25

கவிதை

பாடம் - 1

படைப்பிலக்கியம் - பொருள் வரையறை

1.0 பாட முன்னுரை

இலக்கியம் என்பது இலக்கை (குறிக்கோளை) இயம்புவதாகும். சமுதாய வாழ்வின் பிரதிபலிப்பாக அமைவது இது. ஓர் இலக்கியம், தான்தோன்றிய சமுதாயத்தின் நாகரிகம், பண்பாடு, அரசியல், சமய நிலை முதலானவற்றை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உணர்த்தி நிற்கும். மக்களின் உணர்வுக்கு உவகையளிப்பது கலை. நுண்ணிதின் உணர்ந்து மகிழுமாறு திகழ்வது நுண்கலையாகும். அத்தகைய நுண்கலைகளுள் இலக்கியமும் ஒன்று.

தமிழ்மொழியின் தொன்மையை அதில் தோன்றிய நூல்கள் புலப்படுத்துகின்றன. தமிழ்மொழியின்வழித் தமிழரின் பண்பாடு, பழக்க வழக்கம், தொன்மை நிலை முதலியன புலனாகின்றன. இலக்கியம் தான்தோன்றிய சமுதாயத்தை மாற்றி அமைக்கவல்ல ஆற்றலைக் கொண்டதும் ஆகும். இலக்கியத்தின் வடிவமும் பொருளும் சமுதாயத்தின் தேவைக்கேற்ப மாறி அமைகின்றன. இலக்கியத்தின் நோக்கம் மக்களை இன்புறுத்துவதும், வெளிப்படையாகவோ குறிப்பாகவோ உயர்ந்த வாழ்வியல் நெறிகளை அவர்களுக்கு அறிவுறுத்துவதுமாகும்.

பொதுவாக, பயன்தரத்தக்க சிறந்த எழுத்து வடிவங்களே இலக்கியம் எனப்படுகின்றன. தாலாட்டு, ஒப்பாரி போன்ற எழுதப் பெறாத பாடல்களும் இன்று நாட்டுப்புற இலக்கியம் எனக் கருதப்பெறுகின்றன. எப்படிப்பட்ட இலக்கியமாயினும், அஃது எவ்வகையேனும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருள்களுள் தன்னால் இயன்றவற்றை எடுத்தியம்புவதாக அமைவது இயல்பு.

சங்க இலக்கியம் முதலான இலக்கிய வகைகளிலிருந்து வேறுபட்டு அமைவது படைப்பிலக்கியம். பிற இலக்கியங்கள், கற்று நுகர்ந்தும், நின்றும் (கடைப்பிடித்தும்) பயன் துய்க்கத் தக்கவை. படைப்பிலக்கியம் அப்பயன்களோடு மேலும் ஒரு பயனையும் தரவல்லது. இதுபோலவும், இதனின் சிறப்பாகவும் படிப்போரில் திறனுடையோரைப் படைக்கத் தூண்டுவது. கவிதை, உரைநடை ஆகிய வகைமைகளில் எவ்வெவ்வாறு இலக்கியங்களைப் படைப்பது என்பதைச் சான்றுடன் கற்பிப்பதே படைப்பிலக்கியத்தின் பணியும் பயனுமாகும்.

கவிதை, நாடகம், புனைகதை, கட்டுரை ஆகிய அமைப்புகளில் படைப்பிலக்கியங்களின் வரலாறு குறித்தும், அவற்றைப் படைக்கும் முறை குறித்தும் படைப்பிலக்கியம் என்னும் பெருந்தலைப்பு விரிவாக ஆராய்கின்றது. அவையனைத்திற்கும் ஒரு முன்னோடியாக இப்பாடத்தில் அவை குறித்துத் தெரிந்து கொள்வோம்.

1.1 கவிதை இலக்கியம்

‘இச்சொல்லை நீக்கி வேறொரு சொல்லை இங்கு அமைத்தால் இக்கருத்தும் அமைப்பும் சிறக்காது’ என்று கருதுமளவிற்கு இன்றியமையாத சொற்சேர்க்கையைக் கொண்டு திகழ்வது கவிதை. படிப்போரும் கேட்போரும் மகிழும் வண்ணம் நல்ல நடையுடையதாக விளங்க வேண்டியது கவிதைக்கு அவசியமானதோர் இலக்கணமாகும். கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகியவற்றால் பிற எல்லாவற்றினும் சிறந்திருக்க வேண்டியது கவிதைக்கு மிகத் தேவையான பண்பாகும்.

இலக்கண நூல்களைப் பயின்றும், இலக்கியங்களை இடைவிடாது படித்தும், யாப்பு விதிகளையும், ஓசை நலன்களையும் உள்வாங்கிக் கொண்டு, சீரும் தளையும் சிதையாமல் வரையறுத்த அமைப்பில் பாப்புனைவது மரபுக்கவிதை எனப்படும். இலக்கணக் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் உணர்ச்சி வெளிப்படப் பாடுவது புதுக்கவிதையாகும். இவையன்றி இசைப் பாடல்களும் (சந்தப் பாடல்கள்) கவிதை என்பதற்குள் அடங்குவனவாகும்.

1.1.1 மரபுக் கவிதை ஆசிரியப்பா, வெண்பா என்னும் பா வகைகளும், ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் என்னும் பாவினங்களும் மட்டுமே இன்றைய நிலையில் மரபுக் கவிதை வகையில் செல்வாக்குப் பெற்று வருகின்றன. பா வகைகள் சீர், தளை பிறழாதன; பாவின வகைகள் குறிப்பிட்ட வாய்பாடுகளில் அமையும் நான்கு அடிகளை உடையன.

கருத்து

ஆசில்பர தாரமவை அஞ்சிறைஅ டைப்போம்;

மாசில்புகழ் காதலுறு வேம்;வளமை கூரப்

பேசுவது மானம்;இடை பேணுவது காமம்;

கூசுவது மானுடரை; நன்றுநம கொற்றம்

(கம்பராமாயணம்)

இப்பாடல் அளவடி நான்கு கொண்டு அமைவதாகிய கலிவிருத்தமாகும். கும்பகருணன், தன் அண்ணன் இராவணனிடம், ”அடுத்தவனின் கற்புப் பிறழாத மனைவியைக் கொண்டுவந்து சிறையில் அடைப்போம்; ஆனால் புகழை எதிர்பார்ப்போம்; மானத்தைப் பேசுவோம்; காமத்திற்கு அடிமையாவோம்; மானுடர் இழிந்தவர் என்போம்; மானிடப் பெண்டிரை நயப்போம்; நன்றாக இருக்கிறது. அண்ணா, நம்முடைய வெற்றி பொருந்திய அரசாட்சி!” என்று அரசவையில் துணிந்து நையாண்டி செய்கிறான். இது இராவணனுக்கு மட்டும் கூறப்பட்டதன்று; எக்காலத்திற்கும் சராசரி மனிதனின் அடிமனத்தில் நிலவும் தகாத காம உணர்வைத் திருத்தி நெறிப்படுத்தத் தக்கதாகவும் உள்ளது. ஒலிநயமும் இனியதாக உள்ளது.

உணர்ச்சி

நகை (சிரிப்பு), அழுகை, இளிவரல் (இழிவு), மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை (மகிழ்ச்சி) என்பன எண்வகை மெய்ப்பாடுகள் எனப்படும். இவற்றுடன், எதற்கும் கலங்காதிருக்கும் நிலையாகிய சாந்தம் என்பதனையும் சேர்த்து நவரசம் (ஒன்பான் சுவை) என்பர். கற்போர்க்கும் கேட்போர்க்கும் இவ்வுணர்ச்சிகள் பொங்குமாறு மாற்றத்தை ஏற்படுத்துவது கவிதையின்கண் அமையும் உணர்ச்சியாகும்.

தேவி திரௌபதி சொல்வாள் – ஓம்

தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;

பாவிதுச் சாதனன் செந்நீர் – அந்தப்

பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்

மேவி இரண்டும் கலந்து – குழல்

மீதினில் பூசி நறுநெய் குளித்தே

சீவிக் குழல்முடிப் பேன்யான் – இது

செய்யுமுன் னேமுடி யேனென் றுரைத்தாள்

(பாஞ்சாலி சபதம்)

பாஞ்சாலியின் இந்தச் சபதத்தில் தென்படும் வீரவுணர்ச்சி பயில்வாரையும் வந்து பற்றுவதை உணரலாம். இது, வெண்டளை பயின்றுவந்த நொண்டிச் சிந்து வகையாகும்.

கற்பனை

ஒருத்தியின் பல், முத்தின் அழகையும் தோற்கடிப்பதாக இருந்தது. அதனை நாணிய முத்து, தற்கொலைக்கு முயன்று, அப்பல் தங்கி வாழும் வாய் ஆகிய வாயிலில் தூக்கில் தொங்கலானது. அதுதான் அவள் மூக்கில் தொங்கும் புல்லாக்கு என்னும் மூக்கணியாகும். இது சிவப்பிரகாசர் என்னும் புலவரின் கற்பனையாகும். கற்பனைக் களஞ்சியம் என்னும் சிறப்புப் பெயருடையவர் இவர். அப்பாடல் வருமாறு:

தன்னை நிந்தைசெய் வெண்நகை மேல்பழி சார

மன்னி ஆங்கது நிகர்அற வாழ்மனை வாய்தன்

முன்இ றந்திடு வேன்என ஞான்றுகொள் முறைமை

என்ன வெண்மணி மூக்கணி ஒருத்திநின் றிட்டாள்

(வெண்நகை= பல்; மன்னி = நிலைத்து; ஞான்று = தொங்குதல்; வெண்மணி = முத்து)

இப்பாடல் ஐந்து சீர்கள் உடையதாகிய நெடிலடி நான்கு கொண்ட கலித்துறை என்னும் யாப்பில் அமைந்ததாகும்.

வடிவம்

‘கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் தேமா’ என்னும் வாய்பாட்டிலான கலிவிருத்தம் பின்வருமாறு :

பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம னுங்கச்

செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி

அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்

வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்

(கம்பராமாயணம்)

(பல்லவம் = தளிர்; அனுங்க = தோற்க; கஞ்சம் = தாமரை)

இதில் ‘தந்ததன தந்ததன தந்ததன தான’ என்னும் சந்தம் அமைந்திருத்தலின் ஒலிநயத்திற்கும் தக்க சான்றாகும். இதில் சொல்நயமும் குறிப்பிடத்தக்கது.

பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை, சுத்தானந்த பாரதியார், பெருஞ்சித்திரனார், முடியரசன், சுரதா, வாணிதாசன், பெரியசாமித் தூரன், கவியரசு கண்ணதாசன் போன்றோரது கவிதைகளும் மரபுக்கவிதை படைப்போர்க்குத் தக்க முன்னோடிப் படைப்புகளாகும்.

1.1.2 புதுக்கவிதை எதுகை, மோனை வரையறைகளைக் கடந்து, வேண்டாத சொற்களைத் தவிர்த்துச் சுவை மிளிர நடைமுறைச் சொற்களால் கருத்தை உணர்த்துவது புதுக்கவிதையாகும். மேனாட்டாரின் இலக்கியத் தாக்கத்தால் இருபதாம் நூற்றாண்டளவில் தமிழ்மொழியில் சிறந்தெழுந்த வகைப்பாடாகும் இது.

கருத்து

பாதை முள்

படுக்கை முள்

இருக்கை முள்

வாழ்க்கை முள்

ஆன மனிதர்களைப் பார்த்துச்

சிலிர்த்துக் கொண்டது

முள்ளம்பன்றி…

ஓ.. இவர்களுக்குத் தெரியாதா

முள்ளும் ஓர்

ஆயுதம் என்று

(சிற்பி பாலசுப்பிரமணியம்)

இக்கவிதை, குறைகளை நிறைகளாக்கி மகிழ்வதை, சாபங்களை வரங்களாகக் கருதும் மனப்பான்மையை மானுடர் யாவர்க்கும் உணர்த்தி நிற்கின்றது.

உணர்ச்சி

உனக்கென்ன

ஒரு பார்வையை வீசிவிட்டுப் போகிறாய்

என் உள்ளமல்லவா

வைக்கோலாய்ப் பற்றி எரிகிறது !                   (மீரா)

என்னும் கவிதை காதல் உணர்வை இனிதே வெளிப்படுத்துகின்றது.

கற்பனை

ஏழைகள் வீட்டிலிருந்து

புகை

வருவதால் அவர்கள்

சமைக்கிறார்கள் என்று

அர்த்தம் இல்லை

அந்தப் புகை அவர்கள்

எரியும் மனத்திலிருந்தும்

எழுந்து வரலாம்                     (ஈரோடு தமிழன்பன்)

என்பதில், மக்களின் வறுமை நிலை புகையாகிய காரியத்திற்குக் காரணம் தீயாக இருக்க இயலும், பசித் தீயாகவே இருக்க இயலும் என்னும் கருத்துப் புலப்படுகிறது.

வடிவம்

புதுக்கவிதையில் வரையறுத்த வடிவம் இல்லை.

தொப்பையாய்

நனைந்துவிட்ட மகள்

அப்பா

தலையை நல்லாத் துவட்டுங்க

என்றாள்

கிழியாத அன்பும் கிழிந்த துண்டுமாய்

(ஈரோடு தமிழன்பன்)

என்பதில் முரண்தொடை அமைந்திருப்பது கருதத்தக்கது.

ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், புவியரசு, ஈரோடு தமிழன்பன், தமிழ்நாடன், காமராசன், மேத்தா, மீரா, சிற்பி பாலசுப்பிரமணியம், அக்கினி புத்திரன், அப்துல் ரகுமான் போன்றோர் தம் புதுக்கவிதைகள் புதியன படைப்பவர்களுக்குச் சிறந்த முன்னோடிகளாகும்.

1.1.3 இசைப் பாடல்கள் கீர்த்தனை, கும்மி, சிந்து என்பன இசைப் பாடல் வகைகளாகும்.

பூட்டைத் திறப்பது கையாலே – மனப்

பூட்டைத் திறப்பதும் மெய்யாலே;

வீட்டைத் திறக்க முடியாமல் – விட்ட

விதிய தென்கிறார் ஞானப் பெண்ணே

(சித்தர் பாடல்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு; – நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரம்என்றோர் – மணி

யாரம் படைத்த தமிழ்நாடு

(பாரதியார்)

என்பன சிந்துப் பாடல்களுக்கான சான்றுகளாகும்.

1.2 நாடக இலக்கியம்

நாடு + அகம் = நாடகம்; உள்ளம் விரும்புமாறு ஆடலும் பாடலும் கொண்டு விளங்குவது நாடகம் ஆகும். ‘இல்லது, இனியது, நல்லது என்று புலவரால் நாட்டப்படுவது நாடகம்’ என்பார் தொல்காப்பிய உரையாசிரியர். கூத்தரும் விறலியரும் நாடகக் கலைஞர்கள் ஆவர்.

1.2.1 காலந்தோறும் நாடகம் தொல்காப்பியத்தில் நாடக வழக்கு என்னும் சொல்லாட்சி காணப் பெறுகின்றது. பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், பஞ்சமரபு, பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற நாடக இலக்கண நூல்கள் பண்டைக் காலத்தில் இருந்தமையைச் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையின்வழி அறியலாம். கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் நாடகக் கூறுகளை நன்றாகக் காணமுடிகின்றது.

கலைகள் காமத்தை மிகுவிப்பன என்ற எண்ணமுடைய சமணர்களால் களப்பிரர் காலத்தில் நாடகம் தன் செல்வாக்கை இழந்தது. இராஜராஜசோழன் காலத்தில் ராஜராஜேஸ்வர விஜயம் என்னும் நாடகம் இயற்றப்பட்டு நடிக்கப் பெற்றது. பிறகு கி.பி.17ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து மீண்டும் நாடகங்கள் புத்துயிர் பெறத் தொடங்கின. பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் முதலியன எளிய நடையில் அமைந்து மக்களை மிகவும் கவர்ந்தன.

கி.பி.18ஆம் நூற்றாண்டளவில், இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை போன்ற நாடகங்கள் மிகப் புகழ் பெற்றன.

கி.பி.19ஆம் நூற்றாண்டு தொடங்கி, நாடகம் மிகுந்த வளர்ச்சிபெறத் தொடங்கியது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, ஆங்கில மொழியின் இரகசிய வழி (The secret way) என்னும் நூலைத் தழுவி, மனோன்மணீயம் என்னும் நாடகத்தை யாத்தளித்தார். இதனைப் போன்று அடுத்தடுத்துக் கவிதை நாடகங்கள் பல தமிழில் எழுந்தன. பிறகு, உரைநடை உரையாடல்கள் கொண்ட நாடகங்கள் பலவும் தோன்றலாயின. பிற்காலத்திய திரைப்படத் தோற்றத்திற்கு நாடகமே முன்னோடி என்பது யாவரும் அறிந்த ஒன்றேயாகும். இன்றும், தொலைக்காட்சிகளில் நாடகத்தின் செல்வாக்குச் சிறந்து விளங்கி வருவது கண்கூடு.

காசி விசுவநாத முதலியார், திண்டிவனம் ராமசாமி ராஜா, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற் கலைஞர், பம்மல் சம்பந்த முதலியார், நவாப் ராஜமாணிக்கம், எம்.ஆர்.ராதா, ஆர்.எஸ்.மனோகர் ஆகியோர் நாடகத் துறையில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

1.2.2 நாடக அமைப்பு நாடகத்தில் உரையாடல் முதலிடம் பெறும். பங்கு பெறுவோர் கதாபாத்திரங்கள் எனப் பெறுவர். நிகழ்ச்சி நடைபெறும் இடம், காலம், சூழல் ஆகியனவும் குறிக்கப் பெற வேண்டும். பேசுவோருக்கேற்ற உணர்ச்சிக் குறிப்புகள் (மெய்ப்பாடு) வசனத்தில் ஆங்காங்கே அடைப்புக் குறிக்குள் சுட்டப் பெறுவதும் உண்டு.

நாடகம், பொதுவாக, தொடக்கம், வளர்ச்சி, உச்சம், வீழ்ச்சி, முடிவு என்று ஐந்து கூறுகளையுடையதாக இருக்கும். இக்கூறுகளாகிய பெரும்பிரிவுகள் அங்கங்கள் என்னும் பெயரில் விளங்கும். இவற்றில் களன் அல்லது காட்சி என்னும் சிறு பிரிவுகள் அமையும்.

இன்பியலாகவோ, துன்பியலாகவோ நாடகங்கள் முடிவு பெறும். துன்பியல் முடிவுகளே பெரும்பாலும் வரவேற்புப் பெறும். நாடகம் இத்தனை பக்கங்கள் அல்லது இவ்வளவு கால நேரம் கொண்டதாக விளங்க வேண்டும் என்றெல்லாம் எந்த வரையறையும் இல்லை. படிக்கத்தக்கன, நடிக்கத்தக்கன, படிக்கவும் நடிக்கவும் தக்கன எனப் பல வகைகளில் நாடகம் புனையப் பெறும். நாடகம் நடிக்கப் பெறுங்காலத்து நடிப்பவரின் மெய்ப்பாடு, குரல் அழுத்த வேறுபாடு முதலியன வசனத்திற்கு மேலும் மெருகூட்டிக் காண்போரை விரைந்து சென்றடைகின்றன எனலாம். மேடை நாடகம், வானொலி நாடகம், தொலைக்காட்சி நாடகம், படிப்பறை நாடகம் எனப் பலவாகக் கலைஞரின் நிலைக்கேற்ப நாடகங்கள் புத்தம் புதியனவாகப் படைத்தளிக்கப் பெற்று வருகின்றன.

1.2.3 நாடக வகைகள் பொருண்மை அடிப்படையில் நாடகங்களை வகைப்படுத்திக் காணுதல் தகும்.

சமூக நாடகங்கள்

சமூக நாடகங்கள் சமூகச் சூழல்களின் பின்னணியில் எழுதப் பெற்றவை; அன்றாட வாழ்வியல், சராசரி மக்களின் வாழ்க்கை ஆகியவற்றின் அடிப்படையில் அமைவன; சீர்த்திருத்த நோக்கம் கொண்டவை. வீடு, அலுவலகம், சீர்வரிசை எனப் பல நிலைகளிலும் காணும் அவலங்களை அடையாளம் காட்டுவன; சிக்கல்களை எடுத்துரைத்துத் தீர்வுகளையும் புலப்படுத்துவன இவை. 1867-ஆம் ஆண்டில் காசிவிசுவநாத முதலியார் எழுதிய டம்பாச்சாரி விலாசம் இவ்வகையில் முதல் நாடகமாகும்.

புராண இதிகாச நாடகங்கள்

சிறுத்தொண்டர், அரிச்சந்திரன், மார்க்கண்டேயன் முதலானோரின் புராண வரலாறுகளையும், இராமாயண, மகாபாரதங்களாகிய இதிகாசங்களையும் அடிப்படையாகக் கொண்டு புனையப்படுவன இவ்வகையின. லவகுசா இராமாயண அடிப்படையிலும், கிருஷ்ணன் தூது, கர்ண மோட்சம் என்பன மகாபாரத அடிப்படையிலும் இயற்றப் பட்டனவாகும். இவற்றில் வசனங்கள் பழங்கால நடையினவாக அமைதல் வேண்டும். ஒப்பனைகளும் கற்பனை நிலையில் பல்வேறு அணிகலன்களும் கிரீடங்களும் (மணிமுடி) கொண்டு அமைக்கப்படுதல் மரபு. பாடல்கள் இவற்றில் மிகுதியாகக் காணப்படும். இவை மேடை நாடகங்களில் செல்வாக்குப் பெற்றவை. இயற்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல தெய்வீக நிலையில் இவற்றில் இடம்பெறும். இதற்கேற்ப மேடையமைப்பு ஏற்பாடுகளும் அமையும்.

சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளி திருமணம், சதி அனுசூயா, பவளக்கொடி, அபிமன்யு, பிரகலாதா முதலான நாடகங்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கனவாகும்.

வரலாற்று நாடகங்கள்

நடந்த நிகழ்ச்சிகளை உண்மைக்கு மாறுபாடின்றி எடுத்துரைப்பது வரலாற்று நாடகங்களின் இயல்பாகும். சுவை மிகுதிப்பாட்டிற்காகச் சில நிகழ்வுகளும் சில கதாபாத்திரங்களும் இவற்றில் படைத்துக் கொள்ளப் பெறும். ஒரு சில வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்திப் பிற பகுதிகள் புனைந்து எழுதப் பெறுதல் வழக்கம்.

அரு.ராமநாதனின் இராஜராஜ சோழன், ஆறு.அழகப்பனின் திருமலை நாயக்கர், கண்ணதாசனின் சிவகங்கைச் சீமை போன்றன இவ்வகையில் அமைந்த நாடகங்களில் குறிப்பிடத் தக்கவையாகும்.

இலக்கிய நாடகங்கள்

சங்க இலக்கியம், காப்பியங்கள் ஆகியவற்றில் காணப்பெறும் சிற்சில கதாபாத்திரங்களையும், குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளையும் மையப் பொருளாகக் கொண்டு புனையப்பெறுவன இவ்வகை நாடகங்கள் ஆகும். இவற்றில் தலைமைப் பாத்திரங்கள் செந்தமிழ் நடையிலும், சராசரிக் குடிமக்கள் பாத்திரங்கள் வழக்குத்தமிழ் நடையிலும் வசனம் பேசுதலாக அமைப்பது இயல்பு. இவற்றைக் கவிதையில் அமைப்பதும் உண்டு. உரைநடையில் அமைப்பதும் உண்டு. பாரதிதாசனின் பிசிராந்தையார், சேரதாண்டவம், வ.சுப.மாணிக்கனாரின் மனைவியின் உரிமை (வள்ளல் பேகன் வரலாறு), புலவர் பழநியின் அனிச்ச அடி (பெண் கொலை புரிந்த நன்னன் கதை), மறைமலையடிகளின் அம்பிகாபதி அமராவதி, அ.ச.ஞானசம்பந்தனாரின் தெள்ளாறெறிந்த நந்தி போன்றன இவ்வகை நாடகங்களுக்குத் தக்க சான்றுகளாகும்.

வாழ்க்கை வரலாற்று நாடகங்கள்

ஒருவருடைய வாழ்க்கை வரலாறு முழுவதும் தெரிந்த நிலையில், அவை விடுபடாத வண்ணம் புனைந்துரை அதிகமின்றி உள்ள வண்ணம், எழுதுவது இத்தகு நாடகமாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகள் யாவும் இதில் இடம்பெறும்.

மு.வரதராசனாரின் பச்சையப்பர் நாடகம் இதற்குத் தக்க எடுத்துக் காட்டாகும். அழகிரிசாமியின் கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்பதும் பல நிகழ்ச்சித் தொகுப்பாக அமைந்து இவ்வகை நாடகமாக அமைகின்றது.

அரசியல் நாடகங்கள்

அரசியல் உணர்வும், சிந்தனையும் அமைந்த நாடகங்கள் இவை. விடுதலைப் போராட்டக் காலத்தில் வீறுணர்ச்சியை ஊட்டின. எஸ்.டி.சுந்தரத்தின் வீர சுதந்திரம் என்பது திருப்பூர் குமரன், சுப்பிரமணிய பாரதி, அரவிந்தர் போன்றோர் தம் வீர வரலாறு கொண்டு தொகுக்கப் பெற்றதாகும்.

நகைச்சுவை நாடகங்கள்

மக்களைச் சிரிக்க வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, உருவம், மொழிநடை, அறியாமை, அப்பாவித்தனம் ஆகியவற்றின் அடிப்படையில் புனையப் பெறுவது இது. இதன் தலைப்பே இதனியல்பைப் புலப்படுத்துவதாக அமைவதுண்டு. கேலி, கிண்டல், தரக்குறைவு முதலியன இவற்றில் மிகுந்திருத்தல் இயல்பு.

சங்கீதப் பைத்தியம், வைகுண்ட வைத்தியர், சோம்பேறி, சபாபதி, சகுனம் பார்த்தது போன்றன இவ்வகை நாடகங்களாகும். பம்மல் சம்பந்த முதலியார் இவ்வகை நாடகங்களில் ஆற்றல் படைத்தவராவார்.

துப்பறியும் நாடகங்கள்

இவ்வகை நாடகங்கள் திருட்டு, கொலை, சதி போன்றவற்றில் ஈடுபட்டவர்களைத் தக்க தடயங்களைக் கொண்டு கண்டுபிடிப்பதாக அமைந்திருக்கும். இது மேனாட்டு நாடகங்களைத் தழுவி எழுந்த வகைப்பாடு.

இன்ஸ்பெக்டர், சதுரங்கம், கொலை போன்றவை இத்தகு நாடகங்களாகும். பரமகுரு எழுதிய வினை விதைத்தவர் என்னும் நாடகம் இவ்வகைக்குத் தக்க சான்றாகும்.

மொழிபெயர்ப்பு நாடகங்கள்

சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழிகளில் படைக்கப்பட்ட சிறந்த நாடக இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் இவ்வகையில் அடங்கும்.

மறைமலையடிகளின் சாகுந்தல நாடகம், வடமொழியில் அமைந்த காளிதாசனின் சாகுந்தலத்தின் மொழிபெயர்ப்பாகும். ஆங்கிலத்தில் அமைந்த சேக்ஸ்பியரின் நாடகங்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம், ஆங்கிலத்தில் லிட்டன் என்பார் எழுதிய இரகசிய வழி (The Secret Way) என்னும் நாடகத்தின் தழுவலாகும்.

இவ்வாறு நாடகங்கள் பல வகைப்படும். வார இதழ், மாத இதழ்களில் தொடர்ந்து தொடர் நாடகங்களாக வெளிவரும் நாடகங்களும் இக்காலத்தில் மிகவும் குறிப்பிடத் தக்கனவாகும். மேடை நாடகங்களுக்கென நாடகக் குழுக்கள், நாடக சபாக்கள் பல இன்றும் நின்று நிலவுகின்றன.

1.3 புனைகதை இலக்கியம்

நடந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டோ, அவற்றை ஒட்டியோ கற்பனை கலந்து புனையப் பெறுவன புனைகதைகளாகும். இவை வருணனைப் பாங்கில் அமையும். பெரும்பாலும் எழுத்தாளனே முன்னின்று கதாபாத்திரங்களின் உணர்வையும் செயலையும், நடைபெறும் செயல்களையும் எடுத்துரைப்பதாக எழுதப்பெறுவதாகும். சிறுபான்மை, ஒரு கதாபாத்திரமோ, ஒன்றற்கு மேற்பட்டனவோ தத்தம் நோக்கில் நிகழ்ச்சிகளை எடுத்துரைப்பதாகப் புனையப் பெறுவதும் உண்டு. இது உரைநடையின் செல்வாக்கால் தோன்றியது.

புனைகதையானது சிறுகதை, புதினம் என இரு பிரிவுகளாக அமையும். அவற்றின் இலக்கணங்களையும், வளர்ச்சி வரலாற்றையும் வகைகளையும் குறித்துக் காண்போம்.

1.3.1 சிறுகதை புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராஜாஜி. சிறுகதையின் இயல்பு, சிறுகதை வளர்ச்சி ஆகியன குறித்து ஓரளவிற்கு இங்குத் தெரிந்து கொள்வோம்.

சிறுகதையின் இயல்பு

(1) ஏதேனும் ஒரு பொருண்மையை மையமிட்டிருத்தல்

(2) ஒரு சில பாத்திரங்களைக் கொண்டிருத்தல்.

(3) ஓரிரு நிகழ்ச்சிகளில் அமைதல்.

(4) ஒரு முறை அமர்ந்து அரை மணி முதல் இரண்டு மணி நேரத்திற்குள் படிக்கத் தக்கதாய் விளங்குதல்.

(5) தொடக்கமும் முடிவும் சுவையுடன் விறுவிறுப்பாகக் குதிரைப் பந்தயம்போல் அமைதல்.

(6) வெற்றெனத் தொடுக்கும் சொல்லோ நிகழ்ச்சியோ அமையாதிருத்தல்.

(7) சுருங்கச் சொல்லலும் சுருக்கெனச் சொல்லலும் பெற்றிருத்தல்.

(8) உரையாடல் அளவோடிருத்தல்.

(9) கண்முன்னே நேரே நடப்பது போன்ற உணர்வுத் தூண்டலை ஏற்படுத்துதல்.

இவை சிறுகதையின் இயல்புகளாகும்.

சிறுகதை வளர்ச்சி

தொல்காப்பியத்தில் ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி’ என வருவது சிறுகதையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். சிலப்பதிகாரத்தில் வரும் தேவந்தி கதை, மணிமேகலையில் இடம் பெறும் ஆபுத்திரன், ஆதிரை, காயசண்டிகை ஆகியோரின் கதைகள் ஆகிய யாவும் சிறுகதைத் தன்மையில் அடங்குவனவேயாகும். சீவகசிந்தாமணியின் இலம்பகம் (பிரிவு) ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறுகதை எனலாம். பெரிய புராணமும் பல சிறு, சிறு கதைகளின் தொகுப்பு என்று கூறலாம்.

நாட்டுப்புறக் கதைகளும் தொன்றுதொட்டு இடம்பெற்று வருவனவாகும். குழந்தைகளை உறங்க வைக்கவும், நன்னெறிப்படுத்தவும், பொழுதுபோக்கவும் காலங்காலமாக உறுதுணையாக விளங்குவன சிறுகதைகளே எனலாம்.

தமிழில் மதன காமராசன் கதை, விக்கிரமாதித்தன் கதை போன்றன இருப்பினும், மேனாட்டார் வருகைக்குப் பின்னரே நறுக்குத் தெறித்தாற் போன்ற சிறுகதைகள் தோன்றலாயின. முன்பிருந்த கதைகள், புராணம், அரச வரலாறு பற்றியனவாகவும், பல நிகழ்ச்சிகள் கொண்ட நெடுங்கதைகளாகவும் விளங்கின; இயற்கை யிகந்த (இயற்கையைக் கடந்த) நிகழ்ச்சிகளும் அவற்றில் உண்டு. ஆனால் பிற்காலத்து எழுந்த சிறுகதைகள் சாமானியர்களையும், நடைமுறை வாழ்வையும் பற்றியனவாக அமைந்தன; வருணனையுடையனவாகவும் உரையாடல் பாங்குடையனவாகவும் விளங்கலாயின. இயற்கை யிகந்த நிகழ்ச்சிகள் இவற்றில் பொதுவாக இடம் பெறுவதில்லை.

தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை, வ.வே.சு. ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை என்பதாகும். இவர் எழுதிய மங்கையர்க்கரசியின் காதல் என்னும் சிறுகதைத் தொகுதி எட்டுச் சிறுகதைகளைக் கொண்டது. தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப்படுபவர் இவர்.

மணிக்கொடி இதழ் சிறுகதைகளை வளர்த்த பெருமைக்குரியது. புதுமைப்பித்தன், சிறுகதை மன்னன் எனப் போற்றப் பெறுபவராவார். காஞ்சனை, அகல்யை, சாப விமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்றன இவர் படைப்புகளில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளாகும். பேச்சுத் தமிழ், நனவோட்ட உத்தி, நடப்பியல் ஆகியவற்றைச் சிறுகதையில் புகுத்திய பெருமை இவரையே சாரும். கு.அழகிரிசாமியின் அன்பளிப்பு, ஜெயகாந்தனின் ஒருபிடி சோறு, கோவி.மணிசேகரனின் காளையார் கோயில் ரதம், ஜெகசிற்பியனின் நொண்டிப் பிள்ளையார், சு.சமுத்திரத்தின் காகித உறவுகள், தி.ஜானகிராமனின் சக்தி வைத்தியம் போன்றன குறிப்பிடத்தக்க சிறுகதைகளாகும்.

இக்காலத்தில் சிறுகதைகள் வார இதழ்களிலும், மாத இதழ்களிலும் எழுதப் பெற்று வருகின்றன. இதழ்களில் வெளிவரும் சிறுகதைகளின் எண்ணிக்கை (ஆண்டொன்றிற்கு) ஐயாயிரம் கதைகளுக்கு மேற்பட்டவையாக அமைகின்றன. இன்றைய இதழ்களில் ஒருபக்கச் சிறுகதைகள், அரைப்பக்கச் சிறுகதைகள், கால்பக்கச் சிறுகதைகள் என இவற்றின் வடிவம் வேறுபட்டு இடம் பெறுவதையும் காணமுடிகின்றது. கதாபாத்திரம் தானே பேசுவது போலவும், பின்னோக்கு உத்தியில் அமைவதாகவும் பல கதைகள் வெளிவருகின்றன.

1.3.2 புதினம் உரைநடையில் எழுதப்பட்ட நெடுங்கதையே நாவல் அல்லது புதினம் எனப்படுகின்றது. இது பல அத்தியாயங்கள் (பிரிவுகள்) கொண்டது. இதன் இயல்பும் வளர்ச்சியும் வகையும் குறித்துக் காண்போம்.

புதினத்தின் இயல்பு

(1) பலருடைய வாழ்வில் நிகழ்வனவற்றை ஒருவருடைய வாழ்வில் நிகழ்வனவாகப் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தும் ஒருமுகப் படுத்தியும் உருவாக்கப்படுவது.

(2) எண்ணற்ற கதை நிகழ்வுகளையுடையது.

(3) காலத்தால் விரிந்த நிகழ்ச்சிகளைக் கொண்டது.

(4) பல கதைப் பாத்திரங்களைக் கொண்டது.

(5) பல்வேறு இடப் பின்னணிகளையுடையது.

(6) கதைப் பின்னலில் ஒருமைப்பாடுடையது.

(7) முதன்மைப் பாத்திரங்கள், துணைப் பாத்திரங்கள் எனப் பாத்திரப் பாகுபாடு உண்டு. நிலைமாந்தர் என்பது மாறாத இயல்புடைய பாத்திரம்; அலைமாந்தர் மாறும் இயல்புடைய பாத்திரம்.

(8) உரையாடல் வேண்டிய அளவிற்கு அமைந்திருக்கும்.

(9) வருணனைகள் நிறைந்திருக்கும்.

(10) படைப்பாளர் இடையிடையே கதைமாந்தர், கதை நிகழ்வுகள் குறித்துக் கருத்துத் தெரிவிப்பர்.

(11) கதை மாந்தரே அல்லது கதை மாந்தர்களே தம் கதையைச் சொல்வதாக அமைக்கப்படுவதும் உண்டு.

(12) மையக் குறிக்கோள் ஒன்றும், இடையிடையே பல அறவுரைகளும் உடையதாக அமையும்.

(13) உரைநடையில் அமைந்த காப்பியம் என இதனைக் கருதுதல் தகும்.

(14) புதினப் படைப்பாளி, தம் படைப்பில் ஏதேனும் ஒரு கதைப் பாத்திரமாக அமைந்திருத்தலும் உண்டு.

(15) தொழில்கள், வாழ்வியல், நாகரிகம், பண்பாடு, சமுதாய நிலை, அரசியல் நிலை எனப் பல்வேறு கூறுகள் புதினத்தில் குறிப்பாகவோ, வெளிப்படையாகவோ புலப்படுமாறு அமைந்திருக்கும்.

புதினத்தின் வளர்ச்சி

நாவல்ல (Novella) என்ற இலத்தீன் சொல்லே, ஆங்கிலத்தில் நாவல் எனப்படுவதாயிற்று. இது நவீனம் எனப்பட்டு, புதினம் எனப் பெயர் பெறுவதாயிற்று.

சாமுவேல் ரிச்சர்ட்சன் 1740-இல் ஆங்கிலத்தில் எழுதிய பமிலா என்ற நாவலே உலகின் முதல் நாவலாகும். கி.பி.1879-இல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்பது தமிழில் எழுந்த முதல் புதினமாகும். இரண்டாவது தமிழ்ப் புதினம் பி.ஆர்.ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம் என்பதாகும் (கி.பி.1896). மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது பெண் கல்வியை வலியுறுத்துவது. வேதநாயகம் பிள்ளை தமிழ் நாவலின் தந்தை எனப்படுகின்றார். இருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற புதினங்கள் தோன்றலாயின. அவற்றைப் பலவாக வகைப்படுத்தி அறியலாம்.

புதின வகைகள்

துப்பறியும் புதினங்கள், சமூகப் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், மொழிபெயர்ப்புப் புதினங்கள், வட்டாரப் புதினங்கள் முதலியன.

1. துப்பறியும் புதினங்கள்

மர்ம நாவல் எனப்படுவன இவை. எதிர்பார்ப்பு, பரபரப்பு, விறுவிறுப்பு என அமைந்து எதிர்பாராத திருப்பங்களும் முடிவுகளும் கொண்டு விளங்குவன.

ஆரணி குப்புசாமி முதலியாரின் இரத்தினபுரி இரகசியம், வடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் கும்பகோணம் வக்கீல், தேவனின் ஜஸ்டிஸ் ஜகந்நாதன், தமிழ்வாணனின் கருநாகம் முதலான நூற்றுக்கும் மேற்பட்ட புதினங்கள், சுஜாதாவின் கொலையுதிர் காலம், ராஜேஷ்குமாரின் ஓர் அழகான விபரீதம் முதலான நூற்றுக்கும் மேற்பட்ட புதினங்கள் இவ்வகைக்குத் தக்க சான்றுகளாகும். இவை கிரைம் நாவல் எனவும் அழைக்கப்படுகின்றன. இவற்றிற்கென்று தனித்தனி மாத இதழ்களும், மாதம் இருமுறை இதழ்களும் உள்ளன.

2. சமூகப் புதினங்கள்

சமுதாயச் சிக்கல், சீர்திருத்தக் கருத்துகள், பிரச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை அமையும்.

நாரண துரைக்கண்ணனின் உயிரோவியம், கல்கியின் தியாகபூமி, அலைஓசை, அகிலனின் பாவை விளக்கு, கோவி.மணிசேகரனின் யாகசாலை, ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், மு.வரதராசனாரின் கயமை, அகல்விளக்கு, கள்ளோ காவியமோ, கரித்துண்டு முதலான புதினங்கள், நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள், ராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன், லட்சுமியின் அத்தை, சிவசங்கரியின் நண்டு என்பவையெல்லாம் இவ்வகையின.

3. வரலாற்றுப் புதினங்கள்

இந்திய வரலாறு, தமிழக வரலாறு ஆகியவற்றின் வரலாற்றுக் குறிப்புகளை அடியொற்றிப் புனைந்துரைக் கதை நிகழ்ச்சிகளும் கதைப் பாத்திரங்களும் கலந்து புனையப் பெறுவன இவை.

சரவணமுத்துப் பிள்ளையின் மோகனாங்கி, தமிழின் முதல் வரலாற்றுப் புதினமாகும். கல்கியின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல்புறா, ஜலதீபம், யவனராணி, அகிலனின் வேங்கையின் மைந்தன், கோவி.மணிசேகரனின் செம்பியன் செல்வி, விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி, கலைஞர் கருணாநிதியின் தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் போன்றனவை இவ்வகைமைக்குத் தக்க சான்றுகளாகும்.

4. மொழிபெயர்ப்புப் புதினங்கள்

காண்டேகரின் மராத்தி நாவல்களைக் கா.ஸ்ரீ.ஸ்ரீ அவர்களும், வங்காளம், இந்தி, குஜராத்தி நாவல்கள் பலவற்றைத் துளசி ஜெயராமன், சரஸ்வதி ராம்நாத் போன்றோரும் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன் சுந்தர ராமசாமியால் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

5. வட்டாரப் புதினங்கள்

தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு வட்டார மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றின் செல்வாக்கோடு, மண்வாசனை கமழ எழுதப் பெறுவன வட்டாரப் புதினங்களாகும்.

தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோரக் கிராமத்தின் கதை, வே.சபாநாயகம் அவர்களின் ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது, பெருமாள் முருகனின் ஏறுவெயில், தமிழ்ச்செல்வியின் மாணிக்கம், கண்மணி குணசேகரனின் அஞ்சலை போன்றன இவ்வகையில் அமைந்தனவாகும்.

நாவல்கள் மாலைமதி, ராணிமுத்து முதலான பருவ இதழ்களிலும் வெளியிடப் பெறுகின்றன. வானதி பதிப்பகம் முதலானவற்றில் தனி நூல்களாகவும் இவை வெளிவருகின்றன.

நாவல்களில் அளவு குறைந்தவை குறுநாவல்கள் எனப்பெறுகின்றன. இவையும் நாவல்களுக்குரிய இலக்கணங்களைக் கொண்டு திகழ்கின்றன.

இவை புதினம் பற்றிய செய்திகளாகும்.

1.4 கட்டுரை இலக்கியம்

ஒரு பொருளைப் பற்றிய கருத்துகளைக் கட்டி உரைப்பது கட்டுரையாகும். மேனாட்டு இலக்கியத் தாக்கத்தால் இவ்வகை எழுந்தது. இது உரைநடையில் அமைவது. இதனைப் பின்வரும் வகைகளாகப் பகுத்துக் காணலாம்.

தன் வரலாறு / வாழ்க்கை வரலாறு

உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம், நான் கண்டதும் கேட்டதும், பழையதும் புதியதும் என்பன தன் வரலாற்றில் அடங்குவனவாகும். இவர் இயற்றிய மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் என்பது அவர்தம் ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைப்பதாகும்.

ஆராய்ச்சி நூல்கள்

இலக்கியங்களின் கருத்துகளில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், காலங்கள் பற்றிய ஆராய்ச்சி போன்றவற்றை வெளியிடும் முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை போன்றனவும் ஆராய்ச்சி நூல்களாகும். வையாபுரிப் பிள்ளை அவர்களின் காவிய காலம், இலக்கிய தீபம், இலக்கிய மணிமாலை, தமிழ்ச் சுடர்மணிகள் போன்றன இவ்வகைக்குத் தக்க சான்றுகளாகும்.

இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் ஆண்டுதோறும் கருத்தரங்கக் கட்டுரைகளை நூலாக்கம் செய்து வெளியிடுகின்றது. இவற்றில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட இன்ன பிற நிறுவனங்களின் கருத்தரங்குகளும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதில் சிறந்து விளங்குகின்றன.

விளக்க நூல்கள்

செய்யுள் நூல்களுக்கு விளக்கம் அளித்தல், ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு பல கோணங்களில் அணுகுதல், பல கருத்துகளை ஒப்பிட்டு ஆராய்ந்து உரைத்தல் ஆகியன இவ்வகை நூல்களின் இயல்பாகும்.

திரு.வி.கலியாணசுந்தரனாரின் சைவத்தின் சாரம், முருகன் அல்லது அழகு, திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், இராமலிங்க சுவாமிகளின் திருவுள்ளம் போன்றன இவ்வகை நூல்களாகும்.

பயண இலக்கிய நூல்கள்

வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வந்த பயண அனுபவங்களைச் சுவையுடன் எழுதுதல் இவ்வகை நூல்களின் இயல்பாகும். கற்போர், அப்பயணத்தைத் தாமே அனுபவித்தாற் போன்ற மகிழ்வையும் அனுபவத்தையும் பொது அறிவையும் பெறுதல் இதன் பயனாகும்.

வீராசாமி ஐயரின் காசி யாத்திரை என்பது தமிழில் வெளிவந்த முதல் பயண இலக்கியமாகும். ஏ.கே.செட்டியார் பயண இலக்கிய முன்னோடியாவார். மணியனின் நான் கண்ட சில நாடுகள், உலகம் சுற்றினேன் என்பனவும், மு.வரதராசனின் யான் கண்ட இலங்கை, நெ.து.சுந்தரவடிவேலு எழுதிய பிரிட்டனில், புதிய ஜெர்மனியில், அங்கும் இங்கும், நான் கண்ட சோவியத் ஒன்றியம் என்பனவும், சோம.லெட்சுமணனின் லண்டனில் லக்கி என்னும் நூலும் இன்ன பிறவும் பயண இலக்கிய நூல்களாகும்.

லேனா தமிழ்வாணன், சிவசங்கரி போன்றோர் பருவ இதழ்களில் தொடர்ந்து தங்கள் பயண அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதி வருவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பலவகைகளாகவும் கட்டுரை இலக்கியத்தை அணுகலாம். இவற்றைப் படிப்பதன்வழி நல்ல கருத்துகளைச் சுவை ததும்ப வகை தொகைப்படுத்தியும், பத்தி பிரித்தும் சிறந்த நடையில் எடுத்துரைக்கும் படைப்பிலக்கியப் பயிற்சியைப் பெறவியலும்.

1.5 தொகுப்புரை

கவிதை, நாடகம், புனைகதை, கட்டுரை எனத் தம் கருத்தை முருகியலுணர்வும், பயன்பாடும் அமையத் தமிழில் இயற்றுவது படைப்பிலக்கியம்.

மாற்றவியலாத சொற்கோப்புடையது கவிதை. குறிப்பிட்ட வடிவங்களில் பாட வேண்டும் என முன்னோர் வகுத்த நெறிகளில் எதுகை, மோனை முதலியன அமையத் தொடுப்பது மரபுக் கவிதையாகும். வரையறுத்த இலக்கணம் ஏதுமின்றிச் சொற்புனைவுகள் இன்றி நறுக்குத் தெறித்தாற்போல் உணர்த்தவல்லது புதுக்கவிதை. அவை கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகியவற்றால் சிறந்து நிற்பன.

உரையாடல் சிறந்திருப்பது நாடகம். மேலும், தொடக்கம், வளர்ச்சி, உச்சம், வீழ்ச்சி, முடிவு என ஐந்து கூறுகளையுடையது. நாடகம் ஒப்பனை, உச்சரிப்பு, நடிப்பு ஆகியவற்றால் பெருமை பெறுவது.

நிகழ்ச்சிகளைப் புனைந்துரைப்பது கதை. ஒரு கருத்தைச் சில நிகழ்ச்சிகளில் சில பாத்திரங்களால் ஆர்வமுற எடுத்துரைப்பது சிறுகதை. பலரது வாழ்வியலை ஒருவரின் வாழ்வியலோடு பிணைத்துப் பற்பல நிகழ்வுகளில் விவரிப்பது புதினமாகும். இவ்விரண்டிலும் இட, கால, சூழல் பின்னணிகளும், கதைப்பின்னலும், கதைப்பாத்திரப் படைப்புகளும் குறிப்பிடத்தக்க சிறப்பின.

கட்டுரை, உரைநடையில் அமைவது. வாழ்க்கை வரலாறு, ஆராய்ச்சி, விளக்கம், பயணம் எனப் பல வகைகளில் கருத்துகளைக் கட்டியுரைப்பதாகும்.

மேற்குறித்தனவற்றை இப்பாடத்தில் தெரிந்து பயில்வதன்வழி, இவ்வாறு இயற்றும் படைப்பிலக்கிய உத்திகள் குறித்து அறிந்துணர்ந்து கொள்கிறோம்.

பாடம் - 2

கவிதை வகைமை

2.0 பாட முன்னுரை

இலக்கிய வகைகளில் முதலிடம் பெறுவது கவிதையே ஆகும். கவிதையின் கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம் ஆகியவற்றின் ஒருங்கமைவும், ஒழுங்கமைவும் இதற்கான காரணம் எனலாம். ‘ஒவ்வொரு கோணத்திலும் கவிதை என்பது உணர்ச்சிகளின் மொழி’ என்கிறார் வின்செஸ்டர். ‘கவிதை என்பது சொற்களில் இல்லை; சொற்களுக்கு இடையில் இருக்கிறது’ என்னும் கருத்து, ‘உணர்த்தும் முறையே’ கவிதை இலக்கணம் என்பதைப் புலப்படுத்துகிறது. எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் கவிதை தோன்றும். கவிதை என்பது காணும் பொருள்களை வருணிப்பதில் இல்லை; அப்பொருள்களைக் காணும்பொழுது எழும் மனநிலையில்தான் உள்ளது. ‘கவிதையில் சரியான வார்த்தைகள் சரியான இடத்தில் அமைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்துக் கோப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளைச் சரியான இடத்திற்குக் கொண்டு செல்கிறது’ என்பார் புதுமைப்பித்தன். மேலும், ‘கவிதை, மனிதனின் உணர்ச்சியில் பிறந்த உண்மை; மனித உள்ளம் யதார்த்த உலகத்துடன் ஒன்றுபட்டோ, பிரிந்தோ கண்ட கனவு; அது உள்ள நெகிழ்ச்சியிலே உணர்ச்சி வசப்பட்டு வேகத்துடன் வெளிப்படுவது’ எனவும் உரைப்பார்.

கவிதை முருகியல் (aesthetics) உணர்ச்சியைத் தரக்கூடியது. உயர்ந்த கவிதைகள் யாவும் அவற்றில் ஈடுபட்டுப் படிப்போரிடம் கவிஞர்களின் அனுபவத்தையே பெற வைத்துவிடுகின்றன. அவர்கள் உணர்த்த விரும்பும் உண்மைகளையும் உணர்த்தி விடுகின்றன. கவிதைகளில் பெரும்பாலானவை பயிலும்போது இன்பம் தருவதுடன் உள்ளத்தைத் திருத்தும் பண்பையும் பெற்றிருப்பதால், அவை படிப்போரின் வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவனவாக உள்ளன.

முழுமையாகவும் விரைவாகவும் உணர்த்தும் திறனும், மகிழ்வூட்டி வாழ்வை நெறிப்படுத்தும் பொருண்மையும் ஆகிய தன்மைகளைக் கொண்ட கவிதைகள் தமிழில் காலந்தோறும் தோன்றி வருகின்றன. அவற்றை மரபுக் கவிதை, இசைப்பா, புதுக்கவிதை, துளிப்பா என்பனவாக வகைப்படுத்திக் கொள்ளலாம். இக்கவிதை வகைமைகள் குறித்து இப்பாடத்தில் விரிவாகக் காண்போம்.

2.1 மரபுக் கவிதை

கவிதை வகைமைகளில் தொன்மையானதாக அறியப்படுவது மரபுக் கவிதையாகும். தமிழில் உள்ள யாப்பிலக்கண நூல்கள் மரபுக் கவிதை இயற்றும் முறையை எடுத்துரைக்கத் தோன்றியனவேயாகும். யாப்பு வடிவத்திற்கு அடிப்படை சந்தமும் (Rhythm), தொடையும் ( Rhyme) ஆகும். சந்தம் என்பது அழுத்தமான ஓசையும் அழுத்தமில்லா ஓசையும் சீர்பட அடுக்கி வருவதைப் பொறுத்தது. அழுத்தமுள்ள ஓசையும் அழுத்தமில்லாத ஓசையும் மாறி மாறி இடம்பெறுவதால் ஒரு நயமான ஓசை பிறக்கிறது. மரபுக் கவிதைகள் ஒரு காலத்தில் இசையோடு பாடப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் இவை படிக்கப்படுவனவாக மட்டுமே அமைந்து விட்டன. பாக்களின் ஓசை நயத்துக்குக் காரணமான சொற்களை அளவிட்டுச் சீர் எனக் குறிப்பிட்டனர்.

குறில், நெடில், ஒற்று என்னும் எழுத்துகளால் அசையும், அசையால் சீரும், சீரால் அடியும், அடியால் பாடலும் முறையே அமைகின்றன. சீர்களுக்கு இடையிலான ஓசை தளை எனப்படுகின்றது. சீர், தளை, அடி ஆகியவற்றின் வேறுபாட்டால் பா வகைகள் அமைகின்றன.

சீர்களின் முதலெழுத்து ஒற்றுமை – மோனை; இரண்டாம் எழுத்து ஒற்றுமை – எதுகை; இறுதியில் அமையும் ஒலி ஒற்றுமை – இயைபு; சொல், பொருள் ஆகியவற்றில் காணும் முரண்பாடு – முரண்; ஓர் அடியின் எழுத்தோ அசையோ சீரோ அடுத்த அடியின் முதலாக அமைவது அந்தாதி – எனப் பாடல்கள் தொடுக்கப்படுவது தொடை எனப்படும். அடுத்த பாடத்தில் (மரபுக் கவிதை வடிவம்) இவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சங்க காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரையில் தமிழிலக்கிய நெடும்பரப்பில் செங்கோல் செலுத்தி வந்த பெருமை, மரபுக்கவிதைக்கே உரியது.

மரபுக் கவிதையைப் பா வகைகள், பாவினங்கள் என இரண்டாகப் பாகுபடுத்துவர்.

2.1.1 பா வகைகள் செப்பலோசையை உடைய வெண்பா, அகவலோசையை உடைய ஆசிரியப்பா, துள்ளலோசையை உடைய கலிப்பா, தூங்கலோசையை உடைய வஞ்சிப்பா, வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் மருட்பா எனப் பாக்கள் ஐவகைப்படும்.

அவற்றுள் வெண்பாவும் ஆசிரியப்பாவும் பெருவழக்குடையனவும் தெரிந்துகொள்ள வேண்டியனவும் ஆகும்.

வெண்பா

ஈற்றடி முச்சீரும் ஏனைய அடி நாற்சீரும் பெற்று வரும். மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்பனவாகிய வெண்பாத் தளைகளையே பெற்று வரவேண்டும். ஈற்றுச் சீர் ஓரசையாலோ, ஓரசையுடன் குற்றியலுகரமோ பெற்று முடிதல் வேண்டும். இவ் வெண்பா குறைந்தது இரண்டு அடிகளைக் கொண்டது.

மேற்கண்ட இலக்கணங்கள் பொருந்த இரண்டடிகளில் வருவது – குறள்வெண்பா; மூன்றடிகளில் வருவது – சிந்தியல் வெண்பா; நான்கடிகளில் வருவது – இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா; ஐந்தடி முதல் 12 அடி வரை அமைவது – பஃறொடை வெண்பா; 12 அடிகளுக்குமேல் பல அடிகளைப் பெற்று வருவது – கலிவெண்பா என வகைப்படுத்துவர்.

அவற்றுள் குறள் வெண்பாவும், நேரிசை வெண்பாவும் பயிலத்தக்க சிறப்புடையன.

குறள் வெண்பா

குறள்வெண்பா யாப்பால் அமைந்து சிறப்புடன் திகழ்வது திருக்குறள்.

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்    (குறள் – 294)

என்னும் குறட்பா எளிய நடையில் திகழ்வதைக் காண்கிறோம்.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு     (குறள் – 215)

என வரும் குறள், அழகிய உவமையைப் பெற்று விளங்குகின்றது.

(உலகு அவாம் எனப் பிரிக்க; ஊருணி = ஊரார் நீருண்ணும் குளம்)

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபே ரிரையான்கண் நோய் (குறள் – 946)

என்னும் குறளில், உணவின் செரிமானம் அறிந்து உண்பவனிடம் இன்பம் நிலைபெற்றிருப்பது போல, செரிமானம் ஆவதற்குமுன் அளவிற்கு அதிகமாய் உண்பவனிடம் நோயானது நிலைபெற்றிருக்கும் என இரண்டு கருத்துகள் உவமையடிப்படையில் ஒருங்கே அமைந்து விளங்கக் காண்கிறோம்.

நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா

அடைமொழி இன்றி வெண்பா என்று சொல்லும் அளவில் நினைவிற்கு வருவது நேரிசை வெண்பாவேயாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், பிற்கால நீதி நூல்கள் எனப் பல்வேறு நூல்களிலும் பயின்று வழங்கி வந்துள்ள சிறப்பினையுடையது இது.

நீக்கம் அறும்இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்

நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் – பூக்குழலாய்!

நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்

புல்லினும் திண்மைநிலை போம்     (நன்னெறி – 5)

(நொய்தல் = அற்பம்; புல்லினும் = பொருந்தினாலும்; திண்மை = உறுதி; போம் = போகும்,  போய்விடும்)

என வரும் நேரிசை வெண்பா, நட்பில் பிரிவும் கருத்து வேற்றுமையும் வரக்கூடாது என்பதனை முன்னிரண்டடிகளிலும், அதற்கேற்ற உவமையைப் பின்னிரண்டடிகளிலும் அமைத்துக் கூறுகின்றது.

கள்ளம்என் பார்க்கும் துயிலில்லை; காதலிமாட்(டு)

உள்ளம்வைப் பார்க்கும் துயிலில்லை; ஒண்பொருள்

செய்வம்என் பார்க்கும் துயிலில்லை; அப்பொருள்

காப்பார்க்கும் இல்லை துயில்

என வரும் இன்னிசை வெண்பா, திருடர், காதலர், பொருளீட்ட விழைவோர், பொருளைப் பாதுகாப்போர் என்னும் நால்வருக்கும் தூக்கம் இல்லாமையை அழகுபட அடுக்கி எடுத்துரைக்கின்றது.

இவை வெண்பாப் பற்றியன. இனி ஆசிரியப்பாவைக் குறித்துக் காண்போம்.

ஆசிரியப்பா

உரைநடை போன்று அமைவதே ஆசிரியப்பா. ஈரசைச் சீர்கள் நான்கு கொண்ட அளவடிகளால் அமைவது இது. எதுகை, மோனைகளால் சிறப்புப் பெறுவது. குறைந்தது மூன்றடிகளைப் பெற்று வரும். அடி மிகுதிக்கு எல்லை இல்லை.

எல்லா அடிகளும் நாற்சீர் பெறுவது நிலைமண்டில ஆசிரியப்பா. சீரை மாற்றாமல் அடிகளை மாற்றிப் போட்டாலும் ஓசையும் பொருளும் மாறாதிருப்பது அடிமறிமண்டில ஆசிரியப்பா; ஈற்றடி முச்சீரும் ஏனைய அடிகள் நாற்சீரும் பெறுவது நேரிசை ஆசிரியப்பா; முதலடியும் ஈற்றடியும் நாற்சீர் பெற்று, இடையிலுள்ள அடிகள் இரு சீரோ, முச்சீரோ பெற்று வருவது இணைக்குறள் ஆசிரியப்பா ஆகும். இவ்வாறு ஆசிரியப்பா நால்வகைப்படும்.

அவற்றுள் நிலைமண்டில ஆசிரியப்பாவும், நேரிசை ஆசிரியப்பாவும் பெரிதும் பின்பற்றப்படுபவை. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, கல்லாடம் என்பன ஆசிரியப்பாவால் அமைந்தவை. வெண்பாவைக் காட்டிலும் காலத்தால் முற்பட்டது ஆசிரியப்பாவே ஆகும் (எனினும் யாப்பிலக்கண நூல்கள் வெண்பாவை முற்படக் கூறலின், இங்கும் அம்முறை பின்பற்றப்பட்டது).

நிலைமண்டில ஆசிரியப்பா

மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!

காசறு விரையே! கரும்பே! தேனே!

அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!

பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!

மலையிடைப் பிறவா மணியே என்கோ!

அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ!

யாழிடைப் பிறவா இசையே என்கோ!

தாழிருங் கூந்தல் தையால்! நின்னைஎன்(று)

உலவாக் கட்டுரை பலபா ராட்டித்

தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி

வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்

காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்கென்

(சிலப்பதிகாரம் -2 : 73-90)

(மாசு, காசு = குற்றம்; விரை = மணப்பொருள்)

என்பது சிலப்பதிகாரம். கோவலன், கண்ணகியைத் திருமணமான புதிதில் புகழ்ந்துரைக்கும் பகுதி இது.

நேரிசை ஆசிரியப்பா

உலகம் உன்னுடையது என்னும் தலைப்பில், பாவேந்தர் பாரதிதாசன் பாடும் பாடல் பின்வருமாறு:

நாட்டொடு நாட்டை இணைத்து மேலே

ஏறு! வானை இடிக்கும் மலைமேல்

ஏறு! விடாமல் ஏறு மேன்மேல்!

ஏறி நின்று பாரடா எங்கும்!

எங்கும் பாரடா இப்புவி மக்களை! (5)

பாரடா உனது மானிடப் பரப்பை!

பாரடா உன்னுடன் பிறந்தபட் டாளம்!

‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஓட்டிய

மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!

அறிவை விரிவுசெய்; அகண்ட மாக்கு!     (10)

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!

அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு!

மானிட சமுத்திரம் நான்என்று கூவு!

பிரிவிலை எங்கும் பேதம் இல்லை!

உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்!     (15)

புகல்வேன் ‘உடைமை மக்களுக் குப்பொது’

புவியை நடத்து; பொதுவில் நடத்து!

வானைப் போல மக்களைத் தாவும்

வெள்ளை அன்பால் இதனைக்

குள்ள மனிதர்க்கும் கூறடா தோழா!     (20)

உலகம் என மானிட இனம் முழுவதையும் தழுவி, வேறுபாடற்ற சமுதாயம் காண உணர்ச்சி செறிந்த நடையில் பாவேந்தர் இப்பாடலை ஆக்கியுள்ளார். இடையிடையே எதுகைத் தொடை விடுபடினும் பொருண்மையும் உணர்ச்சியும் சிறந்து பாடலின் நடை சிறக்கக் காண்கிறோம்.

இனிப் பாவினங்கள் குறித்துக் காண்போம்.

2.1.2 பாவினங்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு பாக்களுக்கும், தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவகைப் பாவினங்களும் அமைந்துள்ளன. ஆனால் பாவின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களைப் பொருத்தவரையில் சீர், அடி எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்புமே கருத்தில் கொள்ளப் பெறுகின்றன.

தாழிசை

குறள் தாழிசை, வெள்ளொத் தாழிசை, வெண்டாழிசை, ஆசிரியத் தாழிசை, கலித்தாழிசை, வஞ்சித் தாழிசை என்பனவாகத் தாழிசையின் வகைகள் அமைகின்றன.

ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருதல் என்பது தாழிசையின் தனிச் சிறப்பாகும். பெரும்பாலும் நாட்டுப்புறப் பாடல்கள் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும் தன்மையுடையன என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.

தாழிசைகளுள் வஞ்சித் தாழிசை பயன்பாட்டிற்குரியது.

வஞ்சித் தாழிசை

குறளடி (இரு சீர் அடி), நான்கு கொண்ட செய்யுள்கள் மூன்று ஒரு பொருள்மேல் அடுக்கி வருவது.

பாட்டாளர் நலம்பேணாத்

தேட்டாள ராய்வாழ்வார்

மாட்டாத மரமென்ன

நாட்டாரால் நகையுண்பர்     (1)

எளியவர்க் கிரங்காமல்

ஒளியராய் உறவாழ்வார்

துளியிலா விசும்பென்ன

வெளியரால் இளிவுண்பர்     (2)

உழவர்தம் உழைப்புண்டு

விழவராய் மிகவாழ்வார்

இழவராம் இவரென்னக்

கிழவரால் இழிவுண்பர்     (3)

(பாட்டாளர் = உழைப்பாளி; தேட்டாளர் = செல்வ வசதியர்; மாட்டாத = பயன்தர இயலாத; நாட்டார் = உலகினர்; ஒளி = புகழ்; விழவு = மகிழ்வு; இழவர் = இழிவினர்; கிழவர் = உரிமையுடையவர்)

எனப் புலவர் குழந்தை இதற்குச் சான்று காட்டுகின்றார்.

துறை

குறள்வெண் செந்துறை, ஆசிரியத் துறை, கலித்துறை, கட்டளைக் கலித்துறை, வஞ்சித்துறை என்பன துறை வகைகள் ஆகும். இவற்றுள் கலித்துறை, கட்டளைக் கலித்துறை, வஞ்சித் துறை ஆகியன தெரிந்துணர வேண்டியவையாகும்.

கலித்துறை

நெடிலடி (ஐஞ்சீரடி) நான்கு கொண்டது இது. மா, விளம், விளம், விளம், மா என்னும் வாய்பாட்டில் அமைந்த பாடல்.

எனக்கு நல்லையும் அல்லைநீ என்மகன் பரதன்

தனக்கு நல்லையும் அல்லைஅத் தருமமே நோக்கின்

உனக்கு நல்லையும் அல்லைவந்(து) ஊழ்வினை தூண்ட

மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்

(மந்தரை சூழ்ச்சிப் படலம் – 65)

(நல்லை = நல்லவள்; அல்லை = நல்லவளில்லை; மனக்கு = மனத்துக்கு)

என்பது கம்பராமாயணத்துத் தசரதன் கூற்று.

கட்டளைக் கலித்துறை

வெண்சீர் அமைந்த ஐந்து சீர்களையுடையதாய், ஐந்தாம் சீர் விளங்காய் வாய்பாட்டில் அமைந்ததாய், நேரசையில் தொடங்கின் 16 எழுத்தும், நிரையசையில் தொடங்கின் 17 எழுத்தும் என ஒற்று நீக்கி எண்ணத்தக்கதாய் அமைவது கட்டளைக் கலித்துறையாகும். கந்தரலங்காரம், அபிராமி அந்தாதி போன்ற நூல்கள் இவ்வகையில் அமைந்தனவாகும்.

பாவேந்தர் பாரதிதாசனாரின் வள்ளுவர் வழங்கிய முத்துகள் என்னும் தலைப்பிலான பாடல் வருமாறு:

வெல்லாத இல்லை திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்

பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்

செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்

இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே

(புரை = குற்றம்)

வஞ்சித் துறை

குறளடி நான்கு கொண்டது இது. புளிமாங்காய் + கருவிளம் என்னும் வாய்பாட்டிலமைந்த, ஆழிப்பேரலை குறித்த கி.சிவகுமாரின் பாடல் பின்வருமாறு:

பிழைமூன்று பொறுப்பையாம்

பிழைச்சொல்லோ பெருங்கடல்!

அழைக்காமல் நுழைந்தனை!

பிழைக்காமல் விழுங்கினை!

(பிழை = தவறு; பிழைக்காமல் = யாரும் உயிர் பிழைக்காமல், தவறாமல்)

விருத்தம்

அளவொத்த நான்கு அடிகளையுடையது விருத்தம் எனப் பொதுவாகக் கூறலாம். வெளி விருத்தம், ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் என்பன விருத்தப்பா வகைகள். இவற்றுள் வெளிவிருத்தம் தவிர்த்த ஏனையன அறிய வேண்டியனவாகும்.

ஆசிரிய விருத்தம்

கழிநெடிலடி நான்கு உடையது இது. சீர்களின் எண்ணிக்கைக்கேற்பப் பெயர் பெறும்.

1. விளம் மா தேமா – அறுசீர் விருத்தம்

தாயெழில் தமிழை என்றன்

தமிழரின் கவிதை தன்னை

ஆயிரம் மொழியில் காண

இப்புவி அவாவிற் றென்றே

தோயுறும் மதுவின் ஆறு

தொடர்ந்தென்றன் செவியில் வந்து

பாயுநாள் எந்த நாளோ?

ஆரிதைப் பகர்வார் இங்கே

(மது = தேன்; பாயுநாள் = பாயும் நாள்)

பாவேந்தரின் பாடல் இது. விளச்சீருக்குப் பதில் மாங்காய்ச் சீரும் வரலாம்.

2. மா மா காய் வாய்பாடு – அறுசீர் விருத்தம்

இல்லாப் பொருளுக் கேங்காமல்

இருக்கும் பொருளும் எண்ணாமல்

எல்லாம் வல்ல எம்பெருமான்

இரங்கி அளக்கும் படிவாங்கி

நல்லார் அறிஞர் நட்பையும்நீ

நாளும் நாளும் நாடுவையேல்

நில்லா உலகில் நிலைத்தசுகம்

நீண்டு வளரும் நிச்சயமே

(உமர்கய்யாம் – கவிமணி)

3. விளம் மா விளம் மா, விளம் விளம் மா – எழுசீர் விருத்தம்.

தந்ததுன் தன்னை; கொண்டதென் தன்னை;

சங்கரா ஆர்கொலோ சதுரர்?

அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்;

யாதுநீ பெற்றதொன் றென்பால்?

சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்!

திருப்பெருந் துறையுறை சிவனே!

எந்தையே! ஈசா! உடலிடம் கொண்டாய்!

யான்இதற்கு இலன்ஓர்கைம் மாறே!

(கோயில் திருப்பதிகம் – 10)

(சங்கரன் = சிவன்; சதுரர் = திறமையுடையவர்; அந்தம் = முடிவு; கைம்மாறு = பதிலுதவி)

என்பது மாணிக்கவாசகரின் திருவாசகம்.

4.காய் காய் மா தேமா – எண்சீர் விருத்தம்.

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

அகத்தடியாள் மெய்ந்நோவ அடிமை சாவ

மாவீரம் போகுமென்று விதைகொண் டோட

வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்

சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்

தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பம் தீண்டக்

கோவேந்தன் உழுதுண்ட கடமை கேட்கக்

குருக்களோ தட்சணைகள் கொடுவென் றாரே

(ஆவீன = ஆ ஈன, பசுகன்று ஈன; இல்லம் = வீடு; மாவீரம் = பெரிய ஈரம்)

என்பது இராமச்சந்திர கவிராயரின் தனிப்பாடல். காய்ச்சீருக்குப் பதில் சில இடங்களில் விளச்சீர் வருதலும் உண்டு.

கலி விருத்தம்

அளவடி நான்கு கொண்டது இது. விளம், விளம், மா, விளம் என்னும் வாய்ப்பாட்டில் அமைந்த வில்லிபாரதப் பாடல் வருமாறு:

அருமறை முதல்வனை ஆழி மாயனைக்

கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனைத்

திருமகள் கேள்வனைத் தேவ தேவனை

இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்

(முளரி = தாமரை; பதம் = திருவடி)

வஞ்சி விருத்தம்

சிந்தடி நான்கு கொண்டு அமைவது இது. விளம், விளம், காய் வாய்பாட்டிலான கி.சிவகுமாரின் பாடல் வருமாறு:

என்பது பெண்என எழுச்சியுறும்;

வன்கலும் புணைஎன மிதக்கலுறும்;

முன்சுவை மகவினை முதலைதரும்;

தென்தமிழ்த் திருமுறைச் செயலாலே;

(என்பது = எலும்பானது; கலும் = கல்லும்; சுவை மகவு = விழுங்கிய குழந்தை)

மரபுக் கவிதை வகைமை குறித்து அறிந்தோம். இனி இசைப்பா வகைமையைக் காண்போம்.

2.2 இசைப்பா

சங்க காலத்தில் இருந்து மறைந்தனவாகச் சிற்றிசை, பேரிசை, இசை நுணுக்கம் போன்ற இசை நூல்கள் குறித்துப் பெயரளவில் மட்டுமே தெரிந்து கொள்ள முடிகின்றது. பரிபாடல் இசைப்பா வகையைச் சார்ந்ததேயாகும்.

இசைப்பாக்களைச் சந்தப்பாடல், கும்மிப்பாடல், சிந்துப்பாடல் என மூவகைப்படுத்தலாம்.

2.2.1 சந்தப் பாடல் ஒரு குறிப்பிட்ட ஓசை பயின்று வருவதே சந்தம் எனப்படும். கலி விருத்தம், கழிநெடிலடி, ஆசிரிய விருத்தம் போன்றவற்றின் சீர்கள், குறிப்பிட்ட சந்தங்களே அமையச் சந்த விருத்தங்களாக அமைக்கப் பெறுவதும் உண்டு.

சந்தக் கலித்துறை – மா மா விளம் மா காய்

காலம் போயிற் றஞ்சன மன்ன கடாமீதில்

ஆலம் போல்வெங் காலனும் அந்தோ அணுகுற்றான்

சீலம் கேண்மின் ஒய்யென வேதம் சிவஞானி

கோலம் காணும் கொள்கைக ருத்தில் குறியீரே

(சிவஞானக் கலம்பகம் – 12)

என வரும் சிவப்பிரகாசரின் பாடல் இதற்குச் சான்றாகும்.

தொல்காப்பியச் செய்யுளியல் (நூ.210-231) வண்ணங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கின்றது. பிற்காலத்தில் எழுந்த வண்ணத்தியல்பு, குமாரபூபதியம் போன்றன இது குறித்து விவரிக்க எழுந்த நூல்களாகும்.

எழுத்து, சந்தம், துள்ளல், குழிப்பு, கலை, அடி, பாடல் என முறையே ஒன்றினால் மற்றொன்று அமைய வண்ணப் பாக்கள் உருவாகின்றன. திருப்புகழ்ப் பாக்கள் சில வருமாறு:

1. வல்லோசை – தத்தத்தன தத்தத் தனதன. . . (3) – தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர – எனவோதும்

2. மெல்லோசை – தந்தனந் தந்தந் தனதான

சந்ததம் பந்தத் தொடராலே

சஞ்சலம் துஞ்சித் திரியாதே

3. இடையினவோசை – தய்யதன தான .. . (3) – தனதான

அல்லிவிழி யாலும் முல்லைநகை யாலும்

அல்லல்பட ஆசைக் கடலீயும்

இவ்வாறு திருப்புகழில் இடம் பெறுவனவற்றின் குழிப்புகள், தாளம், இராகம், மாத்திரையளவு போன்றவற்றை அறிந்து பாடினால் உள்ளம் உருகும் என்பது உறுதி.

2.2.2 கும்மிப் பாடல் கும்மி, வெண்பாவின் பாவினத்தைச் சார்ந்தது.

மகளிர் குழுமிக் கைகொட்டி விளையாடும் பொழுது பாடுவதே கும்மி ஆகும். கும்மிப் பாடல் வெண்பா இனத்தைச் சார்ந்தது; வெண்டளை மட்டுமே அமைந்த எழுசீர்க் கழிநெடிலடிகள் ஓர் எதுகை கொண்டு அமைவது; ஈற்றுச் சீர் பெரும்பாலும் விளங்காய்ச் சீராக வரும்.

இயற்கும்மி, ஒயிற் கும்மி, ஓரடிக் கும்மி என்பன கும்மியின் வகைகளாகும்.

இயற்கும்மி

ஓரடியில் ஏழு சீர்கள் அமையும். அது 4 சீர், 3 சீர் என மடக்கி எழுதப்படும். இவ்வாறு 2 அடியும் 4 வரியும் கொண்டதாக அமையும். முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெறும்.

எடுத்துக்காட்டு :

கும்மி யடிதமிழ் நாடு முழுவதும்

குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!

நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின

நன்மைகண் டோமென்று கும்மியடி!

(பாரதியார்)

மூன்றாம் சீரும் ஏழாம் சீரும் இயைபுத் தொடை அமையப் பாடப் பெறுவதும் உண்டு.

எடுத்துக்காட்டு :

நல்லபண் டங்களைக் கண்டறியோம் – ஒரு

நாளும் வயிறார உண்டறியோம்

அல்லும் பகலும் அலைந்திடுவோம் – பசி

யாற வழியின்றி வாடிடுவோம்

(கவிமணி)

அரிச்சந்திரக் கும்மி, ஞானக் கும்மி, வாலைக் கும்மி முதலிய கும்மி நூல்களில் இயற்கும்மிப் பாடல்களைப் படித்தறியலாம்.

ஒயிற் கும்மி

மூன்று அடிகளில் அமையும். முதலடி இருவரிகளிலும், இரண்டாமடி இரு வரிகளிலும், மூன்றாமடி ஒரு வரியிலும் அமையும். இரண்டாமடி முடுகியல் அடியாக வரும்; வெண்டளை பெறவேண்டியதில்லை. ஆனால் முதலடியும் மூன்றாமடியும் வெண்டளை பெற்று வரும். அடிகள் தோறும் மோனை அமைதல் நன்று. முடுகியலடியின் 1, 3 சீர்கள் மோனை பெறும்.

எடுத்துக்காட்டு :

தென்பரங் குன்றினில் மேவும் குருபர

தேசிகன் மேற்கும்மிப் பாட்டுரைக்கச்

சிகரத்திரு மகரக்குழை

திகழுற்றிடும் உமைபெற்றிடு

தில்லை விநாயகன் காப்பாமே

என்பது முருகர் ஒயிற்கும்மிப் பாடல்.

ஓரடிக் கும்மி

கும்மியின் இலக்கணம் அமையப் பெற்ற எழுசீர்க் கழிநெடிலடி ஒன்றே, பொருள் முற்றிவரின் அஃது ஓரடிக் கும்மி எனப்படும்.

முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனையோ, எதுகையோ பெற்றுச் சிறந்து வரும்.

எடுத்துக்காட்டு :

1. மோனை

ஆளுடன் ஆளும் உகையாம லேநீங்கள்

ஆளுக் கொருமுழம் தள்ளிநில்லும்

2. எதுகை

பாட்டுக் குகந்த படியிரு கையையும்

ஆட்டியொய் யாரமாய் ஆடிடுவோம்

2.2.3 சிந்துப் பாடல் சிந்து, அளவொத்த இரண்டடிகளில் அமையும்; நான்கடிகள் ஓரெதுகை பெற்று வருதலும் உண்டு; தளை வரையறை இல்லை; சந்தம் நன்கு அமைய வேண்டும்; மடக்கடி, மோனை பெற வேண்டும்; தனிச்சொல் அடிதோறுமோ, மடக்கடிதோறுமோ வருவதுண்டு. தனிச்சொல் இடம்பெறாத சிந்துப்பாக்களும் உண்டு.

சமநிலைச் சிந்து, வியனிலைச் சிந்து எனச் சிந்துப்பா இரு வகைப்படும்.

சமநிலைச் சிந்து

அளவான சீர்களைக் கொண்டு நடப்பது இது; தனிச் சொல்லின் முன் உள்ள அரையடியும், பின் உள்ள அரையடியும் தம்முள் அளவொத்து விளங்குவது.

எடுத்துக்காட்டு:

1. அரையடிதோறும் இயைபு பெறுவது:

ஓடி விளையாடு பாப்பா – நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா – ஒரு

குழந்தையை வையாதே பாப்பா

(பாரதியார்)

2. அடிதோறும் இயைபு பெறுவது:

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி

யாரம் படைத்த தமிழ்நாடு

(பாரதியார்)

தனிச் சொல்லின் முன்னும் பின்னும் மூன்று சீர்களேயன்றி இருசீர், நாற்சீர், ஐஞ்சீர், அறுசீர் என வரவும் பெறலாம் என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

வியனிலைச் சிந்து

தனிச்சொல்லின் முன் உள்ள அரையடியும், பின் உள்ள அரையடியும் தம்முன் அளவு ஒவ்வாமல் வருவது, ‘வியனிலைச் சிந்து’ எனப்படும்.

எடுத்துக்காட்டு:

1. தனிச்சொற்கு முன்னும் பின்னும் முறையே 3, 4 சீர்கள் அமைதல்:

தின்னப் பழங்கொண்டு தருவான் – பாதி

தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்

என்னப்பன் என்ஐயன் என்றால் – அதை

எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்

(பாரதியார்)

2. நான்கடி ஓரெதுகை பெற்று வருதல்:

அத்தின புரமுண்டாம் – இவ்

அவனியி லேஅதற்கு இணையிலையாம்

பத்தியில் வீதிகளாம் – வெள்ளைப்

பனிவரை போற்பல மாளிகையாம்

முத்தொளிர் மாடங்களாம் – எங்கும்

மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைகளாம்

நத்தியல் வாவிகளாம் – அங்கு

நாடும் இரதிநிகர் தேவிகளாம்

(பாரதியார்)

(பத்தி = வரிசை; அளி = வண்டு; நத்து = விருப்பம்; வாவி = குளம்)

சித்தர் பாடல், பள்ளு, குறவஞ்சி, பாரதியார் பாடல் முதலியவற்றில் இவற்றைப் பயின்றுணரலாம். இவ்வாறே அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய காவடிச் சிந்து, பாரதியார் இயற்றிய நொண்டிச் சிந்து போன்றனவும் பயிலத் தக்கனவாகும்.

மரபுக் கவிதைகளோடு தொடர்புடையனவாதலின், இசைப்பாக்கள் இணைத்துச் சிந்திக்கப் பெற்றன.

2.3 புதுக்கவிதை

கி.பி. இருபதாம் நூற்றாண்டு தொடங்கிப் புதுக்கவிதை, தமிழிலக்கியத்தில் தோன்றிச் சிறக்கலானது. பாரதியார் எழுதிய வசன கவிதைகளே தமிழில் காணும் புதுக்கவிதை முறைக்கு முன்னோடியாக அமைந்தது.

யாப்பிலக்கணத்திற்குக் கட்டுப்படாமல் கவிதை உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் கொடுக்கும் வகையில் உருவானதே புதுக்கவிதை. எதுகை, மோனை, சீர், தளை சிதையாமை முதலான காரணங்களால் மரபுக் கவிதையில் அடைமொழிகளாக வெற்றெனத் (பயனின்றி) தொடுத்தல் அமைவதாக உணரத் தொடங்கியமையின் மடைமாற்ற முயற்சி எனவும் இதனைக் கருதலாம். கவிதை எழுத இனிக் காரிகை (யாப்பருங்கலக் காரிகை) கற்க வேண்டியதில்லை என்ற தெம்புடன் கவியெழுத வந்த புதுக்கவிதையாளர்களும் இங்கு உண்டு. புதுக்கவிதை, உரைவீச்சாகக் கருதத்தக்கது. அது மரபுக்கவிதை, கவிதை வசனக் கலப்பு, வசனம் என எந்த வாகனத்திலும் பயணிக்க வல்லதாக அமைந்தது.

புதுக்கவிதை எனும் போர்வாள்

இலக்கண உறையிலிருந்து

கவனமாகவே

கழற்றப்பட்டிருக்கிறது

(திருத்தி எழுதிய தீர்ப்புகள்)

என்பது கவிஞர் வைரமுத்துவின் புதுக்கவிதை. நறுக்குத் தெறித்தாற்போல் அமைவதே புதுக்கவிதை.

புதுக்கவிதையைப் படித்ததும் புரியும். இயல்பான கவிதைகள், படிமம், குறியீடு, தொன்மம் போன்ற வகையில் அமைந்த உத்திமுறைக் கவிதைகள், எளிதில் புரிந்துகொள்ள முடியாதனவும் பல்வேறு சிந்தனைகளை உண்டாக்குவனவும் ஆகிய இருண்மைக் கவிதைகள் என வகைப்படுத்திக் காணலாம்.

2.3.1 இயல்புநிலைக் கவிதை அகராதி தேடும் வேலையின்றிப் படித்த அளவில் புரியும் பாங்குடையவை இவை. சில சான்றுகளைக் காண்போம்.

1. காதலும் நட்பும் குறித்த கவிஞர் அறிவுமதியின் கவிதை :

கண்களை வாங்கிக்கொள்ள

மறுக்கிறவள்

காதலியாகிறாள்

கண்களை வாங்கிக்கொண்டு

உன்னைப்போல்

கண்கள் தருகிறவள்தான்

தோழியாகிறாள்

(நட்புக்காலம்)

2. முதிர்ச்சியின் பக்குவம் குறித்த இரா.தமிழரசியின் கவிதை:

காய்கள்கூட

கசப்புத் தன்மையை

முதிர்ச்சிக்குப் பின்

இனிப்பாக்கிக் கொள்கின்றன

மனிதர்களில் சிலர்

மிளகாய்போல் காரத்தன்மை மாறாமல்

காலம் முழுவதும்

வார்த்தை வீச்சில் வல்லவர்களாய்

(ஒளிச்சிறை)

3. காதலியை நலம்பாராட்டும் காதலனின் கூற்றாகப் பா.விஜய்யின் கவிதை:

உன்மீது மோதி

வாசம் பார்த்த தென்றல்

தெருப்பூக்களைப் பார்த்தால்

திரும்பிப் போகிறது

(18-வயசுல)

4. அன்பை அடையாளப்படுத்தும் தமிழன்பனின் கவிதை:

தொப்பையாய்

நனைந்துவிட்ட மகள்

அப்பா

தலையை நல்லாத் துவட்டுங்க

என்றாள்

கிழியாத அன்பும் கிழிந்த துண்டுமாய்

(நடை மறந்த நதியும் திசைமாறிய ஓடையும்)

5. பணிக்குச் செல்லும் பெண்கள் பற்றிய பொன்மணி வைரமுத்துவின் கவிதை:

வீட்டுத் தளைகள்

மாட்டியிருந்த கைகளில்

இப்போது

சம்பளச் சங்கிலிகள்

6. தன்னம்பிக்கையூட்டும் மதியழகன் சுப்பையாவின் கவிதை:

வாய்ப்புகளை

நழுவவிட்டபின்

அழுகிறது மனம்

அடுத்துவரும்

வாய்ப்புகளை

அறியாமலேயே

(மல்லிகைக் காடு)

7. ஐம்பூதங்கள் குறித்த தங்கம் மூர்த்தியின் கவிதை:

குடந்தையில்

நெருப்பால் இழந்தோம்

சுனாமியில்

நீரால் இழந்தோம்

போபாலில்

வாயுவால் இழந்தோம்

ஆந்திராவில்

வான்மழையால் இழந்தோம்

குஜராத்தில்

நிலநடுக்கத்தால் இழந்தோம்

ஐந்தையும்

பூதங்கள் என்றவன்

தீர்க்கதரிசிதான்

8. மதநல்லிணக்கம் குறித்தமைந்த அப்துல் ரகுமான் கவிதை:

எப்படிக் கூடுவது

என்பதிலே பேதங்கள்

எப்படி வாழ்வது

என்பதிலே குத்துவெட்டு

பயணத்தில் சம்மதம்

பாதையிலே தகராறு

9. அரவாணிகள் குறித்த ஆஷாபாரதியின் கவிதை:

என்ன பெயர்

சொல்லிவேண்டுமானாலும்

எங்களைக் கூப்பிடுங்கள்

மனிதநேயம் ம(ை)றந்த

மனிதர்களே

என்னவோ போல் மட்டும்

எங்களைப் பார்க்காதீர்கள்

10. இன்னா செய்யாமை குறித்த கவிதையொன்று:

விழுங்கிய மீன்

தொண்டையில் குத்துகையில்

உணர்கிறேன்

தூண்டிலின் ரணம்

(வலியிழந்தவள்)

மேற்கண்ட கவிதைகள் அனைத்தும் எளியன; படித்ததும் புரிவன ஆழ்ந்த கருத்தடங்கியன; கற்போரை நெறிப்படுத்த வல்லன; பல்வேறு கவிஞர்களால் பாடப்பட்டன; பல பொருண்மையில் அமைந்தன.

சமுதாய நிகழ்வில் பாதிப்படைந்த ஒவ்வொருவரும் தாம் அறிந்த சொற்றொடரால் தம் உணர்வைச் சமுதாயத்திற்குக் கவிதைகளாகப் படைத்து வழங்கலாம் என்னும் துணிச்சலை இந்த எளிய கவிதை நடைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்தக் கருத்து நிலைகளே ஒப்பீட்டுத் திறனாய்வின் கருதுகோள்கள் ஆகும்.

2.3.2 உத்திமுறைக் கவிதை

மரபுக் கவிதைக்கு அணியிலக்கணம் போல, கருத்தை உணர்த்துவதற்குப் புதுக்கவிதையிலும் சில உத்திமுறைகள் கையாளப்படுகின்றன.

படிமக் குறியீடு, தொன்மக் குறியீடு, அங்கதம் என்பன புதுக்கவிதைகளில் காணலாகும் உத்திமுறைகளாகும்.

படிமம்

அறிவாலும் உணர்ச்சியாலும் ஆன ஒரு மன பாவனையை ஒரு நொடிப் பொழுதில் தெரியக் காட்டுவதுதான் படிமம் என்பார் வெ.இராம.சத்தியமூர்த்தி. ஐம்புல உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வகையில் இது அமையும்.

ஆகாயப் பேரேட்டில் பூமி

புதுக்கணக்குப் போட்டது

என்பது மேத்தாவின் கருத்துப் படிமம். மேலும் அவர்,

பூமி உருண்டையைப்

பூசணித் துண்டுகளாக்குவதே

மண்புழு மனிதர்களின்

மனப்போக்கு

எனக் காட்சிப் படிமத்தையும் அமைத்துக் காட்டியுள்ளார்.

தொன்மம்

புராணக் கதைகளைப் புதுநோக்கிலும், முரண்பட்ட விமரிசன நிலையிலும் கையாண்டு கருத்துகளை உணர்த்துவது தொன்மம் ஆகும்.

துஷ்யந்தன் தன் காதலின் சின்னமாகச் சகுந்தலைக்கு மோதிரம் பரிசளிக்கிறான். அந்த மோதிரம் தொலைந்த நிலையில் அவள் பல துன்பங்களை அனுபவிக்கின்றாள். அத்தொன்மத்தை உன்னுடைய பழைய கடிதங்கள் என்னும் கவிதையில் மேத்தா கவிதையாக்குகின்றார்.

நானும்

சகுந்தலைதான்

கிடைத்த மோதிரத்தைத்

தொலைத்தவள் அல்லள்

மோதிரமே

கிடைக்காதவள்

(ஊர்வலம்)

எனக் காதலியின் பரிதாப நிலையைச் சகுந்தலையினும் மோசமான நிலைக்காட்பட்டதாகக் காட்டியுள்ளார் கவிஞர்.

அங்கதம்

அங்கதம் என்பது முட்டாள் தனத்தையும் மூடநம்பிக்கையையும் தீச்செயல்களையும் கேலி பேசுவதாக அமைவதாகும்.

கல்வி இங்கே

இதயத்தில் சுமக்கும்

இனிமையாய் இல்லாமல்

முதுகில் சுமக்கும்

மூட்டையாகிவிட்டது

(ஒரு வானம் இரு சிறகு)

என்பது மேத்தாவின் அங்கதக் கவிதையாகும்.

இவ்வுத்தி முறைகள் குறித்து மேலும் விரிவாக நான்காம் பாடம் விவரிக்கும்.

2.3.3 இருண்மைநிலைக் கவிதை புரியாத தன்மையைக் கொண்டு விளங்குவது இருண்மைநிலைக் கவிதையாகும். பேசுவோன், பேசப்படுபொருள் ஆகியன சார்ந்த மயக்கங்கள் கவிதையில் இருண்மையை ஏற்படுத்துவதுண்டு. அவ்வகையில் அமைந்த பிரமிளின் கவிதை,

எதிரே

தலைமயிர் விரித்து

நிலவொளி தரித்து

கொலுவீற்றிருந்தாள்

உன் நிழல்

என்பதாகும்.

என்.டி.ராஜ்குமாரின்,

எறும்புகள் வரிசையாக

பள்ளிக்குச் செல்கிறார்கள்

வரும்பொழுது கழுதையாக வருகிறது

என்பதும் அவ்வகையினதே யாகும் (திணை, பால் கடந்தது?).

இருண்மைக் கவிதைகளின் நோக்கம், வாசகரிடத்தே கருத்துத் திணிப்பை ஏற்படுத்தலாகாது; அவர்களே சுதந்திரமாகச் சிந்தித்துப் பொருள் உணர வேண்டும் என்பதேயாகும் என்பர்.

இனித் துளிப்பாக் குறித்துக் காணலாம்.

2.4 குறுங்கவிதை

இயந்திர கதியில் இயங்கும் இன்றைய அறிவியல் உலகில், சுருங்கிய வடிவில் ‘நறுக்’ எனக் கருத்தினைக் தெரிவிக்கும் புதுக்கவிதை வடிவையும் கடந்து, இன்னும் சுருக்கமாக ‘நச்’ என்று கருத்துரைக்கும் குறுங்கவிதை வடிவம் தோன்றலானது. மூன்றடி வடிவக் கவிதையே குறுங்கவிதையாகும். ஜப்பானிய இலக்கிய வடிவத் தாக்கமாக எழுந்ததே இது. தமிழின் ஐங்குறுநூற்றிலும் மூன்றடிப் பாடல்கள் உள்ளன எனினும் அடி எண்ணிக்கையில் தவிரக் குறுங்கவிதைக்கும் அதற்கும் ஒற்றுமை காணுதல் அரிது.

குறுங்கவிதையைத் துளிப்பா (ஐக்கூ), நகைத் துளிப்பா (சென்ரியு), இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) என மூவகைப்படுத்தலாம்.

2.4.1 துளிப்பா (ஐக்கூ) ஜப்பானிய மொழியில் தோன்றிய ஐக்கூ, 5-7-5 என்னும் அசையமைப்புடையதாக, ஜென் (Zen) தத்துவத்தை விளக்குவதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. தமிழிலக்கியத்தில் இவ்வடிவத்தில் அமைந்த கவிதைகள் சமூக விமர்சனத்திற்கும் சமூகக் கேடுகளைச் சாடுவதற்கும் பயன்படலானது.

துளிப்பாவானது படிமம், குறியீடு, தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் எனப் பல்வேறு உத்திமுறைகளில் அமைகின்றது.

படிமம்

துளிப்பாவில் பெரிதும் கையாளப் பெறுவது படிம உத்தியேயாகும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐம்புல உணர்வுகளையும் அனுபவித்தவாறே வெளியிடுகின்ற உணர்ச்சி வெளிப்பாடே படிமம் எனப்படும். வருணனைத் திறன் மிக்கது இது.

எடுத்துக்காட்டு :

1. கட்புலப் படிமம்

சாரல் அடிக்கிறது

ஜன்னலைச் சாத்தும்போது மரக்கிளையில்

நனைந்தபடி குருவி                   (பரிமள முத்து)

2. விளையாட்டுப் படிமம்

நல்ல கயிறு

எறும்பின் பாதை

பம்பரம் சுற்ற                         (மித்ரா)

3. அச்சு வடிவக் காட்சிப் படிமம்

அதிக சுமையா?

மெ. .ல் . . .ல நகரும்

நத்தை                            (மு.முருகேஷ்)

குறியீடு

செறிவான கவிதை வடிவத்திற்குக் குறியீடுகள் பெரிதும் உதவுகின்றன. ‘ஒப்புறவாலும் ஒட்டுறவாலும் மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் (object), குறியீடு எனப்படுகிறது. ஒரு குறியீடு மற்றொன்றிற்குப் பதிலாக நிற்கலாம்; சுட்டிக்காட்டுவதோடு மட்டுமேகூட அமைந்துவிடலாம். இயற்கை, சமயம், வாழ்க்கை என்பனவற்றைச் சுட்டுவனவாகவே அமைவதே பெரும்பான்மை எனலாம்.

எடுத்துக்காட்டு :

1. இயற்கைக் குறியீடு

அந்தக் காட்டில்

எந்த மூங்கில்

புல்லாங்குழல்

(அமுதபாரதி)

2. சமயக் குறியீடு

இதயத்தில் இறுக்கம்

இதழ்களில் மௌனம் இங்கே

சிலுவையில் நான்                      (பரிமள முத்து)

3.வாழ்க்கைக் குறியீடு

உழுதுவந்த களைப்பில்

படுக்கும் மாடுகள்

காயம் தேடும் காக்கை               (அறிவுமதி)

தொன்மம்

புராண, இதிகாச நிகழ்வுகளை ஒட்டியோ, திரித்தோ, மறுத்தோ இக்கால நிலைக்கேற்பக் குறியீடாக்குதல் தொன்மப் படிமம் ஆகும்.

எடுத்துக்காட்டு :

கல்லாகவே இருந்துவிடுகிறேன்

மிதித்து விடாதே

சுற்றிலும் இந்திரன்கள்             (ராஜ.முருகுபாண்டியன்)

என்பது கௌதமரின் சாபத்தால் கல்லான அகலிகை இராமனின் கால்பட்டுச் சாபவிமோசனம் அடைந்து பெண்ணான நிகழ்வை அடியொற்றியது. பெண்ணாக இருப்பதினும் கல்லாக இருப்பதே பாதுகாப்பானது என்றால் இச்சமூகம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது என்பது இதன்வழிப் புலப்படுகின்றது.

ஆராய்ச்சிமணி அடித்த மாடுகள்

அரண்மனைத் தட்டில்

பிரியாணி                  (அவைநாயகன்)

என்னும் கவிதை, மனுநீதிச் சோழனிடம் முறையிட்ட கன்றை இழந்த பசுவின் கதறலையும், அக்கதறல் கேட்டுத் தன் மகனையே கொன்று முறைசெய்த மன்னனின் நீதிமுறையையும் கொண்டு அமைக்கப்பட்டது. நீதிமன்றங்கள், தக்க தீர்ப்பு வழங்காமல் குற்றவாளிக்கு ஆதரவாக இருப்பதையும், முறையிட வந்தவர்களையே தண்டிப்பதுமாகிய நிலையில் இருக்கும் நாட்டுநடப்பினைப் புலப்படுத்துகின்றது.

முரண்

மாறுபடத் தொடுப்பது முரண் எனப்படும். இது சொல் முரண், பொருள் முரண், சொற்பொருள் முரண் என வகைப்படுத்தப்படும்.

1.சொல் முரண்

தாழ்வு இல்லை

உயர்வே குறிக்கோள்

விலைவாசி                        (ல.டில்லிபாபு)

என்பதில் தாழ்வு x உயர்வு எனச் சொல் முரண் அமைந்தது.

2. பொருள் முரண்

அன்புடைமை அதிகாரத்தை

ஆசிரியர் கற்பிக்கிறார்

கையில் பிரம்புடன்                      (கழனியூரன்)

என்னும் கவிதையில் அன்புடைமைக்கு முரணாகத் தண்டனை எனும் பொருண்மை இணைத்துக் கூறப்படுகிறது.

3. சொற்பொருள் முரண்

மௌன ஊர்வலம்

முடிந்தது

கலவரத்தில்                    (பா.உதயகண்ணன்)

என்னும் கவிதையில், மௌனமும் கலவரமும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுகின்றன.

அங்கதம்

சமூகக் கேடுகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் நயம்பட எடுத்துரைத்துத் திருத்த முயல்வது அங்கதம் எனப்படும்.

எங்கள் மக்கள்

எப்போதும் நலமே தெருவுக்கு

நான்கு டாக்டர்கள்                  (பரிமள முத்து)

என்பதில் நலத்திற்குக் காரணம் நோய் வாராமையன்று, நோய் நிலையாமையே எனக் கூறுவதாக அமைகின்றது.

நான்கு கால்களும்

பல கைகளுமாய்

அரசாங்க மேசைகள்                  (தங்கம் மூர்த்தி)

என்னும் கவிதை, கையூட்டு அரசு அலுவலகங்களில் அங்கிங்கெனாதபடி பரவி நிலைபெற்றிருப்பதைப் புலப்படுத்துகின்றது.

விடுகதை

பெரும்பாலான ஐக்கூப் பாடல்கள், விடுகதை நடையில் எது? யார்? ஏன்? எப்படி என்பது போலும் பொருண்மையில் முன்னிரண்டடிகளும், அதற்குரிய விடையாக ஈற்றடியும் கொண்டு திகழ்ந்து சுவைபயப்பதுண்டு.

அழித்து அழித்துப் போட்டாலும்

நேராய் வராத கோடு

மின்னல்                      (மேகலைவாணன்)

என்னும் கவிதையில், முயன்று தவறிக் கற்றல் என்பதன்படி, ஒரு முறை தவறினும் மறுமுறை திருத்திக் கொள்வது தானே இயல்பு? ஒவ்வொரு முறையும் கோடு நேராகவில்லையென்றால் எப்படி? அப்படிப்பட்ட கோடு எது? என அவ்வினா பல்வேறு சிந்தனைகளைத் தூண்டுகிறது. விடையாக இறுதியடி அமைகின்றது.

இருந்தால் மேடு

இல்லாவிட்டால் பள்ளம்

வயிறு                         (மேகலைவாணன்)

என்பது எதிர்பாராத விடை கொண்ட கவிதை. உணவு இருந்தால் இல்லாவிட்டால் எனக் கொள்ள வேண்டும். வயிறு உணவு குறையாத நிலையில் இருந்தவன் தான் மோடு என்று வயிற்றிற்குப் பெயரிட்டவனாதல் வேண்டும்.

பழமொழி

பழமொழிகளை நயமுறக் கையாண்டு கருத்தை விளக்குதலும் உண்டு.

கந்தலானாலும் கசக்கிக்கட்டு

கசக்கினான்

கிழிந்து போனது                    (மலர்வண்ணன்)

என்னும் கவிதையில் தூய்மைக்குச் சொல்லப்பட்ட பழமொழியை, வறுமையைச் சித்திரிக்க எடுத்துக் கொண்டுள்ளார் கவிஞர்.

ஐந்தில் வளைப்பதற்கோ

பிஞ்சு முதுகில்

புத்தக மூட்டைகள்               (பாட்டாளி)

என்பதில், ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமோ?’ எனப் பணிவுக்குக் கூறப்பட்ட பழமொழி இன்றைய கல்வி முறையை விமரிசிக்கக் கையாளப்பட்டுள்ளது.

வினாவிடை

கவிதை முழுவதும் வினாவாக அமைந்து, தலைப்பு அதற்குரிய விடையாக அமைவதுண்டு. மூன்றாம் அடியே விடையாவதும் உண்டு.

வெட்ட வெட்ட

வளரும் நீ என்ன

விரல் நகமா?                  (பரிமள முத்து)

என்னும் கவிதைக்குரிய பதிலாகிய கவலை இதற்கான தலைப்பாக அமைகிறது.

தாகம் தணிக்குமோ

கடல்நீர்

வெட்டிப்பேச்சு               (செந்தமிழினியன்)

என்பதில், மூன்றாமடி தணிக்காது எனப் பதில் தருவதோடு, வெட்டிப் பேச்சும் அத்தகையதே என்பதை இணைத்துணர்த்துகின்றது.

உவமை

புதுப்புது உவமைகளைக் கையாளும் உத்தியையும் துளிப்பாவில் காண்கிறோம்.

கவிதைகள் எழுத

நல்ல தாள்

பனிப்புகை                     (மித்ரா)

என்பதில் பனிப்புகை வெண்தாளாக நிற உவமையாக்கப்பட்டுள்ளது.

நெருப்புதான் பெண்

அம்மாவிற்கு அடிவயிற்றில்

மாமியாருக்கு அடுப்படியில்        (அறிவுமதி)

என்னும் கவிதையில், மணமாகும்வரை கவனித்து வளர்க்க வேண்டியிருப்பதால் தாய்க்கு அடிவயிற்றில் கட்டிய நெருப்பாகவும், சமையலறையிலேயே இருத்தப்படுவதாலும், வரதட்சணைக் கொடுமை காரணமாகச் சமையலறை அடுப்பு வெடித்து அழிய நேர்வதாலும் மாமியாருக்கு அடுப்படி நெருப்பாகவும் அமைகிறாள் பெண்.

உருவகம்

பொருளும் உவமையும் வெவ்வேறு அல்ல என்பது உருவகம்.

இடியின் திட்டு

மின்னலின் பிரம்படி

அழுதது வானக்குழந்தை             (பல்லவன்)

என்பதில் இடி திட்டாகவும், மின்னல் பிரம்படியாகவும், மழை அழுகையாகவும், மேகம் தண்டிக்கப்படும் குழந்தையாகவும் உருவகப்படுத்தப் பட்டுள்ளன.

பள்ளிக்குப் போகாத சிறுமி

செல்லமாய்க் குட்டும்

ஆலங்கட்டி மழை                 (அறிவுமதி)

என்னும் கவிதையில் ஆலங்கட்டி மழை ஆசிரிய நிலையில் கருதப்பட்டுக் குட்டுவதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

2.4.2 நகைத் துளிப்பா (சென்ரியு) துளிப்பாவை அடுத்துச் சிறந்திருப்பது நகைத் துளிப்பாவாகும். ஜப்பானின் சென்ரியு என்னும் கவிதை வகையே தமிழில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஐக்கூவின் அங்கத வடிவம் சென்ரியு. ஐக்கூ இயற்கை உலகில் பார்வை செலுத்துகிறது எனில், மக்கள், பொருள், சம்பவங்கள் ஆகியவற்றின் மீதான பார்வையைக் குறிப்பது சென்ரியுவாகும். 5+7+5=17 என்னும் அசைகள் அமைப்போடு ஒழுங்கு வகைப்பட்டு ஒவ்வொரு கவிதையும் இருக்கும். சென்ரியு கவிதைகள் நடுத்தர மக்களின் அனுபவம், உணர்வு போன்றவற்றைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை அலுப்பை அகற்றும் சாதனமாக அமைந்து சுய அறிவுக்கு ஏற்றதாக அமைகின்றன. இவை மறைபொருள் தன்மை உடையனவாய் இருப்பதால் ஒரே சமயத்தில் ஒன்றிரண்டு என்று கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்பதே பயனளிப்பதாக அமையும்.

மூன்றடி, தலைப்பு இல்லாமை என்பன ஐக்கூ, சென்ரியு என்னும் இரண்டிற்குமான ஒற்றுமைப் பண்புகள். படிம அழகு, தத்துவச் சார்பு, இயற்கைத் தரிசனம் போன்ற கூறுகள் ஐக்கூவில் சிறப்பிடம் பெறுகின்றன. அன்றாட வாழ்வைப் படம் பிடித்தல்; ஆழமற்றிருத்தல்; வேடிக்கை, விடுகதை, நகைச்சுவை போன்ற தன்மைகளுடன் பொன்மொழி போன்றிருத்தல் ஆகியவை சென்ரியுவின் தனிச்சிறப்பாகும்.

நகைத் துளிப்பாவைத் தமிழுக்கு அறிமுகம் செய்துள்ள ஈரோடு தமிழன்பனின் ‘ஒரு வண்டி சென்ரியு’ என்னும் நூலிலிருந்து சில கவிதைகளை அரசியல், உறவுகள், கடவுள், குழந்தையுள்ளம் என்னும் தலைப்புகளில் இங்குக் காண்போம்.

அரசியல்

அரசியல்வாதி ஆவதற்கென்று தனித்தகுதி தேவையில்லை. எப்படிப்பட்டவர்களும் அதில் சென்று முன்னேறி விடலாம் என்பதை,

அது வராவிட்டால் இது

இது வராவிட்டால் அது

எதுவும் வராவிட்டால் அரசியல்              (ப.66)

என்னும் கவிதையில் நையாண்டி செய்கிறார் கவிஞர்.

கட்சிகள்தோறும் காணப்படும் கூட்டங்கள், தானே திரண்டனவல்ல; திரட்டப்பட்டனவேயாகும். இதனை,

ஆயிரம் பேரோடு

வேட்பு மனுத்தாக்கல்

ஐம்பது வாக்குகள்                         (ப.30)

என்னும் கவிதையில் பட்டவர்த்தனமாக்கியுள்ளார்.

‘மன்னன் எப்படி, மக்கள் அப்படி’ என்பார்கள். பொறுப்பான பதவியில் உள்ள அமைச்சர் பெருமக்களே, தாங்கள் கூடும் பொதுச்சபையில் சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதில்லை என்றால், இவர்களால் ஆளப்படும் நாடு என்னாவது?

சட்டம் ஒழுங்கைக்

காப்பாற்ற முடியவில்லை

சட்டசபையில்                            (ப.31)

என்பது அதைச் சுட்டும் கவிதை.

பதவியிலிருக்கும்வரை அதிகார தோரணையில் தன் விருப்பப்படி நடப்பவராகவும் மக்களைப் பற்றிக் கவலைப்படாதவராயும் இருப்பவர், வீட்டுக்கனுப்பப்பட்டதும் நாட்டைப் பற்றிச் சிந்திக்கிறார்.

பதவி இழந்த அமைச்சர்

அறிக்கை

இனி நாட்டுக்கு உழைப்பேன்                 (ப-63)

என்னும் கவிதை அது பற்றியதாகும்.

அரசியல்வாதிகளாகிய கட்சித் தலைவர்கள் சுயநலவாதிகள்; தொண்டர்கள் அப்பாவிகள் என்பதை,

கட்சி தொண்டர்களுக்கு

காசு குடும்பத்துக்கு

தலைவர் மரணமுறி                        (ப.92)

என்னும் கவிதை புலப்படுத்துகின்றது.

உறவுகள்

இன்றைய வாழ்வில் உறவுகள், பணத்தையே குறியாகக் கொண்டுள்ளன. மனைவியின் எண்ணமும் அதுவாக இருப்பதே வியப்பு; கசப்பான உண்மை.

வழியனுப்ப வந்த மனைவி

கண்ணீரோடு சொன்னாள்

பணம்அனுப்ப மறந்திடாதீங்க                (ப.97)

என்பது அது சார்பான கவிதை.

அண்ணன் தம்பி உறவும்கூடப் பொருளாதாரத்தை மையமிட்ட நிலையில் ஐயப்பாட்டிற்கு உரியதே என்பதை,

அயர்ந்த தூக்கத்தில் அண்ணன்

தம்பிவைத்தான் தலைமாட்டில்

ஊதுவத்தி                                 (ப.58)

என்னும் கவிதை உணர்த்தும். ‘ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி’ என்னும் பழமொழிக் கருத்துடையது இது.

கடவுள்

வழிபாட்டிடம், வணிக இடமாகி விட்டது. நல்ல உள்ளம் படைத்தவர்களும் பொருளாசைக்கு அடிமைப்பட்டுப் பண்பு குன்றி விடுகின்றனர் என்பதை,

குருக்களாகி விட்ட கடவுள்

மறுபடியும் கடவுளாகவில்லை

தட்டுநிறைய காணிக்கை                    (ப.27)

எனக் கடவுள்மேலிட்டுக் குறிப்பிடுகின்றார்.

குழந்தையுள்ளம்

வெளியுலகிற்குச் சென்று விளையாட விரும்பும் குழந்தையை வீட்டில் அடைத்துப் பழைய கதைகளைத் திணித்தல் கூடாது. அனுபவமே தலைசிறந்த கல்வி. கதைகள் கட்டுச்சோறு போன்றன.

கதை வேண்டாம்

கதவைத் திறந்துவிடு

குழந்தை அடம்                            (ப.77)

என்னும் கவிதை இக்கருத்தை உணர்த்துகின்றது. சொல்புத்தி விடுத்துச் சுயபுத்தியுடன் வாழும் குழந்தையே சாதிக்கவல்லதாகும்.

இனி இயைபுத் துளிப்பாவைக் காணலாம்.

2.4.3 இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) அங்கதத்தோடு மூன்றடிக் கவிதையில் முதலடியின் ஈற்றுச் சீரும் மூன்றாமடியின் ஈற்றுச் சீரும் இயைபுத் தொடையமையப் பாடப்படுவது இயைபுத் துளிப்பா. இதன் இரண்டாமடி ஏனைய இரண்டடியையும் விட நீண்டிருத்தல் சிறப்பு.

ஈரோடு தமிழன்பனின் சென்னிமலை கிளியோபாத்ராக்கள் என்னும் நூல் இத்தன்மைத்தாகும். அந்நூற் கவிதைகளில் சிலவற்றை முரண்பாடு, சுயநலம், பொய், தன்பலம் அறியாமை என்னும் தலைப்புகளில் காண்போம்.

முரண்பாடு

சொல்லொன்று, செயலொன்றாய் மனிதன் வாழ்கின்றான். ‘ஊருக்குத்தான் உபதேசம்’ என்பது அவன் கொள்கையாக இருக்கின்றது.

பாடுவது அருட்பாப் பதிகம்

அன்றாடம் உணவில் ஆடு கோழி

மீன் நண்டு வகையே அதிகம்                (ப.28)

என்னும் கவிதை அதனைப் புலப்படுத்துகின்றது.

சொல்லை வைத்து அன்பைப் புரிந்து கொள்ள முடியாத காலமிது. நண்பனைப் போல் பழகும் உட்பகையாளர் பலர் நாட்டில் உள்ளனர். இதனை,

வார்த்தைகள் பாசவெள்ளம்

நண்பர்க்கு நண்பர் தோண்டுவதோ வெட்டிப்

புதைக்க ஆழப் பள்ளம்                        (ப.41)

என்னும் கவிதை உணர்த்தும்.

சுயநலம்

தம் இன்பத்திற்காகப் பிறர்க்குத் துன்பம் தருதல் தகுதியுடையதாகாது.

புகை பிடித்தால் இறப்பாய்

மது குடித்தால் இறப்பாய் இரண்டும்

விற்றால் வாழ்வில் சிறப்பாய்                (ப.18)

என்னும் கவிதை. சமுதாயத்திற்குத் தீங்கு தருவதைத் தடைசெய்யாமல், தீங்கு என்று அறிவுறுத்துவதோடு நின்று, அத்தீங்குப் பொருள்களை உற்பத்தி செய்தும் வணிகம் செய்தும் வாழ்வோரைச் சிறப்புறச் செய்வதாய் அரசு விளங்குவதைச் சுட்டிக் காட்டுகின்றது.

பொய்

மனிதர்கள் பலர், இல்லறத்தின் வேராம் மனைவியை விட்டுவிட்டுத் தகாத நெறியொழுகுதலையும் அதற்காகப் பொய் பேசுதலையும் இயல்பாகக் கொண்டு வாழ்கின்றனர். அவர்களை,

மணக்கும் மதுரைமல்லி

வாங்கிப் போனான் காதலிக்கு

மனைவி பேரைச் சொல்லி                    (ப.56)

என்னும் கவிதை அடையாளம் காட்டுகிறது.

தன்பலம் அறியாமை

‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்பார்கள். உலகில் தன் வாழ்வெல்லாம் துன்பம் என்றும், பிறர் வாழ்வெல்லாம் இன்பம் என்றும் கருதி மயங்குவோர் பலர். தரமாகக் கவிதை எழுதியிருந்தும், எதுகைமோனை வரம்போடு எழுதுவதுதான் கவிதை என்று பிறர் கருதுவதை விரும்பியவன், யாப்புக் கற்க முயன்றதாக,

கவிதை எல்லாம் விற்றான்

கைக்கு வந்த காசைக் கொண்டு

தேமா புளிமா கற்றான்                        (ப.91)

என்னும் கவிதையில் எடுத்துரைக்கின்றார் தமிழன்பன்.

2.5 தொகுப்புரை

கவிதை என்பது சொற்களில் இல்லை; சொற்களுக்கு இடையில் இருக்கிறது. முருகியல் உணர்வு தருவதோடு வாழ்வியலை நெறிப்படுத்துவதும் அதன் பயன்களாகும். மரபுக்கவிதை, இசைப்பா, புதுக்கவிதை, குறுங்கவிதை என்பன கவிதை வகைமைகளாகும்.

மரபுக்கவிதை சந்தமும் தொடையும் செறிந்தது. வெண்பா, ஆசிரியப்பா என்னும் பாவகைகளும், தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்களும் மரபுக்கவிதை வகைமையில் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன.

சந்தப்பா, கும்மிப்பாடல், சிந்துப்பா என இசைப்பா மூன்று வகைப்படும். சந்தப்பா வல்லினம் முதலான இசைகளால் சிறந்து விளங்குவது; கும்மிப்பா வெண்டளை யாப்பும் முடுகியல் ஓசையும் கொண்டு சிறப்பது; சிந்துப்பா அடிதோறும் இயைபுத் தொடை கொண்டு திகழ்வது.

புதுக்கவிதை, மரபுக்கவிதையின் வரையறைகள் கடந்தது; சுதந்திரமாக எழுத ஏற்றது. எளியன, பல உத்திமுறைகளில் அமைந்தன, இருண்மை நிலையின என வகைப்படுத்தி உணரத் தக்கன புதுக்கவிதைகள்.

குறுங்கவிதை மூன்றடிகளில் அமைவது. ஜப்பானியக் கவிதைகளின் தாக்கத்தால் தோன்றியது. இது துளிப்பா (ஐக்கூ), அங்கதம் உடையதான நகைத் துளிப்பா (சென்ரியு), முதலடியும் ஈற்றடியும் இறுதியில் இயைந்து அங்கதம் பொருந்த வரும் இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) என மூவகைகளில் அமைவது.

கவிதை வகைமைகளைச் சான்றுகளோடு இப்பாடத்தில் கற்ற நாம், இனி அவற்றை அடையாளம் காணலாம்; உரிய உத்திமுறைகளில் பொருத்தி உணரலாம். இவ்வாறே நாமும் கவிதை படைக்கவும் முற்படலாம்.

பாடம் - 3

மரபுக்கவிதை வடிவம்

3.0 பாட முன்னுரை

தமிழில் தொன்றுதொட்டு இடம் பெற்று வரும் கவிதை வடிவம், மரபுக் கவிதை வடிவம் ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில், புலவர் என்றும் கவிஞர் என்றும் கருதப்பட்டவர்கள் மரபுக் கவிதையைப் பாடியவர்களேயாவர். ஓசை, அடிவரையறை ஆகியவற்றால் இலக்கண வரையறை பெற்று அமைவனவே மரபுக் கவிதைகள் ஆகும். ‘யாத்தல்’ என்பதற்குக் ‘கட்டுதல்’ என்பது பொருளாகும். ‘யாப்பு’ என்பது இப்பொருள் உடையதாகும். எனவே, மரபுக்கவிதை எழுதும் முறையை எடுத்துரைக்கும் நூல்கள், ‘யாப்பிலக்கண நூல்கள்’ எனப்படும். தொல்காப்பியச் செய்யுளியல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை முதலான நூல்களில் இக்கவிதை வடிவங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன.

யாப்பிலக்கண நூல்களேயன்றி, ஏனைய இலக்கண நூல்களும் மரபுக்கவிதை சிறக்கத் தோன்றியனவேயாகும். எழுத்திலக்கண நூல்கள் புணர்ச்சி விதிகளை எடுத்துரைக்கின்றன; சொல்லிலக்கண நூல்கள் சொற்களின் பயன்பாட்டை விளக்குகின்றன; பொருளிலக்கண நூல்கள் அகமும் புறமும் ஆகிய இலக்கியப் பாடுபொருள்களை விவரிக்கின்றன; அணியிலக்கண நூல்கள் கருத்தை எடுத்துரைக்கும் முறைகளாகிய அணிகள் குறித்து விளக்கியுரைக்கின்றன.

யாப்பிலக்கண அடிப்படை விதிகள் குறித்தும், பா வடிவங்கள் குறித்தும், பாவின வடிவங்கள் குறித்தும், பாக்களை இயற்றும் பிற உத்திகள் குறித்தும் இப்பாடத்தில் காண்போம்.

3.1 யாப்பிலக்கண அடிப்படை விதிகள்

யாப்பிலக்கண நூல்கள் மரபுக்கவிதை இயற்றும் முறைகளை உறுப்பியல், செய்யுளியல் எனப் பாகுபடுத்தி எடுத்துரைக்கின்றன. அவற்றுள் உறுப்பியல் என்னும் பகுதி, எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியன குறித்து விளக்குவதாகும். இவற்றை அறிந்து கொண்டால் அன்றி, மரபுக்கவிதை எழுதுதல் இயலாது. இத்தகைய யாப்பிலக்கண அடிப்படை விதிகள் குறித்து இனிக் காண்போம்.

3.1.1 எழுத்து குறில், நெடில், ஆய்தம், ஒற்று, அளபெடை, குறுக்கம் என ஆறு வகைகளில் எழுத்துக் குறித்துத் தெரிந்து கொள்ளுதல் போதுமானது.

குறில் என்பது குறுகி ஒலிக்கும் எழுத்தாகும். இதற்குரிய மாத்திரை (ஒலிக்கும் கால அளவு) 1 ஆகும். அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் உயிர்க்குறில்களாகும். க, கி, கு, கெ, கொ என்பன முதலாகிய தொண்ணூறும் (5×18=90) உயிர்மெய்க் குறில்களாகும்.

நெடில் என்பது 2 மாத்திரையுடைய எழுத்தாகும். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் உயிர் நெடில்களாகும். கா, கீ, கூ, கே, கை, கோ, கௌ என்பன முதலாகிய நூற்றிருபத்தாறும் (7×18=126) உயிர் மெய் நெடில்களாகும்.

ஆய்த எழுத்தும், ‘க்’ முதல் ‘ன்’ வரையிலான பதினெட்டு மெய்யும் ஆகிய பத்தொன்பதும் ‘ஒற்று’ எனப்படும். இவை அரைமாத்திரை உடையனவாகும். சில இடங்களில் ஆய்தம் ஒரு மாத்திரையும் பெறும்.

அளபெடை என்பது, ஓரெழுத்து தனக்குரிய மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதாகும். நெடில் தனக்குரிய மாத்திரையிலிருந்து நீண்டு 3 அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரையளவு நீண்டொலிப்பது ‘உயிரளபெடை’ எனப்படும். உயிர் நெடிலாயினும், உயிர்மெய் நெடிலாயினும் அவை நீண்டொலிப்பதற்கு அடையாளமாக அந்தந்த நெடிலுக்கு இனமான உயிர்க்குறில் அடுத்து எழுதப்படும். ஐ, ஒள என்னும் நெடில்களுக்கு முறையே இ, உ என்பன இனமாக அமையும். இவ்வாறே, ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், ஃ ஆகிய பதினொன்றும் தமக்குரிய மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பது, ‘ஒற்றளபெடை’ எனப்படும். இவற்றிற்கு அடையாளமாக அதே ஒற்றெழுத்து அருகில் எழுதப் பெறும்.

குறுக்கம் என்பது, ஓரெழுத்து தனக்குரிய மாத்திரையிலிருந்து குறுகி ஒலிப்பதாகும். உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறுகி ஒலிப்பது குற்றியலுகரம் எனப்படும். தனிக்குறில் தவிர்த்து, பிற எழுத்துகளை அடுத்து ஒரு சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய்களின் மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரமாகும். குற்றியலுகரச் சொற்களையடுத்து யகர வரிசைச் சொற்கள் வந்து புணரும்போது குற்றியலுகரம், குற்றியலிகரமாக மாறும். அதுவும், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும். ஐகாரம், மொழிமுதலில் நெடிலாகவும், இடையிலும் இறுதியிலும் குறிலாகவும் கருதப்பெறும்.

3.1.2 அசை ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது அசை எனப்படும். ஒற்றெழுத்தைக் கணக்கிடுவதில்லை. (ஒற்றெழுத்து = மெய்யெழுத்து). அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

நேரசை அமையும் முறை

1) தனிக்குறில் – க

2) தனிக்குறில் ஒற்று – கல்

3) தனிநெடில் – கா

4) தனிநெடில் ஒற்று – கால்

நிரையசை அமையும் முறை

1) இரு குறில் – படி

2) இருகுறில் ஒற்று – தமிழ்

3) குறில் நெடில் – பலா

4) குறில் நெடில் ஒற்று – புலால்

அசை பிரிக்கும் பொழுது, ஒன்றிற்கு மேற்பட்ட ஒற்றுகளும் ஓரொற்றாகவே கருதப்படும் (ஈர்க்/கு); நெடில் குறில் சேர்ந்து ஓரசை ஆவதில்லை (ஏ/ணி); அளபெடைகள், குற்றியலிகரம், ஆய்தம் என்பன சூழலுக்கேற்ப அலகுபெறுவதும் உண்டு; அலகு பெறாதிருப்பதும் உண்டு. (அலகு பெறுதலாவது, அசைபிரிக்கத் தகுதி வாய்ந்த எழுத்தாகக் கருதப் பெறுவதாகும்).

வெண்பாவின் இறுதியில் இடம்பெறும் நேரசை, நிரையசை ஆகியவை குற்றியலுகரம் பெறுவது உண்டு. அக் குற்றியலுகரங்கள் தனியசையாகக் கருதப்படுவதில்லை; நேர்பு, நிரைபு என இவை முறையே பெயர் பெறும். எ.டு :நாடு – நேர்பு; உலகு – நிரைபு

3.1.3 சீர் அசைகளால் அமைவது சீர். ஒரு சொல்லோ, ஒரு சொல்லின் பகுதியோ, இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்களோ ஒரு சீராக அமையும். ஒரு சீர் பொருள் நிறைவுடையதாய் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

சீர் நான்கு வகைப்படும். அவை பின்வருமாறு:

ஓரசைச்சீர் – வாய்பாடு – (2)

நேரசை – நாள்

நிரையசை – மலர்

(வெண்பாவில் மட்டுமே ஓரசைச்சீர் (இறுதிச் சீராக) வரும். அதற்குரிய வாய்பாடு ‘நாள்’, ‘மலர்’ ஆகும். அவ்வாறே ஈரசைச் சீருக்குக் ‘காசு’, ‘பிறப்பு’ என்பன வாய்பாடு ஆகும்).

ஈரசைச்சீர் – வாய்பாடு – (4) (இயற்சீர்)

நேர் நேர் – தேமா

நிரை நேர் – புளிமா         இவற்றை மாச்சீர் (2)

என்று குறிப்பிடுவர்

நேர் நிரை – கூவிளம்

நிரை நிரை – கருவிளம்         இவற்றை விளச்சீர் (2)

என்பர்.

இவ்வாறே இறுதிச் சொல்லை வைத்து, காய்ச்சீர், கனிச்சீர் முதலியனவும் வரும்.

மூவசைச்சீர் – வாய்பாடு – (8)

நேர் நேர் நேர் – தேமாங்காய்

நிரை நேர் நேர் – புளிமாங்காய்

நேர் நிரை நேர் – கூவிளங்காய்

நிரை நிரை நேர் – கருவிளங்காய்         காய்ச்சீர் (4)

(வெண்சீர்)

நேர் நேர் நிரை – தேமாங்கனி

நிரை நேர் நிரை – புளிமாங்கனி

நேர் நிரை நிரை – கூவிளங்கனி

நிரை நிரை நிரை – கருவிளங்கனி         கனிச்சீர் (4)

(வஞ்சிஉரிச்சீர்)

நாலசைச்சீர் (16)

மூவசைச்சீருடன் நேரசையைச் சேர்க்கப் பூச்சீர் என எட்டும், நிரையைச் சேர்க்க நிழற்சீர் என எட்டும் அமையும்.

தேமாந்தண்பூ, தேமாந்தண்ணிழல் போன்றவை.

3.1.4 தளை நின்ற சீரின் இறுதி அசையும், வரும் சீரின் முதல் அசையும் தம்முள் பொருந்துவது ‘தளை’ எனப்படும். தளை ஏழு வகைப்படும். அவை:

· நேர் ஒன்று ஆசிரியத் தளை     - மாமுன் நேர்

(நின்/ற சொல்/லர்)

· நிரைஒன்று ஆசிரியத்தளை     - விளமுன் நிரை

(செம்/மொழி தமிழ்/ மொழி)

· இயற்சீர் வெண்டளை     - மாமுன் நிரை

(கற்/க கச/டற)

- விளமுன் நேர்

(கற்/பவை கற்/றபின்)

· வெண்சீர் வெண்டளை     - காய்முன் நேர்

(செல்/வத்/துள் செல்/வம்)

· கலித்தளை     - காய்முன் நிரை

(பல்/லுல/கும் பல/வுயி/ரும்)

· ஒன்றிய வஞ்சித்தளை     - கனி முன் நிரை

(வினைத்/திண்/பகை விழச்/செற்/றவன்)

· ஒன்றாத வஞ்சித்தளை     - கனி முன் நேர்

(நல/மலிந்/திடு நன்/னா/ளிது)

3.1.5 அடி சீர்களால் அமைவது அடி. இது ஐவகைப்படும். அவை:

· குறளடி     - 2 சீர்களை உடையது.

· சிந்தடி     - 3 சீர்களை உடையது.

· அளவடி (அ) நேரடி     - 4 சீர்களை உடையது.

· நெடிலடி     - 5 சீர்களை உடையது.

· கழிநெடிலடி     - 6 (அ) அதற்குமேற்பட்ட சீர்களை உடையது.

சீர்களுக்கேற்ப அறுசீர்க்கழிநெடிலடி,

எழுசீர்க்கழிநெடிலடி என்றவாறு பெயர் பெறும்.

3.1.6 தொடை அடிகளிலும் சீர்களிலும் எழுத்து முதலியன பொருந்துமாறு தொடுக்கப்படுவது ‘தொடை’ எனப்படும்.

தொடை வகை

தொடை எட்டு வகைப்படும். அவை :

· மோனை     -  முதலெழுத்து ஒன்றி வருவது.

· எதுகை     - முதலெழுத்தை அடுத்து வரும் இரண்டாம் எழுத்துப் பொருந்தி வருதல்.

· முரண்     - சொல்லாலோ பொருளாலோ தம்முள் மாறுபடச் சொற்களைத் தொடுத்தல்.

· இயைபு     - சீர்களின் இறுதி ஓசை ஒன்றி வருதல்.

· அளபெடை     - அளபெடைச் சொற்கள் சீர்களில் அமையப் பெறுதல்.

· அந்தாதி     - எழுத்து, அசை, சீர் முதலான ஒன்றன் இறுதி எழுத்து, அடுத்ததன் முதலாக அமைதல்.

· இரட்டை     - அடி முழுவதும் வந்த சொல்லே வருவது.

· செந்தொடை     - மோனை முதலான தொடைகள் ஏதுமில்லாமல் பொருளால் சிறந்திருத்தல்.

இவற்றுள் மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை ஆகிய ஐந்தும் அடிதோறுமாக இடம் பெறுதல் ‘முதல் தொடை’ எனப்படும்.

3.2 பா வடிவங்கள்

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா எனப் பா வடிவங்கள் ஐந்து வகைப்படும்.

3.2.1 வெண்பா வெண்பாவிற்கான இலக்கணங்களும், வெண்பா வகைகளும் குறித்துக் காண்போம்.

வெண்பா இலக்கணம்

· மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் ஆகியனவே இடம்பெறும்; கனிச்சீர் வரக்கூடாது.

· இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வரும்; பிற தளைகள் வரலாகாது.

· ஈற்றடி முச்சீருடையதாகவும், ஏனைய அடிகள் நான்கு சீர் உடையனவாகவும் அமையும்.

· ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு கொண்டு முடியும்.

· செப்பலோசை பெறும்.

· அடிவரையறை; குறைந்த அளவு இரண்டடி; பேரெல்லைக்கு வரையறை இல்லை.

வெண்பா வகைகள்

வெண்பா ஆறு வகைப்படும். அவை பின்வருமாறு:

1. குறள் வெண்பா

இரண்டடிகளில் அமைவது.

(எ.கா)

வெள்ளத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்

உள்ளத் தனைய துயர்வு

2. சிந்தியல் வெண்பா

மூன்றடிகளில் அமைவது. இரண்டாம் அடியில் தனிச்சொல் பெறுவது நேரிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும். தனிச்சொல் இவ்வாறு பெறாதது, இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும்.

1) நேரிசைச் சிந்தியல் வெண்பா

(எ.கா)

கங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை

செங்குவளை பூத்தாள் செயலென்னே- எங்கோமான்

பங்குற்றும் தீராப் பசப்பு

2) இன்னிசைச் சிந்தியல் வெண்பா

(எ.கா)

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்

மேல்நின்று தான்சுரத்த லான்

3) நேரிசை வெண்பா

நான்கடிகளையுடையது. இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெறும். அத்தனிச்சொல் முன்னிரண்டடிகளின் எதுகையை உடையதாய் இருக்கும். முன்னிரண்டடிகளில் ஓரெதுகையும், பின்னிரண்டடிகளில் ஓரெதுகையும் வருதல் பெரும்பான்மையாகும். இரண்டிற்கு மேற்பட்ட எதுகைகளும் வரலாம். எதுகையை ‘விகற்பம்’ எனச் சுட்டுவது உண்டு.

(எ.கா)

நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்

நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் – பூக்குழலாய்!

நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்

புல்லினும் திண்மைநிலை போம்

4) இன்னிசை வெண்பா

நான்கடிகளில் அமையும். ஓரெதுகையோ, இரண்டெதுகையோ, பல எதுகையோ பெற்று வரும்.

(எ.கா)

கல்லா ஒருவர்க்குத் தம்வாயின் சொல்கூற்றம்;

மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்;

அல்லவை செய்வார்க் கறம்கூற்றம்; கூற்றமே

இல்லத்துத் தீங்கொழுகு வாள்

5) பஃறொடை வெண்பா

5 முதல் 12 அடிவரையில் அமையும். ஓரெதுகையோ, பல எதுகையோ பெற்று வரும்.

(எ.கா)

நன்றி யறிதல், பொறையுடைமை, இன்சொல்லோ(டு)

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை, கல்வியோ(டு)

ஒப்புர வாற்ற அறிதல், அறிவுடைமை,

நல்லினத் தாரோடு நட்டல், இவையெட்டும்

சொல்லிய ஆசார வித்து

6) கலிவெண்பா

13 அடி முதல் பல அடிகளில் வரும். தனிச்சொல் பெறாமல் வருவது இன்னிசைக் கலிவெண்பாவாகும். இரண்டிரண்டு அடிகள் ஒவ்வோரெதுகையும் தனிச்சொல்லும் பெற்றுக் ‘கண்ணி’ என்னும் பெயரில் பலவாக வருவது நேரிசைக் கலிவெண்பா ஆகும்.

இன்னிசைக் கலிவெண்பாவிற்குச் சிவபுராணமும், நேரிசைக் கலிவெண்பாவிற்குத் தமிழ்விடுதூதும் சான்றுகளாகும்.

இவை வெண்பா பற்றியனவாகும்.

3.2.2 ஆசிரியப்பா ஆசிரியப்பாவின் இலக்கணத்தையும், வகைகளையும் இனிக் காண்போம்.

ஆசிரியப்பா இலக்கணம்

· மாச்சீரும் விளச்சீரும் பயின்று வரும்; காய்ச்சீர் சிறுபான்மை வரும்;  கனிச்சீரில் தேமாங்கனியும் புளிமாங்கனியும் மட்டும் மிகச் சிறுபான்மை இடம் பெறலாம்.

· நேரொன்றாசிரியத் தளையும், நிரையொன்றாசிரியத் தளையும் பயின்று வரும். பிற தளைகளும் வரலாம்.

· அளவடி பயின்று வரும்; குறளடியும், சிந்தடியும் இடம் பெறுதலும் உண்டு; நெடிலடியும், கழிநெடிலடியும் வருதல் கூடாது.

· அகவலோசை பெற்று வரும்.

· ஆசிரியப்பாவின் சிற்றெல்லை மூன்றடி; பேரெல்லைக்கு எல்லை இல்லை.

·  ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிதல் சிறப்புடையது.

ஆசிரியப்பா வகைகள்

ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை பின்வருமாறு:

நேரிசை ஆசிரியப்பா

எல்லா அடிகளும் நான்கு சீர்களை உடையனவாகவும், ஈற்றயலடி மூன்று சீர்களை உடையதாகவும் அமைவது.

(எ.கா)

தானே முத்தி தருகுவன் சிவனவன்

அடியன் வாத வூரனைக்

கடிவில் மனத்தால் கட்டவல் லார்க்கே

நிலைமண்டில ஆசிரியப்பா

எல்லா அடிகளும் நாற்சீர் உடையனவாக அமைவது.

(எ.கா)

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட! செவ்வியை ஆகுமதி;

யாரஃ தறிந்திசி னோரே? சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்

உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே

இணைக்குறள் ஆசிரியப்பா

முதலடியும் ஈற்றடியும் அளவடியாக அமைய இடையில் அளவடி, சிந்தடி, குறளடி ஆகியன விரவி வருமாறு அமைவது.

(எ.கா)

நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்

சாரச் சார்ந்து

தீரத் தீரும்

சாரல் நாடன் கேண்மை

சாரச் சாரச் சார்ந்து

தீரத் தீரத் தீர்பொல் லாதே

அடிமறி மண்டில ஆசிரியப்பா

நிலைமண்டில ஆசிரியப்பாவில் எந்த அடியை எங்கு மாற்றி அமைப்பினும் பொருளும் ஓசையும் மாறாதிருப்பது.

(எ.கா)

மாறாக் காதலர் மலைமறந் தனரே

யாறாக் கட்பனி வரலா னாவே

ஏறா மென்தோள் வளைநெகி ழும்மே

கூறாய் தோழியான் வாழு மாறே

இதன் அடிகளை இடம் பெயர்த்து மேலும் 15 வகைகளில் அமைக்கவியலும்.

3.2.3 கலிப்பா கலிப்பாவின் இலக்கணத்தையும் கலிப்பா வகைகளையும் காண்போம்.

கலிப்பா இலக்கணம்

· காய்ச்சீர் பயின்று வரும்; மாச்சீர், விளச்சீர், கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகியன வருதல் கூடாது.

· கலித்தளை பயின்று வரும்; பிற தளைகளும் வரலாம்.

· அளவடியுடையதாக அமையும்.

· துள்ளலோசை உடையது.

· தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்புகளுள் ஏற்பனவற்றைக் கொண்டு நடக்கும்.

கலிப்பா உறுப்புகள்

· தரவு: கலிப்பாவின் முதல் உறுப்பு; எருத்து எனவும் கூறப்பெறும்.

· தாழிசை: கலிப்பாவின் இரண்டாம் உறுப்பு; தரவைவிடக் குறைந்த இசையும் ஓசையும் உடையது. தரவைக்காட்டிலும் அடியளவில் குறைந்தது; இடைநிலைப்பாட்டு எனவும் பெறும். மூன்றடுக்கி வருதல் மிகுதி (அதாவது, ஒரே கருத்தை மூன்று முறை, வெவ்வேறு உவமைகளுடன் கூறுதல்).

· அராகம்: இசைத்தன்மையுடையது.

· அம்போதரங்கம்: கடலலைபோல் சுருங்கி வருவது;

· தனிச்சொல் : பொருள் தொடர்புடையதாய், ஓர் அசை (அ) சீர் தனித்து வருவது.

· சுரிதகம்: பாட்டினை முடிக்கும் உறுப்பு. வெண்பாச் சுரிதகம், ஆசிரியச் சுரிதகம் என இது இருவகைப்படும்.

கலிப்பா வகைகள்

கலிப்பா நால்வகைப்படும். அவை:

தரவு, மூன்றடுக்கிய தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகியன கொண்டது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும்.

தாழிசையை அடுத்து அம்போதரங்கம் அமைவது அம்போதரங்கக் கலிப்பாவாகும்.

தாழிசையை அடுத்தும் அம்போதரங்கத்திற்கு முன்புமாக அராகம் அமைவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா எனப்பெறும்.

ஒத்தாழிசைக் கலிப்பா

(எ.கா)      (தரவு)

வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து

தோணெடுந்தன் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்

பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ?

(தாழிசை)

சூருடைய நெடுங்கடங்கள் சொலற்கரிய என்பவால்

பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே?      (1)

சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால்

நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே?     (2)

சிலம்படைந்த வெங்கானம் செலற்கரிய என்பவால்

புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே?   (3)

(தனிச்சொல்)

எனவாங்கு

(சுரிதகம்)

அருளெனும் இலராய்ப் பொருள்வயிற் பிரிவோர்

பன்னெடுங் காலம் வாழியர்

பொன்னெடுந் தேரொடு தானையிற் பொலிந்தே!

- இப்பாடல் ஆசிரியச் சுரிதகத்தால் இயன்ற நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவாகும். பிறவகைக் கலிப்பாக்களை இலக்கியங்களைப் பயின்று சுவைக்கலாம்.

வெண்கலிப்பா

தரவு மட்டுமே பெறும்; அளவடிகளால் அமையும்; சிற்றெல்லை நான்கடிகள்; பேரெல்லைக்கு எல்லையில்லை; ஈற்றடி சிந்தடியாக வரும். கலித்தளை பயின்று வரும். வெண்சீர் வெண்டளையும் இடையிடையே வரும்.

(எ.கா)

முழங்குகுரல் முரசியம்ப முத்திலங்கு நெடுங்குடைக்கீழ்

பொழிந்தமதக் கருஞ்சுவட்டுப் பொறிமுகத்த களிறூர்ந்து

பெருநிலம் பொதுநீக்கிப் பெயராத பெருமையாற்

பொருகழற்கால் வயவேந்தர் போற்றிசைப்ப வீற்றிருப்பார்

மருள்சேர்ந்த நெறிநீக்கி வாய்மைசால் குணம்தாங்கி

அருள்சேர்ந்த அறம்புரிந்தார் அமர்ந்து

கொச்சகக்கலிப்பா

கலிப்பா உறுப்புகள் முறைமாறியும், கூடியும் குறைந்தும் வருவது. உறுப்புகளுக்கேற்பத் தரவு, தரவிணை, சிஃறாழிசை, பஃறாழிசை, மயங்கிசை எனப் பெயர்பெறும் பல வகைகளையுடையது.

தரவு கொச்சகக் கலிப்பா குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் நான்கடியாலும், சிறுபான்மை ஐந்தடி (அ) எட்டடியாலும் இது அமையும்.

(எ.கா)

கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ

பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து

விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ

அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்

கட்டளைக் கலிப்பா

மா விளம் விளம் விளம் என்னும் வாய்பாட்டில் ஒவ்வோர் அரையடியும் அமையும்; நான்கடிகளையுடையது; நேரசையில் தொடங்குவது பதினோரெழுத்தும், நிரையசையில் தொடங்குவது பன்னீரெழுத்தும் பெறும்; அரையடிகள் கொண்டு விளங்கும்; ஏகாரத்தின் முடியும்.

(எ.கா)

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ!

அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ!

பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ!

பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ!

முன்னை எத்தனை எத்தனை சன்மமோ!

மூட னாயடி யேனும றிந்திலன்!

இன்னும் எத்தனை எத்தனை சன்மமோ!

என்செய் வேன்கச்சி ஏகம்ப நாதனே!

- இதில் விளச்சீருக்குப் பதில் மாங்காய்ச்சீர் வந்தமைந்தது; எழுத்து எண்ணிக்கை மாறவில்லை.

3.2.4 வஞ்சிப்பா

வஞ்சிப்பாவின் இலக்கணத்தையும் வகைகளையும் காண்போம்.

வஞ்சிப்பா இலக்கணம்

· கனிச்சீர் பயின்று வரும்; பிற சீர்களும் வரும்; சிறுபான்மை நாலசைச் சீர்களும் வருவதுண்டு.

· வஞ்சித்தளை பயின்று வரும்; பிற தளைகளும் வரலாம்.

· குறளடியாலோ, சிந்தடியாலோ அமையும்; அளவடியும் வருவதுண்டு.

· தூங்கலோசை உடையது.

· தனிச்சொல் பெற்று வரும்.

· ஆசிரியச் சுரிதகம் கொண்டு முடிவதாக அமையும்.

· சிற்றெல்லை மூன்றடி; பேரெல்லைக்கு வரையறையில்லை.

வஞ்சிப்பா வகைகள்

வஞ்சிப்பா இருவகைப்படும். அவையாவன:

குறளடி வஞ்சிப்பா

குறளடிகளால் ஆனது.

(எ.கா)

வளவயலிடைக் களவயின்மகிழ்

வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்

மனைச்சிலம்பிய மணமுரசொலி

வயற்கம்பலைக் கயலார்ப்பவும்

நாளும்

மகிழும் மகிழ்தூங் கூரன்

புகழ்த லானாப் பெருவண் மையனே

சிந்தடி வஞ்சிப்பா

சிந்தடிகளால் அமைவது.

(எ.கா)

துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி

எயில்நடுவண் இனிதிருந் தெல்லார்க்கும்

பயில்படுவினை பத்தியலாற் செப்பியோன்

புணையெனத்

திருவுறு திருந்தடி திசைதொழ

வெருவுறு நாற்கதி வீடுநனி எளிதே

3.2.5 மருட்பா மருள் – மயக்கம்; கலத்தல். வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து அமைவது இது. வெண்பாவும் ஆசிரியப்பாவும் சமமாக அமையின் சமநிலை மருட்பா எனப்படும். வெண்பாவைவிட ஆசிரியப்பாவின் அடிகள் மிகுந்திருப்பின் ‘வியனிலை மருட்பா’ எனப்படும்.

மருட்பாப் பொருண்மைகள்

· புறநிலை வாழ்த்து

‘வழிபடு தெய்வம் நின்னைக் காப்பதாக; நீ நீடு வாழ்க’ என்பது.

(எ.கா)

அரசியல் கோடா தரனடியார்ப் பேணும்

முரசியல் தானைவேல் மன்னர் – பரசோன்

கழலிணை பொதுவில் காப்பாக

வழிவழி சிறந்து வாழியர் பெரிதே

(பரசு – மழுப்படை; சிவனுக்குரியது)

· கைக்கிளை

ஒருமருங்கு பற்றிய காமம்.

(எ.கா)

பருந்தளிக்கு முத்தலைவேல் பண்ணவற்கே அன்றி

விருந்தளிக்கும் விண்ணோர் பிறர்க்கும் – திருந்த

வலனுயர் சிறப்பின் மன்ற வாணனக்

குலமுனி புதல்வனுக் கீந்த

அலைகட லாகுமிவ் வாயிழை நோக்கே

(இது வியனிலை மருட்பாவாகும்).

· வாயுறை வாழ்த்து

‘இன்று வெறுப்பளிப்பினும் பின்னர் நன்மைதரும்’ என்று உண்மைப் பொருளை வற்புறுத்தி வாழ்த்துவது.

(எ.கா)

வம்மின் நமரங்காள் மன்னுடையான் வார்கழல்கண்

டுய்ம்மின் உறுதி பிறிதில்லை – மெய்ம்மொழிமற்

றென்மொழி பிழையா தாகும்

பின்வழி நுமக்குப் பெரும்பயன் தருமே

· செவியறிவுறூஉ

பெரியோர் அறிவுறுத்துவது

(எ.கா)

வாழ்த்துமின் தில்லை நினைமின் மணிமன்றம்

தாழ்த்துமின் சென்னி தலைவற்கு – வீழ்த்த

புறநெறி யாற்றா தறநெறி போற்றி

நெறிநின் றொழுகுதிர் மன்ற

துறையறி மாந்தர்க்குச் சூழ்கடன் இதுவே

(இதுவும் வியனிலை மருட்பாவாகும்).

இவ்வாறு பா வகைகள் அமைகின்றன.

3.3 பாவின வடிவங்கள்

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் உரியனவாகத் தாழிசை, துறை, விருத்தம் ஆகிய பாவின வகைகள் அமைகின்றன.

3.3.1 தாழிசை குறைந்த ஓசையுடையது. இது ஆறு வகைப்படும்.

1) குறள் தாழிசை

குறள் வெண்பாவில் கலித்தளை கலந்து செப்பலோசை சிதைந்து வருவது.(எ.கா)

வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்

பண்டையள் அல்லள் படி

2) வெள்ளொத்தாழிசை

இன்னிசைச் சிந்தியல் வெண்பா, ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வரும்போது இப்பெயர்பெறும்.

3) வெண்டாழிசை

வெண்டளை, ஆசிரியத்தளை, கலித்தளை ஆகியவற்றுள் ஒன்றாலோ, பலவாலோ மூன்றடிகளில் அமைவது; ஈற்றடி சிந்தடியாகவும் ஏனைய அடிகள் அளவடியாகவும் வரும்.

எ.கா. ஆசிரியத் தளையால் வருவது.

நண்பி தென்று தீய சொல்லார்

முன்பு நின்று முனிவு செய்யார்

அன்பு வேண்டு பவர்

4) ஆசிரியத் தாழிசை

அளவொத்த அளவடிகள் மூன்று கொண்டு, ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவது இது. சிறுபான்மை, தனித்து வருவதும் உண்டு.

(எ.கா) கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்

இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்

கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ

5) கலித்தாழிசை

இரண்டடிகளிலும் பல அடிகளிலுமாக அமையும். ஈற்றடி, சீர் மிகுந்து வரும். ஏனைய அடிகளில் சீர்கள் ஒத்தும் ஒவ்வாதும் அமையும். கலியொத்தாழிசை என்பதும் இதுவே.

(எ.கா) செல்லார் பொழில்தில்லைச் சிற்றம் பலத்தெங்கள்

பொல்லா மணியைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!

6) வஞ்சித் தாழிசை

குறளடிகள் நான்கு கொண்டு அமைவது. அடிகள் அனைத்தும் ஓரெதுகை பெற்று வர வேண்டும். ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவதும் மிக அவசியமானது.

(எ.கா) பிணியென்று பெயராமே

துணிநின்று தவஞ்செய்வீர்!

அணிமன்றில் உமைபாகன்

மணிமன்று பணிவீரே!

இவற்றில் தளை பார்த்தல் கூடாது.

3.3.2 துறை துறை என்னும் பாவினம் நான்கு வகைப்படும்.

1) குறள்வெண் செந்துறை

அளவொத்த இரண்டடிகளில் அமையும். அவ்வடிகள் அளவடியாகவோ, நெடிலடியாகவோ, கழிநெடிலடியாகவோ அமையும்.

(எ.கா) 1. ஆத்தி சூடி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

2. நன்றி யாங்கள் சொன்னக்கால்

நாளும் நாளும் நல்லுயிர்கள்

கொன்று தின்னும் மாந்தர்கள்

குடிலம் செய்து கொள்ளாரே

2) ஆசிரியத் துறை

நான்கடியில் அமையும்; இடைமடக்குடையது; முதலடி தவிரப் பிற அடிகளில் ஏதேனும் ஒன்று அளவு குறைந்து வரும்.

(எ.கா) போதுறு முக்குடைப் பொன்னெயில் ஒருவன்

தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்

தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்

தீதுறு தீவினை இலரே

3) கலித்துறை

நெடிலடி நான்குடையது. 1, 3 சீர்களிலோ, 1, 4 சீர்களிலோ, 1, 3, 5 சீர்களிலோ மோனை அமைதல் நன்று. சந்தத்தில் அமைவதும் உண்டு. பல வாய்பாடுகளில் அமையும். இவற்றில் பாவியற்றப் பயிலல் நன்று. வாய்பாடுகளை மனம் கொள்ளுதல் அவசியம்.

1) மா விளம் விளம் விளம் மா – வாய்பாடு

கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து

பண்ணு றத்தெரிந் தாய்ந்தஇப் பசுந்தமிழ் ஏனை

மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?

2) விளம் மா விளம் மா காய் – வாய்பாடு

காயிலை தின்றும் கானிலு றைந்தும் கதிதேடித்

தீயிடை நின்றும் பூவலம் வந்தும் திரிவீர்காள்!

தாயினும் அன்பன் பூமகள் நண்பன் தடநாகப்

பாயல்மு குந்தன் கோயில ரங்கம் பணிவீரே

கட்டளைக் கலித்துறை என்பதும் இதில் ஒரு வகை. முதல் நான்கு சீர்களிலும் வெண்டளை பிறழாமல், கடைசிச்சீர் அடிதோறும் விளங்காயாக அமைய, நேரசையால் தொடங்குவது. அடிக்கு 16 எழுத்தும், நிரையசையில் தொடங்குவது 17 எழுத்தும் என அமைவது (இவ்வாறு எண்ணுகையில் ஒற்றெழுத்தைத் தவிர்க்க வேண்டும்). தஞ்சைவாணன் கோவை, அபிராமி அந்தாதி முதலிய நூல்கள் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தவை.

(எ.கா) அன்னைத் தமிழினில் ஆயிரம் நற்பேர் அமைந்திருப்ப

இன்னல் ஒலிப்புடை ஏதில் மொழிப்பெயர் ஏற்றதென

உன்னி மழலையர்க் கெல்லாம் பெயரிட் டுவந்திடுவோர்

கன்னல் இருப்பவும் காம்பு சுவைக்கும் கருத்தினரே

(காம்பு – மூங்கில்)

4) வஞ்சித்துறை

குறளடி நான்கு கொண்டு தனித்து வருவது. பல வாய்பாடுகளிலும் இதனை அமைக்கலாம்.

(எ.கா)     கூவிளம் தேமா – வாய்பாடு

நல்லவர் உள்ளம்

வல்லவன் இல்லம்

தொல்லைகள் இல்லா

எல்லையில் இன்பம்

3.3.3 விருத்தம் விருத்தம் ‘மண்டிலம்’ எனவும் படும். இது நால்வகைப்படும்.

1) வெளி விருத்தம்

பெரும்பாலும் நான்கடிகளில் அமையும்; மூன்றடிகளில் வருவதும் உண்டு. அடிதோறும் ஒரே தனிச்சொல்லைப் பெற்று வரும். தனிச்சொல்லைச் சேர்க்காமல் அடிதோறும் நான்கு சீர்கள் அமையும்.

(எ.கா) சொல்லல் சொல்லல் தீயவை சொல்லல் – எஞ்ஞான்றும்;

புல்லல் புல்லல் தீநெறி புல்லல் – எஞ்ஞான்றும்;

கொல்லல் கொல்லல் செய்ந்நன்றி கொல்லல் – எஞ்ஞான்றும்,

நில்லல் நில்லல் நீசரைச் சார்ந்திங் – கெஞ்ஞான்றும்

2) ஆசிரிய விருத்தம்

ஆறுசீர் முதல் பல சீர்களிலும் அமையும் அளவொத்த நான்கடிகளில் அமைவது. ‘கழிநெடிலடிகள் நான்கு கொண்டது’ என்பர். இக்காலப் பயன்பாட்டில் மிகுதியும் உள்ளது இது. மோனை சிறக்குமாறு மடக்கி எழுதப்பெறும்.

அறுசீர் விருத்தம்

விளம் மா தேமா – வாய்பாடு

இதந்தரு மனையின் நீங்கி

இடர்மிகு சிறைப்பட் டாலும்

பதந்திரு இரண்டும் மாறிப்

பழிமிகுந் திடருற் றாலும்

விதந்தரு கோடி இன்னல்

விளைந்தெனை அழித்திட் டாலும்

சுதந்தர தேவி நின்னைத்

தொழுதிடல் மறக்கி லேனே!

மா மா காய் – வாய்பாடு

இல்லாப் பொருளுக் கேங்காமல்

இருக்கும் பொருளும் எண்ணாமல்

எல்லாம் வல்ல எம்பெருமான்

இரங்கி அளக்கும் படிவாங்கி

நல்லார் அறிஞர் நட்பையும்நீ

நாளும் நாளும் நாடுவையேல்

நில்லா உலகில் நிலைத்தசுகம்

நீண்டு வளரும் நிச்சயமே!

காய் காய் காய் காய் மா தேமா – வாய்பாடு

கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதல்

கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய்

மறைக்கப் பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி

இருந்து காட்டிச்

சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத்

தொடக்கை வெல்வாம்

எழுசீர் விருத்தம்

· விளம் மா விளம் மா

விளம் விளம் மா – வாய்பாடு

(எ.கா) அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்தவா ரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையனேன் தனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

செல்வமே சிவபெரு மானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினியே

· புளிமா புளிமா புளிமா புளிமா

புளிமா புளிமா புளிமா – வாய்பாடு

(எ.கா) பனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து

பசியால் அலைந்தும் உலவா

அனியா யவெங்கண் அரவால் இறந்த

அதிபா வமென்கொ லறியேன்

தனியே கிடந்து விடநோய் செறிந்து

தரைமீ துருண்ட மகனே

இனியா ரைநம்பி உயிர்வாழ் வமென்றன்

இறையோ னுமியானு மவமே

எண்சீர் விருத்தம்

காய் காய் மா தேமா – வாய்பாடு

வெள்ளந்தாழ் விரிசடையாய்! விடையாய்! விண்ணோர்

பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்

பள்ளந்தாழ் உறுபுனலின் கீழ்மே லாகப்

பதைத்துருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்(கு)

உள்ளந்தாள் நின்றுச்சி அளவும் நெஞ்சாய்

உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா

வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்

கண்ணிணையும் மரமாம்தீ வினையி னேற்கே

காய் காய் காய் மா – வாய்பாடு

நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்

பொலபொலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வகையறியீர்! கைவிடவும் மாட்டீர்!

கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர்! கிடந்துழல அகப்பட் டீரே!

மா விளம் மா விளம் – வாய்பாடு

வான நாடரும் அறியொ ணாதநீ

மறையின் ஈறுமுன் தொடரொ ணாதநீ

ஏனை நாடரும் தெரியொ ணாதநீ

என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா

ஊனை நாடகம் ஆடு வித்தவா

உருகி நானுனைப் பருக வைத்தவா

ஞான நாடகம் ஆடு வித்தவா

நைய வையகத் துடைய விச்சையே

விளம் விளம் விளம் மா – வாய்பாடு

கூவின பூங்குயில்; கூவின கோழி;

குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;

ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்(து)

ஒருப்படு கின்றது; விருப்பொடு நமக்குத்

தேவ! நல் செறிகழல் தாளிணை காட்டாய்!

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

யாவரும் அறிவரி யாய் ! எமக் கெளியாய்!

எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே

பன்னிருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

விளம் மா விளம் மா

மா காய் – வாய்பாடு

புண்ணிய முதலே! பொங்கொளி மணியே!

பொய்யாப் பெருவாழ்வே!

பொள்ளலில் முத்தே! கள்ளமில் வித்தே!

புரையில் சுவைப்பாகே!

தண்ணிய அமுதே! மண்ணியல் மதியே!

தமிழ்நா வலரேறே!

சத்துவ நிதியே! பொத்திய மலநோய்

சாடு பெரும்பகையே!

எண்ணிய அன்ப ருளத்தமு தூற

இனிக்கு நறுந்தேனே!

என்றும் பத்தி ரசங்கனி கனியே!

எந்நா ளினுமெங்கள்

கண்ணிய பொருளே! ஆய்பவர் தெருளே!

ஆடுக செங்கீரை!

ஆரரு ளாகர! சேவையர் காவல!

ஆடுக செங்கீரை!

இவ்வாறு அறுசீர் விருத்த வாய்பாட்டு அமைப்பு இரு மடங்காகிப் பன்னிரு சீர் விருத்தம் அமையும்.

பதினான்கு சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

மா மா மா மா மா மா விளம் – வாய்பாடு

பேச வந்த தூத! செல்ல

ரித்த ஓலை செல்லுமோ?

பெருவ ரங்கள் அருள ரங்கர்

பின்னை கேள்வர் தாளிலே

பாசம் வைத்த மறவர் பெண்ணை

நேசம் வைத்து முன்னமே

பட்ட மன்னர் பட்ட தெங்கள்

பதிபு குந்து பாரடா!

வாச லுக்கி டும்ப டல்க

வித்து வந்த கவிகை; மா

மகுட கோடி தினைய ளக்க

வைத்த காலும் நாழியும்;

வீசு சாம ரங்கு டில்தொ

டுத்த கற்றை; சுற்றிலும்

வேலி யிட்ட தவர்க ளிட்ட

வில்லும் வாளும் வேலுமே

இவ்வாறே எழுசீர் விருத்த வாய்பாட்டு அமைப்பு இரு மடங்காகிப் பதினான்கு சீர் விருத்தம் அமையும்.

3) கலி விருத்தம்

அளவொத்த அளவடி நான்குடையது கலிவிருத்தமாகும்.

(எ.கா) உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகி லாவிளை யாட்டுடை யாரவர்

தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே

இது சந்தத்தில் அமைவதும் உண்டு.

(எ.கா) வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்

பொய்யோஎனும் இடையாளொடும் இளையானொடும் போனான்

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோஇவன் வடிவென்பதோர் அழியாவழ குடையான்

4) வஞ்சி விருத்தம்

அளவொத்த சிந்தடிகள் நான்கு கொண்டது.

(எ.கா) பொழுது போக்காய் இல்லாமல்

எழுதும் பாக்கள் எல்லாமும்

அழுது வாழ்வோர் நெஞ்சத்தின்

பழுதை நீக்கின் நன்றாமே

இது புளிமா தேமா தேமாங்காய் என்னும் வாய்பாட்டில் அமைந்தது – இவ்வாறு எண்ணற்ற வாய்பாடுகளில் இதனைப் புனையலாம்.

இவ்வாறு பாவின வடிவங்கள் அமைகின்றன.

3.4 பாவியற்றும் உத்திகள்

பொருள்கோள், செய்யுள் விகாரம், நடைநலன், புணர்ச்சி விதி போன்றவற்றை அறிந்து பா இயற்றுதல் வேண்டும்.

3.4.1 பொருள்கோள் சொற்களுக்கு ஆற்றொழுக்காய் எவ்வித மாற்றமுமின்றிப் பொருள் புரியும்படியாய் எழுதுதல், ஓரடிக்குள் உள்ள சொற்களையோ, பல அடிகளில் உள்ள சொற்களையோ வேண்டியவாறு கொண்டு கூட்டிப் பொருள் காணுமாறு எழுதுதல் என எழுதும் முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.

3.4.2 செய்யுள் விகாரங்கள் எதுகை மோனை முதலியன நோக்கியும், தளை தட்டாமைப் பொருட்டும் செய்யுளில் விகாரங்கள் ஏற்படுகின்றன. அவை :

வலித்தல் விகாரம் – மெல்லினம் வல்லினமாதல் (குரங்கு – குரக்கு)

மெலித்தல் விகாரம் – வல்லினம் மெல்லினமாதல் (வெற்றி -  வென்றி)

நீட்டல் விகாரம் – குறில் நெடிலாதல். (நிழல் – நீழல்)

குறுக்கல் விகாரம் – நெடில் குறிலாதல். (தீயேன் – தியேன்)

விரித்தல் விகாரம் – இடையில் ஓர் ஒற்று மிகுதல். (ஏகாரமே – ஏகாரம்மே)

தொகுத்தல் விகாரம் – இடையில் ஓரெழுத்து விடுபடல்.

(தொட்டஅனைத்து – தொட்டனைத்து)

முதற்குறை – தாமரை – மரை

இடைக்குறை – ஓந்தி – ஓதி

கடைக்குறை – நீலம் – நீல்

3.4.3 நடைநலன் கருத்துகளைக் கூறுவது மட்டும் கவிதையாகாது; நயம்படக் கூறுதல் வேண்டும்; ஆங்காங்கு விளியோ பொருள்முடிபோ அமைதல் நன்று; எளிய சொற்களால் யாத்தல் வேண்டும்.

இயற்சொல் மிகுதியாகவும், சூழலுக்கேற்பக் கலைச்சொற்களாகிய திரிசொற்கள் சிறுபான்மையாகவும் கவிதைகளில் சொற்பயன்பாடு அமைதல் வேண்டும். தவிர்க்கவியலாத சூழலில் பிறமொழிச் சொல்லாட்சியும் இடம் பெறலாம்.

மரபுக் கவிதைகளில் பொருள் முடிவு குறிப்பிட்ட சீர்களில் (அ) அடிகளில் அமையும் பொழுது அழகேற்படும். வேண்டியவாறு அடைமொழிகளை அமைத்தலும் மரபுக் கவிதைகளில் தேவையான ஒன்றாகும். எச்சங்கள் அடுக்கி வருதலையும் அறிந்து வைத்துக் கையாளவேண்டும்.

3.4.4 புணர்ச்சி விதிகள் 1) குற்றியலுகரம்

நின்ற சீரின் இறுதியிலுள்ள குற்றுகர எழுத்துடன் வருமொழி உயிர் வந்து புணரும்.

நாடு + என்றான் – நாடென்றான்

பிரித்துக் காட்ட அடைப்புக் குறியிட்டு எழுதலாம். ஆனால் குற்றுகரத்தையும் வருமொழி உயிரையும் புணர்க்காமல் இருத்தல் கூடாது. இது ஓரடிக்குள் மட்டுமன்று; ஓரடியின் இறுதிக்கும் அடுத்த அடியின் முதலுக்கும் இடையில் கூடக் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

2) மகரப்புணர்ச்சி

‘தாம் + கண்ட – தாங்கண்ட’ என வரும். மகரமெய் வருமொழி வல்லினத்திற்கேற்ற மெல்லினமாக மாறும் என்பதை மனங்கொள்ள வேண்டும்.

வருமொழியில் மெல்லினம் வரின் மகரம் கெடும் (மனம் + மொழி = மனமொழி).

3) லகர மெய்

கல்+கோயில் – கற்கோயில் (வல்லினம்வரின்)

கல்+மலை – கன்மலை (மெல்லினம் வரின்)

கல்+தூண்-கற்றூண் (தகரம்வரின்)

(கல்+தீது-கஃறீது)

நல்+நெறி – நன்னெறி (நகரம்வரின்)

பால்+நினைந்து – பானினைந்து (நகரம்வரின்)

4) ளகர மெய்

நாள்+காட்டி-நாட்காட்டி (வல்லினம்வரின்)

அருள்+மொழி-அருண்மொழி (மெல்லினம்வரின்)

முள்+தாள் – முட்டாள் (தகரம்வரின்)

(முள்+தீது-முஃடீது)

முள்+நுனி-முண்ணுனி (நகரம்வரின்)

வாள்+நுதல்-வாணுதல் (நகரம்வரின்)

5) னகர மெய்

பொன்+கோயில்-பொற்கோயில் (வல்லினம்வரின்)

பொன்+நேமி-பொன்னேமி (நகரம்வரின்)

6) ணகர மெய்

மண்+குடம் – மட்குடம் (வல்லினம்வரின்)

கண்+நீர் – கண்ணீர் (நகரம்வரின்)

இவ்வாறான புணர்ச்சி விதிகளைத் தெள்ளிதின் அறிதல் வேண்டும்.

இவ்வாறே ஒற்றுப் பிழையின்மை, ஒருமை பன்மை மயக்கமின்மை (அவன்தான், அவர்தாம்), மரபுச் சொற்கள் ஆகியவற்றை அறிந்திருத்தலும் பாப்புனைவோர்க்குரிய தகுதிகளாகும்.

பாவினைப் படைப்பதற்கு, பாக்களைப் படித்தல், நயத்தல் போன்றன இன்றியமையாதனவாகும்.

3.5 தொகுப்புரை

மரபுக்கவிதையே ‘கவிதை’ எனத் தொன்று தொட்டு மதிக்கப் பெற்றுவருவதாகும். ஓசை ஒழுங்கும், வரையறுக்கப்பட்ட வடிவமும் இதன் இன்றியமையாத இயல்புகளாகும்.

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் அடிப்படை இலக்கணங்கள் மரபுக்கவிதை இயற்றத் தேவையானவையாகும். எனவே அவற்றை அறிந்தோம்.

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா ஆகியவற்றின் இலக்கணங்களும், வகைகளும், பாவினங்களாகிய தாழிசை, துறை, விருத்தங்களும் குறித்த அறிவும் புலமையும் பாப்புனைவோர்க்கு இன்றியமையாதனவாதலின் அவை எடுத்துரைக்கப்பட்டன. பாவகைகள் நெருங்கிய தொடர்புடையவை. பாவினங்கள் பாவுடன் நெருங்கிய தொடர்புடையனவல்ல. பாவினங்களில் வாய்பாட்டமைப்புக்கே முக்கியத்துவம் தரப்பெறும். தளைகள் குறித்த சிந்தனை தேவைப்படாது.

பா இயற்ற விரும்புவோர் பொருள்கோள், செய்யுள் விகாரம், நடை நலன், புணர்ச்சி விதிகள் ஆகியன குறித்தும் அறிந்திருத்தல் வேண்டுமாதலின் அவை ஓரளவு சுட்டிக்காட்டப்பட்டன.

இவ்வகையில் மரபுக்கவிதை வடிவம் என்னும் இப்பாடம், பாக்களை அடையாளம் காணவும், புதியனவற்றை இவ்வடிவங்களில் புனையவும் ஆர்வத்தையும் பயிற்சியையும் அளிப்பதாக அமைகின்றது.

பாடம் - 4

புதுக்கவிதை வடிவம்

4.0 பாட முன்னுரை

படைப்பாளரின் உணர்ச்சியனுபவமும், படிப்பவரின் உணர்ச்சி யனுபவமும் கிட்டத்தட்ட ஒன்றாகுமாறு செய்யவல்லதே கவிதை ஆகும். கவிஞனின் உணர்ச்சி கவிதையில் சொற்களாகவும், சொற்பொருளாகவும், ஒலிநயமாகவும் வடிவம் கொண்டுள்ளது. இவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டு, படிப்பவர் கவிஞனின் அனுபவத்தைத் தாமும் பெறுபவராகிறார். சொற்கள் ஊடகங்கள் ஆகின்றன.

சொற்கள் அனைத்தும் குறியீடுகளே. ஒரு சொல் குறிப்பிட்ட பொருளை மட்டும் உணர்த்தும் என உரைநடைச் சொல் குறித்துக் கூறுவது எளிது. ஆனால் கவிதையில் இடம்பெறும் சொல், கையாளப்படும் சூழலுக்கேற்ப எதிர்பாராத பல பொருள்களையும் தரவல்லதாக அமைகின்றது; உணர்ச்சியை ஊட்டுவதாகின்றது.

கவிஞனின் உணர்ச்சியனுபவத்தைப் பெற ஒலிநயம் துணை செய்வதை உணர்ந்து, தளைகள் என ஓர் அமைப்பினையும் அடிவரையறைகளையும் ஏற்படுத்திய நிலையில் மரபுக்கவிதை தோன்றியது. வெண்பாவில் பிற தளைகள் வரலாகாது முதலான கட்டுப்பாடுகளைக் காணும் நாம், ஆசிரியப்பாவில் உரைநடை போன்ற நடையழகும் சற்றுச் சுதந்திரமும் இருப்பதை உணர்கிறோம். அதிலும், இணைக்குறள் ஆசிரியப்பா இடையிடையே சீர்கள் குறைந்து வரவும் அனுமதிக்கின்றது. அடுத்து வந்த தாழிசை, துறை, விருத்தங்களில் தளை என்னும் கட்டுப்பாடு கடந்து, ஒலியொழுங்கிற்கே முதன்மை தரப்படுவதை அறிகிறோம்.

எதுகை மோனைகளின் பொருட்டு வேண்டாத சொற்களை அடைமொழிகளாக்கியும் அசைநிலை என்ற பெயரில் வெற்றெனத் தொடுத்தும் தவிக்க நேரிடுவதை உணர்ந்தவர்கள், சொற்சுருக்கம் கருதிப் புதுக்கவிதை என்ற ஒன்றைத் தோற்றுவிக்கலாயினர். ஆங்கிலம் போன்ற மொழிகளின் வரவும், அவற்றின் தாக்கத்தால் நேர்ந்த உரைநடை வளர்ச்சியும், அச்சுவாகன வசதி வந்துவிட்டதால், மனப்பாடம் செய்யும் அவசியம் இல்லாமையும் புதுக்கவிதை வளர்ச்சிக்கு ஒருவிதத்தில் காரணமாயின எனலாம். பாரதியாரின் வசனகவிதையே புதுக்கவிதைக்கு வழிகாட்டியாகும்.

புதுக்கவிதை வடிவம் என்னும் இப்பாடத்தில் புதுக்கவிதையின் உருவம், பொருண்மை, உத்தி, நிலைபேறு என்னும் தலைப்புகளில், புதுக்கவிதை குறித்த செய்திகளைச் சான்றுகளோடு காணலாம்.

4.1 புதுக்கவிதை உருவம்

சுவைபுதிது பொருள்புதிது வளம்புதிது

சொற்புதிது சோதி மிக்க நவகவிதை

எனப் பாரதி அறுசீர் விருத்தத்தில் விடுத்த அழைப்புதான், புதுக்கவிதை வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாய் அமைந்தது.

சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை உடையது மரபுக்கவிதை. அக்கட்டுப்பாடுகளை உடைத்தது புதுக்கவிதை.

புதுக்கவிதை

என்பது

சொற்கள் கொண்டாடும்

சுதந்திரதின விழா

எனவும்,

புதுக்கவிதை எனும் போர்வாள்

இலக்கண உறையிலிருந்து

கவனமாகவே

கழற்றப்பட்டிருக்கிறது

எனவும் குறிப்பிடுவார் வைரமுத்து.

எனவே, மரபு இலக்கணம் இல்லாமைதான் புதுக்கவிதைக்கான இலக்கணம் ஆகிறது. புதுக்கவிதை தோன்றியதற்கான நோக்கம் என்னவோ இதுதான்.ஆனால் புதுக்கவிதைக்கு என்று சொற்செட்டு, உருவ அமைப்பு என்ற ஒன்று வேண்டுமல்லவா? புதுக்கவிதையின் உருவம் எவ்வாறு இருக்கிறது என, இதுவரையில் வந்துள்ள கவிதைகளைக் கொண்டு அடையாளம் கண்டுணர வேண்டியுள்ளது.

புதுக்கவிதையின் உருவம் குறித்து, அடிவரையறை, அடியமைப்பு, சொற்சுருக்கம், ஒலிநயம், சொல்லாட்சி, தொடை நயம், யாப்புச் சாயல், நாட்டுப்புறச் சாயல், வசன நடை, உரையாடல் பாங்கு ஆகிய வகைகளில் காணலாம்

4.1.1 அடிவரையறை (வரி எண்ணிக்கை) எத்தனை அடிகளில் புதுக்கவிதை எழுதப்பட வேண்டும் என்றெல்லாம் வரையறை இல்லை. இரண்டடி முதல் எத்தனை அடிகளில் வேண்டுமானாலும் எழுதப் பெறலாம்.

இரவிலே வாங்கினோம்

இன்னும் விடியவே இல்லை       (அரங்கநாதன்)

என்பது சுதந்திரம் குறித்த இரண்டடிக் கவிதை.

பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு

முத்தமிட்டுச் சொன்னது பூமி

ஒன்பதுமுறை எழுந்தவனல்லவா நீ    (தமிழன்பன்)

என்பது மூன்றடியுடையது.

சுதந்திரம் குறித்து அமைந்த,

பழத்தினை

நறுக்க வாங்கிக்

கழுத்தினை

அறுத்துக் கொண்டோம்           (எழிலவன்)

என்னும் கவிதை நான்கடியுடையது.

அமுத சுரபியைத்தான்

நீ தந்து சென்றாய்

இப்போது

எங்கள் கைகளில் இருப்பதோ

பிச்சைப் பாத்திரம்               (மேத்தா)

என்பது காந்தியடிகளிடம், இந்தியாவின் பொருளாதார நிலையைக் குறித்துரைக்கும் ஐந்தடிக் கவிதை.

வாயிலே

அழுக்கென்று

நீரெடுத்துக் கொப்பளித்தேன்;

கொப்பளித்துக்

கொப்பளித்து

வாயும் ஓயாமல்

அழுக்கும் போகாமல்

உற்றுப் பார்த்தேன்;

நீரே அழுக்கு!              (சுப்பிரமணிய ராஜு)

என்பது ஒன்பதடிகளில் அமைந்துள்ளது.

எனவே, கூற விரும்பும் கருத்து முற்றுப்பெறுவதற்குத் தேவையான அடிகளில் அமையக் கூடியது புதுக்கவிதை என்பது புலனாகின்றது. அதேவேளையில் சொற்சுருக்கமும் இன்றியமையாதது.

4.1.2 அடியமைப்பு (வரியமைப்பு) ஒவ்வோரடியிலும் குறிப்பிட்ட சீர்கள் இருக்க வேண்டுமென்று மரபுக்கவிதையில் வரையறை உண்டு. ஆனால் புதுக்கவிதையில் அந்நிலை இல்லை. ஓரடியில் ஒரு சீரும் வரலாம்; இரு சீரும் வரலாம். இங்குச் சீர் என்று கூறாமல் சொல் என்றே சுட்டலாம். ஓரடியில் ஒரு சீர் மட்டுமன்றி, ஓரசையோ ஓரெழுத்தோகூட அமையலாம். பொருள் புலப்பாட்டிற்கான அழுத்தத்தைப் புலப்படுத்த வகையுளி (சொற்பிளப்பு) அமைகின்றது. ‘புதிய / மாணவர் விடுதி’, ‘புதிய மாணவர் / விடுதி’ என இணைத்தும் பிரித்தும் ஒலிப்பதில் பொருள் வேறுபாடு அமைவதை நன்கு உணரலாம். அடுத்தடுத்த அடிகளுக்குரியவை என்பதை / குறியிட்டு உணர்த்துவர்.

1. ஒரு சொல் அடிகள்

ஒவ்வோர் அடியிலும் ஒவ்வொரு சொல்லே இடம்பெறும் கவிதைகளும் உண்டு.

எடுத்துக்காட்டு:

எங்கள்

வீட்டுக்

கட்டில்

குட்டி

போட்டது;

‘தொட்டில்’ (எஸ்.வைத்தியலிங்கம்)

2. ஓரெழுத்து அடிகள்

ஓரடியில் ஓர் எழுத்தே அமைவது. அவ்வாறு அமைவது சுட்டும் பொருளுடன் தொடர்புடைய தோற்றத்தை உணர்த்துதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:

எ      எ     தூ

ன      த்     ங்

க்      த     கா

கு     னை    த

த்

ந     இ

தெ     ட்     ர

ரி       ச    வு

யு      த்     க

ம்      தி     ள்

ங்

ள்

ன்

று

என்னும் அமுதபாரதியின் கவிதை நட்சத்திரச் சிதறல்களை எழுத்துச் சிதறல் (சொற் சிதறல்) மூலம் உணர்த்துவதோடு, நெடுக்குவெட்டுத் தோற்றத்தில் அமைந்த அடிகளின் நீட்சி, இரவின் நீளத்தைப் புலப்படுத்துவதாகவும் அமைகின்றது.

3. புள்ளியிட்ட அடிகள்

பொருள் அழுத்தம் கருதிச் சில சொற்களையோ எழுத்துகளையோ அடுத்துப் புள்ளியிட்டு எழுதுதல் உண்டு.

எடுத்துக்காட்டு: 1

நாங்கள் குருடர்கள்

பகல் . . . . . . . .

எப்படி இருக்கும்

என்னும் கவிதையில் பார்வையற்றோரின் ஆர்வமும் ஏக்கமும் புள்ளியிட்டமைத்த வகையில் ஏற்படும் தொனியால் (உச்சரிப்பு மாற்றம்) உணர்த்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டு : 2

மௌனத்தை மொழிபெயர்த்து

நாலே எழுத்துள்ள

ஒரு மகாகாவியம் தீட்டினேன்

ம. . . ர. . .ண . . . ம்,

எனது வாசகர்கள்

வாசித்து – அல்ல

சுவாசித்தே முடித்தவர்கள்     (சிற்பி)

என்ற கவிதையில் அச்சுறுத்தலையும் அவலத்தையும் உணர்த்தும் வகையில் மரணம் என்னும் சொல் உச்சரிப்பு வேறுபாட்டை உணர்த்தப் பிரித்துச் சுட்டப்பட்டது.

மரபுக்கவிதையில் சீர்களால் அமைவனவே அடிகள் எனப்படும். புதுக்கவிதையில் சொல்லால் அமைவன வரிகள் எனலே பொருந்தும் எனக் கூறுவதும் உண்டு.

4.1.3 சொற்சுருக்கம் சொற்சுருக்கம் உடைமை கருதி, புதுக்கவிதையைத் தளை தட்டிய திருக்குறள் என்பார் வைரமுத்து.

ஒருவரி நீ

ஒருவரி நான்

திருக்குறள் நாம்          (அறிவுமதி)

என்பது தலைவன் தலைவியர் உருவத்தால் பிரிந்தும் உள்ளத்தால் ஒன்றியும் இருப்பதை உணர்த்துகிறது.

அண்ணலே!

இன்றுஉன் ராட்டையில்

சிலந்திதான் நூல் நூற்கிறது

என்னும் கவிதை இராட்டை பயனற்று, மேனாட்டு ஆடைகளே நடைமுறையிலிருப்பதை உணர்த்துகின்றது.

வரங்களே

சாபங்களானால்

இங்கே

தவங்கள் எதற்காக?             (அப்துல் ரகுமான்)

என்பது திட்டங்கள் நாட்டில் நிறைவேற்றப்படாமை குறித்து அமைந்ததாகும்.

4.1.4 ஒலிநயம் மரபுக்கவிதையில் இலக்கியச் சொற்களிடையே ஒலிநயம் பயின்று வரும். புதுக்கவிதையில் பேச்சுவழக்குச் சொற்களிடையே ஒலிநயம் இடம்பெறும்.

ராப்பகலாப் பாட்டெழுதி

ராசகவி ஆனவனே!

தமிழென்னும் கடலுக்குள்

தரைவரைக்கும் போனவனே!

அம்பிகா பதியிழந்து

அமரா வதியுனது

காதுக்குள் அழுதாளே

கவியேதும் பாடலியே!

கதைகதையாப் பாடினையே

மனுஷக் காதலைநீ

மரியாதை செய்யலியே!       (வைரமுத்து)

என்று கம்பரிடம் வினவப்படும் கவிதையில் ஒலிநயம் இடம்பெற்றுள்ளது.

4.1.5 சொல்லாட்சி சிறந்த சொல்லாட்சிகளுக்குப் புதுக்கவிதையில் இன்றியமையா இடம் உண்டு.

வில்லே

வில்லை வளைக்குமா?

வளைத்தது

சீதையின் புருவவில்

இராமனின்

இதய வில்லை வளைத்தது

தன்பக்கம்

அழைத்தது                    (மேத்தா)

என்பதில் வில் என்னும் சொல் சிறப்புறப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வடமொழி, ஆங்கிலம், பேச்சுவழக்குச் சார்ந்த சொற்களுக்கும் புதுக்கவிதையில் இடம் உண்டு.

எடுத்துக்காட்டு: 1 வடசொல்

நாங்கள் அடிமைகள்

அதனால்தான்

எங்கள் சாம்ராஜ்யத்தில்

சூரியன் உதிப்பதுமில்லை

அஸ்தமிப்பது மில்லை

எடுத்துக்காட்டு : 2 ஆங்கிலம்

வேகமாய்

மிக ஆர்வமாய்

பஸ்ஸைப் புணர்ந்த

மண்ணின் பிரசவம்

என்பது சாலைப் புழுதி பற்றியது.

எடுத்துக்காட்டு : 3 பேச்சு வழக்கு

அம்மா

மழைத்தண்ணியை

வாளியில பிடிச்சா

இடியைப் பிடிப்பது எதுலே?

ட்ரம்மிலேயா?

இவ்வாறு சொல்லாட்சிகள் இடம்பெறுகின்றன.

4.1.6 தொடை நயம் எதுகை, மோனை, இயைபு என்னும் தொடை நயங்களெல்லாம் புதுக்கவிதையில் வரவேண்டும் என்றும் விதியில்லை; வரக்கூடாது என்றும் விதியில்லை. எனவே இவை தற்செயலாக அமைவன எனலாம்.

1. எதுகை

பாரதி வேண்டியது

ஜாதிகள் இல்லாத

தேதிகள் . . .

நமக்கோ

ஜாதிகளே இங்கு

நீதிகள்                         (மேத்தா)

2. மோனை

கம்பனின் இல்லறம்

களவில் பிறந்து

கற்பிலே மலர்ந்து

காட்டிலே முளைத்துப்

பிரிவிலும் தழைத்து

நெருப்பிலும் குளித்து

நிமிர்ந்த இல்லறம்             (மேத்தா)

3. இயைபு

வயல்வெளிகள்

காய்கிறது!

வெள்ளம் . . .

மதுக்கடைகளில்

பாய்கிறது!                     (மேத்தா)

இவ்வகையில் தொடை நயங்கள் காணப்பெறுகின்றன.

4.1.7 யாப்புச் சாயலும் நாட்டுப்புறச் சாயலும் அடிவரையறை செய்து எழுதினால் மரபுக்கவிதையே என எண்ணத்தக்க யாப்பமைதி மிக்க பாடல்கள், புதுக்கவிதை வடிவில் எழுதப் பெறுவதுண்டு. திருக்குறளைக் கூட நான்கைந்து வரிகளாக்கிப் புதுக்கவிதை எனலாம்.

காத டைத்துக்

கண்ணி ருண்டு

கால்த ளர்ந்த போதும்

ஆத ரித்துக்

கைகொ டுக்க

ஆட்க ளிலாப் பாதை!

திரும்பிவராப் பாதை – இதில்

உயிர்கள்படும் வாதை!             (புவியரசு)

என்பது காலம் என்னும் கருத்துச் சார்ந்த கவிதை.

நாட்டுப்புறச் சாயல்

அகராதி தேடாத சொல்லாட்சி அமைவதே புதுக்கவிதையின் நோக்கமாகும். பொதுமக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்பதே குறிக்கோளாக அமைதலின், நாட்டுப்புறச் சாயலிலும் புதுக்கவிதைகள் பல உருவாகியுள்ளன.

எடுத்துக்காட்டு:

பூக்களிலே நானுமொரு

பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்

பூவாகப் பிறந்தாலும்

பொன்விரல்கள் தீண்டலையே – நான்

பூமாலை யாகலையே            (மேத்தா)

என்பது முதிர்கன்னி குறித்த கவிதையாகும்.

4.1.8 வசன நடையும் உரையாடல் பாங்கும் உரைநடையையே ஒடித்துப் போட்டால் புதுக்கவிதையாகி விடும் என்பர். ஆனால் அதில் கவிதை வீச்சு இருத்தல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:

கவலை யில்லாமல்

தேதித் தாளைக் கிழிக்கிறாய்

பதிலுக்குன் வாழ்நாளை

ஒவ்வொன்றாய்க்

கழிக்கின்றேன்                   (மேத்தா)

என்பது நாள்காட்டி பேசுவதாய் அமைந்த கவிதை.

உரையாடல் பாங்கு

உரையாடல் பாங்குடைய கவிதைகள் படிப்போரை எளிதில் சென்றடையும் ஆற்றல் உடையவை. ‘விலைமாதர்கள் வள்ளுவரிடம் கேட்ட வினாக்களாக’ப் படைக்கப்பட்ட கவிதை பின்வருமாறு:

எங்களுக்கும்

ஓர் அதிகாரம் ஒதுக்கியதற்கு

நன்றி ஐயா!

பிணம்கொத்திச்

சுகம்பெறும் ஆண்களைக்

காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் . . .

எங்களைக் காப்பாற்ற

எங்களை மீட்க ஏதும் சொன்னீர்களா?

ஐயா

நீங்கள் சொன்னதுபோல்

எல்லாம் விற்கிறோம் – எனினும்

இதயத்தை விற்பதில்லை         (தமிழன்பன்)

என நீள்கிறது கவிதை.

இவ்வாறு புதுக்கவிதையின் உருவம் பல்வேறு வகைகளில் இடம்பெறக் காண்கிறோம். இனிப் புதுக்கவிதையின் உள்ளடக்கம் குறித்துக் காண்போம்.

4.2 புதுக்கவிதைப் பொருண்மை

கவிதைக்குக் குண்டூசி முதல் இமயமலை வரை எப்பொருளும் பாடுபொருளாகலாம். புதுக்கவிதையும் இவ்வாறே எப்பொருளைக் குறித்தும் பாடப்பெறுவதாய் அமைகின்றது.

தன்னம்பிக்கை, பாசம், நட்பு, காதல், இயற்கை, உழைப்பாளி, வறுமை, விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம், பெண்மை, கட்சி, அரசியல், விலைமகளிர், மதநல்லிணக்கம், உயிரிரக்கம் என்னும் பொருண்மைகளில் அமைந்த புதுக்கவிதைகளை இங்குக் காண்போம்.

4.2.1 தன்னம்பிக்கை கவிதை இன்புறுத்துவதாகவும் அறிவுறுத்துவதாகவும் அமைவது இயல்பு. மனம் உடைந்த நிலையில், வாழ்வே வெறுத்துவிட்டதாக விரக்தியடைபவர்களுக்கு ஆறுதல் கூறி, வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படுமாறு செய்தல் மிகவும் தேவையான ஒன்றாகும்.

காயப்படாத மூங்கில்

புல்லாங்குழல் ஆகாது

வலிபடாத வாழ்வில்

வசந்தங்கள் நுழையாது

எனவும்,

துடியாய்த் துடி

சாதிக்க!

படியாய்ப் படி

வாதிக்க!

மரங்குடைய

கோடாலி கொண்டு போவதில்லை

மரங்கொத்தி!

அவனவன் கையில்

ஆயிரம் ஆயுதம்!

எனவும் அமையும் பா.விஜய்யின் கவிதைகள் இத்தன்மையன.

4.2.2 பாசம், நட்பு, காதல் குடும்பத்தில் உள்ளவர்களின் பாசம் ஒருவனின் வாழ்வுக்கும் வெற்றிக்கும் வழிகாட்டியாக அமையும்.

அப்பா அடித்துவிட்டார்

வலிக்கிறதுதான்

என்றாலும்

தடவிக் கொடுக்கும் அம்மா

பாவமாய்ப் பார்க்கும் அக்கா

பயத்தில் அழும் தம்பி

இன்னும்கூட அடிவாங்கலாம் அப்பாவிடம்!     (தபூ சங்கர்)

என்னும் கவிதை ‘கிளைஞரை நீட்டி அளக்கும் கோலாக’ அடி வாங்குவதை அன்போடு அடையாளம் காட்டுகின்றது.

நட்பு

நட்பு, எதிர்பார்ப்பு அற்றது; வயது முதலான எவ்வித வேறுபாடும் அற்றது; துன்பத்தால் துவளும்போது தோள்கொடுத்துத் துணைநிற்பது.

நீ என்னிடம்

பேசியதைவிட

எனக்காகப்

பேசியதில்தான்

உணர்ந்தேன்

நமக்கான

நட்பை                   (அறிவுமதி)

என்னும் கவிதை, உண்மை நட்பின் இலக்கணத்தை உணர்ந்து கொண்டதாக உணர்த்தி நிற்கின்றது.

காதல்

உண்மை அன்பால், எல்லா வேறுபாடுகளையும் மறந்து ஒன்றுகின்ற இரண்டு இதயங்களின் உன்னத உணர்வு காதல்.

சுயநலத்தின்

விரல்பிடித்து வெளியானாலும்

பொதுநலத்தின்

நிழலாய்

தொடருவதே

காதல்                  (இ.இசாக்)

என்பது, காதலின் இயல்பைத் தெள்ளிதின் உரைக்கின்றது.

4.2.3 இயற்கை இயற்கையை உணர்ந்து பாராதவன் மனிதன் அல்லன்; பாடாதவன் கவிஞன் அல்லன். எந்தப் பொருளையும் கண்டு கண்டு அதில் அழகை உணர்ந்து உணர்ந்து உருகிப் பாடுதல் கவிஞர் இயல்பு.

இந்த

நீள

நீலக் கரும்பலகையில்

எழுதும்

இவை

மௌன பாஷையின்

லிபிகளோ?

நிலவு என்னும்

ஒற்றை வாக்கியக் காவியத்தை

எழுதி முடித்த

எக்காளத்தில் . . .

எவனவன்

இத்தனை முற்றுப் புள்ளிகள்

இட்டு வைத்தவன்?                         (வைரமுத்து)

என்பது வானத்து நட்சத்திரங்களைக் குறித்தமைந்த இனிய கவிதையாகும் (லிபி-எழுத்து).

4.2.4 உழைப்பாளி, வறுமை உழைப்பவர் இல்லையேல் உலகமே இல்லை. மீன்காரியைப் பற்றிய கவிதை பின்வருமாறு:

மீனை நாம் உண்கிறோம்

மீனால் இவள் உண்கிறாள்

என்பது போன்ற

நாலாந்தர முரண்களில்

அளக்கக் கூடாது இவளை

தண்ணீரில்

முட்டையிடுகிறது மீன்

கண்ணீரில்

குஞ்சு பொறிக்கிறாள் இவள்     (யுகபாரதி)

வறுமை

ஆடம்பரப் பொருள்களுக்கு ஏங்காமல் உணவு, உடை, உறையுள் என அத்தியாவசியப் பொருள்களுக்கே ஏங்கும் நிலை வறுமையாகும். பலர் எவ்வளவு உழைத்தும் குடிக்கும் கூழுக்கே திண்டாடும் நிலையில் இருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

வறுமையின் தத்துவம்

சமயவாதிகளுக்குப்

பிரசங்கத் தலைப்பு

குருவி ஜோசியக்காரனுக்கு

வயிற்றுப் பிழைப்பு

கலாசிருஷ்டியோடு

எழுதுபவனுக்கு

நிலாச்சோறு

கல்லூரி மாணவனுக்கு – வெறும்

பரீட்சைக் கேள்வி !

என்பது, வறுமையைப் பற்றிப் பலரின் பலவித எண்ணங்களை எடுத்துரைக்கிறது.

4.2.5 விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆண்டுதோறும் பொருள்களின் விலை ஏறிக்கொண்டே செல்வது, வறியவர்களுக்கு ஏக்கத்தையும் அவற்றை அனுபவிக்க முடியாத ஏமாற்றத்தையும் கூட்டிக் கொண்டே செல்வதாக அமைகின்றது.

விற்போரின்

முதலிரவு

வாங்குவோரின்

வயிற்றெரிச்சல்

ஆள்வோரின்

அனாதைகள்

எதிர்த்தரப்பின்

ஏக வாரிசுகள் !

என்னும் கவிதை விலைவாசி குறித்த பலரின் கண்ணோட்டங்களைக் காட்டுகின்றது.

வேலையில்லாத் திண்டாட்டம்

பட்டப் படிப்பு என்பது, சட்டை அழுக்காகாமல் நாற்காலியில் அமர்வதற்கு என்றே பலரும் நினைக்கின்றனர். கிடைக்கும் வேலைகளைத் தங்கள் கல்வித் தகுதிக்குக் கீழானவை எனப் புறக்கணிக்கின்றனர். படித்துமுடித்த அனைவருக்கும் அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்பப் பணியும் ஊதியமும் உண்டாக்கித் தரும் நிலையில் நாடு இல்லை. எனவே, வேலையில்லாத் திண்டாட்டம் என்பது முற்றுப் புள்ளியை எட்டாததாகவே உள்ளது.

ஆனாலும்

வள்ளுவர் அறிவாளிதான்

கற்றதனால் ஆயபயன்

வேலை கிடைக்காது. . .

வாலறிவனை

வாழ்நாள் எல்லாம்

தொழு என்றார்              (தமிழன்பன்)

எனவே கவிதை, கடவுள் வாழ்த்து அதிகாரத் திருக்குறளின் சொல்லாட்சியைத் தன்போக்கிற்குத் திரித்துக் கொண்டு நிலைபெறுகின்றது.

4.2.6 பெண்மை பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் எவ்விதச் சுதந்திரமும் இன்றி அடிமைத் தளத்தில் அல்லலுறுகின்றனர். வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் முதிர்கன்னிகளாகவே வாழும் நிலை உள்ளது.

திருமணம் என்பது

சொர்க்கத்தில் இல்லை

ரொக்கத்தில், பவுனில் !

என்பது இவ்வுண்மையை உணர்த்தும் கவிதையாகும்.

கல்வியறிவு பெற்று, வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலையும் அங்குள்ள ஆண்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளப் பாடாய்ப்படுவதாகவே உள்ளது. சான்று:

சில ஆண்களின்

ஆரோக்கியமில்லாத பார்வைகள்

கம்பளிப் பூச்சியாய்

உள்முதுகில் ஊரும்

சிலர்

கோப்புகளை வாங்கும்போது

அவர்களின்

விரல்களையும் விசாரிப்பார்கள்

இத்தனை சூறாவளிக்கு

மத்தியில்தான்

அந்தக் குத்துவிளக்குகள்

வெளியில் எரிந்துவிட்டு

வீடு வருகின்றன

அவர்களின் கதவுகளைத்

திறந்து விட்டோம்

தெருவுக்குள் வந்தார்கள்

தீ !                                 (வைரமுத்து)

4.2.7 கட்சியும் அரசியல்வாதியும் ஆட்சியில் அமர்ந்து பொதுத்தொண்டில் ஈடுபட விழைவோர் தமக்கெனக் குறிக்கோள், சின்னம் ஆகியன ஏற்படுத்திக்கொண்டு கட்சியைத் தோற்றுவிப்பர். பிற்காலத்தில் தன்னல நோக்கத்தோடும் கட்சிகள் பல தோன்றத் தொடங்கிவிட்டன.

கொடிமரங்களைப்

போலவே

கட்சிகளுக்கும்

இங்கே

இலட்சியவேர் இல்லை         (தமிழன்பன்)

என்பது கொள்கையற்ற கட்சி, வேரற்ற மரத்தையொத்தது எனப் புலப்படுத்துகின்றது. வேரில்லாமை கொடிமரத்திற்குத் தகும்; கட்சிக்குத் தகாதல்லவா?

அரசியல்வாதி

பொதுநல உணர்வும், அறிவும், ஒழுக்கமும், நிர்வாகத் திறனும் உடையவர்கள் கட்சி தொடங்கி அரசியல்வாதியாகிப் பதவியேற்று நாடாளுதல் போற்றத்தக்கதாக அமையும். இத்தகைய தகுதியின்றி யாவரையும் அச்சுறுத்தும் வல்லமையும் நயவஞ்சகமும் கொண்டோர். அரசியல்வாதியாகி விட்டால் நாட்டில் விபரீதம்தான் ஏற்படும்.

எங்கள் ஊர் எம்.எல்.ஏ

ஏழு மாதத்தில்

எட்டுத் தடவை

கட்சி மாறினார்

மின்னல் வேகம்

என்ன வேகம்?

என்னும் கவிதை, தன்னலம்கருதி அடிக்கடி பல கட்சிகளுக்கு மாறும் அரசியல்வாதியைத் தோலுரித்துக் காட்டுகிறது.

தேர்தல்கால வாக்குறுதிகள், அவர்கள் வெற்றி பெற்ற பிறகு பெரும்பாலும் கண்துடைப்பாக அமைந்து விடுவதை,

இல்லாத ஊருக்குப்

போகாத வழியை

அறியாத மக்களிடம்

புரியாதபடி

சொல்லி வைக்கும்

சத்திய வாக்கு              (மு.வை.அரவிந்தன்)

என்னும் கவிதை புலப்படுத்துகிறது.

4.2.8 விலைமகளிர் யாரோ ஒரு சிலரைத் தவிரப் பெரும்பாலான விலைமகளிர், வறுமையும் சந்தர்ப்ப சூழலும் காரணமாக இந்நிலைக்கு ஆளானவர்கள் ஆவர். சமுதாயத்திற்கு இவ்வகை ஒழுக்கம், கேடு பயப்பதேயாகும். தொன்றுதொட்டு வரும் புரையோடிய புண்ணாகவே இஃது உள்ளது.

நாங்கள் பொம்மைகள்

தொங்கவும் விடலாம்

தூக்கியும் நிறுத்தலாம்

எந்த இராத்திரியும்

எங்கட்கு நவராத்திரியே

நாங்கள் பொம்மைகள்

என்னும் கவிதை, தங்களின் கழிவிரக்க நிலையைத் தாங்களே எடுத்துச் சொல்வதாக அமைகின்றது.

4.2.9 மத நல்லிணக்கமும் உயிரிரக்கமும் மனிதன் தோன்றிய காலத்திலேயே மதமும் தோன்றிவிட்டது. இனக் குழுத் தலைவர்கள் தங்கள் அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப மதங்களை வகுத்தனர். யாவரும் சேர்ந்து வாழும் சூழல் ஏற்பட்டபோது எது சிறந்த மதம் என மனிதர்கள் மோதிக் கொள்கின்றனர். அங்கே அன்பு மறைந்து, போலிக் கவுரவம் தலைதூக்கி, உலகப் பொருள்கள் தாக்கப்படுகின்றன.

எனக்காக நீங்கள்

உங்களைப் பலியிடவில்லை

உங்களுக்காக

என்னைப் பலியிடுகிறீர்கள். . .!

என்னைப்

பாதுகாப்பதாய்

எண்ணி

என் படைப்புகளை

அழித்துவிடாதீர்!               (மேத்தா)

என்னும் கவிதை, கடவுளே வந்து அறிவுறுத்துவதாய் அமைந்துள்ளது.

உயிரிரக்கம்

எவ்வுயிர்க்கும் இவ்வுலகப் பொருள்களை நுகர்ந்து வாழ உரிமையுண்டு. வல்லமை படைத்த மனிதன் பிற மனிதர்க்கோ உயிர்களுக்கோ தீங்கு செய்தல் கூடாது அவ்வுயிர்களைக் கொல்லுதலும் கூடாது. தன்னால் இயன்ற உதவிகளைப் புரிவதே தக்கது ஆகும்.

பசுவுக்கு

உண்ணி பிடுங்கிக் கொண்டிருக்கும்

அப்பாவும்

ஆட்டுக்குட்டியை

மடியில் போட்டு

ஈத்திக் கொண்டிருக்கும்

அம்மாவும்

படித்ததில்லை

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்

என்பது தயை-பிறவிக்குணம் என்பதை உணர்த்துகின்றது.

புதுக்கவிதை எவற்றையும் பாடவல்லது திட்பமாகவும் நுட்பமாகவும் சொல்லித் திருத்தவல்லது என்பதை இவற்றால் அறிகிறோம்.

இனி, உத்திமுறைகள் குறித்துக் காண்போம்.

4.3 புதுக்கவிதை உத்திகள்

உணர்த்தும் முறையை ‘உத்தி’ என்று குறிப்பிடுவார்கள். கருத்தைப் புலப்படுத்த மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது ஓர் உத்திமுறை. மொழியில் இலக்கியத்தைத் தேர்ந்து கொண்டதும் உத்திமுறையே. இலக்கியத்துள் கவிதையைத் தேர்வு செய்ததும் உத்திமுறையே. அக்கவிதையுள்ளும் புதுக்கவிதையை எடுத்துக் கொண்டமையும் ஓர் உத்திமுறையேயாகும். அதனுள்ளும் கருத்துகளைப் படிப்போர் நெஞ்சில் விரைவாகவும் ஆழமாகவும் பதியுமாறு எடுத்துரைக்கும் பல்வேறு உத்திமுறைகள் அமைகின்றன. மரபுக்கவிதைக்கான உத்தி முறைகளைத் தண்டியலங்காரம் போன்ற அணியிலக்கண நூல்களின் வழி அறிந்து கொள்கிறோம். புதுக்கவிதைக்கு அவ்வாறான தனி நூல்கள் இல்லாவிடினும் பல்வேறு திறனாய்வு நூல்களின் வழி நம்மால் ஒருசில உத்திமுறைகளை உணர்ந்து படிக்கவும், படைக்கவும் முடிகின்றது.

உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை, இருண்மை ஆகிய உத்திமுறைகள் புதுக்கவிதைகளில் பயன்படுத்தப் பெறுவதை இங்குக் காண்போம்.

4.3.1 உவமை வினை (செயல்), பயன், வடிவம், நிறம் என்னும் அடிப்படைகளில் தெரிந்த பொருளைக் கொண்டு தெரியாத பொருளைக் குறித்து உணர்த்துவது உவமை ஆகும். உணர்த்தும் முறைகளில் முதலிடம் பெறுவது உவமையே ஆகும்.

ஒட்டுப் போடாத

ஆகாயம் போல – இந்த

உலகமும் ஒன்றேதான்                       (தமிழன்பன்)

என்பதில் பின்னமற்ற (பிளவுபடாத) தன்மை பொதுத்தன்மையாகிறது.

வாலிபன். . .

பிணம் விழுவதை

எதிர்பார்க்கும் கழுகாக

மணமேடையில்

உன்னை எதிர்பார்க்கிறான் . . .

அவன்மீது மட்டுமே

ஆத்திரப்படாதே                     (தமிழன்பன்)

என்னும் கவிதையில் வரதட்சணை வாங்கும் மணமகனுக்குப் பிணம் தின்னும் கழுகு செயலடிப்படையில் உவமையாகின்றது.

கோவலன் வருகைநோக்கிய கண்ணகியின் நிலை குறித்து,

வாங்க முடியாத

பொருள்கள் பற்றி நாம்

வர்த்தக ஒலிபரப்பில்

கேட்டுக் கொள்வதுபோல்

வருவான் கோவலன் என்று

தோழி சொன்னதையெல்லாம்

கேட்டுக் கொண்டிருந்தாள் . . . கண்ணகி      (தமிழன்பன்)

என இடம் பெறும் கவிதையில் வினையுவமை அமைகின்றது.

4.3.2 உருவகம் உவமையும் பொருளும் வேறுவேறல்ல; ஒன்றே எனக் கருதுமாறு செறிவுற அமைவது உருவகமாகும். புல் குறித்து அமைந்த கவிதையொன்று பின்வருமாறு:

பச்சை நிறத்தின் விளம்பரமே!

குசேலரின் உணவுக் களஞ்சியமே!

குதித்தோடும் கடல்நீரைக் காதலிக்காமலே

உப்புருசி பெற்றுவிட்ட

ஓவியப் புல்லே

(நா.காமராசன்)

4.3.3 படிமம் உவமை, உருவகம் என்பன மேன்மேலும் இறுகிய நிலையில்தான் படிமம் தோன்றுகிறது. முற்றுருவகப் பாங்கில் அமைந்து தெளிவானதோர் அகக் காட்சியை வழங்கும் ஆற்றலுடையதே படிமம் ஆகின்றது.

கை ஓய இருளை விடியும்வரை

கடைந்த இரவு

ஒரு துளி வெண்ணெயாய் உயரத்தில்

அதை வைத்துவிட்டு நகர்ந்தது

(தமிழன்பன்)

என்பதில் விடிவெள்ளி குறித்த படிமம் காணப்படுகின்றது.

நட்சத்திரங்களைக் குறித்தமைந்த படிமமாக,

இரவும் பகலும்

எதிரெதிர் மோதிட

உடைந்த பகலின்

துண்டுகள்

(தமிழன்பன்)

என்பது அமைகின்றது.

4.3.4 குறியீடு சொல் என்பதே குறிப்பிட்ட பொருளை உணர்த்தும் குறியீடாகும். சில சொற்கள் மற்றொன்றிற்காக நிற்பதும், மற்றொன்றின் பிரதிநிதியாகச் செயல்படுவதும், மற்றொன்றைச் சுட்டிக் காட்டுவதும் ஆகிய நிலைகளில் அமைவதுண்டு. தன்னோடு நெருக்கமான தொடர்புடைய பொருளைக் குறித்த உணர்வினைக் குறியீடு தோற்றுவிக்கின்றது.

குறியீட்டை இயற்கைக் குறியீடு, தொன்மக் குறியீடு, வரலாற்றுக் குறியீடு, இலக்கியக் குறியீடு என வகைப்படுத்தலாம்.

இயற்கைக் குறியீடு

வறுமையில் வாடும் மக்களைக் குறித்து அமைந்த,

இலையுதிர்காலம் இல்லாமலேயே

உதிருகின்ற உயர்திணை மரங்கள்

(தமிழன்பன்)

என்னும் கவிதை இதற்குச் சான்றாகும். மரங்களாவது பருவ காலச் சூழலுக்கேற்பத்தான் இலைஉதிர்க்கும். ஆனால் பட்டினிச்சாவில் பலியாவோருக்குப் பருவம் ஏது?

தொன்மக் குறியீடு

தொன்மம் என்பது பழமையைக் குறிக்கும். புராண இதிகாச நிகழ்வுகளை ஏற்றும், மாற்றியும் புதுக்கியும் கவிஞன் தன் கருத்தைப் புலப்படுத்தும் முறை இது.

சமத்துவம் குறித்த சிந்தனையை மாபலிச்சக்கரவர்த்தியிடம் மூவடி மண்கேட்டு அளந்த வாமன அவதாரக் கருத்தை அமைத்து உரைக்கின்றார் கவிஞர்.

ஓர் அடியை

முதலாளித்துவ

முடிமேல் வைத்து

ஓர் அடியை

நிலப்பிரபுத்துவ

நெஞ்சில் ஊன்றி

ஓர் அடியை

அதிகார வர்க்கத்தின்

முகத்தில் இட்டு

மூவடியால்

முறைமை செய்ய

எழுகிறது                              (தமிழன்பன்)

வாமனன் முதலடியால் மண்ணையும், இரண்டாம் அடியால் விண்ணையும், அளந்து மூன்றாம் அடியை மாபலி தலைமேல் வைத்தான் என்பது புராணம்.

4.3.5 அங்கதம் அங்கதம் என்பது ஒருவகைக் கேலியாகும். இது தீங்கையும் அறிவின்மையையும் கண்டனம் செய்வதாக அமையும்; சமகால நடப்பில், நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாக இருக்கக்கூடியதாகும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது இது.

தனி மனித அங்கதம், சமுதாய அங்கதம், அரசியல் அங்கதம் என இதனை வகைப்படுத்தலாம்.

தனிமனித அங்கதம்

மனிதன், கிடைத்த பொருளை அனுபவிக்கத் தெரியாதவனாக உள்ளான். தாமரையருகில் வாழும் தவளையாகத் தேனுண்ணத் தெரியாமல் வாழ்கிறான். அறிவியல் வசதிகள் வாய்க்கப் பெற்றும், அதனைச் சிறப்புறப் பயன்கொள்ளத் தெரியாமல் பாழாக்குகின்றான்.

கதவுகளையெல்லாம்

திறந்து வைத்திருக்கிறார்கள்

கண்களை மட்டும்

மூடிவிட்டு

(மேத்தா)

என்னும் வரிகளில் இவ்வுண்மை உணர்த்தப்படுகிறது. இம்முட்டாள்தனத்தை மெல்ல மெல்லத் திருத்திக் கொள்ள மாட்டார்களா இக்கவிதையைக் கண்ட பின்பு?

சமுதாய அங்கதம்

தனிநபர் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை,

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்

தலையை எங்கே வைப்பதாம் என்று

எவனோ ஒருவன் சொன்னான்

களவு போகாமல் கையருகே வை !

(ஞானக்கூத்தன்)

என்னும் கவிதை நாசூக்காக உணர்த்துகிறது.

சமுதாயத்தில் நீதியை நிலைநிறுத்த வேண்டிய நீதிமன்றத்தினர், அவற்றில் வழுவுகின்ற நிலையைக் கருத்தில் கொண்டு,

வழக்கறிஞர்களுக்குள்

கடுமையான

வாதம்-

இறந்து போய்விட்ட

நீதியின் பிணத்தை

எரிப்பதா. . .

புதைப்பதா . . .

என்று !                                       (மேத்தா)

என்னும் கவிதை உணர்த்துகின்றது.

அரசியல் அங்கதம்

அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மக்களை மூளைச் சலவை செய்யப் பலவிதமாக முழக்கமிடுவார்கள்.

ஏழைகளே

எங்கள் கட்சி

உங்களுக்காகவே !

நீங்கள்

ஏமாற்றி விடாதீர்கள்

இப்படியே இருங்கள் !

(தமிழன்பன்)

என்னும் கவிதை மக்களை முட்டாளாக்கவே முனையும் அரசியல்வாதிகளின் சாணக்கியத்தனத்தைப் பறைசாற்றுகின்றது.

தேர்தல் காலங்களில் ‘வாக்குச் சீட்டுப் பெட்டிகள்’ வழிப்பறி செய்யப்படுவது கண்டு வருந்தும் கவிஞர் பின்வருமாறு அங்கதம் பாடுகிறார்.

மற்றவர்

குனியும்போது

ஆகாயத்தையும். . .

நிமிரும்போது

நிலத்தையும். . .

சுருட்டிக்கொள்ள

வல்லமை படைத்த

அரசியல்வாதிகள். . .

இந்த

வாக்குச் சீட்டுக்களை

வழிப்பறி செய்வது . . .

கடினமானதல்ல. . .

இவ்வகைகளில் அங்கதக் கவிதைகள் விரியும்.

4.3.6 முரண் ஒன்றுக்கு ஒன்று எதிரானவைகளைக் கொண்டு அமைப்பது முரண் என்னும் உத்தியாகும். மரபுக் கவிதைகளில் முரண்தொடை எனக் கூறப்படும். மாறுபட்ட இரு பொருள்களை அடுத்தடுத்து இணைத்துப் பார்ப்பதில் சுவை கூடும்; நினைவிலும் நிற்கும்.

சொல் முரண், பொருள் முரண், நிகழ்ச்சி முரண் என இதனை வகைப்படுத்தலாம்.

சொல் முரண்

சொல் அளவில் முரண்படத் தொடுப்பது இது,

நாங்கள்

சேற்றில்

கால் வைக்காவிட்டால்

நீங்கள்

சோற்றில்

கைவைக்கமுடியாது !

என்பதில் கால், கை என்பன முரண்பட அமைந்தன.

இறப்பதற்கே

பிறந்ததாய் எண்ணிப் பழகியதால்

நமது

மூச்சில்கூட நாம் வாழ்வதில்லை

மரணம் வாழ்கிறது !

(தமிழன்பன்)

என்னும் கவிதையில் இறப்பு x பிறப்பு, மரணம் x வாழ்க்கை என முரண் சொற்கள் அமைந்துள்ளன.

பொருள் முரண்

பொருளில் முரண் அமையத் தொடுப்பது இது.

மதங்களின் வேர்கள் தந்தது

ஆப்பிள் விதைகள்தான்

ஆனால் அதன்

கிளைகளில்தான் கனிகிறது

நஞ்சுப் பழங்கள்

(பா. விஜய்)

என்னும் கவிதையில் நன்மையும் தீமையுமாகிய பொருள் முரணைக் காண முடிகின்றது.

கரியைப்

பூமி

வைரமாக மாற்றுகிறது – எமது

கல்வி நிலையங்களோ

வைரங்களைக்

கரிகளாக்கித் தருகின்றன

(தமிழன்பன்)

என வரும் கவிதையில் தரமற்றதைத் தரமுள்ளதாக்குவதும், தரமுள்ளதைத் தரமற்றதாக்குவதாகும் ஆகிய பொருள் முரண் காணப்படுகின்றது.

நிகழ்ச்சி முரண்

இரு முரண்பட்ட நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து அமைத்துக்காட்டுவது இது.

கிடைத்தபோது

உண்கிறான்

ஏழை

நினைத்தபோது

உண்கிறான்

பணக்காரன்

(மு.வை.அரவிந்தன்)

என்பதில் சாத்தியமாதலும் சாத்தியம் ஆகாமையுமாகிய முரண்களைக் காணமுடிகின்றது.

வாழ்க்கை இதுதான்

செத்துக்கொண்டிருக்கும் தாயருகில்

சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை

(அறிவுமதி)

4.3.7 சிலேடை சிலேடை என்பது ஒரு சொல் இருபொருள்பட வருவதாகும். பொதுவாக, புதுக்கவிதை சொல்லலங்காரத்தை விரும்புவதில்லை. எனவே, ஒரு சில கவிதைகளில்தான் சிலேடை உத்தியைக் காணமுடிகின்றது.

காமத்துப்பால்

கடைப்பால் என்றாலே

கலப்புப்பால் தான் !

(அப்துல் ரகுமான்)

என்னும் கவிதையில், கடை என்பது, விற்பனை நிலையம், கடைசி என்னும் பொருள்களையும், கலப்பு என்பது பாலும் நீரும் கலப்பு, ஆண் பெண் கலப்பு என்னும் பொருள்களையும் தந்து சிலேடையாகத் திகழ்வதைக் காணலாம்.

4.3.8 இருண்மை சொல்லுக்கும் அஃது உணர்த்தும் பொருளுக்கும் இடையிலான தொடர்பு பலவற்றில் புரியும்; சிலவற்றில் புரியாது. அதற்குக் காரணமும் நமக்குத் தெரியாது. புதுக்கவிதையாளர் சிலர் இதனையே ஓர் உத்தியாக எடுத்துக் கொண்டனர். கவிதை உள்ளது, அதற்குப் பொருளும் உள்ளது, படிப்பவர்தம் அறிவுக்கும் உணர்வுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப அது வெவ்வேறு பொருளைத் தரும் என்பது அவர்களின் கருத்து. இன்னும் சொல்லப்போனால், குறிப்பிட்ட ஒரே ஒரு பொருளை மட்டும் தருவது கவிதையாகாது என்பது அத்தகையோர் வாதம் எனலாம்.

இருண்மை உத்தி மேனாட்டு இலக்கியத் தாக்கத்தால் ஏற்பட்டதாகும்.

எடுத்துக்காட்டு :

தேசிய இறைச்சிகளான நம்

பரிமாற்றம்

ஆரம்பிக்காமல் முடிந்துவிட்டது.

(தேவதச்சன்)

நான் ஒரு உடும்பு

ஒரு கொக்கு

ஒரு ஒன்றுமேயில்லை

(நகுலன்)

எதிரே

தலைமயிர் விரித்து

நிலவொளி தரித்து

கொலுவீற்றிருந்தாள்

உன் நிழல்

(பிரமிள்)

இவை போன்ற கவிதைகள், பார்ப்பவர் எண்ணத்திற்கேற்ப, மேகங்கள் பல்வேறு பொருள்களாய்ப் புரிந்து கொள்ளப்படுவது போலப் படிப்பவர் கருத்திற்கேற்பப் புரிந்து கொள்ளப்படுபவையாகும்.

இவ்வாறு, பல்வேறு உத்திமுறைகள், புதுக்கவிதைக்குப் பெருமை சேர்ப்பனவாக அமைந்துள்ளன.

4.4 புதுக்கவிதை நிலைபேறு

புதுக்கவிதையின் உருவம், உள்ளடக்கம், உணர்த்தும் முறை ஆகியன குறித்துத் தெரிந்து கொண்ட நாம், புதுக்கவிதை தமிழில் தோன்றி வளர்ந்து நிலைபெற்றமை குறித்து அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

அவ்வகையில், புதுக்கவிதைத் தோற்றம், புதுக்கவிதை இதழ்கள், புதுக்கவிதை நூல்கள், புதுக்கவிதையின் இன்றைய நிலை என்பனவாக வகைப்படுத்திக் காண்போம்.

4.4.1 புதுக்கவிதைத் தோற்றம் அச்சு நூல்கள் பெருகியதால், மனப்பாடம் செய்வதன் தேவை குறைந்தது. மேனாட்டு இலக்கியத் தொடர்பால் தமிழில் உரைநடை வளர்ந்தது. கதை இலக்கியம், புதினம், சிறுகதை எனப் புதுவடிவம் கொள்ள, கவிதையும் உரைநடைத் தாக்கம் பெற்றுப் புதுக்கவிதையாகத் தோன்றியது.

தொடக்க காலத்தில் உரைப்பா, விடுநிலைப்பா, பேச்சு நிலைப்பா, உரைவீச்சு, சொற்கோலம், கட்டற்ற கவிதை, சுயேச்சைக் கவிதை (Free verse), வசன கவிதை எனப் பல பெயர்களால் வழங்கப்பெற்றது. பிறகு, ஆங்கிலத்தில் New Poetry, Modern Poetry எனக் கூறப்பட்டவைக்கு இணையாகப் புதுக்கவிதை எனப் பெயர் பெற்றது (

oney Moon – தேனிலவு ஆனாற்போல).

பாரதியார் தம் கவிதைகளை நவகவிதை எனக் குறிக்கின்றார். வசன கவிதைகளாகப் பலவற்றை ஆக்கியளித்துப் புதுக்கவிதைக்கு முன்னோடியானார்.

அடுத்து வந்த ந.பிச்சமூர்த்தி மரபுக்கவிதை சார்ந்தும், கு.ப.இராசகோபாலன் கிராமிய நடை சார்ந்தும், புதுமைப்பித்தன் தனிப் பாடல்களின் நடைசார்ந்தும் புதுக்கவிதைகளை அளித்தனர்.

4.4.2 புதுக்கவிதை இதழ்கள் சூறாவளி, கலாமோகினி, கிராம ஊழியன், மணிக்கொடி, சிவாஜி, சரஸ்வதி, எழுத்து, இலக்கிய வட்டம், கசடதபற, ழ, கணையாழி, ஞானரதம், தீபம், வானம்பாடி போன்ற இதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டுத் தமிழுக்குப் பெருமை சேர்த்தன; தாமும் பெருமை பெற்றன.

4.4.3 புதுக்கவிதை நூல்கள் ஆசிரியர்                                                                                                  நூல்

1. அப்துல்ரகுமான்                                                                                     – வெள்ளை இருட்டு

2. இன்குலாப்                                                                                             – சுயம்வரம்

3. கலாப்ரியா                                                                                              – கீழைக்காற்று

4. கனல்                                                                                                      – கறுப்பு மலர்கள்

5. நா.காமராசன்                                                                                          – சர்ப்ப யாகம்

6. சிற்பி                                                                                                       – மாற்று இதயம்

7. சி.சு.செல்லப்பா                                                                                         – அன்று வேறு கிழமை

8. ஞானக்கூத்தன்                                                                                           – தோணி வருகிறது, விடியல்                                                                                                                                   விழுதுகள்

9. தமிழன்பன்                                                                                          – நட்சத்திரப் பூக்கள், மண்ணின்                                                                                                                                  மாண்பு

10. தமிழ்நாடன்                                                                                              – மூன்று

11. நகுலன்                                                                                                      – நடுநிசி நாய்கள்

12. பசுவய்யா                                                                                                    – சனங்களின் கதை

13. பழமலய்                                                                                                      – காட்டுவாத்து, வழித்துணை

14. ந.பிச்சமூர்த்தி                                                                                               – இதுதான்

15. புவியரசு                                                                                                       – வரும்போகும், ஒளிச்சேர்க்கை

16. சி.மணி                                                                                                          – ஊசிகள்

17. மீரா                                                                                                              – ஊர்வலம், கண்ணீர்ப் பூக்கள்

18. மேத்தா                                                                                                      – அமர வேதனை

19. வல்லிக்கண்ணன்                                                                                            – திருத்தி எழுதிய தீர்ப்புகள்

20. வைரமுத்து                                                                                                       – பால்வீதி

இவை ஒரு சில சான்றுகளாகும். பாலா, வல்லிக்கண்ணன், ந.சுப்புரெட்டியார் போன்றோர் தம் திறனாய்வு நூல்களும் புதுக்கவிதை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.

4.4.4 புதுக்கவிதையின் இன்றைய நிலை அறிவுமதியின் நட்புக்காலம், இ.இசாக்கின் காதலாகி, வைரமுத்துவின் கொடிமரத்தின் வேர்கள் முதலான நூல்கள் என இன்றும் தொடர்ந்து புதுக்கவிதை நூல்கள் வெளிவந்தவாறே உள்ளன.

தினத்தந்தி, தினமலர் போன்ற நாளிதழ்களின் வார இணைப்புகளிலும், பாக்யா போன்ற வார இதழ்களிலும் புதுக்கவிதைகள் பெரிதும் இடம் பெற்று வருகின்றன.

அணி, நறுமுகை, குளம், தை எனப் பல்வேறு இதழ்கள் புதுக்கவிதைக்கென்றே தோன்றிச் சிறப்புற வளர்ந்து வருகின்றன.

கல்லூரிகளின் ஆண்டு மலர்களிலெல்லாம் புதுக்கவிதையே பெரிதும் இடம் வகிக்கின்றது.

தஞ்சை பாரத் அறிவியல் நிர்வாகக் கல்லூரி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி போன்ற நிறுவனங்கள் தேசிய அளவில் கருத்தரங்கம் நடத்திப் புதுக்கவிதை ஆய்வுக் கோவைகளை வெளியிட்டு வருகின்றன.

4.5 தொகுப்புரை

புதுக்கவிதை வடிவம் என்னும் இப்பாடத்தில் உருவம், பொருண்மை, உத்திகள், நிலைபேறு ஆகிய தலைப்புகளில் உரிய செய்திகள் வகை தொகைப்படுத்தப்பட்டன.

அடிவரையறை, அடியமைப்பு என்பனவற்றில் வரையறை ஏதும் இல்லை. சொற்சுருக்கம் மிக அவசியம், தொடை நயங்கள் இயல்பாக அமையலாம்; வடசொல், ஆங்கிலம், பேச்சு வழக்குச் சொல் ஆகியன இடம் பெறுவதுண்டு. அவற்றை வலிந்து புகுத்துதல் தகாது; யாப்புச் சாயல், நாட்டுப்புறப் பாடல் சாயல், வசனநடை, உரையாடல் பாங்கு என்பனவும் புதுக்கவிதை உருவ அமைப்பில் உண்டு என உருவம் பற்றிய பகுதியில் அறிந்தோம்.

பொருண்மை குறித்த பகுதியில் தனிமனிதன், சமுதாயம், வறுமை, அரசியல், இயற்கை, மத நல்லிணக்கம், உயிரிரக்கம், மனிதநேயம் எனப் பல்வேறு விதமான பொருள்களில் புதுக்கவிதைகள் இயற்றப்படுவதனைக் கண்டோம்.

உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம் எனப் பல்வேறு உத்திமுறைகளில் புதுக்கவிதைகள் இயற்றப்படுகின்றன. முரண், சிலேடை என மரபுக்கவிதைகளில் உள்ளவை போன்றே சில உத்திகள் அமைவதும் உண்டு. பொருளே புரியாத இருண்மை நிலையும் இதில் இடம்பெறுவதுண்டு.

பாரதியாரின் வசன கவிதையும், அதையொட்டிப் பல்வேறு கவிஞர்கள் பல்வேறு நடைகளில் புதுக்கவிதை புனைந்தமையும், இதழ்கள் புதுக்கவிதையை வளர்த்தமையும், பிறகு படைக்கப்பட்ட புதுக்கவிதை நூல்களும், இன்றைய நிலையில் இதழ்களும், நிறுவனங்களும் புதுக்கவிதையை வளர்த்து வரும் தன்மையும் நிலைபேறு என்னும் தலைப்பின்வழி அறிந்து கொண்டோம்.

இவற்றின்வழிப் புதுக்கவிதைகளைப் படைக்க முயன்றால், வெற்றி நிச்சயம்.

பாடம் - 5

மரபுக்கவிதையும் புதுக்கவிதையும் - ஒப்புமை

5.0 பாட முன்னுரை

இலக்கியம் என்பது சமுதாய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு கலைவடிவமாகும். நுண்ணுணர்வால் அறிந்து நுகரத்தக்கது ஆதலின் இது நுண்கலையாகும். இலக்கிய வடிவங்கள் பலவற்றுள் காலத்தால் முந்தியது கவிதையே ஆகும். ‘உணர்ச்சி இயல்பாகவே உருவெடுக்கும் இடமான சிந்தனையும் சொற்களுமே கவிதை’ என்கிறார் மில் (Mill). ‘அறிவையும் கற்பனையையும் சேர்த்து இன்பத்தை உண்மையோடு இணைத்து வைக்கும் கலையே கவிதை’ என்பது ஜான்சனின் கருத்து. நன்னூல்,

சொல்லால் பொருட்கிட னாக உணர்வின்

வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் (நூற்பா-268)

எனக் குறிப்பிடுகின்றது.

கவிதையின் உயிராகக் கருதப்படும் ஓசையின் உருவாக்கத்தையொட்டி யாப்பிலக்கணம் வகுக்கப்பட்டது. தொல்காப்பியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகியவற்றில் பாக்கள், பாவினங்கள் ஆகியவற்றிற்கான இலக்கணங்கள் வரையறுத்து உணர்த்தப்படுகின்றன. பல்வேறு இலக்கியங்களைப் பயின்ற பயிற்சியும், யாப்பிலக்கண அறிவும் உடையவர்களால் மட்டும் சிறந்த மரபுக் கவிதைகளைப் படைக்க முடியும். இதில் சாதித்தல் அரிது என்பதை,

காரிகை கற்றுக் கவிபாடு வதினும்

பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே

என்னும் பாடல் உணர்த்தும். இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சமயம், கதை என யாவும் மரபுக்கவிதை வடிவிலேயே முன்பு இடம்பெற்றன. இவ்வடிவம் செய்யுள் என்பதாக இலக்கியங்களிலும், நூற்பா என்பதாக இலக்கண நூல்களிலும் பெயர் பெற்றிருந்தது.

இருபதாம் நூற்றாண்டளவில் மேனாட்டார் வருகையால் ஏற்பட்ட உரைநடைத் தாக்கமும், கல்வி பயில்வோர் பலதரப்பட்டவர்களாக அமைந்தமையும், மனப்பாடத்தின் தேவையின்மையும், அச்சு நூல்கள் மற்றும் இதழ்களின் வளர்ச்சியும், சமுதாய மாற்றமும் புதுக்கவிதை என்னும் யாப்புக் கடந்த கவிதை வகை தோன்றிச் சிறக்கக் காரணமாயின.

இவ்விருவகைக் கவிதைகளின் தோற்றம், வளர்ச்சி, வடிவம் (Form), உள்ளடக்கம் (Content), உத்திகள் (Techniques) ஆகியன பற்றி எடுத்துரைப்பதாக இப்பாடம் அமைகிறது.

5.1 தோற்றமும் வளர்ச்சியும்

மரபுக்கவிதை காலத்தால் முந்தியது. பல்வேறு இலக்கிய நூல்களாக இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தழைத்து விளங்கும் சிறப்புடையது. புதுக்கவிதை, கடந்த இருபதாம் நூற்றாண்டில் தோன்றிச் செழிக்கத் தொடங்கியது. இக்கவிதைகளின் தோற்றம், பெயர்க்காரணம், நோக்கம், நூல்கள், படைப்பாளர்கள், வளர்ச்சி, இன்றைய நிலை ஆகியன குறித்து இங்குக் காண்போம்.

5.1.1 தோற்றம் மரபுக்கவிதை

நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகவும் தொன்மையானதாக விளங்குவது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலாகும். இந்நூல் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப் பெறுகின்றது. இதற்கும் முந்தையனவாக இலக்கண நூல்கள் இருந்திருக்கின்றன. அவ்விலக்கண நூல்கள் ‘எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுவது போல’ இலக்கியத்திலிருந்து இலக்கண நூல்கள் ஏற்படுகின்றன என்னும் விதிக்கு இணங்க, தமக்கு முற்பட்ட இலக்கியங்களைக் கொண்டு இலக்கணம் வகுத்தனவாகும். இலக்கண நூல்களில் செய்யுள் தொடர்பான எழுத்து, சொல், அகம்-புறம் என்னும் பாடுபொருள் குறித்த செய்திகள், யாப்பு, அணி ஆகியன பற்றிய வரையறைகள் இடம் பெற்றிருக்கும். எனவே இவற்றைக் கருதிப் பார்க்கும்போது, செய்யுள் என்னும் கவிதை வடிவம் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுக்காலத் தொன்மையுடையது என உறுதிபடக் கூறலாம்.

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகியன குறித்த இலக்கணங்களைத் தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது. இறையனார் களவியல் உரையில் மறைந்து போன சங்க நூல்களின் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை ஆகிய தலைச் சங்க நூல்களும், கலி, குருகு, வியாழமாலையகவல், வெண்டாளி ஆகிய இடைச் சங்க நூல்களும் அவ்வகை நூல்களுள் அடங்கும். சிற்றிசை, பேரிசை என்பன கடைச்சங்கத்தில் இருந்து மறைந்தவற்றுள் அடங்கும். ‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என மயிலை சீனிவேங்கடசாமி, இவ்வகை நூல்கள் குறித்துத் தனியொரு நூலே எழுதியுள்ளார். அவற்றின்வழி மரபுக்கவிதையின் தொன்மையை நன்கு அறியலாம்.

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும் – இவள்

என்று பிறந்தவள் என்றுண ராத

இயல்பின ளாம்எங்கள் தாய்

எனப் பாரதியார் பாடும் பாடல், மரபுக்கவிதையின் காலத் தொன்மைக்கும் பொருந்தக் கூடியதாகும்.

புதுக்கவிதை

பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கிய வடிவம் என்பது செய்யுள் வடிவமாகவே இருந்தது. இந்நூற்றாண்டில் மேலைநாட்டில் பழைய யாப்பு உருவத்திலிருந்து விலகி, இயைபுத் தொடை (Rhyme) முதலியன இன்றி உரைநடைச் சாயலில் புதிய கவிஞர்கள் கவிதை படைக்கத் தொடங்கினர். 1892இல் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் புல்லின் இலைகள் என்ற தலைப்பில் வெளியிட்ட பன்னிரண்டு கவிதைகளைக்  கொண்ட தொகுப்பு, யாப்பு மரபைப் புறக்கணித்து ஃப்ரீவெர்ஸ் (Free verse) என்னும் வசன கவிதையாக அமைந்தது. அவர்தம் பாடுபொருளும் பிறர்  இதுவரையில் பேசாப் பொருளாக அமைந்தது. இவரை அடியொற்றி  எமர்சன், கார்ல் சான்ட்பெர்க், லின்ட்ஸே, வாலெஸ் ஸ்டீவன்ஸன், ஸ்டீவன் கிரேன், அமி லோவல் போன்ற எண்ணற்ற கவிஞர்கள் வசன கவிதை படைக்கலாயினர்.

பிரெஞ்சு நாட்டிலும், ரிம்பாடு என்னும் இளங்கவிஞர், 1886ஆம் ஆண்டு ஒளி வெள்ளம் என்னும் தலைப்பில் வெர்ஸ் லிப்ரே என்ற கட்டற்ற கவிதைகளைப் படைத்தார். இவரையடுத்து 1889-இல் வியல் கிரிப்பின் என்பவர் கட்டற்ற கவிதை என்ற அறிவிப்புடன் தம் கவிதைகளை வெளியிட்டார்.

இத்தாலி, ஸ்பானிஷ், செர்மன், ருஷ்ய மொழிகளின் இலக்கண மரபுகளிலும் நெகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்படத் தொடங்கின.

பிரெஞ்சு நாட்டினரின் சர்ரியலிசம், இத்தாலியக் கவிஞர்களின் ப்யுச்சரிசம், ஜெர்மானியரின் எக்ஸ்பிரஷனிசம் என்பன அவ்வந்நாடுகளின் மரபுக்கவிதை நிலை கடந்து வசன கவிதைகளைத் தோற்றுவிக்கலாயின.

‘விட்மனின் பாடலில் எதுகை, மோனை, தளை எதுவுமே இருக்காது; வசன நடை போலவே இருக்கும்; கவிதையைப் பொருளில் காட்ட வேண்டுமே யொழியச் சொல்லடுக்கில் காட்டுவது பயனில்லை எனக்கருதி வசன நடையிலேயே அவர் எழுதிவிட்டார்’ என்பார் மகாகவி பாரதியார். மரபுக் கவிதையில் வல்லவரும் தம் பல்வேறு பாடல்களை அதிலேயே படைத்தவருமாகிய பாரதியார் வசன கவிதையில் விருப்புற்றவராகத் தாமும் காட்சிகள் என்னும் தலைப்பில் பல வசன கவிதைகளைப் படைத்துள்ளார்.

பாரதியைத் தொடர்ந்து ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் போன்றோர் புதுக்கவிதை படைக்கலாயினர்.

புதுக்கவிதைகள், பத்திரிகைகளில் வெளியிடப் பெற்றுப் படிப்படியாகச் செல்வாக்குப் பெற்றன என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

5.1.2 பெயர்க்காரணம் தமிழ்க் கவிதைகளை மரபுக்கவிதை, புதுக்கவிதை என்பன போன்ற பெயர்களில் குறிப்பிடுகிறோம். அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

மரபுக் கவிதை

தொன்று தொட்டு வரும் தன்மையுடையது என்பதை மரபு என்னும் சொல் உணர்த்தி நிற்கின்றது. இனிய ஓசை நயம் அமைந்த பாடல்களைக் கேட்டுப் பழகியவர், அதே ஓசையில் பாடல் புனைய முயன்று, பிறர் படிக்கவும், இவ்வாறே புதியன படைக்கவும் ‘பாடல் அமைப்பை’ எழுத்து, அசை, சீர் என அமைத்து ஒழுங்குபடுத்தியிருத்தல் வேண்டும். இவ்வாறு யாப்பிலக்கணம் தோன்ற, அடுத்தடுத்து வந்தவர் அம்மரபு மாறாமல் கவி படைக்கத் தொடங்கினர்.

பாக்களையடுத்துப் பாவினங்களும், அவற்றையடுத்துக் கும்மி, சிந்து போன்றனவும் தோன்றின. இவ்வாறுதான் பாடப்படவேண்டும் என்னும் வரையறை இருப்பதால் சிதறாத வடிவமாகப் பாதுகாக்கப் பெற்றுக் காலந்தோறும் இம்முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.

பாடுபொருளும் உத்திகளும் புதியனவாயினும் மரபு இலக்கணத்தின்படி படைக்கப்படுதலின் இவை மரபுக்கவிதை எனப்படுகின்றன.

புதுக்கவிதை

ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து எனக் காலந்தோறும் யாப்பு வடிவங்கள் செல்வாக்குப் பெற்றுவந்தன. மேனாட்டுத் தாக்கத்தால் உரைநடை செல்வாக்குப் பெற்ற நிலையில், யாப்பிலக்கணத்திற்குக் கட்டுப்படாமல் கவிதை உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி, வசன கவிதை என்றே அழைக்கப்பட்டது. பின்னர், யாப்பில்லாக் கவிதை, இலகு கவிதை, கட்டிலடங்காக் கவிதை போன்ற பெயர்களை அவ்வப்போது பெற்று வரலாயிற்று.

பழக்கத்தில் உள்ள நிலையிலிருந்து சிறிதளவோ முற்றிலுமோ மாறுபட்டுத் தோன்றுவது புதுமை எனப்படும். வழிவழியாக மரபு கெடாது யாப்பிலக்கணத்தோடு பொருந்தி வரும் கவிதைகளிலிருந்து மாறுபடும் கவிதைப் படைப்புதான் புதுக்கவிதை ஆகும். புதுக்கவிதைகள் உருவத்தால் மட்டுமன்றி, உள்ளடக்கம், உத்திமுறைகள் ஆகியவற்றாலும் புதுமையுடையனவாகும்.

இலக்கணச் செங்கோல்

யாப்புச் சிம்மாசனம்

எதுகைப் பல்லக்கு

மோனைத் தேர்கள்

தனிமொழிச் சேனை

பண்டித பவனி

இவையெதுவும் இல்லாத

கருத்துக்கள் தம்மைத்தாமே

ஆளக் கற்றுக்கொண்ட

புதிய மக்களாட்சி முறையே

புதுக்கவிதை                      (ஊர்வலம்)

என மேத்தா கூறும் புதுக்கவிதை, புதுக்கவிதையின் இலக்கணத்தையும் இயல்பையும் புலப்படுத்தும். இதனை, சாலை இளந்திரையன் உரை வீச்சு எனக் கூறுவார்.

5.1.3 நோக்கம் கவிதை, ஒரு கருத்தை எடுத்துச் சொல்கிறது. அந்தக் கருத்து எதற்காகச் சொல்லப்படுகிறது? அதையே நோக்கம் என்கிறோம்.

மரபுக்கவிதை

மரபுக்கவிதை, சங்க காலத்தில் மன்னர்களோடு தொடர்புடையதாக இருந்தது. மன்னர்களின் வீரம், வெற்றி, கொடை, ஆட்சிச் சிறப்பு ஆகியவற்றைப் புகழ்வதாகவும், துணிச்சலுடன் புலவர்கள் அறிவுறுத்துவதாகவும் அமைந்தன. அரசவையிலோ, சங்கம் போன்ற தமிழ் அவைகளிலோ ஒன்று குழுமிய புலவர்கள் அகப்பொருள் பாடி இன்புறுத்துவதாகவும் அறிவுறுத்துவதாகவும் அமைந்தன.

இடைக்காலத்தில் பக்தி இலக்கிய மறுமலர்ச்சியின் காரணமாகப் பாடுபொருள் இறைவனைப் பற்றியதாகவும், திருத்தலங்களின் (கோயில் உள்ள ஊர்) சிறப்பை உணர்த்துவதாகவும் அமைந்தது.

சித்தர் இலக்கியம், தத்துவம், மருத்துவம், அரசர்களையும் குறுநில மன்னர்களையும் மகிழ்வுறுத்தும் சிற்றிலக்கியங்கள் என அடுத்தடுத்த காலங்களில் பாடுபொருள்கள் அமைந்தன.

கவியரங்கம், வரையறுக்கப்பட்ட தலைப்பு, இயற்கை, சமூக அவலம் என இன்றைய நிலையில் மரபுக்கவிதையின் பயன்பாடு அமைகின்றது.

எனவே, மரபுக்கவிதை தொழிலுக்கு உரியதாகவும், அறிவுறுத்துவதாகவும், இன்புறுத்துவதாகவும் அமைந்து வரும் நிலையை அறிகின்றோம்.

புதுக்கவிதை

புதுக்கவிதையைத் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்கள் மிகச் சிலரே. பலர் சமுதாய அவலம் கண்டு அவ்வப்போது கவிதைகள் புனைபவராக உள்ளனர். தனிமனித உணர்வுகளைப் பாடுவதும், நாட்டுப்பற்று, மொழியுணர்வு, பொதுவுடைமை, அநீதியை எதிர்த்தல், பெண்ணுரிமை, தலித்தியம், பகுத்தறிவு என்பனவற்றைப் பாடுதலும் இன்றைய புதுக்கவிதைகளின் நோக்கங்களாக உள்ளன.

மரபுக்கவிதை இயற்றுவது என்பது, பெரும்பாலும் அடித்தட்டு மக்களிடத்தில் இடம் பெறாததாகவே இருந்து வந்துள்ளது. புதுக்கவிதையைப் பொறுத்தவரை பெண்கள், அடித்தட்டு மக்கள், தொழிலாளிகள் எனப் பலரும் படைப்பாளராகி விடுவதனால், தங்களின் உண்மை நிலையையும், வாழ்வியல் சிக்கல்களையும், தாங்கள் எதிர்நோக்கும் தீர்வுகளையும் தெளிவாக எடுத்துக் கூற வல்லவர்களாய் அமைகின்றனர். அவர்தம் புதுக்கவிதைப் படைப்புகளும் அவர்களின் மனநிலையையும் வாழ்வியலையும் படிப்பவருக்கு நன்கு உணர்த்துவனவாகின்றன.

5.1.4 படைப்பாளர்களும் நூல்களும் இவ்வாறு இரு வகையாகப் பிரிக்கப்பட்ட கவிதைகளைப் படைத்தவர்கள் பற்றியும், அவர்களது நூல்களைப் பற்றியும் இனிக் காணலாம்.

மரபுக் கவிதை

சங்க இலக்கியம், காப்பியங்கள், நீதி நூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், தனிப்பாடல்கள் என்னும் யாவும் மரபுக் கவிதைகளால் ஆனவையே ஆகும்.

பாரதியார் காலந்தொட்டு வரும் மரபுக்கவிதை படைப்பாளர்களும் அவர்தம் படைப்புகளும் குறிப்பிடத்தக்க சிறப்புடையனவேயாகும்.

(1) பாரதியார் – பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு

(2) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – ஆசியசோதி, மருமக்கள்வழி மான்மியம்

(3) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை – தமிழன் இதயம், கவிதாஞ்சலி

(4) பாரதிதாசன் – பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, குடும்பவிளக்கு, அழகின் சிரிப்பு

(5) கண்ணதாசன் – இயேசு காவியம், மாங்கனி, ஆட்டனத்தி ஆதிமந்தி

(6) சுத்தானந்த பாரதியார் – பாரதசக்தி மகாகாவியம், தமிழ்த் திருப்பாவை

(7) சுரதா – சிரிப்பின் நிழல், தேன்மழை, துறைமுகம்

(8) அழ.வள்ளியப்பா – மலரும் உள்ளம், பாட்டிலே காந்தி

(9) வாணிதாசன் – கொடி முல்லை

(10) வைரமுத்து – வைகறை மேகங்கள்

புதுக்கவிதை

பாரதியார் தொடங்கிப் புதுக்கவிதைக் கவிஞர் பலர் நல்ல பல படைப்புகளை நல்கியுள்ளனர்.                 (1) பாரதியார் – வசன கவிதை

(2) ந.பிச்சமூர்த்தி – காட்டு வாத்து, வழித்துணை

(3) அப்துல் ரகுமான் – பால்வீதி, சுட்டுவிரல்

(4) வாலி – அவதார புருஷன், பாண்டவர் பூமி

(5) மீரா – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

(6) நா.காமராசன் – கறுப்பு மலர்கள், நாவல்பழம்

(7) மேத்தா – கண்ணீர்ப் பூக்கள், ஊர்வலம்

(8) வைரமுத்து – இன்னொரு தேசிய கீதம், திருத்தி எழுதிய தீர்ப்புகள், கொடிமரத்தின் வேர்கள்

(9) சிற்பி – சர்ப்ப யாகம்

(10) அறிவுமதி – நட்புக்காலம்

5.1.5 வளர்ச்சி வரலாறு எண்ணத்தை அழகாக எடுத்துச் சொல்வது கவிதை. சொல்வதையும் அழகிய வகையில் சொல்லப்பயன்படுவது பா வடிவங்களாகும். காலந்தோறும் மாறிய பா, பாவினம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

மரபுக் கவிதை

ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மரபுக்கவிதை வடிவம் இன்றும் நிலைபெற்று வருகின்றது. இலக்கியம் என்றாலே அது மரபுக்கவிதைதான் என்று விளங்கிய கால கட்டங்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் காண முடிகின்றது.

‘முதலில் தோன்றியது, மிகுந்த கட்டுப்பாடு இல்லாததாகிய ஆசிரியப்பாவாகும்; வரவர ஓசை நலம் கருதியும் செப்பமான நிலையை எண்ணியும் சிற்சில கட்டுப்பாடுகள் தோன்றியிருக்கும். ஆசிரியப்பாவை அடுத்து அதனோடொத்த இயல்புடைய வஞ்சிப்பா தோன்றியதெனலாம். அடுத்துக் குறள் வெண்பா உள்ளிட்ட பலவகை வெண்பாக்களும், பிறகு மருட்பாவும், அதன் பிறகு கலிப்பாவும், பரிபாடலும் தோன்றியிருத்தல் வேண்டும். அடுத்து வந்த காலத்தில் விருத்தப்பா, தாழிசை, துறை என்பன பயன்பாட்டிலமைந்தன’ என்பார் அ.கி.பரந்தாமனார்.

யாப்பிலக்கணம் குறித்து அகத்தியம், அவிநயம், காக்கைபாடினியம், கையனார் யாப்பியல், சங்க யாப்பு, பல்காயம், பனம்பாரம், பெரிய பம்மம், மயேச்சுரர் யாப்பு, மாபுராணம், வாய்ப்பியம், யாப்பருங்கலம் எனப் பல்வேறு இலக்கண நூல்கள் காலந்தோறும் தோன்றி வந்துள்ளன. இந்நூல்கள் தொல்காப்பியக் காலம் சார்ந்தும், காரிகைக்கு முன்னரும் தோன்றியனவாகும்.

காரிகைக்குப் பின், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், சுவாமிநாதம், முத்துவீரியம், அறுவகை இலக்கணம் என்னும் நூல்களும் யாப்பிலக்கணம் உரைப்பனவாய் அமைந்துள்ளன.

இருபதாம் நூற்றாண்டிலும் யாப்பிலக்கண வழிகாட்டி நூல்கள் பல தோன்றியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கன:                 (1) புலவர் குழந்தை – யாப்பதிகாரம், தொடையதிகாரம் (உரை)

(2) அ.கி.பரந்தாமனார் – கவிஞராக (உரைநடை)

(3) கி.வா.ஜகந்நாதன் – கவி பாடலாம் (உரைநடை)

(4) த.சரவணத் தமிழன் – யாப்பு நூல் (நூற்பா)

(5) ச.பாலசுந்தரம் – தென்னூல் (நூற்பா)

(6) இரா.திருமுருகன் – சிந்துப் பாவியல் (நூற்பா)

சங்க இலக்கியத்தில் அகவலும், நீதி இலக்கியத்தில் வெண்பாவும், பிற்காலக் காப்பியங்களில் விருத்தமும், குறவஞ்சி, பள்ளு முதலியவற்றில் சிந்துப் பாடலுமாக மரபுக்கவிதை வடிவம் சிறந்து வந்துள்ளது.

புதுக்கவிதை

கி.பி.1930-1945 காலகட்டத்தில் மணிக்கொடிக் குழுவினர், பாரதியாரை அடுத்துப் புதுக்கவிதை இயற்றியவர்களாவர். அவர்களுள் கு.ப.இராசகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மணிக்கொடி இதழின் காலகட்டத்திலேயே ஜெயபாரதி, சூறாவளி, கிராம ஊழியன், கலாமோகினி போன்ற இதழ்களிலும் புதுக்கவிதைகள் பல இடம் பெற்றன.

கி.பி.1950-1970 ஆண்டுகளில் இரண்டாம் நிலை வளர்ச்சி அமைந்தது என்பார் ந.சுப்புரெட்டியார். எழுத்து, இலக்கிய வட்டம், நடை போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளிவந்தன. 1962-ஆம் ஆண்டு புதுக்கவிதை வரலாற்றில் சிறப்புடையதாகும்.

எழுபதுகளில் தாமரை, கசடதபற, வானம்பாடி போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளியிடப் பெற்றுச் சிறப்புற்றன.

புள்ளி, வெள்ளம், உதயம், கதம்பம், ரசிகன், நீ, அலைகள், ஐ என்னும் புதுக்கவிதைச் சிறு தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

புதுக்கவிதை நூல்கள் பலவும் எழுபதுகள் தொடங்கி வெளிவரலாயின. அவற்றுள் சில:                 (1) ந.பிச்சமூர்த்தி – காட்டுவாத்து

(2) வேணுகோபாலன் – கோடை வயல்

(3) வைத்தீஸ்வரன் – உதய நிழல்

(4) நா.காமராசன் – கறுப்பு மலர்கள்

(5) இன்குலாப் – இன்குலாப் கவிதைகள்

(6) ஞானக்கூத்தன் – அன்று வேறு கிழமை

(7) கலாப்ரியா – தீர்த்த யாத்திரை

(8) சி.சு.செல்லப்பா – புதுக்குரல்கள்

(9) தமிழன்பன் – தோணி வருகிறது

(10) வல்லிக்கண்ணன் – அமர வேதனை

(11) ப.கங்கை கொண்டான் – கூட்டுப் புழுக்கள்

(12) சி.மணி – வரும் போகும்

புதுக்கவிதை, ஈழத்திலும் மறுமலர்ச்சி, பாரதி, ஈழகேசரி, மல்லிகை, க-வி-தை போன்ற இதழ்களில் சிறப்புற வளர்ந்து வந்துள்ளமையும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

புதுக்கவிதை குறித்த செய்திகளையும் தெளிவினையும் புலப்படுத்தி வரன்முறைப் படுத்திய பெருமை திறனாய்வு நூல்களுக்கு உண்டு. இவை ஒரு வகையில் மரபுவழி யாப்பிலக்கண நூல்களை ஒத்தன எனலாம். ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்பது வல்லிக்கண்ணன் எழுதியது. புதுக்கவிதை போக்கும் நோக்கும் என்னும் நூல் ந.சுப்புரெட்டியாரால் எழுதப்பட்டது. புதுக்கவிதை – ஒரு புதுப்பார்வை என்பது கவிஞர் பாலாவின் படைப்பு. புதுக்கவிதை வளர்ச்சிக்கு இத்தகு நூல்களும் பெரும்பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

5.1.6 இன்றைய நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் மொழியமைப்பிலும், வெளியிடும் பாங்கிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. அவற்றை விரிவாகக் காணலாம்.

மரபுக்கவிதை

நற்றமிழ், தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ் போன்ற இலக்கிய இதழ்களில் வல்லமை படைத்த மரபுக் கவிஞர்களின் படைப்புகளும், போட்டிக் கவிதைகள் பலவும் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கவியரங்குகளில் மரபுக் கவிதைகள் சிறப்பிடம் பெறுகின்றன.

பாரதியார் பிள்ளைத் தமிழ், காமராசர் பிள்ளைத் தமிழ், சிவாஜிகணேசன் பிள்ளைத் தமிழ் என்பன போன்ற மரபுவழி இலக்கியங்கள் இன்றும் படைக்கப் பெற்று வருகின்றன.

மருதூர் அரங்கராசனின் யாப்பறிந்து பாப்புனைய என்னும் நூல் இன்றைய நிலையில் மரபுக்கவிதை படைப்பவர்க்கு ஏற்ற வகையில் இயற்றப் பெற்றுள்ளது.

புதுக்கவிதை

உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் உட்படப் பலரும் எளிதில் எழுதுவதாகப் புதுக்கவிதை விளங்குகின்றது. பெண்ணியம், தலித்தியம் என்பன போன்ற கொள்கைவாதிகளும், கவியரங்கம் நிகழ்த்துவோரும், சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரும் புதுக்கவிதை நூல்களை வெளியீடு செய்யும் வழக்கத்தைத் தொடர்ந்து காணமுடிகின்றது.

நாளிதழ்கள், வார இதழ்கள், பல்வேறு மாத இதழ்கள், தை, நறுமுகை போன்ற காலாண்டிதழ்கள் எனப் பல வகை இதழ்களிலும் புதுக்கவிதைகள் சிறப்பிடம் பெறக் காண்கிறோம்.

ஹைக்கூ (துளிப்பா), சென்ரியு (நகைத் துளிப்பா), லிமரைக்கூ (இயைபுத் துளிப்பா) என்னும் வகைகளும் புதுக்கவிதையின் சாராம்சமாய் நாளும் தழைத்து வருகின்றன.

5.2 கவிதை வடிவம்

ஒரு கவிதையைப் பார்த்த அளவில் மரபுக்கவிதையா, புதுக்கவிதையா எனக் கண்டுணரும் அளவிற்கு வடிவப் பாகுபாடுகள் இவற்றிற்கிடையே உள்ளன. படிக்கும் வகையிலும் இவற்றை வேறுபடுத்தி உணரலாம். வரிவடிவம், ஒலிவடிவம் என்னும் இருவகைகளிலும் இவ்வாறு இவை வேறுபடுவதனை அடி, அடி எண்ணிக்கை, யாப்பு, தொடைநயம், சொற்கள், தனித்தன்மை, நெடுங்கதை என்னும் உள்தலைப்புகள் கொண்டு இங்குக் காண்போம்.

5.2.1 அடி கவிதைக்கு வடிவம் தர யாப்புப் பயன்படுகிறது. யாப்பு அடிகளைக் கொண்டு அமைகிறது. அடிகள் அமைந்துள்ள நிலையைக் காண்போம்.

மரபுக்கவிதை

குறில், நெடில், ஒற்று என்பவற்றின் அடிப்படையில் நேரசை, நிரையசைகளும், அவ்வசைகளின் அடிப்படையில் ஓரசைச் சீர், ஈரசைச் சீர், மூவசைச் சீர், நாலசைச் சீர் என்பனவும் இவற்றின் அடிப்படையில் அடிகளும் அமைகின்றன.

இரண்டு சீர்களையுடையது குறளடி; 3 சீர்கள் கொண்டது சிந்தடி; 4 சீர்கள் உடையது நேரடி அல்லது அளவடி; 5 சீர்கள் அமைந்தது நெடிலடி; 6 சீர் முதலானவற்றை உடையது கழிநெடிலடி எனப்படுகின்றது. 6 முதல் 8 சீர்  உடையன சிறப்புடையன; 9 மற்றும் 10 சீர் உடையன நடுத்தரச் சிறப்புடையன; 10க்கு மேற்பட்ட சீர் உடையன அவ்வளவாகச் சிறப்பற்றன.

ஓர் அசையோ, ஒரு சீரோ ஓரடியில் தனித்து இடம் பெறுவதில்லை.  கூன் என்னும் தனிச்சொல் கலிப்பா, வஞ்சிப்பாக்களில் உறுப்பாக இடம்பெறுவதாகும். இது சிறுபான்மையினது.

(1) குறளடி     - ‘அறம்செய விரும்பு’

(2) சிந்தடி     - ‘நிற்க அதற்குத் தக’

(3) அளவடி     - ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’

(4) நெடிலடி     - ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை’

(5) கழிநெடிலடி     - ‘நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே!’

விருத்தம் போன்றவற்றில் ஒரு பாடலில் இடம்பெறும் அடிகள், எதுகையைக் கொண்டு அடையாளம் காணப்படுவது வழக்கம். இவ்வெதுகை அடியெதுகையாகும்.

புதுக்கவிதை

அடி என்பது புதுக்கவிதையில் வரி எனப்படும். சீர்கள், சொற்கள் என்றே குறிக்கப்பெறும். ஒரு வரியில் பெரும்பாலும் நான்குக்கு மேற்பட்ட சொற்கள் இடம்பெறுவதில்லை. மற்றபடி, எதுகை, அசை, சீர், தளை ஆகியன தொடர்பான வரையறைகள் ஏதுமில்லை.

உன்

விழிகளின் வாசிப்பில்

என்

பேனா எழுத

அவதிப்படுகின்றது                  (ஈரநிழல்)

என்னும் கவிதையில் பல்வேறு நிலைகளையும் காண்கிறோம்.

புதுக்கவிதையைப் பொறுத்தவரை, வரிகளில் அமையும் சொல்லமைப்பைப் பொருள்தான் தீர்மானிக்கின்றது.

அவள்

மாமியார் வீட்டுக்குப்

போனாள்

அவள் மாமியார்

வீட்டுக்குப் போனாள்

இவை இரண்டிலும் ஒரே விதமான சொற்கள் இடம் பெற்றிருப்பினும், அவை அடுத்தடுத்த வரிகளில் அமையும் நிலை கொண்டு வெவ்வேறு பொருள் தரக் காணலாம்.

5.2.2 அடி எண்ணிக்கை அடி இரண்டு முதல் பல சீர்களைக் கொண்டது. அடிகளின் எண்ணிக்கைக்கு அளவு உண்டா? பார்க்கலாம்.

மரபுக் கவிதை

இரண்டடிகளையுடைய திருக்குறள் முதலாக, 782 அடிகளையுடைய மதுரைக்காஞ்சி வரையிலுமாக மரபுக்கவிதை பல்வேறு அடிவரையறைகளைப் பெற்றுவரக் காண்கிறோம்.

வெண்பா ஈரடிச் சிறுமையும், ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் மூவடிச் சிறுமையும், கலிப்பா நாலடிச் சிறுமையும் கொண்டு அமையும் என யாப்பருங்கலக் காரிகை கூறுகின்றது. பொதுவாக இப்பாக்களுக்கான அடிகளின் உச்சவரம்பு உரைப்போர் உள்ளக்கருத்தின் அளவினதாக அமைகின்றது.

விருத்தம், தாழிசை, துறை போன்ற பாவினங்கள் பொதுவாக ஓரெதுகையுடைய நான்கடிகளைப் பெற்று வருதல் இயல்பு.

அவிநயம் என்னும் நூல், ஆசிரியப்பாவின் அடிச்சிறுமை ஒன்று என்று கூறுகின்றது. இலக்கணங்களில் காணும் நூற்பா யாப்பை அதற்குச் சான்றாகக் காட்டுகின்றது.

புதுக்கவிதை

புதுக்கவிதையானது குறைந்தது இரண்டு வரிகளையாவது கொண்டிருக்கின்றது. உச்சவரம்புக்கு வரி எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை.

தொடக்க காலத்தில் பத்து வரிகளுக்கு மேற்பட்ட அளவில் கவிதைகள் இருந்தன. இக்காலத்தில் பெரும்பாலும் பத்துவரிகளுக்குள்ளாகவே புதுக்கவிதை அமைவதைக் காண்கிறோம்.

5.2.3 ஒலிநயம் யாப்பு அமைப்பு ஒழுங்காக அமைவதிலேயே ஒரு வகையான ஓசை அமைப்பு உருவாகிச் செவிக்கு இன்பமூட்டுவதை உணரலாம். அது எவ்வாறு அமைகிறது என்பதைக் காண்போம்.

மரபுக் கவிதை

மரபுக்கவிதை இலக்கணத்திற்குக் கட்டுப்பட்டது. சொற்களை ஓசை ஒழுங்கில் வைத்துக் கட்டுவதையே யாப்பு என்கிறோம். எனவே யாப்பில் தாளம், ஒலி நயம், ஓசை நயம் என்று குறிப்பிடப்படும் இசைத் தன்மை மிக எளிதில் கிட்டி விடுகின்றது. சொற்களின் வல்லோசை, மெல்லோசைகளைக் கவிஞன் அடுக்குவதன் மூலம் சந்தமும் ஒலிநயமும் கைவருகின்றன.

‘இலக்கணக் கட்டுக்கோப்பு சொற்களின் அர்த்தத்தை ஆழப்படுத்துகிறது; சொற்களின் ஒலிநயத்தைச் சிறப்பாக வெளிக்கொணர்கிறது’ என்கிறார் தொ.மு.சி.ரகுநாதன். அதே வேளையில் ‘ஒலிநயத்துக்கு மிகையான அழுத்தம் கொடுத்துத் தம் படைப்பின் தரத்தைக் குறைத்துக் கொள்ளவும் கூடாது’ என்கிறார் கைலாசபதி.

ஒவ்வொரு பாவகைக்கும் குறிப்பிட்ட ஓசை நயம் இருக்கிறது.

(1) வெண்பா – செப்பலோசை

(2) ஆசிரியப்பா – அகவலோசை

(3) கலிப்பா – துள்ளலோசை

(4) வஞ்சிப்பா – தூங்கலோசை

இவ்வொவ்வொன்றும் ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை என மும்மூன்று வகைகள் உடையன. தளைகளைக் கொண்டு நால்வகை ஓசைகளும், தளைகளின் வருகைமுறை கொண்டு ஏந்திசை முதலிய உட்பிரிவுகளும் உணர்த்தப்படுகின்றன.

தாழிசை, துறை, விருத்தம் என்னும் பா வகைகளில் சீர்களின் வருகை முறையால் வாய்பாடுகள் அமைக்கப்பட்டு, அவற்றின் பல்வேறு வகைப்பாடுகளால் பற்பல ஒலிநயங்களில் பாடல்கள் அமைகின்றன.

கவிஞன் தன் பொருளுக்கு ஒத்திசைகின்ற பா மற்றும் பா வகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விரும்புகின்ற ஒலிநயத்தைப் பெறமுடியும். பயிற்சியின் மூலம் ஓரளவு எளிதிலேயே இது கைவந்து விடுகின்றது.

ஆசில்பர தாரமவை அஞ்சிறைய டைப்பேம்

மாசில்புகழ்க் காதலுறு வேம்வளமை கூறப்

பேசுவது மானமிடை பேணுவது காமம்

கூசுவது மானுடரை நன்றுநம கொற்றம்    (கம்ப ராமாயணம்)

என்பதில் கும்பகருணன், இராவணனிடம் அறவுரை கூறுமுகமாக அமையும் கருத்துகளை, ஒலிநயம் மெருகூட்டக் காணலாம்.

ஒலிநயமே, பாடலுள் இடம்பெறும் நகை முதலான எண்வகை மெய்ப்பாடுகளை வெளிப்படுத்துவதில் பேரிடம் பெறுகின்றது.

புதுக்கவிதை

‘மென்மையான ஒலிநயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது புதுக்கவிதை முயற்சி’ என்கிறார் சி.சு.செல்லப்பா. இந்த மென்மையைச் ‘சவுக்கைத் தோப்பின்வழியே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஓயும்ஒலி’ என்கிறார் ந.பிச்சமூர்த்தி. ‘கடல் அலையிலும் கால்நடையிலும் ஒருவகை ஒலிநயம் உள்ளதே, அதேபோல் புதுக்கவிதையிலும் ஒருவகை ஒலிநயம் இசைந்து வரும்’ என்பார் மீரா.

செய்யுளில் கிடைப்பதுபோல் எதிர்பார்க்கும் நிறுத்தங்களில் தோன்றாமல், இயல்பாகவே தோன்றி நிறுத்தங்களை நிர்ணயிக்கும் உள்ளடங்கிய ஒலிநயம், புதுக்கவிதையில் இடம்பெறுகின்றது.

எந்தெந்த இடங்களில் தாளலயம் வருகிறது என்பது வாசகனுக்கு முன்கூட்டியே மரபுக்கவிதையில் தெரிந்து விடுகின்றது. அதனால் செய்யுளின் ஓசை எந்திர கதி போன்ற செயற்கைத் தன்மையை அடைந்து விடுகிறது. இது கடிகார ஓசை போன்றது. புதுக்கவிதையில், காற்றைப் போல், தென்றலைப்போல் இயல்பானதாக இருக்க வேண்டும். கவிதையின் அர்த்தத்திற்கு இசைவானதாக இருக்க வேண்டும் எனப் புதுக்கவிதைத் திறனாய்வாளர்கள் சுட்டுகின்றனர்.

அணில் கடித்த பழமா?

ஆங், எனக்கும்

கொஞ்சம்

தாலியறுத்த விதவையா?

அய்யோ. . .

எச்சில் !

என்னும் கவிதையில் அமையும் ஒலிநயம், பாடுபொருளுக்கு மேலும் வலுச்சேர்க்கக் காண்கிறோம்.

5.2.4தொடைநயம் அடிகளை எவ்வாறு இணைப்பது (தொடுப்பது) என்பதையே தொடை என்கிறோம். அத்தொடை காலத்துக்கேற்றவாறு மாறி வருகிறது.

மரபுக்கவிதை

தொடுக்கப்படுவது தொடை, மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்பனவும், அந்தாதி, இரட்டை, செந்தொடை என்பனவும் மரபுக்கவிதையில் தொடைநயங்களாகச் சிறப்பிடம் பெறுகின்றன.

அடுத்தடுத்த அடிகளில் எதுகையும், ஓரடியின் முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் மோனையும், சொல் அல்லது பொருளில் முரணும், அடிகளின் இறுதிச் சீர்களில் இயைபும் தேவைப்படுமிடத்து அளபெடையும் மரபுக்கவிதைகளில் இடம்பெறக் காண்கிறோம். மனனத்திற்கேற்றவாறு முதல் பாடலின் இறுதி அடுத்த பாடலின் தொடக்கமாக அமைவது அந்தாதியாகும் (மனனம் = மனப்பாடம் செய்தல்). செந்தொடை என்பது, எதுகை போன்ற எத்தொடைகளும் அமையாமல், பொருளால் கவிதை சிறந்து நிற்பதென்பர்.

கல்வியில் லாத பெண்கள்

களர்நிலம் ; அந்நி லத்தில்

புல்விளைந் திடலாம் ; நல்ல

புதல்வர்கள் விளைத லில்லை ;

கல்வியை உடைய பெண்கள்

திருந்திய கழனி ; அங்கே

நல்லறி வுடைய மக்கள்

விளைவது நவில வோநான்?           (பாரதிதாசன்)

என வரும் பாடலில் எதுகை, மோனை, முரண் என்னும் தொடைநயங்கள் சிறக்கக் காண்கிறோம்.

புதுக்கவிதை

எதுகையும் மோனையும் அமைந்தேயாக வேண்டும் என்னும் அவசியம் புதுக்கவிதையில் இல்லை. பொருளுக்கு இசைந்த ஒலிநயத்தையும் சொற்களையும் கவிஞர்கள், தாம் விரும்பிய வண்ணம் அமைக்கும் சுதந்திரம் வசனத்தில் அமைந்து கிடக்கிறது. கட்டுப்பாடு இல்லாமல் கட்டுக்கோப்பை உருவாக்கும் வாய்ப்பு வசனத்தில் எழுதும்போது கிடைக்கிறது. எனவே பொருளம்சத்தை ஓசைக்காகத் தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே, சொற்களின் கட்டமைப்பைப் புதுக்கவிதையில் எழுதும்போது கவிஞன் விரும்பிய வகையில் அமைத்துக்கொள்ள முடிகின்றது.

எதுகை, மோனைகளெல்லாம் புதுக்கவிதையில் வரவே கூடாது என்றெல்லாம் விதி ஏதும் இல்லை. அவை வற்புறுத்தித் திணிக்கப்பட்டனவாக இல்லாமல், இயல்பாக இருத்தல் வேண்டும்.

புலமையற்ற தருமிக்குப்

பொற்கிழி

தலைநிமிர்ந்த நக்கீரருக்குத்

தண்டனை

கடவுள்கள் கூட

நியாயத்திற்குப்

புறம்பாகவே

என்னும் கவிதையில் எதுகை, மோனை, முரண் தொடைகள் அமைந்திருக்கக் காண்கிறோம்.

எனக்கு

முகம் இல்லை

இதயம் இல்லை

ஆத்மாவும் இல்லை

அவர்களின் பார்வையில்             (அ.சங்கர்)

என்னும் கவிதையில் இயைபுத் தொடை அமையக் காணலாம்.

5.2.5 சொற்கள்

கவிதையில் இடம்பெறும் சொற்களை நான்கு வகைகளாகத் தொல்காப்பியர் பிரித்தார். இன்றுவரை அந்த வகையிலேயே சொற்கள் கவிதையில் அமைகின்றன.

மரபுக்கவிதை

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்கும் செய்யுளில் இடம்பெறலாம் என்கிறது தொல்காப்பியம். இவை செய்யுள் ஈட்டச் சொற்கள் என்று குறிக்கப்பெறுகின்றன.

(1) இயற்சொல் – பாமரர்க்கும் புரிவது

(2) திரிசொல் – படித்தவர்க்கே புரிவது

(3) திசைச்சொல் – வட்டார வழக்குச் சொல், பிறமொழிச் சொற்கள்

(4) வடசொல் – சமஸ்கிருதச் சொற்கள்

இவற்றின் விகிதம் வேண்டுமானால் வேறுபடலாம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி

பேணி வளர்த்திடும் ஈசன்

மண்ணுக்குள் ளேசில மூடர்-நல்ல

மாதர் அறிவைக் கெடுத்தார்.              (பாரதியார்)

என்பதில் பல வகைச் சொற்களும் இடம்பெறக் காணலாம். (பெண்ணுக்கு – இயற்சொல், பேணி – திரிசொல், ஞானம் – வடசொல்)

புதுக்கவிதை

புதுக்கவிதையில் இயற்சொல், வடசொல், திசைச்சொல், ஆங்கிலச்சொல், பேச்சு வழக்குச் சொல் (அவற்றுள் கொச்சைச் சொல்லும்கூட) ஆகியன இடம்பெறுகின்றன.

விழிகள்

நட்சத்திரங்களை வருடினாலும்

விரல்கள் என்னவோ

ஜன்னல் கம்பிகளோடு தான்

என்பதில் திசைச்சொல்லும் (ஜன்னல்)

எம்ப்ளாய்மெண்ட்

எக்சேஞ்சுக்குப்

புறப்பட்டுப் போன

மகனிடம் கேட்டுக் கொண்டார்

தந்தை

என்னுடையதையும்

ரெனிவல் செய்துகொண்டு

வந்துவிடப்பா                   (அறிவுமதி)

என்பதில் ஆங்கிலச் சொற்களும்,

அழுவதும்கூட

ஆரோக்கியமான

விஷயம்தான்…

சில நேரங்களில்                (அறிவுமதி)

என்பதில் வடசொல்லும்,

வில்லை ஒடித்து மணக்க

இராமன் வராவிட்டாலும்

பரவாயில்லை

தூக்கிச் செல்ல

இராவணனாவது வரமாட்டானா   (பி.எல்.ராஜேந்திரன்)

என்னும் கவிதையில் வழக்குச் சொற்களும் இடம்பெறக் காண்கிறோம்.

5.2.6 நாட்டுப்புறப் பாங்கு கவிஞனின் கருத்தும் அதனை வெளிப்படுத்தும் அழகும் இணைந்து கவிதையாகின்றன. எளிய மக்களும் இயல்பான  போக்கிலேயே கருத்தையும் கற்பனையையும் அழகாக வெளிப்படுத்துகிறார்கள். அந்த மொழியையும் ஒலியையும்  கவிஞர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதுவே கவிதையின்

அடிநாதமாக அமைகிறது.

மரபுக்கவிதை

மரபுக்கவிதையின் தொடக்கமே, நாட்டுப்புறப் பாடல்கள்தாம் என்றும் கூறலாம். ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருதல் முதலான தாழிசைக் கூறுகள். நாட்டுப்புறச் சாயலுடையனவேயாகும். சிலப்பதிகாரம், திருவாசகம், குறவஞ்சி, பள்ளு போன்றவை நாட்டுப்புறத் தாக்கங்களைக் கொண்டிருக்கின்றன.

தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்

பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ !

பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்

விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ !

எனவரும் திருவாசகம் – (திருச்சாழல் பாடல்) நாட்டுப்புறப்பாங்கினது ஆகும்.

புதுக்கவிதை

நாட்டுப்புறப் பாடல்களே ஏட்டிலக்கியங்களின் தாய் ஆதலின், புதுக்கவிதையிலும் அவற்றின் போக்குச் சிறப்புற இடம்பெறக் காணலாம்.

காடெல்லாம் சுற்றிக்

காராம்பசு கொண்டுவந்தோம்

நாடெல்லாம் சுற்றி

நல்லபசு கொண்டு வந்தோம்

சீமைபல சுற்றிச்

சிவப்புப்பசு கொண்டு வந்தோம்

சிவப்புப்பசு உதைக்குமின்னு

சிலபேர்கள் சொன்னதனால்

பால்கறக்க எங்கவீட்டில்

பக்கத்தில் போகவில்லை

பக்கத்தில் போகாது

பாலெல்லாம் வீணாச்சு

என்னும் கவிதையில் பொதுவுடைமைத் தத்துவம் பயன்கொள்ளப் பெறாமை நாட்டுப்புறப் பாங்கில் சுட்டப் பெறுகின்றது.

ஆராரோ ஆராரோ

அப்பாநீ கண்ணுறங்கு

தார்ரோட்டில் காரோட்டும்

தமிழ்மணியே கண்ணுறங்கு !

நாடே பரிசளிப்பு – உனக்கு

நன்கொடையே மூலதனம்

பாடுபடத் தேவையில்லை – என்

பாண்டியனே கண்ணுறங்கு !

என்னும் பாடல் அரசியல்வாதிக்கான தாலாட்டாகப் பாடப்பட்டிருப்பதை அறிகிறோம்.

விடுகதை, பழமொழி போன்ற நாட்டுப்புறக் கூறுகள் அடிப்படையில் அமையும் கவிதைகளையும் காணமுடிகின்றது.

5.3 உள்ளடக்கம்

‘கலை கலைக்காகவே’ என இன்புறுத்தல் மட்டுமே அதன் பயன் என்பவர்களும் உண்டு. ஆனால், இன்பம் என்பது கவிதையின் ஒரு பயனாக இருக்கலாமேயன்றி அதுவே இலக்கியமாகாது; “கலை வாழ்க்கைக்காகவே” என்னும் கருத்தே பெரும்பாலோர் முடிவாகும்.

சமுதாய வாழ்வைச் சித்திரிப்பதும், சமுதாய மேன்மைக்கு வழிகோலுவதும், வழிகாட்டுவதும் இலக்கியத்தின் இயல்புகள் ஆகும்.

இருவகைக் கவிதைகளும் பல்வேறு பாடுபொருள்களை உடையனவாய் உள்ளன. அவற்றுள் மனிதநேயம், மொழிப்பற்று, நாட்டுப்பற்று, பெண்ணியம், பொதுவுடைமை, அரசியல், வறுமை, காதல், தன்னம்பிக்கை, இயற்கை ஆகிய பாடுபொருள்கள் குறித்து இங்குத் தனித்தனியே காண்போம்.

5.3.1 மனிதநேயம் மரபுக்கவிதை

மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவுதலும், துயர்கண்டு வருந்தித் தீர்க்க முற்படுதலும் இடையூறு செய்யாதிருத்தலும் மனிதநேயம் ஆகும்.

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

வாடினேன் ; பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறா(து) அயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் ;

நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்

நேருறக் கண்டுளம் துடித்தேன் ;

ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்(சு)

இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

எனவரும் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா, மனிதநேயத்தையும் ஆன்மநேயத்தையும் தெள்ளிதின் உணர்த்துவதாக உள்ளது.

புதுக்கவிதை

அண்டை மாநிலம், அண்டை நாடுகள் என அடுத்தடுத்து இருப்பனகூட எல்லைக்கோடு, மண்ணுரிமை முதலான பல்வேறு காரணங்களாலும், தீவிரவாதங்களாலும், நாளும் நவீன ஆயுதம் கொண்டு போரிடும் இக்காலத்திற்கு மனிதநேயம் மிகமிகத் தேவையாகும்.

போர்களை நிறுத்து

புன்னகையை உடுத்து

பூமியை நேசி

பூக்களை ரசி

மனிதரை மதி

மண்ணைத் துதி

இன்றாவது

என வரும் வைரமுத்துவின் கவிதை மனிதநேயத்தை எடுத்துரைக்கின்றது. ‘சிக்கலும் சிடுக்கும் புதுக்கவிதையின் ஜீவாதாரம்’ என்னும் க.நா.சுப்பிரமணியத்தின் கருத்திற்கேற்றது இது.

5.3.2 மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் அ.மொழிபற்று

மரபுக்கவிதை

பல்வேறு வாழ்வியல் தேவைகளுக்காகப் பிறமொழிகளைக் கற்க வேண்டிய தேவை இருப்பது உண்மை. அதே நேரத்தில் தாய்மொழியை நேசித்தலும், அதில் பயிற்சி பெறுதலும் மிகவும் வேண்டிய பண்புகளாகும். தாய்மொழியை அலட்சியப்படுத்துதல், தாய்மொழியில் பேசுதல் குறைவென்று தாழ்வு மனப்பான்மை கொள்ளுதல் போன்றன இருத்தல் கூடாது.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம் ;

பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ சொல்வீர் !

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்

(பான்மை = இயல்பு; நாமம் = பெயர்; தேமதுரம் = தேன்போல் இனிமை)

எனப் பாரதியார் பாடுவது உளங்கொளத்தக்கது.

புதுக்கவிதை

அயல்மொழி மோகத்தில் இன்று நிலைதடுமாறும் தமிழர்நிலை அதிகரித்துள்ளது. கவிஞர் காசி ஆனந்தனின்,

தமிழே ! உயிரே ! வணக்கம் !

தாய்பிள்ளை உறவம்மா

உனக்கும் எனக்கும் !

அமிழ்தே ! நீ இல்லை என்றால்

அத்தனையும் வாழ்வில்

கசக்கும் ! புளிக்கும் !

எனவரும் கவிதை, மொழிப்பற்றுக்குத் தக்கதொரு சான்றாகும்.

ஆ.நாட்டுப்பற்று

மரபுக்கவிதை

தாய்நாடு, தாய்க்குச் சமமானது.

பெற்ற தாயும் பிறந்தபொன் னாடும்

நற்றவ வானினும் நனிசிறந் தனவே

என்பார் பாரதியார். நாட்டு விடுதலைக்காகத் தம் உடல், பொருள், ஆவி ஆகியவற்றைத் தியாகம் செய்த நாட்டுப்பற்றாளர்கள் பற்பலர்.

எந்தையும் தாயும் மகிழ்ந்துகு லாவி

இருந்ததும் இந்நாடே – அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே – அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம்வ ளர்ந்து

சிறந்ததும் இந்நாடே – இதை

வந்தனை கூறி மனதில்இ ருத்திஎன்

வாயுற வாழ்த்தேனோ – இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ

(குலாவி = சேர்ந்து; வந்தனை = வணக்கம்)

என்னும் பாரதியாரின் பாடல் நாட்டு வணக்கமாகத் திகழ்ந்து வீறுணர்வு அளிக்கின்றது.

புதுக்கவிதை

நாட்டுக்கு வணக்கம் செலுத்துவது ஒரு வகை என்றால், நாட்டுமக்களின் பிரச்சனைகளை எண்ணிப் பார்ப்பது மற்றொரு வகை எனலாம். இசை என்னும் தலைப்பில் மேத்தா எழுதியுள்ள புதுக்கவிதை அவ்வகையானது. அது வருமாறு :

ஜனகணமன பாடலை

நான் நேசிக்கிறேன்

எப்போது இதை

இன்னும் அதிகமாய்

நேசிப்பேன் தெரியுமா?

எப்போது

இந்தியா

தன் பிரச்சினைத்

துயரங்களுக்கெல்லாம்

‘ஜனகணமன’ பாடுகிறதோ

அப்போதுதான் இதை

அதிகமாய் நேசிப்பேன்

‘ஜனகணமன’ பாடுதலாவது பிரச்சினைகளை முடித்து வைத்தல் – முடிவில் பாடுதல் என்னும் பொருளில்  இங்குக் கையாளப்படுகின்றது. நாட்டு வளத்தைப் போலவே,  நாட்டுமக்களின் வாழ்வும் இன்றியமையாதது அல்லவா?

5.3.3 பெண்ணியம் மரபுக்கவிதை

ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் சமுதாயம்; உலகம். ஆனால் ஆண், பெண்ணை அடிமைப்படுத்தி வந்துள்ள நிலைமை காலங்காலமாக நம் சமுதாயத்தில் இருந்து வந்துள்ளது. பெண்கள் அறிவில் குறைந்தவர்களாகவும், போகப் பொருள்களாகவும் கல்வி பெறத் தகுதியற்றவர்களாகவும் கருதப்பட்டு வந்துள்ளனர். இந்நிலை பாரதியார் காலந்தொட்டுத்தான் மாறியது. விழிப்புணர்வு வந்தது; பெண்ணுரிமை பேசப்படலானது; மகளிர் மதிக்கப்படலாயினர்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டும் அறிவினில் ஆணுக்கிங் கேபெண்

இளைப்பில்லை காண்என்று கும்மியடி

என்னும் பாரதியார் பாடலையே தக்கதொரு முன்னோடியாகக் கொள்ளலாம்.

புதுக்கவிதை

பெண்களும் தங்கள் பிரச்சனைகளை எடுத்துக்கூறப் பயன்படும் வடிவமாகப் புதுக்கவிதை உள்ளது. ஆண்கள், பெண்களுக்காகக் காலந்தோறும் குரல் கொடுத்து வரும் வரிசையில், இன்று பெண்களும் வந்து நிற்கத் தொடங்கியுள்ளனர்.

என் ஆதித்தாயின்

முதுகில்பட்ட திருக்கைச் சவுக்கடி

நான்காணும் ஒவ்வொரு

முகத்திலும்

தழும்பாய், தேமலாய்

படர்ந்து கிடக்கிறது

எனவரும் பெண்கவிஞரின் கவிதை, ‘பெண்கள் எந்தப்  பதவியில் இருந்தாலும் இன்னும் ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டு முன்னேறியதாகத் தெரியவில்லை’ என்பதைப் புலப்படுத்துகின்றது.

5.3.4 பொதுவுடைமை மரபுக்கவிதை

பொருள் உள்ளவர், பொருளில்லாதவர் என்னும் பொருளாதார ஏற்றத்தாழ்வு மாறவேண்டும். உழைப்பவர்க்குத் தக்க ஊதியம் வாய்த்தல் வேண்டும்.

நடவு செய்த தோழர் கூலி

நால ணாவை ஏற்பதும்

உடலு ழைப்பி லாத செல்வர்

உலகை யாண்டு லாவலும்

கடவு ளாணை என்று ரைத்த

கயவர் கூட்ட மீதிலே

கடவுள் என்ற கட்ட றுத்துத்

தொழிலு ளாரை ஏவுவோம்

எனவரும் பாரதிதாசனாரின் பாடல், ‘எல்லார்க்கும் எல்லாமென்று இருப்பதான இடம்’ நோக்கி இவ்வையத்தைச் செலுத்தவல்லதாகும்.

புதுக்கவிதை

நாட்டினைப் பரமபதச் சோபானப் படமாகவும், நாட்டில் நிலவும் சிக்கல்களைப் பாம்பாகவும் உருவகித்துச் சமுதாய மாற்றத்திற்குத் தடையாகும் ஆற்றல்களை அழித்தால்தான் பரமபதத்தை உருவாக்க முடியும் என்கிறார் சிற்பி.

நடுங்கி நடுங்கித்

தாயக் கட்டைகள்

உருட்டிக் காத்திருந்தால்

பரமபதத்தை ஒருநாளும்நீர்

அடைந்திட மாட்டீர்

அதனால்

நாகங்கள் அழிக்கும்

யாகங்கள் தொடங்கினோம்

கொடிய சர்ப்பயாகம்

என்பது அக்கவிதையாகும்.

5.3.5 அரசியல் மரபுக்கவிதை

அன்பும், அருளும், அறிவும், நிர்வாகத் திறமையும் உடையவர்களால் அரசு செலுத்தப்படும் பொழுது நாடு சிறக்கின்றது.  மனுநீதிச் சோழனின் ஆட்சிச் சிறப்பைக் கூறும் சேக்கிழார்,

மாநிலம்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலை

தானதனுக்கு இடையூறு தன்னால்தன் பரிசனத்தால்

ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்

ஆனபயம் ஐந்தும்தீர்த்து அறம்காப்பான் அல்லனோ?

(பெரிய புராணம்)

என அவன்தன் கூற்றிலமைத்துக் கூறுவார். இது முடியாட்சி, குடியாட்சி என்னும் இரண்டிற்கும் பொருந்தும்.

புதுக்கவிதை

அரசியல் குறித்து உடன்பாட்டில் மரபுக்கவிதை உரைக்க, எதிர்மறைநிலையில் அறிவுறுத்துகின்றது புதுக்கவிதை.

அந்நியர் எங்களைச்

சுரண்டிய போது

ஆவேசப்பட்டோம்

இப்போது

சொந்த தேசத்தார்

சுரண்டுகிறபோது

சும்மாயிருக்கின்றோம்

காரணம்

சொந்தமல்லவோ சுரண்டுகிறது     (காந்தியும் கவிஞனும்)

என்கிறார் மேத்தா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே மக்களைச் சுரண்டுதல் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

5.3.6 வறுமை மரபுக்கவிதை

வறுமை என்பது உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றன் தேவைக்கே தவிக்கும் நிலையைக் குறிப்பது எனப் பொதுவாகப் பொருள் கொள்ளலாம். பாணன் ஒருவனின் மனைவி, குடும்ப வறுமையால் உணவுக்கு வழியின்றிக் குப்பையில் தோன்றிய வேளைக்கீரையைப் பறித்து வந்து வேகவைக்கின்றாள். அதனுடன் சேர்ப்பதற்கான உப்பு வாங்கவும் பொருளில்லை. இதில் பங்குக்கு உறவினர்க் கூட்டம் வேறு. ஊராரின் பரிகசிப்புக்குப் பயந்து கதவைச் சாத்திக் கொண்டு உண்கின்றாள். நல்லியக்கோடனிடம் பரிசுபெறச் செல்லும் பாணன் குடும்பநிலை இது என்கிறார் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.

வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த

குப்பை வேளை உப்பிலி வெந்ததை

மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து

இரும்பே ரொக்கலொடு ஒருங்குடன் மிசையும்

அழிபசி வருத்தம்

(கிணைமகள் = பாடினி; வள்உகிர் = கூரிய நகம்; மடவோர் = அறிவிலிகள்; கடை = கதவு; ஒக்கல் = உறவினர்; மிசைதல் = உண்ணுதல்)

என்பன அவர்தம் சிறுபாணாற்றுப்படை அடிகள்.

புதுக்கவிதை

அரசு, மக்களின் பசியைப் போக்க முயலாமல் சட்டம் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை அப்துல் ரகுமானின் கவிதை உணர்த்துகின்றது.

சுதந்திர தினவிழாவில்

‘ஜனகணமன’

பாடிக் கொண்டிருந்தார்கள்

நான்

பசியால் சுருண்டு

படுத்துக் கொண்டிருந்தேன்

எழுந்து நிற்க

முடியவில்லை

தேசியகீதத்தை அவமதித்ததாகச்

சிறையில் அடைத்துவிட்டார்கள்

என்பது அக்கவிதை.

5.3.7 காதல் மரபுக்கவிதை

காதல் தொன்றுதொட்டு வரும் சிறந்ததோர் இன்றியமையாத உணர்வாகும்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரல்

கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே !

என்னும் குறுந்தொகைப் பாடலில் நிலம், வானம், கடல் ஆகியவற்றினும் பெரிதாகக் காதல் சுட்டப் பெறுகின்றது. நட்பு என்பது இங்குக் காதலைச் சுட்டிற்று. குறிஞ்சிப்பூ  கிடைத்தற்கு அரிதாகலின், இக்காதலுணர்வின் கிடைத்தற்கரிய சிறப்புத் தோன்ற உவமையாக்கப்பட்டது.

புதுக்கவிதை

காதலின் மென்மை குறித்து அப்துல் ரகுமான்,

இரவில்

புல்லின் மீது

ரகசியமாக உருவாகும்

பனித்துளி போன்றது

காதல்

என்கிறார். புதுக்கவிதையாளர்களுள் காதலைப் பற்றிப் பாடாதார் யாரும் இல்லை என்று கூறுமளவுக்கு யாவரும் காதலைப் பாடியுள்ளனர்.

5.3.8 தன்னம்பிக்கை மரபுக்கவிதை

வாழ்க்கையில் எந்நிலையிலும் சோர்ந்து போகக் கூடாது. தடைகள் பல வரினும் போராடி வென்று மேலேற வேண்டும். ‘இதுதான் நம் தலைவிதி’ என்று சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொள்ளலாகாது.

தேடிச் சோறுநிதம் தின்று – பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பல செயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்

கூற்றுக் கிரைஎனப்பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போலே – நான்

வீழ்வேன் என்றுநினைத் தாயோ?

எனச் சக்தியிடமே முறையிடுகின்றார் பாரதியார்.

புதுக்கவிதை

தளராத உள்ளத்தோடு துணிந்து செல்ல வழிகாட்டும் புதுக்கவிதைகள் பல வந்துகொண்டிருக்கின்றன.

நம்பிக்கையை

நெஞ்சில் இருத்தி

நடந்து பாருங்கள்

வசந்தம்

கைகோர்த்துக்

கூட வரும்

என்பது க.வை. பழனிச்சாமி என்பவரின் கவிதை.

5.3.9 இயற்கை மரபுக்கவிதை

இயற்கையைக் கண்டு அதில் மனத்தைப் பறிகொடுக்காதவர்கள் கவிஞர்களாகவே இருத்தல் இயலாது. மயிலைக் கண்டு மனம் மகிழ்ந்த பாரதிதாசனார், மயிலை விளித்துப் பாடுகின்றார்.

அழகிய மயிலே ! அழகிய மயிலே !

கடிமலர் வண்டு நெடிது பாடத்

தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்

அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்

தாடு கின்றாய், அழகிய மயிலே !

ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்

மரகத உருக்கின் வண்ணத் தடாகம்

ஆனஉன் மெல்லுடல், ஆடல் உன்உயிர்

இவைகள் என்னை எடுத்துப் போயின

(புளகித்தல் = சிலிர்த்தல்)

இவ்வாறு மயிலின் ஆடலில் மனம் பறிகொடுத்த பாடலாக இஃது அமைகின்றது.

புதுக்கவிதை

மரங்களைக் குறித்து அமைந்த மேத்தாவின் கவிதை வருமாறு :

நாங்கள்

காற்று மன்னவன்

கால்நடை யாத்திரையைக்

கண்டு முரசறையும்

கட்டியங்காரர்கள் ;

தரையில் நடக்கப்

பிரியப்படாத போது

காற்று எங்கள்

தலைகளின் மீதே

நடந்து செல்கிறது

இவ்வாறாகப் பல்வேறு பாடுபொருள்கள் மரபுக் கவிதையிலும் புதுக்கவிதையிலும் அமைகின்றன.

5.4 உத்திகள்

கொள்வோன் கொள்வகை அறிந்து, சொல்ல வரும் கருத்தையும் படைப்போன் பெற வேண்டிய உணர்ச்சியையும் கருத்தில் கொண்டு பாடலியற்றும் முறைகளே உத்திகள் எனப்படும்.

மரபுக்கவிதைகளில் காலங்காலமாகப் பொருள்கோள் முறையும், அணியிலக்கணங்களும் சிறந்த உத்திகளாகப் பயன்படுத்தப் பெற்று வந்துள்ளன.

புதுக்கவிதைகளில் பொருள்கோள் வகைகள் இடம் பெறுவதில்லை. அணியிலக்கணக் கூறுகள் பலவற்றைக் காண முடிகின்றது. பொருளை நேரடியாக அணுகுதல், தேவையற்ற ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் இருத்தல், கடினமான யாப்பு முறைகளை விட்டொழித்து இசையின் எளிமையைப் பின்பற்றுதல் ஆகியன புதுக்கவிதைக்கான சிறந்த உத்திகள் என்பர்.

இருவகைக் கவிதைகளையும் ஒப்பிடும் நிலையில் உவமை, உருவகம், முரண், அங்கதம், சிலேடை, பிறிதுமொழிதல், தற்குறிப்பேற்றம், தொன்மம், உரையாடற்பாங்கு, இருண்மை ஆகியவற்றின் அடிப்படையில் இங்குச் சிந்திப்போம்.

5.4.1 உவமை, உருவகம், படிமம் உவமை

மரபுக்கவிதை

தெரிந்த பொருளைக் கொண்டு, தெரியாத பொருளைப் புரியவைப்பதற்காக உவமை தோன்றியது. பின்னர் அணிநயத்தின் பொருட்டும் பயன்படுத்தப்படலானது. அணிகளுக்கெல்லாம் தாயாக விளங்குவது உவமையணியே ஆகும். உவமவியலை மட்டும் தொல்காப்பியர் படைத்துள்ளமையும் இதனை உணர்த்தும்.

நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்

நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் ; – பூக்குழலாய் !

நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்

புல்லினும் திண்மைநிலை போம்                 (நன்னெறி)

எனவரும் சிவப்பிரகாசரின் பாடலை, பிரிந்து சேர்ந்த நட்பின் உறுதிக்குலைவுக்கு, நெல்லின் உமி பிரிந்து சேர்தல் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

புதுக்கவிதை

புதுக்கவிதைகளிலும் உவமைக்கென்று தனியிடம் உண்டு. ‘கோடை மேகம் சேர்த்து வைத்திருக்கும் மழைத்துளி, ஒரு கருமி, பஞ்சத்தில் காக்கும் பணப்பையின் காசுகள் போன்றது’ என்கிறார் வைரமுத்து.

ஓர் உலோபி

பஞ்சத்தில் காக்கும்

பணப்பையைப் போல்

கோடைமேகம்

என்னும் அக்கவிதையில் கோடைகால மேகமாவது மழையைச் சிந்திவிடுகிறது. கருமி தன் காசுகளைத் தருவதேயில்லை என்னும் கருத்தும் புலனாகின்றது.

உருவகம்

மரபுக்கவிதை

உவமையும் பொருளும் ஏதோ ஒரு பகுதி மட்டும் ஒப்புடையனவல்ல; முழுமையும் ஒன்றானவை என்பதாக அமைவது உருவகம் ஆகும். உவமையினும் செறிவும் நெருக்கமும் உடையது உருவகம். ‘சிவபெருமான், வேதமாகிய உணவை வெறுத்து, தேவார மூவர்தம் திருப்பாடல் ஆகிய உணவுக்கு உழலும் செவியுடையவன்’ என்கிறார் சிவப்பிரகாசர்.

வேத உணவு வெறுத்துப் புகழ்மூவர்

ஓதுதமிழ் ஊணுக்கு உழல்செவியான்    (திருவெங்கை உலா)

என வரும் கண்ணியில் இக்கருத்து இடம்பெறுகின்றது.

புதுக்கவிதை

புதுக்கவிதைகளிலும் உருவகங்கள் இடம்பெறக் காண்கிறோம். ரோஜாவைப் பாத்திகட்டி, நட்டு, நீர்பாய்ச்சி மலர வைத்தாலும், மலரைப் பறிக்கும்போது வளர்த்தவரையே முள்ளால் கீறி வடுப்படுத்துவதும் உண்டு. தொழிலாளர்களின் நிலைமையை ரோஜாவோடு உருவகப்படுத்துகின்றார் இன்குலாப்.

தொழிற்சாலைப் பாத்திகளில்

வியர்வைநீர் ஊற்றி

இயந்திர ரோஜாக்களை

மலரவைத்தோம்

இருந்தும்

வறுமை முட்கள்

கீறிய வடுக்களே

பாடுபட்டதற்குக் கிடைத்த

பரிசுப் புத்தகங்கள்

என்பதில்,

(1) தொழிற்சாலை – பாத்தி

(2) வியர்வை – நீர்

(3) இயந்திரம் – ரோஜா

(4) வறுமை – முள்

(5) வடுக்கள் – பரிசு நூல்கள்

என உருவகம் அமைகின்றது.

புதுக்கவிதையில் படிமம் என்பதாக உருவக வடிவம் செறிவாக அமைதலைக் காணமுடிகின்றது.

படிமம்

உணர்வும் அறிவும் இணைந்து உருவாக்கும் மனக்காட்சியே படிமம் ஆகும். ‘புலன் உணர்வுகளோடும் மன உணர்வுகளோடும் தொடர்புகொண்ட காட்சிப்  பொருள், கருத்துப் பொருள் ஆகியவற்றின் மனஉருக் காட்சி நிலையே படிமம்’ என்பார் சி.சு.செல்லப்பா.

காலக் கிழவி

கண்ணுறங்கப் போகுமுன்

தன்

பொக்கைவாய் கழுவிக்

கழற்றிவைத்த

பல்செட்டோ?               (வாலி)

எனப் பிறைநிலவு குறித்து வரும் கவிதை இவ்வகையினது.

5.4.2 முரண் மரபுக்கவிதை

சொல்லாலோ, பொருளாலோ, சொற்பொருளாலோ முரண்பட அமைவது முரண் எனப்படும். இதனைத் தொடை  வகையுள் ஒன்றாக யாப்பிலக்கணம் கூறும், அணிவகையுள் ஒன்றாக அணியிலக்கணம் கூறும். ‘கடல், குளிர்ந்த சந்திரனின் கதிர்கண்டு பொங்கும்; வெப்பமான சூரியனின் கதிர்கண்டால் பொங்காது; அதுபோல உலகினர் இன்சொல் பேசுவோரைக் கண்டால் மனமகிழ்வர்; வன்சொல் பேசுவோரைக் கண்டால் மனமகிழார்’ என்கிறார் சிவப்பிரகாசர்.

இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்

வன்சொலால் என்றும் மகிழாதே; – பொன்செய்

அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் ; தண்என்

கதிர்வரவால் பொங்கும் கடல்    (நன்னெறி)

என்னும் பாடலில் இன்சொல் x வன்சொல், பொங்காது x பொங்கும் என முரண் சொற்களும் பொருள்களும் அமைந்துள்ளமையைக் காணலாம்.

புதுக்கவிதை

புதுக்கவிதைகளிலும் முரண் உத்தி அமைந்து, கவிதைக்குப் பெருமை சேர்க்கின்றது.

படித்திருந்தாலாவது

பரவாயில்லை என்று

பாமரப்பெண் சிந்திக்க,

படிக்காமலிருந்தாலாவது

பரவாயில்லை என்று

படித்தபெண் சிந்திக்க,

பெண்கள் இங்கே தவிப்புத் தீவுகள்

என்னும் பொன்மணி வைரமுத்துவின் கவிதையில், படித்திருந்தால் x படிக்காமலிருந்தால், பாமரப் பெண் x படித்த பெண் என முரண்பாடுகள் அமையக் காண்கிறோம். ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்னும் பழமொழிச் சாயலினது இது.

5.4.3 அங்கதம் மரபுக்கவிதை

அங்கதம் என்பது நகைச்சுவையும், புலமை நுட்பமும், திறனாய்வு நோக்கும் கொண்ட ஓர் இலக்கிய உத்தி. இது மக்கட்  சமுதாய மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. தீங்கையும்,  அறிவின்மையையும் கண்டனம் செய்வது; மனிதகுலக் குற்றம் கண்டு சினம்கொண்டு சிரிப்பது. தொல்காப்பியரும் அங்கதம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்

பொருட்புறத் ததுவே குறிப்புமொழி என்ப

என்பது தொல்காப்பியம்.

ஒளவையார், தொண்டைமானின் படைக்கலக் கொட்டிலில் புதியனவாகவும், அதியமானின் படைக்கலக் கொட்டிலில் வடிவம் சிதைந்து பழையனவாகவும் படைக்கலன்கள் இருந்தனவாகத் தூது சென்ற இடத்தில் தொண்டைமானிடம் தெரிவிக்கிறார்.

இவ்வே

பீலி யணிந்து மாலை சூட்டிக்

கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்யணிந்து,

கடியுடை வியல்நக ரவ்வே; அவ்வே,

பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து

கொற்றுறைக் குற்றில மாதோ ! . . .

எனவரும் அப்புறநானூற்றுப் பாடல், ‘அதியமான் பல போர்கள் கண்ட திறமுடையவன், தொண்டைமானாகிய நீ போர்களைக் காணாதவன், அவனை நீ வெல்வது அரிது’ என்பதான பொருளை அங்கதமாகக் கொண்டிருக்கின்றது.

புதுக்கவிதை

அங்கதம் புதுக்கவிதையில் சிறப்புறப் பயன்படுத்தப் பெறுகின்றது. ஈரோடு தமிழன்பன், அரசியல்வாதிகள் மனிதநேயமின்றி இருத்தலைக் குறித்துக் கூறும் கவிதை இத்தகையது.

எங்கள் ஊரில்

ஒருவர் ஊராட்சி உறுப்பினரானார்

ஒன்றியத் தலைவரானார்

சட்டமன்ற

உறுப்பினரானார்

அமைச்சரானார்

அயல்நாட்டுத் தூதரானார்

இறுதிவரை ஒருமுறைகூட

மனிதராகாமலே

மரணமானார்

என்பது அக்கவிதை.

5.4.4 சிலேடை மரபுக்கவிதை

ஒருவகைச் சொற்றொடர், பலவகைப் பொருள்களைத் தருவதாக அமைவது சிலேடை ஆகும். காளமேகப் புலவர் சிலேடை பாடுவதில் சிறந்து விளங்குகின்றார். அவர் பாடிய பாம்புக்கும் எள்ளுக்குமான சிலேடை வருமாறு :

ஆடிக் குடத்தடையும் ; ஆடும்போ தேஇரையும் ;

மூடித் திறக்கின் முகம்காட்டும் ; – ஓடிமண்டை

பற்றின் பரபரென்னும் பாரில்பிண் ணாக்குமுண்டாம்

உற்றிடுபாம்பு எள்ளெனவே ஓது

இப்பாடலில்,

(1) குடத்தடைதல் – பாம்புக் கூடை ; எண்ணெய்க்குடம்

(2) இரைதல் – ‘உஸ்’ என்னும் ஓசை ; செக்கு ஓசை

(3) முகம் காட்டல் – பாம்பு முகம் ; பார்ப்பவர் முகம்

(4) மண்டை பற்றல்- விடம் தலைக்கேறல் ; தலையில் பரவுதல்

(5) பிண்ணாக்கு – பிளவுபட்ட நாக்கு ; எள்ளுப் பிண்ணாக்கு (பிள்+நாக்கு)

என்பனவாகப் பொருள் அமையும்.

புதுக்கவிதை

சிலேடைகள் புதுக்கவிதையில் அரிதாகவே காணப்படுகின்றன.

என்னை

எவரெஸ்டாகப் பார்க்கும்

இந்த ஊரின் பார்வையில்

என் வீழ்ச்சி

மிகப் பெரிய வீழ்ச்சியே

எனினும்

இது இயல்பானது

தடுக்க முடியாதது

. . . . . . என் வீழ்ச்சி

நீர்வீழ்ச்சியே

என்னும் மீராவின் கவிதையில் ‘நீர் வீழ்ச்சி – நீர் மேலிருந்து கீழ்விழுதல்; அருவி’ எனப் பொருளமைந்தது. வீழ்தல் நீருக்கு இயல்பானது தானே !

5.4.5 பிறிதுமொழிதல் மரபுக்கவிதை

சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல், வேறொரு கருத்தைக் கொண்டு பெறவைத்தல் பிறிதுமொழிதல் எனப்படும்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் ; அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்

என்னும் திருக்குறளில் பிறிதுமொழிதல் இடம்பெற்றுள்ளது. குறளின் பொருள், ‘மிக மென்மையானவையே ஆயினும் மயிலிறகுகளை அளவுக்கதிகமாய் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்பதாகும். எளியவர்களே யாயினும் பல பகைவர்கள் ஏற்பட்டால், ஆற்றல் படைத்த ஒருவரும் அவர்களால் தோல்வியுற நேரலாம்’ என்னும் கருத்தை விளக்க வந்தது இக்குறட்பா.

புதுக்கவிதை

புதுக்கவிதையில் ‘குறியீடு’ எனக் குறிக்கப் பெறுவது இது எனலாம். குறியீடு என்பது ஒரு பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருளைப் பதிலியாகக் காட்டுவதாகும். காட்டப்படும் பொருள் ஒன்றாகவும், உணர்த்தப்படும் பொருள் ஒன்றாகவும் அமைந்து மறைமுகமாகப் படைப்பாளர், வாசகருக்கு உணர்த்த விரும்பிய பொருளினை உணர்த்தவல்லது குறியீடு.

அஞ்சு விரலும்

ஒன்றுபோலிராது

என்பது உண்மைதான்

அதற்காக நடுவிரல் மட்டும்

நாலடி வளர்ந்தால்

நறுக்காமலிருக்க முடியுமா?

என்னும் மு.கு ஜகந்நாத ராஜாவின் கவிதையில், நடுவிரல்- களையப்பட வேண்டிய தீமையைச் சுட்டி நிற்கின்றது.

5.4.6 தற்குறிப்பேற்றம் மரபுக்கவிதை

இயல்பாக உள்ள பொருளின்மீதோ, இயல்பாக இயங்கும் பொருளின்மீதோ கவிஞன் தானாக ஒரு கருத்தை ஏற்றிக் கூறுதல் தற்குறிப்பேற்றம் ஆகும்.

நட்சத்திரங்களைக் குறித்துச் சிவப்பிரகாசர் பாடும் பாடல் பின்வருமாறு:

கடல்முரசம் ஆர்ப்பக் கதிர்க்கயிற்றால் ஏறி

அடைமதி விண்கழைநின்று ஆடக் – கொடைமருவும்

எங்கள் சிவஞான ஏந்தல் இறைத்தமணி

தங்கியவே தாரகைகள் தாம்

இப்பாடல், கடலாகிய முரசு முழங்க, கதிராகிய கயிற்றில் ஏறி, வானமாகிய மூங்கிலில் நின்று ஆடக்கூடிய சந்திரனாகிய கூத்தாடிக்குச் சிவஞானி (சிவப்பிரகாசரின் குருநாதர்) வாரி வழங்கிய பொற்காசுகளே நட்சத்திரங்களாகும் என்பதாகப் பொருள் தருகின்றது.

புதுக்கவிதை

கடிகார முட்களைக் கொண்டு, சமுதாய ஏற்றத்தாழ்வைச் சுட்டுகின்றார் மு.மேத்தா.

ஏ, கடிகாரமே

பேச்சை நிறுத்தாத

பெரிய மனிதனே !

குதிக்கும் உன்னுடைய

கால்களில் ஒன்று ஏன்

குட்டையாய் இருக்கிறது?

காலங்கள்தோறும்

இருந்துவருகிற

ஏற்றத் தாழ்வை

எடுத்துக் காட்டவோ?

என்னும் அக்கவிதையில் சிறிய முள், பெரிய முள் பேதம் – சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வைச் சுட்ட அமைந்ததாகக் கவிஞர் தம் கருத்தை ஏற்றியுரைக்கின்றார்.

5.4.7 தொன்மம் மரபுக்கவிதை

புராண இதிகாச வரலாறுகளை உடன்பாட்டு நிலையிலோ எதிர்மறைநிலையிலோ, உள்ளவாறோ மாற்றியோ எடுத்துரைப்பது தொன்மம் ஆகும்.

மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனி(து) ஏனையவர்

பேசுற்ற இன்சொல் பிறிதென்க – ஈசற்கு

நல்லோன் எறிசிலையோ, நன்னுதால் ! ஒண்கருப்பு

வில்லோன் மலரோ விருப்பு (நன்னெறி)

என்னும் பாடலில், சாக்கிய நாயனார் சிவலிங்கத்தின்மீது வழிபடும் நோக்கத்தோடு கல் எறிந்தது விருப்பத்திற்குரியதாயிற்று. ‘மன்மதன் மலரம்புகளை வீசினான் எனினும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க வீசப்பட்டதாதலின் வெறுப்புக்குரியதாயிற்று’ எனப் புராண வரலாற்று நிகழ்வுகள் சுட்டப் பெறுகின்றன.

புதுக்கவிதை

தொன்மக் குறியீடு என்பதாக இது புதுக்கவிதையில் சுட்டப்பெறுகின்றது. இன்றைய அரசியல் உலகில் சுயநலம் கருதி அடிக்கடி கட்சித்தாவல் செய்யும் அரசியல்வாதிகளின் செயல்களை,

தாயங்களில் – சகுனி

வெற்றிச் சரிதத்தின் அத்தியாயங்கள்

வளர்க்க வளர்க்க . . .

மாயக் கண்ணன்

கட்சி மாறுகிறான்

எனப் பாரதக்கதையை மாற்றியமைத்துள்ளார் ஈரோடு தமிழன்பன்.

5.4.8 உரையாடற்பாங்கு மரபுக்கவிதை

உரைநடையில் அமையும் நாடகம், நாவல் ஆகியவற்றில் மட்டுமன்றிச் செய்யுளிலும் உரைநடை அமைவதுண்டு. கலித்தொகை, சிலப்பதிகார வழக்குரை காதை, காப்பியங்கள், தனிப் பாடல்கள் எனப் பலவற்றில் உரையாடற்பாங்கு மரபுக்கவிதையில் அமைந்துள்ளமையைக் காண்கிறோம்.

சிவப்பிரகாசர், தம் இளவல்களுக்கு மணம் செய்வித்து வாழ்த்தியபோது பாடிய தனிப்பாடல் வருமாறு :

அரனவ னிடத்திலே ஐங்கரன் வந்துதான்

‘ஐயஎன் செவியை மிகவும்

ஆறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும்

அத்தன்வே லவனை நோக்கி

விரைவுடன் வினவவே ‘அண்ணன்என் சென்னியில்

விளங்குகண் எண்ணினன்’ என

வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ அப்படி

விகடம் ஏன்செய் தாய்என

‘மருவும்என் கைந்நீள முழம்அளந் தான்’என்ன

மயிலவன் நகைத்து நிற்க

மலையரையன் உதவவரும் உமையவளை நோக்கி நின்

மைந்தரைப் பாராய் எனக்

கருதரிய கடலாடை உலகுபல அண்டம்

கருப்பமாப் பெற்ற கன்னி

கணபதியை அருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்

களிப்புடன் உமைக்காக்கவே

இதில் விநாயகனுக்கும் முருகனுக்குமிடையிலான விளையாட்டுச் சண்டையும் முறையீடுகளும் இடம் பெற்றுள்ளன.

புதுக்கவிதை

அரசியல்வாதியிடம் நிருபர் பேட்டியெடுப்பதாய் ஈரோடு தமிழன்பன் கவிதை வழங்குகிறார்.

‘தாங்கள் தவறாது

படிக்கும் பத்திரிகை எது?’

‘படிப்பது வழக்கமில்லை

பத்திரிகைகளுக்குச் செய்தி

வழங்குவது வழக்கம்’

‘தாங்கள் அரசியல்துறவு

பூணுவதாக

எண்ணம் உண்டா?’

‘இல்லை. . .

அரசியல்வாதிகளை

அநாதைகளாக்கமாட்டேன் நான்’

5.4.9 இருண்மை மரபுக்கவிதை

இருண்மை (Obscurity) என்பது, கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையில் கருத்துப் பரிவர்த்தனை முழுமையாக நடைபெறாத நிலையைச் சுட்டுவதாகும். இதற்கு வாசகனும் காரணம்; கவிஞனின் சோதனை முயற்சியும் காரணம். புரியாததுபோல் இருந்து படிக்கப் படிக்கப் புரியத் தொடங்கும் படிமுறைப் புரிதலை உடையது இது.

மரபுக்கவிதையின் பொருள், அகராதி கொண்டு புரிந்து கொள்ளத்தக்கதாக உள்ளதே தவிரப் புரியாமல் இல்லை. எனினும், குழூஉக்குறியாகப் பல்வேறு சொற்களைச் சித்தர்கள் கலைச் சொற்களாகக் கொண்டு பாடி வைத்துள்ளனர்.

புதுக்கவிதை

பொருளைச் சொல்ல விரும்பாமல், உணர்த்த விரும்பும் இருண்மை உத்தி புதுக்கவிதைகளிலேயே மிகுதியும் கையாளப் பெறுகிறது. மாடர்ன் ஆர்ட் போன்றது இது எனலாம்.

நிஜம் நிஜத்தை நிஜமாக

நிஜமாக நிஜம் நிஜத்தை

நிஜத்தை நிஜமாக நிஜம்

நிஜமும் நிஜமும் நிஜமாக

நிஜமோ நிஜமே நிஜம்

நிஜம் நிஜம் நிஜம்.

என்னும் ஆத்மாநாமின் கவிதை இத்தகையது.

இவ்வாறு உத்திமுறைகள் இருவகைக் கவிதைகளிலும் சிறந்து விளங்கக் காண்கிறோம்.

5.5 தொகுப்புரை

தமிழில் உருவான மரபுக்கவிதை, புதுக்கவிதை ஆகியவற்றின் தோற்றம் பெயர்க்காரணம், நோக்கம், படைப்பின் பரப்பு, வளர்ச்சி  ஆகியன குறித்து இப்பாடத்தில் அறிந்துகொண்டீர்கள். இருவகைக்  கவிதைகளின் உருவம், உள்ளடக்கம், உத்தி ஆகியன குறித்தும் அறிந்து கொண்டீர்கள். மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும்  இடையிலான வேறுபாடுகளை அறிந்து படைக்க இச்செய்திகள்  உதவியாக அமைவன.

பாடம் - 6

காலந்தோறும் கவிதையின் நோக்கும் போக்கும்

6.0 பாட முன்னுரை

ஒருவருக்கொருவர் கருத்தைப் பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ற ஊடகமாக விளங்குவது மொழி. மொழியின் பயன்பாடு பேச்சு  வழக்கில்தான் மிகுதி எனினும், அதன் தரம் எழுத்து வழக்கைக் கொண்டே மதிப்பிடப் பெறுகின்றது. மொழியின் எழுத்து வழக்காகிய இலக்கியம், சிறந்த நுண்கலை வடிவமாகும். சமுதாயத்தில் தோன்றிச் சமுதாயத்தைப் பிரதிபலித்துச் சமுதாயத்தில் வாழும் இயல்புடையதாகிய இலக்கியம், சமுதாயத்தையே மாற்றக் கூடிய ஆற்றலையும் கொண்டதாகும்.

ஒரு மொழியில் காணும் இலக்கியங்களின் உருவம், உள்ளடக்கம், உத்திமுறை ஆகியவை காலந்தோறும் சமுதாய மாற்றத்திற்கேற்ப மாறுகின்றன. தமிழ்மொழியில் செய்யுள் வடிவம் தொடக்க காலத்திலிருந்தே செங்கோலோச்சி வந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டு முதல் உரைநடையின் செல்வாக்கைக் காணமுடிகின்றது. காதல், வீரம், நீதி, பக்தி என்னும் பொதுப் பொருண்மைகளிலிருந்தும் வேறுபட்டு, இருபதாம் நூற்றாண்டு முதலாகப் பெண்கள், அடித்தட்டு மக்கள், அன்றாட வாழ்வியல் சிக்கல்கள் சார்ந்த பொருண்மைகள் இடம்பெறலாயின. தன்மையணி, உவமையணி எனத் தொடங்கி, மடக்கணி, சிலேடையணி எனச் சொல்லணிகளின் செல்வாக்கு மிகுந்து, இன்று மேனாட்டு இலக்கியத் தாக்கத்தால் படிமம், குறியீடு போன்ற உத்திமுறைகள் வரையிலாகத் தொடர்ந்து பல வெளிப்பாட்டு முறைகளைக் காண முடிகின்றது.

‘காலந்தோறும் கவிதையின் நோக்கும் போக்கும்’ என்பதான நிலையில், தமிழிலக்கியங்களைச் சங்க இலக்கியம், காப்பியங்கள், இடைக்கால இலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் என நான்கு வகைகளில் பாகுபடுத்தி, இப்பாடத்தில் விரிவாக அறிந்து கொள்வோம்.

6.1 சங்க இலக்கியம்

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் பதினெட்டும் சங்க இலக்கியம் எனப்படும். பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பாக அமைவனவாகும். இவற்றுடன் திருக்குறள் முதலான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஒரு சேர வைத்து இங்குச் சிந்திப்போம்.

6.1.1 உருவம் சங்க இலக்கியங்களாகிய மேற்கணக்கு நூல்கள் பதினெட்டனுள், பரிபாடல் என்னும் நூல் பரிபாட்டினாலும், கலித்தொகை என்பது கலிப்பாவினாலும் ஆனவை. ஏனைய பதினாறு நூல்களும் ஆசிரியப்பாவால் ஆனவை. திருக்குறள் முதலான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் வெண்பா யாப்பினால் ஆனவையாகும். அவற்றுள் முதுமொழிக்காஞ்சி மட்டும் குறள்வெண் செந்துறை என்னும் குறள் வெண்பாவின் பாவினத்தால் ஆனதாகும்.

பரிபாடல் என்பது பரிந்து செல்லும் ஓசையுடையது; காமம், பக்தி இவற்றைப் பொருளாகக் கொண்டது; 25 முதல் 400  அடிவரை அமைவது; இதற்கெனத் தனியே இசைவகுப்பதும் உண்டு. எனவே, தமிழிசையின் பழமைக்குச் சான்றாகத் திகழ்வது இது எனலாம்.

ஆசிரியப்பா

உரைநடைக்கு நெருக்கமானது; யாவரும் விரைந்து எழுதுதற்கு ஏற்றது; இதன் குறைந்த அடியளவு மூன்று ஆகும். மிகுதியான அடியளவிற்கு எல்லையில்லை என்பர். எனினும், 782 அடிகளில் அமைந்ததாக மதுரைக்காஞ்சி கிடைத்துள்ளது.

அடிவரையறை கொண்டே அகநூல்கள் பாகுபடுத்தித் தொகுக்கப் பட்டுள்ளமையைக் காண்கிறோம்.

ஐங்குறுநூறு – 3-6 அடிகள்

குறுந்தொகை – 4-8 அடிகள்

நற்றிணை – 9-12 அடிகள்

அகநானூறு – 13-31 அடிகள்

பத்துப்பாட்டு என்பது 100க்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாடல்களின் தொகுப்பாக அமைகின்றது.

புறநானூறு 4 முதல் 40 அடி வரையிலான பாடல்களைக் கொண்டுள்ளது.

மூன்றடிப் பாடலுக்கோர் சான்று :

யானெவன் செய்கோ பாண ஆனாது

மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்

புல்லென் றனஎன் புரிவளைத் தோளே

(ஐங்குறுநூறு-133)

(செய்கோ = செய்வேன்; ஆனாது = தாங்கமாட்டாமல்; மெல்லம்புலம்பன் = நெய்தல் நிலத் தலைவன்; புல்லென்றன = பொலிவிழந்தன)

நேரிசை ஆசிரியப்பாக்களே பெரும்பான்மையினவாக உள்ளன. கனிச்சீர் இரண்டுடைய வஞ்சியடிகள் கலந்து வந்த ஆசிரியப்பாடலாகப் பட்டினப்பாலை உள்ளது. இதனால் இதனை வஞ்சி நெடும்பாட்டு என்கின்றனர்.

வெண்பா

பிற தளை விரவாத இயல்புடையது. குறைந்த அடியளவு 2. கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறள் குறள் வெண்பாவால் ஆனது. ஆசாரக்கோவையானது குறள் வெண்பா (2 அடி), சிந்தியல் வெண்பா (3 அடி), இன்னிசை வெண்பா (4 அடி), நேரிசை வெண்பா (4 அடி), பஃறொடை வெண்பா (4-12 அடி) எனப் பல வெண்பா யாப்புகளாலும் அமைந்துள்ளது. முதுமொழிக் காஞ்சி ‘குறள் வெண்செந்துறை’ என்னும் குறள் வெண்பா இனத்தால் ஆனது. ஏனைய நூல்கள் அனைத்தும் நேரிசை வெண்பா மற்றும் இன்னிசை வெண்பாக்களால் ஆனவையாகும்.

பத்துப் பாடல்களையுடையது ஓர் அதிகாரம் என வகுத்துக் கொண்ட அமைப்பினையும் திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களில் காணமுடிகின்றது.

குறட்பாவிற்கு ஒரு சான்று :

எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்

எண்ணுவம் என்ப(து) இழுக்கு

குறள் வெண்செந்துறைக்கு ஒரு சான்று :

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை

(சிறந்தன்று = சிறந்தது)

கலிப்பா

அகப்பொருள் பாடச் சிறந்தது; நாடக வழக்கில் அமையக் கூடியது. தரவு, ஒருபொருள்மேல் மூன்றடுக்கிய தாழிசை,  தனிச்சொல், சுரிதகம் என்னும் அமைப்பினவாகிய கலிப்பாக்களே கலித்தொகையில் மிகுதியும் இடம்பெற்றுள்ளன. வெண்டளை பிறழாது வருவதாகிய கலிவெண்பாவினால் ஆன பாடல்களும் இதன்கண் உள்ளன.

தாழிசைக்கு ஓர் சான்று :

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை

மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்

நினையுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்(கு) அனையளே                                                                                                                            (கலித்தொகை-9)

6.1.2 உள்ளடக்கம் அகம், புறம், அறம் ஆகிய மூவகைப் பொருண்மைகளைக் கொண்டனவாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன.

அகம்

தலைவன் தலைவியருக்கிடையிலான அன்பும் சந்திப்பும் குறித்துப் ‘பெயர்சுட்டப் பெறாமல்’ எடுத்துரைப்பது அகப்பொருளாகும்.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என நான்கு இயல்களில் அகப்பாடல் இயற்றுதலுக்கான துறை, கூற்று போன்றன எடுத்துரைக்கப் பெறுகின்றன.

குறிஞ்சித் திணை – இருத்தல் +புணர்தல் நிமித்தம்

முல்லைத் திணை – ஊடுதல் +இருத்தல் நிமித்தம்

மருதத் திணை – இரங்கல் +ஊடுதல் நிமித்தம்

நெய்தல் திணை – பிரிதல் +இரங்கல் நிமித்தம்

பாலைத் திணை     - புணர்தல் +பிரிதல் நிமித்தம்

எனத் திணைகளுக்குப் பொருண்மை வகுக்கப்பட்டன. இவை உரிப்பொருள் எனப்படும். இவற்றிற்குரிய நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும். இவை சார்ந்த தெய்வம், மக்கள், ஊர், நீர், பூ, மரம், பறவை, விலங்கு, யாழ், பண், தொழில் போன்றன கருப்பொருள் எனப்படும். அவ்வவற்றிற்குரிய முப்பொருள்களும் அமையுமாறு பாடுதலே முறையாகும்.

குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை என எட்டுத்தொகை நூல்களுள் ஐந்து நூல்கள் அகப்பொருளன. பத்துப்பாட்டுள் குறிஞ்சிப்பாட்டு, முல்லைப் பாட்டு, பட்டினப்பாலை ஆகிய மூன்றும் அகப்பாடல்கள் ஆகும். பதினெண் கீழ்க்கணக்குள் ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது என்னும் ஆறும் அகம் பற்றியவாகும்.

காதல், திருமணம், இல்லறம் என்பனவாக இவற்றின் போக்கு அமையும். இவற்றில் தோழியின் பங்கு அதிகமாக அமையும். காதலித்த தலைவனையே மணக்க வேண்டும் என்னும் தமிழ்ப் பண்டிபாட்டிற்கேற்பத் தலைவி, தோழி, செவிலி, நற்றாய், தந்தை என ஒருவர் ஒருவர்க்கு முறையே காதல் நிகழ்வு முறைப்படி எடுத்துரைக்கப் பெறும். இஃது அறத்தொடு நிற்றல் எனப்படும். அம்முயற்சி தோல்வியுறுமாயின், தலைவி தான் விரும்பிய தலைவனுடன் அயலூருக்குப் பயணம் மேற்கொண்டு பிறகு மணம் கொள்வாள். இவ்வகையான நிகழ்வு உடன்போக்கு எனப்படும்.

களவுக் காலத்தும், கற்புக் காலத்தும் தலைவனின் பிரிவைத் தாங்காமல் தலைவி வருந்துதல், தோழி தேற்றுதல், அருகில் உள்ள ஊரவர் அலர்தூற்றுதல் ஆகியனவும் அகப்பொருளில் இன்றியமையா இடம்பெறும்.

புலவர்கள் தம்மைப் புரக்கும் அரசர்தம் பெருமைகளை உவமையாக அமைத்து அகப்பொருளைப் பாடுவது உண்டு.

கபிலர் குறிஞ்சித் திணையைச் சுவைபடப் பாடுவதில் வல்லவராக இருந்துள்ளார். ஏனையோருள் ஒரு திணையைப் பாடியோரும் உளர்; பல திணைகளைப் பாடியோரும் உளர்.

நாணமிழந்து காதலைப் புலப்படுத்தும் நிலையினவாகிய கைக்கிளை, பெருந்திணைப் பகுதிகளும் கலித்தொகையுள் இடம்பெற்றுள்ளன.

1. காதலின் அளவு

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே, சாரல்

கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

(குறுந்தொகை-3)

என காதலின் அளவு நிலத்தின் அகலத்திற்கும், வானின் உயரத்திற்கும், கடலின் ஆழத்திற்குமாகக் கூறப்படுள்ளது.

2. தலைவியின் அன்பு

இம்மை மாறி மறுமை ஆயினும்

நீஆகி யர்எம் கணவனை

யான்ஆ கியர்நின் நெஞ்சுநேர் பவளே

(குறுந்தொகை-49)

எனப் பரத்தமை மேற்கொண்ட தலைவனிடத்தும், மறுபிறப்பிலாவது நின் நெஞ்சம் நிறைபவளாகத் தான் ஆகவேண்டும் என வேண்டுகின்றாள் தலைவி.

3. பிறந்த வீடும் புகுந்த வீடும்

அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பை

தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு

உவலைக் கூவல் கீழ

மான்உண்டு எஞ்சிய கலுழி நீரே

(ஐங்குறுநூறு-203)

(படப்பை = தோட்டம்; உவலை = சருகு; கூவல் = நீர்க்குழி; கலுழி = கலங்கல்)

4. ஆண்மான் அன்பு

சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென்று எண்ணிப்

பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமாத்தன்

கள்ளத்தின் ஊச்சும் சுரம்என்பர் காதலர்

உள்ளம் படர்ந்த நெறி

(ஐந்திணை ஐம்பது, 38)

(சிறுநீரை = சிறிதளவாகிய நீரை; கலைமா = ஆண்மான்; கள்ளம் = பொய்; ஊச்சும் = உறிஞ்சும்; சுரம் = பாலை நில வழி)

புறம்

வீரம், போர், வெற்றி, ஈகை, புகழ், ஒழுக்கம், தூது எனப் பல பொருண்மைகளில், வீட்டிற்கு வெளியிலான வாழ்க்கையை, சமுதாயப் பயன்பாட்டினை உரைப்பதாக அமைவது புறப்பொருளாகும்.

புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய இரண்டும் புறப்பொருள் நூல்களாகும். பரிபாடல் அகமும் புறமும் கலந்ததாக உள்ளது. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை ஆகிய ஏழும் புறப்பாடல்களாகும். பதினெண் கீழ்க்கணக்கில் களவழி நாற்பது மட்டும் புறப்பொருள் நூலாகும்.

தொல்காப்பியப் பொருளதிகாரம், போரிடல் தொடர்பாகப் புறத்திணையியல் எனத் தனி இயல் வகுத்து விவரிக்கின்றது.

வெட்சி – பகைவர் மண் கைக்கொள்ளப் போர் தொடுத்தல்

வஞ்சி – மதில் வளைத்துப் போரிடல்

உழிஞை – நேர்நின்று பொருதல்

தும்பை – வென்றவர் பெருமை கூறல்

வாகை – நிலையாமை

காஞ்சி – பாடப்படும் ஆண்மகனது ஒழுக்கம்

பாடாண்     - ஆநிரை கவர்தல்

எனப் புறத்திணைகள் ஏழாக உரைக்கப்படுகின்றன.

அரசியல், நட்பு, பொருளாதாரம், வாணிகம், நாகரிகம், பண்பாடு எனப் பல்வேறு செய்திகளை உள்ளது உள்ளபடி கூறும் வரலாற்றுப் பெட்டகமாகப் புறநானூறு, பதிற்றுப்பத்துப் போன்ற புற நூல்கள் திகழ்கின்றன.

1. நீர்ப்பாதுகாப்பு

நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோர் அம்ம இவண்தட் டோரே

தள்ளா தோர்இவண் தள்ளா தோரே

(புறம்-18)

(தட்டோர் = நீர்நிலை தோண்டினோர்; தள்ளாதோர் = நீர்நிலை தோண்டாதோர்)

நீர்வளம் நிலைபெறச் செய்தவன் தன்புகழை நிலைநிறுத்தியவன். அதை நிலை நிறுத்தாதவன் தன்புகழை நிலை நிறுத்தாதவன் என்பது பாடலின் பொருளாகும்.

2. செல்வப் பயன்பாடு

அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்

ஆற்றும் பெருமநின் செல்வம்

ஆற்றா மைநின் போற்றா மையே

(புறம்-28)

செல்வத்தால் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் அமையும்; அதுகொண்டு அவற்றைத் துய்க்காமை உன்னை நீயே பாதுகாவாமையாகும் என்பது இதன் பொருள்.

3. ஈதல் இயல்பு

எத்துணை யாயினும் ஈத்தல் நன்றென

மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண் மையே

(புறம் – 141)

எனப் பரணர் பேகனைப் பாராட்டுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ”என்ன நேர்ந்தாலும் பிறருக்கு வழங்கவேண்டும்  என்பது அவன் கொள்கை; அந்தக் கொடை மறுமையைக் கருத்தில் கொண்டது அன்று; பிறரது வறுமையையே கருத்தில் கொண்டதாகும்” என்பது இதன் பொருள்.

4. யானையை வீழ்த்தல்

கவளங்கொள் யானையின் கைகள் துணிக்கப்

பவளம் சொரிதரு பைபோல் – திவள்ஒளிய

ஒண்செங் குருதி உமிழும் புனல்நாடன்

கொங்கரை அட்ட களத்து

(களவழி நாற்பது, 14)

(திவள் ஒளிய = விளங்கும் ஒளியுடைய; புனல்நாடன் = சோழன்; கொங்கர் = சேரர்; அட்ட = அழித்த)

அறம்

செய்யத்தக்கன, செய்யத் தகாதன என எண்ணம், சொல், செயல்களின் நிலைகளைப் பாகுபடுத்துவது அறம் ஆகும்.

சங்க இலக்கியங்களிலே அறத்தின் கூறுகளைக் காணமுடிகின்றது.

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே     (புறம், 189)

(துய்ப்போம் = அனுபவிப்போம்; தப்புந = பயன்படாது நீங்குவன)

என்பது புறநானூறு.

கலித்தொகையுள்,

ஆற்றுதல் என்பதொன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்

அன்பெனப் படுவது பேதையார் சொல்நோன்றல். . .

(அலந்தவர்= நொந்தவர்; பாடு = இயல்பு; பேதையார் = முட்டாள்கள்; நோன்றல் = பொறுத்தல்)

எனவரும் பகுதியும் அறத்தின் திறத்தது.

திருக்குறள், நாலடியார்,  பழமொழி நானூறு, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், நான்மணிக்கடிகை,  சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஆசாரக் கோவை, முதுமொழிக்காஞ்சி என்னும் பதினொரு நூல்களும் பதினெண் கீழ்க்கணக்கில் காணும் நீதி நூல்களாகும்.

1. தவம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்(கு) உரு

(குறள்-261)

(நோன்றல் = பொறுத்தல்; உறுகண் = துன்பம்)

எனத் தவத்திற்குப் புதுவிளக்கம் தரப் பெறுகின்றது.

2. ஒழுக்கம்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

(குறள் – 131)

(விழுப்பம் = மேன்மை)

என ஒழுக்கம் உயிரினும் மேலானதாகக் கருதப்படுகின்றது.

3. கல்வி

கல்வி கரையில ; கற்பவர் நாள்சில ;

மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்

ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீரொழியப்

பால்உண் குருகின் தெரிந்து

(நாலடியார், 35)

எனத் தேர்ந்து கற்றல் வற்புறுத்தப் பெறுகின்றது.

4. நட்பிற்குத் தக்கோர்

தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் ;

வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் ;

கோளாளன் என்பான் மறவாதான் ; இம்மூவர்க்

கேளாக வாழ்தல் இனிது

(திரிகடுகம், 12)

(தாளாளன் = முயற்சியுடையோன்; கோளாளன் = மாணவன்; கேள் = நட்பு)

5. துயிலெழுதல்

நாளும் வாழ்வில் கடைப்பிடிக்கத்தக்க பழக்கவழக்க ஒழுக்க முறைகளையும் ஆசாரக் கோவை எடுத்துரைக்கின்றது.

வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்

நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின்

தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே

முந்தையோர் கண்ட முறை

(ஆசாரக்கோவை – 41)

6.1.3 உத்திமுறை சங்க இலக்கியங்களில் உரிப்பொருளைப் பாடும் பகுதி குறைவானதாகவே இருக்கும். ஏனைய முதற்பொருள், கருப்பொருள் சார்ந்த வருணனைகள் மிகுதியாக இருக்கும். ஏனெனில், உரிப்பொருளைப் பாடுவதை விடவும், இயற்கையைக் கண்டு மகிழ்தலும், பிறரும் உணர்ந்து மகிழ அக்காட்சியைச் சொற்சித்திரமாக்குதலுமே புலவர்தம் நோக்கமாக இருந்துள்ளது. அடைமொழியாக அமைக்கும் நிலை, உவமை காட்டும் நிலை என ஏனையவற்றின் வருணனைகளே மிகுந்திருக்கும். இவற்றில் எதுகை, மோனை முதலியன இயல்பாக உள்ளன. செந்தொடைப் (தொடையற்ற) பகுதிகளே அதிகமாக உள்ளன.

உள்ளதை உள்ளவாறு கூறும் தன்மையணி, அணிகளுக்கெல்லாம் தாயாகிய உவமையணி ஆகியவற்றுடன் குறிப்புப்பொருளின் செல்வாக்கையும் சங்க இலக்கியத்தில் காணமுடிகின்றது.

தன்மையணி

எவ்வகைப் பொருளின் மெய்வகை இயல்பையும் உள்ளவாறு உரைப்பது தன்மையணியாகும். இஃது இயல்பு நவிற்சி அணி எனவும் கூறப்பெறும் (நவிற்சி = கூறுதல்).

தலைவி, தலைவனின் பிரிவைத் தாங்காது வருந்துவாள் எனத் தோழி வருந்த, அவள் அவர் வரும்வரை யான் ஆற்றியிருப்பேன் என்பதாக வரும் துறையின் பாடல் ஒன்று வருமாறு :

ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன

கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ

முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து

எருவின்நுண் தாது குடைவன ஆடி

இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்

புன்கண் மாலையும் புலம்பும்

இன்றுகொல் தோழிஅவர் சென்ற நாட்டே

(குறுந்தொகை-46)

(சாம்பல்= வாடுதல்; சிறகர் = சிறகு; குரீஇ = குருவி; உணங்கல் = காயவைத்தது)

மாலைப்பொழுது குறித்துக் கூறவரும் புலவர், குருவியின் உருவம், உணவுண்ணல், விளையாடல், தங்குதல் என இயற்கையோடு இயைந்த நிலையில் எடுத்துரைக்கின்றார்.

உவமையணி

அணிகளுக்கெல்லாம் தலைமையானது; தாய்போல்வது. தெரிந்தது கொண்டு தெரியாததை விளக்க வருவது உவமையணி. பிற்காலத்தில், தொடர்புடையனவற்றை அழகுபட எடுத்துரைப்பதாய் அமையத் தொடங்கியது.

1. நாரையின் கால்

யாரும் இல்லைத் தானே களவன்

தான்அது பொய்ப்பின் யான்எவன் செய்கோ?

தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே

(குறுந்தொகை-25)

(களவன் = இடத்திருந்தோன்; கால = காலுடையன; ஆரல்= மீன்வகை; மணந்த ஞான்று = கூடிய பொழுது)

இதில் நாரையின் காலுக்குத் தினைத்தாள் உவமை கூறப்பட்டுள்ளது. வண்ணம், வடிவம், அளவு ஆகிய மூன்று நிலைகளிலும் ஒப்புச் சொல்லத்தக்க உவமை இது.

2. பண்பிலார்

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண் பில்லா தவர்

(குறள் -997)

என்பதில் அறிவுக் கூர்மைக்கு அரமும், பண்பிலாமைக்கு மரமும் உவமையாகக்  கூறப்பட்டுள்ளன. இவ்விரண்டும் பண்புவமைகள்.

3. நண்பராகத் தகாதோரும் தக்காரும்

யானை அனையார் நண்புஒரீஇ, நாயனையார்

கேண்மை தழீஇக் கொளல்வேண்டும் ; யானை

அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்

மெய்யதா வால்குழைக்கும் நாய்

(நாலடியார், 213)

(ஒரீஇ = நீக்கி; கேண்மை = நட்பு)

என நட்பில் பிழை பொறுத்தல் அடிப்படையில் யானையும் நாயுமாகிய உவமைகள் இங்குக் கூறப்பட்டன.

குறிப்புப் பொருள்

தலைவனுக்கு அறிவுரை கூறும் சூழல் குறிஞ்சி, மருதம் முதலான திணைகளில் நேர்கின்றபோது, நேரடியாகக் கூற இயலாமல் குறிப்பாக அமைத்துக் கூறும் நிலை தலைவிக்கும் தோழிக்கும் நேரிடுகின்றது. பிறர்க்கும் இந்நிலை அமைவதுண்டு.

குறிப்புப் பொருளை உள்ளுறை உவமை, இறைச்சி என இரண்டாகப் பிரிப்பர்.

உள்ளுறை உவமம் என்பது கூறுவதையும் குறிப்புப் பொருளையும் இணையிணையாக அமையுமாறு கூறப்பெறுவது. பரத்தை, தலைவனைக் குறித்துக் கூறும்பொழுது,

கழனி மாத்து விளைந்துகு தீம்பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்

(குறுந்தொகை – 8)

(மா = மாமரம்; கதூஉம் = வாயால் பற்றும்)

என்கிறாள்.

கழனி  – தலைவி

மாமரம்  – தலைவன்

மாம்பழம்  – பரத்தையர் சேரி

பழனம்  – பரத்தை

வாளை     - தலைவனின் இல்லம்

மாம்பழத்தைத் தவறவிட்டது மாமரத்தின் தவறேயன்றி, பற்றிக்கொண்ட வாளைமீனின் தவறாகாது என்னும் கருத்து, தலைவியேயன்றிப் பரத்தை குற்றமுடையவள் ஆகாள் என்பதைக் குறிப்பால் உணர்த்துகின்றது.

இறைச்சிப் பொருளாவது, உள்ளுறை போல நேரடிப் பொருத்தக் கருத்துகள் இன்றித் தொனிப்பொருளில் கருப்பொருள் சார்ந்ததாக வரும்.

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட செவ்வியை ஆகுமதி

யார்அஃது அறிந்திசி னோரே? சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்குஇவள்

உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே!

(குறுந்தொகை-18)

என்பதில், கிளையில் கனிந்த பலா பிறரால் கவரப்படலாம்; கனிந்து கீழே விழுந்தால் சிதறலாம்; மேலும் வேலியற்றது என வரும் கருத்துகள் தலைவி பிறருக்கு மணம் நேர்தல் போன்ற நிலைகளைச் சுட்டுவதாக உள்ளது.

6.2 காப்பிய இலக்கியம்

தனிப்பாடல்களின் தொகுப்பாக அமையாமல், நீண்ட கதையைத் தொடர்நிலைச் செய்யுளில் அமைத்துக் கூறுவது காப்பியம் ஆகும். காப்பியத்தில் கிளைக் கதைகள் பல இடம் பெறுவதுண்டு.

ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், பிற காப்பியங்கள் எனத் தமிழ்க் காப்பியங்களை வகைப்படுத்தலாம்.

ஐம்பெருங்காப்பியங்கள்

1. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்

2. மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்

3. சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்

4. வளையாபதி – பெயர் தெரியவில்லை

5. குண்டலகேசி – நாதகுத்தனார்

இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன.

ஐஞ்சிறு காப்பியங்கள்

1. சூளாமணி – தோலாமொழித் தேவர்

2. யசோதர காவியம் – வெண்ணாவலூருடையார் வேள்

3. உதயணகுமார காவியம் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை

4. நீலகேசி – ஆசிரியர் பெயர் தெரியவில்லை

5. நாககுமார காவியம் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை

பிற காப்பியங்கள்

1. பெருங்கதை – கொங்குவேளிர்

2. கம்பராமாயணம் – கம்பர்

3. வில்லிபாரதம் – வில்லிபுத்தூராழ்வார்

4. பெரியபுராணம் – சேக்கிழார்

5. கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

6. தேம்பாவணி – வீரமாமுனிவர்

7. சீறாப்புராணம் – உமறுப்புலவர்

8. பிரபுலிங்க லீலை – சிவப்பிரகாசர்

இவையேயன்றித் திருவிளையாடற்புராணம் முதலான தலபுராணங்களும், பிற்காலத்தில் இயற்றப்பட்ட இயேசு காவியம் போன்றனவும் காப்பியம் என்னும் இலக்கியப் பகுப்பில் அடங்குவனவாகும்.

இக்காப்பியங்களின் உருவம், உள்ளடக்கம், உத்திமுறை ஆகியன குறித்து இனிக் காணலாம்.

6.2.1 உருவம் சிலப்பதிகாரம் ஆசிரியப்பா, வெண்பா, இடையிடை உரைநடை, விருத்தம் எனக் கலவையான யாப்புடையது.

மணிமேகலை, பெருங்கதை ஆகியன ஆசிரியப்பா யாப்பின. ஏனைய காப்பியங்கள் யாவும் விருத்தப்பாக்களால் ஆனவை.

ஆசிரியப்பா

சிலம்பு 3 காண்டங்களும், 30 காதைகளும் கொண்டது.

புகார்க் காண்டம் – 10 காதை

மதுரைக் காண்டம் – 13 காதை

வஞ்சிக் காண்டம் – 7 காதை

என்னும் அமைப்புடையது. ஆசிரியப்பாக்கள் ‘என்’ என்னும் ஈற்றசை பெற்று முடிகின்றன.

விருத்தம்

கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் (6, 7, 8 சீர்கள்) கலிவிருத்தம் ஆகியவற்றால் பெரும்பான்மையான காப்பியங்கள் யாக்கப் பெற்றுள்ளன. ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களையுடைய அடிகள் நான்கு கொண்டது ஆசிரிய விருத்தம் ஆகும்.

ஆசிரிய விருத்தம்- 6 சீர்கள்

தண்டலை மயில்கள் ஆடத்

தாமரை விளக்கம் தாங்கக்

கொண்டல்கள் முழவின் ஏங்கக்

குவளைகண் விழித்து நோக்கத்

தெண்டிரை எழினி காட்டத்

தேம்பிழி மகர யாழின்

வண்டுகள் இனிது பாட

மருதம்வீற் றிருக்கும் மாதோ

(கம்பராமாயணம்)

(கொண்டல் = மேகம்; விளக்கம் = விளக்கு; தெண்டிரை = அலை; எழினி = திரை)

மயில் – விறலி

தாமரை – விளக்கு

மேகம் – முழவு

குவளை – கண்

அலை – திரை

வண்டு – யாழ்

மருதநிலம் – அரசன்

என்பதாக இப்பாடல் அமைகிறது.

கலிவிருத்தம்

நான்கு சீர்களையுடையதாகிய அளவடிகள் நான்கு கொண்டது கலிவிருத்தமாகும்.

ஆனை துரப்ப அரவுஉறை ஆழ்குழி

நால்நவில் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்

தேனின் அழிதுளி நக்கும் திறத்தது

மானுடர் இன்பம் மதித்தனை கொள்நீ                (சூளாமணி)

(துரப்ப = துரத்த; நால் = தொங்கும்; நவில் = விழுது; நாலும் = தொங்கும்)

யானை துரத்த அஞ்சி ஓடி வந்தவன் பாம்பு உள்ள ஒரு குழியில் சறுக்கி விழ, தற்செயலாக ஆலம் விழுது ஒன்றைப் பற்றியவனாக உள்ளான்; அதுவும் அறுந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தேனடையிலிருந்து ஒழுகும் தேன்துளியைச் சுவைக்கின்றான் என வாழ்வின் இன்பத்தை இப்பாடல் எடுத்துரைக்கின்றது.

6.2.2 உள்ளடக்கம் ‘பாவிகம் என்பது காப்பியப் பண்பே’ என, காவியம் முழுவதும் பரவிக் கிடப்பதும் மையப்பொருளாவதுமாகிய பொருண்மையைப் பாவிக அணியாக எடுத்துரைக்கும், தண்டியலங்காரம். காப்பியத்தில் கிளைக்கதைகள் பல வருதல் போன்றவற்றால் ஒன்றற்கு மேற்பட்ட நீதிக் கருத்துகள் பல இடம் பெறுதல் இயல்பேயாகும்.

அறம் பிறழாமை, மண்ணாசையின் தீங்கினையுரைத்தல், சமயம் சார்ந்த கருத்துகள் என மூவகைகளில் காப்பிய உள்ளடக்கத்தினைக் காணலாம்.

அறம் பிறழாமை

சிலம்பில் மூவகைக் கோட்பாடுகள் காணப்படுகின்றன.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதூஉம்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

சூழ்வினைச் சிலம்பு காரண மாக

நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்

என்பது பாயிரப் பகுதி.

1. அறம் பிறழாமை

யானோ அரசன் யானே கள்வன்

மன்பதை காக்கும் தென்புலம் காவல்

என்முதல் பிழைத்தது கெடுகஎன் ஆயுள்

எனப் பாண்டியன் உயிர் நீக்கின்றான்.

2. பத்தினியின் பெருமை

இவளோ

கொங்கச் செல்வி குடமலை யாட்டி

தென்தமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து

ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய

திருமா மணி

என்பது கவுந்தியடிகள் கூற்று.

3. ஊழ்வினை

கோவலன் கொலை செய்யப் பெற்றமையைக் கூறும் பகுதி.

கல்லாக் களிமகன் ஒருவன் கையில்

வெள்வாள் எறிந்தனன் விலங்கூடு அறுத்தது

காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்

கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்

(களிமகன் = குடிகாரன்; விலங்கு = குறுக்காக; வளைஇய = வளைவதற்காக; உருத்து = உருவெடுத்து; என் = அசைநிலை)

மண்ணாசை கூடாது

வில்லிபாரதம் மண்ணாசை கூடாது என்பதை வலியுறுத்தக் காண்கிறோம். பாண்டவர்களிடமிருந்து சூதாடி நாடு கவர்ந்த கௌரவர்கள், பாண்டவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முடித்து மீண்டும் வந்து நாடு கேட்டபோது, சிறிதளவும் நிலமும் தரமறுத்து, அதனால் ஏற்பட்ட போரில் உறவினர் சூழ அழிந்தொழிந்தனர்.

சமயம்

சிலப்பதிகாரம் சமயப் பொதுநோக்குடையதாகத் திகழ்கின்றது. மணிமேகலை, பௌத்த சமய மேம்பாட்டை உணர்த்துவதற்கென்றே எழுதப் பெற்றது. சீவக சிந்தாமணி  சமணமே உயர்ந்தது என நிறுவும் நோக்குடையது. வளையாபதி சமண நூல். குண்டலகேசி பௌத்தக் காப்பியம்.

ஐஞ்சிறு காப்பியங்கள் சமணம் சார்ந்தவையே என்பது குறிப்பிடத் தக்கது.

பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் என்பவை சைவ சமயம் சார்ந்தவை. இவை முறையே சிவபெருமானின் வலக்கண், நெற்றிக்கண், இடக்கண் எனப் போற்றப் பெறுகின்றன.

கம்பராமாயணமும் வில்லிபாரதமும் வைணவம் சார்ந்தவை.

தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இயேசு காவியம் ஆகியன கிறித்துவ சமயத்தன.

சீறாப்புராணம் இசுலாமியக் காப்பியமாகும்.

தலபுராணங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றன் பெருமையுரைப்பன. இவையும் காப்பியம் எனத்தகும் தன்மையன. இவை எண்ணற்றன.

இருபதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டனவாகிய புலவர் குழந்தையின் இராவண காவியம், கவிஞர் முடியரசனின் பூங்கொடி ஆகியன முறையே தமிழினம், தமிழ்மொழி ஆகியவற்றின் சிறப்புரைக்க வந்தனவாகும்.

6.2.3 உத்திமுறை விரிவாகச் சொல்வதுடன், விளங்குமாறு சொல்வதும் காப்பியத்தின் இன்றியமையா இயல்புகள் ஆதலின் பல்வேறு உத்திமுறைகளைப் பயன்படுத்த வேண்டியது காப்பியங்களின் தேவையாகின்றது.

தன்மையணி

துயரம் ஒன்று நேரும் என உணர்த்தும் பகுதி, உள்ளவாறு வருணிக்கப்படுகிறது.

குடப்பால் உறையா, குவிஇமில் ஏற்றின்

மடக்கணீர் சோரும் – வருவதொன்று உண்டு ;

உறிநறு வெண்ணெய் உருகா, உருகும்

மறிதெறித் தாடா – வருவதொன்று உண்டு ;

நான்முலை ஆயம் நடுங்குபு நின்றிரங்கும்.

மான்மணி வீழும் – வருவதொன்று உண்டு             (சிலப்பதிகாரம்)

(ஏறு = எருது; சோரும் = வழியும்; மறி = ஆடு; நான் (ஞால்)  = தொங்கும்)

உவமையணி

உவவனம் என்னும் மலர்வனம், ஓவியம் தீட்டிய போர்வையைப் போர்த்தியதுபோல் உள்ளது என்கிறது மணிமேகலை.

வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்

சித்திரச் செய்கை படாம்போர்த் ததுவே

என்பது அது.

உதயகுமாரன் செலுத்திய தேரின் வேகம்,

ஓடுமழை கிழியும் மதியம் போல

மாட வீதியின் மணித்தேர்க் கடைஇ

(கடைஇ = செலுத்தி)

என உவமை கொண்டு உணர்த்தப்படுகின்றது.

தற்குறிப்பேற்றம்

மதுரையில் கண்ணகிக்கு நேரப்போகும் துயரினை அறிந்து, அதனால் தனக்குப் பெருகிய கண்ணீரைக் கோவலனும், கண்ணகியும் அறியாவாறு பூக்களாகிய ஆடையால் மறைத்துக் கொண்டது வையை ஆறு என்கிறது சிலம்பு. அப்பகுதி:

வையை என்ற பொய்யாக் குலக்கொடி

தையற்கு உறுவது தான்அறிந் தனள்போல்

புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்

கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி

(புறஞ்சேரி இறுத்த காதை)

(தையல் = கண்ணகி) என்பதாகும்.

பின்னோக்கு உத்தி

நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைவு கூர்தல் என்னும் அமைப்பில் கதை பின்னப்படும் முறை பின்னோக்கு உத்தி எனப்படும்.

கோவலன் கொலைப்படுவதற்கு முன்பாக, அவனைக் குறித்துப் புகழ்கிறான் மாடல மறையோன்.

மணிமேகலைக்குப் பெயர் சூட்டிய நாளில், பரிசுபெற வந்த முதியவர் ஒருவரை யானை தன் துதிக்கையால் பற்ற, உடனே ஓடிச்சென்று அவரை மீட்டு யானையை அடக்குகிறான் கோவலன். இதனால் ‘கருணை மறவன்’ எனப் பாராட்டப் பெறுகிறான்.

தன் குழந்தையைப் பாம்பிடமிருந்து காத்த கீரிப்பிள்ளையைத் தவறுதலாகப் புரிந்து கொண்ட பார்ப்பனி, அதனைக் கொன்றதால் தன் கணவனால் புறக்கணிக்கப்பட்டபோது, வேண்டியன செய்து அவர்களை ஒன்று சேர்க்கிறான் கோவலன். அதனால் ‘செல்லாச் செல்வன்’ எனப்படுகிறான்.

பொய்ச் சாட்சி கூறிய ஒருவனைச் சதுக்கப் பூதம் விழுங்க முற்பட்டபோது, கோவலன் அவனுக்காகத் தன் உயிரைத் தரமுனைகின்றான். அவ்வுதவி ஏற்கப் பெறாமையால் அவன் குடும்பத்தைக் காக்கின்றான். இதனால் ‘இல்லோர் செம்மல்’ எனப்படுகிறான்.

இவற்றால் கோவலன் பெருமை கூடுகிறது; கோவலன்மேல் கற்போர்க்கு இரக்கம் பிறக்கிறது.

கனவுக் குறிப்பு

காப்பியங்களில் கனவுக் குறிப்பு, முன் உணர்த்தல் உத்தியாகப் பெரும்பாலும் கையாளப் பெறுகின்றது. சிலம்பு, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் எனப் பலவற்றிலும் இதனைப் பரக்கக் காணமுடிகின்றது.

சிலப்பதிகாரத்தில், கோப்பெருந்தேவி, கோவலன், கண்ணகி ஆகிய மூவரின் கனவுகளும் சுட்டப் பெறுகின்றன. அவற்றின்படி, அடுத்தடுத்த நிகழ்வுகளும் அமைகின்றன.

கோப்பெருந்தேவி கனவில், ‘பாண்டியனின் வெண்கொற்றக்  குடையும் செங்கோலும் வீழ்கின்றன; வாயில்மணி அதிர்கிறது; எண்திசையும் அதிர்கின்றன; ஒளியை இருள் விழுங்குகிறது;  இரவில் வானவில் தோன்றுகிறது; பகலில் விண்மீன்கள் எரிந்து வீழ்கின்றன’.

கோவலன் கனவில், ஆடை கொள்ளப்பட்டு எருமைமீது அவன் ஊர்ந்து செல்கிறான்.

கண்ணகி கனவில், கோவலனும் கண்ணகியும் வேற்றூர் சென்ற நிலையில், பொய்ப்பழி தோன்றுதலும், கோவலன் தீங்குறுதலும், கண்ணகி வழக்காடுதலும், அரசனுக்கும் ஊருக்கும்  அழிவேற்படுதலும் தோன்றுகின்றன.

கனவும் ஒரு சகுனமாய் அமைகின்றது.

6.3 இடைக்கால இலக்கியம்

பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என யாவும் இடைக்கால இலக்கியம் என்னும் வகைப்பாட்டுள் அடங்குவனவாகும். இவற்றின் உருவம், உள்ளடக்கம், உத்திமுறை குறித்துக் காண்போம்.

6.3.1 உருவம் இடைக்கால இலக்கியங்களில் பா வகைகளின் செல்வாக்கைக் காண முடிகின்றது. சந்தப்பாக்களையும் இடையிடையே பார்க்க முடிகின்றது.

பத்து அல்லது பதினொரு பாடல்களையுடைய பதிக அமைப்புப் பெரும்பான்மையாக உள்ளது. அவற்றின் இருமடங்கு, மும்மடங்கு, நான்மடங்கு அமைப்பையும் காண்கிறோம். அவை ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பா வகைகளால் இயற்றப்பட்டுள்ளன.

அகம் அல்லது புறம் சார்ந்த பொருண்மைக்குள் ஒன்றை மையப்படுத்தியோ அல்லது ஒரு சிலவற்றின் கலவையாகவோ அமைக்கப்பட்டுள்ள நிலை சிற்றிலக்கிய நூல்களில் தென்படுகின்றது.

அளவில் காப்பியத்தினும் சிறுமை என்பதாலும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் பயப்பதில் முன்னிற்கும் காப்பியமாகிய பேரிலக்கியத்தினும் அவற்றுள் ஒரு கூறு குறித்தே விவரிக்கும் சிறுமை என்பதாலும் இவை சிறுமை + இலக்கியம் = சிற்றிலக்கியம் எனப்பட்டன வாகலாம்.

கலிவெண்பா

பன்னீரடிகளின் மிக்குவரும் வெண்பா வகை கலிவெண்பா எனப்படும். இரண்டிரண்டடிகளில் எதுகை, மோனை, பொருண்மை அமைந்து ‘கண்ணி’ என்னும் வகை இதனடிப்படையில் நிலவுகின்றது. இரண்டிரண்டு அரும்பு அல்லது மலர்களை அடுத்தடுத்துக் கட்டும் தலைமாலையானது கண்ணி எனப்படுமாறுபோல இவையும் இப்பெயர் பெறலாயின. இவை தனித்தனிக் கண்ணிகளாகவோ, தனிச்சொல் பெற்றுத் தொடர்ச்சியாகவோ அமைவதுண்டு. இவற்றிற்கு அதிகபட்ச அடி எல்லை குறிப்பிடப் பெறுவதில்லை.

தாயுமானவரின் பராபரக்கண்ணி, குணங்குடியாரின் நிராமயக் கண்ணி போன்றன தனித்து அமையும் கண்ணிக்குச் சான்றாவனவாகும்.

சான்று :

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே

(தாயுமானவர்)

தூது, உலா போன்றன தனிச்சொல் பெற்றுத் தொடர்ச்சியாக வரும் கலிவெண்பாக்களாகும். மதுரைச் சொக்கநாதர்மேல் பாடப்பட்ட தமிழ்விடு தூது, உமாபதி சிவாச்சாரியார் பாடிய நெஞ்சு விடு தூது, பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடிய அழகர் கிள்ளை விடு தூது, கச்சியப்ப முனிவர் இயற்றிய வண்டு விடு தூது போல்வனவும், சேரமான் பெருமாள் நாயனார் பாடிய ஆதியுலா என்னும் திருக்கயிலாய ஞானஉலா, ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா போன்றனவும் இவ்வகையின.

சான்று :

தித்திக்கும் தெள்ளமுதே தெள்ளமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோ(டு) உவந்துரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்

(தமிழ் விடு தூது)

விருத்தம்

இடைக்காலத்தில் ஆசிரிய விருத்தங்கள், கலிவிருத்தங்கள் ஆகியவற்றின் செல்வாக்கைக் காணமுடிகின்றது. பன்னிரு சீர் மற்றும் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் பிள்ளைத் தமிழ், சதகம் போன்ற நூல்வகை யாப்பாகத் திகழ்வதைக் காண்கிறோம். குமரகுருபரர் இயற்றிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ் போன்றனவும், அறப்பளீசுர சதகம், கயிலாசநாதர் சதகம் போன்றனவும் இவ்வகையின.

தேவாரப் பதிகங்கள் முதலானவற்றில் ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம் ஆகியன செல்வாக்குப் பெற்றுள்ளன.

சான்று : ஆசிரிய விருத்தம்

இரப்பவர்க் கீய வைத்தார்

ஈபவர்க் கருளும் வைத்தார்

கரப்பவர் தங்கட் கெல்லாம்

கடுநர கங்கள் வைத்தார்

பரப்புநீர்க் கங்கை தன்னைப்

படர்சடைப் பாகம் வைத்தார்

அரக்கனுக் கருளும் வைத்தார்

ஐயன்ஐ யாற னாரே !

(திருநாவுக்கரசர் தேவாரம்)

கலிவிருத்தம்

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்

எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்

ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்

மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்

(பெரியாழ்வார் திருமொழி)

கட்டளைக் கலித்துறை

ஐந்து சீரடி நான்கும் வெண்டளையும் கொண்டதாய், கருவிளங்காயால் முடிவதாய் நேரசையில் தொடங்கின் 16, நிரையசையில் தொடங்கின் 17 என ஒற்றுத்தவிர்த்த எழுத்துடையதாய் அமைவது கட்டளைக் கலித்துறையாகும்.

நாவரசர் தேவாரத்திலும் மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் கட்டளைக்கலித்துறைப் பாடல்கள் இடம்பெறுகின்றன, திருவாசகம் மற்றும் திருக்கோவையார் முதலிய கோவை நூல்கள் இவ்வகை யாப்பின. அருணகிரிநாதரின் கந்தரலங்காரம், அபிராமி அந்தாதி முதலான அந்தாதி நூல்கள் போன்றனவும் இவ்வகையினவேயாகும்.

சான்று :

தனம்தரும் கல்வி தரும்ஒரு நாளும் தளர்வறியா

மனம்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா

இனம்தரும் நல்லன எல்லாம் தரும்அன்பர் என்பவர்க்கே

கனம்தரும் பூங்குழ லாள்அபி ராமி கடைக்கண்களே !

(அபிராமி அந்தாதி)

இது நிரையில் தொடங்குதலின் அடிதோறும் 17 எழுத்துடையது.

தாழிசை

தரவைக் காட்டிலும் தாழ்ந்த ஓசையுடையது ஆதலின் தாழிசை எனப்பட்டது. கலித்தொகையின் ஓர் உறுப்பாகிய இது, பரணி முதலான நூல்களில் தனித்து ஒரு பா வகையாய் இடம் பெறலானது. எதுகையொன்றுடைய ஈரடிகளால் இயல்வது இது. ஆசிரியவிருத்தத்தின் செம்பாகம் இது எனல் தகும்.

செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி, ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி, வைத்தியநாத தேசிகரின் பாசவதைப் பரணி போன்றன இவ்வகையின.

சான்று :

பேணும் கொழுநர் பிழைகளெலாம்

பிரிந்த பொழுது நினைந்(து) அவரைக்

காணும் பொழுது மறந்திருப்பீர்

கனபொற் கபாடம் திறமினோ

(கலிங்கத்துப்பரணி – கடைதிறப்பு)

(பேணும் = விரும்பும்; கொழுநர் = கணவர்; கனம் = மேலான; பொற்கபாடம் = கதவு)

சந்தப்பா

அருணகிரிநாதரின் திருப்புகழ் போன்ற நூல்கள் சந்தப்பா நூல்களாகும்.

சான்று :

தனதனனத் தனதான

தனதனனத் தனதான

இரவுபகற் பலகாலும்

இயலிசைமுத் தமிழ்கூறித்

திரமதனைத் தெளிவாகத்

திருவருளைத் தருவாயே

பரகருணைப் பெருவாழ்வே

பரசிவதத் துவஞான

அரனருள்சற் புதல்வோனே

அருணகிரிப் பெருமானே

(திருப்புகழ்)

அருணகிரிநாதரைப் போலவே சந்தம் பாடுவதில் வல்லவராகச் சவ்வாதுப் புலவர் விளங்கியுள்ளார். பிற்காலத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திருப்புகழ் நடையில் பாப்பல புனைந்ததால், திருப்புகழ்ச் சுவாமிகள் எனப் போற்றப் பெற்றுள்ளார்.

6.3.2 உள்ளடக்கம் இடைக்கால நூல்கள் தொடக்கத்தில் அரசன் புகழ் பாடுவனவாக இருந்தன. பக்தி இலக்கியச் செல்வாக்கால் இறைவன் புகழும், நிலையாமைக் கருத்துகளும் அடுத்து வந்த காலங்களில் சிறப்பிடம் பெறலாயின.

அரசன் புகழ்

தஞ்சைவாணன்கோவை, நந்திக்கலம்பகம், குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், கலிங்கத்துப்பரணி போன்றன அரசனின் புகழை எடுத்துச்சொல்ல எழுந்த நூல்களாகும்.

கங்கா நதியும் கடாரமும் கைவரச்

சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன்

என்னும் ஒட்டக்கூத்தர் பாடிய இராசராச சோழன் உலாப் பகுதி இதற்குச் சான்றாகும்.

இறைவன் புகழ்

பன்னிருதிருமுறைகள், திவ்வியபிரபந்தம், தாயுமானவர், குமரகுருபரர், சிவப்பிரகாசர், சிவஞான முனிவர் போன்றோர்தம் படைப்புகள் யாவும் இறைவன் புகழுரைக்கும் சிறப்பினவாகும்.

சான்று :

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே

(திருநாவுக்கரசர் தேவாரம்)

நிலையாமை

இளமை, யாக்கை, செல்வம் என யாவும் சில காலம் இருந்து மறைவனவே ஆகும். இவற்றை உண்மைப் பொருளாகக் கருதிப் பற்றுவைத்தல் கூடாது. இறைவனே நிலைத்த பொருள் ஆவான். அவன்மீது அன்பு செலுத்துதலே உண்மையான நிலைத்த இன்பத்திற்கு வழிவகுக்கும் என்பது இந்நூல்களில் வற்புறுத்தப் பெறுகின்றது.

சான்று :

எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்

எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்

செத்தால்வந்(து) உதவுவார் ஒருவர் இல்லை

சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர். . .                      (திருநாவுக்கரசர் தேவாரம்)

இவையேயன்றி இறைவன், உயிர், உலகம் ஆகிய முப்பொருள்களின் இயல்பும், இவற்றிற்கிடையிலான தொடர்பும் குறித்துச் சமயவாதிகளின் சான்றும் வாதமுமாகச் சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கு தோன்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

6.3.3 உத்திமுறை இடைக்கால இலக்கியங்களில் உயர்வு நவிற்சி, சொல்லாட்சி மேலோங்கிய நிலை போன்றவற்றை மிகுதியாகக் காணமுடிகின்றது. பிற வழக்கமான அணிகளும் இடம்பெறுகின்றன.

உவமையணி

சிவப்பிரகாசர் பாடிய சோணசைல மாலையில் வரும் பாடல் ஒன்று :

கழைமொழிக் கொடியோர்க்கு ஏவல்செய்(து) உடலம்

கமர்உகும் அமிழ்தின்மங் குறாமல்

விழைவறத் துறந்தஉன் திருவடிக் கமலம்

விழைகுநர்க்கு ஏவல்செய் திலனே. .

(கழை = கரும்பு; மொழி = சொல்; கொடியோர் = பொதுமகளிர்; கமர் = வெடிப்பு; விழைவு = விருப்பம்; கமலம் = தாமரை)

கழை போலும் மொழி; வெடிப்பில் சிந்தப்பட்ட அமிழ்தம் என்பன உவமைகள் ஆகும். திருவடிக் கமலம் என்பது உருவகமாகும்.

மடக்கணி

சிவனைக் குறித்துத் திருவெங்கைக் கலம்பகத்தில் சிவப்பிரகாசர் பாடும் பகுதியிலிருந்து ஒரு சான்று :

கடலைக் கலக்கு மலைவில்லான்

உடலைக் கலக்கு மலைவில்லான்

கங்கைப் பதியன் பரையானான்

வெங்கைப் பதியன் பரையானான். . .

கடலைக் கலக்கும் (மேரு என்னும்) மலை வில்லுடையவன்; உடலைக் கடக்கும் மலைவு (குற்றம்) இல்லாதவன்;  கங்கையிலிருப்பவன், பரை (பராசக்தி)யாகத் தானே ஆனவன்;  வெங்கைப்பதியின் அன்பர்களை விட்டுப் பிரிந்தறியாதவன் என்பது பொருளாகும் (ஆனான் – பிரியாதவன்).

உயர்வு நவிற்சி அணி

ஒரு பொருளின் இயல்பைக் கற்போர் வியக்குமாறு மிகைபடக் கூறுவது இது.

திருக்கூவம் என்னும் திருத்தலத்தின் நாட்டுவளம் கூறவரும் சிவப்பிரகாசர் உயர்வு நவிற்சி அமையப் பாடும் பாடல் ஒன்று :

சேட்டுஇள வாளை தாக்கத்

தெங்கிள நீர்மார்த் தாண்டன்

பூட்டுவெம் பரித்தேர் காறும்

விசையினில் போதத் தெண்ணீர்

வேட்டு, அவண் இருந்த பாகன்

விரைவினில் பற்றி உண்ணும்

ஊட்டும் ஊழ் எங்குற் றாலும்

அனைவர்க்கும் ஊட்டி டாதோ !

(திருக்கூவப்புராணம்)

(சேட்டு = பெரிய; வாளை = மீன்; தெங்கு = தேங்காய்; மார்த்தாண்டன் = சூரியன்; காறும் = வரையில்; விசை = வேகம்; போத = செல்ல)

சிலேடையணி

காளமேகப் புலவர் சிலேடை பாடுவதில் தன்னிகரற்றவராகத் திகழ்ந்துள்ளார். இவர்தம் தனிப்பாடல்களில் ஒன்று :

பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடை

ஆடிக் குடத்தடையும்; ஆடும்போ தேஇரையும்;

மூடித் திறக்கின் முகம்காட்டும்; – ஓடிமண்டை

பற்றின் பரபரென்னும் பாரில்பிண் ணாக்குமுண்டாம்

உற்றிடுபாம் பெள்ளெனவே ஓது

சொல்                         பாம்பு                          எள்

1. ஆடி                  - படம் எடுத்து ஆடி,      - செக்கில் ஆட்டப்பட்டு

2. ஆடும்போது        - ஆடுகின்றபோது        - செக்கிலிடப்படும்போது

3. முகம்                  - தன்முகம்                  - காண்போர் முகம்

4. மண்டைபற்றல்     - விடம் பரவல்           - மண்டையில் வைக்கப்படல்

5. பிண்ணாக்கு       - பிளவுபட்ட நாக்கு      – பிண்ணாக்கு

(பிள்+நாக்கு)

இவ்வாறான பல்வேறு அணிநலன்கள் இடைக்கால நூல்களில் செல்வாக்குப் பெற்றிருந்தன.

6.4 இக்கால இலக்கியம்

பாரதியாரும் அவருக்கு அடுத்து வந்தவர்களும் தொடங்கி இக்கால இலக்கியத்தின் எல்லையை அமைத்தல் பொருந்தும்.

செய்யுள் இலக்கியமேயன்றி உரைநடை இலக்கியமும் இவ்விலக்கிய வகையில்தான் வளர்ச்சிபெறலாயிற்று.

மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஐக்கூக் கவிதை எனப் பல வகைகளில் கவிதை சிறக்கும் காலகட்டம் இது.

இவ்விலக்கியத்தின் உருவம், உள்ளடக்கம், உத்திமுறை குறித்துப் படிப்பது, இனிப் படைப்பதற்கும் உதவியாகும் என்பதை நினைவிற் கொள்வோம்.

6.4.1 உருவம் நொண்டிச் சிந்து, விருத்தம், புதுக்கவிதை, ஐக்கூ என்பனவாக இவற்றைக் காண்கிறோம்.

நொண்டிச் சிந்து

பாரதியார், பாரதிதாசன் போன்றோர் பாடல்களில் தனிச்சொல் பெற்றும், பெறாமலும் அமையும் நொண்டிச் சிந்துப் பாக்கள் எளிய சொல்லாட்சி கொண்டு இடம்பெறுவதைக் காணமுடிகின்றது.

சான்று :

நல்லதோர் வீணை செய்தே – அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி – எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,

வல்லமை தாராயோ – இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே !

சொல்லடி சிவசக்தி – நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

(பாரதியார் கவிதைகள்)

விருத்தம்

பாரதியார் கவிதைகளில் காணும் அறுசீர் விருத்தம் ஒன்று :

இதம்தரு மனையின் நீங்கி

இடர்மிகு சிறைப்பட் டாலும்

பதம்திரு இரண்டும் மாறிப்

பழிமிகுத்து இழிவுற் றாலும்

விதம்தரு கோடி இன்னல்

விளைந்தெனை அழித்திட் டாலும்

சுதந்தர தேவி நின்னைத்

தொழுதிடல் மறக்கி லேனே

(இதம் = மகிழ்ச்சி; பதம் = பதவி; திரு = செல்வம்; விதம் = வகை)

புதுக்கவிதை

சீர், அடி, தளை போன்றவற்றின் வரையறைகள் அற்றது. அதற்காக ஒடித்தெழுதும் உரைநடையெல்லாம் புதுக்கவிதையாகி விடுவதில்லை. கவிதை வீச்சு இருப்பதே புதுக்கவிதை எனப்படும்.

வரையறை இல்லாதது ஆதலின், இன்ன நடையுடையது என இதனை வகுத்துரைத்தல் அரிது. எழுதுவோரும் பல தரப்பட்டவர்களாதலின் அவரவர்க்கும் தனித்தனிப் போக்கெனப் புதுக்கவிதை அமைகின்றது.

வைரமுத்து, மு.மேத்தா, அப்துல் ரகுமான். ஈரோடு தமிழன்பன், அறிவுமதி, பழமலய், வாலி, சிற்பி, மீரா, நா.காமராசன் போன்றோர் கவிதைகள் புதுக்கவிதை படிப்போர்க்கும் படைப்போர்க்கும் மகிழ்வூட்டித் துணைபுரிவனவாகும்.

மீராவின் கவிதையொன்று வருமாறு :

பாதை முள்

படுக்கை முள்

இருக்கை முள்

வாழ்க்கை முள்

ஆன மனிதர்களைப் பார்த்துச்

சிலிர்த்துக் கொண்டது

முள்ளம்பன்றி. . .

ஓ இவர்களுக்குத் தெரியாதா

முள்ளும் ஓர்

ஆயுதம் என்று !

சிற்பியின் கவிதை, நாட்டுப்புறப்பாங்கில் அமைந்துள்ளமையையும் காண முடிகின்றது.

ஏழைப்பெண் – தலையில்

எப்போதும் பூப்பாரம்

இவளோ தகப்பனுக்கு

எப்போதும் மனப்பாரம்

நா.காமராசனின் ‘ஒப்பாரிச் சாயல்’ கவிதை ஒன்று.

எழுத்துச் சுமைக்காரர்

எங்க ஊரு தபால்காரர்

எழுத்து மங்கும் சாயங்காலம்

எமனோடு போனதென்ன?

சொல்நயம் பொருந்த எழுதப் பெறுவதும் உண்டு. அதற்கொரு சான்று :

அன்று

நஞ்சை உண்டு

சாகுபடி ஆனது !

இன்று

நஞ்சை உண்டு

சாகும்படி ஆனது !                                                (நெல்லை ஜெயந்தா)

என்பது தஞ்சை மக்களின் வாழ்நிலை தாழ்நிலையானதைச் சுட்டுகின்றது.

ஐக்கூ

மூன்று வரிகளில் நறுக்குத் தெறித்தாற்போல் அமையும் இயல்புடையது.

தீப்பெட்டியைத்

திறந்து பார்த்தால்

பிஞ்சு விரல்கள்                          (ஸ்ரீகுமாரன்)

எனக் குழந்தைத் தொழிலாளர் நிலையுரைக்கின்றது.

ஆராய்ச்சி மணி அடித்த மாடுகள்

அரண்மனைத் தட்டில்

பிரியாணி                                   (லிங்கு)

என நீதிநிலையை விமரிசிக்கின்றது ஒரு கவிதை.

அணிலே ! நகங்களை வெட்டு

பூவின் முகங்களில்

காயங்கள் -                                  (மித்ரா)

6.4.2 உள்ளடக்கம் இக்காலக் கவிதைகளில் வாழ்க்கை பேசப்படுகிறது. அன்றாடச் சிக்கல்கள் பாடுபொருளாகின்றன. அகமும் புறமும் மட்டும் பாடுவதென்றோ, கற்பனைகளில் மிதப்பதென்றோ அமையாமல் அவரவரும் தத்தம் சிக்கல்களையும் தாம் தீர்வுகாண விழைவனவற்றையும் எடுத்துரைப்பதாக அமையக் காண்கிறோம். காரணம், உழைப்பாளியும் படைப்பாளியும் ஒருவராக இருப்பது எனலாம்.

பெண்கள் நலம்

சங்க காலம் தொடங்கி அங்கொருவர் இங்கொருவர் என்பதன்றிப் பெண்கள் கல்வியில் மேம்பட்டிருந்ததான நிலை இல்லை. இடைக்காலத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப் பட்டிருக்கிறது. அவர்கள் உடைமைகளாகக் கருதப்பட்டனர்; அடிமைகளாக நடத்தப்பட்டனர். அவர்களை அந்நிலையிலிருந்து மீட்கப் பெண்ணியம் என ஒன்று எழுந்தது. வரதட்சணையும், பெண் சிசுக்கொலையும் நீங்க வேண்டும், பெண்கல்வி ஓங்க வேண்டும் என்பது இதன் நோக்கமாகின்றது.

வேலப்பனுக்குப்

பெண் பிறந்ததாகத்

தகவல் வந்தது

ஊர்க்கவுண்டர் கேட்டார்

இழவு இன்றைக்கா?

நாளைக்கா?                                                             (கவிஞர் பால்ராஜ்)

என்பது பெண்சிசுக் கொலைக் கொடுமையைப் பறை சாற்றுகின்றது.

கல்வியில் விடி

அரசியல் தெளி

சட்டங்கள் செய்

ஊர்வலம் போ

முழக்கமிடு

பெண்ணைப் பேசப்

பெண்ணே எழு                          (அறிவுமதி)

என்கிறார் கவிஞர் அறிவுமதி.

மொழிப்பற்று

பல்வேறு புறச்சூழல்களால் காலந்தோறும் தமிழ் மொழியோடு வடமொழி (சமஸ்கிருதம்), பாலி, பிராகிருதம், உருது, இந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகள் கலக்கும் நிலை நிகழ்ந்து வருகின்றது. இக்காலத்தில் ஆங்கிலத்தின் செல்வாக்கில் மூழ்கித் தாய்த்தமிழ் மொழியையே மறக்கும் நிலை நிலவுகின்றது. மொழிப்பற்றை ஊட்ட வேண்டிய நிலை அவசியமாகின்றது.

பாரதிதாசனார் தமிழின் மேன்மையை இனிதே உணர்த்தி மொழிப்பற்று ஊட்டுகின்றார்.

செந்நெல் மாற்றிய சோறும் – பசுநெய்

தேக்கிய கறியின் வகையும்

தன்னிகர் தானியம் முதிரை – கட்டித்

தயிரொடு மிளகின் சாறும்

நன்மது ரம்செய் கிழங்கு – காணில்

நாவில் இனித்திடும் அப்பம்

உன்னை வளர்ப்பன தமிழா – உயிரை

உணர்வை வளர்ப்பது தமிழே !

நாட்டுப்பற்று

பாரத நாட்டை உணர்வு பூர்வமாகப் போற்றுகின்றார் பாரதியார்.

மன்னும் இமயமலை எங்கள் மலையே !

மாநிலம் மீதுஅது போற்பிறி திலையே !

இன்நறும் நீர்க்கங்கை யாறெங்கள் யாறே !

இங்கிதன் மாண்பிற்கு எதிர்எது வேறே !

பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே !

பார்மிசை ஏதொரு நூலிது போலே !

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே !

போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே !

தொழிலாளர் நலம்

தொழிலாளர்கள் பெரிதும் உழைத்தும் வறுமையிலேயே வாடுகின்றனர்.

கஞ்சி குடிப்பதற்கு

வசதியில்லை

காரணங்கள் என்னவென்று

தெரியவில்லை. . .

உழைப்புதான் இவர்களின்

உயிர்மூச்சு

உற்பத்திப்பயன் முதலாளியின்

உடைமை ஆச்சு . . . .                             (கவிஞர் தமிழ்ப்பித்தன்)

என்னும் கவிதை தொழிலாளர் நிலையை எடுத்துரைக்கின்றது. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தலித்தியம் என்னும் ஒரு கவிதையியக்கம் பரவி வளர்கின்றது.

மத நல்லிணக்கம்

சமயங்கள் பலவும் நிலைபெற்றுள்ள நாடாக இந்தியா விளங்குதலின், இடையிடையே சமயப் போராட்டங்கள் நிலவுகின்றன. அவற்றிடை நல்லிணக்கம் காண வேண்டியது இன்றியமையாததாகும்.

இறைவா !

நீ

எங்கே இருக்கிறாய்?

இந்துவின் கோயிலிலா?

முஸ்லீமின் மசூதியிலா?

என்றேன்.

இறைவன் சொன்னான்

இந்த இருவரும்

ஒருவரை ஒருவர் பார்த்துப்

புன்னகைத்துக் கொள்ளும்

புன்னகையில் நான் இருக்கிறேன்

என்று !                                                                                  (பா.விஜய்)

என்னும் கவிதை வேறுபட்டு மாறுபடும் மத உணர்வை மறுக்கக் காண்கிறோம்.

மனித நேயம்

சுயநலம் மிகுந்து மனித நேயம் குறைந்து வருவதாய் இன்றைய மானுட வாழ்க்கையின் நிலை உள்ளது. இது மாறவேண்டும். யாவரிடத்தும் கைம்மாறு கருதாத அன்புணர்வு கொள்ள வேண்டும்.

ஆயுதம் அழிந்து

மானுடம் மிஞ்சுமா?

இல்லை

மானுடம் அழிந்து

ஆயுதம் மிஞ்சுமா?                                           (வைரமுத்து)

என்னும் வினா இன்றைய அறிவியல் யுகத்தில் முன்னிற்பதைக் காட்டுகின்றார் கவிஞர்.

நட்பு, காதல், அரசியல், மூடநம்பிக்கை, எதிர்ப்பு, பகுத்தறிவு, அறிவியல் செய்திகள், சுற்றுச்சூழல் எனப் பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டதாக இக்கால இலக்கியங்கள் திகழ்கின்றன.

6.4.3 உத்திமுறை இக்கால இலக்கியங்களில் உவமை, படிமம், குறியீடு போன்ற உத்திமுறைகள் இடம்பெறுகின்றன.

உவமை

சாதிப் பிரச்சனை பெரிதென உவமையுடன் உணர்த்துகின்றது ஓர் கவிதை :

சாதி என்பது

மெலிந்து காட்சிதரும்

ஊசியல்ல

தலையெல்லாம்

கனத்துக் கொழுத்த

கத்தரிக்கோல்

படிமம்

ஒரு பொருளின் உணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்தும் வெளியீடு படிமம் எனலாம்.

சான்று : நடைபாதை குறித்த காமராசன் கவிதை.

மழைக்கால நரகம்

மாலைநேரச் சொர்க்கம்

ஏழைகள் உறங்கிட இயற்கையால்

ஏற்படுத்தப்பட்ட புழுதிக் கட்டில்

குறியீடு

மற்ற பொருளைக் குறிப்பதுடன் தன்னையும் அதனுடன் இணைத்து நிற்பது குறியீடு ஆகும்.

இயற்கைப்பொருளைக் குறியீடாக்குகின்றார் ஈரோடு தமிழன்பன். அது வருமாறு :

விதைக்குள் தவமிருக்கும் – உயிர்

விளக்கே . . . தரையுள்ளே

புதைத்துன்னை மூடிவிட்டார் – இனிப்

புதுவாழ்வைச் சாதிப்பாய் !

6.5 தொகுப்புரை

‘காலந்தோறும் கவிதையின் நோக்கும் போக்கும்’ என்னும் தலைப்பில் உருவம், உள்ளடக்கம், உத்திமுறை என்னும் மூவகைகளில் கவிதையின் நிலை குறித்து அறிந்தோம்.

அகமும் புறமும் ஆகிய இருவகைப் பட்டனவாய்ச் சங்க இலக்கியங்கள் விளங்கின. உள்ளதை உள்ளவாறு பாடும் நிலையும், வருணனை முறையும் அவற்றில் இடம்பெற்றுள்ளன. 3 அடி முதல் 782 அடிவரையிலான பாடல்களைக் காணமுடிகின்றது. அகப்பொருள் மாந்தர் பெயர் சுட்டப் பெறுவதில்லை.  அகப்பொருள் பாடலிலும் உவமை, அடைமொழி வாயிலாக வள்ளல்களின் பெருமைகள் பேசப்பட்டுள்ளன. ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாட்டு ஆகிய வடிவங்களில் இவை அமைந்தன.

அறநூல்கள் வெண்பா யாப்பின. ஒழுக்க முறைகளையும், நடைமுறைகளையும் உவமை முதலியவற்றின் வழி இவை எடுத்துரைக்கின்றன.

காப்பிய நூல்கள் ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம், சமயக் காப்பியம், தலபுராணம் என்பனவாக அமைந்துள்ளன. ஆசிரியப்பாவும், விருத்தமும் இவற்றின் யாப்பாக உள்ளன. அறம் பிறழாமை, மண்ணாசை கூடாது, சமயப்பற்று போன்ற மையப் பொருள்களையுடையன. பின்னோக்கு உத்தி, கனவுக் குறிப்பின்வழி முன்னுரைத்தல் போன்ற கூறுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. கிளைக்கதைகளுக்கும் இவற்றில் இடமுண்டு.

இடைக்கால இலக்கியங்களாகப் பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், சைவ சித்தாந்த சாத்திர நூல்கள், தனிப்பாடல்கள் போன்றன அமைகின்றன. கலிவெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை, தாழிசை, சந்தப்பா ஆகியன இடைக்கால யாப்புகளாக உள்ளன. மடக்கணி, உயர்வு நவிற்சி, சிலேடை போன்ற சொல்லணிகள் மேலோங்கியுள்ளன. அரசன், இறைவன், நிலையாமை ஆகிய பாடுபொருள்களைக் கொண்டுள்ளன.

இக்கால இலக்கியம் பாரதியாரிலிருந்து கணக்கிடப் பெறுகின்றது. நொண்டிச் சிந்து, விருத்தம், புதுக்கவிதை, ஐக்கூ போன்ற வடிவங்களும், படிமம், குறியீடு போன்ற உத்திமுறைகளும் நிலவுகின்றன. பெண்கள், தொழிலாளர், மொழி, நாடு, மதநல்லிணக்கம், மனிதநேயம் போன்றன பாடுபொருள்களாக அமைந்துள்ளன.

இவற்றை இப்பாடத்தில் விரிவாக அறிந்தோம்.