பாடம் - 8. புத்தரும் ஏழைச்சிறுவனும்

( தொடர்நிலைச்செய்யுள் )

அறிமுகம்

ஒரு செய்யுளில் ( பாடலில் ) ஒரு கருத்து இடம் பெறுவது உண்டு . பல செய்யுள்கள் தொடர்ந்து வந்து ஒரு பொருளை அல்லது ஒரு கதைப் பகுதியைத் தருவதும் உண்டு . அவ்வாறு பல செய்யுள்கள் தொடர்ந்து வந்து ஒரு கதையை விளக்குவதைத் தொடர்நிலைச் செய்யுள் என்பர் . இராமாயணம் . பாரதம் . சிலப்பதிகாரம் முதலானவை தொடர்நிலைச் செய்யுள் வகையைச் சார்ந்தவை .

ஆசிய ஜோதி என்பது புத்தரின் வரலாற்றைக் கூறும் ஒரு தொடர்நிலைச் செய்யுள் . இதில் " புத்தரும் ஏழைச் சிறுவனும் " என்னும் பகுதியில் சில பாடல்கள் பாடமாகத் தரப்பட்டுள்ளன .

Lesson Introduction

Dear Students!

A poem (a song) always carries a message. Many poetic verses may be combined to deliver a theme or a part of a story. When a string of verses are combined to narrate a story, it is called continuous poetry. The great epics Ramayana, Mahabharatha and Silappathikaram belong to this category of continuous poetry.

“Asia jyothi” is a continuous poetry which gives us the history of Lord Buddha. From this great work, some verses selected from the section titled, “Buddha and the poor little boy” have been given in the form of a lesson here.

நூல் அறிமுகம்

பௌத்த சமயக் கருத்துகளைத் தந்தவர் புத்தர் அவருடைய வரலாற்றை இந்நூல் கூறுகிறது . ஆங்கிலக் கவிஞர் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய " LIGHT OF ASIA ” என்னும் ஆங்கில நூலின் கருத்தை ஒட்டி இந்நூல் எழுதப்பட்டது .

இந்நூலில் புத்தரும் ஏழைச் சிறுவனும் என்பது ஒரு பகுதியாகும் இப்பகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த பத்துப்பாடல்கள் பாடப்பகுதியாக வைக்கப்பட்டுள்ளன . இவை ஓசை நயத்தோடும் , இனிய , எளிய இசையோடும் பாடுவதற்கு ஏற்றவையாக உள்ளன .

ஆசிரியர் அறிமுகம்

இந்நூலை இயற்றியவர் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை . இவர் பெற்றோர் திரு . சிவதாணு , திருமதி ஆதிலட்சுமி பிறப்பு - 1876 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் இருபத்தேழாம் நாள் ஊர் - கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர் மருமக்கள் வழி மான்மியம் குழந்தைச் செல்வம் . தேவியின் கீர்த்தனைகள் கவிமணியின் உரைமணிகள் மலரும் மாலையும் ஆகியவை அவர் எழுதிய பிற நூல்கள் மறைவு - 1954 செப்டம்பர் இருபத்தாறு .

கேட்டல்

இந்தியாவில் உள்ள கபிலவஸ்துவில் சுத்தோதனனுக்கும் மாயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் கௌதம புத்தர் . அவரது இயற்பெயர் சித்தார்த்தன் . புத்தர் இளமையிலேயே எல்லா

உயிர்களிடமும் அன்பு கொண்டவராக இருந்தார் அவர் யசோதை என்னும் பெண்ணை மணம் புரிந்து வாழ்ந்து வந்தார் . அவருக்கு இராகுலன் என்னும் மகன் பிறந்தான் .

உலக மக்களில் பெரும்பாலார் துன்பத்தில் வாழ்கின்றனர் . இந்தத் துன்பத்திற்கு ஆசையே காரணம் . ஆசையை அகற்றுவதற்கு இல்வாழ்க்கையைத் துறந்து துறவியாக வேண்டும் என்று புத்தர் எண்ணினார் . மன்னர் குலத்தில் பிறந்த அவர் அரண்மனையையும் இல்வாழ்க்கையையும் துறந்து வெளியேறினார் . அவ்வாறு சென்ற புத்தர் , வழிநடத்த களைப்பால் சோர்ந்து மயங்கிக் கிடந்தார் .

படித்தல்

பதம் பிரித்தத் தொடர்கள்

பெரும்பாலும் இப்பகுதியில் அருந்தொடர்கள் அதிகமாக இல்லை . ஆதலால் தேவையான அருந்தொடர்கள் மட்டும் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன இவற்றின் துணையோடு பாடல் முழுவதையும் வாய்விட்டுப் படித்துப்பாருங்கள் .

தெய்வகுலத்திவனை = தெய்வகுலத்து + இவனை

ஆகாதினி = ஆகாது + இனி

யாதெனவே = யாது + எனவே

தெளிந்துடனே = தெளிந்து + உடனே

மயக்கொழிய = மயக்கு + ஒழிய

தீண்டவொண்ணா = தீண்ட + ஒண்ணா

அலகில் = அலகு + இல்

தெரிவதுண்டோ = தெரிவது + உண்டோ

நிறமப்பா = நிறம் + அப்பா

குணமப்பா = குணம் + அப்பா

வாராதப்பா = வாராது + அப்பா

வேண்டுமெனில் = வேண்டும் + எனில்

வேண்டுமப்பா = வேண்டும் + அப்பா

மேற்குலத்தார் = மேல் + குலத்தார்

சிறுவன் செயல்

ஆடுகள் மேய்த்து வரும் - ஒருவன்

ஆயர் குலச்சிறுவன்

வாடிக் கிடந்தவனைச் செல்லும்

வழியின் மீதுகண்டான் .

தெய்வ குலத்திவனை - எளியேன்

தீண்டலும் ஆகாதினிச்

செய்வதும் யாதெனவே - சிறிது

சிந்தனை தயங்கி நின்றான் .

உள்ளந் தெளிந்துடனே - வெள்ளாடு

ஒன்றை அழைத்துவந்து

வள்ளல் மயக்கொழிய – மடுவை

வாயில் கறந்து விட்டான்

நிலத்திற் கிடந்தஐயன் - மெல்ல

நிமிர்ந்து தலைதூக்கிக்

கலத்தினி லேகொஞ்சம் - பாலைக்

கறந்து தருவாய் என்றான் .

' ஐயையோ ஆகாது ' என்றான் - சிறுவன்

' அண்ணலே ! யானும் உனைக்

கையினால் தீண்டவொண்ணா - இடையன் ஓர்

காட்டு மனிதன் ' என்றான் .

புத்தரின் அறவுரை

உலகம் புகழ் பெரியோன் - இந்த

உரையினைக் கேட்டு அந்நாள்

அலகில் கருணையினால் சொன்ன

அழுத மொழி இதுவாம் .

ஓடும் உதிரத்தில் - வடிந்து

ஒழுகும் கண்ணீரில்

தேடிப் பார்த்தாலும் - சாதி

தெரிவ துண்டோ அப்பா ?

எவர் உடம்பினிலும் - சிவப்பே

இரத்த நிறமப்பா !

எவர் விழி நீர்க்கும் - உவர்ப்பே

இயற்கைக் குணமப்பா !

பிறப்பினால் எவர்க்கும் - உலகில்

பெருமை வாராதப்பா !

சிறப்பு வேண்டுமெனில் - நல்ல

செய்கை வேண்டுமப்பா !

நன்மை செய்பவரே - உலகம்

நாடும் மேற்குலத்தார் ;

தின்மை செய்பவரே - அண்டித்

தீண்ட ஒண்ணாதார் !

வாசத்துக்கருத்தறிதல்

சிறுவன் செயல்

ஆடுகளை மேய்த்து வந்த இடைக்குலத்துச் சிறுவன் ஒருவன் . தான் செல்லும் வழியில் மயங்கிக் கிடந்த புத்தரைக் கண்டான் .

சிறுவன் , “ தெய்வவடிவத்தை உடைய இவரைத் தொடக்கூடாத தாழ்ந்த சாதியைச் சார்ந்தவன் நான் : ஆகவே , இப்பொழுது நான் என்ன செய்வது ?” என்று தன் உள்ளத்திற்குள் எண்ணித் தயங்கி நின்றான் .

பின்னர் , தானே ஒருமுடிவுக்கு வந்தான் ; வெள்ளாடு ஒன்றை ஓட்டிவந்தான் . புத்தரின் மயக்கம் நீக்க . ஆட்டின் பால் மடியை புத்தரின் வாயருகே கொண்டுவந்து அவர் வாயில் ஆட்டுப்பாலைக் கறந்து விட்டான் .

தரையில் விழுந்து கிடந்த புத்தர் , ஆட்டுப்பாலைக் குடித்தவுடன் சிறிது மயக்கம் நீங்கியவராய்ச் சற்றே நிமிர்ந்து , சிறுவனைநோக்கி , “ மண் கலயத்தில் நீயே பாலைக்கறந்து தா ” எனக் கேட்டார் .

அதுகேட்ட இடைக்குலச்சிறுவன் , ' ஐயையோ !' எனப்பதறி , “ நான் அவ்வாறு செய்யக்கூடாது . ஏனெனில் , அண்ணலே ! தங்களைப் போன்றவர்களைத் தொட்டுப் பழகக் கூடாத , தாழ்ந்த சாதியைச் சார்ந்தவன் நான் ! காட்டுமனிதன் !” என்று பணிவோடு கூறி நின்றான் .

இவ்வாறு , இடைக்குலச் சிறுவன் பதிலைக் கேட்ட உலகம் புகழும் பெரியவராகிய புத்தபெருமான் . அச்சிறுவனின் அறியாமை கண்டு இரக்கம் கொண்டார் : அளவிடமுடியாத அருள் உள்ளத்தோடு அழுதம் போன்ற அழிவற்ற , கீழ்க்காணும் அறவுரையைக் கூறினார் .

புத்தரின் அறவுரை

“ சிறுவனே ! ஒவ்வொருவருடைய உடம்பில் ஓரும் இரத்தத்திலும் , ஒழுகும் கண்ணீரிலும் நாம் தேடிப் தேடிப் பார்த்தாலும் அவர் எந்தச் சாதிக்காரர் என்று தெரிந்துகொள்ள முடிகிறதா ?”

எந்தச் சாதிக்காரராக இருந்தாலும் அவர் உடம்பில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்புத் தானே ? அவர்களுடைய கண்ணீரின் சுவை உப்புச் சுவைதானே ? அதுதானே இயற்கை !

பிறப்பினால் எவருக்கும் பெருமை வந்து சேராது ! சிறப்பும் பெருமையும் அடையவேண்டுமாயின் நல்ல செயல்களை அவர்கள் செய்தல் வேண்டும் !

எல்லாருக்கும் நன்மை கள் செய்பவரே உலக மக்களால் விரும்பப்படும் உயர்ந்த சாதிக்காரர் ஆவார் ! தீமைகள் செய்பவர்களே யாரும் நெருங்கக் கூடாத . தீண்டத்தகாதவர் ஆவார் .

[ என்று கூறி , பிறப்பினால் உயர்வு தாழ்வு , இல்லை ; செய்யும் செயல்களினால் தான் உயர்வு தாழ்வு உண்டு என்பதை அச்சிறுவன் அறியச் செய்தார் ].

மாணவர்களே ! புத்தர் கூறும் இந்த அறிவுரை இடைச்சிறுவனுக்கு மட்டும் அன்று :

இதைப்படிக்கும் யாவருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்க .

அருஞ்சொற்பொருள்

ஆயர்குலம் = ஆடு மாடுகளை வளர்த்து அவற்றால் பயன்பெறும் இனத்தார் ( இடையர் குலம் )

வாடி = களைப்பால் வருந்தி

தெய்வகுலத்திவன் = புத்த பெருமான் ( தேவகுலத்தில் தோன்றியவர் )

தீண்டல் = தொடுதல்

சிந்தை = உள்ளம்

வள்ளல் = புத்தர் ( யாவருக்கும் அருள் வழங்குவதால் வள்ளல் எனப்படுகிறார் ).

மயக்கு ஒழிய = மயக்கம் நீங்க

வெள்ளாடு = ஆடுகளில் ஒரு வகை

மடு = பால்சுரக்கும் காம்பு

ஐயன் = பெரியவராகிய புத்தர்

கலம் = மண்பாண்டம் ( கலயம் )

அண்ணல் = ( ஆண் மக்களுள் சிறந்தவர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல் ) இங்கு , புத்தரைக் குறிக்கிறது .

தீண்டவொண்ணா = தொடுவதற்குத்தகுதியில்லாத

அலகில் = அளவில்லாத

உதிரம் = குருதி ( இரத்தம் )

விழிநீர் = கண்ணீர்

உவர்ப்பு = உப்புக் கரிப்புச் சுவை

செய்கை = செயல்கள்

நாடும் = விரும்பும்

மேற்குலம் = உயர்ந்த குடிப்பிறப்பு

தின்மை = தீமை

அண்டி = நெருங்கி

ஒண்ணாதார் = தகாதவர் ( தகுதியற்றவர் )

திரண்ட கருத்து அறிதல் :

மயங்கிக் கிடந்த புத்தரைக் கண்ட சிறுவன் செயல் என்பதை ஒரு பகுதியாகவும் , புத்தரின் அறவுரை என்பதை அடுத்தப் பகுதியாகவும் பிரித்துக்கொண்டு , கருத்துகளைத் தொகுத்துக் காண்போம் .

ஒத்த பிற பாடல்கள் :

மாணவர்களே ! புத்த பெருமானின் இந்த அறவுரையோடு ,

சாதி இரண்டொழிய வேறில்லை

என்ற ஒளவையார் கருத்தையும் .

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியார் கருத்தையும்

இருட்டறையில் உள்ளதடா

உலகம் - சாதி

இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே !

என்ற பாரதிதாசன் கருத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்க .