19

ஆண்டாண்டுக் காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் பெண் அடிமைப்பட்டே இருந்தாள் .

குடும்ப நிர்வாகம் முதற்கொண்டு பல கடமைகளைச் செய்தாலும் , இனவிருத்தி செய்து குடும்பத்தைப் பெருக்கினாலும் , அன்பு , பாசம் முதலிய பல நல்ல பண்புகளைப் பெற்றிருந்தாலும் பெண் , தொடர்ந்து அடிமையாகவே இருக்கிறாள் .

இந்தச் சமுதாயம் ஆண்களை மையமிட்டது ; எல்லாக் கருத்துக்களும் செயல்களும் ஆண்களை மையமிட்டே நடக்கின்றன .

இவ்வாறு பெண்ணியம் தீவிரமான கருத்துக்களை முன்வைக்கிறது .

இத்தகைய சமுதாயச் சூழ்நிலையை மாற்றவேண்டும் ; பெண் , விடுதலை பெற வேண்டும் என்று பெண்ணியம் கூறுகிறது .

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆளுமை ( personality ) உண்டு ; அந்த ஆளுமை காப்பாற்றப்பட வேண்டும் ; வளர்க்கப்பட வேண்டும் ; காட்டிக்கொள்ளப்பட வேண்டும் - என்று பெண்ணியம் கூறுகின்றது .

பெண் விடுதலை என்பது , சமூக - பொருளாதார அரசியல் - பண்பாட்டுத் தளங்களில் , பெண் சுயமாக இயங்குவதற்கு வேண்டிய உரிமைகளைப் பெறுவது - போராடியாவது பெறுவது - ஆகும் .

4.1.1 பெண்ணியம் : வரலாறு

கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெண்ணியம் என்ற கோட்பாடு , நவீனத்துவத்தின் சூழமைவில் , எழுந்தது .

தொடர்ந்து பிரான்சு நாட்டைச் சேர்ந்த சய்மோன் தெபௌவோ ( Simon De Beauvoir ) எழுதிய இரண்டாவது பாலினம் ( The Second Sex ; 1949 ) என்ற பிரசித்தமான நூலை முன்னோடியாகக் கொண்டு , பெண்ணியம் ஓர் அறிவார்ந்த கொள்கையாகவும் போராட்டக் கருவியாகவும் முன்வைக்கப்பட்டது .

பல நாடுகளில் பெண்ணுரிமை ஒரு பிரச்சினையாகப் பேசப்பட்டது ; இயக்கங்களும் தோன்றின .

இந்தியாவில் சமூகச் சீர்திருத்த உணர்வுடைய பலர் இது பற்றிப் பேசியும் எழுதியும் வந்தனர் .

தமிழகத்தில் , முதல் நாவலாசிரியராகிய மாயவரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை , பெண் விடுதலை பற்றி எழுதியுள்ளார் .

பெண்மதி மாலை அவருடைய நூல்களில் ஒன்று .

திரு. வி.க.வின் பெண்ணின் பெருமை இவ்வகையில் மிகச் சிறந்த ஒரு நூலாகும் .

தமிழகத்தில் பெண் விடுதலை பற்றி அழுத்தமாகவும் புதுமைக் கண்ணோட்டத்துடனும் எழுதியவர்கள் இருவர் .

தமிழகத்தில் 1980-கள் வாக்கில் இயக்கங்கள் பல தோன்றின .

இந்தச் சூழ்நிலையில்தான் பெண்ணுரிமை தொடர்பான இலக்கியங்களும் தோன்றின .

வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் , புனைவியல் நவிற்சியாக ஒரு பெண்ணின் அற்புத ஆற்றலைக் கதையாக்கித் தந்துள்ளது .

4.2 பெண்ணியம் : பல கோணங்கள்

பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம் என்பது ஒரே நிலைப்பாடு கொண்டதல்ல .

அதனுள் பல கருத்தியல்கள் - கோணங்கள் உண்டு .

அவற்றுள் , ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம் .

4.2.1 மிதவாதப் பெண்ணியம்

இது பெண்ணின் சிறப்புக்களைக் கூறுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறது கடவுளுக்கு முன் , ஆண் - பெண் எல்லோரும் சமம் என்று சொல்லுகிற அதே நேரத்தில் அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கிறது .

வழக்காடுமன்றங்கள் , சட்டமன்றங்கள் முதலியவற்றிற்குப் போவதில் ஆர்வம் கொள்கிறது .

4.2.2 போராட்ட குணம் மிக்க பெண்ணியம்

பெண் உரிமைகளைப் போராடித்தான் பெற முடியும் - பெறவேண்டும் என்று இது வற்புறுத்துகிறது .

பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவற்றிற்காக இது போராடிப் பெற்றும் தந்துள்ளது .

4.2.3 தீவிரவாதப் பெண்ணியம்

நவீனப் பெண்ணியம் என்று சொல்லுகின்ற இது , ‘ அரசியல் அமைப்புச் சட்டங்களிலும் அரசு ஆணைகளிலும் வழங்கப்பட்டுள்ள ஆண் - பெண் சமத்துவம் நடைமுறையில் அவைக்குதவாதது ’ என்று குற்றம் காட்டுகிறது .

குடும்பம் , பாலியல் உறவு முதலியவை பெண்ணை அடிமைப் படுத்துகின்றவை ; எனவே இவற்றிலிருந்து பெண் விடுதலையாகி , வெளியே வர வேண்டும் என்று பேசுகிறது .

4.2.4 புரட்சிகரப் பெண்ணியம்

பாலியல் உரிமை ( sexual right ) , கட்டற்ற அல்லது கட்டுப்பாடற்ற பாலியல் உறவு ( free sex ) , பெண் - ஓரினச் சேர்க்கை ( lesbianism ) , குழந்தை பெறுவதை மறுத்தல் - முதலியவற்றை இது வலியுறுத்துகிறது .

4.2.5 சமதர்மப் பெண்ணியம்

குடும்பத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும் பெண் , பொருளாதார அடிப்படையில் சுய நிலையும் பெறவேண்டும் .

அப்போதுதான் பெண் விடுதலை சாத்தியமாகும் என்று சொல்கிறது .

ஒட்டுமொத்தமான சமூக - சமதர்ம அமைப்பிலேயே பெண்ணும் நிரந்தரமாக சமத்துவநிலை பெறுகிறாள் என்று இது கூறுகிறது .

இந்தியாவில் / தமிழகத்தில் , பெண்ணியச் சிந்தனைகளில் இதுவே பெரும்பான்மையாகக் காணப்படுகிறது .

இந்தியாவில் / தமிழகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படும் பெண்ணியச் சிந்தனை எது ?

இந்தியாவில் / தமிழகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படும் பெண்ணியச் சிந்தனை சமதர்மப் பெண்ணியம் .

4.3 பெண்ணியத்திறனாய்வு : வரையறைகள்

‘ சமூக வரலாற்றில் , மக்களில் பல பகுதியினர் ஒதுக்கப்பட்டும் , ஒடுக்கப்பட்டும் வந்தனர் ; அதற்கான காரணகாரியங்களை வெளிப்படுத்த வேண்டும் ; அதன் வழி , மாற்றங்களையும் கொண்டு வரவேண்டும் ” - இது , பெண்ணியத் திறனாய்வின் நோக்கமாகும் .

பெண்ணின் நோக்கிலிருந்து செயல்படுவது இத்திறனாய்வு .

பெண் விடுதலை என்ற ஒளியில் பெண்ணியத் திறனாய்வு என்பது , சமுதாயம் என்ற பன்முகப்பட்ட அனுபவங்கள் தந்த உணர்வு நிலையில் , பெண்ணின் ஆளுமை எவ்வாறு இலக்கியத்தில் வெளிப்படுத்தப்படுகிறது என்று பார்ப்பதாக அமைகிறது .

ஆனால் அத்தோடு அமையாது , இதுகாறும் பெண்கள் பற்றிச் சொல்லப்பட்டு வந்த நியாயங்கள் , உருவாக்கப்பட்டு வந்த மதிப்புகள் , கற்பிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட புனிதங்கள் என்பனவற்றை அடையாளங்கண்டு விளக்குவது , பெண்ணியத் திறனாய்வு ஆகும் .

இந்தச் சமூக அமைப்பு , ஆண்களை மையமிட்டது ; அதனை எதிர்கொண்டு , பெண்களின் எதிர்வினைகளை இது முன்வைக்கிறது .

மரபுவழிவந்த இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுவரும் பெண் பற்றிய போலியான கருத்துருவாக்கங்களை உடைத்தெறிவதும் , பெண் அடக்குமுறைகளின் பல வடிவங்களை வெளிக்கொணர்வதும் , பாலியல் ( sex ) மற்றும் பாலினம் ( gender ) ஆகியவற்றை மையப்படுத்தி , அதிகார உறவுகளையும் ஆதிக்க மனப்பான்மைகளையும் எடுத்துக்காட்டுவதும் பெண்ணியத் திறனாய்வின் பணிகளாகும் .

இவ்வாறு கேட் மில்லட் ( Kate Millet ) கூறுவார் . சமூகவியல் , வரலாற்றியல் , உளவியல் , மார்க்சியம் , அமைப்பியல் , பின்னை அமைப்பியல் முதலிய ஏனைய பிற கோட்பாடுகளோடு இது நெருக்கம் கொண்டிருக்கிறது .