15

சங்க இலக்கியம் - I

பாடம் - 1

சங்க இலக்கியம்- ஒர் அறிமுகம்

1.0 பாட முன்னுரை

உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம்.

தொடக்க காலத்தில் தமிழ் எந்தப் பகுதியில் பேசப்பட்டது என்பதைத் தொல்காப்பியம் என்ற பழம்பெரும் இலக்கணநூல் கூறுகிறது. தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் என்பவர்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ்கூறும் நல்லுலகம்

என்று தமிழ்நாட்டின் எல்லையைக் கூறுகின்றார். எனவே, வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ் பேசப்பட்டதாக நாம் இதன் மூலம் அறிகிறோம்.

தமிழ்நாட்டைச் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களும், பல குறுநில மன்னர்களும் ஆண்டதாகச் சங்க இலக்கியங்கள கூறுகின்றன. சேர நாட்டிற்கு வஞ்சி மாநகரும், சோழ நாட்டிற்குப் பூம்புகாரும், பாண்டிய நாட்டிற்கு மதுரையும் தலைநகர்களாக இருந்துள்ளன.

மூவேந்தர்களில் பாண்டிய மன்னர்கள் தமிழ்மொழியைப் போற்றி வளர்க்கும் வண்ணம் தமிழ்ச் சங்கங்கள் வைத்து நடத்தியதாகப் பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன.

அச்சங்கங்களில் தமிழ்ப் புலவர்கள் இருந்து தமிழ் ஆய்வு செய்ததாகவும், தமிழில் பல்வேறு செய்யுள்களை இயற்றியதாகவும் சங்க இலக்கியங்கள், இறையனார் களவியல் உரை போன்ற நூல்களால் அறியலாம்.

தமிழ் என்ற சொல் இனிமை என்ற பொருளை உடையது. இனிமையும், நீர்மையும் தமிழ் எனலாகும்’ என்று பிங்கல நிகண்டு கூறுகின்றது. மதுரமான மொழி என வால்மீகி இராமாயணம் கூறுகின்றது.

இந்த இனிமையான தமிழ் மொழியைச் சங்கம் மூலம் புலவர்களும் கற்றறிந்தோரும் சிற்றரசர்களும், பேரரசர்களும் பல்வேறு வகைப்பட்ட செய்யுட்களைப் பாடி வளர்த்தனர். புலவர்கள் அரசர்களால் பெரிதும் போற்றப்பட்டனர்.

1.1 சங்க காலம் - விளக்கம்

பல்லாயிரம் ஆண்டுக் காலப் பழமையான இலக்கிய இலக்கணங்களைக் கொண்ட மொழியாகத் தமிழ் மொழி விளங்குகின்றது. அதனால் அம்மொழி நீண்டகால இலக்கிய வரலாற்றினைக் கொண்டிருக்கிறது. இதில் முதன்மையான இலக்கிய வரலாற்றுக் காலம் சங்க காலமாகும்.

1.2 முச்சங்கங்கள்

பாண்டிய மன்னர்கள் தொடக்கத்தில் கடல்கொண்ட தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அங்கு, தமிழ் அறிஞர் பெருமக்களைக் கொண்டு தமிழ் இலக்கிய ஆய்வும், செய்யுள் இயற்றுதலும் நடைபெற்றன. அதுவே முதற் சங்கம் எனப்பட்டது.

தென்மதுரை கடல் பெருக்கெடுத்து வந்ததால் அழிந்தது. அதன் பிறகு கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆண்டார்கள். அங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுப் புலவர்களும், அரசர்களும் தமிழ் ஆய்ந்தனர். இது இடைச் சங்கம் என்று அழைக்கப் பட்டது.

கபாடபுரமும் கடலால் அழிவுற்ற பிறகு இன்றைய மதுரைக்குப் பாண்டியர் தலைநகரை மாற்றினர். இங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்று கி.பி.200 வரை நடைபெற்றது. இது கடைச்சங்கம் என்று அழைக்கப்பட்டது.

இவ்வாறு மூன்று சங்கங்கள் நடத்தப் பெற்று, புலவர்களும், அரசர்களும் பல்வேறு செய்யுட்களைப் பாடி, தமிழை வளர்த்தனர். இம் முச்சங்கங்களின் காலமே சங்க காலம் என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது. இனி ஒவ்வொரு சங்கம் பற்றியும் விவரமாகக் காணலாம்.

1.2.1 சங்கம் என்ற பெயர் சங்கம் என்ற பெயரை முதலில் ஆராய்வோம். சங்க இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இலக்கியங்களில் சங்கம் என்ற சொல்லே பயன்படுத்தப்படவில்லை. கி.பி.400 வாக்கில் வச்சிரநந்தி என்பவர் நான்காம் சங்கம் தொடங்கினார். பிறகு சமணத் துறவிகள் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்திச் சமயத் தொண்டு ஆற்றினர். அந்தச் சொல்லைத் தான் பிற்கால இலக்கிய ஆசிரியர்கள் கி.பி.200க்கு முன் தோன்றிய இலக்கியங்களைச் சங்க இலக்கியங்கள் என்று அழைத்தனர். பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள் இயற்றிய அவையைச் சங்கம் என்று கூறினர்.

மதுரையில் சங்கம் போன்ற அமைப்பு ஒன்று இருந்ததைத் தமிழ் இலக்கியங்கள் பல்வேறு பெயர்களில் சுட்டுகின்றன. பத்துப்பாட்டில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை,

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்

மகிழ்நனை மறுகின் மதுரை(அடிகள் 66-67)

என்று கூறுகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது மதுரையில் தமிழ் நிலை பெற்றிருந்தது என்பது புலனாகிறது. மதுரைக் காஞ்சி எனும் இலக்கியம்

தொல்லாணை நல்லாசிரியர்

புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன்(அடிகள் 761-763)

என்று கூறுவதைக் காணும்போது நிலந்தரு திருவின் நெடியோன் என்ற பாண்டியன் அவையில் புலவர்கள் ஒருங்கிணைந்து செய்யுள் இயற்றினர் எனப் புலனாகிறது.

புறநானூற்றில் 72ஆம் பாடல்,

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவனாக

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைகஎன் நிலவரை

என்று கூறுகிறது. இதில் சங்கத்துத் தலைவராக மாங்குடி மருதன் என்னும் புலவர் இருந்ததும், புலவர்கள் செய்யுள் பாடியதும் கூறப்பட்டுள்ளது.

காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரம் “தென்தமிழ் நன்நாட்டுத் தீதுதீர் மதுரை” என்றும், மணிமேகலை “தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்” என்றும் கூறுகிறது.

கி.பி. 600 வாக்கில் வாழ்ந்த திருநாவுக்கரசர் சிவபெருமானைச் சங்கத்தோடு இணைத்து போற்றிப் பாடுகிறார். தருமி என்னும் ஏழைப் புலவனுக்குக் ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற குறுந்தொகைப் பாடலை எழுதிக் கொடுத்தார் என்பதை,

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி

நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன்காண் (6.76.3)

என்று கூறுகின்றார்.

திருநாவுக்கரசருக்குப் பின் வந்த பல்வேறு இலக்கிய ஆசிரியர்களும் சங்கம் என்ற சொல்லையே பயன்படுத்துகின்றனர்.

சின்னமனூர்ச் செப்பேடு, சங்கத்தில் இலக்கியம் இயற்றும் பணியோடு, மொழிபெயர்ப்புப் பணியும் நடைபெற்றதாக ஒரு செய்தியைக் கூறுகிறது.

மாபாரதம் தமிழ்ப்படுத்தும்

மதுராபுரிச் சங்கம் வைத்தும்

என்று கூறுவதால் மகாபாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்த பணியும் சங்கத்தில் நடந்ததை நாம் அறிகிறோம்.

வடமொழி இலக்கியமாகிய வால்மீகி இராமாயணம் சங்கம் இருந்தமைக்குச் சான்றாக விளங்குகின்றது. அந்த இலக்கியத்தில் சீதையைத் தேடச் சென்ற வானரரை நோக்கிச் சுக்கிரீவன் “பொதிகை மலையில் அகத்திய முனிவரின் தமிழ்ச் சங்கம் உள்ளது; அதனைக் காண்பீர்” என்று கூறியதாக வருகிறது. பிளினி, தாலமி போன்ற மேலைநாட்டு அறிஞர்களும் சங்கம் பற்றி உரைக்கின்றனர். இலங்கை வரலாற்று நூல்களான மகாவம்சம், இராஜாவளி, இராஜரத்னாகிரி போன்ற நூல்களும் சங்கம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன.

1.2.2 முதற் சங்கம் கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் தான் முதற்சங்கமாகும். இச்சங்கத்தை நிறுவிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஈறாக 89அரசர்கள் 4440 ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக இறையனார்களவியல் உரை கூறுகிறது.

இச்சங்கத்தில் அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் போன்ற புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தனர். 4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்து செய்யுள் பாடினர். அவர்களால் பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை போன்ற நூல்கள் பாடப்பட்டன.

1.2.3 இடைச்சங்கம் தென்மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரத்தில் தொடங்கப் பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுக் காலம் நடைபெற்றது. வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால் தொடங்கப் பெற்ற இச்சங்கம் முடத்திருமாறன் முடிய 59 மன்னர்களால் நடத்தப் பெற்றது. இச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழியார் வெள்ளூர்க் காப்பியனார் போன்ற3700 புலவர்கள் பாடினர். இவர்களால் பாடப்பெற்றவை கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை அகவல் போன்ற நூல்களாகும்.

1.2.4 கடைச் சங்கம் கபாடபுரமும் கடலால் அழிந்த பிறகு தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது. இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது.

இச்சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் என 449 புலவர்கள் பாடினர். இதில் எழுதப்பட்ட நூல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் போன்றவை ஆகும்.

முச்சங்கங்கள் பற்றிய மேற்கண்ட செய்திகளை இறையனார் களவியல் உரை என்ற கி.பி. 8ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்தான் கூறுகின்றது. இந்நூல் கூறும் செய்திகள் முழுமையான நம்பிக்கைக்குரியனவா என்பது ஆராய்ச்சிக்குரியதாகும்.

இருப்பினும் சங்கம் என்ற ஓர் அமைப்பு, பாண்டியர்களால் நடத்தப் பெற்றமை குறித்துச் சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் நிறையச் சான்றுகள் கிடைக்கின்றன.

முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும் செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. கி.மு.500 முதல் கி.பி.200 முடிய உள்ள காலமே சங்கம் நடைபெற்ற காலமாக இருக்க முடியும்.

1.3 சங்க இலக்கியங்கள்

சங்கம் என்ற ஓர் அமைப்பு இருந்ததாகப் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தாலும், சங்கத்திலே அமர்ந்து புலவர்கள் பாடிய பாடல்கள் சிலவாகத் தான் இருக்க முடியும். பெரும்பாலான பாடல்கள், பல்வேறு இடங்களில், பல்வேறு காலங்களில், பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவையாகத்தான் இருக்க வேண்டும். அவை கி.மு.500 முதல் கி.பி.200 முடிய உள்ள காலத்தில் பாடப்பட்டவையாக இருக்கலாம்.

சங்கப் பாடல்கள் எட்டுத்தொகை நூல்கள் என்றும், பத்துப்பாட்டு என்றும் பிரிக்கப்பட்டிருத்தல் காணத்தக்கது ஏராளமான பாடல்கள் ஓலைச் சுவடிகளில் இருந்து அழிந்துபோக, எஞ்சியவற்றைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்காலத்து அரசர்கள் புலவர்களின் துணையோடு செயல்பட்டனர். அவ்வாறு தொகுக்கப்பட்டவையே எட்டுத்தொகையும், பத்துப்பாட்டுமாகும். இக்காலப்பகுதியில் படைக்கப்பட்ட இலக்கண நூல்களுள் தொல்காப்பியம் மட்டுமே கிடைத்துள்ளது.

எட்டுத் தொகுதிகளாகத் தொகுக்கப்பட்ட எட்டு நூல்கள் எட்டுத்தொகை என்றும், பத்துப் பெரிய பாடல்கள் பத்துப் பாட்டு என்றும் பெயர் பெற்றன.

1.3.1 தொல்காப்பியம் சங்க இலக்கியங்களை நாம் அறிந்து கொள்வதற்கு முன்னால் சங்க இலக்கியங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த தொல்காப்பியம் பற்றி அறிந்து கொள்வது தேவையான ஒன்றாகும்.

சங்க இலக்கியங்களை அகம், புறம் எனப் பிரித்துப் பார்ப்பதற்கும், தமிழ் மொழியின் முழுமையான இலக்கணத்தை அறிந்து கொள்வதற்கும் தொல்காப்பியம் துணை நிற்கிறது.

சங்க இலக்கியங்களுக்கு முன்னால் பல நூறு ஆண்டுக்காலத் தமிழிலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். கடல் பெருக்கெடுத்து ஊர்களை அழித்ததாலும், ஓலைச் சுவடிகள் பல்வேறு காரணங்களால் அழிந்ததாலும் அவ்விலக்கியங்கள் இன்றைக்குக் கிடைக்கவில்லை. அவ்விலக்கியங்களுக்கு அகத்தியர் எழுதிய அகத்தியம் என்ற இலக்கண நூல் இருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அகத்தியரின் மாணவரான தொல்காப்பியர் தொல்காப்பியத்தை எழுதியதாகவும் தமிழ் ஆய்வாளர்கள் இறையனார் களவியல் உரையை அடிப்படையாகக் கொண்டு கூறுகின்றனர்.

தொல்காப்பியர் கி.மு.500 அளவில் வாழ்ந்ததாக, பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியமே சங்க இலக்கியத்தின் இலக்கணமாகத் திகழ்ந்தது.

தொல்காப்பியம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இலக்கண நூலாகும். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பன அவை. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

எழுத்ததிகாரம்,

நூல் மரபு

மொழி மரபு

பிறப்பியல்

புணரியல்

தொகை மரபு

உருபியல்

உயிர் மயங்கியல்

புள்ளி மயங்கியல்

குற்றியலுகரப் புணரியல்

என ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டு எழுத்தின் பிறப்பு, தொகை, வகை, பெயர் மயக்கம், சொற்களின் புணர்ச்சி ஆகியவற்றை விளக்குகின்றது. இதில் 483 நூற்பாக்கள் உண்டு.

சொல்லதிகாரம் தமிழ்ச் சொற்றொடர்களின் ஆக்கம், வேற்றுமைகள், பெயர், வினை, இடை, உரி என நால்வகைச் சொற்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. இதில் 463 நூற்பாக்கள் உள்ளன. இது

கிளவியாக்கம்

வேற்றுமையியல்

வேற்றுமை மயங்கியல்

விளிமரபு

பெயரியல்

வினையியல்

இடையியல்

உரியியல்

எச்சவியல்

என்று 9 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பொருளதிகாரம் வாழ்க்கைக்கும், இலக்கியத்திற்கும் இலக்கணம் கூறும் பகுதியாகும். உலகில் எல்லா மொழிகளும் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் கூற, தொல்காப்பியம் தமிழில் வாழும்நெறிக்கு இலக்கணம் கூறுகிறது.

பொருளதிகாரத்தில் 665 நூற்பாக்கள் உள்ளன. தொல்காப்பியர் வாழ்க்கையை அகம், புறம் எனப் பிரித்து அதற்கான இலக்கணத்தைக் கூறியுள்ளார். பொருளதிகாரத்தில் அவர்,

அகத்திணையியல்

புறத்திணையியல்

களவியல்

கற்பியல்

பொருளியல்

மெய்ப்பாட்டியல்

உவமவியல்

செய்யுளியல்

மரபியல்

என ஒன்பது இயல்களாகப் பிரித்து விவரித்துள்ளார்.

இந்த இலக்கண நூல்தான் தமிழர் நாகரிகத்தை உலகின் தலைசிறந்த நாகரிகமாக எடுத்து விளக்குவதற்குச் சான்றாக நிற்கின்றது.

மேலும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், கம்பனின் இராமகாதை ஆகிய செவ்வியல் காவியங்களை முன்னுதாரணங்களாகக் கொண்டு, பெரிய புராணம் முதலிய பிற தமிழ்க் காப்பியங்களைப் பார்ப்பதும் இதன் அடிப்படையில் அதுசரியான காப்பியமே என்றோ காப்பியம் அன்று என்றோ மதிப்பிடுவதும் முடிபுமுறைத் திறனாய்வு ஆகும்.

1.3.2 எட்டுத்தொகை நூல்கள் எட்டுத்தொகையில் உள்ளவை எட்டு, தொகை நூல்களாகும். இவற்றைக் குறிக்கும் பழம் பாடல் ஒன்று உள்ளது. இப்பாடலை மனப்பாடம் செய்து கொண்டால் இந்நூல்களின் பெயர்களை நாம் நன்கு நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை.

இவற்றுள் நற்றிணை,குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகநூல்களாகும். பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறநூல்களாகும். பரிபாடல் அகமும், புறமும் கலந்த நூலாகும்.

1.3.3 பத்துப்பாட்டு சிறிய பாடல்கள் எல்லாம் எட்டுத்தொகையுள் அடங்கிவிட, பத்துப் பெரிய பாடல்களின் தொகுதி பத்துப்பாட்டு எனப் பெயரிடப்பட்டது

இப்பத்துப் பாடல்களையும் குறிக்கும் பழம்பாடல் ஒன்று உள்ளது.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து

இவ்வெண்பாவில் உள்ள முருகு என்று கூறப்படுகின்ற திருமுருகாற்றுப்படை, பொருநாறு என்று சொல்லப்படுகின்ற பொருநர் ஆற்றுப்படை, பாணிரண்டு என்று கூறப்படுகின்ற சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கடாம் என்று அழைக்கப்படுகின்ற மலைபடுகடாம் ஆகியவை ஆற்றுப்படை என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தவை. இவை புறப்பாடல்கள் ஆகும். இவை தவிர மதுரைக்காஞ்சியும் புறப்பாடல் ஆகும்.

முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகியவை அகப்பாடல்களாகும். நெடுநல்வாடை அக இலக்கியமா, புற இலக்கியமா என்ற ஆய்வு இன்னும் நிகழ்ந்து வருகின்றது.

இவற்றுள் முல்லைப்பாட்டு 103 அடிகளை உடைய மிகச் சிறிய பாடலாகும். மதுரைக் காஞ்சி 782 அடிகளை உடைய மிகப் பெரிய பாடலாகும்.

இப்பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் இணைந்து பதினெண்மேற்கணக்கு எனவும் பெயர் பெறும்.

1.4 சங்க இலக்கியத்தின் சிறப்புப் பிரிவுகள்

சங்க இலக்கியங்களை அகம், புறம் என்று பிரிப்பர். காதலைப் பற்றிப் பாடும் பாடல்களை அகம் என்றும், காதல் தவிர, பிறசெய்திகளைப் பாடும் பாடல்களைப் புறம் என்றும் கூறுவர். இதற்கான இலக்கணத்தைத் தொல்காப்பியம் கூறுகிறது.

அகப்பாடல்கள் கற்பனையான தலைவன், தலைவியின் காதலைப்பற்றி விளக்கியுரைக்கின்றன. புறப்பாடல்கள் நாட்டை ஆளும் அரசனின் வீரம், கொடை, சமூகத்திற்கு அரசன் ஆற்ற வேண்டிய கடமைகள், கல்வியின் சிறப்பு போன்றவற்றைக் கூறுகின்றன. பெரும்பாலான புறப்பாடல்கள் அரசனின் புகழைப் பாடுவனவாகவே உள்ளன.

பூம்புகார், உறையூர், மதுரை, வஞ்சி போன்ற நகரங்களைத் தவிர, பெரும்பாலும் சிற்றூர்களே அக்காலத்தில் இருந்தமையால் மக்கள் இயற்கையோடு இயைந்த சீரிய வாழ்க்கையை வாழ்ந்ததைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

1.4.1 அகப்பாடல்கள் ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதலிப்பது, காதலைத் தோழி மூலம் செவிலித்தாய், நற்றாய் ஆகியோருக்கு மெல்லத் தெரியப்படுத்துவதும் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்துள்ளன. இவ்வாறு காதலைத் தெரியப்படுத்துவதற்கு அறத்தொடு நிற்றல் என்ற பெயரும் உண்டு. பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாத சூழலில் காதலனும் காதலியும் ஊரை விட்டு வெளியூர் சென்று விடுதல் உண்டு. இதற்கு உடன்போக்கு என்று பெயர்.

அக்காலத்தில் காதலித்த பெண்ணை மணந்து அவளோடு இன்பத்துடன் வாழ்ந்து வரும் தலைமகன் வேறு பெண்களை நாடிச் செல்வதும் வழக்கமாக இருந்திருக்கிறது. இதற்குப் பரத்தையிற் பிரிவு என்று பெயர். அதனால் தலைவி அவனிடம் சினம் கொண்டு ஊடல் கொள்ளுதலும் பழக்கமாக இருந்துள்ளது.

அகப்பாடல்கள் பெரும்பாலும் கற்பனைப் பாடல்களாக இருந்தாலும், அக்கால மக்களின் காதல் வாழ்க்கையை முழுமையாகவே வெளிப்படுத்துகின்றன.

1.4.2 புறப்பாடல்கள் புறப்பாடல்கள் பெரும்பாலும் கற்பனையாகப் பாடப்படவில்லை. இரு அரசர்களுக்கிடையே போர் ஏற்படும் போது புலவர்கள் தலையிட்டுப் போரைத் தடுத்துள்ளனர். அரசன் மக்களிடம் அளவுக்கதிகமாக வரி வாங்கும் நேரத்தில் புலவர்கள் தலையிட்டு அரசனுக்கு அறிவுரை கூறியுள்ளனர். இந்நிகழ்வுகள் புறப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன.

புறப்பாடல்களில் இயற்கைக்கு மீறிய செய்திகள் கூறப்படவில்லை. சங்க கால வரலாற்றைத் தொகுப்பதற்கு, சங்கப் புறப்பாடல்கள் ஓரளவுக்குத் துணை நிற்கின்றன. அரசர்கள் தமக்குள் போரிட்டுக் கொண்டாலும் புலவர்களைப் பெரிதும் மதித்துள்ளனர். யாருமே தொட அஞ்சும் முரசு கட்டிலில் ஏறிப்படுத்து உறங்கிய மோசிகீரனார் என்னும் புலவரைத் தண்டிக்காது, அவர் தூங்கி எழுகின்றவரை கவரி கொண்டு அவருக்கு விசிறினான் சேரமன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்று புறநானூறு கூறுகிறது.

அரசன் கோப்பெருஞ்சோழன் மேல் நட்புக் கொண்டிருந்த காரணத்தால், அவன் வடக்கிருந்து உயிர் துறக்கும் நேரத்தில் புலவர் பிசிராந்தையாரும் அவனுடன் உயிர் துறந்தார் எனவும் செய்தி உண்டு. பேகன் என்னும் அரசன் தன் மனைவி கண்ணகியை விட்டு நீங்கி இன்னொருத்தியுடன் வாழ்ந்ததை மாற்றி, கண்ணகியுடன் சேர்த்து வைத்தனர் கபிலரும் பரணரும் என்ற செய்தி கூறப்படுகிறது.

இவ்வாறு அரச குடும்பங்களின் துன்ப நிகழ்வுகளிலும் புலவர்கள் பங்கு கொண்டு செயல்பட்டமை குறித்த செய்திகள் புறநானூற்றில் உண்டு. மேலும் மலையமான் திருமுடிக்காரியின் சிறு குழந்தைகளைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலில் இட்டு மிதிக்கச் செய்ய முற்பட்டபோது கோவூர்கிழார் கூறியதால் அக்குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர் என்ற செய்தியும் புறநானூற்றில் இருக்கிறது.

1.5 சங்க இலக்கியத்தின் யாப்பு

சங்க இலக்கியப் பாடல்கள் தனிப்பாடல்களாக அமைந்துள்ளவை இவற்றைத் தன்னுணர்ச்சிப் பாடல்கள் என்று கூறுவர். எட்டுத் தொகை பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும் இப்பதினெண்மேற் கணக்கு நூல்களும் மூவகைப் பா வகைகளில் அமைந்துள்ளன. அகவற்பா, வஞ்சிப்பா, கலிப்பா என்னும் பாவகைகளில், பெரும்பாலான சங்கப்பாடல்கள் ஆசிரியப்பா வடிவிலேயே பாடப்பட்டுள்ளன.

ஆசிரியப்பா என்றாலும் அகவற்பா என்றாலும் ஒன்றே ஆகும். இப்பாட்டு வகை இசையுடன் பாடவும் ஏற்ற வகையாகும். ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லும் சிறப்புப் பெற்றதால் இது ஆசிரியப்பா ஆயிற்று எனவும் கூறுவர்.

ஆசிரியப்பாவை அடுத்து வஞ்சிப்பா இசையோடு பாடுவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. பட்டினப்பாலை ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் இணைந்து பாடப்பெற்ற பாடலாகும். 301 அடிகளை உடைய இப்பாவில் 163 அடிகள் வஞ்சிப்பா அடிகளாகவும் 138 அடிகள் ஆசிரியப்பா அடிகளாகவும் உள்ளன. புறநானூற்றில் 2 ஆம் பாடலில் உள்ள

மண்டிணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும். . .

என்னும் அடிகள் வஞ்சிப்பா வகையைச் சார்ந்தவை.

கலிப்பாவில் அமைந்த சங்க இலக்கியம் கலித்தொகையாகும். கலித்தொகையில் உள்ள 150 பாடல்களும் கலிப்பாவாலேயே ஆகியவை. நாடக முறையில் அகப்பொருளைப் பாடுவதற்கு இப்பாடல் வகை பயன்பட்டது.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடல் வெண்பா யாப்பிலும், ஆசிரியப்பா யாப்பிலும் அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் வெண்பா தனிச் சிறப்புப் பெற்ற யாப்பாக விளங்கவில்லை. சங்க காலத்திற்குப் பிறகே வெண்பா யாப்பில் பாடும்பாடல்கள் நிறையப் பாடப்பட்டன.

1.6 சங்க இலக்கிய உவமைகள்

சங்க இலக்கியங்கள் உவமைகளால் சிறப்புற்ற இலக்கியங்களாகும். சங்க காலத்தில் தோன்றிய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் உவமைக்காகவே ஓர் இயல் உண்டு. அது உவமஇயல் எனப்படும்.

சங்க அக இலக்கியங்களிலும், புற இலக்கியங்களிலும் பெரும்பாலான பாடல்கள் உவமைகளோடு மட்டுமே விளங்குகின்றன. எளிய உவமைகளால் மிகச் சிறந்த பொருளை விளங்க வைப்பது சங்க இலக்கியங்களின் சிறப்பியல்புகளுள் ஒன்று.

சோழன் போரவைக்கோப்பெரு நற்கிள்ளி போர்க்களத்தில் விரைவாக வாளைச் சுழற்றிப் போரிடுகிறான். அவன் போர்க்களத்தில் எவ்வாறு வாளைச் சுழற்றுவான் என்பதற்குச் சாத்தந்தையார் என்ற புலவர்,

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்று உற்றெனப்

பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது

போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ

- (புறம், 82)

என்று உவமை கூறுகிறார். அதாவது ஊரிலே விழா நடைபெற உள்ளது. அவ்விழாவிற்கு உதவப் போக வேண்டும்; மனைவிக்குப் பிள்ளைப்பேறு மழை பெய்து கொண்டிருக்கிறது. பிறக்கும் குழந்தையைத் தரையில் போடமுடியாது. அதற்காகக் கட்டில் பின்னுகின்றான் ஓர் ஏழைத் தொழிலாளி. இவ்வளவு செயல்களையும் ஒருசேரச் செய்ய மனம் விழையும் நேரத்தில் கை எவ்வளவு வேகமாகக் கட்டில் பிணிக்குமோ அதே வேகத்தில் சோழன் வாள் சுழற்றுகின்றான் என்கிறார் புலவர்.

கலித்தொகையில் ஓர் உவமை. பாலை நிலத்தின் கொடுமையைக் கூற வந்த பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவர்,

வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்

சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழல்இன்றி

யார்கண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான் இறுதிபோல்

வேரொடு மரம்வெம்ப, விரிகதிர் தெறுதலின்

(பாடல் – 10)

எனப் பாடியுள்ளார். இளமையிலேயே வறுமையுற்றவன் போலத் தளிர்கள் வாடிய கொம்புகளை உடையனவாக மரங்கள் நின்றன. கொடுத்தற்கு மனம் இல்லாதவனுடைய (சிறுமனம் கொண்ட கருமி) செல்வம், தன்னைச் சேர்ந்தார்க்குப் பயன்படாதவாறு போலத்தன்னைச் சேர்ந்தவர்களுக்கு நிழலின்றி இருந்தன. யாவரிடத்தும் ஒழுக்கத்தைக் கடந்து தீங்கு செய்பவனின் புகழ்கெட்டு, இறுதிக் காலத்தே அவன் சுற்றத்தார் மட்டுமன்றி அவனும் கெடுவான். அதுபோல் கதிரவனின் கதிர்கள் சுடுதலினால் கிளைகள் மட்டுமன்றி, மரங்கள் வேரொடே வெம்பி நின்றன என்று மிகச் சிறப்பான உவமையால் விளக்குகிறார்.

இவ்வாறு சங்க இலக்கியம் முழுமையும் பல்வேறு சிறந்த உவமைகளோடு பாடல்கள் இயற்றப்பட்டிருப்பதை அறியலாம்.

1.7 தொகுப்புரை

நண்பர்களே! இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன தெரிந்து கொண்டோம் என்பதை நினைவு படுத்திப் பாருங்கள்.

உலக மொழிகளில் முதன்மை மொழிகளுள் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்மொழி 2500 ஆண்டு காலப் பழைய இலக்கியங்களைக் கொண்டது என்பதை நாம் அறிந்து கொண்டோம். தமிழ் வளர்ப்பதற்குப் பாண்டிய மன்னர்கள் ஓர் அமைப்பினை ஏற்படுத்தி வைத்திருந்தனர் என்பதையும், அவ் அமைப்பிற்குப் பிற்காலத்தில் சங்கம் என்ற பெயர் வழங்கப்பட்டது என்பதையும் தெரிந்து கொண்டோம்.

அக்காலத்தில் புலவர்கள் பாடிய பாடல்கள் அகப்பாடல்கள், புறப்பாடல்கள் என்று பிரித்து அமைக்கப்பட்டன என்பதையும் புரிந்து கொண்டோம்.

சங்கப் பாடல்கள் எட்டுத்தொகை நூல்கள் என்றும், பத்துப்பாட்டு என்றும் பிரிக்கப்பட்டமையை நாம் அறிந்து கொண்டோம்.

சங்ககால வாழ்வியலையும், சங்க இலக்கிய யாப்பு, சங்க இலக்கியத்தில் உவமைகள் ஆகியவை பற்றியும் தெரிந்து கொண்டோம்.

பாடம் - 2

அகத்திணைப் பாகுபாடு

2.0 பாடமுன்னுரை

2500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தொல்காப்பியர், தான் எழுதிய தொல்காப்பிய இலக்கண நூலினை மூன்று அதிகாரங்களாகப் பகுத்தார் என்பதை அறிந்திருப்பீர்கள்.

எழுத்துகள் பிறந்தது முதல் அவை ஒன்றோடு ஒன்று இணைந்து மொழியாகும் தன்மைகளைக் கூறுவது எழுத்ததிகாரம்.

இவ்வெழுத்துகள் சொல்லாகி, அச்சொற்கள் அமையும் பாகுபாடுகள், அவற்றின் பெயர் வகைகள் முதலியவற்றைக் கூறுவது சொல்லதிகாரமாகும்.

இச்சொற்கள் இணைந்து பல்வேறு பொருள்களை உணர்த்தும். இது பொருளதிகாரம் என்று அழைக்கப் பெறுகிறது. பொருள் என்றவுடன் உடனே நாம் உணரும் செய்தி நம் உடைமைப் பொருள்களைத்தான்.

ஆனால் தொல்காப்பியர் பொருள் என்பதற்கு நம் உடைமைப் பொருளைக் குறிக்கவில்லை. அவர் வாழ்வியல் நிலைகளைக் குறிக்கின்றார். வாழ்வியல் நிலைகளை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்.

இவை பற்றிய விளக்கங்கள் தொல்காப்பியரின் அகத்திணையியலில் வருகின்றன. இவ்வகத்திணை இயல் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் முதல் இயலாகும்.

2.1 தொல்காப்பியரின் பொருளதிகாரம்

பொருளதிகாரம் ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

அகத்திணையியல்

புறத்திணையியல்

களவியல்

கற்பியல்

பொருளியல்

மெய்ப்பாட்டியல்

உவமவியல்

செய்யுளியல்

மரபியல்

என்று ஒன்பது இயல்களாகும். இவற்றுள் அகத்திணையியல் களவியல், கற்பியல் ஆகியவை அகத்திணை பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. பொருளியல் என்பது அகத்திணை பற்றிய செய்திகள் சிலவற்றையும், புறத்திணைக்குரிய செய்திகள் சிலவற்றையும் கூறுகின்றது.

மெய்ப்பாட்டியல் எட்டுவகை மெய்ப்பாடுகளைக் கூறுகின்றது. மெய்ப்பாடு என்பது உடம்பில் தோன்றும் உணர்வுகளாகும். உள்ளத்தில் தோன்றிய உணர்வுகள், அவ்வுள்ளத்தில் இருந்து எவ்வாறாவது வெளிப்பட்டு விடும். அதுவே மெய்ப்பாடாகும்.

உவமையியல் இரண்டு பொருள்களுக்கிடையே காணும் ஒப்புமைத் தன்மைகளைக் கூறுகின்றது.

செய்யுளியல் செய்யுள் இலக்கணத்தையும், மரபியல் தமிழில் பழைய காலந்தொட்டு இருந்து வரும் சொற்பொருள் மரபு பற்றியும், முறைமைகள் பற்றியும் கூறுகின்றன.

2.1.1 தொல்காப்பியர் கூறும் திணைப்பாகுபாடு திணைகளை அகம், புறம் என்று பிரித்த தொல்காப்பியர், அகத்திணையை ஏழு பிரிவுகளாகப் பிரிப்பார். அவை

குறிஞ்சி

முல்லை

மருதம்

நெய்தல்

பாலை

கைக்கிளை

பெருந்திணை

எனப் பெயரிடப்பட்டன.

தொல்காப்பிய அகத்திணையியலின் முதல் நூற்பா அகத்திணையைப் பற்றிக் கூறும் போது,

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழுதிணை என்ப

என்கிறது.

திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள்படும். அகமாவது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் தமக்குள்ளே கண்டு, காதல் கொண்டு ஒன்றுபடுதல்; சில காரணங்களால் பிரிதல்; பிரிந்து தனித்திருத்தல்; அத்தனிமைக்கு இரங்குதல்; சில நேரங்களில் பிணக்குக் கொள்ளுதல் என ஐந்துவகை அன்பு உரிப்பொருளைக் கொண்டுள்ளது. இவற்றைக் கூடல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பர். இவை குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் எனவும் குறிப்பிடப்படுகின்றன.

2.1.2 அன்பின் ஐந்திணை ஒருவனும், ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்வது குறிஞ்சித் திணை என்று பெயர் பெறுகிறது. காதலன் பொருளீட்டுவதற்கோ, போர்க்களத்திற்கோ, கல்வி கற்பதற்கோ, தூதுவனாகவோ சென்ற நேரத்தில் பிரிந்து இருக்கும் சூழலில் காதலி காத்திருப்பது முல்லைத் திணை என்னும் பெயர் பெறுகிறது.

தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே பல்வேறு காரணங்களால் பிணக்குகள் வரலாம். இதனை ஊடல் என்று கூறுவர். இந்த ஊடலைக் குறிக்கும் திணை மருதத் திணை எனப்படும். கடலில் மீன் பிடிக்கச் சென்றோ, பிற காரணங்களாலோ தலைவன் பிரிந்து சென்று, திரும்பி வர இயலாத சூழலில் தலைவி அவனுக்காகக் கவலைப்பட்டு இரங்கி நிற்றலை நெய்தல் திணை என்பர். தன் ஊரிலே வறட்சியின் காரணமாக வெளியூர் சென்று பொருளீட்டி வரலாம் என்று தலைவன் பிரிந்து செல்லும் நேரத்தில் இல்லத்தில் இருக்கும் தலைவியின் நிலை குறித்து அவன் கவலைப்படுதலும், செல்லும் வழியில் தலைவனுக்கு என்ன நேருமோ என்று தலைவி இல்லத்தில் இருந்து கவலைப்படுதலும் பாலைத் திணை எனப்படும். இவையே அன்பின் ஐந்திணை என்றும் அழைக்கப்படும்.

2.1.3 கைக்கிளை, பெருந்திணை ஆண் விரும்பி, பெண் விரும்பாமலோ அல்லது பெண் விரும்பி, ஆண் விரும்பாமலோ இருப்பின் அது கைக்கிளை. அதாவது ஒரு தலைக் காமம்.

காதலிக்கும் ஆணைவிடப் பெண் மிகவும் மூத்தவளாகவோ, பெண்ணைவிட ஆண் மிகவும் மூத்தவனாகவோ இருப்பின் அது பெருந்திணை என்று பெயர் பெறும். இது பொருந்தாக் காமம்.

கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டும் தமிழ்ச் சான்றோர்களால் போற்றப்படாத ஒழுக்கங்களாகும். ஒருவனும் ஒருத்தியும் விரும்புகின்ற ஐந்திணைகள் மட்டுமே அன்பின் ஐந்திணை என்று போற்றப்பட்டது.

2.2 முப்பொருள்கள்

தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறும்போது, அவற்றிற்குரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை விளக்கியுரைக்கின்றார்.

2.2.1 முதற்பொருள் முதற்பொருள் என்பது உலகம் தோன்றிய காலம் முதல் இருக்கும் நிலமும் பொழுதும் ஆகும்.

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே (4)

என்று தொல்காப்பிய நூற்பா கூறும்.

நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார்.

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே(அகத்.5)

என்றுரைக்கின்றார், தொல்காப்பியர்.

முல்லை நிலத்தை ‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்றார். காடும், காட்டைச் சார்ந்த இடமும் என்று கூறி, அக்காட்டிற்கு உரிய தெய்வமாகத் திருமாலை மாயோன் என்ற பெயரில் குறிப்பிடுகின்றார்.

குறிஞ்சி நிலத்தை மலையும், மலையைச் சார்ந்த இடமும் என்று கூறி, அம்மலைக்கு உரிய தெய்வமாக முருகனைக் கூறுகிறார்.

‘வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ எனக் கூறுவது வயலும் வயலைச் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தையே ஆகும். இந்திரனுக்கு வேந்தன் என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்திரனே வயலும் வயலைச் சார்ந்த இடத்திற்குக் கடவுளாகும்.

‘வருணன் மேய பெருமணல் உலகமும்’ என்று கூறுவது மணல் மிகுந்திருக்கக் கூடிய கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். இந்த நிலத்திற்குக் கடவுளாக வருணன் உரைக்கப்படுகிறான்.

பாலைத் திணை என்பது பாலைவனப் பகுதியாகும். இதற்கான தெய்வத்தைத் தொல்காப்பியர் கூறவில்லை. தமிழ்நாட்டில் பாலைநிலம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். பாலை என்ற நிலம் எவ்வாறு உருவாகிறது என்பதைக் காலத்தால் சற்றுப் பிற்பட்ட சிலப்பதிகாரம் தான் சொல்கிறது. முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் நீண்ட காலம் மழை பொழியாமல் காய்ந்து போய் இருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதை

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்

(காடுகாண் காதை, 64-66)

என்று கூறுகிறது.

இப்பாலை நிலத்திற்குக் கடவுள் கொற்றவை எனத், தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் கூறுகிறார்.

நிலங்களுக்கு இடமும், கடவுளும் கூறிய தொல்காப்பியர் அந்நிலங்களுக்குரிய காதல் ஒழுக்கங்களுக்கு ஏற்ற வண்ணம் பெரும் பொழுது, சிறுபொழுதுகளைக் கூறுகிறார்.

பெரும்பொழுது என்றால் ஓர் ஆண்டை இரண்டிரண்டு மாதங்களாக – ஆறு பிரிவுகளாகப் பிரித்து அமைத்துக் கொள்வதாகும்.

இவை

கார்காலம்

கூதிர்காலம்

முன்பனிக் காலம்

பின்பனிக் காலம்

இளவேனிற் காலம்

முதுவேனிற் காலம்

என ஆறுவகைப்படும்.

சிறுபொழுது என்பது ஒரு நாளை ஆறு பிரிவுகளாகப் பிரித்துக் கணக்கிடப்படும் காலமாகும். இது

வைகறை

விடியல்

நண்பகல்

எற்பாடு (பிற்பகல்)

மாலை

யாமம் (நள்ளிரவு)

எனப் பிரிக்கப்படும்.

(எற்பாடு – எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு – இளம்பூரணர் உரை, தொல்.பொருள். 10)

2.2.2 கருப்பொருள் மேலே குறித்த நிலம் முதலிய இடத்தாலும் காலம் முதலியவற்றாலும் தோற்றம் கொள்ளும் பொருள்களைக் கருப்பொருள் என்று குறிப்பிடுவர். அவை தேவர் என்றும், மக்கள் என்றும், விலங்கு என்றும் பலவாறு பகுக்கப்படும். அங்கு வாழும் மக்கள் உண்ணுகின்ற உணவு, செய்கின்ற தொழில் இவையும் கருப்பொருளாகும். ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வங்கள், உணவு வகைகள், மரங்கள், பறவைகள், செய்தொழில்கள், யாழ் போன்ற இசைக் கருவிகள் எல்லாம் கருப்பொருள் என்பதில் அடங்கும்.

2.2.3 உரிப்பொருள் மக்களுக்கு உரிய பொருள் உரிப்பொருள் எனப்படும். இதனை ஒழுக்கம் என்பர். இது அக வாழ்க்கைக்கும் புறவாழ்க்கைக்கும் உரியது. புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவற்றோடு கைக்கிளை, பெருந்திணை ஆகியவை சேர்ந்து ஏழும் அகத்திணைக்குரிய உரிப்பொருள்களாகக் கொள்ளப்படும்.

வெட்சி

வஞ்சி

உழிஞை

தும்பை

வாகை

காஞ்சி

பாடாண்

ஆகிய ஏழும் புறத்திணைக்கு உரியனவாகும்.

அகத்திணைகளுக்கு உரிய புறத்திணைகள்

அகப்பொருளில் கூறப்பட்ட முதற்பொருளும், கருப்பொருளும் புறப்பொருள் இலக்கியத்திற்கும் பொருந்துவனவாகும். ஒவ்வொரு புறத்திணையும் ஓர் அகத்திணையோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.

அவை கீழ்க்காணுமாறு தொடர்புபடும் எனத் தொல்காப்பியர் கூறுவார்.

அகத்திணை                              புறத்திணை

குறிஞ்சி                                     வெட்சி

முல்லை                                    வஞ்சி

மருதம்                                        உழிஞை

நெய்தல்                                      தும்பை

பாலை                                         வாகை

கைக்கிளை                                பாடாண்

பெருந்திணை                           காஞ்சி

2.3 அகத்திணையியலும் அன்பின் ஐந்திணைகளும்

அகத்திணை அன்பின் ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை எனப்படும் என்பதை முன்பே அறிந்தோம். அன்பின் ஐந்திணைகளாகிய முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றைக் காணலாம்.

2.3.1 குறிஞ்சித் திணை முதற்பொருள்

நிலம்     -     மலையும் மலையைச் சார்ந்த இடமும்

பொழுது     -     அ) பெரும்பொழுது – கூதிர்காலமும், முன்பனிக்காலமும்

ஆ) சிறு பொழுது – யாமம்

கருப்பொருள்கள்

1.     தெய்வம்     -     சேயோன்

2.     உணவு     -     ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி, கிழங்கு

3.     விலங்கு     -     புலி, யானை, கரடி, பன்றி

4.     மரம்     -     அகில், ஆரம், தேக்கு, வேங்கை

5.     பறவை     -     கிளி, மயில்

6.     பறை     -     முருகியம், தொண்டகப் பறை

7.     தொழில்     -     தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை விதைத்தல், வேட்டையாடுதல்

8.     யாழ்     -     குறிஞ்சி யாழ்

9.     பண்     -     குறிஞ்சிப் பண்

10.     ஊர்     -     சிறுகுடி, குறிச்சி

11.     நீர்     -     அருவி நீர், சுனை நீர்

12.     மலர்     -     காந்தள், வேங்கை, குறிஞ்சி

உரிப்பொருள்

புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (நிமித்தம் = காரணம்)

2.3.2 முல்லைத் திணை முதற்பொருள்

நிலம்     -     காடும் காட்டைச் சார்ந்த இடமும்

பொழுது     -     அ) பெரும்பொழுது : கார்காலம்

ஆ) சிறுபொழுது: மாலை

கருப்பொருள்கள்

1.     தெய்வம்     -     மாயோன்

2.     உணவு     -     வரகு, சாமை

3.     விலங்கு     -     மான், முயல்

4.     மரம்     -     தோன்றி, காயா, பிடவம், குருந்தம்

5.     பறவை     -     காட்டுக்கோழி, சேவல்

6.     பறை     -     ஏறுகோட் பறை

7.     தொழில்     -     ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல்

8.     யாழ்     -     முல்லை யாழ்

9.     பண்     -     குறிஞ்சிப் பண்

10.     ஊர்     -     பாடி, சேரி

11.     நீர்     -     குறுஞ்சுனை, கான்யாறு

12.     மலர்     -     முல்லை, குல்லை, தோன்றி, பிடவம்

உரிப்பொருள்

இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

2.3.3 மருதத் திணை முதற்பொருள்

நிலம்     -     வயலும் வயல்சார்ந்த இடமும்

பொழுது     -     அ) பெரும்பொழுது – ஆண்டு முழுதும்

ஆ) சிறுபொழுது – வைகறை, விடியல்

கருப்பொருள்கள்

1.     தெய்வம்     -     இந்திரன் (வேந்தன்)

2.     உணவு         -     செந்நெல், கரும்பு

3.     விலங்கு     -     எருமை, நீர்நாய்

4.     மரம்         -     வஞ்சி, காஞ்சி, மருதம்

5.     பறவை     -     தாரா, நீர்க்கோழி

6.     பறை         -     மணமுழவு, நெல்லரி கிணை

7.     தொழில்     -     விதைத்தல், விளைத்தல்

8.     யாழ்     -     மருத யாழ்

9.     பண்     -     மருதப் பண்

10.     ஊர்     -     ஊர்கள்

11.     நீர்     -     ஆற்றுநீர், பொய்கை நீர்

12.     மலர்     -     தாமரை, கழுநீர்

உரிப்பொருள்

ஊடலும் ஊடல் நிமித்தமும்.

2.3.4 நெய்தல் திணை முதற்பொருள்

நிலம     -     கடலும் கடல் சார்ந்த இடமும்

பொழுது     -     அ) பெரும்பொழுது – ஆண்டு முழுதும்

ஆ) சிறுபொழுது – எற்பாடு

கருப்பொருள்கள்

1.     தெய்வம்     -     வருணன்

2.     உணவு     -     மீன், உப்பு

3.     விலங்கு     -     உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும் எருது), சுறா

4.     மரம்     -     புன்னை, ஞாழல், கண்டல்

5.     பறவை     -     அன்றில், அன்னம்

6.     பறை     -     மீன்கோட் பறை

7.     தொழில்     -     மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு விளைவித்தல், நாவாய் ஓட்டல்

8.     யாழ்     -     நெய்தல் யாழ்

9.     பண்     -     நெய்தல் பண்

10.     ஊர்     -     பட்டினம், பாக்கம்

11.     நீர்     -     உவர்க்குழி (ஊற்றுநீர்), மணற்கிணறு

12.     மலர்     -     நெய்தல், கைதை (தாழை)

உரிப்பொருள்

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

2.3.5 பாலைத் திணை முதற்பொருள்

நிலம்          -     பாலை நிலம்

பொழுது     -     அ) பெரும்பொழுது – வேனிற் காலம், பின்பனிக் காலம்

ஆ) சிறுபொழுது – நண்பகல்

கருப்பொருள்கள்

1.     தெய்வம்     -     கொற்றவை

2.     உணவு        -     வழிப்போக்கரிடம் திருடிய உணவு

3.     விலங்கு      -     யானை, புலி, செந்நாய்

4.     மரம்            -     இருப்பை, உழிஞை

5.     பறவை        -     கழுகு, பருந்து, புறா

6.     பறை            -     சூறை கோட் பறை

7.     தொழில்      -     வழிப்பறி, சூறையாடல்

8.     யாழ்            -     பாலை யாழ்

9.     பண்             -     பாலைப் பண்

10.     ஊர்            -     பறந்தலை

11.     நீர்              -      கூவல் (கிணறு, குழி)

12.     மலர்          -     மரா, குரா

உரிப்பொருள்

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.

இவ்வாறு வரும் திணைக் கருப்பொருள்கள் தத்தம் திணையில் இடம்பெறுவதுடன் பிற திணையிலும் இடம் பெறுவதுண்டு. அதற்குத் திணை மயக்கம் என்று பெயர்.

2.4 களவியல்

காதல் வாழ்க்கையைக் கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு என்று வழங்கப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு தான் மிகுதியாகப் பேசப்படும்.

களவாவது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, முதலிய ஒத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு நெறியில் இருப்பர். களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை.

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியலை அடுத்து, களவியல் என்ற இயல் வருகின்றது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய கைக்கிளை, பொருந்தாக் காதலாகிய பெருந்திணை ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது.

களவு என்பது இன்ப உணர்வின் அடிப்படையில் நிகழக் கூடியது. இக் களவு ஒழுக்கம் நான்கு வகையாகப் பகுத்துக் கூறப்படும். அவை :

காமப் புணர்ச்சி

இடந்தலைப்பாடு

பாங்கொடு தழாஅல்

தோழியிற் கூட்டம்

என நான்கு வகை ஆகும்.

2.4.1 காமப் புணர்ச்சி அன்புடைய இருவர் நல்வினையால் எதிர்ப்பட்டு, காதல் கொள்வது ஆகும். காம வேட்கை மிகுதியால் தான் இக்காதல் உருவாகிறது. இதுவே காமப் புணர்ச்சி எனப்படுகிறது. இது நல்வினைப் பயனால் தன்னியல்பில் நிகழும் புணர்ச்சியாதலின் இயற்கைப் புணர்ச்சி எனவும், தெய்வப் புணர்ச்சி எனவும்படும். முன்னுறு புணர்ச்சி எனவும் இது வழங்கப்படும்.

காதல் எவ்வாறு உண்டாகும் என்பதைத் தொல்காப்பியர் களவியல் நூற்பாவில் (2) விளக்குகிறார்.

ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் இல்லறத்தின் பயனால் அவ்விருவரையும் ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்தும், பிரித்தும் வைப்பதுமான இருவகை ஊழ்வினை உண்டு. அவற்றுள் நல்லூழின் ஆணையால் ஒத்த பிறப்பு, குடி, ஆண்மை, ஆண்டு, அழகு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்துப் பண்புகளுடன் இருக்கும் ஓர் ஆணும், பெண்ணும் கண்டு காதல் வயப்படுவர். இதில் தலைவன் தலைவியுடன் ஒத்த பண்புடையனாகவோ தலைவியின் மிக்கோனாகவோ இருத்தல் வேண்டும்.

தலைவி தன்னுடன் ஒத்த நலன்களால் சிறந்து தோன்றிய வழி தலைவனுக்கு ‘இவள் தெய்வ மகளோ?’ என்ற ஐயம் தோன்றும். ஆனால் அவள் அணிந்துள்ள மாலை, அணிகலன் ஆகியவற்றைக் கண்டு அவள் மானிட மகளே எனத் தெளிவான்.’

பிறகு அவள் தன்மேல் விருப்பம் கொண்டிருக்கிறாளா என அறிய அவள் கண்களை நோக்குவான். காம வேட்கையினால் அந்நான்கு கண்களும் தாம் கொண்ட காதலை உரைக்கும்.

ஒருவரை ஒருவர் காணும் முதற்காட்சியிலேயே மெய்யுறு புணர்ச்சிக்கு உடன்படாது, உள்ளப் புணர்ச்சி அளவிலேயே ஒழுகி மணந்து கொண்ட பின்னரே கூடி மகிழ்வர்.

2.4.2 இடந்தலைப்பாடு இயற்கைப் புணர்ச்சி எனப்படுகின்ற இருவரும் கூடி மகிழ்கின்ற நிலையை நாள்தோறும் நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்படும். முதல்நாள் சந்தித்த அதே இடத்திற்கு ஒவ்வொரு நாளும் தலைவன் சென்று காதலியைச் சந்தித்து மகிழ்வான். இதுவே இடந்தலைப்பாடு ஆகும்.

2.4.3 பாங்கொடு தழாஅல் இடந்தலைப்பாடு இடையூறு இன்றி நிகழ்தல் அரிது. ஆதலால் தலைவியோடு தனக்குள்ள உறவினைப் பாங்கனுக்குக் (தோழனுக்கு) கூறுவான். பிறகு அத்தோழன் அப்பெண் எவ்விடத்தைச் சேர்ந்தவள்? எத்தன்மை உடையவள்? என வினவி, அவள் இருப்பிடம் அறிவான். அவளிடம் சென்று அத்தலைவியைக் கண்டு வருவான். கண்டு வந்து அவள் நிலையைத் தலைவனுக்குக் கூறுவான்.

2.4.4 தோழியில் புணர்வு தலைவியை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து கூட விழையும் தலைவனுக்குப் பாங்கற் கூட்டம் பயன்தராது. அதனால் தலைவியோடு பழகிவரும் உயிர்த்தோழியை நட்பாக்கிக் கொண்டு அவளை இரந்து, அவள் பின் நிற்பான். பிறகு அவள் வாயிலாகத் தலைவியைக் கூடுவதே தோழியிற் புணர்வாம். இது தோழியிற் கூட்டம் எனவும் உரைக்கப்படும்.

2.4.5 இருவகைக் குறிகள் தலைவியைத் தோழி குறிப்பிட்ட ஓரிடத்தில் இருக்கச் செய்து, பின்னர்த் தலைவனிடம் சென்று தலைவி தலைவனுக்காகக் காத்திருக்கும் இடத்தைக் குறிப்பிடுவாள். தலைவன் அவ்விடம் சென்று தலைவியுடன் கூடி மகிழ்வான். இக்கூட்டம் பகலில் நிகழ்ந்தால் பகற்குறி என்றும் இரவில் நிகழ்ந்தால் இரவுக் குறி என்றும் அழைக்கப் பெறும்.

2.5 கற்பியல்

களவு இன்பம் நீண்ட நாட்கள் தொடர முடியாது. களவிற்குப் பல்வேறு இடையூறுகள் உண்டு. அவை அம்பல், அலர் என இருவகைப்படும். அம்பல் என்பது பிறர் அறியாமல் இருவர் தமக்குள் தலைவன், தலைவியின் காதல் செய்தியைப் பரிமாறிக் கொள்வதாகும். அலர் என்பது பலரும் அறியக் காதல்செய்தியைப் பரிமாறிக் கொள்வது. இது விரிந்த மலரின் நறுமணத்தோடு ஒப்புமைப்படுத்தப்படும். ஊரில் அலர் தூற்றத் தொடங்கி விடுவார்கள். அலர் என்றால் ஊரில் உள்ள மக்கள் இந்தத் தலைவன்-தலைவி காதல் பற்றி ஆங்காங்கே பேசத் தலைப்படுதல் ஆகும். இத்தகு சூழல் வரும்போது காதல் வெளிப்பட்டு, பெற்றோரின் செவிகளுக்குச் செய்தி எட்டிவிடுவதும் உண்டு. பெற்றோரில் சிலர் இக்காதலை ஏற்றுக்கொண்டு திருமண ஏற்பாட்டைச் செய்வர்.

பெற்றோரே காதலை அறிந்து, திருமணத்தை முடிக்காமல் பெண்ணையோ, ஆணையோ காதல் நிலையில் இருந்து பிரிக்க நினைத்தால் இருவரும் சேர்ந்து யாருமறியாமல் ஊரைவிட்டு வெளியூர் சென்றுவிடுதலும் உண்டு. இதற்கு உடன்போக்கு என்று பெயர்.

2.5.1 திருமணம் தோன்றிய சூழல் களவில் ஈடுபட்ட இளைஞர் சிலர், அக்களவு வெளிப்பட்ட பின் நான் இவளை அறிந்ததில்லை என்று பேசியும், காதல் மணம் கொண்டவளைக் கைவிட்டும் வந்தனர். இப்பழக்கம் பலரிடம் பரவாதிருப்பதற்காகக் களவு வெளிப்பட்ட பின் பலர் அறியத் திருமணம் நடத்தும் வழக்கம் வந்ததாகத் தொல்காப்பியர் கூறுவார்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப

(கற்பியல்,4)

என்று விளக்கியுரைப்பார்.

திருமணம் முடிந்த பின்னர் முதன் முதலில் தலைவன், தலைவியைக் கண்ணுற்ற நேரம், தலைவன்பால் உண்டான பெருமையும் உரனும், தலைவியிடம் உண்டான அச்சமும் நாணும், மடனும் நீங்கி இருவரின் நெஞ்சமும் அன்பு வயப்பட்டுக் கூடுவர்.

2.5.2 அகத்திணையில் தோழி களவு, கற்பு என்ற இரு நிலைகளிலும் தலைவன், தலைவி ஆகிய இருவருக்கும் உற்ற துணையாய் இருந்து உதவுபவள் தோழியே ஆவாள். தலைவியின் உயிர்க்குயிராய் இருக்கும் தோழி காதலுக்கு உதவுவதிலும், இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்வதிலும், தலைவனைத் திருமணத்திற்கு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுவதிலும் களவியல் நிலையில் உதவியாக இருப்பாள்.

திருமணம் முடிந்த பின்னர், மணம் முடித்து வைத்தமைக்காகத் தலைவன் தோழியைப் பாராட்ட, அது கேட்ட தோழி அது என் கடமை ஆதலின் என்னைச் சிறப்பித்தல் வேண்டாம் என்று கூறுவாள்.கிடைத்தற்கு அரியவளாகக் களவுக் காலத்தில் இருந்த தலைவி, திருமணத்திற்குப் பின் எளியவளாய் ஆனபின் அவளிடம் அன்பு காட்டுவதைக் குறைத்து விட்டாய் என்று தோழி கடிந்து கொள்ளுதலும் உண்டு.

திருமணத்திற்குப் பிறகு தலைவியின் அழகை முழுமையாகத் துய்த்த தலைவன் இன்னொரு பெண்ணைத் தேடிப் பிரிதலும் உண்டு. இது பரத்தையிற் பிரிவு என்று அழைக்கப் பெறும். இத்தகு நேரங்களில் தலைவனுக்கு அறிவுரை கூறி அவனை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் தோழிக்கு உண்டு.

2.5.3 பாங்கனின் பங்கு தலைவனின் நண்பன் பாங்கன் எனப்படுவான். தலைவன் களவுக்காலத்தில் தலைவியின் இருப்பிடம் அறிந்து, அவள் தலைவனிடம் கொண்டிருக்கும் காதலைத் தெரிந்து, தலைவனுக்கு உண்மை நிலையைத் தெரிவிப்பான். காதலுக்குத் துணை நிற்பான். மணம் முடிந்து, பரத்தையிற்பிரிவு நிகழும் போது இது நியாயமில்லை என அறிவுரை கூறுவான்.

2.5.4 கூத்தர், பாணர் நிலைகள் ஆட்டமும், இசையும் வல்லார் சிலர் காதல் வாழ்வில் ஆங்காங்கே தலையிடுவர். தலைவன் எது செய்தாலும் அவனைப் புகழ்ந்துரைக்க வல்லார் கூத்தராவார்.

தலைவன் பிரிந்து சென்ற போது தலைவியிடம் சென்று ஆறுதல் கூறுதலும், தலைவியின் நிலையைத் தலைவனுக்குக் கூறுதலும் கூத்தர், பாணர் செயல்களாகும்.

2.6 அகத்திணையால் உணரப்படும் பண்டைய பண்பாடு

சங்க இலக்கியங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த தொல்காப்பியம் வாயிலாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்பாட்டுச் செய்திகளை நாம் அறிய முடிகிறது.

அக வாழ்க்கை என்பது ஒருவனும் ஒருத்தியும் காதலிப்பது, மணந்து கொள்வது மட்டுமல்ல. காதலிக்கும் போது ஏற்படும் இடையூறுகள், அந்த இடையூறுகளை நீக்கப் போராடும் தலைவன், தலைவி, தோழி, பாங்கன் ஆகியோரின் செயல்பாடுகள் இன்றைய வாழ்வோடும் ஒத்துப் போகின்றன.

திருமணத்திற்குப் பெற்றோர் ஒத்துக் கொள்ளாத நிலையில் உடன்போக்கு நிகழுதலும் இன்றும் உள்ளதுதான்.

திருமணம் என்கிற சடங்கு, ஒரு பெண்ணைக் காதலித்து ஏமாற்றும் இளைஞர்கள் பெருகி விட்ட சூழலில்தான் நிகழ்ந்ததாக அறிகிறோம்.

காதல்கூட, ஒத்த குணமும், ஒத்த செல்வமும், ஒத்த பிறப்பும் போன்ற பத்துப் பண்புகள் ஒத்திருந்தால்தான் நிகழும் எனத் தொல்காப்பியம் கூறுகிறது.

ஆண் அக ஒழுக்கமும், புறவொழுக்கமும் உடையவனாக விளங்கினான். பெண் இல்லத்தில் இருந்து இல்லறத்தை மட்டும் நடத்தி மகிழ்வுற்றாள். ஆதலின் அவள் அக ஒழுக்கத்திற்கு உரியவள் எனக் கருதப்பட்டாள். பெண் வெளிநாடு செல்லவும், படிக்கச் செல்லவும், போர்க்களத்திற்குச் செல்லவும் அனுமதி கிடையாது. தினைப் புனம் காக்க மட்டுமே பெண் அனுமதிக்கப் பட்டிருக்கிறாள். பெண், கடல் கடந்து செல்லக் கூடாது.

பெண்களுக்குக் கற்பொழுக்கம் மிகுதியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கற்பொழுக்கம் இல்லாதவள் பரத்தை என அழைக்கப்பட்டாள். ஆண்கள் பரத்தையர் வீடுகளுக்குச் செல்வது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.

பெண்கள் ஆண்களைத் தம் உயிரினும் மலோகக் கருதினர். ஆண்கள் தம் தொழிலையே மிகுதியும் விரும்பினர். இதனை,

வினையே ஆடவர்க்குயிரே வாள்நுதல்

மனையுறை மகளிருக்கு ஆடவர் உயிர்என (135)

எனவரும் குறுந்தொகைப் பாடல் வரிஅடிகளால் உணரலாம்.

2.7 தொகுப்புரை

அகத்திணைப் பாகுபாட்டினைத் தொல்காப்பியர் மிகவும் ஆழமாகப் பகுத்துக் கூறியிருக்கிறார். ஒவ்வொரு சூழலிலும் யார், யார் உரையாற்ற வேண்டும், என்ன செயல்கள் செய்யவேண்டும் என்பதை விளக்கியுரைத்துள்ளார்.

பொருளதிகாரத்தில் உள்ள அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகியவற்றில், காதல் தோன்றுவது முதலாகக் காதல் வாழ்வின் அனைத்துச் செய்திகளையும் கூறிவிடுகிறார். மேலும் மெய்ப்பாட்டியலில் அகத்திணைக்கு உரிய மெய்ப்பாடுகளையும் விளக்குகிறார்; பொருளியலிலும் அகத்திணையியலிலும் சொல்லாமல் விட்ட செய்திகளை எடுத்துரைக்கிறார்.

சங்க இலக்கியங்கள் பெரும்பான்மையும் இத்தொல்காப்பிய அகத்திணைப் பாகுபாடுகளை அடிப்படையாகக் கொண்டே இயற்றப்பட்டுள்ளன.

பாடம் - 3

புறத்திணைப் பாகுபாடு

3.0 பாட முன்னுரை

அகம் என்னும் சொல்லைப் போலவே புறம் என்பதும் ஓர் இலக்கியக் கலைச் சொல்லாகும். புறம் என்பது காதல் தவிர்ந்த ஏனைய பொருள்களைப் பற்றியது. அதாவது போர், வீரம், கொடை, புகழ், அறநெறி போன்ற வாழ்க்கையின் புறக்கூறுகளைப் பற்றியது. தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் அகம், புறம் ஆகியவற்றைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:

“அகப்பொருளானது போக நுகர்ச்சியாகலான் அதனாலாய பயன் தானே அறிதலின் அகம் என்றார். புறப்பொருளாவது மறஞ் செய்தலும் அறஞ் செய்தலும் ஆகலான் அவற்றாலாய பயன் பிறருக்குப் புலனாதலின் புறம் என்றார்”.

புறப்பொருள் என்பது போர், வீரம், கொடை, புகழ், பிறப்பு, இறப்பு முதலிய சமுதாயப் புறச் செய்திகளைச் சுட்டுகின்றது. இப்பகுதிக்குப் புறத்திணையியல் எனத் தொல்காப்பியர் பெயரிட்டுள்ளார். அகத்திணையியல் காதலை மட்டுமே கூறும். ஆனால் புறத்திணையியலோ, காதல் தவிர மற்ற எல்லாவற்றையும் கூறும்.

புறத்திணைகளைப் பற்றி நாம் அறியும் போதுதான் சமூக வாழ்க்கை பழங்காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

சங்க காலப் புறத்திணைப் பாடல்கள் போர் பற்றிய செய்திகளையும், அரசர்களின் ஆட்சியின் சிறப்பையும், புலவர்கள் மேல் அவர்கள் கொண்டிருந்த பேரன்பையும், மிகச்சிறப்பாக விளக்குகின்றன. மேலும் அப்பாடல்களில் சொல்லப்படும் கருத்துகள் அக்கால மக்களின் வாழ்வியலை முழுமையாக எடுத்துக்காட்டுகின்றன.

3.1 தொல்காப்பியப் புறத்திணையியல்

தொல்காப்பியர் அகத்திணையியல் கூறியதற்குப் பிறகு புறத்திணையியலைக் கூறக் காரணம் என்னவென்றால் அகப் பொருள் பகுதிக்குப் புறனாய பகுதிகளைக் கூறுவதற்கேயாகும். தொல்காப்பியர் முன்னர் அகத்திணைகள் ஏழு வகைப்படும் என்று கூறினார். அந்த அகத்திணைகளுக்கு இவ்வியலில் கூறப்பெறும் புறப்பகுதிகள் அவ்வகத்திணைகளுக்கே புறத்திணைகளாய் அமைந்த சிறப்பினையும் உணர்த்துகின்றார்.

3.1.1 புறத்திணைப் பாகுபாடு காதல் தவிர, பிறவற்றைக் கூறும் புறத்திணைப் பகுதியில் ஏழு திணைகள் உள்ளதாகத் தொல்காப்பியர் கூறுவார். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனப் பெயர் பெறும். அன்பின் ஐந்திணை எனப் பெறும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை போலவே, இப்புறத்திணைகளும் பூக்களின் பெயரைக் கொண்டு பெயர் பெற்றிருப்பதைக் காணலாம். ‘பாடாண்’ மட்டுமே பூப்பெயரைக் கொள்ளவில்லை.

ஏழு அகத்திணைகளுக்கு இணையாக ஏழு புறத்திணைகளைத் தொல்காப்பியர் கூறுகிறார். அகத்திணைக்குரிய குறிஞ்சி இங்கு வெட்சி என்னும் திணை ஒழுக்கத்தைத் தனக்குப் புறத்திணையாகக் கொள்ளும். முல்லைக்கு வஞ்சித் திணை புறத்திணையாகும்.

மருத ஒழுக்கத்திற்குப் புறத்திணையாவது உழிஞைத் திணையாகும். நெய்தலுக்குத் தும்பை என்பது புறத்திணையாகும். பாலை என்னும் நடுவுநிலைத் திணைக்குப் புறத்திணையாக வாகைத்திணை அமையும்.

பெருந்திணை என்னும் பொருந்தாக் காமப் பொருளுடைய அகப் புறத்திணைக்கு நிலையாமைப் பொருள் குறித்த காஞ்சித் திணை புறத்திணையாகும். கைக்கிளை என்னும் ஒரு தலைக் காமத்திற்குப் புறத்திணையாகப் பாடாண் திணை அமையும்.

இவ்வகத்திணைகள் ஏழும், புறத்திணைகள் ஏழும் ஒன்றிற்கொன்று தொடர்புடையனவாகக் கூறப் பெறுதல், தொல்காப்பியரின் நுண்மாண் நுழை புலத்தைக் காட்டுகின்றது.

3.2 அகத்திணைகளும் புறத்திணைகளும்

அகத்திணைகள் ஏழற்கும் ஏழு புறத்திணைகளை இணைத்து இன்னின்ன அகத்திணைகளுக்கு இன்னின்ன புறத்திணைகள் உரியனவாகும் எனப் பிரித்து விளக்கியுள்ளமையை முன்னர்க் கண்டோம்.

தொல்காப்பியர் புறத்திணையியலின் முதல் நூற்பாவில்

அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்

புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்

வெட்சி தானே குறிஞ்சியது புறனே ;

உட்குவரத் தோன்றும் ஈர்ஏழ் துறைத்தே

என்பதன் மூலம் அகத்திணை இலக்கணத்தை முழுமையாக உணர்ந்தோர் மட்டுமே புறத்திணை இலக்கணத்தைச் சிறப்பாக அறிய இயலும் என்ற கருத்தினைக் கூறுகிறார்.

தொல்காப்பியர் அகப் புறப் பொருள்களைப் பிரித்து விளக்கியுள்ள அடிப்படையில் புறத்திணைப் பாகுபாடுகளைக் காண்போம்.

3.2.1 குறிஞ்சியும் வெட்சியும் அகத்திணைக்குரிய குறிஞ்சி, புறத்திணையாகிய வெட்சி என்னும் திணை ஒழுக்கத்தைத் தனக்குப் புறத்திணையாகக் கொண்டமைக்கு நுண்ணிய காரணங்கள் உண்டு. தொல்காப்பியர்,

வெட்சி தானே குறிஞ்சியது புறனே

உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே

-(புறத்திணையியல், 1)

என்று கூறுவார்.

இந்நூற்பாவால் வெட்சித்திணைக்குரிய இடத்தையும், துறையையும் வரையறுத்துக் கூறியுள்ளார். வெட்சி என்ற புறத்திணைகுறிஞ்சி என்ற அகத்திணைக்குப் புறமாக அமைந்தமைக்குரிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிக்கலாம்:

(1)     பகை நாட்டினர் ஆநிரைகளைக் கவர்ந்து கொள்ளுதல் என்பது பசுக்கள் மேயும் குறிஞ்சி நிலத்தில் கோட்டைக்கு வெளியே (காவல் காட்டில்) கட்டப்பட்டுள்ள ஆநிரைகளைக் கவர்வதால் அதுகுறிஞ்சிக்குப் புறமாயிற்று எனலாம்.

(2)     மகளின் உள்ளத்தை இளைஞன் ஒருவன் களவாடுவதே குறிஞ்சித் திணை. அதே போல ஒரு மன்னன் ஆநிரைகளை, வேற்று மன்னனின் வேளையில் கவர்ந்து வருதல் இரவு வெட்சித் திணையாகும்.

3.2.2 முல்லையும் வஞ்சியும் வஞ்சியாகிய புறத்திணை முல்லையாகிய அகத்திணைக்குப் புறமாகும். மாற்றார் நாடெல்லாம் தனக்கே வேண்டுமென்று நினைத்துப் போருக்குச் சென்ற வேந்தனை, ஒரு மன்னன் அஞ்சாது எதிர் சென்று போர் செய்ய முற்படுவதை வஞ்சி கூறும். இதனைத் தொல்காப்பியர்,

வஞ்சி தானே முல்லையது புறனே

எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்

அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே

(புறத்திணையில்,6)

என்று கூறுவார்.

இத்திணையை முல்லைத் திணைக்குப் புறமாகக் கூறியதற்கு நுண்ணிய காரணம் உண்டு. படையெடுத்துச் செல்லும்போது படை இளைப்பாறவும் நீர் அருந்தி, உணவு சமைத்து உண்ணவும், நிழல் சூழ்ந்த இடம் தேவைப்படும். நிழல் சூழ்ந்த காடும், கார் காலத்தில் வேண்டுமளவு நீரும் தேவைப்படுவதால் முல்லைக்கு வஞ்சி புறத்திணையாயிற்று. மேலும் தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவியின் நிலையும் இங்குப் போர்க்களத்தில் வெற்றிக்காகக் காத்திருக்கும் வீரனுக்குப் பொருந்தும்.

3.2.3 மருதமும் உழிஞையும் உழிஞை தானே மருதத்துப் புறனே

முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்

அனைநெறி மரபிற்று ஆகும் என்ப

(புறத்திணையில்,8)

என்று தொல்காப்பியர் உழிஞைத் திணையை மருதத்துக்குப் புறத்திணையாகக் கூறுவார்.

அரண் என்பது இயற்கையான, மற்றும் செயற்கையான அரண்களாகும். உழிஞைத் திணை மருதத்திற்குப் புறமாதற்குரிய காரணம் வருமாறு :வஞ்சியில் போரிட்டுத் தோற்ற வேந்தன், தன் நாடு சென்றுஅரண்மனைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டிருப்பான். போரிட்டு வென்ற வேந்தன் அவன் நாட்டில் புகுந்து இரவில் முற்றுகையிடுவான். போரிடும் காலம் விடியற்காலமாகும். மருதத் திணையில் ஊடல் கொண்ட மகளிர், கணவன் மார்களுக்குக் கதவடைத்துத் தனிமையில் இருப்பர். தலைவனும் விடியற்காலையில் வந்து கதவினைத் திறந்து உள்புக நினைப்பது மருத ஒழுக்கமாகும். இதனால் உழிஞையும் மருதமும் இணையாயின.

3.2.4 நெய்தலும் தும்பையும் தும்பை என்னும் புறத்திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறமாகும்.

இருபெரும் வேந்தரும் ஒரு களத்தில் போரிடுவர். அதற்கு, களரும் மணலும் பரந்த நிலமே போரிடும் களமாக அமையும். அவ்வாறு போரிடுவதற்குப் போதிய இடம் கடலைச் சார்ந்த மணல் பகுதியாக இருப்பது சிறப்புடையது கதிரவன் மறையும் காலம் போர் முடியும் நேரமாகும். எனவே நெய்தலுக்கு உரிய எற்பாடு நேரமே தும்பைக்கும் உரியதாயிற்று. மேலும் போர்க்களம் சென்ற காதலன் உயிருடன் திரும்பி வருதல் அவ்வளவு உறுதியில்லை. எனவே நெய்தலின் உரிப்பொருளாகிய இரங்கலும் இரங்கல் நிமித்தமும் தும்பைக்குப் பொருந்துவதாயின.

இதனைத் தொல்காப்பியரும்

தும்பை தானே நெய்தலது புறனே ;

மைந்து பொருளாக வந்த வேந்தனைச்

சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப

(புறத்திணையில்,12)

என்று உரைப்பர்.

3.2.5 பாலையும் வாகையும் வாகை தானே பாலையது புறனே

தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்

பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப

(புறத்திணையில்,15)

என்று தொல்காப்பிய நூற்பா கூறும்.

வாகை என்பது வெற்றியைக் குறிக்கும். வாகைத் திணை பாலை என்னும் அகத்திணையினது புறமாகும். பாலைக்கு வாகை எவ்வாறு புறமானது என்பதற்குக் கீழ்வரும் காரணங்களைக் கூறலாம்.

1. பாலை தனக்கென ஒரு நிலமின்றி எல்லா நிலத்திலும் வறட்சிக் காலத்தில் உருவாகும். அதுபோல வாகையும் எல்லா நிலத்திலும் நிகழ்வது.

2. காதலுற்ற தலைவனும் தலைவியும் புணர்ச்சியினின்று நீங்கி இல்லறம் நிகழ்த்தி, பொருள் தேடுவதற்காகப் பிரிவது பாலைத் திணை யாகும். வாகையில் புகழ் எய்துவதற்காக, வெற்றி பெற்ற வேந்தன் துறக்கம் (வீடுபேறு) பெறும் கருத்தினால் பிரிவான். எனவே இரண்டிலும் பிரிவு உண்டு.

3. பாலை அறக் காதலை வளர்த்து, மீண்டும் இன்பத்தை மிகுவிப்பது போல, வாகை மறக் காதலை வளர்த்து வெற்றி இன்பம் விளைவிப்பதாலும், பாலை போல வாகையும் குறிப்பிட்ட நிலம் என்ற வரையரையின்றி எங்கும் நிகழுவதாதலாலும் இரண்டும் ஒப்புமையாயின.

4. பாலைக்குரிய பெரும்பொழுதும், சிறுபொழுதுமே போர் நிகழ்ச்சி முடிவு பெறுதற்குச் சிறந்தனவாதலின் நிலம், பொழுது என்னும் இரண்டு முதற்பொருள்களால் வாகை பாலைக்குப் புறமாயிற்று. எத்துறையிலும் வெற்றி காண வேண்டுமாயின் தலைவியைப் பிரிந்தே ஆதல் வேண்டும். எனவே உரிப்பொருளாலும் புறமாயிற்று.

3.2.6 கைக்கிளையும், பாடாண் திணையும் பாடாண் திணையானது கைக்கிளைக்குப் புறத்திணையாகும்.

கைக்கிளையாவது ஒரு நிலத்திற்கோ, ஒரு பொழுதுக்கோ உரியதாகாமல் எல்லா நிலத்திற்கும், எல்லாப் பொழுதுக்கும் உரிய ஒருதலைக் காமமாகும். அதுபோல இதுவும் ஒரு பாலுக்கு உரியது அன்று. ஒருவனை ஒருவன் ஏதேனும் காரணம் பற்றிப் பாராட்டி நிற்பது பாடாண் திணையாகும்.

வெட்சி முதல் வாகை ஈறாக உள்ள திணைகள் போர் தொடுப்போரும் எதிர்ப்போருமாகிய இருவருக்கும் உரியது; காஞ்சியாவருக்கும் உரியது ;அவ்வாறு இல்லாமல் பாடாண் திணைபாடப்படுபவர், பாடுபவர் என்னும் இருவருள் பாடுவோர் விருப்பம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருத்தலின் கைக்கிளை போல இதுவும் ஒருவர் விருப்பமாயிற்று.

இதனைத் தொல்காப்பியர்,

பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே

நாடுங் காலை நாலிரண்டுடைத்தே

(புறத்திணையில்,20)

எனக் கூறுவார்.

3.2.7 பெருந்திணையும் காஞ்சியும் காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும். காஞ்சித் திணை அகத்திணையாகிய பெருந்திணைக்குப் புறத்திணையாகும். அது நன்று அல்லாத சிறப்பினை உடையது; மேலும் நிலைபேறில்லாத இவ்வுலகத்தைப் பற்றிய வழியினைக் கூறுவது ஆகும்.

நன்றல்லாத சிறப்பாவது செயலால் நன்றல்லாதது போல் தோன்றி, கொள்கையால் சிறந்திருத்தல். அன்பின் ஐந்திணைகளில் பெருந்திணையாகிய மடல் ஏறுதல் போல்வன வரின் அவற்றிற்குப் புறமாக ஒதுக்கப்படுதல் போல, வெட்சி முதலிய புறத்திணைகளில் நிலையாமை உணர்வு வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுதலின், காஞ்சி பெருந்திணைப் புறமாயிற்று.

இதனைத் தொல்காப்பியர்,

காஞ்சி தானே பெருந்திணைப் புறனே

பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்

நில்லா உலகம் புல்லிய நெறித்தே.

(புறத்திணையில்,18)

எனக் கூறுகிறார்.

3.3 புறத்திணைகளின் எண்ணிக்கை

புறத்திணைகளை அகத்திணைகளுக்கு இணையாக வைத்து ஏழு என்று தொல்காப்பியர் வகுத்தாலும், பிற்கால இலக்கண நூலாகிய புறப்பொருள் வெண்பாமாலை புறத்திணைகளைப் பன்னிரண்டு என்று கூறுகிறது.

தொல்காப்பியர் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்று ஏழு திணைகளாகக் கூறுகிறார். தொல்காப்பியருக்குப் பின் வந்த இலக்கண ஆசிரியர்கள் புறத்திணைகளைப் பன்னிரண்டாகப் பிரித்தனர். அவை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை எனப்பட்டன. பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற புற இலக்கண நூல்கள் பன்னிரண்டு திணைகளாக விளக்கியுரைக்கின்றன.

எனவே தொல்காப்பியருக்குப் பிறகு புறப்பொருள் மேலும் பிரிக்கப்பட்டதை உணருகிறோம். ஆனால் உரையாசிரியர் இளம்பூரணர் அகங்கை ஐந்து உடையாருக்குப் புறங்கை ஐந்தாதற்போல அகத்திணை ஏழு என்றால் புறத்திணையும் ஏழுதான் என்றுரைப்பர்.

இவற்றுள் கரந்தை, நொச்சி, பொதுவியல் புதிதாகக் கொள்ளப்பட்ட புறத்திணைகளாகும். அகத்திணையுள் அடங்கிய கைக்கிளை, பெருந்திணை புறத்திணையிலும் இணைக்கப்படவே இவற்றின் எண்ணிக்கை பன்னிரண்டாயிற்று.

ஆநிரை கவர்தலைக் கூறிய தொல்காப்பியர், ஆநிரை மீட்டலாகிய கரந்தையைக் கூறவில்லை. ஏனெனில் அகத்திணைகளுக்கு இணையாகவே புறத்திணைகளைக் கூறும்போது ஒருவனும் ஒருத்தியும் காதல் கொள்ளும் களவினைக் கூறியவர் ஆநிரை கவர்தல் என்னும் களவினைக் கூறி ஒப்புமைப்படுத்துகிறார். ஆநிரை மீட்டல் என்றால் களவு நிலை மாறி, அடுத்தவர் தலையீடு நிகழ்ந்து, காதல் முறிக்கப்படுதல் வந்துவிடும் என அவர் நினைத்திருக்கக் கூடும்.

அதே போல, நொச்சித் திணையையும் அவர் கூறவில்லை. நொச்சித் திணை என்பது கோட்டையின் உள்ளே இருந்துகொண்டு தன் மதில் அழிவு படாமல் காத்தலாகும். பகைவேந்தன் மதிலை வளைப்பான். இது, பகைவர் மதிலை அழித்துக் கோட்டைக்குள் நுழையும் உழிஞைத் திணையுள் அடங்கி விடுகிறது. ஏனெனில் ஊடலும், ஊடல் நிமித்தமும் உள்ள மருதத் திணையின் புறத்திணை, உழிஞைத் திணையாகும். வாயில் அடைத்து ஊடல் கொள்ளும் தலைவியின் ஊடல் தீர்த்துத் தலைவன் உள்ளே நுழைந்து விடுவதைக் குறிக்கும் மருதத் திணைக்குப் புறத்திணையாகிய உழிஞையுடன் நொச்சித்திணைச் செய்திகளும் அடங்கிவிடுவதால் அதனைத் தொல்காப்பியர் பிரிக்கவில்லை.

மேலும் கைக்கிளை, பெருந்திணை ஆகியன காதல் பற்றிய செய்திகளுக்கு உரிய ஆகலான் அவற்றைத் தொல்காப்பியர் புறத்திணையில் சேர்க்கவில்லை. பொதுவியல் என்பது புறத்திணைகளில் கூறப்படாது விட்ட துறைகளும் கூறப்பட்ட புறத்திணைகளுக்குப் பொதுவாய் வருவனவும் ஆகியவற்றுக்கு இலக்கணம் கூறுவதாகும். இதனையும் தொல்காப்பியர் கூற வேண்டிய தேவையில்லை என்பதால் விட்டு விட்டார்.

எனவே தொல்காப்பியர் மிகச் சிறப்பாகப் பாகுபாடு செய்த புறத்திணைகளை ஏதோ காரணம் கருதி, பிற்காலத்தார் பன்னிரண்டாகப் பிரித்தனர் என நாம் கருதலாம்.

3.4 திணையும் துறைகளும்

தொல்காப்பியர் ஆநிரை கவர்தல், மண் கவர்தல், கோட்டையைக் கவர்தல் ஆகிய போர்ச் செயல்களில் கவர்பவர், அதனை எதிர்ப்பவர் ஆகியோரின் செயல்களை முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை ஆகிய திணைகளில் விளக்குகிறார். கவர்தல், எதிர்த்தல் என்ற இரு செயல்களுக்கும் தனித் திணைகளை உருவாக்கி ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலையில் வெட்சி – கரந்தை, வஞ்சி – காஞ்சி, உழிஞை – நொச்சி எனப்பகுத்துக் காட்டுகிறார். கரந்தையும் நொச்சியும் முறையே ஆநிரையை மீட்டலையும் கோட்டையை மீட்டலையும் குறிப்பன. இவை தொல்காப்பியரால் வெட்சியிலும் உழிஞையிலும் சுட்டப்பட்டிருக்கின்றன. பல்வேறு நிலையாமைகள் பற்றிக் கூறும் பகுதிக்குத் தொல்காப்பியர் காஞ்சித் திணை எனப் பெயரிட்டிருக்க, ஐயனாரிதனார் அதனை மண் மீட்டலைக் குறிக்கும் திணையாகக் காட்டியிருப்பது மிகப்பெரிய மாற்றமாகும். தொல்காப்பியர் சுட்டிய புறத்திணைகளின் உரிப்பொருளையும் அவற்றின் துறைகள் குறித்த செய்திகளையும் இப்பகுதியில் காண்போம். திணை என்பது முழுச்செயலைக் குறிப்பது. துறை என்பது முழுச்செயலுக்குள் இருக்கும் சிறுசிறு நிகழ்வுகளைக் குறிப்பது.

3.4.1 வெட்சித் திணையும் துறைகளும் பகைவர் நாட்டின்மேல் போர் தொடுக்க எண்ணும் அரசன் போர் தொடங்கும் முன், அறவோர், பிணியாளர், பெண்டிர் முதலியவர்களைப் போர் நடக்கும் இடத்தை விட்டு வெளியேறப் பணிப்பான். தாமே வெளியேற முடியாத பசுக்கூட்டங்களைத் தன்படை வீரர்களைக் கொண்டு கைப்பற்றி வருவான். இது வெட்சிப் போர் ஆகும். ஆநிரை கவர்வோர் வெட்சிப் பூமாலை சூடியிருப்பர். ஆநிரை மீட்போர் கரந்தைப் பூ மாலை சூடியிருப்பர். ஆநிரை கவர்தலைப் போர் தொடங்கு முன் தன் கருத்தைப் பகைவர்க்கு அறிவிப்பது போலவும் கொள்ளலாம். தொல்காப்பியர் வெட்சித்திணைக்கு 14 துறைகள் கூறியுள்ளார். நிரை கவர்தலுக்கும் (வெட்சி) மீட்டலுக்கும் (கரந்தை) இத்துறைகள் பொதுவானவை.

வெட்சியில் கரந்தை

வெட்சித் திணையில் கரந்தை என்ற பகுதியையும் தொல்காப்பியர் கூறுவார். கரந்தையை ஒரு தனித் திணையாகக் கொள்ளவில்லை.

புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ஐயனாரிதனார் ஆநிரை கவர்தலை மட்டும் வெட்சிப் படலமென்று பெயரிட்டு 19 துறைகள் வகுத்தார்.

வெட்சிப் படையினர் தம் ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதைக் கண்டு இடைமறித்துப் போரிடுதலைத் தனித் திணையாக்கிக் கரந்தைப் படலம் எனப் பெயரிட்டு ஐயனாரிதனார் 13 துறைகளை வகுத்துள்ளார்.

3.4.2 வஞ்சித் திணையும் துறைகளும் தன்னை மதியாது தனது நாட்டைக் கைப்பற்றக் கருதிய பகைமன்னன் மேல் தான் படையெடுத்துச் செல்வது வஞ்சித் திணையாகும். இதற்குத் தொல்காப்பியர் 13 துறைகளை வகுத்துள்ளார். படையெடுத்து வருவோரை எதிர்கொள்வதும் வஞ்சித் திணையுள் கூறப்பட்டுள்ளது. வெண்பாமாலை ஆசிரியர் நாட்டைக் கைப்பற்றுதலை மட்டும் வஞ்சிப் படலம் என்று கூறி அதற்கு 20 துறைகளை வகுத்தார். படையெடுப்பை எதிர்த்தலைக் காஞ்சிப் படலம் எனப் பிரித்துக் குறிப்பிட்டு அதற்கு 21 துறைகளை வகுத்துள்ளார். தொல்காப்பியர் காஞ்சி என்பதற்கு வேறுபொருள் கொண்டார்.

3.4.3 உழிஞைத் திணையும் துறைகளும் பகைவர் மதிலை அழித்துக் கோட்டைக்குள் உழிஞை மன்னன் புகுதலைக் கூறுவது உழிஞை ஆகும். தொல்காப்பியர் படையெடுத்து முற்றுகையிடுதல் (உழிஞை), உள்ளேயிருப்பவன் அதைத் தடுத்துக் காத்தல் (நொச்சி) இரண்டையுமே உழிஞையாகக் கொண்டு 12 துறைகள் வகுத்தார்.

உழிஞையில் நொச்சி

நொச்சித் திணையைத் தொல்காப்பியர் தனித்திணையாகக் கொள்ளவில்லை. உழிஞையில் இணைத்தே கூறுகிறார். கோட்டையின் உள்ளே இருந்து கொண்டு தன் மதில் அழிவுபடாமல் காத்தல் நொச்சித் திணையாகும். மதில் காப்போர் நொச்சிப் பூவைச் சூடியிருப்பர். ஐயனாரிதனார் மதிலை வளைத்தலை மட்டும் உழிஞைப் படலம் என்று கூறி அதற்கு 28 துறைகளை வகுத்தார். மதில் காத்தலை நொச்சிப் படலம் என்று தனியாகப் பிரித்து அதற்கு 8 துறைகள் வகுத்தார்.

3.4.4 தும்பைத் திணையும் துறைகளும் பகை அரசர் இருவர் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அவ்விடத்தைப் போர்க்களமாகக் கொண்டு போரிடுதல் தும்பைத்திணையாகும். இவ்வாறு போரிடுவோர் தும்பைப் பூவைச் சூடிப்போரிடுவர். இத்திணை 12 துறைகளை உடையது. ஐயனாரிதனார் இதற்குத் தும்பைப் படலம் என்று பெயரிட்டு 23 துறைகளை வகுத்தார்.

3.4.5 வாகைத் திணையும் துறைகளும் தன் பகை அரசனை வென்று வெற்றி பெறுதல் வாகைத்திணையாகும். வென்ற மன்னன் வாகைப்பூச் சூடி வருவான். வெற்றி பெற்றதும், அதைச் சிறப்பாகக் கொண்டாடுவதும் வாகைத் திணையின் பாற்படும். வாகையின் துறைகள் 18 ஆகும். அரசர்கள் மட்டுமன்றி மற்றவர்களும் அவரவர் துறையில் வெற்றி பெறுதலும் வாகையுள் அடங்கும். புறப்பொருள் வெண்பா மாலை இதனை வாகைப் படலம் எனப் பெயரிட்டு 32 துறைகள் வகுத்துள்ளது.

3.4.6 காஞ்சித் திணையும் துறைகளும் நிலைபேறு இல்லாத உலக இயற்கையைப் பற்றி எடுத்துரைப்பது காஞ்சித் திணையாகும். இதற்கு 20 துறைகள் கூறப்பட்டுள்ளன. வெண்பாமாலை காஞ்சி என்பதற்கு வேறு பொருள் கொண்டு பகைவரைத் தன்நாட்டின் எல்லையைத் தாண்ட விடாமல் தடுத்தல் காஞ்சிப் படலம் என்கிறது. இவர்கள் காஞ்சிப் பூவைச் சூடியிருப்பர். இதற்கு 21 துறைகளைப் புறப்பொருள் வெண்பாமாலை காட்டுகிறது.

3.4.7 பாடாண் திணையும் துறைகளும் வெற்றி பெற்ற அரசனின் வீரம், புகழ், கொடை முதலிய பண்புகளைப் புகழ்ந்து பாடுதல் பாடாண் திணையாகும். இத்திணையில் 25 துறைகள் உள்ளன. புறப்பொருள்வெண்பா மாலை இதனைப் பாடாண் படலம் என்று கூறி 48துறைகளைக் காட்டுகிறது.

திணைகள், துறைகள் ஆகியவற்றின் விரிவும் விளக்கமும் புறப்பொருள் வெண்பா மாலை பற்றிய பாடங்களில் படிக்கலாம்.

3.5 புறத்திணைகள் கூறும் சமூகச் செய்திகள்

புறத்திணைகள் போர்ப் பிரிவுகளை விளக்குகின்றன. ஆநிரைகளைக் கவர்தல் தான் போருக்குத் தொடக்கமாக அமைகின்றது. ஆநிரை கவர்வோர் செயலை ஆநிரையை மீட்போர் மிகக் கடுமையாக எதிர்த்துப் போரிடுவர்.

பகைவன் நாட்டைக் கைப்பற்றவோ, அவ்வரசனின் மகளைப் பெண் கேட்டு, அவன் தர மறுக்கும்போதோ, போர் நடத்தப்பெறுதல் பெரும்பான்மை நிகழ்வாக இருக்கும். சில நேரங்களில் இகழ்ந்து பேசியதாலும் இகழ்ச்சிக்கு ஆட்பட்டவன் போர்தொடுத்தலும் நடைபெற்றுள்ளது.

புறத்திணைகள் போர்ப் பிரிவுகளைக் கூறினாலும் அவற்றிற்குரிய துறைகள் போரின் சிறு சிறு நிகழ்வுகளைக் கூறுவன ஆகும்.

போருக்கு அடிப்படைக் காரணம் உலகப் பொருள்கள் மேல் ஆசையும், பெண்ணாசையுமே ஆகும். புறத்திணைகளில் ஒன்றான காஞ்சித் திணை உலக நிலையாமையை எடுத்துரைக்கிறது. வாழ்வில் ஏற்படும் பல்வேறு அனுபவங்களையும் இது எடுத்துக்கூறுகின்றது. ஆசைகளால் பயன் இல்லை என்கிறது இது.

போர் தொடங்குவதில் இருந்து போர் முடிந்து வெற்றி பெற்றோ, தோல்வியுற்றோ வரும்வரை ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் தான் போர் நிகழ்விற்கும் ஓர் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் உள்ள புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவையும், பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை இலக்கியங்களும் மதுரைக் காஞ்சியும் மேற்கண்ட புற இலக்கணப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டே இயற்றப்பட்டுள்ளன.

3.6 தொகுப்புரை

இப்பாடம் புறத்திணைப் பாகுபாட்டில் தொல்காப்பியர் கூறியதிணைகளையும், துறைகளையும் அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், பிற்காலப் புறப்பொருள் வெண்பாமாலையின் திணை துறைகளையும் நாம் மேம்போக்காக இப்பாடத்தில் அறிந்து கொண்டோம்.

கைக்கிளை, பெருந்திணை ஆகியவை அகத்திணைகளாக இருந்தாலும் அன்பின் ஐந்திணை என்னும் வரையறைக்குள் அடங்காததால் பிற்காலத்தில் புறத்திணையில் இணைக்கப்பட்டன.

பாடம் - 4

ஆற்றுப்படை

4.0 பாட முன்னுரை

இனிய மாணவர்களே! தமிழ் மொழியின் மிகப் பழமையான இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என்பதை அறிவீர்கள்.உலகின் மிகப் பழமையான இலக்கியங்கள் எனவும் இவை கருதப்படுகின்றன. மக்கள் வாழ்வை அகத்திணை, புறத்திணை என்னும்இருவகை ஒழுக்கங்களாகப் பகுத்து, இவைதாம் இலக்கியமாகப் படைப்பதற்கு உரிய பொருள்கள் என்று வகுத்துள்ள தமிழரின் மரபு பற்றியும் அறிந்துள்ளீர்கள்.

ஏழு புறத்திணைகளில் மிகச் சிறந்தது பாடாண்திணை என்பதைச் சங்க இலக்கியத்தை ஆழ்ந்து கற்றால் அறிவீர்கள். இதுதான் ஒரு மனிதனின் தலைமைப் பண்புகளின் உயர்வைப்பாடுகிறது. அறிவு, ஆற்றல், தன்னலம் இல்லாத ஈகைப் பண்பு,அருள் ஆகிய நல்ல இயல்புகள் அனைத்தும் கொண்டவன்தான் மனிதருள் உயர்ந்த தலைமகன் ஆவான். ஒருவனிடம் இருக்கும் இவற்றை ஆராய்ந்து பாராட்டிப் புகழ்வது அவனை மேலும் உயர்த்தும். அவனைப் பின்பற்றும் மக்களிடையே அவனது ஆளுமை பரவி அவர்களையும் உயர்த்தும். இவர்களைக் கொண்ட சமுதாயம் முழுதும் உயர்ந்த பண்புகளால் சிறக்கும். எனவே, பண்புகளின் உயர்வைப் பாடும் பாடாண் திணையே மிக உயர்ந்தது.

பாடாண்திணை பல துறைகளைக் கொண்டது. அவற்றுள் ஆற்றுப்படை என்பது ஒரு துறை ஆகும்.

தொகை நூல் ஆகிய புறநானூற்றில் பல சிறு பாடல்களாக இத்துறை பாடப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்திலும் சில பாடல்கள் ஆற்றுப்படையாக அமைந்துள்ளன. நீண்ட பாட்டுகளான பத்துப்பாட்டில் சரி பாதி ஆன ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படை இலக்கியங்கள் ஆகும். இத்தகைய சிறந்த இலக்கியம் பற்றி இப்பாடம் விளக்கிக் கூறுகிறது.

4.1 ஆற்றுப்படை இலக்கியம்

புலவர்களும் கலைஞர்களும் புலன்களாகிய அறிவில் அழுக்கு இல்லாத சான்றோர்கள் ஆவர். அவர்களது வாழ்க்கை குறித்துப் புறநானூறு பற்றிய பாடத்தில் மேலும் அறிந்து கொள்வீர்கள். அவர்கள் பண்புகளால் உயர்ந்தவர்களை மட்டுமே பாராட்டிப்பாடுவார்கள். தங்கள் பாட்டுக் கலைத்திறனைப் பாராட்டி அந்த வள்ளல்கள் தரும் பரிசில் பொருள்களைப் பெற்று, அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்து வாழ்வார்கள். அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லை என்றாலும் தகுதி இல்லாதவர்களைப் பற்றிப் பொய்யாகப் புனைந்து பாட மாட்டார்கள். பாடப் படுவதற்கு உரிய தகுதி கொண்ட செல்வர்கள் இருக்கும் இடம் தேடி, பழுத்த மரத்தைத் தேடிச்செல்லும் பறவைகள் போலப் பல நூறு கல் தொலைவு, காட்டையும் மலையையும் கூடத் தாண்டிச் செல்வார்கள்.

அவ்வாறு சென்று பலவகைச் செல்வங்களையும் பரிசாகப் பெற்றுத் திரும்பும் ஒரு கலைஞன் எப்படி இருப்பான்? ஒரு சிற்றரசனிடம் படைகளோடு சென்று அவன் செலுத்த வேண்டிய வரியைப் (இது திறை அல்லது கப்பம் எனப்படும்) பெற்றுக் கொண்டு திரும்பும் பெரிய மன்னனைப் போல் காட்சி அளிப்பான்.

பரிசில் பெற்று வருபவன், இன்னும் பெறாதவன் இருவரையும் ஒப்பிட்டால், எல்லா வகையிலும் சமமான கலைஞர்கள்தாம். ஆனால் ஒரே ஒரு வகையில் இருவரும் ஒப்பிடவே முடியாத நிலையில் வேறுபடுகிறார்கள். அது எது? ஒருவன் செல்வச் செழுமையின் உச்சத்தில் இருக்கிறான். மற்றவனோ வறுமையின் அடி ஆழத்தில் கிடக்கிறான்.

பரிசில் பெற்ற கலைஞன் வறுமையில் இருக்கும் கலைஞனிடம் தானே வருகிறான். அவன் மீது பரிவோடு பேசுகிறான். தன் கலைத் திறனைப் பாராட்டிப் பரிசு வழங்கிய வள்ளலின் கொடைத்திறனைப் புகழ்கிறான்; அவன் தகுதிகளை விரித்துக் கூறுகிறான். அவனிடம் சென்றால் வறுமை தீரும் என்று நம்பிக்கை ஊட்டுகிறான். அவனிடம் செல்வதற்கு வழியை விரிவாகக் கூறி வாழ்த்தி அனுப்புகிறான்.

எனவே, கலைஞர்களுக்கு உதவும் வள்ளல்களை வாழ்த்திப் புகழ்பெறச் செய்யும் கலைஞர்கள், தாங்களும் வள்ளல்களாய் இருக்கின்றனர். இதை ஆற்றுப்படை இலக்கியம் உணர்த்துகிறது.

பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், இந்தப் பண்பாடு மிக்க செயலைப் புலவர்கள் பாடாண் திணையின் ஒரு துறையாகப் பாடி இருப்பதைக் காட்டுகிறார். இதுவே ஆற்றுப்படை ஆகும். ஆறு என்றால் பாதை, வழி என்று பொருள். படை என்றால் படுத்துவது – அனுப்பிவைப்பது என்று பொருள்.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்

(தொல். பு.இ. 88: 3-6)

(கூத்தர் = நாடகக் கலைஞர்; பாணர் = இசைக்கலைஞர்; பொருநர் = பாடலிலும் நடித்தலிலும் வல்லவர், போர்க்களத்தைச் சிறப்பித்துப் பாடுபவர்; விறலி = ஆடல், பாடல், நடித்தல் கலைகளில் வல்ல பெண்; உறழ்தல் = மாறுபடுதல்; காட்சி உறழத் தோன்றல் = செல்வ நிலையில் ஏற்றத் தாழ்வு பார்த்த உடனே புலப்படும் வண்ணம் ஒருவர்க்கு ஒருவர் வேறுபட்ட தோற்றத்துடன் காட்சி அளித்தல்; அறிவுறீஇ = விளக்கிச் சொல்லி; பயன்எதிர = வளங்களை அடைய)

இனிய மாணவர்களே, இந்த ஆற்றுப்படை என்னும் துறையைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொண்டீர்கள் அல்லவா?

4.1.1 பண்பாட்டு இலக்கியம் புதையல் இருக்கும் இடம் தனக்குத் தெரிந்ததும், அதைத் தன் உடன் பிறந்தவனிடம்கூடச் சொல்லாமல் மறைத்து வைப்பவர்களைப் பற்றிய எத்தனையோ பிற நாட்டுக் கதைகள் படித்திருப்பீர்கள். ஆனால், தன்னை ஒத்த கலைஞனிடம் பொறாமை கொள்ளாமல், அன்பு கொண்டு தானாகவே சென்று செல்வப் பரிசு கிடைக்கும் இடத்தைக் கூறி, போக வழியும் சொல்லும் இந்தக் கலைஞர்களின் பண்பாட்டைப் பாருங்கள்!

தான் பெற்ற செல்வத்தை அடுத்தவரின் பசி தீர்க்கக் கொடுத்து உதவும் ஈகை என்பதே மக்கள் பண்பில் உயர்ந்த பண்பு. இதனால் கிடைக்கும் இன்பமும் புகழும் தாம் இந்த உலகில் வாழும் உயிர்பெறும் ஊதியம் (சம்பளம்) என்று திருவள்ளுவர் கூறியுள்ளார் அல்லவா? மன்னர்களிடமும், பெரிய செல்வர்களிடமும் பரிசு பெற்று வாழும் புலவர்களிடமும் கலைஞர்களிடமும் இந்தப் பண்புமிக ஓங்கி நிற்பதை ஆற்றுப்படை காட்டுகிறது என்பதை உணர்கிறீர்களா? இவர்கள் வள்ளல்களைவிட ஒருவகையில் மேலும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் எழுகிறதா? “பசித்தவனுக்கு உணவை வழங்குவதை விட, அதை உருவாக்கிக் கொள்ளும் வழியை அவனுக்குச் சொல்லிக் கொடுப்பதே சிறந்த அறம்” என்னும் மேல்நாட்டுப் பொன்மொழியையும் நினைத்துப் பாருங்கள்.

4.2 புறநானூற்றில் ஆற்றுப்படை

புறத்திணை பற்றிய சிறந்த பாடல்களின் தொகுப்பான புறநானூறு பற்றி விரிவாக அடுத்த பாடத்தில் படிப்பீர்கள். இதில் ஆற்றுப்படைத் துறையில் அமைந்த சிறு பாடல்கள் பல உள்ளன.

புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ள முதல் ஆற்றுப்படைப் பாடல் புலவர் ஆற்றுப்படையாக அமைந்துள்ளது. புலவர் பொய்கையார் ஒரு வறுமையுற்ற புலவனைச் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஆற்றுப்படுத்திப் பாடி உள்ளார்.

கோதை மார்பின் கோதை யானும்

கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்

மாக்கழி மலர்ந்த நெய்த லானும்

கள்நா றும்மே கானல்அம் தொண்டி

அஃதுஎம் ஊரே அவன்எம் இறைவன்…. (புற. 48: 1-5)

(கோதை = சேரமன்னனின் பெயர், பூமாலை; மாக்கழி = கருநீல நிறம் கொண்ட கடற்கரை நீர்நிலை; கள்நாறும் = தேன் மணக்கும்; கானல் = கடற்கரைச் சோலை; இறைவன் = மன்னன்)

இவ்வாறு சேர மன்னனையும் அவனது தலைநகர் தொண்டியையும் அறிமுகம் செய்கிறார் புலவர். “தொண்டி தேனின் மணம் கமழும் ஊர். அதுவே எங்கள் ஊர். அவன்தான் எங்கள் அரசன். அவனிடம் நீ சென்றால் அவன் தரும் செல்வங்களைப் பெற்று நீ உன் வறுமையையும், அந்த வறுமை மிக்க கடந்த காலத்தையும் மறந்துபோவாய். அவற்றை மட்டும் அல்ல. வழிகாட்டிய என்னையும் கூட மறந்துவிடுவாய். அதனால் கோதையிடம், “போரில் வென்று வாள் வன்மையால் நீ ஓங்கி நிற்கும் போது தன் வாய் வன்மையால் உன் புகழை ஓங்கச் செய்யும் புலவரைக் கண்டேன்” என்று, என்னை நினைத்துப் பார்த்துச் சொல்” என்று பாடுகிறார் பொய்கையார்.

இப்பாடலில், தொண்டியில் தேன் மணம் கமழ்வதற்குக் காரணம் சொல்கிறார். கோதை என்ற சொல் சேரமன்னன் பெயரைக் குறிக்கும். பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையையும் குறிக்கும். இந்தச் சொல் மீண்டும் மீண்டும் வரும் வகையில் அழகாகச் சொற்களைத் தொடுத்துள்ளார் புலவர்.

கோதை மார்பில் அணிந்துள்ள மாலையின் மலர்கள்; அவனைத் தழுவிய மகளிர் கூந்தலில் சூடிய மாலையின் மலர்கள்; கரிய நிறம் கொண்ட கடற்கரைப் பொய்கையில் மலர்ந்துள்ள நெய்தல் மலர்கள் இவற்றில் உள்ள தேனால் தொண்டி என்ற ஊரே தேன் மணக்கிறதாம்.

வறுமையில் வாடி வள்ளலைத் தேடி வறண்ட நிலத்தைத் தாண்டிச் செல்கிறான், இந்தப் புலவன். இவனுக்குத் தேன் மணத்தால் இனிமையான வரவேற்புத் தருகிறது சேரனின் ஊர். இனிய முகம் காட்டி விருந்தினரை ஓம்பும் வள்ளலின் இயல்பை ஊரின் மேல் ஏற்றி, அங்கு எங்கும் இனிமை, எல்லாம் இனிமை என்று பொய்கையார் உணர்த்துகிறார் இல்லையா?

கடற்கரையில் உள்ள ஊர் அது. அதில் புலால் நாற்றமாகிய மீன் மணம்தான் இருக்கும். ஆனால், அதை மீறிப் பூ மணம் ஆன தேன் மணம் எழுகிறது என்று புலவர் பாடுகிறார். இதில் ஏதோ ஒரு குறிப்புப் பொருள் இருக்கிறது என்று தோன்றுகிறது அல்லவா? என்ன அது? எண்ணிப் பார்ப்போமா?

சேரமான் வீரத்தில் சிறந்தவன். அதையும் விஞ்சுகின்ற வகையில் ஈகைப் பண்பில் மிகவும் சிறந்தவன். இதையே மீன் மணமும் அதை விஞ்சி எழுகின்ற தேன் மணமும் குறிப்பாகச் சுட்டுகின்றன. எப்படி? இரத்தமும் சதையும் நாறும் போர்க்களத்தில் சிறப்பது வீரம். இதைப் புலால் நாற்றமான ‘மீன் மணம்’ குறிக்கிறது. பூப்போன்ற மெல்லிய நெஞ்சத்தில் ஊறும் தேன் போன்றது அருள். எப்போதும் புகழ் மணமும் இனிமையும் கொண்ட இந்த ஈகைப் பண்பைத் ‘தேன் மணம்’ குறிக்கிறது.

4.2.1 சொல்லின் செல்வர் சொற்களைச் சிறப்பாக ஆளுவதில் சங்கப் புலவர்களுக்கு இணை எவரும் இல்லை என்பதை அறிவீர்கள் அல்லவா? இனிய சொற்களால் கூர்மையுடன் சொல்லும் முறை, பொருத்தமும் அழகும் பொருந்திய உவமைகள், இவை அவர்களின் தனிச்சிறப்பு. ஆற்றுப்படைப் பாடல்களிலும் இந்த ஆற்றல் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

உடும்பும் கடும்பும்

பல நாட்களாக உணவையே காணாத பசியின் கொடுமையால், பாணனின் சுற்றத்தார் எவ்வளவு மெலிந்துபோய் இருக்கின்றனர்! உடை இல்லாத அவர்களின் உடம்பின் விலாப் புறத்தில் எலும்புகள் புடைத்து, நடமாடும் எலும்புக் கூடுகளாகக் காணப்படுகின்றனர். இந்த உடம்பைச் சிறந்த உவமையால், அழகிய சொற்களால் ஓவியமாக்கிக் காட்டுகிறார்

கோவூர்கிழார்:

உடும்புஉரித்து அன்ன என்புஎழு மருங்கின்

கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது

சில்செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து

ஈங்குஎவன் செய்தியோ பாண…(புறம் 68: 1-4)

(உடும்பு = பல்லி இனத்தைச் சார்ந்த ஒரு பெரிய உயிர் இனம்; என்பு = எலும்பு; மருங்கு = இடுப்பு, விலாப்புறம்; கடும்பு = சுற்றத்தார்; களையுநர் = நீக்குபவர்; சில்செவித்து = சில செவிகளை உடையது; கேட்போர் குறைந்த)

உடும்பைத் தோல் உரித்ததுபோல எலும்புகள் துருத்திக் கொண்டு தெரியும் இடுப்புப் பகுதியுடன் மெலிந்து காணப்படுகின்றனர் பாணனின் கூட்டத்தார். இந்த நிலைக்குக் காரணம் ஆன பசியைப் போக்கும் வள்ளலைக் காணாமல் தேடி அலைகிறான் பாணன். “இசையின் நுணுக்கங்களை அறிந்து, கேட்டுச் சுவைக்கும் செவிகள் உலகில் மிகக் குறைவு. கேட்பவர்களிலும், பலருக்கு அறிந்து கொள்வதற்கு அரிய கலை இசைக்கலை. ‘இந்தக் கலையைக் கொண்டு வாழும்படி இறைவன் நம்மைப் படைத்துவிட்டானே’ என்று நொந்து நொந்து புலம்பிக்கொண்டு இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் பாணனே?” என்று உரிமையுடன் கேட்டு, நலங்கிள்ளியிடம் போகச் சொல்லி ஆற்றுப்படுத்துகிறார் புலவர்.

உடம்பு பற்றிய உடும்பு உவமை சிறப்பாக உள்ளது. மேலும் ‘கடும்பின்- கடும்பசி’ சொற்களின் ஒத்த அளவும் ஓசையும், கடும்பசியே மனித உருவம் எடுத்து வந்தது போல் இவர்கள் இருக்கின்றனர்’ என்று காட்டுவதுபோல் உள்ளது, இல்லையா?

இரு மருந்து

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மிகச் சிறந்த வள்ளல். இவன் பல புலவர்களால் சிறப்பித்துப் பாடப் பெற்றுள்ளான். நீர் நிறைந்த தை மாதப் பொய்கை போல் அள்ள அள்ளக் குறையாத சோறு கொண்ட இவனது வளம் பல கொண்ட நல்ல நாடு நயமாகப் பாடப்பட்டுள்ளது.

அடுதீ அல்லது சுடுதீ அறியாது

இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்

கிள்ளி வளவன் (புறம் 70: 8-10)

(அடுதீ = சமையல் செய்யும் தீ; சுடுதீ = பகைவர் வந்து ஊரைக் கொளுத்தும் தீ, எதையும் விடக் கடுமையாகக் கொளுத்தும் தீ ஆகிய பசி; இருமருந்து = நீரும், சோறும்)

உலகில் மக்கள் நோய் இன்றி நலமாக வாழ்வதற்கு ஆதாரமாய் உள்ள நீரையும் உணவையும் இருமருந்து என்று பாடியுள்ள கோவூர் கிழாரின் சொல்லாட்சி நயமாக உள்ளது அல்லவா? இருமருந்து என்பது இரண்டு மருந்துகள் என்றும், மருந்துகளுக்கு எல்லாம் பெரிய மருந்து என்றும் இரு பொருள் தரும்.

பொருநன் என்னும் சொல்லும் போர்வீரன், பாடல் ஆடல்களில் வல்ல கலைஞன் என்ற இரு பொருள் கொண்டது. அந்தச் சொல்லால் வள்ளல் சுட்டப்படுகிறான். போர் செய்து வீரத்தால் பல நாடுகளை வென்று பொருள் வளம் சேர்த்துச் சோறு விளைவிக்கிறான். தன் அருள்மிக்க கொடை உள்ளத்தாலும் செங்கோல் ஆட்சியாலும் மழை பெய்யக் காரணம் ஆகி நீரை

விளைவிக்கிறான் என்ற பொருளையும் உள்ளடக்கியவை இந்த வரிகள். ‘நம் ஆள்’தான் அவன் என்று உரிமையுடன் சொல்வதுபோலக் கலைஞன் என்ற பொருளையும் தரும் பொருநன் என்ற சொல் ஆளப்பட்டுள்ளதைப் பாருங்கள்.

வறுமை பேசும் வாய்கள்

கலைஞனின் வறுமையை அவன் உடுத்துள்ள ஆடையின் கிழிசல்கள் நமக்குக் கூறுகின்றன.

கையது கடன்நிறை யாழே, மெய்யது

புரவலர் இன்மையின் பசியே, அரையது

வேற்றுஇழை நுழைந்த வேர்நனை சிதாஅர்

ஓம்பி உடுத்த உயவல் பாண… (புறம் 69: 1-4)

(வேற்று இழை = தைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட வேறு நூல்; வேர்நனை = வியர்வையில் நனைந்த; அரையது = இடுப்பில் உள்ளது; சிதாஅர் = கந்தல் ஆடை; ஓம்பி = பாதுகாப்பாக)

உன் கையில் இருப்பது இலக்கண முறைமை நிரம்பிய யாழ், ஆதரிப்பார் இல்லாமையால் உன் உடம்பின் உள்ளே நிரம்பி இருப்பது பசி” இவ்வாறு தொடங்குகிறார் ஆலத்தூர் கிழார். ‘கடன்நிறை யாழ்’ இலக்கண முறைமையுடன் அமைந்த யாழ், இசைக்கப்படும் யாழ் என்ற பொருளுடன்; சுற்றத்தாரின் பசியை எல்லாம் போக்கும் கடமை நிறைந்த யாழ் என்றும் பொருள் தருகிறது. அதை நம்பிப் பலரிடம் கடன் வாங்கி இருப்பான் அல்லவா? அந்தக் கடனும் நிறைந்த யாழ் என்று இத்தொடர் இன்னும் ஒரு பொருள் குறிக்கிறது.

இடுப்பில் உள்ள கந்தல் உடையில் நெய்த நூலைவிடத் தைத்த நூல் அதிகம் ஆகிவிட்டது. அத்தனை முறை கிழிந்து, தைக்கப்பட்டு உள்ளது அது. இனி நீரில் நனைத்துத் துவைக்க முடியாது, இற்றுப்போய்விட்டது. அதனால் வேர்வையில் மட்டுமே நனைவது அது என்கிறார். பாணன் அதை ‘ஓம்பி’ உடுத்திருக்கிறான். மிகக் கவனத்துடன் பாதுகாத்து உடுத்திருக்கிறானாம். ஏன்?இருப்பது அதுஒன்றுதான். இற்றுப்போய் இருக்கிறது, அமர்ந்து எழுந்தால் மேலும் கிழிந்து போகலாம். பல இடங்களில் கிழிந்திருக்கிறது. கிழிசல் வழி உடம்பின் மானப்பகுதி தெரிந்துவிடக் கூடாது என்று எப்போதும் கவனமாய் இழுத்து இழுத்து மூடிக் கொள்ள வேண்டிய நிலை. இவ்வளவு காரணங்களை ‘ஓம்பி உடுத்த’ என்ற தொடர் அடக்கியுள்ளது. வேறு ஒரு பாடலில் (புறம் 138: 5), சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண என்று ஒரே வரியில் கந்தல் அணிந்த கலைஞன் அழைக்கப்படுகிறான். ‘டார்’ என்ற ஒலியோடு பழந்துணி கிழியும் ஓசையை இந்த, ஓர் அடி தருவதை மனத்தின் செவிகொண்டு கேளுங்கள்; மருதன் இளநாகனாரின் கவிதைத் திறன் புலப்படும்.

4.2.2 வரிசை என்னும் சிறப்பு வள்ளலைக் கண்ட உடனேயே கலைஞனின் வறுமை நிலை மாறிவிடும் என்பதைப் பரிசு பெற்றவன் சொல்வான். தனக்குக் கிடைத்த வரிசை எனப்படும் சிறப்பினை விளக்கியும் இதைக் கூறுவான். அந்தக் கலைஞன் பெறப்போகும் வரிசையை விளக்கியும் இதைச் சொல்வான்.

‘வண்டுகள் மொய்க்காத தாமரைப் பூவைப்

பரிசாகப் பெறுவாய்’ (69: 20-21)

என்கிறான். பொன்னால் செய்யப்பட்ட தங்கத் தாமரைப் பூ இவ்வாறு நயமாகக் குறிப்பிடப்படுகிறது.

“செல்வை ஆகில் செல்வை ஆகுவை” என்ற இனிய சொல்லாட்சியால் கோவூர் கிழாரின் பாடலில் பாணன் பேசுகிறான். (செல்வை = சென்றாய் ஆனால்; செல்வை ஆகுவை = பெரும் செல்வத்தை உடையவன் ஆகிவிடுவாய்)

இழந்துவிட்டும் வரலாம்

என்னென்ன பெறுவாய் என்று சொல்லும் வழக்கிலிருந்து மாறுபட்டு, எதை இழப்பாய் என்றும் கூறுவதாகப் புதுமையாய்ப் பாடுகிறார் புலவர் நெடும்பல்லியத்தனார், இசைக் கருவிகளால் பெயர் பெற்றவர் இவர். பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடுகிறார். யாகம் என்பது வேள்வி. வேள்விகள் பல செய்யும் அவனைத் துறவிகள் பலர் நாள்தோறும் கண்டு வருகிறார்கள். நாமும் அவனைக் கண்டு ஒரு பொருளைத் துறந்து, துறவிகளாகி வரலாம் என்று விறலி ஆற்றுப்படை பாடுகிறார் இப்புலவர். அந்தப் பொருள் எது? வறுமைதான். அதை வறுமை என்று வெளிப்படையாக நேரான சொல்லால் சொன்னால் அது கவிதையாகாது, உரைநடை. அதனால் நயமாகச் சொல்கிறார்:

குடுமிக் கோமான் கண்டு

நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே

(புறம் 64: 6-7)

(புற்கை = கஞ்சி)

மிக அதிக நீரும் மிகச் சிறிய அளவு தானியமும் கொண்டு காய்ச்சப்படுவது கஞ்சி. அதிலும் நீரை அதிகம் கலந்து குடித்துப் பசி தாங்கி வாழ்ந்திருக்கின்றனர். வள்ளல் வழுதியைக் கண்டு, அந்தக் கஞ்சியை (வறுமையை) நீங்கித் ‘துறவு பூண்டு’ வருவோம் என்று நயமாகப் பாடுகிறார். புதுமையாக உள்ளது அல்லவா?

வறுமையை நோக்கினான்; மறுமையை அன்று

”பாணன் சூடிய பசும்பொன் தாமரைப்பூ, சிறந்த அணிகளை அணிந்த விறலி அணிந்த பொன் அரி மாலையுடன் மின்னத், தேரில் பூட்டிய குதிரைகளை இளைப்பாறவிட்டுச் சொந்த ஊரில் இருப்பவர்கள் போல இந்தப் பாலை இடைவழியில் இருக்கும் நீங்கள் யார், யார் என்று எங்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் கந்தல் அணிந்த பாணனே, வெற்றி வேலை உடைய தலைவனான பேகனைக் காண்பதற்கு முன் உன்னை விட மிக்க வறுமையில் இருந்தோம்”, இது பரணர் வள்ளல் பேகனைப் பாடிய பாணாற்றுப்படைப் பாடல். இதில் பாணன் தான் பெற்ற பரிசில்கள் என்னென்ன என்பதைக் கூறுகிறான் அல்லவா?

மயில், தான் உடுத்தவும் செய்யாது; போர்த்திக் கொள்ளவும் செய்யாது என்பதை அறிந்தும் அதற்கு ஆடையைக் கொடையாக வழங்கிய பேகன் எத்தகைய வள்ளல் என்பதையும் எடுத்துக் கூறுகிறான்.

மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண் மையே

(புறம் 141: 14-15)

மறுமையாகிய மேல் உலகத்தில் தனக்கு நன்மை கிடைக்கும் என்று ‘மறுமையை நோக்கி’ அவன் ஈவது இல்லை. மற்றவரின் ‘வறுமையை நோக்கியே’ வழங்குகிறான் என்ற இந்தச் சொற்களின் அழகைப் பார்த்தீர்களா?

நம் பசி தீர்க்க அவன் இரப்பான்

இந்தப் பாடல்களுக்கு எல்லாம் மணிமுடியாக விளங்கும் ஒரு பாணாற்றுப்படைப் பாடலைப் புறநானூற்றில் (180), கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியுள்ளார். ஈர்ந்தூர் கிழான் கோயமான் என்று அழைக்கப்பட்ட தோயன் மாறன் என்னும் குறுநிலத் தலைவனின் வள்ளல் தன்மை மிக அழகாகச் சொல்லப்படுகிறது.

நாள் தோறும் தொடர்ந்து வாரிக் கொடுக்கும் அளவு பெருஞ்செல்வம் அவனிடம் இல்லை. ஆனால் பரிசில் பெறவருபவர்க்கு இல்லை என்று சொல்லும் சிறுமையும் அவனிடம் இல்லை. தன் மன்னனுக்குத் துணையாகப் போர்கள் பல செய்ததால் இவன் உடம்பை இரும்புக் கருவிகள் சுவைத்தன. அதனால் ஏற்பட்ட புண்கள் ஆறி விழுப்புண் ஆகிய வடுக்கள்உடம்பில் மிக உள்ளன. அதனால் மருந்துக்காக வெட்டப்படும் மூலிகை மரத்தைப் போல் அவ்வுடம்பு வாள் செய்த வடுக்கள் மிகுந்து அழகின்றிக் காணப்படுகிறது. ஆனால் அவன் ஆண்மையோ வடு (களங்கம் – குறை) இல்லாதது. அவன், கொடை வண்மைக்கு நண்பன், பாணர் பசிக்குப் பகைவன். கலையில் முதிர்ச்சிமிக்க பாணனே, உன் வறுமை நீங்க வேண்டும் என்றால் என்னோடு அவனிடம் வா.

நாம் அவனிடம் இரக்கும் பொழுது, அவன் வேறொருவனிடம் சென்று இரப்பான். உண்ணாமல் இளைத்த நம் வயிற்றுப்பகுதியை அவனிடம் காட்டி ஒரு பொருளைக் கேட்டு இரப்பான். அந்த வேறொருவன் அவனது ஊரைச்சேர்ந்த வேல் செய்யும் கொல்லன்தான். அவனிடம் என்ன சொல்லி இரப்பான் தெரியுமா? உடனே ஒரு வேல் வடித்துக் கொடு என்றுதான்! போர் செய்து பொருள் தேடி வந்து இவர்களின் வாடிய வயிற்றுக்கு உணவு இட வேண்டும் என்றுதான்!” (இரத்தல் = பொருள் உதவி கேட்டல்).

அருமையான கொடை வள்ளல்தானே இவன்?

இனிய மாணவர்களே! இப்பாடலில் இருந்து என்ன உணர்கிறோம்? கொடையாக வழங்கப்படும் பொருளின் அளவைவிடக் கொடுக்கும் இயல்பாகிய அந்தப் பண்பைத்தான் புலவர்கள் சிறப்பித்துப் பாடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வோம்.

4.3 பதிற்றுப்பத்தில் ஆற்றுப்படை

பத்துச் சேர மன்னர்களைப் பத்துப் புலவர்கள் ஒருவருக்குப் பத்துப் பாடலாகப் பாடிய நூல் பதிற்றுப்பத்து. இது எட்டுத்தொகையுள் புறத்திணை பற்றிய மற்றும் ஒரு தொகை நூல் ஆகும். இதைப் பற்றி விரிவாகப் படிக்க இருக்கிறீர்கள். இந்த நூலிலும் ஆற்றுப்படைத் துறைப் பாடல்கள் (14, 40, 49, 57, 60, 67, 78, 87) உள்ளன. அவற்றைப் பற்றிச் சுருக்கமாகக் காணலாமா?

வள்ளல் பெறும் வாழ்த்துப் பட்டங்கள்

இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியவை பதிற்றுப்பத்தில் ‘இரண்டாம் பத்துப்’ பாடல்கள். மெய்ம்மறை என்பது உடம்பைப் பாதுகாக்கும் கவசம். இந்த வள்ளலை,,, ‘புலவர் முதலிய சான்றோர்களைப் பாதுகாக்கும் கவசம்’ என்று உருவகமாக வாழ்த்துகிறார் புலவர்: சான்றோர் மெய்ம்மறை (14: 12). மேலும் இவன், படை ஏர் உழவ, பாடினி வேந்தே என்றும் (14: 17) புகழப்படுகிறான்.

வன்மையும் மென்மையும்

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆறாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் ஆவான். காக்கை பாடினி நச்செள்ளையார் பாடிய இப்பத்தில் இரு பாடல்கள் ஆற்றுப்படைத் துறையில் அமைந்தவை. 57-ஆம் பாடலின் பெயரே சில்வளை விறலி என்பதாகும். இதில் சேரனின் வள்ளல் தன்மையை அழகிய தொடர்களால் பாடுகிறார்.

“எவருக்கும் அஞ்சாத சேரன், தன் மனைவி ஊடல் கொள்ளும் போது பார்க்கும் கோபப் பார்வைக்கு மட்டும் அஞ்சுவான். அதைக் காட்டிலும் அதிகமாக அவன் அஞ்சுவது, நம் போன்ற கலைஞர்களுக்கு வறுமையால் வரும் துன்பத்தைக் கண்டு மட்டும்தான்” என்று அழகாகப் பாடுகிறார்.

ஒள்நுதல் மகளிர் துனித்த கண்ணினும்

இரவலர் புன்கண் அஞ்சும்

புரவு எதிர் கொள்வன்… (57: 13-15)

(ஒள்நுதல் = ஒளிமிக்க நெற்றி; துனித்த = ஊடலால் சினந்த; புன்கண் = துன்பம், வறுமை; புரவு = ஆதரித்தல்)

இன்னொரு பாடலில், “நிலம் மறுக்காமல் விளைவதால் குறையாத வருவாய் கொண்டது இவனது நாடு. இதன் காட்டுவழியில் செல்லும் நம் பசியை அங்குள்ள உறுதியான மரத்தில் பழுக்கும் மென்மையான இனிய கனிகள் தீர்க்கும்” என்கிறார். முட்டை போன்ற இக்கனிகளை,

“அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி” (60: 5)

என்று பாடுகிறார். மரங்களை அறுக்கும் வாள் அரம் எனப்படும். அந்த ‘அரத்தினால் கூடப் பிளக்க முடியாத வன்மையான (உறுதியான) மரம். அந்த மரத்தில் பழுத்த மென்மையும் இனிமையும் மிகுந்த கனி நம் பசி தீர்க்கும்’ என்று பாடுகிறார். இதன் மூலம் உள்ளே அமைந்த ஒரு பொருளை நமக்குப் புலவர் உணர்த்துகிறார். என்ன அது? எண்ணிப் பாருங்கள்.

சேரனின் உடல், உள்ளம் இரண்டின் உறுதிப்பாடான வீரத்தை மரமும், அவனது இனிய அன்பான கொடைத்திறனைக் கனியும் குறிப்பாகச் சுட்டுகின்றன அல்லவா? வசைபாடும் பகைவர்களுக்கு அவன் கொடியவன்; இசைபாடும் கலைஞர்களுக்கு இனியவன் என்பது புரிகிறது. இந்தச் சிறப்பால் இப்பாடலுக்கு மரம்படு தீங்கனி என்றே தலைப்பும் தரப்பட்டுள்ளது.

இதுவரை, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய இரு புறத்திணைத் தொகை நூல்களிலும் உள்ள ஆற்றுப்படை பற்றிய பாடல்களைப் பற்றிப் பல செய்திகளை அறிந்து கொண்டோம். மின் நூலகத்தில் உள்ள அப்பாடல்களை விரிவாகப் படித்துச் சுவைத்து மகிழுங்கள்.

4.4 பத்துப்பாட்டில் பாதி - ஆற்றுப்படை

இனிய நண்பர்களே! புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் சிறு பாடல்களாக அமைந்துள்ள ஆற்றுப்படை என்னும் துறை, தன்சிறப்பின் காரணத்தால் நெடும்பாடலாகப் பாடப்படுவதாக ஆனது. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில், பாதி இடத்தை அது பிடித்துக் கொண்டது. ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படையாகஅமைந்துள்ளன. அவற்றைப் பற்றி இனி வரும் பாடப் பகுதியில் பார்க்கலாமா?

4.4.1 திருமுருகாற்றுப்படை துன்பம் நீங்கி வாழ்வதே இன்பம். பொருள்செல்வம் இருந்தால் தான் இந்த உலகில் இன்பமாக வாழலாம். இதைப்போல் இறப்புக்குப் பின் உள்ள மறுமை உலக வாழ்க்கைக்கு அருள்செல்வம் வேண்டும். பொருள் செல்வத்தை அடைவதற்கு ஒரு வள்ளலிடம் செல்வதற்கு வழி சொல்லுபவை, நாம் முன்பு கண்ட ஆற்றுப்படைப் பாடல்களும், பத்துப்பாட்டின் மற்ற நான்கு ஆற்றுப்படை இலக்கியங்களும்! அருள் செல்வத்தை அடைவதற்காக, உலகை எல்லாம் படைத்து, அளித்து, காக்கும் வள்ளல் ஆகிய இறைவனிடம் செல்வதற்கு வழி கூறுவது திருமுருகாற்றுப்படை. இதற்கு முருகு, புலவர் ஆற்றுப்படை என்ற வேறு பெயர்களும் உள்ளன.

317 அடிகள் கொண்ட இப்பாட்டை இயற்றியவர் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவரான நக்கீரர் ஆவார்.

பொருளை எவரிடத்தில் இருந்தும் எந்த வழியிலும் பெற முடியும். ஆனால் அருள் உள்ளம் என்பது கடவுளால் மட்டுமே அருளப்படுவது. அதைப் பெறுவதே மறுமை வாழ்வுக்குச் சிறந்தது என்னும் உயர்ந்த நோக்கத்துடன், முருகனிடமிருந்து அருளைப் பெற்ற ஓர் அரும்புலவன் மற்றவனுக்கு அதைப் பெறவழி சொல்வதாக, ஆற்றுப்படையாக நக்கீரர் இந்நூலை இயற்றியுள்ளார்.

முதல் உவமை; முதன்மை உவமை

உலக உயிர்கள் எல்லாம் மகிழ்ந்து வாழக் கடவுள் புரியும் அருட்செயல்களை உணர்ந்து பார்க்கும் உள்ளம்தான், பிறர் நலனுக்காக வாழும் அருள் உள்ளமாய் ஆகும். அந்த இறையருளை உணர்த்துவதே இந்த நூலின் முதன்மை நோக்கம் ஆகும்.

தன் ஊர்தியாகிய தோகை மயில் மீது சிவந்த ஒளிமிக்க மேனியுடன் தோன்றும் முருகனின் தோற்றத்துக்கு, உலகம் எல்லாம் மகிழக் காலையில் நீலக்கடல் அலைகளின் மீது எழும் செங்கதிரோனின் தோற்றத்தை உவமையாகக் கூறி, நூலைத் தொடங்குகிறார் நக்கீரர்,

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு… (1-2)

(உவப்ப = மகிழ; வலன்ஏர்பு = வலப்பக்கமாகச் சுற்றி; திரிதரும் = வலம்வரும்)

இந்த உவமை, முருகனின் அழகிய தோற்றப் பொலிவை மட்டும் சுட்டவில்லை. இருளை அழித்தல், ஒளிவழங்கி உலகைக்காட்டுதல், வெப்பம் என்னும் உயிர்ச்சத்தை உலக உயிர்களுக்கு எல்லாம் ஊட்டுதல் ஆகிய பயன்பாடுகளையும் உணர்த்துகிறது. வெளிப்படையான இவற்றை மட்டும் அன்றி, உள்ளார்ந்த பயன்பாடு தரும் பண்புகளையும் சுட்டுகிறது. தீமைகளைச் சுட்டுஎரித்தல், நன்மைகளின் பால் செலுத்தும் ஞான ஒளிதருதல் ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்துகிறது.

ஆன்மிக ஆற்றுப்படையாக அமைந்துள்ள இந்நூல் ஆறுமுகன் ஆகிய முருகன் காட்சி தரும் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று அருள் பெற வழிகாட்டுகிறது; ஆறுபகுதிகளாக அமைந்துள்ளது.

மந்தியும் அறியாத மரம் அடர்ந்த காடு

முதல் பகுதி முருகனின் திரு உருவச் சிறப்பைக் கூறுகிறது; அவன் அணியும் மாலைச் சிறப்புகளை வருணிக்கிறது; ஆடல் பாடல் முதலியவற்றால் அவனைத் தெய்வ மகளிர் வாழ்த்துவதைக் கூறுகிறது; சூரபதுமனை அழித்த முருகனின் வீரத்தைப் பேசுகிறது;. மதுரை நகரின் பெருமையையும் திருப்பரங்குன்றத்தின் இயற்கை வளத்தையும் சொல்கிறது.

வண்டுகளால் எச்சில் படாத காந்தள் மலர்களால் ஆன கண்ணியைத் தலையில் சூடிய முருகனின் தோற்றத்தை,

மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்

சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்

பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்

(அடுக்கம் = பக்கமலைகள்; சுரும்பு = வண்டு; மூசா = ஊதாத; கண்ணி தலை = மாலை; மிலைந்த = சூடிய)

என வருணிக்கிறார் நக்கீரர்.

பக்க மலையில் உள்ள காடு குரங்குகள் கூட அறியாத மரங்கள் கொண்டது என்று அதன் அடர்த்தியை உணர்த்துகிறார். குரங்குகள் கூட ஏறி அறியாத உயரமான மரங்கள் கொண்ட காடு என்று அதன் வளத்தையும் ஒரே அடியில் உணர்த்துகிறார் நக்கீரர். அந்த அடர்ந்த காடு இப்போது இல்லை. மனிதர்கள் நாம் அழித்துவிட்டோம்.

செந்தூர் சென்றால் செல்வம் பெறலாம்

இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் என்றும் செந்தில் என்றும் இன்று வழங்கும் திருச்சீர் அலைவாய் காட்டப்படுகிறது. அங்கு எழுந்தருளி அன்பர்க்கு அருள் வழங்கும் முருகனின் சிறப்புகளை நக்கீரர் பாடுகிறார். முருகனின் பிணிமுகம் என்னும் யானை ஊர்தி பாடப்படுகிறது. ஆறுமுகங்களின் செயல்களும் பன்னிரு கைகள் ஆற்றும் பணிகளும் கூறப்படுகின்றன.

“ஒருமுகம் உலகைச் சூழ்ந்துள்ள இருளைப் போக்கப் பல கதிர்களை வீசி ஒளி தருகிறது. ஒருமுகம், அன்பர்கள் புகழ மகிழ்ந்து வரம் தருகிறது. ஒருமுகம், விதிகளின்படி மந்திரத்தைக் குறைகள் வராதபடி கூர்ந்து கவனிக்கிறது. ஒருமுகம், மற்ற வேதங்களிலும் நூல்களிலும் உள்ள பொருள்களை ஆராய்ந்து, முனிவரைக் காக்கும் வகையில் திசைகளையெல்லாம் நிலவைப் போல வெளிச்சப்படுத்துகிறது. ஒருமுகம், அசுரர் முதலிய தீயவர்களை அழித்துக் கள வேள்வி செய்கிறது. ஒருமுகம், கொடி போன்ற இடையைக் கொண்ட குறமகள் ஆகிய வள்ளியுடன் சிரித்து மகிழ்ந்திருக்கிறது” என்று ஆறு முகங்களின் அருள்தோற்றத்தை வருணிக்கிறார் நக்கீரர். இதைப் போலவே, பன்னிரு கைகளும் புரியும் திருச் செயல்களும் சிறப்பாகக் கூறப்படுகின்றன. சென்று அவனைக் கண்டு நல்லருள் ஆகிய செல்வம் பெறலாம் என்பது சொல்லப்படுகிறது.

பழனி சென்றாலும் பார்க்கலாம்

திரு ஆவினன் குடி என்னும் பழனி மலையில் எழுந்தருளும் முருகனின் அழகுத் தோற்றம் காட்டப்படுகிறது. முனிவர், தேவர் மற்றும் உருத்திரர், திருமால் முதலிய தெய்வங்களும் முருகனை வழிபடுகின்றனர். பிரணவம் என்னும் மந்திரம் தெரியாததால் முருகனால் சிறையில் அடைக்கப்பட்டான் பிரமன். அவனை, விடுவிக்குமாறு இவர்களெல்லாம் வந்து வழிபடுவதாக நக்கீரர் பாடுகிறார்.

ஏரகம், திருத்தணிகை மற்றும் குன்றுதோறாடல்

மூன்று தீ வளர்த்து அந்தணர்கள் வழிபடும் திரு ஏரகம் சென்றாலும் முருகன் அருள் கிடைக்கும் எனப்பாடுகிறார். திருத்தணிகை முதலிய குன்றுதோறும் அழகிய மகளிருடன் கைகோத்து ஆடல் கோலத்துடன் அமைந்த தோற்றப் பொலிவைக் கண்டு மகிழச் சொல்கிறார்.

பழமுதிர் சோலை சென்று பணிந்து வேண்டுக

அடுத்ததாகப் பழமுதிர்ச் சோலை சென்று முருகனைக் கண்டு அருள் பெறலாம் என்று முடிக்கிறார் நக்கீரர். தினை அரிசியைப் பரப்பி வைத்து ஆட்டுக் கிடாயை அறுத்துப் பலி செய்யும் ஒவ்வோர் இடத்திலும் வந்து வேற்றுமை பாராமல் அடியவர்க்கு அருள் செய்வான் முருகன் என்று பாடுகிறார். இறைவனின் எங்கும் நிறைந்த தன்மை இவ்வாறு காட்டப்படுகிறது.

முருகனைக் கண்டவுடன், வழிபடும் முறை என்ன என்பதையும் சொல்லித் தருகிறார் நக்கீரர். முருகனின் பிறப்பு முதல் தொடங்கி அவனது சிறப்புகள் எல்லாம் இப்பகுதியில் ஒவ்வொன்றாக உணர்ச்சி மிக்க தமிழ்நடையில் உரைக்கப் பெறுகின்றன. “இவை அனைத்தையும் உணர்ந்து, பாடி அவன் அடி பணிந்தால் உன் மீது அன்பு கூர்ந்து இனிய மொழிகள் பல கூறிப் பெறுவதற்கு அரிய பரிசில்கள் தருவான்” என்கிறார்.

… விளிவு இன்று

இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து

ஒருநீ ஆகித் தோன்ற விழுமிய

பெறல்அரும் பரிசில் நல்கும்… (292 – 95)

(விளிவு இன்று = அழிவு இன்றி; முந்நீர் = கடல்; வளைஇய = சூழப்பட்ட; விழுமிய = மிக உயர்ந்த; பெறல் அரும் = பெறுவதற்கு அருமையான)

இருண்ட கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் நீ ஒருவன் மட்டுமே வீடுபேறு அளிப்பதற்கு உரியவனாக ஆகிவிட்டதைப் போல், அழிவின்றித் தோன்றும்படி, மிக உயர்ந்த, பெறுவதற்கு அரிய பரிசிலை உனக்குத் தருவான்” என்பது இவ்வடிகளின் பொருள். கூர்ந்து சிந்தித்தால் அந்தப் பரிசில் அறிவின் தெளிவாகிய மெய்ஞ்ஞானம் என்பதை உணரலாம். அதைப் பெற்றால் நீயும் வீடுபேறு அடையும் தகுதி பெறுவாய்; உலகில் உள்ள மற்றவர்களுக்கும் அதைப் பெற வழிகாட்டுவாய் என்ற நுட்பமான உட்பொருளுடன் நக்கீரர் பாடுகிறார்.

நல்ல இலக்கியம் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருளும் தரும் வகையில் அமைய வேண்டும் என்னும் தமிழ் இலக்கியக் கோட்பாட்டை அறிவீர்கள் அல்லவா? மற்ற இலக்கியங்கள் எல்லாம் அறம், பொருள், இன்பம் பற்றிக் கூறி அவ்வழி நடந்து வீடு பெறும் வழியைக் குறிப்பாக உணர்த்தும்: வீடு பெறுவதை மட்டுமே நோக்கமாக, இலக்கியப் பொருளாக வைத்து முதன் முதலில் பாடிய பெருமைக்கு நக்கீரர் உரியவர் ஆகிறார். அருள் பெற வழி கூறும் ஆற்றுப்படை பாடியதால் அவர் இந்தச் சிறப்பை அடைகிறார்.

4.4.2 பொருநராற்றுப்படை பொருநர் என்ற சொல் இரு பொருள் தரும். போர் வீரர்களையும் கிணை, தடாரி முதலிய பறைகளை முழக்கிப் பாடி ஆடும் கலைஞர்களையும் குறிக்கும். பாடும் பொருநர் ஏர்க்களம்பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பலவகையினர். இப்பாட்டில் இடம் பெறுபவர்கள் தடாரிப் பறை கொட்டிப் போர்க்களம் பாடும் பொருநர் ஆவர்.

சோழன் கரிகால் பெருவளத்தானிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் பொருநன், பெறாதவனுக்கு வழி கூறி அனுப்புவதாக அமைந்த இப்பாட்டு 248 அடிகளை உடையது. இதனை இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார்.

பொருநரும் விறலியும்

பொருநர் விழாக்களில் கூடித் தங்கள் இசைத்திறனைக் காட்டுவர் .ஊர்விட்டு ஊர் செல்வர். போர் நடந்து முடிந்த களங்களுக்குச் சென்று வென்றவரைச் சிறப்பித்துப் பாடுவர். அவர்களுடன் செல்லும் விறலி முடி முதல் அடிவரை சிறந்த அழகு பொருந்தப் பெற்றவள் ஆவாள். வள்ளல்களைப் பாடிப் பரிசிலாகத் தேர், யானை முதலியவற்றைப் பெறுவர் பொருநர் பொன்னால் ஆகிய தாமரைப் பூவைப் பெறுவர். விறலியர் பொன்னரி மாலைகள் பெறுவர்.

வள்ளல் வளவனின் பெருமைகள்

சோழன் கரிகால் பெருவளத்தான் திருமாவளவன் என்றும் சிறப்பிக்கப்பட்டவன். உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன் தாய் வயிற்றிலே இருந்து அரச உரிமை பெற்றுப் பிறந்தவன். இவன் மனைவி நாங்கூர் வேண்மாள். இவன் மிக இளம்வயதிலேயே வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னனையும் வென்றான்.

எளியவரையும் நட்புடன் விரும்பி, விருந்தோம்பும் பண்பாளன். பாணர் முதலிய கலைஞர்கள் பல நாட்கள் தங்கியிருந்துவிட்டு ஒருநாள் தயங்கித் தயங்கி ‘எங்கள் ஊருக்குப் போகிறோம்’ என்று சொன்னாலும், சினம் கொள்வதுபோல் நோக்கி வருந்துவான். இசைக் கலைஞரின் ஏழிசைக்குத் தக்க மதிப்புத் தரும் வகையில் ஏழடி அவர்கள் பின்னால் நடந்து சென்று வழி அனுப்பி வைப்பான். யானைக் கூட்டத்தையும் பொன் பொருளையும் கணக்கின்றி வழங்குவான். இவனது நல்லாட்சியில் நாடு வளம்மிகுந்து செழித்தது. காவிரி ஆறு பெருகி வந்து நாட்டை வளம் பெறச்செய்தது.

நூலின் அமைப்பு

ஆற்றுப்படுத்தும் பொருநன் வழியில் கண்ட பொருநனை அவன் சிறப்பைக் கூறி அழைக்கிறான். அவனது பாலை யாழின் தோற்றத்தை வருணிக்கிறான். விறலியின் மேனி அழகை முடி முதல் அடிவரை வருணிக்கிறான். தான் கரிகால் வளவனைக் காணச் சென்ற போது அவன் விருந்தோம்பிய சிறப்புகளை எடுத்துரைக்கிறான். உண்ட உணவின் வகைகளைச் சுவைபடச் சொல்கிறான். பல நாள் இருந்து ஒருநாள் பிரிந்து போகிறோம் என்று கூறியதற்கு அவ்வள்ளல் வருந்தியதைச் சொல்கிறான். அவன் கொடுத்த பரிசில்களை விரித்துரைக்கிறான். ‘நீ சென்றால் இன்ன பரிசில்கள் பெறுவாய்’ என்று சொல்கிறான். சோழனது நாட்டின் நால்வகை நிலத்தின் வளங்களை எடுத்துச் சொல்கிறான். அவன் நாட்டு மக்கள் வாழும் இனிய வாழ்வைக் கூறுகிறான். மன்னனின் வீரத்தையும் ஆளும் செங்கோல் திறத்தையும் புகழ்கிறான். கரிகாலனின் சோழ நாட்டை வாழ்த்துகிறான்.

பண் மீட்டும் யாழ் மணப் பெண் போலத் தோன்றும்.

புலவர் முடத்தாமக் கண்ணியாரின் கவிதைத் திறம் பாடல் முழுக்கச் சிறப்பாக விளங்குகிறது.

பாலை யாழைப் பற்றிய வருணனை மிகச் சிறப்பாக உள்ளது. அந்த யாழின் முழுத்தோற்றம் “திருமணம் செய்த புதுப்பெண்ணை நீராட்டியது போல் இருக்கிறது” என்று கூறும் உவமை அழகானது:

மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன காட்சி (20)

பசிதீர்ந்தது, பல்லும் தேய்ந்தது

கரிகாலனின் விருந்தோம்பல் சிறப்பைப் பொருநன் கூறும் பகுதிகள் இனிய சொல்விருந்தாக அமைந்துள்ளன.

சென்ற நாள்தொட்டுப் பகலும் இரவும் மூச்சுக் காற்றுக்குக் கூட உள்ளே இடம் இன்றிக் கொழுப்புடைய கறியையே உண்டனர். அதனால் பொருநனுக்கும் அவன் கூட்டத்தார்க்கும் பற்கள் தேய்ந்து போயினவாம். இதைப் புலவர் அழகான உவமை கொண்டு விளக்குகிறார்:

பல்லே கொல்லை உழுகொழு ஏய்ப்ப

எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி ..

(117-118)

(கொல்லை = நிலம்; உழுகொழு = உழுகின்ற ஏர்முனைக் கொழு; எல்லை = பகல்; ஊன் = கறி, மாமிசம்)

“நிலத்தை உழுது உழுது தேய்ந்து போன ஏர் முனைக் கொழுவைப் போல ஊன் தின்று, தின்று பற்கள் தேய்ந்து போயின” என்கிறார்.

பழைய ஆடையும் புதிய ஆடையும்

பொருநன் அணிந்திருந்த பழைய ஆடையில் “ஈரும் பேனும் இருந்து அரசாள்கின்றன. அது, வேர்வையில் நனைந்து அழுக்கில் திரண்டு, கிழிசல்களை மீண்டும் மீண்டும் தைத்ததால் வேறு நூல் நுழைந்த கந்தலாகி விட்டது. அதனால் துணி நெய்தது போல் இல்லை, தைத்தே செய்ததுபோல் இருக்கிறது”.

இந்தப் பழந்துணியை நீக்கி விட்டு உடுத்துக்கொள்ளக் கரிகாலன் கொடுத்த ஆடை எப்படி இருந்தது தெரியுமா?

நூல் இழை ஓடிய வழி எது என்று கண்பார்வை கூட நுழைந்து கண்டுபிடிக்க முடியாதாம். அவ்வளவு நுண்மை! பூ வேலைப்பாடு கனிந்து இருக்கிறதாம். பாம்பு உரித்த தோல்போல் மென்மையாய் உள்ளதாம்.

நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து

அரவுரி அன்ன அறுவை நல்கி… (82-83)

(அரவுரி = பாம்பு உரித்த தோல்; அறுவை = ஆடை)

திணை மயக்கம்

நிலப்பரப்பைப் பற்றிய வெறும் வருணனையாக இல்லாமல், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு வகை நிலங்களும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்து அறிய முடியாதவாறு கலந்திருக்கின்றன என்று புலவர் பாடுகிறார். இது ‘திணை மயக்கம்’ எனப்படும். மயக்கம் என்றால் கலப்பது என்று பொருள். பொருநராற்றுப் படையின் தனிச் சிறப்பு வாய்ந்த பகுதியாக இது அமைந்துள்ளது.

எந்தப் பொருளுக்காகவும் வேறு ஒரு நாட்டை எதிர்பார்க்கத் தேவை அற்ற தன்னிறைவு கொண்ட நாட்டைத் தம் மன்னன் ஆள்கின்றான் என்பதை வலியுறுத்தப் புலவர்கள் திணைமயக்கம் பாடுவார்கள். இந்த நாடு தன் அளவில் ஒரு தனி உலகமாகவேஉள்ளது என்பதையும், பரப்பில் பெரியது என்பதையும் இது குறிப்பால் உணர்த்துகிறது. மழைவளம் இல்லாமல் போனால்தான் பாலை நிலம் தோன்றும். எங்கள் மன்னனின் நல்லாட்சி காரணமாக மழைவளம் குறைவதே இல்லை அதனால் அவனது நிலம் வளம் மிகுந்து உள்ளது என்பதையும் இது குறிப்பாக உணர்த்துகிறது.

வாழும் மக்களைப் பற்றியும் பாடுகின்றனர். இதனால் தனி ஒரு வள்ளலைப் புகழும் பாட்டாக அமையாமல் அவனது குடிமக்களையும் புகழுவதாகப் பாட்டு அமைந்து விடுகிறது. பிற்காலத்தில் குடிமக்களை முன் நிறுத்திக் காப்பியங்கள் தோன்ற இது வழி வகுப்பதாகவும் அமைந்துள்ளது.

பொருநராற்றுப் படையில் நான்கு வகை நில மக்களைப் பற்றியும் சிறப்பாகப் பேசப்படுகிறது.

மருத நிலத்தில் பெடை மயில்கள் அழைத்துக் கொண்டே இருக்கின்றன. ஆண் மயில்களோ பூக்களில் பாடும் வண்டுகளின் இசை கேட்டு நெய்தல் நிலத்துக்கு வந்து ஆடுகின்றன.

களமர்கள் (உழவர்கள்) கரும்பை அரைக்கும் ஓசை, நெல்லை அரிக்கும் ஓசை இவற்றைக் கேட்டுச் சலிப்பு ஏற்பட்டால் நாரைகள், பகன்றை முதலிய மருத நில மரங்களை விட்டு நீங்கி, தோன்றி, காயா, முல்லை மலர்கள் பூத்த முல்லை நிலம் தேடிச் செல்லுகின்றன. அதுவும் வெறுத்தால், உடனே நெய்தல் நிலக் கடற்பகுதிக்கு வந்து இறால் மீனை உண்டு பூத்த புன்னை மரக் கிளையில் கூட்டில் தங்குகின்றன. அங்கு அலை ஓசை தொல்லை செய்தால் மருத நிலத்தின் பனை மரத்தின் மடலில் கூடு கட்டுகின்றனவாம்.

மக்களும் இதைப் போன்றே, மருத நிலத்துக் களமரின் இசையில் சலிப்பு ஏற்பட்டால் முல்லை படர்ந்த காட்டு நிலத்துக்குச் சென்று அந்த நிலத்தைப் பாராட்டுவார்களாம். அந்த இடத்து வாழ்க்கையில் சலிப்பு வந்தால் உடனே மருத நிலத்துக்குப் போய் அந்த நில ஒழுக்கத்தைப் புகழ்வார்களாம். கடற்கரைப் பாக்கத்தில் வாழும் மீனவர்கள் அந்த வாழ்க்கையில் சலிப்பு வந்தால் உடனே அருகில் இருக்கும் மலை நிலத்துக்குச் சென்று குறிஞ்சியைப் புகழ்ந்து பாடுவார்களாம்.

குறிஞ்சி நிலத்து மக்கள் அங்கு விளையும் பொருள்களான தேனையும் கிழங்கையும் மீனவரிடம் கொடுத்து, மாற்றாக மீன் நெய்யையும் மதுவையும் பெறுவார்களாம். இனிய கரும்பையும் அவலையும் விற்கும் மருத நிலத்து மக்கள் அவற்றுக்கு ஈடாகக் குறிஞ்சி மக்களிடமிருந்து மான்கறியையும், கள்ளையும் பெறுவார்களாம். குறிஞ்சிப் பண்ணை நெய்தல் நிலப் பரதவராகிய மீனவர் பாடுவார்களாம். மலைக் குறவர்கள் நெய்தல் பூ மாலையைச் சூடுவார்களாம். முல்லையாகிய காட்டுநில மக்கள் மருதப் பண்ணைப் பாடுவார்களாம். காட்டுக் கோழி வயலில் நெல் கதிரை மேயுமாம். மருத நில வீட்டுக்கோழி மலையில் விளையும் தினைக் கதிரைக் கொத்துமாம். மலையில் உள்ள மந்திகள் நெய்தல் நில உப்பங்கழியில் மூழ்கி விளையாடுமாம். கழியில் இருக்கும் நாரைகள் அஞ்சிப் பறந்து போய் மலை மீது அமருமாம்.

பொதுவாக எப்போது மக்கள் ஒரு நாட்டை விட்டு நீங்கி இடம் பெயர்வார்கள்? அந்த நாட்டில் வளம் குன்றிப் பஞ்சம் ஏற்பட்டால் தான் அதைவிட்டு நீங்கி வேறு இடம் செல்வார்கள். ஆனால் இந்த நாட்டில் வறட்சியோ பஞ்சமோ ஏற்படுவதே இல்லை. அதனால் இங்குள்ள மக்கள் இடம் பெயர்வது அந்த இடத்தின் இன்ப வாழ்க்கையில் சலிப்பு ஏற்படும் போது மட்டும்தான் என்று புலவர் பாடுகிறார். கரிகால் வளவனின் நாடு எந்தக் காலத்திலும் வளம் குறையாதது என நயமாக உணர்த்துகிறார். பசியும் பிணியும் இருந்தால் தானே மக்களுக்குள் பகையும் வெறுப்பும் இருக்கும்? இங்குப் பலவகை நில மக்களிடையிலும் ஒற்றுமை நிலவியது என்று உணர்த்துகிறார் அல்லவா?

கல்லும் உருகும், வில்லும் வேலும் நழுவும்

பொருநர் பாலை யாழை மீட்டிப் பாலைப் பண் பாடுவர். அது துயரச் சுவை நிரம்பிய இசை. கல்லையும் உருக்கும் அந்த இசையின் ஆற்றலைப் பொருநராற்றுப்படை அருமையாகக் கூறுகிறது.

ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறுதலைப் பெயர்க்கும் மறுஇன் பாலை

(21- 22)

வழிப்பறி செய்யும் கள்வர்கள் வழியில் நடந்து செல்பவரைக் கொல்வதற்காகக் கையில் வில், வேல் முதலிய கொலைக் கருவிகள் வைத்திருப்பர். பாலைப் பண்ணைக் கேட்டால், அவர்களின் மனம் உருகி, இக்கொலைக் கருவிகள் கையிலிருந்து தாமாக நழுவிக் கீழே விழுந்து விடுமாம். அருளுக்கு மாறுபாடான கொலைவெறியும் அவர்கள் நெஞ்சை விட்டுக் கழன்று ஓடி விடுமாம். கல்மனம் கொண்ட கொலையாளிகள் நிலையே இப்படி என்றால், கொடையாளிகளான வள்ளல்களின் அருள் உள்ளம் இசையால் எவ்வளவு கனிந்திருக்கும்!

4.4.3 சிறுபாணாற்றுப்படை ஒய்மாநாட்டின் மன்னன் நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் பாடிய பாட்டு இது. சீறியாழ் என்னும் செங்கோட்டு யாழை இசைக்கும் யாழ்ப்பாணன் சிறுபாணன் எனப்படுவான். சிறுபாணனை நல்லியக்கோடனிடம் செல்லும்படி ஆற்றுப் படுத்துவதால் 269 அடி கொண்ட இப்பாட்டுச் சிறுபாணாற்றுப்படை எனப் பெயர் பெற்றது.

நல்லியக்கோடனின் நல்லியல்புகள்

வீரம் மிக்க ஓவியர் குடியில் பிறந்தவன் நல்லியக்கோடன். திண்டிவனம் என்னும் பெயருடன் இப்போது இருக்கும் நகரை உள்ளடக்கிய கிடங்கில் என்ற நகரமாகிய, மாவிலங்கை, எயிற்பட்டினம், ஆமூர், வேலூர் என்னும் நகரங்கள் இவனுடையவையாக இருந்தன.

இயம் என்ற சொல் இசைக்கருவி என்ற பொருள் கொண்டது. தன் பெயரிலேயே இச்சொல்லைக் கொண்ட இவ்வள்ளல் இசைக் கலைஞர்களுக்குப் பொருளை வாரித் தந்து அவர்களையும் கலைகளையும் வாழ வைத்திருக்கிறான். இவன் காலத்தில் இவனுக்கு ஒப்பான கொடையாளிகள் எவரும் இல்லை.

இவனது பெரிய கோட்டை வாசல் இசைக் கலைஞர்கள், புலவர்கள், அருமறை அந்தணர் ஆகியோர் எளிதில் சென்று வரும் வண்ணம் எப்போதும் விரியத் திறந்திருக்கும். ஆனால் பகைவர் எவரும் நுழைய முடியாது. இது, தெய்வங்கள் இருக்கும் மேருமலை ஒரு கண்ணை விழித்துப் பார்ப்பது போன்ற தோற்றம் தருவதாக இந்நூல் பாடுகிறது.

இவன், உயர் பண்புகள் அனைத்தும் கொண்டவனாக இருந்திருக்கிறான். செய்ந்நன்றி அறிதல், சிற்றினம் சேராமை, இனிய முகமலர்ச்சியுடன் எப்போதும் இருத்தல் இவனது சிறப்புகள். சிறந்த அறிவுடையோர் மட்டுமே இவனைச் சுற்றி இருப்பார்கள். அந்த உயர்ந்தோர் புகழும் செயல்களை மட்டுமே செய்வான். தன்னைப் பணிந்தவர்கள் மீது மாறாத அன்பு கொண்டவன். கொடிய சினம் இல்லாதவன். ஆண்மை மிக்க பகைவர் கூட்டத்தில் புகுந்து அதைச் சிதைக்கும் வீரமும் ஆற்றலும் மிக்கவன். தன் படை தளரும் இடத்தில் தான் சென்று அதைத் தாங்கும் உறுதி மிக்கவன். வாள் வீரர்கள் புகழும் வலிமை மிக்கவன். எண்ணியதை அப்படியே நிறைவேற்றும் திண்மை உடையவன், தான் காதலிக்கும் மகளிரால் விரும்பப்படுபவன். அவர்கள் வசம் ஆகிவிடாமல் அவர்களை அன்பால் ஆதரிப்பவன். தன்னைப்போல் அறிவுடையவர்கள் நடுவே அறிவால் உயர்ந்து விளங்குபவன். அறிவில்லாதவர் இடம் எனில் தானும் அறியாமை உடையவன் போல் நடந்து கொள்பவன். சிறந்த மன்னனுக்குத் திருக்குறள் வகுக்கும் எல்லாத் தகுதிகளையும் கொண்டு விளங்கியவன்.

கலைஞர்களின் திறன் அறிந்து பரிசில் வழங்கும் தன்மையாகிய ‘வரிசை அறிதலில்’ வல்லவன். திறமை இல்லாதவர்க்கும் ‘இல்லை’ என்று சொல்லாமல் ஈகை செய்யும் பண்பாளன்.

பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கைப்

பல்லியக் கோடியர் புரவலன் ……….. (124-125)

“பெண் யானைக் கூட்டத்தைப் பரிசிலாக மழைத்துளிகள் போல் சிதறி வழங்கும் பெரிய கையை உடையவன். பல இசைக்கருவிகளையும் இசைக்கும் கலைஞர்களின் புரவலன்” என்று இந்நூல் இவனைப் பாராட்டுகிறது. “யானைகளை மழைத் துளிகள் போல் சிதறும் கை” என்னும் அழகிய கற்பனை வியப்புத் தருகிறது அல்லவா?

பல அறிஞர், கலைஞர் சூழ்ந்திருக்க நடுவில் இவன் பல விண்மீன்களுக்கு நடுவே பால்நிலவு போல வீற்றிருக்கிறானாம்.

இவ்வாறு நல்லியக்கோடனின் நல்ல இயல்புகளை நல்லூர் நத்தத்தனார் பாடுகிறார்.

நூல் அமைப்பு

பாணர்கள் சந்திக்கும் சூழல், விறலியின் முடி முதல் அடிவரையான வருணனை, இவற்றை அடுத்து வள்ளல் நல்லியக்கோடன் தரும் பரிசு மூவேந்தரின் தலைநகர்களைக் காட்டிலும் செழுமையானது என்று கூறுகிறான் பாணன். கடையெழு வள்ளல்களின் பெருமை கூறி அவர்கள் ஏழு பேர் சேர்ந்து தாங்கிய ஈகையென்னும் பாரத்தை இவன் ஒருவனே தாங்கி இழுத்துச் செல்கிறான் என்று சொல்லப்படுகிறது. இந்த வள்ளலிடம் செல்வதற்கு முன்பு தான் இருந்த வறுமை நிலையை உருக்கமாகச் சொல்கிறான். வள்ளலிடம் செல்லும் வழியில் அவன் நாட்டின் நால்வகை நிலங்களிலும் உள்ள அவனது குடிமக்களின் விருந்தோம்பல் சிறப்பும் சொல்லப்படுகிறது. நல்லியக்கோடனை அடைந்தவுடன் அவன் தரும் வரவேற்பு, விருந்தோம்பல், பரிசில் இவை பற்றிக் கூறுகிறான். அவனது புகழையும் பெருமையையும் கூறி முடிக்கிறான்.

கவிதை நலம்

பாட்டின் தொடக்கமே அழகு மிக்க உருவகங்கள் கொண்ட இயற்கை வருணனையுடன் அமைந்துள்ளது.

மூங்கில் ஆகிய தோள்களை உடைய நிலம் ஆகிய பெண்ணின் மார்பகங்களான மலைகளுக்கு இடையே தவழும் முத்து மாலையாகக் கான்யாறு (காட்டாறு) காட்டப்படுகிறது. மழை வெள்ளத்தால் அந்த ஆறு பெருகி ஓடிய போது படிந்த கருமணல், நிலம் என்னும் பெண்ணின் விரிந்த கூந்தலாக உருவகப்படுத்தப்படுகிறது. வெள்ளத்தால் உடைந்த கரையில் இருக்கும் சோலையில் பூத்த மரக்கொம்பிலிருந்து குயில்கள் குடைந்து உதிர்த்த வாடிய புதுப் பூக்கள் அக்கூந்தலில் பூச்சூட்டியது போல உள்ளன.

பொருநராற்றுப்படையில் உள்ளது போலவே

விறலியின் அழகு தலை முதல் கால் வரை வருணிக்கப்படுகிறது. ஒன்றன் இறுதிச் சொல் அடுத்ததன் தொடக்கமாக அமையத் தொடுக்கும் ‘அந்தாதி’ என்னும் தொடை பற்றி அறிந்திருப்பீர்கள் அல்லவா? அந்த வகைச் செய்யுள் அழகோடு இந்த வருணனை பாடப்பட்டுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு ஆகும்.

நடைத் துயரத்தாலும், வெய்யிலில் காய்ந்த கூர்மையான கல்முனைகளாலும் விறலியின் மெல்லிய சிறு காலடிகளில் கொப்புளங்கள் தோன்றி உள்ளன. இந்தச் சிறிய காலடி, ‘ஓடி இளைத்து வருந்தும் நாயின் நாக்குப் போல்’ இருப்பதாக நத்தத்தனார் உவமிக்கிறார். அளவால் சிறியது, சிவந்த நிறம் கொண்டது, வேர்வை சொட்டுவது, கொப்புளங்கள் கொண்டதுஆகிய இந்த இயல்புகளின் ஒற்றுமையாலும், வடிவ ஒப்புமையாலும் இந்த அரிய உவமை சிறப்பும் பொருத்தமும் உடையதாக அமைந்துள்ளது.

சாஅய்

உயங்குநாய் நாவின் நல்எழில் அசைஇ

வயங்குஇழை உலறிய அடி… (16-18)

(சாஅய் = பொலிவை இழந்து; உயங்கு நாய் = வருந்தும் நாய்; வயங்குஇழை = ஒளிவீசும் நகை (சிலம்பு); உலறிய = வற்றிப்போன, நீங்கிய)

நாய் ஒரு குறிக்கோள் இல்லாமல் அங்கும் இங்கும் ஓடும். பின் ஓரிடத்தில் இருந்து இளைக்கும். இந்தப் பாணனும் குழுவினரும் தங்களை ஆதரிக்கும் சிறந்த வள்ளலைத் தேடி நாடெங்கும் வீணாக அலைந்து திரிந்து, களைத்து இங்கே அமர்ந்திருக்கின்றனர் என்பதையும் இந்த உவமை குறிப்பாக

உணர்த்துகிறது. நகைகள் உலறிய என்னும் சொல்லாட்சியைப் பாருங்கள். இதற்கு, உலர்ந்து போன, வற்றிப்போன என்று பொருள். சிலம்பு முதலிய நகைகளை இவர்கள் உடம்பிலிருந்து வறுமை வற்றிப்போகச் செய்துவிட்டதாம். பசித்தீயை அடக்க விற்று உண்டுவிட்டார்களோ?

நால்வகை நில வளத்தையும் மற்ற நூல்களில் பாடுவதுபோல் திணை மயக்கமாகப் பாடவில்லை. நத்தத்தனார் புதுமையாகப் பாடுகிறார். இது அழகிய நில வருணனையாக அமையாமல், அந்நில மக்கள் தம் அழகிய பண்புகளின் வருணனையாகவே இருக்கிறது. ‘நல்லியக்கோடனின் நாட்டினுள் அடி எடுத்து வைத்தாலே போதும் நம் வறுமை நீங்கிவிடும், அவனது குடிமக்களும் விருந்தோம்பும் பண்பு மிக்க வள்ளல்களாக உள்ளனர், என்று உணர்த்தும் வகையில் பாட்டு அமைந்து உள்ளது. அந்தந்த நிலமக்களின் சிறப்பான உணவு வகைகளையும் பற்றித் தெரிவிக்கிறது.

வறுமை பற்றிய செழுமையான வரிகள்

நல்லியக்கோடனைக் காண்பதற்கு முன்னால் சிறுபாணனின் குடும்பம் இருந்த நிலை கூறப்படுகிறது. அவன் வீட்டுச் சமையல் அறையில் பாத்திரங்களின் ஓசை கேட்கவில்லை. குட்டி போட்ட நாய் ஒன்றின் அவலமான முனகல் கேட்கிறது. பசி கொண்ட, இன்னும் கண் திறக்காத மிக இளமையான குட்டிகள் அவை. தனக்கும் உணவு இல்லாததால் பால் சுரக்காத தாயின் முலைக் காம்புகளைக் குட்டிகள் சுவைக்கின்றன. இதனால் வலி தாங்க முடியாமல் அந்தத் தாய் நாய் ஒலி எழுப்புகிறது.

கூரையின் மூங்கில் கழிகள் இற்று விழுந்துவிட்டன. சுவர்களில் கறையான் புற்றெடுத்துக் காளான் பூத்திருக்கிறது. உண்பதற்கு எந்த உணவுப் பொருளும் இல்லை. பாணனின் மனைவி குப்பையில் வளர்ந்து கிடக்கும் இழிந்த கீரையான குப்பைக்கீரையைப் பறித்துவருகிறாள். அவள் இடை மிக மெலிந்து நுண்மையாய் இருக்கிறது. அழகினால் அல்ல; பசியினால் ! கீரைக்குச் சுவை ஊட்ட உப்புக்கூட இல்லை. உப்பின்றி அதை வேக வைத்துத் தன் பெரிய கூட்டத்துடன் உண்கிறான் பாணன். இங்கே, ஓர் இழிவான நிலை தனக்கு நேர்ந்ததை நினைத்து வருந்துகிறான்.

உணவு உண்ணும் பொழுது தங்கள் வீட்டின் கதவுகளை விரியத் திறந்து வைத்து, “சேர்ந்து உண்ண யாராவது வருகிறீர்களா?” என்று அழைத்த பிறகு உண்ணுவதே அன்றையநாள் தமிழரின் வாழ்வியல் நடைமுறையாக இருந்தது. கதவை அடைத்துத் தாமே உண்பது இழிவு என்று கருதப்பட்டது. அந்த இழிசெயலைத் தான் செய்ய நேர்ந்ததே என்று பாணன் வருந்துகிறான். இவன் கதவை அடைத்து உப்பின்றி வெந்த கீரையை உண்டதற்குக் காரணம் யாரும் பங்குக்கு வந்துவிடக் கூடாதே என்பது அல்ல. ‘வாழ்வில் வறுமையை அடைவது எல்லார்க்கும் இயல்பானதுதான் என்பதை உணராத அறிவற்ற மக்கள் பலர் உள்ளனர். அவர்கள் இழிவாகப் பேசிப் புறங்கூறுவார்களே, அதற்கு நாணம் கொண்டுதான்’ என்று சொல்கிறான் பாணன்.

மடவோர் காட்சி நாணிக் கடைஅடைத்து

இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஉடன் மிசையும்… (138-39)

(மடவோர் = அறிவற்றோர்; கடை = கதவு; இரும்பேர் ஒக்கல் = மிகப் பெரும் சுற்றம்; உடன்மிசையும் = சேர்ந்து உண்ணும்)

அந்த வறுமை எல்லாம் போய் ஒழியும்படி பொருளை வாரிக் கொடுத்தான் வள்ளல் நல்லியக்கோடன் என்று வாழ்த்துகிறான்.

மேலும் சில சிறந்த உவமைகள்

யாழின் வருணனை இப்பாட்டிலும் சிறப்பாக அமைந்துள்ளது. மிகச் சிறந்த உவமைகள் கூறியுள்ளார் நத்தத்தனார்.

நறுமணம் மிக்க காய்ந்த பெரிய மரத்தைக் கடல் அலைகள் கரையில் ஒதுக்கி இருக்கின்றன. அந்த மரம் ‘ஒட்டகம் உறங்குவது போல்’ கிடக்கிறதாம்.

மூங்கிலை உடைத்துப் பிளந்தால் உள்ளே ஒருவகை வெண்ணிறத்தோல் இருக்கும். அதைப் போன்ற மெல்லிய, தூய்மையான வழவழப்பான வெள்ளை ஆடைகளை நல்லியக்கோடன் பாணர்க்கு வழங்குவானாம்.

இந்நூலின் பல சிறப்புகளில் ஒன்று: கடையெழு வள்ளல்கள் பற்றிய முழுமையான வரலாற்றுச் செய்தி சுருக்கமாக இந்நூலில்தான் கூறப்பட்டுள்ளது.

4.4.4 பெரும்பாணாற்றுப்படை பேரியாழ் இசைக்கும் பாணன் பெரும்பாணன் எனப்பட்டான். பெரும்பாணனை ஆற்றுப்படுத்துவதால் இந்நூல் பெரும்பாணாற்றுப்படை என்று பெயர் பெற்றது. இது 500 அடிகள் கொண்டது, பெரியது. இதுவும் பெயருக்குக் காரணமாய் இருக்கலாம். பாடப்படும் வள்ளல் தொண்டைமான் இளந்திரையன், பாடிய புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பத்துப்பாட்டில் உள்ள பட்டினப்பாலை என்னும் இன்னொரு பாட்டையும் இயற்றியவர் இவர்.

ஆளுமைச் சிறப்பு

அந்நாளில் சேர, சோழ, பாண்டிய நாடுகளைத் தவிர, அவற்றைச் சுற்றிப் பல சிறு நிலப்பரப்புகள் இருந்தன. இந்தக் குறுநிலங்களின் மன்னர்கள் வேளிர் என்று குறிப்பிடப்பட்டனர். இவற்றுள் தொண்டை நாடு பெரிய நிலப் பரப்பை உடையது. தொண்டை மண்டலம் எனப்பட்டது. அந்நாட்டு மன்னர்கள் தொண்டைமான் என்னும் சிறப்புப் பெயர் பெற்றனர். இளந்திரையன் அந்த மரபில் வந்தவன். நல்லாட்சித் திறனும், மிக்க வீரமும் கொண்ட இவன் சிறந்த புலவனாகவும் திகழ்ந்திருக்கிறான். நற்றிணையில் மூன்று பாடல்களும் புறநானூற்றில் ஒரு பாடலும் இவனால் பாடப்பெற்றவை.

இவனது பெருமைகளை இந்நூல் பேசுகிறது. துரியோதனனையும் அவனது பெரும்படையையும் அழித்த ஐவராகிய பாண்டவரைப் போலத் தன் பகைவர்களையும் அவர்தம் துணைவர்களையும் அழித்தவன். இவனது தலைநகர் காஞ்சிபுரம். தன்னைத் தஞ்சம் என்று பணிந்தவர்களைப் பாதுகாப்பவன். எதிர்ப்பவர் நாட்டில் உள்ள ஊர்ப் பொது மன்றங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பாழ் மண்டபங்கள் ஆகும்படி அழிக்கும் ஆற்றல் கொண்டவன். காஞ்சியில புறாக்கள் தங்கும் உயர்ந்த மாடங்கள் கொண்ட அரண்மனையில் அரியணையில் இருந்து அரசாட்சி செய்பவன். அக்காட்சி கீழைக் கடலில் கதிரவன் எழும் காட்சி போல் இருக்கிறது. மூவேந்தரும் கடலில் விளையும் சங்கு போன்றவர்கள் என்றால் இளந்திரையன் சங்குகளில் மிக உயர்ந்த வலம்புரிச் சங்கு போன்றவன். குழந்தையாகக் கடல் அலைகளால் கரையில் ஒதுக்கப்பட்டுத் திரையன் என்று பெயர் பெற்றுப் பின் சோழனால் அரசன் ஆனவன் என்ற வரலாறும் இந்த நூலில் சுட்டப்படுகிறது.

ஆட்சிச் சிறப்பு

வெற்றி வீரர்கள் பலர் நல்ல ஆட்சி வழங்கும் ஆட்சியாளர்களாகச் சிறப்புப் பெற்றதில்லை. ஆனால், இளந்திரையன் ஆட்சி புரிவதில் திறமை வாய்ந்தவனாக விளங்கியிருக்கிறான். இவனது பாதுகாப்பு மிக்க அகன்ற பெரிய நாட்டில் ஆறலை கள்வர் எனப்படும் வழிப்பறித் திருடர்கள் இல்லை. இடியும் கூட ஓசை எழுப்பி எவருக்கும் அச்சம் உண்டாக்காது, பாம்புகளும் மக்களைக் கடித்ததில்லை. புலி போன்ற காட்டு விலங்குகளும் யாருக்கும் துன்பம் செய்வதில்லை. ‘அதனால் இளைத்த போது காட்டில் அச்சம் இன்றி இளைப்பாறி, தங்கிப் போக விருப்பம் இருந்தால் தங்கிச் செல்வாயாக’ என்று பாணன் கூறுகிறான்.

அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக்

கைப்பொருள் வௌவும் களவுஏர் வாழ்க்கைக்

கொடியோர் இன்று அவன் கடியுடை வியன்புலம்

உருமும் உரறாது அரவும் தப்பா

காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு

அசைவுழி அசைஇ நசைவுழித் தங்கிச்

சென்மோ இரவல…    (39-40)

(அத்தம் = காட்டுவழி; வௌவும் = பறிக்கும்; கடி = காவல்; வியன்புலம் = அகன்ற நாடு; உருமு = இடி; உரறாது = முழங்காது; அரவு = பாம்பு; உறுகண் = துன்பம்; வேட்டாங்கு = விரும்பியபடி; அசைவுழி = இளைத்தபோது; நசைவுழி = விரும்பிய போது; சென்மோ = போவாயாக)

எந்த அச்சமும் இன்றி எந்நேரமும் விரும்பியபடி பயணம் செய்யலாம் என்கிறான்.

மிகச் சிறந்த செங்கோல் மன்னர்கள் ஆளும் நாடு இவ்வாறுதான் இருக்கும் என்பதை, சிலப்பதிகாரம் இதே கருத்துகளை எடுத்துரைப்பதைக் கொண்டு நாம் தெளியலாம்.

அழகிய வருணனை

சிறந்த வருணனைகளையும் உவமைகளையும் இந்நூலில் காணலாம். எடுத்துக்காட்டாக,

முயல்; இது சொல்லால் வரைந்த ஒரு கோட்டு ஓவியம் போல அழகாக வருணிக்கப்படுகிறது.

முள்அரைத் தாமரைப் புல்இதழ் புரையும்

நெடுஞ்செவிக் குறுமுயல்… (114-15)

“தாமரைப்பூவின் இதழைப் போன்ற நீண்ட செவியை உடைய குட்டை முயல்”

அரிய செய்திகள்

வேதம் ஓதும் பார்ப்பனர் இல்லங்களில் வளர்க்கும் கிளியும் வேதம் ஓதும் என்ற செய்தி கூறப்படுகிறது மற்ற நில மக்கள் தங்கள் சிறப்பு உணவைத் தந்து பாணனை விருந்தோம்புவது போல், அந்தணர் வீடுகளில் பருப்புச் சோறும் பால் சோறும் வழங்குவர் என்ற செய்தி தரப்படுகிறது. மாவடு ஊறுகாய் பற்றிய தகவலும் சொல்லப்படுகிறது.

பொலியும் பொலி

வளமான வயலில் விளைந்த நெல்லை மேல் காற்றில் தூற்றிக் களத்தில் குவியலாக இட்டு வைத்துள்ளனர். இது பொலி எனப்படும். இந்தப் பொலியின் பொலிவை விளக்க அழகான உவமை கூறுகிறார் புலவர். உயரம், நிறம், மதிப்பு இவற்றால் இந்தப் பொலி வடக்கே உள்ள பொன்மலை ஆகிய மேரு மலை போல் காட்சி அளிக்கிறதாம் (240 – 41)

இளந்திரையனின் கொடைச் சிறப்பு

“இளந்திரையனின் தலைநகர் காஞ்சி, பலவகைப் பறவைகளும் வந்து கூடி உண்ணும் பழுத்த பெரிய பலா மரம் போன்றது. உலகில் உள்ள நகரங்களில் மிகச் சிறந்தது. அங்கு இருந்து அரசாளும் அவனைக் கண்டு வாழ்த்தி உன் பேரியாழை இசைத்துப் பாடினால், அவன் பாலின் ஆவியைப் போன்ற மெல்லிய ஆடையை உனக்குத் தருவான். நிலவைப் போன்ற பெரிய வெள்ளித் தட்டைச் சூழ விண்மீன்கள் போன்ற பல சிறு தட்டுகளைப் பரப்பி உனக்கும் உன் சுற்றத்தார்க்கும் கொழுப்பு மிக்க இறைச்சியை உணவாகத் தருவான். முக மலர்ச்சியுடன், குறையாத விருப்பத்துடன், உறவுமுறை சொல்லிச் சொல்லித் தானே நின்று உண்ணச் செய்வான். உனக்குப் பொன்னால் செய்த தாமரைப் பூவைப் பரிசாகத் தருவான். வண்டுகள் மொய்க்காததும் நெருப்பில் பூத்ததும் ஆன புதுமைப் பூ அது. விறலியர்க்குப் பொன்னரி மாலைகள் தருவான். தேர்களையும் குதிரைகளையும் குறைவின்றி வழங்கும் வள்ளல் அவன்” என்று பெரும்பாணன் வழி கூறி அனுப்புகிறான்.

4.4.5 மலைபடுகடாம் ஆற்றுப்படை நூல்களுள் தனிச் சிறப்புக் கொண்டது மலைபடுகடாம். 583 அடிகள் கொண்ட மிகப்பெரிய இந்நூலுக்குக் கூத்தராற்றுப்படை என்ற வேறு பெயரும் உண்டு.

ஆசிரியர் பற்றி

இதனை இயற்றியவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் ஆவார்.

ஆகுளி, எல்லரி, குழல், குறும்பரந்தூம்பு, சிறுபறை, சீறியாழ், தட்டை, தண்ணுமை, துடி, தூம்பு, பதலை, பன்றிப் பறை, பாண்டில், பேரியாழ், முழவு முதலிய பலவகை இசைக்கருவிகள் பற்றிக் கூறியுள்ளார். குறிஞ்சி, படுமலை, மருதம் ஆகிய பண்களைப் பற்றியும் பாடியுள்ளார். யாழைப் பற்றிய சொல் ஓவியம் தீட்டுகிறார். அடர்த்தியான காட்டுவழியில் செல்லும் போது இசைக்கருவிகளுக்கு நேரும் இடையூறுகள் பற்றியும், அவற்றைத் தவிர்த்துக் கவனமாகச் செல்லும் வழிமுறைகள் பற்றியும் சொல்லியுள்ளார். இசைக் கலையில் நுண்மையான புலமையும், இசைக் கருவிகள் பற்றிய தெளிந்த ஆழமான அறிவும் உடையவர் இவர் என்று இவை காட்டுகின்றன.

மலை சார்ந்த நிலப்பகுதி பற்றியும், அதில் காணப்படும் செடி கொடிகள், மரங்கள், விலங்குகள், பறவைகள், மக்கள் பற்றியும் மலையில் எழும் பல வகையான ஒலிகள் பற்றியும் அருமையான பல தகவல்கள் தரும் கலைக்களஞ்சியமாக இந்நூலைப் படைத்துள்ளார்.

பல்குன்றக் கோட்டம் என்னும் மலை நாட்டை ஆண்ட நன்னன் சேய் நன்னன் என்னும் வேள் இந்நூலின் பாட்டுடைத் தலைவன் ஆவான். நவிர மலை இவனது மலை. சேயாறு பாயும் வளம் மிக்க இவனது நாட்டின் தலைநகர் செங்கண்மா. இப்போது செங்கம் என்று வழங்கும் இந்த நகரில் அக்காலத்தில் பெரிய கோட்டை மதில், அகழி, பெரிய தெரு, கடைத்தெரு, அரியணை அமைந்த அரசவை, நன்னனிடம் நல்லுறவு கொள்வதற்காக வந்து சிற்றரசர்கள் தம் காணிக்கைப் பொருளுடன் காத்திருக்கும் முன்றில் (முற்றம்) கொண்ட கோபுர வாசல் இவற்றைக் கொண்ட பெரிய அரண்மனை இருந்திருக்கிறது. இச்செய்திகளை இந்நூலில் இருந்து அறிகிறோம்.

நன்னனின் நல்ல பண்புகள்

நன்னன் மிகச் சிறந்த கொடை வள்ளலாக இருந்திருக்கிறான்.

தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை ஓம்பா வள்ளல் (399 -400)

“தேர்களைப் பரிசாக வாரிச் சிதறும் கவிந்த கையையுடைய, தேன் துளிக்கும் மாலையணிந்த, தனக்கென்று எப்பொருளையும் வைத்துக் கொள்ளாத வள்ளல்” என்றும்;

குன்றா நல்இசைச் சென்றோர் உம்பல் (540)

“கொடை வழங்குவதில் எவருக்கும் குறைவு படாத நல்ல புகழ் உடையவர் மரபில் வந்தவன்” என்றும் பாராட்டப்படுகின்றான்.

“மிக்க மேன்மையான பண்பாளன். பிறருடைய குற்றங்களைப் பெரிது படுத்தாமல் குணங்களையே பாராட்டி அவர்களை உயர்வுபடுத்தும் சிறந்த சுற்றத்தை உடையவன். சிறந்த வீரன். பொய்யாத வாய்மை கொண்டவன். எதையும் ஆராய்ந்து செய்பவன். ஐம்பொறிகளையும் வென்ற புலன் அடக்கம் உடையவன்” என்று கூத்தன் வாய்மொழிகளால் நன்னன் புகழ் பேசுகிறது இந்நூல்.

நூலின் தனிச் சிறப்புகள்

பிற ஆற்றுப்படை நூல்களில் இல்லாத தனிச் சிறப்புகள் சிலவற்றை மலைபடுகடாம் கொண்டுள்ளது.

காடு அடர்ந்த மலைத்தொடர்களைத் தாண்டி நன்னன் இருக்கும் இடத்தை அடைய வேண்டும். இதனால், காட்டு வழிகளைப் பற்றிப் பரிசு பெற்ற கூத்தன் கூறுகிறான். அவ்வழிகளில் செல்பவர்க்கு ஆங்காங்கே வாழும் மக்கள் உணவு தந்து விருந்தோம்பும் பண்பாடு பற்றிச் சிறப்பாக எடுத்துரைக்கிறான். எடுத்துரைப்பதில் இந்நூல் மற்ற ஆற்றுப்படை இலக்கியங்களை ஒத்து அமைந்துள்ளது. ஆனால், அந்த வழிகளில் உள்ள இடர்ப்பாடுகளை எடுத்துரைத்து, அவற்றைத் தவிர்த்துச் செல்லும் வழிமுறைகளைக் கூறுவதில், மற்ற நூல்களில் இல்லாத புதுமையை இந்நூலில் காண்கிறோம்.

விறலியை முடிமுதல் அடிவரை வருணிக்கும் பகுதி இந்நூலில் இல்லை. ஆனால், பேரியாழின் தோற்றம் பற்றிக் கூறும்போது அழகிய மங்கையை வருணிப்பதுபோல் அழகு தோன்றப் பாடுகிறார் பெருங்கௌசிகனார்.

மலையை ஒரு பெரிய யானையாகவும், மலையில் எழும் பல்வகை இனிய ஓசைகளை யானையின் உடம்பில் மதநீர் பெருகும் போது, அதைச் சுற்றி வட்டமிடும் பலவகை வண்டுகளால் எழும் ஓசையாகவும், வண்டுகளின் தொல்லையால் யானையிடமிருந்து எழும் ஓசையாகவும் உருவகம் செய்துள்ளார். இதனால் இந்நூல் மலைபடுகடாம் (கடாம் = மதம்) என்ற பெயர் பெற்றது. இசைக்கலையைப் பற்றி பாட்டுக்கு இசையோடு தொடர்புடைய பெயராக இது, பொருத்தமாக அமைந்துள்ளது.

உள்ளத்தில் இனிக்கும் உயர்ந்த கற்பனைகள்

மலையில் வாழை செழித்து வளர்ந்துள்ளது. முற்றிய வாழைக் குலையின் நுனியில் உள்ள சிவந்த வாழைப்பூ கருத்த பாறையில் முட்டி நிற்கிறது. இது யானையின் முகத்தில் பாய்ந்த இரத்தக் கறைபடிந்த வேல் போல் காட்சி தருகிறது என்று உவமை நயத்துடன் பாடுகிறார்.

காழ்மண்டு எஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென

ஊழ்மலர் ஒழிமுகை உயர்முகம் தோய…. (129-30)

(காழ் = உறுதி; எஃகம் = வேல்)

உயர்ந்த மலையில் ஏறிச் செல்லச் செங்குத்தான சிறு பாதைகள் உள்ளன. அழகிய சொற்றொடரால் இவற்றைக் காட்டுகிறார் புலவர். “படுக்க வைத்ததைப் போன்ற பாறையின் பக்கங்களின் மீது தரையில் கிடக்கும் பாதைகளை எடுத்துச் சாய்வாக நிறுத்தி வைத்தது போன்ற குறுகிய வழிகள்” என்கிறார்.

படுத்துவைத் தன்ன பாறை மருங்கின்

எடுத்து நிறுத்தன்ன இட்டரும் சிறுநெறி (15 – 16)

(மருங்கு = பக்கம், இடுப்பு)

நூல் முழுமையும் நன்னனின் நாட்டு வளமே இயற்கை வருணனையாகப் பாடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ஒரே வரியில் உள்ளடக்கி, அவனது நாட்டின் செழிப்பை உணர்த்தி விடுகிறார் பெருங்கௌசிகனார்:

இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய (98)

(இட்ட = விதைத்தவை; பெட்டாங்கு = விரும்பிய படி)

விதையைப் போட்டால் போதுமாம், விரும்பியபடி விளைச்சல் தரும் வளமான நிலமாம் அந்த வள்ளலின் நிலம்.

4.5 தொகுப்புரை

அன்பு மாணவரே, இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளைத் தெரிந்து கொண்டோம் என்று ஒரு முறை எண்ணிப் பாருங்கள். பண்புகளால் மிக உயர்ந்தோரை மட்டுமே பாராட்டிப் பாடும் இயல்பு கொண்ட சங்கப் புலவர்கள் படைத்த புறத்திணை சார்ந்த இலக்கியங்களில் மிகச் சிறந்தது ஆற்றுப்படை என்பதை உணர்ந்திருப்பீர்கள். புறத்திணைப் பாடல்களின் தொகுப்பான புறநானூற்றிலும், பத்துச் சேர மன்னர்களைப் பத்துப் புலவர்கள் பாடிய தொகை நூலான பதிற்றுப்பத்திலும் ஆற்றுப்படைத் துறையில் அமைந்த பாடல்கள் பல உள்ளன என அறிந்தீர்கள். நெடும் பாட்டுகளான பத்துப்பாட்டில் சரிபாதியாக ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படைகளாக விளங்குவதை அறிந்தீர்கள். புலவர், பாணர், பொருநர், கூத்தர், விறலியர் போன்ற கலைஞர்கள் தமக்குள் துறைப்பகைமை பாராட்டாமல் அன்பு பாராட்டி வாழ்வில் வளம்பெற ஒருவருக்கொருவர் வழிகாட்டியதாக அமையும் உயர்ந்த பண்பாட்டை ஆற்றுப்படை இலக்கியம் காட்டுவதைக் கண்டீர்கள். இத்தகைய ‘பண்பாட்டு இலக்கியம்’ தமிழில் அன்றி உலகில் வேறெங்கும் இல்லை என்ற பெருமையை உணர்ந்தீர்கள். ஆற்றுப்படையாக அமைந்த பாடல்கள், அவற்றில் பாடப்பெற்ற பெருந்தகைகள், பாடிய புலவர்கள் கொண்ட சிறப்புகளையெல்லாம் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து மகிழ்ந்தீர்கள். விளக்கமாகப் புரிந்து கொள்ள இந்த அரிய இலக்கியங்களை மின்னூலகத்தில் தேடிப் படித்துப் பயன் பெறுங்கள்.

பாடம் - 5

புறநானூறு

5.0     பாட முன்னுரை

இனிய மாணவ நண்பர்களே ! தமிழ் மொழியின் மிகப் பழமையான இலக்கியம் சங்க இலக்கியம் என்பதை அறிவீர்கள் அல்லவா? அவை பத்துப்பாட்டு, எட்டுத் தொகை ஆகப் பதினெட்டு நூல்கள் ஆகும். எட்டுத்தொகையுள் அடங்கிய ஒரு தொகை நூல்தான் புறநானூறு. தொகை என்றால் தனித்தனிப் பாடல்களின் தொகுப்பு என்று பொருள். மனிதனின் அகவாழ்க்கை ஒழுக்கமான காதலைத் தவிர, அவனுடைய மற்ற வெளி உலகவாழ்க்கை ஒழுக்கங்கள் எல்லாம் புறத்திணை எனப்பட்டன. அவனது வீரம், கல்வி, கொடை, நட்பு, அறம், ஆட்சி போன்ற சமூகம் தொடர்பான ஒழுக்கங்கள் எல்லாம் புறத்திணையில் அடங்கும். புறத்திணை பற்றிய நானூறு பாடல்களின் தொகை நூல் என்பதால் இது புறநானூறு என்று பெயர் பெற்றது.

இந்நூலில் உள்ள நானூறு பாடல்களில் ஒன்று கடவுள் வாழ்த்து. 267, 268 எண் கொண்ட இருபாடல்கள் கிடைக்கவில்லை. இவற்றிற்குப் பின்னால் உள்ள பல பாடல்களின் சொற்களும் அடிகளும் சிதைந்து உள்ளதால், முழுமையான வடிவில் இல்லை.

வேறு வேறு காலங்களில் வாழ்ந்த பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகப் புறநானூறு உள்ளது. பாடப்பட்டவர்கள் பலரும் பல்வேறுபட்ட காலங்களில் வாழ்ந்தவர்கள். அகத்திணைப் பாடல்களில் உள்ளவை போன்ற கற்பனைப் பாத்திரங்கள் இல்லை. எனவே, தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு மிக நீண்ட கால கட்டத்தின் பதிவுகள் புறநானூற்றில் உள்ளன.

அகநானூறு என்னும் தொகை நூலுக்கு ஒரு தொகுப்பு முறை பின்பற்றப்பட்டுள்ளதை அறிவோம் அல்லவா? அதைப்போல் இந்த நூலுக்கும் ஒரு தொகுப்பு முறையை நூலைத் தொகுத்தவர்கள் பின்பற்ற முயன்று உள்ளனர். கடவுள் வாழ்த்து, அடுத்து மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றிய பாடல்கள், அடுத்து வேளிர்கள் என்னும் குறுநில மன்னர்கள், வள்ளல்கள் பற்றிய பாடல்கள், அவற்றை அடுத்துப் போர் பற்றிய பாடல்கள், இறந்தவர்களுக்கான இரங்கல் பாக்கள், உலகியல் நிலையாமை பற்றிய பாடல்கள் எனப் புறநானூறு தொகுக்கப் பெற்றுள்ளது.

ஒவ்வொரு பாடலின் கீழும் பாடப் பெற்றவர், பாடியவர், பாடல் உணர்த்தும் திணை, துறை போன்ற குறிப்புகள் உள்ளன. பாடிய 156 புலவர்களுள் மன்னர்களும், மகளிரும் உள்ளனர். மகளிரும் கல்வி, கேள்விகளில் சிறந்து புலவர்களாக விளங்கி உள்ளனர்.

புறநானூற்றுப் பாடல்களில் இருந்து சங்க காலத் தமிழர்களின் இலக்கியப் படைப்பாற்றலையும், வீரம், கல்வி, கொடை, ஆட்சித்திறன், வாழ்க்கை பற்றிய மெய்யறிவு, மக்கள் வாழ்க்கை நிலை போன்றவற்றையும் அறிய இயலும். இந்தப் பாடம் சுருக்கமாக இவை பற்றி விளக்குகிறது.

5.1 மன்னரும் மக்களும்

அரச மரபில் மூத்த மகனாகப் பிறந்தால் போதும்; அவனுக்குத் தன் தந்தைக்குப் பின் நாட்டை ஆளுகின்ற அரச உரிமை தானாக வந்து சேர்கிறது. இதனால், மன்னன் தன் நாடும் செல்வமும் எல்லாம் தனக்கே உரிமை என்று கருதிவிடக் கூடாது. இந்த உலக இன்பங்களை எல்லாம் துய்ப்பதற்குத் தனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு இது என்று எண்ணிக் கட்டுப்பாடு இல்லாமல் இன்பத்தில் மூழ்கிவிடக் கூடாது. தம் ஒழுக்கக் கேட்டால் நாட்டையும் அழித்துத் தாமும் அழிந்த பல அரசர்களைப் பற்றி உலக வரலாற்றில் அறிகிறோம் அல்லவா?

5.1.1 மன்னர் சங்க காலத் தமிழ் மன்னர்கள் அவ்வாறு வாழவில்லை. அரசர்கள் அறம் என்னும் நேர்வழியில் இருந்து தவறிவிடாமல் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. புலவர்கள் இனிய கவிதை நயம் பொருந்திய சொற்களால் கருத்துகளை உணர்த்தியுள்ளனர். சில வேளைகளில் செவியில் கடுமையாக ஒலிக்கும் சொற்களைக் கூட அஞ்சாமல் கூறி, அரசர்களைத் திருத்தமான வழிநோக்கித் திருப்பியிருக்கிறார்கள். செவியறிவுறூஉ, பொருள் மொழிக் காஞ்சி, வாயுறை வாழ்த்து என்னும் துறைகளில் அமைந்த புறநானூற்றுப் பாடல்களில் இத்தகைய அறிவுரைகளைக் காணலாம். மன்னர்களும், மற்றவர்கள் தம்மைப் பார்த்துப் பின்பற்றத் தக்க வகையில் நல்ல நடத்தை உடையவர்களாய் வாழ்ந்துள்ளனர். பொன்முடியார் ‘நன்னடை நல்கல்’ கடமையை மன்னர்க்குக் கூறியது இதனால் தான்.

நெல்லும் நீருமா உயிர்?

அகன்று விரிந்த நிலத்தில் பரவி வாழும் மக்களுக்கு உயிராக அமைவது எது? நெல் முதலிய உணவுப் பொருள்கள் அல்ல. உயிரும், பயிரும் தோன்றுவதற்கும் அவை வளர்ந்து வாழ்வதற்கும் அடிப்படையாக அமையும் நீரும் அல்ல. மண்ணை ஆளும் மன்னன்தான் மக்களுக்கு உயிர் ஆவான். இதை அறிவது, வேலால் வெல்லும் படையை உடைய வேந்தனின் கடமை ஆகும்” என்று மோசிகீரனார் மன்னனுக்கு அவன் கடமையை உணர்த்துகிறார். ஒரு சிறிய பாடலில் எவ்வளவு பெரிய உண்மையை விளக்குகிறார் ! அந்தப் பாடல் இதுதான் :

நெல்லும் உயிர்அன்றே நீரும் உயிர்அன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

அதனால் யான்உயிர் என்பது அறிகை

வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே (186)

(அன்றே = இல்லை; மலர்தலை = அகன்ற இடத்தையுடைய; அறிகை = அறிவது; தானை = படைகள்)

உயிர்தானே உடம்பை இயக்குகிறது? உயிர் நன்றாக இயங்கினால்தானே உடலும் நன்றாக இயங்கும்? உடம்புக்கு வரும் நோயை உயிர் நுகர்ந்து கொண்டு உடம்பைக் காக்கிறதே, அது போல மன்னனுக்கு, மக்களைக் காப்பது கடமை. இவை போல, இன்னும் எண்ண எண்ணப் பொருள் நலம் தருவதாக இச்சிறு பாடல் உள்ளதல்லவா? மன்னன் செங்கோல் முறை தவறாமல் ஆட்சி செய்தால்தான் மழை தவறாமல் பெய்யும். நீரும் நெல்லும் மழை இல்லாமல் வருமா? எனவே முறையோடு ஆளும் மன்னன்தான் இவற்றைத் தரும் உயிரின் உயிர் ஆவான் என்னும் ஒரு கருத்தும் தோன்றுகிறது இல்லையா?

வரி விதிக்க ஒரு விதி

தன் குடிமக்களிடம் இருந்து அளவுக்கு அதிகமாக வரிவாங்கினான் அறிவுடைநம்பி எனும் பாண்டிய மன்னன். அவனது செயல் அறிவுடைய செயலாய் இல்லை. பிசிராந்தையார் என்ற புலவர், இந்த மன்னனால் வருந்திய மக்களின் துயரக்கண்ணீரைத் தமிழ்ப்பாடல் கொண்டு துடைத்தார். எப்படி? ஓர் அழகிய உவமையைக் கொண்டு அறிவுடை நம்பிக்கு அறிவு புகட்டிவிட்டார்.

“விளைந்த நெல்லை முறையாக அறுத்துக் கவளமாக உருட்டி யானைக்கு உணவு தருவார்கள். அப்படித் தரும்போது ஒருமிகச்சிறிய அளவு நிலத்தில் விளையும் நெல்லும் அந்த யானைக்குப் பலநாள் உணவு தருவதற்குப் போதும். ஆனால் நெல் விளைந்த பெரும் பரப்பளவுள்ள வயல் ஆனாலும் அதில் யானையைப் புகுந்து மேய விட்டால் என்ன ஆகும். அதன் வாய்க்குள் செல்வதைவிடக் காலில் மிதிபட்டு அழியும் நெல்லே அதிகமாக இருக்கும். அளவுக்கு மிஞ்சி வரிவிதித்து உன் ஆட்களால் மக்களை வருத்தி நீ பொருள் பெறுவதும் இதைப்போன்ற செயல்தான்” என்று உணர்த்தினார். மக்களைத் துன்புறுத்திப் பதறப்பதற அவர்களிடம் இருந்து பொருளைப் பறிக்கும் மன்னன் தானும் அழிவான் அவன் நாடும் அழியும் என்பதை,

யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான்

உலகமும் கெடுமே (184 : 10-11)

(புக்க = புகுந்த; புலம் = விளைநிலம்)

என்று பாடி எச்சரித்தார்; மன்னனைத் திருத்தினார்.

நீர் நிலைத்தால் பெயர் நிலைக்கும்

மிக்க இளவயதில் ஏழு மன்னர்களைக் களத்தில் வென்றவன் நெடுஞ்செழியன். இதனால் வந்த புகழால் போர் செய்வதில் அதிகமாக விருப்பம் கொண்டவனாக ஆகி, ஆட்சி செய்வதில் அவனுக்குக் கவனம் குறைந்து விடுமோ என்று அஞ்சினார் புலவர் குடபுலவியனார். ஓர் அருமை மிக்க பாடலால் அவனுக்கு அறிவுரை கூறினார். மிக நீண்ட பாடல். அறவியல், அறிவியல் இரண்டும் விளங்கும் இனிய கவிதை. அதில், நிலைகளைப் பெருக்கி விளைச்சலை மிகுதிப் படுத்துமாறு அவனுக்குப் பொருளாதார அறிவியலைப் போதிக்கின்றார். “பகைவரை வென்று அவரை விலங்கு (தளை) பூட்டிச் சிறை செய்வதைவிட, மழையால் பெருகும் நீரை ஏரிகளிலும் குளங்களிலும் சிறைப்படுத்துவதே (தேக்குவதே) ஒரு நாட்டிற்கு நலம் பயக்கும்” என்கிறார்.

நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோர் அம்ம இவண்தட் டோரே

தள்ளா தோர்இவண் தள்ளா தோரே (18 : 28-30)

(நிலன் நெளி மருங்கு = நிலம் குழியாய் உள்ள இடம்; தட்டோர் = தளைத்தோர், சிறைப்படுத்தினோர், பிணைத்தோர், தள்ளாதோர் = பிணைக்காதவர்கள்)

அவ்வாறு நீரைத் தேக்கித் தளை செய்தவர்களின் பெயர்தான் புகழ் வடிவில் உலகத்தோடு தளைக்கப்பட்டு நிலைக்கும். தளைக்காதவர் பெயர் நிலைக்காது என்கிறார்.

மன்னன் தன்னை நாட்டின் காவல்காரனாகவே கருதினான். இதனால் அரசன், வேந்தன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட மன்னனுக்குக் காவலன் என்ற பெயரும் தமிழில் உள்ளது. மன்னுதல் என்றால் தங்குதல், நிலைபெறுதல் என்று பொருள். தன் குடிமக்களின் நலனும், நம்பிக்கையும் அவனில்தான் தங்குகின்றன என்ற பொருளில்தான் அவன் மன்னன் எனப்பட்டான் என்று புரிந்து கொள்வோம்.

ஈரமும், வீரமும்

மாணவர்களே, புறத்திணை பற்றிய முந்தைய பாடங்களை நினைவு படுத்திப் பாருங்கள். பழங்காலத்தில் ஏழு புறத்திணைகளுள் பெரும்பகுதி – ஐந்து, போர் செய்தல் பற்றியே அமைந்துள்ளன. இது ஏன் என்று விளக்கப்பட்டு உள்ளது அல்லவா?

காவலன் ஆன மன்னன் தன் மக்களைத் தீயவர்களின் தாக்குதலில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் அல்லவா? அதனால் தன்னை ஆற்றல் உள்ளவனாக, போர்ப்பயிற்சியும் திறமையும் கொண்டவனாக ஆக்கிக் கொள்வான். தன் மக்களையும் அவ்வாறே வலிமை உடையவராக ஆக்குவான்.

புறத்திணை அந்த வீரத்திற்கு வரம்பு கட்டி ஒழுக்க விதிகள் தருகிறது. புறநானூறு, தம் வீரத்தால் தன்மானம், நாட்டுப்பற்று போன்ற உயர் பண்புகளின் மனித உருவமாக வாழ்ந்தவர்களின் நினைவைப் போற்றுகிறது. அதற்காகப் புலவர்கள் படைத்த ‘சொல் சிற்பங்களின்’ மண்டபமாக விளங்குகிறது.

போர் ஆண்மையில் ஒரு பேர் ஆண்மை

தன் சிறுமையான செயல்களால் முரண்பட்டு நலங்கிள்ளியின் பகைவனாக ஆனவன் நெடுங்கிள்ளி. தன் சோழ மரபில் வந்தவன் என்றாலும் அவனுடன் போர் புரிவதைத் தவிர்க்க முடியாத சூழல் நலங்கிள்ளிக்கு ஏற்பட்டது. கோவூர்கிழார் போன்ற புலவர்கள் முயன்றும் முரண்பாடு தீரவில்லை. நலங்கிள்ளி போருக்குமுன் உரைத்த வஞ்சினம் அவனது வீரத்தையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தும் சிறந்த கவிதையாகத் திகழ்கிறது.

“அடக்கத்துடன் வந்து என் அடிகளில் வீழ்ந்து எனக்கு ஈவாயாக என்று கேட்டால் இந்த அரசு என்ன, என் உயிரையே கூடக் கொடையாக வழங்கி விடுவேன். ஆனால், என் அமைச்சர்தம் அறிவு, படைத்தலைவர் தம் ஆற்றல் இவற்றை மதியாமல், என் வீரத்தையும் இகழ்ந்தான் அவன். உறங்கும் புலியைக் காலால் இடறிய குருடனைப் போல் அவன் அழிவது உறுதி. வருந்தும்படி போர் செய்து அவனை அடக்குவேன். தவறினால் என் மார்பில் அணிந்த மாலை, தீமை இல்லாத நெஞ்சத்துடன் காதல் கொள்ளாத, கருங்கூந்தலை உடைய பொதுமகளிரின் பொருந்தாத புணர்ச்சியால் வாடித் துவளட்டும்” என்பது நலங்கிள்ளி உரைத்த வஞ்சின உரையாகும் (73). இதில் பொதுமகளிரைத் தழுவும் ஒழுக்கக் கேடு என்பது எவ்வளவு பெரிய இழிசெயலாக அவனால் கருதப்பட்டது என்பதையும் காண்கிறோம். வீரத்தையும் ஆண்மை ஒழுக்கத்தையும் வியக்கிறோம்.

போர் வஞ்சினம்

சேர்ந்து படைதிரட்டிப் போருக்கு வந்திருக்கின்றனர் சேரனும், சோழனும். இவர்களைச் சிங்கம் போலச் சீறித் தாக்கித் தேரோடு ஊர்நோக்கி ஓடச் செய்வேன். புறம் காட்டச் செய்வேன். இல்லாமல் போனால் எனக்குப் பின்வரும் இழிவுகள் ஏற்படட்டும் : எனக்குச் சிறந்தனவாக, முகத்திற்குப் பொருந்திய, மையுண்ட பெரிய கண்களை உடைய என் மனைவியைப் பிரிவேன் ஆகுக. அறத்தின் உறுதிப்பாடு இல்லாத ஒருவனை நீதி மன்றத்தின் தலைமையில் வைத்து, மக்களுக்கு எல்லாம் அறத்தின் முறை தவறிக் கொடுமை செய்த கொடுங்கோலனாக நான் ஆகுக. என் கண்போன்ற இனிய நண்பர்களான மாவன், ஆந்தை, அந்துவஞ் சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் ஆகியவர்களுடன் கூடிப் பேசிமகிழ்ந்து வாழும் இனிய நாட்களை இழக்கும் நிலையை நான் அடைக. தென்புலம் ஆகிய பாண்டிய நாட்டைக் காக்கும் இந்தக் குடிப்பிறப்பை இழந்து, வேறு வன்புலம் காப்பவனாக நான் மாறிப் பிறக்குக”. இது பூதப் பாண்டியனின் வஞ்சின உரை ஆகும் (71). (வன்புலம் = பண்படாத நிலம்,பாலை வனம்)

தன் நாட்டையும், நீதியையும், வீரத்தையும் எவ்வளவு மதித்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளுவோம். மேலும்,தன் மனைவியின் மீது எவ்வளவு ஆழ்ந்த காதலையும், நண்பர்களோடு எத்தனை உறுதியான நட்பையும் கொண்டிருந்தான் என்பதையும் இவ்வுரை வெளிப்படுத்துகிறது பார்த்தீர்களா?

மானம் மிக்க வீரம்

வீரப்போர் செய்து பெறும் புண் விழுப்புண் (விழுமியது = மிக உயர்ந்தது) எனப்பட்டது. முதுகில் பெறும் இழிந்த புண் புறப்புண் எனப்பட்டது. பெருஞ்சேரலாதன் என்ற மன்னனும் சோழன் கரிகால் பெருவளத்தானும் வெண்ணிப் பறந்தலை என்ற களத்தில் போரிட்டனர். கரிகாலன் எறிந்த வேல் சேரலாதனின் நெஞ்சைத் துளைத்து முனை, முதுகின் வழி ஊடுருவி விட்டது. மார்பின் வழியாகப் பெற்ற புண்தான். ஆனாலும் முதுகிலும் புண் ஆகிவிட்டதே? இது இழிவு என்று கருதிய அந்த வீரன் உண்ணா நோன்பிருந்து (வடக்கிருத்தல் என்று பெயர்) உயிர் விட்டான்.

“வெற்றி பெற்ற உன் வீரத்தைக் காட்டிலும் ‘மார்பின் வழியாகப் பட்டாலும் அது புறப்புண்தான்’ என்று அதற்காக நாணி வடக்கிருந்து உயிர்விட்ட பெருஞ்சேரலாதனின் வீரமே பெருவீரம்” என்று கரிகாலனையே பார்த்துக் கவிதை பாடியவரும் ஒரு பெண்தான். வெண்ணிக்குயத்தியார் என்பது அவர் பெயர்.

5.1.2 மக்கள் பொன்னும் பொருளும் எல்லாரிடமும் இருப்பதில்லை. உழைப்பும் உதவும் மனமும் நாட்டுப் பற்றும் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இன்றி எல்லாரிடமும் அமையும். எனவே, நாட்டுக்காகப் போரிடுவதும் உயிர் ஈவதும் எளிய குடிமக்களுக்குப் புகழ்பெறக் கிடைத்த நல்ல வாய்ப்பு என்று கருதப்பட்டது. வீரர்களை நாட்டுப் பணிக்காகத் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கும் வீடு மூதில் (முதுமையான இல்லம்) என்று மதிக்கப்பட்டது. அந்த இல்லத்தின் வீரப் பெண்களும் மறக்குடியில் வந்ததால் வீர உணர்வு மிக்கவர்களாக வாழ்ந்திருக்கின்றனர். அவர்களைச் சமுதாயம் மிக மதித்திருக்கிறது.

தாயின் செயல்

“இரு நாட்களுக்கு முன்னால் போர்க்களத்தில் இவள் தந்தை யானையைக் கொன்று தானும் இறந்தான். நேற்று நடந்த போரில் இவள் கணவன் பசுக் கூட்டத்தைக் கவர வந்த பகைவரைத் தடுத்துப் போரில் இறந்தான். ஒரே மகனைத் தவிர இனி இவளுக்கு வேறு யாரும் இல்லை. போர்ப்பறையின் ஒலி கேட்டவுடன் வீரப் புகழில் விருப்பம் கொண்டு மகிழ்ந்து அந்த இளவயது மகனை அழைத்து வந்து வேலைக் கையில் கொடுக்கிறாள். ‘போர்க்களம் நோக்கிப் போ’ என்று விடுகிறாள். உள்ளத்தின் உறுதியைப் பார்த்தால் இவள் துணிவைக் கண்டு அச்சமாக இருக்கிறது. ‘மூதின் மகள்’ என்று சொல்வதற்குத் தகுதி உடையவள்தான்” என்று ஒரு வீரத்தாயின் செயலைப் பாராட்டுகிறார் ஒக்கூர் மாசாத்தியார்.

தாய் அடைந்த மகிழ்ச்சி

“போர்க்களத்தில் உன் மகன் புறம்காட்டி ஓடிவிட்டான்” என்று சிலர் சொன்னார்கள். “அவ்வாறு அவன் முதுகு காட்டி ஓடியிருந்தால் அவனுக்குப் பால் ஊட்டிய இந்த மார்பகத்தை அறுத்து எறிவேன்” என்று கையில் வாளுடன் போர்க்களத்தில் பிணங்களைப் புரட்டித் தேடினாள் தாய். மார்பில் புண்பட்டு உடல் சிதைந்து மகன் கிடப்பதைப் பார்த்தாள். நரம்புகள் திரண்டு தோள் தளர்ந்து தாமரை இலைபோல் வயிற்றில் சுருக்கம் விழுந்த முதுமையான வயதில் பிறந்த சிறுவன் அவன். அந்த வீரமகனின் பிணத்தைப் பார்த்து, ஈன்ற பொழுது அடைந்ததைவிட அதிக மகிழ்ச்சி அடைந்தாள்” என்று பாடுகிறார், காக்கைபாடினியார் நச்செள்ளையார்

5.1.3 புலவர் சான்றோர் என மதிக்கப் பட்ட சங்கப் புலவர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு தவறான கருத்து நிலவுகிறது. “மன்னர்களையும் செல்வம் மிக்க சிலரையும் புகழ்ந்து பாடல் எழுதி, அவர்களிடம் இல்லாத சிறப்புகளை இருப்பதாகப் புனைந்து உரைத்து, அவர்கள் தந்த பொருளைப் பெற்றுப் பிழைப்பு நடத்தியவர்கள் புலவர்கள்” என்பதே அது. அறியாமை அல்லது தமிழர் மீது கொண்ட பொறாமை இவற்றினால் சிலர் பரப்பிய பழி உரை இது என்பதைப் புறநானூற்றை ஆழ்ந்து கற்றால் உணர முடியும்.

புலவர் பாடும் புகழ் உடையோர்தாம் மேல் உலகில் நலம் அடைய முடியும் என்று மன்னர்கள் நம்பினர். அந்தப் புகழுக்கு உரிய நடத்தையைக் கடைப்பிடித்து நேர்மையுடன் வாழ்ந்தனர்.

புலவர்களும், புகழ்மொழிக்குத் தகுதி இல்லாத ஒருவர் எத்துணைப் பெரிய வேந்தரானாலும் அவரைப் பாடமாட்டார்கள். தகுதி உடையவரைத் தேடிக் கொண்டு பல கற்கள் தொலைவானாலும் நடந்து செல்வார்கள்.

புலவரின் இயல்பு

நெடுங்கிள்ளி, இளந்தத்தன் என்ற புலவரை ஒற்றன் எனக் கருதிக் கொல்ல முயன்றான். அப்போது கோவூர்கிழார் நெடுங்கிள்ளிக்குக் கூறிய அறிவுரைப் பாட்டு ‘புலவர்கள் என்பார் யார்?’ என்பதை உலகுக்குப் புரிய வைக்கும் உயர்ந்த கவிதை.

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி

நெடிய என்னாது சுரம்பல கடந்து

வடியா நாவின் வல்லாங்குபாடிப்

பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி

ஓம்பாது உண்டு கூம்பாது வீசி

வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை

பிறர்க்குத் தீதுஅறிந் தன்றோ, இன்றே !(47: 1-7)

(சுரம் = பாலை நிலங்கள்; ஓம்பாது = நாளைக்கு வேண்டுமே எனச் சேமியாமல்; கூம்பாது = தன்னலத்தால் பொருளை இறுக்கிப் பிடிக்காமல் ;வரிசை = தகுதியை அறிந்து தரும் பரிசு)

“தகுதி உடைய வள்ளலைத் தேர்ந்து, அவனது இருப்பிடம் நெடுந்தொலைவு என்றாலும் பழுத்த மரத்தை நாடும் பறவை போல, நீண்ட கொடிய பாலை நிலங்கள் பலவற்றைக் கடந்து செல்வோம். எவருக்கும் கீழ்ப்படாத நாவின் பொய்யில்லாத மொழிகளால் எங்கள் திறனுக்கு இயன்ற வரை பாடுவோம். கிடைத்ததற்கு மகிழ்வோம். பெரிய சுற்றத்தார் அனைவர்க்கும் உணவு தருவோம். நாளைக்கு வேண்டுமே என்று ஒதுக்கி வைக்காமல் உண்டு, பதுக்கி வைக்காமல் மற்றவர்க்கு வாரிக் கொடுத்து வாழுவோம். வள்ளலின் அவையில் கிடைக்கும் பொருளின் அளவுக்காக அல்ல, பரிசிலால் கலைத் திறமையை அளவிடும் மதிப்புக்காகத்தான் இவ்வளவு துன்பமும் படுகிறோம். அப்படிப்பட்ட பரிசில் வாழ்க்கையைக் கொண்ட எங்கள் புலவர் கூட்டம் அடுத்தவர்க்குத் தீங்கு என்பதை நினைத்தும் பார்த்ததுண்டா?” என்று பெருமிதத்துடன் கேட்கிறார் கோவூர் கிழார். “உன்னைப் போன்ற மன்னர்களும் எங்கள் புலவர் கூட்டத்தில் உள்ளனர்” என்றும் உணர்த்திப் புலவனைக் காப்பாற்றினார்.

வறுமையில் செம்மை

பெருஞ்சித்திரனார் தம் வீட்டின் வறுமை நிலையைப் பாடிய புறநானூற்றுப் பாடல்கள் (159, 160) துயரச் சொல் சித்திரங்கள். அந்நிலையிலும் தன் மானத்துடன் அவர் வாழ்ந்ததை அவர் பாடல்கள் காட்டுகின்றன.

பெரிய வள்ளலான அதியமான், இவர் தேடிச் சென்றபோது, இவரைக் காணாமல், கவிதையைக் களோமல் பரிசிலை மட்டும் அனுப்பினான். அந்தப் பரிசிலைப் பெற்றுக்கொள்ள மறுத்து அவர் பாடிய பாடல் பெருமிதம் மிக்கது.

காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர்

வாணிகப் பரிசிலன் அல்லென் (208 : 6-7)

“நான் ஒரு சொல் வியாபாரி அல்லன்” என்ற சொல்லைக் கூர்ந்து நோக்குங்கள். அறிவையும் புலமையையும் சீர்தூக்கித் தகுதி அறிந்து தராவிட்டால் அப்பரிசையே மறுப்பவர்கள். தகுதி அற்றவரைப் பாடுவார்களா? இந்தப் புலவர்களும் கலைஞர்களும் பாராட்டிப் பாடும் அளவுக்குப் பார் ஆண்ட மன்னர் தங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டனர் என்பதே உண்மை.

5.2 சொல்லாட்சியில் நல்லாட்சி

மாணவர்களே ! நாட்டில் நல்லாட்சி செய்த மன்னரைப் பாராட்டி அவர்களுக்கு நல்ல வழி காட்டிய சங்கப் புலவர்களைப் பற்றி அறிந்தோம். நாக்கில் நல்ல தமிழ்ச் சொல்லாட்சி செய்வதில் அவர்கள் இணையின்றி விளங்கினர் என்பதையும் முன்பு கற்ற பாடங்கள் வழி அறிந்தீர்கள். காதலையும் இயற்கையையுமசிறப்பிக்கும் கவிதைகளில் வளமான கற்பனைகளும், நயமானஉணர்ச்சி மிக்க சொற்களும், தொடர்களும் அமைவது எளிது. ஆனால், போரையும் புகழையும், அரசியலையும், வாழ்வியல் உண்மைகளையும் கூறும் புறத்திணைப் பாடல்களில் அவ்வாறு அமைவது அரிது. ஆனால் புறநானூற்றுப் பாடல்களோ, சொல்லாட்சியிலும், உவமை முதலிய கற்பனை அழகுகளிலும் மற்றஇலக்கியங்களை விஞ்சும் அளவு சிறப்பில் உயர்ந்து நிற்கின்றன. சில எடுத்துக்காட்டுகளை இனிவரும் பாடப் பகுதியில் காண்போம்.

5.2.1 ஓவியத் தொடர்கள் மிகக் குறைந்த சொற்களால் சிந்திக்கச், சிந்திக்கப் பல பொருள் நலம் சுரக்கும் பாக்களை இயற்றியவர் திருவள்ளுவர். அவரைப் பெற்றெடுத்த அன்னை ஆகிய தமிழின் பிள்ளைகள் தாமே சங்கப் புலவர்கள்? மின்னல் கீற்றுப் போன்ற சுருக்கமான சொற்றொடர்களால் மனக்கண்ணில் மறையாத சொல் ஓவியங்களைத் தந்துள்ளனர்.

சிறுகுடி கிழான் பண்ணன் என்ற வள்ளலின் பெருமையைச் சோழ மன்னன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடியுள்ளான் (173) இதில் மக்களின் பசி தீர்க்கும் அந்த வள்ளலைப் பசிப்பிணி மருத்துவன் என்ற அழகிய தொடரால் குறிப்பிடுகிறான்.

இளைஞனாய் இருந்த காலத்தில் தன் பேச்சின் இனிமையால் பெண்ணின் உள்ளம் கவர்ந்தான் ஒருவன். இப்போது துறவியாய் இருக்கிறான். அவனைக் கண்டு வியந்து மாரிப்பித்தியார் பாடிய இரு பாடல்கள் (251, 252) உள்ளன. அவனை,

இல்வழங்கு மடமயில் பிணிக்கும்

சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே (252 : 4-5)

என்று பாடுகிறார். வீட்டில் நடமாடும் அழகு மயிலாகிய பெண்ணின் உள்ளத்தைப் பிடித்து வசப்படுத்திக் கொள்ளும் சொல் ஆகிய வலையைக் கொண்ட வேட்டைக்காரனாய் முன்பு இருந்தான் என்பது பொருள். புலவர் நம் உள்ளங்களை வசப்படுத்தும் சொல்வலை பின்னியிருக்கிறார், இல்லையா?

புலிகடிமால் என்று அழைக்கப்பட்ட இருங்கோவேள் சிறந்த வள்ளல். அவன் பாணர் முதலிய கலைஞர்களைப் போற்றி ஆதரிப்பதைத் தன் கடமையாகச் செய்துவந்தான். இதைக் கபிலர் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார் :

ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய (201 : 14)

(ஆண்கடன் = ஆண் மகனாகப் பிறந்தவனின் கடமை; பாண்கடன் = இசைக் கலைஞரை ஆதரித்தல் ஆகிய கடமை)

கலைகளை ஆதரித்துப் பாதுகாப்பது வீரம் மிக்க ஆணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் கடமை என்ற கருத்துரையையும் உலகத்திற்குக் கபிலர் வழங்குகிறார் அல்லவா?

பல சொற்களால் கதைகளாய்ச் சொல்ல வேண்டிய செய்திகளை ஒருசில சொற்களில் கூறுவதில் சங்கப் புலவர்க்கு இணை எவரும் இல்லை. வள்ளல் கிள்ளிவளவனிடம் தாமும் சுற்றமும் முன்பு இருந்த வறுமை நிலையை நல்லிறையனார் ஒரே சொற்றொடரில் ஓவியமாகத் தீட்டிக் காட்டுகிறார் பாருங்கள் :

ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல் (393 : 10)

(ஈர்ங்கை = ஈரக்கை; இரும்பேர் ஒக்கல் = மிகப்பெரிய சுற்றத்தார்)

“உணவு உண்டு பல நாட்கள் ஆகிவிட்டன. அதனால், கை ஈரம் பட்டு எவ்வளவு காலம் ஆகிறது என்பதே மறந்துவிட்டது” என்கிறார்.

எவ்வளவு கொடுமையான வறுமை! “ஈர நெஞ்சம் கொண்டவர்களின் ஈகைப் பண்பு உடைய கைகளையும் பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டன” என்று இன்னொரு பொருளையும் இந்த மின்னல் தொடர் தருகிறது அல்லவா?

5.2.2 உவமைகளுக்கு உவமையில்லை உவமை அணி என்பது கவிதைக்கு அலங்காரமாக அமைந்து அழகுபடுத்துகிறது என்பார்கள். ஆனால் கவிதையின் உறுப்பாகவே அமையும் உவமைகளே உண்மையில் அழகானவை; பொருத்தமானவை. சங்க இக்கியத்தில் உவமைகள் சிறப்பாக விளங்குவதற்கு இதுவே காரணம். புறநானூற்றில் அழகும் புதுமையும் மிக்க பல நல்ல உவமைகளைக் காணலாம். சில எடுத்துக் காட்டப்படுகின்றன.

கடைகோல் உள்ளிருக்கும் கடு நெருப்பு

ஒரு நல்ல மன்னன் மிகக் கொடியவனாகவும் இருக்கிறான். பகைவரைக் கொன்று அவர்களின் நாட்டை நெருப்புக்கு இரையாக்கும் இரக்கம் இல்லாத செயல்களைச் செய்கிறான். அவனே தன் குடிமக்களை அருள்மிக்க தந்தையைப்போல் காக்கவும் செய்கிறான். இனிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறான். குளிர்ந்த நிழல்போல் பாதுகாக்கிறான். புலவர்க்கும் கலைஞர்க்கும் பொன்னையும் பொருளையும் வாரி வழங்குகிறான். ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இந்த இரு மாறுபட்ட பண்புகளும் ஒரு சிறந்த தலைவனிடம் இருக்கின்றன. இது உலக இயற்கை. இதைத் தெளிவாக உணர்த்த ஞாயிறும் திங்களும் ஆகிய இரு சுடர்களின் தன்மையைப் புலவர்கள் உவமையாகக் காட்டுவார்கள். இது இப்பாடத்தில் முன்னால் விளக்கப்பட்டது அல்லவா?

தலைவனின் இந்த இரட்டைப் பண்பை உணர்த்த ஒளவையார் கூறும் உவமை வியக்கத் தக்கது; புதுமையானது; பொருத்தமானது. அந்தக் காலத்தில் நெருப்பை உண்டாக்குவதற்கு ஒரு கருவி இருந்தது. ஒரு குழிவான மரத்துண்டின் மீது ஓர் உறுதியான மரக்கோலை அழுத்தமாய் நட்டு மிக விரைவாகக் கடைவார்கள். அதிலிருந்து நெருப்புப் பொறி வெளிப்படும். தீக்கடைகோல் என்பது அக்கருவியின் பெயர். சங்க காலத் தமிழர் அதை ஞெலிகோல் என்றனர். ஒளவையார் அதியமானுக்கு அந்தத் தீக்கடை கோலை உவமையாகக் கூறுகிறார்.

“ஓலை வீட்டின் கூரையில் தீக்கடை கோல் செருகி வைக்கப் பட்டு உள்ளது. முறையாக அதைப் பயன்படுத்தும் போது உணவு சமைக்க, குளிர்காய, விளக்கு ஏற்ற என்று வீட்டாருக்குப் அது பயன்படும் கூரையை எரித்து விடுகிறதா? இல்லையே ! ஆனால் அதனை முறையின்றிக் கையாளும் போது, நெருப்பை உமிழ்ந்து மாடமாளிகையைக் கூடச் சுட்டு எரித்துவிடும் இல்லையா? அதியமான் பகைவரை அழிப்பதில் அத்தகைய கடும் சினம்மிக்க வீரனாம்.

இல்இறைச் செரீஇய ஞெலிகோல் போலத்

தோன்றாது இருக்கவும் வல்லன் மற்றுஅதன்

கான்றுபடு கனைஎரி போலத்

தோன்றவும் வல்லன்தான் தோன்றும் காலே

(315 : 4-7)

(இல்இறை = வீட்டுக்கூரை; கான்றுபடு கனை எரி = மூண்டு எரியும் பெருந்தீ)

‘அமைதியாய் இருந்தால் இருப்பான்; சினம் கொண்டு சீறினால் அழித்து விடுவான்’ என்பதை இந்த உவமை எவ்வளவு அழகாய் உணர்த்துகிறது !

வேலுக்கு ஒரு கூர்மையான உவமை

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறனின் வேல் எப்படி இருக்கிறது தெரியுமா? மின்னலைப் பிடித்துப் பட்டடைக் கல்லில் வைத்து அடித்து அதன் நெளிவுகளை எல்லாம் போக்கி நிமிர்த்தினால் எப்படி இருக்கும்? அது போல் இருக்குமாம்.

மின்னுநிமிர்ந் தன்னநின் ஒளிறுஇலங்கு நெடுவேல்  (57 : 8)

விரைவானது, ஒளிமிக்கது, தாக்கிய பொருளை அழித்தொழிக்கும் ஆற்றல் கொண்டது என்று இரண்டிற்கும் பல பொருத்தங்களைக் காணலாம். ஒரு வேற்றுமை, மின்னல் கோணலானது, வேல் நேரானது. அதனால் தான் புலவர் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் திறமையாகக் கற்பனையால் மின்னலை நிமிர்த்தி நேர்செய்து புதுமை படைக்கிறார்.

மின்னல் கோணலானது. அது தாக்கினால் நல்லவர் கெட்டவர் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை. ஆனால் உன் வேல் ‘நேரானது’ கெட்டவர்களை மட்டுமே அழிக்கும் என்ற குறிப்புப் பொருளையும் இந்த உவமை தருகிறது அல்லவா?

சிறந்த உவமைகளின் களஞ்சியமாய் இருக்கும் புறநானூற்றில் ஒரு சிலவே இங்குக் காட்டப்பட்டன.

5.3 சிறிய தொடர்களில் அரிய உண்மைகள்

இனிய நண்பர்களே ! பல ஆண்டுகள் வாழ்ந்து மக்கள் கண்டு உணர்ந்த உண்மைகளை உணர்ச்சியோடு பதிவு செய்து வைத்த ஆவணங்களாகவும் இலக்கியங்கள் உள்ளன. உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் தம் ஆழ்ந்த சிந்தனையில் கண்டு எடுத்த முத்துகள் போன்ற கருத்துகள் புறநானூற்றில் குவியல் குவியலாகக் கிடைக்கின்றன.எடுத்துக்காட்டாக ஒரு சில காண்போம்

நிலமும் நலமும்

“நிலம் காடாக இருக்கலாம், நாடாக இருக்கலாம்; பள்ளமாக இருக்கலாம் மேடாக இருக்கலாம். ஆண்கள் எங்கே நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்குதான் அந்த நிலமாகிய பெண்ணும் நல்லவளாக இருக்க முடியும்.” ஒளவையார் பாடிய அரிய உண்மை இது :

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே (187 : 3- 4)

ஆண்களுக்கு ஒழுக்கத்தை வலியுறுத்தும் அழகிய கவிதை இது. அமைதியாக எண்ணிப் பாருங்கள். ஆழ்ந்த உண்மைகள் பல

புரியும்.

உலக இயற்கை இருவகை

“ஒரு வீட்டில் சாவுப் பறை ஒலிக்கிறது. அதே தெருவில் வேறு ஒரு வீட்டில் திருமண மேளம் முழங்குகிறது. காதலரைக் கூடிய மகளிர் பூ அணியை அணிகின்றனர். பிரிந்த மகளிரின் கண்கள் கண்ணீர் மழை பொழிகின்றன. இப்படி முரண்பாடாகப் படைத்து விட்டான் பண்பு இல்லாத அந்த இறைவன். உலக இயற்கை கொடியது. இதன் இயல்பை உணர்ந்து மறுமை உலகத்தில் இன்பம் பெறுவதற்கு உரிய நன்மைகளைச் செய்து கொள்ளுங்கள்”

இன்னாது அம்மஇவ் வுலகம்

இனிய காண்கஇதன் இயல்புஉணர்ந் தோரே

(194 : 6-7)

பக்குடுக்கை நன்கணியார் என்பவர் கண்ட வாழ்வியல் பற்றிய தத்துவம் இது.

பொன்னை விடச் சிறந்த மொழி

மீன்முள் போல முடி நரைத்துவிட்டது. தோல் சுருங்கித் திரைத்து விட்டது. கால தேவன் தன் கயிற்றில் கட்டி இழுத்துச் செல்லும் காலம் நெருங்கிவிட்டது. அப்போது, மறுமையில் என்ன ஆகுமோ? என்று வருந்துவீர்கள். முதியவர்களே, செல்வதற்கு நல்லவழி ஒன்று சொல்கிறேன், கேளுங்கள். நல்லதைச் செய்ய இயலவில்லை என்றாலும், நல்லது அல்லாததைச் (தீயதை) செய்யாமல் தவிர்த்துக் கொள்ளுங்கள். இதனால் புகழ் பெறலாம். மற்றவர்களை நல்ல வழியில் செலுத்தலாம்” நரிவெரூஉத்தலையார் என்ற புலவர் சொன்ன பொன்மொழிகள் இவை.

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின் (195 : 6-7)

(ஓம்புமின் = கவனமாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள்)

‘நல்லது’ என்பதற்கு எதிர்ப்பதமாகத் ‘தீயது’, ‘கெட்டது’ என்று கூறாமல் ‘அல்லது’ என்று கூறும் பண்பாட்டை நோக்குங்கள். அவர் ‘தீயதை’ நாவால் சொல்லவும் விரும்பவில்லை.

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே

செல்வ வளங்கள் அனைத்துக்கும் உரிமையாளராகச் சமுதாயத்தில் உச்சியில் இருப்பவர் யார்? பல நாடுகளை வென்று ஆட்சி செய்யும் மன்னர். மிகத் தாழ்ந்து அடிநிலையில் கிடப்பவர் யார்? நாகரிகத்தின் சுவடுபடாத மலைகளில் காடுகளில் அடுத்த வேளை உணவுக்காக விலங்குகளை வேட்டையாட இரவும் பகலும் வில் அம்புடன் குறிபார்த்துக் காத்திருக்கும் வேடர். சிந்தித்துப் பார்த்தால் இந்த இருவரும் அனுபவிப்பது என்ன? உண்பது, ஒரு வேளைக்கு வயிறு கொள்ளும் அளவுள்ள உணவு. உடுப்பது, மேல் ஆடை, கீழ் ஆடை என்ற இரண்டுதான். மற்ற தேவைகளும் ஒத்தவை தாம். எனவே, ஒருவர், செல்வத்தை மிகுதியாகப் பெற்றிருப்பதன் பயன் என்ன தெரியுமா? அடுத்தவர்க்கு ஈந்து அதனால் மகிழ்வது தான். ‘இல்லை நானே துய்ப்பேன்’ (அனுபவிப்பேன்) என்று முயன்றால் துய்க்க இயலாமல் இழக்க நேரும் இன்பங்கள் பல ஆகும்”. இந்த மிகப்பெரும் வாழ்வியல் அறத்தை உரைத்தவர் கடைச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர்.

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே (189 : 7-8)

(தப்புந = கிடைக்காமல் இழக்கப் படுவன)

5.4 உணர்ச்சியின் நெகிழ்ச்சி

கவிதை, இதயத்தின் மொழி, உணர்வுகளில் இருந்து ஊற்றெடுத்துப் பிறப்பது, உணர்வுகளோடு உறவாடுவது, உணர்வுகளை வளர்ப்பது கவிஞனின் உள்ளத்தையும் கவிதையைப் படிப்பவனின் உள்ளத்தையும் உணர்வு கொண்டே இணைப்பது, காலம், இடம் போன்ற வரையறைகளையும் தாண்டி இயங்குவது, நல்ல கவிதையில் உணர்ச்சியின செழுமை மிகுந்து இருக்கும். புறநானூற்றுப் புலவர்கள் மானம், வீரம், பெருமிதம், நன்றி, மகிழ்ச்சி, துயரம் போன்ற பல்வகை உணர்ச்சிகளையும் சிறப்பாகப் பாடியுள்ளனர்.

5.4.1 உணர்ச்சிகள் போர்க்களத்தில் தன் மகனைக் கண்ட தாயின் அழுகையும் போர்க்களத்திலிருந்து வந்த மன்னனின் சினமும் பற்றிப் பார்ப்போம்.

உவகையில் பிறந்த அழுகை

“மீன் உண்ணும் கொக்கின் இறகு போல முடி நரைத்துவிட்ட முதியவள் அவள். அந்த வயதில் பிறந்த இளைய மகன், போர்க்களத்தில் யானையைத் தாக்கிக் கொன்று தானும் இறந்துவிட்டான். அவனது இறப்பிற்காக வருந்தாமல் அவனைப் பெற்ற போது அடைந்ததைவிட அதிக உவகை (மகிழ்ச்சி) கொண்டாள் அந்த வீரத் தாய், அதனால் மகிழ்ச்சியில் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி இமைகளில் தொங்கி வழிந்தது. மூங்கில் அடர்ந்த மலையில் அசையும் மூங்கிலில் பெய்த மழைத்துளிகளை விட அக்கண்ணீர்த் துளிகள் அதிகமாக இருந்தன” என்று பூங்கண் உத்திரையார் பாடுகிறார் (277).

இந்த உணர்வை ‘உவகைக் கலுழ்ச்சி’ என்பார்கள்.

மன்னனின் சினம்

தனக்குத் தலைமகன் பிறந்த செய்தி வந்த பொழுது அவன் போர்க்களத்தில் இருந்தான். போரை வெற்றியுடன் முடித்துவிட்டு மகனைக் காணும் ஆவலில் களத்திலிருந்து நேரே இல்லம் வந்துவிட்டான். கையில்வேல், காலில் வெற்றிக் கழல், உடம்பில் வியர்வை, தொண்டையில் களத்தில் பெற்ற புதிய விழுப்புண். இந்தக் கோலத்தில் வந்து நிற்கிறான். அதியமானின் இந்தத் தோற்றத்தை அருகில் நின்று பார்த்த ஒளவையார் ஓர் அழகிய பாடலாகப் பாடுகின்றார்.

“போர்க்களத்தில் பகைவரைச் சினத்துடன் விழித்துப் பார்த்த கண்களின் சிவப்பு, தன் தவ மகனைப் பார்த்தும் கூடத் தணியவில்லை. புலியோடு போரிட்ட வலிமை மிக்க ஆண்யானையைப் போல நிற்கிறான். இவனது சினத்தை இந்த அளவு தூண்டிய பகைவருள் ஒருவர் கூடத் தப்பிப் பிழைத்திருக்க மாட்டார்கள்” என்று வியக்கிறார் ஒளவையார்.

இன்னும் ஆறாது சினனே, அன்னோ

உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றி யோரே

செறுவர் நோக்கிய கண்தன்

சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே

(100 : 8-11)

(அன்னோ = ‘அம்மாடி’ என்பது போன்ற வியப்புச் சொல்; உய்ந்தனர்அல்லர் = தப்பிப் பிழைத்திருக்க மாட்டார்; உடற்றியோர் = சினம் ஊட்டியவர்கள்; செறுவர் = பகைவர்; ஆனாவே = குறையாமல் உள்ளன.)

பிறந்த மகனின் முகத்தில் முதன்முதலில் விழிக்கும் பொழுது மகிழ்வுடன் இனிய முகம் காட்ட வேண்டும். அப்பொழுதும் கூடச் சினத்துடன் இருக்கிறானே? என்ற வியப்பு உணர்வும், அதியமானின் வீர உணர்வும் வெளிப்படும் அழகிய பாடல் இது.

5.4.2 நெகிழ்ச்சிகள் வீரன் ஒருவனின் மரணத்தால் புலவருக்கு ஏற்பட்ட மன நெகிழ்ச்சியைப் பற்றிப் பார்ப்போம்.

கையறு நிலை

சிறந்தவர்கள் இறக்கும் பொழுது அவர்கள் மீது அன்பு மிகுந்தவர்கள் ஆற்ற முடியாத துயரத்திற்கு உள்ளாகின்றனர். அவர்களின் கண்ணீர் ஊற்று கவிதையாக வெளி வருகிறது. இந்த இரங்கல் பாக்களைத்தான் சங்க இலக்கியத்தில் கையறு நிலைப் பாடல் என்பர். புறநானூற்றில் உலகத் தரம் வாய்ந்த கண்ணீர்க் கவிதைகளைக் காணலாம். எடுத்துக்காட்டாகச் சில தரப்படுகின்றன.

ஒல்லையூர் முல்லையே ஏன் பூத்தாய்?

ஒல்லையூர் நாட்டுத் தலைவனின் மகன் சாத்தன் மிகச் சிறந்த போர்வீரன். போரில் இறந்துவிட்டான். ஒல்லையூர் சார்ந்த காட்டு வழியில் வந்தார் புலவர் குடவாயிற் கீரத்தனார். மிக்க துயரத்துடன் வந்த அவர், காட்டில் கொடியில் பூத்திருந்த முல்லைப் பூவைக் கண்டார். துயரம் பொங்கி விட்டது.

“இளைய வீரர்கள் சூட மாட்டார்கள். வளையல் அணிந்த பெண்கள் பறிக்க மாட்டார்கள். நல்ல யாழின் வளைந்த கோட்டைக் கொண்டு மெல்ல வளைத்துப் பாணன் சூடிக் கொள்ள மாட்டான். பாடினியும் அணிய மாட்டாள். தன் ஆண்மையை உலகம் அறியுமாறு பகைவரை எதிர்த்து அழித்த வேல் ஆற்றல் கொண்ட வீரன் சாத்தன் இறந்துவிட்ட பின்பு, ஏ முல்லையே நீயும் பூத்தாயோ அவனது ஒல்லையூர் நாட்டில்?” என்று இரங்கிப் பாடினார்.

முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே

என்ற ஒரே அடியில் ஒரு கண்ணீர்த் தேக்கத்தையே கட்டி வைத்திருக்கிறார்.

“அவ்வளவு சிறந்தவன் இறந்த செய்தி கேட்டும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான். என்னைப் போலவே நீயும் கொடிய உள்ளம் கொண்டு சிரித்து நிற்கிறாயே?” என்ற வருத்தம் இவரது கேள்வியில் உள்ளது அல்லவா?

பாடுவதற்குத் தகுதிமிக்க சாத்தன் இறந்தபின் என்னைப் போன்ற புலவர்களும் கவிதைகளும் வீண்தான். அதேபோல நீயும் அணிவார் யாரும் இல்லாத சூழலில் வீணாகப் பிறப்பெடுத்தாயே? என்றும் ஒரு பொருள் புலப்படுகிறது இல்லையா?

‘தன் வீரத்தால், கொடையால், ஈகத்தால் உலகுக்குப் பயன்பட்ட சாத்தன் பிறந்த ஒல்லையூர் நாட்டில் நானும் நீயும் மட்டும் பயன் அற்ற வீண் பிறவி எடுத்துவிட்டோமே’ என்றும் ஒரு துயரப் பொருள் தொனிக்கிறது அல்லவா?

எமனே இனிப் பசித்தால் எங்குப் போவாய்?

சோழ மன்னன் கிள்ளிவளவன் குளமுற்றம் என்ற போர்க்களத்தில் உயிர் துறந்தான். புலவர் பலர் கையறு நிலைப் பாடல்கள் பாடினர். ஆடுதுறை மாசாத்தனார் என்னும் புலவர் கூற்றுவனை (எமனை) நோக்கிப் புலம்பிப் பாடுகிறார். அவனை அறிவு இல்லாத பேதை என்று பழிக்கிறார்.

நனிபே தையே நயன்இல் கூற்றம்

விரகு இன்மையின் வித்துஅட்டு உண்டனை (227 : 1-2)

(நனிபேதை = மிகப் பெரிய முட்டாள்; நயன் = அன்பு, ஈரம்; கூற்றம் = எமன்; விரகு = திறமை, அறிவு; வித்து = விதை; அட்டு = சமைத்து)

“விதைத்துப் பயிர் செய்து, தானும் உண்டு பிறர்க்கும் உணவளிப்பதற்கு உரிய விதை நெல்லை அறிவுள்ள எந்த உழவனாவது சமைத்து உண்பானா? அன்பு இல்லாத எமனே உழைப்புத் திறமை இல்லாததால் நீ அவ்வாறு செய்துவிட்டாய் மிகப் பெரிய முட்டாள் நீ. இனி உணவுக்கு எங்குப் போவாய்? என்கிறார். பல போர்க்களங்களில் பிணங்களைக் குவித்து எமனின் பசியைத் தீர்த்தவன் கிள்ளி வளவன். அவனையே கொன்று தின்றுவிட்ட செயல் விதை நெல்லை உண்டுவிட்ட செயல் தானே?

எழினி என்ற வள்ளல் இறந்த பொழுதும் இதே உவமையைக் கூறி எமனை இகழ்கிறார் அரிசில்கிழார்.

திங்கள் உண்டு, எங்கள் தந்தை எங்கே?

வள்ளல்களுள் சிறந்தவன் பாரி. மூவேந்தரின் வஞ்சனையால் போரில் மாண்டான். புலவர்களுள் சிறந்த கபிலர் அவனது பிரிவுக்கு வருந்திப் பாடிய பாக்கள் ஒவ்வொன்றும் கண்ணீர்ப் பூக்கள். பாரியின் மகளிர் இருவர்.அவர்கள் தம் தந்தையின் இறப்பிற்கு வருந்திப் பாடிய பாடல் இரும்பையும் உருக்கும்; கேட்கும் இதயத்தில் எப்போதும் இருக்கும்.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்

வென்றுஎறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.        (112)

(அற்றைத்திங்கள் = சென்ற மாதம்; இற்றைத் திங்கள் = இந்த மாதம்; பிறர் கொளார் = எவராலும் வெல்ல முடியாது)

“ஒரு மாதக் காலத்திற்குள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அன்றைய ‘முழுநிலா இரவு’ ஒளிமயமாக இருந்தது. இன்றைய ‘முழுநிலா இரவில்’ உலகமே இருண்டு போய்விட்டது. அன்று எங்கள் தந்தை இருந்தார். எம் பறம்புமலையை எவராலும் வெல்ல முடியவில்லை. வெற்றி ஒன்றையே கருதிய மூவேந்தரும் வஞ்சனையால் எம் குன்றைக் கைப்பற்றிக் கொண்டனர். நாங்களோ தந்தை இன்றித் தவிக்கிறோம்”. நேர் சொற்களால் பாடப்பட்ட எளிய பாடல்தான். எனினும், அரசியல் காரணங்களுக்காகக் குடும்பத்தை அழிப்பவர்கள் நெஞ்சில் மோதித் தாக்கும் துயர வெள்ளத்தின் பெருக்காக உள்ளது இப்பாடல், இல்லையா?

5.5 தொகுப்புரை

இதுவரை இப்பாடத்திலிருந்து நீங்கள் என்னென்ன தெரிந்து கொண்டீர்கள் என்பதை ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய புறநானூறு பற்றித் தெரிந்து கொண்டீர்கள்.

அன்றைய தமிழரின் சமூக வாழ்க்கை பற்றிய பல செய்திகளை அறிந்துகொண்டீர்கள்.

அரசியல், கல்வி, அறம், அறிவியல் போன்ற துறைகளில் சங்க கால மக்கள்தம் நிலை பற்றிப் புரிந்து கொண்டீர்கள்.

அவர்களின் அன்பு, நட்பு, வீரம், மானம், ஈகை முதலிய பண்புகளை உணர்ச்சி நலம் பொருந்திய பாடல்கள் மூலம் உணர்ந்து கொண்டீர்கள்.

உவமை, உருவகம், உணர்ச்சி, வெளிப்பாடு இவற்றில் புறநானூற்றுப் பாடல்கள் சிறந்து உயர்ந்த இலக்கியத் தரத்துடன் விளங்குவதைப் புரிந்து கொண்டீர்கள்.

பாடம் - 6

பதிற்றுப்பத்து - ஓர் அறிமுகம்

6.0     பாட முன்னுரை

தமிழில் உள்ள இலக்கியங்களுள் மிகவும் பழமை வாய்ந்தவை சங்க இலக்கியங்களாகும். அச்சங்க இலக்கியங்களுள் வரலாற்றுச் செய்திகளைக் கூறும் இலக்கியங்கள் புற இலக்கியங்களே. அக இலக்கியங்களும் ஆங்காங்கே வரலாற்றுச் செய்திகளைச் சுட்டிச் சென்றாலும் புறநானூறு, பதிற்றுப்பத்து, ஆற்றுப்படை இலக்கியங்கள் போன்ற புற இலக்கியங்களே வரலாற்றுச் செய்திகளை நமக்கு முழுமையாகத் தருகின்றன.

சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் புலவர் பலரால் பாடப் பட்டவை. இருப்பினும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த அப்புலவர்கள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு, சில இலக்கியங்களை உருவாக்கியுள்ளனர் என்று கூறத்தக்க அளவில் சில இலக்கியங்கள் காணப்படுகின்றன. அத்தகைய இலக்கியங்களில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவை மிகச் சிறந்தவை. ஏனெனில் ஐந்து புலவர்கள் அன்பின் ஐந்திணைகளை எடுத்துக் கொண்டு ஆளுக்கு நூறு பாடல்களாக ஐங்குறுநூறு என்ற அகப்பாடல் தொகுதியினை எழுதினர். அதேபோல் பத்துப் பெரும் புலவர்கள் பத்துச் சேர அரசர்கள் பற்றி ஒவ்வொரு அரசனுக்கும் பத்துப் பத்துப் பாடல்களாகப் பாடிச் சிறப்புச் செய்துள்ளனர்.

ஒரு மரபில் பிறந்த பத்து மன்னர்கள் குறித்து, தொடர்ச்சியாகப் புலவர் பாடிய செய்யுட்கள் காலமுறை தவறாது இடம் பெற்றிருப்பதுவே இந்நூலின் தலைமைச் சிறப்பாகும்.

பதிற்றுப்பத்துப் பாடல்களைத் தொகுத்தோர் ஒவ்வொரு பத்துக்கும் பதிகம் ஒன்றனையும் சேர்த்துள்ளனர். பாடப்பட்ட சேர மன்னனின் மெய்க்கீர்த்தி போலப் பதிகம் அமைந்தது. பாடிய புலவர், பாடப்பட்ட மன்னன், புலவர் பெற்ற பரிசில் முதலான செய்திகளைப் பதிகம் கூறுகிறது. பதிகங்களைப் பாடியவர் பெயர் தெரியவில்லை.

ஒவ்வொரு பாட்டிற்கும் திணை கூறாமல் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்று குறித்துச் சென்றுள்ளமை பதிற்றுப்பத்துக்கே உரிய தனிச் சிறப்பாகும்.

6.1 எட்டுத்தொகையில் பதிற்றுப்பத்து பெறுமிடம்

எட்டுத் தொகையில் காணப்படும் நூல்களுள் பதிற்றுப்பத்து நான்காம் இடத்தைப் பெற்றுள்ளதை எட்டுத்தொகை பற்றிய வெண்பா கூறும்.

இந்நூல்களில் பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய இரண்டும் புறப்பொருள் பற்றியன. புறநானூறு சங்க கால வரலாற்றை அறிய உதவுவது. பதிற்றுப்பத்து சங்க காலச் சேரமன்னர்களின் வரலாற்றை மட்டும் அறிய உதவுகிறது. இசை வகுக்கப்பட்ட புறநூல் இது ஒன்று மட்டுமே. இந்த இரண்டு புறப்பாடல்களைத் தவிர, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை அகப்பாடல்களாகும். பரிபாடல் அகமும் புறமும் கலந்தது.

6.1.1 பதிற்றுப்பத்தின் பெயர்க்காரணம் பத்துப் பத்து என்பது பதிற்றுப்பத்து என ஆயிற்று. பத்துச் சேர மன்னர்களைப் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியாக விளங்குவதால் இந்நூல் பதிற்றுப்பத்து எனப் பெயர் பெற்றது. ஆக இது நூறு பாடல்கள் அடங்கிய தொகுதியாகும்.

6.1.2 பதிற்றுப்பத்தும், எழுதிய புலவர்களும் பதிற்றுப்பத்து பத்து அரசர்களைப் பற்றிப் பத்துப்புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுதி என்றாலும் கால வெள்ளத்தில் முதற்பத்தும், இறுதிப் பத்தும் அழிந்துபட்டன. தமிழுலகிற்குக் கிடைத்திருப்பவை இரண்டாம் பத்து முதல் ஒன்பதாம் பத்து முடியவுள்ள எட்டுப் பத்துக்களே. முதற்பத்தையும், பத்தாம் பத்தினையும் சார்ந்த பாடல்கள் சில தொல்காப்பிய உரைகளாலும், புறத்திரட்டு என்னும் தொகை நூலாலும் தெரிய வருகின்றன.

பத்து                                 பாடிய புலவர்                     பாடப்பெற்ற அரசன்

முதற்பத்து                              –                                                                -

இரண்டாம் பத்து             குமட்டூர்க் கண்ணனார்             இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன

மூன்றாம் பத்து             பாலைக் கௌதமனார்                  பல்யானைச் செல்கெழு குட்டுவன்

நான்காம் பத்து             காப்பியாற்றுக் காப்பியனார்              களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்

ஐந்தாம் பத்து                 பரணர்                                                   கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

ஆறாம் பத்து                 காக்கைபாடினியார் நச்செள்ளையார்         ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

ஏழாம் பத்து                 கபிலர்                                                             செல்வக் கடுங்கோ வாழியாதன்

எட்டாம் பத்து                 அரிசில்கிழார்                                           தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

ஒன்பதாம் பத்து             பெருங்குன்றூர் கிழார்                           குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை

பத்தாம் பத்து                     -                                                                              -

6.2 பாடிய புலவர்கள் பற்றிய செய்திகள்

முதற் பத்தைப் பாடிய புலவர் பற்றித் தெரியவில்லை. இருப்பினும் பாடப்பட்ட அரசன் உதியன் சேரலாதன் என்று அறிஞர் கருதுவர்.

6.2.1 குமட்டூர்க் கண்ணனார் இரண்டாம் பத்தைக் குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடியுள்ளார். இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடி உம்பற்காட்டில் ஐந்நூறு ஊர்களை இறையிலியாகப் பெற்றார் (இறையிலி – வரியற்ற இலவச நிலம்) குமட்டூர் இவரின் ஊராகும்.

6.2.2 பாலைக் கௌதமனார் மூன்றாம் பத்தைப் பாடியவர் கௌதமனார். கௌதமனார் என்பது இவரது இயற்பெயராகும். பாலைத் திணையைப் பாடுவதில் வல்லவராக இருந்ததால் இவர் பாலைக் கௌதமனார் எனப்பட்டார். மூன்றாம் பத்தில் இவர் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். இவர் அந்தணர். ஒழுக்கத்தை உயிராகப் போற்றிய மனிதர். இவர் பத்து வேள்விகள் செய்து மனைவியொடும் விண்ணுலகு சென்றார் எனக் கூறப்படுகிறது.

6.2.3 காப்பியாற்றுக் காப்பியனார் நான்காம் பத்தைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பவர். இப்புலவரின் ஊர் காப்பியாறு. இயற்பெயர் காப்பியன். இதனால் இவரைக் காப்பியாற்றுக் காப்பியனார் என அழைக்கின்றனர். இவர் பாடிய மன்னன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் என்பவனாவான். இதைப் பாடியதற்குப் பரிசிலாக இந்த அரசனிடம் நாற்பது நூறாயிரம் பொன்னும், ஆட்சியில் ஒரு பகுதியும் பெற்றுள்ளார்.

6.2.4 பரணர் ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர். இவரோடு ஒத்த புலவர் கபிலர். எனவே இருவரையும் கபில பரணர் என்றே கூறிவந்தனர். இவரது பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் இடம்பெறும். இவர் ஐந்தாம் பத்தில் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடியுள்ளார். சங்க இலக்கியங்கள் பெரும்பாலானவற்றில் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவர் செங்குட்டுவனைப் பாடியதால் உம்பற்காட்டு வருவாயையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றார்.

6.2.5 காக்கைபாடினியார் நச்செள்ளையார் ஆறாம் பத்தைப் பாடியவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் ஆவார். செள்ளை என்ற சொல், தாய் எனப் பொருள்படும். ‘ந’ என்பது சிறப்பை உணர்த்துவது. இவர் பெண்பால் புலவர் என்பதைச் செள்ளை என்ற சொல்லால் அறியலாம். காக்கையைப் பற்றிப் பாடியதால் காக்கைபாடினியார் என அழைக்கப்பட்டார். இவர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை ஆறாம் பத்தில் பாடினார். அவரது பாட்டைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் அவருக்கு ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரம் பொற்காசும் பரிசாகத் தந்தான். தனது அவைக்களப் புலவராகவும் சேர்த்துக் கொண்டான்.

6.2.6 கபிலர் ஏழாம் பத்தைப் பாடியவர் கபிலர். சங்கப் புலவரில் தலை சிறந்தவர். இவரது ஊர் வாதவூர். இவர் குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர். பாரியின் நெருங்கிய நண்பர். இவர் செல்வக்கடுங்கோ வாழியாதனை ஏழாம் பத்தில் புகழ்ந்து பாடி, அதற்குப் பரிசாக அம்மன்னன் நூறாயிரம் காணம் பொன் தந்ததுடன், நன்றா என்ற குன்றின் மீது ஏறி நின்று கண்ணில் கண்ட ஊரைஎல்லாம் இவருக்கு அன்பளிப்பாகத் தந்தான்.

6.2.7 அரிசில்கிழார் எட்டாம் பத்தைப் பாடியவர் அரிசில்கிழார். கிழார் என்பதற்கு உரிமையாளர் எனப் பெயர். அரிசில் என்பது இவரது ஊர். எனவே அரிசில் கிழார் என அழைக்கப்பட்டார். இயற்பெயர் தெரியவில்லை. இவர் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடியுள்ளார். இப்பத்தைப் பாடியதற்காக அரசு கட்டிலையும், ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும் பரிசிலாகப் பெற்றார்.

6.2.8 பெருங்குன்றூர்கிழார் ஒன்பதாம் பத்தைப் பாடியவர் பெருங்குன்றூர்கிழார் ஆவார். இவர் ஊர் பெருங்குன்றூர் ஆகும். இயற்பெயரை அறிய முடியவில்லை. ஒன்பதாம் பத்தில் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையை இவர் பாடியுள்ளார். அதற்குப் பரிசாக முப்பத்திரண்டாயிரம் பொற்காசுகளையும், ஊரும் மனையும் வாழ்வதற்கு மலையும், அணிகலனும் பெற்றார்.

பத்தாம் பத்து யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பாடியதாக இருக்கலாம் என அறிஞர் கருதுவர். பாடிய புலவர் பெயரோ, பெற்ற பரிசிலோ தெரியவில்லை.

6.3 பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்திலிருந்து முதல் நூற்றாண்டுக் காலத்துச் சேரவேந்தர்கள் பற்றிய செய்திகளை அறிகிறோம். வரலாறு, நிலவளம், மன்னர்களைப் பற்றிய செய்திகள், மக்களின் வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. இனி ஒவ்வொரு பத்தாகக் காணலாம்

6.3.1 முதற் பத்து உதியன் சேரலாதனைப் பாடிய பத்துப் பாடல்களும் கிடைக்கவில்லை. பாடிய புலவர் பெயரும் தெரியவில்லை.

6.3.2 இரண்டாம் பத்து உதியன் சேரலாதனுக்கும், வேண்மாள் நல்லினி என்ற அரசிக்கும் மகனாகப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

புண்ணுமிழ் குருதி, மறம் வீங்கு

பல்புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை,

நிரைய வெள்ளம், துயிலின் பாயல், வளம்படு

வியன்பணை, கூந்தல் விறலியர், வளன் அறு பைதிரம்,

அட்டு மலர் மார்பன்

என்ற தலைப்புக்களில் குமட்டூர்க் கண்ணனார் இவனது வரலாற்றைப் பாடியுள்ளார்.

நெடுஞ்சேரலாதன் வடக்கே இமயமலை வரை படையெடுத்துச் சென்று வென்றவன். அதற்கு அடையாளமாக இமயத்தில் வில்லைப் பொறித்தவன். தமிழினத்தின் சிறப்பை உலகறியச் செய்தவன். ஆரியர்களை வென்று தன்னை வணங்கச் செய்தவன். கடம்பர்களை வென்றவன். பகைவரோடு வஞ்சனையின்றிப் போர் செய்தவன். தன் வீரர்களுக்குக் கவசமாகவும் விளங்கியவன். பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடுமாறு போர் செய்தவன்.

போரில் பெற்ற பெருஞ்செல்வங்களைப் படைகளுக்கும், குடிமக்களுக்கும் அளித்துள்ளான். தனது உறவினரின் நீண்ட நாள் பசியைப் போக்க மாமிசம் கலந்த வெண்சோற்றினை அளித்துள்ளான். இவன் பரிசிலர்க்குத் தெளிந்த கள்ளினையும், புதிய ஆடைகளையும் அணிகலன்களையும் வழங்கிச் சிறப்பித்ததை,

மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு

நனையமை கள்ளின் தேறலொடு மாந்தி

நீர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு அன்ன

நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை

நூலாக் கலிங்கம் வாள் அரைக் கொளீஇ

(பாடல் -2)

(மையூன் = ஆட்டிறைச்சி; கள்ளின்தேறல் = கள்ளின் தெளிவு; சிதாஅர் = கிழிந்த ஆடை; நூலாக்கலிங்கம் = நூற்கப்படாத நூலாலாகிய ஆடை, பட்டாடை)

என்ற பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

6.3.3 மூன்றாம் பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன். இவனது வரலாற்றை

அடுநெய் ஆவுதி, கயிறு குறுமுகவை,

ததைந்த காஞ்சி, சீர்சால் வெள்ளி,

கான் உணங்கு கடுநெறி, காடுறு கடுநெறி,

தொடர்ந்த குவளை, உருத்துவரு மவிர் நிறை,

வெண்கை மகளிர், புகன்ற ஆயம்

என்ற தலைப்புக்களில் இந்த மூன்றாம் பத்துச் சிறப்பிக்கிறது. இம்மூன்றாம் பத்தின் ஆசிரியர் பாலைக் கௌதமனார்.

குட்டுவன் குட்ட நாட்டிற்கு உரியவன். இவன் உம்ப காட்டில் ஆட்சி செலுத்தினான். தன் அறிவு ஒத்த முதியவரின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தான். தன் நாட்டில் உள்ள நிலத்தின் எல்லையை அவரவருக்கு உரியவாறு வகுத்து ஒழுங்கு செய்தான். இவனது நாட்டில் வேள்வித் தீயின்

புகையையும், தம்மை நாடி வருபவர் அளவில்லாது உண்ணச் சமைக்கும் நெய் மணத்தையும் கடவுளரும் விரும்புவர்.

இதனை,

ஊனத்து அழித்த வால்நிணக் கொழுங்குறை

குய்இடு தோறும் ஆனாது ஆர்ப்ப

கடல்ஒலி கொண்டு செழுநகர் வரைப்பின்

நடுவண் எழுந்த அடுநெய் ஆவுதி

இரண்டுடன் கமழும் நாற்றமொடு வானத்து

நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி(பாடல்-1)

என்ற பாடல் அடிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

அகப்பா என்பது பகைவரின் கோட்டை. அக்கோட்டை மிகுந்த காவலை உடையது. அது உம்பற் காட்டுப் பகுதியில் இருந்தது. குட்டுவன் அதனைத் தன் படை வலிமையால் பகைவர்களை அழித்து வெற்றி பெற்றான். இந்த வெற்றிச் சிறப்பினை

அண்ணலம் பெருங் கோட்டகப்பா எறிந்த

பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ (பாடல் -2)

என்ற பாடல் அடிகள் தெரிவிக்கின்றன.

நாடு வறட்சியால் வாடிய போதும், தன்னை நாடி வரும் பாணர், கூத்தர் முதலான பரிசிலருக்கு அவர்கள் உள்ளம் மகிழப் பசியை நீக்கி, பொன்னாலான அணிகலன்களை வழங்கினான் என்று பல்யானைச் செல்கெழு குட்டுவனின் கொடைத் திறத்தை இப்பத்து விவரிக்கிறது.

நிலம், நீர், காற்று, தீ, வான் என்ற ஐந்தையும் அளந்து முடிவு கண்டாலும் குட்டுவனின் அறிவாற்றலை அறிய முடியாது எனக் கீழ்வரும் பாடல் அடிகள் விளக்குகின்றன.

நீர்நிலம் தீவளி விசும்போ டைந்தும்

அளந்துகடை யறியினும் அளப்பருங் குரையைநின்

வளம் வீங்கு பெருக்கம் இனிதுகண் டிகுமே (பாடல்-4)

6.3.4 நான்காம் பத்து நான்காம் பத்தின் ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், வேளாவிக் கோமான் பதுமனின் மகள் பதுமன் தேவியும் பெற்றெடுத்த மகனாவான் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல். அவன் புகழை,

கமழ்குரல் துழாய், கழையமல் கழனி,

வரம்பில்வெள்ளம், ஒண்பொறிக் கழற்கால், மெய்யாடு

பறந்தலை, வாள்மயங்கு கடுந்தார், வலம்படுவென்றி,

பரிசிலர் வெறுக்கை, ஏவல் வியன் பணை,

நாடுகாண் அவிர் சுடர்

எனும் பத்துத் தலைப்புகளில் பாடுகிறார்.

இம்மன்னன் தன் தோற்றத்தாலே பகைவர்களை நடுங்கச் செய்துள்ளான். பூழி நாட்டை வெற்றி கண்டான். பெருவாயில் என்னும் இடத்தில் இருந்த நன்னனின் போர் ஆற்றலை முழுமையும் அழித்தான். இவன் மிகுந்த செல்வத்தை உடையவன். வறுமையில் தாழ்ந்த குடியை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தான். பகைவர்களை அழித்தான். உயர்ந்த சான்றோர்களிடம் பணிவுடையவன். ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவன் என்பதை

பகைவர் ஆரப் பழங்கண் அருளி

நகைவர் ஆர நன்கலம் சிதறி

ஆன்றவிந்து அடங்கிய செய்தீர் செம்மால் (பாடல்-7)

(ஆர = நிறைய; பழங்கண் = துன்பம்)

என்ற பாடல் அடிகள் மூலம் நாம் அறியலாம்.

தன்னை நாடிவரும் பரிசிலரை மகிழ்ச்சியுடன் கள்ளைக் குடிக்க வைத்துத் தானும் உண்டு, இரவலர்களை வேற்றிடம் செல்லாமல் காப்பான். அவர்களைத் தன்னிடமே தங்க வைத்துக் கொள்வான்.

6.3.5 ஐந்தாம் பத்து ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மகள் மணக்கிள்ளிக்கும் மகனாகப் பிறந்தவன் செங்குட்டுவன்.

சுடர்வீ வேங்கை, தசும்பு துளங்கு

இருக்கை, ஏறா ஏணி, நோய்தபு

நோன்தொடை, ஊன்துவை அடிசில்,

கரைவாய்ப் பருதி, நன்னுதல் விறலியர்,

பேரெழில் வாழ்க்கை, செங்கை மறவர்,

வெருவரு புனல்தார்

என்ற தலைப்பில் அமைந்த ஐந்தாம் பத்து சேரன் செங்குட்டுவன் வரலாற்றை அறியத் துணை புரியும்.

இவன் தன்னைப் பகைத்தவர் அழியவும், நட்புடையவர் ஆக்கம் பெறவும் துணை புரிவான். பகைவர் வலிமை கெட வஞ்சியாமல் எதிர் நின்று போர் செய்பவன்.

இவனது ஆட்சி எல்லையாக வடக்கே இமயமும், தெற்கே குமரியும் இருந்தன. இவன் போர் செய்வதையே தொழிலாக உடையவன். இதனை,

போரடு தானைப் பொலந்தார் குட்டுவ (பாடல்-3)

(தானை = சேனை)

எனப் பரணர் பாடியதில் இருந்து அறியலாம்.

வறுமையால் தன்னை நாடி வந்த வறியவர்கள் உண்பவற்றை மறைக்காது உண்ணச் செய்தான். அவர்களோடு அமர்ந்து தானும் உண்டான். பாணர், கூத்தர் முதலியோர் மகிழப் பொன்னணிகள் தந்தான்.

விறலியருக்குப் பெண் யானையையும், வீரர்களுக்கு ஆண் யானைகளையும், பாணர்களுக்குக் குதிரையினையும்  பரிசாகக் கொடுத்தான். இதனை

பாடு விறலியர் பல்பிடி பெறுக!

துய்வீ வாகை, நுண்கொடி உழிஞை

வென்றி மேவல், உருகெழு சிறப்பின்

கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக!

மன்றம் படர்ந்து, மறுகுசிறைப் புக்கு

கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்

அகவலன் பெறுக மாவே!

(பாடல்-3)

(உருகெழு = அச்சம் தரும்; மள்ளர் = வீரர்; அகவலன் = பகைவன்)

என்று பாடுகின்றார்.

செங்குட்டுவன் பகைவரும் வியந்து பாராட்டும் கெடாத கல்வி அறிவும், ஒழுக்கமும் உடையவன் என்பதை,

இகல்வினை மேவலை ஆகலின் பகைவரும்

தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின்

தொலையாக் கற்ப              (பாடல்-3)

(தாங்காது = வியப்புத் தாளாது; தூங்குகொளை = தூங்கலோசை கொண்ட; தொலையாக் கற்ப = கெடாத அறிவுடையவனே) என்ற அடிகள் விளக்குகின்றன.

பல போர்களைச் செய்து பெற்ற பொருள்கள் அரியவை என்று எண்ணாமல், தனக்காகப் பாதுகாக்காமல், மறந்தும் கனவில்கூடப் பிறர் உதவியை வேண்டாமல் வாழ்ந்தவன் செங்குட்டுவன். இதனை,

நிலம்புடைப்பு அன்னஆர்ப்பொடு விசும்பு துடையூ

வான்தோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்

பெரிய ஆயினும் அமர்கடந்து பெற்ற

அரிய என்னாது ஓம்பாது வீசி

கலம்செலச் சுரத்தல் அல்லது கனவினும்

களைகஎன அறியாக் கசடுஇல் நெஞ்சத்து

ஆடுநடை அண்ணல் (பாடல்-4)

(புடைப்பு = இடிப்பது; விசும்பு துடையூ = வானத்தைத் தடவி; கலம்செலச் சுரத்தல் = அணிகலன் வழங்குதல்; கசடு = குற்றம்; ஆடுநடை = பெருமித நடை)

என்ற பாடல் அடிகளால் பரணர் செங்குட்டுவனை வாழ்த்துவதிலிருந்து அறியலாம்.

செங்குட்டுவன் தனது நண்பன் அறுகை என்பானின் பகைவன் மோகூர் மன்னன் மீது படையெடுத்து வெற்றி பெற்றான். நண்பனின் பழிச் சொல்லைப் போக்கினான்.

தன் வெற்றிக்குத் துணையான வீரர்களுக்குச் சோறு வேறு, தனக்கு வேறு சோறு எனப் பிரித்துக் காணப்படாத வண்ணம் உணவளித்தான்.

பகைவரை அழித்த உன்போன்ற வேந்தரும் இல்லை, உனக்கு ஒப்பாரும் இல்லை என்று பரணர் செங்குட்டுவனைப் புகழ்கின்றார்.

நண்பர்க்கும், மகளிர்க்கும் வணங்கிய மென்மையினையும், பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையும் உடையவன் செங்குட்டுவன் என்பதை,

கைவல் இளையர் நேர்கை நிரப்ப

வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை (பாடல்-8)

என்ற அடிகள் விவரிக்கின்றன. இது போன்ற அரிய செய்திகளை இப்பத்தின் வழி அறியலாம்.

6.3.6 ஆறாம் பத்து குட நாட்டிற்கு உரிய மன்னன் சேரலாதன், அவனுக்கு வேளாவிக் கோமானின் மகளான தேவிக்கும் மகனாகப் பிறந்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.தண்டகாரணியத்தில் ஆரியர் திருடிப் போன மலையாடுகளை மீட்டு, தன் நகரான தொண்டிக்குக் கொண்டு வந்தான். இதன் காரணத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப் பெயர் பெற்றான். வானவரம்பன் என்பது இவனது இயற்பெயர். இவனது வரலாற்றுச் சிறப்புகளை

வடுஅடு நுண்அயிர், சிறுசெங்குவளை,

குண்டு கண் அகழி, நில்லாத் தானை, துஞ்சும் பந்தர்,

வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி,

ஏவிளங்குதடக்கை, மாகூர் திங்கள், மரம்படு தீங்கனி

ஆகிய தலைப்புக்களில் ஆறாம் பத்து எடுத்துரைக்கிறது. இப்பத்தினைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியுள்ளார்.

இப்பத்தின் வழி அறியலாகும் செய்திகள்:

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மழவரைப் போரில் வென்றான். குழந்தையைக் காக்கும் தாயைப் போலத் தன் மக்களைப் பாதுகாத்தான். அறத்தையே விரும்பும் குணத்தை உடையவனாக விளங்கினான்.

இவன் அவையில் குமரி முதல் இமயம் வரையிலும் உள்ள அனைத்து அரசரும் கூடியிருப்பர். அவையில் சான்றோர்களும் நிறைந்து இருப்பர். அனைவரும் கூடியிருந்த ஒரு நேரத்தில் பாணர், விறலியரின் ஆட்டமும் பாட்டும் கேட்டு மகிழ்ந்திருந்தான். அதனைக் கண்ட இவனுடைய பகைவர்கள் சிற்றின்பத்தில் மூழ்கி நிற்கும் எளியவன் என இவனை நினைத்தனர். ஆனால் இவன் கொடிய நஞ்சினை உடைய மலைவாழ் பாம்புகளை அஞ்சிடச் செய்யும் மேகத்தின் இடி முழக்கத்தை ஒத்தவன் என்பதை அறியார். அவனுடைய வீரர்கள் பகைவர்களை ஒரே வீச்சில் அழிக்கும் வெற்றி வீரர்கள். கூற்றுவனின் பகையை ஒத்தவன் சேரலாதன். இதனைக் காக்கைபாடினியார்

வாள்நகை இலங்கு எயிற்று

அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்

பாடல் சான்று நீடினை உறைதலின்

வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்என

உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே?

(பாடல் – 1)

(விறலியர் பாடல் சான்று நீடினை உறைதலின் = விறலியர் பாட்டைப் பெரிதும் விரும்பியிருத்தலாலே; மெல்லியல் போன்ம் = சிற்றின்பத்தில் ஈடுபட்டவன் போலும்; உணராதோர் = இயல்பை உணராதவர்கள்)

போர் செய்யும் ஆவலால் வந்த பகைவரை வஞ்சியாது போர் செய்து அழித்த மேம்பட்ட கை சேரலாதனது கை என்பதை,

நல்லமர்க் கடந்தநின் செல்லுறழ் தடக்கை

இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய

மலர்புஅறியா எனக் கேட்டிகும் (பாடல்-2)

(செல்உறழ் = இடிபோன்ற; கவிதல் = கொடுப்பதற்காகக் குவிதல்; அல்லதை = தவிர; இரைஇய = பிறரிடம் இரக்க; மலர்பு = விரிதல்)

என்ற பாடல் அடிகளால் அறியலாம்.

வறியவர் தன் நாட்டில் இல்லாததால், பிறருக்கு உதவி செய்து மகிழ்கின்ற இன்பத்தை எண்ணி, பிற நாடுகளில் இருந்து வரும் வறியவரைத் தேரில் ஏற்றி வந்து உணவை மிகுதியாக உண்ணக் கொடுக்கும் புகழை உடையவன் சேரலாதன் என்பதை

குடவர் கோவே கொடித்தேர் அண்ணல்

வாரார் ஆயினும் இரவலர் வேண்டித்

தேரில் தந்தவர்க்கு ஆர்பதம் நல்கும்

நகைசொல் வாய்மொழி இசைசால் தோன்றல்

- (பாடல்-5)

என்ற பாடல் அடிகள் கூறுகின்றன. சேரலாதன் பகைவர்க்கு அஞ்சாதவனாய் இருப்பினும் தன் தலைவியின் ஊடலுக்கு அஞ்சுபவன்; அதைவிட இரவலரின் இரக்கம் மிகுந்த பார்வைக்கு இளகுபவன் என்பதை,

நுண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும்

இரவலர் புன்கண் அஞ்சும்

- (பாடல்-7)

என்ற அடிகளின் மூலம் அறியலாம்.

6.3.7 ஏழாம் பத்து சேரலாதன் அந்துவஞ்சேரல், நுட்பமான கேள்வி ஞானம் உடையவன். அவனுக்குப் பொறையன் தேவி என்பவள் பெற்றுத் தந்த மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன். இவனுடைய வரலாற்றை, புலாஅம் பாசறை, வரைபோல் இஞ்சி, அருவி ஆம்பல், உரைசால் வேள்வி, நாள்மகிழ் இருக்கை,  புதல்சூழ் பறவை, வெண் போழ்க் கண்ணி, ஏம வாழ்க்கை, மண்கெழு ஞாலம்,பறைக் குரல் அருவி என்ற தலைப்பிலான பாடல்கள் மூலம் ஏழாம் பத்து விவரிக்கிறது. இப்பத்தைப் பாடியவர் கபிலர்.

செல்வக் கடுங்கோ வாழியாதன் தன் நாட்டில் பல வளங்களை ஏற்படுத்தியவன். தன் பகைவரைத் தோற்று ஓடும்படி செய்தவன். பல போர்களைச் செய்தவன். வேள்விகள் செய்தவன்.

இவன் வறியவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவுவதால் செலவு குறித்து வருந்தமாட்டான். தொடர்ந்து உதவுவதால் உண்டாகும் புகழை நினைத்து மகிழவும் மாட்டான் என்பதை,

ஈத்த திரங்கான், ஈத்தொறு மகிழான்

ஈத்தொறு மாவள் ளியன்என நுவலுநின்

நல்லிசை தரவந் திசினே (பாடல்-1)

(வள்ளியன் = வள்ளல்; நல்லிசை = புகழ்; வந்திசின் = வந்தேன்)

என்ற பாடல் அடிகள் விளக்குகின்றன. இது போன்ற அரிய செய்திகளின்வழி, கடுங்கோவின் வீரம், கொடை பற்றி அறியலாம்.

6.3.8 எட்டாம் பத்து செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பவனுக்கும் வேளாவிக் கோமான் பதுமனின் மகளுக்கும் மகவாகப் பிறந்தவன் பெருஞ்சேரல் இரும்பொறை. இவனது வரலாற்றை இந்த எட்டாம் பத்து விளக்குகின்றது.

இப்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் தலைப்புகள்

குறுந்தாள் ஞாயில், உருத்து எழு வெள்ளம், நிறம் திகழ்

பாசிழை, நலம் பெறு திருமணி, தீம் சேற்று யாணர்,

மா சிதறு இருக்கை, வென்றாடு துணங்கை,

பிறழ நோக்கு இயவர், நிறம்படு குருதி, புண்ணுடை

எறுழ்த் தோள்

என்பன. இதனைப் பாடியவர் அரிசில்கிழார்.

சோழர்களையும் பாண்டியர்களையும் ஒரே போரில் வென்றவன் இச் சேரன். அம்மன்னர்களின் முரசுகள், குடைகள், அணிகள் ஆகியவற்றைக் கவர்ந்தவன். வேள்வி பல செய்தவன்.

இவனது நாட்டில் வளம் சிறந்து காணப்பட்டது. இவன் பகைவரோடு அஞ்சாது போர் செய்தவன். போரில் சுடுவதற்காக உண்டாக்கிய தீயானது பகைவரின் ஊர்களைக் கவர்ந்து உண்ணுதலால் சுடு நாற்றம் நாறும். புகை மிகுதியாகத் தோன்றி நான்கு திசைகளிலும் மறைக்கும். யானைகளையும் அரிய அணிகலன்களையும் இவனுக்கு வரியாகக் கொடுக்காத பகைவர்கள் உடல் நடுக்கம் மிக இவனைத் தெய்வம் என வணங்கி நிற்பர்.

இவன் வேள்வி செய்வதற்குரிய வேதங்களை முறையாகக் கற்றவன். அவற்றிற்குரிய கடமைகளையும் குறைவின்றிச் செய்தவன் என்பதை,

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது

வேள்வி வேட்டனை – (பாடல்-4)

(கேள்வி = மறைப்பொருள்; படிவம் ஒடியாது = விரதம் கெடாமல்; வேள்வி வேட்டனை = வேள்வி செய்தாய்)

என்று குறிப்பிடுகின்றார் அரிசில்கிழார்.

செல்வமும், குண அமைதியும், மகப்பேறும், தெய்வ உணர்வும், பிறவும் முன்செய்தவம் உடையவர்க்கே கிடைக்கும் என்பதை, வேதம் கற்ற புரோகிதனுக்கு, உணர்த்தி அவனைக் காட்டுக்குத் தவம் செய்ய அனுப்பினான். இதனை,

வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்

தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்குஎன

வேறுபடு நனந்தலைப் பெயர – (பாடல்- 4)

(நனந்தலை = விரிந்த இடம்)

என்ற பாடல் அடிகள் விளக்குகின்றன.

பகைவர்களை முழுவதுமாக ஒழித்தவன். பகை மன்னர்களின் வீரர்கள் அழியவும் பகை மன்னர்கள் இறந்துபடவும் செய்தவன். இவனுடைய குதிரைப் படைகளையும், காலாட் படைகளையும் எண்ண முடியாது என்பதை,

பண்ணமை தேரும் மாவும் மாக்களும்

எண்ணற்கு அருமையன் எண்ணின்றோ இலனே

- (பாடல் – 7)

என வியந்து பேசுகிறார் புலவர். இவன் தகடூர்க் கோட்டையை அழித்தவன் என்பதை,

வில்பயில் இறும்பில் தகடூர் நூறி – (பாடல் – 8)

என்ற அடி குறிப்பிடுகின்றது.

6.3.9 ஒன்பதாம் பத்து குட்ட நாட்டுக் குடியினனான இரும்பொறைக்கும் மையூர் கிழான் மகள் அந்துவஞ்செள்ளைக்கும் மகனாகப் பிறந்தவன் இளஞ்சேரல் இரும்பொறை. இவனது வரலாற்றை நிழல்விடு கட்டி, வினைநவில்யானை, பல்தோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடுகாண் நெடுவரை, வெந்திறல் தடக்கை, வெண்தலைச் செம்புனல், கல்கால் கவணை, துவராக் கூந்தல், வலிகெழு தடக்கை என்ற தலைப்புகளில் இப்பத்துப் பாடல்கள் விவரிக்கின்றன.

இப்பத்துப் பாடல்களை எழுதியவர் பெருங்குன்றூர் கிழார்.

இரும்பொறை பொன்னாலான தேரை உடையவன். பகைவனைக் கொல்லும் கூற்றுவனைப் போன்ற வலிமை உடையவன் என்கிறது இப் பதிற்றுப்பத்து.

சேர நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி பூழிநாடு, அந்நாட்டைக் கைப்பற்றியவன் இவன். இதனை,

நுதல்அணந்து எழுதரும் தொழில்நவில் யானை

பார்வல் பாசறைத் தரூஉம் பல்வேல்

பூழியர் கோவே – (பாடல்-4)

(அணந்து = நிமிர்த்தி)

என்ற பாடல் அடிகள் விவரிக்கின்றன. சோழர்களை வென்றான் என்பதை,

ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்

இட்ட வெள்வேல் முத்தைத் தம்என

முன்திணை முதல்வர் போல நின்று

தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கின்

கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரை

- (பாடல்-5)

(ஒன்னாப் பூட்கை = பகைமை கொண்ட; சென்னியர் = சோழர்; முத்தை (முந்தை) = முன்னே, எதிரே; தம்என = தருக என்று; முன் திணை முதல்வர்= குலத்து முன்னோர்; கோடு = சிகரம்)

என்ற அடிகள் குறிப்பிடுகின்றன.

அறம் பல செய்தவன். அறம் செய்ய இடையூறு வந்தால் அதனைப் போக்கப் போரைச் செய்பவன். போரில் ஆண்மகன், அறத்தையும், நல்ல நெஞ்சத்தையும் அசைந்த நடையையும் உடையவன்.

பாணர் முதலானவருக்குப் பரிசில் வழங்கி ஆதரிப்பவன். கொற்றவையை வழிபடுபவன். சோழ பாண்டியர்கள், குறுநில மன்னர்கள் இவனை வணங்கி நிற்பர்.

கழுவுள் என்ற ஆயர் தலைவனையும் அவனுக்குத் துணையாக வந்தவரையும் பெருஞ்சேரல் இரும்பொறை வென்றான்.

இவனுடைய காலத்தில் போர் வீரர்கள் இரவு நேரங்களிலும் வாளைச் சுமந்தவர்களாகத் திரிந்தனர். போர் செய்வதை விருப்பமாகக் கொண்டனர். கூறிய வஞ்சினம் தவறாமல் தம் குடிக்குப் புகழைத் தேடவிரும்பினர்.

இரும்பொறையோடு போரிட அஞ்சிய பகைவர்கள் உறக்கம் கொள்ள மாட்டார்கள். இவனிடம் இருந்து தம்மைப் பாதுகாக்குமாறு தெய்வத்தை வழிபடுவர். இவனோடு போர் புரியப் பகைவர்கள் இல்லாததால் வீரர்கள் போர் வெறிகொண்டு திரிவர். யானைகளும் மதம் கொண்டு திரியும். குதிரைப் படையும் தயார் நிலையில் அணிகலன்களை அணிந்து நிற்கும். இதனை,

மறவர் மறல; மாப்படை உறுப்பத்

தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்ப

- (பாடல்-2)

என்ற அடிகள் விளக்குகின்றன.

(மறல = போர்வெறி கொண்டு திரிய; மா = குதிரை; உறுப்ப = ஆயத்தமாய் நிற்க; தோல் புடை ஆர்ப்ப = கிடுகுப்படை (கேடயம் தாங்கிய படை) ஒருபுறம் ஆரவாரிக்க)

பல வழியிலும் பெற்ற குறையாத செல்வமும், பகைவர் பலமுறை போரிட்டு அழித்த போதும் குறையாத வீரர்களையும் கொண்டவன். செங்கோன்மை, சால்பு, வீரம் போன்ற வற்றாத புகழையும், செல்வத்தையும் உடையவன் இரும்பொறை என்பதை,

பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்து,

செற்றோர் கொளக் கொளக் குறையாத் தானை,

சான்றோர் வண்மையும், செம்மையும், சால்பும்,

மறனும் புகன்று புகழ்ந்து அசையா நல்இசை

நிலம் தரு திருவின் நெடியோய் (பாடல்-5)

(அசையா = குறையாத; நல்இசை = புகழ்)

எனப் பதிற்றுப்பத்துப் புகழ்கிறது.

6.4 சேரர்களின் வீரச் செயல்கள்

சேர மன்னர்களும், அவர்களது வீரர்களும் வீரத்திற்குப் பேர் போனவர்கள். கடற்போரில் வல்லவர்கள். இதனைப் பதிற்றுப்பத்து தெளிவுபடுத்துகிறது.

சேர மன்னர்களும் மறவர்களும் அறநெறி தவறாது போர் புரிந்து நின்றனர். சேர மன்னர்கள் எமனே சினம் கொண்டு வந்தாலும் அவனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வார்கள்.

பகைவர் அஞ்சப் போர் செய்துள்ளனர். இதனைப் பதிற்றுப்பத்து சிறப்பாகக் கூறும். தாம் கூறிய வஞ்சினம் தவறாது எதிர்ப்பட்ட பகைவர்களை யெல்லாம் இறந்து அழியுமாறு போர் செய்தமையை

வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்

முரசுடைப் பெருஞ்சமத்து அரசுபடக் கடந்து

வெவ்வர் ஓச்சம் பெருக – (பாடல்-1)

(சமத்து = போரில்; வெவ்வர் = வெம்மை; ஓச்சம் = ஆக்கம், உயர்வு)

என ஐந்தாம் பத்துக் கூறுகிறது.

வீரர்கள் தமக்குச் சமமானவரோடு போர் செய்ததை,

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்

அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது

தும்பை சூடாது மலைந்த மாட்சி

அன்னோர் பெரும! நன்னுதல் கணவ!

அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ!

(பாடல்-2, ஐந்தாம் பத்து)

(வசி = தழும்பு; சேர்ந்தோர் = சமமானவர்; தும்பை = தும்பை மாலை)

என்ற பாடல் அடிகளால் அறியலாம். மேலும், செங்குட்டுவன் போரில் எதிர்ப்பவரை வெல்வதையே தொழிலாகக் கொண்டுள்ளான் என்பதை நாம் அறிய முடிகிறது.

சேர மறவர்கள் பகைவருக்கு அஞ்சாதவர்கள். இரவு நேரத்திலும் வீர வாளை வைத்து உள்ளனர். போரில் புண்பட்டு விழுவதை விருப்பமாகக் கொண்டுள்ளனர். தாம் கூறிய வஞ்சினம் தவறாமல் தாம் பிறந்த குடிக்கு நல்ல புகழை நிலை நிறுத்த,  பாசறையில் உலவுவார்கள்.

மாயிருங் கங்குலும், விழுத்தொடி சுடர்வரத்

தோள்பிணி மீகையர், புகல்சிறந்து நாளும்

முடிதல் வேட்கையர், நெடிய மொழியூஉ

கெடாஅ நல்லிசைத் தன்குடி நிறுமார்

(பாடல்-1, ஒன்பதாம் பத்து)

(கங்குல் = இரவு;விழுத்தொடி = வீரவளை; மீகை = தோள்களைப் பிணித் தகை: புகல் = போர் விருப்பம்; நெடிய = வஞ்சினம்; மொழியூஉ = மொழிந்து)

என்ற பாடல் அடிகள் கூறுகின்றன.

6.5 சேரர்களின் கொடைத் திறம்

சேர மன்னர்கள் தாம் பெற்ற இன்பம் எல்லாரும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு வாழ்ந்துள்ளனர். கொடை உள்ளம் கொண்டவர்களாகத் திகழ்ந்துள்ளனர். தம்மை நாடி வரும் வறியவரின் பசிப்பிணியைப் போக்கி உள்ளனர். புதிய ஆடை அணிகலன்களை வழங்கியுள்ளனர்.

செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் சேரமன்னன் பெரும் பொருளைப் பிறருக்குக் கொடையாகக் கொடுத்தற்கு ஒரு நாளும் வருந்த மாட்டான். மகிழ்வும் அடைய மாட்டான். கொடுக்கும் போது எல்லாம் அளவில்லாது கொடுப்பான் எனப் பதிற்றுப்பத்துக் கூறும்.

ஈத்த திரங்கான்; ஈத்தொறு மகிழான்

ஈத்தொறும் மாவள் ளியன்என நுவலும்நின்

நல்லிசை தரவந் திசினே

- (பாடல்-1, ஏழாம் பத்து)

சேரன் செங்குட்டுவன் தனக்கு ஒருவகைச் சோற்றையும் பிறருக்கு இன்னொரு வகைச் சோற்றையும் சமைத்து வழங்காதவன் என, பரணர் அழகுபடக் கூறுகின்றார்.

சோறு வேறென்னா ஊன்றுவை அடிசில்

(பாடல்-5, ஐந்தாம் பத்து)

போரில் பெற்ற பெருஞ்செல்வத்தை எளியோர்க்கு வாரி வழங்கினான் செங்குட்டுவன் என்பதை,

பெரிய வாயினும் அமர் கடந்து பெற்ற

அரிய என்னாது ஓம்பாது வீசி

- (பாடல்-4, ஐந்தாம் பத்து)

என்ற அடிகள் கூறுகின்றன.

வறுமையில் வாடுவோர்க்கு உதவுவது கடமை. இதனை உணர்ந்து அவர்களின் துன்பம் தீரும் அளவு பொருள்கள் வழங்கியவன், அன்பு காட்டியவன் இளஞ்சேரல் இரும்பொறை என்பதை,

நல்லிசை நிலைஇய நனந்தலை உலகத்து

இல்லோர் புன்கண் தீர நல்கும்

நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்

(பாடல்-6, ஒன்பதாம் பத்து)

என்ற அடிகள் வழி அறியலாம்.

வறட்சிக் காலத்திலும் பாணர், கூத்தர் முதலான பரிசிலரின் பசிப்பிணியைப் போக்கினான். அவர்களுக்குத் தக்க அணிகலனை வழங்கினான் செங்குட்டுவன் என்பதை மூன்றாம் பத்து விவரிக்கின்றது.

பகைவரோடு போரிட்டுக் கவர்ந்த பொருளை, பாணர் முதலிய இரவலர்கள் மகிழும்படி, வேண்டாம் என்று மனநிறைவு கொள்ளும் அளவிற்கு வழங்கினான். தளர்ந்த குடியை உயர்த்தினான். இதனைக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் செய்தான் என்பதை,

துப்புத் துவர்போகப் பெருங்கிளை உவப்ப

ஈத்துஆன்று ஆனா இடனுடை வளனும்

துளங்குகுடி திருத்திய வளம்படு வென்றியும்

-(பாடல்-2, நான்காம் பத்து)

(துப்பு = வலிமை; ஈத்து ஆன்று ஆனா இடனுடை வளன் = ஈந்து, பெற்றவர் இனிவேண்டா என்பதால் தங்கிப்போன செல்வம்; துளங்குகுடி = தளர்ந்தகுடி)

என்று காப்பியாற்றுக் காப்பியனார் கூறுகிறார்.

6.6 பதிற்றுப்பத்தில் கற்பனையும் உவமைகளும்

பதிற்றுப்பத்துப் பாடல்கள் ஆழ்ந்த கலையின்பமும் அரிய சொல்லாட்சியும் அழகிய உவமை நயமும் கொண்டு விளங்குகின்றன. சங்க காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த புலவர் பெருமக்களின் படைப்பாகப் பதிற்றுப்பத்துத் திகழ்கிறது.

ஒவ்வொரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை, வண்ணம், தூக்கு, பெயர் ஆகியவை உரையில்லாத மூலப் பிரதிகளிலும் உள்ளன. ஆதலால் இவை பாடல் ஆசிரியர்களாலோ, தொகுத்தாராலோ எழுதப் பட்டிருக்க வேண்டும்.

பாடல்களுக்கு உள்ள பெயர்கள் எல்லாம் மிகச் சிறந்த சொற்களால் கற்பனை நயத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன, சான்றாக, புண்ணுமிழ் குருதி என இரண்டாம் பத்தின் முதல் பாடலினைக் காணலாம்

“இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வேல் அவனுடைய பகைமன்னர்களின் துளைத்தற்கரிய மார்பினைத் துளைத்ததினால் உண்டான புண்கள் உமிழும் குருதியினால் உப்பங்கழிகளில் உள்ள நீலமணி போன்ற நீர் தன் நீலநிறம் மாறி, குங்குமக் கலவை போலச் சிவப்பாயிற்று என்னும் சிறப்புக் கருதிப் பாடலுக்குப் புண்ணுமிழ் குருதி எனப் பெயராயிற்று” என்பார் முனைவர் அ.ஆலிஸ்.

இவ்வாறு பல்வேறு பெயர்கள் மிகச் சிறந்த கற்பனை நயத்துடன் விளங்குகின்றன.

சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மனைவி சினம் கொள்ளாது அமைந்த கற்பினை உடையவள். ஊடல் காலத்திலும் இனிமையாகப் பேசுபவள் என்பது புலவரின் கூற்று.

ஆறிய கற்பின் அடங்கிய சாயல்

ஊடினும் இனிய கூறும் இன்னகை

(பாடல்-6, இரண்டாம் பத்து)

இந்த அடிகள் கவிஞனின் படைப்புத் திறனை விளக்கும்.

இளஞ்சேரல் இரும்பொறையின் படையுடன் போர் செய்ய அஞ்சிய சோழப் படைகள் இரும்பொறையிடம் போர் செய்து வெற்றி பெற முடியாது என்று தம்முடைய படைக்கருவிகளை நிலத்தில் எறிந்தனர். அவ்வாறு எறியப்பட்ட வேல்கள் கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடிப் பெற்ற ஊரை விட அதிகம்.

மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்

உவலை கூராக் கவலைஇல் நெஞ்சின்

நனவில் பாடிய நல்இசைக்

கபிலன் பெற்ற ஊரினும் பலவே

(பாடல்-5, ஒன்பதாம் பத்து)

என்கிறார் பெருங்குன்றூர் கிழார்.

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் படையோடு பொருதுதோற்ற பகைவர்களது யானைகளின் வெட்டப்பட்டது திக்கைகள் பனைமரங்கள் வெட்டப் பட்டுக் கிட்ட்பன போல் வீழ்ந்து கிடக்கும். குதிரை, யானை, வீரர்களுடன் இறந்து கிடப்பதால் உண்டான பிணத்தை உண்ணுவதற்காகப் பெண் கழுகினை ஆண் கழுகானது அணைத்துக் கொண்டு பள்ளம் நோக்கி ஓடும். பெரிய பிணக்குவியலைச் சுமந்து கொண்டு பேய்கள் பிணங்களை உண்டு மகிழும் என்கிறார் காப்பியாற்றுக்” காப்பியனார்

இவ்வாறு கற்பனைகளும் உவமைகளும் பதிற்றுப்பத்திற்கு அழகூட்டுகின்றன.

6.7 சேரர்களின் ஆட்சி முறை

அரசனே ஆட்சித் துறையின் மையமாக விளங்கினான். அரசனை, கோ, மன்னன், வேந்தன், கொற்றவன் என்று அழைத்தனர்.

சேரர்களின் ஆட்சி எல்லையாக வடக்கே இமயமும், தெற்கே குமரியும், மேற்கும் கிழக்கும் கடல்களும் இருந்தன. இதனைப் பல பாடல்களால் அறியலாம்.

சேரர்களிடம் காலாட் படை, குதிரைப் படை, யானைப் படை, தேர்ப் படை போன்ற படைகள் இருந்துள்ளன.

மன்னனே நீதி வழங்கும் அதிகாரம் பெற்றிருந்தான். இருப்பினும் மன்னன் தவறு செய்கின்ற போது தக்க சமயத்தில் புலவர்கள் நல்வழிப்படுத்தினர். மன்னர்கள் சினம், காமம், அளவிறந்த கண்ணோட்டம், அச்சம், பொய்ச் சொல், கழி பேரன்பு, கொடுஞ்செயல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என மூன்றாம் பத்தில் பாலைக் கௌதமனார் அறிவுறுத்துகிறார்.

சினனே காமம் கழி கண்ணோட்டம்

அச்சம், பொய்ச் சொல், அன்புமிக உடைமை

தெறல் கடுமையொடு, பிறவும் இவ் உலகத்து

அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்

(பாடல்-2, மூன்றாம் பத்து)

என்கிறார்.

6.8 பதிற்றுப்பத்துக் கூறும் சமூகச் செய்திகள்

பதிற்றுப்பத்து சேரர் வரலாற்றைக் கூறும் இலக்கியம் என்பதால் இதன் மூலம் சேர மன்னர்களின் ஆட்சிக் காலச் சமூகச் செய்திகளை ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாம்.

அரசனே அனைத்து அதிகாரமும் கொண்டவனாக விளங்கினான். மக்கள் அரசனைத் தெய்வத்திற்கு இணையாகக் கருதினர்.

வீரமுடைய அரசர்கள் வள்ளல் தன்மை உடையவர்களாகவும் விளங்கினர்.

கடற்போரில் வல்லவர்களாக அரசர்கள் இருந்தனர்.

தம் நாட்டில் இரவலர் இன்மையால், பிற நாட்டில் சென்று இரவலரைக் கொணர்ந்து அவர்களுக்கு வாரி வழங்குவர்.

பல்வேறு விழாக்கள் அவர்கள் காலத்தில் கொண்டாடப்பட்டன. அவற்றில் வேனில் விழாவும், புனலாட்டு விழாவும் முக்கியமானவை.

நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்

மலிபுனல் நிகர்தரும் தீநீர் விழவிற்

பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை (பாடல் 8).

(மண்டும் = கலக்கும்; தீநீர் விழவு = இனிய நீர்விளையாட்டு; வேனில் = வேனில்விழா)

என்று ஐந்தாம் பத்தில் பரணர் கூறுகிறார்.

6.9 தொகுப்புரை

பதிற்றுப்பத்து பத்துச் சேர அரசர்களின் வரலாற்றைக் கூறினாலும் சங்க கால வரலாற்றை ஓரளவு அறியச் சான்றாக நிற்கிறது.

உலக வீரயுகப் பாடல்களுக்கு இணையாகப் போற்றப்படுகின்ற பாடல்கள் பதிற்றுப்பத்துப் பாடல்களாகும்.