28

நாடகமும் உரைநடையும்

பாடம் - 1

நாடக இலக்கியம் - ஓர் அறிமுகம்

பாட முன்னுரை

அன்பார்ந்த மாணவர்களே! இயல், இசை, நாடகம் எனத் தமிழை முத்தமிழாகக் காண்பது மரபு. மனத்தின் கருத்தை எடுத்துரைப்பது இயற்றமிழ், வாய் ஒலியின் வழி இசைப்பது இசைத்தமிழ். உடலின் அசைவில் உண்டாவது நாடகத் தமிழ் என முத்தமிழுக்கு விளக்கம் கூறுவார்கள். தமிழில் சங்க காலத்திற்கு முன்பே நாடகங்கள் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவை பற்றிய குறிப்புகளை இலக்கியங்கள் வழிதான் உணர முடியும். தமிழ் இலக்கியத்தில் நாடக இலக்கியம் பெறும் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. நாடக இலக்கியத்தின் அறிமுகம் அறிதல், தொன்மைக் கால நாடகங்கள் பற்றி அறிதல், தற்கால நாடகப் போக்குகள் பற்றிக் காணல். இவ்வாறு மூன்று நிலைகளாக நாடகம் பற்றி நீங்கள் பயிலப் போகின்றீர்கள். இப்பாடம் நாடகத்தின் தோற்றம், நாடகம் எனப் பெயர் பெற்ற காரணம், நாடகம் இலக்கியமாக விளங்கும் தன்மை ஆகியவற்றைப் பற்றி அமைகின்றது. இதன் மூலம் நாடக இலக்கியத்தின் சிறப்புக்களை அறிந்து கொள்வீர்கள்.

நாடகத்தின் தோற்றம்

மனிதன் என்று அறிவு பெற்றுத் தோன்றினானோ, அன்றே நாடகமும் ஏதோ ஒரு முறையில் தோற்றம் பெற்றிருக்கக் கூடும். மனிதனின் விளையாட்டு உணர்வும், பிறரின் செயல்களை நடித்துக் காட்ட விரும்பும் இயல்பும், நாடகம் தோன்றக் காரணங்களாக அமையலாம். பொதுவாக நாடகத்தின் தோற்றம் பற்றிய தெளிவான கருத்து அறிய முடியாத ஒன்றாகவே உள்ளது. நடனத்திலிருந்துதான் நாடகம் தோன்றியிருக்க வேண்டும் என்பார் சிலர். சமயச் சடங்குகளிலிருந்து நாடகம் தோன்றியிருக்கலாம் என்பாரும் உளர். பொதுவாகச் சடங்கிலிருந்தே நாடகம் உருவாகியிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும்.

புராதன (பழங்கால) மனிதன், பருவகால மாற்றங்களையும், இயற்கையோடு நிகழும் பல மாற்றங்களையும் கண்டு, இவை தனக்கு மேலான சக்திகளின் செயற்பாடே என்று நம்பினான். அதனை அடிப்படையாகக் கொண்டே சடங்குகள் உருவாகின. இதுவே நாடகமாக வளர்ந்தது.

மனிதனின் இயல்பான குணமாக இருக்கின்ற நாடகத் தன்மை, ஒன்றைப் போலச் செய்து காட்டுதல் என்பதாகும். வேட்டையாடிய மனிதன் தான் வேட்டையாடிய நிகழ்வுகளை மீண்டும் செய்து காட்டினான். தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லிக் காட்டினான். பின்பு அதனைச் செய்து காட்டினான். இவையே நாடகமாக மாறின.

நாடகம் – சொல் விளக்கம் நாடகம் என்பதனைக் குறிக்கும் Drama என்ற சொல், கிரேக்கச் சொல்லின் அடியாகப் பிறந்தது. ட்ரமோனியன் (Dramonian) என்ற கிரேக்கச் சொல்லே இதன் மூலமாகும். இதன் பொருள் ‘ஒன்றைச் செய் அல்லது ஒன்றைப் போல நடித்துக் காட்டு’ என்பதாகும்.

‘நாடகம்’ என்று வழங்குகிற தமிழ்ச் சொல்லுக்கு அறிஞர்கள் பலவாறு பொருள் விளக்கம் தருகின்றனர். ‘நாட்டின் சென்ற காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடு + அகம் = நாடகம் என்று ஆயிற்று’ என்று அவ்வை சண்முகம் கூறுவார். ஆனாலும் நாடகம் என்ற சொல் தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பியங்கள் ஆகியவற்றில் வரும் இடங்களை நோக்கினால் இன்று நாம் நாடகம் என்பதற்குக் கொள்ளும் பொருளில், அன்று கூறப்படவில்லை என்று அறியலாம். நாட்டியம் என்ற கருத்திலேயே காணப்படுகிறது.

‘நாடகம்’ என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் ‘நட’ என்று பாவாணர் கூறுகிறார். ‘நட’ என்னும் வேர்ச் சொல்லிலிருந்து நடனம், நாட்டியம், நாடகம் என்பன ஆட்டத்தை அறிவிக்கும் மறுபெயர்களாக வந்தன என்பார். நடம், நட்டம் என்ற சொற்களும் ஆடலைக் குறிப்பன.

உலக நாடகத் தோற்றம் உலக நாடகத்தின் தோற்றம் எகிப்திலிருந்து தொடங்குவதாக நாடக ஆய்வாளர்கள் கருதுவார்கள். கிறித்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் நாடகம் தோன்றி விட்டது. ஐந்து விதமான எகிப்திய நாடகங்கள் இருந்தன. அவையாவும் கல்லறைகளின் முன்னோ, கோயில்களின் முன்னோ நடிக்கப்பட்டன. எகிப்தின் பிரமிட் நாடகங்கள் என்பன கல்லறைகளின் சுவர்களில் எழுதப்பட்டன. இவை மதகுருக்களாலேயே நடிக்கப்பட்டன. இந்நாடகங்கள் தொடர்ந்து நடிக்கப்பட்டன.

கிரேக்க நாடகங்கள்

எகிப்தில் நாடகங்கள் தோற்றம் பெற்றாலும், திட்டவட்டமான தகவல்களுடன் வரலாறு தொடங்குவது கிரேக்க நாடகத்திலிருந்தே எனலாம். பல நூற்றாண்டுகளாகக் கிரேக்க நாடகம் டயோனிஸஸ் (Dionysus) தெய்வத்துக்குச் செய்யும் சடங்குடனேயே தொடர்புற்று இருந்தது. அரிஸ்டாட்டிலின் குறிப்புகளின்படி டயோனிஸஸ் தெய்வத்துக்குப் பாடப்படும் டித்தரம்ஸ் (Dithyrambs) பாடல்களிலிருந்தே கிரேக்க நாடகம் வளர்ந்ததாகக் கருதப்படுகிறது. கிரேக்க நாடகத்தின் முதல்வர்களாக ஐந்து பேரைக் குறிப்பிடலாம். அவர்கள் அஸ்கிலஸ் (524 – 456 கி.மு), சோபோகிளிஸ், ஈரிபிடிஸ், அரிஸ்டோபன்ஸ், மென்டர் என்பவர் ஆவர்.

இங்கிலாந்து நாடகங்கள்

கிரேக்க நாடகத் தாக்கத்துடனேயே இங்கிலாந்து நாடகங்களும் படைக்கப்பட்டன. பதினாறாம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்து நாடகங்களில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் நாடகத்திற்குப் புத்துயிர் தரப்பட்டது. துன்பத்தை மையமாகக் கொண்ட பல ‘துன்பியல்’ நாடகங்கள் உருவாயின. தாமஸ் கைட் (Kyd), கிறிஸ்டோபர் மார்லோ, ஜான் லில்லி, வில்லியம் ஷேக்ஸ்பியர் முதலியோர் ஆங்கில நாடக இலக்கியத்தை வளர்ச்சி பெறச் செய்தனர் எனலாம்.

இரஷ்ய நாடகங்கள்

கி.பி.பதினெட்டாம் நூற்றாண்டில்தான் இரஷ்ய நாட்டில் நாடகங்கள் தோன்றின. இதற்கு முன் பொம்மலாட்டங்கள், மரபு வழி நடனங்கள் போன்றவை நடைபெற்று வந்தன. முதன்முதல் எழுந்த இரஷ்ய நாடகம் பாலட்ஸ்கி என்பவரால் எழுதப்பட்ட ஊதாரி மகன் என்பதாகும். 18ஆம் நூற்றாண்டில் சுமாராக்கால் என்பவர், தேசியத்தைப் பொருளாக வைத்து இன்பியல், துன்பியல் நாடகங்களை எழுதினார்.

சீன நாடகங்கள்

சீன நாடகங்கள் கிறித்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டன. கி.பி.7ஆம் நூற்றாண்டில் நடிப்புக் கலைக்கெனத் தனியாக ஒரு கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. மிங்-குவாங், சீன நாடகத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார். கி.பி.13ஆம் நூற்றாண்டில் இலக்கியச் செழுமைமிக்க நாடகங்கள் உருவாயின. சீன நாடகத்தில் அக்காலத்தில் ஆண் நடிகர்களே பெண் பாத்திரங்களை ஏற்று நடித்தனர்.

ஜப்பானிய நாடகங்கள்

ஜப்பானிய நாடகங்கள் பற்றிக் கி.மு.350இல் இருந்து குறிப்புகள் கிடைக்கின்றன. கி.பி.14ஆம் நூற்றாண்டில் இருந்து நோ நாடக அரங்கு என்னும் நடன நாடக வடிவம் ஜப்பானில் ஆடப்படுகிறது. இது பௌத்த ஆலயங்களிலேயே நிகழ்த்தப்படுகிறது. நோ நாடகங்களை ஐந்து வகையாகப் பிரிப்பர்.

இந்திய நாடகங்கள்

இந்திய நாடகங்கள் பற்றிய விளக்கத்தையும், அதன் தோற்றத்தைப் பற்றியும் விளக்குகின்ற நூல் நாட்டிய சாஸ்திரமாகும். பரதர் இதன் ஆசிரியர் ஆவார். இந்நூல் நம்பிக்கைகளையும், புராணங்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். சிவபெருமான், பிரமனிடம் ‘பார்ப்பதற்கும் கேட்பதற்குமான’ ஒன்றைப் படைக்கும்படி வேண்டினான். பிரமன் ‘சொல்லை’ இருக்கு வேதத்திலிருந்தும், பாடலைச் (‘இசையை’) சாம வேதத்திலிருந்தும், உணர்ச்சி பாவங்களை அதர்வண வேதத்திலிருந்தும், நடிப்பை யசுர் வேதத்திலிருந்தும் பெற்று, நாட்டிய வேதத்தை உருவாக்கினான். பின் பரத முனிவருக்குக் கூறினான். பரத முனிவர் கந்தர்வர்களையும் யட்சர்களையும் சேர்த்து நாடகத்தை மேடை ஏற்றினார். அது முதன்முதலாக இந்திர துவஜ விழாவில் நடிக்கப்பட்டது. இந்நாடகம் அசுரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது என்பன போன்ற செய்திகளைப் புராணங்கள் வழி அறிகிறோம். பொதுவாகக் கடவுள், தேவர்கள் ஆகியோர் மூலமே நாடகம் மக்களை வந்தடைந்ததாக நம்பிக்கைகள் அமைகின்றன.

இந்திய நாடகத் தோற்றம்

சமயச் சடங்குகளிலிருந்து நாடகங்கள் தோற்றம் பெற்றது என்பது அறிஞர் கருத்து. அது இந்திய நாடகங்களுக்கும் பொருந்தும். ஆனால் பிச்செல் என்பவர் இந்தியப் பொம்மலாட்டத்திலிருந்து தான் இந்திய நாடகங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பார். உலகெங்கும் இந்தப் பொம்மலாட்டத்திலிருந்துதான் நாடகங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பது இவர் கருத்து. கிரேக்கச் செல்வாக்கு இந்தியக் கலைகளில் காணப்படுவதாகவும் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இந்திய நாடக ஆசிரியர்கள் நாடக மரபில் பல உலகத்தரம் வாய்ந்த நாடகங்களை இந்தியா, நாடக இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளது. பல நாடக ஆசிரியர்கள் தோன்றிச் சிறந்த நாடகங்களைப் படைத்துள்ளனர்.

பாசன்

வடமொழியான சமஸ்கிருத நாடக மரபில் பாசன் என்பவரே முதன்மையானவராகக் கருதப்படுகிறார். இவர் எழுதியதில் பதினான்கு நாடகங்கள் இதுவரை கிடைத்துள்ளன. பாசனுடைய காலம் கி.பி.3ஆம் நூற்றாண்டாகும். எளிமையான முறையில் எழுதப்பட்ட சொப்பன வாசவதத்தம், சாருதத்தம், பிரதிமா நாடகம் ஆகியன இவரது நாடகங்களில் மிகச் சிறந்ததாகக் கொள்ளப்படுகின்றன.

சூத்திரகர்

இவர் பாசனுக்குப் பிந்திய காலத்தவர். இவரது மிருச்சகடிகம் என்ற நாடகம் உலகப் புகழ் பெற்றது. இது இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பிரஞ்சு, ஜெர்மன், இரஷ்ய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் பலர் மொழி பெயர்த்துள்ளனர். பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் மண்ணியல் சிறுதேர் என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.

காளிதாசர்

விக்கிரமோர்வசீயம் (விக்கிரமன், ஊர்வசி கதை), மாளவிகாக்னிமித்திரம் (மாளவிகா, அக்னிமித்திரன் கதை), சாகுந்தலம் இந்த மூன்று நாடகங்களில் காளிதாசருக்குப் புகழையும், பெருமையையும் சேர்த்தது சாகுந்தலம் நாடகமேயாகும். இந்த நாடகம் உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டு அந்தந்த நாடுகளில் மேடையேற்றப்பட்டுள்ளது. தமிழில் மறைமலையடிகளார் தனித்தமிழ் நடையில் இந்நூலை மொழிபெயர்த்துள்ளார்.

ஹர்ஷர், மகேந்திரவர்மன், பவபூதி, சக்திதரர், பில்ஹணர், அஸ்வகோஷ் எனப் பலரும் சமஸ்கிருத மொழியில் தொடர்ந்து நாடகம் படைத்து வந்தனர்.

தமிழ் நாடகங்கள்

தமிழ் நாடகங்கள் பற்றி அறிய இலக்கியங்கள், கல்வெட்டுகள், நம்பிக்கைகள், நாட்டுப்புறச் சமயக் கூறுகள் ஆகியன உதவுகின்றன. பண்டைய கூத்துகள் பற்றியே இலக்கியங்கள் பல செய்திகளைக் கூறுகின்றன. துன்பத்துடன் முடியும் ‘துன்பியல்’ மரபு தமிழில் மிகக் குறைவாகவே உள்ளது. எல்லாம் இன்பமயம் என்னும் பண்பே மேலோங்கி நிற்கிறது. தமிழ் நாடகங்களுக்கும் இது பொருந்தும். மேலும் தமிழ்ப் பண்பாட்டில் நடனம், நாடகம் என இரண்டுமே ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. நாடகம், நடனம் என இரண்டுமே ஒரே வகைப் பண்புகளையே கொண்டிருந்தன. பெரும்பாலும் இலக்கியங்களிலே பெண்கள் நடன மகளிர் எனக் குறிப்பிடப்படாமல் நாடக மகளிர் என்றே குறிப்பிடப்படுகின்றனர்.

தொல்காப்பியர் காலத்தில் நாடகம் இன்று கிடைத்துள்ள நூல்களில் மிகத் தொன்மையானது தொல்காப்பியம். ‘நாடகம்’ என்ற சொல்லை தொல்காப்பியத்திலேயே காண்கிறோம். இந்நூலில் கூறப்படும் செய்திகளைக் கொண்டு, அக்காலத்திலிருந்த சில நாடகங்கள் (கூத்துகள்) பற்றி அறிகின்றோம். தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல் என்னும் பகுதியில் கூறியுள்ள பல செய்திகள் நாடகங்களுக்கு ஏற்ற கூறுகளாக உள்ளன. மேலும் தொல்காப்பியர் நாடகத்தை, விளையாட்டு எனப் பொருள்படும் பண்ணை என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.

மறைந்த நாடக நூல்கள்

தொல்காப்பியர் காலத்தை ஒட்டி முன்னும், பின்னும் சில நாடக நூல்கள் இருந்தன. அவை பற்றி உரையாசிரியர்கள் எழுதிய உரைகளின் மூலம் அறிகிறோம். அவ்வாறான நூல்களில் குறிப்பிடத்தக்கவை பன்னிரண்டு. அவை,

(1) முறுவல்

(2) சயந்தம்

(3) குணநூல்

(4) செயிற்றியம்

(5) இசை நுணுக்கம்

(6) இந்திரகாளியம்

(7) பஞ்சமரபு

(8) பரதசேனாபதீயம்

(9) மதிவாணர் நாடகத் தமிழ் நூல்

(10) கூத்த நூல்

(11) செயன் முறை

(12) நூல்

என்பனவாகும். இவற்றில் கூத்த நூல், பஞ்ச மரபு ஆகியன இன்று கிடைத்துள்ளன.

சங்க காலத்தில் நாடகம் கி.பி.250 வரை உள்ள காலத்தைச் சங்க காலம் என்பர் வரலாற்று ஆசிரியர்கள். பெரும்பாலும் தொல்காப்பியர் கூறிய நாடகங்கள் (கூத்துகள்), அவற்றின் வகைகள் பற்றிச் சங்க இலக்கியங்களில் காணலாம். பாணரும், பாடினியும் இசைக் கலையை வளர்த்தனர். பொருநரும், கூத்தரும் நாடகக் கலையைப் போற்றி வளர்த்தனர்.

அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றில் வரும் பாடல்கள் நாடக உரையாடல்கள் போலவே பெரும்பான்மையும் அமைந்துள்ளன. தலைவன் – தலைவி, தலைவி – தோழி, தோழி – பாணன் உரையாடல்கள் நாடகமாகவே விளங்குகின்றன.

வெறியாட்டு என்று சங்க இலக்கியம் கூறும் சடங்கு நிகழ்ச்சி நாடகத் தன்மை பெற்று விளங்குகிறது. காதல் வயப்பட்ட மகள், தாய், வேலன், தோழி என நான்கு பாத்திரங்கள் இந்தச் சடங்கில் முக்கியமானவர்கள். இந்த நான்கு பேருக்கும் இடையில் நடைபெறுகின்ற ‘உரையாடல்’ நாடக மொழிகளாகவே அமைந்துள்ளன.

கூத்தோடு சம்பந்தப்பட்டவர்களாகக் கோடியர், வயிரியர், கண்ணுளர், பாணர், அகவுநர் என்ற தொழில்முறைக் கலைஞர்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. குறிப்பாக மலைபடுகடாம் எனும் நூல் நாடகக் கலைஞர்களாகிய கூத்தர்களை ஆற்றுப்படுத்துவதாகவே (வழி காட்டுவதாகவே) அமைகிறது.

புறநானூறு, 28ஆம் பாடல் கூத்தர் ஆடுகளம் எனக் கூத்து நடைபெறும் இடத்தைக் குறிக்கிறது. பரிபாடலில் வரும்,

படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்

களி நாள் அரங்கின் அணிநலம் புரையும்

(பரிபாடல் – 14)

என்ற அடிகள் ஆடல் அரங்குகளைப் பற்றிக் கூறுகின்றன.

நீதிநூல்கால நாடகம் சங்க காலத்திற்குப் பின்னும், பல்லவர் காலத்திற்கு முன்னும் உள்ள காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். இது கி.பி.250 முதல் 600 முடிய உள்ள காலமாகும். சிலப்பதிகாரமும், மணிமேகலையும், பதினெண் கீழ்க்கணக்கு என்று வகுக்கப்படும் நீதிநூல்களும் இக்காலத்தின் எல்லையில்தான் தோன்றின. இந்நூல்கள் நாடக இலக்கியம் பற்றிய பல செய்திகளைக் கொண்டுள்ளன.

திருக்குறளில் நாடகம்

திருக்குறள் மக்களுக்கு நீதி கற்பிக்க வந்த நூலாயினும், நாடகம் பற்றிய செய்திகளையும் கூறுகின்றது. நீண்ட நாடகங்கள் போலில்லாமல், ஒரு பகுதியை மட்டும் நடித்துக் காட்டுவது ஓரங்க நாடகம் ஆகும். இது கதையின் கட்டுரைப் பொருள், கதையின் நிகழ்ச்சி, உறுப்பினர்கள், காலம், செயல், இட ஒருமைப்பாடுகள், உரையாடல் என அமையும். ஓரங்க நாடகத்திற்கான அத்துணைக் கூறுகளும் திருக்குறளின் பல குறட்பாக்களில் அமைந்துள்ளன. ஆறு, அழகப்பன் என்பவர் புலவி நுணுக்கம் என்னும் அதிகாரத்தை வைத்து ஓர் ஓரங்க நாடகத்தைப் படைத்துள்ளார்.

நாடகத்தில் ‘தனிமொழி’ என்பது ஒரு கூறாகும். ஒருவன் தனிமையிலோ, தன் நெஞ்சத்தை நோக்கியோ, தானே தனியே பேசுவது தனிமொழியாகும். இது பல குறட்பாக்களில் நாடகப்பாங்கில் அமையக் காணலாம்.

சிலப்பதிகாரத்தில் நாடகம்

நாடகக் காப்பியம் என்றழைக்கப்படும் சிலப்பதிகாரம் தமிழின் முதற் காப்பியம். இது இன்று திரைப்படமாக எடுக்கப்பட்டும், நாடக, நாட்டிய வடிவமாக நடத்தப்பெற்றும் உள்ளது. ஒரு நாடக வடிவம் கொள்ளுதற்குரிய கட்டுக்கோப்பைச் சிலப்பதிகாரம் முழுமையாகப் பெற்றுள்ளது.

நாடகமேத்தும் நாடகக் கணிகையொடு

வால சரிதை நாடகங்களும்

என நாடகம் என்ற சொல்லை, நடனமில்லாமல் நாடகம் என்ற பொருளிலேயே சிலம்பு வழங்குகிறது.

பொதுமக்கள் காணும்படியான நாடகங்கள் பொதுவியல் என்றழைக்கப்பட்டன. அரசவை உயர்குடியினர் காணும்படி நடந்த நாடகங்கள் வேத்தியல் என்று அழைக்கப்பட்டன. சிலப்பதிகாரம் இருநிலைப்பட்ட மக்களுக்கான கலைகளையும் கூறுகிறது. நகர்ப்புற மக்களுக்கான கலைகளை,

(1) அரங்கேற்று காதை

(2) இந்திர விழவூரெடுத்த காதை

(3) நீர்ப்படைக் காதை

(4) கடலாடு காதை

(5) வேனிற் காதை

ஆகிய காதைகளில் இளங்கோவடிகள் காட்டுவார். நாட்டுப்புற மக்களின் கலைகளை,

(1) வேட்டுவ வரி

(2) குன்றக் குரவை

(3) ஆய்ச்சியர் குரவை

ஆகிய காதைகளில் காட்டுவார்.

மாதவி ஆடிய பதினொரு ஆடல்கள், சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில் வருகின்றன. அவை புராணக் கதைகளை நடித்துக் காட்டும் தன்மையுடன் விளங்குகின்றன.

‘நாடக மேடை’ என இக்காலத்து வழங்கப்படும் இடம் சிலப்பதிகாரத்தில், ஆடுகளம், ஆடரங்கு, ஆடிடம் என்ற சொற்களால் குறிக்கப்படுகிறது. அரங்கம் அமைக்கப்படும் அளவுகளும் கூறப்பட்டுள்ளன. இவற்றில் கூத்துகள் இரவில் நடக்கும்போது பெரும்விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. எதிரில் அமர்ந்து கூத்துக் காண்போரின் இருக்கை அம்பலம் என்ற பெயரால் விளங்கியது.

ஆடரங்கில் மூவகைத் திரைகள் கட்டப்பட்டிருந்தன. எழினி என்ற சொல் திரையைக் குறித்தது. மூவகை எழினிகள் இருந்தன. அவை,

(1) ஒருமுக எழினி

(2) பொருமுக எழினி

(3) கரந்து வரல் எழினி

என்று அழைக்கப்பட்டன.

நாடகம் தொடங்குவதற்குச் சற்றுமுன் அந்தரக்கொட்டு என்னும் ஒருவகைக் கூத்து ஆடுவது வழக்கம் என்பதைச் சிலப்பதிகாரம் கூறும். மக்களின் மனத்தைக் கவர்வதற்கும், கூட்டத்தைக் கூட்டுவதற்கும் இது ஆடப்பட்டிருக்கலாம்.

மணிமேகலையில் நாடகம்

மணிமேகலை ஒரு துறவுக் காப்பியம். ஆனாலும் இதனுள் நாடகம், நாடகக் காப்பியம், யாழ், தண்ணுமை, குழல் போன்ற செய்திகள் கூறப்படுகின்றன. மணிமேகலைக் காப்பியம் எழுந்த காலத்தில் குடும்பப் பெண்கள் ஆடல்பாடல் நிகழ்த்துவதில்லை. அதற்கென இருந்த பாணர் மகளிரும், விறலியரும், கணிகையருமே இக்கலைகளைப் பயின்று ஆடியும் பாடியும் வந்தனர் என்பதை அறிகிறோம். கதை தழுவாக் கூத்து, கதை தழுவி வரும் கூத்து என இருவகைக் கூத்துகள் இருந்ததை மணிமேகலை ஆசிரியர் சாத்தனார் காட்டுகிறார்.

பிற காப்பியங்களில் நாடகம் கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய சமணக் காப்பியம் பெருங்கதை ஆகும். இந்நூலில் கோயிலில் நாடகம் நடத்துவதற்கெனத் தனிக்குழுக்கள் இருந்ததாக, இதன் ஆசிரியர் கொங்குவேளிர் சுட்டிக்காட்டுவார்.

மணநூல் என்றழைக்கப்படும் சீவகசிந்தாமணியில் கதை தழுவிய கூத்துகள் நடந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன. இக்காப்பியத்தில் ஐம்பது இடங்களில் நாடகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. காப்பியத் தலைவன் சீவகன் ஒரு வீரனாகவும், கலைஞனாகவும் காட்டப்படுகிறான். நாடகங்களையும், நடனங்களையும் காண்பது அவன் பொழுது போக்குகளாகக் காட்டப்பட்டுள்ளன. நாடகங்களைக் காண்பதற்கு மக்கள் பெரும் கூட்டமாக வந்தனர் என்றும் சிந்தாமணி கூறும்.

கம்பர் எழுதிய கம்பராமாயணம், ‘கம்பர் நாடகம்’ என்றே அழைக்கப்படுகிறது. கம்பன் காலத்தில் நாடக நடிகர்கள் மதங்கியர் – கண்ணுனர் என்று அழைக்கப்பட்டனர்.

பக்தி இலக்கியங்களில் நாடகம்

பல்லவர் காலத்தில் சைவமும், வைணவமும் எழுச்சி பெற்றன. சைவப் பெரியோர்களான நாயன்மார்களும், வைணவப் பெரியோர்களான ஆழ்வார்களும் பக்திப் பாடல்களைப் பாடினர். இவர்களின் பாடல்களில் பெரும்பாலும் இசைக்கலை பற்றிய குறிப்புகளே அதிகம் கிடைக்கின்றன. இன்னிசைக் கருவிகள் கொண்டு ஆடல் பாடல் நிகழ்ந்ததாகக் குறிப்புகள் உள்ளன. காலத்தால் பிற்பட்டவராகக் கருதப்படும் மாணிக்கவாசகர், ”நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து…..” என்று பாடுவதன் மூலம், அக்காலத்தில் நாடகம் பெருவழக்காய் இருந்தது தெரிய வருகின்றது. நாடகம் என்ற சொல்லினை நம்மாழ்வார் நாட்டியம் என்ற பொருளிலேயே கூறுகின்றார்.

பிற இலக்கியங்களில் நாடகம்

சேக்கிழார் பாடிய பெரிய புராணம் நாடகத் தொடர்பான பல செய்திகளைக் கூறுகின்றது. மதுரையைக் குறிக்கும் பொழுது ‘முத்தமிழும்’ சிறந்த மதுரை என்று கூறும். காஞ்சியில் அக்காலத்தில் நாடக மகளிர்க்கெனத் தனித் தெருக்கள் இருந்த செய்தியையும் பெரிய புராணம் மூலம் அதன் ஆசிரியர் சேக்கிழார் காட்டுவார்.

அடியார்க்கு நல்லாரின் உரைகள் கலைக்கு விளக்கமாக அமைகின்றன. அவர் காலத்து நாடகம், இன்றைய வடிவில் இல்லாமல் ஆட்ட வடிவில் அமைந்திருந்ததை அடியார்க்கு நல்லார் உரை மூலம் அறிய முடிகிறது.

சிற்றிலக்கியங்களை நாடகம் என்னும் அடிப்படையில் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் மதிப்பிடுவார்கள். நாடகக் கூறுகள் அமைந்த சிற்றிலக்கியங்கள், நாடகத்திற்குப் பெரும் ஊக்கம் தந்தன.

கல்வெட்டுகளில் நாடகங்கள்

கி.பி.பத்தாம் நூற்றாண்டிலிருந்து வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் நாடகம் பற்றியும், அந்நாடகமாகிய கூத்தை ஆடிய கலைஞர்கள் பற்றியும் பல தகவல்கள் காணப்படுகின்றன.

தஞ்சைப் பெரிய கோயிலில் காணப்படும் முதலாம் இராசேந்திரன் காலக் கல்வெட்டொன்று, சாந்திக் கூத்தனாலும், அவன் குழுவினராலும், சிறப்பு நாடகம் ஒன்று தஞ்சைக் கோயிலில் நடத்தப் பெற்றதாகக் கூறுகின்றது.

இரண்டாம் இராசேந்திரன் காலத்திய கல்வெட்டு, தஞ்சைக் கோயிலில், ‘இராச இராசேசுவர நாடகம்’ வைகாசித் திருவிழாவில் ஆடப் பெற்றதென்றும், அதற்கு நிவந்தங்கள் (நன்கொடைகள்) அளிக்கப்பட்டன என்றும் குறிப்பிடுகின்றது.

தஞ்சையில் மானம்பாடி என்னுமிடத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்று வீரநாராயணபுரத்தில் கைலாசமுடி மகாதேவரின் கோயிலில் சித்திரைத் திருவிழாவின்போது ஐந்து முறை தமிழ்க்கூத்து ஆடப்பட்டதாகத் தெரிவிக்கின்றது.

தொகுப்புரை

நடனத்திலிருந்தும், சடங்குகளிலிருந்தும் தோன்றியது நாடகம். எகிப்தில் இவ்வகையில் முதல் நாடகம் தோன்றியிருக்கலாம். கிரேக்க நாட்டின் நாடகக் கலையின் தாக்கம் பல நாடுகளிலும் காணப்பட்டது.

இந்திய நாடகங்களில், வடமொழியான சமஸ்கிருதத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். காளிதாசர் போன்ற மேதைகள் சிறந்த நாடகங்களைப் படைத்தனர். தமிழ் நாடகங்கள் பற்றி அறியத் தொல்காப்பியத்திலிருந்து தொடங்கிச் சிற்றிலக்கியங்கள் வரை குறிப்புகள் கண்டோம். நடனமே பெரும்பாலும் நாடகம் என்று அழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில்தான் ‘கூத்து’ என்று ஓரளவு நடிக்கப்பட்ட நாடகங்கள் நடந்ததாகக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்.

நடனத்தோடு இணைந்து வளர்ந்த நாடகம் தொடர்பான பல செய்திகளை நாம் இலக்கியங்கள் மூலமே அறிய முடிகின்றது. எழுதப்பட்ட ‘நாடகப் பிரதி’ அதாவது நாடக நூல் எதுவும் சிற்றிலக்கிய காலம்வரை, குறிப்பாகப் பதினாறாம் நூற்றாண்டு வரை நமக்குக் கிடைக்கவில்லை. அதனால் தமிழ் நாடக இலக்கியம் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் தெளிவாக எழுத முடியாத நிலை உள்ளது. மறைந்து போன தமிழ் நாடக நூல்கள் கிடைக்குமானால் இன்னும் பல தொன்மை நாடகச் செய்திகளை நாம் அறியலாம்.

பாடம் - 2

தொன்மை நாடகப் போக்குகள்

பாட முன்னுரை

அன்பார்ந்த மாணவர்களே! நாடகக் கலையின் தோற்றம், மனிதன் தோன்றியபோதே தொடங்கி விட்டது. காலப்போக்கில் நாடகம் வளர்ச்சியையும், பல மாற்றங்களையும் பெற்றது. ஆடலுக்குள்ளும் பாடலுக்குள்ளும் ஆரம்பகால நாடகங்கள் அடங்கியிருந்தன. அவை மன்னர் அவைகளிலும், தெருக்களிலும், களத்து மேடுகளிலும், கோவிலுக்கு முன்பும், திருவிழாக்களிலும் நடிக்கப் பெற்றன. எனினும் ஒழுங்குபடுத்தி எழுதப்பட்ட நாடக இலக்கியம் ஏதுமிருக்கவில்லை. பெரும்பாலும் பதினாறாம் நூற்றாண்டிற்குப் பின்னர், எழுதப்பட்ட வடிவத்தில் சிற்றிலக்கிய வகை நாடகங்கள் கிடைக்கின்றன. கல்வெட்டுகளில், கைப்பிரதிகளில் நாடகக் குறிப்புகள் எழுதப்பட்டுக் கிடைக்கின்றன. கூத்துவகை நாடகம் பற்றியும் தெரிய வருகின்றன. 19ஆம் நூற்றாண்டின் முன்னர் இருந்த காலப்பகுதியில் தோன்றிய நாடகங்களைத் தொன்மை நாடகம் எனக் கொண்டு, அதன் போக்குகள், தோற்றம், வளர்ச்சி என்பன பற்றி இப்பாடம் மூலம் அறிந்து கொள்வீர்கள்.

தொன்மை நாடகங்கள்

நாடகக் கலைக்கும், கடவுள் வழிபாட்டுச் சடங்கிற்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. சங்க காலம் சுட்டுகின்ற பல கூத்து வடிவங்களும் இறைவனோடு தொடர்பு கொண்டவைகளாகவே உள்ளன. பழைய புராணங்களும், முதல் நாடகம் இந்திரசபையில் அரங்கேற்றப்பட்டதாகக் கூறுகின்றன. இக்கலை வடிவம் தொல்காப்பியத்தில் கூத்து என வழங்கப்பட்டது. துணங்கை, வெறி, துடி, குரவை போன்றன செல்வாக்குமிக்க கூத்து வடிவங்களாகி நின்றன. இவையாவும் கடவுள் வழிபாட்டின்போதும், திருவிழாக்களின்போதுமே நடிக்கப்பட்டன. கடவுள் சார்ந்த நாடகக் கலை, காலத்திற்கேற்ப மன்னர்கள் ஆதரவில் வளர்ந்தது. கி.பி.பத்தாம் நூற்றாண்டில், பிற்காலச் சோழர்களின் ஆதரவில் இராசராசேசுவர நாடகம் போன்ற நாடகங்கள் நடத்தப் பெற்றன. புராணக் கடவுளர்கள் பெற்ற இடத்தை இங்கே மன்னர்கள் பெற்றனர். மன்னர்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டு, அவர்கள் பெயரிலே நாடகங்கள் நடைபெற்றன. அதேசமயம் வேறு பல நாடகங்களும் இவ்வேளையில் தோற்றம் பெற்றிருந்தன. பிரபோத சந்திரோதயம் என்னும் நாடகமும், சங்கல்ப சூரியோதயம் என்ற நாடகமும் கி.பி.12ஆம் நூற்றாண்டில் நடிக்கப் பெற்றதாக ஏ.என்.பெருமாள் தமிழ்நாடகம் ஓர் ஆய்வு என்ற நூலில் கூறுகிறார்.

கி.பி.பதினாறாம் நூற்றாண்டு வரை உள்ள தொன்மை நாடகப் போக்குகள் கடவுள் சார்ந்தும், மன்னர் சார்ந்துமே அமைந்திருந்தன. புராணக் கதைகளே பெரும்பாலும் நாடகங்களாயின. அனைவரும் அறிந்த அந்தக் கதைகளை யாரும் எழுதி வைக்காமலே நடித்தனர். அதன் காரணமாகவே இக்காலக்கட்டப் பகுதியில் நமக்கு எழுதப்பட்ட நாடகங்கள் கிடைக்கவில்லை.

கல்வெட்டும் நாடகங்களும்

பத்தாம் நூற்றாண்டுக் காலக் கல்வெட்டுக்களில் அக்கால நாடகக் கலைகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. கூத்து ஆடிய கலைஞர்கள் பற்றிய தகவல்களும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டின் புகழ்மிக்க கோயில்களில் ஆண்டுதோறும் விழாக்காலங்களில் தமிழ்க்கூத்து, ஆரியக் கூத்து, சாக்கைக் கூத்து, சாந்திக் கூத்து ஆகியவை நடைபெற்றமைக்கு ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் காணப்படுகின்றன. ஆயினும், இவ்வகைக் கூத்துகளின் நிகழ்த்துபொருள் (நடிக்கப்பட்ட கதை) பற்றியும், அவை நிகழ்த்தப்பட்ட (நடிக்கப் பெற்ற) விதம் பற்றியும் தெளிவான செய்திகள் நமக்குக் கிடைக்கவில்லை. மகேந்திர வர்மன் என்கிற பல்லவ மன்னன் எழுதிய மத்தவிலாசப்பிரகசனம், பகவத்தஜ்ஜுகீயம் போன்ற வடமொழி நாடகங்கள் நமக்குக் கிடைத்திருப்பன போல், தமிழ் நாடகங்கள் கிடைக்கவில்லை. இராசராசேச்சுவர நாடகம் மற்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் பூம்புலியூர் நாடகம், திருமூலநாயனார் நாடகம் ஆகியவற்றின் எழுத்து வடிவங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொன்மைத் தமிழ் நாடகத்தின் போக்கை அறிய உறுதியான பதிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

இலக்கிய வடிவ நாடகங்கள்

தமிழ் நாடக வரலாற்றைப் பொறுத்தவரை பதினாறு, பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகள் குறிப்பிடத்தக்க காலக்கட்டங்களாகும். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டிலிருந்துதான் நாடக இலக்கியங்கள் எழுத்து வடிவில் கிடைத்துள்ளன. மேலும் சோழர் காலத்தில் அரசர்கள் ஆதரவில் அரண்மனைகளிலும், கோயில்களிலும் அடைந்து கிடந்த நாடகக் கலை, மக்கள் மன்றங்களைத் தேடிவரத் தொடங்கியது. தெலுங்கு மற்றும் மராட்டிய அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்தக் காலக்கட்டத்தில்தான், நாட்டுப்புற நிகழ்த்து கலைகளான பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம், குளுவ நாடகம், மகுட நாடகம், கீர்த்தனை போன்ற நாடக வகைகள் வளர்ச்சி பெற்றன. இவ்வகை நாடகங்கள் தொன்மைத் தமிழ் நாடகப் போக்கில் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை இனிக் காணலாம்.

பள்ளு நாடகம் அரசர்களைப் பாடிக் கொண்டிருந்த காலம் மாறி, மக்களைப் பற்றிப் பாடும் காலம் வந்தது. அதனால் பலவகைப்பட்ட புதிய இலக்கியங்கள் பிறந்தன. கி.பி.பதினாறாம் நூற்றாண்டளவில் அவ்வாறு பிறந்ததுதான் பள்ளு நாடகம். மேடை வடிவமும், இலக்கிய வடிவமும் கொண்ட நிலையில் எழுந்த முதல் நாடக வகை பள்ளு. மருத நில மக்கள், பள்ளு நாடக உறுப்பினர்களாக வருகின்றனர். சிலப்பதிகாரம் போன்ற பண்டைய நூல்களில் உழவர்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் தொகுத்து நாடக இலக்கிய வடிவில் பிற்காலப் புலவர்கள் உருவாக்கினர்.

திருவாரூர்ப் பள்ளு என்னும் பள்ளு நூல்தான் இவ்வகையில் முதலில் தோன்றியதாகும். கதிரைமலைப் பள்ளு, திருமலை முருகன் பள்ளு, வைசியப் பள்ளு எனப் பல குறிப்பிடத்தக்க பள்ளு நாடகங்கள் பின் தோன்றின.

பள்ளு நாடகங்களில் மிகச் செல்வாக்குப் பெற்றது முக்கூடற்பள்ளு ஆகும். இது கி.பி.1680இல் எழுந்தது. இப்பள்ளு, பிற்காலத்தில் பல பள்ளு நூல்கள் தோன்றுவதற்கு மூலநூலாக அமைந்தது எனலாம்.

‘பள்ளு நூல்கள், நாடக இலக்கியங்களாக அமைந்தவை. இவற்றை அப்படியே நடிக்க முடியாது. இவற்றில் நாடகப் பாங்கு அமைந்திருப்பதால் சில உத்திகளைச் சேர்த்து இவற்றை நடிப்பதற்கேற்ற வகையில் நாடகமாக்கும் முயற்சி பிற்காலத்தில் தோன்றியது’ என்பார் ஆறு. அழகப்பன்.

கதிரை மலைப் பள்ளு, முக்கூடற்பள்ளு இரண்டும் நாடகமாக நடிக்கப் பட்டவை. கதிரைமலைப் பள்ளின் மூல இலக்கியத்தை இலங்கை அறிஞர் க.வீரகத்தி என்பவர் நாடக வடிவில் இசைநாடகமாக்கி வெளியிட்டுள்ளார். அது இலங்கையில் பல இடங்களில் நாடகமாக நடிக்கப்பட்டுள்ளது. முக்கூடற் பள்ளு என்னாயினாப் புலவர் என்பவரால் நடித்தற்கேற்ற நாடகமாக எழுதப்பட்டது. மேடை நாடகமாகவும் நடிக்கப்பட்டது.

பள்ளு நாடகம் எளிய மக்கள் நடிப்பதற்கும், பார்ப்பதற்கும் தக்கதாக இருந்தது. நாட்டுப்புறக் கோயில் விழாக்களில் பாமர மக்களால் அதிகப் பொருள் செலவோ, அதிகப் பயிற்சியோ இன்றி எளிதாக நடிப்பதற்குத் தக்கதாய்ப் பள்ளு நாடகங்கள் இருந்தன. பள்ளு நாடகம் பார்த்து மக்கள் சொல்லையும், நெல்லையும் வளர்த்தார்கள் என்பார் ஏ.என். பெருமாள்.

குறவஞ்சி நாடகம் குறிஞ்சி நிலமாகிய மலைப்பகுதியில் வாழ்பவர்கள் குறவர்கள். குறப்பெண்ணைக் குறவஞ்சி என்பர். இவர்கள் ஊர் ஊராகச் சென்று குறிசொல்லும் வழக்கமுடையவர்கள். சங்க இலக்கியங்களிலே வெறியறிதல் என்ற பகுதியிலேயே இச்செய்திகளைக் காணலாம். இவ்வாறு குறி சொல்லும் செய்தியை மையக்கருவாகக் கொண்டு தோன்றியதே குறவஞ்சி நாடகம். இதனைக் குறத்திபாட்டு எனவும், குறம் எனவும் பாட்டியல் இலக்கண நூல்கள் கூறும்.

குறவஞ்சி நாடக வகையைச் சார்ந்த இலக்கியம் என்பதை,

செழித்த குறவஞ்சி நாடகத்தைப் பாட -

(குற்றாலக் குறவஞ்சி)

குறவஞ்சி நாடகம் தமிழில் வணங்கிப் பாட

- (சோலைமலைக் குறவஞ்சி)

எனவரும் பல்வேறு குறவஞ்சி இலக்கிய வரிகள் புலப்படுத்துகின்றன. குறவஞ்சி நூல்களின் பெயரிலேயே நாடகம் என்னும் சொல்லாட்சி அமைந்திருக்கக் காணலாம். கும்பேசர் குறவஞ்சி நாடகம், சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம் முதலியன இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

குறவஞ்சி நாடகத்தில், இன்றைய நாடகங்களுக்கு இருப்பது போல் களம், காட்சி என்னும் பிரிவுகள் இல்லை. எனினும் அதனை மூன்று காட்சிகளாக மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு என்னும் தம்முடைய நூலில் பிரித்துக் காட்டுவார். குறத்தி வரும்வரை அமைந்துள்ள தலைவியினுடைய வரலாறு முதற்காட்சியாகவும், குறத்தி குறி கூறிப் பரிசில் பெற்றுச் செல்லுதல் இரண்டாவது காட்சியாகவும், சிங்கனின் பறவை வேட்டை முதல் சிங்கன் – சிங்கி உரையாடல் வரை உள்ள பகுதிகள் மூன்றாவது காட்சியாகவும் அவர் பகுப்பில் விளங்குகின்றன.

பாட்டுடைத் தலைவர் உலா பற்றிய அறிவிப்புடன் தொடங்கிய நாடகம், பாட்டுடைத் தலைவர் வாழ்த்துடன் முடிவு பெறுவது நாடகத்திற்கு ஓர் இயைபினை ஏற்படுத்துவதாக உள்ளது. குறவஞ்சியில் வரும் உரையாடல்கள், பேச்சு வழக்குச் சொற்களாகவும், மரபுத் தொடர், பழமொழிகள், சேரி வழக்குகள் கொண்டதாகவும் அமைகின்றன.

குமரகுருபரர் இயற்றிய மீனாட்சியம்மை குறமே குறவஞ்சி இலக்கிய வகையில் முதலில் தோன்றியதாகும்.

கிரேக்க மொழி நாடகங்களில், வசனப் பகுதிகள் மெல்ல நுழைந்தது போலவே, குறவஞ்சி நாடகங்களிலும் ஒரு செயற்பாட்டிற்கும், மற்றொரு செயற்பாட்டிற்கும் இடையே இணைப்புப் போல் விளங்குகின்ற வசனப் பகுதிகள் இடம் பெறலாயின. கும்பேசர் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, திருமலையாண்டவர் குறவஞ்சி, ஓதாளர் குறவஞ்சி, சிதம்பரக் குறவஞ்சி முதலிய குறவஞ்சி நாடகங்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.

பள்ளு போன்றே அதன் பின் தோன்றிய குறவஞ்சி நாடகங்களும் மக்களைப் பாடின. குறவஞ்சி இலக்கியங்களில் பாட்டுகளை இணைக்கும் உரையாடல்கள் அதிகம் இடம் பெற்றன. இது இன்றைய நாடகத்தை நோக்கிய வளர்ச்சி எனலாம். பொதுவாகப் பள்ளு நாடகத்தைவிடக் குறவஞ்சி நாடகங்கள் அதிகமாக நடிக்கப்பட்டதோடு, வளர்ந்து வந்த போக்கினையும் காணமுடிகிறது.

நொண்டி நாடகம் பள்ளு, குறவஞ்சி போலச் செல்வாக்குப் பெற்ற இலக்கிய வகையில் நொண்டி நாடகமும் ஒன்றாகும். இந்நாடகம் நொண்டிச் சிந்தால் பாடப்பட்டிருந்ததாலும், நொண்டி ஒருவன் தன் வரலாறு கூறுவதைப் போன்ற அமைப்பைப் பெற்றிருந்ததாலும் நொண்டி நாடகம் என்ற பெயர் வந்திருக்கலாம். ஒற்றைக்கால் நாடகம் என்று கிராமப்புற வழக்கில் இந்நாடகம் அழைக்கப்படுகிறது. இந்நாடக வகை 17ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகும்.

ஒரு நடிகன் நொண்டியாக மக்கள் முன் தோன்றி, ஆடலும் பாடலும் மிகுந்த இவ்வகை நாடகங்களை நடித்துக் காட்டியிருக்கிறான். நகைச்சுவை மிகுந்த நாடகமாக நொண்டி நாடகம் விளங்குகிறது.

அக்காலச் சமுதாயத்தில் அதிகமாகக் காணப்பெற்ற பரத்தையர் உறவு, களவு போன்ற தீச்செயல்களை அரங்கத்தில் காட்டி மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே நொண்டி நாடகத்தின் நோக்கமாகும். சிறப்பாக மக்களை மகிழ்வித்து, அறிவு புகட்ட வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.

பல நொண்டி நாடகங்கள் அக்காலத்தில் அரங்கேறின. அவற்றில் சிறப்பானவை திருச்செந்தூர் நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம், திருமலை நொண்டி நாடகம், அவினாசி நொண்டி நாடகம், ஞான நொண்டி நாடகம் முதலியனவாகும். நொண்டி நாடகத்தில் முதலில் தோன்றியதாகச் சீதக்காதி நொண்டி நாடகத்தைக் குறிப்பிடலாம்.

ஒருவனே தோன்றி மேடையின் மீது பாடித் தன் வரலாறு கூறுவதாக அமையும் இந்நாடகத்தை ஒரு தனி நடிப்பு நாடகமாகக் கொள்ளலாம். இது குறவஞ்சி நாடகத்திலிருந்து இன்னும் சிறிது உயர்ந்த நிலையை அடைந்திருப்பதை உணர்த்துகிறது.

விலாச நாடகம் விலாச நாடகம் என்பது பலவகை இலக்கியங்களின் சாயலையும் பெற்று விளங்கும் ஒரு சிற்றிலக்கிய வகை நாடகமாகும். கோவை, தூது போன்ற சிற்றிலக்கியங்களின் தாக்கம் அதிகமாக விலாச நாடகத்தில் உள்ளது. பெரும்பாலான விலாசங்கள், நாடகப் போக்கிலேயே அமைந்துள்ளன.

மேனாட்டு நாடக முறைகளைப் பின்பற்றி அங்கம், களம் போன்ற அமைப்புகளுடன் அமைந்துள்ள விலாசங்களும் உண்டு. பல்வேறு வகையான இசைப் பாடல்களையும், விருத்தங்களையும் இடையிடையே வசனங்களையும் பெற்று அமைந்த விலாசங்களும் உண்டு. தெருக்கூத்தைப் போன்றே அமைந்துள்ள நாடக விலாசங்களும் உண்டு.

தமிழ் நாடக வரலாறு என்ற தன் நூலில் சக்திபெருமாள் கூறும் போது, “இந்நூற்றாண்டில் (கி.பி.19) நூற்றுக்கணக்கான நாடகங்கள் இயற்றப்பட்டு அவை புற்றீசல்கள் போலக் குறுகிய கால அளவே வாழ்ந்து மறையலாயின. குறிப்பிட்ட ஒரு தலைவன் அல்லது தலைவியின் புகழைச் சிறப்பித்துப் பேசும் நாடகம் விலாசம் எனப்பட்டது. அரிச்சந்திர விலாசம், மோகனாங்கி விலாசம் என்பன அவ்வாறு பெயர் பெற்றவை” என்பார்.

சில விலாசங்களைப் படைத்த ஆசிரியர்களே தங்கள் நூல்களை நாடகங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பூம்பாவையார் விலாசம் என்ற நூல் இதற்குச் சான்றாகும்.

கி.பி.18ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாவராததாள சிங்காராதி அபிநய தர்ப்பண விலாசம் என்னும் நூல், இசை, நாடகம் ஆகியவற்றை விளக்கும் நூலாகவே உள்ளது.

பூகோள விலாசம், அண்ட கோள விலாசம், அரிச்சந்திர விலாசம், மோகனாங்கி விலாசம், ஆறாதார விலாசம், சந்திர விலாசம், சமுத்திர விலாசம் எனப் பல விலாச  நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன.

1877இல் திண்டிவனம் இராமசாமி ராசு என்பார் பிரதாப சந்திர விலாசம் என்னும் சமூக நாடகத்தைக் கவிதை, உரைநடை கலந்து அங்கம், களப் பிரிவுகளுடன் எழுதினார். அது முதல் தமிழ் நாடக உலகில் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது.

1857இல் காசி விசுவநாத முதலியார் என்பவரால் இயற்றப்பட்ட நாடகம் டம்பாச்சாரி விலாசம். இது 19 ஆம் நூற்றாண்டில் அரங்கேறிய நாடகங்களிலே தலை சிறந்த நாடகம் என்று குறிக்கப்படுகின்றது. நாடக அமைப்பால் மட்டுமன்றிச் சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்டும் இந்நாடகம் முதலிடம் பெறுகின்றது.

இலக்கிய வகை நாடகங்களில் ஆரம்ப காலத்தில் பாடல்கள் மட்டும் இருந்தன. குறவஞ்சியில் இடையிடையே உரையாடல் இடம் பெற்றது. நொண்டி நாடகத்தில் தனி நடிப்பு வெளிப்பட்டது. விலாச நாடகக் காலத்தில் இறுதிப் பகுதியில் தமிழின் முதல் சமூக நாடகமாக விலாசமே (டம்பாச்சாரி விலாசம்) அமைந்தது. இதன் மூலம் தொன்மை நாடகத்தின் போக்கு பெரும் மாறுதலடைந்து அடுத்த காலக்கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

கீர்த்தனை நாடகம் கி.பி.18ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டு முற்பகுதியிலும் கீர்த்தனங்களாகிய இசைப் பாடல்களால் நாடகக் கூறுகள் மிக்க நாடகக் கீர்த்தனை இலக்கியங்கள் சில எழுதப்பட்டன. அவற்றின் கதைகள் பெரும்பாலும் இராமாயணம், பெரிய புராணம் போன்றவற்றிலிருந்து எடுத்துக் கொண்டதாகவே அமைந்தது.

நாடகக் கீர்த்தனை இலக்கியங்களுக்கு முன்னோடி சீர்காழி அருணாசலக் கவிராயர் 1771 இல் எழுதிய இராம நாடகக் கீர்த்தனை எனலாம். இந்நூலில் 16 இடங்களில் இந்நூலை நாடகம் என்றே ஆசிரியர் வழங்குகிறார். மேலும் ‘உனதாசையாலே நாடகமாகச் செய்தேன்’ என அபசார க்ஷமை என்ற பகுதியில் கூறுகிறார். நூற்பெருமை கூறும்போதும் ‘நாடகம் சொல்வேன்’ என்றும் கூறுகிறார். பாத்திரப் படைப்பு, கதைப் பின்னல், சுவை கூட்டல் ஆகியவை நாடகம் போன்று சிறப்பாக உள்ளன.

கோபால கிருஷ்ண பாரதியார் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் படைத்த நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மக்களைப் பெரிதும் கவர்ந்தது. இதில் உரைநடைப் பகுதிகள் மிகுதி. இருசொல் அலங்காரம் என்னும் இருவர் மாறி மாறிப் பேசுவது என்ற முறையில் உரையாடலை அமைத்துள்ளார். அதனால் நாடக அமைப்புக்கு உகந்ததாக இக்கீர்த்தனை அமைகின்றது.

பொதுவாகக் கீர்த்தனை நாடகங்கள் தனி ஒருவராலேயே கதாகாலட்சேப முறையில் பாடி நடிக்கப் பெற்றன. இவை காலத்துக்கேற்ற முறையில் மாற்றங்களுடன் பாடப் பெற்றன.

சமூக நாடகங்களின் தொடக்கம் டம்பாச்சாரி விலாசம், பிரதாப சந்திர விலாசம் போன்ற நாடகங்கள் தமிழ் நாடக உலகில் எவ்வாறு மாற்றம் ஏற்படுத்தியதோ, அதே போல் ஒரு மாற்றம் 1891 இல் ஏற்பட்டது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவ்வாண்டில் தான் மனோன்மணீயம் என்னும் நாடகத் தமிழ் நூலை முற்றிலும் செய்யுள் வடிவில் எழுதி முடித்தார். தமிழில் புதிய இலக்கியத்தின் தோற்றுவாய் இந்நூல் எனப் பலராலும் பாராட்டப்படுகிறது.

பிற்காலத்தில் பல நூல்கள் தோன்றுவதற்கு மனோன்மணீயம் வழிகாட்டியாய் அமைந்தது.

சுந்தரம் பிள்ளைக்குப் பின் 1896இல் பரிதிமாற் கலைஞர் இயற்றிய ரூபாவதி, கலாவதி ஆகிய செய்யுள் நாடகங்கள் வெளியாயின. நாடக இயல் என்னும் நாடக இலக்கண நூலையும் வெளியிட்டார்.

1889 இல் சீதா கல்யாணம் என்ற நாடகத்தை வேம்பம்மாள் என்ற பெண்மணி இயற்றினார். நாடக ஆசிரியர்களில் முதல் பெண்மணி இவரேயாவார்.

நாட்டுப்புறக் கூத்துகள்

உழைக்கும் மக்களாகிய நாட்டுப்புற மக்களிடம் பலவிதமான இசை, நாடகக் கலைப் பண்புகள் இன்றும் வழங்கி வருகின்றன. பரம்பரை பரம்பரையாக வாழும் கிராமியக் கலைஞர்கள் கூத்துகளை ஆடி வருகின்றனர். அவர்களால்தான் கிராமியக் கலைகள் காப்பாற்றப்பட்டும் வருகின்றன. நாட்டுப்புறக் கலைகள் தமிழ்நாடக வளர்ச்சிக்குப் பெருந்துணையாகவும் விளங்கி வருகின்றன. மேலும் பல ஆடல்கள் நாடகத்தின் பகுதிகளாகவே உள்ளன. நாடகக் கூறுகள் நிறைந்த சில, குறிப்பிட்ட ஆடல்களை ஆய்வது தொன்மை நாடகப் போக்கை உணர உதவும்.

கும்மிப் பாட்டு இரு கைகளையும் கொட்டியவாறு ஆடிப்பாடுவதைக் கும்மிப் பாட்டு என்று கூறுவர். பெரும்பாலும் பெண்களே இக்கூத்தை ஆடுவர். கைகொட்டிப் பாடிக் கொண்டே சுற்றி வருவர். ஒரு பாடலுக்கு மாத்திரமன்றிக் கதைத் தொடர்பான பல பாடல்களுக்கும் அவிநயம் செய்து ஆடுவதைக் காணலாம். அவற்றை நோக்கும்போது அவற்றுள் காக்கப்படும் நாடகப் பண்புகள் நமக்குத் தெளிவாகின்றன.

பல கும்மிப் பாடல் நூல்கள் அச்சாகியுள்ளன. இந்நூல்களில் மற்றைய நாடக நூல்களைப் போன்று காப்பு, வாழ்த்து, வணக்கம், கதை வரலாறு, வாழி என்ற முறை வைப்புக் காணப்படுகின்றது. சில இடங்களில் அந்தாதி அமைப்பில் கண்ணிகள் தொடர்ந்து காணப்படுகின்றன. அவை நாடக உரையாடல் போன்று அமைந்துள்ளன.

கும்மிப் பாட்டு வளர்ச்சியடைந்த நிலையில் ஒயில் கும்மி அல்லது ஒயிலாட்டம் என்ற ஆடல் நடைபெறுகிறது. இதில் பங்கு பெறும் நடிகர்கள் பாத்திரங்களுக்குத் தக்க உடைகளை அணிந்திருப்பர். பாடல்களுக்கு இடையே சிறிய உரைநடை, உரையாடல் இடம் பெறும். கோவை மாவட்டத்தில் இந்த ஆட்டம் அதிகம் நடைபெறும். முருகன், காத்தவராயன், மதுரை வீரன் ஆகிய கதைகள் நடித்துக் காட்டப்படும்.

பாவைக் கூத்து பாவைக் கூத்து என்பது பயன்படுத்தப் பெறும் பாவைகளைக் கொண்டு இருவகைப்படும். அவை தோற்பாவைக் கூத்து, மரப்பாவைக் கூத்து என்பனவாகும். சூத்திரதாரி போன்று ஒரு மனிதன் பாவைகளை நிகழ்ச்சிகளுக்குத் தக்கவாறு ஆட்டிப் பல குரலில் பாடியும் பேசியும் கதையை வளர்த்துச் செல்வான். ஒன்றை ஒன்று மோத வைத்துச் சண்டைக் காட்சிகளைக் காட்டுவான். நகைச்சுவைக் காட்சிக்குத் தக்க பாத்திரங்களைக் கற்பித்துக் கொள்வதோடு, இடத்துக்குத் தக்கவாறு உரையாடல்களைப் பொருத்தமாகவும் நகைச்சுவையுடனும் அமைத்துக் கொள்வான். இராமாயணம் போன்ற கதைகளைப் பல நாட்களுக்கு நடத்துவர்.

பிற கலைகள் நெல்லை, குமரிமாவட்டங்களில் பாடப்பெறும் வில்லுப்பாட்டில் கிராமத் தேவதையின் கதைகள் பாடப்படும். பல வில்லுப்பாட்டுக் கதைகள் பிற்காலத்தில் நாடகமாக நடிக்கப் பெற்றன. அதேபோல் உடுக்கடிப் பாட்டும் கதை நிறைந்த கலையாகும். கோவைப் பகுதியில் அண்ணன்மார்சுவாமி கதை, நாடகம் போன்றே, கதையுடன் பாடி நடிக்கப்படுகிறது.

காவடியாட்டம் என்பது முருகக் கடவுளின் வழிபாட்டுத் தொடர்பாக நடத்தப்படுவதாகும். ஆடலும், பாடலும் நிறைந்த இக்கலையும் நாடக அமைப்பைப் பெற்று விளங்குகிறது.

கரக ஆட்டம் இன்றும் தென் மாவட்டங்களில் மதிப்புடன் விளங்குகிறது. மாரியம்மன் கோயில்களில் பெரும்பாலும் நடக்கும் இந்த ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டத்துடன் கலந்து நாடகத் தன்மை பெற்றுள்ளது.

நாட்டுப்புறக் கூத்துகளும், நாடகங்களும் நாட்டுப்புறக் கூத்துகள் சடங்குகளை அடிப்படையாகக் கொண்டவை. நடிகர்கள் பெரும்பாலும் ஒப்பனையுடன் ஆடிப்பாடி நடிக்கின்றனர். பெரும்பாலும் கோயில்களைச் சார்ந்தே இவை நடிக்கப்பட்டன. இவற்றில் இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன அதிகமான பாடல்களும், ஓரளவு உரையாடல்களும் அமைந்திருந்தன. நாடகம் பெரும்பாலும் தொடக்கக் காலத்தில் நடனத்திலிருந்தும், சடங்கிலிருந்தும் தோன்றியதால் அவை ஆரம்பத்தில் கூத்து நிலையில்தான் இருந்திருக்க வேண்டும். நாட்டுப்புறக் கூத்துகளே மெல்ல மெல்ல நாடக வடிவம் பெற்றிருக்கும் என்பதே ஆய்வாளர்கள் கருத்தாகும்.

நாடகமாகிய நாட்டுப்புறக் கூத்துகள் கடவுளையும், வீரச்செயல் புரிந்தவர்களையும் பற்றியுமே கதையமைப்பைக் கொண்டிருந்தன. புராணக் கதைகளும் நடிக்கப் பெற்றன. மொத்தத்தில் எளிய, உழைக்கும் மக்கள் கலையாக நாட்டுப்புறக் கூத்து வடிவம் அமைந்திருந்தது.

தெருக்கூத்து தெருக்களிலும், களத்து மேடுகளிலும், கிராமப் பொது இடங்களிலும், கோயில் வளாகங்களிலும் நடத்தப்பட்ட கலையாகத் தெருக்கூத்து விளங்கியது. இவை நடைபெற்ற இடத்தை ஒட்டியே இவற்றிற்குத் தெருக்கூத்து எனப் பெயர் ஏற்பட்டது.

தெருக்கூத்து மேடைகள் திறந்த வெளிகளிலேயே அமையப் பெற்றிருந்தன. நடிப்பதற்கேற்ற தனிமேடையமைப்பு காணப்படவில்லை. மேடைகளிலோ, காட்சிப் பின்னணிகளோ, திரைகளோ இடம் பெறவில்லை. இரண்டு கலைஞர்கள் மேடையின் முன்னே வெள்ளைத் துணியினை முன் திரையாகப் பிடித்திருப்பர்.

மக்களுக்குத் தெரிந்த பழைய புராண, இதிகாச மற்றும் நாட்டுப்புறக் கதைகளே தெருக்கூத்தில் நடிக்கப் பெற்றன. முறையான உரையாடலோ, பாடலமைப்போ இன்றி அவை இருந்ததால் சூழலுக்கேற்ப மாற்றப்பட்டும், விரிவுபடுத்தப்பட்டும் வழங்கலாயிற்று.

இராமாயணம், மகாபாரதம், கந்த புராணம் மற்றும் பெரிய புராணம் போன்ற இதிகாச புராண இலக்கியங்களின் கதைகள் தெருக்கூத்தாயின. மதுரை வீரன், நல்லதங்காள், ஆரவல்லி சூரவல்லி, காத்தவராயன் போன்றவை தெருக்கூத்துக்கென விரும்பி ஏற்கப்பட்ட நாட்டுப்புறக் கதைகளாகும். இவை பெரும்பாலும் வீர வரலாறுகளாகவே இருந்தன. பெண் வேடங்களையும் பெரும்பாலும் ஆண்களே ஏற்று நடித்தனர்.

தெருக்கூத்து நாடகங்களின் பொதுவான போக்கு, நீதி போதனைகளை (நெறிகளை) மக்களிடையே தெளிவுபடுத்துவதும், பொழுதுபோக்கிற்குத் துணை செய்வதுமேயாகும். இவ்வாறு நிகழ்த்தப்பட்ட கூத்துகள் எழுத்து வடிவில் நாடக இலக்கியமாக வளராமல் போயின.

தொகுப்புரை

நாடகக் கலையின் தொன்மைப் போக்குகளைப் பற்றிக் கற்கும் போது, கி.பி.10 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.19 ஆம் நூற்றாண்டு வரை நாம் தமிழ் நாடகத்தின் நிலையைக் கண்டோம்.

தொன்மை நாடகத்தைப் பற்றி அறிய “எழுதப்பட்ட நாடகங்கள்” மிகக் குறைவு என்பதால், ஆதாரபூர்வமாக நாம் பல செய்திகளை அறிய முடியவில்லை. கல்வெட்டுக் குறிப்புகள் நாடகங்களைப் பற்றிச் சொன்னாலும், அவை எவ்வாறு நடிக்கப்பட்டன என்பதை அறிய முடியவில்லை.

இலக்கிய வடிவ நாடகங்களான பள்ளு, குறவஞ்சி, நொண்டி, விலாசம் போன்றனவே கி.பி.16 ஆம் நூற்றாண்டுக்குப்பின் கிடைக்கும் எழுதப்பட்ட நாடகங்களாகும். இவ்வகையில் பாடல்களில் ஆரம்பித்து, மெல்லப் பேச்சு வடிவத்தை நோக்கி வளர்ச்சியடையும் போக்கினைக் காணமுடிகின்றனது. ஆரம்ப காலத்தில் மன்னர்களைப் பற்றிய நாடகங்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் அந்நிலை மெல்ல மாறி மக்களைப் பற்றிய கதைகள் நாடகங்களாக நடிக்கப் பெற்றன.

நாட்டுப்புறக் கலைகளை நேரடி நாடகங்களாகக் கூறமுடியாவிட்டாலும், அவையும் நாடகம் சிறப்பாக வளரக் காரணங்களாக அமைந்தன. தொன்மை நாடகத்தின் போக்கு, நாடகம் உச்சம் பெற்ற 20 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு வரை இவ்வாறு அமைந்திருந்ததைக் காணலாம்.

பாடம் - 3

தற்கால நாடகப் போக்குகள்

பாட முன்னுரை

அன்பார்ந்த மாணவர்களே! நாடகக் கலையின் தோற்றம், மனிதன் தோன்றியபோதே தொடங்கி விட்டது. காலப்போக்கில் நாடகம் வளர்ச்சியையும், பல மாற்றங்களையும் பெற்றது. ஆடலுக்குள்ளும் பாடலுக்குள்ளும் ஆரம்பகால நாடகங்கள் அடங்கியிருந்தன. அவை மன்னர் அவைகளிலும், தெருக்களிலும், களத்து மேடுகளிலும், கோவிலுக்கு முன்பும், திருவிழாக்களிலும் நடிக்கப் பெற்றன. எனினும் ஒழுங்குபடுத்தி எழுதப்பட்ட நாடக இலக்கியம் ஏதுமிருக்கவில்லை. பெரும்பாலும் பதினாறாம் நூற்றாண்டிற்குப் பின்னர், எழுதப்பட்ட வடிவத்தில் சிற்றிலக்கிய வகை நாடகங்கள் கிடைக்கின்றன. கல்வெட்டுகளில், கைப்பிரதிகளில் நாடகக் குறிப்புகள் எழுதப்பட்டுக் கிடைக்கின்றன. கூத்துவகை நாடகம் பற்றியும் தெரிய வருகின்றன. 19ஆம் நூற்றாண்டிற்கு முந்திய காலப்பகுதியில் தோன்றிய நாடகங்களைத் தொன்மை நாடகம் எனக் கொண்டு, அதன் போக்குகள், தோற்றம், வளர்ச்சி என்பன பற்றி இப்பாடம் மூலம் அறிந்து கொள்வீர்கள்.

தற்கால நாடகங்கள்

தற்கால நாடகங்கள் என்பது கி.பி.1870லிருந்து தொடங்குவதாகக் கொள்ளலாம். தொன்மை நாடகப் போக்குகளிலிருந்து ஒரு மாற்றம் பெற்ற நிலையை நாடகம் அக்காலக்கட்டத்தில் தான் அடைந்தது. மேலும் பல நாடக மேதைகளும் தமிழகத்தில் தோன்றி நாடகப் போக்குகளை மாற்றியமைத்தனர். 19ஆம் நூற்றாண்டில் பம்பாயில் தோன்றி இந்தியா முழுவதும் நாடகம் நடத்திய பார்சி நாடகக் குழுக்களின் தாக்கமும், உரைநடை வளர்ச்சி, மேல்நாட்டு நாடகப் போக்கின் தாக்கம் ஆகியனவும் தமிழ் நாடகத்தைப் புதிய வடிவிற்குக் கொண்டு வந்தன.

ஆங்கிலக் கல்விக் கற்ற காசி விசுவநாத முதலியார் 1867இல் டம்பாச்சாரி விலாசம் என்ற முதல் சமூக நாடகத்தைப் படைத்து அரங்கேற்றினார். மேலைநாட்டு நாடக அமைப்பில் அங்கம், களம் ஆகிய பிரிவுகள் அமைந்தன. ஆனால் நாடகம் தெருக்கூத்துப் பாணியிலேயே அமைந்திருந்தது. அதன்பின் 1877இல் இராமசாமி ராஜா என்பவர் பிரதாப சந்திர விலாசம் என்ற நாடகத்தை உரைநடையில் எழுதி வெளியிட்டார். இந்நாடகம் மூலம் அதற்கு முன்னிருந்த பாட்டு மயமே நாடகம் என்னும் நிலைமாறியது. உரைநாடகம் என்னும் புதிய நாடக அமைப்பு ஏற்பட்டது.

தற்காலத் தமிழ் நாடக முன்னோடிகள்

தமிழ் – நாடகம் புத்தொளி பெற பல முன்னோடி நாடக ஆசிரியர்கள் கடுமையாக உழைத்தார்கள். நலிந்து வந்த மூன்றாம் தமிழான நாடகத் தமிழை உயர்த்திப் பிடித்தனர்.

சங்கரதாஸ் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் நாடக வரலாற்றின் புத்துயிராக விளங்கியவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவர் தலைசிறந்த நடிகராகவும், இயக்குநராகவும், ஆசிரியராகவும் விளங்கினார். தமிழ்த் தெருக்கூத்துகளைப் புதுப்பித்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றி அரங்கேற்றினார். 1918இல் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா எனச் சிறுவர்கள் அடங்கிய நாடகக் குழுவைத் தொடங்கினார். சங்கரதாஸ் சுவாமிகள் தாம் வாழ்ந்த காலத்தில் மற்ற நாடக ஆசிரியர்களைக் காட்டிலும் மிகுதியாகத் திருக்குறட்பாக்களைத் தம் நாடகங்களுள் புகுத்தினார். நாடகங்களை முறையாக ஒழுங்குபடுத்தி மேடையேற்றியது இவருடைய சிறப்பாகும். வள்ளி திருமணம், பவளக் கொடி, சத்தியவான் சாவித்திரி, நல்லதங்காள் நாடகம், அபிமன்யு சுந்தரி போன்ற இவரது நாடகங்கள் இன்றும் தமிழகத்தில் ஏதாவது ஓர் இடத்தில் நடந்து கொண்டுதான் உள்ளன.

சுவாமிகளினால் ஏற்பட்ட நாடகப் போக்குகள்

பாரம்பரிய வட்ட அரங்கு என்பது ஒருபக்க அரங்காக வடிவம் பெற்றது.

வெகு சனங்கள் எனப்பெறும் எளிய மக்கள் பங்கேற்கும் அரங்கமாக வளர்ந்தது.

இசையை, கர்நாடக இசைக் கூறுகளை முதன்மைப்படுத்தி நாடகங்கள் நிகழ்ந்தன.

படிப்படியாக நகரங்களை நோக்கி நாடகங்கள் நகர்ந்தன.

சங்கரதாஸ் சுவாமிகள்

பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடகத்தை மேனாட்டு நாடகங்களுக்கு நிகராக மாற்றியவர். தமிழ் நாடக நடிகர்களுக்குச் சமுதாயத்தில் நல்ல நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர். நாடகம் பார்ப்பது நல்ல குடும்பத்தார்க்கு அழகன்று என்ற பிற்போக்கான ஒரு நிலையை அறவே மாற்றினார். 1897இல் இவரால் ஏற்படுத்தப்பட்ட சுகுண விலாச சபையே தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பயில்முறை நாடக சபையாகும். பம்மல் சம்பந்த முதலியார் 94 நாடகங்களை எழுதியுள்ளார். இவருடைய மனோகரா, சபாபதி, சந்திரஹரி, சிறுத்தொண்டர் நாடகம், உத்தமபத்தினி போன்றவை குறிப்பிடத்தக்கன. நாடகத் தமிழ், நாடகமேடை நினைவுகள், பேசும்பட அனுபவங்கள் என்பன இவர் நாடகம் தொடர்பாக எழுதிய நூல்களாகும். இந்திய நாடக மேடை என்ற இதழையும் இவர் வெளியிட்டார்.

பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகப் போக்குகள்

சுவாமிகள் புராண நாடகச் செல்வாக்கை மீறி, புதுமுறை நாடகங்களைக் கண்டவர்.

உரையாடல்களுக்கு முதன்மை கொடுத்தார்.

நடைமுறை உலகியலோடு நிகழ்ச்சியினை அமைத்துப் பேசும் மொழி நடையைக் கையாண்டார்.

இரவு முழுவதும் நடைபெற்ற நாடகங்களை மூன்று மணி அல்லது நான்கு மணி நேரத்திற்குள் முடிவுக்குக் கொண்டு வந்தார்.

பம்மல் சம்பந்த முதலியார்

தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் பாவலர் 1920இல் பால மனோகர நாடக சபா என்னும் நாடகக் குழுவைத் தொடங்கினார். தனபதி, விஜய விலோசனை, பதி பக்தி, கதர் பக்தி, பம்பாய் மெயில் போன்ற நாடகங்களைஎழுதி மேடையேற்றியுள்ளார். பத்திரிகையாளராகவும், புனைகதையாசிரியராகவும் விளங்கியவர் பாவலர். அவர் காலத்தில் அச்சு ஊடகங்கள் செல்வாக்குடன் விளங்கியதைக் கண்டு அதற்கேற்ப நாடகங்களை அமைத்தார். பாவலரின் நாடகப் போக்குகளாக,

காந்திய இயக்கம் தொடர்பான நாடகங்களை உருவாக்கியது.

மது விலக்கு, கதர்ப் பிரச்சாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாடகங்களை அமைத்தது.

பாடல் என்னும் நிகழ்த்து வடிவத்திலிருந்து, புனை கதைகளைப் போலப் பேசும் மரபு சார்ந்த நாடகங்களை உருவாக்கியது.

அவர் காலத்திய வடுவூர் துரைசாமி, ஜே.ஆர்.ரங்கராஜு போன்ற துப்பறியும் கதாசிரியர்களைப் பின்பற்றித் துப்பறியும் நாடகங்களை மேடையேற்றியது. (கதர் பக்தி ஒரு துப்பறியும் தேசிய நாடகம் என்றே அச்சிடப்பட்டது.)

சி.கன்னையா தமிழ் நாடக உலகில் பல புதுமைகளைச் செய்த பெருமையுடையவர் சி.கன்னையா. ஸ்ரீ கிருஷ்ண விநோத சபா என்னும் நாடகக் குழுவைத் தொடங்கி இரங்கூன், யாழ்ப்பாணம் ஆகிய கடல் கடந்த நாடுகளுக்கெல்லாம் சென்று நாடகங்களை நடத்தினார். இவருடைய நாடகக் குழுவில் 200 பேர் இருந்துள்ளனர். 10 வண்டி லாரி பெறுமானமுள்ள காட்சி அமைப்புக்களுக்கான பொருட்கள் வைத்திருந்தார். 1915ஆம் ஆண்டிலேயே கும்பகோணத்தில் காலை 10மணிக் காட்சியாக நாடகம் நடத்திய பெருமை கன்னையா அவர்களுக்கு உண்டு. சி.கன்னையாவின் தமிழ் நாடகப் போக்குகளாக,

நீளம், அகலம், உயரம் என்னும் முப்பரிமாணம் கொண்ட காட்சி அமைப்புகளுடன் நாடக மேடை அமைத்தது.

நிஜ குதிரை, தேர், யானை போன்றவற்றை மேடைக்கே கொண்டு வந்தது.

புதுப்புது உடைகள், ஒளி அமைப்பில் எண்ணெய் விளக்குடன் கேஸ் விளக்குகளையும் பயன்படுத்தியது.

விரிவாக விளம்பரங்கள் செய்தல், ஒலிபெருக்கி இல்லாத காலத்தில் முன் மேடையில் வரிசையாகப் பானைகளைக் கட்டி எதிரொலி கேட்கும் வண்ணம் செய்யும் உத்தி எனப் பல புதிய வழிமுறைகளைச் சொல்லலாம்.

சி.கன்னையா

பிற முன்னோடிகள் நவாப் இராஜ மாணிக்கம் மதுரை தேவி பால விநோத சங்கீத சபை என்னும் நாடகக் குழுவை 1933இல் தொடங்கினார். இவருடைய ஐயப்பன் நாடகம்தான் தமிழகத்தில் ஐயப்ப பக்தி வளர ஒரு காரணமாக இருந்தது.

நவாப் இராஜ மாணிக்கம்

எம்.கந்தசாமி முதலியார் நடிகராகத் தொடங்கி, பின் சிறந்த நாடக ஆசிரியராகவிளங்கினார். இவர் ஜே.ஆர்.ரங்கராஜுவின் ஐந்து புதினங்கள் உட்பட, பல புதினங்களை நாடகங்களாக்கினார். தமிழில் புதினங்களை நாடகமாக்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தவர் இவரே.

எம்.கந்தசாமி முதலியார்

நாடக அரசி எனப்படும் கும்பகோணம் பாலாமணி அம்மாள், முதன் முதலாகப் பெண்களையே முழுக்க முழுக்க வைத்து பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி என்ற குழுவைத் தொடங்கினார். 70 பெண்கள் இதில் இருந்தனர். திருமணம் செய்து கொண்டால் தன்னுடைய நாடகப் பணி பாதிக்குமென்று இவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாதிருந்தார். சமுதாய சீர்திருத்த நாடகங்களை முதன் முதலில் நடத்தியவரும் இவரே. பெட்ரோமாக்ஸ் விளக்கு இவர் நாடகத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.

பாலாமணி அம்மாள்

மதுரகவி பாஸ்கரதாஸ் கவிஞர், இசை அமைப்பாளர், நாடகப் பாவலர் எனப் பன்முகங்களைக் கொண்டவர். இவர் தலைமையில் தமிழ் நாடக நடிகர் சங்கம் மதுரையில் 1920இல் ஆரம்பிக்கப்பட்டது. தேச பக்தியையும், ஆங்கில அரசிற்கெதிரான கருத்துகளையும் தைரியமாக எடுத்துரைத்த போக்கே இவரின் சிறப்பாகும்.

விஸ்வநாததாஸ், தேசியம் கலந்த நாடகப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தான் நடித்து வந்த வள்ளி திருமணம், பவளக்கொடி, நல்லதங்காள் முதலான புராண நாடகங்களிலும் இந்திய நாட்டு விடுதலையை முழக்கும் பாடல்களைப் புகுத்திப் புரட்சிசெய்தவர் விஸ்வநாததாஸ்.

ஒளவை தி.க.சண்முகம் 1925இல் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபா என்ற பெயரில் ஒரு சிறுவர் நாடகக் குழுவைத் தொடங்கினார். பின் 1950இல் டி.கே.எஸ். நாடகக் குழு தொடங்கப்பட்டது. அவருடைய நாடகங்கள் ஏதாவதொரு நீதியைப் புகட்டியது. வட்டப்புள்ளி விளக்கு, குறைப்பான் விளக்கு முதலியன இவர் நாடகத்திலேயே முதன்முதலில் பயன்படுத்தப்பட்டன. இந்த விளக்குகள் இலண்டனிலிருந்து வரவழைக்கப்பட்டன. ஒளவையார் நாடகம் மூலம் ஒப்பனைத் திறத்திலும் புகழ் பெற்று விளங்கினார். மனிதன் நாடகத்திற்கு திரைப்படம் போலவே எழுத்துகளைக் காண்பித்தனர்.

டி.கே.எஸ் சகோதரர்கள்

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிறு வயது முதலே பல நாடகக் குழுக்களில் நடித்தார். 1944இல் என்.எஸ்.கே நாடகக் குழுவைத் தொடங்கினார். பகுத்தறிவுச் சிந்தனைகளைச் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளுடன் நல்லதம்பி, கிந்தனார் போன்ற நாடகங்கள் உருவாக்கப்பட்டன.

‘தன்மானக்’ கொள்கைகளுடன் திராவிட இயக்கத்தினர் நாடகங்கள் எழுதினர். அறிஞர் அண்ணா 1934இல் சந்திரோதயம் என்ற நாடகத்தைப் படைத்தார். தொடர்ந்து நீதிதேவன் மயக்கம், வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி எனப் பல நாடகங்களை எழுதினார். வாழ்க்கையின் பல்வேறு கோணங்களையும் நாடகம் மூலம் அலசியது இவருடைய தனித்த போக்காகும். தூக்குமேடை நாடகம் மூலம் அறிமுகமான கருணாநிதி, நச்சுக் கோப்பை, மந்திரி குமாரி, வெள்ளிக்கிழமை, மணிமகுடம், போர் வாள் எனப் பல நாடகங்களைப் படைத்துள்ளார். அடுக்கு மொழியிலும், அனல் தெறிக்கப் பேசுவதிலும் இவருடைய நாடகப் பாத்திரங்கள் தனித்த போக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

எஸ்.வி.சகஸ்ரநாமம் 1952இல் சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவை ஆரம்பித்தார். அதன் மூலம் மேடையேறிய நாடகம் தாகூரின் கதையைத் தழுவிய கண்கள் என்பதாகும். இந்த நாடகம் தமிழ் நாடகமேடைக்கு ஒரு திருப்பு முனையாக, கதை – காட்சி – நடிப்பு யாவற்றிலுமே மாறுதலை ஏற்படுத்தியது. பல மேனாட்டுக் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு நாடகமாக நடிக்கப்பட்டன. வானவில் என்னும் நாடகம் சுழலும் மேடை அமைத்து நடிக்கப்பட்டது. சிறந்த கதாசிரியர்களான பி.எஸ்.ராமையா, தி.ஜானகிராமன் போன்றோர் கதைகளும் நாடகங்களாக்கப்பட்டன. நாடகப் பட்டறை நடத்திப் பலருக்கு நாடகப் பயிற்சியும் தந்துள்ளார் எஸ்.வி.சகஸ்ரநாமம்.

நாடகச் சபாக்களும் நாடக நூல்களும்

நாடகம் நடத்துவதற்கென சபாக்கள் நிறுவப்பட்டன. அவை, மேலைநாட்டு நாடகங்களை மொழிபெயர்த்தும், புதிய நாடக நூல்களை எழுதியும் நாடகத்தை வளப்படுத்தின.

சபா நாடகங்கள்

மன்றம், அகாடெமி, சபா, கிளப் போன்ற பெயர்களில் சபாக்கள் தோன்றின. இத்தகைய சபாக்கள் பெரும்பாலும் இந்திய விடுதலைக்குப் பின்னரே தோன்றின. இசையும் நடனமுமே நோக்கமாகக் கொண்டு உருவான சபாக்களின் கவனம் காலப்போக்கில் நாடகத்தின் பக்கம் பாய்ந்தது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் மாலை நேரங்களில் சபாக்கள், நாடகங்களை நடத்தின. மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், பார்த்தசாரதி சுவாமி சபா, கலாநிலையம் ரசிக ரஞ்சனி சபா, அன்னை கலை மன்றம் போன்றவை குறிப்பிடத்தக்க சில சபாக்கள்.

நடிகர்களும் சபாக்களும்

எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா, எஸ்.எஸ். இராசேந்திரன்,சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.கே.இராதா, ஆர்.எஸ். மனோகர், காத்தாடி இராமமூர்த்தி, சந்திரகாந்தா, மேஜர் சுந்தரராஜன் போன்றோரின் நாடகக் குழுக்கள் பெரும்பாலும் சபாக்களில் நாடகங்களை நடத்தின. ஒய்.ஜி.மகேந்திரன், சோ.இராமசாமி, விசு, மௌலி, எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன், பாலச்சந்தர் ஆகியோரில் சிலர் முன்பும், தற்போதும் சபாக்களையே நம்பி நாடகம் படைத்து வருகின்றனர்.

கவிதை நாடக நூல்கள்

நடிப்பதற்காக இல்லாமல் படிப்பதற்கு என்னும் நோக்கில் கவிதை நாடகங்களும் படைக்கப்பட்டன. 1876இல் கோபாலாச்சாரி வெனிஸ் வணிகன் என்னும் ஆங்கில நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார். 1891இல் சுந்தரம் பிள்ளை மனோன்மணீயத்தைத் தழுவலாகப் படைத்தார். சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர், கலாவதி, ரூபாவதி, மானவிஜயம் முதலான நாடக நூல்களையும் எழுதினார். மறைமலையடிகள் சாகுந்தல நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார். தற்பொழுது பாடத்திட்டங்களுக்கென ஏராளமான கவிதை நாடகங்கள் படைக்கப்படுகின்றன. தீரன் சின்னமலை என்ற தலைப்பிலேயே மூன்று பேர் கவிதை நாடகம் படைத்துள்ளனர்.

புதிய நாடக முயற்சிகள்

தொன்மை நாடகப் போக்குகளிலிருந்து மாறுபட்ட தற்கால நாடகப் போக்கு, 1980-லிருந்து முற்றிலும் வேறுபட்ட பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்தது. காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் பயிற்சிப் பட்டறைகள் (1977), பாதல் சர்க்கார் நாடகப் பட்டறைகள் (1980) ஆகியவற்றின் தாக்கம் தமிழ் நாடகவியலாளர்களைப் புதிய சிந்தனை கொள்ளச் செய்தது. நவீன நாடகங்கள் சில அரங்குகளிலும், அரங்கத்தைப் புறக்கணித்து மக்களிடையேயும் நடத்தப் பெற்றன. பெண்கள் நாடகத்தில் முழு ஈடுபாட்டுடன் நுழைந்தனர். கதைக் கருக்கள், களங்கள் மாற்றம் பெற்றன. அதே சமயம் புரியாத் தன்மையிலும் நாடகங்கள் சில நிகழ்த்தப் பெறுகின்றன. நவீன நாடக முன்னோடிகளாகப் பலரைக் கூறலாம். அவர்களில் சிலரைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

பேராசிரியர் சே.இராமானுஜம்

நாடகத்தின் பன்முகங்களை நுட்பமாக அறிந்தவர் சே.இராமானுஜம். பள்ளி நாடகங்கள் – சிறுவர் அரங்கம் என்பதைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு தனது நாடகப் படிப்பைத் தில்லி தேசிய நாடகப் பள்ளியில் முடித்தார். திருச்சூர் நாடகப் பள்ளியில் உதவி இயக்குநராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக நாடகத் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது இயக்கத்தில் புறஞ்சேரி, வெறியாட்டம், நாற்காலிக்காரர், அண்டொர்ரா, செம்பவளக்காளி, தங்கக் குடம் போன்ற தமிழ் நாடகங்களோடு மலையாள நாடகங்களையும் இயக்கியுள்ளார். நாடக உருவாக்கம், பயிற்சிப் பட்டறை, சொற்பொழிவு ஆகியவற்றின் மூலம் நவீன நாடகங்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.

ந.முத்துசாமி

எழுத்து இலக்கியப் பத்திரிக்கையோடு தன்னை இணைத்துக் கொண்டு, நவீன கதை, கவிதையில் தீவிரமாய்ச் செயல்பட்டவர் ந.முத்துசாமி. நடை பத்திரிகையில் நாடகம் மற்றும் நாடகம் பற்றிய கட்டுரைகளை எழுதி வந்தார். காலம் காலமாக என்பதில் தொடங்கி தெனாலிராமன் வரை இவரது பல நாடகங்கள் முக்கியமானவை. இவரது சுவரொட்டி தமிழின் சிறந்த நவீன நாடகமாக விளங்குகிறது. அதேபோல் பல வருடங்களாக ந.முத்துச்சாமியின் நாற்காலிக்காரர் தொடர்ந்து மேடையேறி வருகிறது. இவரது முழு நேர நாடகக் குழுவான கூத்துப் பட்டறை தேசிய அளவில் முக்கியமான நாடகக் குழுக்களில் ஒன்று. 2000ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதமி விருதை நாடக எழுத்துக்காகப் பெற்றுள்ளார்.

பிரளயன்

நாடகக் கலையில் தொடர்ந்து செயல்படுபவர்கள் மிகக் குறைவு. ஆனால் 16 ஆண்டு காலமாகத் தொடர்ந்து நாடகக் கலையில் ஈடுபட்டு வருகிறார் பிரளயன். தமிழக வீதி நாடகத்தில் இவர் குறிப்பிடத் தக்கவராக உள்ளார். இவரது நாடகப் பயணம், மக்களோடு இணைந்தது; சமூகக் கருத்துகளை நாடகக் கலை மூலம் கொண்டு செல்வது. இந்திய அளவில் நன்கு அறிமுகமான இவர், சென்னை கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர். நாங்கள் வருகிறோம், முற்றுப்புள்ளி, பெண் இவருடைய முக்கிய நாடகங்கள். அறிவொளி இயக்க நாடகத் தயாரிப்புகளிலும் இவரது பங்கு கணிசமாக இருக்கிறது. சமீபத்தில், பிரபலமான பிரெஞ்சு நாவலான குட்டி இளவரசன் என்ற கதையை நாடகமாக்கியுள்ளார்.

புதிய முயற்சிகளின் முன்னோடிகள் நாடகத் துறையில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு, நாடகத் துறைக்குப் பெரும் பங்களிப்பு வழங்கியவர்கள் பலர்.

மு.இராமசாமி

தமிழ் நவீன நாடக அரங்கில் முதன்மை நிலைச் செயல்பாட்டாளர்களுள் மு.இராமசாமி முதன்மையானவர். வீதி நாடகங்களில் தொடங்கி, கடந்த 25 ஆண்டுகளாக நாடகத் துறையில் செயல்பட்டு வருபவர். மதுரையில் நிஜ நாடகக் குழுவைத் தொடங்கி, தொடர்ந்து நாடகங்களைத் தயாரித்து வருகிறார். இந்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி நடத்திய முதல் தென்மண்டல நாடக விழாவில் தனது துர்க்கிர அவலம் நாடகம் மூலம் பிற மொழியினரின் கவனத்தை ஈர்த்தவர். அந்த நாடகம் தேசிய நாடக விழாவிற்கும் தேர்வாகியது. தோழர் பெரியார் என்ற நாடகம் தமிழகத்தில் பல இடங்களிலும் நிகழ்த்தப் பெற்றது. தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாடகத் துறைத் தலைவராக இருக்கும் மு.இராமசாமி தற்போது திரைப்படத்துறையிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிப்பவராகவும், விவரணப் படங்கள் (Documentary) எடுப்பவராகவும் மாறியுள்ளார்.

வ.ஆறுமுகம்

திருச்சூர் நாடகப் பள்ளியில் நாடகம் பயின்ற வ.ஆறுமுகம், புதுவை ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியில் தற்போது பணிபுரிகிறார். பிரளயம், சுவரொட்டிகள், கோயில் ஆகிய நாடகங்களை இயக்கியுள்ளார். இவரது எழுத்தாலும், இயக்கத்தாலும் உருவான கருஞ்சுழி என்ற நாடகம் மண்டல நாடக விழா (விஜயவாடா), தேசிய நாடக விழா (புதுதில்லி) ஆகிய இரு நிகழ்ச்சிகளிலும் பிறமொழி நாடகங்களை விட முதன்மை பெற்று, தமிழ் நாடக அரங்கிற்கு எனத் தனியொரு மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளது.

வேலு.சரவணன்

ஆழி என்ற நாடகக் குழு மூலம் நாடகம் நடத்தி வரும் வேலு.சரவணன், சிறுவர்களுக்கான நாடக அரங்கு பற்றிய சிந்தனையுள்ளவர். இன்று தமிழகத்தில் சிறுவர் அரங்கு பற்றியோ, பள்ளி நாடகங்கள் பற்றியோ பேசினால் உறுதியாக வேலு. சரவணன் பெயர் இடம்பெறும். கிராமம், கிராமம் சார்ந்த கதைகளில் தனக்கேயான நிகழ்த்து முறைகளை உருவாக்கியவர். பாண்டிச்சேரியில் பல்கலை – நாடகப் பள்ளியில் பகுதி நேர விரிவுரையாளராக உள்ளார். இவருடைய கடல் பூதம், குதூகல வேட்டை என்னும் இரு சிறுவர் நாடகங்களும் இரண்டாயிரம் தடவைக்கு மேல் மேடையேறியுள்ளன.

கே.ஏ.குணசேகரன்

நாட்டுப்புறப் பாட்டு, தலித் நாடகம், கலைப் பயிற்சியாளர் என்று பல தளங்களில் செயலாற்றி வருபவர் முனைவர் கே.ஏ.குணசேகரன். கிராமப் புறங்களில் நாடகப் பட்டறைகள் மூலம் நாடகங்களைத் தயாரித்து விழிப்புணர்வூட்டுவதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தற்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் நிகர்நிலைப் பள்ளியின் இயக்குநராக (பொறுப்பு) இருக்கிறார். நாட்டுப்புறக் கலையில் ஆய்வு செய்த இவர், தலித் மக்களுக்காக பல நாடகங்களை அமைத்துள்ளார். பலியாடுகள் என்ற தலித் நாடகம் குறிப்பிடத்தக்கது. தன்னானே நாடகக் குழு மூலம் நாடகங்களைத் தயாரித்து அளித்து வரும் இவர் ‘தலித்துக்கள் தங்களுக்கான கலை வடிவங்களைத் தேடும் போது தலித் அரங்கம் தவிர்க்க முடியாத ஒன்று’ என்கிறார்.

நவீன நாடகங்கள்

தமிழில் நவீன நாடகங்கள் பல தோன்றின. இவற்றிற்கு அயலகத்தில் வாழும்தமிழரும்,எழுத்தாளரும், திறனாய்வாளரும் சிறந்த வகையில் துணை செய்துள்ளனர்.

அயலகத் தமிழ் நவீன நாடகம் பாலேந்திரா சுமார் இருபது ஆண்டுகளாக இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நாடகங்களை நடத்தியுள்ளார். தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் என்ற அவர் குழு 1985 முதல் இலண்டனிலிருந்து செயலாற்றுவதோடு, சிறுவர் அரங்கிலும் கவனம் செலுத்தி வருகிறது.

இலங்கை மட்டக்களப்புபல்கலைக் கழகத்தில் நுண்கலைத் துறைத் தலைவராக உள்ளார் கலாநிதி சி.மௌனகுரு. இவர் ஈழத்து நாடக வரலாறு எழுதியதோடு புதிய நாடகத் தயாரிப்புகளில், பயிலரங்குகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பலநாடகங்களைஎழுதி இயக்கியுள்ளார்.

ஈழத்து நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவியர்களுள் தாசீசியஸும் ஒருவர். அவர்மேற்கத்திய நாடக நுட்பங்களையும், தமிழ் மரபுக் கலைகளையும் இணைத்துப் புதிய போக்கை ஏற்படுத்தினார்.

செழியன், மனவெளிக் கலையாற்று குழு மூலம் கனடாவில் தன்னுடைய நாடகங்களை மேடையேற்றி வருகிறார். என் தாத்தாவுக்கு ஒரு குதிரை இருந்தது, வேருக்குள் பெய்யும் மழை, பெருங்கதையாடல் என்பன அவருடைய குறிப்பிடத்தக்க நாடகங்கள். இவற்றை நூல் வடிவில் உயிர்மை பதிப்பகம் 2003இல் வெளியிட்டுள்ளது.

நார்வேயில் சர்வேந்திராவும், ஆஸ்திரேலியாவில் மா.நித்தியானந்தமும் தமிழ் நாடகங்களை நடத்தி வருகின்றனர்.

வேறு சில முன்னோடிகள்

பரீக்ஷா நாடகக் குழுவைப் பல காலமாக நடத்தி வருகிறார் ஞாநி. பல நாடகங்களை மேடையேற்றிய இவர் பெரியார் பற்றிய நாடகம் ஒன்றை, சமீபத்தில் நடத்தி வருகிறார்.

வீதி அமைப்பில் ஒருவரான கே.எஸ்.ராஜேந்திரன், தற்போது தேசிய நாடகப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது இயக்கத்தில் தில்லியிலும், தமிழகத்திலும் பல நாடகங்கள் மேடையேறியுள்ளன. திராவிட இயக்க நாடகங்கள் பற்றி ஆய்வு செய்துள்ளார்.

நவீன நாடக எழுத்தாளர்கள் ‘சமகாலத்தில் நிகழ்த்தப்படுவதால் மட்டுமே ஒன்று நவீனமாகிவிடாது. நவீனத்துவம் என்பது அவ்வக்காலங்களிலான மரபு மீறல். வாழும் காலத் தேவைக்கேற்ப மனிதனை – மனிதச் செயல்பாடுகளை – புதிய அர்த்தமுள்ள பார்வையில் பார்த்தல்’ என நவீன நாடகத்திற்கு இலக்கணம் வகுப்பார்கள். புதிய எழுச்சிக்கேற்ப நாடகங்களைப் படைத்தவர்கள் தமிழில் ஏராளமாக உள்ளனர். தில்லியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த இந்திரா பார்த்தசாரதி ஒளரங்கசீப், போர்வை போர்த்திய உடல்கள், இராமானுஜர், மழை எனப் பல நாடகங்களை எழுதியுள்ளார். பிரபஞ்சனின் முட்டை குறிப்பிடத்தக்க நாடகம். அஸ்வகோஷ் பல நாடகங்களை எழுதியதோடு, திறனாய்விலும் ஈடுபட்டு வருகிறார். செயந்தனின் சுவர்கள், இயக்க விதி -3 போன்ற நாடகங்கள் பலமுறை மேடையேறியுள்ளன. ஞானராசசேகரனின் வயிறு, டி.செல்வராஜின் யுகசங்கமம், பறம்பைச் செல்வனின் புல்லுருவிகள் போன்றன குறிப்பிடத் தகுந்த நாடகங்களாகும்.

நவீன நாடகத் திறனாய்வாளர்களும் இதழ்களும் வெங்கட் சாமிநாதன், கோமல் சுவாமிநாதன், அ.இராமசாமி, வீ.அரசு, அஸ்வகோஷ், வெளி ரங்கராசன் சி.அண்ணாமலை, சுஜாதா எனப் பலர் நாடகம் பற்றிய திறனாய்வுகளை எழுதியுள்ளனர்.

1911இல் நாடகாபிமானி என்ற நாடக இதழை எம்.வி.ஈசுவர ஐயர் வெளியிட்டார். ஞாநி கட்டியங்காரன் என்ற நாடகச் சிற்றிதழை நடத்தினார். ரங்கராஜனின் நாடகவெளி இதழ் 1990 முதல் 97 வரை 40 இதழ்களாக வெளிவந்து நின்று போனது. கோவையில் புவியரசு நாடகத்திற்கெனக் காற்று என்ற இதழை நடத்தினார்.

சுபமங்களா, கசடதபற, பாலம், நடை, விழிகள், பிரக்ஞை, வைகை, சாதனா, ரீங்காரம், கணையாழி போன்ற சிற்றிதழ்கள் நவீன நாடகங்களுக்கு ஊக்கம் தந்தன.

கல்வித் துறையில் நாடகங்கள்

நாடகங்களின் வளர்ச்சிக்கென, பாண்டிச்சேரி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகங்களில் நாடகத்துறைகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் பல நாடக மாணவர்கள் தமிழ் நாடகத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கருத்தரங்குகள், நூல் வெளியீடுகள் மூலமும் நாடகத்திற்குப் பல தொண்டுகளை இப்பல்கலைக் கழக நாடகத் துறைகள் செய்து வருகின்றன.

தொகுப்புரை

தொன்மை நாடகப் போக்குகளிலிருந்து விடுபட்டதாகத் தற்கால நாடகப் போக்குகள் உள்ளன.

புராண, இதிகாச நாடகங்கள், நாடகம் முழுவதும் பாடல்கள் என்ற தொன்மைப் போக்கின் பிடியிலிருந்து தற்கால நாடகங்கள் விலகின.

சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கி அ.மங்கை வரை புதிய நாடகப் போக்குகள் பல திசைகளிலும் பயணம் செய்யக் காண்கிறோம்.

ஒளி, ஒலி, ஒப்பனை, விளம்பரம், கதையமைப்பு,  காட்சியமைப்பு, மேனாட்டுத் தாக்கம் எனப் பல நிலைகளிலும் தற்கால நாடகங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளன.

நவீன நாடகங்கள் அரங்குகளை விட்டு மக்களைத் தேடிச் செல்கிறது. பெண்கள் நாடக ஈடுபாடு கொண்டு நாடகத்தில் நடிக்கின்றனர்.

சபா நாடகங்கள் பெருகி வருகின்றன. அயலகத் தமிழர்கள் உலகெங்கும் நாடகங்களை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களும் நாடகத் துறைகளை ஏற்படுத்தியுள்ளன.

பாடம் - 4

உரைநடை இலக்கியம் - ஓர் அறிமுகம்

பாட முன்னுரை

அன்பார்ந்த மாணவர்களே! இலக்கியங்கள் காலங்களைக் கடந்தும், கருத்துகளைக் கடந்தும் இன்றும் நிலை பெற்றிருக்கின்றன. அதற்குக் காரணம் அவ்விலக்கியங்கள் பெற்றிருக்கின்ற பல்வேறு தனிச்சிறப்பியல்புகளேயாகும். கூறும் கருத்தால் மட்டுமல்ல, உணர்த்தும் திறத்தாலும் அவை உயிர் பெற்றுத் திகழ்கின்றன. அவ்வாறான உணர்த்தும் திறத்துக்கு ஏற்ற வாகனமாய் அமைவது உரைநடையே ஆகும். கவிதையோடு வளர்ந்து வந்த உரைநடை, அதன் எளிமை காரணமாய் உலகெங்கும் ஆட்சி செய்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ் இலக்கியப் பரப்பில் உரைநடையின் பங்கும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. உரைநடை பற்றிய இப்பாடப் பகுதி உரைநடை இலக்கியத்தை அறிமுகம் செய்தல், தொன்மைக்கால உரைநடைப் போக்குகள், தற்கால உரைநடைத் தன்மைகள் என மூன்று பிரிவுகளாக அமைகின்றன. அதில் உரைநடை இலக்கியம் தோற்றம் பெற்ற விதம், வரையறை, வகைப்பாடுகள், வளர்ச்சி என்ற நிலையில் ஓர் அறிமுகமாக இப்பாடம் அமைகின்றது. இதன் வழி உரைநடை இலக்கியத்தின் சிறப்பையும், வகைகளையும் பற்றி அறிந்து கொள்வீர்கள்.

மொழித் தோற்றம்

நமது நினைவிற்கு எட்டாத காலம் தொட்டு, சமுதாயத்தில் மனிதன் ‘மொழியைப்’ பேசி வருகிறான். சில ஆயிரம் ஆண்டுகளாக மொழியை எழுதி வருகிறான். மனிதன் பெற்ற பெருஞ்செல்வங்களுள் மொழியும் ஒன்றாகும். மொழி மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையது. அதனால் அறிஞர்கள் மொழியின் தன்மை பற்றிப் பண்டைக் காலத்திலேயே சிந்திக்கத் தொடங்கினார்கள். மொழியைப் பிறருக்குச் சொல்லித் தரவும், தாம் படிப்பதற்குப் பயன்படுத்தவும் ஆரம்பித்தார்கள். பிறகு மொழி வளர்ச்சி பெறத் தொடங்கியது. மனிதன் தனது உணர்வுகளை மொழிவழி வெளிப்படுத்திய போது, அது கவிதை வடிவமாகவும், உரைநடை வடிவமாகவும் வெளிப்பட்டது.

உரைநடையின் தோற்றம் சமுதாயம், தேவைகளுக்கேற்ப இலக்கியங்களைப் படைத்துக் கொள்ளும் இயல்புடையது. கவிதையும் உரைநடையும் அவ்வக்காலச் சூழலுக்கு ஏற்ப, கருத்துக்களுக்குரிய வடிவங்களாக வளர்ச்சி பெற்றன. கவிதையும் உரைநடையும் காலத்தின் தேவையைக் கருதி உருவாகியவையாகும். கவிதை அமைத்துத் தர இயலாத எளிமையையும், சிந்தனையையும் உரைநடை தந்தது. கல்வியறிவு குறைவான, இல்லாத எளிய மனிதர்களை உரைநடை எட்டியது. பண்டிதர்கள் கைக்குக் கவிதை சென்றது.

உரைநடையின் நிலை

உலக இலக்கிய வரலாறுகளைப் பார்க்கும்போது, உரைநடையே காலத்தால் பிற்பட்டது என்பதை அறிகிறோம். ஏறத்தாழ எல்லா உலக மொழிகளிலும் பண்டை இலக்கியங்கள் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன. ‘இலக்கிய வரலாற்றில் செய்யுளே உரைநடையினும் பழைமை வாய்ந்தது’ என்பார் எமர்சன் என்ற அறிஞர். கிரேக்கம், இலத்தீன், சீனம், வடமொழி, தமிழ் போன்ற மொழிகளில் பழைய இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவிலேயே அமைந்துள்ளன. செய்யுளைத் தொடர்ந்தே தமிழிலும் உரைநடை தோற்றம் பெற்றது. ஆனால் அது எந்தக் காலத்தில் தோன்றியது, அதன் ஆரம்ப வடிவம் எத்தகையது என்பதை இன்று கூற முடியாத நிலை உள்ளது.

உரைநடையும் செய்யுளும் தற்காலத்தில் செய்யுளைவிட உரைநடை செல்வாக்குப் பெற்றுள்ளது. ஆனாலும் கடுமையான செய்யுள் பகுதிகளுக்கும் அருமையான விளக்கம் தரும் மாணவர்கள், எளிய உரைநடை பற்றி எதுவும் கூற இயலாது தவிக்கின்றனர். நாம் பேசுவது உரைநடை; எழுதுவது உரைநடை; நம் அடிமனம் சிந்திப்பது உரைநடையில்தான். மாணவர்கள் செய்யுள் நூல்களைவிட உரைநடை நூல்களையே விரும்பிப் படிக்கின்றனர்.

உரைநடை வடிவம் பற்றிய வினாக்கள் வந்தால் திகைத்து நிற்கின்றனர். இதன் காரணம் கவிதையை எவ்வாறு அணுகுவது, ஆராய்வது என்று ஆசிரியர்கள் சொல்லித் தந்திருப்பதோடு, அது குறித்து நூல்களும் எழுதியுள்ளனர். ஆனால் உரைநடையை அவ்வாறு அணுகப் பயிற்சி ஏதும் மாணவர்கள் பெற்றதில்லை. அதுவே திகைத்து நிற்கக் காரணமாகும்.

உரைநடை – செய்யுள் வேறுபாடுகள்

உரைநடையும் செய்யுளும் எதிர்எதிர் முனைகளாகும். அவற்றிற்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளன. அவற்றில் சில,

உணர்ச்சியில் எழுவது கவிதை; சிந்தனையில் எழுவது உரைநடை.

கவிதை தருவது கற்பனை இன்பம்; உரைநடை தருவது அறிவின்பம்.

எதுகை, மோனை என ஓசை அமைப்புடையது கவிதை; அவையில்லாத தன்மையுடையது உரைநடை.

கவிதையை மடக்கி மடக்கி எழுதுகிறோம்; உரைநடையை நீண்டதாக எழுதுகிறோம்.

உரை நூல்கள்

மருத்துவம், சோதிடம், கணிதம் என மனிதன் உருவாக்கிய பல்வேறு துறைகளும் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன. காலப்போக்கில் மொழியில் ஏற்பட்ட மாற்றங்களினால், அவை எளிதில் புரியாத நிலை ஏற்பட்டது. அப்போது அவைகளைப் படிப்போர் விளங்கிக் கொள்வதற்காக உரை எழுதப்பட்டது. உரைநடையின் வளர்ச்சி இவ்வாறு தொடங்கியது. காலப்போக்கில் செய்யுள் நூல்களுக்குத் துணை நூல்களாகவும், சார்பு நூல்களாகவும் தமிழில் உரைநூல்கள் தோற்றம் பெற்றன.

உரை – ஒரு விளக்கம் தமிழ்க் கலைக்களஞ்சியம் உரை என்ற சொல்லுக்கு விளக்கம் தரும்போது, ”உரைத்தான் என்பதற்குச் சொன்னான் என்பது பொருள். ஆகையால் உரை என்பதற்குச் சொல் என்றே பொருள்படும். இது ஆகுபெயராய்ச் சொல்லின் பொருளைக் குறித்து வழங்குகின்றது. புலமை மிக்கவர் இயற்றும் நூலைப் பொதுமக்களும் உணர்தல் வேண்டின் அதற்கு விளக்கம் வேண்டியுள்ளது. அவ்விளக்கம் உரை எனப்படும்.” எனக் கூறும்.

குன்றம் குமுறிய உரை என்னும் (பரிபாடல்) வரியில் உரை என்பது முழக்கம் என்ற பொருளில் வருகிறது.

திருமணம் செல்வக்கேசவராய முதலியார் அவர்கள் தம் நூலில் ‘கவியின் வேறாய சொன்னடை தமிழில் உரை எனப்படும். உரை என்பது பேச்சு என்பதற்கும் வியாக்கியானம் என்பதற்கும் வழங்கும் வார்த்தை’ என விளக்குவார்.

‘உரைக்கப் பெறுவதனால் உரையாயிற்று’ என்பார் அ.மு.பரமசிவானந்தம்.

உரை – தமிழ் அகராதி விளக்கம்

உரைநடை என்பதற்கு வசனநடை எனத் தமிழ் லெக்சிகன் விளக்கம் தரும். உரை, உரைநடை என்னும் சொற்கள் தொல்காப்பியக் காலம் முதலே வழங்குகின்றன. எனினும் உரைநடை என்னும் சொல்லமைப்பு, காலத்தால் மிகவும் பிற்பட்ட இருபதாம் நூற்றாண்டுக்கு உரியதாகவே தோன்றுகிறது. நா.கதிரைவேற் பிள்ளை 1922இல் தமிழ் மொழி அகராதியைத் தொகுத்தார். ச.பவானந்தம் பிள்ளை 1925இல் தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியைத் தொகுத்தார். ஆனால் அவையிரண்டிலும் உரைநடை என்ற சொல் காணப்படவில்லை. முதன் முதலில் தமிழ்ப் பேரகராதியே (1924-36) உரைநடை எனக் குறிக்கின்றது.

உரை – ஆங்கில அகராதி விளக்கம்

ஆங்கிலத்தில் Prose என்ற சொல்லால் உரைநடையைக் குறிப்பார்கள். ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி ‘உரைநடை என்பது செய்யுளுக்குரிய சீர் இல்லாமல் பேசப் பெறும் அல்லது எழுதப் பெறும் மொழியின் அமைப்பாகும். உள்ளதை உள்ளவாறு கூறுந்தன்மையுடையது’ என்று கூறுகிறது. சேம்பர்ஸ் இருபதாம் நூற்றாண்டு ஆங்கில அகராதியும், ”செய்யுளுக்குரிய சீர் முதலியவை இன்றிப் பொருளை நேராக விளக்கும் சொற்களையுடைய அமைப்பே உரைநடை. இது சாதாரணமாகப் பேசுவதும், எழுதுவதும் ஆகும்” என விளக்கம் அளிக்கிறது. கார்டினர் என்பவர் ‘எளிமையாக விளங்கிக் கொள்ளுமாறு உரைப்பதே உரை’ எனக் கூறுவார்.

பிறமொழிகளில் உரைநடை

கிரேக்க மொழியில் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிலேயே உரைநடை இலக்கியம் இருந்துள்ளது. இலத்தீன் மொழியில் கி.மு.முதல் நூற்றாண்டிலும், இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளில் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டிலும் உரைநடை தோன்றி வளர்ச்சி பெற்றது.

உரைநடையின் பண்புகள்

உரைநடையின் பண்புகளாக வழுவின்மை, சுருங்கக் கூறல், விளங்க வைத்தல், இனிமை தருதல், பயன் தருதல் முதலியனவற்றைப் பரிமேலழகர் குறிப்பிடுவார். திருமணம் செல்வக்கேசவராய முதலியார் பொருட்சுவை, சொற்சுவை என்னும் இரண்டும் இயைந்து நடத்தலே உரைநடையின் பண்பாகக் கொள்வார்.

ஒழுங்கு, ஓர் உருப்படுத்துதல், நுட்பம், சமநிலை என இவையே உரைநடையின் பண்புகள் என்பார் மாத்யூ ஆர்னால்டு.

மேலை நாட்டு அறிஞர் சாப்மென் நுட்பம், எளிமை, நயம் என மூன்றும் உரைநடையின் இயல்புகள் என்பார்.

ஜோசப் சுந்தரராசு அவர்கள் ‘கருத்து, தெளிவு, சந்தம், உணர்ச்சி’ ஆகிய நான்கும் உரைநடையின் இன்றியமையாப் பண்புகள் எனக் கூறுவார். வ.சு.செங்கல்வராய பிள்ளை, மா.இராமலிங்கம் முதலியோரும் உரைநடைக்குத் தேவையான பண்புகளைக் கூறியுள்ளனர்.

உரைநடையின் வகைகள் உரைநடையின் ஒரு கூறாக நடை பற்றி நடையியல் என்ற நூலை ஜெ.நீதிவாணன் எழுதியுள்ளார். அதில் உரைநடை வகை பற்றிக் கூறும் போது, ‘பொதுவாக எளிய நடை, இனிமையான நடை, அருமையான நடை, மனதைக் கவரும் நடை, கடுமையான நடை, விளக்க நடை, வருணனை நடை’ எனப் பலவித நடைகள் உள்ளதாகக் கூறுவார். பொதுவாக உரைநடையின் வகைகளை ஆறு பிரிவுகளாகக் கூறுவதுண்டு. அவை பின்வருமாறு அமையும்.

விளக்க உரைநடை

ஏதாவது ஒரு பொருளையோ, கருத்தையோ விளக்கிக் காட்டுவது போல் எழுதப்படும் அனைத்துமே விளக்க உரைநடைகள்தாம். பள்ளிக்கூட, கல்லூரிப் பாடப் புத்தகங்கள், அறிவியல் நூல்கள், கலைக்களஞ்சியங்கள், பல்வேறு தொழில்களைப் பற்றியும் கலைகளைப் பற்றியும் எழுதப்படும் விவர விளக்கங்கள் முதலியன இவ்வகையில் அடங்கும். மனிதனின் தேடுதலான அறிவுப் பசிக்கு விருந்தாக அமைவது இவ்வகை உரைநடையே ஆகும்.

அளவை உரைநடை

விவாதிக்கும் போக்கில் அமைவது அளவை உரைநடையாகும். ஓர் உட்கோளைப் படிப்போர் இணங்கி ஏற்றுக் கொள்ளும் வகையில் அமையும். நல்ல முறையில் எழுதப்பட்ட அளவை உரைநடை அறிவைத் தூண்டுவதோடு அமையாமல் உணர்ச்சிக்கும் விருந்து தரும். மேலும், படிக்கும் வாசகனைப் பிரச்சினைகளை நுணுக்கமாய்ப் புரிந்து கொள்ளும் வகையில் சிந்திக்கத் தூண்டும்.

எடுத்துரை உரைநடை

கதை கூறும் எல்லா நூல்களும் எடுத்துரை உரைநடையே ஆகும். வேறு எந்த வகையான உரைநடையையும் விட மக்கள் இதையே விரும்பிப் படிக்கின்றனர். வெறும் நிகழ்ச்சிகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் காட்டி அச்சத்தையும், புதிரையும் தரும் துப்பறியும் கதை முதல் சிறந்த இலக்கியத் தன்மையுடைய கதை வரை எல்லாமே எடுத்துரை உரைநடையிலேயே அமையும்.

வருணனை உரைநடை

புலன்உணர்வு மூலம் ஏற்படும் அனுபவங்களை வருணித்துக் காட்டும் உரைநடையை வருணனை உரைநடை என்பர். மனிதர்களையும், பொருள்களையும் இது வருணிக்கும். படிப்போரின் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் ஆற்றல் இதற்கு உண்டு.

நாடக உரைநடை

நாடகத்தில் இடம்பெறும் பாத்திரங்களின் உரையாடல்கள், இடையிடையே நாடக ஆசிரியர் தரும் மேடை விளக்கக் குறிப்புகள் ஆகியவற்றை நாடக உரையாடல் எனலாம். நாடக உரைநடை பேச்சு வழக்கை ஒட்டியே அமையும்.

சிந்தனை உரைநடை

எழுதும் எழுத்தாளனின் சொந்த ஆளுமை வெளிப்படும் படியாக எழுதப்படுவது சிந்தனை உரைநடையாகும். தன்னுணர்ச்சிப் பாங்கான கட்டுரைகள், ஆன்மிக அனுபவங்களை உணர்த்தும் கட்டுரைகள் முதலியன இவ்வகையில் அடங்கும்.

உரைநடையில் வேறுபாடு உரைநடை ஒரே தன்மையில் அமைவது இல்லை. ஆசிரியர், காலம், நோக்கம், கருத்து, இடம், மக்கள் முதலியவற்றால் அதன் நடையின் தன்மை வேறுபடுகின்றது என்பர் அறிஞர்.

மறைமலையடிகள் நடைக்கும், எழுத்தாளர் சுஜாதா நடைக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு. இது ஆசிரியர்களால் ஏற்படும் உரைநடை வேறுபாடு.

வைணவ உரைக்கும், இன்றைய உரைநடைக்கும் வேறுபாடுகள் உண்டு. இது காலத்தால் உண்டானது.

தூய தமிழில் எழுத வேண்டும் என எழுதிய மறைமலையடிகளார் நடைக்கும், ஆங்கிலம் கலந்து எழுதும் இன்றைய நடைக்கும் நோக்கங்கள் அடிப்படையில் வேறுபாடு காணலாம்.

பைபிள் மொழி நடைக்கும், பாரதி உரைநடைக்கும் கருத்தைக் கூறும் முறையில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

கி.ராஜநாராயணனின் கரிசல் வட்டார உரைநடைக்கும், ஜெயகாந்தனின் சென்னை வட்டார உரைநடைக்கும் இடத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் காணலாம்.

தினத்தந்தியின் எளிய நடைக்கும், தினமணியின் செறிவான நடைக்கும், படிக்கும் வாசகர்களைக் கொண்டே வேறுபாடுகள் காணப்படுகின்றன.

உரைநடை – வேறுபாட்டின் காரணங்கள்

உரைநடை வேறுபாடுகளைக் கண்டோம். அந்த வேறுபாடுகளுக்கும் காரணங்கள் உண்டு. உரைநடையில் அமையும் நடை எந்தெந்தக் காரணங்களால் வேறுபடுகின்றன என்பதை வையாபுரிப் பிள்ளை அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

வாசகர்களுக்குத் தக்கபடி நடைவேறுபடுகிறது.

சொல்லக்கூடிய விஷயங்களுக்குத் தக்கபடியும் நடை வேறுபடும்.

சொல்லும் நோக்கத்துக்குத் தக்கபடியும் நடை மாறுபடும்.

தன் சொல்வன்மையால் வாசிப்போரை வசீகரித்து அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு முயலும்போதும் நடை வேறுபடும்.

எதையேனும் ஒன்றை விளங்கச் செய்யும் போதும், சொல்லும் முறைக்கு ஏற்றபடியும் நடை வேறுபடும்.

உரையாடல் வடிவத்தில் எழுதும் நடையும் வேறுபடும்.

கடித வடிவத்தில் எழுதும் நடையும் மாறுபடும்.

ஆசிரியர்களுடைய மனநிலைக்கு ஏற்றபடியும் நடை வேறுபடுவதுண்டு.

உரைநடை பற்றிய செய்திகள்

உரைநடை பற்றிப் பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களிலும் இறையனார் களவியல் உரையிலும், உரையாசிரியர்களின் உரைகளிலும் இடம் பெற்றுள்ள உரைநடை பற்றி இனி பார்ப்போம்.

தொல்காப்பியமும் உரைநடையும் இலக்கியத்தில், உணர்த்தலுக்குச் செய்யுளே பெரும்பகுதி பயன்பட்டிருந்தாலும், உரைநடையும் ஓரளவு பயன்படுத்தப்பட்டுள்ளதற்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சான்றுகள் உள்ளன. உரைநடை படைப்புத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டதற்குத் தொல்காப்பியம் சான்று கூறுகின்றது. உரைநடையும் பாட்டும் கலந்த நூல்கள் அக்காலத்தில் வழக்கில் இருந்தன என்பதை,

தொன்மை தானே

உரையொடு புணர்ந்த பழமை மேற்றே

என்ற தொல்காப்பிய நூற்பா ஒன்று உணர்த்துகின்றது.

‘உரைவகை நடையே நான்கென மொழிப’ என்ற இன்னொரு நூற்பா ‘நால்வகை உரைநடைகள்’ இருந்ததைக் கூறும். பாட்டைப் போலவே உரையும் முற்காலத்தில் செப்பமாகச் செய்யப்பட்ட ஒன்றாக இருந்துள்ளது. அதனால் பாட்டுடன் உரையினையும் தொல்காப்பியம் செய்யுள் வகையுள் ஒன்றாகவே கொண்டது. அவ்வாறு பொதுச்சொல்லால் குறித்த போதும், இரண்டுக்குள்ளும் வேற்றுமை இருந்ததால் ஒன்றைப் பாட்டு என்றும், மற்றொன்றை உரை என்றும் குறித்தது. இதன்மூலம் உரைநடை பாட்டிலிருந்து தோன்றி, பின் வேறுபட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

சிலப்பதிகாரமும் உரைநடையும் பாட்டைத் தொடர்ந்து உரைநடை எழுந்தது என்பது அறிஞர்கள் கருத்தாகும். அந்த உரைநடையின் ஆரம்ப வடிவத்தை நாம் அறிந்து கொள்ள முடிவது, தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில்தான். அதன் பதிகத்தில்,

வாழ்த்து வரந்தரு காதையொடு

இவ்வா றைந்தும்

உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்

என்று உரை பற்றிய குறிப்பு வருகின்றது.

சிலப்பதிகாரத்திலுள்ள கானல்வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை என்னும் பகுதிகளில் உரைப்பகுதிகள் காணப்படுகின்றன. இவை தமிழ் உரைநடையின் ஆரம்பநிலை எனலாம். மேலும் சிலப்பதிகாரத்தில் இசைத் தமிழ், நாடகத் தமிழ்ப் பகுதிகளில் உரைப்பகுதி வருவதால், முற்காலத்தில் இசை, நாடகத் தமிழிலேயே உரைநடை முதன்முதலாகக் கையாளப்பட்டது எனக் கொள்ளலாம்.

இறையனார் களவியல் உரை தமிழ் உரைநடை வரலாற்றிலே சிறப்பிடம் பெறுவது இறையனார் களவியல் உரையாகும். இதனையே முதல் உரைநடை என்று கூறுவாரும் உண்டு. இதன்காலம் கி.பி.7 அல்லது 8ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இறையனார் களவியல் உரையினை ஆராய்ந்தவர்கள், அதன் உரைநடை இரண்டு விதமாக அமைந்திருப்பதாகக் கூறுவார்கள்.

(1) ஒரு பொருளைக் குறித்துக் கேள்வி கேட்டுப் பதில் பெறுவது போன்ற உலக வழக்கு உரையாடல்.

(2) ஓசைப் பண்புடைய செய்யுள் நடை போன்ற உரையாடல் என்பனவே அவையாகும். இது சிலப்பதிகார உரைநடையிலிருந்து சிறிதே வேறுபட்டு நிற்கிறது. எடுத்துக்காட்டாக, ‘அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்லவே பசிகடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாம் கூவி, ”வம்மின் யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது. நீயிர் நுமக்கு அறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னை யுள்ளி வம்மின் என்றான்” என்ற உரைநடைப் பகுதி ஓரளவு எளிமையாக அமைந்துள்ளதைக் காணலாம்.

உரையாசிரியர்கள் உரைநடையும் பிறவும் கி.பி.10ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலப்பகுதி ‘உரையாசிரியர் காலம்’ எனப்படும். அதற்குக் காரணம், அக்காலப் பகுதியில்தான் இளம்பூரணர் முதல் நச்சினார்க்கினியர் வரை இலக்கியங்களுக்கும், இலக்கணங்களுக்கும் எளிமையான உரைகளை எழுதினர். பண்டை நூல்களாகிய தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, கலித்தொகை முதலியனவற்றிற்கு உரைகள் எழுதப்பட்டன. சைவ சித்தாந்த சாத்திரங்களுக்குத் தத்துவ விளக்கங்கள் உரைகளாகத் தரப்பட்டன. இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் எனப் பல உரையாசிரியர்கள் உரை எழுதி உரைநடை வளர்ச்சிக்கு உதவினர்.

கல்வெட்டும் உரைநடையும்

பல்லவர் காலத்துக் கல்வெட்டுகள் உரைநடையில் அமைந்துள்ளன. அவற்றை மூன்று பிரிவுகளாகக் கொள்ளலாம்.

தனித் தமிழில் அமைந்தவை ஒரு வகை.

ஒரு பகுதி தமிழ் மொழியும், ஒரு பகுதி வடமொழியுமாக அமைந்தவை.

இடையிடையே வடமொழிச் சொற்கள் அமைக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்கள் என்பனவே அவையாகும்.

மணிப்பிரவாள உரைநடை

மணி என்பது முத்து. பிரவாளம் என்பது பவளம். முத்தையும் பவளத்தையும் மாறிமாறி ஒரு மாலையில் கோத்தது போல வடசொற்களையும் தமிழ்ச் சொற்களையும் சரிக்குச்சரி கலந்து எழுதிய தொடர்மொழி நடை என்பது அதன் பொருளாகும். சமண, பௌத்த நூல்கள், வைணவ உரைகள் மணிப்பிரவாள உரைநடைக்கு வித்திட்டன.

இருபதாம் நூற்றாண்டு உரைநடை

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில மொழிக் கல்வி தமிழ்நாட்டில் பரவியது. அக்கல்வி முறையினால் தமிழகத்தில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்த அறிவியல் கலைகளின் பாதிப்பு, இங்கும் ஏற்படத் தொடங்கியது. மக்கள் அறிவியல் சம்பந்தமான கருத்துக்களைத் தமிழ் மொழி வாயிலாக வெளியிடுவதற்கு முற்பட்டனர். அதனால் தமிழ் உரைநடை புதுப்புதுச் சொற்கள், சொற்றொடர்களை உருவாக்கிப் புதுமலர்ச்சி கண்டது. சமயக் கருத்துகளையும்,. செய்யுளுக்குப் பொருளையும் மட்டுமே விளக்க என இருந்த உரைநடையின் போக்கு மாறியது. இயற்கைக் காட்சிகள், வாழ்க்கைச் சம்பவங்கள், உணர்ச்சி பேதங்கள், அறிவியல் ஆய்வுகள் எனப் பன்முகத் தன்மை கொண்டதாக உரைநடை விளங்கியது.

மேலைநாட்டார் உரைநடை

மேலை நாட்டார் வரவால் தமிழ் உரைநடை புதிய எழுச்சி பெற்றது. முற்காலத்தில் தமிழை எழுதும் போது சொற்களைப் பிரித்து எழுத மாட்டார்கள். பல சொற்களையும் ஒன்றாகச் சேர்த்து எழுதுவார்கள். ஆனால் மேலை நாட்டார் சொற்களைப் பிரித்தே எழுதுவர். அம்முறையைப் பின்பற்றித் தமிழ் மொழிச் சொற்களையும் பிரித்து எழுத ஆரம்பித்தனர். அகராதிகள் பலவற்றையும் தொகுத்து வெளியிட்டனர். பொதுமக்கள் பேசும் சொற்களைப் பயன்படுத்தித் தமிழுக்கு ஒரு புதிய நடையை ஏற்படுத்தினர்.

பேச்சும் எழுத்தும் இருபதாம் நூற்றாண்டிலே உரைநடை மிகப் பெரிய வளர்ச்சி பெற்றது. தற்கால உரைநடை இரண்டு பகுதிகளைக் கொண்டதாக எல்லா மொழிகளிலும் அமைகின்றது. அவை

(1) பேச்சு மொழி

(2) எழுத்து மொழி

என்பனவாகும். மக்கள் சாதாரணமாக ஒருவர் இன்னொருவருடன் பேசுவது பேச்சு மொழி, ஒருவர் தன் கருத்தை எழுத்தாக வடிப்பது எழுத்து மொழி. பேச்சுமொழி இடத்திற்கு இடம், சமுதாயத்திற்குச் சமுதாயம் மிக வேறுபடும். எழுத்துத் தமிழில் அத்தகைய வேறுபாடுகள் மிகக் குறைவு.

தென்னிந்திய மொழிகளில் தற்காலத் தெலுங்கு இலக்கியம் கையாளும் மொழிக்கும், பேசும் தெலுங்கிற்கும் அதிக வேறுபாடு இல்லை. கன்னடத்தில் ஓரளவு வேறுபாடு காணப்படுகின்றது. ஆனால் பேச்சும், எழுத்தும் மிக விலகி நிற்பது தமிழ் மொழியில்தான். இன்றைய பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் இருவேறு மொழிகளோ எனச் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு வேறுபட்டு நிற்கின்றன. புத்தகத்தில் தமிழ் படித்த வெளிநாட்டார் அல்லது அயல் மாநிலத்தார் இங்கு வந்தால் தமிழ் மக்கள் பேசுவதைப் புரிந்து கொள்வது சிரமமே.

வங்காள மொழியும் வெகு காலமாக எழுத்து மொழியான சாது பாஷை, பேசும் மொழியான சலித் பாஷை என இரண்டு பிரிவுகளாக வேறுபட்டு நின்றன. பின் மகாகவி இரவீந்திரநாத் தாகூர் போன்றோரின் முயற்சியால் இரண்டும் ஒன்றாகியது. இன்று பேசும் மொழியான சலித் பாஷை மட்டும் உள்ளது.

தமிழகத்தில் இன்று பேச்சுத் தமிழே பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பயன்பட்டு வருகின்றது. உரைநடை வடிவங்களான நாவல், சிறுகதை, ஓரளவு கவிதை ஆகியவற்றில் இன்று பேச்சுத் தமிழே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.

இலங்கை, யாழ்ப்பாணத் தமிழ் மட்டுமே எழுத்துத் தமிழிலிருந்து பெரும்பாலும் மாறாத் தன்மை கொண்டுள்ளது. இதன் காரணம் பழந்தமிழின் இயல்பு அதிக அளவில் யாழ்ப்பாணத் தமிழில் அமைந்திருப்பதே ஆகும்.

தொகுப்புரை

மொழி வளம் பெற்றபோது கவிதை பிறந்தது. கவிதையிலிருந்து உரைநடை தோன்றியது. உலகெங்கும் கவிதையைச் சார்ந்தே உரைநடை வளர்ச்சி பெற்றது.

உரைநடை மெல்ல, மெல்லச் செய்யுளிலிருந்து வேறுபட்டு மாற்றங்கள் பெற்றது. உரை நூல்கள் தோன்றின. செய்யுளை விளக்க உரைகள் எழுதப்பட்டன. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்கள் காப்பியங்களில் பயன்படுத்தப்பட்டன.

உரைநடை பலவகைகளைக் கொண்டதாக அமைந்தது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றன உரைநடை பற்றிய குறிப்புக்களையும், உரைநடை வரிகளையும் தந்தன.

இறையனார் களவியல் உரை, பாரத வெண்பா போன்றன தெளிவான ‘உரைநடை’யை அறிமுகப்படுத்தின. கல்வெட்டுகள் பெரும்பாலும் உரைநடையிலேயே பொறிக்கப்பட்டன. மணிப்பிரவாள நடை பிறமொழிக் கலப்பால் உருவானது.

உரையாசிரியர்கள் காலம் ‘உரைநடை’க்குப் புதிய எழுச்சியைத் தந்தது.

உரைநடையின் முக்கியத்துவம் இக்காலத்தில் உணரப்பட்டது. உரைநடை, ‘இலக்கியம்’ என்ற தன்மையை இக்காலத்தில்தான் பெற்றது.

மேலைநாட்டார் வரவு உரைநடையின் திசையை மாற்றியது. ‘எளிய தமிழ் உரைநடை’ என எல்லா மக்களும் படிக்கும்படி ஆனது. ஆங்கிலக் கல்வி, அச்சு இயந்திர வருகை ஆகியன உரைநடையைப் பொதுமக்கள் சொத்தாக மாற்றியது.

பேச்சு உரைநடை, எழுத்து நடை எனப் பிரிந்து நிற்கும் தமிழில் இன்று, ஊடகங்கள் பேச்சு உரைநடையையே முன் நிறுத்துவதைக் காணலாம்.

பாடம் - 5

தொன்மைக் கால உரைநடைத் தன்மைகள்

பாட முன்னுரை

அன்பார்ந்த மாணவர்களே! இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு உரைநடை பெருந்தொண்டு செய்துள்ளது. காலந்தோறும் மாறிவரும் வளர்ச்சிக்கு ஏற்பத் தமிழ் உரைநடையும் மாற்றங்கள் பெற்று வந்துள்ளது. இன்று எத்துறையையும் எளிதாக உரைநடை கொண்டு விளக்கும் நிலை உள்ளது. ஆனால் உரைநடைத் தோற்றம் கொண்ட காலத்தில் கவிதையே எல்லாத் துறைகளையும் விளக்கும் கருவியாக இருந்தது. கவிதையின் துணையாக வளர்ந்த உரைநடை தொன்மைக் காலத்தில் எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதை நீங்கள் இப்போது பயிலுகின்றீர்கள். இதில் உரைநடைத் தோற்றம், ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ பற்றிய விளக்கம், உரைநூல்கள், உரையாசிரியர்கள் தொடக்கம் மேல் நாட்டார் வரும்வரை வளர்ச்சி பெற்றிருந்த உரைநடையின் தன்மை ஆகியன பற்றி அறிந்து கொள்வீர்கள்.

உரைநடையின் தோற்றம்

ஒரு மொழியில் முதன் முதலாகச் செய்யுள் தோன்றும் போது, அது பேச்சு வழக்கிலுள்ள மொழி நடையினையும், ஓசைப் பண்பினையும் தழுவியே தோன்றும். இது தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். தமிழில் உள்ள ஓசை வகைகளுள் அகவலே முந்தியது என்பர். இந்த அகவலும், செப்பலும் மக்கள் பேச்சு வழக்கில் காணப்படுபவை. இந்த ஓசைகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் உரைநடை போன்ற அமைப்புகளிலேயே அமைந்திருந்தன. அதனால்தான் செய்யுளைத் தொடர்ந்து உரைநடை எழுந்தது என்பர் அறிஞர். உரைநடை தோன்றிய காலத்தில் செய்யுளுக்கும், உரைநடைக்கும் பெரிதும் வேறுபாடுகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. செய்யுளைப் போலவே உரைநடையும் ‘செப்பமாக’ச் செய்யப்பட்ட ஒன்று. அதனால்தான் உரையினையும் தொல்காப்பியர் செய்யுள் வகையுள் ஒன்றாகவே கூறினார்.

தொடக்கக் கால உரைநடையின் தன்மை செய்யுளிலிருந்து பெரிதும் மாறுபடாத நிலையிலேயே இருந்தது.

தமிழ் பிராமிக் கல்வெட்டு உரைநடை தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டன. இவை பெரும்பாலும் சங்க காலத்தைச் சார்ந்தவை என்பர் கல்வெட்டு அறிஞர்கள். இத்தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் தொன்மைக் கால உரைநடையைப் பற்றி அறிவதற்குச் சான்றாக உள்ளன. தமிழ் அல்லது பிராமிக் கல்வெட்டுகள் என்றழைக்கப்படும் இவை தமிழகத்தில் 19 இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. அரச்சலூரில் கிடைத்திருக்கும் பிராமிக் கல்வெட்டு இசை பற்றியதாக உள்ளது. இதைத் தவிர பிற கல்வெட்டுகள் யாவும் சமணத் துறவியர்க்குக் கற்படுக்கை அமைத்துக் கொடுத்ததையே குறிப்பிடுகின்றன. இக்கல்வெட்டுகளின் உரைநடை கீழ்க்காணும் விதமாக அமைகின்றது.

காலத்தால் முற்பட்டவை ஒரு வாக்கியமாக அமைகின்றன. சான்று – ‘வெள்அறை நிகமதோர் கொடி ஓர்’ (மீனாட்சிபுரக் கல்வெட்டு)

(பொருள்: வெள்ளறை நிகமத்தை (வணிகக் குழுவைச்) சேர்ந்தோர்கள் கொடுத்த கற்படுக்கை.)

காலத்தால் பிற்பட்டவை இரண்டு, மூன்று வாக்கியங்களாக அமைந்துள்ளன.

சான்று -

‘இவ குன்றத்து உறையுள் பா தந்தான் எரி

அரிதன் அத்து வாயி அரட்ட காயிபன்’

(பொருள் : ஆனைமலை (இபகுன்றம் – ஆனைமலை, இப – இவ எனத் திரிந்துள்ளது) எரி அரிதன் அத்துவாயி அரட்ட காயிபன் என்பான் படுக்கை (பா-படுக்கை) அமைத்துத் தந்தான்.)

இக்கல்வெட்டுக்களில் சொற்றொடர் அமைப்பு, இன்றைய தமிழ் முறைப்படி அமைந்துள்ளது.

சிறு சிறு வாக்கியங்களாகக் கல்வெட்டுகளில் எழுதப்பட்ட உரைநடை, இன்றைய தமிழ்முறைப்படிச் சொல் தொடர் அமைப்புப் பெற்ற தன்மையைக் கொண்டுள்ளது.

தொன்மைக் கால உரைநடை தொன்மைக் காலத்தில் குறிப்பாகத் தொல்காப்பியத்திற்கு முந்திய காலத்திலும், தொல்காப்பிய காலத்திலும், சங்க காலத்திலும் வழங்கப்பட்ட உரைநடையைப் பற்றிப் பார்ப்போம்.

தொல்காப்பியத்துக்கு முந்திய உரைநடை

மூலபாடம், உரைப்பாடம் என்ற பாகுபாடு தொன்மையானது; இரண்டாயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது. செய்யுள்களுக்கு விளக்கமாக எழுதப்பட்ட உரைகளே உரைநடை வளர்ச்சிக்கு உதவின. தொல்காப்பிய நூற்பாக்களில் என்ப, என்மனார், என்மனார் புலவர், நூல்நவில்புலவர் முதலிய சொற்களும் தொடர்களும் எங்கும் பரந்து கிடக்கின்றன. இவை தொல்காப்பியத்துக்கு முன்பே புலவர்கள் இருந்து நூல் எழுதியுள்ளதைக் குறிக்கின்றன. மேலும் உரை பற்றிய தொல்காப்பியர் கோட்பாடுகள், அவருக்கு முந்தைய உரையாசிரியர் நூல்களிலிருந்தும் பெற்றிருக்க வேண்டும். ஆகவே தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உரைநூல்களும், உரைநடையும் இருந்ததைத் தொல்காப்பிய நூற்பாக்கள்வழி அறிய முடிகின்றது.

தொல்காப்பியத்துக்கு முன்பே உரை வரலாறு உருவாகி விட்டது. உரைநடை வளர்ச்சி கண்டது. அதன் தொடக்கம் தொல்காப்பியத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்காவது முந்தியதாக இருக்க வேண்டும்.

தொல்காப்பியக் கால உரைநடை

உரை என்பதற்குச் சொல்லுதல் என்று பொருள். ஒன்றைப் பற்றிச் சொல்லும் போது எவ்வாறெல்லாம் விளக்கிச் சொல்ல வேண்டுமென்பதே உரையில் சொல்லும் முறையாகும். இவ்வாறு தோன்றிய உரை பல்வேறு படிநிலைகளைக் கொண்டதாக அமைந்தது. மொழிக்கும் வாழ்க்கைக்கும் இலக்கணம் கூறும் இலக்கண நூல்கள், உரைக்கும் இலக்கணத்தைக் கூறுகின்றன.

தமிழில் தொல்காப்பியம் மிகப் பழமையான இலக்கண நூலாகும். அத்தொல்காப்பியத்தில், அதன் ஆசிரியர் தொல்காப்பியர் எழுதிய உரை பற்றிய செய்திகளே, நமக்கு அக்கால உரைநடை குறித்து அறிவதற்கு உதவுகின்றன.

தொல்காப்பியர், காண்டிகை என்றும், உரை என்றும் இருவகை உரை அமைப்புகளைக் காட்டுகின்றார். இவ்விரு வகை உரை முறைகளும் அவர் காலத்து நிலவிய உரைகூறும் மரபு என்று கருதலாம்.

தொல்காப்பியர் செய்யுளை ஏழாக வகுத்துக் கூறுகிறார். அவற்றுள் ஒன்று, அடிவரையறையுள்ள செய்யுட்பகுதியாகிய பாட்டு, மற்றவை அடிவரையறையில்லாச் செய்யுள் பகுதிகள் ஆறு. அந்த ஆறனுள் ஒன்றாக உரைநடை வகையைக் கூறி, அதனை நான்காகக் கூறுவார்.

தொல்காப்பியர் காலத்து உரை பற்றிய செய்திகளே உரைநடை அக்காலத்தில் இருந்ததைக் காட்டுகின்றன. அவை நான்கு வகைப்பட்ட உரைநடை இலக்கியங்களாக விளங்கின என அறியலாம்.

பண்டைக் கால உரைநடை

சங்க இலக்கியச் செய்யுள்களில் கீழ்க்காணப்பெறும் துறை, திணை விளக்கங்கள் ஆகிய பாடலின் குறிப்புகள் உரைநடையில் அமைந்துள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு,

நற்றிணையில்,

பொருள் வயிற்பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த

நெஞ்சிற்கு உரைத்தது             (நற்றிணை – 157)

பரிபாடலில்,

காதல் பரத்தையுடன் புனல் ஆடிய தலைமகன்

தோழியை

வாயில்வேண்ட அவள் புனல் ஆடியவாறு கூறிவாயில்

மறுத்தது

(பரிபாடல் – 16)

பதிற்றுப்பத்தில்,

‘கலன்அணிக’ என்று அவர்க்கு ஒன்பது காப்பொன்னும் நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக்கோ (ஆறாம் பத்து)

சங்க கால உரைநடை, செய்யுள் நடை போல் செறிவுடையதாகவும், அருஞ்சொற்கள் நிறைந்ததாகவும் உள்ளது. கற்றோர்க்கே எழுதியதாகக் காணப்படுகின்றது. ஆனால் இந்த உரைநடை அக்காலத்திலோ, அதற்குப் பிந்திய காலத்திலோ எழுதப் பட்டிருக்கலாம் என்ற கருத்துக்களும் உள்ளன.

சிலப்பதிகார உரைநடை தமிழின் முதல் காப்பியம் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம். இதன் பதிகத்திலேயே,

வாழ்த்து வரந்தரு காதையொடு

இவ்வா றைந்தும்

உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்

என்ற குறிப்பு வருகிறது. ‘உரை பெறு கட்டுரை’, ‘உரைப்பாட்டுமடை’ என்னும் பெயர்களோடு இக்காப்பியத்தில் இடைஇடையே உரைநடை இடம் பெற்றுள்ளது. தமிழ் உரைநடையின் ஆரம்ப வடிவத்தை நாம் சிலப்பதிகாரத்திலே காணலாம். இக்காப்பியத்தில் உரைநடை இரண்டு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

முதலாவது, கதை நிகழ்ச்சிகளை இணைப்பதற்காக.

இரண்டாவது, கதை நிகழ்ச்சிகளை விளக்கிக் காட்டுவதற்காக.

சிலப்பதிகாரக் கால உரைநடைக்குச் சான்றாக, கோவலன் கையிலிருந்து மாதவி யாழ் வாங்கியதை விளக்கும் பகுதியைக் காணலாம். ”ஆங்குக் கானல் வரிப்பாடல் கேட்ட மானெடுங்கண் மாதவியும், ‘மன்னும் ஓர் குறிப்புண்டு. இவன் தன்நிலை மயங்கினான், எனக் கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ்வாங்கித் தானும் ஓர் குறிப்பினள் போல், கானல் வரிப்பாடல் – பாணி, நிலத்தெய்வம் வியப்பெய்த நீள் நிலத்தோர் மனம் மகிழ, கலத்தோடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்குமன்.” – இதுவே அந்த உரைநடைப் பகுதி.

சிலப்பதிகாரத்தில் வந்துள்ள இசைத்தமிழ், நாடகத் தமிழ்ப் பகுதிகளில் உரைப்பகுதி வருவதால், முற்காலத்தில் இசைநாடகத் தமிழிலேயே உரைநடை முதன்முதலாகக் கையாளப் பட்டிருக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கட்டுரை காதை என்பதை ஒவ்வொரு காண்டத்தின் இறுதியிலும் நூலின் இறுதியிலும் காண்கிறோம். சான்றாக,

ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம்

முற்றிற்று

செங்குட்டுவனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த

வஞ்சிக்காண்டம்முற்றிற்று

இவற்றைக் காணும் போது உரைநடை போலவே காணப்படுகின்றன.

தமிழ் உரைநடையின் ஆரம்ப வடிவத்தைச் சிலப்பதிகாரத்தில்தான் தெளிவாக அறிகிறோம். இசை, நாடகத் தமிழில்தான் உரைநடை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் அறிகிறோம்.

பிற்கால உரைநடை

பிற்காலத்தில், சமண முனிவர்கள் உரைநடை, களவியல் உரைநடை, பாரத வெண்பா உரைநடை என்று அடையாளம் காணும் வகையில் மூன்று பிரிவு உரைநடைகள் இருந்தன.

சமணர் தோற்றுவித்த உரைநடை

பல்லவர் காலத்தில் வாழ்ந்த சமண முனிவர்கள் சிலர், தமிழையும் வடமொழியினையும் கலந்து எழுத முற்பட்டனர். இத்தகைய புதிய உத்தியை மணிப்பிரவாள நடை என்று கூறலாம். வைணவ உரையாசிரியர்கள் பிற்காலத்தில் பெரிதும் பின்பற்றிய மணிப்பிரவாள நடைக்கு, சமணர்கள் அன்றே வழிவகுத்தனர் என்று கொள்ளலாம். சமணர்கள் மணிப்பிரவாள நடையில் ஸ்ரீபுராணம், கத்திய சிந்தாமணி போன்ற வசன நூல்களை எழுதினர். ஆனால் சமணர்கள் முயற்சி முழுமையாக வெற்றி பெறவில்லை. ஆயினும் தமிழில் ஜ, ஸ, ஷ, க்ஷ, ஹ எனும் 5 கிரந்த எழுத்துகளின் ஓசை புகுந்து கலந்தன. அத்துடன் மிகுதியான அளவில் வடசொற்களும் கலந்து விட்டன என்று கூறலாம்.

களவியல் உரைநடை

இறையனார் அகப்பொருளுக்கு எழுந்த நக்கீரர் உரையே இன்று நமக்குக் கிடைத்துள்ள உரைநூல்களில் காலத்தால் முந்தியது. இது களவியல் உரை என்றும் அழைக்கப்படும். இதனுடைய காலம் கி.பி.எட்டாம் நூற்றாண்டாக இருக்கலாம். தமிழ் உரைநடை வரலாற்றில் இது சிறப்பிடம் பெற்று விளங்குகின்றது. சங்க காலத்தில் எழுந்த இறையனார் அகப்பொருளுக்குச் சங்கப் புலவராகிய நக்கீரரே முதன்முதலாக உரை கூறினார். பல ஆண்டுகளாகச் செவி வழிக் கேட்டுப் பின் ஏட்டுச் சுவடியில் எழுதப்பட்டது என்பன போன்ற செய்திகள் அந்நூலின் உரைப்பகுதியில் உள்ளன.

நக்கீரர், நூற்பாவுக்கு உரை கூறுமுன்னர்க் கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை என்னும் உரைக் கூறுபாடுகளை விளக்கி, அதன் பின்னர் அந்நூற்பாவுக்கு முறையே நான்கு வகை உரைகளையும் வகுத்துக் கூறியுள்ளார். களவியல் நூற்பாக்கள் அறுபதுக்கும் அவர் இம்முறையைக் கடைப்பிடித்துள்ளார்.

இறையனார் அகப்பொருள் உரையில், உரைநடை கீழ்க்காணும் தன்மைகளில் அமைகின்றது.

கவிதைப் பண்பு கொண்ட உரைநடை

எளிமையான உரைநடை

வினாவிடை முறையில் அமைந்த உரைநடை

இறையனார் களவியல் உரையில் அமைந்த உரைநடைக்குச் சான்றாக அந்நூலிலிருந்து ஒரு பகுதியைக் காணலாம். ”இனிப் பயன் என்பது ‘இது கற்க இன்னது பயக்கும்’ என்பது. ‘இது கற்க இன்னது பயக்கு மென்பதறியேன்; யான் நூற்பொருள் அறிவல்’ என்னுமேயெனின், ‘சில்லெழுத்தினால் இயன்ற பயனறியாதாய், பல்லெழுத்தினான் இயன்ற நூற்பொருள் எங்ஙனம் அறிதியோ பேதாய்’ எனப்படுமாகலின் இன்னது பயக்குமென்பது அறியல் வேண்டும்”.

”தமிழ் உரைநடையின் ஆரம்ப காலத்தை – கவிதை நிலையிலிருந்து உரைநிலைக்குத் தமிழ் மாறுகிற ஒரு காலப்பகுதியைக் களவியல் உரை காட்டுகிறது” என்பார் மு.வரதராசன். இவ்உரைநடை பற்றி அ.மு.பரமசிவானந்தம் கூறும்போது, ”இக்களவியல் உரை தமிழ் உரைநடை வளர்ச்சியில் ஒரு மைல் கல்…. அடுத்து வரப்போகின்ற பெரிய உரையாசிரியர்க்கெல்லாம் வழிகாட்டியாகவும், மணிப்பிரவாள நடைக்கு வித்திட்டதோ என்னுமாறும் இவ்வுரை செல்கிறது” என்பார்.

தமிழின் உரைநடையை இறையனார் களவியலே தெளிவாகக் காட்டுகிறது. கவிதையும், எளிமையும் கலந்த நடை, வினா-விடையில் அமைந்த நடை என இறையனார் களவியல் உரையின் தன்மைகள் அமைகின்றன.

பாரத வெண்பா உரைநடை

பெருந்தேவனார் என்பவரால் எழுதப்பட்ட பாரத வெண்பா கி.பி.9ஆம் நூற்றாண்டில் எழுந்தது என்பர். இப்பாரதம் குறைப்பிரதியாகக்  கிடைத்துள்ளது என எஸ்.வையாபுரிப் பிள்ளை கூறுவார். பாரத வெண்பாவின் உரை, இறையனார் அகப்பொருள் உரையைக் காட்டிலும் தெளிவும் சொல்சுருக்கமும் உடையதாக விளங்குகின்றது. வடமொழிச் சொற்கள் அதிகம் கலந்து வருகின்றன. ”இவ்வகை காவலர் சொல்லக் கேட்டு மிகவும் பிரியப்பட்டுக் கதுமெனக் கோவிலுட் புகுந்து வில்லென வளைந்து விரிகுடையுங் கோலும் ஊன்றிமெல்லெனச் சென்ற பிராமணனைக் கண்டு கன்னன் எதிர் சென்று அர்க்கிய பாத்தியங் கொடுத்து…” என்னும் உரைநடைப் பகுதி பாரத வெண்பா உரையின் எளிய நடையைக் காட்டுகிறது.

எளிமை, சொல்சுருக்கம், வடமொழிக் கலப்பு என்னும் தன்மைகள் அமைந்த உரைநடையே பாரத வெண்பா உரையின் நடையாகும்.

உரையாசிரியர்களின் உரைநடை

கி.பி.பத்தாம் நூற்றாண்டு முதல் கி.பி.பதினேழாம் நூற்றாண்டு வரை உள்ள காலப்பகுதி உரையாசிரியர்கள் காலம் எனப்படுகின்றது. அதாவது இளம்பூரணர் காலந்தொடங்கி நச்சினார்க்கினியர் வரை உள்ள காலப்பகுதி இவ்வாறு சுட்டப்படுகின்றது. தமிழ் உரைநடை மிகச் சிறப்பாக வளர்ச்சியுற்ற காலம் அதுவாகும். பெருமன்னர்கள் தமிழகத்தில் தோன்றி ஆட்சி புரிந்ததும், வணிகம் செழித்ததும், அரசியல் தத்துவ ஆராய்ச்சி, நூலாராய்ச்சி பெருகியதும் உரைநடை இக்காலத்தில் சிறந்து வளரக் காரணங்கள் ஆயிற்று. மொழி வளர்ச்சியால் பழைய நூல்களைப் புரிந்து கொள்வதில் கடினம் ஏற்பட்டது. அதனால் உரையாசிரியர்கள் தோன்றி உரை எழுதும் சூழலும் ஏற்பட்டது.

இளம்பூரணர் உரைநடை உரையாசிரியர்களில் காலத்தால் முந்தியவர் இளம்பூரணர். இவரை உரையாசிரியர் என்ற பெயரிலும் அழைப்பர். மேலும் இளம்பூரணரும் மணக்குடவரும் ஒருவரே என்று தி.வை.சதாசிவ பண்டாரத்தார் கூறுவார். மு.அருணாசலம் இளம்பூரணர் காலம் கி.பி.1070 முதல் கி.பி.1095 வரை இருக்கலாம் என்பார். இளம்பூரணர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை வரைந்துள்ளார். இளம்பூரணர், பொதுவான ஒரு நெறியை உரை முழுவதும் மேற்கொண்டுள்ளார் என்று கூறலாம். அதிகார விளக்கம், இயல் பற்றிய சுருக்கம், நூற்பா நுதலும் பொருள், தெளிவுரை, சொல்தொடர் விளக்கம், மேற்கோள் விளக்கம் என்ற பொது அமைப்பு அவர் உரையில் காணப்படும்.

உரைச்சிறப்பு

”இச்சூத்திரத்துள் ஒழிய என்னும் வினையெச்சம் எவ்வாறு முடிந்தது எனின், அது பாத்திய என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது. அப்பெயரெச்சம் பண்பு என்னும் பெயர் கொண்டு ஐந்திணை என்னும் எழுவாய்க்குப் பயனிலையாகி நின்றது என உரைப்ப” – இது இளம்பூரணரின் உரைநடை வரிகளாகும்.

பெயர் சுட்டாது உரை கூறுதல், அடக்கமாக உரை சொல்லுதல், ஒன்றிற்கு ஒன்று தொடர்பு காணல், நினைவு கூர்தல், பின்நோக்கிப் பார்த்து உரை கூறல், பொருத்திக் காட்டுதல், தாமே வினா எழுப்பி விடை காணுதல் என்பன அவரது உரைநடைத் தன்மையில் காணப்படுவதாக இளம்பூரணர் உரை என்னும் நூலில் முனைவர் சா.கிருட்டிணமூர்த்தி குறிப்பிடுகிறார்.

சேனாவரையர் உரைநடை தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரை வகுத்தவர் சேனாவரையர். இவர் திருநெல்வேலியிலுள்ள ஆற்றூரைச் சார்ந்தவர் என்பர். இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. சேனாவரையர் என்ற தொடர் படைத் தலைவர் என்று பொருள்படும். இவர் உரையில் யானை, போர்ப்பொருள்கள் பற்றிய சொற்கள் அதிகம் வருகின்றன. இவர் வடமொழி, தமிழ்மொழி இரண்டிலும் வல்லுநராக விளங்கினார்.

உரைச்சிறப்பு

சேனாவரையர் உரைநடை, மாணாக்கருடன் நேரில் பேசுவது போல் அமைந்து காணப்படும். வினாக்களை எழுப்பி விடை கூறிச் செல்லும் முறையில் உரையை எழுதியுள்ளார். பொதுவாகத் தருக்க நடையில் உரை காணப்படும்.

‘என்சொல்லியவாறோ எனின்’, ‘அறியாதானை உணர்த்துமாறு என்னை’, ‘கூறிய கருத்து என்னை எனின்’ என்பன சில எடுத்துக் காட்டுகளாம்.

வடமொழிப் புலமை மிக்க காரணத்தால் தமிழில் வடமொழி இலக்கணக் கொள்கையைத் திணிக்கும் போக்கு இவரிடம் காணப்படுகின்றது. வடமொழிச் சொற்களை மிகுதியாகப் பயன்படுத்துவதையும் காணலாம்.

உரைநடை வரலாற்றில் பிறர் உரைகளை மறுத்தெழுதும் போக்கு இவரிடமிருந்து உரைநடை வரலாற்றில் தொடங்கக் காணலாம். இளம்பூரணரை ஐம்பது இடங்களில் மறுத்து உரை எழுதியுள்ளார் சேனாவரையர்.

சேனாவரையர் நடை கடுமையானது. இரும்புக் கடலை என்று அவர் உரையைக் கூறுவர். இவரது உரைநடை போன்றே அண்மைக் காலத்தில் வாழ்ந்த மறைமலை அடிகளார் நடை அமைந்திருந்தது என உரைநடை ஆய்வாளர் கூறுவர்.

பேராசிரியர் உரைநடை பேராசிரியர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியதாகக் கூறுவர். இன்று மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுளியல், மரபியல் ஆகியவற்றிற்கு மட்டுமே இவர் உரை கிடைத்துள்ளது. இவர் குறுந்தொகை, திருக்கோவையார் ஆகிய நூல்களுக்கும் உரை எழுதியதாகக் கூறுவர். ”அவர் காலத்தில் அவரைப் போன்ற பெருமை உடைய ஆசிரியர் இல்லாததால் தான், அவருக்குப் பேராசிரியர் என்ற சிறப்புப் பெயர் வழங்கியது” என்று தம் உரைநடை வரலாறு என்ற நூலில் வி.செல்வநாயகம் கூறுவார்.

உரைச்சிறப்பு

பேராசிரியரின் உரைநடை இளம்பூரணரைப் பின்பற்றியதாகத் தெரிகிறது. இவரது நடை சிறு சிறு வாக்கியங்களைக் கொண்டது. ஆனால் விளக்கம் மிகுந்தது.

பேராசிரியர் தம் உரைநடையில் புதிய வழக்குகளையும் பயன்படுத்தியுள்ளார். இவரது நடையில் இலக்கியத் திறனாய்வு நெறிகளையும் காணலாம்.

பரிமேலழகர் உரைநடை திருக்குறளுக்கு உரைவகுத்த ஆசிரியர்களுள் சிறந்தவர் பரிமேலழகர். இவர் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். காஞ்சிபுரத்து அந்தணர் மரபினர். வடமொழியும் தமிழும் கற்றவர். வைணவ சமயத்தினைப் பின்பற்றியவர். திருக்குறளுக்கும், பரிபாடலுக்கும் இவர் இயற்றிய உரை கிடைத்துள்ளது. திருமுருகாற்றுப்படைக்கு இவர் உரை எழுதியதாகக் கூறுவர்.

உரைச்சிறப்பு

பரிமேலழகர் உரைநடை மிகுந்த சொல்செறிவும், சுருக்கமும் கொண்டது. தேவையற்ற சொற்களை இவர் உரைநடையில் பயன்படுத்துவதில்லை.

மேற்கோளாகக் காட்டும் செய்யுளையும் உரைநடையாகவே பரிமேலழகர் எழுதுவது வழக்கம். வடமொழிக் கருத்துகளை மேற்கோளாகக் காட்டுவார். இவரது உரைநடையில் இலக்கணக் குறிப்புகள் காணப்படும்.

அடியார்க்கு நல்லார் உரைநடை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியுள்ளார். இவர் வடமொழியிலும் தமிழிலும் புலமைமிக்கவர். அக்காலத்திய இசைத் தமிழ், நாடகத் தமிழ் நூல்களைப் பற்றிய செய்திகளை இவரது உரைநடை மூலமே நாம் அறிகிறோம்.

உரைச்சிறப்பு

அடியார்க்கு நல்லார் உரைநடை ஓசைப் பண்பைக் கொண்டதாக அமைகின்றது. பல இடங்களில் உணர்ச்சிக் கலப்பு உள்ளதாகவும் அமைகின்றது. உணர்ச்சியை வெளிப்படுத்தும் உரைநடை அடியார்க்கு நல்லார் உரைநடையில் இருந்து துவங்குகிறது எனலாம்.

நச்சினார்க்கினியர் உரைநடை ‘உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ எனக் கற்று அறிந்த சான்றோர்களால் பாராட்டப்படுபவர் நச்சினார்க்கினியர். இவர் மதுரையைச் சார்ந்தவர் என்பர். பண்டைத் தமிழ் நூல்கள் பலவற்றுக்கு உரை வரைந்தவர் நச்சினார்க்கினியர். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, குறுந்தொகையில் இருபது பாக்கள், சீவக சிந்தாமணி ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். இதனால் இவரை உரை வேந்தர் என அழைப்பர்.

உரைச்சிறப்பு

இலக்கணத்திற்கும், இலக்கியத்திற்கும் சிறந்த உரையைப் படைத்த நச்சினார்க்கினியர், பிற உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டாத சான்றுகளை எடுத்துக் கூறியுள்ளார். இவரது உரைநடை உதாரணங்கள் நிறைந்த உரைநடையாக அமைய இதுவே காரணம்.

நச்சினார்க்கினியர் உரைநடையில், கல்வி காரணமாக அவருக்கு உண்டான பெருமிதத்தைக் காணலாம். கம்பீரமான உரைநடை அவருடையது. ”நச்சினார்க்கினியரிடமிருந்தே சிறந்த உரைநடை தொடங்கிற்று” என்று உ.வே.சாமிநாதய்யர் கூறுவார்.

தெய்வச் சிலையார் உரைநடை தொல்காப்பியத்தில் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதியவர் தெய்வச் சிலையார். வடமொழி இலக்கண அறிவு மிகுந்தவர்.

உரைச்சிறப்பு

உரைநடையில் புதிய சிந்தனைகளையும், விளக்கங்களையும் தந்தவர் தெய்வச்சிலையார்.

விளங்காத பகுதிகளை விளங்கவில்லை என்று குறிப்பிடுவது ஒரு புதுமையாகும். இவர் உரை விருத்தியுரை எனப் பெயர் பெற்றிருந்தது.

பிற உரையாசிரியர்கள் உரைநடை பிற உரையாசிரியர்களில் சங்கர நமச்சிவாயர் சிறப்பு மிகுந்தவர். திருக்குறளுக்கு உரை எழுதிய காலிங்கரும், பரிதியாரும், மயிலை நாதரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

சங்கர நமச்சிவாயர் உரைநடை

சங்கர நமச்சிவாயர் திருநெல்வேலியில் பிறந்தவர். சைவ வேளாள மரபினர். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நன்னூலுக்கு இவர் எழுதிய உரையே தலை சிறந்தது என்று அ.தாமோதரன் அவர்கள் தம்முடைய நூலில் குறிப்பிடுகிறார்.

உரைச்சிறப்பு

சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்கு இயற்றியது விருத்தியுரையாகும். மேலும் எல்லா நூற்பாக்களுக்கும் இவரே கருத்துரை எழுதி உரைநடைக்கு வளம் சேர்த்துள்ளார்.

ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துத் தன் உரைநடையை வளப்படுத்தியுள்ளார். அகராதி போல் சொற்களுக்கு விளக்கம் தருவது இவர் உரைச்சிறப்பு. அதேபோல் நன்னூல் உரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட உவமைகளைக் கூறுகிறார். இவரது உரைநடை உவமை உரைநடை என்னும் அளவிற்கு அமைந்துள்ளது.

பிறர்

திருக்குறளுக்கு உரை எழுதியவர் காலிங்கர். பாட பேதங்களைச் சுட்டுதல், பெரும்பான்மை கேளாய் நெஞ்சே என அழைத்து உரை அமைத்தல் ஆகியவை இவருடைய உரைநடைத் தன்மைகளாகும்.

பரிதியார் திருக்குறளுக்கு உரை எழுதியவர். வடசொற்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட உரைநடை இவருடையது. சொல்லாட்சி மிகுந்த உரைநடையே இவர் சிறப்பு.

மயிலைநாதர் நன்னூலுக்கு உரை வகுத்தவர். எதுகை, மோனை நயம்பட இவருடைய உரைநடை விளங்கும். ஐம்பெருங்காப்பியம் என்ற சொல்லாட்சியை முதன்முதலில் வழங்கியவர் இவரே.

மணிப்பிரவாள உரைநடை

நாலாயிரத் திவ்விய பிரபந்தம் வைணவர்க்கு வேதமாகும். வைணவ உரையாசிரியர்கள் இந்நூலுக்கு எழுதிய உரை மணிப்பிரவாளம் என்று வழங்குகிறது. முத்தும் பவளமும் கலந்து கோத்த மாலை போல (மணி: முத்து; பிரவாளம்: பவளம்) வடசொல்லும் தமிழ்ச் சொல்லும் கலந்து எழுதிய உரைநடை என்பது பொருள். வைணவ உரையாசிரியர்களின் வடமொழிப் புலமையும், மோகமும் மணிப்பிரவாள நடை தோன்றிய காரணங்களில் ஒன்றாகும்.

மணிப்பிரவாளத்தின் சிறப்பு நம்மாழ்வாரின் திருவாய் மொழி உரைக்கு முதலில் மணிப்பிரவாள நடை தோன்றியது. தொடர்ந்து திவ்விய பிரபந்தம் முழுவதுக்கும் உரை வகுக்கப்பட்டது.

ஆழ்வார்களின் பாடலுக்கு உரை இயற்றிய வைணவப் பெரியோர்கள் தாம் கற்ற கலைகள் அனைத்தையும் தம் உரைகளில் வழங்கிச் சென்றுள்ளனர்.

வைணவ உரையாசிரியர்களின் உரைநடை பேச்சு நடையில் அமைந்தது. கொச்சை வார்த்தைகள் நிறைந்தது. கணக்கற்ற பழமொழிகள், மரபுத் தொடர்கள், நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றை இவர்கள் உரைநடையில் காணலாம்.

திருக்குருகைப் பிரான்பிள்ளான், நஞ்சீயர், நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, மணவாள மாமுனிகள் எனப் பலர் மணிப்பிரவாள உரைநடையில் எழுதினர். இவர்களில் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான (உரை) சக்கரவர்த்தி என்றழைக்கப்படுகிறார்.

பெரியவாச்சான் பிள்ளையின் மணிப்பிரவாள நடைக்குச் சான்றாக,

”ஆஸ்ரிதர்க்குத் தஞ்சமான ஸௌலப்யத்தையும் மிடுக்கையுங் கண்டால் நீரிங்ஙனே அஞ்சக் கடவீரோ? என்ன, அது என்னால் வருகிறதன்று, உன் வடிவின் வைலக்ஷண்யத்தாலே வருகிறது” என்ற பகுதியை அறிவதன் மூலம், மணிப்பிரவாள உரை நடையின் தன்மையை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

வைணவ உரையாசிரியர்களின் உரையில், ஒரு பாடலுக்கு உரைகேட்டு விட்டால் மனம் வேறு ஒன்றில் செல்லாது என்பார் உ.வே.சாமிநாதய்யர்.

தொகுப்புரை

மொழியின் வளர்ச்சிக்குக் காரணமாக அமையும் உரைநடை, தமிழ் மொழியிலும் கவிதையுடன் பிறந்தது. அதற்கு உரைகூறும் விதமாக வளர்ந்தது. தொடக்க கால உரைநடை, கவிதையிலிருந்து பெரிதும் வேறுபடாமலிருந்தது.

கல்வெட்டுகளில் எழுதப்பட்ட உரைநடை மக்கள் பேசும் பேச்சு மொழியிலேயே அமைந்திருந்தது. சிறுசிறு வாக்கிய அமைப்புகளுடன் உரைநடை அமைந்திருந்தது.

தொல்காப்பியம் உரைநடைக்கு இலக்கணம் வகுத்தது. நான்கு வகை உரைநடைகளைக் கூறியது.

சங்க காலத்தில் செய்யுள்களின் கீழ், செய்யுளைப் புரிந்து கொள்ளும் விதமான குறிப்புகள் உரைநடையில் எழுதப்பட்டன. அந்த உரைநடை கற்றோர் மட்டுமே அறியும்படி அமைந்திருந்தது.

உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக அமைந்த சிலப்பதிகாரந்தான் தமிழ் உரைநடையின் ஆரம்ப வடிவத்தைக் காட்டுகிறது. இசை, நாடகப் பகுதிகளில்தான் உரைநடை மிகுதியாக உள்ளதால், இசை, நாடகத்தை ஒட்டியே உரைநடை பிறந்திருக்கலாம் என்பர்.

உரை என்னும் முறையில் சிறப்புப் பெற்ற இறையனார் களவியல் உரை, கவிதையிலிருந்து உரைநடை வேறுபட்டது என்பதை உணர்த்தும் முதல் நூலாகும். வினா-விடை நடையில் உரைநடையின் தன்மை அமைந்துள்ளதையும் காணலாம். இதேபோல் பாரத வெண்பா உரைநடையும் எளிமையுடன் அமைந்துள்ளது.

உரையாசிரியர்கள் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர்.

இளம்பூரணர் உரைநடை – நூற்பா விளக்கம், தெளிவுரை, தொடர் விளக்கம், மேற்கோள் விளக்கம் என்னும் சிறப்புக்கள்.

சேனாவரையர் உரை – மாணவர்களுடன் நேரில் பேசுவது போல் அமைந்த கடுமையான உரைடை.

பேராசிரியர் உரைநடை – சிறு சிறு வாக்கியங்களில் அமைந்தது.

பரிமேலழகர் உரைநடை – தேவையற்ற சொற்கள் இல்லாத தன்மை.

அடியார்க்கு நல்லார் உரைநடை – உணர்ச்சி மிகுந்த தன்மை.

நச்சினார்க்கினியர் உரைநடை – சான்றுகள் நிறைந்த தன்மை.

தெய்வச்சிலையார் உரைநடை – புதிய சிந்தனைகள் தரும் தன்மை.

சங்கரநமச்சிவாயர் உரைநடை – மேற்கோள்கள் நிறைந்த தன்மை

தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடை பிற்காலத்தில் வைணவ உரையாசிரியர்களால் வளர்ந்தது. சமணர்கள் நடையும் தொடக்கத்தில் மணிப்பிரவாள நடையாக அமைந்தது.

தொன்மைக் கால உரைநடை இவ்வாறான தன்மைகளுடன், மேலைநாட்டார் வந்த காலம் வரை அமைந்திருந்தது.

பாடம் - 6

தற்கால உரைநடைத் தன்மைகள்

பாட முன்னுரை

அன்பார்ந்த மாணவர்களே! தமிழ் இலக்கிய வரலாற்றில் உரைநடைக்குச் சிறப்பிடம் உண்டு. தொன்மைக் காலத்தில் உரைநடை முழு வளர்ச்சியின்றி இருந்தது. செய்யுளின் கையைப் பிடித்துத் தளர்நடையிடும் குழந்தையாய்க் காட்சியளித்தது. உரையாசிரியர்கள் செய்யுளுக்கு எழுதிய உரைகள், உரைநடைக்கு உரமிட்டன. உரைநடை வளர்ந்து கவிதையைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டது. இன்று எந்த ஒரு கருத்தை விளக்க வேண்டுமென்றாலும் அது உரைநடையிலேயே விளக்கப்படுகின்றது. இலக்கணமும், வடிவமும் பெற்று விளங்கிய கவிதை கூட உரைநடை வடிவமும், தன்மையும் பெற்று இன்று எழுதப்படுகின்றது. இதற்கு வித்திட்டது மேலைநாட்டார் வரவு என்பது உண்மையாகும். இப்போது தற்கால உரைநடைத் தன்மைகள் என்னும் தலைப்பில், மேலைநாட்டார் வரவால் உரைநடை பெற்ற வளர்ச்சி, அச்சு இயந்திரத்தின் வரவால் உரைநடையின் எழுச்சி, பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை உரைநடை பெற்றிருக்கும் சிறப்புத் தன்மைகள் ஆகியவற்றைப் பயில இருக்கின்றீர்கள். இதன் மூலம் காலங்காலமாய் உரைநடை எவ்வாறு வளம் பெற்று வளர்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்வீர்கள்.

ஐரோப்பியர் காலம்

தமிழ் உரைநடை வரலாற்றில் கி.பி.பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள காலப்பகுதி ஐரோப்பியர் காலம் எனப்படும். கிறித்தவ சமயப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் ஐரோப்பியர் தமிழ்நாட்டிற்கு வந்தனர். ஆனால் அவர்கள் தமிழ் மொழிக்கும், தமிழ் உரைநடைக்கும் செய்த தொண்டே மிகப் பெரியதாகும். சமயம் பரப்பும் நோக்கில் தமிழைப் படித்த ஐரோப்பியர், அதன் இனிமையில் மயங்கினர். ஆய்வு நோக்கில் மொழியை வளப்படுத்தினர். தமிழ் எழுத்து வடிவில் இருந்த குறைபாடுகளை நீக்கினர். பண்டிதரே படித்தறிய முடிந்த உரையாசிரியர்களின் உரைநடையை மாற்றினர். சிறுசிறு வாக்கியங்களில் மக்கள் பேசும் மொழியில் ஐரோப்பியர் எழுத ஆரம்பித்தனர். அதன் பயனாகத் தமிழுக்கு ஒரு புதிய உரைநடை கிடைத்தது.

அச்சு இயந்திரமும் அச்சேறிய நூல்களும் தனிநாயகம் அடிகளார் 1958 சூலையில் வெளியான Tamil Culture (Vo.VII. No.3. July 1958, P.293) என்னும் ஆங்கிலம் முத்திங்கள் இதழில் தமிழில் அச்சேறிய முதல் நூல் என்னும் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். அதில் போர்த்துக்கீசிலிருந்து வந்த குருக்களே தமிழ் நூல்களை அச்சிடுவதற்குத் தமிழ் அச்சுப் பொறிகளை உருவாக்கிப் பதினாறாம் நூற்றாண்டிலே தமிழ் நூல்களை அச்சிட்டனர்’ என்கிறார். அவர் லிஸ்பன் நகரில் 1554இல் அச்சிடப்பட்ட கார்த்தில்யா (Carthilha) என்ற நூலே முதல் தமிழ் நூல் என்பார். இந்நூலில் தமிழ் எழுத்துகள் கையாளப்படாமல் உரோமருடைய எழுத்துகள் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்குக் கையாளப் பெற்றிருந்தன. இது 36 பக்கங்களை உடையது. இந்த உரைநடை நூலில் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தின் வழிபாட்டு முறைகளும், செபங்களும் அடங்கியுள்ளன.

தமிழில் இரண்டாவதாக அச்சேறிய நூல் தம்பிரான் வணக்கம். இது 1577ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் நாள் கேரளாவிலுள்ள கொல்லம் என்னும் இடத்தில் அச்சிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பக்கங்கள் உள்ளன. 1579இல் கொச்சியில் அச்சிடப்பெற்ற கிரிசித்தியானி வணக்கம் என்னும் நூல் மூன்றாவதாக அச்சிடப்பட்ட நூலாகும். இது மொத்தம் 120 பக்கங்களைக் கொண்டது.

தத்துவ போதக சுவாமிகள் தமிழில் புதிய உரைநடையைத் தொடங்கி வைத்தவராகத் தத்துவ போதக சுவாமிகளைக் குறிப்பிடுவார் வி.செல்வநாயகம் அவர்கள். இத்தாலியிலிருந்து கி.பி.1606ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்தார். மதுரையில் தங்கிக் கிறித்தவ சமயப் பிரச்சாரம் செய்தார். தமிழ், வடமொழி இரண்டிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். சுமார் ஐம்பது ஆண்டுகள் அவர் தமிழகத்தில் வாழ்ந்திருந்தார்.

தத்துவக் கண்ணாடி, இயேசு நாதர் சரித்திரம், ஞானதீபிகை, பிரபஞ்ச விநோத வித்தியாசம் முதலிய பல நூல்களைத் தத்துவ போதகர் எழுதினார். இவை சமயப் பிரச்சார நூல்களாக அமைந்தாலும், ஒரு புதிய உரைநடைப் போக்கைக் கொண்டதாக அமைந்தன.

பேச்சு வழக்கும், வடமொழியும் கலந்த தத்துவ போதகரின் உரைநடைக்குச் சான்றாக ”ஆதி மனுஷனையும் அவனுக்குத் துணையாகக் கற்பித்தருளின ஸ்திரீயையும் பரிபூரண செல்வங்களைப் பொழிந்திருக்கிறவொரு ஸ்தலத்திலே நிறுத்தி…..” எனவரும் பகுதியைச் சொல்லலாம். வடசொல் கலந்து பேசும் உயர் வகுப்பினர் பாதிப்பில், கிறித்துவப் பாதிரியார்களும் வடசொல் கலப்புடன் உரைநடை எழுதினர்.

வீரமாமுனிவர் பெஸ்கி அடிகளார் எனப்படும் வீரமாமுனிவர் இத்தாலியைச் சேர்ந்தவர். கி.பி.1710ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். அவரது வாழ்க்கை முறையே ‘தமிழர்’ போல மாறியது. சுப்ரதீபக் கவிராயர் போன்ற பெரும் புலவர்களுக்கு உதவி செய்து, தமிழ் கற்றார்.

தமிழின் முதல் அகராதியான சதுரகராதி 1732இல் வீரமாமுனிவரால் தொகுத்து வெளியிடப்பட்டது. தமிழ் இலத்தீன் அகராதியையும் படைத்தார்.

தொன்னூல் விளக்கம், கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தேம்பாவணி, கித்தேரியம்மாள் அம்மானை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களை வெளியிட்டார். லூத்தேர் இனத்தார் இயல்பு, வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம் போன்ற உரைநடை நூல்களையும், பரமார்த்த குருகதை போன்ற கதைகளையும் எழுதினார்.

வீரமாமுனிவர் உரைநடை இரண்டு வகையாக அமைகின்றது. அவை,

(1) பேச்சு வழக்குத் தமிழில் எழுதப்பட்டது. இந்நடை வேதியர் ஒழுக்கம் நூலில் அமைகின்றது.

(2) உரையாசிரியர்கள் கையாண்ட நடையைப் பின்பற்றி எழுதப்பட்டது. இதற்குச் சான்றாகத் தொன்னூல் விளக்கம் நடை அமைகின்றது.

இருவகை உரைநடையில் எழுதினாலும் பெரும்பாலும் ஒரு புதிய உரைநடை வகையினை வீரமாமுனிவர் முதன் முதலில் கையாளத் தொடங்கினார். சான்றாகப் பரமார்த்த குருகதை உரைநடையைக் காட்டலாம்.

”அவிவேக பூரண குருவென்று ஒரு ஆசாரியரிருந்தார். அவர் ஏவிய ஊழியம் செய்யும்படி மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்ற பெயர் பெற்ற சீஷர்கள் ஐந்துபேர் அவர் மடத்திலிருந்தார்கள்.”

வீரமாமுனிவர்

சீகன்பால்கு ஜெர்மனியரான சீகன்பால்கு 1706இல் இந்தியா வந்தார். தரங்கம்பாடியில் 13 ஆண்டுகள் வாழ்ந்தார். தன் பணிகள் பற்றிய விபரங்களை நாட்குறிப்பாக எழுதி வைத்தார். ஐரோப்பியர்கள் தமிழ் மொழியின் சிறப்பு அம்சங்களை அறிந்து கொள்ள வித்திட்ட முதல் வித்தகர் சீகன்பால்கு அவர்கள்.

1716இல் தமிழ் மொழி இலக்கணம் என்னும் நூலை சீகன்பால்கு எழுதினார். 128 பக்கங்களையுடைய இந்நூல், தமிழ் மொழியைப் பிற மொழியினர் கற்க உதவியது.

1708இல் தமிழில் உரைநடை, செய்யுள் அகராதியை எழுதி வெளியிட்டார்.

மருத்துவக் குறிப்புகள், சீதோஷ்ண நிலை எனப் பல அறிவியல் குறிப்புகளையும் எழுதி வைத்தார்.

சீகன்பால்குவின் உரைநடை, கல்வெட்டுகளில் அமைந்த உரைநடையைப் பின்பற்றியதாக இருந்தது. இலக்கண நடை தழுவாது மக்கள் பேச்சில் உள்ள மொழியை அப்படியே பின்பற்றினார். மிக நீண்ட வாக்கியங்களை அமைத்து எழுதினார். சான்றாக, ”இதற்கிடையிலெ,  அவரதானெ இந்தப் பிறையாசங்களை யுந, தமது நித்திய சுவசெஷத்தையும் பொதுவாகவும், பிரதானமாகத் தமிடபடுத்தப்பட்ட புதிய ஏற்பாட்டின் இந்தப் பொத்தகங்களையும், அதுகளுனக்குச் சீவியத்துக்கான…..” என அமைகின்றது.

பெப்ரிஷியஸ் ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் அருட்பணி புரிந்தவர் பெப்ரிஷியஸ். 1740இல் ஜெர்மானியிலிருந்து இந்தியா வந்தார். பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.

பெப்ரிஷியஸ் இடையறாது எழுதி வந்தார். அவரது பணிகள் இவ்வாறு அமைகின்றன.

(1) விவிலிய மொழிபெயர்ப்புப் பணி

(2) அகராதிப் பணி

(3) ஞானப்பாட்டுகள் (தொகுப்பு மற்றும் மொழி பெயர்ப்பு)

(4) இலக்கணப் பணி

(5) அருளுரைகள்

பெப்ரிஷியஸ் செய்த மொழிபெயர்ப்பு, நுணுக்கமாகச் செய்யப்பட்ட சொல்வழி மொழிபெயர்ப்பு ஆகும். நடையை விடக் கருத்தே முதன்மையாகக் கொண்டார். ‘இவரது நடையைப் பின்வந்தவர்களும் பின்பற்றியதால், கிறித்தவத் தமிழ் நடை ஒன்று உருவானது. இதற்குக் காரணம் பெப்ரிஷியசே.’ என்பார் சபாபதி குலேந்திரன் என்ற ஆய்வாளர்.

பெப்ரிஷியஸின் அருளுரைகள் என்ற நூலின் உரைநடை மிகச் சிறப்பாக அமைந்து உள்ளது என்பார் தி.தயானந்தன் பிரான்சிஸ்.

தமிழ் வசன நடையில் வெளிவந்த மிகப் பெரிய நூல் பெப்ரிஷியஸ் எழுதிய பழைய ஏற்பாட்டு மொழி பெயர்ப்பு என்பதாகும். பெப்ரிஷியஸ் தமது புதிய ஏற்பாட்டுக்கு எழுதிய முகவுரை, அவரது உரைநடைத் தன்மைக்குச் சான்றாக அமைகிறது. ”கர்த்தராகிய பராபரன் மகா இரக்கமாய்ச் சர்வ மனுஷ சாதிக்கும் பரமண்டலத்திலிருந்து அனுப்பின தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்கிற உலக இரட்சகருடைய சுவிசேஷத்தை விளங்கப் பண்ணும் இந்தப் புஸ்தகத்தை வாசிக்கிற யாவருக்கம் பாக்கியம்…..’

பிற ஐரோப்பியர் ஹென்றி பவர் ஒரு யூரேசியர் ஆவார். இவர் சீவகசிந்தாமணி ‘நாமகள் இலம்பகத்தை’ உரையுடன் வெளியிட்டார். வேத அகராதி உட்பட ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது நடை ஆங்கிலக் கலப்புடன் அமைந்தது. ஐரோப்பிய மொழிகளின் வாக்கிய அமைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தார்.

கால்டுவெல் திராவிட மொழிகளின் தந்தை எனக் கருதப்படுபவர். இவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதினார். இவரது நடை பேச்சு வழக்கிலமைந்த தெளிவான எளிமையான தமிழ் நடையாகும்.

ஜி.யு.போப் தமிழ் செய்யுட் கலம்பகம் என்ற தொகுப்பு நூலை வெளியிட்டார். கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரது நடையும் பேச்சு வழக்கில் அமைந்ததாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை

17, 18ஆம் நூற்றாண்டுகளில் மேலை நாடுகளிலிருந்து சமயம் பரப்ப வந்த துறவியர் தமிழ் கற்றனர்; உரைநடை நூல்களைப் படைத்தனர். பேச்சு மொழியிலும், ஆங்கிலக் கலப்பிலும் அந்த உரைநடைகள் அமைந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் கிறித்துவ சமய உரைநடை நூல்களே அதிகம் வெளியாயின. முகம்மதியர் நூல்கள் பெரும்பாலும் மொழிபெயர்ப்பாகவே அமைந்தன. ஆங்கில அரசு 1835இல் அச்சகம் வைத்துக் கொள்ளும் அனுமதியை இந்தியர்களுக்குத் தந்தது. உரைநடை உற்சாகம் பெற்றுப் புதிய பாதை கண்டது. ஆனாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை கூடப் பனையோலைகளும், அச்சு நூல்களும் ஒரே சமயத்தில் நிலவி வந்தன. தமிழறிஞர்கள் பலர் உரைநடையின் பக்கம் கவனத்தைத் திருப்பினர். அவர்களில் சிலரின் உரைநடைப் போக்கினைக் காண்போம்.

ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் தமிழ் உரைநடை வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். உரைநடையின் தந்தை என்றும் பாராட்டப்படுபவர். நாவலர் காலம் கிறித்துவ சமயப் பிரச்சாரம் எழுச்சி பெற்றிருந்த காலம். அதனால் சைவரான நாவலர் தம் சமயமான சைவத்தைப் பரப்பப் பொதுமக்களுக்கும் புரியும் எளிய நடையில் உரைநடை படைத்தார்.

பெரியபுராண வசனம், திருவிளையாடற்புராண வசனம், பாலபாடம், நன்னூற் காண்டிகை உரை, சைவசமய நெறியுரை எனப் பல நூல்களை அவர் படைத்தார்.

இலக்கணப் பிழை இல்லாமல், சிறு சிறு வாக்கியங்களில் எழுதுதல்; மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படி எழுதுதல் என்பது நாவலருக்குக் கைவந்த கலை.

”சிறு சிறு வாக்கியங்களின் திட்பம், அவை கோவையாகப் பத்தி பத்தியாக ஒற்றுமை நயம்பட்டு விளங்கும் நுட்பம், கட்டுரை முழுவதும் ஒரு பொருளாய் அமையும் இனிமை, கருத்தின் தெளிவு, சொற்களின் எளிமை, அழகு இலக்கண நயம் – இவை எல்லாம் இவரது உரைநடையில் காணலாம்’ எனத் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தம்முடைய நீங்களும் சுவையுங்கள் என்ற நூலில் பாராட்டுவார்.

நாவலரின் எளிய நடைக்குச் சான்றாகக் கீழ்க்காணும் பகுதி அமைகின்றது.

”சில நாள் கழிந்த பின், சோழராசன், வரகுண பாண்டியனோடு போர் செய்யக் கருதித் தன் சேனையோடு வந்து, மதுரையை அணுகினான். வரகுண பாண்டியன், அஃதறிந்து, தன் சேனையோடு எதிர்ந்து பொருதான்.”

இராமலிங்க சுவாமிகள் இவர் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள மருதூரில் பிறந்தவர். சிறுவயதில் சென்னையில் வசித்தார். வடலூருக்கு அருகே மேட்டுக் குப்பத்தில் வாழ்ந்து, சமரச சன்மார்க்க நெறியைப் பரப்பினார். மனுமுறை கண்ட வாசகம், சீவகாருணிய ஒழுக்கம், உண்மை நெறி முதலிய உரைநடை நூல்களை எழுதினார். இராமலிங்க சுவாமிகள் கையாண்ட உரைநடை, இலக்கண வரம்புடையது. மேலும் கற்றோர் விரும்பக் கூடிய சொற்களிலேயே எழுதப்பட்டிருந்தது. அவருடைய வாக்கியங்கள் பல பக்கங்களுக்கு நீண்டு செல்லும் தன்மையுடையது. ஆகவே ”பொது மக்களுக்குப் பெரிதும் பயன்படக் கூடியது அல்ல” என்பார் வி.செல்வநாயகம்.

வீராசாமி செட்டியார் வீராசாமி செட்டியார் இயற்றிய விநோத ரசமஞ்சரி சிறந்த உரைநடை இலக்கியமாகக் கருதப்படுகின்றது. வாக்கியங்களை நீண்டதாக எழுதியிருந்தாலும், அவை படிப்போருக்கு அலுப்புத் தோன்றாத வகையில் அமைந்துள்ளன. உலக வழக்கில் உள்ள சொற்களையும், மக்களிடையே சாதாரணமாக வழங்கும் பழமொழிகளையும், உவமைகளையும் தம் உரைநடையில் வீராசாமி செட்டியார் பயன்படுத்தியுள்ளார். இவருடைய நடையைக் கதம்ப நடை என்றும் கூறுவர். தெலுங்கு, வடமொழிச் சொற்கள் இவருடைய உரைநடையில் கலந்துள்ளன.

”அக்காலத்தரசர்களிற் சிலர் நிறை கல்வி கற்காமலும், அரசியற்று முறைமை இன்னதென்று குறியாமலும் சற்சன சகவாச செய்யாமலும், ‘துரியோதனன் குடிக்குச் சகுனியைப் போல’க் கிருத்திரம குணமுள்ளவர்களையும், ‘குதிரை பிடிக்கச் சம்மட்டி அடிக்கக் கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்ன’த் தக்கவர்களையும்…’ என்னும் பகுதி வீராசாமி செட்டியார் உரைநடைத் தன்மைக்கு எடுத்துக் காட்டாக அமைகின்றது.”

பிறர் உரைநடை 19ஆம் நூற்றாண்டில் எழுந்த உரைநடை நூல்களுள் வித்துவான் தாண்டவராய முதலியார் மொழி பெயர்த்து இயற்றிய பஞ்ச தந்திரம் குறிப்பிடத்தக்கது. அந்நூல் மாணவர்கள் படித்தறியும்படித் தெளிவாக எழுதப்பட்டது.

யாழ்ப்பாணம் அ.சதாசிவம் பிள்ளை பாவலர் சரித்திர தீபகம், வானசாஸ்திரம், சாதாரண இதிகாசம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். அவர் யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்குச் சொற்களைத் தமது உரைநடையில் கலந்து எழுதினார்.

இருபதாம் நூற்றாண்டு உரைநடை

தமிழ் உரைநடை இதுவரை இருந்து வந்த போக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டு, தனக்கேயுரிய சிறப்புடன் வளம் பெற்ற காலம் இருபதாம் நூற்றாண்டு எனலாம். ‘நான் ஏறிய ரயில் வண்டி நடுராத்திரி மதுரை சேர்ந்தது’ என்ற சாதாரண விஷயத்தைச் சொல்லவந்த ஒரு வித்வான், ‘நான் போந்த நீராவித் தொடர்வண்டி நள்ளிரவில் நான்மாடக் கூடலினை நண்ணிற்று’ என்று எழுதிய காலம் மாறிவிட்டது. இருபதாம் நூற்றாண்டுக் காலப்பகுதி, 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எழுதி வந்தவர்களுடைய உரைநடையாலும் தெளிவு பெற்றது. ஆகவே அத்தகைய உரைநடையாளர்களையும் இருபதாம் நூற்றாண்டு உரைநடைப் பகுதியிலேயே காண்போம்.

நவீன இலக்கியப் படைப்பாளர்கள் உரைநடை நவீன இலக்கியப் படைப்பாளர்களில், தமக்கென தனித்தன்மை வாய்ந்த உரைநடைகளைப் பின்பற்றியவர்கள் வேதநாயகம் பிள்ளையும் பி.ஆர்.ராஜமையரும் ஆவர்.

வேதநாயகம் பிள்ளை

மாயூரத்தில் 13 ஆண்டுகள் முன்சீப் பதவி வகித்தவர். தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார். பெண்மதி மாலை, சுகுணசுந்தரி கதை, பிரதாப முதலியார் சரித்திரம் போன்ற உரைநடை நூல்களையும் எழுதினார். அவர் காலத்து உரைநடையாளர்களின் உரைநடையிலிருந்து, பிள்ளையின் உரைநடை மாறுபட்டிருந்தது. எளிமை, நகைச்சுவை, பழமொழி, பிறமொழிக் கலப்பு என அவருடைய உரைநடை அமைந்திருந்தது. கடினமான வாக்கியங்களை அவர் பயன்படுத்தவில்லை.

வேதநாயகம் பிள்ளையின் உரைநடைக்குச் சான்றாகக் கீழ்க்காணும் பகுதியைக் காணலாம்.

”ஆதியூரில் அருமைநாத பிள்ளை என்பவன் ஒருவன் இருந்தான். அவன் சனியனை விலைக்கு வாங்குவது போல், ஏககாலத்தில் இரண்டு தாரங்களை மணம் செய்து கொண்டான். அந்தத் தாரங்கள் இருவரும் சகோதரிகள், கலியாணம் நடந்த மறுவருஷத்தில் மூத்தவள் பெண் குழந்தை பெற்றாள்” என்ற பகுதியைச் சான்றாகக் கூறலாம்.

பி.ஆர்.ராஜமையர் (1872-1898)

மதுரை மாவட்டம் வத்தலக்குண்டில் பிறந்தவர். கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை எழுதியுள்ளார். இது நாவல் இலக்கிய வரலாற்றில் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. எளிய நடையில் உரைநடை எழுதினார்.

மனிதன் அவன் தாழ்வும் ஏற்றமும் என்ற நூலும் அவரால் எழுதப்பட்டது. ”ஓசைச் சிறப்பும், கம்பீர நடையும் அவர் உரைநடையின் சிறப்பு” என உரைநடை வரலாறு என்னும் நூலில் வி.செல்வநாயகம் கூறுவார். கவிதையிலே காணப்படும் உருவகங்களும், அகவுருவக் காட்சிகளும் ராஜமையர் உரைநடையில்தான் தொடக்கம் பெற்றது.

ராஜமையரின் புதிய உரைநடைப் போக்கிற்கு,

”கடலோசை விட புருஷர்களின் விளையாட்டரவமல்ல; வாலிப ஸ்திரீகளின் வம்புக் கூப்பாடல்ல; இனிய வீணை யாதிகளின் கானம் அல்ல; வெற்றித் தம்பட்டத்தின் ஓசையுமல்ல. அந்தக் குரலில் களியாட்டத் தொனி கிடையாது….” என்ற பகுதியே சான்றாக அமைகின்றது.

தொகுப்பாசிரியர் உரைநடை தொகுப்பாசிரியர்களுள் சிறப்புக்குரியவர்களாகத் திகழ்பவர்கள் சி.வை.தாமோதரம் பிள்ளையும் உ.வே.சாமிநாதய்யரும் ஆவர்.

சி.வை.தாமோதரம் பிள்ளை (1832 – 1901)

யாழ்ப்பாணத்தில் பிறந்த சி.வை.தாமோதரம் பிள்ளை தமிழ்நாட்டில் உயர்ந்த உத்தியோகஸ்தராகப் பணியாற்றியவர். ஓலைச் சுவடிகளைத் தேடிப் பதிப்பித்தவர். கலித்தொகை, தொல்காப்பியம் போன்ற நூல்களைப் பதிப்பித்துக் குறிப்புகளும் எழுதியுள்ளார். இவரது நடை இலக்கியமும், பேச்சு வழக்கும் கலந்ததாக அமைகின்றது.

உ.வே.சாமிநாதையர் (1855 – 1942)

ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டு, அவற்றை நூலாகப் பதிப்பித்தவர் உ.வே.சா. ஆவார். இவர் மணிமேகலைக் கதைச் சுருக்கம், உதயணன் சரித்திரச் சுருக்கம், கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி எனப் பல உரைநடை நூல்களை எழுதியுள்ளார். இரண்டு விதமான உரைநடைகளை இவரது நூல்களில் காணலாம்.

உரையாசிரியர்களைப் பின்பற்றி உயர்ந்த செந்தமிழ் நடையில் எழுதினார்.

பிற்காலத்தில் எளிய நடையில், பத்திரிகைக்கு ஏற்றவாறு எழுதினார். பிழையற்ற எளிய தமிழ் உரைநடை உ.வே.சா.வின் சிறப்பாகும்.

பிறர் மேற்குறிப்பிட்டோரைத் தவிரவும், பெரியார் ஈ.வெ.ரா. போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளும், இலக்கியப் படைப்பாளர்களும், தமிழ் அறிஞர்களும் சிறந்த உரைநடை ஆசிரியர்களாகத் திகழ்ந்தனர்.

திருமணம் செல்வக் கேசவராய முதலியார் (1864-1921)

கம்பநாடர், திருவள்ளுவர், தமிழ் வியாசங்கள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். வசன நடையின் இயல்புகளை, அது எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இவர்தான் முதலில் விளக்கிக் காட்டியுள்ளார். தமிழ் உரைநடையில் கட்டுரைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு இவருடைய ‘உரைநடையே’ சான்றாக அமைகின்றது.

வ.உ.சிதம்பரம் பிள்ளை (1872-1936)

தேச விடுதலைப் போராட்டத்தில் மட்டுமல்ல, இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர் வ.உ.சி. மனம் போல வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் போன்ற மொழியாக்க நூல்களையும், இலக்கிய உரைகளையும் படைத்துள்ளார். உயர்ந்த மெய்யுணர்வுக் கருத்துக்களைச் செறிவான தமிழ் நடையில் எழுதியுள்ளார். சான்றாக,

”ஸ்ரீ ஜேம்ஸ் ஆலன் நூல்களெல்லாம் உலகத்திற்கு முக்கியமாக நம் தேயத்திற்கு, மிக்க நன்மை அளிப்பவையென்பது அறிவிற் சிறந்த பலருடைய அபிப்பிராயம். அந்நூல்கள் நம் வள்ளுவர் மறைக்கொப்பப் போற்றத் தக்கவை….” என்னும் பகுதியைக் கூறலாம்.

வ.உ.சிதம்பரம் பிள்ளை

அ.மாதவையா (1872-1925)

பஞ்சாமிர்தம் என்ற பத்திரிகை நடத்தியவர் அ.மாதவையா. பத்மாவதி சரித்திரம், தில்லை கோவிந்தன் போன்ற நாவல்களையும், குசிகர் குட்டிக் கதைகள் என்ற நூலையும் எழுதியுள்ளார். இவருடைய உரைநடையும் எளிமைத் தன்மை வாய்ந்தது.

மறைமலையடிகள் (1876-1950)

நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள காடம்பாடி என்னும் ஊரில் பிறந்தவர். சுவாமி வேதாசலம் என்ற பெயரை மறைமலையடிகள் என்று தூயதமிழாக்கி வைத்துக் கொண்டார். ஞானசாகரம் என்ற இதழை நடத்தி வந்தார். குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி, மாணிக்க வாசகர் வரலாறும் காலமும், மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

அடிகளார் அனைத்துத் துறையிலும் நூல்களை எழுதியுள்ளார். அவற்றைத் தனித்தமிழிலேயே, பிறமொழிக் கலப்பில்லாமல் எழுதியுள்ளார். எந்தவொரு துறையையும் தனித்தமிழில் எழுத முடியும் என உலகிற்கு எடுத்துக் காட்டியவர் மறைமலையடிகள்.

இவருடைய உரைநடை நீண்ட வாக்கியங்களைக் கொண்டதாக இருப்பினும் எளிமையும், இனிமையும் வாய்ந்ததாக உள்ளது. புதுச் சொற்களைப் படைத்தார். தனித்தமிழ் நடைக்குத் தந்தை என்றும் போற்றப்படுகிறார்.

பெரியார் ஈ.வெ.ராமசாமி (1879-1973)

தனது 95ஆவது வயது வரை, தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தவர் பெரியார் என அழைக்கப்படும் ஈ.வெ.இராமசாமி அவர்கள். பொதுமக்கள் பேசும் பேச்சிலேயே இவரது உரைநடை சிறந்து அமைந்தது. அதனால் இலக்கணம் பற்றிக் கவலைப்படாமல் எழுதினார். மொழிவளம் பற்றி நினையாமல் பொருள் வளம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டது பெரியாரின் உரைநடை. சுருக்கென்று தைக்குமாறு கூடிய மொழிநடையைத் தமிழில் இவர்தான் முதலில் பயன்படுத்தியவர் எனலாம்.

சான்றாக,

”பிறப்பால் உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை. ஆணும் பெண்ணும் சமம். மனைவி மலிவான வேலைக்காரியல்ல; வெறும் விளையாட்டுப் பொம்மையல்ல; நகை மாட்டியல்ல; வாழ்க்கைத் துணை” என்ற பகுதியைக் கூறலாம்.

திரு.வி.கல்யாண சுந்தரனார் (1883-1953)

தேசபக்தன், நவசக்தி ஆகிய பத்திரிகைகளை நடத்தியவர் திரு.வி.க. மேலும் பல்துறை அறிஞராக விளங்கினார். உள்ளொளி, முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் எனப் பல உரைநடை நூல்களைப் படைத்துள்ளார்.

தன் உரைநடை பற்றித் திரு.வி.க. அவர்களே இவ்வாறு கூறுவார். ”என்னுடைய வாழ்க்கையில் மூவித நடைகள் மருவின. ஒன்று இளமையில் உற்றது; இன்னொன்று சங்க இலக்கியச் சார்ப பெற்றபோது பொருந்தியது. மற்றொன்று பத்திரிகை உலகை அடைந்த நாளில் அமைந்தது. இறுதியதே எனக்கு உரியதாய் உடையதாய் நிலைத்தது. இந்நடை எளியது. சிறுசிறு வாக்கியங்களாலாயது.”

”திரு.வி.க.வின் நடை எளிமையாக்கப்பட்ட பண்டிதர் நடை” என்று நா.வானமாமலை குறிப்பிடுவார்.

பாரதியார் (1882-1921)

மகாகவி பாரதி சிறுகதையாசிரியர்,  கட்டுரையாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகத் திறமை பெற்றவர். பாரதியாரின் கட்டுரைகள் இப்போது தனிநூல்களாக அச்சிடப் பெற்றுள்ளன. இவரது நடையில் வட சொற்கலப்பும், ஆங்கிலச் சொற்கலப்பும் காணலாம். மொழித் தூய்மை பற்றிக் கவலைப்படாதவர். நடை உயிரோட்டமுடையதாக இருப்பதில் கவனம் கொண்டார். புதிய சொல்லாக்கங்களையும் படைத்துள்ளார்.

தமிழ் வசனநடை எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பாரதி கூறும்போது “தமிழில் வசன நடை இப்போதுதான் பிறந்து பல வருஷமாகவில்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால் இப்போதே நமது ‘வசனம்’ உலகத்தின் எந்தப் பாஷையைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும். கூடியவரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமம் என்பது என் கட்சி” என்பார்.

நேருக்கு நேர் பேசுவது போல அமையும் பாரதியின் உரைநடைக்குச் சான்றாக ”உன்னுடைய ஆன்மாவும் உலகத்தினுடைய ஆன்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை எல்லாம் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்” என்னும் பகுதியைச் சுட்டலாம்.

பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை என்னும் நூலில் வல்லிக்கண்ணன்.

‘தமிழ் உரைநடை வரலாற்றில் பாரதி காலம் என்றே ஒரு காலம் சுட்டப்படுகின்றது’ என்பார்.

மகாகவி பாரதியார்

வ.வே.சு.ஐயர் (1881 – 1925)

திருச்சி வரகனேரியில் பிறந்தவர். கம்பராமாயண ரசனை என்னும் திறனாய்வு நூலை எழுதியவர். தமிழின் முதல் சிறுகதையைப் படைத்தவர். தமிழில் மறுமலர்ச்சி நடை வ.வே.சு.ஐயரிலிருந்து தொடங்குவதாக உரைநடைத் திறனாய்வாளர்கள் கூறுவர்.

இலக்கண அமைதி, கம்பீரமான நடையழகு, இலக்கியச் சுவை, தகுந்த இடங்களில் பிறமொழிச் சொற்கள் கலப்பு, பேச்சு வழக்கு என அனைத்தையும் அளவாகக் கலந்து படைக்கப்பட்ட புதிய உரைநடை வ.வே.சு.நடையாகும்.

”நாரஸிஸ்ஸனுக்குத் தாகம் எடுத்தது, ஏரிக்கரைக்குச் சென்று நீரை அள்ளிக் குடிக்கலாம் என்று போய், கரையில் உட்கார்ந்து கொண்டு குனிந்தான். ஏரியின் ஜலம் நிர்மலமாய், நீல வானத்தை பிரதிபிம்பித்துக் காட்டிக் கொண்டு பளிங்கு போல் அசைவற்றிருந்தது” என்னும் பகுதி வ.வே.சு.ஐயர் உரைநடை அமையும் தன்மையைக் காட்டுகிறது.

டி.கே.சிதம்பரநாத முதலியார் (1882-1954)

ரசிகமணி என்றழைக்கப்படும் டி.கே.சி. இதய ஒலி, அற்புத ரஸம், கம்பர் யார் போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவரது நடை எளிமையான, உயிரோட்டமுள்ள, பொது மக்கள் விரும்பிப் படிப்பதற்குரிய பேச்சு வழக்கை அடிப்படையாகக் கொண்ட நடையாகும். பண்பாடு, வானொலி போன்ற சொற்களை உரைநடையில் படைத்தவர் இவர் என்று கூறுவர்.

டி.கே.சிதம்பரநாத முதலியார்

எஸ்.வையாபுரிப் பிள்ளை (1888-1956)

தமிழ்ப் பேரகராதி உருவாகப் பெருங்காரணமாக இருந்தவர் வையாபுரிப்பிள்ளை. இலக்கணச் சிந்தனைகள், இலக்கிய தீபம், இலக்கிய மணிமாலை, தமிழ்ச் சுடர் மணிகள் போன்ற பல நூல்களைப் படைத்துள்ளார்.

வ.ராமசாமி (1889-1951)

மணிக்கொடி இதழின் ஆசிரியராக இருந்த, வ.ராமசாமி இன்றைய தமிழ் உரைநடைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் படைப்புக்களை அளித்தவர். நடைச்சித்திரம் என்ற இலக்கிய வடிவத்தை உரைநடைக்குஅளித்தவர். பாத்திரங்களின் குணாதிசயங்களை விளக்கும் வகையில் அமைந்த அந்த நடைச் சித்திரங்கள் உரைநடை இலக்கியத்திற்கு உயிரோட்டம் தந்தன. சீரிய சிந்தனைகளும்அவருடையஉரைநடையில் அமைந்திருக்கும்.

வ.ரா.வின் நடைச்சித்திரங்களின் ஒன்று மார்க்கட்டு மாணிக்கம். அதன் ஆரம்பப் பகுதி

”மார்க்கட்டு மாணிக்கம் கடைத் தெருவில் காசுக் கடையில் விற்கும் நவரத்ன கற்களில் ஒன்றல்ல. மாணிக்கம் உயிருள்ளவன். அவன் மார்க்கட்டில் அலுக்காமல், சலிக்காமல் வியாபாரம் செய்கிறான். கடனுக்கு விற்றேன் என்று தலைமயிரைப் பிடித்து இழுத்து தொடையில் கைவைத்து, எலிகள் ஓடுவதையும் கவனிக்காமல், ஏக்கக் கவலையில் ஆழ்ந்து கிடக்கும் மனிதனை, சித்திரத்தில் பார்த்திருப்பீர்கள். அந்தப் பேர்வழியல்ல மாணிக்கம்” என்ற அமைந்திருக்கும்.

ரா.பி.சேதுப்பிள்ளை (1896-1961)

சொல்லின்செல்வர் என்று அழைக்கப்படும் ரா.பி.சேதுப்பிள்ளை, ஊரும் பேரும் உட்படப் பல நூல்களைப் படைத்தவர். ”உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும்” என்பார் சுத்தானந்த பாரதி. இவரது நடை செய்யுளின் இனிமை கொண்ட செந்தமிழ் நடையாகும். ‘இனிய உரைச் செய்யுள்’ என்றே இவர் உரைநடையைக் குறிப்பிடுவர். அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் ரா.பி.சேதுப்பிள்ளை. சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார்.

”அருமையான தமிழ்ச் சொல் ஒன்று இருக்க ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பார் உண்டோ?” – இது ரா.பி.சேதுப்பிள்ளை உரைநடையின் ஒரு துளியாகும்.

தெ.பொ.மீனாட்சிசுந்தரம் (1901-1980)

பன்மொழிப் புலவர் எனப் பாராட்டப் பெறும் தெ.பொ.மீ. அவர்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தராக விளங்கியவர். தத்துவம், வரலாறு, இலக்கணம், மொழியியல் என அனைத்துத் துறைகளிலும் நூல்களை எழுதியுள்ளார். சிறு சிறு சொல் தொடர்களில் உணர்ச்சியை வெளிப்படுத்தும் முறையில் இவரது உரைநடை அமைகின்றது.

மு.வரதராசனார் (1912-1974)

பேராசிரியராகவும், துணைவேந்தராகவும் விளங்கிய மு.வரதராசன் பல்துறை நூல்களைப் படைத்தவர். நடையை எளிமைப்படுத்தியவர். திரு.வி.க. நடையைப் போன்று, எளிய நடையில் தெளிவுமிக்க வகையில் இனிமையும் மென்மையும் வாய்ந்த சொற்களால் உரைநடையைப் படைத்துள்ளார். வினாக்களை எழுப்பிச் செல்லும் பாங்கையும் இவரது நடையில் காணலாம்.

மு.வரதராசனாரின் வினா நடைக்குச் சான்றாக,

”திருடர்களுக்கு மனைவி மக்கள் இல்லையா? நண்பர்கள் இல்லையா? அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தானே இப்படிப் பொருளுக்காகத் திருட்டுக் குற்றஞ் செய்யத் தூண்டுகிறது?” என்ற பகுதியே அமைகின்றது.

படைப்பாளிகளும் உரைநடையும்

இருபதாம் நூற்றாண்டு உரைநடையில் முற்பகுதிக் காலத்தில் கல்வியாளர்கள் உரைநடையே மேலோங்கி இருந்தது. ஆனால் பிற்பகுதிக் காலத்தில் கதை, கவிதை படைக்கும் படைப்பாளிகளின் ஆயுதமாக உரைநடை விளங்கியது. அறிவுக்கும் மட்டுமல்ல, மனத்திருப்திக்கும், மகிழ்ச்சிக்கும் உரைநடை பயன்பட ஆரம்பித்தது. அவ்வாறான படைப்பாளிகளின் உரைநடைத் தன்மைகளை இனிக் காணலாம்.

புதுமைப்பித்தன் புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றப்பட்டவர். சிறுகதை உலகில் சாதனை புரிந்த புதுமைப் பித்தன், உரைநடையிலும் சாதனை புரிந்துள்ளார். சாதாரணச் சொற்களுக்குத் தனி அழகும் புதுமையும் கம்பீரமும் தரக்கூடிய ஆற்றல் இவரது நடைக்கு இருந்தது. இவர் இதுவரை எழுதி வந்த அத்தனை பேரிலும், ஒரு வித்தியாசமான எழுத்து நடையைக் கையாண்டுள்ளார்.

புதுமைப்பித்தன், தன்நடையைப் பற்றித் தானே கூறும்போது, ”கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு, வார்த்தைகளை வெறும் தொடர்புச் சாதனமாக மட்டும் கொண்டு, தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக் கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது” என்பார்.

திருநெல்வேலி வட்டார வழக்குகள் அவரது உரைநடையில் பரவலாக இருக்கும். ஆங்கிலச் சொற்களையும் ஆங்கில வாக்கிய அமைப்புகளையும் ஆங்காங்கே பயன்படுத்தியுள்ளார்.

தமிழ் உரைநடை வரலாறு என்ற நூலில் வி.செல்வநாயகம் கூறுகையில் ”சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அவர்நடை, பிறர் பின்பற்ற முடியாத ஒன்று” என்பார்.

ஆங்கில வாக்கிய அமைப்பில் கையாளப்படுகின்ற இடைவாக்கியம் என்பதை, அதாவது இருபுறமும் கோடுகளிட்டுத் தனியாகச் சேர்த்து வைப்பது என்ற முறையைத் தமது உரைநடையில் அதிகம் பயன்படுத்தினார். சான்றாக, ”முருகதாசரைப் பொறுத்தவரை அது அவரது புனைபெயர் – அது இரண்டு பேர் செய்ய வேண்டிய காரியம். வாழ்க்கையின் இலட்சியங்களை, வாழ்க்கையின் சிக்கல்களை – ஏன் வாழ்க்கையையே – திறந்து காண்பிக்கும் ஜன்னல்கள் தாம் சிறுகதைகள்……” என்ற பகுதியைக் காணலாம்.

புதுமைப்பித்தனின் உரைநடைச் சிறப்புகளாகக் குறிப்பிடத்தக்கன

(1) புதுமையான உரைநடை அமைக்கும் நோக்கில், ‘காம்பவுண்ட் சென்டன்ஸ்’, ‘காம்ப்ளெக்ஸ் சென்டன்ஸ்’ என்று சொல்லப்படுகிற முறைகளைக் கையாண்டார்.

(2) இடை வாக்கியங்களை அமைத்தார்.

(3) தாவிச் தாவிச் செல்லும் நடையைப் பயன்படுத்தினார்.

(4) சொற்களை வைத்து விளையாடுகிற தன்மையை உரைநடைக்குள் சோதனை செய்தார்.

(5) நனவோட்டம் என்னும் முறையில் உரைநடையை எழுதிப் பார்த்தார்.

(6) திருநெல்வேலி வட்டார மொழியை எழுத்தில் கொண்டு வந்து உரைநடைக்குத் தனித்தன்மை சேர்த்தார்.

புதுமைப்பித்தன்

பிற படைப்பாளர்கள் அண்ணா, மௌனி, லா.ச.ராமாமிருதம், கல்கி, நீல.பத்மநாபன், சுஜாதா, கி.ராஜநாராயணன், சுந்தரம் ராமசாமி போன்றோர் தம் படைப்புகளில் தமக்கெனத் தனித்தன்மை வாய்ந்த உரைநடையைக் கையாண்டனர்.

அண்ணாதுரை

அண்ணா என்றழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர். ”எளிமை, இனிமை, உணர்ச்சி வேகம், இவற்றுடன் ‘பாட்டு மொழிக்கு’ உரிய அடுக்கு மொழித்தன்மையும், மோனை அழகும் அவர் உரைநடையில் கலந்து கிடக்கும்” என்கிறார் ம.செ.இரபிசிங். சில சமயங்கள் நீளமாக வாக்கிய அமைப்புகளும் இடம் பெறும். எதையும் விரிவாகச் சொல்வதே அவர் பாணி.

அறிஞர் அண்ணா

மௌனி

குறைந்த அளவே சிறுகதைகளை எழுதியிருந்தாலும், யாரும் செல்லாத புதிய உரைநடைப் பாதையை உண்டாக்கியவர் என்ற முறையில் மௌனிக்கு உரைநடை இலக்கியத்தில் இடமுண்டு. உள்ளப் பதிவுகளை, மனச்சஞ்சலங்களை, சிந்தனை ஓட்டங்களை உரைநடையில் கொண்டு வந்தவர் மௌனி. எளிமையாக ஆரம்பித்து, போகப் போக நடையில் ஒரு கனமும், பின்னலும் அவர் உரைநடையில் (கதைகளில்) இடம் பெறக் காணலாம். சிறுசெயல்களை நுணுக்கமாக வருணித்தார். இயற்கை பற்றிய பல வருணனைகளை உரைநடையில் கொண்டு வந்தார்.

லா.ச.ராமாமிருதம்

சிறந்த சிறுகதை ஆசிரியரான லா.ச.ரா.வின் உரைநடையும் தனித்தன்மை கொண்டது. சொற்களைக் கொண்டு கலைச் சித்திரங்கள் அமைப்பதில் வல்லவர். மேலும் உரைநடையில் சொற்களைப் பாதியில் விட்டுவிடும் உத்தியைக் கையாண்டார். சான்றாக ”வயிற்றில் பகீர்”, ”உடல் மனம் காற்றுவாக்கில் சிறுவெடிப்பாய் குபீர்” போன்ற தொடர்களைக் கூறலாம். கொச்சை மொழியையும் உரைநடையில் கொண்டு வரும்போது இலக்கிய அழகு பெறும்படி எழுதியிருப்பது லா.ச.ரா.வின் தனிச்சிறப்பாகும்.

கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி

பல நாவல்கள், கட்டுரைகளைப் படைத்தவர் கல்கி. பாமரரும், பண்டிதரும் விரும்பிப் படிப்பதற்குரிய நடை ஒன்றினைக் கல்கி கையாண்டார். அவருடைய உரைநடையில் நகைச்சுவைக்கு அதிகம் இடமிருக்கும். எளிமை, தெளிவு, இனிமை, நகைச்சுவை, கற்பனை நயம் சேர்ந்த அழகான உரைநடை என அவர் உரைநடையினைக் கூறலாம்.

கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி

ஜெயகாந்தன்

அறுபதுகளில் தமிழ் எழுத்துலகில் ஜெயகாந்தன் மிகப் பெரிய எழுத்தாளராக விளங்கியவர். எண்ணங்களை எடுத்துச் சொல்கிற சாதனமாகவே அவர் உரைநடை அமைகிறது. சிறு சிறு வாக்கியங்களில் வளர்கிற ஜெயகாந்தனின் உரைநடை, எண்ணஓட்டம் வலுப்பெறுகிறபோது, பல பிரிவுகளையும் விளக்கங்களையும் தன்னிடம் கொண்ட நீள வாக்கியங்களாக மாறி விடுகிறது.

நீல.பத்மநாபன்

சிறந்த நாவல், சிறுகதை ஆசிரியரான நீல.பத்மநாபன் தனித்த நடை ஒன்றை உருவாக்கியவர் எனலாம். ஏழூர் செட்டிமார்கள் என்ற ஒரு தனிப்பட்ட சமூகத்தில் வழங்கப்படுகிற பேச்சு வழக்குகள், பழமொழிகள் முதலியவற்றை, அவர்கள் வசிக்கிற வட்டாரத்தில் இயல்பாகப் பேச்சில் கலந்து விட்ட மலையாளச் சொற்களோடும் சேர்த்துத் தனித்த உரைநடையைப் படைத்துள்ளார்.

சுஜாதா

எஸ்.ரங்கராஜன் என்ற சுஜாதா தமிழ் உரைநடையில் குறிப்பிடத்தக்கவர். பல புதுமைகளை உரைநடையில் செய்து பார்த்தவர். ”அவருடைய எழுத்து நடையில் இளமை, புதுமை, அழகு, ஆழம், வேகம், விறுவிறுப்பு. சில சமயங்களில் கவிதைத் தன்மை எல்லாம் கலந்திருக்கும்” என்பார் வல்லிக் கண்ணன்.

பல சமயங்களில் தமிழா, ஆங்கிலமா என்று அறிய முடியாத அளவு ஆங்கிலச் சொல்லுடனும் உரைநடையை அமைத்திருப்பார்.

மரபு என்பதை உடைத்து, உரைநடையில் புதுமை உண்டாக்கியவர் சுஜாதா.

உணர்ச்சிப் பரபரப்பை எடுத்துச் சொல்லப் பல உத்திகளைக் கையாள்வார். சான்றாக,

“அவன் இருதயம் பயம் பயம் பயம் என்று பம்ப் அடித்துக் கொண்டிருந்தது” என்ற தொடரைக் கூறலாம்.

சுஜாதா

கி.ராஜநாராயணன்

கரிசல் காட்டு அகராதியைத் தொகுத்த கி.ராஜநாராயணன் வட்டார வழக்கை அடிப்படையாகக் கொண்டு பல படைப்புகளைப் படைத்துள்ளார். மண்வாசனையை ‘அப்படியே கண்முன் நிறுத்தும்’ உரைநடை அவருடையது. கோவில்பட்டி வட்டாரக் கிராமங்களும், மனிதர்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ள வாசகர்களுக்கு முன் நடமாட கி.ராஜநாராயணனின் வட்டார உரைநடை ஒரு காரணமாகும்.

கி.ராஜநாராயணன்

சுந்தர ராமசாமி

நீண்ட காலமாக எழுதி வரும் படைப்பாளியான சுந்தர ராமசாமியின் உரைநடை தனித்துவமிக்கது. எள்ளலும், ஆழமும் அவர் உரைநடையில் சிறப்பாக அமைந்திருக்கும். நினைவோடை என்ற தலைப்பில் உரையாடல் வடிவில் உரைநடை அமைத்து ஒரு புதிய நடையை உருவாக்கியுள்ளார்.

”தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபைத் திசை திருப்பி விட வேண்டுமென்றோ, உரு, உத்தி இத்யாதிகளில் மேல்நாட்டுக் களஞ்சியத்திலிருந்து கொஞ்சம் கொள்ளையடித்துத் தீருவது என்று ஆசைப் பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதிய நாவல் அல்ல இது” எனும் ஒரு புளிய மரத்தின் கதை நாவலின் முன்னுரையே சுந்தர ராமசாமியின் உரைநடைத் தன்மையைக் காட்டும்.

சுந்தர ராமசாமி

அ.மார்க்ஸ்

தமிழ்த் திறனாய்வு உலகில் குறிப்பிடத்தக்கவர் அ.மார்க்ஸ். நிறப்பிரிகை என்னும் இதழை நடத்தியவர். ஏராளமான நூல்களை எழுதியுள்ள இவரின் உரைநடை சிந்திக்க வைக்கும் கருத்துகளையும், எளிமையும் கடுமையும் கொண்ட சொற்களையும் கொண்டதாக அமைகின்றது. ஆதாரங்களையும், நம்பகத் தன்மையான செய்திகளையும் கொண்ட உரைநடைக்கு அ.மார்க்ஸின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். பண்டை இலக்கியங்கள் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை அகன்ற பார்வை கொண்டது அவரது உரைநடை.

”பாலியல் நிலை என்பது இயல்பிலேயே சிக்கலானது. பாலியல் சார்ந்த அடையாளங்கள் (ஆண்மை/பெண்மை; மாற்றுப்பால் புணர்ச்சி/ஒருபால் புணர்ச்சி) வெறும் தனிநபர் சார்ந்தவையோ, உடற்கூறு சார்ந்தவையோ மட்டுமன்று….” இது அ.மார்க்ஸின் உரைநடைக்கு ஒரு சான்றாகும்.

எஸ்.இராமகிருஷ்ணன்

இன்றைய நவீன உரைநடைக்கு எஸ்.இராமகிருஷ்ணனின் படைப்பையே உதாரணமாகக் கூறலாம். சிறந்த சிறுகதை, நாவல்களைப் படைத்துள்ள இவர் நிஜமும், கற்பனையும் கலந்த உரைநடையைப் படைத்துள்ளார். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் தாக்கத்தால் புதிர் மொழி என்னும் புரிந்தும் புரியாத தன்மையில் அமைந்த உரைநடையில் சோதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

ராஜ் கௌதமன்

தமிழில் திறனாய்வு நூல்களைப் படைத்து வருபவருள் குறிப்பிடத்தக்கவர் ராஜ்கௌதமன். இவருடைய சிலுவைராஜ் சரித்திரம் என்னும் இரண்டு பகுதிகளால் ஆன நாவல் ‘தலித் மொழியை’ச் சரளமாகச் சொல்லிச் செல்கிறது. எளிய மக்களின் மொழியாலான உரைநடை தமிழ் உரைநடைக்குச் செல்வமாக அமைகின்றது.

பாமா

சிறுகதை, நாவல் படைப்பாளியான பாமா நேரடியாகப் பேசும் பாங்கில் உரைநடையைத் தந்தவர். இவரின் கருக்கு, சங்கதி போன்ற சிறு நாவல்களின் உரைநடை இதுவரை தமிழ் உரைநடை காணாத புதுவகையாகும். உண்மையான தலித் மொழியைத் தமிழுக்கு வழங்கியது பாமாவின் உரைநடையாகும்.

ப. சிவகாமி

நவீன பெண்ணியப் படைப்பாளர்களில் முன்னோடியாக விளங்குபவர் ப.சிவகாமி. இவரின் ஆனந்தாயி, குறுக்கு வெட்டு போன்ற புதினங்கள் பெண்ணியத்திற்கும், தலித் மக்களின் எளிய எதார்த்த பேச்சு உரைநடைக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. நாட்டுப்புற மக்கள் வழக்கில் நிலவும் மொழியை நறுக்கென்று சொல்லும் ஒரு புதுமாதிரியான வடிவினைத் தமிழுக்குத் தந்துள்ளது ப.சிவகாமியின் உரைநடையாகும்.

தொகுப்புரை

தற்கால உரைநடை ஐரோப்பியர் காலமான கி.பி.16-ஆம் நூற்றாண்டிலேயே தொடக்கம் பெற்று, வெளிநாட்டிலிருந்து வந்த கிறித்துவப் பாதிரியார்களால் வளர்ச்சி பெற்றது. அச்சு இயந்திர வருகை உரைநடைக்கு உயிரூட்டியது.

வேதநாயகர், வீரமாமுனிவர் போன்றோர் மெல்ல உரையாசிரியர்களின் உரைநடையிலிருந்து புதிய உரைநடைக்கு நடை பயின்றனர். கிறித்தவத் துண்டுப் பிரசுரங்களே அக்கால உரைநடையை வளர்த்தது எனலாம்.

19ஆம் நூற்றாண்டில் உரைநடை, ஆறுமுக நாவலர், வீராசாமி செட்டியார் போன்றோரால் எளிமையாக்கப்பட்டுப் பரவலாக மக்களிடம் சென்றது.

இருபதாம் நூற்றாண்டு உரைநடைக்குப் பொற்காலம் எனலாம். வேதநாயகம் பிள்ளை, இராஜமையர் போன்றோரின் படைப்புகள் பேச்சு வழக்கிலும், யாவரும் விரும்பிப் படிக்கும் முறையிலும் அமைந்தன. தனித்தமிழ்நடை தந்த மறைமலையடிகள், துணிவு தரும் நடையிலான உரைநடை கண்ட பெரியார், மறுமலர்ச்சி நடை தந்த திரு.வி.க., பாரதி, வ.ரா எனப் பலர் உரைநடைக்கு உரமிட்டனர்.

புதுமைப்பித்தன் தொடங்கி இன்னும் மலர்ச்சி பெற்றது உரைநடை. வட்டார வழக்குகள், புதிதாக எழுதிப் பார்க்கும் முறை என உரைநடை வளர்ந்தது. கி.ராஜநாராயணன், அ.மார்க்ஸ், எஸ்.இராமகிருஷ்ணன், பாமா, ப.சிவகாமி, சல்மா என விதவிதமான மொழிகளின் கலவையில் தமிழ் உரைநடை இன்று வளர்ச்சியின் உச்சிக்குச் சென்றுள்ளது.