புதினம் - I
பாடம் - 1
முன்பு இலக்கியங்கள் செய்யுள் வடிவில் படைக்கப் பெற்றன. இக்காலத்தில் உரைநடை வடிவில் தரப் பெறுகின்றன. முன்பு நெடும்பாடலாக எழுதப் பெற்றன சிலப்பதிகாரம் முதலியன. தற்போது நெடுங்கதையாகப் படைக்கப் பெறுவன புதினங்கள். இரண்டிலும் கதை, கூறும் முறை, பாத்திரங்கள் ஆகியன கலைப்படைப்பாக அமைக்கப் பெற்றுள்ளன என்பது கருதத்தக்கது.
இவ்வகையில் ஏற்றமுடைய தற்கால இலக்கிய வடிவங்களுள் ஒன்றான புதினத்தை இப்பாடம் அறிமுகம் செய்கின்றது. அதன் அமைப்பை, வரையறையை, பாத்திரப் படைப்பை, உத்திமுறையை, வெளிப்பாட்டுத் திறத்தைப் பொதுவான நிலையில் இப்பாடம் உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறது.
மேல்நாட்டார் வருகைக்குப்பின்னரே படைப்பிலக்கியம் உரைநடை வடிவில் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்களிடையே தமது மதத்தைப்பரப்ப விரும்பிய கிறித்துவ பாதிரியார்கள், தமது கொள்கைகளைப் பரப்ப எளிதாக அமைந்த உரைநடையைக் கையாளத் தொடங்கினர்.
மேல்நாட்டார் வருகையை அடுத்துத் தமிழ்நாட்டு அரசியல், சமூக அமைப்புகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இம்மாற்றத்தால் இலக்கிய வகைகளிலும் மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்தன. அவ்வழியில் புனைகதைகள் உரைநடையின் இலக்கியமாக மலர்ந்தன.
அடுத்து நடக்கப் போவது என்ன என்று தெரிந்து கொள்ளவிரும்பும் ஆர்வம்தான் கதை தோன்றுவதற்கான காரணமாகிறது.
புதினம் என்பது மனித உறவுகள், எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றை விளக்கிக் காட்டும் உரைநடையால் அமைந்த நீண்ட கதை என்று புதிய அகராதி விளக்கம் தருகிறது.
புதுமை என்னும் பொருளிலேயே நாவலைக் குறிக்கத் தமிழ் மொழியில் புதினம் என்றனர். நவீனம் என்றும் கூறுவதுண்டு.
புதினம் பற்றிப் பல அறிஞர்கள் பல விதங்களில் விளக்கியுள்ளனர். உரைநடையில் கதைகூறும்பாங்கில் அமைந்த மனித வாழ்க்கையின் விளக்கமே புதினம். புதினம் என்பது மறுமலர்ச்சி யுகம் பெற்றெடுத்த ஒரு கலைவடிவம். புதினம் என்பது உலகானுபவத்திற்கு உட்பட்டது.
சாமுவேல் ரிச்சட்சன் என்பவர் 1741-ஆம் ஆண்டு ‘பமிலா’ என்ற புதினத்தை எழுதினார். இதுவே உலகின் முதல் புதினமாகக் கருதப்படுகிறது. ஆங்கிலேயரின் வருகையால் இந்திய நாட்டுக்குக் கிடைத்த நன்மைகளுள் ஒன்று, அவர்களால் அறிமுகப்படுத்திய அச்சு இயந்திரத்தின் உதவியால் உரைநடைவளர்ச்சியடைந்தமை. அதன் வெளிப்பாடு புதினம் என்னும் இலக்கிய வடிவம்.
களம் (கதை)
புதினத்தில் பல சிறுகதைகள் இருக்கலாம். இதனால் சிறுகதை பல சேர்ந்தால் புதினமாகும் என எண்ணலாகாது. புதினம் தனக்கென்றே அமைந்த ஒரு பெரிய களம் உடையது. சுருங்கக் கூறினால், புதினம் ஒரு பெரிய கதையையும், கதைமாந்தர் பலரையும் கொண்டது. தனிமனிதன் அல்லது சமுதாய வாழ்க்கையின் பல பகுதிகளையும் சித்திரித்துக் காட்டுவது. இங்ஙனம் சித்திரித்துக் காட்டுவதற்கு உரிய நிகழ்விடமே புதினத்திற்குக்களம் ஆகும். ஓவியத்திற்குத் திரை போலவும், நடனக்கலைக்கு அரங்கு போலவும் புதினத்திற்குக் களமாக அமைவது கதையே ஆகும்.
கரு
புதினம் பொதுவாக ஏதேனும் ‘கரு’ (Theme) ஒன்றைக் கொண்டதாக அமையும். கதைக்கரு இயற்கையாக அமைதல் வேண்டும். புதினத்திற்கு எதுவும் கருவாக அமையலாம். அது நிகழ்ச்சிகளோடும், கதை மாந்தர்களின் உணர்ச்சிகளோடும், கற்பனையோடும், வருணனைத் திறத்தோடும் அமையும் போது அழகிய புதினமாக உருவம் பெறும்.
புதினம் கரு, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, உரையாடல், நனவோடை உத்தி, காட்சி, வருணனை, நடை ஆகியவற்றைக் கொண்டதாக அமையும்.
கருப்பொருள் – விளக்கம்
ஹென்றி ஜேம்ஸ் என்ற எழுத்தாளர் ‘கதைக்கரு எந்த இடத்திலிருந்தும் வரக்கூடும்; எந்த நேரத்திலும் வரக்கூடும். ஊசி குத்துவது போல் ‘சுருக்கென்று தைக்கக் கூடியது அது’ என்கிறார்.
கருப்பொருள் என்பது கலைக்கு இன்றியமையாதது. கலைஞன் உலகைப் பார்க்கின்ற பார்வை எது வெனக்காட்டுவது அதுதான். “எழுத்தாளன் எதையாவது சொல்ல வேண்டும். இல்லையென்றால் நெருப்பின்றியே அதனை அறிவிக்கும் மணியை விளையாட்டாக அடிக்கின்ற குழந்தையாக அவன் ஆகின்றான்” என்கிறார் சீன் ஓ பெலய்ன்.
கருப்பொருள்
மனித வாழ்க்கையில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு பெரிய நிகழ்ச்சி, வரலாற்றுத் தொடர்புடைய சில உண்மைகள், அன்றாடப் பொதுவாழ்க்கையில் நிகழும் சில நிகழ்ச்சிகள், உளவியல் தொடர்புடைய சில சிக்கல்கள் ஆகியன நாவலுக்குரிய கதைப்பொருளாக அமையலாம்.
எடுத்துக்காட்டுகள்
தி. ஜானகிராமனின் புதினங்களில் பொதுவாக இழையோடும் பிரச்சினை ஆண் – பெண் உறவுகள் பற்றியதாகும். அம்மா வந்தாள் கதை முழுவதும் அலங்காரம் என்ற பெண்ணின் பாலுறவுச் சிக்கலை மையமாகக் கொண்டு இயங்குகிறது. சென்னையில் ஓர் அச்சகத்தில் பிழைதிருத்தும் வேலை பார்ப்பவர் தண்டபாணி. இவர் ஓய்வு நேரங்களில் உயர்நீதிமன்ற நீதிபதி, கல்லூரி முதல்வர்கள் போன்ற பெரிய மனிதர்களுக்கெல்லாம் வேதம் சொல்லிக் கொடுப்பார். இவர் மனைவி அலங்காரம் அழகும், கம்பீரமும் நிரம்பியவள். இவள் ஆறு பிள்ளைகளுக்குத் தாய் என்றாலும் சிவசு என்னும் நிலப்பிரபுவோடு முறையற்ற தொடர்பு கொண்டிருக்கிறாள். தன் கடைசிப் பிள்ளை அப்புவை வேதபாடம் படிக்க வைக்கிறாள். அவன் கால்களில் விழுந்து வேத நெருப்பில் ‘எல்லாத்தையும் எரிச்சுடலான்ணு’ அவள் எண்ணுகிறாள். வேதம்படித்துத் திரும்பிய அப்புவும் தன் தாயின் ஒழுக்கக் கேட்டை அறிந்து வெறுப்படைந்து திரும்பிப் போய்விடுகிறான். அலங்காரம் கடைசியில் தனிமையில் நிராதரவாகக் காசிக்குப் போய் விடுகிறாள். இதுதான் கதை.
சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்துப் போராடுவதைக் கருப்பொருளாகக் கொண்டவை ஐசக் அருமைராசனின் கீறல்கள், கு.சின்னப்பபாரதியின் தாகம், பொன்னீலனின் கரிசல் போன்ற புதினங்கள்.
“மனிதருள்ளும், மனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையேயும் தோன்றும் மோதலை அடிநிலையாகக் கொண்டதே நாவல் இலக்கியம்” என்பார் கைலாசபதி. க. நா. சுப்பிரமணியம், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியோர் புதினங்களில் தனிமனிதக் கோட்பாடுகள் வலியுறுத்தப்படுகின்றன.
கற்போர் தாமே எண்ணிப் பார்த்து உணர்ந்து கொள்ளும் வகையில் கதையில் கதைப்பொருளைப் பொதிந்து வைத்தலே சிறந்த உத்தியாகும்.
தமிழில் பிளாட் என்பதைக் கதைப்பின்னல் அல்லது கதைத்திட்டம் என்பார்கள். கதைக்கு வடிவ அழகைத் தருவது அது. கதையில் வரும் நிகழ்ச்சிகள் திடீரென்று வந்து குதிப்பது போல இல்லாமல் இயல்பாக நிகழ வேண்டும். கதைக்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகள் விரிந்து வளர்ச்சி அடைந்து பெருகி ஒரு நிறைவை அடைவது புதினங்களின் போக்கு ஆகும்.
கதைப்பின்னல் வகைகள்
கதைப்பின்னல், நெகிழ்ச்சிக்கதைப் பின்னல் (Loose plot), செறிவுக் கதைப்பின்னல் (Organic plot) என இருவகையாகப் பிரிக்கப்படும்.
நெகிழ்ச்சிக் கதைப்பின்னல் – சான்று
நெகிழ்ச்சிக் கதைப்பின்னல் என்பது கதையில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாகவோ அல்லது பொருத்தமுற அமையாததாகவோ இருக்கும். கதைத் தலைவன் எல்லா நிகழ்ச்சிகளிலும் மையப் பாத்திரமாக இருந்து அக்கதையின் மற்றக் கூறுகளை இணைப்பான். இந்த வகை புதினங்களில் பாத்திரப் படைப்புகளுக்குத் தான் மிக்க சிறப்புத் தரப்படும்.
நெகிழ்ச்சியுடைய கதைப்பின்னலுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக மு.வரதராசனார் எழுதிய கரித்துண்டு என்ற புதினத்தைக் கூறலாம். இக்கதைத் தலைவன் மோகன் கல்கத்தாவைச் சேர்ந்த சிறந்த ஓவியன். அவன் ஓவியத்தில் மயங்கிய நிர்மலா அவனை மணக்கிறாள். ஆடம்பர வாழ்க்கையில் ஆசை கொண்டவள் நிர்மலா. மோகன் ஒரு விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். செய்தி அறிந்த நிர்மலா மருத்துவமனை சென்று கணவனைப் பார்க்காமல் பம்பாய் சென்று விடுகிறாள். கால் இழந்த மோகன் சென்னை வந்து, பொன்னி என்பவளோடு ஒரு சேரியில் வாழ்ந்து கொண்டு, சாலைகளின் ஓரங்களில் இருந்து கொண்டு ஓவியம் தீட்டிப் பிழைப்பு நடத்துகிறான்.
பம்பாய் சென்ற நிர்மலா, கமலக்கண்ணன் என்பவரோடு சென்னை வந்து வாழ்கிறாள். எதிர்பாராத வகையில் ஒருநாள் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்த மோகனைக் காண்கிறாள். மனப்போராட்டத்திற்கு ஆளாகிச் சென்னையை விட்டுப்போய் விடுகிறாள். இதுதான் கதை. ஆனால் கதைத் தலைவன் மோகன் சென்னையில் ஒரு சாலையில் ஓவியம் தீட்டுவதிலிருந்து கதை தொடங்குகிறது. பின் மோகனின் மூலம் முன்பு நடந்த கதை கூறப்படுகிறது. இதில் இடம்பெறுகின்ற நிகழ்ச்சிகள் வரலாற்று முறையில் வரிசையாய் அமையாமல், இடையில் தொடங்கி பின்னோக்கிச் சென்று பிறகு திரும்புகிறது. இதிலும் இடையிடையே விளக்கப்படுகின்ற செய்திகள் கதைப் போக்கின் ஒருமைப்பாட்டுக்கு உகந்ததாக இல்லை.
செறிவுக் கதைப்பின்னல் (Organic plot)
இந்த வகைக் கதைத்திட்டத்தில் நிகழ்ச்சிகள் ஒன்றோடு ஒன்று காரண காரியத்தொடர்பு உடையனவாய் இருக்கும். ஒரு நிகழ்ச்சியின் முடிவு அடுத்த நிகழ்ச்சியின் தொடக்கத்திற்குக் காரணமாக அமையும். இத்திட்டத்தில் அமைந்த புதினங்கள் விறுவிறுப்பாக இருக்கும். இடம்பெறும் நிகழ்ச்சிகள் சில இடங்களில் செயற்கையாகவும், நம்பத் தகாதனவாகவும் அமைவதும் உண்டு. வரலாற்றுப் புதினங்களும், துப்பறியும் புதினங்களும் இக்கதைத் திட்டத்திற்குச் சிறந்த சான்றாகும்.
கதைப்பின்னல் இயற்கையாகத் தோன்றுவது போல் இயங்க வேண்டும். அதன்கண் எதுவும் செயற்கையாகத் தோன்றும்படி இருத்தல் கூடாது. கதைப்பின்னல் உருவாக்கப்பயன்படுத்தும் முறைகள் நம்பத்தக்கனவாகவும், ஏற்றுக் கொள்ளக் கூடியனவாகவும் இருத்தல் வேண்டும்.
சிறந்த கதைப்பின்னல் அமைப்புடைய புதினங்களில் ஈர்ப்பு, எதிர்பார்ப்பு நிலை (Suspense), குறிப்பு முரண் (Irony) முதலியன அமைந்திருக்கும். இவை கதைப்பின்னலை முன்னோக்கி இயக்கும் போது தான் புதினம் அழகு பெறுகிறது.
கதையில் பாத்திரங்கள் பேசும், ஆசிரியரும் பேசுவார். இந்தப் பேச்சுகளில் வெளிப்படையாய் ஒரு பொருள் இருக்கும். உள்ளே, மறைவாய் இன்னும் ஒரு பொருள் அமைந்திருக்கும். இதை, தொனி அல்லது குறிப்புப் பொருள் என்பார்கள். சில வேளைகளில் இந்த வெளிப்படைப் பொருள் ஒன்றாகவும், குறிப்புப் பொருள் அதற்கு நேர்எதிர்மறையான ஒன்றாகவும் அமையும்.
ஒரு பாத்திரத்தின் பேச்சோ, அல்லது ஆசிரியரின் பேச்சோ மேல் நிலையில் ஒரு பொருளையும், ஆழ்நிலையில் எதிர்மறையான பொருளையும் சுட்டவல்லதாக இருக்குமாயின் அதனைக் குறிப்பு முரண் என்பர்.
கிராமங்களில் கதை நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகக் கூறவந்த ஒரு புதின ஆசிரியன் பழைய தல புராண முறையில் மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும் வருணிக்கப் புகுதல் கூடாது.
இருவகை அமைப்பு
சூழ்நிலை அமைப்பை (1) சமுதாயப் பின்னணி (Social setting), (2) காட்சிப் பின்னணி (Material setting) என இருவகைப் படுத்தலாம். சில புதினங்களில் சமுதாயத்தின் ஒரு பகுதி மட்டும் பின்னணியாக விளங்கும். மேல் மட்ட வாழ்க்கை, நடுத்தர மக்கள் வாழ்க்கை, அடித்தள மக்கள் வாழ்க்கை, தொழிலாளர் வாழ்க்கை என இவற்றுள் ஏதேனும் ஒன்று புதினத்தின் பின்னணியாக அமையும். பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் முதலியவை சமுதாயப் பின்னணியின் வகைப்பட்டன ஆகும்.
சில புதின ஆசிரியர்கள் வீதிகள், வீடுகள், உள்ளிடங்கள் முதலியவைகளைப் பற்றி மிக விரிவாகவும், நுட்பமாகவும் வருணிப்பார்கள். வேறு சிலரின் புதினங்களில் இயற்கைக்காட்சி பின்னணியாக அமையும். இவ்வாறு புதினங்களில் இயற்கை பல வகையாகப் பயன்படுத்தப் படுகின்றது. அவை வருமாறு;
(1) மனிதச் செயலோடு தொடர்பு படுத்தாமல் வெறும் அழகுக்காட்சியாக இயற்கையைப் பயன்படுத்தப்படுதல்.
(2) நேரடியாக மனிதச் செயலோடு தொடர்புபடுத்தி இயற்கை பயன்படுத்தப்படுதல். (இதில் இயற்கை மனித உணர்வுக்கு வேறுபட்டோ, இயைந்தோ இருக்கும்.)
கதைத்திட்டத்தை எலும்புக்கூடு என்றால் அக்கூட்டுக்கு உயிரையும், பொருளையும், பொலிவையும் தருவது பாத்திரமேயாகும். ஆகவே புதினங்களின் வெற்றி ஆசிரியர் தேர்ந்து படைக்கும் பாத்திரங்களைப் பொறுத்தே அமைகிறது எனலாம். சிறந்த புதின ஆசிரியர்கள் படைத்த புதினங்களை நாம் படிக்கும் போது, அவற்றின் பாத்திரங்கள் நம் கற்பனையில் உயிருள்ளவை போல் இயங்கும். இவ்வாறு உயிருள்ளவை போலத் தோன்றும் பாத்திரப்படைப்பு உடைய புதினமே சிறப்புடையதாய் மதிக்கப் பெறும்.
(1) தலைமை மாந்தர்கள்
(2) துணைமை மாந்தர்கள்
(3) பிற மாந்தர்கள்
(4) பெயர் சுட்டாக் கதைமாந்தர்கள்
என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
கதைத்தலைவன், கதைத் தலைவி ஆகிய இருவரே தலைமை மாந்தர் என்று கூறலாம். இவர்களுக்குத் துணைபுரியக் கூடியவர்கள் துணைமாந்தர்கள் எனலாம். கதையில் பங்கேற்றுக் கதையோட்டத்திற்குத் தொடர்புடையவர்கள் பிற மாந்தர்கள் என்றும், கதையில் பெயர் சுட்டிக் கூறாத கதை மாந்தர்களைப் பெயர் சுட்டாக் கதைமாந்தர்கள் என்றும் வகைப்படுத்தலாம்.
ஒவ்வொரு நாவலாசிரியரும் சமுதாயத்தைத் தாங்கள் புரிந்து கொண்ட கோணத்தில் நின்று அதற்கேற்பப் பாத்திரங்களைப் படைக்கின்றனர். தமிழ் நாவல்களில் இடம்பெறும் தலைமை மாந்தர்கள் பலர் ஒருநிலைப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். உயர்ந்தபண்பு உடையவரையே கதைத்தலைவராக ஏற்கும் தமிழ் இலக்கிய மரபு, தமிழ்ப் படைப்பாளர்களின் உள்ளங்களில் பதிந்திருப்பதே இதற்குக் காரணம் ஆகும்.
நடைமுறை வாழ்க்கையில் காணும் மனிதர்கள் எல்லோரும் குறையும், நிறையும் உடையவர்கள் என்பது உண்மை. அதுபோலவே புதினப்படைப்பில் இடம்பெறும் பாத்திரங்களும் குறைநிறைகளுடன் படைக்கப் பெறுகின்றன. ஆயினும் நாவலில் இடம்பெறும் பாத்திரங்களில் தொடக்கம் முதல் இறுதிவரை, தன் பண்புகளில் எந்த மாற்றமும் அடையாமல் இருக்கும் பாத்திரம் ‘ஒருநிலைப் பாத்திரம்’ ஆகும்.
ஒருநிலைப் பாத்திரம்
நா. பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சி மலர் என்ற புதினத்தின் தலைவனாகிய அரவிந்தனை ஒரு நிலைப் பாத்திரத்திற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
அச்சுக்கூடத்தில் பிழை திருத்திக் கொண்டிருக்கும் அரவிந்தன் கதைத் தலைவி பூரணி தெருவில் மயங்கி விழுந்ததைக் காண்கிறான். அவன் பூரணியின் தந்தையினுடைய நூல்களைப் பதிப்பிக்கும் உரிமையைக் கேட்கப் பூரணியிடம் செல்லும்போது தன் நாட்குறிப்பை மறந்து அங்கேயே விட்டுவிட்டு வந்து விடுகிறான். அந்த நாட்குறிப்பின் மூலமாக அரவிந்தன் ஒரு சிறந்த கவிஞன் என்பதைப் பூரணி உணர்கிறாள்.
அரவிந்தன்-பூரணி ஆகிய இவர்களிடையே அன்பு வளர்ந்து காதலாக மலர்கிறது. ஆதரவற்ற பூரணியின் குடும்பத்திற்கு அரவிந்தன் பெருந்துணையாக அமைகின்றான். பூரணியின் திறமையை உணர்ந்து அவள்பால் தான் கொண்ட காதலைத் தியாகம் செய்து, அவன் அவள் தொண்டு முழுமையும் நாட்டிற்கே பயன்படுமாறு தேர்தலில் போட்டியிடச் செய்கிறான். பூரணியைத் தேர்தலில் எதிர்த்து நின்ற செல்வனின் பகையால், அரவிந்தன் அச்சகத்தினின்றும் வெளியேற்றப்படுகின்றான்.
அருகில் உள்ள ஊரில் நச்சுக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவிசெய்யும் பணியில் அவன் ஈடுபடுகிறான். முடிவில் அக்காய்ச்சல் அவனையும் பற்றிக் கொள்ள, அதனாலேயே இறக்கிறான். இவ்வாறு இப்புதினத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை சீரிய பண்புள்ளவனாகவே படைக்கப்பட்டுள்ளதால் ஒரு நிலைப் பாத்திரத்திற்கு இப்பாத்திரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.
வளர்நிலை அல்லது முழுநிலைப் பாத்திரம்
தொடக்கத்தில் ஒரு பண்புடைய பாத்திரம், கதைநிகழ்ச்சிகளின் போது மாறுகின்ற பண்பினை உடையதாய் அது வளர்ச்சி எய்துமாயின் அது வளர்நிலைப் பாத்திரம் ஆகும். மு.வரதராசன் அவர்கள் எழுதிய அகல் விளக்கின் கதைத் தலைவனை இத்தகைய பாத்திரத்திற்குச் சிறந்த சான்றாகக் கொள்ளலாம்.
புதினத்தின் தொடக்கத்தில் சந்திரன் மிக நல்லவனாகவும், அழகு மிகுந்தவனாகவும் விளங்குகிறான். உயர்நிலைப் படிப்பை வாலாஜாப் பேட்டை என்ற நகரத்தில் தொடங்குகிறான். பாக்கியம் அம்மையாரின் தொடர்பு சந்திரனின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உயர்நிலைப் படிப்பின் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறினும், ஒரு பாடத்திலும் முதன்மையான எண்கள் பெறாமையால் அவன் உள்ளத்தில் மாற்றம் ஏற்படுகிறது.
கல்லூரிப் படிப்பு சென்னையில் தொடங்குகிறது. படிப்பில் அவன் சிறந்து விளங்கவில்லை. இமாவதி என்ற பெண்ணைக் காதலிக்கிறான். இது ஒரு பக்கக் காதல். அவளுக்குத் திருமணம் என்று கேள்விப்பட்டதும் படிப்பில் ஈடுபாடின்றி விடுதியை விட்டு எங்கோ சென்று விடுகிறான்.
சாந்தலிங்கம் என்ற மாணவன் மூலமாகச் சந்திரனைப் பற்றிய செய்திகள் புதினத்தில் அறிவிக்கப்பெறுகின்றன. நீலகிரி மலையில் தாயம்மா என்ற பெண்ணைச் சந்திரன் திருமணம் செய்து கொள்கின்றான். அவனே சிறிது நாள் கழித்து ஊர்திரும்பி வள்ளி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். சந்திரன்-வள்ளி வாழ்க்கை சுவையாக அமையவில்லை. தோட்டக்காரனுடைய பெண்ணோடு உறவு கொண்டு அவள் கணவனோடு வாழாதபடி சந்திரன் செய்கிறான். அவனுக்குத் தோல் நோய் தொடங்குகிறது.
அவனது கொடுமையைப் பொறுக்க முடியாமல் வள்ளி தற்கொலை செய்து கொள்கிறாள். வீட்டை விட்டு வெளியேறிய சந்திரன் இறுதியில் தொழுநோய் பிடித்து இறக்கும் தறுவாயில் தன் தவறுக்கு வருந்துகிறான். உடல், உள்ளம் ஆகிய இரண்டிலும் உடனுக்கு உடன் மாற்றத்தைச் சந்திரனின் பாத்திரப் படைப்பில் காண முடிகிறது.
இரண்டு வகையில் காலத்தையும், இடத்தையும் கடந்தவர்களாகப் பாத்திரத்தைப் படைக்க இந்த உத்தி பயன்படுகிறது. உடலின் உள்ளுறுப்புகளை எக்ஸ்ரே படம் புலப்படுத்துவது போல, மனத்தின் உள்நிலையை நனவோடைப் புதினங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ஜேம்ஸ் ஜாய்ஸ் என்பவர் (James Joyce) எழுதிய யூலிசெஸ் (Ulysses) என்ற ஆங்கிலப் புதினம் மிகச் சிறந்த நனவோடைப் புதினமாகப் போற்றப் பெறுகிறது.
தமிழ் நாவல்களில் சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சம், லா. ச. ராவின் புத்ர, அபிதா, நீல. பத்மநாபனின் உறவுகள் போன்ற படைப்புகள் நனவோடை உத்தியில் அமைந்தவை.
க.நா.சுப்பிரமணியத்தின் அசுரகணம் விசித்திரப் பாங்கு நிறைந்த ஒருமனிதனின் மனப்பிரமையை அழகுறச் சொல்கிறது. ஹேமா என்ற பெண்ணின் தாயைக் காணும்போது, அவள் நிழலிலே சூர்ப்பனகை ஒளிந்திருப்பதாக நினைப்பதும், அவளைத் தானே தன் கையால் கொலை செய்து விட்டதாக அஞ்சுவதும் வேடிக்கையாக இருக்கிறது. சம்பவங்களோ, அவற்றின் நிழல்களோ கூடத் தெரியாமல் கதாநாயகனின் உள்ள நிழல்களை மட்டுமே வார்த்தைகளில் சொல்ல முயன்றுள்ளார் ஆசிரியர்.
ஜெயகாந்தனின் ரிஷி மூலம் என்ற குறுநாவல் ராஜாராமனுக்கு அவன் தாய் சாரதா மீது ஏற்பட்ட பால்கவர்ச்சியைப் பேசுகிறது. மனநோயாளியான ராஜாராமனின் அடிமனச் சலனங்களை ஜெயகாந்தன் திறம்படக் காட்டுகிறார்.
கதைமாந்தரின் உள்ளப்பாங்கு, நடைமுறை, அவர்கள் வாழும் இடம், செயற்படும் சூழ்நிலை, நிகழ்ச்சியின் போக்கு முதலியவற்றிற்கு ஏற்ற வண்ணம் உரையாடல் அமைய வேண்டும்.
உரையாடல்களின் மூலம் பாத்திரங்களைக் காட்டுவதில் ஜெயகாந்தன் பெரிய வெற்றி பெற்றுள்ளார் எனலாம். சான்றாக அவரது சினிமாவுக்குப் போன சித்தாளு என்னும் புதினத்தில் ஒருவர் பேசுவதைக் காண்போம்:
‘ராத்திரி ஒன்பது மணி எப்படா வரும்னு நெனைச்சிகினு வௌக்கு வெக்கிற நேரம் வரைக்கும் காத்துகினு இருந்த கம்சலை கொஞ்சம் பொயுது இருட்டினப்ப குளிக்கிறதுக்குப் போனா. பழுப்பாண்ட தான் பொம்பளைங்க எல்லாம் ராத்திரியிலே பொயுது இருட்டினத்துக்கப்புறம் வந்து குளிப்பாங்க.’
பாத்திரங்களின் தரத்திற்கேற்ப உரையாடலை அமைப்பதில், அதிலும் குப்பத்துப் பேச்சு, ரிக்ஷாக்காரன் பேச்சு, அக்கிரகாரத்துப் பேச்சு இவற்றைப் படைப்பதில் கைதேர்ந்தவர் ஜெயகாந்தன்.
இராஜம் கிருஷ்ணன், வட்டார மொழியைப் பாத்திரங்களின் மூலம் வெளிப்படுத்துவார். இதனால், அவரது புதினங்கள் ஓர் உண்மைத்தன்மையும்(எதார்த்தம்), ஆழமும் பெற்று விளங்குகின்றன. இராஜம் கிருஷ்ணன், குறிஞ்சித் தேனில் நீலகிரியின் பழங்குடி மக்களான படகர்களின் வாழ்க்கை முறைகளை நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். சுற்றுச்சூழ்நிலைகளை இயற்கையாக அவர் வர்ணிக்கும் திறன் சிறப்புடையதாக இருக்கிறது.
சின்னப்ப பாரதி, செல்வராஜ், பொன்னீலன், சு.சமுத்திரம் போன்றவர்களின் நாவல் பாத்திரங்கள் பேச்சு நடையில் எல்லை கடந்து போகாமல் இயல்பாகப் பேசுகின்றன. இன்றைய புதிய நாவலாசிரியர்கள் ஆங்கிலச் சொற்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
‘நடை’ என்பதற்குத் தமிழ்ப் பேரகராதி இருபத்திரண்டு பொருள்களைத் தருகிறது. மேலை நாட்டார் நடைபற்றிப் பல்வேறு கருத்துகளைத் தந்துள்ளனர். நடை என்பது ஒரு கருத்தின் உடை என்பார் போப். ஆனால் கார்னலஸ் என்பார் ‘அது எழுத்தாளரின் தோல்’ என்கிறார்.
தமிழ் நாவலாசிரியர்கள் சிலரின் நடைக்குச் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம். இராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரத்தில் வருகிற பகுதி இது:
“கடலோசை விடபுருஷர்களின் விளையாட்டரவமல்ல; வாலிப ஸ்திரீகளின் வம்புக் கூப்பாடல்ல; இனிய வீணையாதிகளின் கானம் அல்ல; வெற்றித் தம்பட்டத்தின் ஓசையுமல்ல; அந்தக் குரலில் களியாட்டத் தொனி கிடையாது. சோகம் உண்டு.
கற்பனை இன்பமும், ஓசை நயமும் உடைய கவித்துவ நடையாய் இப்பகுதி அமைந்திருக்கிறது.
நாவலில் புதிய நடையை உருவாக்கியவர் கல்கி. கேலி, கிண்டல், நகைச்சுவை, கற்பனை முதலிய அனைத்தும் கலந்த எளிய, இனிய நடையே கல்கியின் நடை. தமிழ் நாவல் உலகில் தனித்த முத்திரையோடு இனம் காணக்கூடிய மற்றொரு நடை மு.வ. வின் நடை. சின்னஞ்சிறு வாக்கியங்கள்; உள்ளத்தில் இருக்கும் சிந்தனைத் தெளிவை அப்படியே பிரதிபலிக்கும் தொடரமைப்புகள் உடையது. இவையே மு.வ. நடையின் தனிச்சிறப்பாகும்.
உயிர்த்துடிப்பான நடையைக் கையாண்டு பெரும் பரபரப்பையும், பாதிப்பையும் உண்டாக்கியவர் அறிஞர் அண்ணா. அவரின் எழுத்தில் மோனையும் எதுகையும் போட்டி போட்டுக்கொண்டு வந்து நிற்கும்; தென்றலின் இனிமையும், புயலின் வேகமும், எரிமலையின் குமுறலும் மாறிமாறி வந்து மறையும்; உணர்ச்சி நாதத்தை மீட்டுகிற இனிய நடை அண்ணாவின் நடை. அடுக்கடுக்கான சொல்லலங்காரங்கள் படிப்போரை மயக்கித் தன்வசப்படுத்தும். அண்ணாவின் ரங்கோன் ராதாவில் இருந்து ஒரு சிறு பகுதி பின்வருமாறு: ‘ராதா என்ற பெயரே ரசமாகத் தோன்றிற்று! ரங்கோன், ரசமான இடமாமே! பாவம்! அவள் யாரோ! குண்டுகளுக்குப் பயந்து, இங்கு வருகிற அவள் மீது பாணம் பூட்ட நான் கிளம்புவதா? ச்சீ! கெட்ட நினைப்பு நமக்கு ஏன்? என்றும் எண்ணினேன்’.
ஆர். சண்முக சுந்தரத்தின் நடை எளிய, இனிய, உணர்ச்சிகரமான தமிழ்நடை என்று சொல்லலாம். இவரது நடையில் கொங்கு மண்ணின் மணம் கமழுவதையும் காணமுடிகின்றது. நாகம்மாள் புதினத்திலிருந்து அவரது தமிழ் நடைக்கு ஒரு எடுத்துக்காட்டு: ‘அடைமழைக் காலம் வந்து சேர்ந்தது. புரட்டாசி கழிந்து ஐப்பசி ஆரம்பம். வான வீதியில் எந்நேரமும் சாயை படிந்து கருமுகில்கள் கவிழ்ந்த வண்ணம் இருந்தன.’
நீல. பத்மநாபனின் தலைமுறைகள் ஒரு தனிச் சிறப்புடைய நாவல். நாஞ்சில்நாட்டு இரணியல் என்ற ஊரில் கீழைத்தெரு வாசிகளான செட்டிமார்களின் கதை இது. அவர்களின் பேச்சுமொழி, இவரது புதினத்திற்குச் சிறப்புத் தருகிறது.
நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் நாஞ்சில் நாட்டு வேளாளர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற புதினம். இதில் அந்த மக்கள் மொழி ஆசிரியரின் நடைக்கு அழகு சேர்க்கிறது.
குறிப்பிட்ட வட்டாரத்திற்கே உரிய பிரச்சனைகளைக் கலைத் தன்மையுடன் காட்டும் இவ்வகை நாவல்களுடன், நிகழ்கால வாழ்க்கைச்சிக்கல்களை அறிவுபூர்வமாக ஆராயும் நாவல்கள் பலவும் தமிழில் தோன்றி வளர்ந்து வருகின்றன.
கி. ராஜநாராயணனின் கோபல்லபுரம், சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, சூரிய காந்தனின் மானவாரி மக்கள் முதலியன நடையால் சிறப்புப் பெற்றப் புதினங்கள். ஜெயமோகனின் ரப்பர் என்ற புதினம், “குறியீட்டு நோக்கில்” வாழையை விட்டு வணிக நோக்கோடு ரப்பர் பயிரிடுவதையும் அதன் விளைவையும் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. குமரி மாவட்டம் தேங்காய்ப் பட்டணம் என்னும் கடற்கரைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தோப்பில் முகமது மீரான். ஒரு கடலோரக் கிராமத்தின் கதை, துறைமுகம், சாய்வு நாற்காலி போன்ற புதினங்கள் இவருக்குப் பரிசுகளைப் பெற்றுத் தந்துள்ளன. இவர் தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிச்சொற்களையும் கலந்து எழுதுகிறார்.
நடை என்பது இலக்கியத்தின் ஓர் இன்றியமையாத கூறாகக் கருதப்பட்டு வருவதை அறியலாம். நல்ல நடை என்பது படிப்பவரைக் கடைசி வரை சலிப்பூட்டாமல் தன்னோடு இழுத்துச் செல்ல வேண்டும்.
புதினத்தின் தோற்றம் குறித்தும், புதின இலக்கிய முன்னோடிகள் குறித்தும் அறிந்து கொள்ள முடிந்தது.
புதினத்தின் அமைப்புக் குறித்தும், கதைக்கரு, கதைப்பின்னல், இழுப்புவிசை, எதிர்பார்ப்பு நிலை, குறிப்புமுரண், பாத்திரப் படைப்பு, நனவோடைமுறை, உரையாடல், சூழல் அமைப்பு, நடை ஆகிய கூறுகள் புதினத்தில் பெறும் இடம் குறித்தும் இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்டீர்கள்.
பாடம் - 2
இப்பாடத்தில் தமிழ்ப் புதினத்தின் தோற்றம் குறித்தும், அதன் வளர்ச்சி நிலைகள் குறித்தும் விரிவாகக் காணலாம்.
ஆரணி குப்புசாமி முதலியார்
இவர், 1935 வரையில் 43 நாவல்கள் எழுதியுள்ளார். மேல்நாட்டுப் பொழுதுபோக்கு நாவலாசிரியர்களான ரெயினால்ட்ஸ், கானன்டாயில், லின்ச் போன்றோரின் நாவல்களைத் தழுவித் தமிழில் துப்பறியும் நாவல்கள் பலவற்றை எழுதிய பெருமை இவருக்குண்டு.
இரத்தினபுரி இரகசியம் நாவலின் இறுதி வரையிலும், வியப்பும் திகைப்பும் நிறைந்த மர்மங்களும், சிக்கல்களும், எதிர்பாராத திருப்பங்களும் பொழுதுபோக்கு அம்சங்களாக நிறைந்துள்ளன. இந்நாவலில் கிருஷ்ணாசிங் துப்பறியும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளான்.
கடற் கொள்ளைக்காரன், கற்பகச் சோலையில் அற்புதக் கொலை, மஞ்சளறையின் மர்மம் போன்றவை இவர் எழுதிய புதினங்கள்.
வடுவூர். கே. துரைசாமி ஐயங்கார்
இவரது மருங்காபுரி மாயக் கொலை நாவல் மிகவும் பிரபலமான ஒன்று. மருங்காபுரி ஜமீன்தார்கள் ஒருவர் பின் ஒருவராக இறக்கின்றனர். இதற்கான காரணத்தை அறிய இயலவில்லை. உண்மையை அறியச் சென்னையிலிருந்து திவான்பகதூர் அமரசிம்ஹர் என்ற துப்பறியும் நிபுணர் வருகிறார். அவர் துப்புத் துலக்கும் நிகழ்ச்சிகளே கதை முழுவதும் இடம் பெற்றுள்ளன. இவரின் கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் என்ற நாவலில் வழக்கறிஞர் ஒருவரும், நீதிபதி ஒருவரும் சேர்ந்து செய்யும் தில்லுமுல்லுகளும், திகம்பர சாமியார் என்பவர் அவைகளை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நிறைந்துள்ளன.
ஜே.ஆர். ரங்கராஜு
இவர் படைத்த புதினங்கள் இராஜாம்பாள், சந்திரகாந்தா, மோஹன சுந்தரம், ஆனந்த கிருஷ்ணன், இராஜேந்திரன் முதலியன. சந்திரகாந்தா என்ற இவரது நாவல் சவுக்கடி சந்திரகாந்தா என்ற பெயரில் நாடகமாகவும், திரைப்படமாகவும் பின்னர் வந்து மிகவும் பிரபலமடைந்தது.
வை.மு. கோதைநாயகி அம்மாள்
இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். இவர் தனது ஜெகன் மோகினி பத்திரிகையின் மூலம் மாதமொரு நாவலை எழுதினார். கலா நிலையம், சுதந்திரப் பறவை, பெண் தர்மம், மதுரகீதம், பதஞ்சலி போன்ற நாவல்களில் பிராமணக் குடும்பங்களிலுள்ள பல்வேறு வகையான சிக்கல்களை விளக்கியுள்ளார்.
(1) வரலாற்று நாவலாசிரியர்கள்
(2) விடுதலைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் நாவலாசிரியர்கள்
(3) சமுதாயச் சீர்த்திருத்த நாவலாசிரியர்கள்
(4) குடும்பச் சிக்கல்களைச் சித்திரிக்கும் நாவலாசிரியர்கள்
(5) வட்டார நாவலாசிரியர்கள்
என்ற தலைப்பின் கீழ்த் தமிழ் நாவலின் மூன்றாம் கட்ட வளர்ச்சி குறித்துக் காணலாம்.
மகேந்திர பல்லவன் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது பார்த்திபன் கனவு. அடுத்த வரலாற்று நாவல் சிவகாமியின் சபதம். மாமல்லபுரம் செல்கிறவர்கள் சிவகாமியின் சபதம் படித்தவர்களாக இருந்தால் தவறாமல் ஆயனச் சிற்பியையும், அவன் மகள் சிவகாமியையும் நினைப்பார்கள். சிவகாமியின் சபதத்தில் அவ்வளவு சிக்கல்கள் இல்லை. ஆயினும் சிற்பியின் மகளான சிவகாமி என்ற ஆடற் கலையரசியின் – வளர்ச்சியும், வாழ்வுப் போராட்டமும்; இன்னலும், குறிக்கோளும் நாவலின் தரத்தை உயர்த்துவனவாக உள்ளன. நாட்டியக் கலையில் நிகரற்று விளங்கிய அவளுடைய கலைத்திறமை, அரசியல் போராட்டங்களில் சிக்கி அல்லல்படும்போது கதையைப் படிப்பவர்களின் நெஞ்சம் துன்புற்றுத் துடிக்கிறது.
இராசராச சோழனின் வரலாற்றைக் கொண்டு அமைந்த இவரின் பொன்னியின் செல்வன் கதையோட்டம் விறுவிறுப்பானது. கற்பனைச் சுவையிலும் இது இணையற்றதாக உள்ளது; பக்க அளவிலும் மிகப்பெரியது.
அகிலனின் சோழர் காலச் சூழ்நிலையை விளக்கும் வேங்கையின் மைந்தன்-சாகித்திய அகாதமியின் பரிசு பெற்ற நாவலாகும். கயல்விழி, பாண்டியரின் ஆட்சியை விளக்குவது. வெற்றித் திருநகர் விஜயநகர ஆட்சியைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்று நாவல்.
ஜெகசிற்பியன் – இவர் படிக்கப் படிக்கச் சுவையும், திடீர்த் திருப்பமும் கொண்ட திருச்சிற்றம்பலம் என்னும் நாவலைப் படைத்துள்ளார். இவர் நாயகி நற்சோனை, ஆலவாய் அழகன், மகரயாழ் மங்கை, பத்தினிக் கோட்டம் முதலிய நாவல்களையும் படைத்துள்ளார்.
சாண்டில்யனின் மலைவாசல் ராஜமுத்திரை, யவனராணி, கடல்புறா ஆகிய புதினங்கள் குறிப்பிடத்தக்கவை. ராபர்ட் கிளைவ் பற்றிக் கூறும் வரலாற்று நாவலான ராஜபேரிகை வங்க மாநிலத்தின் பரிசை வென்ற பெருமைக்குரியது.
அரு. இராமநாதனின் – வீரபாண்டியன் மனைவி, அசோகன்காதலி; நா.பார்த்தசாரதியின் – பாண்டிமா தேவி, மணிபல்லவம்; விக்கிரமனின் – நந்திபுரத்து நாயகி, காஞ்சி சுந்தரி; பூவண்ணனின் – கொல்லிமலைச் செல்வி; கலைஞர் கருணாநிதியின் – ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம்; மு. மேத்தாவின் – சோழநிலா; கி. ராஜேந்திரனின் – ரவி குலதிலகன்; ஸ்ரீ வேணுகோபாலனின் – சுவர்ணமுகி ஆகியவை சில சிறப்பு வாய்ந்த வரலாற்று நாவல்களாகும்.
வேங்கடரமணி என்பவர் தென்னாட்டுத் தாகூர் என்று போற்றப்பட்டவர். இவரது தேசபக்தன் கந்தன் என்ற நாவல் இந்தியாவின் விடுதலை, கிராமங்களின் மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு ஆகியவற்றை வலியுறுத்துவதால் இதனை முதல் காந்திய நாவல் என்றும் கூறுவர். நாட்டின் விடுதலைக்குப் போராடி மடியும் கந்தனின் வீரச்செயல் இந்நாவலைப் படிப்போரை நெகிழச் செய்கிறது.
அகிலனின் பெண் என்ற நாவலும் தேசிய வீறு கமழும் நல்ல நாவலாகும். இக்கதையில் வரும் சந்தானம் தேசிய வீரனாக மாறி, நாட்டு விடுதலைக்காக உழைக்கிறான். கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள மக்களைத் தட்டியெழுப்பியதால் சிறைத் தண்டனை அடைகிறான். சந்தானத்தின் மனைவி வத்சலா மனத்திலும் சிந்தனைப் புரட்சி உண்டாகிறது. கிராம மக்களது இரங்கத்தக்க நிலை, அவளது மூடிக்கிடந்த விழிகளைத் திறந்து விடுகிறது.
கல்கியின் அலை ஓசையில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. 1930-க்கும் 1947-க்கும் இடைப்பட்ட அரசியல் நிகழ்ச்சிகளை இந்நாவலில் ஆசிரியர் சுவை குறையாமல் விளக்கிக் காட்டியுள்ளார்.
கல்லுக்குள் ஈரத்தில் திரிவேணி, தீக்ஷிதர் முதலிய கதைமாந்தர்களை வரலாற்றுத் தலைவர்களுடன் இணைத்துக் கதை நிகழ்ச்சிகளில் மெய்ம்மைத் தன்மையை நல்ல பெருமாள் திறம்பட உருவாக்கியுள்ளார்.
கோவாவின் விடுதலைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் ராஜம் கிருஷ்ணனின் வளைக்கரம் சிறப்பானது. கோவா மக்களின் உள்ளத்தில் ஊற்றெனச் சுரந்து, பீறிட்டுப் பொங்கிய விடுதலை உணர்ச்சியையும், அதற்காக அவர்கள் செய்ய நேர்ந்த மகத்தான தியாகங்களையும் இந்நாவலில் அழகுற அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலே குறிப்பிட்டவை தவிர, வேறு பல நாவல்களிலும் விடுதலைப் போராட்டச் சாயல் படிந்திருப்பதைப் படிப்போர் உணரலாம்.
பெண்ணுரிமைக்காக வாதாடிப் போராடியவர் வ.ரா.(வ.ராமசாமி) இந்நோக்கத்திற்காக எழுதப்பெற்ற புதினங்கள் சுந்தரி, கோதைத்தீவு போன்றவை.
பி.எஸ். ராமையாவின் பிரேமஹாரம் நாவலில் கல்யாணி வரதட்சணைச் சிக்கலால் புகுந்த வீட்டாரால் நிராகரிக்கப்படுகிறாள். அவள் தங்கச் சங்கிலிக்காகத் தன்னை நிராகரித்த கணவனுடன் போக மறுத்துவிடுகிறாள். கல்யாணியின் தந்தை தன் மகளின் வாழ்வு மலர வேண்டுமே என்பதற்காக எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதையும் இவர் இந்நாவலில் சித்திரித்துள்ளார்.
கலப்பு மணம்
இன்றைய சமுதாயத்தில் கலப்பு மணம் செய்து கொள்வோருக்கு எத்தனையோ சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சிலவற்றைக் கொண்டு இக்காலக்கட்டத்தில் சில நாவல்கள் எழுதப் பெற்றன. ஆர். வி. யின் அணையாவிளக்கு கலப்பு மணச் சிக்கலை எடுத்துப் பேசுகிறது. இலட்சியமும் நடைமுறை வாழ்க்கையும் முரண்பட்டு மோதிக் கொள்ளும் காட்சியைத் தஞ்சை மாவட்டப் பின்னணியில், கிராம வாழ்வின் உயிர்களை ததும்ப இந்நாவலில் எழுதிச் செல்கிறார் ஆர். வி.
திசை மாறிய பெண்கள்
வாழ்க்கையில் சந்தர்ப்பச் சூழ்நிலையால் தவறிப் போய்விட்ட பெண்களின் வாழ்க்கை பல நாவல்களில் காட்டப்படுகின்றது. மு.வ. நாவல்களில் இவ்வாறு வழுக்கி விழுந்த பெண்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தவறு செய்வதற்கான பல்வேறு காரணங்களையும் மு.வ. வெளிப்படுத்தியுள்ளார்.
விந்தனின் பாலும் பாவையும், டி.கே. சீனிவாசனின் ஆடும் மாடும் ஆகிய இரு நாவல்களும் இதே சிக்கலைத் தான் ஆராய்கின்றன.
ஏழைகள், தொழிலாளர்கள், உழைப்பாளிகளின் சிக்கல்கள்
நாடு விடுதலை பெற்ற பின் உழைக்காமலேயே சுகபோகங்களை அனுபவித்து விட வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்களை ஏமாற்றி வாழும் போக்கும் மக்களிடையே உருவாகி விட்டது. டாக்டர். மு.வ.வின் கயமையில் கயவர்களின் செல்வாக்கும், போலி அரசியல் வாதிகளின் முன்னேற்றமும் விளக்கப்படுகின்றன.
பேராசையும், வாய்ப்பும் கொண்டவர்கள் சமுதாயத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை வசதிகளையும், உரிமைகளையும் பறித்துக் கொள்ளும் கொடுமையைப் பொன்மலரில் அகிலன் சித்திரிக்கிறார்.
அரசாங்கத்தின் ஜவுளிக் கொள்கையால் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள், அல்லலுக்கு ஆளாகி, அழுது மடிந்ததைப் பஞ்சும் பசியும் நாவல் காட்டுகிறது. தறித் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சனையை அதன் அடி ஆழம் வரை சென்று, கண்டுணர்ந்து இந்நாவலில் வெளிப்படுத்துகிறார் ரகுநாதன்.
செல்வராஜ் எழுதிய மலரும் சருகும் விவசாயிகளின் போராட்டத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஐந்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சிப் படிகளைச் சித்திரிக்கும் நோக்கில் எழுதப்பட்ட நாவல் ராஜம் கிருஷ்ணனின் அமுதமாகி வருக நாவல் ஆகும்.
சங்கரராமின் மண்ணாசை, லா.ச.ரா.வின் அபிதா, கி.ராஜநாராயணனின் கோபல்லபுரம், சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, மணியனின் ஆசை வெட்க மறியும், இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், சூரியகாந்தனின் மானாவாரி மனிதர்கள் முதலியன சிறந்த சமுதாயப் புதினங்கள்.
ஆண்-பெண் உறவு
ஆண் – பெண் உறவை, அதன் சிக்கலைக் கலைநோக்கோடு விமர்சிக்கும் தரமான நாவல்கள் பல தோன்றியுள்ளன. டாக்டர். மு.வ. வின் அல்லி, கரித்துண்டு, தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள், மோகமுள், அகிலனின் சித்திரப்பாவை முதலியவற்றை இவ்வகையில் குறிப்பிடலாம்.
மேலும், கிருத்திகாவின் புதிய கோணங்கி, ஜெயகாந்தனின் ரிஷிமூலம், சிலநேரங்களில் சில மனிதர்கள், இந்திரா பார்த்தசாரதியின் மனக்குகை, வேஷங்கள், திரைக்கு அப்பால் ஆகிய நாவல்களில் இழையோடும் பிரச்சினை ஆண் பெண் உறவுகள் பற்றியதாகும்.
காதல் பற்றிப் பேசுவன
காதல், தாய்மை என்னும் இரு உணர்வுகளும் உலகிலேயே மிக உயர்ந்த உணர்வுகளாகப் போற்றப்படுகின்றன. பல நாவல்கள் காதலைப் பற்றியே பேசுகின்றன. அகிலன், நா. பார்த்தசாரதி, மு.வ., சு.சமுத்திரம், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி ஆகியோர் காதலின் மாண்பினை நயம்பட எழுதிக் காட்டியுள்ளனர்.
நா. பார்த்தசாரதியின் பொன்விலங்கு என்ற நாவலும் நிறைவேறாத காதலைச் சித்திரிப்பதே. நா.பா.வின் பெரும்பாலான நாவல்களில் நிறைவேறாக் காதல் சித்திரிக்கப் படுகின்றது.
சு. சமுத்திரத்தின் ஊருக்குள் ஒரு புரட்சி, வேரில் பழுத்த பலா போன்றவை நல்ல நடையும் புரட்சி நோக்கமும் உடையவை. வாசவனின் வாழ்வின் ராகங்கள், அந்திநேரத்து விடியல்கள் போன்ற நாவல்களும் காதலைச் சித்திரிக்கின்றன.
காதல் உணர்வு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பதையும், காதலுக்காக ஒருவர், மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பதையும், காதலில் ஆண் – பெண் இருபாலருள் ஒருவர் தோல்வி அடைந்தவர்களாகக் காட்டுவதையும் கருப்பொருள்களாகக் கொண்ட நாவல்கள் பல தமிழில் உள்ளன. அவை விரித்தால் பெருகும் இயல்பின.
பெண் எழுத்தாளர்கள்
குடும்ப நாவல்களைப் படைப்பதில் முன்னிற்பவர்கள் பெண் நாவலாசிரியர்களே. சமுதாய நலனுக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் உரம் ஊட்டக் கூடிய கருத்துகளையே இவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
லட்சுமி என்ற திரிபுரசுந்தரி – காஞ்சனையின் கனவு, மிதிலாவிலாஸ், அடுத்தவீடு போன்ற புதினங்களை எழுதியுள்ளார். அநுத்தமா குடும்பப்பிரச்சனையை ஒட்டி, கேட்டவரம், தவம், மணல்வீடு போன்ற நாவல்களை எழுதியுள்ளார். ஆர். சூடாமணி மனோதத்துவக் கதைகளை உருவாக்குவதில் வல்லவர். இவருடைய மனதுக்கு இனியவள், சோதனையின் முடிவு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்துமதியின் அலைகள், நிழல்கள் சுடுவதில்லை போன்றவை எண்ணத் தகுந்தவை. கிருத்திகா, ஹெப்சிபா ஜேசுதாசன், ஜோதிர்லதா கிரிஜா, வாஸந்தி, குயிலி ராஜேஸ்வரி, குமுதினி, கோமகள், அனுராதா ரமணன் போன்ற நாவல் ஆசிரியர்களும் குறிப்பிடத்தக்கோர் ஆவர்.
தமிழில் இப்போக்கைத்தோற்றுவித்த முன்னோடிகளாக கே.எஸ்.வேங்கடரமணி, ஆர்.சண்முகசுந்தரம், சங்கரராம் முதலியோரைக் குறிப்பிடலாம்.
மண்ணாசை (சங்கரராம்) திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீரமங்கலம் என்ற ஊரையும், நாகம்மாள் (சண்முகசுந்தரம்) கொங்கு நாட்டையும் பின்புலமாகக் கொண்டவை.
பின்வரும் நாவல்கள் வட்டார நாவல்களில் குறிப்பிடத்தக்கன. ஆர்.சண்முகசுந்தரத்தின் அறுவடை, சட்டிசுட்டது, சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், ராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித்தேன், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, நீல. பத்மநாபனின் தலைமுறைகள், பொன்னீலனின் கரிசல், கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், தோப்பில் முகம்மது மீரானின் ஒரு கடலோரக் கிராமத்தின் கதை.
வாடிவாசல்-மதுரை மாவட்டத்து மறவர்கள் வாழ்வின் சிறுபகுதியையும், குறிஞ்சித்தேன்- நீலகிரி படகர்களின் முழு வாழ்வையும், தலைமுறைகள் நாஞ்சில் நாட்டு இரணியல் செட்டிமார்களின் வாழ்வையும் காட்டுகின்றன. புத்தம் வீடு – ஒரு கிறித்துவக் குடும்பத்தின் வாழ்வை, பனையேறிகளின் வாழ்வை எடுத்துக் காட்டுகிறது.
கோபல்ல கிராமம் – கோவில்பட்டி கரிசல் பகுதியைச் சார்ந்த கம்மவார் நாயக்கர்களின் வாழ்வை எடுத்துக் காட்டுகிறது. தி.ஜானகிராமனின் நாவல்களில் தஞ்சை மாவட்டத்து மண்ணின் மணமும், பேச்சு வழக்குகளும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
தமிழ் மொழியின் புதின வரலாறு மூன்று காலக் கட்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. தொடக்கக் காலப் புதின ஆசிரியர்கள், துப்பறியும் புதின ஆசிரியர்கள், சமுதாயப் புதின ஆசிரியர்கள் (வரலாற்று நாவலாசிரியர்கள், விடுதலைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் நாவலாசிரியர்கள், சமுதாயச் சீர்த்திருத்த நாவலாசிரியர்கள், குடும்பச் சிக்கல்களைச் சித்திரிக்கும் நாவலாசிரியர்கள், வட்டார நாவலாசிரியர்கள்) குறித்து இப்பாடம் அறிவித்துள்ளது.
பாடம் - 3
ஆரணி குப்புசாமி முதலியார் நாவல்களில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்ற நாவல் இரத்தினபுரி இரகசியம் என்பதாகும். நாவலின் இறுதி வரையிலும், வியப்பும், திகைப்பும், மர்மங்களும், சிக்கல்களும், எதிர்பாராத திருப்பங்களும் இந்நாவலில் பொழுது போக்கு அம்சங்களாக நிறைந்துள்ளன. இதில் கிருஷ்ணாசிங் என்பவர் துப்பறியும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளார். வடுவூராரின் நாவல்களில் மருங்காபுரி மாயக் கொலை மிகவும் பிரபலமான ஒன்று. மருங்காபுரிக்கு வரும் ஜமீன்தார்கள் ஒருவர் பின் ஒருவராக இறக்கின்றனர்; காரணம் அறிய இயலவில்லை. காரணத்தை அறிய அமரஸிங்ஹர் என்ற துப்பறியும் நிபுணர் வருகிறார். அவர் துப்புத்துலக்கும் நிகழ்ச்சிகளே நாவல் முழுவதும் இடம் பெற்றுள்ளன.
ஜே. ஆர். ரங்கராஜுவின் சந்திரகாந்தா என்ற நாவல் சவுக்கடி சந்திரகாந்தா என்ற பெயரில் நாடகமாகவும், திரைப்படமாகவும் வந்து மிகவும் பிரபலமடைந்தது. இவரது எல்லா நாவல்களிலும் துப்பறியும் பாத்திரமாகக் கோவிந்தன் பாத்திரம் இடம் பெற்றுள்ளது. நாவல் கதைப் போக்கில் சம்பவங்களை மர்மங்களாக்கி, அவ்வப்போது எதிர்பாராத திருப்பங்களை அமைத்து, துப்பறியும் நிபுணனுக்கு மாறுவேடங்கள் பல கொடுத்து, அந்த மாறுவேடங்களை வாசகர்கள் தெரிந்து கொள்ளாத வகையில் மறைத்துக் கதையை நடத்திச் செல்கின்றார் ஜே.ஆர்.ரங்கராஜு.
முதல் நூல்
பண்டித நடேச சாஸ்திரியார் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் நிகழும் குற்றங்களைக் கண்டு பிடித்தற்குக் காவல் துறையினருக்கு உதவி செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டார். மேனாட்டுத் துப்பறியும் கலைநுட்பத்தையும் பயன்படுத்தித் ‘தானவன் என்னும் போலீஸ் நிபுணன் கண்டுபிடித்த அற்புதக் குற்றங்கள்’ என்ற தலைப்புடன் துப்பறியும் நூலை வெளியிட்டார். இது தமிழ்ப் புனைகதை உலகில் குறிப்பிடத் தக்க ஒரு வகைமையைத் தோற்றுவிக்க வழி வகுத்தது. இதுவே தமிழ் நாவல் உலகில் தோன்றிய முதல் துப்பறியும் நாவல் எனக் கொள்ளத்தக்கது.
தமிழ்நாட்டின் ஜேம்ஸ் ஹட்லி சேஸ் என்று பாராட்டப் படுகின்ற சுஜாதா – மக்களின் மனங்கவர்ந்த துப்பறியும் எழுத்தாளர்களுள் ஒருவராவார். துப்புத் துலக்குவதில் புதிய பாணிகளைக் கையாண்டு பாராட்டுப் பெற்றவர். புதினங்களில் சிறந்து விளங்குபவை கொலையுதிர் காலம், கரையெல்லாம் செண்பகப்பூ, நைலான் கயிறு, காயத்ரி ஆகியவை.
ராஜேஷ் குமார் புதினங்களில் ஆங்கில மொழிச்சொற்களின் கலப்பு மிகுதி. இவர் படைத்தவை ஓடும் வரை ஓடு, ஏழாவது டெஸ்ட் டியூப், டிசம்பர் இரவுகள் முதலிய நூற்றுக்கும் மேற்பட்ட புதினங்கள் ஆகும். பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேந்திரகுமார், இந்திரா சவுந்திர ராஜன் முதலியோரும் தற்கால மர்மக் கதை எழுத்தாளர்களுள் புகழ் பெற்றவர்கள்.
நாரண துரைக்கண்ணன், வ.ரா. விந்தன், வேங்கட ரமணி, கல்கி, கொத்தமங்கலம் சுப்பு, ஜெயகாந்தன், கோவி.மணிசேகரன், நா.பார்த்தசாரதி, மு.வ. அநுத்தமா, இந்துமதி, ராஜம் கிருஷ்ணன், லக்ஷ்மி, வாஸந்தி சிவசங்கரி, அனுராதா ரமணன், கு. ராஜவேலு, நீலபத்மநாபன், வாசவன் முதலியோர் சிறந்த சமூகப் புதின ஆசிரியர்கள் ஆவர்.
கே. எஸ். வேங்கடரமணி என்பார் மக்கள் மனதில் தேசபக்திக் கனலை மூட்டுவதற்காக, தேசபக்தன் கந்தன் என்ற நாவலை 1933-இல் எழுதி வெளியிட்டார். கல்கி, காந்திய வழியில் சிறந்த நாவல்களைப் படைத்தார். இவர் சாதிக் கொடுமை, விடுதலை வேட்கை, பொருந்தா மணம், விதவையின் வேதனை ஆகியவற்றைத் தம் கதைகளுக்குக் கருவாக்கிக் கொண்டவர். இந்திய சுதந்திரப் போராட்டப் பின்னணியில் அவர் எழுதிய நாவலே அலையோசை ஆகும்.
காந்தியச் சிந்தனையின் அடிப்படையில் நம் நாட்டுச் சமூகப் பொருளாதாரச் சிக்கல்களை ஆராய்ந்து மனித நேசத்தோடு படைக்கப்பட்டவை அகிலனின் புதுவெள்ளம், எங்கே போகிறோம் என்ற புதினங்கள். 1942-ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுந்த நாவல் தியாகத் தழும்பு (நாரண துரைக்கண்ணன்). வாசவனின் அக்கினிக்குஞ்சு, புதுயுகம் பிறக்கிறது, வாழ்வின் ராகங்கள் போன்ற புதினங்களில் அண்ணலின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கருத்துகளைப் பரவலாகக் காண முடிகின்றது.
அன்றாட அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகியன இல்லாத நிலையில் மக்கள் வாடும் நிலையே வறுமை நிலை. வறுமையைக் கதைப் பொருளாகக் கொண்டு புதினங்கள் பல தோன்றியுள்ளன. வறுமையால் வாழ்க்கையில் சந்தர்ப்பச் சூழ்நிலையால் தவறிப் போய்விட்ட பெண்களின் வாழ்க்கை பல தமிழ் நாவல்களில் எடுத்துரைக்கப்படுகிறது. மு.வரதராசனாரின் நெஞ்சில் ஒருமுள் என்ற நாவல் வறுமைக்காகத் தன் உடலை ஒரு பெண் விற்பதாகக் காட்டுகிறது. அவரின் ‘கயமையில்’ பகட்டான வாழ்வை விரும்பி அதற்காகவே பலரையும் கைக்குள் போட்டுக் கொள்வதற்காக வசீகரம் என்ற பெண் கற்பை விற்பதாகச் சொல்கிறார்.
நா. பார்த்தசாரதியின் பொன்விலங்கு நிறைவேறாத காதலைச் சித்திரிக்கிறது. இவரே நெஞ்சக்கனலில் போலி அரசியல் வாதிகளையும், அவர்தம் திருவிளையாடல்களையும் எடுத்துக்காட்டுகிறார். அறிஞர் அண்ணாவின் பார்வதி பி.ஏ., ரங்கோன்ராதா ஆகிய நாவல்கள் சமுதாயச் சீர்திருத்த நாவல்கள் என்ற வரிசையில் சிறப்பிடம் பெறத்தக்கவை. அநுத்தமா
தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் என்று போற்றப்படுகின்ற அநுத்தமா மணல்வீடு, ஒரே வார்த்தை, கேட்டவரம் போன்ற புதினங்களை எழுதியுள்ளார். லக்ஷ்மி, சூடாமணி, சிவசங்கரி, இந்துமதி முதலியோர் குடும்ப நாவல்களை எழுதியுள்ளனர். கூட்டுக் குடும்ப முறையின் சிக்கல்களை உணர்த்தி இவை அகன்றால் நல்லது என்பது போன்ற எண்ணத்தை நாவலாசிரியர்கள் பலர் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் நாவலாசிரியர்களில் தான் நினைக்கிற ஒரு கருத்தைப் பாத்திரத்தின் பண்புக் கேற்ப வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்க ஒரு சிலரில் ஜெயகாந்தன் குறிப்பிடத்தக்கவர். சில நேரங்களில் சில மனிதர்கள் கதாநாயகி கங்கா, பாலுறவுச் சிக்கல் காரணமாகச் சமுதாயத்தைத் துச்சமாக மதித்து எல்லை கடந்த தனிநபராகி வாழத்தலைப்படுகிறாள். எதிர்பாராமல் நடந்துவிட்ட நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டவள் அவள். இவளைத் திருமணம் செய்து கொண்டு வாழும்படி கூறிய அவளின் நிலைக்குக் காரணமான பிரபுவுடன் காமம் இல்லாமல் பிள்ளை பெற்றுக் கொள்ள நினைக்கிறாள்.
இவரின் பாரிசுக்குப் போ நாவலின் கதாநாயகன் சாரங்கன் தனி மனிதப் போக்கின் காரணமாக இந்த நாட்டின் கலாச்சாரத்தோடு ஒட்டிப் போக முடியாதவனாக அந்நியமாகி விடுகிறான்.
ந.சிதம்பரசுப்ரமணியனின் இதயநாதம் ஒரு சிறந்த புதினம். இக்கதையில் ‘சங்கீதத்தை ஒரு யோகமாகவும், தபஸாகவும் பெரியவர்கள் கருதி வந்தார்கள்; ஆனால் தற்காலத்திலோ, பாடகர்கள் கீர்த்தியும் செல்வமும் செல்வாக்கும் அடைவதுடன் தங்கள் சாதனை பூரணத்துவம் பெற்றுவிட்டதாக நினைத்து விடுகிறார்கள்’ என்று உள்ளார்ந்த உணர்வுடன் வேதனைப்படும் ஒரு பாகவதரை இலட்சியக் கதாநாயகனாக இந்நாவலில் இவர் படைத்துள்ளார்.
சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளுக்காகப் போராடுதல்
விடுதலைக்குப் பின்னர் முதலாளித்துவம் வளரத் தொடங்கியது. சமுதாயக் கொடுமை செடியாக முளைத்து, புதராக வளர்ந்து, இன்று காடாக மண்டிக் கிடக்கிறது. இந்தக் காட்டில் சமுதாயத்தின் மதிப்பீடுகளுக்கு மரியாதை இல்லை. எல்லாம் விலைப் பொருள்கள்தான். இந்த நிலையில் தோன்றியுள்ள சமுதாயப் பிரச்சினைகள் பல. இப்பிரச்சினைகளை முன்னிறுத்திப் பல நாவல்கள் தமிழில் படைக்கப் பெற்றுள்ளன.
மண்ணையே நம்பி வாழும் மாரப்பன், ஜாதிக் கட்டுப்பாட்டு உணர்வின் விளைவாக ஏழை ஹரிஜன விவசாய ஊழியர்கள் கொடுமைப் படுத்தப்படுவதற்கு உடந்தையாக இருக்கும் நிலையில், அவனுடைய மகன் பண்ணை முதலாளியை எதிர்த்துப் போராட முயலும் நிகழ்ச்சிக்கான காரணங்களை கு. சின்னப்ப பாரதியின் தாகம் என்னும் புதினம் விளக்குகிறது.
வறுமையின் கொடுமையால் வாடும் ஒரு குடும்பத்தின் மூத்த புதல்வன் செல்லப்பா; இவன் சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்துப் போராடுவதைக் கருப்பொருளாகக் கொண்டது ஐசக் அருமைராசன் எழுதிய கீறல்கள்.
பொன்னீலன் எழுதியது கரிசல் என்ற புதினம். இது ஒரு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் கேட்பாரற்ற அதிகாரத்துடன் தம்முடைய நிலத்தில் உழைக்கிற மக்களுக்குப் போதிய கூலி கொடுக்காமல் வதைத்து அடக்கு முறையைக் கையாளும் பொழுது, கிராம மக்கள் விழிப்படைந்து உரிமைக் குரல் கொடுப்பதைக் கதைப் பொருளாகக் கொண்டது.
வரலாற்றுக் கற்பனை
கற்பனைப் படைப்பின் தாக்கம் மிகமிக வரலாற்றுக் கற்பனை நாவல்களே மிகுந்த அளவில் தோன்றியுள்ளன. வரலாற்று நாவல்கள் என்பன நடப்பு நிலையைத் தவிர்ப்பதில்லை. பழங்கால நிகழ்ச்சிகள் தற்கால நிகழ்ச்சிகளுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புடையனவாக இருக்கும். வரலாற்றுப் புதினங்களில் புனைநிலை மாந்தரே சிறப்பான இடம் பெறுவர்.
சிவகாமியின் சபதம் பல்லவர் காலத்தின் பெருமையைப் பறை சாற்றும். இப்புதினத்தில் இடம் பெறும் சிவகாமி, வாசகர் நெஞ்சில் நிலையான இடத்தைப் பெற்றுவிட்ட கதாபாத்திரமாகும். இன்றும் மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் பார்க்கும் பொழுது ஆயனரும், அவர் மகள் சிவகாமியும் கண் முன் நடமாடி மகிழ்வூட்டக் காணலாம். அடுத்து இராசராச சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை உருவாக்கினார். இதில் வரும் நந்தினி பாத்திரம் தனிச் சிறப்பு வாய்ந்தது.
சாண்டில்யன் குமுதம் பத்திரிகை மூலம் பல புதினங்கள் எழுதி எண்ணற்ற வாசகர்களையும் பெற்றார். இவரது மலைவாசல், ராஜமுத்திரை, யவனராணி, கடல் புறா ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவரின் ராபர்ட்கிளைவ் பற்றிக் கூறும் ராஜபேரிகை என்ற புதினம் வங்க மாநிலப் பரிசு பெற்றது.
கலைஞர் மு.கருணாநிதியின் ரோமாபுரிப்பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம் இரண்டும் குறிப்பிடத்தக்கவை. தமிழகத்தின் தொடக்கக் கால வரலாற்றை ரோம் நாட்டு அகஸ்டஸ் கால வரலாற்றோடு இணைக்கும் முயற்சியில் இவர் ரோமாபுரிப் பாண்டியனைப் படைத்துள்ளார். வணிகத் தொடர்பால் இரு நாட்டின் உறவு பெருகியதைப் பல இலக்கியச்சான்றுகள் தங்க நாணயங்கள், புதைபொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. கி.மு. 20ஆம் ஆண்டினைத் தொடக்கமாகக் கொண்டு கதை தொடங்குகிறது. மேத்தாவின் சோழநிலா, பூவண்ணனின் காந்தளூர்ச்சாலை, கொல்லிமலைச் செல்வி அரு.ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி, நா.பார்த்தசாரதியின் பாண்டிமாதேவி, மணி பல்லவம் ஆகியவை சிறப்பு வாய்ந்த தரமான புதினங்களாகும்.
சந்திர மண்டலத்திற்கு மனிதனும் விண்வெளிக்கலங்களும் போய்வரத் தொடங்கியதிலிருந்து, அத்தகைய செயல்களில் ஆர்வம் கொண்ட எழுத்தாளர்களின் அறிவியல் புதினங்களும் மிகுந்தன.
சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். இவர் அறிவியலிலும் பொறியியலிலும் வல்லவர். இவரின் அறிவியல் நாவல்கள் ஒற்றர்களின் வீரதீரமிக்க வெற்றிச் செயல்களை வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கும்.
தனஞ்செயன் என்பவன் அமெரிக்கா சென்று விஞ்ஞானிகள் இருவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்து அணு விஞ்ஞானச் சோதனைக்கும், செயற்கைக் கோள்களை வானில் பறக்கவிடும் முயற்சிக்கும் துணை புரிவதைக் கூறும் வகையில் கி. ராஜேந்திரனின் விண்ணும் மண்ணும் நாவல் உருவாகி உள்ளது.
வேங்கடரமணி, தேசபக்தன் கந்தனை எழுதினார். சிற்றூர்கள் சீர்திருத்தப்பட வேண்டிய அவசியத்தை அதில் விளக்கியுள்ளார். சங்கரராம் எழுதியுள்ள மண்ணாசை திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீரமங்கலம் என்ற ஊரைப் பின்னணியாகக் கொண்டது. ஆர்.சண்முக சுந்தரம் எழுதிய நாகம்மாள் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய பாதையை வகுத்தது. இயல்பான ஒரு கோவை மாவட்டக் கிராமத்துப்பின்னணியில், குறுகிய இடத்துக்குள் நிகழும் புகைச்சல்கள், ஆசைகள், வஞ்சகங்கள் எனப் பல்வேறு உணர்வுகளால் பின்னி அமைக்கப்பட்ட கதை நாகம்மாள் என்ற விதவையின் வாழ்வு பற்றியது.
சட்டி சுட்டது என்ற நாவல் எந்திர நாகரிகம் மிக உயர்ந்த நிலையில் வளர்ச்சி பெற்ற கோவை மாவட்டத்தில், கட்டை வண்டி கூட மிக எளிதில் செல்ல முடியாத ஒதுக்குப் புறத்தில் பழமைக் கூறுகளையெல்லாம் கட்டுக் குலையாமல் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டு வந்த ஒரு வாழ்வோவியத்தைத் தீட்டிக் காட்டியது.
சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் மதுரை மாவட்டத்து மறவர்கள்வாழ்வின் சிறுபகுதியையும், ராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன் நீலகிரி படகர்களின் முழு வாழ்வையும், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு ஒரு குமரி மாவட்டக் கிறித்துவக் குடும்பத்தின் வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றன.
தோப்பில் முகமது மீரான்
தோப்பில் முகமது மீரானின் முதல் புதினமான ஒரு கடலோரக் கிராமத்தின் கதை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பரிசு பெற்றது. தமிழ்நாட்டின் தென் கோடியில் அரபிக் கடல் கரையில் உள்ள ஒரு கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள இஸ்லாமியச் சமூகத்தினரின் வாழ்வு, அவர்களது மொழியில் அற்புதமான நாவலாக உருவாகியிருப்பதைக் காணலாம். இவரது சாய்வு நாற்காலி என்னும் புதினம் சாகித்திய அகாதமி விருது பெற்றது. இவர் வட்டாரத் தமிழோடு, மலையாள மொழியையும் பெருமளவு கலந்து எழுதியுள்ளார். நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள், சதுரங்கக் குதிரை ஆகிய புதினங்கள் குறிப்பிடத்தக்கவை.
புகழ் பெற்ற மொழி பெயர்ப்புப் புதினங்கள்
மாக்ஸிம் கார்க்கியின் தாய், டால்ஸ்டாயின் போரும் அமைதியும், ஹெமிங்வேயின் கடலும் கிழவனும், வால்டர் ஸ்காட்டின் ஐவன் ஹோ முதலியன சிறந்த மொழி பெயர்ப்புப் புதினங்களாகும். தாகூர், பங்கிம் சந்திரர், சரத்சந்திரர் ஆகியோரின் வங்க நாவல்களும், தகழி சிவசங்கர பிள்ளையின் செம்மீன் என்ற மலையாள நாவலும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
டால்ஸ்டாயின் அன்னாகரினீனாவைத் தழுவி, நாரண துரைக்கண்ணன் சீமாட்டி கார்த்தியாயினி என்ற நாவலை உருவாக்கினார். டிக்கன்ஸின் ஆலிவர் டுவிஸ்டைத் தழுவி எஸ். மாரிசாமி அனாதை ஆனந்தன் என்ற புதினத்தை உருவாக்கினார். ரெயினால்ட்ஸ் புதினத்தைத் தழுவி மறைமலை அடிகளார் குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி என்ற புதினத்தை எழுதினார்.
பாடம் - 4
கள்வனின் காதலி, தியாகபூமி, மகுடபதி, சுதந்திரம் ஆகிய சமூக நாவல்களை எழுதிய கல்கி பின்னரே வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளார். சாதிக்கொடுமை, விதவையின் வேதனை, பொருந்தாமணத்தின் கொடுமை, விடுதலைப் போராட்ட வேட்கை போன்ற கருத்துகளின் அடிப்படையில் இவர்தம் சமூகப் புதினங்கள் அமைந்துள்ளன.
ஸ்ரீதரனுக்கோ, சாவித்திரியின் பழமை பிடிக்கவில்லை. தன் தாயின் வற்புறுத்தலுக்காகத் திருமணத்திற்கு உடன்பட்டான். சம்பு சாஸ்திரியின் தங்கை மீனா காணாமல் போன செய்தி திருமணத்துக்கு முன்பு தங்கம்மாளுக்குத் தெரிகின்றது. இச்செய்தியை மறைத்ததற்காக ரூபாய் ஐயாயிரம் வரதட்சணையாகச் சாஸ்திரியிடம் கேட்க, அதற்கு அவர் உடன்பட்டதால் திருமணம் நடந்தது.
சம்பு சாஸ்திரியின் தங்கை மீனாவிற்கும், இராமச்சந்திரன் என்பவனுக்கும் திருமணம் நடைபெற்ற பின் அவன் எங்கோ சென்று விட்டதால் மீனா, சம்பு சாஸ்திரி வீட்டிலேயே இருந்தாள். சில ஆண்டுகள் கழித்து, கும்பகோணம் மகாமகத்திற்குச் சென்றபோது, அங்குத் தன் கணவன் விடுதலைப் போரில் ஈடுபட்டு அரசாங்கத்திற்குத் தெரியாமல் மாறுவேடம் பூண்டு மறைந்து இருப்பதைக் கண்டாள். பின் இருவரும் பம்பாய்க்குச் சென்று தனியாகவே தொழில் ஆரம்பித்துப் பெருஞ்செல்வர்கள் ஆனார்கள். இந்நிலையில் காணாமற்போன தங்கையால் சாஸ்திரிக்குப் பழிச்சொல் வந்தது. மேலும் ஆற்று வெள்ளத்தால் துன்பப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சாஸ்திரி, அக்கிரகாரத்தில் உள்ள தனது மாட்டுக் கொட்டகையில் தங்க இடம் அளித்ததால் அந்தணர்கள் சாஸ்திரியை விலக்கி வைத்தனர். இதுவே மீனா காணாமல் போன கதை. இனி சாவித்திரி கதைக்கு வருவோம்.
கணவன் இல்லத்துக்குச் சென்ற சாவித்திரி பல கொடுமைகளுக்கு ஆளானாள். இந்நிலையில் கருவுற்றாள். இச்செய்தியை சாஸ்திரிக்கு எழுதினாள். ஆனால் சாஸ்திரியோ வறுமைக்கு ஆட்பட்டமையால், தன் இரண்டாம் மனைவி மங்களத்தைத் தாய்வீட்டிற்கு அனுப்பிவிட்டுப் பிழைப்பதற்காகச் சென்னை சென்றுவிட்டார். நெடுங்கரைக்கு வந்த சாவித்திரி தன் தந்தை சென்னை சென்றுவிட்டதை அறிந்து, அங்குச் சென்று பல இடங்களிலும் தேடினாள். இறுதியில் மகப்பேறு இல்லத்தில் சேர்க்கப்பட்டு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
வாழ்க்கையில் பல இன்னல்களுக்கு ஆளான சாவித்திரி, எங்கேயாவது வேலை கிடைக்குமா என்று தேடி அலைந்தாள். கடைசியில் கடல் நீரில் மூழ்கிச் செத்துப் போவது என்று குழந்தையுடன் தண்ணீரில் இறங்கினாள். அப்போது தந்தையின் பாடலைக் கேட்டாள். குரல் வந்த திசையை நோக்கி ஓடினாள். தோப்புக்கு நடுவே ஒரு சிறு குளமும், குளத்தின் கரையில் ஒரு பழைய மேடையும் காணப்பட்டன. மேடையில் அப்பா படுத்திருந்தார். சிறிது நேரம் கழித்து மெதுவாக மேடைக்கு அருகில் சென்றாள். அப்பா அசந்து தூங்குவதைப் பார்த்தாள். அவள் தன் குழந்தையை சாஸ்திரி அருகே விட்டு விட்டு, முன்பு கேள்விப்பட்ட பம்பாயில் வாழும் ஒரு குடும்பத்தாருக்குப் பணியாளாகச் சென்றாள்.
குழந்தையை சாஸ்திரி சாவடிக் குப்பத்திற்கு எடுத்துச் சென்றார். அக்குப்பத்தைச் சீர்திருத்த எண்ணினார். அக்குப்பத்திலுள்ள ஒரு பள்ளியில் குழந்தையைச் சேர்த்தார். அவள் சாருமதி என்ற பெயருடன் அனைத்திலும் தேர்ச்சி பெற்று விளங்கினாள்.
பம்பாய்க்குச் சென்ற சாவித்திரி தன் அத்தை மீனாவின் குடும்பத்திற்கே பணியாளாய்ச் சென்றாள். பின் மீனாவும், அவளது கணவனும் இறந்துபடவே, மிகுந்த செல்வத்துடனும் உமாராணி என்ற மாற்றுப் பெயருடனும் சென்னைக்கு வந்தாள். உமாராணியைப் பார்க்கச் சாருமதியும், தோழிகளும் வந்தனர். பள்ளிக்கூடக் கட்டிட நிதிக்காக நாடகம் நடத்தப் போவதாகவும், அதற்குரிய நுழைவுச் சீட்டை வாங்க வேண்டும் என்றும் அக்குழந்தைகள் வேண்டினர். உமாராணி எல்லா நுழைவுச் சீட்டுகளையும் தானே வாங்கிக் கொண்டாள்.
அந்தக் குழந்தைகள் சென்ற பிறகு உமாராணி, சாருமதி நினைவாகவே இருந்தாள். எனவே தன்னுடன் பணியாற்றிய வழக்கறிஞர் ஆபத்சகாயமய்யர் உதவியால் சாவடிக் குப்பம் சென்றாள். அங்குத் தன் தந்தை சாஸ்திரியைக் கண்டாள். அங்கு அவள் தன்னை வெளிக்காட்டாமல் பேசினாள். சாஸ்திரியிடம் தான் குழந்தை சாருவை எடுத்து வளர்ப்பதாகக் கூறினாள். இதற்கு சாஸ்திரியும் உடன்பட்டார்.
ஆனால் உமாராணிக்குத் தெரியாமல் சாவடிக் குப்பத்திலிருந்து கிளம்பி, சாருவுடன், சாஸ்திரி ஊர் ஊராகச் சென்று நாட்டு விடுதலைக்காகப் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கினார். தன் மனைவி மங்களத்தின் உடல் நலக் குறைவு அறிந்து நெடுங்கரைக்குச் சென்றார். மங்களம் சாஸ்திரியின் மடியிலே இறந்தாள்.
சாருவைக் காணாத உமாராணி காவல் நிலையத்திற்குச் சென்று முறையீடு செய்யும் போது காவலர்கள் ஸ்ரீதரனை அழைத்து வருவதைக் கண்டாள். அவன் விடுதலை பெற இவள் உதவினாள்.
ஸ்ரீதரன், உமாராணி தன் மனைவி என அறிந்து உரிமை கோரி வழக்குத் தொடுத்தான்.
உமாராணிக்காக ஆபத்சகாயமய்யரும், ஸ்ரீதரனுக்காக நாணாவும் வழக்காடினார்கள். அப்போது தான் உமாராணி தன் மகள் சாவித்திரி என்பதையும், சாருமதி தன் பேத்தி என்பதையும் சாஸ்திரி அறிந்தார். உமாராணி தான் தன் தாய் என்பதை அறிந்து சாரு எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தாள்.
மறுபடியும் உமாராணி – ஸ்ரீதரன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சாவித்திரி தன் குழந்தையைக் கொன்று விட்டதாகக் கூறினாள். இதனால் காவல் துறையினர் அவளைக் கைது செய்ய முயன்றனர். உடனே சாரு நீதிபதியைப் பார்த்து உண்மையைக் கூறினாள். வழக்கு முடிந்தவுடன் சாஸ்திரி தன் மகள் சாவித்திரியை ஸ்ரீதரனுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறினார். ஆனால் சாவித்திரியோ அதற்கு உடன்படவில்லை. இந்தப் பெருஞ்செல்வத்துக்குக் காரணம் அத்தை மீனாவே என்று விரித்துரைத்தாள். சாஸ்திரி தன் தங்கையைப் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டார். கணவனுடன் இணைந்து வாழ விரும்பாத சாவித்திரி நாட்டுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.
ஒரு நாள் நாட்டிற்காகப் பணியாற்றிய பெண் தொண்டர்கள் பலரைக் காவற்படையினர் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். அதே வண்டியில் ஸ்ரீதரனும் சமூகக் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட ஏற்றப்பட்டான். ஸ்ரீதரனும் போலீஸ் வண்டிக்குள் தேச சேவகிகளின் மத்தியில் சாவித்திரியைக் கண்டு அளவில்லாத வியப்படைந்தான். இத்தனை நாளும் பிரிந்தவர்கள் அந்த நிமிடத்திலேதான் ஒன்று கூடினார்கள்.
இறுதியில், சம்பு சாஸ்திரி தன் பேத்தி சாருமதியுடன் சாவடிக் குப்பத்திற்கு மீண்டும் வந்தார். குப்பத்தில் இறைவழிபாடு நடந்து கொண்டிருந்தது. பின் வைஷ்ணவ ஜனதோ என்ற பாடலை மக்கள் மகிழ்ச்சியுடன் பாடிக் கொண்டிருந்ததைக் கண்டு மெய்மறந்து நின்றனர் சம்பு சாஸ்திரியும், சாருமதியும். சிறைசென்ற சாவித்திரியும், ஸ்ரீதரனும் விடுதலையானபின் நாட்டு விடுதலைக்காக இணைந்து போராடினர். இவ்வாறு கதை முடிவடைகிறது.
தியாக பூமியில் ஸ்ரீதரன், சாவித்திரி, சம்பு சாஸ்திரி, சாருமதி முதலானோர் முதன்மைப் பாத்திரங்களாகவும், மங்களம், தீட்சிதர், இராஜாராமய்யர், நல்லான் போன்றோர் துணைப் பாத்திரங்களாகவும் படைக்கப்பட்டுள்ளனர்.
சாவித்திரியை மணந்த ஸ்ரீதரனுக்கு அவளுடைய பழைமையான பண்பாடுகள் பிடிக்கவில்லை. ‘புதுமை’ என்பதை அவன் தவறாகப் புரிந்து கொண்டிருந்தான். சாவித்திரி துன்பம் மிகுந்த நிலையிலும் இறை நம்பிக்கையோடு செயல்பட்டவள்.
மீனாட்சி மருத்துவமனையில் உள்ள பணிப் பெண்களை எல்லாம் பார்க்கும் போது, தானும் சுதந்திரமாக வாழவேண்டும் என்றும், பிறர் கையை எதிர்பார்க்காது வாழ வேண்டும் என்றும் தீர்மானிக்கிறாள்.
சாவித்திரியின் வாழ்க்கை, விடுதலைக்குப் போராடிய வாழ்க்கை. இவள் திருமணத்திற்கு முன் சித்தியின் கொடுமையிலிருந்து விடுதலை பெறத் துடித்தாள். திருமணம் முடிந்ததும் கணவனோடு வாழத் துடித்தவள் கணவனால் பல தொல்லைகளுக்கு ஆட்பட்டாள். குழந்தைக்குத் தாயானதும் எவ்வாறு வாழ்வது என எண்ணி ஏங்கினாள். உமாராணியாகச் செல்வம் படைத்தவளாக மாறியதும் தந்தையையும், குழந்தையையும் தேடி அலைந்தாள். பெண்ணுரிமைக்காகப் போராடினாள். இறுதியில் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டாள். கதைத் தலைவனைவிடத் தலைவியான சாவித்திரி பாத்திரமே கதை இயக்கத்திற்குப் பெரும் பங்காற்றுகிறது.
அரிசன மக்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று எண்ணி வாழ்ந்த காலத்தில் சாஸ்திரி அக்கிரகாரத்தில் உள்ள தமது மாட்டுக் கொட்டகையில் அவர்களுக்குத் தங்க இடமளித்து உணவளிக்கிறார். இதனால் அந்தணர்கள் தம் சாதியிலிருந்து சாஸ்திரியைத் தள்ளி வைக்கின்றனர்.
மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு முதலிய பிரச்சாரங்களில் ஈடுபட்டு ஊர் ஊராகச்சென்று, தொண்டு செய்யும் சாஸ்திரி சாவடிக் குப்பத்துக் காந்தியாகவே மாறிவிடுகிறார்.
தங்கம்மாள் தன் மகன் ஸ்ரீதரனைக் கேட்காமலே அவனுடைய திருமணத்திற்கு வரதட்சணை பேசி ஆயிரம் ரூபாய் முன்பணமும் (அட்வான்சும்) வாங்கியாகிவிட்டது என்று மகனுக்குக் கடிதம் எழுதுவதிலிருந்து தாய்க்கு அடங்கிய பிள்ளையாக ஸ்ரீதரன் இருப்பதை அறியலாம்.
ஆடம்பர மோகம் கொண்ட ஸ்ரீதரன், ஸீஸியைக் காதலித்தான். ஸீஸியின் ஆடம்பரமும், அழகும் ஸ்ரீதரனைக் கவர்ந்தன. இதனால் சாவித்திரியைப் பல கொடுமைகளுக்கு ஆளாக்கினான். பல நாட்களுக்குப் பின் ஸீஸி ஸ்ரீதரனைப் பகிரங்கமாய் நிராகரித்துப் போய் விட்டாள்.
புதினத்தின் தொடக்கத்தில் போக பூமியில் வாழ்ந்த இவன் இறுதியில் தியாக பூமியில் அடியெடுத்து வைக்கிறான். அன்னை பாரத நாட்டின் கால் விலங்குகளைத் தகர்க்கக் கைவிலங்குப் பூணுகிறான்.
சாருமதி, சாவித்திரியும் ஸ்ரீதரனும் தம்முள் ஒன்றுபட்டு நிச்சயம் தன்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்தாள். அவர்களும் வந்தனர்.
தியாகபூமியில் இடம்பெற்ற முதன்மைப் பாத்திரங்களின் பண்பு நலன்கள் குறித்து இப்பாடத்தின் மூலமாக அறிந்து கொண்டோம். இனி, இந்தியப் பெருநாட்டைத் தியாக பூமியாகக் காட்டும் கல்கி, அத்தியாக பூமியின் மேன்மைக்காகப் பெரும் தியாகங்களைச் செய்யுமாறு மக்களுக்கு விழிப்பூட்டிய காந்தியடிகளின் சிந்தனைகளை நாவலில் எவ்வாறு அமைத்துக் காட்டுகிறார் எனக் காணலாம்.
சம்பு சாஸ்திரி, ஊர் ஊராகச் சென்று கூட்டு வழிபாடு செய்து வந்தார். மக்களிடம் கூட்டு வழிபாட்டின் மூலம் தெய்வ பக்தியையும், நாட்டுப்பற்றையும் அவர் வளர்த்தார். அதனுடன், கள் உண்ணாமைக்கு எதிராக மக்களைத் திரட்டினார். கள்ளுக்கடையில் இருந்த சிலர் சாஸ்திரியைக் கண்டவுடன் கலயங்களைப் போட்டுவிட்டு ஓடத் தொடங்கினர். சிலர் கள்ளுக்கடையை மூடிவிட்டனர். சாஸ்திரியால் கிராமங்களில் இருந்த குடிப்பழக்கம் அடியோடு நின்று போனது.
களர் நிலம் -அந்நிலத்தில்
புல்முளைத் திடலாம் ; நல்ல
புதல்வர்கள் முளைப்ப தில்லை
எனப் பாரதிதாசன் பெண் கல்வி பற்றிப் பாடினார். கல்கி தம் புதினங்களில் பெண் கல்வி மற்றும் பெண் விடுதலையைப் பற்றியும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
தியாக பூமி என்ற நாவலின் உட்பிரிவில் பெண்விடுதலை பற்றிக் கூறியுள்ளார். கிளர்ச்சியில் ஈடுபட்ட மகளிர்,
கற்பு நெறியென்று சொல்ல வந்தார் – இரு
கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்
என்று வீறு கொண்டெழுந்து பாரதியின் பாடலைப் பாடுவதாகவும், மகாத்மா காந்தியின் போதனைக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் செவி சாய்ப்பதாகவும் நாட்டுத் தொண்டில் ஈடுபட்டு, சிறை புகுந்ததாகவும் காட்டிக் கல்கி தம் புதினத்தில் பெண் விடுதலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நாவலில்,..
தாயின் அடிமைத்தனத்தை நீக்குங்கள், உங்கள்
அடிமைத்தனம் தானே விலகிப் போகும்
என்று காந்தி மகான் உரைத்த வழியிலேயே பெண்கள் தங்கள் விடுதலையைப் பெற முயல்கிறார்கள். கல்கி, தியாகபூமியில் பெண் விடுதலைக்காக ஒரு புரட்சியையே உண்டு பண்ணியுள்ளார் என எண்ணுமளவிற்குச் சாவித்திரி என்னும் பாத்திரத்தைப் படைத்துள்ளார்.
சாஸ்திரியின் பேச்சைக் கேட்ட மக்கள் தங்கள் உடல், பொருள் அனைத்தையும் நாட்டிற்காகத் தரத் துணிந்தார்கள். சாஸ்திரியோடு சாருவும் இணைந்து கொண்டு நாட்டுச் சேவையில் ஈடுபட்டாள்.
இந்நாவலில் தாம் உணர்த்த விரும்பும் சிந்தனைகளைக் கல்கி எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்று பார்த்தோம். அவற்றை, ஓர் அழகிய கலைவடிவமாகத்தரக் கல்கி பயன்படுத்திய உத்திகள் பற்றி இனிக் காணலாம்.
“பாரத தேசம் ஆதி காலத்திலிருந்தே தியாகத்துக்குப் பேர் போனதம்மா. அதனாலே தான் இந்த தேசத்தைத் தியாகபூமி என்று சொல்கிறார்கள்” என்று சம்பு சாஸ்திரி சாவித்திரியிடம் கூறுகின்ற மொழியிலிருந்து நாவலுக்கான தலைப்பு பெறப்பட்டுள்ளது.
தமிழகமே அகிம்சைப் போரில் தியாகபூமியாக மாறியதை நாம் இக்கதையில் காணமுடிகிறது.
சாஸ்திரி மங்களத்தை, இரண்டாம் தாரமாக மணந்து கொண்டதற்கான காரணத்தைக் கல்கி நினைவுக் காட்சி மூலமாக விளக்கியுள்ளார்.
கல்கி இந்நாவலில் நனவோடை உத்தியைப் பயன்படுத்தியமைக்கு மற்றுமொரு சான்று பின்வருமாறு ‘சாருவுக்கு ஆறு ஏழு வயதுதான் இருக்கும். அந்தக் குழந்தை இருந்தால் அதற்கும் இப்போது ஏழு வயதுதான் இருக்கும்’ என்று உமாராணி தன் மகளின் நிலையை எண்ணுகிறாள்.
“சாவித்திரி! சாவித்திரி! ‘இந்தச் சனியன் பிடித்த நெடுங்கரைக்குத் திரும்பிப் போக மாட்டோமா’ என்று ஒரு நாளைக்கு நீ தாபங் கொள்ளப் போகிறாய்! இப்போது நீ வெறுக்கும் நெடுங்கரை அப்போது உன்னை வரவேற்குமா?” எனச் சாவித்திரிக்கு இனி நேர இருக்கும் இன்னல்களை ஆசிரியர் முன்கூட்டியே கோடிட்டுக் காட்டி விடுகிறார். சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களில் இத்தகைய முன்னோக்கு உத்தி அமைந்துள்ளது என்பதும் குறிக்கத்தக்கது.
எடுத்துக்காட்டாக, இரண்டாம் பாகத்தில் மழை என்ற அத்தியாயத் தலைப்பில் “மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ? காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?” என்று கபிலர் பாடல் அடியுடன் தொடங்கியுள்ளார். இவ்வாறே நான்கு பகுதிகளும் பாடலுடன் தொடங்கப் பெற்றுள்ளன.
நாவலின் தொடக்கம் – சம்பு சாஸ்திரி என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திச் செல்லும் போக்கில் படைக்கப் பெற்றுள்ளது.
இனி, நாவலின் பல்வேறு சிறப்புகளுக்கும் அடிப்படையாகவும் உறுதுணையாகவும் அமையக் கூடிய கல்கியின் நடைச் சிறப்பைக் காணலாம்.
தியாக பூமியில் பஜனை என்னும் பகுதியில், மக்கள் பஜனைக்கு வருவது பெரும்பாலும் பொழுது போக்குக்காகவும்; சுண்டல், வடை இவற்றுக்காகவுமே எனச் சுட்டிக் காட்டும்போதும், சாமாவய்யர், தீட்சிதர் போன்றோர்களும் சுண்டல் வாங்கி உண்பதற்காகவே பஜனையில் கலந்து கொள்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் போதும் நடையில் நகைச்சுவை சிறக்கிறது.
சாருவுக்கு அவளது தலைமையாசிரியையைக் கண்டாலே சிறிதும் பிடிக்காது. உமாராணியின் வீட்டில் இருந்த ஜில்லி என்ற நாயைக் கண்டவுடன், அவளுக்குத் தன் தலைமை ஆசிரியை நினைவுக்கு வந்து விடுவதாகக் கல்கி நகைச்சுவை உணர்வுடன் நாவலை நகர்த்திச் சென்றுள்ளார்.
“யமுனா அந்த ஜில்லியின் மூஞ்சியைப் பார்த்தா நம்ம பள்ளிக் கூடத்து ஹெட்மிஸ்ட்ரஸ் மூஞ்சி மாதிரியில்லை?” என்று சாரு கூறியவுடன் எல்லாக் குழந்தைகளும் கலகலவென்று சிரித்து விட்டனர். கல்கியின் நகைச்சுவை நடை எளிதில் புரிந்து கொள்ளும்படியாகவும், படிப்பவர் தம்மை மறந்து சிரிக்கும் படியாகவும் அமைந்துள்ளமைக்கு இது ஒரு காட்டு.
இயற்கை வருணனை
பாத்திர வருணனை
உணர்ச்சி வருணனை
நிகழ்ச்சி வருணனை
ஆகிய நான்கு விதமான வருணனைகளைப் பற்றி இனிக் காணலாம்.
இயற்கை வருணனை
புதினத்தில் ஆங்காங்கே இடம்பெறும் அழகிய இயற்கை வருணனைகள் புதினத்தின் சுவையைக் கூட்டுகின்றன. தியாக பூமியில் மழை பற்றிய வருணனை இடம் பெறுகிறது.
‘மழை என்றால் எப்பேர்ப்பட்ட மழை! பிரளய காலத்து மழை என்றுதான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் படபடவென்று பெரிய பெரிய மழைத் துளிகள் விழுந்தன. சில நிமிஷத்துக்கெல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் ஒரே தாரையாகிவிட்டது’
மழையின் மிகுதியை இவ்வருணனை உணர்த்துகின்றது.
பாத்திர வருணனை
கல்கி தியாகபூமியில் உள்ள ஒவ்வொரு பாத்திரத்தையும், நடைமுறையில் நாம் காணும் மனிதர்களாகவே படைத்துள்ளார். சம்பு சாஸ்திரியாரைப் பின் வருமாறு வருணித்துள்ளார்:
‘நெற்றியில் விபூதியும், முகத்தில் புன்சிரிப்பும் கழுத்தில் துளசி மணி மாலையும், கக்கத்தில் மடி சஞ்சியுமாகக் காணப்பட்டார்.’
உணர்ச்சி வருணனை
கல்கி தியாகபூமியில் சாவித்திரி, சாரு ஆகியோரது பாச உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார். ‘அம்பிகே! பராசக்தி. நீ நினைச்சால் முடியாதது ஒண்ணுமில்லைன்னு தாத்தா சொன்னாளே? எனக்கு ஓர் அம்மா கொடுக்கக் கூடாதா, நல்ல அம்மாவா?’ என சாரு பூஜை மாடத்தின் முன் நின்று உள்ளம் உருகப் பிரார்த்திப்பது உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு நல்ல சான்று.
நிகழ்ச்சி வருணனை
ஆசிரியர் நிகழ்ச்சிகளை மிக அழகாக வருணிக்கும் பாங்குடையவர். நாவலின் தொடக்கத்தில் இவர் இரயில் நிலையத்தின் பரபரப்பைக் கூறுகிறார்.
‘தூங்கி வழிந்த ரயிலடிக் கடைக்காரன் திடுக்கிட்டு எழுந்திருந்தான். அவன் எதிரே ஒரு தட்டில் நாலைந்து எள்ளுருண்டையும், மூன்று வாழைப்பழங்களும் இருந்தன. அவற்றின் மீது மொய்த்த ஈக்களைப் பரபரப்புடன் ஓட்டினான்’ என்ற நிகழ்ச்சி வருணனை இயல்பானதாகும்.
தங்கம்மாள்: குடித்தனப் பெண்ணுக்கு அதைவிட அழகு என்னத்துக்குங் காணும் ?
தீட்சிதர் : அம்மா ! நீங்க சொல்றது ரொம்ப சரி. அதைவிடத்தான் அழகு என்னத்துக்கு! அய்யர்வாள் நீங்களே சொல்லுங்கோ. நாமெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிற போது பெண் அழகைப் பார்த்தா பண்ணிண்டோம்?
ராஜா : இல்லை. நாம் பண்ணிக்கலை. அதுதான் தெரிஞ்சிருக்கே? ஆனால் அந்த மாதிரி நம்ம பிள்ளையாண்டான் பண்ணிக்குவானா?
மேற்கண்ட உரையாடல் அந்தணர் பேச்சுத் தமிழில் கதைமாந்தரின் தன்மைக்கு ஏற்றபடி அமைந்துள்ளது. பேச்சு நடையில் பாத்திரங்கள் இயல்பாக எப்படிப் பேசுவது பொருத்தமாக இருக்குமோ அப்படியே இந்நடை இருப்பதைக் காணலாம்.
சம்பு சாஸ்திரி குப்பத்தை விட்டுப் போவதற்கான காரணத்தைக் கூறும் போது உவமையை ஆசிரியர் கையாண்டுள்ளார்.
“ஆயிரக்கணக்கான ஜனங்கள் தங்கள் சொந்தக் காரியங்களையெல்லாம் விட்டுத் தேசத்துக்காக உழைத்து வருகிறார்கள். எத்தனையோ பேர் தங்கள் உடல், பொருள், ஆவியைத் தத்தம் (தியாகம்) செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சமயத்தில் இராமருடைய பாலத்துக்கு அணிற்பிள்ளை மணலை உதிர்த்ததுபோல என்னாலான தேச சேவையை நானும் செய்ய உத்தேசித்திருக்கிறேன் !” (ப.279)
இராமாயணத்தில் இராமர் தம்மைப் பின் தொடர்ந்த அயோத்திவாசிகள் தூங்கும்போது போனதுபோல் தாமும் அர்த்த ராத்திரியில் கிளம்பிப் போய்விட வேண்டியது தான், என்று சாஸ்திரி முடிவு செய்திருந்தார்.
இவ்வாறு இராமாயணச் செய்திகளை ஆசிரியர் கல்கி உவமையில் கையாண்டிருக்கும் திறம் பாராட்டுதற்குரியது.
இப்புதினத்தின் மூலமாகக் கல்கியின் மொழிநடை எளிமையானது என்பதையும், வருணனை நயம் மிக்கது என்பதையும் அறிந்து கொள்ளலாம். நடைமுறைச் சமுதாயத்தில் காணப்படும் யதார்த்தமான பாத்திரங்களையே தமது புதினத்தில் கல்கி இடம் பெறச் செய்துள்ளார் என்பதையும் அறியலாம். கல்கியின் புதினப் புலமைக்குத் தியாக பூமி ஓர் எடுத்துக்காட்டு என்பதில் ஐயமில்லை. தியாகபூமி திரைப்படமாக்கப் பட்டது. அப்படம் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டுப் பின் தடை விலக்கப்பட்டது என்பது இங்குக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
பாடம் - 5
இவர் பொருந்தாத திருமணத்திற்கு ஆட்பட்டு வருந்தும் ஒருத்தியைச் சிநேகிதியில் சொல்லோவியமாக்கிக் காட்டுகிறார். சித்திரப் பாவை என்னும் நாவலில் நாகரிகத்தின் குழப்பத்தையும், பணத்தின் ஆதிக்கத்தையும், அவை கலைஞனைத் தாக்கும் தன்மைகளையும் அகிலன் விளக்குகிறார். இவர் வேங்கையின் மைந்தன், கயல்விழி, வெற்றித்திருநகர் போன்ற வரலாற்று நாவல்களையும் எழுதியுள்ளார். முதன்முதலாக ஞான பீடப் பரிசை சித்திரப்பாவை என்ற படைப்பிற்குப் பெற்றவர். அகிலனின் சமுதாய நாவலான பொன்மலர் என்ற நாவலைப் பற்றி இப்பாடத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சங்கரி
அன்று டாக்டர் சங்கரி வழக்கத்திற்கு மாறாக மிகவும் தாமதமாக இரவு ஏழுமணிக்கு வீடு திரும்பினார். வீட்டு வேலைக்காரி முனியம்மாள் சங்கரிக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறாள். ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கச் சென்ற சங்கரியின் வீட்டுக் கதவை நள்ளிரவில் ஓர் இளைஞன் தட்டினான். தன் மனைவி பிரசவ வலியால் துடிப்பதாகவும்; அவளைக் காப்பாற்ற வேண்டும் என்றும் சொன்னான். சங்கரி அவனுடன் புறப்பட்டுச் சென்று, கடவுளை வேண்டிக் கொண்டு கடமையில் ஒன்றினாள். சில நிமிடங்களில் தாய்க்கும் சேய்க்கும் புத்துயிர் அளித்தாள்; வீடு சென்று ஓய்வு எடுத்துவிட்டு அடுத்தநாள் காலை மருத்துவ மனைக்குப் புறப்பட்டாள்.
மருத்துவமனையில் அவளுக்காகப் பிரசவம் ஒன்று காத்திருந்தது. அப்பெண்ணின் பெயர் காமாட்சி. வசதி படைத்தவள். பிரசவம் முடிந்து பிறந்த பெண் குழந்தையைத் தந்தை திருமூர்த்தியிடம் செவிலிப்பெண் (நர்ஸ்) காட்டி வந்தாள். அப்போது சங்கரி திருமூர்த்தியைக் கண்டாள்; திடுக்கிட்டாள்.
குருமூர்த்தி
அன்று வேலைகள் முடிந்து வீடு வந்து சேர்ந்த சங்கரி கதவை உட்புறம் தாழிட்டுவிட்டு அலமாரியிலிருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள். தற்போதுள்ள திருமூர்த்தியின் உருவத்தில் பத்து வருடத்தினைக் கழித்தால் தோன்றும் உருவம் அப்புகைப்படம். அப்புகைப்படத்தில் இருப்பவன் பெயர் குருமூர்த்தி. திருச்சியில் மாணவியாக இருந்தபோது இவள் அழகில் மயங்கிய இளைஞர்களுள் குருமூர்த்தியும் ஒருவன். அவனிடம் இருந்த பணம் அவனுக்கு விடாமுயற்சியையும், நம்பிக்கையையும் தந்தது. எதிர்காலத்தின் இனிய கனவுகளை ஏற்படுத்திய அவனுக்காக அலங்கரித்த காலம் போய் இப்போது இவள் ஓர் உறுதியுடன் வாழ்கிறாள். மருத்துமனையில் அவளைச் சுற்றியிருப்போருக்காக வாழ்கிறாள்; அதில் அவள் மனநிறைவு காண்கிறாள்.
மாலையில் மருத்துவமனையில் இருந்து கிளம்பும்போது ஐந்து வயதுக் குழந்தை ராதா காமாட்சியை அணைத்து நிற்கின்றாள். அக்குழந்தையின் சாயல் சங்கரியை மெய்ம்மறக்கச் செய்கிறது. அவள் அக்குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுகிறாள். வீடு வந்து சேர்ந்த பிறகும் குழந்தையின் முகம் அவள் மனதில் வந்து சென்றது. அப்போது தொலைபேசியின் மணி அடிக்கவே எடுத்துப் பேசிய சங்கரி மறுமுனையில் பேசிய திருமூர்த்தியின் குரலில் குருமூர்த்தியின் குரலைத்தான் கேட்டாள். குருமூர்த்தி இறந்த செய்தியையும் அவன் திருமூர்த்தியின் சகோதரன் என்பதையும் அப்போது அவள் அறியவில்லை.
லஞ்சம்
சங்கரியின் திறமையை எண்ணி அவளைக் குடும்ப டாக்டராக்கிய திருமூர்த்தி, அவளுக்கு ஆயிரம் ரூபாய் அளித்தான். நன்கொடை என்று எண்ணிய சங்கரி அது தனக்காக அளிக்கப்பட்டது என்று அறிந்தவுடன் தன் குறிப்புப் புத்தகத்தில் லஞ்சம் வாங்கிய கள்ளப்பணம் ஆயிரம் என்று எழுதினாள்.
திருஞானத்தின் கடிதம்
ஒருநாள் வீட்டில் சங்கரி புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது ஒரு துண்டுக் காகிதத்தில் திருஞானம் – திருச்சி என்பதைப் பார்த்தவுடன் முகமலர்ச்சியுற்று அவனை உள்ளே வரச் சொல் என்று முனியம்மாவிடம் கூறினாள். சங்கரியின் உறவினனான அவன் டெல்லியில் மருந்துக் கம்பெனியில் வேலை பார்ப்பதாகக் கூறினான். வெகுநேரம் உரையாடி விட்டு உணவு உண்டு பின் விடைபெறும் முன், அவன் ஒரு கடிதத்தை விட்டுச் சென்றதையும் சங்கரி கவனித்தாள். அக்கடிதம் அவளின் நிலையை எடுத்துரைத்தது.
திருச்சியில் குருமூர்த்தியுடன் பழகிய நேரத்தில், திருஞானம் குருமூர்த்தியுடன் பழகுவதில் கவனம் தேவை என்றான். சங்கரிக்கு இதில் உடன்பாடு இல்லை. சங்கரியின் அப்பா இறந்தவுடன் தற்கொலைக்கு முயலமாட்டேன் என்று சத்தியம் வாங்கிய அவன் அங்கிருந்து நகர்ந்தான். “உனக்கு என்று ஒரு துணை வேண்டும்” என்றவனிடம் அவள் “எனக்கு யார் துணையும் தேவையில்லை” என்று மன உறுதியுடன் கூறினாள். அவன் இவ்வாறு அறிவுரை கூறி, சத்தியம் வாங்காமல் இருந்திருந்தால் கல்லூரித் தலைவியிடம் அடைக்கலம் புகுந்து அவள் இந்த நல்ல நிலையை அடைந்திருக்க மாட்டாள்.
குழப்பம் தீர்ந்தது
பிறந்த திருமூர்த்தியின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவின் போது திருமூர்த்தி குருமூர்த்தியோ என்ற சங்கரியின் குழப்பம் அவனின் தங்கை ராஜேசுவரியின் மூலம் நீங்கிற்று. அவள் குருமூர்த்தி இறந்த செய்தியை அறிந்து கொண்டாள். அவ்விழாவில் திரைப்படத் துறையினரும், பெரிய மனிதர்களும் கலந்து கொண்டனர்.
குமுதா
ஒருநாள் திருமூர்த்தி தொலைபேசியில் சங்கரியை விரைவாக வரவேண்டும் என்று கூறிவிட்டு நேரில் வந்து குமுதா வீட்டிற்கு அழைத்துச் சென்றான். குமுதா அன்பும் ஆதரவுமற்ற பெண். அவனால் சீரழிக்கப்பட்டுக் குழந்தைக்குத் தாயானவள். திருமூர்த்தி அவளைச் சாகடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவன். இதற்குச் சங்கரியைப் பங்காளியாய் ஆக்க எண்ணினான். இதனை அறிந்து கொண்ட சங்கரி அவனது விருப்பத்தை நிறைவேற்றுவதாகக் கூறினாள். அதற்காக அவளுக்குக் கார் வாங்கிப் பரிசளித்தான். குமுதா வீட்டிற்குச் சென்று வைத்தியம் பார்த்த சங்கரி மனத்தில் ஒரு திட்டம் தீட்டினாள். அதன்படி ருக்மணியம்மாள் தனது ஓய்விற்குப் பிறகு நடத்தும் குழந்தைகளுக்கான சிறிய பள்ளியில் குமுதாவை ஒப்படைத்தாள்.
குமுதாவைக் காணாத திருமூர்த்தி சங்கரியிடம் தொலைபேசியில் கேட்க, “எல்லாம் கச்சிதமாய் முடிந்துவிட்டது. நீங்கள் பயப்பட வேண்டாம்” என்று உற்சாகத்தோடு கூறத் திருமூர்த்தி பேயறைந்தவன் போலானான்.
திருமூர்த்தியும் சங்கரியும்
திருமூர்த்தி சங்கரியைத் திரைப்படத் துறையில் நடிக்க வைத்து முன்பணமாக ஒருலட்சம் ரூபாய் வரை வாங்கலாம் என்று எண்ணினான். சங்கரி பெங்களூரில் நடக்கும் மாநாட்டிற்குச் செல்வதாகக் கூறியவுடன், தனது பங்களாவில் தங்க ஏற்பாடு செய்துவிட்டு மறுநாளே அவனும் அங்கு வந்து சேர்ந்தான். அடுத்து வரும் நாட்களில் மாநாட்டு வேலைகள் முடிந்து சங்கரி ஊர் திரும்ப ஆயத்தம் ஆனபோது, திருமூர்த்தி அவளுக்காகக் கடை கடையாக ஏறி இறங்கி வாங்க வேண்டியவற்றை வாங்கிய பின் பங்களாவிற்குத் திரும்பினான். தான் வாங்கி வந்த வைர வளையல்களை வலியச் சென்று தானே அவள் கையில் அணிவித்தான். பெங்களூரில் இருந்து வந்த சங்கரியைக் காணத் திருஞானம் காத்திருந்தான்.
சங்கரி திருமூர்த்தியுடன் பழகுவதைத் தடுக்க ஏனோ திருஞானம் தயக்கம் காட்டினான். திருஞானம் தனக்கு வேலை இல்லை என்றான். அவள் ‘தான் திருமூர்த்தியிடம் கூறி வேலை வாங்கித் தருவதாகக்’ கூறினாள்.
திருஞானம் எந்த நோக்கத்திற்காகத் திருமூர்த்தியிடம் வேலைக்கு அமர்ந்தானோ அது திருமூர்த்தியின் தங்கை ராஜேசுவரியால் எளிமையாயிற்று. ஏனெனில் அவள் திருஞானத்திடம் அன்பு கொண்டாள்.
சங்கரி திருச்சி சென்று வரும் செய்தி திருமூர்த்தியை உறுத்த, அதைப் பற்றித் திருஞானத்திடம் கேட்டான். தனக்கு எதுவும் தெரியாது என்றும், அங்கு சங்கரிக்கு உறவினர் எவரும் இல்லை என்றும் கூறினான். முனியம்மாவிடம் கேட்டான். அவள் தன் அம்மாவைக் காணச் சென்றுள்ளதாகக் கூறியவுடன் இவனது சந்தேகம் வலுப்பெற்றது. ஏனெனில் சங்கரியின் தாயார் இறந்து விட்டார் என்பதை அறிவான். காரணம் அறிய மோட்டார் சைக்கிளில் சென்றான். ஆனால் கார் பாதி வழியிலேயே திரும்பிவர, அவன் சந்தேகம் மேலும் வலுவடைந்தது.
சங்கரியைப் பற்றித் தெரிந்து கொள்ளச் செய்த பல முயற்சிகளில் ஒன்றாக உல்லாசப் பயணமும் இடம் பெற்றது. அச்சமயம் சங்கரி திருமூர்த்தியின் முறை கேடான செய்கைகளைக் கூறிச் சாடினாள். அப்போது சங்கரி என்ற மகாசக்தி, அவனது இரத்தத் திமிர் அனைத்தையும் உறிஞ்சி உமிழ்ந்து விட்டதை உணர்ந்தான்.
ஒரு முறை ‘சாரதாவுக்கு உடல்நிலை சரியில்லை; உடனே புறப்பட்டு வரவும்’ என்னும் அவசரத் தந்தி திருச்சியிலிருந்து சங்கரிக்கு வர அவள் பதற்றத்தோடு புறப்பட்டாள். ஒரு குறிப்பு எழுதித் திருச்சி செல்லும் விஷயத்தைத் திருஞானத்துக்குத் தெரிவித்து அங்கு வரக் கூறியிருந்தாள். சாரதா சங்கரிக்கும், குருமூர்த்திக்கும் பிறந்தவள். சாரதாவைக் கண்டவுடன் சங்கரி “அம்மா இனி உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன் உன்னையும் அழைத்துச் செல்வேன்” என்றாள். இது திருஞானத்திற்குத் தெரியாது.
திருச்சியில் திருஞானத்தைச் சந்தித்தவுடன் தன் இரகசியங்கள் அனைத்தையும் கூற நீண்ட கடிதம் எழுதினாள். ஏனெனில் திருஞானம் ஒரு உளவுத்துறை அதிகாரி என்பதைச் சங்கரி அறிந்திருந்தாள். மேலும் குமுதா என்ற பெண் கொலை செய்யப்படவில்லை, பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாள் என்பதையும், திருமூர்த்தியால் கொடுக்கப்பட்ட குழந்தையுடன் இருப்பதாகவும், அவன் பெரும் குற்றவாளி என்பதையும் தெளிவுபடுத்தி எழுதினாள்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சங்கரி, சாரதா, திருஞானம் மூவரும் காரில் வரும்போது அவர்களது காரை ஒரு கார் பின் தொடர்ந்து வருவதைக் கவனித்த சங்கரி தன் ஓட்டுநர் ரங்கனிடம் அதனைத் தவிர்க்குமாறு கூறினாள். அவன் சாமர்த்தியமாக ஓட்டிப் பின் தொடர்ந்த காரை விபத்துக்குள்ளாக்கினான். திருமூர்த்தி உளவு பார்க்க அனுப்பிய கார் அது.
திருமூர்த்தியின் முடிவு
விவரங்கள் அனைத்தையும் அறிந்த திருமூர்த்தி தான் மாட்டிக் கொண்டதை உணர்ந்தான். பின்விளைவுகளுக்குப் பயந்து அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி, உயிரை இழந்தான்.
திருஞானமும் சங்கரியும்
திருஞானத்துக்கு டெல்லிக்கு வரச் சொல்லி அழைப்பு வந்தவுடன், செல்வதற்குமுன் சங்கரியிடம் தான் அவளை விரும்புவதாகத் தெரிவித்தான்.
இரவு திருஞானத்தை வழியனுப்ப விமான நிலையம் சென்ற சங்கரி தான் இருக்க வேண்டிய இடத்தில் ராஜேசுவரிக்கு இடம் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். விமானம் மேலே பறக்க ஏனோ அவள் உள்ளம் வானத்தில் சிறகடித்து விமானத்தோடு ஒன்றிப் பறந்தது.
(2)பெண்ணின் (சீரழியும்) நிலை குறித்த படைப்பாளரின் பரிவுணர்ச்சி
(3) சமுதாயத்தில் பணக்காரர்களின் நிலை
(4) பொருளாதாரச் சீரழிவு
(5) கருப்புப் பணம், இலஞ்சம், கலப்படம்
போன்ற இவற்றை உள்ளடக்கிய கதைக்கருவை இப்புதினம் கொண்டுள்ளது.
அகிலனின் இந்த நாவல் சமுதாயத்தில் காணப்படும் சீரழிவுகளைத் தோலுரித்துக் காட்டும் எதார்த்தப் போக்கினைக் கதைக் கருவாகக் கொண்டுள்ளது.
சங்கரி
இருபத்து ஐந்து வயது நிரம்பிய சங்கரி அன்பு, தயை, கடமை, உதவி புரியும் பண்பு, மனஉறுதி ஆகிய பண்புகளைப் பெற்றவள். பொன்னுக்குரிய கடினமும், மலருக்குள்ள மென்மையும் ஒருங்கே பெற்றவள்.
சங்கரியின் சொல்லும், செயலும் படிப்போரைத் திகைக்க வைக்கின்றன. ஏனெனில் அவள் நல்லவர்களோடு நல்லவளாயும், பொல்லாதவர்களோடு பொல்லாதவளாயும் செயல்படுகிறாள்.
அவள் திருமூர்த்தி கொடுக்கும் பணத்தைப் (ஆயிரம் ரூபாய்) பத்திரப்படுத்தும் நிலையில் பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவளாக உள்ளாள்.
பணத்தின் அருமை, அதன் வலிமை, அதன் பெருமை யாவும் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவளின் இயல்புகளை, “பேச்சுக்களும், செயல்களும் மட்டும் கண்டு முகம் சுளிக்காதீர்கள். உள்ளே எரியும் தணலை மறந்துவிட்டு வெறும் சாம்பல் என்று நினைக்காதீர்கள்” என்ற கூற்றிலிருந்து அறியலாம்.
திருமூர்த்தி
காமாட்சியின் கணவனான திருமூர்த்தி வாட்ட சாட்டமான உருவமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவன். வெளித் தோற்றத்தில் அமைதியானவன் போலக் காணப்பட்டாலும் அவனது விழிகள் அவனது அமைதியற்ற தன்மையினைப் பறைசாற்றின. குறிப்பிட்ட சில மணிநேரங்களிலேயே பணம் புரட்டிடும் வித்தையில் கைதேர்ந்தவன்.
அவன் மூலதனம் இல்லாதவர்களுக்கு மூலதனம் அளித்து அவர்களால் பணம் சம்பாதித்து அவர்களைத் தன் வலைக்குள் வைத்து ஆட்டி வைப்பவன்.
அவன் இயற்கையாகவே எதையும் குறுக்கு வழியில் விரைவாக முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுபவன் அவன் என்பது, “திருமூர்த்தியை நான் தனிநபராகக் கருதவில்லை. திருட்டுக் கூட்டத்தின் பிரதிநிதிகளில் அவர் முக்கியமானவர்” என்னும் சங்கரியின் கருத்தின் மூலம் வெளிப்படுகிறது.
தன் பணத்தின் மீது நம்பிக்கை கொண்டவன்; புகழினை விரும்பிப் பணத்தைக் கொடுத்துப் புகழ் தேடுபவன்.
இறுதியில் அவன் தன் சட்ட விரோதச் செயலினால் தன் புகழுக்கு இழுக்கு நேர்ந்திடுமோ என்ற பயத்தில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொள்கிறான். திருமூர்த்தி என்பவன் நீதிக்குப் புறம்பான செயல்களைப் புரிபவன், பிறரை ஏமாற்றி அதில் இன்புறும் வஞ்சக நெஞ்சினன். பெண்மையைத் துரும்பாக நினைப்பவன்.
திருஞானம்
சங்கரியின் உறவினனான திருஞானம், குடும்ப நிலையை உணர்ந்தவன். அவன் தன் படிப்புச் செலவுக்காகக் காலையில் வீடு வீடாகச் சென்று பத்திரிக்கை போட்டும், பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தும் பணம் தேடுகிறான்.
அவன் கூர்ந்து நோக்கி ஆராயும் மனம் படைத்தவன் என்பது சங்கரி குருமூர்த்தியுடன் பழகுவதைக் கண்டிக்கும் போது புலப்படும். “குருமூர்த்தியிடம் பழகுவதில் கவனம் தேவை, எது உண்மை, எது போலி என்று உரைத்துப் பார்த்துத் தெரிந்து கொள்” என்ற கூற்று இதற்குச் சான்று.
திருஞானம் சங்கரியைக் காதலியாக ஆக்கிக் கொள்ள விரும்பினான். ஆனால் அவளிடம் கூறவில்லை. கட்டாயப்படுத்தவும் இல்லை. இருப்பினும் அவளை யாரேனும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதில் அக்கறையுடன் இருந்தான்.
திருஞானம் இரகசியத்தைக் காப்பவன். அவன் உளவுத்துறை அதிகாரியாய் வந்த இடத்தில் சங்கரியைக் கண்டதும், கல்லூரி நட்பை அவன் உரிமையாய் எடுத்துக் கொள்ளவில்லை.
சங்கரியின் உயர்வுக்குக் காரணம் திருஞானத்தின் ஊக்கமும், அறிவுரையும் தாம் எனலாம்.
நாவல் முழுதும் இடம்பெறும் திருஞானம், சங்கரியின் நல்லெண்ணத்திற்குப் பாத்திரமானவன். திருஞானம் தன்னிலை வழுவாத தகைமையன் ஆவான்.
இந்நாவலில் குருமூர்த்தி, முனியம்மாள், இராஜேசுவரி ஆகியோர் துணை மாந்தர்களாக அமைகின்றனர்.
குருமூர்த்தி
சங்கரியின் அன்பிற்குரிய கதாபாத்திரம் குருமூர்த்தி. அவனிடம் இருந்த பணம் அவனை விடாமுயற்சியும், நம்பிக்கையும் உடையவனாகத் திகழச் செய்தது. ஓராண்டுக் காலம் திருச்சியில் படிப்பின் போது சங்கரியை விடாமுயற்சியுடன் தொடர்ந்து அவளுக்கு இனியவன் ஆனான்.
பணம்தான் குருமூர்த்தியின் காலத்தையும், இடத்தையும், சூழலையும், வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது என்பதைத் திருஞானம் சங்கரியிடம், கூறும் “நீ பழகுகிற குருமூர்த்தியின் உலகம் உனக்குத் தெரியாது” என்பது வாயிலாக அறிகிறோம்.
திருமூர்த்தியின் சிறிய குழந்தையின் பெயர்சூட்டு விழாவின் போது தான் திருமூர்த்தியும் குருமூர்த்தியும் இரட்டையர்கள் என்பதும், குருமூர்த்தி பர்மாவில் யாரோ ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்பதும் சங்கரிக்கு தெரிய வருகிறது.
மிகவும் குறுகிய காலமே கதையில் வந்தாலும் இப்பாத்திரம் சங்கரியுடன் தொடர்புடையதாயும், நாவலுக்குத் திருப்பு முனையாகவும் அமைகிறது.
முனியம்மாள்
தாய்மையின் சிறப்பிற்கு இலக்கணமாகத் துணைமாந்தர் வரிசையில் வரும் பாத்திரப் படைப்பு முனியம்மாள் பாத்திரமாகும். சங்கரியிடம் தாயின் பரிவைக் காட்டிப் பணிவிடை செய்பவள் முனியம்மாள்.
“வீட்டு முகப்பில் வழிமேல் விழிவைத்துக் கொண்டு வேலைக்காரி முனியம்மாள் காத்திருந்தாள்” என்னும் வரி தாய்மைக்குரிய பண்பை வெளிக்காட்டுகிறது. இவள் வளர்ப்புத் தாயாக சங்கரிக்கு அமைகிறாள்.
களைப்பு மிகுதியாக இருந்த சங்கரியின் நெற்றியில் கை வைத்துப் பார்த்து விட்டு, “மிளகும் பூண்டும் தட்டிப் போட்டு ரசம் வைத்துள்ளேன், பேசாமல் சாப்பிட்டுவிட்டுப் படுத்துத் தூங்குங்க” என்கிறாள். இதில் தாய்மையின் அக்கறை, கண்டிப்பு, அன்பு வெளிப்படுகிறது.
சங்கரியின் வீட்டுக் கதவை யாரோ இரவில் தட்ட, முனியம்மாள் “டாக்டர் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அவர்களை இப்போ பார்க்க முடியாது” என்று கூறுமிடத்தில் கண்டிப்பு மிகுந்த தாயைக் காணமுடிகிறது.
அவள் கிளம்பும் போது, “இந்த இரவு வேளையில் தனியாகச் செல்ல வேண்டாம், நானும் உடன் வருகிறேன்” என்று கூறும்போது தாயாகவே மாறிவிடுகிறாள்.
திருஞானம் வந்த விவரத்தை முனியம்மாள் கூற, சங்கரி உடனே உள்ளே அனுப்புமாறு கூற முனியம்மாளுக்கு வியப்பு ஏற்படுகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு “ஐயாவுக்கும் சேர்த்துச் சமையல் செய்துடட்டுமா” என்னும் இடத்தில் இவளின் புத்திக் கூர்மை வெளிப்படுகிறது.
துணைமாந்தர்களில் சிறப்பிடம் பெறும் பெண்பாத்திரம் முனியம்மாள் எனலாம்.
ராஜேசுவரி
திருமூர்த்தியின் தங்கையான ராஜேசுவரி, இருபது வயது நிரம்பிய நாகரிகப் பெண். தன் அண்ணன் திருமூர்த்திக்கு நேர்மாறான நல்ல குணம் கொண்டவள். எதையும் வெளிப்படையாகப் பேசும் அப்பாவிப்பெண். இதனால்தான் சங்கரி குருமூர்த்தியும், திருமூர்த்தியும் இரட்டையர்கள் என்பதையும், குருமூர்த்தி இறந்த செய்தியையும் அறிய முடிந்தது.
மேலும் திருஞானம் ராஜேசுவரியின் வாயிலாக, திருமூர்த்தி சட்ட விரோதமான செயல்களைச் செய்கிறான் என்பதை அறிய முடிகிறது. அவளின் வெளிப்படையான பேச்சினால் தான் பல உண்மைகள் வெளியாகின்றன.
இந்நாவலைப் படிக்கும் வாசகர்களின் சந்தேகங்கள் இராஜேசுவரியின் வாயிலாகத் தீர்க்கப்படுகின்றன.
இதில் குமுதா, காமாட்சி, குழந்தை ராதா, ரங்கன் ஆகியோர் சார்புநிலை மாந்தர்களாக இடம் பெறுகின்றனர்.
குமுதா
நாவலின் இடைப்பட்ட காட்சியில் சிறிது நேரம் வந்து போகும் அன்பும் ஆதரவும் அற்ற அபலைப் பெண் குமுதா. முரட்டு சுபாவம் உள்ளவள் என்று திருமூர்த்தியால் குற்றம் சாட்டப்பட்டவள்.
பெற்றோர் இல்லாத குமுதா திருமூர்த்தியை நம்பி வந்தாள். அவனது முப்பது நாள் அன்பில் வாழ்ந்ததற்கு அடையாளமாகக் கர்ப்பிணி ஆனவுடன் அவனது அன்பில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தாள்.
டாக்டர் சங்கரி, திருமூர்த்தியின் வற்புறுத்தலின் பேரில் குமுதாவைப் பார்க்க வருகின்றாள். அவளிடம் குமுதா, தான் உடனடியாகச் செத்துப் போவதற்கு மருந்து கொடுங்கள் என்றும், இனிச் சித்திரவதைப்பட முடியாது என்றும் மன்றாடுகிறாள்.
“சாவு சீக்கிரம் வரவேண்டும்;
சிரமமில்லாமல் வரவேண்டும்”
என்ற சொற்கள் அவளின் மனநிலையை உணர்த்தும்.
“பிறர் கேலிக்கு ஆளாகாமல் என்னைக் காத்துக் கொள்ள நீங்கள் மருந்து கொடுங்கள்” என்று வேண்டியவளுக்கு ஆறுதலாக, ருக்மணி அம்மாள் நடத்தும் சிறிய பள்ளியில் குமுதாவை ஒப்படைத்தாள் சங்கரி.
டாக்டர் சங்கரியால் குமுதாவிற்கும், அவளது குழந்தைக்கும் ஒரு வழி பிறக்கிறது. ஆண் ஆதிக்கச் சமுதாயத்தில் கொடுமைக்கு உள்ளாகும் பெண் இனத்தின் அடையாளச் சின்னமாக உருவாக்கப்பட்டுள்ள பாத்திரம் குமுதா. இப்பாத்திரம் மூலமாக, தலைமைப் பாத்திரமாகிய சங்கரியின் இரக்கப்பண்பினையும், போர்க்குணத்தையும் புலப்படுத்தும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.
காமாட்சி
அநீதி, அக்கிரமங்கள் போன்றவற்றைத் தொழிலாகக் கொண்ட திருமூர்த்தியின் மனைவி காமாட்சி. வேலை செய்யாமல், வீட்டிற்குள் கூட நடமாடாமல் சோபாவும் தானுமாக வாழும் செல்வச் செழிப்பு மிக்க பெண்மணி. பிரசவத்திற்காக லட்சுமி நர்ஸிங் ஹோமில் சேர்ந்து டாக்டர் சங்கரியின் மேற்பார்வையில் இருந்தவள். நாவலின் தொடக்கக் காட்சிகளில் வருபவள்.
நாவலின் முதன்மை மாந்தர்கள் சந்தித்துக் கொள்ளக் காரணமாய் இப்பாத்திரம் அமைகிறது.
குழந்தை ராதா
காமாட்சியின் ஐந்து வயதுப் பெண் ராதா. சிறிது நேரமே சில காட்சிகளில் வந்து செல்லும் குழந்தை ராதாவின் முகம் டாக்டர் சங்கரியின் மனத்தைக் கவர்ந்து விடுகிறது. அக்குழந்தையே திருமூர்த்தியின் குடும்பத்தோடு சங்கரி நெருங்கிப் பழக வாய்ப்பினை ஏற்படுத்தியது.
ரங்கன்
குப்பத்தில் குடியிருக்கும் ஏழை இளைஞன் ரங்கன். தன் மனைவிக்குப் பிரசவம் பார்த்த டாக்டர் சங்கரியிடம் நன்றியுள்ளவனாகத் திகழ்கிறான். ரங்கன் தன்னால் முடிந்தது என்று சிறிது பணத்தை டாக்டர் சங்கரியிடம் அளிக்க, அதனைத் தனது இரக்கப் பண்பினால் ஏற்க மறுக்கிறாள். மேலும் அவனுக்கு உதவ நினைத்து, அவனுக்கு ஓட்டுநர் வேலை அளிக்கிறாள்.
ரங்கன் திருமூர்த்தியின் சதித் திட்டத்தை அழிப்பதில் டாக்டர் சங்கரிக்கு உதவுகிறான்.
இவ்வாறு நாவலில் இடம் பெறும் ஒவ்வொரு கதைமாந்தரும் முக்கியம் என்றே கருதப்படும் வகையில் அவர்களை அகிலன் உருவாக்கியுள்ளார்.
(1) பெண்மை நோக்கிய சமுதாயம்
(2) பொருளாதாரம் நோக்கிய சமுதாயம்
மானுடத்தின் சக்தி எனப் போற்றப்படும் பெண்மை, இந்நாவலில் காணப்படும் சமுதாயத்தில் எங்ஙனம் சித்திரிக்கப்படுகிறது என்பதை இங்குக் காண்போம்.
(1) பெண்மையின் மகத்துவம்
(2) பெண்மையின் சீரழிவு
(3) பெண்மை பற்றிய தவறான கண்ணோட்டம்
என்ற மூன்று தலைப்புகள் வழியாக மானுடம் நோக்கிய சமுதாயம் இங்கு விளக்கப்படுகின்றது.
பெண்மையின் மகத்துவம்
இந்நாவலில் பல பெண் கதைமாந்தர்கள் இருப்பினும் உன்னதக் கதைமாந்தரான டாக்டர் சங்கரியின் வாயிலாக நாவலாசிரியர் பெண்மையின் மகத்துவத்தை உணர்த்துகிறார்.
அவளை அன்பு, தயை, கடமை, மனவுறுதி, சுறுசுறுப்பு, பொறுப்புணர்ச்சி மிக்கவளாய்க் காட்டுகின்றார்.
“அவளது ஆற்றலும் பொறுப்புணர்ச்சியும் சுறுசுறுப்பும் ஆஸ்பத்திரியின் தலைவிக்குத் தனியான பரிவைத் தேடிக் கொடுத்தன.”
“அவசரமென்றால் டாக்டர் சங்கரிக்கு ஆஸ்பத்திரியிலிருந்து ஆள்தேடிவரும். முகம் சுளிக்காமல் போய்க் கவனித்து வருவாள்” என்ற வரிகள் தன்னலம் கருதாது பிறர் நலம் கருதும் அவளின் பண்பையும், பிற உயிர்கள் மீது அவளுக்கு உள்ள அக்கறையையும், அன்பையும் புலப்படுத்தும். சங்கரிக்கு அன்பு, தயை, கருணை போன்ற பண்புகள் காணப்பட்டாலும் நல்லவர்களுக்கு நல்லவளாயும், பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவளாயும் அவள் காணப்படுகிறாள்.
தமக்கு எதிரான இழிவை ஏற்றுக் கொண்டு கசங்கி உதிரும் மென்மலராக இல்லாமல், எதையும் எதிர்த்துப் போராடும் வலிமை கொண்ட பொன்மலராகத் திகழும் பெண்மையை டாக்டர் சங்கரி உருவில் காண்கிறோம்.
“காரியம் முடிந்தவுடன் கசக்கி எறிந்துவிடக் கூடிய கறிவேப்பிலைக் கொழுந்தாகத் தான் இதுவரையில் அவன் எந்த மனிதரையும் பயன்படுத்தியிருக்கிறான்; சங்கரியோ எடுத்த எடுப்பிலேயே அவனுக்குத் தாராளமாகக் கசப்பு மாத்திரைகளைக் கொடுத்து விட்டாள்” என்பதன் மூலம் இது தெளிவுறும்.
பெண்மையின் சீரழிவு
பெண்களைப் போகப் பொருளாகப் பயன்படுத்தும் சமுதாயத்தினையும் இந்நாவலில் காணமுடிகிறது.
பெண்ணின் பெருமையை உணராது அவர்தம் வாழ்வைச் சீரழித்து இன்பம் காணுபவன் திருமூர்த்தி. இவனால் சீரழிக்கப்பட்டவள் குமுதா என்னும் அன்பும், ஆதரவும் அற்ற பெண்.
வாழ்க்கையில் நம்பி ஏமாற்றப்பட்டுப் பின் நம்பி வந்தவனே தனக்கு எமனாக மாறும் நிலை கண்டு அஞ்சும் குமுதாவின் மனக்குமுறலை,
“எனக்குச் சோறு வேண்டாம்; துணி வேண்டாம்; மாடி வீடு வேண்டாம் என் வயிற்றில் ஏதோ ஒன்று பிறந்தால் அதனிடமாவது நான் அன்பு செலுத்தி வளர்க்கலாம்” என்ற வரிகள் விளக்குகின்றன.
குமுதாவின் உயிருக்கே உலை வைக்கக் கூடிய மருந்துகளைத் தன் கையாலேயே வாங்கிக் கொடுத்து அவள் வயிற்றுக்கருவை அழிக்க முயன்றான் திருமூர்த்தி. சங்கரியையும் இதில் பங்காளியாய் ஆக்கிக் கொள்ள எண்ணிப் பணத்தால் விலை பேசினான்.
பெண்ணைக் கொண்டே, பெண்ணைக் கொலை செய்ய விலை பேசிப் பெண்மையை இழிவுபடுத்துகிறான் திருமூர்த்தி. மேற்கண்ட செய்திகள் சமூகத்தில் பெண்களுக்கு நேரும் பெரும் சீரழிவை உணர்த்துகின்றன.
பெண்மை பற்றிய தவறான கண்ணோட்டம்
திருமூர்த்தி பணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் கொண்டவன். குமுதா விஷயத்தில் அவள் வாழ்க்கையைச் சீரழித்ததோடு அல்லாமல், சங்கரியையும் பணத்தால் கவர எண்ணினான்.
பெங்களூரில் நடக்கும் மாநாட்டிற்குச் சங்கரி செல்லப் போவதாகக் கூறியவுடன், திருமூர்த்தி தனது பங்களாவில் தங்க ஏற்பாடு செய்தான். அத்தோடு நில்லாமல் மறுநாள் தானும் அங்குச் சென்று தங்கினான்.
மாநாடு முடிந்து ஊருக்குப் புறப்பட வேண்டிய நாள் அன்று கடைவீதிக்கு அவளை அழைத்துச் சென்றான். தான் வாங்கிய வைர வளையல்களை வலியச் சென்று தானே அவள் கையில் அணிவித்தான். அப்போது சங்கரி அவனைப் புரிந்து கொள்ள வேண்டி, “என்னையும் குமுதா போன்றவள் என நினைக்கக் கூடாது” என்றவுடன்,
“இல்லை நான், நான், குமுதாவைப் போல் நடத்த மாட்டேன்… நீங்கள் விரும்பினால் உங்களை…”
என்று கூறுவதில் இருந்து, ‘எந்தப் பெண்ணாய் இருந்தாலும் அவள் பணத்துக்கு மயங்கி விடுவாள்’ என்ற அவனது தவறான நம்பிக்கை தெரிகிறது.
இவ்வாறாக, பெண்களைச் சிக்கலுக்கு உள்ளாக்கி அவர்களை ஏமாற்ற முயலும் ஆண்களையும், அதற்குப் பலியாகாத பெண்களையும் பெண்மை நோக்கிய சமுதாயத்தில் காணமுடிகின்றது.
கருப்புப்பணம், லஞ்சம், பதுக்கல்
நாவலின் தொடக்கப் பகுதியிலேயே திருமூர்த்தி சங்கரியிடம் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் அவளைப் பொறுத்தவரையில் அது கள்ளப் பணம்தான். அதனைச் சங்கரியிடம் லஞ்சமாகக் கொடுக்கின்றான். அதனை சங்கரி, “லஞ்சம் வாங்கிய கள்ளப்பணம் ஆயிரம் ரூபாய்” என்றுதான் குறிப்பிடுகிறாள்.
கணக்கில்லாமல் பணம் சேர்ப்பவர்கள் திருமூர்த்தியிடம் கொடுத்து வைக்கிறார்கள். “இவனிடம் கணக்கில்லாப் பணம் ஒரு கோடிக்கு மேல்” என்று கூறுவதிலிருந்து இவனின் கருப்புப் பணம், பதுக்கல் இவற்றினை அறியமுடிகிறது. மேலும் திருமூர்த்தியின் தங்கை ராஜேசுவரி தன் அண்ணனைப் பற்றிக் கூறும் போது,
“அண்ணாவோடு பழகுகிறவர்களில் பதுக்கல்காரர்கள், கள்ளக்கடத்தல் பேர்வழிகள், திருட்டு வியாபாரம் செய்கிறவர்கள் எல்லாரும் உண்டு. அவர்களுக்கு இவர்தான் பாதுகாப்பாக இருக்கிறார், உதவி செய்கிறார்” என்று கூறுகிறாள்.
இந்நாவலில் திருமூர்த்தி தன் கள்ளப் பணத்தைச் சங்கரிக்கு லஞ்சமாகக் கொடுக்கின்றான். வைர வளையல், மகிழ்வுந்து (கார்) என்று அவன் தன் பணத்தை விரயம் செய்கின்றான். மேலும் பணத்தினைப் பதுக்குகின்றவர்கள் திருமூர்த்தியிடம் கொடுத்து வைக்கின்றனர். அவன் அவற்றை மும்பையில் இருந்து கடத்தி வரப்படும் தங்கக் கட்டிகளாக மாற்றி அடுக்கி வைத்திருந்தான்.
இவை பொருளாதாரத்தில் அடித்தள மக்கள் சீரழிவு அடையவும், வறுமைக்குத் தள்ளப்படவும் காரணமாய் அமையும்.
கலப்படம், கள்ளக் கடத்தல்
திருமூர்த்தியும், அவனது கூட்டாளிகளும் வாங்கியிருக்கும் சொத்துக்களில் பெரும்பான்மை கள்ளப்பணத்தால் வாங்கப்பட்டிருந்தன. தரக்குறைவான போலிப் பொருட்களின் உற்பத்தி சமுதாயத்தில் கலப்படப் பொருளின் ஆதிக்கத்தை ஏற்படுத்தும். இதைத் தான் திருமூர்த்தியும், அவனது கூட்டாளிகளும் செய்தனர்.
“சமுதாயத்தில் வலுவிழந்து பாதுகாப்பு இல்லாமல் தவிக்கும் பெருங்கூட்டத்தினரான குடிமக்களை இவன் ஈவிரக்கம் இல்லாமல் உறிஞ்சி வளர்ந்திருக்கிறான். அவர்களைக் காப்பதற்காக உள்ள சட்டங்களை முறியடிப்பதற்கு இவன் எல்லா விதமான தந்திரங்களையும் கையாளத் தவறுவதில்லை. இவன் செலவு செய்து தேடும் செல்வாக்கு வளர்ந்து கொண்டு போவதே இவனுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது” என்று உளவுத்துறை அதிகாரியான திருஞானம் கூறுவதிலிருந்து இவனின் நிலையை அறியலாம். இதன்மூலம் சமுதாயத்தில் மேல்வர்க்கத்தினர் செய்யும் பதுக்கல் செயலால் பாதிக்கப்படப் போவது அடித்தட்டு மக்களே என்பதையும் பணக்காரர்கள் சட்டத்தை விலை பேசிவிடுகின்றனர் என்பதையும் அகிலன் உணர்த்துகிறார்.
விளம்பரவாதிகள்
மனிதன் புகழுக்கு மயங்குபவன். திருமூர்த்தியும் பணத்தைக் கொடுத்துப் புகழைத் தேடிக் கொண்டான்.
இவன் விழாக்களும், விருந்துகளும் நடத்தி மிகப்பெரிய பதவிகளில் இருந்தவரோடு எல்லாம் படம் பிடித்துக் கொண்டு, அதைப் பத்திரிக்கையில் வெளியிட்டு மற்றவரைப் பயமுறுத்தியவன்; ஐயாயிரம் கொடுத்துவிட்டு ஐம்பதாயிரம் செலவு செய்து விளம்பரம் செய்பவன். அவன் தன்னைப் பெரிய மனிதன் என்று மக்களிடம் காட்டத் தானே செலவு செய்து விளம்பரத்தைத் தேடிக் கொண்டான்.
சமுதாயச் சீரழிவு
லஞ்சம், ஆடம்பரப் பொருள்களின் சேர்க்கை, பஞ்சமாபாதகம் என்று சொல்லப்படுகிற குடி, சூது, விபசாரம், திருட்டு, கொலை முதலியவை, ரகசிய விருந்துகள், ஆடம்பர விருந்துகள், செல்வாக்குத் தேட மறைமுக லஞ்சங்கள் இவையே திருமூர்த்தியின் செலவுகள். சமுதாயத்தில் எங்ஙனம் தீமைகள் ஆட்சி செய்கின்றன என்பதை இவனின் பாத்திரப்படைப்பு எடுத்துக் காட்டுகிறது.
மேற்கண்ட இருநிலைகளில் அகிலன் தனது சமகாலச் சமுதாயத்தை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
‘பொன்மலர் நாற்றம் உடைத்து’ என்று நாம் எத்தனையோ முறை கேள்விப்பட்டிருக்கிறோம். பொன்னால் ஆன மலருக்கு நறுமணம் இருந்து விட்டால் எப்படி இருக்கும்? இருந்தால்தானே? என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் எளிதிலே வாடாமல் பொன்னிறம் பெற்று நெடுந்தூரம் மணம் வீசும் தாழம்பூவையே பொன்மலர் என்கிறார் நாவலாசிரியர் அகிலன்.
மணம் நிறைந்த பொன்மலர் போன்ற டாக்டர் சங்கரி இன்றைய உலகத்தில் பெண்ணுக்குள்ள சக்தியை நன்குணர்ந்தவள். பணத்தின் அருமை, அதன் வலிமை, அதன் பெருமை யாவும் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவ்வாறே அதன் சிறுமைகளையும், கொடுமைகளையும் அறிந்து கொண்டவள் அவள். எனவே இந்நாவலுக்குப் பொன்மலர் என்ற தலைப்பு மிகவும் பொருத்தமுடையது.
“நடுத்தர உயரம், தாழம்பூவின் நிறம், செதுக்கி வார்த்த செம்பொற் சிலை போன்ற உடல் வனப்பு, வட்டமான முகம், அதில் தாழை மடல் போன்ற விழிகள்”
என நாவலின் உட்பொருளோடு வருணித்திருக்கும் அகிலனின் திறம் பாராட்டுதற்குரியது. இது போன்ற பல வருணனைகள் இந்நாவலில் உள்ளன.
இந்நாவலில் டாக்டர் சங்கரியிடம், ராஜேசுவரி குருமூர்த்தி பற்றிய செய்திகளைக் கூறுவது பின்நோக்கு உத்தி முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவர் இக்காலச் சமுதாய வாழ்வின் ஒழுக்கக் கேடுகளையெல்லாம் மிகத் துணிவோடு வெளிப்படையாக எடுத்துப் பேசுகிறார். ‘அவரவர்களுடைய செய்கையின் பயனை அவரவர்கள் அனுபவிக்க வேண்டும்’ என்ற அறமுறைப் பழி வினையினைத் திருமூர்த்தி வாயிலாக ஆசிரியர் வெளிப்படுத்தும் திறன் உணர்ந்து மகிழத் தக்கது. கள்ளப்பணம் எந்தெந்த வகைகளில் எல்லாம் சமுதாயத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறது என்பதை நாவலாசிரியர் அகிலன் இந்நாவலில் பல காட்சிகளில் காட்டியுள்ளார்.
பாடம் - 6
சர் ஆர்தர் கானன் டாயில் அற்புதப் படைப்பான ஷெர்லாக் ஹோம்சைப் போன்று, திருவல்லிக்கேணி கோவிந்தன் என்ற ஒரு துப்பறியும் பாத்திரத்தைப் படைத்துள்ளார். இவர் நாவல் கதைப்போக்கில் சம்பவங்களை மர்மங்களாக்கி, அவ்வப்போது எதிர்பாராத மாறுவேடங்களைக் கதாநாயகனுக்குக் கொடுத்து, அந்த மாறுவேடங்களை வாசகர்கள் தெரிந்து கொள்ளாத வகையில் மறைத்துக் கதையை விறுவிறுப்பாகப் படைத்துள்ளார்.
புதினத்தின் கருப்பொருள்
நாவலாசிரியர் ரங்கராஜு மர்மங்களும், சிக்கல்களும் நிறைந்த கருப்பொருளைத் தெளிவாகக் கையாண்டுள்ளார். கொலையாளி யார் என்று விசாரிக்கும் போது ஒவ்வொருவர் மீதும் சந்தேகம் ஏற்படுவதும், பிறகு சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதும் சிறப்புடையதாகும்.
பொழுதுபோக்கிற்காக எழுதப்படும் நாவல்களில் வீரம் பலவீனத்தை வெல்வதாகவும், அறிவு வன்முறையை வெல்வதாகவும், தீமை அழிந்து நன்மை வெற்றி பெறுவதாகவும் மட்டுமே கதைக்கரு அமையும். இந்நாவலில் திருவல்லிக்கேணி கோவிந்தனின் அறிவாற்றல் வெற்றி பெறுவதாகக் காட்டப்பட்டுள்ளது.
ஒரு நாள் வாய்த்தகராறு முற்றி, பூபதி முதலியாரை வீட்டை விட்டு வெளியேறும்படி சுந்தர முதலியார் கூறுகிறார். சொத்துகள் கிடைத்தவுடன் பூபதி முதலியாரை மணந்து கொள்வதாக லீலாவதி கூறுகிறாள். மிரட்டலினால் லீலாவதியைச் சுந்தர முதலியார் மணக்கச் சம்மதிக்கின்றார். ஆனால் இத்திருமணத்தை வெறுக்கிறாள் விசாலாட்சி.
திருமணத்திற்குப் பிறகு சுந்தர முதலியாரின் போக்கு மாறுகிறது. லீலாவதி, விசாலாட்சிக்குப் பல கொடுமைகளைச் செய்து வருகிறாள். இறுதியில் விசாலாட்சியை வீட்டைவிட்டு வெளியேறும்படி கூறுகிறாள் லீலாவதி. இதனால் விசாலாட்சி தானே வீட்டை விட்டு வெளியேறுவதாகத் தன் தந்தையிடம் கூறி வெளியேறுகிறாள். இச்சம்பவத்தால் சுந்தர முதலியார் பித்துப் பிடித்தவர் போல் ஆகிவிடுகிறார். அலுவலகத்திற்குச் சென்று விசாலாட்சியைத் தேட ஆட்களை அனுப்புகிறார். இதற்கிடையே தன்னுடைய அலுவல்களையும் கவனித்துக் கொள்கிறார்.
சுந்தர முதலியாரின் பிணம்
மாலை ஏழு மணியளவில் மோஹன சுந்தரம் அண்ட் கம்பெனியின் அருகில் ஒரு அடையாளம் தெரியாத பிணம் கிடக்கிறது. இதைக் கண்ட போலிஸ்காரர் உடனே இன்ஸ்பெக்டருக்கு அறிவிக்கிறார். பிணத்தைக் கண்ட அனைவரும் இறந்தது சுந்தர முதலியாரென்று கூறுகின்றனர். அன்று வீட்டில் நடந்த சம்பவங்களால் புத்தி பேதலித்து இருந்த சுந்தர முதலியார்தான் தடுமாறி மாடியில் இருந்து விழுந்திருக்கலாம் என அனைவரும் எண்ணுகின்றனர். சுந்தர முதலியார் இறந்த தகவல் அக்கம்பெனியின் மற்றொரு பங்குதாரராகிய மோஹன முதலியாருக்கும், மருமகனான பூபதி முதலியாருக்கும் சொல்லப்பட்டது. இது தற்கொலையாக இருக்குமென்றே இன்ஸ்பெக்டர் முதலாக அனைவரும் நினைக்கின்றனர்.
மொட்டைக் கடிதம்
சுந்தர முதலியாரின் இறுதிச் சடங்கு நடக்கும் வேளையில் மோஹன முதலியாருக்கு மொட்டைக் கடிதம் ஒன்று வருகிறது. அதில் சுந்தரமுதலியார் இறப்பு தற்கொலை அல்ல! கொலை என்று எழுதியிருக்கிறது. இதைக் கண்ட மோஹன முதலியார் உடனே திருவல்லிக்கேணி துப்பறியும் கோவிந்தனை அழைக்கிறார். தன் நண்பரின் சாவில் உள்ள மர்மத்தைக் கண்டறியும்படி வேண்டுகிறார்.
துப்பறியும் கோவிந்தன்
இதே போன்று ஒரு மொட்டைக் கடிதம் இன்ஸ்பெக்டருக்கும் கிடைக்கிறது. அவர் இதற்குரிய விசாரணையைப் பின்னர் நடத்தலாம் எனவும் கூறுகிறார். பூபதி முதலியார் துப்பறியும் கோவிந்தனை அணுகி விசாலாட்சியைக் கண்டுபிடித்துத் தருமாறு வேண்டுகிறார். தன் தந்தையின் இறுதிச் சடங்கிற்கு விசாலாட்சி வராததால் அவள்மீது பலருக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.
துப்பறியும் கோவிந்தன் முதலில் சுந்தர முதலியார் தவறி விழுந்ததாகக் கூறப்படும் மாடியை ஆராய்கிறார். பிணம் கிடந்த இடத்திற்கு நேராக அம்மாடியில் சிவப்பு மண்படிந்த காலணிகளின் அடையாளம் காணப்படுகிறது. முன்கால் காலணியின் அடையாளம் முழுவதும், பின்கால் காலணியின் முனைமட்டும் காணப்படுகிறது. இவ்விரண்டு அடையாளங்களையும் குறித்துக் கொள்கிறார். சுந்தர முதலியாரின் அலுவலகத்திற்குச் சென்று அவருடைய பெட்டியை ஆராய்கிறார். மேனேஜரிடம் நட்பாகப் பேசி அலுவலகச் செய்திகளையும், முதலியாரின் வீட்டு விஷயங்களையும் தெரிந்து கொள்கிறார். அப்பொழுது கோபால்சாமிநாயுடு என்னும் ஏஜெண்டு பணத்தைக் கையாடல் செய்த விஷயத்தைத் தெரிந்து கொள்கிறார். பிறகு மோஹன முதலியாரிடம் சென்று “எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. ஆகையால் கண்டுபிடிப்பது கடினம்” எனக்கூறி விலகி விடுகிறார்.
சுப்பராயன் சாட்சியம்
இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் தனக்கு வந்த மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் விசாரணை செய்யப் போவதாகக் கூறுகிறார். கம்பெனியின் இரவு நேரக் காவலன் சுப்பராயனை விசாரிக்க, நடந்தவற்றை அவன் கூறுகின்றான். இறந்த அன்று சுந்தர முதலியார் பூபதி முதலியாருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், இருவருக்குமிடையே தகராறு மூண்டதாகவும் அவன் கூறுகின்றான். இதைக் கேட்ட மோஹன முதலியார், பூபதி முதலியாரை விசாரிப்பதற்காக இன்ஸ்பெக்டருடன் பூபதி முதலியாரின் இல்லத்திற்கு விரைகின்றார்.
அந்நேரத்தில் கோவிந்தன் பூபதி முதலியாரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். இன்ஸ்பெக்டர் பூபதி முதலியாரிடம் கொலை நடந்த அன்று நிகழ்ந்த விவரங்களைக் கூறுமாறு கேட்கிறார். ஆனால் அவரோ அன்று நடந்தவை குடும்ப ரகசியங்கள் என்று கூறிச் சொல்ல மறுக்கிறார். ஆனால் தான் இறங்கி வரும்போது வேறொருவர் படியேறிச் சென்றதாகவும், அவர் யாரெனக் கவனிக்கவில்லை எனவும் கூறுகிறார். பூபதி முதலியாரைக் கண்காணிக்க இரு காவலர்களை நியமிக்கிறார் இன்ஸ்பெக்டர்.
விளம்பரம்
விசாலாட்சியைப் பற்றிய விளம்பரம் வெளிவந்ததைக் கண்ட ராமதாஸ் என்பவர் கோவிந்தனைக் காண வருகிறார். கொலை நடந்த அன்று விசாலாட்சியைக் கண்டதாகக் கூறுகிறார். தற்கொலை செய்து கொள்ள அவள் துணிந்ததாகவும், அதனை அவர் தடுத்ததாகவும் கூறுகிறார். விசாலாட்சி தனக்கு அனுப்பிய கடிதத்தை அவர் கோவிந்தனிடம் கொடுத்தார்.
கோவிந்தனின் சந்திப்புகள்
பின்னர் ஏஜெண்டாகிய கோபால்சாமி நாயுடுவைத் தேடிக் கொண்டு கோவிந்தன் சென்றார். கோபால்சாமி, கோவிந்தனை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டுத் தப்பிவிடுகிறார். காவலர் ஒருவர் உதவியினால் கோவிந்தன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். விசாலாட்சியைத் தேடிக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார். கோபாலன் என்பவனைச் சந்திக்கிறார். கோபாலனைப் பின் தொடர்ந்து அவனுக்குத் தெரியாமல் மரகதத்தைச் சந்திக்கிறார்.
அவள் இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியில் வடக்குத்தியான் வீட்டிற்கு விசாலாட்சி வந்ததாகக் கூறினாள். அவளுடன் இரண்டு ஆண்கள் இருந்ததாகவும் கூறுகிறாள். யாருக்கும் தெரியாமல் கடிதம் எழுத அவள் காகிதம் கொடுத்ததாகக் கூறினாள்; கடிதத்தைத் தபாலில் தான் போட்டதாகவும் கூறினான். விசாலாட்சியை நள்ளிரவில் அழைத்துக் கொண்டு அவர்கள் சென்றார்கள் என்றும் கூறினாள்.
கோவிந்தனின் திருச்சிப் பயணம்
கோபால்சாமி நாயுடுவின் சொந்த ஊரான திருச்சிக்குச் செல்கிறார் கோவிந்தன். ஏஜெண்டுகள் வழக்கமாகத் தங்கும் கிருஷ்ணமாச்சாரி ஹோட்டலுக்குச் சென்று ஆராய்கிறார். கோபால்சாமியைக் கையும் களவுமாகப் பிடிக்கிறார். அவரைச் சில நாட்கள் பைத்தியமாக நடிக்க வேண்டும் என வேண்டுகிறார்; கோபால்சாமியைச் சென்னை மருத்துவமனையில் சேர்க்கிறார்.
பின்னர் விசாலாட்சியையும், குதிரை வண்டியையும் தேடிக் கொண்டு செல்கிறார். இறுதியாக ஒரு வீட்டின்முன் விசாலாட்சி உலாவுவதைக் காண்கிறார். பூபதி முதலியாருக்கு விசாலாட்சி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டதாகத் தந்தி அனுப்புகிறார்.
விசாலாட்சி ராமதாஸின் இல்லத்தில் தங்குகிறாள். கொலையாளியை ஏழு நாட்களுக்குள் கண்டுபிடித்துத் தருவதாகக் கோவிந்தன் கூறுகிறார். ராமதாஸின் இல்லத்தில் பூபதி, ராமதாஸ், கோவிந்தன் முதலியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அங்கு லீலாவதி வருகிறாள். தான் சுந்தர முதலியாரைக் கொன்றதாகக் கூறுகிறாள். இன்ஸ்பெக்டர் அவளைக் கைது செய்து கொண்டு செல்கிறார்.
தந்தியின் நகல்கள்
கோவிந்தனோ மோஹன முதலியார் கொலை செய்ததை நிரூபிக்கத் தன்னிடம் சாட்சியம் இருப்பதாகக் கூறுகிறார். இறப்பதற்கு முன் சுந்தர முதலியார் அவருக்குக் கொடுத்த தந்தியின் நகல்களையும் காட்டுகிறார். மேலும் கொலை நடந்த மாடியின் அறையில் உள்ள காலணிகளின் அடையாளமும், மோஹன முதலியாரின் காலணியின் அடையாளமும் ஒன்றுபடுவதாகக் கூறுகிறார் கோவிந்தன். மேலும் இவர் கொலை செய்ததைப் பனையேறி ஒருவன் பார்த்ததாகவும், அவனே மொட்டைக் கடிதம் எழுதியதாகவும் கூறுகிறார்.
கோவிந்தனின் ஆற்றல்
கம்பெனியில் அடமானம் வைத்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மோஹன முதலியார் கையாடல் செய்ததைச் சுந்தர முதலியார் கண்டுபிடித்ததால் அவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டுகிறார். தான் பணத்தைக் கையாடல் செய்ததற்கு யார் சாட்சி என்று கேட்கிறார். அதற்கு கோவிந்தன், சுந்தர முதலியாரே அதற்குச் சாட்சி என்கிறார். அனைவரும் திகைக்கின்றனர். கோவிந்தன் அழைத்தவுடன் சுந்தர முதலியார் உயிரோடு அங்குப் பிரவேசம் ஆகிறார். கோவிந்தன், மோஹன முதலியார் சுந்தர முதலியாரைக் கொல்லவில்லை என்றாலும் அவர் பாலு முதலியாரைக் கொன்றதாகக் கூறுகிறார். தான்செய்த கொலை நிரூபிக்கப்பட்டதை உணர்ந்த மோஹன முதலியார் விஷமருந்தி விடுகிறார்.
சுந்தர முதலியாரின் கூற்று
சுந்தர முதலியார் நடந்தவைகளைக் கூறுகிறார். விசாலாட்சி வீட்டை விட்டு வெளியேறிய அன்று புத்தி பேதலித்த நிலையில் தான் அலுவலகம் சென்றதாகவும், அன்று மதியம் அடமானம் வைத்த பெட்டியைக் கேட்டுப் பாலுமுதலியார் வந்ததாகவும், மோஹன முதலியார் வந்த பிறகு விசாரித்துத் தருவதாகத் தான் கூறியதாகவும் கூறுகிறார். அடமானம் வைத்த பெட்டியின் மதிப்பு ரூ.60 லட்சம் என்றும், அக்கம்பெனியினர் தன்னை ஏமாற்றியதாகவும் பாலு முதலியார் கூச்சலிட்டார் என்றும், போலீஸை அழைப்பேன் என்றவுடன் அவர் வெளியேறி விட்டதாகவும் கூறுகிறார். உடனே கணக்கு வழக்குகளை எடுத்துப் பார்க்கும் போது மோஹன முதலியாரும், கோபால்சாமியும் செய்த கையாடல்களைத் தான் அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார்.
அப்பொழுது விசாலாட்சியைப் பற்றிய கடிதத்தை ஒருவன் கொண்டு வந்ததாகவும், ஆனால் அறையை விட்டு வெளியே வரும்போது பின் மண்டையில் பலத்த அடி விழுந்ததால் தான் மயங்கிவிட்டதாகவும் சொல்கிறார். சூட்டுக்கோலால் தன்னைத் தாக்க வரும்போது தக்க சமயத்தில் கோவிந்தன் வந்து காப்பாற்றியதாகவும் கூறுகிறார். இவ்வளவு நாள் கோவிந்தன் தன்னைத் தன் வீட்டில் வைத்துக் கவனித்துக் கொண்டதாகவும் கூறுகிறார். கோவிந்தனின் சொற்படிதான் அங்கு வந்ததாகவும் கூறுகிறார். பிறகு கோவிந்தன் சுந்தரமுதலியார் அடைத்து வைக்கப் பட்டிருந்த இடத்திற்குச் சென்று விவரத்தைக் கூறுகிறார்.
கொலை நடந்த அன்று பிரேதத்தைப் பரிசோதனை செய்ததில் பாலு முதலியார் என்று பெயரெழுதிய காகிதம் பிரேதத்தின் சட்டையில் இருந்ததாலும், இறந்தது பாலு முதலியார் என்று அறிந்து கொண்டதாகக் கூறுகிறார். பாலு முதலியார் என்பவன் பிடாரிபுர நகைத் திருட்டில் தொடர்புடையவன் என்ற பழைய செய்தி நினைவிற்கு வர எல்லாவற்றையும் ஆராய்ந்ததாகவும் கூறுகிறார். அவனுடைய சகோதரன் சீதாராம முதலியைப் பின் தொடர்ந்ததில் சுந்தர முதலியாரைக் கண்டு பிடித்ததாகவும் கூறுகிறார். மோஹன முதலியார் தான் உண்மையான குற்றவாளி என முன்பே தெரிந்து கொண்டாலும், சாட்சியங்களுக்காகவே இவ்வளவு நாள் தாமதித்ததாகவும் கூறுகிறார் கோவிந்தன். தான் அருந்திய விஷத்தால் மோஹன முதலியார் இறந்து விடுகிறார். அங்கு லீலாவதியைக் கண்ட சீதாராம முதலி அவளைக் கொன்று விடுகிறான்.
திருமணம்
லீலாவதியின் இறுதிச் சடங்கைச் சுந்தர முதலியாரே நடத்துகிறார். கோவிந்தனின் புத்திக் கூர்மையினால்தான் தன் குடும்பம் காப்பாற்றப் பட்டதாகக் கூறுகிறார். ஒரு சுபமுகூர்த்தத்தில் பூபதி முதலியாருக்கும், விசாலாட்சிக்கும் திருமணம் இனிதே நடைபெறுகிறது.
ஒரு நாவலின் சிறப்பிற்குப் பாத்திரப் படைப்பு இன்றியமையாத கூறாகிறது. ஒரு நாவலுக்குக் கரு இன்றிமையாதது; இருப்பினும் அக்கருவிற்கு உயிர் தரவல்ல சிறப்பினை உடையவை பாத்திரங்களாகும்.
இருவகைப் பாத்திரங்கள்
பொதுவாக நாவல்களில் இடம்பெறும் பாத்திரங்களை இருவகைப்படுத்துவர். அவை, (1) முதன்மைப் பாத்திரங்கள், (2) துணைப் பாத்திரங்கள்.
துப்பறியும் புதினங்களில் கதைமாந்தர்
பொழுதுபோக்கு நாவல்களில் துப்பறியும் நாவல்கள் முதன்மை யானவை. இவ்வகை நாவல் ஆசிரியர்கள் கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதில் மட்டும் ஆர்வம் காட்டுகின்றனர். இவற்றில் மனதில் நிலைத்து நிற்கும் பாத்திரங்கள் அரிதாகவே அமையும்.
மோஹன சுந்தரம் – புதினத்தின் கதைமாந்தர்
ஜே.ஆர்.ரங்கராஜுவின் ‘மோஹன சுந்தரம்’ என்னும் இந்நாவலில் பதினைந்திற்கும் மேற்பட்ட பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. இந்நாவலில் கோவிந்தனை முதன்மையான பாத்திரமாகக் கூறலாம். இருப்பினும் லீலாவதி, விசாலாட்சி, மோஹன முதலியார், சுந்தர முதலியார், பூபதி முதலியார், கோபால்சாமி நாயுடு ஆகியவர்களும் கதையோட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
சாட்சி கூறும் இரவு நேரக் காவலாளி சுப்பராயன், இன்ஸ்பெக்டர், கோவிந்தனின் உதவியாளராக வரும் ராமுடு, சீனு, விசாலாட்சிக்கு உதவும் மரகதம், அவளுடைய காதலன் கோபாலன், வடக்குத்தியான், பாலு முதலி, சீதாராம முதலி, அவனுடைய அடியாட்கள் போன்றோரைத் துணைப் பாத்திரங்களாகக் கொள்ளலாம்.
துப்பறியும் கோவிந்தன்
திருவல்லிக்கேணி கோவிந்தன் ஒரு சிறந்த துப்பறியும் நிபுணர்; புத்திக் கூர்மை உடையவர். தன்னுடைய யோசிக்கும் அறிவினாலேயே நடந்தவற்றைக் கணிக்கும் ஆற்றல் உடையவர். புத்திமான் பலவான் என்ற கூற்றிற்கு ஏற்ப அமைந்த பாத்திரம் இப்பாத்திரமாகும்.
இவர் கொலை நடந்த இடத்தில் கிடைத்த காலணிகளின் அடையாளம் கொண்டே கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார். கொலையைக் கண்டு பிடிக்க, தக்க சாட்சிகள் தேவை. இவர் தனக்குக் கிடைத்த சிறுசிறு ஆதாரங்களைக் கொண்டே துப்புத் துலக்குகிறார். ஆசிரியரின் அனைத்து நாவல்களிலும் இப்பாத்திரத்தைக் காணலாம்.
லீலாவதி
இக்கதையின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமானவள்; பணத்தின் மீது அளவு கடந்த பாசம் கொண்டவள்; தன்னை ஒரு சிறந்த குலமகள் போலக் காட்டிக் கொள்கிறாள்; சுந்தர முதலியாரை மணந்து கொள்கிறாள்; அவருடைய ஒரே மகளான விசாலாட்சியைப் பல வகைகளில் துன்புறுத்துகிறாள்; விசாலாட்சியை வீட்டை விட்டுத் துரத்துகிறாள்; காவல் நிலையத்தில், முன்னாள் கணவன் பாலு முதலியின் சகோதரனால் வெட்டப் பட்டு இறக்கிறாள்.
சுந்தர முதலியார்
இவர் அறுபது வயதைக் கடந்தவர். மனைவியை இழந்தவர்; லீலாவதியின் அழகில் மதிமயங்குகிறார்; அவளுக்காக மருமகனான பூபதியை வீட்டை விட்டுத் துரத்துகிறார்; லீலாவதியை இரண்டாம் தாரமாக மணந்து கொள்கிறார்.
இவர் லீலாவதியின் கையில் இருக்கும் ஒரு பொம்மையைப் போலக் காலம் கடத்துகிறார். நாவலின் இடையே சுந்தர முதலியார் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறது. இவர் விரோதிகளால் கடத்தப்படுகிறார். ஆனால் இறுதியில் சுந்தரமுதலியார் உயிருடன் திரும்புகிறார்.
இவர் துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுபவர். தன்னுடைய ஏஜெண்ட் கோபால்சாமி நாயுடு கம்பெனியின் பணத்தைக் கையாடல் செய்திருப்பதை அறிந்த பின்பும், அவருக்காகத் தன்னுடைய பணத்தைக் கொடுக்கிறார்; தன் நண்பன் மோஹன முதலியாரே உண்மையான கொலையாளி என அறிந்த பின்பும் அவரைக் காப்பாற்றவே நினைக்கிறார். இதிலிருந்து அவருடைய நல்ல பண்புகள் விளங்கும்.
மோஹன முதலியார்
இவர் சுந்தர முதலியாரின் ஆருயிர் நண்பர்; மோஹன சுந்தரம் அண்ட் கம்பெனியின் மற்றொரு பங்குதாரர்; மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்கத் துப்பறியும் கோவிந்தனை அவரே அழைக்கிறார்; குற்றவாளியே துப்பறிவாளரை அழைப்பது விந்தையானது; பிறகு, கோவிந்தனால் இவருடைய குற்றம் நிரூபிக்கப்படுகிறது; தன் தவறுக்குத் தானே தண்டனை விதித்துக் கொள்கிறார்; விஷமருந்தித் தற்கொலை செய்து கொள்கிறார்.
விசாலாட்சி
இவள் இசை மீது ஆர்வம் கொண்டவள்; இசை கற்றுக் கொடுக்க வந்த லீலாவதியே தனக்குச் சித்தியாக வருவதை விரும்பாதவள்; சித்தியின் நடவடிக்கையால் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்; தற்கொலை செய்து கொள்ள முயலும் போது, ராமதாஸ் என்னும் நல்லவரால் காப்பாற்றப் படுகிறாள்; மோஹன முதலியாரின் பொய்யான வார்த்தையை நம்பித் தவறானவர்களுடன் ஊரைவிட்டு வெளியேறுகிறாள்; இறுதியில் கோவிந்தனால் காப்பாற்றப்படுகிறாள்.
‘நல்லது எது, கெட்டது எது’ என்று பகுத்தறியத் தெரியாத பாத்திரம். இவளின் கதாபாத்திரத்தில் இளமையின் வேகமே வெளிப்படுகிறது.
பூபதி முதலியார்
இவர் முறைப்பெண் விசாலாட்சி இருக்க, லீலாவதியின் மீது காதல் கொள்கிறார்; லீலாவதியின் உண்மையான குணம் தெரியவர, தன் முடிவை மாற்றிக் கொள்கிறார்; விசாலாட்சி வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்து அவளைக் கண்டுபிடித்துத் தருமாறு கோவிந்தனை வேண்டுகிறார்; இறுதியில் விசாலாட்சியை மணந்து கொண்டு இன்பமாக வாழ்கிறார்.
ஒரு சராசரி இளைஞனாகவே இப்பாத்திரம் படைக்கப் பட்டுள்ளது. புற அழகின் மீது ஆசைகொண்டு உண்மை தெரிந்து தெளியும் கதாபாத்திரமே பூபதி முதலியார்.
கோபால்சாமி நாயுடு
கோபால்சாமி நாயுடுவின் பங்கு இக்கதையில் சிறிதளவே. இவர் பணத்தைக் கையாடல் செய்யும் ஏஜெண்ட்; தான் செய்யும் தவறுக்காக வருந்தாதவர்; சிறிதுகாலம் கோவிந்தனின் சொற்படி பைத்தியமாக நடிக்கிறார்.
இரவு நேரக் காவலாளி சுப்பராயன், சுந்தர முதலியாருடன் கொலை நடந்த அன்று பேசிக் கொண்டிருந்தவர் பூபதி முதலியாரே என்று சாட்சியம் கூறும் துணைப் பாத்திரமாகிறார்.
இன்ஸ்பெக்டர் பாத்திரமும் பல இடங்களில் வருகிறது. கோவிந்தனின் உதவியாளராக வரும் ராமுடு, சீனு போன்றோரும் பிறரைக் கண்காணிக்க, தகவல் கொடுக்க என்று பயன்பட்டிருக்கின்றனர்.
விசாலாட்சியைக் காப்பாற்றும் ராமதாசும் துணைப் பாத்திரமாவார். மரகதம் என்னும் வேலைக்காரப் பெண்ணும் துணைக் கதாபாத்திரங்களில் குறிப்பிடத்தக்கவள். இந்நாவலில் பத்திற்கும் மேற்பட்ட துணைப் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன.
இந்நாவலின் தலைப்பு கதையின் இயக்கத்திற்கு முக்கியக் காரணமாக அமையும் இரு பாத்திரங்களின் பெயராலேயே வழங்கப்பட்டுள்ளது. இந்நாவலில் மோஹன முதலியாரும், சுந்தர முதலியாரும் நண்பர்கள். இருவரும் இணைந்து நடத்தும் கம்பெனியில் நடக்கும் கொலையும், அதை அடுத்த சம்பவங்களும் தான் கதையாகும்.
இந்நாவலுக்கு, கொலை செய்தவரும், கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படுபவரும் என இரண்டு பாத்திரங்களின் பெயர்கள் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது மிகவும் பொருந்துகிறது எனலாம்.
தொடக்கம்
ஒரு நாவலின் தொடக்கம் வாசகர்களுக்குத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
இந்நாவலில் கதையின் தொடக்கம் உரையாடலாக அமைந்துள்ளது. விசாலாட்சி தன்தந்தையிடம் உரையாடும் காட்சியில் இந்நாவல் தொடங்குகிறது.
முடிவு
எதிர்பாராத முறையில் முடிவு அமைந்தால் சுவையும், நிறைவும் ஏற்பட வாய்ப்பு மிகுதி. இந்நாவலில் சுபமான முடிவே தரப்பட்டுள்ளது.
பூபதி முதலியாருக்கும், விசாலாட்சிக்கும் திருமணம் நடைபெறுவதாகக் கதை இனிதே முடிவடைகிறது. பொய் தோற்கிறது; உண்மை வெல்கிறது என்பதைக் கதையின் முடிவு காட்டுகிறது.
துப்பறியும் நாவல் என்பதால் வினாவாக அமைந்த உரையாடல்களே மிகுந்து காணப்படுகின்றன. துப்பறிய வந்த கோவிந்தனிடம் வடக்குத்தியான், ‘நீ யார்? எங்கே வந்தாய்? எப்படி வந்தாய்?’ என்று பல கேள்விகளைக் கேட்கிறார். இவ்வாறு உரையாடல்களும் இந்நாவலுக்கு உறுதுணையாக அமைந்துள்ளன.
சுந்தர முதலியார் தான் கடத்தப்பட்டதையும் கோவிந்தன் வந்து காப்பாற்றியதையும் கூறுவது பின்நோக்கு உத்தி முறையே ஆகும். ராமதாஸ் விசாலாட்சியைக் கண்டதாகக் கோவிந்தனிடம் கூறுவதும் இவ்வகையானதே.
நடை என்பது காலத்திற்குக் காலம் மாறுபடும் தன்மையைக் கொண்டது. ரங்கராஜுவின் இந்நாவல் விடுதலைக்கு முன்னர் எழுதப்பட்டு இருப்பதால் இக்கால இலக்கிய நடையிலிருந்து சற்று வேறுபட்டுள்ளது.
பிறமொழிச் சொற்கலப்பு, இவருடைய நடையில் மிகுதியாக உள்ளது. நாடகம் போன்று பாத்திரங்களின் கூற்றுக்களாக இந்நாவலாசிரியர் உரையாடல்கள் அமைத்துள்ளார். துப்பறியும் நாவல் என்பதால் இயற்கை வருணனை இந்நாவலில் இடம் பெறவில்லை. வினாநடையே இவருடைய இப்படைப்பு முழுவதும் காணப்படுகிறது.
வருணனைகளையும், நனவோடை உத்திகளையும் மொழிநடையில் ஆசிரியர் அழகாகப் படைத்துள்ளார். மேல்நாட்டுத் துப்பறியும் நாவல்களைப் போன்று மர்மங்கள் நிறைந்ததாகவும், விறுவிறுப்பாகவும் இந்நாவலைப் படைத்துள்ளார் ஆசிரியர்.
‘அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழத்தைக் காண்பிப்பதைப் போல்’ (ப. 4)
‘எரிகிற நெருப்பில் கெரோஸின் எண்ணெய்
வார்த்தது போல் என்னைக் கண்டவுடனே பூபதி
முதலியார் பேரிலிருந்த கோபத்தையெல்லாம் சேர்த்து
வைத்து என்னைத் தாறுமாறாய்த் திட்டினார்’ (ப.70)
இவ்வாறு சொல்ல வரும் கருத்திற்கு ஏற்ப நாவலாசிரியர் ரங்கராஜு உவமைகளைப் பயன்படுத்தி உள்ளார். உவமைகளின் பயன்பாடு கருத்துக்களை எளிமையாகப் புரிந்து கொள்ள உதவும்.
ரங்கராஜுவும் தமது நடையில் சொல்ல வேண்டிய கருத்துக்களைச் சிறப்புறச் சொல்வதற்கு உறுதுணையாகப் பழமொழிகளைக் கையாண்டுள்ளார். விசாலாட்சி, லீலாவதியைப் பற்றி அவளிடமே கூறும் போது,
“அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் என்பதைப் போல் நீ முன்னிருந்த நிலைமைக்கும் இப்போது அடைந்திருக்கும் பதவிக்கும் எவ்வளவோ வித்தியாசந்தான்.” (ப.38)
இன்ஸ்பெக்டர் – கோவிந்தனிடம்,
“நான் அவமானமடைவதைக் கண்டு நீர் துக்கிக்க வேண்டாம். ஆடு நனைகிறதென்று ஓநாய் வருத்தப்பட்டதைப் போலிருக்கிறதே நீர் சொல்வது !” (ப. 134)
என்று கூறுகிறார். இவ்வாறு நடையில் பழமொழிகளைக் கையாளும் போது அப்பகுதி மேலும் சுவையுள்ளதாகிறது.
‘லீலாவதி போதும் போதும் அம்மட்டோடு நிறுத்து’ (ப.154)
‘இரண்டு மூன்று தரம் திரும்பத் திரும்ப வாசித்தாள்’ (ப.7)
இவ்வாறு இவருடைய நடையில் அடுக்குத் தொடர்களும் பயின்று வந்துள்ளன.
‘அருளிலார்க்கவ்வுலகமில்லை, பொருளிலார்க் கிவ்வுலகமில்லை மறந்தீர்கள் போலிருக்கிறது’ (ப.23)
‘மன வீதி உண்டானால் இடவீதி உண்டு’ (ப.21)
‘ஈஸ்வராக்கினையை மீறி நடக்க எவராலும் முடியாது’ (ப.41)
இவ்வாறு ஆங்காங்கே அறநெறிக் கருத்துக்களை ஆசிரியர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாத்திர வருணனை
பூபதி முதலியாரின் படத்தை வைத்துக் கொண்டு லீலாவதி அவரை வருணிப்பதைக் காண முடிகிறது. அப்பகுதி பின்வருமாறு :
‘என்ன தேஜஸ் ! என்ன அழகு ! என்ன கண்கள்’ (ப.19)
நிகழ்ச்சி வருணனை
துப்பறியும் நாவலில் பொதுவாகச் சில குழப்பங்களை ஆசிரியர்கள் படைப்பதுண்டு. அக்குழப்பங்களுக்கு உரிய தெளிவுகளை ஆசிரியர் நிகழ்ச்சி வருணனை மூலம் விளக்கியுள்ளார்.
பூபதி முதலியார் லீலாவதியிடம், சுந்தர முதலியார் அவளைப் பற்றி வருணிப்பதாகக் கூறுகிறார். இதைக் கேட்டு லீலாவதி மகிழ்ச்சி அடையும் நிகழ்ச்சியை ஆசிரியர்,
‘ஏனென்றால் தான் விதைத்த விதை முளைத்து வீரியமாய் வளர்ந்து மரமாகிப் பூத்துக் காய்த்து விட்டதென்றும், அதில் பழுக்கும் பழங்களை ருசிபார்க்கும் காலம் சமீபித்து விட்டதென்றும் அவள் சந்தோஷித்தாள்’ (ப.20)
இவ்வாறு ஆசிரியர் வருணனை செய்துள்ளார். நிகழ்ச்சி வருணனைகளும் ஓர் ஆசிரியரின் நடைக்கு அழகூட்டும் என்பதற்கு இப்பகுதி சான்று.
உணர்ச்சி வருணனை
ஒரு கொலையும், அக்கொலையைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களுமே இந்நாவலின் கதைக்கரு என்பதால் உணர்ச்சிகளின் வெளிப்பாடு இந்நாவல் முழுவதும் காணப்படுகிறது. விசாலாட்சியை லீலாவதி கொடுமைப்படுத்தும் போது அவளின் எதிர்ப்பு உணர்ச்சி வெளிப்படுகிறது.
விசாலாட்சி லீலாவதியிடம்,
‘மற்றவர்களைப் போல் எனக்கு உன் துஷ்ட வார்த்தைகளைச் சஹித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அடபோ! சீ ! நீயோ நீ கெட்ட கேடோ ! உன்னிடத்தில் இப்படியெல்லாம் துயரப்படவா என் தாய் என்னை விட்டுப் போனாள்?’ ( ப.39) என்று கேட்கிறாள்.
பூபதி முதலியார் லீலாவதியின் உண்மை சொரூபம் தெரிந்த பின்பு, அவளிடமே,
‘விஷப்பாம்பே, கெடுமதி பூண்ட நஞ்சுடைய உன் கைகளால் என்னைத் தீண்டாதே !’ என்று உணர்ச்சி பொங்கக் கூறுகிறார்.(ப.25)
இவ்வாறு இந்நாவலில் உணர்ச்சி பொங்க வரும் உரையாடல்களை ஆசிரியர் அழகாக வடித்துள்ளார்.
பிறமொழிச் சொல்லாட்சிகள்
நாவலை முழுவதும் இலக்கிய நடையில் படைப்பது படிப்பவர்க்குக் கடினம். இடைஇடையே பேச்சு வழக்குகளும், பிறமொழிச் சொற்களும் பயின்று வருவது படிப்பவருக்கு இயல்பாக அமையும். ரங்கராஜுவும் பிறமொழிச் சொற்களை நாவலில் மிகுதியாகக் கலந்துள்ளார்.
ஜல்தி, க்ஷணம், மாச்சரியம், துஷிதம், மகஜர், பந்தோபஸ்து.
இவ்வாறு பல பிறமொழிச் சொற்கள் இந்நாவலில் பயின்று வந்துள்ளன. மேலும் ஆங்கில வார்த்தைகளும், வாக்கியங்களும் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளன.
‘அநேக டேய்சுக் (Days) கப்பால் இந்த டர்ட்டி வில்லேஜில் (Dirty Village) தங்களைப் பார்த்தது ரொம்ப பிளசெராய் (Pleasure) இருக்கிறது.’ (ப.79) என்று ஆங்கில மொழிச் சொற்களைக் கலந்தும் ஆசிரியர் நடையைக் கையாண்டுள்ளார்.
பேச்சுவழக்குச் சொற்கள்
பேச்சு வழக்குச் சொற்களையும் இந்நாவலில் காணமுடிகின்றது.
‘நானாடி லோல்பட்டவள்?’ (ப.39)
‘வேலைக்காரக் கழுதைக்கு வந்த ராங்கியைப் பார்த்தாயா?’ (ப.39)
என்பன இதற்குச் சான்றுகள்.
‘முளையிலேயே கையால் எடுத்து எறியாவிட்டால் பின்னாடி கோடாலி கொண்டு வெட்டி எறிய வேண்டி வரும் என்பதை வாசகர்கள் கவனிப்பார்களாக’ (ப.42)
இவ்வாறு ஆசிரியர் நாவலின் இடையே தன்னுடைய கருத்தைக் கூறியுள்ளார். மற்றொரு இடத்தில் ஆங்கிலமும், தமிழும் கலந்த நடையில் மக்கள் பேசுவதை வெறுக்கும் விதமாகத் தன்னுடைய கருத்தைப் படைத்துள்ளார்.
‘இப்போது சாதாரணமாய்க் கொஞ்சம் ஆங்கிலேய பாஷை வாசித்தவர்கள் எல்லோரும் தங்களுக்கு அந்தப் பாஷை தெரியுமென்று மற்றவர்களுக்குக் காட்ட வேண்டுமென்னும் எண்ணத்துடன் இப்படியே பேசுவது வழக்கமாயிருக்கிறது. இது அருவருப்பான காரியம். பேசினால் முழுவதும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் அல்லது முழுவதும் தமிழில் பேச வேண்டும்.’ (ப.79-80) என்ற ஆசிரியரின் கூற்று சிந்தனைக்குரியது.