பாடம் - 11. பல்சுவைப் பாடல்கள்

அறிமுகம்

மாணவர்களே !

நீங்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் . அங்கே விருந்து நடைபெறுகிறது . அவ்விருந்தில் நீங்கள் கலந்து கொள்கிறீர்கள் என்று கற்பனைச் செய்து கொள்ளுங்கள் . அந்த விருந்தில் இனிப்பு , புளிப்பு , காரம் போன்ற பல சுவைகளையுடைய உணவுப் பொருட்கள் வைக்கப் பெற்றிருக்கும் . நீங்களும் விருந்தை விரும்பிச் சாப்பிடுவீர்கள் ; திருமணத்திற்கு வந்தவர்களும் அந்தப் பல்சுவை விருந்தை விரும்பிச் சாப்பிடுவார்கள் . இவ்வாறு பலராலும் விரும்பப்படும் அந்த விருந்து ' பல்சுவை விருந்து ' என்று போற்றப் பெறும் . அதுபோல் நீங்கள் தமிழ் இலக்கியத்தைக் கற்க விரும்பி வந்துள்ளீர்கள் . தமிழ் இலக்கியத்தில் உங்களை மகிழ்விக்கும் வகையில் இயற்றப் பெற்றுள்ள பல்சுவைப் பாடல்கள் பல ஆங்காங்கே உண்டு . கோபம் , அழுகை , சிரிப்பு , வீரம் போன்ற பல்சுவைகளில் தமிழில் பாடல்கள் பாடப் பெற்றுள்ளன . அவற்றைப் படிக்கும்போது , அந்த அந்தச் சுவைகளைப் படிப்பவர்கள் பெறுவார்கள் : படிக்கும் நீங்களும் பெறலாம் . அவ்வகைப் பாடல்கள் பல்சுவைப் பாடல்கள் எனப்படுகின்றன .

தமிழ் இலக்கியத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் முன் பகுதியிலும் , பின் பகுதியிலும் இத்தகையப் பல்சுவைப் பாடல்கள் அதிகம் தோன்றின . குறிப்பாக , அக்காலக் கட்டத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்கள் பல்சுவைகளைப் பெற்றிருந்தன . சிற்றிலக்கியம் என்பது அளவாலும் , பொருளாலும் குறுமை கொண்ட இலக்கியங்கள் ஆகும் . சிறிய இலக்கியங்கள் - சிற்றிலக்கியங்கள் எனப்படுகின்றன . எனினும் , இவை சீரிய இலக்கியங்கள் : இலக்கிய இன்பத்தில் நிறைவைத் தரும் இலக்கியங்கள் : குறைவு இல்லா இலக்கியங்கள் .

சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 வகைப்படும் . உலா , பரணி , பிள்ளைத்தமிழ் , பள்ளு , குறவஞ்சி ஆகியவை சிற்றிலக்கியங்களில் சில வகையின . இக்காலத்தில் தோன்றிய தனிப்பாடல்களும் பல்சுவை தருவனவாகும் . காளமேகம் , இரட்டைப் புலவர்கள் , அந்தகக்கவி வீரராகவரர் போன்றோர் தனிப்பாடல்கள் எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர் .

இப்பாடப் பகுதியில் பல்சுவைத் தரும் மூன்று பாடல்களை அறிந்துகொள்ளப் போகிறோம் . முக்கூடற் பள்ளு , குற்றாலக் குறவஞ்சி ஆகிய சிற்றிலக்கியங்களில் இருந்து ஒவ்வொரு பாடலைக் கற்கப் போகிறோம் . இவற்றுடன் காளமேகப் புலவர் படைத்த ஒரு தனிப்பாடலையும் நாம் கற்க உள்ளோம் .

மேல்நிலைப் பாடங்கள்

மாணவர்களே ! இப்போது நீங்கள் பல்சுவைகளைத் தந்திடும் இலக்கிய விருந்திற்குச் செல்லப்போகிறீர்கள் .

Lesson Introduction

Imagine that you are attending a wedding function and participating in the feast. A variety of dishes with all tastes like Sweet, Sour and Spicy are being served. You along with others enjoy the feast.This kind of feast with a variety of dishes and tastes is called “Palsuvai Virunthu” in Tamil.

Palsuvai Paadalgal

Likewise you have come to learn Tamil Literature. In Tamil Literature you have a variety of poems to entertain and make you happy.They express various moods and feelings like anger, happiness, sorrow, love, affection, valour, laughter etc. and while reading them, you get a mix of these tastes which you enjoy. This type of poetry is called “Palsuvai Paadalgal”.

Chitrilakiyangal

During the beginning and end of the 18th century, this type of poems were written in large numbers. In particular most of Chitrilakiyangal written those days were of this “Palsuvai” nature or variety of tastes.

Chitrilakiyangal which stands for Tiny Literature are basically small in size and meaning. But they give enormous satisfaction and literary thrill to the readers. There are 96 types of Chitrilakiyangal. Ulaa, Parani, Pillaithamizh, Pallu and Kuravanchi are some of them.

Thanippaadalgal

Some of the Thanippaadalgal (or standalone poems) written during this period are also of Palsuvai (or of multiple taste) in nature. Kaalamegam, Irattai Pulavargal, Anthagakavi Veeraragavar are some authors of such poems.

In this lesson we are going to learn about three Palsuvai Paadalgal, two from the Chitrilakiyangal, Mukkudal Pallu and Kutraala Kuravanji and the third from a Thanippaadal written by Kalamega Pulavar. Now proceed to the feast of Palsuvai Paadalgal.

முக்கூடற் பள்ளு - நூல் அறிமுகம்

பள்ளு இலக்கியம் என்பது உழவர்களின் இலக்கியமாகும் . ‘ மருத நிலம் ' எனப்படும் வயலில் வியர்வை சிந்தி உழைக்கும் ஆண் , பெண்களின் இயல்புகளைக் கூறும் இலக்கியமாகப் பள்ளு இலக்கியம் விளங்குகின்றது . ஆண்டைகள் எனப்படும் முதலாளிகளின் கீழ் உழைப்பவர்கள் பள்ளர்கள் ஆவர் . இது ஒரு நாடக இலக்கியம் ஆகும் .

முக்கூடற் பள்ளு என்ற நூலின் கதை முக்கூடல் என்ற இடத்தில் நிகழ்வதாகக் கற்பனைச் செய்து பாடப் பெற்றுள்ளது . இதனைப் பாடிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை .

இந்நூலில் உழவுச் செய்திகளும் , உழைப்போரின் செய்திகளும் , திருமால் , சிவன் ஆகியோர் குறித்த செய்திகளும் இடம் பெறுகின்றன .

முக்கூடற் பள்ளு - பாடல் அறிமுகம்

முக்கூடற் பள்ளு நூலில் இருந்து ' தென்கரை நாட்டு வளம் ' என்னும் பகுதி இங்குப் பாடமாகத் தரப்பெறுகின்றது . இந்த நூலில் மொத்தம் 176 பாடல்கள் உள்ளன . அவற்றில் 18 ஆம் பாடல் இங்குப் பாடமாக இடம்பெறுகின்றது .

இப்பாடல் ஒரு நல்ல நாட்டில் இருக்க வேண்டிய வளங்கள் எவை என்பதைப் பட்டியலிடுகிறது . மேலும் , இப்பாடல் இருக்க வேண்டிய வளங்கள் இவை எனக் கூறி , இருக்கக் கூடாத வறுமைகள் இவை என்பதைப் பெற வைக்கின்றது .

இப்பாடல் வழியாகப் பெறப்படும் - இருக்க வேண்டிய வளங்கள் . இருக்கக் கூடா வறுமைகள் இரண்டும் ஒரு நாட்டிற்கு உரியன ஆகும் .

படித்தல் - பாடப் பனுவல்

கீழ்க்காணும் பகுதியைப் படித்துப் பழகவும்

தென் கரை நாட்டின் வளம்

காயக் கண்டது சூரிய காந்தி

கலங்கக் கண்டது

வெண் தயிர்க் கண்டம்

மாயக் கண்டது நாழிகை வாரம்

மறுகக் கண்டது

வான்சுழி வெள்ளம்

சாயக் கண்டது காய்குலைச் செந்நெல்

தனிப்பக் கண்டது

தாபதர் உள்ளம்

தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம்

சீவல மங்கைத்

தென் கரை நாடே !

பொருள் புரியுமாறு படித்தல்

தென்கரை நாட்டின் வளம்

காயக் கண்டது சூரிய காந்தி

கலங்கக் கண்டது

வெண் தயிர்க் கண்டம்

மாயக் கண்டது நாழிகை வாரம்

மறுகக் கண்டது

வான்சுழி வெள்ளம்

சாயக் கண்டது காய்குலைச் செந்நெல்

தனிப்பக் கண்டது

தாபதர் உள்ளம்

தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம்

சீவல மங்கைத்

தென் கரை நாடே !

அருஞ்சொற்பொருள்

காயக் கண்டது - காய்தல்

சூரிய காந்தி - சூரியனின் கதிர்கள்

கலங்கக் கண்டது - மேலும் கீழுமாக மாற்றம் அடைதல்

வெண்தயிர்க் கண்டம் - பாலில் இருந்து பெறப்படும் உணவு .

( தயிர் கெட்டியாக இருப்பதன் காரணமாக அது கண்டம் எனக் குறிப்பிடப்படுகிறது )

மாயக் கண்டது - அழிந்து போவது

நாழிகை - அக்காலத்தில் பயன்படுத்தப் பெற்ற ஒரு வகையான கால அளவு ( தற்கால நிமிடங்கள் போன்றது )

வாரன் - ஒரு வகைக் கால அளவு

மறுகக் கண்டது - மாறுதல்

சுழி - சுழித்து வருதல்

சாயக் கண்டது - நிலையில் இருந்து சரிந்து போகுதல்

காய்குலை - காய்த்துக் குலை குலையாகத் தொங்குதல்

செந்நெல் - அக்கால நெல் வகைகளுள் சிறந்த நெல்வகை , சிவப்பு நிறமுடையது

தனிப்பக் கண்டது - தனியாக இருப்பது

தாபதர் - துறவிகள்

தேயக் கண்டது - தேய்ந்து போவது ( முன் நிலையினின்று தேய்ந்து அழிந்து போகக் கூடியது )

உரைத்திடும் சந்தனம் - சந்தன மரத்துண்டினைக் கல் பலகையில் உரைப்பதால் சந்தனம் கிடைக்கும் சீவல மங்கைத் தென்கரை

நாடு - தென் தமிழகத்தில் உள்ள ஒரு நாடு

திரண்ட கருத்தறிதல்

கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றைக் கவனமாகப் படித்துத் திரண்ட கருத்தை அறிய முயலுங்கள் .

சீவல மங்கைத் தென்கரைநாடு என்பது தமிழ்நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒரு நாடாகும் . இந்நாடும் நீர்வளமும் , நில வளமும் உடையதாகும் .

u இந்நாட்டில் சூரியனின் கதிர்கள் மட்டுமே காய்ந்து வருத்தத்தைத் தருவதைக் காணமுடியும் .

u இந்நாட்டு மக்களின் வயிறு காய்வதைக் காணமுடியாது .

u இந்நாட்டில் வெண்ணெயினைப் பெறுவதற்காகக் கட்டியான தயிரின் துண்டுகளே மத்தினால் கலக்கப் பெறும் ( மத்து = தயிர் கடையப் பயன்படும் கருவி )

u இந்நாட்டு மக்கள் மனம் கலங்குவதைக் காணமுடியாது .

u இந்நாட்டில் காலத்தின் சிறுபகுதிகளான நாழிகைகளும் , வாரங்களும் மட்டுமே கழிந்து அழிந்து போவதைக் காணலாம் .

u இந்நாட்டு மக்கள் பசியால் , வசதிக் குறைவால் அழிந்து போவதைக் காணமுடியாது .

u இந்நாட்டில் மேகங்கள் மழை பொழிவதன் காரணமாக வரும் வெள்ளம் மட்டுமே அங்கும் இங்குமாக மறுகிமாறிச் செல்வதைக் காணமுடியும் .

u இந்நாட்டு மக்கள் மறுகாமல் , மாறாமல் நேர்வழியில் செல்லுவர் .

u இந்நாட்டின் வயல்களில் நிறைய விளைச்சல் ஏற்பட்டுள்ளது . இதன் காரணமாக நீண்டு வளர்ந்துள்ள நெல் பயிர்கள் - மரம் போல - குலை குலையாக முற்றிய நெல் மணிகளைக் கொண்டுள்ளன . இதனால் நெல் பயிர்கள் தலை சாய்ந்து காணப்பெறுகின்றன .

u இந்நாட்டு மக்கள் தலை சாயாமல் வாழ்கின்றனர் .

u இந்நாட்டில் துறவிகள் மட்டுமே தனித்துச் செல்லும் காட்சியைக் காணமுடியும் .

u இந்நாட்டில் இல்லறத்தார்கள் கணவன் மனைவியாக இணைந்தே வாழ்வர் . மக்கள் கூட்டம் கூட்டமாக இணைந்தே ஒற்றுமையாக வாழ்வர் .

u இந்நாட்டில் சந்தனம் மட்டுமே தேய்வடையக் கூடியது . சந்தன மரத்தின் துண்டுகளில் இருந்து சந்தனத்தைப் பெற அதனைக் கல்பலகையில் இட்டு அரைப்பர் . அப்பணி இந்நாட்டின் ஒரு பகுதியில் நடந்து கொண்டுள்ளது .

u இந்நாட்டின் வளத்தில் , மக்களின் வாழ்வில் தேய்வே இல்லை .

u இவ்வாறு வளமுடையது சீவல மங்கைத் தென்கரை நாடாகும் .

u சீவல மங்கைத் தென்கரை நாடு மட்டுமல்ல , அனைத்து நாடுகளும் இத்தகைய வளங்களைப் பெறவேண்டும் . அவ்வளங்களைக் காப்பாற்ற வேண்டும் . உங்கள் நாட்டில் இவ்வளங்கள் உள்ளனவா ?

குற்றாலக் குறவஞ்சி - நூல் அறிமுகம்

குற்றாலக் குறவஞ்சி என்ற நூல் திரிகூட ராசப்பக் கவிராயரால் பாடப்பெற்றது . இது குற்றால மலையில் உள்ள சிவபெருமானைத் தலைவராகக் கொண்டு பாடப் பெற்ற நூலாகும் . இதன் தலைவி வசந்த வல்லி ஆவாள் . இவள் குற்றால நாதரான சிவபெருமான்மீது காதல் கொள்கிறாள் . அவரது உள்ளத்தை அறிய முடியவில்லை . அதனால் இவளின் உள்ளம் வருத்தம் கொள்கிறது . அதனால் உடலும் வருந்துகிறது .

இந்நேரத்தில் வசந்த வல்லியின் வீட்டிற்கு ஒரு குறத்தி வருகிறாள் . அவள் ஒரு கையில் கூடையுடனும் , மறு கையில் குறிகூறப் பயன்படும் கம்புடனும் வருகிறாள் . அவளிடம் வசந்த வல்லியின் உடல் வருத்தத்திற்கானக் காரணம் என்ன எனக் கேட்கிறார்கள் . அவள் குறி கண்டு வசந்த வல்லியின் காதல் நோயைக் கூறுகிறாள் . இதற்காகப் பரிசு பெற்றுச் செல்கிறாள் .

இவளின் கணவனான குறவன் இவளைத் தேடி அலைகிறான் . கடைசியில் இவளைக் கண்டுபிடிக்கிறான் . இவ்வாறு நாட்டுப்புற நிகழ்ச்சிகள் கொண்டதாக இந்த இலக்கியம் விளங்குகிறது .

குற்றாலக் குறவஞ்சி - பாடல் அறிமுகம்

குற்றாலக் குறவஞ்சியின் தலைவி வசந்த வல்லி ஆவாள் . இவள் மிக்க அழகுடையவள் . இவள் தோழிகளுடன் பந்து விளையாடுகிறாள் . அவள் பந்து விளையாடும் அழகை , ஓசை நயத்துடன் இந்நூலின் ஆசிரியர் திரிகூட ராசப்பக் கவிராயர் எடுத்துக் காட்டியுள்ளார் .

அக்காலத்தில் பெண்கள் பந்து , கழற்காய் ( கற்களை வீசிக் கையால் பிடிக்கும் ஆட்டம் ) முதலிய விளையாட்டுகளை விளையாடினர் .

பந்து விளையாடுதல் என்பது தற்போது ஒரு பந்து கொண்டு விளையாடுதல் என்பதாக உள்ளது . ஆனால் பழந்தமிழகத்தில் பல பந்துகளை மேலே எறிந்து அவற்றைக் கீழே விழாமல் தட்டி விளையாடுதல் என்ற முறையில் விளையாடப் பெற்றது . இதை Juggling என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் . இம்முறையில் வசந்த வல்லி ஆடிய பந்தாட்டம் இப்பகுதியில் உங்களுக்குப் பாடமாகத் தரப்பெற்றுள்ளது .

படித்தல் - பாடப் பனுவல்

வசந்த வல்லி பந்தாடல்

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு

புரண்டாடக் - குழல்

மங்குலில் வண்டு கலைந்ததுகண்டு மதன்சிலை

வண்டோட - இனி

இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை

திண்டாட - மலர்ப்

பங்கயமங்கை வசந்த சவுந்தரி

பந்து - பயின்றனளே !

பொருள் புரியுமாறு படித்தல் வசந்த வல்லி பந்தாடல்

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு

புரண்டாடக் - குழல்

மங்குலில் வண்டு கலைந்ததுகண்டு மதன்சிலை

வண்டோட - இனி

இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை

திண்டாட - மலர்ப்

பங்கயமங்கை வசந்த சவுந்தரி

பந்து - பயின்றனளே !

அருஞ்சொற்பொருள்

பொங்கு - எழுதல்

கனம் குழை - பெண்களின் காதுகளில் அணியப் பெறும் கனமான அணி

மண்டிய - மிகுந்த

கெண்டை - ஒருவகை மீன் ( பெண்களின் கண்களுக்கு உவமையாகச் சொல்லப்பெறும் பெருமையை உடையது )

புரண்டு - மாறி மாறி

குழல் - தலைமுடி

மங்குலில் - இருட்டில் , மேகத்தில்

மதன் - மன்மதன்

சிலை - கரும்பு வில்

இடை - பெண்ணின் இடுப்புப்பகுதி

திண்டாட - தவிக்க

பங்கயம் - தாமரை

மங்கை - பெண்

பயின்றாள் - விளையாடினாள்

திரண்ட கருத்தறிதல்

குற்றாலம் என்னும் நகரில் வசந்தவல்லி என்னும் அழகிய பெண் பூக்களால் செய்யப் பெற்ற பல பந்துகளை மேலே எறிந்து விளையாடத் தொடங்கினாள் . மேலே சென்ற பந்துகளைக் கீழே விழுந்துவிடாமல் அவள் கவனித்து விளையாடினாள் . இதன் காரணமாக அவள் உடல் அதற்கு ஏற்றபடி மேலும் , கீழும் , பக்கத்திலும் அசைந்து ஆடியது .

அவளின் காதுகளில் அணிந்து இருந்த அழகிய குழை என்னும் அணிகள் மேலெழுந்து ஆடின . அடுத்து அவளுடைய அழகிய கண்கள் இங்கும் அங்கும் பார்த்தன . அவளின் கண்கள் , கெண்டை மீன்கள் துள்ளுவது போல பந்துகளைப் பார்த்து , பந்துகள் செல்லும் இடங்களை நோக்கிச் சென்றது ; அலைந்தது ; கவனித்தது .

அவளின் இருண்ட மேகம் போன்ற தலைமுடி அவள் பந்து ஆடுவதற்கு ஏற்ப ஆடியது . அவள் தலையில் சூடிய மலர்களும் ஆடின . மலர்களைச் சுற்றி இருந்த வண்டுகளும் ஓடி ஆடின . இந்த வண்டுகள் ஆடி ஓடுவது கண்டு , மன்மதன் வில்லில் உள்ள வண்டுகளும் ஆடின .

( மன்மதன் - காமத்தைத் தரும் கடவுள் : இவன் கரும்பால் ஆன வில்லை வைத்திருப்பவன் . அந்த வில்லை இணைத்துக் கட்டும் கயிறாக வண்டுகள் அமைந்திருக்கும் . ஐந்து வகை மலர்களாகிய அம்புகளைக் கொண்டிருப்பவன் . - இவை புராணச் செய்திகளாகும் .

இவ்வாறு இவள் பந்துகளை விளையாடும் காட்சி மிக அழகாய் இருந்தது . சுமை காரணமாக இவளது மெல்லிய இடுப்புப் பகுதி மிக வருந்திக் கொண்டிருந்தது . ‘ இவள் பந்தாடும் தாங்க முடியாத பேரழகைப் பார்த்து உலகம் தாங்குமா ?’ என்ற புதிய வருத்தமும் சேர்ந்து கொண்டதால் இடை மேலும் வருந்தியது .

இவ்வாறு , தாமரை மலர் போன்ற அழகுடைய பெண்ணான வசந்த சவுந்தரி ( வசந்த வல்லி ) பந்து ஆடினாள் .

காளமேகப் புலவர் பாடல் - நூல் அறிமுகம்

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் பாடுவதில் வல்லவர் . அவரது பாடல்களில் சிரிப்பும் , சிந்தனையும் கலந்திருக்கும் . மழை பொழியும் மேகம் போல் கவிதை பாட வல்லவர் என்பதால் இவருக்குக் காளமேகம் என்ற பெயர் ஏற்பட்டது . தனித்தனிப் பாடல்களாக இவர் பாடல்களைப் பாடிய போதும் அவை தற்போது ஒரே திரட்டாக நூல் வடிவில் கிடைக்கின்றன .

காளமேகப் புலவர் பாடல் - பாடல் அறிமுகம்

இப்பாடப் பகுதியில் பாம்பிற்கும் , வாழைப் பழத்திற்கும் பொதுவாகும் வகையில் அமையும் பாடல் ஒன்று இடம்பெறுகின்றது . ஒரே பாடல் தான் : நான்கு வரிப் பாடல் மட்டுமே ! ஆனால் அது பாம்பு , வாழைப்பழம் ஆகிய இரண்டுக்கும் பொருந்தி வருமாறு பாடப் பெற்றுள்ளது .

இவ்வாறு ஒரு பகுதியே இரு பொருளுக்கும் பொருந்துமாறு பாடப்பெறுவது இரட்டுற மொழிதல் என்னும் அணியாகும் . இதனைச் ' சிலேடை ' என்றும் சொல்வார்கள் . அணிகள் குறித்து வளர்நிலைக் கல்விப்பாடங்களில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் .

படித்தல் - பாடப்பனுவல்

கீழ்க்காணும் பகுதியைப் படித்துப் பழகவும் .

பாம்பிற்கும் வாழைப் பழத்திற்கும் பொருந்திவரும் பாடல்

நஞ்சிருக்கும் ; தோல் உரிக்கும் ; நாதர்முடி மேல் இருக்கும் ;

வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது ; - விஞ்சுமலர்த்

தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்

பாம்பாகும் வாழைப் பழம் .

பொருள் புரியுமாறு படித்தல்

பாம்பிற்குப் பொருந்தி வருதல்

நஞ்சு இருக்கும் ; தோல் உரிக்கும் ; நாதர் முடிமேல் இருக்கும் ;

வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது ; - விஞ்சுமலர்த்

தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்

பாம்பாகும் வாழைப் பழம் .

வாழைப் பழத்திற்குப் பொருந்தி வருதல்

நஞ்சு ( நைந்து ) இருக்கும் ; தோல் உரிக்கும் ; நாதர் முடிமேல் இருக்கும் ;

செஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது ; - விஞ்சுமலர்த்

தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்

பாம்பாகும் வாழைப் பழம் .

அருஞ்சொற்பொருள்

நஞ்சு இருக்கும்

1. நஞ்சு இருக்கும் - பாம்பிற்குப் பல்லில் விஷம் இருக்கும்

2. நஞ்சு இருக்கும் - வாழைப்பழம் அதிகம் கனிந்தால் நைந்து போகும் .

தோல்

1. தோல் உரிக்கும் - பாம்பு மேற்தோலை உரிக்கக்கூடியது

2. தோல் உரிக்கும் - வாழைப்பழத்தைத் தோல் உரித்தபின் உண்ண வேண்டும் .

நாதர் முடி - இறைவனின் தலை

வெஞ்சினம்

1. வெஞ்சினத்தில் - கடும் கோபத்தில்

2. வெஞ்சினத்தில் - துணை உணவில்

மீளாது - திரும்ப வராது

1. மீளாது - கோபத்தில் பாம்பின் பல் மனிதர் மீது பட்டால் உயிர் திரும்ப வராது .

2. மீளாது - துணை உணவாக உள்ள , வாழைப்பழம் வாயினுள் சென்றுவிட்டால் மீண்டும் முழு வடிவோடு வராது .

விஞ்சுமலர் - மலர்களின் மிகுதியால்

தேம்பாயும் - தேன் பெருகிஓடும்

திருமலைராயன் - ஓர் அரசனின் பெயர்

வரை - மலை

திரண்ட கருத்தறிதல்

இப்பாடலில் நான்கு கருத்துகள் பாம்பிற்கும் , வாழைப் பழத்திற்கும் பொதுவாகக் கூறப்

பெற்றுள்ளன . அவற்றை ஒவ்வொன்றாகப் பின்வருமாறு காணலாம் .

1. நஞ்சிருக்கும்

பாம்பு - தன் நாவில் விஷ ( ட ) த்தை வைத்திருக்கும் .

வாழைப்பழம் - அதிகம் கனிந்துவிட்டால் நைந்து போகும் .

2. தோலுரிக்கும்

பாம்பு - பாம்பு தன் தோலை உரித்து வளர்ச்சி அடையும் . அதனைப் பாம்புச் சட்டை எனத் தமிழ் நாட்டார் வழங்குவர் .

வாழைப்பழம் - வாழைப் பழத்தை உண்ணும் போது அதன் தோலை உரித்த பின்னேதான் சாப்பிட முடியும் .

3. நாதர் முடிமேல் இருக்கும்

பாம்பு - பாம்பு சிவபெருமானின் தலை மீது இருக்கும் .

வாழைப்பழம் - இறைவனுக்கு நீராட்டுச் ( அபிடேகம் ) செய்கையின் பஞ்சாமிர்தமாக வாழைப் பழம் இறைவனின் தலைமீது வைக்கப்படும் .

( குறிப்பு : தேன் , நாட்டுச்சர்க்கரை ( அல்லது வெல்லம் ), வாழைப் பழம் , உலர் திராட்சைப்பழம் , பேரீச்சம்பழம் ஆகிய ஐந்து பொருட்களும் இணைந்து செய்யப்படுவது பஞ்ச அமிர்தமாகும் . பஞ்ச என்ற வடசொல்லுக்கு ஐந்து என்று பொருள் . அமிர்தம் என்பது சுவை மிக்க உணவு என்னும் பொருள்படும் .)

4. வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது

பாம்பு - பாம்பிற்குக் கோபம் வந்துவிட்டால் அதன் பல் நம் உடல் மீது பட்டு விட்டால் போகும் உயிர் மீண்டு வராது .

வாழைப்பழம் - துணை உணவாக உள்ள வாழைப்பழம் வாயினுள் சென்று விட்டால் மீண்டும் முழுவடிவோடு வராது .

என்ற நிலையில் பெருமையுடைய இரு பொருட்களும் , பூக்கள் நிறைந்த தேன் பாய்கின்ற சோலைகளை உடைய திருமலைராயன் என்பவனது மலையில் உள்ளன .

கீழ்க்காணும் வினாவிற்கு விடையறிந்து , எழுதியும் , பதில் கூறியும் , பழகவும் .

1. வாழைப் பழம் எவ்வாறு இறைவன் தலையின் மீது இடம் பெறுகிறது ?

2. பாம்பின் தன்மைகளாகக் காளமேகப் புலவர் கூறுவன யாவை ?

3. வாழைப் பழத்தின் தன்மைகளாகக் காளமேகப் புலவர் கருதுவன யாவை ?

விடைகள்

1. வாழைப்பழம் - சிவபெருமானுக்கு நீராட்டு செய்கையில் பஞ்சாமிர்தமாக வாழைப்பழம் இறைவனின் தலைமீது வைக்கப்படும் .

( குறிப்பு : தேன் , நாட்டுச்சர்க்கரை ( அல்லது வெல்லம் ), வாழைப் பழம் , உலர் திராட்சைப்பழம் ,

பேரீச்சம்பழம் ஆகிய ஐந்து பொருட்களும் இணைந்து செய்யப்படுவது பஞ்ச

அமிர்தமாகும் . பஞ்ச என்ற வடசொல்லுக்கு ஐந்து என்று பொருள் . அமிர்தம் ( அமிழ்தம்

அல்லது அமுதம் ) என்பது சாவா மருந்து . இங்குச் சுவை மிக்க உணவு என்னும் பொருள்படும் .)

2. பாம்பின் தன்மைகள்

நஞ்சிருக்கும்

பாம்பு = தன் பல்லில் விடத்தை வைத்திருக்கும் .

தோலுரிக்கும்

பாம்பு தன் தோலை உரித்து வளர்ச்சி அடையும் .

நாதர் முடிமேல் இருக்கும்

பாம்பு சிவபெருமானின் தலை மீது இருக்கும் .

வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது

பாம்பிற்குக் கோபம் வந்துவிட்டால் அதன் பல் யார் மீது பட்டுவிட்டாலும் உயிர்போகும் . அவ்வுயிர் மீண்டும் வராது .

3. வாழைப்பழத்தின் தன்மைகள்

நஞ்சிருக்கும்

வாழைப்பழம் - அதிகம் கனிந்து விட்டால் நைந்து போகும் .

தோலுரிக்கும்

வாழைப் பழத்தை உண்ணும்போது அதன் தோலை உரித்த பின்னேதான் சாப்பிடமுடியும் .

நாதர் முடிமேல் இருக்கும்

இறைவனுக்கு நீராட்டு செய்கையில் பஞ்சாமிர்தமாக வாழைப்பழம் இறைவனின் தலை மீது வைக்கப்படும் .

வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது

துணை உணவாக உள்ள வாழைப்பழம் வாயினுள் சென்றுவிட்டால் மீண்டும் முழு வடிவோடு வராது .