32

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்ற பழந்தமிழ் வாசகத்தை இறுதி வாசகமாகக் கொண்டு, கல்தூணில் அமைந்த பழங்காலத்திய தெருவிளக்குகளின் இடத்தில் மின்விளக்கு அமைகிறது என்ற நிகழ்வை மையமிட்டுப் புதுமையின் அவசியத்தைக் குறியீடாகச் சித்திரிக்கும் தெரு விளக்கு முதலிய அவருடைய கதைகளில் பல, இவ்வாறு புதிய உத்திகளைச் சோதனை முறையில் செய்து காட்டியனவேயாகும்.

சிறுகதைகளில் பல சோதனைகள் செய்த எழுத்தாளர் யார்?

    தமிழில் புதுமையின் அவசியத்தை அல்லது நவீனத்துவத்தை முன்னிறுத்துவதற்காகவே, 1950-1960களுக்குப் பிறகு பல இலக்கிய இதழ்கள் தோன்றின. மணிக்கொடி இவற்றுள் மிக முக்கியமானது. இது , சிறுகதை இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தந்தது. மற்றும் கிராம ஊழியன், சரசுவதி, எழுத்து, இலக்கிய வட்டம் முதலிய இதழ்களும் நவீனத்துவக் கருத்தோட்டங்களை முன்வைத்தன.

2.2 மரபும் நவீனத்துவமும்     

    மரபு என்பது காலங்காலமாகத் தொடர்ந்து வருவது ; ஆழமாக வேரூன்றிக் கிடப்பது. இலக்கணங்கள், வாய்பாடுகள், வரையறைகள், விதிகள் என்ற முறையில் கட்டுப்பாடுகள் கொண்டது. ஆனால் அதேபோது, மரபும் இயங்காற்றல் மற்றும் உயிர்ப்புக் கொண்டதாதலால் அதனுடைய பெரும் நீரோட்டத்தில், பல புதிய வரவுகளும் உண்டு. மரபை மறுப்பதாக நவீனத்துவம் குரல் கொடுக்கிறது. அந்த முறையில் தமிழில் தோன்றியதுதான் புதுக்கவிதை எனும் வடிவமாகும்.

    தமிழில் குறிப்பாக 18,19-ஆம் நூற்றாண்டுகளில் கவிதை, வெறுமனே செய்யுள் வடிவமாகவே இருந்தது. யாப்புக்கட்டுப்பாடு, அதற்குள்ளேயே விளையாட்டு, உள்ளடக்கத்தில் தலங்கள் பற்றிய வருணனைகள், ஜமீன்தார்கள் பற்றிய கேளிக்கைகள். என்று இவ்வாறு இருந்தன. யாப்பு வரையறைகள், கவிதையை வளரவிடவில்லை. இத்தகைய மரபுகளை மறுத்து 1950-களுக்குப் பிறகு கவிதை, புதிய கோலங்களைப் பெறத் தொடங்கியது. ரகளைக்கவி, சுயேச்சா கவி, வசன கவிதை என்றெல்லாம் முதலில் அழைக்கப்பட்டுப் பின்னர், புதுக்கவிதை எனும் கோலம் பெற்றது. ந.பிச்சமூர்த்தி,. சி.மணி, மயன் முதலியவர்கள் இத்தகைய கவிதைகளை எழுதினார்கள்.

புதுக்கவிதையின் முக்கியமான போக்கும் நோக்கும் யாது?

புதுக்கவிதையின் முக்கியமான போக்கும் நோக்கும் யாப்புத் தளைகளை மீறுவது ஆகும்.

உரைநடையின் செல்வாக்கு இதில் கணிசமாக உண்டு. படிமம், குறியீடு முதலியன போற்றப்பட்டன. காதல் மட்டுமன்றி, இருத்தலியல், இருண்மை வாதம் முதலியன அதிகம் இடம்பெற்றன. ஆனால் மரபை மீறுதல் என்ற வேகத்தில் ஆங்கிலச் சொற்களைக் கலப்பது அதிகம் இருந்தது. புதுக்கவிதையை ஒர் இயக்கம் போன்று வளர்ப்பதை, சி.சு.செல்லப்பாவின் எழுத்து என்னும் இதழ் மேற்கொண்டது. புதுக்கவிதை, புதுமை எனும் நெறியின் அடையாளமாகத் தமிழில் வளர்ச்சி பெற்றது.

2.2.1 நவீனத்துவமும் திறனாய்வும்

    எதனையும் அது புதுசு என்றால் வரவேற்பது, சோதனைகள் என்று கருதப்படுபவற்றை முன்னிலைப்படுத்துவது, தரம், புனிதம் பற்றி அக்கறை கொள்வது, மேலைநாட்டுக் கருத்தோட்டங்களை ஏற்றுத் தமிழ் இலக்கியத்தில் பொருத்திப் பார்ப்பது, உருவ உத்திகளுக்கு முதனிலை தருவது என்பவை, நவீனத்துவம் - புதுமை என்று பேசிய சில திறனாய்வாளர்களிடம் காணப்படுகிற பொதுவான    நிலைகள் ஆகும். க.நா.சுப்பிரமணியம், சி.சு.செல்லப்பா, வெங்கட்சுவாமிநாதன் முதலியோர் இத்தகைய போக்குக் கொண்டவர்கள். தமிழ் மரபில் இவர்களுக்குப் போதிய அறிவோ, பின்னணியோ இல்லாவிடினும், அவற்றில் உள்ள பல நல்ல அறிவுநிலைகளை ஒதுக்குவதும் மறுப்பதும் இவர்களின் செயல்முறையாக இருந்தது.

    தமிழ்    இலக்கியமே, நவீன இலக்கியத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்ற கருத்து நிலைகள் இலக்கியத் திறனாய்வுக்குத் தீங்கு தருபவை என்பது அறிந்ததே. ஆயினும், மரபும் புதுமையும் சேர்ந்து    அறிந்த    பல திறனாய்வாளர்கள்    நவீனத் திறனாய்வாளர்களாக இலக்கிய அறிவை வளர்த்திருக்கிறார்கள். முக்கியமாக எதார்த்தவியல், மார்க்சியம், ஃபிராய்டியம், இருத்தலியல் முதலிய கருத்தமைவுகளை இலக்கியத்தில் பொருத்திக் காண்பதிலும், புனைகதை இலக்கியத்தின் மாறிவரும் போக்குகளையும் வடிவங்களையும் கணிப்பதிலும் இத்திறனாய்வு பெரும்பங்களிப்புச் செய்து வருகிறது.

     தன் மதிப்பீடு : வினாக்கள் – I

1.

விடை

2.

விடை

3.

விடை

4.

விடை

5.

விடை

2.3 பின்னை நவீனத்துவம் - தோற்றமும் சூழலும்     

    முதலாளித்துவப் பொருளாதாரம், ஏகபோக பன்னாட்டு முதலாளித்துவமாக வளர்ந்த சூழலில், பின்னை நவீனத்துவம் தோன்றுகிறது. நவீனத்துவம் இந்த உலகையும் சிந்தனை முறையையும் விளக்குவதற்கு போதாது என்ற நிலை வளர்ந்தபோது அதற்கு மாற்றாக இது தோன்றுகிறது. முதலில், கட்டிடக் கலையின் வடிவமைப்பு முறையில் ஏற்பட்ட சிந்தனையாகத் தோன்றியது இது. பின்னர், பண்பாட்டையும் இலக்கியத்தையும் விளக்கக் கூடியதாக 1970-80களில் வளர்ச்சி பெறுகிறது.

ஜேக்கு டெர்ரிடா முதலியோர் முன்மொழிந்த பின்னை அமைப்பியலின் தாக்கம் இதிலுண்டு. அதிகார மையங்கள், பண்பாட்டு அரசியல் முதலியவை பற்றிப் பேசிய மிக்கேல் ஃபூக்கோ (Michael Foucault) மற்றும் கிராம்ஷி (Gramsei) ஆகியோரின் தாக்கமும் இதிலுண்டு. மேலும், நீட்ஷே, ஹெய்டேக்கர் முதலிய தத்துவவாதிகளின் தாக்கமும் இதிலுண்டு. இலக்கியத்தில் லியோத்தா, மோதிலார், ஹேபர்மாஸ், லிண்டோ ஹு ட்ஷியோ, ஃபிரடெரிக் கேம்சன், டெர்ரி ஈகிள்டன்    முதலியோர் பின்னை    நவீனத்துவச் சிந்தனையாளர்களாகக்    கருதப்படுகிறார்கள்.    தமிழிலும் அ.மார்க்ஸ், பிரேம், ஜமாலன் முதலியோர் இந்த வகைத் திறனாய்வில் ஈடுபட்டார்கள். முக்கியமாக, இலக்கியச் சிற்றிதழ்கள், இந்தச் சிந்தனைமுறையை    வலியுறுத்தி வந்துள்ளன. பின்னை அமைப்பியலின் புகழ் மங்குகிற அளவிற்குப் பின்னை நவீனத்துவம் சமீப காலப் பகுதியில் செல்வாக்குப் பெற்றது.

2.3.1 சில அடிப்படைகள்

பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் , பண்பாட்டு உலகிலும் ஏற்பட்டுவிட்ட நுகர்வுக் கலாச்சாரம் (consumerism) பற்றியும் இலக்கியத்தில் அதன் வெளிப்பாடுகள் பற்றியும் கொள்கை ரீதியாக இந்த நூல் பேசுகிறது. இலக்கியத்திலும் சரி, பண்பாடு நிகழ்வுகளிலும் சரி, மையம் (center) என்று ஒன்று இல்லை; இருத்தலாகாது. எனவே, முழுமை     (totality) என்பது அர்த்தமற்றது என்று பின்னை நவீனத்துவம் பேசுகிறது.

ஒன்றோடு ஒன்று தொடர்பற்றவையே என்றும் இது பேசுகிறது. சமூக- பண்பாட்டு அமைவுகளில் ஒதுக்கப்பட்டனவாக விளிம்புகள் (edge) இருக்கின்றன என்றும், எப்போதும் விளிம்புகளுக்கும் மையங்களுக்கும் இடையே மோதல்கள் இருக்கின்றன என்றும், விளிம்புகள் மையங்களை நோக்கி நகர்கின்றன என்றும் பின்னை நவீனத்துவம் கூறுகின்றது.

    பின்னை நவீனத்துவக் கொள்கையில் இதுவன்றியும் பின்வரும் கருத்தியல்களும் அடிப்படைகளாக இருக்கின்றன. அவற்றுள் சில:

• நவீனத்துவம், கலை வடிவங்களைப் புதிய வடிவங்களாகக் காண விரும்புகிறது; பின்னை நவீனத்துவம், எதிர்நிலை வடிவமாகக் (anti-form) காணவிரும்புகிறது.

• உயர்வு, உயர்ந்தோர் வழக்கு, உயர்தரம் என்பவற்றையும், பலராலும் மரபு வழியாக அங்கீகரிக்கப்பட்ட ‘புனிதம்’ என்பதனையும் இது மறுக்கிறது.

• பெரும் நீரோட்டம், பெருநெறி, பெருங்கதையாடல் என்பதற்கு மறுப்புத் தெரிவிக்கிறது. அதேபோது சிறு நெறிகளுக்கு முக்கியத்துவம் தருகிறது.

• நடைமுறை    நிகழ்வுகளை - அவை,    கலகங்களாக, மோதல்களாக    இருந்தாலும் - இது    மொழி விளையாட்டுகளாகவே காண்கிறது. மாற்றுவது, தீர்ப்பது இதன் நோக்கமல்ல.

• ஒற்றைப் போக்கு, ஒற்றைத் தன்மை என்பதற்கு மாறாகப் பன்முகத்தன்மையை இது முன்வைக்கிறது.

    இவ்வாறு பின்னை நவீனத்துவம், மொத்தப்படுத்துதல், முழுமைப்படுத்துதல், புனிதப்படுத்துதல் என்பவற்றிற்கு மாறாகக் கருத்தியல்களை முன்மொழிந்தாலும்,    சுயமுரண்பாடுகள் கொண்டதாகவும் வேறுபட்ட பல கருத்துகளைக் கொண்டதாகவும் இது விளங்குகிறது. மேலும், ‘கொள்கைக்கு எதிராகவே’ (Resistance to Theory) இருப்பதாகவும் இது தன்னைச் சொல்லிக் கொள்கிறது. இதனுடைய இன்னும் சில முக்கியமான கருத்தமைவுகளைச் சற்று விரிவாக இனிக் காணலாம்.

2.4 மையமும் விளிம்பும்     

    ஒரு சமூக அமைப்பில், பார்ப்பனர் அல்லது உயர்சாதி வகுப்பினர் மையம் என்ற நிலையில் நடுவே இருக்கிறார்கள் என்றால்