34

பாரதியார் கவிதை உலகம் - 2

பாடம் - 1

பாரதியாரும் தமிழும்

பாடமுன்னுரை

பாரதி ஒரு தேசியக் கவிஞர் (National Poet). தாம் ஓர் இந்தியன் என்பதில் எவ்வளவு பெருமை கொண்டாரோ, அதைப் போலவே தாம் ஒரு தமிழன் என்பதிலும் பெருமை கொண்டார். தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம், தமிழின் பெருமையைப் பேசி மகிழ்ந்தார். தமிழின் பெருமை உலகளாவிய நிலையில் பரவ வேண்டும் என்று விரும்பினார். தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைப் புகழ்ந்து பாடினார். தமிழ் இனம் எத்தகைய பாரம்பரியப் பெருமை உடையது என்பதனை எண்ணி எண்ணி மகிழ்ந்தார். இவை பற்றிய பாரதியின் கருத்துகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

பாரதி - தமிழைப் பற்றி....

தமிழின் பெருமை

பாரதி ஒரு பன்மொழிப் புலவர். தாய்மொழியாகிய தமிழைத் தவிர, ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம், தெலுங்கு,இந்தி முதலிய மொழிகளை நன்கு கற்றிருந்தார். எனவே, தமக்குத் தெரிந்த பிற மொழிகளுடன் தமிழ் மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். தம் தாய் மொழியாகிய தமிழ் மொழி இனிய மொழியாகவும் சிறந்த மொழியாகவும் இருப்பதை எண்ணி மகிழ்கிறார்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்

(பாரதியார் கவிதைகள் : தேசியகீதம், தமிழ்: 1)

என்று புகழ்ந்து பாடுகிறார்.

தமிழ்ப் புலவர் பெருமை

அடுத்த நிலையில், தாம் அறிந்த புலவர்களிலே தமிழ்ப் புலவர்களாகிய கம்பனையும், வள்ளுவரையும், இளங்கோவையும் போலச் சிறந்த புலவர்களை வேறு எங்கும் பார்க்கவில்லை என்கிறார் பாரதியார்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல்,இளங்கோவைப்போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை

(தேசிய கீதங்கள், தமிழ்: 2)

(யாம் = நான், யாங்கணுமே = எங்குமே)

தமிழ்ச் சொல்லின் பெருமை

பாரதியார் குழந்தைகளுக்காகப் பாடிய ‘பாப்பா பாட்டில்’ குழந்தைகளுக்குப் பலவிதமான அறிவுரைகளைக் கூறுகிறார். தாய்நாட்டின் பெருமை, தாய்மொழியின் பெருமை ஆகியவற்றையும் குழந்தைகளுக்கு உரைக்கிறார். அவ்வாறு கூறும்பொழுது தமிழ்ச் சொற்களின் பெருமையினை எடுத்துரைக்கிறார்.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்

தொழுது படித்திடடி பாப்பா

(பல்வகைப்பாடல்கள், பாப்பா பாட்டு: 12)

தமிழ் மொழி உணர்வு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கில மொழி செல்வாக்குப் பெற்றிருந்தது. தமிழ் தனக்கு உரிய இடத்தைப் பெறவில்லை. தமிழர்களும் தமிழில் பேசுவதை விட, ஆங்கிலத்தில் பேசுவதையே விரும்பினர். எனவே ஏடுகளிலும், வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஆங்கிலமே ஆட்சி செலுத்தியது. கல்வியும் ஆங்கிலத்தின் வாயிலாகவே கொடுக்கப்பட்டது. தமிழுக்கு உரிய இடத்தில் ஆங்கிலம் இருந்தது. தமிழ் இரண்டாம் தர நிலையில் துணைப்பாடமாகும் தன்மையிலேயே அமைந்திருந்தது. இதைப் பார்த்த பாரதியார் மிகவும் வேதனை அடைந்தார். தமிழைக் கற்காமல் பிற மொழிகளையே கற்பவர்களையும், அவ்வாறு கற்பதையே பெருமையாகக் கருதுவோரையும் பார்த்து,

வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ

வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ

(பாரதியார் தேசிய கீதங்கள், போகின்ற பாரதம்:3)

(வீட்டுவார்த்தை = தாய்மொழி)

என்று சினந்து கூறுகின்றார்.

தமிழுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டும். தமிழர்களுக்குத் தமிழ் உணர்வு ஊட்ட வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் மொழி வாழும், வளரும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? பாரதி என்ன கூறுகிறார் என்று பார்க்கலாமா?

தமிழ் வழிக் கல்வி

தமிழ்நாட்டில், தமிழ் வழியாகவே கல்வி கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் புதிய புதிய சொற்களை உருவாக்க முடியும். இதனால் தமிழ் மொழி தலைமை பெற்று வளருவதற்கான வாய்ப்பும் உண்டாகும். இந்தக்கொள்கையைத் ‘தேசியக்கல்வி’ எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் வெளியிட்டுள்ளார் பாரதி.

தெருவெல்லாம் தமிழ் முழக்கம்

மேலும், எங்கும் எதிலும் தமிழ் இருக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும் தமிழைப் புகுத்த வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் செழிக்கும். இதனை,

…………. ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

(தேசிய கீதங்கள், தமிழ்: 2)

(சேமம் = நலம், உற = அடைய)

எனத் தம் பாடலின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

புதிய படைப்புகள் உலகத்தில் உள்ள செம்மொழிகளுள் (Classical Languages) தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் மொழியின் இலக்கியங்களும், இலக்கண வளமும் தொன்மையும் அதைச் செம்மொழிகளுள் ஒன்றாக இடம்பெறும் சிறப்பினை நல்கின. ஆனால் அந்தச் சிறப்பு நிலைபெற்று இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? ஆக்கபூர்வமான பணிகள் சிலவற்றைத் தமிழுக்குச் செய்யவேண்டும் என்கிறார் பாரதியார். அவற்றுள் ஒன்று புகழ்பெறும் தன்மையிலமைந்த பல புதிய படைப்புகள் தமிழில் வரவேண்டும் என்பதாகும்.

உலகெலாம் தமிழோசை ஒலிக்கட்டும்

தமிழைத் தமிழ் நாட்டிலுள்ள தெருக்களில் எல்லாம் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று கூறிய பாரதியார், அதை உலகம் எல்லாம் பரவும் வகை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். எனவே,

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்

(தேசிய கீதங்கள், தமிழ்: 1)

என்று அறிவுறுத்துகின்றார். பின்னர் தமிழ் மொழி வளம் பெற வழி கூறுகின்றார்.

மொழிவளம் சேர்க்கும் வழிமுறை

தமிழ் இனிய மொழி. இலக்கிய, இலக்கணச் சிறப்புடைய மொழி. தொன்மையான மொழி. இத்தகைய தமிழ் மொழியை வளப்படுத்த வேண்டுமானால் பிறநாட்டிலுள்ள சிறந்த அறிஞர்களின் நூல்களைத் தமிழில் பெயர்த்து எழுதவேண்டும், மேலும் புகழ் தரக்கூடிய புதிய நூல்களைப் படைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் பாரதி.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

(தேசிய கீதங்கள், தமிழ் : 3)

(சாத்திரங்கள் = நூல்கள், பெயர்த்தல் = மொழிபெயர்த்தல், இறவாத = அழியாத)

எல்லாக் காலத்திலும் எல்லோருக்கும் பொருந்துகின்ற, எல்லோரும் ஒத்துக் கொள்கின்ற உயர்ந்த கருத்துகளைக் கொண்டிருக்கும் இலக்கியங்கள் புகழுடைய இலக்கியங்களாகத் திகழும். அத்தகைய புகழுடைய இலக்கியங்களைப் படைத்துத் தமிழை வளப்படுத்துங்கள் என்கிறார் பாரதியார்.

அதோடு மட்டும் அல்லாமல், உலகிலுள்ள சிறந்த பல்துறை அறிஞர்களின் உயர்ந்த சிந்தனைகளும் தமிழ் மொழியில் இடம்பெறும் வகையில் அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதவேண்டும் என்கிறார் பாரதியார்.

அறிவியலில் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில், அறிவியல் கூறுகள், மேலைநாட்டு மொழிகளில் இருப்பதைப் போலத் தமிழில் இல்லை. அறிவியல் கூறுகளைப் பற்றிச் சொல்லும் திறமை தமிழ்மொழிக்கு இல்லை என்றும் தமிழ் மொழி மெல்ல மெல்ல அழிந்து விடும் என்றும் ஓர் அறிவிலி உரைத்தான். அந்த அறிவிலியின் சொல் மெய்யாகி விடுமோ என்று பாரதி அஞ்சுகிறார். எனவே, அந்த அச்சத்தை

மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்

(தேசியகீதங்கள், தமிழ்த்தாய்: 10)

(புவி = உலகம், மிசை = மேல், ஓங்கும் = புகழ் அடையும்)

என்று கூறுவதாகப் பாரதியார் குறிப்பிடுகிறார்.

இந்த நிலையை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்? உலகிலுள்ள பல நாடுகளுக்கும் செல்லுங்கள். தமிழை வளப்படுத்துவதற்காக, நீங்கள் செல்லும் இடங்களில் அல்லது நாடுகளில் உள்ள கலைச் செல்வங்கள் அனைத்தையும் சேகரியுங்கள். நீங்கள் சேகரித்த அத்தகைய செல்வங்களை எல்லாம் தமிழில் சேர்த்துத் தமிழை வளப்படுத்துங்கள் என்கிறார்.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர்

(தேசியகீதங்கள், தமிழ்த்தாய் : 11)

(திக்கு = திசை, கொணர்ந்து = கொண்டு வந்து)

பாரதி - தமிழரைப் பற்றி

ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. மனிதன் பேசும் மொழி, அவன் அணியும் ஆடை, உண்ணும் உணவு, வாழும் முறை, செய்யும் பணி, நம்பிக்கை உணர்வு ஆகியவை பண்பாட்டை வெளிப்படுத்தும் கூறுகளாகும். தமிழரின் பண்பாட்டுப் பெருமையைப் பாரதி புகழ்ந்துரைக்கிறார். முதலில் தமிழரின் நம்பிக்கையும் கடமை உணர்வும்

வெளிப்படுத்தப்படுகின்றன.

நம்பிக்கையும் கடமை உணர்வும் ஒருவனது உள் உணர்வுகளும், நம்பிக்கைகளும் அவன் பேசும் பேச்சிலும், அவன் செயல்களிலும் வெளிப்படும். அவை அவனது பண்பாட்டை வெளிப்படுத்தும்.

தமிழரின் மனவுறுதி

தமிழர்கள் பல்வேறு காரணங்களால் ஆப்பிரிக்கா, சாவா, சுமத்திரா, மலேயா, சிங்கப்பூர், பர்மா போன்ற பிற நாடுகளுக்குச் சென்றனர். அங்குப் பல்வேறு வகையான துன்பங்களை அனுபவித்தனர். இருப்பினும் பாரம்பரியமாகத் தங்கள் முன்னோர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளிலிருந்து கொஞ்சம் கூட நெகிழாமல் வாழ்ந்து வந்தனர். குறிப்பாகச் சமய நம்பிக்கையைப் பொறுத்த வரையில் அதைத் தங்கள் பண்பாட்டுக் கூறாகப் பாதுகாத்து வந்தனர். இதனை,

ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும்

தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்

பூமிப் பந்தின் கீழ்ப்புறத்துள்ள

பற்பல தீவினும் பரவி இவ்எளிய

தமிழச் சாதி, தடிஉதை யுண்டும்

கால்உதை யுண்டும் கயிற்றடி யுண்டும்

தெய்வம் மறவார், செயுங்கடன் பிழையார்

எதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்

இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்

(தேசியகீதங்கள், தமிழச்சாதி: 31-36, 43-45)

(காப்பிரி நாடு = நாகரிகம் இல்லாத நாடு, பூமிப்பந்து = பந்துபோன்று உருண்டையான நில உலகம், தடி உதையுண்டும் = தடியால் உதைபட்டும், கால் உதையுண்டும் = காலால் உதைபட்டும், கயிற்றடியுண்டும் = கயிற்றால் அடிபட்டும், தெய்வம் மறவார் = தாம் வணங்கும் தெய்வங்களை மறக்காதவர்கள், ஏதுதான் வருந்தினும் = எதை நினைத்து வருந்தினாலும்)

என்று புலம் பெயர்ந்த தமிழர்களின் சமய நம்பிக்கையினையும், கடமை உணர்வினையும் புகழ்ந்து கூறுகிறார் பாரதியார்.

சமயப்பற்று

தமிழர்கள் சென்று குடியேறிய நாடுகளில் தமிழர்களுக்கு அறிமுகம் இல்லாத பிற சமயங்கள் இருந்தன. சூழலுக்கு அடிமையாகியோ,எப்படியாவது வாழவேண்டும் என்பதற்காகவோ அவர்கள் தாம் சென்றடைந்த நாடுகளிலுள்ள சமயங்களைத் தழுவவில்லை. தங்களுக்கு ஈடுபாடு உடைய, முழுநம்பிக்கை உடைய, தங்கள் சமயத்தையே உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தனர். இன்றைக்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், தங்களது அடையாளச் சின்னமாக, தங்கள் தனித் தன்மையைப் புலப்படுத்த, முருகன் கோயில்களை அமைத்தும், மாரியம்மன் கோயில்களை அமைத்தும், காவடி எடுத்தல், அலகு குத்துதல், தீ மிதித்தல் போன்ற சமயச் சடங்குகளைப் பின்பற்றியும் வாழ்ந்து வருகின்றனர். இவை அவர்கள் தமது பண்பாட்டை உறுதியாகப் பின்பற்றி வருவதற்கு உரிய சான்றுகளாகத் திகழ்கின்றன.

கடமை உணர்வும் கடின உழைப்பும்

உழைப்பின் அருமையை உணர்ந்தவர்கள் தமிழர்கள். எனவேதான் வணிகர்களாகவும், ஒப்பந்தக் கூலிகளாகவும் தாம் குடிபெயர்ந்து சென்ற நாடுகளிலெல்லாம், தம் உழைப்பால் பிறரின் நன்மதிப்பைப் பெற்றதோடு, தாமும் தம் உழைப்பால் முன்னேறினர். கடமை உணர்வுடன் எப்பொழுதும் உழைக்க வேண்டும் என்ற மனப்பான்மை ஓர் இனத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் என்பர். கடல் கடந்து சென்றாலும் தம் கடமையிலிருந்து வழுவாதவர்கள் தமிழர்கள் என்று புகழ்கிறார். இந்தப் பண்பாட்டைத் தாம் சென்ற நாடுகளில் விடாமல் பாதுகாத்தவர்கள் தமிழர் என்பதால் பாரதியார் ‘செய்யுங்கடன் பிழையார்’ என்று சுட்டிக்காட்டிப் பாராட்டுகிறார்.

பாரதி - தமிழ் இனத்தைப் பற்றி

தமிழ் இனத்தைப் பற்றி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள்,

தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா

(தமிழன் பாட்டு : 1-2)

எனவும்

தமிழன் என்று ஓர் இனமுண்டு

தனியே அவர்க்கு ஒரு குணமுண்டு

(தமிழன் இதயம் :1-2)

எனவும் பெருமையாகப் பாடினார்.

தமிழன் தனித்தன்மை வாய்ந்தவன். அவனது தனித்தன்மையால் அவன் தலைநிமிர்ந்து இறுமாப்புடன் (பெருமையுடன்) நிற்பதற்குத் தகுதி உடையவன் என்கிறார் இராமலிங்கம் பிள்ளை. பாரதியாருக்கும் தமிழ் இனத்தைப பற்றி மிகுந்த பெருமை உண்டு. தாம் தமிழன் என்பதிலும் பெருமிதம் கொண்டவர் பாரதி. எனவே, தமிழ் இனத்தின் பெருமையைப் பல பாடல்களின் வழியாகப் புலப்படுத்துகின்றார்.

தொன்மை உலகிலுள்ள தொன்மையான இனங்களுள் தமிழ் இனமும் ஒன்று.தமிழினத்தின் தொன்மைச் சிறப்பைப் போற்றும் பாரதியின் பாடல்கள் பல.சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாக இருப்பவன் சிவன். இறைவனாகிய சிவபெருமானால் உருவாக்கப்பட்டவளே தமிழ்த்தாய். அகத்திய முனிவரால் அமைக்கப்பட்டதே தமிழ்மொழி என்கிறார் பாரதியார்.

ஆதிசிவன் பெற்று விட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றுஓர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்

(தேசியப்பாடல்கள், தமிழ்த்தாய்: 1)

(மைந்தன் = புதல்வன், வேதியன் = அறவோன், நிறைமேவும் = முழுமையாகப் பொருந்தும்)

என்று குறிப்பிடுகிறார் பாரதியார்.

ஆதிசிவனுக்கும் அகத்தியருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? வழக்கில் இருக்கும் ஒரு கட்டுக் கதை இந்தத் தொடர்பை விளக்குவதாக அமைந்துள்ளது.

இமயமலையில், சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தைப் பார்த்து மகிழ்வதற்காக உலகிலுள்ள முனிவர்களும், வானுலகத்திலுள்ள தேவர்களும் கூடினார்கள். அதனால், இமயமலையைச் சார்ந்த வடபுலம் தாழ்ந்தது. உடனே, சிவபெருமான் அகத்தியரை நோக்கித் தென்புலத்திற்குச் சென்று பொதியமலையில் அமரச் சொன்னார். அகத்தியரும் அவ்வாறே, தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள பொதியமலையில சென்று அமர்ந்தார். உடனே, ஒரு பக்கம் சாய்ந்த வடபுலம் தென்புலத்திற்கு நிகராக உயர்ந்து சமமானது. அந்த நிகழ்ச்சியிலிருந்து அகத்தியர் பொதிய மலையில் தங்கியதாகவும், தமிழ் இலக்கண நூல் எழுதியதாகவும் கதை வழங்கி வருகிறது. அகத்தியரின் மாணவர்களில் ஒருவர் தொல்காப்பியர் என்றும் குறிப்பிடுவர்.

எனவே, பாரதியார் தமிழ் இனத்தின் தொன்மையைக் குறிப்பிடுவதற்கு, அகத்தியர் இலக்கணம் எழுதியதைச் சுட்டிக் காட்டுகிறார்.

மேலும் தமிழரின் தொன்மையைக் குறிப்பிடும்போது காலவரையறை சொல்ல முடியாத காலத்தில் வாழ்ந்தவர் தமிழர் என்பதனை,

…. ………………………ஆயிரம்

ஆண்டின் முன்னவரோ ஐயாயிரமோ?

பவுத்தரே நாடெலாம் பல்கியகாலத்

தவரோ? புராணமாக்கிய காலமோ?

(தேசியப்பாடல்கள், தமிழச்சாதி : 97-100)

(முன்னவரோ = முன்னால் தோன்றியவரோ, பவுத்தர் = புத்தமதப் போதகர்கள், பல்கிய = பெருகிய)

என்று வினவுகிறார். வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மையான காலத்தைச் சார்ந்தவர்கள் தமிழர்கள் என்பது பாரதியார் கருத்து.

வீரம் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு அகம், புறம் என்று பாகுபாடு செய்து வாழ்ந்து வந்தார்களோ, அவற்றிற்கு ஏற்ப இலக்கியம் படைத்த பெருமைக்கும் உரியவர்கள் என்று குறிப்பிடுகிறார் பாரதியார்.

புறம்

புறம் என்றால் குடும்ப – அதாவது இல்லற வாழ்க்கைக்குப் புறம்பான, போர், கொடை போன்ற நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டது. இதை அ டிப்படையாகக் கொண்டு அமைந்த இலக்கியங்கள் புற இலக்கியங்கள் என்று வழங்கப்பட்டன. புற இலக்கியங்களில் சிறப்பு வாய்ந்தது புறநானூறு. இதில் பண்டைய தமிழ் மன்னர்களின் வீரமும் படைவீரர்களின் வீரமும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. புறநானூறு கூறும் வீரப்பரம்பரையில் வந்த தமிழர்களைப் பற்றிப் பாரதியார் பெருமையாகப் பாடியுள்ளார்.

கடல் கடந்த போர்

தமிழர்கள் கடல்கடந்து வாணிபம் செய்ததுபோல், கடல்கடந்து சென்று போரும் நிகழ்த்தி உள்ளனர். இலங்கை, சாவகம், கடாரம் போன்ற தீவுகளைக் கடல் கடந்து வென்றுள்ளனர். சோழ அரசர்களுள் சிறப்பு உடையவனாகிய முதலாம் இராசராசசோழன், கடாரம் வரை சென்று அதை வென்ற காரணத்தினாலேயே ‘கடாரம் கொண்டான்’ என அழைக்கப்பட்டான்.

அதைப்போல, இலங்கைமீது படையெடுத்துச் சென்று, சோழ அரசன் இராசராசன் வெற்றி பெற்றுள்ளான். இராசராசேசுவரம் என்ற இடத்தில் கோயில் ஒன்றும் கட்டினான். அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு, தன் ஆட்சியையும் பரப்பினான்.

இத்தகைய, வரலாற்று உண்மையை அடிப்படையாகக் கொண்டு, பாரதியார்,

சிங்களம் புட்பகம் சாவகம் – ஆதிய

தீவு பலவினும் சென்று ஏறி – அங்குத்

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று

சால்புறக் கண்டவர் தாய்நாடு

(தேசியப்பாடல்கள், தமிழ்நாடு : 8)

(ஆதிய = முதலிய, நின்று = நிலைநிறுத்தி, சால்புற = பெருமை விளங்க,)

என்று தமிழர் வீர வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

மேலும் வானத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்த உச்சியைஉடைய இமயமலையைக் கூடத் தமது வீரத்தினால் அழிக்கக் கூடியவர்கள் தமிழர்கள் என்கிறார் பாரதியார். இதனை,

விண்ணை இடிக்கும் தலைஇமயம் – எனும்

வெற்பை அடிக்கும் திறனுடையார்

(தேசிய கீதங்கள், தமிழ்நாடு : 9)

(விண் = வானம், இடிக்கும் = தொடும், தலை = உச்சி, வெற்பு = மலை, அடிக்கும் = அழிக்கும்)

இவ்வாறு தமிழர்களின் வீரமரபைப் போற்றிப் பாடிய பாரதியின் பாடல்கள்பல.

காதல் பண்டைய தமிழர் அக வாழ்க்கைக்குச் சிறப்பிடம் கொடுத்திருந்தனர். சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்கள் காதல் இலக்கியத்தைப் பற்றியே அமைந்துள்ளன. பாரதியாரும், தமிழர்களின் அக இலக்கிய மரபை அடிப்படையாகக் கொண்டு தம் பாடல்களை அமைத்துள்ளார்.

தாம் எழுதிய குயில்பாட்டில், காதலின் பெருமையைப் பாரதியார் குறிப்பிடுகிறார். இறைவன் உலகத்தைப் படைத்தார். ஆனால் இந்த உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்குக் காதல்தான் காரணம் என்கிறார் பாரதியார். காதல் இல்லாவிட்டால் இந்த உயிரினமே அழிந்துவிடும் என்கிறார்.

காதல் காதல் காதல்

காதல் போயின் காதல் போயின்!

சாதல் சாதல் சாதல்

(குயில்பாட்டு : குயிலின் பாட்டு)

(சாதல் = இறத்தல்)

காதல் என்பது மனிதர்களிடம் மட்டுமல்லாமல், உயிர் இனங்கள் அனைத்திடமும் இருக்கின்ற ஒன்று.அதுதான், உயிர் இனங்களிடையே ஓர் உறவை – ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது. எனவே, உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமான காதல் இல்லாவிட்டால் உலகம் இயங்காது அழிந்துவிடும் என்கிறார் பாரதியார்.

இவ்வாறு தமிழர்கள் தம் அகவாழ்வில் சிறப்பிடம் கொடுத்திருந்த காதலின் பெருமையினைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

பாரதி - தமிழ்நாட்டைப் பற்றி

தேன் எவ்வாறு இனிமையைக் கொடுக்கிறதோ, அதைப்போலவே, ‘செந்தமிழ் நாடு’ என்று சொன்ன உடனேயே, அதைக் கேட்கும் காதிற்கும் தேனின் சுவைபோல், இன்பம் கிடைக்கும் என்கிறார் பாரதியார்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே

(தேசிய கீதங்கள், தமிழ்நாடு : 1)

(போதினிலே = பொழுதில்)

தேன் வந்து பாயுது காதினிலே என்பதற்கு நேரடியான பொருள் கொள்ளக்கூடாது. இங்கு இனிமைக்குத்தான் தேன்சுட்டப்படுகிறது. வேறு எதற்காகவும் இல்லை.

தமிழ்நாடு என்ற சொல்லே கேட்கும் காதுகளுக்கு இன்பம் நல்கும் என்றால், தமிழ்நாட்டின் பெருமைகள் முழுவதையும் அறிந்தால் அது எவ்வளவு இன்பத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்! தமிழ் மீது பாரதி கொண்ட தீராக் காதலைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

இயற்கை வளம் மிகுந்த நாடு தமிழ்நாடு. கல்விச் சிறப்புடைய நாடு தமிழ்நாடு. அறவோர்களும், புலவர்களும் தோன்றியமையால், உலகப் புகழ் வாய்ந்த நாடு தமிழ்நாடு. தமிழ்நாட்டின் இத்தகையச் சிறப்புகளை எல்லாம் உள்ளடக்கி, பல பாடல்களைப் பாரதியார் பாடியுள்ளார்.

இயற்கை வளம் மலைவளம், கடல்வளம் போன்ற இயற்கை வளம் மிகுந்த நாடு தமிழ்நாடு. இயற்கையாக அமைந்த ஆறுகள் பல இங்கு உள்ளன. காவிரி ஆறு, தென் பெண்ணை ஆறு, பாலாறு, வைகை முதலிய பல பெரிய ஆறுகள் தமிழ் நாட்டிற்கு வளம் சேர்க்கின்றன. எனவே, தமிழ்நாட்டின் வளத்தைக் குறிப்பிடும்போது பாரதியார்,

காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்

கண்டதோர் வையை பொருநைநதி – என

மேவிய ஆறு பலஓடத் – திரு

மேனி செழித்த தமிழ்நாடு

(தேசியகீதங்கள், தமிழ்நாடு : 3)

(மேவிய = பொருந்திய, மேனி = உடல் (இங்குத் தமிழ்நாட்டின் பகுதி)

என்று குறிப்பிடுகிறார்.

இத்தகைய நீர்வளம் பொருந்திய தமிழ்நாட்டில், பிற செல்வங்கள் எல்லாம் செழித்திருந்தன என்று கூறுகிறார் பாரதியார்.

கல்வி வளம் தொடக்கக் காலம் முதலே, தமிழ்நாட்டில் புலமை மிக்க பலர் இருந்தனர். திருவள்ளுவர் முதல் கம்பர் வரையிலும் கல்வியில் சிறந்த பல புலவர்கள் இருந்தனர். சங்க காலத்தில் ஒளவையார், காக்கைப் பாடினியார், வெள்ளிவீதியார் போன்ற பெண் புலவர்கள் பலரும் இருந்தனர். இதனால் தமிழ்நாடு பெருமை பெற்றிருந்தது. எனவே பாரதியார்,

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல

பல்வித மாயின சாத்திரத்தின் – மணம்

பாரெங்கும் வீசும் தமிழ்நாடு

(தேசியகீதங்கள், தமிழ்நாடு: 6)

(பார் = உலகம், வீசும் = பரவும்)

என்று தமிழ்நாட்டைப் புகழ்ந்து கூறுகிறார்.

கம்பனின் கல்விச் சிறப்பை அறிந்த மக்கள் அவரைக் ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என கூறி மகிழ்வர். வடமொழியில் எழுதப்பட்ட இராமாயணத்தைத் தழுவி, கம்பன் எழுதிய இராமாயணம் தமிழில் உள்ள தலைசிறந்த படைப்புகளில் ஒன்று. இதன் பெருமையை அறிந்தே, மலையாளம் போன்ற மொழிகளில், கம்பனின் இராமாயணத்தை மொழிபெயர்த்துள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கம்பன் பிறந்ததும் தமிழ்நாடு. அதனால் தமிழ்நாடு பெருமை பெற்றது என்று குறிப்பிடுகிறார் பாரதியார்.

உலகப்புகழ்

தமிழ்நாட்டின் பெருமை உலகளாவிய நிலையில் பரவுவதற்குக் காரணமாக இருந்தவர் வள்ளுவர். உலகிலுள்ள பெரும்பாலான அறநூல்கள் எல்லாம் சமயச் சார்புடையன. ஆனால் வள்ளுவரால் இயற்றப் பெற்ற திருக்குறள், எந்த ஒரு சார்பும் இல்லாது எல்லோருக்கும், பொருந்துகின்ற ஒன்று. எல்லாக் காலத்திற்கும் பொருந்துகின்ற ஒன்று. எனவே இதை ‘உலகப் பொதுமறை’ என்று அழைப்பர். உலகிலுள்ள பல மொழிகளில் இதனை மொழிபெயர்த்தனர். எனவே, திருக்குறள் எனும் உலகப் பொதுமறையை இயற்றியமையால், திருவள்ளுவர் உலகப் புகழ் பெற்றார். அதனால் தமிழ்நாடு உலகப் புகழ் பெற்றது. இந்த உண்மையினைப் பாரதியார்,

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

(தேசியகீதங்கள், தமிழ்நாடு: 7)

(வான் = உயர்ந்த)

என்று வியந்து பாராட்டுகிறார்

சேக்ஸ்பியரால் இங்கிலாந்து நாடு புகழ்பெற்றது என்பர். ஹோமரால் கிரேக்க நாடு புகழ் பெற்றது என்பர். அதைப்போல வள்ளுவரால் தமிழ்நாடு உலகப் புகழ் பெற்றது என்கிறார் பாரதியார்.

திருக்குறளிலுள்ள கருத்துகள் உலகநோக்கு (Universal) உடையன. அதனால் உலகளாவிய நிலையில் பரவின. தம் கருத்துகளால் உலக மக்களின் மனத்தில் இடம் பெற்றார் வள்ளுவர். அதனால் புகழ் பெற்றார். அந்தப் புகழ், தமிழ் நாட்டினை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது என்று குறிப்பிடுகிறார் பாரதியார். இவ்வாறு, புலமை மிகுந்த ஒளவையாராலும், இளங்கோவடிகளினாலும் தமிழ்நாடு பெருமை பெற்றது என்றும் பாரதி குறிப்பிட்டுள்ளார்.

வணிகவளம் பண்டைய தமிழ் மக்கள் உலகிலுள்ள பல நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். குறிப்பாக, மேற்கே, உரோம், எகிப்து முதலிய நாடுகளுடனும், கிழக்கே சீனம், மலேயா, சிங்கப்பூர் முதலிய நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். ஏலம், இலவங்கம் போன்ற நறுமணப் பொருள்களைத் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தனர். இத்தகைய ஏற்றுமதி இறக்குமதி வணிகம் சிறப்பாக நடந்ததாகவும் அதற்கான சுங்க வரிகள் வசூலிக்கப்பட்டதாகவும் பட்டினப்பாலை என்ற நூல் குறிப்பிடுகிறது. தமிழர்கள் தாம் தொடர்பு கொண்ட நாடுகளில் தம் பண்பாட்டுக் கூறுகளையும் எடுத்துச் சென்றனர். இதனால் வாணிபத் தொடர்பு கொண்ட நாடுகளிலெல்லாம் தமிழர்களின் புகழ் பரவியிருந்தது.

தமிழர்கள் கடல்கடந்து வாணிபம் செய்து தமிழ்நாட்டை வளப்படுத்தியதோடு தமிழர்களின் பெருமை உலகமெலாம் செல்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினர். இதனைப் பாரதியார்,

சீன மிசிரம் யவனரகம் – இன்னும்

தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை

ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக

நன்று வளர்த்த தமிழ்நாடு

(தேசியகீதங்கள், தமிழ்நாடு : 10)

(மிசிரம் = எகிப்து, யவனரகம் = கிரேக்கம், படைத்தொழில் = போர்த் தொழில்)

என்று குறிப்பிடுகிறார்.

வாணிபவளம் சேர்த்ததோடு, அறிவு வளர்ச்சியும், கலைவளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கு அளித்தனர். தமிழர்களின் புகழ், அவர்கள் வணிகத்தின் பொருட்டுச் சென்ற இடங்களிலெல்லாம் பரவியது என்கிறார் பாரதியார்.

பாரதி - தமிழர் வாழ்வு பற்றி

தமிழ்மக்கள் முன்னர் மாண்போடு வாழ்ந்தார்கள்; இப்பொழுது எத்தகைய நிலையில் வாழ்கிறார்கள்? இதனைப் பற்றிப் பாரதி பல பாடல்களில் பாடியுள்ளார். தமிழர்கள் தம் முன்னோர்களைப் போல், மாண்புடையவர்களாக வாழவேண்டும் என்று விரும்பினார் பாரதியார். தமிழர்களுடைய குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும், எத்தகைய ஆற்றல் வாய்ந்தவர்களாக அவர்கள் வாழ வேண்டும் என்பனவற்றையும் கூறுகிறார் பாரதியார்.

குடும்ப வாழ்க்கை தமிழர்கள் கணவன் மனைவியாக வாழும் குடும்ப வாழ்க்கையையே ஓர் அறமாகக் கருதி வாழ்ந்தனர். எனவே குடும்ப வாழ்க்கையை ‘இல்லறம்’ (இல் = வீடு) என்றே அழைத்தனர். அவ்வாறு அறமாகக் கருதி வாழும் வாழ்க்கையில் கணவன் மனைவியாகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர், அன்புடையவராகவும், ஒத்துழைப்பு நல்குபவராகவும், இருக்கவேண்டும். மற்றவர்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் அன்பு, இரக்கம், தியாகம், தொண்டு, பொறுமை ஆகிய நல்ல பண்புகளுடன், திகழவேண்டும். இல்லற வாழ்க்கை மேலும் மேலும் சிறப்பு அடையத் துணை செய்ய வேண்டும் என்பது பாரதியின் கருத்து. இதனை வலியுறுத்தவே,

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, அவன்

காரியம் யாவினும் கைகொடுத்து

மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும்

மாட்சி பெறச் செய்து வாழ்வமடி

(பல்வகைப்பாடல்கள், பெண்கள் விடுதலைக்கும்மி: 8)

(கைப்பிடித்தே = திருமணம் செய்தே, காரியம் = செயல்பாடுகள், கைகொடுத்து = உதவி செய்து, மாதர் = பெண்கள், மாட்சி = மேம்பாடு, )

என்று குறிப்பிடுகிறார்.

அறிவு ஆற்றல் தொல்காப்பியர், வள்ளுவர், இளங்கோ, கம்பர், ஒளவையார் போன்ற அறிவு ஆற்றல் மிகுந்த சான்றோர்கள் பலர் வாழ்ந்த பெருமைக்கு உரியது தமிழ்நாடு. அந்தச் சான்றோர்களின் வாழ்க்கை முறை, பிறருக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. அத்தகைய சான்றோர்கள் மேலும் உருவாக வேண்டும். அவர்களின் ஆற்றலைப் பிறநாட்டார் பாராட்ட வேண்டும். அதற்கு உரிய மரியாதையைச் செய்ய வேண்டும் என்கிறார் பாரதியார்.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

சொல்வதில்ஓர் மகிமை இல்லை

திறமான புலமையெனில் வெளிநாட்டார்

அதை வணக்கம் செய்தல் வேண்டும்

(தேசியகீதங்கள், தமிழ்: 3)

தமிழர்கள் தங்கள் பழம்பெருமையைப் பேசுவதில் பெரும் மகிழ்வு கொள்கின்றனர். பெருமையாகக் கருதுகின்றனர். அதிலேயே இன்பங்கண்டு வாழ்கின்றனர். ஆக்கபூர்வமான எந்தச் செயலும் செய்யாமல், பழம்பெருமையைப் பேசுவதிலேயே பொழுதைப் போக்குகின்றனர். அவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களைப் பார்த்தே பாரதியார், இவ்வாறுகூறுகிறார். நமக்குள்ளே நம் பழம் பெருமைகளைப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. இன்றையச் சூழலில் நமக்கு இருக்கும் பெருமை என்ன? உலக மக்களிடம் நமக்கு எந்த இடம் இருக்கிறது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உலக மக்கள், நம் பழம் பெருமைகளால் நம்மை மதித்ததுபோல், இன்றும் நாம் மதிக்கப்பட வேண்டுமானால், நாம் நம் புலமையை அறிவு ஆற்றலை மேலும் மேலும் வளர்க்க வேண்டும். பிற நாட்டவர் வாழ்த்தி வணங்கிப் பாராட்டும் வகையில் நாம் வாழ வேண்டும் என்று வேண்டுகிறார் பாரதியார்.

தொகுப்புரை

தாம் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொண்ட பாரதியார், தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். தமிழ் மொழியின் பெருமையையும், வளத்தையும் குறிப்பிடுகிறார். ஆங்கில ஆட்சிக்காலத்தில், ஆங்கிலத்தின் செல்வாக்கால், தமிழ் இரண்டாம்தர நிலைக்குத் தள்ளப்பட்டதை உணர்ந்தார். எனவே எங்கும் எதிலும் தமிழ் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். தாய்மொழியின் வாயிலாகவே கல்வி கொடுக்க வேண்டும் என்று வேண்டினார்.

தமிழர் பண்பாட்டுச் சிறப்பினைக் குறிப்பிடும்போது, தமிழர்கள் கடல் கடந்து சென்றாலும் எத்தகைய உறுதியான நம்பிக்கையையும், கடமை உணர்வினையும் கொண்டிருக்கின்றனர் என்பதைச் சுட்டுகின்றார். தமிழர்களின் வழிபாட்டின் மூலம் வெளிப்படும் பண்பாட்டுப் பெருமையையும் எடுத்துரைக்கின்றார்.

தமிழ் இனம் எத்தகைய தொன்மை வாய்ந்தது என்பதனையும், தமிழர்கள் வீரத்தையும் காதலையும் எவ்வாறு போற்றிப் பாதுகாத்தனர் என்பதனையும் பாரதியார் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் இயற்கையாக அமைந்த ஆறுகள் பலவும் எவ்வாறு நீர் வளத்தை வழங்குகின்றன என்றும் குறிப்பிடுகிறார். வள்ளுவன் போன்ற அறவோர்களாலும் தமிழ்நாடு பெற்ற கல்வி வளத்தைக் கூறுகிறார். தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்து, தமிழ்நாட்டை எவ்வாறு வளப்படுத்தினர் என்பதையும் சுட்டுகிறார்.

விடுதலை பெற்று வாழும் பெண்கள் தங்கள் கணவர்க்குத் துணையாக இருந்து, செய்ய வேண்டிய கடமைகளையும் செய்து, ஓர் எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழவேண்டும், பழம் பெருமைகளையே பேசி மகிழ்ந்து, நாட்களை வீணாக்காமல், தம் அறிவு ஆற்றலால் வெளிநாட்டார் வணங்கி வாழ்த்தும்படி தமிழர்கள் வாழவேண்டும் என்று வேண்டுகிறார் பாரதியார்.

பாடம் - 2

பாரதியாரும் இந்திய விடுதலை இயக்கமும்

பாட முன்னுரை

“எதுவும் தன் விருப்பப்படி செய்து அதனால் ஏற்படக் கூடிய இன்ப துன்பங்களுக்குத் தான் பொறுப்பாளியாக இருப்பது தான் விடுதலை” (பாரதியார் கட்டுரைகள், பக்:99)

தீரத்திலே, படைவீரத்திலே, நெஞ்சில் ஈரத்திலே, (ஈரம் – இரக்கம்) உபகாரத்திலே உயர்ந்த நாடு என்றெல்லாம் பாரதியார் மிகவும் போற்றிப் பாடிய பாரத நாடு முன்னாளில் எப்படி இருந்தது? இன்று காண்பது போல் ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்ததா? இல்லை. நாடு சிறு சிறு பகுதிகளாகப் பிரிந்திருந்தது. அவற்றை அரசர்களும், குறுநில மன்னர்களும் ஆண்டு வந்தனர். இந்தியா ஒரு தலைமையின் கீழ் இயங்கவில்லை. மேலும் மக்களிடையே காணப்பட்ட பல்வகையான வேறுபாடுகளின் காரணமாக ஒற்றுமையின்மை நிலவியது. இதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர் வெளிநாட்டினர். வாணிகம் செய்ய வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலும் தலையிட்டனர். ஆட்சியையும் கைப்பற்றினர். இவ்வாறு இந்தியா அந்நியருக்கு அடிமைப்பட்டது.

இங்ஙனம் அடிமைப்பட்ட இந்தியாவின் அடிமைத்தனத்தை எண்ணி வருந்தி, அந்நியர் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பலரும் போராடினார்கள். அந்த விடுதலைப் போராட்டத்தில் பாரதியாரும் தம்மை இணைத்துக் கொண்டார். மேலும் தம் உணர்வுகளைத் தாம் இயற்றிய பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார். அவை பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் இடம் பெறுகின்றன.

விடுதலை இயக்கம்

இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய விடுதலை இயக்கத்தில் பெரும்பங்கு வகித்தது. இந்திய விடுதலைக்காக இடையறாது போராடியது. தென்னாப்பிரிக்காவில் அறப்போராட்டத்தை நடத்திய காந்தியடிகளின் இந்திய வருகையால் இந்திய விடுதலை இயக்கம் ஒருமுகப்பட்டது. மகாத்மாவின் போராட்ட முறை இந்திய விடுதலைக்கு வழி வகுக்கும் என்ற தொலை நோக்குப் பார்வை பாரதியாரை இந்திய விடுதலை இயக்கத்தில் இணையச் செய்தது.

பாரதியாரின் அரசியல் நுழைவு ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ என்ற சபை இந்திய விடுதலைக்கான இயக்கத்திற்கு எழுச்சி ஊட்டிக் கொண்டிருந்த காலம் அது. 1898-ஆம்ஆண்டு இங்கிலாந்து நாட்டுஅரசின்அரசப்பிரதிநிதியாகக் கர்சன்பிரபு இந்தியாவில் பொறுப்பேற்றார். துவக்க முதலே இந்திய விரோதப் போக்கில் தீவிரமாக இருந்தார் கர்சன் பிரபு. அது இந்திய விடுதலை இயக்கத்திற்குப் புது வேகத்தை அளித்தது. ஜி. சுப்பிரமணிய அய்யர் சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்தவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய சுயாட்சியை ஆதரித்து இந்தியர்களுக்கு அதிகமான அரசுப்பணிகள் அளிக்க வேண்டும் என்று வீரமுழக்கமிட்டார். 1905-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் நாள் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இசுலாமியர் பெரும்பான்மையாக இருந்த பகுதி கிழக்கு வங்காளம் எனவும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி மேற்கு வங்காளம் எனவும் வழங்கப்பட்டது. நிர்வாகத்தின் பொருட்டு வங்காளத்தைப் பிரிப்பதாகக் காரணம் சொன்னார் கர்சன் பிரபு. ஆனால், அது இந்து, இசுலாமியர் ஆகியோரின் ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கில் அமைந்த பிரிவினையாகும்.

வங்காளப் பிரிவினையின் காரணமாக இந்தியா முழுவதும் புத்துணர்ச்சி பிறந்தது. இந்தப் புதிய உணர்ச்சியைக் கோபால கிருஷ்ண கோகலே ‘தேசிய உணர்ச்சி’ என்று குறிப்பிட்டார். வங்காளப் பிரிவினையால் அங்குள்ள இந்துக்களும், இசுலாமியர்களும் ஓரணியில் நின்று வெள்ளையரை எதிர்த்தனர். வங்காள மாணவர்களிடம் ‘சுதேச உணர்வு’ எழுந்தது. அதாவது இந்திய நாட்டில் விளைந்த – உற்பத்தியான பொருள்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் அரும்பியது. அவர்கள் ‘சுதேச விரதம்’ (ஆங்கில நாட்டுப் பொருட்களை நிராகரிப்பது) மேற்கொண்டனர். சென்னை நகர மாணவர்கள் வங்காள மாணவர்களை வாழ்த்த, சென்னைக் கடற்கரையில் கூட்டம் நடத்தினர். ஜி.சுப்பிரமணிய அய்யர் தலைமை தாங்கினார். ‘வங்கமே வாழ்க!’ என்று வங்காளத்தை வாழ்த்திப் பாடிய பாடலுடன் பாரதியாரின் அரசியல் நுழைவு தொடங்கியது.

பாரதியும் சுதேச உணர்வும் வங்காளத்தில் எழுந்த சுதேச உணர்வு நாட்டின் எல்லாப் பாகங்களிலும் பரவ வேண்டும் என்று தேசபக்தத் தலைவர்கள் விரும்பினர். பாரதியார் தமிழ்நாட்டு மக்களிடையே சுதேச உணர்வு வளரப் பாடுபட்டார். ஆகவே ‘சுதேசமித்திரன்’, ‘சக்கரவர்த்தினி’ ஆகிய பத்திரிகைகளில் வங்காளத்தில் எழுந்த சுதேச இயக்கம் பற்றியும், சுதேச இயக்கத்தில் பங்கு கொண்ட வங்காளப் பெண்கள் குறித்தும் கட்டுரைகள் எழுதினார். பெண்களும் தாய்நாட்டிற்காகப் போராடும் தகுதியும், திறமையும், உரிமையும் உள்ளவர் என்று சுட்டிக்காட்டினார். விடுதலை இயக்கத்தில் பங்கு கொள்ளுமாறு அவர்களைத் தூண்டினார். சுதேச உணர்வில் தமிழ்நாடு முன்னணியில் இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். சுதேச உணர்வை எப்படி வெளிப்படுத்த வேண்டும்? சுதேச விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும். தேசபக்தத் தலைவர்கள் சுதேசிய விரதத்தைக் கடைப்பிடிக்குமாறு மக்களிடம் கூறினர். சுரேந்திரநாத் பானர்ஜி சுதேசிய விஷயத்தில் காட்டிய ஊக்கத்தைப் பாரதி,

நமது நாட்டில் சுதேசிய விதையிட்டு, அவ் வயலின்கண் குடிலிட்டுக் கொண்டு இடைவிடாது காப்பவர் இம்மகான் என்பதை யாரும் மறுக்கார்

என்று தமிழ்நாட்டு மக்களுக்குப் புலப்படுத்தினார். (மகாகவி பாரதி வரலாறு, பக் : 150)

சுதேசிய உணர்வு நாடு முழுவதும் பரவினால்தான் விடுதலை கிடைக்கும் என்று பாரதி நம்பினார். ஆங்கிலேயர், தம் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை விற்கும் சந்தையாக இந்தியாவை மாற்றினர். இந்தியாவிலுள்ள கைத்தொழில்கள் நலிந்தன. எனவே, இந்தியரும் ஆங்கிலேயரை விடச் சிறந்த பொருள்களை உற்பத்தி செய்யும் திறமை உடையவர் என்று காட்டும் வகையில் பெருமிதத்தோடு,

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்

உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்

(பாரத தேசம், 8 & 12)

(பண்ணி = செய்து, உவந்து = மகிழ்ந்து)

என்று பாடினார். இந்திய மக்கள் சுதேச உணர்வுடன் செயல்பட்டால் ஆங்கிலப் பொருட்களை வாங்கத் தேவையில்லை என்றும் விளக்கினார்.

பாரதியும் தீவிரவாதமும் நாட்டின் எல்லாத் திசைகளிலும் சுதேசிய உணர்வு மேலோங்கி, ‘வந்தே மாதரம்’ என்னும் மந்திரச் சொல்லே எங்கும் எதிரொலித்தது. (வந்தே மாதரம் என்றால் ‘தாயை வணங்குகிறோம்’ என்று பொருள்படும் – இந்திய நாடு தாயாக மதிக்கப்பட்டது)

காசியில் காங்கிரஸ்

அந்தச் சமயத்தில் காங்கிரசின் 21-வது சபை காசியில் கூடியது. காங்கிரஸ் சபைக்குக் கோபால கிருஷ்ண கோகலே தலைமை தாங்கினார். அவர் சுதேசியம், அந்நியப் பொருள்கள் விலக்கு என்கிற கொள்கைகளுக்கு ஆதரவாகப் பேசினார். ஆனால் ஆங்கில அரசுடன் ஒத்து இருந்து அரச நம்பிக்கையுடன் கூடிய சுய ஆட்சி பெறவேண்டும் என்று அவர் விரும்பியதை அவருடைய பேச்சு உணர்த்தியது. கோகலேயின் நிதானப்போக்கு, ஆங்கில அரசுடன் ஒத்துப்போகவேண்டும் என்ற கொள்கை முதலியவை பாலகங்காதர திலகருக்குப் பிடிக்கவில்லை. முதன் முதலாக அவர் சாத்வீக எதிர்ப்புக் கொள்கையை (தீவிரவாதக் கொள்கையை) இந்தக் காங்கிரஸ் சபையில் வெளியிட்டார். பாலகங்காதர திலகர் கருத்தைப் பலர் ஆதரித்தனர். அவர்கள் ‘நமக்கு நாமே துணை’ என்ற கொள்கையின் அடிப்படையில் நாட்டுப் பணிகளை ஆற்ற வேண்டும் என்று கருதினர். அதற்கு, அன்னியப் பொருள்களை நிராகரிப்பது ஒன்றே சிறந்த வழி என்று கண்டனர். பாரதி, லாலா லஜ்பதிராய், அரவிந்தர், விபின சந்திர பாலர் ஆகியோர் பாலகங்காதர திலகரின் கொள்கையை ஏற்றுக்கொண்டனர்.

கல்கத்தாவில் காங்கிரஸ் கூட்டம்

1906-இல் கல்கத்தாவில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், மிதவாதிகள் அன்னிய நாட்டுப் பொருள்களை நிராகரிக்கக்கூடாது என்று கூறிப் பாலகங்காதர திலகரைப் பற்றி அவதூறாகப் பேசினர். பாரதி இப்போக்கைக் கண்டித்தார். இந்தக் கூட்டத்தின் போது காங்கிரஸில் தீவிரவாத மிதவாத எண்ணங்கள் கொண்ட இரு பிரிவுகள் இருந்தன என்பது வெளிப்பட்டது. கூட்டத்தில் ‘இந்தியாவுக்குச் சுய ராஜ்ஜியம் தேவை’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுய ராஜ்ஜியம் என்றால் என்ன? சுயராஜ்ஜியம் என்பதற்குப் பாரதி, “ஸ்வ என்றால் தனது என்று அர்த்தமாகிறது. யாருடையது? பாரத தேவியினுடையது. பாரத தேவி தன்னைத்தானே பரிபாலனம் செய்து கொள்வது ‘ஸ்வராஜ்யம்’ ஆகும்” என்று குறிப்பிட்டதாகச் சீனி.விசுவநாதன் தம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். (மகாகவி பாரதி வரலாறு, பக்.252) மேலும் மதுவிலக்கு, பெண் கல்வி, சுதேசக் கல்வி ஆகியவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்பதும் தீவிரவாதிகளின் எண்ணங்களாகும்.

பாரதி, சகோதரி நிவேதிதா என்பவரைக் கல்காத்தாவில் சந்தித்தார். பாரதியாரிடம் இருந்த விடுதலை இயக்க உணர்வுக்கு எழுச்சியும், வேகமும், முழுமையும் கொடுத்தவர் சகோதரி நிவேதிதா. அந்தச் சந்திப்பிற்குப் பின்னரே பாரதி விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

பாலகங்காதர திலகர், விபின் சந்திர பாலர், லாலா லஜபதிராய், அரவிந்தர் ஆகியோர் தீவிரவாதத்தைச் சேர்ந்தவர்கள். கோபால கிருஷ்ண கோகலே, மேத்தா போன்றோர் மிதவாதக் கட்சியைச் சேர்ந்தவர்கள். பாரதி பாலகங்காதர திலகர் வழியில் நின்றார். அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்ட விபின் சந்திர பாலரை அழைத்தார். பாலகங்காதர திலகரின் சொற்பொழிவைப் ‘புதிய கட்சியின் (தீவிரவாதம்) கொள்கை’ எனப் பாரதி அறிவித்துத் தம்மைப் புதிய கட்சியின் உறுப்பினராக வெளிப்படுத்தினார். பாரதி தீவிரவாதத்தில் ஈடுபாடு கொண்டதால் தான் இத்தாலி நாட்டு மாஜினியைப் பாடுகிறார். ஆயுதம் கொண்டு போர் செய்வதிலும் இரகசிய சங்கங்கள் வைத்துப் போரிடுவதிலும் நம்பிக்கை கொண்டார். அதற்கேற்ப அவருடைய நண்பர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரும் தீவிரவாதிகளாகவே விளங்கினர். அது போல் சுவாமி விவேகானந்தரின் தம்பி பூபேந்திரர் சிறந்த தேசபக்தரும் புரட்சிவாதியும் ஆவார். இவர்களின் செயல்பாடு ஆங்கில அரசை நிலை குலையச் செய்தது.

பாரதியும் ஆங்கில அரசும் தீவிரவாதிகளின் போக்கால் அமைதி இழந்த ஆங்கில அரசு தீவிரவாதிகளைத் தண்டிக்க நினைத்தது. பாரதி மீதும் வழக்குத் தொடரும் நோக்கில் அவரைக் கண்காணித்தது. அரசாங்கத்திற்கு விரோதமாகச் சதி செய்பவர்களைத் தண்டிக்கச் சட்டம் இயற்றியது. பாலகங்காதர திலகர் அரச நிந்தனை செய்யும் விதத்தில் ‘கேசரி’ பத்திரிகையில் எழுதினார் என்று கைது செய்யப்பட்டார். பாரதி இதைக் கண்டித்தார். ஆங்கில அரசு ‘இந்தியப்’ பத்திரிகையின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கிருஷ்ணசாமி சர்மா, சுரேந்திரநாத் ஆரியா, ஜி.சுப்பிரமணிய அய்யர் ஆகியோரைக் கைது செய்தது. அதனால் இந்தியா பத்திரிகை தொடர்ந்து வெளிவர இயலவில்லை.

பாண்டிச்சேரியில் பாரதி

ஆங்கில அரசு பாரதியைக் கைது செய்யச் சமயம் பார்த்திருந்தது. அதனால் பாரதி தம் நண்பர்களின் அறிவுரைப்படி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரிக்குச் சென்றார். அங்குச் சென்று இந்தியா பத்திரிகையை மீண்டும் தொடங்கினார். அமைதி, ஒழுங்கு, அபிவிருத்தி ஆகியவையே தங்கள் கொள்கையென விளக்கினார். 1911-ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட ஆட்சியாளர் ஆஷ் துரையை ‘மணியாச்சி’ என்னுமிடத்தில் வைத்து வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றார். இக்கொலைக்கும் பாரதிக்கும் தொடர்பு இருக்கும் என்று ஆங்கிலேயர் சந்தேகப்பட்டனர். ‘பாரதியாரின் கனவு’, ‘ஆறில் ஒரு பங்கு’ என்னும் இரண்டு படைப்புகளும் தடை செய்யப்பட்டன. பாரதி அவை காதல் பாட்டும், சமூக சீர்திருத்தக் கதையுமே ஆகும் என்று விளக்கம் தந்தார். ஆயினும் அதற்குப் பலனில்லை.

பாரதியார் கைது

முதல் உலகப்போரில் பிரிட்டன் இந்தியரின் உதவியை நாடி வெற்றி பெற்றது. காங்கிரசில் தலைவர்கள் தங்கள் பகையை மறந்தனர். பிரிட்டன் வெற்றி பெற்றதால் தமக்கு ஆபத்து இல்லை என்று கருதிய பாரதி 1918-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் நாள் சென்னைக்குப் புறப்பட்டார். சென்னைக்கு வரும் வழியில் கடலூரில் அவரை ‘அரசியல் கிளர்ச்சியாளர்’ என்று காரணம் காட்டி ஆங்கில அரசு கைது செய்தது. பாரதி தம் நிலை பற்றி விவரமாகச் சென்னை மாகாண கவர்னருக்குக் கடிதம் எழுதினார், பலனில்லை. இறுதியில் இந்தியாவின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்ட குடிமகனாக வாழ்வதாகவும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதாகவும் எழுத்து பூர்வமாகக் கொடுத்த நிபந்தனையின் பேரில் 1918-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் நாள் விடுதலையானார்.

பாரதியும் காந்தி அடிகளும் அரசியல் உலகில் காந்தியடிகளின் செல்வாக்கு மேலோங்கித் தீவிரவாதிகளின் பங்கு குன்ற ஆரம்பித்தது. இக்காலக் கட்டத்தில் படிப்படியாகப் பாரதி காந்தியின் அரசியல் குணங்களைப் போற்றவும் கடைப்பிடிக்கவும் முன் வந்தார். தென்னாப்பிரிக்காவில் அநியாயத்தை நியாயத்தால் வென்ற காந்தியின் கொள்கை வழி இந்தியாவில் விடுதலை இயக்கம் செயல்படவேண்டும் என்று பாரதி விரும்பினார். மகாத்மா காந்தி என்னும் மந்திரசக்தி பெரும்பான்மை மக்களை அவரது தலைமையின் கீழ் ஒன்றுபடச் செய்தது. இது பாரதியிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தாம் இருந்த கட்சிதான் சிறந்தது என்றோ, தம் கொள்கையே மேலானது என்றோ விடாப்படியாக இல்லாமல் காலத்துக்கு ஏற்ப மாற்றம் தேவை என்பதை உணர்ந்தார் பாரதி. தம்மை மாற்றிக் கொண்டார். இந்தியாவை வாழ்விக்க வந்த மகாத்மா என்று அவரைப் பாராட்டினார். அந்தப் பாராட்டைக் கீழ்க்காணும் அடிகளில் காணலாம்.

பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை

வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க!

(மகாத்மா காந்தி பஞ்சகம், 1)

பாரதியும் மிதவாதமும் துவக்க காலத்தில் தீவிரவாதக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட பாரதி பின்னர் ஏன் மிதவாதப் போக்கினை ஏற்றுக் கொண்டார்? அரசியல் உலகில் காந்தியடிகளின் கோட்பாடுகளே மேலோங்கும் என்ற தொலைநோக்குப் பார்வை அவரை மாற்றியது. இந்தியாவின் விடுதலை சாத்விக முறையில்தான் கிடைக்கும் என்ற உணர்வு, மகாத்மா காந்தி காட்டிய அறவழியில் நின்று போராடத் தூண்டியது. அந்த அறவழியை,

நெருங்கிய பயன்சேர் ‘ஒத்துழையாமை’

நெறியினால் இந்தியாவிற்கு

வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து

வையகம் வாழ்க நல்லறத்தே

(மகாத்மா காந்தி பஞ்சகம், 5)

என்று பாரதியார் பாடுகின்றார்.

இவ்வடிகளில் பாரதியார் உணர்த்தும் செய்தி என்ன?

iஒத்துழையாமை நெறி ‘நெருங்கிய பயன்’ தருவது; அது இந்தியாவிற்கு ‘நல்ல கதி’- போற்றக்கூடிய விரும்பக் கூடிய நல்ல நிலையினை -அளிக்கக் கூடியது.

iiஅதை உணர்ந்து வையகம் (உலகம்) ‘பகைத் தொழில்’ மறந்து, ‘நல்லறத்தே’ வாழ்வதாக.

பெண் விடுதலை

பண்டைக் காலத்தில் பாரத நாட்டில் பெண்களுக்குப் பெருமதிப்பு இருந்தது. பெண்ணை ‘வாழ்க்கைத் துணை’ என்று காட்டினார் வள்ளுவர். ஒளவையார் என்ற பெண்பாற் புலவர் தூதுவராகச் சென்றதைப் புறநானூறு காட்டுகிறது. பெண்களைச் சக்தியின் உருவமாகக் கருதியது பாரத நாடே. பெண்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் குறையலாயின. பெண்களுக்குக் கல்வி அறிவு தேவை இல்லை என்ற நிலை ஏற்பட்டது. பெண்கள் அடிமைபோல் நடத்தப்பட்டனர். பெண்களுக்கு உரிய சமூக அந்தஸ்து (social status) மறுக்கப்பட்டது.

மக்கள் தொகையில் பாதியாக விளங்கும் பெண்களுக்குக் கல்வியறிவு இல்லையென்றால் சமூகம் மேம்பட முடியாது என்றுணர்ந்த சான்றோர்கள் பெண் கல்வியை வற்புறுத்தினர். பாரதியும் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

பாரதியாரும் நிவேதிதா தேவியும் பாரதியிடம் இயல்பாகவே காணப்பட்ட சுதந்திர எண்ணம், அரசியல் மறுமலர்ச்சி, சமூகச் சீர்திருத்தம், பெண் விடுதலை பற்றிய அக்கறை யாவும் நிவேதிதாவைச் சந்தித்த பின் மேலும் தீவிரமடைந்து பாரதியைக் செயல்பட வைத்தன. பெண்ணுக்குச் சமூக விடுதலை கிடைக்காமல் நாட்டிற்கு அரசியல் விடுதலை அடைவதில் பலன் இல்லை என்ற எண்ணத்திற்கு வித்திட்டவர் நிவேதிதா.

கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திற்குப் பாரதியார் சென்றபோது, நிவேதிதா தேவி பாரதியாரிடம், “உன் மனைவியை நீ ஏன் அழைத்து வரவில்லை” என்று கேட்டாராம். அதற்குப் பாரதியார், “இன்னும் மனைவியைச் சமமாகப் பாவித்துப் பொது இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் எங்களிடையே ஏற்படவில்லை, தவிர காங்கிரசுக்கு என் மனைவியை அழைத்து வருவதால் பயன் என்ன?” என்று கூறினாராம். பாரதியாரின் பதிலைக் கேட்ட நிவேதிதாதேவி மிகுந்த கோபம் கொண்டு, “பெண்களுக்குச் சம உரிமையும், தகுந்த கல்வியும் கொடுக்காவிட்டால் சமூகம் எப்படிச் சீர்திருத்தம் பெறும், மனைவியை உன் வலது கை என மதித்து வா” என்று உபதேசம் செய்தாராம். (பாரதி வாழ்க்கைச் சித்திரம், பக்: 28) இந்த நிகழ்ச்சியே பெண் விடுதலை, பெண்ணுக்குச் சமஉரிமை என்னும் பொருள் பற்றி, பாரதியார் சிந்தனைகள் எழுச்சியுறக் காரணமாயின. அதன் விளைவாக அவர் படைப்புகளில் அவை வேகத்தோடும் வீச்சோடும் வெளிப்பட்டன.

பெண் விழிப்புணர்வு பெண் விடுதலை பெற வேண்டுமானால் அவள் விழிப்புணர்வு பெற வேண்டியது முதல் தேவை. விழிப்புணர்வு (awareness) என்பது கவனத்துடன் செயல்படுவதற்குரிய அறிவைக் குறிக்கும். அதனால் பெண்களிடம் அவர்களுடைய உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார் பாரதியார். வங்காளப் பிரிவினைக்குப் பிறகு வங்கப் பெண்மணிகள் சுதேசிய இயக்கத்தில் மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டு வியப்புற்ற பாரதி தமிழ் நாட்டுப் பெண்களும் அவற்றையறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ‘சக்கரவர்த்தினி’ பத்திரிகையில் சுதேசிய எண்ணத்தைப் பற்றி எழுதினார்.

ஆண்களுக்கு அடங்கியே வாழ்ந்து பழகிய தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பிறநாட்டுப் பெண்கள் எவ்விதம் இருக்கிறார்கள் என்று எடுத்துக்காட்ட விரும்பினார். எனவே, பெண் உரிமைக்காகப் போராடிய இயக்கங்களைப் பற்றி ‘தர்மயுத்தம்’ என்னும் தலைப்பில்,

“துருக்கி நாட்டில் பெண்களுக்குள்ளே, நடந்த விடுதலைக் கிளர்ச்சி, தென் ஆப்பிரிக்காவில் ‘பியேட்டர் மாரிஸ்பர்க் பட்டணத்தில் 1910-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘பெண்கள் விடுதலைச் சங்கம்,’ பிருத்தானியா, ‘ஸ்திரி சாம்ராஜ்யம்’ ஆகிய பெண்ணுரிமை இயக்கங்களைத் தமிழ் நாட்டுப் பெண்களுக்கு அறிமுகப்படுத்தினார். எல்லா நாடுகளிலும் பெண்கள் சுதந்திரம் பெற்று மனித இனத்தை மேன்மைப் படுத்த முயற்சி செய்கிறார்கள். தமிழ் நாட்டுப் பெண்கள் இதற்காக எந்த முயற்சியும் செய்யாமலிருக்கிறார்களே ஏன்?”

என்று வினா எழுப்பி அவர்களைச் சிந்திக்கச் செய்தார். (பாரதியாரும் சமூகச் சீர்திருத்தமும், பக் : 121).

பெண்ணுரிமை இயக்கம் ஆசியாவில் பெண்விடுதலைக்காகப் போராடிய சீனநாட்டு சியூசீன் என்ற பெண்ணைப் புகழ்ந்து அப்பெண் இயற்றிய பெண்ணுரிமை இயக்கப் பாடலைத் தமிழாக்கம் செய்தார். புதுச்சேரியில் கூடிய மகளிர் கூட்டத்தில் தம் மகள் சகுந்தலா பாரதியைக் கொண்டு அந்தப் பாடலைப் பாடச் செய்தாராம். (பாரதியும் சமூகச் சீர்திருத்தமும், பக்: 122) அப்பாடலில்,

விடுதலைக்கு மகளிரெல்லோரும்

வேட்கை கொண்டனம்;

(பல்வகைப் பாடல்கள், பெண்விடுதலை – 1)

என்று பெண்கள் விடுதலை மீது விருப்பம் கொண்டதாகப் பாடியிருக்கிறார்.

மண்ணுலகில் உள்ள உயிர்கள் எல்லாம் கடவுள் என்றால் பெண்ணும் தெய்வம் அல்லவா? என்று கேட்டு அவளைத் தெய்வமாக மதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்,

மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்

மனையாளும் தெய்வ மன்றோ? , , , , ,

(பாரதி அறுபத்தாறு, பெண் விடுதலை – 45)

எனத் தெளிவுபடுத்துகின்றார்.

பாரதி நடத்திய தர்மயுத்தத்தின் பலன் என்ன? தமிழ் நாட்டில் ‘பெண் விடுதலைக் கட்சி’ தொடங்கப்பட்டது. அந்தக் கட்சிக்குச் சதாசிவ அய்யர் என்ற நீதிபதியின் மனைவி மங்களாம்பிகை தலைவியானார். அவருக்குத் துணையாக நின்றார் அன்னிபெசன்ட் அம்மையார். பெண்கள் முன்னேற்றத்தில் தீராத ஆர்வம் கொண்டவர் பாரதி. அவர்கள் நகை, ஆடை போன்ற வீண்ஆடம்பரங்களை விட்டுவிட வேண்டும் என்று எச்சரித்தார். அது தான் பெண் விடுதலைக்கு வழி வகுக்கும் என்பது அவர் எண்ணம். வேல்ஸ் இளவரசியின் எளிமையைப் பாராட்டி அதைப் பின்பற்றத் தூண்டினார்.

பெண் கல்வி பெண்கல்வியின் அவசியத்தை எடுத்துக்காட்ட விரும்பிய பாரதி பிற்காலத்தில் சமூக சீர்திருத்தவாதியாக விளங்கிய டாக்டர். முத்துலக்ஷ்மி ரெட்டி எஃப்.ஏ. பரீட்சையில் தேறின செய்தியையும், பிற்காலத்தில் ‘சிஸ்டர்’ என்று அழைக்கப்பட்ட ஆர்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாள் மெட்ரிகுலேஷனில் தேறிய செய்தியையும் ‘சக்கரவர்த்தினி’ பத்திரிகையில் வெளியிட்டார். (சக்கரவர்த்தினி, 1906 ஜனவரி, பக்: 143). பெண்களுடைய படிப்பில் பெற்றோர்கள் அக்கறை செலுத்த வேண்டுமென்று கூறினார். பெண்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றால்தான் இந்திய நாடு முன்னேறும் என்று நினைத்தார். அதனால்,

மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்

வாணி பூசைக் குரியன பேசீர்

(சரஸ்வதி தேவியின் புகழ் – 10)

என்று கலைமகளைப் பற்றிப் பெண்கள் பேச வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கலைமகள் யார்? கல்விக்கு அதிபதி. கல்வித் தலைவியாம் கலைமகளைப் பற்றிப் பேசினால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது அவரது எண்ணம். பெண் விடுதலை இயக்கத்தை நாட்டு விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாகவே பாரதியார் கண்டார்.

பெண் உரிமை சமுதாயத்தில் உள்ள பழக்க வழக்கங்களால் பெண்களுக்குப் பல உரிமைகள் மறுக்கப்பட்டன. அந்த உரிமைகளை வழங்கினால் பெண்கள் விடுதலை அடைவது திண்ணம் என்று நம்பிய பாரதியார், பெண்களுக்குரிய உரிமைகளாகக் கூறுவதைப் பாருங்கள்.

பெண் வயதுக்கு வருமுன்பு திருமணம் செய்து கொடுக்கக் கூடாது.

அவர்களுக்கு விருப்பமில்லாத ஒருவனை மணம் செய்து கொள்ள வற்புறுத்தக் கூடாது.

பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் சமபாகம் கொடுக்க வேண்டும்.

கணவன் இறந்த பின்பு மறுவிவாகம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

விவாகம் செய்யாமல் கைத்தொழில் முதலியன செய்து கௌரவமாக வாழ விரும்பும் பெண்களை அங்ஙனம் வாழ இடம் கொடுக்க வேண்டும்.

பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும். அவளை அவமானப் படுத்தக்கூடாது.

பெண்களுக்கு உயர்தரக் கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும்.

என்பனவாகும். இவ்வுரிமைகள் பெற்றால் சமுதாயம் முன்னேறும். இவ்வுரிமைகளையும் விரைந்து அளிக்க வேண்டும் என்கிறார். (பாரதியும் சமூகச் சீர்திருத்தமும், பக்: 133)

சாதி விடுதலை

சாதி விடுதலை என்பது சில பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கும் இந்திய சமூகத்தின் கட்டுப்பாடுகள் அகற்றப்படுகின்ற நிலையைக் குறிக்கும்.

இந்தியாவில் பல்வேறு சாதிப் பிரிவுகள் காணப்பட்டன. வெகு காலத்திற்கு முன்பு அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைப் பிரிவுகள் தொழிலின் அடிப்படையில் காணப்பட்டன. நாட்கள் செல்லச் செல்லப் பல்வேறு தொழில்கள் தோன்றின. ஒரு தொழில் செய்வதன் அடிப்படையில் ஒருவருக்கு வழங்கப்பட்ட பெயர் நாளடைவில் அத்தொழில் செய்யாவிடினும் நிலைத்து நின்றது. இத்தகைய சாதிப்பிரிவால் மக்களிடையே ஒற்றுமையில்லாமல் இருந்தது. சாதிச் சண்டைகள் மிகுந்திருந்தன. இந்தப் பலவீனமே ஆங்கிலேயருக்குப் பலமாக அமைந்தது. இத்தனை சாதிப் பிரிவுகள் உள்ள நாட்டில் இவர்கள் எப்படி ஒன்றுபடுவார்கள் என்று இந்தியர்களை மலிவாக எடைபோட்டனர்.

சமூகச் சீர்திருத்த எண்ணம் கொண்ட பாரதியார், இந்தியாவில் காணப்பட்ட ஒற்றுமையின்மைக்குக் காரணம் சாதி சமய வேறுபாடுகள் என்று உணர்ந்தார். அந்த உணர்வுகளை மக்கள் விட்டுவிட்டால் நாட்டில் ஒற்றுமை ஓங்கும் என்பதறிந்தார். அதற்காகவே, அந்தணர், அந்தணர் அல்லாதவர் ஆகிய எல்லோரும் ஒன்றே என்ற கருத்தில்,

ஜாதி மதங்களைப் பாரோம் . . . . . . .

வேதிய ராயினு மொன்றே – அன்றி

வேறு குலத்தின ராயினு மொன்றே!

(வந்தே மாதரம் – 1)

. . . . ……………………ஜாதியில்

இழிவு கொண்ட மனிதரென்பது

இந்தியாவில் இல்லையே

(விடுதலை! விடுதலை! விடுதலை! – 2)

என்று சாதி சமயம் அற்ற சமுதாயம் அமையக் குரல் கொடுத்தார்.

தமிழ் நாட்டின் தென் மாவட்டத்திலுள்ள எட்டையபுரம் ஜமீனைச் சேர்ந்த கழுகுமலை என்ற ஊரில் மறவர்களுக்கும் சாணார்களுக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டு விட்டது. அப்போது உற்சவ நேரம். வீதியில் தேரில் சுவாமியை அழைத்து வருவது அங்கு மரபு. ஆனால் தகராறு காரணமாகத் தேரை விடக்கூடாது என்று மறித்தார்கள். அச்சமயம் கழுகுமலையின் கண்காணிப்பாளராக இருந்த வேங்கடராயர் கலகம் நடந்த இடத்தைப் பார்வையிடச் சென்றார், ’இவன் யாரடா, பார்ப்பான் வழக்குத் தீர்க்க வந்தவன்’ என்று சொல்லி யாரோ அவரைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டனர். இந்தச் சம்பவம் பாரதியின் நெஞ்சை வேதனைக்கு உள்ளாக்கியது. சாதிச் சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும், சாதி விடுதலை மிகவும் அவசியம் என்று அவர் கருத இந்த நிகழ்ச்சியும் ஒரு காரணமாயிற்று.

ஆகையால் இந்தியா விடுதலை பெற வேண்டுமென்றால் மக்கள் தம் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று பாரதி பாடிய பாடலைப் பாருங்கள்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

(பாரத நாடு, வந்தே மாதரம் – 1)

(தாழ்வு = மதிப்புக்குறைவு)

இந்தியர்கள் தமக்குள் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று வழக்கிட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட பாரதியார்.

சாதிகள் இல்லையடி பாப்பா! குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

(பாப்பாப் பாட்டு – 15)

(தாழ்ச்சி = குறைவு)

என்று குழந்தையைப் பார்த்துப் பாடுகிறார்.

தீண்டாமை இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தீண்டத் தகாதவர்களாக வைக்கப்பட்டிருந்தனர். இந்த அவலத்தைச் சுட்டிக் காட்டவே பாரதியார் ‘ஆறில் ஒரு பங்கு’ என்னும் சமூகச் சீர்திருத்தக் கதை எழுதினார். அதன் முகவுரையில் பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு சாதி, ஓர் உயிர். தொழில் வெவ்வேறாக இருக்கலாம். ஆயினும் உயர்வு தாழ்வு கூடாது என்றார். ஆறில் ஒரு பங்கு என்னும் நூலை உழவுத் தொழில் புரியும் பள்ளர், பறையர் முதலிய வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்று எழுதினார். (பாரதியாரும் சமூகச் சீர்திருத்தமும், பக் : 98) பறையன், பள்ளன் என மரியாதைக் குறைவாகச் சமுதாயத்தில் கூறப்பட்ட சொற்களைப் பறையர், பள்ளர் என மரியாதையுடன் உயர்த்திக் கூறியவர் பாரதியே. பறையன் என்று கூறுவது இன்று சட்ட விரோதம். பாரதி கண்ட கனவு நனவாகியது. அவர்கள் இன்று விடுதலை பெற்று விட்டார்கள். இன்னும் சில தளைகள் அவர்கள் நீங்கி முழு விடுதலை அடைய வேண்டும். அதுவே பாரதி கண்ட இலட்சியக் கனவு.

தென் ஆப்ரிக்காவில் ‘இன ஒதுக்கல்’ கொள்கை மூலம் அந்நாட்டு மக்கள் இந்தியர்களை ஒதுக்கியதைச் சுட்டிக்காட்டி, நாம் பள்ளர் பறையருக்குச் செய்ததை எல்லாம் அந்நிய நாடுகளில் பிறர் இந்தியருக்குச் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டார் பாரதியார். இப்படி பாரதியைத் தவிர வேறு யார் கூற முடியும்? விடுதலை பெற வேண்டுமாயின், சில வகுப்பினரைத் தீண்டத்தகாதவராகக் கருதும் மனப்போக்கை இந்து மக்கள் மாற்றினாலன்றி விடுதலை கிடைக்காது என்று மகாத்மா காந்தி கூறியதையும் சுட்டிக் காட்டுகிறார். (பாரதியாரும் சமூகச் சீர்திருத்தமும், பக்.103)

எல்லோருக்கும் விடுதலை

பாரதியார் விடுதலை பற்றிப் பாடும்போது, ‘விடுதலை! விடுதலை! இங்குப் பறையருக்கும் விடுதலை!’ என்று முதலில் பறையரைப் பற்றிப் பாடுவது அந்தச் சாதி மக்கள் சமுதாயத்தில் பட்ட துன்பத்தைப் புலப்படுத்துகிறது. மேலும் அப்பாடலில் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டு அடங்கிக் கிடந்த தீயர், புலையர், பரவர், மறவர், குறவர் ஆகிய அனைவருக்கும் விடுதலை என்று ஆணையிடுகிறார். அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார். பாரதியின் நம்பிக்கை நம்மையும் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது.

எல்லோருக்கும் எல்லாமும்

எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும் என்பதைக் குறிக்கும் ‘பாரத சமுதாயம்’ என்ற பாடலில்,

எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம்

எல்லோரும் இந்திய மக்கள்

(பாரத சமுதாயம் – 4)

என்ற சமத்துவ சமூக நீதியைப் பாரதியார் காட்டுகிறார்.

பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக எழுந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் முப்பெரும் முழக்கத்தை எவ்வாறு செயல்படுத்தலாம்? சாதிப் பிரிவை ஒழித்தால் செயல்படுத்தலாம். இந்த எண்ணம்,

தகரென்று கொட்டு முரசே! பொய்மைச்

சாதி வகுப்பினை யெல்லாம்

(முரசு – 18)

(தகர் = அழி)

என்னும் பாடலில் சாதிப் பிரிவைத் தகர்த்து எறிய ஆணையிடும் குரலாய் ஒலிக்கிறது.

‘போகின்ற பாரதம்’ என்ற பாடலில்,

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ

(போகின்ற பாரதம் – 4)

என்ற பாடலடி சாதி உணர்வு கூடாது என்று வலியுறுத்துவதைக் காட்டுகிறது.

சாதி ஒழிப்பு சாதி ஒழிப்பு என்பது சாதிப் பிரிவை இல்லாமல் ஆக்கும் செயலைக் குறிக்கும். சாதிப்பிரிவை ஒழிக்க உதவும் ஆயுதம் எது? கல்வி. கல்வி என்னும் ஆயுதத்தால் வீழ்த்தலாம். பாரதியார் இதை,

வாழி, கல்வி செல்வம் எய்தி

மனம் மகிழ்ந்து கூடியே

மனிதர் யாரும் ஒருநி கர்ச

மானமாக வாழ்வமே!

(தேசியப் பாடல்கள், விடுதலை -2)

(எய்தி = அடைந்து)

என்ற பாடலடிகளில் உணர்த்தியிருக்கிறார்.

பாரதியின் நடுவு நிலைமை

பாரதியார் தம் சாதியினரான அந்தணர்களிடம் உள்ள தவறைச் சுட்டிக் காட்டத் தயங்கவில்லை.

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்

மூன்று மழை பெய்யுமடா மாதம்

இன்னாளி லேபொய்மைப் பார்ப்பார் – இவர்

ஏது செய்தும் காசுபெறப் பார்ப்பார்

(மறவன் பாட்டு – 5)

(ஏது = எதுவும், பார்ப்பார் = அந்தணர்)

என்ற பாடல் பாரதியின் நடுவு நிலைமைப் பண்பைக் காட்டுகிறது.

கனகலிங்கம்

தாழ்ந்தகுலத்தில் பிறந்த இரா.கனகலிங்கத்தைத் தம்முடன் சேர்த்து வைத்துக் கொண்டார். இங்ஙனம் சாதிப்பிரிவை ஒழிக்கும் செயலில் தாமே முன்மாதிரியாக இருந்து வாழ்ந்து காட்டினார் பாரதி.

சாத்திரமா? சதியா?

ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு நீதி சொல்லும் சாத்திரத்தைக் கண்டிக்கும் வகையில் அது சாத்திரமல்ல ‘சதி’ என்றார்.

சூத்திர னுக்கொரு நீதி தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி

சாத்திரஞ் சொல்லிடுமாயின் அது

சாத்திரமன்று சதியென்று கண்டோம்

(உயிர் பெற்ற தமிழர் பாட்டு-ஸ்மிருதிகள்-13)

(சூத்திரர் = அந்தணர் அல்லாதோர், பார்ப்பு = அந்தணர்)

இவ்வாறு சாதிப் பிரிவுகளை நீக்கிச் சமூக நீதிக்கு வழிகாட்டினார் பாரதியார்.

சமய விடுதலை

இறைத் தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்ட நெறிமுறைக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட நிலையைக் குறிப்பது சமய விடுதலை.

சமயங்கள் எல்லாம் மனிதனை ஒன்றுபடுத்தவே தோன்றின. ஆனால் சமயத்தின் பெயரால் மனிதர்கள் வேறுபட்டு, ஒற்றுமையின்றி இருந்தனர். பாரதி இதைக் கண்டு வருந்தினார். பாரத நாட்டு மக்களிடம் காணப்பட்ட சமயக் காழ்ப்பு (வெறுப்பு) உணர்ச்சி நீங்கப் பாடுபட்டார். எல்லோரும் தம் வேற்றுமைகளை நீக்கி ஒன்றுபட்டு வாழ்வதற்கான வழியைத் தேடினார். அந்த வழி அறிவென்று கண்டார்.

அறிவே தெய்வம் பாரதியார் கொள்கைப்படி பார்த்தால் ‘சமயம்’ என்பது மக்களுக்குக் கடவுள் உணர்வை ஊட்டி அவர்களைக் கடவுள் நெறியில் நிறுத்துவது. மக்களிடம் காணப்படும் பொறாமை, ஆசை, அறியாமை முதலியவற்றை நீக்கி அன்பு, அருள், அறம் முதலிய நற்குணங்களைத் தருவது, மக்களைத் தெய்வத் தன்மைப் பெறச் செய்வது என்பனவாகும். ஆகவே, தெய்வம் பல சொல்லி வாழும் மனிதர்களைப் பார்த்து, அறிவைத் தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடும் பாரதி உண்மையும் தெய்வமென்று காட்டுகிறார். உண்மை அறிவின் ஒரு பகுதி அல்லவா? ஆகவே,

மாடனைக் காடனை வேடனைப் போற்றி

மயங்கு மதியிலிகாள்! – எத

னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்று

ஓதி அறியீரோ?

(அறிவே தெய்வம் – 2)

(மதியிலி = அறிவு இல்லாதவர், ஓதி = சொல்லி)

என்று அறிவே தெய்வம் என்று உணர்த்துகிறார். அறிவின் வழி நடந்தால் பிணக்கும், போரும் இல்லாமல் வாழலாமே!

தெய்வம் ஒன்று

உலகில் உள்ள மக்கள் அனைவரும் வணங்கும் தெய்வம் ஒன்றே. நெருப்பை வணங்கும் அந்தணர், மேற்குத் திசையை நோக்கி வணங்கும் இஸ்லாமியர், சிலுவையின் முன் நின்று இயேசுவை வணங்கும் கிறித்துவர் ஆகியோர் கும்பிடும் தெய்வம் ஒன்றே. அது எல்லாப் பொருளிலும் கலந்து நிற்கிறது. ஒவ்வொரு மதத்தவரும் குறிப்பிடும் இறைவன் பெயர்தான் வேறுபட்டுள்ளது என்று மக்களை நல்வழிப்படுத்தும் வகையில்,

யாரும் பணிந்திடும் தெய்வம் – பொருள்

யாவினும் நின்றிடும் தெய்வம்

பாருக் குள்ளே தெய்வமொன்று இதில்

பற்பலச் சண்டைகள் வேண்டாம்

(முரசு – 13)

என்று சண்டையில்லாமல் வேற்றுமை நீங்கி வாழ முழக்கமிடுகிறார்.

எல்லாச் சமயத்தைச் சேர்ந்தவர்களும் பாரதத் தாயின் வயிற்றில் பிறந்தவர்களே. அவர்கள் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர்கள். எனவே, சமய உணர்வை நீக்கி எல்லோரும் ‘பாரதத் தாயின் மக்கள்’ என்ற பரந்த மனப்பான்மையை வளர்க்க ஆசைப்பட்டார்.

எல்லோரும் ஒன்று

சமய வேறுபாட்டின் அடிப்படையில் இந்திய மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி செய்தனர் ஆங்கிலேயர். வங்காளப் பிரிவு இந்துக்களும் இசுலாமியர்களும் வேற்றுமை பாராட்ட வித்திட்டது. சமய வேறுபாடின்றி இந்தியர்கள் ஒன்று பட்டு நின்றால் பாரதநாட்டின் பொது எதிரியான வெள்ளையர்களை இந்திய மண்ணிலிருந்து வெளியேற்ற முடியும் என்று எண்ணினார் பாரதியார்.

சாதிச் சண்டையும், சமயச் சண்டையும் இந்திய மக்களிடம் இருக்கும் வரை தம்மை வெளியேற்ற முடியாது என வெள்ளையர்கள் எண்ணினர். இந்த எண்ணத்தை இந்திய மக்களுக்குத் தெரிவிக்கக் கருதிய பாரதியார்,

ஜாதிச் சண்டை போச்சோ? – உங்கள்

சமயச் சண்டைப் போச்சோ?

நீதி சொல்ல வந்தாய்! கண்முன்

நிற்கொ ணாது போடா!

(தொண்டு செய்யும் அடிமை – 2)

(நிற்கொணாது = நிற்காமல்)

என ஒரு வெள்ளைக்காரன் இந்தியக் குடிமகனைப் பார்த்து ஏளனமாகக் கேட்பது போல் நாடக அமைப்பில் உரையாடல் அமைத்து இருப்பது சுவையான கற்பனை. அதற்கு விடைதருவார் போல

ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்

அன்னியர் வந்து புகல் என்ன நீதி?

(வந்தே மாதரம் 1,3)

என அமைத்திருப்பது பாரதியின் உள்ளத்தை வெளிப்படுத்துகிறது.

பாரதியாரின் சமயக் கொள்கை

பாரதியாரின் சமயக் கொள்கை குறித்து அவரது மாணாக்கர் ரா.கனகலிங்கம்,

‘சமய உணர்ச்சியைக் கொண்டே, பக்தியாகிய சக்தி ஆயுதத்தைச் சுழற்றிக் கொண்டே, வேற்றுமை உணர்ச்சிகளை வெட்டிக் களைந்து சமதர்ம விதையை ஆழமாக விதைத்துச் சிறந்த நற்பயனை விளைவித்துக் கொள்ளலாம் என்பது பாரதியார் கனவு’ (பாரதியார் இதயம், பக், 51)

என்று கூறியிருக்கிறார்.

பாரதியார் எந்தவொரு சமயத்தையும் பெரிதெனக் கொள்ளாமல் வேற்றுமைகளுக்குள்ளே ஒற்றுமை காண முற்பட்டார். ‘ஸ ரி க ம ப த நி’ என்ற ஏழும் வெவ்வேறான எழுத்துகள். ஆயின் அவற்றை இராகமாகப் பாடும்போது மனத்தை ஈர்க்கும் இனிய ஓசை கேட்கிறது அல்லவா? அதுபோல் எல்லாச் சமயங்களிலுமுள்ள சிறந்த கருத்துகளை மக்கள் உணர வேண்டும். அப்போதுதான் இந்தியர் இசைந்து வாழலாம் என்று நம்பினார். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்த நாட்டின் தனிச்சிறப்பல்லவா?

செயல் வீரர்

பாரதியார் சொல் வீரராக இல்லாமல் செயல் வீரராக இருந்தார். பிற சமயத்தவரோடு எவ்விதம் பழக வேண்டும், அந்தச் சமயங்களை எவ்விதம் மதிக்க வேண்டும் என்பதைப் பற்றிக் கூறியது மட்டுமன்றி மற்றவர்களுக்குத் தாமே வழி காட்டினார் வாழ்ந்தும் காட்டினார். இயேசுவையும், அல்லாவையும் இதயங்கனிந்து பாடித் துதித்தார். இந்த மகத்தான சமயப் புரட்சியைத் துவக்கிய பெருமை பாரதிக்கு உண்டு. தாயுமானவரும் வள்ளலாரும் நடந்த பாதையில் பாரதி தம் அடிச்சுவடுகளைப் பதித்துச் செல்கிறார்.

தீயினைக் கும்பிடும் பார்ப்பார் – நித்தம்

திக்கை வணங்கும் துருக்கர்

கோயிற் சிலுவையின் முன்னே – நின்று

கும்பிடும் யேசு மதத்தார்

(முரசு – 12)

என்று எம்மதமும் சம்மதமாகக் கொண்டு வாழ்ந்தார். பெயர்கள் வடிவங்கள் பலவானாலும் அவை ஒரே தெய்வத்தைக் குறிப்பிடுகின்றன என்று நம்பினார். ஆகையால் வேற்றுமை உணர்வின்றி எல்லா மதத்தின் கடவுளையும் பாடித் துதித்தார்.

இவ்வாறு பாரத மக்கள் சமய உணர்விலிருந்து விடுதலை பெற உழைத்தார் பாரதி. அவர் கனவு கண்ட ‘சமதர்மக்கொள்கை’ இந்தியாவில் வளர்ந்து பரவினால் அங்கே பேணுகின்றோம் என்கின்ற பெருமைக்கும் பீழையுறுகின்றோம் (சார்ந்திருக்கின்றோம்) என்ற சிறுமைக்கும் இடமிருக்காது அல்லவா?

ஒரு நாட்டின் விடுதலை என்பது அந்நியரிடமிருந்து பெறும் விடுதலை மட்டுமல்ல. முதலில் தம் நாட்டிற்குள் காணப்படும் தேவையற்ற கட்டுப்பாட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும். அவற்றிலிருந்து விடுபட்டால் அந்நியரிடமிருந்து எளிதில் விடுதலை பெறலாம். இந்த நோக்கில் முதலில் பெண் விடுதலை, சாதி விடுதலை, சமய விடுதலை முதலியனவற்றைக் கூறி, இறுதியில் அரசியல் விடுதலையை வற்புறுத்துகின்றார் பாரதியார்.

அரசியல் விடுதலை

ஆங்கிலேயர் வணிகத்தின் பொருட்டு இந்தியாவிற்கு வந்தவர்கள். மெல்ல மெல்ல, இந்திய நாட்டின் அரசியலில் நுழைந்தனர். மன்னர்களுக்கு இடையே பிரிவுகளை ஏற்படுத்தினர். பிரிவுகளைப் பயன்படுத்தி நாட்டு அரசியலில் பங்கு பெற்றனர். பிறகு அரசியலில் முழுமையாக ஈடுபட்டனர். இவ்வாறு இந்தியா முழுவதையும் தம் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். இந்திய மக்கள் அடிமைப்பட்டனர். அரசியலில் சுரண்டப்பட்டனர். இக்கொடுமையை எதிர்த்துப் போராட முன்வந்தவர்களுள் பாரதியாரும் ஒருவர்.

அந்நியராகிய ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து இந்திய மக்கள் விடுதலை பெற வேண்டும். அதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிப் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

ஒற்றுமை இந்தியா சாதியின் அடிப்படையிலான சமுதாய அமைப்பு உடையது. எனவே மக்களிடையே பல பிரிவுகள் இருந்தன. ஒற்றுமை (Unity) இல்லாமல் இருந்தது. மக்களிடையே ஒற்றுமை இருந்தால்தான், எல்லோரும் ஓர் இனம் என்ற உணர்வு இருந்தால் தான், அந்நியரை எதிர்க்க முடியும் என்று நம்பினார் பாரதியார். எனவே இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பது பற்றிப் பாடுகிறார்.

அந்நியரின் அரசியல் ஆதிக்கத்தால் பல துன்பங்களை அனுபவித்தனர் இந்தியர். இதிலிருந்து விடுதலை பெற வேண்டும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அந்நியர்களை எதிர்த்துப் போராட வேண்டும். எவ்வாறு போராட வேண்டும்? ஒற்றுமையுடன் போராட வேண்டும். இல்லாவிட்டால் நாம் எல்லோரும் அழிந்து விடுவோம் என்கிறார் பாரதியார்.

ஆட்சியில் அமர்ந்திருக்கும் அந்நியர்கள், நம்மைச் சுரண்டுகிறார்கள். அந்தச் சுரண்டலை ஒழிக்க – ஆட்சியை நீக்க ஒற்றுமையுடன் போராடுவோம். இல்லாவிட்டால் அழிந்து விடுவோம் என்று எச்சரிக்கிறார்.

அடிமை மோகம் இந்தியர்களில் சிலர் ஆங்கிலேயரின் ஆட்சியை ஆதரித்தனர். ஆங்கிலேயரின் கீழ் அடிமையாக வாழ்வதையும் விரும்பினார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு ஆங்கிலேயரால் பல சலுகைகள் கிடைத்தன. இத்தகைய அடிமைமோகம் கொண்டவர்களைப் பார்த்துப் பாரதியார்,

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்!

என்று மடியும் எங்கள் அடிமையில் மோகம்?

( சுதந்திர தாகம், 1)

(மடியும் = அழியும்)

என்று வினவுகிறார்.

மேலும், அடிமை மோகம் கொண்டவர்களே, இனியாவது அந்த மோகத்தை விட்டு நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்ளுங்கள் என்று வேண்டுகிறார். அற்பமான அடிமைத் தனத்தை விரும்பி நீங்கள் பேணிப் பாதுகாத்து முன்னர் வாழ்ந்திருக்கலாம் . அது ஓர் இழிவான செயல் என்று எண்ணி நாணம் அடையுங்கள். அதன் காரணமாக உங்களுக்கு வந்த இகழ்ச்சிகள் நீங்க வேண்டும் எனில், அந்நியருக்குத் தொண்டு செய்யும் அந்த அடிமை மோகத்தைத் ‘தூ’ என ஒதுக்கி விடுங்கள் என்று வேண்டுகிறார் பாரதியார்.

புல்லடிமைத் தொழில் பேணிப் – பண்டு

போயின நாட்களுக்கு இனி மனம் நாணித்

தொல்லை இகழ்ச்சிகள் தீர – இந்தத்

தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி . . .

(தேசிய கீதங்கள், வந்தேமாதரம், 1,6)

(புல், புல்லிய = அற்பமான, பேணி = பாதுகாத்து, பண்டு = பழைய/முன்னர், தூவென்று = ‘தூ’ என, தள்ளி = ஒதுக்கி)

அஞ்சாமை இந்தியா, அந்நியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற வேண்டுமானால், அந்நியர்களை எதிர்க்கும் துணிவு வேண்டும். அந்தத் துணிவைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? எதைக் கண்டும் அஞ்சக் கூடாது. அஞ்சாமையே துணிவைக் கொடுக்கும். அதனால் எதைக் கண்டும் அஞ்சாதீர்கள் என்று வேண்டுகிறார் பாரதியார். எனவே, கோழையாய் (coward) இருக்கின்றவர்களையும், எதைக் கண்டும் அஞ்சுகின்றவர்களையும் பார்த்து,

வலிமை யற்ற தோளினாய் போ போ போ

கிலிபிடித்த நெஞ்சினாய் போ போ போ

(நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும் வருகின்ற ஹிந்துஸ்தானமும், போகின்ற பாரதத்தை சபித்தல் – 1)

(அற்ற = இல்லாத, கிலி = அச்சம்)

என்று கூறித் துரத்துகிறார். அதே நேரத்தில் வருங்கால பாரத மக்களைப் பார்த்து,

ஒளி படைத்த கண்ணியாய் வா வா வா

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா

(நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும் வருகின்ற ஹிந்துஸ்தானமும், வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்-1)

என்றும் அழைக்கின்றார்.

அஞ்சாமையும் துணிவும் இருந்தால்தான் அந்நியர் ஆட்சியை இந்த நாட்டிலிருந்து அகற்ற முடியும் என முழுமையாக நம்பினார் பாரதியார். அவர் நம்பிக்கை வீண்போகவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் கிடைக்காத விடுதலை அவருக்குப் பின்னாவது கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடையலாம்.

தொகுப்புரை

இந்தியப் பெரு நாட்டின் விடுதலைக்காகப் போராடிய பாரதியார் அரசியலில் நுழைந்த சூழல், விடுதலை இயக்கத்தில் அவர் மேற்கொண்ட பணி, தீவிரவாதியாகச் செயல்பட்ட பாரதி மகாத்மா காந்தியின் அறப்போரில் ஈடுபாடு கொண்டு மிதவாதியாகத் தம்மை மாற்றிக் கொண்ட நிலை முதலியன பற்றி இப்பாடத்தில் இதுவரை படித்தறிந்தீர்கள். மேலும் பெண்களின் விடுதலை, பெண் உரிமை, சாதி விடுதலை, சமய விடுதலை, அரசியல் விடுதலை பற்றிப் பாரதியார் தம் பாடலில் கூறியுள்ள கருத்துகளையும், உண்மையான விடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலை அல்ல; சாதி, சமய, இன, பால் பாகுபாடுகளில் இருந்து விடுபடுவதே உண்மையான விடுதலை என்பதையும் தெளிவுபடுத்த இப்பாடத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பாடம் - 3

பாரதியாரின் உலகளாவிய நோக்கு

பாடமுன்னுரை

பாட்டின் திறத்தால் வையத்தைப் பாலித்திட நினைத்தவர் பாரதி. நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், கணநேரமும் சோராதிருத்தல் என்று தன் வாழ்வின் இலட்சியத்தைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர். பாரதி வாழ்ந்த காலத்தில் இந்திய நாடு அடிமைப்பட்டுக் கிடந்தது. தாழ்வு அடைந்து, வறுமை மிஞ்சி, விடுதலை தவறி, பாழ்பட்டு நின்ற சூழல். நெஞ்சில் உரமின்றி நேர்மைத் திறமின்றி மக்கள், எதைக்கண்டும் அஞ்சிய காலம்; இத்தகைய சூழலில் பாரதி பிறந்து வளர்ந்தார். அவர் வளர்ந்த சூழலிலிருந்து முற்றும் மாறுபட்ட ஒரு கவிஞனாக உருப்பெற்றார். புதுநெறி காட்டிய பேராளனாகத் திகழ்ந்தார். பாரதியின் சமகாலத்துப் புலவர்களை நோக்கும்போது, பாரதியின் தனித்துவம் புலனாகும். ஒரு யுகக் கவிஞனாக அவர் வளர்ந்ததும் வாழ்ந்ததும் தெளிவாகும்.

அனைவர்க்கும் சொந்தமானவர்

எந்த ஒரு படைப்பாளரும் பிறந்த நாட்டிற்கு மட்டும் சொந்தமாக மாட்டார். அவர் உலகச் சொத்தாகக் கருதத் தக்கவர். எந்த நாட்டில், எந்தக் காலத்தில், எந்தச் சமயத்தில் எந்த மொழியில் அவர் தம் படைப்பை அளித்திருந்தாலும் அவர் மக்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால் அவர் அனைவர்க்கும் சொந்தமானவர். அப்படிப்பட்டவர்களிலே ஒருவராகத் திகழ்பவர் பாரதி.

உலகக்கவி

பாரதியை வேதாந்தக் கவியென்பார் ஒரு சிலர்; சமுதாயச் சீர்திருத்தக் கவியென்பார் வேறுசிலர்; தேசியக் கவியென்பார் மற்றும் சிலர்; பக்திக் கவியென்பார் மேலும் சிலர்; புரட்சிக்கவியென்று போற்றுவர் சிலர். இவையனைத்தும் பாரதி என்பது உண்மைதான். ஆயினும் எந்தக் குறுகிய வட்டத்திற்குள்ளும் பாரதி என்ற கவிஞனை அடைக்க இயலாது; அவர் காற்றைப் போல் சுதந்திரமானவர்; கடலைப்போல் ஆழமானவர்; விரிந்த மனம் கொண்டவர். அனைத்துலக மக்களையும் அரவணைத்துச் செல்லும் அற்புத உள்ளம் கொண்டவர். அதனாலேயே அவர் உலகக்கவியாக உருவானார்; மகாகவி எனப் போற்றப்பட்டார். அவரது உலகளாவிய நோக்கை இப்பாடம் தொகுத்துக் கூறுகிறது.

உலகளாவிய நோக்கு

‘பாரதியின் உலகளாவிய நோக்கு’ என்ற இப்பாடத்தில் பாரதியின் உலகளாவிய பாங்கு எத்தகையது எனப் பார்க்கலாமா? உலகளாவிய நோக்கு என்றால் என்ன? இதுதானே உங்கள் உள்ளங்களில் எழும் கேள்வி?

சாதி, சமயம், உயர்வு, தாழ்வு, ஏழை, பணக்காரன், ஆண், பெண், கற்றவன், கல்லாதவன், நாடு, மொழி, இனம் இவையனைத்தையும் கடந்து நின்ற கவிஞன் மனம் உலக முழுவதையும் தழுவிச் செல்ல வேண்டும்.

என் சாதி, என் மதம், என் மொழி, என் நாடு, என் மக்கள் என்றில்லாமல் இந்த வரையறைகளை எல்லாம் தகர்த்துக் கொண்டு அனைத்துலக மக்களும் எனது சகோதரர்கள்; அனைத்துலக மக்களின் துன்பமும் எனது துன்பம்; அனைத்துலக மக்களும் சமம் என்று நினைக்கின்ற சமநோக்கு உலகளாவிய நோக்கு எனலாம்.

மானிடத்தின் பொது உணர்வுகள் இன மொழி வேறுபாட்டால் உணர்வு வேறாகுமோ? எவை மாறுபட்டாலும் உணர்வுகள் வேறாவதில்லை. நாட்டுக்கு நாடு மொழி, இனம், பண்பாடு இவற்றில் வேற்றுமையுண்டு. அப்படியிருக்கும்போது எப்படி உலகளாவிய சிந்தனையை ஒருவர் கொள்ள முடியும் என்று தோன்றுகிறதா? உண்மைதான். நிலம், நிறம், மொழி, இனம், பண்பாடு எல்லாமே வேறாக இருக்கலாம். ஆனால் மனித சமூகத்தின் – மானிடத்தின் (

umanity) உணர்வுகளில் வேறுபாடுகள் எதுவும் இல்லை. அதாவது உண்மை, பொய்மை, இன்பம், துன்பம், ஆசை, நிராசை, நம்பிக்கை, அவநம்பிக்கை, வீரம், அச்சம், ஏக்கம், ஏமாற்றம் போன்ற உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றுதானே? ஒருவர்க்கு மகிழ்ச்சி தருவது பிறர்க்குத் தராமல் இருக்கலாம்; ஒருவர் ஏங்குவதற்குப் பிறர் ஏங்காமல் இருக்கலாம். ஆனால் அடிப்படை உணர்வுகளில் மாற்றமில்லை. உலக மக்கள் அனைவரும் அனுபவிக்கின்ற – அடைகின்ற உணர்வுகள் இவை!

மானிடத்தின் பொதுத் துயரங்கள் உணர்வுகளுக்குக் கூறியது போலவே அந்த உணர்வுகளால் உருவாகும் துயரங்களும் ஒன்றாகவே உள்ளன. அவற்றை அனுபவிக்கின்ற அளவு வேண்டுமாயின் மாறலாம்; குறையலாம்; கூடலாம். ஆயினும் துயரங்கள் பொதுவானவைதாம். அதனால் தான் ஓரிடத்தில் மனித இனத்தின் துயரம் பேசப்படும்போது அந்தத் துயரத்தை அனுபவிக்கும் மக்கள் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் அவர்களுக்கும் அது பொதுவாகிறது; பொருத்தமாகிறது. உதாரணமாக வறுமையில் வாடும் மக்களின் துயரம் எந்த நாட்டு மக்களைப் பற்றியதாக இருந்தால்தான் என்ன? அது பொதுவானதுதானே? ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறையால் அடிமைப்படும் மக்கள் யாராக இருந்தால் தான் என்ன? அது பொதுவானதல்லவா? எண்ணிப் பாருங்கள்!

பாரதியின் உலக நோக்கு

பாரதி என்ற மானிடனின் உலக நோக்கிற்கு எது அடிப்படை? அவர் காலத்தில் வாழ்ந்த பிற மக்களில் பெரும்பாலோர்க்கு அத்தகைய எண்ணம் இல்லையே, அப்படியானால் பாரதிக்கு இச்சிந்தனைக்கு அடித்தளமாக அமைந்தது எது?

அணிசெய் காவியம் ஆயிரங் கற்பினும்

ஆழ்ந்திருக்குங் கவிஉளம் காண்கிலார்

(சுயசரிதை: 22)

என்ற பாரதியின் கவிதை வரிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. இலக்கியவாதிகளின் படைப்புகளில் ஆழ்ந்து, அங்குப் பொதிந்து கிடக்கும் எழுத்தாளரின் உளப்பாங்கைச் சீர் தூக்கிப் பார்ப்பது படிப்பவர்க்கு அழகு. அவ்வழியில் பாரதியின் கவிதைகளில் ஆழ்ந்திருக்கும் அவர் கவியுள்ளத்தை நோக்கினால் அது பாரதியின் உள்ள உயர்வையும் உலகளாவிய அவர்தம் நோக்கையும் தெளிவாகக் காட்டி நிற்கும்.

பாரதி என்ற மானிடன் பாரதி என்ற மானிடன் தமிழகத்தை மட்டும் எண்ணிப் பார்க்கவில்லை. பாரத நாட்டையும் ஒருங்கிணைத்துப் பார்த்தார். அப்படிப் பார்க்கும்போதே உலகப் பார்வையைப் பெற்றார். இங்குள்ள மக்களின் பிரச்சனையைத் தேசியப் பிரச்சனையாக, உலக மக்களின் பிரச்சனையாக அவர் உள்ளம் பார்த்தது. அதனால் அவர் தமிழர்கள் பிரச்சனையைப் பேசினாலும் இந்தியர்களின் பிரச்சனையைப் பேசினாலும் அது உலகப் பிரச்சனையாகியது. அவற்றைத் தீர்க்க அவர் கூறிய தீர்வுகள், செயல்பாடுகள் அனைவர்க்கும் பொருந்துவதாயின. பாரதி என்ற படைப்பாளர், கவிஞர் ஒரு மானிடராக உயர்ந்து நிற்கிறார். இந்த மானிடர் சக மனிதர்களின் துக்கங்களில் பங்கு கொள்பவர்; சக மனிதர்களின் சிக்கல்களைக் கண்டு வருந்துபவர். வெறும் வருத்தத்தோடு நின்றுவிடாமல் அவர் ஏக்கங்களும் தவிப்பும் செயல்பாடுகளாய் உருவாயின; சக மனிதர்களைத் தட்டியெழுப்பும் பள்ளியெழுச்சியாக அமைந்தது. போர்க்கோலம் கொள்ளச் செய்யும் முரசொலியாக முழங்கியது. எங்கெல்லாம் மக்கள் துயரமடைந்தார்களோ அங்குள்ள மக்களின் துயரத்தை எண்ணிப் பார்த்து, இங்குள்ள மக்களை எழுச்சியுறச் செய்தவர்; வேறு வேறு நாடுகளில் நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் துல்லியமாகக் கணித்து, அவற்றைப் பாராட்டியவர்; அதன் வழி தம் மக்களைச் செயல்திறம் கொண்டவர்களாக உருவாக்க நினைத்தவர் பாரதி. எந்த இன மக்கள் எங்குத் துயரத்தில் மூழ்கினாலும் அவர்களுக்காகப் பெரிது வருந்தும் பண்பை இயல்பாகக் கொண்டிருந்தார் பாரதி. இதற்கு எது அடிப்படையாக அமைந்தது?

அத்வைதம் வகுத்த அடிப்படை பாரதி இந்து சமயத்தைச் சார்ந்தவர்; ஆயினும் எந்தச் சமயத்தின் மீதும் அவருக்கு வெறுப்பில்லை, பகைமையில்லை; உயர்வு தாழ்வு என்ற எண்ணமில்லை. எல்லாச் சமயங்களும் சமம் என்றே எண்ணினார். மதித்தார். ஆயினும் தாம் சார்ந்த சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தம் சமயத்தை நேசித்ததாலேயே பிற சமயத்தையும் நேசித்தவர்; மதித்தவர். வேதாந்தக் கோட்பாட்டில் ஈடுபாடு உடையவர்; ஆயினும் வெற்று (empty / hollow) வேதாந்தியாக அவர் உருவாகவில்லை. அவர் எப்போதும் மக்களைப் பற்றியே கவலை கொண்டிருந்தார். அவர்கள் எந்நாட்டவராயினும் எச்சமயத்தைச் சார்ந்தவராயினும் எச்சாதியைச் சார்ந்தவராயினும் சமமாகவே மதித்தார். கிறித்துவர்களையும், இஸ்லாமியர்களையும் தம் சகோதரர்களாக எண்ணினார்.

பாரதி வேதாந்திதான்; ஆனால் வேதாந்தத்தின் உட்பொருளை உணர்ந்த பாரதி உண்மையான வேதாந்தி. வேதாந்தத்தின் உட்பொருளாவது, அனைவரிடத்திலும் இறைவன் இருக்கிறான், அனைவரும் சமம் என்பதாகும். பக்தியாளன்தான் பாரதி; ஆனால் வெறித்தனமில்லாத பக்தியாளர். இந்து மக்கள் வழிபடும் அத்தனை தெய்வங்களையும் வழிபடுபவர்; ஆயினும் ஆயிரம் தெய்வங்களைப் பாடினாலும் தெய்வம் ஒன்று என்பதில் நம்பிக்கை கொண்டவர். ஏனென்றால் ஓர் உருவம், ஒரு நாமம் இல்லாத இறைவனுக்கு ஆயிரம் திருநாமங்கள் சூட்டி மகிழ்ந்த மக்களின் உள்ளத்தை நன்கறிந்தவர். அதனால் தான் அல்லாவையும் ஏசுவையும் வேறுபடுத்திப் பார்க்கும் மனம் அவர்க்கில்லை. அத்வைதக் கொள்கை தந்த கொடையிது. ஆமாம். அத்வைதக் கொள்கை என்றால் என்ன? நீங்கள் அறிவீர்களா?

அத்வைதக் கொள்கை

‘அத்வைதம்’ என்பதன் பொருள்; ‘இரண்டாகத் தோன்றும் எவையும் இரண்டல்ல, ஒன்றே’ என்பதாம். அதாவது தெய்வம் ஒன்றுதான்; அதை எந்தப் பெயராலும் அழைக்கலாம். பெயரில் என்ன இருக்கிறது? அந்தத் தெய்வம் உன்னிடத்திலும் இருக்கிறது; என்னிடத்திலும் இருக்கிறது. ஏன் உலகப் பொருள்கள் அனைத்திலும் உள்ளது. அனைத்து சீவன்களிலும் உள்ளது. அதாவது அசையும் அசையாப் பொருள்கள் அனைத்திலும் இருப்பது. அப்படியாயின் எல்லாச் சாதியிலும் மதத்திலும் இருப்பதுதானே? எல்லோரிடமும் இருப்பவர் இறைவன் என்றால் வேற்றுமைக்கு இடம் ஏது? பாரதியின் உலகளாவிய நோக்கிற்கு அடிப்படை வகுத்தது இந்த அத்வைதக் கோட்பாடுதான். இதற்கு மேலும் உரமிட்ட பிற தூண்டுதல்களை இனிப் பார்க்கலாமா?

உலக நோக்கிற்கு உரமிட்ட தூண்டுதல்கள்

பாரதியின் பரந்த உள்ளத்திற்குத் தூண்டுகோலாய் அமைந்தவை சில. அவற்றுள் விழுமிய கருத்துகள் எங்கிருந்தாலும் யார் எழுதியதாக இருந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனமும் அவர்களைப் போற்றும் போக்கும் பாரதியிடம் இயல்பாக இருந்த பண்புகள். அதனாலேயே அவருடைய கோட்பாடுகளுக்கு ஒத்த கருத்துடைய மேலைநாட்டுக் கவிஞர்கள் தம் கவிதைகள், கருத்தாக்கங்கள் அவரைக் கவர்ந்தன. அவை அவருக்குப் பெரிதும் தூண்டுகோலாய் அமைந்ததோடு பெருமளவு தாக்கத்தையும் (impact) ஏற்படுத்தின.

அத்வைதக் கொள்கை அவருடைய உலகளாவிய நோக்கிற்கு வேராய் (root) அமைந்ததுபோல் மேலைநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளும் அறிஞர்களின் கருத்தாக்கங்களும் அந்த வேர்கள் ஆழமாயும் உறுதியாயும் பரவி நிற்க உரமாய் அமைந்தன. பாரதியின் உலக நோக்கிற்கு உரமிட்ட தூண்டுதல்களைத் தந்த ஒரு சிலரின் கோட்பாடுகளைச் சுருக்கமாக இங்குக் காணலாமா?

பாரதியும் ஷெல்லியும் (Shelley, P.B.) ஷெல்லி பெரும் புரட்சிக் கவிஞன். பாரதி புரட்சி இலக்கியப் பாரம்பரியத்தில் தமக்கு முன்னோடியான ஷெல்லியிடம் ஈடுபாடு கொண்டிருந்ததில் எந்தவித வியப்புமில்லை. ஷெல்லியின் பாடல்களைப் பாரதி விரும்பிக் கற்றார். தமக்கு ‘ஷெல்லிதாசன்’ என்ற புனை பெயரையும் சூட்டிக் கொண்டார். ‘ஷெல்லி சங்கம்’ என்ற பெயரில் ஒரு சங்கத்தையும் ஏற்படுத்தி, அதில் ஷெல்லியின் நூல்களைப் படித்துக் காட்டி வந்தார். அவருடைய கவிதைகளைப் பிறரும் அனுபவிக்கும்படி செய்தார். அந்த அளவுக்கு ஷெல்லியிடம் பாரதிக்கு ஈடுபாடு இருந்தது.

ஷெல்லியின் தாக்கம்

பாரதியார் மற்ற கவிஞர்களால் தாக்கம் பெற்றதைவிட ஷெல்லியால் தாக்கம் பெற்றதை அவர் கவிதைகள் எதிரொலிக்கின்றன. இருவர் மனத்திலும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று பெரும் கோட்பாடுகள் பதிந்து இருந்தன. மனித மேம்பாட்டையே இருவரும் குறிக்கோளாகக் கொண்டனர்.

இலட்சியங்கள்

நிறுவனங்களுக்கு எதிராகக் கலகம் செய்வது, புரட்சி மனப்பான்மை, பெண் விடுதலைக்காக உழைத்தல், எல்லாவற்றையும் விட ஷெல்லியுடைய இலட்சியக் கோட்பாடுகளாகிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை பாரதியைப் பெரிதும் கவர்ந்தன. அவற்றையே பாரதியும் தம் இலட்சியமாகக் கொண்டார்.

பாரதியும் வால்ட் விட்மனும் (Walt Whitman) ஷெல்லிக்கு இணையாகப் பாரதியைப் பெரிதும் கவர்ந்தவர் அமெரிக்கக் கவிஞரும் அறிஞருமான வால்ட் விட்மன். பாரதியின் வசன கவிதைக்குத் தூண்டுகோலாய் அமைந்தவர் வால்ட் விட்மன். அவருடைய ‘புல்லின் இதழ்கள்’ (The Leaves of Grass) என்ற கவிதையே பாரதியின் வசன கவிதைக்கு அடித்தளமிட்டது.

பொதுப் பண்புகள்

பெண் விடுதலை பற்றி பாரதி, விட்மனைப் போலவே விரிவாகப் பாடுகிறார். இருவரும் பூமி மீதும் வாழ்க்கை மீதும் மக்கள் மீதும் பற்றுடையவர்கள். அதனாலேயே நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கவிதைகள் படைத்தார்கள். அவரவர் நாட்டின் தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்று விரும்பினர். சுருங்கிய தேசியம் என்ற வட்டத்திலிருந்து விரிந்த உலகளாவிய பார்வைக்குப் பரிணமிக்க விட்மனின் கவிதைகளும் கட்டுரைகளும் பாரதிக்குப் பெரிதும் உதவின என்பதை உறுதியாகக் கூறலாம்.

அனைத்துயிருடனும் ஒன்றிய நிலை

இயற்கையில் தம்மை மறந்தவர் விட்மன். வயல்வெளிகளில் காட்சிதரும் விலங்குகளோடும் பறவைகளோடும் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டு (அவற்றின் மகிழ்ச்சியில்) மகிழ்ந்தவர் விட்மன். பாரதியும் உலகத்தைக் கண்டு எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று பாடி மகிழ்ந்தவர். காக்கை, குருவி, கடல், மலை போன்றவற்றோடு தம்மை இணைத்துக் கொண்டு மகிழ்கிறார். விட்மனின் ஜனநாயகக் குரலும் பாரதியைப் பெரிதும் ஈர்த்தது. பாரதியின் உலகளாவிய நோக்கிற்கு விட்மன் உரமூட்டியதோடு பெரும் தூண்டுதலாகவும் அமைந்ததைத் தெளிவாக அறியலாம்.

பாரதியும் பைரனும் (Byron, G.G.) கிரேக்க நாட்டின் நாகரிகம் உலகமறிந்தது. அதுதன்னிலை கெட்டு, அன்னியருக்கு அடிமையானதையும் கலைகளெல்லாம் மங்கி நின்ற நிலையினையும் எண்ணி பைரன் வருந்துகிறார். பாரதியும் இந்திய நாட்டின் அடிமை நிலையை எண்ணி ஏங்குகிறார். பெருமை பல பெற்ற பாரதநாடு அடிமைப்பட்டு அல்லல் உறுவதைக் கண்டு வருந்துகிறார். ஷெல்லி போற்றிய பைரன் மீது ஷெல்லிதாசனாகிய பாரதிக்கு ஈடுபாடு ஏற்பட்டதில் வியப்பில்லை. பைரனை விரும்பிப் படித்தவர் பாரதி.

‘பைரனுக்கும் பாரதிக்கும் இடையே நிலவிய உறவு இவர்களிடம் மேலோங்கி நின்ற விடுதலைத் தீயே’ என்று சுத்தானந்த பாரதி கூறுவார். ‘விடுதலைக்காகப் போராடும் பாரதிக்கு ஓர் ஒளியூட்டும் கண்ணியமான எடுத்துக்காட்டாக, பைரன் திகழ்ந்திருக்க வேண்டும்’ என்பார் கா.மீனாட்சிசுந்தரம்.

பாரதியும் கீட்ஸும் (Keats, John) உணர்ச்சி மிகுந்த கவிஞன் கீட்ஸ். இளம் வயதிலேயே மரணம் அடைந்தவர். உணர்ச்சி மிகுந்த கவிஞனாகிய கீட்ஸின் கவிதைகள் பாரதிக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கீட்ஸின் அழகு தத்துவம் பாரதியின் குயில்பாட்டில் வெளிப்பட்டது என்பர் திறனாய்வாளர். அழகைத் தேடும் தேடல் அது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என மகிழும் பாரதிக்குக் கீட்ஸின் அழகுணர்ச்சி வசப்பட்டதில் என்ன ஆச்சரியம்? ‘உண்மையே அழகு. அழகே உண்மை’ என்பதில் இருவருமே இணைந்து போகின்றனர்.

பிற அறிஞர்கள் மேலும் பல மேலைநாட்டு அறிஞர்கள் பாரதியின் இதயத்தைக் கவர்ந்துள்ளார்கள்.பாரதி தம் கட்டுரைகளிலும் அமெரிக்கா, ஜப்பான், சீனா, பிரான்ஸ் போன்ற மேல்நாட்டு அறிஞர்களின் கருத்துகளைத் தமிழர்க்கும் பாரதநாட்டு மக்களுக்கும் விழிப்புணர்வு தோன்ற ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளார். தொழில் என்னும் கட்டுரையில் சீனஞானி சீஇங், உருஷ்ய ஞானி டால்ஸ்டாய் (Tolstoy), அமெரிக்க ஞானியாகிய தோரோ (Thoreau), கார்லைல் (Carlyle) ஆகிய ஆங்கில ஆசிரியர்களைப் போற்றுகிறார்.

பாரதியும் உலக அறிஞர்களும்

இவையனைத்தும் நமக்குத் தெளிவாகக் காட்டுவன யாவை? பாரதி உலக அறிஞர்கள் பலரை நன்கு படித்துள்ளார்;அவர்களின் கருத்துகளைத் தம்வயமாக்கிக் கொண்டுள்ளார். அவர்களின் உணர்வு ஒத்த கருத்தாக்கங்களின் தாக்கமும் அவருக்கு இருந்திருக்கிறது. அதன் காரணமாக அவருடைய நாட்டு விடுதலை, பெண் விடுதலை, அழகைத் தேடும் தேடல், சமத்துவக் கோட்பாடு ஆகியவை உரம் பெற்றதோடு அவருடைய கவிதைகளிலும் கட்டுரைகளிலும் அவை வேகத்தோடும் வீச்சோடும் இடம் பெற்றன என்பதைத் தெளிவாக அறியலாம்.

பொது நலத்தொண்டர்கள்

ஒன்றை இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும். பாரதியின் உள்ளத்தை ஈர்த்தவர்கள் அனைவருமே தம் மக்களுக்கும், தம் நாட்டிற்கும் மட்டுமன்றி உலக மக்களுக்கும் பொருந்தும் சிந்தனைகளைத் தந்தவர்கள். எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டு மக்களின் விடுதலை மையப் பொருளாக அமைந்தது. மக்களின் சமத்துவத்திற்காக அவர்கள் எழுதினார்கள்; போராடினார்கள்; வாழ்ந்தார்கள். பாரதிக்கும் பேச்சும் மூச்சும் மக்களைப் பற்றியதாகவே இருந்தது. அப்படிப்பட்டவரின் உள்ளத்திற்கு மேற்கூறிய பெரியோர்களின் எழுத்தும் செயலும் வலுவாக அமைந்ததில் என்ன வியப்பு?

உலகநோக்கில் விடுதலைச் சிந்தனை

பாரதி கூறியிருப்பது போல நன்மையும் அறிவும் எங்கிருந்தாலும் அவற்றைத் தழுவி வாழ்வதில் குறையொன்றுமில்லை; மாறாக வளம்பல சேர்க்கும்.

……………… நன்மையும் அறிவும்

எத்திசைத் தெனினும் யாவரேகாட்டினும்

மற்றவை தழுவி வாழ்வீராயின்

அச்சமொன்றில்லை………..

(தமிழச்சாதி- அடிகள் 119-122)

தம் கோட்பாட்டிற்கு இணங்கவே பாரதியும் பிறநாட்டு நல்லறிஞர் நூல்கள் பலவற்றைக் கற்றார். தெளிவடைந்தார். தேனீயைப் போல் திரட்டித் தம்வயமாக்கிக் கொண்டார். சீன, ஜப்பானியக் கவிதைகள் மொழிபெயர்ப்பு, அமெரிக்கக் கவி வால்ட் விட்மனின் படைப்புகள், ஷேக்ஸ்பியர் (Shakespeare), டென்னிசன் (Tennyson), வோர்ட்ஸ் வொர்த் (Wordsworth), பைரன், கீட்ஸ், ஷெல்லி என்ற அனைத்து அறிஞர்களின் படைப்புகளைச் சுவைத்தார். வெறும் இலக்கிய இன்பத்திற்காக அன்று; அவற்றுள் இழையோடிய, மானுட விழுமியங்களால், அவற்றுள் பின்னிப் படர்ந்த மானிட நலன் காக்கும் உணர்வு எழுச்சிகளால், கவரப்பட்டு (சமூக அக்கறையோடும் மக்கள் மீது கொண்ட அளவிட இயலாத அன்பினாலும்) அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டார். மேற்குறிப்பிட்ட உலக அறிஞர்களின் வாயிலாக, விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் எனும் முப்பெரும் கோட்பாடுகளில் பாரதியார் ஈடுபாடு கொண்டார்.

விடுதலை – விளக்கம் விடுதலை என்பது யாது? பாரதியே கூறுகிறார். அதை முதலில் பார்க்கலாமா? ‘மனித உயிர்களுக்கு இருவித நிலைமை தான் உண்டு. எதுவும் தன் விருப்பப்படி செய்து, அதனால் ஏற்படக் கூடிய இன்ப துன்பங்களுக்குத்தான் பொறுப்பாளியாக இருப்பது ஒரு நிலைமை. அதுதான் சுதந்திரம்’. (பாரதியார் கட்டுரைகள் பக்:99)

பாரதியே ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் (

erbert Spencer) சொல்லுவதை மேற்கோளாகக் காட்டுகிறார். ‘பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானதெல்லாம் செய்யலாம் என்பதே விடுதலை’ அதாவது ‘பிறருக்குக் காயம் படாமலும், பிறரை அடிக்காமலும் வைய்யாமலும், கொல்லாமலும் அவர்களுடைய உழைப்பின் பயனைத் திருடாமலும் மற்றபடி ஏறக்குறைய நான் எது பிரியமானாலும் செய்யலாம் என்ற நிலையில் இருந்தால் மாத்திரமே என்னை விடுதலையுள்ள மனிதனாகக் கணக்கிடத் தகும்’.

பாரதியின் பரந்த நோக்கு

தமிழ்நாட்டைச் சார்ந்த பாரதி, தமிழ்நாட்டில் உள்ள தேசியத் தலைவர்களாகிய வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்றோரையும் புகழ்ந்து பாடியுள்ளார். தமிழ்நாட்டின் எல்லையைக் கடந்து இந்திய தேசிய அளவிலான, பாலகங்காதரதிலகர், சத்ரபதி சிவாஜி, மகாத்மா காந்தி போன்ற சிறந்த தலைவர்களையும் சிறப்பித்துக் கூறியுள்ளார். அவற்றிற்கும் மேலாக, உலகளாவிய நிலையில் அவரது பார்வை செல்கிறது. உலகநாடுகளிலுள்ள தலைவர்களைப் பற்றியும், உலகில் உள்ள நாடுகளில் ஏற்பட்ட விடுதலை இயக்கங்கள் பற்றியும் புகழ்ந்து கூறுகிறார்.

இத்தாலியின் விடுதலை ஒரு சமயம் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய இத்தாலி நாடு அந்நியர் படையெடுப்பால் சீர்குலைந்தது. இத்தாலிய நாடு சிசிலி, ரோம், வெனிஸ், நேபில்ஸ் எனத் துண்டு துண்டாகப் பிரிந்தது. ஒற்றுமையிழந்து தளர்ந்து போனது. மக்களும் தன்னம்பிக்கை இழந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பா முழுவதும் தேசிய உணர்வு பெருகவேண்டிய அரசியல் அவசியம் நேர்ந்தது. நெப்போலியன் படையெடுப்பு, ஒற்றுமையாக இருந்தால்தான், இத்தாலி உரிமைகளைப் பெறமுடியும் என்ற விழிப்புணர்வைத் தூண்டியது. இத்தாலி நாட்டின் இந்நிலையைக் கண்ட மாஜினி (Mazzini) என்ற மக்கள் தலைவன் இத்தாலி நாட்டின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட மக்களுக்குத் தொடர்ந்து உற்சாக மூட்டினான். தேசமே பெரிது என்ற எண்ணத்தை மக்கள் உள்ளத்தில் ஆழமாக விதைத்தான். வாலிபர் சபை ஒன்றை உருவாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டை வற்புறுத்தினான். ஆஸ்திரிய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான குடியரசு இயக்கத்தினையும் வளர்க்க உறுதி கொண்டான். மாஜினியின் எழுச்சி பெறும் உரையால் -தொடர்ந்து அவன் மேற்கொண்ட முயற்சியால் மீண்டும் மீண்டும் பல படையெடுப்புகளை இத்தாலி மக்கள் எதிர்கொண்டனர். பஞ்சத்தையும் பசியையும் பொருட்படுத்தாமல் தேசமே பெரிதெனப் போராடினர். இத்தாலி மக்களின் இந்தப் பண்பு பாரதியைப் பெரிதும் கவர்ந்தது. இந்திய நாடும் அடிமைப்பட்டு ஒற்றுமை குலைந்து நின்ற நிலையில் அவர்களைப் போல் நம் மக்களும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட வேண்டுமென்று ஏங்கினார். அதன் வெளிப்பாடே மாஜினியின் பிரதிக்ஞை என்ற பாடலாகப் பிறந்தது.

மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்

வீழ்ச்சியின் உணர்ச்சி மீதாணை

பொலிவுறு புதல்வர் தூக்கினில் இறந்தும்

புன்சிறைக் களத்திடை யழிந்தும்

. . . . . . . . . . .

(மாஜினியின் சபதப் பிரதிக்கினை: 5 )

(பொலிவுறு = எழுச்சியுறு, புன்சிறை = இழிந்த சிறை)

இந்த அடிகளில் மாஜினி தன் நாட்டுத் தலைவர்களையும் மக்களையும் பற்றிக் கூறுவது நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடித் தூக்குமேடை ஏறிய இளைஞர்களையும்; மக்கள் பட்ட துயரங்களையும்; சிறையில் தள்ளப்பட்டுக் கொடுமைகளை அனுபவித்த பெருந்தலைவர்களையும் பற்றிப் பாரதியை எண்ணிப் பார்க்க வைக்கிறது. அது மட்டுமன்றி அவர்கள் பிறந்த நாட்டினின்றும் வேற்று நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்ட கொடுமையையும் நினைத்துப் பார்க்கிறார். அவர்களின் பிரிவைத் தாங்காது அருமை நாட்டின் தாய்மார்கள் விட்டகண்ணீரும் அவர் மனத்தில் தோன்றுகிறது. மாஜினியின் அந்த வார்த்தைகள் எத்துணை யதார்த்தமாய் பாரதியைத் தாக்கியிருக்கும்?

நீங்களே அந்த பாடல் அடிகளைப் படித்து அதன் தன்மையை எண்ணிப் பாருங்கள்!

வேற்றுநாடுகளில் அவர்துரத் துண்டும்

மெய்குலைந்து இறந்துமே படுதல்

ஆற்றகி லாராய் எம்அரு நாட்டின்

அன்னைமார் அழுங்கணீ ராணை

(மாஜினியின் சபதப் பிரதிக்கினை: 6)

(துரத்துண்டும் = துரத்தப்பட்டும், மெய்குலைந்து = உடல்தளர்ந்து, ஆற்றகிலாராய் = தாங்க முடியாதவராய், அழுங்கணீர் = அழுகின்ற கண்ணீர்)

இத்தாலியின் நிலையையே ஒத்திருந்தது பாரதநாட்டின் நிலையும். மாஜினியின் சபதத்தைக் கூறுவதின் வாயிலாக நம் மக்களுக்கு விழிப்பூட்ட நினைக்கிறார் பாரதி. அடிமை எங்கிருந்தால்தான் என்ன? அடிமை, அடிமைதானே?

ஏகாதிபத்தியத்தின் கொடுமையில் சிக்கிய தேசங்களின் நிலைமை ஒன்று போல இருப்பதை உணர்ந்து, விடுதலையும் உயர்வும் பெற ‘இணக்கம் ஒன்றுதான்’ மார்க்கமென்று பாரதி அறிவிக்கிறார்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு

(வந்தே மாதரம், 4)

என்பதில் மாஜினியின் குரலும் பாரதியின் குரலும் இணைந்து ஒலிக்கவில்லையா?

பெல்ஜியத்திற்கு வாழ்த்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் பிடியில் சிக்கி அவதிப்பட்ட நாடு பெல்ஜியம். ஏகாதிபத்தியக் கொடுமையை எதிர்த்துத் தொடர்ச்சியாக அது நடத்திய போர்களை நினைத்துப் பார்த்து வியப்படைகிறார் பாரதி. பல்லாயிரம் பேர் நாடு கடத்தலுக்கும், தூக்குமேடைக்கும் பலியானபோதும் அஞ்சாமல் தன்மானம் காக்கப் போராடிய பெல்ஜிய மக்களின் தீரம் அவர் உள்ளத்தை வெகுவாக ஈர்த்தது. கோழைத்தனத்தாலும் அறியாமையாலும் பெல்ஜியம் வீழ்ந்துபடவில்லை; அறத்தினால் – வண்மையினால் – மானத்தால் – வீரத்தால் – துணிவால் வீழ்ந்தது. ஆயினும் அதை வீழ்ச்சியாக பாரதி மனம் ஏற்கவில்லை. வெற்றி என்பதுதான் என்ன? கொடுமைகள் வலிமையுடையாரால் வெற்றியடையும் போது அதை வெற்றியாகவா கருத முடியும்? (இங்கு ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ளலாமா? அசோக சக்கரவர்த்தி கலிங்கத்தில் பெற்றது வெற்றியா? இல்லை, இனி போரே செய்வதில்லையென அவர் முடிவு செய்தது வெற்றியா? உலகத்தை வெற்றிகொண்டு நடைபோட்ட அலெக்சாண்டர் புருஷோத்தமனை வெற்றிகொண்டதை வெற்றி எனலாமா? இல்லை, தன் நாட்டைப் பலிகொடுக்க விரும்பாத புருஷோத்தமன் அலெக்சாண்டரை எதிர்த்துப் போராடி, தோல்வி கண்டது வெற்றியா? சிந்தித்துப் பாருங்கள்.) பெல்ஜியம் என்ற சிறிய நாடு ஸ்பானியப் பேரரசை எதிர்த்தது எத்துணைச் சிறப்பு வாய்ந்தது

அஞ்சி, அஞ்சி அடிமையாகாமல் மீண்டும் மீண்டும் போர் செய்து, வீரத்தால் மேம்பட்டு நின்ற பெல்ஜியம் பாரதியின் உள்ளத்தை ஈர்த்ததில் வியப்பில்லை.

வீரத்தால் வீழ்ந்து விட்டாய்

மேல்வரை உருளும் காலை

ஓரத்தே ஒதுங்கித் தன்னை

ஒளித்திட மனமொவ் வாமல்

பாரத்தை எளிதாகக் கொண்டாய்

பாம்பினைப் புழுவே என்றாய்

நேரத்தே பகைவன் தன்னை

நில்லென முனைந்து நின்றாய்

(பெல்ஜியத்திற்கு வாழ்த்து, 4)

(வரை = மலை, முனைந்து = எதிர்த்து)

அஞ்சி ஒதுங்குவது ராஜதந்திரம் என்று கருதாமல் எதிர்த்துப் போராடிய பெல்ஜியத்தின் வீரமே வீரம்!

பிணிவளர் செருக்கினோடும் பெரும்பகை எதிர்த்தபோது

பணிவது கருத மாட்டாய்

பதுங்குதல் பயனென்று எண்ணாய்

(பெல்ஜியத்திற்கு வாழ்த்து, 5)

(பிணி = துன்பம், செருக்கினோடு = அகந்தையோடு, பதுங்குதல் = பின்வாங்குதல்)

என்ற அடிகளை நினைக்கும் போது பெல்ஜியத்தின் தார்மீகக் கோபமும், போர்க்குணமும், ஏகாதிபத்திய எதிர்ப்பில் இழப்புகளுக்காக வருந்தாமல் ஈடுபட்ட தீரமும் தெளிவாக விளங்குகின்றன. இந்திய மக்களும் இப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறார் பாரதி. இப்படியில்லையே என ஏங்குகிறார்.

உருஷ்யப் புரட்சி உலகத்தின் பல நாடுகளில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளைப் பாரதி கவனத்தோடு நோக்கியிருக்கிறார். ஆயினும் ருஷ்ய நாட்டின் புரட்சி அதிகமாகவே அவர் கவனத்தை ஈர்த்துள்ளது. சோவியத் புரட்சியை யுகப்புரட்சி என்கின்றார். ஏகாதிபத்தியத்தின் கையில் சிக்குண்டு வருந்திய உலக நாடுகள் அனைத்திற்கும் நம்பிக்கை தரும் நன்மருந்தாகியது அந்தப் புரட்சி.

சோவியத் அக்டோபர் புரட்சியைப் பற்றி எழுதும்போது அதன் பொருளாதார அரசியல் முக்கியத்துவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்.

ஜார் மன்னர்களின் கொடுங்கோன்மை வீழ்ந்தது என்று மகிழும் போது இந்திய நிலையை ஒப்பிட்டுப் பார்க்கிறது அவர் உள்ளம். இங்கும் அந்தக் கொடுங்கோன்மை வீழுங்காலம் வருமென நம்பிக்கை கொள்கிறார்.

இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன்

ஜாரெனும்பே ரிசைந்த பாவி

(புதிய ருஷியா, 2)

(பேரிசைந்த = பெயர்கொண்ட)

பாவி என்ற சொல் பாரதியின் சீற்றத்தையும் வெறுப்பையும் காட்டுகின்றதல்லவா?

இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்

இவ்வா றாங்கே

செம்மை யெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித்

தீர்ந்த போதில்……………

(புதிய ருஷியா, 4)

(செம்மை = நன்மை)

புரட்சி தோன்றுகிறது. பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! எத்தனை நாட்கள் கொடுமையைத் தாங்க முடியும்? எதற்கும் ஓர் எல்லையுண்டல்லவா? அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீர் கொடுங்கோலாட்சியை வீழ்த்தியது. குமுறிய மனங்களின் வெளிப்பாடு புரட்சியாக வெடித்தது. கொடுங்கோன்மை வீழ்ந்ததை எண்ணி மகிழ்கிறார் பாரதி. மகிழ்ச்சித் துள்ளலாக வருகிற அந்த வார்த்தைகளைப் பாருங்கள்! என்ன மகிழ்ச்சி கொடுங்கோல் சாய்ந்ததில்!

சமயமுள படிக் கெல்லாம் பொய்கூறி

அறங்கொன்று சதிகள் செய்த

சுமடர் சட சடவென்று சரிந்திட்டார்

புயல் காற்றுச் சூறை தன்னில்

திமுதிமுவென மரம் விழுந்து காடெல்லாம்

விறகான செய்தி போலே

(புதிய ருஷியா, பாடல். 6)

(சுமடர் = இழிந்தோர், சூறை = சுழல் (சுழல்காற்று)

உவமை எத்தனை இயல்பாக வந்து விழுகிறது. புயற்காற்றில் பெருமரம் வீழ்ந்தால் எப்படியிருக்கும்? விழும்போது ஏற்படும் சத்தம். கற்பனை செய்யும்போதே காட்சி கண்ணில் விரிகிறதல்லவா?

கிளையோடும் கொம்புகளோடும் இலைகளோடும் மரம் வேரோடு முறிந்து விழுவதுபோலக் கொடுங்கோன்மையும் வீழ்ந்தது.

இந்தப் புரட்சி உலகுக்கே ஒரு செய்தியைப் பிரகடனப்படுத்தியது. அது என்ன? குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுற குடிமைநீதி உருஷ்யாவில் எழுந்ததுபோல் எங்கும் எழவேண்டும் என்ற செய்திதான். இந்தியாவிலும் அக்குடியாட்சி மலரவேண்டும் என்று பாரதி விரும்புகிறார். மலரும் என்று நம்புகிறார்.

சோஷலிசக் கோட்பாடு

உலகுக்கு அவமானம் தரக்கூடிய இந்தப் பொருளாதார ஏற்றத் தாழ்வைத் தகர்த்து சோஷலிசத்தை உருவாக்கியதற்காக உருஷ்யாவை அவர் பாராட்டுகிறார். ஆரம்பத்தில் பலரால் வெறுக்கப்பட்ட இக்கோட்பாட்டின் உயர்வை நன்கு புரிந்து கொண்டு பலநாடுகளும் பின்பற்றும் விதத்தில் லெனின் (Lenin) அவர்களும் பிறரும் செயல்படுவதைப் பாரதி நன்கு பாராட்டுகிறார். பொதுவுடைமைக் கொள்கையானது ஜெர்மனி, ஆஸ்திரேலியா, துருக்கி ஆகிய இடங்களில் வலிமை பெறுவதையும் விட ஆசியாவில் மிகப்பெரிய பகுதியான ஸைபீரியாவிலும் இந்த முறை வந்துவிட்டது எனக் கூறியும் மகிழ்கிறார்.

பிரான்ஸ், இங்கிலாந்து முதலிய வல்லரசுகள் இக்கோட்பாட்டை விரும்பாமல் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறாகப் பிரச்சாரம் செய்ததைப் பாரதியார் அம்பலப்படுத்துகிறார்.

உருஷ்யாவின் சமுதாய, அரசியல், பொருளாதார மாற்றங்களை ஏற்றுக் கொண்ட பாரதியார், அங்கு நடந்த அக்டோபர் புரட்சியின்போது சிந்தப்பட்ட ரத்தத்துளிகளுக்காக வருந்துகிறார். ஒருகாலத்தில் தீவிரவாதியாக இருந்த பாரதி பொதுவுடைமை நெறியைப் பாராட்டிய போதும் அந்நெறியைப் பரப்ப ஆயுதமேந்தக்கூடாது என்று எண்ணினார்.

பிஜித்தீவின் கரும்புத் தோட்டத்தில் துன்பப்படும் பெண்களின் நிலையை எண்ணி வருந்துகிறார். நம் நாட்டுப் பெண்களுக்கு மட்டுமன்றி அங்குள்ள பிறநாட்டு மக்கள் அனைவர்க்காகவும் வருந்துகிறார்.

பெண்விடுதலை பாரதியின் பல்வேறு விடுதலைச் சிந்தனைகளை நீங்கள் வேறு ஒரு பாடத்தில் படிக்கப் போகிறீர்கள். அதில் விரிவாகப் பெண் விடுதலைச் சிந்தனைகளையும் படிக்கவிருக்கிறீர்கள். அதனால் பெண் விடுதலை பற்றிய சில கருத்துகளை மட்டும் இங்குக் காண்பது பொருத்தமாக இருக்கும்.

பெண் விடுதலை

பெண்ணுக்கு விடுதலை வேண்டும். பெண்ணுக்கு விடுதலை இல்லையென்றால் பின் இங்கே வாழ்வில்லை; வளமில்லை. அதனால் பெண்ணை அடிமையென்று எண்ணாதே என்கிறார். மேலும் “ஆணுக்கு ஆண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயத்தைக் காட்டிலும் ஆணுக்குப் பெண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயம் மிகப் பெரிது” என்பார்.

பெண்ணடிமை தீர….

‘நம் பெண்கள் அடிமைகள்; அதில் சந்தேகமில்லை’ என்று மேலும் கூறுவார். பெண்ணடிமை தீர, பாரதி கூறும் தீர்வு; ‘அடிமைப்பட்டு வாழமாட்டோம்; சமத்துவமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம்’ என்று வெளிப்படையாகத் தெளிவாகச் சொல்லவேண்டும் என்று மேலும் விரித்துப் பேசுவார்.

வையம் தழைக்கும் வழி

வையம் தழைக்கும்வழி நாட்டின் வளர்ச்சி, சமூக வளர்ச்சி, மனித மேம்பாடு ஆகியவை ஆண், பெண் வளர்ச்சியை ஒட்டியே அமையும். பெண்கள் அறியாமையில் மூழ்கி அடிமைகளாய் இருக்கும்போது ஆண்கள் சுதந்திரம் பெறுவது என்பது இயலாதவொன்று. பெண்கள் அறிவு பெறவேண்டும். ஆணும் பெண்ணும் நிகராகக் கொண்டு அறிவில் ஓங்கும்போதே விடுதலையைப் பெறமுடியும். வையம் தழைக்க வழி பிறக்கவும் முடியும்.

சில பெண்விடுதலைப் போர்கள்

தென்னாப்பிரிக்காவில் நடந்த பெண் விடுதலைப்போர், துருக்கியில் நடந்த பெண் விடுதலைப் போர், ஐரோப்பாவில் மகளிர் சுதந்திரமாக இருத்தல் ஆகியவற்றை எடுத்துக் கூறி,

தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தமது மனுஷ்யப் பதவியை ருசுப்படுத்த வழி செய்யாது இருப்பது ஏன்?

(பாரதியின் கட்டுரைகள்.பக்.150)

என்று வினவி, சியூசூன் என்ற சீனத்துப் பெண்ணுரிமைக் கவிஞரின் பாடலைத் தமிழில் பெயர்த்துத் தந்து ஊக்கமூட்டுகிறார்.

உலக நோக்கில் சமத்துவச் சிந்தனை

மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதில்லை என்ற நிலை உருவாக வேண்டும். சமத்துவம் நிலவ வேண்டுமென்றால் விடுதலை அடையவேண்டும். அதனால்தான் விடுதலைக் கோட்பாட்டை அழுத்தமாகக் கொண்ட பாரதி சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்கிறார். ஏற்றத் தாழ்வு நிறைந்த உலகை மாற்றியமைக்க வேண்டும் என்று வேட்கை கொள்கிறார். உருஷ்யாவின் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதில் வியப்பேதும் இல்லை. மேலும் ‘ஏழைகளே இல்லாமல் செய்வது உசிதம்’; ஒரு வயிற்று ஜீவனுக்கு வழியில்லாமல் யாருமே இருக்கலாகாது என்கிறார் பாரதி.

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனிஉண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனிஉண்டோ?

(பாரத சமுதாயம், சரணங்கள்-1)

(நோக = வருந்த)

என்று வினவி,

எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும்

இந்தியமக்கள்

எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை எல்லோரும்

இந்நாட்டு மன்னர்,

(பாரத சமுதாயம், சரணங்கள் – 4)

எனப் பாடுகிறார்.

தனிமனிதச் சமத்துவம் உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்று ஏதுமில்லை; எல்லோரும் ஓர் இனம். எல்லோரும் இந்திய நாட்டு மக்கள்; எல்லோரும் சமம்; எல்லோரும் மதிப்புடையவர்கள்; எல்லோருமே இந்நாட்டு மன்னர்கள் தாம். ஏனென்றால் விடுதலை பெற்ற மனிதன் யாருக்கும் அடிமையில்லை; யாருடைய ஆளுகையிலும் அவன் இல்லை. ஆளப்படுவோரும் ஆள்வோரும் இல்லையாதலால் எல்லோரும் சமம் என்கிறார்.

உடம்பின் நிறம் அந்தந்த நாட்டின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தது. அதனால் நிற வேறுபாடு மனித வேறுபாட்டுக்கு இடமளிக்கக் கூடாது. இக்கருத்தை ‘முரசு’ கவிதையில்

வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் – அதில்

மானுடர் வேற்றுமையில்லை

எண்ணங்கள் செய்கைகள் எல்லாம் – இங்கு

யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்

(முரசு. 17)

என்பதோடு அமையாமல்

நிகரென்று கொட்டு முரசே! – இந்த

நீணிலம் வாழ்ப ரெல்லாம்

தகரென்று கொட்டு முரசே! – பொய்மைச்

சாதி வகுப்பினை எல்லாம்

(முரசு. 18)

(நிகர் = சமம், நீணிலம் = நீள் நிலம்; பரந்த உலகம், தகர் = அழி, போக்கு)

என்றும் கூறுகிறார்.

பொய்யான சாதி, சமய வேறுபாடுகள் தகர்ந்து போனால் எல்லோரும் சமமாக ஆகலாம். இதற்கு எது அடிப்படை? அன்புதான். அன்பு எங்கு வேரோடி வளம் பெறுகிறதோ அங்கு ஏற்றத்தாழ்வுக்கு ஏது இடம்? அதனால் அன்பென்று கூறி முரசு கொட்டுகிறார்.அது எதை முழங்குகிறது? உங்களால் யோசிக்க முடிகிறதா? சிந்தித்துப் பாருங்களேன்! சரி, பாரதி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். மக்கள் அத்தனை பேரும் நிகர் என்று முரசு கொட்ட வேண்டுமாம். சமத்துவத்தை விழையும் பாரதியின் உள்ளம் மேலும்

அறிவை வளர்த்திட வேண்டும் – மக்கள்

அத்தனை பேருக்கும் ஒன்றாம்

சிறியாரை மேம்படச் செய்தால் – பின்பு

தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்

(முரசு, 28)

என்றும் கூறுகிறார்.

(மேம்பட = உயர்வு அடைய)

இப்படி வாழ்ந்தால் சமத்துவம் எப்படி வராமற் போகும் என்று கேட்கிறார். வாழ்க்கை அப்படி அமைந்தால் தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும் என்று கூறுகிறார். எந்த இடத்தில் வேற்றுமை ஏதுமின்றிச் சமத்துவம் நிலவுகிறதோ அங்குத் தெய்வம் வாழும்; அச்செயலை மேற்கொள்வாரைத் தெய்வம் வாழ்த்தும் என்கிறார்.

பொருளாதாரச் சமத்துவம் சோவியத் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதாரச் சமத்துவம், பெண்ணுரிமை ஆகியவற்றைப் பாரதி பெரிதும் பாராட்டினார். அதைப்போல நாமும் அந்நிலை பெற வேண்டுமென்ற ஏக்கத்தை வெளியிடுகிறார் பாரதி.

நாட்டு விடுதலையை மட்டுமன்றி, பொருளாதார ஏற்றத்தாழ்வினின்றும் விடுபட வேண்டும். எல்லோரும் எல்லாம் அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டவர் பாரதி. அதனால் உருஷ்யாவின் புரட்சி பெரும் மகிழ்ச்சியைத் தந்ததோடு எல்லா இடங்களிலும் அது பரவ வேண்டுமென்று ஆசைப்படுகிறார் பாரதி.

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த உலகை மாற்றியமைக்க வேண்டுமாயின் பொருளாதாரச் சமத்துவம் நிலவ வேண்டும். இல்லையென்றால் ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையே பெரிய இடைவெளி நேர்ந்து விடும் என்கிறார் பாரதி.

நவீன ஐரோப்பியச் சித்தாந்தம்

மனித ஜாதி முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி மானிடருக்குள்ளே இயற்கையாலும் மானிடர் தாமாகவே ஏற்படுத்திக் கொண்ட அர்த்தமில்லாத கட்டுப்பாடுகளாலும் எத்தனை வேறுபாடுகள் காணப்பட்டாலும், இந்த வேறுபாடுகளைக் கருதிச் சிலருக்கு அதிக சௌகரியங்களும், பலருக்குக் குறைந்த சௌகரியங்களும், சிலருக்கு மதிப்பும், பலருக்கு அவமதிப்பும் சிலருக்கு லாபங்களும் பலருக்கு நஷ்டங்களும் ஏற்படுத்தியிருப்பது தவறு என்பதும், ஒவ்வொருவரும் சகோதரரைப் போல் பரஸ்பர அன்புடனும் மரியாதையுடனும் வாழ்வதே நியாயம் என்பதும் நவீன ஐரோப்பியச் சித்தாந்தங்களிலே மிகவும் முக்கியமான சித்தாந்தமாகும்

என்று பாராட்டும் பாரதியின் உள்ளத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

பொருளாதார ஏற்றத்தாழ்வை அவமானத்துக் குரியதாகக் கருதுகிறார். அதனைத் தகர்த்த, சோஷலிசத்தை உருவாக்கியதற்காக உருஷ்யாவை அவர் பாராட்டுகிறார். செல்வத்தால் பெருகிய ஏற்றத்தாழ்வை அகற்ற வேண்டுமென்ற கொள்கை ஐரோப்பாவில் மும்முரமாகப் பரவுவதாக உணர்ந்து மகிழ்கிறார்.

ஏழைகளுக்கு நியாயம்

உலகத்துச் செல்வர் சகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கிட்டெடுத்துக் கொண்டு பெரும்பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா என்று கேட்டால் ‘அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழைகளாய் இருக்கிறார்கள். அதற்கு நாங்களா பொறுப்பு? நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா?’

என்று கேட்கிறார்கள். உலகம் மாறுகிறது. ஏழைகளுக்கு நியாயம் செய்ய வேண்டும் என்கிறார்.

பொருளாளிகள் அன்பையும் சமத்துவ நினைப்பையும் கைக்கொண்டால் உலகத்தில் அழிவுகள் நேராமல் காக்கலாம் என்று எச்சரிக்கிறார்.

பொருளாதாரச் சமத்துவம் கூட வன்முறையால் வருவதை எதிர்க்கிறார்.

ஆண், பெண் சமத்துவம் ஆண், பெண் சமத்துவத்தைப் பற்றிப் பல்வேறு இடங்களில் மிகவும் வற்புறுத்திக் கூறுகிறார் பாரதி.

‘பெண்ணை அடிமை என்று கருதாதே. ஆத்மாவும் சக்தியும் ஒன்று; ஆணும் பெண்ணும் சமம்’ என்பார். இன்னொரு இடத்தில் ‘ஆண்களும் பெண்களும் ஸமானமான ஆத்ம இயல்பும் ஆத்ம குணங்களும் உடையோராதலால் பெண்களை எவ்வகையிலும் இழிந்தவராகக் கருதுதல் பிழை’ என்று குறிப்பிடுகிறார்.

இதை உணர்ந்து செயல்படாத மக்களை நோக்கி,

‘ஆணுக்கு ஆண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயத்தைக் காட்டிலும் ஆணுக்குப் பெண் அடிமைப்பட்டிருக்கும் அநியாயம் மிகப்பெரிது’ (பாரதியார் கட்டுரைகள்: 113) என்கிறார். இதற்கென்ன காரணம்? பாரதியே விளக்குகிறார்.

பலம் குறைந்த உயிரைப் பலம் மிகுந்த உயிர் துன்பப்படுத்தலாம் என்ற விதி எல்லா உயிர்களிடத்தும் காணப்படுகிறது. மனிதர்கள் அதை எல்லையில்லாமல் செய்கிறார்கள் என்கிறார்.

மேலும் சமத்துவத்தை வேண்டிப் பெண்களைத் தர்மயுத்தம் தொடங்கும்படிக் கூறுகிறார். “அடிமைப்பட்டு வாழமாட்டோம்; சமத்துவமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம் என்று வெளிப்படையாகத் தெளிவாகச் சொல்ல வேண்டும். எல்லா வகையிலும் உனக்கு சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமென்றால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன். எனக்கு வேண்டியதை பண்ணித் தின்று கொண்டிருப்பேன்” (பாரதியார் கட்டுரைகள் : பக்.258) என்று அறப்போராட்டத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.

ஆண், பெண் சமத்துவத்தை மிகவும் வலியுறுத்த என்ன காரணம்?

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில்

ஓங்கி வையம் தழைக்கும்

(புதுமைப்பெண், 3)

(நிகர் = சமம், ஓங்கி = விளங்கி)

என்கிறார்.

ஆண், பெண் சமத்துவம் பற்றி மிளகாய்ப்பழச் சாமியார் என்ற ஒரு கற்பனைப்பாத்திரம் (பாரதியாரின் கதையில் வருவது) கூறுவதுபோல பாரதி கூறுவதும் நம் கவனத்தை ஈர்க்கிறது.

ருஷியாவிலே கொடுங்கோல் சிதறிப் போய் விட்டதாம். ஐரோப்பாவிலே ஏழைகளுக்கும் பெண்களுக்கும் நியாயம் வேண்டுமென்று கத்துகிறார்களாம்

உலக முழுமைக்கும் நான் சொல்லுகிறேன். ஆண், பெண்ணுக்கு நடத்தும் அநியாயம் சொல்லுக்கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை; அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை. பெண்ணுக்கு ஆண் நியாயம் செய்வது அதையெல்லாம் விட முக்கியமென்று நான் சொல்கிறேன்.

பூமண்டலத்தில் துக்கம் ஆரம்பமாகிறது. ஆணும் பெண்ணும் சமானம். பெண் சக்தி – பெண்ணுக்கு ஆண் தலைகுனிய வேண்டும். பெண்ணை ஆண்அடித்து நசுக்கக் கூடாது. இந்த நியாயத்தை உலகத்தில் நிறுத்துவதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்’.

‘ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலோரும் சமானமாகவே கருதப்படுவார்கள். உருஷ்யச் (நாட்டு) சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரிகத்தின் கருத்தை அனுசரித்தல் மிக மிக மிக மிக அவசரம்’.

அவசரம் என்பதற்கு முன் எத்தனை மிக! பாரதி ஏன் இப்படிக் கூறுகிறார்? எண்ணிப் பாருங்களேன்!

உலகநோக்கில் சகோதரத்துவம்

உலகிலுள்ள அனைவரையும் சகோதரர்களாக எண்ணி அவர்தம் மகிழ்ச்சியில் மகிழ்ந்து, துன்பத்தில் துயரமுற்று, அவர்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் நேயம் சகோதரத்துவம் எனலாம்.

மனிதர்களாகப் பிறந்தவர் யாராயினும் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை. ஆணாயினும் பெண்ணாயினும் வேறுபாடில்லை. எந்நாட்டைச் சார்ந்தவராயினும், எம்மதத்தைச் சார்ந்தவராயினும், எச்சாதியைச் சார்ந்தவராயினும், எவ்வினத்தைச் சார்ந்தவராயினும் மானிடர் எல்லோரும் சமமே. பாரதி எல்லா விஷயங்களிலும் இத்தகைய சமத்துவத்தையே விரும்புகிறார். சமத்துவம் எங்கு நிலவும்? சுதந்திரம் உள்ள இடத்தில்தானே சமத்துவம் வேர்கொள்ள முடியும்? அடிமைக்கு ஏது சுதந்திரம்? சுதந்திரமில்லையென்றால் எப்படித் தானாகச் செயலாற்ற முடியும்? தானாகச் செயலாற்ற முடியாதபோது கட்டுண்ட நிலைதானே? அதனால் முதலில் விடுதலை. பின்னர் சமத்துவம். சமத்துவ உணர்வு வந்துவிட்டால் வேற்றுமைகள் மறைந்துவிடும். சகோதரத்துவம் தானாக மலர்ந்துவிடும் என்கிறார்.

இறைவன் எங்குமுளன் ‘தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவன் கண்ணுடையவன்’ என்பது முன்னோர் கொள்கை. ‘உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை – எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்’.

இதிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்கிறோம்? ஒவ்வொரு மனிதனுடைய அறிவிலும் தெய்வம் மறைந்து நிற்கிறது என்பதைத்தானே? இதைப்பற்றி இராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்கிறார்?

‘ஈசன் ஒளி; எல்லாப் பொருள்களிலும் திரைக்குள் மறைந்ததுபோல் நிற்கும் ஒளியே தெய்வம்’ என்கிறார். ‘தெய்வம் எது? ஜகத்தின் உயிர்தான் தெய்வம்!’ அப்படியாயின் எல்லாப் பொருள்களிலும் இருப்பது தெய்வந்தானே?

எங்கும் நிறைந்திருப்பது ஒரே சக்தி

அதனால் எல்லா மதங்களும் உண்மைதான்;ஒரு மதமும் முழு உண்மையன்று. மதப்பிரிவுகளைக் கருதி மனிதர் பிரிந்துவிடக் கூடாது. எல்லா மதங்களும் ஒரே தெய்வத்தைத்தான் வணங்குகிறார்கள். பெயர் தான் வேறு வேறு. பல்வேறு இடங்களிலிருந்து ஓடிவரும் நதிகள் இறுதியில் சங்கமம் ஆவது கடலில்தான். அதைப்போலவே பல்வேறு மதங்கள். வேறு வேறு கடவுள் பெயரைக் கூறினாலும் இறுதியில் ஒரு சக்தியையே அது குறிக்கிறது. அப்படியிருக்க மதங்களுக்குள் ஏன் வீண்போராட்டமும் பிணக்கும்? இதில் உயர்வு தாழ்வுக்கு ஏது இடம்? என்னுள்ளும் உன்னுள்ளும் பிறருள்ளும் இருப்பது ஒரே சக்திதான்; இறைவன்தான். அவனை இயேசு என்றாலும் அல்லா என்றாலும் ஒன்றுதான். பின் ஏன் இந்த மயக்கம்?

பாரதியின் அரவணைக்கும் உள்ளம் நமக்குத் தொழில் கவிதை என்று முழங்கிய பாரதி, கவிதைத் திறத்தால் என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறார்? பாட்டுத் திறத்தால் வையத்தைப் பாலித்திட வேண்டுமாம். நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் களையப்பட வேண்டுமென்று விருப்பமாம். எப்படி அவர் உள்ளம் விழைகிறது பார்த்தீர்களா? மானிடச் சாதியை ஒன்றெனக் கொண்ட பாரதி உள்ளம் பரந்த உள்ளம். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் உள்ளம் அது. அதனால்தான்

கடமையாவன தன்னைக் கட்டுதல்

(விநாயகர் நான்மணிமாலை-8)

என்று தனிமனித நிலையைக் கூறிய பாரதி அடுத்து

பிறர்துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்

(விநாயகர் நான்மணிமாலை-8)

என்று கூறுவதோடு அமையாது

அல்லா! யெஹோவா……. என்று உலகில் வேறு வேறு பெயர்களில் போற்றும் இறைவன் ஒருவரையே போற்ற வேண்டும் என்கிறார். தெய்வம் ஒன்று என்றால் மக்கள் அனைவரும் ஒன்றுதானே? சமம்தானே? சகோதரர்கள்தானே? சிந்தித்துப் பாருங்கள்!

பாரதியின் வேண்டுகோள் விநாயகர் நான்மணிமாலையில் பாரதி எதை வேண்டுகிறார்?

பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்

கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்

மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,

விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு மரங்கள்

யாவும் என்வினையால் இடும்பை தீர்ந்தே

இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும் தேவதேவா!

(விநாயகர் நான்மணிமாலை – 32)

(என்வினையால் = என் செயலால், இடும்பை = துன்பம், இணங்கி = ஒற்றுமையாய்)

இப்படிப்பட்ட நெஞ்சம்

காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்

(ஜெயபேரிகை, 3)

என்று பிரகடனப்படுத்துவதில் என்ன வியப்பு?

காயிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே!

கனியிலே இனிப்பதென்ன கண்ணபெருமானே!

(கண்ணபெருமானே, 1)

என்று வியந்து கேட்பவர்

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா! – நின்னைத்

தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்தலாலா

(நந்தலாலா,-4)

(தீண்டும் = தொடும்)

என்று தன்னைமறந்து மெய்சிலிர்க்கும் பாரதி, ஆத்திசூடியில் ‘பரம்பொருள் ஒன்றே’ என உறுதிபடக் கூறுகிறார். வேறு என்னதான் கேட்கிறார்?

பெண்விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்; வானம் இங்கு தென்படவேண்டும்

(மனதில் உறுதி வேண்டும், 2)

(பயனுற = பயன் அடைய, வானம் = சொர்க்கம்)

என்பார். எப்போதும் அவர் நினைவெல்லாம், பேச்செல்லாம், செயலெல்லாம் மக்கள், மக்களே; அதுமட்டுமா? எங்கும் தெய்வம். எல்லாம் தெய்வம்.

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை,

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்

பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்கு

பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்

வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்

மேலுமிங்கு பலபலவாம் தோற்றங் கொண்டே

இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்

எழுதுகோல் தெய்வமிந்த எழுத்து தெய்வம்

(பாரதி அறுபத்தாறு – 18)

இப்படிக் கூறுகிற மனம் தன் நாட்டைப் பற்றி மட்டுமே தன் இன மக்களைப் பற்றி மட்டுமே நினைக்குமா? எண்ணிப் பாருங்கள்.

சகோதரத்துவம் மலர்ந்தால் பாருக்குள்ளே சமத்தன்மை – தொடர்

பற்றும் சகோதரத் தன்மை

யாருக்கும் தீமை செய்யாது – புவி

யெங்கும் விடுதலை செய்யும்

(முரசு – 30)

என்று சகோதரத்துவத்தின் மேன்மையை அழுத்தமாகக் கூறுகிறார்.

நாடு, மொழி, இனம் என்ற வேறுபாடுகளையெல்லாம் கடந்து மனிதகுலம் முழுமையும் மட்டுமன்றி அசையும் அசையாப் பொருள்கள் அனைத்தையும் அரவணைக்கத் துடிக்கிறார். சகோதரத்துவம் என்னும் உணர்வின் மொத்த உருவமாகிறார். இவருடைய உலகளாவிய நோக்கு வியத்தற்குரியது.

கம்பருக்குப்பின் அதாவது ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்குப்பின் ஒரு கவிஞன் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறான் என்று பாரதியைப் பற்றி ஒரு அறிஞர் பாராட்டியிருப்பது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.

பாரதி உலகளாவிய நோக்குடைய மகாகவிகளில் ஒருவர்; அவர் தமிழ்நாட்டில் பிறந்தது தமிழும் தமிழரும் தமிழ்நாடும் செய்த தவப்பயன் எனப் பெருமிதம் கொள்ளலாம்.

தொகுப்புரை

பள்ளத்தில் விழுந்திருக்கும் குருடரெல்லாம்

விழி பெற்றுப் பதவி கொள்ளப்

(தமிழ் -4)

பாடியவர் பாரதி.

அவரைப் பலரும் பல கோணங்களில் பார்ப்பர். அவர் ஒரு விடுதலைக்கவி. சமூகச் சீர்திருத்தவாதி, புரட்சிக்கவி, தேசியக்கவி, பக்திக்கவி என்றெல்லாம் பாராட்டுவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாகப் பாரதி உலகக் கவி என்பதும் அவருடைய உலகளாவிய நோக்கு எத்தன்மையது என்பதையும் இப்பாடத்தில் படித்தீர்கள்.

விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளைத் தம் உயிரைவிட மேலாகப் போற்றியவர் பாரதியார். நாட்டுச் சுதந்திரம், பெண்விடுதலை, பொருளாதார விடுதலை ஆகியவற்றை உலகளாவிய நோக்கில் பார்த்த பாரதியின் சிந்தனைகளை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். சமத்துவம் என்பது என்ன என்பதையும் மானுடர் தமக்குள் மாறுபாடில்லை; மதங்களுக்குள் ஏற்றத்தாழ்வில்லை; ஆண், பெண்ணுக்குள் உயர்வு தாழ்வில்லை; யாரும் யாருக்கும் அடிமையில்லை என்பதையும் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

எல்லா மனிதருக்குள்ளும் எல்லாப் பொருள்களுக்குள்ளும் இருப்பது தெய்வம். இதை உணர்ந்தபின், எல்லோரும் சமம் என்று தெளிவு பெறுவீர்கள். அத்தெளிவின் பயனாக உலகத்து மக்களையெல்லாம் சகோதரர் என்று பாவிக்கும் எண்ணமும் அவர்தம் மகிழ்ச்சியில், துன்பத்தில் பங்கு கொள்ளும் சகோதரத்துவமும் தோன்றும். பாரதி, தம் வாழ்நாள் முழுவதும்

இதற்காகவே வாழ்ந்ததும், அந்தக் கோட்பாடு உடைய உள்நாட்டு வெளிநாட்டுத் தலைவர்களைப் போற்றியதும் தெளிவாகப் புலப்பட்டிருக்கும். பாரதியின் உலகளாவிய நோக்கு என்பது உலகத்தார் அனைவர் மீதும் செலுத்தும் நேயமாகும். எனினும் மனிதநேயம் என்ற வட்டத்தில் மட்டுமே பாரதியை நிறுத்த இயலாது. ஏனென்றால் அவர் அசையும் அசையாப் பொருள்கள் அனைத்தின் மீதும் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தார்.

அளப்பரிய அந்த அன்பு அசையும் பொருள்களையும் அசையாப் பொருள்களையும் அரவணைத்து நின்றது. பாரதியின் இந்த உலகளாவிய நோக்கு அற்புதமானது. நினைக்க நினைக்க வியப்பைத் தருவது!

பாடம் - 4

பாரதியாரின் படைப்புகளில் அறிவியல் நோக்கு

பாட முன்னுரை

உலகில் இருப்பவற்றையும், இயற்கை நியதிகளையும் கவனித்தும் சோதித்தும், நிரூபித்து வகைப்படுத்தியும் காரண காரியத்தோடு பார்க்க வேண்டும் என்று நினைப்பது அறிவியல் நோக்கு.

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அதன் அணுகுமுறை மிகவும் முக்கியமானது. பழையன கழிதலும் புதியன புகுதலும் தவிர்க்க முடியாதவை. இன்றைய உலகொடு இந்திய சமுதாயம் இணைந்து முன்னேற வேண்டுமென்றால் புதியன புகுத்தப்பட வேண்டும். பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் வேளாண்மையே முக்கியமான தொழிலாக இருந்தது. அதே சமயம், மேலை நாடுகள் தொழில் யுகத்தில் இந்தியாவை விட ‘ஒரு யுகம்’ முன்னின்றன. இந்திய நாட்டு மொழி, கலை, பண்பாடு அனைத்தும் அவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருந்தன. பழையன பாராட்டுவோரும் புதியன போற்றுவோரும் காணப்பட்டனர். இவற்றுள் எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது? தெளிவற்ற நிலையில் இருந்த தமிழ் மக்களுக்கு,

. . . .நன்மையும் அறிவும்

எத்திசைத் தெனினும், யாவரே காட்டினும்

மற்றவை தழுவி வாழ்வீ ராயின்

அச்சமொன்றில்லை . . . . . . .

(தமிழச் சாதி, அடி: 119-122)

(தழுவி = ஏற்றுக் கொண்டு)

என்று பாரதியார் வழிகாட்டி அறிவுரை கூறுகிறார்

பழையன எல்லாம் சிறந்தவை என்று கூற முடியாது. அவையே எல்லாமாகி விடுவதில்லை. பழையன பயனற்றுப் போகும் போது அவற்றைத் தயங்காது நீக்கி விட வேண்டும். அதைப்போல், புது உலகில் மலரும் நல்லனவற்றை ஏற்றுக் கொள்ள மனக் கதவுகள் திறந்திருக்க வேண்டும். மனத்தில் சரியென்று பட்ட வழியைத் தயங்காது ஏற்பது அறிவியல் உலகின் பண்பாடு. அதற்கு வழிகாட்டுவது அறிவியல் பார்வை. பாரதியிடம் அப்பார்வை காணப்பட்டது.

‘பாரதியின் பாடல்களின்கற்பனை வளம் இருக்கும் அளவிற்கு அல்லது அதற்கு மேலும் கருத்து வளம் காணப்படுகிறது. அவரிடம் தமிழையும் நிலையான தத்துவத்தையும் காண்கிறோம். பாரதியின் இந்தத் தெளிவிற்குத் துணை நின்றது அவரது அறிவியல் பார்வை’

என்பார் அறிஞர் வா.செ. குழந்தைசாமி,

அறிவியல் துறையின் பிரிவுகளான புவியியல், வானவியல், உயிரியல், பொருளறிவியல், பொறியியல், வேளாண்மை, உடற்கல்வி ஆகியன பற்றியும், அறிவியல் பாடங்கள் கற்பிக்கும் அணுகு முறை பற்றியும் பாரதி கூறியதை அவர் பாடல்களிலும் கட்டுரைகளிலும் பார்க்க முடிகிறது.குறிப்பாகத் தேசியக் கல்வி என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரையில் இவற்றை விளக்கிச் செல்கிறார். அவை பற்றிய விவரங்களை இப்பாடத்தில் பார்க்கலாம்.

புவியியல் (Geography)

பூமியின் நிலப்பரப்பு, கடல், தட்பவெப்பம் முதலியன பற்றி விவரிக்கும் பாடம் புவியியல் என அழைக்கப்படும்.

தட்பவெப்பம் தட்பவெப்பம் என்பது ஓர் இடத்திலுள்ள குளிர்ச்சியையும் வெம்மையையும் குறிப்பது. இந்தியா பல மாநிலங்களைக் கொண்டது. ஒரு மாநிலத்திலுள்ள தட்பவெப்பம் மட்டும் அறிந்திருந்தால் போதாது; எல்லா மாநிலங்களிலும் உள்ள தட்பவெப்ப நிலையையும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்கிறார் பாரதியார். அப்போது தான் ஒரு மாணவன் தன் தாய்த்திரு நாட்டின் முழு விவரமும் அறிய முடியும் என்பது அவரது எண்ணம். அத்துடன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களிலுள்ள தட்பவெப்ப நிலையை அறியும் உலக அறிவும் பெற முடியும் என்பது அவருடைய முடிவு.

காற்று உலகில் வான வெளியெங்கும் நிறைந்திருப்பதும், உயிரினங்கள் உயிர் வாழச் சுவாசிப்பதும், உணரக்கூடியதுமான ஒன்றே காற்று. இயற்கையில் வீசும் காற்று, உடம்புக்கு உற்சாகமும் மனத்துக்கு மகிழ்ச்சியும் தரும். மெல்லிய தென்றல் காற்றாக இயங்கி வாழ்க்கைக்கு இன்பம் தருவதும் உண்டு; அதே காற்று, அனைத்து உயிர்களுக்கும் துன்பம் செய்யும் புயலாக உருவெடுத்து மக்களை அழிப்பதும் உண்டு. இந்தக் காற்றில் உயிர் வாழ உதவும் பிராணவாயு கலந்துள்ளது. பிராணவாயு இல்லாவிடில் உயிர்கள் இறந்துவிடும். அதுவே உடலை இயக்கும் ஆற்றல். அதன் ஆற்றலைப் பாருங்கள்.

காற்றே வா,

இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த

ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு

(வசன கவிதை. காற்று – 6)

என்று அதன் செயலைப் பாரதியார் காட்டுகிறார். மரம், செடி, கொடி முதலியன ஒளிச் சேர்க்கையின் (photosynthesis) போது (காற்றிலுள்ள கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு சூரிய ஒளி, பச்சையம் (chlorophyll) இவற்றின் உதவியால்) உணவுப் பொருளைத் தயாரிக்கும். இந்தச் செயல் நடைபெறும் போது பிராணவாயுவை வெளிவிடும். காற்றானது இலைகளையும், நீரின் அலைகளையும் உராய்ந்து வருவதால் இலைகள் வெளியிடும் புத்தம் புது பிராணவாயு கலந்த குளிர்ந்த காற்று வீசும் என்று பாரதி பாடியதாகக் கொள்ளலாம். தமிழ்நாடு வெம்மை மிகுந்தது. ஆகையால், குளிர்ந்த காற்றை விரும்பிய பாரதி இவ்வாறு பாடினார் போலும். காற்றின் பல்வேறு நிலைகளை, செயல்முறைகளை விரித்துக் கூறுகின்றார் பாரதி.

பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது.

நீரிலே சூடேற்றினால் ‘வாயு’ வாகி விடுகிறது.

தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகி விடுகிறது.

அத்திரவத்திலே சூடேற்றினால் ‘வாயு’ வாகின்றது

(வசன கவிதை, காற்று – 12)

இந்தப் பாடல் திடப்பொருளைச் சூடேற்றினால் அது திரவமாகவும், வாயுவாகவும் மாறுவதைத் தெளிவாகக் காட்டுகிறது.

புயல்

பெரும்புயல் தோன்றக் காரணம் காற்று. காற்றுப் புயலாக மாறும் நிலையை,

காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னேற்றி,

நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி, நீரைத்

தூளாக்கித் தூளை நீராக்கிச்சண்டமாருதம் செய்கின்றான்

(வசன கவிதை, காற்று – 2)

(சூறாவளி = மிகுந்த வேகத்துடன் வீசும் காற்று, மின் = மின்னல், சண்டமாருதம் = பெருங்காற்று) என்ற பாடல் விளக்குகிறது.

வெம்மையும் காற்றும்

வெப்பத்தால் காற்றின் எடை குறையும். அப்போது வெப்பம் குறைந்த இடத்தை நோக்கிக் காற்று செல்லும் என்ற உண்மையை அறிந்தவர் பாரதி. வெம்மை மிகுந்த பிரதேசங்களில் இருந்து வெம்மை குன்றிய பிரதேசங்களுக்குக் காற்று ஓடி வருகிறது. அவ்வாறு வரும்போது, அது மேகங்களை ஓட்டிக் கொண்டு வருகிறது. அதனால் மழை பெய்கிறது. மழை பெய்யக் கடலும் காற்றுமே காரணம் என்ற உண்மையை உணர்த்துகிறார். (வசன கவிதை, கடல் – 2).

கடல் உப்புக் கரிக்கும் நீர் நிறைந்த அலைகள் எழும் பெரும் பரப்பு கடல். உலகில் மூன்று பாகம் கடலாக உள்ளது. காற்றைப் பரப்புவது கடலென்று காட்டுகிறார் பாரதி. புவிஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் கடல் நீர் வெளியில் சிதறவில்லை என்ற உண்மையைப் பாரதியார் உணர்த்துகிறார்.

கடலின் மேற்பரப்புச் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலே செல்கிறது. அது குளிர்ச்சி அடையும் போது மழையாகப் பெய்கிறது. மழை இல்லாவிடில் உலகில் உயிர் வாழ இயலாது. ஆகையால், காற்றைப் பார்த்து, ‘உலகிலுள்ள உயிர்கள் வாழ நீர் கொடுக்கும் கடலில் இருந்து நீரைச் சுமந்து கொண்டு வா. எங்கள் விருப்பம் எல்லாம் நிறைவேறி உலகம் செழிப்புற்று விளங்க இன்பம் தரும் மழையைப் பொழியச் செய்’ என்கிறார் பாரதி. உயிர்கள் வாழ நீர் வழங்கும் மழையை ‘உயிர் மழை’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

காற்றே, உயிர்க் கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்

மழை, கொண்டு வா . . . .

எங்கள் தாபமெல்லாம் தீர்ந்து உலகம் தழைக்குமாறு

இன்ப மழை பெய்தல் வேண்டும்

(வசன கவிதை, கடல் – 2)

(தாபம் = விருப்பம், தீர்ந்து = நிறைவேறி, தழைக்கும் = செழிக்கும்)

வானவியல் (Astronomy)

‘வானவியல்’ என்பது விண்ணில் உள்ள விண்மீன்கள், கோள்கள் முதலியவற்றைப் பற்றிக் குறிப்பது ஆகும். பாரதியார், ‘பூமி சாஸ்திரம்’ என்ற கட்டுரையில் வானவியலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஞாயிறு, நிலா, காற்று இவை வானிலும் ஆகாயத்திலும் விளங்குபவை. இவை பற்றிய பாரதியின் எண்ணங்களைப் பார்ப்போமா?

‘ஸுர்ய மண்டலத்தைப் பற்றியும், அதைச் சூழ்ந்தோடும் கிரகங்களைப் பற்றியும், நக்ஷத்திரங்களைப் பற்றியும், இவற்றின் சலனங்களைப் பற்றியும் பிள்ளைகளுக்கு இயன்றவரை தக்க ஞானம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’

என்று தம் கட்டுரையில் (பக்: 382) வலியுறுத்துகிறார்.

பாரதியார் வாழ்ந்த காலத்திற்குப் பிறகு வானவியல் வெகுவாக முன்னேறி விட்டது. விண்ணில் உள்ள கோள்கள் சூரியனைச் சுற்றியே இயங்குகின்றன. ஆகவே, அது ‘சூரிய குடும்பம்’ என்று வழங்கப்படுகிறது. சூரியன் மிகவும் வெப்பமாக இருப்பதால் மனிதன் அங்குச் செல்ல இயலவில்லை. சூரியனிடமிருந்து ஒளிபெற்றுத் தண்ணொளி வீசும் நிலவில் 1969-இல் நீல் ஆம்ஸ்டிராங் என்னும் அமெரிக்க விண்வெளி வீரர் முதன் முதலாகக் காலடி எடுத்து வைத்தார். இக்காலத்து, மனிதர்கள் விண்வெளியில் பறக்கும் அளவு வானவியல் துறை முன்னேறி விட்டது. செவ்வாய்க் கிரகம் பற்றி ஆராய்ந்து அறியும் நோக்கத்தில் விண்வெளிக் கலன்கள் அனுப்பப்படுகின்றன. ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த சாதனையாளர்கள் சாதாரண மனிதர்கள்தாம். அவர்கள் தம்முடைய கடின உழைப்பால் சாதனை படைக்கின்றனர். ஆகையால் அறிவியல் கலையின் அனைத்துப் பிரிவையும் பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் சேர்த்து உரிய முறையில் கற்பிக்க வேண்டும். முயற்சியும், உழைப்பும் கொண்ட மாணவர்கள் அந்த அறிவைப் பெற்றுப் பல புதிய உண்மைகளைக் கண்டறிய முயல்வர் என்று பாரதியார் கருதுகிறார். ஓய்வின்றி உழைத்தால் ஐரோப்பாக் கண்டம் போல் அறிவியல் துறையில் இந்தியா வளர்ந்து விடும் என்று பாரதியார் நம்பினார் எனக் கொள்ளலாம்.

வானம் பூமிக்கு மேல் தெரியும் கரிய நீல வெளி வானம் எனப்படும். நிலவில் மனிதன் காலடி வைத்தபோது பாரதி உயிரோடு இல்லை. ஆனால் அதற்கு முன்பே வானை அளந்து அதைப் பற்றி ஆராய வேண்டுமென்று பாடியிருக்கிறார். வான சாஸ்திரத்தில் சிறந்த அறிஞர்கள் சந்திர குப்த மன்னன் சபையில் இருந்ததாக வரலாறு காட்டுகிறது. ஆரியபட்டர் என்பவர் வானசாஸ்திரத்தில் வல்லவர். அவர்களோடு அந்தத் துறையின் வளர்ச்சி நின்று விடக் கூடாது, மேலும் தொடர வேண்டும் என்பது பாரதியின் விருப்பம். இந்த விருப்பத்தை,

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம் கற்போம்

வானை யளப்போம் கடல்மீனை யளப்போம்

(பாரத தேசம் – 11)

என்ற பாடலின் மூலம் வெளிப்படுத்துகிறார். அறிவியல் உண்மை மட்டும் தெரிந்தால் போதாது. அதைச் செயல்படுத்தும் திறமையும் தெரிந்திருக்க வேண்டும். அதன் உதவியால் வானை அளக்கலாம், கடல் மீனின் இயல்பை அறியலாம் என்று விளக்குகிறார்.

கோள்கள்

சூரியனைப் போன்ற பெரு விண்மீனின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு அதைச் சுற்றி வரும் விண்வெளிப் பொருள்கள் கோள்கள் ஆகும்.

வானில் உள்ள விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள் ஆகியவை எண்ணிலடங்காதன; அந்த அண்டங்கள் மிகுந்த வேகத்தில் இயங்கக் கூடியன; பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளன; ஒன்றிற்கொன்று மிகுந்த இடைவெளியில் இருக்கின்றன என்பன போன்ற அறிவியல் கருத்துகளைச் சொல்லோவியமாகத் தருகிறார் பாரதியார்.

விண்டுரைக்க, அறிய, அரியதாய்

விரிந்த வான வெளியென நின்றனை.

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை

அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை

மண்டலத்தை அணுவணு வாக்கினால்

வருவ தெத்தனை அத்தனை யோசனை,

கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை

(மகாசக்தி வாழ்த்து – 1)

(அண்ட கோடிகள் = விண்மீன்கள், கோள்கள், துணைக்கோள்கள் முதலிய அனைத்தையும் உள்ளடக்கி எல்லை காணமுடியாத வகையில் பரந்து விரிந்திருக்கும் பெருவெளி. யோசனை = 9 மைல் தூரம், சமைத்தனை = படைத்தனை)

இந்தப் பாடல் அண்டங்களின் இயக்கத்திற்குக் காரணமான ஆற்றலைப் பற்றியும் அவற்றின் இயக்கத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறது.

இடைவிடா இயக்கம்

மேலும், கோள்கள் அனைத்தும் இயங்குவதால் அவை உயிருடையவை. அவை இடைவிடாமல் இயங்குகின்றன என்பதை,

பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது! அகில முழுதும் சுழலுகிறது!

சந்திரன் சுழல்கின்றது, ஞாயிறு சுழல்கின்றது

. . . வானத்து மீன்களெல்லாம் ஓயாது சுழன்று

கொண்டே தான் இருக்கின்றன!

(வசன கவிதை, காற்று – 13)

(விசை = வேகம், அகிலம் = உலகம்)

என்ற பாடல் வாயிலாக வெளியிடுகிறார். சுழல வேண்டுமென்றால் இயக்கமாகிய ஆற்றல் தேவை. இயங்குகிறது என்றால் அவை உயிருடையன என்று பொருள் ஆகிறது. உயிருள்ளவை என்று கருதப்படும் மனிதன், மரம், செடி, கொடி, விலங்குகள் மட்டுமல்லாமல் இந்த உலகிலுள்ள கோள்களையும் உயிருடையதாய்ப் பார்க்கிறார் பாரதி. கோள்களின் இயக்கம் எதை உணர்த்துகிறது? விண்ணிலுள்ள கோள்கள் கால நேரம் தவறாமல் தம் கடமைகளைச் செய்கின்றன. அவை முறையாக இயங்காவிடில் உலகில் இயக்கமே நின்றுவிடும். மனிதனும் அதுபோல் இமைப்பொழுதும் சோராமல் காலம் தவறாமல் உழைக்க வேண்டும் என்பதை அவை உணர்த்துகின்றன.

ஞாயிறு பூமிக்கு இன்றியமையாத வெப்பத்தையும், ஒளியையும் கொடுத்து உதவும் விண்மீன் ஞாயிறு (சூரியன்) ஆகும்.

பாரதியார் விநாயகரையும், பராசக்தியையும் அனைத்துமாய்ப் பார்த்துப் பரவசமடைந்தது போல் ஞாயிற்றையும் பார்த்து,

நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி

மின்னல் இரத்தினம் கனல் தீக்கொழுந்து

உயிர் தருகின்றாய்! உடல் தருகின்றாய்,

வளர்க்கின்றாய் மாய்க்கின்றாய்

(வசன கவிதை, ஞாயிறு – 2)

என்று பாடி, அது எல்லாவற்றிலும் கலந்திருப்பதாகக் காட்டுகிறார். இது மாணிக்கவாசகர் பாடிய,

வான்ஆகி மண்ஆகி வளிஆகி ஒளிஆகி

ஊன்ஆகி உயிர்ஆகி உண்மையும்ஆய் இன்மையும்ஆய்

(திருவாசகம் , அறிவுறுத்தல் – 4)

என்ற பாடலை நினைவூட்டுவதைக் காணலாம். ஞாயிறு, கடலில், மின்னலில், இரத்தினத்தின் ஒளியில், நெருப்பில், தீக் கொழுந்தில், இன்னும் பிறவற்றில் நிறைந்து இருப்பதாகப் பாரதியார் பாடுகிறார். ஒளிவிடும் அனைத்திலும் இருப்பது ஞாயிறே என்பது அவர் எண்ணம். அது உடலையும், உயிரையும் வளர்க்கிறது; நீர் தருகிறது; காற்றாக வீசுகிறது – என அது எல்லாமாக விளங்குவதாகக் காட்டுகிறார். இதில் வானவியல் கருத்துகள் பொதிந்துள்ளன.

ஒரு கணத்தில் பத்தாயிரம் மைல் வேகத்தில் இயங்கும் ஆற்றல் உடைய ஞாயிற்றின் இயல்பை,

காத மாயிரம் ஓர் கணத்துள்ளே

கடுகியோடும் கதிரினம்

(சூரிய தரிசனம் – 2)

(காதம் = 10 மைல் தூரம், கணம் = மிகக் குறைந்த காலம், கடுகி = விரைந்து)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.

பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி முதலிய கோள்கள் ஞாயிற்றில் இருந்து ஒளிபெற்று ஒளிரும் என்ற அறிவியல் உண்மையை வசனகவிதையில் (ஞாயிறு – 10) தெரிவிக்கிறார்.

கோள்களை அவர் ‘வீடு’ என்று சொல்கிறார். பூலோகம், மண்ணுலகில் உள்ள உயிர்களுக்கு வீடாக விளங்குகிறது. கோள்கள் எல்லாம் தீப்பந்தத்திலிருந்து பொறிகள் வீசுவது போல, ஞாயிற்றினிலிருந்து வெடித்து வெளிப்பட்டன என்று குறிப்பிடுகிறார். கோள்கள் மட்டுமா சூரியனிடமிருந்து ஒளி பெறுகின்றன? மனிதனும் ஒளி பெறுகிறான். மனிதனுக்கு இருப்பது ஊனக்கண். ஒளியின் உதவியின்றி அவனால் எதையும் பார்க்க இயலாது.

ஞாயிற்றின் வித்தை

ஞாயிற்றின் வெப்பத்தால் கடலின் மேற்பரப்புச் சூடாகிறது, பின்பு ஆவியாகி மேலே செல்கிறது. மேலே சென்ற நீராவி குளிர்ச்சியடைந்து மீண்டும் மழையாகப் பெய்கிறது. மழைக்குக் காரணம் ஞாயிறு என்ற அறிவியல் உண்மையை பாரதி,

ஞாயிறு வித்தை காட்டுகிறான்

கடல் நீரைக் காற்றாக்கி மேலே கொண்டு போகிறான்

அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகிறான்

மழை இனிமையுறப் பெய்கின்றது

(வசன கவிதை – 11)

(ஞாயிறு = சூரியன்)

என்று காட்டுகிறார்.

ஞாயிறு இருளை நீக்கும் நிலையைப் பாரதியார்,

ஞாயிறே, இருளை என்ன செய்து விட்டாய்?

ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கி விட்டாயா?

இருள் நினக்குப் பகையா?

இருள் நின் உணவுப் பொருளா?

நீங்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளா?

முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா?

(வசன கவிதை, ஞாயிறு – 5)

(முன்னும் பின்னும் = பகலும் இரவும்)

என்று பாடுகிறார். இப்பாடலில் ஞாயிற்றையும் இரவையும் பார்த்து நீவிர் ஒரு தாயின் குழந்தைகளா? பகலிலும் இரவிலுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் அன்னை ஆணையிட்டிருக்கிறாளா? என்று அவர் பாடியிருப்பது சுவையாக உள்ளது.

நிலவு நிலவு ஞாயிற்றினிடமிருந்து ஒளி பெற்று இரவில் தண்ணொளியாக வீசுகிறது. அறிவியல் ஆய்வு வளர்ச்சியினால் மனிதன் நிலவை அடைந்தான். முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சன் இதை ‘மனித குலத்தின் ராட்சச முன்னேற்றம்’ (Giant leap of Mankind) என்று கூறினார். பாரதியும் நிலவின் தன்மையை அறிவதில் ஆர்வம் கொண்டு, சந்திர மண்டலத்தின் இயல்பை அறிய முற்படவேண்டும் என்ற கருத்தில்,

‘சந்திரமண் டலத்தியல் கண்டு தெளிவோம்’

உயிரியல் (Biology)

இது உயிர் வாழ்வன பற்றிய அறிவியல் ஆகும். இதன் கீழ்த் தாவரங்களைப் பற்றி விவரிக்கும் அறிவியல் துறையும் (Botany) விலங்குகள் குறித்து விவரிக்கும் அறிவியல் துறையும் (Zoology) அடங்கும்.

தாவரவியல் (Botany) தாவரங்கள் இல்லையென்றால் உலகில் வேறு எந்த உயிரினமும் வாழ முடியாது. தாவரங்கள் குறித்தும் மாணவர்கள் கற்க வேண்டும் என்று விரும்புகிறார் பாரதி. உலகில் புல் பூண்டு, செடி கொடிகள் முளைக்க மழை தேவை. மழை பெறக் காடுகள் தேவை என்பதை உணர்த்த பாரதி,

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்

(பாரத தேசம் – 12)

என்று குறிப்பிடுகிறார். காட்டின் இன்றியமையாமையை மக்களுக்கு உணர்த்தவே இவ்வாறு பாடியிருக்கிறார்.

ஜகதீச சந்திர வஸு – ஜகதீச சந்திர போஸ் சாதனை

(பொதுவாக ஜகதீச சந்திர போஸ் என்ற பெயரை ஜகதீச சந்திர வஸு என்று எழுதுகிறார் பாரதியார்.)

ஜகதீச சந்திர வஸு

‘ஐந்துக் (விலங்கு)களைப் போலவே விருக்ஷாதிகளுக்கும் உணர்ச்சியிருக்கிறது. ஆகவே மண், செடி, ஜந்து, மனுஷ்யன் அத்தனைக்குள்ளும் ப்ராண சக்தி இருக்கிறது’

(பாரதி கட்டுரைகள் – பக்.50)

என்று கூறியிருப்பது செடிகளுக்கு உயிர் இருக்கிறது என்று கண்டுபிடித்ததைக் காட்டுகிறது. இதையெல்லாம் பாரதி ஏன் கூறுகிறார்?

ஜகதீச சந்திர போஸைப் போல் பல அறிஞர்கள் உருவாக வேண்டும் என்ற ஆர்வத்தில் கூறுகிறார்.

‘செடிக்கு விஷத்தைக் கொடுத்தால் மூர்ச்சைப் போடுகிறது. மறுபடி தெளிய மருந்து கொடுத்தால் தெளிகிறது. செடியின் சந்தோஷம், சோர்வு, வளர்ச்சி, சாவு ஆகிய எல்லா நிலைமைகளையும் . . . . . பார்க்கும் போது, செடியின் நாடியுணர்ச்சிக்கும் இதர மனுஷ்ய மிருகாதி ஜந்துக்களின் நாடியுணர்ச்சிகளுக்கும் பேதமில்லை என்பது ருஜுவாகிறது (நிரூபணமாகிறது)’

(பாரதி கட்டுரைகள், பக்: 50,51)

என்று பாரதி எழுதியிருப்பது மனிதரைப் போல் செடிக்கும் நாடியுணர்ச்சி இருப்பதைக் கண்டுபிடித்த ஜகதீச சந்திர போஸின் அறிவைப் போற்றும் நிலையில் உள்ளது.

விலங்கியல் (Zoology) உலகில் வாழும் உயிரினங்கள் பற்றிய தெளிவான அறிவு மாணவர்களுக்குத் தேவை என்று பாரதி எண்ணினார். இந்த உலகம் முழுவதிலும் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் உள்ளன. அவை கண்ணுக்குத் தெரிபவை, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் (microscopic forms) என்று இருவகைப்படும். உயிரினங்கள் பற்றி பாரதி,

உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்?

நீ கண் கண்ட தெய்வம்.

எல்லா விதிகளும் நின்னால் அமைவன.

எல்லா விதிகளும் நின்னால் அழிவன.

உயிரே.

நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம்.

தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ.

பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு,

இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற

உலகங்களிலுள்ள எண்ணே யில்லாத உயிர்த் தொகைகள்

(வசன கவிதை, காற்று – 15)

என்று பாடுகிறார். காற்றில் ஒரு சதுர அடி இடத்திற்குள் இலட்சக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன. பெரிய உயிரின் உடலுக்குள் பல சிறிய உயிர்களும், சிறிய உயிர்களுள் அதைவிடச் சிறிய உயிர்களும் வாழ்கின்றன. பெரிது சிறிது என்னும் இருவேறு நிலைகளிலும் எண்ணற்ற உயிர்கள் உள்ளதை விளக்குகின்றார் பாரதியார்.

மருத்துவம் கண்ணுக்குத் தெரியாத நுட்பமான பூச்சிகளினால் விஷக் கிருமிகள், நோய்கள் உண்டாகின்றன. இவை தண்ணீர், காற்று முதலியவற்றின் மூலமாகப் பரவுகின்றன, என்று ஐரோப்பியர் கூறியதைப் பாரதி முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. மனம் மகிழ்ச்சியாகவும் இரத்தம் சுத்தமாகவும் இருப்பவர்களைப் பூச்சிகளால் ஒன்றும் செய்யமுடியாது என்பது பாரதியார் எண்ணம். நோயை எதிர்க்கும் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கினால்(resisting power) பூச்சிகளைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. நீரும், காற்றும், நிலமும் இல்லாமல் உயிர் வாழ முடியாது. ஐரோப்பியர் கூறுவதன் அடிப்படையில் பார்த்தால் இவை மூன்றையும் கண்டு அஞ்ச வேண்டிய நிலை ஏற்படும். இத்தகைய எண்ணம் மாணவர் மனத்தில் சிறுவயதில் அழுத்தமாகப் பதிந்து விடும். அவர்கள் அதைக் கண்டு அஞ்சுவர். அவ்வாறு அச்ச மேற்படுத்துவதை, பாரதி விரும்பவில்லை. ஆகையால், நோய் வருமுன்பு உடலைப் பேண வேண்டும் என்று கூறுகிறார். மனிதர்கள் பூச்சியால் சாகமாட்டார். கவலையாலும், பயத்தாலுமே சாகிறார்கள் என்று எண்ணுகிறார்.

இரத்தம் சுத்தமாக இருந்தால் நலமுடன் வாழ முடியும் என்ற உண்மையை இங்கு உணர்த்துகிறார் பாரதி.

பொருளறிவியல் (Physical Science)

இது பொருள்களின் இயல்பை விளக்கும் அறிவியல் துறையைக் குறிப்பிடும். இதன் கீழ் இயற்பியல், வேதியியல் ஆகிய இரு துறைகளும் அடங்கும்.

இயற்பியல் (Physics) பொருள்களின் தன்மை, இயற்கைச் சக்திகளின் இயக்கம், மாற்றம் முதலியவற்றை விவரிக்கும் ஓர் அறிவியல் ஆகும்.

சக்தி (Energy)

ஒரு செயலைச் செய்யக் கூடியதாக ஆக்கும் ஆற்றல், திறன் இவையே சக்தியாகும். இயற்கையில் காணும் பொருள்களினூடே சக்தி கலந்துள்ளது. இதனால் தான் பாரதி,

இயற்கையென் றுனையுரைப்பார் – சிலர்

இணங்கும் ஐம்பூதங்கள் என்றிசைப்பார்

செய்கையின் சக்தியென்பார் – உயிர்த்

தீயென்பர், அறிவென்பர், ஈசனென்பர்

(சிவசக்தி – 1)

என்று சக்தியை இயற்கை, ஐம்பூதம், தீ, அறிவு, கடவுள், வானம், பூமி, நான்கு திசைகள் ஆகிய அனைத்திலும் பார்க்கிறார். இந்தச் சக்தியானது, நிலை சக்தி, (potential energy) இயங்கு சக்தி (kinetic energy) என இரு நிலைகளில் காணப்படுகின்றது. சக்தி இல்லாவிடில் உலகில் எந்தச் செயலும் நிகழாது. இந்தச் சக்தியின் ஆற்றல் இக்காலத்தில் பல நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது. நீரில் இருக்கும் சக்தி மின்சக்தியாகப் பயன்படுகிறது.

காற்றின் வேகத்தால் காற்றாடி சுழல்வது இயந்திர சக்தி (Mechanical energy). அந்தச் சக்தி மின்சக்தியாகக் (Electrical energy) காற்றாலையில் மாற்றப்படுகிறது. இதுபோல் அணு(Atom)வும் அணு மின்சக்தி எடுக்கப் பயன்படுகிறது. இவற்றைக் கொண்டு ஆக்கபூர்வமான பணிகளைச் செய்ய இயலும். ஆகவே தான் பாரதி சக்தியை எல்லாவற்றிலும் கண்டு வணங்குகிறார், போற்றுகிறார்.

புவி ஈர்ப்புவிசை (Gravitational force)

பரம்பொருளின் அருளைப் பாடவந்த பாரதி அவரது கொடையாகப் புவிஈர்ப்பு விசையைக் கூறுகிறார். இந்த விசை சந்திரனில் ஆறில் ஒரு பங்காக இருக்கிறது. மேல் நோக்கிப் எறியப் படும் பொருள்கள் ஈர்ப்பு விசை இல்லையெனில் கீழே விழாது. ஈர்ப்பு விசையால் மண்ணுலக மக்கள் பெறும் நன்மையைப் பாருங்கள்.

விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கி

யிருக்கும் கடல்நீர் அந்தச் சுழற்சியிலே தலைகீழாக

கவிழ்ந்து திசைவெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை?

பராசக்தியின் ஆணை! . . . . .

கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா?

அவள் மண்ணிலே ஆகர்ஷ்ணத் திறமையை நிறுத்தினாள்

அது பொருள்களை நிலைப்படுத்து கின்றது!

(வசன கவிதை, கடல் -1)

(சுழலும் = சுற்றும், சுழற்சி = சுழல்வது, ஆகர்ஷ்ணத்திறமை = இழுக்கும் சக்தி)

இவ்வாறு சக்தியையும் புவிஈர்ப்பு விசையையும் பாடி அதன் ஆற்றலைக் கண்டு வியக்கிறார். பூமி உருண்டையானது அது தன்னைத் தானே சுற்றிவரும் போது, பூமியில் உள்ள கடல் நீர் தலைகீழாகக் கவிழ்ந்து ஆகாயத்தில் சிதறவில்லை. பூமியிலுள்ள கிணற்று நீர் சிந்தவில்லை. இந்தச் செயல்களெல்லாம் எப்படிச் சாத்தியமாகின்றன என்று வியக்கிறார். உலகைத் தோற்றுவித்த அன்னையாகிய பராசக்தியே தம் கருணையால் கடல், மலை போன்றவற்றை அந்தந்த இடங்களில் நிலை பெயராது நிற்க ஆணையிட்டிருக்கிறாள் என்று நம்புகிறார்.

வேதியியல் (Chemistry) பொருள்களின் மூலக் கூறுகளையும் அந்த மூலக் கூறுகள் எவ்வாறு எந்தச் சூழ்நிலையில் ஒன்றோடு ஒன்று வினைபுரிகின்றன என்பதையும் குறிக்கும் அறிவியல் துறையாகும். வேதியியல் பற்றிய தெளிவான அறிவு பாரதிக்கு உண்டு. உலகில் உள்ள மூலப் பொருள்கள் எழுபது, மண்ணுலகில் காணப்படும் பொருள்கள் அனைத்தும், எழுபது மூலப் பொருள்களின் சேர்க்கையால் உள்ளன என்று தம் கட்டுரையில் குறிப்பிடுகிறார். (பாரதி கட்டுரைகள் பக்: 391)

வழக்கத்திலுள்ள பொன், வெள்ளி, செம்பு, கந்தகம் ஆகியவை மட்டுமன்றி, பழக்கத்தில் இல்லாத குரோமியம், தித்தானியம், யுரேனியம் என்பனவற்றோடு, புதிதான ரேடியம், ஹீலியம் ஆகியவற்றையும் பட்டியலிட்டுப் பகுத்துக் காட்டும் அளவு அவருடைய வேதியியல் நூல் அறிவு விரிந்துள்ளது.

திடநிலை, திரவநிலை, வாயு நிலை ஆகிய மூன்று நிலைகளில் காணப்படும் பொருள்களைப் பற்றிக் கற்பிக்க வேண்டுமென வலியுறுத்துகிறார். இத்துடன் வேதியியல் மாற்றம், வேதியியல் சிதைவு போன்றவற்றையும், அணுவைப் பற்றியும் மாணவர்கள் அறிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்கள் பாடத்திட்டத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்பட வேண்டிய பாடங்கள் என்றும் கூறுகிறார். (பாரதி கட்டுரைகள் பக்.392)

தங்கம் முதலிய பொருள்களைப் பூமியிலிருந்து வெட்டியெடுக்க வேண்டுமென்றும் (பாரத தேசம் – 3). கல்லுக்குப் பட்டை தீட்டி வயிரமாக்குதல், செம்புக்கு முலாம் பூசித் தங்கமாக்குதல (electro plating) போன்ற அறிவியல் கலைகளில் இந்தியர் சிறந்து விளங்க வேண்டுமென்றும் அவர் விரும்பியிருக்கின்றார். அவர் பாடிய,

கல்லை வயிர மணியாக்கல் – செம்பைக்

கட்டித் தங்கமெனச் செய்தல்

(வரம் கேட்டல் – 8)

என்ற பாடல் அவர் எண்ணத்தைப் புலப்படுத்துகிறது.

இவ்வாறு இயற்பியல், வேதியியல் பற்றிய முழு அறிவுத் தேவை என்பதை விரிவாகத் தம் கட்டுரையில் கூறுகிறார் பாரதி.

வேளாண்மை (Agriculture)

வேளாண்மை என்பது நிலத்தைப் பண்படுத்தித் தானியங்கள் முதலியவற்றை விளைவிக்கும் தொழிலைக் குறிக்கும

விவசாயம் கிராமங்கள் நிறைந்த நாடு இந்தியா. நன்செய் புன்செய் பயிர்கள் விளையும் விவசாய நாடாக விளங்கியது. விவசாயத் துறையிலும் அறிவியல் முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறார் பாரதி. பள்ளிப் பருவத்திலேயே மாணவச்செல்வங்களுக்கு, குறிப்பாகத் தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு, விவசாயத் தொழிலில் தகுந்த ஞானமும் அனுபவமும் பெற வழிகாட்ட வேண்டும். பள்ளிப் படிப்பு முடிந்ததும் விவசாயம் செய்தால், தொழில் இல்லை என்று யாரும் சோம்பியிருக்க வேண்டியதில்லை என்றார். எல்லோரும் தொழில் செய்தால் இல்லை என்ற சொல்லே இல்லை என்று ஆகிவிடும் அல்லவா?

தோட்டக்கலை (Horticulture) இந்தக் கலை, பூ, காய், பழம் ஆகியவற்றைத் தரும் செடி கொடிகளையும், மரங்களையும் பராமரிக்கும் முறையைக் குறிப்பது ஆகும். பாரதியார் தம் கட்டுரையில் இதைத் ‘தோட்டப் பயிற்சி’ (பக்:392) என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். நன்செய் புன்செய்ப் பயிர் மட்டுமல்லாமல் தோட்டப் பயிர்களைப் பராமரித்து வளர்ப்பதிலும் மாணவர்கள் அனுபவம் பெற வேண்டும். என்று கூறுகிறார் பாரதியார். (பாரதியார் கட்டுரைகள், பக்: 392) விவசாயம் என்ற ஒன்றையே நம்பியிருப்பதை விட, உணவுப் பொருள்களாக விளங்கும் காய், கனி முதலியவற்றைப் பயிர் செய்து பலனடைய வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கூறினார் போலும். இக்காலத்து அழகுக்காக வீடுகளில் வளர்க்கப்படும் செடி, கொடி, பூ போன்றவற்றை வளர்த்து அதுவே ஒரு தொழிலாக வளர்ச்சியடைந்துள்ளதைக் காணலாம். நோயின்றி வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருள் எவை என்று கண்டறிந்து மாணவர்கள் அவற்றைப் பயிர் செய்து வளமுடன் வாழலாம்.

பொறியியல் (Engineering)

இது இயந்திரம் முதலியவற்றை உருவாக்குதல், பராமரித்தல் முதலியவற்றைக் குறிக்கும். ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் விளைவால் புதுப்புது இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனால் மேலை நாடுகளில் பெரிய தொழிற்சாலைகள் தோன்றின. தொழில் வளம் பெருகியது. அது போல் இந்தியாவும் தொழிலில் முன்னேறும் என்ற நம்பிக்கை பாரதிக்கு இருந்தது. இந்தியர் ஏதும் அறியாதவர் என வெள்ளைக்காரர் நினைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பெரிய தொழில் முதல் குடிசைத் தொழில் வரை இந்திய நாட்டு மக்கள் செய்வார்கள் என்பதை,

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

குடைகள் செய்வோம் உழுபடைகள் செய்வோம்

கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்

நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்

ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

(பாரத தேசம் – 9,10)

(உழுபடை = உழுவதற்குப் பயன்படும் கருவிகள், நடையும் = சாலையில் செல்லும் சக்கர வண்டி, பறப்பும் = வானவெளியில் செல்லும் விமானம் போன்றவை, ஞாலம் = உலகம்)

என்று பாடியிருக்கின்றார்.

அக்காலத்தில் விஞ்ஞானக் கதைகளில் கூறப்பட்ட பல கருவிகள் இக்காலத்தில் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் கற்பனை செய்த ‘மந்திரக் கண்ணாடி’ இன்றைய தொலைக்காட்சி, ‘புஷ்ப விமானம்’ தான் ஆகாய விமானம். எதிரொலியின் பிரதிபலிப்புத்தான் வானொலி. பாரதியின் உழுபடை இப்போதுள்ள டிராக்டர் எனக் கொள்ளலாம்.

இதுபோல் பாரதியும் தொலைதூரத்தில் ஒருவர் பேசுவதைக் கேட்கும் வகையில் கருவி கண்டுபிடிக்கப்பட வேண்டுமென்று பாடுகிறார்.

காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்

(பாரத தேசம் – 7)

மேலும் பாரதியார்,

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

(பாரத தேசம் – 8)

என்ற பாடலில் பட்டாடை, பருத்தி ஆடை முதலியன செய்வதில் பாரதநாடு புகழ்பெற்றது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

உடற்கல்வி (Physical Education)

உடற்கல்வி என்பது விளையாட்டு, பயிற்சி முதலியவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்திற்காக அளிக்கப்படும் படிப்பைக் குறிக்கும். இதைச் ‘சரீரப் பயிற்சி’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் பாரதி. (பாரதியார் கட்டுரைகள், பக்:393)

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ (

ealth is wealth) என்பது பழமொழி. நோய் இல்லாமல் வாழ்வதற்கான வழிகளாகப் பாரதி கூறுவதைப் பாருங்கள்.

உடல் உழைப்பு தன் வேலையைத் தானே செய்ய வேண்டும் (self-help) என்ற மகாத்மா காந்தியின் கொள்கையை அனைவரும் கடைப்பிடித்தால் உடற்பயிற்சி யில்லாமல் உழைப்பின் மூலம் நலமுடன் வாழலாம். கிணற்றில் நீர் இறைத்தல், தோட்டத் தொழில்கள் செய்தல், தன் துணிகளைத்தானே துவைத்தல் போன்ற அன்றாட வேலைகளைச் செய்வதால் உடற்பயிற்சி பெறலாம் என்று கூறுகிறார் பாரதியார். (பாரதியார் கட்டுரைகள்,பக்: 393)

உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் செயல்களைக் குறிக்கும், உழைப்பின் மூலம் பெறும் பயிற்சியோடு உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும், உழைப்பின் மூலம் உடலின் அனைத்து உறுப்புகளும் பயிற்சி பெறும் என்று கூற முடியாது. குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்பவர்களுக்கு அந்த வேலையைச் செய்யும் உறுப்புகள் தவிர ஏனைய உறுப்புகளுக்குப் போதுமான அளவு பயிற்சி கிடைக்காது, அந்தக் குறையைப் போக்க உடற்பயிற்சி தேவைப்படுகிறது. அனைத்து உறுப்புகளும் நன்றாகச் செயல் பட்டால்தான் ஆரோக்கியமாக வாழமுடியும். ஆகவே, உடற்பயிற்சி கொடுக்க இப்போது பல கருவிகள் வந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தி உடல் நலம் பெறலாம். மாணவர்களுக்குப் பள்ளிப் படிப்பு மட்டும் போதாது என்பது அவரது எண்ணம். ஆரோக்கியமில்லாமல் படிப்பு மட்டும் கொடுத்தால் படிப்பு வீணாகும். அற்ப ஆயுளில் இறக்க நேரிடும். சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்? ஆகையால் மாணவர்கள் உடற்கல்வி பெறும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

அறிவியல் அணுகுமுறை

பாடங்கள் இருமுறைகளில் கற்பிக்கப்படுகின்றன.

1. வாய்மொழியாகக் கற்பித்தல்

2. செய்முறை(Practical) மூலம் கற்பித்தல்

வாய்மொழியாகக் கற்பித்தல் தொடக்கக் காலத்தில் பாடங்கள் வாய்மொழியாகவே கற்பிக்கப் பட்டன. அறிவியல் வளர வளர வாய்மொழியால் மட்டுமே அனைத்தையும் கற்பிக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. பெரும்பாலும் மொழிக்கல்வி, வரலாறு போன்ற பாடங்கள் வாய் மொழியாகவும், கரும்பலகையில் எழுதியும் கற்பிக்கப்பட்டன. இவை போதாது என்ற நிலையில், இதற்கு அடுத்த கட்டமாகப் படங்கள் தேவைப்பட்டன. ஆகையால், ஆசிரியர் பாடத்திற்குத் தகுந்த படங்களைக் காட்டிக் கற்பித்தனர். இது மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது. வாய்மொழிக் கல்விக்கு மேலாக மாணவர் மனத்தில் பாடத்தைப் பதியச் செய்யப் படங்கள் உதவின.

பாரதியார் புவியியல் பாடங்களைக் கற்பிக்கும் போது, பூமியின், படங்கள், கோளங்கள், வண்ணப் படங்கள் முதலிய துணைக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தம் கட்டுரையில் குறிப்பிடுகிறார். (பக்:382) அப்போதுதான் அந்தப் பாடங்கள் மாணவர்களின் மனத்தை விட்டு அகலாது நிற்கும். ஆனால் அறிவியல் துறை வளர்ந்தபோது மேலே கூறிய கற்பித்தல் முறைகளை விடச் செய்முறைவழிக் கற்பித்தல் இன்றியமையாததாகி விட்டது.

செய்முறை வழிக் கற்பித்தல் இது பாடங்களை மாணவர்களுக்கு விளக்குவதற்காக, செய்து காட்டிக் கற்பிக்கும் முறையைக் குறிக்கும். ‘ஐரோப்பிய ஸயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத் தக்க கருவிகள் மூலமாகவும் பரீக்ஷைகள் (செய்முறை) மூலமாகவும் பிள்ளைகளுக்குக் கற்பித்துக் கொடுத்தல் மிகவும் அவசியமாகும்’. (பாரதியார் கட்டுரைகள், பக்:389) என்று பாரதியார் கூறுவது செய்முறை வழிக் கற்பதன் தேவையை உணர்த்துகிறது. பாடங்களை வாய்மொழியாகவும், வண்ணப் படங்கள் மூலமாகவும் கற்பிப்பதைவிடச் செய்முறை வழிக் கற்பிப்பது வலிமையானது; சக்தி வாய்ந்தது. இதில் மாணவர் ஆசிரியருடன் கலந்துரையாடிப் பங்கேற்கும் நிலையும், மாணவர்கள் தாமே செய்து பார்த்துப் படிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே, கற்றலும் கற்பித்தலும் இந்த முறையில் சிறப்பாக நடைபெறும்.

வேதியியல் பாடத்தில் வேதியியல் மாற்றம், வேதியியல் சிதைவு ஆகியனவற்றைச் செய்முறை மூலம் கற்பித்தல் மிகவும் அவசியம் என்று பாரதியார் தம் கட்டுரையில் கூறுகிறார். பாடம் கற்பிக்கும் போது இயன்ற அளவு தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்பது அவரது கோரிக்கை. (பாரதியார் கட்டுரைகள், பக்: 389, 390) இது தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியார் கொண்ட ஆர்வத்தைக் காட்டுகிறது.

தொகுப்புரை

இவ்வாறு இந்தப் பாடம் பாரதியாரின் அறிவியல் நோக்கைத் தெளிவாகக் காட்டுகிறது. பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகள் ஆகியனவற்றின் வழி ஆங்காங்கே புவியியல், வானவியல், உயிரியல், வேதியியல், வேளாண்மை, பொறியியல், உடற்கல்வி போன்றவற்றைப் பற்றி அவர் அறிந்த உண்மைகளும், அவர் வாழ்ந்த காலத்தில் பேசப்பட்ட உண்மைகளும் இங்குத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

பாடம் - 5

தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதியுகம்

பாட முன்னுரை

சங்க காலத்தில் தோன்றிய தமிழறிஞர்கள் எல்லாம் வளமான இலக்கியங்களைப் படைத்துப் பெருமை சேர்த்தனர். அவர்கள் படைத்த பாடல்களுள் காதல் பற்றிய பாடல்கள் அக இலக்கியங்கள் என்று பெயர் பெற்றன. வீரம், புகழ், கொடை, கல்வி முதலியன பற்றிய பாடல்கள் புற இலக்கியங்கள் என்று வழங்கப்பட்டன. இந்த இலக்கியங்கள் மொழி, நாடு, அரசு, சமுதாயம், பண்பாடு முதலியவை பற்றிக் கூறின.

கடைச்சங்க காலத்தில் மனிதனை மனிதனாக வாழச் செய்வதற்கான கருத்துகளைக் கூறும் திருக்குறள், பழமொழி, நாலடியார் போன்ற அறநூல்கள் தோன்றின. கடைச்சங்க காலத்தை அடுத்துச் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி என்னும் பெருங்காப்பியங்கள் தோன்றின.

அதன் பின்னர் வீடு பேறு அடைதலையே தலையாய குறிக்கோளாகக் கொண்டு, நாயன்மார்களும் ஆழ்வார்களும் முறையே சிவபெருமானையும், திருமாலையும் பாடி வழிபட்டனர். அவர்கள் இறையுணர்வு மேலீட்டால் பாடினர். ஆகையால் இவற்றில் சமுதாயத்தையோ, நாட்டின் நிலையையோ, அரசியலையோ பற்றி மிகுதியாக அறிய முடியவில்லை.

இதையடுத்து முகமதியர், தெலுங்கர் போன்ற அந்நிய ஆட்சியின் ஆதிக்கங்கள் தமிழ்ப் புலவர்களின் செல்வாக்கைத் தேய்த்தன. தமிழ்ப்புலவர்கள் கற்றவர்கள் மட்டுமே பொருள் உணரக் கூடிய வகையில் கலம்பகம், சித்திர கவி, யமகம், திரிபு போன்ற இலக்கியங்களைப் படைத்தனர். சிற்றரசர்கள், செல்வச் சீமான்கள் ஆகியோரை பொருள் பெறும் நோக்கத்துடன் மட்டுமே பலவாறு புகழ்ந்து பாடியிருக்கின்றனர். அந்தப் பாடல்கள் சமுதாயப் பாடல்களாக, தேசியப் பாடல்களாக அமையவில்லை.

தாயுமானவரும் இராமலிங்க அடிகளாரும் தம் பாடல்களில் சமூகச் சிந்தனையைச் சிறிதளவு கொண்டு வர முனைந்துள்ளனர். ஆயின், சமூகச் சிந்தனைகளையே பாடுபொருளாகக் கொண்டு முதன் முதலாகப் பாடியவர் பாரதியே. சமூகத்தின் எல்லா நிலையினரும் பயன்பெறும் வகையில் எளிய நடையில் பாடினார். அன்றாடச் சொல் வழக்கைக் கவிதையில் கொண்டு வந்த பெருமை பாரதியாரையே சாரும்.

தாயுமானவரும் இராமலிங்க அடிகளும்

கம்பர் காலத்திற்குப் பின்பு எண்ணங்களை வெளியிடுவதில் பழைய முறைகளும் ஒரே மாதிரியான வடிவங்களும் சலிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். பாரதியார் காலத்திற்கு முன்பு வாழ்ந்த தாயுமானவர், இராமலிங்க அடிகள் ஆகியோர் சிறிதளவு சமுதாயச் சிந்தனை உடைய பாடல்கள் பாடியிருக்கின்றனர்.

தாயுமானவர்,

எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின்

தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே

என்றும்,

எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே

(பராபரக் கண்ணி, 65,221)

என்றும் பாடியிருப்பது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பார்க்கும் பரந்த உள்ளம் வேண்டும் என்று விரும்பியதை உணர்த்துகிறது. உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் இன்புற வேண்டுமென்று உள்ளன்புடன் வேண்டியதையும் காட்டுகின்றது.

இராமலிங்க அடிகள் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன். என்று நீரின்றி வாடும் அஃறிணைப் பொருளுக்காகவும் இரங்கிப் பாடுகிறார். அவர்கள் காலத்திலும் இந்தியா ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுத் தான் இருந்தது. ஆனால் அவர்கள் நாட்டின் விடுதலைக்காகப் பாடவில்லை. ஆன்மீக விடுதலையை நோக்கமாகக் கொண்டே பாடியிருக்கின்றனர். அவர்களுடைய குறிக்கோள் நாட்டுக் காதல் அல்ல, இறைக் காதல். தாயுமானவர் இறைவன் மீது கொண்ட பக்தியால்,

பத்தர் அருந்தும் பரமசுகம் யானருந்த

எத்தனை நாள் செல்லும் இயம்பாய் பராபரமே

(பராபரக்கண்ணி, 270)

என்று பாடுகிறார். சிவபெருமானின் திருவடி அடைய வேண்டும், சிவபக்தர்கள் பெறும் பேரின்பம் பெற வேண்டும் என்பது அவர் விருப்பம்.

இராமலிங்க அடிகள் பாடிய,

இனி ஏதுறுமோ என்செய்கேன்

எளியேன் தனைநீ ஏன்றுகொளாய்

கனியே கருணைக் கடலே என்

கண்ணே ஒற்றிக் காவலனே

(திருவருட்பா -இரண்டாம் திருமுறை ,933)

(ஏன்று கொளாய் = ஏற்றுக் கொள்வாய், ஒற்றி = திருவொற்றியூர்)

என்னும் பாடல் தமக்கு ஏது நிகழுமோ என்று அஞ்சித் தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு இறைவனிடம் கேட்பதாக விளங்குகிறது.

பாரதியாரின் தனித்தன்மை

பாரதியாரின் சிந்தனை, சொல், செயல் ஆகிய அனைத்தும் அவருக்கு முன்பு வாழ்ந்த புலவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தது. பாரதநாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட காலத்தில், சமுதாயம் தாழ்வுற்று வறுமையடைந்திருந்த நிலையில், பாரத நாட்டு மக்கள் அடங்கி, ஒடுங்கி, அஞ்சி வாழ்ந்த சூழ்நிலையில் பாரதி தோன்றினார். அவருடைய வரவு, பாரதிதாசன் சொல்வது போல், ‘நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா’வாக ஒரு புதிய விழிப்பை, விடியலைத் தோற்றுவிப்பதாக அமைந்தது.

பிற புலவர்களை விட அவரிடம் நாட்டுப் பற்று, மொழிப்பற்று, சமுதாய உணர்வு ஆகிய சிந்தனைகள் எழுச்சி பெற்று விளங்கின. பாரதியின் மனம் புதுமை மீது மிகுந்த விருப்பம் கொண்டதாக விளங்கியது. இருப்பினும் பழையதைப் போற்றியிருக்கிறார். பழமையில் புதுமை படைத்து, முற்றிலும் புதிய வகைகளைத் தந்து தமிழ்க் கவிதைகளுக்குப் புதுப் பொலிவு கொடுத்திருக்கிறார். தமிழ்க் கவிதை வரலாற்றில் புதிய பாதையை வகுத்து வழிகாட்டியிருக்கிறார் பாரதி.

இந்த மறுமலர்ச்சி யுகத்தைப் ‘பாரதி யுகம்’ என்று சிறப்பித்துப் பேசலாம் என்பார் பி.ஸ்ரீ. (பாரதியார் இதயம், பக்: 16).

யுகம் என்றால் என்ன? யுகம் என்ற சொல்லுக்கு நீண்ட காலம் என்பது பொருள். பாரதியார் நாட்டு விடுதலைக்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடியவர். ஆகையால் மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று தம் மனத்தில் பட்டதைக் கவிதையில் சொல்லோவியமாகப் படைத்து விடுகிறார். அதுவே பாடுபொருளாக அமைந்து விடுகிறது. பாரதி தமக்கு முன்பு வாழ்ந்த புலவர்கள் பாடிய பாடுபொருள் போல் பாடியது மட்டுமன்றிப் புதிய வடிவம், எளிய மொழி நடை முதலியவற்றைக் கையாண்டிருக்கிறார்.

பாரதியாரின் விடுதலை வேட்கையும் சமுதாயச் சீர்திருத்த எண்ணமும் அவரை அவ்வாறு பாடத் தூண்டியிருக்கக் கூடும். பெரும்பான்மையான பாடல்களில் பாடுபொருள் ஒன்றாக இராமல் பலவாக விளங்குகின்றன. அது மட்டுமன்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒரு முறை சொன்னதை மீண்டும் அவர் கூறுவதையும் காண முடிகிறது. அடி மேல் அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா?

பாரதி வாழ்ந்தார் என்று இறந்த காலத்தில் கூறாமல் பாரதி வாழ்கிறார், பாரதி வாழ்வார் என்று நிகழ் காலத்திலும் எதிர் காலத்திலும் கூறும் வண்ணம் அவர் தோற்றுவித்த யுகம் இக்காலத்தும் தொடர்கிறது.

பாரதியாரின் அடிச்சுவட்டில் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை போன்ற பல கவிஞர்கள் பாடியிருக்கின்றனர்.

பாடுபொருள்

ஒரு கவிதையை முழுமையாக அறிந்து கொள்ள அதன் இரண்டு நிலைகள் குறித்து நோக்க வேண்டும். ஒன்று பாடு பொருள், மற்றொன்று பாடலின் வடிவம். இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பன. ஆயினும் இரண்டாகப் பார்ப்பது தேவை. இதன் மூலம் பாடலின் இயல்புகளை அறிய முடியும். பாடலின் பொருளுக்கேற்ப அதன் வடிவமும் மாறுபடுகின்றது. பாரதி இவை இரண்டிலும் புதுமை படைத்துப் புதுயுகக் கவிஞராக விளங்குகிறார். பாடுபொருளின் வழியில் பாரதியின் தனித்தன்மை துலங்கும் வகையினை முதலில் காண்போம்.

பாடு பொருள் என்பது கவிதையின் கருவாக அமையும் கருத்து /தகவல்/ செய்தி ஆகும். இந்தக் கரு தன் அனுபவ வெளியீடாகவோ அல்லது பிறர் அனுபவ வெளியீடாகவோ விளங்கும். ஒரு நாடும் அந்த நாட்டில் வாழும் மக்களும் அமைதியாகவும் சிறப்பாகவும் வாழ வேண்டும். இவை இரண்டும் இல்லாத காலத்தில் பிறந்த பாரதியின் உள்ளத்தில் விடுதலை உணர்வு எழுந்தது. அடிமைகளாக வாழ்கின்றோம் என்னும் உணர்வு கூட பாரத நாட்டு மக்களுக்கு அன்று ஏற்படவில்லை. நாட்டு மக்களின் நிலை கண்டு வருந்திய பாரதி விடுதலை உணர்வு கொண்ட பாடல்கள் பல பாடியிருக்கிறார்.

நாடும் மொழியும் பாரதியார் பாடல்களில் பாரத நாட்டின் பாரம்பரியப் பெருமை, அந்நியர் எதிர்ப்பு, தாயின் மணிக்கொடி, சுதந்திரத்தின் பெருமை, தமிழ் மொழி, தமிழ்நாடு முதலிய கருத்துகள் பாடுபொருளாய் விளங்குகின்றன. இந்தப் பாடல்கள் பாரத நாட்டு மக்களிடம் நாட்டின் நிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தின.

ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு அந்நிய நாட்டவர் பலர் இந்தியாவின் மீது படையெடுத்திருந்தனர். அப்போதெல்லாம் பாரத நாட்டு மக்கள் அவர்களை வெளியேற்ற ஒன்று திரண்டு எழவில்லை. ஆனால் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மேலோங்கியிருந்தது. இதைக் கண்ட பாரதி அவர்களுக்கு நாட்டுப் பற்றை வளர்க்கும் வண்ணம் தேசியப் பாடல்கள் பல பாடியிருக்கிறார்.

தம் தாய் நாட்டின் பெருமைக்காகக் கவிதையைக் காணிக்கையாகப் படைத்த பாரதியார், தாய் நாடு உயர வேண்டுமெனில் தாய் நாட்டின் அங்கமாக விளங்கும் பல்வேறு மொழிகள், மாநிலங்கள் ஆகியவை வளம் பெற வேண்டும் என்று கருதியிருக்கிறார்.

தாய்மொழி என்பது மதர் டங் (mother tongue) என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் ஆகும். தாய்மொழி என்னும் சொல்லுக்கு ‘வீட்டு வார்த்தை’ என்ற தூய தமிழ்ச் சொல்லைப் போகின்ற பாரதம் என்னும் பாடலில் பாரதி கூறியிருப்பதைக் காணலாம்.

இங்ஙனம் தமிழ் உணர்வையும் தேசிய உணர்வையும்

இணைத்து,

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

(செந்தமிழ் நாடு – 1)

என்று தமிழோடு தேசியத்தையும், நாட்டையும் போற்றுகிறார்.

தேசியத் தலைவர்களும் பிற நாடுகளும் பாரதியார் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தேசபக்தத் தலைவர்களைப் பாடுபொருளாகக் கொண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். மேலும் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட இத்தாலி நாட்டு மாஜினியைப் பற்றி பாடியுள்ளார். மக்கள் புரட்சி நடைபெற்ற பெல்ஜியம், உருசியா போன்ற நாடுகளும் அவருக்குப் பாடுபொருளாக ஆயின. மேலே கூறியவற்றைப் பற்றி விரிவாக (C0112): பாரதியாரின் தேசியப் பாடல்கள், (C0115): பாரதியார் பாடல்களில் சமுதாய நோக்கு, (C01121): பாரதியார் படைப்புகளில் தமிழியல் சிந்தனைகள் முதலிய பாடங்களில் படித்திருப்பீர்கள்.

சமுதாய முன்னேற்றம் பாரதியார், பாரத சமுதாயத்தில் காணப்பட்ட குறைகளைக் கண்டு வருந்தி, சமுதாய ஒற்றுமையின்மைக்குக் காரணம் சாதி சமய வேறுபாடு என்று உணர்ந்தார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டைத் தம் பாடல்கள் வழி உணர்த்துகிறார். இயற்கையின் அழகைப் பாடினார், ஆற்றலைப் போற்றினார், உழைப்பைப் புகழ்ந்தார். மூட நம்பிக்கையை வெறுத்தார். தீண்டாமையை ஒழிக்க ஆறில் ஒரு பங்கு என்னும் கதை எழுதினார். இறை உணர்வைப் போற்றினார். தொழிலை மதித்தார். மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி காட்டும் பாடல்கள் பாடிக் குவித்தார். பாரதி போல் வேறு எந்தக் கவிஞரும் முதன்முதலாகப் பல வகையான பாடுபொருள்களைக் கொண்ட பாடல்கள் பாடவில்லை. பாரதியார் பாடல்களின் பாடுபொருள் அவருடைய புதுமை உள்ளத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றது.

பெண்கள் முன்னேற்றம்

பாரதியார் இந்திய சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளைக் களைந்தால் மட்டுமே இந்தியா முன்னேற்றம் அடையும் என்று கருதினார். சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால் மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்கள் முன்னேற வேண்டும் என்று அவர்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினார் பாரதி. ஆகவே, பெண்ணுக்கு விடுதலையும் வாழ்வும் வேண்டும் என்று பாடியிருக்கிறார்.

பெண் விடுதலையை மையக் கருத்தாகக் கொண்டு பாரதி பாடிய,

பெண்ணுக்கு விடுதலை நீரில்லை என்றால்

பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை

(பாரதி அறுபத்தாறு, பெண் விடுதலை – 45)

என்னும் பாடல் பெண்ணுக்கு விடுதலை இல்லை என்று சொன்னால் இந்த உலகத்தில் வாழ்க்கையே இல்லை என்று காட்டுகிறது.

இந்தியாவில் மட்டுமன்றிக் கடல் கடந்து அடிமைப்பட்டு வாழும் பெண்களின் விடுதலைக்காகவும் பாரதி பாடியிருக்கிறார். ஆங்கிலேயர் ‘பிஜி தீவி’ல் உள்ள கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய இந்தியப் பெண்களை அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை அடிமைப்படுத்தியது மட்டுமன்றி போகப்பெருளாகவும் பயன்படுத்திய கொடுமையை,

………………………………… செக்கு

மாடுகள் போலுழைத்து ஏங்குகின்றார்

நெஞ்சம் குமுறுகிறார் – கற்பு

நீங்கிடச் செய்யும் கொடுமையிலே

(கரும்புத் தோட்டத்திலே – 4)

என்று பாடி அவர்கள் விடுதலை பெறக் குரல் கொடுக்கிறார் பாரதி.

திரையிட்டு முகம் மறைத்தல்

இஸ்லாமியர் வரவால் இந்தியப் பெண்கள் திரையிட்டு முகத்தை மறைக்கும் பழக்கத்தைப் பாரதியார் சிறிதளவும் விரும்பவில்லை. தேவையற்ற பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்ற எண்ணத்தில்,

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி – பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . .. . . . .. . .. . . . பண்டை

ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?

(கண்ணம்மா என் காதலி, 18-1,2)

என்று பாடி, இந்திய நாட்டுப் பெண்கள் இந்தியப் பண்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இது பாரதியாரின் சுதேச உணர்வை வெளிப்படுத்துகின்றது.

பெண் விடுதலை பெறும் வழி

பெண் விடுதலை பெற சாத்வீக முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று விரும்பினார் பாரதி. பெண்ணுக்கு அநீதி இழைப்பவர் யார்? ஆண்கள். அந்த ஆண்கள் பெண்களுக்கு அண்ணன், தம்பி, தந்தை, மாமன், மைத்துனன், கணவன், காதலன் என்னும் உறவுகளால் கட்டுண்டிருக்கிறார்கள். அவர்களை ஆயுதங்களால் எதிர்க்க இயலாது. எனவே சாத்வீக முறைப்படி ஆண்களுக்குப் புத்திவரும்படி செய்ய வேண்டுமென்று பாரதி எடுத்துரைக்கிறார். தென் ஆப்ரிக்காவில் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை மகாத்மா காந்தி நியாயத்தால் வெல்ல நினைத்த அதே முறையைத் தான் பெண்கள் கையாள வேண்டும் என்கிறார் பாரதி.

பண்பாட்டைப் பேணுதல்

ஐரோப்பாவில் மனிதர்கள் தாங்கள் விரும்பியவருடன் வாழலாம் என்று கூறும் விடுதலைக் காதலை (free – love) வன்மையாகக் கண்டிக்கிறார் பாரதி. இந்தியப் பண்பாட்டிற்கு ஒவ்வாத பழக்கங்களை விட்டு விடக் கூறுகிறார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாரத நாட்டு மக்களால் கட்டிக் காக்கப்பட்டு வருவது இந்திய நாட்டுப் பண்பாடு. அதுவே இந்திய நாட்டின் சமூக மூலதனம் (social capital) ஆகும். அந்தச் சமூக மூலதனம் குறைந்தால் கலாச்சாரச் சீரழிவு ஏற்படும். ஆகவே. சமூக மூலதனத்தைக் காக்கும் எண்ணத்தில் விடுதலைக் காதலைக் கண்டித்துப் பாடுகிறார் பாரதி. தனி மனிதன் உயர்ந்தால் சமுதாயம் உயரும். சமுதாயம் உயர்ந்தால் நாடு உயரும். ஆகவே,

காதலிலே விடுதலை யென்று ஆங்கோர் கொள்கை

கடுகி வளர்ந்திடு மென்பார் யூரோப்பாவில் . . .

வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்

விடுதலையாம் காதலெனிற் பொய்மைக் காதல்! . . . .

ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்

அப்போது பெண்மையும் கற்பழிந் திடாதோ?

(பாரதி அறுபத்தாறு , 55-56)

என்று காதலிலே விடுதலை என்ற போக்கைக் கண்டிக்கிறார் பாரதி. இல்லற வாழ்க்கையின் உயர்வை எக்காரணம் கொண்டும் அவர் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்பதை இப்பாடல் காட்டுகிறது.

குழந்தைகள்-எதிர்கால வித்துகள்-சமுதாயச் சிற்பிகள் இன்றைய குழந்தைகள் எதிர்காலத் தலைவர்கள். மனித வாழ்வில் குழந்தைப் பருவமே மிக முக்கியமானது. இவ்வுண்மையை உணர்ந்து, குழந்தைகள் முறையாக வளர்க்கப்பட்டால் நாட்டிற்கு நன்மை பயக்கும். பாப்பாப் பாட்டுத் தமிழ் இலக்கியத்தில் புதுத்துறை. பாரதியாருக்கு முன்பு யாரும் குழந்தைப் பாடல் பாடவில்லை. குழந்தைகளின் உள்ளம் எதையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளதாகும். பெற்றோரும் மற்றவரும் கூறும் நல்ல கருத்துகள் அவர்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதியும். எனவே, குழந்தைகளின் மனம் கொள்ளும் வகையில் அறிவுரை கூறுகிறார் பாரதி. குழந்தையை அச்சுறுத்தியோ, கட்டுப்படுத்தியோ ஒன்றைக் கூறினால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகவே, குழந்தையின் மனவியல் (psychology) அறிந்த பாரதி, பாப்பாவை அன்போடு அழைத்து,

ஓடி விளையாடு பாப்பா – நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா – ஒரு

குழந்தையை வையாதே பாப்பா

(பாப்பா பாட்டு – 1)

(வையாதே = ஏசாதே, பழித்துரைக்காதே)

என்று பாடியிருக்கிறார். இதில் சோம்பியிருத்தல் ஆகாது, யாரையும் வசை சொல்லக் கூடாது, நாய், பசு போன்ற விலங்குகளிடம் அன்பு காட்ட வேண்டும், பாடம் படிக்க வேண்டும், பொய் சொல்லக் கூடாது, தாய் நாட்டுப் பற்று வேண்டும், சாதி வேறுபாடு கூடாது, ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றெல்லாம் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுகிறார்.

பாரதிக்குப் பெருமை சேர்த்த பாடல்களுள் ஒன்று சிறுவர்க்கு ஏற்ற எளிய சொற்களில் பாடலை இயற்றியிருப்பதாகும்.

வடிவம்

ஒரு கவிதையின் பாடுபொருளுக்கு, பாடலின் கருத்துக்கு ஏற்ற புற அமைப்பு அல்லது உருவம் வடிவம் எனப்படும். பொதுவாக இது பாடலின் யாப்பு நிலையைக் குறிக்கும்.

தமிழ்க் கவிதை வரலாற்றில் புதிய கவிதை வகைகளைப் படைத்தவர் பாரதி. காலமாறுதலுக்கேற்ப, புதிய இலக்கிய வகைகள் தோன்றுதல் இயல்பு.

இந்த மாற்றங்கள் நான்கு வகைப்படும். அவை,

1.பழைய வடிவமும் பழைய பாடுபொருளும்

2.பழைய வடிவமும் புதுப் பாடுபொருளும்

3.புது வடிவமும் பழைய பாடுபொருளும்

4.புது வடிவமும் புதுப் பாடுபொருளும்

என்பனவாகும்.

பழைய வடிவமும் பழைய பாடுபொருளும் பாரதியார் பழைய தமிழ் இலக்கியங்களை வழுவறக் கற்றுத் தேர்ந்தவர். முன்னோர் கூறியதைப் பொன்போல் போற்றி அந்த இலக்கியங்களில் உள்ள பாடுபொருள், வடிவம் (யாப்பு) முதலியவற்றைப் பின்பற்றிப் பாடல்கள் பல பாடியிருக்கிறார்.

பரிசில் வேண்டிப் பாடப்படும் சீட்டுக்கவியும், ஓலைத் தூக்கும் பாரதியார் பாடியிருக்கிறார். மாணிக்க வாசகரின் நீத்தல் விண்ணப்பம், போற்றித் திரு அகவல் போன்று மகாசக்திக்கு விண்ணப்பம், போற்றி அகவல் ஆகிய பாடல்கள் இயற்றியிருக்கிறார். அருணகிரிநாதரின் திருப்புகழ் என்னும் நூலின் செல்வாக்கால் பாரதியார் மகாகாளியின் புகழ், சிவசக்தி புகழ், சக்தி திருப்புகழ் முதலிய பாடல்கள் புனைந்துள்ளார். ஒருவர் இறந்த உடன் அவரை நினைத்து மனம் வருந்திப் பாடும் இரங்கற்பாவான கையறுநிலைப் பாடல், இன்னது செய்யாவிடில் இன்னன் ஆகுக என்னும் பாடுபொருள் கொண்ட வஞ்சினம் முதலிய பாடல்களும் பாடியிருக்கிறார். சிந்துக்குத் தந்தை என்று பாராட்டும் வகையில் ‘சிந்து’ யாப்பில் பல பாடல்கள் பாடியிருப்பதைக் காணலாம்.

ஒரே யாப்பில் அமைந்த 10 பாடல்கள் கொண்டது ஒரு பா ஒரு பஃது ஆகும். பாரதி, வெண்பா யாப்பில் பாடிய ‘இளசை ஒருபா ஒரு பஃது’ என்னும் பாடலின் வடிவமும் கருப்பொருளும் பழையதே ஆகும்.

பழைய வடிவமும் புதுப் பாடுபொருளும் பழைய வடிவத்தில் புதுப் பாடுபொருளையும் பாரதியார் கையாண்டிருக்கிறார். பாமரரும் பாடலின் பொருள் புரிந்து கொள்ளும் அளவு இவருடைய பாடல்கள் எளிமையானவை. மேலும், பாரதியார் தம் பாடல்களை இசையுடன் பாடியதாலும் அவர் பாடல்கள் அனைவரையும் சென்றடைந்தன என்று கொள்ளலாம்.

பாரதியின் காலத்திற்கு முன்புள்ள பாடல்கள் கடின நடையில் விளங்கின. அந்தப் பாடல்களில் இரண்டைப் பாருங்கள்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைந்தத்தா தூதுதி

(தனிப்பாடல் திரட்டு – 313)

இந்தப் பாடல் ‘த’கர எழுத்துகளை மட்டுமே கொண்ட தகர வருக்கப்பாடல்.

இந்தப் பாடலைப் பிரிக்கும் முறை

(தத்தி – சுற்றிச் சென்று, தாது – பூவின் மகரந்தம், (தேன், பூவிதழ், மலர்), ஊதுதி – ஊதுகின்றாய். (அருந்துகின்றாய்), தத்துதி – பாய்ந்து செல்கின்றாய். துத்தி – ‘து’ ‘தி’ என, துதைதி – ஒலித்து, துதைந்து – நெருங்கி, அணுகி)

இதன் பொருள்: வண்டே, நீ சுற்றிச் சென்று மகரந்தத்தை ஊதுகின்றாய் மகரந்தத்தை ஊதிய பின்னர்ப் பாய்ந்து செல்கின்றாய். ‘து’ ‘தி’ என ஒலித்து மலர்களை அணுகுகின்றாய்.

சண்ட வெந்தழல்ப சித்த ழன்றுலகு

தன்னை யுண்ணஎழு தன்மைபோல்

கண்ட மொன்பதும் எரிந்தி டத்தெறு

கடுங்கொ ழும்பொறிகள் சிந்தின

கொண்ட லிற்புகை பரந்து சுற்றின

கொடுஞ்சு டர்ப்படு கொழுந்துபோய்

அண்ட முற்றன பரந்த தந்தர

மதற்கும் அப்புறம் எழுந்ததே

(அரிச்சந்திர புராணம் – 557)

பாடலைப் பிரிக்கும் முறை.

வெந்தழல் பசித்து அழன்று உலகு தன்னை

கடும் கொழும் பொறி

பரந்தது அந்தரம் அதற்கும் அப்புறம்

மேற்கூறிய சொற்களை இவ்வாறு பிரித்துப் படித்தால் மட்டுமே பொருள் விளங்குகிறது. இங்ஙனம் பிரிப்பதற்கு யாப்பு இலக்கணம் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் எளிய சொற்களை இயல்பாக இணைத்துக் காட்டுகிற முறையையே எளிய நடை அல்லது புதிய நடை என்கிறோம். இந்த நடையைத் தான் பாரதி பின்பற்றினார்.

பாரதியின் எளிய நடையிலமைந்த பாடலைப் பாருங்கள்.

தேடியுனைச் சரண் அடைந்தேன் தேச முத்துமாரி!

கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரம் தருவாய்

சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி,

பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும்

(தேசமுத்துமாரி – 1,4)

இந்தப் பாடல் யார் காதில் விழுந்தாலும் அவர்கள் அதைப் பாடும் அளவு மக்கள் பேசும் மொழியில் எளிமையாக உள்ளது. இப்போது முன்பு கூறிய பாடல்களுக்கும் பாரதியார் பாடலுக்கும் உள்ள வேறுபாடு புரிகிறதல்லவா? இதுவே பாரதியின் சிறப்புக்கும் வெற்றிக்கும் காரணம்.

பாரதி தாம் சொல்ல வந்த செய்தி மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்தியிருக்கிறார். அவர் சொல்ல வந்த செய்தி : இன்று நாளை என்று நாட்களைத் தள்ளி போடாமல் இன்றே செய்க! இப்போதே செய்க! என்று சொல்லும் அளவிற்கு இன்றியமையாதவை. அவை நாட்டு விடுதலை, சமுதாய முன்னேற்றம் முதலியனவாகும்.

ஆகவே, மக்கள் மொழியில் மிக எளிமையாகப் பாடியதால் அவர் எண்ணம் நிறைவேறியது.

பாட்டின் பொருளுக்கும் வடிவிற்கும் இயைபு உண்டு. உணர்த்தப்படும் பொருளும் அதை உணர்த்தும் வடிவமும் பிரிக்க முடியாதன. கவிதை வடிவ வகையில், தமக்கு முன்னவர்களான இளங்கோவை, கம்பரை, வள்ளுவரை வழிகாட்டியாகக் கொள்கிறார். ஆயினும் தம் புரட்சி நோக்கில் அமைந்த புதுமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாரதியாரின் கவிதைகள் தேசிய கீதங்கள் 60, தோத்திரப் பாடல்கள்-62, ஞானப் பாடல்கள் 30, முப்பெரும் பாடல்கள்-3, சுயசரிதை-8, பிற பாடல்கள் -5, நீதி நூல்கள் – 3, பல்வகைப் பாடல்கள் – 66 வசன கவிதைகள் – 7, பாரதி அறுபத்தாறு என 237 தலைப்புகளில் பாடல்கள் காணப்படுகின்றன. (பாரதியார் கவிதைகள், பூங்கொடி பதிப்பகம், சென்னை, 2001) இவற்றில் வெண்பா, ஆசிரியப்பா போன்ற பாவகைகளும் ஆசிரிய விருத்தம், கலித்துறை, வஞ்சித்துறை ஆகிய பா இனங்களும் கண்ணி, சிந்து, தாழிசை முதலிய இசைப்பாடல் வகைகளும் பயின்று வருகின்றன. இதைப் பற்றி, பாக்களும் பாவினங்களும் (D03121-3124) என்ற பாடத்தில் விரிவாகக் காணலாம்.

பொருளைச் சிறப்பித்துக் கூறப் பாரதி பல்வகைப் பழைய வடிவங்களைக் கையாண்டு அவற்றுள் புதுப்பாடுபொருளைப் புகுத்தியிருக்கிறார்.

நான்மணிமாலை

பாரதியின் விநாயகர் நான்மணி மாலை என்னும் பாடல் அந்தாதி அமைப்பில் (அந்தாதி என்பது இலக்கிய வகைகளில் ஒன்று. ஒரு பாடலின் இறுதி எழுத்து, அசை, சீர், அடி இவற்றில் ஏதேனும் ஒன்று அடுத்த பாடலில் முதலில் வருமாறு பாடுவது அந்தாதி. அந்தம் = முடிவு, ஆதி = தொடக்கம்) 40 பாடல்களில் அமைந்துள்ளது. இதற்கு முன்னோடியான நூல் பட்டினத்தாரின் ‘கோயில் நான்மணிமாலை’ எனக் கொள்ளலாம். கோயில் நான்மணிமாலை சிவபெருமானின் சிறப்புகளைக் கூறும் நிலையில் காணப்படுகிறது. ஆனால் விநாயகர் நான்மணிமாலை வெளிப்படையாக விநாயகர் பெயரில் அமைந்திருந்தாலும் அதன் பாடுபொருள் கவிஞரின் நூறாண்டுவாழ்வு வேண்டல் (7,20) பல சமய இறைவரைக் குறிப்பிடல் (8), தம் தொழிலைக் கூறல் (25), நாட்டைத் துயரின்றி அமைக்கும் நோக்கம் கூறுதல் (28) விடுதலைக்கு இசையாத மனத்தைக் கடிதல் (36) முதலிய பாடுபொருள்களைக் கொண்டதாய், கோயில் நான்மணி மணிமாலையின் பாடுபொருளில் இருந்து வேறுபட்டு விளங்குகிறது.

ஆத்திசூடி

மனிதரை நன்னெறிப் படுத்துவதற்கான ஓரடி நீதிக் கருத்துகளை ஒளவையார் ஆத்திசூடியில் கூறியிருக்கிறார். இதனால் பெரிதும் கவரப்பட்ட பாரதியார் தம் காலத்திற்குத் தேவையான கருத்துகளை ஒளவையார் போன்று புனைந்திருக்கிறார். சில பாடல்களில் ஒளவையாரைப் பின்பற்றியும் சில பாடல்களில் புதுமையைப் புகுத்தியும் கவிதைகளை இயற்றியிருக்கிறார். இது, அவர் வாழ்ந்த கால உணர்வின் எழுச்சியால் ஏற்பட்ட வேறுபாடாகும். பாரதியாரைப் பின்பற்றி, பாரதிதாசன் ஆத்திசூடி பாடியிருக்கிறார். அவருடைய எண்ணப்போக்கு வேறானது. மூன்று ஆத்திசூடிகளும் பொருளில் வேறுபடுகின்றன. ஏனெனில் ஒவ்வொன்றும் அந்தந்தக் காலச்சூழலைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றன.

ஒளவையார் தம்முடைய இறைவாழ்த்துப் பாடலில் சிவபெருமானை வணங்குகிறார். ஆனால் சமயப் பொது நோக்குக் கொண்ட பாரதியார், எல்லாக் கடவுளர் தம் ஆசியையும் வேண்டிப் பாடுகிறார். இது பல பெயர்களில் வழங்கப்படும் பரம்பொருள் ஒன்று என்ற அவருடைய மனத்தைப் பிரதிபலிக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாத பாரதிதாசன் எந்தக் கடவுளையும் வாழ்த்திப் பாடவில்லை.

ஒளவையார் ‘ஆறுவது சினம்’ (2) என்று சினத்தை அடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆனால் பாரதியார் ‘ரௌத்திரம் பழகு’ (96) என்று சினம் கொள்ளத் தெரியவேண்டும் என்கிறார். ஒளவையார் போர்த்தொழில் புரியேல் (88) என்கிறார். பாரதியார் போர்த்தொழில் பழகு (74) என்று போர்முனையில் போரிட நாட்டு மக்களை ஊக்குவிக்கிறார். அரசியல் போரில் இந்தியா இறங்கி விட்டது. அதிலிருந்து விலகி நிற்பதில் பயன் இல்லை, விலகி நிற்க இயலாது. நாட்டு விடுதலைப் போரில் வீரமுடன் போராட வேண்டும். எனவே போர்க் கொடியை உயர்த்துமாறு பாரதியார் நாட்டு மக்களை வேண்டுவது அக்காலச் சூழலுக்குத் தேவை அல்லவா?

ஆறுவது சினம் x ரௌத்திரம் பழகு போர்த்தொழில்புரியேல் x போர்த்தொழில்பழகு

பழ மரபை நன்குணர்ந்த பாரதியார், அதனைக் கண்ணை மூடிக் கொண்டு பாராட்டுவதில்லை. பயன் உள்ளதாக இருக்குமாயின் பழைய மரபை மதித்தல் வேண்டும் அல்லது அவற்றைக் கைவிடத் தயங்கக் கூடாது என்பது அவர் எண்ணம்.

பாரதியார் தாசனாக விளங்கிய பாரதிதாசன் உலகியல் கண்ணோட்டத்தில் உலகைப் பார்க்கிறார். அவர் இவ்வுலக வாழ்வில் மக்களுக்கு மகிழ்ச்சியான செயல் செய்தால் போதுமானது என்று எண்ணுகிறார்.

குள்ள நினைவு தீர் 17 (தாழ்ந்த எண்ணங்களை நீக்கி விடுக) என்றும் கைம்மை அகற்று 21 (விதவை நிலையை நீக்கு) என்றும் பாடுகிறார் பாரதிதாசன். பாரதியாரிடம் இருந்த சமய உணர்ச்சியோ உயர்ந்த அறக்கருத்துகளோ பாரதிதாசன் கொண்டிருக்கவில்லை. அவருடைய கொள்கைகள் எல்லாம் உலகியல் வாழ்விற்குத் தேவையானதைக் குறிப்பிடுவதேயாகும். ஏனெனில் அவருடைய பாடல்களில் சமுதாய முன்னேற்றமே மையமாக இருந்தது.

திருப்பள்ளி எழுச்சி

பாரதியார் பாடிய பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி என்ற பாடல் எண்சீர் ஆசிரிய விருத்தத்தால் ஆனது. இது மாணிக்க வாசகர் சிவபெருமானைப் பள்ளி எழுந்தருளுமாறு பாடிய திருப்பள்ளி எழுச்சி என்னும் இலக்கிய வகை போன்றது. பாரதியார்,

நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்

நெஞ்சகத்து ஆவலை நீஅறி யாயோ?

இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?

இன்னுயி ரேபள்ளி எழுந்தரு ளாயே!

(பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி – 14)

என்று பாரத மாதாவைத் துயில் உணர்த்துகிறார். இப்பாடல் பாரதியின் சுதந்திர வேட்கையைக் காட்டுகிறது.

பாரத நாட்டின் அனைத்து மாநில மக்களும் சுதந்திரத்திற்காகப் போராடும் நிலையை,

விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி

வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்

(பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி – 5)

(விதம் = வகை)

என்றும்,

பொங்கியது எங்கும் சுதந்திர நாதம்

(பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி – 2)

என்றும் விளக்குகின்றார்.

காவியம்

மகாபாரதக் கதையின் ஒரு பகுதியை எடுத்துப் புதுப்பொலிவு கொடுத்துப் பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தை இயற்றியிருக்கிறார் பாரதி. அது, காவியக் கதையைக் கருவாகக் கொண்டு இருந்தாலும் இந்திய நாட்டின் அரசியல் பின்னணி அதில் அடங்கி உள்ளது. ‘பாஞ்சாலி’யை, பாரத அன்னையாக உருவகித்துள்ளார். அவள் விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கில் அமைந்திருக்கிறது பாஞ்சாலி சபதம். மேலும் விரிவாக வேண்டுமெனில் பார்க்க. (Co114) : பாரதியாரின் முப்பெரும் பாடல்கள்.

இவை தவிரக் கும்மி, கோணங்கி முதலிய நாட்டுப்புறப் பாடல் அமைப்பிலும் பாரதியார் பாடல்கள் இயற்றியிருக்கிறார்.

புது வடிவமும் பழைய பாடுபொருளும் தமிழ்க் கவிதை உலகில் புதுமை படைத்தவர் பாரதி. தாம் புதுமைப் படைப்பாளர் என்பதை,

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,

சொல்புதிது, சோதி மிக்க

நவகவிதை எந்நாளும் அழியாத

மகா கவிதை யென்று நன்கு

(ஓலைத்தூக்கு – 3)

என்ற பாடலில் புதிய சுவையுடன் புதிய பொருள் கொண்ட எந்நாளும் அழியாத கவிதையைத் தாம் பாடப் போவதாகப் பாரதி குறிப்பிடுகிறார். பாரதியார், சொற்களைவிடப் பாடல் உணர்த்தும் பொருளையே பெரிதாகக் கருதியதை அவருடைய பாடல்கள் காட்டுகின்றன.

பாரதியார் தமிழில் கவிப்புலமை பெற்றிருந்தது போலவே இசையிலும் புலமை பெற்று விளங்கியிருக்கிறார்.

இவருடைய பாடல்கள் சிலவற்றில் ராகம், பல்லவி, தாளம் என்பதற்கு இவர் அத்துணையாக மதிப்பளிக்கவில்லை. தம் பாடல்களுக்கு இவர் குறித்துள்ள ராகம் அப்பாடலின் கருத்து எந்த ராகத்தில் பாடினால் நன்றாக வெளிப்படும் என்று எண்ணிக் குறிக்கப்பட்டதாகும். இவ்வாறு ராகம் குறித்த முறை கருத்துத் தழுவிய புதிய முறையாகும் என்பார் வசந்தா இராமநாதன். (கவியுலகக் கதிரவன் பாரதி, பக். 31)

சுயசரிதை

ஒருவர் தம் சொந்த அனுபவங்களை உணர்ச்சிப் பெருக்குடன் விவரித்துச் சொல்வது சுயசரிதையாகும். தமிழிலே பலர் சுயசரிதையை எழுதியிருக்கின்றனர். அவர்கள் தம் சுய சரிதையை வெளியிட மேற்கொண்ட வடிவம் உரைநடையாகும். ஆனால் பாரதியோ தம் சுயசரிதையைக் கவிதை வடிவில் தந்திருக்கிறார். சுயசரிதையைக் கவிதை வடிவில் பாடிய முதல் கவிஞர் பாரதி தான் என்பார் சிலம்புச் செல்வர் மா. பொ. சிவஞானம் (பாரதியாரின் பாதையிலே, பக்: 75) இது ஆசிரியப்பாவின் இனமான ஆசிரிய விருத்தத்தால் ஆனது: ஒவ்வொரு அடியிலும் எட்டுச் சீர்கள் உள்ளன. 49 பாடல்களைக் கொண்டது.

பெரும்பான்மையான சுயசரிதைகளில் எழுதுபவரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளே காணப்படும். ஆனால் பாரதியாரின் சுயசரிதையின் மூலம் அந்நியர் ஆட்சியின் விளைவால் தனிமனிதனுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு, சமுதாய நிலை முதலியனவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. பார்க்க (C0111: பாரதியாரின் வாழ்க்கைச் சித்திரம்) சுயசரிதையில், கனவு, முன்னுரை, பிள்ளைக்காதல், ஆங்கிலப் பயிற்சி, மணம், தந்தை வறுமை எய்திடல், பொருள் பெருமை, முடிவுரை ஆகிய தலைப்புகளின் கீழ் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பாரதியாரின் தந்தை ஒரு பருத்தி அரவை ஆலை தொடங்கினார். ஆங்கிலேயருடன் போட்டியிட முடியாமல் அவர் தோல்வி அடைந்து பணத்தை இழந்த நிலையை,

ஈங்கு இதற்கிடை எந்தை பெருந்துயர்

எய்தி நின்றனன் தீய வறுமையால்

ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும்

ஊணர் செய்த சதியில் இழந்தனன்

(சுயசரிதை -39)

(ஊணர் = ஆங்கிலேயர்)

என்று விளக்குகிறார். ஆங்கிலேயரின் ஆதிக்கம் நாட்டை மட்டுமன்றித் தனி நபரையும் பாதித்ததைக் காட்டுகிறது.

தாய்மொழி மறந்து ஆங்கில மொழி நாட்டு மொழியாகி அதைக் கற்க வேண்டி வந்த நிலையை நினைத்து,

நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்

நேரு மாறென எந்தை பணித்தனன்

(சுயசரிதை – 21)

என்று வருந்துகிறார் பாரதி.

பாலருந்தும் பருவத்துக் குழந்தைகளை மணம் செய்து கொடுக்கும் கொடுமையைச் சாடுகிறார் (சுயசரிதை. 34)

அவருடைய தந்தை போனபின் அவர் குடும்பத்தில் வறுமை சூழ்ந்தது. அப்போது பொருளின் தேவையை உணர்ந்த பாரதி ‘பொருளி லார்க்கிலை இவ்வுலகு’ (43) என்ற வள்ளுவர் கூற்றை நினைவு கூர்கிறார்.

இங்ஙனம் பாரதியின் சுயசரிதை அவருடைய வாழ்க்கைப் பின்னணியை மட்டுமன்றி, அக்காலச் சமுதாயத்தைப் பற்றியும் விளக்குகிறது.

புது வடிவமும் புதுப்பாடுபொருளும் வசன கவிதை

தமிழ்க் கவிதை உலகில் புரட்சிகரமான முறையில் ‘வசன கவிதை’ என்னும் ஒரு புதிய கவிதை வடிவத்தைப் பாரதியார் அறிமுகம் செய்கின்றார். இது உரைநடையுமல்லாமல் செய்யுள் நடையுமல்லாமல் ஆங்கில வசன கவிதையை (blank verse) ஒட்டியது. இதற்கு மூலமாகவும் தூண்டுதலாகவும் அமைந்தது அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மனின் புல்லின் இதழ்கள் (Leaves of grass) என்ற கவிதையாகும். வசன கவிதை சந்தயாப்பு எதுவும் இல்லாமல் உரைநடைச் சொற்களை அடுக்கி அமைத்த வடிவமாகக் காணப்படுகிறது. இது இக்காலத்துப் புதுக் கவிதையின் அமைப்பில் உள்ளது. புதுக்கவிதைக்கு வித்திட்டவர் பாரதி எனக் கொள்ளலாம்.

வசன கவிதையில் காட்சி, சக்தி, காற்று, கடல், ஜகத் சித்திரம், விடுதலை, தந்தையும் மகனும் கடவுளும் என்ற தலைப்புகள் பாடுபொருள்களாக விளங்குகின்றன. கடல், காற்று முதலியவை பற்றிக் காப்பிய இலக்கியங்கள் கூறினாலும் அவற்றின் சக்தி முதலியவை பற்றி பாரதி போல் வேறு யாரும் பாடியதில்லை. மேலும், அவர் தத்துவக் கருத்துகளையும் ஆங்காங்கே கூறிச் செல்கிறார். பாரதியார், காட்சி என்ற தலைப்பில் இன்பம், ஞாயிறு என்னும் இரு பிரிவுகளைக் கூறி, உலகமும் உலகில் உள்ள அனைத்தும் இன்பம் பயப்பது என்று காட்டுகிறார். அதற்குச் சான்றாக,

உணர்வே, நீ வாழ்க, நீ ஒன்று, நீ ஒளி

நீ ஒன்று, நீ பல

நீ நட்பு நீ பகை

நன்றும், தீதும் நீ

நீ அமுதம், நீ சுவை, நீ நன்று, நீ இன்பம்

(வசன கவிதை, காட்சி, இன்பம்: 7)

என்னும் பாடல் விளங்குகிறது. ஞாயிறு உலகிற்கு ஒளியும் வெம்மையும் மட்டுமன்றி மழையும் பொழிவதைக் காட்டுகிறார் பாரதி.

தமிழ் இலக்கியங்களில் ஞாயிறு பற்றிய செய்திகள் பல கோணங்களில் கூறப்பட்டுள்ளன. உயிர் வாழ ஞாயிற்றின் ஒளி தேவை. பாரதி ஞாயிறு பற்றிக் கூறுவதைக் கேளுங்கள்.

ஞாயிறு,

நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி

மின்னல், இரத்தினம், கனல், தீக்கொழுந்து

இவையெல்லாம் நினது நிகழ்ச்சி,

நீ சுடுகின்றாய், வாழ்க; நீ காட்டுகின்றாய் வாழ்க

உயிர் தருகின்றாய் உடல் தருகின்றாய்!

நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க!

(வசன கவிதை, ஞாயிறு-2)

என்றெல்லாம் ஞாயிற்றின் குணங்களை எளிமையாகக் குறிப்பிடுகிறார்.

கடலைப் பற்றிப் பாடும் போது பாரதி அதன் அளப்பரிய ஆற்றலைக் காட்டுகிறார். முதல் அடியில்,

கடலே காற்றைப் பரப்புகின்றது. காற்று இல்லையேல் உலகில் உயிர்கள் வாழ இயலாது. அந்தக் காற்றை இயக்கும் மிகப் பெரிய ஆற்றல் கடலுக்கு உண்டு. கடலில் இல்லாத ஆற்றலே இல்லை. எனவே, பாரதி அதை, ‘உயிர்க்கடலில் இருந்து எங்களுக்கு நிறைய உயிர் மழை கொண்டு வா’ என்று காற்றைக் கேட்கிறார்.

கடலில் உள்ள அலைகள் கரைப்பகுதியை நோக்கி வரும்போது அவை திரட்டிக் கொண்டு வருகிற சக்தி, அளவிடற்கரியது. அது நுகரப்படாத திறன் (untapped potential) ஆகும். அத்தகைய திறன் இருப்பதால்தான் அது காற்றை இயக்குகிறது போலும்!

கடல் நீரின் மேற்பரப்பில் படுகிற கதிர் வீச்சால் கடல்நீர் கொதிப்படைகிறது. சூரிய வெப்பத்தைக் கடல் பரப்புச் சேமித்து வைக்கிறது. கொதிப்படைந்த கடல் நீர், நீராவியாக மாறி உலகைக் காக்கும் மழையாகப் பொழிந்து அனைத்து உயிர்களையும் வாழ வைப்பதால் ‘உயிர் மழை’ என்று அழைக்கிறார் பாரதி.

ஞாயிறு, சக்தி, காற்று, கடல் முதலியவை ஆற்றல் உள்ளவை. ஆற்றல் உள்ள அனைத்தும் உயிருடையவை என்பது பாரதியின் எண்ணம். ஆகவே ஞாயிறு, சக்தி முதலியவற்றிற்கு உயிர் உண்டு.

ஜகத் சித்திரம் என்னும் தலைப்பில் உள்ள வசன கவிதையில் உலகில் உள்ள வானம், மலை, குயில், கிளி முதலியன இன்பமாக இருக்க மனம் மட்டும் துன்பமாக இருப்பதைக் கூறிக் கலங்குகிறார். அதை மாற்ற விரும்பி அவர் பறவைகளை அழைப்பது, எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதைக் காட்டுகிறது. ஸர்வ நாராயண ஸித்தாந்தத்தின் முடிவு எல்லாம் ஒன்றுக்கொன்று சமம் என்பதை எடுத்துரைக்கிறார். உலகில் தற்கொலை செய்வது பெரிய குற்றம் என்பதையும் கூறிச் செல்கிறார் பாரதி.

இவ்வாறு வசன கவிதையில் பாரதி புதுமையைப் புகுத்தியிருப்பதை நீங்கள் காணலாம்.

தொகுப்புரை

தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதிய யுகத்தைப் பாரதி தோற்றுவித்த செய்திகள் இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அவர், முந்தைய புலவர்கள் பாடிய வடிவத்தையும் பாடு பொருளையும் மனத்தில் கொண்டு பாடியிருப்பது புலனாகிறது. பழைய வடிவங்களில் காலத்திற்கு ஏற்பப் புதுப் பாடு பொருள்களைக் கொண்டும் பாடல்கள் பாடியிருப்பது தெரிய வருகிறது. அவை நாடு, கொடி, சுதந்திரம் ஒற்றுமை, பெண்கள் முன்னேற்றம், சாதி சமய ஒழிப்பு, உலகியல் வாழ்வுக்கான அறிவுரை முதலியனவாகும். அவர் புதிதாகப் படைத்த யாப்பு வடிவங்களான வசன கவிதை, சுய சரிதை ஆகியவை பற்றியும் விளக்கிக் கூறும் முயற்சி இந்தப் பாடத்தில் மேற்கொள்ளப்பட்டது. பாரதியாரின் பாடல்களின் தாக்கத்தினால் தோன்றிய புலவர்களில் சிலரையும் இனம் காட்டுகிறது.

பாடம் - 6

பாரதியார் வாழ்கிறார்

பாடமுன்னுரை

உடம்பைப் பொய்யென்று கூறும்,

காயமே இது பொய்யடா – வெறும்

காற்றடைத்த பையடா!

(சித்தர் பாடல்)

(காயம் = உடம்பு)

என்ற இந்தக் கருத்துச் சரியானதா? பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லக் கழிந்து போவது தான் வாழ்வின் இலக்கணமா? நீரிற் குமிழி, நீர்மேல் எழுத்து என்றெல்லாம் சொல்லத் தக்கதுதான் நம் உடம்பா? எலும்பும் சதையும், குருதியும் நரம்பும் கொண்டு அமைந்த இவ்வுடல் பரிணாமத்தின் ஒரு குறியீடு. வளர்ச்சியில் இவ்வுடல் அழிவதும் உண்மையே. ஆனால் இத்தகைய அழியக் கூடிய உடம்பைக் கொண்டு எண்ணற்ற மனிதர்கள், பலப்பல அழியாத, நிலையான செயல்களைச் செய்துள்ளார்களே! கோபர்னிகஸ், கலீலியோ, நியூட்டன், டார்வின், ஐன்ஸ்டீன் என்ற அறிவியல் அறிஞர்களும், அலெக்சாண்டர், அக்பர், சிவாஜி, நெப்போலியன், விக்டோரியா அரசியார், ஜான்சிராணி போன்ற மாவீரர்களும், திருவள்ளுவர், சாணக்கியர், மாக்கியவெல்லி, பிளேட்டோ, அரிஸ்டாடில், வால்டேர், ரூசோ போன்ற அரசியல் மேதைகளும், கௌதமபுத்தர், மகாவீரர், கன்பூசியஸ், இயேசுகிறிஸ்து, முகமது நபி, விவேகானந்தர் போன்ற சமய ஞானிகளும், ஆபிரகாம் லிங்கன், அண்ணல் காந்தியடிகள், மார்ட்டின் லூதர் கிங் போன்ற சான்றாண்மைச் செல்வர்களும் இறந்து விட்டார்களா? இவர்களுடைய முகங்களும், எழுத்துகளும் பேச்சுகளும் மக்கள் நினைவிலிருந்து மறைந்து விட்டனவா? இல்லை. இவர்கள் வாழ்கிறார்கள்; என்றும் வாழ்வார்கள்.

செவியினால் நுகரப்படும் அறிவுப்பொருள்களின் சுவைகளை உணராமல், வாயினால் உண்ணப்படும் உணவிலேயே ஆர்வம் காட்டும் மக்களால் இந்த உலகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. அவர்கள் வாழ்ந்தாலும் வாழ்ந்தவர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்

( குறள் : 420)

(மாக்கள் = மக்கள், அவியினும் = அழிந்தாலும், என் = என்ன)

உண்டு உடுத்து உறங்கிப் பின் இறந்துபடும் எண்ணற்றவர் இருப்பினும் இல்லாது போயினும் ஒன்றே அல்லவா? எனவே மனித வாழ்வு நிலையற்றது தான். எனினும், அதனைக் கருவியாகக் கொண்டு அரியன செய்து சாகாத்தன்மை பெறலாம் என அறிகிறோம். இதற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்பவர் பாரதியார். அவர் இன்றும் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது பற்றிய செய்திகள் இப்பாடத்தில் கூறப்படுகின்றன.

மனித வாழ்வு

ஒருவர் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையில், இடையில் உள்ள காலப்பகுதியை வாழ்க்கை என்று கூறுகிறோம். உயிரோடு இருப்பது மட்டுமல்லாமல், உயிர்ப்போடு இருப்பது தான் வாழ்வு என்று குறிப்பிடப்படுகிறது. இது பொருள் பொதிந்ததாக இருப்பது தான் உயிர்ப்பு எனப்படும். பொருள் என்பது குறிக்கோளை மேற்கொண்டிருப்பதாகும். இந்தக் குறிக்கோளை முடிவு செய்ய, நமது உடல் பற்றியும் நாம் வாழும் உலகம் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

நிலையும் நிலையின்மையும் ‘வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம்’ என்ற நிலையில்லாமை உடம்புக்கே உரியது. பொய் உடம்பு கொண்டு ஈட்டும் புகழுடம்பு நிலையானது.

புகழ் உடம்பு முழுமை அடையும் போது, பூத உடம்பு அழிந்து விடும். இது அறிவு ஆற்றல் உடையவர்க்கே அமையும் என்பதனை,

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது

(குறள் :235)

(நத்தம் = ஆக்கம், சாக்காடு = சாதல், வித்தகர் = அறிவு ஆற்றல் உடையவர்)

என்றார் திருவள்ளுவர். நிலையின்மைக்குள் ஒரு நிலைபேறு உண்டாக்கும் ஆற்றல் சிலருக்கு வாய்க்கின்றது. அவர்கள் தங்கள் உடம்பு அழிந்த பின்னும் வாழ்கின்றனர்.

சிலரே வாழ்கின்றனர் கோடிக்கணக்கான மனிதர்களில் சிலரே அவர்கள் இறந்த பின்னரும் மக்கள் மனத்தில் நிலைத்து வாழ்ந்து வருகின்றனர். பலப்பல தலைமுறைகள் சென்ற பின்னும் நினைந்து போற்றப்பெறுகின்றனர். அதற்குக் காரணம் யாது? அவர்கள் தம்மை நினையாது வாழ்ந்தமையே. பிறருக்காக வாழ்ந்தவர்கள் பெருமை பெற்றார்கள். நினைக்கப் பெற்றார்கள்.

நல்லோர் இமயமலையைப் போல், நெடுந்தூரத்திலிருந்தே

பிரகாசிக்கின்றனர்; ஆனால் தீயோர் இரவின் இருளூடு

எய்த அம்புகளைப் போல், கண்ணுக்கே புலனாவதில்லை.

(தம்ம பதம், 21-15)

என்கிறார் புத்தர். ‘மனிதர் பலர் மடிந்தனர்; பார்மீது நான் சாகாதிருப்பேன்’ என்கிறார் பாரதி. வாழும் சிலரில், பாரதி ஒருவராகத் திகழ்கின்றார்.

பொய் உடம்பும் புகழ் உடம்பும் மனிதனின் பூத உடம்பு வீழ்வதாகிய சாவும் ஓர் இயற்கை நிகழ்வேயாம். ஆனால் வாழும் காலத்துச் செய்யும் அருஞ்செயல்களால், தசை உடம்பாகிய பொய் உடம்பு வீழ்ந்த பின்னும், புகழ் உடம்பாகிய மெய் உடம்பு பெற்று விடுகின்றனர் மனிதரில் மிகச் சிலர். இப்புகழ் உடம்பிற்கு எந்த ஊழியிலும் முடிவு என்பது இல்லை.

உலகம் நிலை இல்லாத ஒன்று. நேற்று உயிரோடு இருந்த ஒருவர் இன்று உயிரோடு இல்லை என்பது தான் உலகத்தின் இயல்பாக உள்ளது என்பதனை,

நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ்உலகு

(குறள் : 336)

(நெருநல் = நேற்று)

என்று பூத உடம்பாகிய பொய் உடம்பைக் குறித்து வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

மேலும், மேற்குறிப்பிட்டவாறுள்ள நிலையில்லாத உலகத்து நிலைத்து நிற்பது புகழ் ஒன்றே என்பதனை,

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்

பொன்றாது நிற்பது ஒன்று இல்

(குறள் : 233)

(ஒன்றா = தனக்கு இணையில்லாத, பொன்றாது = இறவாது)

என்று புகழுடம்பாகிய மெய் உடம்பு குறித்து வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

பாரதி பெற்ற நிலைபேறு முப்பத்தொன்பது ஆண்டுகளே மண்ணுலகில் வாழ்ந்த பாரதி நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்த மனிதர்களும் பெற முடியாத புகழையும், நிலைபேற்றையும் பெற்றுவிட்டார்.

காலா! உனை நான் சிறுபுல்லென மதிக்கிறேன்; என்றன்

காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்

(காலனுக்கு உரைத்தல்)

என்றும்,

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்

பலர்புகழ் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;

பார்மீது நான்சாகா திருப்பேன் காண்பீர்!

(பாரதி அறுபத்தி ஆறு – 6)

என்றும் கூறியது மெய்யாகி விட்டது. அவருடைய எலும்பையும் தோலையுமே காலன் கவர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் அமரகவி இசைத்த கவிதைகள்….

சாதிகள் இல்லையடி பாப்பா….

செந்தமிழ் நாடென்னும் போதினிலே…..

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி…..

சிந்துநதியின் மிசை நிலவினிலே…..

நெஞ்சு பொறுக்கு திலையே….

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்…

யாமறிந்த மொழிகளிலே…..

பாயுமொளி நீயெனக்கு….

சின்னஞ்சிறு கிளியே….

இப்படி எத்தனையோ பாடல்கள் நம் செவியில் காலங் காலமாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பட்டம் பெறுவது வரையில் பாரதி பலராலும் கற்கப் பெறுகிறார். தேசிய ஒருமைப்பாட்டின் குரலையும், தமிழ்மொழியின் எதிர்கால வளர்ச்சியையும், பொதுவுடைமைக் குறிக்கோளையும், உலகளாவிய மனிதநேயத்தையும் இன்று உலகின் பல திசைகளிலிருந்தும் பாரதியின் பாட்டு எதிரொலிக்கின்றது.

பாரதி வாழ்ந்த சூழல்

பாரதி எட்டயபுரத்தில் பிறந்தார். திருநெல்வேலியில் பயின்றார். காசிக்குச் சென்றார். பிறகு எட்டயபுரம் திரும்பி வந்தார். மதுரையில் சில திங்கள் தமிழாசிரியராகப் பணி செய்தார். சென்னையில் நான்காண்டுகள் பத்திரிகைப் பணியாற்றினார். 1908 முதல் பத்தாண்டுகள் புதுவையில் தங்கி

எழுத்துப்பணி பல செய்தார். 1918-இல் கடையத்திற்குச் சென்று பின் மீண்டும் சென்னைக்குத் திரும்பினார், 1921-இல் பாரதி இறந்து விட்டார். பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியும், புதுவையில் பிரெஞ்சுக்காரர் ஆட்சியும் இருந்தன. பொதுநிலையில் தமிழகத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் புதுவையிலும் ஒரே வகையான சூழலே நிலவியது.

எழுத்தறிவில்லாத பெரும்பான்மை மக்கள்.

வறுமையில் பழகிய சமூகம்.

எந்தக் கொடுமையையும் இழிவையும் தலைவிதி என ஏற்கப் பழகிய மனப்பாங்கு கொண்ட குடிமக்கள்.

மூடப் பழக்கங்களும் மூட நம்பிக்கைகளும் மலிந்த வாழ்க்கை முறை.

அச்சத்தில் உரிமைகளை வேண்டாத மனநிலை.

தம்முடைய உடைமைகளைப் பாதுகாக்க அறியாத மடமை.

தம் நாட்டை யார் ஆண்டால் என்ன என்ற கவலையற்ற உளப்போக்கு

புதுமை, புரட்சி, சீர்திருத்தம் ஆகிய எவற்றுக்கும் இடமின்றி வளர்ந்த பத்தாம் பசலி எண்ணங்கள்.

இவையே அக்காலச் சூழலில் குறிக்கத்தக்க பண்புகள். அக்கால இலக்கிய முயற்சிகள் எல்லாம் கடவுளையும், செல்வந்தர்களையுமே குறித்து அமைந்தன. இந்தச் சூழலில் தோன்றிய பாரதி ஓர் எதிர் நீச்சல்காரராக உருவெடுத்தார்.

எட்டயபுரத்தில் வாழ்நாள் முடிந்த பின்னரும் ஒருவர் ‘வாழ்கிறார்’ என்று கூறப்பட வேண்டுமாயின் அவருடைய வாழ்வில் அதற்குரிய அடித்தளங்கள் அமைந்திருக்க வேண்டும். எட்டயபுரத்தில் வாழ்கின்ற போதே,

தாய்மொழிக் காதல்

நாட்டுப்பற்று

மன்னரையும் செல்வந்தரையும் மதிக்காத சுயமரியாதை உணர்வு

ஆகியன அவரிடத்தில் அமைந்திருந்தன. தம்மை ஆங்கிலக் கல்விக்கு உட்படுத்தியமை குறித்துக் கூறும் போது,

வாதும் பொய்மையும் என்றவி லங்கினம்

வாழும் வெங்குகைக்கு என்னை வழங்கினன்

(சுயசரிதை. 27)

(வாது = வீண் விவாதம், வெங்குகை = கொடிய குகை)

என்று கூறக் காணலாம். இத்தகைய உணர்ச்சியைக் கொண்ட மனிதன் விடுதலைப் பண் பாடுகின்ற வானம்பாடியாக மலர்ந்ததில் வியப்பில்லை. பொருள் செய்வதையே நோக்கமாகக் கொண்ட தந்தை; பாரதி ஐந்து வயதுச் சிறுவனாய் இருக்கும் போதே உயிர்நீத்த தாய்; சிருங்காரச் சுவையில் ஈடுபட்டு அத்தகைய இலக்கியங்களைச் சுவைப்பதே வாழ்வெனக் கருதிய மன்னர்; தூதும் அந்தாதியும் கலம்பகமும் (சிற்றிலக்கிய வகைகள் – இவை பற்றிய விளக்கம் சிற்றிலக்கியம் குறித்த பாடத்தில் காண்க) பாடிப் பரிசில் பெற்றுக் கொண்டிருந்த புலவர் கூட்டம் என்ற சூழலில் வாழ்ந்த பாரதியின் வாழ்க்கையில் மேலும் துன்பங்கள் ஏற்பட்டன. இதனை,

தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது;

தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர்

சிந்தையில் தெளிவில்லை; உடலினில்

திறனுமில்லை; உரன் உளத்தில்லையால்

மந்தர் பாற் பொருள் போக்கிப் பயின்றதாம்

மடமைக் கல்வியால் மண்ணும் பயனிலை

எந்த மார்க்கமும் தோன்றிலது என் செய்கேன்?

ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?

(சுய, 46)

என்று குறிப்பிடுகின்றார்.

(பாழ்மிடி = பாழான வறுமை, தரணி = உலகம், உரன் = வலிமை, மந்தர் = அறிவு குறைந்தவர், மார்க்கம் = வழி)

தந்தையும் இறந்து விட்டார். தமக்கு ஆறுதல் கூறுவதற்கு யாருமில்லை. அதனால் மனக்குழப்பம், உடலிலும் உள்ளத்திலும் வலிமை இல்லை. கல்வியினாலும் பயனில்லை. வழி எதுவும் தெரியாமல் இருக்கும் நான் ஏன் பிறந்தேனோ என வருந்துகிறார் பாரதியார்.

ஆனாலும் இந்தத் துன்பங்கள் பாரதியின் குறிக்கோள் மிக்க வாழ்க்கைப் பயணத்தை மாற்றவில்லை. எட்டயபுரத்திலிருந்து பாட்டுக்குயில் சென்னைக்குப் பறக்கின்றது.

சென்னையில் பாரதியார் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து ஆற்றிய பணி, சென்னை வாழ்க்கை, இந்தியா வாரப் பத்திரிகைப்பணி சூரத்நகரில் நிகழ்ந்த காங்கிரஸ்மாநாட்டுப் பணி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகள் ஆகியன பாரதியின் புகழைப் பெருக வைத்தன. மிதவாதியான கிருஷ்ணசாமி ஐயர் பாரதியின் ‘சுதேச கீதங்களை’ உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார். பின்பு 1908-இல் ‘ஸ்வதேச கீதங்கள்’ என்ற தலைப்பில் பதினாறு பாடல்கள் பாரதியாரால் வெளியிடப் பெறுகின்றன. 23.1.1908 அன்று சுதேசமித்திரன் ஏட்டில் வந்த விளம்பரத்தைச் சீனி. விசுவநாதன் அப்படியே தருகிறார். அது கீழ்வருமாறு:

விபின் சந்திர பாலர், தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை முடிவுற்று விடுதலை பெற்ற நாளைச் சென்னையில் பாரதி பெருவிழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். இந்திய விடுதலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க இந்த நிகழ்ச்சிக்குப் பாரதியாரே தலைமை தாங்கினார். பாரதியாரின் நினைவை அழியாமல் போற்றும் இந்த நிகழ்வைக் குறித்து, அவர் 7.3.1908-இல் சுதேசமித்திரனில் வெளியிட்ட அறிக்கையே கூறுவதைக் கேட்கலாம்.

நாளது பிலவங்க வருஷம் மாசி மாதம் 27-ந் தேதி திங்கட்கிழமையன்று (9.3.1908) மகரிஷி பாலர் தமது யாகத்தைமுடித்து விட்டுக் காரியத்தை நிறைவேற்ற வருகிற புண்ணியதினம்.

அன்று நடைபெறும் ஊர்கோலம் முதலியவைகளைச் சிறப்பாய் நடத்த மயிலாப்பூர் மகாஜனங்களின் உதவி அவசியமாதலால், அவர்கள் (மாணவர்கள் உட்பட) தாங்களாகவே மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில் தெரு, 8 நெ. கதவு இலக்கமுள்ள ஜாதீய பிரதம பாடசாலையிலாவது, தலையாரித் தெரு, 10 நெ. வீட்டிலாவது வாலண்டியராகப் பதிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

(மகாகவி பாரதி வரலாறு, பக்.307)

இந்தக் கூட்டத்தில் 20,000 பேர் கலந்து கொண்டதாகக் காவல்துறைக் குறிப்புக் கூறுகின்றது. சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் பாரதி பேசிய பேச்சு விடுதலைக் கனலை எழுப்புவதாக அமைந்தது. காவல்துறையிலிருந்து பெற்ற அப்பேச்சைச் சீனி.விசுவநாதன் அளிப்பதைக் காணலாம்.

கனவான்களே! அன்றாடம் மக்கள் சிறைக்கு அனுப்பப்படுவதும் விடுதலை செய்யப்படுவதும் காணவும் கேட்கவும் செய்கின்றீர்கள். ஆனால் நீங்கள் அவற்றைப் பற்றி அக்கறை படுவதில்லை. பின் ஏன் இன்று இங்குக்கூடிஇருக்கிறீர்கள் ? ஒரு மகாராஜாவையோ, பெருத்த விருது பெற்றவரையோ மதிக்கும் பொருட்டு இங்கு நீங்கள் வரவில்லை. விபின் சந்திர பாலர் விடுதலை பெற்றதைக் கொண்டாடவே கூடி இருக்கிறீர்கள்.

பாலர்அவர்களின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு நாம் இங்கு வரவில்லை. சுயராஜ்யத்தில்- தாய்நாட்டுப் பற்றில் -நம்பிக்கை வைத்திருப்பதால் இங்கே கூடி இருக்கிறோம்.

நம் தேச நலனுக்காக நாம் பாடுபட்டு வருகிறோம். பாலர் அவர்களும் இவை போன்ற கருத்துடையவர். இவை பொருட்டு எழுந்த துன்பங்களை யெல்லாம் அனுபவித்திருக்கிறார். நாமும் நம் சக்திக்கு இயன்றவரை சுயராஜ்ய கொள்கைக்காகவும், தேசப்பற்றுக்காகவும் துன்பங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகவே, நாம் அனைவரும் ஒன்று கூடிச் சுதேசிய சுயராஜ்யக் கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படவோ – போராடவோ முன்வர வேண்டும்.

(அரசாணை எண் 923 (நீதித் துறை) நாள் 4-7-1908)

(மகாகவி பாரதி வரலாறு பக்.311)

இத்தகைய அச்சமின்மையே இந்திய விடுதலைப் போரினை உருவாக்கியது. அந்நிய அரசின் அடக்குமுறை பாரதியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உச்சிமீது வான் இடிந்து வீழினும் அச்சமில்லை என்ற கவிஞர் அவர். சாக்ரடீசுக்கும், திருநாவுக்கரசர்க்கும், காந்தி அண்ணலுக்கும் இந்த அச்சமின்மை இருந்தது. பேரரசுகளுக்கு அறைகூவல் விடுக்கும் இந்தப் பேராண்மையினால், பாரதியின் பெயர் விடுதலை வரலாற்றில் நிலைத்து விட்டது. சென்னையில் இதனைப் போல நிகழ்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பாரதியின் ஆளுமை வெளிப்பட்டது. விடுதலை வரலாற்றில் கவிஞர்கள் உணர்ச்சி பொங்கப் பாடுவார்கள்; சற்று மிகுதியாகப் போனால், இயக்கக்கிளர்ச்சிகளில் பங்கேற்பர். ஆனால் பாரதி அதனை முன்னின்று நடத்த வல்லவராக இருந்திருக்கிறார் என்பது கருதத்தக்கது.

தமிழ்நாட்டிலிருந்த காங்கிரஸ் இயக்கத்தோடு கூட அவர் உறவுடையவராக இல்லை; அவர் தாமே ஒரு தனி இயக்கமாக விளங்கினார். எவரிடமும் அனுமதி பெறாமல் நேரே சென்று காந்தியடிகளைக் கண்டு தாம் நடத்தும் கூட்டத்திற்கு வர இயலுமா என்றும் கேட்டார். இந்திய விடுதலை பற்றி எண்ணும் எவரும் பாரதியை விலக்கிவிட முடியாதபடி அவருடைய சுவடு வரலாற்றில் பதிந்துள்ளமையினைக் கண்டுகொள்ளலாம்.

புதுவையில் பாரதியின் பாடல்களில், வேதாந்தப் பாடல்கள், சக்திப்பாடல்கள், பெண்விடுதலைப் பாடல்கள், சுயசரிதை, வசனகவிதை ஆகியனவும் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் என்ற முப்பெரும்பாடல்களும், பாரதி புதுவையில் இருக்கும்போது தான் பாடப்பெற்றன. அரவிந்தர், வ.ராமசாமி, வ.வே.சு.ஐயர், சுரேந்திரநாத் ஆர்யா, பாரதிதாசன், கனகலிங்கம் ஆகியவர்கள் புதுவையில் பாரதியோடு தொடர்புடையவராக இருந்தார்கள்.

படைப்பிலக்கியப் புதுமைகள்

பாரதியார் இன்றும் பேசப்பெறுவதற்குரிய நிலையில் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று அவரது எளிமையான நடை. பாரதிக்கு முன் ‘பாட்டு இலக்கியம்’ இல்லை. செய்யுள் இலக்கியமே இருந்தது. அந்தச் செய்யுளுக்கு உரை இருந்தால்தான் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. செய்யுட்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள் எழுந்தன. எவ்வளவுக் கெவ்வளவு எளிமையாக இல்லாமல் இருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு செய்யுள் இலக்கியம் மதிப்புடையதாகக் கருதப்பட்டது. பாரதிக்கு இந்தக் கருத்து உடன்பாடாக இல்லை. மக்கள் அனைவருக்கும் விளங்கும் எளிய தமிழில் பாட்டு இலக்கியப் படைப்பு இருக்க வேண்டுமென்று பாரதி கருதினார். பாரதியார் புதுவையில் அரவிந்தரிடம் ரிக் வேதப் பாடல்களை முறையாகக் கற்றுக் கொண்டார். அவற்றைத் தமிழில் மிக எளிமையாகப் பாட்டு வடிவத்தில் கொண்டு வந்தார்.

ரிஷிகள் : எங்கள் வேள்விக் கூட மீதில் ஏறுதே தீ! தீ! – இந் நேரம் பங்க முற்றே பேய்க ளோடப் பாயுதே! தீ!தீ! – இந்நேரம்

அசுரர் : தோழரே, நம் ஆவி வேகச் சூழுதே தீ! தீ! – ஐயோ நாம் வாழ வந்த காடு வேக வந்ததே தீ! தீ! – அம்மாவோ!

(அக்னி ஸ்தோமம், 1-2)

மேற்குறிப்பிட்டவாறு அவர் எழுதினார். பாரதியின் இந்த எளிய பாடல்களைக் குறித்துக் கூறுங்கால்,

பாரதியாரை ஒரு மகாகவி ஆக்குவதற்கு மேற்கூறிய பாடல்களே போதும். ஆயினும் அவர் இம்மட்டோடு நின்றுவிடவில்லை, மக்களுக்கு நிரந்தரமான விடுதலையையும், இன்பத்தையும் அளிக்க விரும்பித் தம் ஆத்மானுபவத்தையும் தீர்க்க தரிசனத்தையும் சக்திப் பாடல்களிலும் வேதாந்தப் பாடல்களிலும் மக்கள் பேசும் எளிய நடையில் விளக்கமாகப் பாடியிருக்கிறார்.

(புதுவையில் பாரதி, ப.கோதண்டராமன் பக். – 50)

என்று கூறக் காணலாம். பாரதியின் புதுவை வாழ்க்கை, தமிழில் அவர் பல சோதனை முயற்சிகளை மேற்கொள்ளக் களம் அமைத்துத் தந்தது.

தமிழில் சுயசரிதை

நூலாசிரியர் வரலாறுகள் பல நமக்குக் கிடைப்பதில்லை. தொல்காப்பியர், திருவள்ளுவர் போன்றோரின் வரலாற்றுக் குறிப்புகள் நமக்குக் கிடைக்காமை பேரிழப்பேயாகும். அருமை மிக்க படைப்புகளைச் செய்வோர் தம் வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைப்பதில்லை. இந்த வகையில் பாரதியும் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுமே தங்கள் வாழ்க்கைக் குறிப்பை ஓரளவு வெறும் பாட்டுவடிவில் அமைத்தவர்கள். ‘சுயசரிதை’ என்ற இலக்கிய வகை பாட்டு வடிவில் இவர்களாலேயே தொடங்கி வைக்கப்பெற்றது. பாரதியின் ‘சுயசரிதை’ அவரை இன்றும் வாழும் வரலாற்று மாமனிதராகக் காட்டுகின்றது. திட்டமிட்ட செயல்முறைகளால் தமிழை வளர்க்க முனைவதையும் பாரதியாரின் சுயசரிதை காட்டுகிறது. ஆங்கில ஆட்சி இந்தியாவை விட்டு நீங்கியது. ஆனால் ஆங்கில வழிக் கல்வி இந்தியாவை விட்டு நீங்கியதா? நீங்குமா என்ற வினாவுக்கு உறுதியான விடையைத் தர இயலாது.

புதுவை நிகழ்ச்சிகள்

புதுவை வாழ்க்கையில் எண்ணற்ற நிகழ்ச்சிகள் அவரை நமக்கு நினைவூட்டுகின்றனவாக உள்ளன. கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞருக்கு அவர் பூணூல் போட்டுவிட்டதும், தம்போலா என்ற தோட்டி வீட்டில் போய் உட்கார்ந்து காற்று வாங்கியதும், தேசமுத்து மாரியம்மன் கோயிலில் சென்று பாட்டிசைத்ததும், வசன கவிதைகளுக்கு அடித்தளம் அமைத்ததும், எளிய நிகழ்ச்சிகளல்ல. வரலாற்றில் இவை பெரிய மாற்றங்களையும் திருப்பங்களையும் உண்டாக்கிவிட்டன.

அறைகூவல்கள் பாரதியின் காலத்தில் அவர் கொண்ட குறிக்கோள்களுக்கும் நடத்திய வாழ்க்கை முறைக்கும் நிறைய அறைகூவல்கள் (challenges) இருந்தன.

தமிழ்க் கவிஞர்

தேசிய விடுதலைப் போராட்ட வீரர்

சாதி மதம் பாராதவர்

செல்வத்தையும் பணத்தையும் ஒரு பொருட்டாகக் கருதாதவர்

பெண்களின் உரிமையை வற்புறுத்தியவர்

கட்சி அமைப்புகளுக்குக் கட்டுப்படாதவர்

தமிழைப் பெரிதும் போற்றியவர்

துணிச்சலான பத்திரிகைக்காரர்

இத்தகைய பன்முகப் பண்பு நலம் கொண்ட ஒருவருக்கு அறைகூவல்கள் இருந்தமை வியப்பில்லை. இந்த அறைகூவல்களுக்கு அவர் அஞ்சவில்லை; இவற்றை எதிர் கொள்ள அந்தக் கவிஞன் யாருடைய உதவியையும் நாடியதில்லை. அவர் வழிபாடு செய்த பராசக்தியிடம் கூட அவர் தம் ஆளுமை குன்றாத நிலையிலேயே வேண்டுதல் நிகழ்த்தினார்.

பராசக்தி! இந்த உலகத்தின் ஆத்மா நீ! உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா? . . . . . .

பராசக்தி – உன்னை நான் நம்புவதை முற்றிலும் விட்டு நிச்சயமாக நாஸ்திகனாய் விடுவேன். நீ என்னை அற்பத் தொல்லைகளுக்கு உட்படுத்திக் கொண்டே யிருந்தால். மஹாசக்தி – நீ இருப்பதை எவன் கண்டான்? உனக்கு அறிவுண்டென்பதை எவன் கண்டான்? இந்த உலகம் – சரி. சரி இப்போது உன்னை வைய மாட்டேன். என்னைக் காப்பாற்று. உன்னைப் போற்றுகிறேன்.

(மகாகவி பாரதி வரலாறு, பக்.478-79)

வாழ்க்கைச் சோதனைகளில் மனிதர்களுக்கு இத்தகைய தீரம் வேண்டும். அவருடைய அஞ்சாமை என்றும் அழியாதது; எனவே பாரதியார் வாழ்கிறார்.

பாரதிக்குப் பின்

1921 செப்டம்பர் 12

பாரதியார் – தமிழை உலகமொழிகளிலேயே சிறந்ததாக்க முனைந்த மகாகவி, இந்தியா விடுதலை அடையு முன்பே “விடுதலை விடுதலை – ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே” என்று பாடிய விடுதலை வீரர், பத்திரிகை உலகில் பல புதுமைகளைச் செய்த ஓர் இதழாசிரியர் திருவல்லிக்கேணியில் ஒரு வாடகை வீட்டில் அமரரானார்.

அவருடைய இறப்பு ஊர்வலத்தில் ஏறத்தாழ இருபது பேர் கலந்து கொண்டதாக நெல்லையப்பர் தெரிவிக்கிறார். அவருடைய இறப்பைக் குறித்துச் சுதேசமித்திரன் பத்திரிகை கீழ்க்காணுமாறு எழுதியது.

. . . பள்ளிக் கூடத்தை விட்டுக் கிளம்பியதும், ஸ்ரீமான் ஜி,சுப்பிரமணிய ஐயரிடத்தில் மித்திரன் உதவி ஆசிரியராக அமர்ந்து, வேலை செய்து வரும் நாளில், ‘இந்தியா’ என்ற வாரப் பத்திரிகை ஒன்றைத் தாமே நடத்தி வந்தார். அதன் மூலமாக ராஜாங்கத்தாருடைய கோபத்துக்கு ஆளாகி சுமார் 10 வருஷ காலம், பிரஞ்சு இந்தியாவில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. பரபரப்பாக வேலை செய்யும் இயல்புடைய ஒருவர் சும்மா இருக்கும்படி நேர்ந்த காரணத்தால், அவருடைய தேகம்மெலிந்து போய், பழைய பாரதியின் சாயல்போல் இரண்டு வருஷங்களுக்கு முன் அவர் புதுச்சேரியிலிருந்து மீண்டு வந்தார். சிறிதுகாலம் தம்முடைய ஊராகிய கடையத்தில் இருந்து விட்டுத் தமது ஆசையைக் கவர்ந்த பத்திரிகை வேலைக்குத் திரும்பி வந்து மித்திரன் உதவி ஆசிரியர்களில் ஒருவராகி தேச ஊழியம் செய்து வரும் நாளில் திடீரென்று நம்மையெல்லாம் விட்டுமறைந்து போய்விட்டார்.

- சுதேச மித்திரன் 13.9.1921 பக்.1.

(மகாகவி பாரதி வரலாறு, பக்.521)

பாரதியின் மறைவுக்குப் பிறகு, நாடு, மொழி, சமூகம் ஆகிய மூன்றும் எவ்வாறு இருக்கின்றன என்பது ஆய்வுக்குரியது.

பாரதியின் மறைவுக்குப் பிறகு, நாடு, மொழி, சமூகம் ஆகிய மூன்றும் எவ்வாறு இருக்கின்றன என்பது பற்றிச் சிந்திக்கும் போது, பாரதியார் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது புலப்படும்.

நாடு 1921ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டில் காங்கிரஸ் இயக்கம் விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. அண்ணல் காந்தியடிகளின் தலைமையைக் கருத்து வேறுபாடின்றித் தேசிய இயக்கத்தினர் ஏற்றுக் கொண்டனர். நாட்டின் விடுதலைக்கு அகிம்சை வழியிலான போராட்டமே தகுதியானது என்ற கருத்தைப் பெரும்பான்மை மக்கள் ஏற்றனர். 1928-இல் கல்கத்தாவில் நிகழ்ந்த காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவிற்கு உரிமை வழங்க வெள்ளை அரசுக்கு ஓராண்டுக் கால வரையறை அளித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1929-இல் லாகூரில் நிகழ்ந்த மாநாட்டில் வெள்ளையர் அரசை எதிர்த்துச் சத்தியாக்கிரகப் போர் தொடங்க முடிவு செய்யப்பட்டது. 1935-இல் மாநில சுயாட்சி உரிமை வழங்கப்பெற்றது.

1947, ஆகஸ்ட் 15-இல் இந்தியா விடுதலை பெற்றது;

நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் – இது

நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் – இந்தப்

பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்-பரி

பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்.

(சுதந்திரப்பள்ளு – 5)

[பரிபூரணன் = முழுமுதற் கடவுள்]

என்ற பாரதியின் வாக்கு மெய்யாயிற்று. விடுதலை அடைந்து, குடியரசு அமைத்து விடுதலைப் பொன்விழாக் கொண்டாடிப் புதிய நூற்றாண்டிலும் இந்தியா காலடி எடுத்து வைத்து விட்டது. ஆனால் நாட்டின் சிக்கல்கள் தீர்ந்து விட்டனவா?

பொருளாதார நலிவு – சமத்துவமின்மை

சாதிச் சமூகப் பிரிவு – தீண்டாமை

அரசியல்வாதிகளின் தன்னலம் – ஊழல்

ஒருமைப்பாட்டில் தளர்ச்சி – ஒற்றுமைக் குலைவு

தாய்மொழி வளர்ச்சியின்மை – பிறமொழி மோகம்

பெண்களுக்கு உரிமையின்மை – பெண்களைக் கொடுமை செய்தல்

மத வேறுபாடும் போரும் – நல்லிணக்கம் இன்மை

இப்படிப்பட்ட தீமைகள் முற்றிலும் தீர்ந்தபாடில்லை.

எண்ணிலா நோயுடையார் – இவர்

எழுந்து நடப்பதற்கு வலிமையிலார்

கண்ணிலாக் குழந்தைகள் போல் – பிறர்

காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்;

நண்ணிய பெருங்கலைகள் – பத்து

நாலாயிரங் கோடி நயந்து நின்ற

புண்ணிய நாட்டினிலே – இவர்

பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்

(பாரத ஜனங்களின் தற்கால நிலைமை – 7)

(எண்ணிலா = எண்ண முடியாத, நண்ணிய = அடைந்த, நயந்து = விரும்பி, பொறி = அறிவு)

என்று அன்று பாரதி கூறிய நிலை இன்றைக்கும் பொருந்துகிறது. நாட்டின் இந்த நிலையை நீள நினைந்து புதிய உலகம் காணப் பாரதியே பயன்படுவார்.

மொழி பாரதிக்குப்பின் கவிதை, இலக்கியம், பத்திரிகை ஆகிய துறைகளில் பல வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இவற்றுக்கெல்லாம் மூல காரணராக அமைந்தவர் பாரதியே. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகின் விடிவெள்ளி பாரதியே. பற்பல சாதனைகளை அவர் புரிந்திருக்கிறார். அவர் மொழியிலேயே கூறினால்,

சாலமிகப் பெரிய சாதனை காண் இஃதெல்லாம்!

தால மிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்?

ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவிலுமே

கானாமுதம் படைத்த காட்சிமிக விந்தையடா!

காட்டு நெடுவானம் கடலெல்லாம் விந்தையெனில்,

பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!

(குயில் பாட்டு, குயிலும்மாடும், 91-96)

என்றுதான் கூற வேண்டும். பாரதிதாசன், பாரதியின் பெருமையெல்லாம் அறிந்தவர். பாரதிதாசனின் பாடுபொருள் மாற்றம் பாரதியால் விளைந்தது. தமிழை வீறு கொண்டு எழச் செய்த பாரதியின் கவித்துவம், இந்த நூற்றாண்டின் கவிதைப் பாதையையே திருப்பிவிட்டது.

தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்

இமை திறவாமல் இருந்த நிலையில்

தமிழகம் தமிழுக்குத் தகும் உயர் வளிக்கும்

தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில்

இலகு பாரதிப்புலவன் தோன்றினான்

(பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 2 – பாரதி)

(நிகர் = சமம்)

1. நடையில் எளிமை

2. சமூக உணர்வே பாடுபொருள்

3. பெண்களின் விடுதலை,

4. புதிய புதிய வடிவங்கள்,

5. புராணப் பழமைகளின் உட்பொருள் அறிந்து அவற்றைப் புதுக்கருத்துகளோடு பரிணாமம் பெற எண்ணிப் படைத்தல்.

6. தெய்வத்தைப் பாடுவதிலும் மக்கள் சிந்தனையே அடிப்படை

7. புதுமையும் புரட்சியும் படைக்கும் கருவியாகக் கவிதை உருக்கொள்ளல்.

8. உலகளாவிய நோக்கு என்ற கூறுகள்

இன்றைய கவிதைகளில் இடம் பெறப் பாரதியே காரணர். பாரதி அவற்றின் வழி வாழ்கிறார். வால்ட்விட்மன் படைத்த புதுக்கவிதையின் பொருளைப் பெரிதும் பாரதி போற்றினார். விட்மன், ஏழை பணக்காரரற்ற, உயர்வு தாழ்வற்ற ஆண் பெண் வேறுபாடு அற்ற, அரசர் குடிமக்கள் வேறுபாடற்ற ஒரு நகரத்தைத் தம் கவிதைகளில் படைக்கிறார். “மக்களின் முகத்தில் நான் கடவுளைக் காண்கிறேன்” என்கிறார். விட்மன் போலவே பாரதியும் மக்கள் கவிஞனாக மலர்ந்து மணம் பரப்பினார். இந்த நூற்றாண்டைப் ‘பாரதியுகம்’ என்று அடையாளம் காணும் வழக்கு நிலைபெற்றுவிட்டது. பாரதியின் கவிதைப் பெருவெள்ளம், அந்தாதிக் கலம்பகங்கள் என்ற இலக்கியங்களைப் புதையுண்ணச் செய்து விட்டது. செல்வர்களின் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் பாட்டுப்பாடும் வழக்கத்தை நீக்கிவிட்டது.

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,

சொற்புதிது, சோதி மிக்க

நவகவிதை எந்நாளும் அழியாத

மாகவிதை . . . .

(வெங்கடேசு ரெட்டப்ப பூபதி, சீட்டுக்கவி – 1, 3)

என்றவாறு கவிதையின் புதிய தகுதிகள் இன்று பேசப் பெறுகின்றன. இதற்கெல்லாம் காரணராய் இருந்தவர் பாரதி, இன்று தோன்றும் எழுச்சிமிக்க புதுயுகப் பாடல்களில் பாரதியின் முகம் தெரிகிறது; அகம் தெரிகிறது; குரல் கூடக் கேட்கிறது. ஆம்! பாரதியார் வாழ்கிறார்.

சமூகம் பாரதிக்குப் பின் சமூக நிலையில் பலமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சமத்துவமான நிலைநோக்கிச் சமூகம் செல்வதற்கு அரசால் ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. பட்டினிச்சாவுகள் குறைந்திருக்கின்றன. தனி மனிதர் வருவாய் விழுக்காடு உயர்ந்துள்ளது; கல்வி பரவலாக்கப்பட்டுள்ளது; பெண்கள் உரிமை பெற்று வருகின்றனர். நாடு தொழில் மயமாகிக் கொண்டிருக்கிறது. அறிவியல் கருவிகளின் பயன்பாடு மிகுந்துள்ளது. பொருள்களை வாங்கும் சக்தி கூடியுள்ளது. புற நாகரிகம் செம்மையாகியுள்ளது. எனினும் குறைகள் இல்லாமல் இல்லை. இன்று கோடிக் கணக்கில் செல்வம் சேர்த்தவர் எண்ணிக்கை பெருகியுள்ளது. ஏழை பணக்காரர் இடையே இடைவெளி பெருகியுள்ளது. “எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு” என்று பாரதி கூறியது உண்மையாகவில்லை.

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர்

(பாரத சமுதாயம், சரணம். 4)

என்று பாரதி கூறிய மக்களாட்சித் தத்துவம் அடையப்பெறவில்லை. சாதிச்சண்டைகள், மதக் கலவரங்கள், இனப்பூசல்கள், பெண்களைச் சித்திரவதை செய்தல், பெண் குழந்தைகளைக் கருவில் அழித்தல், சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்போரை உயிருடன் கொளுத்துதல், கிராமங்களைச் சூறையாடுதல், சாதியடிப்படையிலான தேர்தலும் அரசியலும், இன்னும் எத்தனை எத்தனையோ தீமைகளும் பெருகிவிட்டன. இச்சூழலில் பாரத சமூகம் எப்படி இருக்க வேண்டுமென்பது குறித்துப் பாரதி தாம் பாடிய பல பாடல்களில் தெளிவுபடுத்தியுள்ளார். அவை இன்றும் பொருந்துகின்றன. எனவே இன்றும் பாரதி வாழ்கிறார்.

பாரதி தீர்வு தருகிறார்

புகழொடு தோன்றிய கவிஞர் பாரதி. பராசக்திக்கே புதிய பரிணாமத்தையும், (ஒன்று மற்றொன்றாக மாறுதலையும்) புதிய பணிகளையும் படைத்த பாரதி, பாரத நாட்டில் தோன்றிய- தோன்றும் சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கூறாமலா விடுவார்? அதனால், அவர் இன்றும் நினைக்கப்பெறுகிறார்; மக்கள் நினைவில் மங்காமல் வாழ்கிறார்.

பொருளாதார நிலையில் தோன்றிய சிக்கல்கள்

தாய்மொழி வளர்ச்சியில் தோன்றிய சிக்கல்கள்

சமூக அமைப்பில் தோன்றிய சிக்கல்கள்

என்ற மூன்று வகைச் சிக்கல்களையும் அவர் ஆழமாக நினைந்து தந்த தீர்வுகள் கருதற்குரியன.

எல்லாரும் இந்நாட்டு மன்னர் நம் குடியரசானது, எல்லா மனிதர்களையும் ஒரு நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும்; எல்லார்க்கும் ஒத்த உரிமையும், ஒத்த உடைமையும் நல்கும் அமைப்பாக அது விளங்க வேண்டும். எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பது குடியரசின் கோட்பாடு. அது நன்கு செயல்பட என்ன செய்ய வேண்டும்?

முதலாவது சிலருக்குச் சோறு மிதமிஞ்சி இருக்க, பலர் தின்னச் சோறில்லாமல் மடியும் கொடுமையைத் தீர்த்து விட வேண்டும். இது இலக்கம் ஒன்று. பூமியின் மீதுள்ள நன்செய், புன்செய், தோப்பு, துரவு, சுரங்கம், நதி, அருவி, குப்பை, செத்தை, தரை – கடவுளுடைய சொத்தில் நாம் வேலி கட்டக் கூடிய பாகத்தை யெல்லாம் சிலர் தங்களுக்குச் சொந்தமென்று வேலி கட்டிக் கொண்டனர். பலருக்கு ஆகாசமே உடைமை. வாயு ஆகாரம். இதற்கு மருந்து என்னவென்றால், எல்லோரும் சமானம். அண்ணன் தம்பிபோல என்ற புத்தி உண்டாய் ஏழைகள் வயிறு பசிக்காமல் செல்வர்கள் காப்பாற்ற வேண்டும்.

அது முடியாவிட்டால், ஐரோப்பாவில் ’சோஷலிஸ்ட்’ கட்சியார் சொல்வது போல், நிலத்தை சகலருக்கும் பொதுவென்று ராஜ்யவிதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

(பாரதியார் கட்டுரைகள்- ஜன வகுப்பு, பக்.59)

இந்த அருமையான தீர்வைப் பாரதியார் அளித்துள்ளார். செல்வம், அதிகாரம் ஆகியன தனி உடைமையாய் ஆகிவிடக் கூடாது. பாரதியின் இந்தத் தீர்வு இன்று பலராலும் பேசப்படுகின்றது; தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறுகின்றது. ஆனால் நடைமுறைப் படுத்தப்படவில்லை. சமஉடைமைச் சமுதாயம் நீண்ட நாளாக நம் கனவு. அது நனவாகும் நாளில் பாரதி நம்மோடு மேலும் நெருக்கமாக வந்து புன்னகைப்பார்.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் தமிழ்மொழி யாமறிந்த மொழிகளில் இனிமையானது என்றார் பாரதியார். ஆனால் தமிழர்களால் அது பேணி வளர்க்கப்படவில்லை. அதிலே தேக்கநிலை ஏற்பட்டு விட்டது. புதுமைப் பூக்கள், காலமாறுதலுக்கேற்ற புதிய மணங்கள் தமிழில் தோன்றாத நிலை உண்டாகியது. தமிழை வளர்க்க என்ன செய்வது? பாரதி தீர்வு தருகிறார்.

தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல்

உலகமெலாம் தேமதுரத் தமிழ் பரப்புதல்

பிறநாட்டுச் சாத்திரங்களை மொழி பெயர்த்தல்

புதுநூல்கள் பற்பல தமிழில் இயற்றுதல்

வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் மிகச் செய்தல்.

இந்த ஐந்து பணிகளையும் பாரதியே செய்து காட்டினார். இன்று தமிழ் நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ் இல்லையே என்கிறார் பாரதிதாசன். நம் கல்வி மொழியாக ஆங்கிலம்; நிர்வாக மொழியாக ஆங்கிலம்; நம்மை ஆளும் மொழியாக இந்தி; வழிபாட்டு மொழியாகச் சமஸ்கிருதம்; இசை மொழியாகத் தெலுங்கு என்ற நிலை மேலும் மேலும் பரவலாகி வருகிறது. தமிழ் வளர்ச்சிக்கான செயல் முறைகளும் தொலைநோக்கும் நமக்கு வேண்டும். நிறைய மொழிகளைக் கற்று, அவற்றிலுள்ளவற்றைக் கொண்டு தமிழை மேலும் செழுமைப்படுத்த வேண்டும். பாரதியார் நமக்கு இவற்றை நாள்தோறும் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்.

சாதிகள் இல்லையடி பாப்பா இந்தியா சாதியின் அடிப்படையிலான சமூக அமைப்பைக் கொண்டது. எனவே சாதியின் பெயரால் இன்றளவும் பல சண்டைகள், போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதை உணர்ந்த பாரதி,

சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

(பாப்பா பாட்டு, 15)

என்றார். சாதி உணர்வு என்பது அநாகரிகத்தின் அடையாளம். ஆனால் அதை மனிதனிடமிருந்து மாற்ற முடியவில்லை. சாதிக் கலவரங்களால் உயிர் உடைமை இழப்புகள் நிகழ்ந்த வண்ணமாகவே இருக்கின்றன. இதற்கு என்ன செய்வது? மதம் மாறலாம்; சாதியை மாற்றிக் கொள்ள முடியாது; முடியவே முடியாதா? இராமானுஜர், இறையடியவர் எல்லோரும் சமம் என்றும், அனைவரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்றும் கூறினார். அவ்வாறே செய்தும் காட்டினார். பாரதியும் அதைச் செய்தார். கனகலிங்கத்திற்கும் அவருடைய நண்பர்க்கும் பூணூல் மாட்டி “இன்று முதல் நீர் பிராமணர்” என்றார். இஃது என்ன சாதி மாற்றம்? இது மாற்றமில்லை. சாதிகள் இல்லை என்ற அறிவிப்பு.

நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் – இந்த

நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்

எந்தக் குலத்தினரேனும் – உணர்வு

இன்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.

( உயிர் பெற்ற தமிழர் பாட்டு – ஜாதி 5)

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உணர்வு வேண்டும். சீர்திருத்தம் பேசும் – விரும்பும் – கடைப்பிடிக்கும் எந்தச் சமூகத்திலும் பாரதி இருப்பார்.

பாரதி வாழ்கிறார்

மனிதரில் மூவகையினர் உள்ளனர். 1. வாழும் போதே இறந்து போனவர்கள். 2. வாழ்வு முடிந்து இறந்து போனவர்கள் 3. வாழ்க்கை முடிந்தும் இறவாத நிலையினர். பாரதி மூன்றாம் வகைக்குரியவர். நம் நாட்டையும் மொழியையும் சமூகத்தையும் நினைக்கும் போதெல்லாம் அவர் நம் முன் வருகிறார். இராமனும் கண்ணனும், இயேசுவும் புத்தரும், சங்கரரும் இராமானுஜரும் செத்துப் போய்விட்டார்கள்; நான் சாகாதிருப்பேன் என்று வைர நெஞ்சுறுதியோடு முழங்கியவர். அவர் எழுதாமலும், பேசாமலும் போயிருந்தால், ‘வாழ்கிறார்’ என்று கூற முடியாது.

அத்வைத நிலைகண்டால் மரண முண்டோ?

(பாரதி அறுபத்தாறு, மரணத்தை வெல்லும் வழி, – 4)

என்பது பாரதி வாக்கு. தம்முடைய இலட்சியங்களாலும், தொண்டாலும், வாழ்கின்ற மாமனிதர் பாரதியார். அவரை நினைவு கூரும் வண்ணம் நாம் இருப்பதற்கு அவர் வாழ்ந்த பெருவாழ்வே காரணமாகும்.

எதிர்கால நோய்கள் இந்தியாவை இன்று வந்து சூழ்ந்துள்ள எத்தனையோ சமூக நோய்கள் அகற்றப்படாமலிருக்கும் போது எதிர்காலத்திலும் பல புதிய நோய்கள் வந்து தாக்கும் அச்ச நிலை உள்ளது. இந்தியாவின் அகத்திலும் புறத்திலும் பலப்பல பகைகள் பெருகியுள்ளன. புறப்பகை அண்டை நாட்டினால் தோன்றி வளர்ந்து கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க என்ன செய்வது? அகத்தே பகையின்றி ஒருமைப்பாடு குலையாமல் இருப்பதே புறத்தே கொடும் பகை செயல்படாதவாறு தடுக்கும். அகத்தே ஆயிரம் ஆயிரமாய் வேறுபாடுகள் மலிந்து கிடக்கின்றன. பாரதிதாசன் கூறுவது போல்,

வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால்

சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்.

(சஞ்சீவி பர்வதத்தின் சாரல், 144-145)

(பேதம் = வேறுபாடு)

என்ற நிலை பெரும் அறைகூவலாகி இந்திய ஒருமைப்பாட்டை அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது. வெடிகுண்டு வீச்சுகள், தீவைப்புகள், இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடுதல் நிகழ்வுகள், வானூர்திக் கடத்தல்கள் என்பன அடிக்கடி நிகழ்கின்றன. இவை எதிர்காலத்தில் மேலும் தீவிரப்படலாம். இவற்றைத் தடுப்பது எங்ஙனம்?

சாதிபேதங்கள் கடந்த காலத்திலேயே உச்ச நிலைக்குப் போய்விட்டன. சாதி ஒழிப்புச் சீர்திருத்தங்கள் இன்று புகைந்து போய்விட்டன. கலப்பு மணங்கள் ஒரு பக்கம் பெருகினாலும், சாதிக் கட்டுப்பாடுகள், சாதியிலிருந்து விலக்கங்கள் ஆகியனவும் பெருகி வருகின்றன. இவற்றைத் தடுப்பது எப்படி?

இன்று பெண் படிக்கிறாள்; பணி செய்கிறாள்; அலுவலகத்தை ஆளுகிறாள்; நாட்டையே ஆளும் திறன் பெற்று உயர்ந்திருக்கவும் காணுகிறோம். ஆனாலும் பெண்ணினம் விடுதலையும் உரிமையும் பெற்று விட்டதாகக் கூறமுடியவில்லை. பெண்ணின் பணிச்சுமை கூடியிருக்கிறது. அலுவலகத்தில் பணி செய்பவள் அடுப்பங்கரையிலும் பணி செய்கிறாள். இதனைப் போக்குவது எப்படி?

சமூக அமைப்பில் வர வர அறம் தேய்ந்து வருகிறது. அறத்தின் மீது கொண்ட நம்பிக்கை குறைந்து வருகிறது. இவற்றைச் சரி செய்வது எவ்வாறு?

மேலே கூறியவற்றுக்கெல்லாம் பாரதி மருந்தும் மந்திரமும் வைத்திருக்கிறார். அவர் சிறந்த நாட்டு மருத்துவர்; நாட்டுப் பற்று மிக்க மருத்துவர்.

மருந்தும் மந்திரமும் பாரம்பரியப் பெருமையும் நாட்டுப்பற்றும்

எதிர்காலத்தில் அச்சுறுத்தும் பலநோய்களையும் எதிர்கொள்ள வேண்டுமெனில் நாட்டுப்பற்று என்னும் மருந்தும், வந்தே மாதரம் என்ற மருந்தும் வேண்டுமெனப் பாரதி அறிவுறுத்துகின்றார். ஒருவரது பாரம்பரியத்தைப் பற்றிய அறிவும் பெருமையும் வேண்டும் என்கிறார்.

மாரத வீரர் மலிந்த நன்னாடு

மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன்னாடு

பூரண ஞானம் பொலிந்த நன்னாடு

புத்தர் பிரானருள் பொங்கிய நாடு

பாரத நாடு பழம் பெரும் நாடே

பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே

(எங்கள் நாடு, 2)

(மாரத வீரர் = பெரிய இரத வீரர்)

இந்த உணர்வைக் காப்பாற்றும் கல்வியும், ஞானமும் வரும் தலைமுறையினர்க்கு ஊட்டப் பெற வேண்டும்.

ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்

அந்நியர் வந்து புகல் என்ன நீதி?

(வந்தே மாதரம், 3)

என்ற வலிமைமிக்க ஒருமைப்பாடு வேண்டும். வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமை வேண்டும். இந்து, முசுலீம், கிறித்தவர், சீக்கியர் என்ற மத வேறுபாடுகள் இந்தியர் என்ற ஒருமையில் கரைய வேண்டும். இந்திய தேசியக் கொடி ஏற்றப்படுகிறது.

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் – எங்கும்

காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்

நம்பற் குரியர் அவ்வீரர் – தங்கள்

நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்

(மாதாவின் துவஜம், 4)

தமிழர், கேரளர், தெலுங்கர், துளுவர், கன்னடர், ஒட்டியர், மராட்டர், இந்துஸ்தானத்தர், ராஜபுத்ரர், பாஞ்சாலர் ஆகிய எல்லாரும் சேர்ந்து கொடியினைக் காக்கின்றனர். அரசாங்கம், குடிமக்கள் எல்லாருடைய நலன்களையும் சமமாய் மதித்து காக்கும் போது, கொடிக்கு மரியாதை தோன்றுகிறது. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லாமல் பட்டினி கிடக்க விடாத சமூகத்தில் நாட்டுப்பற்று தானே வேர்விடும்.

சாதி ஒழிப்பு

சாதியைக் கொண்டு மனிதனை மதிப்பிடாமல் குணங்களைக் கொண்டு மதிப்பிடும் நிலையைப் பாரதி அறிவுறுத்துகின்றார். ‘வேதியராயினும் வேறு குலத்தவராயினும் ஒன்றே’ என்று அவர் பாடினார். அவர் சாதியிலிருந்து விலக்கப்பட்டதற்குச் சிறிதும் வருத்தப்படவில்லை. எல்லோருக்கும் பூணூல் போட்டுப் பிராமணராக்கிவிட வேண்டுமென்று அவர் கருதுகின்றார். அவருடைய சீர்திருத்தத்தால் இன்று பிராமணீயம் வலிமை குன்றிவிட்டது. சாதி ஒழிப்புச் சிந்தனையால், முற்போக்கு எண்ணம் கொண்டவர்களிடையே பாரதியார் இன்றும் வாழ்கிறார்.

பெண் உரிமை

ஸ்திரீகள் தமக்கிஷ்டமான பேரை விவாகம் செய்து கொள்ளலாம் விவாகம் செய்து கொண்ட புருஷனுக்கு ஸ்திரீ அடிமையில்லை உயிர்த்துணை: வாழ்க்கைக்கு ஊன்று கோல் : ஜீவனிலே ஒரு பகுதி

(தமிழ் நாட்டின் விழிப்பு,பாரதியார் கட்டுரைகள் பக்.261)

என்று கூறிப் பெண்கள் ‘சாத்விகப் புரட்சி’ யால் தம் உரிமையை நிலை நாட்டிக் கொள்ள வேண்டும் என்கிறார். கைம்பெண்களின் மறுமணத்தைப் போற்றுகிறார். பெண்கள் பல தீமைகளிலிருந்தும் விடுபடுவதற்குக் கல்வி ஒன்றே வழிவகுக்கும் என்ற அவரின் கூற்று உண்மையாகி விட்டது. இன்று ஆண்களை விட எண்ணிக்கையில் மிகுதியாகப் பெண்கள் படிக்கிறார்கள்; தங்கள் விருப்பத்திற்கும் தகுதிக்கும் ஏற்ப மணமகனைத் தேர்ந்து கொள்கின்றனர். இது பாரதி காண விழைந்த கனவு. அந்த கனவு மெய்ப்பிக்கப்பட்டு விட்டது.

குழந்தைக் கல்வி

சமூக அமைப்பில் ஒவ்வோர் அங்கத்தையும் வளர்ந்தபின் திருத்துவது இயலாது. குழந்தை நிலையிலேயே கோணல் வளர்ச்சி இல்லாதவாறு ஒழுங்குபடுத்த வேண்டும். அறத்தில் நம்பிக்கை, ஒழுக்கத்தில் உறுதி, நன்னெறிகள் ஆகியவற்றை இளம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்

புறஞ் சொல்ல லாகாது பாப்பா

தேம்பி அழும் குழந்தை நொண்டி – நீ

திடம் கொண்டு போராடு பாப்பா

(பாப்பா பாட்டு, 7, 10)

என்றவாறு குழந்தைகளுக்குக் கற்பிக்கும் நெறி காட்டுகின்றார் பாரதி. எதிர்காலச் சமூக நலிவுகளுக்குப் பாரதியாரின் சொற்கள் மருந்தென்று கூறத்தக்கன; மந்திரமாகக் கூறித் தீமை அகற்றிக் கொள்ளத் தக்கன.

சாகாததோர் சரித்திரம் இது, என்றும் அழியாத ஒரு வரலாறு கொண்டவர் பாரதி என்பதைக் குறிக்கும்.

‘அச்சமில்லை அச்சமில்லை’

ஒரு கூட்டம் சோர்ந்து தளர்ந்து இருக்கிறது. என்ன நடக்குமோ என்று அச்சம் கொண்டிருக்கிறது. பணம், அதிகாரம், மேல்சாதி போன்ற ஆதிக்க சக்திகளை எதிர்த்து ஆயிரம் பேராக இருந்தாலும் எதிர்த்துப் போராட முடியுமா என்று அவர்கள் கருதுகின்றனர். அவர்கள் குடிசைகள் எரிக்கப்பட்டு விட்டன. அவர்களின் உறவினர் நெருப்பில் வெந்து மடிந்து விட்டனர். அவர்கள் அன்றாடம் உழைத்த உழைப்பில் கஞ்சி குடிப்பவர்கள். அவர்கள் ஒன்று திரண்டு அடுத்து என் செய்வது எனத் தேம்பித் திகைத்து நிற்கையில் ஓர் இளைஞன் அவர்களின் முன்னால் நின்று,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே!

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே!

(அச்சமில்லை, 2)

என்று பாடினான்; கூட்டத்தினர் ஆன்ம பலம் பெற்றனர். ஒன்று கூடி ஆதிக்க சக்திகளை எதிர்த்துச் சத்தியாக்கிரப் போர் தொடுக்க முடிவெடுத்தனர். பாரதியே அவர்களின் போர்க்குரல்; இன்றல்ல என்றைக்கும்.

சமய ஒருமைப்பாடு

ஒரு வழிபாட்டுக் கூட்டம் கூடுகிறது. இந்து முசுலீம் கிறித்துவர் எனப் பல சமயத்தினரும் கூடினர். எந்தச் சமயப் பாடலைப் பாடுவது? ஒரு நொடி தான் தயக்கம். பின்பு சிலர் முழங்கினார்:

ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;

கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்;

மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்

ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துணராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்

(புதிய ஆத்திசூடி, காப்பு 1-8)

இது எல்லார்க்கும் நிறைவு. இந்தச் சமரச ஞானப் பாடலில் பாரதி வாழ்கிறார்.

பெண் உயர்வு

காலைச் செய்தித்தாளில் பரபரப்பு. பெண் உயிரோடு எரிக்கப்பட்டாள்; வரதட்சணைக் கொடுமை காரணமாம். விசாரணை நடக்கிறதாம். கொன்ற கணவன் செல்வாக்கு மிக்கவனாம்; எப்படியும் வெளி வந்து விடுவான் என்று ஊர் பேசிற்று. பெண்கள் திரண்டனர்; கூட்டம் கூட்டினர் என்ன பேசுவது?

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்;

எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்

வேண்டி வந்தோமென்று கும்மியடி!

சாதம் படைக்கவும் செய்திடுவோம் ; தெய்வச்

சாதி படைக்கவும் செய்திடுவோம்.

(பெண்கள் விடுதலைக்கும்மி, 6,7)

எல்லோரும் ஒன்றிணைந்து பாடுகின்றனர். பாரதி, வானிலிருந்து தம் மீசையை முறுக்கி கொள்கிறார். இவைபோல எத்தனையோ!

கலப்புத் திருமணம்; ஆலைகளின் முழக்கம்; கல்விக் கூடங்களின் அணிவகுப்பு; ஆயுதங்களும் காகிதங்களும் முழுவீச்சில் உற்பத்தி; மாநிலங்களிடையே வணிகப் பரிவர்த்தனை (பண்டமாற்று) உழவுக்கும் தொழிலுக்கும் அரசு ஆதரவு. இவை, எல்லாவற்றிலும் பாரதியின் முகம் பளிச்சென்று தெரிகிறது.

புரட்சி, புதுமை, பெருமை

மாணவர்களுக்குக் குறுவினாப் போட்டி நிகழ்கிறது. ஆசிரியர் தொடர்ந்து வினாக்களை அடுக்கிக் கொண்டே போகிறார்.

1.பத்திரிகையில் முதன்முதல் கார்ட்டூன் என்ற கருத்துப்படம் வெளியிட்டவர் யார்?

2. வாழ்க தமிழ் என்று முதன்முதல் கவிதையில் இசைத்தவர் யார்?

3.தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பூணூல் அணிவித்து விட்டுத் தாம் பூணூல் அணியாத புரட்சிக்காரர் யார்?

4. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கப்பலோட்டிய தீரத்தைக் கவிதையில் பாடியவர் யார்?

5.தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களை ‘வறுமைக்கு அஞ்சாதீர்கள்’ என்று தேற்றிக் கவிதை இசைத்தவர் யார்?

6.மகாபாரதத்தில் தருமன் சூதாடியமை க ண்டு ‘சீச்சீ’ என்று இகழ்ந்து பாடிய பெருமைக்குரியவர் யார்?

7.சுதந்திர தேவி’ என்ற புதிய சக்தி வழிபாட்டைத் தொடங்கியவர் யார்?

8.கண்ணனைச் சேவகனாகவும் படைத்து மிக நெருக்கமாக உரிமை கொண்டாடிப் பக்தி இலக்கியத்தில் புதிய பரிணாமம் அமைத்த புதுமைக்காரர் யார்?

9.அக்கினிக் குஞ்சு, நெருப்புச்சுவை, தந்தையர் நாடு, என்ற புதிய சொல்லாட்சிகளைப் படைத்தவர் யார்?

10.இந்திய தேசிய விடுதலைப் போரில் தனி மனிதனாக இருந்து பல போராட்டங்களை நடத்திய வீரமிக்க கவிஞர் யார்?

எல்லாவற்றுக்கும் ஒரே விடைதான் என்று கூறி அவ்விடை ‘பாரதி’ என்றனர். ஆம் பாரதி வாழ்கிறார்; என்றும் வாழ்வார்.

தொகுப்புரை

பாரதியார் முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்தவர்; ஆனால் தம் பலப்பல சாதனைகளால், எந்தக் காலத்து மனிதனாலும் மறக்க முடியாதவாறு வரலாற்றில் தடம் பதித்து விட்டார். இந்திய விடுதலை வரலாறு எழுதுவோர், தமிழ்க் கவிதை வரலாறு அமைப்போர், யாப்பிலக்கண வளர்ச்சி குறிப்போர், காப்பிய வார்ப்புப் பற்றி எழுதுவோர், பத்திரிகைப் புரட்சி பற்றி எண்ணுவோர், பெண்ணுலக மறுமலர்ச்சி வேண்டும் என்போர், சமூகச்சீர்திருத்தம் பற்றித் திட்டமிடுவோர் யாராயினும் பாரதியைத் தொடாமல் எழுத முடியாது. பாரதி என்றும் இறவாமல் வாழும் மனிதர்களில் ஒருவர்.