காப்பியங்கள் - I
பாடம் 1
நல்ல நீதிகளை உள்ளடக்கிக் கதைபொதி பாடல்களாக அமைந்தவை காப்பியம் என்னும் இலக்கிய வகையாக மலர்ந்தன. இலக்கியம் கண்டதன் பின், இலக்கணம் இயம்புதல் என்னும் கருத்துப்படி, இந்தக் காப்பிய இலக்கியங்கள் தோன்றிய பிறகு, அவற்றுக்கான இலக்கண விதிகளும் நூல்களில் இடம் பெற்றன.
தண்டியலங்காரம் என்னும் நூல், காப்பிய அமைப்பை, சிறப்பாகத் தமிழ்ப் பெருங்காப்பியங்களின் இலக்கணத்தை, வரையறுத்துக் கூறுகின்றது. அவ்வகையில் காப்பிய இலக்கணம் குறித்த கருத்துகள் நம் பாடப் பகுதியில் தெரிவிக்கப்படுகின்றன. காப்பியம் என்பதன் பொருள்; காப்பியத்தின் தோற்றம், வகைகள்; காப்பியத்தின் இலக்கணம்; பெருங்காப்பியம், சிறு காப்பியம் பற்றிய செய்திகள் ஆகியவை இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.
காவியம் என்னும் வட சொல்லின் தமிழ் வடிவமே காப்பியம் எனக் கொள்வதுண்டு. காவியம் என்பது கவியினால் செய்யப்பட்டது எனப் பொருள் தரும்.
காப்பியம் என்பதைக் காப்பு + இயம் என்றும் பிரித்துப் பொருள் காணலாம். இப்பெயர் தொடக்கத்தில் இலக்கண நூல்களைச் சுட்டுவதற்காகவே அமைந்து, இடைக் காலத்தில் வடமொழித் தொடர்பால் ஒருவகை இலக்கிய வடிவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பர்.
காப்பியத்தைத் தொடர்நிலைச் செய்யுள் எனவும் குறிப்பர். காவியம், காப்பியம் என்னும் இவ்விரு சொற்களும் சில தமிழ்க் காப்பியப் பெயர்களில் அமைந்திருப்பதைக் காணலாம். சான்றுகள்:
காவியம் என்று பெயர் பெறுபவை
யசோதர காவியம், நாககுமார காவியம், இயேசு காவியம், இராவண காவியம், …..
காப்பியம் என்று பெயர் பெறுவன
கண்ணகி புரட்சிக் காப்பியம், கற்புக் காப்பியம்
முதலில் தனிப் பாடல்களாகவும், செய்யுள் தொகுப்புகளாகவும் இருந்த தொல் பழங்கால (Primitive) இலக்கியப் படைப்பு மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்றது; கதையைத் தொகுத்துக் கூறும் பாடல்கள் பிறந்தன. கற்பனை வளம் விரிவடைந்தது. இவ்வாறுதான் காப்பியப் படைப்புகள் உருவாயின.
தனிமனிதனின் வீரதீரச் செயல், அவன் பிறப்பு, வளர்ப்பு, அவன் சார்ந்த மரபு முதலான வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள், விழாக்களிலும் வழிபாடுகளிலும் பாடுபொருளாயின. அவனது புகழ் ஓர் உன்னத நிலைக்கு உயர்த்தப்பட்டது. அவன் ஒரு குறிக்கோள் மனிதனாக உயர்த்தப்பட்டான். மேலும் அவன் தெய்வீக நிலையை எய்தினான். அவனைப் போற்றிப் புகழ்ந்த நிலை, படிப்படியாக அவன் வாழ்க்கை வரலாறு பற்றிய கதையாக உருவாகித் தனிச்சிறப்பும் உயர்வும் பெற்றது.
பின்னர் இசையோடு கூடிய கூற்று வகைக் கதைப்பாடல்கள் உருவாகத் தலைப்பட்டன. புலவர்கள் இவ்வரலாற்றுப் பழங்கதைப் பாடல்களைத் தொகுத்து, அவற்றை ஒரு முறைப்படுத்தித் தம் கவித்துவச் சிறப்பால் உயிரோட்டமுள்ள ஓர் ஒப்பற்ற படைப்பாகக் காப்பியத்தை ஆக்கித் தந்தனர்.
காப்பியத்தைத் தொடங்கும் போது வாழ்த்து, வணக்கம், வருபொருள் கூறுவதும் மரபாக உறுதிப்பட்டது. காப்பியத்தின் முதல் சொல் பெருமைக்குரிய சொல்லாக அமைய வேண்டும் என்பது கூட மரபு ஆனது. எடுத்துக்காட்டாக, கம்பராமாயணம் உலகம் யாவையும் எனத் தொடங்குகிறது. பெரியபுராணம் உலகெலாம் உணர்ந்து எனத் தொடங்குகிறது.
காப்பியத்தினுள் தலையாய அறக் கருத்துகளைப் பாவிகமாக (உட்பொதிவாக) வைப்பது அல்லது வெளிப்படையாகச் சொல்வது மரபு ஆயிற்று.
இயற்கையிறந்த நிகழ்வுகளும் (Supernatural), எதிர்வரும் நிகழ்வுகளை உணர்த்துவதான கனவு, நிமித்தம், வான்மொழி (அசரீரி) ஆகியவையும் காப்பியங்களில் இடம்பெறுவது மரபாயிற்று.
காப்பியங்களில் கதைநிகழ்ச்சி, இடையில் தொடங்கப் பெறுவதும், பல கலைகள் குறிக்கப்படுவதும், இசைப்பாடல், கட்டுரை ஆகியவை இடம் பெறுதலும் மரபாகக் காணப்படுகின்றன.
2) அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளைப் பயனாகத் தருவதாக அமையும்.
3) தன்னிகர் இல்லாத தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
4) மலை, கடல், நாடு, நகர், ஆறு பருவங்கள், கதிரவன் தோற்றம், சந்திரனின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிய வருணனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
5) திருமணம் புரிதல், முடிசூடல், சோலையில் இன்புறுதல், நீர் விளையாடல், மதுவுண்டு களித்தல், மக்களைப் பெற்றெடுத்தல், ஊடல் கொள்ளுதல், புணர்ச்சியில் மகிழ்தல் முதலிய நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
6) அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தல், தூது செல்லல், போர் மேற்கொண்டு செல்லுதல், போர் நிகழ்ச்சி, வெற்றி பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெறுதல் வேண்டும்.
7) சந்தி எனப்படும் கதைப் போக்கு (கதைத் தொடக்கம், வளர்ச்சி, விளைவு, முடிவு என்பவை) வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும்.
8) அமைப்பு முறையில் பெருங்காப்பியம் உள் பிரிவுகளுக்குச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
9) எண்வகைச் சுவையும், மெய்ப்பாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
10) கற்றறிந்த புலவரால் புனையப்பட்டதாக இருத்தல் வேண்டும். நாற்பொருளும் குறையாது வரவேண்டும். இவை தவிரப் பிற உறுப்புகளில் சில குறைந்தும் வரலாம்
பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று
ஏற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகடல் நாடு, வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றமென்று இனையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்று
இன்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரம் தூது செலவுஇகல் வென்றி
சந்தியின் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்
பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி,
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப
(தண்டியலங்காரம், நூற்பா – 8)
கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபாடு இன்றென விளம்பினர் புலவர்
(தண்டியலங்காரம், நூற்பா – 9)
அறமுதல் நான்கினுங் குறைபா டுடையது
காப்பியம் என்று கருதப் படுமே
(தண்டியலங்காரம், நூற்பா – 10)
மேற்கூறிய பெருங்காப்பியமும், காப்பியமும் ஒருவகைச் செய்யுளாலும், பலவகைச் செய்யுள்களாலும், உரைநடை கலந்தும், பிறமொழி கலந்தும் வரலாம்.
அவைதாம்
ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
உரையும் பாடையும் விரவியும் வருமே
(தண்டியலங்காரம், நூற்பா – 11)
மேற்கூறியவாறு தண்டியலங்காரம் காப்பிய இலக்கணத்தைத் தெரிவிக்கின்றது.
பாவிகம்
காப்பியத்தினுடைய பண்பாகப் பாவிகம் என்பதையும் அந்நூல் குறிக்கின்றது.
பாவிகம் என்பது காப்பியப் பண்பே
(தண்டியலங்காரம், நூற்பா – 91)
காப்பியம் முழுவதிலும் கவிஞன் வலியுறுத்த விரும்பும் காப்பியத்தின் சாரமான அடிப்படைக் கருத்தினையே பாவிகம் எனலாம். காப்பியத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இக்கருத்து ஊடுருவி நிற்பது. இது நூலின் தனிச் செய்யுள்களிலோ, பகுதிகளிலோ புலனாவது இல்லை. தொடக்கம் முதல் முடிவு வரை நூலை முழுமையாக நோக்கும் போதே இப்பண்பு விளங்கும்.
தொல்காப்பியம் கூறும் தொன்மை, தோல் முதலான இலக்கிய வனப்புகள் (அழகு) எட்டினையும் காப்பியத்தோடு தொடர்புபடுத்திக் காண முடியும்.
இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின் என்ற விதிப்படி, காப்பியங்களின் அமைப்பு அடிப்படையிலேயே இவ்வகை இலக்கணங்கள் அமைந்தன எனலாம். தமிழ்க் காப்பியங்களில் இவ்விலக்கண அமைதி பெரும்பாலும் அமைந்துள்ளது. தமிழில், முன்னர் குறிப்பிட்ட பெருங்காப்பியம், காப்பியம் முதலானவைகளுடன் இதிகாசம், புராணம், கதைப்பாடல் ஆகியவற்றையும் காப்பியத்துள் அடக்குவதுண்டு.
1) தொல்பழங்காலக் காப்பியம் (PRIMITIVE EPIC)
2) கலைக் காப்பியம் அல்லது இலக்கியக் காப்பியம் (ART EPIC (or) LITERARY EPIC) என்பன.
1) தொடக்கக் காலக் காப்பியங்களில் வீரதீரச் செயல்களே முக்கியத்துவமும் தலைமைச் சிறப்பும் பெற்றன. இந்த வீர உணர்வில் மிகுந்து விளங்கிய காப்பியங்களையே தொல்பழங்காலக் காப்பியம் என்பர். இவ்வகைக் காப்பியங்களுக்கு எடுத்துக்காட்டு: ஹோமரின் இலியாது, ஒதீஸி.
2) ஒரு தனிப் பெருவீரனைச் சுற்றி மட்டும் அமையாமல், கதை நிகழ்வுகளுக்கு ஓர் இலட்சியக் கனவு நோக்கத்தையும் இணைத்துக் காட்டப்பட்டிருப்பது கலை அல்லது இலக்கியக் காப்பியம் என்பர். மிகப் பழைய காப்பியங்களைத் தனியே பிரித்து விட்டால், மற்றவை இவ்வகையில் அடங்கும்.
பெயர் ஆங்கிலப் பெயர்
நகைச்சுவைக் காப்பியம் Burlesque Epic
நிகழ்ச்சிக் காப்பியம் Epic of Action
வீர சாகசக் கற்பனைக்
காப்பியம் Romantic Epic
வீரக் காப்பியம்
காப்பியம் Satire Epic
உருவக நிலைக் காப்பியம் Symbolic Epic
எள்ளல் (கேலி) காப்பியம் Mock Epic
செந்நடைக் காப்பியம் Classical Epic
வரலாற்றுக் காப்பியம்
புராணக் காப்பியம் Mythological Epic
சமயக் காப்பியம் Religious Epic
அறக் காப்பியம் Moral Epic
காப்பியத்தின் பெயர் ஆசிரியர் மொழி / நாடு
இலியாது, ஒதீஸி ஹோமர் கிரேக்க மொழி
ஆர்லண்டோ இன்ன மராட்டோ பயர்டோ இத்தாலி
ஷாநாமா அபுல்காசிம் மன்சூர் பாரசீகம்
மே மெக்கா செக்மொழி
வாண்டன் ஓஸ்ரெய்னால்ட் பிளீமிஷ் டச்சு மொழி
காப்பியத்தின் பெயர் ஆசிரியர் மொழி
இராமாயணம் வால்மீகி வடமொழி
மகாபாரதம் வியாசர் வடமொழி
இராம சரித மானஸ் துளசிதாசர் ஹிந்தி
குமார சம்பவம்,இரகு வம்சம் காளிதாசர் வடமொழி
நூர் நாமா அமீர் குஸ்ரு பாரசீகம்
சுதாம சரித்திரம் பக்தசிரோமணி குஜராத்தி
பத்மாவதி ஆலாவுல் வங்காளம்
பிரபுலிங்க லீலை சாமரசன் கன்னடம்
குமார சம்பவம் நன்னிசோட தெலுங்கு
இதிகாசம்
கடவுளரும் கடவுளின் அம்சம் ஆனவர்களும், மானிடராகப் பிறந்து, பல தெய்வீகச் செயல்களை ஆற்றி, இறுதியில் தெய்வீக நிலை எய்துவதைப் பற்றி விரிவாகப் பேசுவன இதிகாசங்கள் எனப்படும். (இதிகாசம் என்னும் சொல்லின் பொருள் இவ்வாறு நடந்தது என்பதாம்.)
புராணம்
கடவுளர் பற்றிய புராணங்களில் தெய்வங்கள், தெய்வீக நிலையில் நின்று செயல்படுகின்றன. இத்தெய்வங்களின் அற்புதச் செயல்கள் ஒரு தலத்தைச் (இடம்) சார்ந்து அமைகின்ற போது அதைப் பற்றிக் கூறும் கதைப் பாடல்கள் தல புராணங்கள் என்று பெயர் பெறுகின்றன.
காப்பியம்
சிறப்பு மிக்க, மனிதப் பாத்திரங்கள், நல்வினை தீவினைப் பலன்களை உலக வாழ்க்கையில் அனுபவித்து, நல்வினை ஆற்றி, இறுதியில் இறவா இன்பமாகிய இறைநிலை எய்துதல் பற்றி விரிவாகச் சிறப்பித்துக் கூறுவனவே காப்பியங்கள் எனப்படுகின்றன.
தமிழில் காப்பியப் படைப்பு, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கியது எனலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும், சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும் தமிழில் முதற் காப்பியங்களாகப் போற்றப்படுகின்றன. இவையிரண்டும் ஐம்பெருங் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளன. இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று சான்றோர்களால் பாராட்டப்படுகின்றது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு காலப் பகுதியிலும் காப்பியப் படைப்பு நிகழ்ந்த வண்ணமாகவே இருந்திருக்கின்றது. அவற்றுள் சில குறிப்பிடத்தக்க காப்பியங்களைச் சுட்டிக் காட்டலாம்.
காப்பியத்தின் பெயர் ஆசிரியர் சமயம்
சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் சமணம்
சீவகசிந்தாமணி திருத்தக்கதேவர் சமணம்
சூளாமணி தோலாமொழித்தேவர் மணம்
மணிமேகலை சீத்தலைச் சாத்தனார் பௌத்தம்
குண்டலகேசி நாதகுத்தனார் பௌத்தம்
இராமாயணம் கம்பர் வைணவம்
பாரதம் வில்லிப்புத்தூரார் வைணவம்
பெரியபுராணம் சேக்கிழார் சைவம்
திருவிளையாடற்புராணம் பரஞ்சோதி முனிவர் சைவம்
சீறாப்புராணம் உமறுப்புலவர் இஸ்லாம்
தேம்பாவணி வீரமாமுனிவர் கிறித்துவம்
இரட்சண்ய யாத்திரிகம் கிருஷ்ணப்பிள்ளை கிறித்துவம்
இதிகாசங்களிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, விரிவாக்கிக் காப்பிய வடிவில் தரும் இலக்கியத்தை, கண்ட காவியம் என்று வடமொழி அறிஞர் குறிப்பிடுவர். அத்தகைய முயற்சி தமிழிலும் நிகழ்ந்தது. நைடதம் (அதிவீர ராம பாண்டியர்), நளவெண்பா (புகழேந்திப்புலவர்), குசேலோபாக்கியானம் (வல்லூர் தேவராசப் பிள்ளை), அரிச்சந்திர புராணம் (நல்லூர் வீரைகவிராயர்) முதலியவை இந்த வகைக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும்.
இன்றுவரை தமிழில் உருவான காப்பியங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 150 ஆகும்.
தமிழ்க் காப்பியங்களின் அமைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகச் சிலப்பதிகாரம் பற்றிய செய்திகளை இங்குக் காண்போம்.
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். மகளிர் காலில் அணியும் அணி சிலம்பு. சிலம்பால் விளைந்த நூல் ஆதலின் சிலப்பதிகாரம் என்றாயிற்று. கண்ணகியின் சிலம்பும், பாண்டிமாதேவியின் சிலம்பும் கதைக்கு அடிப்படையானவை. இக்காப்பியம் மூன்று காண்டங்களையும் 30 காதைகளையும் கொண்டது.
சோழ நாட்டில் புகார் நகரில் பிறந்த கண்ணகி, பாண்டி நாட்டு மதுரையை அடைந்து, கணவனை இழந்து, சேர நாட்டில் புகுந்து தெய்வமாகியதே கதையாம். இதனைச் சமணக் காப்பியம் என்பர் அறிஞர்.
இக்காலத்தில் காப்பிய இலக்கணங்களுள் ஒரு சிலவற்றை மட்டும் பின்பற்றி அமைக்கப்பட்ட செய்யுள் படைப்புகள் சிறு காப்பியம், சிறு காவியம், குறுங்காப்பியம், குறுங்காவியம் என்று பெயரிட்டு வழங்கப்படுகின்றன. இக்காவியங்கள் மொழிபெயர்ப்பாகவும், தழுவல் காப்பியங்களாகவும் இருக்கின்றன. அண்மைக் காலம் வரையிலும் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள் கீழே பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளன.
பாரதியார் - கண்ணன் பாட்டு,
குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம்.
பாரதிதாசன் – பாண்டியன் பரிசு, தமிழச்சியின்
கத்தி, இருண்ட வீடு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின்
சாரல், வீரத்தாய், புரட்சிக்கவி.
கவிமணி – மருமக்கள் வழி மான்மியம்
கண்ணதாசன் – ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி,
ஏசு காவியம்.
முடியரசன் – பூங்கொடி, வீரகாவியம்
கவியோகி சுத்தானந்த பாரதியார் – பாரத சக்தி மகா காவியம்
டாக்டர் சாலை இளந்திரையன் – சிலம்பின் சிறுநகை
தி. வெங்கட கிருஷ்ணய்யங்கார் – இராகவ காவியம்
புலவர் குழந்தை – இராவண காவியம்
வாணிதாசன் – கொடிமுல்லை
அண்ணாதாசன் – கலைஞர் காவியம்
தமிழ் ஒளி - மாதவி காவியம்
இக்காலக் காப்பியத்தைப் பற்றிய விளக்கத்தை ஒரு சான்று கொண்டு நோக்கி உணரலாம்.
பாரதியார் – பாஞ்சாலி சபதம்
பாஞ்சாலி சபதம், பாரதக் கதையின் ஒரு பகுதியாகத் திகழ்கின்றது. சூதில் அனைத்தையும் இழக்கின்றான் தருமன். அந்நிலையில் துச்சாதனன் திரௌபதியின் கூந்தல் பற்றி இழுத்துச் சபைக்குக் கொண்டு வருகின்றான். நாணழிந்த திரௌபதி, சபையோர் முன்னிலையில் தான் அடைந்த அவமானத்தால் ஆத்திரமடைந்து, கொடூரமான ஒரு சபதம் செய்கின்றாள். தொடர்ந்து வீமன், அர்ச்சுனன் முதலானோரும் சபதம் எடுக்கின்றனர். இதுவே இக்கதை பொதி பாடலின் கருவாகும். இக்கதைப் பாடல் குறியீட்டு நிலையில் இந்திய விடுதலை உணர்வைப் பிரதிபலிக்கின்றது. இக்காவியம் இரண்டு பாகங்களையும் 5 சருக்கங்களையும் 308 பாடல்களையும் கொண்டது.
காப்பியம் என்றால் என்ன என்பது பற்றியும், காப்பிய இலக்கணம் பற்றிய செய்திகளையும் அறிந்திருப்பீர்கள்.
காப்பியத்தின் இலக்கணம் கூறும் இலக்கண நூல்கள் யாவை என்பதையும் அறிந்திருப்பீர்கள்.
காப்பியத்தின் தோற்றம், வளர்ச்சி, காப்பிய வகைகள், காப்பியப் பாகுபாடு, காப்பிய மரபு முதலான செய்திகளையும், தமிழில் காலந்தோறும் படைக்கப்பட்ட காப்பிய நூல்களைப் பற்றியும் விரிவாக அறிந்திருப்பீர்கள்.
இக்காலக் காப்பியங்கள் குறித்தும் அறிந்திருப்பீர்கள்.
பாடம் - 2
ஐம்பெருங் காப்பியங்களுள் முதல் பெருங்காப்பியமாகப் போற்றப்படுவது சிலப்பதிகாரம் ஆகும். அதில் ஒரு சிறுபகுதி வழக்குரை காதை என்பது. இந்தப் பகுதி மூலம் காப்பியத் தலைவி கண்ணகி, தன் கணவன் கோவலன் கள்வன் அல்லன் என நிறுவியதையும் அதன்வழி முப்பெரும் உண்மைகளுள் இரண்டு உணர்த்தப்படுவதையும் இந்தப் பாடத்தில் காணலாம்.
காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்து, குலவொழுக்கப்படி திருமணம் செய்து, இல்லறம் நடத்திய கோவலன் கண்ணகி வாழ்க்கை வரலாற்றை விளக்குவது இந்நூல். இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை மூன்று காண்டங்களில் முப்பது காதைகளில் விரிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.
பெயர்க்காரணம்
இந்தக் காப்பியத்தின் கதை சிலம்பினைக் காரணமாகக் கொண்டு அமைந்ததால் சிலப்பதிகாரம் எனப் பெயரிடப்பட்டது.
காப்பிய நோக்கம்
காப்பியத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் இடம் பெறுகின்றன. கோவலனும் கண்ணகியும் வானவர் உலகு (வீடு) செல்வதும் காட்டப்படுகிறது. எனினும் காப்பியத்தில் இளங்கோவடிகளின் நோக்கம் அறமே எனலாம். தம்மை அறவுணர்வு உந்த, தாமும் மக்களிடம் அறவுணர்வை விழிப்புறச் செய்ய இளங்கோவடிகள் பாடியது சிலப்பதிகாரம்.
காப்பியத் தலைவி
காப்பிய இலக்கணப்படி பெருங்காப்பியம் தன்னேரில்லாத தலைவனைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆனால் சிலம்பில் கண்ணகி தன் நிகரில்லாத தலைவியாகப் போற்றப்படுகின்றாள்.
முத்தமிழ்க் காப்பியம்
இளங்கோ அடிகள் இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் பயன்படுத்தியுள்ளார். அதனால் சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் எனப் போற்றப்படுகிறது.
மூன்று நீதிகள் அல்லது உண்மைகள்
சிலப்பதிகாரம் இவ்வுலக மக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் மூன்று உண்மைகளைக் கருப்பொருளாகக் கொண்டு அமைந்துள்ளது. அந்த மூன்று உண்மைகள் எவை என அறிந்து கொள்வோமா? அவையாவன :
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது ;
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது ;
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது
(பிழைத்தல் = தவறு செய்தல்; கூற்று = எமன்; உரைசால் = புகழ்மிகுந்த; உருத்து = சினந்து)
இவை சிலப்பதிகார நூல் முழுமையும் விரவி வந்துள்ளதைக் காணலாம்.
காப்பியப் பெருமை
சிலப்பதிகாரக் காலத்தில் வழக்கிலிருந்த தமிழர்தம் பண்பாடு, சமய நெறிகள், பழக்க வழக்கங்கள், கலைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள இக்காப்பியம் பெரிதும் துணைநிற்கும். சிலப்பதிகாரக் காப்பியத்தின் பெருமையைக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்” எனப் பாராட்டியுள்ளார்.
கதை அமைப்பு
அரசநீதி பற்றி எழுந்த இந்த வழக்குரை காதை நாடகப் பாங்கில் அமைந்துள்ளது.
கதை மாந்தர்
வழக்குரை காதைக் கதை நிகழ்ச்சியில் கோப்பெருந்தேவி, பாண்டிய மன்னன், வாயில் காவலன், கண்ணகி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
“தோழீ! கேள். நம் மன்னரது வெண்கொற்றக் குடை செங்கோலுடன் கீழே விழுந்தது. அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியின் ஓசை இடைவிடாது ஒலித்தது. எல்லாத் திசைகளும் அப்போது அதிர்ந்தன. அப்பொழுது சூரியனை இருள் சூழக் கண்டேன். இரவு நேரத்தில் வானவில் தோன்றக் கண்டேன். பகல் பொழுதில் விண்மீன்கள் மிக்க ஒளியோடு பூமியில் விழக் கண்டேன். இதெல்லாம் என்ன? அதனால் நமக்கு வரக்கூடிய துன்பம் ஒன்றுண்டு. அதனை நம்மன்னவர்க்குச் சென்று கூறுவேன்.”
இவ்வாறு கூறிய தேவி மன்னன் இருக்கும் அரசவை நோக்கிச் சென்றாள்.
(பின்னால் நிகழப் போகும் நிகழ்ச்சியைக் குறிப்பாக முன்னரே உணர்த்துவது நாடக உத்தியாகும். இங்குத் தேவி கண்ட கனவின் மூலம் பாண்டிய மன்னன் வீழ்ச்சி அடையப் போவது குறிப்பாக உணர்த்தப்பட்டது.)
இப்பகுதியை ஆசிரியர் கீழ்வருமாறு பாடுகிறார் :
ஆங்குக்
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி யின்குரல் காண்பென்காண் எல்லா
திசைஇரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீன்இவை காண்பென்காண் எல்லா
கருப்பம்
(வழக்குரை காதை : 1-8)
(எல்லா = தோழி; கடைமணி = முறைவேண்டி வருவோர் ஒலிக்கும் பொருட்டு அரண்மனை வாயிலில் கட்டப்படுவதோர் பெரியமணி; கதிர் = சூரியன்; கருப்பம் = அறிகுறி)
கோப்பெருந்தேவியின் வருகை
அரசி மன்னனை நாடிச் சென்ற போது தோழியரும் உடன் வந்தனர். கண்ணாடி ஏந்தி வந்தனர் சிலர்; ஆடை, அணிகலன், ஏந்தினர் சிலர்; மணப்பொருள் ஏந்தி வந்தனர் சிலர்; மாலை, கவரி, அகிற்புகை முதலியன ஏந்தி வந்தனர் சிலர்; கூனராயும், குறளராயும், ஊமையராயும் உள்ள பணி செய்யும் இளைஞரோடு, குற்றேவல் செய்யும் மகளிர் அரசியைச் சூழ்ந்து வந்தனர்; முதுமகளிர் பலரும் ‘பாண்டியன் பெருந்தேவி வாழ்க!’ என உள்ளன்போடு வாழ்த்தினர்.
(கூனர், குள்ளர், ஊமையர் முதலிய குறைபாடு உடையோர் அரண்மனையில் பணிபுரிவது அக்காலத்து வழக்கமாகும்.)
இவ்வாறு தன் பரிவாரத்துடன் தேவியானவள் சென்று, தன் தீய கனவில் கண்டவற்றை எல்லாம் பாண்டிய மன்னனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். சிங்கம் சுமந்த அரசு கட்டிலின் மேல் வீற்றிருந்து, தென்னவர் கோமானாகிய பாண்டியன் தேவி கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
வாயிலோயே வாயிலோயே
அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே
(வழக்குரை காதை : 24-29)
(அறிவு அறை போதல் = அறிவு சமயத்தில் உதவாமல் போதல்; இறைமுறை = செங்கோன்மை)
வாயில் காவலன் மன்னனுக்கு அறிவித்தல்
வாயில் காவலன் கண்ணகியின் சினங்கொண்ட தோற்றம் கண்டு அஞ்சியவனாய் விரைந்து சென்று மன்னனை வணங்கி வாழ்த்தி நின்றான்.
“எம் கொற்கைப் பதியின் வேந்தனே வாழ்க! தென் திசையிலுள்ள பொதிகை மலைக்கு உரிமை உடையவனே வாழ்க! செழிய வாழ்க! தென்னவனே வாழ்க! பழி வருவதற்குக் காரணமான நெறியில் செல்லாத பஞ்சவனே வாழ்வாயாக !
குருதி பீறிடும் மகிடாசுரனுடைய பிடர்த்தலைப் பீடத்தின் மேல் நின்ற கொற்றவையோ என்றால் அவளும் அல்லள்; சப்த மாதர் ஏழு பேருள் இளையவளான பிடாரியோ என்றால் அவளும் அல்லள்; இறைவனை நடனமாடக் கண்டருளிய பத்திர காளியோ எனில் அவளும் அல்லள்; பாலை நிலக் கடவுளான காளியோ எனில் அவளும் அல்லள்; தாருகன் என்ற அசுரனின் அகன்ற மார்பைப் பிளந்த துர்க்கையும் அல்லள்; உள்ளத்திலே மிகவும் சினங்கொண்டவள் போல் தோன்றுகின்றாள்; அழகிய வேலைப்பாடமைந்த பொன் சிலம்பு ஒன்றினைக் கையிலே பிடித்துள்ளாள்; கணவனை இழந்தவளாம்; நம் அரண்மனை வாயிலில் உள்ளாள்,” என்றான்.
வாழிஎம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்சவ வாழி
அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண்டு அருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே
(வழக்குரை காதை : 30-44)
(கொற்கை = சிறந்த முத்துகள் கிடைக்கும் கடற்கரைப் பட்டினம். செழியன், தென்னவன், பஞ்சவன் என்பன பாண்டிய அரசர்க்குரிய பெயர்கள்.
பழியொடு படராப் பஞ்சவ என்றது அன்று வரையிலும் அரசியல் நீதி தவறாது அரசாண்டவன் என்பதை உணர்த்தும்.
பசுந்துணி = வெட்டப்பட்ட துண்டம்; பிடர்த்தலை = பிடரியோடு கூடிய மகிடாசுரன் தலை; இறைவன் = சிவபெருமான்; அணங்கு = பத்திரகாளி; கானகம் உகந்தகாளி = பாலைநிலத் தெய்வம்; செற்றனள் = உட்பகை கொண்டவள்; செயிர்த்தல் = சினத்தல்)
இப்பகுதி கண்ணகி சினத்தாலும் உருவத்தாலும் மக்கள் தன்மையில் இருந்து வேறுபட்டு, கொற்றவை முதலிய தெய்வ மகளிரே போல் காணப்பட்டாள் என்பதை உணர்த்துகிறது.
“உண்மை தெளியா மன்னனே! சொல்லுகிறேன் கேள். தேவர்களும் வியக்கும்படி ஒரு புறாவினது துன்பத்தை நீக்கின சிபி என்னும் செங்கோல் மன்னனும்; தனது அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியை இடைவிடாது அசைத்து ஒலித்த ஒரு பசுவின் துயரைப் போக்க எண்ணி, அப்பசுவின் துன்பத்திற்குக் காரணமான தனது அரும்பெறல் மகனைத் தானே தனது தேர்ச் சக்கரத்திலிட்டுக் கொன்றவனான செங்கோல் வேந்தன் மநுநீதிச் சோழனும் அருளாட்சி செய்த பெரும் புகழை உடைய புகார் நகரம் என்னுடைய ஊராகும்.
புகார் நகரில் மிக்க புகழுடன் விளங்கும் பெருங்குடி வணிகனான மாசாத்துவான் என்னும் வணிகனது மகனாய்ப் பிறந்து, வாணிகம் செய்து வாழ்தலை விரும்பி, ஊழ்வினை காரணமாக உனது பெரிய நகரமாகிய மதுரையிலே புகுந்து, இங்கு அத்தொழிலுக்கு முதலாக என்னுடைய காற்சிலம்புகளுள் ஒன்றினை விற்பதற்கு வந்து, உன்னால் கொலைக்களப்பட்ட கோவலன் என்பான் மனைவி ஆவேன். என்னுடைய பெயர் கண்ணகி” என்றாள்.
தேரா மன்னா செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
(வழக்குரை காதை : 50-63)
(தேரா மன்னா = ஆராய்ச்சி இல்லாத அரசனே; புள் = பறவை. இங்குப் புறாவைக் குறிக்கும்; புன்கண் = துன்பம்; ஏசாச் சிறப்பு = பழி கூறப்படாத பழஞ்சிறப்பு)
இப்பகுதியில் அரசன் மீண்டும் தன்னை வினவுவதற்கு இடமின்றிக் கூறவேண்டிய அனைத்தையும் குறைபடாது கூறிக் கண்ணகி வழக்குரைக்கின்ற திறம் போற்றுதற்குரியது.
மன்னன் கூற்று
“பெண் அணங்கே ! கள்வனைக் கொல்வது செங்கோல் முறைமைக்கு ஏற்றது ஆகும். முறை தவறாத அரச நீதியே ஆகும்,” என்று மன்னன் விளக்கினான்.
கண்ணகி காட்டும் சான்று
அது கேட்ட கண்ணகி, “நல்ல முறையில் ஆராய்ந்து பார்த்துச் செயல்படாத கொற்கை வேந்தனே! என்காற் பொற்சிலம்பு மாணிக்கக் கற்களை உள்ளிடு பரல்களாக உடையது” என்றாள்.
(சிலம்பு ஒலிக்க வேண்டும் என்பதற்காக அதன் உள்ளே சிறு கற்களை இடுவார்கள். அக்கற்களைப் ‘பரல்’ என்றும் ‘அரி’ என்றும் குறிப்பிடுவார்கள். சிலம்பினுள் மாணிக்கப் பரலிடுதல் அரியதொரு நிகழ்ச்சி ஆதலாலும், பாண்டியன் அரண்மனைச் சிலம்பில் முத்துகளே பரல்களாக இருக்க வேண்டும் என்னும் துணிவு பற்றியும் கண்ணகி ‘என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே’ என்றாள்.)
சான்றினைப் பாராட்டுதல்
அது கேட்ட மன்னன் உண்மையை அறிவதற்குத் தகுந்த சான்று கூறிய கண்ணகியைத் தன்னுள் பெரிதும் பாராட்டி, “நல்லது. நீ கூறியவை நல்ல சொற்கள். எமது சிலம்பு முத்துகளை உள்ளிடு பரல்களாக உடையது.” என்றான்.
அக்காலத்தில் மன்னர்கள் நடுநிலை தவறாது முறையாக அரசாண்டனர். குடிமக்கள் தம்மை வந்து காண்பதற்கு எளியவராகவும், இனிமையாகப் பேசும் பண்பு உடையவராகவும் இருந்தனர். சான்றோர் கூறும் அறிவுரைகள் தம் காதுகளுக்குக் கசப்பாய் இருப்பினும் அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் பண்பு உடையவராகவும் இருந்தனர். இவ்வாறு முறை செய்து காப்பாற்றும் மன்னர்களை மக்கள் கடவுளாகப் போற்றினர்.
இப்பாடப் பகுதியில் பாண்டிய மன்னன் கண்ணகி கூறிய சான்றினைக் கொண்டு உண்மையை உணர்வதற்கு ஆர்வம் காட்டுதல் மன்னனது நடுநிலைமையை நமக்கு விளக்குகிறது. மேலும். பாண்டியன் கண்ணகி கூறிய கடுஞ்சொற்களால் சிறிதேனும் சினவாது அமைதியுடன் இருந்து, உண்மை அறிய விரும்பி விரைந்து செயல்பட்ட பண்பு அவன் சிறந்த பண்புடைய மன்னன் என்பதைக் காட்டுகிறது.
கண்ணகி அணிமணிக் காற்சிலம்பு உடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே
(வழக்குரை காதை : 71-72)
பாண்டியன் நிலைமை
பாண்டிய மன்னன் அவ்வாறு சிதறிய மாணிக்கப் பரல்களைக் கண்டவுடன் தனது வெண்கொற்றக் குடை ஒருபக்கம் விழவும், பிடிதளர்ந்து தனது செங்கோல் ஒருபக்கம் சாய்ந்து நிற்கவும், “பொற்கொல்லனின் சொல்லைக் கேட்டு அதனை உண்மையென்று துணிந்த அறிவிலியாகிய யானும் ஓர் அரசன் ஆவேனோ? இப்பொழுது யானே கோவலனின் சிலம்பைக் கவர்ந்த கள்வன் ஆகின்றேன். குடிமக்களைப் பேணிக் காத்து வருகின்ற இத்தென்னாட்டின் பாண்டியர் ஆட்சிச் சிறப்பு என்னால் பிழைபட்டு விட்டதே; ஆதலால் என் ஆயுள் அழிவதாக” என்று கூறி மயங்கி அரசு கட்டிலினின்றும் வீழ்ந்தான்.
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுகவென் ஆயுள்என
(வழக்குரை காதை : 74-77)
இவ்வாறு அரசன் தன் தவற்றை உணர்ந்ததும், தன்னுயிர் நீத்து நீதியை நிலை நிறுத்தினான்.
கோப்பெருந்தேவியின் நிலை
அரச மாதேவியின் உள்ளமும் உடலும் நடுங்கின. கணவனை இழந்த கற்புடைய மகளிர்க்கு அந்த இழப்பிற்கு ஈடாகக் காட்டுவதற்கு உலகில் யாதொன்றும் இல்லை. ஆதலால் தன் கணவனுடைய திருவடிகளைத் தொழுது வீழ்ந்தனள்; உயிர் துறந்தனள்.
அல்லவை செய்தார்க்கு அறம்கூற்ற மாம்என்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே – பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் தேவி
கடுவினையேன் செய்வதூஉம் காண்
(வழக்குரை காதை : வெண்பா எண் : 1)
(அல்லவை = தீயவை; அவையோர் = சான்றோர்; பழுது = பொய்ம்மை; வடு = பழி)
கண்ணகியினுடைய உடம்பில் படிந்த புழுதியையும், அவளது விரிந்து கிடந்த கரிய கூந்தலையும், அவளது கையிலேந்திய ஒற்றைச் சிலம்பையும் பார்த்த பொழுதே பாண்டிய நாட்டு மன்னன் வழக்கில் தோற்றான். அக்கண்ணகி வழக்குரைத்த சொற்களைக் கேட்ட அளவிலேயே மன்னன் உயிரையும் துறந்தான்.
பாடம் - 3
மணிமேகலை என்னும் பெருங்காப்பியத்தின் முதல் காதையாக இடம் பெறுவது விழாவறை காதையாகும். புகார் நகரில் இந்திர விழா நடத்தும் மரபு தோன்றிய வரலாறும், அதனை நடத்த ஆன்றோர்கள் எடுத்த முடிவும், அதனை முரசறைந்து வள்ளுவன் தெரிவித்த முறையும் பற்றி இந்தப் பாடத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சங்கம் மருவிய காலத்தில் பௌத்த சமயம் தமிழகத்தில் விரிவாகப் பரவி மக்களிடையே செல்வாக்குப் பெற்றது. புத்தருடைய வரலாறும், அறவுரையும் புலவர் பெருமானாகிய சாத்தனாருடைய உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. அதன் வெளிப்பாடே மணிமேகலையாகும். இந்நூல்,
1) கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகின்றது.
2) இதனாலேயே இக்காப்பியத்திற்கு மணிமேகலை துறவு எனச் சாத்தனார் பெயரிட்டு வழங்கினார். பின்னர், அது மணிமேகலை என்றே வழங்கப்படலாயிற்று.
3) நூல் முழுவதும் நிலைமண்டில ஆசிரியப்பா யாப்பினால் பாடப்பட்டது. முப்பது காதைகளிலும் மணிமேகலையின் வாழ்க்கை வரலாறு விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
காப்பிய அமைப்பு
மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்பது போலவே தொடர்ந்து வளர்ந்து முடிகிறது. மணிமேகலையின் பிறப்பையும், கோவலன் இறந்த நிலையில் அவள் இளநங்கையாய் இருத்தலையும் சிலப்பதிகாரம் சுட்டிச் செல்கிறது. அந்த இளநங்கையைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு மணிமேகலைக் காப்பியம் பாடப்படுகிறது.
பெயர்க் காரணம்
இக்காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால், இந்நூலுக்கு மணிமேகலை எனப் பெயர் வந்தது.
மணிமேகலை பௌத்த சமயத்தைச் சார்ந்து, துறவியாகிப் பௌத்த சமயத்தைப் போற்றிப் பரப்பிய முறையை இக்காப்பியம் கூறுகிறது. இந்நூலில் அமைந்த முப்பது காதைகளிலும் ஊடுருவிச் செல்லும் மணிமேகலையின் வரலாற்றின் மூலமாக, காப்பியத்தின் இந்த நோக்கம் நிறைவேறி இருக்கிறது எனலாம்.
காப்பியத் தலைவி
தன்னேரில்லாத தலைவனைக் கொண்டிருப்பதே காப்பியத்தின் இலக்கணமாகும். ஆனால் மணிமேகலைக் காப்பியத்துள் தனக்கு நிகரில்லாத தலைவியாக மணிமேகலையே எடுத்துக் காட்டப்படுகிறாள்.
பௌத்தக் காப்பியம்
மணிமேகலை, குறிக்கோளை வெளிப்படையாகக் காட்டிக் கொள்கையைப் பரப்ப எழுதப் பெற்ற காப்பியம் ஆகும். ஆதலால் காப்பிய இலக்கணத்திற்கோ இலக்கியச் சுவைக்கோ முதன்மை தராமல் பௌத்த சமயக் கருத்துகளை விளக்குவதிலே முன்னிலை வகிக்கின்றது. இதனால் பௌத்தக் காப்பியம் என்று கூறினால் மிகையாகாது.
மாதவியின் மகளான மணிமேகலை உலக இன்ப நாட்டத்தினை அறவே வெறுத்துப் பௌத்த மதத் துறவி (பிக்குணி)யாகித் தன் பவத்திறம் அறுக என நோற்றுச் சிறப்புப் பெற்றதனைச் செந்தமிழ் நலம் சிறக்கச் சாத்தனார் பாடியுள்ளார்.
சமுதாயச் சீர்திருத்தக் காப்பியம்
பௌத்த மதக் கோட்பாடுகள், ஒழுக்க நெறி, அரச நெறி, பசி போக்கும் அற மாண்பு இவற்றுடன், சிறைக் கோட்டங்களை அறக்கோட்டமாக மாற்றி அமைத்தல், கள்ளுண்ணாமை, பரத்தைமையை ஒழித்தல் போன்ற சீர்திருத்தக் கருத்துகளையும் சமுதாய மேம்பாட்டையும் வலியுறுத்திக் கூறுகின்ற நூலாக மணிமேகலை விளங்குகிறது. இத்தகு சீர்மையில் மணிமேகலையைச் சமுதாயச் சீர்திருத்தக் காப்பியம் என்பது சாலப் பொருந்தும்.
மூன்று கருத்துகள்
இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் மூன்று கருத்துகளையும் இக்காப்பியம் அழுத்தமாகக் கூறுகின்றது.
காப்பியப் பெருமை
ஐம்பெருங் காப்பிய நூல்களையும் தமிழன்னையின் ஐந்து அணிகலன்களாக ஆன்றோர்கள் கற்பித்துள்ளனர். அவற்றுள் இம்மணிமேகலை மேகலை என்னும் இடை அணி ஆகும் பெருமையுடையது.
நாடு, மழை, அரசனது செங்கோல் ஆகியவை நிலவுலகில் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துக் கூறினான்.
”புகார் நகர மக்களே! நம் நகரை வளமும் பொலிவும் உள்ள நகராக அழகுபடுத்தி விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்; இறைவனுக்கும், ஊரைக் காக்கும் தெய்வங்களுக்கும் உரிய வழிபாடு செய்து தீங்கின்றி நலமே பெற்று வாழ்க; சமயச் சான்றோர்களே, மக்கள் மெய்ம்மொழிகளைக் கேட்டுப் பயனடையவும் வெவ்வேறு சமயங்களின் சார்பான கருத்துகளை வெளியிடவும் பட்டி மண்டபத்தில் உரை நிகழ்த்துங்கள்; சான்றோர் உரை கேட்ட பயனால் எப்போதும் சினமும் பகையும் இன்றி வாழுங்கள்”.
இவ்வாறு செய்தி வள்ளுவன் முரசு முழங்கி அறிவித்தான். மேலும் நாட்டில் பசி, பிணி, பகை இல்லாமல் மழையும் வளமும் நிறையட்டும் என்று வாழ்த்தி, நகரின் பல பகுதிகளில் விழா பற்றிய செய்தியினைக் கூறி முடித்தான்.
கதை மாந்தர்கள்
விழாவறை காதை, கதை நிகழ்ச்சியில் இடம்பெறும் கதை மாந்தர்கள் அகத்தியர், தொடித்தோட் செம்பியன், இந்திரன், தேவர்கள், முரசறையும் வள்ளுவன் மற்றும் இந்திரவிழா எடுக்க அரசவையில் கூடியவர்கள், சமயக் கணக்கர்கள், சோதிடர், பன்மொழி பேசும் வேற்று நாட்டினர், ஐம்பெருங் குழுவினர், எண்பேராயத்தினர் ஆவர். இவர்கள் அனைவரும் கிளைக்கதை மாந்தர்கள்தாம். மணிமேகலைக் காப்பியக் கதையின் மாந்தர்கள் அல்லர்.
கதை அமைப்பு
இந்திர விழா நடைபெறும் பொருட்டு வள்ளுவன் முரசறைந்து, புகார் நகருக்குச் செய்தி அறிவித்தான். இந்நிகழ்ச்சி, மக்களுக்கு விழாச் செய்தி தெரிவித்தல் என்னும் நிலையில் அமைந்துள்ளது.
காவிரிப் பூம்பட்டினத்திற்குப் பூம்புகார் என்ற மற்றொரு பெயரும் உண்டு. புகார் நகரம் இன்று பூம்புகார் என்னும் பெயரில் வழங்கப்படுகிறது. விழாவறை காதைப் பகுதியால் இந்திர விழா தொடங்கிய முறையையும், சோழ மன்னனின் அருஞ் செயலும் ஆற்றலும் வியந்து போற்றப்படும் செய்தியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இந்திர விழாவினை இருபத்தெட்டு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடும் மரபு இருந்துள்ளமையை உணர முடிகின்றது.
சமயக் கணக்கரும்;தந்துறை போகிய
அமயக் கணக்கரும்; அகலா ராகிக்
கரந்துரு எய்திய கடவுளாளரும் (13-16)
(சமயக் கணக்கர் = சமயவாதிகள்: அமயக் கணக்கர் = காலம் கூறும் சோதிடர்; கரந்துரு எய்திய = உண்மை உருவத்தை மறைத்த.)
ஐம்பெருங் குழு : அமைச்சர், புரோகிதர், சேனாதிபதியர், தூதுவர், சாரணர் ஆகிய ஐவரைக் கொண்ட குழு.
எண்பேராயம் :கரணத்து இயலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடைக் காப்பாளர், நகர மாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி மறவர் எனப்படும் எண்மரைக் கொண்ட குழு.
ஐம்பெருங் குழுவினரும், எண்பேராயத்தினரும் அரசனுக்குரிய பணிகளை நிறைவேற்றக் கூடியவர்கள்.
காதையின் இப்பகுதி, பல்வேறுபட்ட மக்கள் கூடியிருத்தலைக் காட்டுகிறது. அக்காலத்தில் சமயப் பூசல் இல்லாமல் மக்கள் சமயப் பொறை (Religious Tolerance) காத்தனர் என்பதனை இதனால் நன்கு உணர முடிகின்றது.
பண்டைக் காலத்தில் ஊர்ப் பொதுக் காரியங்களை நகர் மக்களும் சான்றோரும், அரசனுடைய பணிகளைச் செய்யும் ஐம்பெருங் குழுவினரும், எண்பேராயத்தினரும், பலமொழி பேசுபவர்களும், ஒருங்கு குழுமியே எண்ணித் துணியும் வழக்கம் இருந்தமையை அறிய முடிகிறது. இச்செயல் அக்காலத்து நாகரிகச் சிறப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.
மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும்
ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்க
(அடிகள் 25-26)
(ஆயிரங்கண்ணோன் = இந்திரன்)
இப்பகுதியால் இந்திர விழாவை மறந்து கைவிடத் தகுந்த சூழ்நிலை அந்நகரத்தில் இருந்தமையை உணர முடிகிறது. புகார் நகரத்திற்கு ஏற்படும் துன்பத்தினைத் தடுக்கவும், நகரம் வளமடையவும், இந்திர விழாவை வழக்கம்போல் கொண்டாட வேண்டும் என்னும் செய்தி வெளிப்படுகின்றது. மேலும், உலகிலுள்ள அரசர்கள் முதலாக அனைவரும் வந்து கொண்டாடும் விழா என்பது உணர்த்தப்படுகிறது.
வள்ளுவன் முரசு அறைந்து அறிவித்தல்
வாளேந்திய வீரர்கள், தேர்ப் படையினர், குதிரைப் படையினர், யானைப் படையினர் ஆகிய நால்வகைப் படையினரும் சூழ்ந்து வந்து கொண்டிருக்க, முதுகுடிப் பிறந்த வள்ளுவன் (முரசறைவோன்) வச்சிரக் கோட்டத்தில் உள்ள முரசினை யானையின் கழுத்திலே ஏற்றி, குறுந்தடி கொண்டு முரசறைந்து, இந்திர விழா நடைபெற இருப்பதனைப் புகார் நகர மக்களுக்குப் பின்வரும் செய்திகளைக் கூறி அறிவித்தான்.
முதலில் திருமகள் விரும்பி உறைகின்ற மூதூரான இப்புகார் நகரம் வாழ்க என்று வாழ்த்தினான். பின் மாதந்தோறும் மூன்று முறை தவறாது மழை பொழிவதாகுக என்றான். ஞாயிறு, திங்கள் முதலிய கோள்கள் தம்நிலையில் மாறுபடா வண்ணம் மன்னவன் செங்கோலனாக ஆகுக என்று அரசனை வாழ்த்தி முரசறைந்து தெரிவித்தான்.
திருவிழை மூதூர் வாழ்கஎன் றேத்தி
வானமும் மாரி பொழிக! மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக. (32-34)
(திரு = திருமகள்; விழை = விரும்பும்; மூதூர் = பழைமை வாய்ந்த புகார் நகரம்; கோள்நிலை = ஞாயிறு, திங்கள் முதலான கோள்கள்.)
இப்பகுதியால் முரசறைவோர் நகரத்தையும், மழையையும், செங்கோலையும் முதலில் வாழ்த்திப் பின்னரே செய்தி அறிவிப்பது மரபு என்னும் செய்தி உணர்த்தப்படுகின்றது.
மன்னன் கரிகால் வளவன், பகைவரை வெல்லக் கருதி, வடதிசை நோக்கிப் போயினான். அந்நாளிலே இப்புகார் நகரம் வெறுமையாகிப் பொலிவிழந்து போயிற்று. அதுபோலத் தேவர் கோமானின் பொன்னகரமான அமராபதியும் இந்திர விழா நாளில் வறிதாகிப் போகும் தன்மையில் தேவர்கள் இப்புகார் நகருக்கு வந்து விடுவர். இவ்விழாவினைக் குறித்துப் பழைய நிலையினை உணர்ந்த சான்றோர்கள் முடிவாகக் கூறிய, பொருள் பொதிந்த சொற்கள் இவையே ஆகும்.
மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள்
இந்நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்
பொன்னகர் வறிதாப் போதுவர் என்பது
தொன்னிலை உணர்ந்தோர் துணிபொருள் (35-42)
(பொன்னகர் = அமராபதி; வறிதாக = வெற்றிடமாக; தொன்னிலை = பழமையான வரலாறு)
இப்பகுதியில் இந்திர விழா நடக்கும் நாளில் தேவர்கள் எல்லாரும் வந்து புகாரில் தங்குவதால், அமராபதியே வெற்றிடம் ஆகிவிடும் என்று கூறுவதால் விழாவின் மேன்மை புலப்படுகின்றது.
விழவுமலி மூதூர் வீதியும், மன்றமும்
பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்;
நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின் (54-57)
(நுதல்விழி = நெற்றிக்கண்; சதுக்கத்துத் தெய்வம் = சதுக்கப் பூதம்)
இப்பகுதியால் மக்கள், வீதிகள், பொது இடங்கள், கோயில்கள் முதலான இடங்களில் அழகுபடுத்திய விதம் பற்றிய செய்தியினை அறிந்து கொள்ள முடிகிறது.
இப்பகுதி இந்திரனுக்கு விழா எடுக்கும் நாட்களில், அந்நகரத்து உறைகின்ற எல்லாத் தெய்வங்களுக்கும் விழா நிகழ்த்தப்படும் வழக்கம் மரபாய் இருந்தமையை உணர்த்துகின்றது.
பட்டி மண்டபம் ஏறுமின்
குளிர்ந்த மணல் பரப்பிய பந்தல்களிலும் நிழல் தரும் மரங்களின் கீழ் அமைந்துள்ள ஊர்ப் பொதுவிடங்களிலும், புண்ணிய நல்லுரைகள் அறிந்தவர்கள் உரையாற்றுங்கள்; தத்தம் சமயத்தில் பொதிந்த தத்துவங்கள் சிறந்தவை என்றால், பட்டி மண்டபத்து ஏறி வாதிட்டுப் பயன் காணுங்கள்; பகை மக்களோடும் பகையும், கோபமும் கொள்ளாமல் அவரை விட்டு அகன்று செல்லுங்கள்; வெண்மணற் குன்றுகள், பூஞ்சோலைகள், நீர்த்துறை ஆகிய இடங்களில் தேவர்களும் மக்களும் சமமாக உலவிக் கொண்டு இருங்கள்; இவை அனைத்தையும் இந்திர விழா நடக்கும் இருபத்தெட்டு நாட்களிலும் எங்கும் எல்லா இடங்களிலும் பின்பற்றுங்கள். இவ்வாறு செய்தி வள்ளுவன் முரசறைந்து மக்களுக்குத் தெரிவித்தான்.
ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;
பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்; (60-63)
(பற்றா மாக்கள் = பகைவர்; செற்றம் = தீராத சினம்; கலாம் = கலகம் – போர், சண்டை)
இப்பகுதியில், விழா நாட்களில் செய்ய வேண்டியன இவை, செய்ய வேண்டாதன இவை என்று வகைப்படுத்திச் சாத்தனார் கூறியுள்ளார்.
வாழ்த்துக் கூறுதல்
பசியும், பிணியும், பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் சுரக்கட்டும் என முடிவில் வாழ்த்தினான். இவ்வாறெல்லாம் புகார் நகரில் உள்ள பட்டினப் பாக்கத்துப் பகுதிகள் அனைத்திலும் விழா அணி பற்றிய செய்தியினை வள்ளுவன் முரசறைந்து தெரிவித்தான்.
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க!என வாழ்த்தி
அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென்
(70-72)
(வசி = மழை.)
இப்பகுதியின் வாயிலாக, முரசறையும் செய்தி வள்ளுவன், தொடக்கத்திலும் முடிவிலும் நாடு, அரசன், மக்கள் முதலியோரை வாழ்த்துதல் மரபு என்ற செய்தியினை அறிய முடிகிறது.
இப்பகுதி மூலம் இந்திரவிழா நடத்தப்பட்டதையும் நடத்தப்பட்ட முறையினையும் நாம் உணர முடிகிறது; விழா நாட்களில் நகரை அழகுபடுத்திய விதம் பற்றிய கருத்துகளை அறிய முடிகிறது.
இந்திர விழா நடப்பதைத் தெரிவிக்கும் வள்ளுவன் முதலிலும், முடிவிலும் ஊர், மழை, அரசன் முதலானோரை வாழ்த்துவது மரபு என்னும் செய்தி உணர்த்தப்படுகிறது.
விழா நாட்களில் மக்கள் பிறருடன் பகையும், கோபமும் கொள்ளக் கூடாது என்னும் பண்பு உணர்த்தப்படுகிறது. நாட்டில் பசி, பிணி, பகை முதலியன நீங்கி மழையும் வளமும் பெருக வேண்டும் என்று வள்ளுவன் இறுதியாக வாழ்த்தினான் என்பதும் கூறப்படுகிறது.
பாடம் - 4
இலக்கண நூலார், சிந்தாமணி என்பது நெஞ்சின் கண் பொதிந்து வைத்தற்குரிய ஒரு மணி போன்றது என்பர். அதுபோல் இந்நூலைப் படிப்போர் அறிவுப் பொருள் அனைத்தும் ஒருங்கே பெறுமாறு படைத்தலால் இந்நூல் இப்பெயர் பெற்றது எனலாம்.
காவியத் தலைவனான தன் மகனை விசய மாதேவியார் முதன் முதலாக இட்டு விளித்த பெயர் சிந்தாமணி என்பதாகும். பின்னர் வழிபடு தெய்வம் வானொலியாக ‘சீவ’ என்று வாழ்த்தியது. அதற்குப் பின் அக்குழந்தைக்குச் சீவகன் என்று பெயரிட்டனர். சீவகனின் வரலாற்றை முழுமையாகத் தெரிவிப்பதால் சீவக சிந்தாமணி என்று இந்நூல் பெயர் பெற்றது.
சமணத் துறவிகள் அறக்கருத்துகளை மட்டும் அன்றி இல்லறச் சுவையையும் பாட முடியும் என்பதனை நிறுவும் பொருட்டு இந்நூலை இயற்றினார் திருத்தக்க தேவர்.குருவின் வேண்டுகோளுக்கு இணங்க நரி விருத்தம் பாடிய பிறகே சீவக சிந்தாமணியைப் பாடினார். இத்தகு சிறப்புக் கொண்ட திருத்தக்க தேவரைத் ‘தமிழ்க் கவிஞர்களுள் சிற்றரசர்’ என்று வீரமாமுனிவர் பாராட்டுகின்றார். தேவர், திருத்தகு முனிவர், திருத்தகு மகாமுனிவர், திருத்தகு மகாமுனிகள் என்னும் பெயர்களாலும் வழங்கப்படுவார்.
சிந்தாமணி ஒரு சமயக் காப்பியமாகும். வட மொழியிலுள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி, ஸ்ரீ புராணம் ஆகிய நூல்களில் சீவகன் கதை காணப்படுகிறது. அவற்றைத் தழுவித் தமிழில் சீவக சிந்தாமணி என்னும் பெரு நூலாகத் தந்துள்ளார் திருத்தக்க தேவர்.
விசயை, தன் நாட்டைக் கைப்பற்றிய கட்டியங்காரனைக் கொல்லத் தாய்மாமன் கோவிந்தனைத் துணையாகக் கொள்ளும்படி மகனைப் பணித்தாள். பின்னர்ச் சீவகன், விசயையைத் தன் மாமனாகிய கோவிந்தனின் இருப்பிடத்திற்கு அனுப்பினான். பின்பு, சீவகன் தன் தோழர்களுடன் புறப்பட்டு ஏமாங்கத நாட்டிலுள்ள இராசமாபுரத்தை அடைந்து, நகர்ப் புறத்தேயுள்ள ஒரு சோலையில் தங்கினான். மறுநாள் காலையில் சோலையிலேயே நண்பர்களை இருக்கச் செய்து விட்டுத் தான் மட்டும் வேற்றுருவில் நகருக்குள் சென்றான்.
அந்நகரத்தின் சாகர தத்தன் என்னும் வணிகனின் மகள் விமலை ஆவாள். அவள் பந்தாடுவதில் வல்லவள். அவளது அழகும், விளையாட்டும் சீவகனது மனத்தை மயக்கின. சீவகனும் அவளை மறக்க முடியாதவனாய், அவள் தந்தையின் கடையருகே வந்து நின்றான்.
சீவகன் கடையருகே வந்தவுடன், விலையாகாமல் நெடுநாள் தேங்கிக் கிடந்த பொருட்கள் எல்லாம் விலை போயின. அது கண்ட தத்தன் சீவகனை நோக்கி, அன்போடு வரவேற்றான். “முன்பு ஒரு சோதிடன், உன் மகளுக்குரிய கணவன், உன் கடைக்கு வலிய வருவான். அப்படி அவன் வலிய வந்ததும் உன் கடையில் விற்காது கிடந்த பழஞ்சரக்கெல்லாம் விற்று முதலாகும்” என்று அவள் பிறந்த போதே பயனைக் கணித்துக் கூறியிருந்தான். இன்று நீ என் கடையருகே வந்து நின்றதும் என் இருப்பெல்லாம் விற்றுத் தீர்ந்தன. எனவே நீதான் அச்சோதிடன் கூறிய, என் மகள் விமலைக்கேற்ற கணவனாவாய்” என்று கூறி அவனைத் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்று விமலையைத் திருமணம் செய்து கொடுத்தான். சீவகன் விமலையோடு கூடி இரண்டு நாள் இன்புற்று இருந்து, பின் தன் தோழர்களை அடைந்தான்.
கதை மாந்தர்கள்
இவ்விலம்பகத்தில் விசயை, சீவகன், கோவிந்தன், தம்பி நந்தட்டன், நண்பன் பதுமுகன், சாகர தத்தன், கமலை, விமலை, சோதிடன் ஆகியோர் கதை மாந்தர்களாக இடம் பெற்றுள்ளனர்.
சீவகன் உடனே, “என் மீது வைத்த அன்பினால் கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் மாமனின் இருப்பிடம் சென்று தங்கியிருங்கள்” என்றும், “நான் ஏமாங்கத நாடு சென்று, பகையழித்து வெற்றியுடன் வருகின்றேன்” என்றும் கூறிப் புறப்பட்டான்.
மாமன் மற்றுன்
சீர்தோன்ற வேமலருஞ் சென்றவன் சொல்லி னோடே
பார்தோன்ற நின்ற பகையைச்செறற் பாலை யென்றாள்.
(பாடல் -43)
(மாமன் மலரும் = மாமன் மனம் மகிழும்; செறற் பாலை = கொல்லத் தக்காய்)
அரசர்கள் கைக்கொள்ள வேண்டிய நெறிகள்
1) இறையாக வந்த செல்வத்தை ஆறில் ஒரு பங்கு பெருக்குதல்
2) பழம் பகையை மனத்தில் இருத்துதல்
3) பகைவரை, அவர் பகைவரோடு மோத விடுதல்
4) பல பகைவர்கள் இருப்பின் அவர்களைப் பிரித்துத் தம்மிடம் சேர்த்துக் கொள்ளுதல்.
வெற்றி வாழ்வைப் பெறும் நெறிகள்
1) பல்வகை வெற்றிகளை உண்டாக்குதல்
2) மேல்நிலையை அடைதல்
3) மெலியவரை வலியவராக்குதல்
4) கல்வி, அழகு உண்டாகச் செய்தல் முதலான செயல் புரிவதால் பல நாடுகள் கிடைக்கும். இறையாகப் பெரும் பொருள் வந்து சேரும். உலகில் கிடைக்காதது ஒன்றுமில்லை என்று நினைத்தல்.
மின்னின் நீள்கடம் பின்னெடு வேள்கொலோ
மன்னும் ஐங்கணை வார்சிலை மைந்தனோ
என்ன னோஅறி யோம்உரை யீர்எனா…. (பாடல் – 60)
(நெடுவேள் = முருகன்; என்னனோ = யார் தான் என்று)
மானொடு மழைக்க ணோக்கி வானவர் மகளு மொப்பாள்
பானெடுந் தீஞ்சொ லாளோர் பாவைபந் தாடு கின்றாள்
(பாடல் – 63)
மலை தன்னுடைய அழகிய கைகளிலே ஐந்து பந்துகளைக் கொண்டு ஆடினாள்.
1) மேலே எழும்பியும் முறை தவறிக் கீழே விழுதலின்றியும் ஓடுகின்ற பந்து, கூடச் சென்று ஆடும் போது மாலைகளுக்குள் சென்று மறைந்த பந்து கைகளுக்கு வந்து சேரும்.
2) கருங் கூந்தலுக்குப் பின்புறம் சென்று மறைந்த பந்து, அழகுடைய முகத்தின் முன்னே வரும்.
3) தலைக்கு மேலே சென்ற பந்து, மார்பில் அணிந்த மாலைக்கு நேரே வந்து சேரும்.
4) இன்னும் தலை மாலைக்கு மேலே உயரப் போன பந்து, கை விரல்களுக்கு இடையிலும் வந்து சேரும்.
5) இடையில் மாலை தொடுத்தும், குங்குமம் அணிந்தும் படிப்படியாக உயரும்படி பந்தினை அடித்தும், தன்னைச் சுற்றி வட்டமாக வரும்படி பந்தினை எறிந்தும் மயில் போலப் பொங்கியும், வண்டும் தும்பியும் தேன் உண்ணாமல் பாட, வலிமையோடு பந்தாடினாள் விமலை.
அங்கை யந்த லத்த கத்த ஐந்து பந்த மர்ந்தவை
மங்கை யாட மாலை சூழும் வண்டு போல வந்துடன்
(பாடல் – 65)
(அங்கை அம் தலத்த = அழகிய உள்ளங்கையினிடத்தில்)
இப்பகுதியில், விமலை பந்தாடிய விதம் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது. பாடலின் சந்தம் (ஓசை) பந்தாடும் அசைவுகளை உணர்த்துவது போல் உள்ளது அல்லவா?
திருமல்க வந்த திருவேயெனச் சேர்ந்து நாய்கன்,
செருமல்கு வலோய்க் கிடமால் இதுவென்று செப்ப
(பாடல் – 86)
மங்கைக் குரியான் கடையேறும்வந் தேற லோடும்
வங்கந் நிதிய முடன்வீழுமற் றன்றி வீழா
தெங்குந் தனக்கு நிகரில்லவ னேற்ற மார்பம்
நங்கைக் கியன்ற நறும்பூ வணைப்பள்ளி யென்றான்.
(பாடல் – 89)
(திருமல்க = செல்வம் பெருக; திருவே = செல்வமே; நாய்கன் = வணிகன்; செரு = போர்; வலோய்க்கு = வேலினை உடைய உனக்கு)
“சோதிடன் கூறிய செய்தி, இன்று நடந்ததால் நீயே என் மகளுக்குக் கணவனாவாய், இவளைத் தழுவி இன்பநலம் பெறுக” என்றும் கூறினான் சாகர தத்தன். புதுமனையில் இருத்தி மங்கல இசை முழங்கத் திருமணம் புரிவித்தான். இருவரும் ஒன்று கூடிய அன்பால் இரு உடலும் ஓர் உயிரும் ஆனார்கள். பின் சீவகன் விமலையுடன் இரண்டு நாட்கள் கூடியிருந்து, பின் சோலையில் தங்கியிருந்த தன் தோழர்களைக் காணவேண்டும் என்று கூறிப் பிரிந்து சென்றான்.
இப்பகுதி, விமலைக்குத் திருமணம் நடந்த விதம் பற்றி உணர்த்துகின்றது.
பெரிய மலைகளில் மலையாடுகள் தம் கால்களால் மிதித்த மணிகள் பலவும் செந்துகள்களாயின. அத்துகள்கள் மலையிலிருந்து கொட்டுவது, விண்ணுலகமே உளுத்துக் கொட்டுவதாய்த் தோன்றியது. இப்படி விழுந்த அந்த மணிகளின் செந்துகள்கள் படிந்த மரங்கள் கற்பகத் தருவை ஒத்துத் தோன்றின.
அண்ணலங் குன்றின்மேல் வருடைபாய்ந் துழக்கலின்
ஒண்மணி பலவுடைந் தொருங்கவை தூளியாய்
விண்ணுளு வுண்டென வீழுமா நிலமிசைக்
கண்ணகன் மரமெலாங் கற்பக மொத்தவே
(பாடல் – 11)
(வருடை = மலையாடு; உழக்கல் = மிதித்தல்; தூளி = துகள்; உளுவுண்டென= உளுத்தது போல )
மணிகளின் செந்துகள் படிந்த மரம், கற்பக மரத்திற்கு ஒப்பாயிற்று.
1) சிந்தாமணி என்றால் என்ன என்பது பற்றியும், சீவக சிந்தாமணி கூறும் செய்திகளைப் பற்றியும் அறிந்தீர்கள்.
2) விமலையார் இலம்பகம் கூறும் செய்திகளைப் பற்றி, சிறப்பு நிலையில் விளக்கமாக அறிந்து கொண்டீர்கள்.
3) கதை அமைப்பு, பாத்திரப் படைப்பு முதலியவற்றால் பிற்காலத்தில் தோன்றிய காப்பியங்களுக்குச் சீவக சிந்தாமணி அடிப்படையாக விளங்கியதை அறிய முடிகிறது.
4) சீவக சிந்தாமணியின் ஆசிரியர், பாட்டுடைத் தலைவன், நூலின் இலக்கியச் சிறப்புகள் முதலியன பற்றி விரிவாக உணர்ந்து கொண்டீர்கள்.
பாடம் - 5
சமயக் காப்பியங்களுள் இது வைணவ சமயத்தைச் சார்ந்தது. இந்தக் காப்பியம் தோன்றிய காலம் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆண்ட, கி.பி. 12-ஆம் நூற்றாண்டாகும். சிலர் ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கூறுவர். சோழ நாட்டில் திருவழுந்தூரில் உவச்சர் மரபில் தோன்றிய கம்பரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார்.
வான்மீகி முனிவர் வடமொழியில் இராமாயணத்தை இயற்றினார். அதனை, தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப ஈடும் இணையும் இல்லாமல் கம்பர் தமிழில் தந்த காவியமே இராமாயணமாகும். கம்பர், தம் நூலுக்கு இராமாவதாரம் என்று பெயரிட்டார்.
காப்பிய அமைப்பு
இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது. இந்த ஆறு காண்டங்களின் சிறு பிரிவுகளாக 113 படலங்கள் உள்ளன. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 10,500 ஆகும்.
(காண்டம் – பெரும்பிரிவு; படலம் – சிறுபிரிவு.)
பெயர்க் காரணம்
இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது. கம்பர் எழுதியதால் கம்ப இராமாயணம் எனப்பட்டது. இராம + அயணம் என்ற வடமொழிச் சொற்கள் இணைந்து இராமாயணம் என்றாயிற்று.
காப்பிய நோக்கம்
அடிப்படையில் அறமும், சமயமும் காப்பியத்தின் பொருளாக அமைகின்றன. மனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும் பண்பாட்டினையும் குறிக்கோளினையும் ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் அருமையான இலக்கியமாகத் திகழும் சிறப்புடையது கம்பராமாயணமாகும்.
காப்பியத் தலைவன்
இலக்கணப்படி, காப்பியம் தன்னேரில்லாத தலைவனைக் கொண்டிருத்தல் வேண்டும். அவ்வகையில் கம்பராமாயணத்தில் இராமனே தன்னிகரில்லாத் தலைவனாகப் போற்றப்படுகின்றான்.
வைணவக் காப்பியம்
திருமாலின் மானுட அவதாரமே இராமாவதாரமாகும். இந்நூலில் வைணவ சமயக் கருத்துகள் விரவிக் கிடக்கின்றன. மேலும் உயர்ந்த இலட்சியங்களை முன்னிறுத்தி இராமனை மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்திக் காட்டும் இலக்கியமே கம்பராமாயணமாகும். பல உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டு பாடப்பட்ட சமய நூலாக இந்நூல் விளங்குகிறது எனலாம்.
நீதி உணர்த்தும் காப்பியம்
கம்பராமாயணம் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கற்பு நெறி நின்று வாழவேண்டும் என்ற உண்மையை ஏகபத்தினி விரதனாம் – இராமன் மூலம் தெரிவிக்கின்றது. பிறன் மனைவியை விரும்பினால் அவனும் அவனைச் சார்ந்த சுற்றமும் குலமும் அழிந்துவிடும் என்பதை இந்நூல் விளக்குகின்றது. பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப என்னும் நீதி (கிளை = சுற்றம்) இந்நூல் மூலம் உணர்த்தப்படுகிறது.
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ என்னும் கருத்திற்கு ஏற்ப, கம்பராமாயணம் உயர் கருத்துகளைத் தெரிவிப்பதாக விளங்குகின்றது. மேலும் வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகக் கம்பர் படைத்துள்ளார் என்று வ.வே.சு. ஐயர் போற்றியுள்ளார்.
கல்வியில் பெரியர் கம்பர் என்றும் கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்றும் வழங்கும் மொழிகள் அவரது கவித்திறனைப் பறை சாற்றும். பாரதியார் தம் பாடலில் புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று போற்றியுள்ளார்.
“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” என்றும் பாராட்டியுள்ளார் பாரதியார்.
கதைப் பாத்திரங்களை மனிதப் பாங்கின் அடித் தளத்திலிருந்து பேச வைத்து, உணர்ச்சியை வெள்ளம் போலப் பெருகி ஓட விட்டுப் பாத்திரங்களைப் படைத்துக் காட்டுகின்ற தன்மையால் கம்பர் உலகப் பெருங்கவிஞர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். உலக மகாகவி, கவிச்சக்கரவர்த்தி என்றும் தமிழறிஞர்களால் சிறப்பிக்கப்படுகின்றார்.
பிச்சர் ஆம் அன்ன பேச்சினன் இந்திரன்
வச்சி ராயுதம் போலும் மருங்கினான்
(கங்கைப் படலம் 34:34)
(பிச்சர் = பைத்தியம்; மருங்கு = இடை, இடுப்பு)
பண்பு
கங்கையாற்றின் பக்கத்திலே அமைந்த சிருங்கி பேரம் என்று சொல்லப்படும் நகரத்தில் வாழும் வாழ்க்கையைப் பெற்றவன். பொய் நீங்கிய மனத்தினன். இராமனிடம் அன்பு கெள்ளும் குணத்தினன்; யானைக் கூட்டம் போன்ற சுற்றத்தினரைப் பெற்றவன்; அவன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன்; தூய கங்கையாற்றின் ஆழம் அளவு உயர்ந்தவன்; வேட்டைக்குத் துணையாக நாயினை உடையவன்; துடி, ஊது கொம்பு, துந்துபி முதலான இசைக்கருவிகள் நிறைந்த படையை உடையவன் என்பதனைத் தம் பாடலில்
புலப்படுத்துகின்றார், கம்பர்:
ஆய காலையிள், ஆயிரம் அம்பிக்கு
நாயகன் போர்க்குகன் எனும்நா மத்தான்;
தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான்
காயும் வில்லினன், கல்திரள் தோளினான்
(கங்கைப் படலம் 28)
துடியன் நாயினன்
(கங்கைப் படலம் 29:1)
கங்கையின் ஆழம் இட்ட நெடுமையினான்.
(கங்கைப் படலம் 31:2)
(அம்பி = படகு; காயும் = கொல்லும்; கல்திரள் = மலை)
ஒருங்கு தேனொடு மீன்உப காரத்தன்
இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான்
(கங்கைப் படலம் 36:3-4)
1)வேடர் குலத்தில் சிறந்த தலைவனாக விளங்குபவன் குகன். அவன் போராற்றலும், பேராற்றலும் மிக்கவன் என்பதை இப்பகுதி புலப்படுத்துகின்றது.
2)ஆற்றில் கிடைக்கும் மீனையும், உயர்ந்த மலையில் கிடைக்கும் தேனையும் கொண்டு வந்து இராமனிடம் காணிக்கையாகத் தருகின்ற போது குகனின் இறைபக்தி வெளிப்படுகின்றது.
இராமனைக் காணத் தவப் பள்ளி வாயிலை அடைந்த குகன், தான் வந்துள்ளதைத் தெரிவிக்கக் கூவிக் குரல் கொடுத்தான். முதலில் இலக்குவன் அவனை அணுகி, நீ யார்? என வினவினான். குகன் அவனை அன்போடு வணங்கி “ஐயனே ! நாய் போன்ற அடியவனாகிய நான் ஓடங்களைச் செலுத்தும் வேடனாவேன். தங்கள் திருவடிகளைத் தொழ வந்தேன்” என்று கூறினான். இலக்குவன் தன் தமையனாகிய இராமனிடம், தூய உள்ளமும், தாயன்பும் உடைய குகன், தன் சுற்றம் சூழத் தங்களைக் காண வந்துள்ளான் என்று தெரிவித்தான்.
குகனை அழைத்து வரப் பணித்தல்
இராமனும் மன மகிழ்ச்சியோடு “நீ சென்று குகனை அழைத்து வருக” என்று கூற, இலக்குவனும் “உள்ளே வருக” என அழைத்தான். குகன் அழகு திகழும் இராமனைத் தன் கண்ணினால் கண்டு களிப்படைந்து, நெடுஞ்சாண் கிடையாகத் தண்டனிட்டு விழுந்து வணங்கினான். உடலினை வளைத்து வாயினைப் பொத்திக் கொண்டு பணிவுடன் நின்றான்.
தேவா நின்கழல் சேவிக்க வந்தனென்
நாவாய் வேட்டுவன் நாய்அடியேன் என்றான்.
(கங்கைப் படலம் 38:3-4)
(நாவாய் = ஓடம்)
இப்பகுதி மூலம் இராமனுக்கு, இலக்குவன் மூலமாக, குகனின் இயல்பும் சிறப்பும் கூறப்படுவதனை உணர முடிகின்றது. வள்ளுவர் கூறும் பணியுமாம் என்றும் பெருமை என்பதற்கு ஏற்பக் குகனின் பணிவு உணர்த்தப்படுகின்றது.
‘இருத்தி ஈண்டு’ என்னலோடும். இருந்திலன் எல்லை நீத்த
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம் என்ன.
(கங்கைப் படலம் 41 : 1-3)
(அருத்தி = அன்பு; திருத்து = பக்குவப்படுத்து)
இப்பகுதியால் குகன் கொண்டு வந்த பொருள்கள் தேன், மீன் மட்டுமல்ல, உயர்ந்த அன்பினையும் கொண்டு வந்துள்ளான் என்பதனை அறிய முடிகிறது.
இராமன், மூத்தவர்களாகிய முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டு, “குகனே ! நீ அன்போடும் பக்தியோடும் கொண்டு வந்த தேனும், மீனும் மிகவும் அருமையானவை. அமுதத்தைக் காட்டிலும் சிறந்தவை. இவையெல்லாம் எம்மைப் போன்றவர் ஏற்கத் தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்” என்று குகனிடம் கூறினான்.
அரியதாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்ம னோர்க்கும்
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான்
(கங்கைப் படலம் 42)
இப்பகுதியால் உயர்ந்தவர்களிடத்தில் நாம் கொடுக்கும் பரிசுப் பொருள்கள் (தேன், மீன்) பெரிதல்ல, அவர்களிடத்தில் காட்டும் மதிப்பும் மரியாதையுமே பெரிது என்னும் பண்பினைக் குகன் வாயிலாக அறிய முடிகிறது. உண்ணத்தகாத பொருளாயினும் அன்போடு தந்தால் பெரியோர்கள் ஏற்றல் வேண்டும் என்பதை இராமனின் பெருந்தன்மையால் அறியலாம்.
நாளைவா என்னல்
இராமன், குகனை நோக்கி, “நாம் இன்று தவச் சாலையில் தங்கி, நாளை கங்கையைக் கடப்போம். எனவே நீ, அன்பு நிறைந்த நின் சுற்றத்தாரோடு இங்கிருந்து சென்று, உன்னுடைய நகரத்திலே உவகையோடு இனிதாகத் தங்கி, விடியற் காலை நாங்கள் ஏறிச் செல்வதற்குரிய ஓடத்துடன் இங்கே வருக!” என்றான்.
பொங்கும்நின் சுற்றத் தோடும் போய்உவந்து இனிதுன் ஊரில்
தங்கிநீ நாவா யோடும் சாருதி விடியல் என்றான்
(கங்கைப் படலம் 43:3-4)
இப்பகுதியில் தவச் சாலையில் தவநெறி நிற்பவரே இருத்தல் வேண்டும் என்பது உள்ளமைந்த செய்தியாக வெளிப்படுகிறது.
கார்குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்து வான்இப்
பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வ னேன்யான் இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன் ஆனதுஐய செய்குவென் அடிமை என்றான்
(கங்கைப் படலம் 44)
(ஈர்கிலா = பறிக்காத)
இப்பகுதியால் குகனின் மனவுணர்வும், செயலுணர்ச்சியும் வெளிப்படுவதனைக் காண முடிகிறது. தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தல் வேண்டும் என்ற துடிப்புப் புலப்படுகிறது.
இராமனின் நட்பு
குகனின் வேண்டுகோளைக் கேட்ட இராமன், தன் அருகில் நின்ற சீதை, இலக்குவன் ஆகிய இருவரின் திருமுகத்தையும் நோக்கி, அவர்கள் மனமும் ஏற்றுக் கொள்வதை அறிந்து, “இவன் நம்மிடம் நீங்காத அன்புடையவன் ஆவான்”, என்று கூறினான். “கருணையினால் மலர்ந்த கண்களை உடையவனாகிய எவற்றிலும் இனிமையான நண்பனே ! நீ விரும்பியவாறே இன்று என்னோடு தங்கியிரு” என்று குகனிடம் கூறினான்.
கோதைவில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான்
சீதையை நோக்கித் தம்பி திருமுகம் நோக்கித் தீராக்
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன்
யாதினும் இனிய நண்ப இருத்திஈண்டு எம்மொடு என்றான்
(பாடல் – 18)
நம்முடன் ஒருவர் தங்கியிருக்க வேண்டுமானால் குடும்பத்தினரின் இசைவும் வேண்டும் என்பதை இராமன் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.
குகனின் வருத்தம்
“மனுக்குலத்தின் (அரசகுலம்) வழி வந்த மன்னனே! நீ அழகிய அயோத்தி நகரத்தை விட்டு இங்கு வந்த காரணத்தைத் தெரிவிப்பாயாக” என்று குகன் கேட்டான். இலக்குவன், இராமனுக்கு நேர்ந்த துன்பத்தைச் சொல்ல, அதைக் கேட்டு இரங்கிய குகன் மிகவும் துன்பமுற்றுக் கூறலானான்: “பெரிய நிலத்தை உடையவளான பூமி தேவி தவம் செய்தவளாக இருந்தும், அத்தவத்தின் பயனை முழுவதும் பெறவில்லையே, ஈதென்ன வியப்பு” என்று கூறி. இரண்டு கண்களும் அருவி போலக் கண்ணீர் சொரிய அங்கே இருந்தான். அன்புக்குரியவர் துன்பப்பட்டால், அன்புடையவர் வருந்துவர் என்பதைக் குகன் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
இலக்குவன் கூற்று
குகன் கேட்க, இலக்குவன் பின்வருமாறு கூறினான் :
அயோத்தி மன்னன் தசரதன், அரச குல மரபுப்படி மூத்த மகன் இராமனுக்கு முடி சூட்ட முடிவு செய்தான். கைகேயி தன் தோழி மந்தரை (கூனி)யின் சூழ்ச்சிக்குப் பலியானாள். தசரத மன்னனிடம், தான் சம்பராசுர யுத்தத்தில் உதவி செய்தற்காகத் தனக்கு அளித்த இரு வரங்களைக் கொடுக்குமாறு வேண்டினாள். தசரதன் உடன்பட்டான். அவ்விரு வரங்களில் ஒன்று தன் மகன், பரதனுக்கு முடி சூட்ட வேண்டும் என்பது; மற்றொன்று இராமன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது. தந்தையின் வாக்கைக் காப்பாற்ற இராமன் காட்டுக்குப் புறப்பட்டான்.
அப்போது, சீதையும் உடன் வர, யானும் சேர்ந்து மூவரும் வனவாசம் மேற்கொண்டோம். இவ்வாறு தொடர்ந்து வரும்போது இவ்வனத்தில் உன்னைக் கண்டோம்.
“நாங்கள் காட்டில் வாழ்ந்தாலும் செல்வத்திலும் வலிமையிலும் குறைவற்றவர்கள். ஆனால் பொய் வாழ்க்கை பெறாதவர்கள். எங்களை உறவினராகக் கருதி எங்கள் ஊரில் நெடுங்காலம் இனிதாகத் தங்கியிருங்கள். செய்ய வேண்டிய முறைப்படி நீங்கள் சொல்லும் வேலைகளைச் செய்வோம்”.
செய்ம்முறை குற்றேவல் செய்குதும் அடியோமை
இம்முறை உறவுஎன்னா இனிதுஇரு நெடிதுஎம்ஊர்
(கங்கைப் படலம் 54:3-4)
“தேவர்களும் விரும்பி உண்ணக் கூடிய தேனும், தினையும் உள்ளன; மாமிசமும் இங்கு உள்ளது. உமக்குத் துணையாக நாய் போன்ற அடிமைப்பட்டவராகிய எங்கள் உயிர்கள் உள்ளன. விளையாடுவதற்கு இக்காடும், நீராடுவதற்குக் கங்கையும் இருக்கின்றன. நான் உயிரோடு உள்ளவரை நீ இங்கேயே இனிதாக இருப்பாயாக.” என்றும் தெரிவித்தான் குகன்.
கான்உள புனல்ஆடக் கங்கையும் உளதுஅன்றோ
நான்உள தனையும்நீ இனிதுஇரு நாடஎம்பால்
(கங்கைப் படலம் 55:3-4)
“தேவர்களைக் காட்டிலும் மன வலிமையும், உடல் வலிமையும் கொண்டு வில்லேந்திப் போர் புரியும் வீரர்கள் (5லட்சம் வேடர்கள்) என்னிடம் உள்ளனர். எங்கள் குடியிருப்பில் நீ ஒரு நாள் தங்கினாய் என்றாலும் நாங்கள் கடைத்தேறுவோம். அதைக் காட்டிலும் வேறான சிறப்பு எங்களுக்கு இல்லை” என்று கூறினான் குகன்.
உய்குதும் அடியேம் எம்குடிலிடை ஒருநாள்நீ
வைகுதி எனின்மேல்ஒர் வாழ்வுஇலை பிறிதுஎன்றான்
(கங்கைப் படலம் 57:3-4)
(உய்குதும் = கடைத்தேறுவோம்)
“உடுத்துக் கொள்ள மெல்லிய ஆடை போலும் தோல்கள் உள்ளன. உண்பதற்குச் சுவையான உணவு வகைகள் உள்ளன; உறங்குவதற்குத் தொங்கும் பரண்கள் உள்ளன. தங்குவதற்குச் சிறு குடிசைகள் உள்ளன. வில் பிடித்துப் போரிடக் கைகள் உள்ளன.
நீ விரும்பும் பொருள் வானத்தில் இருந்தாலும் விரைவாகக் கொண்டு வந்து சேர்ப்போம்” என்று தொடர்ந்து பேசினான் குகன்.
கலிவானின் மேல்உள பொருளேனும்
விரைவோடு கொணர்வேமால்
(க.ப 56)
(கொணர்வேம் = கொண்டு வந்து கொடுப்போம்)
விருந்தினரைத் தம் உறவினரைப் போல நேசிக்கும் தன்மையைக் குகன் வாயிலாக அறிய முடிகிறது. அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்னும் குறள் நெறிக்கேற்ப, குகன் இராமனிடம் கொண்ட அன்பிற்காக எதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான் என்பதை அறிகிறோம்.
இராமனின் வாக்குறுதி
குகன் வேண்டுகோளைக் கேட்ட இராமன், மிகவும் மன நெகிழ்ச்சியோடு சிரித்தான். “வீரனே ! நாங்கள் புண்ணிய நதிகளில் நீராடி, ஆங்காங்கு உள்ள புனிதமான முனிவரை வழிபாடு செய்து, வனவாசம் செய்ய வேண்டிய சில நாட்கள் முடிந்ததும் உன்னிடம் இனிதாக வந்து சேருவோம்” என்று குகனிடம் இராமன் கூறினான்.
…. …… …… வீரநின் னுழையாம்அப்
புண்ணிய நதிஆடிப் புனிதரை வழிபாடுஉற்று
எண்ணிய சிலநாளில் குறுகுதும் இனிதுஎன்றான்
(க.ப 58:2-4)
(நின்னுழை = நின் இருப்பிடம் ; புனிதர் = முனிவர்)
எளியவர் ஆயினும் அன்போடு இருந்தால், பெரியோர்கள் தம் நிலையில் இருந்து இறங்கி அன்பும் அருளும் செலுத்துவர் என்பது, இராமன் குகனிடம் கூறிய செய்தியால் உணர்த்தப்படுகிறது. பெரியோர்கள், அன்பிற்காக எதனையும் பொருட்படுத்த மாட்டார்கள் என்னும் கருத்தை இதன் வாயிலாக அறிய முடிகிறது.
கங்கையைக் கடத்தல்
இராமனின் கருத்தை அறிந்துகொண்ட குகன், விரைவாகச் சென்று பெரிய படகு ஒன்றைக் கொண்டு வந்தான். தாமரை மலர்போலும் கண்களை உடைய இராமன் அங்கிருந்த முனிவர்களான அந்தணர்கள் அனைவரிடமும் விடை தருக என்று கூறிவிட்டு, அழகு திகழ் சீதையோடும் இலக்குவனோடும்
படகில் இனிதாக ஏறினான்.
தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான்
அந்தணர் தமைஎல்லாம் ‘அருளுதிர் விடை’என்னா
இந்துவின் நுதலாளாடு இளவலொடு இனிதுஏறா
(க.ப 59:2-4)
(நயனம் = கண்; இந்து = சந்திரன்)
இராமன் உண்மையான உயிர் போன்றவனான குகனை நோக்கிப் படகை விரைவாகச் செலுத்துக என்றான். உடனே படகு விரைவாகவும், இள அன்னம் நடப்பதைப் போல அழகாகவும் சென்றது. படகில் செல்லும் போது சீதையும் இராமனும் கங்கையின் புனித நீரை அள்ளி எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கரையில் நின்று கொண்டிருந்த முனிவர்கள் இராமனைப் பிரிந்த துயரத்தால் நெருப்பில் இட்ட மெழுகுபோல் ஆனார்கள்.
விடுநனி கடிதுஎன்றான் மெய்உயிர் அனையானும்
முடுகினன் ………………………………. …………………………
இடர்உற மறையோரும் எரிஉறு மெழுகுஆனார்
(க.ப.60:2-4)
அன்புடையார்களைப் பிரிவது என்பது மிகவும் வருத்தம் தரக் கூடியதாகும்.
சித்திர கூடத்தின் செல்நெறி பகர்என்ன
பத்தியின் உயிர்ஈயும் பரிவினன் அடிதாழா
உத்தம அடிநாயேன் ஓதுவது உளதுஎன்றான்
(க.ப. 63: 2-4)
“நாய் போன்றவனாகிய நான் உங்களுடன் வரும் பேறு பெறுவேனானால், நேர் வழியையும், அதில் குறுக்கிடும் பல கிளை வழிகளையும் அறிய வல்லவனன் ஆகையால், தக்க வழியைக் காட்டுவேன். உண்பதற்கு இனிய நல்ல காய், கனி, தேன் முதலானவற்றைத் தேடிக் கொண்டு வந்து தருவேன். தாங்கள் விரும்பிய இடங்களில் தக்க குடில்கள் அமைத்துக் கொடுப்பேன். தங்களை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரிய மாட்டேன்” என்று குகன் கூறினான்.
நெறிஇடு நெறிவல்லேன் நேடினென் வழுவாமல்
நறியன கனிகாயும் நறவுஇவை தரவல்லேன்
உறைவிடம் அமைவிப்பேன் ஒருநொடி வரைஉம்மைப்
பிறிகிலென் உடன்ஏகப் பெறுகுவென்எனின் நாயேன்
(க.ப. 64)
(நேடு = தேடு; நறியன = நல்லன; நறவு = தேன்)
குகன், தன் பிரிவாற்றாமையை உணர்த்துவதை இதன் மூலம் அறியலாம்.
மேலும் குகன் தொடர்ந்து பேசினான், “தீய விலங்குகளின் வகைகள் யாவும் தங்களை நெருங்க விடாமல் சென்று அவற்றை அழித்து, தூயன ஆகிய மான், மயில் போன்றவை வாழும் காட்டிடத்தை ஆராய்ந்து கண்டுபிடித்துக் காட்டும் வல்லமை பெற்றுள்ளேன். நீங்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவேன். விரும்பிய பொருளைத் தேடிக் கொண்டு கொடுப்பேன். இரவிலும் வழி அறிந்து நடப்பேன்” என்றான்.
தீயன அவையாவும் திசைசெல நூறி
தூயன உறைகானம் துருவினென் வரவல்லேன்
…………….. இருளினும் நெறிசெல்வேன்
(க.ப. 65)
(நூறி = அழித்து; துருவி = ஊடுருவி)
“மற்போரில் சிறப்புப் பெற்ற தோள்களை உடையவனே! மலைப் பகுதி வழியே சென்றாலும் அங்குக் கிடைக்கும் கிழங்கு, தேன் முதலியன கொண்டு வந்து தருவேன். வெகு தொலைவில் கிடைக்கும் நீர் கிடைத்தாலும், எளிதில் உடனே கொணர்ந்து தருவேன். பல வகையான விற்களைப் பெற்றுள்ள நான் எதற்கும் அஞ்ச மாட்டேன். இராமனே! உன் மலர்போலும் திருவடியை ஒருபோதும் பிரிய மாட்டேன்” என்றும் குகன் கூறினான்.
குகனைத் ‘தம்பி’ எனல்
குகன், இராமனை நோக்கி, “என் படைகள் யாவையும் கொண்டுவந்து காவல் காத்து நிற்பேன். என்னால் வெல்ல முடியாத பகைவர்கள் வந்தாலும், உங்களுக்குத் தீங்கு நேரும் முன் நான் இறந்து விடுவேன் என்று கூறினான். மேலும் சிறிது நேரங்கூடப் பிரியாமல் இருப்பேன்” என்றான்.
இராமன் உடனே, “நீ எனது உயிர் போன்றவன். என் தம்பி இலக்குவன் உனக்குத் தம்பி, அழகுடைய நெற்றியைப் பெற்ற சீதை, உனக்கு உறவினள், குளிர்ந்த கடலால் சூழப்பட்ட இந்நாடு முழுவதும் உன்னுடையது” என்றான். மேலும், “உன்னைக் கண்டு தோழமை கொள்வதற்கு முன் உடன் பிறந்தவர்களாக நால்வர் இருந்தோம். இப்போது உன்னோடு சேர்த்து, உடன் பிறந்தவர்கள் ஐவராகி விட்டோம்” என்றான். “இனி நீ உன் இருப்பிடம் சென்று அங்குள்ள மக்களைக் காக்க வேண்டும்” என்று கட்டளை இட்டான்.
அதனைக் குகன் மறுக்க முடியாமல் ஏற்றுச் செயல்பட்டான்.
முன்புஉளெம் ஒருநால்வேம் முடிவுளது எனஉன்னா
அன்புஉள இனிநாம்ஓர் ஐவர்கள் உளர்ஆனோம்
(க.ப 69:3-4)
இப்பகுதி அன்பால், உடன்பிறப்பு விரிவடையும் தன்மையைப் புலப்படுத்துகிறது.
குகன் விடைபெறல்
இராமனை விட்டுப் பிரிய மனமில்லாமல் மிகுந்த மன வருத்தத்துடன் விடைபெற்றுக் கொண்டான் குகன். பின்பு இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் மரங்கள் அடர்ந்த காட்டில் நெடுந்தூரம் செல்வதற்குரிய வழியிலே நடந்து சென்றார்கள்.
இராமாயணத்தில் இடம்பெறும் கங்கைப் படலத்தின் சிறப்புத் தன்மையைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.
குகனின் தோற்றம், பண்பு, அவன் இராமன் மீது கொண்டிருந்த பேரன்பு, தன்னால் முடிந்த அளவு உதவ முற்படுதல் போன்ற பல செய்திகளைச் சிறப்பாக அறிந்து இருப்பீர்கள்.
குகனின் அன்பினைக் கண்டு, இராமன் அவனைத் தன்னுடன் பிறந்த தம்பியாக ஏற்றுக்கொண்ட செய்தியினையும் அறிந்திருப்பீர்கள்.
கம்பராமாயணத்தின் சிறப்புகள், நூலாசிரியரின் சிறப்புகள் முதலியன பற்றி விரிவாக உணர்ந்து இருப்பீர்கள்.
பாடம் - 6
சுந்தரரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட இந்நூலில், பக்தியின் பெருமை, மக்களின் வாழ்க்கை முறை, ஆட்சி முறை, தமிழ்நாட்டின் திருத்தலங்கள் ஆகிய பல செய்திகள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. தமிழில் தோன்றிய மற்ற காப்பியங்களில் வெளிப்படையாகக் காணமுடியாத ஒரு தனிச் சுவையாகப் பக்திச் சுவையைக் கொண்டும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டும் பாடப்பட்டதே இந்நூல் எனலாம். இத்தகு சிறப்பினைக் கொண்ட புராண நூலைத் தேசிய இலக்கியம் என்று ஆன்றோர்கள் பாராட்டியுள்ளனர். இப்பெரிய புராணத்தில் இலைமலிந்த சருக்கத்தில் கண்ணப்ப நாயனார் புராணம் விளங்குகின்றது. இப்பகுதியில் திண்ணனாரின் தோற்றம், பக்திச் சிறப்பு, வழிபாட்டு முறை, இறைவனுக்குக் கண்ணை அப்பிக் கண்ணப்பராதல் முதலான பல செய்திகளைக் காணலாம்.
சுந்தரரின் சிறப்பு, அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருட்திறம், குரு (ஆசிரியன்), இலிங்கம் (இறைவன் திருமேனி), சங்கமம் (அடியார்) ஆகிய முறைகளில் சிவனை வழிபட்ட நிலைகள், தொண்டின் திறம், சாதி, மத, இன வேறுபாடில்லாமல் அடியார் நோக்கில் கண்டு வழிபட்டு முத்தி பெற்ற தன்மைகள், சிவன் அடியார்களை ஆட்கொண்ட விதம் முதலான பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. அடியார்களின் வரலாறும். அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறியும், இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதமும் இந்நூல் முழுதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார், திருத்தொண்டர் மாக்கதை என்று பெயரிட்டார். செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் (பெரியார்களின்) சிறப்பினை உரைப்பதால் இதனைச் சான்றோர்கள் பெரியர் புராணம் என்று கூற, காலப் போக்கில் பெரிய புராணம் என்று வழங்கப்பட்டது.
சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு பெரிய புராணத்தைச் சார்பு நூலாகப் படைத்தார் சேக்கிழார்.
சிவனை முதன்மைப்படுத்தி வழிபடும் சமயமாகிய சைவத்தையும், அடியார்களது வரலாறு, தொண்டு நிறைந்த வாழ்வு, முத்தி பெற்ற நிலை ஆகியவற்றையும் விரிவாகவும் தெளிவாகவும் புலப்படுத்துவதே பெரிய புராணத்தின் நோக்கம் ஆகும்.
பிற மொழிக் கதைகளைத் தழுவாமல், தமிழ் மக்களையும், தமிழகச் சூழலையும் மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களைப் போலவே பெரியபுராணம் என்னும் நூல் சிறப்புற்றுத் திகழ்கின்றது. ஆண் பெண் வேறுபாடின்றிப் பல இனங்களையும், தொழில் பிரிவுகளையும் சார்ந்த சிவனடியார்களைப் பற்றிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலைத் தேசிய இலக்கியம் என்று சான்றோர்கள் பாராட்டுவர்.
சிவத் தொண்டர்களின் வரலாற்றைச் சிறப்பித்த காரணத்தால் இவருக்குத் தொண்டர்சீர் பரவுவார் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. கல்வெட்டுகள் இவரை மாதேவடிகள் என்றும், இராமதேவர் என்றும் சிறப்பிக்கின்றன. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று இவரைப் பாராட்டுகின்றார்.
திண்ணனார் சிவலிங்கத் திருவுருவத்தின் கண்ணிலிருந்து இரத்தம் கசிந்ததைக் கண்டு, தன் கண்ணைத் தோண்டி அப்ப இறைவனால் கண்ணப்பன் என்று அழைக்கப்பட்ட செய்தியினை இக்கதை விளக்குகின்றது. இக்கதை நிகழ்ந்த இடம் இன்று காளத்தி என வழங்கும் திருக்காளத்தி மலையாகும் (பொத்தப்பி நாடு).
சுந்தரமூர்த்தி சுவாமிகளால் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்றும், பட்டினத்தாரால் நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என்றும், திருநாவுக்கரசரால் திண்ணன், கண்ணப்பன், வேடன் என்றும் பலவாறாகச் சான்றோர்கள் பலரால் கண்ணப்பர் பாராட்டப்படுகிறார்.
ஒரு நாள் திண்ணன் நாணன், காடன் ஆகிய நண்பர்களோடு வேட்டையாடச் சென்றார். வேட்டைக்காக விரித்த வலைகளை அறுத்துக்கொண்டு ஒரு பன்றி மட்டும் ஓடியது. விடாது துரத்திச் சென்று, புதருள் மறைந்த அந்தப்பன்றியைத் திண்ணன் தம் குறுவாளால் வெட்டி வீழ்த்தினார். இதனைக் கண்ட நண்பர்கள் வியந்து, திண்ணனின் வலிமையைப் பாராட்டினார்கள். அருகே ஓடும் பொன்முகலி ஆற்றையும் வானாளாவ நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார் திண்ணன். இதனைக் கண்ணுற்ற நாணன். இம் மலையின் மீது குடுமித் தேவர் இருக்கிறார். அவரைக் கும்பிடலாம் வா என்றான். மலை ஏறும்போது திண்ணனுக்கு மட்டும் புதுவிதமான இன்பமும் உணர்வும் ஏற்பட்டன. குடுமித் தேவருக்கு, சிவ கோசரியார் என்பவர் ஆகம விதிமுறைப்படி பூசை செய்வதனை நாணன் மூலம் அறிந்தார். மலையேறிய திண்ணன், குடுமித் தேவரைக் கண்டவுடன் அவரை வணங்கியும், கட்டித் தழுவியும் ஆடினார்; பாடினார். நண்பன் காடன் ஆற்றங்கரையில் தீயில் இட்டுப் பக்குவப் படுத்திய இறைச்சியைத் தன்னுடைய ஒரு கையில் எடுத்துக் கொண்டார், மறு கையில் வில் இருந்ததால் வாய் நிறைய ஆற்று நீரையும், அருகில் இருந்த மரத்தின் மலர்களைத் தலையில் செருகியும் கொண்டு வந்தார். குடுமித் தேவருக்குத் திருமஞ்சனமாகத் தன் வாய் நீரையும், அமுதமாகப் பன்றி இறைச்சியினையும் தலையில் சூடிய மலரை வழிபாட்டு மலராகவும் இட்டு மகிழ்ந்தார் திண்ணனார். பின் இரவு முழுவதும் வில்லேந்திக் காவல் புரிந்தார். காலையில் குடுமித் தேவருக்குத் திருவமுது தேடி வரப் புறப்பட்டார்.
வழக்கம் போல, பூசை புரிய வந்த சிவ கோசரியார் இறைவன் மீதிருந்த இறைச்சி முதலானவற்றைக் கண்டு வருந்தினார், புலம்பினார். பின் அவற்றை நீக்கித் தூய்மை செய்து பூசனை புரிந்து சென்றார். அடுத்து, திண்ணனாரும் வந்து இறைச்சி முதலானவற்றை வைத்து வழிபட்டார். மறுநாளும் இறைச்சி முதலானவை இருப்பது கண்டு வருந்திச் சிவ கோசரியார் இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார். அவரது கனவில் சிவபிரான் தோன்றித் திண்ணனாரின் அன்பு வழிபாட்டை நாளை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக என்று கூறி மறைந்தருளினார்.
ஆறாம் நாள் திருக்காளத்தி நாதர் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்ட, வலக் கண்ணில் இருந்து உதிரம் பெருகும்படிச் செய்தார். அதனைக் கண்ட திண்ணனார், செய்வதறியாமல் திகைத்தார். பின் தம் கைகளால் துடைத்தாலும் பச்சிலை இட்டாலும் நிற்கவில்லையே என வருந்தி நின்றபோது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது. உடனே தம் வலக்கண்ணை அம்பினால் அகழ்ந்து எடுத்து அப்பினார். உதிரம் நின்றுவிட்டது. இதைக் கண்டு மகிழ்ந்து ஆடினார். சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகும்படிச் செய்தார்.
தம் இடக்கண்ணையும் பெயர்த்து எடுத்து அப்பினால் உதிரம் நின்றுவிடும் என்று உணர்ந்தார். தம் மறு கண்ணையும் பெயர்த்துவிட்டால் இறைவனின் இடக்கண்ணைச் சரியாகக் கண்டறிய முடியாது என்பதால், அடையாளத்துக்காகத் தம் காலின் பெருவிரலை இறைவனின் உதிரம் பெருக்கும் கண் மீது ஊன்றிக் கொண்டார். அம்பினால் தம் இடக்கண்ணைப் பெயர்க்கத் தொடங்கினார். உடனே காளத்தி நாதர் நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார்.
இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவன் அருளில் மூழ்கித் திளைத்தார். அன்று முதல் இறைவனுக்கே தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.
குறிப்பு :
பொத்தப்பி நாடு : ஆந்திர மாநிலத்தின் இப்போதைய கடப்பை மாவட்டத்தில் புல்லம் பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும்.
உடுப்பூர் : இவ்வூர் குண்டக்கல் – அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம்பேட்டைக்கு அருகில் உள்ளது. உடுக்கூர் என இன்று வழங்கப்படுகிறது.
கதைமாந்தர்
கண்ணப்ப நாயனார் வரலாற்றில் இடம்பெறும் கதை மாந்தர்கள். நாகன், தத்தை, திண்ணன், நாணன், காடன், வேடுவர்கள், தேவராட்டி, குடுமித் தேவர், சிவ கோசரியார்.
குடுமித் தேவருக்கு இரவில் துணை யாருமில்லை என்று எண்ணி, இரவு முழுவதும் அவரே கையில் வில்லேந்திக் காவல் புரிந்தார். காலை புலர்ந்தது. திண்ணனார், காளத்தி நாதருக்குத் திருவமுது தேடிவரப் புறப்பட்டார்.
திண்ணனார் முன் போலவே வேட்டையாடி விலங்குகளைத் தீயில் சுட்டு அமுதாக்கிப் படைத்திட வந்தார். தொடர்ந்து, சிவ கோசரியார் வழிபட்டுச் சென்றவுடன், திண்ணனார் வந்து அவற்றை நீக்கி வழிபடுவதும் தொடர்ந்தது. தினமும் சிவன் திருமேனி மீது இறைச்சி இருப்பது கண்டு சிவ கோசரியார் வருந்தினார். மனம் கசிந்து இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார். அவரது கனவில் சிவபிரான், நீ கூறும் மறைமொழிகள் அவன் அன்பு மொழிகளுக்கு ஈடாகாது, நீ வேள்வியில் தரும் அவியுணவைக் காட்டிலும் அவன் தரும் ஊனமுது இனியது என்றும் இந்நிகழ்ச்சியினை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக என்றும் கூறினார்.
அவனுடைய வடிவுஎல்லாம் நம்பக்கல் அன்புஎன்றும்
அவனுடைய அறிவுஎல்லாம் நமைஅறியும் அறிவுஎன்றும்
அவனுடைய செயல்எல்லாம் நமக்குஇனிய வாம்என்றும்
அவனுடைய நிலைஇவ்வாறு அறிநீஎன்று அருள்செய்தார்.
(பெரி: க. பு.: 157)
என்றும் திண்ணனாரின் பக்திச் சிறப்பைச் சிவபிரான் கூறினார்.
இந்த நிலையில் திண்ணனார் அடைந்த துயரத்தையும், தவிப்புகளையும் சேக்கிழார் உணர்ச்சி மிக்க கவிதையாய் வடித்திருக்கிறார்.
பாவியேன் கண்ட வண்ணம்
பரமனார்க்கு அடுத்தது என்னோ
ஆவியின் இனிய எங்கள்
அத்தனார்க்கு அடுத்தது என்னோ
மேவினார் பிரிய மாட்டா
விமலனார்க்கு அடுத்தது என்னோ
ஆவது ஒன்று அறிகி லேன்யான்
என்செய்வேன் என்று பின்னும்…
(க.புராணம் : 174)
(பரமனார், அத்தனார், விமலனார் = சிவபிரானின் சிறப்புப் பெயர்கள்; மேவினார் பிரிய மாட்டா = சேர்ந்தவர்கள் பிரிய இயலாத பேரன்பு கொண்ட)
இனி என்ன செய்வது என்று சிந்தித்து நின்றார். அப்பொழுது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது. உடனே அம்பினால் தமது வலக்கண்ணை அகழ்ந்தெடுத்து, ஐயன் திருக்கண்ணில் அப்பினார். இரத்தம் நின்றுவிட்டது. இதைக் கண்டு மகிழ்ந்து ஆடினார். அடுத்து, சிவபிரான் தமது இடக்கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தார். அதைக் கண்ட திண்ணனார், ‘இதற்கு யான் அஞ்சேன், முன்பே மருந்து கண்டுபிடித்துள்ளேன். அதனை இப்பொழுதும் பயன்படுத்துவேன். எனது இன்னொரு கண்ணையும் அகழ்ந்தெடுத்து அப்பி ஐயன் நோயைத் தீர்ப்பேன்’ என்று எண்ணினார். அடையாளத்தின் பொருட்டு, காளத்தி நாதர் திருக்கண்ணில் தமது இடக்காலை ஊன்றிக் கொண்டு, மனம் நிறைந்த விருப்புடன் தமது இடது கண்ணைத் தோண்டுவதற்கென அம்பை ஊன்றினார். குடுமித் தேவர் நில்லு கண்ணப்ப! என்று மூன்று முறை கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார். மேலும், என்றும் என் வலப்பக்கம் இருக்கக் கடவாய் என்று பேரருள் புரிந்தார். இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவனருளில் மூழ்கித் திளைத்தார்.
இறைவனுக்கே தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் அன்று முதல் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.
புராணம் என்றால் என்ன என்பது பற்றியும், பெரிய புராணம் கூறும் செய்திகளைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள்.
கண்ணப்ப நாயனார் பற்றிய செய்திகளைப் பற்றி, சிறப்பு நிலையில் விளக்கமாக அறிந்து இருப்பீர்கள்.
கதை அமைப்பு, பாத்திரப் படைப்பு முதலியவற்றால் பக்தி நெறியில் படைக்கும் காப்பியங்களுக்குப் பெரிய புராணம் ஓர் எடுத்துக் காட்டாக உள்ளதனை அறிந்திருப்பீர்கள்.
பெரிய புராணத்தின் நூலாசிரியர், பாட்டுடைத் தலைவனின் சிறப்புகள், இலக்கியச் சிறப்புகள் முதலியன பற்றி விரிவாக உணர்ந்து இருப்பீர்கள்.