23

சமணம், பௌத்தம்

பாடம் 1

பழந்தமிழ் நூல்களில் சமணம்

1.0 பாட முன்னுரை

இலக்கியங்கள் ஒரு காலகட்டத்தை விளக்குவதோடு அதைப்பற்றி விமர்சனமும் செய்கின்றன. அந்தந்தக் காலத்தில் எழுந்த இலக்கியங்கள் அவ்வக் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டே தோன்றுகின்றன. வாழ்விலிருந்து இலக்கியங்களும் இலக்கியங்களிலிருந்து வாழ்வும் மேன்மையடைகின்றன. கற்பனையை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற இலக்கியங்கள் உண்மையை அறியச் சிறந்த ஆதாரங்களாக இருக்க முடியாது என்று சிலர் கருதினாலும் சூனியத்திலிருந்து எதுவும் பிறந்துவிட முடியாது. உண்மையின் அடிப்படையில், கற்பனையின் துணைகொண்டு சுவை பயக்க எழுதுவதே இலக்கியங்களாகின்றன. அதனால் அவையும் மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ளும் சாசனங்களாகின்றன என்பதை மறுக்க இயலாது. அதனால் ‘பழந்தமிழ் இலக்கியங்களில் சமணம்’ என்ற இப்பாடத்தில் சங்ககாலத்திற்கு முந்தியதான தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலும் சங்கம் மருவிய கால இலக்கியங்களாகிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களிலும் சமணம் இருந்ததற்கான சான்றுகளை அறிய முற்படுவோம். அத்துடன் அச்சமயம் தமிழுக்கு ஆற்றிய பணியையும் அறிந்து கொள்ளலாம்.

‘பழந்தமிழ் இலக்கியங்கள்’ என்பதை ஒரு வசதிக்காகக் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலான படைப்புகள் என வரையறை செய்து கொள்ளலாம். அவ்வகையில் தமிழக மக்களின் வாழ்வியலை அறியக் கலங்கரை விளக்கமாக அமையும் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள், பின்னர் தோன்றிய திருக்குறள் முதலான அறநூல்கள், அதன்பின் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றையும் பழந்தமிழ் இலக்கியங்களாக எடுத்துக்கொள்ளலாம்.

தமிழகத்தில் சமணச் சான்றோர்கள் வளத்தோடு வாழ்ந்ததற்கான சான்றுகளை இலக்கியங்கள் மட்டுமன்றி ஆங்காங்கே கிடைக்கின்ற கல்வெட்டுகள், சாசனங்கள், சிலைகள் ஆகியனவும் குறிப்பிடுகின்றன. அப்படியாயின் சமணர்கள் இந்த மண்ணிற்குச் சொந்தமானவர்களா? இல்லை, வேறிடத்திலிருந்து வந்தவர்களா? வேறிடத்திலிருந்து வந்தவர்கள் என்றால் எங்கிருந்து வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? எப்பொழுது வந்தார்கள்? தமிழக மக்களோடு எப்படி ஒட்டி உறவாடினார்கள்? அவர்கள் மூலம் தமிழ்ச் சமூகம் ஏற்றம் பெற்றதா? தமிழின் வளமை கூடியதா? இவை அனைத்தும் நம் உள்ளத்தில் எழும் வினாக்கள் அல்லவா? இவற்றுக்கு விடை காண்பதே இப்பாடத்தின் முதன்மை நோக்கமாகும். அதற்கு முன் சமண சமயம் பற்றிய சில செய்திகளை அறிய முற்படுவோமா?

1.1சமணம் : ஓர் அறிமுகம்

சமணம் என்னும் சொல் ‘சிரமண’ என்னும் வடசொல்லின் திரிபாகும். அதனால் ‘சிரமணர்’, தமிழில் சமணர் என அழைக்கப்பட்டனர். சிரமணர் என்பதற்கு இன்பதுன்பம் ஆகிய இரண்டையும் சமமாக ஏற்பவர் என்று பொருள் கொள்ளலாம். நட்பு, பகை அற்றவர் என்றும் கூறலாம். தன்னை இகழ்வாரைக் கோபித்தலும் புகழ்வாரைப் போற்றலும் இல்லாதவர். அன்பும் அருளும் நிறைந்தவர். இறப்பையும் பிறப்பையும் பொருட்படுத்தாமல் உலகில் நல்லவற்றைச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தங்களின் எல்லாச் சுகங்களையும் துறந்தவர். அது மட்டுமன்றி ஐம்புலன்களையும் தன்வயப்படுத்தியவர். யான், எனது என்னும் செருக்கினை அழித்தவர். எக்காரணத்தாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாதவர். ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் காப்பவர் என்று விரிவான பொருளைத் தருவதாகக் கொள்ளலாம்.

1.1.1 சமணசமயத் தோற்றம் சமணசமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்தில் பரவச் செய்வதின் பொருட்டுத் தீர்த்தங்கரர்கள் தோன்றுகின்றனர் என்பது சமண சமயக் கொள்கை. ‘தீர்த்தங்கரர்’ என்பதற்குத் ‘தம் ஆன்மாவைப் பிறவிக்கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்’ என்பது பொருள். இதுவரை 24 தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும் இனியும் 24 தீர்த்தங்கரர்கள் தோன்றுவர் என்பதும் இச்சமயக் கொள்கையாகும்.

தொன்மையும் நீண்ட வரலாறும் கொண்ட சமண சமயம் இருபத்தி நான்காம் தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரரால் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறும் பழக்கம் இன்னும் பலரிடையே தொடர்கிறது. இது வரலாற்றுக்கு முரண்பட்டதாகும். அத்துடன் இந்து சமயத்தின் கிளை என்று கூறுவதும் தவறானது. சமண சமயத்தின் தோற்றம் முதல் தீர்த்தங்கரராகிய விருஷப தேவரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது சமணர் கொள்கை. விருஷபதேவரை ஆதிபகவன் என்றும் ஆதிநாதர் என்றும் வழங்கும் வழக்கமும் சமணரிடையே உண்டு. விருஷபதேவர் வரலாற்றுக்கு முற்பட்டவர் என்பதால் இக்கருத்தை வரலாற்றாசிரியர் ஏற்பதில்லை. ஆயினும் இருபத்தி மூன்றாம் தீர்த்தங்கரராகிய பார்சுவநாதர் கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பதாலும், அவர்க்கும் முன்னவரான இருபத்தி இரண்டாம் தீர்த்தங்கரராகிய நேமிநாதருக்கும் வரலாற்றுச் சான்றுகள் கிடைப்பதாலும் வர்த்தமான மகாவீரர் சமண மதத்தைத் தோற்றுவித்தவர் என்ற கருத்து தவறானது என்பதை உறுதிபடக் கூறலாம். காலத்திற்கு ஏற்பச் சில சீர்திருத்தங்களை மகாவீரர் செய்தாரே ஒழிய, சமண சமயத்தைத் தோற்றுவித்தவர் அல்லர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மகாவீரர் காலத்தில்தான் கௌதம புத்தரும் வாழ்ந்தார். இவர்களின் தோற்றமும் எழுச்சியும் இந்திய வரலாற்றிலேயே ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி எனக் கூறலாம். அந்தக் காலக் கட்டத்தில் தான் கொல்லாமை அறமும் மறுபிறப்பு எடுத்தது.

1.1.2 சமணத்தின் தொன்மை கொல்லாமை அல்லது அகிம்சைக் கோட்பாட்டைப் போற்றும் சமண சமயம் (ஜைன சமயம்) வேதகாலத்திற்கும் முற்பட்டது. நால்வகை வேதத்தில் பழமையானது என்று கருதப்படும் ரிக்வேதம் சமண சமயத்தின் மேன்மையைப் பறைசாற்றுகிறது. ஆதி நாதரைப் (விருஷபதேவரை) போற்றும் தோத்திரங்கள் பல அங்குக் காணலாம். யஜுர் வேதத்தில் நேமிநாதர் (22 – ஆம் தீர்த்தங்கரர்) துதி சிறப்புடன் அமைந்துள்ளது. பதினெண் புராணங்களிலும் தீர்த்தங்கரர்கள் பற்றிய செய்திகள் வருகின்றன. சிவபுராணம், அக்கினிபுராணம் ஆகியவற்றிலும் ஆதிபகவனின் துதியைக் காணலாம். இவற்றை யெல்லாம் நோக்கும்போது மிகப் பழங்காலத்தில் ஜைனசமயமும் தத்துவமும் நாடெங்கும் பரவியிருந்திருக்கலாம் என்பதை உணரலாம். ஆங்காங்கே கிடைத்துள்ள சமண சமயம் சார்ந்த சாசனங்கள் இக்கருத்தினை மேலும் உறுதிச் செய்கின்றன.

1.1.3 சமண வழிபாடு தெய்வங்களாகத் தொழப்படுகின்ற 24 தீர்த்தங்கரர்களும் பொதுவாக இறைவன் செயலாகக் கூறப்படுகின்ற முத்தொழில்களைச் செய்வதில்லை. அதாவது ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற தொழில்களில் ஈடுபடுவதில்லை. ஏனென்றால் இவர்கள் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்கள். காய்தல் உவத்தல் அற்றவர்கள். தன்னையறிந்து, வீடுபேற்றிற்குத் தடையாக அமைந்த இரு வினைகளை முற்றுமாகப் போக்கி, வீடுபேற்றின் பேரின்பநிலையில் என்றென்றும் நிலைப்பவர்கள். அதனால் தம்மை வணங்குபவர்க்கு எதையும் தருவதோ, தவறு செய்தோரைத் தண்டிப்பதோ இவர்களிடம் இல்லை. பின் ஏன் இவர்களை வணங்கவேண்டும்? அவர்கள் சென்ற பாதையில் அவர்கள் விளக்கும் நற்காட்சி, நல்ஞானம் இவற்றின் அடிப்படையில், நல்லொழுக்கத்தைப் போற்றி வாழவேண்டும் என்ற தூண்டுதலைப் பெறத்தானே தவிர, வேறு எதற்காகவும் அன்று! வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து, அதன்பின் தெய்வநிலை அடைவதற்காகவே அவர்களை வணங்குகிறார்கள் சமணர்கள். ஏனென்றால் அதுவே மனிதப் பிறவியின் குறிக்கோள் எனப் போற்றுகிறது சமண சமயம். அதனாலேயே உருவ வணக்கமும் சாவகர்களுக்கு (சமண இல்லறத்தார்) மிக முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது. சமண சமயத்தில் உருவ வணக்கம் இல்லை என்பார் கூற்று சரியானதன்று. இல்லறத்தார் கோவிலுக்குச் சென்று வணங்குதல் அவர்தம் அன்றாடக் கடமைகளில் ஒன்று என வலியுறுத்தப் படுகிறது.

1.1.4 சமணத்தின் வேறு பெயர்கள் சமண மதம் வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. ஐம்புலன்களையும் இருவினைகளையும் ஜெயித்தவர் (வென்றவர்) என்பதால் தீர்த்தங்கரர், ஜினர் என்று போற்றப்படுகிறார். ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் என்று அழைக்கப்பட்டது. இது தமிழில் சமண மதம் என வழங்கப்பட்டது. தீர்த்தங்கரரை, அருகபதவியை (பேரின்ப நிலை) அடைந்தவர் என்பதால் அருகன் என்றும் வழங்குவதுண்டு. ஆகவே அருகனை வணங்குவோர் ஆருகதர் எனப்பட்டனர். அம்மதம் ஆருகதமதம் என்றும் வழங்கப்பட்டது. சமணர் நிக்கந்தர் என வழங்கப்பட்டனர். நிக்கந்தர் என்றால் பற்றற்றவர் என்று பொருள்படும். அதனால் சமணர் நிகண்டர் எனவும் வழங்கப்பட்டனர். சமண சமயம் நிகண்டமதம் எனப்பெயர்பெற்றது.

ஜினர்=வென்றவர் (ஐம்புலன்களையும், இருவினைகளையும் ஜெயித்தவர்) = ஜைனமதம்

அருகர் =அருகபதவி (இருவினைகளை முற்றுமாகப்போக்கி, வீடுபேற்றின் பேரின்பநிலையை அடைந்தவர்) = அருகமதம்

நிக்கந்தர் =பற்றற்றவர் = நிக்கண்ட மதம்

பிண்டியர் =பிண்டி (அசோக) மரத்தைப் போற்றி வழிபடுபவர் = பிண்டியர் மதம்

அசோக (பிண்டி) மரத்தைப் போற்றுவது சமணர் வழக்கமாதலின் சமணர் பிண்டியர் என்றும் குறிக்கப்பட்டனர். மதங்கள் ஏகாந்த வாதம், அநேகாந்த வாதம் என இருவகைப்படும். சமண சமயத்துக்கு ‘அனேகாந்த வாதம்’ என்றும் ஒரு பெயர் உண்டு.

ஒரு பொருளை ஒரு நோக்கில் மட்டும் பார்ப்பது ஏகாந்தவாதம்.

ஒரு பொருளைப் பல்வேறு நோக்கில் பார்ப்பது அனேகாந்தவாதம்

சமணம் தவிர, பிற மதங்கள் ஏகாந்தவாதத்தைக் கூறுவன. சமணம் மட்டுமே அனேகாந்தவாதக் கொள்கையைக் கூறுவதால் அனேகாந்தவாதம் என்றழைக்கப்பட்டது.

1.1.5 சமணத்தின் பிரிவுகள் காலத்திற்கு ஏற்ப எந்த ஒரு சமயமும் சிற்சில மாறுதல்களை அடைவது இயல்பான நிகழ்ச்சிதான். உலகச் சமயங்கள் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல எனலாம். தொடக்கத்தில் வழக்கத்தில் இருந்த திகம்பரச் சமணம் பின்னர் இரண்டாகப் பிரிந்தது. அப்பிரிவுகள் சுவேதாம்பர சமணம், ஸ்தானகவாசி சமணம் என வழங்கப்படலாயின. ஆக சமணம் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டதாயிற்று.

திகம்பரச் சமணத் துறவியர் ஆடை அணியார். திக்குகளையே ஆடையாக உடுத்தியவர்கள். திகம்பரச் சமணக் கோயில்களில் உள்ள தீர்த்தங்கரர் சிலைகளும் / திருவுருவங்களும் ஆடையுடுத்தப் பெறாமல் திகம்பரமாக இருக்கும். சுவேதாம்பரத் துறவியர் வெண்ணிற ஆடை அணிவர். திகம்பரச் சமணரும் சுவேதாம்பரச் சமணரும் உருவ வழிபாட்டினர். ஆனால் ஸ்தானகவாசியைச் சேர்ந்த சமணர் தம் கோயில்களில் சாத்திரம் அதாவது சமண சமய ஆகம நூலையே வணங்கும் வழக்கமுடையர். ஆயினும் இவர்களுக்குள் அடிப்படை வேற்றுமை ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அன்றும் இன்றும் இடம் பெற்றிருப்பது திகம்பரச் சமணமே. சமண சமயத்தில் சாதிகள் இல்லை. சாதி வேற்றுமைகள் ஏதுமில்லை என்பது நம் கவனத்துக்குரியதாகிறது. இன்றும் கூட தமிழகத்தில் வாழும் திகம்பரச் சமணர்களிடம் சாதிகள் இல்லை; எனவே வேற்றுமைகளும் இல்லை. மேற்கூறிய, மூன்று பிரிவினரும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்றும் இடம்பெற்றுள்ளனர்.

1.1.6 தென்னகத்தில் சமணம் கிறிஸ்து பிறப்பதற்குச் சிறிது காலத்துக்கு முன்னர்தான் சந்திரகுப்தர் இந்தியாவில் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தார். அன்று வட இந்தியாவில் இருந்த அன்னிய ஆதிக்கத்தை அடியோடு அகற்றி, ஒரு வல்லமை வாய்ந்த பேரரசை நிறுவியதால் இந்நாட்டின் வரலாற்றில் அது ஒரு புகழ்வாய்ந்த நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது. சந்திரகுப்த மௌரியப் பேரரசனுக்குக் குருவாக அமைந்தவர் பத்திரபாகு என்னும் சமண முனிவராவர். சந்திர குப்தன் பல ஆண்டுகள் நல்லாட்சி செய்தபின் மகனிடம் அரசைத் தந்துவிட்டு துறவறம் மேற்கொண்டான். அத்துடன் அமையாது பத்திரபாகு முனிவரைத் தலைமையாகக் கொண்ட சமண சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டான். வட இந்தியாவில் கொடிய பஞ்சம் உண்டாகும் என்பதை முன்னதாக அறிந்து பத்திரபாகு முனிவர் அங்கிருந்து தென்னகம் வந்தார் என்பர். இப்பஞ்சம் பன்னிரண்டு ஆண்டுகள் நீடித்தது. அச்சூழலில் ஜைன சங்கத்தார் பல ஆயிரம் (எண்ணாயிரம் என்பர்) துறவிகளுடன் தென்னிந்தியாவில் குடிபுகுந்தார் என்பர். தென்னிந்தியா அப்போது மிகவும் செழிப்பான நிலையில் இருந்தது. சமண முனிவர்கள் உணவை ஏற்றுக் கொள்வதில் சில விதிமுறைகளைத் தவறாது பின்பற்றுவர். அவற்றில் ஏதேனும் குறை நேர்ந்தால் அன்று உண்ணாமலேயே இருந்து விடுவர். அதனால் அவர்களுக்கு உணவிடும் முறைகளை, அவர்களது சமயப் பழக்கவழக்கங்களை நன்கறிந்த இல்லறத்தார் இருந்ததாலேயே அவர்கள் தென்னகம் நாடி வந்திருப்பர். அவர்கள் ஒருவேளை சமண நெறிகளைப் பின்பற்றியவர்களாக இருந்திருக்கலாம் என ஊகிக்க இடமுள்ளது.

தென்னகத்தில் குடியேறியதும் முனிவர்கள் அம்மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுடைய மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை நன்கு அறிந்து கொண்டதோடு அவற்றில் நல்ல பயிற்சியும் பெற்றனர். அவர்கள் சங்கம் சமண சமயக் கொள்கைகளோடு தமிழ், கலை, இலக்கியம் ஆகியவற்றையும் வளர்க்கத் தொடங்கியது.

தென்திசை நோக்கி வந்த பத்திரபாகு முனிவர் மைசூர் நாட்டில் வந்து வெள்ளைக்குளம் என்னும் பொருள்படும் சிரவணபௌகுளா (சிரவண = சமணர்; பௌ = வெள்ளை; குளா = குளம்) என்று இப்போது வழங்கப்படுகிற இடத்தில் தம்முடன் வந்த முனிவர்களுடன் தங்கினார். தங்கியபின், தம் சீடர்களில் ஒருவரான விசாகமுனிவர் என்பவரை அனுப்பிச் சோழ, பாண்டிய நாடுகளில் சமண சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தார். பின்னர் சல்லேகனை நோன்பிருந்து கி.மு. 297-இல் வீடுபேறு பெற்றார். சல்லேகனை என்பது வடக்கிருத்தல். வடக்கிருத்தல் என்பதன் விளக்கம் பின்னர்க் காண்க. இவரது சீடராகிய சந்திரகுப்தரும் அங்கேயே சல்லேகனை நோன்பிருந்து உயிர் நீத்தார்.

1.1.7 தமிழகத்தில் சமணம் பாண்டிய நாட்டில் முன்னமேயே சமணமதம் கால் கொண்டிருந்ததால் வடநாட்டுத் துறவிகளின் வருகையும் செயல்பாடுகளும் புதியதொரு ஊக்கத்தை உண்டு பண்ணியது எனலாம்.

ஆக, தமிழகத்தைப் பொறுத்தவரை கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலேயே சமண சமயம் பரவி இருந்ததாக அறிகிறோம். இக்கருத்தை அரண் செய்ய நமக்கு உதவுவது ஆங்காங்கே கிடைக்கும் சமணத் தொடர்பு உடைய பிராமிக் கல்வெட்டுகளாகும். இத்தகைய கல்வெட்டுகள் தமிழகத்தில் அச்சரப்பட்டி, மாங்குளம், திருப்பரங்குன்றம், அழகர்மலை முதலிய இடங்களில் காணப்படுகின்றன. இவற்றை ஆராய்ந்த ஆய்வாளர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து கொங்கு நாட்டின் வழியாக முதலில் பாண்டி மண்டலத்திலும், பின்னர் தொண்டை மண்டலத்திலும் சமணம் பரவியிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

எவ்வாறாயினும் தமிழகத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சமண சமயம் வேரூன்றத் தொடங்கியது என்பது வரலாறு உணர்த்தும் உண்மையாகும்.

இனி, பழந்தமிழ் நூல்களில் சமணம் என்பதைப்பற்றி அறியலாமா?

1.2 தொல்காப்பியம

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுக்கால நீண்ட வரலாற்றை உடையது தமிழ் இலக்கியம். இன்று கிடைத்திருக்கும் நூல்களுள் தொல்காப்பியமே மிகத் தொன்மையானது எனலாம். எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமன்றி வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட பெருமைக்கு உரியது தொல்காப்பியம். வேறு எந்த மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்பு இது என்று பெருமைப்படலாம். இதுவரை கிடைத்திருக்கும் நூல்களில் மிகப் பழமையான நூலே இலக்கணம் என்றால் அதற்கு முன் இலக்கியங்கள் பெருகியிருக்க வேண்டுமல்லவா? எள் இல்லாமல் எண்ணெய் இல்லை; இலக்கியம் இல்லாமல் இலக்கணமில்லை!

1.2.1தொல்காப்பிய ஆசிரியர் சமணர் தொல்காப்பியரின் சமயம் இன்னதென்று திட்டமாகத் தெரியவில்லை என்றாலும் தொல்காப்பியம் சமண நூல் என்பாரும் தொல்காப்பியர் சமணர் என்பாரும் உளர்.

தொல்காப்பியன் எனத்தன் பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோனே

(வரிகள்: 14-15)

என்று பனம்பாரனார் பாயிரம் தொல்காப்பியரைப் புகழ்கிறது. அதாவது தவத்தால் வரும் பல்புகழினை உலகிலே நிறுத்தின தவவொழுக்கத்தினை உடையவன் என்று பொருள்படும்.

படிமையோன்

படிமையோன் என்றால் தவம் செய்பவன் என்று பொருள். சமண வழக்கில் படிமை என்ற சொல் துறவியின் தவவொழுக்கத்தைக் குறிக்கும். அதனால் படிமையோன் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்ட தொல்காப்பியர் சமணர் என்று கொள்ளலாம்.

முதல் நூல்

மற்றுமொரு காரணம் உள்ளது. முதல் நூலைப் பற்றி மரபியலில் குறிப்பிடும்போது,

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல் நூலாகும்.

(தொல்.மர:640)

என்பார். அதாவது சமண தீர்த்தங்கரர் தவத்தினை ஆற்றி, பற்றினை நீக்கிக் கேவலஞானம் பெறுவர். கேவலஞானம் என்ற வடசொல் ‘வினை நீங்கிய நிலையிலான அறிவு’ என்று பொருள்படும். ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்’ என்பது அருகதேவனைக் குறிக்கும். சமண சமயத்தார், முதல் தீர்த்தங்கரராகிய விருஷபதேவரே முதல் நூலை இயற்றியவர் என்பர். அதனால் வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூல் என்று கூறியிருப்பதால் தொல்காப்பியரும் சமணராக இருக்கலாம். இக்கருத்தை மறுப்பாரும் உளர்.

1.2.2 தொல்காப்பியத்தில் சமணக் கொள்கைகள் தொல்காப்பியத்தில் சமண சமயக் கொள்கைகள் இடம் பெற்றுள்ளதைச் சான்றுகள் மூலம் அறியலாம்.

காஞ்சித்திணை: நிலையாமைக் கொள்கை!

நிலையாமைக் கொள்கை எல்லாச் சமயத்தாராலும் பேசப்படுவதுதான் என்றாலும் சமண சமயத்தார்க்கே சிறப்பாக உரியது எனலாம். இக்கொள்கையைத் தொல்காப்பியர் காஞ்சித்திணை என்று தனியாகக் குறிப்பிடுகிறார்.

காஞ்சிதானே பெருந்திணைப்புறனே

பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்

நில்லா உலகம் புல்லிய நெறித்தே

(புறத்திணையியல்:18)

(பாங்கு = ஒப்பு, நில்லா = நிலையில்லா, புல்லிய = தாழ்ந்த, இழிந்த, நெறி = வழி)

பல வகைகளிலும் ஒப்பில்லாத பண்புகளையுடையதாகக் கருதப்படும் இவ்வுலகின் நிலையற்ற போக்கினை விளக்குவது பெருந்திணைக்குப் புறமாக அமைந்துள்ள காஞ்சித்திணை என்பது இவ்வடிகளின் பொருளாகும். (பெருந்திணை என்பது அகத்திணை ஏழனுள் ஒன்று. பொருந்தாத காதல் என்று இதை விளக்கலாம்.)

னகர ஈற்று விளக்கம்: ஆண்களுக்கே வீடுபேற்று உரிமை!

தமிழ் எழுத்துகளுள் னகரம் இறுதி எழுத்தாகும். னகரத்தை இறுதியிலே வைத்ததற்குக் காரணம் காட்டுகிறார் இளம்பூரணர் என்ற உரையாசிரியர்.

னகரம் வீடுபேற்றிற் குரிய ஆண்பாலை

உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது

(தொல், எழுத்து 1. இளம்பூரணர் உரை)

ஆண்பிறவி எடுத்து, துறவு பூண்டு தவத்தினைச் செய்து வினைகளை வென்றால்தான் வீடுபேறு அடைய முடியும் என்பது சமணர்தம் கோட்பாடு. அதனைக் குறிக்கவே ஆண்பால் ஈற்று எழுத்தாகிய னகர மெய்யை மொழி இறுதியில் தொல்காப்பியர் வைத்தார் என்பது இளம்பூரணர் கருத்து. இளம்பூரணரும் சமணர் என்பதால் இயல்பாக இக்கருத்தை ஏற்றுக் கொண்டு விளக்கம் தருகிறார்.

படைப்பு விளக்கம்: உலகம் படைக்கப்படுவதும்

இல்லை; அழிந்துபடுவதும் இல்லை

உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்று பல சமயத்தாரும் கூறுவர். ஆனால் சமணரோ இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது அல்ல என்று கூறுவர். அது எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது; மாற்றங்களுக்கு உட்படுகிறது; ஆனால் முழுவதுமாய் அழிந்துபடுவதில்லை என்கிறது சமண சமயம். தொல்காப்பியரும்

நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம்

(மரபியல் – 91)

(வளி = காற்று, விசும்பு = ஆகாயம், மயக்கம் = கலப்பு)

என்று குறிப்பார். இது சமணக் கொள்கையை ஒத்துள்ளது.

கால அளவு: மாத்திரை

காலஅளவு பற்றிக் குறிப்பிடும்போது மாத்திரை இடம் பெறுகிறது. மாத்திரைக்கு அளவுகளாக கைந்நொடியையும், கண் இமைத்தலையும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் (எழுத்து – 7). இதுவும் சமணர்தம் கருத்தோடு ஒத்துப் போகிறது.

பண்ணத்தி; சமணச் செய்யுள் வகை

உரையும் பாட்டுமாகச் செய்யப்படும் ஒருவகைச் செய்யுள் பண்ணத்தி எனப்படும். இச்செய்யுள் வகையைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் (செய்யுளியல் 173). சமணர்கள் இயற்றிய பழைய செய்யுள் வகையொன்றின் பெயராகப் பண்ணத்தி என்பது வழங்கப்படுகிறது. அதைப் பின்பற்றியோ அல்லது அது தம் சமயச் சார்பானது என்று கருதியோ அவர் அதைக் குறித்திருக்கலாம்.

சமண சமயத்தின் இடம்

இலக்கியங்களில் ஒரு கருத்து இடம் பெற வேண்டுமென்றால் சமூகத்தில் அது வேர் கொண்டிருந்திருக்க வேண்டும். இல்லையேல் அதைப்பற்றிக் குறிப்பிட வேண்டிய தேவை இலக்கியங்களுக்கு இருந்திராது. எனவே தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும் தமிழகத்தில் சமணம் இருந்திருக்க வேண்டும்; சமணச் சார்பான கோட்பாடுகள் மக்களிடையே பரவியிருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.

1.3சங்க இலக்கியம்

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைச் சங்க இலக்கியம் என வழங்குவது மரபு.

1.3.1 பத்துப்பாட்டு கி.மு. சில நூற்றாண்டுகள் தொடங்கி கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையுள்ள காலம் சங்ககாலம் எனலாம். அக்காலத்தை அறிய நமக்குப் பெரிதும் துணையாய் இருப்பன அக்கால இலக்கியங்களாகக் கூறப்படுகின்ற பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகும். இந்நூல்களைப் பாட்டும் தொகையும் என்று வழங்குவர். இப்பதினெட்டு நூல்களை மேல்கணக்கு நூல்கள் என்று வழங்கும் பழக்கமும் உண்டு. மேற்கூறிய சங்க இலக்கியங்களில் கிடைக்கப் பெறும் குறிப்புகளிலிருந்து தமிழ்நாட்டில் சமண சமயம் இருந்தது என்பதற்கான சுவடுகளை அறியமுடிகிறது.

மதுரைக்காஞ்சி

பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சியும் ஒன்றாகும். மதுரை சமணர்களின் இருப்பிடமாக இருந்துள்ளது. மதுரையிலும் மதுரையைச் சூழ்ந்துள்ள இடங்களிலும் கிடைத்துள்ள கல்வெட்டுகளும் சாசனங்களும் சிலைகளும் அவர்களின் இருப்பை உறுதி செய்கின்றன. மதுரைக் காஞ்சி என்ற சங்க இலக்கியமும் இவ்வுண்மையை அரண் செய்வது போல் சில குறிப்புகளைத் தருகின்றது.

மதுரைமாநகரில் அந்தணர் பள்ளி, பௌத்தப் பள்ளிகளுடன் சமணப் பள்ளியும் இருந்தது என மதுரைக்காஞ்சி கூறுகிறது. அங்கிருந்த சமணர் கோயிலை அது அழகுற வருணிக்கிறது. ‘அருகதேவன் கோயில் குளிர்ந்த தண்ணிழல் உடையது. அச்சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அவை கண்பார்வைக்கும் எட்டாது மேலே உயர்ந்திருந்தன. அச்சுவர்கள் குன்று பல திரண்டுள்ளதைப் போலத் தோன்றுகின்றன. அக்கோயிலுள் பூவும் புகையும் ஏந்தி, சமணரில் விரதம் காக்கும் இல்லறத்தாராகிய சாவகர் வணங்குகின்றனர். முக்காலங்களையும் உணர்ந்து உலகத்தார்க்குச் சொல்லுகின்ற ஆற்றலைப் பெற, சமண முனிவர் நோற்கின்றனர்’. என்னும் இக்குறிப்பைக் காட்டும் மதுரைக்காஞ்சியின் பாடல அடிகள் இதோ:

வண்டுபடப் பழகிய தேனார் தோற்றத்துப்

பூவும் புகையும் சாவகர் பழிச்சச்

சென்ற காலமும் வரூஉம் அமயமும்

இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து

வானமும் நிலனுள் தாமுழுதுணரும்

சான்ற கொள்கைச் சாயா வாழ்க்கை

ஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்

(அடிகள் : 475-482)

……………………… ……………..

……………….. வயங்குடை நகரத்துச்

செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து

நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந்தோங்கி

இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்

குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற

(அடிகள் : 484-488)

(பழிச்ச = வாழ்த்த, வரூஉம் = எதிர்காலம், அமயம் = சமயம்; காலம்; செம்பியன்றன்ன = செம்பால் செய்ததுபோல, புனைந்து = ஓவியம் தீட்டப்பெற்று, நோக்குவிசை = கண்பார்வை, இறும்பூது = வியப்பு)

இவ்வடிகளின் பொருள் பின்வருமாறு:

‘தேன் இருந்த அழகிய பூக்களோடே புகையினையும் பலியாக ஏந்திச் சாவக நோன்பிகள் அருகனை வாழ்த்தி நிற்கின்றனர். சென்ற காலத்தையும் எதிர்காலத்தையும் நிகழ்கால நிகழ்ச்சியோடு உணர்ந்தவர்கள்; வானகம் முதலிய உலகங்களின் இயல்பினையும் உணர்ந்து கொண்டவர்கள். தமக்கு அமைந்த விரதங்களையும் அவ்விரதங்களைத் தாங்கக் கூடிய உடலினையும் உடையவர்கள்; கல்வியெலாம் நிறைந்த அறிவினையும் உடையவர்களாகிய சான்றோர் நோன்பினை நோற்கின்றனர். குளிர்ச்சி உடைய அருகக் கடவுளின் திருக்கோயிலிடத்தே அமைந்த சுவர்கள் செம்பால் செய்ததைப்போல் இருந்தன. சுவர்களில் ஓவியம் தீட்டப்பட்டிருந்தன. அவை கண்பார்வைக்கு எட்டாத உயரத்தில் மேலே வியப்பூட்டும் வகையில் இருந்தன. அங்கு வாசனை பொருந்திய பூஞ்சோலைகளை உடைய அமணர்பள்ளியும் மலைகள் பலசேர நின்றது போன்று விளங்கின.’

பட்டினப்பாலை

பத்துப்பாட்டில் மற்றொரு நூல் பட்டினப்பாலை. உருத்திரங்கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலையில் காவிரிப்பூம்பட்டினத்தின் அமைப்பும் அதன் சிறப்புகளும் விளக்கப்படுகின்றன. அங்குத் தவப்பள்ளி ஒன்று இருந்ததாக அதில் குறிப்பிடப்படுகிறது (53). அதுவும் நகர அமைப்பின் சிறப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தவப்பள்ளி என்பதற்கு அமண்பள்ளி, பௌத்தப்பள்ளி என்றே நச்சினார்க்கினியர் உரை எழுதுவார். பள்ளி என்பது சமணர்க்கு உரியது. பள்ளிச்சந்தம் என்று கல்வெட்டில் வரும் குறிப்பும் இதனை உறுதிப்படுத்தும். மணிமேகலையிலும் காவிரிப்பூம்பட்டினத்தில் கண் இத்தகு அமண்பள்ளிகள் இருந்தன என்று கூறப்படுகிறது. ஆதலால் இங்குக் குறிக்கப்படும் தவப்பள்ளி சமண முனிவர் தவமியற்றும் அமண்பள்ளியே என்பது பொருந்தும் எனலாம். சமணத்துறவிகளும் சமண இல்லறத்தாரும் (சாவகர்) சங்ககாலச் சமூகத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தனர் என்பதை அவை அழுத்தமாகக் கூறுகின்றன.

1.3.2 எட்டுத்தொகை சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் இடம் பெறும் சில புலவர் பெருமக்களின் பெயர்களும், பாடல்களில் காணும் அகச்சான்றுகளும் அக்கால நிலையில் தமிழகத்தில் சமணம் வேரூன்றி இருந்த நிலையைக் காட்டுகின்றன.

புலவர் பெயர்களில் சமணம்

நிக்கண்டன் கலைக்கோட்டுத் தண்டனார், உலோச்சனார் போன்ற புலவர் பெருமக்கள் சமணர்கள் என்பதை அவர்களின் பெயர்களே எடுத்துக் காட்டுகின்றன. பற்றற்றவர் என்ற பொருள் தரும் நிக்கந்தர் என்ற சொல் சமணக் கடவுளைக் குறிக்கும் என்பதை முன்னரே பார்த்தோம். நிக்கந்தர் என்பதன் திரிபே நிக்கண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் என்ற பெயரின் முதல் சொல்லாகும். இப்புலவர் பாடிய பாடல் நற்றிணையில் காணப்படுகிறது. உலோச்சனார் என்பதும் சமணப் பெயரே ஆகும்.

உலோச்சனார்

சமண முனிவர்க்குரிய ஒழுக்கங்கள் ஏழில் ஒன்றான லோசம் என்பது மயிர்களைதல் என்பதாகும். சமணர் துறவு மேற்கொள்வதற்கு முன் தீட்சை பெறுவர். அப்போது தலைமுடியைக் கையினால் களைவது அவர்தம் நெறிமுறை. அதனைச் செய்யும்போது உண்ணாநோன்பிருந்து செய்வது அவர்தம் வழக்கம். இச்செயல் உடல்துன்பத்தைத் தாங்கும் ஆற்றலையும் மனத்திட்பத்தையும் காட்டுகிறது. அத்துடன் ஒருவர்க்கு உடல்மீதான பற்றின்மையைக் காட்டவும் மேற்கொள்ளப்படுகிறது.

லோச்சு என்ற இச்சடங்கின் பெயர் உலோச்சு எனவாகி உலோச்சனார் என்று வழங்கப்பட்டிருக்கலாம். ஆதலின் இவர் சமணத் துறவி என்பது புலனாகிறது. இவர் பாடிய பாடல்கள் நற்றிணை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை ஆகிய எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. உலோச்சனார் பாடிய பாடல்களில் பல நெய்தல் திணையைப் பற்றியதாக உள்ளன. பரதவர்களைப் பற்றிய செய்திகள் கூறப்படுவதால் இவர் பரதவராக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

பாடல்களில் சமணம் குறித்த அகச்சான்றுகள்

எட்டுத்தொகை நூல்களுள் காணும் சில சொல்லாட்சியும், சிந்தனைகளும் சமண சமயக் கொள்கைகளின் தாக்கம் தமிழர் வாழ்க்கையிலும் எண்ணத்திலும் பெரிதும் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.

இந்திரர் என்னும் சொல்

இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலர் என்பது புறநானூற்று வரி (182). இப்பாடலில் இந்திரர் என்று குறிக்கப் பட்டுள்ளது வைதிக சமயத்தில் குறிப்பிடும் இந்திரனாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்திரன் அல்லது தேவேந்திரன் என்று ஒருமையில் குறிப்பிடும் வழக்கம்தான் வைதிக சமயத்தில் உண்டு. ஆனால் சமண சமயத்தில் இந்திரர் என்று பன்மையில் குறிப்பது வழக்கம். இந்திரர் எனப்படுவார் பலர் இருந்தனர் என்பது சமணர் நூல்களிலிருந்து புலனாகிறது. எனவே இந்திரர் என்று பன்மையில் கூறப்பட்டிருப்பதால் அக்காலநிலையில் சமண சமயமும் சமண சமயக் கருத்துகளும் பரவியிருந்தன எனக் கொள்ளலாம்.

வினைக்கோட்பாடு

இந்தியச் சமயங்களில் ஊழ்வினைக் கோட்பாடு சிறப்பான இடம் பெற்றுள்ளது. வினை விதைத்தவன் வினையை அனுபவித்தே ஆகவேண்டும்; வினையானது அவ்வினை செய்தவனை அடைந்தே தீரும் என்பதில் சமண சமயத்திற்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு. பிற சமயச் சான்றோர் இறைவன் அருளால் வினையைப் போக்கிக் கொள்ளலாம் என்பர்; பிராயச்சித்தம், கழுவாய் ஆகியவற்றைச் செய்வதின் மூலமாகவும் வினைப் பயனில் இருந்து தப்பிக்க முடியும் என்பர். ஆனால் சமணமோ வினையின் பயனை ஒரு பிறவியில் மட்டுமன்றி வரும் பிறவிகள் தோறும் அனுபவித்தேயாக வேண்டும் என்று கூறுகிறது. இக்கொள்கை அகநானூற்றிலும் (369) கலித்தொகையிலும் (130) புறநானூற்றிலும் (192) இடம் பெற்றுள்ளது. புறநானூற்றுப் பாடலைச் சான்றாகக் காணலாம்.

யாதும் ஊரே யாவரும்கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன

சாதலும் புதுவதன்றே வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்

இன்னா தென்றலு மிலமே மின்னொடு

வானம் தண்டுளி தலைஇ ஆனாது

கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ……..

(புறநா:192)

(முனிவின் = வெறுப்புற்றபோது, மின்னொடு = மின்னலொடு, தண்டுளி = மழை, கல்பொருது = கல்லைமோதி, மல்லல் = வளம், புணை = தெப்பம்)

நமக்கு ஏற்படும் தீமையும் நன்மையும் நம்மால் உண்டாகுமே யல்லாமல் பிறரால் உண்டாகாது. துன்பம் உண்டாவதும், அது தீர்வதும் அதேபோல உண்டாவதாம். உலகில் பிறந்தவர் இறத்தல் என்பது புதியதன்று. வாழ்வதை இனிமையானது என்று எண்ணி மகிழ்ச்சியடைதலும் வெறுப்புற்றபோது உயிர் வாழ்தலைத் துன்பமுடையது என்று எண்ணி வருந்துதலும் இல்லை. இவ்வுலகில் பிறக்கின்ற உயிர், நீர் செல்கின்ற வழியாகவே செல்கின்ற தெப்பம் போல, ஊழ்வினை வழியாகவே செல்லும் என்பதைப் பெரியோரின் நூலறிவால் அறிந்தோம். ஆகவே எமக்கு எல்லா ஊர்களும் சொந்த ஊர்களே ஆகும். எல்லா மக்களும் எம் சுற்றத்தாரே ஆவர்.

நிலையாமைக் கோட்பாடு

சங்ககால மக்களின் வாழ்வியலில் நிலையாமைக் கருத்தும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளது. ஆயினும் பிற்கால அறநூல்களில் இடம் பெற்றுள்ளதைப் போல அவை அழுத்தம் பெறவில்லை.

மன்னன் வரையாது வழங்க வேண்டும் என்று கொடையை வற்புறுத்த நிலையாமைக் கருத்தைக் கைக்கொண்டனர். (புறநா 27, 189, 360 …..) வளர்பிறையும் தேய்பிறையும் மாறிமாறி வருவது நிலையாமையைக் காட்டுவதால் துன்பமுற்று வருவோர்க்குப் பொருளை வழங்க வேண்டும். உலக வாழ்க்கை நிலையற்றது; செல்வமும் நிலையாதது. பொருளைத் துய்க்க வேண்டுமென்று நினைத்துச் சேர்த்து வைத்தால், அதனை அனுபவிக்க முடியாமலும் போகலாம். ஆதலால் செல்வத்தின் பயன் கொடையே என்றனர்.

வடக்கிருத்தல்

வடக்கிருத்தல் என்பது தானாக விரும்பி உயிர்விடும் பழக்கமாகும். உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதலாகும். இதனைச் சமணர் சல்லேகனை என்பர். இது சமணர்க்கு உரிய கோட்பாடாகும். அவர்களுக்கே உரிய தனிக்கொள்கை. பேரிடையூறு, நீங்காநோய், மிகுந்த முதுமை போன்றவை வந்தபோது வடக்கிருந்து உயிர்விடலாம் என்பது வழிவழியாக வருகின்ற கோட்பாடு. இதைத் தற்கொலை என்று ஒருசாரார் கூறுவர். ஆனால் இது தற்கொலையன்று. பகைமை மறந்து, பற்றினை நீக்கி, மன ஒருமைப்பாட்டோடு தியானத்தில் ஆழ்ந்து உயிர்விடுதல் சல்லேகனை எனலாம். சங்க இலக்கியத்தில் வடக்கிருத்தல் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.

சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும், சோழன் கரிகால் வளவனுக்கும் போர் மூண்டது. போரில் தோற்ற சேரமான், மானம் பொறாது வடக்கிருந்து உயிர் நீத்தான். இச்செயலைக் கழாத்தலையார்,

புறப்புண் நாணி மறத்தகை மன்னன்

வாள் வடக் கிருந்தனன்

(புறநா:65)

என்று பாடுகின்றார். முதுகிலே புண் பெற்றதற்கு நாணமடைந்து வீரமிக்க வேந்தன் வடக்கிருந்து உயிர் விட்டான் என்பது இதன் பொருளாகும்.

பாரி மன்னன் இறந்ததும் அவன் பிரிவைத் தாளாது செந்நாப்புலவனாகிய கபிலர் வடக்கிருந்த செய்தியும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

சங்கப் பாடல்கள் காட்டும் மேற்குறிப்புகளெல்லாம் சமணம் சங்க காலத்தில் இருந்தது என்பதையும் சமணக்கோட்பாடுகள் மக்களிடையே பரவியிருந்ததையும் சமண அறிஞர்கள் வாழ்ந்ததையும் எடுத்துக் காட்டுகின்றன.

1.4 சங்கம் மருவிய கால இலக்கியம்

சங்ககாலத்திற்குப் பிற்பட்ட காலத்தைச் சங்கம் மருவிய காலம் என்கிறோம். சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்.

1.4.1 திருக்குறள் இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முதன்மையானது. சங்கத்திற்கும் பிற்பட்டது என இதன் காலத்தை வரையறை செய்யலாம். எல்லாச் சமயத்தாராலும் எமது நூல் எமது நூல் என்று கூறப்படுவதால் இதன் பொதுத்தன்மை புலனாகிறது. ஆயினும் இதனைப் பழைய நாளிலிருந்தே சமணநூல் என்றும் இதன் ஆசிரியர் சமணர் என்றும் கூறுகின்ற மரபும் உண்டு. சமண நூல் என்பதற்கும் ஆசிரியர் சமணர் என்பதற்குமான சில சான்றுகளை இங்குக் காணலாம்.

குறள் ஆசிரியர்

குறளாசிரியர்க்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று தேவர் என்பது. தேவர் என்ற பெயர் சமண சமயத்தார்க்கு உரியதாகையால் இவர் சமணர் என்பர். தவிர, நீலகேசிக்கு உரை எழுதிய சமயதிவாகர முனிவர் திருக்குறளை ‘எமது ஓத்து’ என்று கூறுவார். எம்முடைய நூல் என்று அது பொருள்படுவதால் திருக்குறள் சமணரால் இயற்றப்பட்டது என்று கொள்ளலாம்.

கடவுள் வாழ்த்து : தீர்த்தங்கரர் வாழ்த்து

இன்னொரு கருத்தையும் இங்குக் குறிப்பிட வேண்டும். தமிழகத்தில் சமணர்களின் சமயத் தலைமை இடமாக இருந்த திராவிடச் சங்கத்தின் (திரமிளசங்கம்) தலைவராக இருந்த குந்தகுந்தர் என்ற ஏலாச்சாரியார்தான் திருக்குறளை இயற்றியவர் என்ற கருத்து சமணர்களிடையே நிலவுகிறது. வடஆர்க்காடு மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் பொன்னூர் மலையில் இவருடைய பாதங்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. இன்றும் சமணர்கள் போற்றுகின்ற இடமாக அது விளங்குகின்றது. கடவுள் வாழ்த்தில் கூறப்படும் ஆதிபகவன் முதல் தீர்த்தங்கரராகிய விருஷபதேவரைக் குறிக்கிறது என்றும் சமணர் குறிப்பர். கடவுள் வாழ்த்தில் குறளாசிரியர் பயன்படுத்தும் ‘இருள்சேர் இருவினையும் சேராதவன்’, ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’, ‘மலர்மிசை ஏகினான்’ ஆகிய தொடர்கள் சமணத் தீர்த்தங்கரர்களுக்கு உரியன. இத்தொடர்களின் பொருள் முறையே (1) இருவினைகளையும் வென்று வினைப்பயனுக்கு அப்பாற்பட்டவன், (2) ஐம்புலன்களையும் வென்றவன், (3) மலர்மேல் இருப்பவன் ஆகும்.

குறள் கூறும் கொல்லாமை: சமணக் கொள்கையின்

வெளிப்பாடே!

குறள், அறங்கள் பலவற்றையும் விரிவாகப் பேசுகிறது. ஆயினும் கொல்லாமை அறத்தைப் பேசும்போது

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று (323)

என்று கூறுகிறது. அதாவது, இணையில்லாத ஓர் அறமாக இருப்பது கொல்லாமை என்னும் நல்லறமாகும். அதற்கு அடுத்த நிலையில் வைத்துக் கூறத்தக்கதாகப் பொய்யாமை என்னும் அறம் நல்லது. அத்துடன் அமையாது

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி (324)

என்றும் கூறுவார்.

அதாவது நல்லவழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எதுவென்றால் எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும் என்பார். மேலும்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று (259)

என்றும் கூறுவார். இதன் பொருள்,

நெல் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது எனலாம்.

மேற்கண்ட குறட்பாக்கள் கொல்லாமை நெறியை எத்துணை அழுத்தமாகப் பேசுகின்றன என்பதை அறியலாம். சமணரின் அடிப்படைக் கோட்பாடு கொல்லாமையாகும். இந்த அளவிற்கு அந்தக் காலக்கட்டத்தில் வேறு எந்தச் சமயமும் கொல்லாமைக் கோட்பாட்டை வற்புறுத்தியதாகத் தெரியவில்லை. அதனால் குறளாசிரியர் சமணராக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.

1.4.2 நாலடியார் சங்ககாலச் சூழல் மாறியபோது சங்க இலக்கியப் போக்கிலும் மாறுபாடு தோன்றியது. வீரமும் காதலும் பாடுபொருளாக மேலோங்கிய போக்கு மாறி, தமிழிலக்கியப் பரப்பில் அறநூல்கள் ஒரு கணிசமான பகுதியாகத் தோன்றி வளர்ந்தன.

அறநூல்கள் என்று பொதுவாகக் கொள்ளப்படுவன நீதிமுறைகள், ஒழுகலாறுகள் என்பவற்றை நேரே எடுத்துக் கூறும் நூல்களாகும். இதைச் செய், அதைச் செய்யாதே என்று அறிவுறுத்தும் வகையில் அமைந்தாலும் இலக்கிய நயம் தோன்றப் படைக்கப்படுவனவாகும். அதனால் அறநூல்களை இலக்கியங்களாகப் போற்றுவது தமிழுக்குள்ள தனிச்சிறப்பாகும்.

நாலடியார் சிறப்பு

திருக்குறள் அமைத்த அறவாழ்வின் அடிப்படையில் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களாக உள்ள ஏனைய அறநூல்கள் எழுந்தன. அவற்றுள் தனிச்சிறப்புப் பெறுவது நாலடியார். இந்நூல் திருக்குறளோடு சேர்த்து ஒப்பநோக்கி மதிக்கப்பட்டு வருகிறது. ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ ஆலங்குச்சியும் வேலங்குச்சியும் பல்லுக்கு உறுதியளிப்பதுபோல நாலடியாரும் திருக்குறளும் சொல்லுக்கு உறுதி அளிப்பன என்ற வழக்கால் நாலடியாரின் சிறப்பை அறிய முடிகிறது.

மேல்நாட்டு அறிஞர் ஜி.யு. போப் அவர்களால் நாலடியார் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நாலடியார்: ஒரு சமண நூல்

நாலடியார் சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் தொகுதி எனக் கருதப்படுகிறது. பஞ்சம் வந்தபோது பாண்டியனை வந்தடைந்த சமண முனிவர்கள் பஞ்சம் முடிந்ததும் பாண்டியனைப் பிரிந்து செல்லும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாட்டு எழுதி வைத்துச் சென்றனர் எனவும், அவற்றுள் அழிந்தனபோக நின்றவையே நாலடியார் பாடல்களாயின எனவும் கூறுவர்.

நாலடியாரில் சமணக் கொள்கைகள்

நாலடியார், சிறந்த உவமைகளாலும் ஆற்றலுள்ள சொற்களாலும் உலக நடைமுறையைக் காட்டுதலில் சிறந்து விளங்குகிறது. நாலடியார் முழுவதிலும் நிலையாமைக் கொள்கை ஊடுருவிச் செல்கிறது. செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவை நூலின் தொடக்கத்திலே தொகுக்கப்பட்டுள்ளன. அதன்பின் அறன் வலியுறுத்தல் கூறப்படுகிறது.

பல்லாவுள் உய்த்து விடினுங் குழக்கன்று

வல்லதாந் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு

(நாலடி 101)

(பல் = பல; ஆ = பசு; உய்த்துவிடு = செலுத்து; குழக்கன்று = கன்றுக்குட்டி; கோடல் = கொள்ளுதல்; தொல்லை = முன்னையதான; தற்செய்த = தன்னைச் செய்த; கிழவனை = உரியவனை)

பல பசுக்கள் இருந்தபோதிலும் தன்னுடைய தாயை நாடிச்செல்லும் கன்றுபோல, உலகத்தில் பல மனிதர்கள் இருந்தபோதிலும் அவர்பால் போகாது, வினை தன்னைச் செய்தவனையே சென்று சேர்ந்து, அனுபவிக்கச் செய்யும்.

1.4.3பழமொழி இதன் கடவுள் வாழ்த்து அருகனைக் குறிப்பிடுவதால் இதன் ஆசிரியர் சமணர் என்றறியலாம். ஆசிரியர் முன்றுறை அரையனார் என்பவர்.

தமிழ்நாட்டில் வழங்கிய பழமொழிகளில் ஒன்றை ஈற்றடியாகக் கொண்டு ஒவ்வொரு பாடலும் அமைந்துள்ளது. சொல்லப்படும் கருத்துகள் தெளிவாகவும் சுருக்கமாகவும் கேட்போர் உள்ளங்கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளன. நானூறு பாடல்களை உடையது என்பதால் இது பழமொழி நானூறு என்றும் வழங்கப்படும். இதற்கு முன்பும் பழமொழிகள் சில குறுந்தொகை, அகநானூறு என்பவற்றிலும் பிற்கால இலக்கியங்களிலும் கையாளப்பட்டுள்ளன. ஆனால் நூல் முழுவதிலும் அமையுமாறு பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றால் நிலைநாட்டிக் கூறப்படும் நீதிகளையும் அறங்களையும் கூறி, ஒவ்வொரு செய்யுளிலும் விளக்கிய நூல் இதுவேயாகும்.

1.4.4 பிற அறநூல்கள் நாலடியார், திருக்குறள், பழமொழி முதலிய நூல்களைப் பற்றிப் பார்த்தோம். பிற அறநூல்களிலும், சமணம் வலியுறுத்தும் அறக் கொள்கைகளையே பரவலாகக் காண்கிறோம்.

1.5 காப்பியங்கள்

பழந்தமிழ் நூல்களுள் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் காப்பிய வகையைச் சேர்ந்தன.

1.5.1 சிலப்பதிகாரத்தில் சமணம் சிலப்பதிகார ஆசிரியர் சமணர்; தமது சமயத்தின் முக்கியமான கொள்கைகளாக அமைந்த கொல்லாமை, வினைக்கோட்பாடு, உலகமூடம் முதலியனவற்றை மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறியிருக்கிறார். இவற்றைச் சமணத் தமிழ்க் காப்பியங்கள் என்னும் பாடத்தில் விரிவாகக் காணலாம்.

1.5.2மணிமேகலையில் சமணக் குறிப்புகள் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலை கால வரன்முறையில் வைத்துப் பார்க்கும்போது சிலப்பதிகாரத்திற்கு அடுத்து வைக்கப்படுகிறது.

சமணப்பள்ளி பற்றிய குறிப்பு

மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதையில் சுதமதி மணிமேகலையுடன் தான் வந்த வரலாற்றைக் கூறும்போது தன் தந்தையைப் பற்றிக் குறிப்பிடுகிறாள். கன்றினை ஈன்ற பசுவொன்று தன் தந்தையின்மீது பாய்ந்து அவன் வயிற்றில் பெரும்புண்ணை உண்டாக்கிவிடுகிறது. பெரிய குடரைக் கையில் தாங்கிக் கொண்டு அடைக்கலம் வேண்டி முன்பு சுதமதி தங்கியிருந்த சமணப் பள்ளியை அடைகிறான். சமண முனிவர் அடைக்கலம் தர மறுத்து விடுகின்றனர். சினந்து வெளியே போகுமாறு கையால் காட்டி நின்றனர். இந்தக் குறிப்பு சமணம் அக்காலத்தில் இடம் பெற்றிருந்ததையும் சமண முனிவர் தங்கியிருக்கத் தனியிடம் அமைந்திருந்தமையும் காட்டுகிறது.

நிகண்டவாதி பற்றிய குறிப்பு

சமயக் கணக்கர் தம்திறம் கேட்ட காதையில் மணிமேகலை வஞ்சிநகரின் கண் இருந்து பல்வகைச் சமயவாதிகளையும் சந்தித்து அவரவர் சமயக் கருத்துகளைக் கேட்க விரும்பி அவர்கள்பால் செல்லுகிறாள். அவள் பார்த்த சமயவாதிகளுள் ஒருவர் நிகண்டவாதி. நிகண்டவாதி சமண சமயவாதியாவர். அக்கால நிலையில் சிறப்புடன் விளங்கிய பல சமயங்களில் ஒன்றாகச் சமணசமயமும் விளங்கியதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

1.6 தொகுப்புரை

சங்ககால இலக்கியங்களில் இலைமறை காயாகச் சமயக் கருத்துகள் விளக்கம் பெற்றிருந்தன. சிலப்பதிகாரத்தில் சமயக் கருத்துகள் வெளிப்படையாக விரிவாக அமைவதைக் காண்கிறோம். ஆயினும் எல்லாச் சமயங்களும் போற்றப்பட்டன என்பதையும் சமயப்பொறையே மேலோங்கி இருந்தது என்பதையும் நன்கு உணர முடிகிறது. அதற்குப் பின்வந்த மணிமேகலையில் அந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. தம் சமயக் கோட்பாட்டை விரிவாகக் கூறும் போது பிற சமயக் கோட்பாட்டின் மீதான காழ்ப்புணர்ச்சி மணிமேகலையில் ஆங்காங்கே வெளிப்படுகிறது.

பழந்தமிழ் நூல்களில் சமணம் என்ற இந்தப் பாடத்தில் சங்ககாலத்திற்கு முற்பட்ட தொல்காப்பியம் இலக்கண நூலாக இருந்தபோதிலும் சமண சமயக் கருத்துகள் இடம் பெற்றிருந்ததைப் பார்த்தோம். ஒரு கருத்து இலக்கணத்தில் இடம்பெற வேண்டுமென்றால் அதற்கு முன் இலக்கியங்களில் அக்கருத்து பேசப்பட்டிருக்க வேண்டும். சமூக வாழ்வில் மக்களிடையே பரவலாக வேரூன்றியிருக்கும் கருத்துகள் அக்கால கட்டத்தில் இயற்றப்படும் இலக்கியங்களில் இடம்பெறுவது இயல்பு; அது தவிர்க்க முடியாததும் கூட. தவிர, புதியனவாகத் தோன்றி மக்களிடையே செல்வாக்குப் பெற்ற கருத்துகளும் சிந்தனைகளும் கூட இடம் பெறும் வாய்ப்புண்டு என்பதை மறுக்க முடியாதல்லவா?

தவிர, சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலும் ஆங்காங்கே சமணப்பள்ளிகள் இருந்தமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன. அது மட்டுமன்றி, சமணச் சான்றோர் பாடிய பாடல்கள் சிலவும் இடம் பெற்றிருப்பதை விளக்கமாகப் பார்த்தோம். சமணச் சார்புடைய நிலையாமை, ஊழ்வினை, வடக்கிருத்தல் ஆகிய கோட்பாடுகள் ஆங்காங்கே விளக்கம் பெற்றதையும் அறிந்தோம். அதனால் சமண சமயம் சங்ககாலத்திற்கு முன்னும் பின்னும் தமிழக மண்ணில் வேரூன்றி யிருந்தமையைத் தெளிவாக அறிய முடிகிறது. சமணப் பள்ளிகள் சமணத் துறவிகள் தங்குவதற்கென அமைந்த இடங்களாகும். அவ்விடங்களில் தங்கி மக்களுக்குத் தம் சமயக் கோட்பாடுகளை அறிவுறுத்தி வந்தனர். மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை ஆகிய நூல்களில் அதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது சமணம் இங்குக் காலூன்றி வளர்ந்தமையை அறிந்து கொள்ளலாம்.

மேலும் சங்கம் மருவிய காலகட்டத்தில் தோன்றிய அறநூல்களுள் பலவும் சமணர் தந்தவையே. அவற்றுள் முதன்மை பெற்ற திருக்குறளும் சமண சமய நூலாகக் கருதப்பட வாய்ப்பிருக்கிறது எனக் கண்டோம். திருக்குறளைச் சமண நூலென ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமணச் சார்புடைய பல கோட்பாடுகளை அழுத்தமாகப் பேசுகிறது என்பதை மறுக்க முடியாதல்லவா? திருக்குறளை அடுத்துத் தோன்றிய நாலடியார், பழமொழி போன்ற அறநூல்களும் சமணரால் எழுதப்பட்டவையே ஆகும். ஆயினும் அவையெல்லாம் பொது அறங்களாக விளங்குகின்றன. சமயக் கருத்துகளைப் பரப்பிய சமணச் சான்றோர் மக்கள் நல்வாழ்வு வாழவேண்டுமென்ற அக்கறையோடும் சமயப்பொறையோடும் செயல்பட்டமையைப் புரிந்து கொள்ளலாம்.

சங்கம் மருவிய காலத்திற்குப் பின் தோன்றிய காப்பியங்களாகிய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சமணம் தமிழகத்தில் காலூன்றி உறுதியாய் நின்றதோடு மக்களின் ஆதரவையும் பெற்றதற்குச் சான்றாகின்றன.

மேற்கூறியதையெல்லாம் நோக்கும்போது சமண சமயம் கிறிஸ்து பிறப்பதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைத் தன் இடமாகக் கொண்டு வளம் பெற்றிருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

பாடம் 2

சமணத் தமிழ்க் காப்பியங்கள்

2.0 பாட முன்னுரை

‘பழந்தமிழ் நூல்களில் சமணம்’ என்ற பாடத்தில் சமண சமயம் தொன்மைக் காலம் தொட்டே தமிழகத்தில் இடம் பெற்றிருந்ததை அறிந்தீர்கள். சங்ககால நூல்களில் கிடைக்கும் குறிப்புகள் அவர்தம் இருப்பையும் கோட்பாட்டையும் காட்டி நிற்பதோடு அறக் கருத்துகளில் அவர்தம் ஈடுபாட்டையும் புலப்படுத்தின. சமய வேறுபாடின்றி வாழ்க்கையைச் செம்மையாக வாழ்வதற்குரிய நெறிமுறைகளாக அவை அமைந்து இருப்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள்.

‘சமணத் தமிழ்க் காப்பியங்கள்’ என்ற இந்தப் பாடத்தில் ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றைப் பற்றியும் சிறு காப்பியங்களில் சூளாமணி, உதயணகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம், நீலகேசி ஆகிய ஐந்தைப் பற்றியும் படிக்கப் போகிறீர்கள்.

உதிரிப்பாடல்களாக அமைந்த சங்க இலக்கியப் போக்கிலிருந்து தொடர் நிலைச் செய்யுளில் கதையைக் கூறும் பாங்கில் காப்பியங்கள் தோன்றின. பழந்தமிழ்க் காப்பியங்களில் பெரும்பாலானவை சமணர் தந்த கொடையே. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் புதிய மரபைத் தோற்றுவித்தன. அத்துடன் பின் வந்தவர்க்கு முன்னோடியாகவும் அமைந்தன. அவை பற்றி விரிவாகப் படிப்பதோடு அவை தமிழினச் செழுமைக்கு எங்ஙனம் உதவின என்பதையும் இப்பாடத்தில் நீங்கள் படிக்கப் போகிறீர்கள். இனி, பாடத்திற்குள் செல்லலாமா?

2.1 பெருங்காப்பியங்கள்

பழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறு காப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங் காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமண சமயக் காப்பியங்களாகக் கருதப்படுகின்றன.

2.1.1 சிலப்பதிகாரம் தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மை பெறுவது சிலப்பதிகாரம். நமக்குக் கிடைத்திருக்கும் காப்பியங்களில் பழமையானது இதுவே. காவிரிப்பூம்பட்டினத்தில் பெருங்குடி வணிகர் மரபில் உதித்த கண்ணகி, கோவலன் என்பவர்களுடைய வரலாற்றைக் கூறுவது. முத்தமிழ்ப் புலமையுடைய வித்தகப் பெருமானாகிய இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாராட்டப்படுகிறது. புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் மூன்று காண்டங்களை உடையது இக்காப்பியம். சோழ, பாண்டிய, சேர மன்னர்களின் நாட்டில் கதையை நடத்திச் செல்கிறார் இளங்கோவடிகள். கீழ்க்காணும் முப்பெரும் உண்மைகளை விளக்குவது சிலப்பதிகாரம்.

1.அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

2.ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

3.உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

(அரைசியல்= அரசியல் = ஆட்சி)

ஆட்சி செய்வதில் தவறிழைத்தவர்களை அறம் தண்டிக்கும்; ஊழ்வினை, விடாது பற்றித் தொடரும்; கற்புடைப் பெண்டிரை உயர்ந்தவர்கள் போற்றுவார்கள் என்னும் கருத்துகளையே மேற்குறித்த வரிகள் சுட்டுகின்றன.

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் விரவப் பெற்றிருப்பதால் இது முத்தமிழ்க் காப்பியம் என்றும் வழங்கப்படுகிறது. உலகத்தின் பிறமொழிக் காப்பியங்களைப் போலவோ, வடமொழிக் காப்பியங்கள் போலவோ தெய்வங்களையோ மன்னர்களையோ காப்பியத்தலைவனாகக் கொள்ளாமல் மக்களையே கொண்டதால் இதைக் குடிமக்கள் காப்பியம் என்று அறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் குறிப்பிடுவார். இத்தகைய சிறப்பு மிகுந்த காப்பியத்தை இயற்றிய இளங்கோவடிகள் சமண சமயத்தவர் என்பதை,

குணவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்த

குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்கு

என்ற பாயிர அடிகளுக்கு உரை கூறும் அடியார்க்கு நல்லாரின் விளக்கம் தெளிவாக்குகிறது. குணவாயில் என்பது திருக்குணவாயில் என்பதோர் ஊர். கோட்டம் என்பது அருகன் கோட்டம்; அடிகள் என்பது சமணத் துறவியர்க்கானது என்பது உரை ஆசிரியர் தரும் விளக்கம். அதனால் இளங்கோவடிகளின் சமயம் சமணம் என்று ஆகிறது.

சிலப்பதிகாரத்தில் சமணச் செய்திகள்

சமணர் ஒருவர் இயற்றிய காப்பியமென்பதால், சமண சமயக் குறிப்புகளும், சமணக் கோட்பாட்டு விளக்கங்களும் சிலப்பதிகாரத்தில் விரவி இருக்கின்றன. சமணம் தொடர்புடைய சிலப்பதிகாரப் பகுதிகளை இனிக் காண்போம்.

உலக மூடம் தவிர்த்தல்

கனாத்திறம் உரைத்த காதையில் தேவந்தி, (கண்ணகியின் தோழி) கணவனைப் பிரிந்திருக்கும் கண்ணகியின் துயர் நீங்க, சாத்தன் கோயில் சென்று, (கண்ணகி கணவனைத் திரும்பப் பெற வேண்டும் என்று) வழிபட்டுத் திரும்புகிறாள். கண்ணகியிடம் கணவனைப் பெறுவாயாக என, தேவந்தி வாழ்த்துகிறாள். அதற்கு மறுமொழியாகக் கண்ணகி, ‘நீ இங்ஙனம் கூறுவதால் கணவனைப் பெறுவேன் என்றாலும், யான் கண்ட கனவினால் எனது நெஞ்சம் ஐயுறுகின்றது’ என்று கூறித் தான் கண்ட கனவினைக் கூறுகிறாள். அதற்குத் தேவந்தி, ‘நீ உன் கணவனால் வெறுக்கப்படவில்லை. முற்பிறப்பில் கணவன் பொருட்டுக் காக்க வேண்டியதொரு நோன்பினைச் செய்யத் தவறிவிட்டாய். அதனால் ஏற்படும் தீங்கு வராமல் இருக்கட்டும். காவிரியின் சங்கமுகத் துறையை அடுத்த கானலில் (மணல்வெளி) சோமகுண்டம், சூரியகுண்டம் என்னும் பொய்கைகளில் மூழ்கிக் காமன் கோவிலில் சென்று தொழுத மகளிர் இம்மையில் கணவனுடன் கூடி இன்புறுவர். மறுமையிலும் போக பூமியில் போய்ப் பிறந்து கணவரைப் பிரியாதிருப்பர். ஆதலின் நாமும் ஒரு நாள் நீராடுவோமாக’ என்றுரைத்தாள். ‘தேவந்தி! அங்ஙனம் துறை மூழ்கித் தொழுதல் எங்கட்குப் பெருமையன்று’ என்று கண்ணகி கூறினாள். இதோ அந்த வரிகள்:

கைத்தாயுமல்லை கணவற்கு ஒரு நோன்பு

பொய்த்தாய் பழம்பிறப்பிற் போய்க் கெடுக; உய்த்துக்

கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில்

மடலவிழ் நெய்தலால் கானல் தடமுள

சோமகுண்டம் சூரியகுண்டம் துறைமூழ்கிக்

காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு

தாமின் புறுவர் உலகத்துத் தையலார்

போகஞ்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாமொருநாள்

‘ஆடுதும்’ என்ற அணியிழைக்குஅவ் வாயிழையாள்

‘பீடன்று’ என விருந்த பின்னர்

(கனாத்திறம் உரைத்த காதை :55-64)

(கைத்தாயுமல்லை = நீ தவறு செய்யவில்லை, காமவேள் கோட்டம் = மன்மதன் கோயில், போகம் செய் பூமி = வானுலகம், ஆடுதும் = மூழ்குவோம், பீடன்று = பெருமையன்று)

கண்ணகி சமண சமயத்தைச் சார்ந்த இல்லற நெறியினள். அதாவது சாவக நோன்பி. சமண சமயத்தில் மூவகை மூடங்களைப் பற்றிய கோட்பாடு உண்டு. அவை எடுத்துக்காட்டாக, உலக மூடம், தேவ மூடம், பாஷண்டி மூடம் என்பனவாகும். உலகமூடம் என்பது மலையின் மேல் ஏறிவிழுதல், நெருப்பில் பாய்தல், ஆறு, கடல் ஆகியவற்றில் மூழ்குதல் ஆகிய இச்செயல்களால் புண்ணியம் கிடைக்கும் என்று நம்புவது. சமண சமயக் கோட்பாட்டின்படி இவை தவறானவை. புண்ணியத்தைத் தரும் என்று எண்ணும் நம்பிக்கையும் மூடத்தனமானது எனலாம். அதனால்தான் கண்ணகி தேவந்தியின் வேண்டுகோளை ஏற்காமல் பீடன்று எனவுரைக்கிறாள்.

ஸ்ரீகோயில் சிலாவட்டம்

கோவலனும் கண்ணகியும் வைகறைப் பொழுதில் யாரும் அறியாத படி மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றனர். இடையில் மணிவண்ணன் கோயில், இந்திரவிகாரம் ஏழு ஆகியவற்றைக் கடந்து சென்றனர். இறுதியில் ஸ்ரீகோயில் சிலாவட்டத்தை அடைந்தனர். ஸ்ரீகோயில் என்பது சமணர் கோயில். சிலாவட்டம் என்பது சமணத்துறவியர் மக்களுக்கு அறிவுரை வழங்க அமைக்கப்பட்ட மேடை ஆகும். இந்த ஸ்ரீகோயில் சிலாவட்டத்தின் வருணனை சமண சமயப் பழக்கங்களை விளக்கமாக எடுத்துரைக்கிறது. ஊன் உண்ணுதலைத் தவிர்த்து, பொய்யாமை விரதத்தோடு பொருந்தியவர்கள்; அழுக்காறு, அவா முதலியவற்றைக் கைவிட்டவர்கள், ஐம்புலன்களையும் அடக்கிய கொள்கையுடையவர்கள் – இப்படிப்பட்ட சீரியோர் கூடிய ஸ்ரீகோயிலில் (சமணர் கோயில்) பஞ்சபரமேஷ்டிகள் (அரஹந்தர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சர்வ சாதுக்கள் இவர்களைப் பஞ்சபரமேஷ்டிகள் என அழைப்பது சமணசமய மரபு) நிலைபெற்ற, ஐந்து சக்தியும் கூடிவந்து கலந்த பெரிய மன்றத்தின்கண், பொற்பூவினை உடைய, எழில் விளங்கும் நிழலின் கண் அசோக மரத்தின் கீழ் அபிடேக நாளிலும் தேர்த்திருநாளிலும் சாரணர் (சாரணர் = சமணத்துறவியர், மக்களுக்கு அறநெறி கூறுவோர்) வரத்தகுமென்று சாவகர் (சமணத்தைப் பின்பற்றும் மக்கள்) யாவரும் கூடியிருந்த சிலாவட்டத்தை (சிலாவட்டம் = சாரணர் அமர்ந்து அறம் கூறும் மேடை) கண்ணகியும் கோவலனும் வலம்வந்து வணங்கினர். பின் அங்குக் கவுந்தியடிகளைக் கண்டு வணங்கினர்.

மறவுரை நீத்த மாசறு கேள்வியர் அறவுரை கேட்டு அறிவனை ஏத்தச் செல்லும் எண்ணமுடையேன். ஆதலால் நானும் வருகிறேன் எனக் கவுந்தியடிகள் அவர்களுடன் மதுரை புறப்பட்டார்.

(மறவுரை = அன்பில்லாத உரை, மாசறு = குற்றமற்ற)

கவுந்தி அடிகளின் சாவகச் சிந்தனை

கோவலன், கண்ணகி ஆகியோருடன் புறப்பட்ட கவுந்திஅடிகள் மதுரை செல்லும் வழியின் தன்மையை யெல்லாம் சிந்தித்துக் கொண்டே வருகிறார்.

வயல்களின் வழி சென்றால் கரும்பின்கண் வைத்த தேன்கூடு அழியப் பெற்று, குளங்களின் நீரோடு அத்தேன் கலந்திருக்கும். கடுமையான தாகத்தால் அந்த நீரை இவள் (கண்ணகி) முகந்து உட்கொள்ளக் கூடும். களை பறிப்போர், எடுத்துப் போட்ட குவளைப்பூவுடன் வண்டின் கூட்டம் உள்ளே ஒடுங்கிக் கிடக்கும். வழிநடந்த களைப்பினால் சோர்ந்து அவற்றின்மீது அடியிட்டு நடத்தலும் கூடும். வாய்க்காலில் நண்டு, நத்தை முதலியன இருக்கும். நடந்து செல்லும்போது அவற்றுக்குத் தீங்குண்டாகும் என்றெல்லாம் சிந்திக்கிறார். அதனால் பாதுகாப்பாகக் கண்ணகியை அழைத்து வரும்படி கோவலனிடம் கவுந்தியடிகள் கூறுவார்.

சமண சமய சாவகர் தேன் உண்ணமாட்டார்கள். எந்த உயிர்க்கும் தீங்கு நேராமல் இருக்க வேண்டும் என்ற கொல்லாமைச் சிந்தனையில் எப்போதும் இருப்பார்கள். எனவே தான் கவுந்திஅடிகள் நத்தை, நண்டு போன்றவற்றிற்கும் தீங்கு நேராமல் இருக்கப் பார்த்து நடக்கும்படி கூறுகிறார்.

சாரணர் அறவுரை

சிலாதலத்தில் (சிலாவட்டம்) அமர்ந்திருந்த சாரணரை, கண்ணகி, கோவலன், கவுந்தி அடிகள் மூவரும் வணங்குகின்றனர். சாரணர், கோவலனும் கண்ணகியும் வந்த காரணத்தை அறிந்தவர்கள். ஆயினும், விருப்பு வெறுப்பு அற்றவர்கள் என்பதாலும் வினையின் பயனை நீக்க இயலாது என்று உணர்ந்ததாலும் அவர்களுக்கு நேர்ந்த, நேரும் துன்பத்திற்கு வருந்தாமல் தம்மை வணங்கிய கவுந்தியைப் பார்த்துக் கூறலாயினர்:

‘மிக்க சிறப்பினை உடைய கவுந்தியே, யாவராலும் ஒழிக்க முடியாத தீவினையைக் காண்க. ஒழிக என்றாலும் ஒழியாது ஊட்டும் வலியவினை விளை நிலத்திட்ட வித்துப்போன்றது. நல்வினை வந்தடைந்து, நற்பயனை நுகர்விக்குங்காலத்து அதனை ஒழிக்கவும் முடியாது. கடிய காற்றை உடைய நெடிய வெளியிடத்தில் இடப்பட்ட விளக்கு அணைவதுபோல அழியும் தன்மையது இவ்வுடல். தீவினையின் பயனையும் யாக்கை நிலையாமையையும் கூறியபின் அவற்றை நீக்க அருகதேவனை (தீர்த்தங்கரர்) அடையவேண்டும். இல்லையெனின் பிறவியாகிய மூடப்பட்ட அறையிலிருந்து வெளிவர இயலாது’ என்று கூறினர். பின்னர், கவுந்தியிடம், ‘பாசம் ஒழிக’ என வாழ்த்தி, அருகதேவனைப் பாராட்டினர்.

‘எல்லா உயிர்களுக்கும் இதமானவன். எண்வகை வினைகளை வென்றவன். முக்கால உணர்வு உடையவன். அறங்களுக்கு முதலானவன். உண்மைப் பொருளானவன். பழமையானவன். தேவர்க்கும் தேவன். சிவகதி நாயகன், பரமன், சங்கரன், ஈசன்’ என்றெல்லாம் புகழ்கின்றனர்.

உலக மூடம் தவிர்க்கும் மற்றுமொரு நிகழ்ச்சி

மதுரைக் காண்டத்தில் காடுகாண் காதையில் மாங்காட்டு மறையோனிடம் கோவலன் மதுரைக்குப் போகும் வழியைக் கேட்கிறான். மறையோனும் சிவபெருமானின் சூலம் போன்ற மூன்று வழிகளை விளக்குகிறான். இடப்பக்க வழியை விளக்குகையில் இடப்புறம் திருமால் குன்றம் தாண்டியதும் குகை ஒன்று உண்டு. அங்கு மூன்று பொய்கைகள் உள்ளன என்று கூறி, அவற்றின் தன்மைகளை விளக்குகிறான். புண்ணிய சரவணம், பவகாரணி, இஷ்டசித்தி என்று அவற்றின் பெயர்களைக் கூறி அவற்றில் மூழ்கினால் ஏற்படும் பயன்களையும் விளக்குகிறான்.

புண்ணிய சரவணத்தில் மூழ்கினால் இந்திரனின் ஐந்திர நூலை அறியலாம். பவகாரணியில் மூழ்கினால் முற்பிறவியைப் பற்றி அறியலாம். இஷ்டசித்தியில் மூழ்கினால் விரும்பியதை அடையலாம் என்கிறான். இதைக் கேட்ட கவுந்தியடிகள் ‘எமக்குப் பொய்கையில் மூழ்கத் தேவையில்லை. ஏனென்றால் அருகதேவன் அருளிய பரமாகமத்தின்கண் இந்திரனின் ஐந்திர நூலை அறியலாம். இப்பிறப்பில் முற்பிறவியின் தன்மையை அறிந்து கொள்ளலாம். உண்மை நெறியில் தவறாது பிற உயிர்களைப் பேணுவோர்க்கு அடையக் கூடாத பொருள் ஏதுமில்லை’ என்கிறார்.

இல்லறத்தார், துறவறத்தார் இருசாராருமே பொய்கைகளில் மூழ்கிப் பயன் பெறலாம் என எண்ணுவதில்லை. இங்கும் சமண சமயக் கோட்பாடாகிய உலக மூடம் பற்றிய கருத்தை அறிந்து கொள்ளலாம்.

வரந்தரு காதையில் இளங்கோவடிகளின் அறவுரை

‘தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்’ என்றழைத்து, இளங்கோ அடிகள் கூறுகின்ற அறங்கள் சமணச் சார்புடையன; ஆயினும் பொதுவான அறங்களாக அவை விளங்குவதை மறுக்க இயலாது.

தெரிவுறக் கேட்ட திருத்தரு நல்லீர்!

பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்

தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;

பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;

ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;

தானம் செய்ம்மின்; நலம்பல தாங்குமின்;

செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பிகழ்மின்;

பொய்க்கரி போகன்மின்; பொருண்மொழி நீங்கன்மின்;

அறவோர் அவைக்களம் அகலா தணுகுமின்;

பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;

பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்;

அறமனை காமின்; அல்லவை கடிமின்;

கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்

வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்

இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா

உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது

செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்;

மல்லன்மா ஞாலத்து வாழ்வீர்

(வரந்தருகாதை 185-202)

இதன் பொருளாவது: பிறர்க்குக் கவலையும் துன்பமும் விளைத்தலைத் தவிர்த்திடுக. தெய்வத்தை உணருக. தெய்வத்தை உணர்ந்தோரை விரும்புக. பொய்யுரை தவிர்க்க. புறங்கூறுதலை நீக்குக. ஊன் உண்ணுதலை நீங்குமின். உயிர்க்கொலை செய்தலைத் தவிர்க்க. தானம் செய்க. தவத்தை மேற்கொள்க. பிறர் செய்த உதவியை மறக்க வேண்டா. தீயோரது தொடர்பினை ஒதுக்குக. பொய்ச்சாட்சி கூறும் நெறியில் செல்ல வேண்டாம். உண்மை மொழியை நீங்க வேண்டாம். அறநெறிச் செல்லும் சான்றோர் அவையினை நீங்கா வேண்டாம்; மறநெறி செல்வோர் அவையினின்றும் நீங்குக. பிறர் மனைவியை விரும்பாதீர். துன்பமுற்ற உயிர்களைப் பாதுகாப்பீராக. இல்லறத்தைப் போற்றுங்கள். பாவச் செயல்களை (கள், காமம், களவு, பொய்) விலக்குங்கள். பயனில சொல்லை ஒழியுங்கள். ஏனென்றால் இளமை, செல்வம், யாக்கை இவை நிலையற்றன. அடையவிருக்கும் துன்பம் அடைந்தே தீரும். அதனால் மறுமைக்குத் துணை நிற்கும் அறத்தினைத் தேடுங்கள்.

2.1.2 சீவகசிந்தாமணி சீவக சிந்தாமணி செந்தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் பழம்பெரும் காப்பியங்களாகிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. அதன் சிறப்புக் கருதி ஐம்பெருங்காப்பியங்களுள் சிந்தாமணியையே முன்னிறுத்தி எண்ணும் வழக்கமும் உண்டு.

சிந்தாமணி – பெயர்க்காரணம்

சிந்தாமணி என்பது தேவர் உலகத்து மணிகளுள் ஒன்று. வேண்டுவோர்க்கு வேண்டியதை வழங்கும் தன்மையது. சிந்தாமணியும் புலவர் பெருமக்களுக்கு வேண்டியதைத் தரும் சிறப்புடையது. எனவே சிந்தாமணி என்று போற்றினர் அறிஞர்கள். சீவகனின் தாயார் முதன் முதலில் அவருக்கு இட்ட பெயர் சிந்தாமணி. சீவ என்பது பின்னர் வானொலியாகத் (அசரீரி) தோன்றியதால் சீவகசிந்தாமணி என்னும் பெயர் பெற்றது.

நூலாசிரியரும் நூல் இயற்ற காரணமும்

வடமொழியில் மகாபுராணத்திலும் ஸ்ரீபுராணத்திலும் இக்கதை கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கதேவர். இவர் இளமையிலேயே துறவு நெறியைப் பின்பற்றியவர். சமணர் துறவு நெறியை மட்டுமே பாடவல்லார், இன்பத்தைப் பாட வல்லார் அல்லர் என்ற பழிச்சொல்லை நீக்கவே திருத்தக்கதேவர் இந்நூலைப் பாடினார் என்ற செய்தியும் வழங்குகிறது. காப்பியத் தலைவனாகிய சீவகன் எட்டுப் பெண்களை மணந்த கதையைக் கூறுவதால் இதற்கு மணநூல் என்றும் பெயர் உண்டு.

நூலின் காலமும் சிறப்பும்

இதன் காலம் ஏறக்குறைய ஒன்பதாம் நூற்றாண்டு எனலாம். பெருங்கதை ஆசிரியராகிய கொங்குவேளிரும் இளங்கோவடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் பழைய மரபினின்றும் மாறி, தொடர்நிலைச் செய்யுட்களை அமைத்த பெருமைக்கு உரியவர்கள். அகவற்பா கொண்டு கதையை அமைத்தவர்கள். திருத்தக்கதேவர் அந்த மாற்றத்தில் பின்னுமொரு மாற்றத்தைக் கொண்டு வந்து புதுமை செய்தார். அதாவது விருத்தப்பாவில் காப்பியம் செய்து, பழைய செய்யுள் போக்கை மாற்றியமைத்த பெருமைக்கு உரியவரானார். பின்வந்த காப்பியங்களுக்கு எல்லாம் இது ஒரு முன்னோடியாக அமைந்தது.

சிந்தாமணியிலிருந்து ஓர் அகப்பை முகந்து கொண்டேன் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பனே கூறியதாக ஒரு செய்தியும் வழங்குகிறது. திருத்தக்கதேவர் தமிழ்க் கவிஞருள் ஒரு சிற்றரசர் என்று வீரமாமுனிவர் பாராட்டுகிறார். சீவக சிந்தாமணி உலகக் காப்பியங்களுள் ஒன்று என்று ஜி.யு.போப் புகழ்ந்துரைப்பார். சிந்தாமணி வைணவ சமயத்தில் வரும் கண்ணன் கதையை ஒத்திருக்கிறது என்பாரும் உண்டு. உலகத்தில் பற்றின்றியே எல்லாத் தொழிலிலும் ஈடுபட்டு நல்வாழ்க்கை வாழலாம் என்பதற்குக் கண்ணன் கதையை ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்வர். அதைப் போன்றே சீவகன் வாழ்வும் அமைந்தது எனலாம்.

சமணக் கோட்பாட்டை அரண் செய்யும் கதைக்கரு

மனிதன் மன்னராக இருக்கலாம்; மகளிரை மணக்கலாம். அறநெறி தவறாமல் போரிடலாம். ஆனால் குறிக்கோளை விடாமல் இருக்க வேண்டும். கடமையை ஆற்றியபின் இறுதியில் முற்றும் துறந்து தவம் புரிதல் உயிரின் உயர்ந்த கடமை என்பதை இப்பெருங்காப்பியம் மக்களுக்கு உணர்த்துகிறது. இங்கு ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ளலாம். சீவகனின் தந்தை சச்சந்த மன்னன் மிகு காமம் கொண்டதால் இறந்துபட்டான். மக்களின் தலைவனான மன்னன் நாட்டைச் சிறப்புற ஆளவேண்டும். அதுவே அவன் தலையாய கடமையாகும். கடமையை மறந்து மிகுந்த காமஉணர்வால் சிற்றின்பத்தில் மூழ்கியதால் அமைச்சரால் கொல்லப்பட்டான். அளவுக்கு மிஞ்சினால் உயிரைத் தரும் அமிர்தங்கூட விஷமாகி விடுமென்றால் காமத்தைப் பற்றிக் கூறுவானேன்? அவன் மூழ்கியது மனைவியின் இன்பத்தில்தான் என்றாலும் மிகுந்த காமஉணர்வு அவனை அழித்துவிட்டது எனலாம். சமணக் காப்பியங்களில் எச்சரிக்கையாக அடிக்கடி இது வலியுறுத்தப்படுகின்றது. அதனாலேயே எண்மரை மணந்தும் இன்பத்தில் தன்னை இழக்காமல் மெய்யுணர்ந்து தவத்தினை ஆற்றி, வினைகளை வென்று வீடுபேற்றினை அடையும் சீவகன் வாழ்க்கை மற்றவர்க்கும் எடுத்துக்காட்டாய் அமைய வேண்டுமென்ற செய்தியை, திருத்தக்கதேவர் அறிவுறுத்துவார். சமணம் இன்பத்தை முற்றுமாகப் புறக்கணிப்பதில்லை. மாறாக எல்லாவற்றையும் அனுபவித்தபின் பற்றுள்ளத்தைத் துறக்க வேண்டும். அப்போதுதான் வீடுபேறு கிட்டும் என்கிறது. அனைவராலும் துறத்தல் என்பது இயலாதது தானே? அதனால்தான் குறளாசான் ‘நோற்பார் சிலர், நோலாதார் பலர்’ (குறள்:270) எனக் கூறிப் போகிறார். தவமும் தவமுடையார்க்கே ஆகுமல்லவா?.

நிலையாமைக் கோட்பாடு

சச்சந்த மன்னன், மனைவி விசயைபால் வைத்த அன்பால் ஆட்சியை மறந்து அமைச்சன் கட்டியங்காரனிடம் ஆட்சியை ஒப்படைத்து இன்பத்தில் மூழ்குகிறான். கட்டியங்காரன் மன்னனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து, மன்னனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்ற எண்ணுகிறான். அதையறிந்த சச்சந்த மன்னன் மயிற்பொறி (மயில் வடிவில் அமைந்த, வானில் செல்லும் இயந்திரம்) செய்ய ஏற்பாடு செய்து வான்வழி தப்பித்துச் செல்லும்படி அரசியிடம் கூறுகிறான்.

பிரிந்து செல்ல வருந்தும் அரசியிடம் சச்சந்த மன்னன் நிலையாமை பற்றிப் பேசி ஆறுதல் அளிக்கிறான். ‘இறப்பும், பிறப்பும், ஆக்கமும் அழிவும் ஆகிய யாவும் பொருள்களுக்கு இயற்கை. சாதல் முதலியவற்றுக்குத் துன்புறுதலும் பிறத்தல் முதலியவற்றுக்கு இன்புறுதலும் ஆகிய இச்செயற்கெல்லாம் காரணம் அறிவின்மையே’ என்கிறான். மேலும், ‘பழமையான நம் பிறப்புகளை ஆராய்ந்தால் தோண்டப்பெற்ற கடலின் மணலும் ஒப்பிட முடியாத அளவினை உடையது. அப்பிறப்புகளிலெல்லாம் பிறந்தும் வேறுபட்டிருந்தோம். இனியும் பிரிந்து செல்லும் பிறப்புகளில் ஒன்றுபடோம். அதனால் இந்த உறவைப் பெரிதாக எண்ணி இரங்க வேண்டாம். அருகன் கூறிய நூல்களின் பொருளை அறிந்த நீ வருந்தலாமா?’ என ஆறுதல் கூறி அனுப்புகிறான்.

இத்துணை விவேகமுள்ள மன்னனா காமத்தினால் அழிந்துபட்டான்? நம் உள்ளத்திலும் அவலம் நிறைகிறது. கழிகாமம் அறிவை அழித்துக் கடமையை மறக்கச் செய்யும். எனவே தான் மீண்டும் மீண்டும் காமம் கொடியது என்கிறார்கள் எல்லாச் சமயப் பெரியார்களும்.

இதே போன்று ‘நிலையாமைக் கோட்பாடு’ காப்பியத்தின் பிறபகுதியிலும் விளக்கம் பெறுகிறது. சீவகன் கட்டியங்காரனைக் கொன்று, அறவழியில் ஆட்சி நடத்துவதைக் காணும் பேறு பெறுகிறாள். அவன் தாய் விசயை, வாழ்க்கையில் நிறைவு எய்திய நிலையில் துறவு மேற்கொள்ள விழைகிறாள். அதையறிந்து துயருறும் சீவகனுக்கும் உறவினருக்கும் விசயை அறிவுரை வழங்குகிறாள்.

‘இவ்வுலகில் நம்முடைய வாழ்நாட்கள் எவ்வளவு என்பதை யாரும் அறியமாட்டோம். ஆனால் நெடுநாள் வாழ்ந்து கொண்டேயிருப்போம் என்னும் ஆசையில் அழுந்திக் கிடக்கின்றோம். திடீரென்று எமன் ஒருநாள் வந்து நம் வாழ்வைப் பறித்து, உயிரைக் கொல்லும் போது அதைக்கண்டு அஞ்சிக் கண்ணைப் பொத்திக் கொண்டு அழுவதல்லால் நாம் வாழ்ந்து கழிந்த நாட்களை நம்மால் மீண்டும் திரும்பப் பெறமுடியுமா?’ (சீவக.சிந் 2616).

கொல்லாமைக் கோட்பாடு

அவசியம் இருந்தாலொழியப் போரிடும் சூழலிலும் கொல்லுதலைத் தவிர்க்கும் நிலையைச் சீவகனிடம் காண்கிறோம். கொல்லாமையை அடிப்படை அறமாகக் கொள்ளும் சீவகன் போர் புரியும்போதும் இக்கோட்பாட்டைப் பின்பற்றுவதில் உறுதியாய் உள்ளான்.

(அ) போரிலும் கொலை தவிர்த்தல்

கோவிந்தையார் இலம்பகத்தில் (இலம்பகம் என்பது நூலின் உட்பிரிவு, காதை, சருக்கம் போல) வேடர்கள் கவர்ந்து சென்ற ஆநிரைகளைக் கட்டியங்காரனால் மீட்க இயலவில்லை. அப்போது சீவகன் போர்க்கோலம் பூண்டு, ஆநிரைகளை மீட்கிறான். அவ்வாறு செய்யும்போது வேடர்களை அஞ்சி ஓடும்படி செய்கிறானே தவிரக் கொல்வதில்லை. போராக இருந்தாலும் தேவையில்லாமல் கொல்வது வீரனுக்கு அழகன்று. அத்துடன் அவன் கொல்லாமைக் கோட்பாட்டில் உறுதி பூண்டவன் என்பதால் கொல்லுதலைப் போரிலும் தவிர்க்கிறான்.

(ஆ) கொல்லாமையும் கள்ளுண்ணாமையும் அறிவுறுத்தல்

பல நாடுகளைக் காணும் ஆசையால் குணமாலையைப் பிரிந்த சீவகன் தன் பயணத்தைத் தொடர்ந்தான். சுதஞ்சணன் அளித்த மந்திரங்கள் மூன்றையும் உறுதுணையாகக் கொண்டு பயணம் மேற்கொண்டான். கானகம் வழியாகச் செல்லும்போது வேடன் ஒருவனை எதிர்கொள்கிறான்.

வேடனே, ‘நீ எங்கே வசிக்கிறாய்? உன் உணவு யாது?’ எனச் சீவகன் வினவ, வேடன் அருவிகள் பாயும் மலையில் வசிப்பதாகக் கூறி, பன்றி இறைச்சியும் கள்ளும்தான் தன் உணவு என விடையளிக்கிறான். முற்பிறப்பில் ஊனையும் கள்ளையும் உண்டு, உயிரைக் கொன்றதால்தான் இப்பிறப்பில் வேடனாய்ப் பிறக்க நேர்ந்தது. அதனால் அவற்றை உண்ணாது இருங்கள் எனக் கூறுகிறான் சீவகன். வேடனோ கள்ளையும் ஊனையும் தவிர்த்து எப்படி உயிர் வாழ்வது என வினவுகின்றான். ஊனைத் தின்று, ஊனாகிய உடம்பை வளர்ப்பது பாவம். அதனால் இங்கே காயும் கிழங்கும் பழமும் நல்ல நீரும் கிடைக்கின்றன. அவற்றை உண்டு வாழ்ந்தால் இன்பத்தைத் தரும் சொர்க்க வாழ்வை வாழலாம். அவ்வாறு வாழ முயலுமாறு அறிவுரை கூறுகிறான் சீவகன் (பதுமையார் இலம்பகம்: 1234,1236).

யாராக இருந்தாலும் கொல்லாமையாகிய அடிப்படை அறத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற கோட்பாடு மேலோங்கியுள்ளது. கள் உண்ணாமையும் வலியுறுத்தப்படுகிறது. கள் உண்ணாமை என்னும் அறமானது ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறுவேறு வகையில் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. கள் உண்ணல் சங்ககாலத்தில் இயல்பாக இருந்தது. ஆனால் சங்கம் மருவிய காலத்தில் மறுக்க வேண்டிய பொருள்களில் ஒன்றாக ஆகியுள்ளது. அறநூல்கள் அனைத்தும் கள் உண்ணாமையை வற்புறுத்துகின்றன. இன்றைய நிலையிலும் மதுப்பழக்கம் பலரிடம் இடம்பெற்றிருந்தாலும் சமூகத்தால் மறுக்கப்படும் பழக்கமாகவே உள்ளது.

வினைக்கோட்பாடு

காந்தருவ தத்தையார் இலம்பகத்தில் சீதத்தன் என்னும் பெரும் வணிகனின் மரக்கலம் காற்றாலும் மழையாலும் கலக்குற்ற போது, தன்னுடன் வந்தவர் அஞ்சி நிற்கையில் ஊழ்வினையின் வலிமையை எடுத்துரைத்து, அஞ்சாமல் இருக்க அறிவுரை கூறுகிறான். ‘துன்பம் வந்தபோது எரியும் விளக்கு காற்றால் நடுங்குவது போல் நடுங்காமல் மகிழ்க. அது அத்துன்பத்தைப் போக்கும் கருவியாகும். அத்துன்பத்தை எண்ணித் துக்கமுற்றால் அத்துக்கத்தினின்றும் நீங்கினார் யாருமில்லை. வரத்தக்கவை வந்தேதீரும். அவ்வாறு வரும் போது கலங்காது மலர்ச்சியோடு இருக்க வேண்டும். அதுவே அந்தத் துன்பத்தைப் போக்கும்’.

மேலும், ‘வாழ்நாள் முடிந்தால் பொற்கிண்ணத்தில் உள்ள நீரைக் குடித்தாலும் கொல்லும். கடலின் நடுவே சென்று மூழ்கினாலும் நல்வினைப் பயனால் பிழைத்துக் கொள்வார். ஊழின் ஆற்றல் அத்தகையது’ என்பான் சீதத்தன்.

காப்பியத்தின் இறுதியில் துறவை மேற்கொள்ள விரும்பும் சீவகனுக்குச் சாரணர் வழங்கும் அறிவுரையிலும் வினையின் ஆற்றல் அருமையான உவமைகளுடன் சொல்லப்படுகிறது.

அல்லித்தண்டு அற்று வீழ்ந்த போதும் நூல் அறாது தொடர்ந்து நிற்கும் தன்மைபோல, பழைய தம் உடம்பு உயிரை நீங்கிக் கிடக்க, பழைய தீவினை மட்டும் நீங்காமல் உயிரைத் தொடர்ந்து, அவ்வுயிர் போய்ப் புகுந்த உடம்பில் தானும் புகுந்துவிடும். அத்துடன் அளவற்ற துன்பம் செய்யும் கொடிய நெருப்பாகச் சுட்டு எரித்து விடும். அதனால் அறத்தை உடைய மனத்தராய், பல்லுயிர்க்கும் அருளைச் செய்தால் அப்பழமையான நல்வினை, பறவையும் நிழலும் நீங்காது திரியுமாறுபோல, அவ்வுயிரை விடாமல் திரிந்து கறவைப் பசுவைப்போல் விரும்பிய அனைத்தையும் தரவல்லது.

பஞ்ச நமஸ்காரத்தின் மேன்மை

பஞ்ச நமஸ்காரம் என்பது சமண சமயத்தின் மூல மந்திரம். இதன் பெருமையை உணர்த்தும் நிகழ்ச்சி ஒன்று குணமாலையார் இலம்பகத்தில் இடம்பெறுகிறது.

அந்தணர்க்கு ஆக்கிய சோற்றுத்திரளை நாயொன்று கௌவிச் சென்றது. அதனால் கோபங்கொண்ட அந்தணர் நாயை அடிக்க ஓடினர். நாய் அஞ்சி ஓடி, அருகில் இருந்த குளத்தில் பாய்ந்தது. அதனை அடித்து, அதன் காலை ஒடித்தனர் அந்தணர். அதனைக் கண்ட அந்த நாயின் சொந்தக்காரனான குடிகாரன் (கட்குடியன்) மிகுந்த துன்பம் கொண்டான். அவன் துன்பத்தைக் கண்ட சீவகன், இறந்துபடும் நிலையில் வேதனையோடு துன்பப்படும் நாயின் செவியில் பஞ்சநமஸ்காரத்தை ஓதுகிறான். நாயும் தன் செவி மடுத்து அதைக் கேட்கிறது. சிறிது நேரத்தில் அந்த நாய் சுதஞ்சணன் என்னும் தேவனாகி வானோக்கிச் சென்று தனக்கு நடந்தவைகளையெல்லாம் உணர்ந்து கொள்கிறான். சீவகனின் இச்செயல் பின்வரும் பாடல்வழியே விளக்கம் பெறுகிறது:

உறுதிமுன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில்

மறுகல்நீ பற்றொடு ஆர்வம் விட்டிடு மரண அச்சத்து

இறுகல்நீ இறைவன் சொன்ன ஐம்பத அமிர்தமுண்டால்

பெறுதி நற் கதியை என்று பெருநவை அகற்றினானே

(சீவக.சிந்:946)

(உறுதி = நற்செயல்; மறுகல் = வருந்தவேண்டா, இறுகல் = அழுந்தி இராதே, பெருநவை = பெருந்துன்பம்)

இதன் பொருளாவது: முன்னே செய்த நன்மை ஒன்றுமில்லை என்று நினைத்து நீ வருந்தவேண்டாம். பற்றையும் ஆர்வத்தையும் விட்டுவிடு; இறப்பு என்னும் அச்சத்தைக் கொள்ளாதே; அப்படியிருந்து இறைவன் கூறிய ஐம்பதமாகிய அமிர்தத்தை (பஞ்சநமஸ்காரம்) நீ பருகினால் நல்ல கதியை அடைவாய் என்று கூறி, நாயின் பெருந்துன்பத்தை நீக்கினான்.

மும்மணிக் கோட்பாடு

சித்திர கூடம் என்னும் இடத்தில் வாழும் தாபதர் என்ற துறவியருக்குச் சீவகன் அருகப் பெருமானின் மறைமொழிகளைப் பின்பற்றுமாறு அறவுரை கூறுகிறான். அந்த அறவுரையில் சமணக் கோட்பாடாகிய மும்மணிக் கோட்பாடு விளக்கம் பெறுகிறது.

மெய்வகை தெரிதல் ஞானம்

விளங்கிய பொருள்கள் தம்மைப்

பொய்வகை இன்றித் தேறல்

காட்சிஐம் பொறியும் வாட்டி

உய்வகை உயிரைத் தேயாது

ஒழுகுதல் ஒழுக்கம் மூன்றும்

இவ்வகை நிறைந்த போழ்தே

இருவினை கழியு மென்றான்

(சீவக.சிந்:1436)

ஞானமாவது உண்மையை அறிதல், காட்சியாவது அவ்வாறு அறிந்த பொருள்களைப் பொய்யின்றாகத் தெளிதல். ஒழுக்கமாவது ஐம்பொறிகளையும் ஐம்புலன்களில் செல்லாமல் கெடுத்து, உயிரைக் கெடாமல் அவ்வுயிர் உய்யும் வகையில் நடத்தல். மேற்கூறிய மூன்றும் நிறைந்தபோது இருவினையும் கெடும் என்றான்.

நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்று சொல்லப்படுவது மும்மணிகள் எனச் சமணசமயத்தில் வழங்கப்படும். அதை இரத்தினத்திரயம் என்றும் கூறுவர்.

இதே கருத்துப் பின்னர் சீவகன் துறவு வேண்டிச் சாரணரை அணுகிய போது, சாரணர் கூறிய அறிவுரையிலும் விளக்கப்பட்டுள்ளது.

பொருள்களுள் மெய்ப்பொருள் எது எனத் தெளிதல் ஞானம் ஆகும். தெளிந்த அம்மெய்ப் பொருளின் தன்மையை உணர்ந்தறிதல் காட்சி ஆகும். ஞானமும் காட்சியும் நீக்கமறத் தன்னுளே நிறைந்து விளங்க நடந்தொழுகுதல் ஒழுக்கம் ஆகும். இதை விளக்கும் பாடல்

உள்பொருள் இதுஎன உணர்தல் ஞானமாம்

தெள்ளிதின்அப்பொருள் தெளிதல் காட்சியாம்

விள்அற இருமையும் விளங்கத் தன்னுளே

ஒள்ளிதின் தரித்தலை ஒழுக்கம் என்பவே

(முக்தி இலம்பகம் : 2845)

(ஒள்ளிதின் = விளக்கமாக, தரித்தல் = நிலைபெறுத்தல்)

சமவ சரணம்

சமவ சரணம் என்பது பூமிக்கு மேல் வானத்தில் இந்திரன் முதலிய தேவர்களால் உருவாக்கப்பட்ட அருகன் கோயில் (சீவக.சிந். 3000, உரை, கழகம்).

2.1.3 வளையாபதி ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழும் வளையாபதி என்னும் நூல் நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் அதனுடைய சில பாடல்களைப் பண்டைய உரையாசிரியர்கள் தத்தம் உரைக்குச் சான்றாக மேற்கோள் காட்டியுள்ளனர். தவிர, இக்காவியத்தின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. புறத்திரட்டில் கிடைத்த பாடல்கள் 66, மேலும் 6 பாடல்கள் வேறு உரைநூல்களிலிருந்து கிடைத்ததாகக் கூறி மொத்தம் 72 பாடல்கள் என்று கூறும் வழக்குள்ளது.

சமயமும் நூலாசிரியரும்

செய்யுட்களை நோக்கும்போது இந்நூல் அருக சமய நூல் என்பது புலப்படுகிறது. ஆனால் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் பௌத்தமும் தமிழும் என்ற நூலில் ‘இந்நூல் இப்போது இறந்துபட்டதாகலின், இது பௌத்தச் சார்பினதா, அன்றி ஜைனம் சார்பினதா என்று துணிந்து கூற இயலவில்லை. ஆயினும் இது பௌத்த நூல் என்று பலரால் கருதப்படுகின்ற படியால், இது இப்பகுதியில் (பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்) சேர்க்கப்பட்டது’ (பக்.119) என்பார். செய்யுட்கள் பலவும் சமணக் கோட்பாட்டைச் சார்ந்ததாக உள்ளதால் இக்காவியம் சமணம் சார்ந்தது என்ற முடிவுக்கு வருவது தவறாகாது.

நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. கதையையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள இயலவில்லை.

அருக சரணம்

கடவுள் வாழ்த்துப் பாடல் அருக சரணத்தைப் புலப்படுத்துகிறது.

‘மூன்று உலகத்து வாழும் நல்லோர் ஒருங்கே வாழ்த்தி வணங்குவதற்குக் காரணமான பெருஞ்சிறப்புடைய அருகக்கடவுளின் அடிகளை அடியேன் பழவினை கெடும் பொருட்டும், குற்றம் தீர்ந்த நெஞ்சோடு தூயதாக அவன் கூறிய நல்லறங்களை மேற்கொண்டு ஒழுகவும் திருவருள் கூர்தல் வேண்டும் என்று வணங்குகிறேன்’ என்பது கடவுள் வாழ்த்துப் பாடலின் கருத்து. இப்பாடல் தான் இந்நூல் சமணச் சார்புடையது என்பதை நமக்கு உறுதியாக வெளிப்படுத்துகிறது.

மக்கட்பிறவியும் செல்வமும் பெறுதல் அரிது

உயிர்கள் பல்வேறுபட்ட தீவினைகளின் ஆற்றலால் பல்வேறுபட்ட உடம்புகளை உடையனவாகின்றன. மிகவும் பலவாகிய பிறப்புகளில் புகுந்து அந்தந்தப் பிறப்புகளில் எல்லாம் துயரம் எய்துகின்றன. அப்படிப்பட்ட உயிர்கள் மக்கள் பிறப்பில் பிறத்தல் மிகவும் அரியதொரு செயலாகும். அப்படியே மக்கட்பிறப்பில் பிறந்தாலும் அப்பிறப்பில் இனிய பொருள்களை நுகர்தற்கு இன்றியமையாததாய் வருகின்ற செல்வமும் பெறுதற்கு அரிதாகும்.

தவத்தின் சிறப்பு

தவம் செய்தாலன்றி மக்கட்பிறவியும் செல்வமும் கிடைக்க வாய்ப்பில்லை. அதாவது வித்தின்றி விளைவு இல்லை. முற்பிறப்பில் செய்த தவப்பயன் இல்லாதவன் பொருளைப் பெறுவதற்கும் அவற்றால் இன்பம் துய்ப்பதற்கும் முயன்று அவற்றைப் பெறாது துன்புறுவான். இது நிலத்தில் விதைக்கச் சிறிதும் விதை இல்லாமலே எருதுகளை ஏர்பூட்டி ஆழமாக உழுது பயிரை விளைவிக்க முயலுதலை ஒக்கும் என்று கூறுவார் ஆசிரியர்.

வீடுபேறு பெறுவதற்கு மட்டுமன்றி மண்ணில் பொருளைப் பெற்று இன்பம் அனுபவிப்பதற்கும் தவம் அவசியம். ஊன் உண்ணாது உயர்கதி பெறவும் பொய் பேசுவதைத் தவிர்க்கவும் வேண்டுகிறார். அத்துடன் புகழோடு வாழவும் வழி கூறுகிறார்.

புகழோடு வாழ வழி

எல்லா உயிர்களையும் காப்பாற்றுக. பிற உயிரினங்களின் ஊனை விரும்பி உண்ணற்க. கோபத்தை விலக்கி, காமம் முதலிய குற்றங்களினின்றும் நீங்கி வாழ்வீராக! இவ்வாறு வாழ்வீராயின் இனிவரும் பிறப்புகளில் மேனிலை உலகங்களில் தேவர் போன்று உலகத்தார் கை குவித்து வணங்கப் புகழோடு விளங்குவீர்(23) என்று விளக்குகிறார்.

துறக்க நாட்டினை அடையும் வழி எது? அதற்கான நெறி பின்வரும் பாடலில் விளக்கப்படுகிறது.

பொய்யில் நீங்குமின் பொய்யின்மை பூண்டு கொண்டு

ஐயம் இன்றி அறநெறி ஆற்றுமின்

வைகல் வேதனை வந்துறல் ஒன்றின்றிக்

கௌவையில் உலகு எய்தல் கண்டதே (32)

(வைகல் = நாள், கௌவை = பழி)

இதன் பொருளாவது,

பொய் கூறுவதினின்றும் அகலுங்கள்; பொய்யாமை என்னும் அணிகலனை எப்பொழுதும் அணிந்து கொள்ளுங்கள். நாள்தோறும் நன்னெறியில் நின்று அறங்களைச் செய்யுங்கள். இவ்வாறு அறம் செய்து வாழ்பவர் தம் வாழ்நாளில் தமக்கொரு துன்பம் ஏதுமின்றி இம்மையிலும் இனிது வாழ்ந்து மறுமையிலும் துன்பமில்லாத துறக்க நாட்டினை அடைதல் திறவோர்தம் மெய்க்காட்சியாகும்.

நிலையில்லாத இவ்வுலகில் நிலைத்து நிற்பது எதுவெனவும் கூறப்படுகிறது. நிலைத்து நிற்பது அறம் ஒன்றே.

இப்படியே அறங்களைக் கூறிச்செல்லும் வளையாபதி, இல்லற வாழ்க்கையில் இனிய பயனாக விளங்கும் குழந்தைப் பேற்றினைப் பாராட்டுவது, இல்லறத்தை மதித்துப் போற்றும் நிலையைக் காட்டுகிறது. சமணம் துறவறத்தை மட்டும் வற்புறுத்துகிறது. இல்லறத்தைப் போற்றவில்லை என்பதற்கு மறுப்புப் போலவும் இது தோன்றுகிறதல்லவா? இல்லறத்திற்கு ஒளிவிளக்காய் அமையும் குழந்தையின் அருமையை எப்படிப் பேசுகிறது?

பொறையிலா அறிவுபோகப்

புணர்விலா இளமைமேவத்

துறையிலா வனசவாவி

துகிலிலாக் கோலத் தூய்மை

நறையிலா மாலை கல்வி

நலமிலாப் புலமை நன்னீர்ச்

சிறையிலா நகரம் போலும்

சேயிலாச் செல்வம் அன்றே.

(பொறை = பொறுமை, வனசவாவி = தாமரைப்பொய்கை, துகில் = ஆடை, நறை = நறுமணம், சிறை = நீர்நிலை)

பொறுமையில்லாதவரிடம் உள்ள அறிவு போலவும், இன்பந்தரும் போகம் காணாத வாலிபம் போலவும், இறங்குவதற்குப் படித்துறை இல்லாத தாமரைப் பொய்கை போலவும். ஆடையில்லாத ஒப்பனை போலவும், நன்மை தராத புலமை போலவும், நல்ல நீர் நிலைகள் இல்லாத நகரம் போலவும் மக்கட் செல்வம் இல்லாத ஒருவன் வாழ்க்கையானது பயனற்றதாகும்.

2.1.4 பெருங்கதை தமிழின் பெருமையை உயர்த்திய தொடர்நிலைச் செய்யுள் நூல்களில் ஒன்று பெருங்கதை.

நூலாசிரியரும் நூல் அமைப்பும்

கொங்குவேளிர் இதன் ஆசிரியர். கொங்கு நாட்டில் விஜய மாநகரில் வாழ்ந்தவர். அகவற்பாவாகிய ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது பெருங்கதை. பெருங்கதை, அந்தாதி எனக் கூறப்படும் சொற்றொடர்ச்சியும், பொருள் தொடர்ச்சியாகிய கதைத்தொடர்ச்சியும் கொண்டது. இதற்கு உதயணன் கதை என்றும் பெயர்.

இக்காப்பியம் ஆறு காண்டங்களை உடையது. உஞ்சைக் காண்டம், இலாவாண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம், துறவுக் காண்டம்.

கதைக்குள் கதையாக விரிந்து செல்லுகிறது இக்காப்பியம். உதயணன் மகன் நரவாண தத்தன் கதையும் முடிவில் வருகிறது.

முதல்நூல்

பெருங்கதை, குணாட்டியர் எழுதிய பிருகத் கதையைத் தழுவி எழுதப் பெற்றது. இவர் ஆந்திர நாட்டு அரசன் பேரவையில் இருந்தவர். குணாட்டியர் பைசாச மொழியில் இயற்றிய பிருகத் கதா என்னும் நூலே இதற்கு முதல் நூலாதல் வேண்டும் என்பர். கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் துர்விநீதன் என்னும் கங்கமன்னன் பைசாச மொழியிலிருந்து இதனை வடமொழியில் மொழிபெயர்த்தானென்றும் அதனால் பிருகத் கதா முதல்நூல் என்றும் வழங்குவர்.

காலமும் சமயமும்

காலத்தைப் பற்றிய குறிப்புகள் சரியாகக் கிடைக்கவில்லை. கடைச்சங்க காலத்திற்கும் தேவாரக் காலத்திற்கும் இடைப்பட்ட காலம் என்று கூறுவர். சமண சமயச் சார்புடையது என்றாலும் சமயக் காழ்ப்பிற்கு இடமில்லாதது.

நூலின் சிறப்பு

இந்த நூல், பழங்காலத்து மக்களின் வரலாற்றை அறிய, வாழ்வியலைத் தெரிந்து கொள்ளச் சிறந்த சாதனமாகும். பல மன்னர்களைப் பற்றிய குறிப்புகள், பல சிறந்த நகரங்களைப் பற்றிய செய்திகள், மக்களின் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் விரிவாகப் பேசிச் செல்கிறது. பல உரையாசிரியர்களாலும் படைப்பாசிரியர்களாலும் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்ட நூலாகும். தவிர, மக்களிடையே மிகப்பரவலாக வழங்கப்பட்ட கதை என்பதால் இதன் சிறப்பை நன்கு அறிந்து கொள்ள முடிகிறது.

சமண சமயக் கோட்பாடுகள்

சமண சமயச் சார்புடைய காப்பியம் என்றாலும் பிற்காலக் காப்பியங்களைப் போல வெளிப்படையாகச் சமண சமயக் கோட்பாடுகளைக் கூறாமல் கதையைக் கூறிவரும் போதே, ஆங்காங்கே பொருத்தமான சில கோட்பாடுகளைக் கூறிச்செல்கிறார் கொங்குவேளிர்.

சான்றாக, சமண சமயத் தத்துவமாகிய காதிவினை பற்றிய குறிப்பு மூன்றாவது பகுதியில் (3-27-149) இடம் பெறுகிறது. இந்தத் தத்துவக் கருத்தைத் தத்துவம் பற்றிய தாளில் விரிவாகக் காணலாம்.

வினை தீர்ந்ததும் உயிரானது மேலெழுந்து செல்லுதல் சமண சமயக் கோட்பாடு. இது வினைதீர் உயிர் மிதத்தல் (1-40-186) என்ற தொடரின் மூலம் கூறப்படுகிறது.

இரவு உண்ணாதிருத்தல் என்பது சமண இல்லறத்தார் கோட்பாடுகளில் ஒன்று. இந்தக் கோட்பாடு அல்லூணீத்தலின் அஃகிய உடம்பினன் (4-7-159) என்பதின் மூலம் விளக்கப்படுகிறது. (இதன் பொருள்: இரவு உணவை நீத்ததால் சுருங்கிய உடம்பினன்), அல் (இரவு), ஊண் (உணவு), அஃகிய (சுருங்கிய).

சமண சமயம் பஞ்சநமஸ்காரம்/பஞ்சமந்திரம் என்று கூறும் கோட்பாடும் இதில் (5-3-134) இடம் பெறுகிறது. இவற்றைத் தவிர சமண சமய நிலையங்கள் (அருகன் கோயில், வழிபடும் இடம், துறவோர் தங்குமிடம், சமணப் பள்ளி) சமண சமயச் சார்போடு குறிப்பிடப்படுகின்றன. (4-2-12)

2.2 சிறுகாப்பியங்கள்

செந்தமிழின்கண் சிறந்து விளங்கும் பெருங்காப்பியங்கள் ஐந்தையும் ஒருசேரத் தொகுத்து ஐம்பெருங்காப்பியங்கள் என்று வழங்கும் வழக்காற்றினை நீங்கள் அறிவீர்கள். அதற்கு ஒப்ப, பெருங்காப்பிய இலக்கணங்களுள் சில குறைந்து அமைந்த பண்டைய நூல்களுள் (தொடர்நிலைச் செய்யுட்களுள்) சூளாமணி, யசோதர காவியம், உதயணகுமார காவியம், நாககுமார காவியம், நீலகேசி ஆகியவற்றை ஐஞ்சிறு காப்பியங்கள் என்று கூறும் வழக்கு உண்டாயிற்று.

2.2.1 சூளாமணி சூளாமணி

ஐஞ்சிறு காப்பியத் தொகுதியுள் சூளாமணி பெருங்காப்பிய இலக்கணங்கள் பொருந்தியிருப்பினும் என்ன காரணத்தினால் சிறு காப்பியப் பிரிவில் சேர்த்து வழங்கினார்கள் என்று தெரியவில்லை. சூளாமணியின் பாடல்கள் எளிமையும் இனிமையும் நிறைந்தவை. சீர்மை பொருந்திய சூளாமணியைப் பற்றிய சில செய்திகளையும் அது சமண சமயக் கருத்துகளைக் கதையின் ஊடே சொல்லிச் செல்வதையும் காண முற்படுவோம்.

நூலாசிரியரும் காலமும்

சூளாமணிக் காப்பியத்தை இயற்றியவர் தோலாமொழித் தேவர். இவர் தரும தீர்த்தங்கரரிடத்தே (24 தீர்த்தங்கரர்களுள் ஒருவர்) பெரிதும் ஈடுபாடு உடையவர் என்பதும் கார்வெட்டியரசன் விசயன் காலத்தில் இருந்தவரென்பதும் அவ்விசயன் வேண்டுகோளின் படி இந்நூலை இயற்றினார் என்பதும் சூளாமணிச் செய்யுள் ஒன்றின் மூலம் அறியலாம். பெரும்பான்மையான தமிழ் நூல்களின் காலத்தை உறுதியாகக் கூற இயலாததைப் போலவே இதன் காலத்தையும் திட்டமாகக் கூற முடியவில்லை. சிலர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் சிலர் அல்ல என்றும் கூறுவர்.

சூளாமணியின் முதல்நூல்

ஆருகத நூலாகிய பிரதமாநுயோக மகாபுராணத்தில் கூறப்பட்ட பழைய கதையொன்றினைப் பொருளாகக் கொண்டு எழுந்த நூல் சூளாமணி என்றும், அருகக் கடவுளால் அருளிச் செய்யப்பட்ட மகாபுராணமே இதற்கு முதல் நூல் என்றும் கூறுவர். மேலும் மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ள ஸ்ரீபுராணம் தான் முதல் நூல் என்றும் கூறுவர். அப்புராணத்தின்கண் பதினோராம் தீர்த்தங்கரராகிய சிரேயாம்ச சுவாமி புராணத்தின்கண் இக்கதை கூறப்பட்டுள்ளது. இக்கதையே தோலாமொழித் தேவர்க்குக் காப்பியப் பொருளாயிற்று.

அருகக் கடவுளின் சிறப்பு

இறைவனுடைய சிறப்புகள் காப்பியப் பாத்திரங்கள் மூலம் போற்றப்படுகின்றன. மன்னன் சுவலனசடி கீழ்வருமாறு இறைவனைப் பாராட்டுகிறான்:

எந்த அணிகலன்களையும் அணியாமலே இயற்கை யொளி விளங்கப் பெறுபவன். வரம்பிலா ஞானத்தைப் பெற்றவன். கடையிலா அறிவுடையவன். பகைமைக் குணம் தோன்றுகின்ற கூரிய படைக்கலன்கள் எதுவும் அமையப்பெறாத வடிவத்தை உடையவன். தருமச் சக்கரத்தை உடையவன். ஸ்ரீவத்சம் என்னும் மறுவை (மச்சம்) அணிந்தவன். (இரதநூபுரச் சருக்கம் : 182,183)

சாரணர் போற்றுதல்

சுவலனசடி மன்னன் இறைவனை வணங்கித் திரும்பும் சமயத்தில் சாரணர் இருவர் விண்ணில் நின்றும் இறங்கித் திருக்கோயிலை வணங்கினர். ‘விண்ணவர்கள் போற்றுமாறு மணம் பொருந்திய தாமரைமலர் மேல் சென்றருளியவன். யாம் போற்றினாலும் மகிழ்வதில்லை. விருப்பு வெறுப்பு அற்றவன். எல்லோர்க்கும் ஒரே தன்மையாய் அருள் புரிபவன். மணம் நிறைந்த தாமரைமேல் வான் வணங்கச் சென்றவன்’ (இரதநூபுரச் சருக்கம் : 187-189) என்று இறைவனைப் போற்றுகின்றனர்.

சுயம்பிரபை வணங்கிப் போற்றுதல்

சுவலனசடியின் மகள் சுயம்பிரபை இறைவனின் குணங்களாகப் போற்றித் துதிக்கிறாள்: ‘ஆதியங்கடவுள், அறிதற்கரிய மறைகளைத் தந்தருளியவன். மெய்யறிவுக்கு உரியவன். தாமரை மலரின் மேல் சென்றருளியவன், காமனைக் கடிந்தவன், காலனைக் காய்ந்தவன், திருவுறுமார்பினன், எல்லா உயிர்களுக்கும் தண்ணளியைச் செய்தவன், அடியார்களின் துன்பங்களைத் தீர்த்தருளினவன்’ (இரதநூபுரச் சருக்கம்: 214-216) என்று பாராட்டுகிறாள்.

துறவுச்சருக்கத்தில் பயாபதி மன்னன் அருகதேவனை மிகப் பரவிப் போற்றுகிறான் (1905-1912).

சாரணர் தம் அறிவுரை

மன்னன் சுவலனசடி, சாரணர் இருவரையும் வணங்குகிறான். அனைவர்க்கும் அறத்தைக் கூறுவதே தம் பணியாகக் கொண்டிருக்கும் சாரணர் மன்னனுக்கும் அறவுரை கூறலாயினர்.

பிறவிகளின் தொடர்ச்சி

மெய்யுணர்வில்லாமை என்கிற வித்தினினின்று உண்டாகி, விடாது தொடர்ந்து வருவது பிறவிகள். அந்தப் பிறப்புகளின் வரிசை இவ்வளவு என்று எண்ண இயலாது. பழவினை செலுத்துதலால் மீண்டும் பிறந்து, அதிலும் சில செயல்களைச் செய்து, மீண்டும் மீண்டும் பிறந்து துன்பப்படும் இயல்பின உயிர்கள். அவை, சார்பு கிடைக்கும் வரையில் மாறி மாறிப் பல பிறப்புகளில் பிறந்து வருந்தும். (இரதநூபுரச் சருக்கம் : 198-200)

பிறவிப் பிணியைப் போக்கும் வழி

தொடர்ந்து வரும் பிறவிப்பிணியை ஒழிக்கும் வழி யாது எனில் அருகக்கடவுளின் திருவடிகளை அடைதலே. அதற்குத் துணையாக இருப்பது மும்மணியே என விளக்குகிறார். மும்மணியைப் (இரத்தினத் திரயம்) பற்றி ஏற்கெனவே விளக்கம் தந்திருப்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

துறவியை நாடல்

பயாபதி மன்னன் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனைத் துதித்துப் பாடுகிறான். (துறவுச் சருக்கம் : 1905-1912) பின்னர் ஒரு துறவியைக் கண்டு வணங்குகிறான். இல்வாழ்க்கையின் இன்பம் எத்தகையது என்பதை அத்துறவி கீழ்வருமாறு விளக்குகிறார்.

ஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழி

நானவிர் பற்றுபு நாலு மொருவனோர்

தேனின் அழிதுளி நக்குந் திறத்தது

மானுயர் இன்பம் மதித்தனை கொள்நீ

(துறவுச் சருக்கம் : 1905-1912)

(துரப்ப = துரத்த, அரவு = பாம்பு, நால்,நாலு = தொங்கு, நவிர் = வேர், பற்றுபு = பற்றிக் கொண்டு, மானுயர் = மானிடர்)

ஒருவன் தன்னை ஒரு காட்டுயானை துரத்திவர ஓடி, நச்சுப்பாம்பு வாழ்கின்ற ஆழமான கிணற்றில் வீழ்ந்து, அதனுள் தொங்குகின்ற ஒரு கொடியைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். அப்போது, மேலேயிருந்த தேன் கூட்டிலிருந்து நழுவிச் சொட்டிய தேன்துளி ஒன்று தன்வாயில் விழ அதனைச் சுவைத்து மகிழ்ந்தான். அதை ஒப்பதாம் இவ்வாழ்க்கை. பல்வேறு வகைப்பட்ட துன்பம் நிறைந்த மானிட வாழ்க்கையினூடே அவர்கள் நுகரும் இன்பம் அத்தகையதுதான்.

கொல்லா விரதத்தின் சிறப்பு

கொல்லா விரதத்தின் சிறப்பினை, பயாபதிக்குத் துறவிகள் விளக்குகின்றனர். இல்லறத்தார் எல்லா விரதங்களையும் செய்யவில்லை என்றாலும் கொல்லாவிரதத்தைக் கைப்பற்றினால் போதும். அது எல்லா வினைகளையும் வெல்லும் ஆற்றலுடையது என்கின்றனர். அப்பாடலைப் பார்க்கலாமா?

எல்லா விரதம் இயல்பொக்கும் ஆயினும்

அல்லா விரத மனையாய் அவர்கட்குக்

கொல்லா விரதங் குடைமன்ன ஆமெனின்

வெல்லா வகையில்லை வீங்கெழில் தோளாய் (2002)

விரதங்கள் அனைத்தையும் ஒழுங்காய்க் கடைப்பிடிக்கும் ஆற்றல் இல்லாத இல்லறத்தார்க்கும் கொல்லாமை என்னும் விரதம் ஒன்றையேனும் குறிக்கொண்டு மேற்கொள்ள இயலுமாயின் அவ்வில்லறத்தார் வென்று ஒழிக்க இயலாத தீவினை வேறு எதுவும் இல்லை என்பது பாடலின் கருத்து.

2.2.2 யசோதர காவியம் இந்நூல் யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னன் வரலாற்றைக் கூறுவது. இதன் காலம் 10-ஆம் நூற்றாண்டு எனலாம். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அறங்களில் தலையாயதும் நல்லாறு எனப்படுவதுமாகிய கொல்லாமை என்னும் அறத்தை எடுத்துரைக்க இது எழுந்தது எனலாம். உயிர்க்கொலை கூடாது என்பதையே மையக்கருத்தாகக் கொண்டு தோன்றிய நூல். நல்வினை, தீவினை ஆகியவற்றின் பயனை விளக்கமாகக் கூறிச் செல்கிறது.

உணர்வைத் தூண்டும் நுண்கலைகள்

பொதுவாக நுண்கலைகள் உணர்ச்சியைத் தூண்டவல்லன என்ற கருத்தையும் இசைக்கலை எப்படி உணர்ச்சியைத் தூண்டியது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது இக்காப்பியம்.

யசோதரனின் மனைவி அமிர்தபதி, யானைப் பாகனின் இசையில் மயங்கி அவனை விரும்பி, தன்னிலை தவறுகிறாள் என்பதை விளக்கி, காமத்தின் தன்மையை எடுத்துரைக்கிறார்.

காமத்தின் தன்மை

‘இற்பிறப்பை அழித்து, புகழையும் மானத்தையும் போக்கி, மனத்திட்பத்தை உடைத்து, ஆண்மையை அழித்து, சிந்தையைச் சிதைக்கும் தன்மையுடையது காமம்’ (126) என்கிறார் ஆசிரியர்.

பிறப்பும் இறப்பும்

வினைவழி நான்கு கதிகளிலும் (நான்கு வகைப் பிறவிகள்) மாறிமாறிப் பெற்ற பிறவிகள் எண்ணற்றவை. இறந்தவை மீண்டும் பிறந்தன. பிறந்தன வெல்லாம் மீண்டும் இறந்தன. பிறப்பதற்காகவே அவை இறந்துபட்டன. இதுவே இயல்பாகியது.

பிறவியை நீக்க வேண்டும். அதற்குச் செய்ய வேண்டியன இவையென விளக்குகிறார் கீழ்வரும் பாடலில்,

ஆக்குவ தேதெனில் அறத்தை ஆக்குக

போக்குவ தேதெனில் வெகுளி போக்கவே

நோக்குவ தேதெனில் ஞானம் நோக்குக

காக்குவ தேதெனில் விரதம் காக்கவே (322)

2.2.3 உதயணகுமாரகாவியம் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று உதயணகுமார காவியம். உதயணன் வாசவதத்தைக் கதையைக் கூறுவது. அரிதின் முயன்று தேடிய சுவடியை வைத்துப் பதிப்பித்த உ.வே.சாமிநாதய்யர் இந்நூல் இலக்கியச் சுவையில் குன்றியிருப்பதோடு பிழைகளும் மலிந்திருக்கின்றன என்று குறிப்பிடுவார். ஆனால் பெருங்கதையில் முதல், கடைப் பகுதிகளில் கிடைக்காமற்போன செய்திகளால் ஏற்பட்ட வெற்றிடத்தை இந்தக் காவியம் நிரப்புகிறது.

காப்பியச் சுவைமிகுந்த பெருங்கதையின் கதையையே இந்நூலும் கூறுவதால் பரவலாக இது மக்களிடையே இடம்பெறாமல் போயிற்று என்று கருத இடமுண்டு.

2.2.4 நாககுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களிலே ஒன்று. முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆங்காங்கே கிடைத்த குறிப்புகளை வைத்துக் கொண்டு கதையின் தன்மையை ஓரளவு ஊகிக்கலாம். பெருங்கதையின் இழந்த பகுதிகளுக்கு உதயண சரிதம் உதவியது போல இதற்கும் சில நூல்களின் மேற்கோள்களும் குறிப்புகளும் உதவியுள்ளன.

ஆசிரியரும் சமயமும்

நாககுமார காவியத்தின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆயினும் கதைப் போக்கிலிருந்து, இது ஒரு சமண முனிவரால் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.

காப்பிய அமைப்பு

ஐந்து சருக்கங்களை உடையது. 170 பாடல்களையும் கொண்டுள்ளது. சருக்கங்கள் ஒன்று, இரண்டு என எண்ணுப்பெயரால் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்குத் தனிப்பெயர் இல்லை. விருத்தப்பாவினால் ஆனது. இதற்கு நாகபஞ்சமி கதை என்ற ஒரு பெயரும் உண்டு.

மூலநூலும் பெயரும்

நாககுமார காவியத்தின் மூலநூல் வடமொழி என்று கூறுகிறார்கள். வடமொழி காவியத்தின் ஒவ்வொரு சருக்கத் தலைப்பிலும் அதன் ஆசிரியர் மல்லிசேனர் இப்பெயரைக் குறிப்பிடுகிறார்.

கதை பிறக்கக் காரணம்

மகதநாட்டின் மன்னன் சிரேணிகனும் அவன் மனைவி சாலினியும் தம் சுற்றத்தாரோடு, விபுலமலையிலுள்ள சமவ சரணத்திற்கு வந்து அங்கு வீற்றிருக்கும் முனிவரை வணங்கித் தரும உரைகளைக் கேட்டனர். தரும தத்துவங்களைக் கேட்டபின், அம்முனிவரிடம் நாகபஞ்சமியின் கதையை உரைக்க வேண்டுகிறான் மன்னன். (சமவசரணம் என்பது பூமிக்கு மேல் வானத்தில் இந்திரன் முதலிய தேவர்களால் உருவாக்கப்பட்ட அருகன் கோயில்).

முனிவரும் கதையைக் கூறுகிறார். அதுவே நாககுமார காவியம்.

நாககுமாரன் கதை

கிடைக்கும் குறிப்பிலிருந்து இக்கதையை இவ்வாறு கொள்ளலாம். மகத நாட்டிலுள்ள கனகபுரம் என்னும் நகரை, சயந்திரன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு விசால நேத்திரை, பிரிதிதேவி என இரு மனைவியர் இருந்தனர். மூத்த மனைவியின் மகன் சிரீதரன். பிரதாபந்தன் இளையவள் மகன். பின்னர் இவனுக்கு நாககுமாரன் என்ற பெயர் சூட்டப்பட்டது. இவர்களைத் தவிர வேறு பல மனைவியரும் அரசனுக்கு உண்டு.

பிரதாபந்தன் பல சாதனைகளை நிகழ்த்திப் பல திருமணங்களைச் செய்து கொள்கிறான். இறுதியில் தன் மகன் தேவகுமாரனுக்கு முடிசூட்டிவிட்டு அலமதி என்னும் கேவலஞானியை வணங்கித் துறவு பூண்டு, இயற்கை உருவாகிய நிர்வாண உருக் கொண்டு நோன்பு நோற்கலானான். அவன் மனைவி இலக்கணையும் பதுமஸ்ரீ என்னும் ஆர்யாங்கனையை வணங்கித் துறவு மேற்கொள்கிறாள்.

நாககுமாரன் தன்னைப்பற்றி நின்ற கொடிய காதி வினைகளை வென்று சித்த பதம் சேர்ந்தான்.

2.2.5 நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றாகிய நீலகேசி ஒரு சிறந்த வாதநூல் எனலாம். கருத்துகளை எடுத்துரைக்கும் வகைகளையும் அவற்றை மறுத்துரைக்கும் பாங்கினையும் திறம்பட விளக்கும் சிறப்பினது நீலகேசி.

நீலகேசி தோன்றக் காரணம்

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய குண்டலகேசி பௌத்த சமய நூல். பௌத்த சமயக் கருத்துகளை மக்களிடையே பரவச் செய்யத் தோன்றியது. அக்காலத்தே சமணமும் பௌத்தமும் தம்முள் மாறுபட்டிருந்தன. சமயக் காழ்ப்பு முகிழ்த்த காலகட்டம் என்றுகூடச் சொல்லலாம். தம் சமயமே உயர்ந்தது என வாதம் செய்து நிறுவிய சூழல். அத்தகைய சூழலில் ஆருகத மதமாகிய சமண சமயத்தைப் பழித்தும் குறைத்தும் குண்டலகேசி கூறியது. அதற்கு விடை தருவார் போலவும் விளக்கம் தருவார் போலவும் பௌத்த சமயக் கொள்கைகளைக் குற்றஞ்சாட்டியும் சமண சமயக் கோட்பாடுகளை விளக்கியும் நீலகேசியை ஆசிரியர் எழுதினார்.

நூலாசிரியரும் உரையாசிரியரும்

சிறந்த வாதநூலாகக் கருதப்படுகின்ற நீலகேசியை எழுதிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அவர் வாழ்ந்த காலமும் அறிய இயலவில்லை. ஆனால் அந்நூலுக்கு மிக அரிய உரை எழுதிய உரையாசிரியர் சமயதிவாகர வாமன முனிவர் என்பதை அறிய முடிகிறது.

நூலின் சிறப்பு

தத்துவ நூல் அறிவுக்கு விருந்தாக அமைந்தாலும் இலக்கியங்கள் போன்று சுவையுணர்ச்சி அளித்தல் அரிதாகும். ஆனால் அவற்றையும் பலவகைச் சுவைகள் தோன்றும்படி எழுதுவது நமது தமிழ் மொழியின் பின்னுமொரு சிறப்பு. மணிமேகலை அதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு. குண்டலகேசியும் அவ்வகையைச் சார்ந்ததுதான். ஆயினும் முழுமையாகக் கிடைக்காதது தமிழுக்கும் பௌத்தத்திற்கும் நேர்ந்த இழப்பு எனலாம்.

அந்தப்பாதையில் நீலகேசியும் அமைந்துள்ளது. நீலகேசியையும் அவளை எதிர்த்தாரையும் எதிரெதிர் நிறுத்திச் சொற்போர் புரியும்படி அமைத்திருப்பது சுவை குன்றாமல் இருக்க வழிவகுக்கிறது. நீலகேசி மூலம் அக்காலச் சமயநிலைகளை அறியவாய்ப்பு நேர்கிறது. உரையாசிரியரின் நுணுக்கமான உரைகள் சிந்தனைக்கு நல்ல விருந்தாகின்றன.

தருமவுரைச் சருக்கத்தின் சிறப்பு

முனிச்சந்திர பட்டாரகன் என்ற பாத்திரத்தின் மூலம் நீலகேசிக்கு அறவுரையை விளக்கமாகக் கூறுவதுபோல் தருமவுரைச் சருக்கம் அமைக்கப் பட்டுள்ளது. மக்கள், தேவர், நரகர், விலங்கு என்னும் நால்வகைப் பிறப்புகளிலும் ஏற்படுகின்ற துன்பங்களை எடுத்துக்காட்டி அவை தீர்வதற்கான வழியையும் ஆசிரியர் கூறுகிறார். அதாவது உயிர்களின் அறியாமை காரணமாக உறுகின்ற பிணிகளை முற்றுமாகப் போக்க மருந்து ஒன்றுண்டு என்கிறார். அது ஒரு கூட்டுமருந்து எனக்கூறி, சமண சமயக் கோட்பாடாகிய நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்னும் மும்மணியின் இயல்புகளை நீலகேசிக்கு விளக்கமாக விரித்துரைக்கிறார் முனிவர். சமணசமயக் கோட்பாடுகளும் தத்துவமும் விளக்கம் பெறுகின்ற சருக்கம் இது.

முனிவரின் அறவுரையால் மெய்யுணர்வு பெற்ற நீலகேசி தன் நன்றிக் கடனை முனிவர்க்குச் செலுத்தும் வகையாக அக்காலத்தில் மேலோங்கி யிருந்த பல்வகை மதத்தாரோடும் வாதம் புரிந்து வெற்றி கொண்டு சமண சமயத்தைப் பரப்ப வகை செய்கிறாள்.

பௌத்த சமயக் கருத்துகளுக்கு மாறாக நீலகேசி எழுந்ததால், குண்டலகேசி, அருக்கச் சந்திரன், மொக்கலன், புத்தர் ஆகியவர்களோடு நீலகேசி வாதம் புரிந்து வென்றதாக ஆசிரியர் அமைத்துக் கொள்கிறார். பின்னர் ஆசீவகவாதி, சாங்கியவாதி, வேதவாதி, வைசேஷவாதி, பூதவாதி ஆகியவர்களோடும் வாதம் செய்து வென்றதாகக் கூறிச் செல்கிறார்.

வாதநூல்களில் சிறந்து விளங்குகிறது நீலகேசி. குண்டலகேசி வாதநூலுக்கு வித்திட்டது என்றால் நீலகேசி பின்வந்த வாத நூல்களுக்கு முன்னோடியாய் அமைந்தது எனலாம்.

2.3 தொகுப்புரை

பெருங்காப்பியங்களில் முதற்காப்பியம் சிலப்பதிகாரம். காப்பியங்களில் புதிய மரபைத் தோற்றுவித்த பெருமைக்கு உரியது. சமண சமயக் காப்பியமாயினும் சமயப் பொறைக்குச் சான்றாய் இருப்பது.

சீவக சிந்தாமணி காவிய இலக்கணம் அனைத்தும் முழுமையாகச் சிறந்த முறையில் அமைந்திருப்பது. இலக்கியச் சுவை நிறைந்தது. விருத்தப் பாடல்களால் ஆனது. பின்வந்த காப்பியங்களுக்கு எல்லாம் புதியதொரு பாதை அமைத்துத் தந்தது. காப்பிய அமைப்பில் விரிவை ஏற்படுத்தியது.

வளையாபதி முழுவதுமாகக் கிடைக்கவில்லையென்றாலும் கிடைத்த பாடல்கள் இனிமையும் எளிமையும் உடையன என்பதை எடுத்துக்காட்டுகள் உணர்த்துகின்றன.

சிறுகாப்பியங்கள் ஐந்தையும் தந்த பெருமைக்கு உரியவர்கள் சமணச் சான்றோர். சமயக் கோட்பாடுகள் கதைகளின் மூலம் கூறப்படும்போது சுவை குன்றாமல் படிப்போர் உள்ளத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருப்பதைத் தெளிவாகக் கண்டோம்.

பெருங்கதை பழமையான காப்பியங்களில் ஒன்று. பெருங்காப்பியமாகிய இதில் சில பகுதிகள் இல்லையென்றாலும் அக்கால அரசியல், மக்கள் வாழ்வியல் பற்றிய செய்திகளைக் கூறுவதில் சிறந்துள்ளது. கதையின் ஊடே ஆங்காங்கே சமண சமயக் கருத்துகளைக் கூறிப்போகும் தன்மையைப் பார்த்தோம். வட மொழியினின்றும் கதையை எடுத்துக் கொண்டு தமிழ்ப் பண்பிற்கு ஏற்பக் காப்பியம் இயற்றிப் பின்வந்த பலர்க்குப் பாதை அமைத்தவர் பெருங்கதை தந்த கொங்குவேளிர் என்பதையும் கண்டோம்.

சங்க இலக்கியங்களுக்குப் பின் சமண, பௌத்த காப்பியங்கள் இல்லை யென்றால் இலக்கிய வரலாற்றில் பெரும் வெற்றிடம் நேர்ந்திருக்கும். சமணச் சான்றோரின் கொடையால் அந்த வெற்றிடம் இலக்கியச் சுவை மிகுந்த காப்பியங்களால் நிரப்பப்பட்டு, தமிழின் பெருமையைப் பன்மடங்கு உயர்த்தியது என்பதை யார் மறுக்க முடியும்? தமிழ் விரிவடைந்தபோது மக்களிடையே சமயக் கருத்துகளும் பரவலாயின என்பது வரலாற்று நிகழ்வு.

பாடம் 3

சமண இலக்கணங்கள், நிகண்டுகள் மற்றும் உரைகள்

3.0 பாட முன்னுரை

தமிழகத்தில் வேரூன்றிய சமண சமயம் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெறத் தொடங்கியது. தமிழ் மக்களோடு உறவாடிய சமணத் துறவோர் மக்களிடையே தம் சமயக்கருத்துகளைப் பரப்ப அவர்தம் தாய்மொழியையே பயன்படுத்தலாயினர். அதனால் விரைவில் மக்களை அவர்களால் ஈர்க்க முடிந்தது. இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் அவர்கள் தொண்டு சிறப்புற்றது; தமிழ் மொழியும் வளம் பெற்றது. இந்தப் பாடத்தில் சமணர் இயற்றிய இலக்கண நூல்களையும் அவை தமிழுக்கு எப்படி வளம் சேர்த்தன என்பதையும் அறிந்து கொள்ளலாம். அத்துடன் அவர்கள் எழுதிய நிகண்டுகள், உரை நூல்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

இலக்கணங்கள் படைக்கக் காரணம்

இலக்கியம் முதலான பிற துறைகளைவிட இலக்கணத் துறையில் சமணர்களின் தொண்டு வியப்பை அளிக்கிறது. இதற்கான காரணம் யாது? சமண சமயம் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டோடு வாழவேண்டுமென்ற கோட்பாடுடையது. ஆகவே, அது அறநெறிகளை வகுத்தது. அந்த நெறிகளின் எல்லைக்குள்ளே வாழ வேண்டும் என்று விதித்தது; வாழ்க்கையை, அதன் சுகங்களை அளவுக்கு மீறி அனுபவிக்க வேண்டாமென்று அறிவுறுத்த விரும்பியது; இதன் அடிப்படையிலேயே யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகியவற்றை வலியுறுத்திப் பேசியது சமண சமயம். மொழி மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் கருவியாக அமைவதால், அதற்கும் ஒழுங்கு, வரன்முறை, நெறிமுறை முதலியன வேண்டும் என்று நினைத்து, அந்தச் சமயத்தைச் சார்ந்த சான்றோர் இலக்கண நூல்களை இயற்றினர் எனக் கருதலாம். கட்டுப்பாட்டையும் விதிமுறைகளையும் பின்பற்றுவதில் பெரும் ஈடுபாடு காட்டினாலும் கால மாறுதலுக்கு ஏற்ப விரித்தும் புதியன படைத்தும் பழையன விடுத்தும் நூல்களைப் படைக்க அவர்கள் முன்வந்ததை, அவர்கள் படைத்த இலக்கியங்களைப் பார்க்கும் போது நாம் நன்கு உணர முடியும்.

இலக்கணம் படைக்க வேண்டுமாயின் அதற்கு முன்அமைந்த இலக்கியங்களைக் கண்டறிய வேண்டும். அப்போதுதான் தகுதி வாய்ந்த இலக்கண நூல்களைக் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்பப் படைக்க முடியும். இந்தப் பேருண்மையை நன்கு அறிந்திருந்தனர் சமணச் சான்றோர். அதனால்தான் தொல்காப்பியம் தோன்றிப் பல நூற்றாண்டுகளுக்குப்பின் தோன்றிய நன்னூல் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினான’ என்று பேசுகிறது.

3.1 இலக்கணங்கள்

பழந்தமிழ் நூல்களில் சமணம் என்ற முதற்பாடத்தில் இலக்கண நூலான தொல்காப்பியம் பற்றி விரிவாகவே படித்துள்ளோம். அதனால் அதை விடுத்து, அதற்குப் பின்னர், சில நூற்றாண்டுகள் கழித்துத் தோன்றிய இலக்கண நூல்களைப் பற்றி இங்கு அறிய முற்படுவோம்.

3.1.1 அவிநயம் நூலின் சிறப்பு

தொல்காப்பியர் நெறியினின்றும் மாறுபட்ட கருத்துகள், பின்வந்த இலக்கண நூல்களாகிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, நன்னூல் மற்றும் பிற இலக்கண நூல்களிலும் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. இவற்றிற்கு மூலம் ஒருவேளை அவிநயமாக இருக்கலாம். இன்று இந்நூல் முற்றும் கிடைக்கவில்லை. ஆயினும் பல இலக்கண உரைகளில் இந்த நூலின் பெயரும், நூலாசிரியர் பெயரும், அவிநய நூற்பாக்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. இதிலிருந்து அந்த நூல் அக்காலக்கட்டத்தில் மிகுந்த சிறப்பைப் பெற்றதாக இருந்திருக்க வேண்டும் என்பதை அறியலாம். இத்தகைய சிறப்புப் பொருந்திய அவிநயம் முழுமையாகக் கிடைக்கப் பெறாமை தமிழிற்கு நேர்ந்த இழப்பு எனலாம். அவிநயத்திற்கு அவிநயப் புறனடை என்றும் ஒரு பெயர் உண்டு.

ஆசிரியர் காலமும் சமயமும்

நூலாசிரியர் அவிநயனார். இவர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியாக இருக்கலாம் என்பர். இவர் சமயம் சமணம் என்பதைப் பின்வரும் காரணங்களால் அறியலாம்.

அணுக்கொள்கை

அணுவே அனைத்திற்கும் தோற்றிடம்; அணுவை அழிக்க முடியாது. என்றும் நிலைபெற்றது. இந்த அணுக்களின் சேர்க்கையாலேயே உலகம் யாவும் தோன்றுகின்றன. மொழிக்கு மூலகாரணமும் அதுவே. இந்த அணுக்கொள்கை அவிநயத்தில் காணப்படுகிறது. இது சமண சமயத்திற்கு உரியது என்பதால் இதன் ஆசிரியர் சமணராக இருக்கலாம்.

வினைக்கொள்கை

சமண சமயத்தில் வினை (கர்மா), உயிர் (சீவன்) களுக்குள் முற்றிலும் ஊடுருவிச் சென்று அவற்றை உலகியல் நிலைக்குத் தாழ்த்தி விடுவதாகக் கருதப்படுகிறது. நீர் பாலோடு ஒன்றுவது போல வினை ஆன்மாவுடன் ஒன்றுபடுகிறது. கர்மாவால் (வினையால்) கட்டுண்ட ஆன்மா சம்சாரசீவன் என அழைக்கப்படுகிறது. கர்மாவின் பந்தத்தால் தொடரும் பிறப்பினைத் துன்பங்கள் தொடர்கின்றன. சமணத்தில் ஊடுருவி நிற்கும் இக்கொள்கை அவிநயனாரின் அகப்பொருள் நூற்பாவில் புலப்படுகிறது.

முன்செய் வினையது முறையா உண்மையின்

ஒத்த இருவரும் உள்ளகம் நெகிழ்ந்து

(யாப்பருங்கலவிருத்தி

ஒழிபியல் 95, மேற்கோள்)

(வினை முறைப்படி தன் பயனைத் தரும்; அதன்படி பண்பு முதலியவற்றால் ஒத்திருந்த அந்த இருவரும் – தலைவனும் தலைவியும் – தம் நெஞ்சம் நெகிழ – என்பது இதன் பொருள்)

மேற்கூறியவற்றை நோக்கும் போது அவிநயனார் சமயம் சமணம் எனலாம்.

அவிநயனாரின் பிற நூல்கள்

அவிநயம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல், அவிநயனார் புறத்திணைப்படலம் என நான்காகப் பிரிக்கப்பட்டு அவிநயம் பதிப்பிக்கப் பட்டிருக்கின்றது. அவிநயப் புறனடை தனிநூல் என்பது உறுதி என்கிறார் க.ப. அறவாணன். (சைனரின் தமிழிலக்கணக் கொடை, பக். 178)

இலக்கணங்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவினாலேயே எழுதப்பெறும். வெண்பாவில் எழுதுவது சங்ககாலத்திற்குப் பின் வந்த மரபாக இருக்க வேண்டும். நேமிநாதம் என்னும் இலக்கண நூல் வெண்பாக்களால் ஆனது. அதற்கும் முன்பாக வெண்பாவில் எழுதப்பட்ட நூல் அவிநயப் புறனடை யாகும். வெண்பாவில் இலக்கணம் எழுத முடியும் என்பதை முதலில் காட்டியவர் சமணராகிய அவிநயனாரே எனலாம். இது தமிழுக்குப் புதிய வரவு எனலாம்.

3.1.2 யாப்பருங்கலம் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் மூன்றனுக்கும் இலக்கணம் வகுத்தது. காலப்போக்கில் புதிய இலக்கியங்கள் தோன்றின. வடமொழியின் செல்வாக்கால் பல யாப்பு வடிவங்கள் தமிழ்மொழியை வந்தடைந்தன. தமிழ்ச் சான்றோராலும் புதியனவாகப் படைக்கப்பட்டவை இடம் பெற்றன. அதனால் புதிய நூல்களின் யாப்பு வடிவங்கள் அனைத்தையும் வரையறை செய்து காட்டும் புதிய யாப்பு நூல்களின் தேவை ஏற்பட்டது. அதன் விளைவாக யாப்பு நூல்களும், பாட்டின் அமைப்பைப் பற்றிப் பேசும் பல பாட்டியல் நூல்களும் தோன்றின. அவற்றுள்ளும் யாப்பருங்கலத்திற்குப் பெருஞ்சிறப்பு உண்டு. யாப்பருங்கல விருத்தி என்ற அரிய உரை தோன்றக் காரணமாக அமைந்தது யாப்பருங்கலம் எனலாம். யாப்பிற்கு இலக்கணம் படைத்ததோடு அதற்கான உரையும் தோன்றக் காரணமாயினர் சமணச் சான்றோர்.

ஆசிரியர்

நூலாசிரியர் அமிர்தசாகரர். இவரை அமுதசாகரர் எனவும் அழைப்பர். யாப்பியலில் யாப்பருங்கலவிருத்தியும் யாப்பருங்கலக் காரிகையும் சமணர் தம் மிகச்சிறந்த கொடை எனலாம். யாப்பு இலக்கணத்திற்குத் தனி நூல்கள் எழுதி இலக்கண விரிவிற்குக் காரணமாயினர் சமணர்.

ஆசிரியர் சமயம்

அமிர்தசாகரர் சமண சமயத்தவர் என்பது அவர் எழுதிய கடவுள் வாழ்த்திலிருந்து தெளிவாகிறது. யாப்பருங்கலத்திலும் யாப்பருங்கலக் காரிகையிலும் அருகதேவனை வணங்கியே நூல்களைத் தொடங்குகிறார்.

வெறிகமழ் தாமரை மீமிசை ஒதுங்கிய

அறிவனை வணங்கி அறைவேன் யாப்பே

(வெறி = மணம், மீமிசை = மேல்)

மணம் கமழ்கின்ற தாமரை மலர்மீது அமர்ந்த/நடந்த அருகதேவனை வணங்கி யாப்பினைக் கூறுவேன். இது யாப்பருங்கல அருக வணக்கம்.

கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்

எந்தம் அடிகள் இணையடி ஏத்தி

என்பது யாப்பருங்கலக் காரிகை அருக வணக்கம். அமுதசாகரர் துறவியாக வாழ்ந்தவர் என்பது அருந்தவத்தோனே என முடியும் யாப்பருங்கலப் பாயிரத் தொடரால் உணரலாம்.

3.1.3 யாப்பருங்கலக்காரிகை அமுதசாகரராலேயே யாப்பருங்கலக்காரிகையும் இயற்றப்பட்டது. இது யாப்பருங்கல நடையைவிட எளிமையான நடையை உடையது. கட்டளைக் கலித்துறையில் அமைந்தது.

செய்யுள் இலக்கணத்தை அறிஞர்களிடமிருந்து பொதுமக்களிடம் கொண்டு சென்றவர் காரிகை ஆசிரியர். மக்களுக்குக் கல்வி தருவதில் பெரும் அக்கறை காட்டியவர்கள் சமண முனிவர்கள். எனவே தான், மக்களைச் சென்றடைய வேண்டுமென்று தாம் எழுதிய இலக்கிய, இலக்கண நூல்களை மக்கள் எளிதில் படித்தறியும் வண்ணம் தந்தனர். இது நம் கவனத்திற்குரியது.

காரிகையின் அமைப்பு

இது முப்பிரிவுகள் கொண்டது. யாப்பருங்கலத்தை ஒட்டியே உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழிலக்கிய உலகில் பெண்களை முன்னிலைப்படுத்தி மகடூஉ முன்னிலையைப் படைத்து முதலில் இலக்கியம் அமைத்தவர் சமணச் சான்றோர். நாலடியார் பாக்களிலும் மகடூஉ முன்னிலைப் பாக்களைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக,

இடம்பட நன்ஞானம் கற்பினும் என்றும்

அடங்காதார் என்றும் அடங்கார் – தடங்கண்ணாய்!

உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்து அடினும்

கைப்பு அறா பேய்ச்சுரையின்காய்

(நாலடியார்: 116)

என்ற பாடல் காணப்படுகிறது. இது, பெரிய கண்களை உடையவளே! பேய்ச்சுரைக்காயை உப்பு, நெய், பால், தயிர், பெருங்காயம் முதலியவற்றைச் சேர்த்துச் சமைத்தாலும், அது தன் கசப்புத் தன்மையைக் கைவிடாது. (அதுபோல) இயற்கையாகவே அடக்கம் இல்லாதவர்கள் எத்தனை நல்ல நூல்களைக்கற்றாலும் அடக்கத்துடன் நடந்து கொள்ளமாட்டார்கள் என்று பொருள்படும். தமிழ் இலக்கண உலகிலும் முதல்முதல் மகடூஉ முன்னிலையை அமைத்து இலக்கணம் அமைத்தவர் சமணரே. யாப்பருங்கலக்காரிகை இதற்குச் சான்றாகும்.

3.1.4 நேமிநாதம் சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் பழங்காலத்தில் சமணக்கோயில் ஒன்றிருந்தது. இக்கோயிலில் நேமிநாத தீர்த்தங்கரரின் உருவம் அமைக்கப் பட்டிருந்தது. சமணசமயத்தார் வணங்கும் 24 தீர்த்தங்கரருள் 22-ஆம் தீர்த்தங்கரர் நேமிநாதர் ஆவர். இத் தீர்த்தங்கரர் திருப்பெயரால் செய்யப் பெற்றமையால் இவ்விலக்கண நூல் நேமிநாதம் என்ற பெயர் பெற்றது.

இந்நூலை இயற்றியவர் குணவீர பண்டிதர். இவர் தொண்டை நாட்டில் உள்ள களத்தூரில் பிறந்தவர்.

அமைப்பு

நேமிநாதம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்ற இரண்டு பெரும் பிரிவுகளை உடையது. வெண்பாக்களால் ஆனது. எழுத்ததிகாரம் உட்பிரிவுகள் எதுவும் இல்லாதது. சொல்லதிகாரம் ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகளை நோக்கின் இவை தொல்காப்பியத்தை அடியொற்றி அமைக்கப் பட்டவை என்பது போல் தோன்றுகிறது.

நூல் இயற்றக் காரணம்

இந்த நூலைச் செய்ததன் காரணத்தை, விரிந்த நூல் உணராத மக்களுக்குச் சுருங்கச் செய்யப்பட்டது என்று கூறும் உரைப்பாயிரம் மூலம் அறிகிறோம். இலக்கணத் துறையில் செய்யப்பெற்ற சுருக்கநூல் முயற்சியில் இது முதலாவதாகும். நேமிநாதமும் மகடூஉ முன்னிலை முறையைப் பின்பற்றி வெண்பாக்களால் அமைந்துள்ளது.

இலக்கண நூல்களில் முழுவதும் வெண்பாவால் இயற்றப்பெற்ற முதல் நூல் நேமிநாதமாகும்.

சிறப்பு

தொல்காப்பியத்திற்கும் நன்னூலுக்கும் இடைப்பட்ட காலத்தின் வளர்ச்சியைக் காட்ட, அந்த இடைவெளியை நிரப்பப் பாலமாக அமைவது நேமிநாதம் எனலாம்.

நூலாசிரியராகிய குணவீர பண்டிதரே இதற்கு உரையும் எழுதினார். நூலாசிரியரே உரையும் எழுதுவது இதுவே முதல் முறையாகும்.

தன்மதிப்பீடு : வினாக்கள் – I

3.1.5 வச்சணந்தி மாலை தொல்காப்பியர் காலத்திற்குப் பின்பு எழுந்த தொடர்நிலைச் செய்யுட்களிலும் பக்தி நூல்களிலும் சிற்றிலக்கிய மரபுகள் தோன்றின. இம்மரபுகளுக்கு வகுக்கப்பட்ட இலக்கணம் ‘பாட்டியல் நூல்கள்’ என்ற பெயரில் வழங்கலாயிற்று. நூல்வகைகள், அவற்றின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும், ஒரு நூலின் முதற்பாட்டின் முதற்சீர் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் பாட்டியல் நூல் கூறும். ஒரு நூலில் பாடப்படும் (பாட்டுடைத்) தலைவனின் வருணத்துக்கு ஏற்றபடி அந்தச் சீர், பாடல்களின் எண்ணிக்கை முதலியவை அமைய வேண்டும் என்று அது குறிப்பிடும். நால்வகை வருணத்தை அடிப்படையாக வைத்து நூலை இயற்ற வேண்டும் என்பதும் அதில் கூறப்படுகிறது.

இவ்வகைப் பாட்டியல் நூல்களில் ஒன்றான வச்சணந்தி மாலையின் ஆசிரியர் குணவீர பண்டிதர். முதன்மொழியியல், செய்யுளியல், பொதுவியல் என்ற மூன்று பிரிவுகளை உடையது இந்நூல். வெண்பாக்களால் ஆனதால் இதை வெண்பாப் பாட்டியல் என்ற பெயராலும் அழைத்தனர். இந்நூல் முழுவதும் அந்தாதி யாப்பில் இயற்றப்பட்டுள்ளது. அந்தாதித் தொடையில் இயற்றப்பட்ட முதல் இலக்கணநூல் இது எனலாம்.

3.1.6 நன்னூல் காலச் சுழற்சியில் பழைய மரபுகள் கழிவதும், புதிய மரபுகள் தோன்றுவதும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிகழ்வு. அவ்வகையில் பழந்தமிழ் மரபுகளை முற்றும் புறக்கணிக்காமல் நிலையான தொடர்பு உடையவற்றை ஏற்கவும், தொடர்பு இழந்தவற்றைத் தள்ளவும் வேண்டியிருந்தது; அதே போன்று பின்வந்த வழக்காறுகளில் விழுமியவற்றை ஏற்கவும், ஏனையவற்றை ஒதுக்கவும் வேண்டியிருந்தது. தவிரவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட காரணத்தால் தொல்காப்பியத்தைப் படித்துப் புரிந்து கொள்வதில் மக்களுக்கு இடர்ப்பாடு தோன்றியிருக்கக்கூடும்.

இவ்விரு காரணங்கள் கருதி நன்னூல் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.

‘அமராபரணன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற சீயகங்கன் என்னும் அரசன் தமிழிலக்கியங்களின் ஆராய்ச்சிக்கு இன்றியமையாததும், பரந்து கிடப்பதுமான தொல்காப்பியத்தைக் கற்று விதிவிலக்குகளை அறிந்து கொள்வது எளிதன்று என்று அறிந்து பவணந்தியை நன்னூல் எழுத வேண்டினான்’ என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் தரும் குறிப்பும் இங்கு நினைவுகூரத் தக்கது.

தொல்காப்பியம் மூன்று இலக்கணங்களைப் பேசியது. அவை எழுத்து, சொல், பொருள் என்பன. பின்னர், இலக்கியங்கள் பல தோன்ற, விரிவான இலக்கணம் செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்தது. யாப்பு நூல்கள், அணி நூல்கள், அகப்பொருள் இலக்கணம் போன்றவை தனித்தனி நூல்களாகத் தோன்றின. அவற்றுள் எழுத்து, சொல் என்ற இவ்விரண்டைப் பற்றிய தனி நூலாக நன்னூல் தோன்றியது.

நன்னூலின் ஆசிரியர் பவணந்தியார். சிறப்பு நோக்கி இவரை நன்னூலார் என்றே குறிப்பிடும் வழக்கமும் உள்ளது.

ஆசிரியரும் சமயமும்

நன்னூல் சிறப்புப்பாயிரம் அதன் ஆசிரியரைப் ‘பன்னருஞ் சிறப்பின் பவணந்தி என்னும் நாமத்து இருந்தவத்தோன்’ என்று குறிக்கிறது. பவணந்தியார் இருந்தவத்தோன் என்று குறிக்கப்பட்டதால் துறவி என்பது புலனாகிறது. சமணத் துறவி என்பதற்கு நூலிலேயே சான்றுகள் இருப்பதை அறியலாம்.

எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டிற்கும் இவரே கடவுள் வாழ்த்தைப் பாடியுள்ளார். அது அருகதேவனை வாழ்த்திப் பாடியதாகும்.

மொழிமுதற் காரணம் அணுத்திரள் என்று கூறியதும், உயிர்களைப் பகுக்கும்போது ஓரறிவுயிர் முதலாக ஐந்தறிவு ஈறாக அமைத்திருக்கும் முறையும் சமணர் முறையை ஒட்டியதாகும்.

ஓரறிவு உயிர்

ஈரறிவு உயிர்

மூவறிவு உயிர்

நாலறிவு உயிர்

ஐயறிவு உயிர்

பவணந்தி என்னும் பெயரில் ‘நந்தி’ என்ற சொல் கலந்திருப்பதைக் காணலாம். நந்தி என்ற பெயர் சமண சமயத் துறவிகளுக்கு வழங்கப்படுவது. இவையனைத்தும் அவர் சமணர் என்பதை உறுதிப்படுத்தும்.

சிறப்பு

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்று இலக்கணத்திற்கு ஒரு விதிமுறையைச் சட்டமாக்கிவிட்ட பெருமைக்கு உரியவர் நன்னூலார். அதற்கேற்ப, வழக்கற்றுப் போனவைகளைப் பழையன கழிதலாக விலக்கியும் புதியனவற்றை ஏற்றும் இலக்கணம் செய்துள்ளார், பவணந்தி.

3.1.7 நம்பியகப்பொருள் தொல்காப்பியப் பொருள் இயல்களுக்குப்பின் இறையனார் அகப்பொருள் தோன்றியது. அதன்பின் அகப்பொருள் இலக்கியங்கள் தோன்றின. அகப்பொருள் மரபுகளை, பின்னர்த் தோன்றிய இலக்கணங்கள் விளக்கின. சில நூல்கள் கிடைக்கவில்லை. வீரசோழியம் அகப்பொருள் இலக்கணத்தைக் கூறினும் அது பரவலாகப் படிக்கப்படவில்லை. அத்தகைய சூழலில் பிறந்ததுதான் நம்பி அகப்பொருள் விளக்கம்.

ஆசிரியரும் சமயமும்

இதன் ஆசிரியர் நாற்கவிராசநம்பி. (ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவி, சித்திரகவி என்ற நான்கு கவிகளிலும் வல்லவர். அதனால் நாற்கவிராசநம்பி). இவர் சமயம் சமணம். சிறப்புப்பாயிரம் இவர் சிறப்பினை விளக்குகிறது. இவர் காலம் 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பர்.

நம்பியகப்பொருள்

இது அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

3.2 நிகண்டுகள்

முதன்முதலில் நிகண்டுகளைத் தமிழுக்கு அளித்தவர்கள் சமணர் ஆவர். சொற்பொருளை விளக்குவது நிகண்டுகள். நிகண்டு, சொற்களை அடுக்கிக் கூறுவது. இவை பலபொருள் குறித்த ஒரு சொல் எனவும், ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள் எனவும் இருவகைப்படும். எடுத்துக் காட்டாக, ‘பகவனே ஈசன் மாயோன், பங்கயன், சினனே புத்தன்’ (சூடாமணி நிகண்டு) பகவன் என்னும் சொல், சிவன், திருமால், பிரமன், அருகன், புத்தர் ஆகிய பொருள்களைத் தரும். ‘வழுதி கூடற்கிறைவன், மீனவன், பஞ்சவன், மாறன், வேம்பின் கண்ணியன், மதிகுலன், கைதவன், கௌரியன், தமிழ் நாடன், வண்புனற் குமரி சேர்ப்பன், செழியன், வைகைத் துறைவன், மீனம் உயர் கொடியினன், தென்னவன், பொதியவெற்பன், செப்புமீரெட்டுமே பாண்டியன் பெயராம்’ (ஆசிரிய நிகண்டு) பாண்டிய மன்னனைக் குறிக்க இத்தனைச் சொற்கள் உள்ளன. அகராதி முறைப்படி இச்சொற்கள் அகரவரிசையில் அமைக்கப்படவில்லை.

சிறப்புக் கூறுகள்

நிகண்டு, மொழிக்கல்விக்குப் பெரிதும் துணைபுரிவதாகும். மொழியின் பரந்துபட்ட சொற்கூட்டத்தைப் பயில்பவனுக்கு அகராதி பயன்படுகிறது. அகராதி போல ஒரு காலகட்டத்தில் நிகண்டுகள் பயன்பட்டன.

அகராதிகள் ஒரு மொழியின் வளமையைக் காட்டி நிற்கும். தமிழில் உள்ள நிகண்டுகள் ஒருவிதத்தில் அகராதிகள் எனலாம். ஆனால் இன்றைய அகராதிகள் போல் அவை இல்லை. ஆயினும் அகராதியின் பயனை அவை ஓரளவு தந்தன என்பதை மறுப்பதற்கில்லை.

நிகண்டுகள் தோன்றக் காரணம்

மேலைநாடுகளில் அகராதியை இயற்றும் முயற்சி 18-ஆம் நூற்றாண்டில் தான் துவங்கியது.

தொல்காப்பியம் அகராதிக் கலைக்கான மூலக்கூறுகளை உரியியலில் எடுத்துக் கூறுகிறது.

அச்சுக்கலை தோன்றாத கால கட்டத்தில் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய செய்யுள் வகையில் சொற்களையும் அவற்றின் பொருள்களையும் வரிசைப்படுத்தி நிகண்டுகள் இயற்றப்பட்டன.

பள்ளிகளை ஆங்காங்கே அமைத்துக் கல்வியைப் பரப்பிய சமணர்கள் நிகண்டுகளைப் படைப்பதில் ஆர்வம் கொண்டதில் வியப்பேதுமில்லை. ஏனென்றால் மொழி பயிலவும் பயிற்றுவிக்கவும் அவை பெரிதும் பயன்பட்டிருக்க வேண்டும்.

நிகண்டிற்குக் கடைகாலிட்டுக் (அடிப்படை அமைத்து) கோட்டை கட்டியவரெல்லாம் சமணர்களே ஆவர். மேனாட்டார் அகராதி தொடங்கு முன் சமணரின் நிகண்டு முயற்சியே சிறந்திருந்தது. தொல்காப்பிய உரியியலில் தொல்காப்பியர் சொற்களுக்குப் (313) பொருள் விளக்கம் தருகிறார். அகராதிக் கலைக்கு வேண்டிய மூலக்கூறுகளை உரியியலில் கண்டறிந்த சமணச் சான்றோர்க்கு நிகண்டுகளைத் தோற்றுவிக்க அதுவே காரணமாகவும் அமைந்திருக்கலாம்.

3.2.1 திவாகரம் நிகண்டுகளில் முதன்மையானது திவாகரம். ஆதிதிவாகரம் என்று இதனை அழைப்பர். திவாகர முனிவரால் இயற்றப்பட்டது. திவாகரத்தில் 9500 சொற்களும் 384 ஒருபொருட்பன்மொழிச் சொற்களும் இடம்பெற்றுள்ளன. இதனைச் சேந்தன் திவாகரம் என்றும் வழங்குவர். நிகண்டுகளில் பழமையானதும் இதுவே. இந்நூலாசிரியர் சமணர். இவரைச் சைவர் என்று கூறுவாரும் உண்டு.

3.2.2 பிங்கலந்தை திவாகர நிகண்டிற்குப் பிந்தியது பிங்கலந்தை. இதன் ஆசிரியர் பிங்கலர். 12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் இவரைச் சுட்டுவதால் அதற்கும் முந்தியதாக இருக்க வேண்டும். இதில் முதல் ஒன்பது பகுதிகளில் மட்டும் 14700 சொற்கள் உள்ளன. பத்தாம் பகுதியில் பலபொருள் குறிக்கும் ஒரு சொல் என்ற முறையில் அமைந்த 1091 சொற்கள் உள்ளன.

இவர், தம் நூலை உரிச்சொற்கிளவி என்று சுட்டியதாகக் கூறுவர். இந்நூலைத் தம் நன்னூலில் சுட்டும் பவணந்தி உரிச்சொல் என்றே சுட்டிக் காட்டினர்.

3.2.3 சூடாமணி நிகண்டு சூடாமணி ஆசிரியர்தான் முதன் முதலில் நிகண்டு என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகக் கூறுவர். இதனை இயற்றியவர் மண்டல புருடர். பிங்கல நிகண்டிற்குப் பின்னர்த் தோன்றிப் பரவலாகத் தமிழ்நாடு எங்கும் பயன்படுத்தப்பட்ட நூலாகும். கிருஷ்ணதேவராயர் காலத்தில் இவர் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதற்கான சான்றுகள் கிடைப்பதால் இவர் 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்ததாகக் கொள்ளலாம். ‘முக்குடை நிழற்ற மின்னு பூம்பிண்டி நிழல் வீற்றிருந்தான்’ என்றும் (மூன்று குடைகளின் கீழ் மின்னுகின்ற அசோகமரத்தின் நிழலில் வீற்றிருந்தான்) ‘பூமலி அசோகின் நிழல் பொலிந்த எம் அடியார்’என்றும் அருகனைத் துதிக்கிறார். அதனால் இவர் சமணர் என்பது தெளிவாகிறது.

அமைப்பு

சூடாமணி நிகண்டு 12 தொகுதிகளை உடையது. ஒவ்வொரு தொகுதியை ஆரம்பிக்கிற போதும் அருகவணக்கம் பாடுகிறார். 11-ஆம் தொகுதி தற்கால அகராதிபோல அமைந்துள்ளது. இதற்கு முன் இவ்வமைப்பு இல்லை. 11,000 சொற்கள் உள்ளன. பலபொருள் ஒரு சொற்கள் 1575.

நிகண்டு               காலம்                         சொற்கள்                     பலபொருள்

ஒருசொல்

திவாகரம்              குறிப்பிடப்படவில்லை     9500                        384

பிங்கலந்தை           12-ஆம் நூற்றாண்டு         14700                       1091

சூடாமணி             16-ஆம் நூற்றாண்டு         11000                       1575

3.3 உரைகள்

பழங்காலத்தில் நூல்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆசிரியர் – மாணவர் என்னும் தொடர்பு இலக்கியம் பயில்வதற்கு ஏற்றதாக அமைந்தது. காலம் செல்லச் செல்ல மூல நூலை (செய்யுள் வடிவத்தை)ப் படித்துப் பொருளை அறிந்து கொள்வது என்னும் வழக்கம் குறைந்து வரலாயிற்று. போதிய பயிற்சி இல்லாமையே இதற்குக் காரணம். பழைய நூல்களை நன்கு விளங்கிக் கொள்வதற்கு உதவியாக நூலுக்கு விரிவாகப் பொருள் கூறினர் உரையாசிரியர்கள். உரை என்பது சொல்லுக்குப் பொருள் கூறுவதாக மட்டும் அமையாமல், விளக்கம் தந்து, அதன் நயத்தையும் எடுத்துக் காட்டியது.

இலக்கண இலக்கியங்களைப் படைத்த சமணச் சான்றோர் சிறந்த உரையாசிரியர்களாகவும் விளங்கியுள்ளனர். அவர்கள் உரையில்லையேல் பல இலக்கிய இலக்கணங்களை உரிய முறையில் புரிந்து கொள்ள இயலாமற் போயிருக்கும். உரை எழுதுபவர்கள் பல துறை வல்லுநராக இருக்க வேண்டும். கூர்மையான அறிவு உடையவராகவும் அமையவேண்டும். சமண உரையாசிரியர்களின் திறனை அவர் தம் உரைகளே எடுத்துரைக்கும்.

3.3.1 இலக்கண உரைகள் பல இலக்கணங்களை இயற்றிய சமணப் பெரியோர்கள் இலக்கியம் இலக்கணம் ஆகியவற்றிற்கு உரை எழுதி மேலும் வளம் சேர்த்தனர். தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் இளம்பூரணர். முதல் உரையாசிரியர் இவரே. அதனால் இவரை உரையாசிரியர் என்ற பெயராலேயே அழைப்பர். இவரைத் துறவி என மயிலைநாதர் சுட்டிக் காட்டுகின்றார். நன்னூலுக்கு உரைகண்ட மயிலைநாதரும் சமண சமயத்தைச் சேர்ந்தவர். இளம்பூரணர் உரை, பின்வந்த உரையாசிரியர்கள் பலராலும் மேற்கோளாகக் காட்டப்பட்ட சிறப்பை உடையது. இவர் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

உரைமரபு

சமண இலக்கண நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகள் பெரும்பாலன நூலாசிரியர் காலத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றன. யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை இவ்வகையுள் அடங்கும். இவற்றுக்கு உரை எழுதியவர் குணசாகரர். நேமிநாதம், வச்சணந்திமாலை ஆகிய நூல்களுக்கு உரை வகுத்தவர் குணவீரபண்டிதர்.

உரையை நூலாசிரியரைத் தவிர்த்துப் பிறர் எழுதுவது மரபு. இம்மரபு இக்காலத்தில் மாறியது.

நாற்கவிராச நம்பி, நம்பியகப் பொருளுக்கு உரைகண்டார். நூல் எழுதிய ஆசிரியரே அதற்குரிய உரையையும் எழுதுதல் புதுநெறி. இந்நெறியை குணவீர பண்டிதரும் நாற்கவிராச நம்பியும் மேற்கொண்டார்கள். பின்வந்த உரையாசிரியர்களுக்கு இம்முறை முன்னோடியாக அமைந்தது.

3.3.2 இலக்கிய உரைகள் இலக்கணங்களுக்கு மட்டுமன்றி இலக்கியத்திற்கும் உரை கண்டவர்கள் சமணச் சான்றோர்.

அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்குச் சிறந்ததோர் உரை எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தில் வரும் இசை, நடனம் முதலிய நுட்பங்களை விளக்கிக் கூறுதற்குப் பெரிதும் உதவுவது இவரது உரை. இவரது உரை, சொற்பொருள் கூறி நிற்பதில்லை. பொழிப்பைத் திரட்டிச் சிறப்பு உரையும் தருவது. இவர் கொங்கு மண்டலத்தைச் சார்ந்தவர். இவரைப் பாதுகாத்தவரும் சமணர். இவரது உரை விளக்கத்தினின்றும் இவர் சமணராக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். ஆயினும் சிலர் இவர் சைவர் எனக் கூறுவர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

நச்சினார்க்கினியர் மதுரையில் பிறந்த வைதிக அந்தணர். தொல்காப்பியம், சிந்தாமணி, கலித்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களுக்கு முழுமையாகவும், குறுந்தொகையில் சில பாடல்களுக்கும் உரை எழுதிச் சிறப்புப் பெற்றவர். உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் என்று பாராட்டப்படுபவர்.

சிந்தாமணிக்கு உரைகாண, சில காலம் சமணராகி, சமணர்களிடம் அதன் உரையை அறிந்து எழுதினார் என்றும், சமணர்களாலேயே அவ்வுரை பாராட்டப் பட்டது என்ற ஒரு செய்தியும் வழங்குகிறது.

குறளுக்குப் பதின்மர் உரை எழுதியதாகப் பழம்பாடல் ஒன்று குறிக்கிறது. ஐவரின் உரை கிடைக்கிறது. ஐவரின் உரை கிடைக்கவில்லை. அந்த ஐவரில் ஒருவர் தருமர் என்றும் அவர் சமண சமயத்தார் எனவும் குறிப்புகள் உணர்த்துகின்றன. ஆயின் அவர் குறளுக்கு எழுதிய உரை கிடைக்கவில்லை.

3.4 தொகுப்புரை

சமணம் பெருங்காப்பியங்களைப் படைத்துத் தமிழுக்கு வளமை சேர்த்ததை அறிந்துள்ளோம். அத்துடன் அமையாது பல அரிய இலக்கண நூல்களை எழுதிச் செந்தமிழின் பெருமையை மேலும் உயர்த்திய பெருமைக்கு உரியது சமண சமயம். எழுத்து, சொல், பொருள் என மூன்றாக இருந்த மூன்றிலக்கணக் கோட்பாடு, காலங்கள் பல கழிந்தபோது, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என விரிந்து ஐந்திலக்கணக் கோட்பாடாக வளர்ச்சி பெற்றது. அந்த வளர்ச்சியில் சமணர்தம் பங்கு பிற சமயத்தவரைக் காட்டிலும் அதிகம் என்பதை மறுக்க இயலாது.

ஒரு மொழியின் திறனை – வளத்தை நிகண்டுகள் காட்டி நிற்கும். பிற்கால அகராதிகளுக்கு முன்னோடியாய் அமைந்த நிகண்டுகளைப் படைத்து, அதிலும் தங்கள் ஈடுபாட்டைப் புலப்படுத்தியுள்ளனர். பரந்த இலக்கிய அறிவும் நுட்பமும் நிறைந்திருந்தால்தான் உரைகளை எழுத முடியும். ஏராளமான இலக்கிய இலக்கணங்களுக்கு உரை எழுதி, அதிலும் தங்கள் சுவடுகளை அழுத்தமாகப் பதித்துள்ளனர் சமணப் பெரியோர்கள்.

தமிழின் பெருமையை எண்ணும்போதெல்லாம் சமணத்தின் பங்களிப்பையும் எண்ணும் வகையில் அவர்களுடைய பங்களிப்பு அமைந்துள்ளது.

பாடம் 4

சமணச் சிற்றிலக்கியங்கள், புராணங்கள், பிற நூல்கள்

4.0 பாட முன்னுரை

ஏறக்குறைய பக்தி இயக்கக் காலம் வரை சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் பெரும் செல்வாக்கோடு இருந்தன. பின்னர், சைவமும் வைணமும் மேலோங்கின. சமண, பௌத்தத்திற்கு மன்னர்களின் ஆதரவும் குன்றியது. மக்களும் பக்தி இயக்கத்தில் ஈடுபட்டு உள்ளம் ஒன்றி நின்றனர். அதனால் சமண பௌத்த மதங்களுக்கு மக்களின் ஆதரவும் குறையலாயிற்று. மக்களின் ஆதரவின்றி எந்தச் சமயமும் உயிர்த் துடிப்புடன் வளர முடியாதல்லவா? சமண சமயம் குன்ற அதுவே முக்கிய காரணமாயிற்று.

காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப இலக்கியங்களின் போக்கும் மாறியது. அறநூல்களையும் காப்பியங்களையும் படைத்த சமணச் சான்றோர் பக்தி இயக்கம் வீறுகொண்டு எழுச்சி பெற்றபோது சிற்றிலக்கியங்களைப் படைப்பது தவிர்க்க இயலாததாய்ப் போனது. வீடுபேற்றைத் தங்கள் குறிக்கோளாகக் கொண்டவர்கள் என்பதால் சிற்றிலக்கியங்களும் அதற்கான நெறிமுறைகளையே பேசின. அவற்றுள் கலம்பகம், அந்தாதி, உலா, பிள்ளைத்தமிழ், பரணி போன்ற சிற்றிலக்கியங்கள் நம் கவனத்துக்கு உரியனவாகின்றன.

இந்தப் பாடத்தில் சமணர்கள் இயற்றிய சில சிற்றிலக்கியங்கள் பற்றிய செய்திகளைச் சுருக்கமாகக் காணலாம். அவை பழைய மரபுப்படி எழுதப் பட்டுள்ளனவா அல்லது மரபினின்றும் ஏதேனும் மாறுதலாகப் படைக்கப் பட்டுள்ளனவா என்றும் அறியலாம்.

பக்தி இயக்கக் காலத்தில் பக்திப் பாடல்களும் புராணங்களும் சைவ வைணவச் சான்றோரால் இயற்றப்பட்டன. சமண சமயச் சான்றோரும் புராணங்களை இயற்றினர். அவை பற்றியும் இந்தப் பாடத்தில் அறியலாம்.

4.1 சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியங்கள், பிரபந்தங்கள் என்றும் வழங்கப்படும். இவை 96 வகைப்படும். அவற்றுள் சில வகைச் சிற்றிலக்கியங்கள் சமண சமயம் தந்த கொடையாகும். கிடைத்த சில சிற்றிலக்கியங்களை இனிக் காணலாம்.

4.1.1 கலிங்கத்துப்பரணி ஆயிரம் யானையைப் போர்க்களத்தில் வென்ற வீரனைப் பாடும் நூல் பரணி என்ற சிற்றிலக்கியம் ஆகும். பரணி இலக்கியங்களுள் கலிங்கத்துப் பரணியே தலைசிறந்ததாகப் பாராட்டப்படுகிறது.

பாட்டுடைத் தலைவன், படைப்பாசிரியர்

குலோத்துங்க சோழன் காலத்தில் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தின் மேல் படையெடுத்து வென்றதைப் பாடுவது இந்நூல். இதன் ஆசிரியர் தீபங்குடி ஜெயங்கொண்டார். இவரைக் கவிச்சக்கரவர்த்தி என்றழைப்பர். தீபங்குடி என்பது சமணத் துறவியர் சங்கமிருந்த இடங்களில் ஒன்று. அந்த இடத்தைச் சார்ந்தவராக இருப்பதால் இவர் சமணராக இருக்கலாம் என்பர். இவர் காலம் 11-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. இந்நூல் சோழர் வரலாற்றினை அறிவதற்குப் பெரிதும் உதவுவது.

4.1.2 திருக்கலம்பகம் உதீசிதேவர் அருளியது திருக்கலம்பகம். இவர் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஆர்ப்பாகை (ஆர்ப்பாக்கம்) என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவர் சாவக நோன்பி ஆவார். அதாவது சமண இல்லறத்தார். இவருடைய காலம் 15 -ஆம் நூற்றாண்டு எனலாம்.

மரபு மாற்றம்

கலம்பக நூல்கள் பொதுவாகப் பதினெட்டு உறுப்புகளையும் 100 பாடல்களையும் கொண்டதாய் அமையும். ஆனால் இக்கலம்பகம் 16 உறுப்புகளும் 110 பாடல்களும் உடையதாய் உள்ளது.

திருக்கலம்பகத்தின் பாடல்கள் எளிமையும் இனிமையும் நிறைந்தன. சான்றாக ஒன்று.

ஆதி நாள்புணர்

ஏதில் வல்வினை

கோதில் வாமனை

ஓதில் ஓடுமே

(ஏதில் = பகையாகிய, கோதுஇல் = குற்றமற்ற)

(இதன் பொருள்: எப்பொழுது தோன்றியது என்று அறிய முடியாத ஆதி கால முதல் இந்த உயிருடன் கலந்த வலிமை வாய்ந்த வினைகள், குற்றங்கள் இல்லாத அருகனைத் துதிக்க நீங்கிவிடும்.)

சமணசமயத் தத்துவங்களை மிக அருமையான முறையில் இனிதாக விளக்குவதில் இந்நூலுக்குத் தனிச் சிறப்புண்டு. இந்நூலில் உள்ள ‘நூன்மொழியுமாறு……’ எனத் தொடங்கும் 76- ஆம் பாடல் சமணத்தத்துவம் அனைத்தையும் செறிவாகக் கூறிப் போகிறது.

சைவ, வைணவ அடியார்களின் பாடல்களை நினைவு படுத்துவது போன்ற இனிய ஓசை நிறைந்த ஒரு பாடலைப் பார்ப்போமா?

பாடுவது உன்னடித் தாமரை, பல்வினை மாசறநின்று

ஆடுவது உன்னடி வாரப்புனல், அடியேன் தலைமேல்

சூடுவது உன்னடிச் சேடமலர், என் துணைக்கரங்கள்

கூடுவது உன்னடி; கோமான் எனக்கோர் குறையிலையே

(பாடல் : 45)

‘யான் வணங்குவது உனது திருவடி மலர்களே. நான் பிறவிதோறும் ஈட்டிய வினையழுக்கு நீங்க நின்று குளிப்பது உனது பாதத்தில் பட்ட நீரில். நான் எனது தலைமேல் சூடுவது உனது திருவடியில் அர்ச்சனை செய்த மலர்களையே. எனது இரு கைகளும் குவிவது உனது திருவடிகட்கே. அருகப் பெருமானே! உனது அடியவனாகிய எனக்கு இனி ஒரு குறையும் இல்லை’ இப்பாடலின் ஓசையும் பொருளும் இறையுணர்வை எத்துணை அழகாக வெளிப்படுத்துகின்றன!

4.1.3 திருநூற்றந்தாதி இது மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள 22வது தீர்த்தங்கரராகிய நேமிநாதர் மீது பாடப்பட்ட நூலாகும். ஒரு பாடலின் அந்தமே அடுத்த பாடலின் ஆதியாக அமைத்துப் பாடப்படுவது அந்தாதிச் சிற்றிலக்கியமாகும். அந்தம் என்பது இறுதி; ஆதி என்பது முதல். ஆக, ஒரு பாடலின் இறுதிச் சொல்லை அடுத்த பாடலின் முதலில் அமைத்துப்பாடுவது அந்தாதியாகும்.

ஆசிரியர்

இதனை இயற்றியவர் அவிரோதி நாதர். இவரை அவிரோதி ஆழ்வார் என்றும் அழைப்பர். வைணவ சமயத்திலிருந்து மாறி, சமணக்கோட்பாட்டைப் பின்பற்றிய சமணர். நேமிநாதரின் சிறப்பில் தோய்ந்து பாடும் பாடல்கள் பக்திச் சுவையைச் சுவைக்க வைக்கின்றன.

நூற்பயன்

நூற்பயன் கூறும் போது ‘தீக்கொண்ட வல்வினை சேரார் சிவகதி சேர்பவரே’ அதாவது இந்த நூலைப் படிப்பவர்கள் தீமையை உடைய வலிய வினைகளைச் சேராமல் வீடுபேற்றை அடைவார்கள் என்பார். ‘அவிரோதி நாதர் அருளிய இந்த அந்தாதி நூலை மறவாதிருந்தால் துக்கமில்லை; தீய பாவங்கள் போகும்; சிவந்த தாமரைப் பூவில் வீற்றிருக்கும் திருமகள் சகல பாக்கியத்தையும் கொடுத்து ஆதரிப்பாள்’ என்றும் கூறுவார்.

இறைவனிடம் வேண்டுதல்

ஆன்மாவிலிருந்து வேறான (முற்றிலும் புறம்பான) ஒரு கடவுளைச் சமண சமயம் ஏற்பதில்லை. விடுதலை அடைந்த எல்லா ஆன்மாக்களும் கடவுள் தன்மையை அடைந்ததாகக் கருதப்படும். பற்றினைப் போக்கி, வினைகளைக் களைந்து, பிறப்பினை நீக்கிய ஆன்மாவே சமணர் வணங்கும் தெய்வம். உள்ளத்தில் அவர் நிறைந்திருக்க வேண்டுகிறார் நூலாசிரியர்.

பிற மதக் கண்டனமும் இதில் இடம்பெறுகிறது. பக்தி இயக்கக் காலத்திலும் அதன் பின்னரும் ஒவ்வொரு சமயமும், தத்தம் இறைவனை வழிபட்டார் யாராயினும் அவர் போற்றப்படத்தக்கார் என்றும், உயர் குலத்தவராயினும் தம் இறைவனைப் பணியாதார் இழிந்தவர் என்றும் கருதும் போக்கும் நிலவியது. அந்தப் போக்கினை இங்கும் காண்கிறோம்.

4.1.4 அப்பாண்டை நாதர் உலா தலைவனுடைய பவனியைக் கண்டு நங்கையர் காதல் கொண்ட நிகழ்ச்சியைப் பொருளாகக் கொண்டு தோன்றுவதே உலா இலக்கியம். தெய்வத் தலைவர் மீதும் மானுடத் தலைவர் மீதும் இது பாடப்பெறும். உலா கலிவெண்பாவினால் அமைக்கப் பெறும்.

பாட்டுடைத் தலைவன்

திருநறுங்கொண்டை என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள பார்சுவநாதரை துதித்துப்பாடுவது. அவரையே அப்பாண்ட நாதர் என வழங்குவர். இவர் 23-ஆவது தீர்த்தங்கரராவார். முக்குடைக்கீழ் விளங்கும் தேவாதி தேவன் என்றும் மன்மதனை வென்று, காமம் முதலிய பகைகளைக் கடிந்தவர் என்றும் போற்றப்படுகிறார்.

ஆசிரியரும் காலமும்

இதன் ஆசிரியர் அனந்த விசயர். இவர் 16 அல்லது 17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்பர்.

மரபு மாற்றம்

ஏழு பருவ மகளிரும் உலாத்தலைவர் மீது காதல் கொண்டு தம் வயமிழந்து, விரகதாபமுற்றுப் பேசுவதாக உள்ள நிலைமையே பிற உலா நூல்களில் காணப்பெறும். ஆனால் காமனைக் கடிந்த பெருமானாகிய பார்சுவநாதர் திருவுலாவைக் கண்டு பேதை முதலாய் ஏழு பருவ மங்கையர் (பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்) காதல் வயப்பட்டு மொழியும் பேச்சாய் இல்லை. மாறாக அப்பாண்டை நாதரைத் தரிசித்த ஏழு பருவ மங்கையரும் அவருடைய தெய்வீக ஒளியில் ஈடுபட்டு அவருடைய பெருமையைப் பலவாறு போற்றித் துதிக்க முற்பட்டு விடுகிறார்கள். பெதும்பைப் பருவப்பெண்ணின் நிலையை அறியச் சில பாடல் வரிகள்:

கழங்காடல் கைம்மறுத்துக் காரிகையார் கூடி

வழங்கும் அருட்கலை மன்னி-கொழுங்கன்றி

பூணாரம் தானாடப் பொற்கிண் கிணியார்ப்பச்

சேணாடர் ஏத்துஞ் சிலம்பு அலம்பத் – தோணுந்

திருநுதல் முத்து அரும்பத் தேரெதிரே சென்று

இருகரமும் கூப்பி இறைஞ்சிப் பரவவே

(கண்ணி : 335-338)

(இதன் பொருள்: பெதும்பைப் பருவத்தினளான (வயது 7 முதல் 13 வரை) அப்பெண் கழங்காடுதலைக் கைவிட்டு, சிலம்பு ஒலிக்க, சிறுநுதல் வியர்க்க, தோழியரோடும் ஓடிவந்து, தெருவில் தேர் உலாவைக் கண்டு, வணங்கி மனம் நெகிழ்ந்து போற்ற…)

எனவே இங்கு உலா இலக்கியம் பக்தி இலக்கியமாகப் பரிணமித்துள்ளது எனலாம். உலா இலக்கிய மரபில் இது புதுமை விளைத்துள்ள ஓர் இலக்கியமாகும்.

நூலின் சிறப்பு

உலா நூல்களிலேயே 620 கண்ணிகளில் அமைந்த பெரிய நூல் இது. சமண சமயப் போக்கிற்கு ஏற்பப் பஞ்சகல்யாணம் விளக்கப்படுகிறது. பஞ்சகல்யாணம் என்பது,

தீர்த்தங்கரர் கர்ப்பத்தில் உருவாகும்போது – கர்ப்ப கல்யாணம்

குழந்தையாய்ப் பிறக்கும்போது – ஜன்ம கல்யாணம்

துறவு மேற்கொள்ளும்போது – தப கல்யாணம்

தவத்தைச் செய்யும்போது – ஞான கல்யாணம்

ஆன்மவிடுதலை அடையும்போது – நிர்வாண கல்யாணம்

இவை, தேவர்களின் தலைவனான இந்திரன் பிற தேவர்களோடு சேர்ந்து தீர்த்தங்கரராக ஆவோர்க்குச் செய்வன ஆகும்.

4.1.5 திருப்பாமாலை இந்நூல் 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. திருப்பாமாலையின் முதற்பாடல் சமணர் தம் கருத்தை முற்றுமாகப் புதுமைப்போக்கில் காட்டுகிறது. அதாவது இதுவரை மும்மணிகளின் (நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகியன) வழியில் சென்றாலல்லது வீடுபேறு கிடைக்காதென உறுதிபடக் கூறிய சமணம், இதில் பக்திவழியில் வீடுபேறு பெற முயல்வதாக அமைந்துள்ளது. இந்த மாற்றம் பக்தி இயக்கத்தின் தாக்கத்தால் நேர்ந்திருக்கலாம். அதன் விளைவாக மும்மணிக்குக் (அறநெறிக்கு) கொடுத்த முக்கியத்துவம் பக்தி நெறிக்குக் கொடுக்கத் தோன்றியிருக்கலாம். அதனால் சித்த பக்தி, சைத்திய பக்தி, பஞ்சகுரு பக்தி, ஆருகத பக்தி, நந்தீசுவர பக்தி எனப் பாடல்கள் காணப்படுகின்றன.

நூற்பயன்

அருக சரண அகவல் என்ற பகுதி, சமண சமய நெறியில் நின்றால் தேவரும் வணங்கத்தக்க உயர்கதி கிடைக்குமென்ற நம்பிக்கையைக் குறிக்கிறது. அதாவது இறைவனைப் பாடி, வணங்கி, அக்கதியைப் பெற ஒருவர் முயல்வதாக ஒருபாடல் அமைந்துள்ளது. அவர் இறைவனாகிய அருகனது உரையை நம்பும் ஒருவராக இருக்க வேண்டும். இவ்வாறு கூறும் போக்கு, பக்தி இயக்கத்தின் தாக்கம் என்று கூறலாம்.

4.1.6 பிற சிற்றிலக்கிய நூல்கள் திருமேற்றிசை அந்தாதி திருநறுங்கொண்டையில் எழுந்தருளியுள்ள பார்சுவ நாதர் மீதான அந்தாதிப் பாடல். இவர் 23-ஆவது தீர்த்தங்கரர் என்பதை முன்பே பார்த்தோம்.

மேருமந்தரமாலை என்பது அம்மானைப் பாடலாகும். இதுவும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. நல்லூரில் வாழ்ந்த ஸ்ரீவாமனந்தாச்சாரியார் எழுதியது. நல்லூர் வடார்க்காடு மாவட்டத்தில் உள்ளது. இந்த அம்மானைப் பாடல் மேருமந்தரப் புராணத்தின் சுருக்கம்போல் அமைந்துள்ளது. அதனால் மேருமந்தர புராணத்தில் உள்ள துதிகள், சமயத் தத்துவங்கள், தர்ம விளக்கங்கள் ஆகியவற்றை விடுத்துக் கதைப்போக்கை மட்டும் கூறுகிறது.

ஜினேந்திர ஞானத் திருப்புகழ் நூறு சந்தப் பாடல்களைக் கொண்டுள்ளது. பெண்ணாசையை எடுத்துக் கூறி, அதிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று ஆசிரியர் இறைவனை வேண்டுகிறார்.

அருங்கலச் செப்பு

சமணசமயக் கோட்பாடுகளை உணர்த்தும் நூல். சமண சமயத்துச் சாவகர்களின் (இல்லறத்தாரின்) ஒழுக்கங்களைப் பற்றிக் கூறும் நூலாகும். குறள்வெண்பா யாப்பினால் ஆக்கப்பட்டது.

வீடுபேற்றை அடையும் வழியை மிக எளிய நடையில் தெளிவாகக் கூறுகிறது இந்நூல். இதன் ஆசிரியர் பெயரோ, காலமோ அறிய இயலவில்லை.

இதற்கு முதல் நூலாக அமைந்தது ஸ்ரீ சமந்த பத்ராசாரியாரால் இயற்றப்பட்ட இரத்ன கரண்டகம் என்று கூறுவர். இரத்ன கரண்டகத்தில் கூறியிருப்பவையே இங்கும் கூறியிருப்பதால் அதன் வழிநூல் எனலாம்.

திருவெம்பாவை

திருவெம்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, ஆண்டாளின் திருப்பாவை ஆகியவற்றைக் கண்டு அதைப் போன்றே இயற்றப்பட்டிருக்கலாம். திருவெம்பாவை அவிரோதி நாதரால் இயற்றப்பட்டதாகும். அருகனைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. 20 பாடல்கள் மயிலைநாதர் மேல் பாடப்பட்டுள்ளன. மயிலைநாதர் என்பது மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள நேமிநாதரைக் குறிக்கிறது. சான்றாக ஒரு பாடலைக் காணலாமா?

மகரக் குழலாட மாணிக்கப் பூணாடச்

சிகரக் குழலாட செறிவண் டிசைபாட

முகரப் புனலாடி முக்குடையான் தாள்பாடி

விகலக் கவிபாடி வேதப் பொருள்பாடிச்

சகல சிநத் திறைவன் தன்னனைய தாள்பாடிப்

புகலாம் பதியருகன் பொற்றா மரைபாடி

இகலார்ந் தெனையளித்த வெற்கையான் தாள்பாடி

பகரும் பிறப்பறவே பாடேலோ ரெம்பாவாய் (14)

(சிநன் = ஜினன், முகரம் = சங்கு, விகலக் கவி = குறையற்ற கவி, வெற்கையான் = வெற்றியுடைவன்)

ஆதிநாதர் பிள்ளைத் தமிழ்

இது பத்துப் பருவங்களையும் 100 பாடல்களையும் உடையது.

சீவசம்போதனை

இது, பல்வகைப் பாவால் இயன்ற, உரைநடைப் பகுதிகளையும் கொண்ட சித்தாந்த நூல். 550பாடல்களைக் கொண்டது. காலம் கி.பி.14-ஆம் நூற்றாண்டு. இப்படிப் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துத் தமிழுக்கு வளம் சேர்த்தனர் சமணப் பெரியோர்.

4.2 புராணங்கள்

தோற்றச்சூழல்

பக்தி இயக்கம் மக்களைக் கவர்ந்தபோது சிற்றிலக்கியங்கள் பல தோன்றின. தங்கள் சமயம் அழிந்துவிடாமல் காத்திட, சைவ வைணவப் பெரியார்கள் போல, சமணப் பெரியார்களும் புராணங்களை இயற்றலாயினர்.

சமூகத்தில் அவ்வப்போது நிகழ்கின்ற நிகழ்ச்சிகள் மாறுதலை ஏற்படுத்தும் போது, ஒன்று அவற்றை எதிர்த்துப் போராடலாம். அன்றி இணைந்து நின்று உறவாடலாம். காலச்சூழலுக்கு ஏற்ப, மாற்றங்களுக்குத் தகுந்தபடி இலக்கியங்களைப் படைப்பதே உறவை நிலைக்கச் செய்யும். அத்துடன் அவ்விலக்கியங்கள் உயிர்த்துடிப்போடு மக்களிடையே தன் இருப்பை உணர்த்த முடியும். இதனை மனத்தில் கொண்டே அற இலக்கியங்கள், காப்பியங்கள், இலக்கணங்கள் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்திய சமணர் காலத்திற்கேற்பத் தங்களை மாற்றிக்கொண்டனர். அந்த மாற்றத்தின் விளைவால் தோன்றியவையே புராண வகைகள்.

4.2.1 ஸ்ரீபுராணம் சமணர் வடமொழியில் மகாபுராணம் இயற்றினர். அதில் அறுபத்து மூவர் சரிதம் கூறப்பட்டுள்ளது. அதைத் தழுவித் தமிழில் மணிப்பிரவாள நடையில் வடமொழியும் தென்மொழியும் ஆகிய இருமொழிச் சொற்கள் விரவி வரும் நடையில் ஸ்ரீபுராணம் எழுதப்பெற்றது. வடமொழியுந் தென்மொழியும் ஆகிய இருமொழிச் சொற்கள் விரவிவரும், உரைநடை தமிழிற்குப் புதிய போக்கு. கிறித்துவர்கள் வருகையால் உரைநடை பெரிதும் வளர்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆயினும் அவர்களுக்கும் முன்னோடியாகத் தமிழையும் வடமொழியையும் கலந்து மணிப்பிரவாள நடையில் எழுதிய ஸ்ரீபுராணம் உரைநடை நூலின் விதையெனலாம். அதற்கு முன்னாலும் உரைநடை இருந்திருக்கிறது என்றாலும் நூல் முழுமையும் உரைநடையில் அமைந்தது என்பதால் ஸ்ரீபுராணத்திற்கு ஒரு தனியிடம் உண்டு எனலாம். இம்மணிப்பிரவாள நடையை ஒட்டி வைணவ ஆசிரியர்களும் எழுத ஆரம்பித்தனர்.

அறுபத்துமூவர் வரலாறு

குணபத்திராச்சாரியார் ஒன்பதாம் நூற்றாண்டில் இயற்றிய 63 பெரியோர்களின் வரலாற்றைக் கூறும் உத்தரபுராணத்தைப் பின்பற்றி மண்டல புருஷர் இயற்றிய நூல் ஸ்ரீபுராணம். இதைத் தழுவல் நூல் எனவும் கூறலாம். இதன் காலம் 12-ஆம் நூற்றாண்டு எனலாம்.

சமண சமயத்தில் 63 பெரியோர்களாகக் கருதப்படுவோர்.

தீர்த்தங்கரர்                                                            24

சக்கரவர்த்திகள்                                                       12

வாசுதேவர்                                                               9

பிரதி வாசுதேவர்                                                        9

பலதேவர்                                                                   9

—-

63

—-

மேலே குறிப்பிட்ட அறுபத்து மூவரும் வடமொழியில் திரிசஷ்டி சலாகா புருஷர் என வழங்கப்படுகிறார்கள். இவர்களைப் பற்றிய இந்நூல் திரிசஷ்டி சலாகா புருஷர் சரிதம் என வழங்கப்படுகிறது. இதுவே அறுபத்துமூன்று பெரியோர்களின் வரலாறாகும்.

ஸ்ரீபுராணம் சமணர் போற்றும் புனித நூலாகும். சமணர் இல்லங்களில் இதைப் பாராயணம் செய்யும் பழக்கமும் உண்டு.

4.2.2 மேருமந்தர புராணம் நீலகேசிக்கு உரை எழுதிய வாமனமுனிவரால் இயற்றப்பட்டது மேருமந்தர புராணம். இவர் 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

மேரு, மந்தரர் என்ற இருவரின் முற்பிறப்பு வரலாறும் அவர்கள் முக்தி அடைந்ததும் விளக்கப்படுகின்றன. இருவரும் விமல தீர்த்தங்கரரின் கணதரர்கள். (சித்த பதவி என்பது இறுதி நிலையாகிய நிர்வாண நிலை/ மோட்சம். சித்தபதவிக்கு முன் அரஹந்த பதவியை அடைந்த தீர்த்தங்கரர்கள் சமவ சரணத்தில் அமர்ந்து மக்களுக்கு அறவுரை ஆற்றுவர். அவர் கூற எண்ணுவன வெல்லாம் ஒலியாக வெளிப்படும். அதற்கு திவ்யதொனி என்று பெயர். அவ்வாறு ஒலிவடிவில் கூறப்படுகின்ற அறவுரைகளைக் கணதரர் இருவர் பின்வரும் சந்ததியினர் பயன்பெற வேண்டுமென்று எழுதி வைப்பர். அதுவே ஆகமம் என்று வழங்கப்படும். ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் இரண்டு கணதரர்கள். அவர் அறவுரை வழங்கும் போது இப்பணியைச் செய்வர் என்பது சமணசமய மரபு.) இதற்கு முதல்நூல் வடமொழியில் எழுதப்பட்ட ஸ்ரீபுராணம். மேருமந்தர புராணம் 13 சருக்கங்களையும் 1405 பாடல்களையும் உடையது.

மையக்கருத்து

பிறவிகள் பலவுண்டு. இருவினைக்கேற்ப உயர்வுதாழ்வு ஏற்படும் என்பதை விளக்கிச் செல்லும். சஞ்சயந்த முனிவரை வித்யாதரன் ஒருவன் வீணாகத் துன்புறுத்த, அவர் சகோதரன் சயந்தன் அதனைப் பொறாமல் பெருங் கோபங்கொண்டபோது அதித்தியாபன் என்பவர் பழம்பிறப்புக் கூறி அவனைத் தடுக்கிறார். நல்வினையும் தீவினையும் பல பிறப்பிலும் தொடர்ந்து வருவதனைச் சங்கிலிபோல் பிணைத்துப் பல கதைகளாகக் கூறுவதே மேருமந்தரபுராணம்.

தான் செய்த வினைக்கு ஏற்ப ஒருவர்க்குப் பிறவிகள் தொடரும் என்று வினையின் ஆற்றலை எடுத்துரைப்பது இந்நூல் எனலாம். பிறவிகள் தொடர்வதைத் தடுக்க இரு வினைகளையும் ஒருவர் போக்கிக் கொள்ள வேண்டும். அதற்குத் துறவு மேற்கொண்டு தவத்தினை ஆற்றி, வினைகளை வென்று, வீடுபேற்றை அடையவேண்டும். அதுவே மனிதப் பிறவியின் குறிக்கோளாக வேண்டும் என்பதைச் சுட்டுகிறது மேருமந்தர புராணம்.

4.2.3 பிற புராணங்கள் நாரதசரிதை என்ற நூலிலிருந்தும் சாந்திபுராணம் என்ற நூலிலிருந்தும் சில செய்யுட்கள் புறத்திரட்டு என்னும் நூலில் காட்டப் பட்டுள்ளன. கன்னடத்தில் 9-ஆம் நூற்றாண்டில் 16-ஆம் தீர்த்தங்கரராகிய சாந்திநாதரைப் பற்றிக் கூற எழுந்தது போல் தமிழிலும் தோன்றிய நூலே சாந்திபுராணம். ஸ்ரீபுராணத்தில் நாரதன் கதை வருகிறது. அந்தக் கதையைக் கூறும் நூல் நாரதசரிதை.

சாந்திபுராணம், நாரத சரிதை இரண்டுமே இன்று கிடைக்கவில்லை.

4.3 பிற நூல்கள்

பல்வேறு துறைகளில் தம் பங்கை ஆற்றிய சமணர் கிளி விருத்தம், எலி விருத்தம், நரி விருத்தம் ஆகியவற்றையும் பாடியுள்ளனர். நரி விருத்தம் நிலையாமை பற்றிப் பேசுகிறது. திருத்தக்கதேவரால் இயற்றப்பட்டது. இவை தவிர கணிதம், சோதிடம் ஆகியன பற்றிய நூல்களையும் சமணச்சான்றோர் இயற்றியுள்ளனர்.

கணக்கதிகாரம் போன்ற நூல்கள் ஒரு சிலவே நம் கைக்குக் கிடைக்கின்றன. சோதிடத்தில் சினேந்திரன் மாலை என்ற நூல் கிடைக்கிறது. சமணர் தம் சோதிட அறிவை அறிய அது பயன்படுகிறது.

4.4 தொகுப்புரை

பழங்காலத்திலேயே தமிழ் மக்களோடு ஒட்டி உறவாடிய சமணச் சான்றோர் இலக்கணங்களையும் பெருங்காப்பியங்களையும் படைத்து, தமிழ்மொழியின் வளத்திற்குத் தொண்டாற்றினர். அறநூல்களைப் படைத்து வளமான வாழ்க்கை மேம்பாடு அடைய வழிவகை செய்தனர். மக்கள் உள்ளத்தைக் கவரும் நீண்ட கதைகள் மூலம் தங்கள் சமயக் கோட்பாடுகளைப் பொது அறமாக்கி உரமூட்டினர்.

காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப இலக்கிய வடிவம் மாறும் என்ற உண்மையைச் சான்றோர் உணர்ந்தவர்கள். புதியன படைப்பதில் சலிப்படையாதவர்கள். காலத் தேவையைக் கணக்கில் கொண்டு உழைக்கும் திறனும் முயற்சியும் உடையவர்கள். அதனால், சைவ வைணவச் சமயச் சான்றோர் புராணங்களை இயற்றிச் சமயத்திற்குத் தொண்டாற்றியது போல, சமணசமயச் சான்றோர்களும் புராணங்களை இயற்றினர். மேலும் சிற்றிலக்கியங்கள் தோன்ற ஆரம்பித்தபோது அந்தத் துறையில் தங்கள் பங்கைச் செலுத்தத் தவறவில்லை. பல்வேறு விதமான சிற்றிலக்கியங்களைப் படைத்து, சிற்றிலக்கியப் பரப்பை மேம்படுத்தினர். ஆயினும் காலத்தால் அழிந்தன சில; சமயப் பிணக்கால் மறைக்கப் பட்டனவும் மறக்கப்பட்டனவும் சில; இன்னும் ஓலைச் சுவடிகளிலேயே உறங்குவன சில. எனினும் கிடைத்திருக்கும் நூல்கள் சிற்றிலக்கியத் துறையில் அவர்கள் பதித்த சுவடுகளை அழுத்தமாகக் கூறிச் செல்கின்றன என்பது உண்மை.

பாடம் 5

பழந்தமிழ் நூல்களில் பௌத்தம்

5.0 பாட முன்னுரை

கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையிலான பழந்தமிழக வரலாற்றில் செல்வாக்குப் பெற்றிருந்த சமயங்கள் பல. அவற்றுள் பௌத்த சமயத்திற்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. ஆறாம் நூற்றாண்டு வரையிலான பழந்தமிழ் நூல்களை, சங்ககாலம், சங்கம் மருவிய காலம் என்று குறிப்பிடப்படும் இரு காலகட்டங்களிலும் தோன்றிய நூல்கள் என்று பகுத்துக் கொள்ளலாம்.

இப்பாடத்தில் பௌத்த சமயத்தின் பொதுவான வளர்ச்சியையும், குறிப்பாகத் தமிழகத்தில் வேரூன்றிச் சில நூற்றாண்டுகள் செல்வாக்குப் பெற்று விளங்கியபின் தன் சிறப்பினை இழந்த சூழலையும் படிக்கவுள்ளோம். அத்துடன் பழந்தமிழ் நூல்களில் பௌத்த சமயம் பெற்றிருந்த செல்வாக்கைப் புலப்படுத்தும் குறிப்புகளையும் அறிய உள்ளோம்.

5.1 பௌத்த சமயமும் அதன் வளர்ச்சியும்

பௌத்த சமயம் என்று எதை அழைக்கிறோம்?

அரச வம்சத்தைச் சார்ந்த சித்தார்த்தர் என்பவர் தவத்தினை ஆற்றி ஞானம் பெற்று, புத்தர் என்று வழங்கப்பட்டார். புத்தர் மக்களுக்கு அறிவுறுத்திய அறவுரைகள் பௌத்த நெறியாயிற்று. அந்நெறியைப் பின்பற்றியோர் பௌத்தர் எனப்பட்டனர். அவர்தம் சமயம் பௌத்த சமயம் என வழங்கப்படலாயிற்று. பௌத்த சமயம் வடக்கே தோன்றி வளர்ந்ததாயினும் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் பரவி, சிறப்புப் பெற்றது. இந்தியாவில் மட்டுமன்றி இந்தியாவிற்கு வெளியிலும் பரவிய பெருமையை உடையது அது.

5.1.1 அசோகரின் பங்களிப்பு பௌத்த சமயம் பல்வேறு இடங்களில் வேரூன்ற முக்கியக் காரணமாக அமைந்தவர் அசோக மன்னர். வடக்கே தோன்றிய பௌத்த சமயம் இந்தியாவின் பல இடங்களிலும் பரவத் தொடங்கியது. தென்னிந்தியப் பகுதிகளிலும் அது வேரூன்றத் துவங்கியது. அது யார் காலத்தில் நிகழ்ந்தது? மௌரிய மன்னர்களுள் சிறந்தவராகிய அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் நிகழ்ந்தது என வரலாறு குறிப்பிடுகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஏறக்குறைய இந்தியா முழுமையும் ஒரு குடைக்கீழ் வைத்து ஆண்ட சிறப்புக்குரியவர் அசோகர். புத்தரின் அறநெறிகளில் மனத்தைப் பறிகொடுத்த அசோகர் பௌத்த சமயத்தைத் தழுவிய மாமன்னராவர். அவர் பௌத்த சமயத்தைச் சார்ந்ததோடு இந்தியாவிலும் அதற்கு அப்பாற்பட்ட நாடுகளிலும் பௌத்த சமயத்தைப் பரவச் செய்த பெருமைக்கும் உரியவர். அசோகரின் கல்வெட்டுச் சாசனமும் இச்செய்தியை உறுதி செய்கிறது. தமிழகத்தில் பௌத்த சமயம் கால்கொள்ளவும் அசோகமன்னரின் செயல்பாடுகளே காரணம் என்பதை அவர்தம் கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன.

பௌத்த சமய மாநாடு

பாடலிபுரத்தில் (அசோக மன்னர் ஆட்சி செய்த மௌரியப் பேரரசின் தலைநகரம் பாடலிபுரம்) அசோக மாமன்னரின் ஆதரவில் (மூன்றாவது) பௌத்த மாநாடு நடந்தது. அது மொக்கல புத்திஸ்ஸ என்னும் பௌத்தத் துறவியின் தலைமையில் நடந்தது என்று இலங்கை நூல்களாகிய தீபவம்சம், மகாவம்சம் ஆகியவை குறிப்பிடுகின்றன. அம்மாநாடு ஒன்பது திங்கள் (திங்கள் என்பது மாதத்தைக் குறிக்கும்) நடந்தது என்றும் அவை குறிப்பிடுகின்றன.

5.1.2 மகிந்தரின் சமயப்பணி அசோகர் பௌத்த சமயத்தைப் பரப்பப் பல்வேறு நாடுகளுக்குப் பல பௌத்தத் துறவிகளை அனுப்பிய செய்தியைப் பார்த்தோம். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களுள் அசோக மன்னரின் மகனாகிய மகிந்தர் என்பவர் இதே நோக்கத்திற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டார். இதை மேற்கூறிய தீபவம்சம், மகாவம்சம் ஆகிய நூல்கள் குறிக்கின்றன. மகிந்தர் அசோகரின் தம்பி என்று இந்திய நூல்கள் கூறுகின்றன. உறவுமுறை எப்படியிருந்தாலும் பௌத்த சமயத்தைப் பரப்ப மகிந்தர் அசோகரால் அனுப்பப்பட்டார் என்பது உறுதியாகிறது.

மகிந்தருடன் ஐந்து பிக்குகள் (பிக்கு என்பது பௌத்தத் துறவியைக் குறிக்கும்) இலங்கைக்குச் சென்று பௌத்த சமயத்தைப் பரவச் செய்ததாகவும் இலங்கை நூல்கள் குறிப்பிடுகின்றன. இலங்கைக்குச் சென்ற பிக்குகளில் ஒருவர் சாமனர சமணர். இவர் அசோக மாமன்னரின் பெண்வயிற்றுப் பேரன் என்று வரலாறு குறிப்பிடுகிறது. இவ்வாறு மதத்தைப் பரப்ப இலங்கைக்குச் சென்ற பிக்குகள் எப்பொழுது சென்றார்கள் என்ற வினா நம்முள் எழுவது இயல்பே. கி.மு.250-இல் இலங்கைக்குச் சென்றதாக ஆய்வாளர் கணிக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கும் இந்தக் காலக்கட்டத்தில்தான் பௌத்த சமயம் வந்திருக்க வேண்டுமென்றும் ஆய்வாளர் குறிப்பிடுவர்.

5.1.3 அரிட்டரின் பணி மகிந்தர் இலங்கையில் பௌத்த சமயத்தைப் பரப்பியபோது இலங்கை அரசரின் மாமனாராகிய அரிட்டர் என்பவர் பௌத்த சமயத்தைத் தழுவியதோடு பௌத்தத் துறவியாகவும் மாறினார். இலங்கையில் பௌத்த சமயம் பரவ அரிட்டர் மகிந்தருக்குப் பெருமளவு உதவினார் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. பின்னர் இவர்கள் இருவரும் தமிழ்நாட்டிற்கு வந்து பௌத்த சமயத்தைப் பரப்பியிருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இப்படிக் குறிப்பிடச் சான்று ஏதேனும் இருக்கவேண்டுமல்லவா? தமிழகத்தில் மதுரை மாநகரம் பழம்பெரும் மூதுராகும். அங்குச் சில குகைகள் காணப்படுகின்றன. அவை பௌத்தத் துறவிகள் படுத்து உறங்குவதற்காகப் பாறையில் செதுக்கப்பட்ட படுக்கைகளாகும். அவற்றுக்குக் கீழ் சில எழுத்துகள் காணப்படுகின்றன. குகைகள் பௌத்தத் துறவிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட குகைகள் போலவே உள்ளன. குகைகளில் காணப்படும் எழுத்துகள் அசோகர் காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களில் காணப்படும் பிராமி எழுத்துகளை ஒத்திருப்பதால் அவை கி.மு.3-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று ஆராய்ச்சி வல்லுநர் கூறுகின்றனர். தவிர, பாண்டிய நாட்டுக் குகைகளில் ஒன்று அரிட்டா பட்டி என்னும் கிராமத்துக்கருகில் உள்ளது. இந்தப் பெயர் மகிந்தருக்கு உதவியாக இருந்த அரிட்டர் என்னும் துறவியை நினைவூட்டுகிறது. ஒருவேளை அவர் தம் சீடர்களுடன் அங்கு வாழ்ந்திருக்கக் கூடும். அதனால் அந்த ஊர் அரிட்டாபட்டி என்று வழங்கியிருக்கலாம் என்பர்.

5.1.4 தமிழகத்தில் பௌத்தம் பௌத்த சமயம் உலகெங்கும் பரவக் காரணமாக இருந்தது சங்கம் என்று குறிப்பிடப்படும் பௌத்த பிக்குகளின் கூட்டம் ஆகும். இக்கூட்டத்தின் உறுப்பினர்கள் தேரர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் மக்களிடையே சென்று பௌத்த நெறிகளைப் பரப்புவதில் மிகுந்த வெற்றி பெற்றனர். தமிழகத்திலும் இத்தகைய பௌத்தத் துறவியரால் பௌத்த சமய நெறிகள் மக்களிடையே பரப்பப்பட்டன.

பௌத்தத் துறவியர் பணி

தமிழகத்திற்கு வந்த பௌத்தத் துறவிகள் மக்களோடு நெருங்கிப் பழகித் தங்களின் உறவை நெருக்கமாக்கிக் கொண்டனர். அவர்தம் மொழியைக் கற்று, அவர்களோடு உறவாடினர். தவிர, தமிழகத்தில் ஆங்காங்கிருந்த அரசர், வணிகர், செல்வர் முதலானவர்களின் பொருளுதவி பெற்று, பௌத்த விகாரங்களையும் பௌத்தப் பள்ளிகளையும் நிறுவும் பணியை மேற்கொண்டனர்.

கல்வி மருத்துவப் பணிகள்

பௌத்த மடங்களில் துறவிகள் மருத்துவம் பயின்றதோடு மக்களுக்கு இலவசமாக மருந்தும் கொடுத்து உதவினர். பௌத்தப் பள்ளிகளில் கல்வி கற்பித்து வந்தனர். பௌத்த மடங்களில் பயில்வோர்க்கு புத்தரின் அறநெறிகள், புத்த ஜாதகக் கதைகள், புத்த சரித்திரம் ஆகியவற்றையும் கற்பித்தனர். புத்தரின் அற நெறிகள் திரிபிடகம் என வழங்கப்பட்டது. அவை புத்தரின் சீடர்களால் எழுதி வைக்கப்பட்டிருந்தன. மூன்று கூடைகளில் இருந்து கண்டெடுக்கப் பட்டதால், அவை திரிபிடகங்கள் என்று அழைக்கப்பட்டன. புத்த ஜாதகக் கதைகள் என்பது புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய கதைகளைக் குறிக்கும். புத்த சரித்திரம் புத்தரின் வரலாற்றைக் கூறுவது.

உண்டி கொடுக்கும் பணி

மேற்கூறியவற்றைத் தவிர, குருடர், செவிடர், முடவர் முதலானோர்க்கும் ஏழை எளியவர்க்கும் உணவு கொடுத்து உதவும் அறச்சாலைகளையும் அமைத்தனர். அதற்கு அரசர், செல்வர் முதலானோர் உதவியையும் பெற்றனர்.

வயிற்றுப் பசியைப் போக்க உணவையும் உடல்நோயைத் தீர்க்க மருந்தையும் அளிப்பவர்கள் யாராயினும் அவர்கள் மக்களின் மனங்களில் இடம்பெறுவது இயல்புதானே? தம் மனங்களில் இடம் பெறுவோர் கூறுகிற மொழிகளை மக்கள் மதிப்பதும் அவற்றைப் பின்பற்ற நினைப்பதும் மனித இயல்பல்லவா? அதனால் பௌத்தத் துறவியர்தம் செயல்பாடுகள் மக்களை வெகுவாய் ஈர்த்ததில் வியப்பேதுமில்லை. ஏராளமானோர் பௌத்த நெறிகளைப் பின்பற்றிப் பௌத்தர்களாயினர்.

இலக்கியப்பணி

பௌத்தத் துறவியர் ஆங்காங்கே சென்று மக்களுக்குப் புத்தரின் அறவுரைகளை விளக்கியதோடு அந்தந்த இடத்தின் மக்கள் பேசும் மொழியில் இலக்கியங்களைப் படைத்து பௌத்த நெறி ஆழமாகத் தன் சுவடுகளைப் பதிக்க இலக்கிய இலக்கணங்களையும் படைத்தனர். அதன் காரணமாக, பௌத்த சமயம் மேலோங்கியபோது மொழியும் வளம் பெற்றது; புதிய புதிய இலக்கிய வடிவங்களைக் கண்டது.

5.1.5 பௌத்த சமயம் தன் செல்வாக்கை இழந்தமை இந்திய மண்ணில் தோன்றி வளர்ந்த பௌத்த சமயம் செல்வாக்குடன் இந்தியாவில் மட்டுமன்றி வேறு பல நாடுகளிலும் பரவியிருந்த பெருமைக்குரியது. அத்தகைய சமயம் தமிழக மண்ணில் வளமோடு வாழ்ந்தமைக்கு வரலாற்றில் சான்றுகள் பல உள்ளன. ஆயினும் அப்படிப்பட்ட சமயம் தன் செல்வாக்கை மெல்ல மெல்ல இழக்க ஆரம்பித்ததின் காரணம் என்ன? வைதிக மதம், சமண மதம், ஆசீவகம் ஆகியன பௌத்த சமயத்தோடு போட்டியிட்டதோடு முரண்பட்டும் நின்றன. ஒன்றையொன்று வீழ்த்த முயன்றன. சண்டைகளும் பிணக்குகளும் பெருகின.

வைதிக மதத்தின் செயல்பாடு

வைதிக மதம் கி.பி. நான்காவது அல்லது ஐந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர் பல மாறுதல்களை ஏற்றுக் கொண்டது. பௌத்தர்களின் அடிப்படை அறமாகிய கொல்லாமையை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதுவரை யாகத்தில் உயிர்க்கொலையை அனுமதித்திருந்த வைதிக மதம் அதனை விலக்கிக்கொண்டது. பின்னர் புத்துயிர் பெற்று, பக்தி இயக்கத்தை மேற்கொண்டது. பக்தி இயக்கம் இனிய இசையாலும் இறைவன் நாமத்தைப் பன்முறை கூறுவதாலும் இறைவனை அடையமுடியுமென்றும் அத்துடன் மண்ணில் நல்லவண்ணம் வாழ அனைத்தையும் பெறமுடியுமென்றும் காட்டியதால் மக்களைப் பெரிதும் கவர்ந்தது. அதனால் வைதிகமதம் செல்வாக்குப் பெற்று மேலோங்கவும் மற்றவை தம் செல்வாக்கை இழக்கவும் நேர்ந்தன.

புறப்பகையும் அகப்பகையும்

புறப்பகையாக சமணம், வைதிக மதங்கள் அமைய, அகப் பகையாகப் பௌத்த சமயத்தில் தோன்றிய பெரும் உட்பிரிவுகள் அமைந்துவிட்டன. அப்பிரிவுகள் ஹீனயானம், மகாயானம் என்றழைக்கப்பட்டன. அவை தமக்குள்ளேயே போரிட்டுக் கொண்டதால் வலிமை குன்றிப் போயின. அதனால் புறப்பகையாக அமைந்த சமண, வைதிக மதங்களுடன் போரிடவோ போட்டியிடவோ இயலாமல் செல்வாக்கை இழந்தது பௌத்த சமயம்.

5.2 சங்க நூல்களில் பௌத்தம்

ஒரு காலத்தில் பௌத்த சமயம் வளம் பெற்று வாழ்ந்ததற்கான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. இனி அவற்றைச் சான்றுகளுடன் காணலாம்.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைச் சங்ககால நூல்கள் என வழங்குகிறோம். அவற்றுள் பௌத்த சமயம் பற்றிய குறிப்புகளைப் பார்க்கலாம்.

5.2.1 மதுரைக்காஞ்சி பழந்தமிழ் நூல்களில் தலைசிறந்து விளங்கும் பத்துப்பாட்டில் ஒன்று மதுரைக்காஞ்சி என்னும் நூலாகும். இது மாங்குடி மருதனார் என்ற நல்லிசைப் புலவரால் பாடப்பெற்றது. இது பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது பாடிய பாடலாகும்.

பழங்காலத் தமிழகத்தில் தமிழ்வேந்தர் ஆட்சியின் கீழ் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பினை அறியச் சிறந்த சான்றாகத் திகழ்வனவற்றுள் இம்மதுரைக் காஞ்சியும் ஒன்றாகும். மேற்கூறிய பாண்டியனின் ஆட்சியில் அமைந்த மதுரை நகரின் அழகும் மக்களின் பழக்க வழக்கங்களும் விரிவாகப் பேசப்படுகின்றன. மக்கள் பின்பற்றிய பல்வேறு சமயங்களின் சிறப்பும் புலவரால் பெரிதும் விளக்கமாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு குறிப்பிடப்படும் பல சமயங்களுள் பௌத்த சமயமும் சிறந்த இடத்தைப் பெறுகிறது.

பௌத்தப் பள்ளியின் வருணனை

மதுரை நகரின் சிறப்பையும் மன்னனின் பல்வேறுபட்ட சிறப்புகளையும் விரிவாகக் கூறிச் செல்லும் மாங்குடி மருதனார் சிவனுக்கும், மாயோன், முருகன் ஆகிய தெய்வங்களுக்கும் பூசைப் பொருள் தரும் பொருட்டு மாலைநேரத்தே முழங்கும் இசைக் கருவிகள் பற்றிக் குறிப்பிடுகிறார். அதன்பின் மதுரை மாநகரத்திலுள்ள ஏனைய பிற சமயங்களையும் விளக்கிச் செல்கிறார். அப்போது பௌத்தப் பள்ளியைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அக்குறிப்பு என்ன என்பதைப் பார்ப்போமா?

அழகிய ஒளிபொருந்திய ஆபரணங்களை அணிந்துள்ளனர் சிறுபிள்ளைகள். திருவிழாக் கூட்டத்தில் சிறுபிள்ளைகள் தங்களை விட்டுப் பிரிந்து போகாமல் இருக்கத் தாய்மார் தம் கைகளால் அவர்களை அணைத்துப் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் மீது கொண்ட விருப்பத்தாலும் அன்பாலும் அவ்வப்போது அவர்களைத் தம் உடலோடு அரவணைத்துக் கொள்கின்றனர். சிறுவர்களின் சிறிய கைகளைத் தம் கையால் பிடித்திருப்பதைப் புலவர், தாமரை மலர் தாமரை மொட்டினைத் தாங்கியிருப்பதுபோல் இருக்கிறது எனக் கூறுகிறார். எத்தகைய இனிய காட்சி! அழகு விளங்கப் பெண்கள் பலரும் பூசைக்கு வேண்டிய மலர், புகை முதலியவற்றோடு புத்தரை வழிபாடு செய்து, வாயால் புகழ்ந்து பாடுவதால் பௌத்தப்பள்ளி சிறந்து விளங்குகிறது என்பார். இக்கருத்தைக் கூறும் பாடலடிகளைக் காண்போமா?

திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை

ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கி

தாதணி தாமரைப்போது பிடித் தாங்குத்

தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்

காமர் கவனிய பேரிளம் பெண்டிர்

பூவினம் கையினர் தொழுவனர் பழிச்சிச்

சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும்

(மதுரைக்காஞ்சி: 461-467)

(மதாணி = குழந்தைகள் அணியும் ஆபரணம், பதக்கம்; குறுமாக்கள் = சிறுவர்; முயங்கி = கட்டியணைத்து; தாதணி = மகரந்தம் (தாது) சேர்ந்த; போது = மொட்டு; காமர் = விருப்பம்; கவினிய = அழகிய; பழிச்சி = போற்றி; கடவுட்பள்ளி = பௌத்தப் பள்ளி)

பௌத்த சமயப் பெண்கள் எத்துணை மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு புத்தரின் ஆலயத்திற்குச் சென்று வழிபடுகிறார்கள் என்பதை இவ்வரிகள் நமக்குக் காட்டுகின்றன. மேற்கூறிய காட்சியைக் கற்பனை செய்து பார்ப்பின், பௌத்த சமயத்தைத் தழுவிய மக்கள் எத்தகைய இயல்பான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். பழந்தமிழ்நாட்டில் பௌத்த சமயம் பரவியிருந்தமையும் சமயம் காரணமாக ஒருவரோடு ஒருவர் வேற்றுமையின்றி மக்கள் வாழ்ந்ததையும் இவ்வரிகள் நமக்கு விளக்குகின்றன அல்லவா?

5.2.2 எட்டுத்தொகை நூல்கள் எட்டுத் தொகை நூல்கள் சங்க நூல்களின் ஒரு தொகுதியாகும். இத்தொகுதியில் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகியவற்றில் சீத்தலைச் சாத்தனார் என்பாரின் பாடல்களும் நற்றிணையில் இளம்போதியார் என்பாரின் பாடலும் (72-ஆம் பாடல்) இடம்பெற்றுள்ளன.

போதி என்பது அரசமரத்தைக் குறிக்கிறது. அரசமரம் பௌத்த சமயத்தில் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் புத்தர் போதிமரத்தின் கீழ் அமர்ந்து பல ஆண்டுகள் தவம் செய்து ஞானம் பெற்றதால் பௌத்த சமயத்தவர் அரசமரத்தைப் புனிதமாகக் கருதிப் போற்றினர். அதனால் புத்தர் போதியார் என்று வழங்கப்பட்டார். அந்தப் பெயரைத் தாங்கியிருப்பதால் இளம்போதியார் பௌத்தராக இருக்கலாமென்று தோன்றுகிறது.

சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை என்னும் பௌத்த சமயக் காப்பியத்தைப் படைத்த பெரும்புலவர். பௌத்த சமயத்தைச் சார்ந்தவர். தொகை நூல்களில் மேற்கூறிய இரு புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றிருப்பதால் பௌத்த சமயத்தைச் சார்ந்தவர்கள் அத்தொகை நூல்கள் தொகுக்கப்படுவதற்கு முன் தமிழகத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதையும் பௌத்த சமயக் கருத்துகள் மக்களிடையே பரவியிருந்திருக்க வேண்டுமென்பதையும் அறிந்து கொள்ளலாம்.

5.3 சங்கம் மருவிய கால நூல்கள்

சங்ககாலத்திற்குப் பிற்பட்ட காலத்தை, சங்கம் மருவிய காலம் என்பர். சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி ஆகிய காப்பியங்கள் இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களாகும்.

5.3.1சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம் முதன்மையானது; குடிமக்கள் காப்பியமாகத் திகழ்வது. இக்காப்பியத்தில் காணப்படும் குறிப்புகள் சில பௌத்த சமயம் தமிழகத்தில் பெற்றிருந்த இடத்தை அறிந்து கொள்ளச் சான்றாகின்றன. அவற்றை இப்போது காணலாமா?

இந்திரவிழவூர் எடுத்த காதை என்னும் பகுதியில் புகார் நகரின் சிறப்பும் அவ்வூர் மக்கள் இந்திரவிழாக் கொண்டாடிய சிறப்பும் கூறப்படுகிறது. பல்வேறு வழிபாடுகளும் விழாக்களும் ஊர் முழுவதும் நிகழ்வதை விரிவாகப் பேசுகிறார் இளங்கோவடிகள். பிறவா யாக்கைப் பெரியோன் (சிவன்) முதல் வேறு வேறு கடவுளர் திருவிழா ஒரு பக்கம் சிறந்திருந்தது. மற்றொரு புறமோ அறவோர்களின் பள்ளியிலும் அறம்போற்றும் அறச்சாலைகளிலும் மதிற்புறத்தேயுள்ள புண்ணியத்தானங்களிலும் அறத்தினை உணர்ந்தோர் தருமம் உரைக்கும் செயல் சிறந்து நின்றது என்று கூறுகிறார்.

அறவோர் பள்ளி என்பது சமணப்பள்ளிகளையும் பௌத்தப் பள்ளிகளையும் குறிக்கும் என்றாலும் அறவோர் என்பது இங்கு பௌத்தத் துறவியரைக் குறிப்பிடுகிறது. பள்ளிகளெங்கும் தருமம் உரைக்கும் செயல் சிறந்து நின்றது என்ற குறிப்பின் வாயிலாக, பௌத்த சமயம் பெற்றிருந்த செல்வாக்கையும் அனைத்துச் சமயங்களும் மேலோங்கியிருந்த தன்மையையும் அறிந்து கொள்ளலாம். இக்குறிப்பை உணர்த்தும் வரிகள்:

அறவோர் பள்ளியும் அறன்ஓம்படையும்

புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்

திறவோர் உரைக்குஞ் செயல்சிறந்து ஒருபால்

(இந்திரவிழவூர் எடுத்தகாதை 5:179-181)

எல்லாச் சமயத்தாரும் வேறுபாடின்றி இணக்கத்துடன் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பதும் விழாக்காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து தத்தம் சமய நம்பிக்கை அடிப்படையில் செயல்களை மேற்கொண்டனர் என்பதும் தெளிவாகிறது.

இந்திர விகாரங்கள்

மற்றொரு சான்று: நாடுகாண் காதையில் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளோடு மதுரையை நோக்கிப் பயணம் மேற்கொண்டபோது, வழியில் பற்பல கோட்டங்களைக் கடந்து செல்கின்றனர். கோட்டம் என்றால் கோயில். அப்படிப் பல கோயில்களைக் காணும்போது அவற்றை வலம்வந்து கடந்து போகின்றனர். அவற்றுள் ஒன்று மணிவண்ணன் கோயில். ஆதிசேடனாகிய பாம்பணையில் அறிதுயில் துயிலும் மணிவண்ணன் கோயிலை வலம் செய்து தம் பயணத்தைத் தொடர்கின்றனர். அதன்பின் இந்திரவிகாரங்கள் ஏழினையும் முறையே தரிசனம் செய்து, அவற்றையும் கடந்து செல்கின்றனர். இந்திரவிகாரங்கள் எனப்படுவது பௌத்தசமயக் கோயில்களாகும். அக்கோயில்களின் சிறப்பைக் கூறவந்த இளங்கோவடிகள்

பணை ஐந்து ஓங்கிய பாசிலைப்போதி

அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி

அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும்

இந்திரவிகாரம் ஏழுடன் போகி

(நாடுகாண் காதை: 11-14)

(பணை = கிளை; பாசிலை = பசிய இலை; போதி = அரசமரம்; அந்தரசாரி = வானில் உலவும் சாரணர்)

என்கிறார். அதாவது, பெரிய கிளைகளையும் பசுமை நிறைந்த இலைகளையும் கொண்ட அரசமரத்தின் அழகிய நிழலில் அமர்ந்து புத்த தேவன் அற மொழிகளைக் கூறினார்; வானில் இயங்கும் சாரணர் (சிறு தெய்வங்கள்) அந்த அறமொழிகளை அனைவர்க்கும் எடுத்துரைக்கின்றனர்; அவ்வாறு அவர்கள் கூறும் இடங்கள் இந்திரவிகாரங்கள் என்று அழைக்கப்பட்டன; அப்படிப்பட்ட இந்திர விகாரங்கள் ஏழினைக் கடந்து சென்றார்கள் (அவர்கள்) என்பது இதன் பொருள். மேற்கூறிய குறிப்பு பௌத்த சமயம் பெற்றிருந்த செல்வாக்கை நன்கு உணர்த்தும்

5.3.2மணிமேகலையும் குண்டலகேசியும் ஐம்பெருங்காப்பியங்களில் மணிமேகலையும் குண்டலகேசியும் பௌத்த சமயக் காப்பியங்களாகும். பௌத்த சமயக் கோட்பாடுகளைப் பரப்பவே இயற்றப்பட்ட காப்பியங்கள். இவற்றை ‘பௌத்த சமயக் காப்பியங்களும் பிறவும்’ என்ற பாடத்தில் விரிவாகப் பார்க்கலாம். இவ்விரு காப்பியங்களும் தமிழ்ச் சமூகத்தில் பௌத்த சமயம் வேரூன்றி இருந்தமைக்கான முக்கியச் சான்றுகளாகும்.

5.4 பிற சான்றுகள்

பௌத்த சமயம் தமிழகத்தில் சிறந்து விளங்கியமையை வேறு சில சான்றுகளும் உறுதிசெய்கின்றன.

இளம்போதியார், சீத்தலைச்சாத்தனார் போன்ற புலவர்கள் வாழ்ந்தமையும், அறவண அடிகள் போன்ற அறச்சான்றோர் இருந்தமையும், தருமபாலர் போன்ற துறவியர் கல்வியாளராகப் புகழ்பெற்றிருந்தமையும், புத்தமித்திரர், பெருந்தேவனார் போன்ற படைப்பாளர்கள் சிறப்புப் பெற்றிருந்தமையும் பௌத்த சமயத்தின் செல்வாக்கினை எடுத்துக் காட்டுகின்றன. தவிர, தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினம், நாகைப்பட்டினம், காஞ்சிபுரம், மதுரை, திருப்பாதிரிப் புலியூர், பூதமங்கலம் போன்ற பழம்பெரு நகரங்களில் பௌத்த சமயம் மேலோங்கியிருந்ததை இலக்கியங்கள் மூலமும் ஆங்காங்குக் கிடைக்கின்ற சிலைகள், சாசனங்கள், கல்வெட்டுகள் ஆகியன மூலமும் அறிந்து கொள்ளலாம்.

இவையனைத்தும் பௌத்தம் பெற்ற செல்வாக்கை எடுத்துக் காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை.

5.5 தொகுப்புரை

இந்தியாவில் பல்வேறு சமயங்களும் தங்கள் தங்கள் கோட்பாட்டின் படி பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. அவற்றுள் சில இந்த நாட்டின் சமயங்கள். சில, பிற நாட்டிலிருந்து வந்த சமயங்கள்.

சமணமும் பௌத்தமும் வடக்கிலிருந்து வந்த சமயங்கள். சமணம் பௌத்தத்திற்கும் பல நூற்றாண்டுகள் முந்தையது. கௌதம புத்தரும் சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரராகிய மகாவீரரும் சமகாலத்தவர்.

இங்கு இருந்த வைதிக சமயமும் வடக்கிலிருந்து வந்த சமண, பௌத்த சமயங்களும் தங்கள் தங்கள் சமயக் கோட்பாடுகளைப் பரப்ப இலக்கியங்களைக் கருவியாக்கிக் கொண்டன. அதன் விளைவாகப் புதிய படைப்புகள் தோன்றின. பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் பௌத்தர்கள் சிறப்பாக வாழ்ந்ததற்குக் குறிப்புகள் கிடைக்கின்றன. எட்டுத்தொகை நூல்களிலும் பௌத்தச் சான்றோர் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை மட்டுமன்றி ஆங்காங்குக் கட்டப்பெற்றுள்ள பௌத்த விகாரங்கள், பள்ளிகள் ஆகியவையும் அவர்களின் இருப்பை எடுத்துரைக்கின்றன.

பாடம் 6

பௌத்தத்தமிழ்க் காப்பியங்களும் பிறவும்

6.0 பாட முன்னுரை

சென்ற பாடத்தில் பௌத்தம் தமிழகத்தில் கால் பதித்து, வளர்ச்சி பெற்று மேம்பட்டிருந்ததைப் பார்த்தோம். இப்பாடத்தில் பௌத்த சமயக் காப்பியங்களான மணிமேகலை, குண்டலகேசி ஆகியவை பற்றியும் வீரசோழியம் என்ற இலக்கண நூலைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

பௌத்த சமயத்தினர் எழுதிய நூல்களுள் சில காலத்தால் மறைந்து போயின. நமக்குக் கிடைத்த நூல்களிலும் மணிமேகலைக் காப்பியம் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளது. மணிமேகலை இல்லையென்றால் தமிழ் இலக்கியத்தில் பௌத்த சமயத்தைப் பற்றிய காப்பியமே இல்லாமல் போயிருக்கும். பௌத்தர்களின் தொண்டும் கணக்கில் வராமல் தமிழின் இழப்பைக் கூட அறிய முடியாமல் போயிருக்கும். மற்றொரு காப்பியமாகிய குண்டலகேசியும் பௌத்த சமயக் காப்பியம்தான் என்றாலும் அதுவும் முழுமையாகக் கிடைக்காமல் போனது தமிழுக்கு நேர்ந்த இழப்பு என்பதை மறுக்க இயலாது.

‘பௌத்தத் தமிழ்க் காப்பியங்களும் பிறநூல்களும்’ என்ற இந்தப் பாடத்தில் பௌத்த சமயக் காப்பியங்கள் காட்டும் பௌத்த சமயக் கோட்பாடுகளையும் அந்தச் சமயத்தைச் சார்ந்த பிற நூல்களைப் பற்றிய அறிமுகத்தையும் அறிந்து கொள்ளப் போகிறோம்.

இனிப் பாடத்திற்குப் போவோமா?

6.1 மணிமேகலை

இது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று என்பதை முன்னரே பார்த்தோம். இப்போது மணிமேகலையைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். இதுவே தமிழில் எழுந்த முதல் பௌத்தக் காப்பியம். மணிமேகலையைப் பற்றிய சில சிந்தனைகள்……

நூலாசிரியர்

மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையை இயற்றினார். கண்ணகியின் கதையை இவரே சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகளுக்குக் கூறியதாகச் சிலப்பதிகாரத்திலேயே குறிப்புக் காணப்படுகிறது. இவருக்கிருந்த தமிழ் இலக்கியத் திறனும் பௌத்த சமயத் தத்துவங்களில் கொண்டிருந்த புலமையும் ஈடுபாடும் இந்நூலிலிருந்து புலனாகின்றன. உலகில் பசிப்பிணி அறவேண்டும் என்ற உயரிய நோக்குடன் மானிட நேயமும் பெண்ணின் பெருமையும் விளங்கும்படி காப்பியம் படைத்த பெருமைக்குரியவர் சாத்தனார்.

6.1.1 கதை மாந்தர்கள் மணிமேகலைக் காப்பியத்தின் கதையை நீங்கள் ‘காப்பியங்கள்’ என்னும் பாடப்பகுதியில் படித்திருப்பீர்கள். எனவே இந்தப் பாடத்தில் வரும் பகுதிகளில் தோன்றுகின்ற கதை மாந்தர்களைப் பற்றிய அறிமுகத்தை இங்கே காணலாம்.

மணிமேகலை        காப்பியத் தலைவி. பௌத்தத் துறவியாகி மக்களின் பசிப்பிணி நீக்கிச் சமயத் தொண்டாற்றியவள்.

மாதவி

மணிமேகலையின் தாய். கணவன் கோவலன் கொலையுண்ட பிறகு பௌத்த சமயத் துறவியானாள். மகளையும் அதில் ஈடுபடுத்தினாள்.

சித்திராபதி

மாதவியின் தாய்; மணிமேகலையை, மன்னன் மகன் உதயகுமரனோடு இணைத்து வைக்க முயன்றாள்.

உதயகுமரன்

மன்னன் மகன். மணிமேகலையின்பால் காதல் கொண்டவன். எப்படியேனும் அவளை அடையத் துடித்தவன்.

சுதமதி

மணிமேகலையின் தோழி

சங்க தருமன்

பௌத்தத் துறவி

மணிமேகலா தெய்வம்

மணிபல்லவம் என்னும் தீவில் வாழும் ஒரு தெய்வமகள். கோவலன் இந்தத் தெய்வத்தின் பெயரையே தன் மகளுக்குச் சூட்டினான். இந்தத் தெய்வம்தான் மணிமேகலைக்குப் பலவகைகளில் உதவி செய்தது.

தீவதிலகை

இரத்தின தீவகம் என்னும் தீவில் இருந்த பதும பீடத்தின் காவல் தெய்வம். பல வகைகளில் மணிமேகலைக்கு உதவியது.

ஆபுத்திரன்

கருணை மிகுந்தவன். மக்களின் பசிப்பிணியைத் தீர்ப்பதற்காக அமுதசுரபியைப் பெற்றவன். பிறகு அதை ஒரு பொய்கையில் விட்டுச் சென்றான். அதுவே பின்னர் மணிமேகலையின் கைக்கு வந்தது.

ஆதிரை

மணிமேகலை தான் பெற்ற அமுதசுரபியில் முதல் முதலாகப் பிச்சையேற்றது இந்தக்

கற்புக்கரசியிடம்தான்.

சாதுவன்

ஆதிரையின் கணவன். மரக்கலம் உடைந்து நாகர் தீவில் கரையேறி அம்மக்களுக்கு அறிவுரை கூறியவன்.

அறவண அடிகள்

பௌத்தத்துறவி; சமய அறிஞர்; மணிமேகலைக்கு அறநெறி உணர்த்தியவர்; காஞ்சியில் வாழ்ந்தவர்.

கந்திற்பாவை

சக்கரவாளக் கோட்டத்தில் ஒரு தூணில் வாழும் காவல் தெய்வம்

காயசண்டிகை

கந்தர்வப் பெண். ஒரு முனிவரின் சாபத்தால் யானைத் தீ என்னும் பெரும்பசி நோய்க்கு ஆளானவள். மணிமேகலை அமுத சுரபியிலிருந்து உணவளித்ததும் அந்தச் சாபம் விலகியது. உதயகுமரனிடமிருந்து தப்புவதற்காக மணிமேகலை இந்தக் காயசண்டிகையின் உருவில் நடமாடினாள். இதையறிந்து பின் தொடர்ந்த உதயகுமரனைக் காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் வெட்டிக் கொன்றான்.

6.1.2 காப்பியத்தின் தனிச்சிறப்பு மணிமேகலை ஒரு சீர்திருத்தக் காப்பியம் என்ற சிறப்பிற்கு உரியது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துவதோடு அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதையும் விளக்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாகச் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற்றப்பட்டு அங்குள்ளோர்க்கு அமுதசுரபி கொண்டு மணிமேகலை அவர்களின் பசிப்பிணியை நீக்குவதும் காப்பியத்தின் தனிச்சிறப்பாகும். இனி, இக்காப்பியம் கூறும் சமயக் கோட்பாடுகளையும் பிறவற்றையும் பார்க்கலாம். அதற்கு முன் பௌத்த சமயத்தைத் தோற்றுவித்த புத்தரைப் பற்றி மணிமேகலை என்ன கூறுகிறது என்று பார்க்கலாமா?

6.2 மணிமேகலைக் காப்பியம் புத்தரைப் போற்றும் வகை

மனிதன் மனிதனாக வாழ உதவுவதும் மனித நிலையிலிருந்து மேம்படுவதற்கான உரிய வழிவகைகளை வகுத்துரைப்பதும் சமயத்தின் குறிக்கோள் எனலாம். சமயங்கள் காலத்தின் தேவைக்கு ஏற்பச் சில மாற்றங்களைப் பெற்று, தம்மைப் புதுப்பித்துக் கொள்வது என்பது வரலாறு நமக்குக் காட்டும் உண்மையாகும். பழைய கொள்கைகளையும் பழக்க வழக்கங்களையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் சமூகத்தில் புரட்சியும் மறுமலர்ச்சியும் தோன்றுவது தவிர்க்க முடியாத நிகழ்ச்சிதான். சடங்குகளும் சம்பிரதாயங்களும் வேள்விகளும் வேதங்களுமே மனிதனை மேம்படுத்தும் என்ற நம்பிக்கை மிகுந்திருந்த காலத்தில் புத்தர்பிரான் புதியதோர் ஒளிக்கதிராய்த் தோன்றினார். மனிதரை வெளியே உள்ள யாருமே முன்னேற்ற முடியாது. மனிதன் தன்னாலேதான் உயரவேண்டும். தன் முயற்சியும் தன் ஒழுக்கமும்தான் மனித உயர்விற்கு அடிப்படையாகும் என்றும், மனப்பண்பாடுதான் வாழ்க்கையின் லட்சியம் என்றும் வழிகாட்டியவர் புத்தர். அவருடைய தோற்றம் பற்றி அறவண அடிகள் கூறும் விளக்கத்தை அறியலாமா?

6.2.1 புத்தரின் தோற்றம் புத்தர்பிரானின் தோற்றம் குறித்து அறவண அடிகள் அறவணர்த் தொழுத காதையில் கீழ்வருமாறு விளக்குகிறார்: ‘புத்தர்பிரான் கூறிச் சென்ற நல்லறம் தளர்ந்தது. என்றும் அழியாத வீட்டு நெறி தடைபட்டது. வெயிலை உணர முடியுமே தவிர, காண இயலாது. அதுபோலவே, ஆன்றோர் உணர்ந்தவாறே வீட்டு நெறியை நாம் உணர இயலாது. ஊசியால் துளைக்கப்பட்ட மணியின் மெல்லிய துளைவழியே கடல்நீர் புக இயலாது; என்றாலும் அத்துளை வழியே மிகக் குறைந்த அளவு நீர் நுழைய முடியும். அதுபோல நல்லறங்களைச் சிறிது சிறிதாக அடைய முடியும் என்று நினைத்து நான் அறக்கருத்துகளைக் கூறுவது உண்டு; ஆயினும் உலக மக்கள் கேட்டுத் தெளிவு பெறவில்லை. (அறவணர்த் தொழுத காதை: 57-71) இதைப் போன்றதொரு காலகட்டம் முன்பு இருந்தது. அந்த நிலையில்தான் புத்தபிரான் தோன்றினார்.’ இவ்வாறு அறவண அடிகள் கூறிச் செல்கிறார். உலகமக்களின் துயரம் நீங்க, தேவர்கள் வேண்டியதாகவும் அவர்களின் வேண்டுகோளைக் கேட்ட பிரபாபாலன் என்ற தேவன் புத்தரின் தோற்றம் பற்றிக் கூறிய கருத்தும் மணிமேகலையில் இடம்பெற்றுள்ளது. (அறவணர்த் தொழுத காதை: 72-82)

6.2.2 புத்தரின் பெருமை புத்தரின் பெருமையை, சங்கதருமன், மணிமேகலா தெய்வம், மணிமேகலை ஆகிய பாத்திரங்கள் மூலம் சாத்தனார் விரிவாகப் பேசுகிறார். முதலில் புத்தரின் தோற்றத்தால் ஏற்படும் விளைவுகளைப் பார்க்கலாம்.

புத்தரின் தோற்றத்தைக் குறிக்கும் நிகழ்ச்சிகள்

புத்த ஞாயிறு தோன்றும்பொழுது மதியும் ஞாயிறும் தீமையுறாமல் விளங்கும்.

ஓரிடத்தில் நிலைக்காது சுழன்று கொண்டேயிருக்கும் கோள்களால் கேடு விளையாது.

வானம் பொய்க்காது மழைபெய்யும்.

உலகில் வளம் பல பெருகும்.

உயிர்கள் யாவும் துன்பம் அடையா.

காற்று வலமாக எழுந்து சுழலும்.

திசைகள் எல்லாம் செழுமையுறும்.

முத்து, பவளம் முதலிய பல வளங்களைக் கடல் நல்கும்.

பசுக்கள் கன்றுகளுக்கு ஊட்டிக் கலம் நிறையப் பாலைத் தரும்.

பறவைகள் பயனை நுகர்ந்து தாம் தங்கும் இடங்களிலிருந்து நீங்கா.

விலங்கினமும் மக்களினமும் குறையுடைய பிறவிகளைப் பெற மாட்டா.

அக்காலத்தில் பிறந்து அப்பெருமானின் அருளறத்தைக் கேட்டவர்கள் பிறவித்துன்பத்தைக் கடந்தவராவர். (அறவணர்த் தொழுத காதை: 83-98)

துறவியின் போற்றுதல்

சங்கதருமன் பௌத்த சமயத்தைச் சார்ந்த துறவி. இவர் புத்தரை போற்றும் வகையினைக் கீழே காண்போம்.

புத்ததேவன் எம்முடைய இறைவன்.

இயல்பாகவே தோன்றிய நற்குணங்களை உடையவன்.

குற்றமில்லாத பல பிறப்புகளிலும் பிறந்தவன்.

பிறப்பின் தன்மையை உணர்ந்தவன்.

குணங்களின் மெய்ப்பொருளாக உள்ளவன்.

தனக்கென வாழாது, பிறர்க்காகவே வாழ்ந்தவன்.

தருமச் சக்கரத்தை உருட்டியவன்.

காமனை வென்றவன்.

(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை : 71-79)

மணிமேகலா தெய்வம் புகழுரை

இந்திர விழாவைக் காண விரும்பிய மணிமேகலா தெய்வம் அந்நகரில் பெண்வேடம் பூண்டு பளிங்கு மண்டபத்திற்கு வருகிறது. அப்போது அங்குள்ள புத்த பாதபீடிகையை வலங்கொண்டு வந்து போற்றித் துதித்தது.

மணிமேகலா தெய்வம் புத்தரைப் போற்றியுள்ள பகுதி சிறந்த பகுதியாகும். படிப்பதற்குச் சுவை பயக்கும் பகுதி. அதனைக் கீழ்வரும் பாடல் வரிகள் நன்கு உணர்த்தும்.

புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்

உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ

குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்

முற்ற உணர்ந்த முதல்வா என்கோ

காமற் கடந்தோய் ஏமம் ஆயோய்

தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ

ஆயிர ஆரத்து ஆழி அம்திருந்து ஆடி

நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்?

(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை 5:98-105)

(புலவன் = அறிவுடையோன், தீர்த்தன் = தூய்மையானவன், புராணன் = பழமையானவன், ஏமம் = பாதுகாப்பு)

இனி காப்பியத் தலைவியாகிய மணிமேகலையும் புத்தரை வணங்கிக் கீழ்வருமாறு போற்றுகிறாள்.

மாரனை வென்ற வீரன்

தீய நெறியாகிய பகையை நீக்கியவன்

பிறர் வாழ்வில் அறம் உண்டாக முயல்வோன்

சொர்க்க இன்பத்தை விரும்பாதவன்

மழை போன்றவன்

எட்ட முடியாத அளவிற்கு உயர்ந்து நிற்போன்

உயிர்களுக்கு ஞானக்கண்கள் தரும் மெய்யுணர்வு உடையவன்

நரகர் துயர்கெட அங்குச் சென்றவன்

நரகர்களின் துன்பத்தைப் போக்கியவன்

இவற்றைத் தவிர, பௌத்த சமயச் சின்னங்கள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வது அவர் பெருமையை மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவும்.

6.2.3 பௌத்தச் சின்னங்கள் தமிழகத்தில் பௌத்த சமயம் சிறப்புற்றிருந்த காலத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புத்த பீடிகைகள் (புத்தரது திருவடிகள் பதித்த பீடங்கள்) இடம் பெற்றிருந்தன. புத்த பீடிகைகள் மக்களால் போற்றி வணங்கப் பட்டன. அவற்றின் பெருமையைப் பல இடங்களில் சாத்தனார் விரிவாகப் பேசிச் செல்கிறார்.

புத்த பீடிகையின் தன்மை

புகழமைந்த நிலத்தில் மூன்று முழ அளவு உயரத்தில் நான்கு திசையிலும் ஒன்பது முழ அளவில் இடம் அகன்று, விதிமுறைகளுக்கு ஏற்ப, சிறந்த பளிங்கினால் வட்டமாய் அமைந்து இடையில் சதுர வடிவத்தின் மீது தாமரை ஒளி வீசுவதாய் அமைய வேண்டும். இதுவே புத்தருக்கு உரிய பீடம். இது மணிபல்லவத் தீவில் அமைந்திருப்பது.

இந்தப் பீடத்தின் அருகில் உள்ள மரங்கள் நறுமலர்களை மட்டுமே சொரியும். பறவைகளும் அப்பீடிகையின் அருகில் தம் சிறகுகளை அசைத்து ஒலி செய்யா. தூய மனத்துடன் தொழுது நின்றால் முந்தைய பிறவியைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். அந்தப் பீடத்தின் சிறப்பை உணர்ந்த இந்திரன் அந்தப் பீடத்தில் மணிகளைப் பொருத்திப் போற்றினான். (மணிபல்லவத்துத் துயருற்ற காதை, 44-63)

உவவனத்தின் பதுமபீடம்

உவவனம் என்பது சோலையாகும். பதும பீடம் என்பது தாமரை வடிவில் அமைந்த பீடமாகும். உயிர்களிடத்தில் அருள் கொண்டவன்; ஆருயிர்களைப் பாதுகாக்கும் ஒப்பற்ற இலட்சியத்தை உடையவன்; இப்படிப்பட்ட புத்த தேவனின் ஆணையால் பூத்துக் குலுங்கும் உவவனத்தில் ஒரு மண்டபம் உள்ளது. அதன் தனிச் சிறப்பாவது, அது அங்கிருப்பவரின் ஓசையை வெளிப்படுத்தாது. உருவத்தை மட்டும் வெளியே காட்டும். அந்த மண்டபத்தின் உள்ளே தூய நிறமுடைய மாணிக்கத்தால் அமைந்த ஒளி பொருந்திய பதுமபீடம் அமைந்திருந்தது.

பதுமபீடத்தின் சிறப்பு

பதுமபீடத்தில் அரும்புகளை வைத்தால் அவை மலரும். மலர்ந்தவை பல ஆண்டுகள் ஆனபின்பும் வாடுவதில்லை. அவற்றில் வண்டுகளும் மொய்ப்பதில்லை. காணிக்கை செலுத்துவோர் ஏதேனும் ஒரு தெய்வத்தை மனத்திலே நினைத்து அப்பீடத்தில் மலரை வைத்தால், அம்மலர் அவர் கருதிய தெய்வத்தின் திருவடிகளைச் சென்றடையும். ஒரு நினைப்பும் இன்றி மலரிட்டால் அது எங்கும் செல்லாது; அங்கேயே இருக்கும். இத்தகைய சிறப்பினை உடைய இந்தப்பீடம் தெய்வத் தச்சனால் அமைக்கப்பட்ட பெருமைக்குரியது. தெய்வத்தச்சன், மயனை மயன் என்பர். இவற்றைத் தவிர பாத பங்கய மலையில் உள்ள புத்தரின் பாதப்பெருமையும் (மலர்வனம் புக்க காதை: 61-68) மணிபல்லவத் தீவின் அருகிலுள்ள இரத்தின தீவகத்தில் உள்ள சமந்தமலையில் இடம் பெற்றுள்ள புத்தர் பிரானின் இணையடிகளின் சிறப்பும் (பாத்திரம் பெற்ற காதை 11:19-24) சாத்தனாரால் விளக்கப்படுகின்றன. இனி பௌத்த சமயக் கோட்பாடுகளைப் பார்க்கலாமா?

6.3 மணிமேகலை கூறும் பௌத்த சமயக் கோட்பாடுகள்

மணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை:

வினைக் கோட்பாடு

நிலையாமைக் கோட்பாடு

அறநெறிக் கோட்பாடு

6.3.1 வினைக்கோட்பாடு இந்தியச் சமயங்கள் யாவும் வினைக்கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவை. பௌத்த சமயமும் இதற்கு விதிவிலக்கன்று.

வினை வகைகள்

வினைகள் இருவகைப்படும். அவை நல்வினை, தீவினை என்பனவாகும்.

தீவினை என்பது யாது?

கொலை, களவு, காமம் ஆகிய தீய விருப்பம் மூன்றும் தளர்ச்சியுற்ற உடலிலே தோன்றுவன. பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனற்ற சொல் என்று நால்வகைக் குற்றங்கள் சொல்லிலே தோன்றுவன. வெஃகுதல் (விரும்புதல்), வெகுளுதல், மயக்கம் இம்மூன்றும் உள்ளத்தில் தோன்றுவன. இந்த வகைகளில் தீவினை தோன்றும். இந்தத் தீவினையின் தன்மையை உணர்ந்தோர் தீயவற்றில் மனத்தைச் செலுத்த மாட்டார். தீயவற்றில் மனத்தைச் செலுத்துவாராயின் விலங்கு, பேய், நரகர் என்னும் பிறப்புகளை எடுத்துக் கலக்கமுற்றுப் பிறவிதோறும் துன்புறுவர். (ஆபுத்திரன் நாடு அடைந்த காதை 123-134)

அப்படியாயின் நல்வினை என்பது யாது?

நல்வினை என்பது மேற்கூறப்பட்ட பத்துக் குற்றத்தினின்றும் நீங்கி, ஒழுக்கத்தைப் பின்பற்றி, தானம் செய்து வாழ்பவர் தேவர்; மக்கள், பிரமர் ஆகிய பிறவியெடுத்து நல்வினையின் பயனைத் துய்ப்பர்.

பிறப்பு என்பது யாது?

உலகம் மேல், கீழ், நடு என மூன்றாகும். உயிர்கள் ஆறு வகையென பௌத்த சமயம் கூறும். அவை மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என்பனவாகும். உயிர்கள் நல்வினை, தீவினை என்னும் இருவினைப் பயனால் தத்தமக்குரிய பிறவி எடுத்து, தம் வினைகள் பயனைத் தரும் காலத்தில் தாம் செய்த வினைக்கு ஏற்ப இன்பமும் துன்பமும் அடைகின்றன. (24:116-122)

மறுபிறப்பில் நம்பிக்கை

தாம் செய்த வினைகளுக்கு ஏற்ப உயிர்களுக்கு மறுபிறவி உண்டு என்ற கோட்பாட்டில் பௌத்த சமயத்திற்கு ஆழமான நம்பிக்கையுண்டு. மணிமேகலைக் காப்பியத்தில் உதயகுமரன், மணிமேகலை, மாதவி, சுதமதி ஆகிய பாத்திரங்களின் முற்பிறவி பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.

சான்றாக, முற்பிறப்பில் மணிமேகலையின் தமக்கைகளாக இருந்தவர்கள் இப்பிறப்பில் மணிமேகலையின் தாய் மாதவியாகவும், தோழி சுதமதியாகவும் பிறந்துள்ளனர் (9, 10 காதைகள்). முற்பிறப்பில் இலக்குமியாக இருந்த பெண் மணிமேகலையாகப் பிறந்துள்ளாள். இலக்குமியின் கணவனாக இருந்த இராகுலன் இப்பிறவியில் மணிமேகலையைத் தொடர்ந்து செல்லும் உதயகுமரனாகப் பிறந்துள்ளான். சென்ற பிறவியில் இலக்குமியாக இருந்தவள் சாதுசக்கர முனிவர்க்கு உணவளித்ததால் இப்பிறவியில் தவச்செல்வியான மணிமேகலையாகப் பிறந்துள்ளாள். அத்துடன் அமுதசுரபிகொண்டு பசியால் தவிப்பவர்களின் பசிப்பிணியைப்போக்கும் புண்ணியத்திற்கு உரியவளாகிறாள். அமுதசுரபியை முதலில் பெற்ற ஆபுத்திரன் ஏழை, எளிய மக்களின் பசியைத் தீர்த்த நல்வினையின் பயனால் புண்ணியராசனாகப் பிறந்துள்ளான் என்று முற்பிறவி பற்றிய செய்திகள் இடம்பெறுவதை நோக்கலாம்.

வினைப்பயனால் விளையும் பல நிகழ்ச்சிகள்

நல்வினை, தீவினையின் பயனால் விளைந்த பல நிகழ்ச்சிகளை மணிமேகலை விளக்கமாகக் கூறிச் செல்கிறது. சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போமா?

மணிமேகலையைத் தன்வயப்படுத்த அரசிளங்குமரனாகிய உதயகுமரன் மணிமேகலையைத் தொடர்ந்து வருகிறான். அவனிடமிருந்து தப்ப மணிமேகலை சோலைவனத்தில் உள்ள பளிக்கறையில் (பளிங்கினால் ஆன அறையில்) புகுந்து மறைந்து கொள்கிறாள். அப்போது புகார் நகரில் நடக்கும் இந்திர விழாவைக் காணும் விருப்பத்தால் அந்நகரப் பெண்போலத் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு மணிமேகலா தெய்வம் அங்கு வருகிறது. (மணிமேகலையின் தந்தையான கோவலனின் முன்னோர்களில் ஒருவர் வணிகத்தின் பொருட்டுக் கப்பலில் சென்றபோது, கப்பல் உடைந்து அவர் கடலில் மூழ்கி இறந்துபடாமல் மணிமேகலா தெய்வம் அவரைக் காப்பாற்றியது. அதை நினைவு கூர்ந்து மாதவிக்கும் தனக்கும் பிறந்த குழந்தைக்கு மணிமேகலை எனப் பெயரிட்டான் கோவலன்.) மணிமேகலையின் நல்வினை அதன் பயனைத் தரும் காலம் கனிந்ததால் மணிமேகலைக்கு உதயகுமரனால் தீங்கு ஏதும் நேராமலிருக்க மணிமேகலையை மணிமேகலா தெய்வம் மணிபல்லவத் தீவிற்கு எடுத்துச் செல்கிறது.

வினையின் பயனை அறவண அடிகள் உணர்த்தல்

மணிமேகலை அறவண அடிகளைக் கண்டு வணங்கி மணிபல்லவத் தீவில் தன் பழம்பிறப்பினை உணர்ந்ததும் அமுதசுரபி என்ற அற்புதப் பாத்திரத்தைப் பெற்றதுமான செய்திகள் அனைத்தையும் கூறுகிறாள். அறவண அடிகளும் பாதபங்கய மலையில் புத்தரின் பாதங்களை வணங்கி, மாதவி, சுதமதி ஆகிய இருவரின் பழம்பிறப்பை உணர்ந்ததை விளக்குகிறார். முற்பிறவியில் வீரையும் தாரையுமாக மாதவி, சுதமதி ஆகியோர் இருந்ததையும் யானையால் வீரை இறந்ததால் தாரை இறந்ததும் இவர்களின் இறப்பால் கணவன் துச்சயன் துயரமுற்றதையும் கூறுகிறார். அறவணஅடிகள் துச்சயனுக்கு ஆறுதல் கூறும்போது, ‘இது அவரவர் வினைப்பயனால் நேர்ந்தது’ என்று கூறி அமைதிப்படுத்துகிறார். வினையின் பயனை அனுபவித்தே ஆகவேண்டுமென்பதும் அதற்காக வருந்தாமல் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதையுமன்றோ இந்நிகழ்ச்சி உணர்த்துகிறது! மேலும் ஒருசான்றைப் பார்க்கலாமா?

உதயகுமரன் வெட்டுண்டு இறத்தல்

தன்னைப் பின்தொடரும் உதயகுமரனிடமிருந்து தப்ப மணிமேகலை விஞ்சை மங்கையாகிய (விண்ணுலகப் பெண்) காயசண்டிகை வடிவில் அமுதசுரபி ஏந்தி உணவு படைக்கிறாள். இந்தக் காயசண்டிகை யார் என்ற வினா உங்கள் உள்ளத்தில் தோன்றுகிறதா? காயசண்டிகை விஞ்சையனான காஞ்சனன் மனைவி. முன்பு விருச்சிக முனிவர் இட்ட சாபத்தால் யானைப்பசி என்னும் நோய்க்கு ஆளானாள். யானைப்பசி என்பது எவ்வளவு உண்டாலும் பசி தீரவே தீராமல் மேலும் மேலும் (பசி) மிகுதியாகும். இந்நோய் பன்னீராண்டுகள் துன்பத்தைத் தருமென்பார்கள். மணிமேகலை அமுதசுரபி யிலிருந்து அளித்த உணவை உண்டதும் காயசண்டிகையின் பசி தீர்ந்தது. அவள் தன் இருப்பிடம் திரும்பினாள். காயசண்டிகை சாபம் பெற்று யானைப்பசி நோயினால் வருந்திய காலமும் முடிவுற்றதால் அவள் திரும்பி வாராமைக்குக் காரணம் யாதோ எனக் கவலையுற்றுக் காஞ்சனன் அவளைத் தேடிக் கொண்டு வருகிறான். காயசண்டிகை வடிவில் மணிமேகலை அமுதசுரபி கொண்டு உணவளிப்பதைப் பார்த்த காஞ்சனன் அவளைத் தன் மனைவியெனத் தவறாக நினைத்து அவளோடு பேசமுற்படுகிறான். காயசண்டிகை வடிவில் இருந்த மணிமேகலையோ அவனைப் பொருட்படுத்தாமல் (அங்கு) அவளைத் தொடர்ந்து வந்த உதயகுமரனை அடைந்து நிலையாமையை அறிவுறுத்துகிறாள். தன் மனைவி அயலான் முன் சென்று பேசுகிறாள்; அவன் மீது கொண்ட விருப்பத்தினால் தான் இவள் திரும்பி வரவில்லையென முடிவு செய்து, சமயம் நோக்கி மறைந்திருந்து உதயகுமரனைக் கொன்று விடுகிறான்.

ஊழ்வினையின் பயனாலேயே உதயகுமரன் காஞ்சனனின் வாளால் வெட்டுண்டு இறந்தான் என உலகவறவியில் (ஊர் அம்பலம்) இருந்த கந்திற்பாவை என்னும் தெய்வம் காஞ்சனனுக்கு விளக்கியதோடு, காயசண்டிகை ஊர் திரும்பியதையும், மணிமேகலை காயசண்டிகை வடிவில் இருப்பதையும் கூறியது.

அரசிக்கு மணிமேகலையின் அறவுரை

தன் மகனான உதயகுமரனின் இறப்புக்கு மணிமேகலையே காரணம் என்றெண்ணி அரசி கொடுமைகள் பலவற்றை மணிமேகலைக்கு இழைக்கிறாள். மணிமேகலா தெய்வத்திடம் தான் பெற்ற மந்திர மொழிகள் மூலம் அவற்றையெல்லாம் மணிமேகலை தாங்கிக் கொண்டு எந்தவிதப் பாதிப்பிற்கும் ஆளாகாமல் இருக்கிறாள். மணிமேகலையின் இந்நிலையைக் கண்டு அரசி மிகவும் வியப்படைவதோடு தன் செயலுக்காக வருந்தவும் செய்கிறாள். இராசமாதேவியின் மனம் மாறுகிறது. மனம் திருந்தி மணிமேகலையைத் தொழுது வணங்குகிறாள்.

மணிமேகலை இராசமாதேவிக்குத் தன் முற்பிறப்பைப் பற்றிக் கூறி, தன் கணவனாக இருந்த இராகுலனைப் பற்றியும் கூறியதோடு முற்பிறவியில் இராகுலன் தாயாக அரசமாதேவி இருந்ததையும் கூறுகிறாள். உதயகுமரனை இழந்ததற்காக அழும் அரசமாதேவி பொருந்தாத செயல்களைச் செய்ததைச் சுட்டிக்காட்டி, வினையின் பயனை யாராக இருந்தாலும் நுகர்ந்தே ஆக வேண்டுமென்பதை எடுத்துக்காட்டி இனியாவது நல்வினைகளைச் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறாள். ‘பூங்கொடி போன்ற தேவி, நீ எதற்காக அழுதாய்? நின் மகனின் உடலுக்காக அழுதாயா? உயிருக்காக அழுதாயா? உடலுக்காக அழுதாயானால் உன் மகனது உடம்பைப் புறங்காட்டில் யார் இட்டனர்? உயிர்க்காக அழுதாயானால் செய்வினை வழியே அவ்வுயிர் புகும். அது புகுமிடத்தை நம்மால் தெரிந்து கொள்ள இயலாது. அதனால் அந்த உயிரிடத்து அன்புடையையாயின், அஃது எவ்வுடலில் இருக்கும் என்பதை உணராத நிலையில் எல்லா உயிர்களிடத்தும் நீ இரக்கம் கொள்ளல் வேண்டும்’ என்கிறாள்.

உயிர்கள் அனைத்திடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்ற நேயத்தைச் சாத்தனார் இங்கு வலியுறுத்துகிறார். காப்பியத்தின் அப்பகுதியை நீங்களே படித்துப் பாருங்களேன்!

யாங்கு இருந்து அழுதனை இளங்கோ தனக்கு?

பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனை

உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ?

உடற்கு அழுதனையேல் உன் மகன் தன்னை

எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே?

உயிர்க்கு அழுதனையேல் உயிர்புகும் புக்கில்

செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது

அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்தொடி

எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்

(சிறைவிடு காதை: 71-79)

(புறங்காடு = சுடுகாடு, புக்கில் = உடம்பு)

ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஓர் உறவை இழந்த அனுபவம் சோகமாய் நெஞ்சை அடைத்துக் கொள்ளும். அதையே நினைத்துப் புலம்பாமல் எல்லா உயிர்களையும் சமமாக எண்ணி, அனைத்து உயிர்களிடமும் அன்பு செய்ய வேண்டும். தன் உறவு, தன் சொந்தம் எனப் பார்க்காமல் அன்பு பாராட்டும் மனப்பாங்கு வரவேண்டும். அப்போது எங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிரம்பும்; யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற எண்ணமும் மேலோங்கும். அவ்வெண்ணம் எவ்வுயிர்க்கும் இரங்கி அன்பு செய்ய வேண்டும் என்ற உணர்வைத் தந்து செயல்பட வைக்கும்.

இது எல்லாக் காலத்தும் எல்லாவிடத்தும் எல்லோருக்கும் பொருந்தும் உண்மையல்லவா?

6.3.2 நிலையாமைக் கோட்பாடு இந்தியச் சமயங்கள் அனைத்துமே நிலையாமைக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையன. அதிலும் சமணமும் பௌத்தமும் நிலையாமையை வற்புறுத்திக் கூறும் தன்மையன. சாத்தனார் பௌத்த சமய அறங்களை வலியுறுத்தும் போதெல்லாம் நிலையாமையை அழுத்தமாகக் கூறிச் செல்கிறார். பளிக்கறை புக்க காதையில் மணிமேகலையைத் தொடர்ந்து உதயகுமரன் வர, மணிமேகலை பளிக்கறைக்குள் மறைந்து கொள்கிறாள். உதயகுமரன் மணிமேகலையைத் தொல்லைப் படுத்துவான் என்பதை உணர்ந்த மணிமேகலையின் தோழி சுதமதி, அவனுக்கு யாக்கை நிலையாமையை விளக்குகிறாள்.

வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி

வினையின் வந்தது வினைக்கு விளைவாயது

புனைவன நீங்கில் புலால்புறத் திடுவது

மூப்புவிளி உடையது தீப்பிணி இருக்கை

பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம்

புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை

அவலக் கவலை கையாற ழுங்கல்

தவலா உள்ளம் தன்பால் உடையது

மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து…

(பளிக்கறை புக்க காதை: 112-121)

(வினைவிளங்கு = செயல்திறமுடைய, கேட்டி = கேட்பாயாக, புனைவன = புனையப்படுவனவாகிய மணப்பொருள்கள், மூப்பு = முதுமை, விளி = சாவு, கொள்கலம் = பாத்திரம், செற்றம் = கோபம், சேக்கை = இருப்பிடம், அவலம் = வருத்தம், கையாறு = மூர்ச்சித்தல், அழுங்கல் = அழுதல், தவலா = நீங்காத)

உடம்பு வினையால் உண்டானது. வினைக்கு விளைநிலமாக உள்ளது. புனையப்படுவனவாகிய மணப்பொருள்கள் நீக்கப்படுமானால் புலால் நாற்றத்தை வெளிக்காட்டுவது. முதுமையடைந்து சாதலை உடையது. கொடிய நோய்க்கு இருப்பிடமாக உள்ளது. பற்றுகளுக்குப் பற்றும் இடமாக உள்ளது. குற்றங்களுக்குக் கொள்கலமாய் உள்ளது. பாம்பு அடங்கும் புற்றைப் போல, கோபம் தங்குமிடமாக இருக்கிறது. மக்கள் யாக்கை இத்தகையது என விளக்கி, மணிமேகலையைப் பின்தொடரும் செயலை அவன் விலக்கிக் கொள்ள வேண்டுமென்று மறைமுகமாகக் கூறுகிறாள்.

சக்கரவாளக் கோட்டம் உணர்த்தும் உண்மை

மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் தோழி சுதமதியிடம் சக்கரவாளக் கோட்டத்தின் தன்மையை விளக்கும்போது நிலையாமைக் கோட்பாடு அழுத்தம் பெறுகிறது.

சுடுகாட்டில் தவநெறியில் செல்லும் துறவிகள், பெருஞ்செல்வர், அண்மையில் மகவு பெற்ற இளமகளிர், அறம் அறியா இளம் சிறுவர், முதியோர், இளையோர் ஆகியோரை வேறுபாடின்றிக் கொடுந்தொழிலை உடைய எமன் கொன்று குவிப்பதைக் கண்டும் நிலையாமையை உணரவில்லை மக்கள். இறப்பு உண்மை என்று தெரிந்த பின்னரும் அறநெறியில் செல்லாதவர்களை எண்ணி அத்தெய்வம் வருந்துகிறது.

யாக்கை நிலையாமை

மாதவியின் தாய் சித்ராபதியின் தூண்டுதலால் உதயகுமரன் காமம் மீதூரப் பெற்று மணிமேகலையைக் காண அம்பலம் செல்கின்றான். மணிமேகலையைக் கண்டு, ‘நங்கையே! நீ நற்றவம் மேற்கொண்டதற்குரிய காரணம் தான் யாதோ?’ என்று துணிந்து கேட்கிறான். அதற்கு அவள் பிறத்தலும் முதுமை அடைதலும் நோயுற்று வருந்துதலும் பின் இறத்தலும் உடையது இவ்வுடல். மேலும் இது துன்பங்களுக்கு ஒரு கொள்கலமாகவும் உள்ளது. மனித உடம்பின் நிலையாமையை மணிமேகலை உதயகுமாரனுக்கு உணர்த்தித் தன்னைப் பின்தொடர வேண்டாமென அறிவுரை கூறுகிறாள். அத்துடன் யாக்கையின் இத்தன்மையை நன்கு உணர்ந்ததால்தான் நல்ல தவத்தை மேற்கொண்டதாகக் கூறுகிறாள். அதைக் கீழ்வரும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு இரங்கலும்

இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்

மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து

மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்

(உதயகுமரன் அம்பலம் புக்க காதை:136-139)

(இடும்பை = துன்பம், பிணி = நோய், கொள்கலம் = இருப்பிடம்)

மேலும் மணிமேகலை நரைமிக்க ஒரு மூதாட்டியைக் காண்பித்து, உதயகுமரனுக்கு இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவற்றையும் அறிவுறுத்துகிறாள். நிலையாமை மிக விரிவாகப் பேசப்படுகின்ற இடங்களில் இது ஒன்றாகும்.

நிலைத்ததும் நிலையாததும்

நிலையாமை பற்றிப் பல இடங்களில் பல பாத்திரங்கள் வழி விளக்கிச் செல்லும் சாத்தனார் நிலைத்து நிற்பது எதுவென்றும் கூறுகிறார்.

இளமையும் நில்லாது யாக்கையும் நில்லாது

வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லாது

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்

மிக்க அறமே விழுத்துணையாவது

(சிறைசெய் காதை: 135-138)

(யாக்கை = உடம்பு, வான்பெருஞ்செல்வம் = சிறந்த பொருள், புத்தேள் உலகம் = தேவர் உலகம், விழுத்துணை = சிறந்த துணை)

நிலையாமைக் கோட்பாட்டை மிகவும் வற்புறுத்துவதாலேயே வாழ்க்கையை மறுத்துரைக்கிறது பௌத்த சமயம் என எண்ண இயலாது. அதை ஒரு எச்சரிக்கையாகக் கொண்டு அறங்களை மேற்கொண்டு வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். ஏனென்றால் அவரவர் செய்த வினைக்கு ஏற்பப் பிறவிகள் தொடரும். அதனைத் தவிர்க்க வேண்டுமாயின் நிலையாமையை மனத்தில் பதித்து, அறத்தை இடையறாது மேற்கொள்ளவேண்டும்.

6.3.3 அறநெறிக் கோட்பாடு நான்கு வாய்மை

மதுரையில் கோவலன் கொலையுண்டு இறந்தான் என்ற செய்தியைக் கேள்வியுற்ற மாதவி துயர் தாங்காது வருந்துகிறாள். ஆடலையும் பாடலையும் துறக்கிறாள். பௌத்தத் துறவியாகிய அறவண அடிகளின் பாதங்களில் வீழ்ந்து தனது காதலனாகிய கோவலன் உற்ற கடுந்துயர் கூறி வருந்துகிறாள். வருந்திய மாதவிக்கு அறவண அடிகள் அறவுரை கூறுகிறார். அப்போது மாதவிக்கு அவர் நான்கு வாய்மைகளையும் விளக்குகிறார். அவை

துக்கம்        – துன்பம்

துக்க காரணம்      – துன்பத்திற்கான காரணம்

துக்க நிவாரணம்   – துன்பத்தைப் போக்கல்

துக்க நிவாரண மார்க்கம் – துன்பத்தைப் போக்கும் வழி

இதனையே

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்

பிறவார் உறுவது பெரும் பேரின்பம்

பற்றின் வருவது முன்னது பின்னது

அற்றோர் உறுவது அறிக

(ஊர்அலர் உரைத்த காதை:64-67)

என விளக்குகிறார். அதாவது பிறந்தவர்கள் அடைவது பெருந்துன்பம்; பிறப்பை நீக்கியவர்கள் அடைவது மிகப்பேரின்பம். பற்றினால் வருவது பெருந்துன்பம். பற்றை நீக்குவதால் அடைவது பேரின்பம்.

நான்கு வாய்மைகளை விளக்கியபின் அறவண அடிகள் ஐந்து சீலம் பற்றிக் கூறுகிறார்.

ஐந்து சீலம்

பௌத்த சமய அறநெறிக் கோட்பாடுகளில் அடிப்படையானவை ஐந்து சீலக்கோட்பாடு. அவை:

கொல்லாமை

கள்ளாமை – திருடாமை

பிறன்மனை விரும்பாமை

பொய்யாமை

கள்ளுண்ணாமை

ஐந்து சீலங்களில் கொல்லாமை, புலால் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகிய அறங்கள் ஆங்காங்கே வலியுறுத்திப் பேசப்படுகின்றன. சான்றாக ஒரு சில இடங்களைப் பார்க்கலாம்.

கொல்லாமையும் கருணையும்

உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அன்பு விரிவாகும்போது கருணையாகிறது. அன்பின் விரிவே கருணையாகும். தொடர்புடையவரிடம் அதாவது உறவினரிடமும் நண்பர்களிடமும் காட்டுவது அன்பு. அப்படியின்றித் தொடர்பு இல்லாதவரிடமும் அதாவது அனைத்து உயிர்களிடமும் காட்டப்படுவது கருணையாகும். யார் எங்குத் துன்பமுற்றாலும் அதைக் கேள்விப்பட்டபோது அவர்களுக்காக வருந்துவது கருணையின் அடையாளமாகும். இத்தகையோர் கொல்லாமையைப் பெரிதும் போற்றுவார்கள். இத்தகைய கோட்பாட்டைத் தன் உயிர்க் கொள்கையாகக் கொண்டவர்தான் புத்தர். உயிர்கள் அனைத்திடமும் கருணை காட்ட வேண்டுமென்று அறவுரை கூறியதோடு வாழ்ந்தும் காட்டினார். எந்த உயிர்க்கும் தீங்கு நேர்வதை அவரால் பொறுக்க முடிவதில்லை. புத்தரின் இந்தக் கோட்பாட்டை, சாத்தனார், ஆபுத்திரன் வாயிலாக விளக்குகிறார்.

ஆபுத்திரனும் ஆவும்

காசியில் வேதம் ஓதும் அந்தணனாகிய அபஞ்சிகனின் மனைவி சாலி. அவள் நெறி தவறி நடந்ததால் பெற்ற பிள்ளையை இரவு நேரத்தில் யாரும் அறியாத போது ஒரு தோட்டத்தில் விட்டு விட்டுச் செல்கிறாள். பசியால் குழந்தை அழுகிறது. குழந்தையின் அழுகுரலைக் கேட்ட பசு ஒன்று ஏழு நாள் வரை அக்குழந்தைக்குப் பாலூட்டி வளர்த்தது. அதனால் அக்குழந்தை ஆபுத்திரன் என வழங்கப்பட்டான். இளம்பூதி என்னும் அந்தணன் மனைவியோடு அவ்வழியே வந்தபோது அக்குழந்தையைக் கண்டான். அக்குழந்தையைத் தன் மகன் என எடுத்துச் சென்று வளர்த்தான். அந்தணர்க்குரிய வேதங்களையெல்லாம் நன்கு கற்பித்தான்.

ஆபுத்திரனின் கருணை

ஒருநாள் அந்தணர் ஒருவர் வீட்டில் வேள்வியில் பலிகொடுக்கப் பசு ஒன்றைக் கட்டி வைத்திருந்ததை ஆபுத்திரன் கண்டான். அஞ்சி நடுங்கிய நிலையில் அப்பசுவின் துயரினைக் கண்டு பெருந்துயரம் கொண்டான். இரவில் யாரும் அறியாதபோது அப்பசுவை விடுவித்து அவ்வூரை விட்டு நீங்கினான். பசுவைத் தேடிய அந்தணர் ஆபுத்திரன் செயலைக் கண்டு இழிவான சொற்களால் வசைபாடி அடித்துத் துன்புறுத்தினார். அப்போது கோபங்கொண்ட ஆபுத்திரன் அவர்களை வெறுத்துப்பேசி அவர்களுக்கு அறிவுரையும் கூறுகிறான். ‘அந்தணர்களே, பிற உயிர் வருந்துவதற்குரிய எதையும் செய்யாதீர். நான் கூறுவதைக் கேளுங்கள். மேய்ச்சல் நிலத்தில் உள்ள புல்லை மேய்ந்து இந்தப் பெரிய உலகத்தில் உள்ள மக்களுக்கு அவர்கள் பிறந்தது முதல் தன் இனிய பாலைத் தரும் இப்பசுவிடம் உமக்கு உண்டான சினம்தான் யாது? உரைப்பீராக’ என்றான்.

எந்தக் காரணத்திற்காகவும் உயிர்களைப் பலிகொடுக்கக்கூடாது என்பதில் புத்தர் உறுதி பூண்டிருந்தார்; அவருடைய அந்தக் கோட்பாடே இங்கு ஆபுத்திரன் வாயிலாக விளக்கப்படுகிறது.

கள் உண்ணாமையும் ஊன் உண்ணாமையும்

ஆதிரையின் கணவனான சாதுவன் வாணிகத்தின் பொருட்டுக் கடல் கடந்து செல்லும் போது கப்பல் உடைய, நாகர் கூட்டத்தில் அகப்பட்டுக் கொள்கிறான். தான் யார் என்பதையும் தனக்கு நேர்ந்த துயரத்தையும் அவர்கள் மொழியிலேயே விளக்குகிறான் நாகர் தலைவனுக்கு. அதனால் மகிழ்ந்த நாகர் தலைவன், துயரம் அடைந்த இவன் நம் இரக்கத்திற்கு உகந்தவன் எனக்கூறி, இந்த நம்பிக்கு இளமை பொருந்திய ஒரு பெண்ணைக் கொடுத்து, விருப்பம் தரும் கள்ளையும் புலாலையும் வேண்டுமளவு கொடுங்கள் என்று தன் மக்களுக்கு உத்தரவிட்டான்.

சாதுவன் அறிவுரை

நாகர் தலைவன் கூறியதைக் கேட்ட சாதுவன் அதிர்ச்சியுறுகிறான், ‘வெவ்வுரை கேட்டேன்; வேண்டேன்’ என்று கூறுகிறான். தன் உத்தரவிற்கு மதிப்பளிக்காமல் மறுத்துரைத்த சாதுவன் மேல் கோபங்கொண்ட நாகர் தலைவன், ‘பெண்டிரும் உணவும் இல்லையானால் மக்களுக்கு இவ்வுலகத்தில் அடையக்கூடிய பலன் வேறேதும் உண்டோ? உண்டெனில் நாங்களும் அறியுமாறு சொல்வாயாக’ என்று சினத்துடன் அதட்டினான்.

சாதுவன் நாகர் தலைவனிடம்,

மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும்

கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்

பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்

உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்

நல்லறம் செய்வோர் நல்லுல கடைதலும்

அல்லறம் செய்வோர் அருநர கடைதலும்

உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்

(ஆதிரை பிச்சையிட்ட காதை: 84-90)

எனக் கூறுகிறான்.

இதன் பொருள்:

அறிவை மயக்கும் கள்ளையும் நிலையற்ற உயிர்களைக் கொல்லுதலையும் தெளிந்த அறிவினை உடையோர் விலக்கினர். பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் உறங்குவதும் உறங்கி விழிப்பதும் போன்றதாகும். நல்லறங்களைச் செய்கின்றவர்கள் அடைவதற்கு அரிய இன்பம் கொண்ட மேலுலகங்களை அடைதலும், தீமைகளைச் செய்கின்றவர்கள் தாங்கற்கரிய துன்பத்தைத் தரும் நரகங்களை அடைதலும் உண்மை என உணர்தலால் மனவலிமை மிக்க அறிஞர்கள் அவற்றை நீக்கினர்.

காமத்தை ஒழித்தல்

பௌத்த சமயத்தின் அறங்களில் முக்கியமானது காமத்தை ஒழித்தல். காமம் பல குற்றங்களை இழைக்கத் தூண்டும். தத்துவம் உணர்ந்த பெரியோரால் கடல் சூழ்ந்த இவ்வுலகில் விலக்கப்பட வேண்டிய குற்றங்கள் ஐந்து உள்ளன. அவற்றுள் காமமாகிய குற்றத்தைக் களைந்தவர் எவரோ, அவரே மற்றக் குற்றங்களையும் களைந்தவர் ஆவர் எனக் கருதி, தவநெறி மேற்கொள்வோர் அதனை அறவே விலக்கினர். காமத்தினின்றும் நீங்காதவர் பொறுக்கவியலாத நரகத்தில் வீழ்ந்து துன்புறுவர் என்று காமத்தின் தன்மை உணர்த்தப்படுகிறது.

6.3.4 விழுத்துணை அறம் விழுத்துணை அறமாகப் போற்றப்படுவது பசிப்பிணி போக்கல். எல்லா அறங்களிலும் முதன்மையான அறமாக பசிப்பிணிப் போக்கல் கருதப்படுகிறது. ஏனென்றால் பசியின் கொடுமை எல்லாத் துன்பங்களைக் காட்டிலும் கொடுமையானது. அதனால் முதலில் பசியின் கொடுமை விளக்கப்படுகிறது.

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவில் விட்டு விட்டுச்சென்றதும் மணிமேகலை மெல்ல உலாவி வருகிறாள். அப்போது தீவதிலகை அங்குத் தோன்றுகிறாள். தீவதிலகை இந்திரன் ஏவலால் புத்தர் பாதபீடிகையைப் பாதுகாப்பவள். தீவுக்குத் திலகம் போன்றவள். இந்திரன் ஏவலால் மணிபல்லவத் தீவில் தங்கியிருப்பவள்.

மணிமேகலை புத்த பீடிகையை வணங்கித் தன் முற்பிறப்பை அறிந்ததைக் கேட்டு, கோமுகிப் பொய்கையில் வைகாசிப் பௌர்ணமியன்று வெளியில் வரும் அமுதசுரபியைப் பெறும் தகுதியுடையவள் இவளே, எனக்கருதி அமுதசுரபியின் தன்மையை விளக்குகிறாள். மணிமேகலை புத்த பீடிகையைத் தொழுது கோமுகிப் பொய்கையை வலம் வந்து நின்றபோது, அமுதசுரபி மணிமேகலையின் கையை அடைந்தது. அப்பொழுது தீவதிலகை உயிர்களுக்கு உண்டாகும் பசிப்பிணியின் கொடுமையையும் அதனைத் தீர்ப்போரது பெருமையையும் உரைத்து, ‘இனி நீ உணவளித்து உயிர் கொடுத்தலாகிய அறத்தைச் செய்வாய்’ என்றாள்.

பசியின் கொடுமை

பசிப்பிணி, தன்னால் பற்றப்பட்டவருடைய உயர்குடிப்பிறப்பை அழிக்கும். சிறப்பைக் கெடுக்கும். பற்றிய கல்வியாகிய பெரிய தெப்பத்தையும் நீக்கும். நாணமாகிய அணியையும் போக்கும். மேன்மை பொருந்திய அழகைச் சிதைக்கும். மனைவியரோடு பிறர் கடைவாயிலில் பிச்சை எடுக்க நிறுத்தும். பசிப்பிணி அத்தகைய கொடுமை வாய்ந்தது. (பாத்திரம் பெற்ற காதை: 76-81)

பசியின் கொடுமையை விளக்க ஒரு சான்றையும் கூறுகிறாள் தீவதிலகை. புல்லும் மரமும் கரியுமாறு எங்கும் அழல்போலும் வெம்மை மிகுந்தது. அதனால் உயிர்கள் பசியால் அழியுமாறு மழைவளம் குன்றியது. அரச கடமையிலிருந்து நீங்கிய அருமறை ஓதும் அந்தணன் விசுவாமித்திரன். தவமுனியாகிய அவனும் பசியால் எங்கும் திரிய நேர்ந்தது. தன் கொடும்பசியைப் போக்கிக் கொள்ள எதையும் காணாது தனக்குச் சிறிதும் பொருந்தாத நாயின் ஊனை உண்டான் என்றால் பசியின் கொடுமையை என்னென்பது. (பாத்திரம் பெற்றகாதை:82-91) அத்தகைய பசியின் கொடுமையைப் போக்க உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேயாவர்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

இந்தியச் சமயங்கள் யாவும் மானுடம் தழைக்கவே அறங்களை வற்புறுத்திக் கூறுகின்றன. மண்ணில் நல்லவண்ணம் வாழ நெறிகளைக் காட்டுகின்றன. வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுகின்றன. இதற்கு எந்தச் சமயமும் விதிவிலக்கன்று.

முதன்மையான அறம்

மணிமேகலை பௌத்த சமயத்தைப் பரப்ப எழுந்த காப்பியந்தான். ஆயினும் அது கூறும் சமயக் கோட்பாடுகள் மனித சமுதாயத்திற்குப் பொதுவானவை என்பதை மறுக்க இயலாது. உண்மையில் அனைத்துச் சமயங்களின் கோட்பாடுகளும் அப்படித்தான். ஆயினும் மணிமேகலை பசியின் கொடுமையை விளக்கிப் பசிப்பிணி தீர்ப்பதே விழுத்துணையான அறம் என்று அழுத்தமாகப் பேசுவது மிகச் சிறந்த கோட்பாடாகும். இதைப் போல் வேறெந்த இலக்கியமும் இப்படிப் பேசவில்லை. எல்லாச் சமயங்களும் அன்னதானத்தைப் பெரிதும் போற்றுகின்றன. தானத்தில் அன்னதானமே சிறந்தது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. ஏனென்றால் மக்களின் பசியைப் போக்கவில்லையென்றால் மக்கள் மக்களாக இருக்க மாட்டார்கள். இருக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். அதனால் அன்னதானத்தை முதன்மைப்படுத்தினர். நற்செயல்கள் பலவற்றை அடுக்கிக் கூறும் பாரதி

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்

இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்

பயிற்றிப் பலகல்வி தந்து இப்பாரை

உயர்த்திட வேண்டும் (முரசு: 23)

என்று பசியைப் போக்குவதற்கே முதலிடம் தருகிறார்.

பசித்தவனுக்கு உணவுதான் கடவுள். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவர். உயிர் வளர்க்க ஊன் வளர்க்க வேண்டும். அந்த ஊன் வளர உணவு வேண்டும். இல்லையேல் பசிக்கொடுமை தாளாமல் சமூக விரோதிகளாக மாறுவதற்கான சூழல்தான் உருவாகும். மனிதர்க்கு மட்டுமன்றி மற்ற உயிர்களுக்கும் உணவே முதல் தேவையாகிறது. உறுபசி இல்லாத நாடே நல்லநாடு என்கிறார் வள்ளுவப் பேராசான். பாரகம் செயல்பட, பசிப்பிணி முற்றுமாக அகலவேண்டும். அப்போதுதான் சிந்திக்க முடியும். செயலாற்றவும் முடியும். இல்லையேல் மனித வாழ்க்கை விலங்கு வாழ்க்கையாகவே அமைந்துவிடும்.

சமண சமயம் நான்கு வகை தானங்களை வலியுறுத்துகிறது. அவற்றுள் முதன்மையானது அன்னதானமே. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் (இராமலிங்கம் அடிகள்) அறச்சாலைகள் அமைத்து ஏழை எளியவர்க்கு உணவிடச் செய்தமையை இங்கு நினைவு கூரலாம். எனவேதான் சாத்தனார் மணிமேகலை கரங்களில் அமுதசுரபி என்ற கற்பனைப் பாத்திரத்தைத் தந்து பசிப்பிணிப் போக்கும் அறச்செயலைச் செய்ததாகக் காப்பியம் படைக்கிறார். எத்தனை இனிய கற்பனை! இப்போது அப்படியொரு பாத்திரம் கிடைத்தால்…. என்று நீங்களும் என்னைப்போல் நினைக்கிறீர்கள் தானே? ஒவ்வொரு மனமும் அமுதசுரபிதான். அதில் அன்பு சுரக்கப் பெற்றால் அன்னம் மட்டுமா, அமிர்தத்தையே அனைவருக்கும் தரலாமல்லவா? எல்லாமே சாத்தியம்தான்!

பொறுக்கும் ஆற்றலுடையோர்க்கு அளிப்பவர்கள் அறத்தை விலை கூறி விற்பவராவர். ஏழைகளின் பசியைப் போக்குவோரிடத்தில்தான் மேலான அறநெறி வாழ்க்கை அமைந்துள்ளது. இந்த உலகில் வாழ்பவர்க்கெல்லாம் உணவு கொடுத்தோரே உயிர் கொடுத்தவராவர். அந்த மணிமேகலை வரிகள் இதோ,

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம்விலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

(பாத்திரம் பெற்ற காதை:92:96)

மக்கள், தேவர் இரு சாரார்க்கும் ஒத்த முடிவினை உடைய அறம் என்பது யாது என விளக்கும்போது பசிப்பிணி தீர்த்தலையே சிறந்த அறம் என்கிறார்.

மக்கள் தேவர் என இரு சாரார்க்கும்

ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன

பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்

தவப்பெரு நல்அறம் சாற்றினர்

(அறவணர்த் தொழுத காதை: 116-119)

இன்றும் மக்களிடையே அன்னதானம் (ஏழைகளுக்கு உணவிடுவது) பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.

6.4 குண்டலகேசி

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. பௌத்த சமயக் கருத்துகளைப் பரப்பத் தோன்றிய நூல். இப்போது இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. இது பௌத்த சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் ஓர் இழப்பாகும்.

தொல்காப்பியம், யாப்பருங்கலம், வீரசோழியம், நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகளில் குண்டலகேசிப் பாடல்கள் இடம் பெறுகின்றன. இப்படிக் கிடைத்த பாடல்கள் பத்தொன்பது என்று கூறுகிறார்கள். புறத்திரட்டிலும் (புறப்பொருள் பற்றிய செய்யுட்களைப் பல நூல்களிலிருந்து திரட்டித் தொகுக்கப்பட்ட தொகைநூல்) குண்டலகேசிப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. நீலகேசிக்கு, சமய திவாகர வாமன முனிவர் எழுதிய உரையில் குண்டலகேசியின் 99 பாடல்களின் முதற்குறிப்புகள் காணப்படுகின்றன.

குண்டலகேசியின் துறவும் சமயப் பணிவும்

தன்னைக் கொல்ல நினைத்த கணவனைக் கொன்றபின் குண்டலகேசி வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டு உஞ்சைமாநகர் சென்று அருகச்சந்திரன் என்னும் பௌத்தத் துறவியிடம் அருள் உபதேசம் பெற்றுப் புத்தரின் பெருமைகளை – அவரின் அறவுரைகளை எங்கும் பரவ வகை செய்தாள். பல சமயவாதிகளுடன் வாதிட்டுப் பௌத்த சமயத்தின் பெருமையை நிலைநாட்டினாள் குண்டலகேசி.

புலனடக்கமே மெய்யான தவம்.

மனத்தூய்மை உடையவர்க்கே இன்பமும் புகழும் உரியன.

ஆசையினை அனுபவித்து அழிக்கலாம் என்பது எரியும் தீயை நெய் கொண்டு அணைக்கலாம் என்பதை ஒக்கும்.

நாள் என்று சொல்லப்படுகின்ற வாளின் வாயில் மக்கள் தலை வைத்துள்ளனர்.

எல்லாம் ஊழால் அமைவன.

அதனால் இழப்பின்போது வருந்துதல் வேண்டாம்.

ஆக்கத்தின்போது மகிழ்தலும் வேண்டாம்.

என்பன போன்ற அறங்களைக் குண்டலகேசி திறம்பட எடுத்துரைக்கிறது.

புத்தரின் பெருமை

குண்டலகேசியின் கடவுள் வாழ்த்துப் புத்தரின் பெருமையைக் கீழ்வருமாறு விளக்குகிறது.

பிறர் மெய்யுணர்வு பெற்று வீடுபேறு அடைவதற்கு முன்பே,

அம்மெய்யுணர்வைத் தாம் பெற்றுத் துறவை மேற்கொண்டவர்.

தாம் வீடுபேறு அடையும்வரை பிற உயிர்க்கு நன்மைதரும் வழிகளை ஆராய்ந்து உணர்ந்தவர்.

தாம் உணர்ந்த நல்லறங்களை மக்களுக்கு அறிவுறுத்தியவர்.

எதையும் தாம் விரும்பாது பிறருடைய நன்மையின் பொருட்டே முயற்சிகளை மேற்கொண்டவர்.

இத்தகைய அருங்குணங்களை உடைய புத்தரே எம்இறைவன். அப்பெருமானின் திருவடிகளைச் சரணடைந்து வணங்குவோம் என்றுரைக்கும் பாடல் இதோ.

முன்தான் பெருமைக்கண் நின்றான் முடிவு எய்துகாறும்

நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கு என்று

ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்

அன்றே இறைவன் அவன்தாள் சரண் நாங்களே

நிலையாமைக் கோட்பாடு

இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவற்றைக் கூறி, கணந்தோறும் நாம் இறந்து கொண்டிருக்கிறோம். ஆயினும் பிறர் இறப்புக்கு அழுகின்றோம். நம் இறப்புக்கு அழுவதில்லை. இதற்கு என்ன காரணம்? அறியாமைதானே? இப்படிக் கூறுவதின் வாயிலாகக் கூற்றுவன் வருவதற்கு முன் அறச்செயல்களைச் செய்து நல்வினையைப் பெருக்கிக் கொள்க என்று அறிவுறுத்துகிறது குண்டலகேசி. அந்தப் பாடலைப் பார்ப்போமா?

பாளையாம் தன்மை செத்தும்

பாலனாம் தன்மை செத்தும்

காளையாம் தன்மை செத்தும்

காமுறும் இளமை செத்தும்

மீளும் இவ்வியல்பு பின்னே

மேல்வரு மூப்பும் ஆகி

நாளும் நாள் சாகின்றாமால்

நமக்கு நாம் அழாதது என்னே!

குண்டலகேசியின் சிறப்பு

குண்டலகேசி முழுவதும் கிடைக்கவில்லை யென்பது முன்பு கூறியது போல் இழப்புதான். ஆயினும் நீலகேசி என்ற சமணக் காப்பியம் தோன்றி தர்க்க நூல்களின் வரிசையில் சிறப்புப் பெறக் காரணமாக அமைந்தது குண்டலகேசி என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் தோன்றிய முதல் தர்க்கநூல் என்ற சிறப்பிற்கும் உரியது குண்டலகேசி.

6.5 வீரசோழியம்

புத்தமித்திரர் என்னும் பௌத்த சமயத்தவரால் எழுதப்பட்ட நூல் வீரசோழியம். இஃது ஓர் இலக்கண நூல். வடமொழி இலக்கணத்தை ஓரளவிற்குத் தழுவித் தமிழின் ஐந்திலக்கணங்களையும் (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி) சுருக்கமாகக் கூறுவது.

புத்தமித்திரரை ஆதரித்த வீரராசேந்திரன் என்னும் வீரசோழன் பெயரால் இந்நூல் இயற்றப்பட்டதாகலின் இதற்கு இப்பெயர் வழங்கப்பட்டது. இதற்கு வீரசோழியக் காரிகை என்ற பெயரும் உண்டு.

நூலின் அமைப்பு

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஒவ்வொன்றுக்கும் ஓர் அதிகாரம் என்ற வகையில் ஐந்து அதிகாரங்கள் கொண்டது. அதிகாரங்கள் படலங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. நூலின் துவக்கத்தில் ஒரு பாயிரம் உள்ளது.

நூலின் சிறப்பு

வீரசோழியம் இப்போது வழக்கொழிந்து போனாலும் அது தோன்றிய காலகட்டத்தில் சிறப்பாகப் போற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தை இயற்றிக் கச்சிக்குமரக் கோட்டத்தே அரங்கேற்றும் காலத்தில், அப்புராணத்தின் முதற்செய்யுளில் வருகிற திகடசக்கரம் (திகழ்+தசக்கரம்) என்னும் சொல் புணர்ச்சிக்கு இலக்கணம் காட்டும்படி அவையிலுள்ளோர் தடை நிகழ்த்தியபோது, அவர்களுக்கு இந்த வீரசோழியத்திலிருந்து இலக்கணம் காட்டப்பட்டது என்றும், பின்னர் அவையிலுள்ளோர் அப்புணர்ச்சியை ஒத்துக் கொண்டனர் என்றும் ஒரு வரலாறு கூறப்படுகின்றது. இதன் காலம் 11-ஆம் நூற்றாண்டு என்பர்.

வீரசோழியம் என்னும் இந்த நூலும் இதன் உரையும் தமிழ்நாட்டின் சரித்திரம் முதலியவற்றை ஆராய்வதற்கு ஓரளவு உதவி புரிகின்றன.

6.6 பிற நூல்கள்

பௌத்த சமயத்தவர் மிகுந்த செல்வாக்கோடு தமிழகத்தில் வாழ்ந்துள்ளனர். சமயத்தைப் பரப்பப் பல நூல்களையும் இயற்றியுள்ளனர். ஆயினும் பல நூல்களின் பெயர்களைத்தாம் அறிய முடிகிறதே தவிர நூல் முழுவதையும் கண்டறிய முடியவில்லை. காலத்தால் அழிந்தன சில; பாதுகாப்பார் இல்லாமல் அழிந்தன சில. எப்படியாயினும் அது தமிழுக்குப் பேரிழப்பு என்பதில் மறுகருத்து இருக்க இயலாது.

6.6.1 சித்தாந்தத் தொகை சித்தாந்தத் தொகை இறந்துபட்ட நூல்களுள் ஒன்று. பௌத்தமதக் கொள்கைகளைத் தொகுத்துக் கூறும் நூல் எனக் கூறுவர். இயற்றிய ஆசிரியர் பெயரோ காலமோ தெரியவில்லை.

‘மருள்தரு மனம் வாய் மெய்யிற் கொலை முதல்

வினை பத்தாமே’

என்பது சித்தாந்தத்தொகை என்பதாக, நீலகேசி புத்தவாதச் சருக்கத்தில் குறிப்பிடுகிறது. இதைப்பற்றி வேறுசெய்திகள் ஏதும் கிடைக்கவில்லை.

6.6.2 திருப்பதிகம் இதுவும் தமிழுக்குக் கிடைக்கவில்லை. இந்நூல் ஆசிரியர் அவருடைய காலம் ஏதும் தெரியவில்லை. சிவஞான சித்தியார் செய்யுள் உரையில் ஞானப்பிரகாசர் கீழ்க்கண்ட செய்யுளை மேற்கோள் காட்டி, இது திருப்பதிகம் எனக் கொள்க என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

எண்ணிகந்த காலங்கள் எம்பொருட்டால் மிகவுழன்று

எண்ணிகந்த காலங்கள் இருந்தீர ஒருங்குணர்ந்தும்

எண்ணிகந்த தானமும் சீலமும் இவையாக்கி

எண்ணிகந்த குணத்தினான் எம்பெருமான் அல்லனோ

6.6.3 விம்பசாரன் கதை நீலகேசி உரையினால் (130-வது பாட்டு உரை) இப்படியொரு நூல் இருந்ததை அறிகிறோம். நீலகேசி உரையாசிரியர் விம்பசாரக் கதையிலிருந்து நான்கு அடிகளை மேற்கோள் காட்டி, இது விம்பசாரக் கதை என்னும் காவியம், பௌத்த சமய நூல். அதன்கண் கண்டு கொள்க என எழுதியுள்ளார். ஞானப்பிரகாசரும் நீலகேசி உரையாசிரியர் மேற்கோள் காட்டிய நான்கடிகளை மேற்கோள்காட்டி விம்பசாரன் கதையைப் பற்றி எழுதியுள்ளார். இதைப்பற்றி வேறெந்தச் செய்தியும் கிடைக்கவில்லை.

இக்காப்பியத்தின் பெயரைக் கொண்டு, புத்தர் காலத்தில் இருந்தவனும் அவருக்குப் பலவிதத்திலும் தொண்டு செய்து அவரை ஆதரித்து வந்தவனுமான விம்பசாரன் என்னும் அரசனது வரலாற்றைக் கூறுவது இக்காப்பியம் என்கிறார் மயிலை சீனிவேங்கடசாமி. (பௌத்தமும் தமிழும் : 115)

6.7 தொகுப்புரை

பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தமட்டில் பெரும்பான்மை யானவை ஏதோ ஒரு சமயத்தோடு பின்னிப் பிணைந்திருப்பனவே எனலாம். சங்க காலத்து இலக்கியங்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வியலைக் காட்டுவன. அதற்குப்பின் வந்த இலக்கியங்கள் சமயச் சார்புடையனவாகவே அமைந்துள்ளன. ஆயினும் சங்கத்திற்குப் பின்வந்த பழந்தமிழ் இலக்கியங்களை நோக்கும்போது சமயங்களின் சுவடுகள் ஆழமாகப் பதிந்துள்ளமையை அறிந்து கொள்ளலாம். தம் கோட்பாடுகளைப் பரப்ப முனைந்து நின்ற சமயங்கள் அனைத்தும் தமிழையும் மேம்படுத்தின என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சமயம் வளர்ந்தபோது தமிழும் வளர்ந்தது. தமிழ் மேம்பட்டபோது சமயங்களும் மேம்பட்டன. இலக்கியங்களும் இலக்கணங்களும் பெருகித் தமிழுக்கு வளம் சேர்த்தன. இதற்கு எந்தச் சமயமும் விதிவிலக்கன்று.

பௌத்த சமயம் தன் சமயக் கோட்பாடுகளைப் பரப்பிய போது காப்பியங்களும் பிறநூல்களும் தோன்றின. பௌத்த சமயத்தின் சாரத்தையே வடித்துக் கொடுத்துள்ளார் சாத்தனார். மணிமேகலை அதனைப் பறைசாற்றி நிற்கிறது. பௌத்த சமயக் கருத்துகளை மட்டுமன்றி மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான பல அறநெறிகளையும் பரப்பிய பெருமைக்குரியது பௌத்த சமயம். சான்றாக, கொல்லாமை, கள் உண்ணாமை, எல்லாவற்றுக்கும் மேலாகப் பசிப்பிணியைப் போக்கும் அறச்செயல், சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கும் சீரிய செயல் ஆகியவற்றைக் கூறலாம். இவையனைத்தையும் விரிவாக இப்பாடத்தில் பார்த்தோம்.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். சங்ககாலத்தில் பல்வேறு சமயங்களும் தமிழகத்தில் இடம்பெற்றிருந்தன என்பதற்கு இலக்கியங்கள் சான்றாகின்றன. அவரவர் சமயக் கோட்பாடுகளை மக்களிடையே பரப்பினார்கள். ஆனால் அங்குச் சமயக் காழ்ப்பில்லை; சமயப் பொறையே காணப்பட்டது. சிலப்பதிகாரக் காப்பியம் இதற்குச் சிறந்த சான்று. பல்வேறு போக்கில் மணிமேகலைக் காப்பியம் சிறந்த காப்பியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆயினும் அரிய அறங்கள் பலவற்றை மக்களின் மேம்பாட்டிற்காகக் கூறிய சாத்தனார், சமயப்பற்றின் காரணமாகச் சமயக் காழ்ப்பிற்கு அவரை அறியாமலேயே மணிமேகலையில் வித்திடுகின்றார். இதுவே பின்னர் குண்டலகேசியாக ஒரு காப்பியம் உருவாகவும் அதற்கு எதிரான நீலகேசி தோன்றுவதற்கும் காரணமாகியது எனலாம்.

குண்டலகேசியும் பௌத்த சமயக் காப்பியம் என்றாலும் முழுமையாகக் கிடைக்காததால் அதன் பயன்பாட்டை நாம் கவனிக்க இயலவில்லை.

வீரசோழியம் என்ற இலக்கண நூல் இன்றைய நிலையில் வழக்கொழிந்து போயினும் அது தோன்றிய காலத்தில் சிறப்பாக இருந்திருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது. அதனால்தான் உரையாசிரியர் பலராலும் அதன் பாடல்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன.

பௌத்த சமயத் தமிழ் நூல்கள் சில அழிந்துபட்டன. அவற்றையும் இங்கு அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவையும் கிடைத்திருந்தால் பௌத்த சமயத்தின் பல்வேறு பரிமாணங்களையும் அறிந்து கொண்டிருப்போம். அப்படி அமையாமல் போனது பௌத்த சமயத்திற்கும் தமிழுக்கும் ஏற்பட்ட இழப்பு எனலாம். ஆயினும் பௌத்த சமயம் ஒரு காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததையும் அது தமிழுக்கு ஆற்றிய தொண்டினையும் மறக்க இயலாது. காலத்தால் இனி அழிக்க முடியாத பெருமை உடையது என்றும் கூறலாம்.

இந்திய மண்ணில் பிறந்து, தமிழகத்தில் வேரூன்றி வளர்ந்து வளமாக வாழ்ந்த இந்தச் சமயம் இங்கு வேரின்றிப் போனது வருத்தத்தைத் தரும் வரலாற்று நிகழ்ச்சிதான். ஆயினும் உலகின் வேறுபல நாடுகளில் தன் சுவடுகளைப் பதித்து இன்றும் வாழ்வது மகிழ்ச்சியைத் தருகிறது எனலாம்.

பல்வேறு அரசியல் காரணங்களாலும் சாதி, சமயக் காரணங்களாலும் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பலரும் (பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்கள்) பௌத்த சமயத்தைப் பின்பற்றிய செய்தி வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அம்பேத்கர் இதற்கு மூலகாரணமாக அமைந்தார். அதன் தொடர்ச்சியே மதமாற்றம் எனலாம். இக்கால கட்டத்தில் மேற்கூறப்பட்ட பிரிவினர் பௌத்த சமயத்தைத் தழுவுவது நடைமுறைச் செயலாக மலர்ந்துள்ளது.