14

காப்பியங்கள் - II

பாடம் - 1

சூளாமணி

1.0 பாட முன்னுரை

பழங்காலத்தில், மக்கள் பேசிப்பேசி மகிழ்ந்த கதைகளை, சொற்சுவை, பொருட்சுவையுடன் உணர்வு பொங்க, மக்கள் மகிழ்ந்து பேசும் வகையில் புலவர்களால் படைக்கப்பட்ட தொடர்நிலைச் செய்யுள்தான் காப்பியம் என்பது. ஐம்பெருங்காப்பியங்களைக் கூறும்போது, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்றும், ஐஞ்சிறுகாப்பியங்களாகச் சூளாமணி, யசோதரகாவியம், உதயணகுமார காவியம், நீலகேசி, நாககுமார காவியம் ஆகியவற்றையும் தமிழிலக்கியத்தில வகைப்படுத்தி உள்ளனர்.

காப்பியங்களின் தலைப்புகளைக் கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். கதை மாந்தர்கள் அணிந்திருந்த அணிகள் தலைப்புகள் ஆகியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, சிலப்பதிகாரம் சிலம்பு என்னும் அணியின் பெயரைப் பெற்றிருக்கிறது. அதே போல மணிமேகலை. (மணிமேகலை இடையில் அணிவது) இவ்வாறே சீவகனின் தாய் தன் மகனைச் சிந்தாமணி என அழைக்கிறாள். அதுவே அக் காப்பியத்தின் பெயராக அமைந்தது. (சீவகசிந்தாமணி)

அதுபோலவே, வணிகக் குடியினரின் ஆக்கத்தால் வளர்ந்த சமண சமயத்தில் அன்றைய சமுதாய நாகரிக வளர்ச்சியின் சின்னமாக விளங்கிய அணிகலன்களில் தலையில் அணியும் சூளாமணியை ஆசிரியர் தோலாமொழித் தேவர் தேர்ந்தெடுத்துக் காப்பியம் புனைந்துள்ளார்.

தொடக்கக் கால மனிதன் தன்னைவிட வலிமை வாய்ந்த சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகளோடு, போரிட்டுத் தன் உடலாண்மையை வெளிப்படுத்தியதுபோல, இயற்கையோடு போரிட மனிதன் தன் ஆற்றலைவிட, மந்திர ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளைக் கொண்ட வடநாட்டுப் பழமரபுக் கதைகள் போல, சூளாமணியும் இயற்றப்பட்டுள்ளது.

1.1 சூளாமணி

சூளாமணி – தோலாமொழித் தேவர் இயற்றியது. கி.பி.10-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது (கி.பி. 925-950). சமண சமயத்தைச் சார்ந்த நூல். காப்பியத் தலைமாந்தர்களில் ஒருவராம் பயாபதி மன்னனை, உலகின் முடிக்கு ஓர் சூளாமணி ஆனான் (முத்திச்சருக்கம். 59) என்று ஆசிரியர் பெருமைப்படுத்துகிறார். இதன்வழி சூளாமணி என்பது பயாபதி அரசனின் புகழ்ப் பெயராகவே இருக்கின்றது என்பது தெரிகிறது. இக்காப்பியத்தில், இரத்தின பல்லவ நகரினைச் சூளாமணியின் ஒளிர்ந்து (முத்திச்சருக்கம் 284) என நகரின் பெருமையையும், இந்திர சஞ்சய அரசனை, மஞ்சுசூழ் மலைக்கோர் சூளாமணி (முத்தி. 329) என அரசின் பெருமையையும், குன்றெடுத்த திவிட்டன் முடிமேல் சூளாமணி முளைத்த சோதி (முத்தி. 1519) எனக் காப்பியத் தலைவனின் பெருமையையும் சுட்டியிருப்பதால், இந்நூலாசிரியர் காப்பியத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளமை நன்கு புலனாகின்றது.

ஊழ்வினைக் கோட்பாடு

சூளாமணியின் ஆசிரியர் ஊழ்வினைக் கோட்பாட்டை விளக்கிக் கூறுகிறார். ஊழ்வினையை நீக்க இரத்தினத் திரயம் என்னும் கோட்பாடு, பல உலகம் பற்றிய உண்மை, குலம், சமய நம்பிக்கை ஆகியவற்றைச் சமண சமய உணர்வோடு எடுத்துரைப்பது இக்காப்பியத்தின் நோக்கமாக உள்ளது.

அரங்கேற்றம்

இக்காப்பியம், சேந்தன் எனும் மன்னன் அவையில் அரங்கேறியுள்ளது. இது பாயிரத்தின்மூலம் அறியும் செய்தி.

1.1.1 காப்பிய அமைப்பு சூளாமணி காப்பியம் 12 சருக்கங்களில், 2131 விருத்தப்பாக்களால் எழுதப்பட்டுள்ளது. சருக்கங்கள் வருமாறு:

பாயிரம்

(1)நாட்டுச் சருக்கம்

(2)நகரச் சருக்கம்

(3)குமார காலச் சருக்கம்

(4)இரதநூபுரச் சருக்கம்

(5)மந்திரசாலைச் சருக்கம்

(6)தூதுவிடு சருக்கம்

(7)சீயவதைச் சருக்கம்

(8)கல்யாணச் சருக்கம்

(9)அரசியற் சருக்கம்

(10)சுயம்வரச் சருக்கம்

(11)துறவுச் சருக்கம்

(12)முத்திச் சருக்கம்

ஐந்திணை நிலவளம், நாட்டுச் சிறப்பு, நகரச்சிறப்பு, அரசியல் அறம்,தூது நெறி, வேனில் விழா, அமைச்சரவை, சுயம்வரம், தெய்வப்போர், மாயப்போர் முதலியன கொண்டு இயன்ற வரை தமிழ் மரபுக்கேற்ப இக்காப்பியத்தை இயற்றியுள்ளார், ஆசிரியர்.

1.1.2 முதல் நூல் சூளாமணிக்கு முதல் நூலானது செஞ்சொற்புராணம் என்பதைப் பாயிரத்தின் மூலம் உணரலாம். வடமொழியில் உள்ள ஸ்ரீபுராணத்தில் வரும் 11-ஆம் தீர்த்தங்கரர் புராணத்தில் சூளாமணிக் கதை கூறப்படுகிறது. வடநாட்டு வேந்தர்களான விசயனும், திவிட்டனும் பாகவதத்தில் வரும் பலராமன், கண்ணன் ஆகியோருடன் ஒப்பிட்டு எண்ணுதற்குரியர். ஸ்ரீபுராணத்தைத் தவிர, மற்றொரு சமணக் காப்பியமான மகாபுராணத்திலும் சூளாமணிக் கதைப் பொருள் வருகின்றது.

நாற்பொருள் கூறுதல், ஆருகத (சமண) சமயத்தில் காணும் அரியஉண்மைகளை விளக்கல், வாழ்வில் பின்பற்றற்குரிய வரலாறுகளையும் நீதிகளையும் எடுத்துரைத்தல் ஆகியவை பற்றிப் பேசுவதால், சமணர்கள் மேலான நூலாக இதனைப் போற்றி வந்தனர்.

1.1.3 ஆசிரியர் சூளாமணி ஆசிரியர் தோலாமொழித் தேவர் தான் என்பது பற்றித் தெளிவாக எதுவுமே தெரியவில்லை. தோலாமொழித் தேவர் எனும் பெயருக்கு வெல்லும் சொல்வல்லார் என்பது பொருள்.

தோலாமொழி என்று சில தனிச் செய்யுள்களில் இவர் பெயர் வருகிறது; ஆனாலும் இயற்பெயர் தெரியவரவில்லை.

தேவர் என்ற ஒட்டே சமணர் என்ற குறிப்பைத் தருகிறது என்பதால், இவர் சமணர் என்பர் சிலர். வேறுமொழிகளில் இப்பெயர் கொண்ட காப்பியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமணர்கள் சீவகசிந்தாமணிக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றுவது சூளாமணியைத்தான்.

சிரவணபெலகோலாவில் காணும் கல்வெட்டில், காப்பியங்களுக்கெல்லாம் சூடாமணியாக விளங்கும் சூடாமணி, என்ற காவியத்தை இயற்றியவர் ஸ்ரீவர்த்த தேவர், என்று குறிக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்ரீவர்த்த தேவரே தோலாமொழித் தேவர் என்றும் குறிப்பிடுகிறார்கள் சிலர்.

தருமதீர்த்தன் என்பவரின் மாணவனாக இவர் இருந்திருக்கிறார் என்றும், சிலர் தொண்டை நாட்டுக்குரியவர் என்றும் சிலர் பாண்டிய நாட்டுக்குரியவர் என்றும் கருதுகின்றனர்.

சூளாமணியில் தோலா நாவில் சச்சுதன் என்றும் ஆர்க்கும் தோலாதாய் என்றும் வழங்கியமையால், சூளாமணி ஆசிரியர் அவர் இயற்றிய தொடரால் பெயரிடப்பெற்றார் எனக் கருதுவோரும் உளர்.

1.2 கதைச் சுருக்கம்

இந்தியாவில், சுரமை நாடு இருந்தது; இதன் தலைநகரம் போதனமாநகரம். பயாபதி என்பவன் இந்நகரை ஆண்டு வந்தான். இந்தப் பயாபதிக்கு மனைவியர் இருவர். மிகாபதி, மூத்தவள்; சசி என்பவள் இளைய மனைவி. இவ்விருவரும் முறையே விசயன், திவிட்டன் என்னும் இரு புதல்வர்களைப் பெற்றெடுக்கின்றனர். விசயன் சிவப்பாகவும் திவிட்டன் கறுப்பாகவும் இருப்பர்.

ஒரு நாள் பயாபதி கனவொன்று கண்டான். விடிந்ததும், நிமித்திகன் ஒருவன் வந்து, “நீங்கள் கனவு ஒன்று கண்டீர்கள் அல்லவா?” என்று கூறிக்கொண்டே அதன் பலன்களைக் கூறினான்; ”வடநாட்டில், வெள்ளிமலையை அடுத்துள்ள வித்தியாதரர் நாட்டுமன்னன் சுவலனசடி; இவனது மனைவி, வாயுவேகை என்பவள். இவ்விருவருக்கும் பிறந்த மக்கள் இருவர்; மகன் அருக்ககீர்த்தி; மகள் சுயம்பிரபை. தன் மகளை இங்கு அழைத்து வந்து, திவிட்டனுக்குத் திருமணம் செய்து தருவான். இன்னும் ஏழு நாட்கள் போனதும், அம்மன்னனின் ஓலை வரும்!” என்று சொன்னான்.

சுவலனசடி மன்னன், ஒருநாள் தோட்டத்தில் இருந்த சமணக் கோயிலுக்குச் சென்று வணங்கிக் கொண்டிருக்கும்போது, இரு சாரணர்கள் (வான்வழியே நடப்பவர்கள்) அத்தோட்டத்து வாசலில் சமணத் தத்துவத்தை எடுத்துரைத்தனர். அவற்றைக் கேட்ட சுயம்பிரபை, ஒரு நோன்பை மேற்கொண்டாள்.

சுயம்பிரபை மணம் குறித்து சதவிந்து எனும் நிமித்திகன் வீட்டிற்கே சென்று நாள்பார்த்தான் மன்னன். அந்த நிமித்திகன், ‘திவிட்டனே சுயம்பிரபைக்கு ஏற்ற மணவாளன். இன்னும் ஒரு திங்களில், ஒரு சிங்கத்தின் வாயைப் பிளந்து தன் வீரத்தை அவன் உலகுக்கு உணர்த்துவான்’! என்றான்.

இதைக் கேட்ட சுவலனசடி மன்னன், திவிட்டன் தந்தை பயாபதியிடம் மருசி என்ற தூதுவனை அனுப்பினான். ஓலையைப் படித்த பயாபதியும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தான். பிறகு சுவலனசடிமன்னன், சிங்கத்தின் வாயைப் பிளக்கும் செய்கையை அறிய, ஒற்றர்களை அனுப்பி வைத்தான்.

வித்தியாதரர் வாழும் அதே பகுதியில், வடசேடி எனும் பகுதியை அச்சுவகண்டன் என்பவன் ஆண்டுவந்தான். இவன் மிகவும் கர்வமுள்ளவன்; கொடுங்கோலாட்சியை நடத்தி வருபவன். இவனிடம் சதவிந்து எனும் நிமித்திகன், “நீ இப்படிக் கர்வமுள்ளவனாக இராதே! உனக்கு ஒரு பகைவன் பிறந்து வளர்கின்றான்! அவன் எளிதானவன் அல்ல!” என்றான். உடனே, பயாபதியிடம் வரிவசூல் செய்து வரும்படி நான்கு தூதர்களை அனுப்பினான் அச்சுவகண்டன்.

திவிட்டன், திறை கொடுக்காமல், கண்டனை ஏசி, தூதர்களை வெறுங்கையுடன் அனுப்பிவிட்டான். தூதர்கள் சொன்னதைக் கேட்ட கண்டனின் அமைச்சனான அரிமஞ்சு என்பவன், அரிகேது எனும் மாயவித்தைக் காரனை அழைத்து, ‘நீ சிங்க உருவம் கொண்டு, திவிட்டனையும் அந்த நாட்டையும் அழித்து வா!’ என அனுப்பினான். அந்தச் சிங்கம், அப்படியே சென்று சுரமை நாட்டில் பேரழிவு ஏற்படுத்தியது. திவிட்டன் அந்த மாயச் சிங்கத்தை விரட்டிப் பின் தொடர்ந்தான்; உண்மையான சிங்கம் இருக்கும் ஒரு குகை வரைக்கும் சென்ற அந்த மாயச்சிங்கம் பிறகு மறைந்துவிட்டது. திவிட்டன் குகையுள்ளே இருந்த சிங்கத்தின் வாயைப் பிளந்து கொன்றான். இந்தச் சம்பவங்களை ஒற்றர் மூலம் அறிந்த சுவலனசடி மன்னன், சுயம்பிரபையை மணத்துக்கு ஆயத்தப்படுத்தினான். நாற்படை சூழ, போதன நகரத்திற்குச் சென்றான், சுயம்பிரபை திவிட்டனைத் தன் விமானத்தில் இருந்தபடியே, கண்டு, காதல் கொண்டாள்.

மாதவசேனை என்பாள், சுயம்பிரபை உருவத்தை வரைந்து, அதைத் திவிட்டனிடம் காட்டினாள்; ஓவியத்தில் மயங்கிய திவிட்டன், சுயம்பிரபையை அடைய விரும்பினான். இவ்விருவர் மணமும் மறை விதிப்படி நடந்தது.

சிலநாட்களுக்குப்பின், சுவலனசடி மன்னன் பிரபையைத் திவிட்டனுக்கு மணம் செய்வித்ததை அறிந்த அச்சுவகண்டன், சுவலனசடி மன்னன் மீது போருக்குப் புறப்பட்டான். பயாபதி முதலியோருடன் சேர்ந்து சுவலனசடி மன்னனும் போரிட முடிவு செய்தான். திவிட்டனுக்கும் வித்தியாதர வேந்தர்களோடு போரிடுவதற்குரிய மந்திரங்களைக் கற்பித்தான். இச்சமயத்தில் அச்சுவகண்டன் தூதுவன் வந்து, “அரசர்களே! கண்டனுக்குச் சுயம்பிரபையை வழங்குவீர்களா? அல்லது திவிட்டன் உயிரை அவனுக்குத் திறையாகத் தருவீர்களா?” என்று கேட்டான்.

இதைக் கேட்ட திவிட்டனின் கண்களில் பொறி பறந்தது! வானில், “திவிட்டனே வெற்றி பெறுவான்!” என்ற ஒலி கேட்டது. பயாபதி படையும், கண்டன் படையும் மோதின! போரில் கண்டனும், கண்டனின் தம்பியரும் மடிந்தனர். கண்டனின் மனைவி, போர்க்களத்தில், கண்டனின் உடல்மீது விழுந்து உயிர்விட்டாள்! பின்னர், திவிட்டன், கோடிக்குன்றம் எனும் மலையைக் கையால் அகழ்ந்து தூக்கினான்; அந்நேரத்தில், இவன் வாசுதேவனே என்று பலரும் வாழ்த்தினர்.

சில நாட்கள் ஆனபின்பு, சுயம்பிரபைக்கு, விசயன் என்றொரு மகன் பிறந்தான்; பிறகு சோதிமாலை என்றொரு மகளும் பிறந்தாள்.

சோதிமாலைக்குச் சுயம்வரம்; சோதிமாலை மண்டபத்தில் பலரையும் பார்த்தபின், தன் மாமன் அருக்க கீர்த்தியின் மகனான அமிர்தசேனனுக்கு மாலை சூட்டினாள்.

பிறகு அருக்ககீர்த்தி, தன் மகள் சுதாரை என்பவளுக்குச் சுயம்வரம் நடத்தினான். சுதாரை, திவிட்டன் மகன் விசயனுக்கு மாலைசூட்டினாள்; திருமணம் நடந்தது.

ஒரு நாள், பயாபதி மன்னனுக்குச் சில சிந்தனைகள் தோன்றின. “முன்செய்த தவத்தால் தான் இந்தச் சிறப்பு எனக்குக் கிடைத்தது. ஆதலால், தவத்தை மறந்து நாம் இருத்தல் கூடாதல்லவா? இன்னும் தவம் செய்தால் வீடுபேறு கிட்டுமே” என நினைத்தான்.

தன்மக்களை அழைத்துப் பயாபதி, “அருள் இல்லாதார்க்கு அவ்வுலகு இல்லை. கல்வி இலார்க்கு நுண்ணறிவு இல்லை! பொருள் நிலை இல்லாதது! நல்லறங்கள் செய்யுங்கள்! உங்களுக்கு வயது ஆனதும், உங்கள் குழந்தைகளிடம் ஆட்சியை விட்டுவிட்டுத் தவம் செய்யுங்கள்”! என்று சொல்லியபின்பு தானும் மனைவியர் இருவருமாகத் தவம் செய்யப் புறப்பட்டனர். இறுதியில் பயாபதி முதலியோர் பேரின்பம் பெற்றனர். திவிட்டன் அருகன் அடியை மனத்திருத்திப் பல்லாண்டுக் காலம் ஆண்டான் எனக் காப்பியம் முடிகிறது.

1.3 கதை மாந்தர்

காப்பிய மாந்தர் என்ற நிலையில் மண்ணுலக அரசர்களையும் விண்ணுலக அரசர்களையும் அமைத்துள்ளார் ஆசிரியர். காப்பியத்தில் தலைமைப் பாத்திரம் திவிட்டனா? அல்லது பயாபதியா? என்பது தெளிவற்று இருப்பதை உணரலாம்.

1.3.1 தலைமை மாந்தர் காப்பியத்தில் இன்பச் சுவை, யாரைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறதோ, அவரே காப்பியத் தலைவர்! சூளாமணியில், திவிட்டனே காதல் சுவையைத் தாங்கி வரும் பாத்திரம்; அதுமட்டுமல்லாமல், வீரச்சாகசச் செயலையும் அவனே புரிகிறான். ஆனால், காப்பியம் வலியுறுத்தும் வீடுபேறு, பயாபதி மன்னனைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது!

சீவக சிந்தாமணியில், சீவகனே வீரன், காதலன், தவம் செய்பவன். அதனால் அக்காப்பியத்தில் சிக்கல் இல்லை.

ஆனால், சூளாமணியில் காதலனாகவும் வீரனாகவும் மட்டுமே திவிட்டன் உள்ளான். வீடுபேறு அடைவது பயாபதியைச் சார்ந்திருக்கின்றது. காப்பியம் இவ்வாறு முரண்பட்டு, தெளிவற்று, சுவைகள் முறிவுபட்டு இருப்பதால்தான், சூளாமணியைச் சிறுகாப்பியத்தில் சேர்த்தனர்! அளவில் பெரிதாக இருப்பினும், சிறுகாப்பியமாக இருக்கலாம் என்பதற்குச் சூளாமணி ஒரு சான்று. அறம், பொருள், இன்பம், வீடு எனும் நாற்பொருளும் பெற்றிருந்தாலும், தலைமைப் பாத்திரம் சிதைபடுவதால், சூளாமணி சிறுகாப்பியமானது. தமிழ்க் கதைமரபு, காப்பிய மரபு இவற்றின்படி, திவிட்டனே காப்பியத் தலைவனானான்.

1.3.2 பிற மாந்தர் விண்ணுலக அரசர்கள், மண்ணுலக அரசர்கள் என உயர்நிலை மக்களைப் பற்றியே கவிதைகள் படைத்திருக்கிறார் ஆசிரியர்.

இக்காப்பியத்தில், பெண்கள் மிகவும் குறைவாக உள்ளனர் உணர்ச்சி மிக்க படைப்பாக அச்சுவகண்டனின் சொல்லும் செயலும் அமைக்கப்பட்டுள்ளன.

1.4 காப்பியச் சிறப்பு

ஆசிரியர் தமிழ் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்தியதோடு சிறந்த இலக்கிய வளத்தோடும் இக்காப்பியத்தைப் படைத்துள்ளார்.

1.4.1 இலக்கிய வளம் தோலாமொழித்தேவர் பண்டைய தமிழ் இலக்கியங்களை நன்கு பயின்றவர் என்பதைத் தமது காப்பியத்தில் அவற்றைப் பயன்படுத்தியிருப்பதைக் கொண்டு அறியமுடிகின்றது.

சீவகசிந்தாமணியிலே, மதிலைப் புனைந்துரைத்த பின்னர்ப் பரத்தையர்கள் வாழும் தெருக்களைக் கூறிக் கடைகளைப் புகழத் தொடங்குகிறார் திருத்தக்கதேவர். அதுபோலவே சூளாமணியிலும் மதிலைப் புனைந்துரைத்த பின்னும், கடைகளைப் புகழ்வதற்கு முன்னும், வரும் பாடல்கள் பரத்தையரையே குறிக்கின்றன.

சூளாமணியின் முதல் 50 செய்யுட்களின் சொல், தொடர், கருத்து ஆகியவை சிந்தாமணிக் காப்பியத்தோடு இணைத்துப் பார்க்கக் கூடியனவாக அமைந்துள்ளன.

திருக்குறளின் சொற்களைப் பல இடங்களில் கையாண்டிருப்பதைக் காணலாம்.

மானுடர் வாழ்வு

யானை விரட்ட அஞ்சி ஓடிய ஒரு மனிதன் ஆழ்கிணற்றில் விழும்போது அக்கிணற்றில் பாம்புகள் இருப்பதைக் கண்டான்; ஒரு கொடியைப் பற்றித் தொங்கினான். மேலே மதயானை, கீழே விஷநாகம்; இரண்டுக்கும் இடையே அஞ்சிச் சாகும் சூழ்நிலையில் இருக்கும் அந்த மனிதன் மேலே அண்ணாந்து பார்க்கிறான். அவன் வாயில் ஒரு தேன்துளி விழுகிறது. மனிதன் யானையாலோ, அல்லது நாகத்தாலோ இறப்பது உறுதியென்ற உண்மை அறிந்த நிலையிலும் அந்தத் தேன் துளியைச் சுவைத்து இன்புறும் தன்மையதுவே மானுடர் வாழ்வு. இதனை அறிந்து நடப்பாயாக! என்று உலக வாழ்வின் இயல்பைக் கூறுகின்றது இப்பாடல்.

ஆனை துரப்ப அரவுறை ஆழ்குழி

நானவிர் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்

தேனின் அழிதுளி நக்கும் திறத்தது

மானுடர் இன்பம்;மதித்தனை கொள்நீ       (1989)

(அரவு = பாம்பு; நாலும் = தொங்கும்; திறந்தது = தன்மையது)

மனிதப்பிறவி சிற்றின்பத்தை நாடுவது மிகமிக இழிந்தது என்பதைச் சுட்டும் வகையில் இக்கதையினை உவமை வாயிலாகத் தருவதை உணரமுடிகிறது.

1.4.2 இயற்கை வருணனை காப்பியத்தின் தொடக்கத்திலேயே இயற்கை வருணனை செய்யப்பட்டுள்ளது. கயல், அன்னம், கிளி ஆகியவற்றில் தொடங்கி நானிலங்களில் காணும் மலர், பறவை, விலங்குகள் பற்றி வருணிக்கப்பட்டுள்ளன.

வசந்த காலத்தின் வருகையையும் அதன் அழகையும் பற்றிப் புதிய முறையில் கூறப்பட்டுள்ளது. இயற்கையே மன்னனுக்கு வரவேற்பு நல்குவதாகப் பாடுகிறார். (169-172)

திவிட்டன் சிங்கத்தைக் கொன்ற துன்பத்தை மறைப்பதற்காகவே திவிட்டனுக்கு, விசயனின் தாழ்வரை இயற்கை அழகைக் காட்டி உணர்த்துகிறார். (728-785)

கல்யாணச் சருக்கத்தில் மாலை முதல் இரவு, வைகறைத் தோற்றம் வரை பல்வேறு சிறுபொழுதுக் கோலங்களை மிகவும் நுணுக்கமாக்கிக் காட்டுகிறார் ஆசிரியர். (1028-1034, 1056-1062)

இவ்வாறு கதைச் சூழலுக்கு ஏற்ப, இயற்கை அழகு தோலாமொழித் தேவரால் படைக்கப்பட்டுள்ளது.

1.4.3 அணிநலன்கள் காப்பியங்களின் அழகை மேலும் உயர்த்திக் காட்டவே அணிநலன்களைக் கையாள்வர். அவ்வகையில், உவமை அணியே சிறப்பு மிக்கது.

மணிகளை உயர்ந்த மக்களைக் குறிக்கவும் (230, 417) ஈயத்தை இழிந்த மக்களைக் குறிப்பிடவும், செவியில் உருக்கி வார்த்த செம்பு துன்பமூட்டும் நிலையைக் குறிக்கவும் (230, 1424) அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கவை.

அழகற்று விளங்கும் தாழைக்குப் பேயும் (433) குறுமகனுக்குப் பூதமும் (679) இழிநிலை மாந்தர்க்குக் கிருமியும் (1199) உயிர்களின் துன்பம் கண்டு அதனை நீக்கவும் உதவாமல் வாழும் இழிந்த செல்வ வாழ்வுக்கு அலி பெற்ற வாழ்வும் (775) உவமைகளாகக் கையாண்டுள்ளார் ஆசிரியர்.

காலத்தின் பகுதியாம் பருவங்களை உவமையாக்கியுள்ள அழகு சூளாமணிக் காப்பியத்தின் தனிச் சிறப்பாகும். தூதுவிடு சருக்கத்தில் பொன்னிற விஞ்சையனுக்கு வேனிற் பருவமும், வெண்ணிற விசயனுக்குக் கூதிர்ப்பருவமும் கருநிறத் திவிட்டனுக்குக் கார்ப்பருவமும் ஒளிபெற்ற நிலைக்கு உவமைகளாகி நிற்பதைக் காப்பியத்தில் அறிய முடிகிறது.

குணமிலார் செல்வம் பயனற்றுக் கிடப்பதைக் கண்டு மனம் பதைத்த ஆசிரியர், மணமற்ற கோங்கம் பூத்துக் குலுங்கும் காட்சியோடு ஒப்பிடுகின்றார் (161).

உருவகத்தைப் படம் பிடித்துக் காட்டும் ஆசிரியர், மன்னனைக் குணக்குன்றாகவும் (105) மணிகளால் அமைத்த விமானத்தை மரகதமணித் தளிர்கள் வளர்ந்து வயிரக்கொழுந்து தோன்றி முத்துநகை அரும்பிப் பொன் பூத்துப் பொலியும் மரமாகவும் (857) அமைத்துள்ளார்.

மனிதன் படைத்த ஆக்கப் பொருள்களை உருவகம் செய்யும்போது நுகம் ஆட்சி ஆகிறது (245), அமைச்சர் கண்ணாகவும், மக்கள் கால்களாகவும், தோழர் தோள்களாகவும் ஒற்றர் செவியாகவும், மெய்யறிவு நூலாகவும் கொண்ட ஒரு யந்திரமாக அரசனைக் காட்டும் (505) அழகு காப்பியத்தின் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

பா அமைப்பு

சூளாமணிக் காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பாடல்கள் இருசீர் முதல் எண்சீர் வரை அமைந்துள்ளன.

இந்நூலில் உள்ள சிறந்த பாடல்களில் ஒன்றை இப்போது காணலாம்.

வெள்ளிழை பொலிந்தொளி துளும்பு மேனியின்

வள்ளிதழ் மல்லிகை மலர்ந்த மாலையன்

அள்ளிதழ்ப் புதுமல ரடுத்த வீதிமேல்

கள்ளிதழ்க் கண்ணியான் காலி னேகினான்! (5 : 126)

சுவலனசடி மன்னன் ஒரு சோதிடன் வீட்டுக்கு நடந்து போகிறான்.

அதை வைத்து எவ்வாறு எதுகையை அமைத்துள்ளார் பாருங்கள்!.

1.4.4 மொழி நடை வடமொழி நூலிலிருந்து இக்காப்பியத்தை ஏற்றமையால் நடையிலும் அதன் நிழலைக் காணமுடிகிறது.

சினந்தணிந்தவன் என அமையும் தொடரை அவிந்தன சினத்தன் (529) என்று, வடமொழி நடை அமையப் பாடியுள்ளார். மேலும், காப்பிய நடை தெளிவாகவும் இனிமையாகவும் அமைய, காப்பியத்தின் இடையே பல புதிய தொடராக்கங்களைப் படைத்துள்ளார்.சான்றாக,

காதற்பாவை – தோழி (5)

தாழ்வர் – தாழ்ந்த மலைச்சாரல் – (727, 741, 761)

தேங்கனிக் குழவித் தீநீர் – இளநீர் (921)

பாசிலைத் தழை – வெற்றிலை (921)

புகழ்ச்சி நூல் – திருக்குறள் (628)

இவ்வாறு தமிழ்நடைக்குப் புதுமையான சொற்களைத் தாமே படைத்துக் கொள்வதைக் காப்பியத்தில் பல இடங்களில் காணமுடிகிறது.

வடமொழிக் காப்பியத்தில் மாந்தர் தம் பெயர்களும் இடப் பெயர்களும் அம்மொழியிலமைந்திருத்தல் இயற்கையே. அதனைத் தமிழில் காப்பியமாகப் படைக்கும்போது, அப்பெயர்களைத் தமிழின் அமைப்புக்கேற்ப மாற்றியுள்ளார் தோலாமொழித் தேவர்.

1.5 சூளாமணியும் சுவடியியலும்

சுவலனசடி மன்னன், தன் மகளைப் பயாபதி மகனுக்குத் தர விருப்பம் தெரிவித்து ஓர் ஓலை அனுப்புகிறான். இதுபற்றிய இரு விருத்தங்கள் சுவடி இயலுக்கு வித்திடுவதாக அமைத்துள்ளார், ஆசிரியர்.

ஓலைக் கடிதத்தில் அரக்கு இலச்சினை (சீல்) வைக்கப்பட்ட செய்தியை ஒரு பாடலில் அழகுபட எடுத்துச் சொல்கிறார். (6:82)

இரண்டாவதாக, சுவடி பற்றிய கருத்து ஆராய்ந்து பார்ப்பதற்கு வழி அமைத்து விடுவதுபோல் உள்ளது.

நிகரிகந் தழகி தாகி நெரிவடுப்

படாத வேழப்

புகர் முகப் பொறிய தாய

புகழ்ந்த சொல் லகத்துப் போகா

மகரவாய் மணிக்கட் செப்பின்

மசிகலந்து எழுதப்பட்ட

பகரரும் பதங்கள் நோக்கிப்

பயின்றுபின் வாசிக்கின்றான் (6:83)

எனும் இப்பாடலில், இரண்டாமடியைப் பார்க்கும்பொழுது, யானையின் முகப்புள்ளிகளைப் போன்று குண்டுகுண்டான எழுத்துகள் என ஒரு பொருளும், யானை முகத்தை முத்திரையாக இடப்பட்ட ஓலை என இன்னொரு பொருளும் கொண்டுள்ளது.

அரசவையில், அரசன் முன் ஓலையைப் படிப்பவர்கள் எப்படிப் படிப்பார்கள்? முதலில், ஓலை வாசகத்தை அவர்கள் மனத்திற்குள் பிடித்துக் கொள்வார்களாம்; பிறகு பாடங்களை உறுதி செய்துகொண்ட பிறகே அரசனுக்குச் சத்தம் போட்டுப் படித்துக் காட்டுவார்களாம்!

இவ்வாறு சூளாமணியில் ஓலைச் சுவடி பற்றிய விளக்கம் அமைந்துள்ளது.

1.6 சமயங்கொள்கையும் நிமித்தமும்

சூளாமணி ஒரு சமயம் சார்ந்த காப்பியம் என்பதையும், காப்பியங்களில் பொதுவாக இடம் பெறும் நிமித்தம் பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்ளலாம்.

1.6.1 சமயக் கொள்கை சூளாமணி, சமணக் காப்பியம். காப்பிய மாந்தர்கள் அருக தேவனை வணங்கும் வகையில் பல நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார் ஆசிரியர். நூலினைத் தொடங்கும்போது அருக வணக்கம் கூறி ஆரம்பித்துள்ளார். (பாடல்-1)

அருகப் பெருமானின் பெருமைகளைப் பற்றி வரிப்பாடல்களில் காப்பிய மாந்தர்களும் சாரணர்களும் அரசர்களும் பாடுவதுபோல அமைத்துள்ளமையைக் காப்பியம் முழுவதிலும் காணமுடிகிறது.

வரம்பில் ஆற்றல் உடையவன் அவன் தரிசனம்

அணியாது மொளி திகழும் மூர்த்தி (182)

மலர்மேல் ஏகியவன் (187)

காமனைக் கடிந்தவன் காலனைக் காய்ந்தவன்

துயரவித்தவன் (2146)

காக்கும் திருமால் (540)

நிறைதரு கேவலத்தோன் (541)

என அருகப் பெருமானின் புகழைப் பலபட விரித்துரைக்கிறார். நன்னிகழ்ச்சிகள் நடைபெறுமுன் அருகன் கோவிலில் விழா எடுத்ததைக் காட்டுகிறார். (107)

அருகபதம் அடைவதைச் சிவகதி என்கிறார் (355)

சமண சமயக் கருத்துப்படி, பிறவி காரண காரியத் தொடர்ச்சியாய், அளவின்றி வருவதால் பிறவிமாலை (198) என்று குறிப்பிடுகிறார்.

சாரணர்கள் ஆகாயத்தில் சஞ்சரித்து (186)

அவ்வப்போது அருகன் ஆலயம் வந்து துதிப்பர்;   (190, 203)

அவர் உரை கேட்டு மாந்தர் பலர் அருக நெறியைப் பின்பற்றி உய்வர் என்பதும், நோன்பு நோற்றல் குறித்தும், கடவுள் பற்றியும், பிற சமயக் காழ்ப் புணர்ச்சியின்றி எடுத்துரைக்கும் பாங்கினைச் சூளாமணியில் காண்கிறோம்.

1.6.2 நிமித்தம் காப்பியங்களில் நன்னிமித்தம், தீநிமித்தம் பார்க்கும் படியாக அமைக்கப்படுவது மரபு. அவ்வகையில், சூளாமணிக் காப்பியத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நன்னிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குமுன் நன்னிமித்தமும், தீ நிகழ்ச்சிகள் நிகழுமுன் தீநிமித்தங்களும் நிகழ்வதைச் சூளாமணியில் காணமுடிகிறது.

தெய்வத் தன்மை வாய்ந்த மகன் பிறப்பான் என்பதைக் காட்டும் வகையில் மகளிர் உறங்கும்போது அவர்கள் வாய் வழியாக மதி புகுந்து அகம் அடைவதைச் சுயம்பிரபை வாயிலாகக் காட்டுகிறார் ஆசிரியர் (1701 – 1709)

முகில் முழங்குவது நன்னிமித்தமாகக் காட்டப்பட்டுள்ளது (399)

நன்மக்கள் பிறந்ததைக் காட்டும் நன்னிமித்தமாகத் திசைகள் தெளிந்ததையும், தேவ துந்துபிகள் முழங்குவதையும் இரவலர் ஆசை ஒழிந்ததையும் தீவினைகள் அழிந்ததையும் (73-ஆம் பாடலில்) காட்டுகிறார்.

போர் செய்யப்புகும்போது நன்னிமித்தமாக வெல்பவனின் மேனி ஒளிவிரிவதையும், அவன் மகளிர்க்கு இடத்தோள் துடிப்பதையும் வீரர் கை வாளில் பூ நின்றதையும் குறிப்பிடுகிறார் (1218) ஆசிரியர் தோலாமொழித் தேவர்.

இதற்கு மாறாகத் தீநிமித்தங்களையும் சூளாமணியில் காண்கிறோம். முரசினுள் பாம்பு புகுதல், குடைகளில் தேன்கூடுகட்டி அதிலிருந்து தேன்துளித்தல், காக்கை தேர்க்கொடிஞ்சியில் ஏறிக்கரைதல், திசையும் ஆகாயமும் தீப்பற்றி எரிதல், உதிரமழை பெய்தல், மகளிர் வலக்கண் துடித்தல் போன்ற தீநிமித்தங்களை விளக்கமாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு கேட்போர் ஆவலைத் தூண்டும் விதமாகத் தீநிமித்தங்களையும், நன்னிமித்தங்களையும் பயன்படுத்தியிருத்தல் விளங்குகிறது.

1.7 தொகுப்புரை

காப்பியத் தொடக்கத்தில்     நாட்டுவளம்,     நீர்வளம், பொருள்வளம் ஆகியவற்றின் பெருமைகள் பேசப்பட்டுள்ளன. பயாபதி மன்னன் ஆட்சிச் சிறப்பு, மக்கட்பேற்றின் மாண்பு, கனவு  பற்றிய நம்பிக்கைகள், அரசன் அறிவுடைப் பெரியோரின்  துணையை நாடுதல் ஆகியவற்றை     வெளிப்படுத்துகிறார்  தோலாமொழித் தேவர். ஆட்சிப் பரப்பைப் பெருக்கத் திருமணம்  என்பதை ஒரு துணைக் கருவியாகக் கையாண்டுள்ளார்.

மண்ணுலகக் காட்சியைப் பற்றிப் பாடிய புலவர் வித்தியாதர  உலகத்திற்கும் கதையைக் கொண்டு செல்கிறார். பல நிறமணிகள்,  மலர்கள், தெய்வமரங்கள், ஆறுகள் ஆகிய எல்லாவற்றிலும்  பெருமதிப்பும் தெய்வ நலனும் பொலிவதைக் காட்டி விண்ணுலக அரசன் சுவலனசடிக்கு, அருக்ககீர்த்தியும் சுயம்பிரபையும் பிறந்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.

வித்தியாதரருடன் மானுடர் மணவினை கொள்வதும் விஞ்சையர் மனிதரே எனப் பழமரபு கூறிக் கதையைத் தொடர விட்டிருப்பதும் காப்பியப் போக்கில் ஆவலைத் தூண்டுவதாக அமைக்கப்பட்டுள்ளன.

இன்பச் சூழலைப் பற்றிப் பேசிய பகுதிகளுக்கு அடுத்து, துன்பச் சூழலை வெளிப்படுத்த நினைக்கும் ஆசிரியர், அச்சுவ கண்டனையும் திவிட்டனையும் போரிடச் செய்கிறார். அதன்படி திவிட்டன் பக்கம் நற்சகுனமும் பகைவர் பக்கம் தீச்சகுனமும் தோற்றுவித்து, திவிட்டன் வெற்றி பெறலும் பகைவர் அழிவும் விளக்கமாகக் காட்டப்பட்டுள்ளன. இதன்வழியே, அரசுச் செல்வம், மகளிர் இன்பம் ஆகியவை நிலையா என்னும் கருத்தை, வெற்றி தோல்வி இரண்டின் இடையே தூவுகின்றார் ஆசிரியர்.

அதற்கடுத்த நிலையில், உலக இன்பத்தையே கூறிவந்த நிலைமாறி அழியா நிலையை அடைய வழி எது என்பதை எண்ணச் செய்து, அருக மார்க்கத்தை ஒரு முனிவர் வாயிலாகப் பேச வைத்து, துறவு பூணுவதே நன்னெறி என்பதையும் பயாபதி அரசன் மூலம் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். இதன் வழி, மனித வாழ்வில் உயர்நிலை பெறுவதே சூளாமணியாகத் திகழ வழிகாட்டும் எனக் காப்பியத்தை முடிக்கிறார் ஆசிரியர், தோலாமொழித் தேவர்.

பாடம் - 2

வில்லி பாரதம்

2.0 பாட முன்னுரை

பாரதம் என்னும் சொல்லுக்கு – பரதனது வம்சத்தவரைப் பற்றிய நூல் என்று பொருள். இந்தப் பரதன் சந்திரவம்சத்தில் துஷ்யந்த மகாராசனுக்குச் சகுந்தலையினிடந்தோன்றிப் புகழ் பெற்ற ஓர் அரசன்.

பரத வம்சத்தைச் சேர்ந்த பாண்டவர், துரியோதனன் ஆகியோரைப் பற்றியும் அவர்களைச் சார்ந்தவர்களைப் பற்றியும் உணர்த்தும் நூல் பாரதம் எனப்பட்டது.

நான்கு வேதங்களுக்குச் சமமாக ஐந்தாம் வேதம் என இந்நூல் போற்றப்பட்டது. அனைவராலும் வழிபடத்தக்க மேம்பாட்டை உடையதாயிருத்தலால், இந்த இதிகாசம், ‘மகா’ எனும் அடைமொழி கொடுக்கப்பட்டு, மகாபாரதம் எனவும் வழங்கும்.

இந்நூலை முதலில் வடமொழியில் செய்த வேத வியாசமுனிவரால் வைக்கப்பட்ட ‘பாரதம்’ என்கிற பெயரே, வழிநூலாகிய இத்தமிழ் நூலுக்கும் பெயராயிற்று. எனவே வில்லிபாரதம் ஒரு வழிநூல்.

வில்லிபாரதத்தில் உலூகன் தூது, கிருட்டிணன் தூது, சஞ்சயன் தூது என்னும் மூன்று தூதுச்சருக்கங்கள் உள்ளன. இவற்றில் உலூகன் தூதும், கிருட்டிணன் தூதும் பாண்டவர் சார்பாக நூற்றுவர்பால் அனுப்பப் பெற்றவை. சஞ்சயன் தூது திருதராட்டிரனால் பாண்டவர்பால் விடுக்கப்பெற்றது. கிருட்டிணன் தூது 264 பாடல்களால் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. காப்பியத்தின் உயிர்ப்பகுதியாகக் கிருட்டிணன் தூது அமைகிறது. முதலில் அண்ணன் தம்பி பூசலாக உருவானது; பிறகு பாண்டவர், கௌரவர் மானப்பிரச்சினையாக ஆனது; அதற்குப்பிறகு அரசியல் பிரச்சினையாக வளர்ந்தது. இவ்வாறு ஒரே காப்பியத்தின் கருவானது மூன்று நிலைகளில் நிற்பதால் தான், பாரதம் என்றென்றும் சுவை மிக்க காப்பியமாக விளங்கிவருகிறது.

பாரதத்தின் தொடக்கத்தில் கௌரவ, பாண்டவரின் முன்னோர் வரலாற்றையும் இன்றியமையாத மாந்தர்களின் பிறப்பு நிலையினைப் பற்றியும் விவரித்துப் பங்காளிகளின் பொறாமையே பாரதப் போருக்கான வித்தாகிறது என்பது கூறப்படுகிறது. பாண்டவர்க்கமைந்த நாட்டினைக் கௌரவர் கைக்கொள்ள நினைக்கும் எண்ணமே அந்தப் பொறாமை வளர்வதற்கு உரமாக அமைகிறது.

நூற்றுவரின் தலைவன் துரியோதனன், பாண்டவரின் வலிமை மிக்க வீமனை அழிக்க முடிவுசெய்தல், அரக்கு மாளிகையில் அனைவரையும் அழிக்க முயலுதல், இராஜசூய யாகத்தின் மூலமாகக் கண்ணனுக்குப் பெருமை சேர்த்து, கௌரவர்களைப் பாண்டவர் பழித்தல், மோதல் இல்லாமல் சூது போரால் நூற்றுவர் வெற்றிகொள்ளல், பாஞ்சாலி துகிலுரிதல் – அப்போது கண்ணன் திரௌபதிக்கு உதவுதல், அரசிழந்த பாண்டவர்களின் நிலை எனக் கதை நீண்டு செல்லும் போக்கினைத் தொடர்ந்து, பகையில் அழிவு நேராமல் இருக்க, பாண்டவர் விடுத்த தூதுச் செயல்கள், போர்ச்செயலை நோக்கி விரைவு படுத்தவே உதவுகின்றன.

கண்ணன் தூது சென்று ஆற்றிய செயல்கள் கௌரவர்களின் முழு வலிமையைக் குலைத்தன. இறுதியில் போர்மூண்டு துரியோதனன் வீழ்த்தப் பட்டான். தருமன் அரசனானான். கண்ணன் தூது மேற்கொண்டதும், அப்பணியை எவ்வாறு திறம்பட முடித்தான் என்பதும் இப்பாடப் பகுதியில் விளக்கப் பெறுகின்றன.

2.1 வில்லிபாரதம்

தமிழில் அதிகமான வடசொற்களைக் கலந்து வரும் நூலாக வில்லிபாரதம் காணப்படுகிறது. சுருங்கச்சொல்லல், விளங்கவைத்தல், ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல் முதலிய நூலழகுகள் இந்நூலில் அமைந்துள்ளன. ஆழ்வார்களுடைய சொற்களும், பொருள் கருத்துகளும் சிற்சில இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.

கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லிபுத்தூரார் இயற்றிய பெருங்காப்பியம் வில்லிபாரதம். வியாசரை முதல் நூலாசிரியராகக் கொண்ட வில்லிபுத்தூரார் தமக்குமுன் வழங்கிய சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், பாரத வெண்பா, வடமொழியிலமைந்த பாலபாரதம், மக்களிடையே வழங்கிய பாரதம், கிளைக்கதைகள், நாட்டுப் பாடல்கள், பழமொழிகள் ஆகியவற்றை மனத்தில் கொண்டு தமது நூலைப் பாடினார்.

நல்லாப்பிள்ளை பாரதம்

வில்லிபுத்தூரார் பாடிய பாரதத்திலே சுருக்கமாகக் கதையைத் தொகுத்துக் கூறும் 300, 400 பாடல்கள் தவிர, மற்றைய நாலாயிரஞ் செய்யுட்களை எடுத்துக்கொண்டு, பிற்காலத்தில் நல்லாப்பிள்ளை என்பவர், புதிதாகத் தாம் 11 ஆயிரம் பாடல்கள் பாடி, இடையிடையிற்கோத்தும் இறுதியில் சேர்த்தும் பாரதம் 18 பருவங்களையும் பூர்த்தி செய்தார்; அது நல்லாப்பிள்ளை பாரதம் என வழங்கப்படுகிறது.

2.1.1 நூலாசிரியர்

திருமுனைப்பாடி நாட்டில் வக்கபாகையென்னும் இராசதானியில் கல்வி, அறிவு, செல்வம், அதிகாரங்களில் குறைவின்றி ஆட்சி செலுத்தி வந்தவன் வரபதியாட் கொண்டான். கல்வி, கேள்வித்திறமைகளையும், அடக்கம், அன்பு, ஒழுக்கம் முதலிய நற்குணங்களையும் கொண்ட வில்லிபுத்தூராரின் ஆற்றலைக் கேள்வியுற்ற அம்மன்னன் அவரை அழைத்துத் தனது அவைப் புலவராக்கினான். தனது சமஸ்தானத்துக்கு, உலகம் உள்ளவரைக்கும் அழியாத பெருமை உண்டாகும்படி, வடமொழியில் வேத வியாசர் எழுதிய மகாபாரதத்தைத் தமிழில் எழுதும்படி வேண்ட, அவ்வாறே வில்லிபுத்தூரார் பாடினார்.

வில்லிபுத்தூரார் திருமுனைப் பாடி நாட்டில் சனியூரில் வீரராகவாச்சாரியாருக்கு மகனாக அவதரித்தவர், வைணவ மதம் சார்ந்த அந்தணர் என்னும் செய்திகள் நூலின் சிறப்புப் பாயிரத்தின் மூலம் அறியமுடிகிறது. தன்னை ஆதரித்த வரபதியாட்கொண்டானை இந்நூலின் இடையிடையே புகழ்ந்து பேசியுள்ளார். இவர் மகாபாரதம் தவிர வேறு நூல் எதுவும் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. பிற்காலத்தவர் இவரை ‘வில்லிபுத்தூராழ்வார்’ என்றே குறிப்பிட்டனர்.

இவருடைய காலம் ஏறக்குறைய 16ஆம் நூற்றாண்டு ஆகும். திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரிநாதருடைய சம காலத்தவர் வில்லிபுத்தூரார் என்றும் கூறப்படுகிறது.

நூலாசிரியர் பற்றிய கதை

வில்லிபுத்தூரார்க்கும் இவர் தம்பியர்க்கும் தாய் பாகத்தைப் (பரம்பரைச் சொத்துரிமை) பற்றி விவாதமுண்டாக, அவ்விஷயத்தை அவர்கள் அரசனிடம் கொண்டு சென்றனர்; அரசன் இவரது கல்வித் திறத்தை முன்னரே கேள்வியுற்று அறிந்தவனாதலால், ‘இவ்வளவு கற்றறிந்தவர்க்கும் உண்மையறிவு உண்டாகவில்லையே! என்று வருத்தமடைந்து அவ்வுண்மையறிவை இவர்க்கு உண்டாக்குவதற்கு ஏற்ற உபாயம் மகாபாரத நூலைப் பயிலும் படி செய்வதே’ என்று உறுதிசெய்து, ‘மகாபாரதத்தை நீர் தமிழில் பாடவேண்டும்; பாடின பின்பு தான் உங்கள் வழக்குத் தீர்க்கப்படும்’ என்று கட்டளையிட்டான்; உடனே இவர் அவ்வாறே அப்பாரதத்தைப் பாடி, அந்நூலின் நீதியின் கருத்தூன்றியவராய், பின்பு தாமே தம் பங்கை தம்பியர்க்கே கொடுத்துவிட்டார் என்றும் இவரைப் பற்றி ஒரு கதை வழங்குகிறது.

2.1.2 காப்பிய அமைப்பு வட மொழி மகாபாரதத்தில் மொத்தம் 18 பருவங்கள் உள்ளன. வில்லியார், முதல் 10 பருவங்களை மட்டுமே பாடியுள்ளார்.

(1) ஆதி பருவம்

(2) சபா பருவம்

(3) ஆரணிய பருவம்

(4) விராட பருவம்

(5) உத்தியோக பருவம்

(6) வீட்டும பருவம்

(7) துரோண பருவம்

(8) கன்ன பருவம்

(9) சல்லிய பருவம்

(10) சௌப்திக பருவம்

ஆகியவை. மொத்தம் – 4337 பாடல்கள். நமக்குப் பாடமாக வந்துள்ள ‘கிருட்டிணன் தூதுச் சருக்கம்’- உத்தியோக பருவத்தில் அமைந்துள்ளது.

13 ஆண்டுகள் காட்டிலும் மறைந்தும் வாழ்ந்த பிறகு, பாண்டவர்கள் தங்களுக்கு உரிய அரசினைக் கேட்கவே, பாண்டவர் சார்பாகக் கிருட்டிணன் தூது சென்ற வரலாற்றை உணர்த்தும்பகுதி, இது.

2.2 கிருட்டிணன் தூது

போரின்றிச் சமாதானத்திலே இராச்சியம் கிடைப்பதானால் மட்டுமே அதனைப் பெற்றுக் கொண்டு வாழ விருப்பமா? அல்லது முன்பு 12 வருஷம் வாசஞ்செய்து பழகியுள்ள கொடிய வனத்திற்கே மீண்டும் சென்று வாழ்நாள் முழுதும் வறுமையில் வாழ விருப்பமா? அல்லது மானத்தையும்’ வீரத்தையுமே முக்கியமாகக் கொண்டு துணிவாகச் சென்று துரியோதனாதியரை எதிர்த்துப் போர் செய்து வென்று இராச்சியத்தைப் பெற விருப்பமா? எனத் தனித்தனியாகப் பாண்டவரின் கருத்தைக் கேட்டு அறிகிறான் கண்ணன்.

முதலில் தருமன், சமாதானத்தில் காரியத்தை முடிக்க வேண்டும் என்று கண்ணனிடம் தெரிவித்தான். அதற்குக் கண்ணன் சமாதானத்திற்கு வராதவர்களை அழித்தல் நியாயமே என்று தருமனிடம் சொல்கிறான். மீண்டும் தருமனின் சமாதானப் பேச்சினைக் கேட்ட வீமன், தன் அண்ணன் தருமனைப் பழித்து பேசுகிறான். ஒருவாறு தருமனும், கண்ணனும் வீமனை அமைதிப்படுத்தினார்கள்.

அருச்சுனனும், தன்னுடைய சபதத்தையும், வீமன், திரௌபதி ஆகியோரின் சபதத்தையும் எடுத்துச் சொல்லி, போரினால் மட்டுமே இழந்ததைப் பெறவும், சபதத்தினை முடிக்கவும் கூடும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான். நகுலனும் அதே கருத்தைத் தெரிவித்துத் துரியோதனனைத்தான் கொல்ல விரும்புவதாகக் கூறுகிறான்.

பின்னர், தத்துவ ஞானமுடையவனான சகாதேவனைக் கேட்க, கண்ணனின் திருவுள்ளத்தைத் தான் அறிந்துள்ளதாகச் சொல்லி, அவனது கால்களைக் கட்டினான். பின்பு, கண்ணன் தன்னை விடுவிக்க வேண்ட, விடுவிக்கப்படுகிறான். சகாதேவன் பணிந்து, கண்ணனிடம், இப்பொழுது சமாதானம் தான் சிறந்தது எனச் சொல்ல, அது கேட்ட திரௌபதி அழுதுபுலம்புகிறாள். அவளைத் தேற்றி, தருமனின் வேண்டுகோளின்படி தூது செல்ல ஆயத்தமானான் கண்ணன். இப்பகுதியை, 1 முதல் 53 வரையிலான பாடல்களால் அறியமுடிகிறது.

2.2.1 முதல் நாள் தூது கண்ணன் தூது சென்று மீண்ட நிகழ்ச்சி மிகக்குறுகிய கால எல்லைக்குள்ளேயே நிகழ்ந்துள்ளது.

சங்குகளும் அழகிய பேரிகைகளும் சல்லரியென்னும் வாத்தியங்களும், தாரைகளும், ஊது கருவிகளும் எல்லாவிடங்களிலும் ஒலிக்க, அழகிய வெண்கொற்றக் குடை நிழலைச் செய்யவும் அரசர்கள் பலருடனும் சதுரங்க சேனைகளுடனும், அத்தினாபுரி நோக்கிப் புறப்பட்டான், கண்ணன். கற்கள் அடர்ந்த மலைகளையும், கொடிய வெப்பம் கொண்ட பாலை நிலத்தையும், காட்டாறுகளையும் கடந்து, உயர்ந்த மதில்களாலும், கோபுரங்களாலும் சூழப்பட்டு விளங்கும் பெரிய அத்தினாபுரியைக் கண்டான். அந்நகரத்தின் மதில்கள், மாடங்கள், இராசவீதிகள், துரியனின் அரண்மனை எனப் பல்வேறு காட்சிகளை இப்பகுதியில் வில்லிபுத்தூரார் வருணித்துள்ளார். மேகமண்டலத்தையும், நட்சத்திரலோகத்தையும் மிகக் கடந்து, எல்லா மலைகளினும் உயர்ந்த சக்கரவாளமலையை விட உயர்ந்த மதில்கள் அந்நகரில் பரந்துள்ளன எனப் பாடுகிறார், புலவர்.

2.2.2 இரண்டாம் நாள் தூது அத்தினாபுரம் அடைந்த கண்ணன், நகரின் தென்பகுதியில் ஒரு சோலையில் அமர்ந்தான். அவன் பாண்டவர்களுக்குத் தூதனாக வந்துள்ளான் என்பதைத் தூதுவர்கள் துரியோதனனிடம் கூறினர். துரியோதனனும் கண்ணனை வரவேற்கப் புறப்பட்டான். அவனைச் சகுனி தடுத்து நிறுத்தினான். வீடுமன், துரோணன், அசுவத்தாமன், விதுரன், கிருபன் ஆகியோரும் அரசர் பலரும் கண்ணனை எதிர்கொள்ளச் சென்றனர். அத்தினாபுரத்தினுள் சென்ற பின்பு, துரியோதனன் அரண்மனைக்குச் செல்லாமல், தத்துவ ஞானத்தையும் மிக்க அருளையுமுடைய விதுரன் வசிக்கின்ற திருமாளிகையினுள் புகுந்தான். விதுரன், பாண்டவர் பால் மிகுந்த பிரியமுடையவனாதலால், கண்ணன் அவன் வீட்டுக்குச் சென்றான். பின்பு, விதுரன் படைத்த உணவினை உண்டு மகிழ்ந்தான். மாலைப் பொழுது வந்தது. விதுரன், கண்ணனின் வருகையைப்பற்றி வினவினான். ஐவருக்குத் தூதனாகத் தான் வந்துள்ளதைத் தெரிவித்தான். அன்றிரவு விதுரன் மாளிகையிலே உறங்கினான்.

2.2.3 மூன்றாம் நாள் தூது மூன்றாம் நாள் காலை துரியோதனனின் அவைக்களத்திற்குச் சென்றான். கண்ணன் அவைக்கு வரும்போது எதிர்சென்று யாரும் தொழக்கூடாது என்று துரியோதனன் கட்டளையிட்டான். ஆனால் வீடுமன் முதலியோர் எதிர்கொள்ள, அவையில் நுழைந்தான் கண்ணன். கண்ணனிடம் தன் இல்லத்தில் வந்து தங்காமைக்கு உரிய காரணத்தை, துரியோதனன் வினவினான். “ஒருவர் வீட்டில் உண்டு பின்பு அவரோடு போரிட நினைத்தால் அவர்கள் நரகம் அடைவார்கள்” என்றான் கண்ணன். அதன் பின்பு தூது வந்த காரணத்தைக் கேட்டான் துரியோதனன். “சூதாட்டத்தில் அரசை இழந்து, நீங்கள் சொன்னபடி தவறாமல் அயலார் போலப் புறப்பட்டுச் சென்று, காட்டில் சேர்ந்து, பல நாள்கள் கழித்துப் பாண்டவர்கள் வந்துள்ளார்கள். ஆதலால் நீ அவர்களுக் குரிய நாட்டைக் கொடுப்பாய். நீ அவ்வாறு செய்தால், அரசர்கள் உன்னைப் புகழ்வார்கள். அவ்வாறு செய்யாவிட்டால் ‘அறனும் மாண்பும் புகழும் இழப்பாய்’ என்றான் கண்ணன்.

துரியோதன் அதனை ஏற்கவில்லை. ‘நீ வெறுத்தாலும், ஏனைய மன்னர்கள் திகைத்தாலும் சொன்ன சொல் தவறியவன் எனப் பழித்தாலும், பாண்டவர்கள் என்னோடு சண்டையிட்டாலும், இவ்வுலகில் ஈ இருக்கும் இடம் கூட அவர்களுக்கு நான் தரமாட்டேன்’ என்றான்.

அதனைக் கேட்ட கண்ணன் அவனிடம், “நாடு முழுவதையும் தர விருப்பம் இல்லையென்றால் அதில் பாதியாவது வழங்குவாய்” என்றான். அதற்கும் இணங்கவில்லை. ஐந்து ஊர்களையாவது தருக என்றான். அதையும் ஏற்கவில்லை.

கண்ணன் அவனை நோக்கிப் பாண்டவர்களுக்கு அரசாட்சியைக் கொடுக்காமல் போரிட விரும்பினால், குருநிலத்தில் வந்து போரிடுவதாகக் கையடித்து உறுதி தர வேண்டினான். துரியோதனனும் அருகில் இருந்த தூணில் ஓங்கி அறைந்தான். கண்ணனின் பிறப்பை இகழ்ந்தான். துரியோதனன், கண்ணனுக்கு விருந்து கொடுத்த விதுரனைப் பழித்துப் பேசினான். ‘பொதுமகளின் புதல்வனாகிய விதுரன்’ என அவனது பிறப்பை இழித்துப் பேசினான். ஆத்திரம் அடைந்த விதுரன் பழிகருதி அவனைக் கொல்லாது விடுவதாகத் தெரிவித்தான். இனிப் போரில் வில்லைத் தொடவேமாட்டேன் என்று கூறி அதனை உடைத்தெறிந்தான். பாண்டவர் – கௌரவரின் பாட்டனான வீடுமன் துரியனை அவனது பேச்சிற்காகவும் செயலுக்காகவும் கண்டித்தான். அவை முடிந்து, விதுரன் தன் வீடு சென்றான். விதுரன் தன் வில்லை உடைத்தது எதனால் என்று கண்ணன் கேட்டான். அதற்கு விதுரன், “வருவதை உணராதவனும், அமைச்சர் சொல் கேளாதவனும், அழிவை எண்ணாதவனும், நாவடக்கம் இல்லாதவனுமாகிய துரியோதனனுக்காக உயிர் விடுவது பழுது” என்றான். துரியோதனனின் கடுஞ்சொல் எனக்குப் பிடிக்காததால் வில்லை ஒடித்தேன் என்றான். கண்ணன் விதுரனின் ஆண்மையைப் புகழ்ந்தான்.

இனிப் பாரதப் போர் தவிர்க்க இயலாதது என உணர்ந்து, கண்ணன் குந்தியிடம் சொல்கிறான். அவரிடம், தான் தூதனாக வந்ததையும், “கர்ணன், பாண்டவர்கள் தனக்குத் தம்பியர் என்ற உறவு அறியாமையால் விசயனோடு எதிர்த்துப் போரிட உள்ளான். நீ வரலாற்றைத் தெரியச் சொல்லி, அவனைப் பாண்டவர்களோடு சேர்ப்பாயாக” என்றான். ஒருவேளை அவன் வர மறுத்தால் அரவ (பாம்பு)க் கணையை ஒருமுறை மட்டுமே விசயன் மேல்விடுக்குமாறு வரம் கேட்டுப் பெறுமாறும் சொன்னான்.

கண்ணன் மூலமாகத் தன் மகன்தான் கர்ணன் என்பதையறிந்த குந்தி வருந்தினாள். கண்ணன், கலங்கிய குந்தியை நோக்கி, ‘பாண்டவருள் ஒருவர் இறந்தால் ஐவரும் உயிர் விடுவர் ஆதலின் கர்ணனைக் குறித்து வருந்தாதே’ என்று சொல்லி விதுரன் மாளிகைக்குத் திரும்பினான் கண்ணன்.

2.2.4 நான்காம் நாள் தூது துரியோதனன், சகுனி, திருதராட்டிரன் மற்றும் கர்ணன் யாவரும் கூடி, விதுரனையும் கண்ணனையும் கொல்லச் செய்ய, தயாராக வைத்திருந்த பொய் ஆசனத்தில் உட்காரவைத்தனர். ஆசனம் முறிந்து நிலவறையில் இறங்கியது. கண்ணன் திருவடிகள் பாதாளத்தில் செல்லத் திருமுடி வானத்தில் செல்லப் பேருருக் கொண்டான். துரியனை நோக்கி, ‘அரசனே! உன் தீய அறிவினால் என்னைக் கொல்ல நினைத்தாய். விரைவில் உன்குலம் அனைத்தையும் போர் செய்து ஒரு நொடிப் பொழுதினுள்ளே பொடியாக்குவேன். உனக்கு எதிராக ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று தந்த உறுதிமொழியையும், நான் உன்னைக் கொன்றால், பாண்டவர்கள் சொன்ன சூளுரை பழுதாகும் என்பதையும் கருதியே உன்னைக் கொல்வதற்கு அஞ்சினேன்” என்றான். பின்பு, கர்ணனைத் தனியே அழைத்து, அவனது பிறப்புப் பற்றியும், பாண்டவர் பிறப்புப் பற்றியும் எடுத்துரைத்தான். அவனைப் பாண்டவரோடு சேருமாறு கூறினான். அதற்குக் கர்ணன், தான் பாண்டவர் பக்கம் சேர்ந்தால் உலகம் தன்னைப் பார்த்துச் சிரிக்கும் என்றான். அப்படிச் செய்வது செய்ந்நன்றி மறப்பதாகும் என்றான். கண்ணன் அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினான்.

அடுத்து அசுவத்தாமனைத் துரியோதனனிடமிருந்து பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டான் கண்ணன். “யான் பாண்டவர்க்காகக் கேட்ட ஐந்து ஊர்களைத் தர மறுத்ததற்குப் போர்க்களத்தில் நீயே சான்றாவாய். வீரத்தில் உனக்கு நிகராவார் உண்டா? துரியோதனன் உனக்குப் படைத்தலைமை தந்தால் நீ அதனை ஏற்காமல் மறுக்கவேண்டும். அப்பொழுது தான் பாண்டவர் உயிர்பிழைப்பர்’ என்றான் கண்ணன். அந்நேரத்தில் தன் கை மோதிரத்தைக் கீழே விழவிட, அசுவத்தாமன் அதனை எடுத்துக் கொடுத்து ஏதோ சத்தியம் செய்வதுபோல ஒரு நாடகத்தைக் கண்ணன் செய்வதனைத் துரியோதனன் பார்த்து விடுகிறான். அந்த நேரத்திலிருந்து அசுவத்தாமனை நம்பக்கூடாது என்று ஒதுக்கிவிடுகிறான் துரியோதனன்.

இதன்பிறகு, கண்ணன் கர்ணனுடைய வலிமையைக் குறைக்கும் வழியில் இறங்கினான். இந்திரனை அழைத்து, ‘கர்ணன் விசயனைக் கொன்றால் நாடு துரியோதனனுக்கு உரியதாகும். மற்ற பாண்டவரும் இறப்பர். அது விசயனின் தந்தையாகிய உனக்குப் பழியைத் தரும் என்று சொல்லி, கர்ணனை அழிக்கமுடியாது காக்கும் பொருளான அவனது கவச குண்டலத்தைப் பெற்றுவருமாறு சொன்னான். இந்திரனும் கிழட்டு அந்தணன் வேடமிட்டு அவ்வாறு கேட்கும் பொழுது, “கண்ணன் மாயத்தால் இந்திரனை அனுப்பியுள்ளான். கவச குண்டலங்களைத் தராதே” என்று விண்ணிலிருந்து வந்த குரலையும் பொருட்படுத்தாமல் கொடுத்து விடுகிறான் கர்ணன். இந்திரன் தன்னை வெளிக்காட்டி, கர்ணனுக்கு வெற்றி தரும் ஒரு வேலாயுதம் தருகிறான். இந்திரன் கண்ணனிடம் வந்தடைகிறான்.

மீண்டும் கண்ணன், குந்தியைக் கர்ணனிடம் அனுப்ப முயற்சி மேற்கொள்கிறான். குந்தியும் கர்ணனிடம் சென்று, தானே அவன் தாய் என்று உணர்த்தி, நம்பச் செய்கிறாள். பாண்டவரோடு வந்து சேர்ந்து சிறப்போடு வாழ அழைக்கிறாள். அதற்குக் கர்ணன் அன்று முதல் இன்று வரை என்னை அன்போடு அரவணைத்து, எனக்கு ஏற்றமும் அளித்து வரும் துரியனை விட்டு வரமுடியாது என்று அழுது கண்ணீர் மல்கச் சொன்னான். மீண்டும் கர்ணன் தனது தாயைப் பார்த்து, வந்த நோக்கம் யாது என வினவினான்.

போரில் அருச்சுனன் மேல் அரவக் கணையை ஒருமுறைக்கு மேல் விடுதல் கூடாது என்றும், ஐவருள் ஏனையவர்களோடு போரிடக்கூடாது என்று வரம் வேண்டினாள். அவ்விரு வரத்தையும் நல்கினான். தனது தாயிடம், போரில் தான் வீழ்ந்த போது தனக்குப் பாலூட்டி, என் மகன் தான் என்பதை அனைவருக்கும் சொல்லவேண்டும் என்றும் போர் முடியும் வரை பாண்டவர்களுக்கு நான் குந்தியின் மகன் என்ற உண்மையை உரைக்கக் கூடாது என்றும் வேண்டினான் கர்ணன். குந்தியும் அவ்வரங்களைத் தந்தாள். குந்தி அழுதவாறே கண்ணனைச் சென்றடைந்து, நடந்ததை உரைத்தாள். கண்ணனும் தன் எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்ந்து, அன்றே பாண்டவரிடம் திரும்பிச் சென்றான். நடந்த அனைத்தையும் பாண்டவர்கள் அறியுமாறு எடுத்துச் சொன்னான். இவ்வளவில் கண்ணன் தூது நிறைவடைந்தது.

2.2.5 தூதில் இடம் பெறும் பாத்திரங்கள் வில்லிபாரதத்தில் எடுத்தாண்டுள்ள காப்பிய மாந்தர் ஏறத்தாழ 300 பேர். இவர்களில் மானிடராக வாழ்ந்தவர்களும், தேவர்களும், இராக்கதர்களும் உள்ளனர். மானுட வடிவம் தாங்கி வந்த தெய்வங்களும், தெய்வங்களின் அருளால் பிறந்த மானிடர்களும் இக்காப்பியத்தில் விளங்குகின்றனர்.

தூதுச் சருக்கத்தில் பாண்டவர்கள், திரௌபதி, விதுரன், துரியோதனன், அசுவத்தாமன், கர்ணன், குந்தி, இந்திரன், வீடுமன், சகுனி ஆகியோர் காணப்படுகின்றனர்.

திரௌபதிக்கு அடுத்த நிலையில் வில்லியார் அமைக்கும் பெண் பாத்திரப் படைப்பு குந்தியாவாள். தன் மக்களுக்காகத் தாய்மைத் துன்பத்தை விரும்பி ஏற்பதையும், கர்ணன் தன் மகன் என அறிந்து பாண்டவர்பால் அழைக்க முயல்வதையும், அவன் இறந்த பின் உண்மையை உலகுக்கு அறிவிக்கும் நிலையினையும் படிப்போர் உணர்வு பெருகப் படைத்துள்ளார் வில்லியார்.

2.3 காப்பியச் சிறப்பு

பல கிளைக் கதைகளும், அணிநலன்களும் வருணனைகளும் காப்பியத்தின் சிறப்பாக அமைந்துள்ளன.

2.3.1 கிளைக் கதைகள் வில்லிபாரதத்திலும், அந்தக் காலத்து மக்களுக்கு விருப்பமான கதைகள் எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கண்ணன், சிவன், ராமன் பற்றிய கதைகளைத் தொடர் வடிவில் சுருக்கமாகச் சுட்டுவதும், பிற்காலத்தில் வழங்கிய சம்பந்தர் கதையைக் குறிப்பிடுவதும், நளாயினி கதை, சிவபெருமான் மூங்கிலில் பிறந்தது, முப்புரம் எரித்தது போன்ற கதைகளும் வில்லிபாரதத்தில் காணமுடிகிறது. கிருட்டிணன் தூதுச் சருக்கத்தில், இந்திரன் கோபத்தால் இடையர்க்கும், இடைச்சியர்க்கும் தீங்கு தரும்படி கல்மழையைப் பெய்வித்த பொழுது கண்ணன் கோவர்த்தன மலையை எடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்தது. (பாடல்-27) பூதகி நஞ்சு தீற்றிய முலைப்பாலைக் கொடுத்துக் கண்ணனைக் கொல்ல வந்த கதை (பாடல்-32) ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

நளகூபரன், மணிக்கிரீவன் என்னும் குபேர புத்திரர்கள் – நாரதர் சாபத்தால் மருதமரமாய் ஆனவர்கள், யசோதையால் கயிற்றில் கட்டப்பட்ட கண்ணன் மருதமரத்தில் குறுக்காக வர, மரங்கள் முறிந்து விழவும், குபேரபுத்திரர்கள் உயிர் பெற்று வந்தனர். (பாடல்-27)

மகாபலிச் சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்க, திருமால் வாமன அவதாரம் எடுத்துத் திரிவிக்கிரமனாக உலகம் அளந்த கதை (பாடல்-37).

பாணாசுரனைத் தனது சுதர்சனம் எனும் சக்கரத்தைப் பிரயோகித்து, அவனது ஆயிரந்தோள்களையும், தாரை தாரையாய் உதிரமொழுக அறுத்து, அவனுயிரையும் சிதைக்க இருக்கும் போது சிவபெருமான் வேண்டியதால், நான்கு கரங்களுடன் அவனை உயிருடன் விட்டார் திருமால் (பாடல்-4). இவ்வாறு பல கிளைக்கதைகள் கிருட்டிணன் தூதுச்சருக்கத்தில் காணப்படுகின்றன.

2.3.2 அணி நலன்கள் துரியோதனனை அழிக்க வேண்டும் என்று வீமன் கண்ணனிடம் சொல்லும் போது, தருமன் சொல்வதாக ஒரு பாடல் அமைந்துள்ளது. எனது அவயவங்களில் ஒன்றில் மற்றொன்று அஜாக்கிரதையினால் பட்டு அதற்கு வருத்தத்தை உண்டாக்கினால், அதற்காக அந்த வருத்தும் உறுப்பைக் கோபித்துக் களைபவரில்லாமை போல, ஒரு குடும்பத்தவருள் மற்றொரு வருக்குச் சோர்வினால் தீங்கிழைத்தால், அதற்கு அவரை அழிப்பது தகுதியன்று என்று கூறும் தருமனின் கருத்தை மிக அழகாக அமைத்துள்ளார் புலவர். (பாடல் 8)

கிருட்டிணன் தூது சென்ற அத்தினாபுரத்தில் நகரத்தினை அடுத்துள்ள சோலைகளின் தன்மையைக் குறிப்பிடும்போது, பாக்குமரப் பழுத்த குலைகளுக்குப் பவழத் திரளும், பச்சை இலைகள், பச்சைக் குலைகளுக்கு மரகதமும், தொங்கும் வெள்ளிய பாலைக்கு முத்துக் கோவையும் உவமையாக வருகின்றன. (பாடல் 56)

அத்தினாபுரத்தையும், அந்நகர மாளிகையையும் அந்நகரத்தில் எழும் பலவகை ஒலிகளையும் பற்றிக் குறிக்கும் பாடல்களில் சொற்பொருட் பின்வருநிலையணி பயின்று வந்துள்ளது. (பாடல்-67)

இவ்வாறு வில்லிபாரதத்தில் அணி இலக்கணங்களின் பயன்பாட்டினை அறிய முடிகிறது.

2.3.3 வருணனை வாழ்வின் கூறுகளை உள்ளத்தில் பதியும்படி பல திறன்கள் கொண்ட வருணனைகளை வில்லிபுத்தூராழ்வார் கையாளுகின்றார். யானைப்படையைப் பற்றி அதிகமாக வருணித்துள்ளார்.

கண்ணன் விதுரன் வீட்டில் விருந்துண்டு மகிழ்ந்திருக்கிறான். அந்த மாலைப் பொழுது – சூரியன் அஸ்தமான நிகழ்வை வில்லியார் வருணிக்கிறார். கண்ணபிரான் விருந்துண்டு வீற்றிருந்த சமயத்தில், சூரியனும் மகாமேரு மலைக்கு அந்தப்புறத்தில் சென்று தேவாமிருதத்தை உண்ணுதற்கு அஸ்தமித்தான் என்று வருணிக்கிறார். (பாடல்-85) அதுபோலவே, மாலை நேரத்துச் செவ்வானத்தின் தோற்றமானது, பிராமணர்கள் எல்லாரும் தாம் கழிக்கவேண்டிய கடமைகளை எண்ணி, வேதமந்திரமாகிய கொடிய வில்லின் மேலே, நீராகிய பாணத்தைக் கையால் வைத்து, சூரியனது பெரிய பகைவர்களான அசுரர்களின் மேலே பிரயோகித்தலால் பரவிய இரத்தம் போல நினைக்கும்படி மேற்குத் திசை சிவந்தது என்று வருணிக்கிறார். (பாடல்-86)

மேலும்,

மாலைக்காலத்தில் குவிந்த தாமரைத் தொகுதிகள், பகல் பொழுது முழுவதிலும், உக்கிரமாக எழும் சூரியனொளி, நீரில் வாழும் தெய்வமகளிர் மேல் படாதபடி பரப்பப்பட்டிருந்து, அந்தப் பகல்பொழுது ஒடுங்கிவிட்டது என்கிற காரணத்தால், வரிசையாக மடக்கப்பட்ட, அழகிய மென்மையான பட்டுக்குடைகளைப் போல இருந்தன என்று வருணிக்கிறார். (பாடல் 88) அந்திக் காலத்தில் அத்தினாபுர நகரத்தின் தோற்றத்தினை,

கலந்து மங்கல முழவு வெண்சங் கொடுகறங்க

மிலைந்த பூங்குழல்வனிதையர் மெய்விளக்கெடுப்பக்

கலந்த தாமரைத் தடமெலாங் குவிந்தது கண்டு

மலர்ந்த தாமரை வாவி போன்றது நகர் வட்டம்

(பாடல்-89)

எனும் பாடலில் வருணிக்கும் திறன் வெளிப்படுவதைக் காணலாம். அதாவது, மங்கலமான பேரிகைகள், வெண்ணிறமான மங்கலச் சங்குகளுடனே கூடி ஒலிக்கவும், மலர்களைச் சூடிய கூந்தலையுடைய மகளிர் தீபங்களை ஏந்தவும், அத்தினாபுரி நகரமானது, தாமரை மலர்களையுடைய தடாகங்களெல்லாம் குவியப் பெற்றதைப் பார்த்துத் தானும் மலர்ந்ததொரு தாமரைத் தடாகத்தைப் போலிருந்தது என்று வருணித்துள்ளார்.

2.4 வில்லிபாரதமும் பிறவும்

தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. அதைப்போல இராமாயணக் கதை பற்றிய செய்திகளும் வில்லிபாரதத்தில் கூறப்பட்டுள்ளன.

2.4.1 தமிழ் இலக்கிய வரலாறும் பாரதமும் எட்டுத் தொகையில் ஐந்து நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனார் பாடிய பாரதம் கிடைக்கவில்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் பெருந்தேவனார் என்பவர் பாடிய ‘பாரத வெண்பா’ வில் சில பகுதிகளே கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து, 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அருணிலை விசாகன் என்பவர் பாரதம் பாடியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராழ்வார் பாரதத்தைப் பாடினார். அதுவே வில்லிபாரதம் என அழைக்கப்படுகிறது. அதன் பாயிரத்தை இவருடைய மகன் வரந்தருவார் பாடினார் என்பர் சிலர்.

பாரதக் கதையைத் தமிழில் கூறுவதற்குப் பலர் முயற்சி மேற்கொண்டனர். பாரதக் கதைகள் பல தோன்றினாலும், வில்லிபாரதம் மட்டும் தனிப் பெருமை பெற்றுத் திகழ்கிறது.

தமிழ் இலக்கியத்தில் தூது எனும் இலக்கியவகை 14-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. உமாபதி சிவாச்சாரியரின் நெஞ்சு விடுதூது என்பதே முதல்தூது நூலாகும். அதற்குமுன் வடமொழியில் தூது நூல் தோன்றியுள்ளது.

2.4.2 இராமாயணமும் வில்லிபாரதமும் வில்லிபாரதத்துக்கு முன் கம்பராமாயணம் மிகவும் புகழ் பெற்ற நிலையில் இருந்தது. இராமாயணக் கதை பற்றிய குறிப்புகளை வில்லிபுத்தூரார் பல இடங்களில் எடுத்தாண்டுள்ளார்.

இராமனை அருச்சுனனுடன் ஒப்பிடுவதும், வாயுவின் மகனான வீமனை பிறப்பு முதல் அனுமனுடன் ஒப்பிட்டுப் பேசுவதும் காணப்படுகிறது.

சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனை வெல்வதற்கு இராமபிரான் சேனையாகக் கூட்டிக் கொண்டு போன வானர வீரர்கள் தென்கடலில் அணைகட்டுதற்பொருட்டுப் பல மலைகளைக் கொணர்ந்து கடலில் இட்டனர் என்பது கதை. இதில் இரத்த வெள்ளத்துக்கு உவர்நீர்க் கடலும், மல்லர்க்கு மலைகளும் உவமை. (பாடல்-200)

‘இன்று போய் நாளை வா’ என்ற நிலையில் கர்ணனுக்கு இராவணனை உவமை ஆக்கிப் பேசுவதும், சிசுபாலனுக்குக் கும்பகர்ணனை உவமையாகக் கூறுவதும், இராமாயணத்தின் மீது வில்லியார் கொண்ட பற்றை வெளிப்படுத்துகின்றன.

2.5 தொகுப்புரை

வில்லிபாரதத்தில் கிருட்டிணன் தூது காப்பியத்தின் உயிர்ப்பகுதி. சாம, பேத, தான, தண்டம் என்னும் அரச நீதியை ஒட்டித் தருமன் கண்ணனைத் தூது விடுக்க எண்ணினான். கண்ணனும் தருமனையும் அவனது தம்பியரையும் உடனிருத்தி அவர்கள் கருத்தினை வினவினான்.

“போர் நிகழ்ந்தால் இருபக்கத்திலும் பலரும் மாள்வர். பெரியோர்களையும், உறவினர்களையும், தம்பியரையும் போரில் கொன்று பெறும் வெற்றியைக் காட்டிலும், திருதராட்டிரன் சஞ்சய முனிவரிடத்துச் சொல்லி அனுப்பியவாறே, காடுகளில் இரவும் பகலும் திரிந்து பழங்களையும், கிழங்குகளையும் உண்டு பிழைத்திருத்தலே சிறப்பாகும். உன் தூது வெற்றி பெறாவிட்டால் பின்னர்ப் போரிடலாம். கௌரவரிடம் நாட்டின் ஒரு பகுதியைக் கேள். தரவில்லையென்றால், ஐந்து ஊர்களைக் கேள். அவையும் இல்லையென்றால், ஐந்து இல்லம் வேண்டும், அவற்றையும் தர மறுத்தால் போருக்குப் புறப்படச் சொல்” என்றான் தருமன்.

வீமன் தருமன் உரையைக் கேட்டுச் சினங்கொண்டான். “கண்ணபிரானே! ஊனமிலாத் தருமன் மானமில்லாமல் பேசுகிறான். திரௌபதி அரசவையில் மானத்தால் கூவி முறையிட்ட காலத்தில் ‘சினங்கொள்ளாதே’ என்று கூறி, நமக்கும் நம் குலத்திற்கும் என்றும் தீராத பழியை உண்டாக்கினான்.’ என்று விரைந்து பேசிய வீமனின் கோபத்தைக் கண்ணன் தணித்தான்.

அப்பொழுது விசயன் எழுந்து, கண்ணனையும் தருமனையும் வணங்கி, “இனியும் பொறுத்துக் கொண்டிருந்தால் பகைவர்களை அழிப்பது எப்போது? திரௌபதி குழலை முடிப்பது எப்போது? துகில் உரியப்பட்ட போது, பெருமாளை அழைத்தவாறு அவள் நின்றாள். நாம் மாண்டவரைப் போல வாளா இருந்தோம். இம் மாசு தீர வேண்டாமா? கண்ணன் யாது சொன்னாலும் துரியோதனன் கேட்கமாட்டான்” என்றான். அடுத்து, நகுலனும், “தூதினால் பயன் இல்லை” என்று பேசினான். கண்ணன் தூது போனாலும் துரியோதனன் நாட்டைக் கொடுக்கமாட்டான். ஆதலால் நாட்டைத் தருமாறு கையேந்தி நிற்காமல் போர் தொடுத்தல் வேண்டும் என்றான். அடுத்ததாக, சகாதேவனை மட்டும் தனியாக அழைத்துப்பேசி, கண்ணன் அவனது கருத்தை அறிய முற்பட்டான். சகாதேவன் ‘ஆதிமூர்த்தியே, நீ தூது போனால் என்ன? போகாவிட்டால் என்ன? எது எவ்வாறாயினும் எல்லாம் உன் நினைவின் படியே முடியும். அதனை உள்ளபடியே யான் அறிவேன்’ என்றான். திரௌபதியும் கண்ணனிடம், போரில்லாமல் நாடு கிடையாது என்று சொல்ல, கண்ணன் போர் வேண்டாம் என்று சொல்லவும், திரௌபதி அழுதவாறே நின்றாள். பின்னர், கண்ணன் திரௌபதியின் கண்ணீரைத் துடைத்து, அமைதிப்படுத்தினான். பிறகு, கண்ணன் மலையையும், காட்டையும், ஆறுகளையும் கடந்து அத்தினாபுரி நோக்கிப் புறப்பட்டான்.

கண்ணன் விதுரன் வீட்டில் தங்கியமையால், துரியோதனனுக்கும் விதுரனுக்கும் பிளவு ஏற்பட்டது. விதுரன் வில்லினை ஒடிக்கவும் செய்தான். இது தூதின் முதல் வெற்றி.

அடுத்து, அசுவத்தாமனைத் துரியோதனனிடமிருந்து பிரிக்கச் சூழ்ச்சி செய்தான் கண்ணன். இது இரண்டாவது வெற்றி. குந்தியின் மூலமாகவும், இந்திரனை கொண்டும் கர்ணனின் வலிமையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டான் கண்ணன். இவ்வாறு கண்ணன் தூதனாகவும், சூதனாகவும் இருந்து, பாரதப் போரைத் துவக்கி, வெற்றியைப் பாண்டவர்க்கு அளித்துக் காத்ததாகக் காப்பியம் அமைகிறது.

பாடம் - 3

பாரதியாரின் 'பாஞ்சாலி சபதம்'

3.0 பாட முன்னுரை

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்தியக் கவிஞர்களில் ஒருவரான சுப்பிரமணிய பாரதியாரால் எழுதப்பட்ட காப்பியம் பாஞ்சாலி சபதம். மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ள இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில் உள்ள நிகழ்ச்சி ஒன்றினைக் காப்பியத்தின் மையப் பொருளாகப் பாரதியார் தெரிவு செய்து படைத்துள்ளார்.

பாரதியாருக்கு முன்னரே கம்பரும், (இரணியன் கதை) வில்லிபுத்தூராழ்வாரும் (நளாயினி கதை) இதுபோன்ற ஒரு கிளைக்கதையைத் தமிழாக்கியுள்ளனர். ஆனால், இவ்விருவருமே சமகாலக் கண்ணோட்டத்துடன் அணுகவில்லை என்றே குறிப்பிடலாம். பாரதியார் அந்தப் பழைய நிகழ்வினை, சமகால உணர்வின் அடிப்படையிலேயே படைத்திருக்கிறார்.

பாண்டவர்களின் பெருமையைக் கண்டு பொறாமை கொண்டான் துரியோதனன். தனக்குச் சேரவேண்டிய புகழ் தருமனுக்குச் செல்வதை நினைத்துக் கோபம் கொண்டான். பாஞ்சாலி, பலர் கூடியிருக்கும் அவையில் துரியோதனனைப் பார்த்துச் சிரித்ததும் கேலிசெய்ததும் மீண்டும் துரியோதனனைக் கோபமூட்டியது. தன் மாமன் சகுனியின் மூலமாகப் பாண்டவர்களை வஞ்சனையாகச் சூதாட்டத்தில் ஈடுபடுத்தி, நாட்டையும் பொருளையும் அபகரித்து, காட்டுக்கு அனுப்பி வாழுமாறு செய்து விடுகிறான் துரியோதனன். இந்நிலையில் பணயப் பொருளாகத் தன்னை வைத்து விளையாடிய பாண்டவர்களைப் பார்த்து எதிர்ப்புக் குரல் கொடுக்கிறாள் பாஞ்சாலி. அடிமையாக்கப் பட்ட பாஞ்சாலியைத் துகிலுரிதலிலும் கண்டனக் குரல் ஒலிக்கிறது. பின்னர் வீமன், அர்ச்சுனன், பாஞ்சாலி ஆகியோரின் சபதங்கள் பற்றி இந்நூலில் எடுத்துரைக்கப்படுகின்றது.

3.1 பாஞ்சாலி சபதம்

தமிழனுக்கு நாட்டுப்பற்று ஊட்ட வேண்டிய தேவையை அடிப்படையாக்கியும், ‘பெண்ணடிமை தீர்ந்தாலே நாடு விடுதலை அடையும்’ எனும் கருத்தினை வலியுறுத்தவுமே பாரதி பாஞ்சாலி சபதத்தை உருவாக்கியுள்ளார்.

பல நாட்டு அரசர்கள் அமர்ந்திருக்கும் அவையில் ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க வேண்டி, ‘இன்னது செய்யாமல், ‘இன்னது நடக்காமல்’ அவிழ்க்கப்பட்ட என் கூந்தலை முடிக்க மாட்டேன் என்ற சபதம் செய்கிறாள். இக்காப்பியத்தில் வீமன், அருச்சுனன் ஆகியோரின் சபதம் இடம் பெற்றிருந்தும் அதனை விடுத்து, வீழ்ந்து கிடக்கும் பெண் சமூகத்திலிருந்து சபதம் மேற்கொள்ளும் ஒரு குரலாகப் பாஞ்சாலியின் சபதத்தை அமைத்திருப்பது மிகவும் சிறப்பானதாகிறது.

பாரதப் போரின் முக்கியப் பாத்திரப் படைப்புகளான துரியோதனன், துச்சாதனன் ஆகிய இருவரின் உயிரிழப்பே பாஞ்சாலி சபதத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு பெண் மூலமாக அதனைச் சாதித்துக் காட்டுகிற புதுமரபினைக் கையாண்டுள்ளார் பாரதியார்.

மண்ணாசையை அடிப்படையாகக் கொண்டு கதை பின்னப் பட்டிருந்தாலும், பாஞ்சாலி துகிலுரியப்படும் காட்சியைப் பாரதியார் தேசியத்தின் கோபமாகக் காட்டிப் ‘பாஞ்சாலி சபதம்’ எனப் பெயர் வைத்துள்ளார்.

3.1.1 ஆசிரியர் – பாரதியார் அடிமைத் தளையில் சிக்கிக் கிடந்த தமிழ்ச் சமூகத்தைத் தமது பாட்டுத் திறத்தால் எழுச்சி பெறச் செய்தவர் பாரதியார்.

11.12.1882 இல் எட்டயபுரத்தில் சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் சுப்பையா என்பது. தம் பதினோராம் வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். எட்டயபுர சமஸ்தானப் புலவர்களால் ‘பாரதி’ என்ற புகழைப் பெற்றவர். 1903 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டு வரை கவிதைகளை எழுதிக் குவித்தவர். இந்திய நாட்டு விடுதலைக்காகவே எழுதியதால் தேசியக்கவியாகத் திகழ்ந்தார்.

1920 இல் சென்னையில் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியர் பணியில் சேர்ந்து, திருவல்லிக்கேணி பகுதியில் வாழ்ந்து வரும் போது, கோயில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11 இல் இறந்தார். இவ்வாறு திருவல்லிக்கேணி யானையால் மென்று தின்னப்பட்ட தமிழ்க் கரும்பான பாரதியைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் ஏராளமான ஆய்வு நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் பாரதியும் பாரதியின் எழுத்துகளும் காலத்தால் அழியாப் புகழ்பெற்ற தன்மை வாய்ந்தன என்பது மறக்க முடியாத உண்மையாகும்.

3.1.2 நூலின் அமைப்பு ‘பாஞ்சாலி சபதம்’ இரண்டு பாகங்களையும் ஐந்து சருக்கங்களையும் கொண்டது.

முதற்பாகம்                    அழைப்புச் சருக்கம், சூதாட்டச் சருக்கம் என இரண்டு சருக்கங்களாகவும்,

இரண்டாம் பாகம்        அடிமைச் சருக்கம், துகில் உரியல் சருக்கம், சபதச் சருக்கம் என மூன்று சருக்கங்களாகவும்,                                                          மொத்தம் ஐந்து சருக்கங்களைக் கொண்டது.

ஒவ்வொரு பாகமும் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது. பராசக்தி, வாணி ஆகிய தெய்வங்களைப் பற்றிய கவிதைகள் அவை.

பாண்டவர்களின் பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட துரியோதனன், பாண்டவர்களை அழிக்கச் சகுனியின் சூழ்ச்சியுடன் திருதராட்டிரன் இசைவுடன் விதுரனை அனுப்பிப் பாண்டவர்களைச் சூதுக்கு அழைக்கின்றான்.

சூதாட்டச் சருக்கத்தில், சகுனியின் சூழ்ச்சி, சூதுத்திறமை, தருமன் நாட்டை இழந்து விடுவது பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அடிமைச் சருக்கத்தில், சூதாட்டத்தின் மதிமயக்கத்தில் தன்னை இழந்த தருமன், தன் தம்பியர் நால்வரையும் இழக்கும் நிலை சித்தரிக்கப்படுகிறது.

துகிலுரிதல் சருக்கத்தில் தருமனிடத்தில் எதுவும் இல்லாத நிலையில் திரௌபதியைப் பகடைப் பொருளாக வைத்து இழக்கிறான். திரௌபதியை அடிமைப்பட்டவளாகக் கருதி, துரியோதனன் துச்சாதனனை அழைத்துத் திரௌபதியைச் சபையில் துகிலுரியுமாறு கட்டளையிடுவது காட்டப்படுகிறது.

சபதச் சருக்கத்தில் திரௌபதி துகிலுரியப்படலும், கண்ணன் அவளைக் காத்தலும், பீமன், அர்ச்சுனன், திரௌபதி ஆகியோர் சபதம் மேற்கொள்ளுதலும் காட்டப்படுகின்றது. இவ்வாறு பாரதியார் கதையமைப்பினை வைத்து முடித்துள்ளார்.

3.2 கதைச்சுருக்கம்

பாரதி, பிரமனையும் வாணியையும் வணங்கிய பின்பு, அஸ்தினாபுரத்தின் பெருமைகளைக் குறிப்பிடுவதோடு கதை தொடங்குகிறது.

பொறாமை

பாண்டவர்களின் புகழையும் செல்வப் பெருக்கையும் கண்டு பொறாமைப் பட்ட துரியோதனன், சகுனியின் துணைகொண்டு பாண்டவர்களை அழிக்க நினைக்கிறான். துரியோதனன் தந்தை திருதராட்டிரன் இதற்கு முதலில் இணங்கவில்லையாயினும், பாண்டவர்களைச் சூதுக்கு அழைக்க இணங்குகின்றான். இதன்படி திருதராட்டிரன், பாண்டவர்களை அழைத்து வர விதுரனை அனுப்பப் பாண்டவர்கள் அஸ்தினாபுரிக்கு வருகின்றனர்.

சகுனியின் சூழ்ச்சி

அஸ்தினாபுரியில் பாண்டவர்களைச் சகுனி சூதுக்கு அழைக்கிறான். முதலில் மறுத்த தருமன், சகுனியின் சூழ்ச்சியில் விழுகிறான். இது ‘விதியின் செயல்’ என்று நினைத்துச் சம்மதிக்கிறான். அனைத்துச் செல்வங்களையும் இழந்து விடுகின்றான்; பின்னர், சகுனி தருமனைப் பார்த்து ‘நாடுகளை இழக்கவில்லை’ – தருமா, நாட்டை வைத்து ஆடினால் இழந்த செல்வங்களைப் பெற்று விடலாம் என்கிறான். சபையில் இருந்த விதுரன் இதற்கு உடன்படாமல் ஆட்டத்தை நிறுத்தச் சொல்லித் திருதராட்டிரனை வேண்டுகிறான்.

சூதாட்டமும் இழப்பும்

திருதராட்டிரனோ பதில் சொல்ல முடியாமல் வீற்றிருக்கிறான். துரியோதனன் பதில் பேசுகிறான். விதுரனைத் திட்டுகிறான்; பழிக்கிறான். இதனால் விதுரனும் வாய்மூடித் தலைகுனிந்து அமர்கிறான். தருமன் தன் நாட்டைப் பணயமாக வைத்து இழக்கிறான். மீண்டும் சகுனி, தருமனைப் பார்த்துத், தம்பியர் நால்வரையும் பணயமாக வைத்துச் சூதாடினால், இழந்த அனைத்தையும் பெற்றுவிடலாம் என்று சொல்ல, தருமன் அவ்வாறே தம்பியரைப் பணயப் பொருளாக்கி விளையாட அதுவும் தோல்வியையே தருகிறது தருமனுக்கு. அவன் தன்னையும் இழந்த பின்னர், பாஞ்சாலியையும் பணயமாக வைத்து இழந்து விடுகிறான். தனது ஆசையை நிறைவேற்றிய மாமன் சகுனியைக் கட்டிப் பிடித்து மகிழ்ச்சியால் துரியோதனன் கூத்தாடினான்.

பாஞ்சாலியின் சபதம்

பாண்டவர்கள் கடுந்துயரத்தில் மூழ்கினர். இந்நிலையில் துரியோதனன் பாஞ்சாலியை மன்றத்துக்கு அழைத்துவரச் சொல்லித் தேர்ப்பாகனை அனுப்புகிறான். அவள் வர மறுக்கிறாள். பின்பு, துச்சாதனனை அனுப்பி இழுத்து வரும்படி சொன்னான் துரியோதனன். துச்சாதனன் சென்று பாஞ்சாலியை அழைத்தான். கடும் கோபத்துடன் பேசினாள். உடனே கூந்தலைப் பற்றி இழுத்து வந்தான். சபையில் நின்றிருந்த ஐவரையும் பார்த்துக் கடுமையாகப் பேசினாள் பாஞ்சாலி. அந்நேரத்தில், பாஞ்சாலியின் சேலையைப் பற்றி இழுக்குமாறு கர்ணன் துச்சாதனனுக்குச் சொல்ல, துச்சாதனன் பாஞ்சாலியின் ஆடையைக் களைந்தான். பாஞ்சாலி, கண்ணனிடம் வேண்ட, கண்ணனின் அருளால் பாஞ்சாலியின் துகில் வளர்ந்து கொண்டே போகத் துச்சாதனன் மயங்கிக் கீழே சாய்ந்தான். துரியோதனனும் தலை கவிழ்ந்தான். இதனையடுத்து, கடுங்கோபங்கொண்ட வீமன், துரியோதனனையும், துச்சாதனனையும் போர்க்களத்தில் கொல்வேன் என்று சபதம் செய்தான். வீமனைத் தொடர்ந்து, அருச்சுனனும், பாதகனான கர்ணனைப் போரில் வெல்வேன் என்று சபதம் மேற்கொண்டான். இறுதியில் பாஞ்சாலி, துச்சாதனனின் இரத்தத்தையும் துரியோதனனின் இரத்தத்தையும் கலந்து அவிழ்க்கப்பட்ட என் கூந்தலில் எண்ணெயாகப் பூசி முடிப்பேன். அது நிகழாத வரைக்கும் என் கூந்தலை முடியேன் என்று சபதம் செய்தாள். இந்நேரத்தில் ஐம்பெரும் பூதங்கள், இப்புவி தருமனுக்கே எனச் சாட்சியளிக்கும்படி பேரொலி எழுந்தது. இவ்வாறு பாஞ்சாலி சபதத்தின் கதை முடிகிறது.

3.3 சகுனி

பாஞ்சாலி சபதத்தில் மையப் பாத்திரமாகத் திகழ்பவன் சகுனி. கதையின் திருப்பு முனைக்கும் கதை நிகழ்ச்சிகளின் இயக்கத்திற்கும் முக்கியமாக இருப்பவன் சகுனி.

தனது புத்தி கூர்மையால் சதி திட்டம் தீட்டுவதில் வல்லவனாகக் காணப்படுகிறான். குடும்பத்திலோ, நாட்டிலோ சதித்திட்டம் என்ற உடனே நம் கண்முன் வந்து நிற்பவன் சகுனி. அந்த அளவுக்கு தன் சதித் திட்டத்தால் பிரபலம் ஆனது சகுனி எனும் பாத்திரப்படைப்பு.

3.3.1 சகுனியின் சதி பாண்டவர்களின் வளர்ச்சியினைப் பொறுக்கமாட்டாதவனான துரியோதனன், தன்னுடைய மாமன் சகுனியிடம் தன் மனக்கருத்தை வெளிப்படுத்துகிறான். சகுனியும் சந்தோஷமாகச் சதித்திட்டம் ஒன்றினைச் சொல்கிறான். புதிதாக ஒரு மண்டபம் கட்டி, அது தெய்வ நலன்கள் உடையதாக எடுத்துச் சொல்லி, அதனைப் பார்வையிடப் பாண்டவரை அழைத்து வரவேண்டும். அதன்பின்பு அவர்களைச் சூதாட்டத்தில் ஈடுபடும்படி அழைத்து ஒரு நாழிகையிலேயே அவர்களது செல்வத்தை வென்றிடுவோம் என்றான். மேலும் போரினால் பாண்டவரை வெல்லமுடியாது என்றும் சூதினால் தான் வெல்லமுடியும் என்று துரியோதனனுக்கு ஆலோசனை சொன்னான் சகுனி. இதனைக் கேட்ட துரியோதனன் மகிழ்ந்து சகுனியை வணங்கினான். தீய சக்தியின் திரண்ட உருவமாகச் சகுனி காணப்படுகிறான். தீயனவற்றையே தொழிலாகக் கொண்டு ‘கூட இருந்தே குழிபறிப்பது போலக்’, கௌரவர்களான துரியோதனனையும் துச்சாதனனையும் அழிக்கும் எண்ணங்கொண்டவனாகச் சகுனியின் சதித்திட்டம் அவனைக் காட்டுகிறது. இந்தத் தீய செயல்களால் தன்னையும் இழந்து விடுகிறான் என்பது கண்கூடாகக் காணமுடிகிறது.

3.3.2 தருமனின் மனத்தை மாற்றியமை தன்னுடைய நாட்டினைப் பணயப் பொருளாக வைத்திழந்த தருமனைப் பார்த்துச் சகுனி, தருமனே! செல்வத்தையும் நாட்டையும் இழந்துவிட்டாய். இனி எப்படிப் பிழைப்பாய். உனது தம்பியர் நால்வரையும் பணயம் வைத்துச் சூதாடினால் இதுவரை இழந்ததை எல்லாம் மீட்டு விடலாம் என்றான். துரியோதனனும் அவ்வாறே சொன்னான். தம்பியர் முகத்தில் கவலை படரத் தொடங்கியது. வீமன் கடுங்கோபம் கொண்டான். தருமன், தம்பியரைப் பணயப்பொருளாக வைத்து விளையாடத் தொடங்கி முதலில் நகுலன், சகாதேவனை வைத்து இழக்கிறான். அடுத்த நிலையில் தருமன் மிகுந்த மனவேதனைப்படுகிறான். சூதாட்டத்தை இத்துடன் நிறுத்திவிடலாம் என நினைக்கிறான். அந்நேரத்தில் சகுனி, தருமனைப் பார்த்து, தருமனே! “நகுலனும் சகாதேவனும் வேறொரு தாய்க்குப் பிறந்தவர்கள். அதனால் அவர்களைச் சூதாடி இழந்துவிட்டாய். வீமனும் அருச்சுனனும் உன்னைப் போன்று குந்தியின் பிள்ளைகள் என்பதால் அவர்களைப் பணயப் பொருளாக வைக்கவில்லையா? என்று கேட்கிறான். அதனைக் கேட்ட தருமனுக்குக் கோபம் வந்தது. “சூதாட்டத்தில் தான் இழந்துள்ளோம்; ஒற்றுமையை நாங்கள் இழந்துவிட வில்லை” என்று சொல்லி இருவரையும் பணயப் பொருளாக வைத்து விளையாடச் சம்மதித்து இழக்கிறான்.

3.4 பாஞ்சாலி

பாஞ்சால தேசத்தினர் பெற்ற தவப்பயன் தான் பாஞ்சாலி. பஞ்சபாண்டவரின் உயிர் போன்றவள்; அருள் தன்மையுடன் ஒளிவீசுபவள்; ஓவியம் போன்றவள்: பூமியில் உலவும் செல்வமகள்; எங்கும் தேடிக் கிடைப்பதற்கரிய திரவியம் பாஞ்சாலி.

படிமிசை இசையுறவே – நடை

பயின்றிடும் தெய்வீக மலர்க்கொடியைக்

கடிகமழ் மின்னுருவை – ஒரு

கமனியக் கனவினைக் காதலினை

வடிவுறு பேரழகை – இன்ப

வளத்தினைச் சூதினிற் பணயம் என்றே

(கமனியக் கனவு = ஆகாயக் கனவு)

என வரும் பாடலில் பாரதி குறிப்பிடுகிறார். காப்பியத்தின் தலைமை மாந்தர் பாஞ்சாலியே. அடிமைத் தளையைத் தகர்க்க எழும் பாரதச் சக்தியாகப் பாரதியால் படைக்கப்பட்டவள் பாஞ்சாலி.

3.4.1 பணயப் பொருள் சகுனியின் சதியால் பணயப் பொருளாக வைக்கப்பட்டவள் பாஞ்சாலி.

பாஞ்சாலியைப் பணயமாக வைத்து விளையாடிய செயலைப் பாரதி,

நல்யாகத்தில் படைக்கப்படுகின்ற வேள்விப் பொருளை, எச்சில் தேடியலையும் நாய்க்குமுன் அது மென்றிட வைப்பதைப் போன்று உள்ளது என்றும்,

நல்ல உயரமுள்ள, அகலமுள்ள பொன் மாளிகையைக் கட்டி, அதில் பேயினைத் தேடிக் கண்டுபிடித்துக் குடியமர்த்துவது போல உள்ளது என்றும் கூறுகிறார்.

செருப்புக்குத் தோல் வேண்டியே – இங்குக்

கொல்வரோ செல்வக் குழந்தையினை

விருப்புற்ற சூதினுக்கே – ஒத்தபந்தயம்

மெய்த்தவப் பாஞ்சாலியோ?

என, செருப்புச் செய்வதற்குத் தோல் தேவையென்பதால் அன்புமிக்க குழந்தையைக் கொல்வதற்குத் துணிவது போன்று உள்ளது என்கிறார் பாரதியார்.

3.4.2 எதிர்ப்புக் குரல் விதியின் வலிமையால் தருமன், சகுனியுடன் சூதாடியதால் நாடிழந்து நல்ல பொருள் இழந்து, தம்பியரை இழந்து, இறுதியில் பாஞ்சாலியை இழந்து விடுகிறான். துரியோதனன் தன் தேர்ப்பாகனை அழைத்து, பாஞ்சாலியைச் சபைக்கு அழைத்து, வருமாறு சொன்னான். தேர்ப்பாகனும் சென்று பாஞ்சாலியைப் பணிந்து அழைத்தான். அப்போது பாஞ்சாலி சீறிப்பாய்ந்தாள்.

யார் சொன்ன வார்த்தையடா?

சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து

மாதர் வருதல் மரபோடா? யார் பணியால்

என்னை அழைக்கிறாய்?

என்று தேர்ப்பாகனைப் பார்த்துக் கேட்டாள் பாஞ்சாலி.

நான் துருபத மன்னனின் மகள். சூதில் தோற்றுப் போன பின்னர் என்னைத் தாரமாக்கிக் கொள்ளும் உரிமை அவர்க்கில்லை.

கௌரவர் வேந்தர் சபை தன்னில் – அறம்

கண்டவர் யாவரும் இல்லையா? மன்னர்

சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே – அங்கு

சாத்திரம் செத்துக் கிடக்குமோ?

எனச் சொல்லி, தேர்ப்பாகனை மீண்டும் திருப்பியனுப்புவதைக் காணலாம்.

பழம்பெரும் பாரதக் கதையில் பாஞ்சாலி எதிர்த்துப் பேசுபவளாகக் காணப்படவில்லை. ஆனால் பாரதியார், பாஞ்சாலியைக் கணவன்மார்களையும், கௌரவர்களையும் எதிர்த்துப் பேசுபவளாகப் படைத்துப் பெண்ணுரிமையை நிலைநாட்ட விரும்புகிறார்.

3.4.3 கண்ணனை வேண்டுதல் அடிமையாக்கப்பட்ட பாஞ்சாலியைத் துச்சாதனன் பலர் இருக்கும் அவையில் இழுத்துவந்து ஆடையைக் களைய முற்படுகிறான். அந்நேரத்தில், அனைவராலும் கைவிடப்பட்ட, காப்பாற்றப்படாத சூழ்நிலையில் பாஞ்சாலி கண்ணனை இறைஞ்சி வேண்டுகிறாள்.

முதலையின் வாயில் அகப்பட்ட யானையின் கூக்குரலைக் கேட்டு அருள் புரிந்தவனே! சக்கரம் ஏந்தி நிற்பவனே! சாரங்கம் என்ற வில்லைக் கையில் ஏந்தி நின்று போரிடுபவனே! நீ அனைத்துத் துக்கங்களையும் அழித்திடுவாய். தொண்டர்களின் கண்ணீரைத் துடைத்திடுவாய்!

வானத்துள் வானாக இருப்பவனே! தீயிலும் மண்ணிலும் காற்றிலும் எல்லாவற்றிலும் நிறைந்து இருப்பவனே! அறிவுக்கும் எட்டாத பொருளே! எந்தன் சொல்லினைக் கேட்டு எனக்கு அருள் புரிவாய்.

இரணியன் உடல் பிளந்த கண்ணனே! உன்னடி தொழுது நான் அடைக்கலம் புகுந்தேன்! எனப் புலம்புகிறாள்.

வாக்கின் தலைவனை (பிரமனை) ஆட்கொண்ட வலிமை உடையவனே! எந்தையே! அருட்கடலே! இங்கு நூறு பேரான கௌரவர்களின் கொடுமையினின்று என்னை மீட்பாயாக! வையகம் காப்பவனே! மணிவண்ணனே! என் மனச்சுடரே! நின் தாமரை மலர்களைச் சரண் புகுகின்றேன் என வேண்டினாள் பாஞ்சாலி, கண்ணன் அருள் புரிந்தான். அந்நேரத்தில் துச்சாதனன், பாஞ்சாலியின் துகிலை உரிய உரிய அவளுக்குத் துகில் மலைபோலக் குவிந்து கொண்டே இருந்தது. அவனால் முடியாமல் மயங்கிக் கீழே விழுந்தான்.

3.4.4 வீடுமனின் தேற்றல் ‘மன்னர் சபைதனில் என்னைப் பிடித்து இழுத்துப் பலபட இழிசொற்களால் பேசுகின்ற துரியோதனனை, நிறுத்தடா? என்று சொல்ல யாருமில்லையா?’ எனக் கேட்ட பாஞ்சாலிக்கு, தகுதியால் உயர்ந்தவனான வீட்டுமன் எழுந்து, பாஞ்சாலியே! உன்னைத் தருமன் சூதாடித் தோற்றான்; நீயோ, வாதாடி அவன் செய்கை தவறு என்கிறாய். சூதிலே வல்ல சகுனி தன் திறத்தால் உன் மன்னனை வீழ்த்தி விட்டான். உன்னையும் பணயப் பொருளாக வைத்து இழந்தது தவறு என்று சொல்கிறாய். பண்டைய கால நெறிப்படி நீ சொல்வது சரி. அந்நாளில் ஆணும் பெண்ணும் சமமாக இருந்தனர். ஆனால் பிற்காலத்தில் அது மறைந்து போய்விட்டது. இப்போதுள்ள சாத்திரங்களின்படி ஆணும் பெண்ணும் சமமில்லை. இப்போது ஒருவன் தன் மனைவியை விற்கவும் தானமாகக் கொடுக்கவும் உரிமையுண்டு. இது முழுவதும் விலங்கு வாழ்க்கை. எனவே தருமன் உன்னை அடிமையாக்க உரிமை கொண்டவன். இங்கே நடக்கும் செய்திகளைக் கண்டால் கல்லும் நடுங்கும்; விலங்குகளும் கண்புதைக்கும். இங்கே நடைபெறும் செய்கைகள் அநீதியானவை. சாத்திரத்தில் சொல்லிய நெறிகளையும் வழக்கத்தையும் நீ கேட்பதனால், அவை உன்சார்பாகக் கேட்க யாரும் இல்லை. நானும் தீய செயல்களைத் தடுக்கும் திறமில்லாதவனாகவே இருக்கிறேன் என்று சொல்லித் தலை கவிழ்ந்து அமர்ந்தான் வீடுமன்.

3.4.5 பாஞ்சாலியின் சபதம் இறுதியில் பாஞ்சாலி சபதம் செய்தாள். ஆம் பராசக்தி மீது ஆணையிடுகின்றேன். பாவி துச்சாதனனை என் கணவன் வீமன் கொன்ற பின்னர் அவன் உடம்பிலிருந்து ஊறியெழும் ரத்தத்தையும் பாழ்பட்டுப் போன துரியோதனன் உடம்பு ரத்தத்தையும் கலந்து என் கூந்தலில் பூசுவேன். அதன் பின்னரே என் கூந்தலில் நறுநெய் பூசி என் கூந்தலை முடிப்பேன். அதுவரையில் என் கூந்தலை முடிக்கமாட்டேன் என்று பாஞ்சாலி சபதம் செய்தாள். இவ்வாறு இம்மூவரின் சபத உரைகளைக் கேட்டவுடன் தேவர்கள் ‘ஓம்’ என்று உரைத்தனர். ஐம்பெரும் பூதங்களும் இந்தப் புவி தருமனுக்கே எனச் சாட்சியுரைத்தன என்று சபத உரைகளை முடிக்கிறார் பாரதியார்.

3.5 வீமன்

பாண்டவர் ஐவருள் இரண்டாமவன். தோள்வலி மிக்கவன். சிறு வயது முதலே துரியோதனனைத் தன் எதிரியாகக் கருதி வந்தவன். தருமன், பாஞ்சாலியைப் பணயம் வைத்ததும் முதலில் சினம் கொள்பவன் இவனே. அதேபோல் சபதம் மேற்கொள்பவனும் வீமனே.

3.5.1 வீமனின் கோபம் பணயப் பொருளாகத் தன்னையும் தம்பியரையும் வைத்து இழந்தது குறித்து, வீமன் மிகவும் கவலையுற்றுத் தருமனைப் பார்த்துச் சுடுசொற்களை வீசினான்.

சூதர் மனைகளிலே – அண்ணே

தொண்டு மகளிருண்டு

சூதர் பணயம் என்றே – அங்கு ஓர்

தொண்டச்சி போவதில்லை

என முழங்குகிறான் வீமன்.

தவறு செய்துவிட்டாய் – அண்ணே

தருமம் கொன்றுவிட்டாய்

என்றும் குறிப்பிடுகின்றான். ‘பாஞ்சாலியை நாம் வெறும் சோரத்தினால் (கள்ளத்தால்) அடையவில்லை. சூதாட்டத்தில் வெற்றி பெறவில்லை. வீரத்தினால் வென்றோம் என்று தருமனைப் பார்த்துக் கேட்கிறான் வீமன்.

நீங்கள் நாட்டையெல்லாம் சூதில் பணயமாக வைத்தீர்கள். நாங்கள் பொறுத்தோம்! எங்களைப் பணயப் பொருளாக வைத்தீர்! அடிமையாக்கினீர். அதையும் பொறுத்தோம். ஆனால்,

துருபதன் மகளை – திட்டத்

துய்மன் உடன் பிறப்பை

இருபகடை என்றாய் – ஐயோ

இவர்க்கு அடிமை என்றாய்

எனத் தருமனை நோக்கிக் கடும்சொற்களை வீசினான். மேலும், சகாதேவனைப் பார்த்து,

இது பொறுப்பதில்லை – தம்பி

எரிதழல் கொண்டுவா

கதிரை வைத்திழந்தான் அண்ணன்

கையை எரித்திடுவோம்

என்று தருமன் செயலை நினைத்துப் பொறுக்க முடியாதவனாக வீமன் சினந்து இவ்வாறு பேசினான்.

3.5.2 வீமனின் சபதம் நிலைகுலைந்து அழுது புரளும் பாஞ்சாலியைப் பார்த்துத் துஷ்டனான துச்சாதனன் தீய சொற்களைக் கூறிக்கொண்டே அவளது ஆடையைக் களைகிறான். கண்ணனது அருளால் மேகக் கூட்டம் போலத் துகில் பெருத்து வருவதைக் கண்ட துச்சாதனன் கீழே விழுந்தான். இந்நிலையில் வீமன் மிகவும் கோபங்கொண்டு சபதம் செய்கிறான்.

இங்குத் தேவர்கள் மீது ஆணை, பராசக்தி மீது ஆணை, பிரமதேவனின் மீது ஆணை, கண்ணன் மீது ஆணை என இறைப் பெருமக்கள் மீது ஆணையிட்டு, போர்க்களத்தில் துச்சாதனனையும், துரியோதனனையும் கொன்று அவர்களது இரத்தத்தைக் குடிப்பேன். இது உலகில் நடக்கும். அனைவரும் காண்பீராக! என்று சபதம் எடுத்தான்.

3.5.3 வீமனின் கோபம் தணிதல் தருமன் மீது கடுங்கோபம் கொண்ட வீமனைப் பார்த்து அர்ச்சுனன் பேசுகிறான்.

வீமனே! என்ன வார்த்தை சொன்னாய்? யார் முன்னே இதைச் சொன்னாய்? சினம் பொருந்திய நீ உனது அறிவைப் புதைத்ததாலே மூன்று உலக நாயகனான தருமனைச் சினந்து இவ்வாறு பேசுகிறாய். கோபம் கொள்ளாதே.

தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை

மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்

வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்

கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று

கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம்மாறும்

தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்

தனுவுண்டு காண்டீபம் அதன்பேர்

என்று “தருமத்தின் வாழ்வைச் சூது விழுங்கும் ஆனால், தருமம் மறுபடியும் எப்படியாவது வெற்றி பெற்றே தீரும். இது இயற்கை உண்மை. அதுவரை நாம் பொறுமையாக இருப்பதே நல்லது. கோபம் வேண்டாம். யார் மேலும் குற்றமில்லை”, என்று சொல்லி, வீமனின் கோபத்தைத் தணித்தான் அருச்சுனன்.

3.6 விதுரன்

மன்னன் திருதராட்டினனுக்குத் தம்பியாக இருந்தாலும், அமைச்சர் பொறுப்பு ஏற்றவன். நீதிநெறி கற்றவன். நீதியை நிலை நாட்டுவதில் உறவு முறைகளைப் பார்க்காதவன். அதனாலேயே துரியோதனனால் வெறுக்கப்பட்டவன்.

3.6.1 விதுரனின் அறிவுரை சூதாட்ட மன்றத்தில் தருமனிடம் உள்ள செல்வம் அனைத்தையும் சகுனி வென்று விடுகிறான். அதன்பிறகு நாட்டைப் பணயமாக வைத்து விளையாடலாம் எனச் சகுனி சொல்கிறான். இதனைக் கேட்ட விதுரன் அதிர்ச்சியடைந்து, ‘இதனால் கௌரவர் குலம் அழியும்’ என்று குறிப்பிட்டான். சூதாட்டம் இனித் தேவையில்லை, நிறுத்த வேண்டும் என்றான். தன்னுடைய அண்ணன் திருதராட்டிரனுக்கும் தெரிவித்தான். இதனைக் கேட்ட துரியோதனன், கண்களில் தீப்பொறி பறக்க மிகவும் கோபம் கொண்டு விதுரனைத் திட்டுகிறான்.

‘எங்களிடத்தில் உள்ள செல்வத்தை அனுபவித்துக் கொண்டு; பாண்டவருக்காகப் பரிந்து பேசுகிறாயே? உன்னைச் சபையில் வைத்ததே பெருங்குற்றம்’ என்றான். அன்பில்லாத பெண்ணுக்கு எவ்வளவுதான் நன்மை செய்தாலும் வாய்ப்பு வரும் பொழுது கணவனை விட்டு அகன்று விடுவாள். அதுபோல நீ இருக்கிறாயே என்று துரியோதனன் பழித்தான். அதற்கு விதுரன், ‘உன்னை நல்வழிப்படுத்த முயன்றேன். உன் அவையில் என்னைப் போன்றவர்கள் இருத்தல் கூடாது. குலம் கெட்ட நீசர்கள், மூடர்கள், பித்தர் போன்றோர் மட்டுமே இருத்தல் முடியும். உன் சாவைத் தடுத்திடவே உரைத்தேன். இனி எவ்விதப் பயனும் இல்லை’ எனத் தன் தலைகவிழ்ந்தபடி இருந்தான்.

3.7 காப்பியச் சிறப்பு

காப்பியங்களில் வருணனை ஓர் இன்றியமையாத கூறாகும். பாஞ்சாலி சபதத்திலும் வருணனை சிறந்த இடத்தைப் பெறுகிறது. அது காப்பியத்தின் சிறப்புக்குரிய ஒன்றாகவும் திகழ்கிறது.

3.7.1 வருணனை இயல்பாகவே இயற்கையின் மீது காதல் கொண்ட கவிஞர், பாஞ்சாலி சபதத்திலும் இயற்கையின் வருணனையை அதிகமாகவே வழங்கியுள்ளார்.

பாண்டவர்கள் அஸ்தினாபுரத்திற்குப் போகும் வழியில் மாலை நேரத்து வருணனை அழகாகப் பேசப்பட்டுள்ளது. அந்த மாலை நேரத்தின் அழகினைப் பாஞ்சாலியிடம் அருச்சுனன் சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.

‘பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!

என்னடி இந்த வன்னத் தியல்புகள்!

எத்தனை வடிவம்! எத்தனை கலவை!

தீயின் குழம்புகள்! — செழும்பொன் காய்ச்சி

விட்ட ஓடைகள்! — வெம்மை தோன்றாமே

எரிந்திடுந் தங்கத் தீவுகள்! — பாரடி!

நீலப் பொய்கைகள்! — அடடா, நீல

வன்ன மொன்றில் எத்தனை வகையடி!

எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்

எத்தனை! — கரிய பெரும்பெரும் பூதம்!

நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்

தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட

கருஞ் சிகரங்கள்! — காணடி, ஆங்கு

தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்

இருட்கடல்! — ஆஹா! எங்குநோக்கிடினும்

ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!’

சூரியனைச் சூழ்ந்து நிற்கும் மேகங்கள் சிவப்பு நிறமானவையாக இருப்பதனால் அவை தீப்பட்டு எரிவன போல் தோன்றுகின்றன. நல்ல பொன்னைக் காய்ச்சி உருக்கி விட்டாற்போல், தங்கத்தீவுகள் போன்று மேகங்கள் உள்ளன என்று வருணித்துள்ளதைக் காணலாம். அதுபோலவே,

நீலநிறமான பொய்கையில் மிதக்கும் தங்கத் தோணி போல, நீல நிறமான மேகத்திரளின் நடுவே தங்கமயமான சூரியன் மிதந்து கொண்டிருக்கிறது என்கிறார் கவிஞர்.

என்னைப் பாவப்படுத்துதல் தகுமோ? பெண்பாவம் பொல்லாதாதலால் உமக்கு இழிவு அன்றோ? என்று அவையில் வீடுமனிடத்திலும் சாத்திரம் கற்றோர்களிடத்திலும் பாஞ்சாலி வேண்டுகோள் விடுக்கிறாள். அந்த வேண்டுகோளைப் பாரதி இவ்வாறு வருணிக்கிறார்:

அம்புபட்ட மான்போல் அழுது துடித்தாள்

வம்பு மலர்க் கூந்தல் மண்மேல் புரண்டுவிழத்

தேவி கரைந்திடும்

என அவலத்தோடு வருணிப்பதைக் காணலாம்.

அஸ்தினாபுரத்தின் பெருமைகள்

துரியோதனனின் நகரமான அஸ்தினாபுரத்திற்கு நிகரான ஊர் எதுவுமில்லை. உயர்ந்த, நீளமான தெருக்களும், நகரைச் சுற்றி அகழியுமாகக் கொண்டு விளங்குகிறது. நகரத்தின் மதில்கள், மாளிகைகள் நட்சத்திர மண்டலத்தில்கூட இதுபோலக் காணமுடியாது என்று நகரின் பெருமைகள் பேசுகிறார் பாரதியார்.

ஆகாயத்தில் மிக உயரத்தில் நெருங்கி அசைந்து, சூரிய கிரணங்களையும் உள்ளே புகாதபடி மறைத்து விளங்குகின்ற வெண்மையான கொடிச்சீலைகள், வெண்ணிறமான ஆகாய கங்கையின் அசைகின்ற குளிர்ந்த அலைகளைப் போலத் தோற்றம் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றன.

பசுமையான பாக்குமரங்கள் நிறைந்த சோலை, இந்திரனுக்காகப் படைக்கப்பட்ட சுவர்ணமயமான சுவர்க்கலோகமோ? குபேரனது அளகாபுரியோ என்பது போல மாடமாளிகைகள் காணப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நெடுந்தேர்களும் யானைகளும், மற்ற சேனைகளும் வீதிகளில் ஒன்றோடொன்று எதிரெதிரில் நெருங்கியிருத்தலால், இடம்பற்றாமல் இருப்பதால் ‘போங்கள், போங்கள்’ என்று பிறரைப் பார்த்துச் சொல்லும் ஒலிகளே கேட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம்.

எல்லா மலைகளிலும் எல்லாக் காடுகளிலும், கடல்களிலும் உண்டாகிற பொருள்கள் குவித்து வைத்திருக்கும் கடைவீதிகளை அஸ்தினாபுரத்தில் காணலாம். பல நடனப் பெண்களின் நடனம், தொழில் உணர்ந்த கலைஞர்களின் ஓவியங்கள் என அஸ்தினாபுரத்தின் பெருமைகள் பற்றிப் ‘பாஞ்சாலி சபதம்’ குறிப்பிடுகின்றது.

3.8 தொகுப்புரை

பாண்டவர்கள் வாழ்க்கையை எந்த வழியாலும் கெடுத்திட எண்ணங் கொண்டவனாகத் துரியோதனன், சூதும் பொய்யும் உருவான சகுனி மூலம் பாண்டவர்களைச் சூதாட்டத்தில் ஈடுபடுத்தி, நாட்டையும் செல்வத்தையும் அபகரித்ததோடு மட்டுமல்லாமல், ஐவரையும் பாஞ்சாலியையும் பணயப் பொருளாக வைத்து அடிமைப்படுத்தினான். அடிமையாக்கப்பட்ட பாஞ்சாலியைச் சபைதனில் இழுத்துவரக் கட்டளையிடுகிறான். அப்படியே துச்சாதனன் அந்த இழிசெயலைச் செய்கிறான். அந்நேரத்தில் பாஞ்சாலி மிகவும் கோபங் கொண்டவளாகப் பேசுகிறாள். (இந்த இடத்தில் பெண்களின் உரிமையைப் பெண் மூலமாகவே கேட்க வைத்து ஆணினத்தின் அதிகாரத்தைக் கேள்வி கேட்பதாகப் பாரதி பாஞ்சாலி வழிநின்று பேசுகிறார்.)

சாத்திரங்களில், இதிகாசங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண்ணின் அவல நிலையைத் தோலுரித்துக் காட்டுகிறார்.

பாஞ்சாலியைத் துச்சாதனன் முடிபற்றித் தெருவில் இழுத்து வரும்போது, வீதிமருங்கிலும் நின்று வேடிக்கை பார்த்த மக்களை நொந்து ‘வீரமிலா நாய்கள்’ என்றும், அவர்கள் அழுது புலம்புகின்ற அந்தச் செயலை; அந்தப் பயனில்லாத புலம்பலைப் ‘பெட்டைப்புலம்பல்’ என்றும் சாடுகிறார் பாரதியார்.

சபைதனில் பெண்மையை மானபங்கம் செய்யும் போது, பெண்ணின் வாயால் பெண்ணரசினைப் பற்றிக் கேட்கிறார் பாரதியார்.

தன்னுடைய கணவன்மார்களைப் பார்த்து வேதனைப்பட்டு, ‘என்னைப் பணயத்தில் வைத்து விளையாட உங்களுக்கு என்ன உரிமை’ என்று கேட்க வைக்கிறார் கவிஞர்.

இறுதியாக, காவியத்தில் மானிட சமுதாயத்தில் நம்பிக்கை வைத்தது போதும் என்று நினைத்து இறைவனிடம் வேண்டுகிறாள். காப்பாற்றப்படுகிறாள். பின்னர், தன்னை அவமானப்படுத்தியவர்களைக் கொன்று அதன் மூலமாகவே அவலத்தினுக்கு விடிவுகண்டு, தன் கூந்தலை முடிப்பதாகச் சபதம் ஏற்க வைத்துக் கதையை முடித்துள்ளார் பாரதியார்.

பாரத நாட்டின் விடுதலையையும் பெண் விடுதலையையும் ஒன்றாக நினைத்துக் காப்பியத்தை நிறைவு செய்கிறார்.

பாடம் - 4

பாரதிதாசனின் ‘வீரத்தாய்’

4.0 பாட முன்னுரை

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுதி 1938-ல் வெளிவந்திருக்கின்றது. அக்கவிதைத் தொகுதியின் மூலம் மூன்று காவியங்களைப் படைத்துள்ளார் என்பதை அறியலாம். புரட்சிக் கவிஞர் என்று உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை பெற்றது, கவிஞரின் காவியங்களுள் முதலாவதான ‘சஞ்சீவிபர்வதத்தின் சாரல்’ எனும் காவியமாகும். அதனைத் தொடர்ந்து புரட்சிக்கவி, வீரத்தாய் எனும் காவியங்கள்.

தமிழ்ப் பெண்கள் வீராங்கனைகளாகவும் வீரப் புதல்வரைப் பெற்றவர்களாகவும் காட்ட நினைத்துத் தான் வீரத்தாயைப் படைத்தார். ஒன்பது காட்சிகளால் படைக்கப்பட்ட ‘வீரத்தாய்’ காவியம் ஓர் ஓரங்கக் கவிதை நாடக வகையைச் சார்ந்தது எனலாம்.

உறவினர் அனைவரையும் இழந்த பிறகும் தனக்கிருந்த ஒரே மகனைப் போருக்குச் செல்லுமாறு அனுப்பியவள் புறநானூற்றுத் தாய்.

சீவகனின் தாய் அனாதையாய் இடுகாட்டில் மயில் பொறியில் இறங்குகிறாள்; தவக்கோலம் பூண்டு மறைந்து வசித்து வருகிறாள். அவள் மகன் முனிவர் ஒருவரிடம் மாமன்னர்க்குரியதான பல கலைகளைப் பயில்கிறான். அவனே காப்பியத் தலைவனாகச் சீவக சிந்தாமணியில் படைக்கப்படுகிறான். அதேபோல, கரிகாலன் பிறப்பில் அனாதை. அவனை, அவன் மாமன் இரும்பிடர்த்தலை அரசனாக மாற்றினான். அதுபோலவே, ‘வீரத்தாய்’ காவியத்தில் மகனை வீரனாக்குவது அவனது தாயே. இக்காவியத்தில் ஆண்மாந்தர்களை விடப் பெண்மாந்தர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

கல்வி இன்றி, உரிமை இழந்து, சிந்தனை அறியாமல் கண்டதெல்லாம் குடும்பம் என்றே கிடந்த பெண்கள் உலகத்தை அகற்றிட, அப்பெண்களின் பார்வையைப் பறித்த சமுதாயத்திற்குப் பகுத்தறிவை ஊட்டிட நினைத்து உருவானதுதான் ‘வீரத்தாய்’ காவியம்.

மணிபுரி, மன்னன் இல்லாமல் பாழாய்க்கிடக்கும் நிலையைப் பயன்படுத்தி சேனாபதி காங்கேயனும் மந்திரியும் ஒன்றுசேர்ந்து சூழ்ச்சியால் அரசாட்சியைப் பெற்றிட, இளவரசியையும் சுதர்மனையும் ஊர்ப்புறத்தில் விட்டுவிட்டுச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால், இளவரசி யாருக்கும் தெரியாமல் தன் மகனுக்கும் தெரியாமல் அவனுக்கு எல்லாக் கலைகளையும் கற்றுக்கொடுத்து வளர்க்கிறாள். தகுந்த நேரம் பார்த்துச் சூழ்ச்சியை முறியடித்து வெற்றியும் பெறுகிறாள். இளவரசன் சுதர்மன் மணிபுரி அரசின் முடியைச் சூடும் சமயத்தில், சுதர்மனே, ‘இந்த நாடு எல்லார்க்கும் உடைமை, எல்லார்க்கும் உரிமை’ என முரசறைவித்துக் குடியரசு ஆட்சிமுறைக்கு நாட்டை மாற்றுகிறான் என்பதைப் பற்றிச் சொல்வது’ தான் ‘வீரத்தாய்’ காவியம்.

4.1 வீரத்தாய்

‘வீரத்தாய்’ எனும் காவியம் ஓரங்கக் கவிதை நாடகமாகக் காணப்படுகிறது. ஒன்பது காட்சிகள் கொண்டு கதை தழுவிய கவிதையாகக் காணப்படுகிறது. இலக்கண வேலியைத் தாண்டி, காப்பிய நெறியில் புதுமையைக் கொண்டுள்ள காவியம். தமிழ்ச் சமுதாயத்தில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பெண் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த காட்சி, புரட்சிக் கவிஞனுக்கு வேதனை அளித்தது. பழந்தமிழ் இலக்கியங்களில் கொடுக்கப்பட்டு வந்த உரிமை கூடப் பிற்காலத்தில் இல்லாமல் இருந்ததைப் பார்த்துக் கோபமடைந்த கவிஞர், தமிழ்ச் சமுதாய வாழ்விற்கு மகளிரே தலைமையேற்கும் வரலாற்றை மீட்டமைக்க, பெண்கள் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தி, ‘வீரத்தாய்’ எனும் காவியத்தலைவி மூலம் அதனை நிறைவேறச் செய்கிறார்.

வீரத்தாய் கவிதை நாடகத்தில் வீரமும் உறுதியும் அமைந்தவளாகவும், உலகத்தினர் மெச்சும் வகையில் எல்லாக் கலையினையும் கற்றவளாகவும் ஒரு தலைவியைப் படைத்திட வேண்டும் என்று கவிஞர் தம் இதயத்தில் பொங்கிப் புறப்பட்ட பெண்ணின் பெருமையே ‘வீரத்தாயாக’ உருக்கொண்டது.

அடிப்படையான பெண்மை நலச் சிந்தனை ‘வீரத்தாய்’ கவிதைக் காடு முழுவதும் பூத்துக்குலுங்குவதைக் காணலாம். பிள்ளைகளைப் பெற்றதோடு கடன் முடிந்து விட்டது என்றில்லாமல், உற்ற கடமைகள் பல உண்டு என்று உணர்த்தி, உயர்கலைகள் பல கற்பித்து ஒழுக்க வீரனாய்ச் சுதர்மனை உருவாக்கிப் பிறநாட்டு வேந்தர்களும் போற்றும் அளவிற்கு உயர்த்திப் பெருமை சேர்த்திட ‘வீரத்தாய்’ என்று பட்டம் சூட்டி மகிழ்வித்திருக்கிறார் கவிஞர்.

சீவக சிந்தாமணியின் சீவகன் தாயை மனத்துள் கொண்டே கவிஞர் ‘வீரத்தாயை’ வரைந்துள்ளார் போலத் தோன்றுவதைக் காணலாம். இக்காவிய நாடகம் – இன்பியல் நாடகமா துன்பியல் நாடகமா என்பதைவிட, எழுச்சியியல் நாடகமாக நினைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, பல்வேறு பட்ட மாந்தர்களைப் படைத்து, கருத்தின் வேகத்தைக் குறைக்க விரும்பாமல், கவிஞர் கதையைவிடக் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அறிந்து மகிழலாம்.

4.1.1 ஆசிரியர் – பாரதிதாசன் 1891 ஏப்ரல் 29 ஆம் நாள் புதுச்சேரி கனகசபைக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் பாரதிதாசன். பெற்றோர் இட்ட பெயர் சுப்புரத்தினம்.

1895 இல் ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவிடம் ஆரம்பக்கல்வி பயின்றார். 1906 இல் வித்வான் தேர்வில் தேர்ச்சியடைந்தார். 1907 இல் புதுச்சேரி மகாவித்வான்ஆ.பெரியசாமி ஐயாவிடமும் பங்காரு பத்தரிடமும் இலக்கண – இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

1908 இல் புதுச்சேரியில் பாரதியாரைச் சந்தித்தார். பாரதியாரின் வேண்டுகோளுக்கிணங்க, ‘எங்கெங்குக் காணினும் சக்தியடா’ எனும் பாடலைப் பாடிப் பாரதியின் அன்பைப் பெற்றார். பாரதியிடம் தாம் கொண்ட மதிப்பின் காரணமாகப் ‘பாரதிதாசன்’ எனத் தன்பெயரை மாற்றிக் கொண்டார்.

சமூக விடுதலைக்காகவே ஆயிரக்கணக்கில் கவிதைகளைப் படைத்தார்.

1946 இல் அறிஞர் அண்ணா தலைமையில் பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டு ரூபாய் 25,000/- நிதி அளிக்கப் பெற்றது.

1954 இல் புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

1962 இல் இராஜாஜியால் சிறப்பிக்கப் பெற்றார்.

1964 ஏப்ரல் 21 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

பாவேந்தர் பாரதிதாசன் மறைந்தாலும் அவரது பாடல்கள் தமிழரின் வாழ்விற்கும் மேன்மைக்கும் அடிப்படையாக அமைந்தன. இவ்வாறு தேசியத்திலிருந்து தமிழ்த் தேசியமாகி, சர்வ தேசிய எல்லைகளை நோக்கி விரிகிற படைப்புகளாகப் பாரதிதாசன் படைப்புகள் அமைந்துள்ளன.

4.1.2 காப்பிய நோக்கம் பாரதியின் பாடல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தில் சுதந்திர உணர்வை உண்டு பண்ணியது போல, பாரதிதாசனுடைய பாடல்கள் சமூகச் சீர்திருத்த உணர்ச்சியை மக்களுக்கு ஊட்டியது எனலாம்.

கல்வி இன்றி, உரிமை இழந்து, சிந்தனை அறியாமல் கண்டதெல்லாம் குடும்பம் என்றே கிடந்த பெண்கள் உலகத்தைப் பகுத்தறிவுப் பாதையில் கொண்டு செல்லவும், சமூகத்தில் பலவீனர்கள் என்பதை மாற்றிடவும் தான் வீரத்தாயைப் படைத்தார். அதனை உள்நோக்கமாகக் கொண்டுதான் பெண்மாந்தர்களைத் தலைமைப் பாத்திரமாக ஏற்க வைத்துள்ளார். அதிலும் ஆண் மாந்தர்களை விஞ்சுகின்ற அளவுக்குப் பெண் மாந்தர்களைப் படைத்துள்ளார். .

எத்தனை வஞ்சம் இடைப்பட்டாலும் அத்தனையும் தவிடுபொடியாக்கிக் காட்ட, ஒரு பெண்ணால் முடியும் என்பதை நிலை நிறுத்துகிறார்.

ஆண் துணையின்றி, சுற்றுச்சார்பு ஏதுமின்றித் தோள்வலிமை ஒன்றாலேயே ஒரு பெண் சாதித்து வெற்றி பெறுவாள் என்பதை நிலை நாட்டும் நோக்கத்தில் தான் காப்பியத் தொடக்கத்திலேயே ‘விஜய ராணி’ யை வீர தீரக் கலைகளிலும் அறிவு முதிர்ச்சியிலும் திறம் பட்டவள் என்று அறிமுகம் செய்கிறார்.

குடும்ப அமைப்புக்குக் கடைக்காலாக நின்று சமூக வாழ்விற்கு நெடுத்துணையாக விளங்குகின்ற பெண்கள், கல்வியில்லாமல், உரிமையில்லாமல், முன்னேற வழியில்லாமல் கடைக்கோடிப் பள்ளத்தில் தள்ளப்பட்டதை மாற்றிடவும், தமிழ்ச் சமூக வாழ்விற்கு ஏற்றம் தந்திடவும் சமூக வாழ்விற்கு மகளிர் தான் தலைமையேற்றிட வேண்டும் என நினைத்த பாவேந்தர் பாரதிதாசன்.

“படியாத பெண்ணினால் தீமை – என்ன

பயன் விளைப்பாள் அந்த ஊமை” என்றும்

“நெடுந்தமிழ் நாடெனும் செல்வி – நல்ல

நிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி”

என்றும் பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

பொதுவுடைமைச் சமுதாயத்தை விரும்பிய கவிஞர் பாரதிதாசன், ‘வீரத்தாய்’ காவியத்தை முடிக்கும் போது பொதுவுடைமைச் சமுதாய நோக்கத்தோடு, மன்னராட்சி ஒழிந்த மக்களாட்சிக் குரலோடு முடித்திருப்பதை அறிய முடிகிறது.

4.2 கதைச்சுருக்கம்

மணிபுரி மாளிகை மன்னன் மது அருந்தித் தன்னை மறந்து கிடக்கிறான். இதற்குக் காரணம் சேனாபதி காங்கேயன். மன்னன் மரித்தால், ‘அரசி விஜயராணியை அரண்மனையை விட்டுத் துரத்தி விடலாம், அரசிளங்குமரன் சுதர்மனைக் காட்டில் அலையவைத்துப் படிப்பறிவு, போர்ப் பயிற்சி இல்லாமல் செய்து விடலாம்’ என்பது சேனாபதி திட்டம். திட்டத்தை அறிந்த விஜயராணி, தானே அரண்மனையிலிருந்து மறைந்து விடுகிறாள். சேனாபதி, சுதர்மனைக் காட்டில் ஒரு கிழவனிடம் வளர்க்கச் சொல்லி ஒப்படைக்கிறான். தன் கையாள் காளிமுத்துவின் மூலம் அரச குமாரனைப் படிப்பறிவற்ற மூடனாக வளர்க்க வேண்டும் என்று சொல்லுகிறான்.

சேனாதிபதியின் கற்பனை

சேனாதிபதியும் அமைச்சனும் தாங்களே அரசனாகவும், தலைமையமைச்சனாகவும் கற்பனையில் மகிழ்கின்றனர். ‘நமது விஜயராணி, வீரம் செறிந்தவள், நடுவில் புகுந்து தொல்லைகொடுத்தால்.,? என்று அமைச்சன் கேட்க, ‘அவள் என்ன சாதாரணப் பெண்தானே! எதற்குப் பயப்பட வேண்டும்?’ என்று கேலி பேசுகிறான் சேனாதிபதி.

‘பெண்களை நான் எளியவர்களாய் நினைக்கவில்லை’ என்கிறான் அமைச்சன். சேனாதிபதி சிரித்தவாறே, ‘ஆடைக்கும் அணிகலனுக்கும் ஆசைப்படுபவர்கள்; அஞ்சுவதும் நாணுவதும் ஆடவர்களைக் கொஞ்சி மகிழ்வதும் மகளிர் இயல்பு. மனித சமூகத்தில் வலிவற்ற பகுதி அவர்கள்.’ என்றான். ‘வலுவற்ற பகுதிதானே வீரம் மிகுந்த ஆண்களைப் படைக்கிறது. மகளிர் கூட்டம் தான் சக்தி பெற்றது. மேலும் எட்டு வயதுடைய அரசகுமாரன் வளர்ந்ததும் ‘ஆட்சியைக்கொடு’ என்று வருவானே?’ அவனை நடைப்பிணம் போல் வளர்க்க வகை செய்துள்ளேன். யாரும் அறியாத ரகசியமாய்! மிகவும் சாமர்த்திய சாலிதான். உன் திட்டம் என்ன என்று கேட்டான் மந்திரி.

பொக்கிஷம்

‘பொக்கிஷத்தைத் திறக்க வேண்டும் – பொக்கிஷச் சாவியை அரசி எடுத்துப் போய்விட்டாள். அதைத் திறப்பவர்களுக்குப் பரிசளிப்பதாகத் தண்டோரா போடச் செய்ய வேண்டும். கஜானா கைக்கு வந்தால், பணத்தால் பதவியைப் பெற்று விடலாம்’ என்கிறான் சேனாதிபதி காங்கேயன்.

காட்டில் சுதர்மன்

சுதர்மன் காட்டில் கிழவர் ஒருவர் மேற்பார்வையில் வளர்கிறான். சேனாதிபதி, அரசகுமாரனுக்குப் போர்ப் பயிற்சி எதுவும் கற்றுத் தரக் கூடாது என்று சொல்லியும், அந்தக்கிழவர் மறைவிடத்தில் அவனுக்கு வாள் பயிற்சி தினமும் அளித்து வருகிறார். தன்னை இவ்வளவு அக்கறையுடன் வளர்க்கும். ‘அந்தக் கிழவர் யார்?’ என்பதையறிய சுதர்மன் முயல்கிறான். ‘என்னையறிய முயற்சி செய்யாதே, உன் பகைவன் என் பகைவன். இது மட்டும் தெரிந்து கொள்’ என்கிறார் முதியவர்.

பொக்கிஷம் திறத்தல்

ஒரு நாள் காலை வாள் பயிற்சி நடந்து முடிந்த நேரம், தண்டோரா போடும் சத்தம் கேட்கிறது. ‘பொக்கிஷம் திறக்க வாரீர், பரிசு பெற்றுச் செல்வீர்’. கிழவர் யோசிக்கிறார். அரண்மனைக்குள் செல்ல நல்ல சமயம் என்று நினைத்து அரண்மனை சென்றார். கிழவர் பொக்கிஷ அறைக்குள் புகுந்தார். நாலைந்து முயற்சிகளுக்குப் பிறகு ஒரு சாவியினால் கஜானாவைத் திறந்தார். அமைச்சன் ஆச்சரியமடைந்தான். பரிசுப்பணத்தை அளிக்கும்படி வேண்டினார் கிழவர். இவருடைய சாமாத்தியத்தை அறிந்த சேனாதிபதி, ‘இங்கே அரண்மனையிலேயே தங்கியிருங்கள். உங்கள் உதவி எங்களுக்குத் தேவைப்படும்’ என்றான்.

சேனாதிபதியின் ஆசை

மணிபுரி மகுடம் தரிக்க சேனாதிபதி நாள் குறித்தான், வெளிநாட்டரசர்களுக்கு எல்லாம் ஓலை அனுப்பினான். வெள்ளி, வள்ளி, கொன்றை, குன்றநாடு என்று பலநாட்டு மன்னர்கள் வருகை தருகிறார்கள். பொக்கிஷத்தைத் திறந்த கிழவரை அரண்மனையில் காணவில்லை. சேனாதிபதி காங்கேயனுக்கு ஒரு சந்தேகம். அமைச்சனுடன் அரச குமாரனைப் பார்க்கக் காட்டுக்குப் போகிறான். அங்கே அந்த முதியவர், அரச குமாரனுக்கு வில், வாள் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். எழுந்த கோபத்தில் சேனாதிபதி, தன் உடை வாளை உருவி, அரச குமாரனை வெட்ட வாளை ஓங்குகிறான். கிழவரின் வாள் அதைத் தடுக்கிறது. சேனாதிபதி வாள் கீழே விழுகிறது. உயிர் மேல் ஆசை கொண்டு அதிர்ச்சியும், பீதியும் தாங்காமல் அரண்மனை திரும்புகிறான்.

வேஷம் கலைகிறது

பலநாட்டு மன்னர்களும் சேனாதிபதியை ‘அரசகுமாரன் எங்கே? அவனை முதலில் கொண்டு வந்து காட்டு. பிறகு ‘நீ முடி சூடலாம்’ என்கின்றனர். ‘இதோ, அரசகுமாரன்!’. ஒலிவந்த திசையைப் பார்க்கின்றனர் அனைவரும். அந்த முதியவருடன் கையில் வாளுடன் வீரம் செறிய வந்து நிற்கிறான் சுதர்மன். சபையுள் நுழைந்த கிழவர் – தம் தாடி மீசை எல்லாவற்றையும் உரித்தெடுத்துப் போட்டார் – பார்த்தவர்கள் பிரமித்தனர்.

‘நான்தான் ராணி விஜயராணி, சேனாதிபதியும் அமைச்சனும் கனவு கண்டபடி நான் இறக்கவில்லை. என் பிள்ளையை இந்த நாட்டு அரச குமாரனை வீரமகனாக வளர்த்திருக்கிறேன்’ என்று கர்ஜனை புரிகிறாள்.

சுதர்மன், சேனாபதியை மன்னித்து, தன்நாட்டைக் குடியரசாக அறிவிக்கிறான்.

4.3 கதை மாந்தர்

குறைவான பாத்திரப்படைப்புகளைக் கொண்டே இக்காவியத்தை முடித்திருப்பதனால், இதனை ஓரங்கக் கவிதை நாடகமாகக் கருதலாம். வீரத்தாய் விஜயராணி, சேனாபதி காங்கேயன் ஆகிய இருவரின் பங்களிப்பே காவியத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.

4.3.1 விஜயராணி ஆண்மாந்தரை எளிதாக விஞ்சும் பெண்மாந்தரான ‘வீரத்தாய்’ எனும் பெயரிலேயே காப்பியத்தை அமைத்துள்ளார்.

படியாத பெண்ணினால் தீமை – என்ன

பயன் விளைப்பாள் அந்த ஊமை – என்று

படியாத பெண்களால் இந்தச் சமுதாயத்திற்கு என்ன பயன் வந்துவிடப் போகிறது என்று இரக்கமும், அதே நேரத்தில் கோபமும் கொண்டவராகப் பெண்ணினத்தை நேசிக்கிறார் பாரதிதாசன். அந்த எண்ணத்திலேயே,

“அரசியோ வீரம், உறுதி அமைந்தாள்!

தரையினர் மெச்சும் சர்வ கலையினள்”

என்று வீரத்தாயை முதலில் அறிமுகம் செய்கிறார்.

பெண்கள் மிகவும் சாதாரணமானவர்கள் என்னும் தவறான கணிப்பைத் தவிடுபொடியாக்கிச் சேனாபதியின் ஆசைக் கனவுகளையே சிதறடித்து விடுகிறாள் அரசி.

வெற்றிக்கான விதையைச் சரியாகப் பாதுகாப்பதில் வீரத்தாய் விழிப்பாகக் காணப்படுகிறாள்.

கிழவராக வேடம் பூண்டு, கல்வியறிவில்லா மூடனாக வளர இருந்த சுதர்மனைக் கல்வி, கேள்வி, வீர தீரக் கலைகளில் தேர்ச்சி பெறச் செய்து ஒழுக்கமிக்க வீரனாக வளர்க்கிறாள் வீரத்தாய்.

பெண் என்றால் இப்படியன்றோ பிறந்திட வேண்டும் என்று பல நாட்டு மன்னர்களும் போற்றும் விதத்தில் வீரத்தாயைப் படைத்துள்ளார் கவிஞர்.

பெண்மையைப் புல்லாக மதித்துப் புன்மை செய்யப் புறப்பட்ட சேனாபதி பெண்மையின் வலிமை மிகுந்த இயல்பினைக் கண்டு, இடிந்து, தலைகுனிந்து நிற்பதைக் காணமுடிகிறது.

சுற்றுச் சார்பு ஏதுமின்றித் தன் தோள் வலி ஒன்றையே நம்பிக் காலம் பார்த்திருந்து வெற்றி சூடும் பெண்மணியாக வீரத்தாய் படைக்கப் பட்டிருக்கிறாள்.

எத்தனை வஞ்சகம் இடைப்பட்டாலும் அத்தனையும் இடையொடிந்து போக, வாள் பயிற்சி பெற்ற வஞ்சியாகவும் வயிரம் பாய்ந்த நெஞ்சளாய்த் தான் பெற்ற பிள்ளைக்குத் தக்க கலைகளைப் பயிற்றுவிப்பவளாகவும் காணப்படுகிறாள்.

‘அறிவு பெற்ற படியாலே எல்லாம் பெற்றீர்’!

என்றும்,

தக்க நல்லறிஞரின்றித் தரணியும் நடவாதன்றோ! என்றும் மந்திரியின் மூலமாக வீரத்தாயின் பெருமைகள் பேசப்படுகின்றன.

‘நிற்கையிலே நீ நிமிர்ந்து நில் குன்றத்தைப் போல

நெளியாதே லாவகத்தில் தேர்ச்சி கொள்’

எனத் தன்மகனைத் தேற்றி, வீரம் செறிந்தவளாகக் காணப்படுகிறாள்.

இறுதியில் நாட்டைக் குடியரசுக்குட்படுத்தி மக்களின் வாழ்த்துக்களைப் பெறுபவளாக ‘வீரத்தாய்’ படைக்கப்பட்டிருக்கிறாள்.

4.3.2 காங்கேயன் காப்பியங்களில் வரும் எதிர்பாத்திரப் படைப்புப் போலத் தான் காங்கேயனும் படைக்கப்பட்டுள்ளான். மணிபுரி மன்னனிடம் கூடவே இருந்து மதுப்பழக்கத்தை உண்டு பண்ணி அதிகாரத்தைப் பறித்துக் கொண்டவன் காங்கேயன்.

சூழ்ச்சி செய்து, சூழ்நிலையை உருவாக்கி நாட்டைக் கைப்பற்றத் திட்டமிட்டவனாகவும் காணப்படுகிறான். இத்திட்டத்திற்கு மந்திரியை உதவிக்கு அழைத்து, அவனுக்குப் பங்கு தருவதாகச் சொல்லித் தன் பக்கமாக இழுத்தவன். அதே நேரத்தில், அரசி விஜயராணியை வசப்படுத்தவும் நினைத்தவன்.

ஆடை, அணிகலன்களை அணிந்து கொள்வதும் வாசமலர்களைச் சூடிக் கொள்வதும் ஆடவர்களுக்குச் சேவை செய்வதுமே பெண்களின் தலையாய பணி என்று பெண்களை இழிவாகக் கருதுபவன்.

‘அஞ்சுதல் வேண்டாம் அவளொரு பெண்தானே!’ எனக் கேவலமாக இளவரசி விஜயராணியை நினைத்து, அழிவிற்கு ஆட்படுபவனாகக் காணப்படுகிறான்.

கல்வி, கலை. நல்லொழுக்கம் – இம் மூன்றிலும் தேறாதவன் ஆண்மகனே ஆனாலும் ‘நடைப்பிணம்’தான் எனக் கூறி, இவ்வழியிலேயே மன்னன் மகன் சுதர்மனை வளர்க்கவும் திட்டமிடுகிறான் காங்கேயன்.

‘ஆவி அடைந்த பயன் ஆட்சி நான் கொள்வதப்பா’ என வஞ்சனையால் நாட்டைப் பெற வகை தேடினவனாகக் காணப்படுகிறான்.

அரசாங்க பொக்கிஷத்தை அவசர அவசரமாகத் திறக்கச் சொல்லி, அதனை, அனுபவிக்கத் துடிக்கும் நெஞ்சினனாகக் காங்கேயன் இருக்கிறான். தானே மணிபுரி அரசனாக முடிசூடப் போவதாகச் சொல்லும் வேளையில் மணிபுரி மக்களுக்கு மகிழ்ச்சி தராத ஓர் அரசனாகக் காணப்படுகிறான். மன்னனையும் அரசியையும் பற்றித் தவறான இழிவான செய்தியைப் பரப்புகிறான். ‘அமுதூட்டி அருமையாக வளர்த்த மன்னன் மகனுக்குக் கல்வி வரவில்லை’ என்று தவறாகப் பிரச்சாரம் செய்கிறான். இவ்வாறு வஞ்சனை, பொய், ஆத்திரம், பேராசை எனும் பல்வேறு முகங்களின் ஒட்டுமொத்த உருவமாய்க் காங்கேயன் திகழ்வதை இக்காவியத்தில் காணலாம். இறுதியில் பொய்யுரைகளை நம்பாத பல நாட்டு மன்னர்களும் கண்டிக்கும் அளவிற்கு அவனது ஏமாற்று வேலை அமைந்துள்ளது.

4.4 பாரதிதாசனின் சமுதாயச் சீர்திருத்த உணர்வு

பாரதிதாசன் சிறந்த சமுதாயச் சீர்திருத்தவாதி. தமது சீர்திருத்த உணர்வுகளைக் காப்பியத்தின் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் தீருவதற்குக் கல்வி எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதைச் சுட்டுகிறார். மேலும் பெண்ணின் பெருமையே நாட்டின் பெருமை என்றும் வலியுறுத்துகிறார்.

4.4.1 கல்வி ‘நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும்

நான் நான் நான்’

என வீறார்ந்து முழங்கும் பாவேந்தர், தாம் வாழ்ந்த காலத்துச் சமுதாயத்தில் காணப்பட்ட சாதிப் பிளவு, சமயப் பிரிவு, பொருளாதார ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் கொடுமைகளைக் கண்டு மனம் வெகுண்டு குருதிக் கண்ணீர் வடித்தார். இதற்கெல்லாம் காரணம் பெண்கள் கல்வி கற்காமையே என்று நினைத்தார். அதன் வெளிப்பாட்டினைத்தான் ‘வீரத்தாய்’ காவியத்தில் மிகவும் அற்புதமாகப் படைத்துக் காட்டுகிறார். கல்வி கற்ற பெண்ணாக வீரத்தாய் இருப்பதாலேயே அவளை எல்லாவித அடிமைத் தனத்திலிருந்தும், சூழ்ச்சியிலிருந்தும் மீள்கிற வீரப் பெண்ணாகப் படைத்துள்ளார்.

‘படியாத பெண்ணினால் தீமை’

எனத் தமது மற்றொரு நூலில், படியாத பெண்ணை ‘ஊமை’ என்று திட்டுவதைக் காணலாம்.

கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத்

தூக்குமரம் அங்கே உண்டாம்!

என்றும்

எளிமையினால் ஒரு தமிழன் கல்விஇல்லை யென்றால்

இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்!

என்றும் கல்வியின் அவசியத்தைத் தமது கவிதைகளில் படைத்தவர் பாவேந்தர் பாரதிதாசன்.

கல்வி இன்றி, உரிமை இழந்து, சிந்தனை அறியாமல், கண்டதெல்லாம் குடும்பம் என்றே பெண்கள் உலகத்தைக் காண விரும்பாத கவிஞர், வீரத்தாயை, வீரமும் உறுதியும் சர்வ கலையினையும் கற்றுக் கல்விப் பெருமையும் உடையவளாகக் காட்டுகிறார் கவிஞர்.

‘கல்வி இல்லாதவனை நடைப்பிணம்’ என்று இளவரசன் சுதர்மனைக் குறிப்பிடும் போது கூறுவதைக் காண முடிகிறது.

‘கல்வியில்லாதவனை ஆவியில்லாதவன்’ என்று மந்திரி மூலமாகப் பேசும் பாவேந்தரை வீரத்தாயில் காணலாம்.

‘கல்வியில்லாதவன் நாட்டிலே வாழ்ந்தாலும் காட்டில் வாழ்வதற்குச் சமம்’ என்பதை சுதர்மனைக் காளிமுத்து என்னும் தன்னுடைய ஆளிடத்தில் பழக்கவிடும்போது குறிப்பிடும் சேனாபதியின் பேச்சிலிருந்து அறியமுடிகிறது.

மன்னன் மகனுக்குக் கல்வியோ நல்லறிவோ ஒன்றும் வராமல் செய்யுமாறு நினைத்த சேனாபதி காங்கேயனின் சூழ்ச்சித் திறமைகளையெல்லாம் தவிடுபொடியாக்குபவளாக ‘வீரத்தாயை’க் கல்வி, கேள்விகளில் சிறந்தவளாகப் படைத்திருக்கும் பாவேந்தர் பாரதிதாசனின் உயர்ந்த எண்ணத்தை அறிய முடிகிறதல்லவா!

வீரத்தாயைப் பார்த்து ‘அறிவு பெற்றபடியாலே எல்லாம் பெற்றீர்’ என்று மந்திரியைப் பேச வைத்துள்ளமையும் காண்கிறோமல்லவா?

‘தக்க நல்லறிஞரின்றித் தரணியும் நடவாதன்றோ!’ என்று கல்வி கற்ற சான்றோராக வீரத்தாயைப் போற்றுவதையும் காணமுடிகிறது.

‘அரிவையர் கூட்டமெல்லாம் அறிவிலாக் கூட்டம்’ என்று நினைக்கும் தவறான சமூகச் சிந்தனைக்குச் சவுக்கடி கொடுக்க நினைத்த பாவேந்தர்,

‘அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்

என்னும்படி’

பெண்ணினத்தை அமைத்து,

‘எல்லார்க்கும் எல்லா உரிமைகளும்; எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்த்திடுக!’ என்று பொதுவுடைமைக் கோட்பாட்டை முழக்கமிடும் புதல்வனைப் பெற்ற வீரத்தாயினைக் காப்பியத்தின் இறுதியிலும் படைத்திருப்பது, பெண்ணின் பெருமையைப் பாடிய கவிஞர் பாரதிதாசன் என்பதைப் பறைசாற்றுகிறது.

4.4.2 பெண்ணின் பெருமை தமிழ்ச் சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயமே. பெண் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டிருந்ததை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பாரதிதாசன்.

‘ஆடை அணிகலன், ஆசைக்கு வாச மலர்

தேடுவதும், ஆடவர்க்குச் சேவித்து இருப்பதுவும்,

அஞ்சுவதும், நாணுவதும், ஆமையைப் போல் வாழுவதும்

கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் குலம்

மானுடர் கூட்டத்தில் வலிவற்ற ஒரு பகுதி

என்கிற பெண்களின் இழிநிலைக்கருத்தினை மாற்றியமைத்திடவே, ‘வீரத்தாய் நாடகத்தில் வீரமும் உறுதியும் சர்வகலையினையும் பயின்றவளாக வீரத்தாயைப் படைத்துள்ளார். இதன் மூலம் பாரதிதாசனின் பெண்மை நலச் சிந்தனைகள் வெளிப்படுகின்றன. மேலும்

அரிவையர் கூட்டமெல்லாம் அறிவிலாக் கூட்டம் என்பாய்

புரிவரோ விஜயராணி புரிந்தவிச் செயல்கள் மற்றோர்

எனும் கவிதை வரிகளில், பெண்கள் அறிவிலாக் கூட்டம் இல்லை என்பதனை ‘விஜயராணி’ மூலம் முறியடித்துக் காட்டுகிறார் பாரதிதாசன்.

“ . . . . . . . . . . ஆடவரைப்

பெற்றெடுத்த தாய்க்குலத்தைப் பெண்குலத்தை

துஷ்டருக்குப்

புற்றெடுத்த நச்சரவைப் புல்லெனவே எண்ணி

விட்டான்”.

என்று, தன் மகன் சுதர்மனைக் கொல்ல வந்த சேனாபதியைத் தனது வாளால் தடுத்துக் காப்பாற்றுபவளாகக் காணப்படும் ‘வீரத்தாய்’ விஜயராணி’ மூலம் ஆண்மை உள்ளதாகக் கூறி இறுமாக்கும் ஆடவரைப் பெற்றெடுத்த தாய்க்குலமாயிற்றே அது; வீரமற்றதெனில் பிறந்த ஆண் குலமென்றோ பீடழியும்’ எனக் குறிப்பிடுகிறார்.

“ஆவி சுமந்து பெற்ற அன்பன் உயிர் காப்பதற்குக்

கோவித்த தாயினெதிர் கொல்படைதான் என் செய்யும்”

என்றும், ‘ஆர் எதிர்ப்பார் அன்னையார் அன்பு வெறி தன்னை!’ எனவும் பிறநாட்டு மன்னர்கள் வாயிலாகப் பெண்ணின் பெருமையைப் பேசும்படி செய்துள்ளார் பாரதிதாசன்.

“அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்

என்னும்படி அமைந்தீர்! இப்படியே பெண்ணுலகம்

ஆகு நாள் எந்நாளோ? அந்நாளே துன்பமெலாம்

போகும் நாள், இன்பப் புதிய நாள்”

என்று அன்னையின் தத்துவத்தை உலகுக்குக் காட்ட வந்த பெண்படைப்பாகவே வீரத்தாயைப் படைத்துள்ளார் கவிஞர் பாரதிதாசன்.

தமிழர்களுக்கு என்று இருந்த வீரமரபினையும் பெண் கல்வியின் பெருமையினையும் ஒன்றாகச் சேர்த்து ‘வீரத்தாய்’ காவியம் நிறைவுறுகிறது.

4.4.3 பொதுவுடைமை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்ந்த காலம் நாடு வளமிழந்து, வறுமையில் உழன்று, உரிமை கெட்டு, அடிமையில் கிடந்து, ஏற்றத்தாழ்வான ஒரு சமுதாயமாக இருந்து கொண்டிருந்தது. உலகம் முழுவதிலும் நாடுகள் பொருளாதார அடிப்படையில் புரட்சியைத் தோற்றுவித்துப் புதிய சமுதாயத்தை அமைத்துக் கொண்டிருந்தன. அதன் வழியிலே – பொதுவுடைமைச் சமுதாயத்தை அமைப்பதில் பாரதிதாசனும் பேரார்வம் காட்டினார். தொழிலாளர்களைப் போர் வீரர்களாக ஆக்கினார். இந்த உலகம் உழைப்பாளர்களுடையது, மேல் கீழ் என்று பேசும் அறியாமையைப் பொதுவுடைமையினால் தானே அகற்ற முடியும் என்று நம்பினார். இந்த மாற்றங்களையே தனது படைப்புகளில் வலியுறுத்தியுள்ளார்.

மக்களுக்குப் பங்கில்லாத மன்னராட்சியால் கொடுமைகள் ஏற்படலாம். அவர்களின் கூக்குரலுக்குப் பதில் கிடைக்காது என்பதை உணர்ந்ததால் ‘குடியரசு’ ஆட்சியைப் பிரகடனப்படுத்துகிறார் பாரதிதாசன்.

இதனைப் புரட்சிக்கவி, வீரத்தாய், கடல்மேல் குமிழி, குறிஞ்சித்திட்டு ஆகிய தனது படைப்புகளில் நிறைவேற்றிக் காட்டுகிறார் கவிஞர். குறிப்பாக, வீரத்தாய் காவியத்தில்,

“எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம்

எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!

எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!

எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக

வல்லார்க்கும் மற்றுள்ள செல்வர்க்கும் நாட்டுடைமை

வாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக;

வில்லார்க்கும் நல்ல நுதல் மாதர் எல்லார்க்கும்

விடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே!”

என்று மணிபுரியை ‘ஓதும் குடியரசுக்குட்படுத்தி ’அரசியல் சட்டம் இயற்றிட வழிவகுக்கிறார் பாரதிதாசன்.

முதலாளித்துவ மோசடிக் கொள்கையால் கிடைக்கும் கூலியைக் கெஞ்சிப் பெற்றுத் ‘தலைவிதி’ என்று நொந்து கொண்டு தொலையாத துயரினைக் கண்ட பாரதிதாசன், தோழா! ஓடப்பனே! நீ ஒடுங்கி நில்லாதே, உதைப்பயனாகி நீ;ஓர் நொடிக்குள் ஒப்பப்பர் ஆகிடு! என்று உலக சமத்துவத்தின் குரலை உரத்து எழுப்பியவர் பாவேந்தர் பாரதிதாசன்.

‘உழைப்போர் உதிர்ந்த வியர்வையின்

ஒவ்வொரு துளியிலும் கண்டேன்

இவ்வுலகுழைப்பவர்க் குரியதென்பதையே’

என்று தனது காவியங்களில் உழைப்போர் மேனிலையடையவும், மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி முறை நிலவிடவும், பொதுவுடைமைச் சமுதாயம் பூத்துப் பொலியவுமான பாடல்களைப் படைத்துள்ளார் என்பது புலனாகின்றது.

4.5 பாரதிதாசனின் தமிழ் உணர்வு

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் என்பது அவரது எழுத்துகள் அனைத்திலும் துடிப்பாக இடம் பெறுவதைக் காணலாம்.

4.5.1 தமிழ் மொழியில் ஈடுபாடு தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் பாரதிதாசன் கவிதைகள் முத்தமிழை முழுமையாக வலம் வந்திருக்கின்றன. உலகக் கவிஞர்களிலேயே ஒரு மொழியை உயிருக்குச் சமமாக நினைத்துப் பாடியவர் பாரதிதாசன் ஒருவராகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்குத் தமிழ் மொழியை நேசித்தார்.

காதலி ஒருத்தி தன் காதலனோடு கொஞ்சிப் பேசும் மொழிகூடத் தமிழ் மொழியாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவர்.

மங்கை ஒருத்தி தரும் சுகமும் தமிழ்மொழிக்கு ஈடாகாது என்று பேசியவர். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று வாழ்ந்தார் பாவேந்தர்,

வீரத்தாயில் ‘மலையைப் பெயர்க்கும் தோள் உடையோராக வளருங்கள், கீழ்ச் செயல்கள் விடுங்கள், வீரத்தைப் போற்றுங்கள், வீரத்தில் உயருங்கள்’ என்று அனைத்துத் தமிழர்களுக்கும், குறிப்பாகப் பெண்ணினத்துக்கும் அறைகூவல் விடுப்பதைக் காணமுடிகிறது.

4.5.2 தமிழர்களின் விழிப்புணர்ச்சி வீரத்தாயில்

என் நாட்டை நான் ஆள ஏற்ற கலையுதவும்

தென்னாட்டுத் தீரர்; செழுந்தமிழர்; ஆசிரியர்

என்று. சுதர்மன் மூலமாகப் பேசுகிறார் கவிஞர். தொல்காப்பியம், திருக்குறளுக்கு மட்டும் விளக்கம் தருபவன் தமிழ் ஆசிரியன் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் சூழ்ச்சிகளுக்கு இடங்கொடாமல், தமிழின் ஆக்கத்திற்கும், தமிழ்நாட்டின் ஆட்சிக்கும் தமிழர்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துபவரே தமிழாசிரியர் என்று வீரத்தாயில் நிலை நிறுத்தியுள்ளார்.

இவ்வாறு, வீரத்தாய் காவியப் பண்பும் பாத்திரப் படைப்புகளும் தமிழே உருவானவர்களாகக் காணப்படுகின்றனர்.

4.5.3 தமிழனின் வீரப் பாரம்பரியம் தமிழ்ப் பெண்களை வீராங்கனைகளாகவும் வீரப் புதல்வரைப் பெற்றவர்களாகவும் நினைவூட்டி, தமிழர்களின் வீரத்திற்குச் சான்றாகக் காணப்படுகின்ற புறநானூற்று வீரக்கதைகளை நினைவுபடுத்திடவும் வீரத்தாய் எனும் பெயரில் காவியம் படைத்தளித்துள்ளார் பாவேந்தர் பாரதிதாசன்.

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு

திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா!

எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்

புலியெனச் செயல் செய்யப் புறப்படுவெளியில்!

என்று, இளைய உள்ளங்களுள் வீரத்தை ஊட்டியவர் பாரதிதாசன். தாம் படைத்த மூன்று காப்பியங்களிலும் வீரப்பெண்களைத் தலைமைப்படுத்தியே அமைத்துள்ளார்.

‘சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் குப்பனின் மனைவி வஞ்சியும், புரட்சிக்கவியில் கவிஞனின் காதலி அமுதவல்லியும், வீரத்தாயில் விஜயராணியும் வீரம் செறிந்த கதைமாந்தர்களாகக் காணப்படுகின்றனர்.

விஜயராணியை அறிமுகம் செய்யும்போதே வீரமும் உறுதியும் அமைந்தவளாகக் காட்டுகிறார் கவிஞர். அதுபோலவே ‘வீரத்தமிழன்’ எனும் பாடலில் இராவணனை, மாசுபடுத்தி ஊறுபடுத்தப்பட்ட தமிழ் மறவர்களில் மூத்தவனாகக் காண்கிறார் பாரதிதாசன். தமிழனின் வீர மரபினை இராவணனைப் படைத்ததன் மூலம் போற்றிப் பெருமிதம் கொள்கிறார் கவிஞர்.

தமிழனின் வீரப் பாரம்பரியத்தை நினைவுபடுத்த விரும்பியே வீரத்தாய் காவியத்தில் தன் மகனைத் தாயே வீரனாக்குகின்ற வகையில் படைக்கிறார். சுதர்மனை நோக்கி வீசிய சேனாபதியின் வாளினைத் தனது வாளினால் துண்டித்துவிடும் வீர மகளாக விஜயராணி காணப்படுகிறாள்.

“பறித்தெடுத்த தாமரைப் பூம் பார்வையிலே வீரம்

பெருக் கெடுக்க நிற்கின்றாய் பிள்ளையே”

எனும் வரிகளைப் பிறநாட்டு வேந்தர்கள் மூலம் சுதர்மனின் வீரத்தைப் பேச வைக்கிறார் கவிஞர் பாரதிதாசன். அதுபோலவே,

ஆவி சுமந்து பெற்ற அன்பன் உயிர் காப்பதற்குக்

கோவித்த தாயின் எதிர் கொல் படைதான்

என் செய்யும் என்றும் விஜயராணியின் வீரத்தைப் புலப்படுத்துகிறார். கடைசியில் புரட்சிக்கவியில் வருவது போலவே ‘குடியரசு’ ஓங்க, வீரமகன் அரசியல் பிரகடனம் செய்வதைக் காண முடிகிறது. இவ்வாறு தாயையும் மகனையும் வீரத்தின் விளைநிலமாக அமைத்து, கொடியவர்களிடம் இருந்து நாட்டைக் காக்கும் வீரப் பெண்ணாகவும் அதே நேரத்தில், ஒழுக்கம் மிக்க வீரப்புதல்வனைப் பெறும் வீரத்தாயாகவும் படைத்துத் தமிழரின் வீர மரபினை நிலை நிறுத்தியுள்ளார் பாவேந்தன் பாரதிதாசன்.

4.6 பா நலம்

எதுகை மோனை கவிதையின் அடிப்படைக் கூறு. பாரதிதாசன் எதுகை மோனையைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். அதைப்போல, கவிதைக்கு மெருகு ஊட்டும் உவமைகளையும் பயன்படுத்தியுள்ளார். இவை காப்பியத்தின் பா நலத்தை எடுத்துரைக்கின்றன.

4.6.1 எதுகை மோனை எதுகை மோனைகள் தாமாகவே வந்து கவிஞருக்குக் கை கொடுப்பதைக் காணலாம்.

கீழ்க்குறிப்பிடப்படும் பாடல்கள் எதுகை மோனைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

“ஆடை அணிகலன் ஆசைக்கு வாசமலர்

தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதுவும்,

அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்

கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர்குலம்”

“எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்

இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்

தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்

செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாகும்”

எனும் பாடல்களில் எதுகை மோனை நயங்களுடன், தமது நேர்க்கூற்றாகவே தமிழ்க்கனல் கொப்பளிக்கும் பாடல்களை இயற்றியுள்ளார்.

4.6.2 உவமைகள் கவிஞர்கள் தங்களுடைய உணர்வுகளைத் தெளிவாகவும் கூர்மையாகவும் வெளிப்படுத்துவதற்கு உவமைகளைக் கையாள்வார்கள். அந்தவகையில் காப்பியப் பாத்திரப் படைப்புகளின் அவலநிலை, ஆற்றல், செயல்திறம், தோற்றம், இயற்கையை வருணித்தல் ஆகியவற்றை விளக்க வீரத்தாயில் பல இடங்களில் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார் பாரதிதாசன்.

இலட்சியத்தை அடைவதற்காக ‘நீறுபூத்த பெருங்கனல் போல் பொறுத்திருப்பாய்’ என்று சுதர்மனுக்கு விஜயராணி அறிவு புகட்டுவதைக் காண முடிகிறது.

‘பிணிபோல் அன்னவன் பால் தீயொழுக்கம்’ என்று சுதர்மனுக்குத் தீயொழுக்கம் பிடித்திருக்கிறது என்பதைச் சேனாபதியின் மூலம் பயன்படுத்தியிருப்பதும்,

“மானைத் துரத்தி வந்த வாளரி போல் வந்து குறித்தெடுத்துப் பார்க்கின்றீர்” என்று வெள்ளிநாட்டு வேந்தனின் பேச்சிலும்,

‘கானப்புலி போல் கடும் பகைவர் மேற்பாயும்’ என்று சுதர்மனின் வீர உரையிலும் உவமைகளைப் பயன்படுத்திருப்பதைக் காணமுடிகிறது.

ஆள் நடமாட்டமே இல்லாத சிற்றூரின் நிலையை “ஆந்தை அலறும் அடவி சிற்றூர்” என்று வருணிப்பதைக் காணலாம். இவ்வாறு வீரத்தாய் காவியத்தில் உவமை, உருவகம், கற்பனை, ஓசை, சந்த நயங்களை அமைத்துச் செஞ்சொல் கவி இன்பத்தைப் பெற வைத்துள்ளார் பாரதிதாசன்.

4.7 தொகுப்புரை

தமிழ்ச் சமுதாயம் ஒரு ஆணாதிக்கச் சமுதாயமாக இருப்பதைப் பார்க்கிறார் பாரதிதாசன். பெண்களைத் தெய்வங்கள் என்று போற்றிக் கொண்டே, இன்னொரு பக்கம் இழிநிலையில் வைத்திருக்கும் காட்சியும் கவிஞரின் கண்களுக்குப் புலப்படுகிறது. இந்த விழ்ச்சியிலிருந்து பெண்மக்களைக் கரையேற்ற முயன்று இருப்பதை வீரத்தாய் கவிதைக் காவியத்தில் காண முடிகிறது.

கதை மாந்தர்கள் அனைவரிலும் தலைமை சான்றவளாகப் பெண்ணே படைக்கப்பட்டுள்ளாள். மன்னன் மதுவிலே மயங்கிக் கிடக்கிறான். படைத் தலைவன், பதவியைப் பிடித்திடத் திட்டம் போடுகிறான். பக்கத்துணைக்கு அமைச்சனையும் அழைத்துக் கொள்கிறான் – பதவி ஆசைகாட்டி! சூழ்நிலையை உருவாக்கிச் சூழ்ச்சியால் நாட்டைக் கைப்பற்ற முயலும் படைத்தலைவனின் சூதினை, பின்புலம் ஏதுமின்றித் தன் தோள் வலிமை ஒன்றையே நம்பித் தகுந்த நேரமும் காலமும் பார்த்திருந்து, சமயோசித புத்தியைப் பயன்படுத்தி வெற்றி வாகை சூடுகிறாள் வீரத்தாய் விஜயராணி.

வெற்றிக்கான விதையைச் சரியாகப் பாதுகாப்பதில் வீரத்தாய் விழிப்பாக இருக்கிறாள். கிழவராக மாறுவேடம் பூண்டு, கெட்டு வளர வேண்டிய மகனைப் பக்குவமாக வளர்த்து, ஒழுக்கம் மிக்க வீரனாகச் சுதர்மனை வளர்க்கிறாள். பகைவனை அண்டி அவனிடம் பதவி பெற்றுப் பக்குவமான காலம் வந்ததும் பலரும் அறிய அவனது வஞ்சனைத் திரைகிழித்து வெளியே வரவழைக்கும் மனவுறுதியும் அறிவு முதிர்ச்சியும் பெற்றவளாக விளங்குகிறாள் விஜயராணி.

பெண் என்றால் இப்படியல்லவா பிறந்திடல் வேண்டும்; பெண்ணுலகமே இப்படி ஆகிவிட்டால் துன்பமெல்லாம் பிறக்காதல்லவா? அதனால்தான் ‘வீரத்தாய்’ எனும் பட்டம் சூட்டிப் பெருமிதம் கொள்கிறார். பாவேந்தர் பாரதிதாசன். புரட்சிக்கவிஞர் தம் இதயத்தில் பொங்கிப் புறப்பட்ட பெண்ணின் பெருமையே வீரத்தாயாக உருக்கொண்டுள்ளது. ஆண் துணையேயில்லாமல் பெண்கள் அரசியலில் சாதித்துக் காட்ட முடியும் என்பதை நினைவூட்டுவதே இந்தக் கதையாகும்.

பாடம் - 5

வாணிதாசனின் ‘தமிழச்சி’, ‘கொடிமுல்லை’

5.0 பாட முன்னுரை

கவிஞன் சமுதாயத்தில் ஒருவன். அவனுடைய கவிதைகளும் சமுதாயத்தைப் பற்றியதாகத்தான் இருத்தல் வேண்டும். கவிதையின் ஒவ்வொரு அடியும் மக்களின் வாழ்வை எதிரொலிப்பதாகவே அமைகிறது. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் தோன்றிய கவிஞர்கள் எல்லாரும் மக்கள் வாழ்வுப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்தனர்.

தற்காலச் சூழலுக்கு ஏற்ப, பொதுமக்கள் விரும்பி ஏற்கும் வண்ணம் எளிய நடையில் இனிய சந்தங்களால் காவியம் படைக்க முனைந்தனர். அவர்களில் முன்னோடியாகப் பாரதியார், நாட்டு விடுதலையை அடிப்படையாகக் கொண்டு பாஞ்சாலி சபதம் படைத்தார். அவரைத் தொடர்ந்து பாரதிதாசன், சஞ்சீவிபர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி ஆகியன படைத்தார். பாரதிதாசன் வழியில் உருவான இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களாக வாணிதாசன், முடியரசன், கண்ணதாசன், சுரதா போன்றோரைக் குறிப்பிடலாம்.

புதுவையில் தோன்றிய கவிஞர் வாணிதாசன் அறிவூட்டும் இலக்கியங்களைப் படைத்தார். தன் ஊரைச் சுற்றியுள்ள கிராமத்து மக்களின் வாழ்வைக் கண்ணாரக் கண்டு எழுதினார்.

சிற்றூர்ப் பெண்கள் திருந்தினால்தான்

நாடு திருந்தும் என்பது என்துணிவு

அத்துணிவால் தோன்றியவளே தமிழச்சி

என்று தமிழச்சி காவியம் தோன்றிய காரணத்தைச் சொல்கிறார். அதுபோலவே, இயற்கையின் அழகை வெளிப்படுத்தவும் செந்தமிழின் செழிப்பை உணர்த்தவுமே கொடிமுல்லை படைக்கப்பட்டது.

மதம் தான் தீண்டாமைக்குக் காரணமாகின்றது என்று சொல்லி, பகுத்தறிவுச் சிந்தனைகளாலேயே அதனை ஒழிக்க முடியும் என்பதை இவ்விரு காவியங்களும் சித்திரிக்கின்றன.

கொடிமுல்லைக் காவியம் பகுத்தறிவுப் பார்வையோடு தான் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு காவியங்களிலும் உவமை, கற்பனை எனும் உத்திகளை நயம்படக் கையாண்டுள்ளார் கவிஞர்.

இரண்டு காவியங்களிலும் எளிமையான நடையினைக் கையாண்டுள்ளார். பொருள் புரியும் வார்த்தைகள், வினாவிடை முயற்சிகள், நகைச்சுவையுடன் சாடுவது, சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் போன்ற நடையமைப்பினைத் தமிழச்சியிலும் கொடிமுல்லையிலும் கண்டு மகிழலாம்.

5.1 தமிழச்சியும் கொடிமுல்லையும்

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிய காவியங்கள் தமிழச்சியும், கொடிமுல்லையும். சாத்தனார் கண்ட மணிமேகலை போலக் கதைத் தலைவியின் பெயரையே காப்பியங்கள் தாங்கி நிற்கின்றன.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இலைமறை காயாக மக்களிடையே நிலவிவந்த ஆரியர்-திராவிடர் பிரிவினை, தந்தை பெரியாரால் பிராமண எதிர்ப்பு இயக்கமாகத் திராவிடர் கழகம் என்று உருவாகி, தமிழ் மக்கள் அளவில் எழுந்து, நாட்டளவில் நின்று கடைசியில் அரசியலில் அறிமுகமானது. அதுவே 1949-இல் திராவிட முன்னேற்றக் கழகமாகத் தோன்றியது. இந்தக் கால கட்டத்தில் தான் தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய காப்பியங்கள் தோன்றின.

பெண்ணைப் பெருமைப்படுத்தவே தமிழச்சியைப் படைத்தார் கவிஞர். வரலாற்றுப் பின்புலத்தில் தமிழகத்தைக் காணவே கொடிமுல்லை உருவானது.

சிற்றூர்ப் பெண்கள் திருந்தினால்தான்

நாடு திருந்தும் என்பது என் துணிவு

அத்துணிவில் தோன்றியவளே தமிழச்சி

எனக் காவியம் தோன்றியதன் நோக்கத்தைக் குறிப்பிடுகிறார்.

சேரிமக்களின் அடிமை வாழ்வு அகற்றவும், பெண்களை இழிவாய் எண்ணும் சின்ன புத்தியை மாற்றவுமே தமிழச்சி படைக்கப் பட்டிருக்கிறாள்.

கொடிமுல்லை – காப்பியத் தலைவியின் பெயரே நூலுக்கும் பெயராக வைத்துள்ளார். அரசன் மகளாக இருந்தாலும், செல்வத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி வாழும் ஆடம்பரப் பெண்ணாக இல்லாமல், அறிவு வழியில் செல்லும் பெண்ணாகத் திகழ்வதை அறியலாம். காதலுக்கு இலக்கணமாக வாழ்பவள். காதலனைத் தவிர வேறொன்றும் விழையாதவளாகக் காணப்படுகிறாள்.

வரலாற்றுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டும், இயற்கையின் ஈடுபாட்டினை வெளிப்படுத்தவும் கொடிமுல்லை படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, இருகாப்பியங்களிலும் காப்பியத் தலைவியரையே காப்பியத் தலைவனைவிடக் கூர்ந்த அறிவுடையவர்களாகவும் செயல்திறம் மிக்கவர்களாகவும் படைத்திருப்பது பெண்களை முதன்மைப்படுத்தும் கவிஞரின் விருப்பமே என்பது புலனாகிறது.

5.1.1 வாணிதாசன் 1915 ஜூலை 22 ஆம் நாள் கவிஞர், புதுவையையடுத்த வில்லியனூரில் திருக்காமு நாயுடு – துளசியம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் எத்திராசலு என்ற அரங்கசாமி. ஆரம்பப் பள்ளியாசிரியராகப் பணியாற்றியவர். திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். இவர் இயற்கைக் கவிஞர், தமிழ்நாட்டுத் தாகூர், பாவலர் மணி, பாவலர் ஏறு, புதுமைக் கவிஞர் எனப் பலவாறு போற்றப்பட்டவர். பாரதிதாசனது பரம்பரையில் முதிர்ந்தவர்.

புனைபெயர்

1938 இல் தமிழன் ஏட்டில் ரமி என்னும் புனைபெயரில் பாரதிநாள் என்னும் முதற்பாடல் வெளிவந்தது. அதன்பிறகு வாணிதாசன் என்று பெயரை மாற்றி எழுதினார்.

படைப்புகள்

ஆனந்தவிகடன், திராவிட நாடு, குயில், திருவிளக்கு, நெய்தல், பொன்னி, மன்றம், முரசொலி ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.

தமிழச்சி (1949), கொடிமுல்லை (1950), தொடுவானம் (1952), எழிலோவியம் (1954), வாணிதாசன் கவிதைகள் முதல்தொகுதி (1956), பொங்கல் பரிசு, தீர்த்தயாத்திரை, குழந்தை இலக்கியம் (1959), சிரித்தநுணா (1963), இனிக்கும்பாட்டு (1965), எழில் விருத்தம் (1970), பாட்டரங்கம் (1972), வாணிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி (1981) என்பன போன்ற நூல்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பு நாடகங்களையும் எழுதியுள்ளார். சிங்கப்பூர் தமிழ்முரசு இதழில் பல கவிதைகளைப் படைத்துள்ளார்.

புலமை

தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரிந்தவர்.

கவிதைத் தளம்

இவ்வாறு மரபுக்கவிஞராகவும் புதுமைக் கவிஞராகவும் திகழ்ந்த கவிஞர் வாணிதாசன் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் தமது கவித்தளத்தை அமைத்து வெற்றி பெற்றுச் சிறந்தார்.

5.1.2 காப்பியங்களின் அமைப்பு தமிழச்சி காப்பியம் 18 இயல்களைக் கொண்டது. இயல்களுக்கு ஏற்ற வகையில் தலைப்புகள் தரப்பட்டுள்ளன. 173 அறுசீர் விருத்தங்களும் 4 கும்மிப் பாடல்களும் உள்ளன. மொத்தம் 177 செய்யுட்கள் உள்ளன. இந்நூல் 1949 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

கொடிமுல்லை 1950 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூல் 16 இயல்களைக் கொண்டது. இயல்களுக்குத் தலைப்புகள் தரப்படவில்லை. இயல்களுக்கு ஏற்ற வகையிலான கதைக் குறிப்புகள் உள்ளன. 132 செய்யுட்களால் ஆனது. ‘என் ஆசிரியர் கவியரசர் பாரதிதாசன் அவர்களுக்கு இந்நூல் படைப்பு’ – என்று பாரதிதாசன் மீது கொண்டுள்ள பற்றினை இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

5.1.3 காப்பியங்களின் நோக்கம் சமுதாயத்தின் துயரம் காவியங்களில் ஒலிக்கலாம். அந்தத் துயர ஒலி எதிர்கால விடியலுக்கு அழைத்துச் செல்வதாக இருத்தல் வேண்டும். துயரத்தை நியாயப்படுத்துதல் கூடாது எனும் நோக்கத்தில் தமிழச்சி படைக்கப்பட்டிருக்கிறது. சேரிமக்களின் வாழ்வில் உழைப்பிருந்தும் உயர்வு இல்லாமையைக் கண்ட கவிஞர், அதனை உடைத்தெறியும் நோக்கத்திலே நூலைப் படைத்துள்ளார்.

ஆண்கள் பெண்களுக்கு எப்போதுமே அநீதிகளை இழைத்து வந்திருக்கிறார்கள். கல்வி, போராட்டம் என எதிலும் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த கவிஞர், தமிழச்சியின் மூலம் ஆண்களை வெட்கித் தலைகுனியும்படி பேச வைக்கிறார்.

‘பொரியுண்டை என உம் முள்ளே பெண்களை நினைத்தீர் போலும்’ என்று ஆண்களுக்கு அறைகூவல் விடுப்பதன் மூலம், பெண்ணின் பெருமைக்கும் கற்பின் சிறப்பிற்கும் அறம்சார்ந்த அரசியலுக்கும் பெண்களைத் தயார்ப்படுத்துவதைக் காணமுடிகிறது. குறிப்பாகச் சிற்றூரில் வாழும் பெண்கள் தலைநிமிர்ந்து வெகுண்டு எழும்போது தான் நாடு வளம் பெற்று ஓங்கும் என்பதைத் தமிழச்சியில் புலப்படுத்தியுள்ளார்.

தமிழரின் வரலாற்றுச் சிறப்பையும் கலையார்வத்தையும் விளக்க எழுந்ததே கொடிமுல்லை. ஏற்றத்தாழ்வற்ற இலட்சிய சமுதாயத்தைப் படைக்கும் குறிக்கோளினை இதில் காணமுடிகிறது.

உண்மைக் காதலுக்குக் குறுக்கே நிற்கும் உயர்வு தாழ்வுத் தடைக்கல் உடைத்தெறியப்பட வேண்டும் என்பதே முதன்மையான நோக்கமாகிறது. ‘விலை கொடுத்து வாங்க முடியாதது காதல்’ என்றும் காதலை மதிக்காத நாடு இருப்பதைவிட அழிவதே மேல் என்றும் குறிப்பிட்டிருப்பதால், காதலுக்கு ஓர் உயர்வான இடம் இக்காவியத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அந்த அளவுக்கு உண்மைக் காதலின் உயர்வும், கவிஞரின் இலட்சிய நோக்கும் இச்சிறுகாவியத்தில் பின்னிப் பிணைந்துள்ளன எனலாம்.

5.2 கதைச்சுருக்கம்

வாணிதாசன் இயற்றிய தமிழச்சி, கொடிமுல்லை எனும் காப்பியங்களின் கதைச் சுருக்கத்தை இனி பார்ப்போம்.

5.2.1 தமிழச்சி – கதைச்சுருக்கம் தமிழச்சி என்பாள் சிற்றூரைச் சேர்ந்தவள். இளவயது முதலே சீர்திருத்த எண்ணங்கள் கொண்டவள். தமிழச்சி முதலியார் வீட்டுப் பெண்ணாக இருந்தாலும், சேரிமக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் புரட்சி உள்ளம் கொண்ட ஒரு புதுமைப்பெண். அதனால் ஊர் மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகிறாள். தமிழச்சியின் காதலன் பொன்னன். கிழவனுக்கு வாழ்க்கைப்பட மறுக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணான பாப்பாத்தியை மீட்கும் பொறுப்பினைத் தன் காதலனான பொன்னனிடம் ஒப்படைக்கிறாள் தமிழச்சி. அந்தத் திட்டம் செயல்படும் போது, பொன்னனும் பாப்பாத்தியும் ‘ஓடிப்போனதாக’ ஊரில் புரளி கிளம்புகிறது. இதற்கிடையில் பட்டாளத்தில் இருந்து திரும்பிய பாப்பாத்தியின் காதலன் குப்பன் ஊராரின் புரளிகேட்டு ஆத்திரம் அடைகிறான். அதன் விளைவால் பொன்னன் கொலை செய்யப்படுகிறான். அந்தக் கொலைப்பழி தமிழச்சி மேல் சாட்டப்படுகிறது. தமிழச்சியை எப்படியாகிலும் பழிவாங்கக் காத்திருந்த ஊராருக்கு இந்த வாய்ப்புப் பெரும் காரணமாக அமைந்தது. அவளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கிச் சிறையில் அடைத்தனர்.

சேரிக்காளை எனப்படும் மதுரைவீரன் என்பான் தமிழச்சி விட்டுச் சென்ற சேரிப் பணியைத் தொடர்ந்து செய்கிறான். பாப்பாத்தி, அவனுக்குப் பக்கத்துணையாக இருந்து உதவுகிறாள். இருவரிடையே நட்பு அரும்புகிறது. இதனைக் கண்ட ஊரார், காழ்ப்புணர்ச்சி கொண்டு, மதுரைவீரனின் குடிசையைக் கொளுத்திவிடுகின்றனர். சேரிமக்கள் மத்தியில் கோபம் கொப்பளித்து, புரட்சி வெடிக்கிறது. ஒன்று சேர்ந்து கிளம்பிய சேரி மக்களால் ஊராரின் கொட்டம் அடக்கப்படுகிறது. தமிழச்சி சிறையிலிருந்து மீட்கப்படுகிறாள். நன்மக்கள் அனைவராலும் போற்றப்படுகிறாள். பாப்பாத்தி – மதுரைவீரன் திருமணம் சீர்திருத்தத் திருமணமாக நடந்தேறுகிறது. தமிழச்சியின் கனவு நனவாகிறது. கதை முடிகிறது.

5.2.2 கொடிமுல்லை – கதைச் சுருக்கம் பல்லவ  நாட்டு அரசன் மாமல்லனுக்கும் பட்டத்தரசி செங்காந்தளுக்கும் பிறந்தவள் கொடிமுல்லை. அக் கொடிமுல்லையை, இலங்கை நாட்டு இளவரசனும் பல்லவ நாட்டுப் படைத்தலைவனுமான மானவன்மனுக்கு மணம் முடிப்பது என்று பெற்றோர் முடிவு செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், கலைக் கோயிலை அமைக்க இலங்கையிலிருந்து வந்துள்ள கல்தச்சன் அழகனுக்கும் இளவரசி கொடிமுல்லைக்கும் எதிர்பாராத வகையில் காதல் அரும்புகிறது.

மாமல்லனின் அரசாங்கப் புலவனும் அழகனின் நண்பனுமான நலம்பாடி, கொடிமுல்லையின் தோழி அல்லி ஆகியோரின் உதவியால் காதலர் இருவரும் சந்தித்துப் பேசி மகிழ்கின்றனர். இக்காட்சியைக் காண நேர்ந்த மானவன்மன் கண்களை ஆத்திரம் மறைக்கிறது. அதன்காரணமாக அழகனைக் கொலைசெய்து விடுவது என்று எண்ணித் திட்டமிட்டான். ஆனால் அவன்மேற்கொண்ட முயற்சி, ‘முகமூடி’ அணிந்த ஒருவனால் முறியடிக்கப்படுகிறது. மறுநாள், குகையினுள் செதுக்கப்பட்டிருந்த இளவரசியின் சிலையைச் சேதப்படுத்தினான் மானவன்மன். இதனால் கோபம் கொண்ட அழகன் சிற்றுளியினால் மானவன்மனைத் தாக்க, குகை கொலைக்களமாக மாறுகிறது. அழகன் மேல் கொலைக்குற்றம் சாட்டப்படுகிறது. அரசன் முன் நிறுத்தப்படுகிறான். அழகனைக் கழுவிலேற்றிக் கொல்வதே தீர்ப்பு என அறிவிக்கப்படுகிறது.

கழுவிலேற்றப்படும் நேரத்தில், மாற்றுடையில் வந்து அழகன் தப்பித்துச் செல்ல வழிவகுத்து, நண்பனுக்காகத் தன்னுயிரைக் கொடுக்கிறான் நலம்பாடி. தப்பிச் சென்ற அழகன், ‘கடற்கரை மணலில் உனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்’ என்று எழுதியுள்ள கடிதத்தை நலம்பாடியின் இருப்பிடத்தில் கண்டவுடன், விரைவாகக் கடற்கரைப் பகுதிக்குச் செல்கிறான். அங்கே, கொடிமுல்லை குற்றுயிராகக் கிடக்கக் கண்டு நெஞ்சம் குமுறுகிறான் அழகன்.

காதலனைக் கடைசி முறையாகக் கண்ட மனநிறைவோடு கண்ணை மூடுகிறாள் கொடிமுல்லை. காதலியின் சோக முடிவைக் கண்ட அழகன் அழுது புலம்பியவாறு அலைகடலுள் வீழ்ந்து மறைகிறான். இவ்வாறு கதை முடிகிறது.

5.3 கதைமாந்தர்

தமிழச்சி, கொடிமுல்லை ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள கதை மாந்தர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

5.3.1 தமிழச்சி – கதைமாந்தர் தமிழச்சியில் காணப்படும் கதை மாந்தர் பல்வகையினர். தமிழச்சி, பாப்பாத்தி ஆகிய பெண் பாத்திரங்களும் பொன்னன், மதுரைவீரன், குப்பன் ஆகிய ஆண் பாத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழச்சி

வாணிதாசன் படைத்த தமிழச்சி சேரி மக்களின் வாழ்வில் மாற்றம் காண விழையும் முதலியார் வீட்டுப் பெண்ணாகக் காணப்படுகிறாள்.

ஆட்டிட ஆடுகின்ற

பாவைநான் அல்லள் ; சற்றுப்

பாட்டையில் நடந்தால் என்ன?

பலருடன் பழகிப் பேசி

வீட்டிற்கு வந்தால் என்ன?

விழிப்புண்டு கற்பில் ……

எனும் தமிழச்சியினைப் பார்க்கும்போது, அவள் ஒரு புதுமைப் பெண்ணாகவே காணப்படுகிறாள். பெண்விழித்தால் விடுதலை நிலைக்கும் நாட்டில் என்று பேசுகிறாள் தமிழச்சி, காதல் மணமே சிறந்தது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவள். கனிந்த காதலுள்ளம், பிறரிடம் காட்டும் அன்பு, ஊரார்க்கு உழைக்கும் பண்பு, மூடப் பழக்கங்களை முறியடிக்கும் துணிவு, பகுத்தறிவை மக்களுக்குப் புகட்டும் ஆர்வம், சேரியினைத் திருத்தும் முயற்சி, சாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறியும் எழுச்சி, தனியுடைமையை மாற்றிப் பொதுவுடைமையைப் பூத்துக்குலுங்க வைக்கும் கொள்கை போன்ற தன்மைகள் தமிழச்சியிடம் காணக்கிடக்கின்றன.

‘சாப்பிடப் பிறந்ததன்றித் தன்மானம் உரிமை காவாப் பாப்பாக்களாலே பெண்கள் பாழானார்; அடிமையானார்’ என்று பெண்ணடிமையாவதற்கும் உரிமைகளை இழப்பதற்கும் பெண்களே காரணம் என்பதைச் சொல்வதோடு மட்டுமல்லாமல், எதிர்த்திட எடடீ வாளை ! என்று பெண்களைத் தட்டி எழுப்பும் புரட்சிப் பெண்ணாகவும் அவள் விளங்குகிறாள்.

பாப்பாத்தி

தமிழச்சியின் பக்கத்து வீட்டுப் பெண். மிகவும் அழகு வாய்ந்தவள். பட்டாளத்துக் குப்பனை மனமாரக் காதலித்தவள். கிழவனுக்கு வாழ்க்கைப்படப் பெற்றோர்கள் வற்புறுத்தியபோது மறுத்துப் பேசியவள். அதை நினைத்துப் புலம்பும் கோழைப்பெண்ணாகவும் இருந்தவள். தமிழச்சியின் உறவால் மனஉறுதி பெற்றுப் புதுமைப் பெண்ணாக மாறியவள். பொன்னனோடு சென்றதால் ஊர் மக்களின் பழிச்சொல்லுக்கு ஆளானவள். அவளது உண்மைக் காதல் குப்பனால் உதாசீனப் படுத்தப்பட்டபோது நிலைகுலைந்து போகிறாள். பொன்னனைக் குப்பன் கொலை செய்த பிறகு, பாப்பாத்தியின் காதலில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. மதுரைவீரன் பாப்பாத்தி காதல் மலர்கிறது. கலப்பு மணத்திற்கு வழிவகுத்த புரட்சிப் பெண்ணாகப் பாப்பாத்தி தோன்றுகிறாள்.

பொன்னன்

தமிழச்சியின் காதலன். ஏரோட்டும் உழவன். தமிழச்சியால் நெஞ்சுறுதி பெற்று நிமிர்ந்து நிற்பவன். கணவன் என்ற நிலையை அடையாமல் காதலனாகவே வாழ்ந்து மடிகிறான். காதலியின் வேண்டுகோளை நிறைவேற்றத் துணிந்ததால் கொலை செய்யப்படுகிறான். தன்வீடு, தன்னுலகம் தன்வாழ்வு என்று அமைத்துக்கொள்ள விழைபவன். மொத்தத்தில், அவலச்சுவையின் பிரதிபலிப்பாக இப் பொன்னன் பாத்திரம் காவியத்தில் இடம் பெறுகிறது எனலாம்.

மதுரைவீரன்

சேரிக்காளை என்று கவிஞரால் அறிமுகம் செய்யப்படுகிறான். அறப்பணி செய்ய தமிழச்சி விடுத்த அழைப்பினை ஏற்று, நான் என்றன் சேரிக்காக நல்குவன் உயிரை என்று துணிவோடு செயல்படுகிறான். தமிழச்சி சிறை சென்ற பொழுது, ஊராரின் எதிர்ப்புக்கு உள்ளானவன். அதே நேரத்தில் தன்னிடம் பாதுகாப்பிற்காக இருக்கும் பாப்பாத்தியைக் கண்ணுங் கருத்துமாகக் காப்பாற்றியவன். பாப்பாத்தியின் மேல் காதல் கொண்டு, வெளிப்படுத்தமுடியாமல் இருந்தவன். இவனது கண்ணியமும் நாகரிகமுமே பாப்பாத்தியின் மனத்தில் இடம்பெற வைத்தது. சொல்வேறு செயல்வேறு என்றில்லாமல் சொன்ன சொற்படி வாழ்பவனாகத் திகழ்கிறான். சாதியை எதிர்க்கும் சமதர்மவாதியாகவும், உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் பாட்டாளித் தோழனாகவும் சிறப்பிடம் பெறுகிறான். இவ்வாறு ஊராரின் வீழ்ச்சிக்கும் தமிழச்சியின் மீட்சிக்கும் காரணமாகத் திகழும் கடமை வீரனாகக் காட்சியளிப்பதோடு மட்டுமன்றி, காப்பியம் தொடர்வதற்கு இன்றியமையாத படைப்பாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குப்பன்

பாப்பாத்தியின் முதற்காதலன். அவள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவன். அதே நேரத்தில் பட்டாளத்திலிருந்து திரும்பிய நேரத்தில், அவளை நம்புவதைவிட ஊர்ப்புரளியை நம்பிவிடுகிறான். அதனால் அவன் தொடர்ந்து எடுக்கும் நடவடிக்கைகள் போலியான அன்பினை வெளிப்படுத்துவது போலக் காணப்படுகிறது. தீர ஆராய்ந்து உண்மையை அறிய முற்படாமல், அவசரபுத்தியுள்ளவனாகச் செயல்படுகிறான். இதனால் காவியத்தில் இவனது பிற்பகுதி வாழ்க்கை சிதைந்து போய்விடுகிறது. பாப்பாத்தியின் கடிதத்தைப் படித்த பிறகும் கொடியது காதல் எனும் முடிவுக்கே வருகிறான். பாப்பாத்தியைச் சந்தித்தபோதும் உண்மையை அறியும் உணர்வில்லாமல், ‘பழிகாரி! என்னை வஞ்சித்த பாதகி’ என்று வசைமாரி பொழிந்து அவளைக் கொலை செய்யத் துணிகிறான். நல்லவைகளைச் செய்த பொன்னனையே குத்திக் கொலை செய்து விடுகிறான். ஊர்ப்புரளியை நினைத்துப் பொன்னனைக் கொலை செய்தது, கொலைக் குற்றத்தைத் தமிழச்சியின் மீது சுமத்தியது, ஊராரோடு சேர்ந்து கொண்டு சேரியைக் கொளுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கொடிய பாத்திரப் படைப்பாகக் குப்பன் காணப்படுகிறான்.

5.3.2 கொடிமுல்லை – கதைமாந்தர் கொடிமுல்லைச் சிறுகாவியத்தில் முதன்மைக் கதைமாந்தர்,துணைக் கதைமாந்தர் எனப் பலர் இடம் பெற்றுள்ளனர். அழகன், கொடிமுல்லை, நலம்பாடி, மாமல்லன், மானவன்மன் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர் ஆவர்.

அழகன்

கல்தச்சர் குழுவுக்குத் தலைவன். தென்னிலங்கையைச் சேர்ந்தவன். பல்லவநாட்டு இளவரசியை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்து காதல் வயப்பட்டவன். கதைத் தலைவன். பெண்ணுரிமைக்காகப் பரிந்து பேசும் சமுதாயவாதியாகவும் பெண்களின் காதல் உரிமைக்காக வாதாடும் வழக்குரைஞனாகவும் விளங்குகிறான். ‘கத்திக்கும் நான் இனிமேல் அஞ்சேன்; வேந்தன் காவலுக்கும் நான் அஞ்சேன் !’ என்றும், ‘நீயோ மண்ணரசி ! நான் கல்லைச் செதுக்கும் தச்சன். வாக்களிப்பாய், எதிர்த்து உலகை மிதிப்போம்’ என்று அவன் கூறும் கூற்றுகளிலிருந்து, நெஞ்சுறுதிமிக்க அஞ்சாமை உடையவன் என்பது புலனாகிறது. தமிழ், தமிழ்ப்பண்பு, தமிழர் வாழ்வுமுறையைப் பேணிக்காக்கும் பெருவேட்கையுடையவனாக விளங்குகிறான். ஆரியத்தை ஆதரித்ததால்தான் தமிழர் வாழ்வு, கலை எல்லாம் அழிந்தது என்று கருதுகிறான். அவனது இறுதி முழக்கம் தமிழ் இன உணர்வின் வெளிப்பாடாகவே காணலாம். நலம்பாடியால் காப்பாற்றப்படுகிறான். இறுதியில் பூங்கொடியை இழந்து புலம்புகிறான்.

காதலுக்கு மதிப்பில்லா இந்த நாட்டைக்

கருக்கிடுவாய் தூயதமிழ் அன்னாய்

என்று பேசுகிறான்.

மாணிக்கச் சுடரொளியாள் செத்தாள் ; இந்த

மண்ணுலகம் புளிக்குது எனக்கிங் கென்னவேலை

என்று வருந்துகிறான்.

அரசனுக்கும் ஆண்டிக்கும் வேறுவேறு

சட்டதிட்டம் அற்றுலகம் வாழ வேண்டும் ;

அரசன்தன் இச்சையைப் போல் எதையும் செய்யும்

அடுக்காத செயல் மண்ணில் ஒழியவேண்டும் என்று

தான் வாழ்ந்த நாட்டின் அமைப்பையே சாடுவதைக் காணலாம்.

கொடிமுல்லை

காவியத்தின் தலைவி. மன்னன் மாமல்லனின் மகள். நற்றமிழாள் கொடி முல்லை, கொய்யாப்பூக் கொடிமுல்லை, கயல்விழியாள் கொடிமுல்லை என்று அழைக்கப்படுபவள். பாரதிதாசனின் புரட்சிக்கவியில் வரும் அமுதவல்லியோடு ஒப்பிடக் கூடிய அளவுக்குக் கொடிமுல்லையின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. கொடிமுல்லையின் அழகு, காப்பியம் முழுவதும் கதிரொளி வீசுகிறது.

கட்டுக்கும் முட்டுக்கும் அஞ்சி வாழ்ந்தால்

காதலெங்குத் தழைத்திருக்கும்? சொல்வீர்

என்று, தான் காதலித்தவனை அடைய உலகை எதிர்க்கப் புறப்பட்டவள். பாராளும் வேந்தன் மகள் சிற்பக் கலைஞனைக் காதலிப்பது கண்டு கொதித்தெழுகிறான் மன்னன். தந்தையின் கோபத்துக்கு ஆளான தன் காதலனைக் காக்க, தந்தையிடம் கருணைமனு அனுப்பியும் மன்னன் கேட்காததால், அவசரக்காரியாகித் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்கிறாள். இறுதி மூச்சு வரை காதலனுக்காக ஏங்கித் தவிக்கும் இதயம் பெற்றவளாகத் திகழ்கிறாள்.

நலம்பாடி

பல்லவநாட்டு அரசவைப் புலவன். அழகனின் நண்பன். கதைத் தலைவனுக்கு ஆலோசனை தரும் அந்தரங்க நண்பன். நண்பன் அழகனை முகமூடி அணிந்து வந்து காப்பாற்றுகிறான். காதலுக்குச் சாதி, மதம், அரசன், ஆண்டி என்ற வேறுபாடுகள் இல்லை என்பதை விளக்கி, அழகன் மேல் பழிசுமத்துதல் தவறு என்று மன்னனிடம் வாதாடுகிறான். இறுதியில் நண்பனுக்காகவே தன் இன்னுயிரைக் கொடுக்கின்றவனாகக் காட்சியளிக்கிறான். கதைத் தொடக்கத்தில் அழகன் – கொடிமுல்லைக் காதலை மலைக்கும் மடுவுக்கும் ஒப்பிட்டுப் பேசியவன் பின்னர் அவர்களின் உண்மையான காதலினை அறிந்ததும் அவர்களுக்காக ஆணித்தரமான வாதத்தை எடுத்து வைப்பவனாகிறான். மாமல்லன் இக்காவியத்தில் இடம் பெறும் வரலாற்றுப் பாத்திரம். கொடிமுல்லையின் தந்தை. நிலைத்த புகழை நாடும் நேரிய கலை ஆர்வலன். மூடப்பழக்கங்களை ஆதரித்தவன். உயர்வு தாழ்வு கருதும் மன்னன், தன்னிச்சையாகச் செயல்பட்டு முடிவு எடுக்கும் ஆணவம் கொண்டவன். கடவுள் பெயரால் சொல்லப்படும் கதைகளும் சாதி, சமயச் சண்டைகளும் இல்லாமல் நாட்டை ஆளவே முடியாது என நம்புகிறான்.

எக்காலம் பகுத்தறிவு பெற்று மக்கள்

எதிர்ப்பாரோ அன்றிடரும் தீரும்

என்னும் கருத்துடையவனாகக் காணப்படுகிறான். மக்களே என்றைக்குப் பகுத்தறிவு பெற்று எதிர்க்கிறார்களோ, அன்றைக்குத்தான் மூடப்பழக்கங்களை ஒழிக்க முடியும் என்பது அவனது கருத்தாக இருக்கிறது.

உயர்சாதி என்பதையும் மறந்து, தீயோன்

எங்களரும் கொடிமுல்லை அறிவை மாய்த்தான்

என்று கூறும்போது, அவனது சாதிச் செருக்கினையும் பிற்போக்கு மனநிலையையும், வெளிப்படையாக அறியமுடிகிறது.

நுழைபுலத்தான்

மாமல்லனின் சிறந்த அமைச்சன். கடமை தவறாதவன். தன் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை பயனற்றது என்று சொன்ன அரசனுக்கு, செத்துப் போனவரைப் பழிகூற வேண்டாம் வேந்தே ! புகழ் நடுக என்று பணிவுடன் அறுவுறுத்துகிறான். பல்லவன் தன் பெயரால் ஊரமைத்துப் புதுமை செய்ய விரும்பி நாளும் கோளும் பார்க்க வேண்டும் என்று சொன்னபோது,

வேந்தே

கடைக்காலக் கொள்கையிது ; வீணர்சூழ்ச்சி

ஆள்வினையை நம்பாது மக்கள் வீழும்

அளறு மிகுமுள் நிறைந்த பாட்டை ; காலில்

தேள் கொட்ட நெறி தென்னைக் கேறலுண்டோ?

செப்பிடுவீர்

(ஆள்வினை = முயற்சி; அளறு = சேறு; பாட்டை = வழி)

என்று அரசனுக்குப் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பக்குவமாக எடுத்துச் சொன்னவன். கொடிமுல்லையைக் காதலித்ததால், கல்தச்சனுக்கு நீதி வழங்க வேண்டிய நிலை வரும்போது, அரசனைப் பார்த்து ‘முன்பின்னே ஆய்ந்துணர்ந்த பின்னர் நல்ல முடிவிற்கு வருவது மேன்மை’ என்று அறிவுறுத்துகிறான். அதை ஏற்க மறுத்த அரசனைப் பார்த்து, “மானந்தான் தமிழருக்குப் பெரிது; நாட்டில் பழிதாங்கி வாழ்வதோ? உமது முன்னோர்” என்று அறிவுறுத்திய பிறகும் அரசன் கேட்காததால், ‘குற்றம் அழகனிடம் இல்லை’ என்று நீதிக்காகக் குரல் எழுப்புகிறான்.

மானவன்மன்

இலங்கை இளவரசன். பல்லவ நாட்டுப் படைத்தலைவன். மாமல்லனுக்கு உறவினன். கொடிமுல்லைக்கு உரியவனாகக் கருதப்படுபவன். இள வயது முதல் கொடிமுல்லையுடன் ஊஞ்சல் ஆடி, கழுத்தில் மாலை சூட்டி மகிழ்ந்தவன். பருவ வயதினையடைந்த கொடிமுல்லையை மணக்கத் துடித்தான். அவளோ மறுத்தாள். கல்தச்சனான அழகனோடு அவளைக் காணும்போது மிகவும் வேதனைப்பட்டான். பொறாமையும் அவனைக் கோபமுறச் செய்தது. அழகனைக் கொல்ல நினைத்துச் சென்றவன், அழகனின் கோபத்துக்கு ஆளாகிப் பலியானான். அத்துடன் அவன் வாழ்வு முடிகிறது.

அவன் அழிவை அடிப்படையாகக் கொண்டே கதையின் உச்சக்கட்டம் அமைகின்றது. மாமல்லனைப் போன்று இவனும் ஒரு வரலாற்றுப் பாத்திரம். கதைப்போக்கில் மானவன்மன் இடையூறு விளைவிக்கும் கொடியோனாகப் படைக்கப்படுகிறான். தமிழ்மறவன் மானவன்மன் என்றும், குன்றைத் தகர் தோளன் என்றும் கதையின் தொடக்கத்தில் இவனைப் பற்றி அறிமுகம் செய்யப்படுகிறது. கதையில் தீங்கு செய்யும் பாத்திரமாகவே படைக்கப்பட்டுள்ளது.

5.4 வாழ்க்கை நெறி

கவிஞர் வாணிதாசன் காலத்தில் பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. சமூக விழிப்புள்ள எவரையும் பெரியார் இயக்கம் வெகுவாகக் கவர்ந்தது. அவ்வகையில் பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாடும், சீர்திருத்தத் திருமண முறையும் கவிஞரைக் கவர்ந்தன. இவரது உள்ளமும் அவற்றிற்கு ஆட்பட்ட காரணத்தால்,தமது காவியங்களில் சீர்திருத்தத் திருமணமும், கலப்பு மணம், காதல் மணமும் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தமையால் இதனை அப்படியே தமிழச்சியிலும் கொடிமுல்லையிலும் படைத்துள்ளார்.

5.4.1 திருமணம் திருமணம் என்பது மனப்பொருத்தமும் குணப்பொருத்தமும் பார்த்து நடத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

தமிழச்சியில் ‘மதுரைவீரன் – பாப்பாத்தி’ திருமணம் சீர்திருத்தத் திருமணமாகவும் கலப்புத் திருமணமாகவும் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் பார்க்கவில்லை !

பார்ப்பானைத் தேடவில்லை!

மஞ்சள் நூல், தாலி, பீலி

வாங்கவும் இல்லை ! தீயைக்

கொஞ்சமும் வளர்க்கவில்லை !

குந்தாணி, அம்மி எல்லாம்

வஞ்சகர் திணித்தார் !

(தமிழச்சி : பக்கம் : 66)

என்று அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் இல்லாமல், நெல்லும் மலரும் தூவி மணமக்களை வாழ்த்தித் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குமுன் தமிழர்கள் திருக்குறளை ஓதி மணம் முடித்தல் வேண்டும் என்கிறார் கவிஞர். தமிழச்சியில் நடைபெறும் திருமணத்தில் தாலி அணிதலும் இல்லை; அகற்றலும் இல்லை.

5.4.2 காதலின் மாண்பு தமிழச்சியிலும் கொடிமுல்லையிலும் காதலின் மாண்பு குறித்து அதிகமாகவே பேசப்பட்டுள்ளது. தமிழச்சியின் காதலன் சாதாரண உழவன். கொடிமுல்லையின் காதலன் சாதாரணக் கல்தச்சன். தங்களுடைய காதலுக்குத் தடையாக இருப்பவற்றை உடைத்தெறியும் முயற்சியிலேயே இருவரும் காணப்படுகின்றனர்.

காதலர்

மன இன்பத்திற்கேதடி சாதிமதம் என்று பாடும் கவிஞர் வாணிதாசன் தமிழச்சி-யில் பாப்பாத்தி-துரைவீரன் திருமணத்தைக் காதல் மணமாகவும் அதே வேளையில் கலப்பு மணமாகவும் நடத்தி வைக்கிறார். கொடிமுல்லையில் அழகன்-கொடிமுல்லைக் காதல் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உடையது எனினும் வாழ்வில் இணையாத காதலர்கள் சாவில் இணைகின்றனர். தமிழச்சியில் காதல் ஒரு கூறாகிறது. கொடிமுல்லையில் காதலே உயிர்நாடியாக அமைகிறது.

கயற்கண்ணாள் என் இன்பத்தலைவி ! உள்ளக்

கடலலைக்கும் கதிர்க்கற்றை

என்ற அழகன் கூற்று காதல் படுத்தும் பாட்டினை விளக்குகிறது கொடிமுல்லைக் காவியம். இங்குக் காதலனின் உள்ளம்கடலாகிறது. அவள் கதிர்க்கற்றையாகிறாள். நிலவொளி கடலை அலைக்க, காதலியின் கண்ணொளி காதலனின் உள்ளக் கடலை அலைக்கிறது

என் மனம் கொள்ளை கொண்டான்

இருக்கின்றான் அவனை யன்றி

முன்னாண்ட மூவேந்தர்கள்

முளைத்தாலும் விழையேன் (தமிழச்சி : ப-28)

என்று காதலித்தவனையே மணக்கும் உறுதி பூண்டவளாகத்தமிழச்சி காணப்படுகிறாள். ‘காதல் துணைவனை அடையாவிட்டால் குவளை தின்று இறந்து படுவேன்’ என்றும் தமிழச்சியில் ‘காதல்’ பற்றிய கருத்துகளை விதைத்துள்ளார் கவிஞர்.

காதலியின் கண் வீச்சில் விழுந்த காதலன் நிலையை,

வலைப்பட்ட மீனொப்ப அவள் மைக்கண்ணில்

அகப்பட்ட மனமடக்கி நடந்திட்டானே

என்று கொடிமுல்லைக் காப்பியத்தில் காதலின் வல்லமையைப் புலப்படுத்துகிறார் கவிஞர்.

மேலும்,

காதலுக்குத்

தொலைதூரம் சாதிமதம் ; அரசன் ஆண்டி

சொக்கும் எழில்

என்றும்,

மலையினுக்கும் மடுவிற்கும் உள்ளவேறு

பாடு, உண்மைக் காதலுக்கு வணங்கும்

என்று கொடி முல்லையில் காதலின் மேன்மைகளையும், காதலுக்குக் குறுக்கே நிற்கும் உயர்வு தாழ்வு தடைக்கல் உடைத்தெறியப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார் கவிஞர். மேலும், ‘விலை கொடுத்து வாங்க முடியாதது காதல்’ என்றும் கூறுகிறார். ‘காதலுக்கு மதிப்பளிக்காத நாடு இருப்பதைவிட அழிவதே மேல்’ என்பன போன்ற கருத்துகளையும் கொடிமுல்லையில் படைத்திருக்கிறார்.

காதலுக்கு ஓர் உயர்வளித்துப் பேசப்பட்ட கொடிமுல்லையில் வாழ்வில் ஒன்றுசேராமல் இறப்பில் ஒன்று சேர்வதையே காணமுடிகிறது.

மாற்றுமருந்து

காதல் நோய் தீரவேண்டுமானால் அதற்கான மாற்று மருந்து என்ன என்பதைச் சொல்ல வருகிறார் கவிஞர்,

நச்சுப் பாம்பின்

கடிபட்டார் பிழைத்திடுவார் ; தோளணைப்பே

காதலுக்கு மாற்று

என்று கொடிமுல்லைக் காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இவ்வாறு அன்பின் உயர்ந்த வெளிப்பாடான காதல் உணர்வுகளைத் தமது இருகாப்பியங்களிலும் படைத்திருக்கிறார் வாணிதாசன்.

5.4.3 சாதியும் தீண்டாமையும் சாதிகளைத் தோற்றுவிப்பவன் மனிதனே. தன் வாழ்விற்கும் வசதிகளுக்கும் ஏற்ப அதனை மாற்றிக் கொள்கிறான் என்பதும் மனிதனின் முன்னேற்றத்திற்குச் சாதி ஒரு தடையாக உள்ளது என்பதும் கவிஞர் வாணிதாசனின் கருத்து.

சாதியை வகுத்து நம்மைப்

பாழ்செய்த தடியர் கூட்டம்

ஏதேனும் சிறிய நன்மை

நமக்காக நினைத்த(து) உண்டா?

என்று தமிழச்சி பாத்திரத்தின் மூலம் சாதியை ஒழிக்க நினைக்கிறார் கவிஞர். தாழ்த்தப்பட்ட சாதி என்று தள்ளிவைக்கப்பட்ட சேரி மக்களின் வாழ்வில் சீர்திருத்தத்தை விரும்பும் தமிழச்சி, சாதி பார்ப்பவனைத் தடியர் கூட்டம் என்றே சாடுகிறாள்.

காதலுக்குத் தொலை தூரம் சாதிமதம் என்று கொடிமுல்லையில் பேசப்படுகிறது.

கல்வியின் சிறப்பு

சாதியை ஒழிக்க வேண்டுமானால் அவனுக்குக் கல்விக்கண்ணைத் திறந்திடல் வேண்டும் என்பது கவிஞரின் எண்ணம். தமிழச்சியில்

படித்திடில் சாதிப்பேச்சும்

பறந்திடும் ; அறிவும் உண்டாம் ;

படித்திடில் அடிமை ஆண்டான்

எனும் பேச்சும் பறக்கும் அன்றோ

என்று சாதியை எளிதில் ஒழிக்க வேண்டுமானால் கல்வி ஒன்றினால் தான் முடியும் என்பதைக் கவிஞர் விளக்குகிறார்.

தீண்டாமை

தீண்டாமை அகல வேண்டும் மனத்தில், தீண்டாமை ஒழி என்று நினைத்த கவிஞர், முதலியார் வீட்டுப் பெண்ணாகத் தமிழச்சியைப் படைத்து, சேரி மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வைத்துள்ளார்.

சேரி மக்களின் அடிமை வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்திட எழுந்த காப்பியமே தமிழச்சி.

ஆண்டான் அடிமைகள் ஏய்ப்பதற்கே – நம்மை

அடிமைக் குழியினில் சாய்ப்பதற்கே

தீண்டாமை என்றொரு பொய்யுஞ் சொன்னார் -

என்று பாடுகிறார் கவிஞர்.

மதுரைவீரன் – பாப்பாத்தித் திருமணமும் சாதியை உடைத்தெறிய நடத்திவைக்கும் மணமாகவே காணமுடிகிறது. இதேபோலக் கொடிமுல்லையிலும், சாதியையும், தீண்டாமையையும் ஒழிக்கவே அழகன் எனும் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார் கவிஞர்.

5.5 காப்பியங்களின் சிறப்பு

வாணிதாசன் சிறந்த இயற்கை ஈடுபாடு உடையவர். எனவே இயற்கையைப் பற்றிச் சிறப்பாகப் பாடியுள்ளார். மேலும் அவரது கற்பனை வளத்தையும், அணிநலன்களைக் கையாளும் திறனையும் இக் காப்பியங்களில் காணலாம். இவை காப்பியங்களின் சிறப்புக் கூறுகளாகக் காணப்படுகின்றன.

5.5.1 இயற்கை இயற்கையை அனுபவித்து மகிழாத கவிஞனோ, இயற்கையின் நுட்பங்களைக் கூர்ந்து நோக்காத கவிஞனோ இதுவரையில் தோன்றியதில்லை. அவ்வகையில் வாணிதாசனைத் தமிழ்நாட்டின் இயற்கைக் கவிஞர் என்றே அழைக்கலாம்.

தேன்ததும்பும் பூப்பறித்தாள் முல்லை, நாளும்

செடி பறித்தாள், தொடுத்திட்டாள் ; ஆங்குவந்த

மானைத் தன் மார்பணைத்தாள் ; போ ! போ ! என்று

வந்தஇளம் பசுங்கன்றை விரட்டி நின்றாள்

எனக் கொடிமுல்லையில் இயற்கையின் ஈடுபாடு அவரைக் கதையைத் தொடரச் செல்லவைக்கிறது. இதேபோல்,

தீங்குயில்கள் மரக்கிளையில் சிறகடிக்கும் ;

தென்னையிலே கூடமைக்கும் காக்கை

என்றும் இயற்கையின் மீது கவிஞருக்கு இருக்கும் ஈடுபாட்டினை அறிய முடிகின்றது. அதுபோலவே,

தமிழச்சியிலும், பெண்கள் தண்ணீர்த் துறையில் குடத்தில் நீர் முகக்கும் காட்சியைப் படைக்க விரும்பிய கவிஞர், படித்துறை எங்கும் வட்டமதிக்கூட்டம் என்று பாடுகிறார்.

தாமரை மொட்டுக்குள்ளே – அழகு

தங்கிக் கிடக்குதடி

என்று மலர்களைப் பற்றியும்,

நொந்துபோன உள்ளத்தினை மாற்றும் நுழைபுலத்தோர்

ஒக்கும் சோலை

என்று சோலையைக் கவலை தீர்க்கும் மருந்து போலவும் இயற்கையைப் பாடுகிறார் கவிஞர். இவ்வாறு இயற்கையைக் கவலைக்கு மருந்தாகவும், கற்பனைக்கு வித்தாகவும் படைத்துள்ளார். இயற்கையின் மூலம் மக்களுக்கு அறிவூட்ட முற்படுவதையும் இவரது காவியங்களில் காணலாம்.

5.5.2 கற்பனை கொடிமுல்லைக் காவியமே கவிஞனின் கற்பனையில் உருவானது. “மாமல்லபுரம் சென்றிருந்தோம். கலையும் மலையும் கத்தும் கடலும் என் கருத்தைக் கவர்ந்தன. கற்பனையைத் தூண்டின. அதன் விளைவே இந்நூல்” என்கிறார் கவிஞர்.

ஞாயிற்றின் ஒளியோடு தொடங்கும் ‘தமிழச்சியில்’

வானிடைத் தோன்றும் செம்மை

வளம் பெறப் பரிதி காலை

தானொரு ஓவியன்போல்

பொன்னிறம் தடவும் ; ஆங்கே

ஏனெனை மறந்தாய் என்றே

எதிர்நின்று தடுக்கும் மேகம்

கான்மலர் இவற்றைக்கண்டு

கைகொட்டி நகைத்து நிற்கும்

எனக் கதிரவனுக்கும் கார் முகிலுக்கும் இடையே நடக்கும் போராட்டம் கவிஞனால் அழகுபட வருணிக்கப்படுகிறது.

மாலை நேரத்தில் காற்றுவாங்கச் சென்ற கவிஞன் குளத்தில் உள்ள தாமரையை நேசிக்கிறான். தாமரை இலைமேல் நிற்கும் தண்ணீர் கொற்கையில் குளித்த முத்தாகவும், தாமரை இலை தட்டாகவும் தவளை கத்துவது தென்னை மரங்களைக் கூவி அழைப்பதாகவும், தென்னைமரம் வாங்குவோனாகவும், தாமரைப்பூ விலை பேசுபவனாகவும் கவிஞன் கண்ணில் படுகின்றன. பிறிதொருபாடலில்,

மதியவன் மறைந்துவிட்ட வானத்தை இருளரசி எப்படி ஆட்கொள்கிறாள் என்பதை, கீழ்வானை இருள் விழுங்கக் கண்டான் என்று கொடிமுல்லையில் படைக்கிறார்.

செவ்வல்லி தீச்சுடர் போல் மலரும் ; மேற்குத்

திசை மறையும் பரிதி கண்டு முளரி கூம்பும்

அவ்வோடை பூக்காத ஆம்பல் நோக்கி

அண்டிவரும் நீர்ப்பாம்பு காதல்பேச

(பரிதி = சூரியன்; முளரி = தாமரை)

என மதியின் வருகையைக் கவிஞன் நம்முடைய மதியை மயக்கும் வகையில் வருணிக்கிறார். இவ்வாறு கண்ணால் கண்ட காட்சியைக் கற்போரும் கண்டதுபோல இன்பமடையச் செய்வது கவிஞனின் கற்பனையாற்றலுக்குச் சான்றாகின்றது.

5.5.3 அணிநலன்கள் ‘அணிகள் இல்லாத கவிதை பணிகள் இல்லாத பாவை’ என்பர். வாணிதாசனின் கவிதைகளில் அணிகளுக்குக் குறைவேயில்லை. கருத்துகளுக்கேற்ப ஆங்காங்கே அணிகள் எழிலாக ஒளிர்கின்றன.

பொதுவுடைமை, பகுத்தறிவு, தீண்டாமை, சாதி ஒழிப்பு எல்லாம் ஏட்டளவில்தான். உழைப்பதற்கு மட்டுமே சேரி மக்கள் தேவை என்ற நிலையில் கொத்தடிமைகளாக நடத்தப் படுவதை,

கல்லிக் கீழ்ச் செடியைப் போலக்

காலத்தைக் கடத்தி விட்டீர்

என்ற தமிழச்சியின் கூற்றால் அறியலாம்.

கொடிமுல்லைக் காப்பியத் தலைவன் அழகனும் கொடிமுல்லையும் முதல் சந்திப்பிலேயே இதயத்தைப் பறிகொடுத்தனர். அதனைக் கூறவந்த ஆசிரியர்,

அடிபட்டுக் கால்முறிந்த மானைப் போல

அவளவனைப் பார்த்திருந்தாள்

என்று குறிப்பிடுகிறார்.

கொடி முல்லையும் அவளது தோழி அல்லியும் ஓடிப்பிடித்து விளையாடி மகிழ்கின்றனர். ஓடும் முல்லையைத் துரத்தும் அல்லியைப் பற்றிக் குறிப்பிடும் கவிஞர், அதனை

………………… இன்பம்

அள்ளுதற்குப் பெட்டையினைத் துரத்திச் செல்லும்

ஆண்கோழி போல் அல்லி துரத்துகின்றாள்

என்ற உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். அதேபோல் கொடிமுல்லை தன் கூந்தல் அங்கும் இங்குமாக அலைய ஓடினாள் என்பதற்கு எருமை வாலொத்த சடை அலையச் சென்றாள் என்பது கேளாத உவமைகளாயுள்ளன.

காதலி கொடிமுல்லையிடம் மனத்தைத் தூதுவிட்ட அழகன் துயிலிழந்து தலைசாய்க்காது தவிக்கும் காட்சியைத்

தலையணைமேல் கையூன்றிப் பிடரிதாங்கிக்

கிணறேறத் தத்தளிக்கும் நல்ல பாம்பின்

நிலையினிலே படுத்திருந்தான்

என்று படம்பிடித்துக் காட்டுகிறார்.

பொரியுருண்டை என உம்முள்ளே

பெண்களை நினைத்தீர் போலும்

என ‘மிகமலிவான விலையில் கிடைப்பது குழந்தையின் பல்லுக்கு மெதுவாக இருக்கும்’ என்ற உவமையின் மூலம் பெண்களை மலிவான பொருளாகக் கருதுவதைத் தமிழச்சியின் மூலம் கண்டிக்கிறார்.

‘வயதில் நாங்கள் அம்மியைப் போலே வீட்டில் இருந்தனம்’ என்பதில், பெண்களை ஓர் உயிரற்ற திடப்பொருள் போலக் கருதி நடத்துவதைக் கண்டிக்கிறார். அதே நேரத்தில் பெண்களே தங்கள் நிலையை உணராமல் வாழ்ந்த பாங்கினையும் இவ்உவமையின் மூலம் வெளிப்படுத்துகிறார். இவ்வாறாக, தமிழச்சியிலும் கொடிமுல்லையிலும் உவமைகள் பல விரவிக் கிடக்கின்றன.

5.6 ‘தமிழச்சி’யும் ‘கொடிமுல்லை’யும் - ஒப்பீடு

இவ்விரு காவியங்களிலும் கதைத் தலைவியராக வரும் பெண் பாத்திரங்களின் பெயர்களே, தலைப்புகளாக அமைந்துள்ளன. தமிழச்சி என்னும் பெயர் இன உணர்ச்சியையும், கொடிமுல்லை கவிஞரின் இயற்கை ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகின்றன.

தமிழச்சி – சிற்றூர்ப் பெண்ணாகிறாள். கொடிமுல்லையோ பல்லவ நாட்டு இளவரசி. இருவருமே காதல் வயப்பட்டவர்கள். தமிழச்சியின் காதலன் சாதாரண உழவன். கொடிமுல்லையின் காதலனோ சாதாரணக் கல்தச்சன்.

தீமையை எதிர்த்துப் போராடுவதில் கொடிமுல்லையைவிட, தமிழச்சி முன்னணியில் இருக்கிறாள்.

கொடிமுல்லையின் வாழ்வு தற்கொலையில் முடிகிறது. தமிழச்சியின் வாழ்வோ, புதிய நாட்டை உருவாக்கும் புரட்சி வாழ்வாக அமைகிறது. தமிழச்சி காவியம் சமுதாயப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. கொடிமுல்லைக் காவியமோ வரலாற்றுப் பின்னணியில் அமைக்கப்பட்டு மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் பற்றியதாகக் காணப்படுகிறது.

இருகாவியங்களிலும் கொலை நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. கொடிமுல்லையில் மானவன்மன் கொலை நடக்கிறது. கதைத் தலைவன் அழகன் தண்டனை பெறுகிறான். தமிழச்சியில் பட்டாளத்துக் குப்பனால் பொன்னன் கொலை செய்யப்படுகிறான். கொலைக்குற்றமோ, கதைத் தலைவி தமிழச்சியின்மீது சாட்டப்படுகிறது; அவள் தண்டனைக்கு ஆளாகிறாள்.

கொடிமுல்லை – அழகன் தற்கொலைகளால் துன்பியலாக முடிவது கொடிமுல்லை.

பாப்பாத்தி – மதுரைவீரன் திருமணத்துடன் இன்பியலாக முடிவது தமிழச்சி. இவ்வாறு சமூகப் பின்புலமும் வரலாற்றுப் பின்புலமும் கொண்டு, பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்கும் புதுமைக் காவியங்களாக இவ்விரு காவியங்களும் படைக்கப்பட்டுள்ளன எனலாம்.

5.7 தமிழுணர்வு

கவிஞனுக்குத் தன்னுடைய மொழிதான் முதற்காதலி. தமிழ்மொழியின் ஒலி நயத்திலும் இசையிலும் ஆழ்ந்துவிடும் கவிஞன், அதனை மீண்டும் மீண்டும் செவி குளிரக் கேட்க விரும்புகிறான்.

காதலர்களின் களவின்பம் தமிழின்பம் இரண்டையும் அழகாக ஒப்பிட்டுக் காட்டுகிறார் வாணிதாசன்.

தலைகாலே தெரியாது காதலர்கள்

தனித்தமிழின் இன்பத்தைத்துய்ப்பது போல

நிலையற்றுக் கிடந்தார்கள் தோட்டத்துள்ளே

என்று தனித்தமிழின் இன்பத்தைத் தமிழச்சியில் புகழ்கிறார்.

தமிழ் இன்பம் அவளுதடு என்று கொடிமுல்லையில் தமிழ்தரும் சுகத்தைக் காதலியின் இதழ்தரும் சுகத்திற்கு ஒப்புமைப்படுத்திக் காட்டுகிறார்.

கத்திக்கும் நானினிமேல் அஞ்சேன் ; வேந்தன்

காவலுக்கும் நானஞ்சேன் ; தமிழைப் போலத்

தித்திக்கும் கொடிமுல்லையாளே ! உன்னைச்

சேரவழி அழகனுக்குக் காட்டாயோ சொல்

என்று கொடிமுல்லையை நினைத்துப் பித்தனாகப் புலம்பும் அழகன் மூலமாகத் தமிழைப் புகழ்வதைக் காண முடிகிறது.

கொடிமுல்லைக் காவியத்தில் தொடக்கத்திலேயே அரசனை வாழ்த்த வந்த புலவரின் வாய்மொழியாகச் செந்தமிழ்போல் வாழ்க என்று வாழ்த்துவது கவிஞனின் மொழிப்பற்றினை அறிய உதவும் சான்றுகளில் ஒன்று. அதேபோல்,

புலவோய் ! நல்ல

அடைத்தேனைத் தமிழ்ப் பாட்டில் பிழிக

என்று தேனைவிடச் செந்தமிழ் சிறந்தது என்பதை விளக்குகிறார்.

உளம்வாட்டும் கொடுந்துயரை மாற்றுகின்ற

ஓசைநிறை பாட்டெங்கள் தமிழ்ப்பாட் டேயாம்

என்று தமிழிசையின் பெருமையினைப் பற்றிக் கவிஞர் கொண்டிருந்த வேட்கையின் மூலம் அறியமுடிகிறது. இவ்வாறு கொடிமுல்லையிலும் தமிழச்சியிலும் தமிழ் மொழியின் மேன்மையினைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.

5.8 தொகுப்புரை

இயற்கையாகவே சேரி மக்களின் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகவே கவிஞர் வாணிதாசன் தமிழச்சி காப்பியத்தைப் படைத்துள்ளார். சேரி மக்களது வாழ்வில் மாற்றம் உருவாக வேண்டும் என்பது கவிஞரின் எண்ணமாகிறது. இந்தக் காவியத்தில் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார்.

சேரியில் சீர்திருத்தம்.

காதலை உயர்த்திப் பேசுதல்.

கைம்மையைக் கண்டிப்பது.

கற்பின் அவசியத்தைப் பாதுகாக்குமாறு பெண்களுக்கு வலியுறுத்தல்.

இதிகாச புராணங்களைச் சாடுதல்.

சாதியக் கொடுமைகளையும் பாகுபாட்டினையும் எதிர்த்தல்.

பொதுவுடைமைச் சமுதாயத்திற்கு அடிகோலுதல்.

பெண்கல்வி, முதியோர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தல்.

குடும்பக் கட்டுப்பாட்டினைப் போற்றல்

தாய்மொழி, தாய்நாட்டின் பெருமை பேசுதல்.

திராவிட நாட்டுப் பெருமையை எடுத்துச் சொல்லல்.

விதவை மணத்தை ஆதரித்தல்

எனக் கவிஞரின் கருத்துகளைக் காவியம் முழுவதிலும் காணலாம்.

வரலாற்றுப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள கொடிமுல்லை, இயற்கையின் அழகு, பெண்ணுரிமைச் சிந்தனை, பகுத்தறிவு, மூடநம்பிக்கைகளை ஒழித்தல் போன்ற சிந்தனைகளின் தொகுப்பாகக் காணப்படுகிறது.

காதலுக்குச் சாதியில்லை என்னும் சீர்திருத்த நோக்கு இச்சிறுகாவியத்தில் சிறப்பிடம் பெறுகின்றது. கதைமாந்தர்களின் இயல்புகள் அழகாகச் சுட்டப்படுகின்றன. உவமை, உருவகம், கற்பனை, தனித்தமிழ் நடையெனக் காப்பியங்களின் சுவைக்கு மேலும் மெருகூட்டப்பட்டுள்ளன.

தமிழச்சியும் கொடிமுல்லையும் காவிய உலகில் புதியன படைக்கும் புரட்சி நூல்கள் என்றால் அது மிகையாது எனலாம்.

மக்களின் பேச்சு வழக்கில் காணும் சொற்களைக் கொண்டு காவியம் படைத்துள்ளார். கவிஞரின் இராகம், தாளம் ஈடுபாட்டையும் இசைப் பாடல்கள் வடிக்கும் ஆர்வத்தையும் இக்காவியங்களில் காண முடிகிறது. திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், தந்தைபெரியார், தற்காலக் கவிஞர்கள் ஆகியோரின் சிந்தனைகளை மேற்கோள்காட்டியிருப்பது இக்காவியங்களுக்கு மேலும் வலுவூட்டுகின்றன.

பாடம் - 6

கண்ணதாசனின் 'மாங்கனி'

6.0 பாட முன்னுரை

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களுள் பாரதி -பாரதிதாசனுக்குப் பிறகு, உண்மையிலேயே கவியரசராகத் திகழ்ந்து, ஒப்பாரும் மிக்காருமற்றவராக வாழ்ந்தவர் கண்ணதாசன்.

கவியரசு கண்ணதாசனிடம் இளமையிலேயே கவிதை பாடும் ஆற்றல் இருந்தது. கற்பனை உரமும், காணும் இடத்திலேயே கவிதைபுனையும் ஆற்றலும் இருந்தமையால் அவருடைய கவிதைகள் சாகாவரமுடையன ஆயின.

இவர்தம் அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் சிறையில் பிறந்த காவியம்தான் மாங்கனி. இது 1954-இல் வெளிவந்தது. காவியத்தின் கதைக் கருவிற்கு வரலாற்றுச் சான்றினை ஆதாரமாகக் கொண்டு எழுதியுள்ளார். பழைய தமிழைப் புதுத்தமிழில் பாடியிருப்பது போல இது அமைந்துள்ளது. பழங்கதைகளைத் தற்காலச் சூழலுக்கு ஏற்ப, கற்பனைத் திறத்துடன் படைக்கப்பட்டுள்ளது.

கவிஞரின் இலக்கியப் புலமையை வெளியிடுவதுபோல இக்காவியம் அமைந்துள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலையின் இணைந்த வடிவமாகவும் காணப்படுகிறது.

“செந்தமிழின் நவமணிகளை அள்ளித் தெளித்துத் தங்கத் தமிழ்ப் பாவில் இழைந்தோடவிட்ட அழகிய நாடகக் காப்பியம்” என்று பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை இதனைப் பாராட்டியிருக்கிறார்.

மாங்கனி தமிழ்வாழ்த்தில் ஆரம்பித்து, வஞ்சியல் விழாவில் ஆர்ப்பரித்து – புத்தர் வழியில் பொன்னரசி என்று முடித்து, 40 தலைப்புகளில் இக்கவிதைக் காவியத்தை நிறைவு செய்துள்ளார், கவிஞர்.

பண்டைய இலக்கியங்களில் பாத்திரப் படைப்புகளைக் காப்பியக் கவிஞரே அறிமுகப்படுத்தும் மரபு இருந்து வந்துள்ளது. அதுபோலவே, மாங்கனியிலும் கவிஞர் பாத்திரப் படைப்புகள் அனைத்தையும் தாமே அறிமுகம் செய்கிறார். நாடு, நகர் போன்ற அறிமுகக் காட்சிகளையும் படைத்துள்ளார்.

காப்பியத் தலைவி மாங்கனி ஆரவாரத்தில் தொடங்கி காதல் சுவையில் நிறைந்து, பிரிவின் ஏக்கத்தில் உழன்று, அமைதியில் முடிவதைக் காணமுடிகின்றது. ஏறக்குறைய காவியத் தலைவன் அடலேறுவும் இதே நிலையில் தான் படைக்கப்பட்டுள்ளான்.

காதல் சம்பவங்கள் கற்பனை என்றாலும், வாழ்வில் கைகூடாத காதல் நிலையினை, இருவரையும் மரணத்தில் ஒன்று சேர்த்து, காவியத்தை முடித்துள்ளார்.

6.1 மாங்கனி

கல்லக்குடிப் போராட்டம் காரணமாகத் திருச்சி மத்திய சிறையில் இருந்தபோது, (1954-இல்) மாங்கனி எழுப்பட்டது. வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு குறுங்காவிய நாடகம் போன்றது தான் மாங்கனி. கவிஞர் எழுதிய காவியங்களில் மாபெரும் பாராட்டுப்பெற்றது இதுவெனலாம்.

மோரிய மன்னன் அறுகையோடு மோகூர்க் குறுநில மன்னன் பாண்டியன் பழையன் என்பவன் பகைமை கொண்டதாகவும், அறுகைக்கு உதவியாகச் சேரன் செங்குட்டுவன் பழையன் மீது போர் தொடுத்ததாகவும் காணப்பட்ட ஒரு குறிப்பை வைத்து மாங்கனியைப் புனைந்ததாகக் கவிஞர் கண்ணதாசன் தம் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். மேலும் இக்காவியத்தில் அமைச்சராக வரும் அழும்பில் வேளுக்கு ஒரு மகன் இருந்ததாக வரலாற்றில் குறிக்கப்படவில்லை; ஆனால், கவிஞர் படைத்துள்ளார். அதேபோல, சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் செல்லும் இடங்களுக்கெல்லாம் கணிகையர் சிலரும் அழைத்துச் செல்லப்படுவதுண்டு எனும் வரலாற்றுக் குறிப்பினைக் கொண்டு, அதிலே ஒருத்தியாகக் கவிஞரின் கற்பனையில் பிறந்தவள் தான் இக்காவிய நாயகி மாங்கனி.

தென்னரசி, பொன்னரசி கவிஞர் படைத்த கற்பனைப் பாத்திரங்கள்; காதல் சம்பவங்களை, காவியத்தைச் சுவையாக அமைக்கப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

மாங்கனியில் அகப்பொருள், புறப்பொருள் எனும் இரண்டு பொருள்கள் பற்றியும் கவிதை புனைந்திருப்பதைக் காணலாம்.

இலக்கண வரம்பை மீறி உணர்ச்சி நிரம்பிய நடையுடன் எழுதப்பட்டுள்ள இந்தக் காவியத்தின் ஒரு பகுதி, கவிஞர் நடத்திய தென்றல் எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் முழுமையாக நூல்வடிவம் பெற்றது. ‘கண்ணதாசன் கவிதைகள்’ முதல் தொகுதியில் ‘மாங்கனி’ இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

6.1.1 ஆசிரியர் – கண்ணதாசன் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான கவியரசு கண்ணதாசன், 24-06-1927-இல் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். தந்தை சாத்தப்பன், தாய் விசாலாட்சி என்பவர். கண்ணதாசன் இளமையிலேயே கவிபுனையும் ஆற்றல் பெற்றவர்.

1944-இல் ஏப்ரல் 14-இல் இவரது முதல் கவிதை அச்சாகியது. 1948இல் சேலம் மாடர்ன் தியேட்டரில் பணி செய்தார். அறிஞர் அண்ணாவின் பேச்சுகளால் கவரப்பட்டு 1949-இல் தி.மு.க-வில் நுழைந்தார். சுமார் பத்து ஆண்டுகள் தி.மு.க-வின் கருத்துகளைத் தம் எழுத்துகளில் வடித்தார். பின்னர்த் தமிழ்த் தேசியக் கட்சியின் மூலமாக இந்தியத் தேசியக் காங்கிரசில் நுழைந்து, அதன் கொள்கைகளைத் தமது கவிதைகளில் வெளியிட்டார்.

தமது 17-ஆம் வயதில் ‘திருமகள்’ இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தினார்.

தென்றல், திரைஒளி, மேதாவி, கண்ணதாசன், சண்டமாருதம், கடிதம் முதலான இதழ்களில் எழுதி வந்தார்.

பாரதியார், பாரதிதாசன் ஆகியவர்களைப் பின்பற்றி எழுதியவர்; அதே போல, அருணகிரிநாதர், பட்டினத்தார் முதலியவர்களின் பக்திப் பாதையையும் பின்பற்றி எழுதியவர்.

1970இல் அனைத்திந்திய சிறந்த கவிஞர் பட்டம் பெற்றவர். 1977இல் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர். இவ்வாறு பக்திக் கவிஞர்களைப் போலவும் சமூகக் கவிஞர்களைப் போலவும் சித்தர்களைப் போலவும் தம் கவிதைகளில் கருத்துகளை வெளிப்படுத்தியவர் கண்ணதாசன்.

கண்ணதாசன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்) மனம் போல் வாழ்வு, வனவாசம், அதைவிட ரகசியம், தெய்வ தரிசனம், இலக்கியத்தில் காதல், அர்த்தமுள்ள இந்துமதம், ஆட்டனத்தி ஆதிமந்தி, ஞானமாலிகா, ராகமாலிகா, இயேசுகாவியம், மாங்கனி, தைப்பாவை, வேலாங்குடித் திருவிழா என இவரது படைப்புகள் நீண்டு கொண்டே செல்லும். இது தவிர, ‘முத்தையா’ எனும் இயற்பெயரில் பல கடிதங்களையும் எழுதியுள்ளார். இவ்வாறு, திராவிட இயக்கக் கவிஞராக அறிமுகமாகி, திரை இசைக் கவிஞராக உலா வந்து, பின்னர், மதநம்பிக்கையாளராக மாறி, மானுடச் சாதியின் மகத்துவத்தை உலகறியச் செய்த ஒப்பற்ற கவிஞராகத் திகழ்ந்தவர் தான் கவியரசு கண்ணதாசன்.

1981-அக்டோபர் 17-இல் கவிஞர் அமரரானார். ஆனாலும், அவரது கவிதைகள் நம் இதயங்களில் நீங்கா இடம் பெற்ற கவிதைகளாக உலா வருகின்றன என்பதே உண்மை.

6.2 கதைச் சுருக்கம்

சேரன் செங்குட்டுவன் வடக்கே கனக விசயர்களை வென்று, அவர்கள் தலையில் கண்ணகிக்குக் கல்கொண்டு வந்து வஞ்சிமாநகரில் விழா எடுக்கிறான்.

அடலேற்றின் காதல்

அந்த வேளையில் சேரன் அவையில் மாங்கனி என்ற கணிகை குலப்பெண் யாவரையும் கவரும் விதத்தில் நடனமாடினாள். அப்போது, அங்கிருந்த அமைச்சர் அழும்பில்வேள் மகன் அடலேறு, அவள் அழகைக் கண்டு மயங்கிக் காதல் கொள்கிறான். தன் மாளிகையில் மாங்கனியை நினைத்தவாறே உட்கார்ந்திருந்த அடலேறுவிடம், மோகூர் மன்னன் பழையனுக்கு எதிராகப் போர்தொடுக்கும் செய்தியைச் சொல்கிறான். அமைச்சரும் அவன் தந்தையுமான அழும்பில்வேள், போருக்குச் செல்லும் எண்ணம் ஒரு பக்கமிருந்தாலும், அந்த இரவில் தனியாக இருக்கும் மாங்கனியிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறான் அடலேறு. மாங்கனி அவனைத் திட்டியும் பழித்தும் பேசி மறுத்துவிடுகிறாள். ஆனாலும், அடலேற்றின் பண்பினையும் பெருந்தன்மையையும் நினைத்து அவனிடம் மனத்தைப் பறிகொடுத்தவளாகவே காணப்படுகிறாள்.

அடலேற்றின் படையெடுப்பு

அடலேற்றின் தலைமையில் சேரர் படை மோகூருக்குச் செல்கிறது. ஆடல், பாடல்களுக்காக மாங்கனியும் அவளுடன் ஐந்து பெண்களும் செல்கின்றனர். மோகூரின் வடக்குப் பகுதியில் தனித்தனியாகக் கூடம் அமைத்துத் தங்குகின்றனர். அன்று நள்ளிரவில் அடலேறு மாங்கனியைச் சந்தித்துப் பேசித் தனது கூடாரத்தை அடைகின்றான். அவ்வேளையில் மோகூர் மன்னன் தன் படைத்தலைவனான மலைமேனியை உளவறிந்துமாறு அனுப்புகிறான். மலைமேனி சேரர் படைகளைப் பார்க்கிறான். அதனருகில் மாங்கனியையும் மற்ற பெண்களையும் பார்க்கிறான். பார்த்த மாத்திரத்திலே மாங்கனியையும் மற்ற பெண்களையும் மலைமேனியின் ஆட்கள் காட்டிற்குத் தூக்கிச் சென்று விடுகிறார்கள்.

போர் வெற்றி

சேரர் படை வீரர்கள் பல படைகளைக் கடந்து பகைவர்களை அழித்து, மோகூருக்குள் நுழைந்து, வெற்றி பெற்றுப் பெருமகிழ்ச்சியோடு அரண்மனைக்குள் நுழைய, நான் சரணம்’ எனக்கூறிப் பழையன் பணிந்தான். அவன் பெண் மக்கள் இருவரும் கண்களில் நீர் சொரிய ஆங்கே வந்துநின்றனர். மூவரையும் படைத்தலைவன் தளிவேல் சிறைப்படுத்தினான்.

அடலேற்றின் செயல்கள்

மோகூர் நாட்டைக் கைப்பற்றிய பெருமிதத்துடன் அந்த நகரை வலம் வந்தான் அடலேறு. அப்போது கட்டுப்பாடற்ற சில சேர வீரர்கள் அக்கிரமச் செயல்கள் செய்வதைப் பார்த்துக் கண்டித்தான் அடலேறு. தளிவேல் என்பவன் பழையன் மகள் பொன்னரசியின் கூந்தலை அறுத்துவிடுகிறான். தென்னரசி மட்டும் அவனை எதிர்த்து நின்றாள். அந்த நேரத்தில் அங்கு வந்த அடலேறு, தளிவேலைக் கண்டித்து, அவனது வீரப்பதக்கங்களைப் பறித்தான். பின்னர், பழையன் மற்றும் மக்கள் இருவரையும் விடுவித்து அவர்களைத் தேற்றுகிறான். உடனே, பழையன் அடலேற்றை விருந்திற்கு அழைக்கிறான். அடலேறு அவ்விருந்தில் கலந்து கொள்கிறான். அப்போது பழையன் மகளிர் முக்கனியைக் கொண்டு வந்து படைக்கும் நேரத்தில், மாங்கனியைத் தொட்டு எடுக்கும் நேரத்தில், காட்டுவெளியில் தங்கவைத்துவிட்டு வந்த தன் காதலி மாங்கனி நினைவுக்கு வர விரைவாகப் புறப்பட்டுப் போய்விடுகிறான். அவனது செயலை நினைத்துப் பழையனும் அவனது மகளிரும் மிகவும் வருத்தமுறுகிறார்கள்.

அடலேற்றின் பகையும் துன்பமும்

மாங்கனியைக் காணாதவனாக அடலேறு மிகவும் அழுதுபுலம்புகிறான். ஒன்றும் செய்வதறியாது திகைப்புற்று நிற்கிறான்.

இந்நிலையில் ‘தளிவேல்’ அடலேறுவிற்குப் பகைவனாக மாறிவிடுகிறான். மாங்கனியை, சூரபதன் என்பவனுக்கு விற்றுவிடுகிறான். மாங்கனியைச் சூரபதன் காவலுக்குட்படுத்திக் கொடுமைகள் பல நிகழ்த்துகிறான்.

இச்சூழ்நிலையில், வெற்றிப் பெருமிதம் ஒருபக்கம் இருந்தாலும், தன் காதலியைத் தொலைத்த சோகத்துடன் அடலேறு சேரநாடு திரும்புகிறான்.

அடலேற்றின் திருமணம்

சிலநாள்கள் கழித்து, பழையனிடமிருந்து தன் மகள் தென்னரசியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டி ஓலை வருகின்றது. மன்னன் விருப்பப்படியும் தன் தந்தையின் கட்டளையின் பேரிலும் திருமணத்திற்குச் சம்மதித்து அடலேறு மணம் புரிகிறான்.

மாங்கனியின் வருகை

பல இன்னல்களிடையேயும் தன் காதலனை மனத்தில் நிறுத்தி நாடி வருகிறாள் மாங்கனி. சேர நாடு வந்தடைகிறாள். அடலேறுவிற்குத் திருமணம் நடந்து முடிந்துவிடுகிறது. கேள்விப்படுகிறாள். ஆறாத்துயரில் மூழ்குகிறாள். தென்னரசியும் அடலேறுவும் இருக்கும் அறையின் அருகில் செல்கின்றாள். அங்கு இருவரும் ஒன்றிப்போய் பேசி மகிழ்வதைப் பார்த்து, ‘அத்தான்’ என்றாள் மாங்கனி. அந்தக் குரலைக் கேட்ட அடலேறு மாங்கனி! மாங்கனி! என்று வெளியே ஓடிவருகிறான்.

துன்பமுடிவு

மாங்கனி அங்கு நிற்காமல் துயரத்தோடு ஓடி, சுழன்று வரும் ஆற்றில் விழுகிறாள். அவளைக் காப்பாற்ற அடலேறும் விழ, அவ்விருவரையும் காப்பதற்காகத் தென்னரசியும் விழுந்து விடுகிறாள். இப்படி மூவரும் ஆற்றில் மூழ்கி இறந்து விடுகின்றனர். இக்கதையே மாங்கனி காப்பியம்.

6.3 கதைமாந்தர்

மாங்கனி காப்பியத்தின் தலைமை மாந்தர்களாகக் காணப்படுபவர்கள் அடலேறுவும் மாங்கனியும். அவர்கள் இருவரின் காதல் உணர்வை இக்காப்பியம் வெளிப்படுத்துகிறது.

6.3.1 அடலேறு மாங்கனி காவியத்தின் தலைவனாக ‘அடலேறு’ படைக்கப்பட்டிருக்கின்றான். தன்னேரில்லாத் தலைவனாகவே காணப்படுகிறான்.

காவியத்தின் பெரும்பகுதி காதல் வயப்பட்ட ஒரு குணாதிசயப் படைப்பாகவே அடலேறு காணப்படுகிறான். ஆடல் அழகி மாங்கனியைப் பார்த்து, அடலேறு அடைந்த நிலையினை,

செழுங்கொடியைக் கண்வாங்கி மனத்துட் போட்டு

சீரணிக்கமுடியாமல் நின்றான் ஆங்கே!

என்று எழுதுகிறார் கவிஞர் கண்ணதாசன்.

அடலேறுவின் காதல்

மாங்கனி வந்து அவையில் ஆடற்கலை நிகழ்த்திவிட்டுச் செல்கிறாள். அப்படிச் செல்பவளின் பின்னாலே போகிறான் அடலேறு. மாங்கனி சென்று மறைகிறாள்; ஆனாலும் அவள் சென்ற இடத்தையே பார்த்துப் பார்த்து ஏக்கம் கொண்டவனாக, அவளது பாதத்தின் தடயத்தைப் பார்த்து மகிழ்பவனாகக் காணப்படுகிறான் அடலேறு:

போனவளின் பின்னாலே மெல்லப் போனான்!

புதுமனதின் முதல் கூச்சம் இழுக்கக் கண்டு

சித்திரத்தாள் அடிச்சுவட்டைத் தேடிப்பார்த்தான்

தென்றலது போனதற்குச் சுவடு ஏது?

கைத்திறத்தால் தரை தடவிப் பார்த்து அன்னாள்

கால்பட்ட இடத்தில் இளஞ் சூடு கண்டான்!

என்று அடலேறுவின் காதல் செயல்பாட்டினை அழகுபட எடுத்துரைக்கிறார் கவிஞர்.

பித்துமனம் நிலையழியப் பெருமூச் சோடு

பேரரசைத் தோற்கடித்த வாளைப் பார்த்தான்!

குத்திடுவேல் வாளெல்லாம் களத்திலேதான்;

கோதையர்பால் துரும்பேதான்

என்று தன்னுடைய வாள்வீரத்தையும் தோள்வீரத்தையும் காதல் போர்க்களத்தில் தோற்றுவிடுவனவாகப் பேசுவதைக் காண்கிறோம்.

விழியிருக்கும் ஒளியின்றி, விரிந்த நெஞ்சு

வெளியிருக்கும் நினைவின்றி, வாய் வடித்து

மொழிபிறக்கும் தொடர்பின்றிக் காதல் ஒன்றே

மூண்டிருக்கும் உருவானான் அமைச்சன் மைந்தன்!

என்று காதல்வயப்பட்டவனின் நிலையினைப் பேசுகிறார் கவிஞர்.

………………….. மரம்பழாத

பழந்தின்னும் நினைவான அடலேறங்கே

பசியாற முடியாமல் சோலை புக்கான்!

மரத்தோடு மரமாக நின்றான்; தந்தை

வலுவோடு அழைத்திட்ட குரலுங்களோன்;

சிரத்தூடு மலர்பட்டுச் ‘சில்’ லென்றேறி

சிலையாக்க, மூச்சின்றி நின்றான் மைந்தன்!

என்று, தன் சிந்தனையில் மாங்கனியைத் தவிர, மற்ற செயல்பாடுகளையெல்லாம் மறந்தவனாகக் காட்சியளிக்கிறான்.

கோபமும் பண்பும்

நள்ளிரவு நேரத்தில் மாங்கனியைச் சந்தித்துத் தனது காதலை வெளிப்படுத்த நினைத்துச் செல்கிறான். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாத மாங்கனி அவனைக் கோபத்துடன் திட்டி விடுகிறாள். அடலேறு அப்போதும் அவளிடம் கோபம் கொள்ளாமல், மன்னிப்புக் கேட்கும் ஒரு மாண்பாளனாகக் காணப்படுகிறான்.

மாங்கனிக்குத் தன் மேல் கோபம் வரவழைத்துவிட்டேனே என்று ஏக்கத்துடன் தன்னுடைய படுக்கை அறைக்குள் சென்ற செயலினை,

பாறைக்கல் பள்ளத்தில் விழுந்தாற்போலப்

படுக்கையில் அடலேறு வந்து வீழ்ந்தான்

என்று அடலேறுவின் நிலை பேசப்பட்டுள்ளது.

காதலியின் மூலமாகவே காதலனின் பண்பு நலன்கள் பற்றிப் பேசவைப்பதில் கவியரசு கண்ணதாசன் கைதேர்ந்தவர்.

ஆணழகன்! சிங்காரன்! அவனியெல்லாம்

அடக்கிவைத்த மாவீரன்! அறிவுத்தோட்டம்!

தேன்பொழியும் கருணைமனம்! வடகோ டன்னத்

திரண்டிருக்கும் உயர்தோளன்! அழியாச் செல்வம்

மானமிகும் மறக்குலத்தான் என்றாள்!

என்று ஒரு தமிழ் மன்னனின் பெருமைகளைப் பேசுவதைப் போல அடலேறுவின் பண்பு நலன்களைக் குறிப்பிடுகிறார் கவிஞர்.

அடங்காத பொலிகாளை உருவம் போலும்

அடலேறு செல்கின்றான் தலைமை தாங்கி

என்று வீரம் செறிந்த ஒரு காவியத் தலைவனாகக் காணப்படுகிறான். மேலும்,

பெண்களைக் கொடுமைப்படுத்தும் தன் நாட்டு வீரர்களைக் கண்டிப்பவனாகவும் மாங்கனியைக் காணாதவனாக அழுது துடித்துப் புலம்புபவனாகவும் அடலேறு விளங்குகிறான்.

ஒளியிழந்த வானத்தின் மேனி போல

தூக்கத்தில் நடப்பது போலவும் -நடந்து செல்கிறான்

மாங்கனியைக் காணாத அடலேறுவின் நிலையினைக் கவியரசு இவ்வாறு பேசுகிறார். இறுதிவரை, காதலுக்காகவே வாழ்ந்து தனது இன்னுயிரைத் தியாகம் செய்பவனாகவே காவியத்தில் அடலேறு படைக்கப்பட்டிருக்கிறான்.

6.3.2 மாங்கனி தன்னேரில்லாத தலைவன் போலவே இளமையும், அழகும் நாணும் பொற்பும் பெற்ற தலைவி காவிய நாயகி மாங்கனி. ஆடல், பாடல், அழகு சிறந்த கலை மடந்தை.

மின்வெட்டுக் கண்கட்ட மேவினாற்போல்

மென்பட்டுப் பூங்குழலி பூமிதொட்டுப்

பொன்கட்டிச் சிலைபோல ஊர்ந்து வந்தாள்.

என்று மாங்கனியைக் கவிஞர் அறிமுகம் செய்கிறார்.

மாங்கனியின் அழகு

கவியரசரின் கற்பனையில் பிறந்த பரத்தையர் குலப் பெண்தான் மாங்கனி. உயர்ந்த ஒழுக்கம் கொண்ட, ஆடல் அழகு வாய்ந்த பெண்ணாகப் படைக்கப்பட்டிருக்கிறாள்.

கொலைவாளுக்கு உறைபோல விழிவாளுக்கு இமை

சிலையோடும் சமமாக விளையாடும் புருவம்

சிறுவானப் பிறைமீது அலைமோதும் அழகு

என்று சேரமன்னனின் அவைக்களப் புலவன் மூலமாக மாங்கனியின் அழகு பேசப்படுகிறது.

விரிக்காத தோகைமயில்! வண்டுவந்து

மடக்காத வெள்ளைமலர்! நிலவு கண்டு

சிரிக்காத அல்லிமுகம்! செகத்தில் யாரும்

தீண்டாத இளமை நலம்; பருவஞானம்!

என்று சேரமன்னன் மாங்கனியைப் பற்றியும் அவளது இளமை அழகையும் பற்றிப் பேசுவதாகக் காணமுடிகிறது.

இவ்வாறு அனைவராலும் மாங்கனியின் அழகு நலன்கள் பேசப்படுவதைக் காணலாம்.

தாயின் வற்புறுத்தலும் மகளின் மறுப்பும்

மாங்கனி தன்னைப்போலவே நடனமாதாக இருந்துவிடக் கூடாது என்பதால், தன்குலத்து ஆடவன் ஒருவனை மணக்க வற்புறுத்துகிறாள் அவள் தாய். ஆனால், தனக்குப் பிடிக்காத ஒருவனை எப்படி மணப்பது என்று மாங்கனி தன் தாயைப் பார்த்துக் கேட்கிறாள்.

கற்சிலையோ அம்மா நான்; கயவன் அந்தக்

காமுகனுக் கென் நெஞ்சத்தைத் தத்தம் செய்ய?

பொற்கிளியை வானரத்தின் மடியில் போடப்

பொருந்தியதோ உன்னுள்ளம் போதும்போதும்

என்று, தான் விரும்பாத ஆடவனை வற்புறுத்தி மணக்கச் செய்யும் போக்கினைக் கண்டிப்பதை, மாங்கனி மூலம் வெளிப்படுத்துகிறார் கண்ணதாசன்.

காதலும் கண்டிப்பும்

தன்மேல் காதல் கொண்ட அடலேறு, இரவில் தனியாக இருக்கும் தன்னிடம் வந்து காதலைத் தெரிவிக்க வரும் நேரத்தில், அவனைப் பார்த்து

திறந்திருந்த வீட்டிற்குள் ஓசையின்றித்

திருடனைப்போல் நுழைந்தீரே! தென்னர்தானா?

மானத்தை இக் கோதை மறவாள்! போம்!போம்!

என்று, உள்மனத்தில் அவனைக் காதலித்தாலும், திட்டிப் பழித்துப் பேசி அனுப்பிவிடுபவளாகக் காணப்படுகிறாள்.

நள்ளிரவு ! தாசிமனை ! இளம்பெண்தூங்கும்

நறுமலர்ப் பஞ்சணையருகோர் காளைவந்து

மெல்லமுகந் தொடுவதுதான் உங்கள் ஏட்டில்

வீரர்கள் பெண்கேட்க வரும் செய்தியா?

என்று, தான் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டுப் பெண் கேட்கவே வந்தேன் என்று சொன்ன அடலேறுவைப் பார்த்துக் கோபப்படுகிறாள். “கள்ளமனத்தோடு எம்குலமக்கள் வாழ்ந்தது பழையகாலம் இப்போதில்லை என்பதை மறந்துவிட்டீர்களா?” என்று தன் குடும்ப, குலத்தொழிலின் இழிநிலையை உடைத் தெறிபவளாகக் காணப்படுகிறாள் மாங்கனி. அதே நேரத்தில் அடலேறு நடந்து கொண்ட பெருந்தன்மையினை நினைத்து அவன்மீது காதல் கொள்பவளாகவும் இருக்கிறாள்.

போராட்டமும் முடிவும்

மலைமேனி எனும் கொடூரன் தன்னை மானபங்கம் செய்ய முயற்சி செய்த போது, அவனை எதிர்த்து, போராடி, வீழ்த்தித் தப்பித்து ஓடிவரும் பெண்ணாகக் காட்சியளிக்கிறாள். பெண்குலமே காணாத துன்பத்தைக் காதலுக்காகப் படுபவளாக மாங்கனி படைக்கப்பட்டிருக்கிறாள். தன் காதலன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் என்பதை அறிந்த மாங்கனி, தனிமைக்குள் உடல்வேக நிற்கிறாள். தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேகமாக ஓடி மறையும் துன்பப் பாத்திரப்படைப்பாக இறுதியில் படைக்கப்பட்டிருக்கிறாள். இவ்வாறு ஆட்டத்தில் தொடங்கி அமைதியில் முடியும் மாங்கனியின் கதை, இணையில்லாச் சேரநாட்டுக் காதல் கதை என்பதை நினைவுறுத்துகின்றது.

6.4 இல்வாழ்க்கை நெறி

இல்வாழ்க்கைக்குரிய நெறிகளுள் கற்பின் சிறப்பினையும், காதலின் உயர்வினையும் எடுத்துரைக்கிறார் கண்ணதாசன்.

6.4.1 காதல் மனித வாழ்வில் தோன்றும் உணர்வுகளில் காதல் உணர்வு மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.

அழகினால் கவர்ச்சியினால் தொடங்கும் காதலானது உள்ளத்தால் வலுவடைகிறது. காதல் உள்ளத்தைப் பொறுத்து அமைகிறது. காதல் இல்லாமல் இவ்வுலகத்தில் இன்பம் நிலவாது. ஆண்-பெண் படைப்பின் தீர்வே காதலாகிறது என்பதைத் தமது கவிதை வரிகளில் நிரூபித்துக் காட்டியவர் கவியரசர் கண்ணதாசன்.

காதலின் உயர்வு

‘காதல் செயும் மனைவியே சக்தி கண்டீர்’ என்றும், ‘காதல் போயின் சாதல்’ என்றும் பாரதியார் காதலின் உயர்வை வலியுறுத்திப் பாடினார்.

‘காதல் அடைதல் உயிரியற்கை’ எனப் பாவேந்தர் பாரதிதாசனாரும் பாடினார். இவர்களைப் பின்பற்றியே ஆலங்குடிசோமுவும் “காதல் என்பது தேன்கூடு அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு” எனத் திரைப்படப் பாடலில் வெளிப்படுத்தினார்.

மாங்கனியில் காதல் உணர்வு

தாம் படைத்த மாங்கனி குறுங்காவியம் முழுவதிலும் காதலின் வெளிப்பாடுகளைப் பல நிலைகளில் உணர்த்தியுள்ளார், கண்ணதாசன்.

தலையிருக்கும் பாரத்தை இறக்கி வைக்க

வழியிருக்குஞ் சாலைதனில், ஆனால் காதல்

குலையிருக்கும் நெஞ்சத்தின் பாரமொன்றும்

குறையா தென்று! அரற்றினான் கொற்றவீரன்

என்று, மாங்கனியின் கண் சுழற்சியால் அகப்பட்ட அடலேறுவின் காதல் நிலையினைப் பேசுகிறார் கவிஞர்.

காதல் வளர்ந்து, தனிமையில் முதன்முதலில் சந்திக்க முயல்கின்றனர்.

‘மாங்கனி ‘ என்றான் வீரன்; மாங்கனி காதல் மீறித்

‘தாங்குவீர்’ என்றாள் ! தாங்க, தளிர்க்கொடி சுற்றிக்

கொண்டாள்,

‘நீங்கிடேன்’ என்றான் மெள்ள

என்று காதலில் அகப்பட்டவர்களின் சந்திப்புப் பற்றிப் பேசுகிறார் கவிஞர் கண்ணதாசன். மேலும்,

காதல் வெள்ளத்தில் சிக்கிச் சிதறுண்டு தத்தளித்த அடலேறுவின் மனத்தை,

பாறைக்கல் பள்ளத்தில் விழுந்தாற்போலப்

படுக்கையில் அடலேறு வந்து வீழ்ந்தான்

சிரத்தூடு மலர்பட்டுச் ‘சில்’ லென்றேறி

சிலையாக மூச்சின்றி நின்றான் மைந்தன்!

என்று காதல் வயப்பட்ட மனத்தை நம் கண்முன் நிறுத்துகிறார் கவிஞர்.

காதலில் பிரிவு

காதலர்கள் இருவரும் பேச ஆரம்பித்துவிட்டால், நேரம் ஆனதைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள். அதே நேரத்தில் பிரிய வேண்டிய கட்டாயமான பகல் நேரம் அரும்புகிறது. பிரிய மனமில்லாதவர்களாய் இருக்கின்றனர்.

அடுத்தார் குடித்தார் அகன்றுவிட மனமின்றி

அடுத்தார் குடித்தார் அல்லும் மெல அகன்று

விடியும் வரைக்கும் விலகவிலை, தங்களிரு

மெய்யும் துயில விலை!

என்று மாங்கனி – அடலேறு பிரிவின் துன்பத்தைப் பற்றிப் பேசுகிறது காவியம்.

மாங்கனியை விட்டு இறுதியாகப் பிரியப் போகும் அடலேறுவின் நிலையைப் பற்றிப் பேச நினைத்த கவிஞர்,

பேச்சினை முடிக்குமுன்னே

பிறிதொரு முத்தம் வைத்துப்

பெருஞ்சுவை எடுத்துக் கொண்டான்

என்று, ‘இனி இதுபோல் சுகம் பெறுதல் முடியாது’ என்பதை இக்கவிதை வரிகளில் நமக்கு முன்னதாகவே உணர்த்துகிறார்.

இவ்வாறு, கவிஞர் கண்ணதாசன் மாங்கனி காவியம் முழுவதிலும் காதல் உணர்வை மிகவும் சிறப்பாகக் கவிதைப் படுத்தியிருக்கிறார்.

6.4.2 கற்பு மனித வாழ்வில் தோன்றும் உணர்வுகளில் காதல் உணர்வும் குறிப்பிடத்தக்கது. இரு மனங்களுக்கிடையே வேர்விட்டு, கிளைவிட்டு, பூத்துக்குலுங்கிப் பரிபூரண இல்லற வாழ்வைத் தேடி அழைத்துச் செல்லும் அறப்பயணம். அந்த மாண்பமைந்த இல்லற வாழ்விற்குக் ‘கற்பே’ இருவரும் போற்றிப் பாதுகாக்கும் அணிகலனாகும். இந்த அருங்குணத்தோடு ஆணும், பெண்ணும் இல்லற வாழ்வில் இனிதே புகுந்தால் இன்பம் நல்கும்.

மாளிகை செல்வம் வாகன சுகங்கள்

மற்றவை கூடினும் மனையறம் இன்றேல்

பெண்ணின் பிறப்பே பேதமையாகும்

என்று பெண்ணிற்கும்,

ஆயிரம் கல்வி அறிவெனத் தேறினும்

ஆடவன் வாழ்வும் அன்புடை மனைவி

இல்லாதாயின் இல்லா தாகும்

என ஆடவர்க்கும் இல்லற வாழ்வின் மேன்மையைப் போற்றித் தமது பாடல்களில் போதித்தவர் கவிஞர் கண்ணதாசன்.

மாங்கனி காவியத்திலும் ‘கற்பு’ பற்றிய சிந்தனைகளைப் பல இடங்களில் பரவ விதைத்திருக்கிறார்.

மண்ணான தாசிகுலம் பிறப்பாலன்றி

மடிதொடர்ந்து வரும் என்று நினைக்கலாமோ?

என்று, தனக்குப் பிடிக்காத ஒருவனை மணக்க வற்புறுத்திய தாயின் வற்புறுத்தலை எதிர்த்துப் பேசுகிறாள் மாங்கனி.

மாங்கனியின் கற்பு

‘தாசிகுலம்’ என்பது தொடர்ந்து அனுபவித்துவரும் கொடுமையாக இல்லாமல், மாற்றிக் காட்டுவோம் என்று போராடத் துடிக்கும் ஒரு பெண்ணின் மனவேதனையில், கற்பொழுக்கத்துடன் மாங்கனியைப் படைக்க நினைத்துள்ளார் கவிஞர் கண்ணதாசன்.

மாங்கனியின் மீது காதல் கொண்ட அடலேறு நள்ளிரவில் வீடு தேடி வருகிறான். அந்த நேரத்தில் அவனை எதிர்பார்க்காத மாங்கனி,

தீங்கு நினை வுற்றீரோ அமைச்சர் பிள்ளை,

தேவடியாள் குலந்தான்நான்; குணத்தில் அல்ல!

என்று பேசுவதன்மூலம், கற்பின் சிந்தனையை மாங்கனியின் கோபத்திலும் அதனைப் பற்றிச் சிந்திக்கச் செய்கிறார் கவிஞர்.

தாசிமனை என்று நினைத்து, எந்த நேரத்திலும் சென்று பேசலாம் என்று வருவது வீரர்களுக்கு அழகா? என்று அடலேறுவைப் பார்த்துக் கோபமாகக் கேட்கிறாள் மாங்கனி.

கள்ளமனம் எம்குலத்தில் பழைய சொத்து

காளையதைக் கொண்டுவரல் நன்றேயல்ல!

என்று, தான் பெண் கேட்கவே வந்தேன் என்று சொன்ன அடலேறுவைப் பார்த்துப் பேசுபவளாகவும் மாங்கனி உருவாக்கப்பட்டிருக்கிறாள். அதே நேரத்தில், அமைச்சர் மகன் படம் எடுக்கும் நாகம் போல் வந்திருந்து தன்னைக் கெடுத்துவிட்டிருந்தால் என்ன செய்திருக்க முடியும்? நீதி கிடைத்திருக்கும். ஆனால், அழிந்துவிடும் கற்பினை யார் தருவார்? என்ற சிந்தனை வரிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் கற்பின் மேன்மையை உணர்ந்தவர்கள் என்பதையும், பெண்மையைப் போற்றுபவர்கள் என்பதையும் கவிஞரின் கவிதைகள் மூலம் நம்மால் உணர முடிகிறது.

மோகூர் நாட்டின் மீது போர் தொடுத்துச் சென்ற அடலேறுவும் மாங்கனியும், அந்நகரின் எல்லையில் தனித்தனியே கூடாரம் அமைத்துத் தங்குகின்றனர். நள்ளிரவில் மாங்கனியும் அடலேறுவும் கொள்ளைப் பெருமயக்கத்தில் குடமதுவைக் கிண்ணத்தில் கொட்டிக் குடிப்பதுபோல, பிரிய மனமில்லாமல் பேசிக் கொண்டிருந்தனர். பொழுது விடிகிறது. இதனைப் பற்றிச் சொல்கின்ற கவிதை வரிகளில்,

அடுத்தார் குடித்தார் அல்லும் மெல அகன்று

விடியும் வரைக்கும் விலகவிலை தங்களிரு

மெய்யும் துயிலவிலை! ஆனாலும் அவ்விரவு

களங்கப் படவுமிலை! கட்டழகர் தென்னரன்றோ!

என்று காதலிருவரும் கற்புடன் இருந்தனர் என்பதைக் கவிஞர் அழகாக எடுத்தியம்புவதைக் காணலாம்.

மாங்கனியும் அடலேறும் மகிழ்ந்து பிரிகின்றனர். அந்தப் பிரிவை,

அடைந்த நன் மார்பை விட்டுக்

கள்ளியின் நடையில் அந்தக்

களங்கமில் கன்னி சென்றாள்!

என்று மாங்கனியின் கற்பின் சிறப்புப் பேசப்படுகிறது.

கற்பின் கனல்

சேரர் படை மோகூரை வளைத்து விடுகிற சூழலில், கட்டுப்பாடற்ற சில சேர வீரர்கள் கண்டவரைக் கைதொட்டு இழுத்து, அக்கிரமச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அப்பொழுது, பாண்டிய நாட்டுப் பெண்கள் சிலர் அந்த வீரர்கள் சிலரை வெட்டுகின்றனர். இதனைப் பற்றிச் சொல்ல நினைத்து, கவியரசர்,

தட்டுப் பாடானாலும் கற்பை விற்கச்

சம்மதியார் நற்குலத்திற் பிறந்த மக்கள்!

என்று பாண்டிய நாட்டுப் பெண்களின் கற்பின் சிறப்பினைக் குறிப்பிடுகிறார்.

சேரர் படை பாண்டியனின் மோகூர் எல்லையில் தங்குகிறது. அந்தப் படைகளின் எண்ணிக்கையைப் பற்றி உளவறிய வருகின்றான் பழையனின் படைத்தலைவன் மலைமேனி என்பவன். அப்பொழுது, ஆங்கிருந்த மாங்கனி மற்றும் பிற மகளிரைப் பார்த்தவுடன் அட்டூழியங்களைச் செய்கிறான். பல பெண்கள் மயங்கி வீழ்கின்றனர். மாங்கனியைத் தொட்டு இழுக்க வந்த மலைமேனியின் தலையில் ஒரு பலகையால் அடித்து அவனைச் செயல் இழக்கச் செய்கிறாள்.

சறுக்காத பாதத்தாள் உயிரே யன்றித்

தடங்கற்பைப் பலிகொள்ள இசையா ளானாள்

என்று மாங்கனியின் கற்புத்திறம் கவிஞரால் பேசப்படுகிறது.

கற்பின் செல்வி

மலைமேனியை வீழ்த்திவிட்டுப் போராடிப் பிறகு தப்பித்துச் செல்கிறாள் மாங்கனி. போராடி ஓடும்போது பள்ளமொன்றில் விழுந்து விடுகின்றாள். நெற்றி பிளந்து போகுமளவிற்குக் காயமுறுகிறாள். ஆனாலும் கற்பை இழக்காதவளாகப் பெருமிதம் கொள்கிறாள். இதனை,

தாசி மகள் என்றாலும் கற்புக் காக்கும்

தமிழ்மகள் சேரமகள் மூர்ச்சையாக

என்று கவிஞர் தமிழ்ப் பெண்களின் கற்பின் மேன்மையை உயர்வாகச் சுட்டுகிறார்.

மாங்கனியையும் மற்றும் நான்கு பெண்களையும் மலைமேனி ஆட்கள் சிறையிலிட்டுள்ளனர். நினைவு திரும்பிய மாங்கனி, மற்ற நால்வரையும் பார்க்கிறாள்.

பெண்ணமுத நால்வரையுங் கண்டாள்; வாயிற்

பேச்சின்றி முகம்பார்த்தாள் கற்பின் செல்வி

என்று பேச்சிழந்த நிலையிலும் தன்னைச் சார்ந்தவர்களைப் பார்த்து ஆறுதல்படும் மாங்கனியாகப் படைத்திருப்பதை அறியமுடிகிறது.

மலைமேனி எனும் மிருகத்திடமிருந்து மீட்டுத் தளிவேலன் என்னும் சேரநாட்டு வீரனிடம் அகப்படுகிறாள் மாங்கனி. தளிவேலனும் மாங்கனியை வைத்துப் பொன்னைப் பெற்றுவிட விரும்பி, ‘சூரபதன்’ என்பவனிடம் விற்று விடுகிறான். கொலைகாரச் சூரபதன், ‘என்ன கொடுமை செய்வானோ?’ என்று மாங்கனியும் ஏங்கி இருக்கிறாள்.

இதனை வெளிப்படுத்த விரும்பிய கவியரசு கண்ணதாசன்,

விலைமாது விலையானாள்; வேங்கைவாயில்

கலைமானாய் அடைபட்டாள்; கற்பும் இந்நாள்;

என்று, மாங்கனியின் பாத்திரப் படைப்பைப் பேச நினைக்கும் போதெல்லாம், கற்பின் திறத்தைப் பற்றிப் பேசுவதைக் காணலாம். இவ்வாறு மாங்கனியில் மகளிரின் கற்பு பற்றிய சிந்தனைகளைக் கவியரசு கண்ணதாசன் உரக்க வெளிப்படுத்திச் செல்வதைக் காணமுடிகிறது.

6.5 காப்பியச் சிறப்பு

மாங்கனியில் பல சிறப்பு வாய்ந்த உவமைகள் கையாளப்பட்டுள்ளன. பழந்தமிழ் இலக்கியங்களின் தாக்கமும் காணப்படுகின்றது. தமிழ்மொழியின் சிறப்புக் கூறுகளும் கூறப்பட்டுள்ளன. இவை காப்பியத்தின் சிறப்பினை எடுத்துரைக்கின்றன.

6.5.1 உவமைகள் உவமை எனப்படுவது கவிஞன் தான் கூறக் கருதிய பொருளைத் தக்க ஒப்புமை கொண்டு உணரச் செய்யக் கையாளும் உத்தியாகும். உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவன் உயர்ந்தவனாகின்றான் என்பதைப்போல உயர்ந்த உவமைகள் சிறந்த படைப்புகளுக்குக் காரணமாகிறது.

மாங்கனி காவியம் முழுவதிலும் 108 உவமைகளைக் கையாண்டுள்ளார். ஒரு பொருளின் தன்மையைப் பறைசாற்றவும், ஆடவர், பெண்டிரின் அழகினைப் பற்றி விளக்கிடவும், கதை மாந்தர் சிலரின் இன்ப, துன்பங்களை வெளிப்படுத்தவும், இயற்கை எழிலை வெளிக் கொணரவும் என உவமைகள் மாங்கனியில் மிளிர்கின்றன.

காற்றுக்கு முருங்கை மரம் ஆடல்போலும்

கடலுக்குள் இயற்கைமடி அசைத்தல் போலும்

நாற்றுக்குள் இளங்காற்று நடித்தல் போலும்

நல்லோர்தம் அவைக்கண்ணே நடனமிட்டாள்

என மாங்கனியின் நடனச் சிறப்பினை உவமைகள் மூலம் விளக்குகிறார் கவியரசு கண்ணதாசன்.

விரலுக்குச் செங்காந்தளும், அவளது வடிவ அழகிற்குப் பொன்கட்டிச் சிலையும், சிரிப்புக்கு முல்லைப்பூவும் உவமையாக, பெண்கள் நடந்து செல்வதைப் பசுக்கூட்டங்கள் நடப்பது போல, என உவமைகளை நிரப்பி மாங்கனியைப் படைத்திருக்கிறார் கவிஞர்.

ஆடவரைப் பற்றிக் குறிப்பிடும் போது,

நடையினிலே ஆடவர் சிம்மம் போலும்

என்றும், உறுதிவாய்ந்த உடம்பிற்கு ‘மலை’யை உவமையாகவும், மலைமேனி வீரரெல்லாம் திரண்டு வந்து என்றும் மாங்கனியில் பயன்படுத்தியிருப்பது புலனாகிறது.

இழிவான செயல்களைச் செய்பவர்களை நாய்க்கு ஒப்பிட்டுப் பேசுவதைக் காணலாம்.

தெருவிலுனை நாய்போல் இழுக்கச் செய்வேன் என்று பெண்களை அவமானப் படுத்தும் சில வீரர்களைச் சாடுகிறார்.

போர்க்காலங்களில் நடனமாடுவதற்கும், பாட்டுப் பாடுவதற்கும் மங்கையை அழைத்துவரும் வீரனுக்குப் பறவையை உவமைப்படுத்தி, அப்படிப்பட்ட பெண்கள் வேண்டாம் என்று சொல்வது போல,

நடையிலே வாத்துப் போலும்,

நயக்குரல் காகம் போலும்

எனும் கவிதை வரிகளில் உவமைகளைப் பயன்படுத்தியிருப்பதை அறியலாம்.

அடலேறும் மாங்கனியும் ஒன்றிப் போய் காதல் மொழி பேசி மகிழ்கின்றனர். இதனை

மறுவொன்றும் இல்லாத தந்தப் பேழை

வைரத்துப் புதைந்துள்ள தன்மை போலும்

என்று உவமையின் மூலம் ஒருவரோடு ஒருவர் கொஞ்சி மகிழும் தன்மையை விளக்குகிறார் கவிஞர். மாங்கனியைப் பிரிந்து வந்த ஏக்கத்திலேயே அடலேறு தன் அறையில் உள்ள கட்டிலின்மீது விழுகிறான். இது

பாறைக்கல் பள்ளத்தில் விழுந்தாற்போலப்

படுக்கையிலே அடலேறு வீழ்ந்தான்

என்று உவமிக்கப்பட்டுள்ளது.

கொலைகாரக் கொடு மனதுடையவனான பாதகன் மலைமேனி மங்கையரை அடையச் செல்கின்ற தன்மை

புறாப்பிடிக்கப் போவான் போலவும்

என்று உவமிக்கப்படுகிறது.

மாங்கனியின் நடன அழகில் மயங்கி மனத்தைப் பறிகொடுத்து நிற்கிறான் அடலேறு. இந்நிலை,

அப்பொழுதே பிறந்தவன் போல் விழித்தான்

என்று உவமிக்கப்பட்டுள்ளது. இதுபோல, காப்பியம் முழுமையிலும் கற்பிற்கு, கலைக்கு, அழகுக்கு என உவமைகளின் அணிவகுப்பு நடத்தி மானுடச் சாதியின் மகத்துவத்தைக் காப்பிய நிலையில் அமைத்துள்ளார் கவியரசு கண்ணதாசன்.

6.5.2 இலக்கியத் தாக்கம் பண்டைத் தமிழர்களின் வாழ்வியல் செய்திகளைப் பற்றி அறிந்து கொள்ளத் துணையாக இருப்பவை காப்பியங்களும் சங்கப் பாடல்களுமாகும். குறிப்பாக, அகப்பொருள் நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய நூல்கள் குறிப்பிட்டுச் சொல்லும் காதல் பற்றிய செய்திகளைக் கவிஞர் தம்முடைய கவிதை வரிகளில் பல இடங்களில் எடுத்தாண்டிருப்பதை அறிய முடிகிறது. அதுபோலவே காப்பியங்களின் தாக்கமும் மாங்கனியில் இடம்பெற்றிருப்பதை அறியலாம்.

சிலம்பும் மேகலையும்

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இணைந்த வடிவமாக மாங்கனியை அமைத்துள்ளார் கவிஞர் சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியைப் போலவே இளமை, அழகு, நாண், பொற்பு பெற்ற தலைவியாகவும், ஆடல், பாடல் அழகு சிறந்த கலைமடந்தையாகவும் மாங்கனி காணப்படுகிறாள்.

மணிமேகலையின் துறவறத்தைக் காட்ட நினைத்த கவிஞர் கண்ணதாசன். பொன்னரசியைப் படைத்து மகிழ்வுறுகிறார். மனிதவாழ்வு பிறப்பில் தொடங்கி உலக இன்பங்களில் உழன்று, இறப்பில் முடியும் பெரும்பயணமாகி விடுகிறது. சிலர் விரும்பியதைப் பெறுகின்றனர். சிலர் விரும்பியது நிறைவேறாது மாய்ந்து விடுகின்றனர். சிலருக்குத் தோல்வியான வாழ்வு அமைந்தாலும் அதைத் தம் அருங்குணத்தால் வெற்றியாக்குகின்றனர். மாங்கனியில் வரும் பொன்னரசியின் வாழ்வு அவ்வாறு அமைந்த வாழ்வாகின்றது.

காதலில் வளர்ந்து, கற்பினில் சிறந்து, பிரிவினில் தளர்ந்து பொறுமையில் நிறைகிறாள். காதலிலே தோல்வியைத் தழுவினாலும் கற்பினில் வழுவாது; இல்லற வாழ்வை இழந்தாலும் துறவற வாழ்வில் தன்னைப் புனிதப் படுத்திக் கொண்டவளாகப் பொன்னரசி காணப்படுகிறாள்.

மூவேந்தரின் நாடுகளை இணைத்துப் பேசிய சிலப்பதிகாரம் போல மாங்கனியிலும் பேசப்பட்டுள்ளது.

நாம்மூவர் ஆனாலும் ஒருமனத்தார்

நாட்டின் வேறானாலும் ஓர் இனத்தார்

தேன்பாய்ந்த செந்தமிழே சேர் குணத்தார்

திசையினில் உலகிற்குத் தென் புலத்தார்

என்று சேரமன்னனின் மூலம் கவிஞர் தமிழ் நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறார்.

மணிமேகலை புத்தமதத்தைப் போற்றிடும் காப்பியம். மாங்கனி காவியத்திலும் புத்த மதத்திற்குச் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. காவிய முடிவில் பொன்னரசி புத்த மதத்தைத் தழுவியவளாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறுந்தொகை

அதுபோலவே குறுந்தொகைப் பாடல் ஒன்றினையும் காதலர்களின் பிணைப்பைப் பற்றிச் சொல்வதற்குக் கவிஞர் கண்ணதாசன் எடுத்தாண்டுள்ளார்.

குக்கூ வென்றது கோழியதனெதிர்

துட்கென்றன்றுஎன் தூஉ நெஞ்சம்

தோள் நோய் காதலர்ப்பிரிக்கும்

வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே

(குறுந்தொகை: 157)

எனும் குறுந்தொகைப் பாடலை அடியொற்றியே,

விடிந்தது கண்ணே என்றான் அடலேறு

விழித்தவள் காதில் அச்சொல்

ஒடிந்தது வீணை என்று ஒலித்தது

என்பதாக அமைத்துள்ளார் கண்ணதாசன். இவ்வாறாகக் கவிஞர் கண்ணதாசன் தமது மாங்கனி காவியத்தில், தாம் கற்ற பழந்தமிழ் இலக்கியங்களின் பகுதியைப் பல இடங்களில் எடுத்தாண்டு, சுவைபடவும் பொருள்படவும் படைத்துள்ளார் என்பது புலனாகிறது.

6.5.3 தமிழ்மொழியின் பெருமை இந்தியா விடுதலை பெற்றதும் மொழி, இனம், விடுதலையடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்க் கவிஞர்கள், தமிழர்களிடையே மொழியுணர்வைத் தோற்றுவிக்க, அதனைத் தமது கவிதைகளில் படைத்தனர்.

செந்தமிழ்த் தேன் மொழியாள் – நிலாவெனச்

சிரிக்கும் மலர்க்கொடியாள்

எனத் திரைஇசைப் பாடல்களிலும் தமிழ்மொழியின் சிறப்பினைப் புகழ்ந்த கவியரசு கண்ணதாசன் தாம் படைத்த காவியங்களிலும் கொஞ்சி விளையாடும் கன்னித் தமிழைக் காணமுடிகிறது. 20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்களில் முத்தமிழுக்கும் தொண்டாற்றிப் புகழ் பெற்றவர் இவர்.

தென்சந்தப் பாப்பாடி நடனம் ஆடு,

தேன்மொழியே, தமிழ்நாட்டார் மகிழ்வு காண!

எனத் தேன்போன்ற தாய்மொழி பேசுபவளாக மாங்கனியை அழைத்து அறிமுகம் செய்வதைக் காணலாம்.

இன்பத் தமிழ்

மாங்கனி, இரவு நேரத்தில் இனிமையான ஒரு கீதத்தைப் பாடுகிறாள். அந்தக் கீதத்தின் இனிமையைச் சொல்ல நினைத்த கவியரசர் கண்ணதாசன்,

என்னசுகம்! ஆகா என்ன சுகம் – மாறா

இளமைத் தமிழ்ச் சிரிப்பில் என்னசுகம்?..

தென்னமுதாம் தமிழ் இன்னமுதை நினைந்தால்

என்ன சுகம் ஆகா….

என்று தமிழ்மொழியால் பாடப்படும் பாடலின் இன்பத்தை உயர்த்திப் பேசுவதை அறியலாம்.

தமிழின் சிறப்பு

மோகூரின் மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டின் எல்லையில் படைகள் தங்கின. அன்று இரவில் மாங்கனியும் அடலேறுவும் தனிமையில் சந்தித்துப் பேசுகின்றனர்.

தமிழரே! உயிரே! உள்ளந்

தாங்கொணாக் காதலோடு

உமதுருத் தேடி வந்தேன்

என்று மாங்கனியைக் காணாதவனாக அடலேறு, தன்னுடைய ஏக்கத்தினை வெளிப்படுத்திய பேச்சிலும் கூடத் தமிழின் சிறப்பைப் புலப்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது.

தமிழ்ப் பெண்கள் வீரம்

பாண்டிய மன்னனான பழையன் மகள் தென்னரசி. தென்னரசியை அறிமுகப்படுத்தும் கவிஞர்.

தென்னரசி கலைச் செல்வி, தமிழர்கல்வி

தேர்ந்தமகள்; வீரத்தில் சிறுத்தையன்னாள்!

என்று தமிழ்ப்பெண்கள் வீரம் செறிந்தவர்கள் என்று எடுத்துக்காட்டியிருப்பது புலப்படுகின்றது.

தாசிமகள் என்றாலும் கற்புக்காக்கும்

தமிழ்மகள் சேரமகள்

என்று மாங்கனி பல இடங்களில் பேசப்பட்டிருக்கிறாள்.

தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் கருத்தமைந்த வடிவங்களில் மாங்கனி காவியத்தை நமக்கெல்லாம் சொந்தமாக்கியுள்ளார் என்பதை உணரமுடிகிறது.

6.6 தொகுப்புரை

கவியரசு கண்ணதாசன் பல வரலாற்றுக், குறிப்புகளைக் கொண்டு, 1954-இல் திருச்சிச் சிறைச்சாலையில் படைத்த ஒரு குறுங்காவியம் மாங்கனி. பல தலை முறைகளுக்கு முன்னால் இருந்த மக்களின் உள்ளங்களில் பதிந்த வரலாற்று நிகழ்வுகளைக் கவிஞர் தம்முடைய படைப்புக்கு ஆதார மாக்கியுள்ளார். அந்த நிகழ்ச்சி காதலின் மாண்பினை விளக்கும் கதையாகிவிட்டதால் சிறந்து விளங்குகின்றது.

கவிதைகள் வெறும் பொழுது போக்கிற்காக அமையாமல் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தவே என்று மாங்கனி உணர்த்துகிறது. பழந்தமிழ்க் காவியங்களில் உள்ள கதாபாத்திரங்களை இன்றைய சமுதாயத் தேவைக்கு ஏற்றவாறு படைத்துள்ளார் கவிஞர் கண்ணதாசன்.

தமிழ்மொழியின் மேன்மையைச் சொல்லல், அழகியல் உணர்வுகளின் வெளிப்பாடு, காதல், கற்பு இவற்றைப் பற்றிய உயர்வு. நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கு என மாங்கனி பல பரிமாணங்களைக் கொண்டதாகப் புனையப்பட்டுள்ளது.