புதினம்
பாடம் - 1
ஓவியம்
சிற்பம்
இசை
இந்தப் படைப்பிலக்கியமாவது மற்றொன்றைப் பார்த்துப் படைக்கப்படாததாகும். தனியொருவனே தன் சிந்தனைத் திறனால் கற்பனை கலந்து ஒரு வடிவம் கொடுத்துப் படைப்பதாகும். ஒருவன் ஒரு வகையான படைப்பிலக்கியம் படைத்த பிறகு அது போலவே இன்னொருவன் தன் கற்பனையில் இன்னொன்றைப் படைப்பதும் படைப்பிலக்கியமாகும்.
சுருங்கச் சொல்லல்
ஒரு நிகழ்வை அல்லது ஒரு செய்தியைக் கூற விழைகிற படைப்பாளி தன் படைப்பினைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்க விழைகிறான். அதற்குச் செய்யுள் நடை மிகவும் பயன்பட்டது.
மனனம்
மேலும், ஓர் ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட படைப்பு பழங்காலத்தில் படிப்பவர்களால் மனப்பாடம் செய்யப்பட்டது. மனப்பாடம் செய்வதற்குச் செய்யுள் நடையே ஏற்றது என்பதாலும் செய்யுள் நடை வழக்கத்தில் இருந்தது.
பிற துறைகள்
இலக்கியம் மட்டுமின்றி மருத்துவம், சோதிடம், நீதி, ஆசாரம் ஆகியவையும் செய்யுள் நடையிலேயே எழுதப்பட்டன. பெரும் கதைகளும் செய்யுள் நடையிலேயே எழுதப்பட்டன. இவை காப்பியங்கள் என்று பெயர் பெற்றன.
மருத்துவம்
சோதிடம்
நீதி
உரைநடை
காலங்கள் மாறி, அச்சகங்கள் உருவாகி நூல்கள், வெளிவரத் தொடங்கிய பிறகுதான் உரைநடை இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டது. உரைநடையில் சிறுகதை, நாவல், நாடகம் போன்ற படைப்பிலக்கியங்களும், பிற சமூகச் செய்திகளைக் கூறுகின்ற கட்டுரைகளும், நூல்களும் எழுதப்பட்டன. மருத்துவம், சோதிடம், நீதி, தத்துவம் ஆகிய செய்திகளும் உரைநடையில் எழுதப்பட்டு மக்களால் படிக்கப்பட்டன.
கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் ஆகியவை படைப்பிலக்கியங்கள் என்று கருதப்படலாம். மேலும், கற்பனை வளம் உள்ள கட்டுரைகள், கடிதங்கள், விளம்பரங்கள் ஆகியவையும் படைப்பிலக்கியங்களுள் அடங்கக் கூடும்.
படைப்பும் அனுபவமும்
படைப்பு என்பது அனுபவத்தின் வெளிப்பாடு. அனுபவத்தில் இருந்து பெற்ற சிந்தனை வளர்ச்சியால் நாம் உணர்ந்த கருத்துகளைப் பிறருக்கு வெளிப்படுத்தவும், விளக்கவும் நமக்கு ஒரு வடிகால் தேவைப்படுகிறது. அந்த வடிகாலே படைப்பாக வெளிப்படுகிறது. நல்ல ஓவியன் அதனை ஓவியமாகத் தீட்டுவான். நல்ல சிற்பி அதனைச் சிற்பமாக வடித்து எடுப்பான். இசைக் கலைஞன் இசையாகப் பாடுவான். நல்ல இலக்கியவாதி இலக்கியமாகப் படைத்துச் சமூகத்திற்கு அளிப்பான்.
படைப்பு வகை
படைப்பினைக் கதை, கட்டுரை என்று இரு வகையாகப் பிரிக்கலாம். சங்க இலக்கிய அகப் பாடல்கள் சிறுசிறு கதைகளைக் கூறும் இலக்கியங்கள்தான். நீதி இலக்கியங்கள், மருத்துவ நூல்கள், சோதிட நூல்கள் எல்லாம் கவிதை நடையில் எழுதப்பட்ட கட்டுரைகளே.
தற்காலத்தில் கதை என்பது உரைநடை வடிவில் எழுதப்படும் சிறுகதை, நாவல், நாடகம் ஆகியவற்றைக் குறிக்கிறது. கதை என்பது உள்ளத்தைச் சார்ந்தது. உணர்ச்சிக்கும், கற்பனைக்கும் இடமளிப்பது.
கட்டுரை என்பது செய்திகளை விரித்துக் கூறும் படைப்பாகும். இதில் கற்பனைக்கு இடமில்லை. செய்திகளுக்கு மட்டுமே முக்கிய இடம் அளிப்பது கட்டுரையாகும். கட்டுரையானது அனுபவத்தில் விளைந்த கருத்தை விளக்கிக் கூறுவது ஆகும். இக்கட்டுரைக்கு, ‘வடிவம்’, உரைநடை வடிவமே ஆகும்.
கவிதையில் இன்னொரு வகை புதுக்கவிதை எனப்படும். இவ்வகைக் கவிதை இலக்கண வரம்பிற்கு உட்படாமல், உணர்வின் அடிப்படையில் எழுதப்படுவது. தற்காலத்தில் இக்கவிதை நடையே பெரும்பாலான கவிஞர்களால் பின்பற்றப்படுகின்றது.
1741ஆம் ஆண்டில் சாமுவேல் ரிச்சர்ட்சன் (Samuel Richardson) என்னும் எழுத்தாளர் கடித முறையைப் பின்பற்றி ஒரு நீண்ட கதையை எழுதினார். அதற்குப் பமிலா என்று பெயர் சூட்டினார். அது புதுமையான இலக்கிய வடிவமாக அமைந்தது. படிப்பாளிகளால் மிகவும் வரவேற்பினைப் பெற்ற இந்நூலைப் பின்பற்றிப் பலர் எழுத முற்பட்டனர். Novella என்ற இத்தாலிய மொழிச் சொல் வாயிலாக நாவல் என்ற சொல் இத்தகு இலக்கியத்திற்கு இடப்பட்டது. நாவல் என்பதற்குப் புதுமை என்று பொருள்.
தமிழில் முதல் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்பதாகும்.
தமிழில் இடைக்காலத்தில் தோன்றிய பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் போன்ற இலக்கிய வகைகளும் நாடக இலக்கிய வகையைச் சார்ந்தவையே.
பிற்காலத்தில் சீர்காழி அருணாசலக் கவிராயரின் இராம நாடகமும், கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திர கீர்த்தனையும் நாடக இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டன.
நாடகங்களைப் பொறுத்தவரை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1) படிப்பதற்கான நாடகங்கள்
2) படிப்பதற்கும், நடிப்பதற்கும் உரிய நாடகங்கள்
3) நடிப்பதற்கான நாடகங்கள்
சரசுவதி
மில்டன்
உலகம் முழுதும் இருந்த பெரும் படைப்பாளிகள் கடவுள்தான் தம்மை எழுதத் தூண்டுவதாக நம்பினார்கள். மில்டன், பாரதியார் போன்ற பெருங்கவிஞர்களும் கடவுளே தம்மை எழுத வைத்ததாக நம்பியுள்ளனர்.
பாரதியார்
திருஞான சம்பந்தர் ஞானப்பால் உண்டு மூன்று வயதிலேயே படைப்பாளியாக மாறி விட்டதாகவும், சுந்தரருக்கு இறைவனே ‘பித்தா’ என்று பாட, சொல் எடுத்துக் கொடுத்ததாகவும் தமிழில் ஏராளமான கதைகள் இது தொடர்பாக உள்ளன.
திருஞான
சம்பந்தர்
சுந்தரர்
ஆனால், படைப்பிலக்கியம் தோன்ற உண்மையான காரணங்கள் கீழ்க்காண்பவைகளாக இருக்கலாம்.
1) தன் உள்ளத்து உணர்வுகளை யாரிடமாவது எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்னும் ஆவல் என்பதாக இருக்கக் கூடும். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் வாய் மொழிக் கதைகளாக அடுத்தவர்க்குக் கூறுவார்கள். எழுதப் படிக்கத் தெரிந்து, சரியான வடிவம் கொடுக்கத் தெரிந்தவர்கள் வரி வடிவில் படைப்பிலக்கியம் படைக்கக் கூடும்.
2) இயற்கையாகவே படைப்புணர்வு மிகுந்து இருப்பவர்கள் படைப்பிலக்கியம் படைக்கலாம்.
3) இதழ்களுக்கு எழுத வேண்டும் என்ற உணர்வு உள்ளவர்களும் படைப்பாளர்களாக மாறலாம்.
4) எழுத்தின் மூலம் புகழ் பெற வேண்டும் என்ற உந்து சக்தியும் இதற்குக் காரணமாகலாம்.
5) ஒரு படைப்பாளியின் படைப்பைப் பார்த்துத் தானும் படைப்பாளியாக மாற வேண்டும் என்ற எண்ணமும் காரணமாகலாம்.
6) பொருளீட்டுவதற்கு எழுத்தை ஒரு தொழிலாகக் கொள்வதும் உண்டு.
படைப்பிலக்கியவாதிகள், நீதி நூல்கள், தத்துவ நூல்கள் போல் செய்திகளைச் சுவையற்ற தன்மையில் கூறாமல், கற்பனையை இணைத்து, அழகியலுடன் வடிவம் கொடுக்கின்றனர். அப்போது படைப்பிலக்கியத்தைப் படிப்பவனும் இலக்கியத்தில் தானும் தோய்ந்து, அவ்விலக்கியத்தில் வரும் ஒரு பாத்திரமாகவே தன்னை எண்ணத் தொடங்குகின்றான். இதன் காரணமாக மனம் செம்மை பெறுகின்றது.
படைப்பாளன் படைப்பின் வழி அழகியலை மேம்படுத்திக் கொண்டு, தன்னையும் மேம்படுத்திக் கொள்கிறான். அவனுடைய மேம்பாடு அவன் படைப்பில் வெளிப்படுகிறது. அதைப் படிப்பவனும் தன்னை மேம்படுத்திக் கொள்ள அந்தப் படைப்பு பயன்படுகிறது.
சான்றாக, மது அருந்துதலின் இழிவு பற்றிய படைப்புகள் படைக்கப்படுமாயின் படிப்பாளிகள் மது அருந்துவதில் இருந்து தம்மை மீட்டுக் கொள்ள அப்படைப்புகள் பயன்படும். நாட்டுப் பற்றினை, மொழிப் பற்றினை, சமுதாய மேம்பாட்டிற்குச் செய்ய வேண்டிய செயல்களைப் படைப்புகள் காட்டுமாயின், படிப்பாளிகளும் அவற்றைப் படித்துத் தம்மை ஒழுங்குபடுத்திக் கொள்வார்கள்.
மனிதனுக்கு வேண்டிய புறவாழ்வுப் பொருள்களை அறிவியல் ஆக்கித் தரும். அக வாழ்வு ஒழுங்கினைப் படைப்பிலக்கியம் உருவாக்கித் தரும்.
1) படைப்பாளிகள் எந்த ஒன்றையும் கூர்ந்து நோக்கும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
2) எந்த ஒன்றையும் ஆர்வத்தோடு நோக்கும் தன்மை கொண்டிருக்க வேண்டும்.
3) படைப்பாளர்கள் மிகுந்த அனுபவங்கள் பெற்றவராக இருக்க வேண்டும்.
4) தமிழில் தலைசிறந்த இலக்கியத் திறனாய்வாளர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள், “வாழ்ந்து காட்டும் வாழ்க்கையைச் சொற்களால் கூறுவதே இலக்கியம்” என்று கூறுவார். அந்த முறையில் ஒரு படைப்பாளி வாழ்வைப் பற்றித் தான் முழுதும் உணர்ந்து, தான் உணர்ந்ததைச் சொற்களால் படைக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
5) படைப்பாளி நல்ல சமூக அக்கறை உள்ள மனிதனாக இருத்தல் மிகவும் இன்றியமையாதது ஆகும்.
பாடம் - 2
பழங்காலக் கதை இலக்கியங்கள் பெரும்பாலும் கவிதை வடிவிலேயே தோன்றின. இது பெரும்பாலான மொழிகளுக்குப் பொருந்தும். வரலாற்றுத் தொடக்க காலத்தில் வடமொழியில் தோன்றிய இராமாயணம், மகாபாரதம் போன்ற கதை கூறும் இதிகாசங்கள் கவிதை வடிவில் தோன்றியவையே. சங்க காலத்தை அடுத்தும், இடைக்காலத்திலும் தமிழில் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற கதை கூறும் இலக்கியங்கள் கவிதை வடிவ இலக்கியங்களே. பிற்காலத்தில் அச்சு எந்திரங்கள் அறிமுகமாகிய சூழலில் உரைநடை வடிவில் பெருங்கதைகள் எழுதும் நிலை ஏற்பட்டது. இதன் வெளிப்பாடே, நாவல் எனும் புதிய இலக்கிய வடிவம். இந்தப் புதிய இலக்கிய வகை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
இடைக்காலத்தில் ஐரோப்பாவில் வீரர்களின் வீரதீரச் செயல்களையும், அவர்களின் காதலையும் கூறும் கதைகள் நிறைய எழுதப்பட்டன. ஆனால் இக்கதைகளும் கவிதை வடிவிலேயே தோன்றின. 13ஆம் நூற்றாண்டில் இத்தாலிக் கலைஞர்கள் நூவேல் என்னும் பெயர் கொண்ட பல கதைக் கொத்துக்களை வெளியிட்டனர். இவை கவிதை வடிவில் வெளிவந்தவை. பிற்காலத்தில் உரைநடையின் வாயிலாகக் கதை சொல்லும் மரபு ஏற்பட்டதும் இதுவே நாவல் எனும் புதிய இலக்கிய வகை தோன்றப் பின்புலமாக அமைந்தது என்பர்.
உரைநடையில் அமைந்த, குறிப்பிடத்தக்க அளவில் நீண்ட கதையே நாவல் என்றும், அது படிப்பவர்களை ஒரு கற்பனையான உண்மை உலகிற்கு அழைத்துச் செல்கிறது என்றும், படைப்பாளன் உருவாக்கியதால் அந்த உலகம் புதியது என்றும் காதரீன் லீவர் தம்முடைய நாவலும் படிப்பாளியும் என்ற நூலில் கூறுகிறார்.
தமிழில் முதன் முதலில் நாவல் முயற்சியில் ஈடுபட்ட தமிழறிஞர்களும் நாவல் பற்றிய தத்தம் கருத்துகளைத் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆதியூர் அவதானி சரிதம் எழுதிய தூ.வி.சேஷய்யங்கார் தம் நாவல் முன்னுரையில் ‘இது பொய்ப் பெயர்ப் பூண்டு மெய்ப்பொருள் காட்டும்’ என்று குறிப்பிடுகின்றார். மாயூரம் வேதநாயகம் பிள்ளை தம்முடைய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் நாவலின் முன்னுரையில் நாவலை வசன காவியம் (Prosaic Epic) என்ற பெயரில் குறிப்பிடுகின்றார்.
ஆர்.எஸ். நாராயணசாமி அய்யர் தாம் எழுதிய மாலினி மாதவம் என்ற நாவலின் முன்னுரையில் நாவல் பற்றிக் கீழ்வருமாறு கூறியுள்ளார்:
‘இனிய இயல்பான நடையில், சாதாரணமாய் யாவரும் அறியும் வண்ணம், பிரகிருதியின் இயற்கை அமைப்பையும், அழகையும், அற்புதங்களையும், ஜனசமூகங்களின் நடை, உடை, பாவனைகளையும், மனோ (Thought), வாக்கு (Words), காயம் (Deeds) என்னும் திரிகரணங்களாலும் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள எண்ணிறந்த வித்தியாசங்களையும் பிரத்யட்சமாய் உள்ளபடி கண்ணாடி மேல் பிரதி பிம்பித்துக் காட்டுவதே நாவல் எனப்படும்.’
ஒரு நல்ல நாவல்தான், நாவல் பற்றி நமக்கு எடுத்துக் கூறும் ஆற்றலும், தன்மையும் உடையதாகும்.
நாவல் என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் ‘புதுமை’ என்ற பொருள் இருந்ததால் நாவல் இலக்கியப் பெயரினைத் தமிழில் கூறத் தமிழறிஞர் சிலர் புதினம் என்ற சொல்லை உருவாக்கிப் பயன்பாட்டில் வைத்தனர். ஆயினும் நாவல் என்ற பெயரே தமிழிலும் பயன்பாட்டில் இன்றும் நின்று நிலவுகின்றது.
எனவே, நாவல் என்பது
1) உரைநடையில் எழுதப்படும் ஒரு படைப்பிலக்கியம்.
2) ஒரு பெருங்கதையை விவரமாக எடுத்துக் கூறும் இலக்கியம்.
3) வாழ்வியலைக் கூறுவது.
4) பாத்திரங்களின் உரையாடல் மூலமாகவோ, செயல்பாடுகள் மூலமாகவோ கதை ஓட்டம் நிகழ்த்தப் பெறும் இலக்கியம்.
புரிதலில் கடினம்
ஓலைச் சுவடிக் காலத்தில் படைக்கப்பட்ட பெரும் கவிதை இலக்கியங்களை, மிகச் சிறந்த கல்வி அறிவும், பரந்துபட்ட இலக்கிய உணர்வும் உள்ளவர் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல் நிலவியது. கதைகளைப் படிக்க, படித்துப் புரிந்து கொள்ளச் செய்யுள் வடிவம் சாதாரண மக்களுக்கு இடையூறாக இருந்தது. முதலில் செய்யுளைப் பிரித்துப் படித்து அதன் முழுப்பொருளையும் புரிந்து கொண்டு, கதையை விளங்கிக் கொள்ளுதல் மக்களுக்குச் சிரமமாக இருந்தது. செய்யுள் வடிவம் சில கட்டுப்பாடுகளுக்குரிய யாப்பு வடிவமாக இருந்ததால் கதை ஓட்டம் பாதிக்கப்பட்டது. கதையைப் படிக்க விரும்புவோர் மிகப் பெரும் இடர்களுக்கு உள்ளாக வேண்டியிருந்தது.
உரைநடையும் எளிமையும்
உரைநடையில் அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை தேவையில்லை. மேலும் சாதாரண மக்கள் பேசும் நடையிலேயே எழுதுவது சுலபம். படிப்போரும் மிகச் சுலபமாக நாவலைப் படிக்க இயலும். எனவே உரைநடை வடிவத்தில் கதையை எழுதி நாவல் இலக்கியம் உருவாக்கினர்.
‘நாடகத்தின் ஒளியானது மிக வேகமாக இலக்கிய வானில் குன்றிடவே, புதிய விண்மீன் வரவை எதிர் நோக்கினர். புதிய இலக்கிய வடிவம் ஒன்றைத் தருவதால் வேடிக்கை உணர்வைத் தருவதுடன் அறக்கருத்தைத் தந்து முன்னேற்றும் தன்மை உடையதாகவும் எளிமை உடையதாகவும், அந்தக் காலத்தின் தேவையை நிரப்பக் கூடியதாகவும் ரிச்சர்ட்சன் புதிய வெள்ளியைப் படைத்தார்.’
எனவே, நாவலின் தோற்றம் என்பது இலக்கிய உலகில் புதிய விடிவெள்ளியாக அறிஞர்களால் கருதப்பட்டது. வாழ்க்கையை அதன் போக்கிலேயே எதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டும் ஓர் இலக்கிய வடிவமாக உரைநடையில் தோன்றியதுதான் நாவல்.
நாவல் என்ற இலக்கிய வடிவம் தோன்றவில்லை என்றால் அவ்வக்கால மக்களின் சமூக வாழ்க்கை, வர்க்க வேறுபாடு, காதல் நிகழ்வுகள், உரையாடல் மொழி ஆகியவை பதிவு செய்யப்படாமல் போயிருக்க வாய்ப்புண்டு.
நாவலில் இடம் பெறும் எந்த ஒரு கதை மாந்தரும் தனித்து இயங்கி வாழ்வதில்லை. கதை மாந்தர் சமூகத்தின் ஓர் அங்கமாகத் திகழ்வதால் சமூகத்தின் வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் தன் பங்கினைச் செய்கின்றனர். சமூகம் கதை மாந்தரைப் பாதிப்பதால் சமூகம் நாவலில் முக்கியப் பங்காற்றுகின்றது. எனவே, நாவல் இலக்கியம், தான் தோன்றிய காலத்துச் சமூக வாழ்வை முழுமையாகப் பதிவு செய்கிறது. இது எதிர்கால வரலாற்று ஆய்விற்கு முக்கியப் பங்காற்றுவதாக விளங்கும்.
(1) சமூக நாவல்
(2) வரலாற்று நாவல்
நாவலின் கதைப் பின்னணி அடிப்படையில்தான் இப்பிரிவுகள் அமைகின்றன.
சமூகவியலாளர் மனிதனைச் சமூக விலங்கு என்றே கூறுவர். அச்சமூக விலங்கு கூடி வாழும் பொழுது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட காலச் சூழலில் சமூகத்தில் மக்களுக்குள் உணர்வு அடிப்படையில், வாழ்வு அடிப்படையில் ஏற்படும் சிக்கல்களைச் சமூக நாவல்கள் பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்துகின்றன. காதல், வறுமை, பொருளாதாரச் சிக்கல்கள், சாதியச் சிக்கல்கள், மத அடிப்படைச் சிக்கல்கள் முதலியவற்றைச் சமூக நாவல்கள் புலப்படுத்தக் கூடும். ஒரு படைப்பாளி, தான் வாழும் சமூகத்தில் கண்ட, கேட்ட, அனுபவித்த இன்பமான அல்லது சோகமான முடிவுகளைக் கொண்ட செய்திகளைச் சற்றுக் கற்பனையை இணைத்துச் சமூக நாவல்களாகப் படைப்பர். சமூக நாவல்களில் வரும் கதைப் பாத்திரங்களின் பெயர் மட்டும் கற்பனையாக இருந்து கதை உண்மையாக நடந்த நிகழ்ச்சியாக இருக்கக் கூடும். சமூக நாவல்களைப் பண்பு அடிப்படையில்
(1) எதார்த்தம் அல்லது நடப்பியல் நாவல்
(2) போலி எதார்த்த நாவல்
என்று பிரிப்பர். இந்த அடிப்படையில் சமூக நாவல்களைப் பிரித்தால் நாவலில் யதார்த்தமும், யதார்த்தம் போல் கற்பனையும் அமைந்திருப்பதாக ஏற்றுக் கொள்ளலாம்.
நாவல்களைக் கீழ்க்கண்ட முறையில் மேலும் பிரித்துக் காண்பர் ஆய்வாளர்கள்:
(1) வட்டார நாவல்
(2) குடும்ப நாவல்
(3) சமுதாய நாவல்
(4) குறுநாவல்
(5) பெரு நாவல்
(6) புதுமை நாவல்
(7) உளவியல் நாவல்
(8) ஆன்மிக நாவல்
(9) துப்பறியும் நாவல்
இவ்வாறு வகைப்படுத்தினாலும் இன்னும் மார்க்சிய நாவல், அறிவியல் நாவல், அங்கத நாவல், கடித நாவல், பின் நவீனத்துவ நாவல் என்றும் பிரிப்பது உண்டு.
வட்டார நாவல்
ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துக்குள் வாழும் மக்களின் சமூகப் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் நாவல் வட்டார நாவல் எனப்படும். அம்மக்களின் உரையாடல் நடையிலேயே அந்நாவல் எழுதப்பட்டிருக்கும்.
இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித்தேன் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அவர்கள் மொழியிலேயே படம் பிடித்துக் காட்டுகிறது. அவரின் கரிப்பு மணிகள் தூத்துக்குடி பக்கத்தில் வாழும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வை வெளிப்படுத்துகிறது. தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு பண்ருட்டி பகுதி மக்களின் வாழ்வைக் காட்டுகிறது. மேலும், பொன்னீலனின் கரிசல், கி.ராஜ நாராயணனின் கோபல்ல கிராமம், ஹெப்சிபா ஜேசுதாசின் புத்தம் வீடு ஆகிய நாவல்களும் வட்டாரத் தன்மையை வெளிப்படுத்துகின்றன.
குடும்ப நாவல்
குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களை அக்குடும்பப் பாத்திரங்களைக் கொண்டே வெளிப்படுத்துவது குடும்ப நாவல் ஆகும். குடும்ப நாவல்களை எழுதுவதில் லஷ்மி தலைசிறந்து விளங்கினார். அவரின் பெரும்பாலான நாவல்கள் குடும்பப் பின்னணி நாவல்களே ஆகும். அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற பெண் எழுத்தாளர்களே குடும்ப நாவல்கள் எழுதுவதில் முன் நின்றனர். ஆனாலும் தமிழில் அவ்வளவாக அறியப்படாத தஞ்சை பிரகாஷ் எழுதிய கரமுண்டார் வீடு குடும்ப நாவல்களுள் சிறந்ததாக விளங்குகின்றது.
சமுதாய நாவல்
ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அல்லது சமுதாய மக்களின் வாழ்க்கை முறை, செயல்பாடுகள், அவர்களின் பிரச்சனைகள் ஆகியவற்றை ஆராய்வது சமுதாய நாவலாகும். சு.சமுத்திரத்தின் கோட்டுக்கு வெளியே என்ற நாவலை இதற்குச் சான்றாகக் கூறலாம். அகிலன் அவர்கள் எழுதிய பால்மரக் காட்டினிலே என்ற நாவல் மலேயா இரப்பர்த் தோட்டத் தொழிலாளிகளின் சமூக வாழ்க்கைப் பிரச்சனைகளை முழுவதுமாக வெளிப்படுத்தியது.
குறுநாவல்
மிக அதிகமான பாத்திரங்களோடு நிறையப் பக்கங்களோடு இல்லாமல் குறைவான பாத்திரங்களைக் கொண்டு, சிறுகதையை விடச் சற்றுப் பெரிதாக அமைந்து விளங்கும் நாவல் குறுநாவலாகும். எம்.வி.வெங்கட்ராமின் உயிரின் யாத்திரை, இருட்டு, ச.கலியாணராமனின் பஞ்சம் பிழைக்க போன்றவை இதற்குச் சான்றாக அமையும்.
பெரு நாவல்கள்
அளவில் பெரியதாக, மிக அதிகமான பாத்திரங்களுடன் நிகழ்வுகள் அதிகமாக உள்ள நாவல் பெரு நாவலாகும். பெரு நாவல்கள் பல பாகங்களாகக் கூட வெளி வரலாம். தொடக்க காலத்தில் பெரிய நாவல்களைக் கல்கி தமிழில் எழுதினார். கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவை சில பாகங்களாக வெளிவந்த பெருநாவல்களாகும்.
புதுமை நாவல்கள்
நாவல்கள் கதையைத் தொடங்கி அதனை இன்பமுடிவாகவோ, துன்பமுடிவாகவோ முடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தன. சமூகத்திலும், வாழ்வுப் போக்கிலும் பல்வேறு புதிய முயற்சிகள் செய்து பார்க்கப்பட்டு அம்முயற்சிகள் வெற்றி பெறுவதை அல்லது தோல்வி அடைவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நாவல் படைப்பிலும் புதிய முயற்சிகள் செய்யப்பட்டு, புதிய முறையில் கதை சொல்லும் பழக்கம் ஏற்பட்டது. க.நா.சுப்பிரமணியம் எழுதிய ஒரு நாள், எம்.வி.வெங்கட்ராம் எழுதிய காதுகள் போன்றவை புதிய முறையில் படைக்கப்பட்ட நாவல்களாகும். ஒரு நாள் காலை முதல் இரவு முடிய ஒருவனின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளின் அடிப்படையில் க.நா.சுப்பிரமணியத்தின் ஒரு நாள் நாவல் படைக்கப்பட்டுள்ளது. தன் காதுகளில் ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு எம்.வி.வெங்கட்ராம் காதுகள் எனும் நாவலை எழுதினார். கதைகளில் இவ்வாறு புதுமையை ஏற்படுத்துவது தற்காலத்தில் வழக்கத்தில் வருவதைப் புதிய நாவல்கள் படிக்கும் சூழலில் நாம் அறிந்து கொள்ளலாம். சுந்தர ராமசாமியின் ஜெ.ஜெ. சில குறிப்புகள் எனும் நாவல் தமிழில் தோன்றிய புதுமை நாவல் வகைகளுள் முதன்மையானது. கற்பனை மாந்தராகிய ஒரு எழுத்தாளரின் குறிப்புகளாக, உண்மை மாந்தரைக் கூறுவதுபோல் அமைந்தது இந்நாவலாகும்.
உளவியல் நாவல்
மனிதரின் உளமெய்ம்மை (Psychic Reality) சார்ந்த நிலையில் வெளியாகும் நாவல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. மனிதனின் வாழ்க்கை அவன் செய்யும் செயல்களால் நடப்பது இல்லை. அவன் எண்ணுகிற எண்ணங்களால்தான் நடக்கிறது. உடலோடு உயிர் ஒட்டியுள்ள வரை மனமும் எண்ணங்களால் அலைகிறது. அவ்வெண்ணங்களின் அடிப்படையில் நாவல் பாத்திரங்கள் செயல்படுவதே உளவியல் நாவல்களின் அடிப்படையாகும். எம்.வி.வெங்கட்ராமின் அரும்பு இந்நாவல் வகையைச் சார்ந்ததாகும்.
ஆன்மிக நாவல்
ஆன்மிக எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு அவ்வான்மிகக் கருத்துகளை மக்கள் மனத்தில் பதிப்பதற்காக எழுதப்படும் நாவல்கள் ஆன்மிக நாவல்களாகும். எம்.வி.வெங்கட்ராம் எழுதிய இருட்டு, உயிரின் யாத்திரை போன்றவை ஆன்மிகத்தின் சிறப்புகளை உணர்த்த எழுதப்பட்டவை. இருட்டு நாவலில் தீய சக்திகள் ஒருவர் உடலில் நுழைந்து கடவுள் மறுப்புக் கொள்கைகளை அவர் மூலம் பிரச்சாரம் செய்யச் சொல்லுகின்றன என்று கூறுகின்றார். இத்தீய சக்திகள் எவ்வித நோயுமில்லாத மனிதர்களை இறுதியில் மரணத்தில் கொண்டு செலுத்திவிடும் தன்மை கொண்டவை என்று உரைக்கின்றார். நாத்திகர் தீயவர் என்றும், ஆத்திகர் நல்லவர் என்றும் இந்நாவல் கூறுகின்றது.
துப்பறியும் நாவல்
ஒரு கொலையோ அல்லது சதிச் செயலோ நடந்தால், அதனைக் கண்டு பிடிக்க முயலும் ஒரு துப்பறியும் நிபுணரின் நுண்ணிய துப்பறியும் அறிவை விளக்குவது இவ்வகை நாவல்கள். தமிழில் தொடக்க காலத் துப்பறியும் நாவல்கள் சர் ஆர்தர் கானன்டாயில், ரெயினால்ட்ஸ் போன்ற ஐரோப்பியத் துப்பறியும் நாவலாசிரியர்களின் படைப்புகளின் தழுவல்களாகவே வெளிவந்தன. வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர்.ரங்கராஜு, கோதை நாயகி அம்மாள் போன்றவர்கள் இத்தகு முயற்சிகளில் ஈடுபட்டனர். துப்பறியும் நாவலில் ஆர்தர் கானன்டாயிலின் கற்பனைப் பாத்திரமான ஷெர்லாக்ஹோம்ஸ் என்ற பாத்திரத்தின் மறுபதிப்பாகச் சங்கர்லால் என்ற பாத்திரத்தை உண்மைப் பாத்திரம் போல் படைத்துப் புகழ் பெற்றவர் தமிழ்வாணன்.
வரலாற்று நாவல்கள்
வரலாற்று நாவல்களுக்கும் சமூக நாவல்களுக்கும் சில ஒற்றுமை வேற்றுமைகள் உண்டு. வரலாற்று நாவல்களில் கதையும், கதை மாந்தர்களும் வரலாற்று நிகழ்ச்சிகளில் இருந்து எடுக்கப் பட்டிருக்கும். வரலாற்று நாவல்களில் வரலாற்று உண்மைகளைப் புள்ளிகளாக ஆங்காங்கே அமைத்து அவற்றைச் சுற்றித் தம் புனைவுகளை இழைகளாக இணைத்து நாவலாக்குகின்றனர்.
வரலாற்றுச் சூழல்கள் இந்நாவல்களில் மையமாக இருக்கும். நிகழ்வுகளும், பாத்திரங்களும் நாவல்களை நடத்திச் செல்வனவாக இருக்கும். உண்மைப் பெயர்களில் கற்பனை நிகழ்வுகளும், வரலாற்று நிகழ்வுகளும் இணைக்கப்பட்டு நாவல்கள் எழுதப்பட்டிருக்கும்.
பழங்கால மக்களின் வாழ்வு முறை, உணவு, உடை, பழக்க வழக்கங்கள் மிக விரிவாக விவரிக்கப்பட்டிருக்கும். தமிழில் வரலாற்று நாவல்களை எழுதியதில் முன்னோடியாகத் திகழ்பவர் கல்கி. அவரைத் தொடர்ந்து அகிலன், நா.பார்த்தசாரதி, கோவி.மணிசேகரன் போன்றோர் வரலாற்று நாவல்களை எழுதிப் புகழ் பெற்றனர். சாண்டில்யன் தமிழில் மிகுதியான வரலாற்று நாவல்களை எழுதினார்.
கல்கி
அகிலன்
கோவி.மணிசேகரன்
வரலாற்று நாவல்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
(1) பழங்கால வரலாற்று நாவல்
(2) சமகால வரலாற்று நாவல்
இவற்றுள் பழங்கால வரலாற்று நாவல்களை எழுதுவது மிகச் சுலபமானது. பெரும்பாலும் பெயர்களை உண்மைப் பெயர்களாகக் கொண்டு, நிகழ்ச்சிகளைக் கதையின் சுவைக்காகக் கற்பனையாகப் படைக்கலாம். பாத்திரங்களுக்குப் பொய்ப் பெயர் கொடுத்து மெய்ப்பொருள் கூறுவதாகவும்; மெய்ப் பெயர் கொடுத்துப் பொய்ப் பொருள் கூறுவதாகவும் கதையை அமைத்துச் சுவை கூட்டலாம்.
ஆனால் சமகால வரலாற்று நிகழ்வுகளை நாவலாக்கினால் நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மைகளாக இருக்க வேண்டும். கற்பனைப் பாத்திரங்களைப் பயன்படுத்த முடியாது. கல்கியின் தியாகபூமி, அலையோசை போன்றவை சமகால வரலாற்று நாவல்களாகும்.
(1) இரண்டும் உரைநடையில் அமைந்தவை.
(2) இரண்டும் மானிடப் பண்புகளை விளக்கக் கூடியவை.
(3) இரண்டும் மானிட வாழ்க்கையை விளக்கக் கூடியவை.
(4) பெரும்பாலும் பொழுது போக்கிற்குப் படிக்கக் கூடியவை.
இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உண்டு.
எண் சிறுகதை நாவல்
1. கதைக்கரு ஓர் அனுபவமாகவோ, பல்வேறு அனுபவங்கள்
சிறு செய்தியாகவோ இருக்கும். பல்வேறு செய்திகள் காணப்படும்.
2. வாழ்வின் ஒரு சிறு நிகழ்வை வாழ்வை முழுமையாகவோ, ஒரு
விளக்கக் கூடியது. பகுதி வாழ்க்கையை விளக்கமாகவோ கூறுவது.
3. ஏதோ ஒரு பாத்திரத்தின் பல்வேறு பாத்திரங்களின்
மிக மிக முக்கிய சுவையான பண்புகளையும் வாழ்க்கை முறைகளையும்
ஒரு செய்தியைச் சில அவற்றிற்கிடையே நடைபெறும்
பக்கங்களில் விறுவிறுப்பாகக் நிகழ்ச்சிகளையும் ஒழுங்குபடுத்திக் காட்டுவது.கதையாகத் தருவது.
4. பத்தாயிரம் சொற்களுக்குள் நீண்டதொரு கதையாக
அரைமணி நேரத்தில் படிப்பதாக ஐம்பதாயிரம் சொற்களுக்கு மேல்
இருக்க வேண்டும். இருக்கலாம்.
5. சிறுகதையை வாழ்க்கையின் நாவலை வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சாளரம் எனலாம். நிலைக் கண்ணாடி எனலாம்.
6. சிறுகதை எழுப்பும் கலையார்வம் நாவல் எழுப்பும் கலையார்வம் நீண்ட
விரைந்து பெருகி விரைந்து முடியும் நேரம் நீடித்து நிற்க வல்லது.
தன்மையுடையது.
7. பரபரப்பு ஊட்டவல்ல ஒரு நாவலுக்குப் பரபரப்பு
சிறிய நிகழ்ச்சி அல்லது ஊட்டவல்ல பல காட்சிகளும் நிகழ்வுகளும் உள்ளம் கவரும் ஓர் அரிய தேவை.
காட்சி சிறுகதையாகும்.
இவ்வாறு பல்வேறு பொதுப் பண்புகளும், வேறுபாடுகளும் கொண்டிருந்தாலும் இரண்டு இலக்கியங்களும் படைப்பிலக்கியத் துறையில் மக்களிடம் மிகச் செல்வாக்கு மிக்கனவாக இன்றுவரை விளங்குகின்றன. இரண்டு இலக்கியங்களுமே வார, மாத இதழ்கள் மூலம் மக்களிடம் மிக நெருக்கமான தொடர்பு கொண்டு விளங்குகின்றன. கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர்கதையாக முதன் முதலில் வந்த காலத்தில் சிற்றூர்களில் பெண்களிடம் மிகச் செல்வாக்கோடு விளங்கியது. கல்வி அறிவுடைய பெண்கள் குறைவாக இருந்த அக்காலச் சூழலில், பொன்னியின் செல்வனைக் கல்வி அறிவுடைய ஒரு பெண் படிக்கப் பிறர் கேட்டுக் கொண்டிருப்பர். அதே போல், வீரமாமுனிவரின் பரமார்த்தகுரு கதை தொடங்கி ஜெயகாந்தனின் சிறுகதைகள் வரை மக்களிடம் சிறுகதைகளும் செல்வாக்குப் பெற்றன.
வீரமாமுனிவர்
ஜெயகாந்தன்
பொதுவாக இவ்விரு இலக்கியங்களும் மக்களிடம் வாசிக்கும் வழக்கத்தினை மிகுதியாக்கின.
நாடகம், நாவல் – ஒற்றுமைகள்
(1) நாவலைப் போல நாடகமும் ஒரு கதையைச் சொல்லுகிறது.
(2) நாவலுக்கும் நாடகத்திற்கும் இடையே உயிராக உள்ளது கதைக் கோப்பாகும்.
(3) நாவல், நாடகம் இரண்டும் மனித வாழ்வின் செயல்பாடுகளை ஒரு கதை மூலமாக வெளிப்படுத்துகின்றன.
(4) நாவல், நாடகம் இரண்டிலும் தொடக்கம், முடிவு ஆகிய இரு நிலைகளுக்கிடையே போராட்டத்தின் வளர்ச்சியும், நெகிழ்ச்சியும், உச்சநிலையும் சுவை குன்றாமல் ஒரே முறையில் வெளிப்படுத்தப்படுகின்றன.
நாடகத்திற்கும் நாவலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்:
எண் நாடகம் நாவல்
(1) கலையரங்கம் தேவை. கலையரங்கம் தேவையில்லை.
(2) நிகழ்ச்சிகள் யாவும் நிகழ்ச்சிகள் யாவும்
அரங்கக்காட்சி வருணனை முறையிலேயே
அடிப்படையிலேயே இருக்கும்.
அமைக்கப்பட்டிருக்கும்.
(3) பாத்திரங்களின் உணர்வுகளும், உணர்வுகளையும்
பண்புகளும் அவர்களின் முக பண்புகளையும் நாவல்
பாவம், நடிப்பு ஆகியவற்றின் ஆசிரியரே வருணிப்பார்.
மூலம் வெளிப்படும்.
(4) கதைமாந்தர்கள் செயல்படும் ஆசிரியரே விளக்கினால்
முறையிலேயே செயல்கள் போதுமானது.
வெளிப்பட வேண்டும்.
இவ்வாறு நாவலுக்கும் நாடகத்திற்கும் இடையே பல ஒற்றுமை, வேற்றுமைகள் இருந்தாலும் இரண்டும் கதையை நடத்திச் செல்வதையே அடிப்படையாகக் கொண்டவை. நாவலில் பல இடங்களில் நாடகத் தன்மைகள் நிறையக் காணப்படும். பாத்திரங்களின் உரையாடல்கள் நாடக முறையிலே அமைக்கப்பட்ட தொடக்க கால நாவல்களை நாம் அறிவோம்.
பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் போன்ற நாவல்கள் நிறைய நாடகக் கூறுகளை கொண்டவை ஆகும்.
முதல் நாவல்
சாமுவேல் ரிச்சர்ட்சன் 1740ஆம் ஆண்டில் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டார். அக்காலத்தில் மக்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்ட கற்பனைக் காதல் கடிதங்கள் முறையில் அமைந்த நூல் ஒன்றினை எழுதினார். அது புதுமையாகவும், வாசகர்களால் விரும்பப் பட்டதாகவும் அமைந்தது. அந்நூலுக்கு ரிச்சர்ட்சன் வைத்த பெயர் பமிலா. அந்நூலின் புது மரபைப் பார்த்தவர்கள் நாவல் என்று கூறத் தொடங்கினர். அதே முறையில் பல எழுத்தாளர்கள் இம் முயற்சியில் ஈடுபட நாவல் என்னும் இலக்கிய மரபு வளரத் தொடங்கியது.
நாவலில் அங்கதம் (Satire)
அதே காலச் சூழலில் தோன்றிய பீல்டிங் என்பார் ஆங்கில நாவல் உலகில் மேலும் ஒரு புரட்சி செய்தார். அங்கதச் சுவையுடைய ஒரு நாவலை எழுதினார். 1740இல் அனைவரும் பமிலா நாவல் பற்றியே பேசிக் கொண்டிருந்த சூழல் பீல்டிங்கிற்கு வியப்பாக இருந்தது. டாம் ஜோன்சின் வரலாறு என்ற பெரிய நாவலை அங்கதச் சுவையுடன் எழுத இதுவே காரணமாயிற்று. இந்நாவலில் மிக அதிகமான கதைமாந்தர்கள் இடம் பெற்றனர். 18ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்தினை இக்கதை படம் பிடித்துக் காட்டிற்று. இவர் அமலியா என்ற நாவலையும் எழுதினார்.
பிற நாவல்கள்
தாமஸ் ஸ்மோலட் என்பவர் ஆறு நாவல்கள் எழுதி, நாவல் இலக்கியத்தை விரிவடையச் செய்தார்.
இதே காலச் சூழலில் பிரேவோ பாதிரியார் என்பவர் மானோன் லெஸ்க்கோ என்ற பிரெஞ்சு நாவலை எழுதினார். இது ஒரு கீழ்நிலைப் பெண்ணின் மீது காதல் பித்துக் கொண்ட இளைஞனின் வாழ்க்கைச் சீரழிவை விவரிக்கிறது. இது, காதலால் அழியும் இளைஞனின் கதை. இது வெற்றி பெற்ற ஒரு நாவலாகும்.
தீதரோ என்ற பிரெஞ்சு எழுத்தாளர் வரலாறு, தத்துவம், நாவல் எனப் பல துறைகளில் புகழ் பெற்றார். அவரது ரமோவின் மருமகன் உலகப் புகழ் பெற்றது. அந்நூலை ஜெர்மன் மொழியில் கெதே மொழிபெயர்த்தார்.
ரூசோவும் நாவல் துறையில் ஈடுபட்டார். புது எலோரஸ் என்ற காதல் நாவலை எழுதினார். எலோ ஈசு, தனக்குக் கல்வி கற்பித்த பாதிரியாரைக் காதலிக்கிறாள். காதலுக்குப் பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. இருவரும் மறைமுகமாகத் திருமணம் செய்து கொள்கின்றனர். மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் என்ற தமது கருத்தை ரூசோ நாவலில் வலியுறுத்துகின்றார்.
இந்திய மொழிகளில் நாவல் இலக்கியம் மிகச் சிறப்பாக வளர்ந்தோங்கியது. வங்காள மொழியில் பங்கிம் சந்திரர் எழுதிய துர்க்கேச நந்தினிதான் இந்தியாவின் முதல் நாவல். பங்கிம் சந்திரர், இரவீந்திரநாத் தாகூர், சரத் சந்திர சட்டர்ஜி போன்றோர் வங்க நாவலைச் சமூகச் சிந்தனையோடும், நாட்டுப் பற்றுடனும் வளர்த்தனர்.
இரவீந்திரநாத் தாகூர்
மலையாளத்தில் முதல் நாவலாசிரியர் ஓ.சந்து மேனன். பின்னர், வைக்கம் முகமது பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை போன்றோர் மலையாள நாவலுலகில் புகழ் பெற்றவர்கள். தகழி சிவசங்கர பிள்ளையின் செம்மீன், தோட்டியின் மகன், ஏணிப்படிகள் போன்றவை மிகவும் புகழ் பெற்றவை.
மராட்டியத்தில் காண்டேகர் எழுதிய நாவல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் புகழ் பெற்றவை. பகிர்மோகன் சேனாதிபதி ஒரியா மொழியில் முதல் நாவலாசிரியர். அஸ்ஸாமியில் பெஸ் பருவா, பிரேந்திரகுமார் பட்டாச்சாரியா போன்றவர்களும் புகழ்பெற்றவர்கள்.
ராஜம் ஐயரை அடுத்து அ.மாதவய்யா எழுதிய பத்மாவதி சரித்திரம் மிகத் தொன்மையான கதைமாந்தர் படைப்பைக் கொண்டது. அந்நாவலில் அவரின் சமூகச் சீர்திருத்த எண்ணங்கள் வெளிப்படு கின்றன. அ.மாதவய்யா விஜய மார்த்தாண்டம், முத்து மீனாட்சி என்னும் நாவல்களையும் எழுதியுள்ளார். விஜய மார்த்தாண்டம் மறவர் சமுதாய வாழ்க்கையை வெளிப்படுத்துவது. முத்து மீனாட்சி ஓர் இளம் விதவையின் துன்பத்தை வெளிப்படுத்திய நாவலாகும்.
அ.மாதவய்யாவிற்குப் பிறகு தமிழ் நாவல் துறை வேறுவழியில் போகத் தொடங்கியது. பல வெளிநாட்டுத் துப்பறியும் நாவல்களைப் படித்து அவற்றைப் போலவே தமிழில் எழுத விழைந்த நாவலாசிரியர்கள் தோன்றினர். வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், கோதை நாயகி அம்மையார், ஜே.ஆர்.ரங்கராஜு போன்றோர் இத்தகு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர்.
கல்கியின் பங்களிப்பு
தமிழில் நகைச்சுவையுடன் ஆனந்தவிகடனில் கட்டுரைகள் எழுதிவந்த சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழில் முன்னோடிப் பத்திரிக்கையாளருமான பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி வரலாற்று நாவல்களைத் தமிழில் எழுதத் தொடங்கினார். பல்லவர் கால வரலாற்று நிகழ்வுகளைப் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் என்ற நாவல்களாக எழுதினார். பிற்காலச் சோழருள் புகழ்பெற்றவனாகிய இராசராச சோழன் வரலாற்றைப் பொன்னியின் செல்வன் என்ற மிகப் பெரும் நாவலாக எழுதினார். இவை தமிழில் வாசகர் வட்டத்தை மிகுதியும் அதிகப்படுத்தின. நாவல் படிக்கும் பழக்கத்தைச் சாதாரண மக்களிடம் கொண்டு சென்றதில் கல்கிக்குப் பெரும் பங்கு உண்டு. சமகால வரலாற்றைத் தியாகபூமி, மகுடபதி, அலையோசை ஆகிய நாவல்களாக எழுதினார்.
நாரண துரைக்கண்ணனின் பங்களிப்பு
கல்கியைத் தொடர்ந்து சமகால வரலாற்றை, சுதந்திரப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நாவல் இயற்றியவர் நாரண துரைக்கண்ணன். அவரின் தியாகத் தழும்பு மிகவும் போற்றத் தக்க நாவலாகும்.
அகிலனின் பங்களிப்பு
அகிலன் தமிழ் நாவல் உலகில் அடுத்த காலகட்டத்தில் புகழ்பெற்று விளங்கியவருள் ஒருவர். அவரின் பாவை விளக்கு மனிதனின் உள் மனப் போராட்டங்களை விவரிக்கிறது. அவரின் சித்திரப்பாவை நாகரிகத்தின் குழப்பத்தையும், பணத்தால் ஏற்படும் பல்வேறு சிக்கல்களையும் கூறுகிறது. தமிழில் ஞானபீட விருது பெற்றது இந்நாவலாகும். அகிலனின் பால்மரக் காட்டினிலே மலேசிய ரப்பர்த் தோட்டத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்களின் இன்னல்களை வெளிப்படுத்துகிறது.
வரலாற்று நாவல்களைப் படைப்பதிலும் அகிலன் முன்னிற்கிறார். இவரின் வேங்கையின் மைந்தன் சோழப் பேரரசு வரலாற்றைக் கூற, கயல்விழி பாண்டியர் ஆட்சி வரலாற்றைக் கூறுகிறது. விஜய நகர ஆட்சியைப் பின்னணியாகக் கொண்டது அவரது வெற்றித் திருநகர்.
பிறரின் பங்களிப்பு
கோவி.மணிசேகரன் தமிழில் பல்வேறு வரலாற்று நாவல்களையும், சமூக நாவல்களையும் படைத்தவர். அவர் எழுதிய பீலிவளை, செம்பியன் செல்வி போன்றவை புகழ் பெற்றவை.
சாண்டில்யன் தமிழ் வரலாற்று நாவல் துறையில் மிகவும் புகழ் பெற்றவர். தமிழில் வரலாற்றுத் தொடர்கதைகளாக யவனராணி, கடல் புறா, மன்னன் மகள், ஜீவபூமி, கன்னிமாடம், பல்லவ திலகம் போன்ற நாவல்களை எழுதிப் புகழ் பெற்றார்.
நந்திபுரத்து நாயகி என்ற பெயரில் எழுத்தாளர் விக்ரமன் ஒரு வரலாற்று நாவலை எழுதினார். ஜெகசிற்பியன் மகரயாழ் மங்கை, ஆலவாய் அழகன், நாயகி நற்சோணை, அருள்மொழி நங்கை, திருச்சிற்றம்பலம் முதலிய நாவல்களை வரலாற்று அடிப்படையில் எழுதினார். அரு.ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி மிகச் சிறந்த வரலாற்று நாவல்.
சமூக நாவலாசிரியர்களில் மிகவும் சிறப்பாகப் போற்றப்பட்டவர் பேரா.மு.வரதராசனார். அவரின் நாவல்கள் ஐம்பதுகளில் கல்லூரி மாணவர்களிடம் மிகப் பெரிய ஈர்ப்பினைக் கொண்டிருந்தன. அவரின் கள்ளோ காவியமோ, கரித்துண்டு, கயமை, அகல் விளக்கு, நெஞ்சில் ஒரு முள் போன்றவை மிகச் சிறப்பு வாய்ந்தவை.
குடும்பச் சூழலைக் கொண்டு நாவல்களைப் படைப்பதில் பி.எம்.கண்ணன், ஆர்.வி., மாயாவி, அநுத்தமா போன்றோர் சிறந்து விளங்கினர். விந்தனின் பாலும் பாவையும் மிகச் சிறந்த சமூக நாவலாகப் போற்றப்படுகிறது.
தி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள் ஆகிய நாவல்கள் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் நாவல்களில் முக்கியமானவை. எம்.வி.வெங்கட்ராம் கும்பகோணம் சௌராட்டிர இனமக்களின் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய வேள்வித் தீ என்ற நாவல் தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்று. அவர் எழுதிய அரும்பு, ஒரு பெண் போராடுகிறாள், நித்திய கன்னி ஆகியவையும் போற்றத் தகுந்த நாவல்களாகும்.
நா.பார்த்தசாரதி சமுதாயக் கேடுகளை அச்சமின்றித் தம் நாவலில் சுட்டிக் காட்டியவர். அவருடைய குறிஞ்சிமலர், பொன் விலங்கு ஆகியவை மிகச் சிறந்த சமூக நாவல்களாகப் போற்றப்படுகின்றன. பாண்டிமா தேவி, மணிபல்லவம் என்ற இரண்டு வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார்.
கு.ராசவேலுவின் 1942 எனும் நாவல் விடுதலைப் போராட்டச் செய்திகளைக் கூறும் நாவலாகும். தமிழில் மிகச் சிறந்த படைப்புகளைத் தந்த கலைஞர் மு.கருணாநிதி வரலாற்று நாவல்களை இலக்கிய நடையில் எழுதியுள்ளார். அவரின் ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் ஆகிய வரலாற்று நாவல்கள் புகழ் பெற்றவை.
வீடும் வெளியும் என்ற நாவலைப் படைத்த வல்லிக்கண்ணன், மண்ணில் தெரியுது வானம் எழுதிய ந.சிதம்பர சுப்பிரமணியன், கல்லுக்குள் ஈரம் எழுதிய ர.சு.நல்ல பெருமாள், இன்ப உலகம் வழங்கிய சங்கரராம், தந்திர பூமி எழுதிய இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் தமிழ் நாவல் உலகிற்கு மாபெரும் தொண்டாற்றி உள்ளனர்.
ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள்?, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சுந்தர காண்டம், ஜய ஜய சங்கர போன்ற நாவல்கள் தமிழில் மிகவும் போற்றப்பட்டவை ஆகும்.
பொன்னீலனின் புதிய தரிசனங்கள், பிரபஞ்சனின் வானம் வசப்படும், மானுடம் வெல்லும், மகாநதி ஆகியவை புகழ்பெற்ற நாவல்களாகும்.
சு.சமுத்திரத்தின் ஊருக்குள் புரட்சி, சோற்றுப் பட்டாளம் போன்றவை சிறந்த நாவல்கள். பெண் எழுத்தாளர்கள் சிவசங்கரி, அனுராதா ரமணன், இந்துமதி, ரமணிச் சந்திரன் போன்றோர் தமிழ் நாவல் உலகில் சமீப காலத்தில் சாதனை படைத்தவர்கள். இவர்களின் நாவல்களில் பெண் அடிமைத்தனம் பற்றியும், அவற்றைத் தகர்த்து எறியும் தன்மை பற்றியும் நாம் அறிய முடியும்.
தமிழ் நாவல் வளர்ச்சியில் இலங்கை, மலேயா போன்ற பிற நாட்டு எழுத்தாளர்களின் பங்கும் மிகுதியாக உண்டு. தி.த.சரவண முத்துப் பிள்ளை எழுதிய மோகனாங்கியும், சீ.வை.சின்னப்பா பிள்ளை எழுதிய வீரசிங்கன் கதையும் தொடக்க காலத் தமிழ் நாவல்களாகும்.
டானியல் எழுதிய நெடுந்தூரம் என்ற நாவலும் தமிழில் குறிப்பிடத்தக்கது. செ.யோகநாதன் எழுதிய இரவல் தாய்நாடு, செ.கணேசலிங்கத்தின் செவ்வானம், நீண்ட பயணம், சடங்கு போன்ற நாவல்கள் சாதியப் பிரச்சனைகளை முன்வைக்கின்றன.
தற்கால நாவலாசிரியர்களில் தனித்தன்மை பெற்று நிற்பவர் எஸ்.ராமகிருஷ்ணன். அவரின் உபபாண்டவம் நாவல்தான் தமிழ் உலகிற்கு அவரை மிகச் சிறந்த நாவலாசிரியராக அடையாளம் காட்டிற்று.
நாவலுக்கு இதிகாசக் கதையைப் பயன்படுத்துவது ஒன்றும் புதிய முறை அல்ல. பல எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்ட ஓர் உத்திதான். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணன் மகாபாரதக் கதையையும், நடப்பியல் கால நிகழ்வையும் ஒருங்கிணைத்து இந்நாவலை ஆக்கியுள்ளார். அவரின் நெடுங்குருதி, உறுபசி ஆகிய நாவல்கள் தமிழ் நாவல் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றவை.
ஜெயமோகன், தமிழில் புதுமுயற்சிகளில் ஈடுபட்டு, கம்பாநதி, ரெயினீஸ் அய்யர் தெரு என்னும் நாவல்களை எழுதினார். கெ.டி.குரூஸ் எழுதிய ஆழி சூழ் உலகு என்பது குறிப்பிடத்தக்க நாவல்களுள் ஒன்றாகும்.
திலகவதியின் கல்மரம் கட்டிடத் தொழிலாளிகளின் வாழ்வியல் பிரச்சனைகளையும், பாலமுருகனின் சோளகர் தொட்டி மலைவாழ் மக்களின் துன்பியல் வாழ்க்கையையும் சுட்டிக் காட்டுகிற நவீன நாவல்கள்.
தமிழ் நாவல்களைப் பொறுத்தவரை 21ஆம் நூற்றாண்டு ஒரு புதிய முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது. எஸ்.இராமகிருஷ்ணன் கூறியிருப்பது போல,
‘நாவல் என்பது ஒற்றைச் சட்டகமல்ல. இது பல்வேறு விதமான இலக்கிய வடிவங்களின் ஒன்று சேர்ந்த முயற்சி. அதாவது நாவல் ஒரு இசைக் கோர்வையைப் போலத் தன்னுள் கவிதை, நாடகம், தத்துவம், ஓவியம் என்று பல்வேறு வகைப்பட்ட தளங்களைக் கொண்டிருக்க வேண்டும்.’
தமிழ் நாவல் துறை தற்காலத்தில் வளர்ந்து வருகிறது.
தமிழில் நாவல் இலக்கியம் தோன்றியதும், ஆங்கிலக் கல்வி கற்றமையும், பரவலாக்கப்பட்ட கல்வியும், அச்சக வளர்ச்சியும் நாவல் வளர்ச்சிக்குத் துணை நின்றமையை அறிந்தோம்.
பிரதாப முதலியார் சரித்திரம் முதலாகக் கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் போன்ற நாவல்களின் தோற்றமே தமிழில் நாவல்துறையின் வளர்ச்சியை உருவாக்கின என்பது கண்கூடு.
இருபதாம் நூற்றாண்டு, தமிழ் நாவலின் பொற்காலம் என்பதும், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு புதிய முறை நாவல்களின் தோற்றக் காலம் என்பதும் நாம் இப்பாடம் வாயிலாக அறிந்து கொண்டவை.
பாடம் - 3
கதை என்பது, தொடங்க வேண்டியதில் தொடங்கி முடிய வேண்டிய இடத்தில் முடியும் நிகழ்ச்சிகளின் தொடர்பறாத விவரிப்பே ஆகும். எந்த இடத்தில் கதையைத் தொடங்கினால் சுவையாக இருக்கும் என்பதை மனத்தில் வரையறுத்துக் கொண்டு நாவலாசிரியர் கதையை அந்த இடத்தில் இருந்து தொடங்குவது வழக்கம். இவ்வாறு தொடங்கப்பட்ட கதையைப் பாத்திரங்களின் செயல்பாடுகளால் வளர்த்து, முடிக்க வேண்டிய இடத்தில் முடிக்கலாம். சாதாரணமாக ஒரு கதைக்குத் தொடக்கமோ முடிவோ கிடையாது. படைப்பாளன் விருப்பம் போல் ஒரு குறிப்பிட்ட சூழலின் அனுபவத்தைத் தேர்ந்தெடுத்து முன்னாகவோ, பின்னாகவோ கதையை அமைக்கலாம்.
(1) பருப்பொருள் கரு – Phenomenolistic Concept
(2) தனிமனிதச் சிந்தனைக் கரு – (Individualist Concept)
(3) சமூகக் கரு – (Sociological Concept)
(4) உளவியல் கரு – (Psychological Concept)
(5) தெய்விகக் கரு – (Theological Concept)
இவற்றில் தனிமனிதச் சிந்தனைக் கரு, சமூகக் கரு, உளவியல் கரு, தெய்விகக் கரு ஆகியவற்றையே பெரும்பாலும் தமிழ் நாவல்கள் கொண்டிருக்கின்றன.
தனி மனிதனைச் சுற்றி, அவன் செயல்பாடுகளைச் சுற்றி நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் நாவல்கள் தனிமனிதச் சிந்தனைக் கரு உடைய நாவல்களாகும். தமிழில் க.நா.சுப்பிரமணியன் எழுதிய ஒருநாள் என்ற நாவல் ஒரு தனிமனிதனின் ஒரு நாள் செயல்பாடுகளை முழுமையாக விவரிக்கின்றது. இந்த நாவல் தனிமனிதச் சிந்தனைக் கரு உடைய நாவலாகும்.
சமூகக் கரு என்பது நாவல் தோன்றிய காலச் சூழலில் அமையும் மனிதனைப் பற்றிப் பேசும். கு.சின்னப்ப பாரதியின் சங்கம் என்ற நாவல் மலைவாழ் மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. சுதந்திரம் பெற்ற இந்தியாவில் அடிப்படை அறிவும், வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இல்லாத மக்களின் சமூக வாழ்க்கையை முழுமையாகச் சுட்டுகிறது. இந்நாவலைச் சமூகக் கருவைக் கொண்ட நாவலாக நாம் கருதலாம்.
உளவியல் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்கள் உளவியல் கரு உடையனவாக அமைவன. எம்.வி.வெங்கட்ராம் எழுதிய காதுகள் என்ற நாவல் மகாலிங்கம் என்ற ஒரு தனிமனிதனின் உளவியல் நிலையை முழுமையாக எடுத்துக் காட்டுகிறது.
தெய்விகக் கரு என்பது ஆன்மிகப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டது. எம்.வி.வெங்கட்ராம் எழுதிய இருட்டு என்ற நாவல் ஆன்மிகப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு தெய்விகக் கருவால் எழுதப்பட்ட நாவல் எனக் கருதலாம்.
நாவலில், பல்வேறு கதை நிகழ்ச்சிகளை நாவலாசிரியர் குறிப்பிடுவார். இக்கதை நிகழ்ச்சிகளைக் காரண காரிய முறையில் ஒன்றினை அடுத்து ஒன்றை வைப்பது கதைப் பின்னலாகும். இந்த நிகழ்வுக்குப் பின், இது நிகழும் என்றும், இன்ன காரணத்தால் இந்த நிகழ்ச்சிக்குப்பின் இந்த நிகழ்ச்சி வைக்கப்பட்டுள்ளது என்றும் முறைப்படுமாறு அமைக்க வேண்டும். ஒரு கதை நிகழ்வைப் படிக்கும் வாசகனுக்கு அடுத்து என்ன நிகழப் போகிறது என்ற ஆர்வத்தைத் தூண்டுமாறு நிகழ்ச்சிகள் தொடர்புடன் அமைய வேண்டும். நாவலின் கதை நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் சுவையாக அமைய வேண்டும். அப்போதுதான் அடுத்த நிகழ்ச்சி என்னவாக இருக்கும் என்ற சிந்தனையை உருவாக்க முடியும். இரு நிகழ்ச்சிகள் தொடர்புடையன ஆவதற்குரிய காரணமாக அமைவது கதைப்பின்னலாம்.
கதைப்பின்னல் இரு வகையாகப் பிரிக்கப்படும்.
(1) நெகிழ்ச்சிக் கதைப் பின்னல் (Loose Plot)
(2) செறிவான கதைப் பின்னல் (Organic Plot)
செந்தாமரை மு.வரதராசனாரின் முதல் நாவல். இதில் ஓரு பாத்திரமாவது முழுமையானதாகப் படைக்கப்படவில்லை. சிலர் காதலை வளர்த்து வாழ்கிறார்கள்; சிலர் காத்திருந்து பெறுகிறார்கள்; சிலர் ஆராய்ந்து தேடி அடைகிறார்கள். செந்தாமரை நாவல் இத்தகைய மூன்று காதல் வாழ்வுகளையே சித்திரிக்கிறது. மருதப்பனும், அவனுடைய மனைவியும் காதலை வளர்த்து வாழ்கிறார்கள். திருநாதனும் திலகமும் காத்திருந்து காதலைப் பெறுகிறார்கள். இளங்கோவும், செந்தாமரையும் ஆராய்ந்து தேடி, காதல் வாழ்க்கை வாழ்கிறார்கள்.
கதைமாந்தர் மாறி மாறிப் பேசுவது போல் செந்தாமரை நாவல் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் கதை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கையில் திடீரென்று இன்னொரு பாத்திரம் பேசுவது போல் கதை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே கதை ஓட்டம் நெகிழ்ச்சி அடைகிறது.
மு.வரதராசனாரின் மற்றொரு நாவல் கரித்துண்டு. இந்நாவலின் கதைத் தலைவர் ஓவியர் மோகன்; கதைத் தலைவி நிர்மலா. இவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர். மோகன் விபத்துக்கு உள்ளாகவே கணவன் மனைவி இருவரும் பிரிகின்றனர். நிர்மலா பம்பாய் சென்று கமலக்கண்ணன் என்பவரைச் சந்திக்கிறாள். அவரோடு சேர்ந்து வாழ்கிறாள். சென்னை வரும்போது தன் கணவன் மோகனைக் காண நேரிடுகிறது. கமலக்கண்ணனை விட்டுப் பிரிகிறாள்.
சென்னையில் ஓவியர் மோகன் முடவராய் வாழ்கிறார். வண்ணப் பொடிகளாலும், ஓவியக் கோலாலும் ஓவியம் தீட்டிய மோகன், கடைசியில் கரித்துண்டால் ஓவியம் தீட்டும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். சின்னக் குடிசையில் ஏழைப் பொன்னியுடன் வாழ்க்கை நடத்துகிறார். அவரிடம் இருந்த படிப்பின் செருக்கு மறைகின்றது.
கதைத் தலைவன் மோகன் ஓவியம் தீட்டுவதில் இருந்து தொடங்கிப் பின்னர்த் தன் வாயாலேயே தன் கதையைக் கூறி வருவதாகக் கதை செல்கிறது. இதில் அமையும் நிகழ்ச்சிகள், இடையில் தொடங்கி, பின்னோக்கிச் சென்று மீண்டும் முன்னோக்கிச் செல்கின்றன. மேலும் இடையிடையே அறிவுரைகளும் மு.வரதராசனாரால் கூறப்படுகின்றன. இவ்வாறு கதை ஓட்டம் தடைப்பட்டு தடைப்பட்டு நெகிழ்வடைந்து மாறி மாறிச் செல்கின்றது. எனவே இந்நாவலும் நெகிழ்ச்சிக் கதைப் பின்னலுக்குச் சான்றாகின்றது.
செறிவுக் கதைப்பின்னலில் கதை ஒரே தொடர்ச்சியாக அமையும். ஒன்றற்கு ஒன்று தொடர்புடையதாகவும், ஒன்றில் இருந்து ஏதேனும் ஒரு பகுதி கிளைத்துத் தோன்றியது போலவும் தோன்றும். இந்த நிகழ்வு, இவ்விடத்தில் இல்லையென்றால் கதை சிறக்காது என்று வாசகன் சொல்லுகின்ற அளவிற்குப் பிரிக்க முடியாத நிலையில் நிகழ்ச்சிகள் அமைந்திருக்கும். ஒரு நிகழ்ச்சியின் முடிவு அடுத்த நிகழ்ச்சியின் தொடக்கமாக அமையும். ஜெயகாந்தன், எம்.வி. வெங்கட்ராம் போன்றோரின் நாவல்களில் செறிவுக் கதைப்பின்னலைக் காணலாம்.
ஜெயகாந்தன் அறுபதுகளில் எழுதிய அக்கினிப்பிரவேசம் என்னும் சிறுகதையின் தொடர்ச்சியாக வந்தது, சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் நாவல்; அதன் தொடர்ச்சியாக வந்தது, கங்கை எங்கே போகிறாள் என்ற நாவலாகும்.
கல்லூரி வாயிலில் மழைக்கு ஒதுங்கிப் பேருந்துக்குக் காத்து நின்ற கங்கா, காரில் அழைத்துச் சென்றவனிடம் ஏமாந்து தன் கற்பைப் பறிகொடுக்கிறாள். தன் அம்மாவிடம் வந்து அழுகிறாள். அம்மா, அவள் தலையில் தண்ணீரை ஊற்றி, உடலும் உள்ளமும் தூய்மையாகி விட்டதாகக் கூறுவதோடு அக்கினிப் பிரவேசம் சிறுகதை முடிக்கப் பெறுகிறது. பின்னால், இக்கதை தன்னிடம் வந்து அழுத பெண்ணைத் தாயே அடித்துத் திட்டி, ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்துச் செய்தியை வெளியே பரப்பிவிட, கங்காவின் வாழ்க்கைப் பயணம் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற தலைப்பில் நாவல் ஆக்கப்பட்டது. கங்கா தன்னைக் கெடுத்த பிரபுவைத் தேடிக் கண்டுபிடிக்கிறாள். ஆனால் அவன் மணமாகிக் குடும்பத்துடன் வாழ்கிறான். கங்காவிற்கு நேர்ந்த களங்கத்திற்குத் தான் காரணமான குற்றத்திற்காக, பிரபு வருந்துகிறான். அவளுடன் நட்புடன் பழகுகிறான். இந்தப் புதிய உறவு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
எனவே பிரபு அவளுக்குத் திருமணம் நடந்தால் நல்லது என நினைக்கிறான். அவளை விட்டு விலகிச் செல்கிறான். ஆனால் திருமணத்திற்கு உடன்படாமல் தனிமையில் நிற்கும் கங்கா குடிப்பழக்கத்திற்கு ஆட்படுகிறாள். சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் இத்துடன் முடிவடைந்தாலும், கங்கா இதற்குப் பிறகு என்ன ஆனாள் என வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக கங்கை எங்கே போகிறாள்? என்ற நாவல் எழுதப்பட்டது.
இந்த இரு நாவல்களிலும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவும் அடுத்த நிகழ்ச்சி தொடங்குவதற்குக் காரணமாக அமைகின்றன. செறிவுக் கதைப் பின்னலுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்
எம்.வி.வெங்கட்ராமின் காதுகள் என்ற நாவலில் கதைத்தலைவன் மகாலிங்கம். மகாலிங்கத்தின் காதுகளில் ஒரு விசித்திரமான பிரச்சனை. இரு காதுகளிலும் இரண்டு பேர் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. இதனால் அவனால் எதிலும் முழுமையாக ஈடுபட முடியவில்லை. பொருளாதாரச் சிக்கல் ஏற்படுகிறது. அடுத்தடுத்துத் துன்பங்கள் என இந்நிகழ்ச்சிகள் வரிசையாகச் செறிவான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்நாவலும் செறிவான கதைப் பின்னலுக்குச் சான்றாகும்.
கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும் சிவகாமி, தி.ஜானகிராமனின் மோகமுள்ளில் வரும் யமுனா, ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களில் வரும் கங்கா போன்றவர்களை வாசகர்கள் மறக்க இயலாது.
பாத்திரத்தின் பண்பினை வாசகர்கள் அறிந்துகொள்ளப் படைப்பாளிகள் பயன்படுத்தும் உத்திகள் பலவாகும். அவற்றுள் சிலவாக ஆய்வாளர்கள் கூறுவன கீழ்க்கண்டவை ஆகும்.
(1) புறத்தோற்றம்
(2) அசைவு, நடை, நடத்தை, பழக்கம்
(3) பிற பாத்திரங்களுடன் கொள்ளும் உறவு
(4) பிறருடன் பேசும் உரையாடல்
(5) செயல்பாடுகளும், பிறருடன் நடந்து கொள்ளும் முறைகளும்
(6) பாத்திரத்தின் பெயர்
பாத்திரங்களின் பண்பினை நாவலாசிரியர் சில இடங்களில் தாமே வெளிப்படுத்துவார். சில இடங்களில் பாத்திரங்களின் பேச்சாலும் செயலாலும் வெளிப்படுத்தப்படும்.
கல்கியின் சிவகாமி, நரசிம்மவர்மனின் வாதாபிப் போருக்கே ஒரு காரணமாகவும், அவன் வெற்றிக்கு அடிப்படையாகவும் இருக்கிறாள். கல்கி, தாம் எழுதிய நாவல்களின் பாத்திரங்களில் சிலரின் மேல் பேரன்பு கொண்டிருந்தார் என்பதைச் சிவகாமி சபதம் முன்னுரையின் மூலம் நாம் அறியலாம்.
‘மகேந்திரரும், மாமல்லரும், ஆயனரும், சிவகாமியும், பரஞ்சோதியும், பார்த்திபனும், விக்ரமனும், குந்தவையும் மற்றும் பல கதா பாத்திரங்களும் என் நெஞ்சில் இருந்து கீழிறங்கி, ‘போய் வருகிறோம்’ என்று அருமையோடு சொல்லி விடை பெற்றுக் கொண்டு சென்றார்கள்.’
இதனைக் கொண்டு நாம் பார்க்கும் போது படைத்தவரான கல்கியாலேயே மறக்க முடியாத பாத்திரமாகச் சிவகாமி இருப்பதை உணரலாம்.
தி. ஜானகிராமனின் மோகமுள்ளில் வருகின்ற யமுனா தன்னை மணந்துகொள்ள வருகின்ற இளைஞர்கள் சாதியத்தாக்கத்தால் மறுத்துச் செல்கின்ற நேரத்திலும், அதனைப் பற்றிக் கொஞ்சமும் வருந்தாமல் சமூகத்தைக் கவனித்து வருகிறாள். பாபுவின் மீது அவளுக்குக் காதல் உண்டா, நட்பு மட்டும்தானா என்பது தொடக்கத்தில் புலப்படவில்லை. பாபு மட்டுமே அவள் மேல் ஒருதலையாகக் காதல் கொண்டுள்ளானா என்றும் அறிய முடியவில்லை. நாவலின் முடிவில் பாபுவிற்குத் தன்னை அர்ப்பணித்த பிறகு அவள் பாபுவை நோக்கி ஒரு வினா எழுப்புகிறாள்.
‘திருப்திதானே?’
இந்த வினா, யமுனாவின் பாத்திரப்படைப்பைப் பற்றிய மதிப்பை மிகவும் உயர்த்திவிடுகிறது. யமுனா மறக்க முடியாத பாத்திரமாகிறாள்.
அதே போல் சில நேரங்களில் சில மனிதர்களில் வரும் ‘கங்கா’ நாம் முன்னர்க் கண்டது போல் மறக்க இயலாப் பாத்திரமாகக் காட்சியளிக்கிறாள்.
(1) வளர்ச்சி பெறாப் பாத்திரம் (Flat Character) அல்லது ஒரு நிலை மாந்தர்.
(2) வளர்ச்சி பெறும் பாத்திரம் (Round Character) அல்லது முழுநிலை மாந்தர்.
வளர்ச்சி பெறாப் பாத்திரப்படைப்பு
வளர்ச்சி பெறாப் பாத்திரம் என்று மொழி பெயர்த்தாலும் ஒரு நிலை மாந்தர் என்றும் மொழி பெயர்ப்பர். நாவலின் தொடக்கத்தில் எந்த ஒரு பண்புடன் காணப்படுகிறாரோ, நாவல் முடியும் வரை அதே பண்போடு விளங்குபவரே ஒரு நிலை மாந்தராவர். இப்பாத்திரம் ஒரு கருத்து, அல்லது குணத்தைச் சுற்றி அமைக்கப்படும். நாவலாசிரியர் பாத்திரத்தின் ஒரு சில குணங்களைத் தேர்ந்தெடுத்து மற்றவற்றை விட்டுவிடுவர். அதனால் பாத்திரத்தின் பிற பண்புகள் விளக்கம் பெறுவதில்லை. இப்பாத்திரம் பற்றி நாவலாசிரியர் விளக்கி உரைக்காமலே இப்பாத்திரத்தின் பண்பினை வாசகர் உடனே விளங்கிக் கொள்வர். ஒரு நிலை மாந்தர், நாவல் முழுமையும் ஒரே குணத்தவராகக் காணப்படுவர். ரெனி வெல்லாக், ஆஸ்டின்வாரன் ஆகியோர் தம்முடைய இலக்கியக் கொள்கையில், ‘வளர்ச்சி பெறாப் பாத்திரப்படைப்பு, முதன்மையானதாகவோ, சமுதாய நிலையில் மிகத் தெளிவாகப் புலப்படும் நிலையிலோ அமைந்த தனிப் பண்பை வெளிப்படுத்துகிறது. அது ஒரு கேலிச் சித்திரமாகவோ, உயர்ந்த குறிக்கோள் நிலையுடையதாகவோ இருக்கலாம்’ என்று கூறுவர்.
மு.வரதராசனாரின் கயமை எனும் நாவலில் வரும் வெங்கடேசன், எம்.வி.வெங்கட்ராமின் அரும்பு எனும் நாவலில் வரும் பசுபதி ஆகியோர் நாவல்களின் தொடக்கம் முதல் இறுதி வரை சுயநலமும், தீமை செய்வதும் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். நாவல் முடிவு வரை ஒரே நிலையிலேயே வாழும் வளர்ச்சி பெறாப் பாத்திரங்களாக இவர்கள் படைக்கப்பட்டுள்ளனர்.
சில திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் ஒருவர் வருவார். அவர் படத்தில் எந்த இடத்தில் வந்தாலும் நகைச்சுவையாளராக மட்டுமே செயல்படுவார். அவரிடம் பிற பண்புகள் எதுவும் வெளிப்படாது. ஒருநிலை மாந்தரும் இப்படிப்பட்டவரே.
வளர்ச்சி பெறும் பாத்திரப் படைப்பு
இப்பாத்திரங்களை முழுநிலை மாந்தர் என்றே தமிழ் ஆய்வாளர்கள் மொழி பெயர்ப்பர். இப்பாத்திரங்கள் நாவலின் ஒவ்வொரு வளர்ச்சி நிலைக்கும் ஏற்றவண்ணம், தம் இயல்புகளில் தாமும் வளர்கின்றனர். இவர்களின் பண்புகள் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை மாறாமல் இருப்பதில்லை. வளர்ச்சியும் மாற்றமும் இவ்வகைப் பாத்திரங்களுக்கு உண்டு.
இம் முழு நிலை மாந்தர் ஆழமான குறிக்கோள் கொண்டவர்களாக இருப்பர். வாசகன் தானும் அப்பாத்திரத்தைப் போலச் சிறப்புடைய மனிதனாக வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் இருக்குமாறு இம் முழுநிலை மாந்தர்கள் செய்து விடுகின்றனர்.
முழுநிலை மாந்தர் தம் வாழ்வுப் போக்கில் எத்தகைய மாற்றத்தையும் அடையலாம். தொடக்கத்தில் இருந்தது போலவே இருக்கக் கூடாது. வாழ்வில் ஒவ்வொரு சூழலிலும் முழுநிலை மாந்தர் வளர்நிலை அடைதல் வேண்டும். ஆனால் இந்த வளர்ச்சி அல்லது மாற்றம் பொருத்தமாக இருக்க வேண்டும். வேண்டுமென்றே செய்யப்பட்ட திடீர் மாற்றமாக இருக்கக் கூடாது. தவிர்க்க இயலாச் சூழலில் இம்மாற்றம் நிகழ்ந்ததாக அமைய வேண்டும்.
எம்.வி.வெங்கட்ராமின் அரும்பு எனும் நாவலின் கதைத் தலைவி மஞ்சுளா. இவள் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும் உயர்ந்த குணநலன்களும், அறிவுப் பூர்வமாகச் சிந்தித்து முடிவு எடுக்கும் தன்மைகளும் கொண்டவளாக விளங்குகிறாள். கதையின் வளர்ச்சிக்கேற்ப அவளின் நற்குணங்களும் அறிவும் வளர்ந்து கொண்டே செல்கின்றன. காதலித்த நீலகண்டனும் நட்புக்குரிய சரஸாவும் தன்னை ஏமாற்றிய போதும், உணர்வு நிலைக்கு ஆட்படாமல் அறிவு நிலையில் மென்மையாகப் பிரச்சனைகளை அணுகுகிறாள். இவள் வளர்ச்சி பெறும் பாத்திரத்திற்குச் சான்றாக அமைகிறாள்.
உரையாடலும் வாசகனும்
உரையாடலைப் படிக்கும் வாசகன் பாத்திரங்களுடன் நெருக்கமான தொடர்பு கொள்ள முடிகிறது. சிறந்த உரையாடல்தான் நாவலின் கதையை விளக்கமுறச் செய்கிறது. பாத்திரங்களின் மனநிலை, உணர்ச்சி, உள்நோக்கங்கள் ஆகியவற்றை வெளிக் கொணர்வது உரையாடலின் பணியாகும். பாத்திரங்கள் அவை பேசுகின்ற பேச்சின் மூலம் தம்மை அடையாளப் படுத்துகின்றன.
மறைமலையடிகளார்
மு.வரதராசனார்
ஜெயகாந்தனின் இல்லாதவர்கள் என்ற நாவலில் டோனி என்கிற துரைசாமி என்ற இளைஞனின் மொழிநடை கீழ்க்கண்டவாறு இருக்கிறது.
‘…….. த்தா! அரசியலு பெரிய மனுசங்க சமாசாரமா இருந்ததெல்லாம் முந்திடா! இப்ப, அது மொட்டப் பசங்க, முக்காடுப் பசங்க சமாசாரமாத்தான்டா பூடுச்சி…… த்தா! எவன் வேண்ணாலும் எந்தக் கட்சிக்கு வேண்ணாலும் போங்கடா! ஆனா…… டேய் எம்மவனுங்களா இந்த டோனி உசிரு இருக்கிற வரைக்கும் இந்தக் கொடிதான்டா! அதான்டா பறக்கணும் அங்கே!’
இவ்வாறு மக்களின் அன்றாட மொழியே, உரைநடை மொழியாக ஆகிவிட்டது.
(1) கதை சொல்லல்
(2) உரையாடல்
(3) வருணனை
(4) விளக்கவுரை
(5) பாத்திரத்தின் தனிமொழி
கதை சொல்லலைப் படைப்பாளியே நிகழ்த்துவார். இது சிறப்புடையதாகப் போற்றப்படாது. உரையாடல் இரு பாத்திரங்களுக்கு இடையே நிகழ்ந்து, கதையை நடத்திச் செல்லும். வருணனையைப் படைப்பாளியோ, பாத்திரமோ செய்யலாம். விளக்கவுரை என்பது ஒரு செயலை அல்லது பாத்திரப் பண்பை நாவலாசிரியரே விளக்கியுரைக்கும் வண்ணம் அமைவது. ஒரு பாத்திரம் தன் பண்பை – தன் செயலை மற்றவருக்குக் கூறாமல் தனக்குத் தானே உரைத்துக் கதை ஓட்டத்திற்குத் துணை நிற்பது தனி மொழியாகும்.
கதை சொல்லல்
கதை சொல்லலைப் படைப்பாளியே நிகழ்த்துவார். சிறு குழந்தைகளுக்கு எழுதப்படும் ராஜாராணிக் கதை போலக் கதை ஆசிரியரே கதையைக் கூறிச் செல்வார்.
வல்லிக்கண்ணனின் துணிந்தவன் எனும் நாவலில் கதையை அவரே சொல்லி வருவார்.
‘அழகை அள்ளிப் பொழிந்து கொண்டிருந்தது நிலவு.
…………………….
அன்று பௌர்ணமி
………………..
ஊருக்கு வடக்கேயுள்ள குளத்தின் கரை மீது ஆழ்ந்த யோசனையில் இலயித்திருந்த மாதவன் கண்கள் கூட இயற்கையின் மோகன எழிலால் வசீகரிக்கப்பட்டன.’
என்று சொல்லிக் கொண்டு செல்கிறார்.
உரையாடல்
உரையாடல் இரண்டு பாத்திரங்களுக்கிடையே நிகழ்ந்து, கதையைச் சொல்லிக் கொண்டு செல்லும். மோகமுள் எனும் நாவலில் தி.ஜானகிராமன் கதைத் தலைவன் பாபுவை ஓர் உரையாடல் மூலம் அறிமுகப்படுத்தி அவனது இசை ஞானத்தையும், அவன் ஒரு கல்லூரி மாணவன் என்பதையும் விளக்குகிறார்.
மேலக்காவேரி சண்முகானந்த சாஸ்திரிகள் கூறுகிறார்,
‘ஓய்! ஆறுமுகம், இதைப்பாரும். சார் கூட உம்ம பேச்சைப் பார்த்து அஞ்சு நிமிஷம் அசந்து போய் நிற்கிறார்; சாரைத் தெரியுமா? உமக்கு’ என்று பாபுவைப் பார்த்துக் கொண்டே ஆறுமுகத்தைக் கேட்டார் சாஸ்திரிகள்.
‘கடைக்கு வர்ர வாடிக்கை தானே! தெரியாம என்ன?’
‘அவ்வளவு தான் தெரியுமா?’
‘சொல்லுங்களேன்’
‘அட போமய்யா, இவ்வளவு பேச்சு பேசறீர்! ஊரையே விலைக்கு வாங்கறேங்கிறீர். சாரைத் தெரியாதுங்கிறீரே?’
………
‘போன வருஷம் காலேஜ்லே நாடகம் போட்டாளே பார்த்தீரா?’
‘பார்த்தேன்’
‘அப்படின்னா சொல்லும் சார் யாருன்னு?’
‘சொல்லும்’
‘இருங்க’
‘எத்தனை நாழி? ஏன்யா இது தெரியலீயா?’ ‘லீலாவதி வேஷம் போட்டுண்டாரய்யா.’
……………..
என்ன சாரீரம் பார்த்தீரா? என்ன பொட்டு என்ன ரவை! பொல பொலன்னு மத்தாப்பூவா உதிர்க்கிற சாரீரம்’
என்று பாத்திரத்தை உரையாடல் மூலம் அறிமுகப்படுத்துகிறார்.
நாவலைப் பொறுத்தவரை கதை நிகழ்விடம் என்பது, கதை நிகழும் நாடு, இடம் முதலியவற்றையும், காலம், பருவம் முதலியவற்றையும், சமூகச் சூழலையும் குறிக்கும்.
சில நாவல்களில் கதை நிகழ்விடம் ஓரிரு ஊர்களில் முடிந்துவிடும். சில நாவல்களில் கதை பல ஊர்களில் நிகழும். க.நா.சுப்பிரமணியனின் ஒருநாள் என்ற நாவல் ஒரு சிற்றூரில் தொடங்கி அங்கேயே ஒரே நாளில் முடிவடைந்து விடுகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி வேம்பலை என்ற சிற்றூரையும், வடக்குறிச்சி என்ற சிற்றூரையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலாகும். கல்கியின் பொன்னியின் செல்வன் எனும் நாவலில் பழையாறை, தஞ்சாவூர், இலங்கை போன்று பல்வேறு இடங்கள் வருவதை நாம் காண்கிறோம்.
க.நா.சுப்பிரமணியத்தின் ஒருநாள் எனும் நாவல், ஒரு நாள் காலையில் தொடங்கி இரவு எட்டு மணிக்கு முடிவடைந்து விடுகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் எனும் நாவல் மூன்றாண்டுக் காலக் கதையைச் சொல்லுகிறது.
பாடம் - 4
மனத்திற்குள் பல நாட்கள் சிந்தித்து ஒரு கதையை மனத்திலேயே நாவலாக வடிவம் கொடுத்துக் கதையைப் பின்ன வேண்டும். சில நேரங்களில் கதையைத் தொடங்கி, கதையை வளர்த்துக் கொண்டே சென்று, நாவலின் வளர்ச்சி நிலையில் முடிவைத் தீர்மானிக்கலாம்.
நாவல் எழுதும்போது நாவலாசிரியரே ஒரு பார்வையாளராக நின்று, விளையாட்டு வருணனையைத் தொலைக்காட்சியிலேயோ, வானொலியிலேயோ சொல்வதைப் போலக் கதையைச் சொல்லிச் செல்லலாம்.
இரண்டாவது வகை, நாவலாசிரியர் தம்மையே ஒரு பாத்திரமாக்கிக் கதையை நடத்துவதாக அமைக்கலாம். மூன்றாவது வகை, கதைமாந்தரே கதை கூறுவது போல அமைக்கலாம். நான்காவது வகை, கடித முறையிலே நாவலைப் படைக்கலாம். இவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் இடம் பெற்றுள்ளன.
எல்லாருக்கும் படைப்பாற்றல் திறன் உண்டு. ஆனாலும் படைக்கும் ஊக்கமும் முயற்சியும் தானாக உருவாக வேண்டுமே அன்றி அடுத்தவர் உருவாக்கித் தர இயலாது.
எம்.வி.வெங்கட்ராம் தம்முடைய காதுகள் நாவலில் தமக்கு உண்மையிலேயே ஏற்பட்ட ஓர் அனுபவத்தை அப்படியே நாவலாக மாற்றி அமைத்து விட்டதாகக் கூறுவார். அந்நாவலின் கதைத் தலைவன் மகாலிங்கம் என்பவன் வேறு ஒரு கற்பனைப் பாத்திரமில்லை; தாமே என்பதை அவரே ஒத்துக் கொள்கிறார்.
எனவே, நாவல் எழுதும் எந்த ஒரு நாவலாசிரியரும் நாவலில் பெரும்பாலும் தம் அகப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டே எழுதுகின்றனர்.
நாவலை எழுதும் போது வெளியில் இருந்து கதை சொல்வது போல நாவலாசிரியர் கூறினாலும் தம் மனப் போராட்டங்களை, அக எழுச்சிகளை நாவலில் பதித்து விடுவார். படைப்பாளன் பற்றிப் பிராய்டு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
‘நரம்பு நோயாளி போன்று கலைஞனும் திருப்தி தராத எதார்த்தத்திலிருந்து கற்பனை உலகில் தஞ்சம் புகுந்து கொள்கிறான்.’
அனுபவத்தைப் பகிர்தல்
ஏதோ ஒரு சூழலில் அல்லது சந்தர்ப்பத்தில் ஓர் அனுபவம் படைப்பாளிக்குக் கிடைத்து விடுகிறது. மேலும் அவ்வனுபவத்தை அடுத்தவருக்குச் சொன்னால்தான் மனதில் நிம்மதி ஏற்படும் போல் தோன்றுகின்றது. அவ்வனுபவத்தைச் சற்றுக் கற்பனை சேர்த்து உணர்ச்சியுடன் வடிவம் கொடுக்க அவனது ஆழ்மனம் ஆணையிடுகிறது. அந்த ஆணையை அடுத்து அவன் கையில் பேனாவுடன் தாளை எடுக்கிறான். எழுதத் தொடங்குகின்றான். அனுபவம் கதையாகின்றது. தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் பெயரை மாற்றிக் கதை மாந்தர்களாக மாற்றுகிறான். நடந்த நிகழ்வுகளைப் பொய்ப் பெயருடன் ஒரு கதையாக, நாவலாக உருவாக்குகின்றான். நாவல் வளருகின்றது. நாவல் எழுதும் போது அவன் மனத்தின் ஆழத்தில் சொல்ல நினைத்த செய்திகள் மெல்ல மெல்ல எழுத்து வடிவம் பெறுகின்றன. சொற்களாக, சொற்றொடர்களாக உருமாறுகின்றன. அச்சொற்றொடர்கள் பாத்திரங்களின் உரையாடல்களாகவும், உரையாடல் வழிக் கதை நிகழ்வுகளாகவும் மாறுகின்றன. ஒவ்வொரு நிகழ்வாகப் படைப்பாளி உருவாக்குகின்றான். நிகழ்வு சிறிது உண்மையாக இருக்கலாம். சிறிது கற்பனையாகவும் இருக்கலாம். கதையின் சுவைக்காகக் கற்பனைச் செய்திகளை ஒழுங்குபடுத்திக் கதையாக்கு கின்றான் படைப்பாளன்.
கூர்ந்து கவனித்தலும் கதைமாந்தரும்
பிறரைக் கூர்ந்து கவனிக்கும் போது அவரின் நடவடிக்கை, செயல்பாடுகள், உரையாடும் தன்மை, அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை அல்லது அடுத்தவரைக் கெடுக்கும் செயல்கள் எனப் பலவும் படைப்பாளனை வித்தியாசமாகச் சிந்திக்க வைக்கின்றன. இந்த மனிதரைத் தன் நாவலில் எப்படியாவது ஒரு பாத்திரமாக உருவாக்கி விடுவான்.
சமூக நிகழ்வுகள்
படைப்பாளன் சமூகத்தை உற்று நோக்குகிறான். சமூக நிகழ்வுகள் அவனைப் பாதிக்கின்றன. அந்நிகழ்வுகளை நாவலில், கதை நிகழ்வில் பயன்படுத்திக் கொள்கிறான்.
சமூகத்தில் நிலவும் வர்க்க வேறுபாடு, சாதிய வேறுபாடு, மத வேறுபாடு, பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை, சமூகச் சிக்கல்கள் ஆகியவை புறச்சூழல்களாக நின்று நாவல் படைப்பதற்குத் துணை நிற்கின்றன.
சுய அனுபவம்
வறுமையின் துன்பத்தில் உள்ள படைப்பாளி, தான் அனுபவிக்கும் வறுமைத் துன்பத்தை நாவலில் முழுமையாகக் காட்ட முடியும். செல்வச் செழிப்பில், பிறந்தது முதல் வாழும் ஒரு படைப்பாளி, வறுமைச் சூழலை முழுமையாக நாவலில் படைக்க முடியாது.
எம்.வி.வெங்கட்ராம், தாம் எழுதிய ஏழு நாவல்களில் இரண்டு ஆன்மிக நாவல்கள், ஒன்று புராண இதிகாச நாவல், பிற நான்கு நாவல்களில் வறுமையின் பெருந்துன்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். காதுகள் எனும் நாவலின் கதைத் தலைவன் மகாலிங்கம், வேள்வித் தீ என்னும் நாவலில் கண்ணன் என்ற பாத்திரம், அரும்பு எனும் நாவலில் வாத்தியார் ராமசாமி எனும் பாத்திரப் படைப்பு, ஒரு பெண் போராடுகிறாள் என்பதில் ஜஸ்மா ஆகியோர் வறுமையின் எல்லைக் கோட்டைப் பார்த்தவர்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடிப்படைக் காரணம் நாவலாசிரியர் வறுமையை முழுமையாக அனுபவித்தவர். அதனால் தான், அவர் வாழ்ந்த புறச்சூழலை நாவல்களில் படைப்பது அவருக்குச் சுலபமாக இருந்தது.
சாதி ஏற்றத் தாழ்வுகளை வெளிப்படுத்தும் நாவலாகப் பாமாவின் கருக்கு எனும் நாவல் காணப்படுகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பெண் எழுத்தாளர்கள் பலர் ஆழமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
எனவே, புறச்சூழலில் தான் கண்ட, அனுபவித்த சுவையான செய்திகளை, சமூகப் பிரச்சனைகளை நாவலில் எடுத்து எழுதுதல் நாவல் படைப்பாளிக்கு உகந்ததாக இருக்கும்.
‘மலரில் கலந்த மணம் போன்று கருவானது நாவலின் ஊடே பரவிக்கிடக்கும் ஒன்று. வெளியில் அப்பட்டமாகத் தெரியக் கூடாது. சிந்திக்கச் சிந்திக்கப் புலனாக வேண்டும்’ என்று எழுத்தாளர் அகிலன் கூறுகிறார்.
நாவல் உருவாக்கத்தில் ஒரு கதைக் கருவை அடிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தி.ஜானகிராமனின் மோகமுள் எனும் நாவலில் தன்னை விட வயதில் மூத்த ஒரு பெண்ணின் மேல் ஓர் இளைஞன் தன்னை அறியாமல் கொண்டு விட்ட மோகமே கதைக்கருவாக அமைவதைக் காணலாம்.
நாஞ்சில் நாடன், தலைகீழ் விகிதங்கள் என்ற தம் நாவலுக்கு வர்க்க வேறுபாட்டினை அடிப்படையான, கதைக்கருவாகக் கொள்கிறார். ஏழை, பணக்கார வர்க்கத்திற்கிடையே ஒரு திருமணத்தை நிகழ்த்தி, இரண்டு வர்க்கமும் எவ்வாறு ஒருங்கிணையும் அல்லது மோதிக் கொள்ளும் என்பதை யதார்த்தமாகச் சொல்ல விழைந்திருக்கிறார். கதைக் கருவைத் தேர்ந்தெடுக்கும் போது வேறுபட்ட வர்க்கங்களின் மோதல் என்ற அளவிலே நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்தது நாவலின் வெற்றிக்குத் துணை நிற்கிறது.
நாவலில், ஒரே ஒரு கதைக்கருதான் இருக்க வேண்டும் என்பது இல்லை. பல கருக்களைக் கொண்டும் நாவலை அமைக்கலாம்.
ஒரு நாவலின் கதைக் கரு என்பது கதைத் தலைவனை அடிப்படையாகக் கொண்டோ தலைவியை அடிப்படையாகக் கொண்டோ உருவாகலாம். தலைவனோ, தலைவியோ வாழ்வில் சந்திக்கும் அனைத்துப் போராட்டங்களையும் சிக்கல்களையும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கருவாக்கி எழுதலாம். தலைவன் பெரும்பங்கு கொள்ளும் போராட்டங்கள் எந்தச் சமூக மாற்றம் ஏற்பட்ட காலத்தில் எழுந்தன என்று விவரிக்கலாம்.
எம்.வி.வெங்கட்ராமின் ஒரு பெண் போராடுகிறாள் எனும் நாவலின் கதைத் தலைவன் டீகம் மண்வெட்டிப் பிழைக்கும் ஒரு எளிய கூலித் தொழிலாளி. பிற தொழிலாளர்கள் குடித்துவிட்டுப் போடும் கும்மாளங்களில் அவன் பங்கு கொள்வதில்லை. தன் மனைவி ஜஸ்மாவைத் தவிர அவன் உள்ளம் வேறு ஒரு பெண்ணை எண்ணிக்கூடப் பார்த்ததில்லை. பேரழகியான சௌதாமினி, அழகுப் பெண்ணாகிய சம்பா ஆகியோர் அவனை அடைய முயன்று தோற்கின்றனர். அவனுக்கு ஜஸ்மாவை மட்டும்தான் பெண்ணாகத் தெரியும். ஜஸ்மாவுக்கு அவனை மட்டும்தான் ஆணாகத் தெரியும். ஜஸ்மாவை எப்படியாவது அடைய அரசன் செய்யும் சூழ்ச்சிகளைச் சுற்றியே கதை சுழல்கிறது.
சமூகப் பிரச்சனைகளைக் கருவாகக் கொண்ட நாவல்கள் அண்மைக் காலத்தில் நிறையத் தோன்றுகின்றன. சமூக அமைப்பின் அடிப்படையை இவை சுட்டிக் காட்டும். குறிப்பிட்ட நாவலாசிரியர்கள் தாம் வாழ்ந்த காலச் சமூகத்தை உன்னிப்பாகப் படம் பிடிப்பார்கள். தஞ்சாவூர் மாவட்ட வாழ்வியல் சூழலை, தி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள் ஆகியவை சுட்டுகின்றன. சௌராட்டிர இன மக்களின் வாழ்வியல் போராட்டங்களை எம்.வி.வெங்கட்ராமின் வேள்வித் தீ என்ற நாவல் காட்டுகிறது.
அரசியலை நேரடியாகவும் மறைமுகமாகவும் நாவல்கள் எடுத்துரைக்கின்றன. காந்தியத்தைப் போற்றியும் விமர்சித்தும் கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி போன்றோர் நாவல்களை எழுதியுள்ளனர்.
கதைக் கருவிற்குச் சமூகப் பிரச்சனையை முன் நிறுத்தும் இக்காலச் சூழலில் புராண, இதிகாசக் கதைகளை மீட்டுருவாக்கம் செய்யும் செயலில் பல படைப்பாளிகள் இறங்கியுள்ளனர். மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு எஸ்.ராமகிருஷ்ணன் உபபாண்டவம் என்ற நாவலை எழுதியுள்ளார். இது தற்காலத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நாவலாகும்.
கதையின் மையக் கருத்தாக அமையும் கதைக்கருதான் நாவலின் வெற்றிக்கு மிக முக்கியமாக விளங்குகின்றது.
சிறுசிறு நிகழ்வுகளையும் உற்றுப் பார்த்து மனத்தில் பதிந்த அந்நிகழ்வுகளை எழுத்தில் கொண்டுவர முயல வேண்டும். நாம் செல்லுகின்ற வீதிகளில், பேருந்துக்கு நிற்கின்ற இடங்களில், பேருந்துப் பயண நேரங்களில், கடைத்தெருவில், மற்ற பொதுவிடங்களில் நிகழ்வுகள் பல நிகழக் கூடும். அந்நிகழ்வுகளை மனத்தில் நிறுத்தி, சேகரித்து வைத்திருக்க வேண்டும். மறதி வந்துவிடும் என்று தோன்றினால் கையில் சிறு குறிப்பேடு வைத்துக் கொண்டு, நம் உள்ளத்தைத் தொடும் சிறுசிறு நிகழ்வுகளையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிகழ்வையும் மிகுந்த ஆர்வத்தோடு பார்க்க வேண்டும். டி.எச்.லாரன்ஸ் பற்றி ஆல்டக்ஸ் ஹக்ஸ்லி குறிப்பிடுகையில் ‘சாகப் போகிறவன் உலகத்தை ஆர்வத்தோடு பார்ப்பது போலப் பார்த்தார்’ என்று குறிப்பிடுகின்றார்.
உலகில் கிடைக்கும் அனைத்து அனுபவங்களையும் தேடிப் பெறுதல் வேண்டும். அனுபவத்தைக் கொண்டு நமக்குத் தெரிந்ததைப் பற்றி, நமக்கு ஆர்வமுள்ள செய்திகளைப் பற்றி எழுத வேண்டும். மகிழ்ச்சி உண்டாக்குவதற்காகவோ, நாவலில் சுவைகூட்ட வேண்டும் என்பதற்காகவோ, நம் அனுபவத்திற்கு மாறானதை எழுதக் கூடாது. நாம் நம்புவதை மிகுந்த நம்பிக்கையுடன் எழுத வேண்டும்.
வரலாற்று நாவல்களை எழுதும்போது பெரும்பாலும் உண்மையான கதை மாந்தர்களின் பெயர்களையே பயன்படுத்த வேண்டும். வரலாற்று நிகழ்வுகளை இயன்றவரை பல்வேறு வரலாற்று ஆதாரங்களுடன் எழுத வேண்டும். கற்பனை கலந்து எழுதினாலும் உண்மை மறுக்கப்படக் கூடாது. சரியான தகவல் கிடைக்காத நிகழ்வுகளை எழுதக் கூடாது.
நாவல் என்பதைப் பிறர் படிப்பதற்காக நாம் எழுதுகிறோம். எனவே பிறருக்குப் புரியும் மொழி நடையில் எழுத வேண்டும். மறைமலை அடிகள் தமிழ் நாவல் எழுதும் போது தூய தமிழ் நடையில் எழுதினார். அவரது நாகநாட்டரசி அல்லது குமுதவல்லி நாவல் செல்வாக்குப் பெறாமல் போயிற்று.
நாவல் எழுதுபவர் தம்மை மிகச் சாதாரண வாசகனாக நினைத்து அவனுக்கு எழும் சிரமங்களைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும். வாசகர், சொல்லுக்கு அர்த்தம் தேடி அலையுமாறு எழுதக் கூடாது. வாசகருக்குத் தெரிந்ததில் தொடங்கித் தெரியாததைக் கூற வேண்டும்.
பெரிய பெரிய சொற்றொடர்களைப் பயன்படுத்தக் கூடாது. சிறு சிறு சொற்றொடர்களில் எழுத வேண்டும். ஒவ்வொரு சொற்றொடரும் ஒரு பொருளைத் தரும் வண்ணம் எழுத வேண்டும். தேவையான சொற்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமான சொல் அலங்காரம் இருந்தால் நாவல் படிப்பதற்குச் சலிப்பு ஏற்படும். நாம் சொல்ல வந்ததைப் புரிய வைக்க எளிமையான, அதே நேரத்தில் தேவையான அளவு சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
எளிய சொற்கள்தாம் நாவலை விளங்க வைக்கும். எதார்த்த நாவல் எழுதும் எழுத்தாளர்கள், வட்டார நாவல் எழுதும் எழுத்தாளர்கள் எளிய மக்களின் மொழியையே சொற்களாக்கி எழுதுவர். எல்லாருக்கும் தெரிந்த சொற்களையே பயன்படுத்த வேண்டும். மொழித் தூய்மை உண்டாக்குகிறேன் என்று கூறி யாருக்கும் புரியாத சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.
கதை நல்ல முறையில் எழுதப்படவும், வாசகர்களைக் கதைக்குள் முழுமையாகக் கவர்ந்திழுக்கவும் சில உத்திகளை நாவலாசிரியர் பின்பற்றுவர். அந்த உத்திகளுக்குக் கதை கூறும் உத்தி என்று பெயர். இதனைக் கதை கூறும் முறை என்றும் கூறுவர்.
கதை கூறும் முறையை
(1) ஆசிரியரே கதை கூறல்
(2) கதை மாந்தர் கதை கூறல்
என்று பிரிக்கலாம்.
ஆசிரியரே கதை கூறல்
ஆசிரியரே கதை கூறும் முறையை எடுத்துரை உத்தி என்றும் கூறுவர். அதாவது ஆசிரியர் கதையைத் தானே எடுத்துரைக்கும் முறையில் கதை கூறுவது ஆகும். ஆசிரியர் தனியே படர்க்கை நிலையில் நின்று, தான் ஒவ்வொரு நிகழ்வையும் அருகே இருந்து பார்ப்பது போல் கதையைக் கூறிச் சொல்லும் முறை. கதையை ஒருவர் சொல்ல இன்னொருவர் கேட்பது போல இம்முறை இருக்கும். எழுத்தாளர் கதை கூறுபவர்; வாசகர் கதையைக் கேட்பவர். தமிழில் பெரும்பாலான நாவல்கள் இம்முறையில் அமைந்தவை. இவ்வாறு கதையைக் கூறிச் செல்வதில் கல்கி மிகச் சிறந்தவர் ஆவார். கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற நாவல்கள் இம்முறையில் புகழ் பெற்றவை. நாவல் எழுதும் படைப்பாளி இந்த முறையில் எழுதினால் தான் சொல்ல நினைக்கும் ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியையும் விடாமல் மிகச் சிறப்பாக வருணிக்கலாம்.
கதைமாந்தர் கதை கூறல்
நாவலில் வருகின்ற தலைமை மாந்தர்கள், இன்றியமையா மாந்தர்கள் ஆகியோர் தாம் அனுபவித்த, தாம் கண்ட நிகழ்வுகளை ஒரு செய்தியாகக் கூறி வருவர். பாத்திரத்தின் பெயரைத் தலைப்பாகக் கொண்டு அந்தந்த அத்தியாயம் தொடங்கும். தலைப்பாக இருக்கும் பாத்திரம் தானே தன்னை ‘நான்’ எனக் கூறிக்கொண்டு கதையைச் சொல்லத் தொடங்கும். அப்படிக் கூறுவதால் நாவலாசிரியனின் இடையீடு இருக்காது. நாவலின் சம்பவங்களைக் கூறும்போது கதை சொல்லும் பாத்திரம் தான் கண்ட, கேட்ட அனுபவித்த செய்திகளை மட்டும்தான் கூற முடியும். இன்னொரு பாத்திரம் தான் கண்ட, கேட்ட, அனுபவித்த செய்திகளைக் கூறும். இவற்றை இணைத்துக் கொண்டு கதை அமையும். இவ்வாறு, நாவல்களை எழுதிப் பார்த்தவர்களிலே மு.வரதராசனார் முக்கியமானவர்.
கதையில் வரும் ஒரு பாத்திரம் மட்டுமே கதை கூறுவதாக நிறைய நாவல்கள் வெளிவந்துள்ளன. தமிழில் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் நாவலில் கதைத் தலைவரான பிரதாப முதலியாரே கதையைக் கூறிச் செல்கிறார்.
மு.வரதராசனாரின் அகல்விளக்கு நாவலில் வேலன் என்ற ஒரு பாத்திரமே கதை முழுவதையும் சொல்கிறது. மு.வரதராசனாரின் மற்றுமொரு நாவலாகிய வாடாமலர் நாவலில் குழந்தைவேல் என்ற கதைத் தலைவனே கதை முழுவதையும் கூறுகிறான்.
இவ்வாறு, கதை மாந்தரே கதை கூறுவதால் கதை நிகழ்வுகளில் சில நேரங்களில் சலிப்பு ஏற்படுவதும் உண்டு.
தனித்தமிழ் இயக்க முன்னோடியான மறைமலையடிகள் இந்த உத்திமுறையில் கோகிலாம்பாள் கடிதங்கள் என்ற நாவலை எழுதினார். இந்நாவலில் பதினேழு கடிதங்கள் உள்ளன. மனித இயல்பை ஆசிரியர் பாத்திரங்களுக்கிடையே கடிதங்களின் மூலம் எழுதியுள்ளார்.
கோகிலாம்பாள் கடிதங்கள் எனும் நாவல், கோகிலாம்பாள் தன் தலைவனுக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாகக் கதை சொல்கிறது. தன்மை முறையில் கூறப்படும் நாவலைப் போல இம்முறையும் தன்மை முறையிலேயே அமையும்.
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, ராஜி என்ற தம் நாவலில் கதைத் தலைவன் நாணு கதைத் தலைவி ராஜிக்கு எழுதும் கடிதங்களும் கடிதம் மூலம் கதை கூறும் உத்திக்குச் சான்றாகும்.
இம்முறை அண்மைக் காலங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுவதில்லை.
நனவோடை முறையில் கதையைக் கூறும் போது சில பிரச்சனைகளும் ஏற்படலாம். கதை நிகழ்வுகள் ஒன்றோடு ஒன்று தொடர்பின்றி இருப்பது போல் தோன்றும். மொழிநடையும் புதிதாகவும், புரியாததாகவும் இருக்கும்.
தமிழில் லா.சா.ராமாமிர்தம் தமது அபிதா எனும் நாவலில் இவ்வுத்தியைப் பயன்படுத்தியுள்ளார். நீல.பத்மநாபனின் உறவுகள் என்ற நாவலும் இவ்வுத்தியில் எழுதப்பட்டது.
இந்த முறையில் நாவல் எழுதத் தொடக்க கால எழுத்தாளர்கள் அளவுக்கதிகமான முயற்சி செய்ய வேண்டும். இம்முறை நாவல்கள் உரைநடைக் கவிதையாய் வளர்ந்து, முடியும் என்பார் எழில் முதல்வன். மேலும், அவர் கூறுகிறார்:
‘கடந்த காலம் என்பது முடிந்து போன ஒன்று. வருங்காலம் என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியாதது. எனவே நிஜமாக எஞ்சி நிற்பது நிகழ்பொழுது மட்டுமே. ஆதலின் நிகழ்கணத்தில் நித்தியத்தின் விஸ்வரூபத்தைத் தேடிக் காண்பதே வாழ்க்கையின் இலட்சியம் என நனவோடை நாவலாசிரியர்கள் கருதுகின்றனர்.’
(1) நாவலின் தொடக்கம்
(2) நாவலின் வளர்ச்சி
(3) நாவலின் உச்சநிலை
(4) நாவலின் புடைபெயர்வு
(5) நாவலின் முடிவு
முதல் ஓரிரு அத்தியாயங்களில் கதை நிகழும் ஊரின் பின்னணி, கதை நிகழும் காலச் சூழல் ஆகியவற்றை விளக்கலாம். பிறகு, கதையை எந்த உத்தியில் தொடங்கினால் நன்றாய் இருக்குமோ அந்த உத்தியில் தொடங்கிச் சுவைபடச் சொல்ல வேண்டும்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் தொடக்கம் ஒரு நல்ல நாவலின் தொடக்கம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக உள்ளது.
‘ஆதியும் அந்தமுமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். வினாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.’
என அது அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நம்மை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராசராச சோழன் இளைஞனாக இருந்த காலத்திற்கு அழைத்துச் செல்கிறார். கல்கிக்குப் பின் வந்த நாவலாசிரியர் சிலர் நேரடியாகக் கதையைத் தொடங்கும் உத்தியையும் கையாண்டனர். மோகமுள் நாவலைத் தி.ஜானகிராமன்,
‘அணைக்கரை பஸ் ஆனையடியைக் கடந்து வந்து டவுன் ஹைஸ்கூல் வாசலையும் கடந்து நாற்சந்தியையும் கடந்து போயிற்று. அவ்வளவுதான். ஏதோ புழுதிப்புயல் கிளம்பி ஊரையே சூறையாடுவது போலாய் விட்டது. மேல்துண்டாலும், முந்தானையாலும் மூக்கையும், வாயையும் பொத்திக் கொண்டார்கள். செம்மண் புகாமல் கண்ணை இடுக்கிக் கொண்டார்கள். உடம்பைச் சுற்றி போத்தியிருந்த காவிக்கதர் ஐந்து முழத்தால் மூக்கையும் வாயையும் பொத்தினவாறே விளக்குமாறு பட்ட நாய் போல ஹ்ரம், ஹ்ரம் என்று சந்தேகத்தையும், அருவருப்பையும் கமறி வெளியே தள்ளினான் பாபு.’
என்று கதையை நேரடியாகத் தொடங்குகிறார்.
நவீன நாவலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் தன் நெடுங்குருதி நாவலைக் கீழ்க்கண்டவாறு தொடங்குகிறார்.
‘ஒரு சாரை எறும்புகள் ஊரை விட்டு விலகிய பாதையில் அவசரமாகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த போது நாகுவிற்குப் பதினொறு வயது நடந்து கொண்டிருந்தது.’
இவ்வாறு, நாவலின் தொடக்கம் பல்வேறு முறைகளில் அமைவதை நாம் பல நாவல்களைப் படிக்கும் போது உணரலாம். நாம் நாவல் எழுதும் போது நாவலின் தொடக்கத்தைப் படித்தவுடன் நாவலை வாசகர் தொடர்ந்து படிக்க விரும்பும் வண்ணம் அமைக்க வேண்டும்.
வெறும் கதை மட்டுமே நாவலாக வளர்ந்து விடாது. ஓர் அழகியல் சுவையுடன் நிகழ்ச்சிகள் அமைக்கப் பெற்றுப் பாத்திரங்களின் செயல்பாடுகளுடன், உரையாடலுடன் நாவல் எழுதப்பட வேண்டும்.
கதைப் பின்னல் அமைப்பே நாவலின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். ஓர் அத்தியாயம் ஒரு நிகழ்வுடன் தொடங்கி அதே நிகழ்வுடன் முடிந்தால் நன்றாக இருக்கும். அடுத்த அத்தியாயம் அதே நிகழ்வின் தொடர்ச்சியாகவோ அல்லது வேறு நிகழ்வின் தொடக்கமாகவோ இருக்கலாம். சில நேரங்களில் முந்திய அத்தியாயங்களில் தொடர்பற்றுப் போன கதையை இரண்டு மூன்று அத்தியாயங்கள் கழித்தும் தொடங்குவது உண்டு. இதனால் கதை வளர்ச்சி நிலையில் சுவை பெருகும்.
ஜெயகாந்தனின் காத்திருந்த ஒருத்தி போல் எனும் நாவலில்,
‘பார்வதியம்மாளை மாடிப்படி வரை வந்து விடை கொடுத்தனுப்பி விட்டு, படிக்கட்டின் திருப்பத்தில் நின்று தன்மகன் பிரகாசம் வருகிறானா என்று பார்த்தாள் அழகம்மாள்.’
என்று முதல் அத்தியாயம் தொடங்குகின்றது. அத்தியாய முடிவில்,
‘அதன் பிறகு ஒவ்வொரு பருவத்திலும் வளர்ந்து வருகின்ற பிரகாசத்தின் வருகைக்காகக் காத்திருப்பதும்…. அழகம்மாளின் வாழ்க்கையே ஒரு காத்திருத்தலாகி விட்டது…’
என்று எழுதுகிறார். இரண்டாவது அத்தியாயத் தொடக்கத்தில்,
‘பத்து மணிக்குப் பிரகாசம் வந்தான். அவன் பஸ்ஸில் இருந்து இறங்கும்போதே பார்த்த அழகம்மாள் நிம்மதியாய் நிமிர்ந்து நின்றாள்’
என்கிறார். இதனால் கதையின் வளர்ச்சியில் சுவை கூடுகிறது.
சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை எனும் நாவலில் முதல் இரு அத்தியாயங்கள் தாமோதர ஆசான் என்பவருடன் படைப்பாளிக்கு ஏற்பட்ட நட்பைக் கூறுகிறது. மூன்றாவது அத்தியாயம் படைப்பாளி, தாம் இவ்வூரில் புளியமரத்து ஜங்ஷனில் வந்து முதன் முதலில் இறங்கியதில் தொடங்குகிறது.
‘எங்கள் குடும்பம் எனது தந்தையின் பூர்வீகக் கிராமத்தை விட்டுக் குடி பெயர்ந்து எனது தாயாரின் பிறப்பிடமாகிய இவ்வூருக்குச் சட்டியும் பெட்டியுமாக வந்து சேர்ந்த போது எனக்கு இன்னும் நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. நாங்கள் எல்லோரும் புளிய மர ஜங்ஷனில் தான் வந்து இறங்கினோம்.’
இவ்வாறு கதை முன், பின்னாகத் தொடங்குவதும் நாவல் வளர்ச்சியில் சுவையூட்டும் முறைதான்.
கதைக்கான சம்பவத் தொடர்கள் காரண காரியங்களோடு தொடர்பு படுத்தப்படும் பொழுது நாவல்கள் வளர்கின்றன. நிகழ்வுகளைச் சங்கிலி வளையங்கள் போலக் காரண காரியங்களால் பிணைக்க வேண்டும். அவ்வாறு பிணைத்து, கதை மாந்தரின் செயல்கள் மூலம் அவர்களிடையே உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
மு.வரதராசனார் தமது அகல்விளக்கு எனும் நாவலில் பாத்திரங்களின் செயல்கள் மூலம் அவர்களிடையே உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்துகிறார்.
சந்திரன் - அழகன்; படிப்பாளி.
- ஒழுக்கக்குறைவானவன்.
வேலு - அழகிலும், படிப்பிலும் சுமார்.
- ஒழுக்கமானவன்.
மாலன் - மூடநம்பிக்கை உள்ளவன்
கற்பகம் - பகுத்தறிவு உள்ளவள்
மணிமேகலை - ஆடம்பரம் விரும்புபவள்
அவள் கணவன் - ஆடம்பரத்தை விரும்பாதவன்
இவ்வாறு பல முரண்பாடுகளால் அகல் விளக்கு நாவலில் பாத்திரங்கள் செயல்படுவதால் நாவல் வளர்கிறது.
சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் நாவல் ஜெயகாந்தன் எழுதிய மிகச் சிறந்த நாவல். இந்த நாவலின் கதை அவர் எழுதிய அக்னி பிரவேசம் எனும் சிறுகதையின் தொடர் வளர்ச்சியாகும். இதனை ஜெயகாந்தனே கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
‘எனக்கு இந்த நாவல் அல்ல, இதற்கு அடிப்படையான அக்னிப் பிரவேசமே உடன்பாடான கதை. உடன்பாடான கருத்து உடையதாகும். அதன் முடிவை எல்லோரும் மாற்றி ஆளுக்கொரு கதை எழுதியதின் காரணமாக அவர்கள் விரும்புகிற முடிவை ஆரம்பமாக வைத்து நான் என்னையே மறுத்து அக்னிப்பிரவேச முடிவை மாற்றினால் வரும் விளைவுகளை நாவலாக எழுதினேன்.’
எனவே, ஒரு நாவல் உருவாகி வளர்வதற்கு ஓர் அடிப்படை தேவைப்படுகிறது. நாவல் ஓர் உச்ச நிலையை நோக்கி வளர்ந்து, முடிவை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
நாவல் படைப்பாளன், நாவல் வளர்கின்ற சூழலில் சிக்கல்களை அதிகப்படுத்திக் கொண்டே சென்று, ஓர் உச்ச நிலைக்கு நாவலைக் கொண்டு செல்வான்.
இந்தப் புடைபெயர்வுதான் நாவலை மிகச் சிறப்பாகக் கொண்டு செல்லும். இப்புடைபெயர்வு சரியாக அமையவில்லை என்றால் நாவல், படிப்பவர்க்குச் சலிப்பூட்டும்.
உரையாடல்கள் வழியோ, நாவலின் பாத்திரங்களின் வழியோ புடைபெயர்வை நிகழ்த்தலாம். ஒரு செயல் நடக்கும்போது, அதற்கான காரணத்தைச் சொல்ல வருகின்ற ஒரு கதை மாந்தர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சிதான் இதற்குக் காரணம் என்று கூறுவார். உடனே கதையும் பின்னோக்கு உத்தியில் புடைபெயர்வு கொள்ளும்.
தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலில் கல்லூரியில் படிக்கும் பாபு ஒலிபெருக்கியில் ஒலிக்கும் வீணை இசையைக் கேட்டு மனம் உருகுகின்றான்; உடனே நினைக்கிறான்.
‘நாமும் காலத்தையெல்லாம் இப்படி வீணாக்காமல் இருந்தால், இந்த சங்கீதத்தை நன்றாகப் பயின்றிருந்தால்’ என்று நினைத்துத் தன் தந்தையைப் பற்றி எண்ணுகிறான்.
கதை அவனின் ஏழு வயதுக்குத் திரும்புகிறது. அந்த வயதிலேயே அவன் தந்தையுடன் கச்சேரி கேட்கச் சென்ற செய்திக்குச் செல்கிறது.
இதற்குமேல் சிக்கல்கள் வர முடியாது என்று நாவல் படைப்பாளி நினைத்தவுடன் உச்சநிலை (Climax) முடிவடையும். பிறகு ஒவ்வொரு சிக்கலாக அவிழத் தொடங்கும். சிக்கல்கள் அவிழ, அவிழ நாவல் படிக்கும் வாசகருக்கு நாவலைப் படிப்பதில் சுவை கூடும்.
எம்.வி.வெங்கட்ராம் எழுதிய வேள்வித் தீ எனும் நாவலில் கதைத்தலைவன் கண்ணன், அவன் மனைவி கௌசலை ஆகியோரைச் சுற்றி நிகழும் கதை நிகழ்வு, ஹேமா என்ற பணக்கார இளம் விதவை நுழையும்வரை சாதாரணமாகச் செல்கிறது. ஹேமா, கண்ணனின் மேல் மோகமுற்றுத் தன் பணத்தால் கௌசலையையும், கண்ணனையும் மயக்குகிறாள். கௌசலை, ஹேமா, தன் கணவன்மேல் கொண்ட மோகத்தால் தான் தன்னுடன் அன்புடன் பழகுகிறாள் என்பதை அறியாதவள். கண்ணன் அறிந்தாலும் முதலில் பணத்தேவைக்காக அவள் நட்பை விரும்பினான். பிறகு அவளையே விரும்பினான்.
ஒருநாள் கௌசலை வெளியே போயிருந்த வேளையில் கண்ணனும், ஹேமாவும் இருந்த நிலையும், அந்நேரத்தில் கௌசலை வந்துவிட கண்ணனும் ஹேமாவும் மாட்டிக் கொள்வதும் நிகழ்கிறது. இதுதான் இந்நாவலின் உச்ச நிலை. கௌசலை கேட்கிறாள்.
‘இந்தக் கூத்து எத்தனை நாளா நடக்குது?’
‘என்ன நடந்துட்டுது? எதற்காகக் கத்தறே. பணவிஷயமா கேக்க வந்தா; நீ இல்லே; புறப்பட்டுட்டா. . .’
‘எனக்கும் கொஞ்சம் புத்தியிருக்கு. ரெண்டு பேர் மூஞ்சியிலும்தான் பட்டையா எழுதி வச்சிருக்கே !’
இந்த உச்சநிலைதான் கதையை முடிவுக்குக் கொண்டு வரத் துணை நிற்கிறது. கௌசலை பொற்றாமரைக் குளத்தில் தற்கொலை செய்து கொள்வதும், ஹேமா, கண்ணனுடன் சேருவதுமாகக் கதை முடிவுக்கு வருகிறது.
கல்கி தம்முடைய சிவகாமியின் சபதம் எனும் நாவலின் முன்னுரையில் கீழ்வருமாறு கூறுகிறார்.
‘மகேந்திரரும், மாமல்லரும், ஆயனரும், சிவகாமியும், பரஞ்சோதியும், பார்த்திபனும், விக்ரமனும், குந்தவையும் மற்றும் பல கதாபாத்திரங்களும் என் நெஞ்சில் இருந்து கீழிறங்கி போய் வருகிறோம் என்று அருமையோடு சொல்லி விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள்.’
நாவல் முடிவில் மையப் பாத்திரங்கள் தவறாமல் இடம் பெற வேண்டும். மையப் பாத்திரங்களின் பிரச்சனைகளின் முடிவே நாவலின் முடிவாகும். இல்லையேல் நாவல் முடிவுக்கு வராது.
தற்காலத்தில் நவீன எழுத்தாளர்கள் முடிவை வாசகர்களுக்கே விட்டு விடுகிறார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் நாவல் கங்கா கடைசியில் ஒரு குடிகாரியாக மாறுவதோடு முடிகிறது. ஜெயகாந்தனுக்குக் கங்காவை அப்படியே விட மனம் வராமல் கொஞ்ச காலம் கழித்துக் கங்கை எங்கே போகிறாள்? என எழுதுகிறார்.
நாவல் ஒன்றை எழுதத் தொடங்கும் போது நாவலின் அனைத்துப் பகுதிகளையும் அறிந்து கொள்ளுதல் நல்லது. நாவல் எழுதும் பயிற்சியும் முயற்சியும் தானே ஏற்படவேண்டுமே அல்லாமல் அடுத்தவரால் ஏற்படுத்த இயலாது. ஆனால் நாவல் எழுத ஓரளவு பயிற்சி அளிக்கலாம்.
பாடம் - 5
எனவே, பாத்திரப் படைப்புதான் ஒரு கதையை உயிரோட்டமாக வைத்திருப்பதற்கு அடிப்படையாகும். சோழ வரலாறு படிக்கும் போது நம்மைப் பாதிக்கும் இராசராச சோழனை விட, கல்கியின் நாவலில் இடம் பெறும் பொன்னியின் செல்வன் நம் மனத்தை மிகவும் கவர்கிறான். கல்கியின் இன்னொரு நாவலான சிவகாமியின் சபதத்தில் இடம் பெறுகிற நரசிம்மன், பல்லவர் வரலாற்றில் இடம் பெற்றுள்ள நரசிம்ம பல்லவனைவிட நம்மை பாதிக்கிறான்.
நாவல் பாத்திரங்களின் வாயிலாகத்தான் கதை நிகழ்கிறது. பாத்திரங்கள் இல்லையேல் கதை இல்லை. கதைப்பின்னல் இல்லை; நிகழ்ச்சிகள் இல்லை. நாவலின் உயிரோட்டமாக இருப்பது பாத்திரப் படைப்பே. பாத்திரங்களை மனத்தில் உருவாக்கிக் கொண்டு, அவற்றிற்காக நாவல்களை எழுதிய நாவலாசிரியர்கள் இருக்கின்றனர். வங்காள நாவலாசிரியர் சரத் சந்திரர்,
‘நான் முதலில் பாத்திரங்களை முடிவு செய்து கொண்டு, அவற்றை வரிசையாக எழுதிக் கொள்வேன். பின்னர் அவற்றைக் கொண்டு ஒரு கதையைத் தொடங்குவதிலோ, ஒரு கதையின் இன்றியமையாத மாந்தர்களின் பண்பு நலன்களை உருவாக்குவதிலோ எனக்குச் சிக்கலே இல்லை’
என்கிறார்.
மேற்குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, ஒரு நாவலுக்கு முதுகெலும்பாக இருப்பது பாத்திரப்படைப்பே, என்பது புலனாகும்.
நாவல் என்ற இலக்கிய வடிவம் பாத்திரப்படைப்பை விளக்கவே தோன்றியது என்பதை வர்ஜினியா உல்ஃப் என்ற நாவலாசிரியரும் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
‘அனைத்து நாவல்களும் பாத்திரங்களோடு தொடர்பு உடையன என நான் நினைக்கிறேன். அறம் உரைக்கவோ, பாடல் பாடவோ, ஆங்கில அரசின் பெருமைகளை விளக்கவோ நாவல் எழுதப்படுவதில்லை. பாத்திரங்களை உணர்த்தவும் விளக்கவுமே நாவல் எழுதப்படுகிறது.’
எனவே, ஒரு நாவல் படைப்பாளன் பாத்திரப் படைப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மிகச் சிறந்த நாவல்களில் வரும் பாத்திரங்கள் நம் கண்முன் நடமாடும் மனிதர்களாகவே காணப்படுகின்றனர். பேராசிரியர் மா. இராமலிங்கம் தமது நாவல் இலக்கியம் என்ற நூலில்,
‘உலகத்திலுள்ள தலை சிறந்த நாவல்களை எல்லாம் நாம் நினைக்கிற போது முதலில் நினைவுக்கு வருவது அந்நாவலின் கருவோ, கதைப்பின்னலோ, பிறவோ அல்ல; கதை மாந்தர்களே. டால்ஸ்டாயின் அன்னாவும், பிளாட்பர்டின் பவாரியும், தாகூரின் கோராவும், தகழியின் கருத்தம்மாவும், கல்கியின் சிவகாமியும் இப்போது நினைத்தாலும்கூட நம் எதிரே நிற்பது போன்ற பிரமை உண்டாகிறது அல்லவா?’
என்று கூறுவதைக் காணும்போது நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள்தான் நாவலின் உயிர்நாடி எனத் தெரிகிறது. கருத்துகளை விடப் பாத்திரங்களையே தொடக்க நிலையாக எடுத்துக் கொண்டதாக உருசிய எழுத்தாளர் இவான் துர்கா னேவ் கூறுகிறார்.
நாவலாசிரியர்கள் தாம் படைக்கும் பாத்திரங்களை, நம் மனத்தில் உண்மை மாந்தர்போல் எண்ண வைத்து விடுகின்றனர். சர். ஆர்தர் கானன்டாயிலின் ஷெர்லாக் ஹோம்ஸ் எனும் பாத்திரத்தைப் போல் தமிழ்வாணன் தமது நாவல்களில் சங்கர்லால் என்ற துப்பறிவாளரைக் கதா பாத்திரமாகப் படைத்தார். காலப்போக்கில் சங்கர்லால் என்று ஒருவர் இருப்பதாகவே வாசகர்கள் எண்ண ஆரம்பித்து விட்டனர்.
நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலரின் கதைத் தலைவி பூரணியையும், கல்கியின் பொன்னியின் செல்வனின் வானதியையும், சிவகாமியின் சபதத்தில் சிவகாமியையும் மறக்கமுடியாத வாசகர்கள் தங்கள் பெண்களுக்கு அப்பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர்.
நாவலில் வரும் பாத்திரங்கள் நாவலோடு மட்டும் முடிந்து விடுவதில்லை. நாவல் முடிந்தாலும், பாத்திரங்களின் எதிர்காலம் பற்றி வாசகர்கள் எண்ணுவார்கள். இது பற்றி எம்.வி. வெங்கட்ராம் தம்முடைய அரும்பு எனும் நாவலில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
‘கதையை முடிப்பதால் பாத்திரங்களின் வாழ்க்கை முடிந்து விடுமா என்ன? மஞ்சுளா, ஸரஸா, மாதவன், நீலகண்டன், பசுபதி முதலியவர்கள் வாசகர்களோடு நெருங்கிப் பழகிவிட்டவர்கள்; அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும், அவர்கள் எப்படி அமைத்துக் கொள்வார்கள் என்று ஆர்வம் கொள்ளும் இரசிகர்களுக்கு இரண்டாம் பாகம் முதல் அத்தியாயத்தை மட்டும் ஆரம்பித்துக் கொடுத்துள்ளேன்.’
பாத்திரங்களின் சிறப்பு, நாவலாசிரியர் சொல்லுகின்ற முறையில் வெளிப்படும். எனவே, நாவலாசிரியர் பாத்திரங்களைப் படைப்பதில் சில உத்திகளைப் (Techniques) பயன்படுத்துவார்.
நேரடி முறையும் நாடக முறையும்
பாத்திரங்களின் பண்புகளை ஆசிரியர் தம் கூற்றாகவே கூறிச்செல்வது ‘நேரடிமுறை’ என்றும், பாத்திரங்களின் செயல்களின் மூலம் நாம் உய்த்தறியுமாறு செய்வது ‘நாடகமுறை’ என்றும் கூறுவார் மா. இராமலிங்கம்.
ஒவ்வொரு பாத்திரத்தின் பெயரையும் கூறி, பாத்திரங்களின் பண்பினையும் விளக்கி ஆசிரியரே நமக்குப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் நேரடி முறையை நாவலாசிரியர் சிலர் பின்பற்றுவர். கல்கி, பொன்னியின் செல்வன் எனும் நாவலில் வந்தியத்தேவனைக் கீழ்க்கண்டவாறு அறிமுகப்படுத்துகிறார்.
‘ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள். முன்மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீரநாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ் பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்’
இந்த அறிமுகத்தில் வீர நாராயண ஏரிக்கரையில் வாலிபனாகவும், வீரனாகவும், வாணர் குலத்தைச் சேர்ந்தவனாகவும் உள்ள வந்தியத்தேவன் வந்து கொண்டிருக்கிறான் என்று அறிமுகப் படுத்துவதால் நமக்கு முழு அறிமுகம் கிடைக்கிறது.
நாடக முறையில் பாத்திரப் படைப்பை நாவலாசிரியர் விளக்குவது இல்லை. பாத்திரங்களது நடவடிக்கையாலும், பேச்சாலும், ஏனைய பாத்திரங்களோடு நிகழ்த்தும் உரையாடலாலும் ஏனைய பாத்திரங்கள் அளிக்கும் திறனாய்வாலும் இவர்களை உணரலாம். நெடுங்குருதி எனும் நாவலில் எஸ். ராமகிருஷ்ணன், நாவலின் கதைத் தலைவன் நாகுவிற்கு வயது பதினொன்று என்று கூறுவதுடன் சரி. அவனுடைய பண்பு, அவனைப் பற்றிய பிற செய்திகள் எல்லாம் அவனது நடவடிக்கையாலும், பேச்சாலும், உரையாடல்களாலும் மட்டுமே வெளிப்படுகின்றன.
நாவலாசிரியரே குறுக்கிட்டு அறிமுகப்படுத்துவதைவிட, நாமே நாவலில் பாத்திரங்களின் பண்புகளை உணர்ந்து கொள்ளும் இம்முறை திறனாய்வாளர்களால் போற்றப்படுகிறது.
க.நா. சுப்பிரமணியன் எழுதிய ஒரு நாள் என்ற நாவல், கதைத்தலைவன் ஒருநாளில் சந்தித்த, மனத்தில் நிறுத்திக் கொள்ளக் கூடிய பத்துப் பேரை மட்டுமே பாத்திரங்களாகக் கொண்டுள்ளது.
ஒரு தீவில் சிக்கிக் கொண்ட தனிமனிதனுக்கு நிகழ்ந்த நிகழ்வுகளைக் கதையாகக் கூறவேண்டுமானால், அவன் ஒருவனே மனிதப்பாத்திரமாகவும், அங்கு எவையேனும் விலங்குகளோ, பறவைகளோ கதை நிகழ்வில் பங்கெடுக்குமானால் அவையும் சிறுபாத்திரங்களாகவும் கொள்ளப்படுகின்றன.
எம்.வி. வெங்கட்ராம் தம்முடைய காதுகள் எனும் நாவலில் மகாலிங்கம் என்ற பெயரில் தம்மையே கதைத் தலைவனாக ஆக்கிக் கொண்டார்.
ஜெயகாந்தன், சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் நாவலில் தம்மையே எழுத்தாளர் பாத்திரமாகக் கொண்டு கதையில் முக்கியப் பங்கு வகிக்கிறார். ஜெயகாந்தன், தான் முன்பெழுதிய கதையில் வந்த ‘கங்கா’ என்ற பாத்திரத்தைச் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நாவலிலும் கதைத் தலைவியாக்கி, பிறகு கங்கை எங்கே போகிறாள் என்ற நாவலிலும் கதைத்தலைவி ஆக்கியுள்ளார்.
நாவல் படைக்க எண்ணும் இளம் எழுத்தாளர்கள், தாம், தம் வாழ்வில் கண்ட மனிதர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு நாவல் எழுதினால் எழுதுவது சுலபமாயிருக்கும். படிப்பதற்கும் சுவையாக இருக்கும். பேராசிரியர் மா. இராமலிங்கம் பாத்திர முன்மாதிரி என்பது பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
‘யாராவது ஒருவனை முன்மாதிரியாக மனத்தில் கொண்டுதான் நாவலாசிரியர் பாத்திரத்தைச் சிருஷ்டிக்கிறார்; என்றாலும் கடைசியில் அவர் கண்ட நகல் முற்றிலும் புதியதாகவே அமைகிறது. நிஜ மனிதர்களோடு சில வகைகளில் ஒன்றியும் சில வகைகளில் ஒன்றாமலும் கதாபாத்திரம் மாறிவிடுகிறது.’
எனவே, நாவல் எழுதத் தொடங்கும் புதிய நாவல் படைப்பாளிகள் நாவலில் இடம்பெறும் பாத்திரங்களுக்குப் பெயர் இடுவதற்கு முன்பு கதையில் பாத்திரத்தின் பண்புகளை உணர்ந்து, பெயரை முடிவு செய்தால் நன்றாக அமையும்.
(1) பாத்திரத்தை ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது நேரடியாக அறிமுகப்படுத்துதல்.
(2) பாத்திரத்தைப் பற்றி, இன்னொரு பாத்திரமோ, நாவலாசிரியரோ முன்னால் கூறிவிட்டுப் பிறகு பாத்திரத்தை அறிமுகப் படுத்துதல்.
(3) ஒரு பாத்திரத்தின் பெயரைச் சுட்டாமல் நாவலில் ஓரிடத்தில் நேரடியாகப் பங்கேற்கச் செய்து, பிறகு அப்பாத்திரம் பின்னொரு முறை நாவலில் வெளிப்படும் பொழுது அப்பாத்திரத்தின் பெயர், பிற பாத்திரங்களுக்கும், அதற்கும் உள்ள தொடர்பு போன்றவை விளக்கப்படுதல்.
மேற்கூறிய மூன்று முறைகளும் பாத்திரத்தைப் பற்றி நேரடியாகவே அறிந்து கொள்கிற முறையாகும். ப.சிங்காரத்தின், புயலில் ஒரு தோணி எனும் நாவலில் கதைத் தலைவன் பாண்டியன் அறிமுகப்படுத்தப்படுகிற முறையைப் பார்க்கலாம்.
‘பாண்டியன் வடக்கேயிருந்து கெசாவன் நடைபாதையில் வருகிறான். நிறம் தெரியாத சராயும் வெள்ளைச் சட்டையும் அணிந்த, வளர்ந்து நிமிர்ந்த உருவம். காலடி ஒரே சீராய் விழுந்து ஒலி கிளப்புகிறது. வாயில் தீயொளி வீசும் சிகரெட்.’
இவ்வாறு அறிமுகப்படுத்தும் போது பாத்திரத்தைப் பற்றி ஓர் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.
இரண்டாவது வகையில், பாத்திரத்தைப் பற்றி அப்பாத்திரமோ, இன்னொரு பாத்திரமோ முன்னர்க் கூறி அறிமுகப்படுத்துதல் ஆகும். அற்பஜீவி என்ற நாவலில் (தெலுங்கு நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு) சுப்பையா என்ற தலைமைப் பாத்திரத்தை நாவலாசிரியர் கீழ்க்கண்டவாறு அறிமுகப்படுத்துகிறார்.
‘சுப்பையா அழகானவன் அல்ல; இது சுப்பையாவின் அபிப்பிராயம். சுப்பையா சுத்த உதவாக்கரை; இதுவும் சுப்பையாவின் அபிப்பிராயமே. சுப்பையாவுக்கு ஜாமின்தாரி எதுவுமில்லை; இது அவன் மனைவி சாவித்திரியின் கோபத்திற்குக் காரணம். சுப்பையா வெறும் கெக்கேப்பிக்கே, இப்படிச் சாவித்திரியின் அண்ணன் வெங்கட்ராவ் சொல்வதுண்டு’
இந்த அறிமுக முறையால் சுப்பையாவைப் பற்றி, நாவலின் தொடக்கத்திலேயே நமக்குப் புலனாகின்றது.
மூன்றாவது வகை அறிமுகம், பாத்திரத்தை முழுமையாக முதலில் அறிமுகப்படுத்திவிட்டு, பிறகு பாத்திரத்தின் பெயர், பண்பு, பிற பாத்திரங்களுடன் உள்ள உறவு நிலையை விளக்குவது.
பொன்னியின் செல்வன் நாவலில் ஆழ்வார்க்கு அடியானைக் கல்கி இவ்வாறுதான் அறிமுகப் படுத்துகிறார். மூன்று பேர் ஒரு பெரிய விவாதம் நடத்திக் கொண்டிருப்பதைக் கூறிய கல்கி,
‘வாதமிட்ட மூவரில் ஒருவர் உடம்பெல்லாம் ஊர்த்தவ புண்டரகமாகச் சந்தனம் அணிந்து, தலையில் முன் குடுமி வைத்திருந்த வைஷ்ணவ பக்த சிகாமணி. கையில் அவர் ஒரு குறுந்தடியும் வைத்திருந்தார். கட்டையாயும், குட்டையாயும் வைரம் பாய்ந்த திருமேனியுடன் விளங்கினார்’
என்று கூறிவிட்டு, பிறகு இன்னொரு பாத்திரம் மூலம் அவன் பெயர் ஆழ்வார்க்கு அடியான் என்பதைக் கூறுகிறார்.
நாவலில் இப்படிப்பட்ட பாத்திர அறிமுகம், பாத்திரத்தின் பண்பினை, முதலிலேயே அதன் புறத்தோற்றம் மூலம் விளக்கி விடுகிறது. வைணவத்தில் மிகப் பெரிய ஈடுபாடுடைய ஒருவர் பிற சமயத்தைச் சார்ந்தவரோடு வாதம் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிகிறோம். பிறகுதான் அவர் பெயர் ஆழ்வார்க்கு அடியான் நம்பி என நமக்குத் தெரிகிறது.
இளம் படைப்பாளிகள் இம் மூன்று முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பாத்திர அறிமுகம் நிகழ்த்தினால் வாசகருக்கு நாவலில் ஈடுபாடு உண்டாகும்.
தொடக்க கால நாவல்களில் முழுமையாக நல்லவர்களும், தீயவர்களும் பாத்திரங்களாக வருவர். தீயவரிடம் இருந்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்ற நல்லவர் முயன்று இறுதியில் வெற்றியோ, தோல்வியோ அடைவது நாவலில் வழக்கமாக இருந்திருக்கிறது.
நாவலில் எதார்த்தம் மிகுதியாக வந்ததற்குப் பிறகு இந்தத் தொடக்க கால முறை ஓரளவு செல்வாக்கு இழந்துவிட்டது. மனிதர்களில் முழு நல்லவர்களோ, முழுக் கெட்டவர்களோ இல்லை. அதனால் நாவலில் நல்லோர், தீயோரை அறுதியிட்டுக் கூறினால் நாவலின் ஓட்டம் குறைவுபடக்கூடும் என்பதை,
‘குற்றங்களே இல்லாத உயரிய பாத்திரப் படைப்புகள், குற்றங்களின் மொத்த வடிவமாகத் திகழும் மிகக் கொடுமையான பாத்திரப் படைப்புகள் ஆகிய இரண்டு வகையான பாத்திரப் படைப்புகளும் வாசகருக்கு நிறைவு அளிக்காமல் போவதுடன், நாவலின் ஓட்டத்தை மந்தப்படுத்திவிடும்.’
என்று கூறுகிறார் சி.இ.மறைமலை.
உலகத்தில் மிகச் சாதாரணமாக நிலவும் பாத்திரங்களை நாவலில் உலவ விட்டால் நாவல் சிறக்குமே தவிர, முற்காலக் காப்பிய இலக்கணம் கூறியது போன்று தன்னேரில்லாத் தலைவனையும், தலைவியையும் உலவ விட்டால் நாவலின் சுவை குன்றி, அது வாழ்வியலில் இருந்து விலகிச் சென்றுவிடும். மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் எனும் மிகச்சிறந்த நாவலில் இடம் பெறும் பிரதாப முதலியாரை விட, ஆர்.சண்முக சுந்தரத்தின் நாவலில் இடம் பெறும் நாகம்மாள் பாத்திரம் வாழ்வியலோடு ஒட்டி நிற்பதை நாம் அறியலாம்.
எனவே, படைப்பாளிகள் உண்மையான மனிதனைப் படைக்க வேண்டுமே அன்றி, அவனை முழு நல்லவனாகவோ, முழுக் கெட்டவனாகவோ படைக்கக் கூடாது. அவ்வாறு படைத்தால் அது நடப்பியலுக்கு மாறானதாக இருக்கும்.
பாத்திரத்தின் முடிவு திருமணம், குறிக்கோள் நிறைவேறுதல் போன்ற இன்ப முடிவாக இருக்கலாம். இல்லையேல் மரணம், குறிக்கோளில் தோல்வி போன்ற துன்பமுடிவாக இருக்கலாம். எந்த முடிவாக இருந்தாலும் அம்முடிவு பாத்திரத்திற்கு, இயற்கையாக ஏற்பட்ட முடிவாக இருத்தல் வேண்டும்.
நாவலாசிரியரே வலிந்து தாமே ஒரு முடிவை, பாத்திரத்திற்குத் தம் விருப்பு, வெறுப்பிற்கேற்ப உருவாக்குவாரேயானால் அம்முடிவு செயற்கையானதாக, நாவலின் உயிர்த்தன்மையை அழிக்கக் கூடியதாக ஆகிவிடும்.
‘எந்த முடிவை நாவலாசிரியர் அமைத்தாலும் அந்த முடிவைத் தவிர வேறு முடிவு அப்பாத்திரத்திற்குப் பொருத்தமானது அன்று எனப் படிப்போர் நம்பும்படியாக இருக்கவேண்டும்.’
என்பார் கரு.முத்தையா.
பொன்னியின் செல்வன் எனும் நாவலின் கதை பொன்னியின் செல்வனாகிய ராஜராஜ சோழன் பதவியேற்பதற்கு முன்பே முடிவடைந்து விடுகிறது. எனவே, அந்நாவலின் கதை முழுமையடையாமல் முடிந்து விட்டதாகவும், கதை மாந்தர்களின் பிற்கால வாழ்வு எவ்வாறு அமைந்தது என்பதைக் கேட்டும் வாசகர் பலர் கடிதம் எழுதியதாகக் கல்கி கூறுகிறார். எனவே நாவலுக்கு முடிவுரை ஒன்றை எழுதி, கதை முடிவிற்கான காரணத்தை அவர் விளக்குகிறார்.
‘முற்றிலும் கற்பனை செய்யப்பட்ட கதைகளில் வரும் பாத்திரங்களில் எல்லோருக்கும் கதை ஆசிரியர் சுலபமாக முடிவு சொல்லிவிடலாம். கதாநாயகனும் கதாநாயகியும் கலியாணம் செய்துகொண்ட பிறகோ, அல்லது கதாநாயகன் தூக்கு மேடை ஏறியும் கதாநாயகி கடலில் விழுந்தும் இறந்த பின்னரோ, கதையில் வரும் மற்ற பாத்திரங்களை ஒரு பாராவில் சரிப்படுத்திவிடலாம். ஆனால் சரித்திரக் கதைகளை இந்த விதத்தில் முடிப்பது அவ்வளவு எளிய காரியமும் அன்று; உசிதமும் ஆகாது…’
கதையின் பாத்திரங்களின் பிற்கால வாழ்க்கை என்ன வாயிற்று என்பதை, ஒன்பது வினாக்களுக்கு விடை அளிக்கும் விதமாகக் கல்கி வரலாற்று அடிப்படையில் விளக்குகிறார்.
எனவே, நாவலின் முடிவு அல்லது பாத்திரத்தின் வாயிலாகச் சொல்ல வேண்டிய கதை முடிவு என்பது மக்களின் ஆர்வத்தை முழுமையாகத் திருப்திப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்.
நாவல் எழுதும் ஆசிரியர், ஆணாக இருந்தால் பெண் பாத்திரங்களைப் படைப்பதில் அவருக்குப் பல சிக்கல்கள் உண்டாகும். பெண்களின் உணர்வுகளைப் பெண்ணாக இருந்து உணர்வதைவிட ஆணாக இருந்து உணர்வது மிகக் கடினம். அதே போல் பெண் எழுத்தாளர்களுக்கும் சிக்கல் ஏற்படும்.
இதனால்தான் நாவல் படைப்பாளிகள் ஆண், பெண், விலங்கினங்கள் தொடர்பான மனோ தத்துவத்தைப் படித்துக் கொள்ள வேண்டும் என்பர். பெண் உணர்வினை ஆண் படைப்பாளியும், ஆண் உணர்வினைப் பெண் படைப்பாளியும் பெறுவதற்குக் கூர்ந்து நோக்கும் அறிவும் தேவை.
1. ஐந்து வயதுக்கு உட்பட்டோர் – குழந்தைகள்
2. ஐந்து வயது முதல் பதினைந்து வயது முடிய – சிறுவர், சிறுமிகள்
3. பதினாறு வயது முதல் முப்பத்தைந்து வயது முடிய – இளைஞர்கள், இளம்பெண்கள்.
4. முப்பத்தாறு வயது முதல் ஐம்பது வயது முடிய – நடுத்தர வயதினர்
5. ஐம்பது வயது முதல் – முதியவர்.
நாவலில் ஓர் இளைஞன் ‘வந்தான்’ என்று எழுத வேண்டுமானால் அவன் வயது பதினாறு வயது முதல் முப்பத்தைந்து வயதுக்குள் இருக்க வேண்டும். இதனைக் கவனத்தில் கொண்டுதான் நாவல் எழுத வேண்டும்.
நற்குணம் மிகுந்து கெட்ட குணம் குறைந்து காணப்படுபவனைப் படைப்பதும், கெட்ட குணம் மிகுந்து நற்குணம் குறைந்து காணப்படுபவனைப் படைப்பதும் நாவலை எதார்த்த நிலையில் இருக்குமாறு செய்யும்.
இதைப் போலவே, நாவலில் குறிக்கோள் பாத்திரம், (Ideal Character), நடப்பியல் பாத்திரம் (Realistic Character) ஆகியவையும் படைக்கலாம். ஒரு குறிக்கோளை நிறைவேற்றும் செயல்பாடுகளே அப்பாத்திரத்தின் செயல்பாடாக இருக்கும். அப்பாத்திரத்தைக் குறிக்கோள் பாத்திரம் எனக் கூறலாம். பொன்னியின் செல்வன் எனும் நாவலில் வந்தியத் தேவன் சோழப் பேரரசிற்கு எவ்வித இடையூறும் வந்து விடக் கூடாது என்ற குறிக்கோளுடன் மட்டுமே செயல்படுவான். அவனைப் போன்று பல்வேறு நாவல்களில் குறிக்கோள் பாத்திரங்களைப் படைப்பர்.
நடப்பியல் பாத்திரம் என்பது, நாவல்களில் மிகச் சாதாரண மனிதர்களின் பண்புகளைக் கொண்டு, நம்பக்கூடிய முறையில் படைக்கப்படும் பாத்திரமாகும். ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் நாவலில் வரும் கங்கா எனும் பாத்திரப் படைப்பை நடப்பியல் பாத்திரத்திற்கு ஒரு சான்றாக நாம் கொள்ளலாம். தற்போது நாவல் படைக்கும் படைப்பாளிகள் பெரும்பாலும் நடப்பியல் பாத்திரங்களையே எதார்த்தத்துடன் உருவாக்குகின்றனர்.
சமூகத்திற்குக் கட்டுப்பட்டு, இதனால் ஏற்படுகின்ற இன்ப துன்பங்களை இயல்பாக ஏற்றுக் கொள்கின்ற மனிதர்களைக் காணுகிறோம். நாவல்களில் வரும் சில பாத்திரங்களும் இத்தன்மை கொண்டவைகளாகப் படைக்கப்படுகின்றன.
சமூகத்திற்கு முரண்படுகின்ற பாத்திரங்களை நோக்கினால், இம்முரண்பாடு சமூகத்தில் காலம் காலமாக இருக்கும் அவலங்களை எதிர்த்தா, இல்லையேல் சமூக நன்மைகளை எதிர்த்தா என்பதைக் கொண்டே பாத்திரத்தின் பண்பினை உணரலாம்.
சமூகத்தில் இருந்து ஒதுங்கிச் செல்லும் பாத்திரங்களின் பார்வை, சமுதாயத்தின் பார்வையில் இருந்து மாறுபட்டு இருக்கும். ‘நமக்கு என்ன’ என்ற எண்ணத்தோடு, சமூகத் தீமையை எதிர்த்துப் போராடாமலும், நன்மையை ஆதரிக்காமலும், தம் வேலையைப் பார்த்துச் செல்லும் பாத்திரங்களும் சமுதாயத்தில் இருந்து ஒதுங்கிச் செல்லும் பாத்திரங்களே ஆகும்.
1. தலைமைப் பாத்திரம் அல்லது முதன்மைப் பாத்திரம்
2. இன்றியமையாப் பாத்திரம்
3. துணைப் பாத்திரம்
4. சிறு பாத்திரம்
தலைமைப் பாத்திரங்களைச் சுற்றியே நாவலின் கதை நடைபெறும். இப்பாத்திரங்கள் பெரும்பாலும் கதைத்தலைவன் தலைவியராக இருப்பர். கதையே இவர்களுக்காகப் படைக்கப் பட்டதுதான். சில நாவல்களில் கதைத்தலைவனின் அடுத்த நிலையில் இருக்கும் பாத்திரம் தலைமைப் பண்பைப் பெற்று விடுவதும் உண்டு. அப்போது யாரைத் தலைமைப் பாத்திரமாகக் கொள்வது என ஐயம் ஏற்படலாம். பொன்னியின் செல்வனின் கதைத் தலைவன் அருள்மொழி வர்மனாகிய இராசராச சோழன் என்றாலும், வந்தியத்தேவன் தான் தலைமைப் பாத்திரம் போல் நாவல் முழுவதும் வலம் வருகின்றான்.
இன்றியமையாப் பாத்திரங்கள் நாவலின் கதைக்கு மிகவும் இன்றியமையாதவர்கள். இவர்கள் இல்லையேல் கதையில் வளர்ச்சியே இருக்காது. இவர்கள் தலைமைப் பாத்திரங்களுக்கு அடுத்துச் சிறப்புப் பெற்றவராவர். பொன்னியின் செல்வனில் வரும் பழுவேட்டரையர் சகோதரர்கள், ஆழ்வார்க்கடியான் போன்றோர் இத்தன்மையுடையோர்.
துணைப் பாத்திரங்கள் தலைமைப் பாத்திரங்களுக்குத் துணை நிற்போர் ஆவர். கதையில் நடக்கும் நிகழ்ச்சியில் இவர்களின் பங்கேற்பு அதிகமாக இருந்தாலும்கூட இவர்களைச் சுற்றிக் கதை நிகழாததால் இவர்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை.
சிறு பாத்திரங்கள் நாவலில் எங்கேனும் ஓரிடத்தில் இடம் பெறுவர். இவர்களின் செயல்பாடுகளும், தோற்றமும் இல்லாவிட்டால் நாவலின் கதைக்கோ, கதைப் பின்னலுக்கோ இடர்ப்பாடு வந்துவிடாது.
இவ்வாறு பாத்திரப் படைப்புகளை உருவாக்கி நாவலை எழுதும்போது நாவல் நல்ல முறையில் அமைய வழி ஏற்படும்.
ஒரு நாவல் படைப்பாளி, கதையை நடத்திச் செல்லும் பாத்திரங்களை நல்ல முறையில் படைத்துவிட்டால் நாவல் சுவைமிக்கதாகவும் பயனுள்ளதாகவும் அமையும்.
பாடம் - 6
பிரதாப முதலியார் சரித்திரம் எனும் நாவல் முதல் இன்றைய சோளகர் தொட்டி எனும் நாவல் வரை தமிழ் நாவல் இலக்கியம் பல்வேறு படிகளைத் தாண்டி வந்துள்ளது.
நாவல்கள் எனும் கதை வகை வருவதற்கு முன்பு, பொழுது போக்க இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளைப் பண்டிதர்கள் படித்தனர். செல்வந்தர் வீடுகளில் இந்நிகழ்வுகள் நிகழ்ந்தன. பிற மக்கள் இல்லங்களில் அல்லி அரசாணிமாலை, ஆரவல்லி சூரவல்லி கதை போன்ற இலக்கியங்கள் எழுதப் படிக்கத் தெரிந்தோரால் பிறருக்குப் படித்துக் காட்டப்பட்டன. அச்சு இயந்திர அறிமுகம் உரைநடை வளர்ச்சி ஆகியவற்றால் தோன்றிய நாவல் இலக்கியம் பாமரர்களும் படித்து மகிழும் நிலையில் அமைந்தது.
துப்பறியும் நாவல்கள் பெருமளவிற்கு வாசிப்புக்குள்ளான சூழலில்தான் வரலாற்று நாவல்களைச் சுவையோடு எழுதும் வழக்கம் தமிழகத்தில் ஏற்பட்டது. தமிழக வரலாற்றில் பேரரசர்களாகத் திகழ்ந்த நரசிம்ம பல்லவன், இராஜராஜ சோழன் போன்றோரைப் பற்றிச் சுவையுடன் வரலாற்று நாவல்களைத் தொடர்கதைகளாகக் கல்கி எழுதத் தொடங்கினார்.
கல்கியின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆகியவை நரசிம்ம பல்லவன் வரலாற்றையும், பொன்னியின் செல்வன் இராசராச சோழன் வரலாற்றையும் சுவைபடக் கூறின. இவை நாவல் படிப்பவர்களின் வட்டத்தை அதிகப்படுத்தின. பெரும்பாலும் இல்லத்தரசிகள் இந்நாவல்கள் தொடர்கதையாய் வரும் போது, தாமும் படித்து, படிக்கத் தெரியாதவர்களுக்கும் வாசித்துக் காட்டுவர்.
தொடர்கதைகள் தமிழுலகில் செல்வாக்குப் பெற்றிருந்த சூழலில் தமிழ்ப் பேராசிரியர் மு.வரதராசனார் நாவல் இலக்கியத் துறையில் தம்மை இணைத்துக் கொண்டு செந்தாமரை, கரித்துண்டு, கள்ளோ காவியமோ, கயமை, வாடாமலர் போன்ற நாவல்களை எழுதினார். இவரின் சமூக நாவல்கள் அறிவுரை கூறும் நாவல்களாகவும், நல்லோர் தீயோர் செயல்பாடுகளை விளக்குவனவாகவும் வெளிவந்தன. இந்நாவல்கள் ஐம்பதுகளில் கல்லூரி மாணவர்களிடமும், கற்றவர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
அகிலன், ராஜம் கிருஷ்ணன், லட்சுமி போன்றோர் தொடர்கதை மூலமாகவும் தனி வெளியீட்டின் மூலமாகவும் வெளியிட்ட நாவல்கள் சமூக அவலங்கள், மக்கள் பிரச்சனைகள், பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள், தொழிலாளர் பிரச்சனைகள் ஆகியவற்றை முன் வைத்தன.
அகிலனின் பால்மரக்காட்டினிலே நாவல் மலேயா ரப்பர் தோட்டத் தொழிலாளிகளின் மிக மோசமான வாழ்க்கைச் சூழலை விளக்குகிறது. இராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் இன்னல்களை வெளிப்படுத்தியது.
ஜெயகாந்தன் இருபதாம் நூற்றாண்டில் ஒரு குறிப்பிடத்தக்க நாவலாசிரியர் ஆவார். பொதுவுடமைச் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டு தன் எழுத்து வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயகாந்தன் தமிழ் நாவல் உலகில் சிறந்து விளங்கினார்.
அவர் பொதுவுடமையில் தொடங்கி, ஆன்மிக நாவல்களையும் எழுதினார். அவரின் ஜெயஜெய சங்கர, பல்வேறு விமரிசனங்களுக்கு ஆட்பட்ட ஓர் ஆன்மிக நாவலாகும். அவருடைய சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், உன்னைப்போல் ஒருவன் போன்றவை புகழ்பெற்ற நாவல்களாகும்.
ஜெயகாந்தனுக்கு அடுத்து பிரபஞ்சன், டி.செல்வராஜ், பூமணி க.நா.சுப்பிரமணியன், அசோகமித்திரன், எம்.வி.வெங்கட்ராம், தஞ்சை பிரகாஷ், இந்திரா பார்த்தசாரதி போன்ற பல்வேறு எழுத்தாளர்கள் நாவல் இலக்கிய உலகில் தம் தரமான படைப்புகளால் புகழ் பெற்றவர்களாவர்.
இன்றைய தமிழ் நாவல்களின் வகை
இன்றைய தமிழ் நாவல்கள் பெரும்பாலும் கீழ்க்கண்ட அடிப்படையில் எழுதப்படுகின்றன.
1) சமூக நாவல்கள்
2) பெண்ணிய நாவல்கள்
3) தலித்திய நாவல்கள்
4) எதார்த்த நாவல்கள்
5) வட்டார நாவல்கள்
6) பின் நவீனத்துவ நாவல்கள்
நாவல் என்ற இலக்கிய வகை சமுதாயப் பிரச்சனைகளை, சமூக மாற்றங்களை, சமூக அவலங்களை எடுத்துக்கூற எழுந்ததாக நாம் கொள்ளலாம்.
மனிதன் தன்னைச் சமுதாயத்தில் இருந்து அப்புறப்படுத்திக் கொண்டு ஒதுங்கிவிடாமல் தனது காலச் சமுதாயத்தின் பழக்க வழக்கங்களையும், நடை, உடை, பாவனைகளையும் உணர்ந்து, அறிந்து சமூகவயமாதல் ஆகும். அவ்வாறு சமூகவயப்பட்டு, அச் சமூக இயல்பையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் நாவல்கள் சமூக நாவல்கள் எனப்படும்.
பிரபஞ்சன் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழில் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக அடையாளம் காணப்பட்டவர். பிரபஞ்சன் வானம் வசப்படும், மானுடம் வெல்லும், நாளை ஒரு பூமலரும், எனக்குள் இருப்பவள் போன்ற நாவல்களால் புகழ் பெற்றவர். எனக்குள் இருப்பவள் என்ற நாவலில் வரும் டேவிட் முத்தையா என்ற பாத்திரத்தின் மூலம் பொருளாதார ஏற்றத்தாழ்வினைப் பிரபஞ்சன் சுட்டிக்காட்டுகின்றார். பொருளற்றவர்கள் எளிய உணவை உண்ணுவதால் அவர்களின் தகுதி குறைவாக மதிப்பிடப்படுகிறது. இதனை டேவிட் முத்தையாவின் வார்த்தைகளால் உணர்த்துகிறார் பிரபஞ்சன்;
‘ஓட்டல்ல அப்பா இட்லி வடைக்கு ஆர்டர் கொடுத்தார். அப்புறம் மசால்தோசை. என் வாழ்நாளிலேயே முதன் முறையாக பி.யூ.சி. படிக்கிறபோதுதான் மசால் தோசையைக் கண்ணால் பார்த்தேன். சாப்பிட்டேன். எனக்கு ஆச்சரியம் எல்லாம் தினம் தினம் இட்லியும் தோசையும் சாப்பிடற ஜனங்களும் இருக்காங்க என்கிறதுதாங்க. தினம் கம்பஞ்சோறும், கேழ்வரகு களியும் வாரத்திலே எப்போதாவது ரெண்டு வேளை அரிசிச்சோறும் சாப்பிட்டு வளருரவங்க நானு. இப்பவும் என் அம்மாவும், தம்பியும் ஊருலே கம்பஞ்சோத்தைத் தின்னுகிட்டுதான் காலம் தள்ளுறாங்க. அதை நினைக்கிற போதுதான் மனசுக்குக் கஷ்டமா இருக்கு.’
பிரபஞ்சனைப் போல எஸ். ராமகிருஷ்ணன் தமிழ் நாவல் உலகில் சமூகப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு நாவல் எழுதுபவராக உள்ளார். அவரது நெடுங்குருதி, உறுபசி போன்ற நாவல்கள் சமூகப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் செய்திகளைக் கூறுகின்றன.
நெடுங்குருதி என்ற நாவலில் வேம்பலை என்ற சிற்றூரில் குற்றப் பரம்பரையினர் எனக் காவல் துறையினரால் நாள்தோறும் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட ஆண்கள் பாத்திரங்களாக வருகின்றனர். ஜெயமோகன் காடு, ஏழாம் உலகம், விஷ்ணுபுரம் போன்ற நாவல்களை எழுதியுள்ளார். ஜெயமோகனின் ஏழாம் உலகம், குறைப்பிறவிகளான முடமான பெருநோய்வாய்ப்பட்ட பிச்சைக்காரர்களின், அவர்களைச் சுரண்டி ஏய்ப்பவர்களின் உலகம், பெருங்கோயில்களின் முன்னால் அமர்ந்திருக்கின்ற முடமான பிச்சைக்காரர்களுக்கும் ஒரு முதலாளி உண்டு என்பதை இந்நாவல் எடுத்துக் காட்டுகிறது. அறம், கருணை, மனிதநேயம் என்றெல்லாம் நாம் காலம் காலமாக வளர்த்து வந்த நம்பிக்கைகளை இந்நாவல் வேரொடு பிடுங்கி விடுகிறது.
மனிதர்கள் விற்பனைப் பொருள்களாக மாறிப் போன காலம் இது. இங்கு நேர்மைக்கு இடமில்லை. உண்மைக்கு இடமில்லை. பணமே இங்குக் கடவுள். அதுவே வணங்கத்தக்கது என்ற கருத்தை இந்நாவல் எடுத்துரைக்கிறது.
பொன்னீலனின் புதிய தரிசனங்கள் என்ற நாவல் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றது. மூன்று பாகங்களைக் கொண்ட இந்த நாவல் சமூகவியல் நோக்கில் எழுதப்பட்ட எதார்த்த நாவலாகும். இந்நாவலின் கதை இந்தியாவில் நெருக்கடி நிலைமை (1975-77) நடைமுறையில் இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது.
கவிஞர் வைரமுத்து கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவராக இருந்தாலும், தமிழ் நாவல் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்கியுள்ளார். அவரின், தண்ணீர் தேசம், கள்ளிக்காட்டு இதிகாசம் போன்றவை தமிழ் நாவல் போக்குகளைச் சற்று மாற்றி அமைத்தன. ஒரு நாவலுக்கு இதிகாசம் என்று பெயரிட்ட அவரின் செயல்பாடு காணத்தக்கது. அவரே தன் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலின் முன்னுரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
‘இந்த மண்ணில் ராஜாக்களுக்கு இதிகாசம் உண்டு. குடியானவனுக்கு இதிகாசம் உண்டா? இது ஒரு குடியானவனின் இதிகாசம்’
என்று கூறி, தமிழ் நாவல் உலகை இன்னொரு தடத்திற்குக் கொண்டு செல்கிறார்.
இன்னும் பல்வேறு நாவல் ஆசிரியர்கள் சமூக நாவல்களை எழுதியுள்ளனர்; எழுதி வருகின்றனர். இந்நாவல்களின் மூலம் தமிழ்ச் சமூக வரலாற்றையும் நாம் ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள இயலும்.
1) பெண்ணின் தாழ்வுற்ற நிலையை மாற்ற முயலும் அனைத்துப் போராட்ட முறைகளையும் உள்ளடக்கி, மனித சமூகத்தில் பெண்ணுக்கு மனித மதிப்பு கிடைக்கப் பாடுபடுவது.
2) பெண் என்பதால் ஒருவர் எதிர்கொள்ள நேரும் துயரத்தைக் களையப் பாடுபடுவது.
3) வாழ்வின் எல்லாத் தளங்களிலும் ஆண், பெண் இருபாலரும் சமமானவர்களே என்ற சமத்துவக் கருத்தை உருவாக்கப் போராடுவது.
தமிழில் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தில் பிரதாப முதலியாரின் மனைவியாக வரும் ஞானாம்பாள், கல்வி கற்றவளாகவும், போராடும் குணம் உள்ளவளாகவும் காணப்படுகிறாள். காலம் காலமாக இருந்த பெண்ணடிமைச் சமூகத்தில் இருந்து விடுபடும் முதல் பெண்ணாக இவள் காட்டப்படுகிறாள்.
இடைக்காலப் பெண்ணிய நாவல்கள்
இடைக்காலத்தில் ஆங்கிலப் பேராசிரியரும் தமிழ்த் தொண்டாற்றியவருமான எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை எழுதிய இரண்டு நாவல்களில் ஒன்று பெண்ணியச் சிந்தனைகளோடு எழுதப்பட்டது ஆகும். அவருடைய மருத்துவன் மகள், தப்பில் ஆகிய இரண்டு நாவல்களும் இரு வேறுபட்ட பிரச்சனைகளை ஆராய்கின்றன.
தமிழ்ச் சமுதாயத்தில் பெண்ணிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மருத்துவன் மகள் சித்திரிக்கிறது. தமிழில் எழுதப்பட்ட முதல் பெண்ணிய நாவலாக மருத்துவன் மகளைக் கொள்ளலாம்.
எம்.வி. வெங்கட்ராம் தம்முடைய ஒரு பெண் பேராடுகிறாள், நித்திய கன்னி ஆகிய நாவல்களைப் பெண்ணிய நோக்கில் எழுதியுள்ளார். நித்திய கன்னி நாவல் மகாபாரதத்தில் வரும் கிளைக்கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது.
வியாசர் படைத்த மாதவி, யயாதியின் மகள். ஒரு குழந்தை பிறந்தாலும் மீண்டும் கன்னித்தன்மையைத் திரும்பப் பெறும் வரம் பெற்றிருந்தாள். அவ்வரத்தின் பயனாக மூன்று அரசர்களையும், ஒரு முனிவரையும் மணந்து நான்கு குழந்தைகளையும் பெற்று, பெற்ற இடத்திலேயே அக்குழந்தைகளை விட்டுவிட்டு மீண்டும் கன்னியாகித் தந்தையிடம் திரும்புகிறாள். தந்தை அக்கன்னிப் பெண்ணுக்குச் சுயம்வரம் வைக்க விரும்புகிறார். அவள், அச்சுயம்வரத்தை மறுத்துவிட்டுக் காட்டுக்குத் தவம் செய்யக் கிளம்பி விட்டாள்.
இக்கதையில் பல மாறுதல்களை ஏற்படுத்தி எம்.வி. வெங்கட்ராம் நித்தியகன்னி எனும் நாவலை உருவாக்கி உள்ளார். ஒரு பெண்ணுக்குத் தருமத்தின் பெயரால் இழைக்கப்பட்ட மிகப்பெரிய கொடுமை இது. காதலனாகிய காலவன், தந்தையாகிய யயாதி, கணவர்களாகிய அரசர்கள், முனிவர் விசுவாமித்திரர் எல்லாருமே அவளை ஒரு பெண் என்று கருதாமல், போகம் துய்க்கப் பயன்படும் ஒரு பொருளாகவே கருதுகின்றனர். அவள் உள்ளம் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அதனால் பெண்ணுக்கு இழைக்கப்படும் இச்சமூக அநீதியை எதிர்த்து நிற்க இயலாமல் காட்டை நோக்கி ஓடி விடுகிறாள்.
இன்றைய பெண்ணிய நாவல்கள்
பெண்ணுக்கு ஏற்படும் அநீதிகளைக் குறித்து எத்தனையோ நாவல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் ஆகிய நாவல்களின் கதைத் தலைவி கங்கா, பெண்ணுக்கு ஏற்படும் அனைத்துச் சிக்கல்களையும் அடைந்து இறுதியில் கங்கையில் மூழ்கி மறைகிறாள்.
தலித் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளைக் குறித்து அண்மையில் பாமா எழுதிய ‘கருக்கு’ என்ற நாவல் ஒரு தலித் பெண்ணின் வாழ்வியல் பேராட்டத்தைக் காட்டுகிறது.
கு.சின்னப்ப பாரதி எழுதிய சங்கம் என்ற நாவல் மலைவாழ் பெண்களைச் சமூகம் எப்படி நடத்தியது என்பதைச் சுட்டுகிறது.
கந்து வட்டிக்குக் கடன் வாங்கித் திருப்பி அளிக்க முடியாத வெள்ளையன், தன் மனைவி கருமாயியைக் கடன்காரனிடம் ஒப்படைக்க வேண்டிய கொடுமையைச் சங்கம் எனும் நாவல் காட்டுகிறது.
‘சுக்ரன் வீட்டினுள் நுழைந்தான். காடடர்ந்த தனிப்பாதையில் தனிமையில் இருக்கும் ஒருத்திக்குத் திடீர் எனப் பய அதிர்ச்சியைப் போல் கருமாயி அதிர்ச்சிக்கு உள்ளானாள். குழந்தையை மார்புறத் தழுவியபடி ‘அண்ணா என்னெ உட்டுடுங்கண்ணா! பச்சப்புள்ளத்தாச்சி யண்ணா’ என்று ஓவென்று கதறினாள்.
அந்த மனித மிருகம் அவளின் அவலக் குரலைச் செவி மடுத்ததாகவே தெரியவில்லை. அவள் கொண்டையைப் பிடித்து இழுத்தவாறே வெளியில் கொண்டு வந்து நிறுத்தித் தன் பின்னால் நடக்குமாறு உத்தரவிட்டான்.’
பெண்ணிய நாவல்கள் கூறும் செய்திகள்
இவ்வாறு பெண்களுக்கு இழைக்கப்படும் பல்வேறு கொடுமைகளை நாவலாசிரியர்கள் எடுத்துரைப்பதை இன்றைய நாவல்களில் பெரிதும் காணமுடிகிறது.
தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போராட முடியாத நிலையில் பெண்கள் இருந்ததையும் பெண்ணிய நாவல்களில் காணலாம்.
மராட்டியத்திலும், கர்நாடகத்திலும் தலித் மக்களைப் பற்றிய இலக்கியங்கள் தலித் இலக்கியம் என்ற பெயரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் இலக்கியத்திலும் தலித் இலக்கியம் பெரும்பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
‘இங்கே தலித் இலக்கியம் என்பது தலித் இலக்கியத்தால் மட்டுமே வரையறுக்கப் படவில்லை. சாதிப்போராட்டங்கள், சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டுக் கிளர்ச்சிகள், பொருளாதார சமத்துவத்தைப் பற்றிய பேராட்டங்கள், அரசியல் கிளர்ச்சிகள் ஆகியவற்றோடு ஒன்றாகவே தலித் இலக்கியம் எழுந்துள்ளது.
தலித் இலக்கியம் இன்றைய நவீன இலக்கியம் என்ற பெயரில் புழக்கத்தில் இருக்கின்ற, உள்ளதை உள்ளபடி கூறுவதாக, உரிமை பாராட்டுகிற எதார்த்தவாத இலக்கியத்தோடு என்ன முறையில் தொடர்பு கொள்கிறது என்ற கேள்வி மிக முக்கியமானது. தலித் இலக்கியத்திற்கு என்று வரையறுத்த வடிவங்கள் எதுவும் இல்லை. இருக்கின்ற எதார்த்த வடிவங்களைக் கேலி செய்வதில் இருந்து தலித் இலக்கியம் தனக்கென்று மாற்று வடிவங்களை உருவாக்குகிறது.’
தலித் இலக்கியப் படைப்பாளர்கள்
தமிழ் நாவல்களில் தலித் மக்களின் வாழ்வியலைக் கூறும் நாவல்கள் ஏராளமாக வெளிவந்து கொண்டுள்ளன. தலித் நாவல் படைக்க யாருக்கு உரிமை இருக்கிறது என்ற விவாதங்கள் தற்போது மிக அதிக அளவில் நடக்கின்றன.
தலித் சாதியில் பிறந்த படைப்பாளிகள், பிறப்பாலேயே தலித் இலக்கியம் படைக்கத் தகுதி பெற்றோர் ஆவர். அவர்களின் சொந்த அனுபவங்களே தலித் இலக்கியங்களைப் படைக்கத் துணை நிற்கின்றன.
படைப்பாளர்கள் சிலர் தலித் சாதியில் பிறக்காவிட்டாலும் தலித் இலக்கியம் படைக்க உரிமை உடையவர்கள். இவர்கள், ‘தலித்’களின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்து, அவர்கட்கு ஏற்படும் சமூகப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு இலக்கியம் படைப்போராவர்.
தமிழகத்தில் அறுபதுகளில் பிறந்து இன்று ஆசிரியப் பணியாற்றும் பாமா தலித்திய நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர். இவரின் கருக்கு, சங்கதி இரண்டு ஆகிய இரு நாவல்களும் மிகச் சிறந்த தலித்திய நாவல்களாகும். இவரின் முதல் நாவலான கருக்கு தமிழின் முதல் தலித் இலக்கியத் தன்வரலாற்று நாவல் என அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்ட ஒன்று. ஒரு பெண்ணாக, கிறித்தவப் பெண் துறவியாகத் தென்மாவட்ட கிராமம் ஒன்றில் தான் பட்ட அனுபவங்களே இவர் எழுதிய தன்வரலாற்று நாவலான கருக்கு ஆகும். கருக்கு நாவலின் முன்னுரையிலேயே பாமா கூறுகிறார்:
‘வாழ்க்கையின் பல நிலைகளில் பனங்கருக்குப் போல என்னை அறுத்து ரணமாக்கிய நிகழ்வுகள், என்னை அறியாமையில் ஆழ்த்தி முடக்கிப் போட்டு மூச்சு திணற வைத்த அதீத சமுதாய அமைப்புகள், இவற்றை உடைத்தெறிந்து அறுத்தொழித்து விடுதலை பெறவேண்டும் என்று எனக்குள் எழுந்த சுதந்திரப் பிரளயங்கள். இவை சிதறடிக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எனக்குள் கொப்பளித்துச் சிதறிய குருதி வெள்ளங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இப்புத்தகத்தின் கரு.’
தலித் இலக்கிய எழுத்தாளர்களில் இன்னொரு பெண் எழுத்தாளர் சிவகாமி. தொண்ணூறுகளில் தமிழ்ச் சூழலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இவரது பழையன கழிதலும், ஆனந்தாயி ஆகிய நாவல்கள் தமிழில் பெரும் வாசிப்புக்கு உள்ளானவை. பழையன கழிதலும் தலித் மக்களின் பிரச்சனையை முன் வைத்து எழுதப்பட்ட நாவலாகும்.
தலித் இலக்கியம் என்று இலக்கியத்தைப் பிரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறும் பூமணி ஒரு தலித்திய நாவலாசிரியரே. பூமணியின் பிறகு என்ற நாவல் சிறந்த தலித் நாவல்களில் ஒன்றாகப் பலரால் பேசப்படுகிறது.
கு.சின்னப்ப பாரதி எழுதிய சங்கம் என்ற நாவலை இன்னொரு தலித்திய நாவல் என்றே கொள்ளலாம். மலைவாழ் தலித் மக்கள் சமவெளிவாழ் தலித்திய மக்களைவிடக் கல்வி அறிவிலும், சமூகப் பிரச்சனையிலும் மிகவும் பிற்பட்டவர்கள். அவர்கள் தமக்குள் இணைந்து ஒரு சங்கம் அமைக்கப் படும் துன்பத்தை இந்நாவல் காட்டுகிறது. அவர்கள் உற்பத்தி செய்த காய், கனி ஆகியவற்றை உரிய விலைக்கு விற்பதற்குப் படும் துன்பத்தை இந்நாவல் எடுத்துரைக்கிறது.
தலித் மக்கள் பிற மக்களால் எவ்வாறு கொடுமைப்படுத்தப் பட்டனர் என்பதை விளக்குகின்றன.
தலித் மக்களின் போராட்டங்கள் எவ்வாறு தொடங்கின என்பதையும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்ட சூழலையும் கூறுகின்றன.
தமிழில் தொடக்க கால நாவல்கள் மிகுந்த கற்பனை உணர்வோடு எழுதப்பட்டனவாகவே இருந்தன. கற்பனா வாதம் தமிழ் நாவல் உலகில் இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வந்தது. வரலாற்று நாவலாக இருந்தாலும் சமூக நாவலாக இருந்தாலும் அவை வாழ்வின் எதார்த்த நிலையைவிட்டுச் சற்றுத் தள்ளியே நின்றன. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் எதார்த்தமாக எழுதினால் அந்த எழுத்து மக்களிடம் மிகச் சரியாகப் போய்ச் சேரும் என்பதைப் படைப்பாளிகள் உணர்ந்து கொண்டனர். அதற்குப் பிறகே எதார்த்த நாவல்கள் தமிழில் வெளி வரத் தொடங்கின.
1957இல் ரகுநாதனின் பஞ்சும் பசியும் என்ற நாவல் எதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 1960களில் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், சுந்தரராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை ஆகியவை எதார்த்த நாவல்களாக வெளிவந்து கதை கூறின. இதே காலச் சூழலில் தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்றோர் பாலியல் நிகழ்வுகளைக் கூட எதார்த்தமாகச் சொல்லத் தொடங்கினர். தி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், ஜெயகாந்தனின் ரிஷிமூலம் போன்றவைகளை இதற்குச் சான்றாகக் காட்டலாம். எம்.வி.வெங்கட்ராமின் வேள்வித்தீ சௌராட்டிர மக்களின் வாழ்வை எதார்த்தமாகக் காட்டுகிறது.
ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு எதார்த்த நாவலுக்குரிய தன்மையோடு விளங்குகிறது. இது நாடார்களிடையே நடக்கும் பேராட்டத்தை எதார்த்தமாகச் சொல்கிறது.
பூமணியின் பிறகு, பாமாவின் கருக்கு, சங்கதி ஆகியவை தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை அவர்களின் பேச்சுமொழியிலேயே வெளிப்படுத்துகின்றன. தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு, கண்மணி குணசேகரனின் அஞ்சலை ஆகியவையும் இவ்வகையைச் சார்ந்தவையே.
சமீப காலத்தில் பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி மக்களால் பெரிதும் பாராட்டப் பெற்ற வட்டார நாவலாகும். இந்நாவல் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் மக்கள் அதிகார வர்க்கத்தின் அட்டூழியங்களால் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது.
பிரேம் குமார் எழுதிய சொல் என்றொரு சொல் என்ற பின்நவீனத்துவ நாவல் புராண மரபுகளையும், இதிகாசங்களையும், பழங்கதைகளையும் எடுத்துக் கொண்டு புதுப்புது முறைகளில் கதை கூறுகிறது.
யுவன் சந்திரசேகரின், பகடை ஆட்டம் என்ற நாவல் பின்நவீனத்துவ நாவல்களில் புகழ் பெற்றது. சீனா, திபெத், இந்தியா, இமயமலை ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட ஜோமிட்ஸியா என்ற கற்பனை தேசத்தின் கற்பனைச் சரித்திரமே இந்நாவலாகும். கடந்த நூற்றாண்டில் மனித குலம் அடைந்த பெருந்தீமைகளின் கொடுங்கனவுகளின் அவலங்களும், அழிவுகளும் இந்த நாவலில் நிகழ்வுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நாவலில் நேரடியாக, காலவரிசையில் அமைந்த கதை சொல்லும் முறை இல்லை.
எம்.ஜி.சுரேஷ் எழுதிய 37c என்ற நாவல் தலைப்பிலேயே பின்நவீனத்துவ நாவல் என்பதைப் புலப்படுத்துகிறது. சராசரி மனிதனின் உடல் வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட். இதைச் செல்சியசாக மாற்றினால் 37 டிகிரி c என்று சொல்லலாம். 37 காலிபர் என்றும் சொல்லலாம். காலிபர் என்பது துப்பாக்கி வகை. இது வன்முறையின் குறியீடு. மனிதன், வன்முறை ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் உருவகமாக 37 C என்று குறிப்பிடலாம். எனவே இதற்கு 37 C எனப் பெயர் வைத்திருக்கிறார். இந்நாவல் 37 அத்தியாயங்களைக் கொண்டது. தொடக்கமும் முடிவும் ஒன்றுபோல அமைந்து உள்ளது.
பின்நவீனத்துவ நாவல்கள் உணர்த்தும் செய்திகள்
பின்நவீனத்துவ நாவல்களில் இதுவரையில் கற்பிக்கப்பட்டு வந்த மதிப்பீடுகள் தகர்கின்றன. புனிதம், உன்னதம் என்றெல்லாம் சொல்லப்பட்டவை உடைபடுகின்றன. பகுத்தறிவுக்கு உட்படுகின்ற இவற்றின் மூலம் மதம், சாதி, பண்பாடு, விழுமியங்கள் தகர்க்கப் படுகின்றன. உலகளாவிய நோக்கில் மனித இருத்தலையும், ஒட்டு மொத்த அடிமைத்தனத்தையும் பற்றிச் சிந்திக்கப் பின்நவீனத்துவ நாவல்கள் பயன்படுகின்றன.
சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர், ஆண்களால் அடக்கப்படும் பெண்கள் பற்றிச் சமீப கால நாவல்கள் நிறைய சொல்லத் தொடங்கியுள்ளன. இவ்வகையில் பெண்ணிய நாவல்களும் தலித்திய நாவல்களும் சமூக அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளன. அவை வெகு மக்களின் வாசிப்புக்கும் பெருமளவில் உள்ளாகின்றன.
கதை சொல்லும் முறையால் அநியாயத்தையும் நியாயப்படுத்தி விட முடியும். இத்தகு சூழலில் காலவரிசையில் ஒரு கதை சொல்வதைத் தவிர்க்க பின்நவீனத்துவம் முன் வந்தது.
இன்னும் எதிர்காலத்தில் தமிழ் நாவல்கள் புதிய வடிவங்களில், புதிய செய்திகளுடன் நிறைய வெளிவருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.