மொழிபெயர்ப்பியல் அறிமுகம்
பாடம் - 1
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்
(பாரதியார் பாடல்கள் – 21)
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
(பாரதியார் பாடல்கள் – 22)
போன்றகருத்துகள் மொழிபெயர்ப்பின் இலக்குக்கு வழிகாட்டுகின்றன. பல்திசைக் கலை, இலக்கிய, அரசியல் கருத்துகள் மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாகும். மொழி பெயர்ப்பு செம்மையாகவும், எளிமையாகவும், தெளிவாகவும் அமைய, அனுபவம் என்னும் ‘பட்டறிவு’ கட்டாயம் தேவை. எந்த ஒரு செய்தியையும் எளிதில் புரிய வைக்க வேண்டும் என்ற அகத்தெழுச்சி அதி முக்கியமாகக் கருதப்படவேண்டும். மொழிபெயர்ப்புக்குக் கருத்துப் பரிமாற்றம் மொழி மாற்று முறை அடிப்படையில் அமைந்தது. ஒரு மொழியில் ஏற்படும் புதுமைகளை வேற்று மொழிக்குக் கொண்டுவரும் அரிய பெரிய கலையே மொழிபெயர்ப்புக்கலை ஆகும். மொழிபெயர்ப்புச் செய்யப்படும் பொழுது மூலமொழி சார்ந்துள்ள சமுதாயப் பின்னணியை எண்ணிப்பார்ப்பது தேவையானது. அறிவு வளர்ச்சிக்குக் கல்வி முக்கியம், கல்வி மேம்பாட்டிற்கு மொழிப்பயிற்சி பெருந்துணையாகும். அந்தத் துணை, மொழிபெயர்ப்பு முயற்சியிலும் துளிர்த்து நிற்பதை நாம் அறியலாம். இன்று மொழியியல், அறிவியல், இலக்கியம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தனிக்கவனம் செலுத்தப் படுதலின் இன்றியமையாமையை உணர்ந்து வருகிறோம். பிறநாட்டுத் தொழில் நுட்பங்கள் நம்வரை எட்டத் துணை நிற்கும் மொழி பெயர்ப்பு, நமது கூர்த்த அறிவுக் கூறுகள் வேற்று நாட்டவர்க்கும் எட்டுவதில் பயன்பட வேண்டும் என்று விழைவது இக்கலை மேம்பாட்டின் ஒரு பகுதியாக அமைகிறது.
உலகின் பல மொழிகளில் ‘பைபிளுக்கு’ அடுத்த படியாக மொழிபெயர்க்கப் பெற்றுள்ள திருக்குறளின் தாக்கம் பல மொழிகளிலும் இலக்கிய வடிவ மாற்றங்கள் உருவாகப் படியாக அமைந்தது என்பர். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டதன் விளைவு பல நாடக மேடை அமைப்புகள் உருவாகின. மேலை நாட்டு இலக்கியச் சார்புதான் நமது தமிழிலக்கியத்தின் புதிய வரவுகளான புதினம், சிறுகதை போன்ற வடிவங்களுக்குப் படிநிலையாகும். வால்ட்விட்மனின் ‘புல்லின் இதழ்கள்’ ஏற்படுத்திய கவிதைத் தாக்கம் தமிழ்ப் புதுக் கவிதை மாளிகைக்கு அடிக்கல் நட்டது. ஜப்பானிய ‘ஹைக்கூ’ கவிதைகள் நமது ‘ஹைக்கூ’ கவிதை வளர்ச்சிக்கு வித்திட்டது. இங்ஙனம் மொழியாக்கங்கள் இலக்கிய வளர்ச்சியில் பங்கேற்பது தவிர்க்க இயலாத உண்மையாகும்.
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே
(தொல் : பொருள் : மரபியல் :98)
என்ற நூற்பாவில் ‘மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்’ என்ற தொடரை எடுத்துக் கொண்டால் வேற்று மொழிப் படைப்பினைத் தமிழுக்கு ஆக்குதல் என்று பொருள் கொள்ள வாய்ப்பு உண்டு. திசைச் சொல், வடசொல் என்பனவற்றிற்கான இலக்கணம் சொல்லும் நிலையிலும் தமிழ்ப் படுத்தும் நிலை பற்றித் தொல்காப்பியர் பேசுகிறார். இவ்வடிப்படையில் நோக்குங்கால் மொழிபெயர்ப்பு என்ற தொடரை முதன்முதலில் கையாண்டவர் தொல்காப்பியர் என்பது புலனாகும். நிகண்டுகள், வடமொழி மாற்றம் என்பதற்கான சான்றுகளும் நமக்கு உண்டு. சங்க நூல்களிலும், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் சில வடமொழிக் கதைக்குறிப்புகள் சுட்டப்படும் நிலையைக் காண்கிறோம்.
‘மாபாரதம் தமிழ்ப் படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்’
என்று வரும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்புகள் மொழிபெயர்ப்புப் பற்றிச் சுட்டும் குறிப்புகளே. பகவத் கீதையை மொழிபெயர்த்த நிலை குறித்ததோர், அருமையான பட்டியலை ‘மொழிபெயர்ப்புக் கலை’ எனும் தமது நூலில் வளர்மதி விளக்குதலைக் காணலாம். நளவெண்பா போன்ற நூல்களும் தமிழாக்கச் சுவடுடைய நூல்களாக இருப்பதனை அறியலாம்.
அன்டிரிக் அடிகளார், போத்துக்கீசிய மொழியில் எழுதிய தமிழ் நூல் ‘த கேற்றகிசா’ (ஞானோபதேசம்) என்ற நூல் ஒரு தனித்தன்மை வகிக்கிறது. வீரமாமுனிவர் திருக்குறளின் அறத்துப்பாலை இலத்தீனில் மொழிபெயர்க்க முனைந்ததும், டாக்டர்.ஜி.யு.போப் திருவாசகம், திருக்குறள் போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததும் சான்றாக அமையும்.
பிற மொழிகளில் உள்ள கதைகள், கட்டுரைகள், புதினங்கள், நாடகங்கள், கவிதைகள், திறனாய்வுகள், வரலாற்று நூல்கள், பாட நூல்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்தல் என்பது ஒரு சீரிய பணியாகும். நாளிதழ், வார, திங்கள் இதழ்கள் போன்ற ஏடுகளின் அலுவலகங்களுக்கு ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் வரும் செய்திகள், விளம்பரங்கள் போன்றவற்றை மொழிபெயர்த்தல் இன்றியமையாததாகும். ஒரு மொழியைக் கருத்துலகின் கால வேகத்துக்கு ஏற்புடையதாக வளமாக்குவதில் மொழிபெயர்ப்பின் பங்கு மிகப் பெரிதாகும். மொழிபெயர்ப்பில், கலாச்சாரம் அல்லது பண்பாட்டுப் பரிமாற்றமும் கூர்ந்து நோக்கப்பட வேண்டிய பகுதி என்பது மொழிபெயர்ப்பாளனின் மனத்தில் பதிய வேண்டும்.
அறிவியல் மொழிபெயர்ப்பாக இருந்தால் உண்மைச் செய்திகள் உரிய செறிவோடு தரப்படுதல் வேண்டும். கவிதை மொழிபெயர்ப்பு சற்று மாறுபட்ட தன்மையுடையது. ”ஒரு கவிஞனின் உள்ளம் ஒரு மொழியில் உயிரோட்டமாக உருக்கொண்டதனை, மற்றொரு மொழியில் உயிரோட்டமாக வேறொரு கவிஞன் உருக்கொடுப்பதுவே கவிதையின் உண்மையான மொழிபெயர்ப்பு” என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் கூறிச் செல்வது இங்குச் சிந்தித்தற்குரியது. இரு மொழி அறிந்த ஒருவர் எல்லாத் துறைசார் மொழிபெயர்ப்புகளையும் செய்துவிட முடியும் என்று கருதுவது பொருத்தமான முடிவு அல்ல.
கி.மு.5ஆம் நூற்றாண்டில் நெகிமா எனும் யூதத் தலைவர் அரபு மொழி பேசுகின்ற யூதர்களுக்காக ஈப்ரு மொழியிலிருந்து கிறித்தவத் திருநூலின் பழைய ஏற்பாட்டை அரபு மொழியில் மொழிபெயர்த்தார். கி.மு.250 இல் முதல் மொழிபெயர்ப்பு நிகழ்ந்தது என்று சில அறிஞர்கள் கூறினர். அதனை மறுத்து, கி.பி. 210ஆம் ஆண்டில் ஹமுராபி அரசர் அரசவை அதிகார அறிவிப்பு முறைகளை மக்களின் பேச்சு மொழியில் மொழி பெயர்க்கச் செய்தார்; ஆகவே அதுவே உலகின் முதல் மொழிபெயர்ப்பு என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு சண்முக வேலாயுதம் தமது ‘மொழிபெயர்ப்பியல்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மொழிபெயர்ப்பின் தத்துவத்தைப் பிளினி வலியுறுத்தியுள்ளார். பொருளுக்குப் பொருள் என்பதான மொழிபெயர்ப்பு முறையை விடச் ”சொல்லுக்குச் சொல்” மொழிபெயர்ப்பு முறைக்கே அவர் ஆதரவு அளித்தார். விவிலிய நூல் அறிஞரான ஜெரோம் என்பவரைப் புதிய ஏற்பாட்டினை எபிரெய மொழியிலிருந்து இலக்கிய நடையில்லாமல் எல்லோருக்கும் தெரிந்த இலத்தீனில் மொழிபெயர்க்குமாறு போப் டமாசஸ் பணித்தார். ஜெரோமினுடைய அணுகுமுறை ”சொல்லுக்குச் சொல்” முறையை விடுத்துப் ”பொருளுக்குப் பொருள்” என்னும் முறையிலேயே அமைந்திருந்தது.
எட்டாம் நூற்றாண்டில் மூர் இனத்தவர் ஸ்பெயின் நாட்டின் மீது படையெடுத்ததன் விளைவாக அரேபிய மொழிப் புத்தகங்களை இலத்தீன் மொழியில் பெயர்க்கும் வேகம் பெருகியது.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் டோலடோ என்னுமிடத்தில் ஜெரோட் ஆப் கிரோமனா என்பவர் மொழிபெயர்ப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவர்தான் ”மொழிபெயர்ப்பாளர்களின் மூதாதையராக”க் கருதப்பட்டார். அதோடு அவ்வாறே போற்றப்பட்டும் வருகிறார். அவர் பல்வேறு அறிவியல் படைப்புக்களைக் கிரேக்க, அரபிமொழிகளிலிருந்து இலத்தீன் மொழிக்கு மொழிமாற்றம் செய்தார்.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலம் மொழிபெயர்ப்பு அறிஞர்களின் முக்கிய நகரமாக டோலடோ விளங்கிற்று. அவ் அறிஞர் பெருமக்களுள் ஆங்கிலத் தத்துவஞானி அடிலாட் ஒருவர். யூகிளிட்ஸ் என்பவர் அரபி மொழியில் எழுதிய ”எலிமண்ட்சு” என்ற நூலை இவர் இலத்தீனில் மொழி பெயர்த்தார். இதுவே இவரது படைப்புகளுள் தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டைப் பொறுத்த வரையில் மொழிபெயர்ப்புக் கலை எலிசபெத் அரசியாரின் ஆட்சிக்காலத்தில்தான் உயிர் பெற்றது. ஹோமருடைய ‘ஒடிசியும்’ ‘இலியட்டும் பல மொழிபெயர்ப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தன. பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் கிரேக்க, இலத்தீன் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களைக் கவர்ந்தன.
ஜான் டிரைடனுடைய ஜூவனல் (Juvenal), வெர்ஜில் (Virgil) ஆகியவை மொழிபெயர்க்கப்பட்டன. இச்சூழலை, 1684ஆம் ஆண்டில் லண்டனில் ரோஸ்காமன் என்பவர் எழுதிய ”மொழிபெயர்க்கப்பட்ட செய்யுளைப் பற்றிய ஒரு கட்டுரை” என்ற நூல் தெளிவாக விளக்கும்.
1791ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் ஃபிரேஸர் டெய்ட்லர் எழுதிய ”மொழிபெயர்ப்புக் கொள்கைகள்” என்ற நூல் இத்துறையில் குறிப்பிடத்தக்க நூலாகும். அவர் மூன்று வகையான அடிப்படைக் கொள்கைகளை விளக்கிச் சொல்கிறார். அவை வருமாறு :
• மொழிபெயர்ப்பு என்பது மூலமொழியில் உள்ள கருத்துகளை ஒரு வரைபடம் போன்று விளக்க வேண்டும்.
• மொழிநடை, எழுதிச் சென்றுள்ள முறை போன்றவைகளெல்லாம் மூலமொழியில் அமைந்துள்ளது போன்றே குறிக்கோள் (பெறு) மொழியிலும் அமைய வேண்டும்.
• மொழிபெயர்ப்பு என்பது மூலமொழியில் உள்ள எல்லாவகையான எளிமைகளையும் குறிக்கோள் (பெறு) மொழி கொண்டு விளங்க வேண்டும்.
இரண்டாவது உலகப் போருக்குப்பின் மொழிபெயர்ப்புப் பணி மிகவும் சீரிய முறையிலேயே வளர்ந்தோங்கியது. பல நாடுகள் இலக்கிய மொழிபெயர்ப்புக்கென்று ஆண்டுதோறும் பரிசுகளைக் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றன. விஞ்ஞான, தொழில்நுட்ப மொழிபெயர்ப்புகள் இக்காலக் கட்டத்தில் வளர்ந்தோங்கக் காண்கிறோம். உலகத்தில் தலைசிறந்த இலக்கியங்களை மிகவும் குறைந்த விலைக்கு ஆங்கிலேயர்கள் வாங்கிப் பயனடையும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று மக்கள் தொடர்புச் சாதனங்களின் பயன்பாட்டால் மொழிபெயர்ப்புத் துறை தன் ஆளுமையைப் பறைசாற்றத் தொடங்கியுள்ளது.
ஒரு மொழியின் வளம் என்று சொல்லும்பொழுது, பிறமொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள இலக்கியங்களையும், அதே சமயம் அம்மொழியிலிருந்து பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இலக்கியங்களையும் பொறுத்தே அமைகிறது. இந்த வகையில் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புப் பணி மிகுந்த ஈடுபாட்டுடன் வளர்ந்த நிலையினை அறிகிறோம். இந்திய மொழிகளுள் தமிழ்மொழி இந்தத் துறையில் இமயத்தின் உச்சிக்கே சென்றுள்ளதென்றால் அதில் ஐயமில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழில் தோன்றிய திருக்குறள் விவிலியத்திற்கு அடுத்த படியாகப் பல நூறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ள நிலையே சான்றாகும். திருவாசகத்தையும் புறநானூற்றில் சில பாடல்களையும் G.U. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது ஒரு தனிச் சிறப்புதான். தமிழ் மொழிபெயர்ப்பின் வரலாறு, வளர்ச்சி பற்றி நாம் சிந்திப்பதற்கு முன்பாக, பொதுவாக மொழியின் வளர்ச்சி வேகமும் வரலாறும் பற்றிச் சிந்திப்பது பயன் தரும்.
• மேலைநாட்டுக் கல்வி முறையும் மொழிபெயர்ப்பும்
புராணங்கள் சிற்றிலக்கியங்கள் இவற்றைக் கவிதை வடிவில் இயற்றுவதையே பொழுது போக்காகக் கொண்டிருந்த தமிழ்ப் புலவர் பெருமக்களிடையே மேலைநாட்டுக் கல்விமுறை ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கியது. ‘உரைநடை வளர்ச்சி’ எனும் ஒரு புதிய பரிமாணத்தை அவர்கள் ஏற்கத் தொடங்கினர். எல்லாவற்றையும் செய்யுளிலேயே சொல்லிக் கொண்டு வந்த தமிழர்கள், கருத்தைப் புலப்படுத்த மிகச் சாதாரணமான உரைநடையைப் பயன்படுத்தத் தலைப்பட்டனர். நாவல் என்ற புதினம், சிறுகதை என்பன இந்தியரை, குறிப்பாகத் தமிழரை மிகவும் கவர்ந்த புதிய இலக்கிய வகைகளாக மாறின. மேலும் ‘கட்டுரை’ என்னும் புதுவகை உரைநடை இலக்கியம் பெரு வழக்குப் பெற்றது. இவற்றோடு தன்னுணர்ச்சிப் பாடல்கள், குறுங்காப்பியம், நாடகம் போன்ற இலக்கிய வகைகளும் மனித வாழ்க்கையோடு தொடர்புடைய உணர்ச்சிகளைச் சித்திரிக்கும் புத்திலக்கியங்களாகப் பெருவாழ்வு பெற்றன.
எபிரேய மொழியில் உள்ள விவிலியம் 18ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் 1774இல் ஜெ.பி. பெப்ரீஷியஸால் தமிழில் மொழியாக்கம் செய்யப் பெற்றது. தொடர்ந்து திரு.விஸ்வநாத பிள்ளை என்பவர் ஷேக்ஸ்பியரின் ‘மெர்ச்சென்ட் ஆப் வெனிஸ்’ என்ற நூலை ‘வெனிஸ் வர்த்தகன்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். இந்தக் காலக்கட்டத்தில் தான் மராத்தி மூலத்திலிருந்து பஞ்ச தந்திரக் கதைகள் வீரமார்த்தாண்ட தேவரால் அருமையான கவிதை வடிவில் மொழிபெயர்க்கப் பெற்றது.
• இஸ்லாமிய மொழிபெயர்ப்புகள்
தமிழ்நாட்டு இஸ்லாமியப் புலவர்கள் பலர் பாரசீக மொழியில் உள்ள கதைகள், உரையாடல்கள், சிற்றிலக்கியங்கள் போன்றவற்றைச் சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்த்தனர். இவற்றுள் ‘துத்திநாமா’ என்னும் ‘கிளிக்கதை’ சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. அராபிய மொழி நூலான திருக்குரானை இதுவரை ஏழு அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். அராபிய மொழியில் வழங்கும் கதைப் பாடல்கள், காவியங்கள், தத்துவ விளக்க நூல்கள் ஆகிய பல தமிழில் தரப்பட்டுள்ளன. அரபுக் கதைகளில் குறிப்பாக ‘ஆயிரத்து ஒரு இரவுகள்’ போன்ற கதைகள் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யப் பெற்றன. ‘அராபிய ஞானப் புதையல்’ என்னும் பெயரில் குணங்குடி மஸ்தான் சாகிபு அராபிய தத்துவப் பாடல்களை மொழிபெயர்த்துத் தந்துள்ளார். அலாவுதீனும் அற்புத விளக்கும், தாவீது கோலியாத் கதைகள் போன்ற கதைகளும் அராபிய மொழியிலிருந்து தமிழாக்கம் பெற்றன.
இக்பால் கவி அமுதம், இக்பாலின் ஞானோதயம் என்னும் பெயர்களில் இக்பால் கவிதைகள் தமிழில் தோற்றமெடுத்தன. மேலும் கலீல் கிப்ரான், ஜலாலுதின் ரூமி போன்றோர் படைப்புகளும் தமிழ் மொழிபெயர்ப்பு வாயிலாகத் தமிழ் மக்கள் மனத்தில் பதிந்தன. அராபிய மருத்துவச் செய்திகள், குறிப்பாகக் கண் மருத்துவம் பற்றிய செய்திகள் தமிழுக்கு வந்த வரப்பிரசாதங்களாகும்.
• ஆங்கிலமும் ருசிய மொழியும்
ஆங்கில நூல்கள் பல்லாயிரக் கணக்காகத் தமிழாக்கம் பெற்றன. சார்லஸ் டிக்கன்ஸின் A Tale of two cities என்ற புதினத்தை இருநகரக் கதை என்ற பெயரில் கா.அப்பாதுரையாரும் இருபெரும் நகரங்கள் என்ற பெயரில் கே.வேலனும் மொழிபெயர்த்துள்ளனர். ஜேன் ஆஸ்டினுடைய எம்மாவும் வால்ட்டர் ஸ்காட்டின் Ivanhoe என்ற புதினமும் பல தமிழறிஞர்களால் தமிழாக்கம் பெற்றன. பெர்னாட்ஷாவின் கதைகளும் தமிழ் வடிவேற்றன. பிரெஞ்சு, ரஷ்ய மொழி நூல்களும் தமிழில் மொழி மாற்றம் பெற்றன.
• சீனமொழி மொழிபெயர்ப்புகள்
ஆசியாவில் தலைசிறந்த பழம்பெரும் நாகரிக நாடுகளில் சீனா ஒன்று என்ற உண்மையை யாரும் மறுக்க மாட்டார்கள். ஹீபோங்-கு-பிட்ச் எனப்படும் கன்பூசியசின் இளவேனிலும் இலையுதிர் காலமும் என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள சில பாடல்களை, கா.அப்பாத்துரையார் மொழிபெயர்த்துள்ளார். சீனத்து மகளிர் பற்றிய கதைகளை, பனிப்படலத்துப் பாவை என்ற சிறுகதைத் தொகுப்பாக்கினார் ந.பிச்சமூர்த்தி. குங்போதங் என்னும் சீனர் எழுதிய நாவலைத் தழுவி, கிழக்கோடும் நதி என்ற பெயரில் த.நா.குமாரசாமி மொழிபெயர்த்துள்ளார். சி.யூ.சென் என்னும் சீனப் பெண் எழுத்தாளரின் சில படைப்புகளைப் பாரதியார் பெண் விடுதலை என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
• ஜப்பான் மொழி மொழிபெயர்ப்புகள்
சீனமொழிப் படைப்புகள் போலவே ஜப்பானியப் படைப்புகளும், தமிழ்த் தோற்றம் கொண்டன. மணியோசை என்ற பெயரில் புதுமைப்பித்தனால் ஜப்பானியச் சிறுகதைகள் தமிழ் வடிவேற்றன. யாமதாகாஷி என்ற ஜப்பானிய நாவலாசிரியரின் உலகப் புகழ் வாய்ந்த கதைகள், நாடகங்கள் பல துன்பக்கேணி, பகற்கனவு, முத்துமாலை என்ற பெயர்களில் தமிழில் வந்துள்ளன. நோகுச்சி என்ற ஜப்பானியக் கவிஞனின் குறும்பாட்டு பாரதியார் கட்டுரைகள் பலவற்றில் தமிழ் உருவம் பெற்றன. இந்தக் குறும்பாட்டுவகை இன்றைய ஹைக்கூ கவிதைத் தோற்றத்தின் வித்து என்றால் மிகையாகாது.
• வடமொழி மொழிபெயர்ப்புகள்
நம்நாட்டு மொழிகளில் வடமொழி இராமாயணம், மகாபாரதம் ஆகியவை தமிழ் வடிவேற்றன. பின்னர், காலமாற்றத்திற்கேற்பப் பலமொழி நூல்களும் தமிழ் மொழிபெயர்ப்பைக் கொண்டன. பன்மொழி அறிஞர்களான கா.ஸ்ரீ.ஸ்ரீ. தி.ஜ.ர., த.நா.குமாரசாமி, த.நா.சேநாபதி, குமுதினி, ஆர்.சண்முகசுந்தரம் போன்ற பெருமக்கள் மொழிபெயர்ப்புப் பணியேற்றனர். வங்கமொழி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலிருந்து பல இலக்கியங்கள் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.
இந்நிலையில் வங்கமும், தமிழும், ஆங்கிலமும் நன்கறிந்து புலமை பெற்றுத் தேறிய த.நா.சேனாபதி அவர்கள் துணை ஆசிரியர் ஆனார். இவர் பெசன்ட் பள்ளி ஆசிரியர் பதவியை விடுத்து மஞ்சரி துணை ஆசிரியர் ஆனார். பின்பு கலைமகள் ஆசிரியரான கி.வா.ஜ.வின் அறிவுரைப்படி தாகூர் நூல்களை மொழிபெயர்த்தார். காளிதாசன், ஷேக்ஸ்பியர் போன்ற ஆசிரியர்களின் படைப்புகள் குறித்து கி.சந்திரசேகர் எழுதியும், பேசியும் வந்தார்.
கி.சாவித்திரி அம்மாள், கி.சரசுவதி அம்மாள் இருவரும் வங்கமொழி நன்கறிந்த இலக்கிய வாதிகள். இவர்களில் சாவித்திரி அம்மாள் தாகூரின் ஒரு நாவலை வீடும் வெளியும் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். பிரேம்சந்தின் இந்திச் சிறுகதைகளைக் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்த்தார். காண்டேகரின் படைப்புகளையும் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்த்தார். மலையாள, கன்னட, தெலுங்கு மொழிப் படைப்புகளும் தமிழாக்கம் பெற்று மஞ்சரியில் வெளிவந்தன. இவ்வடிப்படையில் மஞ்சரி என்ற இதழ் மொழிபெயர்ப்புப் படைப்புக்களுக்காகவே உருவெடுத்தது என்றால் மிகையாகாது.
பாடம் - 3
மும்மொழி ஆட்சிமுறை உள்ள நம் இந்திய நிலையில் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றில் ஆட்சி நடவடிக்கைகள் உடனுக்குடன் மொழி பெயர்க்கப்படும் நிலையினையும் இன்று நாம் காணுகின்றோம். பிறமொழிகளில் சிறப்பிடம் பெறும் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், புதினங்கள், கவிதைகள், திறனாய்வுகள், வரலாற்று நூல்கள் போன்றவை மொழியாக்கம் செய்யப்படும்போது அது மொழியாக்கம் பெற்ற மொழிக்கு ஒரு புதுவரவாக அமையும். மொழி பெயர்ப்பில் மூலமொழியைத் தருமொழி என்றும், பெயர்க்கப்படும் மொழியைப் பெறுமொழி என்றும் குறிப்பிடுவார்கள்.
‘Uncle’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழாக்கம் தரும் பொழுது பொதுவாக ”மாமா” என்று எழுதுவது வழக்கம். ஆனால் அந்தச் சொல்லுக்கு, (1) தந்தையுடன் பிறந்த ஆண், (2) தாயுடன் பிறந்தாளின் கணவன், (3) தாயுடன் பிறந்த ஆண், (4) தந்தையுடன் பிறந்தாளின் கணவன் என்ற பலபொருள்கள் இருப்பதால் இடத்துக்கேற்பப் பயன்படுத்த வேண்டும் அப்போது அது பயன்செறிந்த தெளிவான மொழி மாற்றமாகின்றது. எழுதும்போது மூலமொழியின் சமுதாயப் பயில் நிலைகளை உற்றுணர்ந்து, மரபுச் சொல் வழக்குகளை அறிந்து மொழி மாற்றம் செய்வதே சாலச் சிறந்ததாகும். அகராதிகளைப் புரட்டிப் பார்த்து, தகுந்த பொருளை உறுதிப்படுத்திக் கொண்டு, நடைமுறை நிலைக்கு ஏற்பப் பழகுதமிழில் ஆழக் கருத்துரைப்பதே சீரிய மொழிபெயர்ப்பு என்றல் மிகையாகாது.
மூலமொழியில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அது அப்படியே பெயர்ப்பு மொழியில் தரப்படல் வேண்டும். எடுத்துக்காட்டாக, சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பல்கலைக்கழகம் வெளியிட்ட விளம்பரம் ஒன்றை அழகு தமிழில் மொழிபெயர்த்த நிலையில் ஏற்பட்ட தவறினைப் பார்க்கலாம்.
”A self addressed envelope stamped to a value of Rs. 4.20” என்று ஆங்கிலத்தில் வெளியான செய்தி தமிழில் வருகிறபொழுது ‘தன்முகவரி எழுதப்பட்ட ரூ.4.50 அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட உறை ஒன்று” என்று எழுதப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் ரூ4.20, தமிழிலோ ரூ4.50 மொழி மாற்றத்தால் 30 காசுகள் மதிப்பு ஏறிற்றோ? இல்லை, இல்லை; அதே போல, ‘அஞ்சல் வில்லை’ என்பதும். அது ‘அஞ்சல் தலை’ என்று இருக்க வேண்டும். மொழிபெயர்ப்போடு மூலத்தைச் சரியாக ஒப்பிட்டுப் பாராததால் ஏற்பட்ட பிழைதான் அது. மொழிபெயர்ப்பில் இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்பட, ஒப்பிட்டுச் சரிபார்த்தல் அவசியமாகிறது.
”You are in the good books of the Manager” என்பதை ”நீ மேலாளரின் நல்ல புத்தகத்தில் இருக்கிறாய்” என்றும், ”
பாடம் - 4
• மொழி விட்டு மொழி மாற்றுவதே சரியான மொழிபெயர்ப்பு.
• எழுத்து வடிவத்திற்கு நாட்டிய வகையில் அபிநயம் பிடிப்பதும் ஒருவகையான மொழிபெயர்ப்பு.
எனச் சிலர் கூறுகின்றனர் என்று டாக்டர். வீ. சந்திரன் தனது மொழிபெயர்ப்பியல் அணுகுமுறைகள் என்ற நூலில் கூறிச் செல்லுகிறார். எந்நிலை அமையினும் மொழிபெயர்ப்பு என்று கூறுவதை விட மொழி ஆக்கம் என்று கூறப்படுவதே சரியென மா. சண்முக சுப்பிரமணியன் போன்றோர் கருதுகின்றனர்.
பொதுவாக மொழிபெயர்க்கும் பாணியில் மொழிபெயர்ப்பு ஆறு வகைகளாகப் பகுக்கப்படும். அவை வருமாறு:
(1) சொல்லுக்குச் சொல் பெயர்த்தல் (Literal And Metaphrase Translation)
(2) விரிவான மொழிபெயர்ப்பு (Amplification)
(3) முழுமையான அல்லது சரியான மொழிபெயர்ப்பு (Close or Accurate Translation)
(4) சுருக்கம் (Paraphrase or Abridgement)
(5) தழுவல் (Adaptation)
(6) மொழியாக்கம் (Transcreation)
கல் ஆனாலும் கணவன்; புல் ஆனாலும் புருஷன்
காடு விளையாவிட்டாலும் கடமை போகுமா?
என்ற பழமொழிகளை முறையே.
Though in heart hard as a stone, and worthless as a blade of grass, he is your husband. என்றும் Though the waste land has yielded nothing will tax be remitted? – என்றும் பெர்சீவல் மொழி பெயர்த்துள்ளார். இது சற்று விரிவான விளக்கமான மொழிபெயர்ப்புத்தான். எனினும், தமிழின் சரியான உட்கிடையை ஆங்கிலேயர் புரிந்து கொள்ள இது துணைநிற்கும் என்பதில் ஐயமில்லை. சில வேளையில் இத்தகைய விரிவான மொழிபெயர்ப்பு குறைந்த அளவு படித்தவருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையைப் பற்றி ஓரளவு அறிந்தவருக்கும் மட்டுமே மிகுந்த பலனைத் தருவதாக அமையலாம்.
வி.எஸ்.வி. இராகவன் அவர்கள் எழுதிய மெகஸ்தனீஸ் என்னும் மொழிபெயர்ப்பு நூலில் கூட ”இந்நூலில் வரும் வரலாற்றுத் தொடர்பான பகுதிகளுக்கு வரலாற்றில் புகழ்மிக்க பலருடைய நூல்களிலிருந்து ஆங்காங்கே மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்களிலிருந்தும் ஆங்காங்கே பொருத்தமான ஒப்புமைப் பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன” என்ற பதிப்புரையின் படி நோக்குங்கால் இது ஒரு விரிவான மொழிபெயர்ப்புக்குச் சான்று என்று தெரியலாம்.
வீணையடி நீ எனக்கு; மேவும் விரல் நானுனக்கு
என்னும் தம்முடைய கவிதையை,
Thou to me the harp of gold And I to thee the finger bold
என்று பாரதியார் தாமே மொழிபெயர்த்துள்ளார். இதில் ஆசிரியனது ஆன்ம ஈடுபாடு மொழிபெயர்ப்பிலும் புலப்படுதலைக் காணமுடிகிறது. ஜேம்ஸ் ஆலன் என்னும் ஆங்கில அறிஞரின் As a man thinketh என்ற நூலில் வரும்
Thought in the mind hath made us
What we are by thought was wrought and built
If a man’s mind hath evil thoughts pain
Comes on him as comes the wheel
The ox behind ….. If one endures
The purity of thought; joy follows him
As his own shadow – sure
என்ற வரிகளைத் தமிழில்
”மனமெனும் நினைப்பே நமையாக்கியது
நினைப்பால் நாம் நம் நிலையை உற்றனம்
ஒருவர் நினைப்பு கருமறம் பற்றிடின்
எருதுபின் உருளை போல்வரும் நனிதுன்பமே
ஒருவன் நினைப்பு திருஅறம் பற்றிடின்
தன்நிழல் போல் மன்னும் இன்பமே”
என்று மனம் போல் வாழ்வு எனும் நூலில் வ.உ.சி. அவர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்பு செம்மையும், சீர்மையும் நிறைந்த சரியான மொழிபெயர்ப்பாக அமைவதை நாம் அறியலாம். இதில் மொழிபெயர்ப்பாளரின் இருமொழித்திறன் தெளிவாகப் புலப்படுவதைக் காணலாம்.
4.3.1 சுருக்கமான மொழிபெயர்ப்பு
மூலமொழியிற் காணும் செய்திகளை மொழிபெயர்ப்பாளர் தன் மனத்தில் ஏற்றுக் கொண்டு, சுருக்கமாகப் பெயர்ப்பு மொழியில் தருவதே சுருக்கம் எனப்படும்.
இச்சுருக்கங்கள் செய்யுள் இலக்கியங்களில் மட்டுமின்றி நீண்ட புதினங்கள், நாடகங்கள், வாழ்க்கை வரலாறுகள், அறிவியல் நூல்கள் போன்றவற்றிலும் காணப்படுவதை அறியலாம். இவற்றால் மூல நூலை நாம் முழுமையாக உளங்கொள்ள இயலாது. மாறாக இச் சுருக்கங்கள் மூலநூலைப் படிக்கத் தூண்டுமேயானால் அது பயனுடையதாக அமையும். எடுத்துக் காட்டாகக் ‘காலம் மிகமிகக் குறுகியது’ என்ற தலைப்பில் வை. சாம்பசிவம், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அறிவியல் எண்ணங்களை மொழிபெயர்த்துள்ளார். அதைப் படிக்கும் போது மூலநூலைப் படித்தாக வேண்டும் என்ற உள்ளுணர்வு தூண்டப்படுகிறது. இது ஒரு சிறந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படை எனக் கொள்ளலாம்.
A flask of wine, a book of verse and thou
Beside me singing in the wilderness
And wilderness is paradise
என்ற உமர்கய்யாம் பாடலைத் தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள்
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசுந்தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு,
தெரிந்து பாடநீயுண்டு
வைய்யம் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ
• முதல் மொழிபெயர்ப்பு
இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது என்பது சிறப்புக்குரிய ஒரு செய்தியாகும். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்கு என்பவரால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜான் பிலிப் பெப்ரீசியஸ் என்பவராலும் பின்னர் இரேனியஸ் என்பவராலும் (1833 இல்) மொழிபெயர்க்கப்பட்டன. இதற்குப் பின்னர் அமெரிக்கரான பீட்டர் பெர்சிவல் இலங்கை, இந்தியா என்ற இரு இடங்களிலும் (யாழ்ப்பாணம், சென்னை) இருந்து 1848 இல் பணியை நிறைவு செய்தார். பிரஞ்சு தந்தைக்கும் இந்தியத்தாய்க்கும் தோன்றிய பவர் ஐயர் 1871 இல் முழு வேதாகமத்தையும் மொழிபெயர்த்தார். தொடர்ந்து லார்சன் 1936 இலும் மோனகன் 1954 இலும் மொழி பெயர்த்தனர்.
• தமிழரின் மொழிபெயர்ப்பு
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட டி. இராஜரீகம் என்பவர் அவருக்கு முன்னர் வந்த பைபிள் மொழி பெயர்ப்புகளில் காணப்படும் புரியாத சொற்களை நீக்கி, தூய தமிழாக்கிய பெருமை பெற்றார். திருத்த முறைக் கிறித்தவ மொழிநடை, கத்தோலிக்கக் கிறித்தவ மொழிநடை என்ற பாகுபாட்டுக்குள் கிடந்த பைபிள் மொழிபெயர்ப்பு பொது மொழிபெயர்ப்பு என்ற நிலையில் ஒருங்கிணைந்த ஒரு குழுவினரால் செய்யப்பட்டுத் திருத்தம் பெற்றது. இன்னும் இப்பணி தொடர்ந்து கொண்டு வருகிறது.
சங்க இலக்கியங்களில் இராமாயணக் கதைகளைவிட மகாபாரதக் கதைக் குறிப்புகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. அதிகக் கிளைக் கதைகளைக் கொண்டு வடமொழியில் இயற்றப்பட்ட மகாபாரதக் கதை தமிழில் மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் என்ற சின்னமனூர்ச் செப்பேட்டுச் சொல்லால் கடைச் சங்க இலக்கிய காலத்துக்கு முன்னரே மொழிபெயர்க்கப்பட்ட நிலையை அறிகிறோம். பின்னர் மூன்றாவது நந்திவர்மன் காலத்தில் பெருந்தேவனார் என்னும் புலவர் வடமொழி பாரதத்தைத் தழுவி பாரத வெண்பா என்ற நூல் ஒன்றைத் தமிழில் இயற்றியுள்ளமை அறிகிறோம். ஆனால் இன்று அது முழுமையாக அன்றிச் சில பகுதிகள் மட்டுமே கிடைக்கின்றன. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூர் ஆழ்வார் வேதவியாசருடைய வடமொழி மகாபாரதத்தைத் தமிழில் சுவை மிகுந்த இலக்கியமாக இயற்றியுள்ளார். இந்நூலில் 10 பருவங்களில் 4375 பாடல்கள் உள்ளன. கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் அட்டாவதானம் அரங்க நாதக் கவிராயர் விருத்தப்பாக்களில் வில்லிபாரதத்தை நிறைவு செய்து பாடி வைத்தார்.
கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நல்லாப்பிள்ளை எனும் புலவர் 7000க்கு மேற்பட்ட செய்யுள்களால் விரிவான பாரதத்தைத் தமிழில் எழுதித் தந்தார். மகாபாரதக் கிளைக் கதைகள் பல. அவற்றுள் நளனைப் பற்றிய வரலாற்றைக் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் நளவெண்பா என்ற பெயரில் புகழேந்திப் புலவர் பாடினார். கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேவராசப்பிள்ளை என்பவர் குசேலோபாக்கியானம் என்னும் நூலையும், பாரதியார் பாஞ்சாலி சபதம் என்ற தழுவல் காப்பியத்தையும் தமிழில் தந்துள்ளனர்.
பகவானால் அருளப்பட்ட திருநூல் என்பதைவிடப் புனித இசைப் பாடல்களைக் கொண்ட இசைத் திருநூல் (Song celestial) என்ற பொருளிலேயே இந்நூல் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது என்றும், இது தமிழில் 12 மொழிபெயர்ப்புகளையும், ஆங்கிலத்தில் 27 மொழிபெயர்ப்புகளையும் கொண்டு விளங்குகிறது என்றும் டாக்டர் க.த. திருநாவுக்கரசு அவர்கள் கருத்தளித்துள்ளார். திருமதி. மு. வளர்மதி அவர்களின் மொழிபெயர்ப்புக்கலை என்ற நூலின் 74-76 என்ற பக்கங்களில் அவர் அளித்துள்ள பட்டியலின் வாயிலாகக் காண்கின்ற பொழுது கீதையின் 14 மொழிபெயர்ப்புகள் பல்வேறு காலங்களில் தமிழில் வெளியிடப் பட்டுள்ளமையை நம்மால் அறிய முடிகிறது.
என்று மொழியாக்கம் செய்துள்ளார்.
இந்தப் பாடலில், ஆங்கில மொழியில் படிப்பதைக் காட்டிலும் ஒருதெளிவும் ஈடுபாடும் தமிழில் பெறமுடிகிறது.
எடுத்துக்காட்டாக:
I spoke – நான் பேசினேன்.
We spoke – நாம் பேசினோம்
You spoke – நீ பேசினாய் / நீங்கள் பேசினீர்கள்
They spoke – அவர்கள் பேசினர், அவை பேசின.
இந்த எடுத்துக்காட்டில் நாம் ஒரு மொழி அடிப்படை நிலையை வேறுபடுத்திக் காண இயலும். அதாவது ”spoke” என்ற ஆங்கிலச் சொல் ஒரே நிலையில் பேசப்படுகிற நிலையிலும் I, We, You, They,
பாடம் - 5
”மொழிபெயர்ப்பென்பது எளிதான வேலையல்ல. மூலபாடம் எழுதவல்ல ஆற்றலுடையவர்களே மொழிபெயர்ப்பில் இறங்க முடியும். மூலபாடம் எழுதுபவர்களாயின் ஒரு மொழிப்பயிற்சி போதுமானது. மொழி பெயர்ப்பாளர்க்கோ இருமொழிகளிலும் தேர்ந்த கல்வி அறிவு இருக்க வேண்டுவது இன்றியமையாதது. சொல்லுக்குச் சொல் பெயர்த்தடுக்குவது மொழிபெயர்ப்பாகாது. பெயர்க்கப்பட வேண்டியது பொருளே. அங்ஙனம் பெயர்க்கும்போது அந்தந்த நாட்டு வழக்குகளையும் மரபுகளையும் கூட நன்கு தெரிந்திருத்தல் இன்றியமையாதது” என்ற கவிமணியின் கூற்றை இணைத்து நோக்கும்போது, கருத்துமுரண் தோன்றா வகையில் நூலை மொழிபெயர்ப்பதற்கென மொழிபெயர்ப்பாளருக்கு இருக்க வேண்டிய திறன் புலப்படும். ”முரண்பாடுகள் இருப்பின் அவை தவறான கருத்துகளை மாற்று மொழியினருக்கு அறிமுகப்படுத்துவதோடு மொழிபெயர்ப்பு எனும் நிலை மாறி அது தழுவலாகி விடும்” என்று திரு. மு.கோவிந்தராசன் மொழித் திறன்களும் சில சிக்கல்களும் என்ற தம்நூலில் குறித்துச் சொல்வது சிந்திப்பதற்கு உரியது.
இதனை ஒரு குறளுக்கான சில ஆங்கில மொழிபெயர்ப்புகள் கொண்டு விளக்கலாம்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
என்பது வள்ளுவன் வாய்மொழி. இதனைப் பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். அவற்றுள் ஒரு சிலவற்றை எடுத்து விளக்கம் பெறலாம்.
(1) ”Let him who does virtuous deeds
be of spotless mind to that extent is virtue
all else is vain show”
என்று W.
(2) ”Spotless be thou in mind, this only merits
virtue’s name; All else, mere pomp of idle sound,
no real worth can claim”
என்று Dr. G.U. Pope மொழிபெயர்த்துள்ளார்.
(3) ”Virtue is nothing but becoming pure in mind,
the rest is nothing, empty and pompous noise”
என்று S.R.V. அரசு என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
(4) ”Be pure in mind, its virtues claim,
All else is only vain acclaim”
என்று கஸ்தூரி சீனிவாசன் என்பவர் மொழி பெயர்த்துள்ளார்.
(5) ”Abolishing filthy thoughts from our mind
is virtue. All the other virtuous acts
cannot be equated with it”
என்று சு. சண்முக வேலாயுதம் எழுதுகிறார்.
மொழிபெயர்ப்புகளைச் சற்றுச் சிந்தித்தால் Dr. G.U. போப் அவர்களின் மொழிபெயர்ப்பு சற்று விளக்கமாகவும், பொருத்தமாகவும் அமைவதைக் காணமுடிகிறது. இதனை உண்மை மொழிபெயர்ப்பு என்று ஏற்றுக் கொள்ளலாமா என்ற வினாவை எழுப்பினால் மூலத்தின் உள்ளீட்டை விளக்கி நிற்கும் நிலையில் ஏற்றுக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. ஏனைய மூன்றாவது, நான்காவது மொழிபெயர்ப்புகள் வேறுபட்ட சொற்களில் ஒரே பொருளைச் சொல்லி நிற்கின்றன. ஐந்தாவது மொழிபெயர்ப்பு ஒரு விளக்க மொழிபெயர்ப்பாக அமைகிறது என்று தேறலாம். இது கருத்தினைத் தெளிவாகப் புரிந்து கொண்டு கூற முற்பட்டிருப்பதால் மொழிபெயர்ப்பென ஏற்பதில் தவறில்லை. ஆனால் நான்காவது மொழிபெயர்ப்புச் சுருக்கமாகவும் அதே நேரத்தில் ஆங்கிலக் கவிதையில் திருக்குறளைக் கூறுவதாகவும் அமைகிறது. எனவே, இதனைச் சிறந்ததெனக் கொள்ளினும் பொருந்தும் எனலாம்.
பல மொழிபெயர்ப்புகள் தோன்றுவது நல்லதுதான். ஆனால் தவறாக மொழிபெயர்த்து விடக் கூடாது என்ற நோக்கம் இருத்தல் வேண்டும். மற்றவற்றினும் சிறந்த மொழிபெயர்ப்பைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுதல் நல்லதுதான். ஆனால் முரண்பாடு நிகழா வண்ணம் காப்பது மொழிபெயர்ப்பாளரின் அடிப்படைக் கருத்தாக அமைய வேண்டும்.
”அறிவுலகத்திற்கு மொழிதான் பாதையும், பாலமும் ஆகும். அதன் எல்லைகள் விரியும் பொழுது நமது சாலையும் பாலமும் இயல்பாகவே அவற்றை எட்ட வேண்டும். இன்றைய அறிவுலகின் எல்லைகள் எங்கோ இருக்கின்றன. நமது மொழிகள் எங்கோ நிற்கின்றன. இடைவெளி பெரிது என்பது கவலைக்குரியது. அதனினும் அந்த இடைவெளி விரிவாகிக் கொண்டே போகிறது என்பது மேலும் கவலைக்குரியது. அது சீரானால் விரிவாகும் வேகமும் குறையும், எளிமையும் தோன்றும்” என்று மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையினையும் எளிமையையும் குறித்து டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் குறிப்பிடுகிறார். ”நல்ல மொழிபெயர்ப்புகள் நம் காலத்தின் முக்கிய தேவைகளில் ஒன்றாகும்” என்று F.L.லூக்காஸ் என்பவர் கூறுகிறார். இந்த எளிமைக்குச் சான்றாகக் குஜராத்தி மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுத் தமிழ் மொழிக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட ஜெய சோமநாத் என்ற நூலைக் கொள்ளலாம். இந்தப் புதினத்தைத் தமிழில் தந்தவர் சரஸ்வதி ராமனாத்.
‘மூலத்திலுள்ள சொல்லும் எழுத்தும் மொழி பெயர்ப்பாளருடைய சுதந்திரத்தைப் பாதிக்கும் விலங்காக அமைந்துவிடக் கூடாது. சில சொற்களை மொழிபெயர்க்காமல் விட்டு விட்டால் அதனால் மொழிபெயர்ப்பு ஒன்றும் கெட்டுப் போய் விடாது. உண்மையில் மூலத்தின் பொது பாவத்தைச் செம்மையாக மொழிபெயர்ப்பதற்காகவே சில சொற்களைத் தமிழாக்கம் செய்யாமல் தவிர்க்க வேண்டி இருக்கும்’ என்ற S.மகராஜன் அவர்களின் கருத்து இந்தப் போக்குக்கு மேலும் வலிவூட்டக் காணலாம்.
தன்வயமாக்கல்
பிறமொழியினரின் பெயர்ச்சொற்கள் அதாவது பாத்திரத்தின் பெயர், இடப்பெயர் போன்றனவும், நம்மிடையே இல்லாத பொருட்களின் பெயர்களும் மூலத்தில் வருமாயின் அவற்றைத் தன்வயமாக்கி ஏற்றுக் கொள்ளுதல் சிறப்புடையதாகும். எடுத்துக்காட்டாகச் சிறந்த ஆங்கில நாடக ஆசிரியரான Shakespear ஐ ‘செகப்பிரியர்’ என்றும், Merchant of Venice என்பதை ‘வாணிபுர வணிகன்’ என்றும் தமிழாக்கியதைக் குறிப்பிடலாம். Joseph, John, Jacco போன்ற ஆங்கிலப் பெயர்களை சூசை, நகுலன் என்று வீரமாமுனிவர் தமிழ்ப்படுத்திய நிலையும் இங்கு எண்ணிப்பார்க்கத் தக்கது.
எடுத்துக்காட்டாக: மறைமலை அடிகளார் தமது சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பின் முன்னுரையில் காளிதாசன் சமக்கிருதத்தில் எழுதிய சாகுந்தலம் பற்றியும், இதனைத் தாம் எந்தச் சூழலில் தமிழாக்கம் செய்தார் என்பன போன்ற செய்திகளையும் தந்துள்ளமையைக் குறிப்பிடலாம்.
அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா
என்பது ஒளவையாரின் மூதுரைப் பாடல்.
“Whatever efforts men may put forth
except at the due season no act will fruictify
Just as the many branched and grown trees
do not yield fruit except in season
இம்மொழிபெயர்ப்பு தமிழில் கவிநயம் சுமப்பது போல ஆங்கிலத்தில் அமைவதாகத் தெரியவில்லை. உரைநடைமுறை போல் ஆங்கிலத்தில் அமைவதால் தமிழில் கூறியுள்ள உயிரோட்டத்தை அப்படியே ஆங்கிலத்தில் பெற இயலவில்லையோ என்ற ஐயம் எழுகிறது.
மழை கூட ஒருநாளில் தேனாகலாம்
மணல்கூடச் சிலநாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவையாவும் நீயாகுமோ?
அம்மா வென்றழைக் கின்றசேயாகுமோ?
விண்மீனும் கண்ணே உன்கண்ணாகுமோ?
விளையாடும் கிளிஉன்றன் மொழிபேசுமா?
கண்ணாடி உனைப்போலக் கதை கூறுமா? இரு
கைவீசி உலகாளும் மகனாகுமா?
மணமாலை தனைச்சூடி உறவாடுவார் – மனம்
மாறாமல் பலகாலம் விளையாடுவார்.
ஒருகாலத் தமிழ்நாடு இதுதானடா – இதை
உன்காலத் தமிழ்நாடு அறியாதடா.
என்ற கண்ணதாசன் பாடலை,
Rain too may become honey one day
Even the sand as gold within a few days
But equal thee can these all
Or like the suckling babbling as ”Ma”
Will the twinkling stars turn as thy blue eyes.
Or else the parrot imitate thy speech?
Can the mirror narrate fables like thee
Or is anything like thee who reigns the world,
waving thy hands!
Enjoyed the lovers in nuptial garlands then
Going on chatting and playing, O! Child!
Once this was thy land of Tamils; of which
Aware not you may be; sleep, please, hearing
my lullaby
என்று ‘தெசினி’ அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இதில் ஒரு கவிதை ஓட்டத்தை நம்மால் காண முடிகிறது.
(1) மொழிபெயர்ப்பில் முறைசார் நிகர்மையைக் காட்டிலும் ஆற்றல் மிகு நிகர்மையே முக்கியமானது.
(2) சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பைக் காட்டிலும் சூழல் சார்ந்த மொழிபெயர்ப்பு பொருத்தமானது.
(3) வாசகருக்கு மரபுவழிப்பட்ட சொல் தொடர்களை விடப் பழக்கமான சொற்கள் பொருத்தமானவை.
(4) புனைகதை, நாடகம் போன்றவற்றில் இடம் பெறும் உரையாடல்களை மொழிபெயர்ப்பதில் இலக்கிய மொழி வழக்கைக் காட்டிலும் பேச்சுமொழி வழக்கே பொருத்தமானது.
கவிதை மொழிபெயர்த்தல்
கவிதையைக் கவிதையாக மொழிபெயர்ப்பதே சாலச் சிறந்தது. ஆனால், கவிதையை உரைநடையில் மொழிபெயர்க்கவே கூடாது என்ற கட்டாயத்திற்கு இடமில்லை. உணர்ச்சியும், கற்பனையும், சொல்செறிவும் நிறைந்து கவிதைத் தன்மை செறிந்த கவிநயப் புலப்பாடு இருக்குமேயானால் அந்த மொழிபெயர்ப்புச் சிறப்புடையதாக ஏற்றுக் கொள்ளப்படும். மக்கள் விருப்புக்கு ஏற்பவும், மொழிபெயர்ப்பாளர் மனநிலைக்கு ஏற்பவும் கவிதையாகவும், உரைநடையாகவும் மொழிபெயர்க்கப் படலாம்.
மொழிபெயர்ப்பின் தன்மை
ஒரு மொழிபெயர்ப்பு என்பது படிப்பதற்கு ஒரு மொழிபெயர்ப்புப் போல இல்லாதிருப்பதே சிறப்பானதாகும். ஒருமொழி அறிந்த வாசகன் அறிந்திராத மூலமொழிச் சொல்லாட்சி, தொடர்கள், வாக்கிய அமைப்புகள், பிற இலக்கணக் கூறுகள், சிறப்பு வழக்குகள், உவம உருவக வழக்குகள் ஆகியவற்றை அப்படியே பெயர்ப்பு மொழியில் பெயர்ப்பது வாசகனை மிரளச் செய்வதாய் அமைந்து விடும். வாசகனுக்காகத்தான் மொழிபெயர்ப்பே தவிர மொழிபெயர்ப்பாளரின் மனமகிழ்ச்சிக்காக அல்ல. ஆகவே பெறுமொழி வாசகனுக்குப் புரியத்தக்க, பழகிப்போன மொழி இயல்புகளுக்கும், தனிச் சிறப்புத் தன்மைகளுக்கும் ஏற்ப மூலத்தைப் பெயர்ப்பு மொழியில் தருதல் நல்லது.
கதை மொழிபெயர்ப்பு
பிறமொழிபெயர்ப்புகளோடு ஒப்புநோக்கும் போது கதைகளை மொழிபெயர்த்துத் தருவது எளிமையானது. மூலநூலின் வாக்கியங்கள், தொடர்கள், சொற்கள் ஆகியவற்றுக்கு இணையான பெறுமொழி இணைகள் மொழிபெயர்ப்பில் தவறாமல் இடம்பெற வேண்டும் என்பதில்லை. கதையின் தொனியும், நிகழ்ச்சிகளும் பிற கதைக் கூறுகளும் விடுபடாமல் எடுத்தல் (மிகுதல்), படுத்தல் (குறைதல்) மாறாமல் திருப்பு மையம் போன்ற செய்திகள் மாற்றமடையாமல் இடம்பெறுமேயானால் அந்த மொழிபெயர்ப்பு மிகச் சிறந்தது எனக் கொள்ளப்படும்.
(1) எட்டினி தோலட் – Etienne Dolet
(2) மார்ட்டின் லூதர்கிங் – Martin Luther king
(3) கேம்ப்பெல் – George Campbell
(4) ஷிலர் மேக்கர் – Schlier Macker
(5) கோத்தே – Goethe
(6) புனித ஜெரோம் – St.Jerome
(7) கேட் ஃபோர்டு – Catford
(8) யூஜின் நைடா – Eugene Nida
(9) பீட்டர் நியூமார்க் – Peter Newmark
முதலியவர்களையும்,
(1) நிதாதாபர் வேர்நிலைவிதி
(2) நியூமார்க் வேர்நிலைவிதி
என்னும் இரண்டு விதிகளையும், டாக்டர் வீ.சந்திரன் தனது மொழிபெயர்ப்பியல் கொள்கைகள் என்ற நூலில் சொல்லிச் செல்லுகிறார்.
பாடம் - 6
”20ஆம் நூற்றாண்டு மொழிபெயர்ப்பியல் துறையில் மாபெரும் மாற்றத்தைக் கண்டது. செய்தித் தொடர்பியல் துறை மொழிபெயர்ப்பால் வானளாவ வளர்ந்தது என்பதும் கருதுதற்குரிய உண்மையே. சொற்பொருளியலாளர்களும், உளவியலாளர்களும் தகவலைச் சரிவரத் தெரிவிக்காத செய்தித் தொடர்பு எதுவும் பயனற்றது” என்று கருதுகின்றனர். இந்நிலையில் மொழிபெயர்ப்பியல் நிலையில் 5 வகை வளர்ச்சிகள் ஏற்பட்டு மொழிபெயர்ப்புக் கொள்கையிலும் நடைமுறையிலும் சில குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தின.
(1) அமைப்பு வகையிலான மொழியியல் பெருமளவில் விரிவுபடுத்தப் பட்டது.
(2) மொழிபெயர்ப்பின் தனித்த சிக்கல்களைக் களைவதற்கு அமைப்பு மாநாடு நடத்தி விவிலிய மொழிபெயர்ப்புக்கான காலாண்டு ஏட்டினைத் தொடங்கினர். இந்நோக்கிற்காக அவர்கள் மொழியியலோடு நெருங்கிய தொடர்புடையோர் ஆயினர்.
(3) ஒருங்கிணைந்த விவிலிய சமயிகள் பன்னாட்டு மொழிபெயர்ப்பு மாநாடு தொடங்கினர். இந்நோக்கிற்காக அவர்கள் மொழிபெயர்ப்பாளரோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆனார்கள்.
(4) யுனெசுகோ குழு மூலம் ”போபல்” வெளியீடான மொழி பெயர்ப்புக்குரிய ஏட்டில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புத் துறையின் தற்காலக் கொள்கைகள், கோட்பாடுகள், நடைமுறைகள் பற்றி அறிவதற்கு வழிவகுத்தன.
(5) இயந்திர மொழிபெயர்ப்பில் பல்வேறு செயல்திட்டங்கள் மூலம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இவ்வளர்ச்சி பலகட்டங்களில் நிறைவேறியது. ”கணிப்பொறி மொழியியல், இயந்திர மொழிபெயர்ப்புக்குத் தேவைப்படும் மொழிபெயர்ப்பு நடைமுறைகளை ஆய்வு நடத்தியுள்ளது” என்று முனைவர் வீ. சந்திரன் வகைப்படுத்திக் காட்டுகிறார்.
மொழிபெயர்ப்பில் இலக்கியத் தரம் வாய்ந்த சொற்கள், இலக்கண அமைப்புகள் ஆகியவை தாம் இடம்பெற வேண்டும் என்பதில்லை. ஒரு மொழிபெயர்ப்பு சமூகத்தின் எந்தப் பிரிவினருக்காக உருவாகிறதோ அந்த வாசகரை மனத்தில் வைத்து, அவர்கள் புரிந்து கொள்ளும் சொற்களையும் இலக்கண அமைப்புகளையும் தாங்கி வெளிவர வேண்டும். நீண்ட இலக்கிய மரபு உள்ள மொழிகளில் வாசகர்களின் தேவைக்கேற்ப மூன்றுவித மொழிபெயர்ப்புகள் தேவைப்படும் என்பார் நைடா.
(1) பண்டை இலக்கியப் புலமையுடையோரும் சுவைக்கும் வண்ணம் இலக்கியமொழி நடையில் பெயர்த்தல்.
(2) தற்கால இலக்கியத்தில் பயிற்சியுள்ள இன்றைய நடுத்தட்டு மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் மொழிபெயர்த்தல்.
(3) பாமர மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய பேச்சு மொழியில்பெயர்த்தல்.
இலக்கியப் பாரம்பரியமற்ற மொழிகளில் சாதாரண மக்களின் பேச்சு மொழியே மொழிபெயர்ப்பில் இடம் பெறுகிறது என்று டாக்டர்.சேதுமணி மணியன் குறிப்பிடுகிறார்.
மொழிபெயர்ப்பது எப்படி என்பது பற்றியும் மொழிபெயர்ப்பு முறைகள் பற்றியும் அறிவது ஒருபுறமிருக்க, மொழிபெயர்ப்பு வகைகளை அறிவதும் ஓர் அடிப்படை ஆகும். அந்த வகையில் மொழிபெயர்ப்புப் பணியில் எழுகிற நடைமுறைச் சிக்கலைப் பட்டறிவு கொண்டுதான் கூர்ந்தாய்வு செய்ய இயலும். அப்பொழுதுதான் ஒரு தீர்வும் ஏற்படும். மொழி எதுவாயினும் காலம்தோறும் பல்வேறு வகைகளில் பிரித்தும், வகுத்தும் திறம் கண்டுள்ளனர்.
மொழிபெயர்க்கப்படும் மொழி எதுவாயினும் அதற்கு இலக்கிய வழக்கு, உலக வழக்கு என்ற இரு பாகுபாடுகள் உள்ளன. மொழிநிலையின் இன்றைய போக்கு சில நேரங்களில் நடுச்சந்தித்தேர் போல மொழித் தூய்மை நாடுவோர் ஒருபுறமும், மொழிக் கலப்பை ஆதரிப்போர் மறுபுறமும் அமைய இருதிசைகளில் இழுக்கப்படுகிறது. இந்நிலையில் அம்மொழி பேசும் பாமர மக்கள் தங்களுக்குள் சில ஒலி வடிவத்தை வைத்து வாழ்வு நடத்துவதும் உண்டு. உலக வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் உலகில் உதித்த மொழிகளின் வாழ்வும், தாழ்வும் அம்மொழி பேசும் மக்கள் நாட்டைக் கட்டி ஆளும் வல்லமை பெற்றபோது வாழ்ந்தும் அம்மொழி இனத்தார் தாழ்ந்த போது வழக்கொழிந்தும் வந்ததைக் காணுகிறோம்.
பொதுவாக மொழிபெயர்ப்புகளை ஒன்பது வகையாகப் பகுக்கலாம் அவை வருமாறு;
(1) இலக்கிய மொழிபெயர்ப்பு
(2) அறிவியல் மொழிபெயர்ப்பு
(3) சட்டத்துறை மொழிபெயர்ப்பு
(4) விளம்பர வகையிலான மொழிபெயர்ப்பு
(5) மக்கள் தொடர்புச் சாதன மொழிபெயர்ப்பு
(6) தொழில்நுட்பத் துறை மொழிபெயர்ப்பு
(7) ஆட்சித்துறை மொழிபெயர்ப்பு
(8) நீதித்துறை மொழிபெயர்ப்பு
(9) மேடை மொழிபெயர்ப்பு
இலக்கியத்தை அதிகமாக மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் அறிவியல் துறையில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டியது மிகவும் தேவையான ஒன்றாகும். ஏனென்றால் இன்றைய உலகம் ஓர் அறிவியல் உலகமாகத் திகழ்கிறது என்பதோடு, அந்த அறிவியல் கருத்துகள் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டாக வேண்டும் என்ற தேவையும் முன் நிற்கிறது.
அறிவியல் படைப்புகளை மொழிபெயர்ப்பது என்பதை ஒரு சிறந்த மொழிபெயர்ப்புக்குச் சான்றாகக் கொள்ளலாம். இதில் கருத்துகளுக்குத்தான் முதலிடம் அளிக்கப்படுகிறதே தவிர, கருத்துகள் வெளியிடப்படுகின்ற முறைக்கு அல்லது நடைக்கு அல்ல.
மூலமொழியிலுள்ள கருத்துகளைப் பற்றிய அறிவை அறிவியல் மொழிபெயர்ப்பாளர் பெற்றிருக்க வேண்டிய தேவையை வலியுறுத்தல் அவசியம். அறிவியல் மொழிபெயர்ப்பிலே சொற்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் நூல்கள் கருதுகோள் அடிப்படையில் பரிசோதனையை நடத்திச் சில உண்மைகளை வெளியிட்டு நிற்கின்றன. இந்நூல்களைப் படிக்கின்றவர்கள் உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் அவர்கள் படைப்பாளியினுடைய இலக்கிய நடைநலனில் கவனம் செலுத்துவதே இல்லை. கருத்துகள் தெளிவாகப் புரியும் வண்ணம் சொல்லப்படவேண்டும் என்பதுதான் மொழிபெயர்ப்பாளரின் முக்கியக் குறிக்கோளாக அமைதல் வேண்டும்.
அறிவியல் நூல்களைப் படிப்பவர்கள் செய்தித் தெளிவுக்காகவும் அறிவு விளக்கத்திற்காகவுமே படிக்கின்றனர். அறிவியல் செய்திகள் எளிமையாக, தெளிவாக விளக்கப்பட வேண்டும். மொழிபெயர்க்கப்படும் மொழியில் எளிதில் விளங்கக் கூடிய வகையிலே சொற்களைப் புதிதாக உருவாக்க வேண்டும்.
சான்றாக :
ஆங்கிலத்தில் Pump என்ற சொல்லுக்குக் கிணற்றிலிருந்து நீரை இறைத்து வெளியேற்றும் கருவி என்பது பொருள். இவ்வளவு பெரிய தொடரை மொழிபெயர்ப்பாகத் தர இயலாதே, இதற்கு இணையான சொல் என்ன என்று சிந்தித்த பொறியாளர் கொடுமுடி. சண்முகம் ‘அறிவியல் மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்கள், என்ற தனது வானொலி உரையில் எற்றி என்ற சொல்லைக் குறிப்பிட்டார். பின்னர் மருத்துவக் கல்லூரியில் Pump என்பது எக்கி என்று கூறப்பட்டதாக அறிந்து பேரகராதியை நாடிய போது எக்கி என்ற தொடர் நீர்வீசும் பொறி என்ற பொருளில் சுட்டப்பட்டிருப்பது கண்டு மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரே அந்த வானொலி உரையில் மேலும் விளக்கும்போது, Budget என்ற தொடரை வரவு செலவுத்திட்டம் என்கிறோம், பொருளாதாரத்தில் மட்டுமன்றி Time Budget, Water Budget என்ற தொடர்களுக்குப் புதுச்சொல் தேட வேண்டியுள்ளது. இச்சொல்லுக்கேற்ற நல்ல சொல் சொல்லடையாக அமைந்தால் எதனொடும் பொருத்திக்காண வாய்ப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
பல சொற்கள் உருவாகும் நிலையில் மொழி வளர்ச்சி மேலோங்குகிறது. அந்தப் புதிய சொற்கள் வளருந்தன்மையைக் கருத்தில் கொண்டு மற்றைய மொழிகளில் புதிய சொற்களை நாம் அமைக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக :
Photo என்ற சொல் இருக்கிறது. அதிலிருந்து photograph, photography, photo synthesis, photometry என்ற பல தொடர்கள் உருவாயின. இதற்கு இணையான தமிழ்ச் சொல்லை உருவாக்கக் கருதினால் photo என்பதற்கு ஒளி என்ற அடிச்சொல்லை ஏற்றுக் கொண்டால் ஒளிவரை, ஒளிவரையம், ஒளிச்சேர்க்கை, ஒளி அளவையம் என்று அமைப்பது எளிமையும் தெளிவும் பெறும். அறிவியல் மொழிபெயர்ப்பில் கருத்து மாறுபாடு எளிதில் ஏற்பட வாய்ப்புண்டு. அறிவியல் செய்திகள் உலகளாவிய தன்மை கொண்டிருப்பதால் அது உலக அரங்கில் பயன்படுத்தப்படும் பொருள்நிலையிலேயே மொழியாக்கத்திலும் அமைதல் வேண்டும். பிறமொழிச் சொற்கள் வலுக்கட்டாயமாக மாற்றப்படாமல் இயல்பாகப் பொருள் உணர்த்தும் வகையில் மொழியாக்கம் பெற வேண்டும். அவ்வாய்ப்பு குன்றிய நிலையில் ஒலிமாற்ற நிலையில் அல்லது போல ஒலித்தல் நிலையில் அமைவதும் பொருந்தும்.
Radar – ரேடார் Penicillin – பென்சிலின் Molecule – மூலக்கூறு
என்று பொருள்நிலை ஒலிமாற்றத்தை இங்கே காணலாம்.
”கலப்பென்று தமிழையே மறைக்க முயல்வது தமிழுக்கு ஆக்கம் தேடுவதாகாது. தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு” என்ற திரு.வி.க.வின் கூற்று சிந்தித்தற்குரியது.
(1) வேற்றுமொழி அறியாதவர்களுக்குப் பயன்பட வேண்டுமென்ற நோக்கு.
(2) வேற்றுமொழி நூல் பலவற்றை அறிந்து கொள்ள வேண்டுமென விழையும் ஆர்வலர்க்குப் பயன்படும் நோக்கு.
(3) பிறமொழியை ஒரு காலக் கட்டத்தில் பயின்று தங்குமிடம், தொழில் காரணமாக மறந்துவிட்டவர்கள் மீள்நினைவு பெறவேண்டும் என்ற நோக்கு.
(4) அரசியல் நிகழ்வுகளைக் குடிமக்கள் அம்மொழியறிவு இல்லாத காரணத்தால், அறிய இயலாநிலையில் தவறு இழைப்பதைத் தடுக்கும் நோக்கு.
என்பனவாகும்.
இன்ன தவறுக்கு இன்ன தண்டனை என்று சட்டம் விதிக்கிறது. சட்டத்தை அறிந்திருக்கவில்லை (சட்டம் தெரியாது) என்பதால் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அதே போல, சட்டம் எழுதப்பட்டுள்ள மொழி தெரியாது என்பதாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. (Ignorance of Law is no excuse.) இந்த நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பதற்காகவே ஆங்கில மொழியிலுள்ள சட்டங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நமது அரசியல் அமைப்புச் சட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட காரணத்தால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அது அப்போதைக்கப்போது மொழிபெயர்க்கப்பட்டு மக்கள் அறியும் வண்ணம் வெளிவந்துள்ளது.
1908ஆம் ஆண்டு உரிமையியல் விசாரணைச் சட்டம்.
1919ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டம்
1920ஆம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்டம்
1967ஆம் ஆண்டு இந்திய சாட்சிச் சட்டம்.
இப்படி காலவாரியாகத் தேவை கருதி இவை வெளியிடப்பட்டன. ஆனால், சட்ட அறிவை மக்கள், அரசியல் அமைப்பைச் சார்ந்த உரிமையாகக் கோர இயலாது கலங்கிய ஒரு காலக்கட்டம் இருந்தது. விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆட்சி மொழிக்கு வகை கோலப்பட்டது. இதை ஒட்டி எழுந்த மாநில ஆட்சிமொழி ஆணையங்கள் பல நாடெங்கிலும் அமைக்கப்பட்டு, வட்டார மொழிகளில் மைய மாநிலச் சட்டங்கள் மொழிபெயர்த்து மக்களுக்கு வழங்கப்பட்டன.
இவ்வகையில் 1967ஆம் ஆண்டுக்குப் பின் தமிழக அரசு ஆட்சி மொழி ஆணையம் சட்ட மொழிபெயர்ப்பைத் தொடங்கித் தமிழில் வெளியிடத் தொடங்கியது. சட்டத்தை மொழிபெயர்ப்பது, மொழிமரபுப்படி அமைய வேண்டுமானால் நெடுங்காலச் சட்ட நிருவாக அனுபவம் இருந்தால் தான் மொழிபெயர்ப்புச் சிறப்பாக அமையும். ‘செம்மையான சட்டத் தமிழாக்கத்திற்கு மொழிபெயர்ப்புத்துறை அனுபவமும், தமிழ் மொழியறிவும், தமிழில் புதிதாகச் சொற்களைப் படைக்கும் ஆற்றலும் இருந்தாக வேண்டும். புதுச் சொற்கள் தமிழ் மரபுப்படியே தரப்படவேண்டும். இப்பணியில் எளிமையும், சுருக்கமும் கருதித் தமிழ் வேர்ச் சொற்களையே பயன்கருதி ஆக்க வேண்டும். இக்கட்டான கட்டங்களில் ஆங்கிலச் சொற்களை அடைப்புக்குறிக்குள் பயன்படுத்தலாம்’ என்று டாக்டர் வீ.சந்திரன் குறிப்பிடுகிறார். இக்கருத்தை மா.சண்முக சுப்பிரமணியமும் வலியுறுத்துகிறார்.
எடுத்துக்காட்டாக :
Damages என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் சட்டச் சொல்லுக்கு, ”இரண்டு பேர் தமக்குள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு ஒருவர் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுவதால் மற்றவருக்கு இழப்பு நேரிடுகிறது. இழப்பு நேர்ந்தவர் ஒப்பந்தத்தை மீறியவர் மீது வழக்கிட்டுப் பெறும் தொகைதான் Damages என்பது.” இதற்கு இழப்பீடு என்று மொழிபெயர்ப்பு இருக்கிறது. இதே Damages என்பது அவதூறு காரணமாக எழுமானால் தீங்கீடு என்று குறிக்கப்படுகிறது.
Punishment என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தண்டனை என்கின்றனர். Sentence என்ற சொல்லுக்குத் தீர்ப்புத்தண்டனை என்கின்றனர். இங்ஙனம் நுண்நோக்குடன் கண்டு ஆய்ந்து எழுதப்படும் நிலையில் பல சிக்கல்கள் தீர வாய்ப்பு ஏற்படுகிறது.
உற்பத்தியாளர்கள் தங்கள் பொருளின் தரத்தை உயர்த்திக் காட்டி விளம்பரத்தைக் காண்போர் வாங்கியாக வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் அமைவதே விளம்பரத் தமிழாகும். இன்றைய நிலையில் இந்த விளம்பரத் தமிழ்தான் மக்கள் தொடர்புச் சாதனங்களின் மணி மகுடமாகத் திகழ்கிறது.
விளம்பரத்திற்குச் சொல்லப்படும் செய்தி முன்பின் மாறானதாக இருத்தல் கூடாது. விளம்பரத்தைப் படிக்கும் ஒருவன் அப்பொருளை வாங்கிப் பயன்படுத்தியே தீரவேண்டுமென்ற வேகத்தை அவனுக்குள் உருவாக்கவேண்டும். ”இரண்டு வாங்கினால் அல்லது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” என்ற விளம்பரம் இன்றைய சூழலில் பலரைக் கவரும் ஒன்றாக அமைகிறது. ஆக நல்ல மொழிபெயர்ப்பால் இலக்கிய வளமையும், வணிக இலாபமும் பெற்றுக் கொள்ளலாம்.
(1) விளம்பரச் செய்தி மொழிபெயர்ப்பு
(2) அறிவியல் மொழிபெயர்ப்பு
(3) இலக்கிய மொழிபெயர்ப்பு
என்று கொள்ளலாம். தொலைக்காட்சி மைய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. வானொலி பிரசார் பாரதி நிறுவனக் கட்டுபாட்டில் இருக்கிறது திரைப்படம். சட்டதிட்டங்களால் கட்டுப்படுத்தப்பட்ட நெறியின் படி செயல்படுவது. இவற்றில் இலக்கியம், நாட்டு நடப்பைக் காட்டும் நாடகங்கள், செய்திகள், அறிவியல் சாதனங்கள், மக்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஒரு மொழியில் தயார் செய்யப்பட்டு மற்ற மொழிகளிலும் மொழிபெயர்த்து ஒலிபரப்பப்பட்டும், ஒளிபரப்பப்பட்டும் வருவதைக் காணுகிறோம். ஒலி, ஒளி மொழிபெயர்ப்பு நிலையில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிகோல இந்த மக்கள் தொடர்புச் சாதனங்கள் துணை நிற்கின்றன.
அகம், புறம் என்ற பிரிவுகளும் குறிஞ்சி, முல்லை, வெட்சி, தும்பை என்ற குறிப்புணர்த்தும் பூக்களின் பயன்பாடும் பிறமொழிகளில் விளக்கப் படலாமே தவிர, மொழிபெயர்க்கப்பட இயலாது.
புறப்பாடலில் போரின் நிலை, ஆட்சி அமைப்பின் பகுதி இவை சுட்டப்படும் நிலையில் கருத்து, பொருள் இவைதான் குறிப்பிடப்பட இயலுமே தவிர மொழிபெயர்ப்பில் கொண்டு வந்து அமைப்பது சிக்கலான ஒரு காரியமே.
இயற்கை நிகழ்ச்சிகளான வேங்கை பூத்தல், வயல் கதிர் முற்றல் என்பன பெண்களின் பருவ மாறுபாடுகள், திருமணத்திற்கு ஏற்ற காலம், பெண்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலை ஆகிய உட்குறிப்புகளை உணர்த்த இலக்கியத்தில் பயன்படுத்தபட்டன. அவற்றை மாற்று மொழியில் படைப்பது என்பது மிகக் கடினமான ஒரு செயலாகும். முயன்று புகுத்தினும் அது சற்றுப் பொருந்தா நிலையில் அமைவது திண்ணம். வெறியாட்டு என்ற ஒரு நிலையைச் சங்க இலக்கியம் தருகிறது. அதனை அந்தக் கருத்திலே எப்படி மாற்று மொழியில் தருவது? இத்தகு சிக்கல்கள் இலக்கிய நிலையில்தான் உண்டு என்றால், அங்ஙனமல்ல, பிற துறைக் கலைச்சொற்களை மொழியாக்கம் செய்யும் நிலையிலும் இது எழுகிறது. நமது மொழியைக் காட்டிலும் ஆங்கிலத்தில் சொற்கள் அதிகம். எனவே, தொழில் நுட்பத் துறை சார் நூல்களைத் தமிழில் பெயர்க்கும் போது நிகரான அல்லது இணையான தமிழ்ச் சொற்கள் கிடைப்பது கடினமாகிறது.
எடுத்துக்காட்டாக :
Treatment என்ற சொல் நமக்கு அன்றாடப் பழக்கத்திலுள்ள சொல்தான். அது பயன்படுத்தப்படும் இடத்திற்கேற்பப் பொருள் மாற்றம் பெறும். மருத்துவரிடம் சிகிச்சை பெறும்போது ஒரு treatment வருகிறது. அவர் treatment சரியில்லையென்று ஒரு பெண் தன் கணவனைப் பற்றிச் சொல்லும் போது ‘பெண்ணை நடத்துமுறை’ என்ற பொருளில் வருகிறது. பாலுமகேந்திரா படத்தில் ‘அவர் treatment -ஏ தனிதான்’ என்றால் அவர் படத்தை இயக்கிச் செல்லும் முறை என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது. இப்படிப் பல சொற்களைச் சுட்டிச் சொல்லலாம்.
இக்காலத்தில் சிறுகதை, புதினம் முதலியவற்றில் பேச்சு வழக்கு அப்படியே பயன்படுத்தப்படுகிறது. Tubelight என்பது குழல் விளக்கைச் சுட்டும் அதே நேரத்தில் ‘அவன் சரியான Tubelight’ என்றால் எளிதில் புரிந்து கொள்ளும் திறனற்றவன் என்ற பொருளையும் தருகிறது. இவற்றை மொழிமாற்றம் செய்ய முனைந்தால் நடைமுறை மரபு தெரியாத போது புரிந்துணர இயலாது போகும்.
நம்நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் நீதித்துறையோடு தொடர்பு உடையவர்களான முனிசீப் வேதநாயகம் பிள்ளையும், நீதிபதி தாமோதரம் பிள்ளையும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தமிழாக்கம் செய்த நிலையை நமக்கு வரலாறு காட்டுகிறது. ஆகத் தம் நெருக்கமான பணியிலும் அவர்கள் நேரம் ஒதுக்கி மொழிபெயர்ப்பை வளர்த்தமை போற்றற்குரியதே.