30

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இலக்கியத் திறனாய்வின் புதிய பரிமாணங்கள் பற்றிப் பேசுகிறது. அமைப்பியலும், அதனை அடுத்துத் தோன்றிய பின்னை அமைப்பியலும் தோன்றிய சூழல்கள் பற்றிப் பேசுகிறது. அவற்றிற்குப் பங்களிப்புச் செய்தவர்கள் இன்னின்னார் என்று பேசுகிறது.

    இவ்விரண்டு திறனாய்வு முறைகளின் அடிப்படைகள் பற்றி    விளக்குகிறது. சில எடுத்துக்காட்டுகளைத் தந்து, இவ்விரண்டு அணுகுமுறைகள் எவ்வாறு பின்பற்றக்கூடியன என்பது பற்றிச் சொல்கிறது. திறனாய்வின் வளர்ச்சி குறித்துப் பேசுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

• இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்கு, இரு முக்கிய அணுகுமுறைகளை அறிந்து கொள்ள முடியும்.

• அமைப்பியலின் பண்புகளை அறிந்து கொள்ளலாம்.

• அமைப்பியலுக்கும் பின்னை அமைப்பியலுக்கும் உள்ள உறவுகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

• சிறுகதை, நாவல், வருணிப்புக்கவிதை (Narratives), காப்பியம் முதலியவற்றை ஆராய்வதற்கு அமைப்பியல் மிகவும் உகந்த சாதனம் ஆகும். அது எவ்வாறு என்பதனை அறிந்துகொள்ள முடியும்.

• இருநிலை எதிர்வு, கதைப்பின்னல், பன்முகவாசிப்பு, கட்டவிழ்ப்பு - முதலிய திறனாய்வு உத்தி முறைகளை அறிந்துகொள்ளலாம்.

1.0 முன்னுரை    

    இலக்கியத் திறனாய்வின் முக்கியமான செயல்நிலைப் பண்புகளில் ஒன்று - அது இலக்கியத்துக்குள்ளிருந்து மட்டும் முகிழ்ப்பதல்ல; தத்துவம், சமுதாயவியல் முதலியவற்றிலுள்ள கருத்தியல்/கொள்கைத் தளங்களிலிருந்தும் அது முகிழ்க்கின்றது என்பதாகும். காட்டாக, சார்பியல், (Relativity) மற்றும் பரிணாமவியல் (theory of evolution) ஆகியவை அறிவியல் கொள்கைகளை. வழிமுறையாக்கிக் கொண்டும் திறனாய்வு முகிழ்க்கின்றது.    மொழியியல் என்பது, அடிப்படையில் மொழிசார்ந்த ஒரு கொள்கை; ஆனால் இலக்கியத் திறனாய்வுக்கும் அது ஓர் அடிப்படையாக அமைகின்றது. அதுபோலவே அமைப்பியல் என்பது, நாட்டுப்புறவியல், மொழியியல், சமுதாயவியல் முதலிய தளங்களை மையமாகக் கொண்டது; ஆனால் அதேபோது இலக்கியத் திறனாய்வுக்கு அது மிக முக்கியமான முறையியலைத் (methodology) தந்திருக்கிறது.

    இலக்கியத்திறனாய்வுத்    துறையில்,    அமைப்பியல் (structuralism), செல்வாக்கு வாய்ந்த ஒரு திறனாய்வு அணுகுமுறையாக விளங்குகிறது. பல திறனாய்வாளர்கள் இந்த அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளனர். முக்கியமாக, கதை, கதை தழுவிய பாடல், காப்பியம், நாவல் முதலியவற்றிற்கு அமைப்பியல் சிறந்த ஒளிகாட்டுகின்றது. ஆனாலும் சிந்தனை உலகில், ஒன்று மட்டுமே நின்று கோலோச்சுவதில்லை. காலங்கள் மாறுகிறபோது சிந்தனை முறையும் மாறுகிறது.அதுபோல், திறனாய்வு முறைகளும் மாறுகின்றன.அமைப்பியல் செல்வாக்குடன் திகழ்ந்தாலும், அதுவும் பழையதாகிவிட, இதன்    வளர்ச்சியாகவும்,    அதிலிருந்து மாறுபட்டதாகவும் முரண்பட்டதாகவும் வேறு பல முறையியல்கள் தோன்றிவிடுகின்றன.     பின்னை அமைப்பியல் (post- structuralism) என்பது, இவ்வாறு அமைப்பியலின் அடுத்த கட்டமாக, அமைப்பியல் போதாது என்ற நிலையில், அதனை மறுத்து எழுகின்றது. இரண்டையும் அறிந்து கொள்ளுவதன் மூலமாக, இலக்கியத் திறனாய்வின் சிறப்பான இரண்டு அணுகுமுறைகளை நாம் அறிந்து கொள்கிறோம்.

1.1 அமைப்பியல் : வரலாறு    

    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ருசிய உருவவியல் (Russian Formalism) மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்தது. செக்கோஸ்லோவாகியா நாட்டில் அது வளர்ந்து பல புதிய கோணங்களையும் முனைப்புகளையும் பெற்றது. மொழியியல் அறிஞர்களின்    ஆராய்ச்சி,    உருவவியலுக்குப்    புதிய கண்ணோட்டங்களைத் தந்தது.

    பிரான்சு நாட்டில் அமைப்பியல், மிகவும் சிறப்பாக வளர்ச்சிபெற்றது.    முக்கியமாக,    நாட்டுப்புறவியலையும், மொழியியலையும் இலக்கியத்தையும் விளக்கிட அது பெரிதும் துணை செய்தது. பிறகு அது அமெரிக்காவுக்கு ‘ஏற்றுமதி’ யானது. அங்கு அது, பிற யாவற்றிலும் தனித்து நின்று செல்வாக்கு மிகுந்த துறையாகி விளங்கத் தொடங்கியது. முக்கியமாக இலக்கியத் திறனாய்வில் அது தனிச் சிறப்புப் பெற்று விளங்கியது.தொடர்ந்து சமுதாயவியல் மற்றும் தத்துவம் முதலிய துறைகளிலும் அது சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டது.

1.1.1 அமைப்பியலின் விளக்கம்.

    அமைப்பு (structure) என்பது ஒரு கலைச்சொல் (technical term). அது, தூலமான கட்டுமானத்தைக் குறிப்பிடுகிறது. ஒரு பொருளில் பல உறுப்புக்கள் இருக்கின்றன. ஆனால் இவை பிரிக்க முடியாதவை; ஒன்று மற்றொன்றை மாற்றி வளர்ப்பதாக உள்ள இந்த    உறுப்புக்கள், ‘முழுமை’ யொன்றில் உயிர்ப்புடன் ஒன்றிணைந்திருக்கின்றன என்று அமைப்புப் பற்றி அமைப்பியல் விளக்கம் தருகிறது. இத்தகைய அமைப்பு, ஒரு செய்தியை அல்லது ஒரு பொருளை உணர்த்துகிறது. ‘அழகே செய்தி (Beauty is Information), அமைப்பே அழகு, அமைப்பே செய்தி என்று அமைப்பு என்பதனை ஆழமானதொரு கருத்தியலாக அமைப்பியல் கொண்டிருக்கிறது. அந்த அமைப்பினுடைய அழகையும் அது தரும் செய்தியின் உண்மைகளையும் அமைப்பியல் ஆராய்கின்றது. அமைப்புக்கு    முக்கியத்துவம்    கொடுப்பதனால், அந்த அமைப்பினைப் படைப்பு (work) எனக் கொள்ளாமல் பனுவல் (text) என அது கொள்கிறது. பனுவலுக்குள்ளேயே, ஒரு கலை வடிவத்தின் அல்லது இலக்கியத்தின் அழகும் பொருளும் எல்லாமும் இருக்கின்றன-வெளியே அல்ல என்று அமைப்பியல் கூறுகிறது. படைப்பாளி மற்றும் படைப்பு என்பதற்குள்ள முக்கியத்துவத்தை வாசகன் (reader) பக்கமாக நகர்த்துவது, அமைப்பியலின் முக்கியமான பண்பாகும். பனுவல் என்பது இயங்குதல் தன்மை கொண்ட பல பகுதிகள் கொண்டது; அந்தப்பகுதிகள்,    ஒரு முழுமையின் பகுதிகளேயன்றித் தனிமையானவை அல்ல என்றும், அத்தகைய பகுதிகளை வாசகன் எவ்வாறு புரிந்துகொள்கிறான்; வாசகனுடைய புரிதல் தன்மைகள், பனுவலின் விசேடத்தன்மைகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன- என்றும், அமைப்பியல் விளக்குகிறது.

1.1.2 அமைப்பியல் அடிப்படைகள்

    அமைப்பு என்பதற்குரிய விளக்கத்தை அமைப்பியல் எவ்வாறு காணுகிறது எனக் கண்டோம். இது அமைப்பியலின் அடிப்படை விதி. இவ்வாறு ஒரு பகுதியை, ஓர் உறுப்பை ஆராய்கின்ற போது, அந்த அந்த ஒழுங்கிணைவுக்குள்ள அதன் உறவோடு ஆராயவேண்டும். உதாரணமாக,

மானிடவியலில்     (Anthropology)    இனக்குழுக்கள் பற்றி ஆராய்கிறபோது உறவு முறைகள் பற்றி (kinship) விளக்குவார். அந்த அடிப்படையைப் பின்பற்றித் தமிழ் மரபில் உள்ள உறவுமுறைகளைப் பார்க்கவும், தமிழில் ‘மாமா’ என்பது தாய்வழியே வரும் ஓர் உறவு; சித்தப்பா / பெரியப்பா என்பது தந்தை வழி வரும் உறவு; இந்த உறவுகள் திருமண உறவுகள் முதலியன வரை    நீள்வன. இவற்றைத் தமிழ்க் குடும்ப அமைப்புக்குள் மட்டுமே விளக்க முடியும். ஆங்கில மரபில் இரண்டற்குமே ‘uncle’ என்ற சொல்தான் உண்டு. தமிழகக் குடும்ப அமைப்பை விளக்குவதற்கு உரியது அல்ல, இது. அது போன்று தமிழில் குடும்ப உறவுகளைக் காட்டப் பல சொற்கள் உண்டு. அவற்றுள் சில: அப்பச்சி, அம்மாச்சி, ஆத்தா, அப்பத்தா ஐயா, அம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, சின்னம்மா, அக்கா தங்கை, அண்ணன், தம்பி, அத்தான், மச்சான், மாப்பிள்ளை, மருமான், மாமா, அம்மான் , மாமனார், அத்தை , மாமியார், அண்ணி, கொழுந்தன், கொழுந்தி, மச்சினிச்சி, கணவன், மனைவி, இல்லாள், அகமுடையான், அத்திம்பேர்..... இப்படிப் பல சொற்கள் உண்டு. சொற்களின் வளம் (vocabulary) தமிழ்ச்சமூகத்தில் குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் காட்டும், மேலும், இந்தச் சொற்கோவையில் மணவுறவு, சாதி, ஆணாதிக்கத்தன்மை எல்லாவற்றையும்    பார்க்கலாம்.     (உதாரணம்: கணவன், அகமுடையான் ஆகிய ஆண்பாற்களுக்கு இணையாகப் பெண்பால் காட்டுகிற “ள்”- என்ற எழுத்தில் முடிகிற பெண்பால் சொற்கள் இல்லை; அதுபோல் ‘இல்லாள்’ என்பதற்கு இணையாக ‘ன்’- இல் முடிகிற ஆண்பாற் சொற்கள் இல்லை). இவையெல்லாம் ‘குடும்பம்’ என்ற முழுமை அல்லது அமைப்புக்குட்பட்ட உறவுகள் அல்லது உறுப்புக்கள் பற்றிய ஆராய்ச்சியினால் வெளிப்படுகின்றன. இது, அமைப்பியலின் ஓர் அடிப்படையாகும். மேலும், கதைப் பின்னல், இருநிலை எதிர்வு என்பன அமைப்பியலின் சிறப்பான அம்சங்களாகும். அவற்றைப் பார்க்கலாம்:

1.2 இருநிலை எதிர்வு    

    ஒரு கதை அல்லது நிகழ்ச்சிவருணனையில் (narrative) நிகழ்வுகள், நீள்வரிசை முறையில் அமைந்திருக்கின்றன என்று அமைப்பியலுக்கு முன்னரக் கருதப்பட்டு வந்தது. நிகழ்வுகள் அல்லது செய்திகளின் பண்பு, இதன் மூலமாகப் புறக்கணிக்கப்படுகின்றது: வரிசை முறை மட்டுமே சொல்லப்படுகிறது. ஆனால் அமைப்பியலை விளக்கும் லெவ்    ஸ்ட்ரோஸ், நிகழ்வுகளின் பண்புகளை எடுத்துக்கொண்டு, அந்தப் பண்புகள் காரணமாகவே, அந்த அமைப்புக் கட்டப்பட்டிருக்கிறது என்று விளக்குகிறார்.

படம், பாடம்; படம், பழம்;    பழம், பணம் - இப்படி இணைகளை எடுத்துக்கொள்வோம். இவை வேறு வேறு பொருளை உணர்த்துவன. இந்த வேறுபாடுகள் எதனால் வெளிப்படுகின்றன?

தொல் மானிடவியல் அடிப்படையில் பண்பு x பண்பாடு (nature x culture) என்ற ஒரு இருநிலை எதிர்வை அவர் விளக்குகிறார். பண்பு என்பது இயற்கையானது; ஏற்கெனவே இருப்பது. பண்பாடு என்பது ஆக்கிக் கொள்வது; பண்படுத்தப்படுவது. இரண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை யென்றாலும் முரண்பட்டவை. இதனை, பதனப்படாதது x பதனப்பட்டது- (raw x cooked) என்ற எதிர்வாகக் கொள்ளலாம். இத்தகைய பண்பு, அமைப்பு முழுக்க விரவிக்கிடப்பதாகவும், அதன் இயக்கம் இத்தகைய ஆற்றலினால் அமைந்துள்ளது என்றும் அமைப்பியல் காட்டுகிறது. நல்லவன் x கெட்டவன்; வலியவன் x மெலியன்; ஆண் x பெண்; கதாநாயகன் x வில்லன் என்று இந்தப்பண்புகளின் நீட்சியைக் கூறிச்செல்லலாம். கதை கூறும் உத்தியில் இந்தப் பண்புகளை அறிந்துகொள்ளவேண்டும்

1.3 கதைப் பின்னல்

    கதை அல்லது கதைப் பண்பு கொண்ட நிகழ்ச்சிவருணனை (narrative)யில், கதைக்குரிய பண்பு, அதாவது ஒன்றற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள்,    கதைத்தன்மையுடையனவாக    எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன    என்று விளக்குகின்றபோது, அது, கதைப்பின்னல் (plot) என்பதனால் ஆனது என்று அமைப்பியல் கூறுகிறது.

இது, சிறு சிறு நிகழ்ச்சிகளின் கூட்டு வடிவமாகத் தோன்றினாலும், தன்னளவில் இது முழுமையானது, தன்னளவில் கட்டுக்கோப்பானது. பாடுபொருள் அல்லது கரு (theme) என்று சொல்லப்படுவதை விளக்குவதாகவும் அதனை ஒரு தூலப்பொருளாக ஆக்குவதாகவும் கதைப்பின்னல் அமைகின்றது. “உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்” என்பது சிலப்பதிகாரத்தின் பாடுபொருள் எனக் கொண்டால், அதனை    அவ்வாறு கொண்டுவருவதற்குக் காரணமாகவும், அதனை விளக்குகிறதாகவும் அமைவது கதைப்பின்னலாகும், கண்ணகி, தெய்வமாகிறாள், கவுந்தியடிகள் எனும் சமணத்துறவி முதல் பலரும் அவளைப் பாராட்டுகின்றனர்; சேரன் செங்குட்டுவன், இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து பத்தினிக் கோட்டம் சமைக்கிறான்.- இது கதைப்பின்னல் ஆகும்.

இத்தகைய    சிறப்புடன் கதைப்பின்னல் இல்லையென்றால், சிறுகதையோ, நாவலோ, காவியமோ சிறப்படையாது.