27

6.2.1 புலம்பெயர்வுப் பிரச்சினைகள்

ஏற்கெனவே தாயகத்தில் ஓரளவு வசதிகள் உடையவர்கள் , மேலும் கூடுதல் வசதிகளும் உயர்நிலைகளும் வேண்டி , வெளிநாடுகளில் குடிபெயர்வது என்பது வேறு ; பிரச்சினைகள் இருப்பினும் அவை குறைவே .

ஆனால் , நெஞ்சத்தில் அழுந்தும் சுமைகளோடும் , வேறு வழியில்லை என்ற நிலைகளோடும் புலம்பெயர்ந்தோர் படுகிற சிரமங்களும் கசப்பான அனுபவங்களும் அதிகமாகும் .

முக்கியமாக இத்தகைய நிலைகளில் ஏற்படுகிற பிரச்சினைகள் பொதுவாக நான்கு .

அவை :

( 1 ) வேற்று நாடுகளில் குடியமர்ந்த பின்னும் , தங்களுடைய தாயகம் , தங்களுடைய பாரம்பரியம் , சொந்தபந்தம் முதலியவை பற்றிய உணர்வுகள் , பிரிவுகளின் எதிரொலிகள் முக்கியமான பிரச்சினையாகும் .

( 2 ) வேற்றுநாட்டில் , வேற்றுச்சூழலில் வேர்விடுகின்ற முயற்சியும் அதன் விளைவுகளும் தருகிற பிரச்சனை .

( 3 ) தாயகத்துச் சூழல்கள் , வாழ்ந்த வாழ்க்கைகள் ஆகியவற்றுக்கும் இப்போது குடியேறிய நாடுகளில் ஒன்றாவதற்கு முயலும் முயற்சிகளுக்கும் இடையே தம்முடைய சுய அடையாளம் பற்றிய நெருக்கடிகள் .

( 4 ) சில காலங்களுக்குப் பிறகு , மீண்டும் தம் தாயகம் திரும்பவேண்டும் என்ற சூழ்நிலைகள் ஏற்படலாம் ; மனநிலைகள் உருவாகலாம் ; வருவதற்குரிய முயற்சிகள் நடைபெறலாம் வந்து மீண்டும் அமரலாம் ; அவ்வாறு அமரும்போது , முன்னால் இருந்த வாழ்வு , உறவு முதலியவை பலவித உணர்வுகளை ஏற்படுத்தலாம் .

இவையும் முக்கியமான பிரச்சினைகளாகும் .

புலம்பெயர்வு வாழ்க்கையில் இத்தகைய பிரச்சினைகளும் இவற்றைச் சார்ந்தனவும் பலவாக ஏற்படுகின்றன .

புலம்பெயர்ந்தோரின் இலக்கியங்களில் இத்தகைய உணர்வுநிலைகளைக் கண்டறிந்து விளக்குதல் வேண்டும் .

நாம் , கடைசியாகச் சொன்ன ‘ மீண்டும் தாயகம் திரும்புதல் - அதிலே சந்திக்கின்ற பிரச்சனைகள் ’ என்பதனை ஹெப்சியா ஜேசுதாசனின் புத்தம் வீடு என்னும் நாவல் மிக அழகாகச் சித்திரிக்கின்றது .

பர்மாவுக்குச் சென்ற தமிழ்க் குடும்பம் , அங்கு ஏற்பட்ட போர் முதலிய சூழல்கள் காரணமாக மீண்டும் தாயகம் வருகிறது .

ஆனால் , அதனால் படுகின்ற சிரமங்கள் பல. இதனைப் புத்தம் வீடு ஒரு எதார்த்தமான படப்பிடிப்பாக்கிக் காட்டுகிறது .

6.3 பழந்தமிழகமும் புலம்பெயர்வும்

புலம்பெயர்வு என்ற சொல் , சங்க இலக்கியத்திலேயே கிடைக்கிறது .

அதுபோல , புலம்பெயர்ந்த நிலைகள் , நிகழ்வுகள் குறித்த குறிப்புகளும் கிடைக்கின்றன .

‘ மொழிபெயர்தேயம் ’ என்ற தொடர் , புலம்பெயர்வு நிலையைக் குறிப்பிடும் ஒரு தொடர் .

இது அகநானூறு முதலியவற்றில் பல இடங்களில் காணப்படுகிறது .

மேலும் ‘ வேறுபுலம் ’ ( புறம் 254 ) , ‘ அறியாத் தேயம் ’ ( அகம் 369 ) முதலிய சொற்களும் கிடைக்கின்றன .

ஏற்றுமதி இறக்குமதி வணிகமும் செல்வமும் கொண்ட புகார் நகரத்தின் சிறப்பினை அது இப்படிச் சொல்கிறது .

தொல் கொண்டித் துவன் றிருக்கைப்

பல்லாய மோடு பதிபழகி

மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

புலம்பெயர் மாக்கள் கலந்தினிது றையும்

முட்டாச் சிறப்பிற் பட்டினம் .

பல பொருட்கள் , அவற்றைக் கொண்டு வந்து விற்பனை செய்கின்ற பல குழுக்கள் ( ஆயங்கள் ) - அவர்கள் பதி , இடம் , ஊர் பழகிவிடுகிறார்கள் .

மொழி ஒன்றல்ல , மொழிகள் பல அங்கே பேசப்படுகின்றன .

இப்படி வேற்றிடங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்த மக்கள் , அந்த ஊர் மக்களோடு கலந்து , மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் .

தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வந்த மக்கள் , மொழி இன வேறுபாடின்றி மகிழ்ச்சியோடிருந்தார்கள் என்ற புலம்பெயர்வு வாழ்க்கையின் சீரிய சிறந்த பண்பினை இப்படி உருத்திரங்கண்ணனார் காட்டுகிறார் .

இதே கருத்தினை ஏறத்தாழ இதே சொற்களில் சிலம்பும் இதே மாதிரிப் புகாரை வருணிக்கிறபோது சொல்லுகின்றது .

‘ கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் ’ - கலந்து இருந்து உறைவதாக அது கூறுகின்றது .

ஆனால் , தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து வந்த மக்களை இவ்விலக்கியங்கள் கூறுகின்றனவே தவிர , தமிழகத்து மக்கள் , வேற்றுப்புலங்களுக்குப் பெயர்ந்து சென்றார்கள் என்று கூறவில்லை .

ஒருவேளை இது அதிகம் இல்லாமலிருந்திருக்கலாம் .

மேலும் தமிழ் மக்களின் உளவியல் , இருக்கிற இடத்தில் சுகமாக இருத்தல் என்பதனையே சுற்றி வந்திருக்கிறது .

சிலம்பு , இதனை இரண்டு இடங்களில் புகார் பற்றிப் பேசுகிற போதும் , மதுரை பற்றிப் பேசுகிற போதும் கூறுகின்றது .

பதியெழு பறியாப் பழங்குடி தழீஇய

பொதுவறு சிறப்பிற் புகார் ( 1 : 15-16 )

என்று புகார் நகர் பற்றியும் , அதே பாணியில் ,

பதியெழு யறியாப் பண்புமேம்பட்ட

மதுரை மூதூர் மாநகர் ( 15 : 5-6 )

என்று மதுரை பற்றியும் சிலம்பு வருணிக்கிறது .

எனவே , வெளியிலேயிருந்து வந்து தமிழ்நாட்டில் குடியேறலாம் .

ஆனால் , இங்கே இருந்துபோய் வேற்றுப் புலம்படர்வது கூடாது என்ற மனநிலை அன்று இருந்திருக்கிறது போலும் !

இதனைத் தொட்டுக் காட்டுவதும் இதற்குரிய வரலாற்றுப் பின்புலங்களைக் கண்டறிவதும் திறனாய்வாளனின் வேலையாகும் .

6.3.1 பாரதியும் புதுமைப்பித்தனும்

கி.பி.1777-இல் முதன்முதலாகத் தமிழர்கள் சிலரை , பிரிட்டன் குடியேற்ற அரசு ஃபிஜியத்தீவிற்கு அனுப்புகிறது .

பின்னர் , தொடர்ந்து பலரை அனுப்புகிறது . பெண்களும் அனுப்பப்படுகின்றனர் .