பாடம் - 1. இறைவாழ்த்து, மொழிவாழ்த்து
அறிமுகம்
மாணவ நண்பரே!
நம் தமிழ்மொழியில், வாழ்த்து என்னும் சொல்லுக்கு "மகிழ்ச்சி தெரிவித்துப் பாராட்டு", “போற்று", “தன்மைகளைக் கூறு" எனப் பல பொருள்கள் உண்டு. இப்பாடப் பகுதியில் வாழ்த்து என்பது போற்று என்ற பொருளில் இடம் பெறுகிறது.
தமிழ் இலக்கியத்தில் வாழ்த்துகள் ஆறுவகைப்படும். அவை
1. இறை அல்லது கடவுள் வாழ்த்து
2. ஆ வாழ்த்து
3. அந்தண வாழ்த்து
4. அரச வாழ்த்து
5. நாட்டு வாழ்த்து
6. மொழி வாழ்த்து
என்பனவாகும் இவற்றை ஆறு வகையான வாழ்த்துகள் என்ற பொருளில் "அறுமுறை வாழத்து" என்பர் இவற்றில் இறை வாழ்த்து என்பது இறைவனைப் போற்றிப் பாடுவது. ஆ வாழ்த்து என்பது பசுவைப் போற்றிப் பாடுவது அந்தண வாழ்த்து என்பது அறநெறி தவறாதவர்களைப் போற்றிப் பாடுவது.
அரச வாழ்த்து என்பது மன்னனைப் போற்றிப் பாடுவது. நாட்டு வாழ்த்து என்பது நாட்டைப் போற்றிப் பாடுவது. மொழி வாழ்த்து என்பது மொழியை வாழ்த்திப் பாடுவது.
ஆறுவகை வாழ்த்துகளில் இறை வாழ்த்துப் பாடலாகத் தாயுமானவரின் பாடலும் மொழி வாழ்த்துப் பாடலாகச் சுப்பிரமணிய பாரதியாரின் பாடலும் இப்பாடப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
Lesson Intruduction
Dear Students
The word “Vazthu” (incovation) has several meanings in our Thamizh language such as felicitating wish or praise and enumerating the qualities etc., Here, in this lesson. The invocation has been presented in the context of “Praise”.
கற்றல் செயல்பாடுகள்
பாடல்களைப் படிப்பதற்கும் உரைநடையைப் படிப்பதற்கும் வேறுபாடு உண்டு. உரைநடையை அப்படியே படித்து விடலாம். ஆனால் பாடல்களைப் படிக்கும்போது அவற்றின் ஒலிநயம் கெடாமல் படிக்க வேண்டும் அவ்வகையில் நமக்குப் பாடமாக வந்துள்ள இறைவாழ்த்துப் பாடல் மூன்று வகையாக இங்கே தரப்படுகிறது
1. இசையுடன் பாடுதல்
2. சந்தத்துடன் பாடுதல்
3. பதம் பிரித்துப் படித்தல்
என்பவை அந்த மூன்று வகை ஆகும்.
நூல் அறிமுகம்
இந்த இறைவாழ்த்துப் பாடல் தாயுமானவ சுவாமிகளின் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் பராபரக்கண்ணி என்னும் பகுதியில் உள்ளது. இரண்டிரண்டு அடிகளாக வரும் பாடலைக் கண்ணி என்று கூறுவர். ஒவ்வொரு கண்ணியும் பராபரமே என்று முடிவதால் இது, பராபரக்கண்ணி என்று கூறப்படுகிறது. இந்நூலில் 392 பராபரக் கண்ணிகள் உள்ளன. அவற்றுள் இரண்டு கண்ணிகள் இங்கு, பாடப் பகுதியாக வைக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் அறிமுகம்
இந்த இறைவாழ்த்துப் பாடலின் ஆசிரியர் தாயுமானவ சுவாமிகள். இவர், 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு என்ற ஊரில் பிறந்தவர். திருமறைக்காட்டை வேதாரண்யம் என்றும் கூறுவர். பெற்றோர் கேடிலியப்பர். கஜவல்லி அம்மையார். இவர் , அக்காலத்தில் ஆட்சிபுரிந்த, திருச்சி மன்னர் விஜயரகுநாத சொக்கலிங்க நாயக்கரின் அரசாங்கக் கணக்கராகச் சிலகாலம் பணிபுரிந்திருக்கிறார். திருமணம் செய்து கொண்ட போதிலும் துறவு மனப் பான்மையே இவரிடம் மிகுந்திருந்தது. துறவு என்பது பற்று அற்ற தன்மையைக் குறிக்கும். குடும்பப் பற்றை நீக்கி வாழ்வதே துறவு வாழ்க்கை ஆகும்.
தாயுமானவர் இளமையிலேயே மௌன குரு என்ற துறவியைக் குருவாகக் கொண்டு துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். இவர், தமிழ் நாட்டில் உள்ள பல கோயில்களுக்கும் சென்று திருப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
அன்பைப் பெருக்கியென தாருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே! இறையே! பராபரமே!
எவ்வுயிரு மென்னுயிர்போ லெண்ணி யிரங்கவும்நின்
தெய்வ அருட் கருணை செய்யாய் பராபரமே.
செய்யுளைச் சந்தி பிரித்துப் படிக்கக் கேட்டல் (பொருள் புரியுமாறு செய்யுளைப் பிரித்தல்)
படித்துப் பழகுதல்
அன்னைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே
எவ்வுயிரும் என்உயிர் போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே.
சொல்தொடர் பிரிப்பு. அருஞ்சொல் பொருள் அறிதல், ஆகியவற்றைக் கண்டு செய்யுளின் திரண்ட கருத்தை அறிய முயலுங்கள்.
அன்னைப் பெருக்கியென தாருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே!
எவ்வுயிரு மென்னுயிர்போல் எண்ணி இரங்கவுநின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே!
மாணவ நண்பரே! இப்பொழுது பாடலில் அடிக்கோடிட்ட சொல்தொடர்களைக் காணுங்கள். அவை எதற்காக அடிக் கோடிடப்பட்டுள்ளன? அவற்றிற்கெல்லாம் சந்தி பிரித்து அறிய வேண்டும் அல்லவா?
இனி, ஒவ்வொரு தொடர்களாகப் பிரித்துக் காண்க.
பெருக்கியென தாருயிரை = பெருக்கி+எனது+ஆருயிரை
எவ்வுயிருமென்னுயிர் = எ+ உயிரும்+என்+உயிர்
இரங்கவுநின் = இரங்கவும்+நின்
அருட்கருணை = அருள்+கருணை
அருஞ்சொற் பொருள்
அடுத்து, பாடலில் வந்துள்ள அருஞ்சொற்களுக்கு நீங்கள் பொருள் உணரவேண்டும்.
இப்பாடலில் எந்தெந்தச் சொற்கள் அருஞ்சொற்கள்? முதலில் அருஞ்சொற்களின் பட்டியலைக் காணுங்கள்!
அன்னைப் பெருக்கி.
ஆருயிர்,
இன்பப் பெருக்கு,
பராபரம்
இவை யாவும் பொருள் அறிய வேண்டிய அருஞ்சொற்கள் அல்லவா? இனி இவற்றின் பொருள்களைக் காணுங்கள்!
அன்பைப் பெருக்கி = அன்பு என்னும் பண்பை மிகுதியாக ஊற்று எடுக்கச் செய்து.
ஆர் உயிர் = அருமையான உயிர்;
இன்பப் பெருக்கு = இன்பமாகிய வெள்ளம்;
பராபரம் = மேலான ஒப்பற்ற கடவுள்.
இனி இவற்றின் துணையோடு பாடலின் திரண்ட கருத்தைக் காண்போமா?
திரண்ட கருத்து அறிதல்
இப்போது, மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்.
அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே
எவ்வுயிரும் என்உயிர் போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே.
மாணவ நண்பரே! பாடலின் திரண்ட கருத்தை வாய்விட்டுப் படித்து உணருங்கள்!
“ என்னிடம் அன்பு என்ற உணர்வை அதிகமாக்கி என் அருமையான உயிரைக் காக்க வந்த இறைவனே! இன்ப வெள்ளமே! ஒப்பற்ற மேலான பொருளே! உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் என் உயிர் போல் நினைத்து அவ்வுயிர்கள்மேல் இரக்கம் கொள்ளும்படி, நீ எனக்கு அருள் புரிவாயாக" என்று தாயுமானவர் இறைவனிடம் வேண்டுகிறார்!
ஒத்த பிறபாடல்
தாயுமானவரின் இறைவாழ்த்துப் பாடலைப் படித்து, திரண்ட கருத்து அறிந்து, சொல்லாட்சித் திறனையும் அறிந்து மகிழ்ந்த நீங்கள். இப்பொழுது தாயுமானவரின் மற்றொரு பராபரக் கண்ணியையும் படித்து மகிழுங்கள்!
அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!
பயிற்சிகள்
(1) கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் இருந்து சரியான விடையைத் தேர்வு செய்யுங்கள்.
1) என்னுயிர் என்பதன் சரியான பிரிப்பு......
அ) என்+னுயிர்
ஆ) எ+உயிர்
இ) என்+உயிர் (விடை-இ)
2) அருட்கருணை என்பதைப் பிரிக்க வேண்டியமுறை .......
அ) அரும்+கருணை
ஆ) அருள்+கருணை
இ) அருட்+கருணை (விடை-ஆ)
3) இன்பப் பெருக்கு என்பது யாரைச் சுட்டுகிறது?
அ) மனிதர்
ஆ) கடவுள்
இ) வெள்ளம் (விடை-ஆ)
4) ஆருயிர் என்பதன் பொருள்...
அ) யாருடைய உயிர்
ஆ) பசுவின் உயிர்
இ) அருமையான உயிர் (விடை -இ)
5) பராபரம் என்பதன் பொருள்
அ) மேலான கடவுள்
ஆ) ஒப்பற்ற உயிர்
இ) பரந்துவிரிந்த உலகம் (விடை-அ)
2) கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொல்லைக் கொடுக்கப்பட்டுள்ள சொல்பட்டியலிலிருந்து இட்டு நிரப்புக:
உயிர்களையும்
உயிர்போல்
இரக்கம்
“உலகத்திலுள்ள எல்லா என் நினைத்து அவ்வுயிர்கள் மேல் -------------கொள்ளும்படி நீ எனக்கு அருள் புரிவாயாக"
விடை
“உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் என் உயிர்போல் நினைத்து அவ்வுயிர்கள் மேல் இரக்கம் கொள்ளும்படி நீ எனக்கு அருள் புரிவாயாக"
3) தாயுமானவரின் இறை வாழ்த்திலிருந்து சில வினாக்கள் தரப்பட்டுள்ளன.
அந்த வினாக்களுக்கு விடை அறிய முயற்சி செய்யுங்கள்.
1. தாயுமானவர் இறைவனை எவ்வாறெல்லாம் அழைக்கிறார்?
இன்பப் பெருக்கே! இறையே! பராபரமே! என அழைக்கிறார்.
2. இன்பமாகிய வெள்ளமே! இறைவனே! மேலான ஒப்பற்ற கடவுளே! என்பவற்றின் பொருள் என்ன?
இன்பமாகிய வெள்ளமே!
இறைவனே! மேலான ஒப்பற்ற கடவுளே! என்பன பொருளாகும்.
3. இறைவன் எதனைக் காக்க வந்ததாகக் குறிப்பிடுகிறார்?
அரிய உயிரைக் காக்க வந்ததாகக் குறிப்பிடுகிறார்.
4. இறைவன் எதனைப் பெருக்குவதாகத் தாயுமானவர் கூறுகிறார்?
அன்பு என்ற உணர்ச்சியை அதிகப்படுத்துவதாகக் கூறுகிறார்.
5. தாயுமானவர் உலகத்திலுள்ள எல்லாவுயிர்களையும் எவ்வாறு எண்ணவேண்டும் என விரும்புகிறார்?
'எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் எண்ண வேண்டும்' என விரும்புகிறார்.
6. இறைவனிடம் எத்தகைய கருணையை வேண்டுகிறார்?
இறைவனிடம் (தெய்வ அருள் கருணையை) தெய்வீக இரக்கத்தைத் தருமாறு வேண்டுகிறார்.
7. தாயுமானவர் இறைவனிடம் அருள் புரியுமாறு எதற்காக வேண்டுகிறார்?
உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி, அவற்றின் மீது இரக்கம் கொள்வதற்காக இறைவனின் அருளை வேண்டுகிறார்.
மொழி வாழ்த்து
நூல் அறிமுகம்
மாணவ நண்பரே! முன்பகுதியில் அறிந்துகொண்ட அறுமுறை வாழ்த்தினுள் ஒன்றான மொழிவாழ்த்துப் பாடலை இப்பொழுது படிக்க இருக்கிறீர்கள்! இது. நம் தாய் மொழியாகிய, தமிழ்மொழியின் பெருமைகளைக் கூறி வாழ்த்தும் பாடலாகும். இப்பாடல், சுப்பிரமணிய பாரதியாரால் இயற்றப்பட்ட தமிழ் மொழி வாழ்த்து என்னும் பகுதியில் உள்ள பாடலாகும்.
ஆசிரியர் அறிமுகம்
சுப்பிரமணிய பாரதியார் கி.பி. 1882 இல் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் பல மொழிகளைக் கற்றவர். இவரது தந்தையார் சின்னச்சாமி என்பவர் ஆவர். இவரது தாயார் இலக்குமி அம்மையார். இவர் கவிதைகள். இசைப்பாடல்கள், உரைநடை எனப் பலவகை இலக்கியங்களைப் படைத்துள்ளார். “கண்ணன் பாட்டு", “குயில் பாட்டு" “பாஞ்சாலி சபதம்" முதலியவை புகழ் பெற்ற பாடல்கள் ஆகும்.
சந்தத்துடன் படித்தல்
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!
படித்துப்பழகுதல்
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழிய வே!
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்று என்றும் வாழிழ வே!
பொருள் புரியுமாறு பிரித்துப் படித்தல்
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழிய வே!
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்று என்றும் வாழிய வே!
அருஞ்சொற்பொருள்
மாணவ நண்பரே!
அடுத்து, பாடலில் வந்துள்ள அருஞ்சொற்களுக்கு நீங்கள் பொருள் உணரவேண்டும்.
இந்தப் பாடலில், எந்தெந்தச் சொற்கள் அருஞ்சொற்கள்? முதலில் அருஞ்சொற்களின் பட்டியலைத் திரையில் காணுங்கள்!
நிரந்தரம்
வாழிய
வண்மொழி
ஏழ்கடல்
வைப்பினும்
இசைகொண்டு
இனி. அருஞ்சொற்களின் பொருள்களைத் திரையில் காணுங்கள்!
நிரந்தரம் = நிலைபெற்று
வாழிய = வாழ்க
வண்மொழி = வளம்பெற்ற மொழி
ஏழ்கடல் = ஏழு கடல்
வைப்பினும் = நிலப்பகுதியிலும்
இசைகொண்டு = புகழுடன்
திரண்ட கருத்து அறிதல்
இப்போது மீண்டும் ஒருமுறை பாடலைப் படித்துப் பாருங்கள்.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழிய வே!
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்று என்றும் வாழிய வே!
தமிழ் வாழ்க! அது நிலைபெற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!
வானம் பெற்றுள்ள அளவிற்குப் பழமையும் பெருமையும் கொண்ட வளம்பெற்ற தமிழ் மொழி வாழ்க! வாழ்க!!
ஏழு கடல்களால் சூழப்பெற்ற பூமியில் புகழ் பரப்பி, தமிழ் வாழ்க! இத்தகைய பெருமை பெற்ற எங்கள் தமிழ் மொழி என்றும் நிலைத்து வாழ்க என்று பாரதியார் தமிழ்மொழியைப் போற்றியுள்ளார்.
சொல்லாட்சித் திறன்
மாணவ நண்பரே!
இப்பாடலில் தமிழ் மொழி பழமையும் பெருமையும் வாய்ந்தது என்பதை உணர்த்த வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி என்று பாடியுள்ளார். வானம் மிகப் பழமையானது. அந்த வானம் அறிந்தது அனைத்தும் அறிந்த பழமை வாய்ந்த மொழி தமிழ்மொழி என்று குறிப்பிட்டுள்ளது சொல்லாட்சித் திறன் ஆகும். உலக நாடுகள் பலவற்றிலும் புகழுடன் விளங்கும் மொழி என்பதைப் பாரதியார் பின்வரும் தொடர் வாயிலாக விளக்கியுள்ளார். ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழியவே என்னும் தொடர்தான் அது. கடலால் சூழப்பட்ட உலகில் புகழுடன் நிலைத்து வாழ்க என்பது இதன் பொருள். உலகை ஏழ்கடல் வைப்பு என்று கூறியிருப்பது சிறந்த சொல்லாட்சித் திறம் ஆகும். இதே போல் நீங்களும் சொல்லாட்சித் திறன் காண முயலுங்கள்.
ஒத்த பிற பாடல்
மாணவ நண்பரே! பாரதியாரின், தமிழ்மொழி வாழ்த்தினைப் பாடி ஒலிநயம். சொல்லாட்சித்திறன், திரண்ட கருத்து முதலானவற்றை அறிந்து கொண்ட நீங்கள் இதேபோல் ஓசைநயம். பொருள்நயம் வாய்ந்த பின்வரும் மொழி வாழ்த்துப் பாடலைப் பாடியும் படித்தும் மகிழ்க!
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுத் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
- பெ.சுந்தரனார்
பயிற்சிகள்
1. கொடுக்கப்பட்டுள்ள விடகளில் இருந்து சரியான விடையைத் தேர்வு செய்யுங்கள்.
1. வானமளந்தது என்பதனைப் பிரிக்கும் முறை
அ) வான+மளந்தது
ஆ) வானம்+அளந்தது
இ) வானம+ளந்தது
விடை(ஆ)
2. வண்மை என்பதன் பொருள்
அ) கடுமை
ஆ) வலிமை
இ) வளம்
விடை(இ)
3. தமிழ் மொழி பழமையும் பெருமையும் கொண்டது என்பதற்குச் சொல்லப்பட்டுள்ள இயற்கைப் பொருள்
அ) காற்று
ஆ) வானம்
இ) கடல்
விடை (ஆ)
II கீழ்க்காணும் வினாக்களுக்குப் பதில் கூறியும், எழுதியும் பழகவும்.
1. நிலைபெற்று வாழ்க என்பதற்குப் பாரதியார் குறிப்பிட்டுள்ள சொல் யாது?
நிலைபெற்று வாழ்க என்னும் பொருளில் நிரந்தரம் என்ற சொல்லைப் பாரதியார் குறிப்பிட்டுள்ளார்.
2. வாழிய என்பதன் பொருள் யாது?
வாழிய என்னும் சொல்லின் பொருள் வாழ்க என்பது ஆகும்.
3. ஏழ்கடல் வைப்பு என்பது எதைக் குறிக்கும்?
ஏழ்கடல் வைப்பு என்பது உலகத்தைக் குறிக்கும்.
4. இசைகொண்டு என்பதன் பொருள் யாது?
இசைகொண்டு என்பதன் பொருள் புகழ்கொண்டு என்பது ஆகும்.
5. என்றென்றும் என்பதை எவ்வாறு பிரிக்கலாம்?
என்று+என்றும் எனப் பிரிக்கலாம்.
இலக்கணம்
எழுத்து - உயிரெழுத்து
ஒரு மொழிக்கு அடிப்படையாக இருப்பது எழுத்து.
எழுத்து வகைகள்
தமிழ்மொழியில் உள்ள எழுத்துகளை இரண்டு வகையாகக் கூறுவர்.
1. முதல் எழுத்து
2. சார்பு எழுத்து
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பதினெட்டு மெய் எழுத்துகளும் முதல் எழுத்துகள் எனப்படும். அவற்றுள் உயிர் எழுத்துகளை இங்கே படிப்போம்.
உயிர் எழுத்துகள்
தமிழ் மொழிக்கு உயிராய் விளங்கும் எழுத்துகள் உயிர் எழுத்துகள் எனப்படும்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ. ஓ, ஒள என்னும் பன்னிரண்டு எழுத்துகளும் உயிர் எழுத்துகள் எனப்படும்.
உயிரெழுத்து வகை
உயிரெழுத்து இரண்டு வகைப்படும்.
1. குறில்
2. நெடில்
குறுகிய ஓசை உடைய எழுத்துகள் குறில் எழுத்துகள் எனப்படும்
அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துகளும் குறில் எழுத்துகள்
நீண்ட ஓசை உடைய எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்படும்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துகளும் நெடில் எழுத்துகள்.
பயிற்சிகள்
அ) பின்வரும் சொற்களில் உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களை மட்டும் எடுத்து எழுதுக.
கடமை, அம்மா, தம்பி, அண்ணன், அப்பா, ஊர், மான், குதிரை, எலி, முருகன், தாமரை, ஏணி.
விடை: அம்மா, அண்ணன், அப்பா, ஊர், எலி, ஏணி.
ஆ) பின்வரும் சொற்களில் குறில் எழுத்துகளில் தொடங்கும் சொற்களை எடுத்து எழுதுக.
மாடு ஆடு, அணில், ஏன், ஊர், இலை, ஊதல், உரல், அலை ஆணி, மாலை, எண், காடு, ஒட்டகம்.
விடை: அணில், இலை, உரல், அலை, எண், ஒட்டகம்.
இ) பின்வரும் கோடிட்ட இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக.
உயிர் எழுத்து ---------------- வகைப்படும். (இரண்டு/மூன்று)
உயிர் எழுத்துகளின் எண்ணிக்கை -------------- (பத்து/பன்னிரண்டு)
உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துகளின் எண்ணிக்கை --------- (ஐந்து/ஏழு)
உயிர் எழுத்துகளில் நெடில் எழுத்துகளின் எண்ணிக்கை -------------- (ஏழு/ஆறு)
விடை: இரண்டு, பன்னிரண்டு, ஐந்து, ஏழு
ஈ) பின்வரும் தொடர்கள் சரி அல்லது தவறு என்று குறிப்பிடுக.
1. ஒரு மொழிக்கு அடிப்படையாக இருப்பது எழுத்து.
2. தமிழ் எழுத்துகளை மூன்று வகைகளாகக் கூறுவர்.
3. தமிழ் மொழிக்கு உயிராய் விளங்கும் எழுத்து உயிர் எழுத்து.
விடை: சரி, தவறு, சரி