36

பாரதிதாசன் கவிதை உலகம் - 2

பாடம் - 1

பாரதிதாசனின் தமிழ் உணர்வு

பாட முன்னுரை

பாரதிதாசன், தம் பாடல்கள் பலவற்றின் மூலம், தமது தமிழ் உணர்வினை நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்மொழியைப் பற்றிப் பல பாடல்கள் பாடியுள்ளார். தமிழ் மக்களைப் பற்றியும் பாடல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைப் பற்றியும், பல பாடல்களில் எழுதிய பெருமை பாரதிதாசனுக்கு உண்டு. இப்பாடல்கள் மூலம் வெளிப்படும் பாரதிதாசன் தமிழ் உணர்வு இப்பாடத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பாவேந்தரும் தமிழும்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு

(சங்கநாதம்: 1-2)

எனும் முழக்கம், தமிழக மேடைகளிலும், தமிழ் உணர்வு கொண்ட ஏடுகளிலும், தமிழர்களிடையேயும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் எழுச்சிக்குரல்; தமிழ் உணர்ச்சியின் வெளிப்பாடு. இந்த உணர்ச்சியின் பிறப்பிடம் பாவேந்தர் பாரதிதாசனின் உள்ளம். பாரதிதாசனின் இந்த உள்ள உணர்ச்சியை அவரது பாடல்களில் பெரும் அளவில் பார்க்கலாம்.

தமிழ் மீதுகொண்ட பற்றால், அதைத் தன் உயிரினும் மேலாக நேசித்தமையால், தமிழை என் உயிரே என்று அழைத்து மகிழ்ந்தார். அதன் இனிமையின் சிறப்பினையும் பல பாடல்கள் மூலம் எடுத்துக்காட்டுகின்றார். விருப்பத்துக்குரிய பொருளை, தேன், பால், என்றும் கண், உயிர் என்றும் கூறும் மரபைக் கவிஞர்களிடம் காணலாம். அடியார் பலர் இறைவனை இவ்வாறு பாடியுள்ளனர். பாரதிதாசன் தமிழ் மொழியைத் தேன், பால், கண், உயிர் என்று கருதிப் பாடியுள்ளார். மொழியை இவ்வாறு வருணித்துப் பாடும் மரபும் புதியது. இம்மரபுக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர் பாரதிதாசன்.

தமிழ் உயிர் போன்றது தமிழ் மொழி மீது பாரதிதாசனுக்கு அளவு கடந்த பற்று உண்டு. இதனை அவரது பாடல்களில் பரவலாகக் காணலாம். வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம், அவர் தமது தமிழ்ப் பற்றை வெளியிடுவார். தமிழைத் தன் உயிரினும் மேலாக மதித்தார், போற்றினார். எனவே,

செந்தமிழே ! உயிரே ! நறுந்தேனே !

செயலினை மூச்சினை உனக்களித்தேன்

(பாரதிதாசன் இசையமுது, தமிழ்: 5)

என்று பறை சாற்றுகின்றார். இனிய தேன்போன்ற தமிழ்மொழிக்குத் தன் வாழ்வையே, வாழ்க்கையின் செயல்பாடுகள் முழுவதையுமே அர்ப்பணித்தார். எனவே தான், ‘செயலினை மூச்சினை உனக்களித்தேன்’ என்று கூறுகிறார்.

• தமிழெனும் அமிழ்தம்

பொதுவாக, அமிழ்தம் (அமுதம்) என்றால் உணவு என்று பொருள். வானுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவிற்கும் அமிழ்தம் என்று பெயர். அது மிகவும் சுவை உடையது என்றும், அதை உண்பதினால் தான், தேவர்கள் சாகா வரத்துடன் வாழ்கிறார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. நல்ல சுவையான உணவை உண்ணும் போதுகூட, “ஆகா! என்ன சுவை! என்ன சுவை! ‘அமிழ்தம்’ போன்றல்லவா இருக்கிறது” என, தேவர்கள் உண்ணும் உணவை மனத்திற்கொண்டு, கூறுகிற மரபு உண்டு. பாரதிதாசனுக்கோ தமிழே அமிழ்தமாகின்றது. எனவே

தமிழுக்கும் அமுதென்று பேர் ! – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

(இன்பத் தமிழ்: 1-2)

என்று பாடுகிறார். பாரதிதாசன் இன்றும் நம்மிடையே உயிர்ப்புடன் உலவவும், நம் உணர்வினைத் தூண்டவும் அவர் படைப்புகள் தானே காரணம்! எனவே தமிழை அமிழ்தம் என்றும் உயிர் என்றும் சொன்ன சொற்கள் மிகை அல்லவே!

• தமிழெனும் உயிர்

இயற்கையில் பல்வேறு வகையான சுவைகள் இருக்கின்றன. நன்கு பழுத்த பழத்தின் சுளையில் இனிமை இருக்கிறது. கரும்புச் சாற்றிலும் இனிமை உண்டு. தேனிலும் இனிமை உண்டு. காய்ச்சிய வெல்லப் பாகிலும் இனிமை இருக்கிறது. பசுவின் பாலிலும் இனிமை இருக்கிறது. தென்னையின் இளநீரிலும் இனிமை இருக்கிறது. அவ்வாறு ஆயின் தமிழில் என்ன இருக்கிறது? இதோ பாரதிதாசன் கூறுவதைக் கவனியுங்கள்:

காட்சி

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,

பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்,

நனிபசு பொழியும் பாலும் – தென்னை

நல்கிய குளிரிள நீரும்,

இனியன என்பேன் எனினும் – தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர் !

(பாரதிதாசன் கவிதைகள் – முதல் தொகுதி 19. தமிழின்இனிமை, முதல் பாடல்)

(கழை = கரும்பு)

என்ன நண்பர்களே! “எனினும்”, “இருந்தாலும்” என்று பாரதிதாசன் கூறுவதின் பொருள் என்ன? தமிழில் “இனிமையைக் காண்கிறேன் என்று சொல்ல அவர் தயங்குகிறாரா? சற்று எண்ணிப் பாருங்கள். ‘இனிப்புடையதாயிருத்தல்’. ‘உயிர்ப்பு உடையதாயிருத்தல்’ – இவற்றுள் எது மிகுதியும் விரும்பத்தக்கது? உயிர் இல்லையேல் சுவைப்போருக்கு இனிப்பு ஏது, நுகர்ச்சி ஏது? கனி, கரும்பு, தேன், பாகு, பால், இளநீர் – அனைத்தின் சுவையும் உயிர் என்ற ஒன்று இருந்தால் தானே நுகரமுடியும். தமிழ் மொழியின்பால் கவிஞர் கொண்ட ஆழ்ந்த பற்று இதில் தெரிகிறதல்லவா!

வடலூர் இராமலிங்க வள்ளலார் ‘தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் பருப்பும் தேனும் கலந்த கலவையை விடச் சுவையானவன் இறைவன்’ என்றார். பாரதிதாசனுக்கு அந்த உணர்வை, இனிமையைத் தமிழ் தந்திருக்கிறது.

“சோலையினுள் மலர்களின் தேன் அருந்தவரும் வண்டின் ஒலியையும், புல்லாங்குழல் (Flute) ஒலியையும், வீணையின் இசையையும், குழந்தைகளின் மழலைப் பேச்சினையும் கேட்டு மகிழ்ந்து, அவற்றோடு மெய்மறந்து ஒன்றி இருக்கிறேன். ஆனால் அவற்றிடமிருந்து என்னை நான் விடுவித்துக் கொள்ள இயலும். தமிழை விட்டு என்னால் பிரிய முடியாது. ஏன் என்றால், தமிழும் நானும் உடலும் உயிரும் போன்றவர்கள்” இதனைத்,

தமிழும் நானும் மெய்யாய் உடல் உயிர்கண்டீர்

(பாரதிதாசன் கவிதைகள் முதல்தொகுதி 19. தமிழின் இனிமை, மூன்றாவது பாடல்)

என்று குறிப்பிடுகிறார். மேலும், தமிழ் மொழி தமிழ்மக்களின் உயிராக இருப்பதால், உலகிலுள்ள அனைத்தையும் வெல்லும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்று பறைசாற்றுகின்றார்.

தமிழ் எங்கள் உயிர் என்பதாலே – வெல்லும்

தரமுண்டு தமிழருக்குப் புவிமேலே

(பாரதிதாசன் கவிதைகள் முதல்பகுதி 23. எங்கள் தமிழ், வரிகள்: 9 – 10)

ஒவ்வொரு மனிதனும், தன் உயிரைப் பேணிப் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும், மேம்பாடு அடையச் செய்வதற்கும், எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வான். அதைப்போல நம் உயிர் போன்ற தமிழைப் பாதுகாப்பதற்கும் வளர்ச்சியடையச் செய்வதற்கும் நாம் எல்லாவித முயற்சிகளையும் தியாகங்களையும் செய்வதற்குத் தயார் ஆக வேண்டும் என்று கூறுகிறார் பாரதிதாசன்.

தமிழின் இனிமை ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒவ்வொரு வகையான இன்பம் கிடைக்கும். சிலருக்குப் பொருள் ஈட்டுதல் இன்பம் தரும். ஒரு சிலருக்கு அவர்கள் வகிக்கும் பதவி இன்பம் நல்கும். புகழ் இன்பம் வழங்கும். ஆனால் பாரதிதாசனுக்கு எது இன்பம் தருகிறது தெரியுமா? தாய்மொழியாம் தமிழ் இன்பம் தருகிறது. தமிழ் தரும் இன்பத்தைத் தம் பாடல்களின் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்.

தமிழுக்கு இன்னொரு பெயர் உண்டு. அது உங்களுக்குத் தெரியுமா? என்று வினவும் பாரதிதாசன்,

இன்பம் எனப்படுதல் – தமிழ்

இன்பம் எனத் தமிழ்நாட்டினர் எண்ணுக.

(முதல் பகுதி : தமிழ் உணவு, வரிகள்: 36 – 37)

என்று குறிப்பிடுகிறார். எனவே, தமிழுக்கு இன்பம் என்று இன்னொரு பெயருண்டு. தமிழ் நாட்டினரே அதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.

தமிழ் என்ற உடனே, இன்பம் தானாக வந்து கிட்ட வேண்டும். அந்த இன்பத்தை நீங்கள் நுகர வேண்டும் என்று கூறுகிறார்.

(கிட்டுதல் = அடைதல், கிட்ட = அடைய)

இயற்கையில் அமைந்துள்ள பல பொருள்களை நாம் நுகரும் போது அவை நமக்கு இன்பம் தருகின்றன. அவற்றை மனத்தில் நினைத்த உடனே, இன்ப உணர்வு ஏற்படும். அதைப்போல் தமிழைப் பற்றி நினைத்த உடனேயே இன்ப உணர்வு வரும்.

தமிழ் இன்பம் தருவதால், அது அமுதம் போன்றது என்று குறிப்பிடுகிறார். அமுதத்தை உண்ணும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, அல்லது இன்பம், தமிழைப் படிக்கும் போது கிடைக்கும். எனவே,

இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்கு

இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது !

(முதல் தொகுதி, 23. எங்கள் தமிழ் – வரிகள்: 1 – 2)

என்று இனிமையின் எல்லை எனக் கருதப்படும் அமுதத்தையே தமிழ் இன்பத்திற்கு இணையாகக் கூறுகிறார் பாரதிதாசன்.

தமிழ் மக்கள்

தமிழர் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள். பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம் பெறத்தக்க உயர்ந்த நாகரிகத்தை உடையவர்கள். தமிழர் பண்பாடு, உலகம் போற்றும் ஒரு சிறந்த பண்பாடு. இத்தகைய சிறப்புடைய தமிழ் மக்களின் இன்றைய தாழ்ந்த நிலையைச் சுட்டிக் காட்டி, அவர்கள் பெறவேண்டிய புத்துணர்ச்சியையும் வலியுறுத்திப் பாரதிதாசன் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.

தமிழரின் தொன்மைச் சிறப்பு இந்த நில உலகு தோன்றிய காலத்திலேயே தமிழ் இனம் தோன்றிவிட்டது. மனித வாழ்வை உருவாக்கியதே தமிழ்மொழி என்று தமிழினத் தொன்மைச் சிறப்பை எடுத்துரைக்கிறார்.

புனல்சூழ்ந்து வடிந்து போன

நிலத்திலே புதிய நாளை

மனிதப் பைங்கூழ் முளைத்தே

வகுத்தது மனித வாழ்வை

இனிய நற்றமிழே நீதான் எழுப்பினை

(அழகின்சிரிப்பு : தமிழ் – முதல்பாடல் வரிகள்: 1 – 6)

(கூழ் = பயிர்)

மேலும் தமிழ்மொழியின் தொன்மையினையும், தமிழர்கள் தொன்மை நாகரிகம் கொண்டவர்கள் என்பதனையும்,

மொழியில் உயர்ந்தது தமிழ்மொழியே – பண்டு

முதல் நாகரிகமும் பழந்தமிழ் மக்களே

(தேனருவி, தமிழன், வரிகள்: 11 – 13)

என்று சுட்டுகிறார்.

தமிழரின் பெருமை தமக்கென ஒரு தனிப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் உடையவர்கள் தமிழர்கள். பெருமைக்கு உரிய தமிழர் பண்பாடு இன்று வரையிலும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. அந்தப் பண்பாட்டுக் கூறுகளில் விருந்தோம்பல் முதன்மையானது.

• விருந்தோம்பல்

தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ் இனமக்கள் நல்ல பண்புகள் பொருந்தியவர்கள். அவர்களின் பண்புகளில் சிறந்தது விருந்தோம்பல். சங்ககாலம் முதற்கொண்டே விருந்தினரைப் போற்றி வாழ்கிறார்கள். விருந்தினர்களைப் போற்றி வாழ்வதினாலேயே உலகம் முழுவதும், புகழுடன் வாழ்கிறார்கள் தமிழர்கள் என்கிறார் பாரதிதாசன்.

நற்றமிழர் சேர்த்த புகழ்

ஞாலத்தில் என்னவெனில்

உற்ற விருந்தை

உயிரென்று – பெற்று உவத்தல்.

(குடும்பவிளக்கு, இரண்டாம் பகுதி – விருந்தோம்பல் – மாமன் மாமி மகிழ்ச்சி, 5வதுபாடல்)

தம்மை வந்து அடைந்த விருந்தினர்களுக்குத் தமிழர்கள், விருந்தோம்பலைத் தம் உயிருக்கும் மேலாகக் கருதினர். எனவே விருந்தினரைப் பேணும் பொழுது பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.

• தமிழரும் தமிழ்க் கலையும்

சீரும் சிறப்புமாக வாழ்ந்த பண்டைத் தமிழர் நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார் பாரதிதாசன்.

புலிக் கொடியும், வில் கொடியும், மீன் கொடியும் கொண்டு ஆட்சி செய்த மூவேந்தர் காலத்தில், உலகெங்கும் புகழ் பரப்பும் வகையில், செந்தமிழின் ஒலியே கேட்டது. தமிழ் நாட்டுக் கலைகளே ஒளியாய்க் கண்முன் காட்சியளித்தன. ஆனால் இன்று, பிறமொழி ஒலிகளும், பிறநாட்டுக் கலைகளுமே மலிந்து உள்ளன. இந்த நிலைமாறி மீண்டும் பழைய நிலை என்று வருமோ என்று ஏங்குகிறார் பாரதிதாசன். எனவே

காட்சி

ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்

ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்

புலி, வில், கயல் கொடி மூன்றினால்

புது வானம் எங்கும் எழில் மேவிடும்

அந்த வாழ்வுதான் எந்நாள் வரும்?

(இசையமுது, எந்த நாள்: 5-8)

(கயல் = மீன் , மேவிடும் = பொருந்திடும்)

என்று குறிப்பிடுகிறார்.

• இசைத்தமிழ்

இசையில் – தமிழ் இசையில் தமிழர்கள் எந்த வகையில் ஈடுபாட்டுடனும், புலமையுடனும் இருந்திருக்கிறார்கள் என்பதையும் பாரதிதாசன் விளக்கிக் கூறியுள்ளார்.

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழ்மக்கள், இயற்கையின் பொருள்களிலிருந்து – அவற்றின் ஒலிகளிலிருந்து இசையை அமைத்துக் கொண்டனர். குயிலின் குரல் இனிமையைக் கேட்டு மகிழ்ந்ததைப் போல், தாம் கேட்டு இன்புற்ற பறவைகளின் இனிய ஒலிகளிலிருந்தும், வண்டுகளின் ரீங்காரத்திலிருந்தும், மூங்கிலின் ஒலியிலிருந்தும் பெற்ற இன்னிசையைத் தமிழ் இசையாக மாற்றிய பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள். எனவே தமிழருக்கே உரிய தமிழ் இசை என்பது, இயற்கையிலிருந்து பிறந்தது என்கிறார் பாரதிதாசன்.

காட்சி

பழந்தமிழ் மக்கள் அந்நாள்

பறவைகள் விலங்கு வண்டு

தழை மூங்கில் இசைத்ததைத் தாம்

தழுவியே இசைத்த தாலே

எழும் இசைத்தமிழே.

(அழகின் சிரிப்பு: 57)

இயற்கையிலிருந்து பெறப்பட்ட இந்தத் தமிழ் இசை, தனிச்சிறப்பு வாய்ந்தது. இசையமுதில் தமிழன் வாழ்ந்த இன்ப வாழ்வின் அடையாளம் இசைத்தமிழே என்கிறார். இதனைக்

குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு

கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை

(இசையமுது. எந்த நாள்: 9-10)

என்று குறிப்பிடுகிறார். இசைத்தமிழ் தமிழர்களின் குறைவில்லாத செல்வம்.; தமிழர்கள் நெஞ்சில் நிறைந்த செல்வம்.

தமிழரின் வீரம் பண்டைத் தமிழர்கள் வீரத்தின் சிறப்பினைப் புறநானூறு போன்ற பழைய இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. அந்த வீரப் பாரம்பரியப் பெருமையைத் தமது தமிழ் உணர்வு வெளிப்படுமாறு எடுத்துரைக்கிறார் பாரதிதாசன்.

செந்தமிழர் இருக்கின்றார் சிங்கங்கள் போல்

திறலழித்துவிட எவரும் பிறந்தாரில்லை.

(தமிழச்சியின் கத்தி, அத்தான் என்று எதிர் வந்தாள்:1-2)

தம் பழம் பெருமையைக் காப்பாற்ற வேண்டும் தமிழர்கள். தமிழர்களின் வீரம் சிங்கம் போல் ஆற்றல் வாய்ந்தது; அந்த ஆற்றலை அழிப்பது எளிதல்ல என்று கூறுகிறார் பாரதிதாசன்.

• இமயத்தில் தமிழ்க் கொடி

பண்டைத் தமிழ் மன்னர் ஒருவர், வடநாடு சென்று போரிட்டு, வெற்றி பெற்று, தன் வெற்றிக்கு அடையாளமாக இமயமலையின் மேல், தன் நாட்டின் கொடியை ஏற்றி வைத்தார். இந்த வீர வரலாற்று நிகழ்ச்சியை நினைவூட்டி “நாம் தமிழர்” என்று சொல்வதில் எத்தகைய பெருமிதம் கொள்கிறார், பாரதிதாசன்!

இமய வெற்பின் முடியிற் – கொடியை

ஏறவைத்த நாங்கள்

தமிழர் என்று சொல்வோம்.

(இரண்டாம் தொகுதி – 39. பகை நடுக்கம். வரிகள்: 2 – 4)

இவ்வாறு, தமிழர்களிடமுள்ள வீரத்தின் சிறப்பினைப் பல பாடல்கள் மூலம் வெளிப்படுத்துகிறார் பாரதிதாசன்.

தமிழரின் கடமைகள் தாய்மொழியாம் தமிழ் வளம் பெற்றால்தான், தமிழன் வளம் பெறுவான். தமிழ் வாழ்ந்தால்தான் தமிழன் வாழ்வான் என்ற நம்பிக்கை பாரதிதாசனுக்கு இருக்கிறது. எனவே, தமிழுயர்ந்தால் தான் தமிழன் உயர்வான், தமிழ்ப் பகைவனும் தானே மறைவான் என்று குறிப்பிடுகிறார். தமிழை வளப்படுத்த என்ன வழி? அது எவ்வாறு வாழும்? தமிழ் எங்கும் நீக்கம் அற நிலைத்து நிற்க வேண்டும்; அதற்கான பணிகளைச் செய்ய வேண்டும். கலைச் செல்வங்கள் யாவும் தமிழாய் நிலைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன். எனவே

நன்று தமிழ் வளர்க ! தமிழ்

நாட்டினில் எங்கணும் பல்குக ! பல்குக

என்றும் தமிழ் வளர்க – கலை

யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக !

(முதல்தொகுதி – 21. தமிழ் உணவு 8-வது பாடல், வரிகள் 3 – 6)

என்று வேண்டுகிறார் கவிஞர்.

• தமிழும் தமிழரும்

தமிழ் வாழ்ந்தால் தமிழர்கள் வாழ்வார்கள் என்று கருதிய பாரதிதாசன், தமிழையும் தமிழரையும் பிரிக்க முடியாது என்று உணர்ந்தார். எனவே,

தமிழ்மொழி வாழ்க !

தமிழர் வாழ்க !

(இளைஞர் இலக்கியம், வாழ்க வரிகள்: 1 – 2)

என வாழ்த்துகிறார். தான் பெற்ற தமிழ் உணர்வைத் தமிழர்கள் எல்லாம் பெற்று, தாய் மொழியாம் தமிழைப் பேணிப் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்று விரும்பினார் பாரதிதாசன்.

தமிழர் ஒற்றுமை தமிழ்வாழ, தமிழர் வாழ. தமிழர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் என எண்ணினார் பாரதிதாசன். எனவே, தமிழர்களின் ஒற்றுமையைப் பற்றிப் பல பாடல்கள் பாடினார்.

தமிழர்கள் தங்களுக்குள் வேற்றுமை பல கொண்டுள்ளனர். அவ்வேற்றுமையை ஒழிக்க வேண்டும். அதற்கு என்ன வழி? தமிழால் – செந்தமிழால் ஒன்றுபட வேண்டும். தமிழ் – தமிழர் என்ற உணர்வு ஏற்பட வேண்டும். இதனைச்,

செந்தமிழ் ஒன்றே

நல்லொற்றுமை சேர்க்கும் ; நன்னெறி சேர்க்கும்

என்று குறிப்பிடுகிறார். மேலும், தமிழர் ஒற்றுமையாய் வாழ்ந்தால் என்ன நிகழும் என்பதையும் சுட்டுகிறார்.

தமிழுக்குப் பகையாக இருப்போர் எல்லாம், தமிழர்களிடையே காணப்படுகின்ற ஒற்றுமையைப் பார்த்து ஓடி ஒளிந்து கொள்வார்கள் என்று கூறுகிறார் பாரதிதாசன். ஒற்றுமையால் ஏற்படும் நன்மையைக் கூறும்போது,

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

(தேனருவி – செந்தமிழ்ச் செல்வம், வரிகள்: 4 – 5)

என்று குறிப்பிடுகிறார்.

• உடல் பல உயிர் ஒன்று

தமிழ் உணர்வால் ஒன்றுபட்ட தமிழர்கள், உடலளவில் பலராக வாழ்ந்தாலும், உயிரளவில் ஒருவரே இதனை,

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்

வீரம்கொள் கூட்டம் அன்னார்

உள்ளத்தால் ஒருவரே மற்று

உடலினால் பலராய்க் காண்பார்.

(முதல்தொகுதி. எந்நாளோ? 5-வது பாடல், வரிகள்: முதல் 4 வரிகள்)

என்ற பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார். இங்கு ‘வெள்ளம்போல் தமிழர் கூட்டம்’ என்று ஓர் அருமையான உவமையைக் கையாளுகிறார். வெள்ளம் ஒன்று திரளும். பிரிந்தாலும் மீண்டும் கூடும். குறுக்கே பிளந்தாலும் ஒன்று சேரும். தமிழர்களின் ஒற்றுமை அவ்வாறு தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழர் ஒற்றுமை நிலைக்கும். தமிழும் தமிழரும் தரும் பெருமையும் மேலும் மேலும் வளரும்; வாழும் என்று நம்பினார் பாரதிதாசன்.

தமிழ்நாடு

சங்க காலத்தில், சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்ற முப்பிரிவுகளால் ஆளப்பட்டது தமிழ்நாடு. சேரர், சோழர், பாண்டியர் என்ற மூவேந்தர்களும், தம் ஆட்சிச் சிறப்பாலும், மொழி உணர்வாலும், தமிழ் இலக்கியத்திற்கு – அதன் வளர்ச்சிக்குப் பெருந்தொண்டு ஆற்றினர். அதனால், தமிழ் இலக்கியம் வளம் பெற்றது. தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கணமும், இலக்கியமும் இன்றளவும் வாழ்ந்து வருகின்றன.

பழம்பெருமை வாய்ந்த தமிழ்நாடு, அரசியல் படையெடுப்புகளாலும், அந்நியர் ஆதிக்கத்தாலும் பல்வேறு வகையான அகப்புற மாற்றங்களைப் பெற்றது. அதனால் தமிழ்நாட்டில், தமிழருக்கும், தமிழுக்கும் பல சோதனைகள் ஏற்பட்டன. பிறமொழிச் செல்வாக்கினாலும், அரசியல் ஆட்சியின் சூழலாலும், தமிழ்நாடு பழைய நிலையிலிருந்து தாழ்வுற்றதாகப் பாரதிதாசன் கருதினார். அதிலிருந்து மேம்பாடு அடையவேண்டும் என்ற நோக்கில் தமிழ் நாட்டைப் பற்றிப் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.

தமிழன் தன் நாட்டின் தொன்மைப் பெருமையை அறிந்திருந்தால்தான், தற்காலத்தில் தமிழ்நாட்டில் காணப்படும் சீர்கேடுகளிலிருந்து விடுபட்டு முன்னேற முடியும் என்று கருதினார்.

தமிழ்நாட்டின் பெருமை சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப் பெற்ற தமிழ்நாட்டின் எல்லை வடக்கே வேங்கட மலை முதல், தெற்கே கன்னியாகுமரி வரையிலும் பரந்து காணப்பட்டது. இமயமலை வரையிலும் தமிழர் படையெடுத்துச் சென்றனர். கடல் கடந்து சென்று, இலங்கை, கடாரம் போன்ற இடங்களையும், கைப்பற்றித் தம் ஆட்சிக்கு உட்படுத்தி ஆண்டு வந்தனர். அத்தகைய பெருமை வாய்ந்த தமிழ்நாட்டைப் பற்றி, அதன் எல்லையைப் பற்றிக் குறிப்பிடும் போது,

கோடுயர் வேங்கடக் குன்றமுதல் – நல்

குமரிமட்டும் தமிழர் கோலங்கண்டே

நாம் ஆடுவமே ! பள்ளுபாடுவமே !

(இசையமுது, தமிழ்ப்பள்ளு: 1)

என்று கூறுகிறார்.

தமிழ்நாட்டின் வளம் தமிழ்நாட்டின் செல்வச் செழிப்பிற்குக் காரணம் தமிழ்நாட்டின் மண்வளம். தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சிறப்பிற்குக் காரணம் தமிழ் மக்களின் மனவளம். இவ்வாறு பல வளங்கள் பெற்ற ஒரு நாடு தமிழ்நாடு.

மண்வளத்தால் இயற்கை வளம் மிகுந்துள்ளது. மனவளத்தால் மக்களின் பண்பு வளம் சிறப்பாகக் காணப்படுகிறது.

• இயற்கை வளம்

மலைவளமும், கடல்வளமும், நிலவளமும் நிறைந்த ஒரு நாடு தமிழ்நாடு. இந்தச் சிறப்புகளை மையமாகக் கொண்டு, குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருத நிலம், நெய்தல் நிலம் என்று தமிழ்நாட்டைப் பாகுபாடு செய்திருந்தனர். நில அமைப்பிற்கேற்ப, தம் குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்தனர். இது தமிழ்நாட்டிற்கு உரிய தனிச்சிறப்பு. பாரதிதாசன் நெய்தல், குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் தலைப்புகளில் பாடல்களை இயற்றினார். அப்பாடல்களில், தமிழ்நாட்டின் வளத்தைச் சுட்டுகிறார்.

காட்சி

பாடிவரும் ஆறுகள் பல

பரந்துயர்ந்த மலைகளும் பல

கூடிநடக்கும் உழவுமாடு

கொடுக்கும் செல்வம் மிகப் பலபல

(நாடு, மருதம்: வரிகள் 5 – 8)

பெரிய ஆறுகள் பாய்ந்து செல்லும் போது ஏற்படும் இரைச்சல், கவிஞருக்கு அவை பாடுவன போன்ற, ஓர் உணர்வை ஏற்படுத்துகின்றது. எனவே, அவற்றைப் ‘பாடிவரும் ஆறுகள்’ என்கிறார்.

மருத நிலத்தின் வளத்தைச் சொல்ல விரும்பிய கவிஞர், உழவுத் தொழிலால், நாடுபெறும் செல்வத்தைச் சிறப்பாகச் சொல்கிறார்.

• சோலை தரும் காட்சி

கனிகளும், தானியங்களும் கொடுக்கும் இயற்கை வளத்தைப் போல, சோலைகளும், சோலைகளிலுள்ள மரம், கொடி ஆகியவற்றில் பூத்த மலர்களும், மரங்களிலும், மலர்களிலும் பொருந்தியிருக்கும் குயிலும் சிட்டும் பாடும் பாக்களும் இயற்கை வளத்திற்கு அழகு சேர்ப்பவை என்கிறார் பாரதிதாசன். அதனைத்

தென்றல் சிலிர்க்க வரும்சோலை

தனிற் குயிலும்

தேன்சிட்டும் பாடும் அங்கு மாலை

மணக்கும் மலர்

(நாடு, எழில்மிகுநாடு. வரிகள்: 8 – 11)

என்று குறிப்பிடுகிறார்.

காற்றடிக்கும் பொழுது, மரத்தின் இலைகள் அசையும். இல்லையா? அதைத் தென்றல் காற்று பட்டதும் சிலிர்க்கும் உடலைப்போல், காற்றுப்பட்டதும், மரமும் சிலிர்க்கிறது என்று சுவையாகவும், நயமாகவும் விளக்குகிறார் பாரதிதாசன். கவிஞரின் கற்பனைச் சிறப்பினை எண்ணிப் பாருங்கள்!

• பண்பு வளம்

தமிழ்நாட்டு நிலவளத்தைக் கூறிய கவிஞர் பாரதிதாசன், தமிழ்நாட்டு மக்கள் பண்பு வளத்தையும் சுட்டுகிறார். அறத்தோடு வாழ்ந்த தமிழர்கள், சிறந்த பண்பாடும் நாகரிகமும் உடையவர்கள். தமிழர்கள் பண்புக்கூறுகளில் ஒன்று வீரம். வீரர்களைப் பெண்கள் விரும்பி மணந்த தன்மையையும், வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கியமையையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழர்களின் வீரம் தமிழ்நாட்டின் பண்பாட்டை வளப்படுத்தியது. கற்பினைத் தம் உயிரினும் மேலாகப் போற்றிப் பாதுகாத்து வந்தனர் தமிழ்ப் பெண்கள். இத்தகைய நற்பண்புகளால் வளம் பெற்ற ஒரு நாடு தமிழ்நாடு என்று பெருமிதமாகக் கூறுகிறார் பாரதிதாசன்.

அறங்கிடந்து பண்பாடும்

அன்பிருந்து சதிர் ஆடும்

திறங்கிடந்த நாகரிகம்

செய்து தந்தது தமிழ்நாடு !

மறங்கிடந்த தோள் வீரர்

மகளிர்தரும் பெருங்கற்புச்

சிறந்திருக்கும் தமிழ்நாடு

செந்தமிழர் தாய்நாடு !

(நாடு, மருதம் : வரிகள்: 11 – 18)

(சதிர் = நாட்டியம்)

தமிழ்நாட்டில் கல்வி உலகிலுள்ள சிறந்த மொழிகளுள் ஒன்றாகவும், சிறந்த பண்பாடு உடையதாகவும், பல செல்வங்கள் கொண்டதாகவும், தமிழ் மொழி, திகழ்ந்தது. அதனால் தமிழ் மக்களும், பெருமைப்பட்டனர். தமிழ்நாடும் சிறப்புடன் திகழ்ந்தது. ஆனால் அந்த நிலை இன்று இல்லையே என்று மிகவும் வருந்துகிறார் பாரதிதாசன். கல்வியில் சிறந்திருந்த தமிழ்நாடு, இன்று அதிலும் பின்தங்கி உள்ளதை,

எல்லாம் இருந்த தமிழ்நாடு படிப்பு இல்லாமல்

பொல்லாங்கு அடைந்தது பிற்பாடு

(நாடு, எழில்மிகு தமிழ்நாடு : 1-2)

என்று கவலைப்படுகிறார் கவிஞர். தன் கவலையைப் போக்கும் வகையில் தமிழ் நாட்டவர்கள் செயல்பட வேண்டும் என வேண்டுகிறார்.

கல்வி இருட்டிற்குக் கலங்கரை விளக்கு

யாவர்க்கும் வாக்குரிமை இருக்கும் நாட்டில்

யாவர்க்கும் கல்வி இருக்க வேண்டும்

. . . . . . . . . . . . . . . . . . . . .

(நாடு, நாட்டியல் நாட்டுவோம், வரிகள்: 27 – 29)

இந்தப் பாடலைக் கூர்ந்து கவனித்தீர்களா? கல்வியின் சிறப்பினை இதைவிடச் சிறப்பாகக் கூற முடியுமா? விடுதலை பெற்று, வாக்குரிமை பெற்றோர்க்கு இருக்க வேண்டிய முக்கியமான பொருள் கல்வி என்கிறார் பாரதிதாசன். கல்வியறிவு பெற்றோராலேதான் தகுதி வாய்ந்த ஆட்சியாளரைச் சீர்தூக்கிப்பார்த்துத் தேர்ந்தெடுக்க முடியும் என்று கவிஞர் நம்பினார். குடியாட்சி வெற்றி பெறவேண்டுமானால், கல்வித் தகுதி பெற்ற வாக்காளர் தேவை என்பதைக் கவிஞர் எடுத்துரைக்கிறார்.

• நிலைத்து நிற்கும் கல்வி

நாம் ஈட்டும் செல்வம் நம் கையை விட்டும் போகலாம். ஆனால், நாம் கற்கும் கல்வி என்றைக்கும் நிலைத்து நிற்கும். இந்த உண்மையைப் பாரதிதாசன்,

இல்லை என்பது கல்வி இல்லாமையே !

உடையவர் என்பவர் கல்வி உடையவரே !

(நாடு, நாட்டியல் நாட்டுவோம், வரிகள்: 33 – 34)

என்று குறிப்பிடுகிறார். அழியாத செல்வமாகிய கல்வியைக் கற்று, தமிழ் நாட்டிற்குப் பெருமை ஏற்படுத்துங்கள் என்கிறார் பாரதிதாசன்.

தமிழ்நாட்டில் ஒற்றுமை பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சி சிதைந்தமைக்கும், தமிழ் மக்கள் அல்லல் பல அடைந்தமைக்கும், தமிழ் மொழியின் செல்வாக்கு குறைந்தமைக்கும் காரணம் தமிழ்நாட்டில் இருந்த மன்னர்களுக்குள்ளே போட்டி, பொறாமை, அவற்றின் விளைவான சண்டைகள். அவற்றால் ஏற்பட்ட அந்நியர் ஆதிக்கம், அந்நியர் ஆட்சி ஆகியனவேயாகும். நாட்டில் ஒற்றுமை இருந்தால்தான், நாடும், மக்களும், மொழியும் பாதுகாப்போடு, சிறப்படையும் என்பதை நன்கு உணர்ந்தவர் பாரதிதாசன். எனவே,

உற்ற நலம் உணர்ந்திடுக தமிழ் இனத்தார்

உள்ளூர ஒன்றுபட்டால் வாழ்தல் கூடும்.

(தமிழ் ; தமிழினத்தார் ஒன்றுபட வேண்டும் : 15-16)

என்று வேண்டுகிறார்.

ஒற்றுமையாக இருந்ததால் நாம் பெற்ற நன்மைகளையும் ஒற்றுமை இல்லாமையால் அடைந்த துன்பங்களையும் நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். நம் உள்ளத்தின் உணர்வுகளால் ஒன்று பட்டால் நமக்கு நல்வாழ்வு ஏற்படும். எனவே தமிழர்களே! ஒன்று படுங்கள் என்று குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டில் தமிழ் எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! என்று முழங்கியவர் பாரதிதாசன். தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களிலும், ஏடுகளிலும், கூத்துகளிலும், இசையிலும், தெருக்களிலும், தமிழ் உரிய இடத்தைப் பெறவில்லையே என்று மிக வருந்தியவர் பாவேந்தர். எனவே, தமிழ்நாட்டின் இன்றைய நிலையையும் சுட்டிக்காட்டி, அந்த நிலையை மாற்றியமைத்து, புதியதோர் உலகம் செய்வோம், தமிழுக்குப் புத்துயிர் ஊட்டுவோம் என்று கூறுகிறார் பாரதிதாசன். அதற்கு ஒரே வழி, எல்லாத் துறைகளிலும் தமிழுக்கு உரிய இடத்தைப் பெறச் செய்வதாகும் என்று கூறுகிறார்.

நன்று தமிழ் வளர்க ! தமிழ்

நாட்டினில் எங்கணும் பல்குக ! பல்குக !

என்றும் தமிழ் வளர்க – கலை

யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக !

(முதல்தொகுதி, தமிழ் உணவு: 9-வது பாடல் வரிகள்: 3 – 6)

தமிழ்நாட்டில் தமிழுக்கு உரிய இடத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை எல்லாம் தமிழ்த்தொண்டு மூலம் வெளிப்படுத்த வேண்டும். அதை இளைய தலைமுறை செய்ய வேண்டும். எனவே, இளைஞர்களைப் பார்த்து,

தொண்டு செய்வாய் ! தமிழுக்குத்

துறைதோறும் துறைதோறும்

துடித்தெழுந்தே

(தமிழ் இயக்கம். பாடல் 11)

என்று வேண்டுகிறார்.

• இனிய தமிழ்

தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்யவேண்டுமென்று பாடிய பாரதிதாசன், பிறமொழியைப் பயன்படுத்திய இல்லற விழாவில், இனிய தமிழை ஒலிக்க வேண்டுமென்று வேண்டுகிறார்.

இல்வாழ்க்கையைத் தமிழர்கள், இனிய இல்லறம் என்றே குறிப்பிடுகின்றனர். இனிமையின் தொடக்கம் இல்லறம். மனைவி, மக்களுடன், உற்றார் உறவினருடன் வாழும் போது கிடைக்கும் இன்பத்திற்கு இணை ஏது? இன்பம் தரும் இத்தகைய இல்லற வாழ்க்கையில் புகும் போது புரியாத மொழியில், புரியாத மந்திரங்களை ஓதுவதால் என்ன பயன்? புரியும் மொழியில் இனிமைத் தமிழில் வாழ்த்தினால் அந்த இல்லற வாழ்வில் இனிமை பொங்கும் ; மகிழ்ச்சி தங்கும் என்பதனை

மணமக்கள் இல்லறத்தை

மாத்தமிழில் தொடங்கிடுக

மல்கும் இன்பம்.

(தமிழ் இயக்கம், விழாநடத்துவோர் :20)

என்று குறிப்பிடுகிறார்.

இன்பம் தரும் இல்லற வாழ்க்கையை, இன்பம் தரும் தமிழில் தொடங்குங்கள் என்று வேண்டுகிறார். தாய் மொழியின் மீது கவிஞர் கொண்ட பற்றைத் தமிழ் உணர்வை வாழ்நாள் முழுவதும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே பாரதிதாசன் ஆசை.

தமிழ் வாழ்க! நாடு வாழ்க! மொழித் தொன்மையும், இலக்கிய வளமையும், பண்பாட்டுச் சிறப்பும் பொருந்திய தமிழ் நாட்டின் மீது கொண்ட அளவுகடந்த பற்றை வெளிப்படுத்தும் பாரதிதாசன்,

தமிழ் நாடே வாழ்க – எம்

அமிழ்தாகிய இயல், இசை, கூத்தென்னும்

தமிழாகிய உயிர்தழையும் விழுமிய

தமிழ் நாடே வாழ்க !

(தேனருவி, தமிழ்நாட்டு வாழ்த்து வரிகள்: 1- 4)

என்று தமிழ் நாட்டை வாழ்த்துகின்றார். அமிழ்தம் போன்ற சிறப்பு வாய்ந்த, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் உயிர் போன்ற சிறப்புடையது. அத்தகைய சிறப்புக்குரிய மொழி பிறந்த தமிழ் நாடே வாழ்க என்று வாழ்த்துகின்றார்.

தொகுப்புரை

பாரதிதாசன் தமிழ்மொழி மீதும், தமிழர் மீதும் தமிழ்நாட்டின் மீதும் பாடிய பல பாடல்களில் அவர் உணர்த்தும் தமிழ் உணர்வு வெளிப்படுகிறது. இப்பாடல்களில், தமிழ்மொழியின் சிறப்புக் கூறுகளையும், தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பினையும், தமிழ்நாட்டின் பெருமைகளையும் எடுத்துரைக்கிறார்.

இப்பாடத்தில் சொல்லப்பட்ட கருத்துகளில் இருந்து, பாரதிதாசன், தமிழைத் தன் உயிர்போல் நேசித்தமை புலப்படும். தமிழ் எத்தகைய இனிமையான மொழி என்பதுவும், தமிழ் மக்களின் வீரம், கற்பு ஆகியவற்றில் கவிஞருக்கு இருந்த மதிப்பு எத்தகையது என்பதுவும் புலப்படும்.

பாடம் - 2

பாரதிதாசன் கண்ட இயற்கை

பாட முன்னுரை

இயற்கையின் அழகைக் கண்டு, மகிழ்ந்து, இன்பம் அனுபவித்த கவிஞர்களில் பலர் தாம் கண்டு நுகர்ந்த இன்பத்தைப் பிறரும் அனுபவித்து மகிழவேண்டும் என்ற நோக்கத்தில் தம் கவிதைகளைப் புனைந்தனர். இத்தகைய கவிஞர்களுள் இயற்கையைப் பற்றிப் பாடியுள்ள புலவர்களுள் ஒரு சிலரே சிறப்புக்கும், பாராட்டுக்கும் உரியவர்களாகத் திகழ்கின்றார்கள். குறிப்பாக ஆங்கிலக் கவிஞர் வோர்ட்ஸ்வொர்த் (Wordsworth) சிறந்த இயற்கைக் கவிஞராகக் கருதப்படுகிறார். சமஸ்கிருதத்தில் காளிதாசரைக் குறிப்பிடுவர். சங்ககாலத்தைச் சார்ந்த கபிலர், இயற்கையைப் பற்றிப் பாடிய தமிழ்க் கவிஞர்களுள் முதன்மையானவர். இருபதாம் நூற்றாண்டில், இயற்கையைப் பற்றிப் பாடிய கவிஞர்களுள், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலையாயவர்.

இயற்கையில் தாம் கண்டு, அனுபவித்து ஆனந்தம் அடைந்ததற்குக் காரணமான ஒவ்வொரு பொருளைப் பற்றியும் பாரதிதாசன் அருமையான கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். ஒவ்வொரு கவிதையும், கவிஞரின் இயற்கை ஈடுபாட்டையும், இயற்கைப் பொருள்களைப் பற்றிய அவரது புதிய அணுகுமுறைகளையும் மிகச் சிறப்பாக வெளியிடுகிறது.

இந்தப் பாடத்தில், பாரதிதாசன் எந்த அளவிற்கு இயற்கையின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது விளக்கப்படுகிறது. இயற்கைக் காட்சிகளிலும், இயற்கைப் பொருள்களைப் பற்றியும், காலை, மாலை போன்ற பொழுதுகளைப் பற்றியும் பறவை இனங்களைப் பற்றியும் பாடிய பாரதிதாசன், அவற்றின் மூலம் எத்தகைய சமுதாயக் கருத்துகளைத் தெரிவித்தார் என்பது இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.

பாரதிதாசனின் பாடல்களில் இயற்கை

ஓர் அறிவியலாளன், அல்லது விவசாயி இயற்கையைப் பார்க்கும் பார்வையில் இருந்து ஒரு கவிஞனின் பார்வை வேறுபட்டது. அழகான ஓர் இயற்கைக் காட்சியைப் பார்த்து மகிழ்வது மனித இயல்பு. ஆனால், தான் பார்த்து மகிழ்ந்த காட்சியைக் கவிஞன், அதோடு விட்டு விடுவதில்லை. பிறரும், அக்காட்சியைப் பார்க்க இயலாவிட்டாலும், படித்து, மகிழவேண்டும் என்று நினைக்கிறான். எனவே, தான் அனுபவித்து மகிழ்ந்த காட்சியை அழகான ஒரு சொல் ஓவியமாக நம் மனக்கண் முன்னால் கொண்டு நிறுத்துகிறான். பாரதிதாசனின் கவிதைகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

கவிஞன் என்பவன், இயற்கையைக் கண்டு மகிழ்ந்து அந்த மகிழ்ச்சியை மட்டும் எடுத்துக்காட்டுவது ஒரு நிலை. இயற்கைக் காட்சி ஒன்றினைப் பார்க்கும் பொழுது ஏற்படும் உணர்வுகளை (feelings) வெளிப்படுத்துவது இன்னொரு நிலை. அது வளர்ந்த நிலை. பாரதிதாசன் இந்த வளர்ந்த நிலைக் கவிதைகளையே படைத்துள்ளார். தாம் கண்டு மகிழ்ந்த இயற்கைக் காட்சிகளை வாழ்க்கையின் மரபுகளோடும், அன்றாட நடைமுறை நிகழ்ச்சிகளோடும் இணைத்தும் பிணைத்தும் காட்டியுள்ளார் பாரதிதாசன். மேலும் பழைய மரபுக் கவிஞர்களிலிருந்து வேறுபட்ட நிலையில் பல புதிய விளக்கங்களையும், அணுகுமுறைகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பாரதிதாசன் காணும் இயற்கைக்காட்சிகள்

பாரதிதாசன், இயற்கையைப் பற்றிய தம் பாடல்களில், இயற்கையிலே அமைந்திருக்கும் காட்சிகள் பலவற்றை இடம்பெறச் செய்துள்ளார். அவற்றில், குறிப்பாக மலையைப் பற்றிய காட்சி, மழைதரும் காட்சி, இடை அறாது ஓடிக் கொண்டிருக்கும் ஆறு வழங்கும் காட்சி, சோலையின் வனப்பு ஆகியவற்றை மிகவும் சிறப்பாகப் பாடியுள்ளார்.

மலையின் அழகு இயற்கை வழங்கும் அழகுக் காட்சிகளில் மலையும் ஒன்று. மலையையும் மலைசார்ந்த இடத்தையும் பண்டைத் தமிழர் ‘குறிஞ்சி’ என்று அழைத்தனர். குறிஞ்சி நிலத்தின் கடவுளாக முருகனைப் படைத்தனர். தமிழில் முருகு என்றால் அழகு என்று பொருள். அழகையே, இயற்கை அழகையே இறைவனாக வழிபாடு செய்யும் வழக்கம் தமிழர்களிடையே பண்பாடாக வளர்ந்து இருந்தது. மலைப்பகுதியின் அழகு காரணமாக, அதன் தெய்வமாக முருகன் அல்லது ‘அழகனை’த் தமிழர் வழிபட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே ! இயற்கை அழகின் தளமாக அமைந்திருக்கும் மலையைப் பற்றியும் மலைதரும் அழகுக் காட்சியைப் பற்றியும் பல புலவர்கள் பாடியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு மாறுபட்ட நிலையில், பாரதிதாசன் மலை தரும் வனப்பைப் பற்றிப் பாடியுள்ளார்.

மாணவர்களே ! எப்பொழுதாவது மலைப்பகுதிக்குச் சென்றுள்ளீர்களா? சுற்றுலாப் பயணமாகக்கூடச் சென்றிருப்பீர்கள் இல்லையா? எவ்வளவு அழகான மரங்கள் ! செடி கொடிகள் ! மரங்களில் காய்களும் கனிகளும் ! செடிகொடிகளில் பல வண்ண வண்ணப் பூக்கள்! பார்க்கப்பார்க்க நம்மைப் பரவசம் ஊட்டும். ஆனந்தக்களிப்பில் நம்மை அப்படியே மெய்மறக்கச் செய்யும். உண்மைதானே? ஒரு பக்கம் குயில் கூவிக்கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் அழகான மயில் தோகையை விரித்து ஆடிக் கொண்டிருக்கும். குளிர்ந்த காற்று உடலுக்குக் குளிர்ச்சி ஊட்டி இன்பம் தரும். பூக்களின் நறுமணம் நம்மை ஈர்க்கும். பூக்கள்தோறும் சென்று, தேனைச் சேகரிக்கும் தேனீக்கள் இன்னிசை பாடிக்கொண்டிருக்கும். இயற்கையின் இந்த அழகுக் காட்சியைப் பாவேந்தர் பாரதிதாசன் பார்த்து மகிழ்ந்திருக்கிறார். அந்த அழகுக்காட்சியைக் கவிதையாக வடித்துக் கொடுக்கிறார்.

குயில்கூவிக் கொண்டிருக்கும் ; கோலம் மிகுந்த

மயில்ஆடிக் கொண்டிருக்கும் ; வாசம் உடையநற்

காற்றுக் குளிர்ந்தடிக்கும் ; கண்ணாடி போன்ற நீர்

ஊற்றுக்கள் உண்டு ; கனிமரங்கள் மிக்க உண்டு ;

தேனீக்கள் இருந்தபடி இன்னிசை பாடிக் களிக்கும்.

(சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வரிகள்: 1 – 6)

(கோலம் = அழகு)

அருவியின் அழகு மலையின் அழகை வார்த்தைகளில் வடித்த பாரதிதாசன், பாயும் அருவியின் அழகினையும் எடுத்துரைக்கிறார. இயற்கையைப் பற்றிப் பாடிய பல புலவர்களும் அருவியின் அழகை விளக்கிப் பாடியுள்ளனர். ஆனால் பாரதிதாசன், பாயும் அருவிக்குப் புதியதொரு விளக்கம் கொடுக்கிறார்.

மலையிலிருந்து பாயும் அருவியைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த கவிஞர், பக்கத்தில் பறந்து கொண்டிருக்கும் குருவிகளைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார். மலர்ந்திருந்த மலர்களையும் கண்டுகளித்திருக்கிறார். அதை அப்படியே கவிதையாக்கித் தந்துள்ளார்.

அருவிகள், வயிரத் தொங்கல்

அடர்கொடி, பச்சைப்பட்டே !

குருவிகள், தங்கக் கட்டி !

குளிர்மலர், மணியின் குப்பை !

(அழகின் சிரிப்பு : குன்றம், ‘ஒளியும் குன்றும்’ வரிகள் : 1-5)

மாணவர்களே ! புரிகின்றதா பாரதிதாசன் என்ன சொல்கிறார் என்று? மலையின் உச்சியிலிருந்து அருவிகள் கீழ்நோக்கிப் பாய்கின்றன. அவை, பாரதிதாசன் பார்வையில், ஒளிவீசும் வயிரத்தை (Diamond) கட்டித் தொங்கவிட்டது போல் காட்சி அளிக்கின்றன. அருவியின் பக்கத்து மரங்களில் படர்ந்திருக்கும் நெருக்கமாக இருக்கும் கொடிகள், பச்சைநிறத்தில் அமைந்த பட்டைப்போல் காணப்படுகின்றன. மரங்களில் அமர்ந்திருக்கும் குருவிகள் தங்கத்தால் ஆகிய கட்டிகள் போலுள்ளன. மலர்கள் எல்லாம் மணியின் கூட்டம் போன்று அமைந்துள்ளன. கவிஞர் கூறும் ஒவ்வோர் உவமையும் அவரது புதிய நோக்கையே சுட்டுகிறது. அருவியைப் பலரும் பலவிதமாகப் பாடியுள்ளனர். ஆனால், மாறுபட்ட நிலையில் பாரதிதாசன் பாடிய தன்மை புதுமையானது.

உலகிலுள்ள விலை உயர்ந்த பொருள்களாகிய வைரம், தங்கம், மாணிக்கம் போன்ற பொருள்களோடு, அருவியின் காட்சியை ஒப்பிட்டுக் கூறுகிறார். அதன் காரணம் என்ன? தான் பார்த்த அருவியின் காட்சி, விலை மதிக்கமுடியாத உயர்ந்த தன்மை உடையது என்பதைப் புலப்படுத்தவே இவ்வாறு கூறுகிறார். இப்பாடலில், இயற்கைக் காட்சியின் தன்மையையும், தரத்தையும் வெளிப்படுத்தவே இவ்வாறு கூறுகிறார் பாரதிதாசன்.

• இயற்கைப் பாடலிலும் சமுதாய உணர்வு

பாரதிதாசன் ஒரு சமுதாயச் சிந்தனையாளர். சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்டவர். எனவே வாய்ப்புக் கிடைக்கும் பொழுது எல்லாம் அதை அவர் வெளிப்படுத்தியுள்ளார். மலையின் அழகைப் பற்றிப் பாடும் பொழுதும், தம் வாழ்க்கையில் விடிவே இல்லாமல் வருந்தும் அடிமையின் உள்ளக் குமுறல் தான் அவர் நினைவுக்கு வருகிறது:

. . . . அடிமை நெஞ்சம்

புகைதல் போல் தோன்றும் குன்றம் !

(அழகின்சிரிப்பு குன்றம், முகில்மொய்த்த குன்றம்,

வரிகள்: 7 – 8)

கவிஞரின் அடிமனத்தில் சமுதாயச் சிந்தனை எவ்வளவு ஆழமாக வேர் ஊன்றியுள்ளது, பாருங்கள்!

மழை அழகு மழையில் – மழைபெய்வதில் என்ன அழகு என்று கேட்கலாம்? நீங்கள் சிறுவர்களாக இருக்கும் பொழுது மழை பெய்வதை வியந்து பார்த்து இரசித்திருப்பீர்கள் ! இல்லையா? மழை பெய்வதற்கு முன்னர், இருண்ட மேகம் சூழும். இடி மின்னல் வரும். கருமேகங்களுக்கு இடையே மின்னல் மின்னுவதும் ஓர் அழகு. இடிமுழங்குவது மழை வருவதை அறிவிக்கும் முரசுபோல் முழங்கும். பிறகு மழை பெய்யும். இவை அனைத்தும் சங்கிலித்தொடர் போல் நிகழும் இயற்கை நிகழ்ச்சிகள். இந்நிகழ்ச்சிகளைப் பின்புலமாக வைத்துப் பாரதிதாசன் பாடுகின்றார்.

கேள்விஇலார் நெஞ்சம்போல் இருண்டு, நீளும்

வழக்குடையார் செல்வம்போல் மின்னி மாய்ந்து

வண்பொருளை இழந்தான்போல் அதிர்ந்து பின்னர்,

மழைக் கண்ணீர் உகுத்தது வான் !

(பாண்டியன் பரிசு. இயல் 53. வரிகள்: 2 – 5)

பிறர் சொல்வதைக் கேட்டுப் பயன்பெறாதவர்களின் இருள்சூழ்ந்த நெஞ்சத்தைப் போல் மேகம் இருண்டு காணப்படுகிறது என்கிறார். நீதிமன்றத்தில் நீண்ட நாட்கள் வழக்கு நடத்திக் கொண்டிருப்பவனது செல்வம், திடீரென விரைவிலே அழிவது போல, மின்னல் மின்னி மறைந்துவிடுகிறதாம். தன்னிடம் இருக்கும் செல்வங்களை எல்லாம், முழுமையாக இழந்து, ஓ ! என்று அலறி அழுது கண்ணீர் விடுபவனைப் போல் இடிமுழங்கி, மேகம் மழையாகிய கண்ணீரைப் பொழிகிறது என்று மிக அருமையாக விளக்குகிறார் பாரதிதாசன்.

மேற்குறிப்பிட்ட பாடலின் கருத்துகளில் இருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்? ஒரு சமுதாயக் காட்சியையே உங்கள் முன்கொண்டு வந்து பாரதிதாசன் நிறுத்துகிறார். இல்லையா?

கேள்வி அறிவில்லாதவன் உள்ளம் இருள் சூழ்ந்தது; நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடத்திக் கொண்டிருப்போர் செல்வம் அழியும்; கையில் இருக்கும் செல்வங்களையெல்லாம் இழப்பவன் மனத்திற்குள் அடக்கி வைத்திருக்கும் துன்பத்தைத் தன் கண்ணீரால் வெளிப்படுத்துவான் என்பவையெல்லாம் இவற்றின் மூலம் புலப்படவில்லையா?

இவ்வாறு இயற்கைக் காட்சிகளின் வாயிலாகத் தம் கருத்துகளைப் பாரதிதாசன் வெளிப்படுத்துகின்றார்.

இயற்கைப்பொருள்கள்

இயற்கைக் காட்சிகளைப் பற்றிப் பாடிய பாரதிதாசன், இயற்கைப் பொருள்களாகிய வானம், நிலா, ஞாயிறு முதலியவை பற்றியும் பல பாடல்களைப் பாடியுள்ளார். தம் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு இவற்றைத் தளமாகக் கொண்டு பாடியுள்ளார்.

வானத்தின் அழகு அளவிட முடியாதது, அலகிட முடியாதது வானம். இந்த வானத்தில் தான் எத்தனை அழகுகள். பகலில் ஞாயிறு, இரவில் நிலா, விண்மீன்கள் கூட்டம், மேகங்களின் ஊர்வலம். இத்தனையும் கொண்டுள்ள இந்த வானத்தின் அழகினை, மாலை நேரத்தில் பார்த்தால், உள்ளத்தை அள்ளுகின்ற காட்சியாக இருக்கும். இந்தக் காட்சி தரும் இன்பத்தை – அழகினைத் தம் பாடலில் வெளிப்படுத்துகிறார் பாரதிதாசன்.

குன்றின் மீது நின்று கண்டேன்,

கோலம்! என்ன கோலமே !

பொன் ததும்பும் அந்தி வானம்

(பாரதிதாசன் கவிதைகள் காட்சி இன்பம்: வரிகள்: 1 – 3)

அந்திவானத்தின் அழகுக் காட்சியை ஒரு குன்றின்மேல் நின்று பார்க்கிறாராம். அந்தி வானத்தின் அருமையான காட்சி, அவரைப் பரவசப்படுத்தியிருக்கிறது. எனவே, என்ன அழகு ! என்ன அழகு ! என்று வியக்கிறார். அந்தி வானத்தின் வண்ணத்தை, ஞாயிறு மறையும் போது தோன்றும், அந்த அழகை, பொன்னைப் போல் பிரகாசிக்கிறது என்கிறார் பாரதிதாசன்.

வானம் தந்த அழகுக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த கவிஞர், அதன் தன்மையை வெளிப்படுத்துகிறார்.

காற்று, தீ, நீர், ஞாயிறு, நிலவு போன்ற உலக இயக்கத்தின் அடிப்படைக் கூறுகளை வழங்கிய வானத்தின் சிறப்பை எண்ணி எண்ணி வியப்படைகிறார்.

விரிந்த வானே, வெளியே – எங்கும்

விளைந்த பொருளின் முதலே

திரிந்த காற்றும், புனலும் – மண்ணும்,

செந்தீ யாவும் தந்தோய்

தெரிந்த கதிரும் நிலவும் – பலவாச்

செறிந்த உலகின் வித்தே,

புரிந்த உன்றன் செயல்கள் – எல்லாம்

புதுமை ! புதுமை ! புதுமை

(இரண்டாம் தொகுதி, 4. இயற்கைச் செல்வம் – வரிகள்: 1 – 8)

வானத்தின் தன்மையை – அதன் வாயிலாகக் கிடைக்கும் பயன்களையும் சிறப்புகளையும் – புதுமை ! புதுமை ! புதுமை ! என்று புகழ்கிறார்.

கதிரவன் தரும் காட்சி கதிரவன் வழங்கும் இயற்கைக்காட்சிகளைப் பற்றிப்பல பாடல்கள் பாடியுள்ளார் பாரதிதாசன். ‘மலர்ந்தது காலை, பூத்தது கதிர், விழுந்ததது தங்கத்தூற்றல்’ என ஒவ்வொரு நாளையும் தொடங்கி வைக்கும் கதிரவனைக் குறிப்பிடுவார். கதிரவனின் தோற்றமும் மறைவும் பார்ப்பவர் மனத்தில் இன்பம் ஊட்டும். பாரதிதாசன் கதிரவனின் தோற்றப் பொலிவினைக் கண்டு மகிழ்ந்திருக்கிறார்.

காட்சி

உலகம் விளக்கம் உறக் கீழ்த்திசையில்

மலர்ந்தது செங்கதிர் ! மலர்ந்தது காலை

(எதிர்பாராத முத்தம்.

பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு’, வரிகள்:1 – 2)

என்று கூறும் பாரதிதாசன், இன்னொரு பாடலில்,

காரிருள் நீக்கக் கதிர்வந்து பூத்தது

(தமிழச்சியின் கத்தி)

என்று, கதிரவன் தோன்றியதை மலர்ந்தது, பூத்தது என்று மிக நயமாகக் குறிப்பிடுகிறார்.

அதோடு அவர் மனம் திருப்தி அடையவில்லை. கீழ்த்திக்கில் கதிரவன் தோன்றும்போது, கீழ்வானத்தில், கதிரவன் கதிர்கள் ஒளி வீசிக் கொண்டு வெளியே வரும். இந்த ஒளிமயமான வண்ணக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த கவிஞர்,

எழுந்தது செங்கதிர்தான்

கடல்மிசை ! அடடா எங்கும்

விழுந்தது தங்கத் தூற்றல் !

(அழகின் சிரிப்பு. கடல், கடலும் இளங்கதிரும்: வரிகள்: 1 – 3)

கதிரவனின் தோற்றத்தால் இருள் அகன்றது. அதோடு, அதன் கதிர்கள் ஒளி மழையை வழங்கியது. எத்தகைய ஒளி மழை? தங்க ஒளி மழை என்கிறார் பாரதிதாசன். கதிரவன் தோற்றத்தின் இயற்கைக்காட்சியை எப்படியெல்லாம் கவிஞர் நினைந்து நினைந்து மகிழ்ந்திருக்கிறார் பாருங்கள்!

கதிரவனின் தோற்றக் காட்சியின் அழகைக் கண்டு மகிழ்ந்த பாரதிதாசன், அதனைத் தன் கருத்தை வெளியிடுவதற்கு உரிய வாயிலாகவும் பயன்படுத்திக் கொண்டார்.

• பகலவன் பரிசு

ஒரே தன்மை உடைய கதிரவனை, இரண்டு இடங்களில் இரண்டு விதமான செய்திகளை வழங்குவதாகச் சுவையாகக் குறிப்பிடுகிறார்.

விடியற்காலத்தில், கதிரவன் தோன்றுவதற்கு முன்னரே, தலைவி எழுந்து, முற்றத்திற்கு வந்து, தண்ணீர் தெளித்து, அரிசிமாவால் அழகான கோலம் போட்டாள். அப்பொழுது தோன்றிய கதிரவன், அவள் செயலைப் பாராட்டும் வகையில், பொன் போன்ற ஒளியைப் பரிசாகக் கொடுத்தானாம்.

காட்சி

அரிசிமாக் கோலம் அமைத்தனள் ; அவளுக்குப்

பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி

(குடும்ப விளக்கு முதற்பகுதி,

‘ஒருநாள் நிகழ்ச்சி’, ‘கோலமிட்டாள்’ வரிகள்: 14 – 15)

(பகலவன் = சூரியன்)

கதிரவன் கீழ்த்திக்கில் தோன்றியதும் இருள் நீங்கி ஒளிவருவது இயற்கை. அதைச் சுவையாக விளக்குகிறார் கவிஞர், காலைக் கடமைகளைத் தொடங்கிய ஒரு பெண்ணுக்குப் பொன் போன்ற ஒளியைக் கொடுத்தான் என்று எவ்வளவு சிறப்பாகச் சொல்லுகிறார் பாருங்கள்!

• பரிதியின் நடுக்கம்

இன்னொரு இடத்தில், இதற்கு மாறுபட்ட நிலையில் குறிப்பிடுகிறார். ‘குடும்ப விளக்கு’ என்ற பாடலில் உள்ள தலைவிக்குப் பரிசு வழங்கிய கதிரவன், ‘இருண்ட வீடு’ என்ற நூலின் தலைவி கோலம் போடுவதைப் பார்த்ததும், கண்கள் நடுங்கின என்று குறிப்பிடுகிறார்.

கோலம் போட்டவள் கொஞ்சம் நிமிர்ந்தாள்

காலைப் பரிதியின் கண்கள் நடுங்கின.

(இருண்ட வீடு, பகுதி. 4 வரிகள் 23-24)

(பரிதி = சூரியன்)

பெண்கள், கதிரவன் தோன்று முன்னரே, எழுந்து, முகம்கழுவி, தன் கூந்தலைக் கட்டிக் கொண்டு வந்து, கோலம் இடுவார்கள். அதுதான் மரபு. ஆனால், இந்தப்பெண், கதிரவன் நடு உச்சிக்கு வந்த பின் முகம் கழுவாமல், தன் கூந்தலைக் கூட ஒழுங்கு படுத்தாமல், பல் துலக்காத நிலையில் வருகிறாள். வந்தவள், வரும் வழியில் கிடந்த மாட்டுச் சாணத்தை எடுத்து, குவளையில் மிஞ்சியிருந்த பாலில் கலக்கி, முற்றத்தில் தெளித்தாள். தலைவிரி கோலமாக இருந்த அவளது கூந்தல் சிலிர்த்த முள்ளம்பன்றிபோல் காட்சி அளித்தது. இந்தக் கோலத்துடன் அவள் தலை நிமிர்ந்ததும் பகலவன் அவளின் தோற்றத்தைப் பார்த்து நடுங்கினான் என்கிறார் பாரதிதாசன்.

காட்சி

பெண்களின், கடமையையும் அதைச் செவ்வனவே செய்யவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தவே பாரதிதாசன் இவ்வாறு கூறுகிறார். குடும்பத்தின் சீர்மை கெடாது பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே பாரதிதாசனின் நோக்கம்.

நிலவு பெரும்பான்மையான கவிஞர்கள், நிலவின் அழகைப் பற்றிப் பலவிதமாகப் பாடியுள்ளனர். பல உவமைகளுக்குப் பயன்படுத்தியுள்ளனர். பொதுவாக, நிலவைப் பெண்களின் முகத்தின் அழகோடு ஒப்பிட்டுப் பாடுவர். ஆனால், பாரதிதாசன், நிலவின் அழகை மட்டும் மனத்தில் கொள்ளவில்லை; அதற்கு மேலும் சென்று தம் கருத்துகளின் விளக்கத்திற்கு உரிய கருவியாகவும் பயன்படுத்தியுள்ளார்.

கவிஞர் பாரதிதாசன், தம் நண்பர்களுடன் இரவு வேளையில் தோணியில் சென்றபொழுது ஏற்பட்ட அனுபவத்தையும், பார்த்த இயற்கைக் காட்சியையும் அடிப்படையாகக் கொண்டு ஓர் அருமையான கவிதை புனைந்துள்ளார். அதில் நிலவைப்பற்றிப் பாடும்பொழுது,

முத்துச் சுடர் முகம் ஏனோ – இன்று

முற்றும் சிவந்தது சொல்வாய்.

இத்தனை கோபம் நிலாவே – உனக்கு

ஏற்றியதார் என்று கேட்டோம்

உத்தரமாக எம் நெஞ்சில் – மதி

ஒன்று புகன்றது கண்டீர்.

சித்தம் துடித்தது நாங்கள் – பின்னால்

திரும்பிப் பார்த்திட்டபோது

தோணிக் கயிற்றினை ஓர் ஆள் – இரு

தோள் கொண்டு இழுப்பது கண்டோம்.

என்று, நிலவின் தோற்றத்தில் தன் கருத்தை ஏற்றிக் கூறுகிறார்.

நிலவின் ஒளிபொருந்திய முகம், இன்றும் சிவந்து காணப்படுகிறதாம். காரணம் என்ன? என்று சிந்திக்கும் கவிஞர்க்குக் காரணம் தெரியவில்லை. இன்று ஏன் இந்தக் கோலம்? தற்செயலாகத் திரும்பிப் பார்த்தார் கவிஞர். காரணம் புரிந்து விட்டது. ஓர் ஏழைத் தொழிலாளி, தோணிக் கயிற்றினைத் தன் தோள்களைக் கொண்டு இழுப்பதைக் கண்டார். நிலவின் முகம் சிவப்பதற்குக் காரணம் இதுதான். ஏழைத் தொழிலாளி மீது பாவேந்தர் கொண்ட ஈடுபாட்டை அக்கறையை இக்கவிதை எவ்வளவு சிறப்பாக வெளியிடுகிறது பாருங்கள்! இயற்கைப் பாடல்களிலும் கவிஞர் தன் சமுதாயச் சிந்தனையை வெளியிடுகிறார்.

இயற்கையின் அழகுகளில் ஒன்றாகிய நிலவைப் பற்றிப் பாடும் பொழுது கூட, இந்தச் சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருக்கும் ஏழைகளின் நினைவு பாரதிதாசனுக்கு வருகிறது.

தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்

சிறிது கூழ் தேடுங்கால், பானை ஆரக்

கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்

கவின்நிலவே உனைக் காணும் இன்பம் தானோ?

(புரட்சிக்கவி, இரண்டாவது எண்சீர்விருத்தம், 5-வது பாடல், இறுதி 4 வரிகள்)

(ஆர = முழுவதுமாக)

பல நாள் பசியோடு வாடும், ஏழை மக்கள், சிறிது அளவாவது உணவு கிடைக்காதா என்று ஏங்கும் பொழுது, எதிர்பாராதவிதமாக, ஒரு பானை முழுவதும் உணவு கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்? அதைப்போல, அழகு நிலவே ! உன்னைக் காணும் போது நான் இன்பம் அடைகிறேன் என்று பாடுகிறார் பாரதிதாசன். ஏழைகளின் துயரில் அக்கறை கொண்ட கவிஞர், இயற்கைப் பொருள்களில் அதை ஏற்றிச் சொல்கிறார்.

இயற்கைப் பொழுது

இயற்கையில் அமைந்திருக்கும் பொழுதுகளைக் கூட கவிஞர் தம் பாடல்களில் இடம் பெறச் செய்துள்ளார். காலை, மாலை, இரவு என்ற மூன்றையும் பற்றிச் சிறந்த பாடல்கள் பல பாடியுள்ளார்.

காலைப் பொழுது கதிரவன் தோன்றுவதற்கு முன்னும், பின்னும் உள்ள காலை நேரம், உலகம் மெல்ல மெல்ல இருளிலிருந்து வெளியே வரும் நேரம். கதிரவனின் தோற்றத்தால் ஏற்படும் ஒளி தரும் காட்சி பாரதிதாசனைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. அதை மிகச்சாதாரணமான ஓர் உவமை மூலம் விளக்குகிறார்.

தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த

கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது

(குடும்ப விளக்கு – முதல்பகுதி – ‘ஒருநாள் நிகழ்ச்சி’

வரிகள்: 5-6)

காட்சி

நீலம் நிறைந்த தொட்டியில், சுண்ணாம்பைக் கலந்தால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு இருந்தது காலைப் பொழுது என்கிறார் பாரதிதாசன். காலையின் தோற்றத்தை விளக்க வேறு எந்த இடத்திற்கும் செல்லவில்லை. அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் ஒன்றையே உவமையாகக் காட்டுகிறார்.

தொட்டியில் இருக்கும் நீலத்தில், சுண்ணாம்பைக் கலக்கும் பொழுது, நீலத்தின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக வெண்மையாக மாறிக் கொண்டிருக்கும். அதைப்போல் இருள் பரந்த இரவு முடிந்து காலைப் பொழுதில், கதிரவனின் தோற்றத்தால் – கதிரவனின் ஒளியால், இருள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, வெளிச்சம் வரும். இதனை நம் கண் முன்னால் காண்கின்ற ஒரு நிகழ்ச்சியை, ஓர் அழகான உவமை மூலம் எடுத்துக் காட்டி விளக்குகிறார் பாரதிதாசன். கதிரவனின் காலைத் தோற்றத்தையும், அதனால் ஏற்படும் வெளிச்சத்தையும் இதைவிட எளிமையாகச் சொல்லமுடியுமா? அல்லது விளக்கத்தான் முடியுமா? ஓர் இயற்கைக் காட்சியைப் பாமரரும் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் துல்லியமாகக் குறிப்பிடுகிறார் கவிஞர்.

மாலைப் பொழுது மாலைப் பொழுது இயற்கை தரும் இனிய பொழுது எனப் பல புலவர்கள் பலவாறு தம் கற்பனை வளத்திற்கேற்பப் பாடி உள்ளனர். ஆனால் பாரதிதாசன் மிகச் சுருக்கமாக,

கதிரவனை வழியனுப்பிக்

கனிந்த அந்திப்போது

(காதல் நினைவுகள்: !)

என்று சுவையாகக் குறிப்பிடுகின்றார். கதிரவன் முழுமையாக மறைந்து இன்னமும் இருள் சூழவில்லை. அந்த நிலையை மிக அழகாகக் ‘கதிரவனை வழியனுப்பி’ என்று கூறுகிறார். இன்னும் கதிரவன் முழுமையாகப் போகவில்லை என்பதை நயமாக எடுத்துரைக்கிறார்.

இரவு நேரம் காலைப் பொழுதையும் மாலையையும் பற்றிப் பாடிய கவிஞர்களின் எண்ணிக்கையை விட இரவைப் பற்றிப் பாடிய கவிஞர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.

முரண் கொண்ட மாடு, தன்னைக் கட்டுப்படுத்தும் மூக்குக் கயிற்றையும் மீறி, பக்கத்திலிருக்கும் சேற்றில் வண்டியைக் குடை சாய்த்தால் எப்படி இருக்கும்? அதைப் போல் இருக்கிறதாம் இரவு என்கிறார் பாரதிதாசன்.

காட்சி

மிக்க முரண்கொண்ட மாடு – தன்

மூக்குக் கயிற்றையும் மீறிப்

பக்க மிருந்திடும் சேற்றில் – ஓடிப்

பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச்

சக்கரம் போலிருள் வானில் – முற்றும்

சாய்ந்தது சூரியவட்டம் !

புக்க பெருவெளியெல்லாம் – இருள்

போர்த்தது.

(இரண்டாம் தொகுதி – ‘மாவலிபுரச்செலவு’ – 4-வது பாடல்)

(புக்க = செல்லும்)

இங்குச் ‘சேறு’ என்பதை இருளுக்கு ஒப்பிடுகிறார்.

கதிரவனின் வட்ட வடிவத்தை வண்டியின் சக்கரத்துடன் ஒப்பிடுகிறார். கதிரவன் மேற்குத் திக்கில், கடலுக்குள், மறைவதை ‘முற்றிலும் சாய்ந்தது சூரிய வட்டம்’ என்று குறிப்பிடுகிறார். சக்கரம் சுழலும்போது ஒரு வகையான ஒளிவீசும். அது சேற்றினுள் மறைந்த பின் அந்த ஒளி முழுவதுமாக மறைந்துவிடும். நம் அனுபவத்திற்கு உட்பட்டவைகளையே உவமையாகச் சொல்வது, பாரதிதாசனின் தனித்தன்மை.

பறவைகள்

இயற்கைப் பொருள்களையும், இயற்கையாக அமைந்துள்ள பொழுதுகளையும் பாடிய பாவேந்தர், பறவைகளைப் பற்றியும் சிறப்பாகப் பாடியுள்ளார்.

கிளி சமுதாயச் சிந்தனையாளராகிய பாரதிதாசன், இயற்கையிலுள்ள எந்தப் பொருளைப் பற்றிப் பாடினாலும் தன் மனத்தினுள் மறைந்து கிடக்கும் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை மறைமுகமாக வெளியிடுவார்.

பறவை இனத்தில் கண்ணைக் கவரும் பச்சை வண்ணம் கொண்டது கிளி. இது, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பறந்து திரிந்து பழங்களைத் தின்னும் இயல்பு உடையது. இந்தக் கிளியைக் கூண்டுக்குள் அடைத்து விட்டால் இயற்கையான அதன் இறக்கைகளால் எந்தப் பயனும் கிடையாது. கூண்டினுள் அடைபட்ட கிளி தனது உணவுப் பொருட்களுக்கு மற்றவர்களைத் தான் நம்பியிருக்க வேண்டும். அதன் உணவாகிய பழங்களை வேண்டுமானால், மற்றவர்கள் கொண்டு வந்து தரலாம். அதன் இறக்கையின் பயனாகிய பறத்தலை யார் கொண்டு வந்து தருவார்?

இயற்கைப் பறவையாகிய கிளி பறந்து திரிவதில்தான் அதன் உண்மையான இன்பம் இருக்கிறது. அதைப் போல ஒரு நாட்டு மக்கள் தங்கள் அரசைத் தாங்களே நிர்ணயிப்பதில்தான் அவர்களின் மகிழ்ச்சி இருக்கிறது. மகிழ்ச்சியையும், விடுதலை உணர்வையும் நாம்தான் முயன்று பெறவேண்டும்.

இந்தக் கருத்தைப் பாரதிதாசன், இயற்கைப் பொருளான கிளியை நோக்கிப் பாடுவதுபோல் அமைத்துள்ளார்.

தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ?

அக்கா அக்கா என்று நீ அழைத்தாய்

அக்கா வந்து கொடுக்கச்

சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?

(பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி : 68 ‘சுதந்திரம்’ : கடைசி 4 வரிகள்)

(சதமோ = உறுதியோ)

மேலும், கூட்டுக்குள் இருக்கும் கிளி, அக்கா அக்கா என்று அழைத்த உடனேயே, அது திறந்து விடப்படுமா? நிச்சயமாக இல்லை. அதைப்போல் தான், சுதந்திரம் என்பது கேட்ட உடனே கிடைக்கக் கூடிய ஒன்று அல்ல. கடைக்குச் சென்று, சுக்கு வேண்டும், மிளகு வேண்டும் என்று கேட்டு வாங்கக் கூடிய ஒன்றா சுதந்திரம்? என்று வினவுகிறார் பாரதிதாசன். பல போராட்டங்களுக்குப் பின், பல தியாகங்களுக்குப் பின் கிடைக்கக் கூடிய ஒன்று என்பதனை மறைமுகமாகச் சுட்டுகிறார். இயற்கைப் பொருளைப் பாடும்போதும் விடுதலை மனப்பான்மையை ஊட்டும் அளவிற்குச் சமுதாயச் சிந்தனை உடையவராய்க் காட்சி அளிக்கிறார்.

சாதாரண பாமரர் மத்தியிலே வழங்கப்படும் சொற்களைத் தன் கவிதையில் பயன்படுத்தும் ஆற்றல் பாரதிதாசனுக்குக் கைவந்தகலை. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். அதைப்போல் தான், மிகச் சாதாரணமான சொற்களும் பாரதிதாசன் கையாளும் முறைமையால் ஆளுமை பெறுகின்றன.

மயில் மயிலின் அழகைப் பற்றிப் பல கவிஞர்கள் பாடியுள்ளார்கள். மயிலின் சாயலையும், தோகையையும், நீண்ட கழுத்தினையும் பெண்களுக்கு உவமையாகப் பாடியுள்ளனர். ஆனால் பாரதிதாசன், மயிலின் அழகையும் அதன் தன்மையையும் அடிப்படையாகக் கொண்டு, ஓர் அழகான நடனக் காட்சியை நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறார்.

தென்றல் காற்றால் சிலிர்க்கின்ற மரங்கள் நிறைந்த சோலை. அங்கு மணம் பொருந்திய அழகிய மலர்கள் உள்ளன. மலரிலுள்ள தேனை உண்பதற்காக வரும் வண்டுகள் ரீங்காரப் பண்ணைப் பாடுகின்றன. கொஞ்சும் மொழியில் கிளி பேசிக் கொண்டிருக்கிறது. கருமை நிறம் பொருந்திய குயில் அமுதம் போன்ற இசை விருந்தை அளித்துக் கொண்டிருக்கிறது. அந்த அருமையான சூழலில், மயில் தன் அழகான தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து உள்ளம் மட்டுமல்ல, உடலும் பூரிப்பு அடைகிறது. இந்த அழகான காட்சியைக் கீழ்க்குறிப்பிடும் கவிதையில் வடித்துக் காட்டுகிறார் பாரதிதாசன்.

அழகிய மயிலே ! அழகிய மயிலே !

அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம்

கருங்குயில் இருந்து விருந்து செய்யக்

கடி மலர் வண்டுகள் நெடிது பாடத்

தென்றல் உலவச், சிலிர்க்கும் சோலையில்

அடியெடுத்து ஊன்றி அங்கம் புளகித்து

ஆடுகின்றாய் அழகிய மயிலே !

(இயற்கை. மயில், வரிகள்: 1-7)

(அஞ்சுகம் = கிளி, புளகிதம் = பூரிப்பு)

இனிமையான அழகிய இயற்கைச் சூழல் மிகுந்த ஓர் அரங்கத்தில் மயிலை ஆடவைத்தார். அதோடு அவர் மனம் நிறைவு பெறவில்லை. மேலும் அதன் இயற்கை அழகைப் புகழ்கிறார்.

மயிலின் தோகை, வரையப்படாத, வரையமுடியாத ஓவியம் என்கிறார். அந்தத் தோகையில் பல வண்ணங்களில் கண்போல் பொருந்திக் காட்சி அளிப்பவை, ஒளிபொருந்திய மாணிக்கக் களஞ்சியம் என்று புகழ்கிறார்.

உனதுதோகை புனையாச்சித்திரம்

ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம் !

(இயற்கை. மயில், வரிகள்: 8 – 9)

மயிலின் அழகில் வயப்பட்டு, தன்னை மறந்திருந்த பாரதிதாசனுக்குத் தன் நினைவு வருகிறது. மயிலை அருகில் அழைக்கின்றார். அருகில் வந்த மயிலிடம், ‘மயிலே! உனக்கு ஒரு செய்தி சொல்வேன். நீயும் பெண்களுக்கு நிகர் என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் கழுத்தும் உன் கழுத்தும் ஒன்றா? இல்லையே! பெண்கள் அடுத்த வீட்டு நிகழ்ச்சிகளை அறிவதற்கு மிகவும் ஆவலுடையவர்களாக இருப்பார்கள். அத்தகைய பெண்கள் அடுத்த வீட்டை எட்டிப் பார்க்காமல் இருப்பதற்கே இயற்கை அன்னை அவர்களுக்குக் குட்டைக் கழுத்தைக் கொடுத்துள்ளாள். உனக்கோ, இப்படிப்பட்ட குறையில்லாத காரணத்தால் நீண்ட கழுத்தை இயற்கை அன்னை வழங்கியுள்ளாள். இதைக் கேட்டால் பெண்கள் என்னிடம் சினம் கொள்வார்கள். எனவேதான் உன்னிடம் சொன்னேன். பெண்களின் இந்தச் சுருங்கிய உள்ளம் விரிவு அடையாமல் இருப்பதற்கு என்ன காரணம்?, இந்த ஆண்களின் கூட்டம்தான். இதை இந்த உலகம் உணர வேண்டும்’ என்று கூறுகிறார் கவிஞர்.

இயற்கையின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர் பாரதிதாசன். இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கின்ற பொழுது தன்னை இழந்து பார்க்கும், நுகரும் பாரதிதாசனுக்குத் தன் நினைவு வந்ததும், சமுதாய உணர்வு மேலோங்கி நிற்கிறது. எனவே, மயிலின் அழகைப் பற்றிக் கூறியவர், திடீரென ஆண் ஆதிக்கச் சமுதாயக் கொடுமைகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

இவ்வாறு, மயிலின் இயற்கை அழகினையும், அதன் இயல்பையும், சிறப்பாகப் பாடியுள்ளார் பாரதிதாசன்.

தொகுப்புரை

பொதுவாக, பாவேந்தர் பாரதிதாசனால் இயற்றப்பட்ட பாடல்களில் பெரும்பாலும் தமிழ் உணர்வும், சமுதாயச் சீர்திருத்த உணர்வும் காணப்பட்டாலும், அழியாத இயற்கைக் காட்சிகளையும், பொழுதுகளையும், பொருள்களையும் பற்றிப் பாடும் பொழுது கூட, தம் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளையும், இலையினுள் மறைந்திருக்கும் காய்போல் வெளிப்படுத்தியுள்ளார்.

இப்பாடத்தில், மலை, மழை போன்றவை தரும் அழகுக் காட்சிகளின் சிறப்பினைக் கூறுவதோடு, தம் கருத்துகளையும், அவற்றின் மூலம் வெளிப்படுத்துகிறார். இயற்கைப் பொருள்களாகிய வானம், கதிரவன், நிலவு ஆகியவற்றின் இயற்கைத் தன்மையிலும், பாரதிதாசன் பல வகையான கருத்துகளைக் குறிப்பிடுகிறார். காலை, மாலை, இரவு ஆகிய பொழுதுகளைப் பற்றிப் பாடும் பொழுதும், மயில், கிளி போன்ற பறவைகளைப் பற்றிப் பாடும் பொழுதும், தம் கருத்துகளை வெளியிடுவதற்குரிய சாதனமாகவும் அவற்றைப் பயன்படுத்தியுள்ளார். எனவே இயற்கையைப் பற்றிய தம் பாடல்களில், இயற்கையில் தமக்கு ஏற்பட்ட ஈடுபாட்டை வெளிப்படுத்தியதோடு, தமது சிந்தனைகளையும் அவற்றின் மூலம் எடுத்துரைத்தார்.

பாடம் - 3

பாரதிதாசனின் காப்பியங்கள்

பாட முன்னுரை

பாவேந்தர் பாரதிதாசன் தமது கருத்துகளை வெளியிடுவதற்குப் பல இலக்கிய வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளார். அவர் மிகுதியாகப் பயன்படுத்தியுள்ள இலக்கிய வடிவம் காப்பியம் ஆகும். பாரதிதாசன் ஒரு கவிஞர் என்பதால், கவிதை வடிவில் கருத்தைத் தெரிவிக்கும் காப்பியத்தை மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளார். அந்தக் காப்பியங்களின் வழியாகத் தமது சிந்தனைகளைப் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளார்.

காப்பியம்

ஒரு கருத்தைக் கவிதை வடிவில் தெரிவித்தால் அதைச் செய்யுள் என்கிறோம். செய்யுள் வடிவில் ஒரு தொடர் கருத்தை அல்லது கதையைத் தெரிவித்தால் அதைக் காப்பியம் என்கிறோம். காப்பியங்களை இரண்டு வகையாகப் பிரித்துக் கூறுவார்கள்

1. பெருங்காப்பியம்

2. சிறுகாப்பியம்

பெருங்காப்பியம் பெருங்காப்பியம் ஒரு தலைவனைக் கொண்டதாய் இருக்கும். அந்தத் தலைவன் நிகர் இல்லாதவனாக இருப்பான். நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் கொண்டதாய்ப் பெருங்காப்பியம் விளங்கும். மேற்கூறியவற்றில் சில அல்லது பல குறைந்து வருவது சிறுகாப்பியம் ஆகும்.

பாரதிதாசனின் காப்பியங்கள் பாரதிதாசன் பதினைந்துக்கும் மேற்பட்ட காப்பியங்களைப் படைத்துள்ளார்.

1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

2. புரட்சிக் கவி

3. வீரத்தாய்

4. போர் மறவன்

5. ஒன்பது சுவை

6. கடல் மேல் குமிழிகள்

7. நல்லமுத்துக் கதை

8. எதிர்பாராத முத்தம்

9. பாண்டியன் பரிசு

10. அமிழ்து எது?

11. இருண்ட வீடு

12. காதலா கடமையா

13. குறிஞ்சித்திட்டு

14. தமிழச்சியின் கத்தி

15. கண்ணகி புரட்சிக் காப்பியம்

16. மணிமேகலை வெண்பா

என்பவை பாரதிதாசன் படைத்துள்ள காப்பியங்கள் ஆகும். இவை அனைத்தும் சிறுகாப்பியம் என்னும் பிரிவில் அடங்கும். இவை அனைத்தையும் இந்தப் பாடத்தில் விளக்குவது இயலாது. எனவே சில காப்பியங்களை மட்டும் காண்போம்.

சஞ்சீவி பர்வதத்தின் சாரல

பாரதிதாசனின் காப்பியங்களில் முதலில் (1930) வெளிவந்தது ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்னும் காப்பியம் ஆகும்.

இக்காப்பியத்தில் குப்பன் என்பவனும் வஞ்சி என்பவளும் சஞ்சீவி மலைக்கு வருகின்றனர். அவர்கள் இருவரும் காதலர்கள். வஞ்சியின் கையைக் குப்பன் தொடுவதற்குப் போனான். அப்போது வஞ்சி ‘தொடாதீர்கள்’ என்று சொல்லி விட்டாள்.

‘ஏன் உன்னைத் தொடக்கூடாது?’ என்று கேட்ட குப்பனிடம் காரணத்தைச் சொன்னாள் வஞ்சி. அந்தக் காரணத்தைக் கூறுவதில்தான் கதையே தொடங்குகின்றது. அடுத்து அதனைக் காணலாம்.

இரண்டு மூலிகைகள் சஞ்சீவி மலையில் இரு அற்புத மூலிகைகள் உண்டு என்று வஞ்சியிடம் குப்பன் கூறியிருந்தான். அந்த மூலிகைகளைப் பறித்துத் தருவேன் என்றும் சொல்லியிருந்தான். ஆனால் அந்த மூலிகைகளைப் பறித்துத் தராமல் அவன் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தான். அந்த மூலிகைகளைப் பறித்துத் தந்து விட்டு என்னைத் தொடுங்கள் என்று சொல்லி விட்டாள் வஞ்சி.

மலை உச்சியில் இருக்கும் அந்த மூலிகைகளைப் பறிப்பதற்கு உன்னால் மலை உச்சிக்கு வரமுடியாது என்று எடுத்துச் சொன்னான் குப்பன். வஞ்சி விடுவதாய் இல்லை. மூலிகை பறிப்பதற்கு என்றால் எவ்வளவு உயரத்திற்கும் என்னால் வரமுடியும் என்று சொன்னாள் அவள். மூலிகைகளைப் பறித்துக் கொடுப்பதற்கு ஒப்புக் கொண்டான் குப்பன். அதற்கு முன் அந்த மூலிகைகளின் அற்புதத்தைச் சொல்கிறேன் கேள்! என்றான்.

மூலிகையின் அற்புதங்கள் ‘அந்த இரண்டு மூலிகைகளில் ஒன்றைத் தின்றால் உலகில் உள்ளோர் பேசுவது நமது காதில் நன்றாகக் கேட்கும். இன்னொரு மூலிகையைத் தின்றால், இந்த உலகில் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் கண்ணுக்கு எதிரே தெரியும்’ என்று குப்பன் தெரிவித்தான். ஆகவே இந்த மூலிகைகள் உனக்கு வேண்டாம் என்று அவன் மேலும் தெரிவித்தான். ஆனால் வஞ்சியோ, ‘நீங்கள் சொன்ன அற்புதத்தைக் கேட்டபிறகு அந்த மூலிகைகளின் மேல் ஆசை கூடுகிறது’ என்று கூறினாள். நீங்கள் என்னை அழைத்துச் சென்று அந்த மூலிகைகளைப் பறித்துத் தராவிட்டால் நானே சென்று பறிப்பேன். என்னால் மூலிகைகளைப் பறிக்க இயலவில்லை என்றால் மலையிலிருந்து கீழே விழுந்து இறந்து விடுவேன் என்றும் கூறினாள்.

வஞ்சியின் உறுதியைக் கண்ட குப்பனும் அவளுடன் சென்று மூலிகைகளைப் பறித்தான். அவற்றில் உலகத்தில் உள்ளவர்களின் பேச்சை எல்லாம் கேட்கச் செய்யும் மூலிகையை இருவரும் தின்றார்கள்.

• பிற நாட்டவர் பேச்சு

உலகில் உள்ளவர்களின் பேச்சைக் கேட்கச் செய்யும் மூலிகையைத் தின்றதும் பிற நாட்டவர்களின் பேச்சுகளும் அவர்களின் காதுகளில் கேட்டன. அவ்வாறு கேட்டவற்றில் பிரான்சு நாட்டில் இருவர், அமெரிக்கர், இங்கிலாந்துக்காரர் ஆகியோரின் பேச்சுகளையும் இராமாயணச் சொற்பொழிவுக் காட்சி ஒன்றையும் இங்கே காண்போம்.

• பிரான்சு நாட்டில் இருவர் பேச்சு

இத்தாலி நாட்டுக்காரன் ஒருவன் பிரான்சு நாட்டு விடுதி ஒன்றில் தங்கியிருந்தான். அவன் அந்த விடுதியில் கறுப்பர்கள் உணவு உண்ணக்கூடாது என்று சொன்னான். அதைக் கேட்ட பிரான்சுக்காரன், எங்கள் நாட்டில் இந்த நிற பேதம் கிடையாது எனவே, நாங்கள் கறுப்பர்களைத் தடுக்க இயலாது என்றான்.

• அமெரிக்கன் பேச்சு

இந்த உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் நலமாய் இருக்க வேண்டும் என்று நல்ல அமெரிக்கன் நினைப்பான். தீய அமெரிக்கன் மட்டுமே, தான்மட்டும் செல்வம் உடையவனாக வாழ விரும்புவான். நான் நல்ல அமெரிக்கனாகவே வாழ விரும்புகிறேன்.

• இங்கிலாந்துக்காரன் பேச்சு

மூன்று கோடி மக்கள் அங்கே வாழ்கிறார்கள். அவர்களிடம் பிரிவினையும் முப்பத்து மூன்று கோடி இருக்கும். பிரிவினைகளை வளர்ப்பதற்காகவே அவர்கள் புராணங்களையும் இதிகாசங்களையும் வைத்திருக்கிறார்கள். ‘இந்த உலகம் பொய் பரம பதமே மெய்’ என்று வேதாந்தம் பேசும் வேதாந்திகள் அங்கே நிறைந்து உள்ளார்கள்.

• இராமாயணச் சொற்பொழிவு

இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த வஞ்சி மகிழ்ச்சி அடைந்தாள். இந்த மூலிகை மிகவும் பயன்படும் என்று சொன்னாள். குப்பனின் அருகில் சென்றாள். அப்போது ஒரு குரல் யாரோ ஒருவர்க்குக் கட்டளை இடுவது போல் கேட்டது. “ஒரு நொடியில் ஓடிப்போய் சஞ்சீவி மலையை வேரோடு பேர்த்து வா” குரலைக் கேட்டதும் குப்பன் மிகவும் அஞ்சினான். ‘நாம் இருக்கும் இந்த மலையைத் தூக்கினால் நமது கதி என்ன ஆவது?’ என்றான். அதற்கு வஞ்சி ‘சஞ்சீவி மலையை மனிதனால் தூக்க இயலாது’ என்றாள்.

அப்போது மீண்டும் குரல் கேட்டது.

“உனக்கு இராமனின் அருளும் வானம் வரை வளரும் உடலும் உண்டு. உடனே போய், சஞ்சீவி மலையை எடுத்துவா” என்றது குரல்.

இராமனின் அருள் பெற்றவன் வந்து மலையைத் தூக்கப்போகிறான் என்று கேட்டதும் குப்பன் மேலும் அஞ்சினான். அப்போது அந்தக் குரல் மேலும் கூறியது.

காட்சி

“அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வந்து, அம்மலையில் உள்ள மூலிகையால் இராமனுக்கும் இலட்சுமணனுக்கும் உயிர் கொடுத்தான். மீண்டும் சஞ்சீவி மலையை எடுத்த இடத்தில் கொண்டு போய் வைத்தான்” என்னும் குரலைக் கேட்ட குப்பன் ஆறுதல் அடைந்தான்; இனி ஆபத்து வராது என்று தெளிந்தான்.

சற்று நேரத்தில், “இத்துடன் இன்று கதையை நிறுத்துகின்றேன். மீதியை நாளைக்குக் கூறுகின்றேன்” என்ற குரல் கேட்டது. உடனே வஞ்சி ‘இந்த மூலிகையைச் சாப்பிடுங்கள்’ என்று உலக நிகழ்ச்சியைக் கண்ணுக்குக் காட்டும் மூலிகையைக் குப்பனிடம் கொடுத்தாள். அதைக் குப்பன் சாப்பிட்டான். இராமாயணக் கதை சொல்பவனையும் அவனைச் சுற்றி இருந்த மக்களையும் குப்பனும் வஞ்சியும் பார்த்தார்கள்.

‘இப்போது புரிந்ததா? இராமயணக் கதை சொல்பவன் சொன்னதைத்தான் நாம் மூலிகையின் அற்புதத்தால் இதுவரை கேட்டுக் கொண்டிருந்தோம்’ என்று கூறினாள் வஞ்சி.

உண்மையை உணர்ந்த குப்பன், வஞ்சியை அழைத்துக்கொண்டு மலை அடிவாரத்திற்கு வந்தான்.

சஞ்சீவி பர்வதத்தின் சாரல் – காப்பியக் கருத்து மனிதனோ விலங்கோ வானைத் தொடும் அளவு வளர்தல் என்பது அறிவுக்குப் பொருந்தாதது ஆகும். மனிதனாகப் பிறந்தவன் இறப்பது உறுதி. இறந்த பிறகு சொர்க்கம், நரகம் என்பவை கிடையாது போன்ற கருத்துகளைப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளைக் காலந்தோறும் சிலர் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்; சில ஏடுகளும் இதே கருத்துகளை வலியுறுத்துகின்றன. எவ்வளவுதான் முயன்றாலும் இவர்களால் மூடத்தனத்தைப் பரப்ப இயலாது என்பதை,

பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஏடுகளால்

எள்ளை அசைக்க இயலாது

(சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 361-362)

என்று பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

உழைக்கின்ற அளவிற்கு ஏற்ப வருவாய் கிடைக்கும். வானத்திலிருந்து வருவாய் வந்து குவியாது. பரம்பொருள் ஒன்று இருக்கிறது என்பது உண்மையில்லை என்னும் கருத்துகளைப் பாவேந்தர்,

மக்கள் உழைக்காமுன் மேலிருந்து வந்திடுமோ?

எக்காரணத்தாலும் இன்மையிலே உண்மை உண்டோ?

(சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 369-370)

என்னும் வரிகளின் வழியாக விளக்கியுள்ளார்.

இந்தியாவில் இமயமலை இருக்கிறது; கங்கை நதி பாய்கிறது; செந்நெல் வயல்களும் செங்கரும்புத் தோட்டங்களும் கனிகளும் நிறைந்துள்ளன. இங்கே முப்பத்து மூன்று கோடி மக்கள் வாழ்கிறார்கள்; எல்லா வளங்களும் இருக்கின்றன. இவற்றுடன் மூடப்பழக்கமும் இருக்கின்றதே! இந்த மூடப்பழக்கம் ஒழிந்தால்தான் இந்தியா முன்னேறும் என்பதை அழகாகப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

நல்ல இமயம் நலம் கொழிக்கும் கங்கைநதி

வெல்லத் தமிழ் நாட்டின் மேன்மைப் பொதியமலை

செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள்

தின்னக் கனிகள், தெவிட்டாப் பயன் மரங்கள்

இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்

முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன?

செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன?

மூடப்பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்

ஓடுவது என்றோ? உயர்வது என்றோ?

(சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 393-401)

என்னும் வரிகள் பாரதிதாசனின் இச்சிந்தனையை நமக்குக் காட்டுகின்றன.

இந்தியா விடுதலை பெறவேண்டும் என்றால் இந்நாட்டில் உள்ள பெண்களுக்கு முதலில் விடுதலை வேண்டும். பெண்களை ஊமை என்று சொன்னால் ஆண்கள் ஆமைகளாய் அந்நியருக்கு அடங்க வேண்டியது தான் என்னும் கருத்துகளைப் பாரதிதாசன் பின்வரும் அடிகளில் தெரிவித்துள்ளார்.

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே

ஊமை என்று பெண்ணை உரைக்கு மட்டும் உள்ளடங்கும்

ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு

(சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 56-59)

என்று பெண் விடுதலைக் கருத்தையும் ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்னும் காப்பியத்தில் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

வீரத்தாய்

பாரதிதாசனின் வீரத்தாய் என்னும் காப்பியம் 1938 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

மணிபுரி நாட்டின் சேனாதிபதி காங்கேயன் என்பவன், அவன் மணிபுரியின் மன்னன் ஆகத் திட்டம் தீட்டினான். அதன்படி மன்னனுக்கு மதுப்பழக்கத்தை ஏற்படுத்தினான்.

சேனாதிபதியின் சூழ்ச்சியை அறிந்த அரசி விஜயராணி அரண்மனையை விட்டு வெளியேறினாள். அதைத் தனக்கு வசதியாகப் பயன்படுத்திய சேனாதிபதி, மக்களிடம் விஜயராணி அரண்மனையை விட்டு ஓடிவிட்டாள் என்று பரப்பினான்.

மன்னனின் மகன் சுதர்மனைக் காட்டில் கல்வி அறிவு இல்லாமல் வளரச் செய்தான் சேனாதிபதி.

அரசி போட்ட வேடம் அரண்மனையை விட்டு வெளியேறிய விஜயராணி, ஒரு கிழவர் வேடத்தைத் தாங்கினாள். சுதர்மன் வளர்ந்து வரும் காட்டுப்பகுதிக்குச் சென்றாள். அங்கே சுதர்மனை வளர்த்து வந்த காளிமுத்து என்பவனின் நம்பிக்கையைப் பெற்றாள். சுதர்மனை வளர்ப்பதைத் தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டாள். மறைவான இடத்தில் சுதர்மனுக்குக் கிழவன் வேடத்திலிருந்த விஜயராணி வில்வித்தை கற்றுக் கொடுத்தாள்.

காட்சி

சேனாதிபதியால் அரண்மனைக் கருவூலத்தைத் திறக்க இயலவில்லை. எனவே, அதைத் திறந்து தருபவர்களுக்கு ஆயிரம் ரூபாய்ப் பரிசு அளிப்பதாக அறிவித்தான்.

காட்சி

கிழவன் வேடத்தில் இருந்த விஜயராணி அரண்மனைக்குப் போய், கருவூலத்தைத் திறந்து சேனாதிபதியின் நம்பிக்கைக்கு உரியவள் ஆனாள்.

சேனாதிபதியின் திட்டம் மணிபுரி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சேனாதிபதி தானே மன்னனாக முடி சூட்டிக் கொள்ளப்போவதாக அனைத்து மன்னருக்கும் செய்தி அறிவித்தான்.

அதே வேளையில் சேனாதிபதியின் தீய எண்ணம் வெளிப்படும்படியாக எல்லா மன்னர்களுக்கும் விஜயராணியும் செய்தி அனுப்பினாள்.

எல்லா மன்னர்களும் வந்து அவையில் கூடினர். தான் மணிமுடி சூட்டிக்கொள்ளப் போவதைச் சேனாதிபதி தெரிவித்தான்.

விஜயராணி அனுப்பிய செய்தியை அறிந்த மன்னர்கள், சேனாதிபதியின் ஏமாற்றுத் திட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சேனாதிபதி காங்கேயனால் முடிசூட இயலவில்லை.

சேனாதிபதியின் ஓட்டம் காட்டில் கிழவன் வேடத்தில் விஜயராணி சுதர்மனுக்கு வாள்வித்தை கற்பித்துக் கொண்டிருந்தாள். அங்கே வந்த சேனாதிபதி காங்கேயன் அந்தக் கிழவனை வெட்ட வாளை ஓங்கினான். சேனாதிபதியின் வாளைத் தடுத்து அவனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தாள் விஜயராணி.

அடுத்த நாள் அனைவரும் அவைக்கு வந்தனர். அங்கு வந்த விஜயராணி தனது கிழவன் வேடத்தைக் களைந்தாள்.

கோழியும் தன் குஞ்சுதனைக் கொல்லவரு வான் பருந்தைச்

சூழ்ந்து எதிர்க்க அஞ்சாத தொல்புவியில் ஆடவரைப்

பெற்றெடுத்த தாய்க்குலத்தைப் பெண்குலத்தைத் துஷ்டருக்குப்

புற்றெடுத்த நச்சரவைப் புல் எனவே எண்ணி விட்டான்.

(பா.க. வீரத்தாய். ப.49)

என்று தான் தனது மகன் சுதர்மனைக் காத்த செய்தியை விஜயராணி தெரிவித்தாள். இப்பாடலில் தீயவர்களுக்குப் பெண்ணினம், பாம்பைப் போல் கொடியது. அத்தகைய பெண்ணினத்தைச் சிறு புல் என்று கருதுகிறவர்கள் தோற்பது உறுதி என்ற கருத்தையும் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த கொன்றை நாட்டு மன்னன்,

அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்

என்னும் படி அமைந்தீர்! இப்படியே பெண் உலகம்

ஆகு நாள் எந்நாளோ? அந்நாளே துன்பம் எலாம்

போகு நாள், இன்பப் புதிய நாள் என்று உரைப்பேன்,

அன்னை எனும் தத்துவத்தை அம்புவிக்குக் காட்ட வந்த

மின்னே, விளக்கே, விரிநிலவே, வாழ்த்துகின்றேன்

(பா.க. வீரத்தாய் ப.49)

என்று கூறி விஜயராணியை வாழ்த்தினான்.

மக்களாட்சி மலர்ந்தது இளவரசன் சுதர்மனின் விருப்பப்படி மணிபுரி நாட்டில் குடியாட்சி மலர்ந்தது.

எல்லார்க்கும் தேசம் எல்லார்க்கும் உடைமை எலாம்

எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!

எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!

எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக!

(பா.க. வீரத்தாய் ப.49)

என்று சுதர்மன் வாயிலாகப் பாரதிதாசன் தமது குடியாட்சிக் கருத்தையும் பொது உடைமைச் சிந்தனையையும் தெரிவித்துள்ளார்.

கடல்மேல் குமிழிகள்

கடல் மேல் குமிழிகள் என்னும் காப்பியம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்தது. திறல் நாட்டைப் புலித்திறல் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது தந்தைக்கும் வேட்டுவப் பெண் ஒருத்திக்கும் பிறந்தவன் செம்மறித்திறல் என்பவன். புலித்திறலின் கொழுந்தி பொன்னியைச் செம்மறித் திறல் காதலித்தான். எனவே, செம்மறித்திறலை நாட்டை விட்டு விரட்டி விட்டான் புலித்திறல்.

‘செம்மறித்திறலைத்தான் திருமணம் செய்வேன்’ என்று பொன்னி பிடிவாதம் செய்தாள். எனவே, அவள் சிறையில் அடைக்கப்பட்டாள். சிறையில் பொன்னி தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகக் கறுப்பு ஆடை அணிந்தாள். அதை அறிந்த செம்மறித்திறலும் கறுப்பு ஆடை அணிகிறான்.

மன்னனின் சாதிவெறி புலித்திறலின் மகன் வையத்திறல். நல்ல இளைஞன். அவனுக்குத் தனது மகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்குப் பெருநாட்டு மன்னன் தூது அனுப்பினான்.

பெருநாட்டு மன்னனின் மகளை மணம் செய்வதற்கு வையத்திறல் மறுத்துவிட்டான். அவன் பூக்காரி ஆண்டாளின் மகளான மின்னொளியைக் காதலித்தான். இதை அறிந்த மன்னன், தனது மகன் என்றும் பார்க்காமல் வையத்திறலையும் சிறையில் அடைத்தான்.

காட்சி

சிறையில் இருக்கும் பொன்னியைச் சந்திப்பதற்குச் செம்மறித்திறல் மாறு வேடத்துடன் சென்றான். இருவரும் ஒன்று சேர்ந்தனர்.

தாழ்ந்த குலப்பெண்ணுக்குப் பிறந்த செம்மறித்திறல் தனது கொழுந்தியுடன் ஒன்று சேர்வதா என்று கோபம் கொண்டான் மன்னன். பொன்னியைக் கொல்வதற்கு ஏற்பாடு செய்தான்; செம்மறித்திறலையும் சிறையில் அடைத்தான்.

மன்னனை எதிர்த்த மக்கள் மன்னனின் இந்தச் சாதி வெறியைக் காவல்காரனின் மகனான அழகன் என்பவன் அரண்மனைப் பணியாளர்களுக்கு எடுத்துச் சொன்னான்.

அரண்மனைப் பணியாளர்கள் யாரும் அரண்மனைக்கு வரக்கூடாது என்று முடிவெடுத்தனர்.

காவலர்கள் தங்கள் பணிகளைச் செய்யாததால் சிறையிலிருந்த வையத்திறல், செம்மறித்திறல், பொன்னி ஆகியோர் வெளியேறினர்.

பணியாளர்கள் இல்லாததால் அரண்மனை வேலைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. உயர் சாதியினரின் பணிகளைச் செய்வதற்குத் தாழ்ந்த சாதியினர் வேண்டும் என்று மன்னனிடம் அவர்கள் எடுத்துரைத்தனர்.

வள வயல் உழவும் குளச்சேறு எடுக்கவும்

இரும்பு அடிக்கவும் கரும்பு நடவும்

உப்புக் காய்ச்சவும் தப்படிக்கவும்

சுவர் எழுப்பவும் உவர்மண் எடுக்கவும்

பருப்புப் புடைக்கவும் செருப்புத் தைக்கவும்

மாடு மேய்க்கவும் ஆடு காக்கவும்

வழிகள் அமைக்கவும் கழிவடை சுமக்கவும்

திருவடி தொழுது நம் பெருமை காக்கவும்

வரும்படி நமக்கு வைத்து வணங்கவும்

நாலாம் வகுப்பு நமக்கு வேண்டுமே!

(கடல் மேல் குமிழிகள், இயல் 29)

(தப்பு = ஒரு வகைத் தோல் கருவி; கழிவடை = கழிவுப் பொருட்கள்)

காட்சி

என்று மன்னனுக்கு உயர் சாதியினர் கூறினார்கள். படைத்தலைவரை அழைத்தான் மன்னன். அரண்மனைப் பணியாளர்கள் அனைவரையும் அடித்து இழுத்து வர ஆணையிட்டான்.

திறல்நாடு தோற்றது அந்த வேளையில் பெருநாட்டுப் படைகள் வந்து திறல் நாட்டை முற்றுகையிட்டன. தாழ்ந்த சாதியைச் சார்ந்த திறல்நாட்டுப் படைவீரர்கள் ஒருவரும் போருக்குப் புறப்படவில்லை. திறல் நாட்டைப் பெருநாடு கைப்பற்றியது. புலித்திறல் சிறையில் அடைக்கப்பட்டான்.

வையத்திறலுக்கும் பெருநாட்டான் மகளுக்கும் மண உறுதி செய்வதற்கு மக்கள் அனைவரையும் பெருநாட்டு மன்னன் அரண்மனைக்கு அழைத்தான்.

மக்கள் புரட்சி அடுத்த நாள் பொது மக்கள் அனைவரும் அரண்மனையில் கூடினார்கள். வையத்திறல் வரவில்லை. ‘எனது மகளை வையத்திறல் திருமணம் செய்வதாக உறுதி ஏற்றால் இந்த நாட்டை ஆளலாம்’ என்றான் பெருநாட்டு மன்னன். உடனே மக்களில் ஒருவர் எழுந்து,

உங்கள் உறவுதான் ஊர் ஆள வேண்டுமோ?

வேந்தன் சேய்தான் வேந்தாக வேண்டுமோ?

(கடல்மேல் குமிழிகள், இயல்:35)

என்று கேட்டார். அதையே பொது மக்கள் அனைவரும் கேட்டார்கள்.

ஆத்திரம் கொண்ட பெருநாட்டு மன்னன், பொது மக்களை அடக்கும்படி படைத்தலைவரிடம் கூறினான். அங்கிருந்த செம்மறித்திறல் பொது மக்களுக்கு உணர்வு ஊட்டினான். மக்கள் புரட்சி எழுந்தது. பெருநாடு தோற்றது; திறல் நாடு வென்றது.

நாட்டினிலே குடியரசு நாட்டி விட்டோம். இந்நாள்

நல்ல படி சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும்.

காட்டோமே சாதி மணம்! கலப்பு மணம் ஒன்றே

நல்வழிக்குக் கைகாட்டி! கட்டாயக் கல்வி

ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே!

உழையானை நோயாளி ஊர் திருடி என்போம்

கேட்டை இனிவிலை கொடுத்து வாங்கோமே; சாதி

கீழ் மேல் என்று உரைப்பவர்கள் வாழ்வது சிறையே

(கடல் மேல் குமிழிகள், இயல்: 38)

(உழையானை = உழைக்காதவனை)

என்று பாரதிதாசன் சாதிகள் அற்ற சமத்துவச் சமுதாயம் காண்பதற்காகக் கடல் மேல் குமிழிகள் என்னும் காவியத்தைப் படைத்துள்ளார்.

பாரதிதாசனின் காப்பியங்களில் உவமை

பாரதிதாசன் தமது படைப்புகளில் உவமைகள் பலவற்றைப் பயன்படுத்தியுள்ளார். அந்த உவமைகள் அவர் வாழ்ந்த காலத்தை வெளிப்படுத்துவதை நாம் காணமுடிகிறது.

நின்ற சிலை சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் குப்பன் ஆடாமல் அசையாமல் தெற்கே வஞ்சி வரும் வழியைப் பார்த்து நின்றான். அதைப் பாரதிதாசன்,

செப்புச்சிலை போலே தென்திசையைப் பார்த்தபடி

ஆடாது அசையாமல் வாடி நின்றான்

(சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வரி 14-15)

என்று குறிப்பிட்டுள்ளார். சிலைக்கு அசைகின்ற தன்மை கிடையாது. அதைப் போல் குப்பனும் அசையாமல் நின்றான் என்பதை இதன் மூலம் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

காதல் வேகம் காதலி சொல்கின்ற வேலையை உடனே செய்து முடிக்கும் இயல்பு கொண்டவர்கள் இளைஞர்கள். அதைப் பாரதிதாசன்.

கிட்டரிய காதல் கிழத்தி இடும் வேலை

விட்டு எறிந்த கல்லைப்போல் மேல் ஏறிப் பாயாதோ?

(சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வரி 98-99)

(கிட்டரிய = கிடைத்தற்கு அருமையான)

என்று பாடியுள்ளார். இங்கே பாரதிதாசன் கூறியுள்ள உவமையின் நயத்தைப் பாருங்கள். மேல்நோக்கி எறிந்த கல் விரைந்து பாய்வதைப் போல் காதலியின் கட்டளையை விரைந்து நிறைவேற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கண்ணாடிப் பாத்திரம் சஞ்சீவி மலையை அனுமன் தரையில் வைத்ததைக் குப்பன் தனது காதலி வஞ்சியிடம் சொல்கிறான்.

மலையைக் கடுகளவும் ஆடாமல்

கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பது போல்

(சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வரி 319-320)

வைத்ததாகக் கூறியுள்ளார் பாரதிதாசன்.

கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைக்கும் போது எவ்வளவு மெதுவாக வைப்போமோ அதைப் போல் சஞ்சீவி மலையை அனுமன் தரையில் வைத்தான் என்று பாடியுள்ள உவமை நயத்தைப் பார்த்தீர்களா? புதிய உவமை அல்லவா இது?

நிலவு தரும் இன்பம் நிலவைக் காணுகின்ற இன்பம் எத்தகையது என்பதைப் பாரதிதாசன் தமது புரட்சிக்கவி என்னும் காப்பியத்தில் தெரிவித்துள்ளார்.

தினைத் துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்

சிறிது கூழ் தேடுங்கால் பானை ஆரக்

கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்

கவின் நிலவே உனைக்காணும் இன்பம் தானோ?

(பாரதிதாசன் கவிதைகள் ப.21)

(பானை ஆரக் கனத்திருந்த = பானை முழுவதும் நிறைந்திருந்த)

காட்சி

என்னும் அடிகளில் நிலவைப் பாரதிதாசன் சமுதாயச் சிந்தனையுடன் பார்த்துள்ள தன்மையைக் காணமுடிகிறது. பசியோடு இருக்கின்ற ஏழை, தனது பசியைப் போக்குவதற்குச் சிறிது கூழ் கிடைக்காதா என்று ஏங்கி இருக்கும் போது பானை நிறைய வெண்சோற்றைக் கண்டால் எவ்வாறு மகிழ்வானோ அதைப் போன்ற இன்பம் வெண்ணிலவைக் காணும்போது இருக்கிறது என்று பாடியுள்ளார்.

பனையில் விழுந்த இடி பாண்டியன் பரிசு என்னும் காப்பியத்தில் வேழநாட்டுப் படைகளும் கதிர்நாட்டுப் படைகளும் மோதின. இருதிறப்படை வீரர்களும் இறந்து விழுந்தார்கள். அதைப் பாரதிதாசன்,

பனைமரங்கள் இடி வீழக் கிழிந்து வீழும்

பான்மை போல் இரு திறத்து மறவர் வீழ்ந்தார்

(பாண்டியன் பரிசு, இயல்-5)

என்று பாடியுள்ளார், இடிவிழுந்த பனைமரம் இருகூறாகக் கிழிந்து விழுவதைப் போல் படைவீரர்கள் விழுந்தார்கள் என்று பாரதிதாசன் இந்த வரிகளில் உவமை நயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சூழ்ந்த படை வேழ நாட்டுப் படைகள், கதிர்நாட்டு அரண்மனைக்குள் சென்று பரவியதை,

விரிநீர் போய் மடைதோறும் பாய்வதைப் போல்

சூழலுற்றார்

(பாண்டியன் பரிசு, இயல்-9)

ஞாலம் கறுப்பாக்கும் நள்ளிருள் ‘எதிர் பாராத முத்தம்’ என்னும் காப்பியத்தில் இருள் எப்படி இருந்தது என்பதைப் பாரதிதாசன்,

நீலம் கரைத்த நிறைகுடத்தின் உட்புறம் போல்

ஞாலம் கறுப்பாக்கும் நள்ளிருள்

(எதிர்பாராத முத்தம், இயல் : 6)

என்று பாடியுள்ளார். நீலம் கரைத்த குடத்தின் உட்பகுதி போல் இருள் இருந்தது என்று தற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் பொருளை உவமித்துள்ளதைக் காணமுடிகிறது.

பாரதிதாசனின் காப்பியங்களில் குடியாட்சி

இந்தப் பாடத்தில் நாம் பாரதிதாசனின் நான்கு காப்பியங்களின் கதை நிகழ்வுகளைக் கண்டோம். இந்த நான்கு காப்பியங்களும் 1930 முதல் 1948க்குள் வெளியிடப்பெற்றவை ஆகும். இந்தக் கால கட்டத்தில் இந்தியா குடியரசு நாடு ஆக வில்லை. முதல் மூன்று காப்பியங்கள் வெளியிடப்பட்ட காலத்தில் இந்தியா விடுதலையைக் கூடப் பார்க்கவில்லை.

குடியரசு நாடாக இந்தியா மலர்வதற்கு முன்பே தமது மூன்று காப்பியங்களின் இறுதியிலும் மன்னராட்சி மறைந்து குடியாட்சி மலர்ந்ததாகப் பாரதிதாசன் பாடியுள்ளார்.

குடியாட்சியில் எல்லாப் பொருளும் எல்லாருக்கும் கிடைக்கும் என்ற கருத்தையும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். குடியாட்சி நடக்கும் நாட்டில் சாதிச் சண்டைகளும் மதச் சண்டைகளும் இல்லாமல் ஒழியும் என்பதையும் பாரதிதாசன் தெளிவாக விளக்கியுள்ளார்.

தொகுப்புரை

பழங்கால இலக்கிய வடிவம் காப்பியம். அதில் தற்காலத்திற்கு ஏற்ப, புதுக்கருத்துகளை ஏற்றிப் பாடியுள்ளார் பாரதிதாசன். தமது கொள்கைகளுக்கு ஏற்ப, தாம் பாடியுள்ள காப்பியங்களில் பகுத்தறிவுக் கருத்துகளையும் பொது உடைமைச் சிந்தனைகளையும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

பெண்களால் எல்லாக் காரியங்களையும் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர் பாரதிதாசன். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப, சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் வஞ்சியையும் புரட்சிக்கவியில் அமுதவல்லியையும் வீரத்தாயில் விஜயராணியையும் கடல் மேல் குமிழிகளில் பொன்னியையும் பாரதிதாசன் படைத்துள்ளார்.

பாரதிதாசன் உவமைகளைப் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர் என்பதை அவரது காப்பியங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் பல உவமைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். இக்காலத்தில் பயன்பாட்டில் உள்ள பொருள்களையும் அன்றாட வாழ்வில் காணும் காட்சிகளையும் அவர் உவமைகளாகக் கையாண்டுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டு, குடியாட்சித் தத்துவம் மலர்ந்த நூற்றாண்டு. இந்தியாவில் குடியாட்சி மலர்வதற்கு முன்பே குடியாட்சியின் நன்மைகளைப் பாரதிதாசன் பாடியுள்ளார்.

பாடம் - 4

பாரதிதாசனின் இசைப்பாடல்கள்

பாட முன்னுரை

மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்திலேயே இசைக்கத் தொடங்கி விட்டான். காடுகளில் வளர்ந்து நின்ற மூங்கில் மரங்களில் வண்டுகள் துளைகளிட்டன. அந்தத் துளைகள் வழியாகக் காற்றுப் புகுந்து வெளியேறும் போது குழல் இசை பிறந்தது.

காட்சி

விலங்குகளை வேட்டையாடி உண்ட பழங்கால மனிதன் அவற்றின் தோலை மரக்கிளைகளில் தொங்க விட்டிருந்தான். காய்ந்த அந்தக் தோல்களில் மரங்களின் கிளைகள் உரசி ஒலியை எழுப்பின. அவை தோல் கருவிகள் தோன்றுவதற்கு அடிப்படை ஆயின.

காட்சி

பழங்காலம் முதலே தமிழர்கள் பயன்படுத்திய இசை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தப்பட்டது. அது தமிழிசை எனப்பட்டது.

காட்சி

குழலும் யாழும் முரசும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களால் பயன்படுத்தப்பட்டதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

இசைத்தமிழ் பழங்காலத்தில் சிறந்து விளங்கியதால்தான் ‘இசைத்தமிழ்’ என்பதை முத்தமிழில் ஒன்றாகச் சேர்த்துள்ளோம்.

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும். பத்துப்பாட்டு நூல்களில் முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் ‘பாட்டு’ என்னும் சொல்லாலேயே குறிக்கப்படுகின்றன. அனைத்தும் சேர்ந்தும் பாட்டு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

எட்டுத்தொகை நூல்களில் பரிபாடல் என்பதும் பாடல் என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது. பரிபாடலில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் இசையும் பண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பதிற்றுப் பத்து நூலில் உள்ள பாடல்களுக்கும் வண்ணம், தூக்கு என்னும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. வண்ணம் என்பது பண்ணையும் தூக்கு என்பது தாளத்தையும் குறித்துள்ளன.

மேலும் ஆசிரியப்பாவிற்கு ‘அகவல் ஓசை’ என்றும் வெண்பாவிற்குச் ‘செப்பல் ஓசை’ என்றும் வஞ்சிப்பாவிற்குத் ‘தூங்கல் ஓசை’ என்றும் கலிப்பாவிற்குத் ‘துள்ளல் ஓசை’ என்றும் தமிழர்கள் வகுத்துள்ளனர்.

இனிய ஓசை உடைமை நூலுக்கு அழகு என்பதாக நன்னூல் தெரிவித்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழனின் வாழ்க்கையைத் தெரிவிக்கும் சிலப்பதிகாரத்தில் முதல் பகுதிக்குப் பெயரே ‘மங்கல வாழ்த்துப் பாடல்’ என்பது ஆகும். பாடல் அந்தக் காலத்திலேயே சிறப்புற விளங்கியிருந்ததற்கு இது ஓர் எடுத்துக்காட்டு ஆகும். மேலும் கானல் வரி, வேட்டுவ வரி, ஊர்சூழ்வரி என்னும் பகுதிகள் வரிப்பாடல்களை உணர்த்துகின்றன.

இவ்வாறு இசைப்பாடல்களைச் கொண்ட மொழி தமிழ்மொழி. இந்தத் தமிழ்மொழியில் இசைப்பாடல்கள் இல்லை என்று கூறிய பிற்கால இசை வல்லுநர்கள் பிறமொழிப் பாடல்களைப் பாடினார்கள்.

இக்குறையைப் போக்க எண்ணிய பாரதிதாசன் பல தமிழ் இசைப்பாடல்களைப் பாடியுள்ளார். பாரதிதாசனின் இசைப் பாடல்கள் இசையமுது என்னும் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. எஞ்சிய இசைப் பாடல்கள் தேனருவி என்னும் நூலாக வந்துள்ளன. இவை தவிரவும் காப்பியங்களின் இடையிலும் நாடகங்களின் இடையிலும் பல இசைப் பாடல்களைப் பாரதிதாசன் படைத்துள்ளார்.

தமிழ் இசை

இசைக்குத் தமிழ் மொழி பொருந்தாது என்று சொல்லிவிட்டு, தமிழர்கள் பிற மொழியில் இசை பாடுவதைப் பாரதிதாசன் வெறுக்கிறார். மேலும் சிலர், தமிழிசை என்று சொல்லிக் கொண்டு வேற்று மொழியைக் கலந்து பாடுகிறார்கள். இதைக் கண்ட பாரதிதாசன்,

தமிழிசையைப் பிறமொழியால் இசைத்தல் வேண்டாம்

தமிழிசை பாராட்டிடுவீர்

(எது இசை?-1)

என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்ப் பற்றும் இசையும் தமிழ் மொழி மீது பற்று இருந்தால்தான் தமிழ் இசை பாடமுடியும். அடிப்படையில் தமிழ்மொழி மேல் வெறுப்பை வைத்துக் கொண்டு தமிழிசையை வளர்ப்பதாகக் கூறுகிறவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்; பிழைப்புக்காகப் பொய் சொல்கிறார்கள். மேலும் அவர்கள், தமிழிசையை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். இதில் தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதைப் பாரதிதாசன்,

தமிழிசையைத் தவறான வழியில் போக்கித்

தாங்கரிய பழிதாங்காது இருத்தல் வேண்டும்.

தமிழுக்குப் பகையானோர் தமிழிசைக்கோ

தக்க பேராதரவை நல்குவார்கள்?

(எது இசை-2)

என்று கேள்வி கேட்டுச் சிந்திக்க வைத்துள்ளார்.

எது தமிழ் இசை? தமிழ் இசையில் சாதியக் கருத்துகளையும் மதச் சிந்தனைகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் தருவது என்றால் தமிழ் இசை இல்லாமல் இருப்பதே நன்மை தரும் என்று பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பாடல் மதம் சாதி மூட எண்ணம்

தரும்பாட்டாய் இருப்பதினும் இலாமை நன்று

(எது இசை?-3)

என்று தீவிரமாகத் தெரிவித்துள்ள கருத்து, தமிழ் இசையில் எவை இருக்கக்கூடாதவை என்பதை விளக்கும்.

தமிழ் மொழியில் இசைப் பாடல்கள் பாடப்பட்டால் அவை தமிழ் இசைப் பாடல்கள் எனப்படும். இந்தத் தமிழ் இசைப் பாடல்கள் மதக்கருத்துகளையும் சாதியச் சிந்தனைகளையும் மூடநம்பிக்கைகளையும் பரப்புவனவாய் இருத்தல் கூடாது. தமிழ் இசைப் பாடல்கள் சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடும் பாடல்களாய் இருத்தல் வேண்டும் என்று பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

எளிய தமிழ் இசை போதும் பல்லவிகளையும் கீர்த்தனங்களையும் தெரிந்தவர்களின் உதவியுடன்தான் தமிழிசையை வளர்க்க முடியும் என்று சிலர் கூறுகிறார்கள். பல்லவிகள் பற்றியும் கீர்த்தனங்கள் பற்றியும் தெரிந்தவர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். தமிழ்ப் பற்று இல்லாத பிறமொழியாளர்களுக்குப் பல்லவியும் கீர்த்தனமும் தெரியும் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் உதவியை நாம் நாட வேண்டியதில்லை என்று பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

பல்லவிகள் கீர்த்தனங்கள் மற்றும் உள்ள

பல் நுணுக்கம், இசைவிரிவு தெரிந்துள்ளாரின்

நல் உதவி பெற்றுத்தான் தமிழ் இசைக்கு

நாம் ஏற்றம் தேடுவது முடியும் என்று

சொல்லுகின்றார் சில புலிகள். அவர்க்கு நானும் சொல்லுகின்றேன்; சுண்ணம் இடிப்பார்கள் பாடும்

பல்வகை இலேசான இசைகள் போதும்;

பாரதியாரே போதும் . . .

(எது இசை? – 16)

(பல்லவி – இசைப்பாட்டின் முதல் பகுதி; கீர்த்தனங்கள் – போற்றிப்பாடும் பாடல்கள்)

என்னும் பாடல் வழியாக எளிய நாட்டுப்புற இசைப் பாடல்களைப் பயன்படுத்தலாம் என்றும் பாரதியாரின் பாடல்களைப் பாடலாம் என்றும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

இப்பாடலில் தமிழில் இசைபாட வேண்டும் என்றால் பல்லவிகளும் கீர்த்தனங்களும் இருந்தால்தான் முடியும் என்று கூறுவோரைப் புலிகள் என்று ஏளனத்துடன் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

இசைக் கலை நுட்பம் முழுவதையும் அறிந்தவர்களைப் போல் அவர்கள் ஒன்றும் அறியாமல் இருந்து கொண்டு பேசுவதை இச்சொல்லின் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சிறுவர் பாடல்கள்

பாரதிதாசனின் இசைப் பாடல்களில் சிறுவர் பாடல்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அப்பாடல்களின் வழியாகச் சிறுவர்களுக்கு நல்ல பொறுப்பு உணர்வை அவர் ஊட்டியுள்ளார். சிறார் பொறுப்பு என்னும் தலைப்பில் உள்ள ஒரு பாடலைப் பாருங்கள்.

இன்று குழந்தைகள் நீங்கள் – எனினும்

இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்!

(இன்று குழந்தைகள் நீங்கள்)

நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகள்

ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்

(இன்று குழந்தைகள் நீங்கள்)

குன்றினைப் போல் உடல்வன்மை வேண்டும்!

கொடுமை தீர்க்கப் போராடுதல் வேண்டும்!

தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்

அன்றன்று வாழ்வின் புதுமை காண வேண்டும்!

(இன்று குழந்தைகள் நீங்கள்)

பல்கலை ஆய்ந்து தொழில் பல கற்றும்

பாட்டின் சுவைகாணும் திறமையும் உற்றும்

அல்லும் பகலும் இந்நாட்டுக்கு உழைப்பீர்கள்!

அறிவுடன் ஆண்மையைக் கூவி அழைப்பீர்கள்!

சிறுவர்கள் சிறுமியர் என்று இருபால் -

(இன்று குழந்தைகள் நீங்கள்)

(இசையமுது, சிறார் பொறுப்பு)

குழந்தைகளையும் இந்தப் பாடலில் அழைத்துப் பாடியுள்ளார் பாரதிதாசன். இவ்வாறு பாடுவதால் குழந்தைகளுக்குத் தாங்கள் மதிக்கப்படுகிறோம் என்ற உணர்வு தோன்றும். அவ்வாறு தோன்றும் உணர்வு அவர்களுக்கு நல்ல பண்புகளைக் கொடுக்கும்.

தூய்மை சிறுவர்கள் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்க வழக்கங்களில் ஒன்று தூய்மை ஆகும். இந்தத் தூய்மையைத் திருவள்ளுவர் உடல்தூய்மை, உள்ளத்தூய்மை என இரண்டாகப் பகுத்துள்ளார். திருவள்ளுவர் காட்டிய வழியிலேயே பாரதிதாசனும் தூய்மையை உடல் தூய்மையாகவும் உள்ளத் தூய்மையாகவும் பிரித்துக் காட்டியுள்ளார்.

இரண்டு வகைத் தூய்மையையும் விளக்கிப் பாரதிதாசன் பாடியுள்ள பாடலைக் கேட்போமோ?

தூய்மை சேரடா தம்பி – என்

சொல்லை நீ பெரிதும் நம்பித்

(தூய்மை சேரடா தம்பி)

வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்

தூய்மை உண்டாகும்! மேலும் மேலும்

(தூய்மை சேரடா தம்பி)

உடையினில் தூய்மை – உண்ணும்

உணவினில் தூய்மை – வாழ்வின்

நடையினில் தூய்மை – உன்றன்

நல்லுடல் தூய்மை – சேர்ப்பின்

தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்

தரும்நாள் ஆகும் நீ என்றும் -

(தூய்மை சேரடா தம்பி)

துகளிலா நெஞ்சில் – சாதி

துளிப்பதும் இல்லை – சமயப்

புகைச்சலும் இல்லை – மற்றும்

புன்செயல் இல்லை! – தம்பி!

அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய

அச்சம் போகும்! நீ எந்நாளும் -

(தூய்மை சேரடா தம்பி)

(இசையமுது, ‘தூய்மை’)

(துகளிலா = குற்றம் இல்லாத; துளிப்பது = செழிப்பது; புகைச்சல் = மன எரிச்சல்; புன்செயல் = தீய செயல்)

தூய்மையை விளக்கும் இந்தப் பாடலில் சிறுவர்களுக்கு மட்டும் எடுத்து உரைப்பது போல் பாரதிதாசன் பாடியுள்ளார். அடுத்த பாடலைச் சிறுமியைப் பார்த்துப் பாரதிதாசன் பாடியுள்ளார் பாருங்கள்.

தந்தை – பெண்ணுக்கு ஒரு தந்தை தன் பெண் குழந்தையைப் பார்த்துப் பாடுவது போல் இந்தப் பாடல் அமைந்துள்ளது.

காட்சி

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட

சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை

சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்

விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி

வேளைதோறும் கற்று வருவதால் படியும்!

மலைவாழை அல்லவோ கல்வி? – நீ

வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!

(தலைவாரிப் பூச்சூடி)

படியாத பெண்ணாய் இருந்தால், – கேலி

பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்!

கடிகாரம் ஓடுமுன் ஓடு! – என்

கண்ணல்ல, அண்டை வீட்டுப் பெண்களோடு!

கடிதாய் இருக்கும் இப்போது – கல்வி

கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது!

கடல்சூழ்ந்த இத்தமிழ்நாடு – பெண்

கல்வி பெண்கல்வி என்கின்றது அன்போடு!

(தலைவாரிப் பூச்சூடி)

(இசையமுது – தந்தை பெண்ணுக்கு)

(படியும் = மனத்தில் பதியும்; படியாத = படிக்காத; மலைவாழை = மலைவாழைப்பழம்)

பெண் குழந்தைகளுக்குக் கல்வி வேண்டாம் என்று வீட்டில் அடைக்கும் வழக்கம் இருந்த காலம் அது. அந்தக் காலத்தில் ஒரு தந்தை தன் பெண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு வற்புறுத்தி அனுப்புவது போல் அமைந்த இந்தப் பாடலைக் கேட்டீர்களா?

இந்தப் பாடலில் பாரதிதாசன் ‘விலை போட்டு வாங்கவா முடியும் – கல்வி?’ என்று கேட்டுள்ளார் பாருங்கள். காசு கொடுத்தால் கடையில் சென்று பொருள்களை வாங்க முடியும். கல்வியைக் கற்றால் தான் பெற முடியும் என்று விளக்கியுள்ளது அருமை அல்லவா?

மேலும் அந்தத் தந்தை ‘நீ படியாத பெண்ணாய் இருந்தால் இந்த ஊர்க்காரர்கள் என்னைக் கேலி செய்வார்கள்’ என்று கூறியுள்ளார். பெண் குழந்தையைப் படிக்க வைக்காத தந்தை என்ற இழிசொல் தனக்கு வரக் கூடாது என்ற கருத்து இதில் வெளிப்படுகிறது. இதில் எனக்காகவாவது நீ சென்று படி என்னும் ஏவல் இருப்பதையும் நாம் உணர முடிகிறது.

கல்வி கற்கும் போது முதலில் சிறிது கடினமாகத் தான் இருக்கும். ஆனால், கற்கக் கற்க அது இனிமையைத் தரும். எனவே, பின்னால் வர இருக்கும் கல்வி இன்பத்தை நினைத்து இன்று படி என்று கூறியுள்ளார் பாரதிதாசன்.

மகளிர் பாடல்கள்

பெண்கள் அறிவு பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் பாரதிதாசன். ஆண், பெண் – சமத்துவத்திற்குப் பெண் கல்வி கட்டாயம் தேவை என்ற கருத்தைப் பல இடங்களில் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். கல்வியறிவு பெற்ற – தமிழ் உணர்வு கொண்ட தமிழ்ப் பெண்களால்தான் தமிழ்நாடு முன்னேறும் என்னும் கருத்தைப் ‘பெண்கல்வி’ என்னும் பாடலில் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

பெண்களால் முன்னேறக் கூடும் – நம்

வண் தமிழ் நாடும் எந்நாடும்!

கண்களால் வழிகாண முடிவதைப் போலே!

கால்களால் முன்னேற முடிவதைப் போலே!

(பெண்களால் முன்னேறக் கூடும்)

படியாத பெண்ணினால் தீமை! – என்ன

பயன் விளைப்பாள் அந்த ஊமை?

நெடுந்தமிழ் நாடெனும் செல்வி – நல்ல

நிலை காண வைத்திடும், பெண்களின் கல்வி!

(பெண்களால் முன்னேறக் கூடும்)

பெற்றநல் தந்தை தாய் மாரே – நும்

பெண்களைக் கற்க வைப்பீரே!

இற்றைநாள் பெண் கல்வியாலே – முன்

னேற வேண்டும் வையம் மேலே!

(பெண்களால் முன்னேறக் கூடும்)

(இசையமுது, ‘பெண்கல்வி’)

நல்ல பெண் குழந்தைகளைப் பெற்ற தந்தையரே! தாயரே! உங்கள் பெண் குழந்தைகளைக் கல்வி கற்க வையுங்கள். பெண் கல்வியால் மட்டுமே இந்த உலகம் முன்னேற முடியும் என்று பெற்றோர்களை வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார் பாரதிதாசன்.

பெற்றோர் ஆவல் பெண்கள் இயல், இசை, கூத்து என்னும் மூன்று தமிழிலும் வல்லவர்களாக விளங்க வேண்டும் என்பது பாரதிதாசனின் எண்ணம். அதை, அவர் பெற்றோரின் ஆவலாக இந்த இசைப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார்.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக்

கின்பம் சேர்க்க மாட்டாயா? – நல்

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ

அல்லல் நீக்க மாட்டாயா? – கண்ணே

அல்லல் நீக்க மாட்டாயா?

(துன்பம்)

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே

வாழ்வின் உணர்வு சேர்க்க – எம்

வாழ்வின் உணர்வு சேர்க்க – நீ

அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்

ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே

ஆடிக் காட்ட மாட்டாயா?

(துன்பம்)

அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே

அறிகிலாத போது – யாம்

அறிகிலாத போது – தமிழ்

இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்

இயம்பிக் காட்ட மாட்டாயா? – நீ

இயம்பிக் காட்ட மாட்டாயா?

(துன்பம்)

புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே

புலவர் கண்ட நூலின் – தமிழ்ப்

புலவர் கண்ட நூலின் – நல்

திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்

செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்

செல்வம் ஆக மாட்டாயா?

(துன்பம்)

(இசையமுது,‘பெற்றோர் ஆவல்’)

(வன்பு – வலிமை; அன்றை – அந்நாள்; தமிழ்க்கூத்து – நாடகத் தமிழ்)

இந்தப் பாடல் 1939 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இக்காலத்தில் ‘யாழ்’ என்னும் இசைக் கருவி பயன்பாட்டில் இல்லை. யாழில் இருந்து வளர்ச்சி பெற்ற வீணை என்னும் இசைக் கருவியே பயன்படுத்தப்பட்டது, எனினும் இந்தப் பாடலில் பாரதிதாசன் ‘வீணை’ என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. சங்க காலத்திலே தமிழர் பயன்படுத்திய ‘யாழ்’ என்னும் இசைக் கருவியையே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்கால நாட்டியத்தைக் குறிப்பிடாமல் ‘அன்றை நற்றமிழ்க் கூத்து’ என்றே குறிப்பிட்டுள்ளார்.

அறம் எது? மறம் எது? என்று அறியாதவர்களுக்கு அறத்தையும் மறத்தையும் தெளிவாகப் பிரித்துக் காட்டுவது திருக்குறள் என்ற கருத்தையும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

அகம், புறம் என்று வாழ்க்கையையும் இலக்கியத்தையும் பிரித்து அறிந்தவர்கள் தமிழர்கள். அதைச் சங்ககால நூலின் வழியில் புரிய வைக்குமாறு பெற்றோர் கேட்பது போல் பாரதிதாசன் பாடியுள்ளார்.

பாரதிதாசனுக்குக் கலை என்றால் பிற கலப்பு இல்லாத தமிழ்க் கலை தான் மகிழ்ச்சியைத் தரும்; இசை என்றால் தமிழ் இசைதான் மகிழ்ச்சியைத் தரும்; மொழி என்றால் தமிழ் மொழி தான் மகிழ்ச்சியைத் தரும். இவற்றை இந்தப் பாடலின் அடிப்படையாய் அமைத்து அவர் பாடியுள்ளதைக் காணமுடிகிறது.

மடமை இல்லாப் பெண்கள் பெண்கள் மூடப்பழக்க வழக்கங்களில் சிக்கிவிடக் கூடாது. பேய், பூதம் என்னும் இல்லாத பொருள்கள் இருக்கிறது என்று நம்பி அஞ்சக் கூடாது என்பதைப் பின்வரும் பாடலின் வழியாகப் பாரதிதாசன் உணர்த்தியுள்ளார்.

அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்

அழகிய தமிழ்நாட்டின் கண்கள்

உச்சி இருட்டினில் பேய் வந்ததாக

உளறினால் அச்சமா? பேய் என்பதுண்டா?

(அச்சமும் மடமையும்)

முச்சந்தி காத்தானும் உண்டா – இதை

முணுமுணுப்பது நேரில் கண்டா?

பச்சைப் புளுகெல்லாம் மெய்யாக நம்பிப்

பல் பொருள் இழப்பார்கள் மடமை விரும்பி

(அச்சமும் மடமையும்)

கள் உண்ணும் ஆத்தாளும் ஏது? மிகு

கடிய சாராய முனி ஏது?

விள்ளும் வைசூரிதான் மாரியாத்தாளாம்;

வேளை தோறும் படையல் வேண்டும் என்பாளாம்

(அச்சமும் மடமையும்)

மடமைதான் அச்சத்தின் வேராம் – அந்த

மடமையால் விளைவதே போராம்.

மடமையும் அற நல் ஒழுக்கமும் வேண்டும்

கல்வி வேண்டும் அறிவு கேள்வியும் வேண்டும்

(அச்சமும் மடமையும்)

(இசையமுது, ‘அச்சம்தவிர், மடமை நீக்கு’)

(பச்சைப் புளுகு – பெரிய பொய், முச்சந்தி காத்தான், கள் உண்ணும் ஆத்தாள், சாராய முனி – சிறு தெய்வங்கள், விள்ளும் – சொல்லும்)

பகுத்தறிவு கொண்ட பெண்கள் சமுதாயத்தில் நிறைந்தால் அச்சம் அகலும். அச்சம் அகன்றால் அறியாமை நீங்கும். அறியாமை நீங்கிய பகுத்தறிவுச் சமுதாயத்தில் போர் ஏற்படாது. பெண்களிடம் பகுத்தறிவு தோன்ற வேண்டும் என்றால் கல்வியும் கேள்வியும் நிறைய வேண்டும் என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.

தமிழ் உணர்வு

பாடகர்கள் மேடை ஏறிப் பாட வேண்டும் என்பதற்காகவே தமிழ் இசைப் பாடல்களைப் பாரதிதாசன் பாடினார். அந்தத் தமிழ்ப் பாடல்களின் வழியாகவும் பாரதிதாசன் தமிழ் உணர்வை ஊட்டியுள்ளார். தமிழைத் தாயாக உருவகம் செய்து பாவேந்தர் பாடியுள்ள பாடலைப் பாருங்கள்.

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே

மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே

வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!

வீரனின் வீரமும் வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப்பேனோ

தமிழன் எந்நாளும் தலைகுனிவேனோ

சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்

தோன்றுடல் நீ உயிர் நான் மறப்பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே

செயலினை மூச்சினை உனக்களித்தேனே

நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு

நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது

மொய்த்த நன் மனிதராம், புதுப்புனல் மீது

செந்தாமரைக் காடு பூத்தது போல

செழித்தஎன் தமிழே ஒளியே வாழி

(இசையமுது – தமிழ்)

என்று பாரதிதாசன் தமிழ்த்தாயை வாழ்த்திப் பாடியுள்ளார். இப்பாடலில் தமிழின் பழைமைச் சிறப்பைப் பாரதிதாசன் எடுத்து உரைத்துள்ளார். மனிதர்கள் அறிவுடன் கூடி வாழத் தொடங்கிய காலத்திற்கு முன்பே தமிழ் மொழி தோன்றியதை உணர்த்தியுள்ளார். மேலும் தமிழ் மொழி அந்தப் பழங்காலத்திலேயே செழித்து விளங்கியதை ஓர் அழகிய உவமை மூலம் விளக்கியுள்ளார் பாருங்கள். தண்ணீரில் செந்தாமரை பூத்து நிறைந்தது போல் தமிழ் மொழி செழித்து வளர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ச் செல்வம் மாடு, மனை, வீடு வாசல் என்று பலவற்றை நாம் செல்வமாகக் கருதுகிறோம். ஆனால், பாரதிதாசன் தமிழையே செல்வமாகக் கருதுகிறார். பிறரையும் அவ்வாறு கருதுமாறு செய்துள்ளார்.

செல்வம் என்று போற்று

செந்தமிழ்ச் சொல்லை – நீ

(செல்வம் என்று. . . )

அல்லலும் நீங்கும் பகையாவும் நீங்கும்

(செல்வம் என்று. . . )

வெல்வது வேலன்று; செந்தமிழ் ஒன்றே

நல்லொற்றுமை சேர்க்கும், நன்னெறி சேர்க்கும்

வல்லமை சேர்க்கும் வாழ்வை உண்டாக்கும்.

வண்டமிழ் நைந்திடில் எது நம்மைக் காக்கும்?

தமிழர்க்கு மானம் தனி உயிர்! யாவும்

தமிழே ஆதலால் வாழ்த்துவோம் நாளும்!

(செல்வம் என்று . . . )

(தேனருவி – பாடல் 3)

இந்தப் பாடலில் தமிழர்க்கு மானமாகத் தமிழைப் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். மானத்திற்கு இணையாகக் கருதும் உயிரையும் அவர் தமிழ் என்றே குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தமிழர்கள் உயர்வாகக் கருதும் மானத்தோடும் உயிரோடும் பாரதிதாசன் தமிழை இணைத்திருப்பதை நாம் காண முடிகிறது.

தமிழ்த் தொண்டு தமிழ் மொழி உயர்ந்த நிலை அடைவதற்குத் தமிழர்கள் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் பாரதிதாசன். தமிழ்த் தொண்டு செய்வது அமுதம் பெறுவது போல் இன்பமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் என்னும் மணிவிளக் கேற்றடா நாட்டில்!

தமிழரின் நெஞ்சமாம் அழகான வீட்டில்!

அமுதென்று கொள்ளடா செந்தமிழ்ப் பணியை

அறமென்று கொள்ளடா செந்தமிழ்ப் பணியை

(தமிழ்)

தமிழென்ற உணவினைக் குவியடா யார்க்கும்

தமிழருக்கு இங்குள குறையெலாம் தீர்க்கும்

சமமாக ஆற்றடா தமிழூழியத்தைச்

சகலர்க்கும் ஆற்றடா தமிழூழியத்தை

(தமிழ்)

தமிழென்ற வன்மையைக் கூட்டடா தோளில்

தமிழர்க்கு நலமெலாம் வரும் ஒரே நாளில்

அமைவினால் புரியடா செந்தமிழ்த் தொண்டே

அன்பினால் புரியடா செந்தமிழ்த் தொண்டே

(தமிழ்)

தமிழ் என்னும் உணர்வினைச் சேரடா எங்கும்

தமிழரின் ஆட்சியே உலகெலாம் தங்கும்

இமையேனும் ஓயாது தமிழுக்குழைப்பாய்

இன்பமே அதுவென்று தமிழுக்குழைப்பாய்

(தமிழ்)

(இசையமுது-2, ‘தமிழ்த் தொண்டு’)

என்று தமிழ் உணர்வை எல்லாரிடமும் சேர்ப்பதற்காகப் பாரதிதாசன் பாடியுள்ளார். இவ்வாறு தமிழ் உணர்வை அனைவரிடமும் சேர்த்தால் தமிழின் ஆட்சியும் தமிழரின் ஆட்சியும் உலகில் பரவும் என்று தமிழ் உணர்வை ஊட்டுவதால் ஏற்படும் பயனையும் பாரதிதாசன் தெரிவிள்ளார்.

தமிழ் மொழியை உயிரோடும் உணர்வோடும் கலந்து பார்த்த பாரதிதாசன் அதை எவ்வாறு எல்லாம் அழைக்கலாம் என்று பாடியுள்ளார் பாருங்கள்.

காட்சி

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

(தமிழுக்கும்)

தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணம் என்று பேர் – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர் இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்

(தமிழுக்கும்)

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

(தமிழுக்கும்)

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

(தமிழுக்கும்)

(பாரதிதாசன் கவிதைகள், 20, இன்பத் தமிழ்)

(நிருமித்த = உருவாக்கப்பட்ட)

நாடு பற்றிய பாடல்கள்

பாரதிதாசன் நாடு பற்றிய பாடல்களின் வழியாக நாட்டுப்பற்றை ஊட்டியுள்ளார். பாரதிதாசனின் இசைப்பாடல்களில் நாடு என்று குறிப்பிடப்படுவது பெரும்பாலும் தமிழ்நாடே ஆகும். தமிழ்நாட்டின் பழம் பெருமையையும் இயற்கைச் சிறப்பையும் வளங்களையும் பாரதிதாசன் இப்பாடல்களின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டுப் பெருமை நில வளத்திலும் நீர் வளத்திலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இங்கு வாழும் தமிழர்கள் பண்பு நிறைந்தவர்கள். விருந்தோம்பல் பண்பை உயிராக மதிப்பவர்கள் என்னும் கருத்துகளைப் பாரதிதாசன் தமிழ்நாட்டுப் பெருமைகளாகப் பாடியுள்ளார்.

தமிழ்நாடு தான் மேலான நாடு

தமிழர்க்கெல்லாம் மற்றவை காடு

(தமிழ்)

கமழ்தென்றலே நடமாடு நாடு

காவிரி நீள்வைகை பாயும் நாடு

(தமிழ்)

கன்னல்மா பலாவும் வாழை கமுகு

செந்நெல் யாவுமே மலிகின்ற நாடு

(தமிழ்)

பொன்னின் வார்ப்படம் போல்மாதரோடு

போர்புரி மாவீரர் வாழும் நாடு

(தமிழ்)

(இசையமுது, 2 – ‘எதற்கும் மேல்’)

என்னும் பாடலில் தமிழ் நாட்டையும் தமிழரையும் உயர்வாகப் பாரதிதாசன் பாடியுள்ளதைக் காண முடிகிறது. காவிரி, வைகை என்னும் நதிகள் பாய்ந்து தமிழ்நாட்டை வளப்படுத்துகின்றன. இங்கு மா, பலா, வாழை என்னும் முக்கனிகள் விளைகின்றன. கமுகும் நெல்லும் நன்கு பயிராகின்றன என்று பாரதிதாசன் இயற்கை வளங்களை எடுத்துக் கூறியுள்ளார். மேலும் பொன்னின் வார்ப்படம் (mould) போன்ற அழகான பெண்களும், போர் புரிவதில் சிறந்த வீரர்களும் வாழும் நாடு தமிழ்நாடு என்றும் பாடியுள்ளார்.

தமிழர் ஒற்றுமை தமிழர்கள் தங்களுக்குள் சாதி, மதங்களால் பிரிந்து வாழ்கிறார்கள், அவர்கள் அனைவரும் தமிழ் என்ற மொழியின்கீழ் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று பாவேந்தர் பாடியுள்ளார். தமிழர் ஒற்றுமையாய் வாழ்ந்தால் தமிழ் மொழி ஏற்றம் பெறும் என்னும் உண்மையை அவர் எடுத்துக் கூறியுள்ளார்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

விண்ணோடும் உடுக்களோடும்

மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்

பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்

சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு

ஞாபகம் செய் முழங்கு சங்கே!

சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்

தீராதி தீரரென்று ஊது சங்கே!

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்

சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்

தோள் எங்கள் வெற்றித் தோள்கள்!

கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள்

ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!

வெங்குருதி தனில் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற

தமிழ் எங்கள் மூச்சாம்!

(பாரதிதாசன் கவிதைகள், 27, சங்கநாதம்)

(உடுக்கள் = விண்மீன்கள்; மங்குல் = மேகம்; சிங்களம் = இலங்கை; சங்காரம் = அழித்தல்; சாக்காடு = சாவு)

இந்தப் பாடலில் தமிழ், தமிழர் என்று படிநிலை அமைத்து, பாரதிதாசன் பாடியுள்ளார். தமிழை மூச்சாகக் கொண்டவர்கள் தமிழர்கள். அவர்கள் வீரம் நிறைந்தவர்கள், கங்கையைப் போன்றும் காவிரியைப் போன்றும் கருத்துகள் ஊறும் உள்ளம் கொண்டவர்கள் என்று பாடியுள்ளார்.

காதல் பாடல்கள்

பாரதிதாசனின் இசைப் பாடல்களில் காதல் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலாளியின் காதல் எண்ணங்களை வெளிப்படுத்துவதாய் இருக்கின்றன. வண்டிக்காரன், மாடு மேய்ப்பவன், பாவோடு பெண்கள், தறித்தொழிலாளி நினைவு, உழவன் பாட்டு, உழத்தி, ஆலைத் தொழிலாளி, இரும்பாலைத் தொழிலாளி, கோடாலிக் (கோடரி) காரன், கூடைமுறம் கட்டுவோர், பூக்காரி, குறவர், தபால்காரன், சுண்ணம் இடிக்கும் பெண்கள், ஓவியக்காரன் என்று காதல் பாடல்களைப் படைத்துப் புதுமை செய்துள்ளார் பாரதிதாசன். இந்தத் தொழிலாளிகளின் தொழில் சார்ந்த எண்ணங்களுடன் காதலை வெளிப்படுத்தியுள்ள தன்மை சிறப்பாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.

உழத்தி களை எடுக்கின்ற உழத்திப் பெண்ணைப் பார்த்து, காதலன் பாடும் பாட்டின் கற்பனை நயத்தைப் பாருங்கள்.

களை எடுக்கின்றாள் – அதோ

கட்டழகுடையாள் சிற்றிடையாள் அதோ

களை எடுக்கின்றாள்!

வளவயல்தனில் மங்கைமாருடன்

இளங் கரும்பிடைச் செங்கரும்புபோல்

களையெடுக்கின்றாள்!

கவிழ்ந்த தாமரை

முகம் திரும்புமா? – அந்தக்

கவிதை ஓவியம்

எனை விரும்புமா?

அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம்

அருவி நீரில் எப்போது மூழ்கலாம்? -

(களை)

செந்நெல் காப்பது

பொதுப்பணி செய்யல்! – ஆம்

என்ற நினைவினால்

என்னருந் தையல்

மின்னுடல் வளைய வளையல்கள் பாட

விரைவில் செங்காந்தள் விரல்வாட

(களை)

(இசையமுது, ‘உழத்தி’)

என்னும் பாடலில் குனிந்து களை எடுக்கும் பெண்ணைக் கவிழ்ந்த தாமரை என்று பாரதிதாசன் பாடியுள்ளார். மலர்ந்த தாமரை என்று இயல்பாகக் கவிஞர்கள் தாமரையைப் பாடுவார்கள். ஆனால் கவிழ்ந்த தாமரை என்று பெண்ணின் முகத்தைப் பாவேந்தர் உவமைப்படுத்தியுள்ள திறம் வியப்பைத் தருகிறது அல்லவா?

களை எடுத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் கருங்கூந்தல் அவிழ்ந்து தொங்குகிறதாம். அது, பாரதிதாசனுக்கு அருவி நீரை நினைவு படுத்துகிறதாம். அத்துடன் அவர் நிறுத்தவில்லை. அந்தக் கருங்கூந்தலாகிய அருவி நீரில் எப்போது முழுகலாம் என்று ஒரு கேள்வியும் கேட்டிருக்கிறார் பாருங்கள்.

ஆலைத் தொழிலாளி மேலே படித்த பாடலில் ஒரு காதலன் தனது காதலியைப் பார்த்துப் பாடியதை நாம் கண்டோம். அடுத்த பாடலில் ஆலைக்கு வேலைக்குப் போன காதலனை எதிர்பார்த்து இருக்கும் காதலி பாடுகிறாள் பாருங்கள்.

ஆலையின் சங்கே நீ ஊதாயோ? மணி

ஐந்தான பின்னும் பஞ்சாலையின் சங்கே ஊதாயோ?

காலை முதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே

வேலை செய்தாரே! என் வீட்டை மிதிக்கவே

(ஆலையின்)

மேலைத் திசைகளில் வெய்யிலும் சாய்ந்ததே

வீதி பார்த்திருந்த என் கண்ணும் ஓய்ந்ததே

மேலும் அவர் சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே

விண்ணைப் பிளக்கும் உன் தொண்டையேன் காய்ந்ததே

(ஆலையின்)

குளிக்க ஒரு நாழிகையாகிலும் கழியும்

குந்திப் பேச இரு நாழிகை ஒழியும்

விளைத்த உணர்வில் கொஞ்ச நேரம் அழியும்

வெள்ளி முளைக்கு மட்டும் காதல்தேன் பொழியும்

(ஆலையின்)

பஞ்சாலைக்கு வேலைக்குப் போன தன் காதலன் வருவான் என்று மாலையில் தலைவி எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். தலைவன் இன்னும் வரவில்லை. ஆலையின் சங்கு ஊதினால்தானே தலைவன் வருவான். சங்கு ஏன் இன்னும் ஊதவில்லை என்று சிந்தித்தாள். எப்போதும் சங்கின் ஒலியானது விண்ணைப் பிளக்கும் வேகத்தில் ஒலிக்கும். அவ்வாறு விண்ணைப் பிளக்கும் அளவிற்கு ஒலித்ததால் அதன் தொண்டை வறண்டு விட்டதோ என்று அவள் நினைக்கின்றாளாம். எவ்வளவு அழகான கற்பனை?

ஆலையின் சங்கு ஓர் உயிரற்ற பொருள், மின்சாரத்தின் விசையால் ஒலிக்கும் இயல்புடையது. அது உரிய நேரம் வந்தால் ஒலிக்கும். தலைவன் சீக்கிரம் வர வேண்டும் என்று கருதியதால் அவளது மனம் சங்கு ஒலிக்கும் நேரம் கடந்து விட்டதாகக் கருதுகிறது. அதிகமாக ஒலி எழுப்பினால் மனிதனின் தொண்டை வறண்டு விடுவது போல் ஆலைச் சங்கின் தொண்டையும் வறண்டு விட்டதோ என்று நினைக்கிறாள். இவ்வாறு உயிரற்ற பொருளை உயிருடைய பொருள்போல் கற்பனை செய்ய வைத்திருப்பது காதல் மயக்கமா?

இவை போன்ற காதல் பாடல்கள் பாவேந்தரின் இசையமுது நூலில் பல உள்ளன. அவற்றை நீங்கள் இணைய நூலகத்தில் கற்கலாம்.

இசைப் பாடல்களில் சந்த நயம்

பாவேந்தர் பாரதிதாசனின் இசைப்பாடல்கள் இசைக்கு ஏற்ப அமைந்துள்ளன. மேலும் சந்த நயம் மிகும் வகையில் பல ஒலி நயங்களையும் கொண்டுள்ளன.

தமிழ்நாடு தான் மேலான நாடு

தமிழர்க்கெல்லாம் மற்றவை காடு

என்னும் பாடலின் இரு அடிகளின் இறுதி எழுத்துகளும் ‘டு’ என்னும் எழுத்தாய் அமைந்து ‘நாடு’, ‘காடு’ என்று ஓர் இயைபை வழங்குவதைக் காணமுடிகிறது. மேலும் இப்பாடலின் இரு அடிகளிலும் முதல் எழுத்து ‘த’ என்னும் ஒரே எழுத்தாய் அமைந்து ஒலிப்புக்கு இனிமையைக் கூட்டுகிறது.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு

என்னும் பாடல் வரிகளில் ‘எங்கள்’ ‘மங்காத’ என்னும் சொற்களில் ‘ங்’ என்னும் எழுத்து இடம் பெற்று, சந்தம் தருவதைக் காணமுடிகிறது. இதைப் போன்றே முதல் அடியின் மூன்றாம் சொல்லிலும் இரண்டாம் அடியின் மூன்றாம் சொல்லிலும் ‘ங்’ என்னும் எழுத்து அமைந்து ஒலி நயத்தைக் கூட்டுகிறது. இவை போன்றே பாரதிதாசனின் இசைப்பாடல்கள் சந்த நயம் வழங்குவதைக் காணுங்கள்.

தொகுப்புரை

தமிழில் இசைப் பாடல்கள் இல்லை என்று சொல்வோரின் வாயை அடைக்கும் வகையில் பாரதிதாசன், தமிழ் இசைப் பாடல்கள் பலவற்றைப் படைத்துள்ளார். அந்தப் பாடல்கள் வழியாகச் சிறுவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை எடுத்து உரைத்துள்ளார். பெண் கல்வி பெண் விடுதலை முதலிய பெண்கள் முன்னேற்றக் கருத்துகளை இசைப் பாடல்களின் வழியாக வழங்கியுள்ளார். தமிழ்மொழியின் பெருமையையும் தமிழ்த் தொண்டு செய்ய வேண்டிய தேவையையும் பாரதிதாசன் இசைப் பாடல்களின் வழியாக இளைஞர்களுக்கு விளக்கியுள்ளார். இசைப்பாடல்களில் காதல் சுவையைக் கலந்து நமக்குப் பாவேந்தர் தந்துள்ளார். அவற்றில் காணப்படும் உவமை நயம் ஒவ்வொன்றும் நம்மை நினைத்து நினைத்து இன்பம் அடையச் செய்யும்.

பாடம் - 5

பாரதிதாசனின் நாடகங்கள்

பாட முன்னுரை

இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டு தமிழ் மொழி வளர்ந்தது. அவற்றுள் பழங்கால இயல் நூல்கள் இன்றும் பல கிடைக்கின்றன. இசை நூல்களும் நாடக நூல்களும் கிடைக்கவில்லை. இசைத்தமிழ் நூல்கள் தேவார காலத்தில் பல தோன்றின. ஆனால் நாடக நூல்கள் தோன்றவில்லை. அந்தக் குறையைப் போக்கியது சுந்தரனாரின் ‘மனோன்மணீயம்’ என்னும் நாடகம் ஆகும். அதைத் தொடர்ந்து சிறந்த நாடக நூல்கள் தோன்றவில்லை. இந்தக் கால கட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் கவிதையிலும் உரைநடையிலும் ஆன பல நாடக நூல்களை இயற்றியுள்ளார்.

நாடகம்

ஒரு கதையை நடந்தது போல் நடித்துக் காட்டுவது நாடகம் எனப்படும். இந்த நாடகங்கள் காலப் போக்கில் மூன்று வகையாகப் பிரிந்தன.

1. பார்ப்பதற்கான நாடகங்கள்

2. படிப்பதற்கான நாடகங்கள்

3. பார்ப்பதற்கும் படிப்பதற்கும் ஆன நாடகங்கள்

பார்ப்பதற்கான நாடகங்கள் பலவற்றைப் பம்மல் சம்பந்தனார் காலம் தொடங்கிப் பல நாடகக் குழுவினர் நடத்தி வருகிறார்கள்.

படிப்பதற்கான நாடகங்கள் பலவற்றைக் கவிதை வடிவில் காணமுடிகிறது. அச்சிடப்பட்ட நூல் வடிவிலும் கிடைக்கின்றன.

பார்ப்பதற்கும் படிப்பதற்கும் ஆன நாடகங்கள் மேடை நாடகங்களாகப் பார்க்கப்பட்டும் நூல் வடிவில் படிக்கப்பட்டும் வருகின்றன.

பாரதிதாசனின் நாடகங்கள் பாரதிதாசனின் நாடகங்கள் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் ஆன நாடக வகையைச் சேர்ந்தவை ஆகும். பாரதிதாசனின் நாடகங்களில் பலவும் அச்சிடப்பட்டு நூல் வடிவில் நமக்குக் கிடைக்கின்றன, அவற்றில் பல நாடகங்கள் மேடைகளில் நடிக்கப்பட்டவை என்பதை அந்த நூல்களின் முன்னுரை வாயிலாக நாம் அறிய முடிகிறது.

பாரதிதாசன் நாடகங்களின் எண்ணிக்கை மொத்தம் 47 ஆகும். இவற்றில் பத்து நாடகங்கள் செய்யுள் வடிவில் வந்தவை. அவை,

1. தமிழச்சியின் கத்தி

2. வீரத்தாய்

3. பாண்டியன் பரிசு

4. புரட்சிக்கவி

5. ஒன்பது சுவை

6. போர் மறவன்

7. ஏழை உழவன்

8. சத்தி முத்தப் புலவர்

9. அமிழ்து எது?

10.நல்ல முத்துக்கதை

என்பவை ஆகும்.

இவற்றில் தமிழச்சியின் கத்தி, வீரத்தாய், பாண்டியன் பரிசு, புரட்சிக்கவி, நல்லமுத்துக்கதை ஆகிய ஐந்து நாடகங்களும் காப்பியங்களாகவும் வெளிவந்துள்ளன. இவை பாரதிதாசனின் காப்பியங்கள் என்னும் பாடத்தில் இடம் பெற்றுள்ளன.

உரை நடையில் பாரதிதாசனால் எழுதப்பட்ட நாடகங்களில் பதினொரு நாடகங்கள் நூல்வடிவில் வெளிவரவில்லை. அவை,

1. சங்கீத வித்வானோடு

2. ஐயர் வாக்குப் பலித்தது

3. ஆக்கம்

4. தீவினை

5. சிந்தாமணி

6. லதாக்ருகம்

7. கருஞ்சிறுத்தை

8. பாரதப் பாசறை

9. இசைக்கலை

10. மக்கள் சொத்து

11. பறவைக் கூடு

என்பவை ஆகும்.

இவை தவிர இருபத்தாறு நாடகங்கள் நூல் வடிவில் வெளிவந்துள்ளன.

1. இரணியன் அல்லது இணையற்ற வீரன்

2. பிசிராந்தையார்

3. சேரதாண்டவம்

4. நல்ல தீர்ப்பு

5. அமைதி

6. கற்கண்டு

7. பொறுமை கடலினும் பெரிது

8. இன்பக் கடல்

9. தலை மலை கண்ட தேவர்

10. கழைக் கூத்தியின் காதல்

11. குடும்ப விளக்கும் குண்டுக் கல்லும்

12. ஆரிய பத்தினி மாரிஷை

13. ரஸ்பு டீன்

14. அம்மைச்சி

15. வஞ்ச விழா

16. விகடக்கோர்ட்

17. சௌமியன்

18. மேனி கொப்பளித்ததோ

19 படித்த பெண்கள்

20. மூளை வைத்தியம்

21. குலத்தில் குரங்கு

22. முத்துப்பையன்

23. கோயில் இரு கோணங்கள்

24. சமணமும் சைவமும்

25. மருத்துவர் வீட்டில் அமைச்சர்

26. காதல் வாழ்வு.

என்பவை ஆகும்.

இந்த இருபத்தாறு உரைநடை நாடகங்களையும் இந்தப் பாடத்தில் அறிமுகம் செய்ய இயலாது. எனவே இரணியன், பிசிராந்தையார், சேரதாண்டவம், நல்ல தீர்ப்பு, அமைதி, கழைக் கூத்தியின் காதல் ஆகிய ஆறு நாடகங்கள் இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இரணியன்

பாரதிதாசனின் நாடகங்களில் பலமுறை மேடைகளில் நடிக்கப்பட்ட நாடகம் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்பது ஆகும். அவ்வாறு நடிக்கப்பட்ட பிறகே இந்த நாடகம் நூலாக அச்சிடப்பட்டுள்ளது. இரணியன் என்னும் புராணகால வீரனைப் பற்றிய புதிய நாடகம் இது. இரணியன் என்னும் வீரன் எவ்வாறு வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டான் என்பதை இந்த நாடகம் தெரிவிக்கிறது. பாரதிதாசன் தமது பகுத்தறிவுப் பார்வைக்கு ஏற்ப இந்த நாடகத்தைப் படைத்துள்ளார்.

இரணியன் பழைய கதை இரணியன் பழைய புராண மரபுப்படி அசுரர்களின் தலைவன். அவன் ஆணவம் மிகுந்தவன், தெய்வத்தை மதியாதவன். தனக்கும் மேலே ஆற்றல் நிரம்பிய தெய்வம் ஒன்று உண்டு என்ற கருத்தையும் அத்தெய்வம் நாராயணன் என்னும் பெயர் கொண்டது என்பதையும் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. இரணியன் ஆட்சியில் கல்வி பயிலும் பிள்ளைகள் எல்லாரும் தெய்வத்தின் பெயரைச் சொல்வதற்குப் பதிலாக இரணியனின் பெயரையே சொல்லி வணங்கினார்கள்.

இரணியனுக்கு மகன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் பிரகலாதன். அவன் தெய்வத்தை மதித்தான்; நாராயணனை வணங்கினான். பிரகலாதனிடம் ஆசிரியர், இரணியனின் பெயரைக் கூறி வணங்குமாறு கூறினார். அதைக் கேட்காமல் நாராயணனின் பெயரைச் சொல்லி வணங்கினான் பிரகலாதன். ஆசிரியர், நிகழ்ந்ததை இரணியனிடம் கூறினார். இரணியன் கோபம் கொண்டான். பிரகலாதனைப் பலவாறு தண்டித்தும் பயனில்லை. இறுதியில், “சொல்லடா! ஹரி என்ற உன் நாராயணன் எங்கே இருக்கிறான். காட்டு” என்று கேட்டான்.

காட்சி

“நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்று பிரகலாதன் கூறினான், அதைக் கேட்ட இராவணன் மிகுந்த கோபம் கொண்டான். அருகிலிருந்த தூணைச் சுட்டிக்காட்டி, “இந்தத் தூணிலும் உன் நாராயணன் இருக்கிறானா?” என்றான். “ஆமாம்” என்று கூறினான் பிரகலாதன்.

தூணை எட்டி உதைத்தான் இரணியன். தூணிலிருந்து சிங்கமுகத்துடன் நாராயணன் தோன்றி இரணியனின் குடலைக் கிழித்துக் கொன்றதாகப் பழைய கதை கூறுகிறது. இந்தக் கதை விஷ்ணு புராணத்திலும் இராமாயணத்திலும் இடம் பெற்றுள்ளது.

இரணியன் நாடகக் கதை இரணியன் தன் மகன் பிரகலாதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்ட விரும்புகிறான். இளவரசன் ஆவதற்கு முன் உலக நாடுகள் பற்றிய அறிவை அவன் பெற வேண்டும் என்று இரணியன் கருதினான். எனவே, பிரகலாதனை உலகச் சுற்றுப் பயணத்திற்கு அனுப்புகிறான்.

காட்சி

பிரகலாதன் தன் பள்ளி நண்பன் காங்கேயனுடனும் மெய்க் காப்பாளர்களுடனும் உலகச் சுற்றுப் பயணத்திற்குச் சென்றான். அவ்வாறு சென்றவன் அயல் நாடுகளுக்குச் செல்லவில்லை; அங்கே அருகே உள்ள காட்டில் தங்கினான்.

பிரகலாதனுடன் சென்ற காங்கேயன் தீய எண்ணம் கொண்டவன். அவன், கஜகேது என்பவனின் மகன். எப்படியாவது பிரகலாதனைத் தீய எண்ணங்களுக்கு அடிமையாக்கி விட வேண்டும் என்று திட்டமிட்ட கஜகேது அதற்கு ஏற்பத் தனது மகள் சித்ரபானுவுடன் பிரகலாதனைப் பழகச் செய்கிறான்.

காங்கேயனின் தங்கைதான் சித்ரபானு. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சித்ரபானுவுக்கும் பிரகலாதனுக்கும் திருமணம் செய்து வைக்கிறான் கஜகேது. மேலும் அவர்களின் திருமணம் தற்போது இரணியனுக்குத் தெரியக்கூடாது என்றும் திட்டமிட்டான். சித்ரபானுவின் அழகில் மயங்கிய பிரகலாதன் உலகச் சுற்றுப் பயணத்திற்குச் செல்லவில்லை.

நாராயண மந்திரம் பிரகலாதன் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பியதாகக் கூறித் திரும்பினான். அவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லா நாட்டு மன்னர்களும் வந்து அமர்ந்திருந்தனர். பட்டம் சூட்டுவதற்குரிய கிரீடம் வந்தது. ‘இரணிய நாமத்தை வாழ்த்துகிறேன்’ என்று சொல்லிவிட்டு இளவரசருக்கு உரிய இருக்கையில் அமரச் சொன்னார்கள்.

பார்வையாளர்கள் நடுவே, பொதுமக்களோடு சித்ரபானுவும் அமர்ந்து இருந்தாள். பிரகலாதன் பார்க்கும் படியாக அவள் எழுந்து நின்று தன்னை நினைவுபடுத்தினாள்.

உடனே பிரகலாதன் ‘சர்வலோக சரண்யனாகிய ஸ்ரீமந் நாராயணன் நாமம் வாழ்க’ என்று கூறினான். அனைவரது முகமும் சுருங்கின. இரணியன் உடனே எழுந்து பின்வருமாறு கோபமாகக் கூறினான்.

“சீ! என்ன சொன்னாய்? அடக்கு உன் இறுமாப்பை மூடனே! உனது தமிழ்த் தன்மை எங்கே? என் பெயரைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! தமிழ்ப் பெருமக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட களங்கமே! உன் நெஞ்சைப் பிளப்பேன். என் மகன் என்பதால் உன்னை விடவில்லை பொது மக்களின் இளவரசன் என்பதால் விடுகிறேன்!

“நாராயணன் என்ற பதத்தால் நீ குறிக்கும் மனிதன் யார்? அல்லது ஒரு சக்தி உள்ள பொருளானால் அப்பொருள் எது?” என்று கேட்டான்.

(இரணியன், காட்சி : 11)

அமைச்சர், தாய் லீலாவதி, ஏனையோர் எல்லாரும் எடுத்துச் சொன்ன பிறகும் நாராயணனின் பெயரையே பிரகலாதன் சொன்னான்.

வாளை உருவியபடி அவனை வெட்டுவதற்குப் போனான் இரணியன்.

லீலாவதி தடுத்து, ‘நான் எப்படியாவது பிரகலாதனை மாற்றுகிறேன்; நாளைக்குப் பட்டம் சூட்டலாம்’ என்றாள்.

இரணியனின் இறப்பு அரண்மனையில் ஒரு தனிப் பகுதியில் சித்ரபானுவும் பிரகலாதனும் உரையாடுகிறார்கள். அப்போது அங்கே சேனாதிபதி வந்தான். உடனே சித்ரபானு மறைந்து கொண்டாள்.

அப்போது, பிரகலாதனை அழைத்துச் செல்வதற்குக் காவலர்கள் வந்தார்கள். அவர்களிடம் “என்னிடம் எந்த மாற்றமும் இல்லை. இராஜவிசுவாசப் பிரமாணம் செய்ய இயலாது என்று சொல்” என்று கூறி அனுப்பினான்.

காவலர்கள் மீண்டும் வந்தார்கள்

‘இளவரசரை இந்தச் சங்கிலியால் கட்டி இழுத்துவரச் சொன்னார் சக்கரவர்த்தி’ என்று சொன்னார்கள்.

காட்சி

அவர்களிடம் சேனாதிபதி “சங்கிலியால் இளவரசரைக் கட்டினோம் சங்கிலி பொடிப் பொடியாக உதிர்ந்து விட்டது. பிறகு நெருங்கமுடியவில்லை; அக்கினிச் சுவாலை வீசுகிறது. நாங்கள் பயந்து ஓடி வந்து விட்டோம் என்று சொல்லுங்கள். சங்கிலியை இங்கேயே போட்டுவிட்டுப் போய் விடுங்கள்” என்றான்.

மன்னனிடம் சென்ற காவலர்கள் சங்கிலி பொடியான செய்தியைத் தெரிவித்தார்கள். இரணியன் ஆத்திரத்துடன் பிரகலாதனிடம் வந்தான். லீலாவதியும் உடன் வந்தாள்.

“மன்னனின் மகனான நீ இப்படி நாராயணன் பெயரைச் சொல்லலாமா? யார் போட்ட மருந்தினால் இப்படி மயங்கினாய்” என்று தாய் லீலாவதி கேட்டாள்.

அதற்குப் பிரகலாதன், “மனிதரிட்ட மருந்தல்ல! ஸ்ரீமந் நாராயணனிட்ட மருந்துதான் அம்மா!” என்றான்.

“அட வஞ்சகனே! நீ சொல்லும் நாராயணன் எங்கே இருக்கிறான், காட்டுவாயா?” என்றான் இரணியன்.

“அவன் எங்கும் இருப்பான், இதோ இருக்கும் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்” என்றான் பிரகலாதன்.

“இந்தத் தூணிலுமா?” என்று தூணை உதைத்தான் இரணியன். அப்போது தூணுக்குப் பின்னால் இருந்த காங்கேயன் சிங்க முகமூடியுடன் வெளியே வந்தான்.

காட்சி

உடனே இரணியன், “அடே! நான் தூணை உதைத்தேன். நாராயணனாகிய நீ வந்தாய். உன்னை உதைத்தால் உன்னிடமிருந்து தூண் வெளிவருமா?” என்று கூறி, அவனை உதைத்தான். உதைபட்ட காங்கேயன் விழுந்து இறந்தான். அப்போது மறைந்திருந்த கஜகேதுவின் வீரர்கள் வெளியே வந்து இரணியனின் முதுகில் குத்தினார்கள். இரணியன் இறந்தான். இரணியனின் கையிலிருந்த வாளால் லீலாவதி தற்கொலை செய்து கொண்டாள்.

சித்ரபானு கூறியதன்படி சேனாதிபதியைப் பிரகலாதன் கொல்லவந்தான். அதற்கு முன் பிரகலாதனைச் சேனாதிபதி கொன்றான். தன்னை ஏமாற்றிய சித்ரபானுவையும் அவன் கொன்றான். இரணியனின் இறப்புக்குத் தானும் ஒரு காரணம் ஆகி விட்டோமே என்று கலங்கிய சேனாதிபதி தானே கட்டாரியால் குத்திக் கொண்டு இறந்தான்.

கதையை மாற்றியது ஏன்? புராணக் கருத்துகளைப் பாரதிதாசன் ஏற்கவில்லை. அவை தமிழர்களின் பண்பை வெளிப்படுத்தவில்லை என்று அவர் உணர்ந்தார். இரணியனின் கதையும் புராணத்தில் இடம் பெறுகிறது. தமிழர்களின் பண்பை வெளிப்படுத்தவில்லை என்று தான் கருதிய புராணக் கதையின் வாயிலாகவே தமிழர்களின் பண்பை வெளிப்படுத்த பாரதிதாசன் விரும்பினார். எனவே, தமது எண்ணத்திற்கு ஏற்ப, இரணியனின் கதையை மாற்றி அமைத்து நாடகமாகப் படைத்துள்ளார்.

புராணக் கதையில் பிரகலாதன் சிறுவனாகக் காட்டப் பட்டுள்ளான். பாரதிதாசன் தமது நாடகத்தில் பிரகலாதனை இளைஞனாகக் காட்டியுள்ளார். அவனே இரணியனின் எதிரிகளுக்குத் துணை செய்வதாகவும் உருவாக்கியுள்ளார்.

நாடக முடிவில் இரணியன் வஞ்கமாகக் கொல்லப்பட்டதாகக் காட்டியுள்ளார். மேலும், நாடக உரையாடல்கள் வாயிலாக இரணியனின் இணையிலா வீரம் வெளிப்படும்படியாகவும் செய்துள்ளார்.

பிசிராந்தையார்

பாரதிதாசனுக்குச் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றுத் தந்த நாடகம் பிசிராந்தையார் என்னும் நாடகம் ஆகும். கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இடையே தோன்றிய நட்பை அடிப்படையாகக் கொண்டது இந்த நாடகம்.

ஒரு நாட்டில் தீமையே நிகழ வில்லை என்றால் அந்நாட்டு மக்களால் திடீரென்று அயலாரால் நிகழும் தீமையை எதிர்க்க இயலாது; திடீரென்று ஏற்படும் இயற்கைச் சீற்றங்களைத் தாங்கவும், அவற்றைப் போக்கவும் வலிமை இல்லாமல் போய் விடுகிறது. எனவே ஒரு நாட்டில் தீயவர்களும் சிலர் இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் வலிமையை வளர்த்துக் கொள்வார்கள் என்னும் மாறுபட்ட கருத்தையும் இந்த நாடகம் வலியுறுத்துகிறது.

பிசிராந்தையார் நாடகக்கதை காற்றும் மழையும் வேகமாக அடித்தன. யானைமேல் இருந்தபடி ஓர் உருவம் ஆராய்ச்சி மணியை அடித்தது. அரண்மனை நிலாமுற்றத்தில் நின்று கொண்டிருந்த மன்னன் வெளியே வருகிறான்.

காட்சி

வேகமாக வீசிய காற்று ஆராய்ச்சி மணி அடித்தவரைத் தூக்கி எறிந்தது. விழுந்தவரைத் தாங்குவதற்கு ஓடிச் சென்ற மன்னனையும் காற்றுத் தூக்கி வீசியது. முன்பே ஒருவர் ஆலமரக் கிளை அருகே தூக்கி எறியப்பட்டுக் கிடந்தார்.

காற்றும் மழையும் குறைந்தது. ஆராய்ச்சி மணியை அடித்தவர் பிசிராந்தையார் என்பது தெரிந்தது. ஆலமரக்கிளையின் அருகே கிடந்தவர் மேற்படியார் என்னும் புலவர் என்பதும் புரிந்தது.

மக்கள் இந்தக் காற்றுக்கும் மழைக்கும் அஞ்சி ஒளிவதைக் கண்டு பிசிராந்தையார் வியந்தார். இயற்கைச் சீற்றத்தைத் தாங்கும் வலிமை இல்லாதவர்களா இந்த மக்கள்? என்று எண்ணிய பிசிராந்தையார் வருந்தினார்.

பெட்டியில் பிணம் புயல் மழையால் மக்கள் அடைந்த துன்பத்தைப் பார்வையிடுவதற்கு மன்னனும் பிசிராந்தையாரும் மேற்படியாரும் சென்றனர். அவ்வாறு செல்லும் போது ஒரு சிற்றூரில் உள்ள குளக்கரைக்கு அவர்கள் அதிகாலையில் வந்தனர். அந்தக் குளத்தில் உடையப்பன் என்பவன் மீன்பிடித்துக் கொண்டிருந்தான். அவனது மனைவி ஓடைப்பூ என்பவள் அவனை வீட்டிற்கு வருமாறு அழைக்கிறாள். அவன், ‘மீன் பிடிக்காமல் வரமாட்டேன்’ என்கிறான்.

காட்சி

இவற்றை மன்னனும் மற்றவர்களும் மறைந்து நின்று பார்க்கிறார்கள். உடையப்பனின் வலையில் ஏதோ பெரிதாக மாட்டிக் கொண்டது. அவனாலும் ஓடைப்பூவாலும் அதை இழுக்க முடியவில்லை. மன்னனும் புலவர்களும் சென்று வெளியில் இழுத்தார்கள். அது ஒரு பெட்டி. அந்தப் பெட்டியில் கருவுற்ற பச்சைக்கிளி என்ற பெண்ணின் பிணம் இருந்தது. அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருந்தாள். அந்தக் கொலையைச் செய்தது யார் என்று தெரியவில்லை.

அமைச்சருக்குத் தண்டனை அரண்மனைக்குத் திரும்பினான் மன்னன். மூன்று நாட்களுக்குள் கொலை செய்தவனைக் கண்டு பிடித்து விடவேண்டும். அவ்வாறு கண்டுபிடிக்கவில்லை என்றால் அமைச்சரைத் தூக்கிலிடுமாறு மன்னன் ஆணையிட்டான். அப்போது ஒருவன் ‘நான்தான் கொலை செய்தேன்’ என்று கூறினான். ஆனால், அவன் யார் என்பதையும் கொலை செய்த காரணத்தையும் கூறவில்லை.

‘இன்னும் மூன்று நாட்களுக்குள் கொலைக்கான காரணத்தை அமைச்சர் கண்டுபிடிக்க வேண்டும். இல்லை என்றால் கொலை செய்ததாகச் சொன்னவனுடன் அமைச்சரும் தூக்கிலிடப்படுவார்’ என்றான் மன்னன்.

முன் கதை பச்சைக்கிளி சிறுபெண்ணாக இருக்கும் போது குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாள். அப்போது குளத்திற்குள் ஒரு கரடி வந்தது. கரடியைப் பார்த்த பச்சைக்கிளி பயந்து விட்டாள். அந்த வழியாக வந்த தூயன் என்பவன் அவளைக் காப்பாற்றினான். அவன் சோழ நாட்டைச் சேர்ந்தவன். பச்சைக்கிளியுடன் தூயனும் அவளது வீட்டிற்குப் போனான். தூயன் பச்சைக்கிளியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால், பச்சைக்கிளி அவ்வாறு கருதவில்லை.

ஆண்டுகள் கழிந்தன.

அதே குளக்கரையில் மான்வளவன் என்பவனைக் கண்டு பச்சைக்கிளி காதல் கொள்கிறாள். பெற்றோர் சம்மதத்துடன் அவனைத் திருமணம் செய்து கொண்டாள். பச்சைக்கிளியின் திருமணத்தை அறிந்த தூயன் கோபம் கொண்டான். அவளைப் பழிவாங்க எண்ணினான்.

பச்சைக்கிளிக்குப் பொன்னன் என்று ஒரு மகன் இருந்தான். மீண்டும் பச்சைக்கிளி கருவுற்றாள். தனது கணவனிடம் அவள் இலந்தப் பழம் கேட்டாள்.

பல இடங்களில் அலைந்த பிறகு ஐந்து இலந்தப் பழங்களை மட்டும் மான்வளவன் வாங்கி வந்தான். பச்சைக்கிளி ஒரு பழத்தைத் தனது மகன் பொன்னனுக்குக் கொடுத்தாள். மீதம் நான்கையும் தலையணைக்கு அடியில் வைத்துவிட்டுத் தூங்கி விட்டாள்.

காட்சி

இலந்தப் பழத்தில் ஆசை கொண்ட பொன்னன் மேலும் இரண்டு பழங்களைத் தனது தாய்க்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

தாடியுடன் அங்கே வந்த தூயன் அந்தக் கனி இரண்டையும் பொன்னனிடமிருந்து வாங்கினான். பொன்னன் பள்ளிக்குப் போய் விட்டான்.

மான்வளவன் வரும் வழியில் இலந்தப் பழத்துடன் வந்தான் தூயன். அவனிடம் ‘இலந்தப் பழம் வேண்டும், கிடைக்குமா? எங்கே கிடைக்கும்?’ என்று கேட்டான் மான்வளவன்.

‘இது எனக்கு ஒரு பெண் தந்த அன்பளிப்பு. அவள் கணவன் ஐந்து கனிகள் தந்தான். அதில் ஒன்றை அவளது மகனுக்குக் கொடுத்தாள். இரண்டை அன்பால் எனக்குத் தந்தாள்’ என்றான்.

தனது மனைவி பச்சைக்கிளிதான் இவ்வாறு செய்தவள் என்று அறிந்தான் மான்வளவன்; வீட்டுக்கு வந்ததும் ஆத்திரத்தில் மனைவியைக் கொன்று விட்டான்.

இளங்கோச் சோழனின் பதவி ஆசை பச்சைக்கிளியின் கொலையில் சோழநாட்டுத் தூயனும் தொடர்பு உடையவன். எனவே இந்தக் கொலைக்குச் சோழநாடு தான் காரணம் என்று பதவி ஆசையில் இளங்கோச் சோழன் பொய்ச் செய்தியைப் பரப்பினான். சோழநாட்டுப் படைத்தலைவர் பரூஉத் தலையாரின் மகள் மணியிடையை இளங்கோச் சோழன் விரும்பினான். அவளைத் திருமணம் செய்ய விரும்புவதாகப் படைத்தலைவரிடம் கூறினான். திருமணத்திற்கு முன்பு, தான் மன்னன் ஆவதற்கு உதவுமாறு அவரிடம் வேண்டினான்.

படைத்தலைவரின் உதவியுடன் இளங்கோச் சோழனும் அவன் தம்பி செங்கோச் சோழனும் படையுடன் தந்தையை எதிர்த்து வந்தனர். படை வருவதை அறிந்த கோப்பெருஞ்சோழன் வாளுடன் எதிர்த்து வந்தான். அவனைக் கண்டதும் இளங்கோச் சோழனும் செங்கோச் சோழனும் அஞ்சி ஓடினார்கள். அவர்கள் பாண்டிய நாட்டுப்படை உதவியுடன் தந்தையை எதிர்க்க எண்ணினார்கள். ஆனால் பாண்டியன், சோழ இளவரசர்களின் வஞ்சக எண்ணத்தைப் பிசிராந்தையார் மூலம் அறிந்தான். எனவே அவர்களுக்கு உதவ மறுத்து விட்டான். கோப்பெருஞ்சோழனுக்குத் துணையாகத் தனது படையையும் அனுப்பினான்.

பாண்டியப் படைக்கும் கோப்பெருஞ்சோழனின் படைக்கும் இடையில் சோழ இளவரசர்களின் படை சிக்கியது. இளவரசர்களை அழிப்பதற்கு வாளை உருவியபடி புறப்பட்டான் கோப்பெருஞ்சோழன். மன்னனைப் புலவர் எயிற்றியனார் தடுத்தார். இளவரசர்கள் இறந்த பிறகு இந்த நாடு யாருக்காக என்று உணர்த்தினார்.

கோப்பெருஞ்சோழன் வடக்கிருத்தல் இளவரசர்களின் தீய எண்ணத்தை அறிந்த கோப்பெருஞ்சோழன் பெரிதும் வருந்தினான்; இனி மேலும் தான் உயிர் வாழ்ந்து பயனில்லை என்று கருதினான்; வடக்கிருந்து உயிர் விடுவதற்கு ஓர் ஆலமரத்தடியைத் தேர்வு செய்தான். தனக்கு அருகில் பிசிராந்தையாரும் வடக்கு இருப்பதற்கு இடம் ஒதுக்கச் சொன்னான்.

காட்சி

வடக்கிருத்தல்

“உயிரை விடும் நோக்கத்துடன்

வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து

உயிர் விடுதல்.”

தாங்கள் வடக்கிருப்பது பிசிராந்தையாருக்குத் தெரியாது. எனவே அவர் ‘வரமாட்டார்’ என்று சான்றோர்களும் புலவர்களும் தெரிவித்தனர். கோப்பெருஞ்சோழனோ, பிசிராந்தையார் உறுதியாக வருவார் என்று நம்பினான்.

அப்போது பிசிராந்தையாரின் யானை வரும் மணி ஓசை கேட்டது ‘அதோ வந்து விட்டார் பிசிராந்தையார்’ என்றான் கோப்பெருஞ்சோழன். பிசிராந்தையாரும் சோழனுடன் வடக்கிருந்தார். அதைக் கண்ட புலவர் பொத்தியாரும் அவர்களுடன் வடக்கிருந்தார்.

சோழநாட்டு மக்கள் அனைவரும் பிசிராந்தையாருக்கும் கோப்பெருஞ்சோழனுக்கும் இடையில் இருந்த நட்பின் ஆழத்தைப் போற்றினார்கள்.

தந்தையும் புலவர்களும் வடக்கிருப்பதை அறிந்த இளங்கோச் சோழனும் செங்கோச் சோழனும் தங்கள் அறிவற்ற செயலுக்கு வருந்தினார்கள்; தந்தையிடம் மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.

வடக்கிருந்த புலவர் பிசிராந்தையார், புலவர் பொத்தியார், கோப்பெருஞ்சோழன் மூவரும் உயிர் துறந்தனர்.

பாரதிதாசன் இந்த நாடகத்தின் வாயிலாகக் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்ததற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார். அந்தக் காரணத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் பச்சைக்கிளியின் கொலை நிகழ்ச்சியையும் இணைத்துள்ளார். இந்தக் கொலையைக் காரணம் காட்டி, பதவி ஆசை பிடித்த இளங்கோச் சோழன் குழப்பம் விளைவிப்பதையும் பாரதிதாசன் தொடர்புபடுத்திக் காட்டியுள்ளதை நாம் அறிய முடிகிறது.

சேர தாண்டவம்

சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் ஆட்டன் அத்தி, ஆதிமந்தி ஆகியோர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இந்தக் குறிப்புகளை மையமாகக் கொண்டு சேர தாண்டவம் என்னும் நாடகத்தைப் பாவேந்தர் படைத்துள்ளார்.

ஒருவனுக்கும் ஒருத்திக்கும் இடையே ஏற்படும் காதலை விளக்கும் வகையில் இந்த நாடகம் அமைந்துள்ளது.

சேர தாண்டவம் நாடகக் கதை சேர நாட்டு மன்னன் ஆட்டன்அத்தி என்பவன். அவன் சோழ நாட்டுப் படைகளின் நிலையை அறிந்து வருவதற்குத் தனது ஆடல்கலைஞர்களை ஒற்றர்களாக அனுப்பி வைத்தான். ஒற்று அறிய சென்றவர்கள் சோழ நாட்டில் பல இடங்களிலும் மன்னனின் அரண்மனையிலும் ஆடினார்கள். அவர்களின் ஆட்டத்தின் சிறப்பை அறிந்த சோழ இளவரசி அவர்களைத் தனது அந்தப்புரத்திலும் ஆடச் சொன்னாள்.

ஒற்று அறிந்து முடித்த ஆடல்கலைஞர்கள் சேர நாட்டுக்குத் திரும்பினார்கள். தாங்கள் ஒற்று அறிந்த செய்தியுடன் சோழ நாட்டு இளவரசி ஆதிமந்தியைப் பற்றியும் அவளது அழகைப் பற்றியும் தெரிவித்தனர். ஆதிமந்தியின் அழகில் மயங்கினான் சேர மன்னன்.

மேலும் ஒற்று அறிய வேண்டும் என்று சொல்லிக் கொண்டு ஆட்டன் அத்தியே சோழ நாட்டுக்குச் சென்றான்.

ஆட்டன்அத்தி – ஆதி மந்தி காதல் காட்சி

சோழ நாட்டில் ஆடிய ஆட்டன்அத்தியின் ஆட்டத்தில் மயங்கினாள் ஆதிமந்தி. இருவரின் காதலையும் அறிந்த சோழ மன்னன் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தான்.

காவிரியில் நீர்ப் பெருக்கு விழா வந்தது. ஆட்டன்அத்தி அவ்விழாவில் ஆடினான். ஆதிமந்தி பாடினாள். விழாவின் முடிவில் காவிரியில் ஆட்டன் அத்தி குளித்தான். அப்போது ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் ஆட்டன் அத்தியை இழுத்துச் சென்றது.

காட்சி

கணவனைத் தேடி, காவிரி ஆற்றின் கரை ஓரமாக ஆதிமந்தி ஓடினாள். காண இயலவில்லை.

நெய்தலி ஆட்டன் அத்தியை இழுத்துச் சென்ற ஆறு அவனைக் கடலில் கொண்டு போய்ச் சேர்த்தது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆட்டன் அத்தியை நெய்தலி என்ற மீனவப் பெண் கண்டாள்.

மீனவர்களின் உதவியுடன் அவனைக் காப்பாற்றினாள். தனது வீட்டில் அவனைத் தங்க வைத்து அவனது உடலைத் தேறச் செய்தாள். நெய்தலி அந்த மீனவப் பகுதித் தலைவனின் மகள். ஆட்டன் அத்தியை அவள் காதலித்தாள். இருவரும் நடுக்கடலில் பெரிய படகில் தங்கி இன்பமாய் வாழ்ந்தனர்.

நெய்தலியின் மறைவு காவிரி ஆற்றங்கரை ஓரமாகக் கணவனைத் தேடி ஓடி வந்த ஆதிமந்தி கடற்கரைக்கு வந்து சேர்ந்தாள்; மயங்கி விழுந்தாள். மீனவர்கள் அவளைத் தூக்கி வந்து காப்பாற்றினார்கள். ஆதிமந்தியைக் கண்ட ஆட்டன்அத்தி அவளுடன் சேர்கிறான். அதைக் கண்ட நெய்தலி தனது கழுத்தில் கல்லைக் கட்டித் தொங்கவிட்டபடி கடலில் விழுந்து இறக்கிறாள். வரலாற்றுக் காதலர் இருவரின் வாழ்வில் ஏற்பட்ட இன்னலைக் கலை நயத்துடன் ‘சேர தாண்டவம்’ என்னும் இந்நாடகம் சித்திரிக்கிறது.

காட்சி

நல்ல தீர்ப்பு

மனித வாழ்க்கையில் கலை பெறும் இடத்தை இந்த நாடகம் விளக்குகிறது. கலை வாழ்க்கையில் போட்டி ஏற்படுவது இயல்புதான். அந்தப் போட்டி மனப்பான்மை பொறாமையாக மாறக் கூடாது என்பதை ‘நல்ல தீர்ப்பு’ என்னும் இந்த நாடகம் விளக்குகிறது.

நல்ல தீர்ப்பு நாடகக் கதை பிறை நாட்டு அரசனின் மகள் முல்லை. அந்நாட்டுப் படைத்தலைவனின் மகள் கிள்ளை. அமைச்சனின் மகள் சாலி. இவர்கள் மூவரும் தோழிகள்.

பீலி நாட்டுச் சிற்றரசன் கடம்பன். அவனது மகள் நிலவு. இவள் சிறந்த ஆடலரசி.

நிலவிடம் ஆடல் கற்றுக் கொள்வதற்கு கிள்ளையும் சாலியும் விரும்பினார்கள். ஆனால் பிறை நாட்டுக்கும் பீலி நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் தகராறால் அங்கே சென்று ஆடல் கற்க இயலவில்லை.

கிள்ளையிடம் முல்லை மிகுந்த தோழமையுடன் பழகுவதாகச் சாலி பொறாமை கொண்டாள். எனவே சூழ்ச்சியின் மூலம் அவர்களைப் பிரிக்க விரும்பினாள்.

அந்த வேளையில் அரசியின் மோதிரம் காணாமல் போய்விடுகிறது. கிள்ளைதான் அந்த மோதிரத்தைத் திருடினாள் என்று பொய் சொல்கிறாள் சாலி.

வழக்கை ஆராய்ந்த மன்னன், கிள்ளையை நான்கு ஆண்டுகள் நாடு கடத்துவதாகத் தீர்ப்புக் கூறினான். நான்கு ஆண்டுகளும் அவள் பீலி நாட்டிலேயே வாழ வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பீலி நாட்டில்தான் ஆடலரசி நிலவு வாழ்கிறாள். அங்கே போய் கிள்ளை ஆடல் கலையைக் கற்று விடுவாள் என்று எண்ணிய சாலி, ‘கிள்ளை ஆடல் கற்றுக் கொள்வதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறினாள்.

அப்போது, மோதிரம் கிடைத்து விட்டதாகச் செய்தி வந்தது. கிள்ளை குற்றம் அற்றவள் என்பதை அனைவரும் அறிந்தனர். சாலியின் பொறாமைக் குணம் அனைவருக்கும் தெரிந்தது. மன்னனிடம் சாலி மன்னிப்புக் கேட்கிறாள்.

பிறை நாட்டில் ஆடல் அரங்கு அமைக்கப்பட்டது. அங்கே பீலி நாட்டைச் சார்ந்த நிலவு வந்து ஆடல் கற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நாடகம் ‘நல்ல தீர்ப்பு’ என்ற தலைப்புக்கு ஏற்ப, குற்றம் செய்யாத கிள்ளைக்கு மன்னனின் தீர்ப்பு நல்ல தீர்ப்பாக அமைந்ததை விளக்குகிறது.

அமைதி

உரையாடலே இல்லாமல் தமிழில் எழுதப்பட்ட முதல் நாடகம் ‘அமைதி’ என்னும் இந்த நாடகம் ஆகும். இதை ‘ஊமை நாடகம்’ என்றே பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். உரையாடல் இல்லாமல் அங்க அசைவுகளாலேயே நடிக்கும் வகையில் இந்த நாடகம் அமைந்துள்ளது.

இந்த நாடகத்தில் முதன்மை மாந்தனாக உள்ள மண்ணாங்கட்டிக்கு மட்டுமே பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏனைய மாந்தர்களுக்குப் பெயர் சூட்டப்படவில்லை.

அமைதி நாடகக் கதை காட்சி

ஒரு சிற்றூரில் மண்ணாங்கட்டி என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் பிறருக்காக வாழ வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவன். அவன் தனது தாய் இறந்த பிறகு அங்கே வாழ விரும்பாமல் வெளியேறுகிறான். தன்னுடன் எழுதுகோல், தாள், சில நகைகள், காசுகள் முதலியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டான்.

அடுத்த நாள் அவன் அயலூர் ஒன்றை அடைந்தான். அங்கே குளிரில் வாடிக் கொண்டிருந்த மூதாட்டிக்குத் தன்னிடமிருந்த துணியைக் கொடுக்கிறான்.

இவ்வாறு அவன் சென்ற ஒவ்வோர் ஊரிலும் வாழ்ந்தவர்களுக்குத் தன்னிடம் இருந்த பொருட்களைக் கொடுக்கிறான்.

ஓர் ஊரில் பண்ணையார்கள் நன்கு உண்டு உறங்குவதைக் கண்டான். அங்கே உள்ள ஏழைகள் பசியால் வாடுவதையும் கண்டான். வேலை இல்லாததால் ஏழைகள் துன்பப்படுவதை அறிந்த அவன் அவர்களுக்கு வேலை கிடைப்பதற்குத் திட்டமிட்டுச் செயல்படுகிறான்.

குறவர்கள் கலவரம் ஏற்பட்டபோது ஒருவனது மண்டை உடைந்தது. அவனைக் காப்பதற்குச் சென்ற மண்ணாங்கட்டி காவலரிடம் அடிபடுகிறான். இறுதியில் உயிரையும் விடுகிறான்.

காட்சி

மண்ணாங்கட்டியை உதவாத பொருள் என்று ஒதுக்குவது இயல்பு. எதற்கும் பயன்படாதவனை ‘மண்ணாங்கட்டி’ என்று இழிவாகக் கூறுவதும் உண்டு. ஆனால், இதற்கு மாறாக ‘அமைதி’ நாடகத்தில் மண்ணாங்கட்டி என்ற பெயர் கொண்டவன் எல்லாருக்கும் உதவுவதாகப் பாரதிதாசனால் படைக்கப்பட்டுள்ளான்.

கழைக்கூத்தியின் காதல்

சாதி, மத வேறுபாடுகளும் ஏழை, செல்வன் முதலிய வேறுபாடுகளும் மறைய வேண்டும் என்னும் நோக்கத்தில் படைக்கப்பட்டது இந்நாடகம்.

கழைக் கூத்தியின் காதல் நாடகக் கதை தொண்டை நாட்டின் ஒரு பகுதியை வள்ளல் சடையநாதன் என்பவன் ஆண்டு வந்தான். அவனை முத்துநகை என்பவள் விரும்பினாள். முத்துநகை கழைக்கூத்து ஆடிப் பிழைத்து வந்தாள்.

காட்சி

கழைக்கூத்து என்பது ஒரு மூங்கிலை வைத்துக் கொண்டு அதன் உதவியால் பல்வேறு ஆட்டங்களை நிகழ்த்துவது ஆகும். (கழை – மூங்கில்)

மன்னன் தனது படையுடன் வந்து கொண்டிருந்தான். அவன் வரும் வழியில் ஓர் ஆலமரத்தில் மறைந்திருந்த முத்துநகை, மன்னனுக்குத் தெரியாமல் அவனது மணி மகுடத்தை எடுத்து விடுகிறாள்.

காட்சி

அரண்மனைக்குச் சென்ற மன்னன் தனது மணிமகுடத்தைத் தேடி வந்தான். ஆலமரத்தில் இருந்த முத்துநகை ‘விச்சுளி’ என்னும் ஆட்டத்தில் சிறந்தவள் ஆவாள்.

விச்சுளி ஆட்டம் என்பது ஒரு சிறிய பொருளில் கூட, தனது உடலை மறைத்துக் கொள்ளும் கலை ஆகும்

முத்து நகை தனது உருவத்தை மறைத்துக் கொண்டு மன்னனுக்குக் கேட்கும் படியாகப், ‘புத்தூர் சாவடிக்கு வந்தால் மகுடம் கிடைக்கும்’ என்று கூறினாள்.

சாவடியில் முத்துநகை மறைந்து கொண்டாள். மன்னனுக்கு மகுடம் கிடைக்கச் செய்தாள்.

மற்றொரு நாள் முத்துநகை ஆண்டியப்பன் என்னும் பெயரில் ஆண் உருவத்துடன் சென்று மன்னனைக் கடத்தி வந்தாள். அவனை ஒரு குகையில் அடைத்து வைத்தாள்.

மன்னனைக் காணாத அமைச்சன் தானே அரசனாகத் திட்டமிடுகிறான். அமைச்சனின் தீய எண்ணத்தை முத்துநகை அனைவரிடமும் வெளிப்படுத்துகிறாள்.

பாவேந்தரின் நாடக நடை

நாடகங்கள் உரையாடலாலும் உணர்வூட்டும் நடிப்பாலும் சிறப்பைப்பெறும். நடிப்புக்கு அடிப்படை, உணர்வை உள்ளடக்கிய உரையாடல்கள் ஆகும். எனவே நாடகம், உரையாடல் திறத்தால் சிறப்பைப் பெறும் எனலாம்.

சிறுசிறு தொடர்கள் நாடக உரையாடல்கள் சிறு தொடர்களைக் கொண்டிருந்தால் காட்சியில் விறுவிறுப்புக் கூடும். பாவேந்தர் பாரதிதாசனின் ‘கழைக்கூத்தியின் காதல்’ என்னும் நாடகத்தில் வரும் உரையாடல் சிறு தொடர்களில் அமைந்திருப்பதைக் காணலாம்.

வள்ளி :இதென்ன! எனக்கு அச்சமாயிருக்கிறது!

பொன்னி :பேயா இருக்குமோ?

முள்ளி :காணோமே ஒன்றையும்!

வள்ளி :பேய் கண்ணுக்கா தெரியும்?

முள்ளி :பின் எதற்குத் தெரியும்?

வள்ளி :அதன் ஓசைதான் காதில் கேட்கும்

முள்ளி :நம் குரல் அதற்குக் கேட்குமா?

வள்ளி :கேட்கும்

முள்ளி :அப்படியானால் கூப்பிடு. எங்கே முத்துநகை என்று கேட்டுப்பார்க்கலாம்.

பொன்னி :நீ தான் கூப்பிட்டுக் கேள். நாங்கள் வீட்டுக்கு ஓடிவிடுகிறோம்.

முள்ளி :பேயே!

(கழைக்கூத்தியின் காதல், காட்சி : 3)

இவ்வாறு அந்த உரையாடல் தொடர்ந்து செல்கிறது. பேய் என்னும் அச்சத்தால் இருப்பவர்களால் பெரிய தொடர்களைப் பேச இயலாது. அதற்கு ஏற்பவே பாரதிதாசன் இங்கே சிறு தொடர்களைப் பயன்படுத்தியுள்ளார்.

உரைநடையில் உணர்வு பிறப்பில் உயர்வு தாழ்வு உண்டு என்னும் எண்ணம் கொண்ட மன்னனின் மனத்தை மாற்றுவது போல் ஒரு காட்சி ‘கழைக் கூத்தியின் காதல்’ என்னும் நாடகத்தில் இடம் பெற்றுள்ளது. முத்துநகை என்பவள் ஆண்டியப்பன் என்னும் ஆண் வேடத்தில் அரசனிடம் உரையாடுகிறாள்.

அரசன்:இப்படி என்னைக் கட்டிக் கொண்டு வந்தவர் யார் ஐயா?

ஆண்டியப்பன்:சிவபெருமான்

அரசன்:கடவுளுக்குப் பேர் உண்டா? செயல் உண்டா? ஆட்களை அனுப்பி என்னைக் கட்டி இங்குக் கொண்டு வந்தது கடவுளா?

ஆண்டி:கடவுள் வராது. நீங்கள் முற்பிறப்பில் செய்த தீவினையின் செயல்.

அரசன்:முற்பிறப்பு உண்டா இல்லையா என்பது முடிவு பெறாத செய்தி. தீவினைத் தொடர்பு நம்பத்தகாத ஒன்று.

ஆண்டி:நீங்கள் முற்பிறப்பில் செய்த வினைக்கு ஈடாக இன்ன பிறப்பில் இன்ன நாளில் இன்னபடி நடக்கும் என்றும் உங்கள் தலையில் எழுதி வைத்திருக்கும். ஏன் இதை மறுக்கிறீர்கள்?

அரசர்:இவை எல்லாம் ஆரியர் மூடக் கொள்கைகள்

ஆண்டி:உலகில் மக்களின் ஏற்றத் தாழ்வு நிலைக்குக் காரணம் என்ன?

அரசன்:அதுவா. . . . ?

ஆண்டி:கேள்வி விளங்கவில்லையா? நீங்கள் அரசர், நான் அடிமை. நீங்கள் செல்வர், நான் ஏழை. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன என்று தான் கேட்கிறேன்.

அரசன்:அதுவா . . . ?

ஆண்டி:நீங்கள் மேலான சாதி. என் போன்றோர் தாழ் சாதி. காரணம்?

அரசன்:காரணம் என்ன என்று கேட்கிறாய். அதுவா . . . ?

ஆண்டி:வள்ளலே உள்ளத்தை மறைக்காதீர்கள்!

அரசன்:உலக மக்களின் ஏற்றத் தாழ்வு நிலைமைகளுக்குக் காரணம் அவரவர்களின் அறிவு ஆற்றல்களே.

ஆண்டி:தெளிவான கருத்து. சாதியில்லை அல்லவா?

அரசன்:இல்லை

ஆண்டி:மக்கள் யாவரும் நிகரா?

அரசன்:ஒரே நிகர்

(கழைக்கூத்தியின் காதல், காட்சி : 15)

மேற்காணும் உரையாடலில் பாரதிதாசன் தமது கொள்கையான ‘சாதி இல்லை, மக்களில் உயர்வு தாழ்வு இல்லை’ என்னும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளதை நாம் காண முடிகிறது.

தொகுப்புரை

தமிழ் மொழியில் நாடக நூல்கள் பல தோன்றாத காலத்தில் பல நாடகங்களைப் பாரதிதாசன் படைத்துள்ளார். அந்த நாடகங்கள் வழியாகத் தமது கொள்கைகளான பகுத்தறிவு, சாதி இல்லை முதலியவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்னும் நாடகத்தின் வாயிலாகத் தமிழர்களின் நேர்மையான வீரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இரணியன் என்னும் மனிதனைப் பற்றிப் புராணம் தெரிவிக்கும் கருத்துக்குப் பாரதிதாசன் முரண்பட்டுள்ளார்.

கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இடையே இருந்த நட்பின் பெருமையைப் பிசிராந்தையார் என்னும் நாடகத்தின் வாயிலாகப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

எல்லா வளங்களையும் ஒரு நாடு பெற்றிருந்தாலும் அந்த நாட்டு மக்களிடம் மனவலிமை இல்லை என்றால் அந்த நாடு சிறந்தநாடு ஆகாது. மனவலிமை இல்லாத மக்களால் திடீரென்று ஏற்படும் தீமைகளை எதிர்கொள்ள இயலாது என்னும் மாறுபட்ட கருத்தையும் இந்த நாடகம் வழியாகப் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளார்.

சேரதாண்டவம் என்னும் நாடகத்தின் வாயிலாகக் காதல் வாழ்வின் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நல்ல தீர்ப்பு என்னும் பாரதிதாசனின் நாடகம் கலையில் போட்டி இருக்கலாம்; பொறாமை கூடாது என்னும் கருத்தை உணர்த்துகிறது.

அமைதி என்னும் நாடகம் உரையாடலே இல்லாமல் அமைக்கப்பட்ட புதுமை நாடகம் ஆகும். இந்த நாடகம் பிறருக்கு உதவும் மனப்பான்மையைத் தெரிவிக்கிறது.

கழைக் கூத்தியின் காதல் என்னும் நாடகம் சாதி முறையை எதிர்க்கிறது: பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டுகிறது.

பாரதிதாசன் தமது நாடக உரையாடல்களில் சிறு சிறு தொடர்களைப் பயன்படுத்தியுள்ளார். உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உரையாடல்களை அமைத்துள்ளார். மேலும் பாரதிதாசன், நாடக உரையாடல்களின் வாயிலாகத் தமது கொள்கைகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பாடம் - 6

பாரதிதாசன் வாழ்கிறார்

பாட முன்னுரை

தமிழ்க் கவிதை உலகம் பல்லாயிரம் ஆண்டுகளாய்ப் பல கவிஞர்களைக் கண்டு வருகிறது. அவர்களில் இருபதாம் நூற்றாண்டில் விளங்கிய கவிஞர்களில் பாவேந்தர் பாரதிதாசன் தனக்கென்று தனி இடத்தைப் பெற்றுள்ளார். சங்ககாலக் கவிஞர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தைத் தங்கள் கவிதைகள் வாயிலாகத் தந்துள்ளனர். அவற்றின் துணைகொண்டு சங்ககால மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு முதலியவற்றை நாம் அறிய முடியும். சங்ககாலப் புலவர்களைப் போன்று பாரதிதாசனும் தாம் வாழ்ந்த காலத்தைத் தமது கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

குடியாட்சி தோன்றுவதற்கு முன்பே இந்தியாவில் குடியாட்சி மலர வேண்டும் என்று தமது காப்பியங்களில் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். தமிழிசை மலர்ச்சிக்காக எண்ணற்ற தமிழிசைப் பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழ் நாடக உலகிற்குத் தொண்டு செய்யும் நோக்கில் கவிதை நாடகங்களையும் உரைநடை நாடகங்களையும் படைத்துள்ளார்.

பாரதிதாசனின் புரட்சிகரமான கருத்துகளும் மறுமலர்ச்சிச் சிந்தனைகளும் அவரது படைப்புகளில் வெளிப்பட்டுள்ளன. அவை நிலவும் வரை பாரதிதாசனும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்.

பெண் உலகம்

நாட்டு முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்ட பெண்கள் நிறைந்த நாடு வளர்ச்சி அடையும். அத்தகைய பெண்களை உருவாக்க வேண்டும் என்று பாரதிதாசன் எண்ணியுள்ளார். பெண்கள் நாட்டு முன்னேற்றத்தில் ஈடுபடுவதற்கு அவர்கள் அடிமைகள் இல்லை என்ற நிலை முதலில் உருவாக வேண்டும். எனவே,

காட்சி

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு

மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே

(பாரதிதாசன் கவிதைகள், ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’)

என்று பாடியுள்ளார். முயலுக்குக் கொம்பு கிடையாது. இல்லாத கொம்பு எப்படி முயலுக்கு வளராதோ அதைப் போன்று பெண்ணுக்கு விடுதலை இல்லை என்றால் நாட்டுக்கும் விடுதலை கிடையாது என்று இந்திய விடுதலைக்கு முன்பே பாரதிதாசன் பாடியுள்ளார்.

பெண் விடுதலை பெண்களுக்கு விடுதலை பிறரிடமிருந்து வருவதில்லை. அவர்களிடமிருந்தே தோன்ற வேண்டும் என்ற உணர்வைப் பெண்களுக்கு ஊட்ட வேண்டும் என்று பாரதிதாசன் விரும்பினார்.

ஆடை, அணிகலன்கள், ஆசைக்கு வாசமலர்

தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதுவும்

அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்

கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் குலம்

மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர் பகுதி

(பாரதிதாசன் கவிதைகள், ‘வீரத்தாய்’ காட்சி : 1)

என்னும் பாடலில் ஆடை, அணிகலன் முதலியவற்றில் மட்டும் ஆர்வம் காட்டும் பெண்களை வலிமையற்றவர்கள் என்று பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

வீரப் பெண் பெண்கள் அறிவும் வீரமும் துணிச்சலும் கொண்டவர்களாய் விளங்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் நாடு நன்மை பெறும். எனவே பாரதிதாசன் அறிவும் வீரமும் கொண்ட வீரத்தாயாக விஜயா என்னும் பெண்ணை ‘வீரத்தாய்’ என்னும் காவியத்தில் படைத்துள்ளார். அவளது அறிவுக் கூர்மையாலும் வீரத்தாலும் அவள் தனது மகனையும் நாட்டையும் காத்தாள். அவள் தன் மகனிடம் கூறும்போது,

நிற்கையில் நீ நிமிர்ந்து நிற்பாய் குன்றத்தைப் போல்!

(பாரதிதாசன் கவிதைகள், ‘வீரத்தாய்’ காட்சி : 3)

என்று கூறி அவனுக்கு வீரத்தைக் கொடுத்தாள். அவளது ஆற்றலை அவளுடைய மகன் சுதர்மன் வாய்மொழியாகவே பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளார் பாருங்கள்.

கிழவர் வேடத்தில் தனது மகன் சுதர்மனுக்குப் போர்ப்பயிற்சி கொடுத்த விஜயாவிடம் சுதர்மன் சொல்கிறான்.

கற்போர்கள் வியக்கும்வகை இந்நாள் மட்டும்

கதியற்றுக் கிடந்திட்ட அடியேனுக்கு

மற்போரும் விற்போரும் வாளின்போரும்

வளர் கலைகள் பலப்பலவும் சொல்லித்தந்தீர்

(பாரதிதாசன் கவிதைகள், ‘வீரத்தாய்’ காட்சி : 3)

என்னும் வரிகளின் வாயிலாக மேற்கூறிய போர்க்கலைகள் அனைத்தையும் விஜயா அறிந்திருந்ததைப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

‘தமிழச்சியின் கத்தி’ என்னும் காவியத்தில் பாரதிதாசன் வேறு ஒரு வீரப் பெண்ணைப் படைத்துள்ளார். அவள் பெயர் சுப்பம்மாள். தேசிங்கு மன்னனின் படைத்தலைவர்களில் ஒருவனான சுதரிசன் என்பவன் அவளிடம் தவறாக நடக்க முயன்றான். அதைத் தடுத்த சுப்பம்மா கூறியதைக் கேளுங்கள்.

தீ என்னை வாட்டிடினும்

கையைத் தொடாதேயடா – இந்த

முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி

மூச்சுப் பெரிதில்லை காண்

(தமிழச்சியின் கத்தி – 20)

என்று சீறினாள். உயிரைவிட மானம்தான் பெரிது என்று கருதும் வீரமும் மானமும் கொண்ட பெண்ணாக இங்கே சுப்பம்மாளை நாம் காண்கிறோம்.

பெண் கல்வி பெண்கள் கல்வி கற்று உயர வேண்டும், கல்வி கற்ற பெண்களால்தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க இயலும் என்னும் எண்ணம் கொண்டவர் பாரதிதாசன். எனவே, அவர் பெண்கல்வியின் உயர்வைக் குடும்ப விளக்கில் தெரிவித்துள்ளார்.

காட்சி

பெண்கட்குக் கல்வி வேண்டும்

குடித்தனம் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்

மக்களைப் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்

உலகினைப் பேணுதற்கே!

பெண்கட்குக் கல்வி வேண்டும்

கல்வியைப் பேணுதற்கே!

(குடும்பவிளக்கு ‘விருந்தோம்பல்’)

என்னும் அடிகளில் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கு மட்டும் அல்லாமல் உலகத்தைப் பாதுகாப்பதற்கும் பெண்கல்வி தேவை என்று பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

கல்வி இல்லாத பெண்களால் சமுதாயத்தில் அறியாமைதான் நிறையும் என்னும் கருத்தைப் பாரதிதாசன் பின்வரும் பாடல் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

கல்வியில் லாத பெண்கள்

களர் நிலம்: அந்நிலத்தில்

புல் விளைந்திடலாம்; நல்ல

புதல்வர்கள் விளைதல் இல்லை!

கல்வியை உடைய பெண்கள்

திருந்திய கழனி; அங்கே

நல்லறிவுடைய மக்கள்

விளைவது நவிலவோ நான்?

(குடும்ப விளக்கு ‘விருந்தோம்பல்’)

என்னும் அடிகளில் கல்வி அறிவுடைய பெண்களால்தான் அறிவுடைய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

குடும்ப அமைப்பு

‘நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்’ என்னும் கருத்தைப் பாரதிதாசன் தமது குடும்ப விளக்கு என்னும் நூலின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அன்பு என்னும் நூலால் கட்டப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து வாழும்போது இனிய இல்வாழ்க்கை அமைகிறது என்று பாரதிதாசன் தெரிவிக்கிறார்.

அதிகாலையில் துயில் எழுவதுமுதல் தனது கடமைகளைச் சிறப்பாகச் செய்யும் பெண்ணாகக் குடும்ப விளக்கில் தலைவி காட்டப்பட்டுள்ளாள். நேர்மையான வாணிகம் செய்து பொருள் ஈட்டுபவனாகத் தலைவன் படைக்கப்பட்டுள்ளான். அன்பான பெற்றோர்கள், அழகான குழந்தைகளுடன் சிறந்த குடும்பம் ஒன்றை இந்நூலின் வழியாகப் பாரதிதாசன் காட்டியுள்ளார்.

பாரதிதாசன் காட்டியுள்ளது போன்ற குடும்பங்களைக் கொண்ட சமுதாயம் உயர்வு அடையும் என்பது எளிதில் விளங்கும்.

மாமியார் கொண்டு வந்த பொருள்கள் தற்காலச் சமுதாயத்தில் திருமணம் ஆகி, கணவன் வீட்டுக்கு வரும் மருமகள் பலவகையான பொருள்களைக் கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு கொண்டு வராத மருமகள் தனது மாமியார் வீட்டில் பல இன்னல்களை அடைவதையும் காண்கிறோம். ஆனால் பாவேந்தர் பாரதிதாசன் இந்த மனப்பான்மையை மாற்றி அமைப்பது போல, குடும்ப விளக்கு நூலைப் படைத்துள்ளார்.

வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை மருமகள் கொண்டு வருவதற்குப் பதிலாக மாமியாரே கொண்டு வருவதைப்போல் பாடியுள்ளார்.

தலைவியின் மாமியார் தமது மகள் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வரும்போது தமது மருமகளுக்கு உதவுமே என்று பல பொருள்களை வாங்கி வருகிறார். அந்தப் பொருள்களின் பட்டியலைப் பாரதிதாசன் பாடலாகப் படைத்துள்ளார் பாருங்கள்.

கொஞ்சநாள் முன்வாங்கிட்ட

கும்ப கோணத்துக் கூசா,

மஞ்சள், குங்குமம், கண்ணாடி

மை வைத்த தகரப் பெட்டி

செஞ்சாந்தின் சீசா, சொம்பு

வெற்றிலைச் சீவற்பெட்டி,

இஞ்சியின் மூட்டை ஒன்றே

எலுமிச்சை சிறிய கோணி.

புதிய ஓர் தவலை நாலு

பொம்மைகள், இரும்புப் பெட்டி

மிதியடிக் கட்டை, பிள்ளை

விளையாட மரச்சாமான்கள்

எதற்கும் ஒன்றுக்கிரண்டாய்

இருக்கட்டும் வீட்டில் என்று

குதிரினில் இருக்கும் நெல்லைக்

குத்திட மரக்குந் தாணி;

தலையணை, மெத்தைக் கட்டு,

சல்லடை, புதுமுறங்கள்

எலிப்பொறி, தாழம்பாய்கள்,

இப்பக்கம் அகப்படாத

இலுப்பெண்ணெய், கொடுவாய்க் கத்தி

இட்டலித் தட்டு, குண்டான்,

கலப்படமிலா நல்லெண்ணெய்,

கைத்தடி, செந்தாழம்பூ;

திருமணம் வந்தால் வேண்டும்

செம்மரத்தினில் முக்காலி

ஒருகாசுக் கொன்று வீதம்

கிடைத்த பச்சரிசி மாங்காய்,

வரும் மாதம் பொங்கல் மாதம்

ஆதலால் விளக்குமாறு

பரிசாய்ச் சம்பந்தி தந்த

பாதாளச் சுரடு, தேங்காய்;

மூலைக்கு வட்டம் போட்டு

முடித்த மேலுறையும், மற்றும்

மேலுக்கோர் சுருக்குப் பையும்

விளங்கிடும் குடை, கறுப்புத்

தோலுக்குள் காயிதத்தில்

தூங்கும் மூக்குக் கண்ணாடி

சேலொத்த விழியாள் யாவும்

கண்டனள் செப்பலுற்றாள்.

(குடும்ப விளக்கு ‘மாமன் மாமி வாங்கி வந்தவை’)

என்னும் பாடல் அடிகளில் ஒரு குடும்பத்துக்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் பாவேந்தர் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தையும் மாமியார் தமது மருமகளுக்காக வாங்கி வந்ததாகப் பாடியுள்ள பாரதிதாசன் குடும்ப வாழ்க்கை முறையில் புரட்சி செய்துள்ளதைக் காணமுடிகிறது. காலம் காலமாய் மருமகள் கொண்டு வரும் பொருள்களை மாமியாரே வாங்கி வருவதாகப் பாடியிருப்பது உண்மையில் புரட்சிதானே!

வீடுபேறு நம் முன்னோர், வாழ்க்கையின் பயனாக அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் குறிப்பிட்டுள்ளார்கள். இவை நிலைத்த உண்மைகள் ஆகும். இதில் நான்காவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘வீடு’ என்னும் சொல்லே வீடுபேறு என்று அழைக்கப்படுகிறது. இந்த வீடுபேறு என்னும் சொல்லைச் ‘சொர்க்கம்’ என்னும் பொருளில் நாம் பயன்படுத்துகிறோம். சொர்க்கம் என்பதை இறந்தபிறகு தான் அடைய முடியும் என்று நம்புகிறார்கள். ஆனால், பாவேந்தர் பாரதிதாசனோ அதை வாழ்நாளிலேயே அடையமுடியும் என்னும் கருத்தைக் கொண்டுள்ளார். எனவே,

காட்சி

அதிர்ந்திடும் இளமைப் போதில்

ஆவன அறங்கள் செய்து

முதிர்ந்திடும் பருவந்தன்னில்

மக்கட்கு முடியைச் சூட்டி

எதிர்ந்திடும் துன்பமேதும்

இல்லாமல் மக்கள், பேரர்

வதிந்திடல் கண்டு நெஞ்சு

மகிழ்வதே வாழ்வின் வீடு

(குடும்ப விளக்கு ‘முதியோர்க்கு’)

என்று பாடியுள்ளார். இப்பாடலில் பாரதிதாசன் மனிதனின் வாழ்க்கையை மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளார். அவை,

1. இளமை வாழ்க்கை

2. முதுமை வாழ்க்கை

3. வீடுபேற்று வாழ்க்கை

என்பவை ஆகும்.

இளமையில் ஒருவன் நல்ல வழியில் பொருள் ஈட்ட வேண்டும். அப்பொருளை அறவழிக்குப் பயன்படுத்த வேண்டும். இது இளமை வாழ்க்கை.

முதுமையில் ஒருவன் தனது குடும்பப் பொறுப்புகளை எல்லாம் தனது மக்களிடம் பகிர்ந்து கொடுத்திட வேண்டும். இது முதுமை வாழ்க்கை.

ஒருவன் இவ்வாறு பொறுப்புகளைக் கொடுத்த பிறகு தனது மக்கள் வாழ்வதைக் கண்டு மகிழ வேண்டும். அவ்வாறு மகிழ்வதே வீடுபேற்று வாழ்க்கை.

வீடுபேறு என்றால் என்ன? என்பதற்குப் பாரதிதாசன் அறிவுக்குப் பொருந்தும் வகையில் கொடுத்துள்ள விளக்கத்தைப் பார்த்தீர்களா?.

‘வீடு’ என்னும் சொல் ‘விடு’ என்னும் பொருளைக் கொண்டது. ‘விடு’ என்றால் இங்கே உலகப் பற்றை விடு என்று பொருள். உலகப் பற்றை விடுத்து வாழ்வதையே நாம் வீடு என்கிறோம்.

‘பேறு’ என்னும் சொல் ‘பெறு’ என்னும் பொருளைக் கொண்டது. ‘பெறு’ என்பது எதேனும் ஒன்றையோ பலவற்றையோ பெறுதலைக் குறிக்கும். இங்கே உலகப்பற்றை விடுதல் என்னும் பெறுதலை இது குறிக்கிறது.

உலகப் பற்றை விடுதல் தான் ‘வீடு பேறு’ என்பதைப் பாரதிதாசன் தெளிவுபடுத்தியுள்ளார். அவ்வாறு இல்லாமல் உலக வாழ்க்கை முடிந்த பிறகு (இறப்பிற்குப் பிறகு) வருவது அல்ல வீடு பேறு என்னும் தெளிவையும் இப்பாடல் வழியாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இல்லறமே நல்லறம் உலகப் பற்றைத் துறந்தாலும் குடும்பத்தோடு சேர்ந்துதான் வாழவேண்டும் என்று பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். வாழ்வின் இறுதி நிலையாகிய வீடுபேற்று நிலையிலும் குடும்பத்தினர் வாழும் வாழ்க்கையைக் கண்டுதான் மகிழ வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஞாலத் தொடர்பினால்

நல்லின்பம் காணலன்றி

ஞாலத் துறவில் இன்பம்

நண்ணுவதும் – ஏலுமோ?

(குடும்ப விளக்கு ‘இலலறமே நல்லறம்’)

என்று கேள்வி கேட்டுள்ள பாரதிதாசன், உலக வாழ்க்கைக்கு இல்லறத்தையே உயர்ந்த அறமாகத் தெரிவித்துள்ளார்.

முதியோர் காதல் ஒருவனும் ஒருத்தியும் அன்பு கொண்டு வாழும் வாழ்க்கையைக் காதல் வாழ்க்கை என்கிறோம். இந்தக் காதல் வாழ்க்கை இளமையில் இனிப்பாய் இருப்பதைப் பல கவிஞர்கள் பாடியுள்ளார்கள். ஆனால், முதியோரிடம் உண்டாகும் காதல் வாழ்க்கையைப் பாரதிதாசன் அழகாகக் காட்டியுள்ளார்.

முதியவளின் உடலில் பளபளப்போ அழகோ இல்லை. என்றாலும் முதியவர், அவள்மேல் கொண்டிருந்த காதல் மாறவில்லை. இதற்கு அடிப்படை அவரது உள்ளத்தில் நிறைந்து விளங்கும் உண்மை அன்பு ஆகும்.

காட்சி

புதுமலர் அல்ல; காய்ந்த

புற்கட்டே அவள் உடம்பு!

சதிராடும் நடையாள் அல்லள்

தள்ளாடி விழும் மூதாட்டி

மதியல்ல முகம் அவட்கு

வறள்நிலம்! குழிகள் கண்கள்!

எது எனக்கின்பம் நல்கும்?

‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!

(குடும்ப விளக்கு – ‘முதியோர்காதல்’)

முதியவளின் உடம்பு புதுமலர் போல் ஒளியுடன் இல்லை; காய்ந்து போன புல்கட்டைப் போன்று இருக்கிறது. அவள் நடப்பது நடனத்தைப் போல் அழகாக இல்லை; தள்ளாடி விழுவதுபோல் இருக்கிறது. நிலவு போல் அவள் முகத்தில் ஒளி இல்லை; வறண்டு இருக்கிறது. கண்கள் குழிந்து காணப்படுகின்றன. இப்படிப்பட்ட முதியவளின் உடலில் எனக்கு இன்பத்தைத் தருவது எது? இன்றும் உயிருடன் இருக்கின்றாள் என்பது மட்டுமே எனக்கு இன்பத்தைத் தருவது ஆகும் என்று முதியவர் கூறுவது போல் பாரதிதாசன் பாடியுள்ள பாடல் உண்மைக் காதல் என்பது உயிர் இருக்கும் வரை தொடரும் வலிமை உடையது என்பதை உணர்த்துகிறது அல்லவா?.

முதியவர் தம் மனைவியிடம் கொண்டிருந்த காதலை அழகாக விளக்கிய பாரதிதாசன், முதியவள் தம் கணவரிடம் கொண்டிருந்த காதலையும் அழகாக விளக்கியுள்ளார் பாருங்கள்.

காட்சி

அறம் செய்த கையும் ஓயும்!

மக்களை அன்பால் தூக்கிப்

புறம்போன காலும் ஓயும்!

செந்தமிழ்ப் புலவர் சொல்லின்

திறம் கேட்ட காதும் ஓயும்!

செயல்கண்ட கண்ணும் ஓயும்!

மறவரைச் சுமக்கும் என்றன்

மன மட்டும் ஓய்தலில்லை

(குடும்ப விளக்கு ‘முதியோர் காதல்’)

என்று தனது மனத்தில் முதியவரைத் தாங்கி இருப்பதாகக் கூறும் அந்த மூதாட்டியின் முதுமைக் காதல், உயர்ந்தது அல்லவா?

பகுத்தறிவு

ஆறு அறிவு கொண்டவன் மனிதன். ஆறாவது அறிவாக மனிதனுக்கு மட்டுமே உரியதாக விளங்குவது பகுத்தறிவு. இந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்று மக்கள் வாழ்ந்து வருவதைப் பாரதிதாசன் கண்டார்.

அறிவுக்குப் பொருந்தாத செயல்களைச் செய்யும் மக்கள் அவற்றை அறவே நீக்க வேண்டும் என்று பாவேந்தர் விரும்பினார். யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பக்கூடாது. பிறர் கூறும் கருத்து அறிவுக்குப் பொருந்துமா என்று மக்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அவர் எடுத்துக்கூறினார்.

அச்சத்தைப் போக்கு அச்சமே மடமையை வளர்க்கும் என்று கருதிய பாரதிதாசன் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அச்சம் இல்லாதவர்கள் பகுத்தறிவு வழியில் நடப்பார்கள். பகுத்தறிவு வழியில் செல்பவர்கள் ‘கடவுள் இல்லை’ என்ற உண்மையை உணர்வார்கள். அதை உணராமல் கடவுளை நம்பினால் அவர்கள் கைவிடப்படுவார்கள் என்று பாடியுள்ளார்.

காலம் காலமாய்க் கடவுளை வணங்கியும்

வயிற்றிற்கு இலாது வறுமையில் வாழ்பவர்

வாழ்க்கையின் வசதி சிறிதும் இலாதவர்

தொழில் இல்லாதவர் தொழில் செய்தாலும்

மனித உழைப்பே மலிவாய்ப் போய்விடும்

நோய்நொடி நூறு நொறுக்கித் தின்றிடும்

இத்தனைபேரும் கடவுளை நம்பினோர்

ஆனால் அவர்கள் கைவிடப்பட்டார்

(நாள்மலர்கள் : ப. 120)

என்று இல்லாத கடவுளை நம்பி அலையும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மதத்தின் பெயரைச் சொல்லி மதவாதிகள், மக்களின் உழைப்பையும் பணத்தையும் சுரண்டுவதையும் பாரதிதாசன் பகுத்தறிவுக் கருத்துகளாய்த் தெரிவித்துள்ளார். பாரதிதாசன் தெரிவித்துள்ள பகுத்தறிவுச் சிந்தனைகள் மனிதனை மனிதனாய் வாழச் செய்யும்; அறிவுலகம் நோக்கி அழைத்துச் செல்லும்.

அறிவே கல்வி மக்களிடம் மூடநம்பிக்கை வளர்வதற்குக் காரணம் கல்வி அறிவு இல்லாமை என்பதை அறிந்தவர் பாரதிதாசன். மூடநம்பிக்கை நிறைந்து காணப்படும் வீடு இருண்ட வீடு போன்றதாகும். அந்த இருண்ட வீட்டில் கல்வி அறிவு என்னும் ஒளியைப் பாய்ச்சிட வேண்டும் என்று எண்ணினார் பாரதிதாசன். எனவே, குடும்பத்தில் உள்ள எல்லாரும் கற்க வேண்டும் என்று பாடியுள்ளார்.

எல்லா நலமும் ஈந்திடும் கல்வி

இல்லா வீட்டை இருண்டவீடு என்க!

படிப்பிலார் நிறைந்த குடித்தனம், நரம்பின்

துடிப்பிலார் நிறைந்த சுடுகாடு என்க!

அறிவே கல்வியாம்; அறிவிலாக் குடும்பம்

நெறிகாணாது நின்றபடி விழும்!

சொத்தெல்லாம் விற்றும் கற்ற கல்வியாம்

வித்தால் விளைவன மேன்மை இன்பம்!

கல்வி இலான் கண்இலான் என்க

(இருண்டவீடு : 33)

(ஈந்திடும் = தந்திடும்)

காட்சி

என்று குடும்ப வாழ்க்கையில் கல்வி பெறும் சிறப்பிடத்தைப் பாரதிதாசன் விளக்கியுள்ளார்.

குழந்தைகளிடம் பகுத்தறிவு மூட நம்பிக்கைகள் மக்களைவிட்டு அகல வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர் பாரதிதாசன். எனவே, மூடநம்பிக்கை நிறைந்து காணப்படும் சமுதாயத்தை அவர் ‘காடு’ என்றே குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைத் தாலாட்டில் மூடத்தனத்தைப் போக்கப் பிறந்த பெண் குழந்தையை எப்படி வருணிக்கிறார் என்பதைப் பாருங்கள்.

காட்சி

மூடத் தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற

காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே

(பாரதிதாசன் கவிதைகள், 42 ’பெண்குழந்தைத் தாலாட்டு’ – 8)

(முடை நாற்றம் = முடங்கிக் கிடப்பதால் ஏற்படும் நாற்றம்)

இப்பாடலில் பெண்குழந்தையைக் கற்பூரப் பெட்டியாகப் பாரதிதாசன் உருவகப்படுத்தியுள்ளார். மூடத்தனத்தால் ஏற்பட்டிருக்கும் நாற்றத்தைக் கற்பூரப் பெட்டியைப் போன்ற பெண்குழந்தை மாற்றுவாள் என்று பாடியுள்ளார்.

பகுத்தறிவுப் பெண்களை உருவாக்கப் பாடிய பாரதிதாசன் சிறுவர்களிடம் பகுத்தறிவுச் சிந்தனைகளை விதைக்க,

பச்சை விளக்காகும் – உன்

பகுத்தறிவு தம்பி!

பச்சை விளக்காலே – நல்ல

பாதை பிடி தம்பி

(பாரதிதாசன் கவிதைகள் III, ‘ஏற்றப்பாட்டு’ : 77,78)

என்று பாடியுள்ளார்.

அறியாமையே அனைத்து இழிவுகளுக்கும் தொடக்கம். சமுதாயத்தில் அறியாமை அகல வேண்டும். அறியாமை அகன்றால் பகுத்தறிவு பரவும். பகுத்தறிவு என்பது வாழ்வுக்கு வழிகாட்டும் பச்சை விளக்கு. அந்தப் பச்சை விளக்கின் துணையுடன்தான் சமுதாயப் புரட்சியை உருவாக்க முடியும் என்று பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்காலத்தில் சாலையில் ஊர்திகளில் செல்கிறவர்கள் சிவப்பு விளக்கு எரிந்தால் நிற்க வேண்டும்; பச்சை விளக்கு எரிந்தால் மட்டுமே செல்ல முடியும். இதை அறிந்திருந்த பாரதிதாசன் பச்சை விளக்கைப் பகுத்தறிவுக்கு உவமையாகப் படைத்துள்ளார். பச்சை விளக்காகிய பகுத்தறிவின் துணையுடன் நல்ல பாதையில் நடக்க வேண்டும் என்று பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

உலக மனிதர்

மானிடச் சமுதாயத்தைப் பாரதிதாசன் ஓர் உலகமாகப் பார்க்கிறார். நாடு, மொழி, இன எல்லைகளைக் கடந்தவன் மனிதன். அந்த மனிதர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றால், அன்பு செழிக்க வேண்டும் என்று அவர் கருதியுள்ளார்.

காட்சி

தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்

தொல்லுலக மக்களெலாம் ‘ஒன்றே’ என்னும்

தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே

சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே

(பாரதிதாசன் கவிதைகள் ‘புதிய உலகம் – உலக ஒற்றுமை’)

என்னும் அடிகளில் அன்புள்ளத்தைத் தாயுள்ளம் என்று பாடியுள்ளார். தாய்மையை அன்பின் வடிவமாக்கி அத்தாயை உலகமக்களின் அன்னையாக்கினால் நாடுகளுக்கு இடையே சண்டை ஏற்படாது என்று கருதியுள்ளார்.

உலகநாடுகளில் வல்லவர்கள் ஏனைய நாட்டினரை அடிமை கொள்ளும் நிலையைப் பாரதிதாசன் வெறுக்கிறார். இந்த மனப்பான்மையை அவர் ‘நச்சு மனப்பான்மை’ என்று கூறியுள்ளார். இந்த மனப்பான்மை இந்த உலகிற்கு இடியைப் போன்றது என்றும் தெரிவித்துள்ளார்.

நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும்

நச்சுமனப் பான்மை

தொல்புவி மேல் விழும் பேரிடியாம்

(பாரதிதாசன் கவிதைகள், ‘புதிய உலகம் – பேரிகை’)

என்னும் அடிகள், பாரதிதாசனின் இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

புதிய தோர் உலகம் செய்வோம் – கெட்ட

போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்

(பாரதிதாசன் கவிதைகள் ‘புதிய உலகம் – புதிய உலகு செய்வோம்’)

என்னும் அடிகளில் தீய வழியில் போர் செய்ய எண்ணும் உலகத்தவர்களை அழித்திட வேண்டும் என்று பாடியுள்ளார்.

உலக மக்கள் அனைவரையும் ஒரேகுலமாகக் காணும் எண்ணத்துடன் பாரதிதாசன்.

எங்கும் பாரடா இப்புவி மக்களை!

பாரடா உனது மானிடப் பரப்பை

பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்

‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய

மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்

(பாரதிதாசன் கவிதைகள் ‘புதிய உலகம்’ – உலகம் உன்னுடையது)

என்று பாடியுள்ளார்.

கறுப்பு நிறம் கொண்டவனாகப் பிறந்தாலும் வெள்ளை நிறம் உடையவனாகப் பிறந்தாலும் மனிதகுலத்தில் பேதம் கிடையாது; எல்லாரும் மனிதர்களே! என்று எண்ண வேண்டும். அவ்வாறு எண்ணினால் இந்த மக்களிடையே ஒற்றுமை நிலவும். இவ்வாறு அனைவரும் நினைப்பதற்கு மக்கள் தங்கள் அறிவை விரிவாக்க வேண்டும்; குறுகிய மனப்பான்மையை ஒழிக்க வேண்டும். இதை,

அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை

அணைந்துகொள் உன்னைச் சங்கமமாக்கு

மானிட சமுத்திரம் நானென்று கூவு

பிரிவிலை எங்கும் பேதமில்லை

உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!

புகல்வேன்; ‘உடைமை மக்களுக்குப் பொது’

புவியை நடத்துப் பொதுவில் நடத்து

(பாரதிதாசன் கவிதைகள் ‘புதிய உலகம் – உலகம் உன்னுடையது’)

என்று எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பாடியுள்ளார். உலக மக்கள் அனைவரும் பசியின்றி வாழ வேண்டும் என்றால், உலகில் உள்ள பொருள்கள் எல்லாம் உலக மக்களுக்குப் பொதுவானவை என்ற நிலை வரவேண்டும் என்று விரும்பியுள்ளார்.

இலையே உணவிலையே கதி

இலையே எனும் எளிமை

இனிமேலிலை எனவே முர

சறைவாய்! முரசறைவாய்!

(பாரதிதாசன் கவிதைகள் ‘புதிய உலகம் – வாளினை எடடா’)

உலகின் ஒரு பகுதியில் உள்ள மக்கள் பசித்துன்பம் இல்லாமல் வாழ்கிறார்கள். வேறு ஒரு பகுதியில் உள்ள மக்கள் பசியால் வாடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலை இனிமேலும் இருக்கக்கூடாது என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.

உலகத் தொழிலாளர் உலக மனிதருக்குப் பாடிய பாரதிதாசன் உலகத் தொழிலாளர்களையும் ஒரே வகையில் பார்த்துள்ளார். கண்கவரும் சோலையைப் பார்க்கின்றவரின் கண்களுக்கு அதில் உள்ள அழகுதான் உடனடியாகத் தெரியும். ஆனால் பாவேந்தருக்கோ இந்தச் சோலை உருவாவதற்கு உழைத்த தொழிலாளர்களின் உழைப்புத்தான் தோன்றியிருக்கிறது. அதைச் சோலையைப் பார்த்துக் கேட்பதைப்போல் பாடியுள்ளார் பாருங்கள்.

காட்சி

சித்திரச் சோலைகளே! உமை நன்கு

திருத்த இப்பாரினிலே – முன்னர்

எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ

உங்கள் வேரினிலே!

(பாரதிதாசன் கவிதைகள் ‘புதிய உலகம் – நீங்களே சொல்லுங்கள்’)

என்னும் பாடலின் பேசமுடியாத சோலையைப் பார்த்துக் கேட்கும் பாவேந்தரின் கவிதை உள்ளம் வியப்புக்கு உரியது அல்லவா?

உலகத் தொழிலாளர்களில் பலர் வேலையில்லாமல் துன்பப்படுவதைப் பாரதிதாசன் பார்த்துள்ளார். அவ்வாறு அவர்கள் துன்பப்படுவதற்கான காரணம் எது என்றும் அவர் சிந்தித்துள்ளார். சிந்தனையின் விளைவாக அவர்,

வாடித் தொழிலின்றி வறுமையால் சாவதெல்லாம்

கூடித் தொழில் செய்யாக் குற்றத்தால் தோழர்களே

(பாரதிதாசன் கவிதைகள் – ‘புதிய உலகம் – கூடித் தொழில் செய்க’)

என்று தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் தங்களுக்குள் ஒற்றுமை உணர்வுடன் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் சிறிய தொழில் கூடங்களை அவர்களாலேயே உருவாக்கிட இயலும். இந்தச் சிறு தொழில் கூடங்கள் அவர்களுக்கு வாழ்வு அளிப்பதுடன் பிற தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கும். எனவே, தொழிலாளர்கள் கூட்டுத் தொழில் முறையைப் பின்பற்றி வாழ்வில் உயரவேண்டும் என்று பாடியுள்ளார்.

இயற்கைக் கவிஞர்

ஓர் அறிவியல் அறிஞன் அல்லது ஒரு விவசாயி இயற்கையைப் பார்க்கும் பார்வையிலிருந்து கவிஞனின் பார்வை வேறுபட்டது. அறிவியல் அறிஞன், இயற்கையை ஆராய்ச்சி மனப்பான்மையுடன் பார்ப்பான். விவசாயி தனது விவசாயத் தொழில் நோக்கத்தோடு பார்ப்பான். சாதாரண மனிதன் இயற்கையைப் பார்த்து மகிழ்வான். ஆனால் கவிஞன், தான் பார்த்து மகிழ்ந்த இயற்கைக் காட்சியைப் பிறரும் பார்க்கும் வகையில் சொல் ஓவியம் ஆக்குகிறான்.

கதிர் வருணனை இயற்கையைப் பாடிய தமிழ்க் கவிஞர்களில் பாரதிதாசன் முதல் இடத்தைப் பெறுகிறார். கதிரவனின் தோற்றத்தைக் காட்டுகிறார் பாருங்கள்.

எழுந்தது செங்கதிர்தான்

கடல்மிசை! அடடா எங்கும்

விழுந்தது தங்கத் தூற்றல்

(அழகின் சிரிப்பு, ப. 3)

எவ்வளவு அழகான கற்பனை. ‘எழுந்தது செங்கதிர் – விழுந்தது தங்கத் தூற்றல்’ என்னும் எதிர்ப்பொருள் வழங்கும் இன்பம் ஒருபுறம் என்றால், கதிரின் ஒளியைத் தங்கமாகக் காட்சிப்படுத்தியுள்ளது மேலும் வியப்பை வழங்குகிறது. இவை மட்டும்தானா என்றால், இல்லை. இன்னும் தொடர்கிறது பாருங்கள். அந்தத் தங்க ஒளி தூவப்படுகிறது என்று ஒளியைச் சிறு துளியாகக் கற்பனை செய்துள்ள அருமையை எவ்வாறு புகழ்வது?

நிலவு வருணனை கதிர் வருணனை இவ்வாறு என்றால், நிலவை வருணித்திருக்கிறார் பாருங்கள்.

புதுவையிலிருந்து மாமல்லபுரத்திற்குப் பாரதிதாசனும் அவரது நண்பர்களும் படகில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நிலவு, ஒரு மரத்தின் பின்புறம் வானில் தோன்றியது. அதைப் பார்த்த பாவேந்தரின் கவிதை உள்ளம் ஆற்றைக் கடந்து, நாட்டைக் கடந்து பாலைவனத்திற்குச் செல்கிறது. பாலைவனப் பகுதியில் ஆட்சிபுரியும் மன்னன் ஒருவன் அங்கே உள்ள ஒட்டகத்தில் வீற்றிருப்பதைப் போல் நிலவு தோன்றுகிறது என்று பாடியுள்ளார்.

காட்சி

வட்டக்குளிர்மதி எங்கே – என்று

வரவு நோக்கி இருந்தோம்

ஒட்டக மேல் அரசன்போல் – மதி

ஓர் மரத்தண்டையில் தோன்றும்

(பாரதிதாசன் கவிதைகள் II ப. 39)

(மரத்தண்டையில் = மரத்தின் அருகில்)

என்பதுதான் அந்தப்பாடல். கவிஞரின் இயற்கைக் கற்பனை நம்மையும் கற்பனை செய்யத் தூண்டுகிறது அல்லவா?

இவ்வாறு இயற்கையில் காணும் பொருள்களை எல்லாம் பாரதிதாசன் தமது பாடல்களில் சிறை வைத்துள்ளார். இந்த இயற்கைக் கற்பனை பாரதிதாசனை என்றும் நிலைக்க வைக்கும்.

புரட்சிக் கவிஞர்

இருக்கின்ற சமுதாய அமைப்பை மாற்றி முற்றிலும் புதுச் சமுதாய அமைப்பை உருவாக்குவதைச் சமுதாயப் புரட்சி என்கிறோம். இத்தகைய சமுதாயப் புரட்சிக் கவிதைகளைப் பாடியதால் பாரதிதாசனைப் புரட்சிக் கவிஞர் என்று அழைக்கிறோம்.

சமுதாயப் புரட்சி பாரதிதாசன் காலத்தில் சமுதாயம் சாதிகளால் பிளவுபட்டுக் கிடந்தது; மதச் சண்டைகளில் மூழ்கிக் கிடந்தது; பகுத்தறிவுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கையைக் கொண்டிருந்தது; பெண் கல்வி புறக்கணிக்கப்பட்டிருந்தது; தமிழ் மொழியின் சிறப்புகள் மறுக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில் தோன்றிய பாரதிதாசன், சமுதாயத்திலிருந்து இக்கொடுமைகளைப் போக்குவதற்காகப் பாடினார்.

சமுதாயப் புரட்சிக்குத் தேவையானது சமத்துவம். சாதி, பொருள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு உயர்வு, தாழ்வு கருதாமல் அனைவரையும் ஒரே தரத்தினராகக் கருதுவது சமத்துவம் எனப்படும். இந்தச் சமத்துவம், சமுதாயத்தில் மலர்ந்தால் மனிதரிடையே பேதங்கள் மறையும் என்று பாரதிதாசன் நம்பினார். எனவே,

எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான

இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்

(பாண்டியன் பரிசு, இயல் : 56)

என்று பாடியுள்ளார். சமத்துவச் சமுதாயத்தில் எல்லாப் பொருள்களும் எல்லாருக்கும் கிடைக்கும். எனவே, இந்த உலகம் அதை நோக்கியே செயல்படுகிறது என்று பாவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

சாதி அற்ற சமுதாயம் பாரதிதாசன் காண விரும்பிய சமுதாயம் சாதிப் பிரிவுகள் இல்லாத சமுதாயம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்னும் வேறுபாடு எந்தச் சமுதாயத்தில் இருந்தாலும் அது நோயாகத்தான் கருதப்படும். தமிழ்ச் சமுதாயத்தில் இருக்கும் இந்த நோய் நமது முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை என்று பாரதிதாசன் எண்ணினார். இந்தச் சாதி வேற்றுமையை அவர் ‘வருண பேதம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பொய்மை வருண பேதம்

போனால் புனிதத் தன்மை

நம்மில் நாம் காண்போமடி – சகியே

நம்மில் நாம் காண்போமடி

(பாரதிதாசன் கவிதைகள் III. ‘சமத்துவப்பாட்டு’ : 368)

என்று வருணபேதம் ஒழிந்தால் சமுதாயம் தூய்மை அடையும் என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.

சமயம் அற்ற சமுதாயம் தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் அனைவரும் தமிழர்கள் என்று எண்ண வேண்டும். சமயம் அவர்களைக் கூறு போடக் கூடாது என்னும் கருத்தைப் பாரதிதாசன்,

துருக்கர், கிறித்துவர் சூழ் இந்துக்கள் என்று

இருப்பவர் தமிழரே என்று உணராது

சச்சரவுபட்ட தண்டமிழ் நாடு

(பாரதிதாசன் கவிதைகள் II, 23 ‘புதுநெறி காட்டிய புலவன்’)

என்னும் கவிதை வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

காட்சி

சமய வேறுபாடுகள் மக்களின் அமைதியைக் குலைக்கின்றன. எனவே, சமய வேறுபாடுகள் அற்ற சமுதாயம் மலர வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்த விரும்பினார் பாரதிதாசன்.

சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?

சமயபேதம் வளர்த்தே தளர்வது நன்றா?

(பாரதிதாசன் கவிதைகள் ‘ஆய்ந்து பார்’ : 1-2)

என்று சமுதாயத்தைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார் பாரதிதாசன்.

தொகுப்புரை

பாவேந்தர் என்றும் புரட்சிக் கவிஞர் என்றும் போற்றப்படுபவர் பாரதிதாசன். தமிழ்க் கவிதையைச் சமுதாய மறுமலர்ச்சிக்கும் மூடநம்பிக்கை ஒழிப்பிற்கும் பகுத்தறிவைப் பரப்புவதற்கும் மொழி, இன உணர்வை ஊட்டுவதற்கும் பயன்படுத்திய முதல் தமிழ்க்கவிஞர் பாரதிதாசன் ஆவார்.

தமிழ் மொழி உணர்வும் தமிழ் இன உணர்வும் தமிழனுக்கு என்றும் தேவையானவை. பகுத்தறிவுச் சிந்தனை நிறைந்தோர் வாழும் நாடு வளம் நிறைந்த நாடாக மலரும். அந்த அடிப்படையில் தமது கவிதைகளில் பகுத்தறிவுக்குத் தனி இடத்தைப் பாரதிதாசன் கொடுத்துள்ளார்.

இயற்கையை அதன் எழிலைச் சொல் ஓவியமாகத் தீட்டியவர் பாரதிதாசன். அந்த இயற்கைப் பாடல்கள் வழியாகவும் அவர் தமது கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

இயற்கைப் புனைவுகள், என்றும் இதயத்தை ஈர்ப்பவை ஆகும். அவர் பாடியுள்ள இயற்கைக் காட்சிகள் அவரைப் பிற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியுள்ளன. இந்த இயற்கைக் கவிதைகள் பாரதிதாசனை என்றும் நிலைக்கச் செய்யும்.

பாரதிதாசன் அன்றாட வாழ்வில் காணும் அனைத்தையும் தமது கவிதைகளுக்கு உரிய பொருள் ஆக்கி உள்ளார். மேலும் அக்கவிதைகளில் தற்காலத்தில் காணும் பொருள்களை உவமைகளாகப் பயன்படுத்தியுள்ளார்.

எளிய சொற்களை இணைத்து அவற்றில் கவிதை நயத்தையும் கற்பனையையும் கலந்து கவிதை படைத்த திறமும் பாரதிதாசனின் தனிச்சிறப்பு ஆகும்.

கவிதைகள், காவியங்கள், இசைப்பாடல்கள், நாடகங்கள், கதைகள், கடிதங்கள், வாழ்த்து மடல்கள் என்று தமிழ் இலக்கியத்தின் வடிவங்களில் எல்லாம் இலக்கியம் படைத்த கவிஞர் என்னும் பெருமையும் பாரதிதாசனுக்கு உரியது ஆகும்.

சங்ககால வரலாறு முதல் பாரதிதாசன் வாழ்ந்த கால வரலாறு வரை அனைத்தையும் பாரதிதாசன் தமது படைப்புகளில் தொட்டுக்காட்டியுள்ளார். பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தையும் ஒருவர் படித்தால் தமிழனின் பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ள இயலும்.

இவ்வாறு பாடு பொருள்களாலும் இலக்கிய வடிவங்களாலும் வரலாற்றுப் பதிவுகளாலும் தனக்கு என்று ஒரு தனி இடத்தைப் பாரதிதாசன் தக்கவைத்துள்ளார்.