வைணவம்
பாடம் - 1
இப்பாடத்தில் வைணவ சமயப் பக்தி இயக்கத்திற்கு முன் தோன்றிய பழந்தமிழ் இலக்கியப் பதிவுகளைக் காண்போம்.
தொல்காப்பியத்தில் ஆங்காங்கே திருமாலைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்றைப் பார்க்கலாமா?
சங்ககால மக்கள் சிவனையும் வழிபட்டனர்; திருமாலையும் வழிபட்டனர்; சிவன் மைந்தனான முருகனையும் வழிபட்டனர்.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
(தொல்காப்பியம் – பொருளதிகாரம் நூ. 5)
(மாயோன் = திருமால், சேயோன் = முருகன்)
இதன் மூலம் திருமால் முல்லை நில மக்களின் திணைக் கடவுளாக இருந்தமையை அறியலாம்.
ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய கருப்பொருள்கள் பதினான்கில் தெய்வமும் ஒன்று என்று குறிப்பிடும் தொல்காப்பியம், முல்லை நிலத்திற்குரிய தெய்வம் திருமால் எனவும் குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் சேயோன் (முருகன்) எனவும் சுட்டுகிறது.
எல்லாப் பொருளும், பொருளின் தன்மையும் திருமால் என்பதை,
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ
(பரி. 3:63-68)
எனப் போற்றுகின்றார் புலவர் கடுவன் இளவெயினனார்.
(தெறல் = வெம்மை, நாற்றம் = மணம், மணி = நீலமணி, மறம் = வீரம், வாய்மை = உண்மை, மைந்து = வலிமை, பூதம் = நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்கள், வெஞ்சுடர் = சூரியன், திங்கள் = நிலவு, அளி – குளிர்ச்சி)
மேலும் இறைவனின் பெருமையை இயற்கைப் பொருளைக் கொண்டு உணர்த்துகின்றார்.
நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின், தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின், சுரத்தலும் வண்மையும் மாரி உள
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின், நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின், தோற்றமும் அகலமும் நீரின் உள;
நின், உருவமும் ஒளியும் ஆகாயத்து உள;
நின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள:
(பரி. 4:25-32)
(வெம்மை = பகைவரை அழிக்கும் ஆற்றல், தண்மை = அளித்தல், அருளல், சுரத்தல் = விருப்பம் நிகழ்தல், வண்மை = கொடை, புரத்தல் = தாங்குதல், நாற்றம் = மணம், வண்மை = ஒளி, பூவை = காயாமலர், ஒலி = சொல், வருதல் = அவதரித்தல், ஒடுக்கம் = மறைதல், மருத்து = காற்று)
இப்படி உருவப் பொருளிலும் அருவப் பொருளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனாகத் திருமாலைக் காட்டுகின்றது பரிபாடல். ஐம்பெரும்பூதங்களாகவும், கோள்களாகவும் இறைவனைக் கண்ட புலவர்கள் சொல்லினுள் வாய்மை நீ எனச் சுட்டி எண்ணம், பேச்சு, செயல் ஆகிய மூன்றிலும் நெருடல் இல்லாத தன்மையைக் காட்டுகின்றனர்.
• கூர்ம அவதாரம்
தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர், இந்திரன் இழந்த செல்வத்தை எடுப்பதற்காக. அப்பொழுது மத்தாக இருந்த மேருமலை கடலில் அழுந்தத் தொடங்கியது.
தேவர்களுக்கு உதவ எண்ணிய திருமால் ஆமையாக உருக்கொண்டு மேருமலையைத் தாங்கி நின்றார் என்பது புராணம். இச்செய்தியைப் பரிபாடல் திரட்டின் முதல் பாடல் பின்வருமாறு கூறுகின்றது.
திகழ் ஒளி முந்நீர் கடைந்தக்கால், வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம்சீர்ச் சிரத்து ஏற்றி
மகர மறிகடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய இருவயின் நாண்ஆகி
மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க
உகாஅ வலியின் ஒருதோழம் காலம்
அறாஅது அணிந்தாரும் தாம்
(64-71)
(முந்நீர் = திருப்பாற்கடல், வெற்பு = மந்தரமலை, சிரத்து ஏற்றி = உச்சியில் ஏற்றி (ஆமை முதுகில் ஏற்றி), இருதிறத்தோர் = தேவர், அசுரர், அமுது = அமிழ்தம், நாணாகி = கயிறாகி, ஆழியான் = திருமால், அணிந்தார் = மத்தின் கயிறானார்)
• வராக அவதாரம்
இரணியனுடன் பிறந்த அசுரன் நிலத்தைச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் மறைந்து கொண்டான். இச்செய்தியைக் காப்புக் கடவுள் திருமாலிடம் கூறித் தமக்கு உதவுமாறு வேண்டினர் தேவர்கள். திருமால் வராக வடிவில் கடலுக்குள் சென்று தன் கொம்பின் உதவியால் நிலமகளை அசுரனிடம் இருந்து மீட்டான் என்பது கதை.
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
(பரி. 2:16-18)
(கேழல் = பன்றி, ஒருவினை = திருவிளையாடல்)
(கடலில் மூழ்கிய நிலத்தைப் பன்றி உருவில் தன் கொம்பால் மேலே கொண்டு வந்தவன்)
• நரசிம்ம அவதாரம்
இரணியன், பிரகலாதன் ஆகியோர் பற்றிய கதை நரசிம்ம அவதாரத்தில் இடம்பெறும். இரணியன் தன்னை விலங்கு, மனிதர், தேவர் யாரும் கொல்லக் கூடாது; பகல், இரவு, வீட்டுக்குள், வெளியில் யாரும் எந்த நேரத்திலும் தன்னைக் கொல்லக்கூடாது. ஆயுதங்களாலும், தனக்கு அழிவுவரக்கூடாது எனப் படைப்புக் கடவுள் பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான். எனவே எல்லோரும் தன்னை வணங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினான்.
தந்தை இரணியனை, திருமால் அடியவன் ஆன மகன் பிரகலாதன் வணங்க மறுத்தான். இருவருக்கும் நடந்த வாக்குவாதம் முற்ற இறைவனைக் காட்டு எனத் தந்தை கேட்க, மகன் ‘தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்’ என விடை சொன்னான். இறைவன் நரசிம்ம வடிவங்கொண்டு தூணைப்பிளந்து கொண்டு வந்து இரணியனை இழுத்துத் தன் மடியில் கிடத்தித் தன் நகத்தால் கிழித்துக் கொன்றான் என்பது நரசிம்ம அவதாரமாகும்.
இரணியன்-பிரகலாதன் கதையைப் பாடியுள்ளார் கடுவன் இளவெயினனார் (பரி. 4:10-21).
• வாமன அவதாரம்
குள்ள வடிவு கொண்ட அந்தணன் தோற்றத்தில் மகாபலிச் சக்கரவர்த்தியின் செருக்கை அடக்கியது வாமன அவதாரம் ஆகும். அரசனிடம் மூன்று அடி மண் கேட்டு, பின் ஓரடியால் மண்ணையும், ஓரடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் இல்லாமல் போக, மூன்றாவது அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து அவனைப் பாதாளத்திற்குள் தள்ளியது வாமன அவதாரக் கதை.
பெரும்பாணாற்றுப்படை (29-31) என்னும் ஆற்றுப்படை நூல் தொண்டைமான் இளந்திரையன் முன்னோருடன் திருமாலை ஒப்பிட்டுக் காட்டுகின்றது. அந்த இடத்தில் வாமன அவதாரத்தை எடுத்துரைக்கின்றது. கலித்தொகையில் நல்லந்துவனார் பாடிய நெய்தற்கலியிலும் இக்குறிப்பு உள்ளது.
• பரசுராமன் அவதாரம்
திருமாலின் கூறாகிய பரசுராமன், முன்பு விடாமல் முயன்று முடித்த வேள்விக்களத்தில், கயிற்றில் சுற்றிக் கட்டப்பட்ட அழகிய தூண்போல என உவமை கூறுவதின் வழி,
மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்
அருங் கடி நெடுந்தூண் போல
(அகநானூறு : 220-5-9)
(மன் மருங்கு = அரசர் குலம், வனப்பு = அழகு, மழுவாள் நெடியோன் = மழுவாகிய வாள்படை உடைய பரசுராமன்)
மதுரை இளநாகனார் பரசுராம அவதாரத்தை சுட்டுகின்றார் (காவலை உடைய தூண் போலத் தலைவியின் ஆகம் காணற்கரியது). ஆக, அகப்பாடலிலும் உவமை கூறும்போது திருமால் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளதை நெய்தல் திணையில் அமைந்த அகநானூற்றுப் பாடல் வழி அறிகின்றோம்.
• இராமன் அவதாரம்
இராமன் அரக்கரை வெல்ல, போர் பற்றிய அரிய மறை (இரகசியச்) செய்தியை வானர வீரர்களோடு ஆராய்ந்த பொழுது பறவைகள் ஒலி எழுப்புகின்றன. அவ்வொலி பேச்சுக்கு இடையூறாக இருக்கின்றது. எனவே இராமன் பறவைகளின் ஒலியை, கேட்காமல் செய்தான். பல விழுதுகளை உடைய ஆலமரத்தில் இருந்த பறவைகள் ஒலி எழுப்பவில்லை. எனவே, ஆலமரம் ஒலியின்றி அமைதியாக இருந்தது என்பதை,
வென்வேற் கவுரியர் தொல் முதுகோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ்வழுங்கல் ஊரே
(அகம்,70:13-17)
(வென்வேல் = வெற்றிவேல், கவுரியர் = பாண்டியர், முதுகோடி = கோடிக்கரை, இரும் = பெரிய, பௌவம் = கடல், இரங்கும் = ஒலிக்கும், துறை = கடற்கரை)
எனச் சுட்டுகிறார் மதுரை தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார். தலைவன் வரைவு (திருமணம்) உடன்பட்டதும் வதுவை (திருமணம்) கூடும். எனவே அலர் (பழிச்சொல்) பேசுகின்ற இந்த ஊரும் அது போல அலர் அவிந்து கிடக்கும். இப்படிப் பொருத்தமான உவமையாகப் புராணக் குறிப்புகளை அகப்பாடல் பாடிய புலவர்கள் எடுத்தாண்டுள்ளனர். இப்பாடலும் முற்காட்டிய பரசுராம அவதாரத்தைச் சுட்டிய பாடலைப் போன்று நெய்தல் திணையில் அமைந்த அகநானூற்றுப் பாடல்.
• கிருஷ்ண அவதாரம்
நீராடும் போது கண்ணனால் ஆடை கவரப்பட்ட ஆயமகளிர் அணிந்து கொள்ள, குருந்த மரக்கிளை நீருக்குள்ளே வளைந்து செல்லும்படி தம் திருவடியால் மிதித்த திருமால் போல என்னும் உவமை,
வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல
(அகநானூறு : 59 : 3-6)
(தொழுநை = யமுனை, மரம் செல = குருந்த மரம் வளைந்திட, அண்டர் மகளிர் = ஆயமகளிர், ஆயர் = ஆயர் குலத்தை சேர்ந்தவர்; ஆடு, மாடு மேய்க்கும் தொழிலைச் செய்பவர்)
நீர்வளம் பொருந்திய யமுனை ஆற்றில் மணலை உடைய அகன்ற துறையில் நீராடிய ஆயர் மகளிர் குளிர்ந்த தழையை உடுத்திக் கொள்ளக் குருந்த மரம் வளையும்படி மிதித்துத் தந்தான் கண்ணன் என்று கிருஷ்ண அவதாரச் செயலைக் குறிப்பிடுகின்றது.
கம்சன் அனுப்பிய குதிரை வடிவமாக வந்த அசுரனைக் கண்ணன் கொன்றான் என்பது முல்லைக் கலியில் உள்ளது. ஏறு தழுவிய ஆயர்களைத் தோழி தலைவிக்குத் தனித்தனியே காட்டுகின்றாள். ‘காயாம்பூங் கண்ணியைச் சூடிய பொதுவன் ஏறு தழுவிய பிறகு நிற்கும் காட்சி,
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல்
மாயோன் என்று; உட்கிற்று என்நெஞ்சு
(103: 53-55)
(மேவார் = பகைவர், விடுத்தந்த = அனுப்பிய, வாய்பகுத்து = வாய் கிழித்து, புடைத்த = அடித்த, ஞான்று = வேளை, உட்கிற்று = நினைத்து)
என்று கூறுவது அரக்கனை அழித்த கண்ணன் போன்று இருந்தது என உவமையாக இடம் பெற்றுள்ளது.
மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல்
(52:2-3)
(நூற்றுவர் தலைவன் = துரியோதனன், குறங்கு = தொடை)
மல்லரை மறம் சாய்த்த மால்போல்
(52:5)
எனத் தலைவனுக்கு உவமைகள் வந்து உள்ளன. இதன் வழி நூற்றுவர்களுக்குத் தலைவன் ஆன துரியோதனனை வீமன் அழித்தான் என்றும், மல்லர்களைக் கண்ணன் அழித்தான் என்றும் அறிகின்றோம்.
‘மறம்’ வீழ்த்தப்படுவது அவதாரப் பெருமை என்பதும் புலன் ஆகின்றது.
பாண்டவர்கள் அரக்கினால் செய்த வீட்டில் இருக்கும்பொழுது, இரவில் துரியோதனன் நெருப்பை வைத்துக் கொளுத்தி விடுகின்றான். வீமன் அரக்குவீட்டை உடைத்து உள்ளே இருந்தவரைக் காப்பாற்றுகின்றான் (25: 1-8).
தலைவன் வெஞ்சுரம் செல்ல இருக்கின்றான் என்கிறாள் தோழி. அகப்பாடல்களில்
ஏறு தழுவும் போது தலைவனின் தோற்றத்தை உவமிக்கும் போதும்,
தலைவனைப் பிரிவுணர்த்திய பின் செலவைத் தள்ளிப்போடும் போதும் / தவிர்க்கும் போதும்,
கிருஷ்ண அவதாரக் குறிப்பு உள்ளது.
• பலராமன்
பலராமன் பற்றிய குறிப்பு சங்க நூல்களில் உள்ளது. நற்றிணையில்,
மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி
(நற்றிணை – 32)
(மாயோன் = கண்ணன், அன்ன = போல / ஒத்த, மால்வரைக்கவான = மலைப்பக்கம், வாலியோன் = வெண்மை நிறமுடைய பலதேவன்)
எனத் திருமாலும் பலராமனும் அடுத்தடுத்து இடம் பெறுகின்றனர். பலராமன் நீலநிற ஆடையை அணிந்திருந்ததை நெய்தற்கலி (7) காட்டுகின்றது.
முல்லைக்கலி (5) காளைகளுக்கு உவமையாக கிருஷ்ண – பலதேவர் ஆகிய இருவரைக் கூறும்.
புறநானூறு சிவன்-முருகன் ஆகியோருக்கு இணையாக கிருஷ்ண – பலராமன் ஆகிய இருவரை,
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடியோனும்
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண் உயர் புட்கொடி விறல் வெய்யோனும
(புறம். 56: 3-6)
(வளை = சங்கு, புட்கொடி = கருடக் கொடி, நாஞ்சில் = கலப்பை, மேனி = உடம்பு, விறல் = வெற்றி)
என மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் பாடியுள்ளார். மேலும் அவர்களை வலிமை உடையவர்களாகவும் காட்டுகிறார்.
சோழன் திருமாவளவனும் பாண்டியன் பெருவழுதியும் சேர்ந்திருக்கக் கண்ட காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்,
பால்நிற உருவின் பனைக் கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றா அங்கு
(புறம், 58:14-16)
என்று கிருஷ்ணன் பலதேவர்களுக்கு உவமிக்கின்றார்.
ஆக, சங்க இலக்கியங்கள்
கிருஷ்ணனும் பலராமனும் வழிபடுதெய்வமாக இருந்ததைக் குறிப்பிடுகின்றன.
சிவன் – முருகன் வழிபாடு போலவே மக்கள் கிருஷ்ண -பலராமர் வழிபாட்டையும் செய்தனர்.
பலராமனை வலிமைக்கு உதாரணமாகக் காட்டுகின்றனர் புலவர்கள்.
மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன், என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே
என நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்துப்பாடி, திருமாலை முழுமுதற் கடவுளாகக் காட்டுகின்றார். திருமால், ஐம்பெரும் பூதம், மதியம், சூரியன், திசை, இப்படி எல்லாம் அவன், அவனே உலகத்து உயிர், உயிர்கள் அனுபவிக்கும் பொருள், வேதத்தின் பொருள் எனவே அவனை வணங்குவோம் என்பர்.
எனவே நிலத்தை அவன் திருவடியாகவும் கடலை அவன் ஆடையாகவும், திசையை அவன் கை ஆகவும், சந்திரன் சூரியன் ஆகியவற்றை அவன் இரு கண்களாகவும் கண்டு உருவகப்படுத்தி உள்ளார். இறைவனையும் இயற்கையையும் பிரித்தறிய முடியாது என்பது பொருள்.
வழிபடு கடவுள் என்றால் கோவிலும் இருக்கத்தானே செய்யும். எனவே வழிபாட்டையும் அதற்கான வழிமுறைகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
‘செல்வன் சேவடி பரவி’
(பதிற்றுப்பத்து 4:1:9)
(பரவி = வணங்கி)
எனப் பாடியுள்ளார். திருமாலை வழிபட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர் என்பதால் திருமாலுக்குரிய உருவ வழிபாடும் இடமும் (கோவில்) சங்க காலத்தில் இருந்தன என்பதையும் அறிகின்றோம்.
திருமாலிருஞ்சோலை (அழகர்கோயில்), இருந்தையூர் ஆகிய இடங்களைத் திருமால் இடமாகக் காட்டுகின்றன பரிபாடலும் பரிபாடல் திரட்டும். திருமுருகாற்றுப்படையும் அறுபடை வீடு பற்றிப் பேசும்போது திருமாலைக் குறிப்பிடுவதால் திருமாலுக்குரிய வழிபாட்டு இடம் உண்டென்பது பெறப்படுகின்றது.
• வழிபடுதல்
மக்கள் திருமாலை வழிபட்டதை,
நலம் புரீஇ அம்சீர் நாம வாய்மொழி
இது என உரைத்தலின் எம்உள் அமர்ந்து இசைத்து இறை
இருக்குன்றத்து அடிஉறை இயைக! எனப்
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே
(பரி. 15:63-66)
(நலம் புரீஇ = நன்மை செய்யும், நாம வாய்மொழி = வேதம், இருங்குன்றம் = திருமாலிருஞ்சோலை, பெரும் பெயர் இருவர் = நம்பி மூத்தபிரானும் வசுதேவனும்)
என்று பரிபாடல் காட்டுகின்றது. சுற்றத்தாரோடு சென்று
, . . . . . . . . மரபினோய் நின்அடி
தலை உற வணங்கினேம், பல்மாண் யாமும்
கலிஇல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு:
(பரி. 2: 72-76)
(கடும்பு = சுற்றம், கலி இல் = துளக்கமற்ற (அசைவற்ற), ஏத்தி = உயர்த்தி, வாழ்த்தி = போற்றி, பரவுதும் = வணங்குகிறோம், கொடும்பாடு = கொடிய துன்பம்)
. . . . . . . .நின் அடி தொழுதனெம்
பல்மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்
முன்னும் முன்னும் யாம்செய்தவப் பயத்தால்
இன்னும் இன்னும்எம் காமம் இதுவே.
(பரி. 13:61-64)
(பல்மாண் = பலமுறை, அடுக்க = அடுத்தடுத்து, காமம் = விருப்பம்)
எனத் தொடர்ந்து திருமால் திருவடியை வணங்கும் அருள் வேண்டும் எனப் பாடுகின்றார் நல்வழுதியார்.
• திருவடி
திருமாலுடைய திருவடி பிறவிப் பெருங்கடலைக் கடக்கத் துணை செய்வது: பிறப்பறுக்கும் திருவடி.
மா அயோயே மா அயோயே!
மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே!
(பரி. 3:1-3)
(மறு பிறப்பு அறுக்கும் = பிறவித்துன்பம் ஒழிக்கும், மாசுஇல் = தூய்மையான, மணி திகழ் உருபின் = நீல மணி போன்ற நிறம் உடையவன்)
எனப் புகழ்ந்து,
முதல் முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இல்லை, பிறப்பித்தோர் இலையே
(பரி:3:71-72)
திருமால் உலகில் முதல், இடை, இறுதியில் படைப்பு, அளிப்பு (காத்தல்), அழிப்பு போன்றவை செய்தலால் அவன் பிறவாத பிறப்பு இல்லை எனச் சிறப்பிக்கின்றது.
கடுந்தெற ல்இராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கன்
செம்முகப் பெருங்கிளை யுழைப்பொலிந் தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே
புறநா: ( 378: 18-22)
(மதரணி = ஒளிரும் அணிகலன், அரக்கன் = இராவணன், வௌவிய = கவர்ந்த, பெருங்கிளை = குரங்குக் கூட்டம், இழை = அணிகலன்)
இராமனுடன் வாழ்ந்த சீதையை அரக்கன் கவர்ந்து கொண்டு வந்தான். அப்பொழுது சீதை தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாகக் கீழே போட்டாள். அவை குரங்குக் கூட்டங்களின் கையில் கிடைத்தன. அக்குரங்குகளுக்கு நகைகளை எப்படி எங்கு அணிவது எனத் தெரியவில்லை. எனவே அவை மாறி மாறி அணிந்து கொண்டன. அதுபோலச் ‘சோழன் கோயிலில்’ பரிசில் பெற்ற பாணர்கள் கூட்டமும் செய்தது எனப் புறநானூறு இராமாயணத்தில் வரும் நிகழ்வுக் குறிப்புகளை உவமையாகக் காட்டுகின்றது.
கலித்தொகையில் இசைக் கருவிகள் ஒலிக்க மாட்டின் கொம்புகளுக்கு இடையில் விழுந்து ஆயர்கள் ஏறு தழுவிய இடம் ஆகிய தொழுவம் (தொழுஉ) பாரதப் போர்க்களம் போல் உள்ளதாம்.
புரிபு மேல்சென்ற நூற்றுவர் மடங்க
வரி புனைவல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும் தொழூஉ
கலி (104 : 57-59)
(நூற்றுவர் = கௌரவர், ஐவர் = பாண்டவர், பொருகளம் = போர்க்களம், தொழுஉ = மாடுகள் கட்டும் இடம்)
அம் சீர் அசைஇயல் கூந்தற் கைநீட்டியான்
நெஞ்சம் பிளந்துஇட்டு நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்
(101:18-20)
துச்சாதனனைக் கொன்று வஞ்சினம் நிறைவேற்றிய வீமனைப் போல் காட்சி தருகின்றான் பொதுவன் என உவமை வழி, பாரதப்போரில் பாண்டவரின் வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கலித்தொகையில் முல்லைக்கலியின் முதல் பாடல் வழி அறிகின்றோம்.
முல்லைக் கலிப் பாடல்களில்,
வீமனின் வீரம் பொதுவனின் தோற்றத்திற்கு உவமிக்கப் படுகின்றது
துச்சாதனன் பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றிய செய்தி
பாரதப் போர்க்களம்
அவதாரச் சிறப்பு
போன்ற பல செய்திகள் முல்லைத்திணையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆயர்களின் கடவுளாக, ஆயர்களின் வாழ்வோடு ஒன்றிய பெருமாளை, அந்நில மக்கள் வாழ்வை, நிலமும் பொழுதுமாக வைத்துப் பாடிய புலவர்கள் பதிவு செய்திருப்பது இலக்கியப் பாரம்பரியத்திற்கு வளம் சேர்த்திருப்பதோடு, ஆழ்வார் பாசுரங்களுக்கும் வித்திட்டிருக்கின்றது.
ஐம்படைத்தாலி என்னும் இத்தொடருக்கு உரையாசிரியர்கள் சங்கு, சக்கரம், கதாயுதம், வாள், வில் ஆகிய ஆயுதங்களின் வடிவமாக அமைக்கப்படும் ஓர் ஆபரணம். பஞ்சாயுதமென்றும் பிறந்த ஐந்தாம் நாளில் பிள்ளைகளுக்கு அணிவித்தல் மரபென்றும் கூறுவர். இந்த உரையும் திருமால் காத்தல் கடவுள் எனக் கருதிய மக்களின் நிலையைக் காட்டுகின்றது.
கா எரியூட்டிய கவர்கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்
பணி வரை மார்பன், பயந்த நுண்பொருட்
பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்
(239 -242)
பற்றிப் பேசும்போது வீமன் மடை (சமையல்) நூலில் குறிப்பிட்டபடியே ஒய்மாநாட்டு நல்லியக்கோடன் அரண்மனையில் பல்வேறு வகை உணவுகள் சமைத்தனன் என்ற குறிப்பு உள்ளது.
அர்ச்சுனன் காண்டவ வனத்தைத் தீயிட்டுக் கொளுத்திய செய்தியும் கூறப்படுகின்றது.
இரு நிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை
( 29-30)
(திருமறு மார்பு = திருமகள் பொருந்திய மார்பு, முந்நீர் = கடல்)
என ஈரடியால் மூவுலகும் அளந்த திருமாலைக் காட்டுகின்றார்.. . . . . . . . . . . .நீடு குலைக்
காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்
(அடி.371-373)
(காந்தள் = மலர், சிலம்பு = மலை)
மலையில் படிந்த யானைபோல, பாம்பணையில் பள்ளி கொண்ட திருமால் என விளக்கி, திருவெஃகாவில் திருமால் வழிபாடு இருந்ததைக் காட்டுகின்றார்.
கலித்தொகையில் பொதுவனின் ஏறு தழுவிய வீரத்தையும் வெற்றியையும் காட்டப் பாரதப் போர்க்களம் உவமையாக வந்துள்ளது. புறநானூற்றில் மன்னனின் வெற்றியையும் கொடைச் சிறப்பையும் காட்டும் பொழுது கௌரவர் பற்றிய குறிப்பும், போர்க்களம் பற்றிய குறிப்பும் உள்ளது.
பெரும்பாணாற்றுப்படையில்,
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய
பேர் அமர்கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல
(415 – 417)
(ஈர்ஐம்பதின்மர் = நூற்றுவர், களம் = போர்க்களம்)
எனப் பாரதப்போர் நிகழ்வும், வெற்றியும் பற்றிப் பாடுகின்றார் உருத்திரங் கண்ணனார். எனவே சேரநாட்டிலும் தொண்டை நாட்டிலும் தோன்றிய இலக்கியங்கள் பாரதப்போர் பற்றிய குறிப்பை மன்னன் பெற்ற வெற்றியைப் பாடும்போது பதிவு செய்துள்ளன.
நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண் வரத்தோன்றி
(403-404)
(நெடியோன் = திருமால், நான்முகன் = பிரமன், பொகுடு = (தாமரை) மலர்)
என்னும் அடிகள் திருமாலின் கொப்பூழ் – அதில் இருந்து தோன்றிய தாமரை மலரில் பிரமன் தோன்றினான் என்று சுட்டுகிறது.
நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல
(1-3)
(நேமி = சக்கரம், வலம்புரி = சங்கு, மாதாங்கு = திருமகளைத் தாங்கியிருக்கிற, மாஅல் = திருமால்)
என்றும், மாவலியிடம் மூன்றடி மண்கேட்டுப் பின் நெடியோனாய் உலகம் அளந்தவன் என்றும் திருமால் பற்றிய செய்திகளை மூன்று அடிகளில் பெய்து வைத்துள்ளார். ஆக, திருமால் தோற்றப் பொலிவு வெளிப்படையாகவும், அவதாரச் சிறப்புக் குறிப்பாகவும் பெறப்படுகின்றது.
கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நல்நாள்
(590-591)
(மாயோன் = கண்ணன், ஓண நல்நாள் = கண்ணன் பிறந்த நாள்)
எனப் பாடியுள்ளார்.
ஆக, திருமாலுக்குரிய திருவோண நாளை மதுரை மாநகரில் சங்ககாலத்தில் சிறப்பாக மக்கள் கொண்டாடினர் என்பதை அறிகின்றோம்.
சங்க இலக்கியத்தில்,
•அவதாரம் பற்றிய செய்திகள் குறிப்பாக மட்டும் உள்ளன.
•இராமன், வராகம் (கேழல்) ஆகிய அவதாரங்கள் மட்டும் பெயரோடு உள்ளன.
•திருமால் பற்றிய செய்திகள் பரிபாடலிலும் கலித்தொகையிலும் அதிகமாக உள்ளன.
தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
(குறள் : 1103)
என்னும் குறளில் உள்ள இரண்டாம் அடிக்கு, ‘செங்கண்மால் உலகம்’ என்பார் உரையாசிரியர் பரிமேலழகர்.
கண் அகல் ஞாலம் அளந்த தூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
மாயச் சகடம் உதைத்த தூஉம் – இம்மூன்றும்
பூவைப் பூவண்ணன் அடி
(சகடம் = வண்டி)
இப்பாடல் வழி திருமாலின் திரு அவதாரச் சிறப்பையும், திருவடியின் பெருமையையும் அறிய முடிகிறது.
• கோட்டம் (கோயில்)
திருமாலின் கிடந்த கோலத்தையும் நின்ற கோலத்தையும் காடுகாண் காதை காட்டுகின்றது. கோவலனிடம் மாமறையாளன், தன் கண்கள் திருமாலின் கோலத்தைக் காட்டு எனத் தன் உள்ளத்தைக் கலக்குவதால் அரவணையில் பள்ளிகொண்டவனைக் காணவந்தேன் எனக் கூறுகிறான். இதை,
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
(11:40-42)
செங்க ணெடியோ னின்ற வண்ணமும்
என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்
(11:51-53)
என உரையாடுவதாகக் காட்டுவர் இளங்கோவடிகள்.
திருவரங்கத்தையும், திருவேங்கடத்தையும் தரிசிக்க மாமுதுமறையோன் குடமலையில் உள்ள மாங்காடு என்னும் ஊரில் இருந்து வந்துள்ளார். தாம் வாழுகின்ற ஊரில் மட்டுமல்லாமல், பிற ஊர்களில் உள்ள தாம் வழிபடும் தெய்வங்களைப் பயணம் செய்து வழிபட்டனர் மக்கள் என்பதற்கு மேற்காட்டிய பாடலடிகள் சான்றாகும்.
சிலம்பில் உள்ள இந்திரவிழா ஊர் எடுத்த காதை, கோவில்கள் பற்றி விரித்துரைக்கின்றது.
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
(5:169-173)
என்று பலதேவன், திருமால் போன்றோரின் கோயில்கள் ஒரே ஊரில் வழிபாட்டுக்கு உரியனவாக இருந்தன. மேலும் வேறுவேறு கடவுளர்களுக்கு விழா எடுத்தனர் என்ற செய்தியையும் (178) குறிப்பிடுகின்றது.
அரசனும் இறைவனும் வீற்றிருக்கின்ற இடம் கோயில் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அரசனைப் பாடிய மக்கள் அந்த இடத்தில் இறைவனை வைத்துக் கோயிலில் சென்று பாடினர். நாளடைவில் அரசன் இருந்த இடம் கோயில் என்று அழைக்கும் வழக்கம் இல்லாமல் போயிற்று. இதற்குப் பாலமாக அமைந்திருப்பது மேற்காட்டிய சிலப்பதிகார அடிகளாகும். ஊர்காண் காதையிலும் (14:7-12)
நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்
உவணச் சேவ லுயர்த்தோ னியமும்
மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
(நுதல்விழி நாட்டத்து இறையோன் = சிவன், உவணச் சேவல் = கருடச் சேவல், மேழி வலனுயர்த்த வெள்ளை = பலதேவர், நியமம் / நகரம் / கோட்டம் = கோயில், கோழிச்சேவல் கொடியோன் = முருகன்)
என்று பல தெய்வங்கள் முன்சொன்ன இந்திரவிழா ஊர் எடுத்த காதையில் தொகுக்கப்பட்டுள்ளன. கோயில் என்ற சொல் தரும் பொருளை நியமம், நகரம், கோட்டம் போன்ற சொற்களும் குறிப்பதை அறிகின்றோம்.
கண்ணகி இடைச்சேரியில் இருந்தபொழுது பல தீ நிமித்தங்கள் தோன்றுகின்றன. அதுகண்ட மாதரி ‘ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவன் தன் தமையனோடு ஆடிய குரவைக் கூத்து ஆடுதும் யாம்’ என்றாள்.
ஆய்ச்சியர் குரவையில் பெண்கள் ஆடும் விளையாட்டு இசைக் களஞ்சியம் ஆகும்.
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுஆனுள் வருமே லவன்வாயிற்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ
(பாடல் -19)
(குணில் = குறுந்தடி, ஆனுள் = பசுக்கூட்டத்தில், கனி = விளாம்பழம், கன்று = ஆவின் கன்று)
வஞ்சத்தால் வந்து நின்ற ஆவின் கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு அங்கே நின்ற விளவின் கனியை உதிர்த்த கண்ணன் இன்று நம் வழிபாட்டால் நம் பசுக்கூட்டத்தில் வருவானாயின் அவன் வாயின் மூலம் கொன்றைக் குழலின் இனிய ஓசையைக் கேட்போம் தோழீ என்று பாடும் போது திருமாலின் கண்ணன் (கிருஷ்ண) அவதாரம் பேசப்படுகிறது.
‘பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாதவன், கொல்லையம்சாரல் குருந்தொசித்த மாதவன்’ எனத் திருமாலின் சிறப்பைப் பாடி ஆடுகின்றனர் ஆய்ப்பாடிப் பெண்கள். ‘வடவரையை மத்தாக்கி வாசுகிப் பாம்பைக் கயிறாக மாற்றி, திருப்பாற்கடலைக் கடைந்தவன்; மூவுலகும் இரண்டடியால் அளந்தவன், பாண்டவர்களுக்காகக் கௌரவரிடம் தூது சென்றவன்’ எனப் பெருமாளின் செயல்பாடுகள் பற்றிப் பாடுகின்றனர். பரிபாடல், கலித்தொகை ஆகிய தொகை நூல்களுக்கும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கும் இடையே பாலமாக அமைவது சிலப்பதிகாரம் என்பதை நூல்வழி அறியும் செய்திகள் காட்டுகின்றன.
. . . . . தொல் இலங்கை கட்டழித்த
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே
(35)
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே
(36)
. . . . . .பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே
நாராய ணாவென்னா நாவென்ன நாவே
(37)
என ஆயமகளிர் கைகோத்து ஆடிய குரவையுள் ஏத்தி வழிபடும் தெய்வமாகத் திருமால் உள்ளார். மேலும் செவி, கண், நா ஆகியவற்றை இகழ்வது போல, பிறவிப் பயன்பெறத் திருமாலை வழிபடாத ஐம்புலன்களை உடைய மனிதர்களை இகழ்கின்றது.
• பொய்கை / குளம்
அழகர்மலையில் மயக்கத்தைக் கெடுக்கும் மூன்று பொய்கைகள் உள்ளன. அவை புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்பன. அவற்றுள் நீராடினால் முறையே இந்திரன் இயற்றிய ‘ஐந்திரம்’ என்னும் இலக்கண நூலும், பழம்பிறப்பும், நினைத்தவை எல்லாம் நடக்கும் ஆற்றலும் பெறுவீர் என்னும் குறிப்பு உள்ளது. சான்று:
திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
பெருமால் கெடுக்கும் பிலமுண்டு
(11:19-92)
(குன்றம் = அழகர் மலை, பெருமால் = மயக்கம்)
இச்சான்றுடன் ‘திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்க’ குலசேகர ஆழ்வார் வேண்டுவதும் செய்வதும், ஒப்புநோக்கி மகிழ்தற்குரியது. இறைவன் எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் உள்ள பொய்கைகளும் இறைவனைப் போலவே சிறப்பிற்குரியனவாகப் பக்தர்கள் / மக்கள் எண்ணினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெடியோன் குறளுரு வாகி நிமர்ந்துதன்
அடியிற் படியை யடக்கிய வந்நாள்
நீருடன் பூமியைக் கொடுக்க
நீரிற் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
(19:51-54)
என்றும்,
மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவையிஃதாமென நோக்கியும்
(19:65-66)
(குறளுரு = வாமன அவதாரம், மாமணி வண்ணன் = கண்ணன், தம்முனும் = முன்உள்ளோன் பலதேவன், பிஞ்ஞை = நப்பின்னை)
எனவரும் செய்தி சிலம்பின் ஆய்ச்சியர் குரவையை நினைவுபடுத்து கின்றது.
மேலும் ‘சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட காதை’யில் மணிமேகலை வஞ்சி மாநகர்ப்புறத்தில் வைதிக மார்க்கத்து வைணவ வாதியை அடைகின்றாள். ‘நின் சித்தாந்தம் பற்றிச் சொல்லு’ எனக் கேட்கின்றாள்.
காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதின காப்பென்று உரைத்தனள்
(27:98-99)
திருமாலின் புராணத்தை வைணவ சமயத்தைச் சேர்ந்த ஒருவன் மணிமேகலையிடம் எடுத்துக் கூறினான் என்பது செய்தி.
ஆக இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் திருமாலைப் பற்றிய குறிப்புகள் இருப்பதை மேற்காட்டிய சான்று வழி அறியலாம்.
இராமாயண, பாரதக் கதைக் குறிப்புகள் பற்றியும் அந்தக் குறிப்புகளின் வழி, பக்தி இலக்கிய உலகுக்கு விதை தூவப்பட்டிருப்பதையும் உணர்ந்து தெளிந்திருப்பீர்கள். சிலப்பதிகாரம் பக்தி இயக்கத்துக்கு வித்திட்டிருப்பதையும் அறிந்திருப்பீர்கள்.
தனித்தனிப்பாடல்களும், தொடர்நிலைச் செய்யுள்களாக அமைந்த காப்பியங்களும், மணிமேகலை போன்ற பௌத்த சமயக் காப்பியமும் திருமால் தொடர்பான செய்திகளைப் பதிவு செய்துள்ளதை அடையாளங் கண்டிருப்பீர்கள்.
பாடம் - 2
வைதிகச் சமயங்களான சைவமும் வைணவமும் புறச் சமயங்களான பௌத்த சமண மதங்களோடு போராடித் தம்மைத் தக்க வைத்துக் கொண்டன. அதன் பின் தங்களுக்குள் சமயத்தைப் பரப்புவதில் போட்டி போட்டுக் கொண்டன. அதன் விளைவு அல்லது விளைச்சல்தான் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகும்.
இறைவனின் பெருமையை நயமுற அழகாக – செவிக்கு இனிமையாகப் பாடுவதால் திவ்வியப்பிரபந்தம் எனச் சிறப்புப் பெறுகின்றது.
1.பொய்கை ஆழ்வார்
2.பூதத்தாழ்வார்
3.பேயாழ்வார்
4.திருமழிசை ஆழ்வார்
5.மதுரகவி ஆழ்வார்
6.நம்மாழ்வார்
7.குலசேகர ஆழ்வார்
8.பெரியாழ்வார்
9.ஆண்டாள்
10.தொண்டரடிப் பொடி ஆழ்வார்
11.திருப்பாணாழ்வார்
12.திருமங்கை ஆழ்வார்
• நாலாயிரம் + திவ்வியம் + பிரபந்தம்
நாலாயிரம் என்பது பாசுரங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். திவ்வியம் என்பது இறைவனைப் பற்றியது, அடியவர்களுக்கு இன்பம் அளிப்பது எனப் பொருளின் தன்மை கருதி இனிமை என்னும் பொருளைத் தரும்.
பிரபந்தம் என்பது தொகுப்பு என்றும், தனி நூல் என்றும் பொருள் தரும். தமிழில் பிரபந்தம் என்பதை இரண்டு பொருளிலும் பயன்படுத்தி உள்ளனர். எனவே திவ்வியப்பிரபந்தம் என்பதை,
(அ)தெய்வத்தைப் பற்றிய அல்லது தெய்வீக நூல்களின் தொகுப்பு.
(ஆ)தெய்வத்தைப் பற்றிய நூல் அல்லது தெய்வீக நூல் என்றும் பொருள் கொள்ளலாம்.
பிரபந்தங்கள் என்ற சொல்லைச் சிற்றிலக்கியம் என்னும் பொருளில் பயன்படுத்தியதோடு, ஒவ்வொரு சிற்றிலக்கியத்தையும் ஒரு தனி நூலாகக் கொண்டனர். (காட்டாக, உலாப் பிரபந்தம்) எனவே தான் சிற்றிலக்கியங்களின் வகையை 96 வகைப் பிரபந்தம் என்று அழைத்தனர்.
ஆக, பிரபந்தம் என்னும் சொல் தொகுப்பு, தனி நூல், சிற்றிலக்கியம் ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதைத் தமிழ் இலக்கிய வரலாறு காட்டுகின்றது.
புறச் சமயத் தாக்குதல்களில் இருந்து விடுபட்ட சைவ வைணவம் சார்ந்த வைதிக சமயத்தார் தத்தம் கடவுளர்கள் தாம் முழுமுதல் கடவுள் என நிறுவத் தலைப்பட்டனர். இதன் விளைவு பயன் உரைக்கும் பாசுரங்கள் முகிழ்த்தன.
திவ்வியப் பிரபந்தத்தில் ஒவ்வொரு பதிகத்திலும் அமைந்த இறுதிப் பாடல்கள் இதனை வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றன.
திவ்வியப் பிரபந்தத்தின் பாசுரங்களில் சமணம், பௌத்தம் போன்ற மதம் சார்ந்தவர்களைப் பழிக்கும் அடிகளும் இடம் பெற்றன.
பின் வந்தோர் திருமால் அவதாரத்தைக் காப்பிய நாயகனாகக் கொண்டு காப்பியங்களும் பிற சிற்றிலக்கிய வகை சார்ந்த நூல்களும் இயற்ற நாலாயிரத்தின் செல்வாக்கே காரணம் எனலாம்.
1.முதலாயிரம்
2.திருமொழி
3.திருவாய்மொழி
4.இயற்பா
என நால் வகையாகப் பகுத்துள்ளார். இந்த வகைப்பாடு பற்றி அறிஞர்களிடையே பல கருத்துகள் உண்டு.
1.பொய்கை ஆழ்வார் 100
2.பூதத்தாழ்வார் 100
3.பேயாழ்வார் 100
4.திருமழிசை ஆழ்வார் 216
5.மதுரகவி ஆழ்வார் 11
6.நம்மாழ்வார் 1296
7.குலசேகர ஆழ்வார் 105
8.பெரியாழ்வார் 473
9.ஆண்டாள் 173
10.தொண்டரடிப் பொடி ஆழ்வார் 55
11.திருப்பாணாழ்வார் 10
12.திருமங்கை ஆழ்வார் 1137
_____
3776
_____
மேற்காட்டிய பாசுரங்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
• எண்ணிக்கை
ஆழ்வார்களின் பாசுரங்கள் 3776. எனவே 224 பாசுரங்கள் குறைவாக இருப்பினும் அவற்றை நாலாயிரம் எனக் கொள்வர்.
ஒரு சிலர் திருவரங்கத்தமுதனார் இயற்றிய பிரபந்த காயத்ரி எனப்படும் இராமானுசரின் வரலாற்றைக் கூறும் இராமானுச நூற்றந்தாதியைச் சேர்த்து 4000 எனக் கணக்கிடுவர்.
எண் ஆழ்வார்கள் அருளியவை
1. பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதி 2. பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
3. பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
4. திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம்
நான்முகன் திருவந்தாதி
5. மதுரகவி ஆழ்வார் கண்ணி நுண் சிறுத்தாம்பு
(இது நம்மாழ்வாரைப் பற்றிய
பாடல்களைக் கொண்டது)
6. .நம்மாழ்வார் திரு ஆசிரியம்
திருவாய் மொழி
திருவிருத்தம்
பெரிய திருவந்தாதி
7. குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி
8. பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
திருப்பல்லாண்டு
9. ஆண்டாள் திருப்பாவை
நாச்சியார் திருமொழி
10. தொண்டரடிப்
பொடியாழ்வார் திருமாலை திருப்பள்ளியெழுச்சி
11. திருப்பாணாழ்வார் அமலனாதி பிரான்
12. திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
திருக் குறுந்தாண்டகம்
திரு நெடுந்தாண்டகம்
திருவெழு கூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திருமடல்
உரையாசிரியர்கள்
நாதமுனிகள், ஆளவந்தார், இராமானுசர், எம்பார், கூரத்தாழ்வார், திருவரங்கத்து அமுதனார், அனந்தாழ்வான், முதலியாண்டான், அம்மங்கியம்மாள், பிள்ளை திருநறையூரரையர் ஆகியோர் உரைகள் வளம்பெற்று, வடிவம்பெற வித்திட்டவர்கள்.
ஆக 10-ஆம் நூற்றாண்டு முதல் பக்தி இலக்கியத்தின் தொகுப்பையும், உரையையும் உருவாக்குவது இன்றியமையாதது என்பதை உணரத் தலைப்பட்டார்கள் வைணவத் தொண்டர்கள் என்பது தெளிவாகின்றது.
மணிப்பிரவாள நடை
தத்துவக் களஞ்சியமாகவும் வேதத்தின் சாரமாகவும் விளங்கும் திருவாய்மொழிக்கு வடமொழியும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையில் பல உரைகள் தோன்றின. திருவாய் மொழிக்கு எழுதப்பட்ட உரைகள் ஈடு என்று குறிப்பிடப்பட்டன. அவை எழுத்து எண்ணிக்கையில் (படி) குறிப்பிடப்பட்டன.
படி என்பது மெய் எழுத்தை விலக்கி எண்ணும் போது உயிரும் மெய்யுமாக 32 எழுத்துகளை உடைய ஒரு தொடர் ஆகும். நம்மாழ்வார் திருவாய்மொழிக்கு ஈடு உரை எழுதியவர்களும் உரைப்பெயரும் பின் வருமாறு:
திருக்குருகைப் பிரான் பிள்ளை ஆறாயிரப்படி
நஞ்சீயர் ஒன்பதினாயிரப்படி
அழகிய மணவாள சீயர் பன்னிரண்டாயிரப்படி
பெரியவாச்சான் பிள்ளை இருபத்தி நாலாயிரப்படி
நம்பிள்ளை காலட்சேபமாகச்
சொல்ல வடக்குத் திருவீதிப்பிள்ளை முப்பத்தாறாயிரப்படி
பட்டோலை கொண்டு அருளியது
• தமிழின் வளம் மேலும் சிறந்தது
மேற்காட்டிய ஈடு உரைகள் வைணவ உலகத்திற்கும் தமிழ் உலகத்திற்கும் வளம் சேர்த்தன. பக்தி இலக்கியத்தைப் பரவச் செய்யப் பெருந்தொண்டாற்றின.
ஈடு உரை கண்ட நம்பிள்ளை பெரிய திருமொழி, திருப்பள்ளி எழுச்சி, திருவிருத்தம் ஆகிய பிரபந்தங்களுக்கும் உரை அருளினார்.
திருவாய் மொழிக்கு முதல் உரையாசிரியர் ஆளவந்தார் என்பதை ஈடு உரை வழி அறியலாம். திவ்வியப் பிரபந்தங்களின் பொருளை, பக்தி உலகில் பரவச் செய்த பெருமைக்குரியவர் நாதமுனிகள். அவரை முதல் உரையாசிரியராகக் கொள்ளலாம். நாதமுனிகள் முதல் எம்பெருமானார் காலம்வரை உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி, நாதமுனிகள் பேரன் ஆளவந்தார், பெரிய நம்பிகள் (திருமாலை ஆண்டான்) இராமானுசர் போன்றோர் கேள்வி வாயிலாக (நினைவாற்றல்) உரைகளைப் பாதுகாத்தனர். எம்பெருமானார் காலத்தில் வியாக்கியானம் என்னும் பெயரில் உரைகள் வரி வடிவம் பெறத் தொடங்கின.
வடமொழியிலும் தமிழிலும் வல்லவர்களும் தமிழை மட்டும் அறிந்தவர்களும், வைணவ இலக்கியத்தின் செழுமையையும் பக்தி இலக்கியத்தின் பரப்பையும் விரிவுபடுத்தத் தமிழில் உரைகள் செய்ய வேண்டிய தேவையை உணர்ந்தனர். எனவே மணிப்பிரவாள நடையில் அமைந்த வைணவ நூல்களுக்கு எளிய தமிழில் உரைப்பணி செய்யத் தொடங்கினர். அவர்களுள் தலைசிறந்தவர் புருஷோத்தம நாயுடு என்பதை அவரின் தமிழாக்கப்பணி புலப்படுத்தும். அப்பெருந்தகை சமயத் தொண்டோடு தமிழ்த்தொண்டும் செய்து தமிழ் உரைவளத்தைச் செழுமைப்படுத்தினார். எனவே அவரின் மொழிபெயர்ப்புப் பணியும் ஈண்டு நினைவு கூரத்தக்கது.
பிள்ளை லோகாச்சாரிய சீயர் அருளிய நூல்கள்:
1.இராமானுச திவ்விய சூரி சரிதை
2.உபதேசத் திருநாமம்
3.யதீந்திரப் பிரணவப் பிரபாவம்
4.அந்தாதிப் பிரபந்த உரை
5.இராமானுச நூற்றந்தாதி உரை
6.திருமந்திரார்த்த உரை
7.நாலாயிரத் திவ்வியப் பிரபந்த தனியன் உரை
8.திருவாய் மொழி நூற்றந்தாதி உரை
இவற்றை எழுதி அவர் வைணவ உரைகளுக்கு வளம் சேர்த்துள்ளார்.
1.திருப்பல்லாண்டு
2.அமலனாதிபிரான்
3.கண்ணி நுண் சிறுத்தாம்பு
2.அந்தாதித் தொடையால் பெயர் பெற்றவை
1.முதல் திருஅந்தாதி
2.இரண்டாம் திருஅந்தாதி
3.மூன்றாம் திருஅந்தாதி
3.முதற் குறிப்பாலும் அந்தாதித் தொடையாலும்
1.நான்முகன் திருஅந்தாதி
4.பாடியவர்களால்
1.பெரியாழ்வார் திருமொழி
2.நாச்சியார் திருமொழி
3.பெருமாள் திருமொழி
5.அளவால்
1.பெரிய திருமொழி
2.திருஎழு கூற்றிருக்கை
6.பாவால்
1.திருஆசிரியம்
2.திருச்சந்த விருத்தம்
3.திருக்குறுந்தாண்டகம்
4.திருநெடுந்தாண்டகம்
7.செயலால்
1.திருப்பாவை
2.திருப்பள்ளி எழுச்சி
8.தன்மையால்
1.திருவிருத்தம்
2.சிறிய திருமடல்
3.பெரிய திருமடல்
4.திருமாலை
9.சிறப்பால்
திருவாய் மொழி
மடல், அந்தாதி, மாலை, பள்ளி எழுச்சி போன்ற பிரபந்தங்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.
ஆழ்வார்கள் வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு குலங்களில் பிறந்தவர்கள் எனினும் பக்தி என்னும் சரடு அவர்களை இணைத்தது.
திருக்கோயில்களில் எழுந்தருளி இருக்கும் இறைவனின் திருமேனி அல்லது திருமூர்த்தி ‘அர்ச்சை’ என்று அழைக்கப்பட்டது. அதைப் போற்றிப் பாடுவது ‘அர்ச்சாவதார ஈடுபாடு’ எனப்பெயர் பெற்றது.
மனிதனைக் கொண்டாடும் காலம் மாறி, இறைவனைப் போற்றும் காலம் வரும் போது, இறைவனுக்கு மனிதப் பண்பை ஏற்றினர். மக்களுக்குத் துன்பம் வரும் போது இறைவன் துயரம் தீர்ப்பான்; அடியவர்களுக்கு அருள் வழங்குவான். எனவே மனித உருவில் அவதாரம் எடுத்து, அவன் செயல்பாட்டால் அறத்தை, தர்மத்தைக் காப்பதாகக் காட்டினர்.
ஆழ்வார்கள் பாடியதாக வைணவர்கள் போற்றும் திருத்தலங்கள் திவ்விய தேசம் எனப்படும். அவை 108 ஆகும். அவற்றுள் திருப்பாற்கடல், திருப்பரமபதம் (வைகுண்டம்) ஆகிய 2 நீங்கலாக 106 உள்ளன. அவற்றுள் 12 தவிர ஏனையவை (94) தமிழ்நாட்டில் உள்ளன.
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தின் தனியன்கள் பிரபந்தங்களின் நோக்கத்தை, கனிச்சாறுபோலச் சுருக்கிக் காட்டும் சிறப்பிற்குரியவை.
அனைவருக்கும் புரியும்படி உரை எழுதிய வைணவச் சான்றோர்கள் பற்றிய குறிப்பையும் இப்பாடத்தின் வழி அறிந்திருப்பீர்கள் இல்லையா?
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் வைணவர்கள் – ஆழ்வார்கள் எழுப்பிய பக்தி மாளிகை, அவற்றின் தூண்கள் பன்னிரு ஆழ்வார்கள். அதை மேலும் அலங்கரித்தவர்கள் வைணவத் தொண்டர்கள்.
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் ஞானத் தேனீக்கள் கட்டிய தேன்கூடு; இசைக் களஞ்சியம்; வரலாற்றுப் பெட்டகம், கோயில்களின் பண்ணை.
மா, பலா, வாழை ஆகிய முக்கனி போல, பொருள், இசை, நடை ஆகிய மூன்றும் இணைந்து பக்திச் சுவைக்குச் சுவை சேர்க்கின்றது. பக்தியில் ஈடுபடும் ஆன்மாவுக்கு அறுசுவை உணவை வழங்கும் அற்புதமான அமுதகலசம்.
திவ்வியப்பிரபந்தம் பக்தனுக்குக் காமதேனு; பாமரனுக்குக் கற்பக மரம்; பிறவியைக் கடப்பவனுக்கு ஒரு பாய்மரம் அல்லது தோணி; ஞானத் தமிழில் எழுதிய ஞானக் களஞ்சியம்; ஞானப் பேழை.
திவ்வியப்பிரபந்தம் திருமாலைப் பற்றிய பாசுரங்கள் மட்டுமல்ல; படிப்பவரையும் பக்தனாக மாற்றும் ஆற்றலுடைய ஞானப் பழங்கள்.
திருமால் திருப்பாற் கடலில் பாம்பணையில் பள்ளி கொண்டதாகக் காட்டுவர்; அப்பாம்பின் பெயர் ஆதிசேடன் என்பதாகும்.
வைணவ உலகத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள் தரும் பொருள் வைணவ பக்தி இலக்கியக் கலைச் சொற்களாகக் கொள்ளத்தக்கன.
சேவித்தல் வழிபடுதல் திவ்ய தேசம் திருமால் கோயில் கொண்டருளும் இடம்
அவதாரம் திருமால் தோன்றிய பிறப்புகள்
நின்றான் திருமாலின் நின்ற திருக்கோலம்
இருந்தான் திருமாலின் இருந்த/ அமர்ந்த கோலம்
கிடந்தான் திருமாலின் கிடந்த /பள்ளிகொண்ட
கோலம்
அனந்த சயனம்
அல்லது அறி துயில் திருமாலின் நித்திரை
அவதரித்தல் பிறத்தல்
மங்களாசாசனம் ஆழ்வார்களால் போற்றப்பட்ட பெருமை
பாடம் - 3
பக்தியால் தமிழும் தமிழால் பக்தியும் வளர்ந்தன; வளம் பெற்றன. தமிழ், பக்தி மொழியாகியது. பக்திக்கு ஓர் ஊடகம் ஆகியதால் தமிழ் மொழியில் பல புதிய இலக்கிய வகைகள் (Genre) தோன்றின.
மானுடனைப் பாடிப் பரிசில் பெற்ற கவிஞர்கள் மானுடக் காதலைப் பதிவு செய்த புலவர்கள் தெய்வத்தை – தெய்வக் காதலைப் பாடி, பாடுபொருள், பாடும் முறை ஆகியவற்றில் மாற்றம் செய்தனர். அம்மாற்றங்கள் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டன. இவற்றை முதலில், முதல் மூவரும் திருமழிசை ஆழ்வாரும் அருளிய பாசுரங்கள் வழிக் காண்போம்.
• பொய்கை ஆழ்வார்
இவர் காஞ்சிபுரத்தில் (கச்சி) திருவெஃகாவில் ஐப்பசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் தோன்றினார். இவர் அருளியன 100 பாசுரங்கள் கொண்ட முதல் திருவந்தாதி ஆகும். (திருவெஃகா என்பது சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில் ஆகும்.)
• பூதத்தாழ்வார்
இவர் திருக்கடல் மல்லையில் (மாமல்லபுரம்) ஐப்பசி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் அருளிய 100 பாசுரங்கள் கொண்ட நூல் இரண்டாம் திருவந்தாதி என்று அழைக்கப் படுகின்றது.
• பேயாழ்வார்
இவர் திருமயிலையில் (மயிலாப்பூர்) ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில் தோன்றினார். இவர் அருளிச் செய்தன 100 பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதி ஆகும்.
ஆழ்வார்களில், காலத்தால் முன்னே தோன்றிய பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகிய மூன்று ஆழ்வார்களும் முதல் ஆழ்வார்கள் என்னும் பெருமைக்குரியவர்கள். இவர்களின் பாசுரங்கள், பாமரர் முதல் பாராண்ட மன்னர் வரை பண்டைத் தமிழகம் முழுவதும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின; கோயில்கள் பெருகின; பக்தி, இயக்கமாக மாறத் தொடங்கி எங்கும் பரவ வித்திட்டன.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று
(3183)
எனத் தொடங்குகின்றது. உலகத்தை விளக்கு ஆகவும் (அகல்), அந்த விளக்கிற்கு நெய்யாகக் கடலையும் ஒளியாகக் கதிரவனையும் வைத்து மாலையாகப் பாசுரங்களைத் திருவடிகளுக்கு அணிவிக்கின்றார் பொய்கையார். எதற்காக என்றால் துன்பக்கடலில் இருந்து நீங்குவதற்காக என்கின்றார்.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்
(3284)
எனப் பாடி, இரண்டாம் திருவந்தாதியைத் தொடங்குகின்றார். தம் தமிழை ஞானத்தமிழ் என்றும், அது திருமாலுக்கு உரியது என்றும் அருளியுள்ளார்.
இப்பாசுரத்தில் அன்பு என்னும் விளக்கு ஆர்வம் என்னும் நெய் ஊற்றப்பட்டு, மனம் என்னும் திரி இட்டு ஞானம் என்னும் சுடர்விளக்காக ஏற்றப் படுவதாகப் பாடுகின்றார் ஆழ்வார்.
இறைவனை எங்கும் தேட வேண்டாம். உன்னிடம் உள்ளான்; உள்ளத் தூய்மையால் மனம் உருகி அவனை நினைத்து வழிபடுங்கள் என்பதை இறைத் தொண்டர்கள் பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி எளிய தமிழில் எடுத்தோதினர்.
மேற்காட்டிய இரு பாசுரங்களும் பக்தியில் முதிர்ந்த கனிகள்; மனித நேயத்தை உலகிற்கு உணர்த்திய ஞானக் களஞ்சியங்கள்; எல்லா நாட்டினருக்கும், எல்லா மக்களுக்கும் உரியதான பண்பைப் பற்றிப் பேசும் ஒளி விளக்குகள்.
இருவர் ஏற்றும் விளக்குகள் எப்படி ஒத்த தன்மையன என்று காண்போமா?
பொய்கையார் பூதத்தார்
விளக்கு உலகம் (வையம்) அன்பு
நெய் கடல் ஆர்வம்
திரி ------ சிந்தை(மனம்)
ஒளி கதிரோன் ஞானம் (சுடர்)
பொய்கை ஆழ்வார் இடர் (துன்பம்) ஆகிய ஆழி (கடல்) நீங்கச் சொல்மாலை (சொல்லால் தொடுக்கப்பட்ட மாலை) சூட்டுகின்றார் திருமாலுக்கு. பூதத்தாழ்வார் இறைவனைப் பற்றியே நினைக்கும் ஐம்புலன்களையும் அளிக்க மனத்தைத் திரியாக இட்டு ஞானத்தினால் சுடர்விளக்கு ஏற்றி ஞானத் தமிழால் மாலை சூட்டுவதாக முதல் பாசுரத்தில் தம் ஞானச்சிறப்பைப் புலப்படுத்தி உள்ளார்.
இப்படி இரு ஆழ்வார்களின் நோக்கம் அவர்களின் முதல் பாசுரங்களில் முன்மொழியப்படுவது உள்ளம் கொண்டு மகிழ்வதற்குரிய சிந்தனை.
என்று கடல்கடைந்தது? எவ்வுலகம் நீரேற்றது?
ஒன்றும் அதனை உணரேன்நான் – அன்றது
அடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்
(3185)
என இறைவனிடம் வினா எழுப்பும் முகமாக அமைத்து வினைச்சொல் வழி இறைவன் செயல்களை வெளிப்படுத்துகிறார் பொய்கையாழ்வார். திருப்பாற் கடலைக் கடைந்தது, வாமனனாக உலகை அளந்தது, இராமனாக இலங்கைக்கு அணைகட்டி அடைத்தது, உலகைப் படைத்தது, மண்ணை உண்டது, உமிழ்ந்தது ஆகிய செய்திகளை ஒரே பாசுரத்தில் சொல்லி விடும் திறன் வியப்பிற்குரியது.
புவிகால்நீர் விண்பூதம் ஐந்தும் – அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க் கியல்பு
(3195)
என்று ஐம்புலன்களாகவும், ஐம்பூதங்களாகவும், ஞானம் (அறிவு), வேள்வி, அறம் ஆகவும் நிற்பது இறைவன் இயல்பு என்பர்.
மேலும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் அவனையே நினைத்து உருகவேண்டும் என்பதை,
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கைஉலகம்
தாயவனை அல்லது தாம்தொழா – பேய்முலைநஞ்சு
ஊணாக உண்டவன் உருவொடு பேரல்லால்
காணாகண் கேளா செவி
(3194)
(தாயவன் = தாவியவன், பேய் = பெண் வடிவில் வந்த ஓர் அசுரன்)
என்ற பாசுரம் வழி அறிகின்றோம்.
ஐம்புலன்களும் இறைவனுக்காக என்னும் பாசுரங்கள் சிலப்பதிகாரத்தை நமக்கு நினைவூட்டுகின்றன அல்லவா? ‘உரன் (அறிவு) என்னும் தோட்டியால் ஓரைந்தும் காக்க வேண்டும்’ என்பதில் கருத்தாய் இருந்தார்கள் ஆழ்வார்கள். எனவேதான் பொய்கை ஆழ்வாரே மூன்று பாசுரங்களில் இக்கருத்தைக் கூறுகின்றார். (3246, 3255, 3278)
அன்புஆழி யானை யணுகென்னும் நாஅவன்றன்
பண்புஆழித் தோள்பரவி யேத்தென்னும் – முன்பூழி
காணானைக் காண்என்னும் கண்;செவி கேள்என்னும்
பூணாரம் பூண்டான் புகழ்
(3255)
அதாவது ஐம்புலன்களும் துளசி மாலைஅணிந்த திருமாலைத் தொழுது (கை), வாழ்த்தி (வாய்), கண்டு (கண்), கேட்டு (செவி) இருக்கக் கட்டளை இடுவதாகச் சொல்லி, தம் நிலையைப் பொய்கை ஆழ்வார் விளக்குகின்றார்.
பேயாழ்வாரும்,
காண்காண் எனவிரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்தார் அகலத்தான் பொன்மேனி – பாண்கண்
தொழில்பாடி வண்டறையும் தொங்கலான் செம்பொற்
கழல்பாடி யாம்தொழுதும் கை
(3418)
என்று கண்கள் கார் மேனியானைக் கண்டு, வண்டுகள் (ரீங்காரம்) ஒலிக்கும் மாலையை அணிந்தவனின் திருவடிகளை வணங்கிப் பாடிக் கைதொழுவதாகவும் பாடுகின்றார்.
சங்க அகப்பாடல் புலவர் சிலரும், தெய்வப்புலவர் திருவள்ளுவரும் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனும் பெண்ணிடம் உள்ளது என்று கூறினர். அந்த மானுடக்காதல் பக்தி இயக்கக் காலத்தில் இறைக்காதலாக – இறைவனின் மீது காதல்கொண்டு பாடும் ஆன்மீகக் காதலாக மலர்ந்ததற்கு மேற்காட்டிய பாசுரங்கள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
அவரவர் தாம்தாம் அறிந்தவா றேத்தி
இவரிவர் எம்பெருமான் என்று – சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல்
(3197)
மக்கள் தாம் அறிந்தவாறு இறைவனைச் சுவரில் சித்திரமாக வரைந்தும், சிலையாக வைத்தும் மனம் உருகி வழிபடலாம் என்று ஆழ்வார் குறிப்பிடுகின்றார் (3197). இப்பாசுர வழி 5-ஆம் நூற்றாண்டளவில் மக்களால் கொள்ளப்பட்ட வழிபாட்டு முறைகளையும் அறிகின்றோம்.
வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ – கூரிய
மெய்ஞ்ஞானத் தால்உணர்வார் காண்பரே மேலொருநாள்
கைந்நாகம் காத்தான் கழல்
(3230)
(மதக்களிறு ஐந்து = ஐம்புலன், நிறீஇ = நிறுத்தி, கைந்நாகம் = யானை)
எனவரும் பாசுரத்தால் அறியலாம்.
மேலும் கன்மம், மாயை ஆகிய மலங்களை நீக்கி, ஐம்புலன்களையும் மனம்போன போக்கில் திரியவிடாமல் நிறுத்தி ஞானத்தினால் உணரலாம் என்று வழியைக் காட்டுகின்றார் ஆழ்வார்.
அரிய புலன்களை அடக்கி, தொழுது மலர்கொண்டு தூபம் கையில் ஏந்தி வழிபடுவதற்கு எழுவாய் நெஞ்சே (3241) என நெஞ்சினை அழைக்கின்றார்.
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு
(3236)
என்னும் பாசுரம் காட்டுகின்றது.
திருமால் நடந்து சென்றால் குடை, அமர்ந்து இருந்தால் அரியணை, நிற்கும்போது காலணி (பாதுகை), இப்படிச் செயல்பாடுகளில் துணையாகின்றது ஆதிசேடன் என்னும் பாம்பு. மற்றும் கடலில் மிதப்பதற்குத் தெப்பமாகவும், விளக்காகவும் (ஒளி) ஆடையாகவும், படுக்கையாகவும் விளங்குவது ஆதிசேடன் என்று அதற்கு ஒரு பாசுரமும் பாடியுள்ளார் பொய்கை ஆழ்வார்.
• வராக அவதாரம்
இடந்தது பூமி; எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச!-கிடந்ததுவும்
நீரோத மாகடலே; நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது
(3222)
(இடந்தது = தோண்டியது, கடந்தது = அழித்தது, கஞ்சன் = கம்சன், கிடந்தது = படுத்தது)
என்ற பாசுரம் வினைச்சொல் முன்னும் பெயர்ச்சொல் பின்னும் வந்து மிடுக்கான உணர்வைப் பாடலைப் படிக்கும்பொழுதே ஏற்படுத்துகின்றது; அதே நேரத்தில் ஆழ்வாருக்கு ஆழியான் மீதுள்ள ஈடுபாட்டையும் உணர்த்தி நிற்கின்றது.
• நரசிம்ம அவதாரம்
வடியுகிரால் ஈர்ந்தான் இரணியனது ஆகம்
(3200:3-4)
இரணியனை நகத்தால் கிழித்தவன்.
பொறியுகிரால் பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா!
(3276:3-4)
அவன் ஆணவத்தை அழித்து அருளியவன் அவன்.
திருவேங்கடத்தில் நின்றான்; விண்ணகரில் (வைகுண்டம்) இருந்தான்; திருவெஃகாவில் கிடந்தான்; திருக்கோவலூரில் நடந்தான் என்று சொன்னால் துன்பம் தீரும் (3260) எனத் திருமால் எழுந்தருளிய திருத்தலங்களை மனத்தில் நிறுத்தி வழிபட்டால் வினை தீரும் என்று சுட்டுகின்றது ஒரு பாசுரம்.
• இராம அவதாரம்
திருவேங்கடமலை யாருக்குரியது என்றால் ‘முன்பு மாரீசன் இறக்கும்படி அம்பு எய்தவனுக்குரியது’. திருத்தலங்களைச் சுட்டும்போது மாரீசன் மான் வடிவில் வந்த செய்தியைச் சொல்லி, அச்செயலுக்குரியவனுடைய மலை எனப் பாடுகின்றார் (3265). இப்படி இதிகாசக் கதைக் கூறுகள் ஆங்காங்கு அமைந்து பொலிவும் வனப்பும் தோற்றுவித்து இலக்கியப் படைப்பை வளப்படுத்துகின்றன.
• கிருஷ்ண அவதாரம்
சிறு குழந்தையாக இருந்த கண்ணன் மண், மலை, கடல், காற்று (மாருதம்), விண் ஆகியவற்றை விழுங்கினான் என்று சொல்கிறார்கள். இதனைப் பார்த்தால் ஆழியானுக்கு வாய் உலகம் அளவு உண்டோ? (3193) என்று வினாத் தொடுக்கின்றார் முதல் ஆழ்வார்.
பொய்கையாழ்வார் திருமாலை மறந்தறியாதவர்; கடல் வண்ணனைக் கண்ணாரக் கண்டவர். எனவே,
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ ஏழைகாள்? – அன்று
கருஅரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கம் மேயான் திசை
(3189)
எனத் தம் அனுபவத்தை எடுத்துச் சொல்லுகின்றார். எனவே இத்தன்மை உடைய இறைவனைத் தொழுபவர்கள் ‘வினையால் துன்பப்பட மாட்டார்கள்; நரகத்திற்குச் செல்ல மாட்டார்கள்’ (3248) என்றும் கூறி வழிபடச் சொல்லுகின்றார்.
ஐம்புலன்கள் ஆகி நின்றவனும், ஐம்பெரும் பூதங்களாகி உலகத்து உயிர்களை வாழ வைப்பவனும் உலகளந்த பிரான் எனத் தம்முள் பெருமாளைக் காணும் ஆழ்வார், தம் மனம் திருமாலைத் தேடி ஓடுகின்றது என்று தம் நிலையை வெளிப்படுத்துகின்றார்.
மலர்கள் நிறைந்த கொடி கொம்பை நாடிப் படர்வது போல, தம் மனம் நிலவைக் கடந்து வானத்தின் உச்சியை நோக்கி, அருள் செல்வம் வழங்கும் பெருமானைத் தேடி ஓடுகின்றது என ஓர் உவமை வழி விளக்குகின்றார்.
தளிர்கள் நிறைந்த கொடி படர்வதற்குக் கொம்பைத் தேடுவது இயல்பு. அதுபோல இறைப்பற்று மிகுந்திருக்கும் தம் உயிர் அருள் நிறைந்திருக்கும் இறைவனை நாடிச் செல்வது இயல்பு என்பதைப் பெறவைக்கின்றார் பூதத்தார்.
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் இறைவன் என்று சொன்ன பின்பு அப்புலன்கள் நல்வழிச் செல்வது இயற்கைதானே!
கண்ணனாய்ப் பாரதப் போரில் தேரை ஓட்டிச் சென்றான்; இராமனாய் மாயமானின் பின் சென்று சீதையைப் பிரிந்தான்; பாம்பணையில் பள்ளி கொண்டான் (3298) எனத் தம் மனத்து உள்ள வேங்கடத்தானை – தேவாதி தேவனைப் போற்றுகின்றார் பூதத்தார்.
• வாமன அவதாரம்
மாவலியிடம் குள்ள வடிவினனாகச் சென்று மூன்று அடி மண்கேட்டு, பின் வடிவம் பெரிதாகி ஓர் அடியால் மண்ணையும், மற்றோர் அடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடியை மாவலி அரசனின் தலையில் வைத்து அவன் அகந்தையை அவித்தவன். கருமாணியாய் (கரிய நிறத்து பிரம்மச்சாரியாய்) இரந்த (பிச்சை கேட்ட) கள்வன் எனப் பல பாசுரங்களில் திருமாலைப் பாடியுள்ளார்.
• நரசிம்ம அவதாரம்
வரத்தின் வலிமையும், உடல் வலிமையும் இரணியனை அகங்காரம் படைத்தவனாக ஆக்கின; நரசிம்மனாகத் தோன்றி அதை அழித்தான் திருமால். அப்படிப்பட்ட திருவடியை நாம் வணங்குவோமாக எனப் பாடுகின்றார்.
வரம் கருதித் தன்னை வணங்காத வன்மை
உரம் கருதி மூர்க்கத் தவனை நரம்கலந்த -
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே
அங்கண்மா ஞாலத் தமுது
(3367)
(மூர்க்கத்தவன் = இரணியன், திருவன் = திருவினை உடையவன், நரம் கலந்த சிங்கம் = நரசிங்கம்)
அவன் திருவடிகள் இந்த உலகத்தவர்களுக்கு அமுது ஆகும்.
மண்ணுலகம் ஆளேனே; வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே – நண்ணித்
திருமாலைச் செங்கண் நெறியானை – எங்கள்
பெருமாளைக் கைதொழுத பின்
(3373)
‘மண்ணுலக ஆட்சியோ, வானுலக ஆட்சியோ தேவையில்லை. எமக்கு ஒரு குறையும் இல்லை, எங்கள் பெருமாளை வணங்கிய பிறகு’ என்கிறார்.
இருந்தமிழ்நல் மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது
(3357)
(இருந்தமிழ் = பெருந்தமிழ்)
எனத் தமிழால் பக்திப் பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.
பணிந்தேன் திருமேனி; பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன்சேவடிமேல் அன்பால்
(3348:1-2)
கண்டேன் திருமேனி யான்கனவில் ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி – கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்த பின்னும்
மறுநோய் செறுவான் வலி
(3350)
(கனலும் = தீஉமிழும், ஆழி = சக்கரம்)
இறைவன் அருளால் திருவுருவைக் கண்டேன்; அவன் கையில் சக்கரம் கண்டேன்; என் வினைகளாகிய நோயைப் போக்கினான். பிறவியாகிய நோய் மறுபடியும் வராதவாறு அழித்த அவன் திறமையையும் கண்டேன் எனச் சொல்லி, மக்களை இறைவன் மீது நம்பிக்கை வைக்க நெறிப்படுத்துகின்றார் ஆழ்வார்.
பகற்கண்டேன்; நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே; – மிகக்கண்டேன்
ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்
வான்திகழும் சோதி வடிவு
(3364)
(ஊன் = தசை, நேமி = சக்கரம்)
என்று கூறுகிறார்.
இப்படி, பக்தி இயக்கக் காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியங்கள் மேற்குறித்தவற்றையும் பாடின. ஆனால் அவற்றை மட்டும் பாடி மக்களை அவர்களின் வாழ்க்கையை அச்சப்படும்படி செய்யாமல் வாழ்வை அழகு உடையதாக, மகிழ்ச்சி உடையதாக மாற்ற வேண்டும். அதற்கு மனம் இன்றியமையாதது. அந்த மனத்தை இறைவனிடம் செலுத்துங்கள். நிலைத்த பொருளும் நிலைத்த இன்பமும் பெறுவீர்கள் என அறிவூட்டின.
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று
(3384)
(அருக்கன் = சூரியன், சங்கம் = சங்கு, ஆழிவண்ணன் = கடல்நிற முடையவன்)
இப்படித் திருமாலைக் கண்டதால் ஏழ்பிறப்பும் அறுத்தேன் எனத் தம் பாசுரத்தைத் தொடங்குகின்றார் பேயாழ்வார் (3385).
உலகத்தை விளக்காக்கினார் பொய்கை ஆழ்வார். அன்பை விளக்காக ஆக்கி ஞானச் சுடர்விளக்கை ஏற்றி ஞானத்தமிழ் கொண்டு வழிபட்டார் பூதத்தாழ்வார். பேயாழ்வாரோ முன் இருவரையும் விஞ்சி திருக்கண்டேன் எனப் பாடி, “மருந்தும் பொருளும் அமுதமும் திருந்திய செங்கண்மால் தான்” எனப் போற்றுகின்றார் (3387).
சென்றநாள் செல்லாத செங்கண்மால் எங்கள்மால்
என்றநாள், எந்நாளும் நாளாகும் – என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்
மறவாது வாழ்த்துகஎன் வாய்
(3400)
எனப் பாடுகின்றார். இறைவனை வாழ்த்திய நாள்களே நல்ல நாள்கள். கழிந்த நாட்கள் மட்டுமல்ல, வர இருக்கின்ற நாளும் நல்ல நாளாகும். எனவே இறைவனை வாய் வாழ்த்திக் கொண்டே இருக்கவேண்டும் என வேண்டுகின்றார்.
கடுமையான நோன்பு நோற்று இறைவனை வழிபட வேண்டாம் என்பது ஆழ்வார் காட்டும் வழி.
பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும் ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர்வேண்டா – விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து
(3459)
திருவெஃகாவில் கோயில் கொண்டுள்ள திருமாலை மலர் தூவி வழிபட்ட அளவில் தீவினைகள் நீங்கும் என்பது பொருள். கடுந்துறவே இறைவனை அடையும் வழி என்பதிலிருந்து தம்மையும், மக்களையும் விடுவித்துக் கொள்ள விரும்பிய ஆழ்வார்களின் சிந்தனையை வெளிப்படுத்தும் பாசுரமே மேலே கூறிய பாசுரம் ஆகும்.
• மராமரம், மான்மறி, குறளுரு
இராமன் ஏழு மராமரங்களை எய்தவன்; சீதைக்காக மாயமான் வடிவில் வந்த மாரீசனை அம்பு எய்து கொன்றவன்; குறள் உருவில் மாவலியிடம் நிலம் கொண்டவன் எனக் கதைக் குறிப்புகளைச் சொல்லி ஆழியானின் புகழ்பாடுகின்றார் பேயாழ்வார்.
• மாமுதலை
திருமாலை வழிபடுவதற்குத் தாமரை மலர் பறிக்கச் சென்றது கஜேந்திரன் என்னும் யானை; அங்கு, குளத்துள் கிடந்த முதலை, அதன் காலைப் பற்றியது. திருமாலின் பெயரைச் சொல்லி யானை அலற, அவன் சக்கரத்தைச் செலுத்தி ஆழ்ந்த நீரில் வளர்ந்த பெரிய முதலையைக் கொன்றான்.
……………………………………. குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
(3482)
அதுபோல அடியாரின் துன்பம் பொறுக்கமுடியாத அவனது திருப்பாதம் தமக்குச் சார்ந்து வாழும் இடம் என்பர் பேயாழ்வார்.
• விளங்கனி
கன்றினைத் தடியாகக் கொண்டு விளங்கனி மேல் எறிந்தவன் கண்ணன். அவன் மலை எப்படிப்பட்டது காண்போமா!
பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப்பேர்த்து – கார்த்த
களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு
(3451)
சுனைநீரில் தன் நிழலைக் கண்ட கடுவன் (ஆண்குரங்கு) வேறு ஓர் குரங்கு அங்கே இருப்பதாக எண்ணி, வேறு ஓர் இடத்திற்குச் சென்றது; அது களங்கனியை உண்ணக் கைநீட்டும் வேங்கடமலை. அந்த மலைதான் விளங்கனி வடிவில் வந்த அசுரனை அழித்த மலை என இயற்கை வருணனையோடு தம் மனங்கவர்ந்த திருமாலின் திருச்செயல்களையும் விளக்குகின்றார். ‘மேனாள் குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று’ திருவேங்கடம் (3454) என்று மொழிகின்றார்.
நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று
இறையுருவம் யாமறியோம் எண்ணில் – நிறைவுடைய
நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே
பூமங்கை கேள்வன் பொலிவு
(3439)
வெண்மையோ, சிவப்போ, பச்சையோ, கருமையோ தெரியாது. தாமரை மலரில் வீற்றிருக்கும் கலைமகளும், திருமகள் தன் மணவாளனின் தோற்றப் பொலிவைப் பேச வல்லவளோ என்கின்றார்.
ஐம்புலன்களையும் மனம் போன போக்கில் அலையவிடாமல் மனம் ஒன்றி நின்றால், ஏழு பிறப்பையும் நீக்கலாம்.
உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப்படுத்தேன்
(3477)
(வலைப்படுத்தேன் – என் பிடிக்குள் அடக்கினேன்)
இப்படி மாயனை நெஞ்சில் நிறுத்தலாம்; நிலையாகப் பள்ளி கொள்ளச் செய்யலாம் எனத் தம் அனுபவத்தைச் சொல்மாலையால் எடுத்து உணர்த்துகின்றார் பேயாழ்வார்.
• கிருஷ்ணன்
கிருஷ்ண அவதாரச் செயல்களைச் சுட்டி அக்கண்ணனைக் கண்கள் காணவேண்டும். மாயவனின் பல பெயர்களைச் சொல்லுவோம் நாராயணா எனச் சொல்லி இருகையால் கூப்பி வணங்குவோம். என்றெல்லாம் தம் நெஞ்சுக்கும் கூறுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.
நாமம் பலசொல்லி நாராய ணாஎன்று
நாம்அங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே!-வாமருவி
மண்ணுலகம் உண்டுமிழ்ந்த வண்டறையும் தண்துழாய்
கண்ணனையே காண்க நம்கண்
(3391)
கண்ணனைக் கண் காணவேண்டும் என்னும் பாசுரம் நாம் முதல் பாடத்தில் சொன்ன சிலப்பதிகாரம் காட்டிய சிந்தனையோடு ஒத்திருப்பது எண்ணத்தக்கது.
அறிவு என்னும் தாளைக் (பூட்டு) கொண்டு ஐம்புலன்களை அடக்கி, கதவுக்குள் அடைத்து வைத்து நான்கு வேதங்களைச் சொல்லி நன்கு உணர்பவர்கள் கண்ணனை – பாற்கடல் வண்ணனை – பாம்பணையின் மேல் துயில்வானை உணரலாம் (3375).
அவன் அறிவு சான்ற நூல்களின் பொருளாக உள்ளான் (நூற் கடலான் 3394) ஆலிலை மேல் துயின்றவன். இப்படிக் கண்ணனின் செயல்களைக் காட்டிக் காட்டி ஈடுபாட்டை வெளிப்படுத்துவன பேயாழ்வார் பாசுரங்கள்.
முதல் ஆழ்வார்களும், திருமழிசை ஆழ்வாரும் தொண்டை நாட்டினர். நால்வரும் அந்தாதி பாடி அருளியவர்கள்; சமகாலத்தவர்கள்.
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் – யான்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை
சிந்தாமல் கொண்மின்நீர் தேர்ந்து
(3484)
பிரமனைநாராயணன் படைத்தான்; பிரமன் சங்கரனைப் படைத்தான். எனவே நாராயணனே முதற்பொருள் என்பதை நான் இவ்வந்தாதியின் மூலம் அறிவிக்கிறேன்; நீங்கள் இதனைக் குறைவற மனத்தில் கொள்ளுங்கள் எனத் தன் நோக்கத்தை விளக்கி, நான்முகன் திருவந்தாதியைத் தொடங்குகின்றார், திருமழிசைப்பிரான்.
அடுத்தே, எப்படி இருப்பினும் எத்தவம் செய்தாருக்கும் ‘அருள் முடிவது ஆழியானிடம்’ என்கின்றார் (3485).
பாலிற் கிடந்ததுவும் பண் டரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதும் ஆரறிவார் – ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளைஅப்பில்
அருபொருளை யானறிந்த வாறு?
(3486)
ஆல்இலை மேல் துயின்றவனை வழிபட,
வாழ்த்துக வாய்;காண்க கண்;கேட்க செவி மகுடம்
தாழ்ந்து வணங்குமின்கள் தண்மலராய்
(3494:1-2)
இருகரம் கூப்பி, வாய் அவன் புகழ்பாட, கண் அவன் திருஉருவைக் காண, செவி (காது)யில் அவன் அவதாரத்தைச் சொல்லும் பாசுரங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பர். ஏனென்றால் ‘நாக்கொண்டு மானிடம் பாடேன்’ (3558) எனச் சொன்னவர் திருமழிசை ஆழ்வார்.
செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்
புவிக்கும் புவியதுவே கண்டீர் – கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான்
(3552)
(புவி = பூமி, புவி = இடம்)
என யாதுமாகி நின்ற மாயனை மீண்டும் மீண்டும் கவிப்பொருளாக்கிக் கைகூப்பி வணங்குகின்றார்.
வீடுபேறு அடையும் வழி அறியாது உடலை வருத்தி, எலும்புக்கூடு போலத் தோற்றம் உருவாகும்படி தவம் புரிந்து வாழவேண்டாம். வீடுபேற்றைக் கொடுக்க வல்லவன், வேத முதற் பொருளான நாராயணன் தான் (3496) என வீடுபேறு பெறும் வழி காட்டுகின்றார்.
குலங்களாய ஈரிரண்டி லொன்றிலும் பிறந்திலேன்
கலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்
புலன்களைந்தும் வென்றிலேன், பொறியிலேன்,புனித! நின்
இலங்குபாத மன்றி மற்றோர் பற்றிலேனெம் ஈசனே!
(841)
மேற்குலங்களில் பிறத்தலும் கலைகளில் சிறத்தலும் ஐம்பொறிகளை வெல்லுதலும் ஆகிய சிறப்புகள் ஏதும் எனக்கு இல்லை. உன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றையும் நான் அறியேன் என்று தம் இயலாமையையும் அளவில்லாத பக்தியையும் ஆழ்வார் தம் திருச்சந்த விருத்தத்தில் குறிப்பிடுகிறார்.
பாம்பணையில் துயில் கொண்டிருக்கும் நாதன் தமக்குக் கண்ணாக இருந்து நெறிப்படுத்துபவன் எனச் சொல்லும் திருமழிசை ஆழ்வார்,
ஊனில்மேய ஆவிநீ; உறக்கமோடு உணர்ச்சிநீ
ஆனில்மேய ஐந்தும்நீ: அவற்றுள்நின்ற தூய்மைநீ
வானினோடு மண்ணும்நீ; வளங்கடற் பயனும் நீ
யானும்நீ, அதன்றிஎம் பிரானும்நீ; இராமனே!
(845)
(ஊனில் = உடம்பில், ஆனில் மேய ஐந்தும் = பசுதரும் பயன்கள்-பால், தயிர், நெய், கோமியம், சாணம், கடற்பயன் = அமுதம், பவழம் போன்றன)
என்று பாடி ‘உன்னை என்னிலிருந்து பிரித்து விடாதே’ என வேண்டுகிறார்.
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞான மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ? இலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே!
(812)
(ஏனம் = வராக அவதாரம்)
எனத் திருமாலின் அருளிச் செயல்களுக்குக் காரணம் கற்பிக்கின்றார் ஆழ்வார்.
அன்றுநான் பிறந்திலேன்; பிறந்தபின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததுமென் நெஞ்சுளே
(815)
என்பர். பிறந்த உயிர் அழிவது தெரிந்திருந்தும் இந்த உலகத்தில் உள்ள மக்கள் ஏன் இறைவனை எண்ணி வாழ முடியாமல் உள்ளனர் என வினவுகின்றார் (817).
• கால் வலையில்படுதல்
வீடுபேறு அடையும் வழி தெரியாது உடலை வருத்தி, தவம்புரிந்து அலைந்து திரிய வேண்டாம். வீடுபேறு கொடுக்கவல்ல மெய்ப்பொருளும் வேதமுதற் பொருளும் விண்ணவர்க்கு நற்பொருளும் நாராயணன் தான் (நான்முகன் திருவந்தாதி – 3496) என வழிகாட்டுகின்றார். அந்த வழி மிக எளிது. பல மலைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது திருவேங்கடமலையைச் சொன்னேன். இதனால் வீடுபேறு உறுதி என்னும் நிலையை அடைந்தேன். அதை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.
வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -
(3523)
வாமனன் அடியினை வணங்கினால் ‘ஞானமும் செல்வமும் சிறந்திடும்! திருமாலைப் போற்றினால் தீவினைகள் நீங்கும் (825), அவன் ‘விண்கடந்தசோதி, ஞானமூர்த்தி, பாவநாச நாதன்’ (778), விண்ணின் நாதன் (798), கடல் கிடந்தகண்ணன் (844), வேதகீதன் (868), சாம வேத கீதன் (765) எனப் போற்றிப் புகழ்கின்றார்.
காளிங்கன் என்னும் பாம்பின்மேல் நடனம் ஆடியவன்; குடக்கூத்தாடிய கொண்டல் வண்ணன், கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்தவன். விளங்கனி வடிவில் வந்த அரக்கனைக் கொன்றவன் (789).
ஆய்ச்சிபாலை யுண்டு மண்ணை யுண்டு வெண்ணெயுண்டு,பின்
பேய்ச்சிபாலை யுண்டு பண்டொ ரேனமாய வாமனா!
(788:3-4)
என வாமன அவதாரத்தைச் சொல்லும் ஆழ்வார் வராக அவதாரத்தைச் சுட்டி விளிக்கின்றார். ‘உரத்தில் (மார்பு) கரத்தை (கை) வைத்து நகத்தால் கீறியவன், வாமனன் ஆகி மண் இரந்தவன் (776) என இரணிய அவதாரத்தையும் வாமன அவதாரத்தையும் ஒரு பாசுரதத்தில் சுட்டுவர்.
திருமால் உள்ளங்கையில் ஆழி (சக்கரம்), சங்கு, தண்டு, வில், வாள் ஏந்தியவன் (775, 848, 857).
கூனியின் முதுகின் மீது வில்லுண்டை எறிந்த நாதன் வாழ்கின்ற ஊர் திருவரங்கம்.
கொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனிகூன்
உண்டைகொண் டரங்கவோட்டி உள்மகிழ்ந்த நாதனூர்
(800)
‘இலங்கை மன்னன் சிரங்கள் பத்தும் அறுத்து உதிர்த்த செல்வர்’ வாழும் இடம் திருவரங்கம் ஆகும்.
அரங்கமென்பர் நான்முகத் தயன்பணிந்த கோயிலே(802)
இலங்கையை அழித்த ஆழியானை நான்முகன் வந்து பணிந்த ஊர் அரங்கம் எனப் பாசுரம் செய்கின்றார் திருமழிசையாழ்வார், திருச்சந்தவிருத்தில்.
திவ்ய தேசங்களின் புகழ்பாடும் அடியார் பழைய புராணக்கதைகளைப் பொதிந்து புதிய விளக்கம் கொடுக்கின்றார்.
அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண
இழைப்பன் திருக்கூடல் கூட
(3522)
எனப் பாடுவது, மானுடக் காதல் இறைவன் மீது கொண்ட காதலாக மாற்றம் செய்யப் பெற்றதைக் காட்டுகின்றது.
வாள்களாகி நாள்கள்செல்ல நோய்மைகுன்றி மூப்பெய்தி
மாளும்நாள்அது ஆதலால் வணங்கிவாழ்த்தென் நெஞ்சமே!
(863)
எனப் பிறப்பு இறப்பு நீங்க, உடம்பின் நிலையாமையைச் சொல்லி மனத்தை மாயன்பால் வைக்க வேண்டுகிறார். வீடுபேறு தருபவன்; வெற்றி அளிப்பவன்; ஞானம் ஆனவன், அத்தலைவன்.
அத்தனாகி, யன்னையாகி யாளுமெம்பி ரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப் பொழித்துநம்மை ஆட்கொள்வான்
(866:1-2)
அச்சம், நோய், அல்லல் (துன்பம்), பல்பிறப்பு, மூப்பு (முதுமை) ஆகியவற்றை அகற்றி வான் ஆளும் பேறு கொடுப்பான். நாகணையில் (பாம்பணை) கிடந்த நாதன் என்பர்.
பலபிறவிகள் எடுத்த தம் உடம்பை, அவனே உய்யக் கொள்வான். ‘என் ஆவிதான் இயக்குஎலாம் அறுத்து அறாத இன்பவீடு பெற்றதே’ (871) எனத் திருச்சந்த விருத்தத்தின் இறுதிப் பாசுரம் திருமழிசை ஆழ்வாரின் பற்று அறுத்த நிலையைக் காட்டுகின்றது.
ஒன்றுசாதல், நின்றுசாதல், அன்றியாரும் வையகத்து
ஒன்றிநின்று வாழ்தலின்மை கண்டுநீச ரென்கொலோ
அன்றுபா ரளந்தபாத போதையுன்னி வானின்மேல்
சென்றுசென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே?
(812)
என்னும் பாசுரம் தம்முயிர் போலவே பிற உயிரும் உய்திபெறும் வழியை நாட வேண்டும் என ஏங்கும் ஆழ்வாரின் விழைவைக் காட்டுகின்றது.
மறம்துறந்து வஞ்சமாற்றி யைம்புலன்க ளாசையும்
துறந்துநின் கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன்
(849)
எனப் பாடி மீண்டும் பிறவாமல் இருக்கும் பேறும், உன்னை மறவாதிருக்கும் பேறும் வேண்டும் என்பர்.
இந்தப் பாடத்தில் முதலாழ்வார்களும் திருமழிசை ஆழ்வாரும் ஆற்றிய தொண்டினை விரிவாகக் கண்டோம். ஆழ்வார்கள் திருமாலை வழிபடு தெய்வமாகக் கொண்டனர். தாம் பெற்ற இன்பத்தைச் சாதாரணக் குடிமக்களும் பெறவேண்டும் என்று விரும்பினர். பிறப்பில் மேல் கீழ் என்பது இறைவனை வழிபடத் தடைக்கல்லாக இருக்கக்கூடாது எனத் துணிந்தனர். எனவே இறைவனை மனம் ஒன்றி உள்ளன்போடு வழிபட்டால் போதும், அவன் அருள் கிட்டும் என எளிய தமிழில் பாசுரங்கள் இயற்றினர். ஊர் ஊராக எழுந்தருளி இருக்கும் திருமால் கோயில்களைப் பற்றிப் பாடினர்.
அந்தந்த ஊரில் வாழும் மக்கள் தம் கடவுளை வழிபட வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.
முதல் மூவரும், திருமழிசை ஆழ்வாரும் தம் பாசுரங்களில் பயன் உரைக்கும் பாசுரங்களைப் பாடவில்லை. எனினும் இறைவனை வழிபடுவதால் பெறும் பயனைப் பாசுரங்களின் இடை இடையே சுட்டியுள்ளார்கள். ஆழ்வார்களுள் காலத்தால் முற்பட்டவரான இவ்வாழ்வார்கள் நால்வரும் வைணவ பக்தி இலக்கியம் செழித்து வளரவும் பரவவும் வித்திட்டவர்கள்.
பாடம் - 4
நான்கு ஆழ்வார்களும் இறைவனுக்கு ஒவ்வொரு விதமாய்த் தொண்டாற்றினார்கள். ஆண்டாள் நாச்சியாரோ இறைவனிடத்துக் காதல் கொண்டு இறைவனையே மணக்க உறுதி கொண்டாள். இவர்கள் தொண்டிலும் காதலிலும் கனிந்து பாசுரங்கள் பல பிறந்தன.
• ஆழ்வார்களின் தொண்டு
ஆழ்வார்கள் திருமாலுக்குப் பூமாலை கொடுத்தும் சொல்மாலை சூட்டியும் வழிபட்டனர். நாயக-நாயகி பாவத்தில் தம்மை நாயகியாகவும் இறைவனை நாயகனாகவும் பாவித்துக் காதல் கொண்டனர்; ஆண்டாளுக்கோ பாவிக்க வேண்டிய தேவையில்லாததால் நாயகியாய் நின்று பள்ளமடையாகப் (பள்ளம் நோக்கிப் பாயும் வெள்ளமாக) பக்திக் காதலை வெளிப்படுத்தினாள். எல்லா ஆழ்வார்களையும் விட ஒருபடி மேலே சென்று பெருமானுக்குத் தொடுத்த மலர்மாலையைத் தான் சூட்டி அழகு பார்த்துப் பின் பெருமானுக்குக் கொடுத்து, சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாயினாள். மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று கூறியவள் அருளிச் செய்தவை திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய நூல்களாகும். இவற்றைப் பற்றியும் இப்பாடத்தில் படிக்கலாம்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு
(812)
எனத் திருப்பல்லாண்டு தொடங்குகின்றது. இக்காப்புப் பாசுரம் திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் காப்பாக அமைந்து, ஆழ்வார்களின் நோக்கம் திருமாலின் திருவடி அடைவது என்பதைக் காட்டுகிறது.
அந்தியம் போதில் அரியுரு வாகி
அரியை அழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத்
தாண்டென்று பாடுதுமே
(6:3-4)
(அந்தியம் போது = மாலை நேரம், அரியுரு = நரசிங்கம். அரி = பகைவன், பந்தனை = வாட்டம்)
என்பர். இறைவனிடம் அடியவர்களும் மக்களும் தங்கள் வேண்டுதலைச் செய்வது வழக்கம். ஆனால் இங்கோ பெரியாழ்வார் நரசிம்ம அவதாரம் செய்த வாட்டம் தீரப் பல்லாண்டு பாடுவோம் என அழைப்பது தாய்மை கலந்த பக்தியின் எல்லை எனலாம்.
கண்ணனைக் குழந்தையாக எண்ணி அளவிலா அன்புடன் குழந்தையின் எல்லாச் செயல்களிலும் மனம் தோய்ந்து பாடியுள்ள பாசுரங்கள் இதயத்தை ஈர்க்கும் பாங்கின. பெரியாழ்வார் யாருக்குத் தாயாகிறார்? சகல உயிர்களுக்கும் அருள் செய்யும் பகவானுக்கே தாயாகிறார். எத்தனை உயர்ந்த உள்ளம்!.
கண்ணனை ஒரு தாயின் நிலையிலிருந்து பாடுகிறார். தாய் நிலையைத் தாலாட்டுப் பாடுதல், நிலவு காட்டுதல், இரண்டு கைகளைச் சேர்த்துச் சப்பாணி கொட்டச் செய்தல், முதுகில் அமரும் குழந்தையை வைத்து விளையாடுதல், அப்பூச்சி காட்டுதல், காது குத்தல், நீராட்டுதல் எனப் பல நிகழ்வுகளை ஒட்டியே பாடியிருக்கிறார். இவை குழந்தைகளுக்கு உரிய செயல்களல்லவா? அவற்றை இந்தத் தாய் எப்படி அனுபவிக்கிறாள்? சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போமா?
கண்ணனைப் பற்றிய முழுக் குறும்படமாகப் பெரியாழ்வார் பாசுரங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. காட்டாகச் சில பாசுரங்கள் பற்றிக் காண்போம்.
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்!
(21)
(மருங்கு = இடுப்பு, புல்கில் = அணைத்தால் உதரம் = வயிறு)
எனத் தாயாகிய ஆழ்வார் குழந்தைக் கண்ணனின் குறும்பைக் காட்சிப் படுத்துகின்றார். நாமும் அக்காட்சியைக் கண்டு களிக்க முடிகிறதல்லவா?
இப்பாவனை கிருஷ்ண அவதாரப் பொலிவில் ஈடுபட்ட பெரியாழ்வாருக்குக் கைவந்த கலையாக அமைந்து பின் வந்த கவிஞர்கள் பிள்ளைத்தமிழ் என்ற ஒரு சிற்றிலக்கிய வகையைத் (Genre) தோற்றுவிக்க வித்திட்டது என்பதைத் தமிழ் இலக்கிய வரலாறு கொண்டு அறியலாம்.
சின்னஞ்சிறு குழந்தையைத் தாய் அங்கம் அங்கமாகக் கண்டு மகிழ்வது போலத் தாயாகிய பெரியாழ்வாரும் மகிழ்கின்றார். அதுமட்டுமல்ல தாம் கண்டு மகிழ்ந்தது போல் ஆய்ப்பாடிப் பெண்களும் ரசிக்க வேண்டுமென்று ‘காணீரே’ என அழைக்கின்றார்.
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ!
வையம் அளந்தானே! தாலேலோ!
(44)
(ஆணிப்பொன் = சிறந்த பொன், குறளன் = வாமன், (வாமன அவதாரச் செய்தி) வையம் அளந்தான் = உலகத்தை அளந்தான்)
குழந்தைக்குத் தேவர்களும் தேவியரும் பலவிதமான அணிகலன்களைத் தந்தனர். அவற்றால் காக்கும் கடவுளான குழந்தையை அழகுக்கு அழகு செய்தனர்; அதன் அழகில் பெரியாழ்வார் தம்மை மறக்கின்றார். நாட்டுப்புற மக்கள் அன்றாட வாழ்வில் தம் குழந்தைகளுக்குப் பாடிய தாலாட்டுப் பாடல் வடிவத்தை ஆழ்வார் பயன்படுத்திக் கொண்டு பக்தியோடு பண்பாட்டையும் பதிவு செய்துள்ளார்.
மஞ்சில் மறையாதே, மாமதீ! மகிழ்ந்து ஓடிவா
(55)
(மஞ்சு = மேகம், மாமதீ = நிலவே)
என நிலவை வேங்கடவாணன், சக்கரக்கையன், ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் (சிறுவன்), வெண்ணெய் விழுங்கிய பேழை வயிறனை இடுப்பில் வைத்துக் கொண்டு விளையாட அழைக்கின்றார்.
பாரித்த மன்னர் படப்பஞ் சவர்க்கு அன்று
தேருய்த்த கைகளால் சப்பாணி
தேவகி சிங்கமே! சப்பாணி
(80)
(பட = அழிய, பஞ்சவர் = பாண்டவர், தேவகி = கண்ணனைப் பெற்ற தாய், யசோதை = வளர்ப்புத்தாய்)
கொட்டச் சொல்லி, குழந்தையின் கை அசைவில் இன்பம் துய்க்கின்றார் ஆழ்வார்.
கொங்கைவன் கூனிசொற் கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன்கான் அடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
(
125)
(குவலயம் = உலகம், கரி = யானை, பரி = குதிரை, இராச்சியம் = நாடு (அயோத்தி), கான் = காடு)
என்று மகாபாரத, இராமாயண நிகழ்வுகளைக் குழந்தைக் கண்ணனின் பொலிவைச் சுட்டப் பின்புலம் ஆக்குகின்றார் பெரியாழ்வார்.
• நீராட்டல்
குழந்தையை நீராட்டும் முறை (152-161) பக்திக் கனியாகவும் வரலாற்றுப் பேழையாகவும் உள்ளது. சீயக்காய் (புளிப்பழம்) கொண்டு, நெல்லிமர இலையைப் போட்டு காய்ச்சிய வெந்நீர் கடாரம் (அண்டா) நிறைய வைத்து நீராட்டினர்.
‘அப்பம் கலந்த சிற்றுண்டி வெல்லம் பாலில் கலந்து சுட்டுவைத்தேன். உண்ணக் கனிகள் தருவன், ஒலிகடல் ஓதநீர் (அலைநீர்) போல வண்ணம் (நிறம், பண்பு) அழகிய நம்பீ! மராமரம் சாய்த்தவனே! திருவோண நாளாம் இன்று நீ நீராட வேண்டும்’ (156, 157) என யசோதைத் தாயாகிய ஆழ்வார் இறைஞ்சுகின்றார். அவதார நாயகனுக்குத் தமிழகக் குழந்தையின் வளர்ப்பு முறையை ஏற்றும் போது, தமிழக மக்களின் குழந்தை தொடர்பான காது குத்தல், தொட்டிலிடுதல், குழந்தை உணவு, யானைத் தந்தத்தால் செய்த சீப்பால் குழல்வாருதல், பூச்சூடல் பற்றிய செய்திகள் பதிவாகிப் பாசுரத்திற்குப் பொலிவும், படிப்போர்க்கு நெகிழ்வும் ஈடுபாடும் தோன்ற வழி செய்து விடுகின்றன.
கண் போன்ற கோதையை அருமையாய் வளர்த்தவர் பெரியாழ்வார். அவளைச் செங்கண்மால் கொண்டு போனதை எண்ணி, மனத்தில் பாசம் மேலோங்கத் தவிக்கும் தவிப்பைப் பல பாசுரங்கள் விளக்குகின்றன (297-304).
• ஆண்டாளைப் பிரிந்த ஆழ்வார்
ஒரு மகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால் தான் கொண்டு போனான்
(125)
எனவே, யசோதை என் மகளை மருமகளாகக் கொண்டு உவந்து சீர் செய்வாளோ என எண்ணுகிறாள் ஆய்ச்சியாகிய ஆழ்வார்.
கிருஷ்ணாவதாரத்தில் தம்மை மறந்து ஈடுபட்ட பெரியாழ்வார் இராமாவதாரத்தையும் சுட்ட மறக்கவில்லை (320-322).
• நாமப் பெருமை
திருமாலின் நாமத்தைக் கூறாதவர்கள் அடையும் இழப்பையும் அவன் நாமத்தைக் கூறுபவர்கள் அடையும் நன்மையையும் கீழ்வருமாறு விளக்குகிறார்.
சிரீதரா, மாதவா, கோவிந்தா, தாமோதரா, நாரணன், கண்ணன் என்பன போன்ற திருநாமம் இட்டால் அவர்களின் அன்னை நரகம் செல்ல மாட்டாள். எனவே மண்ணில் பிறந்து மண் ஆகும் மானிடப் பேரிட்டு, அங்கு எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள் (387), உங்கள் பிள்ளைக்கு என் முகில் வண்ணன் பேரிடுங்கள் (389) வைகுந்தம் செல்லலாம் என்பர்.
• வழிபாடு
நாமப் பெருமையைக் கூறியவர் எப்படி வழிபாடு செய்கிறார்?
எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு
ஏதும்நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளி யானே!
(423: 3-4)
(எய்ப்பு = களைப்பு)
எனப் பாடுகின்றார். எந்த ஒரு செயலுக்கும் அல்லது நிகழ்வுக்கும் இடமும் காலமும் இன்றியமையாதது. முதுமையில் நினைக்கும் வாய்ப்பு குறைவு. ஏனெனில் ஐம்புலன்கள் ஒடுங்கிப் போகும்; நினைவு இழக்கும்; ஒளி குன்றும்; அவை தம் வழிக்கு வாரா என்பதை உணர்ந்து இளமையில் மனம் எப்பொழுது இறைவனை நினைக்கும் உணர்வு நிலைக்குச் செல்லுகிறதோ அப்பொழுது அதன் குறிப்பறிந்து இறைவனிடமும் தம் வேண்டுகோளை வைத்து விடுகின்றார்.
சொல்லலாம் போதேஉன் நாமம் எல்லாம்
சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அல்லற் படாவண்ணங் காக்க வேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளி யானே!
(425: 3-4)
என வேண்டும் ஆழ்வார் தம் உள்ளக் குறிப்பைத் தெரிவிக்கிறார். அத்துடன் தாம் பெற்ற இன்பத்தை நாமும் பெற நம்மையும் அரங்கனை வழிபட நெறிப்படுத்துகின்றார். பிறவிப் பிணியை நீக்கும் மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணனிடம் இதைவிட வேறெதைக் கேட்பது?
உனக்கு இடமாய் இருக்க என்னை
உனக்கு உரித்து ஆக்கினையே
(471)
• மருத்துவன்
கிருஷ்ண அவதாரப் பொலிவைப் பேசுவதில் பெரியாழ்வார் தாம் பெரிய ஆழ்வார். பெரியாழ்வாரின் (தாலாட்டு) உவமை, எளிமை போன்ற கூறுகள் பக்திக்கு அழகு கூட்டுகின்றன.
குலசேகர ஆழ்வார் அரசர் என்பதால் அரசனான தசரதனை நினைக்க, ஆண்டாளின் வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வார் தாய்மை நிலையில் தோய்ந்து பாசுரம் பாடினார் போலும்!
தம்மைத் தாயாகவும், யசோதையாகவும், ஆயர்பாடியின் ஆய்ச்சியாகவும், செவிலித் தாயாகவும் இப்படிப் பல தாயர்களின் கூற்றுகளில் அமைந்துள்ள பெரியாழ்வார் பாசுரங்கள் பக்தி உணர்வின் பெட்டகம், அன்புக் களஞ்சியம் எனலாம்.
இவர் அருளிச் செய்த திவ்வியப் பிரபந்தங்கள் இரண்டு. அவை:
1. திருமாலை – 45 பாசுரங்கள்
2. திருப்பள்ளி எழுச்சி – 10 பாசுரங்கள்
இவர் இயற்பெயர் விப்ரநாராயணர்.
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா! அமர ரேறே
ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே!
(873)
வேதம் மனிதனுக்கு ஆயுள் 100 ஆண்டுகள் என்கின்றது. அதில் பாதி உறக்கத்திலும் மீதி பிள்ளைப் பருவம், முதுமை, பிணி முதலியனவற்றிலும் கழிகின்றது. ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மாநகருளானே (874) எனப் பெருமாளின் நாமம் சொல்லுவதில் பெரும் பேறு அடைந்ததாகக் காட்டுகின்றார் ஆழ்வார்.
• அவனையே சரணடைதல்
ஊர் இல்லை; உரிமையாகக் காணி இல்லை; உறவு இல்லை; உன்னைத் தவிர எனக்கு யாரும் இல்லை. எனவே துன்பம் களைவதும் நீ தான் (900) எனக் கதறியழுது அவனையே அடைக்கலம் என எண்ணுகிறார். முழுமையாகத் தன்னை இறைவனிடம் ஒப்படைப்பது சரணாகதி ஆகும். வைணவத்தின் உயிர்க்கொள்கையன்றோ அது! எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் இறைவனை வழிபட்டு அவனையே சரண் அடைந்தால் வீடுபேறு கிட்டும்; உய்தி பெறலாம். அவனை நம்பி அவனைத் தவிர வேறு துணையில்லை என்று நம்மை ஒப்படைத்து விட்டால் உய்தி பெறலாம் எனக் காட்டும் பாசுரம் (901) வைணவ சமயத்தின் சாரத்தை விளக்குகிறது.
தாவி அன்று உலகம் அளந்து மாவலி தலையில் திருவடி வைத்தவனே! உன்னைத் தவிர யாரையும் சேவிக்க (வணங்க) மாட்டேன்; ஆவியே! அமுதே! என் ஆருயிர் போன்றவனே! (906) எனச் சிக்கெனச் செங்கண்மாலைப் பிடித்துக் கொள்கின்றார் தொண்டரடிப் பொடி ஆழ்வார்.
வழிபாடு செய்வதற்குத் தேவர்களும், முனிவர்களும், காமதேனுவும் கந்தருவர்களும் நாரதரும் புகுந்துள்ளனர்; வானவர் வாயுறை வழங்கக் கூடியுள்ளனர். கீதங்கள் பாடுகின்றனர். நீ எழுந்தருள்க என்று வேண்டுகிறார்.
மாதவர் வானவர் சாரண ரியக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள
அரங்கத்தம் மா! பள்ளி யெழுந்தரு ளாயே!
(925: 3-4)
(நாள் ஓலக்கம் = காட்சி கொடுத்தல்)
என அறிதுயில் கொண்டிருக்கும் அரங்கனைத் துயில் எழப் பாடும் ஆழ்வார், நம்மையும் அவனுக்கு ஆட்படத் தூண்டுகின்றார்.
திவ்வியப் பிரபந்தத்தில் “மடல்” என்று கூறும்போது திருமங்கை ஆழ்வார் நினைவுக்கு வருவது போல் திருப்பள்ளி எழுச்சி என்றால் தொண்டரடிப் பொடி ஆழ்வார் நினைவுக்கு வருகின்றார்.
காதலால் நெஞ்சம் அன்பு
கலந்திலேன்; அதுதன் னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு; எல்லே!
என்செய்வான் தோன்றி னேனே?
(897)
எங்ஙனம் மறந்து வாழ்கேன்?
ஏழையேன் ஏழை யேனே!
(894.4)
கரும்பமர் சோலை சூழ்ந்த
அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன்
கண்ணிணை களிக்கு மாறே!
(888:3-4)
(கண் இணை = இரண்டு கண்களாலும், களிக்குமாறு = மகிழுமாறு)
இவ்வாறு தம் நிலையைச் சொல்லி அரங்கனிடம் வருந்துகின்றார் ஆழ்வார்.
குரங்குகள் மலையை நூக்கக்
குளித்துத்தாம் புரண்டிட் டோடி
தரங்க நீ ரடைக்க லுற்ற
சலமிலா அணிலும் போலேன்
(898:1-2)
(நூக்கு = தள்ளு, சலம் இலா = குற்றம் இல்லாத)
சின்னஞ்சிறிய அணிலாகிய அஃறிணைப் பொருள் உணரும் போது, ஆறறிவு உடைய மனிதனாகிய நான் பொறுப்பற்றுத் திரிந்தேனே எனத் தம்நிலைக்கு வருந்தும் ஆழ்வார், இராமபிரானின் அன்பைப் பெற்ற அணிலைச் சலமிலா அணில் என்று புகழ்கின்றார்.
• வயலில் குழந்தை
வயலில் நெற்கதிர்களுக்கு இடையில் குழந்தை கிடந்ததைப் பாணர் ஒருவர் கண்டார்; அவர் அக்குழந்தையை வளர்த்து வந்தார். பாணர் குலத்தில் வளர்ந்ததால் குழந்தை யாழ் வைத்துப் பாடுவதில் பயிற்சி பெற்றது.
• நம்பாடுவான்
திருவரங்கத்தானின் திருவடிப்பேற்றில் ஈடுபாடு கொண்ட அக்குழந்தை நாளும் இசையோடு இறைவனை வழிபடத் தொடங்கியது. பாசுரங்களைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் ‘நம்பாடுவான்’ என்னும் திருநாமம் சூட்டுகின்றார்.
• முனிவரின் சினமும் கனவும்
காவிரிக்கரை அரங்கனுக்கு வழிபாடு செய்துவரும் ‘லோகசாரங்க மாமுனிவர்’ என்னும் அடியார் துறைக்கு அருகில் வழியில் திருவரங்கன் சந்நிதியை நோக்கிப் பாடிக் கொண்டிருக்கும் பஞ்சமன் ஒதுங்கவில்லை என்பதால் சினமடைகின்றார். வழிவிடவும் எட்டச் செல்லவும் கூவுகின்றார்; இதற்குள் ஒருவன் கல்லை எடுத்துப் பாணர்மேல் வீசிவிடுகின்றான். அன்று இரவு அரங்கன் முனிவரின் கனவில் காயத்துடன் காட்சி கொடுக்கின்றார். முனிவர் பயந்து நடுங்கிக் காரணம் கேட்க, ‘பாணரின் உள்ளத்தில் இருந்தபோது பட்ட காயம் தான் இது’ எனப் பதில் சொல்லி அவரைச் சந்நிதிக்கு அழைத்துவரச் சொல்லி மறைகின்றார்.
• முநிவாகனர்
மறுநாள் மாமுனிவர் அரங்கன் இட்ட கட்டளைக்கு இணங்கித் தமக்கும் வீடுபேறு கிடைத்த மகிழ்வுடன் பாணரை வணங்கி அவரைத் தோளில் தூக்கிக் கொண்டு அரங்கன் சந்நிதியை அடைகின்றார். முனிவரின் தோளில் சென்று திருமேனியைச் சேவித்த பாணருக்கு ‘முநிவாகனர்’ என்னும் பெயரும் வழங்கி வரலானது.
• தாழ்ந்த குலமென்று ஏதுமில்லை
கதை எப்படியோ? அது உணர்த்தும் செய்தி தாழ்ந்த குலம் என்று சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒருவன் அரங்கனின் திருவருள் பெற எந்தத் தடையுமில்லை. அவனுடைய அடியும் (கால்களும்) அரங்கனின் கோயிலில் படலாம்; அவன் வழிபாடு செய்யலாம் என்பதைத்தான் இக்கதை வழி அறிகின்றோம். அனைத்துயிர்களுக்கும் அருள்பாலிக்கும் திருமாலுக்கு உயர்ந்த குலம் தாழ்ந்தகுலம் என்று ஒன்றுண்டா?
• இறைவன் திருவடி கண்டதன் பயன்
இறைவனின் திருமேனி கண்டது கண்ணுக்குக் குளுமை; செவிக்கு விருந்து என ஆழ்வார் ஓதிய பாசுரம் எப்படி என்பதை எழுத்துவழிக் காண்போமா!
அமல னாதிபிரா னடியார்க்கென்னை ஆட்படுத்த
விமலன்
(927)
அரங்கனின் கமலம் போன்ற பாதங்கள் வந்து தம் கண்ணினுள் புகுந்தன எனப் பாடுகின்றார் பாணாழ்வார். அரங்கன் அடியார்க்கும் ஆட்பட்டதாகச் சொல்லும் ஆழ்வார் வீடுபேறு பெறும் முதிர்ந்த நிலையைத் திருப்பாதம் கண்டதன் வழிப்புலப்படுத்துகின்றார்.
இறைவனின் திருவடி முதல் கண்கள் வரை மனம் தோய்ந்த ஆழ்வார் பாதாதிகேசமாக (அடி முதல் முடிவரை) அரங்கன் பெருமையைப் பாடிப் பறை சாற்றி நெஞ்சைப் பறிகொடுக்கின்றார்.
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்
கோர மாதவம்செய்தனென்கொல்அறியேன் அரங்கத்தம்மான்திரு
ஆர மார்வது அன்றோ! அடியேனை யாட் கொண்டதே!
(931)
(பாரம் = சுமை, வாரம் = அன்பு, ஆரம் = மாலை, மார்வது = மார்பாகிய அது)
செய்ய வாய்: ஐயோ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!
(933:4)
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே!
(934:4)
நீலமேனி ஐயோ! நிறை கொண்டதென் நெஞ்சினையே!
(935:4)
இப்படி இறைவனுள் கரைந்த ஆழ்வார் 10 பாசுரங்களுள் ‘ஐயோ’ என்னும் சொல்லை இருமுறை பெய்து வைத்திருப்பது அவரின் இறையன்பு கனிந்த நிலையில் இருப்பதைக் காட்டுவதோடு ஆயிரம் பொருளைத் தருகிறது.
அரவு அரசப் பெருஞ்சோதி,……
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என்
கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே?
(647)
என முதல் பாசுரத்தில் ஏங்கும் குலசேகரப் பெருமாள் அரங்கனை ‘அந்தமிழின் இன்பப் பாவினை வடமொழியை’ (650) என்று தமிழாகவும், வடமொழியாகவும் காண்பது சிறப்பு.
நிலையான வாழ்வைத் தேடும் பக்தரான குலசேகரர், ‘எம்பிரானுக்கு ஏழ் பிறப்பும் பித்தன் ஆனேன்’ (673) என்றும், ‘பித்தனாய் ஒழிந்தேன்’ (674), ‘பேயனாய் ஒழிந்தேன்’ (675) என்றும் திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள அரங்கன் மீது தாம் கொண்ட ஈடுபாட்டைப் பாசுரத்தில் வடித்து வாசிப்பாரையும் மெய்மறக்கச் செய்கின்றார்.
திருவேங்கட மலையின் சுனையில் மீனாக, குருகு என்னும் பறவையாக, வேங்கடத்தான் உமிழுகின்ற பொன்வட்டில் பிடிப்பவனாக, செண்பக மரமாக, தம்பகமாக (புதர்ச்செடி), சிகரமாக (மலை உச்சி), காட்டாறாக, நடக்கின்ற பாதையாக (வழி) ஆக வேண்டும் என ஏங்கியவர் பின், படியாக, ஏதேனுமாகக் கிடக்க வேண்டும் (677-687)எனச் சொல்லும் பாசுரங்கள் ஆழ்வாரின் ஏக்கத்தைக் காட்டுவதோடு, உயிரானது இறைவனை அடையத் துடிக்கும் துடிப்பையும் அல்லவா புலப்படுத்துகிறது? அந்த அனுபவத்தை உணர முடியுமே தவிர உணர்த்தவா முடியும்?
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
(685)
(செடி = துன்பம். நெடியோன் = வாமனாவதாரத்தில் வானுற வளர்ந்தவன், கிடந்தியங்கும் = நடமாடும்)
எங்கும் போய் உய்கேன் உன் இணையடியே அடையல்அல்லால்
எங்கும் போய்க் கரைகாணா நெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே
(693)
எனப் பாடுகின்றார்.
இப்பதிகம் முழுக்க அரங்கத்தான் மீது கொண்ட காதலை உவமை வழி விளக்கிச் செல்கிறார். உவமையின் உச்சத்திற்குச் சான்று:
எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்; மற்றவைபோல்
மெய்த்துயர் வீட்டாவிடினும் விற்றுவக்கோட் டம்மா!
என் சித்தம்மிக உன்பாலே வைப்பன் அடியேனே
(694)
(பைங்கூழ் = பயிர், முகில் = மேகம், மெய்த்துயர் = துன்பம், சித்தம் = மனம்)
வானம் மழை பொழியாது போனாலும் பயிர்கள் மேகத்தையே நோக்கி இருக்கும். அதுபோல இறைவா! நீ என்மேல் கருணை காட்டாவிடினும் என் மனம் உன்னிடம் தான் எனச் சொல்லும் குலசேகரர் அவன் தாள் (திருவடி) வேண்டி நிற்கின்றார்.
தாய் தேவகிக்காக மட்டுமல்ல தந்தை வசுதேவருடைய நிலையையும் உணர்ந்து சிறு நாடகக் காட்சியைக் கண்முன் நிறுத்துகின்றார் ஆழ்வார். அதாவது அன்புடைய மகளிர் தம் மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு அப்பா எங்கே? எனக் கேட்கிறார்களாம்; அது கேட்ட குழந்தை பதில் சொல்லுவது போல் தன் கண்களைத் தந்தை இருக்கும் பக்கம் திருப்புகிறதாம். அக்காட்சியைக் காணும் பேறும் வளர்த்த தந்தை நந்தகோபனுக்குக் கிடைத்ததாம்; பெற்ற தந்தை வசுதேவருக்குக் கிடைக்கவில்லையாம்.
குழந்தை தள்ளாடித் தள்ளாடி நடந்துவரும் அழகைக் காணவும் உண்ட உணவின் மீதியை உண்ணவும் தனக்குக் கொடுத்து வைக்கவில்லை என்று ஏங்குகின்றாள் தேவகி.
திருமகளோ டினிதமர்ந்த செல்வன் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந்தன்னுள்
அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால்
அரசாக வேண்டேன் மற்றரசு தானே
(747)
இப்பாசுரம் இராமபிரானின் திருவடிகளைச் சூடிக்கொள்ளும் அரசைத் தவிர, மற்றைய அரசபதவி அரசு அல்ல என, அரசனாக நாட்டை ஆண்ட குலசேகரர் ஆழ்வாராகி இராம காதலனாக மாறிவிடும் நிலையைக் காட்டுகின்றது.
திருவேங்கடமலையானிடம் மண்ணை ஆளும் அரச பதவி வேண்டாம் எனச் சொன்னவர் (678) உண்மையான பொருளை- நிலையான பொருளை நாடி அடையத் துடிக்கும் தேடல் இது!
வாய்த்தவனே! என்னுடைய இன்னமுதே! இராகவனே
தாலேலோ’
(719)
(கௌசலை = இராமன் தாய்)
எனத் தாலாட்டும் ஆழ்வார், தாலாட்டுப் பாடுவது போல இறைவனின் பெருமைகளைப் பாடிப் பரவுகின்றார்.
ஆலினிலைப் பாலகனாய் அன்றுலக முண்டவனே!
வாலியைக் கொன்றரசிளைய வானரத்துக் களித்தவனே!
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க் கதிபதியே! அயோத்தியனே! தாலேலோ!
(725)
(கால் = காற்று, மணி = கடல்மணி)
தசரதன் புதல்வன், மைதிலி (சீதை) கணவன் (722), சனகன் மருகன் (மருமகன்) (721) எனத் தாலாட்டு என்னும் உத்தியைப் பயன்படுத்தி இராமாவதாரக் கதையைச் சுட்டுகின்றார்.
• தசரதன் புலம்பல்
தாயாகி ஏங்கியவர் தந்தையாகி (தசரதனாகி) இராமாவதாரம் குறித்துப் புலம்புகிறார்.
இராமன் காட்டுக்குச் செல்ல, தசரதன் புலம்பல்;
நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும்
இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ!
எம்பெருமான்! என்செய் கேனே!
(721:3-4)
(நேரிழை = பெண் (சீதை), இளங்கோ = தம்பி)
என்றும்,
‘என் பேச்சைக் கேட்டு, களிறு, தேர், குதிரை ஆகிய படைகளை விட்டுவிட்டு காட்டு மரத்தின் நிழலில்,
கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ?
காகுத்தா! கரிய கோவே!
(732:4)
‘நீ சென்ற பிறகு என் நெஞ்சம் இரண்டாகப் பிளக்காமல் உள்ளதே, கேகய மன்னன் மகளான கைகேயியின் சொல் கேட்ட யான் தீவினையாளன் (734), எங்கள் கோலத்தை மாற்றி என் துணைவியோடு நான் செல்ல வேண்டிய காட்டிற்கு நீ செல்லுதல் சரியா என்றெல்லாம் புலம்பியவர்.
நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன்
ஏழ்பிறப்பும், நெடுந்தோள் வேந்தே!
(738 : 3-4)
எனக் குலசேகரர் பாடும்போது தசரதனாகவே மாறிவிடுகின்றார்.
இராமன், இராமாயணக் கதை, அக்கதையில் வரும் பாத்திரங்களாக நிற்றல் (தசரதன், கௌசலை), கிருஷ்ண அவதாரம், ஆயர்பாடிப் பெண்கள் நிலை, பெற்ற தாய்(தேவகி) நிலை இப்படிப் பிற அவதாரங்களிலும் ஈடுபட்டு நிற்கின்றார் ஆழ்வார்.
தாயாகிக் கண்ணனின் குறும்பு
தந்தையாகி (தசரதன்) மகன் (இராமன்) பிரிவு
தாயாகித் (கௌசலை) தாலாட்டு
ஆய்ப்பாடிப் பெண்ணாகிக் காதல்
அடியாராகி இராமன் கதை
கிருஷ்ண அவதாரத்தில் பெற்ற தாயாகிய தேவகியாக மாறி, பெற்றதைத் தவிர வளர்க்கும் பேறு பெறவில்லை என்னும் தாய்மைத் துன்பத்தையும், தம் துணையாகிய வசுதேவருக்கும் அது இழப்பு என்பதையும் உணர்ந்து உணர்ந்து ஏங்கி ஏங்கிக் காட்சிப்படுத்துகின்றார்.
ஆய்ப்பாடிப் பெண்ணாக அல்லது ஆய்ச்சியாகவே மாறி விடுகின்றார், ஆழ்வார். அதாவது நாயகியாக நின்று ஏக்கத்தைப் பாடுகின்றார்.
திருவரங்கம், திருவேங்கடம், வித்துவக்கோடு ஆகிய திவ்விய தேசங்களின் பெருமையைப் போற்றிப் பாடி உள்ளார்.
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகர ஆழ்வார் தாமும் ஓர் அரசன் என்பதால் அரசனாக – சக்ரவர்த்தியாக வாழ்ந்த தசரதன் மீது ஈடுபாடு கொண்டார் போலும்.
• சூடிக் கொடுத்தவள்
ஆழ்வார் இறைவனுக்கு வைத்த மாலையைத் தம் பெண் அணிந்தது பெருமானுக்கு உகந்தது அன்று என வருந்த, வடபெருங்கோயிலுடையான் கனவில் தோன்றி, “அம்மாலை தமக்கு உகந்தது என்றும் இனி, கோதை சூடிக் களைந்த மாலையே வேண்டும்” எனவும் பணித்தார். எனவே, அவர் தம் மகளை எம்பெருமானின் தேவிகளில் ஒருத்தி என நினைத்து ‘ஆண்டாள்’ எனவும் திருநாமம் இட்டார்.
பெரியாழ்வார் வடபெருங்கோவில் உடையானுக்குச் சாத்துவதற்காகத் தொடுத்து வைத்த மாலையைத் தாம் அணிந்து பின் இறைவனுக்குச் சாத்தியதால் சூடிக் கொடுத்த நாச்சியார் என்றும் திருநாமம் இட்டு அடியார் அழைத்தனர்.
• காலம்
ஆண்டாள் அவதாரம் செய்த நாள் நளவருடம், ஆடிமாதம் கூடிய பூர நட்சத்திரத்தில், இக்குறிப்பின்படி ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
அருளியவை:
ஆண்டாள் அருளிய திவ்வியப்பிரபந்தங்கள் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் ஆகும். ‘கோதை தமிழ் ஐயைந்தும் (5 x 5) ஐந்தும் (5) அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு’ என்பதால் திருப்பாவையின் பெருமை புலப்படும்.
திருப்பாவை 30 பாசுரங்களும் மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் நல்ல கணவன் வேண்டியும் மழை வேண்டியும் செய்யும் நோன்பு முறைகளைப் பற்றிக் கூறுகின்றன.
காத்தியாயனி என்னும் பாவைக்கு வழிபாடு செய்து அவரவர்களுக்கு வேண்டுவனவற்றை அருளும்படி வேண்டுவது வழக்கம். பாவை நோன்பு பெண்மக்கள் எடுக்கும் நோன்பு ஆகும்.
கண்ணனை மனத்தில் வரித்த ஆண்டாள் தன்னை ஆய்ப்பாடிப் பெண்களில் ஒருத்தியாகப் பாவித்துக் கொள்கின்றாள்.
திருவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாகவும், வடபெருங்கோயில் நந்தகோபர் மாளிகையாகவும், அங்கு எழுந்தளியிருக்கும் இறைவனைக் கிருஷ்ணனாகவும் பாவித்து இடைப்பெண்கள் நோற்ற நோன்பை நோற்கின்றாள்.
அந்நோன்பைப் பற்றித் திருப்பாவை, நிகழ்ச்சி அடிப்படையில் பதிவு செய்துள்ளது.
• மன நிலை
ஆண் அடியார்கள் இறைவனைத் தலைவனாகவும், தம்மைத் தலைவி ஆகவும் பாவித்துக் கொண்டு பாடுவது நாயக-நாயகி பாவம் என்று அழைக்கப்படும்.
இங்கு ஆண்டாள் இயல்பாகவே நாயகி நிலையில் நின்றாள். ‘மானிடவனை மணாளன் ஆக்கி வாழமாட்டேன்’ என்று முடிவு செய்த ஆண்டாளுக்கு மடை திறந்த வெள்ளம் போல் காதல்/பக்தி பெருக்கெடுத்து ஓடுகின்றது. எனவே இதைப் பள்ளமடை என்றும் சிறப்பித்துக் கூறுவர்.
• செய்வனவும் தவிர்ப்பனவும்
கண்ணனைச் சென்று காணும் போது அவனையே ஒரு மனத்தோடு நினைக்கும் மனநிலை வேண்டும். அதனால் நெய், பால் உண்ணாமல் கண்ணுக்கு மை தீட்டாமல், கூந்தலுக்கு மலர் சூடாமல், பிறர் குறைகளைப் பேசாமல், நல்ல நோக்கம், நல்ல எண்ணம், நல்ல செயல் உடையவராக நம்மைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும் என்கிறாள்.
• ஆய்ப்பாடி நிகழ்வு
நோன்பு நோற்க வேண்டி, ஆய்ப்பாடிச் சிறுமிகள் வீடுவீடாகச் சென்று தோழிகளைத் துயில் எழுப்பி வருகின்றனர். அப்பொழுது ஆய்ச்சியர் பொன்வளை ஒலிக்க, கைகளை மாற்றி மாற்றி மத்தினால் தயிர் கடைகின்ற இளங்காலைப் பொழுதில் அந்தத் தயிர் அரவம் கேட்டிலையோ? (480) எனச் சொல்லி, கேசவனைப் பாட வா என அழைக்கின்றனர்.
• பாவை நோன்பின் நோக்கம்
உலகத்தவர் வாழ மழை பொழிய வேண்டும். அத்துடன் நாங்கள் மார்கழி நீராட மழை வேண்டும் என மண் வளத்தோடு மனித குல வளத்திற்கும் வேண்டுகின்றனர்.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
(476:1-3)
எனப் பாவை நோன்பின் நோக்கத்தையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது பாசுரம்.
• கோவிந்தன் பெருமை
ஓங்கி உலகை அளந்தவன், கேசியைக் கொன்றவன், தென் இலங்கை அரசன் இராவணனை அழித்தவன், பறவை உருவில் வந்த பகாசுரன் என்னும் அசுரன் வாயைப் பிளந்து கொன்றவன் (486) என்றெல்லாம் தந்தை பெரியாழ்வாரைப் போலவே அவதாரங்களுக்கும் செயல்களுக்கும் மங்களாசாசனம் (போற்றுதல்) செய்கிறாள் ஆண்டாள்.
• வேண்டுவன
நாராயணனே நமக்குப் பறை தருவான் (474), வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆகிய செல்வம் (476), பால் போன்ற நிறமுடைய பாஞ்ச சன்னியம் போன்ற சங்குகள், பரந்து ஒலி எழுப்பக்கூடிய தோல் கருவியாகிய மிகப் பெரிய பறை, திருப்பல்லாண்டு பாடுபவர்கள், கோல விளக்கு, கொடி, விதானம் (499) போன்றவற்றுடன் ஆல் இலையில் துயின்றவனை வழிபாடு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்புடன் நிற்கின்றனர் ஆய்ச்சியர்.
• நோன்பு நோற்கும் இடம்
பாவை நோன்பை (475, 476) ஆய்ப் பிள்ளைகள் பாவைக் களத்தில் (486) ஒன்று சேர்ந்து மேற்கொள்வர். பாவை நோன்பு அல்லது வழிபாடு செய்யும் இடத்தைப் பாவைக்களம் என்று அழைக்கின்றனர்.
• நோன்பு நிறைவடைதல்
நோன்புக்கு முன்பு கண்ணனைப் பிரிந்த ஆய்ச்சி ‘நெய் உண்ணோம், பால் உண்ணோம்’ என்றாள். அவனைப் பெற்ற பிறகு,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்று அனைய பல்கலனும்யாம்அணிவோம்
ஆடை உடுப்போம். அதன் பின்னே பால் சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்
(500:4-8)
(சூடகம் = தோளில் அணியும் அணி, பாடகம் = காலில் அணியும் அணி)
என்று கிடைத்தவற்றை உள்ளம் உவந்து சுட்டுகின்றாள்.
• நோன்பின் பயன்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்தில் உன்னைப் பெறும்படியான புண்ணியம் யாம் உடையோம் (501), எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உறவுடையவர் ஆனோம், உனக்கே தொண்டு செய்வோம் (502), எங்கள் பிற விருப்பங்களை மாற்றுவாயாக (495),
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
(478: 7-8)
கடந்த காலத்தில் செய்த பிழைகளும் இனிவரும் நாட்களில் செய்யப் போகும் பிழைகளும் தீயினில் தூசாகும் என்று அருமையான உவமையைப் பயன்படுத்துகிறாள். தீ தானும் தூயதாய் தன்னிடத்து வரும் பொருள் எப்படிப்பட்டதாயினும் அதையும் தூய்மைப்படுத்தும் இயல்புடையது. அப்படியாயின் தன் பிழைகள் தூசாகவும் இறைவன் பேரருட்திறன் தீயாகவும் உவமித்துக் கூறுகிறாள். எப்படிப்பட்ட பிழையாயினும் அவை ஒன்றுமில்லாமல் போகும் என்கிறாள். நோற்றால் மக்கள் நலனுற மழை பெய்யும்; சுவர்க்கம் புகலாம் என்றும் கூறுகிறாள்.
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே!
(508:3-4)
எனச் சொல்லிக் காமனைத் தொழுகின்றாள்.
வானில் வாழுகின்ற தேவர்களுக்கு மறையவர் வேள்வியில் சொரிந்த அவி உணவைக் காட்டில் திரியும் நரி புகுந்து உண்ணத் தலைப்பட்டால் எப்படி இருக்குமோ அதுபோலத் திருமாலுக்கென்று தோன்றிய உடம்பை மானிடன் தீண்டுவது பொருத்தமற்றது; தகாதது. எனவே, மனிதர்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் உயிர் வாழமாட்டேன் என்கிறாள்.
நாச்சியார் திருமொழிப் பாசுரங்கள் 143-ம் பக்திப் பனுவல்கள் மட்டுமல்ல; அகப்பொருள் கூறுகளைக் கொண்டவை; இலக்கிய மரபுகளைப் பதிவு செய்துள்ள வரலாற்றுச் சிறப்புக்குரியவை. தமிழரின் வழிபாட்டு முறைகளையும் புலப்படுத்துபவை. நாயகியாகிய ஆண்டாளின் உணர்வுகளைப் புலப்படுத்தும் பக்திப்பேழை.
• விளக்கினில் புக வேண்டுதல்
‘தை மாதம் முழுவதும் மன்மதன் வருமிடத்தைச் சுத்தம் செய்து, கோலமிட்டு, நுண் மணல் கொண்டு தெருவை அலங்கரித்து வைத்துள்ளேன். காமனையும் அவன் தம்பி சாமனையும் தொழுகின்றேன். சக்கரக் கையையுடைய வேங்கடவனுடன் இணைய நீ விதிக்க வேண்டும் (504) என்று மன்மதனைத் தொழுகின்றாள். மலர் கொண்டு மூன்று வேளையும் உன்னை வணங்குகின்றேன்.
வித்தகன் வேங்கட வாணனென்னும்
விளக்கினிற் புகவென்னை விதிக்கிற்றியே
(506)
என ஏங்குகின்றாள் கோதை.
கண்ணனை நினைத்துப் பாடும் பாசுரங்களில் உள்ளம் விளக்காகி ஆண்டாளின் உணர்வு நெய்யாகி உணர்வுப் பிழம்பாகப் பாசுரம் பொலிவு பெறுகிறது.
• கோபியர் ஆடை வேண்டல்
‘கோழி கூவும் முன்னே குடைந்து நீராட வந்தோம்; அரவணை மேல் பள்ளி கொண்டவனே! காளிங்கன் என்னும் பாம்பின் மேல் குதித்து ஆடியவனே!
குருந்திடைக் கூறை பணியாய்
(525:4)
(குருந்து = மரம். கூறை = ஆடை / உடை)
குருந்த மரத்தின் மேல் வைத்துள்ள உடைகளைக் கொடுப்பாயாக,
வேண்டியதெல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம்
பட்டைப் பணித்தரு ளாயே
(526)
எனக் கன்னியரோடு கரியபிரான் நிகழ்த்திய கிருஷ்ண அவதாரச் செயல்களை, ஆடை மேலிட்டுத் தன் உள்ளத்துணர்வை வெளிப்படுத்துகிறாள் ஆண்டாள்.
திருமழிசை ஆழ்வாரும் தம்மை நாயகியாக எண்ணிக் கூடலிழைத்தல் பற்றிக் குறிப்பிட்டிருப்பது ஈண்டு எண்ணத்தக்கது. தலைவன் தலைவியிடையே எழும் காதல் உணர்வுப் போராட்டத்தைப் புலப்படுத்தும் ஓர் உத்தியாகக் கூடலிழைத்தல் நிகழும். ஆண்டாளும் திருமாலைக் கூட, கூடலிழைத்துப் பார்க்கிறாள் (538).
வாமன அவதாரத்தையும் கண்ணன் அவதாரத்தில் நிகழ்த்திய செயல்களையும், சிசுபாலன், மருத மரங்கள், ஏழு எருதுகள், பகாசுரன், கம்சன் போன்றோரை அழித்தவற்றை எடுத்துச் சொல்லியும், தேவகி வசுதேவன் பெற்ற கண்ணனிடம் தன் காதலைக் கூடலிழைத்தலின் மூலம் வெளிப்படுத்துகின்றாள் ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்’.
• குயிலே! கருமாணிக்கம் வரக்கூவாய்
வெண்மையான சங்கை இடக்கையில் ஏந்திய விமலன் எனக்குத் தன் உருக்காட்டவில்லை; ஆனால் என் உள்ளத்தில் புகுந்து நாள்தோறும் உயிரோடு வைத்து வாட்டுகின்றான்’ (546). எலும்பு உருகி, கண்கள் இமைகளைப் பொருந்தாமல் பல நாளும் துன்பக்கடலில் புகுந்து வைகுந்தன் என்பதோர் தோணியைப் பெறாமல் துன்புறுகின்றேன் (548). வில்லிபுத்தூரில் உறைவானின் திருவடியைக் காண வேண்டும் (549) என்ற ஆவலினால் குயிலினை அழைத்துத் திருமாலின் பெயரைக் கூறிக் கூவ வேண்டுகிறாள்.
அங்குயிலே! உனக் கென்ன மறைந்துறைவு?
ஆழியும் சங்குமொண் தண்டும்
தங்கிய கையவ னைவரக் கூவில் நீ
சாலத் தருமம் பெறுதி
அப்பாசுரம் தலைவன் பெயரைக் குயில் கூவ, அதைக் கேட்டு மகிழ, தன் ஆர்வம் தணிய வேண்டுகிறாள்.
பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்
பாசத் தகப்பட் டிருந்தேன்
(553)
எனத் தன் நிலையையும் தெளிவு படுத்துகிறாள்.
• கனவும் மணமும்
பக்தியும் காதலும் ஒரு சேரக் கொண்டிருந்த ஆண்டாளின் திருமணம் திருவரங்கனுடன் நடக்கின்றது.
ஆண்டாளின் கனவு உரைக்கும் பாசுரங்கள் ஆண்டாளின் தமிழுக்கும், அக்காலத் தமிழர் திருமண முறைக்கும் அற்புதமான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
வாரணம் ஆயிரம் சூழ வலம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
(556)
(வாரணம் = யானை)
நாளை மணநாள் என நிச்சயம் செய்து, பாளையோடு கூடிய கமுகு (பாக்குமரம்) மரங்களால் அலங்காரம் செய்தனர்; இந்திரன் உள்ளிட்ட தேவர் கூட்டம் வந்திருந்து மணத்தை உறுதி செய்தனர்; மணப்புடவை உடுத்தி மணமாலை சூட்டினர்; நான்கு திசைகளில் இருந்தும் கொண்டு வந்த தீர்த்தத்தால் நீராட்டி, பார்ப்பனர்கள் மந்திரங்களைச் சொல்ல, புனிதனாகிய கண்ணனோடு என்னை இணைத்துக் காப்புக் கட்டினர்; பெண்கள் மங்கல விளக்கும் கலசமும் ஏந்தினர்.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ! நான்
(561)
பின் தீவலம் செய்தோம்; நாராயணன் தம் திருக்கையால் என் தாள் (பாதம்) பற்றி அம்மி மிதிக்கச் செய்தார், உடன் பிறந்தோர் தீயின் முன் நிறுத்தி, அச்சுதன் கையின் மேல் என் கையை வைத்தனர், குங்குமம் பூசி, சந்தனம் தடவ வந்தோம் எனத் தன் மணக்கனவு பற்றித் தோழியிடம் சொல்லுகிறாள் ஆண்டாள். அக்கனவு வாழ்வது போலவே உணர்ச்சி மேலிட்டுக் கற்பனை செய்து அருளியவை ஆகும்.
• பாவையும் பாஞ்ச சன்னியமும்
இறைவனை விட்டு நீங்காது இருக்க வேண்டுமென்ற தாபத்தால் ஆண்டாள் ஆழிவெண்சங்கிடம் பேசுவது திருமாலின் மீது அவர் கொண்ட எல்லையில்லாத காதலை வெளிப்படுத்துகிறது. இறைமைக் காதலில்தான் இப்படியொரு பாசுரம் பிறக்க முடியும் எனலாம். அந்தப் பாசுரம்,
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்ஆழி வெண் சங்கே
(567)
ஓடும் மேகங்களைத் தூது விடும் ஆண்டாள், தான் வெறுங்கூடுதான்; உயிர் கண்ணனிடம் உள்ளது என்பதை, ‘உலங்குண்ட விளங்கனி போல்’ (உலங்கு – கொசு) என்னும் உவமை வழி அறிவிக்கின்றாள். விளங்கனியின் மேல் ஓடு இருக்க அதன் உட்பகுதியைக் கொசு அழித்துவிடும். அதுபோல, ‘நானும் நலிந்துள்ளேன், கண்ணன் தந்த காதல் நோயால்’ எனத் தெளிவுபடுத்துகிறாள்.
‘மழைக்காலத்தில் எருக்கஞ்செடியில் உள்ள பழுத்த இலைகள் வீழ்வது போல நானும் வீழும் நிலையில் உள்ளேன். எனக்கு ஒருநாள் ‘தம் வாசகம் (சொல்) தந்து அருளமாட்டாரா? (584) ‘ஓர் பெண்கொடியை வதம் செய்தான்’ (585) என்னும் சொல் பழியாகாதா? என மேகத்திடம் தன் மோகத்தைச் சொல்லி அரற்றுகின்றாள் ஆண்டாள். எனவே அவள் தமிழும் மானுடம் பாடாமல் மாதவனைப் பாடுகின்றது.
• யாவும் கண்ணனே
திருமாலையே நினைத்து உருகும் ஆண்டாளுக்குத் திருமாலிருஞ் சோலையில் உள்ள மலர்களும் அவற்றின் வண்ணமும் அழகனை நினைவுபடுத்துகின்றன. ஆண்டாள், குயில், மயில், கருவிளை (காக்கணம் பூ) களங்கனி, காயாம்பூ ஆகிய ஐந்தையும்,
ஐம்பெரும் பாதகர்காள்!
அணி மாலிருஞ் சோலைநின்ற
எம்பெரு மானுடைய
நிறம் உங்களுக் கென் செய்வதே?
(590 : 3-4)
என்று கேட்டு விடுகின்றாள். அவை ஐந்தும் அவன் நிறத்தையே கொண்டவை. நோக்குமிடமெல்லாம் கண்ணனைக் காணும் கோதை 100 தடாவில் (அண்டாவில்) வெண்ணெயும் 100 தடாவில் அக்கார அடிசிலும் (சர்க்கரைப் பொங்கல்) வாய்நேர்ந்து (வாக்குறுதி தந்து) பராவி வைத்துள்ளேன் என அமுதுண்ண வரும் அழகரை விரும்பி நிற்கின்றாள்.
• கடலும் காமமும்
காந்தள் பூ, கோவைப்பழம், முல்லைப்பூ, பாடும் குயில், ஆடித் தோகை விரிக்கும் மயில், மழை ஆகியவற்றின் நிறத்தில், வடிவத்தில், ஒலியில், அழகில் கண்ணனைக் கண்ட ஆண்டாள்
உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன்
நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென் றுரைத்தியே
(605:3-4)
(ஊறல் = உயிர், நடலை = துன்பம்)
இப்படி, பெருமான் உடலுள் புகுந்து உயிரை வாட்டிய போதும் அவனை விடமுடியாமல் அவள்படும் துன்பங்களைக் கருமுகில் வண்ணனிடம் சொல்ல வேண்டும் என்கின்றாள்.
சொற்பொருளாய் நின்றார் என்மெய்ப்பொருளும் கொண்டாரே
எல்லாப் பொருள்களில் இருந்தும், யாராலும் அடைய இயலாதவன். வேதத்தின் பொருளானவன்; என் மெய்யின் பொருளான உயிரையும் கொண்டான் எனத் தன் அணுக்கத்தைக் கூறுவாள் ஆண்டாள்.
• மாயவனும் கோதையும்
தேவகி-வசுதேவனுக்கு மகனாகப் பிறந்து, யசோதை-நந்தகோபனால் வளர்க்கப்பட்ட கண்ணனிடம் காதல் கொண்டேன். சுற்றத்தவராகிய நீங்கள் சொல்வதெல்லாம் என் காதில் விழாது.ஆகவே ‘மதுரைப் புறத்தென்னை உய்த்திடுமின்’ (617)குறளனானமாயனைக் கண்ணாரக் காணவேண்டும் ‘ஆணையால் நீரென்னைக் காக்க வேண்டில், ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்’ (618), ‘துவராபதிக்கு (துவாரகை) என்னை உய்த்திடுமின்’ (625) எனத் தலைவன் இருக்கும் இடத்திற்குத் தன்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள் எனப் பாடுகின்றாள் ஆண்டாள்.
• வினாவும் விடையும்
கண்ணனின் குறும்புகளைச் சொல்லிக் கண்டீர்களா எனக் கேட்க, பிருந்தாவனத்தில் பரமனைக் கண்டோம் எனப் பதில் கூறும் பாங்கில் நாச்சியார் திருமொழியின் கடைசிப் பத்துப் பாசுரங்களும் அமைந்து பொலிவூட்டுகின்றன. காட்டு:
கார்த்தண் கமலக் கண்ணென்னும்
நெடுங்கயிறு படுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன் றன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின் குப்பாயப்
புகர்மால் யானைக் கன்றேபோல்
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே
(640)
(குப்பாயம் = சட்டை , வேர்த்து = வியர்த்து / வேர்வை)
பொருள்:
தாமரை போன்ற கண்களாகிய காதல் வலையில் வீழ்த்தி, என் நெஞ்சையும் உடன் அழைத்துச் சென்று விளையாடும் ஈசனைக் கண்டீரா?
சட்டையை அணிந்து யானையின் குட்டிபோல் தோற்றம் கொண்டு வேர்வை துளிர்க்கவிளையாடுபவனை பிருந்தாவனத்தில் கண்டோம்.
இரு ஆழ்வார்களும் முறையே பிள்ளைத்தமிழ், திருப்பள்ளிஎழுச்சி என்னும் புதிய சிற்றிலக்கிய வகைக்கு வித்திட்டு, பக்தியோடு தமிழ் இலக்கிய வகைக்கும் வளம்சேர்த்த பெருமைக்குரியவர் ஆவர்.
இசையோடு பாசுரங்கள் பாடி இறைவனைக் கண்ட திருப்பாணாழ்வாரின் இசைத்தொண்டும் தமிழ்த்தொண்டும் தனிச் சிறப்புக்குரியது.
இராம அவதாரத்தில் நனைந்து இராமனிடம் அன்புகொண்ட குலசேகர ஆழ்வார் தசரதன் புலம்பல் வழி மகன்மைக் காதலையும் பக்தியையும் பறை சாற்றுவதோடு நம்மையும் இராமனுக்காகப் புலம்ப வைக்கிறார்.
பன்னிரு ஆழ்வார்களுள் ஒரே பெண்பிள்ளையாகிய ஆண்டாள் ஆழ்வார் திருப்பாவையில் பாவை நோன்பையும், நாச்சியார் திருமொழியில் அரங்கனுக்கு ஆட்பட்ட நிலையையும் அழகு தமிழால் புலப்படுத்துகின்றார். அவளின் திருமணம் பற்றிய பாசுரங்கள் பக்திக் காதலைப் பறை சாற்றுவதோடு ஆய்ப்பாடிக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. ஆண்டாள் அரங்கனுள் கரைய, அவள் காட்டும் மணச்சடங்கில் நாமும் அவளுக்காகக் கரைந்து போகின்றோம்.
ஆழ்வார்களின் திருத்தொண்டும் காதலும் ஒரு நிமிடம் நம்மை – நம் மனத்தை இழுத்துப் பிடிக்கின்றன அல்லவா?
பாடம் - 5
அக்காலத்தில் வாழ்ந்த ஆழ்வார்கள் வைணவத் திருத்தலங்களுக்குச் சென்று திருமாலைப் பக்திப் பாசுரங்களால் பாடி வழிபட்டனர்; அதன்வழி, திருத்தலங்களைத் திவ்விய தேசங்களாகப் போற்றி மங்களாசாசனம் செய்தனர். மங்களாசாசனம் என்றால் ஆழ்வார்களால் துதிக்கப் பெறுதல் அல்லது வழிபாடு செய்யப் பெறுதல் ஆகும்.
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்விய தேசங்கள் 108 என்பதை ஈண்டு நினைவு கூரலாம். திருப்பாற்கடல், திருப்பரமபதம் ஆகியவை தவிர 106 திவ்விய தேசங்கள் உள்ளன; அவற்றுள் 12 வட இந்தியாவில் உள்ளன.
ஏனைய 94 தென் இந்தியாவில் உள்ளன. அதிகமாகப் பாசுரங்கள் அருளிய நம்மாழ்வாரையும் அவர் சீடரான மதுரகவி ஆழ்வாரையும், அதிகமாகத் திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்த திருமங்கை ஆழ்வாரையும் பற்றி இப்பாடத்தில் காண்போம்.
நம்மாழ்வார் பிறந்தது முதல் குழந்தைக்குரிய அழுதல், தாய்ப்பால் குடித்தல் போன்ற செயல்கள் செய்யாது வாட்டமின்றி இருந்தார். எனவே பெற்றோர் அக்குழந்தை பிறந்து, பன்னிரண்டாம் நாள் திருக்குருகூர்ப்பிரான் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். உலக வழக்கத்திற்கு மாறாகக் காட்சி அளித்த அக்குழந்தைக்கு மாறன் எனத் திருநாமம் இட்டனர்.
திருவரங்கநாதன், நம் ஆழ்வார் என்று அழைத்ததால் நம்மாழ்வார் என்பர். பெருமாள் கொடுத்த மகிழம்பூ மாலையை அணிந்தவர் என்பதால் மகிழ்மாலை மார்பினர் ஆனார். புறச் சமயங்களாகிய யானையை அடக்கத் தம் அருளிச் செயல்களை அங்குசம் போலப் பயன்படுத்திக் கொண்டவர். ஆகையால் பராங்குசதாசர் எனப் போற்றினர். சடகோபர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. நம்மாழ்வார் அருளிய நான்கு திவ்வியப் பிரபந்தங்களும் நான்கு வேதங்களின் சாரம் என்பதால் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்றும் போற்றப்படுகிறார்.
2.திருஆசிரியம் 7 பாசுரங்கள்
3.பெரிய திருவந்தாதி 87 பாசுரங்கள்
4.திருவாய்மொழி 1102 பாசுரங்கள்
இனி அவர் அருளிய திருவிருத்தம் பற்றிக் காணலாமா?
சான்றாக, நலம் பாராட்டல் துறையைக் காண்போம். தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டுவது அகப் பொருளில் நலம்பாராட்டல் என்பர். இங்கு, திருமாலை நாயகனாகப் பாவித்த ஆழ்வார் நாயகியாகத் தம்மைப் பாவித்து நலம் பாராட்டுகிறார். சான்றாக ஒரு பாடல்:
வண்டுகளோ! வம்மின்! நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண்பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்ஏனம் ஒன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டு கள்வாரும் மலர் உளவோ நும்வியல் இடத்தே?
(3634)
(வம்மின் = வாருங்கள்; ஏனம் = பன்றி, விண்டு = மலர்ந்து, விரை = மணம்)
ஞானச்சுடர் விளக்கானவன் (3637), வெண்ணெய் உண்ட கள்வனை அல்லால் வேறு எதுவும் நெஞ்சம் பேணவில்லை (3670), யாக்கை முதுமை அடைந்து தடுமாறும் முன் நல்வீடு செய்யும் திருமாலை வணங்குபவன் (3674) இப்படிப் பல சொல்லி நாயகி தாம் விரும்பும் தலைவன் யார் எனக் காட்டுவது போல் அமைந்த பாசுரங்கள் அறத்தொடு நிற்றல் துறையில் அமைந்துள்ளன.
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான்கண்ட நல்லதுவே
(3678:4)
என அகப்பொருள் துறைகள் அரங்கன் மீது கொண்ட பக்தியைப் பரப்பும் துறைகளாகப் படைத்துக் கொண்டுள்ளார் நம்மாழ்வார்.
ஐம்பெரும் பூதங்கள் அவனுள் அடக்கம். உலகுக்கும் அவன் தெய்வம், எமக்கும் அவனே தெய்வம் எனத் தீவிர வைணவராகத் திருஆசிரியத்தை நிறைவு செய்கின்றார் நம்மாழ்வார்.
பிரிவையும் கூடலையும் மாற்றி மாற்றித் திருவிருத்தத்தில் காட்டிய நம்மாழ்வார், திருஆசிரியத்தில் திருமால் மட்டும் தனிப்பெரும் தெய்வம் என்றும் அவன் அருளிச் செயல்களைத் தொகுத்துக் காட்டி, அவனை மட்டும் வணங்குவோம் என்றும், அவன் திருவடிகளைப் போற்றும் பேறு பெற்று நல்வீடு பெறுவோம் என்றும் கூறி, உண்மையான செல்வம் (பக்தி) வழிபாட்டின் மூலம் கிடைக்கும் என்பதைக் காட்டுகிறார்.
பல்உருவை எல்லாம் படர்வித்த வித்தா!உன்
தொல் உருவை யார் அறிவார்? சொல்லு
(3704:3-4)
(படர்வித்த = உண்டாக்கிய)
எனக் கேட்டு வியக்கின்றார் ஆழ்வார்.
இறைவனோடு தாம் பெற்ற இன்பத்தை அப்படியே உரையாடல் போக்கில் பாடுகின்றார். நெஞ்சம் பெருமாளை மட்டும் சிந்தித்து இருக்க வேண்டும் (3695), பஞ்சபாண்டவர்களைக் காத்தவனைக் காணவேண்டும் (3699), நாவு திருமாலை வாழ்த்த வேண்டும் (3730), இப்படி மனிதப் பிறவியின் பயனைத் திருமாலை வழிபட்டு அடையவேண்டும் எனக் காட்டுகின்றார்.
உலகைப் படைத்தவன் அவனே, அவனுக்கு எல்லாம் உரியது என்பதையும் (3278),
பார்உண்டான்! பார்உமிழ்ந்தான் பார்இடந்தான்! பார்அளந்தான்
பார்இடம் முன்படைத்தான் என்பரால் – பார் இடம்
ஆவானும் தான்ஆனால், ஆர்இடமே? மற்றொருவர்க்கு
ஆவான் புகாவால் அவை
(3728)
எனக் காட்டுகிறார். அதாவது பெருமானின் செயற்கரிய செயல்களை இப்பாசுரம் கூறுகிறது. பிரளய காலத்தில் இவ்வுலகை விழுங்கித் தம் வயிற்றில் வைத்துக் காப்பாற்றிப் பின்னர் படைப்புக் காலத்தில் வெளிவிட்டார். அவரே வராக அவதார காலத்தில் பூமியை எடுத்துக் கீழிருந்து மேலே கொண்டு வந்தார். திரிவிக்கிரம அவதாரத்தில் பூமியை அளந்தார். அவ்வுலகை ஆதியில் படைத்தவரும் அவரே என்று கூறுவர். பார் (உலகம்) என்னும் பெயர்ச்சொல் மீண்டும் மீண்டும் வேறு வேறு வினைச்சொற்களோடு வந்து அவதாரங்களை நயம்படக் காட்டுகிறது.
‘எல்லாம் அவனே, அவனுள் எல்லாம்’ என்பதையும் அழகுபடச் சுட்டுகிறார்.
தொல்லை மா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லைகாண் மற்றோர் இறை!
(3746:3-4)
எனவே நரகம் செல்லாதிருக்கத் துழாய் மாலை அணிந்த மாயனைப் பணிய வேண்டும் என்பது நம்மாழ்வார் முடிவாகும்.
கடவுள் எங்கு உள்ளான்? எப்படிப்பட்டவன்? என்று மனப் போராட்டத்துக்கு ஆளாகாமல் கண்ணனே கடவுள் எனத் தெளிந்து நன்மை பெறுங்கள் எனத் தம் சமயக் கடவுளைக் காட்டுவார் நம்மாழ்வார்.
ஐம்புலன்கள் படுத்தும் பாட்டைப் பற்றிப் பேசாத கவிஞர்களும், பக்தர்களும், சித்தர்களும் இல்லை எனலாம். ஆழ்வாரும் குறும்பு செய்யும் ஐவரை நெறிப்படுத்தி, சினம் அழித்துச் செலுத்தினால் திருத்துழாய் மாலையானைச் சேவிக்கப் பழகிக் கொள்ளும் பெருமை உடையது (3737) ஆகுமாம்.
வாழ்த்தி அவன் அடியைப் பூப்புனைந்து நின் தலையைத் தாழ்த்தி, இருகை கூப்பித் தொழுவாய் மனமே! அவனைத் தொழாமல் உன்னால் இருக்க முடிகிறதா? எப்போதும் பெருமானின் திருவடிகளைப் போற்று. வல்வினை நீங்கும் என்பதோடு பெரிய திருஅந்தாதி நிறைவுறுகிறது.
நெஞ்சை விளிப்பது போலத் தன் உணர்வையும், பிறரையும் பக்தி நெறிப்படுத்தும் ஆழ்வாரின் அணுகுமுறையைக் காட்டும் இவ்வந்தாதி, உண்மையிலேயே பெரிய அந்தாதிதான்.
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழின் இசை வேதத்து இயல்
………………..
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் – ஈன்ற
முதல்தாய் சடகோபன்…
(திருவாய்மொழித் தனியன் 4,5)
வடமொழி வேதத்தைத் தமிழ்ப்படுத்திய பெருமைக்குரிய நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி என்பது தனியன், திராவிட வேத ஸாகரம் (கடல்) என்பர் நாதமுனிகள்.
‘வேதம் தமிழ் செய்த மாறன்’ எனத் திருவாய்மொழியினால் திருநாமம் பெற்றார் நம்மாழ்வார். இத்தன்மைத்தான சிறப்புக்குரிய திருவாய்மொழி பற்றிக் காண்போம்.
உயர்வற உயர்நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவன்? அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
துயர்அறு சுடரடி தொழுதுஎழு என் மனனே!
(2082)
(மயர்வற = அறியாமை நீங்க, அமரர்கள் = தேவர்கள், துயர் அறு = துயரத்தைத் தீர்த்து)
என்பது முதல் பாசுரம் ஆகும். முதன்மையாக நின்று ஞானத்தின் முதிர்ச்சியையும் காட்டுகின்றது. ‘இதற்கு மேலே ஏதும் இல்லை என்னும் அளவுக்கு உயர்ந்து நிற்பவன்; மயக்கம் தீர்ந்த அறிவொளி தந்து உயர்த்தினான்; துன்பம் நீங்க அவன் திருவடியைத் தொழுவாயாக என் நெஞ்சமே!’என்பது நம்மாழ்வாரின் வேண்டுகோள்.
உருவினன், அருவினன், ஒழிவிலன், நலன் உடைய ஒருவன், அந்த இறைவன்.
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி உடையவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே
(2086)
மக்கள் இறைவனை வழிபாடு செய்யும் முறை, அவர்களுக்கு இறைவன் அருளும் திறன் பற்றிப் பொதுவிதி செய்துள்ளார் ஆழ்வார்.
• இறைமை
இறைவன் ஐம்பெரும்பூதங்களாகிப் படர்கின்ற பொருள் முழுவதிலும் நிறைந்தவன். உடலில் தங்கி உள்ள உயிர் போல எங்கும் மறைந்து எங்கும் நிறைந்துள்ளவன். ஒளி விடுகின்ற வேதங்களும் அவனே (2088) எனப் போற்றுகின்றார்.
• உளன் இலன்
இறைவன் உண்டு என்றால் அவன் உருவங்கள் உடையவன். இல்லை என்றால் அவன் அருவப்பொருள் ஆகின்றான். உள்ளவன், இல்லாதவன் ஆகிய இரு தன்மையனாய் எங்கும் ஒழிவு இலன் ஆக இருப்பவன் (2090) என்பர்.
‘அகலில் அகலும் அணுகில் அணுகும்’ (2157), ‘மயக்கம் அற என் மனத்தே மன்னினான் உயர்வினையே தரும் ஒண்சுடர்க் கற்றை, தேவர்களின் ஆதிக் கொழுந்து (2151) எனப் பாடுபொருளாகவும் நுண்பொருளாகவும் நிற்கும் நாதனைக் கொண்டாடுகிறார் நம்மாழ்வார்.
ஆணல்லன்; பெண்ணல்லன்; அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான்; உளன்அல்லன்; இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும்; அல்லனுமாம்
(2245:1-3)
என்பன போன்ற பாசுரங்கள் பல உள்ளன.
• ஞானச்சுடர்
விடுவே னோஎன் விளக்கைஎன் ஆவியை
நடுவே வந்துஉய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்துஇள ஆய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே?
(2152)
அதாவது என்னுடைய உயிர் போன்றவரும், வாழ்வின் ஒளியாக மேவுபவரும் நடுநாயகமாக விளங்கி என்னுள் மேவி உய்யுமாறு புரியும் தலைவரும் ஆய்ச்சியர்கள் தமது கண்களால் மகிழ்ந்து பருகியும் கைகளால் தொட்டுப் பேரானந்தம் கொண்டும் விளங்க அருள் செய்தவருமான கண்ணபிரானை, அடியேன் விட்டு நீங்கி இருப்பேனா? என்று எளிவந்த பிரானைச் சிக்கெனப் பற்றிக் கொண்ட நம்மாழ்வார் நிலையைக் காட்டுவது மேற்குறித்த பாசுரம்.
• வீடுபேற்றை அடையும் வழி
எல்லாப் பற்றையும் துறந்தால் பற்று அற்ற நாதனைப் பற்றிக் கொள்ளலாம்.
வீடுமின் முற்றவும் – வீடுசெய்து உம்உயிர்
வீடு உடையானிடை – வீடு செய்ம்மினே
(2093)
(வீடு = விடுதல், முக்தியுலகம்)
அற்றது பற்று எனில் – உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில் – அற்றுஇறை பற்றே
(2097)
என உலக மக்களுக்கு உபதேசம் செய்கிறது திருவாய்மொழி.
• பிறவிப் பிணிக்கு மருந்து
தம்மை வழிபடுகின்றவர்களுக்குச் செல்வம் ஆகவும் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகவும் விளங்கும் ஆயர் கொழுந்தை (கண்ணன்), அமுதினைப் பருகிப்பருகி மாயப் பிறவியிலிருந்து விடுபட்டேன் (2150) எனப் பிறவித் துன்பம் நீங்கக் காரணமானவனைத் தம் ஞானத் தெளிவால் பாசுரமாக்கியுள்ளார் நம்மாழ்வார்.
• என் ஆவி நலம் கொள்நாதன்
ஆலிலையில் துயின்றவன் ஆழ்வாரோடு கலந்த நிலையைக் காட்டும் பாசுரம் (2170) மிக அருமையானது. ‘கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான்; நான் அவன் கண்களாலே காண்பன் (2178) எனப் பிரித்தறிய இயலாத உறவைக் கூறும் மனநிலை எத்துணை அற்புதமானது!
ஞானவெள்ளச் சுடர் மூர்த்தி (2209)யின் உறவால் பிறவிப்பேறு பெற்ற ஆழ்வார், ‘நீ எனது ஆவியுள் கலந்த உதவிக்குக் கைம்மாறாக எனது ஆவியை உனக்கு உரிமையாக்கி விட்டேன், உன்னிடம் பெற்றதை உன்னிடம் கொடுத்து விட்டேன், உரிமை ஆக்கியதை உய்தி பெறச் செய்வாய்’ எனக் கேட்கும் பக்திப் பாசுரம்.
எனதுஆவியுள் கலந்தபெரு நல்உதவிக் கைம்மாறு
எனதுஆவி தந்தொழிந்தேன்;இனிமீள்வது என்பதுஉண்டே
எனதுஆவி ஆவியும்நீ, பொழில்ஏழும் உண்ட எந்தாய்!
எனதுஆவி யார்?யான்ஆர்? தந்த நீகொண் டாக்கினையே
(2217)
(பொழில் ஏழும் = உலகம் ஏழும், கொண்டு = ஏற்றுக்கொண்டு, ஆக்கினையே = உன்னுடையவையாக மாற்றினாயே)
என்பது நம்மாழ்வாரின் சொல்லாடலுக்கும் (2217) சான்றாகும்.
• அக்காரக் கனி
கைம்மா (இந்திரன் யானை) துன்பம் கடிந்த பிரானே! அம்மா அடியேன் வேண்டுவது இஃதே (2202)
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்கா லத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும்என்
அக்காரக் கனியே! உன்னை யானே
(2289)
எனத் திருமாலை அக்காரக்கனி (இனிய் வெல்லப்பாகில் தோய்த்த கனி) யாகக் காணும் ஆழ்வார்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
ஒழுகிலா அடிமை செய்ய வேண்டும்
(2326: 1-2)
(ஒழிவில் = இடைவெளியின்றி)
என வேண்டுகோள் விடுக்கின்றார். ‘மன்னி’ என்னும் சொல் நிலைபெற்று, நீங்காது, கலந்து, என்னும் பொருளைத் தரும். ஆழ்வாரின் பக்தி கனிந்த நிலையையும் புலப்படுத்தும்.
• அடியார்க்கு அடியார்
பிறப்பினால் வரும் வேறுபாடுகள் எங்களுக்கு இல்லை; சக்கரக்கையானுக்கு ஆட்பட்டவர்கள் எமக்குக் கடவுள்.
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல்
மணிவண்ணற்கு ஆள்என்று உள்
கலந்தார், அடியார் தம் அடியார்
எம் அடிகளே
(2378:3-4)
(அடிகள் = கடவுள்)
இக்கடவுள் பாசுரம் ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதைக் காட்டுகிறது. அக்காலத்தில் நிலவிய சாதி முறை அல்லது சமூக அமைப்பு மனிதனை மனிதனில் இருந்து பிரித்துப் பார்க்கும் கொடுமையைச் செய்தது. விளைவு கடவுள் கூட, தனிப்பட்ட சமூகத்தின் சொத்துபோலப் பாவிக்கப்பட்டு, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழிபாடு மறுக்கப்பட்டது. அதன் விளைவு இத்தன்மைத்தான பாசுரங்களும் தோன்ற வித்திட்டன.
• இன்கவி யாருக்கு?
‘சொன்னால் விரோதம் இது, இருந்தாலும் சொல்லுவேன், என் நாவில் இன்கவியான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் (2392), இம்மானிடத்தைக் கவி பாடி என்ன பயன்? (2393), வானவர் ஈசனை வான்கவி கொண்டு பாடுங்கள்’ (2394), மனிதரைப் பாடிப் பெறும் பொருள் எதற்கு (2395) என்பன போன்ற பாசுரங்கள் பாடுபொருளில் மாற்றம் ஏற்பட்ட சிந்தனையைக் காட்டும்,
நும்இன் கவிகொண்டு நும்நும் இட்டாதெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என்திரு மாலுக்குச் சேருமே
(2397:3-4)
(இட்டா = விருப்பமான)
என எல்லோரும் வணங்கும் கடவுளாகத் திருமாலைக் காணும் நம்மாழ்வார்
வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்
(2400:1)
எனத் தம் நோக்கத்தைப் பதிவு செய்கின்றார்.
நம்மாழ்வார் வாழ்ந்த காலம் (9-ஆம் நூற்றாண்டு) தனி மனிதன்/ வள்ளல்/ அரசர் போன்றோரைக் கவிபாடிக் கவிஞர்கள் பொருள் பெற்ற காலம். அதே நேரத்தில் முதல் ஆழ்வார்கள் தொடங்கி வைத்த பக்தி ஆல விதை போலத் தழைத்துக் கிளைகள் பெருகத் தொடங்கிய காலம்; அதாவது மனிதரையும் தெய்வத்தையும் கவிபாடிப் பொருளும் அருளும் பெற்ற மனிதம் பாடிய கவிஞர்களும் தெய்வம் போற்றிய அருளாளர்களும் ஊடாடிய காலம். எனவே ஆழ்வார் இருவர் நிலையையும் ஒப்புநோக்கி, மனிதம் பாடிய கவிஞர்களைத் தம் பக்கம் இழுக்க, பக்தியைப் பரப்பும் முயற்சிக்கு வளம் சேர்ப்பவர்களை அழைக்கும் அழைப்பிதழாகத் தம் பாசுரங்களைப் படைத்துக் கொண்டார்போலும்.
தமிழ் மொழி என்றாலே கவிதைப் பதிவு தான் பெரும்பான்மை என்பதால் கவிஞர்களை விளித்தார் போலும்.
• புறச்சமயத்தவர் போற்றுமின்
சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறருக்கும் நாயகன் அவனே. சமணரும் சாக்கியரும் வலிந்து வாதம் செய்பவர்களும், திருக்குருகூர் நாதனைப் போற்றுங்கள் (2516, 2517) என்பர்.
நம்மாழ்வாரின் திருமால் பக்தியும் பிற சமயத்தாரை வேண்டும் தன்மையும் அதேநேரம் திருமால் மீது அவர் செலுத்திய அளப்பரிய காதலும் புலப்படுகிறதல்லவா?
• நோக்குபவை எல்லாம் திருமாலே
தலைவியின் மனநிலை கண்ட தாய் கூற்றில் அமைந்த பாசுரம்:
மண்ணை இருந்து துழாவி
‘வாமனன் மண் இது’ என்னும்
விண்ணைத் தொழு(து) அவன் மேவு ‘வைகுந்தம்’ என்று கைகாட்டும்
கண்ணையுள் நீர்மல்க நின்று
‘கடல்வண்ணன்’ என்னும்; என்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு
என்செய்கேன் பெய்வளை யீரே?
(2447)
(கண்ணையுள் = கண்ணில், பெருமயல் = பெருமயக்கம், பெய்வளையீர் = வளையணிந்த பெண்கள்)
செந்தீயைத் தழுவி ‘அச்சுதன்’ என்றும், காற்றைத் (துழாய் மணம்) தழுவி ‘கோவிந்தன்’ என்றும், கன்றைத் தழுவி ‘கோவிந்தன் மேய்ந்தன’ என்றும், நாகத்தின் (பாம்பு) பின்போய் ‘அவன் கிடக்கை’ என்றும், ஆய்ச்சியர் வெண்ணெய் காணில் ‘அவன் உண்ட வெண்ணெய்’ என்றும் உருகி நிற்கும் பாங்கு அவர்தம் பக்தியைக் காட்டுகிறது.
• ஞானச் சிறுகுழவி
என்நலம் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே? (2616) என்றும், கோலப்பிரான் செய்கையை நினைந்து என் மனம் குழைகிறது (2668) எனக்கு இனி யார் நிகர்? (2673) என்றும் பெருமையைப் பேசுகிறாள் தலைவி.
உண்ணுஞ் சோறு பருகுநீர்
தின்னும் வெற்றிலையும் எல்லாம்
(2700:1)
கண்ணன் எனச் சொல்லித் திருக்கோளுர் புக நினைக்கின்றாள். கண்ணனே எல்லாம் ஆகிப் போன தலைவி ஞானச் சிறு குழவிக்காக ஏங்குகின்றாள்; தூது அனுப்புகின்றாள் (2711-2721).
• கட்டுவிச்சி
அன்னைமீர் கட்டுவிச்சி சொற்கேட்டுக் கள்ளும் இறைச்சியும் தூவாதீர்கள். துழாய்முடிப்பிரான் கழல் வாழ்த்துங்கள் (2471) பெருந்தேவன் பேர் சொன்னால் இவளைப் பெறலாம். அதுவே இவள் உற்ற நோய்க்கு மருந்து எனத் தோழி அன்னையரிடம் தலைவியின் மெலிவுக்குக் காரணமானவன், தலைவி விரும்பும் தலைவன் யார் எனச் சொல்லி, தலைவியின் தாய்க்குத் தலைவியின் நோய் அறியச் செய்து, பிறவழிபாடுகளை விலக்குகின்றாள்.
• மடலூரத் துணிதல்
தலைவியைப் பெறத் தலைவன் கடைசியாக மேற்கொள்ளும் முயற்சி மடலூர்தல் ஆகும். அகப்பொருள் துறையைப் பயன்படுத்திக் கொண்ட நாயகியாகிய நம்மாழ்வார்.
ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னைசொல் நீர்படுத்து
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனிநங் கண்ணன் தோழீ! கடியனே
(2549)
(செய் = வயல், கவ்வை = அவதூறு மொழி, கடியன் = கொடுமை நிறைந்தவன் )
மணிவண்ணன் வலையுள் பட்டேன். எனவே மடல் ஊர்ந்தாவது ஆழியங்கைப் பிரானின் தன்மைமிக்க துழாய் மலர் கொண்டு சூடுவோம்’ (2555) எனப் பக்திக்காதல் மடல் ஊர்தலால் கிடைக்கும் பரிசைக் கூறுகின்றது.
தாய் ஆகவும், தலைவி ஆகவும் தம்மைப் பாவித்த ஆழ்வார், மகள் நிலை உரைப்பதும், தம் நிலை உரைப்பதும் நம்மாழ்வாரின் பக்திப் புலப்பாட்டிற்கும், நடைச் சிறப்பிற்கும், மொழி ஆளுமைக்கும், பக்தியோடு கூடிய மொழிப் பற்றுக்கும் எடுத்துக்காட்டுகள் ஆகும்.
• வழிபாடு
வானவர் தலைவன் இந்திரனும், தேவர்களும் மலர்களைத் தூவிவழிபட்ட இடம் திருவேங்கடம் (2327), துழாய் மலர் விரும்பும் தலைவி (2731), தொண்டர்கள் பூக்கொண்டு ஏத்தி ஆடிப்பாடுதல் (2487), பாதத்தில் மலர் தூவுதல் (3121)
நாடீர்நாள் தோறும் – வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் – வீடே பெறலாமே
(3122)
என்பதால் திருமால் வழிபாட்டில் மலரும், துழாயும் நிறைந்திருந்ததை அறியலாம்.
• நிலையாமை
இளமை கெடுவதன் முன்பு திருமாலிருஞ்சோலை அழகனை நினையுங்கள் (2293). மூப்பும் பிறப்பும் இறப்பும் பிணியும் விழும்படி செய்பவன் திருவேங்கடத்தான் (2334), வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று இளைப்பதன் முன்னம் (2335) நினையுங்கள். மழைநீரில் தோன்றும் குமிழிபோல் வாழ்வு நிலையற்றது, உறுதிப்பொருள் வேண்டில் கடல்பள்ளி அண்ணலின் அடியவர் ஆகுங்கள் (2419).
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை
மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால்
அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்
என்பதில்லை
(மொக்குளி = நீர்க்குமிழி)
என நிலையாமையைக் காட்டி, நிலைத்த பொருளாய்ப் பற்ற வேண்டும். அதுபோலவே செல்வமும் உறவும் நிலையற்றது (2964 – 2973). எனவே, எம்பிரானே சிறந்த துணை என்பர்.
இவர் அருளிச் செய்த திவ்வியப் பிரபந்தம் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனத் தொடங்கும் 11 பாசுரங்கள், இளமையிலேயே இனிய கவிகளைப் பாட வல்லவராக விளங்கியதால் மதுரகவி எனப் பெயர் பெற்றார்.
நம்மாழ்வார் தவிர வேறு தெய்வமில்லை. திருக்குருகூரில் எழுந்தருளிய நம்மாழ்வாரைக் குருவாகக் கொண்டு வீடுபேறு பெற்றவர். பன்னிரு ஆழ்வார்களுள் மதுரகவி ஆழ்வார் மட்டும் திருமாலைப் பாடாமல், திருமாலின் அவதாரங்களைப் பாடாமல் திருமாலடியார் ஆன நம்மாழ்வாரை மட்டும் பாடி ஞானம் பெற்றவர். மேலும்,
வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறு,எங்கள்
வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை
ஆள்வார் அவரே யரண்
(தனியன்)
எனப் பாடிய நாதமுனிகள் கூற்றும் இதனைத் தெளிவுபடுத்தும்.
கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே
(937)
(தாம்பு = கயிறு, பண்ணிய = செய்த, என் அப்பன் இல் = நம்மாழ்வார் வீடு, நண்ணி = சேர்ந்து, அண்ணிக்கும் = தித்திக்கும்)
சிறிய கயிற்றினால் தன்னை யசோதை கட்டும்படி செய்த மாயனே தென்குருகூர் நம்பி ஆகிய நம்மாழ்வார் எனச் சொன்ன அளவில் தேன் என இனிக்கும்; வாயில் அமுதம் ஊறும் என்கின்றார்.
எனவே நம்மாழ்வாரைத் தவிர தெய்வம் வேறில்லை; அவர் அருளிச் செயல்களைப் பாடித் திரிவேன்.
நாவி னால்நவிற்றி இன்ப மெய்தினேன்
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி
பாவி னின்னிசை பாடித் திரிவனே
(938)
(குருகூர் நம்பி = நம்மாழ்வார், தேவு = கடவுள்)
எனப் பாடும் மதுரகவியின் பாசுரங்கள் வித்தியாசமானவை. நம்பியைக் குருவாகக் கொண்டதால் நம்மாழ்வார் திருவடியே சரணம் என்கின்றார்.
• நம்மாழ்வாரைப் போற்றுதல்
நம்மாழ்வாரைத் ‘தமிழ்ச் சடகோபன்’ என்று பாடும் மதுரகவி, அவர் அருள் பரப்புவது தம் வேலை என்பர்.
வேதத்தின் பொருளை எளிய தமிழில் பாடியவர் என்பதை உணர்ந்த சீடர்,
அருள்கொண் டாடும் அடியவ ரின்புற
அருளி னான்அவ் வருமறை யின்பொருள்
அருள்கொண் டாயிரம் இன்தமிழ் பாடினான்
அருள்கண் டீர்இவ் வுலகினில் மிக்கதே
(944)
எனப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றார். படித்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ளக் கூடிய அல்லது சிறுபான்மையோரின் கைக்குள்ளிருந்த வேதத்தைக் கற்றோரும் கல்லாதோரும் உணர்ந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்திய பெருமைக்குரியவர் நம்மாழ்வார்.
இவர் அருளியவை:
1.பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்)
2.திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்)
3.திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)
4.திரு எழு கூற்றிருக்கை ( 1 பாசுரம்)
5.சிறிய திருமடல் (40 பாசுரங்கள்)
6.பெரிய திருமடல் (78 பாசுரங்கள்)
ஆக ஆறு திவ்வியப் பிரபந்தங்களில் 1253 பாசுரங்கள் அருளியுள்ளார். இவற்றுள் பல யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தி உள்ளார்.
திருமங்கை ஆழ்வார் பிறக்கும் பொழுது கரிய நிறம் உடையவராய் இருந்ததால் பெற்றோர்கள் நீலன் என்னும் திருநாமம் சூட்டினார். சோழ மன்னன் ஆழ்வாரின் வீரத்தைப் போற்றி, அவரைத் திருவாலியின் குறுநில மன்னன் ஆக்கினான்.
இவர் திருவெள்ளக் கோயிலில் குமுதவல்லியைக் கண்டு காதல் கொண்டார். அம்மையார், ஒருவருடம் 1008 வைணவர்களுக்கு அமுது செய்விக்க வேண்டும் எனப் பணித்தார்.
• அடியார்களுக்கு அமுது செய்வித்தல்
அடியார்களுக்கு அமுது செய்யவே பணம் தீர்ந்தது. சோழ மன்னனுக்கு வரி செலுத்தப் பணம் இல்லை. அரசன் படையுடன் வந்து திருமங்கையைச் சிறைப்பிடித்தான். காஞ்சி வரதராசப் பெருமான் இவர் கனவில் தோன்றி, பணம் தருவதாகச் சொல்லி மறைந்தார். இறைவன் கொடுத்த பணத்தில் வரி செலுத்தியதை அறிந்த மன்னன் பணத்தைத் திருமங்கையாரிடம் திரும்பக் கொடுத்தான்.
• எட்டெழுத்து மந்திரம்
திருமங்கை, கொள்ளை அடித்தாவது அடியார்களைப் பேண வேண்டும் என்னும் கொள்கை உடையவர் ஆனார். ஒருமுறை பெருமான், மணக்கோலத்தில் வர, ஆழ்வார் அவர்களிடம் இருந்த பொருள்களைப் பறித்தார். அப்பொழுது மணமகன் காலில் உள்ள நகையைக் கழற்ற இயலாமல் பல்லால் கடிக்க, பெருமானால், கலியன் (பலம் மிக்கவன்) என அழைக்கப்பட்டார். அவர்களிடம் கவர்ந்த பொருள்களை அடியாரால் எடுத்துச் செல்ல முடியவில்லை. அதற்கான காரணத்தை அந்தணர் வடிவில் வந்த பெருமானிடம் கேட்க, எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோ நாராயணாய) உபதேசிக்கப்பட்டு, திவ்வியப் பிரபந்தங்களை அருளும் பேறு பெற்றார்.
திருமங்கை, தமிழ் யாப்பு வடிவங்களைக் கவினுறக் கையாண்டு நூல் அருளியவர்; 108 திவ்ய தேசங்களில் 85 திருத்தலங்கள் பற்றிப் பாடி உள்ளார் என்பர். திருஉருவ வழிபாட்டில் (அர்ச்சா அவதாரம்) மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
நாடினேன்; நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
(948:4)
என அச்சொல் எதுவெனக் காட்டி, பெரிய திருமொழியை ஏக்கத்துடனும் மனநிறைவுடனும் தொடங்குகின்றார்.
• நாமப் பெருமை
நாராயணா என்ற பெயர் தரும் பயன்: திருமாலின் திருநாமம் ‘குலம் தரும்; செல்வம் தரும்; வெற்றி தரும்; அருள் தரும்; பெற்ற தாயினும் நல்லன செய்யும்’ (956) என்று புகழ்கின்றார். ‘பரமனைப் பாடி நீர் உய்தி பெறுவீர். நம்முடைய வினைக்கு நஞ்சுதான் கண்டீர் நாராயணா என்னும் நாமம்’ (954) என்பர். இராம, கிருஷ்ண அவதாரங்களின் பெருமையைக் கதை போலச் சொல்லும் பாசுரங்கள் பல (978-997) உள்ளன.
இலங்கை அரக்கன் இராவணனின் தலை பத்தும் அறுத்தவன் வாழும் இடம், இரணியனைப் பிளந்தவன், ஐம்பெரும் பூதங்களானவன், சாளக்கிராமத்து அடிகள் எனத் திருமால் கோயில் கொண்டுள்ள இடங்களின் திருமூர்த்தியைப் போற்றுகின்றார் (996:1-2).
• மானிட உறுப்புகள் பயன்
புள்ளில் (கருடன்) ஊர்ந்து திரிவான் பொன்மலையைக் கண்கள் காண வேண்டும். செவிகள் தொண்டர்க்கு இனியவனைக் கேட்க வேண்டும். பேச்சு திருமாலின் பெருமை பற்றிய பேச்சாக இருக்க வேண்டும். பாட்டு நறுந்துழாய் மாலை அணிந்தவனை ஆர்வத்தால் பாடவேண்டும். கைகள் சங்கேந்தும் கையானைத் தொழ வேண்டும். உள்ளம் அவனை உள்ள (நினைக்க) வேண்டும். நெஞ்சு மலரிட்டு அவனை நினைக்க வேண்டும் (2012-2019). நப்பின்னைக்காக ஏழு எருதுகளை வென்றவனுக்கு ஆட்படாதவர்கள் ‘மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே’ (2020) எனப் பக்தியின் எல்லைக்கே சென்று விடுகின்றார்.
• இரணியன் வதம்
நரசிம்மர் கோயில் கொண்டுள்ள சிங்கவேள் குன்றம் பற்றிய பாசுரங்கள் பத்தும் (1008-1017) நரசிம்ம அவதாரத்தை மட்டும் பேசுகின்றன.
• இராமகாதை
காவித்துணியால் உடம்பை மூடி, சானகியைக் காதல் செய்த இராவணனை அழித்தவன்; அனுமனைத் தூது அனுப்பியவன் (1074) என்றும், விபீடணனைச் ‘செல்வ விபீடணன் (1522), எந்தை விபீடணன் (1541)’ என்றும் போற்றுகின்றார். தோல்வியுற்ற அரக்கர் நிலை (1858-1877), இரணியன் பிரகலாதன் உரையாடல், நரசிம்ம அவதாரம் (1075) பற்றியும் பேசும் ஆழ்வார், கிருஷ்ண அவதாரத்தையும் பாரதக் கதையையும் இணைத்து, திவ்விய தேசப் பெருமையைப் பாடுவது குறிப்பிடத்தக்கது.
• திருவடிச் சிறப்பு
வையம் தொழும்,
முனியை வானவ ரால் வணங்கப்படும்
முத்தினைப் பத்தர்தாம் நுகர் கின்றதோர்
கனியைக் காதல் செய்து என்உள்ளங் கொண்ட
கள்வனை இன்று கண்டு கொண்டேனே
(1575:3-4)
எனச் சிக்கெனப் பிடிக்கின்றார் ஆழ்வார்.
‘பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர்கள் பின் உதவார் என்பது அறிந்தேன். நீ பணித்த அருள் என்னும் ஒளி பொருந்திய வாளை உருவி எறிந்தேன். ஐம்புலன்கள் இடர்தீர எறிந்து வந்து நின்னடியைச் செறிந்தேன்’ (1461) என ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலக்க விழைந்த பேற்றைப் பாடுகின்றார். பிறவிப்பிணி வேண்டேன். அந்தோ! மனை வாழ்க்கை தன்னை வேண்டேன் (1462). கல்லா ஐம்புலன்களும் பாடாய்ப்படுத்துகின்றன. அவற்றிலிருந்து விடுபட்டு உன்னைச் சரண் அடைந்தேன். ‘சுடர்போல் என் மனத்து இருந்த வேதனே’ எனத் தமிழ் மாலையால் திருமாலை ஆட்படுத்திக் கொள்கிறார் ஆழ்வார்.
• வழிபாடு: பிறவி நீங்க வழிபடல்
மக்கள் கருவில் என்னைத் தோற்றுவிப்பாயோ’
என அஞ்சும் ஆழ்வார்
ஆற்றங் கரைவாழ் மரம்போல அஞ்சுகின்றேன்
(2022:3)
காற்றில் அகப்பட்ட கலத்தில் உள்ளவர் மனம்போல் (கலவர்) நடுங்குகின்றேன் (2023), பிறவிக்கண் புகச் செய்வாய் எனக் கருதி ‘பாம்போடு ஒரு கூரையில் (கூட்டில்) வாழ்வதுபோல மனம் அஞ்சுகின்றது’(2024), இருபக்கமும் நெருப்பு எரிகிற கொள்ளியில் மாட்டிக் கொண்ட எறும்புபோல் என் உள்ளம் உருகும் (2025), இடும்பைக் குழியில் விழச் செய்வாய் என அஞ்சி ‘வெள்ளத்திடை சிக்கிக் கொண்ட நரிக்கூட்டம் போல (2026) என் உள்ளம் தடுமாறுகின்றது என்றெல்லாம் பிறப்பைப் போக்க வேண்டிப் பெருமாளைக் கெஞ்சும் திருமங்கை ஆழ்வார் அழகிய உவமைகளைப் பெய்து, அவற்றின் வழித் தம் நிலையையும் உணர வைக்கின்றார்.
ஆழ்வாரின் அச்சம் பாசுரங்களைப் படிப்போரை பக்தி உலகுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் மிக்கவை.
பாடோமே எந்தை பெருமானை? பாடிநின்று
ஆடோமே ஆயிரம் பேரானை? பேர்நினைந்து
சூடோமே சூடும் துழாய் அலங்கல்? சூடிநாம்
கூடோமே கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே!
(1979)
(துழாய் = துளசி, அலங்கல் = மாலை)
வழிபாடு செய்யும் ஆழ்வாரின் மன நிலையைக் காட்டுவது மேற்காட்டிய பாசுரம்.
• திருச்சாழல்
பெருமானின் எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிர் எதிராகக் கூறும் வினா விடையில் காட்டும் நிலையில் அமைந்தது திருச்சாழல் என்னும் இலக்கியவகை. இதைத் திருமங்கையாழ்வார் கையாள்கிறார் (1992 -2001). இது பக்தியைப் பரப்ப நாட்டுப்புற இலக்கிய வகை பயன்பட்டதற்குச் சான்று,
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே!
(1996)
என்று பெண்கள் பாடுவதாக அமைத்துள்ளார்; பக்திப் பாடல்களைப் பாடும்போது, எழுதப் படிக்கத் தெரியாத மக்களிடமும் அப்பாடலை நினைவில் வைத்துப் பாடுகின்ற ஆற்றலும் வாய்ப்பும் உருவாகும் வண்ணம் பாடியுள்ளார்.
• திருமங்கை நாயகி
தலைவனைப் பிரிந்த தலைவி வண்டு முதலியவற்றை நோக்கிக் கூறுதல் (1198-1207), உடன்போக்கில் சென்ற தலைமகளைக் குறிக்கத் தாய் இரங்குதல் (1208-1217) போன்ற அகப்பொருள் துறையில் அமைந்த பாசுரங்கள் நாயகியாகிய ஆழ்வார் இறைவன் மீது கொண்ட காதலைப் பாடுகின்றன.
மண் அளந்தவன், குடந்தை நகர் உள்ளவன் தனக்குத் துணையாளன் ஆகவேண்டும் (1206) எனச் சொல்லி, சிறு வண்டைத் தன் காதல் நோய் உரைக்க வேண்டுகின்றாள்.
வெள்ளி வளைக் கைப்பற்ற
பெற்ற தாயரை விட்டு அகன்று
அள்ளல் அம் பூங்கழனி
அணி யாலி புகுவர் கொலோ?
(1208:3-4)
(வெள்ளி வளை = ஒளி பொருந்திய வளை, அள்ளல் = சேறு, ஆலி = திருவாலி நகர்)
எனத் திருமணத்திற்கு முன் உடன் சென்ற மகள் நிலையைச் சொல்லி இரங்குகின்றாள்.
அகப்பொருள் துறையில் தாய், தலைவன் பெயரை அறிந்து சொன்னதாகப் பாடல் அமையாது. ஈண்டு பக்தி இலக்கியம், பக்தியைப் பரப்பும் இலக்கியம் என்பதால் தாய் தலைவன் பெயர் அறிந்து சுட்டுகிறாள். மேலும் தன் மகள் ‘கண்ணன்’ என்றும் ‘நேசன்’ என்றும் தேவதேவன் என்றும் சொல்லி,
பலரும் ஏச என்மடந்தை
பார்த்தன் பள்ளி பாடுவாளே
(1325:4)
எனத் தாமரையாள் (திருமகள்) கேள்வனைத் தன் மகள் நினைந்து உருகுவதைச் சொல்லிப் புலம்புகின்றாள்.
இரும்பு அனன்று உண்ட நீர்போல்
எம் பெருமானுக்கு என்தன்
அரும் பெறல் அன்பு புக்கிட்டு
அடிமை பூண்டு உய்ந்து போனேன்
(2036)
(அனன்று = பழுக்கக் காய்ச்சிய)
என்னும் இப்பாசுரம் ஆழ்வாரின் இறை அனுபவத்தை விளக்கும் அழகிய உவமை கொண்ட அற்புதமான எடுத்துக்காட்டு. ‘காய்ச்சிய இரும்பில் பட்ட நீர்’ என்பது ஆன்மாவும் பரமான்மாவும் கூடிய நிலையைக் காட்டும்.
• அடியார்க்கு அடியார்
திருமலை ஒருமையானை
தன்மையை, நினைவார் என்தன்
தலைமிசை மன்னு வாரே
(2038)
(ஒருமையானை = ஒப்பற்றவனை)
என்று இறை அருளையும், வண்ணத்தையும் சொல்லி அரங்கநாதனைப் போற்றி நினைப்பவர்கள் தலைமேல் வைத்து மலர் போலச் சூடத் தக்கவர்கள் என அடியார்க்கு அடியார் ஆகின்றார் திருமங்கை.
இன்பப் பாடல், பச்சைத் தேன், பைம்பொன், மரகதம், நிதி, பவளத் தூண் என அலைகடல் வண்ணனைக் கண்ணுக்கும் மனத்துக்கும் இனியவன் ஆகக் காண்கின்றார்.
கரும்பினைக் கண்டு கொண்டுஎன்
கண்ணிணைக் களிக்கு மாறே
(2044:4)
அரங்கனை இரண்டு கண்களாலும் கண்டதாகப் பாடுகிறார் ஆழ்வார்.
அன்பினால் ஞான நீர் கொண்டு
ஆட்டுவன் அடியனேனே
(2046:3-4)
என்றும், மாரீசமானைக் கொன்று, மருதமரங்களை முறித்து, வையம் அளந்தவனை, வானில் வாழும் தேவர்களுக்கு அமுதம் கொடுத்தவனை ‘என்னுடைச் சொற்கள் என்னும், தூயமாமாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே’(2048:4) என்றும் பாடுகிறார். ஏனெனில் பிறவி நீக்குவதற்கு ஆசை பெரிதும் உடையேன் என்கின்றார்.
(2055:2)
என்று எல்லாம் ஆக இறைவனைக் காணும் ஆழ்வார் மொழியாகவும் காண்பது சிறப்பு. குலசேகரரும் (650) இருமொழியாகப் பெருமாளைக் காண்பதைத் திருமொழி காட்டுகிறது. தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் இரங்கல் போன்ற அகப்பொருள் துறைகளில் அமைந்த பாசுரங்கள் உள்ளன.
திருமங்கை ஆழ்வார் தாய், தலைவி ஆகிய இருநிலைகளிலும் தன் பக்திக் காதலைப் பொழிகின்றார். தலைவியாக (நாயகி) இருந்து பக்திக் காதலை வெளிப்படுத்துவதில் மனநிறைவு பெறாத அடியார்கள், மகள் நிலையைப் படைத்துக் கொண்டு, தாயாகிப் பேசுகின்றனர் என்று கொள்ளத் தோன்றுகிறது. அதாவது தலைவி கூற்றைவிடத் தாய் கூற்றில் மகள் நிலை உரைத்தல் பக்தி உணர்வை வளப்படுத்துகிறது போலும்!
நீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மேலாய்!
நிலாத் திங்கள் துண்டத்தாய்! நிறைந்த கச்சி
ஊரகத்தாய்! ஒண்துறைநீர் வெஃகா உள்ளாய்!
உள்ளுவார் உள்ளத்தாய்! உலகம் ஏத்தும்
காரகத்தாய்! கார்வானத் துள்ளாய்! கள்வா!
காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய்! பேராதுஎன் நெஞ்சின் உள்ளாய்
பெருமான்! உன் திருவடியே பேணி னேனே
(2059)
(நெடுவரைஉச்சி = திருவேங்கடம், நிலாத்திங்கள் துண்டம் = ஏகம்பர் கோயிலில் உள்ள பெருமாள், கச்சி = காஞ்சி, ஊரகம் = உலகளந்தார் கோவில்; நீரகம், காரகம், கார்வானம் மூன்றும் உலகளந்தார் கோவிலில் உள்ள சந்நிதிகள், வெஃகா = சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில், கள்வன் = காமாட்சி கோவிலின் உள்ளே உள்ளது, காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய் = திருவரங்கம்)
இப்பாசுரம் காமருபூங்கச்சியில் எழுந்து அருளும் பெருமானின் திருத்தலங்களையும் நீக்கம் அற நிறைந்து இருக்கும் நிலையையும் காட்டுகின்றது.
கவிதை முழுக்க முழுக்க திருக்குடந்தைப் பிரானின் பெருமையையும் குடந்தையின் இயற்கைக் காட்சிகளையும் காணலாம்.
பக்தியை எண்களில் வடித்து வெளிப்படுத்த முடியும் என்பதற்கு இப்பாசுரம் ஓர் எடுத்துக்காட்டு.
செல்வம் மல்குதென் திருக்குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த
பரம! நின் அடியிணை பணிவன்
வரும் இடர் அகல – மாற்றோ வினையே
(3774:43-47)
(அரவு அமளி = பாம்புப் படுக்கை)
என்று துன்பங்களைக் களைந்து அருள் தரும்படி பாசுரம் நிறைவு பெறுகின்றது.
ஆழ்வார்கள் அருளிய பனுவலில் சற்று வித்தியாசமான நோக்குடைய – வடிவம் உடைய நூல் இப்பிரபந்தம் ஆகும்.
திருமங்கை ஆழ்வார் அருளிய சிறிய திருமடல் (3775), பெரிய திருமடல் (3815) ஆகியவற்றைத் தனித்தனிப் பாடலாகவும், பாசுரங்களாகவும் (40,78), கண்ணிகளாகவும் (771/2, 1481/2) கணக்கிடும் முறை அறிஞர்கள் இடையே உள்ளது. இருப்பினும் யாப்பு விதிப்படி தனித்தனிப் பாடல்களாகக் கொள்வது சிறப்பு.
பேரா யிரமும் பிதற்றி – பெருந்தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார்பூம் பெண்ணை மடல்
எனச் சிறிய திருமடல் நிறைவு பெறுகின்றது.
காமத்தின்பால் நின்ற நாயகி, ‘அன்ன நடையார் அலர் ஏச ஆடவர் மேல் மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும் தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனையாம் தெளியோம்! மன்னும் வடநெறியே வேண்டினோம்’ எனத் தன் நோக்கைத் தெளிவு படுத்துகிறாள். உலகம் அறியப் பெருமானை நினைந்து பெண்ணை (பனை) மடல் ஊர்வேன் என்பதாகப் பெரிய திருமடல் நிறைவடைகின்றது.
தொல்காப்பியம் பெண்கள் மடலூர்தல் (நூற்பா: 54-1) இல்லை என்று குறிக்கின்றது. பன்னிருபாட்டியல் இறைவன் தலைவனாக வரும்பொழுது தலைவி மடலூர்வாள் எனப் பெண் மடலூர்தலை இலக்கணப் படுத்துகிறது.
‘மடல்’ என்னும் அகப்பொருள் துறை ஆழ்வாருக்கு ஓர் இலக்கிய வகையைப் படைக்கத் துணை நின்றுள்ளது.
தலைவியிடம் தலைவன் கண்ட இன்பம், இறைவனிடம் அடியார் காண்கின்றனர்.
எனவே அகப்பொருளில் தலைவி பெற்றிருந்த இடத்தைப் பக்தி இலக்கியத்தில் இறைவன் பிடித்துக் கொள்கின்றான். நாயகி நிலையில் நிற்கும் ஆழ்வார்கள் அகப்பொருள் தலைவன் செயலை மேற்கொண்டு ஒழுகுவதாக பக்தி இலக்கியம் காட்டுகிறது. திருமங்கை ஆழ்வார் தாம் அருளிய 6 திவ்வியப்பிரபந்தங்கள் வழி:
பல்வேறு யாப்பு வடிவங்களைப் பக்தி இலக்கியத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார்.
நாட்டுப்புறப்பாடல் வகைகளைப் பின்பற்றி, பக்தி நெறியைப் புலப்படுத்தினார்.
சித்திரகவி படைத்துப் பக்தி உலகுக்கு வளம் சேர்த்தார்.
தாண்டகங்கள் அருளி அவற்றுள்ளும் நாயகநாயகி பாவத்தை அருளினார்.
அகப்பொருள் துறையைப் பயன்படுத்திக் கொண்ட ஆழ்வார் நாயகி நிலையில் இருந்து பாடியிருப்பவை பக்தியின் முதிர்கனிகள் ஆகும்.
மடல் துறைவழி ஓர் புதிய இலக்கிய வகையைப் படைத்த பெருமைக்கு உரியவர்.
பக்தி இலக்கியத்தை, பக்தி இயக்க இலக்கியம் ஆக்கி, தமிழ் வளத்துக்கும் இலக்கிய வகைப் பெருக்கத்திற்கும் வித்திட்டவர்.
இறைவன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் தோற்றத்தில் (அர்ச்சாவதாரம்) ஈடுபாடு கொண்டு ஏராளமான பாசுரங்களைப் பக்திச் சுவை ததும்பப் பாடிய பெருமைக்கு உரியவர்.
நம்மாழ்வார் திருவாய்மொழியால் பக்திக்கும் தமிழுக்கும் வளம் சேர்த்தவர். திருமங்கை ஆழ்வார் இரண்டு திருமடல்களையும் இரண்டு திருத்தாண்டகங்களையும் அருளி, புதிய இலக்கிய வகைக்கு வித்திட்டவர்; அகப்பொருள் மரபில் ஒரு துறையாக இருந்த மடலைத் தம் பக்தி பரப்புக் கொள்கையால் ஒரு தனி இலக்கிய வகையாக உருவாக்கியவர். கோவில்களில் எழுந்தருளியுள்ள இறைவனின் திரு உருவில் அதிக ஈடுபாடு கொண்டவர்; ஆழ்வார்களுள் அர்ச்சாவதாரத்துக்கு அதிகமாகப் பாசுரங்கள் அருளியவர். மதுரகவி அடியார்க்கு அடியாராகிய ஆழ்வார்களுள் ஒருவரான பெருமைக்குரியவர். மொத்தத்தில் இவர்கள், பக்தி இயக்கக் காலத்தில் மக்களின் தேவையையும் காலத்தையும் கருதிப் பாசுரங்கள் பாடி வைணவச் சமயத்தை வளர்த்தவர்களுள் ஆற்றல் மிக்கவர்கள் என்பதை இப்பாடவழி அறிந்து கொண்டோம்.
பாடம் - 6
மழை பெய்வதற்கு முன் மழைக்கான அறிகுறிகள் தோன்றும்; மழை பெய்த பின்னரும் மழை பெய்ததற்கான அடையாளம் தென்படும். அதுபோல, பக்தி இயக்கத்திற்கு முன்னும் பின்னும் பல இலக்கியப் பதிவுகள், இலக்கணப் பதிவுகள் உள்ளன. அவற்றை வைணவம் வளர எப்படிப் புலவர்கள் பயன்படுத்திக் கொண்டனர் எனக் காண்போமா?
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமுமின்றித் தீருமே
இன்மையே ராமஎன்ற இரண்டெ ழுத்தினால்
(தின்மை = தீமை)
என்பது நூற்பயன் உரைக்கும் செய்யுள்.
தாதை ஏவலின் மாதுடன் போகி
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீ அறிந்திலையோ? நெடுமொழி அன்றோ ?
சிலம்பு-II :14
(தாதை = தசரதன்; வேதமுதல்வன் = இராமன்; காதலி = சீதை)
என்பது சிலப்பதிகாரம்.
நடையி னின்றுயர் நாயகன் தோற்றத்தின்
இடைநி கழ்ந்தவி ராமாவ தாரப் பேர்த்
தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை
என்று கம்பர் தமது காப்பியத்தின் பெயரையும் சொல்ல வந்த பொருளையும் குறிப்பிடுகிறார்.
மீனமாகியும் கமடமது ஆகியும் மேருவை எடுக்கும்நாள்
ஏனமாகியும் நரஅரி ஆகியும் எண் அருங் குறள்ஆகியும்
கூனல்வாய் மழுதரித்த கோஆகியும் அரக்கரைக் கொலைசெய்த
வான நாயகன் ஆகியும் நின்ற மால் மலரடி மறவேனே
(மீனம் = மச்சாவதாரம், கமடம் = ஆமை வடிவம், ஏனம் = பன்றி, நரஅரி = நரசிங்கம், குறள் = வாமனன், மழுதரித்தகோ = பரசுராமன், வானநாயகன் = திருமால்)
என்பன கடவுள் வாழ்த்துக் காட்டும் அவதாரங்கள் ஆகும்.
மேற்காட்டிய காப்பியங்கள் தவிர இதிகாசக் கிளைக்கதைகளோடு தொடர்புடைய குசேலோபாக்கியானம், நளவெண்பா, நைடதம் போன்ற நூல்களும் உள்ளன. இவை, வைணவத்தின் கதைக்கூறுகள் வளமார்ந்த காப்பியங்கள் தோன்றத் துணைநின்றமைக்கு எடுத்துக்காட்டாகும்.
• நல்லாப்பிள்ளை பாரதம்
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நல்லாப்பிள்ளை என்பவர் வியாச பாரதம் முழுவதையும் தமிழில் பாடியுள்ளார். இவர் வடமொழியில் உள்ளவாறே பதினெட்டுப் பருவங்களையும் பாடியுள்ளார். நல்லாப்பிள்ளை பதினெட்டுப் பருவங்களையும் 132 சருக்கங்களில் 14000 பாடல்களில் பாடியிருக்கிறார். வில்லிபுத்தூர் ஆழ்வார் பாரதத்தில் உள்ள பாடல்களின் அழகைக்கண்டு, அவருடைய பாடல்களில் பெரும்பாலானவற்றை எடுத்துக் கொண்டார். வில்லிபுத்தூர் ஆழ்வார் பாடாமல் விட்ட கதைப்பகுதிகள் எல்லாவற்றையும் இவர் பாடியுள்ளார். வில்லிபுத்தூர் ஆழ்வார் பாடிய பகுதிகளில் சுருக்கமாக உள்ள பகுதிகளையும் விரித்துப் பாடியுள்ளார். நல்லாப்பிள்ளை பாரதத்தில் வில்லிபுத்தூர் ஆழ்வார் பாரதமும் அடக்கம்.
கைக்கு அணி ஈகை, கருத்துக்கு அணி ஞானம், சென்னிக்கு (தலை) அணி மாறன் சேவடி மேல் கொண்டு இறைஞ்சுதல், இனி வேறு அணி எதற்கு என நம்மாழ்வாரை வழிபடு கடவுளாகக் காட்டுகிறது, இந்நூல்.
இந்நூலுக்கு மேற்கோள் நூல் அவர் இயற்றிய திருப்பதிக் கோவை ஆகும்.
இலக்கியம் மட்டுமன்றி, இலக்கணத்தின் வழியும் சமயப் பணி ஆற்ற முடியும், சமய வளர்ச்சிக்கு வித்திட முடியும் என்பதற்குச் சான்றாக – ஆவணமாக – இந்நூலில் உள்ள 140 பாடல்கள் அமைந்துள்ளன.
அப்பதிகளைக் ‘கண்டும், தொழுதும், வலம் செய்தும், சொல்லித் துதித்தும், முழுதும் உணர்ந்தும், …. வேதம் உரைத்தும் வேத நிழலே சரணம் என நினைத்து வாழ்வார் பாதமே நமக்குக் கதி’ என்கிறது, இந்நூல்.
• மும்மணிக் கோவை
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் நம்மாழ்வார் மும்மணிக் கோவை இயற்றியுள்ளார். வேதாந்த தேசிகர் ஒரு மும்மணிக்கோவை அருளியுள்ளார்.
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு வகை உறுதிப் பொருள்களுள் ஒன்றோ, பலவோ, குறைந்துவரின் அது சிற்றிலக்கியம் என அழைக்கப்படும். அத்தன்மைத்தான வைணவ இலக்கியங்கள் பற்றிச் சான்றுக்காகச் சிலவற்றைக் காணலாம்.
• இராமானுச நூற்றந்தாதி
திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதியை 108 கட்டளைக் கலித்துறைகளில் பாடியுள்ளார். அதன்படி ஆழ்வார்கள் காலம் பின்வருமாறு:
1.பொய்கை ஆழ்வார் 6ஆம் நூற்றாண்டு
2.பூதத் தாழ்வார்6ஆம் நூற்றாண்டு
3.பேயாழ்வார்6ஆம் நூற்றாண்டு
4.திருப்பாணாழ்வார்7ஆம் நூற்றாண்டு
5.திருமழிசை ஆழ்வார்7ஆம் நூற்றாண்டு
6.தொண்டரடிப் பொடி ஆழ்வார்7ஆம் நூற்றாண்டு
7.குலசேகராழ்வார்8 ஆம் நூற்றாண்டு
8.பெரியாழ்வார்8 ஆம் நூற்றாண்டு
9.ஆண்டாள்8 ஆம் நூற்றாண்டு
10.திருமங்கை ஆழ்வார்9 ஆம் நூற்றாண்டு
11.நம்மாழ்வார்9 ஆம் நூற்றாண்டு
12.மதுரகவி ஆழ்வார் 9 ஆம் நூற்றாண்டு
• சடகோபர் அந்தாதி
கம்பர், நம்மாழ்வார் மீது சடகோபர் அந்தாதி பாடித் ‘தெய்வங்களில் உயர்ந்தது திருமால்; அந்தப் பரம்பொருளைப் பாடிய கவிஞர்களுள் தலைசிறந்த தெய்வக் கவிஞர் நம்மாழ்வார்’ எனப் போற்றுகின்றார்.
கம்பர் தெய்வப் பனுவலான திருவாய்மொழியைக் ‘கண்ணன் உண்ணும் அறுசுவை உணவு’ (7), பக்திக்கு மூலப்பனுவல் (8), திருமாலின் 11ஆவது அவதாரம் (78), நான்கு வேதத்தின் சாரம் (71) எனப் பலவாகக் காண்கின்றார்.
பாக்களில் சிறந்ததாகத் திருவாய் மொழியையும், அதைப் பாடிய நம்மாழ்வாரை ‘ஞானத்தைத் திறந்து தந்தவன்’(85) என்றும் புகழ்கின்றார்.
நம்மாழ்வாரைப் பற்றி மதுரகவி 10 பாசுரங்கள் பாடி அருள் பெற, கம்ப நாடர் 10 பதிகங்கள் பாடி அருள்பெற விழைந்துள்ளார்.
• திருவாய்மொழி நூற்றந்தாதி
ஆழ்வார் திருநகரியில் பிறந்து அழகிய மணவாளன் என இயற்பெயர் பெற்ற மணவாள மாமுனிகள் திருவாய்மொழி நூற்றந்தாதி, உபதேச ரத்தின மாலை (71 வெண்பா) மற்றும் ஆர்த்தி பிரபந்தம் ஆகிய மூன்று நூல்களை அருளியுள்ளார். மாறன் பாதமே உற்ற துணை என்று உள்ளமே! ஓடு (7), மாறன் பதம் பணிக என்சென்னி, வாழ்த்திடுக என்னுடைய வாய் (10), மாறன் அடியாருடன் நெஞ்சே! ஆடு (13), ஞான முனி (99) என நம்மாழ்வாரைத் திருவாய்மொழி நூற்றந்தாதியில் புகழ்கின்றார் மணவாள மாமுனி.
சோழநாட்டில் திருமங்கை நகரில் பிறந்த அழகிய மணவாளதாசர் திருவரங்கத்தில் தங்கி, திருவரங்கப் பெருமானைப் பாடுவதில் பேரின்பம் கண்டவர். இவர் திருவரங்கத்து அந்தாதி, திருவேங்கடத்து அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி ஆகிய மூன்று அந்தாதி நூல்களை அருளியுள்ளார். இவை அஷ்டப்பிரபந்தம் என்று அழைக்கப்படும் நூலுள் இடம் பெற்றுள்ளன.
எண்ணார் மறைப்பொருளை எல்லாரும் தாம்அறியப்
பண்ணார் தமிழால் பரிந்து
எனப் புகழ்கின்றது.
கொற்றவன்தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூதா!
குறையுடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்!
அற்றவர்சேர் திருவரங்கப் பெருமாள் தோழன்
அவதரித்த திருக்குலமென்று அறியாய் போலும்
(பெருமாள் தோழன் = குகன்)
என்னும் பாடல் மகள் மறுத்தலில் அமைந்து அரங்கன் பெருமை பேசுவதைக் காணலாம்.
பதின்மர் செந்தமிழைப் படிக்கிலாய்; கேளாய்
படித்தபேர் தாளையும் பணியாய்
எதிபதி சரணே சரணம் என்று ஒருகால்
இசைக்கிலாய், எமது வேங்கடத்தைத்
துதி செயாய், இருந்த இடத்து இருந்தேனும்
தொழுகிலாய்! வாழி என் மனனே!
மதிநுதல் அலர்மேல் மங்கை நாயகனார்
மலர்ப்பதம் கிடைப்பது எவ்விதமே?
(எதிபதி = யதிராஜர், இராமானுசர்)
என்பது திருவேங்கடக் கலம்பகம், பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் ஆகியோரை நீக்கி, பதின்மர் பாடிய செந்தமிழ் எனத் திவ்வியப் பிரபந்தத்தைக் குறிக்கின்றது. திருமாலின் பெருமை பேசுவதே வைணவச் சிற்றிலக்கியங்களின் குறிக்கோளாக இருப்பதை நாம் அறியலாம்.
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் போன்ற சைவம் பற்றிய பிள்ளைத் தமிழ் நூல்களும் காப்புப் பருவத்தில் குழந்தையைக் காக்க வேண்டி, காத்தல் கடவுளான திருமாலைக் காக்குமாறு பாடி வழிபடுகின்றன.
கிளியிடம் ‘நீ திருமால் பெயராகிய ‘அரி’ என்ற பெயர் பெற்றிருக்கின்றாய்; திருமால் நிறம் பெற்றாய்; திருமகள் உன்னைத் தன் கையில் பிடிக்கின்றாள்; உன் சிறகு கண்ணன் குழல் ஊதிய காலத்துத் தழைத்த பசுந்தழையின் நிறம். இராமன் இராவணனை அழித்த பிறகு வீடணன் இலங்கையில் புதியதாகக் கட்டிய தோரணமோ அது? நீ பேசும் மொழி கண்ணனின் புல்லாங்குழல் இசையோ?’ எனப் பறவையில் பெருமானைக் காண்கின்றாள் தலைவி.
பாட்டுடைத் தலைவன் ஆன அழகரின் அவதாரப் பொலிவைப் பேசுகின்றாள்; இறைவனின் அருளையும் ஆட்கொள்ளும் பண்பையும் சொல்லிச் சொல்லி அரற்றுகிறாள் தலைவி.
- பைந்தமிழால்
ஆதிமறை நான்கையும் நாலாயிரத்து நற்கவியால்
ஓதும் பதினொருவர் உள்ளத்தான்
(கண்ணி 86-87) (பதினொருவர் ஆழ்வார்கள்)
எங்கும் இலாதிருந்தே எங்கும் நிறைந்திருப்போன்
எங்கும் நிறைந்திருந்தே எங்குமிலான் – அங்கறியும்
என்னை எனக்கொளித்தி யான் என்றுங் காணாத
தன்னை எனக்கருளும் தம்பிரான்’
(கண்ணி 86-87)
மேற்காட்டிய சான்றுகள் தலைவியின் காதல் நோயோடு இறைவனின் சிறப்பையும் வெளிப்படுத்துவன.
‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல வைணவத் தூது நூல்களுள் ஒன்றான அழகர் கிள்ளை விடு தூது திருமாலின் பெருமை பேசும் சமயக் களஞ்சியம் எனலாம்.
பலபட்டடைச் சொக்கநாதப்பிள்ளையின் கவிதை நடையும் இருபொருளில் அமைந்த சொற்களும், இசையில் பிரித்துப் பார்த்தால் பொருள் வேறு வேறு தரும் சொற்களும் தூது இலக்கியத்துக்கு வளம் சேர்க்கின்றன.
தண்பொருளை வீசும் வண்குருகை யாளி
தந்த தமிழ் வேதம் வாழியவே
எனக் குறிப்பிடுகின்றது.
• இரணியவதைப் பரணி
இரணியன் பிரமனால் கொடுக்கப்பட்ட வாழ்நாளை உடையவன் எனச் சுட்டுகிறது. இரணியன் அழிவு பற்றிப் பேசுகிறது. கஞ்சவதைப் பரணி கண்ணபிரான் கம்சனை அழித்ததைக் கூறுகின்றது.
• மாலை
பிள்ளைலோகாச்சாரியார் நவரத்தின மாலை இயற்றியுள்ளார். வேதாந்த தேசிகர் என்று அழைக்கப்படும் திருவேங்கடமுடையான் அருளியனவாகத் தமிழில் 20 நூல்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் திருச்சின்னமாலை, நவரத்தினமாலை ஆகிய இரு மாலை நூல்கள் உள்ளன. மணவாள மாமுனி அருளிய உபதேசரத்தினமாலை 71 வெண்பாக்களில் ஆழ்வார் பதின்மர் வரலாற்றைக் கூறுகின்றது. திருக்குருகைப் பெருமாள் கவிராயர் மாறன் கிளவிமணிமாலை எழுதியுள்ளார். பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருவரங்கத்துமாலை, திருவேங்கடமாலை ஆகிய இரு மாலைகளை அருளியுள்ளார்.
• மான்மியம்
சைவ சமயத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று பொருள்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் தலத்தின் பெருமையைப் (மற்ற இரண்டையும் சேர்த்தே) பேசுவன தலபுராணங்கள். அவ்வாறே வைணவத் திருப்பதிகளின் பெருமையை, மான்மியங்கள் எடுத்துக் கூறுகின்றன. மான்மியம் என்ற சொல் மகாத்துமியம் என்னும் வடசொல்லின் தமிழ்வடிவம். திருக்குருகைப் பெருமாள் கவிராயர் திருக்குருகை மான்மியம் என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் ஊரின் பெருமையைத் திருமாலோடு இணைத்துப் போற்றுகின்றது.
• மகாத்மியம்
வேதாந்த தேசிகர் அத்திகிரி மகாத்மியம் அருளியுள்ளார்.
• பஞ்சகம்
பிள்ளை லோகாச் சாரியாரும், வேதாந்த தேசிகரும் அர்த்த பஞ்சகம் என்னும் பெயரில் தனித்தனி நூல்கள் அருளியுள்ளனர்.
• பத்து
வேதாந்த தேசிகர் அடைக்கலப் பத்து என்னும் தமது நூலில் திருமாலின் திருவடிப்பேற்றைப் போற்றுகின்றார்.
• திருநாமம்
வேதாந்த தேசிகர் பன்னிரு திருநாமம் எனும் நூலைப் பாடி அருளியுள்ளார்.
• வழக்கம்
வேளாளர்கள் தம் திருக்கையால் வழங்கும் கொடைச் சிறப்பைப் பற்றிக் கூறும் நூல் திருக்கைவழக்கம். இந்நூல் கம்பநாடரால் 59 கண்ணிகளில் கலிவெண்பாவால் பாடப்பட்டது.
- பண் அமைந்த,
வேதம் ஒருநான்கினையும் மிக்க தமிழ் நாலடியால்
ஓதி உரைத்தே கருணை ஓங்கும் கை
(42)
பண் அமைத்து ஒதவேண்டிய வட மொழி வேதங்கள் நான்கையும் நாலடிப் பாசுரங்களோடு தமிழில் பாடிய கருணை மிகுந்த கை வேளாளர் கை என நம்மாழ்வாரின் சிறப்பையும் அருளிச் செயல்களையும் போற்றுகின்றார்.
• பிரபந்தம்
மணவாள மாமுனிகள் ஆர்த்தி பிரபந்தம் இயற்றியுள்ளார். இராமானுசர் அவதரித்த காலத்தில் அவருடன் இருந்து ஆண்டான், ஆழ்வான், எம்பார், வடுக நம்பி போன்றோர் பணி செய்தார்கள். அதுபோல மணவாள மாமுனிகளும் பணி செய்ய விரும்பினார். எனவே அவர் இந்த உலகத்தில் வாழ விரும்பவில்லை, ஸ்ரீவைகுண்டம் செல்ல வேண்டி ஆர்த்தி பிரபந்தம் அருளினார்.
‘வாழி எதிராசன் வாழி எதிராசன்’ எனப் பிரபந்தம் இராமானுசர் வாழ்த்தோடு தொடங்குகின்றது. இந்நூல் முழுக்க எதிராசர் ஆன இராமானுசருடன் நிலையான தொடர்பு வேண்டியும் அவரின் பெருமையைப் போற்றிப் புகழ்ந்தும் பாடியுள்ளார்.
தேன்பயிலும் தாரான் எதிராசன் சேவடிமேல்
தாசன் பரம பக்தி தலை எடுத்து -மாந்தர்க்(கு)
உணவாக ஆர்த்தியுடன் ஒண்தமிழ்கள் செய்தான்
மணவாள மாமுனிவன் வந்து
(கண்ணி 86-87)
என்பது அந்த மணவாள மாமுனிவரைப் புகழும் தனிப்பாடல் (இத்தகைய போற்றித் தனிப்பாடல்களைத் ‘தனியன்’ என்ற பெயரில் வைணவம் குறிப்பிடும்).
வைணவம் சார்ந்த பள்ளி
நாட்டுக்குள் இரந்தும் பசிக்கு ஆற்றமாட்டாமல் வாரி நஞ்சை எல்லாம் உண்டான் உங்கள் நாதனல்லோடி?
(நஞ்சை உண்டது = சிவன், நாதன் = சிவன்)
சைவம் சார்ந்த பள்ளி
மாட்டுப் பிறகே திரிந்து சோற்றுக்கில்லாமல் வெறும் மண்ணை உண்டான் உங்கள் முகில் வண்ணனல்லோடி?
(கிருஷ்ணாவதாரத்தில் மண்ணை உண்டது = முகில் வண்ணன், முகில் வண்ணன் = கண்ணன்)
வை.ப :ஏற ஒரு வாகனம் இல்லாமையினால் மாட்டில் ஏறியே திரிந்தான் உங்கள் ஈசனல்லோடி?
(மாடு = சிவன் வாகனமாகிய நந்தி)
சை.ப :வீறு சொன்ன தென்ன மாடு தானுமில்லாமல் பட்சி மீதில் ஏறிக் கொண்டான் உங்கள் கீதனல்லோடி?
(பட்சி = கருடன், கீதன் = திருமால்)
பள்ளு இலக்கியம் சாதாரண மக்களின் வாழ்வியல் கூறுகள் பற்றியது என்பதால் மதக் கருத்துகளும் எளிமைப்படுத்தப்பட்டு, பாமரனின் மொழியில் புரியும்படி வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
நாதமுனி யோக ரகசியம், நியாய தத்துவம் ஆகிய நூல்களை அருளியுள்ளார். கண்ணனின் முழு வரலாற்றையும், ஆரியப்பப் புலவரின் பாகவத புராணம் (4970 விருத்தம்), அருளாள தாசரின் வாசுதேவ கதை (9151 செய்யுள்), செவ்வைச் சூடுவாரின் விண்டு பாகவதம் அல்லது பாகவத புராணம் (4972 பாடல்கள்), வரதராச ஐயங்காரின் மகாபாகவதம் (9147 பாடல்கள்) ஆகியவை விரித்துக் கூறுகின்றன.
• வேதாந்த தேசிகர்
வடகலை மரபைத் தோற்றுவித்த வேதாந்த தேசிகர் தமிழில் 24 நூல்களை இயற்றினார். அவற்றுள் நான்கு நூல்கள் கிடைக்கவில்லை ஏனைய 20 நூல்களுள் சில:
பரமபத சோபானம்
பரமத பங்கம்
வைணவ தினசரி
திருமந்திரச் சுருக்கு
துவயச் சுருக்கு
சரம சுலோகச் சுருக்கு
கீதார்த்த சங்கிரகம்
பிரபந்த சாரம்
• அருளாளப் பெருமாள்
இராமானுசரின் மாணவர் அருளாளப் பெருமான் எம்பெருமானார் ஞானசாரம், பிரமேய சாரம் ஆகிய நூல்களை அருளியுள்ளார். ஞானசாரம் (40 வெண்பா) திருமாலின் திருவடிச் சிறப்பைக் கூறுகின்றது. பிரமேய சாரம் (10 வெண்பா) இறைவனுக்குச் செய்யும் தொண்டு வீடுபேறு அடையும் வழி எனக் காட்டுகின்றது.
• அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவாய்மொழியில் அறிய வேண்டிய உள்ளுறைப் பொருளை எளிய நடையில் உணர்த்த விரும்பி ஆசாரிய ஹிருதயம் என்னும் நூலை அருளினார். (ஆசாரிய – நம்மாழ்வார், ஹிருதயம் – மனம்.) ‘மாறன் மனம்’ என்பது இந்நூல் பெயர் தரும் பொருளாகும். ஆசாரிய பரம்பரையின் முதல்வர் நம்மாழ்வார் எழுதிய திருவாய்மொழியின் பெருமையைக் கூறும் ஆசாரிய ஹிருதயம், ஆசாரிய பரம்பரையின் கடைக்குட்டியான மணவாள மாமுனிகளின் சிறந்த உரையைப் பெற்றுத் திகழ்கின்றது.
இராமாயணம் பற்றிய செய்தி கம்பன்விழா எடுப்பதன் மூலம் தமிழகம் எங்கும் இன்று வரை செல்வாக்குப் பெற்றிருக்கின்றது. மகாபாரதத்தின் கதை கிராமங்களில் தனித் தனியாக, கிளைக்கதைகளாகக் கூத்து வடிவத்தில் நிகழ்த்தப்படுகின்றன.
மொழி பற்றிய செய்தி அல்லது இலக்கியக் கோட்பாடுகள் மட்டுமே இடம் பெறும் இலக்கணத்தில் கூடத் திருமாலின் பெருமையைப் பாடி வைத்துள்ள பாங்கு இலக்கணப் புலவனைத் திருமால் பக்தனாகச் சித்திரிக்கின்றது.
சிற்றிலக்கிய வகைகளில் உள்ள பல வடிவங்களை எடுத்துக் கொண்டு பெருமாளின் அருளைப் போற்றுகின்றனர் வைணவப் புலவர்கள்.
இறைவனைப் போற்ற ஆழ்வார்களைப் போலவே அந்தாதி வகையை அதிகமாகக் கையாண்டுள்ளனர்.
நாதமுனிகள் காலம் முதல் எம்பெருமானார் காலம் வரை வைணவ வியாக்கியானங்கள் குரு சீடர் பரம்பரை வழி நினைவாற்றல் மூலம் இரண்டு நூற்றாண்டுகள் தக்க வைக்கப்பட்டன அல்லது மனத்தில் எழுதிப் பாதுகாத்தனர் எனக் கொள்ளலாம்.
10 ஆம் நூற்றாண்டில் வரி வடிவத்தில் அரும்பத் தொடங்கிய உரை 13-ஆம் நூற்றாண்டில் வைணவத் தொண்டர்களால் செழித்து வளர்ந்தது. மணிப்பிரவாள நடையில் அமைந்த இவ்வுரைகள் 18-ஆம் நூற்றாண்டு வரை செல்வாக்குப் பெற்றிருந்தன.
எனவே தான் மணிப்பிரவாள நடையைத் தமிழ் நடையாக மாற்றுவதற்கும் அல்லது மொழிபெயர்ப்புச் செய்வதற்கும் அல்லது எளிமைப் படுத்துவதற்கும் முயன்றனர் சான்றோர்கள்.
மணிப்பிரவாள நடை உரைகாரர்களிடம் செல்வாக்குப் பெற, அக்காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் வடமொழியிலும் தமிழிலும் வல்லுநர்களாக விளங்கியதும் ஒரு காரணம்.
வைணவம் பற்றிய இராமாயணம் இராமனைத் தென் சொல் கடந்தான், வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான் என நகர் நீங்கு படலத்தில் அவதார புருடனுக்கு இருமொழிப் புலமையை ஏற்றிக் காட்டுகின்றது என்பதும் நினைவு கூரத்தக்கது.
வைணவ சமயத்தாரிடம் காணப்பட்ட பரம்பரை, குரு சீடர் தொண்டு, நம்மாழ்வாரிடம் கொண்ட ஈடுபாடு, இராமானுசரிடம் பக்தி, திருவாய்மொழியைப் பரப்பும் நோக்கம், இப்படிப் பல காரணங்கள் பக்தி இயக்கத்திற்குப் பின் பல வகை வைணவ நூல்கள் தோன்ற உதவின.
நம்மாழ்வார் பரம்பரையில் வந்த திருக்குருகைப் பிரான் கவிராயர் நம்மாழ்வார் பெயரில் கோவையும் இலக்கண நூலும் அருளியுள்ளார்.
கலம்பகம், மறக்குடிப் பெண்ணை, திருமாலை வழிபாடு செய்பவளாகக் காட்டுகின்றது. தூது, திருமாலின் மீது மையல் கொண்டு மாலை விரும்பும் பெண்ணாகச் சித்திரிக்கின்றது. பள்ளு, திருமாலுக்காகச் சண்டை போடும் பெண்ணாக – திருமாலை உயர்வான கடவுளாகக் காட்டும் போராட்டக்காரியாகக் காட்டுகின்றது. ஆக, பெண்களும் பெருமாள் மீது ஈடுபாடு கொண்டவர்களாக வாழ்ந்த செய்தியைச் சிற்றிலக்கியம் காட்டுகின்றது.
உரை அருளிய சான்றோர்களும் திருமால் பற்றிய பல இலக்கியங்களைப் படைத்து உரைவளத்தோடு திருமாலின் திருவடிப்பேற்றில் ஈடுபட்டுக் கிடந்துள்ளனர்.
புறச்சமயங்களான சமணம், பௌத்தம் ஆகியவற்றின் செல்வாக்கைக் குறைப்பதில் வெற்றி கண்டனர் வைதிக சமயத்தார். ஆனால் காலப்போக்கில் சைவர், வைணவர் ஆகியோரிடையே சமயத்தைப் பரப்புவதில் – மக்களிடம் தங்கள் மதத்தின் செல்வாக்கைப் பதிய வைப்பதில் கடும்போட்டி ஏற்பட்டது. எனவே கோயில்கள், வழிபாடுகள், வழிபாடு செய்யும்போது சொல்லும் இசைப்பாடல்கள், அவற்றின் பொருளைக் கதாகாலாட்சேபம் செய்யும் முயற்சி என்பன போன்ற நடவடிக்கைகளும் திவ்வியப் பிரபந்தம் அல்லாத பிற காப்பியங்கள், வைணவ நூல்கள், வைணவ உரைகள் போன்றவை தோன்றக் காரணமாயின.
எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிக மிகக் குறைவாக வாழ்ந்த கால கட்டத்தில் இராமாயண, பாரதக் கதைகள் ஒருவரால் சொல்லப்பட்டன. அல்லது நடித்துக் காட்டப்பட்டன. எனவே இப்படிப்பட்ட செய்திகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்று, படைப்பாளிகளை ஊக்கப்படுத்தின. அது மட்டுமல்லாமல் படிக்காதவர்களிடம் வைணவக் கொள்கையைப் பரப்பும் சாதனமாக – அல்லது ஓர் ஊடகமாக அவை அமைந்தன.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் பாடு பொருள், பாடும் முறை, வடிவம் ஆகியவை பக்தி இயக்கத்தின் பின் ஒரு தொண்டர் படை உருவாகக் காரணமாயின. வைணவப் பெருமக்கள் நாலாயிரம் என்னும் காந்தத்தால் ஈர்க்கப்பட்டு அவற்றை வளப்படுத்தும் முயற்சியில் மூழ்கி வெற்றியும் பெற்றனர்.
வானம்பாடிக்குத் தான் மழையின் அருமை தெரியும்; பக்தனுக்குத் தான் பெருமாளின் பேரன்பின் சுவை தெரியும்; பக்திச் சுவை தெரியும்; ஞானச் சுவை தெரியும்.