29

இதழியல் - ஓர் அறிமுகம்

பாடம் - 1

இதழியல் - அறிமுகம்

பாட முன்னுரை

தகவல் தொடர்பு விரிவடைந்து உலகம் ஒருமையை நோக்கிச் செல்கிறது. தகவல் தொடர்பின் பகுதியாக விளங்கும் இதழியல் வளர்ந்து வரும் ஒரு புதுத் துறையாகும். இதழியல் என்ற சொல்லின் மூலம், அகராதிப் பொருள், அதைப்பற்றி அறிஞர் வெளியிட்ட கருத்துகள், செய்திப் பரிமாற்றத்தின் வரலாறு, அச்சு இயந்திரங்களின் வருகையும் இதழ்களின் தோற்றமும், உலக இதழ்கள், இந்திய இதழ்கள், தமிழ் இதழ்கள் முதலியவற்றின் தோற்றம் ஆகியவற்றை விளக்கும் வகையில் இந்தப் பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

இதழியல்

காரிருள் அகத்தில் நல்ல

கதிரொளி நீதான்! இந்தப்

பாரிடைத் துயில்வோர் கண்ணில்

பாய்ந்திடும் எழுச்சி நீதான்

ஊரினை நாட்டை இந்த

உலகினை ஒன்று சேர்க்கப்

பேரறி வாளர் நெஞ்சில்

பிறந்தபத் திரிகைப் பெண்ணே!

என்பது பாரதிதாசனது கவிதை! இதழ்களின் நோக்கத்தையும் சிறப்புக் கூறுகளையும் பணிகளையும் உள்ளடக்கிய இதழியல் என்ற கலைச்சொல்லின் முழுமையான    பரிமாணங்களையும் தன்னகத்தே பெற்று இக்கவிதை மிளிர்கிறது எனலாம்.

இதழியல் சொற்பிறப்பு ஜர்னலிஸம் (Journalism) என்ற ஆங்கிலக் கலைச் சொல் டையர்னல் (Diurnal) என்ற இலத்தீன் மொழிச்சொல்லில் இருந்து பிறந்தது. டையர்னல், ஜர்னல் என்றால் அன்றாடம் என்பது பொருள். வாஸ்கோடகாமா தமது கப்பற்பயணத்தில் அன்றாடம் நிகழ்ந்தவைகளை எழுதித் தொகுப்பாக்கினார். அத்தொகுப்பு எ ஜர்னல் ஆப் தி பஸ்டு வாயேஜ் ஆப் வாஸ்கோடகாமா (A Journal of the first voyage of Vascodagama) எனப் பெயர் பெற்றது. அன்றாடம் என்ற பொருள் தரும் சொல் காலப்போக்கில் அன்றாட நிகழ்வுகளைத் தெரிவிக்கும் இதழ்களைக் குறித்தது.

தமிழில் முதலில் பத்திரிகை என்ற சொல் கையாளப்பட்டது. ஏடு, மலர், மடல், முடங்கல், தாள், தாளிகை, சுவடி முதலிய சொற்களும் பத்திரிகையைக் குறிக்கும். தற்போது இதழ் என்ற சொல்லும் இதழியல் என்ற சொல்லும் கலைச் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வார, மாத, ஆண்டு இதழ்களையும், கவிதை, சிறுகதை, துணுக்குகள், கட்டுரை முதலியவற்றைத் தாங்கி நிற்கும் வெளியீடுகளையும் இதழ் என்ற சொல் குறிப்பிடுகிறது. அதாவது இதழியல் என்பது இதழ் தொடர்பான எல்லாவற்றையும் உள்ளடக்கிய கலைச் சொல்லாக உள்ளது.

அகராதிப் பொருள் ‘வெளியிடுவதற்காகவோ பதிப்பிப்பதற்காகவோ ஒலி பரப்புவதற்காகவோ நடைமுறை ஈடுபாடுள்ள விவரங்களைத் தொகுப்பதும், எழுதுவதும், செப்பனிடுவதும் இதழியல்’ என்று வெப்ஸ்டர் பன்னாட்டு அகராதி (Webster) குறிப்பிடுகிறது.

‘பொது இதழ்களுக்கு எழுதுதல், அவற்றை நடத்துதல் ஆகிய தொழிலே இதழியல் எனப்படும்’ என, சேம்பரின் இருபதாம் நூற்றாண்டு அகராதி (Chambers) சுட்டுகிறது.

அறிஞர்களின் கருத்து ‘பொது நோக்குடைய இதழியல் துறை ஓர் ஆற்றல் மிக்க கருவியாகும். அதன் மூலம்தான் இன்றைய சமுதாயம் அதனுடைய வழிகளை வகுத்துக் கொண்டும் மாற்றிக் கொண்டும் தெளிவாக வரையறுக்கப் பெற்ற வளரும் மனிதநலன் என்னும் இலட்சியத்தை நோக்கி நடைபயில்கின்றது’ என்று அமெரிக்க இதழியல் பேராசிரியரான ஹெரால்டு பெஞ்சமின் (

arold Benjamin) குறிப்பிடுகின்றார்.

ஜி.எப். மோட் (G.F. Mott) என்பவர் விரிவாக ‘இதழியல் என்பது, பொதுமக்கள் தொடர்புக்கு உரிய புதிய சாதனங்களைப் பயன்படுத்தி, பொதுச் செய்திகளையும் பொதுப் பொழுதுபோக்குகளையும் முறையாக, நம்பிக்கைக்கு உரிய வகையில் பரப்பு வதாகும்’ என்று குறிப்பிடுகின்றார்.

‘பெரும்பாலும் ஒரு நாளிதழ் அறிவிப்பதும் கருதுவதும் தான் வரலாற்றுக்கு மூலப்பொருளாகவும்    வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் மதிப்புடையதாகவும் அமைகின்றது’ என்பது பிராங் மோரேஸ் (Frank Moraes) என்பவரின் கருத்தாகும்.

ஆர். இராமச்சந்திர ஐயர் என்ற இந்திய அறிஞர் கூறுவதாவது; இதழ்களுக்கு, குறிப்பாகச் செய்தித்தாட்களுக்கு, எழுதும் தொழிலைத் தான் முதன்முதலில் இதழியல் என்ற சொல் குறித்தது. இப்பொழுது அதனுடைய பொருளும் பரப்பும் விரிவடைந்து, செய்திகளையும் கருத்துக்களையும் பரப்புகின்ற மக்கள் தொடர்பு நிறுவனமாக மாறியும், சமுதாய விழிப் புணர்ச்சியின் ஓர் உறுப்பாக அதுவே உருவெடுத்தும், அதனுடைய நடவடிக்கைக்கு அற அடிப்படையிலும் சட்டநோக்கிலும் பொறுப்பேற்கும் அமைப்பாகவும் இதழியல் திகழ்கின்றது.’

செய்திப் பரிமாற்றம்

மக்கள் தோன்றிய பொழுதே இதழியலும் தோன்றிவிட்டது எனத் தமிழ் இதழியலாளரான அ.மா.சாமி கூறுகின்றார். என்ன நிகழ்ந்தது ? என்ற ஆர்வமே செய்திப் பரிமாற்றத்திற்கான களம் ஆகும்.

குறிகள், கொடிகள், வண்ணங்கள் சைகை மூலமாகச் செய்திப் பரிமாற்றம் நிகழ்ந்தது; பின்னர் சித்திரம், மொழி என வளர்ந்தது. நாளடைவில் குறிகள்,  கொடிகள், வண்ணங்கள் முதலியனவும் பயன்படுத்தப்பட்டன.

குறிகள்

இதய வடிவம் காதலின் சின்னமாக உலகம் முழுவதும்  குறிப்பிடப் படுகிறது.

கொடிகள்

மீனக்கொடி பாண்டியப் பேரரசைக் குறிக்கும். மூவர்ணக்  கொடி பாரததேசத்தைச் சுட்டும். கப்பலில் மஞ்சள் கொடி  பறந்தால் அது கொள்ளை நோயின் அறிகுறியாகும்.

வண்ணங்கள்

வெண்மை நிறம் சமாதானத்தையும், பச்சை நிறம்  வளமையையும், சிவப்பு நிறம் அபாயத்தையும் குறிப்பிடுகின்றது.

நாகரிகம் வளர வளரச் செய்திப் பரிமாற்றம் மேம்பட்டது.  அரசுகள் ஏற்பட்ட காலகட்டத்தில், மக்களுக்கு அரசாணைகளை  அறிவிப்பதற்கும், மக்கள் கருத்துகளைப் பெறுவதற்கும் தனிப்  பணியாளர்கள்  நியமிக்கப்பட்டனர்.

பழந்தமிழகத்தில் செய்திப் பரிமாற்றம் பழந்தமிழகத்தில் செய்திப் பரிமாற்றத்துக்கான பணியை மேற்கொள்வதற்கு     வள்ளுவன், ஓலைநாயகம்    என்ற பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மன்னனது கடமைகளுள்  மக்களின் கருத்தை அறிவது இன்றிமையாத பணியாக இருந்தது.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்     (குறள் : 582)

என்பது திருக்குறள். அதாவது நாட்டில் நடக்கும் எல்லா  நிகழ்வுகள் பற்றியும் அறிவது அரசனது கடமை என்பது  பொருள்.

வேற்று நாட்டு ஒற்றர்கள் வழி ஒரு நாட்டின் செய்திகள் ஏனைய நாடுகளுக்குப் பரவியது. சிலப்பதிகாரத்தில்

வம்பணி யானை வேந்தர் ஒற்றே

தஞ்செவிப் படுக்குந் தகைமைய வன்றோ              (வஞ்சிக் காண்டம் :175-6)

என்று சுட்டப்படுகிறது. அயல்நாட்டுப் படையெடுப்புப் பற்றிய  செய்தியை வஞ்சி மாநகரில் பறையறிவித்தால் ஒற்றர்கள் வழி  அந்தந்த நாடுகளுக்குச் செய்தி சென்று சேர்ந்துவிடும் என்பது  பொருளாகும்.

மேலைநாடுகளில் செய்திப் பரிமாற்றம் உரோம்    நாட்டிலும்,    இத்தாலியிலும் செய்திகள் அனுப்பப்பட்டன.

உரோம்

உரோம் நாட்டில் ஜூலியஸ் சீஸர் ஆட்சிக் காலத்தில்  அரண்மனைச் செய்திகள் படைத்தளபதிகளுக்கு அனுப்பப்பட்டன.  இச்செய்திகள் ஆக்டா டைர்னா (Acta Diurna) என்று  அழைக்கப்பட்டன.

இத்தாலி

இத்தாலி நாட்டில் அரசாங்கச் செய்திகளை எழுதித்  தெருக்களில் வைத்தனர். அதனை அருகில் வந்து படிப்பதற்கு  கெஜட்டா என்னும் சிறு நாணயம் கட்டணமாகப் பெறப்பட்டது.அதன் தொடர்ச்சியாகவே அரசிதழ்கள் கெசட் எனப்பட்டன.

இந்தியாவில் செய்திப் பரிமாற்றம் இந்தியாவில் அசோகர் காலத்தில் நாட்டில் நிகழ்ந்தவைகளைக் கல்வெட்டில் பொறித்து வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.     புத்தமதக் கொள்கைகள்,     அரசாணைகள்  முதலியனவும் இக்கல்வெட்டுகளில் இடம் பெற்றன. இவற்றை  இந்திய இதழ்களின் முன்னோடியாகக் கொள்ளலாம் என்பர்.

பிற்காலச் சோழர்களில்     இராசராசன் காலத்தில் சாஸனங்களும் கல்வெட்டுக்களும் ஏற்படுத்தப்பட்டன. இவையும்  அரசாங்கச் செய்திகளை மக்களுக்கு அறிவித்தன.

மொகலாயப் பேரரசர்கள் ஆட்சியில் பலதரப்பட்ட  செய்தியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். ஒளரங்கசீப்  மன்னனது காலத்தில் நாட்டு மக்களிடமிருந்து செய்திகளைச்  சேகரிப்பதற்கு வாக்யா நாவிஸ் (Vaquia Navis) என்ற  செய்தியாளர்கள் இருந்தனர். அரசிடமிருந்து மக்களுக்குச் செய்திகளைக் கொண்டு செல்வோருக்கு சவானிக் நாவிஸ்  (Savanik Navis) என்ற செய்தியாளர்கள் இருந்தனர். இரகசியச் செய்திகளைச் சேகரிப்பவர் கோஃபியா நாவிஸ் (Cofia Navis) எனப்பட்டனர்.    இச்செய்தியாளர்கள் அனுப்பும்  செய்திகள் ஒளரங்கசீப்பின் அவையில் நள்ளிரவு வரையில் பெண்களால் படிக்கப்பட்டன. இச்செய்திகளின் அடிப்படையில்  அரசாங்கம் முடிவெடுத்தது. இதனை நிக்கோலோ மானுசி  என்ற வெனிஸ் பயணி தமது குறிப்பில் சுட்டுகின்றார்.

செய்தி மற்றும் செய்தியாளர்களின் அவசியத்தைப் புரிந்து  கொண்ட ஆங்கிலேயர்களும் செய்தியாளர்களைப் பணியில்  அமர்த்தினர். 1704ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் நாள்  இராமச்சந்திரா என்பவரை ஹூக்ளியில் வக்கீலாக நியமித்தனர்.  ஆங்கிலேயர்கள் தொடர்பான    செய்திகளைத் தமது தாய்மொழியிலேயே தெரிவிக்கலாம் என்றும் அவருக்கு  அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு இந்தியாவில் செய்திப் பரிமாற்றம் வளர்ந்து  வந்திருக்கிறது.

அச்சுக் கலையும் இதழ்களின் தோற்றமும்

இன்றைய இதழ்களின் வடிவத்திற்கு உறுதுணையாக இருப்பவை காகிதமும் அச்சு இயந்திரமும் ஆகும். இவற்றின் வருகையும் வளர்ச்சியும் இதழியலின் வருகைக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பவை எனலாம்.

மல்பெரி மரத்தின் பட்டைகளில் இருந்து சீனர்கள் காகிதம் செய்யும் கலையைக் கண்டறிந்தனர். சீனர்களிடம் இருந்தே பிற நாட்டினர் காகிதம் செய்யும் கலையைத் தத்தம் நாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

காகிதம் போன்றே அச்சுக்கலையின் பிறப்பிடமும் சீனா என்றே உலக வரலாறு சுட்டுகிறது. மர எழுத்துக்களில் மைதடவி அவற்றை அழுத்தினர். ஆகவேதான் அச்சு வழிப்பட்ட இதழியல் துறை பிரஸ் (Press) எனப்படுகிறது.

உலகின் மிகப்பழைய இதழ்

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மரப்பலகையில் செதுக்கிய இதழ்கள் சீனாவில் வெளியாயின. கிஸ்போ, பீகிங் நியூஸ், பீகிங் கெஜட் முதலியன அவ்வாறு வெளியான இதழ்களாகும். கி.பி.1835 வரை வெளியான பீகிங் நியூஸ் இதழுக்கு 1200ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த இதழே உலகின் மிகப்பழைய இதழாகக் கருதப்படுகிறது.

அச்சு இயந்திரமும் முதல் இதழும் 450இல் ஜான் கூடன்பர்க் (John Gutenberg) என்ற ஜெர்மானியர் முதன் முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தார். அதன் காரணமாக முதல் அச்சிதழும் ஜெர்மனியில் இருந்தே வெளிவந்தது. முதலில் ஜெர்மனியில் முழுமையான இதழ்களாக இல்லாமல் துண்டுப் பிரசுரங்களை (News Pamphlets) வெளியிட்டனர். பல்லாண்டுகள் கழித்து 1609இல் ஜெர்மனியின் ஸ்ட்ராஸ்பெர்க் நகரிலிருந்து உறவு (Relation) என்ற இதழ் வெளிவந்தது. இதுவே உலகின் முதல் அச்சிதழ் ஆகும்.

இங்கிலாந்தில் இதழ்கள் பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் பல நாடுகளில் இதழ்கள் வெளியாயின. அரசியல், பொருளாதாரச் செய்திகளை நூல் வடிவத்தில் வெளியிட்டனர். வாணிப நிறுவனங்கள் செய்திக் கடிதங்களைச் சுற்றுக்கு விட்டன.

1622ஆம் ஆண்டில் தி வீக்லி நியூஸ் (The Weekly News) என்ற பெயரில் இங்கிலாந்தின் முதல் மாத இதழ் தொடங்கப்பட்டது. 11.3.1708இல் எலிஸபெத் மாலெட் (Elizabeth Mallet) என்ற பெண்மணி இங்கிலாந்தில் தினசரிச் செய்திகள் (The Daily Courant) என்ற நாளிதழைத் தொடங்கினார். இதுவே இங்கிலாந்தின் முதல் நாள் இதழாகும். 1785ஆம் ஆண்டு ஜான் வால்டர்(John Walter) என்பார் தொடங்கிய தினசரி உலகப் பதிவேடு என்ற நாளிதழே லண்டன் டைம்ஸ் எனப் பெயர் மாற்றம் பெற்று விளங்குகிறது.

ஆஸ்திரேலியாவில் இதழ்கள் தொடக்கக் காலத்தில் அச்சுக்கலை அறிந்தவர்களே இதழாசிரியர்களாக இருந்தனர். 1788ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அச்சகத் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். தண்டனையை அனுபவிப்பதற்காகக் கப்பலில் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டார். அக்கைதியால் ஆஸ்திரேலியாவில் முதல் இதழ் தொடங்கப்பட்டது.

இந்திய இதழியல் வரலாறு

ஐரோப்பியர்களின் வருகையால் இந்தியாவில் விளைந்த நன்மைகளுள் ஒன்று இதழ்களின் தோற்றமாகும். இந்தியச் சமுதாயத்தின் எல்லாத் தரப்பினரையும் தொடர்பு கொள்ளுவதற்காக அவர்கள் இந்திய மொழிகளைப் பயின்றனர்; தங்களது மத போதனைகளை அம்மொழிகளில் நூல்களாக வெளியிட்டனர்.

1577ஆம் ஆண்டு கோவாவில் போர்த்துகீசியரால் தம்பிரான் வணக்கம் என்ற முதல் தமிழ்நூல் அச்சானது. இதுவே இந்தியாவின் முதல் அச்சு நூலாகும்.

பெங்கால் கெசட் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய ஆங்கிலேயர்கள்தான் இந்திய இதழ்களின் தொடக்க முயற்சியாளர்கள் ஆவர். 1766ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகிய வில்லியம் போல்டஸ் என்பார் தமது இதழியல் முயற்சியை அறிக்கையாக வெளியிட்டார். வணிக வளர்ச்சி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டுவதோடு, தனிப்பட்டவர்கள் பற்றிய விவரங்களும் தம்மிடம் உள்ளதாக போல்ட்ஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதனால் ஆங்கிலேய அரசாங்கம் அவரை இந்தியாவிலிருந்து வெளியேற்றியது. இவ்வாறு இந்தியாவில் முதல் இதழியல் முயற்சி அடக்கு முறைக்கு ஆளானது.

கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் கழித்து ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி 1780ஆம் ஆண்டு சனவரி 29ஆம் நாள் பெங்கால் கெசட் அல்லது கல்கத்தா அட்வர்டைசர் என்ற செய்தி இதழை வெளியிட்டார்.

12”(inches)x 8”(inches) அளவில் இரண்டு பக்கங்களில் வார இதழாக ஆங்கில மொழியில் பெங்கால் கெசட் வெளியானது. இங்கிலாந்து இதழ்களில் வெளியான செய்திகள், விளம்பரங்கள், கடிதங்கள் முதலியன இவ்விதழில் இடம் பெற்றன. ஆங்கில அரசின் முறையற்ற செயல்களையும், அதிகாரிகளின் தனிப்பட்ட வாழ்க்கையையும் எள்ளல் நடையில் ஹிக்கி தமது இதழில் வெளியிட்டார். ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ், அவரது மனைவி, உச்ச நீதிமன்ற நீதிபதி எலிஜா இம்பே முதலியோர் பற்றியும் செய்திகளை வெளியிட்டார். அதனால் அரசின் அடக்குமுறைக்கு ஆளானார் ஹிக்கி. இரண்டே ஆண்டுகளில் 1782 மார்ச் மாதம் பெங்கால் கெசட் இதழ் நின்றது. எனினும், ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி, இந்தியச் செய்தித்தாள்களின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

பிற இதழ்கள் இந்திய இதழ்கள் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய முப்பெரு நகரங்களிலிருந்து வெளிவந்தன. 1780ஆம் ஆண்டு பி.மெஸ்ஸின்க், பீட்டர் ரீட் ஆகிய இருவரும் கல்கத்தாவிலிருந்து இந்தியா கெசட் என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டனர். இவ்விதழ் ஆங்கில அரசின் ஆதரவு இதழாக வெளிவந்தது. 1784இல் கல்கத்தா கெசட், 1785இல் ஓரியண்டல் மேகஸின் அல்லது கல்கத்தா அம்யூஸ்மென்ட், 1785இல் பெங்கால் ஜர்னல் ஆகிய ஆங்கில இதழ்கள் கல்கத்தாவிலிருந்து வெளிவந்தன.

1785ஆம் ஆண்டு மெட்ராஸ் கூரியர் என்ற ஆங்கில வார இதழ் சென்னையிலிருந்து வெளியானது.

1789இல் பாம்பே ஹெரால்ட், 1790இல் பாம்பேகூரியர், 1791இல் பாம்பே கெசட் முதலிய ஆங்கில வார இதழ்கள் பம்பாயிலிருந்து (இன்றைய மும்பை நகரம்) வெளிவந்தன.

1818இல் திக்தர்சினி என்ற வங்க மொழி இதழும், 1821ஆம் ஆண்டு மீரட் அல் அக்பர் என்ற பாரசீக மொழி இதழும், 1822ஆம் ஆண்டு மும்பாய்னா சமாச்சார் என்ற குஜராத்தி மொழி இதழும் வெளிவந்தன.

இந்திய இதழ்கள் தொடக்கத்தில் சமயப் பிரச்சாரங்களையும், ஆங்கிலேய அரசின் செய்திகளையும் மட்டுமே வெளியிட்டன. காலப் போக்கில் பிற செய்திகளும் இவ்விதழ்களில் வெளியாயின.

தமிழ் இதழியல் வரலாறு

தமிழ் இதழியல் வரலாறு என்பது இந்தியாவிற்குள் மட்டும் முடிந்து விடுவது அன்று. தமிழர்கள் பரவியிருந்த இலங்கை, பர்மா, பிஜித் தீவுகள் முதலியனவும், கல்வி கற்கச் சென்ற இங்கிலாந்து முதலிய மேலைநாடுகளும் எல்லைகளாகும். இவ்வாறு தமிழ் கூறும் நல்லுலகம் முழுமையும் ஆய்வுக்கு உரியவை என்பார் இதழியலாளர் அ.மா.சாமி அவர்கள்.

முதல் தமிழ் இதழ் இந்திய இதழாளர்கள் 1831ஆம் ஆண்டு வெளியான தமிழ்மேகசின் என்பதையே முதல் தமிழ் இதழாகக் கருதுகின்றனர். ஆயின், அ.மா.சாமி அரசாங்க வர்த்தமானி என்ற இதழை முதல் தமிழ் இதழாக நிறுவுகிறார்.

1802ஆம் ஆண்டு இலங்கை அரசின் சார்பில் ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மும்மொழிகளில் ஓர் இதழ் வெளியிடப்பட்டது. அவ்விதழின் தமிழ்ப் பிரிவே அரசாங்க வர்த்தமானி ஆகும். இதனையே அ.மா.சாமி முதல் தமிழ் இதழாகக் கருதுகிறார்.

பிற இதழ்கள் 1812ஆம் ஆண்டில் மாச தினச்சரிதை என்ற தமிழ் இதழ் வெளிவந்ததைத் திருக்குறள் பதிப்பின் வழி அறிய முடிகிறது. தமிழ் நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் இதழாக இதனைக் குறிப்பிடலாம். மாசத் தினச் சரிதை என்றே புள்ளியின்றி அச்சான நிலையை அறிய முடிகிறது. (பார்க்க. படம்) இவ்விதழின் படி ஏதும் தற்போது கிடைக்கவில்லை.

1815ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கிறித்துவ திருச்சபையினரால் திருச்சபை இதழ் வெளியிடப்பட்டது.

1823ஆண்டு பிரெஞ்சு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் புதுவை அரசிதழ் வெளியானது. இவ்விதழ் முதலில் பிரெஞ்சு இந்திய அரசு நிர்வாக ஆவணம் என்ற பெயரில் வெளியானது. புதுவை அரசு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகே புதுவை அரசிதழ் எனப் பெயரிடப்பட்டது.

1829ஆம் ஆண்டு சுஜந ரஞ்சனி என்ற இதழ் பெங்களூரில் இருந்து வெளிவந்தது.

1831ஆம் ஆண்டு சென்னை கிறித்துவ சமயக் கல்விக் கழகம் தமிழ் மேகசின் என்ற இதழை வெளியிட்டது. இவ்விதழே தமிழின் முதல் இதழாக இதழியலாளர்களால் சுட்டப்படுகிறது.

1832ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கெசட்டு என்ற சென்னை அரசின் இதழ் வெளியானது.

1833இல் இராசவிருத்தி போதினி என்ற இதழும், 1835இல் மெட்ராசு கிரானிகல் என்ற வார இதழும் வெளியாயின.

தொடக்கத்தில் தமிழ் இதழ்கள் கிறித்துவ மதச் சார்புடையனவாக வெளிவந்தன. இதற்கு மாற்றாக இந்துமதம், சித்தாந்தம், விரதம், புராணம், தர்க்கம் ஆகியவற்றின் அடிப்படையிலும் இதழ்கள் வெளிவந்தன. 1866ஆம் ஆண்டு வெளிவந்த கலாவர்த்தமானி குறிப்பிடத் தகுந்தது.

காலப்போக்கில் இந்திய விடுதலை இயக்கம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றிற்குத் தமிழ் இதழ்கள் இடமளித்தன எனலாம்.

இன்றைய நிலை

வெளிநாட்டினர் வருகையால் அச்சு உருவம் கொண்ட தமிழ்மொழியின் தற்போதைய நிலை உலகளாவியதாகும். 1997ஆம் ஆண்டு ஏக்நாத் என்பவர் வீடியோ இதழை வெளியிட்டார். இன்று தமிழ் மொழியின் நாள், மாத இதழ்கள் கணினி வலைப்பின்னலில் காட்சி அளிக்கின்றன.

தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை இதழியல் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள். இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்ட செய்திகளை நினைவு படுத்திப் பாருங்கள் !

இதழியல் பற்றிப் பொதுவாக அறிந்து கொள்ளலாம்.

இதழியல் என்ற கலைச் சொல்லின் மூலம், அகராதி சுட்டும் பொருள், அறிஞர்களின் கருத்துகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

செய்திப் பரிமாற்றம், அவற்றின் வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றியும் அறியலாம்.

அச்சு இயந்திரத்தின் வருகையால் உருவான இதழியலின் தோற்றம், வளர்ச்சி முதலியன பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

இதழியலின் அறிமுகமாக அமையும் இப்பாடத்தின் மூலம் இதழியல் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்.

பாடம் - 2

இதழ்களின் வரையறை

பாட முன்னுரை

பெருகி வரும் தொழில் நுட்பம், அறிவியல் முன்னேற்றம் முதலியவற்றால் இதழ்கள் பெருக்கமடைந்துள்ளன. இதழ்களின் வரையறையை விளக்குவதாகப் பாடத்தின் முதற்பகுதி அமைகின்றது. இதழ்கள் வெளியாகும் காலம் மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. உள்ளடக்க அடிப்படையில் இதழ்கள் வேறுபடுத்தப்பட்டுச் சான்றுகளுடன் விளக்கப்படுகின்றன. இவையே இந்தப் பாடத்தில் குறிப்பிடப்படுபவை ஆகும்.

இதழ்கள்

பொதுவாக, அச்சிட்ட செய்திகளையும் கருத்துகளையும் பரப்ப வெளிவருகின்ற எல்லாவற்றையும் இதழ்கள் என்ற பொதுச் சொல்லால் குறிப்பிடலாம்.

இதழ்களின் வரையறை உலக ஆங்கில என்சாட்ரா அகராதி பின்வருமாறு இதழ்களை வரையறை செய்கிறது:

செய்திகளைச் சேகரிப்பதும், சேகரித்த செய்திகளைச் செம்மையாக்கி, தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் முதலிய தகவல் தொடர்புச் சாதனங்கள் வழி செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் பிற இலக்கிய வகைகளாகவும் வெளியிடுவதும் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்வன இதழ்கள் என்று உரைக்கப்படுகின்றது. தகவல் தொடர்புச் சாதனங்களின் வழி இலக்கிய வகைமைகளாகச் செய்திகளைத் தனித்த நடையில் எழுதுவதும் வெளியிடுவதும் ஆகிய செயல்கள் முதலியவற்றை மேற்கொள்வனவற்றையும் இதழ்கள் எனலாம். இதழ்கள் வெளியாகும் கால அடிப்படையிலும் உள்ளடக்க அடிப்படையிலும் வகைப்படுத்தி வரையறுக்கலாம். சான்றாக நாள்தோறும் வெளியாகும் இதழ்களை நாளிதழ்கள் எனலாம்.

இதழ்களின் வகைகள் இதழ்கள் பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்கள் வெளிவரும் கால அடிப்படையிலும், இடம்பெறும் செய்திகள் மற்றும் யாருக்காக வெளியிடப்படுகின்றன என்ற அடிப்படையிலும், தர அடிப்படையிலும் (Quality) வகைப்படுத்தப்படுகின்றன. இதழ்களின் உள்ளடக்க அடிப்படையிலும் வேறுபடுத்தி வகைகளாக்கப்படுகின்றன.

கால அடிப்படை

பெரும்பாலும் இதழ்கள் வெளியாகும் காலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. நாள்தோறும் வெளியானால் நாளிதழ் என்றும், வாரந்தோறும் வெளியானால் வார இதழ் என்றும், மாதந்தோறும் வெளியானால் மாத இதழ் என்றும், ஆண்டுதோறும் வெளியாகும் இதழ்கள் ஆண்டிதழ் என்றும் அழைக்கப்படுகின்றன.

கால அடிப்படையிலான இதழ்களின் பகுப்பை வரைபடம் மூலம் விளக்கலாம்.

தர அடிப்படை

வெளியாகும் செய்திகள் மற்றும் எவ்வகையான வாசகர்களுக்காகப் பிரசுரமாகின்றன என்ற அடிப்படையில் இதழ்களைப் பகுக்கலாம். (1) தரமான இதழ்கள் (2) பொது மக்கள் இதழ்கள் (3) நச்சு இதழ்கள் எனப் பிரிப்பர்.

துறை சார்ந்த ஆராய்ச்சி இதழ்களைத் தரமான இதழ்கள் என்றும், பொழுதுபோக்கிற்காகப் பொது மக்கள் படிக்கும் இதழ்களைப் பொது மக்கள் இதழ்கள் என்றும் படிப்பவர்களின் உள்ளத்தை நஞ்சாக்கும் இதழ்களை நச்சு இதழ்கள் என்றும் வரையறுக்கலாம்.

உள்ளடக்க அடிப்படை

இதழ்களில் இடம் பெறும் செய்திகள் மற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும் இதழ்களை வரையறைப்படுத்தலாம். அதாவது வெளியிடப்படும் செய்திகள் மற்றும் படைப்புகள் எதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன என்ற அடிப்படையில் இதழ்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகையான பகுப்பு மிக நீண்டதாகவும் விரிவானதாகவும் உள்ளமையைப் பாடத்தின் போக்கில் காணலாம்.

கால அடிப்படையிலான இதழ்கள்

குறிப்பிட்ட கால இடைவெளியில் வருவதைக் கால இதழ் (Periodical) அல்லது பருவ இதழ்கள் (Magazine) என்று கூறலாம். இவற்றை, வெளிவரும் கால இடைவெளியின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

நாளிதழ் நாள்தோறும் வெளியாகும் இதழ்களை நாளிதழ் என்கிறோம். அன்றாடச் செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பவை நாளிதழ்களே. இதழியல் என்ற ஆங்கிலக் கலைச்சொல்லான ஜர்னல் என்ற சொல்லின் இலத்தீன் மூலமே அன்றாடம் என்ற பொருளைக் குறிப்பிடுவது நினைவில் கொள்ளத்தக்கதாகும். நாளிதழ்களில் பெரும்பாலும் செய்திகள் இடம் பெறுகின்றன. வர்த்தகம், தொழில், சினிமா, விளையாட்டு, சட்டம், தொழிலாளர் நலன், கல்வி, அரசியல், கட்சிகள், மகளிர், சிறுவர் பற்றிய செய்திகளுக்கும் நாளிதழ்கள் இடம் ஒதுக்குகின்றன. உள்ளூர்ச் செய்திகளிலிருந்து வெளிநாட்டுச் செய்திகள் வரை எல்லாத் தரப்புச் செய்திகளையும் தருவது நாளிதழின் நோக்கமாகும். செய்திகளின் நம்பகத்தன்மைக்காகப் புகைப்படங்கள் இடம் பெறுகின்றன. நாட்டு நடப்புகளை வெளிப்படுத்தும் வகையில் கருத்துப்படங்களும் (cartoons) இடம் பெறுகின்றன.

நாளிதழ்களின் வடிவம் உலகெங்கிலும் ஒரே மாதிரியாக உள்ளது என்பர். டெம்மி என்றழைக்கப்படும் அளவில் நாளிதழ்களின் பக்கங்கள் உள்ளன. ஒருபக்கம் எட்டுப் பத்தியாகப் பிரிக்கப்படுகிறது. நாளிதழ்கள் வெளிவரும் நேரத்தின் அடிப்படையில் காலை இதழ்கள், மாலை இதழ்கள் எனப் பிரிக்கப்படுகின்றன.

காலை இதழ்கள்

காலையில் வெளியாகும் நாளிதழ்களைக் காலை இதழ்கள் எனலாம். இக்காலை இதழ்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வெளியாகின்றன.

சான்று: ஆங்கிலம் :அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்; இந்தியாவில் தி ஸ்டேட்ஸ்மன், தி டைம்ஸ் ஆஃப் இண்டியா முதலியன

தமிழில் :தினத்தந்தி, தினமலர் முதலியவை.

மாலை இதழ்கள்

ஒவ்வொரு நாளும் மாலையில் வெளியாகும் இதழ்களை மாலை இதழ்கள் எனலாம். அன்றாடம் மதியம் ஒருமணி வரை உள்ள செய்திகள் மாலை இதழ்களில் வெளியாகின்றன. சிலபோது இன்றிமையாச் செய்திகள் வெளியிடுவதற்காகக் காலை பதினொருமணி அளவில் முதற்பதிப்பை வெளியிடுகின்றன. சான்றாகப் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாலைமுரசு நாளிதழ் வெளியிடும் சிறப்புப் பதிப்பினைச் சுட்டலாம்.

பொதுத் தேர்தலின் போதும் இம்மாதிரி இரண்டு அல்லது மூன்று பதிப்புகளை இம்மாலை இதழ்கள் வெளியிடுகின்றன.

சான்று :மாலை முரசு, மாலை மலர்

வார இதழ்கள் வாரந்தோறும் வெளியாகும் இதழ்களை வார இதழ்கள் என வரையறைப்படுத்தலாம். வார இதழ்களில் செய்திகள் இடம் பெற்றாலும், செய்தியின் பின்னணி, என்ன காரணம், எப்படி நடந்தது என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து, பின்னணியுடன் இவ்வார இதழ்கள் வெளியிடுகின்றன.

நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின்றன; வார இதழ்களில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின்றன. உலகெங்கிலும் நாளிதழ்களை விட வார இதழ்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது எனலாம். இலக்கியம், சமயம், தத்துவம், கலை, தொழில், திரைப்படம், கல்வி, பொருளாதாரம், விளையாட்டு ஆகியவை பற்றிய கருத்துகள் வார இதழ்களில் அதிகம் இடம் பெறுகின்றன. தமிழ்மொழி வாரஇதழ்களில் நகைச்சுவைத் துணுக்குகளும் தவறாது இடம் பெறுகின்றன. வார இதழ்களில் கதை, கட்டுரை முதலியவற்றிற்கு ஓவியர்கள் வரையும் ஓவியங்கள் இடம் பெறுகின்றன. இலக்கியம் சார்ந்த சிறுகதை, நாவல் (தொடர்கதை), கவிதை, செய்திக்கட்டுரைகள் முதலியனவும் இடம் பெறுகின்றன.

வார இதழ்களை, அவை வெளியாகும் கால இடைவெளியின் அடிப்படையில் வகைப்படுத்தி வரையறுக்கலாம்.

வாரம் மும்முறை இதழ்கள்

ஒரு வாரத்தில் மூன்று முறை வெளியாகும் இதழ்களை வாரம் மும்முறை இதழ்கள் எனலாம். கிட்டத்தட்ட இந்த இதழ்கள் செய்தி இதழ்களாக உள்ளன. வாரம் மும்முறை இதழ் வரிசையில் தமிழின் முதல் இதழ் காலக்கணிதன் ஆகும். 1883ஆம் ஆண்டு மே மாதம் முதல் இவ்விதழ் வாரம் மும்முறையாக வெளியானது. 1897ஆம் ஆண்டு சுதேசமித்திரன் வாரம் மும்முறை இதழாகத் தொடங்கப்பட்டது.

வாரம் இருமுறை இதழ்கள்

வாரத்திற்கு இருமுறை வெளியாகும் இதழ்கள் உண்டு. இவையும் செய்தி இதழ்களாக உள்ளன.

சான்று:  ஜூனியர் விகடன் குமுதம் ரிப்போர்ட்டர்

1832ஆம் ஆண்டு வெளிவந்த புனித ஜார்ஜ் கெசட் என்பது தமிழின் முதல் வாரம் இருமுறை இதழாகும்.

வாரம் இருமுறையோ, மும்முறையோ வெளிவரும் இதழ்களையும் உலக நாடுகளின் கல்வி, சமுதாயம், பண்பாட்டு அமைப்பு (UNESCO) நாளிதழ்களாகவே கருதுகின்றது. அவ்வகையில் செய்திகளையே முக்கியமாகக் கருதும் இவ்விதழ்களை நாளிதழ் வரிசையில் சேர்க்கலாம்.

வார இதழ்கள்

வாரந்தோறும் வெளியாகும் இதழ்களை வாரஇதழ்கள் என்பர். இவ்விதழ்களில் செய்திகளோடு சிறுகதை, கட்டுரை, கவிதை போன்றவையும் இடம் பெறுகின்றன.

சான்று :

குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், கல்கி.

1983ஆம் ஆண்டுக் கணக்கின்படி இந்தியாவில் 6128 வார இதழ்கள் வெளியாகியுள்ளன. 1823ஆம் ஆண்டு புதுவையிலிருந்து வெளியான புதுவை அரசிதழ் தமிழில் வெளிவந்த முதல் வார இதழ் ஆகும்.

மாத இதழ்கள் மாதந்தோறும் வெளிவரும் இதழ்களை மாத இதழ்கள் என வரையறுக்கலாம். நாளிதழ், வார இதழ்களை விட ஒரு செய்தியை ஆழமாகவும் அகலமாகவும் வெளியிடுவதற்கு மாத இதழ்கள் இடமளிக்கின்றன. இம்மாத இதழ்களும் வெளியாகும் கால இடைவெளியின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

மாதம் மும்முறை இதழ்கள்

மாதந்தோறும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்றுமுறை வெளியாகும் இதழ்கள் மாதம் மும்முறை இதழ்களாகும். இவ்விதழ்களும் செய்தியைப் பின்னணியாகக் கொண்ட கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன. 1833ஆம் ஆண்டு வெளியான இராசவிருத்திபோதினி என்பது தமிழின் முதல் மாதம் மும்முறை இதழாகும். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியான இவ்விதழுக்கு அரசாங்கம் உதவிப்பணம் அளித்தது. மதியம், திருவாங்கூர் அபிமானி முதலிய இதழ்கள் மாதம் மும்முறை இதழ்களில் குறிப்பிடத்தகுந்தவையாகும்.

மாதம் இருமுறை இதழ்கள்

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வெளியாகும் இதழ்கள் மாதமிருமுறை இதழ்கள் (Fortnightly) என்று அழைக்கப்படுகின்றன. வார இதழ்களுக்கும் மாத இதழ்களுக்கும் இடையில் இருக்கும் இவ்விதழ்கள், இவ்விரு இதழ்களையும் இணைக்கும் பாலமாகச் செயற்படுகின்றன எனலாம்.

1835ஆம் ஆண்டு சென்னையிலிருந்து வெளியான சத்தியதூதன் என்பது தமிழின் முதல் மாதமிருமுறை இதழாகும். கிறித்துவ சமயக் கல்விக்கழக வெளியீடாகத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியானது. இலாசரசு என்பவரை ஆசிரியராகக் கொண்டு மற்றொரு சத்தியதூதன் இதே ஆண்டில் ஒருபைசா விலையில் சென்னையிலிருந்து வெளியானது.

சான்று:அவள் விகடன்,

இந்தியா டுடே (தமிழ், ஆங்கிலம் முதலிய பல மொழிகளில்)

மாத இதழ்கள்

மாதந்தோறும் வெளியாகும் இதழ்களை மாத இதழ்கள் என வரையறை செய்வர். துறை சார்ந்த இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள் முதலியன மாத இதழ்களாக வெளியாகின்றன. 1812ஆம் ஆண்டு வெளியான மாசதினச் சரிதை என்ற இதழ் தமிழின் முதல் மாத இதழாகும். இவ்விதழ் பற்றிய செய்திகளை இதழியல் அறிமுகம் என்ற பாடத்தில் காணலாம்.

சான்று :

கலைமகள், செந்தமிழ்ச் செல்வி

ஆண்டிதழ்கள் ஓர்ஆண்டின் கால எல்லைக்குள் வெளியாகும் இதழ்களை ஆண்டிதழ்கள் எனக்குறிப்பிடலாம். அவையும் வெளியாகும் கால எல்லைக்குள் பகுத்துச் சுட்டப்படும்.

காலாண்டிதழ்

மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளியாகும் இதழ்கள் காலாண்டிதழ்கள் ஆகும். இவ்வகை இதழ்கள் பெரும்பாலும் ஆய்வு மற்றும் துறை சார்ந்த இதழ்களாக உள்ளன. 1815ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியான யாழ்ப்பாணத் தமிழ்த் திருச்சபை இதழ் முதல் தமிழ்க் காலாண்டிதழாகும்.

அரையாண்டிதழ்

ஆண்டுக்கு இருமுறை வெளியாகும் இதழ்களை அரையாண்டு இதழ்கள் என வரையறை செய்யலாம். இவையும் துறை சார்ந்த இதழ்களாக உள்ளன. சொல்ல வந்த பொருள் பற்றிய செய்திகளை ஆழமாக வெளியிடும் இதழ்கள் அரையாண்டிதழ்கள் ஆகும். 1894ஆம் ஆண்டு வெளியான பிரம்ம வித்யா என்பது முதல் அரையாண்டிதழ் ஆகும்.

ஆண்டிதழ்

ஆண்டுதோறும் வெளியாகும் இதழ்கள் ஆண்டிதழ்கள் எனப்படும். கல்லூரி, பள்ளி, அலுவலகம் பற்றிய பொதுவான செய்திகள் வெளியாகும் ஆண்டுமலர்களை ஆண்டிதழ்கள் எனலாம். 1885ஆம் ஆண்டு வெளியான சாமியின் ஆண்டிதழ் முதல் தமிழ் ஆண்டிதழாகும். இதழ்கள் வெளிவரும் கால அடிப்படையிலான வகைகளை இதுவரை கண்டறிந்தோம்.

தர அடிப்படையிலான இதழ்கள்

இதழ்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் இதழ்கள் பகுக்கப்படுகின்றன. இவற்றைத் தன்மை அடிப்படைப் பகுப்பு (Quality) எனவும் கூறலாம். அவ்வகையில்

(1) தரமான இதழ்கள்

(2) மக்கள் இதழ்கள்

(3) நச்சு இதழ்கள்

என வகைப்படுத்தலாம்.

தரமான இதழ்கள்

இலக்கியம், கலை, அறிவியல் தொடர்பான ஆழமான செய்திகளை வெளியிடும் ஆராய்ச்சி இதழ்களைத் தரமான இதழ்கள் என வரையறுக்கலாம்.

சான்று :

கலைமகள், செந்தமிழ்ச்செல்வி, கிஸான் வோர்ல்ட்

மக்கள் இதழ்கள்

செய்திகள், கதை, கட்டுரை, திரைப்படம் எனப் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இதழ்களை மக்கள் இதழ்கள் எனலாம். பரவலான செல்வாக்குப் பெற்ற இதழ்கள் இவ்வகையினதாகும்.

சான்று:

குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், கல்கி

நச்சு இதழ்கள்

படிப்பவரின் மனத்தைக் கெடுக்கும் பாலியல் மற்றும் வன்முறைச் செய்திகளைத் தூண்டுபவை நச்சு இதழ்கள் எனப்படும் (Yellow Magazines). இவ்வகையான இதழ்களை அரசாங்கம் பறிமுதல் செய்கிறது. எனினும் இரகசியமான     முறையில் விற்பனையாகின்றன. எவ்வாறிருப்பினும், இவ்விதழ்கள் ஒழிக்கப்பட வேண்டியவை ஆகும்.

உள்ளடக்க அடிப்படையிலான இதழ்கள்

கால அளவு, வெளியாகும் செய்திகளின் தன்மை முதலியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தினாலும் இதழ்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் இதழ்களை வேறுபடுத்தி அறியலாம். இதனை உள்ளடக்க அடிப்படையிலான பகுப்பு எனலாம். இவ்வகையிலான பகுப்பு மிக நீண்டதாகவும் முடிவற்றதாகவும் உள்ளமை நினைவில் கொள்ளத்தக்கதாகும். பெரும்பான்மையும் இடம் பெறும் செய்திகளின் அடிப்படையிலும் சிலவற்றை வரையறை செய்யலாம். அவை வருமாறு :

(1)அயல்நாட்டுத் தூதரக இதழ்கள்

(2)அரசியல் இதழ்கள்

(3)அறிவியல் இதழ்கள்

(4)இலக்கிய இதழ்கள்

(5)கலை இதழ்கள்

(6)சமய இதழ்கள்

(7)சிறுவர் இதழ்கள்

(8)சோதிட இதழ்கள்

(9)தனிச்சுற்று இதழ்கள்

(10)திரைப்பட இதழ்கள்

(11)தொகுப்பு இதழ்கள்

(12)தொழில் இதழ்கள்

(13)பன்மொழி இதழ்கள்

(14)புலனாய்வு இதழ்கள்

(15)பொருளாதார இதழ்கள்

(16)பொழுதுபோக்கு இதழ்கள்

(17)மகளிர் இதழ்கள்

இந்தப் பட்டியல் முடிவற்றதாகவும் விரிந்து இடமளிக்கும் தன்மைமிக்கதாகவும் உள்ளது என்பது எண்ணத்தக்கதாகும். இந்தப் பகுப்பினை ஒவ்வொன்றாக வரையறுத்துக் காண்போம்.

அரசியல் இதழ்கள் அரசியல் செய்திகள் மட்டும் வெளியிடும் இதழ்கள் அரசியல் இதழ்கள் என வரையறுக்கப்படுகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கட்சிக்கென இதழ்களை நடத்துகின்றன. இந்தியாவில் உள்ள கட்சிகள் அனைத்தும் வட்டார மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இதழ்களை நடத்துகின்றன. இவற்றில் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் அடங்கும். பிற இதழ்களைப் போல இந்த அரசியல் கட்சி இதழ்கள் பொது மக்களால் விரும்பிப் படிக்கப்படாவிட்டாலும், கட்சியைச் சேர்ந்தவர்கள் படிக்கிறார்கள்.

சான்று :திராவிடர் கழகம் – விடுதலை

கம்யூனிஸ்ட் கட்சி – ஜனசக்தி

அயல்நாட்டுத் தூதரக இதழ்கள்

ஒரு நாட்டில் உள்ள பிற நாட்டுத் தூதரகங்கள் நடத்தும் இதழ்கள் இவ்வகை இதழ்கள் ஆகும். இவ்விதழ்களில் அவ்வந்நாட்டுச் செய்திகள், தூதரகம் உள்ளநாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. தூதரகம் அமைந்துள்ள நாட்டின் மொழியில் இத்தூதரக இதழ்கள் உள்ளன.

சான்று: இரஷ்யத் தூதரகம் இந்தியாவில் வெளியிட்ட சோவியத்நாடு (தற்பொழுது இல்லை) இதழ்.

அறிவியல் இதழ்கள் அறிவியல் தொடர்பான பல்வேறு துறைகளில் வெளியாகும் இதழ்களை அறிவியல் இதழ்கள் என வரையறுக்கலாம். இவ்விதழ்களில் அந்தந்த அறிவியல் துறைசார்ந்த ஆய்வுகள், வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்பு முதலிய செய்திகள் இடம்பெறுகின்றன. இத்தகைய அறிவியல் இதழ்கள் மாத இதழ்களாகவும், காலாண்டு, அரையாண்டு இதழ்களாகவும் வெளியாகின்றன. வட்டார மொழியைவிட இவ்வறிவியல் இதழ்கள் ஆங்கில மொழியில் தான் அதிகமாக வெளியாகின்றன. அறிவியல் இதழ்கள் பெரும்பாலும் தொழில்நுட்பக் கழகத்தின் பிரதிநிதிகள் அல்லது நிபுணர்களால் வெளியிடப்படுகின்றன. இவை, பொது மக்கள் ஆதரவைப் பெறவில்லை எனினும், அவ்வத்துறை சார்ந்தவர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.

சான்று: வேளாண்மைத்துறை: மேழிச்செல்வம், ஏர்முரசு – மாத இதழ்

உணவுப் பொருள் : பனைச்செல்வம், கரும்பு – மாத இதழ்

மருத்துவ இதழ்கள் :கட் (GUT) – மாத இதழ் பிரிட்டிஷ் ஜர்னல்ஆப்சர்ஜரி- மாத இதழ்

நல்வாழ்வு இதழ் :பேமிலிஹெல்த்; நல்வாழ்வு – மாத இதழ்

கணினித்துறை :தமிழ்க் கம்ப்யூட்டர்-மாத இதழ்

தொழில் இதழ்கள் தொழில் சார்ந்த இதழ்கள் பொருள் உற்பத்தி, வர்த்தகம் பற்றிய செய்திகளை வெளியிடுபவையாக உள்ளன. அவ்வத்துறை சார்ந்த நிபுணர்களால் இவ்விதழ்கள் வெளியிடப்படுகின்றன. நாடு தழுவியனவாக இல்லாமல் இவ்வகை இதழ்கள் உலகு தழுவியனவாக உள்ளன.

தொழிற்சங்கம் சார்ந்த செய்திகள் வெளியானால் அவை தொழிற்சங்க இதழ்கள் எனப்படுகின்றன.

சான்று: சகோதரன் (சிம்சன்-கூட்டுக் கம்பெனிகளின் தேசீயப் பணியாளர் சங்க வெளியீடு)

தொழில் உற்பத்தி, விவசாய விளைபொருள் உற்பத்தி, அவற்றின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் பற்றிய செய்தி வெளியிடும் இதழ்கள் மார்க்கெட் நிலவர இதழ்கள் எனப்படுகின்றன. வர்த்தக நிறுவனங்கள் தங்களுக்கெனத் தனியாக வெளியிடும் இதழ்கள் வர்த்தக நிறுவன இதழ்கள் அல்லது வளாக இதழ்கள் எனப்படுகின்றன.

சான்று : சக்தி சர்க்கரை நிறுவன இதழ்.

இலக்கிய, கலை, திரைப்பட, பொழுதுபோக்கு இதழ்கள் இலக்கியம், கலை, திரைப்படம், பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கெனத் தனித்தனி இதழ்கள் வெளிவருகின்றன.

இலக்கிய இதழ்கள்

சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரை முதலிய இலக்கிய வகைகள் பல்வேறுபட்ட படைப்பிலக்கியவாதிகளால் இதழ்களில் படைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை பொழுதுபோக்கு இதழ்களில் இடம்பெறுகின்றன. ஆழமான இலக்கியத்திற்கு எனத் தனித்த இலக்கிய இதழ்கள் தற்போது வெளியாகின்றன.

சான்று : குமுதம் தீராநதி ;    காலச்சுவடு

கவிதை மட்டும் வெளியாகும் இதழ்களைக் கவிதை இதழ்கள் எனவரையறுக்கலாம்.

சான்று: பொயட் – ஆங்கிலக் கவிதை இதழ்- மாதம் ஒருமுறை.

கதைகள் மட்டும் வெளியாகும் இதழ்கள் உண்டு. இவற்றைக் கதை இதழ்கள்/புதின இதழ்கள் எனலாம்.

சான்று : ராணிமுத்து ; நாவல் டைம்ஸ்

கலை இதழ்கள்

இசை, சிற்பம், ஓவியம், நடனம் முதலிய கலைகளுக்கு எனத் தனித்த இதழ்களைக் கலைகளுக்கான இதழ்கள் என வரையறுக்கலாம். இவை அவ்வத்துறை சார்ந்த செய்திகளையும், இன்றிமையா நிகழ்ச்சிகளையும், மாநாடுகள், விழாக்கள் பற்றிய செய்திகளையும் வெளியிடுகின்றன.

சான்று : சரிகமபதநி: ஸ்ருதி – இசை பற்றிய மாத இதழ்கள்

நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் முதலியவை கலைகளுக்கு எனத் தனித்த இடமளித்தாலும், இவ்வாறு தனித்த கலை இதழ்களும் உண்டு.

திரைப்பட இதழ்கள்

திரைப்படம் பற்றிய தொழில்நுட்பம், படப்பிடிப்பு, திரைப்படக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் முதலியன திரைப்பட இதழ்களின் உள்ளடக்கமாகும். பொதுவாக இந்திய இதழ்களில் வார, மாத, இதழ்களும் திரைப்படச் செய்திகளுக்கு இடமளிக்கின்றன. சான்றாக வார இதழான குமுதம் இதழின் நடுப்பக்கத்தில் வரும் படம் மற்றும் திரைப்படச் செய்திகளைக் குறிப்பிடலாம். தமிழ் மொழியில் திரைப்பட இதழ்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பியவையாக உள்ளன.

சான்று : சினிமா எக்ஸ்பிரஸ் ; பிலிமாலயா

பொழுதுபோக்கு இதழ்கள்

பொதுமக்களால் விரும்பிப் படிக்கப்படுகிற கதை, கட்டுரை, திரைப்படம், துணுக்கு முதலிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இதழ்களைப் பொழுதுபோக்கு இதழ்கள் எனலாம். இவ்விதழ்களை ஜனரஞ்சக இதழ்கள் என்றும் உரைப்பர்.

சான்று : குமுதம், ஆனந்த விகடன்

மகளிர், சிறுவர் இதழ்கள் மகளிருக்கென, சிறுவர்களுக்கென இதழ்கள் பல உள்ளன.

மகளிர் இதழ்கள்

மகளிர் தொடர்பான அழகுக்குறிப்புகள், சமையல் குறிப்புகள், வீட்டுக்குறிப்புகள், கலை, கைவேலை, உடல்நலம், ஆன்மிகம், கதைகள், பண்டிகை, ஆடை வகை, வீட்டுப் பராமரிப்பு முதலிய செய்திகள் இடம்பெறும் இதழ்களை மகளிர் இதழ்கள் எனலாம். அதாவது மகளிரே இவ்விதழ்களுக்கான வாசகர்கள் ஆவர்.

சான்று : மங்கையர் மலர், பெண்மணி

சிறுவர் இதழ்கள்

சிறுவர்களுக்கான இதழ்களை எல்லா நாடுகளும் வெளியிடுகின்றன. படங்கள் நிறைந்தனவாகவும், கதைகள் அதிகம் கொண்டனவாகவும் சிறுவர் இதழ்கள் உள்ளன. வாசகர்களாக மட்டுமின்றிப் படைப்பாளர்களாகவும் சிறுவர்கள் உள்ளனர். சிறுவர் இதழ்கள் சிறுவர்களது உள்ளத்தைப் பண்படுத்துகின்றன. அறஉணர்வு, நீதிபோதனை சார்ந்த கதைகள், புராணம், வரலாறு, கல்வி, அறிவியல் தொடர்பான கதைகள், கட்டுரைகள் முதலியன எளிய நடையில் வெளியாகின்றன.

சான்று : சுட்டி விகடன், அம்புலிமாமா

சமய, சோதிட இதழ்கள் சமயக் கருத்துகளை வெளியிடுவதற்கெனத் தனியாகவும், சோதிடம் பற்றிய செய்திகளுக்கெனத் தனியாகவும் இதழ்கள் வெளியிடப்படுகின்றன.

சமய இதழ்

இந்திய இதழியல் வரலாற்றில் தொடக்க இதழியல் முயற்சிகள் சமயத்தோடு தொடர்புடையவை. இவ்வகை இதழ்கள் பொதுவானதாகும், குறிப்பிட்ட சமயம் சார்ந்தும், ஆதீனங்கள், மடம் முதலிய அமைப்புகள் சார்ந்தும், கோவில்கள் சார்ந்தும் வெளிவருவது உண்டு.

பொதுவான ஆன்மீக இதழ் :  குமுதம் பக்தி ஸ்பெஷல்,

ஆலயம், சமயம் சார்ந்த இதழ் :முஸ்லிம் முரசு,ஞான பூமி.

சேவை நிறுவனம் சார்ந்த இதழ் :ஞானசம்பந்தம் (தருமபுர ஆதீனவெளியீடு)

கோயில் சார்ந்த இதழ் :திருமலை (திருப்பதி தேவஸ்தான இதழ்).

சோதிட இதழ்

சோதிடம் தொடர்பான செய்திகளை வெளியிடும் இதழ்களைச் சோதிட இதழ்கள் எனலாம். நாளிதழ், வார, மாத இதழ்கள் சோதிடத்துக்காகத் தனியே இடம் ஒதுக்குகின்றன.

சான்று :ஜோதிட ரத்னா

பிறவகை இதழ்கள் மேற்குறிப்பிட்டவை தவிர, செய்திகளின் தொகுப்பாகவும், ஒரே இதழில் பல மொழிகளில் செய்திகள், கருத்துகள் இடம்பெறுவதாகவும், புலனாய்வுச் செய்திகளை வெளியிடுவதற்காகவும், தனிச்சுற்றுக்காகவும் இதழ்கள் வெளி வருகின்றன.

தொகுப்பு இதழ்கள்

செய்திகள், நாட்டு நடப்புகள், நிகழ்வுகள் முதலியவற்றைத் தொகுத்து வெளியிடும் இதழ்களைத் தொகுப்பு இதழ்கள் என வரையறுக்கலாம். கிட்டத்தட்ட நாளிதழ்ச் செய்திகளின் தொகுப்பாக இவ்வகை இதழ்கள் உள்ளன.

சான்று : கல்கண்டு, முத்தாரம், மஞ்சரி.

பன்மொழி இதழ்கள்

ஓர் இதழிலேயே பல மொழிகளில் செய்திகள், கதை, கட்டுரைகள் இடம் பெறுவதுண்டு. இவற்றைப் பன்மொழி இதழ்கள் எனலாம்.

சான்று : திருமலை இதழ்

புலனாய்வு இதழ்கள்

செய்திகளின் பின்னணி, அரசியல், சமூகவியல் குற்றங்கள் முதலியவற்றின் பின்னணியைத் துப்பறிந்து வெளியிடும் இதழ்களைப் புலனாய்வு இதழ்கள் என வரையறுக்கலாம்.

சான்று :ஜூனியர் விகடன் , தராசு

தனிச்சுற்று இதழ்கள்

குறிப்பிட்ட வாசகர்களுக்காக மட்டும் இதழ்கள் வெளிவருகின்றன. இவை பெரும்பான்மை வாசகர்களைச் சென்று அடைவதில்லை. ஆகவே, இதில் வரும் செய்திகளும் வரையறை உடையவையாக உள்ளன.

சான்று:தமிழ்ப்பாவை – எழுத்தாளர்களுக்கான இதழ்

தொகுப்புரை

தோழர்களே! இதுவரை இதழியல் வரையறை பற்றிய அடிப்படையில் செய்திகளை அறிந்திருப்பீர்கள். இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்ட செய்திகளை நினைவுபடுத்திப் பாருங்கள்.

பொதுவாக இதழ்கள் என்ற கலைச்சொல்லின் வரையறையை அறியலாம்.

கால அடிப்படையில் இதழ்களைப் பகுத்து அவற்றின் வரையறையைச் சான்றுகள் வழி தெரிந்து கொள்ளலாம்.

தர அடிப்படையில் இதழ்களின் வகைகளையும், சான்றுகளையும் இப்பாடத்தின் வழி அறியலாம்.

உள்ளடக்க அடிப்படையில் இதழ்களை வகைப்படுத்தி அவற்றினைத் தக்க சான்றுகள் வழி அறிந்து கொள்ளலாம்.

உள்ளடக்க அடிப்படையிலான பகுப்பு விரிவானதாகவும் மிக நீளமானதாகவும் உள்ளமையைப் பாடத்தின் போக்கில் அறிந்து கொள்ளலாம்.

இதழியல் வரையறையாக அமையும் இப்பாடத்தின் மூலம் வரையறையை மட்டுமின்றி இதழ்களின் வகைகளையும் அறிந்து கொள்கிறோம்.

பாடம் - 3

இதழியல் கலைச்சொற்கள்

பாட முன்னுரை

நாள்தோறும் புதிய புதிய தகவல்களைத் தரும் இதழியல் தனித்ததொரு துறையாகும். எல்லா மொழிகளிலும் வெளிவரும் இதழ்கள் உலகு தழுவிய பொதுமையுடையவை. ஆகவே, இதழ்களில் பயன்படுகின்ற – இதழியல் துறையில் கையாளப்படுகின்ற – கலைச்சொற்கள் உலகப் பொதுமொழியான ஆங்கிலத்திலேயே உள்ளன. கலைச்சொற்கள் தவிர, சுருக்கக் குறியீட்டு விளக்கங்களும் (Abbreviations) உள்ளன.

பாடத்தின் முற்பகுதியில் இதழியல் கலைச்சொற்கள் ஆங்கில அகர வரிசைப்படி பட்டியல் இட்டு விளக்கப்படுகின்றன. அடுத்த பகுதியில் சுருக்கக் குறியீட்டு விளக்கங்கள் பட்டியலிடப்பட்டு விளக்கப்படுகின்றன.

இதழியல் கலைச்சொற்கள்

முன்னரே கூறியபடி இதழியல் என்பது புதுமையும் பொதுமையும் உடைய ஒரு துறை ஆகும். ஆகவேதான் இதழியல் கலைச்சொற்கள் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு விளக்கம் தரப்படுகின்றன. அடைப்புக் குறிக்குள் ஒலிபெயர்ப்பு முறையில் (Transliteration) பல இதழியல் கலைச்சொற்கள் தமிழில் சுட்டப்படுகின்றன.

இதழியல் கலைச்சொற்களை ஒன்றன் பின் ஒன்றாகக் காண்போம்.

A Copy (ஏ காப்பி)

இதனை A Matter என்றும் கூறுவர். முதலில் வெளியான செய்தியோடு தொடர்புடைய விளக்கமாக அமையும். இதனைத் தனித் தலைப்பிட்டும் வெளியிடலாம்.

Add (ஆட்)

Add (ஆட்) என்பது, முன்பே வந்துள்ள செய்தியோடு புதிதாகச் சேர்த்துக் கொள்ள வேண்டிய கூடுதல் விவரம்.

Agency (ஏஜென்ஸி)

நியூஸ் ஏஜென்ஸி என்றும் இதனைக் கூறுவர். தனியார் மற்றும் அரசுத் துறைகளில் செய்திகளைச் சேகரித்துத் தருவதற்காகச் செயல்படும் அமைப்புகள் செய்தி நிறுவனங்கள் எனத் தமிழில் அழைக்கப்படுகின்றன.

செய்தி நிறுவனங்கள் உலகின் எல்லா நாடுகளிலும் செய்திகளைத் திரட்டும் நிருபர்களிடமிருந்தும் பிற செய்தி நிறுவனங்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டும் செய்திகளைத் திரட்டித் தருகின்றன. செய்தி இதழ்கள் இந்தச் செய்தி நிறுவனங்களில் உறுப்பினர்களாகச் சேர்ந்து செய்திகளைப் பெறுகின்றன.

எ.கா :P.T.I – Press Trust of India

U.N.I -United News of India

All in (ஆல் இன்)

இது தமிழில் கையிருப்பு; பிழைதிருத்துவோர் பயன்படுத்தும் கலைச்சொல். இதழ்களில் இடம்பெற வேண்டிய செய்திகளைக் கொண்ட கையெழுத்துப் பிரதிகளும் அச்சுப் பிரதிகளும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடும் கலைச்சொல்.

All of (ஆல் ஆஃப்)

தயாரான பக்கம். அனைத்துச் செய்திகளும் சரிபார்க்கப்பட்டுத் திருத்தப்பட்டு அச்சிடுவதற்குத் தயாரான நிலையில் உள்ளதைக் குறிப்பிடுவது இக்கலைச்சொல்.

All out (ஆல் அவுட்)

கொடுக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் செய்தி இதழ்களில் இடம் பெற்றுவிட்டன. ஏதும் விடுபடவில்லை என்பதனைக் குறிப்பிடுவது இக்கலைச்சொல்.

All rights reserved (ஆல் ரைட்ஸ் ரிசர்வ்ட்)

பதிப்புரிமையைக் குறிப்பிடும் கலைச்சொல், பதிப்புரிமை எனப்படும்.

ஒருவரது வெளியீட்டிலிருந்து செய்தி/கருத்து முதலியவற்றை எடுத்துப் பயன்படுத்தக் கூடாது என்பதைக் குறிப்பிடும் சொல் (Copy rights) காப்பி ரைட்ஸ் என்றும் குறிப்பிடுவர்.

Alteration (மாற்றம்)

இதழ்களுக்கு உரிய செய்திகள் தாங்கியுள்ள கையெழுத்துப் பிரதியில் இல்லாததை, அச்சுப் பிரதியில் எழுதிச் சேர்ப்பது Alteration எனப்படும்.

Angle (கோணம்)

வெளியாகும் செய்தியில் எதனை முன்னிலைப்படுத்துவது என்பதைக் குறிப்பிடும் சொல் Angle எனப்படும்.

Anonymous News (மொட்டைச் செய்தி)

ஊர், பெயர், ஏதும் இன்றி ஆதாரம் இல்லாமல் வெளியாகும் செய்திகள் மொட்டைச் செய்திகள் எனப்படும்.

Art Editor (கலைப்பகுதி ஆசிரியர்)

இவர், இதழ்களில் வெளியாகும் புகைப்படங்கள், ஓவியங்கள், வண்ணங்கள் முதலியவற்றிற்குப் பொறுப்பானவர்.

Assembly Reporter (சட்டமன்ற நிருபர்)

இவர், சட்டமன்ற நிகழ்வுகளைச் சேகரித்து இதழ்களுக்குத் தருபவர்.

Assignment (அஸைன்மென்ட்)

குறிப்பிட்ட செய்திகளைச் சேகரிக்க இதழாசிரியர் நிருபருக்குத் தரும் பணி ஆணை Assignment எனப்படும்.

Banner (பேனர்)

Banner என்பது தலைப்புச் செய்தி. ஓர் இதழின் முதல் பக்கத்தில் பெரிய அளவில் வெளியாகும் முக்கியச் செய்தியின் தலைப்பு.

Beat (பீட்)

ஒரு நிருபர் வழக்கமாகச் சென்று செய்தியைத் திரட்டும் இடம் Beat எனப்படும். ஒரு செய்தித்தாளுக்குச் சொந்தமான ஒரு செய்தியையும் இக்கலைச்சொல் குறிப்பிடும்.

Big News Paper (பெரிய நாளிதழ்)

50,000 பிரதிக்கு மேல் அச்சாகின்ற நாளிதழைப் பெரிய நாளிதழ் என்பர்.

சான்று : தி ஹிந்து

Bit News (துணுக்குகள்)

செய்திகளைச் சுருக்கி நான்கு அல்லது ஐந்து வரிகளில் எழுதுவதை Bit News என்பர்.

Blind Spot (பார்வை படா இடம்)

பார்வை படா இடம் என்பது ஓர் இதழின் இடப்பக்க மூலை. இந்த இடம் வாசகர்களின் பார்வையில் படாத இடமாகும்.

Blow-up (படப் பெருக்கம்)

சாதாரண அளவை விடப் பெரிதாக்கிப் புகைப்படத்தை வெளியிடுவதை புளோ-அப் என்பர்.

Box Story (பெட்டிச் செய்தி)

செய்திக் கட்டுரையோடு தொடர்புடையதான கூடுதல் செய்தியைத் தனியாகத் தொகுத்துக் கட்டம் கட்டி வெளியிடுவதைப் பெட்டிச் செய்தி என்பர்.

Bulletin (புல்லட்டின்)

மிகப்பெரிய மாநாடுகள், கருத்தரங்குகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, அந்நிகழ்வுகள் பற்றி அவ்வப்பொழுது தொகுத்துத் தனியாகச் செய்தித்தாள் போன்று வெளியிடுதல் Bulletin எனப்படும் .

By line (பெயர் வரி)

செய்தியையோ கட்டுரையையோ எழுதியவரின் பெயர், செய்தி ஆகியவற்றைக் கட்டுரையின் மேற்பகுதியிலோ அல்லது முடிவிலோ வெளியிடுவது பெயர் வரி எனப்படும்.

Caption (படத் தலைப்பு)

படத் தலைப்பு என்பது புகைப்படம், கருத்துப்படம், வரைபடம் பற்றிய சுருக்கமான விளக்கத் தலைப்பு ஆகும்.

Caricature (கேலிச் சித்திரம்)

அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகத்தில் முக்கியப் பிரமுகர்களின் தோற்றத்தை நகைச்சுவையுணர்வு மிளிர மிகைப்படுத்திச் சித்திரிக்கும் படம் கேலிச் சித்திரம் ஆகும்.

Cartoon (கருத்துப் படம்)

அரசியல், சமுதாய நிகழ்வுகள் முதலியவற்றைப் பற்றிய எண்ணங்களை நையாண்டியாக வெளிப்படுத்தும் படம் கருத்துப் படம் ஆகும்.

Censorship (தணிக்கை)

இது செய்தித் தணிக்கையைக் குறிக்கும். மக்கள் தொடர்புச் சாதனங்களில் இடம் பெறும் செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு அரசால் செய்யப்படும் தணிக்கை.

Circulation (சர்க்குலேஷன்)

இஃது இதழ்களின் விற்பனை எண்ணிக்கையைக் குறிக்கும். இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் பெரிய இதழ் என்றும், சிறிய இதழ் என்றும் இதழ்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

City News (உள்ளூர்ச் செய்திகள்)

City News என்பதை Local News என்றும் அழைப்பர். நாளேடுகளில் குறிப்பிட்ட பக்கங்களை இதற்கென ஒதுக்குவர்.

Clip (or) Cuttings (செய்தித் துணிப்பு)

இதழ்கள் வெளியிடும் செய்திகளில் தேவையற்றவைகளை நீக்குதலே செய்தித் துணிப்பு எனப்படும்.

Column (காலம்)

இதைப் பத்தி எனலாம். செய்தி இதழ்களின் முழுப் பக்கமும் நீளவாக்கில் 6 அல்லது 8 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். எட்டுப் பத்தி எனில் ஒரு பத்தியின் அகலம் 4.8 செ.மீ ஆகவும், ஆறு பத்தி எனில் 7 செ.மீ ஆகவும் பிரிக்கப்பட்டிருக்கும்.

Continuity (தொடர்ச்சி)

நாளேடுகளில் தொடராக வெளிவரும் படக்கதை அல்லது நாவலின் தொடர்ச்சி சரிபார்த்தலைத் தொடர்ச்சி அல்லது Continuity என்பர்.

சான்று : தினத்தந்தி – சிந்துபாத்.

Copy (கைப்பிரதி)

இது, வெளியிடுவதற்காகத் தரப்படும் கையெழுத்துப் பகுதி அல்லது தட்டச்சு செய்யப்பட்ட பகுதி.

Coverage (கவரேஜ்)

இது செய்தி சேகரித்தலைக் குறிக்கும். குறிப்பிட்ட நிகழ்ச்சியை முதல் நாளில் இருந்து நடந்து முடியும்வரை ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கவனித்து, சேகரித்து, செய்தியாக வெளியிடுவது.

சான்று : ஒலிம்பிக் போட்டி நடைபெறும் போது செய்திகள் வெளியிடுவது.

Cover Story (கவர் ஸ்டோரி)

அட்டைப் படமாக வெளியிடப்படும் படம் பற்றி விளக்கமாக எழுதுவது கவர் ஸ்டோரி ஆகும். இவ்விளக்கம் செய்திக் கட்டுரையாகவோ கதையாக அமையலாம்.

Crime News (குற்றச் செய்தி)

இது, குற்றங்கள் தொடர்பான செய்திகளைக் குறிக்கும்.

Date Line (தேதி வரி)

ஒரு செய்தி நிகழ்ந்த தேதி, இடம் போன்றவற்றைக் குறிப்பிடுவது தேதி வரி ஆகும்.

Dead Line (டெட் லைன்)

குறிப்பிட்ட நேரத்தைக் குறிக்கப் பயன்படும் சொல் Dead Line ஆகும். செய்தியை வெளியீட்டிற்கு வழங்கக் கொடுத்திருக்கும் கால வரையறை.

Delete (நீக்குக)

செய்தியைச் செம்மையாக்கும் போது அச்சுப்பிரதியில் குறிப்பிட்ட பகுதியை நீக்குதலை இது குறிக்கிறது.

Derogatory News (டெராகேட்டரி நியூஸ்)

முரணான செய்திகள், அவமரியாதை உண்டாக்கும் செய்திகள்.

Dirty Proof (டர்ட்டி புரூப்)

இது, பிழைகள் மிகுந்த பிரதி. அடித்தல் திருத்தம் அதிகமுள்ள படிக்க முடியாத பிரதி.

Digest Magazine (திரட்டு இதழ்)

செய்திகளைத் திரட்டி, செய்தித் துணுக்குகளாக வெளியிடும் இதழ் திரட்டு இதழ் ஆகும். தமிழில் கல்கண்டு வார இதழைக் குறிப்பிடலாம்.

Dummy (டம்மி)

இது  மாதிரிப் பக்கம். இதழ் வெளியாவதற்கு முன்னதான மாதிரிப் பக்கம்.

Ear Panel (காது விளம்பரம்)

ஓர் இதழின் (நாளிதழ்) முதல் பக்கத்தில் மேல்புறத்தில் உள்ள வலது இடது ஓரங்களில், இதழ்ப் பெயரின் இருபுறமும் வெளியாகும் விளம்பரமே காது விளம்பரம் ஆகும்.

Edition (பதிப்பு)

ஓர் இதழில் ஒரே நாளில் வெளியாகும் பதிப்புகள். முதல் பதிப்பு, இரண்டாம் பதிப்பு, தனிப்பதிப்பு, விசேடப் பதிப்பு முதலியவை.

Editor (ஆசிரியர்)

ஆசிரியர் என்பது இதழாசிரியரைக் குறிக்கும். வெளியாகும் எல்லாப் பகுதிகளுக்கும் இவர் பொறுப்பானவர்.

Editorial (தலையங்கம்)

அரசியல், சமூக நிகழ்வு பற்றி ஓர் இதழின் தனிப்பட்ட கருத்தை அதன் ஆசிரியர் எழுதி வெளியிடும் பகுதியே தலையங்கம் ஆகும்.

Eight Column News (எட்டுப் பத்திச் செய்தி)

இன்றியமையா நிகழ்வை இதழ்களின் முழுப்பக்கத்தில் வெளியிடுவர். இதனை எட்டுப் பத்திச் செய்தி என்பர்.

Exchange Copies (மாற்றுப் பிரதி)

பிறரது இதழ்களுக்குத் தமது இதழ்களை அனுப்பி அவர்களது இதழ்களைப் பெறுவதை மாற்றுப் பிரதி என்பர்.

Exclusive (சிறப்புச் செய்தி)

பிற இதழ்களுக்குக் கிடைக்காமல் குறிப்பிட்ட இதழுக்கு மட்டும் கிடைக்கிற செய்தி சிறப்புச் செய்தி ஆகும்.

Expected News (எதிர்நோக்குச் செய்திகள்)

விழாக்கள், விளையாட்டுகள், நாடகம், அரசியல் நடைமுறைகள் பற்றிய தகவல்களை முன்னமே அறிந்து தக்க ஏற்பாட்டுடன் சேகரிக்கப்படும் செய்திகள் எதிர்நோக்குச் செய்திகள் எனப்படும்.

Fake (பொய்ச் செய்தி)

இதனை False News என்பர். நடைபெறாத நிகழ்வை யூகத்தின் அடிப்படையில் வெளியிடுவது.

Filler (இட நிரப்பி)

செய்திகளுக்கு இடையே ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கான செய்தித் துணுக்குகள் இட நிரப்பிகள் எனப்படும்.

Flag (இதழ் முகம்)

இதழ் முகம் முதல் பக்கத்தில் வெளியாகும் இதழின் பெயர் ஆகும்.

Flash (உடனடிச் செய்தி)

மிக இன்றியமையாத செய்தி பற்றித் தரும் முதல் குறிப்பு Flash அல்லது உடனடிச் செய்தி எனப்படும்.

Follow-up (தொடர் செய்தி)

முதல் நாள் வெளியான செய்தியின் தொடர்ச்சியை வெளியிடுவது தொடர் செய்தி எனப்படும்.

சான்று : சார்க் உச்சி மாநாடு பற்றிய செய்தி மாநாடு முடியும் வரை தொடர்ந்து வெளியாவது.

Foreign Correspondent (வெளிநாட்டு நிருபர்)

வெளிநாடுகளில் இருப்பவர்கள் குறிப்பிட்ட இதழ்களுக்காகச் செய்தி சேகரித்து அனுப்புவர். அவ்வாறு செய்பவர் வெளிநாட்டு நிருபர் என்று குறிப்பிடப்படுகிறார்.

Free Lancer (ஃபிரீ லான்சர்)

இவர், தன்னிச்சையான எழுத்தாளர். குறிப்பிட்ட இதழ்களில் பணியாற்றாமல், விருப்பம் போல எல்லா இதழ்களுக்கும் எழுதுபவர்.

Ghost Writer (கோஸ்ட் ரைட்டர்)

இவர், வேறு ஒருவருக்காகக் கட்டுரை, கதை, கவிதை போன்றவற்றை அவரது பெயரில் எழுதித் தருபவர்.

ead Lines (செய்தித் தலைப்புகள்)

செய்திக்கு மேல் பெரிய எழுத்துகளில் அமைக்கும் தலைப்புகள் செய்தித் தலைப்புகள் ஆகும்.

ot News (சூடான செய்திகள்)

சில இன்றியமையா நிகழ்வுகள் பற்றி உடனுக்குடன் செய்திகளை வெளியிடும் செய்திகள் சூடான செய்திகள் என்று அழைக்கப்படும்.

சான்று : தேர்தல் முடிவு பற்றிய செய்திகள்.

Illustration (விளக்கப்படம்)

இதழ்களில் வெளியாகியுள்ள செய்திகள் பற்றி விளக்குவதாக உள்ள படம் விளக்கப்படம் ஆகும்.

In

and (கையிருப்புச் செய்தி)

இதழ்களில் வெளியிடுவதற்குத் தயாராக உள்ள செய்திகளை இவ்வாறு குறிப்பர்.

Interview (பேட்டி)

சமுதாயத்தில் குறிப்பிடத்தகுந்த ஒருவரைப் பற்றிய உரையாடல் அல்லது அவரிடம் உரையாடுவதன் மூலம் கருத்துகளைப் பெறும் முறைகளுள் ஒன்று பேட்டி ஆகும்.

Issue (வெளியீடு)

இது, ஒவ்வொரு முறையும் வெளியாகும் இதழ்கள் குறித்துக் குறிப்பிடுகிறது.

Journalist (இதழியலாளர்)

இதழ்களில் பணியாற்றுபவர் இதழியலாளர் எனப்படுவர்.

Jump (தொடர்ச்சி)

செய்தியின் தொடர்ச்சி அதே பக்கத்தில் அமையாது மற்றொரு பக்கத்தில் அமைவது Jump அல்லது தொடர்ச்சி எனப்படும்.

Label (உயிரற்ற தலைப்பு)

வழக்கமாக வெளியாகின்ற பகுதிகளின் ஒரே மாதிரியான தலைப்புகளை உயிரற்ற தலைப்பு என்பர். இவை புதுமையானவையாக இருப்பது இல்லை.

சான்று : மங்கையர் மலர் இதழில் ‘இந்த மாதம் எப்படி?’ என வருகின்ற சோதிடப் பகுப்புத் தலைப்பு.

Late News (கடைசிச் செய்தி)

இவை, செய்தித்தாள் உருவாக்கத்தின் கடைசி நேரத்தில் கிடைக்கும் செய்திகள்.

Lead (செய்திச் சாரம்)

இது, வெளியிடும் செய்தியின் முக்கியமான தகவல்களைச் சுருக்கமாக வெளியிடும் முதல் பத்தி. இதனை ‘Intro’ எனவும் அழைப்பர்.

Libel News (அவதூறுச் செய்தி)

இவை, ஒருவரைப் பற்றி உண்மையில்லாத – அவதூறாக வெளியாகும் -செய்திகள்.

Lobby Correspondent (நாடாளுமன்றச் செய்தியாளர்)

இவர், நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் போது அங்கேயே இருந்து செய்திகளைச் சேகரிப்பவர்.

Magazine (பருவஇதழ்)

இதன் விளக்கத்தைப் படம்-2-இல் காணலாம்.

Margins (வெற்றிடம்)

இஃது இதழ்களின் விளிம்பைச் சுற்றியுள்ள வெற்றிடம்.

Mass Media (மக்கள் தகவல் தொடர்புச் சாதனம்)

மக்கள் தகவல் தொடர்புச் சாதனங்களாக இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

Matter (இதழ்ச் செய்தி)

இதழ்களில் வெளியான செய்திகள், கட்டுரைகள், கதைகள், படங்கள் அனைத்தும் மேட்டர் என்று சுட்டப்படுகின்றன.

Morgue (இதழியல் நூலகம்)

ஒவ்வொரு இதழ் அலுவலகத்திலும் தனிப்பட்ட நூலகம் உண்டு. இந்நூலகத்தில் அவர்கள் இதழ் தவிர, பிற இதழ்கள், நூல்கள் முதலியன சேகரித்து வைக்கப்படும்.

News (செய்தி)

இஃது உலகம் முழுவதும் உள்ள செய்திகளைக் குறிக்கும். North, East, West. South என்ற சொற்களின் முதலெழுத்துக்களைக் கொண்ட சுருக்கம்.

News Bank (செய்தி வங்கி)

இதழ் அலுவலகத்தில் இன்றியமையாச் செய்திகளைச் சேகரித்து வைக்கும் அமைப்பு செய்தி வங்கி ஆகும்.

News Source (செய்தி மூலம்)

செய்தி கிடைக்கும் இடம். சட்டமன்றம், காவல் நிலையம், மருத்துவமனை போன்ற குறிப்பிட்ட பொது இடங்களுக்குச் சென்று நிருபர்கள் செய்தி சேகரிக்கும் இடம்.

Night Editor (இரவு இதழாசிரியர்)

இவர், அதிகாலையில் வெளியாகும் செய்தித்தாளுக்கு இரவு நேரத்தில் பொறுப்பாக உள்ள இதழாசிரியர்.

Press-Conference (செய்தியாளர் கூட்டம்)

அரசியல், சமூகத் தலைவர்கள் செய்தியாளர்களை ஒருங்கிணைத்துத் தகவல்களை அறிக்கைகளாக வெளியிடுவர். இதைச் செய்தியாளர் கூட்டம் என்பர்.

Proof-Reader (புரூஃப்ரீடர்)

இவர், அச்சிட்ட இதழ்களின் பிரதியைத் திருத்துபவர்.

Proximity (வட்டாரத் தன்மை)

வெளியாகும் செய்திகள் நெருங்கியதாகவும் உள்நாடு சார்ந்தும் வட்டாரத் தன்மையுடனும் இருக்கும்.

Reporters (நிருபர்கள்)

செய்தி சேகரிப்பாளர். நாளேட்டிற்குத் தேவையான செய்திகளை நேரடியாகத் திரட்டித் தருபவர்கள். இவர்கள் செய்தி மூலங்களான காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், அரசுத்துறைகள் போன்றவற்றிற்குச் சென்று செய்திகளை உடனுக்குடன் திரட்டித் தருவர்.

உள்ளூரில் நடைபெறுகின்ற செய்திகளைத் திரட்டித் தருபவர் உள்ளூர் நிருபர் என்றும், வெளியூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளைத் திரட்டி அனுப்புபவர்கள் வெளியூர் நிருபர் என்றும் அழைக்கப்படுவர்.

இதழ்களில் வெளிநாடுகளிலும் நிருபர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் அஞ்சல் வழியாகவோ, தந்தி, தொலைபேசி, இணையத்தளம் வழியாகவோ செய்திகளை அனுப்புவர்.

இன்றியமையா நிகழ்வுகளின் போது சிறப்பாகச் சிலர் நியமிக்கப்படுவர். இவர்களைச் சிறப்பு நிருபர் என்பர்

Royalty (ராயல்டி)

இது புத்தகம் வெளியானதும் ஆசிரியருக்குப் பதிப்பகத்தார் வழங்கும் பங்குத் தொகை.

Smash (கவர்ச்சியான செய்தி)

திரைப்படம் தொடர்பான செய்திகளைக் குறிப்பிடலாம்.

Spot News (ஸ்பாட் நியூஸ்)

நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து உடனுக்குடன் பெறும் செய்தி.

Stringer (பகுதிநேர நிருபர்)

இதழ்களில் பகுதி நேரமாகப் பணியாற்றும் நிருபர்கள் பகுதிநேர நிருபர்கள் ஆவர்.

Sub-Editor (ஸப் எடிட்டர்)

இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றுபவர்கள் ஸப் எடிட்டர் என்று அழைக்கப்படுவர்.

supplement (இணைப்பு வெளியீடு)

தீபாவளி, பொங்கல் முதலிய பண்டிகைகளின் போது இதழ்கள் வெளியிடும் மலர்கள்.

Tabloid (சிற்றிதழ்கள்)

குறைந்த எண்ணிக்கையில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் சென்று சேரும் இதழ்கள் சிற்றிதழ்கள் எனப்படும்.

Trim (டிரிம்)

குறைத்தல். செம்மையாக்கத்தின் போது செய்தியைத் தேவையானவாறு செறிவூட்டுவது டிரிம் எனப்படும்.

Zero

our (ஜீரோ ஹவர்)

செய்தி பெறுவதற்கான இறுதி நேரம் .

இதழியல் சுருக்கக் குறியீட்டு விளக்கம்

இதழியல் துறை சார்ந்த சுருக்கக் குறியீட்டு விளக்கங்களை அகர வரிசையில் காண்போம்.

சுருக்கக்குறியீடு                                       விளக்கம்

A.B.C.                                          Audit Bureau of Cirulation

இதழ்கள் வெளியீட்டின் தணிக்கை நிறுவனம்.

Ad.                                                    Advertisement

விளம்பரம்

AM.                                                  Ante Meridian

காலை நாளிதழ்

A.P.                                              Associated Press

அமெரிக்கச் செய்தி நிறுவனம்

A.P.I.                                          Associated Press of India

இந்தியச் செய்தி நிறுவனம்

B.B.C.                                      British     Broadcasting     Corporation

பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம்

I.N.S.                                     International News Service

அகில உலகச் செய்திச் சேவை

N.B.C                                  National Broadcasting Corporation

தேசிய ஒலிபரப்பு நிறுவனம் (அமெரிக்க நிறுவனம்)

PM.                                               Post Meridian

மாலை நாளிதழ்

P.T.I.                                         Press Trust Of India

இந்தியச் செய்தி நிறுவனம்

U.N.I.                                      United News of India

இந்தியச் செய்தி நிறுவனம்

தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை நாம் இதழியல் துறையில் உலகு தழுவிய பொதுமை உடைய கலைச்சொற்களையும் சுருக்கக் குறியீட்டு விளக்கங்களையும் அறிந்து கொண்டோம். அவற்றை மீண்டும் நினைவு படுத்திப் பாருங்கள்.

பாடம் - 4

இதழ்களின் சிறப்பும் நோக்கமும்

பாட முன்னுரை

இன்றைய உலகின் இன்றியமையாத துறைகளுள் இதழியலும் ஒன்றாகும். அந்த இதழியலின் சிறப்புகள், நோக்கங்கள் முதலியவற்றை அறிவது தேவையானதாகும். இதழ்கள் மக்களாட்சியில் காவல் தேவதையாக உள்ளமையையும் அரசியலமைப்பில் இன்றியமையா இடம் பெற்றுச் சிறப்புறுவதையும் இப்பாடம் விளக்குகிறது.

இதழ்களின் பொதுவான   நோக்கங்களான தெரிவித்தல், நெறிப்படுத்தல், பொழுதுபோக்கு, வியாபாரம், சேவை முதலியவற்றையும், தனிப்பட்ட இதழ்களின் கொள்கைகள், பொருளடக்கம் சார்ந்த சிறப்பு நோக்கங்களையும் பாடத்தின் இரண்டாம் பகுதி விளக்குகின்றது.

இதழ்களின் சிறப்பு

இதழ்களுக்கு உரிய சிறப்பான பங்கினைச் சென்ற நூற்றாண்டில் அறிஞர்கள் சுட்டிக் காட்டினார்கள். புகழ் பெற்ற வரலாற்று அறிஞரான மெக்காலே இதழியலாளர்களை நான்காம் தூண் (Fourth Estate) எனக் கூறினார்.

எட்மண்ட் பர்க் என்பார் ‘நாடாளுமன்றத்தில் அரச குடும்பம் (Royalty), பிரபுக்கள் சபை (

ouse of Lords), பொதுமக்கள் சபை (

ouse of Commons) ஆகிய மூன்று தூண்கள் உள்ளன. ஆனால், அங்கே செய்தியாளர்கள் (Reporters) அமரும் இடத்தில்தான் இவை மூன்றையும் விட மிக இன்றியமையாததான நான்காம் தூண் உள்ளது’ என்று கூறினார்.

இந்தியாவில் நாடாளுமன்றம், நிர்வாகம், நீதி ஆகிய மூன்று அரசுத் துறைகளோடு இதழியலை நான்காவது தூணாகக் கருதலாம்.

மக்களாட்சியின் காவல் மக்களாட்சியைக் காப்பதற்கு அரசியல் அமைப்பில் பல பிரிவுகள் உள்ளன. ஆனால், அவற்றையும் மேற்பார்வை இடும் கடமை இதழ்களுக்கு உண்டு. ஆகவேதான் இதழ்களைக் காவல் நாய் (Watch Dog) என்பர். உயர்ந்ததொரு நோக்கில், மக்களாட்சியின் காவல் தேவதையாக இதழ்கள் உள்ளன. (The Press is the guardian angel of democracy) எனக் கூறலாம். காவல் தேவதையாக இதழ்கள் சிறப்பாகச் செயல்படும் விதத்தைக் காணலாம்.

செய்திகளைப் பரப்புதல் அன்றாடம் நடைபெறும் செய்திகளை மக்களுக்குப் பரப்புவது இதழ்களின் சிறப்பாகும். மக்களுக்குத் தேவையான செய்திகளையும் கருத்துகளையும் உடனுக்குடன் சரியான முறையில் வெளியிடுவது இதழ்களின் கடமையாகும். இதழ்கள் தாம் கொண்டிருக்கும் சார்பின் அடிப்படையில் தம்நலம் கருதிச் செய்திகளை இருட்டடிப்புச் செய்வது தவறானதாகும்.

செய்திகளை விளக்குதல் இதழ்கள் செய்திகளைப் பல்வேறு முறைகளில் விளக்குகின்றன. விளக்கப்படங்கள், கேலிச்சித்திரங்கள், கேள்வி பதில்கள், சிறப்புக் கட்டுரைகள் ஆகிய பல முறைகளில் இதழ்கள் செய்திகளை விளக்குகின்றன. செய்திகளை விளக்குவதோடு அவை தொடர்பான கல்வியை வழங்குவதும், தேவையானால் அறிவுறுத்துவதும் இதழ்களின் சிறப்பாகும்.

செய்தியின் பின்னணி, மறைந்து கிடக்கின்ற விவரம் முதலியவற்றை வெளிக்கொணர்கின்ற புலனாய்வுப் பணியும் இதழ்களின் சிறப்பாகும். இந்த முறைமையில் தமிழில் புலனாய்வு இதழ்கள் தோன்றி வளர்கின்றன.

சான்று : ஜூனியர் விகடன், தராசு, நக்கீரன்

விமர்சித்தல் செய்திகளை வெளியிட்டு விளக்குவதோடு மட்டுமல்லாமல் அவை பற்றிய விமர்சனமும் விவாதமும் இதழ்களால் நடத்தப்பட வேண்டும். புதிய சட்டங்கள், அரசின் கொள்கைகள் பற்றிய மக்கள் கருத்துகளை அறிய முற்படலாம். இன்றைய காலகட்டத்தில் தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வாரஇதழ்கள் போன்றவை இத்தகைய விமரிசனங்களை வெளியிட்டு, அவை பற்றிய மக்களது கருத்துக் கணிப்புகளைத் தொகுத்துத் தருகின்றன.

சான்று: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டித் தொடரின் வெற்றி – தோல்வி பற்றிய விமர்சனமும் மக்களது கருத்துக் கணிப்பும்.

கருத்தை உருவாக்குதல் நாட்டு நடப்பு, சமுதாய நிகழ்வு, அரசியல் முதலியவை சார்ந்து பொதுக் கருத்துகளை உருவாக்குதலும் இதழ்களுக்கு உரிய சிறப்பாகும்.

இதழ்கள் தொடக்கத்தில் செய்தி அறிக்கைக் கோட்பாட்டினை (Bulletin Theory) நம்பின. அதாவது இதழ்களில் வெளியாகும் செய்திகளின் மூலம் வாசகர்களைத் தாம் ஆட்டிப்படைக்கக் கருதின. ஆனால், தற்போது இதழ்களைப் படிக்கும் வாசகர்கள் செய்திகளைச் சீர்தூக்கிப் பார்க்கின்றனர்; நல்லது கெட்டது உணர்ந்து நடக்கின்றனர். தமக்கெனத் தனித்த கொள்கைகளை, கருத்துகளை உருவாக்கிக் கொள்கின்றனர். அவற்றைக் குறிப்பிட்ட இதழ்களின் வழியாக வெளியிடுகின்றனர்.

சான்று : நாளிதழ்களில் வெளியாகும் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதி.

அரசியலமைப்பில் இதழ்கள்

மக்களாட்சியின் காவல் தேவதையாக மட்டுமின்றி அரசியலமைப்பிலும் இதழ்கள் பங்கேற்பது சிறப்பிற்கு உரியதாகும். டி.எஸ்.மேத்தா (D.S.Mehta) என்பார், “பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதிலும், செப்பனிடுவதிலும் பிரதிபலிப்பதிலும் மக்களாட்சி நடைபெறும் நாட்டில் இதழ்கள் இன்றியமையாது செயல்படுகின்றன. இதழ்கள் சமுதாயத்தின் ஆதார நிறுவனம் ஆகும். நாட்டில், அரசியல், சமுதாய, பொருளாதார வளர்ச்சியினைச் சிறப்பாக ஏற்படுத்த அவை மிகவும் துணை செய்கிறது. இதழ்கள், அரசின் செயல்பாட்டோடும் அது பின்பற்றும் கொள்கையோடும் நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளன. இவ்வாறு இதழ்கள் பொது வாழ்க்கையின் கூறு ஒவ்வொன்றையும் தொடுகின்றன” எனக் குறிப்பிடுகின்றார்.

சான்றாக, இந்திய விடுதலையின் போது இதழ்கள் படைத்த வரலாற்றைக் குறிப்பிடலாம். இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்கள் பலர் தாங்களே இதழ்களை நடத்தினர்.

சித்தரஞ்சன்தாஸ், நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பார்வர்ட் என்ற இதழை நடத்தினர். அரவிந்தர் யுகாந்தர் என்ற இதழையும் பாரதியார் இந்தியா என்ற இதழையும் நடத்தினார்கள். மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அல்ஹிலால் என்ற இதழையும் காந்தியடிகள் ஹரிஜன், யங்இந்தியா ஆகிய இதழ்களையும் நடத்தினார்கள். திலகர் கேஸரி, மராட்டா ஆகிய இதழ்களை நடத்தினார்.

இந்தியாவில் இதழ்கள் மூலம் விடுதலை இயக்கத்தை, விடுதலை இயக்கத் தலைவர்கள் நடத்தினர். அதற்காக அடக்குமுறையையும், சிறைத் தண்டனையையும் பரிசாகப் பெற்றனர். எனினும், இந்திய விடுதலை என்ற அரசியல் மாற்றத்தில் இதழ்களின் பங்கு அளவிட முடியாத சிறப்பிற்கு உரியது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தல் அரசியல் அமைப்பில் பங்கு கொண்டு மாற்றங்களை உருவாக்கும் இதழ்கள் சமுதாய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றன. இதனை உணர்ந்து நெப்போலியன், ஹிட்லர் முதலிய தலைவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் இதழ்களைத் தடை செய்தனர். ஆனால், இங்கிலாந்து நாட்டுப் பிரதமராகிய சர்ச்சில், இதழ்கள் மூலம் மக்களிடத்து விழிப்புணர்வைத் தூண்டித் தமது வெற்றிக்கு இதழ்களைப் பயன்படுத்திக் கொண்டமை வரலாற்றுப் பதிவாகும்.

சமுதாயக் கல்வி புகட்டுதல் மக்கள் சமுதாயத்திற்குச் செய்திகளைப் புரிய வைக்கும் கல்வியாளராகவும் இதழ்கள் செயல்படுகின்றன. நாட்டு நலனோடு தொடர்புடைய செய்திகளை வெளியிடும் பொழுது அவை பற்றிய சிறப்புக் கட்டுரைகள், தலையங்கம், தலைவர்கள் பேட்டி, மக்களது கருத்து முதலியவற்றின் வழி விளக்குகின்றன. இவ்வாறு இதழ்கள் சமுதாயத்திற்குக் கல்வி புகட்டும் ஆசானாக விளங்குகின்றன.

எதிர்க்கட்சியாகச் செயல்படுதல் மக்களாட்சி முறை பரவலாகி வரும் நிலையில் எதிர்க்கட்சியாகவும் இதழ்கள் செயல்படுகின்றன. நாட்டின் அரசாங்கத்தில் நடைபெறும் தவறுகள், குறைகள் போன்றவற்றை வெளிச்சமிடும் செயலும் இதழ்களுக்கு உரியவையே.

சான்றாக, அமெரிக்கக் குடியரசுத் தலைவராக விளங்கிய நிக்ஸன் காலத்திய வாட்டர்கேட் ஊழலை வாஷிங்டன் போஸ்ட் என்ற இதழ் வெளிச்சமிட்டது. அதன் விளைவாக அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்ஸன் பதவியிழந்தார் என்ற வரலாற்று நிகழ்வைச் சுட்டலாம்.

வளர்ச்சியில் பங்கேற்றல் அரசியல் மற்றும் சமுதாயப் பொருளாதார வளர்ச்சியில் இதழ்களின் பங்கு இன்றியமையாததாகும். நாட்டில் நடைபெறும் வளர்ச்சிகளை, திட்டங்களை மக்களுக்கு இதழ்கள் அறிவிக்க வேண்டும். இந்தியாவில் சாதி, மத வேறுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் பிற்போக்கு மனப்பான்மையும் வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. குறுகிய நோக்கத்தோடு செயல்படும் சக்திகளைப் பொதுமக்களுக்கு இனங்காட்டி, நாட்டுப்பற்றை மக்களுக்கு ஊட்ட வேண்டும். பொதுமக்கள் தொண்டு (Public Service) என்பது இதழ்களுக்கு உரிய குறிக்கோள்களுள் சிறப்பானதாகும்.

இதழ்களின் நோக்கம்

இதழ்களின் நோக்கம் பற்றித் தமது சுயசரிதையில் காந்தியடிகள் பின்வருமாறு உரைக்கின்றார். ‘மக்களின் உணர்வினை அறிந்து, அதனை வெளியிடுவது இதழ்களின் நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். மற்றொன்று மக்களிடம் உணர்வுப் பூர்வமான எண்ணங்களை உருவாக்க வேண்டும். மூன்றாவதாகப் பொதுமக்களிடம் இருக்கும் குறைகளையும் துணிச்சலாக எடுத்துரைக்க வேண்டும்’. அவ்வகையில் இதழ்களின் நோக்கங்களைப் பொது நோக்கங்கள், சிறப்பு நோக்கங்கள் என வகைப்படுத்தி அறியலாம்.

பொதுவான நோக்கங்கள் நாடு, மொழி, இனம் கடந்து இதழ்கள் ஆற்றும் பணிகளைப் பொதுவான பணிகள் எனலாம். அவற்றை,

(i) தெரிவித்தல்

(ii)நெறிப்படுத்தல்

(iii)பொழுதுபோக்கு

(iv)வியாபாரம்

(v)சேவை

எனப் பகுத்து உரைக்கலாம். அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் காண்போம்.

(i) தெரிவித்தல்

இதழ்களின் பொதுவான நோக்கங்களில் தலையாயதும் இன்றியமையாததும் ஆகிய நோக்கம் தெரிவித்தல் ஆகும். சமுதாயம், சமயம், அரசியல், பொருளாதாரம், கலை, பண்பாடு முதலியவை தொடர்பாக வெளியாகும் அனைத்துச் செய்திகளையும் விருப்பு-வெறுப்பின்றி முழுமையாகத் தெரிவித்தல் வேண்டும். அன்றாடம் மக்கள் அறிந்து கொள்ள விரும்புகின்ற விலைவாசி, அரசியல் செய்திகள், விளையாட்டு முடிவுகள், நடைபெறும் நிகழ்வுகள் முதலியவற்றையும் இதழ்கள் தெரிவித்தல் வேண்டும்.

(ii) நெறிப்படுத்தல்

இதழ்கள் செய்திகளை அறிவிப்பதோடு நெறிப்படுத்துதல் என்ற நோக்கமும் கொண்டு இலங்க வேண்டும். நெறிப்படுத்துதல் என்ற பணியை இதழ்களின் கல்விப்பணி என்பர் ஆய்வாளர்கள்.

பிற நாடுகளுடன் வியாபார ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடுவதைத் தெரிவிப்பது இதழ்களின் முதன்மை நோக்கம். அவ்வொப்பந்தங்களினால் ஏற்படும் சாதக பாதகங்களையும், சூழல்களையும், எதிர்கால நிலைகளையும் மக்களுக்கு எடுத்துக்காட்டி விளக்குதல் நெறிப்படுத்தலாம்.

மேலும், இதழ்கள் வாசகர்களின் அறிவுப் பசிக்குத் தீனி போடுகின்றன. உலக நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் முதலிய செய்திகள் வாசகர்களை அறிஞர்களாக மாற்ற வல்லவை என்பது நினைவிற்கு உரியதாகும்.

(iii) பொழுதுபோக்கு

இதழ்களின் மற்றுமொரு நோக்கம் பொழுதுபோக்கு ஆகும். வாசகர்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் உடையனவாக இதழ்கள் விளங்க வேண்டும். கருத்துக்கு விருந்தளிக்கும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் முதலியவற்றோடு வண்ண ஓவியங்கள், சித்திரத் தொடர்கள், பேட்டிகள் ஆகியவையும் செய்தித் துணுக்குகளும் இதழ்களில் இடம் பெறுகின்றன. திரைப்படம் தொடர்பான செய்திகள், விளையாட்டு, கலை பற்றிய நிகழ்வுகள், வியப்பான செய்திகள் முதலியவைகளும் வாசகர்களைக் கவர்கின்றன. இவ்விதமான பொழுதுபோக்கு அம்சங்கள் பெரும்பான்மையும் பருவ இதழ்களில் இடம் பெறுகின்றன.

செய்திகளை முதன்மையாகத் தருகின்ற நாளிதழ்கள் இத்தகு பொழுதுபோக்கு அம்சங்களை நிறைவுபடுத்தும் விதமாகச் சிறுவர், மகளிர் சிறப்பு மலர்களாக இணைப்புகளை வெளியிடுகின்றன.

சான்று: தினமணி நாளிதழ் வெளியிடும் இளைஞர்மணி, வணிகமணி, வெள்ளிமணி, சிறுவர்மணி, தினமணி கதிர் முதலிய இணைப்புகள்.

(iv) வியாபாரம்

இதழ்களின் மற்றுமொரு நோக்கம் வியாபாரம் ஆகும். ஆதலால் இதழ்கள் வியாபார நோக்கத்தோடும் செயல்பட வேண்டியுள்ளது. இதழ்களில் இடம்பெறும் விளம்பரங்கள் ஓரளவு வருவாயை ஈட்டுவதாக உள்ளன. ஓரளவு வருமானம் உள்ள இதழ்கள் எவ்வித அரசியல் சார்புமின்றி, செய்திகளைத் துணிச்சலாக வெளியிட முடியும்.

(v) சேவை

தெரிவித்தல், நெறிப்படுத்தல், பொழுதுபோக்கு, வியாபாரம் முதலிய பொதுவான நோக்கங்களைத் தாண்டி, சேவை என்பதும் இதழ்களின் பொதுவான நோக்கமாக உள்ளது. நாட்டில், சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது இதழ்களின் சேவையாகும்.

தீண்டாமை, வரதட்சணைக் கொடுமை, நீதி தவறுதல் முதலியவற்றை இதழ்கள் சுட்டிக்காட்டித் தீர்வு காணுகின்றன. தீராத நோய் உள்ள வறுமையாளருக்கு வாசகர்கள் மூலமாகப் பொருள் திரட்டுவதும் சேவையே !

சான்றாகத் தமிழகத்தில் பருவமழை இன்றித் தஞ்சை விவசாயிகள் பஞ்சத்தால் வாடியபோது விகடன் இதழ்க் குழுமம் வாசகர்கள் மூலம் நிதி திரட்டி, பஞ்ச நிவாரணப் பணி ஆற்றியமையைக் குறிப்பிடலாம்.

இதழ்களின் சிறப்பு நோக்கங்கள் இதழ்களின் தனிப்பட்ட கொள்கை மற்றும் அவற்றின் தோற்றத்திற்கான/வெளியீட்டுக்கான காரணங்களை இதழ்களின் சிறப்பு நோக்கம் எனலாம். அதாவது இதழ்களின் பொருளடக்கம் என்பது அவ்வவ்விதழ்களின் சிறப்பு நோக்கம் எனப்படுகிறது.

இந்திய இதழியல் வரலாற்றில் தொடக்கக் கால இதழ்கள் பெரும்பான்மையும் சமயப் பிரச்சாரத்துக்குத் தோன்றியவை என்ற குறிப்பு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில், 1831ஆம் ஆண்டு சென்னை கிறித்துவ சமயப் பரப்புக் கழகம் சார்பில் வெளியான தமிழ் மேகசீன் என்ற இதழைக் குறிப்பிடலாம்.

தேச விடுதலையைப் பிரதானமாகக் கொண்ட இதழ்களைப் பற்றி இப்பாடத்தின் முதற்பகுதியில் பார்த்தோம். சமயம், தேச விடுதலை முதலிய நோக்கங்கள் தாண்டியும் இதழ்கள் வெளியாயின. சில இதழ்கள் தங்களது நோக்கங்களைச் சிறப்பாக முன் வைத்தன.

சான்று:

ஞானபாநு – இதழாசிரியர் : சுப்பிரமணிய சிவா. இவ்விதழில், ‘உறங்கிக் கிடக்கும் தமிழ் ஜாதியினரை அறிவாகிய சாட்டையால் அடித்து எழுப்பி, அவர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் உண்டுபண்ணி, அவர்களை முன்னிலையிற் கொண்டுவர வேண்டுமென்பதே இவ்விதழின் நோக்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றுமொரு சிறப்பு நோக்கம் கொண்ட இதழ் இராசாசியின் விமோசனம் என்பதாகும். பூரண மதுவிலக்கு என்பதே இவ்விதழின் சிறப்பு நோக்கமாகும்.

விதவை மறுமணத்தை ஆதரித்து, காரைக்குடியிலிருந்து மரகதவள்ளி அம்மையார் மாதர் மணம் இதழ் வெளியிட்டார்.

‘நாடும், மக்களும் வளர, வாழ நல்ல கதைகள் வேண்டும். கதைகள் மூலமாகவே சிறந்த கருத்துகளைச் செப்பனிட்டுத் தரலாம்; வாழ்வை வளப்படுத்தலாம் ; பண்பாட்டைப் பசுமையாக்கலாம். இந்த நற்கருத்தைத் தாங்கி இன்று கலாவல்லி பணியாற்ற வருகிறாள்’ என்ற அறிவிப்போடு வெளியான கலாவல்லி இதழின் நோக்கம் கதைகளை மட்டும் வெளியிடும் இலக்கிய நோக்கமாகும்.

இவ்வாறு தனித்த இதழ்கள் ஒவ்வொன்றும் அதன் பொருளடக்க அடிப்படையில் சிறப்பு நோக்கம் கொண்டதாகக் கருதப்படலாம்.

தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை இதழியலின் சிறப்பையும் நோக்கத்தையும் கண்டோம். இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்டவற்றை நினைவு படுத்திப் பாருங்கள்.

இதழ்களின் சிறப்பைத் தெரிந்து கொண்டோம்.

இதழ்கள் மக்களாட்சியின் காவல் தேவதையாக அமைந்து செய்திகளைப் பரப்பியும் விளக்கியும் விமரிசித்தும் கருத்தை உருவாக்குவதை உணர்ந்து கொண்டோம்.

அரசியலமைப்பில் இதழ்கள் சமுதாய விழிப்புணர்வை உருவாக்கியும். கல்விச் சேவை புரிந்தும், எதிர்க்கட்சியாகச் செயலாற்றியும், வளர்ச்சிப் பணிகளில் பங்கு கொண்டு சிறப்பாக இலங்குவதையும் அறிந்து கொண்டோம்.

தெரிவித்தல், நெறிப்படுத்தல், பொழுதுபோக்கு, வியாபாரம், சேவை முதலிய பொதுவான நோக்கங்களின் அடிப்படையில் இதழ்கள் செயற்படுகின்றன என்பதைக் கண்டோம்.

ஒவ்வோர் இதழும் அவற்றின் உள்ளடக்க அடிப்படையில் சிறப்பு நோக்கம் உடையவையாக உள்ளன. அவற்றுள் இன்றியமையாத இதழ்கள் சிலவற்றை அறிந்தோம்.

இதழியல் பற்றிய இப்பாடத்தின் மூலம் இதழ்களின் சிறப்பையும் நோக்கத்தையும் அறிந்து கொண்டோம்.

பாடம் - 5

இதழ்களின் நடத்தை விதிகளும் சட்டங்களும்

பாட முன்னுரை

உலகில் வெளியாகும் அத்தனை இதழ்களும் தமக்கெனத் தனித்த கொள்கைகளை உடையன; எனினும் பொதுவான சில அடிப்படைக் கூறுகளையும் பின்பற்றுகின்றன. இதழ்கள் தாமே பின்பற்றுகிற ஒழுக்க விதிகளை நடத்தை விதிகள் என்றும் பின்பற்றப்பட வேண்டிய விதிகளைச் சட்டங்கள் என்றும் கூறலாம். இந்தப் பாடத்தின் முன்பகுதி இதழியலின் நடத்தை விதிகளைக் கூறுவதாகவும், அடுத்த பகுதி இதழியல் சட்டங்களைச் சுட்டுவதாகவும் அமைகின்றது.

இதழ்களின் நடத்தை விதிகள்

போட்டி நிறைந்த உலகில் இதழ்களின் நோக்கம் இலாபமாக இருக்கலாம். ஆனால், ஒவ்வோர் இதழும் தனக்கெனத் தனித்த குறிக்கோள்களைக் கொண்டு இலங்க வேண்டும். அக்குறிக்கோள்கள் இதழுக்கு இதழ் மாறுபடலாம். இதழ்கள் பின்பற்றுகிற சில மரபுகள் உண்டு. அம்மரபுகளை நடத்தை விதிகள் எனலாம். இதழியலின் நடத்தை விதிகளை இதழாளர் சங்கங்கள் சில வெளியிட்டுள்ளன. அவற்றைக் காண்போம்.

அமெரிக்கச் சங்கமும் விதிகளும் அமெரிக்க இதழாசிரியர்கள் பலர் கூடி இதழாசியர் சங்கம் ஒன்றை ஏற்படுத்தினர். அச்சங்கத்தினர் 1923ஆம் ஆண்டில் இதழியலாளர் பின்பற்ற வேண்டிய விதிகளை வெளியிட்டனர். அவ்விதிகள் வருமாறு :

பொறுப்பு (Responsibility)

இதழ்கள் வாசகர்களைக் கவரப் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றலாம். செய்தி வெளியீடு, கருத்து வெளியீடு ஆகியவற்றில் பொறுப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். போட்டிகள், வாசகர்களின் புகைப்படங்களைப் பிரசுரித்தல் முதலியவை இந்த வழிமுறைகளில் அடங்கும். இவ்வழி முறைகளைக் கையாளும்போது சமுதாய நலனைக் கெடுக்காத வகையில் இதழ்கள் செயல்பட வேண்டும். இதழ்களின் இச்செயல்பாடுகள் பொறுப்புணர்வுடன் கூடியவையாக இருத்தல் வேண்டும்.

இதழியல் சுதந்திரம் (Freedom of Press)

சட்ட வரம்புகளுக்கு உட்பட்டுச் செய்திகளை வெளியிடவும் விவாதிக்கவும் இதழ்களுக்குக் கட்டுப்பாடற்ற உரிமை இருத்தல் வேண்டும். இந்த உரிமை இதழியல் சுதந்திரம் எனப்படும்.

தனித்தன்மை (Independence)

மக்கள் நலன் சார்ந்து இதழ்கள் தனித்தன்மையுடன் இயங்க வேண்டும். அவ்வாறு தனித்தியங்கும் போது இதழ்கள் தமது சுயநலத்திற்காகச் செய்திகளைப் பயன்படுத்தக் கூடாது. மேலும் உண்மைக்குப் புறம்பாக, ஒருபக்கம் சார்ந்து செய்திகளை வெளியிடுவதும் விமரிசிப்பதும் கூடாது.

மிகச் சரியான உண்மை (Truthfulness and Accuracy)

இதழ்கள் மிகச் சரியான செய்திகளை வெளியிட வேண்டும். உண்மையாகவும் சரியாகவும் உள்ள செய்திகளை நேர்மையாக வெளியிட வேண்டும். செய்திகளை வெளியிடும் போது திரித்தோ, வேறு பொருள்தரும் வகையில் மாற்றியோ வெளியிடக் கூடாது. செய்திகளுக்கு ஏற்ற தலைப்பினைத் தருதல் வேண்டும். மாறாக, கவர்ச்சிக்காகவோ கிளர்ச்சிக்காகவோ தொடர்பின்றித் தலைப்புத் தருதல் தவறானதாகும்.

ஒருபாற் கோடாமை (Impartiality)

செய்திகளை நடுவுநிலையோடு வெளியிட வேண்டும். செய்திகளையும் அவை பற்றிய பல்வேறு கருத்துகளையும் வேறுபடுத்திக் காட்ட வேண்டும். மாறாக, வாசகர்களைத் திசைதிருப்பக் கூடாது.

நேர்மையான செயல் (Fair Play)

இதழ்கள் நேர்மைக்கு மாறாகச் செயல்படக் கூடாது. ஆதாரமின்றித் தனிநபர் மீது குற்றம் சாட்டுவது கூடாது. செய்திகளோடு தொடர்புடையவர்கள் தரும் விளக்கங்களை ஏற்றுக் கொண்டு, தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்ள இதழ்கள் தயங்கக் கூடாது.

பண்பாடு (Decency)

இதழ்கள் செய்திகளை வெளியிடும் பொழுது சமுதாய நெறியிலிருந்து விலகாது இருத்தல் அவசியமாகும். கொலை, திருட்டு, வன்முறை முதலிய குற்றங்கள் பற்றிய செய்திகளை வெளியிடும்போது உணர்வுகளைத் தூண்டாமல், சமுதாயப் பண்பாட்டைச் சீர்குலைக்காமல் தரமான முறையில் வெளியிடுதல் இதழ்களின் பண்பாடு ஆகும்.

இந்திய இதழியல் மன்றமும் விதிகளும் இந்திய இதழியல் மன்றம் (Press Council) 1966ஆம் ஆண்டு இதழ்கள் பின்பற்ற வேண்டிய நடத்தைக் கோட்பாட்டைத் (Code of Conduct) தொகுத்து அளித்தது. அதனை நாளிதழ்களுக்கும் பருவ இதழ்களுக்கும் அனுப்பியது. இவ்விதிகளை இதழியல் கலை என்ற நூல் விரிவாகக் குறிப்பிடுகிறது. அது இதழ்களின் உரிமையை ஏற்றுக் கொண்ட மன்றம் விலக்க வேண்டிய கூறுகளைப் பின்வருமாறு பட்டியல் இடுகின்றது.

(1) சாதி தொடர்பான நிகழ்ச்சிகளையோ விவரங்களையோ மிகைப்படுத்தியோ, சிதைத்தோ கூறுதல்; உண்மைகளைப் போல,சரிபார்க்காத வதந்திகளையோ, ஐயப்பாடுகளையோ ஊகங்களையோ பரப்புதல்;அவற்றைப் பற்றி விமரிசித்தல்.

(2) இலக்கிய நயத்தோடு அமைய வேண்டும் என்பதற்காக எதுகை மோனைக்காகவோ, அழுத்தம் தருவதற்காகவோ பண்படாத கட்டற்ற மொழி நடையைப் பின்பற்றுதல்.

(3) உண்மையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் குறைகளைத் தீர்க்கும் வழிமுறையாக வன்முறைக்கு ஊக்கம் தரும் முறையில் எழுதுதல்.

(4) குறிப்பிட்ட இனம் அல்லது சாதி உறுப்பினர்கள் என்பதற்காக, அவர்களது நடத்தை பற்றிக் குற்றச்சாட்டுகள் இருக்கும்போது தனிமனிதர்களையோ, சமுதாயங்களையோ தாக்கி எழுதுதல்.

(5) சாதிகள், வட்டாரங்கள், மொழிகள் முதலிய பிரிவினருக்கு இடையில் கசப்பான தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய செய்திகள், கருத்துகள் பற்றி வெறி ஏற்றும் விமரிசனங்களை வெளியிடுதல்.

(6) சமுதாய ஒற்றுமையைப் பாதிக்கும் செய்திகளை, உணர்ச்சியைத் தூண்டுவதற்காக, நடந்தவற்றை மிகைப்படுத்தியோ, பெரிய தலைப்புகளோடோ, வேறுபட்ட எழுத்துகளில் அச்சிட்டோ வெளியிடுதல்.

(7) பல்வேறு மதங்களைப் பற்றியோ, நம்பிக்கைகளைப் பற்றியோ, அவற்றின் நிறுவனங்களைப் பற்றியோ மரியாதையற்ற, மட்டம் தட்டுகின்ற, கேவலப்படுத்துகின்ற கருத்துரைகளைக் கூறுதல்.

பன்னாட்டு உழைக்கும் சங்கமும் விதிகளும் உலக அளவில் இதழியல் நடத்தை விதிகளைத் தீர்மானிக்க யுனெஸ்கோ அமைப்பு அவ்வப்பொழுது சில இதழாளர்கள் மாநாட்டைக் கூட்டுவது உண்டு. 1983ஆம் ஆண்டு பிரேக் மற்றும் பாரிசு நகரங்களில் பன்னாட்டு இதழாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நிகழ்ந்தது. அப்போது வெளியிடப்பட்ட பன்னாட்டு இதழ்களின் நடத்தை விதிகள் வருமாறு :

செய்திகளை அறியும் உரிமை

உண்மையான செய்திகளை அறிந்து கொள்ளவும் அவை பற்றிய கருத்துகளைத் தகவல் தொடர்புச் சாதனங்கள் வழி வெளியிடவும் பொதுமக்களுக்கு உரிமை உண்டு.

கொள்கைப் பிடிப்பு

செய்தியின் உண்மைத் தன்மையோடு எவ்வித மாற்றமும் இல்லாமல், தனித்தன்மையோடு இதழாளர்கள் வெளியிடுதல் வேண்டும். செய்திகளின் பின்னணி மற்றும் உண்மை நிலவரத்தை அறிவதில் இதழாளர்கள் கொள்கைப் பிடிப்போடு இருத்தல் வேண்டும்.

சமூகப் பொறுப்பு

செய்திகளை வெளியிடும் இதழாளர் தனது மனச்சாட்சிப் படியும், தொழில் நெறிப்படியும் எவ்விதச் சூழ்நிலைகளிலும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

நேர்மை

இதழாளர் நேர்மையானவராக இருத்தல் அவசியம். தனக்குச் செய்தி தரும் நபர்களையோ, தான் பணியாற்றும் நிர்வாகத்தையோ அச்சுறுத்தல்களுக்கு அஞ்சிக் காட்டிக் கொடுத்தல் கூடாது. தனிப்பட்ட முறையில் இலஞ்சம் பெறுவது, கூடுதல் சலுகைகளைப் பெற முயல்வது, பிறர் எழுத்து, படைப்புகளைத் திருடுவது போன்ற குற்றங்கள் செய்யாது இருப்பது முதலியன நேர்மையாகும்.

பொதுமக்களது பங்கெடுப்பு

செய்தி வெளியீட்டிலும், அவற்றைத் திருத்துவதிலும், கருத்துகளைக் கூறுவதிலும் பொதுமக்களையும் பங்கெடுத்துக் கொள்ள வைப்பது இதழ்களின் நடத்தை விதிகளில் இன்றியமையாதது ஆகும்.

சமூக மதிப்புகளை மதித்தல்

தனி மனிதர்களை மதிப்பதோடு, உள்நாட்டு, வெளிநாட்டுச் சட்டங்களை மதித்து, மானநட்டம், அவதூறு, இகழ்ச்சி முதலிய குற்றங்களுக்கு ஆட்படாமல் தவிர்ப்பது ஆகும்.

மக்கள் விருப்பத்தை மதித்தல்

மக்கள் சமுதாயத்தையும் மக்களாட்சி அமைப்புகளையும் பொது ஒழுக்க நெறிகளையும் மக்களது விருப்பத்தையும் மதித்தல் இதழாளர் கடமை ஆகும்.

உலகளாவிய சிந்தனை

பன்னாட்டு அறங்களையும், அமைப்புகளையும் மாநாடுகளையும், உலகளாவிய தீர்மானங்களையும் உலகளாவிய ஒருமைச் சிந்தனையையும் இதழாளர்கள் அறிந்து வைத்திருப்பது அவசியமானதாகும்.

போர் முதலிய தீமைகளை அகற்றுதல்

மனித இனத்தை அச்சுறுத்தும் போர், ஆயுத உற்பத்தி, ஆக்கிரமிப்பு, பலாத்காரம், இனப்பாகுபாடு, நிறவெறிப் பாகுபாடு, அடக்குமுறை, காலனியாதிக்கம், சுரண்டல் பொருளாதாரம், வறுமை, பிணி, சத்துணவின்மை முதலியவற்றை அகற்றுவதில் இதழாளர்கள் அக்கறை கொண்டிருக்க வேண்டும். இந்தத் தீமைகளை நாடு, மொழி, மதம் கடந்து அகற்றுவதற்கு இதழாளர்கள் பாடுபட வேண்டும்.

பன்னாட்டு உறவை வளர்த்தல்

நாடுகளுக்கு இடையேயான உறவையும் செய்தித் தொடர்புகளையும் பொதுமைப் படுத்துவதோடு நாடுகள் மக்களுக்கு இடையேயான அமைதிக்கும்

உறவுக்கும் வழிவகுப்பதும் இதழாளர் கடமையாகும். இதழ்களும் இதழாளர்களும் இத்தகைய நடத்தை விதிகளை ஏற்றுச் செயல்பட்டால் சமுதாயம் நலம்பெறும்; வளம் பெறும் !

இதழியல் சட்டங்கள்

செய்திகளை வெளியிடும் உரிமை இதழ்களுக்கு உண்டு. எனினும், அயல்நாட்டு உறவு, பொது அமைதி, ஒழுங்கு, நீதிமன்ற அவமதிப்பு,    நாட்டின்    பாதுகாப்பு முதலியவற்றிற்காக அரசாங்கங்கள் இதழியல் தொடர்பான சட்டங்களை இயற்றியுள்ளன.அவை வருமாறு :

வெல்லெஸ்லி பிரபுவின் திட்டம் விடுதலைக்கு முந்தைய   இந்தியாவில், 1799ஆம் ஆண்டு தலைமை ஆளுநர்     வெல்லெஸ்லி பிரபு இதழாளர்களைக் கட்டுப்படுத்த ஐந்து அம்சத்திட்டத்தைக் கொண்டு வந்தார்.

செய்தித்தாளின் கடைசிப் பக்கத்தில் அச்சிடுவோரின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

இதழ்    உரிமையாளர்    தலைமைச் செயலருக்கு முகவரியைத் தெரிவிக்க வேண்டும்.

ஞாயிற்றுக்     கிழமைகளில்     இதழ்களை வெளியிடக் கூடாது.    அரசின் தலைமைச் செயலகம் அனுமதி தந்த பிறகு இதழ்கள் வெளியிட வேண்டும்.

மேற்கண்டவற்றை நிறைவேற்றாதவர்கள் நாடு கடத்தப்படுவர்.

செய்தித்தாள் சட்டங்கள் செய்தித்தாள் அவசரச் சட்டம் (1823), பதிவுச்சட்டம் (1835), வாய்ப்பூட்டுச் சட்டம் (1857), பத்திரிகைப் பதிவுச் சட்டம் (1867) ஆகிய பல சட்டங்கள் இருந்தன.

செய்தித்தாள் அவசரச் சட்டம்

1823ஆம் ஆண்டு ஆடம்ஸ் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இச்சட்டத்தின்படி அச்சடித்த இதழின் ஒரு பிரதி உள்ளூர் நீதிமன்ற நடுவருக்கு அனுப்பிட வேண்டும். அனுமதி மறுக்கும் அதிகாரம் கவர்னருக்கு உண்டு. அனுமதி இன்றிச் செய்தி வெளியிட்டால் நான்கு மாதச் சிறைத் தண்டனையோ நானூறு ரூபாய் அபராதமோ உண்டு.

செய்தித்தாள் பதிவுச் சட்டம்

இச்சட்டப்படி செய்தித்தாள் வெளியிடுபவர் அச்சக உரிமையாளர், வெளியிடும் இடம் முதலியவற்றைப் பதிவு செய்தல் வேண்டும். மீறினால் அபராதமும் தண்டனையும் உண்டு. இரண்டு முறை இச்சட்டம் திருத்தப்பட்டது. அரசுக்கு எதிரான செய்திகள் வெளியிட்டால் நாடு கடத்தப்படுவர்.

வாய்ப்பூட்டுச் சட்டம்

1857ஆம் ஆண்டு இதழ்களின் சட்டம் எண் 15 கொண்டு வரப்பட்டது. சிப்பாய்க் கலகத்தை ஆதரித்த இதழ்களை ஒடுக்க வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி அச்சகம் நிறுவ முன் அனுமதி பெறவேண்டும்; மேலும், அரசுக்கு எதிரான செய்திகளைத் தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு உண்டு.

பத்திரிகைப் பதிவுச் சட்டம்

பத்திரிகைப் புத்தகப் பதிவுச்சட்டம் 1867ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பத்திரிகை வெளியிடுபவர் ஒரு நீதிபதியின் முன் உறுதிமொழி எடுக்க வேண்டும். ஆசிரியர், அச்சிடுபவர், அச்சகப் பெயர் முதலியவற்றை இதழ்களில் குறிப்பிட வேண்டும். அச்சிட்ட இதழ்களை அரசுக்கு அனுப்ப வேண்டும். மீறினால் அபராதமும் சிறையும் உண்டு. 1872ஆம்     ஆண்டு Evidence Act    என்னும் சான்றாதாரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய மொழி இதழ்கள் சட்டம்

1878இல் லிட்டன் பிரபுவால் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேய அரசைத் தாக்கி எழுதுவதைத் தடை செய்ய இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் படி இதழ்கள் குறிப்பிட்ட பிணையத் தொகையைச் செலுத்த வேண்டும். அரசாங்கத்தைக் குறை கூறும் விதமாகவோ இனம், மதம், சாதிக் கலவரங்களைத் தூண்டும் வகையிலோ எழுதக்கூடாது. அவ்வாறு செய்தால், பறிமுதல் செய்யும் அதிகாரம் நீதிமன்ற நடுவருக்கு உண்டு. அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாது. இதனை எதிர்ப்பவர்கள் பிணைத் தொகையை இழப்பதோடு சிறைத்தண்டனைக்கும் உள்ளாவர். 1881ஆம் ஆண்டு ரிப்பன்பிரபு காலத்தில் இச்சட்டம் திரும்பப் பெறப்பட்டது.

குற்றத் தூண்டுதல் தடுப்புச் சட்டம் ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகளைக் குறிக்கும் மற்றுமொரு சட்டம் 1908இல் பிறப்பிக்கப்பட்டது. குற்றங்களைத் தூண்டும் செய்திகளை வெளியிட்டால் இதழையும் அச்சகத்தையும் நீதிபதி பறிமுதல் செய்யலாம். இச்சட்டத்தினால், ஆங்கிலேய அரசுக்கு முதல் ஐந்தாண்டுகளில் ஐந்து லட்சம் ரூபாய் பிணையத் தொகை கிடைத்தது.

1910ஆம் ஆண்டு இதழ்கள் சட்டம் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான ஆங்கில அரசின் நடவடிக்கைகளுள் இச்சட்டமும் ஒன்றாகும். இரண்டாயிரம் ரூபாய் வரை பிணையத் தொகையை இதழ்கள் கட்ட வேண்டும். அரசுக்கு எதிரான செய்திகள் வெளியானால், அஞ்சலக அதிகாரி இதழ்களை நிறுத்தி வைக்கலாம். அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியாது. கடுமையான இச்சட்டத்தால் இதழ்கள் பல நின்று போயின. 1921ஆம் ஆண்டு சாப்ரூ என்பவரின் தலைமையில் அமைந்த குழுவின் பரிந்துரையின்படி இச்சட்டம் நீக்கப்பட்டது.

செய்தித்தாள் அவசரச் சட்டம் 1930ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி செய்தித்தாள்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டது. இதனால் பல இதழ்கள் பாதிப்பு அடைந்தன.

நெருக்கடிக் கால அதிகாரச் சட்டம் 1931ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டம் ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடிக் கால அதிகாரங்களை அளித்தது. இச்சட்டப்படி இதழ்களும் அச்சகங்களும் பத்தாயிரம் ரூபாய் பிணையத் தொகை கட்ட வேண்டும். இத்தொகையை மாநில அரசுகள் பறித்துக் கொள்ளலாம். தேசத் தலைவர்கள் பற்றிய செய்திகளை வெளியிடக் கூடாது. இச்சட்டம் காந்தியடிகளின் சட்டமறுப்பு இயக்கத்தை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது.

பிற பல்வகைச் சட்டங்கள் மேற்குறிப்பிட்டவைகளைத் தவிர, இதழியல் தொடர்பாகப் பல்வேறு வகையான சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்திய நூலகச் சட்டம் (1954)

வெளியிடப்படும் நூலின் / இதழ்களின் பிரதியைத் தேசீய நூலகம் (கல்கத்தா), மத்திய நூலகம் (டில்லி), கன்னிமாரா நூலகம் (சென்னை) ஆகியவற்றிற்கு அனுப்ப வேண்டும் என்பது இச்சட்டத்தின் நோக்கம்.

தொழில் முறைப் பத்திரிகையாளர் சட்டம்

இதழியல் துறைப் பணியாளர்களுக்கான ஊதியம், வைப்புநிதி, ஓய்வுக்கால ஊதியம், பணிக்கொடை விடுமுறை (earned leave), வேலைநேரம் பற்றிய சட்டம். இச்சட்டம் 1955ஆம் ஆண்டு இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

விலை, பக்க நிர்ணயச் சட்டம்

1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டம் முன்னரே இருந்த சட்டங்களின் திருத்தம் செய்யப்பட்ட வடிவமாகும். இச்சட்டப்படி இதழ்கள் டில்லி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படவேண்டும். அச்சிட்ட இதழ்களின் பிரதியைப் பதிவாளர் அலுவலகத்துக்கும், கல்கத்தா தேசிய நூலகத்திற்கும் சென்னை கன்னிமாரா நூலகத்திற்கும் அனுப்ப வேண்டும். ஆசிரியர், பதிப்பாளர், அச்சிடுபவர், அச்சகம் பெயரை இதழ்களில் வெளியிட வேண்டும். ஆண்டு அறிக்கை வெளியிட வேண்டும்.

நாடாளுமன்ற நடவடிக்கைச் சட்டம்

1956ஆம் ஆண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் அவை தொடர்பானவற்றையும் வெளியிடுவது பற்றியதாக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனைப் பெரோஸ்காந்தி சட்டம் என்பர்.

தீங்கு விளைவிக்கும் இதழ்கள் சட்டம்

ஆபாச வெளியீடுகளைத் தடை செய்யும் விதமாக 1956இல் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

பதிப்புரிமைச் சட்டம்

நூலாசிரியர்களுக்குப் பதிப்புரிமை அளிக்கும் விதமாக இச்சட்டம் 1957இல் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஆசிரியருக்குப் பதிப்புரிமை வழங்கப்படுகிறது.

அவதூறுச் சட்டம்

தனி மனிதர் பற்றி மாறான செய்திகள் வெளியிட்டால் வழக்குத் தொடர இச்சட்டம் வகை செய்கிறது. இ.பி.கோ. 499, 502 ஆகிய பிரிவுகளில் வழக்குத் தொடரலாம். இத்தகு சட்டங்கள் நடத்தை விதிகள் உருவாக உதவுகின்றன.

ஆபாச வெளியீட்டுத் தடைச் சட்டம்

மக்கள் மனத்தைக் கெடுக்கும் வகையில் செய்திகளை (பாலுணர்வு, வன்முறை தூண்டல்) வெளியிடுவதை இச்சட்டம் தடை செய்கிறது. இ.பி.கோ.292,293,294 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனை உண்டு. இச்சட்டத்தின்படி இதழ்களைப் பறிமுதல் செய்யலாம்.

தீமை பயக்கும் வெளியீட்டுத் தடைச்சட்டம்

1956இல் கொண்டு வரப்பட்ட இச்சட்டப்படி இளைஞர்களது உள்ளங்களைக் கெடுக்கும் வெளியீடுகளை இச்சட்டம் தடை செய்கிறது. அவற்றை விற்பதும் சட்டப்படி குற்றமாகும்.

ஆட்சி துரோகச் சட்டம்

ஆட்சிக்கு எதிரான வன்முறை தூண்டல், புரட்சி உண்டாக்கல், நாட்டின் பாதுகாப்புக்குத் தீங்கு விளைத்தல் முதலியன ஆட்சிக்கு எதிரானவை. இவை பற்றி இச்சட்டம் அமைகின்றது.

மருந்து, தந்திர நிவாரணச் சட்டம்

மருத்துவம், தந்திரம் சார்ந்த விளம்பரங்களைத் தடை செய்வது இச்சட்டத்தின் நோக்கமாகும். தொடர்புடையவற்றைத் தடைசெய்வதோடு விளம்பரங்களையும் இச்சட்டம் தடை செய்கிறது.

பத்திரிகைக் குழுச்சட்டம்

இதழ்களின் உரிமையைப் பாதுகாக்கக் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இதழ்கள் தொடர்பான எந்தப் பிரச்சினையையும் இதழியல் குழு (Press Council) விசாரித்துத் தீர்ப்பு வழங்கும். இம்முறை மேலை நாடுகளிலும் உண்டு.

இதழியல் தொடர்பான இந்தியன் பீனல்கோடு சட்டங்கள்

(1)இ.பி.கோ 124-A-இன்படி நாட்டின் நலனிற்குக் கேடு விளைவிக்கும் முறையில் பேசுவதையும் எழுதுவதையும் துரோகமாகக் கருதித் தண்டனை விதிக்கிறது.

(2)இ.பி.கோ. 505ஆம் பிரிவின்படி இராணுவத்தினர் இடையே பிளவு உண்டாகும்படி அறிக்கை வெளியிடுவதைத் தடுக்கிறது.

(3)இ.பி.கோ. 295-A-யின்படி மத நல்லுணர்வுக்குக் கேடு விளைவதைத் தடுக்கிறது.

(4)இ.பி.கோ. 99 A, 99G- யின்படி இனக்கலவரம் உண்டாகக் காரணமான நூலையோ செய்தித்தாளையோ பறிமுதல் செய்கிறது.

(5)இ.பி.கோ. 228ஆம் பிரிவின்படி நீதிமன்ற அவமதிப்பைத் தடுக்கிறது.

தணிக்கைச் சட்டம்

1988ஆம் ஆண்டு இதழ்களின் தணிக்கைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி,செய்திகள் வெளியிடுவதற்கு முன்பு அவற்றை ஆராய்ந்து நீக்க முடியும். இச்சட்டம் இதழியல் சுதந்திரத்தோடு தொடர்புடையதாகும். இதழ்களின் சுதந்திரத்தைப் பாதிப்பதால் இதனைக் கருப்புச் சட்டம் என்பர். இத்தகைய தணிக்கை முறை அமெரிக்க, பிரிட்டன் முதலிய நாடுகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை இதழியல் நடத்தை விதிகளையும் இதழியல் சட்டங்களையும் அறிந்திருப்பீர்கள். இப்பாடத்தின் மூலம் தெரிந்து கொண்டவற்றை நினைவுபடுத்திப் பாருங்கள்.

இதழ்களின் நடத்தை விதிகள் பற்றி அமெரிக்கச் சங்கம் கூறுவதையும், இந்திய இதழியல் மன்றம் கூறுவதையும் பன்னாட்டு உழைக்கும் இதழாளர் சங்கம் கூறுவதையும் அறிந்து கொள்ளலாம்.

இந்த நடத்தை விதிகள் ஒவ்வோர் இதழையும் தரமுடையதாக்குகின்றன

ஆண்டுகளின் ஏறுவரிசையில் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட இதழியல் சட்டங்களைத் தொகுத்து அறியலாம்.

விடுதலைக்கு முன்னர், ஆங்கிலேய அரசால் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்டது இந்திய இதழ்கள் சட்டம் என்பதைச் சட்டங்களின் விளக்கங்கள் நமக்குத் தருகின்றன.

விடுதலை இந்தியாவில் வெளியான இதழியல் சட்டங்கள் இந்திய இதழ்களைத் தரப்படுத்தவும் செம்மையாக்கவும் வழி வகுக்கின்ற தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

இதழியல் நடத்தை விதிகளும் சட்டங்களும் என்ற இப்பாடத்தின் மூலம் நல்ல தரமான இதழ்களின் அடிப்படைக் கூறுகளைப் புரிந்து கொள்கிறோம்.

பாடம் - 6

இதழ்களின் சுதந்திரம்

பாட முன்னுரை

‘வாக்குச் சீட்டினால் தேர்ந்தெடுக்கப்படாத மக்களின் பிரதிநிதி’ என இதழ்களைப் பற்றிக் கருத்துக் கூறுவர். மக்கள் குரலாக ஒலிக்கும் இதழ்கள் எவ்விதத் தடையுமின்றிச் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் இதழியலின் நோக்கம் முழுமையாக நிறைவேறும். அதாவது ஒரு சமுதாயத்திற்கு முழுமையான நன்மை செய்யும் விதமாக இயங்குவதற்கு இதழ்களுக்குத் தேவை, சுதந்திரம் !

இதழ்களின் சுதந்திரம் பற்றிய பொருள் விளக்கம், அறிஞர்களின் கருத்துகள், வரையறை, இதழியல் சுதந்திரத்தின் தேவை, இதழியல் சுதந்திரத்திற்கான தடைகள், இந்தியாவில் இதழியல் சுதந்திரம் எவ்வாறு இருந்தது என்பவற்றை விளக்கும் வகையில் இப்பாடம் அமைகின்றது.

இதழ்களின் சுதந்திரம்

இதழ்களின் சுதந்திரம் (Freedom of the Press) என்பது இன்றியமையாததாகும். இதழியல் சுதந்திரம் என்பது இதழியல் வளர்ச்சியோடு இணைந்த ஒன்றாகும். முதலில் இதழ்களின் சுதந்திரம் பற்றிய பொருள் விளக்கத்தைக் காண்போம்.

பொருள் விளக்கம் பிரஸ் (Press) என்ற ஆங்கிலச் சொல்லை, தமிழில் முதலில் பத்திரிகை என்று மொழிபெயர்க்கின்றோம். அச்சிடுவதற்கு உரிய கருவிகளையும் எந்திரங்களையும் கொண்ட அச்சகம் என்றும் பொருள் உண்டு. விரிந்த பொருளில், பொதுச் செய்திகளையும் அவை பற்றிய கருத்துரைகளையும் கொண்ட இதழ்களைக் குறிக்கும் வகையில் இதனைப் பயன்படுத்துகின்றனர். ‘இங்குச் செய்தித்தாட்கள், மலர்கள், செய்திப்பணிகள், இதழ்களில் பணிபுரியும் எல்லா வகை இதழாளர்கள் ஆகிய அனைத்தையும் குறிக்கும் வகையில் பத்திரிகை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்’ என்பார் மா.பா. குருசாமி.

பத்திரிகை என்பதன் மாற்றாக இதழ் / இதழியல் என்ற சொல்லைக் கையாளலாம். இதழியல் சுதந்திரம் என்ற தொடருக்குப் பலரும் பலவாறு பொருள் கூறுகின்றனர். எந்த வகையான சட்டத்தடையோ கட்டுப்பாடோ இல்லாமல் எதனையும் அச்சிட்டு வெளியிடுவதை இதழியல் சுதந்திரம் என்பர்.

இதழியல் சுதந்திரம் என்பதைப் பலவாறு குறிப்பிடுகின்றனர்.

விருப்பு வெறுப்பின்றிச் செய்திகளை வெளியிடுதல்.

அரசின் கட்டுப்பாடில்லாமல் செயல்படுதல்.

விளம்பரதாரர்கள், செல்வாக்குப் படைத்தவர்கள் முதலியவர்களின் தலையீடின்றி இருத்தல்.

நிதிக்கும் ஏனைய பிறவற்றிற்கும் மற்றவர்களைச் சாராமல் இருத்தல்.

எனப் பல்வேறு விதமாகப் பொருள் கூறுகின்றனர்.

இதழியல் குழு இந்தியாவின் முதல் இதழியல் குழு (Press Commission) ‘பொது அதிகாரத்தின் எந்த வகையான தலையீடும் இல்லாமல் கருத்துகளைக் கொண்டிருக்கவும், செய்திகளைப் பெறவும் அச்சிட்டு வெளியிடவும் இருக்கின்ற சுதந்திரம்’ எனப் பொருள் கூறுகிறது. மேலும் ‘எதனை வெளியிட விரும்புகின்றார்களோ அதனை அரசின் முன் அனுமதியின்றி அச்சிட்டு வெளியிடப் பொது மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால், வெளியிடுபவர்கள் வெளியிட்ட செய்திகளுக்கு உரிய சட்டபூர்வமான பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ எனவும் கூறுகின்றது.

இதழியல் சுதந்திரம் என்பது மக்களாட்சியில் மக்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒன்றாகும். பொதுவாக மக்களாட்சியில் அச்சிடும் உரிமை (Right to Print), திறனாய்வு உரிமை (Right to Criticise), அறிவிக்கும் உரிமை (Right to Report) இதழ்களுக்கு உண்டு. இதனை, ‘இதழியல் சுதந்திரத்தில்,

செய்திகளின் எல்லா மூலங்களோடும் தொடர்பு கொள்ளும் சுதந்திரம்.

வெளியீட்டுச் சுதந்திரம்.

சுற்றுக்கு விடும் சுதந்திரம் (Freedom of Circulation)

என்ற மூன்று கூறுகளும் உள்ளன’ என்று இதழியல் குழு கூறுகிறது.

தகவல் உரிமைகள் மையம் தகவல் உரிமைகள் மையம் (Freedom of Information Centre) என்பது கொலம்பியாவிலுள்ள மிசௌரி பல்கலைக் கழகத்தில் உள்ளது. அந்த மையம், இதழியல் சுதந்திரம் என்பதற்கு,

செய்திகளைப் பெறுவதற்கு உரிமை.

முன் கட்டுப்பாடின்றி அச்சிடும் உரிமை.

தண்டனை பற்றிய அச்சமோ, அச்சுறுத்தலோ இன்றி அச்சிடும் உரிமை.

தகவல் தொடர்புக்கு வேண்டிய வாய்ப்புகளையும் சாதனங்களையும் பெற்றுக் கொள்கின்ற உரிமை.

சட்டப்படி செயல்படும் அரசோ, சட்டத்திற்குப் புறம்பாக மக்களோ தலையிடாமல் செய்திகளைப் பரப்புகின்ற உரிமை.

எனப் பொருள் தருகிறது.

மேற்கூறிய விளக்கங்களின் அடிப்படையில் இதழ்களின் சுதந்திரம் என்பது கூட்டுச் சுதந்திரம் (Collective Freedom) என்பது பெறப்படுகின்றது.

அறிஞர்களின் கருத்துகள்

இதழ்களின் சுதந்திரம் பற்றி அறிஞர்களின் கருத்துகளைக் காண்போம்.

வின்ஸ்டன் சர்ச்சில்

‘சுதந்திர மனிதன் போற்றும் ஒவ்வொரு உரிமையையும் தூங்காமல் கட்டிக் காக்கும் காவலன் சுதந்திரமான இதழே’ என்கிறார்.

காந்தியடிகள் கருத்து

‘இதழ்களின் நோக்கம் மக்களுடைய எண்ணங்களை நல்ல முறையில் புரிந்து கொண்டு அதை வெளியிடவேண்டும். மக்களிடம் சில நல்லெண்ணங்களை, இலட்சியங்களை வளர்க்கவும் உருவாக்கவும் முயல வேண்டும். மூன்றாவதாகச் சமுதாயத்தில் காணப்படும் பொதுவான குற்றங்களைத் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும்’ என்கிறார்.

மேலும், ‘சுதந்திரமாகப் பேசுதல், சுதந்திரமாகக் கூடுதல், சுதந்திரமான இதழ்கள் முதலியவற்றைக் கொண்டு வருவதுதான் சுயராஜ்யம் என்பதன் முழுப்பொருள் ஆகும்’ என்றும் உரைக்கின்றார்.

நேருவின் கருத்து

‘இதழ்களின் சுதந்திரம் என்பது வெறும் கோரிக்கை முழக்கம் மட்டும் அல்ல. அது மக்களாட்சி வழிமுறையில் மிகவும் இன்றியமையாத இயல்பாகும். இதழ்கள் எடுத்துக் கொள்ளும் உரிமைகளை அரசு விரும்பாவிட்டாலும் அவற்றை ஆபத்தானது என்று கருதினாலும், இதழ்களின் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை’ என்று நேரு கூறுகின்றார்.

ஹென்றி காபோட் லாட்ஜ்

‘இதழியல் சுதந்திரம் என்பது உலகமெல்லாம் பின்பற்ற வேண்டிய ஓர் உயரிய கொள்கை ஆகும். விமரிசனத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதும் யாரிடமும் குறையற்ற உண்மை இல்லை என்பதும் இக்கொள்கையின் அடிப்படையாகும்’ என்று கூறுகிறார்.

ஆர்.சி.எஸ். சர்க்கார் கருத்து

‘இதழ்கள் மக்களுக்கு எல்லாவற்றையும் தெரிவிக்கவும், பொது விவாதத்தையும் அறிவார்ந்த திறனாய்வையும் உருவாக்கும் வாய்ப்பினை வழங்கவும் வேண்டுமானால் இதழ்கள் சுதந்திரமாகவும் (Freedom) தனித்தும் (Independent) இருக்க வேண்டும். இந்த இரண்டு பண்புகளும் பிரிக்க முடியாதவை. இவை இரண்டும் மிகவும் இன்றியமையாதவை. சுதந்திரமான இதழ் தனித்து நிற்கும் இதழாகவும் இருக்க வேண்டும்’ என்று விரிவாக இதழியல் சுதந்திரம் பற்றி உரைக்கின்றார்.

இதழியல் சுதந்திரம் : வரையறை இதழியல் சுதந்திரம் என்பது சில ஒழுக்க நெறிகளுக்கு உட்பட்டதாகும்.

உண்மையை மட்டுமே இதழ்கள் வெளியிட வேண்டும்.

ஒருவருக்கும் அஞ்சக் கூடாது.

ஆணவமாக நடந்து கொள்ளக் கூடாது.

உண்மையை வெளியிடுவதில் எவ்விதமான தியாகமும் செய்யத் தயங்கக் கூடாது.

செய்திகளின் மூலத்தை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது.

எல்லாப் பருவத்தினரும் பால் வேறுபாடு இல்லாமல் படிக்கும் விதத்தில் எழுத்துகளின் தன்மை இருக்க வேண்டும்.

குரல் எழுப்ப முடியாத எளியவர்களையும் அணுகி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வெளியிட வேண்டும்.

ஒருவர் மீது குற்றம் சாட்டி எழுதினால் குற்றம் சாட்டப்பட்டவர் பதில் அளிக்கவும் இதழ்களில் வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.

இந்நெறிகளின்படி செயல்பட்டால் இதழ்கள் சுதந்திரமாகச் செயல்படுவதோடு இதழ்களின் நோக்கமும் முழுமையாக நிறைவேறும் எனலாம்.

இதழ்கள் சுதந்திரமாகச் செயல்படுவதோடு தமக்குள்ள பொறுப்பினையும் கடமையையும் எண்ணிப் பார்க்க வேண்டும். பொறுப்பும் கடமையும் இல்லாத சுதந்திரம் படிப்படியாகக் குறைந்து மறைந்து போகும். ஆகவேதான் காந்தியடிகள், ‘இதழியல் சுதந்திரம் என்பது ஆற்றல் மிக்க கருவி. அது கட்டுப்பாடற்றுச் செயல்பட்டால், அழிவினை உண்டாக்கும் காட்டாற்று வெள்ளமாகிவிடும்’ என உரைக்கின்றார்.

மேற்கூறியவற்றின் அடிப்படையில், இதழியல் சுதந்திரம் என்பது ‘செய்திகளை உண்மை மாறாமல் யாருக்கும் அஞ்சாமல் உள்ளவாறே (அச்சிட்டு) வெளியிடுவதும் அது குறித்த பொறுப்பையும் கடமையையும் ஏற்றுக் கொள்வதும் ஆகும்’ என வரையறுக்கலாம். அதாவது இதழியல் சுதந்திரம் என்பது கட்டுப்பாடு, பொறுப்பு, கடமையுணர்வு ஆகியவற்றுடன் உண்மைகளை அறிவிப்பது ஆகும்.

இதழியல் சுதந்திரத்தின் தேவை 1977ஆம் ஆண்டு பிரண்ட்-ரிச்-நாவ்மான்-ஸ்டிஃபிங் என்ற பன்னாட்டு இதழியல் நிறுவனம் கருத்தரங்கு ஒன்றை நிகழ்த்தியது. அக்கருத்தரங்கில் பங்கு கொண்ட இந்திய இதழியலாளர்கள் இந்தியாவில் இதழியல் சுதந்திரமும் மக்களாட்சியும் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டனர். அவ்வறிவிப்பு இதழியல் சுதந்திரத்தின் தேவையை உரைக்கிறது என இதழியல்கலை என்ற நூல் கூறுகின்றது. அவ்வறிவிப்பு வருமாறு :

(1) எல்லாச் சுதந்திரங்களின் இதயமாக இதழியல் சுதந்திரம் இருக்கின்றது. செய்திகளையும், சிந்தனையையும் சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்ள இயலாவிட்டால், வேறு எந்த உரிமையும் கிடைக்காமல் போய்விடும். சுதந்திர சமுதாயத்தின் தூண்களில் ஒன்றுதான் இதழியல் சுதந்திரம்.

(2) மக்களாட்சியில், வேறுபட்ட பங்கினைச் செய்ய இதழ்களுக்குப் பிரிக்க முடியாத உரிமை இருக்கின்றது. பொதுநல ஈடுபாட்டோடு எல்லா நிலைகளிலுள்ள அதிகாரத்தையும் விமர்சிக்கும் உரிமை இதழ்களுக்கு உண்டு. சமுதாயத்திற்குப் பொறுப்புள்ளதாக, எல்லாவகைச் செய்திகளையும் அச்சமின்றி, சிதைக்காமல், மறைக்காமல் வழங்குவது இதழ்களின் கடமை. இந்தக் கடமையை நிறைவேற்றச் சுதந்திரம் தேவை.

(3) மக்கள் தங்கள் விருப்பப்படி வெளியிடவும் செய்தித்தாள்களைப் படிக்கவும் உரிமை பெற்றிருக்க வேண்டும். ஆசிரியருக்கு நிர்வாகத்தின் தலையீடின்றிச் செயல்படும் உரிமை இருக்க வேண்டும்.

(4) சுதந்திரமான இதழ்கள் அதன் வாசகர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு இதழ்கள் தம்மைத்தாமே நெறிப்படுத்திக் கொள்வதும், கட்டுப்படுத்திக் கொள்வதும் தேவையாகும்.

(5) ஒன்றுக்கு மேற்பட்ட செய்தி நிறுவனங்கள் (News Agencies) இருக்க வேண்டும். அவை அரசின் கட்டுப்பாடின்றி, போட்டி போட்டுக் கொண்டு செயல்பட வேண்டும்.

(6) இதழியல் சுதந்திரம் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படக் கூடாது. தனி இதழ்களின் விளம்பரக் கட்டணங்களை நிர்ணயித்தல், அரசின் விளம்பரங்களை வழங்குவதன் மூலம் கட்டுப்பாடுகளை விதித்தல், காகிதம் வழங்குவதில் மறைமுகமாக அச்சுறுத்தல் போன்றவற்றை அரசு பின்பற்றக் கூடாது.

(7) செய்திகளின் கட்டுப்பாடற்ற ஓட்டத்திற்குச் சுதந்திரமான இதழ்கள் மட்டுமின்றி, சுதந்திரமாகவும் போட்டியிடும் வகையிலும் செயல்படுகின்ற வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் தேவை.

மேற்கூறிய ஏழு கருத்துகளும் உலகளாவிய இதழியல் சுதந்திரத்தின் தேவையை உணர்த்துவனவாக உள்ளன எனலாம்.

இதழியல் சுதந்திரத்திற்கான தடைகள்

இதழ்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்குச் சில நடைமுறைத் தடைகள் உள்ளன. அவற்றை இதழாளர்கள் அகத்தடை, புறத்தடை எனப் பகுத்து உரைப்பர்.

அகத்தடைகள் இதழ்களின் சுதந்திரத்திற்கு இதழ்களின் அமைப்புக்குள்ளும், செயல்படும் முறைகளிலும் நேரிடும் தடைகள் அகத்தடைகள் எனப்படுகின்றன. அவை வருமாறு:

பொருளாதாரச் சுதந்திரம்

பொருளாதாரச் சுதந்திரம் இன்றி, பிறரைச் சார்ந்திருக்கும் இதழ்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாது.

கொள்கைப் பிடிப்பின்மை

தனக்கெனத் தனித்த கொள்கை இன்றி இலாப நோக்கில் செயல்படுவது. அரசியல் செல்வாக்கு, தொழிலதிபர்கள் ஆதரவு, ஆதிக்க பலமுடையவர்களின் அதிகாரம் முதலியவற்றால் கொள்கைப் பிடிப்பின்றிச் செயல்படுவது.

ஆசிரியருக்குக் கட்டுப்பாடு

பெரிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்களுக்கு நிர்வாகத்தால் ஏற்படும் கட்டுப்பாடு.

இதழ்களின் உடைமை முறை

இதழ்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உடைமையாக இருக்குமானால் முதலாளிகளின் விருப்பப்படிதான் இதழ்கள் செயல்பட முடியும். உண்மையான கருத்துகள் மறைக்கப்படலாம்.

இதழாளர் சங்கம்

வலுவாக அமைந்துவிட்ட இதழாளர் சங்கங்கள் இதழ்களின் செயல்பாடுகளில் தலையிடுவது.

புறத்தடைகள் இதழ்களுக்கு வெளியிலிருந்து வரும் தடைகளைப் புறத்தடைகள் என்பர். அவை வருமாறு :

விளம்பரங்கள்

விளம்பரங்கள் இதழ்களுக்கு வருவாய் தரும் மூலங்களாகும். விளம்பரம் தரும் விளம்பரதாரர்கள் தமது செல்வாக்கால் இதழ்களைக் கட்டுப்படுத்த முயல்வர்.

கூட்டங்களின் தாக்குதல்

சில வேண்டாத செய்திகளால் பாதிப்படையும் கூட்டத்தார் (Mobs) (அரசியல்வாதிகள், குற்றவாளிகள்) இதழ்களைத் தாக்குவது.

உலக நாடுகளில் இதழியல் சுதந்திரம்

இதழியல் வரலாற்றில் தொடக்கக் காலம் முதல் இன்றுவரை இதழியல் சுதந்திரத்திற்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதை அறிய முடிகிறது. சர்வாதிகார ஆட்சி முறை மட்டுமின்றி மக்களாட்சியும் இதழ்களை அடக்கியாள முயற்சி செய்கின்றன. இதழ்களின் ஆற்றலுக்கு அஞ்சாத ஆட்சியாளர்கள் இல்லை. நெப்போலியன், ஆயிரம் ஈட்டிகளைக் காட்டிலும், நான்கு கிளர்ச்சிப் போக்குடைய இதழ்கள் நாட்டிற்குப் பேராபத்தை விளைவிக்கும்’ என்று அஞ்சியது நினைவிற்கு உரியது ஆகும்.

இங்கிலாந்தில் இங்கிலாந்து நாட்டில் ஜான் வில்க்ஸ் என்பார் நார்த்பிரிட்டன் என்ற இதழை நடத்தினார். அவ்விதழில் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் சொற்பொழிவைக் கடுமையாக விமரிசித்தார். ஜான் வில்க்ஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் கைது செய்யப்பட்டார். காமன் சபையினராலும் (

ouse of Common) பிரபுக்கள் சபையினராலும் (

ouse of Lords) குற்றம் சாட்டப்பட்டு இறுதியில் நாடு கடத்தப்பட்டார்; 1768ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று இங்கிலாந்தில் நுழைந்தார். அதன் பின்னர் வில்க்ஸ் தொடுத்த வழக்குகள் தனிமனித சுதந்திரத்தோடு இதழியல் சுதந்திரத்திற்கும் அடித்தளம் இட்டன எனலாம்.

அமெரிக்காவில் அமெரிக்காவின் பிரபலமான நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் என்பதாகும். அவ்விதழில் ஆண்டர்ஸன் என்பவர் 1972ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டு வென்ற நிக்ஸன் பற்றிக் கட்டுரை வெளியிட்டார். அக்கட்டுரையில், நிக்ஸன் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சியினர் நடவடிக்கைகளைத் தொலைபேசி மூலம் ஒட்டுக் கேட்டார் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு வாட்டர்கேட் ஊழல் என வரலாறு பெயரிட்டுள்ளது. இதழில் வெளிவந்த இச்செய்தியால் நிக்ஸன் பதவி விலகினார். இதழியல் சுதந்திரத்தால் மக்களாட்சி முறைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி இது.

இந்தியாவில் இதழியல் சுதந்திரம்

இந்திய இதழியல் வரலாறு என்பது இதழியல் சுதந்திரத்திற்கான போராட்ட வரலாறு என்றால் மிகையில்லை. மேலும், இந்திய விடுதலைப் போராட்ட வரலாறும் இதழியல் சுதந்திரத்திற்கான போராட்டமும் இணைந்தே உள்ளன எனலாம்.

முதல் இதழியல் முயற்சி கல்கத்தாவில் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய வில்லியம் போல்ட்ஸ் (William Bolts) என்பவர் 1766ஆம் ஆண்டு இதழ் ஒன்றைத் தொடங்க முயற்சி செய்தார். அம்முயற்சியைக் கண்டு அஞ்சிய கம்பெனியார் அவரைப் பணியிலிருந்து அகற்றினர். எனினும், தனது முயற்சியைக் கைவிடாத வில்லியம் போல்ட்ஸ் செய்தித்தாள் பற்றி மேலும் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதனால் ஆத்திரம் கொண்ட அரசு அவரை இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு நாடு கடத்தியது. இந்தியாவின் முதல் இதழியல் முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி கிட்டத்தட்டப் பதினான்கு ஆண்டுகள் கழித்து ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (James Augustus

icky) என்பார் 1780ஆம் ஆண்டு ஜனவரி 29இல் கல்கத்தாவில் பெங்கால் கெசட் அல்லது கல்கத்தா ஜெனரல் அட்வர்டைசர் என்ற இதழைத் தொடங்கினார். ஆங்கில மொழியில் வார இதழாக இந்த இதழ் வெளியானது. விளம்பரங்கள், அறிக்கைகள் முதலியவற்றிற்கு முதலிடம் தந்த ஹிக்கி ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகளையும் தமது இதழ்களில் இடம் பெறச் செய்தார். ஆங்கிலேய கவர்னர் வாரன் ஹேஸ்டிங்ஸ், உச்ச நீதிமன்ற நீதிபதி எலிஜா இம்பே (Elijah Impay) ஆகியோரும் ஹிக்கியின் கணைகளில் இருந்து தப்பவில்லை. இதனால் அவதூறு வழக்கு இடப்பட்டு ஹிக்கியின் இதழ் தடைசெய்யப்பட்டது. இரண்டே ஆண்டுகளில் 1782இல் பெங்கால் கெசட் இதழ் நின்றது. எனினும் ஹிக்கி இந்தியச் செய்தித்தாளின் தந்தையாகவும், பெங்கால் கெசட் இந்தியாவின் முதல் செய்தி இதழாகவும் சிறப்புப் பெற்றுள்ளமை நினைவில் கொள்ளத் தக்கதாகும்.

தேசத் தலைவர்களின் இதழ்கள்

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் சமுதாயச் சீர்திருத்தத்திற்கும் தேசத் தலைவர்கள் இதழ்களையே தேர்ந்தெடுத்தனர்.

இராஜாராம் மோகன்ராய் பிராமனிகல் மேகசின், சம்பாத் கௌமுதி, மீரட்-அல்-அக்பர் முதலிய இதழ்களை ஆங்கிலம், பெர்சியன், உருது ஆகிய மொழிகளில் வெளியிட்டார். இவற்றின் மூலம் இந்து சமயம், விடுதலை, சமுதாயச் சீர்திருத்தம் முதலியவை பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

திலகர் கேசரி, மராட்டா என்ற இரு இதழ்கள் மூலம் விடுதலை வேள்வியை வளர்த்தார். ஹரிஜன், யங் இந்தியா இதழ்கள் மூலம் காந்தியடிகள் தீண்டாமை, ஆதிக்க எதிர்ப்பு ஆகியவற்றை மக்களிடம் நிலைநாட்டினார்.

அல்ஹிலால் என்பது மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் இதழாகும். யுகாந்தர் அரவிந்தர் நடத்திய இதழ். பாரதியார் இந்தியா இதழை நடத்தினார். நேரு நேஷனல் ஹெரால்ட் இதழ் மூலம் சுதந்திர உணர்வைப் பரப்பினார்.

இந்திய விடுதலையும் இதழியல் சுதந்திரமும் ஆதிக்க எண்ணம் கொண்ட ஆங்கில ஏகாதிபத்தியம் இதழ்களைச் சட்டத்தின் மூலம் ஒடுக்க முற்பட்டது. வில்லியம் போல்ட்ஸின் முயற்சியும் ஹிக்கியின் இதழும் தொடக்கத்திலேயே நசுக்கப்பட்டன.

இதழ்கள் பதிவுச் சட்டம், பறிமுதல், வாய்ப்பூட்டுச் சட்டம் முதலியவற்றால் இந்திய இதழ்கள் நசுக்கப்பட்டன. இதழ்களை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். கடுமையான தண்டனைகளும், அபராதங்களும் இதழ்களை ஒடுக்க முற்பட்டன. எனினும் அடக்குமுறையால் விடுதலை வேட்கை கிளர்ந்து எழுந்தது. இந்தியா 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் நாள் விடுதலை பெற்றது. பின்னர் இந்திய அரசு சில சட்டங்கள் மூலம் இதழ்களை வரையறைப்படுத்தியது.

நெருக்கடி நிலை 1975ஆம் ஆண்டில் மத்திய அரசு நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தது. மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன; இதழ்களின் சுதந்திரம் நசுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதழ்களுக்குத் தணிக்கை முறை வந்தது.

தணிக்கைக்கு உட்பட்ட இதழ்கள் வெற்றிடங்களுடன் வெளியாயின. எவ்வாறேனும் உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க இந்திய இதழ்கள் போராடின. 1977 மார்ச் வரை இந்திய இதழ்களுக்கு இந்தச் சோதனை இருந்து வந்தது. பின்னர் வந்த தேர்தலில் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. இம்மாற்றம் இதழ்களின் பணியால் ஏற்பட்ட விளைவாகும். இவ்வாறு இதழ்கள் ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலின என்பது இதழ்களின் வலிமையை நமக்கு உணர்த்துகின்றது எனலாம்.

தொகுப்புரை

நண்பர்களே ! இதுவரை படித்த பாடத்தின் மூலம் இதழியல் சுதந்திரம் பற்றியும் உலக வரலாற்றில் இதழ்கள் சுதந்திரச் செயல்பாட்டில் செய்த சாதனைகளையும் அறிந்தோம்.

விருப்பு வெறுப்பின்றி, செய்திகளை அரசின் கட்டுப்பாட்டில்லாமல் வெளியிடுதல் இதழியல் சுதந்திரம் ஆகும்.

இதழியல் குழு, சுதந்திரத் தகவல் மையம், பல்வேறு அறிஞர்கள் இதழியல் சுதந்திரம் பற்றி உரைக்கும் கருத்துகளையும் அறிந்து கொண்டோம்

இதழியல் சுதந்திரத்தின் தேவையை உணர்ந்து கொண்டோம். இதழியல் சுதந்திரத்திற்கான அகத்தடைகள், புறத்தடைகளையும் தெரிந்து கொண்டோம்.

உலக நாடுகளில் இதழியல் சுதந்திரத்தால் ஏற்பட்ட நன்மைகள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் இதழியல் சுதந்திரத்தால் ஏற்பட்ட விளைவுகள் ஆகியவற்றை அறிந்து கொண்டோம்.