சிறுகதை - 2
பாடம் - 1
தமிழ்ச் சிறுகதை உலகில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆர்.சூடாமணி. அவரது சிறுகதைகளைப் பற்றி இப்பாடம் கூறுகிறது.
அந்த நேரம் (1969), இழந்த மகுடம் (1973), ஓர் இந்தியன் இறக்கிறான் (1975), ஆர். சூடாமணியின் சிறுகதைகள் (1978), உலகத்தினிடம் என்ன பயம் (1978), சுவரொட்டி (1985), அம்மா (1987), கிணறு (1991), அஸ்தமனக் கோலங்கள் (1993), காவலை மீறி (1996), ஆர். சூடாமணியின் கதைகள் (2001). இறுதியாகக் குறிப்பிட்டுள்ள இந்த நூலுக்குத் தமிழ்வளர்ச்சித் துறை சிறந்த சிறுகதைப் படைப்புக்கான பரிசு வழங்கியுள்ளது.
சிறுகதை, புதினம், குறும்புதினம், நாடகம் ஆகிய நான்கு துறைகளிலும் இதுவரை 37 நூல்கள் படைத்துள்ளார். இவருடைய சில சிறுகதைகள் ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. சில கதைகளை இவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். 1962 முதல் மொழி பெயர்ப்பாக அன்றி நேரடியாகவும் ஆங்கிலத்தில் சிறுகதை படைத்து வருகிறார்.
ஏதேனும் ஒன்று, ஒரு மனச்சலனம், ஒரு மாற்றம், ஒரு பார்வை, ஒரு கணிப்பு என்ற ஏதாவது ஒன்று மட்டுமே நோக்கமாகக் கொண்டு சிறுகதை நிகழ்வுகள் சுவைபட அமைய வேண்டும். இவ்விலக்கணங்களுக்கு ஏற்றாற்போல் அமைந்து வாசகர்களுக்குச் சுவை பயப்பன ஆர்.சூடாமணியின் கதைகள்.
காலிழந்த ஒரு மனிதன், அவனுக்கும் ஆசாபாசங்கள் உண்டு. உணர்ச்சிகள் உண்டு. ஆனால் அவனை யாரும் உணர்ச்சி உள்ளவனாகவே நினைக்கவில்லை. தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டக் கூடிய ஒரு வடிகாலாகவே அவனை நினைக்கின்றனர் என்பதை விளக்கும் கதை வடிகாலன் (அமுதசுரபி தீபாவளி மலர். 1997.)
தொலைக்காட்சி விளம்பரங்கள் மக்கள் கவனத்தைச் சுண்டி இழுக்கின்றன. இந்த விளம்பர மோகத்திற்குக் குழந்தைகள், சிறுவர், முதியவர், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் அடிமையாகின்றனர். விளம்பரம் பார்த்துப் பார்த்துத் தன் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் இளம்பெண் ஒருத்தி ஆசை வழி மனம் செல்ல எவ்வாறு அல்லல்படுகிறாள் என்பதை எடுத்துரைப்பது ஆசை வழி மனம் செல்ல (கல்கி. 1998.)
பூப்பெண்
ஓர் அம்மன் கோவில் வாசலில் பூ விற்றுக் கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி. மருத்துவ மனைக்குச் சென்று கொண்டிருந்த காவேரியம்மாள் தன் மகனுக்குப் பிடிக்குமே என்று பிஞ்சு வெண்டைக்காய் வாங்கிக் கொண்டிருக்கிறாள். பூ விற்கும் சிறுமி “என்ன ஆயா பூ வாங்கலியா? காய் மட்டும் தான் வாங்குவியா?” என்று வலிய அழைக்கிறாள். உரையாடல் தொடர்கிறது. பேச்சு வாக்கில் காவேரியம்மாள் சிறுமியைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். பூவுக்குப் பணம் கொடுத்த பின்னர் ‘உன் பேரென்ன?’ என்று கேட்கிறாள். சிறுமி நிமிர்ந்து பார்த்தாள் ‘என்ன அப்படிப் பார்க்கறே?’ ‘உன் பேரென்ன?’ ‘இந்திரா’. அன்று முதல் வாரம் தோறும் சிறுமியிடம் ஒரு முழம் பூ வாங்கும் பழக்கம் தொடர்ந்தது.
ஒரு நாள் முதியவள் கையில் வைத்திருந்த பூவினால் சிறுமியின் முகம் அதிர்ச்சியில் வாடிவிட்டது. ‘என்னை விட்டுவிட்டு எப்படி வேறொருவரிடம் பூ வாங்கலாம்’ என்று கேட்கிறாள்.‘உன்னிடமே வாங்குவதாக எழுதிக் கொடுத்திருக்கிறேனா?’ என்று கேட்டவுடன் வேதனைப்படும் சிறுமியைக் கறிகாய்க்காரர் சமாதானம் செய்கிறார்.
‘ஏன் பாப்பா? இதுக்குப் போய்ச் சொணங்கிப்போற. அவங்க தர்ற ரெண்டு ரூபாயிலயா நீ மாடி வீடு கட்டப் போற. ஒனக்கும் அவங்களுக்கும் சொந்தமென்ன? பந்தமென்ன! இவங்க என்னவாம் பெசல் உனக்கு?’
“இவங்க மட்டும் தான் என் பேரைக் கேட்டாங்க” இந்த ஒரு வரி பூ விற்கும் பெண்ணின் உணர்வுகளை முழுமையாக வாசகர்க்கு உணர்த்திவிடுகிறது அல்லவா? பூ விற்கும் சிறுமியின் மனத்தில் யாராவது தன் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும் என்ற ஏக்கம், தன் பெயரைக் கேட்டதனால் அவர்கள் மீது சொந்தம் கொண்டாடும் உரிமை, எல்லாமே இனி இழந்து விட்டோமோ என்ற வருத்தம் – அனைத்தையும் உணர்த்தும் ஆசிரியர் இத்துடன் கதையை முடித்துவிடவில்லை.
சிறுமி பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த காவேரியம்மாள் மனம் நெகிழ்ந்து போய் ‘காலில் முள் குத்திடிச்சு. சகுனம் சரியில்லை எதிர்ல வந்த குழந்தை கிட்ட அந்தப் பூவைக் கொடுத்திட்டு அப்படியே திரும்பிட்டேன். இந்தாம்மா பொண்ணு, இந்திரா வழக்கம்போல் மொழம் முல்லை கொடு’ பேசிக்கொண்டே தன் கையடக்கப் பர்சைத் திறந்தாள். சிறுமியை நேராகப் பார்க்கவில்லை. பார்த்தால் அழுதுவிடுவோமோ என்று பயமாயிருந்தது – என்று காவேரி பூப் பெண்ணின் மனத்தைப் புரிந்து கொண்ட நிலையைக் குறிப்பதாகக் கதை நிறைவு பெறுகிறது.
சிறுவர்களின் கள்ளம் கபடமற்ற மனநிலை, அன்பையே எதிர்பார்த்து, அன்புக்கு ஏங்கும் மனநிலை, என்று பல கோணங்கள். சிறுவர்களின் மன உணர்வுகள் இவர் சிறுகதைகளில் படம் பிடிக்கப்படுகின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றாற்போல் சிறுவர்களின் உணர்வுகளும் விருப்பங்களும் மாறி நிற்கும் நிலையினைச் சுவைபடச் சொல்லும் சிறுகதை கோடைக் காலக் குழந்தைகள் (சௌராஷ்டிர மணி தீபாவளி மலர் 1994.)
கோடைக்காலக் குழந்தைகள்
‘நாளுக்கு நாள் வெயில் ஏறும் மே மாதத் தொடக்கம். மோகன், ராஜி இருவரையும் இக்கோடை விடுமுறைக்கு அவர்கள் பெற்றோர் கொடைக்கானலுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அந்த மகிழ்ச்சியில் அவர்கள் பேச்சும் அதுபற்றியே இருந்தது. வெப்பத்தைத் தணித்துக் கொள்ள, தெருவில் ஐஸ்கிரீம் விற்கும் பையனைக் கூப்பிட்டான் மோகன். மோகனின் வயதுள்ள அச்சிறுவன் ஐஸ்கிரீம் வகைகளைச் சொல்லுகிறான். மோகனும் ராஜியும் ஆளுக்கொரு சாக்கோபார் வாங்கிக் கொண்டார்கள். அம்மா தனக்கு ஐஸ்கிரீம் வேண்டாமென்று சொல்லிப் பணம் கொடுக்க, பெற்றுக் கொண்ட சிறுவன் ‘இன்னிக்கு வியாபாரம் மோசமில்லை’ என்றான். திருப்தியுடன்.
மோகன் ‘நாங்கள்ளாம் ஜில்லுனு கொடைக்கானல் போகப் போகிறோம் தெரியுமா? இங்கே வெயில் சகிக்க முடியலே, எனக்கு வெயில் பிடிக்காது’ என்று அறிவித்தான்.
‘எனக்குப் பிடிக்கும்’ என்றான் ஐஸ்கிரீம் பையன் அமைதியாக. ‘கோடைக்காலமாய் இருக்கிறதனாலதான் ஐஸ்கிரீம் கம்பெனி என்னை வேலைக்கு எடுக்குது. வெயில் நாளில் விற்பனை அதிகம். என்மாதிரி அதிகப்படி ஆளுங்க தேவைப்படும்……
ஐஸ்கிரீம் விக்கிற பணத்தில் கமிஷன் கொடுப்பாங்க. வீட்டுக்குப் போய் அப்பா அம்மா கிட்ட குடுப்பேன். கொஞ்சம் நல்லா சாப்பிடலாம். வெயில் இருக்கிற வரைக்கும் எனக்குக் கவலையில்லீங்க. வெயிலை எனக்குப் பிடிக்கும்!’ என்றான். அவன் மீண்டும் சைக்கிளில் ஏறப்போனபோது அம்மா தனக்கும் ஒரு சாக்கோபார் கேட்டு வாங்கிக் கொண்டாள். காசை வாங்கிக் கொண்டு ‘எப்பவுமே கோடைக்காலமாயிருந்தா எத்தினி நல்லாயிருக்கும்’ என்றான். வாசகர்க்கு உணர்த்தப்படும் உணர்வுகளைக் கதை மாந்தரும் உணர்ந்து கொள்வதைக் கதையின் இறுதிப் பகுதி தெரிவிக்கிறது.
மோகன் மீதமிருந்த சாக்கோபார் குச்சியை வெறித்துப் பார்த்துவிட்டு ஜன்னல் வழியாய் வெளியே வீசி எறிந்தான். இனி உளவியல் சிறப்புக் கதைகளைப் பார்ப்போமா?.
ஒரு மனநிலை
ஒரு மனநிலை (தினமலர் தீபாவளி மலர். 1992) என்ற சிறுகதையில் ராதா என்ற பெண்ணின் ஒரு குறிப்பிட்ட மனநிலையை விளக்கி வர்ணித்திருப்பதைப் பாருங்கள்.
முதன் முதலில் பஸ்சில்தான் ஒருவன் அவளைப் ‘பாட்டி’ என்று கூப்பிட்டான். ‘பாவம் நின்றுகிட்டே வரீங்களே பாட்டி இப்படி உட்காருங்க’ என்று எழுந்து இடம் விட்டான். இப்படித் தொடங்குகிறது ஒரு மனநிலை என்ற சிறுகதை. முதன் முதலில் தனக்கு வயதாகி விட்டதென்று அறிந்து உணரும் மனநிலையின் வியப்பு, அதிர்ச்சி, வருத்தம், இலேசான உலுக்கல் என்று படிப்படியாக அது விரிவதைச் சித்திரிக்கிறது. இச்சிறுகதை, கற்பனையின் உச்சமாக ராதா நினைப்பதைப் பாருங்கள் ‘ஒரு குழந்தையை தீர்க்காயுசாய் இரு என்று வாழ்த்தும்போது நரையும் டென்ச்சரும், கைத்தடியும் கண்ணாடியும் உனக்கு வரட்டும் என்று தானே அர்த்தம்? முதுமையை ஏற்றுக் கொள்ள அஞ்சும் மனம் எப்படிக் கற்பனை செய்கிறது பாருங்கள். முதலில் ஏற்கத் தயங்கிய மனம் காலப் போக்கில் பக்குவமாக மாறி விடுகிறது. காலம் மனநிலையை மாற்றும் ஆற்றல் பெற்றதல்லவா?
உள் உணர்வு
ஜெயகுமாரி நிர்மலா வீட்டில் வேலை செய்யும் சிறுமி. அடிக்கடி கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று ஒற்றை விரலை உயர்த்திக் காட்டுகிறாள். எதனால் இவ்வாறு செய்கிறாள் என்பதை உளவியல் ரீதியில் விளக்கும் கதைதான் உயர்த்திய விரல் (கல்கி. தீபாவளி மலர். 2000.) இவள் முன்னால் வேலை செய்த வீட்டின் எஜமானி முதல் நாள் இரவு 8 மணிக்குக் கொல்லைக் கதவைப் பூட்டி விட்டால் மறுநாள் காலை கதவைத் திறக்கும் வரை காத்திருக்க வேண்டும். அடக்கப் பார்த்துப் பார்த்துத் தவிக்கும் நிலை, இரவு நெருங்குகிறதே என்று பீதி கொள்ளும் நிலை என்று சிறுமி பட்ட துன்பமும் அதன் விளைவுகளும் கூறப்படுகின்றன. இப்போது இந்தப் புதிய வீட்டில் இருக்கும் சுதந்திரம் தான் அடிக்கடி ஒற்றை விரலை உயர்த்தச் சொல்கிறது. எப்போது வேண்டுமானாலும் கழிப்பறை செல்லலாம் என்ற சுதந்திரத்தை இப்படி அனுபவிக்கிறாள் என்று உளவியல் ரீதியில் சிறுமியின் உணர்வுகள் விளக்கப்படுவதைக் காணலாம்.
உள் உறுத்தல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை நோயின் கடுமை தாள முடியாமல் மூட்டைப் பூச்சி மருந்தைக் குடித்து இறந்து போகிறார். அவருடைய மகன் சேது தந்தையின் விருப்பத்தைப் புறக்கணித்து விட்டு ஹேமாவைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். அவர் விருப்பம்போல் நடந்து கொண்டிருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பாரோ? இது மகனின் உள் உறுத்தல். தந்தையின் சொல்லை மீறி ஆன்மீகம் தேடி ஆசிரமம் சென்ற மகள் தாரிணி, தான் பணிவிடை செய்து கொண்டு பக்கத்தில் இருந்திருந்தால் அப்பாவைக் காப்பாற்றியிருக்கலாமோ என்று வருந்துகிறாள். மருமகள் ஹேமாவை ஹார்லிக்ஸ் கொண்டு வரத் தாமதமானதென்று மாமனார் கோபிக்க, பதிலுக்கு ஹேமாவும் ‘நான் போட்டால்தான் சோறு‘ என்று சொல்லிவிட்டாள். புற்றுநோயால் இறந்தாரென்று உலகம் நினைக்கிறது. ஆனால் மகன், மகள், மருமகள் மூவர்க்கும் அவரவர் செய்த தவறு அவரவர் உள்ளத்தை உறுத்துகிறது என்று உளவியல் ரீதியில் சொல்லப்பட்ட கதை உள் உறுத்தல் (அமுத சுரபி தீபாவளி மலர். 1999.)
தேவகியின் நிலை
தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது மைந்தன் கண்ணன். அவன் மாமன் கம்சனை அழிப்பான் என்பது புராணம் கூறும் செய்தி. திருமாலின் அவதாரமாகக் கண்ணன் இப்பூவுலகில் பிறந்தான் என்பதும் நாம் அறிந்ததே. தேவகியின் வயிற்றில் பிறந்த இந்தத் தெய்வப் பிறப்புக்காக முதல் ஏழு குழந்தைகளைப் பறிகொடுத்த தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்ற புதிய கோணத்தை (விலை. சதங்கை. 1994.) என்ற இக்கதை நமக்குக் காட்டுகிறது.
கம்சன் அழிந்த பின்னர், சிறை செய்யப்பட்டிருந்த தேவகியும் வசுதேவரும் விடுதலை பெற்று வெளியே வருகிறார்கள். கண்ணனும் பலராமனும் பெற்றோரை அணைத்துக் கொண்டு அழுதனர். தேவகியின் உயிர் நாளங்களிலிருந்து பல ஆண்டுகளாக அழுத்திக் கிடந்த துயரச் சுமை தெறித்து விழுந்தது. தெய்வப் பிறவி தோன்றும் பொருட்டு ஏழு பிஞ்சுகளைப் பெற்றுப் பெற்று உடனுக்குடன் பலி கொடுத்த கொடுமை தேவகியை வாட்டுகிறது.
குழந்தை ஒவ்வொன்றையும் பிறந்த உடனேயே உன்னிடம் கொடுத்து விடுகிறேன் என்று கம்சனுக்கு வசுதேவர் வாக்களித்தது எவ்வளவு கொடுமை! பிறந்த உடனேயே குழந்தையைச் சாகக் கொடுக்கப் போகிறோம் என்பது தெரிந்தே ஒவ்வொரு முறையும் கருவுற்று – இறைவனுக்கே என்றாலும் இந்தப் பலிகள் நியாயமா? “ஐயோ என் குழந்தைகளே, என் குழந்தைகளே” என்று கதறி அழுகிறாள் தேவகி. கண்ணன் தாயைத் தேற்ற இயலாமல் ஒரு சாட்சி மாத்திரமாய்ப் பார்த்துக்கொண்டு ஒதுங்கி நின்றான்.
புராணக் கதைகளில் நாம் பார்க்கத் தவறியதை ஒரு தாயின் பார்வையில் வெளிப்படும் புதிய சிந்தனையால் காட்டும் ஆசிரியரின் கற்பனை, புதிய பார்வை ஆகியவற்றைப் பார்க்க முடிகிறதல்லவா?
சகுந்தலையின் உறுதி
சகுந்தலை, துஷ்யந்தன் கதை நமக்கெல்லாம் தெரியும். துஷ்யந்தன் கண்ணே, மணியே என்று சகுந்தலையைப் புகழ்ந்தவன். அவனைத் தேடி அவள் வந்தபோது ‘உன் வயிற்றில் வளர்வது யார் குழந்தையோ? அரச போகத்துக்கு ஆசைப்பட்டுச் சொந்தம் கொண்டாடிவந்திருக்கிறாய்’ என்கிறான். தன்மானம் அடியுண்டதால் தளர்ந்த சகுந்தலை வழியில் தேவகன்னி மேனகையைச் சந்திக்கிறாள்.
தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் மேனகை, “விசுவாமித்திரரின் தவத்தைக் கலைக்கத் தேவேந்திரனால் அனுப்பப்பட்டவள் நான், உன் தாய்” என்கிறாள். உரையாடல் தொடர்கிறது.
“அதாவது ஒரு தவச் சிதைவின் அடையாளம்”.
“ஏன் விரக்தியாய்ப் பேசுகிறாய். உன்னைத் தேவலோகத்துக்கு அழைத்துச் செல்லுகிறேன். உன் மகன் அங்குப் பிறப்பான்.”
“நீங்கள் என் தாய் என்பது உண்மையானால்……”
“சூரிய சந்திரர் சாட்சியாய் சத்தியம்.”
“நான் பிறந்ததும் தேவலோகத்துக்கு எடுத்துச் சென்றிருக்கலாமே?”
“மானிட சிசுவைத் தேவர் உலகிலேயே வைத்திருக்க முடியுமா?”
“அதனால் என்ன செய்தீர்கள்?”
“உன் தந்தை விசுவாமித்திரர் ஏற்றுக் கொள்ளாததால் கானகத்தில் விட்டு விட்டுச் சென்றேன்.”
“நான் சாவதற்கு”
மேனகை தலை குனிந்து “என் இயலாமை” என்றாள்.
“பிறந்த குழந்தை என்ன குற்றம் செய்தது மரண தண்டனை விதிக்கப்பட?”
“பிறந்ததுமே என்னைப் புறக்கணித்தவள் எனக்கு அம்மா எப்படி ஆவாள்? நானும் அவளைப் புறக்கணிக்கிறேன்” என்கிறாள் உறுதியாக. கண்வ மகரிஷியிடம் திரும்பிச் சென்றபோது அவர் ஆறுதல் கூறுகிறார். அப்போது சகுந்தலை “என் மகன் இந்த ஆசிரமத்தில் தங்கள் புனித நிழலில் பிறப்பான். துஷ்யந்தன் வரும்போது தந்தையுடன் போக அவன் விரும்பினால் போகட்டும். ஆனால் நான் போக மாட்டேன். இங்கேயே தங்கள் அன்பு மகளாய் வாழ்வேன். தங்கள் கால்பட்ட இந்த அன்பு நிலத்திலேயே என் கடைசி மூச்சை விடுவேன்” என்கிறாள். சகுந்தலையின் உறுதியையும், பெண்மையின் தன்மானக் கனலையும் எடுத்துரைக்கும் சிறுகதை தான் தாயகம். (புதிய பார்வை. 1993)
சுதந்திரம்
குழந்தைப் பருவத்தில் இருக்கும் சுதந்திரம் வளர வளரப் பறிபோய் விடுகிறது என்ற உண்மையை உணர்ந்த ஒரு பெண்ணை நடன விநாயகர் (கல்கி – 1996) கதையில் பார்க்கிறோம். தான் இழந்த சுதந்திரத்தின் அருமையை அப்போது உணர்கிறாள் நந்தினி.
குழந்தை, சுதந்திரம் ஒரே பொருளில் இரண்டு சொற்கள், என்று தான் இழந்த சுதந்திரத்தைச் சிறுமியிடம் காணும்போது ஆற்றாமையால் வருந்துகிறாள் நந்தினி.
தனிமை
பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பள்ளி விட்டு வந்தவுடன் தாயுடன் இருக்க. தன் தாய் அலுவலகம் செல்வதால் தான் மட்டும் தனியே இருக்கும் சூழ்நிலையை வெறுக்கும் சிறுவன் பிரபுவின் மனநிலையை விளக்குவது விட்டுட்டு விட்டுட்டு (கல்கி – 1997) .
தனியாக இருப்பதை வெறுத்த சிறுவன் பிரபு அதன் எதிரொலியாக சிகரெட் பிடிக்கிறான். அதை எதிர்த்த பெற்றோரிடம் “தனியாக உக்காந்து எனக்குப் போரடிக்கிறது ஸ்கூல்லேருந்து வந்தா வீட்ல அம்மா கிடையாது. வேற யாரும் கிடையாது. எத்தனை நேரம் ராஜு வீட்டுலே போய் உட்கார்ந்திருக்கிறது. அவன் அம்மா எத்தனை நல்ல ஆன்ட்டி. ராஜுவை விட்டுப் போறதே இல்லை. நீதான் என்னை விட்டுட்டு விட்டுட்டுப் போயிடறயே? அப்புறம் நான் என்ன பண்ணா உனக்கென்ன” (பக். 136, சூடாமணி கதைகள்).
பெற்றோரிடம் இருக்க வேண்டும் என்ற ஆதங்கம், பக்கத்து வீட்டாரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சமூகச் சூழல் எவ்வளவு ஆழமாகச் சிறுவர்களிடம் பதிந்து கிடக்கிறது என்பதையே சிறுவனின் பேச்சில் சுட்டிக் காட்டுகிறார் சூடாமணி.
உறுதி
எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் கணவனால் பெண்படும் துன்பத்தைப் படம் பிடிக்கிறது (நாய், சிறுகதை தினமணி கதிர் – 1988). நாள்தோறும் தன் சந்தேகப் பார்வையாலும் கேள்விகளாலும் மனைவியைத் துளைத்து எடுக்கிறான் கணவன். “இப்படிச் சாக்கடையாய் இருக்கிறதே உங்க மனசு?” என்கிறாள் மனைவி. “என் உத்தரவு இல்லாம நீ எவன் கூடவும் பேசக் கூடாது, என் உத்தரவு இல்லாம நீ வாசப் பக்கமே வரக்கூடாது” என்று சொல்ல, “உன் உத்தரவு இல்லாம நான் மூச்சு விடலாமா? இல்லே அதையும் உன்னைக் கேட்டுக்கிட்டுதான் செய்யணுமா?” என்று வெறுப்பும் இகழ்ச்சியும் மேலிடும் தீக்கோளமாய் மனைவி பதில் சொல்கிறாள். எத்துன்பத்தையும் எதிர் கொள்ளும் உறுதியான மனநிலை கொண்ட பெண்ணை இங்குக் காண்கிறோம்.
குற்ற உணர்வு
இன்றைய காலக் கட்டத்தில் பெண்கள் வெளியே அலுவல் பார்ப்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. குடும்பத்தில் பெண்ணுக்குரிய கடமைகளாகச் சமுதாயம் நினைத்திருப்பதை மாற்றாமல் இருக்கிறது. இதனால் ஸ்வாதி என்ற பெண்ணுக்கு ஏற்படும் குற்ற உணர்வையும் இன்னல்களையும் எடுத்துரைப்பது விட்டுட்டு, விட்டுட்டு சிறுகதை.
நேர்மையும் துணிச்சலும்
அலுவலகம் செல்லும் இளம்பெண் பானுவின் பாத்திரப் படைப்பும், மானேஜர் கார்த்திகேயன் மனைவி விமலாவின் பாத்திரப் படைப்பும் சிறப்பாக அமைவது ‘பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவை’ சிறுகதையில் (கல்கி. 1997). மணமான மானேஜர் கார்த்திகேயன் தன் அலுவலக ஸ்டெனோ பானுவை விரும்புவதும் அவளை அடையத் துடிப்பதும் அதற்கான விலையாகப் பத்தாயிரம் ரூபாய்ப் பட்டுப்புடவையைப் பரிசளிப்பதாகச் சொல்வதும், அவளுக்குச் சினத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துகிறது. இதை மறுத்தால் நீ வேலையை இழக்க வேண்டியிருக்கும் என்று அச்சுறுத்துகிறான். கார்த்திகேயனிடம் பணியவும் கூடாது வேலையும் நிலைக்க வேண்டும் என்று துணிவுடன் செயலாற்றுகிறாள் பானு.
திட்டமிட்டபடி ஓட்டலுக்கு வரும் கார்த்திகேயன் அங்குத் தன் மனைவியைப் பார்த்துத் திடுக்கிடுகிறான். பானு தன் மனைவியைச் சந்தித்து எல்லா விவரமும் கூறியுள்ளதை அறிகிறான். விமலா கார்த்திகேயனிடம் “உங்க எண்ணம் பலிக்கவில்லை என்று கோபத்தில் இந்தப் பெண்ணை நீங்க வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது மறுபடியும் இவங்க கிட்ட வம்பு பண்ணினாலோ, உங்க நடத்தையைப் பற்றி நானே தில்லியில் உங்க எம்.டிக்குத் தெரிவிப்பேன், இது மிரட்டல் இல்லை” என்று எச்சரிக்கிறாள்.
தன் கணவனாக இருந்தாலும் தவறுகளைச் சுட்டிக் காட்டுகின்ற, அத்தகையவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கவும் தயாராகின்ற நேர்மையான பெண்ணாக விமலாவைப் படைத்துள்ளார் சூடாமணி.
தன்மானம்
ராஜாமணி பதினெட்டு வயதில் திருமணமாகி 21 வயதில் கணவனால் கைவிடப்பட்டவள். 51 வயது வரை தன் வாழ்க்கையைச் சிரமப்பட்டுக் கழித்தவள். பெற்ற குழந்தையை இழந்து, தந்தையை இழந்து, கணவனாலும் கைவிடப்பட்டு, சமையல் வேலை செய்து காலம் கழித்தவள். அவள் இறந்தபோது வீட்டுச் சொந்தக்காரர் மருமகன் கொள்ளி போடுகிறான். அப்போது ஒருவர், ராஜாமணியின் கணவர், அவனுக்கு நன்றி சொல்கிறார். ராஜாமணி என்ற அந்தப் பெண்ணின் தன்மானம், மரியாதை, கம்பீரம் அனைத்தையும் உணர வைக்கிறார் ஆசிரியர். இதுவரை யாரிடமும் சொல்லாத உண்மைகளை ராஜாமணியின் கணவர் சொல்கிறார்.
கணவனுக்காக அவள் மூன்றாண்டுகள் அவனுக்கும் சேர்த்து உணவு சமைத்து விட்டுக் காத்துக் கிடந்தாள். அந்த ஏமாற்றம் தந்த துயரம், விரக்தி இவற்றுக்கிடையே முப்பதாவது வயதில் அவளுடைய கணவன் அவளைத் தேடி வந்தபோது அவனைப் புறக்கணிக்க வைத்தது. அவள் கணவனுடன் சென்று வசதியாய் இருந்திருக்கலாம். தன் மனத்துக்குச் சரி என்று தோன்றியதற்கேற்ப முடிவெடுத்து ஏற்றுக் கொண்ட வாழ்க்கை என்பதை மரியாதைக்குரிய, கம்பீரமான அவளுடைய அந்தரங்க பொக்கிஷமாய் வைத்திருந்தாள். அவள் இறந்தபோது அவள் கணவன் தெரிவித்த பின்னரே வாசகர்க்கு உணர்த்தும் உத்தியில் ஒரு பெண்ணின் மனஉறுதி சாம்பலுக்குள் இருக்கும் தீக்கங்குபோல வெளிப்பட்டதை உணர்த்துகின்றார் சூடாமணி. (சாம்பலுக்குள். தினமணி மகளிர் மலர். 1997).
பிள்ளைகள் மனநிலை
திருமலாச்சாரி தன் நண்பரைப் பார்க்கச் சென்ற பொழுது அவர் முதியோர் இல்லத்தில் இருப்பது தெரிய வருகிறது. அவர் மகன் அவரைப் பற்றி மகா பிடிவாதக்காரர் என்றும், மற்றவர்களுடன் ஒத்துப் போவதில்லை என்றும் விமர்சிக்கிறான். ஆனால், நண்பர் சௌரியோ அப்பாவி, பரம சாது. அவரைப் பற்றிய அவர் மகன் மதிப்பீடும் முதியோர் இல்லத்திற்கு அவரை அனுப்பிய செயலும் நெஞ்சைப் பாரமாய் அழுத்த வீடு வந்து சேர்கிறார். மருமகள் அவரை அன்போடு விசாரிக்க ‘நான் கொடுத்து வைத்தவன்மா’ என்று நெகிழ்ந்து போகிறார். நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு என்பது போல், எல்லாப் பிள்ளைகளுமே பெற்றவர்களை முதியவர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கும் நன்றி கெட்டவர்கள் அல்லர், நல்ல பிள்ளைகளும் உண்டு என்ற உண்மையை உணர்த்துவது நண்பர் திருமலை கதை.
சிறுகதை யாருடைய விழிவழியே நோக்கப்பட்டுக் கூறப்படுகிறது என்பது நோக்கு நிலையாகும். அரச மரமே கதை சொல்வது போல வ.வெ.சு அய்யரின் குளத்தங்கரை அரச மரம் அமைந்திருக்கிறதல்லவா? சிறுகதையில் வாசகர் உணரும் வண்ணம் சிலவற்றைக் குறிப்பாகப் புலப்படுத்துவர். குறிப்பாக ஒன்றைப் புலப்படுவதற்குக் கையாளப்படும் கூறு குறியீடு எனப்படும். சிறுகதைகள் எல்லாவற்றிலும் குறியீடுகள் அமைந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. கனகாம்பரம், திரை ஆகிய இருகதைகளிலும் தலைப்பிலேயே குறியீட்டைக் கையாண்டுள்ளார் கு.ப.ரா. இனி, சூடாமணி கதைகளில் இந்தச் சிறுகதைக் கூறுகளைக் காண்போமா?
கூட்டுக் குடும்பம்
கூட்டுக் குடும்ப வாழ்வு அரிதாகின்ற இக்காலத்திலும் அன்பும் மனிதாபிமானமும் இருந்தால் அது சாத்தியமே என்பதை உறுதிப்படுத்தும் சிறுகதை நண்பர் திருமலை. இனிக்கும் இல்லறத்தை மேலும் இனிக்கச் செய்வன குழந்தைச் செல்வங்கள் அல்லவா? ஆனால் கமலாவும் ராஜுவும் புதிய உயிரின் வருகையால் தங்களுக்கு ஏற்படப் போகும் செலவினத்தை நினைத்து அஞ்சுகின்றனர். நம் திருமணம் காதல் திருமணம் என்பதால் நமக்கு நம் பெற்றோரின் உதவி கிடைக்கவில்லை. நாம் அதுபோல் இல்லாமல் நம் குழந்தை விருப்பப்படி வாழ நாம் குறுக்கே நிற்கக் கூடாது என்று முடிவு செய்கின்றனர். நம்ம குழந்தை என்று சொல்லும்போது ஏற்படும் அதிசய உணர்வில் பரிச்சய உலகத்தை மறந்து மகிழ்ச்சியில் ஆழ்வதை விளக்குவது கமல ராஜு (புதிய பார்வை – 1997).
“பின்னால் காலடியோசை ஒலிப்பது போல் இருந்தது. அவள் துணுக்குற்றாள்; அப்படியே நின்றாள். உற்றுப்பார்த்தாள். பிரமையா” – இப்படி இரவில் நடந்து போகும் ஒரு பெண்ணின் மனநிலையை உணர்த்துவதாகத் தொடங்குகிறது வேலை சிறுகதை. “வலது தோள் மலோக்கு. கருநீல நிறம். கையிரண்டில் வாளி, நீர், துடப்பம்” என்று வேலைக்காரப் பெண்ணின் வர்ணனையில் தொடங்குகிறது விஜயா என்னும் சிறுகதை.
‘மே மாதத் தொடக்கம்’ என்று கோடைக் காலத்தை அறிமுகப்படுத்தும் கோடைக் காலக் குழந்தைகள்.
“சிறகு இல்லாமல் பறக்க முடியுமா? ஒலி இல்லாமல் பாட முடியுமா? நள்ளிரவுக் கருமையை வானில் வண்ணங்களாய்க் காண முடியுமா? இவ்வளவையும் வாணி செய்தாள்” என்று – வாணியின் மகிழ்ச்சியான மனநிலையை வினாக்களாக்கித் தொடங்குகிறது அக்காவின் அறை என்னும் சிறுகதை.
வீம்பு என்னும் கதையில் “அப்பாவை ரேஷன் கடையில் பார்த்ததுமே பகீரென்றது. இளைத்துத் துரும்பாயிருந்தார். நாலே மாதங்களில் இத்தகைய வித்தியாசமா?” என்ற தொடக்கம், ‘அப்பா – மகன் மன வேறுபாடு; பிரிவு ஆனால் உள்ளத்தின் ஆழத்தே பாசம்’ என்று கதையின் உள்ளடக்கத்தையே சுருக்கித் தந்திருக்கிறது, “அக்கா ஒரு அலாதிப் பிரகிருதிதான்.” என்று தொடங்கும் சிறுகதை விசாலம். அவளுடைய பாத்திரப் படைப்பை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைக்கு அதையே கதையின் தொடக்கமாக வைத்தது பொருத்தமாக அமைகிறது.
ஆசை வழி மனம் செல்ல என்ற கதை விளம்பர மோகத்திற்கு ஒரு பெண் எந்த அளவு அடிமையாகிறாள் என்பதைச் சுவையாகச் சொல்கிறது. சரோ வீட்டு வேலை செய்யும் பெண். அவளுக்கு முறைப்பையனோடு திருமணம் நிச்சயமாகிறது. திருமணம் திடீரென நின்று போகிறது. சரோவின் அம்மாவிடம் வீட்டு எஜமானி காரணம் கேட்கிறாள்.
‘சரோஜா முறைப்பையனிடம் டி.வி. விளம்பரத்துல ஒரு அய்யா பெண்ஜாதிகிட்ட தன் ஆசையைக் காட்ட வைர மோதிரம் வாங்கி அந்தம்மா விரல்ல போட்டு விடறாரே அந்த மாதிரி நீயும் எனக்கு வைர மோதிரம் வாங்கிக் குடுத்தாத்தான் ஒன்னைக் கட்டிக்குவேன் என்று சொன்னாளாம்’ என்று முடிவடைகிறது. மேலே சொன்ன கதை 5 பக்கங்கள் வரும். இக்கதையின் புதிர் இந்தக் கடைசி வரிகளில் தான் விடுபடுகிறது. இந்த முடிவை வாசகர் ஊகிக்காத வண்ணமும், சரோ என்ன கேட்டதனால் திருமணம் நின்று போயிற்று என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கும் வண்ணமும் கதையைச் சுவையாகச் சொல்வது ஆசிரியரின் சிறப்பு.
பெரும்பாலும் சிறிய சிறிய தொடர்கள், மக்கள் பேச்சுவழக்கு, வாசகர்க்குத் தான் உணர்த்த விரும்புவதை எளிமையாக வெளிப்படுத்தும் திறன் இவரிடம் இருப்பதைக் காணலாம். மக்கள் பேச்சு வழக்கைப் பயன்படுத்தும் திறனைக் கீழ்க்காணும் வரியில் காணலாம்.
‘நேரம் விஷம்போல் ஏறிக் கொண்டிருந்தது’ (விட்டுட்டு விட்டுட்டு, பக்.136).
தத்துவம் கூடக் கதைப் போக்கில் எளிமையாகச் சொல்லப்படுவதைப் பாருங்கள்.
‘கவலைதான் எப்படி சுவாரஸ்யப் பேச்சுப் பொருளாகி விடுகிறது, கடந்து போன பிறகு’ (ராசாக்கண்ணு, பக்.153).
மனித உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாக வைத்துப் புனையப்பட்ட கதைகளிலும் பலப்பல வகையான உணர்வுகளைக் காணமுடிகிறது.
எளிமையான மொழிநடையைக் கையாண்டு வாசகர் மனம்கொள்ளச் சுவையாகக் கதை சொல்வது இவர் சிறப்பு. 50 ஆண்டுகளுக்கு மலோக நல்ல தரமான கதைகளைப் படைத்துக் கொண்டிருப்பவர். பல இதழ்களிலும், ஆண்டு தோறும் வெளிவரும் தீபாவளி மலர்களிலும் தொடர்ந்து படைப்புப் பணி செய்பவர். பிரச்சினைகளைப் பெரிதாக்கிக் காட்டாமல் எளிமையாகத் தீர்வு சொல்வதும் இவர் படைப்பின் சிறப்பு. இதனால் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார் என்பதை அறிய முடிகிறது.
பாடம் - 2
கமலம், சிவஞானம் என்பன இவருடைய நெடுங்கதைத் தொகுப்புகளாகும். நாலுவேலி நிலம், வடிவேல் வாத்தியார், டாக்டருக்கு மருந்து ஆகியவை இவர் படைத்த நாடக நூல்கள். மேலும் இவர் உதயசூரியன், நடந்தாய் வாழி காவேரி, கருங்கடலும் கலைக்கடலும் ஆகிய பயண நூல்களையும் படைத்துள்ளார்.
சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுதி 1979இல் சாகித்திய அகாதமி பரிசு பெற்றது. இத்தொகுதிக்கு இலக்கியச் சிந்தனைப் பரிசு 1984இல் கிடைத்துள்ளது. அக்பர் சாஸ்திரி சிறுகதைத் தொகுதி எட்டாம் பதிப்பாக 2002 இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
“உலகத்துச் சிறுகதைகள் எதனால் மேம்பட்டு விளங்குகின்றனவோ, அத்தகைய மேன்மை வாய்ந்த குணங்களைப் பெற்றவை தி.ஜா. கதைகள்” என்று பாராட்டுகிறார் ந.சிதம்பர சுப்பிரமணியன் (சிவப்பு ரிக்ஷா, முன்னுரை, ப.6).
எந்தக் கதையென்றாலும் மனித மன உணர்வுகளே அங்கு அடிப்படையாவதால் மனிதனே முக்கியத்துவம் பெறுகின்றான். இதனால்தான் இவருடைய சிறுகதைகளைப் பற்றி இரா.தண்டாயுதம் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இவருடைய கதைகளில் மனிதனே ஓங்கி நிற்கிறான். அவன் செல்வனோ, ஏழையோ, படித்தவனோ, படிக்காதவனோ, நல்லவனோ, கெட்டவனோ, அப்பாவியோ, சூழ்ச்சிக்காரனோ அது வேறு செய்தி. ஓங்கி நிற்பவன் மனிதன்தான்… பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கதைகளில் கூட மனிதர்கள்தாம் பளிச்சென்று தெரிகின்றனர்” (பாரதி முதல் சுஜாதா வரையில் ப.153).
அப்பாவியையும், சூழ்ச்சிக்காரனையும் இனம் காட்டுகிறது கங்காஸ்நானம் (சக்தி வைத்தியம்). நல்லாசிரியர் என்று ஊரே பாராட்ட அதில் மகிழ்ந்து நிற்கும் நேரம் முள்முடியை உணர வைத்த அனுபவம் கூறுவது முள்முடி (சக்தி வைத்தியம்). எப்படியும் வாழலாம் என்றிருக்கின்ற மனிதர்களை நமக்குக் காட்டும் ரசனையின் வெளிப்பாடு கோதாவரிக் குண்டு (சக்தி வைத்தியம்). மனிதனின் உள்ளும், புறமும் ஒரு சேர வெளிப்படுத்தும் ஆற்றல் தி.ஜா.வின் எழுத்துகளுக்கு உண்டு. இவர் கதைகளைப் படித்தால் இவ்வுண்மை புலனாகும்.
அக நோக்கு நிலையில் ஆசிரியரே கதை சொல்வது போல் அமைந்த சிறுகதை இது. ஐப்பானுக்குச் செல்கிறார் ஆசிரியர். நண்பர் கொடுத்தனுப்பிய ஜப்பானிய நண்பர்களின் முகவரியில் யோஷிகியின் முகவரியும் இருந்தது. யோஷிகிக்கு ஒரு கடிதம் எழுதி விட்டு கியாத்தோ நகருக்குச் செல்கிறார். அங்கு யோஷிகி ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டுக் காத்திருக்கிறார். யோஷிகி “ஜப்பான் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா” என்கிறார். ஆசிரியர் பதிலைப் பாருங்கள்.
“அழகான ஆரோக்கியமான நகரம் ஜப்பான். நான் ஜப்பானுக்கு வந்து இரண்டு மாதமாயிற்று. இன்னும் ஒரு நரைமயிரைப் பார்க்கவில்லை. ஒரு சிடு மூஞ்சியைப் பார்க்கவில்லை. எந்த ஒரு பஸ் ஸ்டாப்பிலும் ஒரு நிமிடத்துக்கு மேல் காத்திருக்கவில்லை. எந்தச் சாமானும் கெட்டுப்போகவுமில்லை. ஹிபியா பார்க்கில் உட்கார்ந்தவன் ஒரு பெஞ்சில் பர்ஸ், டயரி எல்லாவற்றையும் மறந்து சென்று விட்டேன். திரும்பி வந்து பார்த்தபோது அப்படியே இருந்தது. ரயிலில் போகும்போது யாரும் இங்கு கத்துவதில்லை. சிகரெட் பிடிப்பதில்லை. படிக்கிறார்கள், இல்லாவிட்டால் கண்ணை மூடிக்கொண்டு விடுகிறார்கள் “(யோஷிகி, ப.55 யாதும் ஊரே).
யோஷிகி ஊரைச் சுற்றிக் காண்பித்து விட்டு ஆசிரியர்க்கு மறக்க முடியாதபடி ஓர் அன்பளிப்பையும் கொடுத்து விட்டுச் சென்று விடுகிறார். அவரோடு ஊர் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவருடைய கடை ஒன்று தீப்பற்றி எரிந்து இருபதாயிரம் டாலருக்கு மேல் நஷ்டம் என்றும் அவருடைய தம்பிக்குத் தீக்காயம் என்றும் பின்னர்த் தெரிய வருகிறது. ஆனால் இதை யோஷிகி நண்பர்க்குத் தெரிவிக்கவில்லை. தம்பிக்கு உடம்புக்கு அதிகமாகிவிட்ட தென்றும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாங்காது என்றும் தகவல் வந்ததால் அவசர வேலை என்று சொல்லிச் சென்று விட்டார். பழைய காலத்து ஜப்பானியப் பண்பின் உருவமாகத் துக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அதை மென்று விழுங்கும் பண்பாளராக யோஷிகி படைக்கப்பட்டுள்ளார். இக்கருத்தைத் தெரிவிக்கும் அவர்கள் உரையாடலைப் பாருங்கள்.
“துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் மனம் ஆடக் கூடாது.
பொங்கி வழியவும் வேண்டாம்.சோர்ந்து மடியவும் வேண்டாம்.”
“அதற்காகச் செத்தால் கூடச் சிரிக்க முடியுமா?”
“அழுது மட்டும் என்ன ஆகிவிடப் போகின்றது?”
நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கும் என்பது போல் அமைந்த கதைகளில் ஒன்றுதான் கண்டாமணி (யாதும் ஊரே, ப.32). வீட்டிலேயே சமைத்துப் பல பேருக்கு உணவளிக்கும் தொழிலைச் செய்து வரும் மார்க்கம் என்பவர் மனம் ஒரு நாளில் படும் பாட்டினைச் சுவைபடச் சொல்கிறது இந்தச் சிறுகதை.
ஒருநாள் பள்ளிக்கூட விஞ்ஞான ஆசிரியரின் உதவியாளர் பசியோடு வருகிறார். அவருக்கு உபசரித்து உணவளித்த பின் குழம்பைத் தற்செயலாகக் கிளறிக் கரண்டியைத் தூக்கிய பொழுது அதில் சூட்டில் வதங்கிய பாம்புக் குட்டி! கணவன், மனைவி இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.
“இத்தனைக் காலமா மானமாக் காலம் தள்ளியாச்சே, இப்படிச் சோதனை செய்கிறாயே”, என்று மனைவி தெய்வத்திடம் முறையிட, மார்க்கம் “பஞ்ச லோகத்திலே கைநீளத்திலே கண்டாமணி வாங்கித் தொங்க விடறேன், சேதி பரவாமல் இருக்கணும்”, என்று வேண்டிக் கொண்டு அதன்படியே கண்டாமணி செய்து வைக்கிறார். ஊரெல்லாம் அந்த மணியின் அழகையும், அதன் ஒலியையும் புகழ்ந்தார்கள். ஆனால் மார்க்கத்திற்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை. மணி அடிக்கும் பொழுதெல்லாம் அந்த மணி ஓசையில், இறந்து போன ஐராவதமே காட்சி அளிக்கிறார். மணி அலையில் ஐராவதம் வருவதைப் பொறுக்க முடியாமல் தர்மகர்த்தா வீட்டுக்குப் போகிறார். “செட்டியார்வாள் அந்த மணியோசை கேட்கிற போதெல்லாம் நாமதான் பண்ணி வச்சோம்னு அகங்காரம் வந்து நிற்கிறது. அதனால் கண்டாமணியை நான் எடுத்துப் போய்விடுகிறேன். அதே பெறுமானத்துக்குச் சின்னதாக நாலஞ்சு வெள்ளி மணி பண்ணி வச்சிடலாம்னு பார்த்தேன்” என்கிறார்.
‘வெள்ளிமணி பண்ணி வையுங்க. வேண்டாங்கல, இதைத் திருப்பி எடுத்துக்கிட்டுப் போவதாவது, யாராவது கேட்டா சிரிப்பாங்க’ என்று பிடிவாதமாக மறுத்து விடுகிறார். மார்க்கம் சோர்ந்து வீட்டுக்குத் திரும்புகிறார். கோவிலில் ஒலித்த மணி ஓசை ‘கணார்’ என்று அவர்மீது அதிர்ந்தது. ‘முழுச்செவிடர்கள் எப்படியிருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்க்க முயன்றார் அவர்’ என்று கதை நிறைவு பெறுகிறது. மார்க்கத்தின் சோகத்தை, பிறரிடம் சொல்ல முடியாத அந்த வேதனையை, முழுச் செவிடர்கள் எப்படியிருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்க்க முயன்றார் என்று வேடிக்கையாய் வெளிப்படுத்தும் தி.ஜா.வின் தனித்தன்மையை இங்கே காணலாம். எதை மறக்க வேண்டும் என்று மார்க்கம் நினைத்தாரோ அதை மறக்கவே முடியாதபடி தாமாகவே ஒரு செயல் செய்ய நேர்ந்த சூழலை இவ்வாறு வெளிப்படுத்துகிறது கண்டாமணி.
“இது ஏதுடா காலண்டர்”
“நான்தாண்டா வாங்கிண்டு வந்தேன் மண்ணெண்ணைக் கடை நாயக்கர் கிட்டேயிருந்து”
“ரொம்ப நன்னாருக்குடா என்ன விலைடா இது?”
“விலைக்குக் கொடுக்கமாட்டா தெரிஞ்சவாளுக்கு மட்டும் இனாமாக் கொடுப்பா.”
இப்படி ஒரு அழகான காலண்டருக்குச் சொந்தக்காரனாக ஆகிவிட்ட சிறுவன் எதிர் வீட்டு நண்பர்களிடம் தான் அதைத் தினமும் கடையில் பார்த்து ரசித்ததையும், முதலாளி தனக்கு அதைக் கொடுத்து விட்டதையும் சொல்கிறான். “இது எவ்வளவு அழகா இருக்கு பாருடா, இதைப் பார்த்துக்கிட்டே நிக்கணும்போல் இருக்குடா” என்று ரசித்துச் சொல்கிறான். நண்பனோ குள்ளநரி, பேச்சை மாற்றிவிட்டு “நான் ஒன்று சொல்கிறேன். அது மாதிரி செய்வாயா” என்று கேட்கிறான். சிறுவன் யோசிக்கிறான். பக்குவமாகச் சிறுவனிடம் வார்த்தைகளைப் பேசிவிட்டுத் தான் கேட்பதைச் சத்தியமாக, சாமி சாட்சியாகக் கொடுப்பதாக வாக்குறுதி பெற்றுக் கொண்டு, காலண்டரைக் கேட்கிறான். சிறுவன் திடுக்கிட்டாலும் காலண்டரைக் கொடுத்து விடுகிறான்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டே வந்த தந்தை குமுறுகிறார். சத்தியம் வாங்கிக் கொண்டு காலண்டரை அடித்துக் கொண்டு போய்விட்டானே என்று பொருமுகிறார். மகனிடம் அவனைப் போலவே தந்திரமாகப் பேசி அதைத் திருப்பி வாங்கச் சொல்கிறார். சிறுவன் செல்கிறான். தயங்கித் தயங்கி அவனைப்போலவே வாக்குறுதியெல்லாம் வாங்கிவிட்டு, காலண்டரைக் கேட்காமல் ரப்பர்த் துண்டைப் பெருமையோடு வாங்கிக் கொண்டு வருகிறான். தந்தையிடம், ‘இது மையெல்லாம் அழிக்கும்’ என்று பேசுகிறான். தந்தை ‘காலண்டரை ஏன் கேட்கவில்லை’? என்கிறார்.
“எப்படிப்பா கேக்கிறது?”
“அவன் கேட்ட மாதிரியே கேக்கிறது”
“எனக்குப் பயமாயிருக்கு”
“ஏன்?”
“கொடுத்தப்புறம் எப்படீப்பா கேக்கிறது?”
தந்தை பின்னர் மனைவியிடம் அங்கலாய்க்கிறார். “இந்த மாதிரி தெய்வங்கள்ளாம் இந்த பூமியிலே ஏண்டி பிறக்கறதுகள்? இது கெட்டிக்கார உலகமாச்சே!” தந்தையைப் போலவே இக்கதை படிக்கும் நம் உள்ளத்திலேயும் அன்பும் இரக்கமும் அந்த அசட்டுப் பையன்மேல் ஏற்படுகிறதல்லவா? எதிர்வீட்டுச் சிறுவனிடம் காணப்படும் ஏமாற்றும் குணம் அவன் பெரியவனாகும் போது எப்படியிருக்கும் என்று கற்பனை செய்வது போல் எழுதப்பட்ட கதைகள் கடன் தீர்ந்தது (சிவப்பு ரிக் ஷா) கங்கா ஸ்நானம் (சக்தி வைத்தியம்) ஆகியன.
கடன் தீர்ந்தது கதையில் வரும் அறுபது வயது சுந்தர தேசிகர் அப்பாவி, ஏமாளி. அயோக்கியன் ராம்தாஸிடம் ஏமாந்து போகிறார். குழி பதினைந்து ரூபாய் மதிப்புள்ள நிலங்களை நாலரை ரூபாய்க்கு வாங்கித் தருவதாக ஆசை காட்டி ஏமாற்றி விடுகிறான். ராமதாஸை நம்பிய சுந்தர தேசிகரிடம் சிறிது சிறிதாக அவர் சொத்தையெல்லாம் விற்கச் செய்து அந்தப் பணத்தையெல்லாம் வாங்கிக்கொண்டு விடுகிறான். எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார் தேசிகர். தேசிகருக்கு ஆறுதல் கூறும் உறவினர் ராமதாஸ் மேல் வழக்குப் பதிவு செய்கிறார். வழக்கு முடியும் தறுவாயில் ராமதாஸ் பணத்தையெல்லாம் செலவழித்து விட்டு உடல்நலம் குன்றி மரணப் படுக்கையில் கிடக்கிறான். அப்போது சுந்தர தேசிகர் அவன் வீடு தேடி வருகிறார். அவனிடம் “எந்தத் தப்பு, குத்தம் பண்ணினாலும் அதுக்குப் பிராயச்சித்தம் பண்ணி இந்த உடம்பையும், நெஞ்சையும் வருத்தித்தான் ஆகணும் மனுஷன். இல்லாட்டா பாவம் பின்னாலே வந்து வந்து அறுக்கும். நம்ம சாஸ்திரங்கள்லே வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்காமச் செத்துப் போகக் கூடாதுன்னு சொல்லியிருக்கு. இப்ப உன் கடனை நீ தீத்துப்பிடனும், நானும் பாக்கி இல்லேன்னு மனசாரச் சொல்லிடனும். உன் கையில் இருக்கிறது ஏதாவது கொடு. ஒரு ரூபா கொடுத்தாலும் போதும் உன் கடன் தீந்து போச்சுன்னு லோகமாதா ஆணையாச் சொல்லிப்பிடறேன்” (சிவப்பு ரிக் ஷா, ப.56) என்கிறார். அழுது கொண்டே அவன் மனைவி இரண்டணாவைக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு “உன் கடன் தீர்ந்தது” என்கிறார். தன்னை வஞ்சித்ததைச் சகித்துக்கொண்டு பொறுமையாக, பெருந்தன்மையாக இருப்பதே அரிது. அதைவிட மேலாகச் சென்று, ஏமாற்றியவனைப் பாவம் தொடரக் கூடாது என்று நினைக்கும் செம்மை மனமுடையவராய் உயர்ந்து நிற்கிறார் சுந்தர தேசிகர், மனித மனத்தின் உயர்வை இதைவிடச் சிறப்பாகக் காட்ட முடியுமா?
காவிரிக் கரையில் வாழும் குஞ்சு முதியவர். அண்மையில் தாயைப் பறி கொடுத்தவர். மனிதாபிமானம் மிகுந்தவர். தாயைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியிருந்தவரைச் சோகமாக வந்த ஓர் இளைஞன் சந்திக்கிறான். அவரை நமஸ்கரித்து மிகவும் பணிவாக அவர் மகனுடன் வேலை பார்ப்பவன் என்று கூறுகிறான். முதியவர் தம் நண்பரின் அண்ணன் மகன் அவன் என்பதையும் தெரிந்து கொள்கிறார். வந்தவன் கண்களில் நீர் வழிய, ‘குழந்தைக்கு முடியிறக்குவதற்கு அம்மா, மனைவியுடன் வைத்தீஸ்வரன் கோவில் வந்தேன். வந்த இடத்தில் அம்மா கீழே விழுந்து அடிபட்டதால் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். கையில் பணமில்லை யாரையும் தெரியவில்லை’ என்று கலங்கி நிற்கிறான். குஞ்சுவும் அவனுக்கு ஆறுதல் கூறிக் கையில் காசில்லாத நிலையிலும் பக்கத்தில் கடன் வாங்கி 20 ரூபாய் கொடுக்கிறார். இது போன்ற சமயங்களில் உதவுவதுதானே மனித இயல்பு என்று, மாலையில் அவர்களுக்கு வேண்டிய உணவையும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு செல்கிறார். அவன் சொன்ன மருத்துவ மனையில் அப்படி யாரும் இருக்கவில்லை. பக்கத்தில் இருந்த மருத்துவ மனைகளிலும் விசாரித்து விட்டு வீட்டுக்குச் செல்கிறார்.
இரவே மகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். நாலாம் நாள் அதற்குப் பதில் வருகிறது. “விவரம் யாவும் தெரிந்து கொண்டேன். ராமநாதன் அளவுக்கு மீறின புத்திசாலி. போன வருடமே அவனை வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். வேலை வாங்கித் தருகிறேன் என்று 30,40 பி.ஏ; எம்.ஏக்களிடம் 100, 200 என்று வாங்கிக் கொண்டானாம். அவன் அப்பா, சித்தப்பாவின் நண்பர்களிடம் இதேபோல் கடன் வாங்கிக் கொண்டு போய்விட்டான். கவலைப்பட வேண்டாம். அந்தப் பணம் திரும்பி வராது. இருபது ரூபாயோடு போயிற்று. இனிமேல் யாராவது கேட்டால் தீர விசாரியாமல் கொடுக்க வேண்டாம். ராமநாதனுக்கு இன்னும் கலியாணமாகவில்லை. தாங்கள் வருத்தப்பட வேண்டாம்.” என்ற கடிதத்தைக் கண்டதும் ‘பேஷ்’ என்றார். “நம் பிள்ளையும் நம்ம மாதிரிதான் இருக்கான்னேன்” என்று கடிதத்தை மனைவிக்கு வாசித்துக் காட்டினார். தன்னை ஒருவன் ஏமாற்றி விட்டானே என்ற கோபத்தை விடத் தன் மகன் தன்னைப் போல் இருப்பதில் திருப்தி அடைவதாகக் காட்டுவது தெரிகிறதல்லவா? இத்தகைய மனிதப் பண்பு உடையவர்கள்தானே மனித வாழ்க்கையின் உயர்வை இவ்வுலகிற்கு உணர்த்துகிறார்கள்!
இத்தகைய பெருமித உணர்வுக்கு எதிரான பொறாமை உணர்வு ஒரு மனிதனை எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் கதை பாயசம் (பிடி கருணை, ப.33).
77 வயது சாமநாது, 7 பெண்களைப் பெற்றும் லட்சாதிபதியாக வாழ்கின்ற அண்ணன் மகன் சுப்பராயனைப் பார்த்துப் பொறாமைப் படுகிறார். இளவயதில் வறுமையில் உழன்று படிப்பையே நிறுத்தியவன்; அலைந்து, திரிந்து உழைத்து இன்று பெரிய மனிதன் ஆகிவிட்டான். ஊரில் அவனுக்குள்ள செல்வாக்கைக் கண்டு பொறாமைத் தீயில் வெந்து சாகிறார் சாமநாது.
சுப்பராயன் மகள் திருமணத்திற்கு உறவினர் எல்லாரும் வந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கப் பார்க்க சுப்பராயன் மீது பொறாமை அதிகரிக்கிறது. திருமணத்துக்கு அழைக்கிறார்கள். நாயனம் வாசிக்கப்படுகிறது. சாமநாதுக்கு மூச்சு முட்டிற்று. கொல்லைப்புறம் நடந்தார். கடைசிக் கட்டில் கோட்டை அடுப்புகள் எரிகின்றன. சாக்கு மறைவில் ஒரு பயல் வெள்ளரிப் பிஞ்சு நறுக்கிக் கொண்டிருக்கிறான். வேறு ஒரு பிராணி இல்லை. ஒரு தவலையில் பாயசம் மணக்கிறது. வயிறளவு உயரம். ஐந்நூறு அறுநூறு பேர் குடிக்கிற பாயசம். ‘நான் ஒண்டியாகவே கவிழ்த்து விடுவேன்’ இரண்டு கைகளைக் கொடுத்து மூச்சை அடக்கி மேல் பக்கத்தைச் சாய்த்தார். பாயசம் சாக்கடையில் ஓடிற்று. அரிவாள் மணையை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறான் சிறுவன்.
“எங்கே போயிட்டேள் எல்லோரும் இத்தனை பெரிய எலியைப் பாயசத்திலே நீஞ்ச விட்டு? இத்தனை பாயசத்தையும் சாக்கடைக்கா படைச்சேள்? மூடக் கூடவா தட்டு இல்லே?” இந்தக் கூப்பாட்டுக்கு முன் யார் என்ன பேச முடியும்? பொறாமைப் பேய் எப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறது என்பதைச் சொல்கிறது இந்தக் கதை.
“ஓய் வக்கீலே! நீர் நன்னா இருப்பீரா? இலையில் உட்கார்ந்தவனை எமதூதன் மாதிரி தள்ளிண்டு வந்தீரே!”
“ஏய்! போறயா நொறுக்கி விடட்டுமா”
“போறேன் போறேன். ஆனால் திரும்பி வருவேன். அடுத்த மாசம் இதே தேதிக்கு உம்ம வீட்டிலேயே சாப்பிட வரேன். நீர் அழுது கொண்டே போடற சாப்பாட்டுக்கு வரேன் பார்த்துக்க”
அவன் வாக்குப் பலித்து விடுகிறது. வக்கீலின் பிள்ளை மாரடைப்பினால் இறந்து போகிறான். வக்கீலின் அகங்காரம் தவிடு பொடியாகிறது.
அடுத்த மாதம் வருகிறான். வக்கீல் அவனிடம் “உம் வாக்குப் பலித்து விட்டது! நீர் சாபமிட்டீர்” என்கிறார்.
“என் பசி சாபமிட்டது”
“நீர் பெரிய அறிவாளியாக இருப்பீர் போலிருக்கிறது. ஏன் இப்படிச் சோற்றுக்கு அலைகிறீர்.”
“அறிவு இருந்தால் பிச்சை எடுக்காமல் இருக்க முடியுமா?”
“நீர் சொல்வது எனக்குப் புரியவில்லை”
“எப்படிப் புரியும்? உம்முடைய அகங்காரம் அவ்வளவு லேசாக, பஞ்சையாக இருக்கிறது. அந்தத் தெம்புக்கு அஸ்திவாரமான அன்பு உம்மிடம் இல்லை. துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால் அது கம்பீரமாக நிற்கும். உம்முடைய அகங்காரத்துக்கு நான் சொன்ன வலுவில்லை. இருந்தால் மோட்டார், ஆயிரம் வேலி, வைரக்கடுக்கன், இந்தப் பரதேசி எல்லாவற்றையும் சேர்த்து உட்கார வைத்துக் கண் நிறைய உள்ளம் நிறைய ஆனந்தமடைந்திருப்பீர். மோட்டார், வைரம் இதற்கப்பால் உம் அகங்காரத்திற்குக் கண் தெரியவில்லை”. அண்ணா சூன்யத்தைப் பார்த்துக் கொண்டு தேம்பினார். அவருக்கு, வந்தவன் பரதேசியாகத் தோன்றவில்லை, பரம்பொருளாகவே தோன்றுகிறான். “காலதேவரே உட்காரும்” என்கிறார். மனிதனின் அகங்காரமும், ஆணவமும் பொடிப்பொடியாவதைச் சித்திரிக்கும் சிறுகதையாகப் பரதேசி வந்தான் அமைந்து விடுகிறது.
இனி கோவிந்தராவ் என்கிற அப்பாவி மனிதரைப் பார்க்கலாம். “கீழே நாலு முழத்தில் ஒரு சிவராயர் கலர் போட்ட அழுக்கு வேஷ்டி, கோடிக்கணக்கில் இட்டிலிகளுக்கும் தோசைகளுக்கும் சட்னிகளுக்கும் அரைத்துக் கொடுத்த உடம்பு” (அக்பர் சாஸ்திரி, ப.123). இந்த கோவிந்த ராவ் ஆறு குழந்தைகளுக்குத் தந்தை. ஏழாவது குழந்தைக்காக மனைவி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறாள். ஆம்புலன்சுக்குப் போன் செய்து விட்டுக் காத்துக் கொண்டிருக்கிறார் கோவிந்தராவ். இனி ஆம்புலன்சு வந்து வீட்டு வாசலில் நின்று தன் சம்சாரத்தை ராஜோபசரமாக அழைத்துப் போய் வைத்தியம் செய்கிற பெருமையில் இருக்கிறார். ஆம்புலன்சு வருவதற்குள் குழந்தை பிறந்து விடுகிறது. ஆம்புலன்சு வந்தபோது இனி வேண்டாமென்று மறுத்து விடுகிறார். “இந்தத் தடவை ரொம்ப லேட்டாப் போயிடுத்து. இனிமே அடுத்த பிரசவத்துக்கு இரண்டு நாள் முன்னாடியே சொல்லி வச்சுப்பிடனும் என்கிறார்” கோவிந்தராவ். இந்த அப்பாவித்தனத்தின் எல்லையைக் கண்டு நம்மால் நகைக்காமல் இருக்க முடியுமா?
தமிழ் தெரியாத வெள்ளைக்காரன் போல்ஸ்க்கா, நாதஸ்வரத்தில் கீர்த்தனைகள் அல்லாமல் திரையிசைப் பாடல்களை வாசிப்பதை ஒத்துக்கொள்ள முடியாத நாதஸ்வர வித்வான் தங்கவேலு, இரண்டையும் வாசிக்கத் தெரிந்தவனான தங்கவேலுவின் மகன் இவர்கள் செய்தி சிறுகதையில் வரும் கதை மாந்தர்கள்.
தங்கவேலு தியாகையரின் சாந்தமுலேகாவை வாசித்த போது வெள்ளைக்கார போல்ஸ்க்கா அந்த இசையில் தன்னையே பறிகொடுத்தவனாய் ‘சாந்தமுலேகா’வையே திரும்பத் திரும்ப வாசிக்கச் சொல்கிறான். கோயில் மணியின் கார்வையைப் போல் அந்த நிசப்தத்தில் அவன் தலையும், உள்ளமும், ஆத்மாவும் அசைந்து ஆடிக்கொண்டிருந்தது.
“இதில் ஏதோ ஒரு செய்தி இருக்கிறது. இந்த உலகம் முழுவதும் ஒரே இரைச்சல். ஒரே கூச்சல். ஒரே அடிதடி. புயல்வீசி மரங்களை முறிக்கிறது. அலை உயர உயர எழுந்து குடிசைகளை முழுக அடிக்கிறது. இடி விழுந்து சாலையின் மரங்கள் பட்டுப்போகின்றன. இந்த இரைச்சலில் நான் மட்டும் அமைதியைக் காண்கிறேன். அரவமே கேட்காத உயரத்திற்கு எழுந்து அங்கே அமைதியைக் கண்டு விட்டேன்”. வெள்ளைக்காரனுடைய இந்தப் பேச்சை மொழி பெயர்த்துச் சொன்ன போது தங்கவேலு ஆச்சரியப்பட்டுப் போகிறார். “நம்ம தியாகராஜ சுவாமியும் அமைதி வேணும்னு தானே, சாந்தம் வேணும்னு தானே இந்தக் கீர்த்தனத்திலே ஏக்கத்தோடு கேட்டிருக்கார்.” அமைதி அமைதி என்று கடைசி லட்சியமாக இந்தப் பாட்டு இறைஞ்சுகிறது என்பதைக் கேட்டு போல்ஸ்காவும் அதிர்ந்து போய்விட்டான். தங்கவேலுவுக்கும் ஒரு செய்தி கிடைத்து விட்டது என்று கதை நிறைவு பெறுகிறது. இக்கதை மொழிவேறுபாட்டுக்கு இடையிலும் இசையின் மொழி ஒன்றாகவே இருக்கிறது; இசை ஒன்றுபட்ட உணர்வை உண்டாக்குகிறது என்பதை எவ்வளவு எளிமையாக உணர்த்துகிறது பாருங்கள்.
இசைப்பயிற்சி சிறுகதையில் வரும் குப்பாண்டி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன். அவனுடைய குரல் வளத்தையும், இசை ஞானத்தையும் பார்த்துப் பிரமித்த வித்துவான் மல்லிகை அவனுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கத் தீர்மானித்து விடுகிறார். “குப்பாண்டிக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கப்போகிறீர்களாமே?” என்று ஊரெல்லாம் துக்கம் விசாரிக்கிறது. “வீட்டுக்குள்ளே வைத்துப் பாட்டுச் சொல்லித் தருவீரா” என்றவுடன் ஆண்டாண்டுக் காலமான பழக்கம், அச்சம்,குழப்பத்துக்கு இடையில் கொல்லைப் புறத்திலே வைத்துச் சொல்லிக் கொடுக்கிறார். “மீசையிலே படாம கூழ் குடிச்சாச்சு” என்கிறார் கர்ணம். கோபம் தலைக்கேறுகிறது. “நாளைக்கு உள்ள வச்சிண்டு பாடம் சொல்றேனா இல்லையா பாருங்கடா ஒழிச மக்களா” என்று சுருதிப் பெட்டியை வீசி எறிகிறார். இசையார்வம் பொய்ச் சம்பிரதாயங்களை மீறிக் கொண்டு செல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மல்லிகையின் முயற்சிகளையும், அதில் அவர் படும் துன்பங்களையும் இக்கதையில் காணலாம்.
நகைச்சுவை
தி.ஜா.வின் சிறுகதைகளில் நகைச்சுவை இயல்பாக அமைந்திருப்பதைக் காணலாம். முழுவதும் நகைச்சுவையாக எழுதப்பட்ட கதைகளும் உண்டு.
78 வயதுக்கிழவர் தம் 98 வயதுத் தந்தையுடன் ஓய்வூதியம் வாங்கச் செல்கிறார். தம்முடைய மகன் (நான்காண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர்) காசிக்குச் சென்றிருப்பதால் நான்காம் வீட்டில் இருக்கும் உதவிப் பதிவாளர் மகனைத் துணைக்கு அழைத்துச் செல்கிறார். அவன் வயது முதிர்ந்த கிழவர்களுக்குத் துணையாக இருந்து அவர்களை மாட்டு வண்டியில் அழைத்துச் செல்கிறான். திரும்பி வரும்போது வண்டி குடைசாய்ந்து விட இளைஞனுக்குப் பலத்த அடி. மருத்துவ மனைக்குச் சென்று கட்டுப் போட்டுக் கொண்ட அவனுக்குத் துணையாக வந்தார்கள் கிழவர்கள் என்று முடியும் கதைக்குத் துணை (அக்பர் சாஸ்திரி, ப.14) என்பது தலைப்பு. இவ்வாறு நகைச்சுவையோடு எழுதும் தி.ஜா.வைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
தம் சிறுகதைகளில் எல்லா வகையான கதைமாந்தர்களையும் தி.ஜா. படைத்துள்ளார். பெருநிலக்கிழார்கள், செல்வர்கள், வறியவர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சிறுவர்கள், துறவிகள், ஆண்டிகள், பரதேசிகள், தாசிகள் என்று தொடரும் கதை மாந்தர்களில் புத்தர், கருவூர்த் தேவன், இராவணன் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.
அப்பாவித் தனத்தின் எல்லையிலும், சூழ்ச்சித் திறத்தின் எல்லையிலுமாக இருவேறு துருவங்களான கதை மாந்தர்களைப் படைத்துக் காட்டுவது இவர் சிறப்பு. பேராசைக்காரர்களையும், பொறாமைக்காரர்களையும் எத்தர்களையும், ஏமாற்றுபவர்களையும், வாய்ச்சொல் வீரர்களையும் படம் பிடித்துக் காட்டுவதுபோல் துல்லியமாகக் காட்டுவது இவர் தனிச்சிறப்பு. உலகில் நாம் காணும் உண்மை மனிதர்களாகவே அவர்கள் தோன்றுவர். இச்சிறப்பினால் இவர் படைக்கும் கதை மாந்தர்கள் பலர் வாசகர் மனத்தில் பதிந்து விடுகின்றனர்.
இவருடைய பாத்திரப் படைப்பின் வெற்றிக்கு முதல் காரணமாக அமைவது கதை மாந்தரைப் பற்றிய முழு வர்ணனை. அடுத்ததாக உரையாடல் திறனைக் குறிப்பிடலாம். சிறப்பான வெளியீட்டு நெறியாக இவர் உரையாடலைப் பயன்படுத்துகின்றார். “தி.ஜா. உரையாடல்கள் மூலமே பாத்திரங்களின் இயல்பையும் ஈடுபாட்டையும், தவிப்பையும், விழிப்பையும் சுட்டிக்காட்டுகிறார்” என்கிறார் க.நா. சுப்பிரமணியம் (நாவல் விமர்சனம், ப.89).
“உரையாடலில் இவர் கையாளும் மௌன இடைவெளிகள் இவருக்கு மட்டும் கைவந்த சிறப்பான உத்தி. மிகவும் இக்கட்டான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட கதை மாந்தர் என்ன சொல்லி விடுவாரோ என்று வாசகர் திகிலுடன் எதிர் நோக்கும் நேரங்களில் அந்த ஆணோ, பெண்ணோ ஒன்றும் பதில் சொல்லாமல் இருப்பது மூலமே எவ்வளவோ சொல்லும் ஜால வித்தை ஜானகிராமனின் தனிப்பட்ட உத்தியாகப் பரிணமித்து விடுகிறது” என்கிறார் சிட்டி (சிட்டி இலக்கியத் தேடல் – நளபாகம்).
கதை மாந்தரை வர்ணிப்பதற்கு ஒரு சான்று பாருங்கள் “பார்த்தால் ‘பாவம்’ என்று இரக்கப்பட வேண்டும் போலிருக்கும். அப்படி ஒரு தயவை எழுப்புகிற தோற்றம். கட்டை குட்டையான உடல்; சற்று உருண்டையாக, பூசினாற்போலிருக்கும், உருண்டைத் தலை வழுக்கை. பின் உச்சியில் பூனை மீசை மாதிரி எண்ணி ஐந்தாறு நரைமயிர்கள். கண்ணுக்கு ஒரு வெள்ளி பிரேம் மூக்குக் கண்ணாடி. எப்போதும். ஒரு மோட்டா அரைக்கைக் காக்கிச் சட்டை. நடக்கிறபோது கூடக் குழந்தை நடக்கிற மாதிரி இருக்கும். மேலே பார்த்துக்கொண்டு அடிப்பிரதட்சிணம் செய்வது மாதிரியான நடை” (கண்டாமணி,யாதும் ஊரே ப.33 ) -நேர்முக வர்ணனை செய்வது போல் இருக்கிறதல்லவா!
கதை மாந்தர் பண்பினை எளிமையாகவும், அழுத்தமாகவும் பெரும்பாலான சமயங்களில் நகைச் சுவையாகவும் சொல்வது இவருக்குக் கைவந்த கலை. ஒரு சிறு நிகழ்ச்சியிலேயே கதை மாந்தர் பண்பை அளவிட்டுச் சொல்லும் ஆற்றலும் இவருக்கு உண்டு. மனிதாபிமானம் சிறுகதையில் ஒரு காட்சியைப் பாருங்கள்!
மனைவிக்கு வாங்கிக் கொடுத்த கைக்கடிகாரம், வாங்கிய ஒரு மணி நேரத்தில் ஆட்டோ ரிக் ஷாவில் நழுவி விழுந்து விட்டது. “கையிலே வாட்ச் இருக்கா பாத்தியானு நீங்களாவது சொல்ல மாட்டேளோ? உங்களுக்கு சங்க ஞாபகம்தான்” என்று அவருக்குக் குழி வேறு பறித்தாள் அவள். அது அவள் சுபாவம். “வாழைப்பழத் தோலில் சறுக்கி அவள் விழுந்தால் கூடச் சுற்றி இருப்பவர்கள் தொலியை முன்னாலேயே பார்த்து அவளை எச்சரித்திருக்க வேண்டும் என்பது அவள் பார்வை” (மனிதாபிமானம், ப.3-4). இனி தி.ஜா.படைத்த விந்தை மாந்தர்களைப் பார்ப்போமா?
மாலை அலுவலகம் சென்று திரும்பும் வழியில் தத்தோஜி ராவ் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, “என்ன இங்கே நிற்கிறீர்!” என்றார்.
“என் சம்சாரம் மூணுமணி ஆட்டத்திற்குப் போயிருக்காள். அவளை அழைச்சிண்டு போக வந்தேன்”.
“நீர் கூடப் போக வேண்டாமோ?”
“இல்லை சார். ரெட்டிப் பாளையத்திலிருந்து காலையில் ஒரு பெண் மல்லிகைப்பூ கொண்டு வந்தா. என் சம்சாரம் ஒரு சேர் வாங்கிப்பிட்டா. உள்ளே காசில்லை. அப்புறம் ஏதோ பாத்திரத்தை வச்சு ஒரு ரூபா வாங்கிண்டு வந்தா. மல்லிப்பூ பத்தணாதான் மீதி ஆறணா இருந்தது. என்ன செய்யலாம்னு கேட்டா.”
“புதுப்படம் இன்னிக்கு வருதாமே. பாத்திட்டு வாயேன்னேன். சரின்னு புறப்பட்டு வந்தா. அழச்சிண்டு போக வந்தேன்”
இவர்கள் விந்தை மனிதர்கள் தாமே!
மருத்துவமனை நோயாளியாய் இருந்து கொண்டே காசு சம்பாதித்து ஊருக்கு அனுப்பும் ராமன் நாயர் (நான்தான் ராமன் நாயர் – சிவப்பு ரிக் ஷா, ப.182), கேட்டவருக்கெல்லாம் இரக்கப்பட்டுப் பணம் கொடுத்து அதைத் திரும்பப் பெற முடியாமல் ஏமாந்து நின்று ஆத்திரப்பட்டாலும் தொடர்ந்து அதையே செய்து வரும் கிருஷ்ணன் (கள்ளி – அக்பர் சாஸ்திரி), ஆசையாய் வளர்த்த தம்பி சொத்தைப் பிரிக்கும் போது, தனிக்கட்டையாய் இருந்த அண்ணனுக்கு ஒரு பாகமும், அப்போதுதான் திருமணமான தனக்கு இரண்டு பாகமும் கேட்டதால், திடீரென்று ஒரு கேரளப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விடும் அண்ணன் கிட்டன் (அர்த்தம் – அக்பர் சாஸ்திரி) – இவர்களெல்லாம் விந்தை மனிதர்கள் தாமே!
கதை நிகழ்களம் ஓடுகின்ற புகைவண்டி. “மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டு விட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று பையை நகர்த்திவிட்டு என் இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தது. குரலாவது குரல்! தொண்டைக்குள் வெண்கலப் பட்டம் தைத்த குரல். அதிகாரமும் வயசான பெருமையும் எக்களித்துக் கொண்டிருக்கிற குரல்”. இப்படித் தொடங்கும் அக்பர் சாஸ்திரி சிறுகதையில் இவ்வாறு அறிமுகம் செய்யப்படும் குரல் அக்பர் சாஸ்திரியின் குரல். ஆசிரியர் அவரை வர்ணிப்பதைப் பாருங்கள்.
“ஆள் ஆறடி உயரத்துக்குக் குறைவில்லை. இரட்டை நாடியில்லை. ஆனால் ஒல்லியுமில்லை. சாட்டை மாதிரி முறுக்கு ஏறிய உடம்பு. நேரான உடம்பு. உட்கார்ந்திருந்த போது கூட வளையா நேர் முதுகு. கறுப்பில்லை, மாநிறமுமில்லை, அப்படி ஒரு கறுப்பு – நீள மூக்கு, நீளக் கைகால். குரலில் தெறித்த அதிகாரத்திற்கேற்ற உடம்புதான்.” “எனக்கு மதுரை கோவிந்த சாஸ்திரின்னு பேரு. அட்வகேட்டாயிருக்கேன். ஒரு கேஸ் விஷயமா பட்டணம் போயிட்டு வரேன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர், சற்று நேரத்தில் தன்வந்திரி போல் வைத்தியக் குறிப்புகள் கூறி அனைவரையும் தன் வசப்படுத்தி விடுகிறார். தன்வந்திரி சித்தர்கள் எல்லாரும் அவர் மேல் கருணை கொண்டு இரண்டாம் வகுப்பில் சக பிரயாணியாய் வந்தது போல் அவர் செயல்பட்டு அனைவரையும் கவர்ந்து விடுகிறார். உடல் ஆரோக்கியம் மிகுந்த அவர் டாக்டருக்காக ஒரு பைசா கூடச் செலவழிக்காதவர். மற்றவர்களிடம் பொறாமை உணர்வைத் தூண்டும் வண்ணம் அமைந்திருந்த அவர் வாழ்க்கை அவரைப் போலவே சுறுசுறுப்பாகச் சென்று, முடிந்தே போகிறது. திருவிடை மருதூரில் மகிழ மாலை இங்கு விற்குமே என்று எழுந்தவர் பேச முடியாமல் கலங்கிச் சாய்ந்தார். சைகை காட்டியவர் உடலிலிருந்த உயிரும் பிரிந்தது. ‘அப்போது கூட டாக்டரின் உதவியின்றியே சென்றுவிட்டார்’ என்று கதை முடிகிறது. அக்பர் சக்கரவர்த்தி உலகத்திலே இருக்கிற நல்லதெல்லாம் சேர்த்துத் தனக்குன்னு ஒரு வாழற முறையை ஏற்படுத்திக் கொண்டார். மேற்கூறிய கோவிந்த சாஸ்திரி அவ்வாறு வாழ்ந்ததால் அவருடைய சம்பந்தி அக்பர் சாஸ்திரி என்று அவரை அழைக்க அதுவே அவருக்குப் பெயராயிற்றாம்.
இவ்வாறு தி.ஜா. படைக்கும் பாத்திரங்கள் அவர் கதைகளைப் பல்வேறு சுவைகளால் நிரப்புகின்றனர்.
தஞ்சை மாவட்டத்துக்கே வளம் சேர்க்கும் காவிரியை அவரால் மறக்க இயலவில்லை. முடிந்த இடங்களில் எல்லாம் காவிரி நீராடலையும், காவிரியின் பெருமையையும் கதை மாந்தர்களே பேசுகின்றனர்.
கங்கைக் கரையில் நின்று கொண்டிருக்கும் சின்னசாமியிடம் ஓடிக்கொண்டிருக்கும் கங்கையின் அகலம் பற்றி அவர் மனைவி கேட்கிறாள்.
“ரண்டு கும்மாணம் (கும்பகோணம்) காவேரி இருக்குமாங்கறேன் அகலம்” (கங்கா ஸ்நானம் – சக்தி வைத்தியம் பக்.1 ). அப்பா பிள்ளை சிறுகதையில் வரும் குஞ்சுவின் எண்ண ஓட்டத்தைப் பாருங்கள். “ஒன்பது மாத காலம் அல்லில்லை பகலில்லை – வெயிலில்லை – மழையில்லை – அப்படி கர்ம சிரத்தையாக இந்தக் காவேரி ஓடிக் கொண்டிருக்கிறது. . . குடிக்க, குளிக்க எல்லாவற்றுக்கும் இந்தக் காவேரிதான். அம்மாவும் நினைத்து நினைத்து வந்து முழுகுவாள். அம்மாவுக்கே காவேரி ஓடினாற் போலிருந்தது”. (யாதும் ஊரே, ப.82).
நஞ்சை வயல்களால் கொழிக்கும் தஞ்சை மண்ணின் வளத்தை வியந்து பேசுவதைப் பாருங்கள்.
“உங்க ஊர்லே நூறு ஏக்கரும் சரி. இந்த ஊர்லே பத்து ஏக்கரும் சரி. வருஷம் முழுக்க ஆத்திலே பிரவாகம் போயிண்டேயிருக்கும். கழனியும் காடும் விளைஞ்சிண்டே இருக்கும்” (வீடும் வெளியும் – மனிதாபிமானம், ப.62,63).
காவிரியில் நீராடலை தி.ஜா.வின் பல கதைகளில் காணலாம். “கையைக் காலை வீசி இப்படி ஒரு நாளைக்கு வந்து காவேரியிலே ஒரு முழுக்கு போட முடியுமான்னே” – பாயசம் (பிடி கருணை, ப.33).
காப்பிப் பிரியர்கள் மிகுந்த தஞ்சை மாவட்டம் என்பதால் அந்த ரசனையும் பல இடங்களில் கூறப்படுகிறது.
“கள்ளிச் சொட்டாக நுரைத்து, மணத்த காபியை நெஞ்சு சுட, உள்ளம் குளிரக் குடித்தான்” (தூரப்பிரயாணம், சிவப்பு ரிக் ஷா, ப.199).
“நடுப்பகல் ஒரு மணிக்கு மணியடித்ததும் இந்த ஆபீசே அப்படியே போட்டது போட்டபடி குழாயடிக்குக் கை கழுவ ஓடும். அந்த ஒரு மணி நேரத்தில் மகாவிஷ்ணுவே வந்தால் கூட மரியாதை காட்ட மாட்டார்கள்” (ஸ்ரீ ராம ஜெயம் – யாதும் ஊரே, ப.129).
“இந்தப் பஞ்சாயத்து பல்பு எங்காத்துக் காரரும் கச்சேரிக்குப் போறார்னு மினுங்கிண்டிருக்கும்” (கோபுர விளக்கு – யாதும் ஊரே, ப.1)- இது போல் வழக்கில் உள்ள தொடர்களைக் கையாளுவது இயல்பாக அமைந்துள்ளது.
உடல் நலம், உள்ள நலம் காக்கும் அனுபவ மொழிகளைப் பார்ப்போமா?
“புடிகருணையை நெருப்பிலே போட்டு வாட்டி, தோலைத் தேச்சுட்டு, தேனைக் குழைச்சு சாப்பிட்டா கண்ணெரிச்சல், மூலம் இருக்கிற இடம் தெரியாமல் பறந்திடுமாம்” (பிடி கருணை, ப.1).
“கருவேப்பிலைக் குழம்பு, வேப்பம் பூவைச் சாதத்து மேலே வச்சு ஆமணக்கெண்ணையைக் காய்ச்சி அதன் மேலே ஊற்றிச் சாப்பிட்டால் டாக்டருக்கு ஒரு தம்பிடி கொடுக்க வேண்டாம்” (அக்பர் சாஸ்திரி ப.5).
எலும்பு மூடிக் காணப்படும் சிறுவனைத் தேற்ற அக்பர் சாஸ்திரி கூறும் யோசனை. “கொள்ளு தினமும் கொஞ்சம் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைச் சாப்பிட்டு, அந்தச் சுண்டலையும் கொஞ்சம் உப்புப் போட்டுச் சாப்பிட்டால் பையன் அரபிக் குதிரை மாதிரி வலுவானவனாவான்” (அக்பர் சாஸ்திரி, ப.5)
“எல்லாரும் சந்தோஷமா இருக்கணும், எல்லாரும் திருப்தியாயிருக்கணும், எத்தனையோ கிடைக்கும். கிடைக்காம இருக்கும். எத்தனையோ வரும். எத்தனையோ போகும். அதுக்காக சந்தோஷமா இருக்கறதை விடப்படாது. முயற்சி பண்ணி சந்தோஷமா இருக்கக் கத்துக்கணும்” (மாப்பிள்ளைத் தோழன் – பிடி கருணை, ப.140) மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இந்த அறிவுரை ஒரு வழிகாட்டியல்லவா?
மனித மனத்தின் உயர்வையும், தாழ்வையும் ஒருங்கே உணர்த்தும் கதைகள் பல உண்டு. மனித மனத்தின் விசித்திரங்களைக் கலை உணர்வோடு, வாழ்க்கை மீதான ரசனையோடு படைத்துள்ளார். தி.ஜா. தஞ்சை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆதலால் அந்த ஈடுபாடு அவர் கதைகளில் வெளிப்பட்டுத் தெரிவதைக் காணலாம். காவிரி நீராடல், நஞ்சையும், புஞ்சையும் வளம் சேர்க்கும் தஞ்சை மண், கள்ளிச் சொட்டாய் மணக்கும் காப்பி, வெற்றிலை, பாக்கு, புகையிலை விரும்பிகள் இக்கதைகளில் ரசனையோடு சொல்லப்படுவதைக் காணலாம். அப்பாவிகளையும் சூழ்ச்சிக்காரர்களையும், சத்தியவான்களையும், ஏமாற்றும் பேர்வழிகளையும், வாய்ச்சொல் வீரர்களையும் கிண்டலும் கேலியும் கலந்த நடையில் இச்சிறுகதைகளில் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இயல்பாக அமையும் நகைச்சுவையும் உள்ளும், புறமுமான கதை மாந்தர் வர்ணனையும் பொருத்தமான உவமையும், பழமொழிகளும் அனுபவ அறிவுரைகளும் தி.ஜா.வின் கதைகளைச் சிறப்பிக்கின்றன.
வாழ்க்கையின் பல அம்சங்களையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். கதைப் பின்னல், வெளிப்படுத்தும் உத்தி முறை ஆகியன சிறப்பம்சங்கள். இசை மொழி வேறுபாடுகளைக் கடந்த சிறப்புடையது என்பதை நுணுக்கமாக வெளிப்படுத்தும் சிறுகதை போன்றவை ஆசிரியரின் இசை ஈடுபாட்டை உணர்த்துகின்றன. வாழ்க்கையின் தேடல் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது. பல்வகைப்பட்ட வாழ்க்கைத் தேடல்களை எடுத்துக்காட்டும் கதைகளையும் தி.ஜா. படைத்துள்ளார். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் தமக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றவர் தி.ஜானகிராமன் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
பாடம் - 3
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அறிஞர் அண்ணாவின் பங்கினை யாரும் மறுக்க இயலாது. 1.3.67 முதல் 2.2.69 முடிய, தமிழகத்தின் முதல்வராக இருந்து ஆட்சி செய்த பெருமைக்குரியவர். 1934 முதல் 1966 முடிய இவர் படைத்தவை 89 சிறுகதைகள் ஆகும். இவை இவர் நடத்திய இதழ்களிலும், திராவிட இயக்க இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்தவை. இவருடைய சிறுகதைகள் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவை அண்ணாவின் சிறுகதைகள் (1969), அண்ணாவின் ஆறு கதைகள் (1968), அண்ணாவின் குட்டிக்கதைகள் என்பனவாம். அண்மையில் பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட ‘பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுதி’ என்னும் நூலில் 108 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இச்சிறுகதைகளைப் படைத்தளித்த அண்ணாவைப் பற்றிய அறிமுகத்திற்குச் செல்வோமா?
பெரியார் ஈ.வெ.ரா.வின் சுயமரியாதைக் கொள்கையால் கவரப்பட்டு அவரோடு நீதிக் கட்சியிலும், பின்னர்த் திராவிடர் கழகத்திலும் இருந்தார். 1949இல் தி.மு.க.வைத் தோற்றுவித்தார். 1957இல் தமிழ்நாடு சட்டமன்றத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையேற்று எதிர்க்கட்சித் தலைவரானார். 1962இல் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். 1.3.67இல் தமிழக முதல்வரானார். 4.4.67இல் சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு எனப் பெயரிட்டுப் பெருமை பெற்றார். 1968இல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். 1968இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 2.2.1969இல் அண்ணா இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர் படைப்புகள் இன்றும் அழியாப் புகழ் பெற்று விளங்குகின்றன.
இதழாசிரியர்
விடுதலை, திராவிட நாடு, நம்நாடு, காஞ்சி முதலிய இதழ்களில் பணியாற்றியவர். தாமே சில இதழ்களுக்கும் பொறுப்பேற்று நடத்தியவர். சமகாலச் சம்பவங்கள், அன்றாடச் செய்திகள், உலக நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அழகு தமிழில் தொகுத்துத் தந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் இவர் கருத்துகள் குறிப்பிடத் தக்கவையாக அமைந்தன. ‘தம்பிக்கு’ என மடல் எழுதி மக்கள் உள்ளங்களைக் கவர்ந்தவர். கடித இலக்கியம் என்றும் புதிய இலக்கிய வகையை உருவாக்கியவர். இவருடைய கடித இலக்கியம் 24 தொகுதிகள் வெளிவந்தது, இவை பல பதிப்புகளைப் பெற்றன.
நாடக ஆசிரியர்
அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு ஆகிய நாடகங்கள் அவரை நாடக ஆசிரியராகப் புகழ் பெற வைத்தன. அவரது நாடகங்களைக் கண்ட எழுத்தாளர் கல்கி, அவரைத் ‘தென்னாட்டு பெர்னார்ட்சா’ என்று பாராட்டினார். ஆங்கில நாடகங்களை ஆழ்ந்து கற்ற அண்ணாவின் நாடகங்களில் திகைக்க வைக்கும் நிகழ்ச்சிகளும் திருப்பு முனைகளும் அடுக்கடுக்காய் வந்து பார்ப்பவரைப் பரவசப்படுத்தும். நாடகங்கள் பாமரர்களுக்கான பல்கலைக்கழகங்கள் என்பதற்கு இவருடைய நாடகங்கள் சிறந்த சான்றாக விளங்கின.
புதின ஆசிரியர்
சமுதாய அவலங்களைத் தமக்கே உரிய எழுத்து வன்மையால் அழுத்தமாகப் புதினங்களில் புலப்படுத்தினார். ஆங்கிலத்தில் படித்த புதினங்களைத் தமிழில் சுருக்கித் தந்தார். என் வாழ்வு (1940), பார்வதி பி.ஏ. (1945), ரங்கோன் ராதா (1948), கலிங்கராணி (1954), தசாவதாரம், இன்ப ஒளி (1968) முதலிய ஆறு புதினங்களைப் படைத்துள்ளார். 9 குறும்புதினங்களும் இவர் படைத்துள்ளார்.
1930 முதல் 1969 முடிய, தம் எழுத்தால், பேச்சால், அரசியல் மாற்றங்களுக்குப் பெரும் பங்களிப்பைச் செய்தவர் அண்ணா. சிறுகதை, புதினம், நாடகம் என்ற இலக்கிய வகைகளில் சோதனை செய்து அவற்றைச் சமுதாயச் சீர்திருத்தத்துக்குப் பயன்படச் செய்தவர். தமிழ் உரைநடையை வளர்த்தவர். மேடைத் தமிழ் என்ற ஒன்றினைப் பொலிவுறச் செய்தவர். இயல், இசை, நாடகங்களில் ஆழ்ந்த கருத்தைச் செலுத்தியவர். பல்துறை அறிவு, பல்துறை ஆற்றல், எழுத்தாற்றல், பேச்சாற்றல், சிந்தனை ஆற்றல், அறிவுக் கூர்மை, கருத்துருவாக்கத்திறம், கருத்துப் பிரச்சார உத்திகள் இவற்றைக் கொண்ட அண்ணாவைப் பேரறிஞர் என்று அறிஞர் உலகம் பாராட்டுவது பொருத்தமல்லவா !
சிறுகதைப் படைப்புகள்
படைப்பாற்றல் மிக்க அண்ணா சௌமியன், சமதர்மன், சம்மட்டி, ஒற்றன், ஆணி, பரதன் என்ற புனை பெயர்களில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவருடைய முதல் சிறுகதையான கொக்கரக்கோ ஆனந்தவிகடன் 11.2.34 இதழில் வெளிவந்தது. பொங்கல் பரிசு 14.1.66 இதழில் வெளிவந்தது. இவருடைய 89 சிறுகதைகள் இவர் நடத்திய இதழ்களிலும், திராவிட இயக்க இதழ்களிலும் வெளிவந்தன. தமிழ்ச் சமுதாயத்தை அரித்துக் கொண்டிருக்கும் சேற்றுப் புழுக்களாக உள்ள சமுதாயக் கேடுகள் அனைத்தையும் சிறுகதைகளில் படம்பிடித்துக் காட்டினார் அண்ணா. சமுதாய அவலங்கள் தரும் பாதிப்பையும் வெளிப்படுத்தினார்.
புலி நகம், பிடிசாம்பல், திவ்யஜோதி, தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில், இரும்பாரம், பவழ பஸ்பம் முதலிய வரலாற்றுச் சிறுகதைகளையும் அண்ணா படைத்துள்ளார்.
பொருளாதாரச் சமநிலை சமுதாயத்தில் அமைய வேண்டுமென்பதை அண்ணாவின் சமூகச் சிறுகதைகள் வற்புறுத்துவதைக் காண முடியும்.
சமயவாதிகளின் பொய் வேடத்தை எடுத்துக்காட்டும் கதைகள் ஜெபமாலை, கடைசிக் களவு போன்றவை. ஒழுக்கக் கேடுடைய மதத் தலைவர்களின் இரட்டை வாழ்க்கையை ஜெபமாலை என்ற சிறுகதை காட்டுகிறது. மக்களின் சமய நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு போலித் துறவிகள் அவர்களை ஏமாற்றும் நிலையைச் சொல்கிறது அன்ன தானம். வணிகராகவும் துறவியாகவும் மாறி மாறி வேடம் பூண்டு மக்களை ஏமாற்றிக் கன்னி வேட்டை செய்து திரியும் கயவனைப் பற்றிக் கூறுகிறது தேடியது வக்கீலை என்னும் சிறுகதை.
சமயம் மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கப் பயன்பட முடியாத தன்மையை மதுரைக்கு டிக்கெட் இல்லை என்னும் சிறுகதை சொல்கிறது. சமயப் போர்வையில் செய்யப்படும் அநீதிகளைச் சுட்டிக் காட்டுவதே இத்தகைய படைப்புகளின் நோக்கம் எனலாம்.
சாதிக் கொடுமையினால் காதல் வாழ்வு முறிந்து போவதைச் சிங்களச் சீமாட்டி என்ற சிறுகதை மூலமாகக் காட்டுகிறார். தங்கத்தின் காதலன் என்ற கதை நெஞ்சம் கலந்த காதலர்களிடையே சாதி தடையாக இருந்ததைக் காட்டுகிறது. இக்கதையில், சாதிவெறி தணியக் கலப்பு மணமே சிறந்தது என்பதைத் திருமலைப் பிள்ளைக்கும் சுந்தரிக்கும் நடக்கும் திருமணத்தின் மூலம் காட்டுகிறார். சாதி பேதம் அற்ற சமத்துவச் சமுதாயம் அமைக்க விரும்பிய அண்ணா. கலப்பு மணத்தைச் சிறந்த வழியாகக் காண்கிறார். தாம் ஆட்சியில் அமர்ந்த பின்னர்த் தாழ்த்தப்பட்டோரை மணந்தோர்க்குத் தங்கப் பதக்கம் அளித்தும், அரசுப் பணிகளில் அமர்த்தியும் கலப்பு மணத்திற்கு ஊக்கம் அளித்தார்.
பலா பலன் என்ற சிறுகதையில் சின்னப்பன் மார்வாடியிடம் பட்ட கடனை எண்ணி எண்ணி நோய்வாய்ப்பட்டான். சோதிடனிடம் செல்கிறாள் அவன் மனைவி. கிரகங்கள் சரியான நிலையில் இல்லாததால் இந்த நோய் என்கிறான் சோதிடன். நிலத்தை விற்றுக் கடனை அடைத்துவிட்டு எஞ்சிய தொகையை வங்கியில் போட்டவுடன் சின்னப்பன் நோயிலிருந்து விடுதலை பெற்றான். மனைவியோ சோதிடர் கூறிய சாதக பலனாலே நோய் நீங்கியதாக மகிழ்கிறாள். உண்மையை அறிந்து கொள்ள முயலாமல் சோதிடத்தை நம்பும் மூட நம்பிக்கையைச் செல்வர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் போக்கினைச் சுடுமூஞ்சி என்ற சிறுகதை காட்டுகிறது.
பேய் பூதங்களைக் கண்டு மக்கள் அஞ்சுவதையும் அவற்றை ஓட்டும் பூசாரிகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்வதையும் வேதனையுடன் வெளிப்படுத்துகிறார் அண்ணா. பேய்பிடித்தது என்று பூசாரிகளை நாடும் மக்களின் அறியாமையைப் பேய் ஓடிப் போச்சு என்ற சிறுகதையில் காணலாம்.
அறிவியல் உண்மைகள் பரவப் பரவ மூட நம்பிக்கைகள் மறையத் தொடங்குகின்றன என்ற உண்மையை விழுப்புரம் சந்திப்பு சிறுகதை தெளிவுபடுத்துகிறது.
பொருந்தா மணம்
அண்ணாவின் சிறுகதைகளில் சில, பொருந்தா மணம் பற்றிப் பேசுகின்றன. வாலிப விருந்து என்னும் கதையில் சந்தான கிருஷ்ண அய்யர் மோகனாவை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். அவர்களுக்கு இடையே உள்ள மணப் பொருத்தத்தை அண்ணா எப்படிக் கூறுகிறார் பாருங்கள்:
“இளமை மெருகும், எழில் மணமும் வீசிட அவள் உலவினாள். இவர் காலத்தால் கசக்கப்பட்டு, முதுமையென்னும் முற்றத்திலே கிடந்தார். ஐயருக்கு மட்டும் அறுபது வேலி நிலமும் அரை இலட்சம் ரொக்க லேவாதேவியும் இல்லாவிடில் இந்தப் பேத்தி பெண்டாட்டி ஆகியிருக்க முடியாது”.
பொருந்தாத் திருமணம் ஒழுக்கக் கேட்டிற்கும் வழிவகுக்கும் என்பதைக் கபோதிபுரக் காதல், காமக் குரங்கு, சுடுமூஞ்சி, வாலிப விருந்து முதலான சிறுகதைகளில் எடுத்துரைக்கக் காணலாம்.
சொத்துரிமை
பெண்கள் அடிமைப்பட்டு இருப்பதற்கு அடிப்படைக் காரணம் அவர்களுக்குச் சொத்துரிமை இல்லாததே ஆகும். 1943 ஆம் ஆண்டு மத்திய சட்டசபையில் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டென்று மசோதா கொண்டு வந்தபோது ஆண்களில் சிலர் அம்மசோதாவைக் கடுமையாக எதிர்த்தனர். அவர்களது மனைவியர் அம்மசோதாவை நிறைவேற்ற வேண்டி உண்ணாவிரதம் இருந்தனர். இவ்வேடிக்கையைக் கருத்துரையாக்கி உண்ணாவிரதம் ஒரு தண்டனை என்ற சிறுகதையைப் படைத்தார். பெண்களும் ஆண்களைப் போல் சொத்துரிமை உடையவர்களாக இருக்க வேண்டும் என்ற அண்ணாவின் நோக்கத்தை இக்கதை புலப்படுத்தக் காண்கிறோம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டாச்சாரியார் மகள் சுந்தரவல்லியின் காதலைத் திருமலை மன்னன் பெற்றான். கருவுற்ற மங்கை அவமானம் தாங்காமல் நஞ்சுண்டு மடிந்தாள். மகள் மாரடைப்பால் இறந்தாள் என்று வெளியில் கூறினாலும் உள்ளுக்குள் பட்டாச்சாரியார் மனம் மன்னனைப் பழிவாங்கத் துடித்தது. மன்னனின் தயவால் கிறித்துவ மதம் பரவுவதைக் கண்டு சினம் கொண்ட சிலருடன் சேர்ந்தார். பொருள் நெருக்கடியால் மன்னன் இடர்ப்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவனைப் பழி வாங்கினார். பக்திப் பரவசத்தில் மன்னர் ஜோதியில் கலந்து விட்டார் என்று செய்தி பரப்பப்பட்டது என்பதைக் கூறும் கதைதான் திவ்யஜோதி.
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், சமயப் பொய்மைகள், சாதிப் பாகுபாடுகள், மூட நம்பிக்கைகள், பெண்ணடிமை நிலை, ஆணாதிக்கம் ஆகியவற்றை அறவே நீக்க வேண்டும் என்ற ஆர்வமும் வேகமும் இவர் சிறுகதைகளில் தீவிரமாக வெளிப்படக் காணலாம்.
பெண் கதை மாந்தர்களில் கல்வி அறிவு பெற்ற துணிச்சல் மிக்க பெண்கள், கல்வி அறிவு பெறாத, பாசத்திற்கு அடிமையாக இருக்கும் பெண்கள் என்று இரு சாராரைப் படைத்துக் காட்டுகிறார். இதனால் பெண்கள் அடிமைத் தளையில் இருந்து விடுபட அவர்களே முயற்சி செய்ய வேண்டும், அதற்கு அவர்களே குரல் எழுப்ப வேண்டும் என்பதைப் புலப்படுத்துகிறார் அண்ணா.
பொருளாதார ஏற்றத் தாழ்வினைப் புலப்படுத்தும் கதைகளில் செல்வர்கள், வறுமையில் வாடுபவர்கள் என்ற இருவகை மாந்தர்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார். “சிறந்த எழுத்தாளர்கள் கதை மாந்தர்களைப் படைப்பதில்லை, வாழும் மக்களையே படைத்து விடுகின்றனர்” என்ற எமிங்வேயின் கூற்றுக்கு அண்ணாவின் கதைமாந்தர் சான்றாக அமைந்துள்ளனர். இனி அவர் கையாளும் உத்தி முறைகள் பற்றிப் பார்ப்போமா ?
உத்திக்கே முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட ஒரு கதை தனபாலச் செட்டியார் கம்பெனி. ஒரு கடையின் முதலாளி தனபாலச் செட்டியார் மற்றும் அவரிடம் பணிபுரியும் ஊழியர்களின் வரவு செலவுக் கணக்குகளை மட்டும் வைத்து எழுதிய இக்கதையில் கடையில் பணிபுரியும் ஊழியர்களின் வரவு செலவுக் கணக்குகளை மட்டும் வைத்து, பற்று வரவு செய்திருப்பவர்களின் வாழ்க்கை முறையை விளக்கியிருக்கும் உத்தியைக் காணலாம். இக்கதை அமைப்பில் ஒவ்வொருவருடைய குறிப்பேட்டை மாத்திரம் பட்டியலாகக் காண்பித்து விடுவது சிறப்பு. கடிதங்கள், மருத்துவரின் தர்மா மீட்டர் கருவி காட்டும் காய்ச்சல் அளவுகள், மளிகைக் கடைக் கணக்குகள், அச்சடித்த அறிவிப்புகள், அழைப்புகள் முதலியவற்றைக் கூடக் கதை சொல்ல உதவும் கருவியாகப் பயன்படுத்தும் உத்தியை அண்ணா கையாள்வதைக் காணலாம்.
சொல்லாதது என்ற சிறுகதையில் ஒவ்வொரு பத்தியிலும் கதை நிகழ்ச்சிகளை விவரித்து முடிவில் அக்கதையில் வரும் கதைமாந்தர்கள் அவ்வாறு கருதினார்களே தவிர வெளியில் சொல்லவில்லை. சொன்னதில்லை என்றே முடிக்கின்ற ஒரு உத்தியைக் காணலாம்.
தொலைபேசி வாயிலாக வாணிகம் பேசும் புதிய உத்தியை வரவு செலவு சிறுகதையில் அமைத்துள்ளார். நிகழ்ச்சிகளை அவை நடந்த கால முறைப்படி எழுதாமல் முன் பின்னாக மாற்றிப் படிப்போரைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைப்பதைக் காணலாம். அண்ணாவின் பெரும்பாலான சிறுகதைகளில் இந்தப்பின்னோக்கு உத்திமுறையைக் காணலாம். சிறுகதைகளின் தொடக்கம் பெரும்பாலும் உரையாடலுடனே தொடங்குகிறது. சிறுகதைகளின் முடிவு பெரும்பாலும் ஆசிரியர் கூற்றாகவே அமைகின்றன. இனி அண்ணாவின் மொழிநடை பற்றிப் பார்ப்போமா?
“சாருபாலா சமூக சேவை செய்து பிரபல்யமடைந்து கொண்டிருந்த குமாரி. முகிலுக்கு இணையான குழல். அது தழுவியிருந்தது வட்ட நிலவு முகம். பிறை நெற்றி. பேசும் கண்கள். துடிக்கும் அதரம். அங்கம் தங்கம். நடை நாட்டியம். பேச்சோ கீதம்” (அண்ணாவின் சிறுகதைகள்).
பரஞ்சோதி சிறுத்தொண்டனாக மாறிய நிலையினை அண்ணாவின் அழகுநடை எப்படி எடுத்துரைக்கிறது பாருங்கள்.
“பரஞ்சோதி சிறுத்தொண்டன் ஆனான். படைத்தலைவன் பக்தன் ஆனான். முரசு கொட்டியவன் முக்திக்கு வழி தேட முனைந்து விட்டான். சாளுக்கிய நாட்டுக்குச் சண்ட மாருதமாகியவன் சரித்திரத்தில் இடம் பெறாமல் சாதுக்கள் கூட்டத்தில் ஒருவன் ஆகிவிடுகிறான்” (பிடிசாம்பல்).
அண்ணாவுக்கே உரிய மொழி நடைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டுப் பாருங்கள்:
“செங்கோடனின் செவ்வாழைக் குலை ! அவனுடைய இன்பக் கனவு! குழந்தைகளின் குதூகலம். அதற்கு மரண ஓலை தயாரித்து விட்டான் சுந்தரம்” (செவ்வாழை).
புதிய உவமைகளைக் கூறுவதும் இவர் தனிச் சிறப்பு.
“குரோட்டன்ஸ் செடியிலே குண்டு மல்லிகை பூக்குமா?” (அண்ணாவின் சிறுகதைகள்)
முரண் என்னும் அணியும் அவர் மொழி நடைக்கு வலிமை சேர்ப்பதைக் காணலாம்.
“அங்கே 250 ரூபாயில் நாய் வாங்கினார்கள். இங்கோ இரண்டு தலைமுறையாகக் குடும்பச் சொத்தாக இருந்த கம்பங் கொல்லையை 250 ரூபாய்க்கு விற்றுவிட்டார்கள்” (இருபரம்பரைகள்).
“உத்தி, உள்ளடக்கம், நடை ஆகிய அம்சங்களில் முழுமையாக அமைந்த பல சிறுகதைகளைப் படைத்த அண்ணா, மணிக்கொடிக்கு அடுத்த காலத்தும் இந்தத் துறையை வளர்க்க உதவிய ஆசிரியர்களில் ஒருவர்” என்கின்றனர் சிட்டி மற்றும் சிவபாத சுந்தரம்.
அண்ணா தம் சிறுகதைப் படைப்புகளில் சாதி பெற்றுள்ள ஆதிக்கம், அதனால் ஏற்படும் சீர்கேடுகள், மூட நம்பிக்கையால் தன்னம்பிக்கை இழந்து சாதகம், சோதிடம் என்று அலையும் மக்களின் அவல வாழ்வு ஆகியவற்றை எடுத்துரைக்கின்றார். அடுக்கு மொழியும், கேலியும், கிண்டலும், வாதத்திறமையும் கொண்டது இவர் மொழி நடை. பண்பட்ட நகைச்சுவை இவருடைய சிறுகதைகளில் வெளிப்படக் காணலாம். அறிவுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகள் அழிய வேண்டும் என்பதை வலியுறுத்துவன இவர் சிறுகதைப் படைப்புகள், கலப்பு மணம், விதவை மணம், சுயமரியாதைத் திருமணச் சட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்தத் தூண்டுவனவாக அமைந்தவை. தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அண்ணா தமக்கெனத் தனியிடத்தைப் பெற்று விளங்குகிறார் எனலாம்.
பாடம் - 4
ஆசிரியர். சு.சமுத்திரம் நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதி நாடறிந்த எழுத்தாளராகத் திகழ்ந்தவர். தலைசிறந்த தமிழ் அங்கத எழுத்தாளர்களில் ஒருவர். வானொலி மூலமும் தொலைக்காட்சி மூலமும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற ஓர் எழுத்தாளர்.
சிறுகதையின் அளவு, ஆற்றல், ஆளுமை முதலிய அனைத்தையும் டாக்டர் வாசவன் தம் வண்ணத்தமிழ் வாசல்கள் என்னும் நூலில் பின்வருமாறு அருமையாக விளக்குகிறார்:
“கதைக்குக் கால் முளைத்தால் மட்டும் போதாது. இறக்கைகளும் முளைக்க வேண்டும். அந்த இறக்கைகள் சுருங்கச் சொல்லலும், சுருக்கெனச் சொல்லலும். சிறுகதை வடிவத்தில் சிறிதானாலும் வானத்தையும், பூமியையும் அளந்துவிட்டு அளப்பதற்கு இன்னும் இடம் கேட்கின்ற வாமனனைப் போன்றது. இராம பாணத்தைப் போன்று குறி தவறாமல் இலக்கை எட்டக் கூடியது. அதனால்தான் வேறெந்தப் படைப்பிலக்கியத்தையும் விடச் சிறுகதை உலகளாவக் கோலோச்சுகிறது. நீங்கள் பார்க்கிற, பழகுகிற, உங்களையும் மற்றவர்களையும் பாதிக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியுமே சிறுகதைதான்”.
இக்கருத்தைப் பிரதிபலிப்பனவாக அமைந்தவைதாம் சு.சமுத்திரத்தின் சிறுகதைப் படைப்புக்கள் எனலாம். நாள்தோறும் நாம் பார்க்கின்ற மனிதர்களின் எண்ணங்கள், ஆசைகள், வாழ்க்கைச் சூழல்கள், அது தரும் நெருக்கடிகள், அவற்றால் மனிதன் தாழ்வதும் உயர்வதும் ஆகிய நிலைகள் சமுத்திரத்தின் சிறுகதைகளில் படம் பிடிக்கப்படுகின்றன.
“என்னுடைய பெரும்பாலான கதைகள் சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் என்ற தார்மீகக் கோபத்தில் எழுந்தவை” என்று அவரே குறிப்பிடுகின்றார்.
வறியவர் வாழ்க்கையின் அவலங்களும் பல கதைகளுக்குக் கருப்பொருள் ஆகின்றன. குடும்ப உறவுகள், அடிப்படை அன்பின் வலிமை ஆகியவை எடுத்துக் காட்டப் பட்டாலும், பல கதைகளில் குடும்ப உறவுகள் போலியாக இருப்பதும் பணத்தாசை காரணமாக உறவுகள் வலிமை இழந்து இருப்பதும் சுட்டிக் காட்டப்படுகின்றன.
“ஏழைகளோட ரத்தத்தைச் சட்ட விரோதமாக உறிஞ்சுகிற ஒன் பிரின்ஸ்பால் புருஷன் ஸ்கூலுல வேலை பாக்கிறதை விட மயானத்துல பிணத்தைக் காக்கலாம்” என்று கூறிவிட்டு வேலையைத் தூக்கியெறிந்து விட்டுப் புறப்படுகிறாள் அம்சா (வேலையில் காயம், மனம் கொத்தி மனிதர்கள்). வறியவராய் இருப்பினும் அவர்கள் தங்கள் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்பவராகவே இருப்பதை இவருடைய கதைகள் நமக்குக் காட்டுகின்றன. வறியவன் ஒருவன் பற்றிய சமுத்திரத்தின் வர்ணனையைப் பாருங்கள்: “அவன் வயது வாக்குரிமைக்குத் தகுதி பெற்று விட்டாலும் உடம்போ வறுமைக் கோட்டுக்குக் கீழேயே நின்றது. பூவாகாமலே பிஞ்சாய்ப் பழுத்தவன் போல் ஒட்டிய உடம்புக்காரன்; கிழடுபட்ட இளமை முகம், காய்ந்து போன முதுமைக் கண்கள் அவனுக்கு. இருபது வயதுதான் ஆயுளின் உயர்ந்தபட்ச வயது என்பது மாதிரியான பத்தொன்பது வயதுக்காரன்” (ஒரு போலீஸ் படையின் கிராமப் பிரவேசம்).
“நீங்க செய்த காரியத்தாலே ஒரு டிரைவரோட குடும்பம் நடுத்தெருவுல நிக்குது! ஒரு பெரிய அதிகாரியைக் காட்டிக் கொடுக்காம இருக்கிறதுக்காக நியாயத்தைக் காட்டிக் கொடுத்திட்டீங்க. நீங்க செய்திருக்கிற காரியத்திற்கு இப்பவே ஒங்களை சஸ்பெண்ட் பண்ணலாம்” என்று கோபிக்கிறார். “ஆனாலும் என்ன பண்றது ஒங்களைக் காட்டிக் கொடுத்தால் டிபார்ட்மெண்டுக்குக் கெட்ட பேரு வருமே என்று யோசிக்கிறேன் இல்லேன்னா…” என்று கத்துகிறார்.
இதே போல மாவட்ட மருத்துவ அதிகாரியைச் சந்தித்து உண்மையைக் கக்கச் செய்கிறார்.
மருத்துவ அதிகாரி அழுதார். அவருக்கும் இரக்கம் காட்டப்பட்டது.
குப்பனைச் சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றிய ஏகாம்பரத்தை அவரது மேலதிகாரி அதட்டுகிறார். அவன் குடித்து விட்டு அலுவலகத்தில் கலாட்டா பண்ணியதற்காக மாற்றல் கொடுத்ததாகக் கூறுகிறார்.
“எப்பவாவது அவன் குடிக்கிறான்னு மெமோ கொடுத்திருக்கீங்களா?”
“இல்லை சார்”.
“ஏன் இல்ல? ஏன்னா அவன் குடிகாரன் இல்ல. நீங்க ஒரு தடவை பேமிலியோடு மகாபலிபுரம் போறதுக்கு வண்டி கேட்டீங்க. என்னால கொடுக்க முடியல. குப்பன் முடியாதுன்னுட்டான்.”
இவருக்கும் இரக்கம் காட்டப்பட்டது. எல்லாரிடமும் இரக்கம் காட்டி அவர்களை வேலையில் நீடிக்கச் செய்தார். தவறு செய்தவர்கள் எல்லாரும் ஒன்றாகி விட்டார்கள். தவறு செய்ய மாட்டேன் என்று சொன்ன குப்பன் இறந்து போனான். அவன் குடும்பத்திற்கு எந்த உதவித் தொகையும் கிடைக்கவில்லை.
ஏழையின் வாதம் செல்லாது என்பதைப் போல் குப்பன் மனைவி எழுதிய மனுவிலும் உண்மை மறைக்கப்பட்டு விட்டது. ஆனால் அது தெரியாமலே ஏமாந்துபோய் நிற்கும் அந்த அப்பாவியின் கடிதம் படிப்பவர் நெஞ்சைத் தொடுகிறது.
பொறுப்புள்ள அதிகாரிகள் செய்யும் அநியாயங்கள் எல்லாம் ஓர் ஏழைக்கு இழைக்கப்படும் கொடுமைகளாகின்றன. இந்த அவலத்தைச் சொல்லும் சிறுகதைதான் ‘ஒரு நியாயம் விதவையாகிறது’ (மரம் கொத்தி மனிதர்கள்).
தங்கள் அலுவல் தொடர்பாக வேனில் காவல்துறை அதிகாரிகள் சென்று கொண்டிருக்கின்றனர். டிரைவர், “வேன் வாடகை பாதியாவது கொடுக்கணும்னு முதலாளி சொல்லச் சொன்னாருங்க” என்றான்.
“அடி செருப்ப . நீயும் கம்பி எண்ணணுமா?”
“நான் பேசல சார்! முதலாளி கேட்கச் சொன்னார்!”
“ஒன் மொள்ளமாறி முதலாளியை எங்கிட்ட பேசச் சொல்லுடா! லைசென்ஸ் இல்லாம ஆம்னி பஸ் ஓட்டுறான். புளு பிலிம் வேற போட்டுக் காட்டுறான்! இதெல்லாம் கண்டுக்காம இருக்கோம். எங்களுக்கு ஒரு வேன் கூடக் கொடுக்காட்டி எப்படிடா?” (ஒருபோலிஸ் படையின் கிராமப் பிரவேசம், மனம் கொத்தி மனிதர்கள்).
குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் மீறி ஓர் ஐம்பது வயதுப் பெண்மணி அருகில் வந்து குடியரசுத் தலைவரிடம் ஒரு விண்ணப்பமும் செய்து விட்டாள். குத்தாம்பட்டி கிராமத்தில் கூட்ஸ் ரயில் மெதுவாக வரும்போது இரும்புத் தகடு, கோதுமை மூட்டை ஆகிய பொருள்கள் எடுக்கப்பட்ட அநியாயத்தை எடுத்துச் சொன்னதால் தன் மகள் கடத்தப்பட்டது முதலான தனக்கு ஏற்பட்ட அவலங்களை எடுத்துரைத்தார். குடியரசுத் தலைவர் ஆளுநரிடம் சொல்ல, அவர் அதிகாரிகளைப் பார்க்க, அதிகாரிகள் தத்தம் கீழ் அலுவலர்களை முறைத்தனர்.
குடியரசுத் தலைவர் அப்பெண்மணிக்கு முதியோர் பென்ஷனும் வழங்க உத்தரவிட்டார். அந்த அம்மாவுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குக் காரணமானவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டார். ஆனால் நடந்தது என்ன? “இந்த இடத்துக்கு எப்படீடி வந்தே” என்று அவளை இடித்துத் துன்புறுத்தியதுதான் அவள் கண்ட பலன். விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டுக் கொண்டிருந்தார் என்று முடிவு பெறுகிறது ‘பாரத மாதா’ என்ற இச்சிறுகதை (மனம் கொத்தி மனிதர்கள்).
எழுத்தாளர் மயில்நாதனைத் தேடி ஓர் இளைஞன் வருகிறான். வந்தவன் தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். “என் பெயர் கலிங்கன். நீங்க எழுதுன நாவல் இருக்குதே ‘பங்க மனிதன்’, அதை எங்க இயக்குநர் அரூப சொரூபன் படமாக்குவது என்று தீர்மானிச்சுட்டார். உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்கார். புறப்படுங்க.”
“தம்பி. ஒரு எழுத்தாளன் கிட்ட வரும்போது நாவலைப் படிக்காட்டாலும், அதோட பெயரையாவது ஞாபகம் வச்சுக்கணும். நான் எழுதியது மனித பங்கம்.”
“கோபப்படாதீங்க அண்ணே. ஏகப்பட்ட நாவல் படிக்கிறோமா. அதனால சில சமயம் ஒரு கதை இன்னொரு டைட்டிலுக்குப் போயிடுது.”
“சினிமாக்காரங்க அதிகமாகப் படிக்க மாட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்”.
“தப்புண்ணே தப்பு. நாங்க பாக்காத நாடகங்கள் இல்லை. படிக்காத நாவல்கள் இல்லை. ரசனைக்காக அல்ல. எல்லாம் உல்டாவுக்கும், சொருகிறதுக்கும்தான்.
நாடகத்தில் வரும் வித்தியாசமான மாமனார் கேரக்டரை சினிமாவில் மாமியார் ஆக்கிடுவோம். வாரப் பத்திரிகையிலே வருகிற ஜோக்குகளை அங்கங்கே காட்சியா காட்டிடுவோம். இதுக்குப் பேரு சொருகிறது. உல்டாவுக்கும் சொருகிறதுக்கும் பலரை வேலையில் வைத்திருக்கிறோம்” என்று விளக்குகிறான்.
எழுத்தாளர் மயில்நாதன் “இவனுவ கலைஞர்கள் இல்லை – சிறையில் திணிக்க முடியாத கொள்ளைக்காரர்கள்” என்று திட்டினாலும், வறுமையின் பிடியில் வேறுவழியின்றி ஒத்துக் கொள்கிறார். மயில்நாதனின் கதை திரையில் முற்றிலுமாக மாறுகிறது. வாச்சாத்தியின் அவலக் கதையைக் காமக் கதையாகத் திரைப்படக் கலைஞன் மாற்றுகிறான். திரையுலக அவலங்களைக் கண்டு பொறுக்க முடியாமல், கதைக்கு வாங்கிய பத்தாயிரம் ரூபாய் நோட்டுக் கற்றையை இயக்குநரின் கை விளிம்பிற்குள் திணித்துவிட்டுக் கோபத்தை மௌனமாக்கி வெளியேறி விடுகிறார் எழுத்தாளர்.
திரையுலகின் உள்ளே நடக்கும் அவலங்கள் இப்படியென்றால், திரைப்பட மோகத்தால் மக்களும் எப்படி மாறிப்போய் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் சிறுகதை ‘நிசங்களை விழுங்கிய நிழல்கள்’ (ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்).
நியாய விலைக் கடைகளில் நடக்கும் ஊழல்கள் கண்டு, அதைத் தட்டிக் கேட்க வேண்டும். ஊழல் செய்பவர்களை இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். என்ற போர்க்குணத்தோடு பெண்கள் கிளம்புகிறார்கள். பத்திரிகைச் செய்திகளில் வந்த திரைப்பட நாயகர்கள் பற்றிய கிசுகிசுப்புச் செய்தியைப் படிக்கிறார்கள். அதிலேயே ஆழ்ந்து போய் மனம் ஒன்றி நியாயம் கேட்கச் செல்ல வேண்டும் என்பதையே மறந்து போகிறார்கள்.
நிழலை நிசமாக நினைக்கிறார்கள். நிசத்தை மறந்து போகிறார்கள். பத்திரிகைகள் திரைப்பட நடிகர்கள் பற்றிய செய்திகளை விவரிப்பதும் இதற்கு ஒரு காரணம். ‘தொட்டால் கை வழுக்கும். அத்தனை பத்திரிகைகளும் நல்ல பாம்பு படமெடுத்தது போல் பக்கங்களை விரித்துக் காட்டிக் கொண்டிருந்தன. அவற்றின் உட்பக்கங்களோ புதைமணலாய்த் தோற்றங்காட்டின’ என்கிறார் சு.சமுத்திரம் (ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்).
மனநிலை சரியில்லாத 30 வயது மீனாட்சி, அண்ணன் குடும்பத்தில் இருக்கிறாள். அவளால் யாருக்கும் துன்பமில்லை. பேனாவை எடுத்துப் பல் குத்துதல் போன்ற காரியங்களைச் செய்வாள் – திட்டினால் தலையைக் குனிந்து கொள்வாள். ஆபத்தில்லாத பைத்தியம் என்று சொல்லிக் கொண்டே அண்ணன் மகள் ஒரு வாலிபனுடன் வீட்டுக்குள் வந்தாள். வீட்டில் யாருமில்லை. உள்ளறைக்குப் போனார்கள். அண்ணன் மகள் பயத்துடன் சிரிப்பதைக் கேட்ட மீனாட்சி உள்ளே ஓடிச் சென்று விமலாவை மாறி மாறிக் கன்னத்தில் அடித்தாள். தடுக்க வந்த வாலிபனை ஓங்கி ஒரு அறை கொடுத்து வாசலுக்கு வெளியே தள்ளினாள். அருகில் வந்த விமலாவின் கண்களைத் துடைத்தாள். ஒரே ஒரு வினாடிதான். மீனாட்சி வழக்கமாக அமரும் இடத்தில் முழங்கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். மனநிலை சரியில்லாத பெண்ணும் அண்ணன் மகளைத் தக்க சமயத்தில் காப்பாற்றும் அன்பு நிறைந்தவளாய் இருப்பதைச் சொல்லும் கதை ‘மீனாட்சி நிமிர்ந்து பார்க்கிறாள்’ (ஒரு சத்தியத்தின் அழுகை),
மன நோயாளி குணமான பின்னரும் குடும்பத்தாரும் ஊராரும் அவனைப் பைத்தியம் என்று கருதுவதும், பேசுவதும் அவனை மீண்டும் பைத்தியமாகவே ஆக்கிவிடும் அவலத்தைச் சொல்லும் கதை ‘மனம் கொத்தி மனிதர்கள்’ (மனம் கொத்தி மனிதர்கள்). ஆணும் பெண்ணும் சமம் என்று சொன்னாலும் இன்று எழுதாத சமூகச் சட்டங்கள் பெண்களை உணர்வு உள்ளவர்களாக நினைப்பதில்லை. அதனால் வரதட்சணை கொடுக்க வேண்டிய அவலம் இன்றைய சமுதாயத்தில் உள்ளது. மூன்று பெண்களைப் பெற்ற சிவராமன் மூன்றாவது பெண்ணின் திருமணத்துக்குப் பத்தாயிரம் ரூபாய்க்கு நகை போடச் சம்மதிக்கிறார். முதல் இரண்டு பெண்களும் தங்கள் பங்கு குறைந்து போய்விட்டதாகத் தந்தையோடு சண்டை போட, கிராமத்து வீட்டையும் நிலத்தையும் விற்று இருவருக்கும் பணம் அனுப்புகின்றார்.
அவருடைய மகன் தந்தையின் தன்மானத்தை விட இரண்டாயிரம் ரூபாய் பணத்தையே பெரிதாக நினைக்கிறான். தங்கைக்கு மாமனாராகப் போகின்றவரிடம் எட்டாயிரம் ரூபாய் தான் புரட்ட முடிந்தது என்கிறான். மணமகனோ இரண்டாயிரம் வராவிட்டால் தாலி கட்ட முடியாது என்கிறான். சிவராமன் மகளின் திருமணம் நின்று விடக் கூடாதே என்று சம்பந்தியின் கால்களில் விழுந்து எழுந்து விட்டார். மணமகன் பந்தலை நோக்கி வர, கெட்டி மேளம் முழங்கியது. சாந்தியின் கழுத்தை நோக்கி வந்த தாலிக் கயிறு அவளால் தட்டி விடப்பட்டது.
கணவன், மனைவி என்ற புனிதமான உறவுக்கு விலை பேசியவனைக் கணவனாக ஏற்க மறுத்து விட்டாள் சாந்தி. தந்தையிடம் மன்னிப்புக் கேட்கிறாள்.
“பணத்தைக் கொடுத்து பந்தத்தை வாங்குவதை விட உங்களையும், உங்களுக்குப் பிறகு கடவுளையும் நினைத்துக் காலத்தைக் கழித்து விடுவேன். விலை கொடுத்து வாங்கும் பந்தத்திற்காக விலை மதிக்க முடியாத இந்தப் பந்தத்தை வெட்டிக் கொள்ள மாட்டேன். இது சத்தியம்” என்கிறாள் ‘உறவின் விலை’, (குற்றம் பார்க்கில்’).” அற்ப மனம் கொண்ட உறவினர்களால் அப்பெண்ணுக்கு என்ன பயன்?” என்ற ஆசிரியர் கேட்காத கேள்வி, இச்சமுதாயத்தைப் பார்த்துக் கேட்கப்பட்டது அல்லவா?
தன்மானம் இழந்து பிறர் காலில் விழும் கலாச்சாரத்தை, அதன் விளைவுகளைக் கற்பனை செய்து எழுதப்பட்ட சிறுகதை ‘எதிர்ப் பரிணாமம்’ (ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்).
கி.பி.2140 இல் உலகம் முழுவதும் ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ் ஒழிக்கப் பட்டு விட்ட காலத்தில் தமிழக மக்களை ஒரு விசித்திரமான நோய் பிடித்துக் கொண்டது. தமிழர்களில் பெரும்பான்மையோர் தரையோடு தரையாய்த் தவழ்ந்து பிறகு தரைக்குக் கீழேயும் போக விரும்பி, தலைகளைத் தரையில் மோதி மோதி மூக்குகள் உடைபட்டு, சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஒரு செய்தி. சர்வதேச அறிஞர்கள் ஒன்று கூடி விவாதித்து இதற்குரிய காரணங்களைக் கூறுகின்றனர்: “இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தவழ்ந்தபடியே உயிர் வாழும் இவர்களின் மூதாதையர் வாழ்க்கை முறைபற்றி விசாரித்தபோது அமைச்சர்கள், அரசியல் வாதிகள் அல்லது உயர் காவல் துறையினராக இருந்தமை தெரிய வருகிறது. உயிரின உடம்பில் அமைந்த ஜீன்கள் வழி வாரிசுகளுக்கும் இக்குணம் வந்து காலில் விழுவதற்கு ஏற்பச் சம்பந்தபட்டவரின் உடல் வாகை மாற்றுகின்றன”.
இவ்வியத்தகு வியாதிக்குச் சிகிச்சை முறை கீழ்க்கண்டவாறு கூறப்படுகிறது: “தனி நபர் வழிபாடு என்ற போலி உலகைச் சிருஷ்டித்துக் கொண்டவருக்கு ஏற்பட்ட இந்நிலையைப் போக்க, தவழ்ந்து கிடக்கும் நோயாளிகளின் காதுகளில் கணியன் பூங்குன்றன் பாடிய ‘பெரியோரை வியத்தலும் இலமே’ என்ற பாடலை 24 மணி நேரமும் ஒலிக்கச் செய்ய வேண்டும்.
கயவர்தாம் தங்களைத் தாமே வியப்பர் என்ற வள்ளுவர் வாசகத்தைக் காதில் குத்தும்படி சொல்ல வேண்டும். இதனால் ஏற்படும் மாற்றங்கள் இவர்களின் செல்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். இப்படி ஏற்பட ஏற்படப் படுத்துப்போன தமிழனின் முதுகெலும்பு மீண்டும் செங்குத்தாக ஆகும். இதற்கு மூன்று தலைமுறை ஆகும் என்றாலும் இன்றைய தமிழன் மூன்றாவது தலைமுறைக்காவது முதுகெலும்பு நிமிர்ந்தால் சரிதான்” என்ற வரிகளில் ஆசிரியரின் சமூகப் பொறுப்புணர்வும், தமிழன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற அவருடைய வேட்கையும் வெளிப்படக் காணலாம்.
தன் மகனுக்குப் பெண் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் மைத்துனர் மகள் கிளியம்மையின் திருமணத்தை நிறுத்தத் துடிக்கிறார் பலவேசம். வண்ணாத்தி செல்லக்கனியின் உதவியை நாட அவளும் அதற்கு ஒப்புக் கொள்வது போல் நடிக்கிறாள். “கிளியம்மை அகங்காரி என்பது உண்மைதான். அதற்காக ஒரு பொண்ணோட வாழ்வைக் குலைக்கிற அளவுக்கு நான் மோசமானவ இல்ல. ஏன்னா நான் அழுக்க எடுத்திட்டு சுத்தத்தைக் கொடுக்கிறவ என்கிறாள். வண்ணாத்தியின் மனித நேயம் உணர்த்தும் சிறுகதை ‘இலவு காத்த பலவேசம்’ (ஒரு சத்தியத்தின் அழுகை).
மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க வரும் பெண்மணியை வரவேற்கப் புகைவண்டி நிலையத்தில் காத்திருந்தவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி. கோட்ட அதிகாரி, தாசில்தார், ரெவின்யூ அதிகாரி மற்றும் டவாலிகள், கோட்ட அதிகாரி மாலையிட்டு வரவேற்க, கலெக்டர் அம்மா “நான்சென்ஸ் நான் என்ன மினிஸ்டரா இந்த அமர்க்களம் எல்லாம் எதுக்கு?” என்று கோபித்தாள். கோட்ட அதிகாரி குமரன் துடித்துப்போனான். இதுபோல ரெவின்யூ இன்ஸ்பெக்டர் மீது கோபித்த போது, தனக்கு எங்கு மாற்றலோ என்று அஞ்சி அஞ்சித் துடித்தார். ஆங்கிலத்தில் பேசிவிட்ட தாசில்தாருக்கு ஒர் அர்ச்சனை – ” தமிழை நிர்வாகத்தில் அதிகமாய்ப் பயன்படுத்த வேண்டும்” என்றவுடன் ஆடிப்போனார் அவர்.
ஆணையாளரின் அதிகப் பிரசங்கித்தனமான பேச்சும் அம்மாவால் விரும்பப் படவில்லை. பிரமோஷன் வருகிற நேரம் இப்படியாகி விட்டதே என்று அவருக்கு வருத்தம். இப்படி எல்லாரையும் வருத்தப்பட வைத்த கலெக்டர் அம்மாவும், யாரென்று தெரியாமல் சீப் செகரட்டரியிடம் முரட்டுத் தனமாகப் பேசிவிட்டதால், காரில் ஏறிய பின்னரும் வருந்துகிறாள். ‘எடுத்த எடுப்பிலேயே சி.எஸ்.கிட்டே கெட்ட பெயர் வாங்கிட்டேனே! இனிமேல் மியூசியம் டைரக்டர் வேலைக்குத் தான் போகணுமோ?’ என்று நிறைவு பெறுகிறது இக்கதை! (இவர்களின் உலகம்).
குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் போக்குவரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் காவல் துறையினரின் கெடுபிடியான செயல்களைப் பற்றிய வர்ணனையைப் பாருங்கள்: “முக்கியப் பிரமுகர் வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், போன பிறகு ஒருமணி நேரத்திற்குப் பின்பும் கட்டவிழ்த்து விடப்படும் காவல் துறையினர், சாலைகளை மூடி லத்திக் கம்புகளை ஆட்டி நாயக ஜனங்களுக்கு ஜனகன பாடிவிடுவது ஒரு பழக்கம். கார் வைத்திருப்பவர்களை ‘சார்’ பட்டம் கொடுத்தும், ஸ்கூட்டரில் செல்பவருக்கு ‘மிஸ்டர்’ பட்டம் வழங்கியும், சைக்கிள்காரர்களை ‘டேய்’ போட்டும் துரத்தியாகி விட்டது’. (பாரத மாதா).
வழக்கறிஞர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘மாப்பிள்ளை’ என்று உருவகிக்கிறார். வழக்கறிஞர்தான் மாப்பிள்ளை, அதே முறுக்கு. அதே வரதட்சணை அதே மற்றும் பல . . (மதில் மேல் பூனை, ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்).
இன்றைய சமுதாயத்தைப் பிடித்திருக்கின்ற சில நோய்களைக் கண்டு கூறுவதும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைப்பதும் பெரும்பாலான கதைகளுக்கான கருப்பொருள்கள் ஆகின்றன.
அரசியல் கட்சி மற்றும் அக்கட்சித் தலைவர் மீது மோகமும், திரைப்பட மோகமும் கொண்ட நிலை சமுதாயச் சீர் கேட்டுக்குக் காரணமாவது சுட்டிக் காட்டப்படுகிறது.
பணத்தாசை கொண்டு நீதி, நியாயம், நேர்மை ஆகியவற்றைப் புறக்கணிக்கும் நிலையும், தனிநபர் வழிபாடு, மக்களைத் தன்மானம் இழக்க வைக்கும் நிலையும் பல கதைகளின் உள்ளடக்கமாகிறது.
அரசு அலுவலகங்களின் அவலம், அதிகாரிகளின் ஆணவப் போக்கு, ஏழைகளுக்கு நியாயம் புறக்கணிக்கப்படுதல் ஆகியவை துணிவுடன் பேசப்படுகின்றன.
சிறப்பாக விழாக் கொண்டாடுவதற்கு ஊர்ப் பணத்தை நாசப்படுத்துகிறார்கள் காடசாமி, மாடசாமி என்பவர்கள். நேர்மைக்கும் நீதிக்கும் போராடும் பழனிச்சாமி, கடல்மணி போன்றவர்கள் போராடிச் சாகிறார்கள். நட்பின் உயர்வுக்கு எடுத்துக்காட்டாக, சிநேகித சாதியில் உயர்ந்த மனிதர்களைப் படைத்துக் காட்டுகிறார்.
கட்சித் தலைவர்கள் மீது மோகத்தால் தமக்குள் பகை கொள்கிறார்கள். தங்கள் வீட்டுத் திருமணத்தையே நிறுத்திக் கொள்கிறார்கள். அங்கே கல்யாணம் இங்கே கலாட்டா (குற்றம் பார்க்கில்). உறவு பகையாக மாறியது. யார் காரணமாக இவ்வுறவு பகையாகின்றதோ அவர்கள் வீட்டுத் திருமணம் நடைபெறும் செய்தி பத்திரிகையில் வெளிவருகிறது.
கடமை மறந்து, ஆடம்பர விழாக் கொண்டாடும் மக்களையும் நமக்குக் காட்டுகிறார். பழம்பெருமை பேசிக்கொண்டு பாராட்டு விழா எடுப்பவர்கள் பாகிஸ்தான் போரில் காலை இழந்த சிப்பாயைக் கண்டு கொள்ளவில்லை என்று மக்கள் மனப்பான்மையையும் அவர்களை வழிநடத்தும் தலைவர்களின் சுயநலப் போக்கினையும் தோலுரித்துக் காட்டுகிறது ‘ஐம்பெரும் விழா (ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்). “காற்றில் தென்னை ஆடும்போது அதில் இருக்கும் ஓணான் தானே அந்தத் தென்னையை ஆட்டுவதாக நினைத்து, தனது தலையை ஆட்டுமாமே… அப்படிப்பட்ட அலுவலக ஓணான் பயல்கள்” (ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்) என்று பதவியும் அதிகாரமும் இருக்கும் துணிச்சலில் தற்பெருமை கொள்ளும் மனிதர்களைச் சாடுகிறார். இனி அவர் கையாளும் உத்தி முறைகள் பற்றிப் பார்ப்போமா?
“நம்ம மெக்கானிக் ஒரே நிமிடத்தில் முடிச்சுடுவாராம். ஆனால் அது தப்பாம். ஒரு அதிகாரியோ அல்லது ஊழியரோ சர்க்கார் பணத்தை மோசடி பண்ணக் கூடாதுங்கிறதுக்காக இப்படிப்பட்ட சட்ட திட்டங்களைப் போட்டிருக்காங்க. ஆனால் அதில் தங்கள் சுயநலத்தையும், சோம்பல் குணத்தையும், பொறுப்பற்ற தன்மையையும் காட்டுவதால் ஏற்படும் அவலங்கள் இவை”. அரசு வேலை என்றால் இப்படி அல்லல் ஏற்படுத்தும் என்ற அச்சம் ஓர் இளைஞனை அரசு வேலைக்கான நியமன ஆணையையே கிழித்துப் போட வைக்கிறது என்று ‘அரவிந்தும் ஆறுமுகமும்’ கதையில் எடுத்துரைக்கிறார்.
ஓர் அமைச்சரின் வருகையை ஒட்டிய முன்னேற்பாடுகள், குறிப்பாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு ஏற்படுத்திய குழப்பத்தை நகைச்சுவையாகச் சொல்கிறது. ‘அமைச்சர் புகுந்த மணவிழா’. போக்குவரத்து நெரிசலில் அமைச்சர் திருமணத்திற்கு வரத் தாமதமாகவே மணமகனே அமைச்சரை எதிர்கொண்டு அழைக்கச் செல்கிறான். போக்குவரத்து நெரிசலில் மணமகன் மாட்டிக் கொள்ள, மணமகனைக் காணாததால் “அவனுக்குப் பெண்ணைப் பிடிக்கவில்லை” என்று சிலர் பேச, அதை நம்பிய அமைச்சரும் அவன் பொறுப்பற்றுப் போனதாகக் கருதி, வேறொரு சொந்தக்காரப் பையனை மணமகனாக்கினார். தாமதமாக வந்த மணமகன் சோகமாக எங்கோ சென்றான். மறுநாள் வந்த பத்திரிகைச் செய்தி: ‘மணப்பெண் பிடிக்காமல் மாப்பிள்ளை தலைமறைவு! அமைச்சரின் சமயோசிதத்தால் மணமகள் குலமகளானாள்!’. இப்படி, சிறுகதை முடிவில் தரும் அழுத்தம் இவருக்கே உரிய உத்தி எனலாம்.
சிறுகதைத் தலைப்பிலேயே சொல்ல வந்த கருத்தைச் சுருக்கி உரைப்பதும் இவருடைய உத்தி எனலாம். எ.கா: புலித்தோல் போர்த்திய மாடுகள், கண்ணுக்குத் தெரிந்த கிருமிகள், பொறுத்தது போதாது, (ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்), மேதைகள் தோற்றனர் (குற்றம் பார்க்கில்), சிநேகித சாதி, வேலையில் ‘காயம்’ (மனம் கொத்தி மனிதர்கள்.)
தன்னலம் மிகுந்து பொதுநல உணர்வற்றுப் போய் வாழும் மனிதர்கள் மிகுந்த சமுதாயம் இவர் கதைகளில் படம் பிடிக்கப்படுகிறது. தமிழ்ச் சமுதாயம் உயர வேண்டும் என்ற நோக்கம் பல கதைகளில் எதிரொலிக்கிறது. அதற்குரிய வழிமுறைகளையும் இவர் படைப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.
வறியவர் அவலம், குடும்ப உறவுகள், அவற்றின் நிலைகள் பல கோணங்களில் எடுத்து உரைக்கப்படுகின்றன. சமூக அநீதியை எதிர்த்துப் போராடும் வலிமை படைத்த உள்ளங்களையும், அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் சு.சமுத்திரம் நயமுற எடுத்துரைக்கின்றார்.
கூறவந்த கருத்தை அங்கதச் சுவையோடு எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர் சு.சமுத்திரம். சமத்காரமாகக் கையாளும் ஆற்றல் பெற்றவர். தமக்கெனத் தனிநடை கொண்டவர்.
சமுத்திரத்திடம் சீற்றமுண்டு – சீதளக் குளிருமுண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக அவரிடம் மானிட நேயம் உண்டு” என்னும் முனைவர். இராம குருநாதனின் கூற்று மிகப் பொருத்தமாக உள்ளது எனலாம். சமூகப் பொறுப்புணர்வு அனைவர்க்கும் வேண்டும் என்ற உயரிய நோக்குடைய சு.சமுத்திரத்தின் சிறுகதைகள் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் தனியிடம் பெற்று விளங்குகின்றன எனலாம்.
பாடம் - 5
ஆர்.சூடாமணியின் சிறுகதைகள்
தி.ஜானகிராமனின் சிறுகதைகள்
அண்ணாவின் சிறுகதைகள்
சு.சமுத்திரத்தின் சிறுகதைகள்
பிரபஞ்சன் சிறுகதைகள்
அம்பையின் சிறுகதைகள்
மேற்கூறிய பாடங்களில் முதல் நான்கு பாடங்கள் படித்து விட்டோம். பிரபஞ்சனின் சிறுகதைகள் பற்றி இப்போது பார்ப்போமா?
பிரபஞ்சன் என்ற புனைபெயரைக் கொண்ட இவருடைய இயற்பெயர் வைத்தியலிங்கம். சென்னையில் வாழும் பிரபஞ்சன் பல வார இதழ்களிலும், மாத இதழ்களிலும் சிறுகதைகள் படைத்து நாடறிந்த எழுத்தாளராக இருப்பவர்.
பிரபஞ்சம் என்பது, உலகத்தைக் குறிக்கும். உலக மனிதனாக ஆசைப் பட்டதால் பிரபஞ்சன் என்ற புனைபெயரை வைத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.
“மனிதன் சக மனிதன்பால் அன்பு செலுத்த வேண்டும். எனில் மனிதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி எனில் அவன் தன்னைத் தானே புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இங்ஙனம் மனிதன் தன்னை அறிவதற்குக் கலையும் இலக்கியமும் மிகப் பெரும் துணையாய், ஒரு நல்ல சினேகிதனாய் நிற்கும் என்று நான் உளப்பூர்வமாக நம்புகிறேன்” என்கிறார் (நேற்று மனிதர்கள்- முன்னுரை).
மேற்கூறிய நம்பிக்கை பிரபஞ்சன் படைப்புகளில் எதிரொலிக்கக் காணலாம்.
தனக்குப் பிடித்த பத்துப் புதினங்களைப் பட்டியலிடும் பிரபஞ்சன், தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றும் ஒரு நாளே’ என்று தொடங்கி, பத்தாவது புதினமாகத் தன்னுடைய வானம் வசப்படும் புதினத்தைக் குறிப்பிடுகிறார். இனி இவர் பெற்ற பரிசுகளும் பாராட்டும் பற்றிப் பார்ப்போமா?
இவரது புகழ்பெற்ற நாடகப் படைப்பு முட்டை தில்லிப் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இவரது மானுடம் வெல்லும் சரித்திரப் புதினம் ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றுள்ளது.
இவரது மகாநதி புதினம் கோவை கஸ்தூரி ரங்கம்மாள் நினைவுப் பரிசு பெற்றுள்ளது. இவரது சந்தியா புதினம் 1997- ஆம் ஆண்டு ஆதித்தனார் நினைவுப் பரிசு பெற்றுள்ளது. இவரது பிருமம் சிறுகதை இலக்கியச் சிந்தனையால் ஆண்டின் சிறந்த கதையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவர் கதைகள் ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு முதலான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
1986 ஆம் ஆண்டில் வெளிவந்த நேற்று மனிதர்கள் சிறுகதைத் தொகுதி 1997 ஆம் ஆண்டில் நான்காம் பதிப்பாக வெளிவந்துள்ளது. சைக்கிள் தொடங்கி நேற்று மனிதர்கள் முடிய 13 கதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு அது. 1995 இல் வெளிவந்த விட்டு விடுதலையாகி சிறுகதைத் தொகுப்பில் 11 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
2001 இல் வெளிவந்த இருட்டின் வாசல் சிறுகதைத் தொகுப்பில் ஒரு மதியப் பொழுதில் தொடங்கி, சிட்டை முடிய 17 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், இலக்கிய மலர்களாக வரும் மாத இதழ்களிலும், தீபாவளி மலர்களிலும், இவரது சிறுகதைப் படைப்புகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன.
‘எல்லாவற்றையும் பெறத் துடிக்கின்றோம். பெற்றும் வாழ்கின்றோம். ஆனால் மகத்தானதாகிய வாழ்க்கையை இழந்து விடுகின்றோம். வாழ்க்கையை இழந்து வாழ்வா?’ என்ற பிரபஞ்சனின் கேள்வி. இவர் படைப்புகளிலும் எதிரொலிக்கக் காண்கிறோம்.
குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் உரிமைகளும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்கிற ஆசிரியரின் வேண்டுகோள் பல சிறுகதைகளில் எதிரொலிக்கக் காணலாம்.
எட்டு வயது லெட்சுமியின் வகுப்புத் தோழன் சிட்டி. இவர்களுடைய கள்ளம் கபடம் இல்லாத நட்பு வகுப்பு ஆசிரியரால் கொச்சையாகப் பேசப்படுகிறது. இதனால் மனம் வருந்தித் துன்புறும் லெட்சுமியின் உணர்வுகளைக் கதை ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்:
“சிட்டி நான் செத்ததும் திரும்பவும் பிறப்பேன். பிறந்தால் பறக்கிற பட்சியா பிறப்பேன். எவ்வளவோ சந்தோஷம். பறவையாய்ப் பிறந்தா. பள்ளிக்கூடம் போக வேண்டாம்” (பூக்களை மிதிப்பவர்கள்).
பெண்களின் உரிமையும் உணர்வும் மதிக்கப்படாத நிலை இன்றும் சமுதாயத்தில் நிலவுவதை எடுத்துரைக்கும் சிறுகதை ‘அம்மாவுக்கு மட்டும்’ (இருட்டின் வாசல்).
விடியற்காலை நாலரைக்கு எழுந்து வேலை செய்யத் தொடங்கிய சாந்தாவை அவன் மகன் சித்து பார்க்கிறான். தொடர்ந்து அவள் (காபி, இட்லி, சமையல்) வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். கணவன் அவசர அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்கிறான். புறப்படும்போது வந்த தன் நண்பனுக்கு மனைவியை அறிமுகம் செய்து வைக்கிறான். “வேலைக்குப் போறாங்களா?” என்று நண்பன் கேட்ட போது, “இல்ல, வீட்டுல சும்மாதான் இருக்கா” என்கிறான். வேலைக்காரியை நிறுத்திவிட்டு, மேலும் சிக்கனமாக இருக்கச் சொல்கிறான்.
“ஆபீஸ்ல நாலு ஆள் வேலையை நான் செய்யறேன். ரொம்பக் களைப்பா ஆயிடுது. வீட்டுல சும்மா இருக்கிற உனக்கு எங்க கஷ்டம் விளங்காது” என்கிறான். தூக்கம் வரவில்லை என்று சொன்ன மகனிடம்,” உங்களுக் கென்ன? அம்மா, வீட்டுக்குள்ள மகாராணியா இருக்கா. நீ படிக்கிறே. காலைலே பஸ்சுல நசுங்கி, நடந்து, ஆபீஸ்ல கஷ்டப்பட்டு வீடு வந்து சேர்றதுக்குள்ள நான் படற கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.’
“எதுக்கப்பா இத்தனை கஷ்டப்படறே?”
“கஷ்டப்படலேன்னா, சம்பளம், சுளையா மூவாயிரம் யார் கொடுப்பா?”
“அப்பா, உனக்கு ஆபிசுல சம்பளம் கொடுக்கறாங்க. அம்மாவுக்கு யாருப்பா சம்பளம் கொடுப்பா?”
“அம்மாவுக்கு சம்பளமா?”
“அம்மாவும்தானே வேலை செய்யறாங்க. காலையிலே உனக்கு முன்பே எழுந்திருக்கிறாங்க. தெருப் பெருக்கி காபி போடறாங்க. சோறு ஆக்கிறாங்க. துணி துவைக்கிறாங்க, வீடு கழுவி விடறாங்க, ராத்திரியும் சோறு ஆக்கிறாங்க. இதுக்கெல்லாம் சம்பளம் தர வேணாமாப்பா நீ? ஆபீசுல நீ வேலை பார்க்கிறதுக்கு உனக்கு சம்பளம். வீட்டுல வேலை பார்க்கிறதுக்கு அம்மாவுக்கு யார் சம்பளம் கொடுப்பா?”
பதில் சொல்லத் தோன்றாமல் அமர்ந்திருந்தான் சேகர். சேகருக்கு மட்டுமா பதில் சொல்லத் தோன்றவில்லை என்ற பாவனையை இச்சிறுகதை உண்டாக்குகிறதல்லவா?
வரதட்சிணைக் கொடுமையைச் சொல்வது தொலைந்து போனவள் (விட்டு விடுதலையாகி) சிறுகதை. பெண்ணினத்தையே அவமானப்படுத்துவதைப் போல் நடைபெறும் பெண்பார்க்கும் நிகழ்ச்சி இப்படி விமர்சிக்கப்படுகிறது:
சீதா அக்காவைப் பெண்பார்க்க வருபவர்கள் இரண்டு வகைப் பட்டவர்களாக இருப்பார்கள். காலை நேரத்தில் வருபவர்கள் மற்றும் மாலை வேளையில் வருபவர்கள். மிக நிம்மதியாகக் காலைப் பலகாரம் சாப்பிட்டு விட்டு, பெரும்பாலும் ஞாயிறுகளில் பொழுது போக்க, வேறு ஒரு காரியமும் இல்லையெனின் அப்படியே தமாஷாக அக்காவைப் பார்க்க வருபவர்கள். மாலை வேளைக்காரர்கள்… காலாற நடந்து ஒரு மாறுதலுக்காக வருபவர்கள். வந்தவர்கள் இனிப்பு காரமெல்லாம் சாப்பிட்டார்கள். எல்லா மாப்பிள்ளைகளையும் போலத்தான் அவரும் இருந்தார். அதே விறைப்பு, அதே ஒட்டாத பார்வை எல்லாம். “மிஸ் சீதாவுக்கு என்ன அடிப்படைச் சம்பளம், நானூற்றைம்பதா? எழுநூறுக்கு மேலேன்னாரே தரகர்” அலுத்துக் கொள்ளும் மாப்பிள்ளை.
பண விஷயத்தில் மாப்பிள்ளைப் பையன் குறியாக இருப்பது பற்றித் தயங்கினார் பெண்ணைப் பெற்றவர். பெண் என்ன முடிவெடுக்கிறாள் பாருங்கள்:
“வரப் போகிறவரைப் புரிந்து கொண்டு, அவரிடம் இருக்கிற நல்ல குணத்தை அல்லது கெட்ட குணத்தைப் புரிஞ்சுகிட்டுக் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரியா நாம இருக்கோம்? கண்ணுக்கு விகாரமா இல்லை; ஏதோ சம்பாதிக்கிறார். அதுக்கு மேலே நம்மால போக முடியாதுடி. ஒவ்வொரு சம்பந்தமும் முறிஞ்சு போறப்போ அப்பா எவ்வளவு சங்கடப்படறார்? உனக்கும் வயதாகிறது. நான் எதுக்கு நந்தி மாதிரி நடுவில் கிடந்து உன் வாழ்க்கையை மறிக்கணும்” என்கிறாள் தங்கையிடம். இப்படித் தன் ஆசைகளை விருப்பத்தைத் தொலைத்துக் கொண்டு மற்றவர்கள் மனத்தை நோகடிக்காத, பெண்ணின் மேன்மையான உணர்வுகளைச் சொல்லும் கதைதான் ‘தொலைந்து போனவள்’ (விட்டு விடுதலையாகி).
பாண்டிச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் வாழ்ந்து வந்த ஒரு குடும்பம். அக்குடும்பத்தில் மாமாவின் பண்பினை அவர் மருமகன் கூறுவதைப் பாருங்கள்:
“மாமாவுக்குப் பிரான்சிலிருந்து வந்த எந்தப் பொருளும் உன்னதமானவை. வெள்ளைக்காரர்கள் கடவுள் மாதிரி. அவர் உபயோகிக்கும் சைக்கிள், சோப், பட்டுச் சட்டை எல்லாமே மேல் நாட்டிலிருந்து வந்தவை. சைக்கிளை அவர் பராமரிக்கும் அழகே அழகு. மாமா சைக்கிளுக்குப் பக்கத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு பல்லுக்கும் சொட்டுச் சொட்டாய் எண்ணெய் விடுவார். சைக்கிளுக்கு எண்ணெய்க் காப்பு முடிந்ததும் கொஞ்சம் தள்ளி நின்று அதைப் பார்ப்பார். குழந்தையைப் பார்க்கிற உற்சாகம் அவர் முகத்தில் ததும்பும். அப்புறம் பெடலை வேகமாக மிதித்துச் சக்கரத்தைச் சுழல விடுவார். சக்கரம் மயங்கிக் கொண்டு சுற்றும். சரக்கென்று பிரேக் போடுவார். உதறிக்கொண்டு நிற்கும் சக்கரம். சைக்கிளை அவர் தவிர வேறு யாரும் தொடக் கூடாது.”
இப்படிப்பட்டவரை சைக்கிளையே வேண்டாம் என்று மருமகனிடம் கொடுக்க வைத்தது ஒரு நிகழ்ச்சி. அது என்ன என்று பார்ப்போமா?
திரௌபதி அம்மன் திருவிழா உற்சவம். மாமா ஒரு நாள் பொறுப்பேற்றுச் சிறப்பான முன்னேற்பாடுகள் செய்தார். பட்டுச் சட்டை, பட்டு வேஷ்டி உடுத்திக் கம்பீரமாக வீற்றிருந்தார் மாமா. கூத்து தொடங்கியது. முக்கிய அதிகாரியான செபஸ்தீன் தன் மனைவியோடு வர, மாமா எழுந்து தன் நாற்காலியில் துரை மனைவியை அமரவைக்க வேண்டியதாயிற்று. பிறகு நாற்காலி வர, துரை மனைவியின் பக்கத்தில் நாற்காலியைப் போட்டு அமர்ந்தார். துரை மனைவி கணவன் பக்கம் திரும்பி அவர் காதில் ஏதோ சொல்ல. துரை மாமாவைத் தனியே அழைத்துப் போனார்.
“நீங்க பக்கத்தில் உக்காருவது துரை மனைவிக்குப் பிடிக்கவில்லை.”
“பிடிக்கலையா… எதுக்கு?”
“நான் நினைக்கிறேன் – என்ன இருந்தாலும் நீங்க எங்களுக்குச் சரிசமமா உக்காரலாமா? அதுவும் ஒரு பொது நிகழ்ச்சியில்….”
மாமாவுக்கு யாரோ கன்னத்தில் அறைந்தது போல் இருந்திருக்கிறது. இந்நிகழ்ச்சிக்குப் பின்தான் மாமா ஆசையாய்ப் போற்றிப் பாதுகாத்த பிரான்சு சைக்கிளை மருமகனிடம் கொடுத்துவிட்டார்.
மனிதர்கள் மனத்தைக் காட்டும் கண்ணாடி முகம் என்கிறார்கள். எத்தனையோ முகத்தில் அகத்தின் நிலை தெரிகிறது. தெரிவதை எவ்வளவு பேர் சரியாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பதில் ஒருவனுக்கு ஏற்பட்ட சுவையான அனுபவம் பற்றி எழுந்த சிறுகதை அப்பாவு கணக்கில் 35 ரூபாய்.
இச்சிறுகதையில் ஏமாற்றியவன் அப்பாவி போல இருக்கிறான். ஏமாந்து போனவனோ ஏமாற்றியவனிடம் கோபப்படுவதற்குப் பதிலாக இரக்கப்படும் அளவுக்கு அப்பாவியாய் இருக்கிறான் என்பதைச் சுவையாகச் சொல்கிறார் பிரபஞ்சன்.
பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்த ஒரு பெரியவர் சீட்டு வாங்க நூறு ரூபாய்த் தாளை எடுத்து நீட்ட, நடத்துநர் கண்டபடி திட்டுகிறார். வேறு சில்லரை இல்லையே என்று பரிதாபமாக நின்றவருக்குச் சீட்டு எடுத்துக் கொடுக்கிறார் மற்றவர். மாமண்டூரில் இரவு உணவுக்கு இறங்கிச் சாப்பிட்டு விட்டு நூறு ரூபாயை நீட்ட அங்கும் சில்லறை இல்லை. முன்புபோல மற்றவரே இருவருக்கும் சேர்த்துப் பணம் கொடுக்கிறார். வண்டி ஊருக்குச் சென்றவுடன் இறங்கியவர் பழம் வாங்கிச் சில்லறை மாற்றிக் கொடுக்கலாம் என்று தனக்கு உதவியவரை அழைத்தார். அங்கும் சில்லறை இல்லை. பெரியவர் பழத்தைத் திருப்பிக் கொடுக்க முயலவே பரவாயில்லை. குழந்தைகளுக்குக் கொண்டு போய்க் கொடுங்க என்று சொல்லி மேலும் ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து வண்டி வச்சிட்டுப் போங்க என்றார் மற்றவர். மனம் நெகிழ்ந்து போன அவர் “அவசியம் வீட்டுக்கு வரணும். ரொம்ப உபகாரம் பண்ணியிருக்கீங்க. முகவரி கூறி அப்பாவுன்னு சொன்னா வீட்டைக் காட்டுவாங்க” என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.
மறுநாளே அவரையும் அவர் குழந்தைகளையும் பார்த்துவிட்டு வரலாம் என்று அவர் வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டில் இல்லை. அவர் மனைவி பையனிடம் அவரைச் சாராயக் கடையிலிருந்து அழைத்துவரச் சொல்கிறாள். திடுக்கிட்ட அவரிடம், “என் தம்பி கொடுத்தனுப்பின பணம் தீர்ற வரைக்கும் அது அங்கதான் இருக்கும்” என்று சாதாரணமாகச் சொன்னவள், “உங்களுக்கு ஏதாவது பணம் தரணுங்களா?” என்றாள்.வறுமைத் தோற்றத்தில் இருந்த இரண்டு பெண்கள், பையனைப் பார்த்தவுடன் கையிலிருந்த பத்து ரூபாயைக் கொடுத்து விட்டு “நாளைக்கு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு நடந்தார்- என்று நிறைவு பெறுகிறது இச்சிறுகதை.
நீதி மன்றத்தில் பொன்னுத்தம்பி அணிந்திருந்த சப்பாத்துக்கள் (ஷு க்கள்) போன்றே அரசுத் தரப்பு வழக்கறிஞர் அணிந்திருந்தார். தமிழ் வழக்கறிஞர்கள் இருவர் மட்டும் கோட்டும் பஞ்சக் கச்சமும் அணிந்து வெறும் காலுடன் இருந்தனர். பொன்னுத்தம்பி முதன் முதலில் சப்பாத்து அணிந்து வெள்ளைத் துரைமார் போலச் சென்ற போது நீதிபதி ஆட்சேபித்தார்.
“என் மன்றத்துக்குள் தாங்கள் சப்பாத்து அணிந்து வருவதை நான் ஆட்சேபிக்கிறேன்”.
பொன்னுத்தம்பி நிமிர்ந்து நீதிபதியிடம் “கனம் நீதிபதி அவர்களே! என் நண்பரும் அரசு வழக்கறிஞருமான இவரும் மரியாதைக்குரிய தாங்களும் சப்பாத்து அணிந்து மன்றத்துக்குள் இருக்கும்போது நான் மட்டும் அணியக் கூடாது என்று தாங்கள் சொல்லும் கட்டளையை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
வழக்கறிஞர்கள் என்ன உடை உடுத்த வேண்டுமோ அந்த மரபுப்படி நான் உடுத்தியிருக்கிறேன். ஐரோப்பிய வழக்கறிஞர்கள் இன்ன விதமாயும், இந்திய வழக்கறிஞர்கள் இந்த விதமாயும் உடுத்த வேண்டும் என்ற நியதியை நம் நீதிமன்றம் ஏற்படுத்தவில்லை. தாங்கள் நான் சப்பாத்து அணிந்து வருவதை மறுப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”
மாபெரும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியான வணக்கத்துக்குரிய நீதிபதியைப் பார்த்து, அடிமை நாட்டைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதர் முகத்துக்கு நேரே தன் எதிர்ப்பைப் புலப்படுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவம் அப்போது நிகழ்ந்து முடிந்திருந்தது என்ற இந்நிகழ்ச்சி மேற்கூறிய சிறுகதையில் பதிவு செய்யப்படுகிறது.
பின் பொன்னுத்தம்பியின் வழக்கறிஞர் உரிமை மறுக்கப்பட்டது. பொன்னுத்தம்பி பாரிசில் இருந்த உச்ச நீதி மன்ற நீதிபதிக்கு நீதிமன்றத்துள் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் எழுதி “நீதி தேவதைக்கு முன்னால் வெள்ளை, கறுப்பு என்ற வித்தியாசங்கள் உண்டா… நீதிமன்றம் அனுமதித்த உடைகளையும் சப்பாத்தையும் அணிந்தே நான் நீதிமன்றம் செல்லத் தாங்கள் உத்தரவிட வேண்டும். புதுச்சேரி நீதிபதியின் தீர்ப்பையே தாங்களும் ஆதரிப்பீர் எனில் இந்த வழக்குரைஞர் வேலையை விடுவேனே அல்லாது, என் வழக்கத்தை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். நீதி ஒருபோதும் சாகாது என்பதை நான் அறிவேன். சமத்துவத்தை மட்டுமே நான் கோருகிறேன்” என்று கடிதம் எழுதி அனுப்பி விட்டு ஓராண்டு காத்திருந்தார். பின்னர் புதுச்சேரி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து,’ பொன்னுத்தம்பி தன் விருப்பம் போல் உடுத்திச் சப்பாத்து அணிந்து நீதிமன்றத்துக்கு வரலாம்’ என்று உத்தரவு வந்ததும், வெற்றி வீரனாக நீதிமன்றம் சென்றதாகக் கதை நிறைவு பெறுகிறது.
ஏரிக்கரை ஓரம் இருந்த அரச மரத்தின் கீழ் முத்து, கிண்ணம், கத்தியோடு உட்கார்ந்திருப்பார். அவருக்குக் கடை இல்லை, நாற்காலி இல்லை… கத்தியும் கிண்ணமும் சீப்புமே அவர் ஆயுதங்கள்… காலம் அவர் கைக்குள் இருந்தது. அவருக்கும் அவசரம் இல்லை. அவரிடம் வந்தவர்களுக்கும் அவசரம் இல்லை. அரைநாள் முடிவெட்டிக் கொண்டார்கள்.
இப்போது முன்னதாகவே நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். கதவைத் திறந்ததும் ஏ.சியின் பனி முகத்தில் படிந்தது. என்னிடம் வந்தவர் புன்னகையோடு தன்னை அறிமுகம் செய்து கொண்டார். காபி கொடுத்து உபசரித்தார்.” முன் பக்கம் அதிகமாக கட் பண்ண வேண்டாம்”. ” எனக்குத் தெரியும் நண்பரே… டாக்டருக்கு உடம்பைப் பற்றித் தெரியும். அவரிடம் இந்த மாத்திரையைக் கொடுங்கள் என்று கேட்பீர்களா?” அவர் குரலில் எவ்வளவு பணிவு இருந்ததோ அவ்வளவு கண்டிப்பும் இருந்தது. அடுத்த ஒரு மணி நேரம் தலையில் அவர் கைபடுவதாகவே எனக்குத் தோன்ற வில்லை. ஏதோ ஒரு ரசாயன மாற்றம் நிகழ்வது மாத்திரம் தெரிந்தது. என் தகுதியை மீறிய கட்டணத்தைக் கொடுத்து விடைபெற்றேன். ஒரு டாக்டர் வீட்டுக்கு, ஒரு வழக்கறிஞர் வீட்டுக்கு, ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வீட்டுக்குப் போய் வந்த மாதிரி இருந்தது என்று முடிவெட்டியவரின் அனுபவம் விவரிக்கப்படுகிறது.
“பட்டணமெல்லாம் எப்படித் தம்பி இருக்கு?” என்று கேட்ட கிராமத்து முடி வெட்டுபவர் முத்துவிடம், “அதுக்கென்ன? ராட்சசக் குழந்தை மாதிரி அது வளர்ந்துகிட்டு இருக்கு. உன்னை மாதிரி ஆளுகளை அழிச்சு, அது மாத்திரம் கொழு கொழுன்னு ஆயிட்டு இருக்கு” என்ற பதிலில் சமுதாய மாற்றமும் விளைவும் கூறப்படுகிறது அல்லவா?
எனக்காக அவள் உயிரை, உடம்பை, அணு அணுவாய்த் தேய்த்து உடம்புத் தோலை எனக்குப் பாதுகையாய்த் தைத்துத் தருவாளா? நல்லது அவளை சக்தி என்று நான் கொண்டாடுவேன். அவளை நான் தெய்வம் ஆக்குவேன். கோவிலில் வைத்துக் கும்பிடுவேன். ஆனால் ஒரு சக மனுஷியாக, சிநேகிதியாக, சகாவாக, உயிர்ப் பிண்டமாக, ஆத்மாவாக மட்டும் நான் நடத்த மாட்டேன்! அப்படிப் பெண்ணைச் சக மனிதராக ஏற்றுக் கொண்டால் என் ஆணாதிக்கம் என்னாவது? (நேற்று மனிதர்கள் – முன்னுரை)
இருட்டின் வாசல் சிறுகதையில் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டும் பெண்ணுக்கு அவளுடைய சம்பளத்தில் கூட உரிமை இல்லாதிருப்பதைச் சொல்கிறார் பிரபஞ்சன்.
கணவன் திருமணமாகிப் பதின்மூன்று மாதங்களில் சம்பளம் தருகிற நாளில் ஏதோ வேலையாக வருவது போல் வந்து அவள் சம்பளக் கவரைப் பெற்றுக் கொண்டு விடுவான். ஒரு நாள் அப்படி வாங்கிக் கொள்ளும் போது,
“ஒரு அஞ்சு ரூபாய் கொடுங்களேன்; தலையை வலிக்குது காபி சாப்பிடணும்” என்றாள். அவன் பைக்குள் கையைவிட்டான் . சில்லறையை எடுத்தான். எண்ணினான்.
“காபிக்கு ரெண்டு ரூபாய் போதாதா” என்கிறான்.
இவ்வாறு தனி மனிதனின் மன மாறுதல்களும், சமுதாய மாற்றங்களும் பிரபஞ்சன் சிறுகதைகளில் நுணுக்கமான உணர்வுகளோடு பதிவு செய்யப்படுகின்றன.
மாறுதல்கள் என்ற சிறுகதையில் தந்தை மகன் என்ற நிலையில் மகனைப் பற்றிய தந்தையின் உணர்வுகளையும், இருவரிடையே உள்ள மாற்றங்களையும் எடுத்துரைக்கக் காணலாம்.
மனித நேயத்தை வெளிப்படுத்துவதை இவருடைய படைப்பின் நோக்கமாகக் காணலாம். எவ்வித உணர்வுகளையும் நுணுக்கமாக வெளியிடும் திறன் இவர்க்குரிய சிறப்பு எனலாம்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
என்று வள்ளுவரின் குறளுக்கு இலக்கணமானவர் அண்ணாச்சி (பூக்களை மிதிப்பவர்கள்,) தனக்கென்று உறவினர்யாருமில்லாத அண்ணாச்சி எல்லாரையும் நேசிப்பவர். அவருக்கும் எதிரியாக ஒருவன் அவரைக் கத்தியால் குத்திவிட்டுச் சென்றுவிட்டான். குத்தியது யாரென்றுதெரிந்தும் அவன் மீது இரக்கப்பட்டவர். அவனைக் காட்டிக் கொடுக்காமல் இருக்கிறார் என்றால் அவருடைய பண்பினை என்ன என்று சொல்வது?
மனிதர்கள் மனிதப் பண்பு மிக்கவர்களாக இருக்கும் பொழுது அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள். அப்படி உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும். இக்கருத்தை, ‘சுந்தா மாமா’ (பூக்களை மிதிப்பவர்கள்) சிறுகதையில் பிரபஞ்சன் எப்படிக் கூறுகிறார் பாருங்கள்:
விமர்சன சிம்மன் வரது, நாணாவின் பாட்டைக் கேட்டு மேடையில் ஏறி விமர்சனம் செய்கிறார்.
“நாணா மகாவித்வான். வித்வான்களுக்கெல்லாம் வித்வான். அந்த சரகுண பாலிம்ப, அட்சரலட்சம் பெறும்… சங்கீதம் பெரிசு இல்லை. எந்த வித்தையுமே பெரிசு இல்லை. உத்தமமான மனுசனா வாழறது தான்ய்யா பெரிசு. நல்ல பாட்டு கீதம், நல்ல ஜீவிதம் சங்கீதம். ‘ச’ என்றால் ரொம்ப உசத்தியானதுன்னு அர்த்தம். நாணா! உன் பாட்டை விடவும் நீ உசந்தவனா இருக்கணும்”.
அலிகளின் வாழ்க்கை இரக்கத்திற்குரியது. அவர்தம் உணர்வுகள் மனிதாபிமான அடிப்படையில் நோக்கப்பட்டதன் விளைவு ‘சின்னி’ என்ற சிறுகதைப் படைப்பு (இருட்டின் வாசல்). அலிகளின் மென்மையான உணர்வுகளும் அவர்களும் மனிதர்களே, மனிதாபிமானத்தோடு அவர்களைப் பார்க்க வேண்டும் என்பதும் இக்கதையில் வாசகர்களுக்கு உணர்த்தப்படுகிறது.
மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்பவர் தாணு. அவருடைய அறிமுகம் பற்றியும் அவர் நடவடிக்கைகள் பற்றியும் அவர் நண்பர் சொல்வதாகக் கதை தொடர்கிறது. கொஞ்சம் பழகிவிட்டாலே தங்க பஸ்பம் பற்றியும், லேகியம் பற்றியும் சொல்லத் தொடங்கி விடுவார். நண்பர்களுக்கு வைத்தியக் குறிப்புகள் சொல்லும் தாணுவைப் பற்றி அவர் நண்பர் மூர்த்திக்குச் சந்தேகம் வந்து விடுகிறது. தன் அந்தரங்க வாழ்க்கை பற்றி மற்றவர்களிடமெல்லாம் சொல்லி விடுவாரோ என்று பயந்து அவர் தொடர்பே வேண்டாம் என்று வெறுத்துப் பேசுகிறார்.
அப்போதுதான் மனம் திறந்து பேசுகிறார் தாணு. “நான் ஒரு ஆம்பிளையே இல்லை சார். நான் ஒரு இரண்டுங்கெட்டான். அதனால்தான் என் பெண்டாட்டி எங்கிட்டேர்ந்து ஓடிப்போயிட்டா. நான்தான் அப்படி ஆயிட்டேன்… என் சினேகிதர்கள் சந்தோஷமா இருக்கணும்னுதான்…” என்கிறார் தாணு.
தாணு திடீரென்று இறந்து போனதை, சிறுகதைத் தொடக்கத்தில் கூறிவிட்டு, இறப்பதற்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னால் கூறும் உத்தியை இக்கதையில் கையாண்டிருக்கிறார் ஆசிரியர்.
மாலைக் காலத்தில் அலுவலகத்தை விட்டுப் புறப்படும் நேரத்தில் ஏற்படும் சப்தங்கள் பற்றிய வர்ணனையைப் பாருங்கள்:
வீட்டுக்குப் புறப்படும் நேரத்துக்குரிய சப்தங்கள்-மேசைக் களவயத்தை இழுக்கும் சப்தம் ‘சர்ர்….’ அப்புறம் சாப்பாட்டுப் பெட்டியை எடுத்து ‘டக்’ என்று மேசை மேல் வைக்கும் சப்தம். அதை எடுத்துக் கைப்பைக்குள் ஜிப்பை ‘ஸ்ஸ்’ என்று இழுத்து, அதை உள்ளே தள்ளும் சப்தம்… களவயத்தைக் கடைசித் தடவையாக நோட்டம் விட்டுச் சாத்தும் சப்தம்… இந்தச் சப்தங்கள் எதன் பொருட்டும் மாறுபடுவதில்லை. எவ்வளவு இனிமையான சப்தம்… விடுதலை உணர்வின் சப்தம் இது. ‘மன மயக்கம்’, (பூக்களை மிதிப்பவர்கள்)
பிரபஞ்சனின் இசை ஈடுபாட்டை அவர் படைப்புகளின் வழி அறியலாம். இசைப் புலமையையும் மிக நுணுக்கமாக வெளிப்படுத்தும் இடங்கள் பல. எடுத்துக்காட்டாக, கீழ்வரும் பகுதியைப் பாருங்கள்:
சுந்தா மாமா, நாணாவின் பாட்டைக் காதே உடம்பாகக் கேட்டுக் கொண்டிருந்தார்… நாணா, ஏணிப் படிகளில் செங்குத்தாக ஏறிக் கொண்டிருந்தான். முதலில் கணபதியைத் தொட்டான். அப்புறம் இந்தோளத்தில் முழுகி சாமஜ வர கமனாவில் நீந்தினான். அப்புறம் ‘வருவாரோ’ என்று சாமாவைக் கேட்டான். மின்னல் தோரணையில் பிர்க்காக்கள். ஜரிகை மாதிரிக் கார்வை. (சுந்தா மாமா)
இனி, பிரபஞ்சனின் சிறுகதைக் கலை பற்றிப் பார்ப்போமா!
சிறுவர்களின் இயல்பான மகிழ்ச்சிக்கு இன்றைய சமுதாயச் சூழ்நிலை தடை விதிப்பதைப் பல சிறுகதைகள் எடுத்துக் காட்டுகின்றன. ஏமாற்றும் மனிதர்களிடமும் இரக்கம் காட்டும் அப்பாவித்தனம், குற்றம் செய்தவன் ஒப்புக் கொண்ட போது அவனை மன்னிக்க நினைத்து எப்படியாவது காப்பாற்ற விரும்பும் தீவிரம் ஆகிய உணர்வுகளும் இவருடைய கதைகளுக்குக் கருப்பொருள்களாகின்றன.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் பிரெஞ்சுத் துரைமார்கள் இந்நாட்டு மக்களைத் தங்கள் அடிமைகளாக நினைத்து அலட்சியப் படுத்திய நிலையினால் புண்பட்ட உள்ளங்களையும் சில சிறுகதைகளில் எடுத்துக் காட்டுகிறார் பிரபஞ்சன். இவ்வகைச் சிறுகதைகள் வரலாற்றுச் சிறுகதை என்று சொல்லக் கூடிய வகையில் முந்தைய சமுதாய நிலையை நுணுக்கமாகப் படம் பிடித்துக் காட்டுபவை என்று பாராட்டலாம். வாழ்க்கையில் நடக்கும் சாதாரண நிகழ்ச்சிகளைக் கூட நகைச்சுவையை முதன்மையாகக் கொண்டு சுவைபடச் சொல்லும் சிறுகதைகளும் உண்டு. காலையில் பால் வாங்கப் போனபோது ஒரு முதியவர் வரிசையில் பின்னால் தள்ளப்பட்டதையும் அது அவர்க்கு ஏற்படுத்திய அனுபவங்களையும் சொல்லும் கதை ‘எலி, எருமை வராத மழை’ (பூக்களை மிதிப்பவர்கள்).
வரிசையாக, சென்ற இடங்களில் எல்லாம் தன் செருப்புகள் மட்டும் தொலைந்து போகும் அவலம் ஒரு பதினாறு வயது இளைஞனுக்கு ஏற்படுத்திய அனுபவங்களை வாசகர்க்கு நகைச்சுவை தோன்றச் சொல்லும் சிறுகதை ‘இராமலிங்க சாமி, ஜீ.வி.ஐயர் மற்றும் நான்’
வெறும் காலுடன் வீட்டுக்குப் புறப்பட்டேன்…. புத்தம் புதிய பேண்ட்டும், சட்டையும் அணிந்து கொண்டு, செருப்பு இல்லாமல் நடக்கிற துரதிருஷ்டம் அவமானமாக இருந்தது.
வகுப்பறை… இளைஞன் ஆசிரியரிடம் கேட்கும் கேள்வி இது: “இராமன் செருப்பை பரதன் வாங்கிக் கொண்டதால் அவர் காட்டில் செருப்பில்லாமல் தான் நடந்தாரா?”. செருப்பு பற்றிய சிந்தனைகளுடனே அவன் இருப்பதைக் கற்பனை செய்து கதை தொடர்கிறது. இனி, பிரபஞ்சன் படைக்கும் கதைமாந்தர்கள் பற்றிக் காண்போமா?
ஆணாதிக்கத்துக்கு அடிமையாகின்ற பெண்கள், ஆதிக்கத்தை எதிர்த்து உரிமைக்குப் போராடும் பெண்கள், என்ற இருவகைப் பெண்களையும் இவர் படைப்புகளில் காணலாம். பெண்கள் குடும்பம் என்ற அமைப்பிற்காகத் தங்கள் உரிமைகளையும் விருப்பங்களையும் புறக்கணிக்கின்றனர். அதே சமயம் குடும்ப நலனிற்காகவே தாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பதைப் புரிந்தவர்களாக இருக்கின்றனர். தேசப் பற்று மிகுந்தவர்கள், தியாகத்துக்கு விலை பேசுவது கூடாது என்ற உயர்ந்த மனப்பான்மையில் ஓய்வூதியமும் பெற மறுத்த சில முதியவர்கள், பொருளே பெரிதென்று எண்ணும் சில சிறியவர்கள் என்று இரு சாராரையும் படைத்துக் காட்டுகிறார் பிரபஞ்சன். சாமியார் வேடத்தில் மக்களை ஏமாற்றும் வஞ்சகர்கள், வலியோர் எளியோரை அடக்க நினைக்கும் இயல்பினை நிரூபித்துக் காட்டும் சாதாரண மனிதர்கள் ஆகியோரையும் கதை மாந்தர்களாகப் படைத்துக் காட்டுகிறார்.
இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்களைப் படம் பிடித்துக் காட்டும் கலையை மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார் பிரபஞ்சன். வகைவகையான மனிதர்களை இனம் பிரித்துக் காட்டும் எளிமையான நிலை இவரிடம் இயல்பாய் அமைந்துள்ளது.
பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளை அடிக்கும் ஆசிரியர்கள் நமக்கு அறிமுகமாகிறார்கள். தட்சணை, (நேற்று மனிதர்கள்)
மூர்க்கத்தனம் நிறைந்த மாமா-சண்டைச் சேவல் பொறப்பு – கால்ல கத்தி கட்டிக்கிட்டுத் திரியுற ஜாதி என்று வர்ணிக்கப்படுபவர் ‘நேற்று மனிதர்கள்’ என்ற கதையின் நாயகன். தன் மனைவி தன்னைத் தவிர யாருடனும் சிரித்துப் பேசிவிடக் கூடாது என்ற கொள்கை உடையவர். அவ்வாறு பேசியதற்காக இறுதிவரை அவளை அவளுடைய சாவுக்குக் கூடச் செல்லாமல் தன் வாழ்க்கையிலிருந்தே விலக்கியவர். தன் ஒரே மகள் உறவுக்காரப் பையனைத் திருமணம் செய்து கொள்ள நினைத்ததற்காக அவள் மீது மண்ணெண்ணை ஊற்றி எரித்தவர். அவள் விரும்பிய அந்தப் பையனைச் சூளைச் செங்கல்லோடு எரியச் செய்தவர். அன்பு, பாசம், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், உறவின் பெருமை அனைத்தையும் புறக்கணித்து வாழும் ஒரு வறட்டுப் பிடிவாத வாழ்க்கையால் யாருக்கு என்ன பயன் என்று கேட்காமல் கேட்கும் கதை நேற்று மனிதர்கள். இப்பிடிவாத வாழ்க்கை நேற்று வேண்டுமானால் பெருமைக்கும் பாராட்டுக்கும் உரிய தாய் இருந்திருக்கலாம். ஆனால் இன்று அப்படியில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் கதை இது.
அப்பாவி மனிதர்கள் ஏமாந்து போவதை இவர் சிறுகதைகள் நுணுக்கமாக வெளிப்படுத்தும். ஏமாந்து போகின்றவர்கள் மனிதாபிமானம் கருதுவதாலேயே மேலும் ஏமாந்து போகிறார்கள் என்பதை உணர்த்தும் ஒரு சிறுகதைதான் அப்பாவு கணக்கில் 35 ரூபாய்.
நேற்று மனிதர்கள் சிறுகதைத் தொகுதி தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்ற சிறுகதைத் தொகுப்பு என்று பார்த்தோமல்லவா? இத்தொகுதியை “மனிதனை நேசிக்கும் எழுத்துக்கள். ஒவ்வொரு வரியும் மனித நேயம் பாடும் கீதங்கள் ஆகும்” என்று தினத்தந்தி பாராட்டி உள்ளது.
புதுமைப்பித்தனின் துன்பக்கேணி என்ற சிறுகதைத் தலைப்பை நினைவுபடுத்துவது போல் தன்னுடைய ஒரு சிறுகதைக்கு இன்பக்கேணி என்று பெயர் சூட்டியிருப்பதைக் காணலாம். மிகச் சுருக்கமான தலைப்புகளைத் தம் சிறுகதைகளுக்கு இடுவதும் இவருடைய உத்தி எனலாம்.
திரை, விளை, குழந்தைகள், கண், பாபா, உரை, ஆகஸ்ட் 15, பாப்பா, பாதுகை, அகி, ருசி, அடி, மூவர் ஆகியவற்றை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். இனி பிரபஞ்சனின் மொழி நடையைப் பற்றிப் பார்ப்போம்.
வாக்கியத்துக்கு முற்றுப் புள்ளி மாதிரி ஒவ்வொரு தரம் பேசி முடித்த போதும் சிரிப்போடுதான் முடிப்பாள் அவள். (நேற்று மனிதர்கள்)
ஒரு குழந்தை மல்லாக்கப் படுத்துக் காலை விரித்துக் கிடப்பது போல் கோப்பு மிக யதார்த்தமாகப் படுத்துக் கிடந்தது. (அவலம், பூக்களை மிதிப்பவர்கள்)
வெங்கட் தன் வெற்றிலைப் பெட்டியைத் திறந்தார். அது ஆட்டம் முடிந்த நாடகக் கொட்டகை மாதிரி இருந்தது. (பூக்களை மிதிப்பவர்கள்)
நகரத் தயாராக இருக்கும் பஸ்ஸைப் பிடிக்கப் போகிறவர் போல் அவர் அவசரமாக நடந்தார். (பூக்களை மிதிப்பவர்கள்) சொல் அலங்காரம் இவர் சிறுகதைகளில் இயல்பாய் அமைந்திருப்பதைக் காணலாம்.
அலாரம் வைத்துக் கொண்டு அவர் படுப்பதில்லை. அவரே ஒரு அலாரம் (எலி, எருமை வராத மழை)
கன்றுக்குட்டி மாதிரி நின்றிருந்தது சைக்கிள் (நேற்று மனிதர்கள்)
வாழ்க்கைத் தத்துவங்கள் ஆங்காங்கே சொல்வதும் பிரபஞ்சனுக்கு இயல்பாக அமைகின்றது.
இறந்த காலம் மீள்வதில்லை. நிகழ்காலம் உறைப்பது இல்லை. எதிர்காலம் புரிவது இல்லை. (இருட்டின் வாசல்)
வரலாற்று உண்மைகளும், நிகழ்கால உண்மைகளும் பிரபஞ்சன் எழுத்தில் எப்படி எதிரொலிக்கின்றன பாருங்கள்:
பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் தமிழகம் இருந்த போது… “மூர்! எனக்கு நாலு இந்தியர்கள் வேலைக்கு வேண்டும்”.
“எதற்கு?”
“எனக்கு வரும் வருமானத்தை எண்ணி மூட்டையில் கட்டுவதற்கு”.
பிரெஞ்சு அதிகாரி மேலும் சொல்கிறான். “நர்மதை நதியிலிருந்து குமரி முனைவரைக்கும் என் மூச்சுக் காற்றே, அதிகாரம்! என் காலுக்குக் கீழே என் சப்பாத்துக்கள் (ஷு), அந்தச் சப்பாத்துக்களுக்கும் கீழே பார் தலைகள் தென்படும். ஆம். இந்தியச் சிறு மன்னர்கள், நவாபுகள், ஜமின்தார்களின் தலைகள்… இந்த மக்கள் நம் வாளுக்குத் தக்க கைப்பிடிகள்” இந்தியர்களைப் பற்றிய கணிப்பு எப்படி இருந்தது என்பது தெரிகிறதல்லவா?
வேறுபட்ட சிந்தனைகளைச் சுவையாகச் சொல்லும் திறன் பிரபஞ்சனிடம் அமைந்திருப்பதைப் பல இடங்களில் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்ப்போம்:
ரயில் புறப்படும் நேரம். பத்தரைதான். என்றாலும் அவன் 10 மணிக்கே ரயிலடிக்கு வந்து விட்டிருந்தான். கடைசி நேரத்துப் பரபரப்பு, ஓடத் தொடங்கும் வண்டியை ஓடிவந்து பிடித்தல் எல்லாம் அவன் இயல்புக்கு ஒத்து வருவது இல்லை என்பதுதான் விஷயம். ரயில் நின்று கொண்டிருக்க-அதை ரசித்தபடி, கெத்தாக நடந்து வந்து, சாவகாசமாக ஒட்டப்பட்ட பட்டியலைப் பார்த்துக் கொண்டு பெட்டிக்குள் பிரவேசிப்பது ஒரு வகை கௌரவம் என்பது அவன் எண்ணமாக இருந்தது. வண்டி என்பது வெறும் வாகனம். அவனைச் சுமந்து கொண்டு அவன் போக வேண்டிய இடம் கொண்டு சேர்ப்பதான கருவி… அது மனிதர்க்கு மேம்படுவதாவது (மதிக்கும் நிலம், இருட்டின் வாசல்).
எள்ளல் சுவை தரும் அங்கத நடையும் இவருடைய மொழி நடைக்குச் சிறப்புச் சேர்க்கிறது எனலாம்.
‘நல்ல வெயில். சுட்டுப் பொசுக்கும் வெயிலை நல்ல வெயில் என்று ஜனங்கள் வழங்குவது விசித்திரம்தான். நல்ல பாம்பு என்பது போல் இதுவும்..’ (தியாகராஜன், பூக்களை மிதிப்பவர்கள்)
“அழகிய தமிழ், அங்கத நடை, அளவான பாத்திரப் படைப்பு, மனித மனத்தை நுணுக்கமாக ஆராயும் தன்மை, படிக்கச் சுவாரஸ்யம், குறைவு படாத தரம், மனிதார்த்தத்தை உன்னதப்படுத்தும் இலட்சியம் ஆகியன இவரது எழுத்தின் சிறப்பு” என்று கவிதா பதிப்பகத்தார் பாராட்டுகின்றனர்.
சமுதாய மாற்றங்களும், தனி மனித மாற்றங்களும் இவருடைய படைப்புகளில் கலை உணர்வுடன் எடுத்துரைக்கப்படுவதைக் காணலாம். சுவையாகச் சொல்லும் கலைத் திறனும் வெவ்வேறான கற்பனைகளின் வெளிப்பாடும் வாசகர்களைக் கவர்ந்திழுக்கும் அம்சம் எனலாம்.
குழந்தைகளின் உலகம், பெண்களின் உலகம், தனி மனிதர்களின் அக உலகம் ஆகியவற்றில் நுழைந்து அதில் வெளிப்படுத்தும் சிந்தனையும் கற்பனையும் கதை வடிவம் கொள்கின்றன. சமுதாய மாற்றம் குறித்த இவர் படைப்புகளில் நாட்டுப் பற்று, ஆணாதிக்கம், பெண் விடுதலை, தனி மனிதர் எதிர்கொள்ளும் சமுதாயத் தாக்கம் ஆகியவை அடங்குகின்றன. பெண் விடுதலையும், குழந்தைகள் சுதந்திரமும், காவல் துறையினரிடம் இருக்க வேண்டிய மனிதாபிமானமும் இவருடைய படைப்புகளின் நோக்கமாக அமைவதைக் காணலாம்.
சமுதாயத்துக்குத் தரும் செய்தியாக ‘வாழ்க்கை உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். மற்றவர்க்கு எடுத்துக்காட்டாக, பலர்க்குப் பயன்தரக் கூடியதாக இருக்க வேண்டும்’ என்பது சொல்லப்படுகிறது. உயர்ந்த உள்ளமும், செயல் திட்பமும், உறுதியும் கொண்ட கதை மாந்தர்கள் இவர் படைப்புகளால் நமக்கு அறிமுகமாகின்றனர். போலிச் சாமியார்களிடம் ஏமாந்து நிற்கும் அப்பாவி மக்கள், சாதாரண மனிதர்களைப் போலவே ஆசையும் விருப்பமும் கொண்ட அலிகள் ஆகியோரை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.
எளிய மொழி நடை, அங்கதம் கலந்த நடை, புதிய உவமைகளைக் கையாளுதல் ஆகியன இவர் படைப்புகளின் தனிச் சிறப்பாகும். தத்துவம், உளவியல் போன்ற நோக்கிலும் இவர் படைப்புகள் அமைகின்றன. நுணுக்கமான உணர்வுகளைச் சுவைபடச் சொல்லும் திறன் பிரபஞ்சனிடம் நாம் காணும் சிறப்பு அம்சம் எனலாம். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பிரபஞ்சனின் படைப்புகளுக்குத் தனியிடமுண்டு என்பதில் சிறிதும் ஐயமில்லை.
பாடம் - 6
ஒரு குடும்பத்தில் சிறுமி ஒருத்தி வயதுக்கு வந்த போது அவளுடைய தாய் ஊரில் இல்லை. பருவமடைந்ததை ஒட்டி அவள் உடலில் ஏற்படும் மாறுதல்களால் அச்சம் கொள்கிறாள். அதற்குப் பிறகு தனக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டு வியப்படைகிறாள். ஊரிலிருந்து வரப்போகும் தாயிடம் தனக்கு ஆதரவு கிடைக்கும், அஞ்சி நடுங்கும் தன்னை அவள் ஆதரவோடு அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்வாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஏனென்றால் அவள் தாய் அப்படிப்பட்டவள். எதற்குமே பதற்றப்படாமல் தன்னை வளர்த்தவள். தான் கறுப்பாக இருந்தாலும், அது குறித்து எதுவுமே பேசாமல் “என்ன அடர்த்தி உன் தலைமுடி”. “உனக்கு நடனம் கற்றுக்கொடுக்கப் போகிறேன்” என்றெல்லாம் சொல்லித் தனக்கு உற்சாகம் ஏற்படுத்தும் அந்தத் தாய் அசுத்தங்களைச் சுத்திகரிக்கும் நெருப்பாகத் தோற்றம் தந்தவள். ஒரு சிரிப்பில் மனத்தில் கோடானு கோடி அழகுகளைத் தோரணமாட வைக்கும் அவள் தாய், சிறுமிக்கு ஒரு தேவதையாகவே தெரிந்தவள்.
அந்தத் தாய் ஊரிலிருந்து வந்ததும், “உனக்கு ஆகியிருக்கும் இதுவும் அழகுதான்” என்று சொல்வாள். பயமுறுத்திய முறுக்குப் பாட்டி, கல்யாணி எல்லாரையும் புன்னகையின் ஒரு தீப்பொறியில் ஒதுக்கித்தள்ளி விடுவாள் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறாள் அந்த சிறுமி,
ஆனால், “உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்? இது வேறே இனிமே ஒரு பாரம்” என்கிறாள் தாய். தேவதை போன்ற அம்மா, யதார்த்தத்துக்கு உட்பட்ட வெறும் மனித அம்மாவாகத் தெரிகிறாள். இந்த அதிர்ச்சியை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இச்சிறுகதையில் இளம்பருவத்திலேயே ஒரு பெண்ணின் மன உணர்வுகள் ஒடுக்கப்படுவதையும் குற்ற உணர்வு ஏற்பவளாக ஆகக்கூடிய நிர்ப்பந்தச் சூழலையும் எடுத்துக் காட்டுகிறார் அம்பை.
இச்சமுதாயத்தில் ஆண் செய்யும் போது சரியாகத் தோன்றும் ஒன்று ஒரு பெண் அதைச் செய்தால் பைத்தியக்காரத்தனமாக ஏன் தோன்றுகிறது என்ற வியப்பில் எழுந்த கேள்விகளைப் பாருங்கள்:
பாரதியார் பக்கத்து வீட்டுக்குப் போய் அரிசி கடன் கேட்பதைப் போலவும், அவர் கொண்டு வந்த அரிசியைச் செல்லம்மாள் உற்சாகமாகக் குருவிகளுக்குப் போடுவதைப் போலவும் அப்படி இருந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனை உதிக்கிறது ஒரு சிறுகதையில் (பிரசுரிக்கப்படாத ஒரு கைப்பிரதி, காட்டில் ஒரு மான்).
பழத்தைக் கடித்துக் கொடுக்கும் சுகாதாரமற்ற முறைகளைக் கையாண்ட கண்ணன் இன்னமும் அவளுக்குப் பிடிபடவில்லை (காட்டில் ஒரு மான்).
மலைக்காட்டில் பிறந்து வளர்ந்த பெண் செந்திரு. அவள் வாழ்க்கையையும், அவள் எழுதும் வாழ்க்கைக் கதையையும் கூறும் சிறுகதை ‘அடவி’ (காட்டில் ஒரு மான், ப. 136). கணவன் வியாபாரம் செய்பவர். பல கிளைகள் கொண்ட வியாபாரத்தில் அவளைக் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ள அவன் தோழர்கள் உடன்படவில்லை என்று கூறிவிட்டான். இதனால் அவள் மனம் நொந்து காட்டிற்குச் செல்கிறாள். அங்குச் சீதையின் கதையை எழுதுகிறாள். இராமன் செயலைச் சிந்திக்கிறாள். பல நாட்கள் வனத்தில் இடர்ப்பட்டு இராமனையே நினைத்துக் கொண்டிருந்த சீதையை அக்கினியில் குளிக்கச் சொல்லும் இராமனை, அவனுடைய மனப்பான்மையை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இசை ஈடுபாட்டுடன் சீதைக்கும் அந்த இசையைக் கற்றுத் தர விரும்பும் இராவணன் நண்பனாகத் தெரிகிறான்.
மனித நேயத்தை மையமாகக் கொண்ட சிறுதைகளையும் அம்பை படைத்துள்ளார். அவை பற்றி இனி பார்ப்போமா?
நோயாளியைச் சமாளிக்க முடியாத நிலையில் குடும்பத்தில் அவனை அறையில் பூட்டி வைத்திருக்கும் பரிதாபத்தையும், வறுமையை விரட்டுவதற்காக அவனை மணந்தாலும் தன்னுடைய பொறுப்பை அலட்சியப்படுத்தாமல் அவனிடம் அந்தப் பெண் காட்டிய மனித நேயத்தையும் எடுத்துக் காட்டும் சிறுகதைதான் ‘அறைக்குள் இருந்தவன்’ (சிறகுகள் முறியும்).
சுற்றுப்புறச் சூழலின் தூய்மையைப் பொருட்படுத்தாத நிலை மக்களிடையே இருப்பதைத் திக்கு சிறுகதையில் அம்பை எப்படிக் கூறுகிறார் என்று பாருங்கள்:சில கோயில்களின் பக்கத்திலேயே நிரம்பி வழிந்து தெருவெல்லாம் குப்பை சிதறியபடி அழுகல் நாற்றமும், சிலசமயம் ஏதாவது பிராணி ஒன்று செத்த வாடையும் வீசியபடி குப்பைத் தொட்டி இருக்கும். கன்னத்தில் போட்டுக் கொண்ட உடனேயே மூக்கைப் பிடித்துக் கொண்டு விடலாம். கோயிலை ஒப்புக் கொண்ட அதே ஏற்புடன் குப்பைத் தொட்டியையும் ஒப்புக் கொண்டனர். இத்தகைய மனோபாவத்துக்குக் கீதை புராணங்களில் இருந்தெல்லாம் மேற்கோள்கள் காட்டினர் சிலர்.
இவ்வாறு சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்ச்சியை மறைமுகமாக வற்புறுத்துகிறார் அம்பை.
ஆண் ஆதிக்கத்திற்கும், பெண்கள் அந்த ஆதிக்கத்தின் கீழ் அடங்குவதற்கும் உரிய காரணங்களை உளவியல் ரீதியில் புனர் சிறுகதையில் அம்பை எடுத்துக் காட்டுகின்றார் (வீட்டின் மூலையில் ஒரு சமையலறை). இச்சமுதாயத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும், ஆண்களாகவும், பெண்களாகவும் உருவாக்கப்படுகின்றனர். இச்சமுதாயமே அவர்களின் நடத்தைக்குக் காரணமாகிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது அவர் நோக்கமாகிறது. ‘இவ்வுலகில் பிறந்தவர்கள் இயல்பாக இருப்பதே அவர்கள் சுதந்திரம்’. அவர்களை அவ்வாறு இருக்க விடுவதும் சுதந்திரம் என்பதைப் பல சிறுகதைகளில் வெளிப்படுத்துகிறார் அம்பை.
ஒளியற்ற, ஜன்னல் அற்ற குறுகிய அந்தச் சமையலறையிலிருந்து கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின் எண்கால் போல், ஆதிக்கக் கரங்கள் நீண்டு வளைத்துப் போட்டன. கால்கள் இறுக்க இறுக்கக் கட்டுண்டு கிடந்தனர் ஆனந்தமாக. அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம் என்றும், காலைச் சுற்றினால் கொலுசு என்றும், தலையில் பட்டால் கிரீடம் என்றும் நினைத்துக் கொண்டனர் பெண்கள். நாலா புறமும் கம்பிகள் எழும்பிய உலகில் புகுந்து கொண்டு அதை ராஜ்யம் என்று நினைத்து அரசோச்சினர். இன்று மட்டன் புலவு, நாளை பூரி மசாலா என்று பூமியைத் திருப்பிப் போடும் முடிவுகள் எடுத்தனர்.’ பேடி அதிகாரம்’ என்று இதனைக் கடுமையாகச் சாடுகிறார் அம்பை.
“திருமணமான புதிதில் முப்பது பேர் வீட்டில் அஞ்சு கிலோ ஆட்டா மாவு பிசைவேன். 300 சப்பாத்தி இடுவேன்” என்று கூறுகிறாள் ஜீ.ஜி. முதல் தடவை இரண்டு உள்ளங்கையும் இரத்தம் கட்டி நீலமாய் இருந்தது. தோள்பட்டையில் குத்திக்குத்தி வலித்தது. அவளைப் பார்த்துப் பப்பாஜி சொன்னார். “சபாஷ் நீ நல்ல உழைப்பாளி” என்று (வீட்டின் மூலையில் ஒரு சமையலறை). சந்தேகப்படும் கணவன் மனைவியை எவ்வளவு துன்பத்துக்கு உள்ளாக்குகிறான் என்பதைச் சொல்லும் சிறுகதை ‘வல்லூறுகள்’ (சிறகுகள் முறியும்).
‘உடன்கட்டை ஏறுவது ஒரே மனிதனிடம் அவளுக்கு உள்ள விசுவாசத்தின் உச்சக் கட்ட நிரூபணம்’ என்று வாமனன் சிறுகதை குறிப்பிடுகிறது.
சமையலறைச் சிந்தனைகளே பெண்ணின் மனத்தை ஆக்ரமித்திருப்பதால் அவளால் உலக அறிவும் விழிப்புணர்வும் பெற இயலாமல் போய் விட்டதை இக்கதையில் இடம் பெறும் மீனாட்சி வாயிலாக அம்பை குறிப்பிடுகிறாள்
நாலு நாட்களுக்கு ஒருமுறை ஸ்டவ் திரியை இழுத்து விட வேண்டும். மண்ணெண்ணெய் கிடைக்கும் போது வாங்க வேண்டும். மழைக் காலத்தில் கவலை. அரிசி, பருப்பில் பூச்சி, மாங்காய்க் காலத்தில் ஊறுகாய்; வெயில் காலத்தில் அப்பளம், பழங்கள் வரும் காலத்தை ஒட்டி சர்பத், ஜூஸ், ஜாம், பழைய சமையலறை முற்றத்துக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுண்ணாம்பு, மாதவிடாய் தள்ளிப் போயிற்றோ என்று கவலை; தள்ளிப் போகாவிட்டால் கவலை என்று பெண்களின் கவலைகளையெல்லாம் எடுத்துரைக்கிறார். இவை இல்லாமல் இருந்திருந்தால் ‘புதுக்கண்டங்களைக் கண்டு பிடித்திருக்கலாம், காவியம் எழுதியிருக்கலாம், குகைகளுக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம்’ என்று பெண்ணின் உழைப்பும் குறுகிய வட்டத்திலான உணர்வுகளும் அவளை இதுவே உலகம் என்று எண்ணச் செய்து விட்டதையும், அவள் விரும்பினால்தான் அதிலிருந்து அவள் விடுபட முடியும் என்பதையும் உணர்த்துகிறது வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்னும் சிறுகதை.
அலுவலகம் செல்லும் கணவனுக்குத் தினமும் அக்கறையாகச் சமைத்து உணவு கொடுத்தனுப்புகிறாள். அன்போடு அவள் செய்தவற்றை அவன் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் மேலிட வாய்விட்டே கேட்டு விடுகிறாள்.
“நீ நன்னாத்தான் சமைக்கிறே. சாமானை வீணடிச்சுடறே. இருந்தாலும் ஓட்டல்ல சாப்பிடறதை விட இது லாபம்தான்” (சிறகுகள் முறியும்) என்று கூறுகிறான். இதுபோன்ற தருணங்களில் தன்னுள் எழும் ஆத்திரத்தைச் சாயா எப்படிச் சமாளிக்கிறாள் தெரியுமா?
நாட்டை ஆளும் ராணியாக, ஆணையிடும் அரசியாகத் தன்னைக் கற்பனை செய்து கொள்வாள். “இஸ்திரி போட்ட பேண்ட் உடுத்தினால் என்ன?” என்று கேட்டால், “வண்ணானுக்கு எத்தனை கொடுக்கிறது?” என்று புலம்பும் கணவன்.
மனதுக்குள்ளே இடும் சட்டம்: கருமிகளுக்குக் கல்யாணமே ஆகக்கூடாது. ஆவலுடன் மனைவியின் கண்கள் ஒரு பொருளின் மீது படியும் போது, கெட்டியாக மூடிக் கொள்ளும் கணவனின் பர்ஸ் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றொரு சட்டம். அடக்குமுறை அதிகமாக அதிகமாகச் சுதந்திர தாகமும் அதிகரிக்கிறது. சாயாவுக்கும் அப்படித்தான். அவள் தங்கையைப் பெண் பார்க்க வருவதால் சாயா வரவேண்டுமென்று அவள் தாய் கடிதம் எழுதியிருந்தாள். பாஸ்கரனோ “ஆயிரம் பேர் பெண் பார்க்க வருவா, ஒவ்வொரு தடவையும் நீ போக முடியுமா? “என்கிறான். அந்தக்கணம் ஓர் இந்துப் பெண்ணுக்குத் தோன்றக் கூடாதது என்று காலம் காலமாய் எல்லாரும் சொல்லும் ஓர் எண்ணம் அவளுக்கும் தோன்றியது. அவனை விட்டுப் போய்விட வேண்டும் என்று அவள் நினைத்தாள். பத்து வருஷங்களாய் இழுக்க இழுக்க நீளும் ரப்பர் துண்டாய் வளைந்து கொடுத்த மனம் அன்று கல்லென்று உறைந்தது. மனம் நினைத்த மறுவினாடியே எதிர்காலத் திட்டங்கள் நீண்டு அவள் தீர்மானமே செய்து விட்டாள். அவள் சிறகுகளை விரித்து அவள் பறக்க வேண்டும். விசும்பின் நிச்சலனமான அமைதியில் அவள் சிறகுகள் அசைய வேண்டும். அதுதான் வாழ்க்கை என்று நினைக்கிறாள். (சிறகுகள் முறியும்)
பெண்ணின் சாதனை
ஆணாதிக்கத்தில் உரிமைகள் ஒடுக்கப்படலாம். உணர்வுகள் அடக்கப் படலாம். ஆனால் பெண் நினைத்தால் சாதிக்கலாம் என்பதை அம்பை எவ்வளவு சுவையாகச் சொல்கிறார் என்று பாருங்கள்:
எந்த வாகனமும் ஓட்ட அவளுக்கு உரிமை மறுக்கப்பட்டது. அவளுக்கு ஒரு வாகனம் உரிமை உடையதாயிற்று. சக்கரமில்லா, சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத வாகனம், ஓசையின்றி, மோதலின்றி, ரத்தமின்றி இயங்கும் வாகனம். மின்னியக்க வாகனம். அதில் ஆரோகணித்துத் தகவல் வீதியில் பல காத தூரம் பயணம் போனாள். தகவல் வலைக் கூட்டத்தாரின் வீட்டுப் பக்கங்களை நோட்டம் விட்டாள். பல வீட்டின் கதவுகளைத் தட்டித் திறந்தாள். தனக்கென்று ஒரு வீட்டை அதில் அமைத்துக் கொண்டாள். தற்போது தன் வாகனம் என்று குறிப்பிட்டு மின்னியக்க மூஞ்சூறின் மேல் ஆரோகணித்தவளாய்த் தன்னை வரைந்து கொண்டாள். அரக்கர்களை அழிக்கவும் தேவர்களைச் சந்திக்கவும் மின்னியக்கத் தருணம் பார்க்க ஆரம்பித்தாள். இவ்வாறு அக்கதை (காட்டில் ஒரு மான்) செல்கிறது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே அமையும் தோழமை உணர்வையும் நெருக்கத்தையும் பல படைப்பாளிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோலத் தாய்க்கும் மகளுக்கும் அமைந்த தோழமை உணர்வையும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் நிலையினையும் வெளிப்படுத்துகிறது அம்பையின் ‘பிரசுரிக்கப்படாத கைப்பிரதி’ (காட்டில் ஒரு மான்).
சமுதாயத்தில் ஆண்கள், பெண்கள் இவர்களின் நடத்தைக்கு, சமுதாயம் அவர்களுக்குக் கற்பித்துத் தந்ததே என்று உளவியல் ரீதியான காரணத்தை ஒரு சிறுகதையில் எடுத்துக் காட்டுகிறார் (வீட்டின் மூலையில் ஒரு சமையலறை).
‘லோகிதாஸ்’ என்ற ஆண் உருவாக்கப்பட்டான். சபரி என்ற பெண்ணும் உருவாக்கப்பட்டாள்.
ஆண் சம்பாதிப்பவன். சம்பாதிப்பவனே ஆண். நீ சம்பாதிப்பவன். நீ வேலைக்குச் செல்பவன். நீ உரிமைகளை உடையவன். நீ அழக் கூடாதவன். நீ உறுதியானவன். நீ தீர்மானங்களைச் செய்பவன். நீ ஆண் – இப்படி உருவாக்கப்படுபவன் ஆண் என்று ஆணாதிக்கச் சமுதாயத்தை எடுத்துக் காட்டுகிறார். (வீட்டின் மூலையில் ஒரு சமையலறை)
ஹிஸ்டரி எடு! அப்புறமா அடுப்பு தானே ஊதணும்? சமைக்கக் கத்துக்க,வாய்க்கு ருசியா சமைக்காத பொண்ணை யார் கட்டுவாங்க? ஃபெமினா பாரு, ரெசிபி கத்தரிச்சு வை. நீ வீட்டைப் பேணுபவள், நீ அழகு சாதனங்களுக்கானவள். நீ அடக்கமானவள். நீ தீர்மானங்களைக் கேட்டுக் கொள்பவள். நீ தேவியானவள். நீ உபயோகமானவள். நீ சுகத்தைத் தருபவள். நீ தேவைக்காக மட்டுமே வேலை செய்பவள்.நீ பாதுகாக்கப்பட வேண்டியவள். நீ பெண். இவ்வாறு சபரி என்ற பெண்ணை உருவாக்கியுள்ளதாக எடுத்துக் காட்டுகிறார்.
ஆண் மேம்படுத்தப்பட்டும், பெண் அடக்கப்பட்டும் உருவாக்கப் படுவதால் இச்சமுதாயச் சூழல் அதனை வளர்க்கவே வழி செய்வதை அம்பை எடுத்துக் காட்டுகிறார்.
பெண்கள் வாழ்க்கை சமையலறையைச் சுற்றியே இருப்பதைக் காட்டும் சிறுகதை வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. குழாயடித் தண்ணீருக்கு நின்று நின்று அடிப்பாதம் எல்லாம் வெடிப்புக் கீறல்கள். மருமகள் மீனாட்சி துணிச்சலாகப் பாத்திரம் தேய்க்க வெளியே ஒரு தொட்டி போடலாம் என்கிறாள். மாமனார் பப்பாஜி எதற்கு என்று கேட்கிறார். சமையலறைத் தொட்டி சிறியது. வெளியில் கொடியில் கட்டியிருக்கும் துணிகள் மலையை மறைக்கிறது என்கிறாள். ஆனால் சமையலறை நிலவரம் மாற்றப்படவில்லை. “மைசூர்ப் பெண்ணே, இங்கே நிரந்தரமாக வாழாத உனக்கு மலை எதற்கு. அதன் பச்சை எதற்கு? ராஜஸ்தானத்துச் சமையல் பண்பாட்டுக்கும் ஜன்னலுக்கும், பாத்திரம் அலம்பும் தொட்டிக்கும் என்ன சம்பந்தம் பெண்ணே….. முக்காடு அணிய மறுக்கும் … நிறையப் பேசும் பெண்ணே” என்கிறது மாமனார் பப்பாஜியின் மௌனச் சவால். சந்தேகப்படும் கணவனுக்குத் தன் மௌனத்தாலேயே தண்டனை தருகிறாள் அவன் மனைவி (வல்லூறுகள், சிறகுகள் முறியும்). பெண்ணுரிமை அடிப்படையிலேயே பல கதைமாந்தர்களைப் படைத்திருப்பதை அம்பையின் சிறுகதைகளில் காணலாம்.
கதைக் கருவை உருவகமாக்கித் தலைப்பிலே தரும் உத்தி ‘காட்டில் ஒரு மான்’ சிறுகதைத் தலைப்பில் காணலாம். மான் கொடிய விலங்குகளுக்கு அஞ்சக் கூடியது. அச்சத்துடன் ஓடினாலும் அதற்கென்று ஓர் உலகம் இருக்கிறது. ஒருநாள் தன் கூட்டத்தை விட்டுத் தான் வாழும் காட்டில் ஒரு பகுதியை விட்டு விட்டுப் புதியதொரு பகுதிக்கு வந்து விடுகிறது. எதைப் பார்த்தாலும் புதியதாக இருப்பதால் அஞ்சி அஞ்சி ஓடுகிறது. பிறகு துள்ளித் துள்ளி ஓடி அனைத்துப் பகுதிகளையும் அறிந்து கொள்கிறது. அதன் பின்னர் அச்சமின்றி அங்கு வாழ்வதாகச் சொல்லப்படும் இக்கதை ஒரு பெண்ணால் அங்குள்ள குழந்தைகளுக்குச் சொல்லப்படுகிறது. அந்த மானைப் போன்றவள்தான் அந்தப் பெண்ணும். மணமான அவளுக்குக் குழந்தைப் பேறு கிட்டவில்லை. அவளால் அனைவரிடமும் அன்பு செலுத்த முடியும். நல்ல எண்ணங்கள் கொண்ட அவள் குழந்தைப் பேறில்லாத ஒரு பெண்ணுக்கு இச்சமுதாயத்தில் என்னென்ன பழிகள் உண்டாகும் என்பதை அறிந்து கொண்டவளாய் இருக்கிறாள். அதற்கு ஏற்றாற்போல் கணவனுக்கு மறுமணம் செய்து வைத்தாள். எல்லாக் குழந்தைகளையும் அன்புடன் நேசித்தாள். பிள்ளை பெறாதவள் என்று கூறும் இச்சமுதாயத்தைத் தன் உள்ள உறுதியால் வென்று அந்த மான் போல் அச்சமின்றி வாழ்கிறாள் என்பதை உருவகமாக இச்சிறுகதை உணர்த்துவதைக் காணலாம்.
ஒரே தலைப்பில் (பயணம் 1, பயணம் 2, பயணம் 3) மூன்று சிறுகதைகளைப் படைத்து வேறுபட்ட மூன்று பயண அனுபவங்களைச் சுவைபடச் சொல்கிறார் அம்பை (காட்டில் ஒரு மான்).
புராணக் கதைகளைப் புதிய பார்வையோடு நோக்கி அம்பை புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துகிறார்.
கல்வி அறிவில்லாத கிராமத்துப் பெண் ஆணின் அடக்குமுறைக்கு உட்பட்டு வீட்டு வேலைகள் செய்யும் ஓர் அடிமைபோல்தான் இருக்கிறாள். தான் ஒடுக்கப்படுகிறோம் என்பதை அறியாதவளாய் இருப்பதால் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள். டாக்டர் பட்டம் பெற ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டிருக்கும் பெண்ணோ அந்த அடக்குமுறைகளினால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகிறாள். வேதனைக்கு உள்ளாகிறவள் ஒடுக்கப் பட்டிருப்பவளின் மகிழ்ச்சியைப் பார்த்து வியப்பதும் அம்பையின் கதைகளில் காணலாம். அறிவியல் தொழில் நுட்பச் சாதனங்களாகிய கணினிகளிலும் ஆணாதிக்க உணர்வு மிக்கிருப்பதை எடுத்துக் காட்டுகிறார் அம்பை. மனித நேய உணர்வினை எடுத்துக் காட்டும் சிறுகதைகளையும் அம்பை படைத்துள்ளார்.
கடலில் பிடித்த மீன்களில் மஞ்சள் மீன் ஒன்று மீனவர் கையிலிருந்து கீழே தப்பியது. அதை மீண்டும் கடலில் கொண்டு போய் விட்டு மகிழ்ச்சியடையும் உயர்ந்த உணர்வையும் அம்பை மஞ்சள் மீன் சிறுகதையில் எடுத்துக் காட்டுகிறார். வெவ்வேறு வகையான கதை மாந்தர்களைப் படைத்துக் காட்டுகிறார் அம்பை. வெவ்வேறு வகையான கதை மாந்தர் படைப்பு அம்பையின் படைப்புத் திறனுக்குச் சான்றாகும். ஆணாதிக்கம், அதை உணர்ந்த பெண்களின் எண்ணங்களும், பேச்சும், செயலும் அம்பையின் அனைத்துப் படைப்புகளிலும் எதிரொலிக்கின்றன எனலாம்.