பாடம் - 15. சித்தர்த்தன் ( நாடகம் )

அறிமுகம்

ஹெர்மன் ஹெஸ்ஸே ஜெர்மானிய மொழியில் எழுதிய ' சித்தார்த்தன் ' என்ற புதினம் திருலோக சீதாராம் என்பவரால் ' சித்தார்த்தன் ' என்ற அதே பெயரில் திமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது . ஹெர்மன் ஹெஸ்ஸெ இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர் .

ஹெர்மன் ஹெஸ்ஸே படைத்த சித்தார்த்தன் என்ற இப்புதினம் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பெரிய புதினப் பனுவலாகும் . இந்தியத் துணைக்கண்டத்தில் இந்து மதம் , சமண மதம் , பௌத்த மதம் ஆகியவை தழைத்தோங்கிய காலக் கட்டத்தில் இப்புதினத்தின் கதை நிகழ்கிறது . கபிலவஸ்துவில் வாழ்ந்த இளவரசன் சித்தார்த்தன் புத்தன் ஆனதை நாம் அறிவோம் . இந்தப் புதினத்தில் உள்ள புதிய சித்தார்த்தனும் ஞானம் தேடிப் போவதாகக் கதை அமைகிறது . ‘ அந்தண குமாரன் ' என்ற முதல் அத்தியாயத்தில் உள்ள கதை நிகழ்வு நாடகம் ஆக்கப்பட்டு இங்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது .

Lesson Introduction

A Tamil writer, Thiruloka Sitaram translated the novel titled “Siddharthan” written in German language by the German novelist Herman Hesse. The same title “Siddharthan” was retained in Tamil also. The German novelist Herman Hesse was awarded Nobel Prize for literature. Herman Hesse’s novel “Siddharthan” was a great literary work of the twentieth century. The backdrop of this story happens to be a period when Hinduism, Jainism and Buddhism flourished in the subcontinent of India. We are aware of how prince Siddhartha of Kapilavastu became Buddha. Siddhartha, the hero of this novel also leaves his home in search of enlightenment. The story content of the first Chapter of this novel has been converted to a play which is given here in the form of a lesson.

முன் நிகழ்ச்சிச் சுருக்கம்

( சித்தார்த்தன் ஓர் அந்தணச் சிறுவன் . ஒருசமயம் , அவனது ஊர் வழியாகச் சமணத் துறவிகள் , யாரோடும் ஒட்டாமல் செல்வதைக் காண்கிறான் . அவர்களைக் கண்ட சித்தார்த்தனது மனது சமண மதத்தை நாடுகிறது . சமண மதத்தில் சேர விரும்புவதைத் தன் தந்தையிடம் தெரிவிக்க வருகிறான் . தந்தை அறையில் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார் . சித்தார்த்தன் அறைக்குள் நுழைகிறான் )

பாத்திரங்கள் : 1. சித்தார்த்தன்

2. சித்தார்த்தனுடைய தந்தை .

இடம் : அந்தணர் வீட்டின் உள்ளறை

நேரம் : முன்னிரவு

சி . தந்தை : யாரது சித்தார்த்தனா ?

( சிறிது மௌனத்திற்குப் பிறகு )

நீ எதையோ தெரிவிக்க விரும்புகிறாய் .

உள்ளத்திலிருப்பதைச் சொல்லப்பா .

சித்தார்த்தன் : தந்தையே ! தங்கள் அனுமதியின் பேரில் நாளைய தினம் இந்த இல்லம்விட்டு அகன்று சாதுக்கள் சங்கத்தில் சேர விரும்புகிறேன் . சமணன் ஆகிவிட விரும்புகிறேன் . எனது தந்தை இதை மறுக்கமாட்டார் என நம்புகிறேன் .

சி . தந்தை : ( சிறிது நேரம் யோசித்துவிட்டு ) சீறிச் சின மொழி கூறுதல் அந்தணர்க்கு அழகல்ல . என் இதயத்தில் இப்போது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது . இன்னொரு முறை இந்த வார்த்தைகளை உன்னிடமிருந்து நான் கேட்கக் கூடாது .

( சித்தார்த்தன் பேசாமல் நின்றுகொண்டிருக்கிறான் .)

சி . தந்தை : ( கோபமாக ) ஏன் நிற்கிறாய் ?

சித்தார்த்தன் : ( தழுதழுத்தக் குரலில் ) ஏன் என்பது தங்களுக்கே தெரியும் .

( தந்தை வெறுப்போடு அறையை விட்டு வெளியேறி , படுக்கைக்குச் செல்கிறார் . தூக்கம் பிடிக்காமல் , படுக்கை கொள்ளாமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறார் . அறையின் சிறிய சாளரத்தின் வழியே அசையாமல் கைகள் கட்டிய நிலையில் இருந்த சித்தார்த்தனை வேதனையோடு பார்க்கிறார் . பொழுது புலர்கிறது . சித்தார்த்தனிடம் செல்கிறார் )

சி . தந்தை : சித்தார்த்தா ! ஏன் காத்துக் கொண்டிருக்கிறாய் ?

சித்தார்த்தன் : ஏன் என்று தாங்களே அறிவீர்கள் !

சி . தந்தை : நன்று . காலை , மதியம் , மாலை வரையிலும் காத்துக் கொண்டே இருக்கப் போகிறாயா ?

சித்தார்த்தன் : நிற்பேன் . காத்திருப்பேன் .

சி . தந்தை : களைத்துப் போவாய் , சித்தார்த்தா .

சித்தார்த்தன் : ஆம் , களைத்துப் போவேன் .

சி . தந்தை : தூங்கி விழுந்துவிடுவாய் .

சித்தார்த்தன் : தூங்கி விழமாட்டேன் !

சி . தந்தை : இறந்து போவாயே , சித்தார்த்தா !

சித்தார்த்தன் : இறந்து போகிறேன் .

சி . தந்தை : தந்தை சொல்லுக்கு இணங்கி நடப்பதை விட , இறந்து போகவே முடிவு செய்து விட்டாயா ?

சித்தார்த்தன் : சித்தார்த்தன் தந்தைக்கு எப்போதும் பணிந்தே நடக்கிறான் .

சி . தந்தை : அப்படியானால் உன் திட்டத்தை விட்டு விடுவாயா ?

சித்தார்த்தன் : தந்தை என்ன சொல்கிறாரோ அதையே சித்தார்த்தன் செய்வான் .

( பகல் பொழுது நீள்கிறது . சித்தார்த்தனின் கால்கள் நடுங்குவதைத் தந்தை காண்கிறார் . ஆனால் அவன் முகத்தில் எந்த ஒரு நடுக்கமோ , வருத்தமோ இல்லை . அவன் பார்வை தொலைவில் நீண்டு கிடக்கிறது . சித்தார்த்தன் இனி வீட்டில் தங்கவே மாட்டான் என்பதைப் புரிந்து கொள்கிறார் .)

சி . தந்தை : ( சித்தார்த்தன் அருகில் சென்று தோளைத் தொட்டவாறே ) சித்தார்த்தா ! நீ கானகம் செல்கிறாய் , சமணன் ஆகியாய் . மகிழ்ச்சிதானே ! உன் தாயை வணங்கி விடை பெற்றுச் செல் .

சித்தார்த்தன் : நன்றி , தந்தையே ! ( சித்தார்த்தன் தந்தையின் முன் தாழ்ந்து வணங்குகிறான் . தந்தையின் கட்டளைப்படி தாய் இருப்பிடம் நோக்கிச் சென்று வணங்கி விடைபெறுகிறான் .)

அருஞ்சொற்பொருள்

தமிழாக்கம் - Translation in Tamil

நோபல் பரிசு - Nobel Prize

காலக் கட்டத்தில் - In the period of

புதினம் - Novel

அந்தணன் - Clergyman

பாத்திரங்கள் - Charactors

சாதுக்கள் - Saints

சாளரம் - Window

குறுக்கும் நெடுக்குமாக - Walking accross