சங்க இலக்கியம் - II
பாடம் - 1
அக நூல்கள்
பத்துப்பாட்டு நூல்களுள் முல்லைப் பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை ஆகியன அகநூல்கள். எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியன அகநூல்கள்.
ஐந்திணை விளக்கம்
திணை என்பதன் பொருள் ஒழுக்கம். அகத்திணைகள் ஏழு. அவை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என்பன. நிலப் பாகுபாட்டையும், தலைவன்-தலைவி ஆகியோர் அக வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளையும் ஒட்டித் திணைப் பாகுபாடு அமைந்துள்ளது. ஒவ்வொரு திணைக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் பாகுபாடு உண்டு. எந்தச் சூழலில் யார் பேசுவதாகப் (கூற்று) பாடல் பாடப்படுகிறது என்பதை விளக்கும் துறை என்ற பிரிவு திணைக்கு உண்டு.
முல்லைத் திணைக்குரிய தெய்வம்-திருமால்; மக்களுள் உயர்ந்தோர் – குறும்பொறை நாடன், கிழத்தி; உயர்ந்தோர் அல்லாதோர் – ஆயர், இடையர், ஆய்ச்சியர், இடைச்சியர்; பறவை – கானக்கோழி; விலங்கு – முயல், மான்; ஊர் – பாடி, சேரி; நீர் – காட்டாறு; பூ – முல்லை, தோன்றி; மரம் – கொன்றை, குருந்து, காயா; உணவு – வரகு, சாமை; பறை – ஏறுகோட்பறை; யாழ் – முல்லையாழ்; பண் – சாதாரிப் பண்; தொழில் – சாமை, வரகு விதைத்தல், ஆநிரை மேய்த்தல் போன்றவை.
இளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவண ரோ?எனப்
பெயல்புறம் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்குஎயிறு ஆக
நகுமே தோழி நறுந்தண் காரே (குறுந்தொகை : 126)
(நசைஇ = விரும்பி; இவண் = இங்கு; எவண் = எங்கு; பெயல்= மழை; முகை = மொட்டு; எயிறு = பல்வரிசை; நகுமே = சிரிக்குமே)
“தோழி! இன்பத்திற்கு உரிய இளமையின் அருமையைத் தலைவர் எண்ணிப் பார்க்கவில்லை. பொருள் வளத்தை விரும்பி என்னைப் பிரிந்து சென்றவர் இன்னும் வரவில்லை. நறுமணம் தரும் குளிர்ந்த கார்காலம் “எங்கேடி அவர்?” என்று கேட்பது போல் முல்லை அரும்புகளாகிய பற்களைக் காட்டிச் சிரிக்கின்றதே!”
கார்ப்பருவம் கண்டு வருந்தித் தோழியிடம் தலைவி இவ்வாறு பேசுகிறாள். முல்லைத் திணைக்கு உரிய பெரும்பொழுதான கார்காலம் நறுந்தண் கார் என இப்பாடலில் வெளிப்படுவதைக் காணுங்கள். ஒக்கூர் மாசாத்தியார் பாடிய பாடல் இது.
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
(முல்லைப்பாட்டு : அடி 6)
(புன் மாலை = வருத்தம் தரும் மாலைப் பொழுது)
என்னும் அடியில் பிரிந்தோர்க்குத் துன்பம் தரும் மாலை என்று சிறுபொழுது சுட்டப்படுவதைக் காணலாம்.
இனி, முல்லைத் திணைக்கு உரிய காடு என்னும் நிலமும், கார்ப்பொழுதும் பாடலின் ஒரே அடியில் அமைவதைக் காணலாம். ‘கார்காலத்தில் வருவேன் என்று கூறிய தலைவன் வரவில்லை. ஆனால் கார்காலம் வந்துவிட்டதைக் காடு கூறிவிட்டது. பொய் கூறாத் தலைவன் ஏன் வரவில்லை?’ என மனத்துக்குள் வருந்தும் தோழியைத் தேற்றுவது போலத் தலைவி பேசுகிறாள்.
புதுப்பூங் கொன்றைக்
கானம், கார்எனக் கூறினும்
யானோ தேறேன்,அவர் பொய்வழங் கலரே
(குறுந்தொகை : 21)
“புதிய கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கும் இக்காடு, ‘கார் காலம் வந்துவிட்டது’ என்று சொல்கிறது. ஆனாலும் நான் நம்ப மாட்டேன்; அவர்பொய் சொல்ல மாட்டார்” என்கிறாள். இங்குக் கானம் (காடு) என நிலமும் கார் எனப் பொழுதும் குறிக்கப்படுவதைக் காணலாம். ஓதலாந்தையார் பாடிய பாடல் இது.
இடைச்சிறுவன் பால் விற்றல், ஆடு மேய்த்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் காட்சியை நற்றிணைப் பாடலில் காணலாம். நுண்ணிய பல மழைத் துளிகள் அவன் உடலின் ஒருபுறத்தை நனைக்கின்றன. கையில் கோலூன்றி அதன்மேல் கால்வைத்து அவன் நடுங்கி, ஒடுங்கி நிற்கிறான். வாயைக் குவித்துச் சீழ்க்கை ஒலி எழுப்புகிறான். அதனைக் கேட்டு ஆட்டுத் தொகுதி வேற்று நிலம் புகாமல் முல்லைக் காட்டிலேயே நிற்கின்றது.
பால்நொடை இடையன்
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத்
தண்டுகால் வைத்த ஒடுங்குநிலை மடிவிளி
சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவி னதுவே… (நற்றிணை : 142)
(நொடை= விலை; துவலை = மழைத்துளி; மடிவிளி = சீழ்க்கை; சிறுதலை = ஆடு; தொழுதி = தொகுதி; ஏமார்த்து = மயங்கி; அல்கும் = தங்கும்)
நற்றிணையின் இப்பாடல் ஆயச்சிறுவனை நம் கண்முன் காட்டுகிறது. ஆடு மேய்த்தல், பால் விற்றல் முதலிய முல்லை நில மக்களின் தொழிலையும் நமக்குக் காட்டுகிறது. இடைக்காடனார் என்னும் புலவர் பாடிய பாடல் இது.
மழையில் நனைந்து குளிரால், நடுங்கும் ஆயச்சிறுமி தன் கைகளால் தோளை இறுக அணைத்துக் கொண்டு, தாய்ப் பசுக்களின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கன்றுகளிடம் “தாயர் இப்போதே வந்திடுவர்” என்று ஆறுதல் கூறுகிறாள். இது முல்லைப்பாட்டு காட்டும் காட்சி.
பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவ லசைத்த கையள்
இன்னே வருகுவர் தாயர் என்போள்
(அலமரல் = வருத்தம்; சுவல் = தோள்; அசைத்தல் = கட்டிக் கொள்ளுதல்)
மழை தொடங்கியது; தலைவன் வரவில்லை, தலைவி வருந்துகிறாள். ஆறுதல் கூறும் தோழி, “காரணம் இல்லாது மழையைப் பெய்யும் மேகத்தைக் கண்டு கார்ப்பருவ மேகம் எனத் தவறாக எண்ணுகிறது, கொன்றைமரம். அறியாமையால் மலர்கின்றன கொன்றை மலர்கள். இதைக் கண்டு நீ இது கார்ப்பருவம் என்று வருந்தாதே” என்று தேற்றுகிறாள்.
பேதையங் கொன்றைக் கோதை நிலைநோக்கி
எவன்இனி மடந்தைநின் கலிழ்வே ?
(ஐங்குறுநூறு : 462)
(பேதையங் கொன்றை = அறியாமையால் மலர்ந்த கொன்றை; கோதை = மாலை; கலுழ்தல் = கலங்குதல்)
இப்பாடலில் கொன்றை மரம், கொன்றைப் பூக்கள் ஆகிய கருப்பொருள்கள் இடம் பெறுகின்றன.
தண்நறும் பிடவமும் தவழ்பொடித் தளவமும்
வண்ணவண் தோன்றியும் வயங்குஇணர்க் கொன்றையும்
(கலித்தொகை-102 : 2-3)
என்ற முல்லைக்கலிப் பாடல் அடிகள், பிடவம், முல்லை, தோன்றி, கொன்றை முதலிய முல்லை நிலத்துக்கு உரிய மலர்களைச் சுட்டுகின்றன.
தலைவி துயருடன் ஆற்றியிருத்தல்
கார்காலத்துப் பெருமழை மாலைக் காலத்தில் வந்தது. ஆண் மான்கள் பெண் மான்களைத் தழுவியவாறு மயக்கம் மிகுந்து காட்டில் மறைந்து ஒடுங்குகின்றன. ஆண் யானைகள் தத்தம் பெண் யானைகளோடு சேர்ந்து அழகிய மலைப் பக்கங்களை அடைந்தன. பொன்னைப் போன்ற என் மேனியின் அழகு, பிரிவினால் சிதையும்படி செய்த தலைவன் இன்னும் வரவில்லையே, இன்னமும் வராவிடில் என் இனிய உயிர் என்னாகும்? எனத் தலைவி வருந்தி இருக்கிறாள்.
தோழி தேற்றல்
வருந்தும் தலைவியைத் தோழி, “உன்னைப் பிரிந்து நீடித்து அங்கிருக்க மாட்டார் தலைவர். விரைவில் வருவார்” எனத் தேற்றுகிறாள்.
இனையல் வாழி தோழி எனையதூஉம்
நிற்றுறந்து அமைகுவர் அல்லர்
(ஐங்குறுநூறு : 461)
(இனையல் = வருந்தாதே; எனையதூஉம் = சிறிதளவும்; நிற்றுறந்து = உன்னைப் பிரிந்து)
தலைவன் தலைவியை எண்ணி இருத்தல்
பாசறையில் இருக்கும் தலைவன் தலைவியின் நிலையை எண்ணிப் பார்க்கிறான். ‘நம்மைப் பிரிந்து போன நம் தலைவனின் நிலை எப்படி இருக்கிறதோ என மயக்கம் அடைந்திருப்பாள் தலைவி. கண்ணீர் சிந்தி அழுது துன்பத்துடன் ஆற்றி இருப்பாள் அவள்’ என்று தன் நெஞ்சிற்குக் கூறுகிறான் தலைவன். இப்பாடலைப் பாடிய புலவர் மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன் தேவனார்.
எவன்கொல் மற்றுஅவர் நிலை?என மயங்கி
இகுபனி உறைக்கும் கண்ணொடு இனைபுஆங்கு
இன்னாது உறைவி
(அக நானூறு-164 : 8-10)
(இகுபனி உறைக்கும் = கண்ணீர் சிந்தும்; இனைபு = அழுது உறைவி = தங்கியிருப்பவள்)
தலைவன் வினைமுடிந்து திரும்புதல்
வினைமுடிந்து தலைவியைக் காணப் பேராவலுடன் திரும்பும் தலைவன் பாகனை நோக்கி, “தலைவியின் துயரம் தீரவும், அவள் அழகு மீளுமாறு நான் தழுவவும் விரைந்து செல்லவேண்டும். விரைந்து தேரைச் செலுத்து” என்கிறான்.
அரும்படர் அவலம் அவளும் தீரப்
பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க
ஏமதி வலவ தேரே
(ஐங்குறுநூறு : 485)
(அரும்படர் = பெருந்துன்பம்; நலம் = அழகு; முயங்க = தழுவ; ஏமதி = செலுத்து; வலவ = பாகனே)
வேண்டியிருந்தது. எனவே ஆயர், தம் மகளை மணக்க வரும் ஆடவர் வீரம் மிக்கவராய் விளங்க வேண்டும் என எண்ணினர். அதன் காரணமாக ஏறு தழுவும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினர். ஏறு தழுவுதல் என்பது சீறிப் பாயும் காளைகளைத் தழுவி அடக்குதல் ஆகும். ஆயர் ஏறுகளின் கொம்பைக் கூர்மையாகச் சீவிப் பரந்த வெளியான ஏறு தழுவும் இடத்தில் விடுவர். இளைஞர் போட்டி போட்டு ஏறு தழுவ முயல்வர். ஏறு தழுவிய ஆயனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவர் ஆயர். ஏறு தழுவல் காட்சிகளை நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலிப் பாடல்களில் விரிவாகக் காணலாம்.
ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்
திருமாமெய் தீண்டலர்
(கலித்தொகை-102 : 9-10)
(பொருபுகல் = போர் செய்வதில் விருப்பம் உடைய; ஏறு = காளை)
போர் செய்யும் விருப்பம் உடைய நல்ல காளையை அடக்குபவரே அல்லாமல் வேறு யாரும் இவளது மெய் தீண்டத்தக்கவர் அல்லர் என்பது இதன் பொருள். ஆயர்குலப் பெண் ஏறு தழுவும் ஆடவனையே விரும்பி மணப்பாள் என்பதை இது உணர்த்துகிறது.
ஆடு, மாடுகள் வதியும் இடத்தையும், ஏறு தழுவும் இடத்தையும் ‘தொழு’ என்பர். ஏறு தழுவுவதற்கு முன் நீர்த்துறைகளிலும், மரத்தடிகளிலும் உள்ள தெய்வங்களை வழிபடுவது மரபு. வீரம் அற்றவனை ஆயர்குலப் பெண்டிர் விரும்ப மாட்டார். காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை ஆயர்மகள்அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டாள். இக்கருத்தை
கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்
(கலித்தொகை- 103 : 63-64)
(கோடு = கொம்பு; புல்லாள் = தழுவ மாட்டாள்)
என்ற கலித்தொகை அடிகள் எடுத்துரைக்கின்றன.
இளைஞர்கள் ஏறு தழுவும் காட்சியைக் காணும் தோழியும் தலைவியும் பேசிக் கொள்ளும் உரையாடலில் அக்காட்சி அழகாக விரிகிறது. ஆயர் காளைகளைத் தொழுவில் விடுகின்ற போது வாத்தியங்கள் முழங்குகின்றன. மகளிர் வரிசையாக நிற்கின்றனர். தொழுவில் ஆயர் பாய்ந்தபோது தூசி கிளம்புகிறது; தொழுவில் பாய்ந்த ஆயர் காளைகளின் கொம்பினைப் பிடித்தனர்; தம் மார்பில் பொருந்தும்படி தழுவினர். அவற்றின் கழுத்தில் அடங்கினர்; கொண்டை (இமில்) முறியும்படி தழுவினர்; தோளுக்கு நடுவே காளையின் கழுத்தைப் புகும்படி விட்டனர்; காளைகள் ஆயர்களைக் கீழே வீழ்த்தின; நீண்ட கொம்புகளால் சாகும்படி குத்தின; மொத்தத்தில் கோபமுற்ற காளை எமனைப் போல் விளங்கியது.
இக்காட்சிகளைக் கலித்தொகை 105 ஆம் பாடல் விரிவாகக் காட்டுகிறது.
ஏறு தழுவல் முடிந்தபின் உறவினர் இசைவுடன் திருமணம் நிகழ்த்துவதே ஆயர் குல வழக்கமாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில், கலித்தொகையில் மட்டுமே ஏறு தழுவல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.
தருமணல் தாழப்பெய்து, இல்பூவல் ஊட்டி
எருமைப் பெடையொடு எமர்ஈங்கு அயரும்
பெருமணம்
(கலித்தொகை-114 : 12-14)
(தருமணல் = கொண்டு வந்து குவித்த மணல்; பூவல்ஊட்டி = செம்மண் பூசி; பெடை = கொம்பு)
கொணர்ந்து குவித்த மணலைப் பரப்புகின்றனர்; வீட்டில் செம்மண் பூசுகின்றனர்; தெய்வமாய் வைத்த பெண் எருமையின் கொம்பை வழிபட்டு உறவினர் திருமணம் நிகழ்த்துகின்றனர் என்பது இப்பாடல் வரிகளின் பொருள் ஆகும்.
(1) கோட்டினத்து ஆயர் – எருமைக் கூட்டத்தை உடையவர்.
(2) கோவினத்து ஆயர் – பசுக் கூட்டத்தை உடையவர்.
(3) புல்லினத்து ஆயர் – ஆடுகளை உடையவர்.
மறப்பண்பில் பசுவின ஆயரை விட எருமை இன ஆயரே சிறந்தவர் என்ற கொள்கை ஆயருக்கு உண்டு.
இஃதுஒத்தன்
கோட்டினத்து ஆயர்மகன் அன்றே மீட்டுஒரான்
போர்புகல் ஏற்றுப் பிணர்எருத்தில் தத்துபு
தார்போல் தழீஇ யவன்.
(கலித்தொகை- 103 : 32-35)
(கோட்டினத்து = எருமை இனம்; ஒத்தன் = ஒருவன்; பிணர்எருத்து = சொரசொரப்பு உடைய கழுத்து; தார் = மாலை)
போரிடும் காளையின் கழுத்தில் பாய்ந்து மாலையாய் அதனைத் தழுவியவன் எருமைக் கூட்டத்தை உடைய ஆயர்மகன் அல்லவா ? காளையின் வலிமையை அடக்காமல் அவன் மீளான் என்பது இதன் பொருள்.
பால், மோர் – விற்றல்
ஆவினத்தை வளர்த்து ஆவின் பயனான பால், மோர், வெண்ணெய் விற்று வருகிறாள் ஆயர் குலப் பெண் ஒருத்தி. தலையில் மோர்ப் பானை ஏந்திப் பெரிய ஊர்களையும், சிறிய ஊர்களையும் கடந்து செல்கிறாள் அவள். அழகும் இளமையும் நிறைய, மோருடன் வந்தவளைக் கண்டபோது ஊர் முழுவதும் ஆரவாரம் உண்டாகிறது.
காமக் கடவுள் பாலுடன் செல்லும் அழகிய ஆயர் குலப் பெண்ணைக் கண்டால் அம்புகள் பயனற்றன என்று அவற்றைக் கீழே இட்டு விடுவான் என்கின்றனர்.
இவ்வாறு பிறர் ஏவப் பால், மோர், வெண்ணெய் விற்போர் ‘வினைவல பாங்கர்’ எனக் குறிக்கப்படுகின்றனர்.
மழைக்கால மாலைப் பொழுதில் தலைவனது பிரிவால் வருந்துகிறாள் தலைவி. அவள் அரசி. போருக்குச் சென்ற அரசன் வரவில்லையே என்ற ஏக்கம் அரசிக்குத் துன்பம் செய்கிறது. பெருமுது பெண்டிர் என்று அழைக்கப்படும் வயது முதிர்ந்த பெண்கள் சிலர் கோவிலுக்குச் செல்கின்றனர். அக்கோவிலில் நிறை நாழி நெல்லும், முல்லை மலர்களும் தூவி வணங்கி நற்சொல் கேட்டு நிற்கின்றனர். அப்போது ஆயச்சிறுமி ஒருத்தி கூறும் சொற்கள் அவர்களது செவிகளில் நற்சொல்லாக விழுகின்றன.
சிறிய கயிற்றினால் கட்டப் பட்டிருந்த பச்சிளங் கன்றுகள் பசியுடன் தாய்ப் பசுக்களின் வருகையை எதிர்பார்த்துக் குரல் கொடுக்கின்றன. குளிரில் நடுங்கும் ஆயச் சிறுமி அக்கன்றுகளை நோக்கி,
இன்னே வருகுவர் தாயர் (முல்லைப்பாட்டு : 16)(இன்னே = இப்பொழுதே; தாயர் = தாய்ப் பசுக்கள்) என்கிறாள்.
தாய்ப் பசுக்கள் இப்போதே வரும் என்று பொருள் தரும் இக்கூற்றைத் ‘தலைவன் விரைவில் வந்துவிடுவான்’ எனப் பொருள்படும் நல்ல விரிச்சியாக ஏற்கின்றனர் பெருமுது பெண்டிர். இதைச் சொல்லி அரசியைத் தேற்ற ஆரம்பிக்கின்றனர்.
போர்க்களம் செல்லும் ஆடவர்களின் வீரத்திற்குக் குறைந்தவர்கள் அல்லர் பெண்கள் என்ற கருத்தை இப்பெண்கள் நமக்கு உணர்த்துகின்றனர்.
அரசனை வாழ்த்தல்
முல்லை நிலப் பெண்கள் அரசனை வாழ்த்திக் குரவையிட்டுக் கூத்தாடுவது உண்டு. ஏறு தழுவிய பின் குரவையிடும் வழக்கமும் உண்டு. மன்னன் பாண்டியனை வாழ்த்துவதைச் சில முல்லைக் கலிப் பாடல்கள் காட்டுகின்றன.
சான்று : கலித்தொகை 103 ஆம் பாடல்.
தலைவியைக் காணப் பெரும் ஆவலுடன் திரும்புகிறான் வினை முடித்த தலைவன். புறப்படுமுன் தேர் மணியினது நாக்கு ஒலிக்காதபடி அதைக் கட்டுகிறான்.காரணம் என்ன? வண்டுகள் தம் துணையுடன் கூடி மகிழும் போது, தேர் மணி ஓசை அவைகளுக்கு அச்சத்தைக் கொடுத்துப்
பிரித்து விடக் கூடாது என்பதே நோக்கம். காதல் தொடர்பான இத்தகைய மென்மையான உணர்வைத் தலைவனின் ஒரு சிறு செயல் மூலம் காட்டிய புலவரின் கற்பனைத் திறன் பாராட்டத் தக்கது. வண்டின் காதலுக்கு இடையூறு செய்ய நினையாத தலைவன் தலைவிக்குத் துன்பம் ஏற்பட அனுமதியான். அதனால் விரைவில் வருவான் என்ற குறிப்பைத் தலைவிக்குத் தோழி உணர்த்தும் சிறப்பையும் இப்பாடலில் காண்கிறோம்.
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
(அகநானூறு – 4 : 10-12)
(பொங்கர் = சோலை; தாது உண் பறவை = மலரின் தேனை உண்ணும் வண்டு; ஆர்த்த = ஒலிக்காதபடி கட்டிய; பேதுறல் மயங்குதல்)
இவ்வரிகள் கற்பனைச் சிறப்பு வாய்ந்த தோழியின் சொல்லாற்றலை வெளிப்படுத்துகின்றன.
தோழியே! வினைமுடிக்கச் சென்ற தலைவன் வருவதாகச் சொன்ன பருவம் இதுதானே என்று என்னை வினவுகின்றாய்! இது அன்று! அறிவில்லாமல், பருவ காலத்தை மறந்து கடல் நீரை உண்டது மேகம். நீரை உண்டதால் சுமை தாங்க மாட்டாமல் அது மழையைப் பெய்தது. பிடவும், கொன்றையும், காந்தளும் இன்னும் பலவும் மலர்ந்து விட்டன. காரணம் அவற்றின் அறிவின்மை!
இவ்வாறு தலைவியைத் தேற்றும் தோழி, ‘நீயும் அறிவற்றுக் கார்காலம் என மயங்காதே’ என்ற குறிப்புரையைத் தருகிறாள்.
மதியின்று
மறந்து கடல்முகந்த கமஞ்சூல் மாமழை,
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
காரென்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ வாகலின், மலர்ந்தன பலவே.
(நற்றிணை : 99)
(மதிஇன்று = அறிவில்லாது; கமம் = நிறைந்த; மாமழை = மேகம்; இறுத்த = பெய்தொழித்தல்; அயர்ந்த = மறதி உற்ற; தேர்வில = அறியாதன; மடவ = அறிவில்லாதவை)
தலைவியைத் தேற்றக் கார்கால அறிகுறிகளாகிய மழையையும் மலர்களையும் குறைசொல்லும் தோழி, மதிஇன்று, மடவ என்ற கடும் சொற்களால் அவற்றைக் கடிந்து கொள்கிறாள். இளந்திரையனார் என்னும் புலவரின் இச்சொல்லாட்சிகள் கவிதையின் உணர்ச்சிக்குப் பொருத்தமாக அமைந்துள்ளதைக் காணலாம்.
தலைவியை, அவள் காதலிக்கும் தலைவனுக்கு அல்லாமல், வேறொருவனுக்கு மணம் பேசுகின்றனர் பெற்றோர். இது வேற்று வரைவு எனப்படும். இந்நிலையில் தலைவி தலைவனுக்குச் செய்தி தெரிவிக்கக் கூறும் கலித்தொகைப் பாடலில் சொல்லாட்சி சிறந்திருப்பதைக்
காணலாம்.
தருமணல் தாழப்பெய்து இல்பூவல் ஊட்டி
எருமைப் பெடையோடு எமர்ஈங்கு அயரும்
பெருமணம் எல்லாம் தனித்தே ஒழிய
வரிமணல் முன்துறைச் சிற்றில் புனைந்த
திருநுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒருமணம் தான்அறியும் ; ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த
விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அருநெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல்இயல்பு அன்றே
(கலித்தொகை- 114 : 12-21)
(பூவல் = செம்மண்; பெடை = கொம்பு; புணர்ந்த = கலந்த; தெருமரல் = கலக்கம்)
“தோழியே! மணலை உடைய துறையில் தோழியரொடு சிறி வீட்டைக் கட்டி விளையாடினேன் அல்லவா? பின்பு தோழியர் கூட்டத்தில் இருந்து நான் தனியே நீங்கினேன். தலைவன் என்னைச் சேர்ந்தான். அந்த ஒரு மணத்தை என் மனம் மட்டும் அறியும். என் உறவினர், வீட்டில் மணலைப் பரப்பிச் செம்மண் பூசுகின்றனர்; தெய்வமாய் வைத்த எருமையின் கொம்பை வழிபடுகின்றனர். உறவினர் நடத்த எண்ணும் திருமணம் (பெருமணம்) வேறு ஒருவனுக்கு என்னை மணம் முடிப்பதற்காக என்பதால், இரண்டு மணம் உண்டாகின்றது. விரிந்த கடலை ஆடையாக உடுத்திய உலகத்தைப் பெற்றாலும் ஆயர் மகளுக்கு இருமணம் கூடுதல் இயல்பு இல்லை”. இதுவே இப்பாடலின் பொருள் ஆகும்.
தலைவியின் பேச்சில் ஒருமணம், பெருமணம், இருமணம் என வரும் சொற்களின் ஆட்சி காதலின் உண்மை இயல்பை வாதிட்டு எடுத்துக் காட்டும் கருவியாகப் பயன்படுவது காணலாம்.
தலைவி, ஆயர் மகளிரோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது குருந்தம் பூவால் ஆன மாலை சூடிய ஆயன் வருகிறான். அவன் தலைவியை நோக்கி,
முற்றுஇழை ஏஎர் மடநல்லாய் ! நீஆடும்
சிற்றில் புனைகோ, சிறிது ?
(இழை = அணிகலன்; ஏஎர =அழகு; மடநல்லாய் = இளம் பெண்ணே; புனைகோ = கட்டவா)
என்று கேட்கிறான்.
‘நிறைந்த அணிகலன்களை அணிந்த அழகிய இளம் பெண்ணே! நீ கட்டி விளையாடும் மணல் வீட்டை நானும் சிறிது கட்டவோ?’ என்பது பொருள்.
நீ
பெற்றேம்யாம் என்று, பிறர் செய்த இல்இருப்பாய்
கற்றது இலைமன்ற காண்
(கலித்தொகை : 111 )
என்று தலைவி பதில் சொல்கிறாள்.
“நீ மணந்து கொண்டு எனக்கு ஒர் இல்லத்தை அமைத்துக் கொடுக்க அறியாதவன். பெற்றோர் கட்டிய வீட்டில் இருக்கவே எண்ணுபவன். ஆதலால் நீ உலகில் எதையும் கற்றவன் இல்லை” என்று சொல்கிறாள் தலைவி. இப்பாடலில் சிற்றில் என்ற சொல், வாழும் இல்லத்தைக் குறிக்கும் இல் என்ற சொல் பிறக்கக் காரணமாகி விடுகிறது. ‘விளையாட்டு வினை’ ஆகிறது. திருமணத்தை நிகழ்த்தத் தலைவனைக் குறிப்பினால் தூண்டுகிறாள் தலைவி.
இயற்கையோடு ஒட்டிய உவமை
ஏறு தழுவும் இடத்து ஓசைக்கு இடி முழக்கம் உவமை ஆகிறது. ஒரு காளையின் நிறத்திற்குப் பட்டுப்பூச்சியின் நிறம் உவமையாகிறது. மணிகளையுடைய மலைகளிலிருந்து விழும் அருவிகள் அழகின் எல்லையைத் தாண்டிய வெண்மையான கால்களை உடைய காளைக்கு உவமையாகின்றன. விண்மீன்களைக் கொண்ட அந்திக் காலத்துச் சிவந்த வானம் சிவந்த காளைக்கு உவமையாகிறது. இவ்வாறு இயற்கையோடு ஒட்டிய பற்பல உவமைகள் முல்லைக்கலியில் நிறைந்து கிடக்கின்றன.
தெய்வத்தோடு ஒட்டிய உவமை
கொல்லும் தொழிலை உடைய சிவபெருமான் சூடிய இளம்பிறை, சிவந்த காளையின் வளைந்த நீண்ட கொம்புக்கு உவமையாகிறது.
கொலைவன் சூடிய குழவித் திங்கள்போல்
வளையுபு மலிந்த கோடுஅணி சேயும்
கம்சன் முதலியவர் தன்மீதுவரவிட்ட குதிரையின் வாயைப் பிளந்து அடித்தான் கண்ணன். அவனைப் போல் தன்மேல் பாய்ந்த சிவந்த காளையின் கொம்பைப் பிடித்துக் கொண்டு, அதன் வலிமையை அடக்குகிறான் ஓர் ஆயன். (கலித்தொகை, 103 – 15-16 ; 50-55)
மாவலி வார்த்த நீர் தன் கைகளில் விழுந்த அளவில் பெரிய உருவமாக வளர்ந்தவன் திருமால். அத்திருமாலைப் போன்று மேகம் கடல்நீரைக் குடித்து உலகத்தை வளைத்து, பெரிய மழையைக் கொட்டியது. இந்த உவமையை முல்லைப்பாட்டு,
நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
கோடுகொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த
(முல்லைப்பாட்டு : 3-6)
(பாடு இமிழ் = ஒலி முழங்கும்; பனிக்கடல் = குளிர்ச்சியான கடல்; பருகி = குடித்து; வலனேர்பு = வலப்புறமாக எழுந்து; கொடுஞ்செலவு = விரைந்து செல்லும்; எழிலி = மேகம்; பெரும்பெயல் = மழை) என்று கூறுகிறது.
வாழ்க்கையோடு ஒட்டிய உவமை
ஆயர்தம் வாழ்க்கை முறைகள் உவமை ஆவதும் உண்டு. ஆயர் குலப் பெண்டிர், திரிகையில் அரிசியை இட்டுச் சுழற்றுவார்கள். சுழற்றும் போது ஏற்படும் ஒலி, விரைந்து வரும் தேரின் சக்கரம் மணலை அறுத்துக் கொண்டு வரும் ஒலிக்கு உவமையாகிறது, பெருந்தலைச் சாத்தனாரது அகநானூற்றுப் பாடலில்.
மனையோள்
ஐதுஉணங்கு வல்சி பெய்துமுறுக்கு உறுத்த
திரிமரக் குரல்இசை கடுப்ப, வரிமணல்
அலங்குகதிர்த் திகிரி ஆழி போழ
வரும்கொல் தோழி !
(அகநானூறு- 224 : 12-15)
(ஐது உணங்கு = பதமாகக் காய்ந்த; வல்சி = அரிசி; முறுக்கு உறுத்த = சுழற்ற; திரிமரம் = திரிகை; கடுப்ப = போல; திகிரி = சக்கரம்; போழ = பிளந்து கொண்டு)
மனைவி பதமாகக் காய்ந்த அரிசியை எடுத்துத் திரிகையில் இட்டுச் சுழற்றுவாள். அதன் ஒலி போல் வரி மணலில் வட்டச் சக்கரம் அறுத்துக் கொண்டு செல்லும் ஓசை தலைவனுக்கு ஒலிக்கிறது.
பொருளைக் கூறாமல் உவமையை மட்டும்வருணனையாகக் கூறும் தன்மையை உள்ளுறை உவமத்தில் காணலாம். தலைவியைக் காணும் ஆசையால் தேரை விரைந்து செலுத்துமாறு தேர்ப்பாகனை வேண்டுகிறான் தலைவன். வாயைக் குவித்துச் சீழ்க்கை ஒலி எழுப்புகிறான் ஓர் இடையன். சிறிய தலையை உடைய ஆட்டுக் கூட்டம் அந்த ஒலியைக் கேட்கிறது. வேற்றிடத்திற்குச் செல்லாது மயங்கி அந்தக் கூட்டம் அங்கேயே தங்கிவிடுகிறது என்று நற்றிணைப் பாடலில் (142) வரும் கருத்து உள்ளுறை ஆகிறது. வேற்றிடம் புக நினைக்கும் ஆட்டுக் கூட்டம் இடையன் விளித்ததால் இருந்த இடத்திலேயே தங்கி விடுகிறது என்னும் கூற்றில், சோர்வடைந்த தலைவனின் உள்ளம் பாகன் விரைந்து செலுத்தும் தேர் ஒலியால் சோராது தங்குகிறது என்னும் குறிப்புப் பொருள் அமைந்துள்ளது. ஆகவே இது உள்ளுறை உவமம் ஆகும்.
ஒடுங்குநிலை மடிவிளி
சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே (நற்றிணை-142 : 6-8)
(மடிவிளி = சீழ்க்கை ஒலி; தொழுதி = தொகுதி; ஏமார்த்து = மயங்கி; அல்கும் = தங்கும்; புறவு = காடு)
இந்தப் பாடத்தில்இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
ஏறு தழுவல், எருமைக் கொம்பை வழிபடல், மூவினம் வளர்த்தல், பால், மோர் விற்றல், விரிச்சி கேட்டல், பாசறையில் மகளிரும் பங்கேற்றல், குரவைக் கூத்திட்டு அரசனை வாழ்த்தல் முதலிய முல்லைத்திணையின் சிறப்புகளை அறிந்து கொள்ள முடிந்தது.
முல்லைப் பாடல்களில் காணப்படும் உள்ளுறை போன்ற இலக்கியச் சுவையைப் புரிந்து சுவைக்க முடிந்தது.
பாடம் - 2
ஐங்குறுநூற்றில் நூறு குறிஞ்சிப் பாடல்களையும் பாடியவர் கபிலர். கலித்தொகையில்குறிஞ்சிக்கலிப் பாடல்களைப் பாடியவரும் கபிலர். குறிஞ்சிப்பாட்டு நூலைப் பாடியவரும் அவரே. ஆகவே குறிஞ்சிக்கோர் கபிலர் என்று இவர் சிறப்பிக்கப்படுகிறார். அதனால் இப்பாடத்தில் ஐங்குறுநூறு, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு ஆகியவற்றின் பாடல்களோ, கருத்துகளோ மேற்கோளாகக் காட்டப்படும் போது பாடிய புலவரின் பெயர் சுட்டப்படவில்லை. வேறு தொகை நூல்களில் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாடல்களும் உள்ளன. பிற புலவர்கள் பாடியவையும் உள்ளன.
கருப்பொருள்கள் என்பதையும் அறிவீர்கள். நிலத்திற்குரிய மக்களின் ஒழுக்கமே உரிப்பொருள் என்பதை அறிவீர்கள். குறிஞ்சித் திணைக்கு உரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை இப்பகுதியில் அறியலாம்.
குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்
பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
(ஐங்குறுநூறு- 199 : 1-2)
(குன்ற நாடன் = முருகன் அல்லது நிலத்தலைவன்; குன்றத்துக்கவாஅன் = பக்கமலை; பகுவாய் = மலர்ந்தவாய்)
தலைவியின் பண்பைப் பாராட்டும் தலைவனின் கூற்றாக இப்பாடல் அமைகிறது. இப்பாடலின் மேற்காட்டிய இருஅடிகளும் குறிஞ்சி நிலத்தை நம் கண் முன் கொண்டு வருகின்றன. முருகனது அல்லது தலைவியின் தந்தையது மலையின் பக்க மலையில் மலர்ந்த வாயை உடைய குவளை மலர்கள் பசிய சுனையில் பூத்துக் கிடக்கின்றன என்பது இதன் பொருள்.
கல்கெழு நாடன் கேண்மை
(நற்றிணை-206, ஐயூர் முடவனார்)
(கல் = மலை; கெழு = நிறைந்த; கேண்மை = நட்பு)
சாந்த நறும்புகை
தேங்கமழ் சிலம்பின் வரையகம் கமழும்
(ஐங்குறுநூறு- 253 : 1-2)
(சந்தனம்; தேன்கமழ்சிலம்பு = தேன்மணக்கும் மலை; வரையகம் = பக்கமலை)
குன்றம், கல், மலை, வரை, சிலம்பு, வெற்பு, சாரல் ஆகிய சொற்கள் குறிஞ்சி நிலப்பகுதியைக் குறிப்பவை.
பொழுது
கூதிர்ப்
பெருந்தண் வாடையின் முந்து வந்தனனே
(ஐங்குறுநூறு-252 : 4-5)
(கூதிர்ப் பெருந்தண் வாடை = கூதிர்க் காலத்துப் பெரிய குளிர்ந்த காற்று)
இவ்வரிகளில் பெரும்பொழுதாகிய பனிக்காலம் சுட்டப்படுகிறது.
இருளிடை என்னாய்நீ இரவுஅஞ்சாய்
(கலித்தொகை- 38 :14)
(இருளிடை = இருண்டு கிடக்கும் இடம்)
நடுநாட் கங்குலும் வருதி
(ஐங்குறுநூறு-296 : 3)
(நடுநாட் கங்குல் = நள்ளிரவு)
இவ்விரு பாடல் அடிகளும் சிறுபொழுதான யாமத்தைக் குறிக்கின்றன.
தெய்வம் : முருகன்
முருகயர்ந்து உவந்த முதுவாய் வேல
(குறுந்தொகை-362 : 1, வேம்பத்தூர்க் கண்ணன்
கூத்தனார்)
முருகனை வழிபட்டு மகிழ்ந்த அறிவு மிகுந்த வேலனே! என்பது இதன் பொருள்.
மக்கள்: சிலம்பன்,
விண்டோய் மாமலைச் சிலம்பன்
(குறுந்தொகை: 362:6)
பின்னிரும் கூந்தல் நன்னுதல் குறமகள்
(ஐங்குறுநூறு-285 : 1)
(பின்னிரும் கூந்தல் = பின்னிய கரிய கூந்தல்; நுதல் = நெற்றி)
பறவை : கிளி, மயில்
வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை வாழிய பலவே!
(ஐங்குறுநூறு-281 : 1-2)
(ஊழி = இறுதிக் காலம்; வரம்பு = எல்லை; கிள்ளை – கிளி)
‘வெள்ளம் பெருக்கெடுக்கும் யுக முடிவான இறுதிக் காலத்தையும் தாண்டி, கிளியே நீ பல்லாண்டு வாழ்க!’ என்பது இதன் பொருள்.
மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிர
(ஐங்குறுநூறு-292 : 1)
மயில்கள் அகவ, பெரிய வண்டுகள் ஒலிக்கும்.
விலங்கு: புலி
ஆகொள் வயப்புலி ஆகும் அஃது
(அகநானூறு-52 : 6, நொச்சி நியமங்கிழார்)
(ஆகொள் = பசுவைக் கவர்கின்ற; வய = வலிய)
மராஅ யானை மதம்தப ஒற்றி
(அகநானூறு-18 : 4, கபிலர்)
(மராஅ = இனத்தோடு சேராத; தப = கெட; ஒற்றி = மோதி)
இனத்தோடு சேராத ஆண்யானையின் மதம் அழியுமாறு அதனை வெள்ளம் மோதி இழுக்கும் என்பது பொருள்.
மரம், பூ : சந்தன மரம், காந்தள் பூ
குன்றக் குறவன் ஆரம் அறுத்துஎன
நறும்புகை சூழ்ந்த காந்தள் நாறும்
(ஐங்குறுநூறு- 254 : 1-2)
(ஆரம் = சந்தன மரம்; காந்தள் = காந்தள் மலர்)
தொழில் : தினை காத்தல்
சிறுதினைக் காவல னாகி
(ஐங்குறுநூறு- 230 : 2)
காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென, அருவி
விடர்அகத்து இயம்பும் நாடஎம்
தொடர்பும் தேயுமோ நின்வயி னானே?
(குறுந்தொகை- 42, கபிலர்)
(கருவி = மின்னல், இடி போன்ற தொகுதி; விடர் = குகை, மலைப்பிளவு; இயம்பும் = ஒழுகும்)
“தலைவனே! நீ இரவில் வராவிட்டால் மெய்யுற்றுப் பெறுகின்ற இன்பம் இல்லாமல் போகலாம். அதனால் என் தலைவி உன்னுடன் கொண்ட நட்புக் குறைந்து போகுமா? நள்ளிரவில் பெரும் தொகுதியை உடைய பெரிய மழை பெய்கிறது. மலைக் குகைகளின் வழியே ஒழுகும் அருவியின் ஓசை மறுநாளும் கேட்கிறது. அத்தகைய மலை நாட்டைச் சார்ந்தவனே! என் வினாவிற்கு விடையைச் சொல்வாயாக”.
இப்பாடலில் தலைவன் – தலைவியின் கூடல் தொடர்பான செய்தி குறிக்கப்படுவதால், குறிஞ்சியின் உரிப்பொருள் தெளிவாகத் தெரிகிறது. (தலைவியைக் கூடத் தலைவன் முயல்வதும், தோழி அதற்கு மறுத்துரைப்பதும் கூடல் தொடர்பானவையே)
இரவில் பிறர் அறியாதபடி மலையில் மழை பெய்கிறது. ஆயினும் அருவியின் ஒலியால் மழை பெய்தது அறியப்படுகிறது; பேசப்படுகிறது. அதுபோல் இரவில் பிறர் அறியாதபடி தலைவன் – தலைவி சந்திப்பு நிகழ்ந்தாலும், பகலில் தலைவியின் மேனி (உடல்) வேறுபாடு ஊரார்க்கு இரவுச் சந்திப்பை உணர்த்திவிடும்; அவர்கள் இதைப்பற்றிப் பழித்துப் பேசத் தொடங்கி விடுவார்கள். ஆகவே இச்சந்திப்பு வேண்டாம் என மறைமுகமாக உணர்த்துகிறாள் தோழி.
நாறுஉயிர்
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை
(குறுந்தொகை- 332 : 3-4, இளம்போத்தன்)
(நாறுஉயிர் = மணக்கும் மூச்சு; மடப்பிடி = இளைய பெண்யானை; தழீஇ = தழுவி; தடக்கை = பெரியகை)
மணக்கும் மூச்சை உடைய இளமையான பெண் யானையை அன்புடன் தன் துதிக்கையால் தழுவிக்கொள்ளும் ஆண் யானை என்பது பொருள். யானைகளின் அன்புநிலை காட்டிக் கூடல் என்ற உரிப்பொருள் இங்கு உணர்த்தப்படுகிறது.
இவ்வாறு அனைத்துக் குறிஞ்சித்திணைப் பாடல்களிலும் கூடல் என்ற உரிப்பொருள், கூடல் தொடர்பான செய்திகளைச் சுட்டி வெளிப்படுத்தப் படுகிறது.
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ
நனவில் புணர்ச்சி நடக்கலும், ஆங்கே
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ
(கலித்தொகை- 39 : 34-36)
புணர்ச்சி என்ற சொல் இப்பாடலில் மீண்டும் மீண்டும் வந்து குறிஞ்சியின் உரிப்பொருளை வெளிப்படுத்துகிறது.
தலைவிக்கு உடனிருந்து பிறர் அறியாமல் களவுக் காதலுக்கு உதவியவள் தோழி. களவுக் காதல் கற்பாக மாற வேண்டும். காதல் வெளிப்பட்டுத் திருமணம் நிகழ வேண்டும். ஆதலால் வாய்ப்பு ஏற்படும் பொழுது தோழி செவிலிக்குத் (செவிலி-வளர்ப்புத்தாய்) தலைவியின் காதலைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறாள். களவை வெளிப்படுத்தல் என்று கூறாமல் அறத்தொடு நிற்றல் என்று பெயர் வைத்துள்ளது சிறப்பாகும். தலைவியின் கற்பு அறத்தைக் காப்பதற்காகக் களவு உண்மையை வெளிப்படுத்துவதால் இது அறத்தொடு நிலை என்று சொல்லப்படுகிறது.
அகவன் மகளே ! பாடுக பாட்டே !
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடும் குன்றம் பாடிய பாட்டே !
(குறுந்தொகை- 23 : 3-5, ஒளவையார்)
(அகவன் மகள் = குறிசொல்லும் பெண்; நன்னெடும் =நல்ல நெடிய; குன்றம் = மலை)
ஒரு குறிப்பிட்ட மலையைச் சார்ந்த தலைவன் ஒருவனை விரும்பினாள் தலைவி. செவிலித்தாய் தலைவியின் போக்கில் மாற்றத்தை உணர்கிறாள். எனவே குறத்தியை அழைத்துத் தலைவியின் மாற்றத்துக்குக் காரணம் அறியக் குறி கேட்கிறாள். குறத்தி குறி கூறுமுன் வழக்கப்படி பல மலைகளையும் பற்றிப் பாடத் தொடங்குகிறாள். தலைவனுடைய மலையைப் பாடும் போது தோழி குறுக்கிட்டுக் கூறுகிறாள் : “குறத்தியே ! பாடு, பாடு, அவருடைய மலையை மட்டுமே பாடிக் கொண்டேயிரு” என்கிறாள்.
இவ்வாறு குறி கூறுபவளைப் பார்த்து அவர் மலையை மட்டுமே பாடும் என்பது தாய்க்கு ஐயத்தை உறுதியாக ஏற்படுத்தும். அவர் மலை என்பதில் உள்ள குறிப்பு தலைவியின் மாற்றத்திற்கான காரணத்தைத் தாய்க்கு வெளிப்படுத்திவிடும். களவு வெளிப்பட்ட பின் திருமண ஏற்பாடுகள் தொடங்கிவிடும். இதுவே தோழியின் எதிர்பார்ப்பு. இவ்வாறு குறிப்பாக நிகழ்வதே அறத்தோடு நிற்றல் நிகழ்ச்சி.
குறிஞ்சிப் பாடல்களை இயற்றுவதில் மிகச் சிறந்தவர் கபிலர். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் பெருமையை எடுத்துச் சொல்லக் கபிலர் பாடியது குறிஞ்சிப்பாட்டு. 261 அடிகளை உடைய குறிஞ்சிப்பாட்டு அறத்தொடு நிற்றல் துறையில் அருமையாக அமைந்துள்ளது. தோழி செவிலித்தாய்க்குக் கூறும் கூற்றாக இப்பாட்டு அமைந்துள்ளது.
அன்னாய் வாழி வேண்டு அன்னை
(குறிஞ்சிப்பாட்டு – 1)
(அன்னாய்= அன்னையே; வாழி = வாழ்க; வேண்டு=விரும்பிக் கேள் அன்னை = அன்னையே)
குறிஞ்சிப்பாட்டின் இம்முதல் அடி அறத்தொடு நிற்க விரும்பும் தோழி செவிலித்தாயின் கவனத்தைத் தன்முகமாகத் திருப்பப் பேசும் பேச்சுத் தொடக்கம். தன்னை நோக்கித் திரும்புபவள் தன் சொல்லின் உண்மையை நோக்கித் திரும்புவாள் என்று தோழி நம்புகிறாள்.
களவு ஒழுக்கத்தால் தலைவியின் மேனி (உடல்), ஒழுக்கம் (இயல்புகள்) இவை வேறுபடுகின்றன. செவிலி, வேலனையும் கட்டுவிச்சியையும் (கட்டுவிச்சி – நெல்மணியை முறத்தில் இட்டுக் குறிசொல்பவள்) வரவழைத்துக் காரணம் கேட்கிறாள். அதனால் எப்பயனும் விளையவில்லை. இந்நிலையில் தலைவி தோழியிடம், ‘தோழி! நம் வீட்டுக் கட்டுக் காவலை மீறிச் சென்று, தலைவனும் நானும் கொண்ட காதலைத் தாயிடம் சொல்வது தவறாகுமா?’ என்று கேட்கிறாள்.
நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி
இருவேம் ஆய்ந்த மன்றல் இதுஎன
நாம்அறி வுறாலின் பழியும் உண்டோ?
(குறிஞ்சிப்பாட்டு: 20-22)
(எந்தை = என்தந்தை, அருங்கடி = அரிய காவல்; நீவி = கடந்து; இருவேம் ஆய்ந்த = தேர்ந்து கொண்ட; மன்றல் = களவுமணம்)
“தோழியே ! தாம் விரும்பியவர்க்கு என்னை மணம் முடிக்க நினைக்கின்றனர் தாயும் தந்தையும். அவர்களது விருப்பமும், எனது மனமும் ஒன்றிப் போகுமாறு செய்ய வேண்டும். ‘காவலைக் கடந்து நானும் தலைவனும் தேர்ந்து கொண்ட மணம் இது’ என்று நாமே தாயிடம் எடுத்துச் சொன்னால் புகழே ஆகும். பழி ஆகாது”, இவ்வாறு தலைவி தோழியை அறத்தொடு நிற்கத் தூண்டுகிறாள். அதன் படியே குறிஞ்சிப்பாட்டு முழுவதுமாகத் தோழி அறத்தொடு நிற்கிறாள். தினைப்புனம் காக்குமாறு செவிலி தலைவியையும் தோழியையும் அனுப்பிய ஒருநாள், தலைவியை நோக்கி வந்த சினம் கொண்ட யானையிடமிருந்து தலைவன் காப்பாற்றியதையும், அன்று முதல் அவர்களுக்கிடையே தோன்றிய காதலையும், தலைவன் தலைவியை மணந்து கொள்வதாக அருவிநீர் உண்டு வாக்குறுதி (சத்தியம்) அளித்ததையும், அவன் அழகையும், பண்புகளையும், குடும்ப வளத்தையும் எல்லாம் விரிவாகக் கூறிச் செவிலியின் மனம், காதலர் காதலுக்கு ஆதரவாக இசையும் வண்ணம் முயல்கிறாள் தோழி.
குறிஞ்சித்திணைக்கு மிகுந்த நயம் சேர்ப்பது அறத்தொடு நிற்றல் துறையாகும்.
வரைவு கடாவுதல் குறிப்பாலும், வெளிப்படையாலும் அமையப் பெறும். குறிப்பாய் உணர்த்தும் போது பயனற்றுப் போனால் மட்டுமே வெளிப்படையாய்க் கூறுதல் மரபு.
ஓங்கல் வெற்ப
ஒருநாள் விழுமம் உறினும், வழிநாள்
வாழ்குவள் அல்லள்என் தோழி…
கொடுந்தேன் இழைத்த கோடுஉயர் நெடுவரை
பழம்தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில்
பகல்நீ வரினும் புணர்குவை…
(அகநானூறு-18 : 8-10; 14-16, கபிலர்)
(ஓங்கல் = உயர்ந்த; வெற்ப = மலைநாடனே!; விழுமம்உறினும் = துன்பம் அடையினும்; வழிநாள் = மறுநாள் கொடுந்தேன் = வளைந்த தேன்கூடு; கோடு = உச்சி; நளிப்பு = செறிவு; பொதும்பு = புதர்; புணர்குவை = சேர்வாய்)
வரைவு நீட்டிக்கின்றான் தலைவன். அதாவது, திருமணம் செய்ய முயலாமல் காலம் கடத்துகிறான். இரவில் வந்து தலைவியைச் சந்திக்கின்றான். இரவு வருகின்றவனைப் பகலில் வா என்று இப்பாடலில் தோழி கூறுகிறாள்.
“உயர்ந்த மலைநாடனே ! இரவில் வரும் உனக்கு ஒருநாள் துன்பம் நேர்ந்தாலும் என்தோழி மறுநாள் உயிர்வாழ மாட்டாள். வளைந்த தேன்கூடுகள் கட்டப்பட்டுள்ள உயர்ந்த மலைச்சாரல் எம் ஊர். அம்மலைச் சாரலில் பழங்கள் பழுத்துத் தொங்கும் மரச்செறிவில் உள்ளது காந்தள் புதர். அப்புதரில் நீ பகற்காலத்தில் வந்தால் தலைவியைக் கூடலாம்.”
இப்பாடல் தோழியின் நாவன்மைக்கு மிகச்சிறந்த சான்றாகிறது. பகலில் வரலாம் என அவள் கூறினாலும் பகலில் தேன் எடுக்க வருபவராலும், பழம் பறிக்க வருபவராலும், காந்தள் மலர் கொய்ய வருபவராலும் இடையூறு ஏற்படும் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறாள். ஆதலால் நீ விரைந்து இவளை மணந்து கொள்வதே நன்மை பயக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறாள்.
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட ! செவ்வியை ஆகுமதி !
யார்அஃது அறிந்திசி னோரே? சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்குஇவள்
உயிர்தவச் சிறிது ; காமமோ பெரிதே
(குறுந்தொகை- 18, கபிலர்)
(வேரல் = மூங்கில்; வேர்க்கோட்பலா = வேரில்குலை உடைய பலாமரம்; தவ = மிக)
இப்பாடலில் விரைந்து வந்து மணக்குமாறு தலைவனுக்குக் குறிப்பால் உணர்த்துகிறாள் தோழி.
“வளர்ந்த மூங்கிலை வேலியாகக் கொண்ட மலைச்சாரல் நாட்டினனே! உனது நாட்டில் வேலியின் உள்ளே வேரில் குலைகளை உடைய பலா மரங்கள் நிறைந்திருக்கும். எங்கள் மலையிலோ பலாவின் உயர்ந்த சிறு கிளையில் தாங்க முடியாதபடி பெரிய பழம் தொங்கும். அந்தக் கிளைபோல் தலைவியின் உயிர் மிகச் சிறியது. பெரிய பழம்போல் அவ்வுயிர் சுமக்கும் காமமோ பெரியது. யார் இதனை அறிவார்? நீ விரைந்து வந்து அவளை மணந்துகொள்” என்பது பொருள்.
பாரி
பலவுறு குன்றம் போலப்
பெருங்கவின் எய்திய அருங்காப் பினளே
(நற்றிணை-253 : 7-9, கபிலர்)
(பலவுறு = பலாமரம் நிறைந்த; அருங்காப்பு = அரிய காவல்; கவின் = அழகு)
வள்ளல் பாரியின் பலாமரம் நிறைந்த பறம்பு மலைபோலப் பேரழகு வாய்ந்தவள் தலைவி. அத்தலைவி அரிய காவலில் வைக்கப்பட்டுள்ளாள்.
இவ்வாறு இற்செறிப்பு என்ற அருங்காவல் வைப்பு, பல பாடல்களில் இடம் பெறுகிறது.
தலைவி இற்செறிக்கப்பட்ட பின் அவளைப் பகலில் சந்திக்க இயலாதவன் ஆகிறான் தலைவன். இரவு நேரத்தில் அவளைச் சந்திக்க வருகின்றான். இரவில் வந்து தலைவியைச் சந்திக்கத் தோழி ஏற்பாடு செய்து வைக்கும் இடம் இரவுக் குறி எனப்படும். தொடர்ந்து இரவில் வரும் அவனைத் தடுத்து இனிமேல் ‘இரவில் வராதே, மணம் புரிந்துகொள்’ என்று குறிப்பாகவும், வெளிப்படையாகவும் சொல்கிறாள் தோழி. இதனை இரவுக் குறி மறுத்தல் என்று கூறுவர்.
பகல்நீ வரினும் புணர்குவை
(அகநானூறு- 18: 16, கபிலர்)
முன்னர் வரைவு கடாவுதலுக்குச் சான்றாகப் பார்த்த இப்பாடல் இரவுக்குறி மறுத்தற்கும் சான்றாகிறது.
இரவில் வரும் தலைவன் தலைவியைச் சந்திக்க முடியாமல் திரும்பிச் செல்லுமாறு நேர்கின்ற தடைகள் பற்றிக் கூறுகின்றது குறிஞ்சிப் பாட்டு.
இரவரல் மாலைய னேவரு தோறும்
காவலர் கடுகினும் கதநாய் குரைப்பினும்
நீதுயில் எழினும் நிலவுவெளிப் படினும்
(குறிஞ்சிப்பாட்டு : 239-241) (இரவரல் மாலையன் = இரவில் வரும் தன்மை உடையவன்; வருதோறும் = வரும்போதெல்லாம்; காவலர் = ஊர்க்காவலர்; கடுகினும் = காவல் செய்ய வந்தாலும்; கதநாய் = சினம் உடைய நாய்; நீ துயில் எழினும் = செவிலியான நீ உறக்கம் நீங்கி எழுந்தாலும்)
காவலர், சினம் கொண்ட நாய், நிலவு, செவிலியின் விழிப்பு ஆகிய பல தடைகளை வென்று ஒவ்வொரு நாளும் இரவில் தலைவியைச் சந்திப்பது தலைவனுக்குப் பெருஞ்சாதனை ஆகிறது.
சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
(குறுந்தொகை – 3: 2-4, தேவகுலத்தார்)
தலைவி, மலைநாடனின் நட்பு மிகவும் பெரியது. பரந்தது உயர்ந்தது என்று கூற விரும்புகிறாள். எத்தகைய மலை நாட்டிற்குத் தலைவன் என்று கூறும் போது கரிய கிளையில் பூக்கும் குறிஞ்சி மலரை நினைக்கிறாள். குறிஞ்சித்தேன் மிகவும் இனியது. குறிஞ்சி மலர்களில் உள்ள தேனை எடுத்து வண்டுகள் பெரிய தேன்கூட்டைக் கட்டியிருக்கும் மலைநாடன் என்று அவனைக் குறிப்பிடுகிறாள். சிறப்பான குறிஞ்சித் தேன் போன்றது தங்களது காதல் என உணர்த்துகிறாள்.
குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 வகை மலர்களை அடுக்கிக் கூறுகிறார். அவற்றுள் குறிஞ்சியும் உண்டு.
ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி . . . . . .
(குறிஞ்சிப்பாட்டு : 62-63)
என் தோழி மேனி
விறல்இழை நெகிழ்த்த வீவுஅருங் கடுநோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
(குறிஞ்சிப்பாட்டு: 2-4)
(விறல் = வெற்றி; இழை = அணி; நெகிழ்த்த = கழலும் படி செய்த; வீவு அருங்கடுநோய் = மருந்துகளால் நீக்குவதற்கு அரிய கொடிய நோய்; அகல்உள்ஆங்கண் = அகன்ற உள் இடத்தை உடைய ஊரில்; அறியுநர் = குறியால் உணருபவர்)
குறிஞ்சிப்பாட்டு எழக் காரணம் செவிலி குறிகேட்க ஆரம்பித்தலே ஆகும்.
“தாயே ! என் தோழியின் உடலில் அணிந்துள்ள ஆடை அணிகள் நெகிழ்கின்றன. மருந்துகளால் நீக்க முடியாத நோயினளாக அவள் உள்ளாள். அவளுக்கு வந்துள்ள அரிய, கொடிய நோயின் காரணத்தை அறிய நீ விரும்புகின்றாய். அதனால் அகன்ற உள்ளிடத்தை உடைய ஊரில் உள்ள குறியால் உணருபவரை அழைக்கிறாய். ‘என்மகள் அடைந்த நோய்க்குக் காரணம் யாது ? ’ எனக் கேட்கிறாய்.” எனக் கூறியே தோழி தொடங்குகிறாள்.
குறி சொல்லும் வேலன், கட்டுவிச்சி ஆகியோர் கட்டினாலும், கழங்கினாலும் குறி பார்த்துச் சொல்வர். முறத்தில் பரப்பிய நெல்கொண்டு பார்க்கும் ஒருவகைக் குறியே கட்டு எனக் கூறப்படுகிறது. கழற்சிக் காய்கொண்டு பார்க்கும் குறியைக் கழங்கு எனக் கூறுவர்.
குறுந்தொகையில் ‘அகவன் மகளே அகவன் மகளே! (பாடல்எண்23, ஒளவையார்) என்ற பாடலும் குறிகேட்கும் இயல்பை எடுத்துக் காட்டுகிறது.
தினைப்புனம் காவல் காக்கத் தலைவி தோழி இருவரையும் செவிலி அனுப்பிவைக்கும் வழக்கம் உண்டு. இதனைக் குறிஞ்சிப்பாட்டு காட்டுகிறது.
துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்
நல்கோள் சிறுதினைப் படுபுள் ஓப்பி
எல்பட வருதியர் எனநீ விடுத்தலின்
(குறிஞ்சிப்பாட்டு : 37-39)
(துய் = பஞ்சு; வாங்கிய = விளைந்த; புனிறு = இளமை; தீர் = நீங்கிய; பெருங்குரல் = பெரிய கதிர்; படுபுள்= வீழ்கின்ற பறவைகள் (கிளிகள்); ஓப்பி = ஓட்டி; எல்பட= சூரியன் மறைய; வருதியர்= வருவீராக)
“பஞ்சு போன்ற நுனியைக் கொண்டு நன்றாக விளைந்து வளைந்தன தினைக்கதிர்கள். அக்கதிர்களைக் கவர வரும் கிளிகளை ஓட்டி மாலையில் வருமாறு என்னையும், தலைவியையும் நீ தினைப்புனத்திற்கு அனுப்பினாய்” என்று செவிலியிடம் தோழி கூறுகிறாள்.
பரண் அமைத்து அதில் அமர்ந்து பல கருவிகளால் ஒலி எழுப்பிக் கிளிகளை விரட்டும் இயல்பினைக் குறிஞ்சிப்பாட்டு காட்டுகிறது. (குறிஞ்சிப் பாட்டு : 40-44)
கடல் குறைய நீரை மொண்டு கொண்டு வானில் கூடின மேகங்கள்; காற்று வீசியது; மேகங்கள் கலங்கின; முரசம் போன்று இடியை முழங்கின; பறவைகள் தம் கூடுகளில் போய் அடங்கின; முருகப் பெருமானின் வேல் போல் மின்னல் தோன்றியது; இத்தொகுதிகளுடன் தலைவனின் மலைமேல் மழை பொழிந்தது. நெடிய மலை உச்சியிலிருந்து வெண்மையான அருவி கொட்டியது. தெளிந்த நீரையுடைய அருவி தூய வெள்ளை ஆடை போல் இருந்தது. பளிங்கைக் கரைத்து வைத்தது போன்று சுனை பரவி இதமளித்தது. (குறிஞ்சிப்பாட்டு: 46-57)
குறுந்தொகைப் பாடல் ஒன்றில் தலைவியின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று நினைக்கிறான் தலைவன். நாணம் உடைய அவளை நாணத்திலிருந்து நீக்க அவள் உடல்தொட்டுக் கூந்தலைத் தடவுகிறான். இதனை மெய் தொட்டுப் பயிறல் என்பர். கற்பனை சிறக்க வண்டை அழைத்துப் பேசுகிறான்.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோநீ யறியும் பூவே
(குறுந்தொகை – 2, இறையனார்)
(கொங்கு = பூந்துகள், தேன்; அஞ்சிறை = அழகிய சிறகுகள்; தும்பி = வண்டு; காமம் = விருப்பம்; செப்பாது = சொல்லாமல்; கண்டது = ஆராய்ந்து கண்ட உண்மை; மொழிமோ = சொல்க; பயிலியது கெழீஇய = பல பிறவியிலும் என்னோடு இணைந்த; செறிஎயிற்று = நெருங்கிய பல்வரிசையினை உடைய; அரிவை = பெண்; கூந்தலின் = கூந்தல் போல; நறியவும் = நறுமணம் உள்ளதும்)
“அழகிய சிறகுகளை உடைய வண்டே! நீ மலர்களில் உள்ள பூந்துகளை ஆராய்ந்து உண்கின்றாய். என் வினாவிற்கு விடை தருவாயாக. எனக்காக நான் விரும்பியதை நீ சொல்ல வேண்டாம். பல பிறவியிலும் என்னோடு தொடர்ந்து வரும் அன்பினை உடையவள் என் காதலி. அவள் மயில் போன்ற சாயலினை உடையவள். நெருங்கிய பல்வரிசை உடையவள். அவளது கூந்தலைப் போல நறுமணம் உடைய பூவை நீ அறிந்ததுண்டோ ?”
வண்டை அழைத்து, அதன் வாழ்க்கை முறை காட்டித் தன் கருத்தை நிலை நிறுத்தும் பாங்கு சிறப்பிற்கு உரியது. இங்கு ஒரு நாடகமே நடக்கிறது. வண்டோடு பேசும் பேச்சு தலைவியின் அழகைப் பாராட்டும் பேச்சு; தலைவி அதைக் கேட்டுப் புன்முறுவல் பூப்பது தெரிகிறது; கூந்தலில் மொய்க்கும் வண்டை விலக்குவது போன்ற ஒரு பாவனையில் தலைவன் தலைவியின் கூந்தலைத் தீண்டுவது புலப்படுகிறது.
தலைவனோடு தான் கொண்ட நட்பின் தன்மையைத் தலைவி தோழிக்கு எடுத்துரைக்கிறாள்.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
(குறுந்தொகை – 3, தேவகுலத்தார்)
கரிய கொம்புகளில் பூத்துள்ளன குறிஞ்சி மலர்கள். அவற்றில் இருந்து வண்டுகள் தேனைச் சேர்த்துத் தேன்கூடுகளைக் கட்டுகின்றன. இத்தகு இனிமை நிறைந்த மலை நாட்டினன் என் தலைவன். அவனிடம் நான் கொண்ட நட்பானது நிலத்தைவிட அகலமானது; வானத்தைவிட உயர்ந்தது; கடலைவிட ஆழமானது. குறிஞ்சி மலரில் உள்ள தேனை மலை உச்சியில் தேன்கூட்டில் சேர்க்கின்றது தேனீ என்னும் வண்டு. அதுபோல் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த எங்கள் உள்ளங்கள் இனிமையாய் ஒன்றுபட்டன. பால்வரை தெய்வம் என்ற விதி எங்கள் இருவரையும் இணைத்துள்ளது,’ என்பன போன்ற பல கருத்துக்களை உள்ளடக்கியது இப்பாடல். இது தோழியிடம் தலைவி கூறுவது. ‘கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடன்’ என்பது சொல்லால் வரைந்த ஓவியம் ஆகிறது.
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
(குறுந்தொகை-40, செம்புலப்பெயனீரார்)
(யாய் = என்தாய்; ஞாய் = உன்தாய்; எந்தை = என்தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்; செம்புலம் = செம்மண் நிலம்; பெயல்நீர் = மழைநீர்)
முன்பின் தெரியாத ஒருவனிடத்து உள்ளத்தைப் பறிகொடுத்தாள் தலைவி. இவன் நம்மை மணப்பானோ அல்லது விட்டுவிடுவானோ என உள்ளம் கலங்குகிறாள். அவளைத் தேற்றுகிறான் தலைவன்.
“என்தாயும், உன்தாயும் உறவினர் அல்லர்; என் தந்தையும் உன் தந்தையும் உறவினர் அல்லர்; இதற்கு முன் நாம் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் இல்லை. ஆனால் நம் நெஞ்சங்கள் அன்பினால் செம்புலப் பெயல் நீர்போல ஒன்று கலந்துவிட்டன.”
இப்பாடலில் செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம் நயம் தருகிறது. செம்மண் நிலமும், எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப் பொழிகிறது. நிலம் அதனை ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன் இணைந்து விடுகிறது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம், பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது. இவ்விரண்டையும் இனிப் பிரிக்க முடியாது. இவ்வாறே தலைவன், தலைவி காதலையும் பிரிக்க இயலாது. முன்பின் அறியாத் தலைவன் தலைவியின் மனத்தில் நம்பிக்கையை உண்டாக்குவதற்கு அருமையான உவமையைப் பயன்படுத்தி உள்ளது பாராட்டத் தக்கது.
குறிஞ்சித்திணைப் பாடல்களில் எண்ணற்ற உவமைகள் நிறைந்து காணப்படுகின்றன.
சான்றாக :
இகல்மீக் கடவும் இருபெரு வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல
(குறிஞ்சிப்பாட்டு: 27-28)
‘பகை கொண்ட இரு பேரரசர்களை ஒன்று சேர்த்துக் கூட்டும் அறிவுடையவரைப் போல’ என்பது இதன் பொருள். தோழி, தலைவிக்கும் செவிலிக்கும் இடையே நின்று தலைவியின் காதலைத் தெரிவித்து, மணம் கூட்டும் பெரும் முயற்சியில் ஈடுபடுவதற்குக் கவிஞர் இந்தப் பொருத்த மான உவமையைக் கையாள்கிறார்.
‘மலையில் ஓங்கி வளர்ந்துள்ளது மூங்கில். அந்த மூங்கில் ஈன்ற அரிசியைத் தின்ன விருப்பத்துடன் வருகின்றது ஆண்யானை. மேல் நோக்கித் துதிக்கையை உயர்த்தி முயற்சி செய்கின்றது அது. தன் கைக்கு அரிசி எட்டாததால் தன் கொம்பில் துதிக்கையை வளைத்துப் போட்டு வருத்தம் நீங்குகின்றது. அக்கையைப் போன்ற வளைந்த தினைக் கதிர்கள்..’ என்றொரு செய்தியைத் தோழி குறிஞ்சிப்பாட்டில் செவிலியிடம் சொல்கிறாள். (குறிஞ்சிப்பாட்டு : 35-37)
மலையில் ஓங்கி வளர்ந்த மூங்கில் தலைவியின் உயர்ந்த குடியாகிறது; மூங்கில் ஈன்ற நெல் தலைவி; பசியுடைய யானை காதல் வேட்கையுள்ள தலைவன்; யானை மேல்நோக்கி முயற்சி செய்தல் தலைவன் இரவுக்குறியில் தலைவியைச் சந்திக்க முயற்சி செய்தல்; கைக்கு எட்டா உயரத்தில் மூங்கில் அரிசி இருப்பது தலைவி இற்செறிப்பில்இருப்பதைக் குறிக்கிறது. யானையின் தந்தங்கள் தலைவனின் நற்குணங்கள் நிறைந்த உறுதிப் பாடாகும். இவ்வாறு யானையின் வருணனை தலைவன் – தலைவி காதல் இயக்கத்துக்கு உள்ளுறையாகிறது.
முன்பு நாம் கண்ட குறுந்தொகைப் பாடலில் (பாடப்பகுதி 2.3.3) இரவில் யாரும் அறியாது பெய்த மழை, பகலில் அருவியாக வழிந்து அனைவர்க்கும் வெளிப்பட்டுவிடும் என்னும் வருணனை, தலைவன் – தலைவியின் களவுக் காதல் சந்திப்பு, தலைவியின் தோற்ற மாறுதலால் பிறர்க்கு வெளிப்பட்டு விடும் என்பதை உணர்த்தும் உள்ளுறை உவமையாகி விடுகிறது.
கோடுஉலக்கை யாகநல் சேம்பின் இலைசுளகா
ஆடுகழை நெல்லை அறைஉரலுள் பெய்துஇருவாம்
பாடுகம்வா வாழி
(கலித்தொகை- 41 : 1-4)
(பாடுகம் = பாடுவோம்; வயக்களிற்றுக்கோடு = வலிய யானைக்கொம்பு; சுளகு = முறம்; கழை = மூங்கில்; அறை = பாறை; இருவாம்= இருவரும்)
தலைவன் வேலியை அடுத்து நிற்கிறான். தோழியும் தலைவியும் உலக்கை கொண்டு நெல் குற்றும் பாட்டைப் பாடுகின்றனர். இப்பாட்டை வள்ளைப் பாட்டு எனச் சொல்வர். தலைவன் தலைவியை மணந்து கொள்ள விரும்பினான். உரியவரை அவளுடைய பெற்றோரிடம் அனுப்பினான். அவர்களும் மணத்துக்கு இசைவு (சம்மதம்) தெரிவித்தனர். அதைத் தோழி தலைவிக்குக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.
“தோழி ! வாழ்க ! நாம் பாடுவோம் வா! எவ்வாறு பாடுவோம் என்று சொல்கிறேன் தோழி ! நாம் இருவரும் அசையும் மூங்கில் உதிர்த்த நெல்லைப் பாறையாகிய உரலில் இடுவோம்; வலிமை வாய்ந்த யானைக் கொம்பாகிய உலக்கை கொண்டு குற்றுவோம். நல்ல சேம்பினது இலையை முறமாகக் கொண்டு புடைத்துப் பாடுவோம்”. இது பாடல் அடிகள் தரும் வெளிப்படைப் பொருள்.
உயர்ந்த மூங்கிலின் நெல் தானே உதிர்ந்தது; அதனை நாம் எடுத்து உரலில் இடுவோம் என்னும் வருணனை, உயர்ந்த தலைவனை நமக்குத் தெய்வம் தானே கொண்டு வந்து கொடுத்தது. அவனை நம் வயமாக்கிக் கொண்டோம் என்னும் வேறொரு குறிப்புப் பொருள் தருகிறது.
யானைக் கொம்பு கொண்டு நெல்லைக் குற்றிப் பயன்படச் செய்வது, வரைவு கடாதல் செயலால் தலைவன் பெண்கேட்டு இல்லறப் பயனை அடையச் செய்கிறோம் எனப் பொருள் தருகிறது. சேம்பிலை அரிசி புடைக்க முழுமையாகப் பயன்படாது. அதுபோல, களவுக் காதலால், விரைவாக மணந்துகொள்ள முடியாது எனும் பொருள் கிடைக்கிறது.
இவ்வாறு பொருள்கொள்ள அமைகிறது இறைச்சி.
இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
குறிஞ்சித் திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எவை என அறிந்துகொள்ள முடிந்தது; இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வெளிப்படுவதை அறிந்து கொள்ள முடிந்தது.
அறத்தொடு நிற்றல், வரைவு கடாவுதல், இற்செறிப்பு, இரவுக்குறி, குறிஞ்சியைப் போற்றல், குறிகேட்டல், தினைப்புனம் காத்தல் முதலிய குறிஞ்சித் திணையின் சிறப்புகளை அறிந்து கொள்ள முடிந்தது.
குறிஞ்சிப் பாடல்களில் காணப்படும் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை, இறைச்சி ஆகிய இலக்கியச் சுவைகளைப் புரிந்து சுவைக்க முடிந்தது.
பாடம் - 3
மருதன் இளநாகனார், ஓரம்போகியார் ஆகிய இரு புலவர்களும் மருதம் பாடுவதில் வல்லவர்கள். ஐங்குறுநூற்றில் மருதப்பாடல்களை ஓரம்போகியார் பாடியுள்ளார். கலித்தொகையில் மருதக்கலிப் பாடல்களை மருதன் இளநாகனார் பாடியுள்ளார். ஐங்குறுநூற்றில் நூறு பாடல்கள், கலித்தொகையில் முப்பத்தைந்து பாடல்கள், அகநானூற்றில் நாற்பது பாடல்கள் மருதத்திணைப் பாடல்களாகும். இப்பாடத்தில் ஐங்குறு நூற்றின் மருதப் பாடல்களோ, கருத்துகளோ குறிக்கப்படும் போது பாடியவர் ஒரே புலவர் (ஓரம்போகியார்) என்பதால், பாடிய புலவரின் பெயர் சுட்டப்படவில்லை. அதைப்போல் மருதக் கலிப்பாடல்களைப் பாடிய மருதன் இளநாகனார் பெயரும் கலித்தொகைப் பாடல்களையோ, கருத்துகளையோ அடுத்துக் குறிப்பிடப்படவில்லை.
மழைக்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற் காலம் ஆகிய ஆறு காலங்களுமே மருதத் திணைக்கு உரிய பெரும்பொழுது ஆகும். இவ்வாறு ஆண்டு முழுவதுமே மருதத்தின் பெரும்பொழுது ஆகின்றது.
அதிகாலை இரண்டு மணி முதல் காலை ஆறு மணிவரை உள்ள நேரத்தை வைகறை என்று கூறுவர். வைகறை நேரம்தான் மருதத்திணைக்கு உரிய சிறுபொழுது ஆகும்.
தெய்வம் : இந்திரன்
மக்கள் : ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர்
பறவை : நாரை, நீர்க்கோழி, அன்னம், குருகு
விலங்கு : எருமை, நீர்நாய்
ஊர் : பேரூர், மூதூர்
நீர் : ஆறு, மனைக்கிணறு, பொய்கை
பூ : தாமரை, குவளை, கழுநீர்ப்பூ
மரம் : மருதம், காஞ்சி, வஞ்சி
உணவு : செந்நெல், வெண்ணெல்
பறை : மணமுழா, நெல்லரிகிணை
பண் : மருதப்பண்
யாழ் : மருதயாழ்
தொழில் : நெல்லரிதல், கடாவிடுதல், குளத்திலும் ஆற்றிலும் புனலாடல்
விளைக வயலே (ஐங்குறுநூறு – 2 : 1-2)
(ஆதன் அவினி = சேரமன்னருள் ஒருவன்)
தோழி தலைவனிடம் கூறும் கூற்று இது. தலைவனின் நட்பு நாள்தோறும் பெருக வேண்டும் என்று கூறவரும் தோழி, ஆதன் அவினியை முதலில் வாழ்த்துகிறாள். பின்னர் ‘விளைக வயலே’ என வாழ்த்துகிறாள். இவ்வாழ்த்தில் மருதத்தின் முதற்பொருளாகிய நிலம் வெளிப்படுகின்றது. மருதநிலப் பகுதி வயல், கழனி என்று அழைக்கப்படுகின்றது. இப்பாடலில் வயல் என்ற சொல் மருத நிலப்பகுதியைக் குறிக்கிறது.
பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற்
கழனி ஊரன்
(ஐங்குறுநூறு – 4 : 4-5)
(கழனி = வயல்)
பூத்துப் பயன்படாத கரும்பையும், காய்த்துப் பயன்படும் நெல்லையும் உடைய வயல்வளம் மிகுந்த ஊரினை உடையவன் என்பது இதன் பொருள்.
மருதத் திணையின் பெரும்பொழுது ஆறு பருவங்களும் என்பதால் ஆண்டின் பன்னிரு மாதங்களும் மருதத்திற்கு உரியனவாகக் கருதப்படுகின்றன. ஆதலால் பெரும்பொழுதை மருதப் பாடல்களில் தேட வேண்டியதில்லை.
பல பாடல்களில் புதுவெள்ளம் பெருகிவரும் மழைக்காலம் குறிக்கப்படுகின்றது.
நலமிகு புதுப்புனல் ஆடக் கண்டோர்
(ஐங்குறுநூறு – பாடல் 64 : அடி-2)
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
(குறுந்தொகை – 80 : 2, ஒளவையார்)
(இரும் துறை = பெரும் நீர்த்துறை)
மருதத் திணைக்கு உரிய சிறுபொழுது வைகறை. அதிகாலை அல்லது விடியல் நேரத்தைத்தான் வைகறை என்று சொல்வர்.
ஐங்குறுநூற்றுப் பாடலொன்றில் விடியற்பொழுது குறிக்கப்படுவதைக் காணலாம்.
பரத்தை தலைவியைப் புறம் கூறினாள். ஆனால் தலைவிதான் தன்னைப் புறம் கூறியதாக அவள் பிறர்க்குக் கூறினாள். அதனைக் கேட்ட தலைவி, தான் அடங்கியது போல் பரத்தை அடக்கத்தைக் கொள்ளவில்லை என்று தலைவனிடம் கூறுகிறாள் ‘இருள் சரியாகப் புலராத வைகறை (அதிகாலை)ப் பொழுதில் ஆம்பல், தாமரை போலத் தோற்றம் தரும் ஊரையுடைய தலைவனே’ என அவனை அழைக்கிறாள்.
கன்னி விடியல் கணைக்கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர !
(ஐங்குறுநூறு – 68 : 1-2)
(கணைக்கால் = திரண்ட தண்டு; கன்னி விடியல் = மிக்க இளமையான, சரியாகப் புலராத காலைப் பொழுது)
சிறப்பற்ற ஆம்பல் தாமரை போலத் தோன்றுகிறது என்பதில் பரத்தை, தலைவியைப் போலத் தோன்றுகிறாள் என்ற உட்பொருளை உணர முடிகிறது.
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே
(குறுந்தொகை – 157 : 4, அள்ளூர் நன்முல்லையார்)
என்பதில் வைகறை, தலைவனைத் தன்னிடமிருந்து பிரிக்க வந்துவிட்டது எனத்தலைவி வருந்துவதைத் தெரிவிக்கிறது.
தெய்வம்
இந்திரன்
இந்திர விழவில் பூவின் அன்ன
(ஐங்குறுநூறு – 62 :1)
(இந்திர விழவில் = இந்திரனுக்குச் செய்யப்படும் விழாவில், பூவின் அன்ன = பூவைப் போன்ற)
மக்கள்
மகிழ்நன், ஊரன், உழவர்
எவ்வூர் நின்றன்று மகிழ்ந நின்தேரே !
(ஐங்குறுநூறு – 62 : 4)
(நின்றன்று = நின்றது)
கலிமகிழ் ஊரன்
(அகநானூறு – 146 :5, உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்)
(கலி = ஆரவாரம்)
வித்திய உழவர் நெல்லொடு பெயரும்
(ஐங்குறுநூறு – 3 : 4)
(வித்திய = விதைத்த)
பறவை
நாரை, நீர்க்கோழி
கயலார் நாரை போர்வில் சேக்கும்
(ஐங்குறுநூறு – 9 : 4)
(கயலார் = மீனை உண்ணும்; போர்வு = நெற்போர்; சேக்கும் = தங்கும்)
நீருறை கோழி நீலச் சேவல்
(ஐங்குறுநூறு – 51 : 1)
(உறை = தங்கும்)
விலங்கு
எருமை
மருதத் திணைக்கு உரிய விலங்கான எருமையை மையமாக்கி எருமைப் பத்து என்ற தலைப்பில் ஐங்குறுநூற்றில் பத்துப்பாடல்கள் உள்ளன.
கருங்கோட்டு எருமை (ஐங்குறுநூறு – 92 : 1)
(கோடு = கொம்பு)
ஊர்
மூதூர்
ஆதி அருமன் மூதூர் அன்ன
(குறுந்தொகை – 293 : 4, கள்ளில் ஆத்திரையன்)
(ஆதி = பழைமையான; அருமன் = அருமன் என்பவனுடைய)
நீர்
பொய்கை
ஊர்க்கும் அணித்தே பொய்கை
(குறுந்தொகை – 113 : 1, மாதிரத்தன்)
(அணித்து = அருகில்)
பூ
தாமரை, ஆம்பல்
ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண்துறை ஊரன்
(நற்றிணை – 300 : 3-4, பரணர்)
(இறைஞ்சும் = எதிரில் சாயும்; தண்துறை = குளிர்ச்சி பொருந்திய நீர்த்துறை)
மரம்
காஞ்சி, மருதம்
காஞ்சி நீழல், தமர்வளம் பாடி
(அகநானூறு – 286 : 4, ஓரம்போகியார்)
(நீழல் = நிழல்; தமர் = தம் சுற்றத்தார்)
மருதுஉயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறை
(ஐங்குறுநூறு – 33 : 2)
(மருது = மருதமரம்; விரி = பரந்த; பூம் = அழகான)
உணவு
நெல்
செந்நெல் அம்செறுவிற் கதிர்கொண்டு
(ஐங்குறுநூறு – 27 : 1)
(அஞ்செறு = அழகிய வயல்)
இவை போன்றே பிற கருப்பொருள்களும் மருதத் திணைப் பாடல்களில் வெளிப்படுகின்றன.
3.3.3 உரிப்பொருள் வெளிப்பாடு
மருதத்திணையின் உரிப்பொருள் ஊடலும், ஊடல் தொடர்பான நிகழ்வுகளும் ஆகும். பரத்தையை நாடித் தலைவன் செல்வதே தலைவி தலைவனிடம் கொள்ளும் ஊடலுக்குக் காரணமாகும்.
தலைவி வாயில் மறுத்தல்
பரத்தை உறவால் தலைவியைப் பிரிந்து சென்றான் தலைவன். மீண்டும் வந்தவன் தோழியிடம் தலைவியை அமைதிப்படுத்தச் சொல்கிறான். தன்னிடம் வாயிலாக வந்த (தூது வந்த) தோழிக்குத் தலைவி மறுப்பு உரையாகச் சொல்கிறாள்.
நோம்என் நெஞ்சே ! நோம்என் நெஞ்சே!
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்குஇன் புதுமலர் முட்பயந் தாங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே !
(குறுந்தொகை – 202 : அள்ளூர்நன்முல்லை)
(நோம் = நோகும் (வருந்தும்); புன்புலம் = சிறியநிலம்; அமன்ற = நெருங்கி முளைத்த; கட்குஇன் = கண்ணுக்கு இனிய; பயந்தாங்கு = தந்தது போல)
“தோழி ! என் நெஞ்சம் மிகவும் வருந்துகிறது. சிறிய நிலத்தில் நெருங்கி முளைத்த சிறிய இலைகளை உடைய நெருஞ்சியின் புதுமலர், முதலில் பார்வைக்கு இனியதாகத் தோன்றும்; பின்னர் முட்களைத் தந்து துன்பம் விளைவிக்கும். அதுபோல் தலைவர் முன்பு நமக்கு இனியன செய்தார். இப்போது பரத்தையிடம் சென்று நமக்குத் துன்பம் விளைவிக்கிறார். அதனை நினைத்து என் நெஞ்சம் மிகவும் வருந்துகிறது.” – என்பது இப்பாடலின் பொருள் ஆகும்.
இனிய, இன்னா என்ற முரண்பட்ட சொற்களால் தலைவன் உள்ளம் காலப் போக்கில் மாறுபட்டு விட்டதைச் சொல்கிறாள் தலைவி. இச்சொற்கள் அவளது வருத்தத்தை மட்டும் காட்டாமல் அவள் கொண்ட ஊடலைக் காட்டவும் பயன்படுகின்றன. தலைவனுக்கு வாயிலாக (தூதாக) வந்த தோழியிடம் தலைவி வாயில் மறுத்துக் கூறிய உரிப்பொருள் இப்பாடலில் அமைந்துள்ளது.
ஊடலுக்கு மற்றுமொரு காரணம்
பரத்தையிடம் சென்ற தலைவன் தன் வீட்டிற்குத் திரும்ப நினைக்கிறான். தலைவியின் ஊடலுக்கு அஞ்சிப் பாணனைத் தூது விடுகின்றான். தூதினால் பயனில்லை. தோழி தலைவியிடம் ‘இனி அவன் வந்தால் ஊடல் கொள்ளாதே’ எனச் சொல்கிறாள். தான் ஊடல் கொண்டதற்கான காரணத்தைத் தலைவி கூறத் தொடங்குகிறாள்.
தண்துறை ஊரன் தண்டாப் பரத்தைமை
புலவாய் என்றி தோழி ! புலக்குவென்…
என்
நளிமனை நல்விருந்து அயரும்
கைதூ இன்மையான் எய்தா மாறே
(நற்றிணை – 280 : 4-5; 8-10, பரணர்)
(தண்டா = நீங்காத; புலவாய் = ஊடாதே; என்றி = என்றாய்; புலக்குவென் = ஊடுவேன்; நளிமனை = பெரிய வீடு; விருந்தயரும் = விருந்தினரைப் போற்றும்; கைதூ இன்மை = கையொழியாது வேலை செய்தல்)
“என் பெரிய வீட்டுக்கு வரும் நல்ல விருந்தினரை வரவேற்றுப் போற்றும் விருந்தோம்பல் என்னும் மனையறம் குன்றுவதால் அவனிடம் நான் ஊடல் கொள்கிறேன். இடைவிடாது கைகள் வேலை செய்யும் விருந்தோம்பலை நான் செய்ய முடியாததால் ஊடல் கொள்கிறேன்” என்பது தலைவி கூறும் காரணம். தலைவனின் பரத்தமை ஒழுக்கமும், அதன் காரணமாகத் தலைவி விருந்தோம்ப முடியாத நிலை ஏற்படுவதும் தலைவியின் ஊடலுக்குக் காரணங்கள் ஆகின்றன.
இவ்வாறு மருதத் திணையின் பாடல்களில் உரிப்பொருளாக ஊடல் பல்வேறு வகைகளில் சொல்லப்படுகிறது.
தலைவன் தன் இல்லத்துக்குச் செல்ல மறந்து பரத்தையோடு தங்குகிறான். ஒருநாள் பரத்தை “நின் இல்லத்திற்குச் சென்று வா” என்று கூறுகிறாள். தன் இல்லம் நாடி வருகிறான் தலைவன், “பரத்தை விரும்பிச் சொன்னதால் நீ இங்கு வர வேண்டாம் அவளது வீட்டிலேயே தங்கிவிடு. அது எமக்கும் நல்லது” என்று தலைவனிடம் கூறுகிறாள் தோழி.
நினக்கே அன்றுஅஃது எமக்குமார் இனிதே
நின்மார்பு நயந்த நன்னுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை ஆகி
ஈண்டுநீ அருளாது ஆண்டுஉறை தல்லே
(ஐங்குறுநூறு – 46)
(நயந்த = விரும்பிய; நுதல் = நெற்றி; அரிவை = பெண் (பரத்தை); உறைதல் = தங்குதல்; ஆண்டு = அங்கு)
தோழி கூற்றாக அமைந்த குறுந்தொகைப் பாடல் ஒன்றில் (பாடல் எண் : 45, ஆலங்குடி வங்கனார்) தலைவன் காலையில் புறப்பட்டு, விரைவாகச் செல்லும் தேரின் மீது ஏறித் தூய அணிகலன்களை அணிந்த பரத்தையரை நாடிப் போகிறான் என்னும் செய்தி இடம் பெறுகிறது. பரத்தையரை நாடிப் போகும் போதே தலைவியும் தோழியும் அதனை அறிந்திருக்கின்றனர் என்பதை இங்குக் காண்கிறோம்.
தலைவன் அனுப்பிய தூதர் தலைவியிடம் வந்தனர். அப்போது தலைவி இவ்வாறு கூறி வாயில் மறுக்கிறாள் :
அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒருநாள் நம்மில் வந்ததற்கு எழுநாள்
அழுப என்ப அவன் பெண்டிர்
தீஉறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே
(ஐங்குறுநூறு – 32)
“தோழியே, கேள் ! நம் இல்லத்தை நோக்கி மகிழ்நன் (தலைவன்) ஒருநாள் வந்தான். அவன் பெண்டிர் அதனைப் பொறுக்காமல் தீயில் பட்ட மெழுகைப் போன்று உடனே மனம் கலங்கினர்; ஏழுநாள் வரை அழுது தீர்த்தனர் என்று பலரும் கூறுவர்” என்று தலைவி தோழியிடம் சொல்கிறாள். ஒருநாள் தலைவன் பிரிந்தால் ஏழுநாள் பரத்தையர் துன்புறுவர் – அதனால் அவன் இங்கு வரவேண்டாம் என்ற குறிப்பில் தலைவி வாயில் மறுக்கின்றாள்.
தலைவியின் ஊடலைத் தீர்க்க வந்த பாணன், தலைவன் தவறு இல்லாதவன் எனக் கூறி அவளிடம் வாயில் வேண்டுகிறான்; தலைவனின் தேர் பரத்தையர் சேரிக்குச் சென்றதில்லை என்கிறான். அவனிடம் தலைவி, “மாயத் தலைவனின் வாய்மொழியை நம்பித் தன் நலம் துறக்கத் துணிந்த மற்றோர் பரத்தையும் இருப்பாள். அங்கு நீ போ. அவள் ஊடலை நீ தீர்ப்பாயாக” என்று சொல்கிறாள். இவ்வாறு தன் ஊடலை மிகுதியாக்கி வாயில் மறுக்கின்றாள் அகநானூற்றுத் தலைவி. (அகநானூறு : 146 : உவர்க் கண்ணூர்ப் புல்லங்கீரனார்)
தோழியும் தலைவியும் இணைந்து புதுப்புனலில் நீராடியதைக் கலித்தொகைத் தலைவி இவ்வாறு கூறுகிறாள் :
புனைஇழை நோக்கியும், புனல்ஆடப் புறம்சூழ்ந்தும் (கலித்தொகை – 76 : 1)
(இழை = அணி; புறம் = வெளியில்)
“நன்கு செய்யப்பட்ட என் அணிகளைத் திருத்தினான் தலைவன். நாம் நீரில் ஆடும்போது நமக்கு ஒரு துன்பம் வாராமல் வெளியில் காவல் காத்தான் அவன்” – என்பது இப்பாடல் வரியின் பொருள்.
முன் ஒருநாள் தலைவியுடன் புதுப்புனல் ஆடிய தலைவன், “இனி நான் பரத்தைமை ஒழுக்கத்தை மேற்கொள்ள மாட்டேன்” என்று உறுதி கூறினான். அவன் இன்று பரத்தையரோடு புனல் ஆடுகிறான் என்பதைத் தலைவி கேள்விப்படுகிறாள். அவனுக்கு நெருக்கமானோர் கேட்கும்படி அவள் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள் :
“தோழியே ! கேள். வளைந்து முதிர்ந்த மருத மரங்கள் நிறைந்து இருக்கின்ற இடம் பெருந்துறை. அத்துறையில் நீராடும்போது, உடன் நீராடுவோர் அறியும்படி, ‘இனிப் பரத்தைமையை விரும்பேன்’ என்று சூள் (உறுதி, சபதம்) உரைத்தான் தலைவன். அதை மறவாமல் கடைப்பிடித்தல் தனக்குக் கடமை அன்று என அவன் கூறுவானோ?” (ஐங்குறுநூறு- 31)
தலைவன் தலைவியோடும் புனல் ஆடுகிறான்; பரத்தையிடம் செல்லும்போது பரத்தையோடும் புனல் ஆடுகிறான் என்ற உண்மையை இங்குக் காண்கிறோம்.
மகிழ்நன்
மருதுஉயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறைப்
பெண்டிரொடு ஆடும் என்ப
(ஐங்குறுநூறு – 33 : 1-3)
இப்பாடலில் தலைவன் பரத்தையரோடு புதுப்புனல் ஆடுவது குறிக்கப்படுகிறது.
மகிழ்நன், மருத மரங்கள் நீண்டு உயர்ந்து பூக்கள் விரிந்து கிடக்கும் நீர்த்துறையில் “பரத்தையரோடு நீராடுகின்றான் எனச் சொல்வர்” என்பது இதன் பொருள்.
பரத்தையிடம் சென்று திரும்பிய தலைவன் தலைவியை நெருங்க முயற்சி செய்தான். அப்போது தலைவி ஊடல் கொண்டு, “இனி எம்மனைக்கு வராதே. வந்ததைப்போல் போ!” என்று கூறுகிறாள். அதைக் கேட்ட தலைவன், “நீ இவ்வாறு பேசினால் என் உயிர் எங்ஙனம் நிற்கும்? வழி சொல்வாய்” என்கிறான். “உன் பொய்களை எல்லாம் எனக்குச் சொல்லி வருந்தாதே. முன்பே உன் வஞ்சனைகளை நான் அறிந்துள்ளேன்” என்கிறாள் தலைவி. அதற்குத் தலைவன், “என்னை வெறுக்காதே, இனிய சிரிப்பை உடையவளே, நீ என் மீது கூற விரும்பும் தீதை நான் உடையவன் அல்லன்” என்கிறான். அதைக் கேட்ட தலைவி, “நெஞ்சே! இனியும் இவனிடம் சினம் கொண்டால், தவறு செய்து விட்டேன் என்று என் பாதங்களில் வீழ்ந்து வணங்கினாலும் வணங்குவான். ஆதலால் இந்த ஊடல் போரில் தோற்று அதன் பயனைக் காண்போம்” என்று தன் நெஞ்சிற்குக் கூறி ஊடல் நீங்கப் பெறுகிறாள். (கலித்தொகை – 89)
தலைவியின் மனநிலை இப்பாடலில் ஊடலைத் தீர்த்து வைக்கக் காண்கிறோம்.
தலைவன் பரத்தையிடம் போய்த் திரும்பி வந்தான். அப்போது தலைவி தன் மகனைத் தழுவி விளையாடிக் கொண்டிருந்தாள். தலைவன் அவள் அறியாதபடி வீட்டினுள் சென்றான். அவள் அவனுடன் ஊடல் கொண்டு சினந்து உரையாடினாள். முடிவில் தலைவன், “ஏடி ! நான் தீங்கற்றவன் என்று சொன்னேன். நீ சினம் தணியாது இருக்கின்றாய். கன்றைக் கட்டின இடம் தேடிச் செல்லும் பசுவைப் போல நான் என் தந்தையின் பெயர் கொண்ட மகனை எடுத்துக் கொள்வேன்” என்கிறான். மகன் மீது அவன் கொண்ட பாசத்தால் தலைவியின் ஊடல் தீர்கின்றது.
மேதக்க எந்தை பெயரனை யாம்கொள்வேம்
தாவா விருப்பொடு கன்றுயாத் துழிச்செல்லும்
ஆபோல் படர்தக நாம்
(கலித்தொகை – 81 : 35-37)
(மேதக்க = மேன்மை உடைய; எந்தை பெயரன் = என் தந்தையின் பெயர்கொண்ட மகன்; தாவா = கெடாத; யாத்துஉழி = கட்டப்பட்ட இடத்தில்; ஆ = பசு; படர்தக = வரும்படி)
ஊடல் நீளாமல் தீர்க்கப் பெறுவது மருதத் திணைப் பாடல்களுக்குச் சிறப்புச் சேர்க்கிறது.
பரத்தை ஒருத்தி தலைவனின் மகனுக்குக் காளை முத்திரையைக் கைக் காணிக்கையாக இடுகிறாள்.
அவளும்
மருப்புப்பூண் கையுறை யாக அணிந்து
(கலித்தொகை – 82 : 11-12)
கலித்தொகைத் தலைவி ஒருத்தி தன் மகனுக்கு அணிவித்திருக்கும் அணிகளைப் பற்றிச் சொல்லும்போது, ‘மகனே! நீ அணிந்தவை வெட்டாத வாள், வெட்டாத மழு ஆகியவை நெருங்கக் கட்டிய அணி, மழைக்காலத்துத் தம்பலப் பூச்சியின் நிறத்தை உடைய பவளத்தால் செய்த காளை வடிவுடைய அணி ஆகியன’ என்று கூறுவது (பாடல்- 85 : 8-11) இங்குக் குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில் மருதத் திணைப் பாடல்களில் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை போன்ற இலக்கிய நயங்கள் அமைந்து சுவையூட்டுவதைக் காணலாம்.
வேம்பின் பைங்காய் என்தோழி தரினே,
தேம்பூங் கட்டி என்றனிர் ; இனியே,
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய ! அற்றால் அன்பின் பாலே !
(குறுந்தொகை – 196 : மிளைக்கந்தன்)
(தேம்பூங்கட்டி = இனிய அழகிய கரும்புக்கட்டி; தண்ணிய = குளிர்ந்த; அற்று = அத்தன்மைத்து; பால் = பகுதி)
“தலைவனே ! முன்பு (திருமணத்துக்கு முந்திய களவுக் காதலின் போது) என் தலைவி வேம்பின் காயை உனக்குத் தந்தாள். அதனை அழகிய இனிக்கும் வெல்லக் கட்டி என்று சொன்னாய். இப்போதோ தை மாதத்தில் குளிர்ந்து கிடக்கும் பாரியின் பறம்பு மலையில் உள்ள குளிர்ச் சுனையின் நீரை அவள் தருகிறாள். ‘அது வெம்மையாய் உள்ளது – உவர்ப்பாய் உள்ளது’ என்று கூறுகிறாய். நின் அன்பின் தன்மை இப்படிப்பட்டதாகி விட்டதே !”.
காதல் தளராத நிலையில் தலைவி விளையாட்டாக வாயில் இட்ட வேப்பங் காயும் தலைவனுக்கு வெல்லக் கட்டியாக இனித்தது. தலைவியிடம் சலிப்பு ஏற்பட்டுப் பரத்தையிடத்து மோகம் கொண்ட இந்நாளில் தலைவி தரும் குளிர்ந்த நீரும் வெப்பம் மிக்கதாக, உவர்ப்பாக இருக்கிறது. சுனைநீர் குளிர்ச்சியானது. பாரியின் பறம்பு மலைச் சுனைநீர் மிக மிகக் குளிர்ச்சியானது. பனிக்காலமாகிய தை மாதத்தில் அந்நீர் அதிகக் குளிர்ச்சி பெற்றிருக்கும். இதனையே தலைவன் வெப்பம் மிக்கது என்று கூறினால், தலைவியிடம் அவன் கொண்ட காதல் கசக்க ஆரம்பித்து விட்டது என்பதுதான் பொருள். வேம்பின் பழத்தில் கூடச் சிறிது இனிப்புச் சுவை இருக்கும். ஆனால் வேம்பின் பசிய காய் மிகவும் கசக்கும். அந்தக் காய் கூட ஒருநாள் அவனுக்கு இனித்தது. காரணம் தலைவியிடம் கொண்ட காதலின் இனிப்பு. இன்று அவன் மனநிலை மாறிடக் காரணம் பரத்தையிடம் அவன் கொண்ட காதல் அல்லவா?
அருமையான கற்பனைக்குச் சான்று குறுந்தொகையின் இப்பாடல்.
கலித்தொகைப் பாடலொன்று (எண்:92) தலைவன் கண்ட அழகுக் கனவைக் கற்பனையுடன் எடுத்துரைக்கிறது. தலைவன் – தலைவியின் உரையாடலாக அமையும் நயத்தையும் இப்பாடலில் காண முடிகிறது.
தலைவன் : “ஆரவாரம் மிகுந்த மதுரையில் வையைக் கரைச் சோலையில் இருப்பதாகக் கனவு கண்டேன்”.
தலைவி : “அதைச் சொல்”
தலைவன் : “இமயமலையின் ஒரு பக்கத்தில் மாலையில் அன்னங்கள் தங்கியது போல், வைகைக் கரை மணல்மேட்டில் அழகிய பெண்கள் தம் தோழியருடன் இருந்தனர்”.
தலைவி : “பறை ஓசை நாம் விரும்பிய சொற்களாகவே ஒலிக்கும். அதுபோல் நீ விரும்பிய இன்பத்தையே கனாவாகக் கண்டாய். மேலே சொல்”.
தலைவன் : “கொடிபோன்ற அழகுப் பெண்கள் ஒரு பூங்கொடியை வளைத்துக் கொத்துகளைப் பறித்தனர். கொத்துகள் உடைந்தன. கொத்துகளில் இருந்த வண்டுகள் அழகுப் பெண்களை மொய்த்துப் போரிட்டன. இந்தப் போரில் ஒருத்தியின் முத்து மாலையும் மலர்மாலையும் இன்னொருத்தியின் வளையலில் சிக்கின. ஒருத்தியின் நெற்றிமுத்து வடம் இன்னொருத்தியின் காதணியில் சிக்கியது. ஒருத்தியின் ஆடை வேறொருத்தியின் சிலம்பில் சிக்கியது. ஊடல் கொண்டு கணவனைத் தழுவாது இருந்த ஒருத்தி வண்டின் ஆரவாரத்திற்கு அஞ்சினாள்; கணவன் வணங்க அவன் மார்பில் பொருந்தினாள். மொய்க்கும் வண்டுக் கூட்டத்திற்குப் பயந்து ஒருத்தி குளத்தில் பாய்ந்தாள். ஒருத்தி ஓடத்தில் பாய்ந்தாள். விளையாட்டு மங்கையர் அவ்வண்டுகளுக்குத் தோற்றனர்”.
தலைவி : “உன் பெண்டிர் உன்னிடம் ஊடல் கொண்டதையும், அவர் முன் நீ வணங்கியதையும் கனவின் மேல் இட்டுக் கூறுகின்றாய்”.
தலைவன் : “நான் பொய் சொல்லவில்லை; ஊடலால் பிரிந்தோரே, கூடுங்கள் என்பதுபோல் குயில்கள் கூவின. நான் கண்ட கனவு உண்மைதான் என்பதை உணர்வாயாக”.
இங்கே தலைவியுடன் பேசும் தலைவன் பரத்தையிற் பிரிந்து திரும்பி வந்திருப்பவன்; தலைவியிடம் தூது அனுப்ப ஆள் இல்லாதவன்; தன் காதல் ஏக்கத்தையே தூது ஆகக் கொண்டு அவளுடைய ஊடல் நீக்க முயல்கிறான். இந்த முயற்சிதான் ஒரு கற்பனைக் கனவாக விரிந்துள்ளது.
“நீண்ட நேரம் நீராடினால் கண்கள் சிவக்கும். இனிப்பான தேனும் மிகுதியாக உண்டால் புளிப்பை உண்டாக்கும். நினக்கு முன்பு இனிப்பாயிருந்த தலைவி இன்று புளிப்பாகிப் போனாள்” என்று தோழி கூறுவதாக அமைகிறது குறுந்தொகைப் பாடல் ஒன்று.
நீர்நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
(குறுந்தொகை – 354 : 1-2, கயத்தூர் கிழான்)
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை நினைவூட்டுவதுபோல் தேனும் புளிக்கும் என்ற தொடர் அமைகிறது. இனிய தேன் புளிக்கக் காரணம் என்ன? அளவை மீறி உண்பதால் அது புளிக்கிறது. நெடுநாள் பழகியதால் இனித்த தலைவி இன்று புளிக்கின்றாளோ? தலைவியிடம் உன் அன்பு என்ற இனிமை ஏன் குறைந்தது? என்று கேட்க நினைக்கும் தோழி பரத்தமை ஒழுக்கமே காரணம் என்பதையும் அவனுக்கு உணர்த்த விரும்புகிறாள். “எம் தந்தையின் ஊரில் எங்களை விட்டுவிட்டு நீ செல்” என்று தொடர்ந்து தோழி தலைவனை வலியுறுத்துகிறாள்.
எம்இல் உய்த்துக் கொடுமோ (அடி-3)
என்று அவள் கூறுவது உறுதியாகத் தலைவனின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். தலைவியின் தந்தை வீட்டில் அவளை மட்டும் விட்டுச் சென்றால் ஊர் மக்கள் பழிச் சொற்களை நஞ்சு போல் அள்ளி வீசுவர். களவுக் காலத்தில் நஞ்சைக் கக்கும் பாம்புகள் திரியும் தெருவில் அன்று உன் மிகுதியான துன்பத்தைப் போக்கியவள் தலைவி. இன்று பழியைக் கூறும் மக்களின் சொற்கள் தரும் துன்பத்திலிருந்து அவளை நீ காப்பது உன் கடமை அல்லவா? என்று இடித்து உரைப்பது போல் சொற்களைக் கொட்டுகிறாள் தோழி. சொல்லாட்சியில் இப்பாடல் சிறக்கிறது.
‘பரத்தையரை நான் அறியேன். வீணாக ஊடல் கொள்ளாதே’ என்றான் தலைவன். அவன் அன்பு கொண்டுள்ள பரத்தையைத் தான் கண்டதைச் சொல்லி ஊடுகின்றாள் அகநானூற்றுத் தலைவி ஒருத்தி.
தலைவனின் மகனது முகம் பார்த்து அவனைப் பாசத்தால் தழுவுகிறாள் பரத்தை. ‘வருக என் உயிரே!’ என்கிறாள். இதைக் கண்ணுற்ற தலைவி பரத்தையிடம்,
மாசுஇல் குறுமகள் ! எவன்பேது உற்றனை
நீயும் தாயை இவற்கு
(அகநானூறு-16 : 12-13,சாகலாசனார்)
என்கிறாள். “குற்றமற்ற இளம் பெண்ணே ! நீ எதற்கு மயங்கினாய்? நீயும் இச்சிறுவனுக்குத் தாய் ஆவாய்” என்பது இதன் பொருள்.
இப்பாடலில் பரத்தையிடம், “நீயும் என் மகனின் தாயே!” என்பதில் ‘தாய்’ என்ற சொல், உண்மையான பொருளிலா வருகிறது? பரத்தையை எள்ளுவதாகவும், தலைவனைக் கடிவதாகவும் அமைகிறது.
பரத்தையுடன் நீராடிய தலைவன் திரும்புகிறான்; தலைவியைப் பாராட்டுகிறான். ஊடல் கொண்ட அவள் தன் இளமை தொலைந்ததை அவனுக்கு நினைவூட்டுகிறாள்.
பல்வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்
இளமை சென்று தவத்தொல் லஃதே
(அகநானூறு – 6 : 20-21, பரணர்)
(தவ = மிகுதியாக; தொல்லஃதே = பழையதாயிற்றே)
“பலவாகிய வேற்படையை உடையவன் மத்தி. அவனது கழாஅர் என்ற ஊரைப் போன்று என் இளமை கழிந்து மிகப் பழையதாயிற்று” என்கிறாள். ஊர் பழைமை அடைய அடையப் பெருமை பெறும். அதுபோலத் தன் இளமை கழிந்தாலும் பெருமைக்கு உரியவளே என்பதை இந்த உவமை மூலம் புலப்படுத்துகிறாள் தலைவி.
நண்டின் கண்களை அழகான உவமை கொண்டு மருதப் பாடல் வருணிக்கின்றது.
வேப்புநனை அன்ன நெடுங்கண் கள்வன்
(ஐங்குறுநூறு – 30 : 1)
(வேப்பு நனை = வேப்பம் பூவின் அரும்பு; அன்ன = போன்ற; கள்வன் = நண்டு)
வேப்பம் பூவின் அரும்பு போன்ற நீண்ட கண்களையுடைய நண்டு என்பது இதன் பொருள்.
தலைவனையும் தலைவியையும் பழித்து உரைக்கின்றாள் பரத்தை.
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
(குறுந்தொகை – 8 : 4-5, ஆலங்குடி வங்கனார்)
கண்ணாடியில் தோன்றும் உருவம் எதிரில் நிற்பவர் கையை, காலைத் தூக்கும் போது தானும் தூக்கும். அதைப்போலத் தலைவி சொன்னபடி எல்லாம் ஆடுகிறான் தலைவன் என்பதை இவ்வுவமை மூலம் பரத்தை உணர்த்துகிறாள்.
தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன் பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்பது எவன்கொல் அன்னாய் !
(ஐங்குறுநூறு – 24)
(சாப்பிறக்கும் = சாகப் பிறக்கும்; புள்ளிக் கள்வன் = புள்ளிகளையுடைய நண்டு; பிள்ளை = குஞ்சு; முதலைத்து = முதலையை உடையது; ஆகின்று கொல்= ஆகின்றமைதானோ; பொலந்தொடி= பொன்வளையல்; தெளிர்ப்ப = ஒலிக்க; முயங்கியவர் = புணர்ந்தவர்; துறப்பது = நீங்குதல்)
பரத்தை ஒழுக்கத்திலும் கூட, தலைவன் ஒரு பரத்தையை விட்டு வேறொரு பரத்தையிடம் கூடி இன்புற்றான். அதனை அறிந்தாள் தோழி. வாயிலாக வந்தவர் கேட்கும்படி தலைவியிடம் கூறுவதாக வரும் பாடல் இது.
“தலைவியே ! மகிழ்நனுடைய ஊர் தாய் சாவப் பிறக்கும் புள்ளி பொருந்திய நண்டுகளை உடையது; தன் குட்டியையே உண்ணும் முதலையையும் உடையது. சேரியில் உள்ளவர் கூறுவதனால்தான் இங்கு வந்தானோ? அங்ஙனம் வந்தவன் பொன் வளையல்களை அணிந்த மகளிரின் அழகை அனுபவித்தும், அவர் நலம் கெடும்படி துறப்பது ஏன்? சொல்” – என்கிறாள்.
இப்பாடலில் அமைந்துள்ள உள்ளுறையை இனி அறியலாம்.
தாய் சாகப் பிறக்கும் நண்டை உடைய ஊரினன் என்பது, கலந்த மகளிரின் நலத்தைக் கெடுக்கும் அன்பு இல்லாதவன் என்ற உள்ளுறையைத் தருகிறது. பிள்ளை தின்னும் முதலையை உடைய ஊரினன் என்பது இனித் தழுவ இருக்கும் மகளிர் நலத்தை அனுபவித்துப் பிரியும் அருள் இல்லாதவன் என்ற உள்ளுறையைத் தருகின்றது.
ஆலங்குடி வங்கனாரின் அகநானூற்றுப் பாடலொன்று (106) சுட்டும் உள்ளுறையைக் காண்போம்.
முதுமையால் பறக்க முடியாத சிரல் பறவை, மீனுக்கு அருகில் இலையில் அமர்ந்துள்ளது. மீனை அதனால் கவர முடியவில்லை. பிற சிரல் பறவைகள் மீனைக் கவர்வதைப் பொறுக்க முடியவில்லை – இச்செய்தி பாடலில் காணப்படுகிறது.
முதுமையால் எழுச்சி குன்றித் தன் இல்லத்தில் இருக்கின்றாள் தலைவி. தலைவன் அருகில் இருந்தும் அவனை வளைத்துக் கொள்ள முடியவில்லை. இளம் பருவமுடைய பெண்டிர் அவனைத் தழுவுவதையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று பரத்தைகுறிப்பாக எள்ளுவதை உள்ளுறையாக இப்பாடல் செய்தி உணர்த்துகிறது.
இவ்வாறு இன்னும் பல பாடல்களில் உள்ளுறை அமைகின்றது.
பரத்தமை ஒழுக்கம், வாயில் மறுத்தல், புதுப்புனல் ஆடல், ஊடல் தணிதல், பிள்ளைத்தாலி அணிதல் முதலிய மருதத் திணையின் சிறப்புகளை அறிந்து கொண்டிருப்பீர்கள்.
மருதப் பாடல்களில் காணப்படும் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய இலக்கிய நயங்களைப் புரிந்து கொண்டு.
பாடம் - 4
ஐங்குறுநூற்றில் நூறு நெய்தல் பாடல்களையும் பாடியவர் அம்மூவனார். கலித்தொகையில் நெய்தல்கலிப் பாடல்களைப் பாடியவர் நல்லந்துவனார். நெய்தல்கலிப் பாடல்கள் மொத்தம் முப்பத்து மூன்று.
இனி இப்பாடத்தில் ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவற்றின் பாடல்களோ, கருத்துகளோ மேற்கோளாகக் காட்டப்படும் இடங்களில் பாடிய புலவர் பெயர் குறிப்பிடப்பட மாட்டாது.
1) இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி)
2) முதுவேனிற் காலம் (ஆனி, ஆடி)
3) கார் காலம் (ஆவணி, புரட்டாசி)
4) குளிர் காலம் (ஐப்பசி, கார்த்திகை)
5) முன்பனிக் காலம் (மார்கழி, தை)
6) பின்பனிக் காலம் (மாசி, பங்குனி)
இவை ஆறும் நெய்தலின் பெரும்பொழுது ஆகும். நெய்தல் திணைக்கு உரிய சிறுபொழுது எற்பாடு. எற்பாடு என்றால் சூரியன் மறையும் நேரம் அல்லது ஒளி மறையும் நேரம் என்று பொருள்படும்.
தெய்வம் : வருணன்
மக்கள் : துறைவன், சேர்ப்பன், பரத்தி, பரதவர், பரத்தியர், நுளைச்சி, நுளையர், நுளைச்சியர், அளவர்
பறவை : நீர்க்காக்கை, அன்னம்
விலங்கு : சுறா, முதலை
ஊர் : பட்டினம், பாக்கம்
நீர் : மணற்கேணி
பூ : நெய்தல், தாழை
மரம் : புன்னை, தாழை
உணவு : மீனும் உப்பும் விற்றலால் வரும் பொருள்.
பறை : மீன்கோட் பறை
பண் : செவ்வழிப் பண்
யாழ் : விளரியாழ்
தொழில் : உப்பு விற்றல், மீன் பிடித்தல்
முழங்குகடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
(ஐங்குறுநூறு -105 : 1-2)
(திரை = அலை; தரு = தந்த; இமைக்கும் = ஒளிவிடும்)
ஒலிக்கும் கடல் அலைகள் கொண்டு வந்த முத்துகள் வெண்மையான மணலில் கிடந்து ஒளிவிடும் என்பது இவ்வடிகளின் பொருள்.
கடற்கரை, பெருநீர், அழுவம், பௌவம், போன்ற சொற்களால் நெய்தல் நிலம் குறிக்கப்படுவதைப் பல பாடல்களில் காண முடிகின்றது.
(எ.டு)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
(ஐங்குறுநூறு – 170 :1)
பெருநீர் அழுவத்து எந்தை தந்த…
(அகநானூறு – 20 : 1, உலோச்சனார்)
தெண்திரைப் பௌவம் பாய்ந்து
(ஐங்குறுநூறு – 121 : 3)
(அழுவம், பௌவம் = கடல்)
கடல் சார்ந்த மணல்பரப்பில் விரிந்திருக்கும் சோலைகள் கானல் எனப்படும்.
என்நலனே
ஆனா நோயொடு கான லஃதே
(குறுந்தொகை – 97 : 1-2, வெண்பூதி)
(ஆனா = குறையாத)
பெரும்பொழுது
குறுந்தொகை 55-ஆவது பாடலில் (நெய்தற் கார்க்கியர்) ஊதையொடு என்று வரும் சொல் குளிர்காலத்தைக் காட்டுகின்றது. (ஊதை = வாடை)
சிறுபொழுது
நீலம் கூம்பும்
மாலை வந்தன்று …
(ஐங்குறுநூறு – 116 : 2-3)
எற்பாடு என்பது சூரியன் மறையும் அந்தி மாலை நேரம். நீலமலர் குவியும் அந்தி மாலை வந்தது என்பது இப்பாடல் அடிகளின் பொருள்.
மக்கள்
பரதவர், துறைவன், சேர்ப்பன்
உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர்
(நற்றிணை – 63 : 1, உலோச்சனார்)
(உரவு = வலிமை; உழந்த = வருந்திய)
துறைவன் தம்ஊ ரானே
(குறுந்தொகை – 97 : 3, வெண்பூதி)
நளிநீர்ச் சேர்ப்ப !
(ஐங்குறுநூறு – 179 : 1)
(நளிநீர் = மிகுந்த நீர் (கடல்))
பறவை
அன்னம்
துதிக்கால் அன்னம்……
(ஐங்குறுநூறு – 106 : 2)
(துதிக்கால் = தோற்பை போன்ற கால்)
விலங்கு
சுறா
கோட்சுறா எறிந்தென
(நற்றிணை – 207 : 8)
(கோட்சுறா = கொல்லவல்ல சுறாமீன்)
ஊர்
பாக்கம்
பெருங்கழிப் பாக்கம் கல்லென
வருமே தோழி கொண்கன் தேரே
(நற்றிணை – 111 : 9-10)
(பெருங்கழி = பெரிய நீர்க் கழிகள் சூழ்ந்த; கல்லென = கல் என்று ஒலிக்க; கொண்கன் = தலைவன்)
மேற்காட்டிய நற்றிணைப் பாடல்களின் (207, 111) ஆசிரியர்கள் பெயர் தெரியவில்லை.
மரம்
புன்னை
புன்னை
பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை
(ஐங்குறுநூறு – 110 : 1-2)
(பூக்கெழு = பூக்கள் நிறைந்த)
பண்
செவ்வழிப்பண்
செவ்வழி யாழ்நரம்பு அன்ன
(கலித்தொகை – 118 :15)
தொழில்
உப்பு விற்றல்
உப்புஒய் உமணர்
(அகநானூறு – 30 : 5, முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்)
(ஒய் = உப்பு வண்டியைச் செலுத்தும்; உமணர் = உப்பு வாணிகர்)
இவை போன்றே பிற கருப்பொருள்களும் ஆங்காங்கே பாடல்களில் வெளிப்படுகின்றன.
களவு (திருமணத்திற்கு முற்பட்ட காதல் வாழ்க்கை), கற்பு (திருமணத்திற்குப் பிற்பட்ட குடும்ப வாழ்க்கை) இரு நிலையிலும் நெய்தலின் உரிப்பொருள் ஆகிய இரங்கல் வெளிப்படும்.
இரங்கல் – களவுக் காதலில்
அன்னை வாழிவேண்டு அன்னை ! – என்தோழி
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து
தண்கடல் படுதிரை கேட்டொறும்
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே
(ஐங்குறுநூறு – 107)
(நுதல் = நெற்றி; பசப்ப = பசலை நோய் கொள்ள; சாஅய் = துன்புற்று; படர் = வருத்தம்; கேட்டொறும் = கேட்கும் போதெல்லாம்; நோகோ = வருந்துகிறேன்)
தோழி செவிலித் தாய்க்கு அறத்தொடு நிற்கும் நிலையில் பிறப்பது இப்பாடல். தலைவன் வரைவு நீட்டித்தான். தலைவியைப் பசலை நோய் (இளைத்து நிறம் மாறுதல்) பற்றுகிறது. இரவெல்லாம் அவள் தூங்குவதில்லை. காரணம், தலைவனை நினைத்து வருந்துவதே.
“தாயே ! நான் சொல்வதை விருப்பத்துடன் கேள். என் தோழியின் ஒளியுடைய நெற்றியில் பசலை பற்றிக்கொண்டது. துன்ப மிகுதியால் வருந்தி மெலிந்தாள். குளிர்ந்த கடலின் அலை ஒலி கேட்கும் போதெல்லாம் அவனுடைய தேரின் மணி ஓசை என நினைத்து உறங்காமல் வருந்துகிறாள். அதனால் நானும் வருந்துகிறேன்” என்பது இப்பாடலின் பொருள்.
இரங்கல் – கற்பு வாழ்க்கையில்
தலைவனின் பிரிவுக் காலம் நீண்டதால் மாலைப் பொழுதிடம் மனம் குமுறி வருந்துகிறாள் கலித்தொகைத் தலைவி.
மாலை நீ
எம்கேள்வன் தருதலும் தருகல்லாய் ; துணைஅல்லை
பிரிந்தவர்க்கு நோய்ஆகிப் புணர்ந்தவர்க்குப்
புணையாகித்
திருந்தாத செயின்அல்லால் இல்லையோ நினக்கு !
(கலித்தொகை – 148 : 16-19)
(கேள்வன் = கணவன்; தருதலும் தருகல்லாய் = தருதலையும் செய்யாய்; புணர்ந்தவர்க்கு = சேர்ந்தவர்க்கு; புணை = தெப்பம்)
“மாலையே ! நீ அறிவு மயங்கினை ! என் கணவரை முன்பு போல் இங்கு நீ தரவும் இல்லை. எனவே நீ எனக்குத் துணை இல்லை. கணவனைப் பிரிந்த மகளிருக்குப் பிரிவு நோயின் வடிவமே நீ தான். கணவனைச் சேர்ந்த மகளிருக்கு இன்பத்தின் தெப்பமாக இருப்பதும் நீ தான். இவ்வாறு நன்மையே ஆகாத செயல்களைச் செய்வது அல்லாமல் வேறு நற்செயல்கள் உனக்கு இல்லையோ?” என்பது இப்பாடல் அடிகளின் பொருள்.
இப்பாடல் வேந்தனுக்குத் துணையாகப் போருக்குச் சென்ற தலைவனைப் பற்றியது. நாடு கொள்வதற்குப் பிரிதல் களவு ஒழுக்கத்தில் இல்லை. எனவே இது கற்புக் காலத்துப் பிரிவு ஆகும்.
இவ்வாறு நெய்தல் திணைப் பாடல்களில் இரங்கல் என்ற வருத்தம் தொடர்பான ஒழுக்கமே நிறைந்துள்ளது.
தலைவியை மணந்து கொள்வதில் கருத்தின்றிப் பகலில் மீண்டும் மீண்டும் தலைவியைக் காண வருகிறான் தலைவன். ‘இதனை அன்னை அறிந்தால் தலைவியை வெளியில் அனுப்பாமல் வீட்டில் இருத்தி விடுவாள். எனவே விரைவில் மணந்துகொள்’ என்கிறாள் அகநானூற்றுத் தோழி.
ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை
கோதை ஆயமொடு வண்டல் தைஇ
ஓரை ஆடினும் உயங்கும்நின் ஒளியென
(அகநானூறு – 60 : 9-11, குடவாயிற்கீரத்தனார்)
(ஊதை = வாடைக்காற்று; அடைகரை = நீர்க்கரை; கோதை = மாலை; ஆயம் = தோழியர்கூட்டம்; வண்டல் = சிற்றில்; தைஇ = கட்டி; ஓரை = விளையாட்டு)
“ஊதைக் காற்றால் குவிக்கப்பட்ட உயர்ந்த மணற்குன்றை உடையது நீர்க்கரை. அக்கரையில் மாலை அணிந்த தோழியருடன் சிற்றில் கட்டி விளையாடினாலும் “உன் உடம்பின் ஒளி வாடும். அங்குப் போகாதே” என்று சினப்பாள் தாய். அப்படிப்பட்ட தாய் உன் வருகையை அறிந்தால் தலைவியைக் காவலில் வைத்துவிடுவாள்” என்று தோழி கூறுகிறாள்.
அகநானூற்றுப் பாடலொன்று இளம் பெண்கள் விளையாடும் வரிமனையை (சிற்றில் அல்லது மணல்வீட்டை), கடல் அலை வந்து அழிக்கும் என்று குறிக்கிறது.
மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
(அகநானூறு – 90 : 1-2, மதுரை மருதனிளநாகனார்)
(வெண்தலை = நுரையோடு கூடிய அலைகள்; புணரி = கடல்)
தோழியர் கூட்டத்தோடு சேர்ந்து மணல்வீடு கட்டி விளையாடுவது நெய்தல் நில இளம் பெண்களின் உற்சாகமான பொழுதுபோக்கு எனத் தெரிகிறது.
கடற்கரையில் மட்டுமல்லாது இல்லத்திலும் கூடல் இழைப்பது உண்டு.
தன் இல்லத்தில் கூடல் இழைக்கின்றாள் ஒரு தலைவி. ஒரு முனை மற்ற முனையுடன் கூடவில்லை. ஆதலால் அது இளம்பிறை போல் விளங்கியது. அந்த இளம்பிறை பின்பு முழு நிலவாக மாறி வருத்தும் என்று எண்ணுகிறாள்; தான் உடுத்திருந்த ஆடையால் அதை மூடுகிறாள்; உடனே இளம்பிறையை அணியும் சிவபெருமான் பிறையைத் தேடுவான் என்று எண்ணுகிறாள். தான் சிவனுக்கு அதைக் கொடுத்து உதவி செய்தவளாக விளங்க எண்ணுகிறாள். உடனே மூடும் முயற்சியைக் கைவிடுகிறாள்.
இக்காட்சியைக் கலித்தொகையில் நல்லந்துவனார் காட்டுகின்றார் (142 : 24-29).
தலைவன் வரைவு நீட்டிக்கிறான். தலைவி இற்செறிப்பில் வைக்கப்பட்டுள்ளாள். ஒருநாள் தலைவியின் வீட்டு வேலிக்கு அப்பால் உள்ள இடத்தில் நிற்கின்றான் தலைவன். அவனிடம், “விரைந்து மணம் செய்” என்று வலியுறுத்துகிறாள் நற்றிணைத் தோழி. அலர் (பழி) தூற்றும் தன் ஊரைப் பற்றி அவள் சொல்வது நயமான பகுதி ஆகும்.
உரவுக் கடல்உழந்த பெருவலைப் பரதவர்
மிகுமீன் உணக்கிய புதுமணல் ஆங்கண்
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவுநாறு விளங்குஇணர் விரிந்துஉடன் கமழும்
அழுங்கல் ஊர்
(நற்றிணை – 63 : 1-5, உலோச்சனார்)
(உரவு = வலிமை; உழந்த = வருந்திய; உணக்கிய = காயவிட்ட; புலவல் = புலவு நாற்றம்; இணர் = பூங்கொத்து; அழுங்கல் = பேரொலி)
“வலிமையுடைய கடலில் சென்று உடல் வருத்திப் பெரிய வலைகளை வீசி மீனைப் பிடிக்கின்றனர் பரதவர். மிகுதியான மீன்களைப் புதிய மணற் பரப்பில் காயப் போடுகின்றனர். ‘கல்’ என்று ஒலிக்கக்கூடிய சேரி முழுதும் புலவு நாற்றம் (மீன் நாற்றம்) வீசுகிறது. அச்சேரியை அடுத்திருக்கும் புன்னை மரங்கள் விழாவிற்குரிய மணமுடைய பூங்கொத்துகளை ஒரு சேர விரிக்கின்றன. புன்னையின் நறுமணம் மீன் உணக்கும் புலவு நாற்றத்தைப் போக்குகின்றது. அத்தகைய ஊரில் மக்கள் பழி தூற்றும் ஒலி மிகுகின்றது”.
பரதவர் மீன் உணக்கும் செய்தி இவ்வாறு உலோச்சனார் பாடலில் அழகான வருணனை ஆகியிருக்கிறது.
போந்தைப் பசலையாரின் அகநானூற்றுப் பாடல், மீன் உணவைப் பற்றிக் கூறுகிறது. (110 – 16-17)
தோழி செவிலித் தாய்க்கு அறத்தொடு நிற்கிறாள். அதாவது தலைவியின் களவுக் காதலை வெளிப்படுத்தும் இடம் இது.
“தாயே ! தலைவியும் நானும் தோழியர் கூட்டத்துடன் சென்று கடலில் ஆடினோம். கடற்கரைச் சோலையில் மணல்வீடு கட்டியும், சிறுசோறு சமைத்தும் விளையாடினோம். சோலையில் சிறிது இளைப்பாறினோம். எம்மிடம் ஒருவன் நெருங்கி வந்தான். “நான் மிகவும் இளைத்திருக்கிறேன். இந்த மெல்லிய இலைப் பரப்பில் நீங்கள் சமைத்த சோற்றை விருந்தினனாக உண்பதில் இடையூறு உண்டா?” என்று அவன் கேட்டான். “இந்த உணவு உமக்கு ஏற்றது அன்று. இழிந்த கொழுமீனால் ஆன உணவு” எனச் சொன்னோம்”. என்று கடற்கரை நிகழ்ச்சியை எடுத்துரைக்கிறாள் தோழி. கொழுமீன் வல்சி என்று வரும் தொடர் மீன் உணவு என்று பொருள்படும்.
குடவாயிற் கீரத்தனாரின் பாடலில் (அகநானூறு – பாடல்60) தோழி தலைவனிடம் கூறும் கூற்றில் மீன் உணவு வகைகள் இடம் பெறுகின்றன.
‘பரதவனின் மகளான தலைவி அவனுக்கு உணவு எடுத்து வருகிறாள். உப்புக்கு விலையாகப் பெற்ற நெல்லினது அரிசியால் ஆன வெண்சோற்றின் மீது அயிலை(ரை) மீனை இட்டுச் சமைத்த அழகிய புளிக்கறியைச் சொரிந்து கொழுவிய மீன் கருவாட்டுப் பொறிக்கறியுடன் தந்தை உண்ண அவள் தருவாள்’.
புளிக்கறி என்பது புளிக்குழம்பைக் குறிக்கின்றது. அயிரை மீன் புளிக் குழம்பும், கொழுமீன் கருவாட்டுப் பொறியலும் பரதவரின் உணவு வகைகள் எனத் தெரிகின்றது.
மணலில் புன்னைக் காயை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர் சிறுமியர். வெள்ளிய மணலில் விளையாட்டாகப் புன்னைக் காயை அழுத்திப் புதைத்தாள் சிறுமியாய் இருந்த தலைவி. பின்னர் அக்காய் முளைக்க ஆரம்பித்தது கண்டு அச்செடிக்குப் பாலும் நெய்யும் ஊற்றி வளர்த்தாள். செடியும் மரமாக வளர்ந்தது. தலைவியும் வளர்ந்தாள். தான் வளர்த்த புன்னை மரத்தை அவளது தங்கை என அறிமுகப்படுத்தினாள் அவள் தாய். அம்மரத்தின் கீழ் அவளது காதலன் அவளுடன் உறவாட வந்தான். அவள் நாணம் உறுகிறாள். அதைத் தோழி தலைவனுக்குக் கூறுகிறாள்.
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
(நற்றிணை – 172 : 4-7, ஆசிரியர் பெயர் தெரியவில்லை)
(நுவ்வை = உன் தங்கை; நகை = சிரித்துவிளையாடல்)
“இந்தப் புன்னை உங்களை விடச் சிறந்தது; உங்களுக்குத் தங்கை” என அன்னை கூறினாள். அத்தங்கையின் அருகில் நின்று உன்னோடு பேச நாணுகிறாள் தலைவி. ஆகவே நீ அவளை விரைவில் திருமணம் செய்து கொள் என்ற குறிப்புடன் தோழி பேசுகிறாள்.
இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கையை வாழும் மனிதர்கள் இயற்கைப் பொருள்களையும் தம் உறவாக நினைப்பது அவர்தம் மென்மையான பண்புக்கு மிகச் சிறந்த சான்றாகிறது.
தலைவனது பிரிவால் வருந்தும் தலைவி ஒருத்தியின் காம நோய்க் கொடுமையைக் காட்டும் அம்மூவனார் பாடிய குறுந்தொகைப் பாடலில் அமைந்துள்ள கற்பனை நயத்தைக் காண்போம்.
பிரிவு வேதனையால் இரவு முழுதும் உறக்கம் இன்றித் தவிக்கிறாள் தலைவி. அவளுக்குத் துணையாக, ஆறுதல் சொல்ல அந்த இரவில் யாரும் இல்லை. இரவு முழுதும் இடைவிடாமல் கடல் அலைகளின் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இடைவிடாமல் துன்ப அலை வீசிக் கொண்டிருக்கும் தன் உள்ளத்துக்கும் கடலுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகக் காண்கிறாள் தலைவி. கடலை நோக்கிக் கேட்கிறாள் : “கடலே ! கரையில் உள்ள வெண்மை நிறமுடைய தாழம் பூக்களை அலைகள் மோதி மோதி அலைக்கழிக்கின்ற இந்த இரவு முழுவதும் உனது வருத்தமான குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. நீ யார் மீது கொண்ட காதல் காரணமாக இத்துன்பத்துக்கு ஆளானாய்?”.
யாரணங் குற்றனை கடலே…..
வெள்வீத் தாழைத் திரையலை
நள்ளென் கங்குலும் கேட்கும்நின் குரலே
(குறுந்தொகை – 163 : 1, 4-5)
‘கடலும் யாரையோ காதலித்துக் காம நோயால் புலம்புகிறது’ என்ற தலைவியின் எண்ணம் கவிஞரின் அழகிய கற்பனையில் இருந்து எழுந்திருக்கிறது.
தலைவியின் உறவினர் மணத்துக்குச் சம்மதிக்கின்றனர். தலைவனும் சம்மதிக்கின்றான். ஆனால் காலம் தாழ்த்துகின்றான். விரைந்து மணக்குமாறு தோழி கூறுகிறாள்.
“இல்வாழ்வு நடத்துதல் என்பது வறியவர்க்கு ஏதேனும் ஒன்றைக் கொடுத்து உதவுதலாகும்; ஒன்றைப் பாதுகாத்தல் என்பது கூடியவரைப் பிரியாமல் இருத்தலாகும்; மக்கள் பண்பு என்பது உலக ஒழுக்கம் அறிந்து ஒழுகுதலாகும்; அன்பு என்பது, தன் சுற்றம் கெடாது இருக்கச் செய்தலேயாகும். அறிவு என்பது அறியாதவர் தம்மைப் பார்த்துச் சொல்லும் சொல்லைப் பொறுத்தலேயாகும்” என்று பலவாறாக மனித வாழ்விற்குத் தேவையான பண்புகளைப் பட்டியல் இடுகிறாள் தோழி.
ஆற்றுதல் என்பதுஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்புஎனப் படுவது பாடுஅறிந்து ஒழுகுதல்
அன்புஎனப் படுவது தன்கிளை செறாஅமை
(கலித்தொகை – 133 : 6-9)
(அலந்தவர் = வறியவர் (ஏழையர்); பாடு = உலக ஒழுக்கம், மரபு; கிளை = சுற்றம்; செறாஅமை = பகை கொள்ளாமை )
‘பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்’ என்பது எத்தகைய சொல் இனிமையும் பொருள் சிறப்பும் கொண்டு அமைந்துள்ளது என்பதை நோக்குங்கள்!
‘நண்டு தாக்குவதால் துறையில் வாழும் இறால் மீன் புரளும் இடம் தொண்டி. இனிய ஆரவாரம் நிறைந்த அத்தொண்டி போன்றது இவளது நெற்றி’ என்கிறார் அம்மூவனார் (ஐங்குறுநூறு – 179). ஓர் ஊரைச் சொல்லி அதைப் போன்றது நெற்றி என்று ஏன் சொல்ல வேண்டும்? “அழகாலும், இன்பத்தாலும் இனிய ஆரவாரங்கள் நிறைந்த தொண்டிக்கு ஒரு சிறு துன்பம் நேர்ந்தாலும், அது ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகத் தெரிந்துவிடும். அதுபோலக் காதல் துயரால் இவளது நல்ல நெற்றி பசலை கண்டால், மற்றவர்க்குக் களவுக் காதல் தெரிந்துவிடும். இவள் நாணம் உடையவள் என்பதால் உயிர்வாழ மாட்டாள். அதனால் வளம் மிகுந்த தொண்டி போன்ற இவளது அழகு மிகுந்த நெற்றியில் பசலை வரக் காரணமாக இருக்காதே. விரைவில் மணந்து கொள்” என்று குறிப்பாகத் தலைவனிடம் உணர்த்த இவ்வாறு கூறுகிறாள்.
உவமையைச் சொல்வதில்,
கடலினும் பெரிதுஎமக்கு அவருடை நட்பே
(ஐங்குறுநூறு – 184)
என்ற தொடர் சிறக்கின்றது. கடலை விடப் பெரியது அவர் கொண்ட காதல் என்று தலைவி கூறுவது இலக்கிய இன்பம் தருகிறது.
நெய்தல் நில மக்களுக்கு ஏற்ற, அவர் தம் வாழ்க்கை முறைக்கு ஏற்ற உவமையை எடுத்தாள்வது உண்டு.
புறங்காட்டி ஓடாத கொள்கையை உடைய மன்னன் ஒரு பாசறை அமைக்கின்றான். அதில் உள்ள யானைகளின் பொன்னால் ஆன முகத்திரைகள் (முகபடாங்கள்) ஆடுகின்றன; ஒளிவிடுகின்றன. அதைப்போல் கடலில் பரதவர் மீன் பிடிக்கப் பயன்படுத்தும் தோணிகளில் (படகுகளில்) விளக்குகள் ஒளி சிந்துகின்றன. (அகநானூறு – 100 : 5-10, உலோச்சனார்)
இந்த உவமை பரதவர்கள் புறங்காட்டி ஓடாதவர்கள், அவர்தம் படகுகள் யானைபோல் பலம் வாய்ந்தவை என்ற கருத்துகளையும் உணர்த்துகின்றது.
தலைவி ஒருத்தி மீது காதல் கொண்டு வாடும் தலைவனின் வேறுபாடு கண்டு இகழ்கிறான் பாங்கன் (தோழன்). அவனிடம் தலைவன் மறுமொழி கூறுகிறான்; தலைவியைப் பார்த்த இடத்தைக் கூறுகிறான்.
கடற்கரையில் தாழையின் மணம் நன்கு பரவிப் புலால் நாற்றத்தைப் போக்கும் இடம் அது என்கிறான். தலைவியின் காதல் பார்வை தலைவனின் கட்டுப்பாடு (நிறை) முதலியவற்றைப் போக்கிவிட்டது என்பது இந்த வருணனையின் உள்ளுறைப் பொருள்.
அலைகள் கொண்டுவந்து கரையில் வீசியுள்ள முத்துகள் குதிரையின் ஓட்டத்தைத் தடுக்கும் என்கிறான். தலைவியின் காதல் அவன் நெஞ்சத்தைக் தடுத்து நிறுத்தியது என்பது உள்ளுறை. (அகநானூறு – 130 : வெண்கண்ணனார்)
நற்றிணைப் பாடலில் (63, உலோச்சனார்) தோழியின் கூற்றில் உள்ளுறை அமைகின்றது. தலைவன் – தலைவி காதலை ஊரார் அலர் (பழி) தூற்றுவதன் காரணமாக விரைவில் தலைவியை மணம் புரியுமாறு தோழி தலைவனிடம் வேண்டுகிறாள். அப்போது,
‘கழிச்சேற்றில் (உப்பங்கழிச் சகதியில்) ஓடும் குதிரைகளின் உடம்பிலே பட்ட சேறு கடல்நீரால் கழுவப்படும்’ என்று ஒரு வருணனை சொல்கிறாள்.
களவொழுக்கத்தை மேற்கொண்ட தலைவி, தலைவன் இருவர் மீதும் படிந்த அலர்ப்பழி, அவ்விருவரும் இணையும் திருமணத்தால் நீக்கப்படும் என்பதை உள்ளுறையாக உணர்த்துகிறது இவ்வருணனை.
நெய்தல் திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எவை என அறிந்துகொள்ள முடிந்தது. இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வெளிப்படும் முறை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.
சிற்றில் கட்டி விளையாடல், கூடல் இழைத்தல், மீன் உணக்கல், மீன் கறி ஆக்கல், இயற்கையையும் உறவாக நினைத்தல், மடலேறுதல் முதலிய நெய்தலின் சிறப்புகளை அறிந்துகொள்ள முடிந்தது.
நெய்தல் பாடல்களில் காணப்படும் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய இலக்கிய நயங்களைப் புரிந்து கொண்டு.
பாடம் - 5
ஐங்குறுநூற்றில் உள்ள நூறு பாலைப் பாடல்களையும் பாடியவர் ஓதலாந்தையார். கலித்தொகையில் உள்ள முப்பத்தைந்து பாலைப் பாடல்களையும் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. இவர் நற்றிணையில் பத்து, குறுந்தொகையில் பத்து, அகநானூற்றில் பன்னிரண்டு பாடல்களையும் பாடியுள்ளார். ஐயத்துக்கு இடமான ஒன்றிரண்டு போக இவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே பாலைத் திணையில் அமைந்தவை. இச்சிறப்புக் கருதித்தான் பாலை பாடிய என்ற அடைமொழியை இவர் பெற்றுள்ளார்.
அள்ளூர் நன்முல்லை, உகாய்க்குடி கிழார், மதுரைச் சீத்தலைச் சாத்தன் போன்ற பல புலவர்கள் பாலைத் திணையில் பாடியுள்ளனர். ஓதலாந்தையார், பாலை பாடிய பெருங்கடுங்கோ இருவரும் முறையே ஐங்குறுநூறு, கலித்தொகை நூல்களில் உள்ள அனைத்துப் பாலைத் திணைப் பாடல்களையும் பாடியுள்ளனர். ஆகவே இப்பாடத்தில் அவ்விரு நூல்களிலிருந்து மேற்கோள் காட்டப்படும் பொழுது பாடிய புலவரின் பெயர் சுட்டப்படவில்லை.
பெரும் பொழுது
பாலையின் பெரும்பொழுது இளவேனிற் காலமும் முதுவேனிற் காலமும் ஆகும். இளவேனிற் காலம் என்பது சித்திரை, வைகாசி மாதங்கள். முதுவேனிற் காலம் என்பது ஆனி, ஆடி மாதங்கள். மொத்தத்தில் வெயில் சுட்டெரிக்கும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களே பாலைத் திணைக்குரிய பெரும்பொழுது ஆகும். பாலையின் பெரும்பொழுதாகப் பின்பனிக் காலத்தையும் குறிப்பிடுவர்.
சிறுபொழுது
நன்றாக வெயில் சுட்டெரிக்கும் நேரமான பகல் 12 மணி முதல் மதியம் 2 மணிவரை உள்ள நண்பகல் நேரமே பாலையின் சிறுபொழுது ஆகும்.
தெய்வம் : கொற்றவை (காளி)
மக்கள் : விடலை, காளை, எயிற்றி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்.
பறவை : கழுகு, பருந்து
விலங்கு : செந்நாய், இளைத்த யானை, புலி
ஊர் : குறும்பு
நீர் : வற்றிய கிணறு
பூ : பாதிரி, மரா, குரா
மரம் : இருப்பை, ஓமை, பாலை
உணவு : வழிப்பறி செய்த பொருள்கள், வளமான பகுதிகளில் சென்று கொள்ளை அடித்த பொருள்கள்
பறை : போர்ப்பறை, ஊரெறி பறை
பண் : பாலை (பஞ்சுரம்)
யாழ் : பாலையாழ்
தொழில் : வழிப்பறி செய்தல்.
மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கின்
(நற்றிணை-362 : 7-8. மதுரை மருதனிளநாகனார்)
(மழகளிறு = இளம் ஆண்யானை; பராரை = பருத்த அடிமரம்)
இளைய ஆண்யானை உராய்ந்த பருத்த அடியை உடையது வேங்கை மரம். அங்குள்ளது மணற்பரப்பு என்பது இவ்வடிகளின் பொருள்.
மாரி வறப்ப
வரைஓங்கு அருஞ்சுரத்து
(கலித்தொகை-6 : 1-2)
(மாரி = மழை; வறப்ப = வறண்டுபோக; வரை = மலை; அருஞ்சுரம் = அரிய காடு)
‘மழை வறண்டது; உயர்ந்த மலைப் பகுதி சார்ந்த அரிய அக்காட்டில்’ என்பது இதன் பொருள்.
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு
(கலித்தொகை- 6 : 5-6)
தண்ணீர் கிடைக்காமையால் நாவை நனைக்கக் கண்ணீர் சிந்த வைக்கும் கொடுமையான காடு என்று முறையில் திரிந்த முல்லை நிலம் இங்குப், பாலை நிலம் ஆகிறது.
பொழுது
வேரொடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலின்
(கலித்தொகை-10 : 4)
(வெம்ப = கெடும்படி; விரிகதிர் = சூரியன்; தெறுதல் = சுடுதல்)
வேரொடு மரம் கெட்டு அழியும்படி சூரியனின் கதிர்கள் சுடும் என்பது இவ்வடி தரும் கருத்து, சூரியன் சுட்டெரிக்கும் கோடை காலமான பெரும் பொழுதும், மதிய நேரமான நண்பகல் என்ற சிறுபொழுதும் இவ்வடியில் உணர்த்தப்படுகின்றன.
வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
(ஐங்குறுநூறு – 309 : 1)
‘வேனிற் கால மாதத்தில் கொடிய பாலை வழியைக் கடந்து’ என்பது இத்தொடரின் பொருள். வேனிற் காலமான பெரும்பொழுது இத்தொடரில் வெளிப்படுகின்றது.
மக்கள்
விடலை, காளை, எயினர்.
அரிதே விடலை இவள் ஆய்நுதற் கவினே
(ஐங்குறுநூறு – 310 : 4)
விடலையே! இவளது ஆராய்ந்த நெற்றியின் அழகை மீட்டல் அரியது என்பது இதன் பொருள்.
வஞ்சினக் காளை
(ஐங்குறுநூறு – 372 : 2)
கொடுவில் எயினர்
(அகநானூறு – 79 : 14, குடவாயிற் கீரத்தனார்)
விலங்கு
செந்நாய்.
…..செந்நாய் ஏற்றை
(ஐங்குறுநூறு – 397 : 1)
(செந்நாய் ஏறு = ஆண் செந்நாய்)
பூ
பாதிரி
வேனிற் பாதிரிக் கூன்மலர் அன்ன
(குறுந்தொகை- 147: 1, கோப்பெருஞ்சோழன்)
வேனிற் காலத்தில் மலரும் பாதிரியினுடைய வளைந்த மலர் போன்ற என்பது பொருள்.
மரம்
ஓமை, இருப்பை
ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு
(குறுந்தொகை – 124:2 பாலை பாடிய பெருங்கடுங்கோ)
(குடியிருந்த ஊர் பாழ்பட்டது போன்ற தோற்றத்தை உடைய ஓமை மரங்கள் நிறைந்த பெரிய காடு)
கான இருப்பை வேனல் வெண்பூ
(குறுந்தொகை – 329 : 1, ஓதலாந்தையார்)
காட்டிலே உள்ள இருப்பை மரத்தினது வேனிற் காலத்தில் மலர்ந்த வெள்ளை மலர்கள் என்பது பொருள்.
பண்
பஞ்சுரம்
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்
(ஐங்குறுநூறு – 311 : 1)
வேங்கைப் பூவைப் பறிப்பவர் பஞ்சுரப் பண்ணைப் பாடினாலும் என்பது பொருள்.
பாலைத் திணையில் அதிகமான பாடல்களைக் கொண்ட இலக்கியம் அகநானூறு என்பதை முன்பு கண்டோம். அகநானூற்றுப் பாடல் கொண்டு உரிப்பொருள் வெளிப்பாடு காண்போம்.
தலைவன் பொருள் ஈட்டத் தன்னைப் பிரிவான் என்பதைத் தலைவி பிறர் கூறக் கேட்கிறாள்; வருந்துகிறாள். ‘அவன் உன்னைப் பிரியான்’ எனக் காரணம் காட்டித் தோழி கூறுகிறாள்.
“பிரிவுத் துயரால் நம்மை அழவிட்டு, வரிப்புலிகள் உலாவுவதும், மேல் காற்றினால் வலிமையான மூங்கில்கள் வளைவதும் ஆன கொடிய காட்டு வழியில் பொருள் தேடுவதற்காகத் தலைவர் பிரிந்து போவார் என்று ஊரார் சொல்வதாகக் கூறும் தலைவியே! நீ பெரிய அறிவிலி!
பாண்டிய மன்னர் அறநெறி நின்று காவல் செய்யும் துறைமுகம் கொற்கை. கொற்கையின் முத்துக்கள் போன்றவை உன் பற்கள். அப்பற்கள் பொருந்திய பவளம் போன்றது நின் வாய். நின் வாய் ஒன்றே அவர் நின்னைப் பிரியாது தடுக்கப் போதுமே. அதையும் மீறி அவர் செல்ல நினைத்தால் தடுப்பவை எவை தெரியுமா? உன் கண்கள் தாம். போரில் வென்ற வேல் இரத்தம் பட்டுப் புரளுவது போன்றவை மை தீட்டப்பட்ட சிவந்த வரிகள் படர்ந்த நின் கண்கள். அக்கண்களின் மாறுபட்ட பார்வை அவர் உன்னைப் பிரிந்து செல்ல எவ்வாறு விட்டு விடும்? விடாது. ஆதலால் நீ வருந்தாதே”. (அகநானூறு 27, மதுரைக் கணக்காயனார்)
தலைவியை வருத்தித் தலைவன் பிரிய மாட்டான் என்ற நம்பிக்கையை இங்குத் தோழி வெளிப்படுத்துகிறாள்.
தலைவன் தலைவியைப் பிரிய இருக்கும் செய்தியைத் தோழியிடம் கூறுகிறான். தோழி “தலைவியும் உடன் வருவாள்” என்கிறாள். தலைவன் காட்டு வழியின் கொடிய இயல்புகளைக் கூறி, “தலைவி வருவது நகைப்பிற்கு உரியது” என்கிறான்.
வழியில் செல்பவர்க்குத் துன்பத்தைச் செய்வர் மறவர். அவர்களது வண்டியின் சக்கரம் கிழித்து உண்டாக்கிய வழியில் செல்வர் மக்கள்.
சுட்டெரிக்கும் முதுவேனிற் காலம் நீண்டிருக்கும்; மேகங்கள் மழை பெய்யாமல் மேலே உயர்ந்து நீங்கும்; தண்ணீர் அற்ற குளத்தில் தோண்டப்பட்ட குழியில் உண்பதற்கு இயலாத கலங்கிய நீர் கிடக்கும்; ஆண்யானை, அந்த நீரைக் கொண்டு கன்றையுடைய பெண்யானையின் தலையைக் கழுவும்; அதன்பின் எஞ்சி இருக்கும் சேற்றினைத் தன் மீது வீசிக் கொள்ளும்; அதனால் அதன் நிறம் வேறுபடும்; சிவந்த காம்பை உடைய வெண்கடம்ப மலர்க் கொத்துகள் அசைய அம்மரக் கிளையைப் பற்றும் அந்த ஆண் யானை, தன் முதுகை அதில் உராயும். அந்த வெண்கடம்பின் வரி நிழலில் மென்மையான தோளை உடைய தலைவி தங்கி, என்னுடன் வருவேன் என்பது சிரிப்ப உண்டாக்குகிறது. (அகநானூறு 121, மதுரை மருதனிளநாகனார்)
பிரிவுத் துயரை விட வழிநடைத் துயர் பெரிது எனக் காட்டும் இப்பாடல், பாலைத் திணை உரிப்பொருளின் ஓர் இயல்பைக் காட்டுகிறது.
குறுந்தொகைப் பாடல் ஒன்றில் பிரிவுத் துயரை விடப் பாலை வழிநடைத் துயரம் பெரிது அன்று எனத் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றிர் ஆயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே
(குறுந்தொகை – 124: 2-4, பாலை பாடிய பெருங்கடுங்கோ)
“ஊரே பாழ்பட்டு நிற்பது போன்ற தோற்றத்தைத் தரும் ஓமை மரங்கள் நிறைந்த பெருங்காடு கொடியது என்கிறீர்கள். அவ்வாறாயின் தனித்து இருக்கும் எங்களுக்கு வீடுகள் மட்டும் இனியவை யாகிவிடுமா?” என்று கேட்கிறாள் தோழி.
இவ்வாறே நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகைப் பாடல்களிலும் பாலையின் உரிப்பொருள் வெளிப்படுகிறது.
நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ?
(கலித்தொகை – 5 : 15)
என்ற பாடலில் ஒரு வரி மட்டுமே பாலையின் உரிப்பொருளைத் தெளிவாகக் காட்டுவது குறிப்பிடத் தக்கது.
நீர் உள்ளவரை மலரும் செழிப்பாக இருக்கும். நீ உள்ளவரை தலைவியும் மகிழ்ச்சியாக இருப்பாள். நீர் இல்லை என்றால் மலர் வாடி வீழ்ந்துவிடும். நீ இவளைப் பிரிந்து விட்டால் இவளும் இறந்து படுவாள் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாலைத் திணையின் உரிப்பொருளை இவ்வாறு மிக எளிமையாகச் சொல்லிப் புரிய வைக்கும் திறம் வியந்து போற்றுவதற்கு உரியது.
(1) உடன்போக்கு
(2) நற்றாய் வருந்துதல்
(3) செவிலி மகளைத் தேடிச் செல்லல்
(4) செலவு அழுங்குவித்தல்
(5) தலைவியை ஆற்றுவித்தல்
இவை பாலைத் திணைக்கு உரிய சில அகவாழ்க்கை நிகழ்வுகள் ஆகும். கீழ் வருவன பாலைத் திணைக்கு உரிய புறவாழ்க்கை நிகழ்வுகள் ஆகும்.
(1) கொள்ளை அடித்தல்
(2) அறம் பாராட்டல்
உடன்போக்கு என்பதற்குக் களவுக் காதலர் கற்பு வாழ்க்கை மேற்கொள்ள ஊரை விட்டுச் செல்வது என்று பொருள் கொள்ளலாம்.
தலைவன் பொருள் ஈட்டச் செல்கிறான். தன்னை அவன் பிரிகிறான் என்பதை உணர்ந்த தலைவி வருந்துகிறாள். தோழி தலைவனிடம் போய்த் “தலைவியையும் உடன் அழைத்துச் செல்” என்கிறாள். அவன் அதற்குச் சரி என்கிறான். தோழி தலைவியிடம் இதனைச் சொல்லத் தொடங்குகிறாள்.
“தோழியே கேள் ! தலைவன் பொருள் ஈட்டப் பிரிந்து போவான் என்ற நம் மனத்துன்பம் நீங்கித் தொலைவில் செல்லவிருக்கிறது.
தலைவன் செல்லும் வழியில் கூர்மையான பல்லை உடைய பெண் செந்நாய் பசியால் வருந்தும். அதன் பசியைப் போக்க நினைக்கும் ஆண் செந்நாய். அப்போது பெண்மான் ஒன்று ஆண் கலைமானைத் தேடிக் கொண்டிருக்கும். ஆண் செந்நாய், ஆண் கலைமானின் தொடையைச் சிதைக்கும் (கிழிக்கும்). இதைக் கண்டு பெண்மான் அலறும். வெப்பம் மிக்க வழியாக அவ்வழி இருக்கும். ஆறலை கள்வர்கள் (ஆறு + அலை + கள்வர் – வழியில் மறித்துத் துன்புறுத்துகின்ற திருடர்) வழிப்போக்கர் மீது கல்லை எடுத்து எறிவர். கிழிசல் ஆடையையும், உலர்ந்த குடையையும் உடைய வழிப்போக்கர் அஞ்சி மரத்தில் ஏறுவர். உணவை வேட்டையாட எண்ணி இனத்திலிருந்து பிரிந்து வந்த பருந்து வானத்தில் பறக்கும் பொழுதை எதிர் நோக்கி அம்மரத்தில் இருக்கும். இத்தன்மையான கடுமையும் கொடுமையும் நிறைந்த காட்டு வழியில் பெரிய தோளையும் குவளை மலர் போன்ற கண்களையும் உடைய இவளும் நம்முடன் வருவாள்” என்று தலைவன் கூறியதாகத் தோழி கூறுகிறாள். (அகநானூறு -285, காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்)
பாலை நிலம் வெப்பமும், காட்டு விலங்குகள், ஆறலை கள்வர்கள் ஆகியோரின் கொடுமைகளும் நிறைந்ததாயினும், தலைவியின் பிரிவுத் துயருக்கு அஞ்சி அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்லத் தலைவன் துணிகிறான் என்பதை இப்பாடலில் காண்கிறோம்.
உடன்போக்கில் சென்ற மகள் விட்டுச் சென்ற அவள் விளையாடிய பொருள்களைப் பார்க்கிறாள் நற்றாய். கண்கள் கலங்குகின்றன. வாய் புலம்புகிறது.
“நீர் வேட்கை (தாகம்) மிகுந்ததால் யானை வங்கியம் என்னும் இசைக்கருவி போல் துதிக்கையை உயர்த்திப் பிளிறும். அக்கொடிய வழியில் என்மகள் சென்றுவிட்டாள். பந்து, பாவை, கழங்கு என்று அவள் விளையாடிய பொருள்களை விட்டுவிட்டுச் சென்று விட்டாளே. அது ஏன்? நான் அவற்றைக் கண்டு அவளை நினைந்து வருந்தத்தானோ?”
சென்றனள் மன்றஎன் மகளே
பந்தும் பாவையும் கழங்கும்எமக்கு ஒழித்தே
(ஐங்குறுநூறு – 377)
(பாவை = பதுமை, பொம்மை; கழங்கு = பெண்கள் விளையாடும் கருவி)
மகளைத் தேடிவரும் செவிலி ஒழுக்கத்தில் சிறந்த அந்தணர் சிலரை வழியில் காண்கிறாள். அவர்களிடம்,
இவ்இடை
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாம்அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ? பெரும !
(கலித்தொகை- 9 : 5-8)
என்று கேட்கிறாள்.
“அந்தணர்களே ! என் மகள் ஒருத்தியும், வேறொருத்தியின் மகனும் மற்றவர் அறியாது தமக்குள் கூடியவர்; இன்று மற்றவர் அறியுமாறு கூடி அவர்கள் சென்றுவிட்டனர். அவர்கள் இருவரையும் இந்தக் காட்டில் கண்டீர்களா?” என்பது இப்பாடல் அடிகளின் பொருள்.
இவ்வாறு வளர்த்த பாசம் தாளாமல் உடன்போக்கில் சென்ற தன் மகளைத் தேடிச் செல்லும் செவிலித் தாயைப் பாலைத் திணைப் பாடல்களில் காண முடிகிறது.
தோழி தலைவியின் இளமை தொலைதல் பற்றித் தலைவனிடம் கூறுகிறாள். அவன் பிரிந்து செல்வதைக் கைவிடுகிறான்.
மலை கடந்து தேடும் பொருள், காடு கடந்து தேடும் பொருள் பொருள் ஆகாது. அருந்ததி போன்ற கற்பினை உடைய தலைவியைப் பிரியாது இருத்தல்தான் உண்மையான பொருள் என்று தலைவனுக்கு உணர்த்துகிறாள் தோழி.
மலைஇறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருள் ஆகுமோ?…
கடன்இறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருள் ஆகுமோ? வடமீன்போல் தொழுதுஏத்த வயங்கிய கற்பினாள்
தடமென்தோள் பிரியாமை பொருள்
(கலித்தொகை 2 : அடிகள் 12, 20, 21, 22)
(கடன் = சுரம்; இறந்து = கடந்து; வடமீன் = அருந்ததி; தொழுதுஏத்த = வணங்கி வாழ்த்தும்படி; வயங்கிய = விளங்கிய; தடமென்தோள் = பெருமையுடைய மென்மையான தோள்கள்)
பாகனின் அங்குசத்தால் குத்தப்பட்டும் அடங்காமல் வேகமாகச் செல்லும் ஆண்யானை யாழ் ஓசை கேட்டு மயங்கி நின்றது. அதைப்போல் தோழியின் மென்மையான பேச்சைக் கேட்டுத் தலைவன் மனம் மாறிப் பயணத்தைத் தவிர்த்து விடுகிறான் என்று வரும் இப்பாடல் கருத்து நினைத்துச் சுவைக்கக் கூடியது.
குறுந்தொகைப் பாடல் ஒன்றில் தோழி தலைவியிடம், ‘தலைவர் உன் மீது மிகுந்த அன்புடையவர். ஆகவே விரைந்து வந்து விடுவார்’ என்று கூறித் தேற்றுகிறாள்.
நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி அவர்சென்ற ஆறே
(குறுந்தொகை -37, பாலை பாடிய பெருங்கடுங்கோ)
(நசை = விருப்பம்; நல்குவர் = அருள் செய்வார்; பிடி = பெண்யானை; களைஇய = நீக்குவதற்காக; வேழம் = ஆண் யானை; யாஅம் = யாமரம்; பொளிக்கும் = பட்டையை உரிக்கும்)
“தோழி! தலைவர் உன்மீது மிகுந்த விருப்பம் உடையவர்; அவர் சென்ற வழியில் பெண்யானையின் பசியைப் போக்க ஆண்யானை யாமரத்தின் பட்டையை உரித்துக் கொண்டிருக்கும் அன்பான காட்சியைப் பார்ப்பார்; அதனைப் பார்த்ததும் உன்னை நினைத்து உடனே திரும்புவார்” என்பது தோழியின் ஆறுதல் கூற்று.
கொடிய காட்டு வழியில் அலைந்து அங்கு வரும் பிறரது உடைமைகளைக் கொள்ளை அடித்து வாழ்வர் ஆறலை கள்வர்கள்.
ஆறலை கள்வர் அல்லது கள்வரைப் பற்றிப் பல பாலைப் பாடல்கள் கூறுகின்றன.
ஆறலை கள்வர் வழியில் செல்பவரை வருத்துபவர்கள்; அவர்தம் பொருளைக் கவர்பவர்கள்; அப்பொருள் கொண்டு உண்பவர்கள்; பயிர்த் தொழில் முதலியவற்றைச் செய்து உண்ண விரும்ப மாட்டார்கள்; மழையை விரும்ப மாட்டார்கள்; கொள்ளை அடித்திடக் காட்டு வழிகளை விரும்புபவர்கள்; வில்லாகிய ஏரால் பிறர் உடலில் உழுபவர்கள்.
கான்உயர் மருங்கில் கவலை அல்லது
வானம் வேண்டா வில்ஏர் உழவர்
பெருநாள் வேட்டம் கிளைஎழ வாய்த்த
பொருகளத்து ஒழிந்த குருதி
(அகநானூறு- 193: 1-4, மதுரை மருதனிள நாகனார்)
(கான் = காடு; மருங்கில் = பக்கத்தில்; கவலை = வழி; வானம் வேண்டா = மழையை விரும்பாத; வேட்டம் = வேட்டை; பொருகளம் = போரிடும் இடம்; கிளை = சுற்றம்)
“உயரமான காட்டில் உள்ள கிளை பிரிந்த வழிகளைத் தவிர மழையை விரும்பாத, வில்லாகிய ஏரால் உழும் ஆறலை கள்வர் சுற்றத்துடன் புறப்பட்டுச் சென்றபோது கிடைத்தது நல்ல வேட்டை. அவ்வேட்டையில் வழிச் செல்பவரோடு போரிடுகிறார்கள். அப்போது வழிச்செல்பவரின் உடலில் இருந்து இரத்தம் சிந்துகின்றது” என்று ஆறலை கள்வரின் கொள்ளை அடிக்கும் வாழ்க்கை பற்றி இப்பாடல் அடிகள் கூறுகின்றன.
பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாடல்கள் பலவற்றில் உலக வாழ்க்கையின் நல்லறங்களை எடுத்துரைக்கும் இயல்பினைக் காண முடிகிறது.
வினையே உயிர்
தொழிலை உயிராகக் கருதுபவர் ஆண்கள். இல்லத்தில் வாழும் பெண்களுக்கு உயிர் அவர்தம் காதலரே. பாலை பாடிய பெருங்கடுங்கோவின் குறுந்தொகைப் பாடலில் இக்கருத்தைக் காணலாம்.
வினையே ஆடவர்க்கு உயிரே வாள்நுதல்
மனைஉறை மகளிர்க்கு ஆடவர் உயிர்
(குறுந்தொகை – 135 : 1-2)
(வாள் நுதல் = ஒளி பொருந்திய நெற்றி; மனைஉறை = இல்லத்தில் வாழும்)
ஈயாமை
சேர்த்து வைத்த பொருளைத் தன்னை நாடி வந்து இரப்பவர்க்குக் கொடுத்து வாழ்வதுதான் சிறந்தது. இரப்பவர்க்குக் கொடுக்காது (ஈயாது) வாழ்வது இழிவு ஆகும். இக்கருத்தைக் குறுந்தொகைப் பாடலில் பாலைபாடிய பெருங்கடுங்கோ சுவையாக வெளிப்படுத்துகிறார்.
தலைவன் பிரியப்போகின்றான் என நினைக்கிறாள் தலைவி. அவள் அச்சம் நீக்குகின்றான் தலைவன்.
“உன்னைப் பிரிந்து சென்று நான் நீண்ட நாள் தங்கி விட்டால், இரப்போர் என்னிடம் வாராத நாள்கள் பல ஆகட்டும்” என்று கூறுகிறான் அவன்.
இரவலர்க்கு வழங்க வேண்டும் என்றால் அவர்கள் வழங்குபவரை நாடி வரவேண்டும். அவர்கள் வராமல் பொருள் வழங்கும் ஒருவனை ஒதுக்கிவிட்டால் அது கொடுமையானது. தலைவியைப் பிரிந்தால் இரப்போர்க்கு வழங்கும் அறநெறி தனக்கு இல்லாமல் போகட்டும் என்பது தலைவனின் கருத்து. (குறுந்தொகை – 137)
இல்என இரந்தார்க்குஒன்று ஈயாமை இழிவு
(கலித்தொகை- 2 : 15)
எனக் கலித்தொகையில் இவர் காட்டுவதும் இங்குக் கருதத்தக்கது.
பொருள் தேடல்
பொருள் தேடும் நேர்மையான முறையில் இருந்து நீங்கிப் பொருள் தேடக்கூடாது. அப்படித் தேடிய பொருள் அவரை விட்டு நீங்கும். இப்பிறவி மட்டுமின்றி, மறுபிறவியிலும் அப்பொருள் அவர்க்குப் பகையாகும் என்கிறது கலித்தொகைப் பாடல் ஒன்று.
செம்மையின் இகந்துஒரீஇப் பொருள்செய்வார்க்கு
அப்பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ
(கலித்தொகை-14 : 14-15)
(செம்மையின் இகந்து ஒரீஇ = நேர்வழியில் இருந்து நீங்கி)
எனவே நேர்மையாகப் பொருள் தேடவேண்டும் என்ற அறம் இங்கு வலியுறுத்தப்படுகிறது.
வாழ்க்கை நடத்தல்
குறிப்பிட்ட பருவம் வரை பெற்றோர்க்கு உரியவள் பெண். உரிய பருவம் வந்தபோது நல்ல ஆணைத் துணையாகக் கொண்டு அவனோடு சென்று இல்லறம் நடத்துவது நல்லறமே ஆகும். இக்கருத்தை,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்
அறம்தலை பிரியா ஆறும்மற்று அதுவே
(கலித்தொகை – 9 : 23-24)
(இறந்த = மிகுந்த; எவ்வம் = வருத்தம்; படரன்மின் = செய்யாதீர்கள்; வழிபடீஇ = வழிபட்டு; அறம் தலைபிரியா = அறத்தினின்று தவறாத; ஆறு = வழி; மற்று = பொருள் அற்ற அசைச்சொல்)
உடன்போக்கில் சென்று விட்ட தலைவியைத் துன்புறுத்தாதீர் எனச் செவிலியிடம் அறவோர் கூறும்போது இல்லறமே சிறந்த அறம் என இவ்வாறு எடுத்துரைக்கின்றனர்.
செல்வத்தைத் தேடிப் பிரிவதை விட வறுமையிலும், இளமையும் காதலும் ஒரு சேர வாழ்வதே வாழ்க்கை என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
வாழும் நாளெல்லாம் இல்லத்தே இருந்து இருவரும் தத்தம் ஒரு கை கொண்டு தழுவி, ஒரே ஆடையைக் கிழித்து இருவரும் உடுத்துக் கொள்ளும் வறுமை மிக்க வாழ்க்கையாய் இருந்தாலும், பிரியாது உள்ளம் ஒன்றி வாழ்வதே வாழ்க்கை. பொருளைத் தேடிக் கொண்டு வரலாம்; சென்று போன இளமையைத் தேடிக் கொண்டுவர முடியுமா?
உளநாள்
ஒரோஒகை தம்முள் தழீஇ, ஒரோஒகை
ஒன்றன்கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதுஅரோ
சென்ற இளமை தரற்கு
(கலித்தொகை -18 : 8-12)
(ஒரோஒகை = ஒரு கை; தழீஇ = தழுவி; ஒன்றினார் = இணைந்தவர்; தரற்கு = கொண்டு வருவதற்கு)
உடன்போக்காய்த் தலைவனுடன் சென்ற தன் மகளைத் தேடி வருகிறாள் செவிலி. ‘அவர்கள் இருவரையும் கண்டீர்களா? எனக் கேட்கும் அவளுக்கு அந்தணர்கள் ‘கண்டோம்’ எனப் பதில் தருகின்றனர்; தலைவி சிறந்த ஓர் ஆண்மகனைக் கணவனாக வழிபட்டு அவனுடன் சென்றது நியாயமே எனக் கூறுகின்றனர். பெற்றோர்க்கும் மகளுக்கும் உண்டான சொந்தம் எத்தகையது என்பதை அருமையான கற்பனை கொண்டு தெளிவு படுத்துகின்றனர்.
பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்குஅவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே;
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்குஅவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே;
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்குஅவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே!
(கலித்தொகை -9 : 12-20)
(பலவுறு = பல நறுமணப் பொருள்களும் கலந்த; படுப்பவர்க்கு = அணிபவர்க்கு; சாந்தம் = சந்தனம்; முத்தம் = முத்து; நீர் = கடல்; ஏழ்புணர் இன்னிசை = ஏழு நரம்பால் எழுப்பப்படும் இன்னிசை; முரல்பவர் = மீட்டுபவர்)
குறிப்பிட்ட காலம் வரை மலைக்கும், கடலுக்கும், யாழுக்கும் (வீணைக்கும்) சொந்தமானவை சந்தனம், முத்து, இசை ஆகியன. பின்னர் அவை பூசுபவர்க்கும், அணிபவர்க்கும், மீட்டுபவர்க்கும் அல்லவா சொந்தமாகின்றன? அதுபோல் ஆராய்ந்து பார்த்தால் உன் மகள் குறிப்பிட்ட பருவம் வரைதான் உனக்கு உரியவள்; அதன்பின் அவள் காதலுக்குரிய காதலனுக்குத்தான் உரியவள் என்பதைப் பக்குவமாகச் சொல்ல இக்கற்பனை பயன்படுகிறது.
பணைத்தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே
(குறுந்தொகை-168 : 5-7,சிறைக்குடி ஆந்தையார்)
(பணை = பருத்த; மணத்தல் = பொருந்துதல்; தணத்தல் = பிரிதல்)
“என்றும் ஒன்றுபட்டு இருப்பதால் பருத்த தோள்களை உடைய தலைவியைப் பொருந்துதலும், பிரிதலும் இல்லை. இன்று அவளை விட்டுப் பிரிந்து சென்றால் பிரிவுத்துயர் என்னைக் கொன்று விடும். அதனால் உயிர் வாழ்தல் என்பது உறுதியாக இல்லை” என்பது தலைவனின் உள்ளக் கருத்தாகிறது. ஒன்றியிருக்கும் நிலையை ‘மணத்தலும் தணத்தலும் இல்லை’ எனக் குறிப்பிடும் அழகிய சொல்லாட்சி போற்றத் தக்கது.
தலைவன் பிரிந்து செல்லும் வழியில் ஆறு அலை கள்வர் விடுத்த கூர்மையான அம்புகள் வழிச்செல்வோர் உடலில் தைக்கும். அதனால் துன்புறும் அவர்கள் நா உலர்ந்து வாடுவர். தண்ணீர் கிடைப்பதில்லை. அவர் விடும் கண்ணீர்தான் அவர்தம் நீர்த் தாகத்தைத் தணிக்கும். இதைக் கூறும் கலித்தொகைப் பாடலில் தண்ணீர், கண்ணீர் என்ற சொற்கள் நயம் சேர்க்கின்றன.
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு
(கலித்தொகை 6 : 5-6)
துகில்விரித் தன்ன வெயில்
(நற்றிணை-43 : 1, எயினந்தையார்)
இதே பாடலில் ‘நீ பிரிந்தால் பசலை நோய் தலைவியின் அழகைத் தின்னும்’ என்று தலைவனிடம் சொல்ல வரும் தோழி கையாளும் உவமை நயம் தருகின்றது.
பைங்கண் யானை வேந்துபுறத்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில்
ஓர்எயில் மன்னன் போல
அழிவுவந் தன்று (9-12)
யானைப் படையை உடைய பகைமன்னன் மதில் புறத்து வந்து தங்குகிறான். உடைந்த ஒரே மதிலை உடைய அரசன் தனக்கு வந்த துன்பத்தைப் போக்குபவரைக் காணாமல் கலக்கம் கொள்கிறான். அதுபோலத் தலைவியின் அழகுக்கு அழிவு வந்துவிட்டது. அதைப் போக்க யாரும் இல்லை என்பது இப்பாடல் அடிகள் தரும் பொருள் ஆகும்.
பாலை நிலத்தில் மரம் வெம்பியதைச் சொல்லும் போது ஆளப்படும் உவமை அழகுணர்ச்சியுடன் அறம் உணர்த்துகிறது.
வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்
சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி
(கலித்தொகை-10 : 1-2)
வறுமை உடையவனுடைய இளமைபோலத் தளிர்கள் வாடிய கொம்பை உடையன அந்த மரங்கள். பிறர்க்குக் கொடுக்க மனம் இல்லாதவனின் செல்வம் தன்னைச் சேர்ந்தவர்க்குப் பயன் தராதது போல ஞாயிற்றின் கதிர்கள் சுட நிழல் தராமல் வேரோடு கெடுகின்றன அம் மரங்கள்.
இவ்வாறு பல்வேறு உவமைகள் பாலைத் திணைப் பாடல்களுக்குச் சுவை ஊட்டுகின்றன.
“கதிரவன் காய்வதால் வாடிய தேக்கு இலையைக் கோடைக் காற்று உதிர்க்கும்” என்று அவள் கூறுகிறாள். “முன்பே உன் சொல்லால் வாட்டம் அடைந்திருக்கும் தலைவி, நீ பிரிந்து போய்விட்டால் இறந்து விடுவாள்” என்பதை இது உள்ளுறையாக உணர்த்துகிறது. (அகநானூறு -143 : 2-5)
இவ்வாறு பாலைத் திணைப் பாடல்களில் அவ்வப்போது உள்ளுறை அமைந்து நயம் தருகின்றது.
பாலைத் திணையின் முதற்பொருள். கருப்பொருள், உரிப்பொருள் எவை என அறிந்துகொள்ள முடிந்தது. இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வெளிப்படும் முறை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.
உடன்போக்கு, செலவு அழுங்குவித்தல், நற்றாய் வருந்துதல், செவிலி மகளைத் தேடிச் செல்லல், தலைவியை ஆற்றுவித்தல் போன்ற அக நிகழ்வுகளையும், கொள்ளை அடித்தல், அறம் பாராட்டல் போன்ற பிற இயல்புகளையும் அறிந்து கொள்ள முடிந்தது.
பாலைத்திணைப் பாடல்களில் காணப்படும் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய இலக்கிய நயங்களைப் புரிந்து சுவைக்க முடிந்தது.
பாடம் - 6
விளக்கம்
தலைவன் தலைவி ஆகிய இருவருள் ஒருவரிடத்தில் மட்டும் தோன்றும் காமத்தையே கைக்கிளை என்பர். சுருக்கமாகச் சொன்னால் கைக்கிளை என்பது ஒருதலைக் காதல் ஆகும். கை என்பது சிறுமை எனப் பொருள்படும். கிளை என்பது உறவு எனப் பொருள்படும். சிறுமையான உறவு அல்லது பெருமையில்லா உறவு என்பது கைக்கிளையின் பொருள். ஆயினும் இதுபற்றிய இலக்கணத் தெளிவைப் பின்னர்க் காணும்போது இது அவ்வளவு இழிவானதன்று என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.
காமம் சாலா இளமை யோள்வயின்
ஏமம் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றுஇரு திறத்தான்
தன்னொடும் அவெளாடும் தருக்கிய புணர்த்துச்
சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே
(தொல்காப்பியம்-பொருளதிகாரம்,அகத்திணையியல்: 53,)
(சாலா = அமையாத – மிகாத; வயின் = இடத்து; ஏமம் = பாதுகாவல்; இடும்பை = துன்பம்; எய்தி = அடைந்து; தருக்கிய = ஒத்தவை; புணர்த்து = சேர்த்து; புல்லி = பொருந்தி)
காமத்திற்குப் பொருத்தம் இல்லாத இளையவளிடத்தில் பாதுகாவல் அற்ற (காதல்நோய் தீர்வதற்கு வழியில்லாத) காதல் துன்பம் கொள்கிறான் தலைவன். புகழ்தல், பழித்தல் என்ற இரு வகையாலும் அவளைப் பற்றிப் பேசுவான்; தனக்கும் அவளுக்கும் ஒத்த (சமமான) குணங்களைச் சேர்த்துச் சொல்வான். அவளோ பிறரோ கேட்காதபடி அவன் பேசுவதால் அவன் சொல்லிற்கு மறுமொழி இராது; தானே சொல்லி இன்புறுவான். இவ்வாறு அமையும் ஒருதலைக் காதல்தான் கைக்கிளை எனப்படும்.
கைக்கிளைக் காமம் என்பது இறுதி வரை ஒருதலைக் காதலாகவே இருந்து விடுவதன்று. தலைவனுடைய வேட்கையைத் தலைவி பின்னர்ப் புரிந்து கொண்டு உடன்படும் போது அது நல்ல காதலாக மலரும். ஆகவே கைக்கிளையைக் காதலின் தொடக்கம் எனவும் கொள்வார்கள். அன்பின் ஐந்திணைக் களவுக் காதலுக்கு முன்பு கைக்கிளை நிகழ்வது இயல்பு என நம்பியகப்பொருள் (நூ.28) கூறுகிறது.
இவ்வாறு அன்றிக் காதலாக மலராமல் இறுதிவரை கைக்கிளையாகவே நின்று விடுவதுதான் இழிவான கைக்கிளை எனலாம்.
தலைவன் ஒருவன் கைக்கிளைக் காதல் கொள்வது ஆண்பாற் கைக்கிளை எனப்படும். அது போலவே தலைவி ஒருத்தி கைக்கிளைக் காதல் கொள்வது பெண்பாற் கைக்கிளை எனப்படும். ஆனால் அது இலக்கணமாகச் சொல்லப்படவில்லை. பின்னர் நீங்கள் காணவிருக்கும் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றில் பெண்பாற் கைக்கிளை அமைந்துள்ளது. அதனால் அவற்றை அகத்திணையில் சேர்க்காமல் புறத்திணையில் சேர்த்துள்ளனர்.
திருக்குறளில் தகையணங்குறுத்தல், குறிப்பறிதல் ஆகிய அதிகாரங்களில் கைக்கிளையைக் காண முடிகின்றது.
முத்தொள்ளாயிரப் பாடல்கள் பலவற்றில் சேர, சோழ, பாண்டிய நாட்டு மகளிர் பலர் அவர்தம் மன்னர் மீது கொள்ளும் ஒருதலைக் காதலைக் காணலாம்.
நாயக-நாயகி பாவத்தில் அமைந்த நாயன்மார், ஆழ்வார் பாடல்களில் அடியார்கள் இறைவனைத் தலைவனாகவும் தம்மைத் தலைவியராகவும் கொண்டு அவன் அன்பைப் பெறத் துடிக்கும் ஒருதலைக் காதலைக் காட்டு கின்றனர்.
கோவை, உலா, கலம்பகம், தூது, குறவஞ்சி போன்ற சிற்றிலக்கியங்களிலும் கைக்கிளைக் காதல் காட்டப்படுகின்றது.
ஊர்க்கால் நிவந்த பொதும்பருள்
எனத் தொடங்கும் பாடல் அது.
காமத்திற்கு அமையாத அழகிய இளம்பெண் ஒருத்தியைக் காண்கிறான் தலைவன். ‘நிலாப் போன்ற முகத்துடன் இங்கே வரும் இவள் யார்? கொல்லிமலையில் வல்லவனால் செய்யப்பட்ட பாவையோ? எல்லா அழகிய பெண்களின் உறுப்புகளையும் ஒருங்கிணைத்துப் பிரமன் செய்த பேரழகியோ? ஆயரைக் கொல்ல அழகிய வடிவாக வந்த கூற்றுவனோ?’ எனப் பலவாறு ஐயம் கொள்கிறான். கைக்கிளைக் காதலின் தொடக்க நிலையாகிய ‘காட்சி’, ‘ஐயம்’ ஆகியவை இப்பகுதியில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். பின்னர்த் தலைவன், தலைவியின் அணி, ஆடை ஆகியவைகளைக் கொண்டு அவள் ஒரு மானிடப் பெண்ணே என ஐயம் தீர்கிறான். இது கைக்கிளையின் மூன்றாம் நிலையாகிய ‘தெளிவு’ என்பதைக் குறிக்கும். இத்‘தெளிவு’ தோன்றியபின் தலைவனது கைக்கிளைக் காதல் மேலும் பெருகுகிறது. மருந்தில்லாத நோய்க்கு ஆளாகிறான்.
அவளோடு ‘பேசிப் பார்ப்போம்’ எனத் தனக்குள்ளேயே பேசுகிறான். இப்பேச்சில் அவள் அழகைப் புகழ்தலும், அவ்வழகு அவனைத் துன்புறுத்துவதால் இகழ்தலும் அமைகின்றன.
பெருத்தநின் இளமுலை
மயிர்வார்ந்த வரிமுன்கை மடநல்லாய் நின்கண்டார்
உயிர்வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ?
(அடி: 23-25)
(வார்ந்த = நேராக அமைந்த ; வரிமுன்கை = மயிர் வரிசையை உடைய முன்கை; மடநல்லாய் = இளம்பெண்ணே!; உணர்தியோ = உணர்கிறாயா?)
“இளமையான அழகியே! உன் மார்பு கண்டவர்களின் உயிரை வாங்கி விடுகிறது. இதனை நீ உணர்வாயா? உணர மாட்டாயா?” என்று அவன் கூறும்போது அவனுள் காதல் பெருக்கெடுக்கிறது.
யாதுஒன்றும் வாய்வாளாது இறந்துஈவாய் கேள்!
(அடி :29)
(வாளாது = பேசாமல்; இறந்து ஈவாய் = கடந்து செல்கிறாய்)
“கேட்டவர்க்கு எதையும் வாய்திறந்து சொல்லாமல் போகின்றவளே, கேள்” என்று அவன் தொடர்ந்து கூறுகிறான். இவை எல்லாம் சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் என்ற தொல்காப்பிய நூற்பாத் தொடரை நினைவூட்டுகின்றன.
நீயும் தவறிலை, நின்னைப் புறங்கடைப்
போதர விட்ட நுமரும் தவறு இலர்
நிறைஅழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
‘பறைஅறைந் தல்லது செல்லற்க’ என்னா
இறையே தவறுடை யான்
(அடிகள் : 30-34)
“அழகால் பிறரைக் கவர்ந்து இழுக்கும் பெண்ணே! நீ குற்றம் உடையவள் இல்லை. உன்னை இங்குச் செல்ல விட்ட உறவினரும் குற்றம் உடையவர் அல்லர். கொல்லும் இயல்புடைய யானையை நீர்நிலைக்கு அனுப்பும் போது பறைசாற்றி மக்களுக்குத் தெரிவிப்பது போல, நீ செல்லும் போதும் பறை முழக்காமல் செல்லக் கூடாது என்று உன்னைத் தடுத்து ஆணையிடாத அரசனே குற்றம் உடையவன்” என்கிறான் அந்த இளைஞன்.
இப்பாடலில் கைக்கிளை இலக்கணமாகிய பாதுகாவலற்ற
(மருந்தற்ற) துன்பம் எய்தல், நன்மை தீமை இரண்டும் கூறித் தன்னை அவளோடு இணைத்துப் பார்த்துப் புலம்புதல், அவளுடைய பதில் பெறாமல் அவனே புலம்பி இன்புறல் ஆகியவை அமைந்திருப்பதைக் காணலாம்.
தலைவன் பெண் ஒருத்தியை நினைந்து காம நோய்க்கு உட்பட்டு மெலிந்ததை அறிகிறான் பாங்கன். அறவுரை கூறித் தலைவனைத் தேற்றுகிறான்.
நோதக் கன்றே காமம் யாவதும்
நன்றுஎன உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும்பே தமைத்தே
(குறுந்தொகை, 78)
( நோதக்கன்று = வெறுக்கத் தக்கது; பேதைமைத்தே = அறிவின்மை உடையது )
‘தலைவனே! காமம் என்பது, சிறிது அளவேனும் நன்மை தருவது என்று அறியாத பேதையாரிடத்தும் சென்று ஒருவரை இரந்து நிற்கச் செய்யும் தன்மையை உடையது. ஆதலால் அது வெறுத்து ஒதுக்கத் தக்கது என்று உணர்வாயாக.’
இப்பாடல் கைக்கிளைக்கும் பொருந்துகிறது. தமிழ்க் காதல் என்ற நூலில் வ.சுப.மாணிக்கம் இப்பாடலைக் கைக்கிளைப் பாடலாகக் கருதலாம் என்று கூறுவது (ப-106) இங்குக் குறிக்கத்தக்கது.
சொல்லின் சொல்எதிர் கொள்ளாய்
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதும்எனக்
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ
(நற்றிணை -39 :1- 3)
(மிகின் = கடந்தால்)
‘நான் உன்னை நாடிச் சில சொற்களைச் சொன்னால், நீ அவற்றை ஏற்கவில்லை; காமம் எல்லை தாண்டுமானால் அதைத்தாங்கிக் கொள்ள முடியுமோ?’ என்று தலைவன் தலைவியிடம் தன் காதலை எடுத்து உரைக்கின்றான். இங்குத் தலைவன் தானே பேசிப் புலம்புவது தெரிகிறது.
சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
என்று தொல்காப்பியர் கூறும் இலக்கணத்தை இப்பாடலின் முதல் அடி நினைவூட்டுகிறது.
பெண்பாற் கைக்கிளை
தொல்காப்பியர் பெண்பாற் கைக்கிளை ஒழுக்கத்தைச் சொல்லவில்லை. இதற்குக் காரணம் சொல்வது போல் இளந்திரையனாரின் நற்றிணைப் பாடலில் ”தான் கொண்ட காதல் ஒழுக்கத்தைப் பெண் சொல்வது பொருந்துவதன்று” என்று தலைவி ஒருத்தி கூறக் காணலாம்.
தோழியிடம் பேசுகிறாள் தலைவி.
யானே,பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி
(நற்றிணை, 94 : 3)
(தட்ப = புலப்படுத்தாமல்)
என்று தன் பெண்மைத் தன்மையால் தலைவனிடம் தன் காதலைக் கூற முடியாத நிலையிலிருப்பதைத் தெரிவிக்கிறாள். ‘அவனிடம் காதல்கொண்டு, அவன் மார்பால் துன்புறும் என் நிலையை அறியாத இவன் என்ன ஆண் மகன்?’ எனத் தன் ஆற்றாமையைக் கூறுகிறாள். இது ஒருவகையில் பெண்பால் கைக்கிளையாகத் தோன்றுவதைப் புரிந்து கொள்ளலாம்.
கபிலர் பாடிய குறிஞ்சிப் பாடலாகிய 57ஆவது பாடலில், கொடி போலவும், மின்னல் போலவும், அணங்கு போலவும் தோன்றும் பெண் ஒருத்தி பந்தாடிக் கொண்டிருக்கிறாள். அவள் மீது கைக்கிளைக் காதல் கொண்ட தலைவன் அவளைப் பார்த்துப் பல சொற்களையும் சொல்கின்றான். அதற்கு ஒரு விடையும் சொல்லாமல் தலைவி நிலம் நோக்கித் தலை கவிழ்ந்து தன் வீட்டுக்குச் செல்கிறாள்.
”குளிர்ந்த மாலையை அணிந்தவன் பாண்டிய மன்னன். அவனது பொதிகை மலையில் அழகை உடைய கொத்துக்களாய் அமைந்த வேங்கைப் பூ உண்டு. அப்பூவைப் போன்ற தேமலை உடையவளே! முத்துமாலை அணிந்த உன் இளம் முலைகள், இந்த இளம் பருவத்திலும் பாண்டியனின் வலிமையும், மதமும் உடைய யானையின் கொம்புகளை விடச் சினம் கொண்டவையாய் உள்ளன. இந்தக் கொடுமை உன்னுடைய இந்த இளமைப் பருவத்துக்குத் தக்கதோ?”
(அடிகள் : 16-19) என்று பல சொற்களைக் காம மிகுதியால் கூறுகிறான் தலைவன். அவள் பதில் கூறாமல், தலை கவிழ்ந்து தன் வீட்டுக்குச் சென்று விடுகிறாள். தன் அறிவை அவளிடம் இழந்துவிட்டு அரற்றுகிறான் தலைவன். இங்குத் தலைவியின் இளமை பற்றிக் கூறுவதனால் ‘காமம் சாலா இளமையோள்’ என்னும் தொல்காப்பிய இலக்கணம் பாட்டில் அமைந்திருக்கக் காணலாம். தன் சொற்களுக்கெல்லாம் அவள் மறுமொழி தராமல் சென்று விட்டாள் என அவன் கூறுவது ‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்’ என்னும் கைக்கிளை இலக்கணத்தை உணர்த்துகிறது. ‘தன் அறிவைக்கவர்ந்து
சென்று விட்டாள்’ என அவன் வருந்துவது, ‘ ஏமம் சாலா இடும்பை’யை (மருந்து இல்லாத நோயை) அவன் கொண்டிருப்பதை உணர்த்துகிறது. இவ்வாறு கைக்கிளைக் காதலின் அனைத்து இலக்கணங்களுக்கும் விளக்கம் போல இப்பாடல் அமைந்திருக்கின்றது.
கபிலரே பாடிய, கலித்தொகையின் 58-ஆவது பாடலில் சிலம்பு ஒலிக்க, வளைக்கை வீசிக் கொண்டு நடந்து வரும் தலைவி தன் உயிரைக் கவர்ந்து கொண்டு போவதாகவும், அச்செயலை அவளது இளமை காரணமாக அவள் அறிந்திருக்கவில்லை என்றும் தலைவன் புலம்புகிறான்.
உளனாஎன் உயிரைஉண்டு உயவுநோய் கைம்மிக
இளமையான் உணராதாய்
(அடிகள் 7-8)
என அவளிடம் பேசுகிறான்.
(உளனா = சிறிதளவு உயிரோடு நான் இருக்கும்படி; உயவுநோய் = காமநோய்; கைம்மிக = மிக அதிகமாக)
வேறு யாராலும் தீர்க்க முடியாத நோயை உண்டாக்குவது அவள் அழகு. அதனை அவள் வீட்டார் அறிவர். அறிந்தும் அதற்கு மேலும் அவளை அலங்காரம் செய்து, தம் செல்வச் செருக்கினால் வெளியே புறப்பட விட்டுவிட்டார்கள்; அவர்களே தவறுடையவர்கள் எனப் புலம்புகிறான் தலைவன்.
களைநர்இல் நோய்செய்யும் கவினறிந்து அணிந்துதம்
வளமையால் போத்தந்த நுமர்தவறு
(களைநர் = நீக்குவார்; கவின் = அழகு; அணிந்து = அலங்காரம் செய்து; வளமை = செல்வச் செருக்கு; போத்தந்த = வெளியே புறப்படவிட்ட; நுமர்= உன் வீட்டார்)
கைக்கிளைக் காதலின் உச்ச நிலையில், ”என் நோய் பொறுக்கும் எல்லையைத் தாண்டி விட்டால் மடல்ஏறி உனக்கு ஒரு பழியை ஏற்படுத்தி விடுவேன் போல் இருக்கிறதே” என்றும் தலைவன் புலம்புகிறான்.
இப்பாடலிலும் தலைவன் தலைவியின் மறுமொழி பெறாமல் தானே பேசுகிறான்; அவள் காமத்திற்கு உரிய பருவம் வராத இளமையுடையாள் என்பதைக் கூறுகிறான் ; தனக்கு ஏற்பட்டுள்ள காமநோய் வேறு யாராலும் தீர்க்க முடியாதது என்பதை உணர்த்துகிறான். மேலும் தன்னைத் துன்புறுத்தும் தீங்கை அவள் மற்றும் அவளது உறவினர் பக்கமாகவும், தான் மடல் ஏறி உயிர் கொடுக்க இருக்கும் நன்மையைத் தன் பக்கமாகவும் சேர்த்துச் சொல்கிறான். இவை அனைத்தும் தொல்காப்பிய நூற்பாவில் சொல்லப்பட்ட கைக்கிளை இலக்கணத்துக்குப் பொருந்துமாறு அமைந்திருப்பதை நீங்கள் ஒப்பிட்டுக் கண்டு கொள்ளலாம்.
இன்ன பண்பின்நின் தைந்நீ ராடல்
மின்னிழை நறுநுதல் மகள்மேம் பட்ட
கன்னிமை கனியாக் கைக்கிளைக் காமம்
(பரிபாடல், 11 : 34-136)
என்று தோழி கூறும் வரிகள் தலைவியின் கைக்கிளைக் காமத்தைக் காட்டுகின்றன.
(தைந்நீராடல் = தை மாதம் வையை ஆற்றில் நீராடல்; மின்னிழை = ஒளிவிடும் நகை; நறுநுதல் = மணம் மிக்க நெற்றி)
தலைவி வையை ஆற்றில் தைநீராடக் காரணம் அவளது கைக்கிளைக் காமம் என்கிறாள் தோழி. விரைவில் தலைவன் ஒருவனை மணம்பெற வேண்டி நிற்கும் நிலை இங்குக் கைக்கிளைக் காமம் ஆகிறது.
இம்மூன்று பாடல்களும் சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி மீது ஒருதலைக் காதல் கொண்டு நக்கண்ணையார் என்ற பெண்பாற் புலவர் பாடியவை.
கோப்பெரு நற்கிள்ளி தன் தந்தையாகிய சோழன் தித்தனைப் பகைத்து நாடு துறந்து வறுமையுற்று அலைந்தவன். எனினும் சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். அவன் மீது நக்கண்ணையார் காதல் கொண்டார். அவர் பாடிய பாடல்களில் பாடப்பட்டவன் கற்பனைத் தலைவனாக அல்லாமல் உண்மைத் தலைவனாக அமைந்தமையால் இப்பாடல்கள் புறநானூற்றில் சேர்க்கப்பட்டன. ”கோப்பெரு நற்கிள்ளி மீது கொண்ட காதலால் என் கைவளைகள் கழன்று விழுகின்றன. காரணம் என்னவென்று என் தாய் கேட்பாளே! அவளுக்கு நான் அஞ்சுகிறேன். அவனது வீரத் தோளைத் தழுவ நினைக்கிறேன். ஆனால் பலரும் அவனைச் சூழ்ந்துள்ளனர் ; அந்த அவையில் உள்ளவரை எண்ணி நாணுகிறேன். இந்த ஊர் தாயைப் போலவும், அவையைப் போலவும் இரு தன்மை உடையதாக இருக்கிறது. எனவே மயக்கத்தை உடைய இந்த ஊர் என்னைப் போலவே நடுக்கத்தை அடையட்டும்” என்கிறார். (புறநானூறு – 83)
இப்பாடலில் தலைவியின் காதலைத் தலைவன் அறியவில்லை என்பதை உணர்கிறோம். ஆகவே இது கைக்கிளையாகிறது.
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு
(குறள் – 1081)
எனத் ‘தகையணங்குறுத்தல்’ அதிகாரத்திலும்,
இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து
(குறள்-1091)
எனக் ‘குறிப்பறிதல்’ அதிகாரத்திலும் ஆண்பாற் கைக்கிளையைக் காண முடிகின்றது.
”இவள் தெய்வப் பெண்ணோ? அழகு மயிலோ? கனமான குழையை அணிந்து உள்ளதால் மானிடப் பெண்ணோ? என்று என் உள்ளம் மயங்குகிறது” (குறள் 1081) என்று தலைவன் தன் ஒருதலைக் காதலை உணர்த்துகிறான்.
”மை தீட்டப் பெற்ற இவளின் கண்களில் இரு விதப் பார்வைகள் உள்ளன. ஒன்று காமநோயை உண்டாக்குகிறது. மற்றது அந்நோய்க்கு மருந்தாகிறது” (குறள் 1091) என்றும் தலைவன் தன் கைக்கிளைக் காதலை உணர்த்துகிறான்.
சைவ சமய அடியார்களாகிய நாயன்மார்களும், வைணவ சமய அடியார்களாகிய ஆழ்வார்களும் இறைவனைத் தலைவனாக்கி, தம்மைத் தலைவியராய் ஆக்கி நாயக-நாயகி பாவத்தில் பல பாடல்களைப் புனைந்துள்ளனர்.
தலைவியின் ஒருதலைக் காதலான பக்தியைத் தாய் கூறுவது போல நாவுக்கரசர் பாடியுள்ளார். தலைவனுடைய பெயரையும், நிலையையும், ஊரையும் கேட்டு, அதைச் சொல்லிச் சொல்லி, அவன் மேல் பித்தாகிறாள் தலைவி. தாய்-தந்தை சமூகக் கட்டுப்பாடு எல்லாவற்றையும் விடுத்துத் தன்னை மறந்து, தன் பெயரையும் மறந்து, இறைவன் திருவடியே தஞ்சமெனக் கிடக்கிறாள் அவள். இதனைச் சொல்கிறது தேவாரப் பாடல் :
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன்இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
தன்னை மறந்தாள்தன் நாமம் கெட்டாள்
தலைப்பட் டாள்நங்கை தலைவன் தாளே!
(நாவுக்கரசர் தேவாரம்,6 : 25-7)
முத்தொள்ளாயிரம் என்ற பிற்கால இலக்கியம் கைக்கிளைத் திணையின் வளர்ச்சி நிலைக்கு நல்ல சான்றாகும். சேர, சோழ, பாண்டிய மன்னர் மீது பெண்கள் கொள்ளும் ஒருதலைக் காதலை இந்நூல் முழுதும் காண முடிகிறது.
ஒரு பெண் உலா வரும் சேர மன்னன் கோதையைக் காணச் செல்கிறாள்; கதவைத் திறக்கிறாள்; நாணம் வந்ததால் வீட்டினுள் செல்கிறாள்; மீண்டும் கதவருகே செல்கிறாள்; நாணத்தால் வீட்டினுள் திரும்புகிறாள். பெரும் பணக்காரர் இல்லத்தில் சென்று நிற்கத் தயங்கும் ஏழை போல் அவள் நெஞ்சு போவதும் வருவதுமாகத் தடுமாறுகிறது.
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவுஅடைத்(ந்)தேன்- நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும்செல்லும் பேரும்என் நெஞ்சு
(முத்தொள்ளாயிரம்,16)
(ஆய்மணிப் பைம்பூண் = ஆராய்ந்து எடுத்த இரத்தின மணியால் ஆன மாலை; அலங்குதார் = அசைந்தாடும் மலர்மாலை; காணிய = காண்பதற்காக; நல்கூர்ந்தார் = வறுமையுற்றவர் (ஏழை))
விளக்கம்
பெருந்திணையைப் பொருந்தாக் காமம் அல்லது ஒவ்வாக் கொள்ளும் காதலே பெருந்திணை ஆகும். இப்பொருத்தமின்மை பற்றிப் பெருந்திணையின் இலக்கணத்தில் விளக்கமாகக் காணலாம்.
மருதக்கலியில் இரண்டு பாடல்களும் (எண்:62,94, ஆசிரியர் மருதனிள நாகனார்) முல்லைக்கலியில் இரண்டு பாடல்களும் (எண் : 112, 113, ஆசிரியர் சோழன் நல்லுருத்திரன்) நெய்தல் கலியில் பத்துப் பாடல்களும் (பாடல் எண் 138 முதல் 147வரை, ஆசிரியர் நல்லந்துவனார்) பெருந்திணையில் அமைந்தவை ஆகும்.
புறநானூற்றில் 143ஆவது பாடலைக் கபிலரும், 144, 145ஆவது பாடல்களைப் பரணரும், 146ஆவது பாடலை அரிசில்கிழாரும், 147ஆவது பாடலைப் பெருங்குன்றூர் கிழாரும் பாடியுள்ளனர்.
ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே
(தொல்காப்பியம்,பொருளதிகாரம், அகத்திணையியல், 56)
(மிடலொடு = மாறிய திறனொடு, முறையற்ற செயலொடு; செப்பிய = சொல்லப்பட்ட)
ஏறிய மடல் திறம், இளமை தீர்ந்த திறம், தெளிவு அற்ற மிகுந்த காமம், காமம் மிகுந்து விடுதலால் செய்யும் வரம்பு கடந்த செயல்கள் ஆகிய நான்கும் பெருந்திணையைக் குறிப்பன என்பது இந்நூற்பாவின் கருத்து. இனி இவற்றைத் தனித்தனியே விளக்கிக் காணலாம்.
ஏறிய மடல் திறம்
இது மடல் ஏறுவதைக் குறிக்கும். மடலேறுதல் ஆணுக்கு மட்டுமே உரியது. தலைவன் மடல் ஏறுவேன் எனச் சொல் அளவில் கூறுவது கைக்கிளையளவில் நிற்கும். உண்மையில் தலைவன் மடல் ஏறிவிடுவது பெருந்திணையாகி விடும்.
தான் விரும்பும் தலைவியை மணக்க இயலாத நிலை ஏற்படும்போது தலைவன் மடல் ஏறுகிறான். அதைக் கண்ட தலைவி இரங்கி அவனுக்கு உடன்படுகிறாள். அவ்வாறு அவளை அடைந்த விதத்தைத் தலைவன் தன்னைச் சேர்ந்தோருக்குத் தெரிவிக்கின்றான். (கலித்தொகை, பாடல் 138) இப்பாடலில் தலைவன் தலைவியை அடைகிறான். எனினும் அடைந்த விதம் (மடலேறுதல்) அன்பின் ஐந்திணைக்குப் பொருந்துவதாக இல்லை. நாணமற்ற ஒரு செயலால் களவைப் பலர் அறிய வெளிப்படுத்தி விட்டமையால் இது பெருந்திணை ஆயிற்று. தலைவன் பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம் பூ ஆகியவற்றைத் தொடுத்து மடல் குதிரையில் கட்டி, ஊர்க்கடைத் தெருவில் மடல் ஏறி,
எல்லீரும் கேட்டீமின் என்று
படரும், பனைஈன்ற மாவும் சுடர்இழை
நல்கியாள் நல்கி யவை
(அடிகள் : 11-13)
(எல்லீரும் = எல்லோரும் ; கேட்டீமின் = கேளுங்கள்; படர் = துன்பம்; மா = குதிரை; நல்கியாள் = என்னால் காதலிக்கப்பட்டவள்; நல்கியவை = கொடுத்தவை)
”விளங்கும் அணியை உடைய என்னால் விரும்பப்பட்டவள் எனக்குக் காதலித்துத் தந்தவை வருத்தமும், வருத்தத்தால் உண்டான பனை மடலால் செய்த குதிரையும் ஆகும்” என்பது பொருள்.
ஒளி பொருந்திய அணியை உடையவள் என்னால் பொறுத்துக் கொள்ள இயலாதபடி காம நோயை எனக்குத் தந்தாள். அந்நோயால் என் உயிர் அழுந்தியது. நெருப்பில் பட்ட மெழுகாய் உருகித் தேய்கிறது. இஃது எல்லாரும்
இரக்கப்படுமாறு இருப்பது”
இப்பாடலைக் கேட்டு அவள் இரங்கித் தன்னை ஏற்றதாகக் கூறுகிறான்.
இளமைதீர் திறம்
பெருந்திணையின் இரண்டாவது வகையாகக் குறிப்பிடப்படுவது இளமை தீர் திறம் ஆகும்.இளமை நீங்கிய நிலையில் கொள்ளும் காதல் இளமை தீர் திறம் ஆகும். இது மூன்று வகையில் அமையலாம். தலைவி முதியவளாகத் தலைவன் இளையவனாக இருக்கலாம் ; தலைவன் முதியவனாகத் தலைவி இளையவளாக இருக்கலாம்; இருவருமே இளமை தீர்ந்தவர்களாகவும் இருக்கலாம். ஒரு குறளனும் (குள்ளன்) கூனியும் முதலில் ஊடிப் பேசிப் பின் கூடுகின்றனர். ஒருவரையொருவர் உருவத்தைக் கொண்டு இகழ்ந்து பேசுகின்றனர். (கலித்தொகை, பாடல் -94)
நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல்
ஈங்குஉருச் சுருங்கி
இயலுவாய் ! நின்னொடு உசாவுவேன்
(அடிகள் : 2-4)
(நுடங்கிய = அசைந்து தெரிந்த ; ஈங்கு = இங்கு; உரு= உருவம்; உசாவுவேன் = பேசுவேன்)
”கரையில் நின்ற ஒரு பொருளின் நிழல் நீருக்குள் தெரிவது போல் கூன் கொண்டு உருவம் சுருங்கி நடப்பவளே! உன்னோடு நான் பேச வேண்டும்” என்று இப்பாடலில் கூனியைப் பார்த்துக் குறளன் கூறுகிறான். அதற்கு அவள்,
காண்தகை இல்லாக் குறள்நாழிப் போழ்தினான்
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்மகனே ! நீ எம்மை
வேண்டுவல் என்று விலக்கினை ; நின்போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று? (அடிகள் : 5-8)
(காண்தகை இல்லா = கண்ணால் பார்க்கத் தகுதி இல்லாத; குறள் = குள்ளம்; நாழி = நேரம்;ஆண்டலை = ஒரு பறவை, ஆந்தை; பறழ் = குஞ்சு)
”கண்ணால் பார்க்கச் சகிக்க முடியாத குள்ளனாகப் பிறப்பதற்குரிய நேரத்தில்,ஆந்தைப் பறவைக்கு அதன் பெட்டை ஈன்ற குஞ்சான மகனே! நீ என்னை விரும்புவேன் என்று மேலே போகாமல் தடுத்தாய். உன்னைப் போன்று குறளனாக இருப்பவர் என்னைத் தீண்டப் பெறுவாரோ?”
என்று பதில் தருகிறாள். தொடர்ந்து இருவரும் மாறிமாறி இவ்வாறு விளையாட்டாய்ப் பேசிக் கொண்டபின் காம ஒழுக்கம் மேற்கொள்கின்றனர்.
‘உருச் சுருங்கி இயலுவாய்’ என்றும் ‘கொக்குரித்தாற் போலத் தோன்று பவளே’ என்றும் சொல்வதனால் தலைவி உருவம் சுருங்கியமையும், உடலில் தோல் சுருங்கியமையும் உணர்த்தப்படுகின்றன. இதனால் தலைவியின் இளமை தீர்ந்த முதுமை சுட்டப்படுகின்றது.
‘ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே’ என்பதால் தலைவனின் இளமை தீர்ந்த திறம் சுட்டப்படுகின்றது. உருவப் பொருத்தமின்மை, பருவப் பொருத்த மின்மை ஆகிய இரண்டுமே இக்காதலைப் பெருந்திணைக் காதலாக அடையாளம் காட்டுகின்றன.
வேறு குறைபாடுகள் இன்றித் தலைவனும் தலைவியும் வயது முதிர்ந்தபின் காமம் கொள்வதற்கு ஒரு காரணம், இளமையில் பொருள் தேடுதல் போன்றவற்றால் போதுமான காம நுகர்ச்சி இல்லாமல் போவதே ஆகும். அதனையும் பெருந்திணை என்றே கொள்வர்.
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
இது அறிவுத் தெளிவு அற்றுக் காமத்தில் மிகுதல் ஆகும். இது பெரும்பான்மை தலைவிக்கு உரியது.
தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் வருந்தியிருக்கும் தலைவியைத் தோழி தேற்றுவாள். ஆனால் தேறுதல் பெறாத தலைவி, காமம் மிகுந்திடப் பிறர் கேட்பத் தன் காமத்தையும் அதனால் தான்படும் துன்பத்தையும் எடுத்துரைப்பாள்.
கலித்தொகையின் 142ஆவது பாடல் இதற்குத் தகுந்த சான்றாகும்.
பெண்ணின்றி
யாவரும் தண்குரல் கேட்ப.. எழில்உண்கண் ஆயிதழ் மல்க அழும்
(அடிகள் : 8-12)
‘பெண்தன்மை இல்லாமல், பிறர்க்குக் கேட்காமல் சொல்ல வேண்டிய காதல் வேதனை பற்றிய செய்தியை எல்லாருக்கும் கேட்கும்படி கூறி அழுகின்றாள்’ எனத் தோழியர் பேசுகின்றனர்.
‘ஞாயிறே! அவரைத் தேடிப் பார்த்து எனக்குத் தா. அப்போதுதான் உயிர் திரியாக, என் நெஞ்சமே அகலாக எரிகின்ற என் காமத்தீ அவியும்’ எனத் தன் காம வெப்பத்தை வெளிப்படையாகப் பேசுகிறாள்.
இவ்வாறு தேறுதல் ஒழிந்த காமத்தின் வெளிப்பாடு பெருந்திணையாயிற்று.
மிக்க காமத்து மிடல்
காமம் மிகுந்துவிடுதலால் செய்யும் முறை கடந்த செயல்களைக் குறிப்பது இது. பிரிந்து செல்ல வேண்டிய தலைவன், பிரிய வேண்டாம் எனத் தலைவியோ தோழியோ வற்புறுத்தாத நிலையிலும், காம மிகுதியால் தன் பயணத்தை நிறுத்திவிடுதல், தலைவியிடம் பணிந்து நின்று வேண்டுதல், மணவாழ்வில் மனைவி விடுத்தலால் வேறு பெண்டிரை நாடிச் செல்லுதல் போன்றவை ஆணின் ‘மிக்க காமத்து மிடல்’ ஆகும்.
“யார் இவன் என்னை விலக்குவான்?” (கலித்தொகை, 112 : 1) எனத் தொடங்கும் கலித்தொகைப் பாடலில், ”நின் பெற்றோர் சொல்லாடாது நிற்க எனக் கூறினரே அன்றிச் சேர வேண்டாமெனக் கூறினரோ?”என்று தலைவன் தலைவியிடம் கேட்கிறான். அவளும் சேர உடன்படுகிறாள். இவ்வாறு மிக்க காமத்தால் அவளைக் கூடுவதால் இது பெருந்திணை ஆயிற்று.
தலைவன் வருவதாகக் கூறிய பருவம் வந்தபோது ‘இது அப்பருவம் தான் என்றும், அப்பருவம் அன்று’ என்றும் தலைவி மயங்குதல் போன்றவை பெண்ணின் ‘மிக்க காமத்து மிடல்’ ஆகும்.
”தன்னுடன் புணரும் குறிப்பு இல்லாத என்னைப் புணர்ச்சி விருப்புடன் கையால் வலியப் பிடிக்கும் இவன் நாணம் இல்லாதவன்” என்று தலைவி கூறுகிறாள்.
”உன் மேனியைத் தழுவுவதற்கு இனிதாய் உள்ளது. அதனால் தழுவினேன்” என்று பதில் தருகிறான் தலைவன்.
”தனக்கு இனிதாய் இருக்கிறது என்று எண்ணிப் பிறர்க்கு இனியது அல்லாததை வலியச் செய்வது இன்பத்தை அளிக்குமோ?” என்று தலைவி வினா எழுப்புகிறாள்.
“தண்ணீர் விரும்புவர்க்கு இனியது என்று அருந்துவது அல்லாமல் அந்த நீர்க்கு இனியதாய் இருக்கும் என்று எண்ணி அருந்துவாரோ!” என்று விடை தருகிறான் தலைவன்.
வேட்டார்க்கு இனிதாயின் அல்லது நீர்க்கினிதென்று
உண்பவோ நீருண் பவர்
(அடிகள் : 10-11)
(வேட்டார்= தாகம் கொண்டார்; உண்பவோ= உண்பார்களோ)
காமத் துன்பத்தில் ஆழ்த்தும் பெண்களை வன்மையாகச் சேர்வதும் ஒருவகை மணம் என நூலோர் கூறுகின்றனர் என்றும் கூறுகின்றான். இவைகளைக் கேட்ட தலைவி புணர்ச்சிக்கு உடன்படுகிறாள். இது மிக்க காமத்து மிடல் என்னும் பெருந்திணை ஒழுக்கம்.
வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவி கண்ணகியைத் துறந்து நல்லூர்ப் பரத்தையிடம் உறவு கொண்டிருந்தான். இதனைக் கண்ட கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் ஆகிய நால்வரும் பேகனிடம் கண்ணகியின் துயரத்தைக் கூறுகின்றனர்; அவளுடன் சேர்ந்து வாழுமாறு வேண்டுகின்றனர்.
நின்னும்நின் மலையும் பாட இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைப்ப விம்மிக்
குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே
(புறநானூறு-143 : 12-15)
”பேகனே! உன் ஊருக்கு யான் வந்து உன்னையும் உன் மலையையும் பாடினேன். அப்போது வேதனையுற்று வடித்த கண்ணீரை நிறுத்த முடியாமல், மார்பு நனைய விம்மிக் குழல் அழுவதுபோல் அழுதாள் ஒருத்தி” எனக் கூறுகிறார் கபிலர்.
பேகன் பெருங்குன்றூர்கிழாருக்குப் பரிசில் தர முன் வந்தான். ஆனால் புலவரோ அதை மறுக்கிறார்.
”நேற்று நான் செவ்வழிப் பண்ணைப் பாடி வந்தேன். ஒருத்தி கண்ணீர் விட்டு வருந்தினாள். அவிழ்ந்த கூந்தலை உடையவள் அவள். அவள் தன் கூந்தலை முடித்து மகிழ நீ அருள வேண்டும். இதுவே நான் வேண்டும் பரிசில்” என்கிறார் புலவர். (புறநானூறு – 147)
இப்பாடல்கள் பேகனுக்குப் பரத்தையிடம் தோன்றிய பொருந்தாக் காதலைக் கூறுகின்றன; மேலும் கண்ணகி பேகனிடம் கொண்ட மிகுந்த காதலால் புலம்புவது காரணமாகவும் இப்பாடல்கள் பெருந்திணை ஆகின்றன.
இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள். கைக்கிளையின் விளக்கம், தொல்காப்பியர் கூறும் கைக்கிளை இலக்கணம், கைக்கிளை பாடிய புலவர்கள், கைக்கிளையைக் காட்டும் அக இலக்கியங்கள், கைக்கிளையை உணர்த்தும் புற இலக்கியம் (புறநானூறு), பிற இலக்கியங்களில் இடம்பெறும் கைக்கிளை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிந்தது.
பெருந்திணையின் விளக்கம், தொல்காப்பியர் கூறும் பெருந்திணை மரபு, பெருந்திணை பாடிய புலவர்கள், பெருந்திணையைக் காட்டும் கலித்தொகை, பெருந்திணையை உணர்த்தும் புறநானூறு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிந்தது.
இதுவரை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலைத் திணைகளின் முப்பொருள்கள், முப்பொருள் வெளிப்பாடு, சிறப்புகள், இலக்கிய நயங்கள் பற்றி அறிந்தீர்கள். இப்போது கைக்கிளை, பெருந்திணை பற்றி அறிந்தீர்கள். இவ்வாறு சங்க அக இலக்கியங்கள் பற்றித் தெளிவாக (ஆறு பாடங்களில்) அறிந்திருப்பீர்கள்.