21

எல்லா நிலைகளிலும் ஆணும் பெண்ணும் சமநிலையிலிருக்க வேண்டும் ; சலுகைகள் வேண்டாம் - உரிமைகளே வேண்டும் ; பெண்ணின் பங்கு இல்லையென்றால் , குடும்பம் மட்டுமல்ல , சமூக முன்னேற்றமும் தடைப்படும் என்று பெண்ணியத் திறனாய்வு கூறுகிறது .

ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் என்ற நாவலை முன்வைத்து இதனைப் பார்க்கலாம் .

எழுபதுகளுக்கு முன்னால் , வழக்கமான குடும்ப நாவல்கள் எழுதியவர் , இவர் .

அதன் பின்னர் சமூக உணர்வும் போராட்ட குணமும் கொண்ட படைப்புக்களை எழுதத் தொடங்கினர் .

கரிப்பு மணிகள் என்ற நாவல் , தூத்துக்குடி உப்பளத் தொழில் பற்றியதாகும் .

உப்பளத்தில் பல பிரச்சனைகள்- வேலை நிரந்தரமின்மை , தொழிலாளர்களுக்குப் பல வசதிக்குறைகள் , போதாத கூலி , பெண்தொழிலாளர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் - இப்படி அவ்வப்போது பிரச்சனைகள் .

சங்கம் வைக்கிறார்கள் .

போராடுகிறார்கள் .

ஆனால் பாதிக்கப்படுகிறார்களே தவிர , வெற்றி கிடைக்கவில்லை .

காரணம் ?

நாவலாசிரியர் , கதையின் ஊடேயும் இறுதியிலும் முத்தாய்ப்பாக முன் வைக்கும் கருத்து : தொழிற் சங்கத்திலும் எல்லோரும் ஆண்கள் .

போராட்டத்தில் தலைமை தாங்குபவர்களும் முன்னணியில் நிறுத்தப்படுபவர்களும் ஆண்கள் .

தொழிலாளர்களுள் , பாதிக்குமேற்பட்டவர்கள் பெண்கள் ; ஆனால் , சங்க அமைப்புகளிலும் போராட்டங்களிலும் அவர்களின் பங்கு இல்லை .

ஆண் ஆதிக்கம் வெற்றி தேடித்தராது .

பெண்களின் பங்கு- செயல்பாடு - இல்லையேல் சமூக நியாயங்களும் உரிமைகளும் கிடைக்காது .

இந்தக் கருத்து , நாவலின் சாராம்சமாகச் சித்திரிக்கப்படுகிறது .

எனவே ஆண் பெண் சமத்துவம் என்பது சமுதாயத்தின் பல பரிமாணங்களிலும் ஏற்படவேண்டும் என்று பெண்ணியம் வலியுறுத்துகிறது .

4.3.4 தொன்மங்களும் பெண்ணியமும்

தொன்மம் ( myth ) என்பது பழங்கதை வடிவம் .

நீண்ட வரலாற்றின் சில நிகழ்வுகளையும் உணர்வுகளையும் சாராம்சமான கதை வடிவத்தில் ஆக்கித் தருவது தொன்மம் .

சங்க இலக்கியத்தில் பாரி மகளிர் , வெள்ளி வீதியார் , பேகன் மனைவி கண்ணகி , நன்னனால் ( காவல் மரத்தின் மாங்கனி தின்றதற்காகக் ) கொலை செய்யப்பட்ட பெண் , பூதபாண்டியனின் மனைவி - இவர்கள் பற்றிய செய்திகள் தொன்மம் சார்ந்தவை .

பெண்ணியத் திறனாய்வின் மூலம் , இந்தப் படைப்புகளை ஆராய நிறைய வாய்ப்புண்டு .

பெண் நிராகரிக்கப்படுதல் , அவலத்திற்குள்ளாதல் முதலிய நிலைகளுக்கு ஆளாகிறாள் .

சமுதாயவியல் அடிப்படையில் பெண் ஏன் அடிமையானாள் என்பதை ஆராயலாம் .

களவு - கற்பு ஆகிய காதல் உறவுகளில் , பெண்ணுக்கு வரையறைகளும் ஒழுக்கக்கட்டுப்பாடுகளும் , அச்சம் மடம் நாணம் போன்ற உணர்வுகளும் வலியுறுத்தப்படுகின்றன என்ற செய்தியும் இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு உதவும் .

4.3.5 பெண்மொழியும் பெண் உடலும்

மரபு வழியில் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துமொழி , ஆண் ஆதிக்கத்தைச் சார்ந்தது என்று பெண்ணியச் சிந்தனையாளர்கள் கருகின்றனர் .

உடல்வலு , வன்மை சார்ந்த மனம் , அலட்சியம் , ஒதுக்கம் ( ஒதுக்கி வைக்கும் மனப்பான்மை ) , ‘ தான் ’ என்ற அகந்தை - முதலிய உணர்வுகள் சார்ந்த மொழி , ஆணின் மொழி .

குடும்ப உறவுகளிலும் சமூக உறவுகளிலும் பணிந்து போகிறதாகப் பெண்ணின் மொழி வெளிப்படுகிறது .

பெண் உரிமை , பெண் விடுதலை முதலிய சூழல்களில் பெண்ணின் மொழி கூர்மையடைகிறது ; இது , புதிய ஆளுமையைப் பிரதிபலிக்கிறது என்று பெண்ணியத் திறனாய்வு கருதுகிறது .

ஆண்டாண்டுக் காலமாகப் பெண்களின் உடலை - உடல் உறுப்புகளை ‘ அழகு ’ என்ற பெயரில் போகப் பொருளாகவே கருதி வருணித்து வருகிறார்கள் என்று பெண்ணியம் கூறுகின்றது .

ஆனால் , பெண் , தன் உடல் உறுப்புகளின் வலிமையையும் மேன்மையையும் முதலில் அறிந்துகொள்ள வேண்டும் என்று பெண்ணியம் சொல்லுகிறது .

பாலின வேறுபாடு் , உடல்மொழி ஆகியவற்றைக் கொண்டு பெண் ஒடுக்கப்படுவதையும் , இதன் பின்னால் அதிகார அரசியல் செயல்படுவதையும் வெளிப்படுத்துகிறார் , கேட் மில்லட் என்ற பெண்ணியத் திறனாய்வாளர் , இவர் எழுதிய “ பாலியல் அரசியல் ” என்ற நூல் ( Sexual Politics ) இவ்வகையில் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது .

தமிழில் பெண் கவிஞர்கள் பலர் இன்று பெண்ணியச் சிந்தனை யுடையவர்களாக விளங்குகிறார்கள் .

அவர்களைப் பற்றியும் அவர்களுடைய கவிதைகளில் பெண்ணியம் படிந்து கிடக்கும் படிமங்கள் , குறியீடுகள் , பலவித சொல்லாடல்கள் பற்றியும் ஆராய்வது பெண்ணிலை வாத ஆராய்ச்சிக்கு உதவக் கூடியதாகும் .

பெண் - உடல்மொழி எனும்போது கருப்புப் பெண்ணியமும் ( Black Feminism ) பெண்ணியல் சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுவது நினைவுக்குவரும் .

பெண்ணடிமைத்தனம் , பொதுவாக இருந்தாலும் அதனுள்ளும் கறுப்பர் இனத்துப் பெண்கள் கூடுதலாகவே பாதிக்கப் படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது .

தமிழ்ச் சூழலில் , சிவப்பு - கறுப்பு என்ற நிறங்கள் பேதப்படுத்தப்பட்டு அதனடிப்படையில் பெண்கள் அவமானப்படுத்தப் படுகின்றனர் .

தொலைக்காட்சி ஊடகம் , பெண்களை மோசமாகச் சித்திரிப்பதில் , இந்த நிற வேற்றுமை மிகவும் வன்மை யுடையதாகக் காணப்படுகிறது .

பெண்ணியத் திறனாய்வு இதனுடைய சித்திரிப்பு முறைகளைக் கவனமாக எடுத்துக் கொள்ளுகிறது .

4.4 பெண்ணியத் திறனாய்வின் பணி

பெண்கள் எவ்வாறு இலக்கியங்களிலும் ஊடகங்களிலும் சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று விளக்கவியல் அடிப்படையில் பார்ப்பது போதாது .

சமூக- பொருளாதார - பண்பாட்டுத் தளங்களில் பெண்களின் சில இருப்புகளையும் எழுச்சிகளையும் , தருக்கவியல் அடிப்படையிலும் , எதிர்நிலையிலான முரண்கள் வழியாகவும் , வரலாற்றுச் சூழமைவுகள் மற்றும் எதிர்காலத்துவம் என்ற பின்னணியிலும் பார்க்கப்பட வேண்டும் .

அதுவே பெண்ணியத் திறனாய்வின் பணியாகும் .

படைப்பாளிகள் ஆண்களா , பெண்களா என்பது முக்கியமல்ல - என்றாலும் , பெண் என்ற அடையாளம் , பெண் என்ற உணர்வு , பெண் என்ற அனுபவம் நேரடியாக இருக்கும் என்பதால் பெண் எழுத்தாளர்களிடம் பெண்ணியச் சிந்தனையையும் பெண்ணிய மொழியையும் எதிர்பார்ப்பது என்பது இயல்பே .

பெண்ணிய எழுத்து , ஒடுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுகளை வெளியே கொண்டு வர வேண்டும் .

ஏனென்றால் ,

4.5 தொகுப்புரை

இலக்கியத் திறனாய்வின் புதிய பரிமாணங்களில் ஒன்று , பெண்ணியத் திறனாய்வு ஆகும் . நவீனத்துவத்தின் ஒரு வெளிப்பாடாகவும் , உலக அளவில் விடுதலை பற்றிய உணர்வுகளின் ஒரு அங்கமாகவும் தோன்றியது , இது. வரலாறு நெடுகிலும் சமூக அமைப்பில் , பெண் அடிமைப்பட்டுக் கிடக்கிறாள் ; தான் , அடிமைப்பட்டிருப்பதும் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதும் அவளுக்கே தெரியாது .