33

இதன் காரணமாகப் பெண்ணியம், தலித்தியம் முதலியவற்றில் இது அக்கறை காட்டுகிறது. “விளிம்பு நிலை வாழ்க” (“Hail to Edge” - Linda Hutcheon) என்று கூறினாலும் தீர்வுகளுக்கோ, சமூக மாற்றங்களுக்கோ இது வழிமுறை சொல்லுவதில்லை. மேலும், விளிம்பு நிலையிலிருப்போரைக் கூடத் தனித்தனிக் குழுக்களாகப் பார்க்கவே இது விரும்புகிறது. குழுக்களிடையே செயலளவிலான தொடர்புகளை இது கூறவில்லை.

2.4.1 புனிதம்

    பின்னை நவீனத்துவத்தின் ஒரு முக்கியமான பங்களிப்பு, வழிவழியாகப் ‘புனிதம்’ என்று வழங்கப்படுபவற்றை மறுத்தது ஆகும். காட்டாக, திருமணம்- ஒருத்திக்கு ஒருவன் , ஒருவனுக்கு ஒருத்தி எனும் கற்புநிலை, குடும்பம் முதலிய அமைப்புகளும் அவை    பற்றிய    கருத்தியல்களும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. அவற்றை, இது கேள்வி கேட்டு மறுக்கிறது. அதுபோல் உயர்வு அல்லது தரம் என்று இலக்கியத்தை அடையாளம் காட்டுவதையும் அல்லது பாராட்டுவதையும் இது மறுக்கிறது. அப்படியானால், வணிகரீதியாக எழுதப்பெறும் மர்ம நாவல்கள் உள்ளிட்ட ஜனரஞ்சக (Mass or Popular literature) எழுத்துகளையும் பின்னை நவீனத்துவம் ஏற்றுக் கொள்கிறது என்று பொருள். ஆனால், நடைமுறையில் தமிழில் பின்னை நவீனத்துவவாதிகள் இதனை ஏற்றுக் கொள்ளுவதில்லை.

2.4.2 பெருங்கதையாடல்

    பின்னை நவீனத்துவ வாதிகளால் அதிகமாகப் பேசப்பெறும் ஒன்று கதையாடல் (Narrative) ஆகும்.

நடைமுறை நிகழ்ச்சிகளின் மீது ஒரு தொடர்ச்சியையும் அர்த்தத்தையும் திணிக்கின்ற ஒரு செயல் வடிவத்தின் வடிவமாகவே இது கொள்ளப்படுகிறது என்று விளக்கம் அளிப்பார் ஹேடன் ஒயிட் என்பார். இதனைப் பின்னை நவீனத்துவம் இரண்டு நிலைகளாகப் பார்க்கிறது. ஒன்று - மிகப் பலரால் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருகின்ற, பலவற்றிற்கு மையமாக இருக்கின்ற, பெருங்கதையாடல் (grand or great narrative) என்பது. இது, சங்க கால வரலாறு, வீரயுகம் என்பது போன்ற வரலாறாக இருக்கலாம்; தாய்மை என்பது போன்ற கருத்துநிலை பற்றிய விளக்கமாக இருக்கலாம். இவற்றைப் பின்னை நவீனத்துவம் மறுக்கிறது; மாறாகத் தனித்தனி வட்டாரங்கள், தனித்தனிக் குழுக்கள், குடும்பமோ பிற கட்டுப்பாடுகளோ அற்ற உறவுகள் முதலியவற்றைச் சிறுகதையாடல் (Little narrative) என்று கொண்டு, அவற்றைப் பின்னை நவீனத்துவம் வரவேற்றுப் போற்றுகிறது.

2.5 தொகுப்புரை     

    அண்மைக் காலத்திய ஒரு திறனாய்வு மற்றும் பண்பாட்டுச் சிந்தனை    முறை,    பின்னை    நவீனத்துவமாகும். இது, நவீனத்துவத்துக்குப் பிறகு வந்தது என்றாலும், நவீனத்துவத்தின் போதாமையில்    தோன்றியது    என்பது மட்டுமல்லாமல், நவீனத்துவத்திற்கு மறுப்பாக இது தோன்றியது என்பதாக, இதனுடைய கொள்கையைப் பற்றிப் பேசுகிற லியோதா, மோதிலார் முதலிய பலர் கூறுகின்றனர். நவீனத்துவம், புதுமை, புதிய கலை, புதிய வடிவம் என்று தன்னை முன்னிறுத்துகிறது. அதுபோல உயர்வு, தரம், தாராளத்துவம் என்பன பற்றிப் பேசுகிறது. தமிழில் நவீனத்துவத்தின் முக்கியமான    பிரதிநிதிகளில்    ஒருவராக மதிக்கப்படுகிறவர் புதுமைப்பித்தன் ஆவார். சிறுகதை உத்திகளில் பல சோதனைகள் செய்தவர் இவர். தமிழில் ஒருசார் நவீனத்துவ விமரிசகர்கள் தமிழ் மரபுகளையும் தொன்மை இலக்கியங்களின் பெரும் சாதனைகளையும் மறுப்பர். இருப்பினும், நவீனத்துவம் பல போக்குகள் கொண்டது. தற்காலத் தமிழ் உலகில் பல நல்ல இலக்கியங்களை அது உருவாக்கித் தந்துள்ளது. புதுக்கவிதை எனும் இலக்கிய வகை நவீனத்துவத்தின் குழந்தையாகக் கருதப்படுகிறது.

    பின்னை நவீனத்துவம் என்பது பண்பாட்டு முதலாளித்துவம், நுகர்வுக்    கலாச்சாரம் ஆகியவற்றின் ஒரு விளைவாகும். மொத்தப்படுத்துதல், முழுமை, மையம், புனிதம், தரம் முதலிய கருத்து நிலைகளை இது தீவிரமாக மறுக்கிறது. அவற்றிற்குப் பதிலாக, கூறுபடுத்துதல், கூறு அல்லது பகுதி, விளிம்பு, எதிலும் புனிதம், தரம் என்று பார்க்கக் கூடாது என்ற மனநிலை முதலியவற்றை முன்னிறுத்துகிறது.பெருநெறி மரபுகளை மறுத்து சிறு நெறிகளை, தொடர்பற்ற தன்மைகளை இது போற்றுகிறது.1990-களில் இது தமிழில் மிகப் பிரபலமாக - முக்கியமாக - இலக்கியச் சிற்றிதழ்களால் பேசப்பட்டது. இன்று, மீண்டும் திறனாய்வு புதிய தடங்களை நோக்கி நகரத் தயாராகவுள்ளது.

3.0 பாட முன்னுரை

    இலக்கியவுலகில்    மிகவும்    செல்வாக்கு வாய்ந்த திறனாய்வுமுறை, மார்க்சியத் திறனாய்வு ஆகும். மார்க்சியம் எனும் சமூகவியல் தத்துவத்தை அடித்தளமாகவும் வழிகாட்டுதலாகவும் கொண்டது மார்க்சிய அணுகுமுறையாகும். மார்க்சியம் என்பது அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய சமூக தளங்களில் மனிதகுல விடுதலையை முன்னிறுத்துவது ஆகும். இது, அறிவியல் பூர்வமானது; தருக்கம் சார்ந்தது; இயங்கியல் தன்மை கொண்டது. மார்க்சியத்தின் மூல ஊற்றுக்கண் கார்ல்மார்க்ஸ் ஆவார்; மற்றும் அவருடன் சேர்ந்து சிந்தித்த, சேர்ந்து செயல்பட்ட ஏங்கல்சும், தொடர்ந்துவந்த லெனினும் மாசேதுங்கும் மார்க்சிய சித்தாந்தத்தின் முன்னணிச்    சிந்தனையாளர்கள் ஆவர். மேலும், இந்தத் தத்துவத்தை இவர்களும், தொடர்ந்து ஜார்ஜ் லூகாக்ஸ், கிறிஸ்டோபர் காட்வெல், மற்றும் இக்காலத்து டெர்ரி ஈகிள்டன், ஃபிரெடெரிக் ஜேம்சன் முதலியோரும் இலக்கியத் திறனாய்வுக்குரிய ஒரு நெறிமுறையாக விளக்கிக் காட்டியுள்ளனர் இவர்களின் எழுத்துக்களையும் சிந்தனைகளையும் கொண்டு அமைவது மார்க்சியத் திறனாய்வு.

3.1 மார்க்சிய அணுகுமுறை

    மார்க்சிய அணுகுமுறைக்கு, மார்க்சிய சித்தாந்தமே அடிப்படை.மார்க்சியம், ஓர் அரசியல் பொருளாதார சித்தாந்தமாக விளங்கினாலும்,அது சமூகவியல் அடிப்படைகளை விளக்குகிற ஒரு சித்தாந்தமாகலின், அழகியல், கலை, இலக்கியம், ஆகியவற்றையும் அது விளக்குகிறது; ஏனெனில், இவை சமூகத்தின் பண்புகளாகவும் பகுதிகளாகவும் இருப்பவை.

3.1.1 வரையறையும் விளக்கமும்

    மார்க்சியத் திறனாய்வு, சமூகவியல் திறனாய்வோடும் வரலாற்றியல் திறனாய்வோடும் மிக நெருக்கமாக உறவு கொண்டது. இலக்கியம் என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகத்திலிருந்து தோன்றுகிறது. அந்தச் சமூகத்தை நோக்கியே அது அமைகிறது. அதுபோல, சமூகம் என்பது காலம், இடம் என்ற வெளிகளில் அவற்றை மையமாகக் கொண்டு இயங்குவது; எனவே வரலாற்றியல் தளத்தில்    இயங்குவது. இலக்கியம்    இத்தகைய சமூக- வரலாற்றுத்தளத்தில் தோன்றி, அதன் பண்புகளைக் கொண்டது ஆகலின், இலக்கிய ஆராய்ச்சிக்குச் சமூக - வரலாற்றுப் பின்புலங்களும்    அவற்றின்    செய்திகளும்    மிகவும் முக்கியமானவையாக அமைகின்றன . மார்க்சியத் திறனாய்வு இங்கிருந்துதான் தொடங்குகிறது என்று சொல்ல வேண்டும். அதாவது, சமூக வரலாற்றுத் தளத்திலிருந்துதான் மார்க்சியத் திறனாய்வு தொடங்குகிறது.

    சமூகம் மாறக்கூடியது; வளர்ச்சி பெறக்கூடியது. அது போன்று இலக்கியமும் வளர்நிலைப் பண்புகளைக் கொண்டது. அத்தகைய    பண்புகளைத்    தற்சார்பு இல்லாத முறையில், காரணகாரியத்    தொடர்புகளுடன் மார்க்சியத் திறனாய்வு விளக்குகிறது.    இலக்கியம்,    மக்களுடைய    வாழ்க்கை நிலைகளிலிருந்து தோன்றுகிற உணர்வுநிலைகளின் வெளிப்பாடு. அதேபோது அந்த உணர்வுநிலைகளை அது செழுமைப்படுத்துகிறது. மக்களிடமிருந்து தோன்றுகிற இலக்கியம், மக்களின் வாழ்வோடு நெருக்கம் கொண்டு இயங்குகிறது. மார்க்சியத் திறனாய்வு, இலக்கியத்தை மக்களோடு நெருங்கியிருக்கச் செய்கிறது. மனிதகுல மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும்    இலக்கியம்    உந்துதலாக இருப்பதை அது இனங் காட்டுகிறது. மார்க்சியத் திறனாய்வின் நோக்கம், இலக்கியத்தை மனிதனோடு நெருங்கியிருக்கச் செய்வதும், மனிதனை இலக்கியத்தோடு நெருங்கியிருக்கச் செய்வதும் ஆகும்.

3.1.2 மார்க்சியத் திறனாய்வின் அடிப்படைகள்     

    மார்க்சும் ஏங்கல்சும் திறனாய்வுநூல்கள் எழுதியவர்கள் அல்லர்; அதுபோல், இலக்கியக் கொள்கைகளைப் பரிமாறிக் கொண்டவர்கள் அல்லர். ஆனால், தம்முடைய அரசியல்- பொருளாதார    நூல்களிடையே இலக்கியங்கள் பற்றியும் பேசுகின்றனர். இருவரும் ஜெர்மனியப் பேரறிஞர்கதே (Goethe) என்பவர் பற்றிப் பேசுகின்றனர். அதுபோல் மின்னா கவுட்ஸ்கி, மார்கரெட் ஹார்கன்ஸ், லாசல்லே ஆகியோரின் இலக்கியப் படைப்புகளைப் பற்றிப் பேசுகின்றனர். ஷேக்ஸ்பியர் மற்றும் பால்ஜாக் ஆகிய இலக்கிய மேதைகளை உதாரணங்களாக்கிப் பேசுகின்றனர். லியோ டால்ஸ்டாயின் நாவல்களைப் பற்றி லெனின் பாராட்டிப் பேசுகிறார். இலக்கியம் பற்றிய கருதுகோள்களை இதன் மூலம் இவர்கள் வெளிப்படுத்துகின்றனர். குறைகள் கண்டவிடத்தும் கூட, அவற்றைப் பெரிதுபடுத்தாமல், குறைகளைக் களைந்து மேலும் சிறந்த முறையில் எழுதுவதற்கு யோசனைகள் சொல்லும் முறை, மார்க்சிடமும் ஏங்கல்சிடமும் காணப்படுகிறது. அதுபோல், லெனினும்.    லியோ    டால்ஸ்டாய்,    மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாமல் கிறித்துவ இறையாண்மையே ஏற்றுக் கொண்டவரானாலும், அவருடைய நாவல்களில் அன்றைய சமூகமும், அதன்    மாற்றங்களும்    பாராட்சமில்லாமல் சித்திரிக்கப்படுகின்றன என்று    சொல்லிப் பாராட்டுகின்றார். மார்க்சியத் திறனாய்வின் நசம் கொண்ட வழிகாட்டுதலை இந்த உதாரணங்கள் உணர்த்துகின்றன.

    மார்க்சியத் திறனாய்வின் அடிப்படை, மார்க்சியமே என்பதைச் சொல்லிக் காட்டவேண்டியதில்லை. அரசியல்-பொருளாதாரக் கோட்பாடுகளன்றியும் இந்த மார்க்சியத்திற்கு அடிப்படையாகி இருப்பவை, இயங்கியல் வாதம் (Dialectical Materialism) மற்றும்    பொருள்முதல் வாதம் (Historical Materialism) ஆகியவை. வரலாற்றியல் வாதம் மற்றும் இயங்கியல் பொருள்முதல் வாதம் (Historical Materialism and Dialectical Materialism) இவற்றிற்குட்பட்டவையாகும். மேலும், எதார்த்தம், உருவம் உள்ளடக்கம் பற்றிய கருத்துநிலை, எதிரொலிப்பு, தீர்வு முதலியவை பற்றிய கருத்து நிலைகள் மார்க்சிய அழகியலுக்கு அடிப்படை நெறிமுறைகளாக உள்ளன.

3.1.3 இலக்கியம் பற்றிய கருதுகோள்

    ஒவ்வொரு திறனாய்வு முறைக்கும், இலக்கியம் பற்றிய கருதுகோள் என்பது மிகவும் அவசியம். ஆயின் இது, அவ்வத் தேவைகளுக்கு ஏற்றவாறு வெவ்றோக இருக்கக் கூடும். மார்க்சியத் திறனாய்வைப் பொறுத்த அளவில் இலக்கியம் பற்றிய அதனுடைய கருதுகோள் அல்லது வரையறை; இலக்கியம் என்பது ஒரு கலைவடிம்; சமுதாய அமைப்பில் அதன் மேல் கட்டுமானத்தில் (Super-Structure) உள்ள ஓர் உணர்வு நிலை. சமுதாய அடிக்கட்டுமானமாகிய (Basic Structure) பொருளாதார உற்பத்தியுறவுகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சார்ந்து இருப்பது, அது. இதுவே, இலக்கியத்தைப் பற்றிய அடிப்படையான வரையறை என மார்க்சியம் கருதுகிறது. மேல்கட்டுமானத்தைச் சேர்ந்த கலை, இலக்கியம், அரசியல் தத்துவம், சாதி, சமயம் முதலியவை அடிக்கட்டுமானத்தோடு ஒன்றுக் கொன்று தொடர்பும் தாக்கமும் கொண்டவை. அதாவது இதனுடைய பொருண்மை என்னவென்றால்- இலக்கியம், மக்களிடமிருந்து தோன்றுகிறது; மக்களை நோக்கியே செல்கிறது; மக்களின் உணர்வுகளையும் வாழ்நிலைகளையும் ஏதேனும் ஒருவகையில் பாதிக்கிறது. எனவே இலக்கியத் திறனாய்வு, இலக்கியத்தின் இந்தப் பண்பினையும் பொருண்மையினையும் பாதுகாக்கிறது; வளர்க்கிறது. இதுவே மார்க்சியத் திறனாய்வின் நோக்கமும் ஆகும்.

    இலக்கியம் சுயம்புவானது அல்ல; சுயாதிக்கம் உடையது அல்ல; தன்னளவில் முற்ற முழுமையுடையதும் அல்ல. சமுதாய அடிக் கட்டுமானத்தோடும், ஏனைய அமைப்புக் கூறுகளாகிய அரசியல், தத்துவம் முதலியவற்றோடும் சேர்ந்து இருப்பது; அவற்றின் அழகியல் வெளிப்பாடாக இருப்பது. எனவே திறனாய்வு, இலக்கியத்தை இத்தகையதொரு தளத்திலிருந்து காணவேண்டும் என்று மார்க்சியத் திறனாய்வு கூறுகிறது. எனவே, கலை, கலைக்காகவே என்பதையும், கலை, தனிமனிதன் சம்பந்தப்பட்டது என்பதையும், ஒரு சில உயர்ந்தோருக்கும் மேதைகளுக்கும் மட்டுமே    உரியது என்பதையும் மறுத்து,    கலையை மக்களுக்குரியதாகச் சொல்லுகிறது. எனவே    மார்க்சியத் திறனாய்வாளனுக்குச் சமூகவுணர்வும், பொறுப்பும் உண்டு என்பது வற்புறுத்தப்படுகிறது.

3.2 மார்க்சியக் கொள்கையும் இலக்கியமும்

    இலக்கியத்தைச் சமூகத்தின் வரலாறாகப் பார்க்கிறது மார்க்க்சியத்திறனாய்வு.    இதன்வழிச் சமூக அமைப்பின் வளர்நிலைகளைக் கணிக்கிறது. வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்ற கோட்பாட்டை அது முன்வைக்கிறது. இலக்கியத்தை வர்க்கங்களின் மோதல் அடிப்படையில் மார்க்சியத்திறனாய்வு மதிப்பிடுகிறது. வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தையும், வர்க்கப் போராட்டத்தையும்    மார்க்க்சியத்திறனாய்வு இலக்கியத்தில் காண்கிறது.

3.2.1 வரலாற்றியல் பொருள் முதல்வாதம்     

    கருத்து (idea) அல்லது சிந்தனையே முதன்மையானது எனக்கூறி, உலகத்தை அதன்வழியாகக் காண்பது கருத்து முதல்வாதம் (Idealism), அவ்வாறன்றிப் பொருளே (matter) முதன்மையானது எனக் கொண்டு, உலகை அதன்வழிப் பார்ப்பதும் விளக்குவதும் பொருள் முதல்வாதம் (materialism) ஆகும். வரலாற்றியல் பொருள்வாதம் என்பது, பொருளின் இயங்குநிலை எவ்வாறு மனிதகுல வரலாற்றை விளக்குவதற்கு அடிப்படையாக இருக்கிறது என்று கூறுகிறது. மனித சமுதாயத்தை ஒற்றைப் பரிமாணம்

கொண்டதாகவும், தேக்க நிலை கொண்டதாகவும் பார்க்கக்கூடாது என்று சொல்லி, அதனை எப்போதும் தன்னுள்ளே இயங்குகின்ற ஆற்றலுடையதாகவும் மாற்றமும் வளர்ச்சியும் கொண்டதாகவும்    பார்க்கவேண்டும் என்று வரலாற்றியல் பொருள்வாதம் வலியுறுத்துகிறது.

    சமூகவியலுக்கு இதனுடைய முக்கியமான பங்களிப்பு, சமுதாய வரலாற்றை, சமுதாய - பொருளாதார வடிவாக்கங்களின் (socio- economic formations) படிநிலை வளர்ச்சிகளாக விளக்கியிருப்பது ஆகும். அந்த வடிவாக்கங்கள்:

புராதன கூட்டுக்குழு அமைப்பு (Primitive Communism)

அடிமையுடைமை (Slave owning)

நிலவுடைமை (Feudalism)

முதலாளித்துவம் (Capitalism)

பொதுவுடைமை (Communism)

    பொதுவுடைமை வளர்ச்சிபெறுவதற்கு முன்னால் அதன் முன்னோடியாக இருப்பது சமதர்மம் அல்லது சோஷலிசம் ஆகும். அதுபோல், முதலாளித்துவம் என்பது பொதுவான சொல்லாக இருந்தாலும், குழும முதலாளித்துவம் (Corporate capitalism), பன்னாட்டு முதலாளித்துவம் (Multi national capitalism), ஏகபோக முதலாளித்துவம் (Monopoly capitalism) என்று பல நிலைகள் அதிலே உண்டு. இத்தகைய சமூக அமைப்புக்களுக்கு ஏற்ப, அவ்வக் காலத்திய சமூகவுணர்வு நிலைகளும், அழகியல், அரசியல், கலை இலக்கியம் முதலியனவும் இருக்கும் என்று மார்க்சியம் கூறுகிறது. தமிழில், சங்க இலக்கியம் முதல் தொடர்ந்து வரும் இலக்கியங்களில், மேற்கூறிய சமூக அமைப்புக்களும் அவை சார்ந்த உணர்வு நிலைகளும் எவ்வாறு காணப்படுகின்றன என்று பார்ப்பதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் உண்டு.

3.2.2 வர்க்கமும் இலக்கியமும்     

    மார்க்சியம், சமூகத்தை வர்க்க சமுதாயமாகக் காணுகிறது. வரலாற்றியல் பொருள் முதல் வாதத்தின் ஒருபகுதியாக அமைந்துள்ள    வர்க்கக்    கண்ணோட்டம் இலக்கியத்தின் செய்நெறிகளையும் இலக்கியம் கூறும் செய்திகளையும் கண்டறிய உதவுகிறது. வர்க்கம் (class) என்பது என்ன? சமுதாயத்தின் வளங்களையும் நலன்களையும், பெறுவதிலும், பங்கிடுவதிலும், துய்ப்பதிலும் உள்ள பிரிவினையைக் குறிப்பது இது. பொருளாலே உற்பத்தியுறவுகளின் அடிப்படையில் பிறரோடு வேறுபட்டும், தமக்குள் பொதுத்தன்மை பெற்றும் இருக்கிற மக்கள் பிரிவினைகளே வர்க்கங்கள் ஆகும். ஏழை - பணக்காரன் என்ற பிரிவினை    அல்ல,    இது.    உற்பத்திகளையும் உற்பத்திசாதனங்களையும் உடைமையாகக் கொண்ட முதலாளி - அதிலே உழைக்கிற, உழைப்பைக் கூலியாகப் பெறுகிற தொழிலாளி என்ற பிரிவினையே, இது. உற்பத்தியில் முழுதுமாகத் தன் உழைப்பை நல்கிடும் தொழிலாளி, அதன் பலனையும் நலனையும் பெறமுடியாத நிலையில், முதலாளியோடு முரண்படுகிறான்; குழுவாக இணைகிறான், மோதல் நடைபெறுகிறது. இதனை வர்க்கப் போராட்டம் என்கிறோம். சமூகத்தில் நடைபெறும் இத்தகைய நிலைகளை    இலக்கியத்தில் காணமுடியும். உதாரணமாக, ரகுநாதனின் ‘பஞ்சும்பசியும்’ என்ற நாவலில் இதனைக் காணலாம். விக்கிரமசிங்கபுரம் நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளிகள், தங்களுடைய    வேலை உத்திரவாதம், கூலி நிர்ணயம் முதலியவற்றுக்காக, ஒன்றிணைந்து, ஊர்வலம், வேலை நிறுத்தம் முதலிய வழிமுறைகள் கொண்டு முதலாளியோடு போராடுகிறார்கள். இவ்வாறு சித்திரிக்கும் இந்த நாவல், தொழிலாளிகள் வர்க்க உணர்வு    பெற்று இணைந்து நிற்பதைக் காட்டுகிறது. ராஜம்கிருஷ்ணனின் ‘கரிப்புமணிகள்’, ஸ்ரீதர கணேசனின் ‘உப்பு வயல்’ ஆகிய நாவல்களில் தூத்துக்குடி வட்டார உப்பளங்களில் உழைக்கும்    உப்பளத்    தொழிலாளிகள்    தங்களுடைய முதலாளிகளுக்கு எதிராக எழுச்சி பெற்று நிற்பது இடம் பெறுகிறது. ‘நாங்கள் சேற்றில் கால்வைக்காவிட்டால், நீங்கள் சோற்றில் கைவைக்க முடியாது, - என்பது போன்ற புதுக்கவிதைகளிலும் இத்தகைய குரல் ஒலிப்பதைக் கேட்கலாம்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.

மார்க்சியத் திறனாய்வு எங்கிருந்து தொடங்குகிறது?விடை