பாடம் - 4. நாட்டுப்புறப் பாடல்கள்
அறிமுகம்
மாணவர்களே !
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு
நெய்மணக்கும் கத்தரிக்காய் !
நேத்து வைச்ச மீன்குழம்பு
என்னை இழுக்குதையா
என்பது ஒரு திரைப்படப் பாடல் . இந்தப் பாடலை உங்களில் சிலர் கேட்டிருக்கலாம் . இதைப் போல்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்து வகை நானறியேன் . . . . .
தமிழ்நாட்டுக் கிராமப் புறங்களில் பாடப்படும் ( குழந்தைகளைத் தொட்டிலில் இட்டுப் பாடும் ) தாலாட்டுப் பாடல்கள் . இறப்பு வீட்டில் பாடப்படும் ஒப்பாரிப் பாடல்கள் முதலானவற்றையும் அறிந்திருப்பீர்கள் .
இவை போன்ற பாடல்களை . நாட்டுப்புறப் பாடல்கள் எனவும் , நாடோடிப் பாடல்கள் எனவும் கிராமியப் பாடல்கள் எனவும் கூறுகிறார்கள் . தனி ஒருவரால் எழுதி வைக்கப்படாமல் வாய்மொழியாகக் கேட்டுப் பாடப்படுவதால் இப்பாடல்களை வாய்மொழி இலக்கியம் என்றும் கூறுகிறார்கள் . இவை . தொன்றுதொட்டு நாட்டுப்புறங்களில் பாடப்பட்டு வருகின்றன . அண்மைக் காலமாக இவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டும் , பாடியும் வருகிறார்கள் .
நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டு , ஒப்பாரி , நாட்டுவளம் , வழிபாடு , வீட்டு நிகழ்ச்சிகள் , தொழில்கள் , தொழிலாளர் நிலைமை , காதல் முதலானவை அமைந்திருக்கின்றன . நாட்டுப்புறப் பாடல்களில் பேச்சு வழக்குச் சொற்கள் மிகுந்து காணப்படும் . இவை எளிமையானவை , இனிமையானவை .
இப்பகுதியில் , தாலாட்டுப்பாடல் , நாட்டு வளப்பாடல் ஆகிய இரண்டு பாடல்கள் வழங்கப்பட்டுள்ளன . இனி ஒவ்வொன்றாகக் காண்போம் .
Lesson Introduction
Dear Students
You might have listened to a few folk songs in Films.
You may known the folk songs sung in the rural areas such as THALATTU (LULLUBY)
and OPPARI (LYRICS OF CONDOLENCE).
Folk songs of this type are known as gypsy lyrics and rural odes. Since these types of song are not in written form but are learnt or handed down through mere listening: they are also known as ORAL LITERATURE. These songs have been sung since the ancient days.
Over the years. People have collected such folk songs as the
· THALATTU (LULLUBY).
· OPPARI (LYRICS OF CONDOLENCE).
· NATTUVALAM (WEALTH OF A NATION).
· VAZHIPADU (PRAYER).
· VEETTU NIGAZHCHIGAL (VARIOUS HAPPENINGS AT HOME).
· THOZHILGAL (OCCUPATIONS).
· THOZHILALAR NILAIMAI (CONDITIONS OF THE WORKERS).
· KAADHAL (Which means LOVE) etc.
A greater use of colloquial words and slang is quite common in folk songs than in other songs. The folk songs are sweet and simple.
தாலாட்டுப்பாடல் - அறிமுகம்
தால் என்ற சொல்லுக்கு நாக்கு என்பது பொருள் . தாயானவள் . தன்னுடைய நாவினை .
அசைத்துப் பாடி . குழந்தையின் தால் ( நாக்கு ) அசைவதற்குப் பயிற்சி கொடுக்கிறாள் . எனவே , இப்பாடலைத் தாலாட்டுப் பாடல் எனக் கூறுகிறோம் இது குழந்தையை உறங்க வைக்கவும் பயன்படுகிறது .
இந்தத் தாலாட்டுப் பாடலில் குழந்தையின் சிறப்பு . குழந்தையின் வருங்காலம் பற்றிய தாயின் கற்பனை முதலியவை இடம்பெறும் . மேலும் , குலப்பெருமை , தாய்மாமன் பெருமை , குழந்தை இல்லாவிட்டால் தாயாருக்கு ஏற்படும் இழிவு ஆகியவையும் தாலாட்டுப் பாடல்களில் இடம்பெறும் .
கிராமப்புறத் தாய்மார்களே தாலாட்டுப் பாடல்களின் ஆசிரியர்கள் ஆவார்கள் .
கீழே தரப்பட்டுள்ள பாடலைப் பாடிப் பழகுக
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ !
கண்ணே கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு !
மாசிப்பிறையோ - நீ
வைகாசி மாங்கனியோ !
தேசப் பிறையோ - நீ
தெவிட்டாத மாங்கனியோ ! ( ஆராரோ . . .)
எங்கள் குலம் மங்காமல்
எதிர்க் குலத்தார் ஏசாமல்
தங்கமலி பொக்கிசத்தைத்
தானாள வந்த கண்ணோ !
கண்ணே ! கண்ணுறங்கு !
கண்மணியே கண்ணுறங்கு ! ( ஆராரோ . . .)
படிக்கும் முறை
நீ ! மாசிப்பிறையோ
நீ ! வைகாசி மாங்கனியோ !
நீ ! தேசப் பிறையோ
நீ தெவிட்டாத மாங்கனியோ !
எங்கள் குலம் மங்காமல்
எதிர்க் குலத்தார் ஏசாமல்
தங்க ( ம் ) மலி பொக்கிசத்தைத்
தான் ஆள வந்த கண்ணோ !
கண்ணே ! கண் உறங்கு !
கண்மணியே ! கண் உறங்கு !
அருஞ்சொற்பொருள்
மாசி = மாசிமாதம்
பிறை = இளம் நிலவு
வைகாசி = வைகாசி மாதம்
மாங்கனி = மாம்பழம்
தேசப்பிறை = ( தேசம் + பிறை ) ஒளி பொருந்திய இளம் நிலவு
குலம் = குடும்பம்
தெவிட்டாத = வெறுப்பினை ஏற்படுத்தாத
மங்காமல் = அழியாமல்
ஏசாமல் = குறைகூறாமல் / பழி கூறாமல்
மலி = செழித்த / நிறைந்த
பொக்கிசம் = களஞ்சியம் , கருவூலம் ( தங்கம் , வெள்ளி போன்ற பொருள்களைப் பாதுகாப்பாக வைக்கும் இடம் )
திரண்ட கருத்து
தாயானவள் தன் குழந்தையின் அருமை பெருமைகளைக் கீழ்க்காணுமாறு கூறித் தாலாட்டுகிறாள் . “ என் கண் போலவும் கண்ணின் மணி போலவும் விளங்குபவனே ! மாசி மாத இளம் பிறை போன்றவனே ! வைகாசி மாதத்தில் கிடைக்கும் மாங்கனி போல் இனிமையானவனே ! ஒளிபொருந்திய இளம் நிலவே ! உண்ண உண்ணத் தெவிட்டாத மாங்கனி போன்றவனே ! எங்கள் குடும்பப் பெருமை காப்பதற்கு வந்தவனே ! வாரிசு அற்ற குடும்பம் என்று நம் எதிராளிகள் நம்மைப் பழி காப்பாற்றுவதற்காக வந்து தோன்றியவனே ! பொன் நிறைந்த கருவூலத்தை ஆள வந்த கண் போன்றவனே ! நீ நன்றாகக் கண் உறங்கு !
பொருள் நயம்
குழந்தை வளர்வது குடும்பச் சொத்து சுகங்களை அனுபவிக்க மட்டுமல்ல . குலத்துக்கு அக்குழந்தை பெருமை சேர்க்க வேண்டும் : குலத்தின் எதிரிகளின் பழிச்சொல்லிலிருந்து குடும்பத்தைக் காக்கவும் வேண்டும் என்பது நமக்கு விளங்குகிறது .
ஒத்த பிறப் பாடல்
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
தேனோ திரவியமோ
தெவிட்டாத தெல்ளழுதோ ?
கோடைப் பலாச் சுளையோ ?
கொஞ்ச வந்த ரஞ்சிதமோ ?
வானத்து மீனோ ? என்னை
வாழ வைக்க வந்தவளோ ?
மேகத்து மின்னலோ நீ
தாகத்தைத் தீர்க்க வந்த
தங்க இள நீரோ ?
என்ற தாலாட்டையும் பாடி மகிழுங்கள் .
நாட்டுவளம் கூறும் பாடல் - அறிமுகம்
நாட்டுப்புறப் பாடல் வரிசையில் அடுத்து நீங்கள் படிக்க இருப்பது நாட்டுவளம் கூறும் ஒரு பாடல் .
இப்பாடல் , தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்களுள் ஒன்றான மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியின் நீர்வளம் . நிலவளம் பற்றிக் கூறும் பாடல் ஆகும் .
அக்காலத்தில் மாதம் மூன்றுமுறை மழை பெய்தமை : வாழை , கமுகு ( பாக்கு ), கரும்பு , தென்னை , நெற்பயிர் முதலானவை பயிரிடப்பட்ட செய்திகள் . உழவு செய்த முறை : மக்கள் பசி பஞ்சம் இல்லாமல் வாழ்ந்தமை ; முகத்தல் அளவைப் பெயர்கள் போன்ற செய்திகளை இப்பாடல் தெரிவிக்கிறது .
படித்தல்
பாடுமுறை
வாழை வடக்கீனும் : வான் கமுகு தெற்கீனும் :
கரும்பும் இளநீரும் கண்திறந்து மடை பாயும் :
கட்டுக் கலம் காணும் : கதிர் உழக்கு நெற்காணும் :
அரிதாள் அறுத்துவர மறுதாள் பயிராகும் :
அரிதாளின் கீழாக ஐங்கலந்தேன் கூடுகட்டும் ;
ஆனை கட்டும் தாளும் வான்மட்டும் போராகும் :
மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெலென்று
ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை :
மாதமொரு மும்மாரி வருசிக்கும் தென் மதுரை ;
பஞ்சை பனாதி பரதேசி கிடையாது :
பஞ்சம் கிடையாது பாண்டி வள நாட்டினிலே :
கருப்புக் கிடையாது கனத்ததொரு மதுரையிலே :
மதுரையை அடுத்தவர்கள் வாழ்வரசு பெற்றிடுவார் .
படிக்கும்முறை
வாழை வடக்கு ஈனும் . வான் கமுகு தெற்கு ஈனும் ;
கரும்பும் இளநீரும் கண்திறந்து மடை பாயும் ;
கட்டுக் கலம் காணும் : கதிர் உழக்கு நெல் காணும் ;
அரிதாள் அறுத்துவர மறுதாள் பயிர் ஆகும் ;
அரிதாளின் கீழாக ஐங்கலம்தேன் கூடுகட்டும் ;
ஆனைகட்டும் தாளும் வான்மட்டும் போர் ஆகும் ;
மாடு கட்டிப் போர் அடித்தால் மாளாது செந்நெல் என்று
ஆனைகட்டிப் போர்அடிக்கும் அழகான தென்மதுரை ;
மாதம் ஒரு மும்மாரி வருசிக்கும் தென்மதுரை ;
பஞ்சை பனாதி பரதேசி கிடையாது ;
பஞ்சம் கிடையாது பாண்டி வள நாட்டினிலே ;
கருப்புக் கிடையாது கனத்ததொரு மதுரையிலே ;
மதுரையை அடுத்தவர்கள் வாழ்வு அரசு பெற்றிடுவார் !
அருஞ்சொற்பொருள் :
ஈனும் = கொடுக்கும் : தரும் ; காய்க்கும்
வான் கமுகு = உயரமான பாக்குமரம்
கண் = இங்குக் கணு என்னும் பொருளில் வந்துள்ளது
மடை = நீர் ஓடை
உழக்கு = பண்டைக் கால அளவைப் பெயர் . ( உழக்கு = கால்படி ; இன்றைய அளவுப்படி 250 மில்லிலிட்டர் )
கலம் = ஓர் அளவு ( ஒரு மூட்டையாகக் கட்டப்படும் அளவு )
காணும் = விளைச்சல் காணப்படும்
அரிதாள் = நெற்பயிரின் அடிப்பகுதி . ( கதிரை அறுவடை செய்த பின் எஞ்சி நிற்கும் பகுதி )
ஐங்கலம் = ஐந்து படி அளவு
ஆனை = ' யானை ' என்பதன் பேச்சுவழக்குச்சொல்
வான்மட்டும் = வானைத்தொடும் அளவுக்கு
போர் = வைக்கோல் போர்
மாளாது = விரைவில் முடியாது
மும்மாரி = மூன்று மழை
வருசிக்கும் = பெய்யும் , வருவிக்கும்
பஞ்சை பனாதி = ஏழை மக்கள் : ஆதரவு இல்லாதவர் .
பரதேசி = ஊர் ஊராகச் சுற்றுபவர் .
பாண்டி வள நாட்டில் = ஒரு காலத்தில் பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கிய மதுரை மாநகரில்
கருப்பு = பஞ்சம் : வறுமை
கனத்த = பெருமை மிக்க : பெரிய
அடுத்தவர்கள் = சேர்ந்தவர்கள்
வாழ்வரசு = நல்வாழ்க்கை ( அரசரைப் போல வாழும் வாழ்க்கை )
சொற்களை பிரித்துப் படிக்க அறிதல் :
மாணவர்களே ! இப்பாடலில் வந்துள்ள சொற்களையும் தொடர்களையும் கீழ்க்காணும் முறையில் பிரித்துப் படியுங்கள் .
வடக்கீனும் = வடக்கு + ஈனும்
தெற்கீனும் = தெற்கு + ஈனும்
நெற்காணும் = நெல் + காணும்
பயிராகும் = பயிர் + ஆகும்
ஐங்கலந்தேன் = ஐந்து + கலம் + தேன்
போராகும் = போர் + ஆகும்
போரடித்தால் = போர் + அடித்தால்
செந்நெலென்று = செம்மை + நெல் + என்று
மாதமொரு = மாதம் + ஒரு
மும்மாரி = மூன்று + மாரி
தென்மதுரை = தெற்கு + மதுரை
வளநாட்டினிலே = வளமை + நாட்டினிலே
கனத்ததொரு = கனத்தது + ஒரு
வாழ்வரசு = வாழ்வு + அரசு
பிறமொழிச் சொற்களுக்குரிய தமிழ்ச் சொற்கள் அறிதல்
இப்பாடலில் , மாதம் . வருசிக்கும் . பனாதி , பரதேசி ஆகிய வடமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன . இவற்றுக்கும் நேரான தனிச் தமிழ்ச் சொற்கள் பின்வருமாறு :
மாதம் = திங்கள்
வருசிக்கும் = கொடுக்கும் : ( பெய்யும் )
பரதேசி = ஊர் ஊராகச் சுற்றுபவர் ( துறவி )
பனாதி = ஆதரவற்றவர்
திரண்ட கருத்து
முன்காலத்தில் பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கியது மதுரை மாநகரம் . அந்த நகரத்தில் வாழைமரம் தன் இயல்புக்கு மாறாகச் செழித்து வளர்ந்து வடக்கு நோக்கிக் குலை தள்ளும் : பாக்கு மரங்களும் தம் இயல்புக்கு மாறாகத் தெற்கு நோக்கிக் குலை தள்ளும் . ( வாழை தெற்கு நோக்கியும் . கமுகு கிழக்கு நோக்கியும் குலை தள்ளும் இயல்பு உடையன . காய்கள் பெருத்தும் மிகுந்தும் இருப்பின் தத்தம் இயல்புக்கு மாறாகக் குலைதள்ளும் ) கரும்பு , இளநீர் ஆகியவை நன்கு செழித்திருந்தமையால் அவற்றின் கணுக்களிலிருந்து கருப்பஞ் சாறும் இளநீரும் தானாக வயலில் உள்ள நீரோடைகளில் பாயும் .
நெற்பயிரை அறுவடை செய்து கட்டும் ஒவ்வொரு கட்டிலும் ஒரு கலம் நெல் கிடைக்கும் ; ஒரு கதிரில் கால்படி கிடைக்கும் அளவுக்குப் பெரும் விளைச்சல் விளைந்திருக்கும் : முழு வயலும் அறுவடை செய்துமுடிக்கும் முன் . அரிதாளில் மறுதாள் பயிராகும் :
நெற்பயிரை ஒட்டி அறுத்து விடாமல் இடைவெளி விட்டு அறுத்திருப்பதால் அந்த இடைவெளியில் ஐந்து கலம் ( படி ) தேன் கிடைக்கும் அளவுக்குத் தேன்கூடு கட்டுமாம் !
நெற்பயிரைக் களத்துமேட்டில் போட்டு , மாடுகளைக் கொண்டு போரடித்தால் விரைந்து போரடிக்க இயலாது என்பதால் யானைகளைக் கொண்டு போரடிக்கும் அளவுக்கு மிகுதியான நெல்விளைச்சலைக் கொண்டு விளங்கியது மதுரையாகும் !
குவித்து வைக்கப்பட்டுள்ள நெற்போர் வானைத்தொடும் அளவுக்கு மிகுந்து காணப்பட்டது ! ( அறம் தவறாத அந்தணர்க்காவும் . நீதி தவறாத அரசர்க்காகவும் : கற்புத் தவறாத பெண்டிர்க்காவும் என ) திங்கள் தோறும் மூன்று மழை தவறாமல் பெய்யுமாம் !
இத்தகைய வளத்தால் தென்மதுரையில் பசியால் வருந்துவோர் . ஏழைகள் , ஊர் ஊராகச் செல்லும் பிச்சைக்காரர்கள் இல்லை !
பெருமைமிக்க இந்த மதுரையில் எப்பொழுதும் வறுமை கிடையாது :
மதுரையிலேயே பிறந்து வாழ்ந்து வருபவர்களை மட்டும் அல்லாது வந்தாரையும் நல்வாழ்க்கை வாழ வைக்கும் வளமான நாடு மதுரையாம் !
இவ்வாறு , இப்பாடலில் , மதுரையின் வளம் கூறப்படுகிறது .
ஒத்த பிற பாடல்கள்
இப்பொழுது படித்து மகிழ்ந்ததைப் போன்றுள்ள கீழ்க்காணும் பாடலையும் படித்து மகிழ்க !
மதுரைக்கு நேர் கிழக்கே
மழை பெய்யாக் கானலிலே
தங்கக் கலப்பை கொண்டு - சொக்கர்
தரிசுழுகப் போனாராம் :
முத்து விதை பாவி
மிளகுச் சம்பா நாத்துநட்டு - சொக்கர்
பவளக் குடை பிடித்துப்
பயிர் பார்க்கப் போனாராம் .
சரம் சரமா நெல் விளையும்
சந்நிதி போல் போர் ஏறும்
கட்டுக் கலங் காணும்
கதிர் உழக்கு நெல்காணும்
அடித்துப் பொலி தூற்ற
அதுவும் கலங்காணும்
இலக்கணம்
பெயர்ச்சொல்
பொருள்களின் பெயர்களைக் குறிப்பது பெயர்ச்சொல் எனப்படும் . பெயர்ச்சொல் வகைகள்
பெயர்ச்சொல் ஆறு வகைப்படும் . அவை .
1. பொருட்பெயர்
2. இடப்பெயர்
3. காலப்பெயர்
4. சினைப்பெயர்
5. குணப்பெயர்
6. தொழிற்பெயர்
என்பவை ஆகும் .
பொருட்பெயர்
பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் ஆகும் .
எ - டு . கணினி , பேருந்து , வளவன்
இந்த எடுத்துக்காட்டுகளில் கணினி , பேருந்து ஆகியவை உயிர் இல்லாத பொருள்கள் .
வளவன் உயிர் உள்ள பொருள் . எனவே பொருட்பெயர் உயிர் உள்ள பொருளையும் உயிர் இல்லாத பொருளையும் குறிக்கும் என்று அறிந்து கொள்ளலாம் .
இடப்பெயர்
இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் ஆகும் .
எ - டு .: மதுரை , கோயில் , தொழிற்சாலை .
காலப்பெயர்
காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் ஆகும் .
எ - டு . கோடை , பகல் , மார்கழி
சினைப்பெயர்
உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும் .
எ - டு . வேர் , தலை , வால் , பல்
பண்புப் பெயர்
ஒரு பொருளின் அல்லது ஒருவரின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப் பெயர் ஆகும் .
எ - டு . கருமை , வட்டம் , அருள்
தொழிற்பெயர்
தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் ஆகும் .
எ - டு . படித்தல் , பாடல் , ஓடுதல் , ஆட்டம்
\