20

மொழிபெயர்ப்பு வகைகள்

பாடம் 1

ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகள்

1.0. பாட முன்னுரை

மக்களாட்சியில், ஆளப்படுகின்ற மக்கள் பேசும் மொழியே ஆட்சி மொழியாக அமைவது தான் இயற்கை ஆகும். அதுவே மக்களாட்சிக் கோட்பாட்டினுக்கு ஏற்புடையது. வேற்றுமொழி பேசும் ஆட்சியாளர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நாட்டில் ஆட்சி மொழியானது ஆளுவோரின் நலனுக்கேற்ப மாற்றப்படுகின்றது. ஒரு நாட்டில் பரந்து பட்ட மக்களின் மொழியானது புறக்கணிக்கப்பட்டு வீட்டுமொழியாக மாறுமெனில், அது நாளடைவில் வழக்கொழிந்து விடும். எனவே ஆட்சிமொழியானது சமூக ரீதியில் முக்கிய இடம்பெறுகின்றது. தமிழகமானது கடந்த அறுநூறு ஆண்டுகளாகப் பிறமொழி பேசும் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டிருக்கின்றது. இந்நிலையிலும் தமிழானது தொடர்ந்து ஆட்சி மொழியாக இருந்திடப் போராடி வருகின்றது. ஆட்சித்தமிழின் தனித்தன்மையும் கலைச்சொல்லாக்கமும் மேம்பாடு அடைந்திட ஆட்சித்தமிழ் மொழி பெயர்ப்புகள் உதவுகின்றன. இன்றைய சமூக, அரசியல் சூழலில் ஆட்சித் தமிழின் சிறப்பம்சங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப்பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

1.1 ஆட்சி மொழி

ஆட்சியிலிருந்து அரசினை நடத்திட உதவும் மொழி ஆட்சிமொழி ஆகும். அது ஒரு வகையில் ஆளுவோருக்கும் பரந்து பட்ட மக்களுக்கும் இடையில் பாலமாக விளங்குகின்றது. அரசின் ஆணைகளையும் கருத்தியலையும் வெளிப்படுத்திட உதவும் ஆட்சி மொழியானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆட்சியாளரின் மொழிக்கும் ஆளப்படுகின்ற மக்களின் மொழிக்கும் இடையிலான முரண்பாட்டினை, அரசியல் அடிப்படையில் தான் விளங்கிக் கொள்ள இயலும். இங்கு மொழியானது கருத்தியல் வெளிப்பாட்டுக் கருவி என்ற நிலையைக் கடந்து ஒடுக்குமுறை ஆயுதமாக வடிவமெடுக்கின்றது. இந்நிலையில் நாட்டின் விடுதலையுடன் மொழி விடுதலையும் இணைகின்றது.

1.1.1 தமிழகத்தில் ஆட்சி மொழி சங்க காலத்திலும் அதற்குப் பிந்திய காலக்கட்டத்திலும் தமிழ் மொழியே ஆட்சிமொழியாக இருந்தது. மன்னர் ஆட்சியை நடத்திட உதவிய பல சொற்கள் இன்றும் கூடத் தமிழக ஆட்சியாளருக்கு உதவியாக உள்ளன.

களப்பிரரும், பல்லவரும் தமிழகத்தை ஆட்சி செய்தபோது, பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் அரசின் ஆதரவு பெற்று வளமடைந்தன. வடமொழியும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடை புதிதாக உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே வழக்கிலிருந்த தமிழ்ச்சொற்கள் வட மொழிக்கு மாற்றப்பட்டன. இவ்வாறு மாற்றி எழுதுவது சிறப்பு என்ற கருத்து வலுப்பெற்றது. இத்தகைய மாற்றம் பெற்ற சொற்கள் பின்வருமாறு:

அரசன் - ராஜன்

மண்டிலம் - மண்டலம்

அவை - சபை

திரு - ஸ்ரீ

அரியணை - சிம்மாசனம்

தேர் - ரதம்

யானை - கஜம்

ஆட்சிமொழிச் சொற்களில் ஏற்பட்ட மாற்றம், சோழ மன்னர்களின் பெயர்கள், கோயில்களின் பெயர்கள் போன்றவற்றையும் பாதித்தது.எனினும் சோழர் காலத்தில் ஆட்சிமொழிச் சொற்கள் பெரிதும் தமிழிலேயே இருந்தன.

1.1.2 பிற்காலப் பாண்டியர் காலம் பிற்காலப் பாண்டியர்கள் அரியணையில் வீற்றிருந்தபோது தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடை செல்வாக்குப் பெற்றது. ஆட்சித் தமிழ்ச்சொற்கள் பல வடமொழி ஆக்கப்பட்டுத் தமிழில் எழுதப்பட்டன. எடுத்துக்காட்டு :

அகப்பரிவாரம், பிரம தேயம், சரஸ்வதி

பண்டாரம், உத்திர மந்திரி.

எனினும் தமிழ் ஆட்சிமொழி என்ற செல்வாக்கினை இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1.1.3 வேற்றுநாட்டவர் ஆட்சிக்காலம் வேற்றுநாட்டைச் சார்ந்த முகலாயர், மராட்டியர், தெலுங்கர், ஆங்கிலேயர் ஆகியோர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து ஆட்சி செய்தனர். அவர்கள் காலத்தில் பல பிறமொழிச் சொற்கள் தமிழ் ஆட்சி மொழியில் இடம் பெற்றன.

• முகலாயர் ஆட்சி

தாஜ்மகால்

கி.பி.16-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தின் மீது படையெடுத்த முகலாயர், தில்லி சுல்தான்களின் ஆட்சி, வெவ்வேறு காலக்கட்டங்களில் தமிழகத்தில் நடைபெற்றது. அப்பொழுது ஏராளமான அரபி, பாரசீக, இந்துஸ்தானிச்சொற்கள் ஆட்சிச்சொற்களாகத் தமிழுக்கு வந்து சேர்ந்தன. அவற்றுள் சில

அசல் கிஸ்தி தஸ்தாவேஜி முன்சீப்

தாசில் பட்டுவாடா ராஜிநாமா ஜில்லா

ஜப்தி மாஜி அமீனா பிர்க்கா

வாபஸ் மகஜர் ரத்து பாரா

பாக்கி மராமத்து ரொக்கம் சிரஸ்தார்

ஜாமீன் அயன் சிபாரிசு சீல்

மேற்குறித்த சொற்களுக்குப் பொருத்தமான சொற்கள், ஏற்கெனவே தமிழில் ஆட்சி மொழியில் இடம்பெற்றிருப்பினும் ஆளுவோரின் நலனுக்கேற்ப, அவை மாற்றி அமைக்கப்பட்டன. இவற்றில் பல சொற்கள் மக்களிடையே இன்றும் பேச்சு வழக்கில் உள்ளன.

• மராட்டியர், தெலுங்கர் ஆட்சி

மராட்டியரும், தெலுங்கரும் தமிழகத்தை ஆண்ட போது மராட்டி, தெலுங்குச் சொற்கள் ஆட்சி மொழிச் சொற்களாகத் தமிழ் ஆக்கப்பட்டன. (எ.கா) ஆஸ்தி, சன்மானம், கிரயம்.

• ஐரோப்பியர் ஆட்சி

ஆங்கிலேயர்

கி.பி.15-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 1947-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் போர்த்துக்கீசியர், டேனிசுக்காரர், டச்சுக்காரர், ஒல்லாந்தார், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் முதலானோர் வணிகச் சங்கங்களை அமைத்து வணிகம் செய்ததுடன், காலப்போக்கில் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றினர். இவர்களில் ஏறத்தாழ 350 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டவர்கள் ஆங்கிலேயர்கள் மட்டுமே. இதனால் பல்வேறு ஐரோப்பிய மொழிச் சொற்கள் அப்படியே தமிழ் வடிவம் பெற்றன.

1.2 ஆங்கிலம் ஆட்சிமொழி

மெக்காலே

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர், ஆங்கில மொழியை ஆட்சி மொழியாக இந்திய மக்களின் மீது திணித்தனர். 1835ஆம் ஆண்டு மெக்காலே வெளியிட்ட ஆங்கில முறைக்கல்வி பற்றிய அறிக்கைக்குப் பின்னர், ஆங்கிலம் ஆட்சி மொழியானது. ஹார்டிங் 1844ஆம் ஆண்டு பிறப்பித்த ஆணையின்படி ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்கள் மட்டும் அரசுப் பணியில் முன்னுரிமை பெற்றனர். மரபு வழிப்பட்ட தமிழ்க் கல்வி புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலக் கல்வி முக்கியத்துவம் அடைந்தது. ஆட்சியிலிருந்த ஆங்கிலேயர் போல ஆங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் உயர்வானது என்ற புனைந்துரை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆட்சி மொழியாகத் தமிழகத்தில் ஆங்கிலம் அரியணை ஏறியது.

தமிழகத்தில் ஆட்சி மொழியாகத் தமிழே இருக்க வேண்டுமென்று மாயவரம் வேதநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரனார், பாரதியார், பாரதிதாசன், தேவநேயப்பாவாணர் போன்றோர் முயன்றனர். அவர்களின் விருப்பம் 1956-ஆம் ஆண்டு தமிழகப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழிச்சட்டம் மூலம் நிறைவேறியது.

பாரதியார் தேவநேயப் பாவாணர் பாரதிதாசன்

1.3 தமிழ் ஆட்சி மொழி

தமிழகத்தில் ஆட்சி மொழியாகத் தமிழ் வழங்கவேண்டும் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது. இக்குழு ஆட்சி மொழியாக உள்ள ஆங்கிலத்தை அகற்றி, அவ்விடத்தில் தமிழை நிலைநிறுத்துவதற்கான அடிப்படைப் பணிகளில் கவனம் செலுத்தியது.

ஆட்சி மொழிக் குழுவின் முதன்மைச் செயற்பாடுகள் பின்வருமாறு:

தமிழகம் முழுவதிலுமுள்ள பல்வேறு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, தமிழில் அலுவல்களை நடத்திட அறிவுரைகள் வழங்குதல்.

தமிழை ஆட்சி மொழியாக்குவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் களைய ஆலோசனைகள் அளித்தல்.

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்திற்கு அடிப்படையான ஆட்சிச்சொல் அகராதிகள் தயாரிப்புப் பணிகளை வளப்படுத்துதல்.

1.3.1 தமிழ் வளர்ச்சி இயக்ககம் ஆட்சித் தமிழை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு 1971-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சி இயக்ககம் எனும் தனித்துறையை ஏற்படுத்தியது. ஆட்சித் தமிழ் தொடர்பான அனைத்துச் செயற்பாடுகளையும் அந்த இயக்கம் மேற்கொண்டு வருகிறது.

1.3.2. மொழிபெயர்ப்புப் பணிகள் ஆட்சி மொழித் திட்டத்தினை நிறைவேற்றிட ஆங்கிலத்தில் உள்ள நிருவாகம் தொடர்பான விதிகள், விதித்தொகுப்புகள், நடைமுறை நூல்கள், பதிவேடுகள், படிவங்கள் போன்றவற்றைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டியது அடிப்படையானது ஆகும்.எனவே மொழிபெயர்ப்பு வல்லுநர்கள், கூர்ந்தாய்வுக் கண்காணிப்பாளர்கள் (Scrutiny officers) மட்டுமன்றிப் பல்வேறு துறைகளில் பணியாற்றி மொழிபெயர்ப்பு அனுபவம் பெற்ற அலுவலர்களும் ஆட்சித் தமிழ் மொழிபெயர்ப்புகளில் முனைந்து செயற்படுகின்றனர். இதனால் அரசின் பல்வேறு துறைகளிலும் தமிழ் இடம் பெறத் தொடங்கியுள்ளது.

1.3.3 ஆட்சிச் சொல் அகராதி தமிழ் ஆட்சி மொழித்திட்டத்திற்குப் பயன்படும் வகையில் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையாகத் தமிழ்ச் சொற்களைக் கொண்ட அகராதி தயாரிப்பது என்று அரசு கருதியது. இந்நிலையில் சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் ஆட்சிச் சொல் அகராதி தயாரித்து அரசிடம் வழங்கியது. அது 1957-ஆம் ஆண்டில் செப்பம் செய்யப்பட்டது. இவ்வகராதியில் பல்வேறு துறைகளில் வழக்கிலுள்ள பொதுவான ஆங்கிலச் சொற்கள், அவற்றுக்குரிய தமிழாக்கங்களுடன் இடம் பெற்றுள்ளன.

ஆட்சிச் சொல் அகராதி, காலத்தின் தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டு, இதுவரை நான்கு பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் கையடக்கப் பதிப்பு 1953-ஆம் ஆண்டிலும், இணைப்பகராதி 1997-ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டுள்ளன.

1.3.4 சிறப்புச் சொல் துணையகராதி தமிழக அரசின் துறைகள்தோறும் வழக்கிலுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தொகுத்துச் சிறப்புச் சொல் துணையகராதிகள் தயாரிக்கப்படுகின்றன. அவை துறைதோறும் வழங்கப்படுகின்றன. இத்தகைய அகராதிகளில் இடம் பெறும் ஆங்கிலச் சொற்களின் தமிழாக்கங்கள், அவ்வத்துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்து ஆய்வு செய்து, முடிவெடுத்து, அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. எழுபத்தெட்டுத் துறைகளின் சிறப்புச் சொல் துணையகராதிகள், ஆட்சித் தமிழை நடைமுறைப்படுத்துவதற்காக, இதுவரை தமிழ் வளர்ச்சித் துறையினால் வெளியிடப்பட்டுள்ளன.

1.4 ஆட்சித் தமிழ் முன்னோடிகள்

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமென மொழியறிஞர்களும் சமூக அக்கறை மிக்கவர்களும் தொடர்ந்து வலியுறுத்தினாலும், அதற்காக நடைமுறையில் செயற்பட்டவர்களின் முயற்சி முக்கியமானது. இத்தகையோரில் தேவநேயப்பாவாணர், கா.அப்பாத்துரை, கீ.இராமலிங்கம், கோ.முத்துப்பிள்ளை ஆகியோர் ஆட்சிச்சொல் மொழிபெயர்ப்புகளில் முனைந்து செயற்பட்டுள்ளனர். வெறுமையான தமிழ் மொழி பற்றிய ஆரவாரக் கூச்சலுக்கிடையில், தமிழை ஆட்சி மொழியாக்கிட முனைந்த அறிஞர்களின் பணி போற்றத்தக்கது.

1.4.1 தேவநேயப் பாவாணர் தேவநேயப்பாவாணர்

தமிழகத்தில் வடமொழிக் கலப்பால் தமிழன் மறந்த சொற்கள் பலவற்றையும் மீட்டெடுத்தவர் பாவாணர் ஆவர். ஆங்கிலம் அரசின் மொழி என்ற காரணத்தினால், தமிழர் அதைப் போற்றவும், தமிழைத் தூற்றவும் முயன்றனர் என்று குறிப்பிடும் பாவாணர், தமிழை ஆட்சி மொழியாக்குவதற்காகப் பல்வேறு ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கி உள்ளார். அவற்றில் சில பின்வருமாறு.

Bail - பிணை

Field - களம்

Advisory board - அறிவுரைக்குழு

Agencies - முகவாண்மைகள்

Agenda - நிகழ்ச்சிக் குறிப்பு

Bill of Exchange - பரிமாற்றப் பட்டி

Campus - வளாகம்

1.4.2 கா. அப்பாத்துரை கா.அப்பாத்துரை ஆட்சித் தமிழுக்காகப் பல்வேறு பணிகள் புரிந்துள்ளார். புதுச்சொல் படைத்தும், வழக்கிலுள்ள சொற்களைப் புதுக்கியும் ஆட்சிச் சொற்களை முயன்று உருவாக்கியுள்ளார். அவற்றில் சில :

Cheque - காசோலை

Expert - வல்லுநர்

Factory - தொழிலகம்

Passport - கடவுச்சீட்டு

Television - தொலைக்காட்சி

Bonus - விருப்பூதியம்

1.4.3 கீ.இராமலிங்கம் தமிழில் ஆட்சிச் சொற்கள், ஆட்சித்துறைத் தமிழ், தமிழில் எழுதுவோம் எனும் நூல்களை எழுதி ஆட்சித் தமிழின் வளர்ச்சிக்கு கீ.இராமலிங்கம் தொடர்ந்து பாடுபட்டார். இவர் பல்வேறு அரசுப் பணிகளின் வழியாக ஆட்சித் தமிழ் மொழிபெயர்ப்புகளில் முனைந்து செயல்பட்டார். இவரது சொல்லாக்கங்களுக்குச் சான்றுகள் பின்வருமாறு :

Ratification - பின்னேற்பு

Insurance - ஈட்டுறுதி

Collector - ஆட்சியர்

Auditor - தணிக்கையாளர்

Bus - பேருந்து

Commissioner - ஆணையர்

Governor - ஆளுநர்

1.4.4 கோ.முத்துப்பிள்ளை மொழிபெயர்ப்பிலும் சொல்லாக்கத்திலும் திறமை மிக்க கோ.முத்துப்பிள்ளை ஆட்சித் தமிழ் வளர்ச்சியில் அயராது உழைத்தார். இவரது ஆட்சித் தமிழ் மொழியாக்கங்களில் சிலபின்வருமாறு :

Efficiency - திறப்பாடு

Instruction - அறிவுறுத்தம்

Profession - செய்தொழில்

Proposal - கருத்துரு

Active Service - செயற்படு பணி

Initial - சுருக்கொப்பம்

1.5 ஆட்சிச் சொற்களும் தமிழாக்க முறைகளும்

தமிழை ஆட்சி மொழியாக்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட ஆட்சிச் சொல்லகராதியில் ஏறக்குறைய 9000 சொற்கள் தமிழாக்கப்பட்டுள்ளன. உலகமெங்கும் நடைபெறும் அறிவியல் ஆய்வுகளை எல்லாம் தமிழ்ச் சொற்களால் விவரிக்குமளவு, தமிழ்மொழி வளமுடையது. எனவே தான் பழைய மரபுகளைக் கருத்தில் கொண்டும் புதிய மொழியியலுக்கு ஏற்பவும் ஆட்சித் தமிழ் மொழிபெயர்ப்புகள் தமிழில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய சொற்களில் பல நிலைத்து நிற்கின்றன; சில வழக்கொழிந்து போகின்றன; இந்நிலை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

1.5.1 ஓர் ஆங்கிலச் சொல் – பல தமிழ் வடிவங்கள் ஆட்சி மொழிப் பயன்பாட்டில் ஓர் ஆங்கிலச் சொல், வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு பொருள்களில் வழங்கப்படுகின்றது. எனவே அச்சொல், துறையின் தேவைக்கேற்ப, கையாளுவதற்கு ஏற்ற வடிவில் பல்வேறு வடிவங்களில் தரப்பட்டுள்ளது.

Candidate     -     வேட்பாளர், தேர்வு நாடுபவர், பணிக்கு விண்ணப்பிப்பவர்

Junction         -     சந்திப்பு, கூடல், சந்தி, இணைப்பு

Accord         -     இசைவு, ஒப்பந்தம், பொருத்தம், அணி

Bar         -     வழக்குரைஞர் குழாம், விசாரணைக் கட்டு, கம்பி, பாளம், தாடை, மதுக்கூடம்

1.5.2 திட்டவட்டமான மொழிபெயர்ப்புகள் ஆட்சித்துறையில் அடிக்கடி புழங்கி வரும் சில சொற்களுக்குத் திட்டவட்டமான முறையில் சொற்களைத் தமிழாக்குவது வழக்கிலுள்ளது. இத்தகைய போக்கு வெகுசன ஊடகங்களின் வழியாக உறுதிப்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்புச் சொற்களை ஏற்றுக்கொள்கிறது. அவற்றுள் சில :

Legislative Assembly     - சட்டமன்றப் பேரவை

Lok Sabha         - நாடாளுமன்றம்

Immediate         - உடனடி

Dismissal             - விலக்கல்

Suspension         - இடை நீக்கம்

Transfer             - மாற்றம்

1.5.3 நுண்ணிய பொருள் வேறுபாடுகள் ஆங்கிலத்தில் நடைமுறை காரணமாகச் சில சொற்கள் நுண்ணிய பொருள் வேறுபாடுகளை உடையவையாக உள்ளன. இவற்றினுக்கேற்ற தமிழ்ச் சொற்கள் கிடைப்பது அருமை. எனினும் தற்பொழுது பயன்படுத்தப்படும் சொற்கள் பொருளின் நுண்மையான வேறுபாட்டினை விளக்க முயலுகின்றன. அவை பின்வருமாறு

Zone     - மண்டலம்

Region     - வட்டாரம்

Proposal     - கருத்துரு

Deed     - ஒப்பாவணம்

Record     - பதிவுரு

Bond     - பிணைமுறி

1.5.4 ஒருசொல் – ஒருபொருள் குறிப்பிட்ட ஒரு பொருளையே தருவன போல் தோன்றும் சில சொற்கள் குறித்த பொருளையே தருவதை ஆங்கிலத்தில் காணலாம். எனவே, குறித்த ஒரு பொருளையே தருவதற்குரியனவாக அவற்றைத் தமிழ் ஆக்கி உள்ளதனைப் பின்வரும் சான்றுகள் விளக்குகின்றன.

Grade         - தரம்

Cadre         - பணிப்பிரிவு

Rank         - வரிசை

Overseer         - பணிப்பார்வையாளர்

Manager         - மேலாளர்

Supervisor     - மேற்பார்வையாளர்

Review         - மறு ஆய்வு

Revision         - சீராய்வு

Decision         - முடிவு

Judgement     - தீர்ப்புரை

1.5.5 மாறும் சொல்வடிம் மொழியானது காலந்தோறும் மாறும் இயல்புடையது. மொழியின் வளர்ச்சியானது, புதிய சொல்லாக்கங்கள், தொடரமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடையது. ஆட்சித் தமிழ்ச்சொற்களின் மொழிபெயர்ப்பானது மாறிவரும் சூழலுக்கேற்பப் புதிய வடிவங்களையும், சொற்களையும் ஏற்றுக் கொள்வதாக அமைய வேண்டும். (எ.கா)

(i) Collector     தண்டல் நாயகர்

தண்டல் தலைவர்

ஆட்சித் தலைவர்

ஆட்சியர்

(ii) Casual Leave     நேர்வு விடுப்பு

சிறு விடுப்பு

சில்லறை விடுப்பு

தற்செயல் விடுப்பு

1.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடம் உங்களுக்குள் உருவாக்கியிருக்கும் பதிவுகளை நினைவு கொள்ளுங்கள்.

இப்பொழுது ஆட்சித் துறை மொழிபெயர்ப்புகள் பற்றிய சித்திரத்தின் அருமையை உணர்ந்திருப்பீர்கள்!

ஆட்சித்துறை மொழிபெயர்ப்புகளின் சிறப்புகள், ஆட்சித் தமிழ் வரலாறு, ஆட்சித்தமிழ் நடைமுறைப்படுத்துதல், மொழிபெயர்ப்புகளின் சிறப்புக் கூறுகள்… போன்றன பற்றி இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்டீர்கள்.

பாடம் 2

அறிவியல் மொழிபெயர்ப்புகள்

2.0. பாட முன்னுரை

மனிதனின் சமுதாயச் செயற்பாடு, அறிவுநிலையில் மொழியை அடிப்படையாகக் கொண்டது. பன்னெடுங்காலம் மனிதகுலம் கண்டறிந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், மொழி வழியே வெளிப்படுகின்றன. எனினும் ஒரு மொழி பேசும் குழுவினருடன் இன்னொரு மொழி பேசும் குழுவினர் தொடர்பு கொள்ள மொழி தடையாக உள்ளது. இந்நிலையை மாற்றிட மொழிபெயர்ப்புகள் உதவுகின்றன. இதனால்தான் அறிவியலின் பல்வேறு விளைவுகளும் உலகமெங்கும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை காரணமாகவே இயல், இசை, நாடகம் என்ற முப்பெரும் பிரிவுகளை உடைய தமிழில், நான்காவதாக ‘அறிவியல் தமிழ்’ வளர்ச்சி அடைந்து வருகிறது. அறிவியல் தமிழின் மேம்பாட்டில் முக்கிய இடம் வகிக்கும் அறிவியல் மொழிபெயர்ப்புகளின் பல்வேறு கூறுகளையும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் பாடப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

2.1 அறிவியல் வெளியீடுகள்

உலக வரைபடம்

அறிவியலின் மாபெரும் வளர்ச்சி காரணமாகவும், தகவல் தொடர்பியல் கருவிகளின் நவீன கண்டுபிடிப்புகளின் விளைவாகவும் உலகம் முழுவதும், பல்வேறு மொழிகளில், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் அறிவியல் கட்டுரைகளும், நூல்களும் வெளியிடப்படுகின்றன. இத்தகைய வெளியீடுகள் பெரும்பாலும் ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷியன், ஜெர்மன், சீன, ஜப்பானிய மொழிகளில் வெளியாகின்றன. அறிவியல் நுணுக்கங்களை அறிய விரும்பும் அறிவியலாளர்களால், ஓரிரு மொழிகள் மட்டுமே அறிந்த நிலையில் சர்வதேச ஆய்வுப் போக்கினை அறிந்து கொள்வது இயலாதது.

அறிவியல் வளர்ச்சி

கணிப்பொறி கைபேசி தொலைக்காட்சி

இதுவரை கண்டறியப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பங்கள் ஆகியவற்றைவிட இன்னும் பத்தாண்டுகளில் அறிவியலின் வளர்ச்சி இருமடங்காகிவிடும் என்று தகவல் அறிவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். புதிய துறைகளின் தோற்றம், ஒரு துறைக்குள்ளேயே சிறப்பான தனித்துவம் வாய்ந்த நுண்ணிய துறைகள் தோன்றுதல், ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைந்த ஆய்வுகள் போன்றவை அறிவியல் வெளியீடுகளைத் துரிதப்படுத்துகின்றன.

ஆய்வு இதழ்கள் வளர்ச்சி

ஆய்வகங்களில் கண்டறியப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள், துறைசார்ந்த ஆய்வு இதழ்களில் (Journals) முதன் முதலாக வெளியிடப்படுகின்றன. அறிவியல் வெளியீடுகளில் இதழ்கள் அரும்பணியாற்றுகின்றன. 1800-ஆம் ஆண்டில் இதழ்களின் எண்ணிக்கை 100 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கையானது 1850ஆம் ஆண்டில் 1000; 1900இல் 10,000; 1950இல் 1,00,000; 2000இல் 10,00,000 என்று பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அறிவியலில் பல்துறை சார்ந்த அறிவியல் நூற்களின் வெளியீடும் பன்மடங்கு அதிகரித்து உள்ளது.

மொழிபெயர்ப்புகள்

இந்நிலையில் மொழிபெயர்ப்புகள் மூலமாகவே அறிவியல் கருத்துகளை வல்லுநர்கள் அறிந்துகொள்ள முடிகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், அறிவியல் முன்னேற்றத்திற்கு மொழிபெயர்ப்புகள் அடிப்படையாக விளங்குகின்றன. மேலும் அறிவியல் மொழிபெயர்ப்புகள் உலக மக்களை ஒருங்கிணைக்கும் மகத்தான பணியையும் செய்கின்றன.

2.2 தமிழும் அறிவியலும்

சிற்பம்                            உலோகச் சிலை

தமிழில் மரபு வழிப்பட்ட அறிவியலும், தொழில் நுட்பவியலும் வழக்கில் இருந்துள்ளதனைத் தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ள இரும்பு, செம்பு போன்ற உலோகப் பொருட்கள் உறுதி செய்கின்றன. மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், சிற்பவியல், நீர் மேலாண்மை, கட்டடவியல் போன்ற அறிவியல் துறைகளின் பயன்பாடுகள் பற்றிய செய்திகளை இலக்கியப் படைப்புகள், வரலாற்று ஆவணங்கள் மூலம் அறியமுடிகின்றது. அவை பண்டைக் காலத்தில் பதிவு செய்யப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும் கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட ஓலைச் சுவடிகளில் வெடிமருந்து தொழில்நுட்பம், கால்நடை மருத்துவம் போன்ற பல்வேறு அறிவியல் துறைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இத்தகைய மரபு அறிவியல் குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டும் வழக்கில் இருந்திருக்க வாய்ப்புண்டு.

2.2.1 அறிவியல் தமிழ் – தோற்றம் ஐரோப்பியரின் இந்திய வருகைக்குப் பின்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் மேலைநாடுகளில் வெளியான அறிவியல் நூல்கள், இதழ்களைப் போன்று தமிழிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அறிவியல் தமிழுக்கு ஆதாரமாகும். தொழிற்புரட்சியின் காரணமாக ஐரோப்பாவெங்கும் பரவிய அறிவியல் சிந்தனைகளின் வீச்சு, தமிழ்நாட்டிலும் பரவியதன் விளைவுதான் தமிழில் அறிவியல் நூல்களின் வெளிப்பாடு, தொடக்கத்தில் தமிழ் அறிவியல் நூல்கள், ஆங்கிலத்தில் வெளியான அறிவியல் நூல்களைத் தழுவியோ, மொழிபெயர்த்தோ வெளியிடப்பட்டன. இத்தகைய நூல்களுக்கு அன்று பெரிய அளவில் வரவேற்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. எனினும் ஆங்கிலேயர் ‘மெக்காலே’ கல்வி முறையினைத் தமிழகத்தில் அறிமுகம் செய்தபோது, சூழலில் மாற்றம் ஏற்பட்டது. தமிழின் மூலம் அறிவியல் பாடங்களைக் கற்கும் நிலை ஏற்பட்டபோது, அறிவியல் மொழிபெயர்ப்புகள் பெரிய அளவில் உதவின.

2.2.2 மொழிபெயர்ப்புகளின் தேவைகள் இந்திய நாட்டின் முன்னேற்றம் என்பது, இன்று, முழுமையாக அறிவியல், தொழில்நுட்பவியலைச் சார்ந்துள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சியும், மாறிவரும் புதிய உலகின் போக்குகளை வெளிப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது. மேலைநாடுகளுக்கும் தமிழகத்திற்கும் இடையில் அறிவியல் துறைகளில் நாளும் விரிவடையும் இடைவெளியைக் குறைத்திடல் வேண்டும். தமிழ்மொழியை அண்மைக் காலத்தியதாக ஆக்க வேண்டுமெனில், தொடக்கநிலையில் மொழிபெயர்ப்புகள் பல்கிப் பெருக வேண்டும். அப்பொழுதுதான் தமிழர் வாழ்க்கை வளம் அடையும்.

அறிவியல் நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் என்பது தொடரும் பணியாகும். இதன்மூலம் அறிவியல் மரபு தமிழில் உருவாகும்; அறிவியல் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வளமுடையதாகத் தமிழ்மொழி வளமடையும். பின்னர்த் துறைசார்ந்த இதழ்கள் தமிழில் வெளிவரும் நிலைமை ஏற்படும்.

2.2.3 மொழிபெயர்ப்புகளின் தன்மைகள் ஒப்பீட்டளவில் அறிவியல் மொழிபெயர்ப்பானது இலக்கிய மொழி பெயர்ப்பிலிருந்து மாறுபட்டது. அறிவியல் மொழிபெயர்ப்பில் உணர்ச்சி, சந்தம், ஒலிநயம், அலங்காரச் சொற்கள், ஆரவாரமான தொடர்கள் போன்றவற்றுக்கு இடமில்லை. அதே சமயம் கலைச்சொற்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

அறிவியல் மொழிபெயர்ப்புகளில் கருத்துகளுக்குத்தான் முதலிடம் தருதல் வேண்டும்; மொழிநடை கருத்தினை வெளிப்படுத்தும் ஊடகமாக மட்டும் அமைந்திடல் வேண்டும்.

மொழிபெயர்ப்பாளர், மூல மொழியிலுள்ள அறிவியல் கருத்துகள் பற்றிய செறிந்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் வல்லுநர் மூலமொழியில் எத்தகைய குறிக்கோள் அல்லது கருதுகோளினை வலியுறுத்த விரும்பினாரோ, அதனைப் பெறுமொழியிலும் கொண்டு வருமாறு மொழி பெயர்ப்பு அமைந்து இருத்தல் சிறந்த அறிவியல் மொழிபெயர்ப்புக்கு இலக்கணம் ஆகும்.

2.2.4 மொழிபெயர்ப்புகளின் நெறிமுறைகள் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்குப் பின்வரும் நெறிமுறைகள் முக்கியமானவை ஆகும்.

வழக்கிலுள்ள சொற்களைக் கொண்டு புதிய சொல்லாக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பொருள் மயக்கம் தரும் சொற்களைத் தவிர்க்க வேண்டும்.

கூட்டுச் சொற்கள், புணர்மொழி, அடுக்குத் தொடர்கள் ஆகியவற்றைத் தவிர்த்திடல் நல்லது.

இடுகுறிச் சொற்களைப் பயன்படுத்தலாம்.

கருத்துப் புலப்பாடு சீராக இருக்க வேண்டும்.

தொடர்கள் இணைப்பில் கருத்துச் செறிவு, தெளிவு தேவை.

குறியீடுகள், சமன்பாடுகள், வாய்பாடுகள் போன்றவற்றை உலக அளவில் பயன்படுத்தும் முறையிலே தமிழிலும் பயன்படுத்துதல் வேண்டும்.

2.2.5 மொழிபெயர்ப்புகளின் வாசகர்கள் அறிவியல் நூல்களை மொழிபெயர்ப்புச் செய்திடும் மொழி பெயர்ப்பாளர், பெறுமொழி வாசகர்கள் பற்றிய புரிதலுடன் தம் பணியைத் தொடங்க வேண்டும். வாசகர்களைப் பின்வரும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

கற்றுத்துறை போகிய அறிவியல் வல்லுநர்கள்

ஆய்வு மாணவர்கள் / மாணவர்கள்

பொது மக்கள்

பொதுமக்கள் அறிவியல் தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் மொழிபெயர்க்கப்படும் நூல்கள், எளிய நடையுடனும் விளக்கப் படங்களுடனும், படிக்கும் ஆர்வத்தினைத் தூண்டும் வகையிலும் இருத்தல் அவசியம்.

2.3 அறிவியல் மொழிபெயர்ப்புகளின் வரலாறு

பிறமொழி அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது கி.பி.1832இல் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து அறிவியல் நூல்கள் தமிழாக்கப்பட்டு வருகின்றன. இவை அறிவியல் தமிழுக்கு வளம் சேர்ப்பவை ஆகும்.

2.3.1 தொடக்கக் காலம் பூமி

தமிழின் முதல் அறிவியல் நூலான ‘பூமி சாஸ்திரம்’, இரேனியஸ் பாதிரியாரால் 1832-ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சர்ச் மிஷன் அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியானது. இந்நூலில் புவியியல் தொடர்பான ஐம்பத்தொரு கலைச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.

பின்னர் ‘பூமி சாஸ்திரச் சுருக்கம், பூமி சாஸ்திரப் பொழிப்பு, பூமி சாஸ்திரப் பாடங்கள்’ ஆகிய நூல்கள் 1846-ஆம் ஆண்டு வெளிவந்தன. இந்நூல்கள் ஆங்கில மொழியில் வெளியான நூல்களைத் தழுவித் தமிழில் எழுதப்பட்டனவாகும்.

1848-ஆம் ஆண்டு இலங்கைக்கு மருத்துவத்துறை ஆசிரியராகப் பணியாற்ற வந்த டாக்டர் ஃபிஷ் கிரீன் (Samuel Fisk Green) அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் சிறந்து விளங்கினார். டாக்டர் கட்டர், ஆங்கிலத்தில் எழுதிய ‘Anatomy, Physiology and

ygiene’ என்ற மருத்துவ நூலினை ‘அங்காதிபாத சுகரண வாத உற்பாவன நூல்’ என்ற பெயரில் 1852இல் ஃபிஷ் கிரீன் மொழிபெயர்த்தார். இதுவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் மருத்துவ நூலாகும். 1857இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பெண்களின் பிள்ளைப்பேறு பற்றி விவரிக்கும் மருத்துவ வைத்தியம் (Midwifery) என்ற நூல் ஃபிஷ் கிரீன் மேற்பார்வையில் வெளியானது.

அதனைத் தொடர்ந்து ஃபிஷ் கிரீன் மேற்பார்வையில் மொழி பெயர்க்கப்பட்ட இரண வைத்தியம் (The Science and art of Surgery), மனுஷ சுகரணம் (

uman Physiology) ஆகிய நூல்கள் சிறப்பு மிக்கனவாகக் கருதப்படுகின்றன.

1855இல் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சார்ந்த கரோல் விஸ்வநாதன் அல்ஜிப்ரா கணிதத்தைத் தமிழில் ‘பீஜ கணிதம்’ என்ற பெயரில் வெளியிட்டார்.

வெல்சுவின் Chemistry Practical and Theories என்ற ஆங்கில நூல் ‘கெமிஸ்தம்’ என்ற பெயரில் சாப்மன், சுவாமிநாதன் ஆகியோர் உதவியுடன் கிரீன் மொழிபெயர்ப்பில் 1875ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

எட்வர்ட் ஜான் வாரிங்கின் ‘Pharmacopoeia of India’ என்ற நூல் ‘இந்து பதார்த்த சாரம்’ என்ற பெயரில் 1888-ஆம் ஆண்டு வெளியானது. இதனை சாப்மன் மொழிபெயர்த்தார்.

1885இல் ஜேம்ஸ் மில்ஸ் எழுதிய The Indian Stock Owner’s Manual என்ற நூல் ‘இந்து தேசத்துக் கால்நடைக்காரர் சாஸ்திரம்’ என்ற பெயரில் சுப்ரமணிய முதலியரால் தமிழாக்கப்பட்டது.

கி.பி.19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்திலிருந்து அறிவியல் நூல்களை மொழிபெயர்ப்பதில், இலங்கைத் தமிழர்கள் அதிக அளவில் ஈடுபாடு கொண்டிருந்தனர்.

2.3.2 நிறுவனங்களின் பங்கு 1954-இல் தொடங்கப்பட்ட தென்மொழிகள் புத்தக நிறுவனம் நாற்பதுக்கும் மேற்பட்ட பிறமொழி அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. சராசரிக் கல்வி கற்றவரும் ஆர்வத்துடன் வாசிக்குமாறு எளிய நடையில் விளக்கப்படங்களுடன் வெளியான மொழிபெயர்ப்பு நூல்கள் தரமானவையாக உள்ளன.

இந்திய அரசாங்கத்தின் தேசிய புத்தக நிறுவனம் அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளது.

கல்லூரி மாணவ மாணவியர் தமிழின் வழியாக உயர்கல்வி பயிலுவதற்காக, தமிழ்நாடு அரசினால் 1962-இல் தமிழ்நூல் வெளியீட்டுக் கழகம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் முப்பத்தைந்து அறிவியல் நூல்களைத் தமிழாக்கி வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பு, பின்னர் ‘தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 450 அறிவியல் நூல்களில், பல தழுவல்களாகவும், மொழிபெயர்ப்புகளாகவும் விளங்கின.

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், மீரா பப்ளிகேஷன்ஸ், ஸ்டார் பிரசுரம், வானதி பதிப்பகம், கலைமகள் பதிப்பகம் போன்றவை தமிழில் மொழிபெயர்ப்பு நூல்களைப் பதிப்பித்த முக்கியமான பதிப்பகங்கள் ஆகும்.

சோவியத் ரஷியாவில் சோசலிச ஆட்சி நடைபெற்ற போது, ராதுகா, புரோகிரஸ் பதிப்பகங்கள், ரஷிய அறிவியல் நூல்களை அதிக அளவில் தமிழாக்கி வெளியிட்டுள்ளன.

இவை தவிர, மோட்டார் ரிப்பேரிங், டிரான்சிஸ்டர் மெக்கானிசம், வெல்டிங், வயரிங், டி.வி.மெக்கானிசம், கம்ப்யூட்டர் போன்ற நூல்கள், ஆங்கிலமும் தமிழும் கலந்த நடையில் அதிக அளவில் தமிழில் வெளியாகின்றன.

2.4 கலைச் சொல்லாக்கம்

அறிவியல் நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பில் கலைச்சொல்லாக்கம் அடிப்படையானது. ஆய்வின் அண்மைக்காலத்திய நிலைக்கேற்ப கலைச்சொற்கள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும். மூலமொழிச் சொற்களின் பொருளினை நுட்பமாக அறிந்து கொண்டால், தமிழில் கலைச்சொல்லாக்கம் செம்மையாக அமையும். ஒரு சொல் மூலமொழியில் பயன்படுத்தப்பட்ட சூழலுக்கும் தமிழ்மொழியின் சொல்லுக்கும் உள்ள உறவினை ஆராய்ந்து உருவாக்கப்படும் கலைச்சொல் பொருத்தமானதாக அமையும். அறிவியலில் ஒவ்வொரு துறைக்கும் உள்ள தனித்த பண்பினை ஆராய்வதுடன், தமிழ்மொழியின் மரபினையும் அறிந்துகொள்ள வேண்டியது, கலைச்சொல்லாக்கத்தில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறை ஆகும்.

அறிவியல் மொழிபெயர்ப்பில் கலைச்சொற்களை விதைகளாகவும், பிற சொற்களைச் சதைப் பற்றுகளாகவும் கொண்டு தொடர்கள் அமைக்கப்படுகின்றன.

2.4.1 கலைச்சொல்லாக்க முயற்சிகள் ஃபிஷ் கிரீன், 1875-ஆம் ஆண்டில் எஸ்.சுவாமிநாதன், சாப்மன் ஆகியோரின் துணையுடன் மருத்துவம் தொடர்பான கலைச்சொற்கள் அடங்கிய நான்கு தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இதுவே தமிழில் அறிவியல் கலைச்சொல்லாக்க முயற்சியில் முதன்மையானதாகும்.

1932-ஆம் ஆண்டில் சென்னை அரசாங்கத்தினரால் அமைக்கப்பட்ட குழுவினர் சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட கலைச்சொற்களைத் தொகுத்தனர். அவற்றில் பெரும்பான்மை ஆங்கிலக் கலைச்சொற்களின் ஒலிபெயர்ப்பாகவும் சமஸ்கிருதச் சொற்களாகவும் விளங்கின.

சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 1936-இல் தயாரித்த கலைச்சொல் தொகுதி, தமிழில் அறிவியல் சொற்களை வெளியிட வழிவகுத்தது; அருமையான முயற்சியாக விளங்கியது.

இலங்கை அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் 1956-ஆம் ஆண்டு, கலைச்சொற்களின் தொகுப்புத் தயாரிக்கப்பட்டது.

1967-ஆம் ஆண்டு முதல் அண்மையில் வெளியான கடைசி இதழ் வரையில் யுனெஸ்கோ கூரியரில் கையாளப்பட்ட ஆயிரக்கணக்கான கலைச்சொற்கள், மணவை முஸ்தபாவினால் ‘அறிவியல் தமிழ்க் கலைச்சொற்கள்’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக் கழகம்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 1995-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அறிஞர் குழுவினர் கணினித்துறை தொடர்பான கலைச் சொற்களைத் தமிழாக்குவதில் சிறப்புடன் செயல்பட்டுள்ளனர்.

1996-ஆம் ஆண்டில் சாமி சண்முகம் என்பவர் 17,000 மருத்துவச் சொற்களைத் தமிழாக்கியுள்ளார்.

கடந்த 150 ஆண்டுகளில் இதுவரை தமிழில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேலான அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய சொற்களைப் பயன்படுத்துவதில் சீர்மை இல்லாத நிலை உள்ளது. மேலும் கலைச்சொல் ஆக்கத்தில் தரப்படுத்துதலும் பொதுப்பயன்பாடும் குறைவாகவே உள்ளன. இந்நிலையை மாற்றுவதற்கான சூழலைப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கிட வேண்டும்.

2.4.2 கலைச்சொல்லாக்கம் – சில சான்றுகள் அறிவியல் கலைச்சொற்களைத் தமிழாக்குவதில் பல்வேறு வழி முறைகள் பின்பற்றப்படுகின்றன. இது குறித்து அறிவியல் வல்லுநர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் அறிவியல் அறிஞர் வா.செ.குழந்தைசாமி குறிப்பிடும் கலைச்சொல்லாக்க முறைகள் சான்றுகளுக்காகத் தரப்பட்டுள்ளன.

பழந்தமிழ் இலக்கியச் சொற்களைப் பயன்படுத்துதல் Pilot – வலவன்

பேச்சு மொழியிலிருந்து சொற்களைத் தேர்ந்து எடுத்தல் Small Pox – அம்மை; Temple Trustee – கோயில் முறைகாரர்

பிறமொழிச் சொல்லினைக் கடன்பெறல் Decimal System – தசம முறை

புதுச்சொல் படைத்தல் Molecule – மூலக்கூறு

உலக வழக்கை ஏற்றுக் கொள்ளுதல் X – ray – எக்ஸ் கதிர்

பிறமொழித் துறைச் சொற்களை மொழிபெயர்த்தல் Photograph – ஒளிப்படம்; Photosynthesis – ஒளிச்சேர்க்கை

மாற்றம் இல்லாமல் ஒலிபெயர்த்துப் பயன்பட வேண்டிய சொற்கள் Meter – மீட்டர்; Ohm – ஓம்

மாற்றம் இல்லாமல் உலக அளவில் பயன்படுத்தப்பட வேண்டிய குறியீடுகள், சூத்திரங்கள் குறியீடு :υ;π;Σ; PS; சூத்திரம்:

2O, Ca

2.5 தமிழில் அறிவியல் இதழ்கள்

1831-இல் வெளியான ‘தமிழ் மாகசீன்’ என்ற இதழில் அறிவியல் தொடர்பான கட்டுரைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து தமிழில் வெளியான பல்வேறு வெகுசன இதழ்களில் பிறமொழியில் வெளியான கட்டுரைகளைத் தழுவியோ, மொழிபெயர்த்தோ வெளியிடும் போக்கு உள்ளது. ‘கலைக் கதிர்’ இதழ் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளுடன் வெளிவருகிறது. அறிக அறிவியல், துளிர், களஞ்சியம், சூழல் உலகம், விவசாய உலகம், தொழில் நண்பன், ஹெல்த் லைப், மருத்துவ அறிவியல் மலர் போன்ற பல்துறை அறிவியல் இதழ்களில், தழுவியும் மொழிபெயர்த்தும் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.

ஆங்கிலத்தில் வெளியாவதுபோல, துறைசார்ந்த இதழ்கள் (Journals) தமிழில் மிகக்குறைவாகவே வெளியாகின்றன. இத்தகைய இதழ்களில் வெளியாகும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

2.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை அறிவியல் மொழிபெயர்ப்புகள் பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தின் மூலம் அறிந்துகொண்ட முக்கியமான செய்திகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

அறிவியல் மொழிபெயர்ப்பின் தேவைகள், தமிழின் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் இடம், காலந்தோறும் அறிவியல் மொழிபெயர்ப்புகள் தமிழில் பெறும் இடம், கலைச்சொல்லாக்கத்தின் சிறப்புகள்…

போன்றன பற்றி இப்பாடத்தின் வழியாக அறிந்திருப்பீர்கள்.

பாடம் 3

சட்ட மொழிபெயர்ப்புகள்

3.0. பாட முன்னுரை

மக்களாட்சி முறை நிலவும் ஒருநாட்டில் சட்டம் இயற்றுதலும் அதனைச் செயற்படுத்துதலும் அடிப்படையான அம்சங்கள் ஆகும். சமுதாய அமைப்பு மக்கள் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயல்பட, ‘சட்டம்’ தேவைப்படுகிறது. இன்னொரு நிலையில் அதிகாரத்தில் இருந்து ஆட்சியை நடத்தும் ஆட்சியாளர்களின் நலனுக்கேற்பவும் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. கடந்த முந்நூறு ஆண்டுகளாக ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது, அவர்களுடைய சுரண்டல், அதிகாரத்திற்கு ஏற்ப ஆங்கிலத்தில் சட்டங்கள் எழுதினர். நாட்டு விடுதலைக்குப் பின்னர், புதிதாக எழுதப்பட்ட இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் ஆங்கிலத்திலேயே இருந்தது. சட்டமானது சராசரி மனிதருக்குப் புரிய வேண்டும் என்ற நிலையேற்பட்டபோது, அதனைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பொழுது ஏற்பட்ட பிரச்சினைகள் தனித்தன்மை கொண்டவை. இன்று பரந்து பட்ட மக்களின் வாழ்க்கையில் முக்கிய இடம்பெறும் சட்ட மொழிபெயர்ப்புகளின் பல்வேறு கூறுகளையும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் பாடப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

3.1 தமிழும் சட்டமும்

பண்டைத் தமிழகத்தில் தமிழரின் வாழ்வியலை நெறிப்படுத்துவதற்காகத் தனிப்பட்ட ‘சட்ட நூல்கள்’ எதுவும் இல்லை. தமிழர் அன்றாட வாழ்வில், ‘அறவியல்’ சிந்தனைக்கு முக்கியத்துவம் தந்தனர். அறம் சார்ந்த நிலையில் சமுதாய வாழ்க்கையில் புதிய மதிப்பீடுகள் தோன்றின. இந்தியா ஆங்கிலேயரின் குடியேற்ற நாடாக அடிமைப்பட்டவுடன், அதற்கேற்பச் சட்டங்கள் வகுக்கப்பட்டன. நீதிமன்றம், சட்டம் ஆகியன சராசரி மனிதனுக்கு எட்டாத தொலைவில் இருந்தன. இந்தியா, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுதலை அடைந்தவுடன் சட்டத்திற்கு முன்னர் எல்லோரும் சமம் என்ற எண்ணப்போக்கு எங்கும் பரவலானது. இந்நிலையில் தமிழ்மக்களின் தாய்மொழியான தமிழில் சட்டங்கள் வெளிவர வேண்டும் என்ற கருத்து வலுப்பட்டது. தமிழுக்குப் புதியதான சட்டத் தொகுப்புகள், தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும்போது, புதிய வகைப்பட்ட மொழிநடை தேவைப்படுகின்றது.

3.2 சட்ட மொழிபெயர்ப்புகள்

19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஆங்கிலத்திலிருந்த சில வழக்குகளின் தீர்ப்புகளைத் தமிழ் ஆக்கி வெளியிட்டார். இதுவே தமிழில் வெளியான சட்ட மொழி பெயர்ப்புகளில் முதன்மையானதாகும்.

1957-ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆட்சி மொழியாகத் தமிழ் சட்டப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் சட்டம், நீதி, நிருவாகம் ஆகிய துறைகளில் தமிழில் பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

1980-ஆம் ஆண்டு முதல் ‘தீர்ப்புத் திரட்டு’ என்ற சட்டத் தமிழ் மாத இதழில், தமிழில் வெளியான பழந்தமிழ்த் தீர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மொழியமைப்பினை ஆராய்கையில், சட்டத்தமிழில் வடமொழி, ஆங்கிலம், அரபு, பாரசீகம், உருது போன்ற பிற மொழிச் சொற்கள் பெற்றிருந்த செல்வாக்கினை ஆராய முடிகின்றது.

1934-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு அரசு இதழில் சட்டம் தொடர்பான செய்திகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற வகையில் இன்று பல்வேறு சட்ட நூற்கள் தமிழாக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

3.2.1 தன்மைகள் இலக்கிய மொழிபெயர்ப்பிலிருந்து சட்டமொழிபெயர்ப்பு பெரிதும் வேறுபாடு உடையது. சட்டத் தமிழில் மிகையுணர்ச்சி, நயங்காணுதல், கற்பனை போன்றவற்றுக்குச் சிறிதும் இடமில்லை. மூல மொழியில் சட்டம் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்துகளைத் தமிழில் மொழிபெயர்க்கையில் மிகைபடக் கூறாமலும் சுருக்கிக் கூறாமலும் இருத்தல் வேண்டும். ‘தழுவல்’ என்பது சட்ட மொழி பெயர்ப்புக்கு முரணானது. மூலப் பிரதிக்குத் தொடர்புடையதாக, உள்ளதை உள்ளவாறு, எளிமையான நடையமைப்பில் கூற வேண்டியது சட்டத்தமிழின் அடிப்படையாகும். ஒரு மொழியின் பயன்பாட்டில் சொல்லவந்த செய்தியைத் துல்லியமாகச் சொல்ல முயலுவது சட்டமொழிபெயர்ப்பில் பின்பற்றப்பட வேண்டியதாகும்.

இந்தியக் குற்ற விசாரணை முறைத் தொகுப்புச் சட்டத்திலுள்ள வாக்கிய அமைப்பைப் பார்த்தால், பல பக்கங்கள் தொடராக வரும் ஒரு சில வாக்கியங்களைக் கொண்ட சிறப்புடையது. இத்தகைய பெரிய வாக்கியங்களைப் பொருள் மாறாது மொழி பெயர்ப்பது, சற்றுச் சிரமமான செயலே. பெரிய வாக்கிய அமைப்புகள் பக்கம் பக்கமாக இடம் பெறும்பொழுது, அதன் உட்கருத்தையும் பொருளையும் மனத்தில் கவனமாகச் கொண்டு, அவற்றைத் தனித்த வாக்கியங்களாகப் பிரித்து மொழிபெயர்த்துப் பின்னர் அவற்றின் பொருள் மாறாதவாறு ஒன்று சேர்க்க வேண்டும். இச்சட்டக் கருத்துகளை வெளியிடுவதற்கு ஆங்கிலேயர் இணை அமைப்பு வாக்கியங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வகை ஆங்கிலச் சட்ட வரைவுகளில் காணப்படும் கருத்துச் செறிவும் நுட்பமும் அப்படியே தமிழில் மொழி பெயர்க்கப்படுவதற்கு. சட்ட நூல்களுடன் பல்லாண்டுத் தொடர்பு, சட்டத்தமிழ், ஆங்கிலப் புலமை, மொழி பெயர்ப்புத் திறன் ஆகியவை அடிப்படைத்தேவைகளாகும்.

3.2.2 சிறப்பியல்புகள் மக்களின் அன்றாட வாழ்வில் நெருங்கிய தொடர்புடைய சட்டத்தினை மொழி பெயர்க்கும் போது, மொழிபெயர்ப்பாளர் சொற்கள், தொடரமைப்பு, நடை, பொருண்மை குறித்துத் தனிக் கவனம் செலுத்த வேண்டும். சட்டத்துடன் தொடர்புடைய பொது மக்களை மூன்று பிரிவினராகப் பிரிக்கலாம்.

சட்டத்தை இயற்றும் வல்லுநர் பிரிவு.

சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் வழக்கறிஞர்கள், சட்டத்தை நிருவகிக்கும் அதிகாரிகள்

நீதியரசர்கள் அடங்கிய பிரிவு.

சட்டம், தனித்தன்மை கொண்ட மொழியின் வழியே கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே கற்றுத் துறை போகிய சிலருக்கு மட்டுமே சட்டம் விளங்கக் கூடியது. மூலச் சட்டமே இந்நிலைக்குரியது என்றால், அதைச் சார்ந்த மொழிபெயர்ப்பு இன்னும் கடினமானது. எனவே சட்டத் தமிழ் மொழிபெயர்ப்புகள், நடையின் காரணமாக விமரிசனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. மொழிபெயர்ப்பில் காற்புள்ளிகள், நிறுத்தற்குறிகள் போன்றன விடுபடாமல் தமிழாக்கப்படும்போது மொழி பெயரப்பாளர் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் அளவற்றவை. சட்டத்துறைத் தமிழ் அகராதிகள் இன்னும் விரிவான அளவில் வெளியிடப்படும்போது, இத்தகைய சிக்கல்கள் எதிர்காலத்தில் நீங்கும் என்பது உறுதி. தொழிலாளர்கள், குடியானவர்கள் முதலியோர் அறிந்து கொள்ளும் வகையில், பொதுமக்கள் தொடர்பான வழக்குகளைத் தொகுத்துத் தமிழாக்கி, சிறு நூற்களாக வெளியிடும்போது சட்டத்தமிழ் இன்னும் வளர்ச்சி அடையும்.

3.3 கலைச் சொல்லாக்கம்

தமிழில் சட்டக்கருத்துகளை ஆங்கில முறையிலான சட்டநெறி அமைப்பில் வெளியிடும்போது, புதிய தமிழ்ச் சொற்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் மொழிபெயர்ப்பாளர் சொல்லாக்கம் செய்ய முயல்கின்றார். பிற மொழியிலுள்ள சொல்லை ஒலிபெயர்த்தல் அல்லது மொழிபெயர்த்தல் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய சொல்லாக்க முயற்சிகள் சட்டத் தமிழினைச் செழுமை அடையச் செய்கின்றன. சட்டத் தமிழின் தேவைக்கேற்ப உருவாக்கப்படும் கலைச்சொல்லாக்கம் குறித்துப் பல்வேறு நெறிமுறைகளை ஆய்வாளர்கள் வகுத்துள்ளனர்

3.3.1 தரப்படுத்துதல் சமூகத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் துறைகளில் சட்டத்துறையும் ஒன்று. அதற்கான கலைச்சொற்களை உருவாக்குவதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் கவனம் தேவைப்படுகின்றது. தற்சமயம் சட்ட மொழிபெயர்ப்புகளில் கலைச்சொற்கள் தரப்படுத்தப்படாமல், பல்வேறு வகைகளில் பலராலும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய போக்குச் சட்டத் தமிழ் பயன்பாட்டில் ஒழுங்கின்மையைத் தோற்றுவிக்கும். எனவே சட்டத் தமிழுக்குரிய கலைச்சொற்களைத் தரப்படுத்துவதற்கு முக்கியத்துவம் தரப்படல் வேண்டும். சட்டத்துறை மொழிபெயர்ப்புகளில் முதன்மையிடம் வகிக்கும் கலைச்சொல்லாக்கம் தரப்படுத்தலில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் பின்வருமாறு:

பொருத்தம்

எளிமை

ஏற்றுக் கொள்ளுதல்

தூய்மை

சீர்மை

பல்துறை அணுகுமுறையும் போக்கும்

• பொருத்தம்

சட்டத்தினைத் தமிழில் மொழிபெயர்க்கும்போது, ஆங்கிலத்திலுள்ள தொழில்நுட்பச் சொற்களுக்குப் பயன்படுத்தப்படும் தமிழ்ச் சொற்கள் பொருத்தமுடையனவா? என்று ஆராய்ந்திட வேண்டும். ஓர் ஆங்கிலச் சொல்லுக்குப் பல தமிழ்ச் சொற்கள் இருப்பினும், சூழலுக்கேற்ற, பொருத்தமான சொல்லைத் தரப்படுத்துதல் அவசியமானதாகும். Disposal என்ற ஆங்கிலச்சொல்லின் பொருள் தமிழில் ஒருங்கமைவு, வரிசைப்பாடு, செய்முறை, செயலாட்சி பொறுப்புத் தீர்வு, கைப்பொறுப்பு நீக்கம் என்று அகராதிகளில் காணப்படுகின்றது. எனினும் சட்ட நோக்கில் சில நேர்வுகளில் மேற்படி ஆங்கிலச் சொல்லுக்கு, தீர்த்துவை, அப்புறப்படுத்து, முடிவு செய், பராதீனம் (பிறருக்கு உரிமையாக்குதல்) வெளிக்கொணர் என்ற பொருள்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன.

• எளிமை

கலைச்சொல்லைத் தரப்படுத்தும்போது எளிமை அடிப்படையான அம்சமாகும். அதே நேரத்தில் எளிமை என்ற பெயரில் மலினப்படுத்தி விடக் கூடாது. வாசிப்பில் சொல்லின் நுட்பப் பொருளை விளக்குவதாகக் கலைச் சொல்லாக்கம் அமைந்திடல் வேண்டும்.

கோப்பு (Files) களின் மீது ‘Confidential’ என்று காணப்படும் சொல்லுக்கு ரகசியம், மந்தணம் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்சமயம் ‘மறைபொருள்’ என்ற சொல்லாக்கம் முன்மொழியப்பட்டுள்ளது. இச்சொல் எளிமையானதாகவும் நயமுடையதாகவும் உள்ளது.

Public Functionary என்ற ஆங்கிலத்தொடருக்குப் பொதுப் பதவியர், பொதுப் பதவியலாளர் என்ற சொற்கள் சட்டத் தமிழில் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்சமயம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ‘பொது வாழ்வினர்’ என்ற சொல்லாக்கம் ஏற்புடையதாகிவிட்டது. இம் மொழிபெயர்ப்பு எளிமைக்குச் சிறந்த சான்று ஆகும்.

• ஏற்றுக் கொள்ளுதல்

ஒரு துறையினர் பின்பற்றும் மொழிபெயர்ப்பினை விடுத்துப் புதிய வகைப்பட்ட மொழி பெயர்ப்பினை இன்னொரு துறையினர் பயன்படுத்துவது வழக்கில் உள்ளது.

Pending என்ற ஆங்கிலச் சொல் சட்டத்துறையினரால் ‘நடப்பிலிருக்கின்ற’ அல்லது ‘முடிவுறாதிருக்கின்ற’ என்று மொழி பெயரக்கப்படுகின்றது. அதே ஆங்கிலச்சொல்லை வருவாய்த்துறையினர் ‘நிலுவையில் இருக்கின்ற’ என்று மொழிபெயர்த்துப் பயன்படுத்துகின்றனர்.

Come into force என்ற ஆங்கிலச் சட்ட வாசகம், சிலரால் ‘அமலுக்கு வருதல்’ எனவும், இன்னும் சிலரால் ‘செயலுக்கு வருதல்’ எனவும் மொழிபெயர்க்கப்படுகின்றது. தற்சமயம் சட்டத் துறையினர் ‘நடைமுறைக்கு வருதல்’ என மொழிபெயர்த்துள்ளனர்.

எனவே சட்டத் தமிழில் மொழிபெயர்க்கப்படும் சொற்கள், மொழியில் ஏற்படும் மாற்றத்தினுக்கேற்ப, அவ்வப்போது மாறும் இயல்புடையன. ஒரு சொல் பெரு வழக்கினுக்கு வருவதற்கு முன்னர் எந்தப் பொருளில் வழங்கியதோ, அதற்கு நேர்மாறான பொருளிலும் இடம்பெறலாம். இந்நிலையில் சொற்களைத் தரப்படுத்தும்போது ஆழ்ந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

• தூய்மை

சட்டத் தமிழைப் பொறுத்த வரையில் ஆங்கிலத்தின் பயன்பாட்டிற்கு முன்னர் உருது, பாரசீகம், அரபுச் சொற்கள் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டன. எனவே தொடக்கக்காலத் தமிழ் மொழி பெயர்ப்புகளில் பிறமொழிச் சொற்கள் அதிக அளவில் இடம் பெற்றன. பின்னர் நாளடைவில் தூய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே மொழி என்பது மக்களின் வழக்கினுக்கேற்ப மாறும் இயல்புடையது.

(எ.கா)

(i) ஜாமீன்- பிணையம்

(ii) ஜப்தி- கைப்பற்றுகை

(iii) ரசீது- பெறு தொகை சீட்டு

ஆனால் சட்டத் தமிழில் ஓர் இனச் சொற்களுக்குப் புதிய சொற்களை உருவாக்க வேண்டிய நிலைமை இன்னும் உள்ளது. தமிழில் தீர்ப்பு, முடிவு, கட்டளை, ஆணை, முடிந்த முடிவு போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன. இத்தகைய சொற்களுக்கு ஏற்றவாறு நுண்ணிய வேறுபாடுடைய சொற்கள் ஆக்கப்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மொழித்தூய்மை என்ற நிலையில் கரடுமுரடான சொற்களைப் பயன்படுத்தாமல், மொழியின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் எளிய தமிழ்ச் சொற்களை உருவாக்குதல் ஏற்புடையதே.

• சீர்மை

தமிழில் சட்டத்தினை மொழிபெயர்க்கும்போது கலைச்சொல்லாக்கத்தில் சீர்மையைப் பின்பற்ற வேண்டும். இன்ன சட்டக் கருத்தினை இச்சொல் தமிழில் கூறுகிறது என்று வரையறுத்துப் பொருண்மையினை முடிவு செய்யாவிடில், அச்சொற்களினால் தமிழாக்கம் செய்யப்படும் சட்டங்கள் பொருள் மயக்கத்துடன் முரண்பாடு மிக்கனவாய் அமைந்திடும். எனவே சட்டத் தமிழ் மொழி பெயரப்புகளில் ஒரே சீர்மையான சட்டச் சொல்லாக்கம் வேண்டும்.

Direction என்ற ஆங்கிலச் சொல், பணிப்புரை அல்லது பணிப்பாணை என்று ஒரு சட்டத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டால், அச்சொல்வரும் எல்லா இடங்களிலும் பணிப்புரை அல்லது பணிப்பாணை என்ற சொல்லையே பயன்படுத்துதல் வேண்டும். Fact என்ற ஆங்கிலச் சொல், இந்திய சாட்சியச் சட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அச்சொல்லினை நிகழ்வு, பொருள், உண்மை என்று மொழிபெயர்ப்பது பொருத்தமானது அன்று.

Fact என்ற சொல்லினைச் சிலர் ‘சங்கதி’ என்றும், சிலர் ‘பொருண்மை’ என்றும் மொழி பெயர்க்கின்றனர். இத்தகைய மொழிபெயர்ப்பில், வடமொழிச் சொல்லான ‘சங்கதி’ என்பதனை நீக்கி விட்டுப் ‘பொருண்மை’ என்ற தமிழ்ச் சொல்லினை ஏற்றுக் கொள்ளலாம். மேலும் இச்சொல், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். அப்பொழுது தான் மொழிபெயர்ப்பில் ‘சீர்மை’ ஏற்படும்.

• பல்துறை அணுகுமுறையும் போக்கும்

கலைச்சொல்லினைப் பல்வேறு துறைகளுக்கும் பொதுவானவை என்று கூறிவிட இயலாது. எனவே சட்ட மொழிபெயர்ப்புகளில், அந்தந்தத் துறையினர், அந்தச் சொல்லுக்கு என்ன பொருளைப் பயன்படுத்துகின்றனர் என்பதனை அத்துறையினர் உதவியுடன் அறிந்து அதற்கேற்பத் தமிழாக்க வேண்டியது சட்டத் தமிழின் தனித்தன்மை ஆகும்.

கால்நடைத்துறை தொடர்பான சட்டம் மொழிபெயர்கப்படும்போது animal என்ற சொல்லுக்கு ‘விலங்கு’ என்ற சொல்லைச் சட்டத்துறையினர் பயன்படுத்தினர். பின்னர் ‘கால்நடை’ என்று மொழிபெயர்க்கப்பட்டது. இதுவே பொருத்தமானது.

Tamil Nadu Cinema (Regulation) Act என்ற சட்டத்தில் உள்ள Cinema என்ற சொல்லுக்குத் ‘திரைப்படம்’ என்ற சொல் வழங்கி வந்தது. பின்னர் அது ‘திரையரங்குகள்’ என்று மாற்றப்பட்டது. இச் சொல்லாக்கமே சட்டத்தின் நோக்கத்தினுக்கு ஏற்றதாகும்.

3.4 இன்றைய நோக்கில் சட்டத் தமிழ்

மொழிபெயர்ப்புகள் வழியாக உருவாக்கப்பட்டு, இன்று நிலைப்படுத்தப்பட்டு வருகின்ற சட்டத்தமிழ் இன்று தனித்துவம் மிக்க துறையாக வளர்ந்து வருகின்றது. மக்களிடையே கல்வி அறிவு அகலமாகவும் ஆழமாகவும் பரவிவரும் வேளையில், சட்டத்தமிழின் தேவைகள் முன்னெப்போதையும்விட இன்று அதிகரித்துள்ளன.

பொதுமக்கள் நோக்கு, நீதியரசர் மற்றும் வழக்கறிஞர் நோக்கு ஆகிய இருபெரும் நிலைகளில் சட்டத் தமிழ் இன்று ஏற்றம் பெற்றுள்ளது. ‘சட்டம்’ என்பது வறண்ட சொற்களின் தொகுப்பு என்ற அணுகுமுறையிலிருந்து மாறி, மக்கள் வாழ்வின் ஆதாரம் என்ற நிலையில், உயிரோட்டம் மிக்கதாக மொழிபெயர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.

சட்டத்தமிழ், பிற துறைத் தமிழைவிட முற்றிலும் மாறுபட்டது. சட்டத்தில் மொழியைக் கையாளும்போது அச்சட்ட வாசகங்கள் ஆணைகளாகவும் கருத்துரைகளாகவும் வாக்குமூலங்களாகவும் சமுதாயத்தினை நிலைப்படுத்தும் வல்லமை மிக்கனவாகப் பெரும்பாலும் இசைந்து கொடுக்கின்றன. சட்ட வழக்குகளில் பெரும்பான்மையானவை முற்கோள்களுடனும் (Precedents), மேற்கோள்களுடனும் (References) பயன்படுத்தப்படுகின்றன. சட்டத்துறையில் IPC, CPC, SITA போன்ற ஆங்கில மொழிக்கூறுகளும் 144,302 போன்ற எண்களும் உண்டு. எனவே சட்டத் தமிழுக்கு ஏற்ற மரபுகளை மொழிபெயர்ப்பில் உருவாக்கிட வேண்டும். இத்தகைய முயற்சிக்குப் பிற துறையினரின் ஒத்துழைப்பு அவசியம் ஆகும்.

3.5 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை படித்ததில் இருந்து சட்ட மொழிபெயர்ப்புகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை அறிந்து கொண்டிருப்பீர்கள். இந்தப் பாடத்தினைக் கற்றதன் மூலம் அறிந்துகொண்ட முக்கியமான செய்திகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

இப்பொழுது சட்ட மொழிபெயர்ப்புகள் பற்றிய ஓர் அமைப்பு உங்களுக்குள் பதிவாகியிருப்பதனை உணர்வீர்கள்.

சட்ட மொழிபெயர்ப்புகளின் தோற்றம், தமிழுக்கும் சட்டத்திற்குமான தொடர்பு, சட்ட மொழிபெயர்ப்புகளின் தன்மைகள், கலைச்சொல்லாக்கத்தின் பன்முக அம்சங்கள்…… போன்றன பற்றி இப்பாடத்தின் வழியாக அறிந்திருப்பீர்கள்.

பாடம் 4

சமய மொழிபெயர்ப்புகள்

4.0. பாட முன்னுரை

இறைவனைப் போற்றிப் பாடும் பாடல்களும் இறையியல் தத்துவங்களும் தமிழில் அதிக அளவில் வெளியாகியுள்ளன. எனவே தான் தமிழ்மொழியைப் பக்தியின் மொழி என்று சிறப்பித்துச் சொல்லுவது வழக்கிலுள்ளது. வீரமும் காதலும் முதன்மைப்படுத்தப்பட்ட சங்க காலத்தில் இயற்கை வழிபாட்டுடன் இந்திரன், முருகன், திருமால், சிவன் போன்ற தெய்வங்களையும் மக்கள் வணங்கினர். பின்னர் சமண, பௌத்த சமயக் கருத்துகளுடன் வைதிக சமயக் கருத்துகளும் தமிழரிடையே பரவலாயின. சமயத் தத்துவம் தனியாக வளர்ச்சி அடைந்தது. தொடக்கக் காலத்தில் பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் வெளியான சமய நூல்கள் தமிழில் தழுவி எழுதப்பட்டன. இப்போக்கு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் தமிழரிடையே செல்வாக்குப் பெற்றிருந்தது. இத்தகைய சமய மொழிபெயர்ப்புகள் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்தப் பாடப்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

4.1 சங்க காலத்தில் சமய மொழிபெயர்ப்புகள்

சங்க காலத்தில் தெய்வம் பற்றிய வடமொழிக் கதைகள், புராணச் செய்திகள் பழமரபுக் கதைகளாகவும் (legends), தொன்மங்களாகவும் (Myths) இடம் பெற்றுள்ளன.

சிவன் திரிபுரம் எரித்த தொன்மம் புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் ஆகியவற்றில் காணப்படுகின்றது.

சிவன் முப்புரம் எரித்த தொன்மமானது, வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ண பருவத்திலிருந்து புறநானூற்றில் தமிழ் வடிவம் பெற்றுள்ளது.

இராவணன்

இராவணன் தன்னுடைய கைகளால் கைலாய மலையைப் பெயர்த்த தொன்மம் கலித்தொகையில் இடம்பெற்றுள்ளது. இது வான்மீகி வடமொழியில் எழுதிய இராமாயணத்தில் உத்தரகாண்டத்தில் காணப்படுகிறது.

நரசிம்ம அவதாரம்

பரிபாடலில் நரசிம்ம அவதாரம் ‘நரமடங்கல்’ எனவும் பிரகலாதன் என்ற பெயர் ‘பிருங்கலாதன்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை போன்று பல சான்றுகளைக் கூறலாம்.

பாலி, பிராகிருத மொழியில் இடம்பெற்றிருந்த பௌத்த, சமண சமயக் கருத்துகள், சங்க காலப் புலவர்களால், பெயர் சூட்டப்படாமல் தமிழாக்கப்பட்டுள்ளன. சங்க கால ஒளவையாரின் ‘நாடா கொன்றோ காடா கொன்றோ’ என்ற புறநானூற்றுப் பாடல், புத்தரின் தம்ம பதம் எனும் நூலிலுள்ள அருகதர் சருக்கத்தின் 98-ஆவது பாடலினை அடிப்படையாகக் கொண்டது.

சங்க காலத்தில் பிற மொழிகளில் காணப்பட்ட சமயக் கருத்துகள், தொன்மமாகவும், கருத்து நிலையிலும் தழுவி எழுதப்பட்டுள்ளன. எனினும் பிற மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முழுமையான நூலினைக் கண்டறிய இயலவில்லை.

சங்கம் மருவிய காலம்

சங்கம் மருவிய காலத்தில் எழுதப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சமணம், பௌத்தம், வைதிக சமயக் கருத்துகள் இடம் பெற்றமையினால் பிறமொழிச் சொற்களும் தமிழில் இடம்பெறலாயின. மேலும் மொழிபெயர்ப்பு நூல் என்று தனியாகக் கருதாமல், தமிழ்ப் படைப்புப் போலக் கருதுமளவு ஆசாரக் கோவை போன்ற நூல்கள் தழுவியெழுதப்பட்டன. சமயம் சார்ந்த அறநெறிக் கருத்துகளை வலியுறுத்தி எழுதப்பட்ட நூல்களால் பிறமொழித் தாக்கம் மிகுதியாக இருப்பதைக் காணலாம்.

4.2 இதிகாச மொழிபெயர்ப்புகள்

மகாபாரதம்

வடமொழியில் எழுதப்பட்ட இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும் சங்க இலக்கியத்தில் தொன்ம நிலையில் கதைகளாக ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. மகாபாரதம் சங்க காலத்திலே முழுமையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சின்னமனூர்ச் செப்பேட்டில்

மாபாரதம் தமிழ்ப் படுத்தும்

மதுராபுரிச் சங்கம் வைத்தும்

(பாண்டியர் செப்பேடு: பத்து)

என்ற தகவல் உள்ளது. எனவே பாண்டிய மன்னர்கள் நிறுவிய தமிழ்ச் சங்கத்தினர் மகாபாரதத்தினை மொழிபெயர்த்த செய்தியை அறிய முடிகிறது. ஆனால் தற்சமயம் அந்நூல் கிடைக்கவில்லை.

தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ”அருந்திறல் பிரிந்த அயோத்தி போல” என்ற வரிகள், இராமாயணக் கதையினைக் குறிப்பிடுகின்றன.

எனவே தமிழில் இதிகாசம் பற்றிய குறிப்புகள் சங்க காலத்திலிருந்து தொடர்ந்து இடம்பெறுகின்றன என்று அறிய முடிகின்றது.

4.2.1 மகாபாரத மொழிபெயர்ப்புகள் பல்லவ மன்னரான மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் பெருந்தேவனார், மகாபாரதத்தினைத் தழுவித் தமிழில் பாரத வெண்பா என்ற நூலை இயற்றியுள்ளார். இந்நூலின் சில பகுதிகள்தான் கிடைத்துள்ளன.

மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டில் மகாபாரதம் பற்றிய குறிப்பு உள்ளது. ஆசிரியர் பெயர், நூலின் பெயர் போன்றன பற்றி அறிய இயலவில்லை.

கி.பி.15-ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூர் ஆழ்வாரும், கி.பி.16-ஆம் நூற்றாண்டில் அரங்கநாதக் கவிராயரும், கி.பி.18-ஆம் நூற்றாண்டில் நல்லாப் பிள்ளையும் மகாபாரதத்தினைத் தமிழில் தழுவலாகத் தந்துள்ளனர்.

மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கிளைக் கதைகள் தமிழில் தழுவியெழுதப்பட்டன. நாட்டுப்புறக் கதைகளாகப் பல்வேறு பாரதக் கதைப் பாடல்கள் தமிழாக்கப்பட்டுள்ளன. அல்லி அரசாணி மாலை, பிலவேந்திரன் மாலை, நளவெண்பா, குசேலோபாக்கியானம் போன்ற நூல்கள் பாரதத்தினை மூலமாகக் கொண்டவை ஆகும்.

பாரதி ராஜாஜி

இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த பாரதியின் பாஞ்சாலி சபதம், கவிதை வடிவில் அமைந்தது; இது பாரதத்தில் ஒரு நிகழ்ச்சியை விளக்குகிறது. இராஜாஜியின் வியாசர் விருந்து உரைநடை வடிவில் வெளிவந்த மகாபாரதக் கதை.

4.2.2 இராமாயண மொழிபெயர்ப்புகள் கம்பர்

வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தழுவி, கம்பர் எழுதிய கம்பராமாயணம் தழுவல் படைப்பாகும்.

குணாதித்யன் சேய், இராமாயண வெண்பா என்ற நூலினை கி.பி.15-ஆம் நூற்றாண்டில் எழுதியுள்ளார்.

தக்கை ராமாயணம், மயில் ராவணன் கதை, இராமாயண நாடகக் கீர்த்தனை, இராமாயணச் சிந்து, இராமாயண ஓடம், இராமாயண ஏலப்பாட்டு, இராம காவியம் போன்ற நூல்கள் இராமாயணத்தினை மூலமாகக் கொண்டவை ஆகும்.

துளசி தாசர் இந்தி மொழியில் எழுதிய துளசி ராமாயணமும் தமிழாக்கப்பட்டுள்ளது. (‘ராம சரித மானஸ்’ என்பது மூலநூலின் பெயர். இதுவே துளசி ராமாணயம் என்று வழங்கப்படுகிறது.)

வாலி

இருபதாம் நூற்றாண்டில் இராஜாஜியின் சக்கரவர்த்தித்திருமகன், வாலியின் அவதார புருஷன் ஆகியன மக்களிடையே பெரும்வரவேற்பினைப் பெற்ற தழுவல் நூல்கள் ஆகும்.

4.3 சமய வளர்ச்சியில் மொழிபெயர்ப்புகள்

தமிழகத்தினைப் பொறுத்தவரையில் பிறமொழியினரால் அறிமுகம் செய்யப்பட்ட சமயக் கருத்துகள், மொழிபெயர்ப்பின் வழியே ஆழமாகப் பரவின. பௌத்தமும் சமணமும், தாய்மொழிக்கு முக்கியத்துவம் தந்தமையினால், தமிழுக்குச் சமயத் தத்துவம் அறிமுகமானது. இறையியல் பற்றிய புதிய கருத்தாக்கம் மக்களிடையே பரவிட மொழிபெயர்ப்புகள் மூலம் சமயத் துறவியர் முயன்றனர். வைதிக சமயம், வடமொழியிலுள்ள வேதம், ஆகமம் முதலியவற்றைப் பிறர் அறியக்கூடாது என்று தடை விதித்திருந்தது. எனவே அவை ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டும் வழக்கிலிருந்தது; தமிழரிடையே பெரிதும் வழக்கில் இல்லை.

இஸ்லாம், கிறிஸ்தவ சமயக் கருத்துகள் கடந்த இருநூறு ஆண்டுகளாகத் தமிழில் விரிவாக மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

4.3.1 பௌத்த சமய மொழிபெயர்ப்புகள் மணிமேகலை

சீத்தலைச் சாத்தனார் எழுதிய தமிழ்க் காப்பியமான மணி மேகலையில் பாலி மொழியிலுள்ள புத்த சாதகக் கதைகள் தமிழாக்கப்பட்டு மணிமேகலை வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அறுவகை சமயத் தத்துவக் கோட்பாடுகள் பற்றிய விளக்கம் மணிமேகலையில் இடம் பெற்றுள்ளது. இது பிற மொழியிலுள்ள சமயக் கோட்பாட்டினைத் தழுவியெழுதப்பட்டதாகும்.

நாதகுத்தனார் எழுதிய குண்டலகேசி என்ற காப்பியம், பாலி மொழியில் எழுதப்பட்ட ‘தேரிகாதை’ என்ற நூலில் இடம்பெற்ற கதையினை மூலமாகக் கொண்டது ஆகும்.

பௌத்த சமயக் கருத்துகளைத் தொகுத்துக் கூறும் ‘சித்தாந்த கொள்கை’ என்ற நூலின் சில பகுதிகள் மட்டும் தற்சமயம் கிடைக்கின்றன.

புத்தருக்குத் தொண்டு செய்த ‘விம்பசாரன்’ என்ற மன்னரின் வரலாற்றினைக் கூறும் ‘விம்பசார கதை’ தழுவல் நூல் ஆகும்.

தற்காலத்தில புத்தரின் போதனைகள், தம்ம பதம், புத்த ஜாதகக் கதைகள், ஜென் புத்த சமயக் கோட்பாடுகள், ஜென் புத்தக் கதைகள் முதலியன தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.

4.3.2 சமண சமய மொழிபெயர்ப்புகள் சமண சமயம் இன்றளவும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வருவதனால், சமண சமய நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஐம்பெருங்காப்பியங்களில் இடம் பெற்றுள்ள சீவக சிந்தாமணி, நீலகேசி ஆகிய இரு நூல்களும் சமண சமயப் பின்புலம் உடையனவாகும்.

கி.பி.9-ஆம் நூற்றாண்டில் திருத்தக்க தேவரால் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி என்ற காப்பியம், சமஸ்கிருத மொழியிலுள்ள க்ஷத்திர சூடாமணி என்ற நூலின் தழுவலாகும்.

புஷ்பதந்தா வடமொழியில் எழுதிய ‘யசோதர காவியம்’ என்ற நூலின் தழுவலே தமிழிலுள்ள யசோதர காப்பியம் ஆகும்.

இவை தவிர சமண சமயத்தின் கருத்துகள் பிற மொழியிலிருந்து தமிழாக்கப்பட்டு இப்பொழுதும் நூலாக்கப்படுகின்றன.

4.3.3 வைதிக சமய மொழிபெயர்ப்புகள் வைதிக சமய நூல்கள் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் தான் அதிக அளவில் தமிழாக்கப்பட்டன. ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வந்து அதிகாரத்தினைக் கைப்பற்றியவுடன், ஏற்கனவே இந்தியாவில் நிலவிய சனாதன வருணாசிரம முறை ஆட்டங்கண்டது. சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் பிற சமயங்களை நாடத் தொடங்கினர். இந்நிலையை மாற்றி அமைத்திட வைதிக சமயத்தில் சீர்திருத்தக் கருத்துகளை முன்வைத்ததுடன், மறுமலர்ச்சிப் போக்கினுக்கு ஆதரவான சமய நூல்களும் தமிழில் வெளியிடப்பட்டன. வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள், பாகவதம், புராணம் போன்றவை பெரிய அளவில் தமிழாக்கப்பட்டன.

அத்துவித ரச மஞ்சரி, ஆசார்ய ஹ்ருதய சாரசங்க்ரஹம், சிவானந்த லஹரி, பஜ கோவிந்தம், ஆனந்த ரகஸ்யம், சுப்ர பாதம், ஹரி நாம சங்கீர்த்தனம், அபிராமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற வைதிக சமய நூல்கள் நூற்றுக்கணக்கில் வெளியாகியுள்ளன.

இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்களும் கடோபநிஷத்து முதலிய உபநிடதங்களில் சிலவும் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.

சைவ, வைணவ சமயத் தத்துவங்களும் தமிழில் விரிவான அளவில் மொழிபெயர்க்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளன.

குறிப்பாக, சைவ சித்தாந்தம் தமிழ்நாட்டில் தமிழ்த்திருமுறைகளின் அடிப்படையில் உருவானது. இதிற்காணும் ஆகமக் கருத்துகளை ஆழ்ந்து பயில்வதற்கென ஆகமங்களை மொழிபெயர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீர சைவம், வீரசைவம் பற்றிய சித்தாந்த விளக்கங்கள் தமிழாக்கப்பட்டுள்ளன.

புராண மொழிபெயர்ப்புகள்

கி.பி.15-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழில் புராணங்கள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டன. புராணம் என்பது உயர்வானது; புனிதமானது என்ற கருத்துச் சமய நம்பிக்கையுடையோரின் ஆழ்ந்த நம்பிக்கை ஆகும்.

கி.பி.16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதிவீரராம பாண்டியர், கூர்ம புராணம், இலிங்க புராணம், கந்த புராணத்தின் பகுதியான காசிக் காண்டம் ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார். கந்த புராணத்தின் பிற பகுதிகளான பிரமோத காண்டத்தினை வரதுங்கராம பாண்டியரும் உபதேச காண்டத்தினைக் கோனேரியப்பரும் மொழிபெயர்த்துள்ளார்.

கி.பி.15-ஆம் நூற்றாண்டில் சூதசங்கிதை என்ற நூலினைப் பிரம கீதை என்ற பெயரில் தத்துவராயர் தமிழாக்கினார். அதே நூல் கி.பி.19- ஆம் நூற்றாண்டில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையினால் தமிழாக்கப் பட்டுள்ளது.

கி.பி.16-ஆம் நூற்றாண்டில் மச்ச புராணம் வடமலையப்பராலும் பாகவத புராணம் செவ்வைச்சூடுவாராலும் தமிழ் வடிவம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் அமைந்துள்ள ஊர்களைப் போற்றும் புராணங்கள்,தல புராணங்கள் ஆகும். அவை தமிழில் எழுதப்பட்டன. இத்தகைய புராணங்களை எழுதியவர்களில் பலர் தமிழும் வடமொழியும் நன்கு அறிந்தவர்கள். வடமொழியில் எழுதுவது சிறப்பு என்ற அன்றைய பொதுக் கருத்தினால் தமிழில் எழுதப்பட்ட புராணங்கள் பின்னர் வடமொழியில் தரப்பட்டன. அவ்வாறே வடமொழியில் எழுதப்பட்ட சில தல புராணங்கள் (இவை ‘மான்மியம்’ என்று பொதுவாகக் குறிக்கப்படும் இருநூற்றுக்கும் மேற்பட்ட புராணங்கள்) வடமொழியிலிருந்து தமிழாக்கப்பட்டதாக ஓர் ஆய்வு குறிப்பிடுகின்றது.

பகவத்கீதை மொழிபெயர்ப்புகள்

மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள பகவத்கீதை, பின்னர் எழுதிச் சேர்க்கப்பட்டதா என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. வைதிக சமயத்தின் புனித நூலாகக் கருதப்பட்ட ‘பகவத்கீதை’ இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எல்லோருக்கும் பொதுவான செயலாக்கம் மிக்கதாக மாற்றமடைந்தது. இந்நூலுக்கு இன்று வரை சமய விற்பன்னர்கள் விளக்க உரை எழுதி வருகின்றனர்.

கி.பி.11-ஆம் நூற்றாண்டில் ஆளவந்தார் பகவத்கீதையை, ‘கீதார்த்த சங்கிரகம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இதுவே தமிழில் வெளியான முதல் மொழிபெயர்ப்பு நூலாகும்.

கி.பி.19-ஆம் நூற்றாண்டு வரை பகவத்கீதையை, பத்து மொழி பெயர்ப்பாளர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் மொழிபெயர்த்துள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டில் பகவத்கீதை பாரதியார் உட்படப் பலரால் தமிழாக்கப்பட்டுள்ளது.

4.3.4 இஸ்லாமியச் சமய மொழிபெயர்ப்புகள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ‘சோனகர்’ என்ற சொல் அரேபியரைக் குறிக்கிறது. தமிழகத்து மன்னர்களுடன் அரேபியர் குதிரை வாணிகம் நடத்தி வந்தனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டினுக்குப் பின்னர் முஸ்லிம்கள் அதிக அளவில் தமிழகத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். அதற்குப் பின்னர், தமிழகத்தில் இஸ்லாம் பரவலாயிற்று. சூபி வழிபாட்டின் காரணமாக இஸ்லாம் தமிழகத்தில் வேரூன்றியது. அரபு மொழியின் மூலமாகவே இறைவனின் புகழ்பாடவும் வழிபடவும் வேண்டும் என்று கி.பி.19-ஆம் நூற்றாண்டு வரை இஸ்லாமியரிடம் நம்பிக்கை இருந்து வந்தது. இதனால் இஸ்லாமியச் சமயக் கோட்பாடுகள் பெரிய அளவில் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. எனினும் பீர் முகம்மது அப்பா, மஸ்தான் சாகிபு போன்ற சூபி வழி வந்தவர்கள் இஸ்லாமிய ஞான மார்க்கத்தினைப் பாடல் வடிவில் பாடியுள்ளனர்.

புலவர் நாயகத்தினால் பாடப்பெற்ற ‘புதூகுஷ்ஷாம் என்கின்ற புராணம்’ என்ற நூல், அரபு மொழியில் எழுதப்பட்ட ‘புதூகுஷ்ஷாம்’ என்ற நூலின் தழுவலாகும்.

கடந்த நானூறு ஆண்டுகளாக இஸ்லாமியப் புலவர்கள் தமிழில் பாடிய போதும், அண்மையில் தான் இஸ்லாமியத் திருமறை தமிழாக்கப்பட்டது. 1943-ஆம் ஆண்டில் அல்லாமா ஆ. கா. அப்துல் ஹமீது பாகவியால் தர்ஜீமதுல் குர்ஆன்-பி-அல்தபின் பயான், அரபு மொழியிலிருந்து தமிழாக்கப்பட்டது. எஸ்.எஸ்.அப்துல் காதிர் பாகவி, ‘ரூஹீல் பயான்’ என்ற அரபு நூலின் தமிழாக்கத்தினை ஏழு பகுதிகளாக வெளியிட்டது, இஸ்லாமியச் சமய வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தது.

தற்சமயம் இஸ்லாம் சமய நெறி குறித்த பல்வேறு நூல்கள் உருது, அரபு மொழிகளிலிருந்து தமிழாக்கப்பட்டு வருகின்றன.

4.3.5 கிறிஸ்தவச் சமய இலக்கியம் ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வந்து வாணிகம் நடத்தியபோது, கிறிஸ்தவ சமயத்தினைப் பரப்பும் முயற்சியிலும் ஈடுபட்டனர். மேலும் இந்தியாவைக் கைப்பற்றி அதிகாரம் செலுத்துவதற்காக இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளையும் அம்மொழி பேசும் மக்களையும் பற்றி ஆராய்ந்தனர். தமிழ் போன்ற மொழிகளில் அச்சு எந்திரத்தின் உதவியுடன் பல்வேறு நூல்களை வெளியிட்டனர். இந்தியாவில் முதன் முதலாக அச்சிடப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற கிறிஸ்தவ வேதோபதேசம் (Flas Sanctorum) என்ற நூல் 1577-இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலானது கிறிஸ்தவச் சமயக் கருத்தினைப் போதிக்கின்ற மொழிபெயர்ப்பு நூலாகும். கி.பி.17-ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவச் சமயக் கருத்துகள் அடங்கிய பல்வேறு நூல்கள் கிறிஸ்தவச் சமயப் பாதிரியார்களால் வெளியிடப்பட்டன. கிறிஸ்தவச் சமயத்தின் பிரச்சாரத்தின் ஊடே தமிழில் ஓலைச்சுவடியில் இருந்த பகுதிகள் தாளில் அச்சடிக்கப்பட்ட பிரதிகளாக மாற்றமடைந்தது. இது பெரிய மாற்றம் ஆகும்.

கி.பி.1774-இல் விவிலிய நூலின் புதிய ஏற்பாடு, ஜே.பி.பாப்ரிஷியஸ் என்பவரால் தமிழாக்கப்பட்டு நூல் வடிவில் வெளிவந்தது.

கி.பி.19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இரேனியஸ் ஐயர், புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு, ஜெபப்புத்தகம் போன்றவற்றைத் தமிழாக்கினார்.

ஜான் பன்யன் எழுதிய மோட்சப் பயணம் (The Pilgrim’s Progress) என்ற நூலைத் தழுவி ஹெச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை 1894-இல் வெளியிட்டுள்ளார்.

மில்டன் எழுதிய பாரடைஸ் லாஸ்ட் (Paradise Lost) என்ற நூலினை 1880-இல் பரதீக உத்தியான நாசம் என்ற பெயரில் சாமுவேல் யோவான் ஐயர் மொழிபெயர்த்துள்ளார்.

மில்டனின் பாரடைஸ் லாஸ்ட் நூலானது அ.வேதக்கண் மொழிபெயர்ப்பில் 1863-ஆம் ஆண்டு ‘ஆதி நந்தவனப் பிரளயம்’ என்ற பெயரிலும், வேதநாயகம் தாமஸ் மொழிபெயர்ப்பில் 1887-ஆம் ஆண்டு ‘பூங்காவனப் பிரளயம்’ என்ற பெயரிலும் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ சமய வேத நூலான விவிலியம் தொடர்ந்து வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவச் சமயக் கோட்பாடுகளின் தன்மைகளும், கிறிஸ்தவச் சமயப் பரப்புதல் குறித்தும் பிற மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் தற்சமயம் தமிழாக்கப்பட்டு வருகின்றன.

4.4 சமய மொழிபெயர்ப்புகளின் தன்மைகள்

தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது பன்முகத் தன்மையுடையது. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை விளக்குமளவு சொல் வளமுடையதாகத் தமிழ் விளங்குகின்ற வேளையில், பிற துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். மனிதனை நெறிப்படுத்தி நல்வழிப்படுத்துவதற்காகவும், பிரச்சினைகளில் சிக்கி அல்லல்படும் மனித மனத்திற்கு அமைதி அளித்திடவும் கண்டறியப்பட்ட கடவுள் பற்றிய கருத்துகள் தமிழில் தனித்துவம் உடையன. இன்று தமிழ் பக்தியின் மொழி என்று போற்றப்பட்டாலும் சமயக் கருத்துகள், பிற மொழிகளிலிருந்தே தமிழ் வடிவம் பெற்றுள்ளன.

வைதிக சமயம் உள்பட, தமிழரிடையே பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சமயங்கள், பிற மொழிப் படைப்புகள் மூலமாகவே தமிழுக்கு அறிமுகமாகியுள்ளன. இந்நிலையில் தமிழில் சமயக் கருத்தியல் வளர்ச்சி என்பது மொழிபெயர்ப்பினை அடிப்படையாகக் கொண்டதாகும்.

4.5 தொகுப்புரை

நண்பர்களே! தமிழில் சமய மொழிபெயர்ப்புகள் பற்றிய சில செய்திகளை இதுவரை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தைக் கற்றதன் மூலம் மனத்தில் பதிந்துள்ள செய்திகளை மீண்டும் நினைவுபடுத்திப் பாருங்கள்.

சமய மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழில் ஏற்பட்ட கருத்தியல் வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

பல்வேறு சமயங்களும் தத்தம் கருத்துகளை மொழிபெயர்ப்பின்

மூலம் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய முறையினைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவ்வகையில் இப்பாடம் சமய மொழிபெயர்ப்புகள் பற்றிய புரிதலுக்கு வழிவகுத்துள்ளது.

பாடம் 5

விளம்பர மொழிபெயர்ப்புகள்

5.0. பாட முன்னுரை

இன்றைய உலகில் எல்லாமே சந்தைக்கான நுகர்வுப் பொருட்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. இதனால் வணிகத்தில் போட்டிகள் மலிந்துவிட்டன. பொருளின் தரம் பற்றிய அக்கறையற்று, அந்தப் பொருள் வாழ்க்கை வாழ்ந்திட ஆதாரமானது என்பது போன்ற புனைவுகள் தொடர்ந்து கற்பிக்கப்படுகின்றன. நுகர்வுச் சங்கிலியில் சிக்கிக் கொண்டவர்கள் தொடர்ந்து கடன் அல்லது தவணை முறையில் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். இத்தகைய சந்தைப் பண்பாட்டில் முக்கிய அம்சமாக விளம்பரங்கள் விளங்குகின்றன. விளம்பரத்தின் மோசமான தன்மையைச் சமூகவியலாளர் சுட்டிக்காட்டினாலும் விளம்பரம் இல்லாத உலகினைக் கற்பனை கூடச் செய்ய இயலாது. தகவல் தொடர்பு ஊடகங்களின் வழியாக விளம்பரம் மக்களைச் சென்று அடைகின்றது. தமிழில் விளம்பரம் வெளிவந்தாலும், பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்கள் மொழிபெயர்ப்புகள் மூலமாகவே, தமது பொருட்களை விளம்பரப்படுத்துகின்றன. தற்காலத் தமிழ் மொழியின் நடை அமைப்பில் முக்கிய இடம் வகிக்கும் விளம்பர மொழிபெயர்ப்புகளின் பல்வேறு கூறுகளையும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இப்பாடப் பகுதி எழுதப்பட்டுள்ளது.

5.1 விளம்பரங்கள்

பொருட்களை விளம்பரப்படுத்த விளம்பரதாரருக்கும், புதிய பொருட்களைப் பற்றி அறிந்து, அவற்றை வாங்கிப் பயன்படுத்திட நுகர்வோருக்கும் விளம்பரங்கள் உதவுகின்றன. விளம்பரம் என்பது ஒரு வகையான கருத்தியல் வெளிப்பாடு ஆகும். அதன்மூலம் பரந்துபட்ட நிலையில் பொதுக் கருத்தியலை உருவாக்கிட இயலும். அரசின் நலத் திட்டங்கள், சமூகச் செயற்பாடுகள் விளம்பரங்கள் மூலமாகவே மக்களைச் சென்று அடைகின்றன. அரசின் அதிகாரம் பற்றிய சொல்லாடலுக்கு அப்பால், அரசு பற்றிய இணக்கமான கருத்தியலை விளம்பரம் வழியாக உருவாக்குதல் அரசியலின் முக்கிய அம்சம் ஆகும். இந்நிலையில் விளம்பரத்தில் பயன்படுத்தப்படும் மொழி மிகவும் முக்கியமானது. அது மக்களுக்குத் தெளிவாகத் தெரியக் கூடியதாகவும், எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும் இருத்தல் அவசியமானது.

நல்ல விளம்பரத்தின் இயல்புகள் பின்வருமாறு:

நுகர்வோருக்கு அறிவூட்டும் வகையில் இருத்தல் வேண்டும்.

நுகர்வோரிடம் தாக்கத்தினை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்.

நம்பகத்தன்மை மிக்கதாக அமைய வேண்டும்.

நுகர்வோரின் மனவுணர்வுகளைத் தூண்டுவதாக அமைதல் வேண்டும்.

செயற்படுத்தக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

மேலோட்டமான நிலையிலும், நினைவில் பதியுமாறு அமைந்திருத்தல் வேண்டும்.

நுகர்வோரின் கவனத்தை ஈர்க்கும்படி இருத்தல் வேண்டும்.

கருத்துத் தெளிவும் சொற்சிக்கனமும் மிகவும் அவசியம்.

5.1.1 தமிழில் விளம்பரங்கள் வணிக நிறுவனங்கள், வங்கிகள், தொழிற்சாலைகள் போன்றன வணிக நோக்கில் விளம்பரங்களைத் தமிழில் வெளியிடுகின்றன. பொதுவாக, இன்று உலகமயமாக்கல் காரணமாக, தமிழ்நாட்டின் சந்தையானது உலக வணிகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களும் வட இந்தியாவிலுள்ள வணிக நிறுவனங்களும் பெரிய அளவில் தமிழகத்தில் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்ய, விளம்பரங்கள் உதவுகின்றன. இந்நிலையில் பிறமொழி பேசும் முதலாளிகள், விளம்பர நிறுவனங்கள் மூலம் பல்வேறு ஊடகங்களின் வழியாக இந்தியாவெங்கும் விளம்பரப்படுத்துகின்றனர். பரந்துபட்ட சந்தையைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படும் விளம்பரங்கள் தனித்துவமான காட்சியமைப்பு, மொழி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. பெரும்பாலான விளம்பரங்கள் முதலில் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் வடிவமைக்கப்படுகின்றன. அவை பின்னர்த் தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இத்தகைய பணியில், தமிழ்மொழியின் தொன்மை, தனித் தன்மைக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. விளம்பர நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களின் மனநிலைக்கு ஏற்ப, விளம்பரங்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன. பொருளைச் சந்தைப்படுத்துவதற்கு என்று உருவாக்கப்படும் மொழி நடையும், சொற்களும், தமிழின் சிறப்பினுக்கு ஏற்ப இல்லை. பல விளம்பரங்களின் மொழி பெயர்ப்புகள் இலக்கண வளமுடைய தமிழின் மரபினைப் புறக்கணிப்பதாக உள்ளன.

5.2 விளம்பர மொழிபெயர்ப்புகளின் வகைகள்

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட விளம்பரங்களை ஆராய்ந்திடும் போது, சொல் நிலையிலும் தொடர் நிலையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதனைக் காண இயலுகின்றது. இவை புதிய வகைப்பட்ட தமிழினை உருவாக்கிடும் வல்லமை பெற்றனவாகும்.

5.2.1 சொல் மொழிபெயர்ப்புகள் விளம்பரதாரர்களின் விருப்பத்திற்கு இணங்க, விளம்பர நிறுவனங்கள் விளம்பரத்திற்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கிடும் சொற்களின் மொழி பெயர்ப்புகள் பன்முகத்தன்மையுடையன. எந்த வகையிலும் வாடிக்கையாளரின் மனத்தில் பொருள் பற்றிய கருத்தினைப் பதிய வைப்பதற்காகத் தயாரிக்கப்படும் விளம்பரங்களில் இடம் பெறும் சொற்கள், பின்வரும் வகைகளில் தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன.

நேர் மொழிபெயர்ப்புகள்

கூட்டுச் சொல்லின் ஒரு பகுதியை மட்டும் தமிழாக்குதல்

ஆங்கிலச் சொல்லை, இன்னொரு ஆங்கிலச் சொல்லினால் மொழிபெயர்த்தல்

ஆங்கிலச்சொல்லினைப் பிறமொழிச்சொல்லாக மொழிபெயர்த்தல்

பொருந்தாத சொல்லாக்கம்

தமிழையும் ஆங்கிலச் சொல்லையும் கலந்து எழுதுதல்

5.2.2 நேர் மொழிபெயர்ப்புகள் பிற மொழிச் சொல்லைத் தமிழில் நேரடியாக மொழிபெயர்க்கும்போது, தமிழில் புதிய சொற்கள் உருவாகுகின்றன. இதனால் தமிழ்மொழி வளம் அடைகின்றது. பொதுவாகத் தமிழில் மொழிபெயர்க்கப்படும் விளம்பரங்களில் நேர் மொழிபெயர்ப்பினுக்குப் போதிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. எனினும் அரசு அலுவலகங்கள் சார்பில் விளம்பரப்படுத்தப்படும் விளம்பரங்கள் நேர் மொழிபெயர்ப்பில் உள்ளன.

Bore well – ஆழ்குழாய்க் கிணறு

T.N.E.B – த.நா.மி.வா

Virtual University – இணையப் பல்கலைக் கழகம்

New year – புத்தாண்டு

Fast food stall- துரித உணவகம்

5.2.3 பகுதி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்திலுள்ள கூட்டுச் சொல்லின் ஒரு பகுதியை மட்டும் தமிழாக்குவது விளம்பரத்தில் இடம்பெறுகின்றது. பகுதி மொழிபெயர்ப்பில் இரு சொற்கள் கொண்ட ஆங்கிலக் கூட்டு வடிவத்தில் இரண்டு வகைகளில் பின்வரும் மொழிபெயர்ப்பானது நிகழ்கின்றது.

1. முன் பகுதியை மட்டும் தமிழாக்குதல்

2. பின் பகுதியை மட்டும் தமிழாக்குதல்

முன் பகுதி மொழிபெயர்ப்பு

ஆங்கிலம் கூட்டுச் சொற்களில் முன் பகுதியை மட்டும் மொழி பெயர்ப்பது வழக்கிலுள்ளது.

Air Service – விமான சர்வீஸ்

Open Market – வெளி மார்க்கெட்

Natural Enzymes- இயற்கை என்சைம்கள்

பின்பகுதி மொழிபெயர்ப்பு

சில விளம்பரங்களில் ஆங்கிலக் கூட்டுச் சொற்களில் பின்பகுதியை மட்டும் மொழிபெயர்த்து வெளியிடுகின்றனர்.

Revenue Minister- ரெவினியூ அமைச்சர்

Civil Authorities- சிவில் அதிகாரிகள்

5.2.4 மொழிபெயர்ப்பில் ஆங்கிலச் சொல் ஆங்கிலத்தில் உள்ள சொற்களைத் தமிழுக்கேற்ப மொழிபெயர்க்காமல், ஆங்கிலத்தில் உள்ளவாறே தமிழில் ஒலி பெயர்த்து எழுதுவது பெருவழக்காக உள்ளது. ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்த்தல் சிரமம் அல்லது புதிய தமிழ்ச் சொல் நுகர்வோருக்குப் புரியாது என்று கருதுகின்ற விளம்பரதாரர்கள், தத்தம் விருப்பம் போல விளம்பரங்களில் எழுதுகின்றனர். விளம்பர மொழிபெயர்ப்பில் அளவுக்கு அதிகமாக ஆங்கிலச் சொற்களைக் கடன் வாங்கித் தமிழாக்குகின்றனர். உரிய தமிழ்ச் சொல் இல்லாத போது பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரைக் கவர்வதற்காகவே, ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழாக்குவது ஏற்பு உடையதன்று.

Textiles- டெக்ஸ்டைல்ஸ்

Diamond Collection- டயமண்ட் கலெக்ஷன்

Great Value- கிரேட் வால்யு

erbal Skin Treatment- ஹெர்பல் ஸ்கின் ட்ரீட்மென்ட்

Deluxe Pressure cooker- டீலக்ஸ் பிரஷர் குக்கர்

பிறமொழிச் சொல்லாக மொழிபெயர்த்தல்

ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கும்போது அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தாமல் சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துவது விளம்பர உலகில் வழக்கில் உள்ளது. தமிழில் சமஸ்கிருத மொழியின் தாக்கம் பல்லாண்டுகளாக இருப்பதனால், இத்தகைய போக்கு நிலவுகிறது. புதிய தமிழ்ச் சொல்லாக்கத்தினை விட ஏற்கனவே வழக்கிலுள்ள சமஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்துவது எளிது என்று விளம்பர மொழிபெயர்ப்பாளர்கள் எண்ணியிருக்க வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக,

பிரார்த்தனை,

சமர்ப்பணம்,

கல்யாணம்,

ஆபரணங்கள்,

5.2.5 சொல்லாக்கம் போலச் செய்தல் முறையில் சில சொற்களை விளம்பரதாரர்கள் உருவாக்குகின்றனர். இத்தகைய சொற்கள் விளம்பரத்தினுக்கு முக்கியத்துவம் தருகின்றன.

தமிழில் பெயரடைகளைப் பண்புப் பெயர்ச்சொற்களுடன் ‘ஆன’ என்ற விகுதியை இணைத்து உருவாக்குகிறார்கள். இம்முறையில், தமிழாக்கப்பட்ட ஆங்கிலச் சொற்களுடன் ‘ஆன’ விகுதியைச் சேர்த்துப் பெயரடைகளை உருவாக்குகின்றனர்.

ஸ்ட்ராங்கான காபி

ஸ்ட்ராங் என்ற ஆங்கிலச் சொல்லுடன் ஆன என்ற விகுதியைச் சேர்ப்பது தமிழ் மரபினுக்குப் பொருந்தாதது. எனினும் இச்சொல் விளம்பரத்தில் பொருண்மை மிக்கதாகப் பயன்படுத்தப்படுகிறது.

5.3 தொடர் மொழிபெயர்ப்புகள்

விளம்பரங்களில் இடம்பெறும் தொடர்களின் அமைப்பில், தமிழ் இலக்கண விதிகள் புறக்கணிக்கப்படுகின்றன. நுகர்வோரைக் கவரும் வகையில், சுருக்கமாக விளம்பரத் தொடர்கள் உருவாக்கப்படுவதால், அவற்றின் மொழி நடையானது வழமையிலிருந்து மாறியுள்ளது.

விளம்பரத் தொடர்களில், பொருளின் பயனை விடப் பொருளுக்கே முதன்மையிடம் தரப்படுகின்றது. இது ஆங்கிலத் தொடர் அமைப்பினைத் தமிழாக்குவதனால் ஏற்படும் விளைவு ஆகும்.

ஹார்லிக்ஸ் – முழுமையான ஊட்டம் பெற

மின்னலடிக்கும் ரின்

அவர்கள் விரும்புவது டாலர் பிஸ்கெட்டுகள்

5.3.1 பொருள் மயக்கம் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்படும் விளம்பரங்களில் பொருள் மயக்கம் ஏற்படுகின்றது. தமிழ்த் தொடரமைப்புப் பற்றி மொழிபெயர்ப்பாளர் சரியாகப் புரிந்துகொள்ளாததால் இத்தகைய மயக்கம் உண்டாகிறது.

ரிக்கரி இன்ஸ்டண்ட் வறுத்து அரைத்த காபியின் சுவையை ஏறக்குறைய அதே விலையில் உங்களுக்கு வழங்குகிறது

இவ்விளம்பரம் வாசிப்பில் பொருள் மயக்கம் தருவதாகும்.

5.3.2 குறைத் தொடர்கள் பொருள் முடிவுக்காகத் தகுதியுடைய வேறொரு சொல்லை வேண்டிநிற்கும் தொடர்கள் குறைத்தொடர்கள் எனப்படுகின்றன. அதாவது சில தொடர்கள் தன்னளவில் முழுப்பொருளைத் தராமல், முழுப்பொருளைத் தர வேறொரு பொருத்தமான சொல்லை எதிர்பார்த்து இருக்கும். இத்தகைய தொடர்கள் ஆங்கிலத்தொடர் அமைப்பின் தாக்கத்தினால் விளம்பரங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

புத்துணர்வு பெற நெஸ்கஃபே

மேற்குறித்த தொடரினை நிறைவு செய்ய அருந்துங்கள் என்ற சொல் தேவைப்படுகின்றது.

கால்சியம் ஸான்டோஸ் வலுவான பற்களுக்கும் உறுதியான எலும்புகளுக்கும்

சிறந்தது என்ற சொல் இத்தொடரில் தொக்கியுள்ளது.

5.3.3 ஆங்கிலச் சொற்கள் விளம்பரங்களில் எழுத்துமுறை மரபு மீறப்படுவது பொதுவாக வழக்கிலுள்ளது. ஆங்கிலச் சொல்லைத் தொடரின் நடுவில் அப்படியே பயன்படுத்துவது ஏற்புடையதன்று. எனினும் ஆங்கிலம் மட்டும் கற்ற மேட்டுக்குடி மனப்பான்மையினரையும் கவருவதற்காக இத்தகைய விளம்பரங்கள் பயன்படுகின்றன. இன்னொரு வகையில் ஆராய்ந்தால், ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துவது, பொருள் பற்றிய உயர்ந்த கண்ணோட்டத்தினை உருவாக்கும் என்று விளம்பரதாரர் கருதியதாக, நாம் நினைக்க வாய்ப்பு உண்டு.

மெத்தை விளம்பரத்தில் புதிய Kurl-on சூப்பர் டீலக்ஸ் க்வில்டெட் என்ற தொடர் இடம்பெற்றுள்ளது.

அழகுநிலையம் விளம்பரத்தில் இது Non-surgical சிகிச்சையாகும் என்ற தொடரும், ஏஞ்சல்ஸின் Figure Correction, Spot Reduction புரொகிராம்கள் தேவையற்ற சதையை குறைத்து விடலாம் என்ற தொடரும் ஆங்கிலச் சொற்கள் கலந்து எழுதப்பட்டவற்றுக்குச் சான்றுகள் ஆகும்.

தொடர்கள்

விளம்பரங்கள் தமிழாக்கப்படும்போது, தவிர்க்கவியலாத நிலையில் ஆங்கிலச் சொல், தமிழ் வடிவத்தில் இடம் பெறுவது இன்று ஏற்புடையதாகிவிட்டது. ஆனால் சில விளம்பரங்களில் தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கையை விட ஆங்கிலச் சொற்களே அதிக அளவில் இடம் பெறுகின்றன.

பின்வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி விளம்பரம் இதற்குச் சிறந்த சான்று.

ஆண்:1என்ன சார் சரக்கு வாங்கிட்டு சைலண்ட்ஆ இருக்கிறீங்க

ஆண்:2:பேமெண்ட் தானே! இந்தாங்க

ஆண்:1:கேஷா கொடுங்க

ஆண்:2:இதுவும் பேமெண்ட் தான்

ஆண்:1:இதை பேங்க்ல போட்டு இது கலெக்ஷன் போயி எப்ப சார் நான் பணம் எடுக்கிறது.

ஆண்:2:நீங்க தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்கில் அக்கௌண்ட் வைங்க. போட்டவுடன் கலெக்ஷன் ஆகும். கம்ப்யூட்டர் சர்வீஸ் இருக்கு. இந்தக் கையில டிராப்ட் கொடுத்தா இந்தக் கையில பணம் வாங்கலாம்.

‘மேற்குறித்த விளம்பரத்தில் மொத்தம் 14 ஆங்கிலச் சொற்கள் உள்ளன.

இன்று நாம் பேசும் தமிழ் உரையாடலில் ஏறக்குறைய 50% அளவில் ஆங்கிலமும், பிறமொழிச் சொற்களும் கலந்து உள்ளன. இந்நிலையானது விளம்பரத்தில் இடம்பெறும் சொற்களின் பயன்பாட்டிலும் உள்ளதனை அறிய முடிகின்றது.

5.4 ஒலியன் மரபு மீறல்

தமிழ் மொழியின் இலக்கண விதிகளுக்கு மாறாக ஒலியன் மரபானது விளம்பரங்களில் மீறப்பட்டிருக்கின்றது.

5.4.1 ஆய்தம் தமிழில் ஆய்தம் மொழிக்கு முன் வராது என்பது மரபு. ஆனால் விளம்பரங்களில் மொழி முதல் ஆய்தம், ஆங்கில எழுத்தான F ஐக் குறிக்கப் பகரத்துடன் சேர்த்து எழுதப்படுகின்றது.

ஃப்யூஷன் டிசைன்கள்

ஃபிரைடு ரைஸ்

ஃபேன்கள்

5.4.2 மெய் தமிழ் இலக்கண மரபின்படி, மெய்ம்மயக்கங்கள் (இரண்டு மெய் ஒலிகள் இணைந்து வருதல்) மொழிக்கு முதலில் வராது. இது தமிழுக்கே உரிய சிறப்பாகும். ஆனால் விளம்பரங்களிலோ இவ்விதி மீறப்பட்டுள்ளது,

க்ரீம்; ச்யவன பிராஷ்; ப்ரொடக்ட்ஸ்; ப்ரூ காபி;

ட்ராலி சூட்கேஸ்; த்ரீ ரோஸஸ்; வ்யாஸ முனிவர்

மொழியின் இடையிலும் கடையிலும் கூட வழக்காற்றினை மீறிய ஒவ்வாத மெய்ம்மயக்கங்கள் விளம்பர மொழியில் இடம்பெறுகின்றன.

இடையில்: போ ர்ன் விடா

கடைசியில்: லக்ஸ்; மார்க்

5.4.3 டகரம், ரகரம், லகரம் இலக்கண நூல்கள் டகரம், ரகரம், லகரம் ஆகியன மொழிக்கு முதலில் தமிழில் வாரா என்று உரைக்கின்றன. ஆனால் விளம்பரத் தமிழில் அவை மொழிக்கு முதலில் இடம் பெறுகின்றன.

டயர், டாக்டர், டோக்கன், டேப் ரெகார்டர், டொமாட்டோ சாஸ், டீலர், டூத் பேஸ்ட்

ரீஃபில் பேக், ருசி, ரெப்ரிஜிரேட்டர், ரேசர், ரொக்கப் பரிசு

லக்ஸ், லுங்கி, லிப்டன் டீ, லூப்ரிகேட் ஆயில், லைம் லைட், லேபரட்டரீஸ்

5.5 தகவல் தொடர்பும் விளம்பர மொழிபெயர்ப்புகளும்

நவீன அறிவியல் வளர்ச்சி காரணமாகத் தகவல் தொடர்புக் கருவிகளில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால மாற்றங்கள் பிரம்மாண்டமாக உள்ளன. நாள்தோறும் வெளியிடப்படும் அனைத்துலகத் தகவல்களில் பல்வேறு மொழிகளிலுள்ள சொற்கள் இடம் பெறுகின்றன. இதனால் தமிழ் விளம்பரங்களின் மொழிபெயர்ப்புகளிலும் பிறமொழிக் கலப்பு ஊடுருவியுள்ளது. அறிவியல் தொழில்நுட்பக் கலைச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்கள் உருவாக்கம் இன்னும் தொடக்க நிலையிலே உள்ளது. எனவே ஸ்டெபலைஸர், பூஸ்டர், யுபிஸ், ஆல்பா, பீட்டா, காமா, ஆன்டனா போன்ற பல சொற்கள் தமிழ் வடிவில் விளம்பரங்களில் வெளிப்படுகின்றன. விளம்பர வாசகங்களை உருவாக்கும் விளம்பர நிறுவனங்கள் நுகர்வோரை முன்னிறுத்தியே விளம்பரங்களை வடிவமைக்கின்றன. ஏற்கனவே தமிழ்நாட்டின் நகர்ப்புறத்தில் ஆங்கிலமும் பிறமொழிச் சொற்களும் கலந்து பேசுவது மேன்மையானது என்பது போன்று புனைவு உள்ளது. இதன் விளைவாக நுகர்வோரின் உடனடிப் பயன்பாட்டினுக்காகத் தயாரிக்கப்படும் தமிழ் விளம்பர மொழிபெயர்ப்புகளில் பிறமொழிக் கலப்பு அதிக அளவில் இடம் பெறுகின்றது.

5.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை விளம்பர மொழிபெயர்ப்புகள் பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தைக் கற்றதன் மூலம் தங்கள் மனத்தில் பதிவாயிருக்கும் தகவல்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

விரிந்திடும் பசுமைப் புல்வெளி போல விளம்பர மொழிபெயர்ப்புகள் பற்றிய நுணுக்கமான செய்திகள் உங்களுக்குள் பரவியிருப்பதனை உணர்வீர்கள்.

விளம்பர மொழிபெயர்ப்புகளின் தன்மைகள், விளம்பர மொழி பெயர்ப்பில் பயன்படும் தமிழ்ச்சொற்கள், தொடரமைப்புகள், ஒலியன் மரபு மீறல், பிறமொழிச் செல்வாக்கு… போன்றன பற்றி இப்பாடத்தின் வழியே அறிந்திருப்பீர்கள்.

பாடம் 6

திரைப்பட மொழிபெயர்ப்புகள்

6.0. பாட முன்னுரை

அறிவியல் கண்டுபிடிப்புகளின் விளைவாக இவ்வுலகிற்குக் கிடைத்த அரிய பொழுதுபோக்கு ‘திரைப்படம்’ ஆகும். உலகமெங்கும் வாழும் பல்வேறு பிரிவினரும் தத்தம் மொழிகளில் திரைப்படத்தினை ஆர்வமுடன் பார்க்கின்றனர். இந்தியாவில் பரந்துபட்ட மக்களுக்குக் கேளிக்கையினைத் தருவதில் திரைப்படம் முதன்மையிடம் வகிக்கின்றது. தமிழகத்தினைப் பொறுத்தவரையில் ஏனைய நிகழ்கலை வடிவங்களான கூத்து, நாடகம், நாட்டுப்புற நடனங்கள் போன்றவற்றைப் புறந்தள்ளிவிட்டுத் திரைப்படம் செல்வாக்குச் செலுத்துகிறது. ஓவியம், சிற்பம், இலக்கியம் போன்ற பல்வேறு கலைகளையும் உள்வாங்கிக் கொண்டு தயாரிக்கப்படும் திரைப்படம், கண்ணையும் மனத்தையும் கவரும் வகையில் வெளியிடப்படுகிறது. தமிழர்கள், தமிழில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுடன் பிறமொழித் திரைப்படங்களையும் விரும்பிப் பார்க்கின்றனர். பிறமொழித் திரைப்படங்களைக் கண்டு களித்திட ‘மொழி’ தடையாக உள்ளது. இந்நிலையில் பிறமொழித் திரைப்படங்களைக் காண்பதற்குத் திரைப்பட மொழிபெயர்ப்புகள் உதவுகின்றன. இத்தகைய திரைப்பட மொழிபெயர்ப்புகள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பாடப்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

6.1 திரைப்படங்களும் மொழிகளும்

உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் வெளியாகும் திரைப்படங்கள், அவை தயாரிக்கப்படும் நாடுகளின் சமூக, அரசியல், பண்பாட்டு நிலைகளை முன்னிலைப்படுத்துகின்றன. மனித மனத்தின் பன்முகத்தன்மைகளையும் இருத்தலின் அடிப்படை அம்சங்களையும் திரைப்படங்கள் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. திரைப்படத்தின் காட்சிக் கோர்வைகளின் காரணமாக, எல்லா மொழித் திரைப்படங்களையும் ஓரளவு இலக்கிய ஆளுமைமிக்க பார்வையாளரால் புரிந்து கொள்ள முடியும். எனினும் ஒரு திரைப்படத்தின் பல்வேறு அம்சங்களையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில், மொழிபெயர்ப்பு அவசியமானதாகும். மொழித் தடையை மீறி, பல்வேறு மொழி பேசும் மக்களையும் ஒரு திரைப்படம் சென்று அடைய வேண்டுமெனில் மொழிபெயர்ப்பு இன்றியமையாததது ஆகும். அப்பொழுதுதான் திரைக்கதை, உரையாடல்களின் பொருளினை முழுமையாக அறிந்துகொள்ளவும், பாத்திரங்களின் செயற்பாட்டிற்கான அடிப்படைக் காரணங்களையும் கண்டறியவும் முடியும்.

6.1.1 திரைப்படங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் திரைப்படங்கள் மௌனப் படங்களாகக் காட்சி தந்தன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் இந்தியாவெங்கும் திரையிடப்பட்டன. திரையில் அசைந்திடும் படங்கள் மக்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தன. பின்னர் நவீனத் தொழில்நுட்பத்தின் காரணமாகத் திரைப்படங்களில் இடம்பெறும் திரைப்படங்கள் பேசத் தொடங்கின. இத்தகைய பேசும் படங்களைத் தமிழகத்தில் திரையிட்டபோது, ஆங்கிலம் அறிந்திராத பெரும்பான்மைத் தமிழர்கள், அதிசயம் காண்பது போலத் திரையரங்குகளில் கூடினர். எனினும் மொழி புரியாமல் குழம்பிய மக்களின் பிரச்சனையைப் தீர்க்கப் படத்தயாரிப்பாளர்கள் ஆலோசித்தனர். முடிவில் திரைப்படங்கள், அரங்குகளில் திரையிடுவதற்கு முன்னர், மொழிபெயர்ப்பாளர்கள், திரைப்படத்தினைக் காண்பதுடன், உரையாடலையும் மொழிபெயர்த்துக் கொண்டனர். பின்னர்த் திரையரங்குகளில் பிறமொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டபோது, மொழிபெயர்ப்பாளர்கள் பார்வையாளர்களின் முன்னர் தோன்றி, படத்தின் கதைச் சுருக்கத்தைத் தமிழில் கூறுவதுடன் அவ்வப்போது உரையாடல்களையும் தமிழில் கூறினர். இதற்காக ஒலி பெருக்கியினையும் பயன்படுத்தினர். இத்தகைய வசதி, நகரத்தில் அமைந்திருந்த, சில திரையரங்குகளில் மட்டும் இருந்தன. அனைத்துத் திரையரங்குகளிலும் இருக்கவில்லை. மேலும் நாளடைவில் திரையரங்குகளின் எண்ணிக்கை பெருகியது. இந்நிலையில் இருமொழிகள் அறிந்த மொழிபெயர்ப்பாளர்கள் அதிக அளவில் கிடைக்காத காரணத்தினால், காலப்போக்கில் மொழிபெயர்ப்பு முயற்சி நின்று போனது.

திரையரங்குகளில் நேரடியாக, ஒலிபெருக்கி மூலம் செய்யப்பட்ட திரைப்பட மொழிபெயர்ப்புகளைப் பற்றி அறிந்திட இயலவில்லை. இத்தகைய மொழிபெயர்ப்புகள் மூல மொழிக்கு எந்த அளவு விசுவாசமாக இருந்தன என்று அறிவதற்குச் சான்றுகள் இல்லை. ஆங்கிலம் அறிந்திராத பொது மக்களுக்கு மேலோட்டமான நிலையில் கதையைத் தமிழில் சொல்வதாகத் திரைப்பட மொழிபெயர்ப்புகள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பல்வேறு காட்சிகளின் தொகுப்பாக (Editing) விரிந்திடும் திரைப்படத்தினை உடனுக்குடன் வரிக்கு வரி மொழிபெயர்ப்பது அரிய செயல். மேலும் அது பார்வையாளர்களின் ரசனைக்கு இடையூறாக இருந்திருக்கவும் வாய்ப்புண்டு.

6.2 திரைப்பட மொழி மாற்றப் பெயர்ப்பு

திரைப்படமானது கலை என்ற நிலையைக் கடந்து, ஏராளமான பொருளீட்டுவதற்கான வாய்ப்பாக மாறியதால், தயாரிப்பாளர்கள், ஒரு மொழியில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தினைப் பிற மொழிகளில் மொழிமாற்றம் (Dubbing) செய்யத் தொடங்கினர். உலகமெங்கும் சந்தையை விரிவுபடுத்த வேண்டுமெனில் மொழி மாற்றம் அவசியம் என்பதை அறிந்து கொண்டனர். புதிய தொழில்நுட்பம், இயந்திரங்களின் மூலம் மொழிமாற்றம் (Dubbing) செய்வதனை ஊக்குவித்தது.

இதனால் ஒரு மொழி பேசிய திரைப்படம், இன்னொரு மொழிபேசும் திரைப்படமாக மாற்றமடைவது எளிதானது. நாளடைவில் ‘மொழிமாற்றம்’ என்பது பெரும் வீச்சாகப் பரவியது.

6.2.1 திரைப்பட மொழி மாற்றத்தின் தன்மைகள் பிற மொழியில் வெளியான திரைப்படத்தின் கதை உரையாடல் பிரதியை நுணுக்கமாக வாசித்துத் தமிழில் மொழிபெயர்க்கும் மொழி பெயர்ப்பாளர்கள் தமிழுடன் பிற மொழியிலும் புலமை மிக்கவராக இருத்தல் வேண்டும். இந்த மொழி மாற்றம் இருவேறுபட்ட பண்பாட்டு மரபுகளின் மாற்றம் என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். மேலும் மூலத் திரைப்படத்தில் என்ன பொருண்மையில் சொற்கள் கையாளப்பட்டுள்ளன என்பது குறித்து நுட்பமான பார்வையுடன் மொழிபெயர்ப்பது அடிப்படையானதாகும்.

பிறமொழித் திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் பேசும் உரையாடலை அப்படியே தமிழாக்கம் செய்வது, மொழி மாற்றப் பெயர்ப்பில் முக்கியம் இல்லை. பேசும் பாத்திரத்தின் உதட்டசைவினுக்கும் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப, உரிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும். பாத்திரத்தின் உடலசைவுகள், இயக்கம், முகபாவம் ஆகியனவற்றை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் மொழி மாற்றம் அமைந்திருத்தல் அடிப்படையானதாகும்.

மூலமொழித் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒலிப்பதிவின் வழியே நடிப்பு, உதட்டசைவுடன் ஒத்திசைவாகத் தமிழில் மொழி மாற்றம் செய்திடும் போது பார்வையாளர்களுக்குத் தமிழ்த் திரைப்படம் பார்த்த மனநிலை தோன்றும்.

மூலமொழித் திரைப்படத்தில், ஒரு குறிப்பிட்ட காட்சியில் பாத்திரங்கள் உரையாடுகையில் தேவைப்படும் நேர அளவிற்குள் தமிழில் மொழி மாற்றம் இடம்பெற வேண்டும்.

இவ்வாறு பொருத்தமான முறையில் மொழி மாற்றம் செய்யப்படும் திரைப்படத்தில் இடம் பெறும் பாத்திரங்களின் நிறம், தோற்றம், இனம், ஆகியனவும் நகரங்கள், ஊர்களின் அமைப்புகளும், தமிழகத்திற்கு முற்றிலும் மாறுபட்டதெனினும் அது தமிழ் பேசுவதால் தமிழ்த் திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படுகின்றது. படத்தினுடன் தொடர்பு கொள்ள, தமிழ் மொழி உதவுவதால், ஒருவகையில் அவை தமிழ்த் திரைப்படங்களாக மாற்றம் பெறுகின்றன. இது மொழி மாற்றத் திரைப்படங்களின் வழியாகப் பிற நாட்டுப் பண்பாட்டுக் கூறுகளும் சமூகவியல் அம்சங்களும் தமிழில் அறிமுகமாவதற்கான தளத்தை உருவாக்குகின்றன.

6.2.2 தமிழில் பிறமொழிப் படங்கள் தமிழில் பல ஆண்டுகளாகப் பிறமொழித் திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழித் திரைப்படங்கள் மொழி மாற்றம் மூலம் தொடர்ந்து தமிழ் வடிவம் பெறுகின்றன. எழுபதுகளின் பின்னர் தெலுங்குத் திரைப்படங்கள் அதிக அளவில் தமிழில் மொழி மாற்றம் பெற்றன. தெலுங்கிலிருந்து தமிழாக்கப்பட்ட சலங்கை ஒலி, வைஜெயந்தி ஐபிஸ்., போன்ற திரைப்படங்கள் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடின. அடிதடி, மாயாஜாலம், சமூகம், பக்தி திரைப்படங்கள் தெலுங்கிலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகின்றன.

தற்சமயம் ஹாலிவுட்டில் தயாராகும் முக்கியமான ஆங்கிலத் திரைப்படங்கள், அதிக அளவில் தமிழில் மொழி மாற்றப்படுகின்றன. அதிரடிச் சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து தயாரிக்கப்படும் ஜாக்கிசான் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகின்றன. ஹாலிவுட்டில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்படும் ஆங்கிலப் படங்கள், தமிழாக்கப்படுவதனால், அசலாகத் தயாராகும் தமிழ்த் திரைப்படங்கள் வசூல் ரீதியில் பாதிக்கப்படுகின்றன என்று தமிழ்த் திரையுலகினர் கூறுகின்றனர்.

6.2.3 மொழியமைப்பு தமிழில் மொழி மாற்றப்பட்டுள்ள திரைப்படத்தின் திரைக்கதை – உரையாடல் பிரதியை, மூலமொழித் திரைப்படத்தின் கதை – உரையாடல் பிரதியுடன் ஒப்பிடுகையில், மொழிமாற்றத்தின் தனித்தன்மைகளை அறிய இயலும். மேலும் உதட்டசைவு, நடிப்பினுக்காக மொழி மாற்றத்தில் செய்யப்படும் மாறுதல்களையும் அறிந்துகொள்ள முடியும். இது போன்ற ஆய்வு, இதுவரை தமிழில் நிகழ்த்தப்படவில்லை. எனவே சான்றுகளைத் திரட்டி ஒப்பிட்டு, மொழியமைப்பினைப் பற்றி அறிய இயலவில்லை.

தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யும்போது உதட்டசைவு, ஓரளவு தொடர் அமைப்புகள் பொருந்தி வர வாய்ப்புண்டு. ஏனெனில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியன திராவிட மொழிக் குடும்பத்தினைச் சார்ந்தவை ஆதலால், ஏவல் வினைகள், ஓரே வேர்ச் சொல்லினை மூலமாகக் கொண்டிருக்கும். எனவே சில சொற்கள் திராவிட மொழிகளுக்குள் பொதுவாக இருக்க வாய்ப்புண்டு அல்லது சிறிய வேறுபாடுகளுடன் ஒரே மாதிரியாக இருக்கும்.

ஆங்கிலம், இந்தி மொழிகளின் சொற்கள், தொடரமைப்புகள் தமிழுக்கு முற்றிலும் மாறுபட்டவை. எனவே அவை தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும்போது, உதட்டசைவு, உடலசைவுக்கு முற்றிலும் பொருந்தி வாரா.

6.3 திரைப்படச் சார மொழிபெயர்ப்பு

பிறமொழித் திரைப்படங்களின் ஒலியமைப்பினை மாற்றாமல், திரைப்படம் திரையில் தெரியும்போது, அந்தக் காட்சிக்குரிய பாத்திரங்களின் தமிழாக்கப்பட்ட உரையாடலைத் தமிழ் எழுத்து வடிவில் திரையில் இடம் பெறச் செய்வது திரைப்படச் சார மொழி பெயர்ப்பு (sub-title translation) ஆகும். திரைப்படத்தின் கதைப்போக்கு, உரையாடலுக்கேற்ப, திரைப்படச் சார மொழிபெயர்ப்பு அமைந்திருத்தல் வேண்டும். திரையில் தெரியும் காட்சியில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களின் பிற மொழிப் பேச்சினைத் தவிர்த்து விட்டு, தமிழ் எழுத்து வடிவத்தினையும் காட்சியையும் ஒருங்கிணைத்துக் காண்பதன் மூலம் திரைப்படத்தினை விளங்கிக் கொள்ளலாம்.

கலைத் தன்மையுடைய சிறந்த திரைப்படங்கள், தமிழில் சார மொழி பெயர்ப்பின் மூலம் திரையிடப்படுகின்றன. இந்திய அரசின் முயற்சி காரணமாகத் தேசிய விருது பெற்ற திரைப்படங்கள், தமிழ்ச் சார மொழிபெயர்ப்புடன் திரையிடப்படுகின்றன. இதனால் தமிழ் மட்டும் அறிந்துள்ள பார்வையாளர்கள் பிற மொழிப் படங்களின் அமைப்பினையும் சிறப்பினையும் அறிய இயலும்.

6.3.1 மொழியமைப்பு மூல மொழித் திரைப்படத்தின் கதை-உரையாடல் பிரதியைத் தமிழில் வெளியான சார மொழிபெயர்ப்புடன் ஒப்பிடும்போது மொழியமைப்பினைப் புரிந்து கொள்ளலாம். தேசிய விருது பெற்ற பிறமொழித் திரைப்படங்கள் பெரும்பாலும் மும்பை, புதுதில்லி போன்ற நகரங்களிலிருந்து சார மொழிபெயர்ப்புச் செய்யப்படுகின்றன. இத்தகைய மொழிபெயர்ப்புகள் தமிழின் நடைக்குப் பொருத்தமற்றுக் கரடுமுரடாக உள்ளன.

இவ்வாறு மொழிபெயர்க்கப்படும் தமிழ்ப் பிரதிகளுடன் மூலப் பிரதியை ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம் தமிழ் நடை, தொடரமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டறியலாம்.

6.4 திரைப்பட மொழிபெயர்ப்பின் சிறப்புகள்

பிறமொழித் திரைப்படங்கள், தமிழில் மொழிபெயர்க்கப்படும்போது, பிறமொழியின் தொடரமைப்பினுக்கேற்பத் தமிழிலும் புதிய தொடர்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும் புதிய சொல்லாக்கங்கள் தமிழில் தோற்றம் பெறுகின்றன. திரைப்பட மொழிக்கெனத் தனித்து வடிவமைக்கப்படும் மொழியினால், தமிழ் மொழியும் வளம் அடைகிறது. உலக மொழிகளில் ஏற்படும் புதிய மாற்றங்களை, மொழிபெயர்ப்பு மூலம் தமிழ்த் திரைப்படங்கள் பரந்துபட்ட மக்களிடம் கொண்டு செல்கின்றன. இதனால் தமிழ்மொழி அண்மைக் காலத்தியதாக மாற்றமடைகின்றது. மேலும் தமிழில் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் கருத்தியல், தரம் ஆகியவற்றிலும் மொழி பெயர்ப்புகள் புதிய போக்குகளை உருவாக்குகின்றன.

6.5 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை திரைப்பட மொழிபெயர்ப்புகள் பற்றிய சில அடிப்படையான செய்திகளை அறிந்தீர்கள். இந்தப் பாடம் உங்களுக்குள் ஏற்படுத்தியுள்ள பதிவுகளை மீண்டும் ஒருமுறை மனத்திரையில் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ்த் திரைப்பட மொழிபெயர்ப்புகள் பற்றிய மேலோட்டமான வரலாற்றினை அறிந்துகொள்ள முடிந்தது.

திரைப்பட மொழி மாற்றம், திரைப்படச் சார மொழிபெயர்ப்புப் பற்றிப் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் திரைப்பட மொழிபெயர்ப்புகள் பெறுமிடம் தன்மைகள் பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது. இந்தப் பாடம் உங்களின் தொடர்ந்த தேடலுக்கு ஆதாரமாக அமையும் எனலாம்.