பாடம் - 14. அறவுரைப்பகுதி
அறிமுகம்
மாணவ நண்பரே !
அறவுரைப் பகுதி என்பது அறக் கருத்துகளை எடுத்து உரைக்கும் பகுதி ஆகும் . தமிழ் மொழியில் அறம் உரைக்கும் நூல்கள் பல உள்ளன . அவற்றுள் ஆத்திசூடி , கொன்றைவேந்தன் , நீதிநெறி விளக்கம் , திருக்குறள் ஆகிய அறநூல்களிலிருந்து தெரிந்து எடுக்கப்பட்ட பாடல்கள் இப்பகுதியில் பாடமாகத் தரப்பட்டுள்ளன .
Lesson Introduction
Dear students, the chapter of ethics and values defines moral principles. There are many volumes on moral principles in Tamil. Here some selected verses from ‘Aathichoodi’ , ‘Kondraivendan’, ‘Neethineri vilakkam’ and ‘Thirukkural’ are dealt with.
1. ஆத்திசூடி - பாடல்
மாணவ நண்பரே !
முதலில் ஆத்தி சூடியின் அடிகளைக் கேளுங்கள் . பாடல் வரிகளைத் திரையில் படியுங்கள் !
1. ஊக்கமது கைவிடேல்
2. ஒப்புரவு ஒழுகு
3. இளமையில் கல்
4. செய்வன திருந்தச் செய்
5. நோய்க்கு இடம் கொடேல் - ஔவையார்
இதுவரை , பாடப்பகுதியைப் படித்த நீங்கள் , இனி ஒவ்வொரு பாடலையும் விளக்கமாகக் காணுங்கள் ! அதற்குமுன் ஆத்தி சூடி பற்றியும் ஔவையார் பற்றியும் படிப்போம் .
ஆத்தி சூடி - நூல் அறிமுகம்
ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே
என்று இந்நூலின் காப்புச் செய்யுள் ( கடவுள் வாழ்த்து ) தொடங்குகின்றது . அதனால் , இந்நூலுக்கு " ஆத்தி சூடி " என்று பெயர் ஏற்பட்டது .
ஆத்தி என்பது ஆத்திமாலை , ஆத்தி மாலையைச் சூடிய கடவுள் சிவபெருமான் . ‘ அமர்ந்த ' என்பதற்கு ' விரும்பி ' என்பது பொருள் . தேவன் = சிவபெருமான் . ஆத்தி மாலையைச் சூடிய பெருமானைப் போற்றி வணங்குவோம் என்பது இக்கடவுள் வாழ்த்துப் பாடலின் பொருள் .
இந்நூல் , கடவுள் வாழ்த்து நீங்கலாக , 108 ஓரடிப் பாக்களைக் கொண்டது . மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளை மிகச் சிறிய தொடர்களில் , அகர வரிசைப்படி கூறுகிறது . சிறுவர்களும் படித்துப் பயன்பெறும் வகையில் எளிமையாக உள்ளது இந்நூலின் சிறப்பாகும் .
ஆத்தி சூடி - ஆசிரியர் அறிமுகம்
ஆத்தி சூடியை எழுதியவர் ஔவையார் . இவர் பெண்பாற்புலவர் . தமிழ்நாட்டில் ஔவையார் என்னும் பெயரில் புலவர் பலர் இருந்துள்ளனர் . இங்கு நாம் படிக்கும் ஔவையார் ஆத்தி சூடியுடன் கொன்றை வேந்தன் , மூதுரை , நல்வழி முதலான நூல்களையும் இயற்றியுள்ளார் .
அருஞ்சொற்பொருள் , பாவின் பொருள் அறிதல்
1. ஊக்கம் கைவிடல் - ( ஒரு செயலைச் செய்வதற்கான ) மனஎழுச்சி
விட்டு விடாதே . செயல் செய்யும் ஊக்கத்தைக் கைவிட்டு விடாதே .
2. ஒப்புரவு ஒழுகு - உலக நடைமுறை ( ஏற்புடையவனாக ) நட .
உலகின் நல்ல நடைமுறைகளை அறிந்து அவற்றுக்கு ஏற்ப நடந்துகொள் .
3. இளமயில் - இளம் வயதிலேயே
கல் - ( கல்வியைக் ) கற்றுக்கொள்
இளம் வயதிலேயே கல்வியைக் கற்றுக்கொள்
4. செய்வன திருந்தச்செய் - செய்யும் செயல்களைத் செம்மையாகச் செய் - நீ செய்யும் செயல்களைச் செம்மையாகச் செய் .
5. நோய்க்கு - வியாதிகளுக்கு
இடம்கொடேல் - ( உன்னை வந்து அடைவதற்கு ) வாய்ப்புக் கொடுக்காதே . நோய்களுக்கு உன் உடலில் இடம் கொடுத்து விடாதே .
2. கொன்றை வேந்தன்
இனி ' கொன்றை வேந்தனி ' ன் பாடல் அடிகளைக் கேளுங்கள் ! பின்னர் அந்த அடிகளைத் திரையில் பாருங்கள் !
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
3. தாயின் சிறந்து ஒரு கோயிலும் இல்லை
4. நுண்ணிய கருமம் எண்ணித் துணி
5. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் .
கொன்றை வேந்தன் - நூல் அறிமுகம்
கொன்றை வேந்தன் என்னும் இந்த நூலையும்ன் ஔவையார் இயற்றியுள்ளார் . ஆத்தி சூடியைப் போலவே கொன்றை வேந்தனிலும் ஓர் அடிப் பாடல்களே உள்ளன .
கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே !
- ஔவையார்
என்று கொன்றை வேந்தனின் கடவுள் வாழ்த்து அமைந்துள்ளது . இந்த இரண்டுவரி , ‘ காப்புச் செய்யுளின் ' முதல் இரண்டு சொற்களைச் சொல்லிப் பாருங்கள் !
கொன்றை வேந்தன் !
இதுவே நூலின் பெயராக அமைந்துள்ளது .
கொன்றை வேந்தன் = கொன்றைமலர் மாலையை அணிந்த சிவபெருமான்
செல்வன் = அச்சிவனாகியத் தலைவன் ( இறைவன் )
இணை = இரண்டு ;
அடியிணை = இரண்டு பாதங்கள் ;
என்றும் = எக்காலத்திலும் ;
ஏத்தி = போற்றி துதித்து ;
தொழுவோம் = வணங்குவோம் ;
யாமே = நாம் ;
சுருக்கமாகச் சொன்னால் " நாம் என்றும் சிவபெருமான் ஆகிய இறைவனைத் தொழுது வணங்கி , அதன் பின்னர் எச்செயலையும் தொடங்குவோம் " என்பது ஆகும் .
இனி , இந்த நூலைப் பற்றிச் சிறிது விளக்கமாகத் தெரிந்து கொள்வோம் . கொன்றை வேந்தன் , கடவுள் வாழ்த்து நீங்கலாக 91 அடிகளைக் கொண்டுள்ளது .
பொருளறிதல்
மாணவ மணிகளே !
‘ கொன்றை வேந்தன் ' பகுதியில் தெரிவு செய்யப் பெற்றுள்ள பாடப் பகுதியை மீண்டும் ஒருமுறை படியுங்கள் !
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
3. தாயின் சிறந்து ஒரு கோயிலும் இல்லை
4. நுண்ணிய கருமம் எண்ணித் துணி
5. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - ஔவையார்
இனி , ஒவ்வொரு செய்யுளாகப் பார்ப்போம் !
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அன்னை - தாய்
பிதா - தந்தை
முன் அறி - முதலில் அறியப்பட வேண்டிய
தெய்வம் - தெய்வங்கள் ஆவர்
தாயே , உலகில் நமக்கு எல்லாப் பொருட்களையும் அறிமுகம் செய்து வைக்கிறார் ; பேசக் கற்றுத் தருகிறார் . தந்தை நம்முடைய எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்கிறார் . ஆகவேதான் ஔவையார் இப்பாடலில் ' தாயும் தந்தையும் இந்த உலகில் நம்மால் முதலில் அறியப்பட வேண்டிய தெய்வங்க ' என்று கூறியுள்ளார் .
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் !
ஔவையார் இங்கே எவற்றைக் கண் எனப் போற்ற வேண்டும் என்கிறார் ? எண்ணையும் எழுத்தையும் கண் எனப் போற்ற வேண்டும் என்கிறார் .
எண் = கணிதம்
எழுத்து = இலக்கிய இலக்கணங்கள்
கண் = கண்கள்
எனத்தகும் = என்று சொல்லும் தகுதி உடையவை
எண் என்பது என்ன ? ஒன்று , இரண்டு என்று எண்ணப்படுவது ; கணக்கு என்றும் கணிதம் என்றும் சொல்லப்படுவதுதான் எண் ஆகும் . கணிதம் தான் எல்லா அறிவியல் துறைகளுக்கும் அடிப்படை ஆகும் .
எழுத்து என்பது என்ன ? நம் எண்ணங்களை வாழ்வின் அனுபவங்களை , கருத்துகளை எழுதி வைக்கிறோம் அல்லவா ! இவை எல்லாம் எழுத்து என்பதனுள் அடங்கும் . அதாவது , எழுத்து என்பது மொழி . மொழி இல்லாமல் எக்கருத்தையும் வெளியிட முடியாது . ஆகவே , ஔவையார் " கணிதமாகிய எண்ணும் இலக்கிய இலக்கணங்களாகிய எழுத்தும் மனிதனின் வாழ்வுக்கு இரு கண்கள் ஆகும் " எனக் கூறியுள்ளார் .
இனி , அடுத்தப் பாடலைப் படித்துப் பாருங்கள் !
தாயின் சிறந்து ஒரு கோயிலும் இல்லை !
இதன் பொருளைப் பார்ப்போம் .
தாயின் - அன்னையை விடவும்
சிறந்து - சிறப்புப் பொருந்திய
கோயிலும் - ஆலயமும் , வழிபாட்டு இடமும்
இல்லை - வேறு இல்லை
கோயில் என்பது என்ன ? நாம் ஏன் கோயிலுக்குச் செல்கிறோம் ? கடவுள் இருக்கும் இடம் கோயில் . நம்மைக் கடவுள் காப்பாற்றுவார் . நம் எண்ணங்களை , வேண்டுதல்களை , முறையீடுகளை நிறைவேற்றி வைப்பார் . நம் குறைகளைப் போக்குவார் என்று நம்புகிறோம் . கோயில்களுக்குப் போகிறோம் !
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் நாம் பிறந்தது முதல் நாமே நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றலைப் பெறுகின்ற வரை நம்மைப் பாலூட்டி , சீராட்டி , நல்வழி காட்டி , காப்பாற்றி வளர்த்தது யார் ? நம் தாய் தானே ! அதனால் ஔவையார் ' தாயின் சிறந்த ஒரு கோயிலும் இல்லை ' என்று கூறியுள்ளார் . தாயை விடச்சிறந்த கோயில் எதுவும் இல்லை என்பது பாடலின் பொருள் .
தாயையே இறைவனாக , கடவுள் தங்கியுள்ள இடமாக நாம் எண்ணி வழிபட வேண்டும் என்பதை ஔவையார் வற்புறுத்துகிறார் .
இனி , அடுத்தப் பாடலைப் படியுங்கள் !
நுண்ணிய கருமம் எண்ணித் துணி
இச்செய்யுளின் பொருள்
நுண்ணிய - மிக மிக நுணுக்கமான , மிகச் சிறிய
கருமம் - செயல்
எண்ணி - ஆலோசித்து , பலமுறை சிந்தித்து
துணி - செய்வதற்கு முடிவு செய்
நாம் எடுத்துக் கொள்ளும் செயல் மிகமிகச் சிறியதாக இருந்தாலும் நுட்பமானதாக இருந்தாலும் அதைச் சாதாரணமாக நினைக்காமல் ஆராய்ந்து பார்த்துச் செய்தல் வேண்டும் என்பது பொருள் . எந்தச் செயலையும் ஆராய்ந்து செய்யப் பழக்கப்படுத்திக் கொண்டால் , எதிர் காலத்தில் அரிய பெரிய செயல்களைச் செய்து வெற்றி காண முடியும் . அதனால் தான் ஔவையார் ' நுண்ணிய கருமம் எண்ணித் துணி ' என்று கூறியுள்ளார் .
கொன்றை வேந்தனின் அடுத்த அடியைப் படியுங்கள்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
மாணவர்களே ! நாம் எதைச் செய்கிறோமோ அதன் பயன்தான் நமக்குக் கிடைக்கும் என்கிறார் ஔவையார் . முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதன் பொருளைக் காண்போமா ?
முற்பகல் - முன் + பகல் .
பகல் என்பது பகல் பொழுதான நாளைக் குறிக்கிறது .
முன்பகல் - நாளின் முன்பகுதி , அதாவது காலையில்
செய்யின் - செய்தால்
பிற்பகல் - பின் + பகல்
நாளின் பின்பகுதி , அதாவது மாலையில்
விளையும் - பயன் ஏற்படும்
அதாவது " நாளின் முன் பகுதியில் ஒரு செயலைச் செய்தால் , அந்த நாளின் பின் பகுதியில் அதற்கு உரிய விளைவாகிய பயன் கிடைக்கும் " என்பதாகும் .
எதைச் செய்தாலும் காலையில் செய்ததற்கு மாலையில் பயன் உண்டு என்கிறார் . நல்லதைச் செய்தால் நன்மை விளையும் . தீயதைச் செய்தால் தீமை விளையும் என்பதைச் சிந்தித்துத் தெரிந்து கொள்ள வைக்கிறார் .
நல்லனவற்றைப் படிப்போம் ! நல்லனவற்றைச் செய்வோம் ! நல்ல பயன்களைப் பெறுவோம் ! ஔவை வழி நடப்போம் !
மாணவச் செல்வங்களே !
இனி நாம் ' நீதி நெறி விளக்கம் ' குறித்துக் காண்போம் .
நீதி நெறி விளக்கம் - நூல் அறிமுகம்
எல்லாரும் கடைப்பிடிக்க வெண்டிய மிகச் சிறந்த கருத்துகளை விளக்கமாகக் கூறும் நூல் என்பது இதன் பொருள் . இந்த நூல் நான்கு அடி வெண்பாக்களால் இயற்றப் பெற்றுள்ளது . இந்த வெண்பாக்கள் எளிய சொற்களையும் , பொருள் தெளிவையும் கொண்டுள்ளன . இந்த நூலைப் பதினேழாம் நூற்றாண்டின் முன்பகுதியில் மதுரையிலிருந்து ஆட்சி செய்து வந்த திருமலை ( நாயக்க ) மன்னர் வேண்டிக் கொண்டபடி குமரகுருபரர் இயற்றினார் .
நீதிநெறி விளக்கம் - ஆசிரியர் அறிமுகம்
குமரகுருபரர் , திருவைகுண்டத்தில் பிறந்தவர் . இவர் தந்தையார் சண்முக சிகாமணிக் கவிராயர் ; தாயார் சிவகாமி அம்மையார் . இவர் பிறந்தது முதல் ஐந்து வயது வரை வாய் திறந்து பேசத் தெரியாதவராகவே வாழ்ந்தார் . ஐந்து வயது நிறைவுற்றபோது இவரது பெற்றோர் இவரைத் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்தனர் . அன்று இரவு முருகன் இவர் கனவில் தோன்றிக் ' குமரகுருபர் ' என அழைத்து அருள்புரிந்தார் . அன்றே இவர் பேசும் ஆற்றலையும் கவிபாடும் அருளையும் பெற்றார் . தமக்கு அருள் புரிந்த திருச்செந்தூர் முருகனைக் குறித்துக் ' கந்தர் கலிவெண்பா ' பாடினார் . மதுரைக்குச் சென்றதும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் , முதலான நூல்களையும் பாடினார் . இவைதவிர வேறுபல நூல்களையும் பாடினார் .
குமரகுருபரர் இயற்றிய நீதிநெறி விள்ளக்கத்திலிருந்து ஒரு பாடலைக் காண்போம் .
நீதிநெறி விளக்கம் - பாடல்
மெய்வருத்தம் பாரார் ! பசிநோக்கார் ! கண்துஞ்சார் !
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் ! - செவ்வி
அருமையும் பாரார் ! அவமதிப்பும் கொள்ளார் !
கருமமே கண் ஆயி னார் !
இதுதான் செய்யுள் ! அதாவது , தாம் தொடங்கிய செயலை முடிப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்துபவரின் இயல்பு எப்படி இருக்கும் என்பதைக் குமரகுருபரர் விளக்குகிறார் .
கருமம் - எடுத்த செயல் , தொடங்கிய காரியம்
கண் ஆயினார் - கண் எனக் கருதுபவர் . செயலை முடிப்பதில் அதிகக் கவனம் , ஈடுபாடு , அக்கறை செலுத்துபவர் .
தொடங்கிய செயலைச் செம்மையாகச் செய்து முடிக்க நினைப்பவர் எவைகளைப் பொருட்டாகக் கருதமாட்டார்கள் என்பதைப் பாடலின் முதல் மூன்று அடிகளில் கூறியுள்ளார் . அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம் !
1. மெய் வருத்தம் பாரார் !
மெய் - உடல் .
வருத்தம் - துன்பம் .
பாரார் - பார்க்கமாட்டார் .
தாம் தொடங்கிய செயலைச் செய்யும்போது உடலுக்கு ஏற்படும் துன்பங்களைக் கருதமாட்டார் ! அத்துன்பங்களுக்காக வருந்தமாட்டார் .
2. பசி நோக்கார் !
பசி - வயிற்றுப் பசி
நோக்கார் - பார்க்கமாட்டார்
வயிறு பசிக்கிறதே ! இந்தச் செயலைப் பிறகு பார்க்கலாம் என்று எண்ணிப் பசிக்கு உணவு தேடும் செயலைச் செய்யமாட்டார் . பசியை ஒதுக்கி வைத்துச் செயலை முடிப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்துவார் .
3. கண் துஞ்சார் !
துஞ்சுதல் - உறங்குதல் , தூங்குதல்
துஞ்சார் - உறங்க மாட்டார் , தூங்கமாட்டார் .
தூக்கம் கெடுவதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் எடுத்த செயலை முதலில் செய்து முடிப்பதிலேயே கவனமாக இருப்பார் .
4. எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் !
எவ்வெவர் - எவர் + எவர்
தீமையும் - செய்யும் தீய செயலையும்
மேற்கொள்ளார் - பொருள் படுத்த மாட்டார் .
தாம் ஈடுபட்டிருக்கும் செயலைத் தடுத்து நிறுத்தப் பலர் பல வழிகளில் முயலலாம் ! அதற்காக அவர்களோடு போராடிக் கொண்டு , காலத்தை வீண் ஆக்கமாட்டார் . தீமை செய்பவர்களை எல்லாம் பொருட்படுத்தாமல் , செய்ய வேண்டிய செயலிலேயே கவனம் செலுத்துவார் !
5. செவ்வி , அருமையும் பாரார் !
செவ்வி - காலம்
அருமை - கடுமை
காலத்தின் அருமையைப் பொருட்படுத்தமாட்டார் என்பது ஆகும் . அது என்ன காலத்தின் அருமை ? நள்ளிரவில் செய்ய வேண்டி இருக்கலாம் ! மழைக் காலத்தில் செய்ய வேண்டி இருக்கலாம் ! கோடை வெயிலில் செய்ய வேண்டி இருக்கலாம் ! இவை எல்லாம் காலத்தின் அருமைதானே ! இப்படிக் காலத்தின் கடுமையைக் கருதாமல் செயலைச் செய்வார் !
6. அவமதிப்பும் கொள்ளார் !
அவமதிப்பு - அவமானம் , இகழ்ச்சி
கொள்ளார் - கருத்தில் கொள்ளமாட்டார் .
செயலைச் செய்யும்போது , பிறர் உதவி தேவைப்படலாம் . அப்போது அந்தப் பிறர் , கடமையாற்ற முயல்பவரைப் பலவகையிலும் அவமானப்படுத்தலாம் . அந்த அவமானங்களை எல்லாம் ஒரு பொருளாகக் கருதாமல் , செயலில் கவனம் செலுத்துவார் !
இனி , செய்யுளின் திரண்ட கருத்தைச் சுருக்கமாகக் காண்போமா ?
ஒரு செயலைச் செய்து முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் . உடலுக்கு ஏற்படும் வருத்தத்தையும் பசியையும் கண் உறக்கத்தையும் காலத்தின் அருமையையும் பொருட்படுதமாட்டார்கள் . அத்துடன் , பிறர் செய்யும் தீமைகளையும் அவமதிப்புகளையும் கருதாமல் செயலிலேயே முழுக் கவனத்தையும் செலுத்துவார்கள் .
திருக்குறள் - குறட்பாக்கள்
மாணவர்களே !
இனி அறநூல்களில் முதலாவதாகக் கருதப்படும் திருக்குறள் பற்றிக் காண்போமா ?
முதலில் குறட்பாக்களைக் கேளுங்கள் திரையிலும் படித்துப் பாருங்கள் .
1. அகர முதல் எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு .
2. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று .
3. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
4. ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்
5. இதனை இதனான் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்
6. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
திருக்குறள் நூல் அறிமுகம்
திரு + குறள்
திரு என்பது சிறப்பைக் குறிக்கத் தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் சொல் . இதனை ' அடைமொழி ' என்று சொல்வார்கள் . ‘ திரு ' என்பதற்கு ' மேன்மை , சிறப்பு , செல்வம் , பெருமை , விருப்பம் , அழகு ' எனப்பல பொருட்கள் உண்டு . எனவே , இந்த அடைமொழி ஒரு பொருளுக்கு மதிப்புத் தருவதற்காக அதன் பெயருக்கு முன் சேர்க்கப்படுவது உண்டு . அந்த வகையில் ' குறள் ' என்பதற்கு அடை சேர்த்து , ‘ திருக்குறள் ' என்று வழங்கி வருகின்றனர் .
இனி ' குறள் ' என்பதற்குரிய விளக்கத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் ! குறள் என்றால் குறுகியது என்பது பொருள் .
இரண்டு அடியில் அமைந்த வெண்பாவைக் ' குறள்வெண்பா ' என்பர் . இவ்வகைக் குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் என்ற காரணத்தால் இந்நூல் ' திருக்குறள் ' என்று பெயர் பெற்றது .
திருக்குறளைத் தமிழ் மொழியில் உள்ள அற நூல்களில் எல்லாம் சிறந்தது . மிக மிகச் சிறந்தது , தலைசிறந்தது என்று கூறுவர் . இது உலகமக்கள் அனைவருக்கும் எக்காலத்துக்கும் பொருந்துவதாக இருப்பதால் , ‘ உலகப்பொதுமறை ' என்று போற்றப்படுகின்றது .
திருக்குறள் அறம் , பொருள் , இன்பம் என்னும் மூன்று பிரிவுகளை ( பால்களை ) க் கொண்டு விளங்குகிறது . திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன அதிகாரத்துக்குப் பத்தாக மொத்தம் 1330 பாக்கள் உள்ளன .
ஆசிரியர் குறிப்பு
திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் . கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்ததாகக் கூறப்படுகிறது . இதன் அடிப்படையில் ' திருவள்ளுவர் ஆண்டு ' என்கிற ஆண்டுக் கணக்கு உள்ளது . ஆங்கில ஆண்டுடன் முப்பத்தொன்றைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு கிடைக்கும் .
திருவள்ளுவருக்குச் சென்னை மயிலாப்பூரில் ஒரு சிலை இருக்கிறது . சென்னை நுங்கம்பாக்கத்தில் ' வள்ளுவர் கோட்டம் ' என்னும் நினைவுச்சின்னத்தை உருவாக்கியுள்ளனர் . தமிழ்நாட்டின் தென் பகுதியான கன்னியாகுமர் முனையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரச் சிலை அமைத்துள்ளனர் . சென்னைக் கடற்கரையிலும் ஒரு சிலை உள்ளது .
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
என்று பாரதியார் திருவள்ளுவரைப் பாராட்டியுள்ளார் .
திருக்குறள் - பாடப்பனுவல்
மாணவ மணிகளே !
இனி , திருக்குறளின் பாடப்பகுதியில் நுழைவோம் ! இங்கே உங்களுக்கு ஐந்து குறள்கள் தெரிந்து அளிக்கப்பெற்றுள்ளன . அவற்றுள் முதலாவதாக அமைந்துள்ள குறள் .
\
அகர முதல் எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்பது ஆகும் .
இதுவே , திருக்குறள் நூலின் முதல் குறளும் ஆகும் . ' கடவுள் வாழ்த்து ' என்னும் முதல் அதிகாரத்தின் முதல் குறள் இது .
கடவுள் வாழ்த்தா ? கேட்ட தொடராக இருக்கிறது அல்லவா ? ஆம் ! தமிழ் பாடத் தொடக்கத்தில் வாழ்த்துப் பகுதியைப் படித்தீர்கள் அல்லவா ? அங்கே , ‘ இறைவாழ்த்து ' என்ற தலைப்பில் முதல் செய்யுளைப் படித்தோம் ! நினைவுக்கு வருகிறதா ?
கடவுள் , இறைவன் , தெய்வம் ஆகிய சொற்கள் எல்லாம் ஒரே பொருளை உணர்த்தும் சொற்கள்தாம் . ‘ கடவுள் ' என்கிற ஒரே பொருளைத்தான் இந்தச் சொற்கள் உணர்த்துகின்றன !
குறளை மீண்டும் ஒருமுறை படியுங்கள் !
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இனி , இக்குறளில் அமைந்த சொற்களின் பொருள்களைப் பாருங்கள் !
அகரம் - அ என்னும் எழுத்து
முதல் - முதலாக , அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன
எழுத்து எல்லாம் - எழுத்துகள் எல்லாம்
ஆதி - பழமையான
பகவன் - இறைவன்
எழுத்துகள் எல்லாம் அகரத்தை முதலாக , அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன . அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாக , அடிப்படையாகப் பெற்றிருக்கின்றது என்பது தான் இந்தக் குறள் தரும் பொருள் ஆகும் .
இனி , அடுத்தக் குறளுக்குச் செல்வோம் .
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
இக்குறளில் சில சொற்களைப் பிரித்து அறிந்து கொள்ளுங்கள் .
நன்றன்று - நன்று + அன்று
நன்றல்லது - நன்று + அல்லது
நன்றி - பிறர் நமக்குச் செய்த உதவி
மறப்பது - மறந்து விடுவது
நன்று அன்று - நல்லது இல்லை
நன்று அல்லது - தீயது
இந்தக் குறள் ' செய்ந்நன்றி அறிதல் ' என்னும் அதிகாரத்தில் வருகிறது . இதற்கு என்ன பொருள் தெரியுமா ? பிறர் நமக்குச் செய்த நன்மையை மறவாதிருத்தல் என்பதே இந்த அதிகாரத் தலைப்புக்குப் பொருளாகும் .
நமக்குப் பாடமாக அமைந்துள்ள குறளில் கொல்லப்பட்டுள்ள கருத்து என்ன தெரியுமா ?
ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறம் அன்று . ஒருவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும் என்பதே இதன் கருத்தாகும் .
இனி அடுத்த குறளுக்குச் செல்வோமா ? இந்தக் குறள் , கல்வி கற்கின்ற நமக்கு நல்வழி காட்டும் குறளாகும் . கல்வி என்ற அதிகாரத்தில் உள்ள இந்தக் குறளைப் படியுங்கள் !
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக !
இது என்ன சொல்கிறது என்று பார்ப்பதற்கு முன் சில சொற்களின் பொருட்களைத் தெரிந்து கொள்வோமா ?
கற்க - படியுங்கள்
கசடற - ( கசடு = குற்றம் ) குற்றம் நீங்க
கற்பவை - படிக்க வேண்டியவற்றை
கற்றபின் - படித்த பிறகு
நிற்க - வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள்
அதற்குத் தக - படித்தவற்றிற்கு ஏற்ப
இந்தக் குறளில் மூன்று கேள்விகளுக்கு விடை சொல்கிறார் திருவள்ளுவர் .
1. எவற்றைக் கற்க வேண்டும் ?- கற்க வேண்டியவற்றை ( நல்லவைகளை ) க் கற்க வேண்டும் .
2. எப்படிக் கற்க வேண்டும் ?- கசடு அற - குற்றம் நீங்குமாறு , அதாவது தவறான ஐயங்களை நீக்கிக் கற்க வேண்டும் .
3. கற்ற பிறகு என்ன செய்ய வேண்டும் ?- கற்ற நூல்களில் சொல்லப்பட்ட நல்ல அறங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் .
மாணவர்களே ! மீண்டும் குறளின் பொருள் முழுவதையும் படித்துப பாருங்கள் .
“ கற்கத் தகுந்த நூல்களை ஐயம் நீங்கக் கற்க வேண்டும் . அவ்வாறு கற்ற பிறகு கற்ற நூல்களில் சொல்லப்பட்டவாறு உயர்நெறியில் நடக்க வேண்டும் " - என்பதே அக்குறளின் சுருங்கிய பொருள் அல்லவா ?
இனி ! காலம் அறிதல் என்னும் அதிகாரத்தில் அமைந்த அடுத்தக் குறளைப் படிப்போம் ! ‘ காலம் அறிதல் ' என்பது , ஒரு செயலை நல்லமுறையில் செய்து முடிப்பதற்குப் பொருத்தமான காலம் எது என்று கண்டு அறிவதைக் குறிக்கும் .
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்
ஞாலம் - உலகம்
கருதினும் - விரும்பினாலும்
கைகூடும் - கைமேல் கிடைக்கும் ; வெற்றி கிடைக்கும்
காலம் கருதி - தகுந்த காலத்தைச் சிந்தித்து
இடத்தான் - தகுந்த இடத்தில்
செயின் - செய்தால்
‘ இந்த உலகத்தையே நாம் அடையவேண்டும் !’ என விரும்பினாலும் அதை அடைய முடியும் . அதற்கு என்ன செய்ய வேண்டும் ? அதற்குரிய காலத்தையும் இடத்தையும் சரியாகத் தேர்ந்து எடுத்துச் செய்தால் உலகையே அடையலாம் . இதுவே இக்குறளின் பொருள் ஆகும் . காலமும் இடமும் அறிந்து செய்தால் எந்த முயற்சியிலும் வெற்றி பெறலாம் என்பது கருத்து .
மாணவர்களே !
இனி , ‘ தெரிந்து வினையாடல் ' என்னும் அதிகாரத்தில் உள்ள அடுத்தக் குறளைப் படியுங்கள் !
இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
இதனை - செய்து முடிக்க வேண்டிய செயலை
இதனான் - இன்ன் இன்ன வழிமுறைகளால்
இவன் முடிக்கும் - இவனே செய்து முடிப்பான்
என்று ஆய்ந்து - என்பதனை எல்லாம் ஆராய்ந்து பார்த்து
அதனை - அந்தச் செயலை
அவன்கண் - ( நம்மால் தெரிவு செய்யப்பட்ட ) அவனிடத்தில்
விடல் - ஒப்படைக்க வேண்டும்
இதுவரை , குறளில் தொடர் தொடராகப் பொருளை ஆராய்ந்தோம் . இனி முழுமையாகப் பார்ப்போமா ?
“ செய்து முடிக்க வேண்டிய செயலை , இந்த வழிமுறைகளைக் கொண்டு இவன் செய்துமுடிப்பான் என்பதனை ஆராய்ந்து பார்த்து , அந்தச் செயலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் " என்பதே இக்குறளின் சுருக்கமான பொருளாகும் .
இந்தக் குறளில் ஒரு செயலைச் செய்வதற்கு உரியவனை ஆராய்ந்து கண்டுபிடித்துப் பயன்படுத்தும் திறமை கூறப்பட்டுள்ளது .
மாணவ மணிகளே !
முயற்சியின் சிறப்பை வள்ளுவர் ஓர் அதிகாரத்தில் விளக்கியுள்ளார் . அந்த அதிகாரத் தலைப்பு என்ன தெரியுமா ?
ஆள்வினை உடைமை !
ஆள்வினை உடைமை என்றால் இடைவிடாத முயற்சியைப் பெற்றிருத்தல் என்று பொருள் .
முயற்சி உடையவனுக்குக் கிடைக்கும் பயனைத் தெய்வத்தாலும் தடை செய்ய முடியாது என்பதை வள்ளுவர் ஒரு குறளில் கூறுகிறார் . அந்தக் குறள்தான் உங்களுக்குப் பாடமாக அமைந்துள்ளது . அந்தக் குறளைப் படிப்போமா ?
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்பதுதான் அந்தக் குறள்
தெய்வத்தான் - தெய்வத்தால்
ஆகாது - ஒரு தடையாக இருந்து
தன்மெய் வருத்த - செய்த உடல் வருத்தத்தின் அளவுக்காவது முயற்சி
கூலி தரும் - பலன் தரும்
ஒருவன் ஒரு செயலைச் செய்து முடிப்பதில் தெய்வமே தடையாக வந்து நின்றாலும் , அச்செயலை அவன் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சியால் முடிக்க முனைய வேண்டும் . அதைத்தான் வள்ளுவர் வற்புறுத்துகிறார் .