பாடம் - 13. சதுரங்கச் சாதனையாளர் விஜயலட்சுமியுடன் ஒரு சிறப்பு நேர்காணல்

அறிமுகம்

இந்தியாவின் முதல் மகளிர் கிராண்ட் மாஸ்டராகத் தகுதி பெற்று சாதனைப் படைத்திருக்கிறார் விஜயலட்சுமி சுப்பராமன் . இவர் தமிநாட்டைச் சேர்ந்தவர் . ஹைதராபாத்தில் நடைபெற்ற ' விப்ரோ சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்கப் போட்டியில் பங்கேற்றபோது அச்சாதனையை அவர் செய்தார் . நான்கு முறை தேசிய மகளிர் சாம்பியனாகப் பட்டம் வென்றுள்ளார் விகயலட்சுமி . 1996 இல் நடந்த லினாரெஸ் ஓபன் போட்டியிலும் , 2000 இல் உதய்ப்பூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார் . இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விஜயலட்சுமி பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது .

நேர்காணல் என்பது புகழ் பெற்ற தலைவர்கள் . விளையாட்டு வீரர்கள் , இலக்கியவாதிகள் , மேதைகள் ஆகிய இவர்களைச் சந்தித்து , அவர்கள் புகழ்பெற்று விளங்கும் துறைகளில் அவர்களுடைய அனுபவங்களையும் கருத்துகளையும் , கேள்வி கேட்டு , அறிந்து அவற்றை வெளியிடுவதாகும் . கேள்வி - பதில் என்ற வடிவில் நேர்காணல் அமையும் .

சதுரங்கச் சாதனையாளர் விஜயலட்சுமியுடனான ஒரு சிறப்பு நேர்காணல் பாடமாக அமைந்துள்ளது .

Lesson Introduction

Ms.Vijayalakshmi Subbaraman has qualified herself as the first ever Indian Women Grand Master. She belongs to TamilNadu. She achieved this distinction when she participated in the Wipro International Chess Championship at Hyderabad. She has won the National Women’s title in 1996; the Lineras open at Spain in 1998 and the Asian Championship at Udaipur in 2000. It is worth mentioning that she has participated in more than 30 international championships. ‘NERKANAL’ means ‘interview’. To interview well-known leaders, players, literates and celebrities, meeting them in person, questioning them and publishing their response is known as NERKANAL. The Interview will be in the form of questions and responses.

சதுரங்கச் சாதனையாளர் விஜயலட்சுமி

சதுரங்க ஆட்டக்காரர்களின் படங்கள்

படித்தல் - பாடப்பனுவல்

இந்தியாவில் முதல் உலக மகளிர் கிராண்ட் மாஸ்டராகச் சாதனைப் புரிந்துள்ளீர்கள் . உங்களின் எதிர்கால லட்சியம் குறித்து . . . .

அடுத்ததாக ஆடவர் சர்வதேச மாஸ்டர் பிரிவிலும் போட்டியிட்டுச் சாதனை செய்ய முயற்சி செய்வேன் . தில்லியில் நடைபெற உள்ள உலக சதுரங்கப் போட்டியிலும் , துருக்கி சதுரங்க ஒலிம்பியார் போட்டியிலும் பங்கேற்பதில் இப்போது கவனம் செலுத்தி வருகிறேன் .

சதுரங்க உலகில் உங்களின் புதிய சாதனை குறித்து . . .

எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை . எதிர்காலத்தில் ஏராளமான மகளிர் கிராண்ட் மாஸ்டர்கள் தோன்றுவார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது . எனினும் , ‘ முதல் மகளிர் கிராண்ட் மாஸ்டர் ' என்ற பெருமையை யாரும் என்னிடமிருந்து பறித்துவிட முடியாது .

கிராண்ட் மாஸ்டர்கள் பலரை வெற்றிகண்டது பற்றி உங்கள் கருத்து .....

கொபைலா ( ரஷ்யா ), பிளாஸ்கெட் ( இங்கிலாந்து ), சோராசின் ( அர்ஜெண்டைனா ), நஜ்டோஸ்கி ( மேசிடோனியா ) பரூவா , குண்டே ( இந்தியா ) போன்ற கிராண்ட் மாஸ்டர்களைத் தைரியமாக எதிர்கொண்டு வீழ்த்தியதை மறக்க முடியாது . அந்தப் போட்டிகள் அனைத்துமே எனக்குப் பெரும் சவாலாக அமைந்தன . நிதானத்தைத் தவறவிடாமல் உறுதியாக விளையாடி கிராண்ட் மாஸ்டர்களை வெற்றி கண்டேன் .

மகளிர் பிரிவில் தங்களுக்கிணையாக இந்திய வீராங்கனைகள் யாருமின்றி , பெரிய இடைவெளி உள்ள நிலையில் , தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொண்டு விளையாட்டில் முனைப்பு காடுகிறீர்கள் ?

விடாமுயற்சிதான் அதற்கான அடிப்படை . எனது விளையாட்டுத் திறனையும் செயல்பாட்டையும் மேம்படுத்திக் கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன் . எனது தந்தையும் பயிற்சியாளருமான சுப்பராமன் அவர்கள் ஊக்கமும் ஆதரவும் அளிப்பதோடு எனது நோக்கங்கள் எப்போதுமே உயர்ந்தவையாக இருக்குமாறும் பார்த்துக் கொள்கிறார் .

‘ உனது திறமையை நீ நம்ப வேண்டும் ' என்று எனது தாயும் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார் .

போட்டிகளுக்கு எவ்வாறு தயார் செய்து கொள்கிறீர்கள் ?

உடல் ரீதியாகவும் , உளவியல் ரீதியாகவும் , விளையாட்டு சம்பந்தமாகவும் என்னைத் தயார்ப்படுத்திக் கொள்கிறேன் . ஆரோக்கியமான உடல் நலனுக்காக நடப்பது , சைக்கிள் ஓட்டுவது போன்ற எளிய பயிற்சிகளை மேற்கொள்கிறேன் .

குழந்தைப் பருவத்திலிருந்தே எனது தந்தை அளித்துவரும் ஊக்கம் , தன்னம்பிக்கையோடு போட்டிகளை எதிர்கொள்ள எனக்கு உதவுகிறது . உளவியல் ரீதியாக வரும்போது தெளிவான மனத்துடன் போட்டிகளை அணுகுகிறேன் . மற்ற விடயங்கள் எனது மனத்தைப் பாதிக்க நான் அனுமதிப்பதில்லை .

என் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ள தனித்தோ அல்லது என் சகோதரி மீனாட்சியுடனோ விளையாடுவதன் மூலம் பயிற்சி பெறுகிறேன் . செஸ்பேஸ் 7.0. ஃபிரிட்ஸ் 6’

போன்ற அமைப்புகளைப் பயன்படுத்திக் கணினியில் பயிற்சி மேற்கொள்வது எனது தொடக்க நகர்த்தல்களுக்கும் , ஆட்டத்தை அலசி ஆராயவும் உதவிகரமாக உள்ளது .

உங்கள் விளையாட்டுப் பாணி எத்தகையது ?

ஆக்ரோஷமான தாக்குதல் மற்றும் முன்னணி பெறுவதில் முனைப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் . எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் மனம் தளராமல் போராடுவது , தேவையான இடங்களில் புதிய வியூகங்களையும் தாக்குதல் முறைகளையும் முயற்சித்துப் பார்ப்பது ஆகியவற்றையும் பின்பற்றி வருகிறேன் .

உலக மகளிர் கிராண்ட் மாஸ்டர் என்ற வகையில் இந்தியாவின் இளம் சதுரங்க வீரர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன ?

சதுரங்க விளையாட்டில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது மிக அவசியம் . கடின உழைப்பும் , சரியான ஆதரவும் இருந்தால் யாரும் நல்ல ஒரு சதுரங்க வீரராக உயர்வது நிச்சயம் . விளையாட்டில் விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை . அதுவும் கூட ஒரு வகையில் ஒழுக்கம் சார்ந்ததே .

உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு சில வரிகளில் . . . . . .

நான் ஒரு வெளிப்படையான சாதாரணமான பெண் அனைவருடனும் நட்புணர்வுடன் பழகவே விரும்புகிறேன் . அங்கீகாரம் , புகழ் என்பதெல்லாம் விளையாட்டு சம்பந்தமாகத்தான் . அடிப்படையில் எனக்கும் சதுரங்க விளையாட்டிற்கும் உண்மையானவளாக நடந்து கொள்வதே எனது விருப்பம் .

உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து . . . .

ஆறு மாத காலமாகத் தொடர்ந்து விளையாடி வருவதால் ஹைதராபாத் போட்டிக்குப் பின்னர்ச் சற்று ஓய்வெடுக்க விரும்புகிறேன் . அதன் பின்னர்த் துருக்கியிலும் தில்லியிலும் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்பேன் .

தொழில் முறைச் சதுரங்க ஆட்டக்காரராக விரும்புகிறீர்களா ?

தற்போதே நான் ஒரு தொழில் முறைச் சதுரங்க வீராங்கனை என்றே உணர்கிறேன் . என்னால் எத்தனை காலத்திற்கு விளையாட முடியுமோ அது வரையும் , எனது தந்தை நிர்ணயிக்கும் இலக்குகளை எட்டும் வரையிலும் தொடர்ந்து விளையாடுவே .

உங்களது மனம் கவர்ந்த முன்மாதிரியான சதுரங்க வீரர்கள் பற்றி

ஜூடித் போல்கர் , கேரி காஸ்பரோவ் , விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரது தீவிர ரசிகை நான் .

ஜூடித் போல்கரின் சாதனைகள் மகத்தானவை . எப்போதும் அவரைப் பின்பற்றி வருகிறேன் .

படித்துக் கருத்தறிதல் - பாடப்பனுவல்

இந்தியாவின் முதல் மகளிர் கிராண்ட் மாஸ்டராகத் தகுதி பெற்று சாதனைப் படைத்திருக்கிறார் விஜயலட்சுமி சுப்பராமன் . இவர் தமிநாட்டைச் சேர்ந்தவர் . ஹைதராபாத்தில் நடைபெற்ற ' விப்ரோ சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்கப் போட்டியில் பங்கேற்றபோது அச்சாதனையை அவர் செய்தார் . நான்கு முறை தேசிய மகளிர் சாம்பியனாகப் பட்டம் வென்றுள்ளார் விகயலட்சுமி . 1996 இல் நடந்த லினாரெஸ் ஓபன் போட்டியிலும் , 2000 இல் உதய்ப்பூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார் . இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விஜயலட்சுமி பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது .

நேர்காணல் என்பது புகழ் பெற்ற தலைவர்கள் . விளையாட்டு வீரர்கள் , இலக்கியவாதிகள் , மேதைகள் ஆகிய இவர்களைச் சந்தித்து , அவர்கள் புகழ்பெற்று விளங்கும் துறைகளில் அவர்களுடைய அனுபவங்களையும் கருத்துகளையும் , கேள்வி கேட்டு , அறிந்து அவற்றை வெளியிடுவதாகும் . கேள்வி - பதில் என்ற வடிவில் நேர்காணல் அமையும் .

சதுரங்கச் சாதனையாளர் விஜயலட்சுமியுடனான ஒரு சிறப்பு நேர்காணல் பாடமாக அமைந்துள்ளது .

முதன்மைச் சொற்களும் அவற்றின் பொருட்களும்

சதுரங்கம் = caturankam (noun) ‘chess’

போட்டி = (noun) competition

கிராண்ட் மாஸ்டர் = 'Grand master ' என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் ஒலிபெயர்ப்பு

தேசிய மகளிர் சாம்பியன் = National Woman’s Champian (noun)

ஆடவர் = ‘male person’

வீராங்கனை = விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்பவள் , sports women

பயிற்சியாளர் = Coach விளையாட்டை முறையாக ஆடக் கற்றுத் தருபவர்

நகர்த்தல் = காயை இடம் மாற்றுதல் , to move a piece

ஆட்டம் = விளையாட்டு , game

தாக்கு = விளையாட்டில் முன்னேறி நெருக்கு , attack, play offensive game

மரபுத் தொடர்

கடைப்பிடி = பின்பற்று , follow, observe

அலசி ஆராய்தல் = ஒரு அம்சத்தின் எல்லா கூறுகளையும் கண்டறிதல் , discussing threadbare

மனம் தளராமல் = உள்ளம் சோர்வடையாமல் , ‘ without getting depressed of spirit’

மனம் கவர் = உள்ளத்தை ஈர்க்கும் , captivate

முனைப்பு காட்டு = தீவிரமாகச் செயல்படு , act with determination

முன்மாதிரி = எடுத்துக்காட்டாக அமையும் ஒருவர் , model, example

விடாமுயற்சி = தொடர்ந்து செய்யும் முயற்சி , perseverance

அருஞ்சொற்பொருள்

அங்கீகாரம் = ஒப்புதல் , recognition

அடிப்படை = ஒன்றின் மிக அடிப்படையானது , basis

அணுகுதல் = நோக்குதல் , deal with, approach

ஆக்ரோஷம் = ஆவேசம் , aggressive

ஆரோக்கியம் = நல்ல ( நிலை ) நலம் 'good health’

இக்கட்டான = நெருக்கடி crisis, quandary

இலக்கு = இறுதிப்பயன் , goal

இளம் = வயதில் குறைந்த , young

உதவிகரமாக = ஒத்தாசையாக , helpfully

உளவியல் = மனித மனம் செயல்படும் தன்மை , ‘ psychology’

ஊக்கம் = உற்சாகமான தூண்டுதல் , encouragement

எதிர்கொள் = நேருக்கு நேர் சந்தித்தல் , ‘ face to face’

கணினி = computer

குறித்து = பற்றி , about

குறிப்பிடு = சுட்டிக்காட்டு , mention

சவால் = போட்டிக்கு அழைத்தல் , challenge

தவற விடுதல் = விடும்படி நேர்தல் , miss

தவிர்த்து = except , நீங்கலாக

தோன்று = பிறத்தல் , to he born

ரீதியாக = அடிப்படையில்

இலட்சியம் = அடைய விரும்பும் உயர் நிலை , aim

வியூகம் = தாக்குவதற்கு அல்லது தற்காத்துக் கொள்வதற்கு ஏற்படுத்தும் அணிவகுப்பு , battle array, plan

வீழ்த்து = தோற்கடி , defeat

வெளிப்படையான = open, frank