37

அறநூல்கள் - 1 (கீழ்க்கணக்கில் அறம்-திருக்குறள் நீங்கலாக)

பாடம் - 1

நாலடியார்

பாட முன்னுரை

இலக்கிய வளமும் இனிமையும் கொண்டது தமிழ்மொழி. இலக்கிய வகைகள் பலவற்றையும் எண்ணற்ற இலக்கியச் செல்வங்களையும் தமிழ்மொழியில் காணலாம். அவற்றுள் அற இலக்கியங்கள் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றிருக்கும் இலக்கிய வகையாகும்.

• பதினெண்கீழ்க்கணக்கில் அறம்

பண்டைத் தமிழ்ச் சான்றோர் நூல்களின் இயல்புக்கேற்பவும், பாடல் அடிகளின் அளவிற்கேற்பவும் பாகுபாடு செய்து பத்துப்பாட்டு, எட்டுத்தொகையெனத் தொகுத்தனர். மேலும் மேற்கணக்கு நூல்கள், கீழ்க்கணக்கு நூல்கள் என்று பாடல் அடிகளின் அளவைக் கொண்டும் பகுத்தனர்.

இவற்றுள் நான்கடிக்கு மேல் இயற்றப்பட்ட பாடல்களைக் கொண்டவை மேற்கணக்கு எனப்படும். நான்கடிக்குள் இயற்றப்பட்ட பாடல்களைக் கொண்டவை கீழ்க்கணக்கு எனப்படும். மேல் என்றால் பெரிது என்றும் கீழ் என்றால் சிறிது என்றும் பொருள்படும். கணக்கு என்பது நூலைக் குறிக்கும்.

பதினெண் மேற்கணக்கு பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாம். கீழ்க்கணக்கு திருக்குறள் முதலாகக் கைந்நிலை ஈறாக உள்ள  பதினெட்டு நூல்களுமாம். எனவே இவை பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்

பால்கடுகம் கோவை பழமொழி – மாமூலம்

இந்நிலைய காஞ்சி யுடன் ஏலாதி என்பவே

கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என வரும் பழைய பாடலொன்று பதினெண்கீழ்க்கணக்கு  நூல்களைக் குறிப்பிடுகிறது. இதனை நீங்கள் நினைவு வைத்துக் கொள்கிறீர்களா?

• முப்பாலும் நாலடியும்

முப்பால் (திருக்குறள்), நாலடி என்ற இரண்டு நூல்களும் உறுதிப் பொருள்களைப் பால், இயல் என்னும் அதிகாரங்களாக வகுத்துக் கூறுகின்றன. இன்னாமை இவை எனக் கூறுவது இன்னா நாற்பது. இனியவை இவை எனக் கூறுவது இனியவை நாற்பது. பெரும்பாலும் நிலையாமையைக் கூறுவது முதுமொழிக்காஞ்சி என்ற நூல். பழமொழி முற்காலத்துத் தமிழ் நாட்டில் வழங்கிய பழமொழிகள் பலவற்றைச் செய்யுளின் ஈற்றடியில் வைத்துச் சொல்ல வந்த கருத்தை விளக்குகிறது.

நான்மணிக்கடிகை அறிய வேண்டிய உறுதிப்பொருள்களில் நான்கினை ஒவ்வொரு பாடலிலும் விளக்குகின்றது. ஆசாரக்கோவை, அன்றாட வாழ்க்கையில் கையாள வேண்டிய நெறிகளைத் தொகுத்து உணர்த்துகிறது. திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி இவை மூன்றும் நோய் நீக்கும் மருந்துப் பெயர்களை மேற்கொண்டு உயிர்க்கு நலமான பொருட்களை முறையே மூன்று, ஐந்து, ஐந்தின் மேற்பட்டனவாக அமைத்து மொழிகின்றன என்பர் அறிஞர் வையாபுரிப்பிள்ளை.

அறம் - விளக்கம்

அறம் என்றால் என்ன? என்ற வினா எழுப்பினால் அதற்கு விடை காண்பது கடினமானது. அறம் என்ற சொல்லின் பொருள் என்ன? ‘அறு’ என்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம்.

மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே – முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர். ‘பிறவிதோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்’ என்ற ஆன்மீக விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு. (திருக்குறள் – நீதி இலக்கியம் – பக் 23)

அறம் பற்றிய கருத்துகள் நம் முன்னோர் அறம் என்னும் சொல்லிற்குத் தந்துள்ள விளக்கத்தோடு எதிக்ஸ் (Ethics) என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தரப்படும் பொருள் விளக்கம் மிகவும் பொருந்துவதாக உள்ளது. நல்ல அல்லது தீய செயல்கள் மூலம் தானே வெளிப்படும் மக்களுடைய நடத்தையைப் பற்றிய ஆய்வியல் கலையே ‘எதிக்ஸ்’ என்பதாகும். இதைத் தமிழில் அறவியல் எனலாம்.

எதிக்ஸ் என்னும் சொல் கிரேக்க மொழிச் சொல்லாகும். முதன் முதலில் இச்சொல் பழகிப்போன நடத்தை, வழக்கம், மரபு என்னும் பொருள்களையே உணர்த்தி வந்தது. பின்னர் நடத்தை என்னும் பொருளே போற்றப்பட்டது. ஒழுக்கத்தைக் குறிப்பிடும் Moral என்னும் ஆங்கிலச் சொல்லும் பழக்க வழக்கம் என்னும் பொருளையே குறித்தது. இதனால் மனித நடத்தை குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள் வழக்கமாகக் கொள்ளும் முடிவையே ஒழுக்கமாகக் (Morality) கொண்டனர் என்பது புலனாகின்றது.

இதனால் தனி மனித நடத்தை பெரும்பாலோரால் பின்பற்றப்பட்டபொழுது ஒழுக்கமெனும் பண்பாக மலர்ந்து வாழ்க்கை நெறியாக மாண்புற்றது எனலாம்.

அறத்தின் அடிப்படை இனி அறம் என்பது செயலா, சொல்லா, எண்ணமா என்று பார்ப்போம். செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும். எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும் செயலும் தூய்மையாக அமைய முடியும். எண்ணம் எழுவதற்கு இருப்பிடமாக உள்ள மனம் மாசு இல்லாததாக இருக்க வேண்டும். மனத்தின் மாசினைப் போக்குவதற்கு முயலுவதே அறமாகும். மன மாசு என்பது யாது? மன மாசினைப் போக்குவது எவ்வாறு? பொறாமை, பேராசை, வெகுளி, கடுஞ்சொல் ஆகியவை மனமாசுகளாகும். அவை இல்லாமல் இருப்பதே அறம். இதையே குறளாசிரியர்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற

(குறள் – 34)

(மாசு = குற்றம், இலன் = இல்லாதவன், ஆகுலநீரபிற = பிற ஆரவாரிக்கும் தன்மை உடையன)

என்றும்,

அழுக்கா றுஅவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

(குறள் – 35)

(அழுக்காறு = பொறாமை, அவா = பேராசை, வெகுளி = கோபம், இன்னாச்சொல் = கடும் சொல், இழுக்கா (இழுக்கி) = நீக்கி)

என்றும் கூறுகிறார். இவ்விளக்கங்களின் அடிப்படையில் பார்க்கும்போது அறம் என்பது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் சேர்ந்த ஒன்று என்று கொள்ளலாம். இத்தகைய அறம் பற்றிப் பேச எழுந்தவையே அறநூல்கள். அறநூல்களுக்கு உயிராக இருப்பது கருத்து. அறக் கருத்துகளையும் இலக்கியச் சுவை என்னும் இனிப்பிலே கலந்து கொடுக்கப்படும்பொழுது அவை அற இலக்கியங்கள் ஆகின்றன. இனி அற இலக்கியங்களுள் ஒன்றாகிய நாலடியார் பற்றிப் பார்ப்போமா?

நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாகக் குறிப்பிடப்படும் சிறப்புடையது நாலடியார்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதில் வரும் நாலும் என்ற சொல் நாலடியாரையும் இரண்டும் என்ற சொல் திருக்குறளையும் குறிக்கிறது. ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி அளிக்கிறது. அதுபோல் நாலடியாரையும், திருக்குறளையும் கற்றவர்கள் சொல்வன்மையும் உறுதியும் பெற்றவர்கள் ஆகிறார்கள். பொதுமறை என்று புகழ்பெற்ற திருக்குறளோடு ஒப்ப வைத்து எண்ணும் சிறப்புடையது நாலடியார் என்ற கருத்தையும் இப்பழமொழி விளக்குகிறதல்லவா?

அமைப்பும் உள்ளடக்கமும் நாலடியார், கடவுள் வாழ்த்து நீங்கலாக நானூறு வெண்பாக்களைக் கொண்ட நூல். நாலடி நானூறு என்றும் வழங்கப் பெறும் நூல். இந்நூல் சமண முனிவர்களால் இயற்றப்பட்டது. திருக்குறளைப் போல் மூன்று பால் பகுப்புகளை உடையது. பதினொரு இயல்களும், நாற்பது அதிகாரங்களும் கொண்டது. அதிகாரத்துக்குப் பத்துப் பாடல்கள் வீதம் நானூறு பாக்களைக் கொண்டது.

• துறவுக்குச் சிறப்பிடம்

அறத்துப்பாலில் துறவு நெறி அறங்களும், இல்லறநெறி அறங்களும் கூறப்படுகின்றன. சமண முனிவர்கள் இயற்றிய நூல் ஆதலின் துறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் கூறப்படுகிறது. நிலையாமை பற்றிய கருத்துகளும் அழுத்தமாகக் கூறப்படுகின்றன.

• இல்லறமும் பிறவும்

இனிய இல்லறத்தைப் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கின்றது. இல்லறத்திற்குப் பொருந்தாதவை எவை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. மக்கள் வாழ வேண்டிய பாங்கினைச் சொல்கிறது. கல்விச் சிறப்பையும், கற்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. சான்றோர் இயல்பையும் பெருமையையும் எடுத்துரைக்கிறது. பண்பிலார் இயல்பையும் பட்டியலிடுகிறது. குறளின் அதிகாரப் பொருளோடு தொடர்புடைய கருத்தை ஒவ்வொரு குறளும் கூறுகிறது. ஆனால் நாலடியாரில் ஒரே கருத்தைப் பல அதிகாரங்களுள் வெவ்வேறு உவமைகளோடு கூறும் பாடல்கள் உள்ளன.

நூல் சிறப்பு சிறந்த உவமைகளை நாம் நாலடியாரில் காணலாம். பழமொழிகளாலும், பழைய கதைகளாலும், உறுதிப் பொருள்களை வலியுறுத்துதலில் இந்நூல் ஈடிணையற்றது. அறத்தை உரைக்கும் போதும் அழகும் சுவையும் தோன்றக் கூறுகிறது. இயற்றியவர் முனிவராயினும் இலக்கியத்திற்குச் சுவையூட்டும் கற்பனை உணர்வையும் இவர்கள் கைவிடவில்லை.

• கற்பனை

அறிவொளியால் உலகத்தை அறநெறிப்படுத்தும் பெரியோர் விரைவில் இறந்துபடுகின்றனர். அறிவிலிகளோ நெடுங்காலம் வாழ்கின்றனர். இம்முரண்பாட்டின் காரணம் யாதென எண்ணிய புலவர் கூறுவதைப் பாருங்கள். சாற்றை விரைவில் இழுத்துக் கொண்டு, சக்கையை விட்டு விடுதல் எவர்க்கும் இயல்பு. கூற்றுவனும் சான்றோரை இளமையிலேயே எடுத்துக் கொண்டு மற்றோரை விட்டு விடுகிறான். இங்குப் புலவர் கூறிய காரணம் எதுவாக இருப்பினும் சரியோ! தவறோ அதை நம்மால் ரசிக்காமல் இருக்க முடியாது. இது போன்ற உலகியலை ஒட்டிய கற்பனைகளை நாலடியாரில் காணலாம்.

• பழமொழி

பொருள் விளக்கத்துக்காகப் பல பழமொழிகளும் ஆங்காங்கு எடுத்தாளப்பட்டுள்ளன. மேன்மக்கள் என்றும் மேன்மக்களே, கயவர் எக்காலத்தும் கயவரே என்பதனைப் புலப்படுத்த,

கைக்குமாம் தேவரே தின்னினும்வேம்பு

(நாலடி – 112)

(கைக்குமாம் = கசக்குமாம்)

என்ற பழமொழி வந்துள்ளது.

ஒருவர் பொறை இருவர் நட்பு   -    223

கற்கிள்ளிக் கையிழந்தற்று         -    336

மகனறிவு தந்தையறிவு                -    367

என்பன போன்ற பழமொழிகள் பலவற்றைக் காணலாம்.

• சுவைகள்

இதுவரை உவமைகளாலும், உலக நடைமுறைகளைக் கூறுதலாலும் பழமொழிகளாலும், உறுதிப் பொருள்களை உணர்த்துதலிலும் நாலடியார் தனிச் சிறப்புப் பெற்றுள்ளதைப் பார்த்தோம். அறப்பொருள் உரைக்கும் நிலையிலும் நகைச்சுவை தோன்றப் பாடுவதை நாலடியாரில் காணலாம்.

கொடுத்தாலன்றி விடாத இரவலர் பற்றி வழங்கப்படும் பாடல்களும் கதைகளும் தமிழில் மிக உண்டு. கொடாக்கண்டன் விடாக்கண்டன் கதையைப் போன்றது. இரவலர் ஒருவர் புகை நுழைய முடியாத இடத்திலும் நுழைந்து யாசித்தலைக் கண்டு வியந்து பாடிய பாடல் இது.

பொருள்கள் பலவற்றுள்ளும் நீரே நுட்பமானது. அதனை விட நுட்பமானது நெய். நெய்யை விட நுணுக்கம் உடையது புகை. நீர் நுழைய முடியாத இடத்திலும் நெய் நுழையும். நெய் நுழைய முடியாத இடத்திலும் புகை நுழையும். ஆனால் யாசிப்பவன் புகை நுழைய முடியாத இடத்திலும் புகுந்து செல்வான் என்கிறார் புலவர் (நாலடி: 282).

இங்கே புலவர் அனுபவிக்கும் வியப்புச் சுவை நம்மையும் மகிழ்விக்கிறது.

கல்லாத பேர்களிலும் கல்லே மிக நல்லது

(நாலடி – 334)

என்ற பேதைமை பற்றிய பாடல்களில் இகழ்ச்சிச் சுவை மிளிர்கிறது. உயிரற்ற கற்கள் கூட மனிதர்கள் அமரவும் படுக்கவும் உதவுகின்றன. அறிவிலார் எதற்கும் பயனில்லாதவர்கள் என்பதைத்தான் அவ்வாறு வெளிப்படுத்துகிறார் கவிஞர்.

நிலையாமை பற்றிய பாடலில் எள்ளற் சுவையைக் காணலாம். இறந்தவனின் பிணத்தைச் சுமந்து கொண்டு செல்பவர்கள் தாங்களும் ஒருநாள் இறப்பவர்களே என நினைக்கிறார்களா? இல்லையே என்ற கருத்தில் இகழ்ச்சிக் குறிப்புடன் பிணத்தை இனிச் சாம்பிணங்கள் சுமந்து செல்கின்றன என்கிறார்.

செத்தாரைச் சாவார் சுமந்து

(நாலடி – 24)

என்ற வரி கற்போர் நினைவை விட்டு நீங்காது.

எதுகை மோனை அழகுபட வரும் பல பாடல்களை நாலடியாரில் காணலாம். சான்றுக்கு ஒரு பாடலைப் பாருங்கள்.

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்

வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்

வைகலை வைத்துணரா தார்

(நாலடி – 39)

இப்பாடலில் ஒவ்வொரு சொல்லிலும் முதல் எழுத்து ஒன்றாக வரும் மோனை என்னும் தொடை அழகினைக் காணலாம். அவ்வாறே ‘வைகல்’ எனும் சொல் அடுத்தடுத்து வருவதைக் கண்டு மகிழலாம்.

இனி நாலடியார் நூலிலிருந்து நாம் அறியலாகும் பிற செய்திகளைப் பார்ப்போம்.

இடைக்கால மக்களின் பழக்க வழக்கங்கள், தொழில், உணவு, மக்கள் பயன்படுத்திய நாழி, தூணி, பதக்கு முதலிய அளவு கருவிகள், காணி, முந்திரி முதலிய நில அளவைகள், காதம், யோசனை முதலிய தொலைவு அளவைகள் பிறன் மனை விழைந்தார்க்குக் கொலைத் தண்டனை அளிக்கப்பட்டமை, இம்மை மறுமை உண்டு, வினைப்பயன் உண்டு, கூற்றுவன் பாசக்கயிற்றால் உயிர்களைப் பிணித்துக் கொண்டு செல்வான் என்ற நம்பிக்கைகள் இருந்தன என்பவை பற்றியும் அறிந்து கொள்கிறோம். இலக்கிய உலகில் நாலடியார் சிறந்ததோர் அற இலக்கியமாக விளங்குகிறது.

துறவறம்

சமணத் துறவிகள் இயற்றிய நூலாதலின் துறவறவியல் முதலில் சொல்லப்படுகிறது. வீடுபேறு அடைவதுதான் மனிதப் பிறவியின் உயர்ந்த நோக்கம், அதற்குப் பற்றினை நீக்க வேண்டும். பற்றினை நீக்கத் தவத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்குத் துறந்து செல்வது சிறந்த வழியென்பது சமணர்தம் கோட்பாடு, அதனால் துறத்தல் பெருமை உடைய செயல். அதுபோல் அவர்கள் செய்யும் தவமும் பெருமை உடையது. வலிமை வாய்ந்தது. எந்த அளவுக்கு வலிமை வாய்ந்தது தெரியுமா? விளக்கொளிமுன் கரிய இருள் ஓடுவதுபோல் ஒருவன் தவத்தின் முன் பாவம் நில்லாது ஓடும். அந்த அளவுக்குச் சிறப்பு வாய்ந்தது தவம்.

துறவிகள் இயல்பு துறவிகள் இளமை, அழகு, யாக்கை, செல்வம் ஆகியன நிலைத்து நில்லாதன என்பதனை நன்கு உணர்ந்தவர்கள். அதனால் ‘நான்’ என்னும் அகப்பற்றையும் ‘எனது’ என்னும் புறப்பற்றையும் அறவே நீக்கியவர்கள்.

முற்றும் துறந்த இவர்கள் மனவலிமை உடையவர்கள். பிறர் தம்மை இகழ்ந்தபோதும் அவர்கள் மீது சினம் கொள்ளாமல் இரக்கம் கொள்வார். ஏன் தெரியுமா? எம்மை இகழ்ந்த தீவினைப்பயனால் அவர்கள் நரகத்தில் சென்று வருந்துவார்களே என்ற நல்ல எண்ணத்தினால் அவர்களுக்காகவும் இரங்கும் கருணையுடையவர்கள். இத்தகைய உயர்ந்த பண்புகளே துறவியர் இயல்பாகின்றன.

நிலையாமை

செல்வம், இளமை, யாக்கை ஆகியன நிலைத்த தன்மை உடையன அல்ல.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு

(குறள் – 336)

(நெருநல் = நேற்று)

என்று நிலையாமையைச் சொல்லும் குறட் கருத்தின் விளக்கத்தை நாலடியார் பல பாடல்களில் எடுத்துரைக்கிறது. நிலையாமையை உணராத பேதைமையும் நாலடியாரில் சுட்டிக் காட்டப்படுகிறது.

செல்வம் நிலையாமை அறுசுவை உணவுகள் ஒரு பக்கம். அவ்வுணவினை ஊட்ட அன்பு மனைவி அவன் பக்கம். கணவனோ எதை உண்ணுவது என்று தெரியாமல் ஒவ்வொன்றிலும் ஒரு பிடி அளவே உண்ணும் செல்வந்தன். இத்தகைய செல்வச் செழிப்பில் இருப்பவனும் ஒருநாள் அனைத்துச் செல்வங்களையும் இழக்கக் கூடும். அத்துடன் நில்லாமல் தனக்குத் தேவையான அற்பமான கூழையும் பிறரிடம் சென்று யாசிக்கும் நிலையை அடையலாம் என்ற கருத்தமைந்த பாடல் செல்வம் நிலையாமையை விளக்குகிறது (நாலடி-1). வண்டியின் உருளை போன்று யார் மாட்டும் நில்லாது சென்று கொண்டே இருக்கும் செல்வம் என்று செல்வத்தின் நிலையாமைத் தன்மையைச் சொல்கிறது இன்னொரு பாடல் (நாலடி- 2).

மிகுந்த செல்வம் பெற்றிருக்கிறோம் என்று அறியாமையினால் செருக்குற்றுத் திரிவர் சிலர். அவர்கள் வருந்தும்படி செல்வம் அவர்களை விட்டு நீங்கும். எப்படித் தெரியுமா? இவர்கள் செல்வந்தர்களாய் இருந்தார்கள் என்ற அடையாளம் கூட இல்லாதபடி நீங்குமாம். இதற்கு எதனை உவமை சொல்கிறது நாலடியார், பாருங்கள். இரவில் கரிய மேகம் வெளிப்படுத்திய மின்னல், தோன்றிய வேகத்தில் சுவடில்லாமல் அழியும். அடையாளமில்லாமல் அழிந்து போகும். அதுபோலச் செல்வமும் அழிந்து விடும். இக்கருத்தமைந்த பாடல் இதோ,

செல்வர்யாம் என்று செல்வுழி எண்ணாத

புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லில்

கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி

மருங்கறக் கெட்டு விடும்

(நாலடி – 8)

(எல் = இரவு; கொண்மூ = மேகம்; மருங்கு = அடையாளம்)

எனவே செல்வம் இருக்கின்ற காலத்திலேயே விரைந்து அறம் செய்க என்ற கருத்து இங்கு வலியுறுத்தப்படுகிறது.

மலர் தோறும் தேனெடுத்துக் கூடுகளில் தேனீக்கள் தேன் சேகரிக்கின்றன. ஆனால் அந்தத் தேனைத் தேனீக்கள் அனுபவிக்கின்றனவா? இல்லையே. தேனை யாரோ எடுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள். தேனீக்கள் தேனை இழக்கின்றன. அதுபோல் பொருளைத் தேடி வைத்தவர்கள் செல்வத்தின் நிலையாமைப் பண்பின் காரணமாகச் செல்வத்தை இழக்கிறார்கள். செல்வம் இருந்த காலத்தில் இவர்கள் நல்ல அறம் செய்யவில்லை. இல்லாதவர்களுக்குக் கொடுக்கவில்லை. செல்வம் இழந்த நிலையில் அவர்களும் அனுபவிக்க இயலாது. தேனீக்கள் தேன் சேகரித்து இழக்கும் செயலைச் சாட்சியாகக் காட்டி விரைந்து அறம் செய்வதை வலியுறுத்தும் நாலடிப் பாடல் இது.

உடாஅதும் உண்ணாஅதும் தம்முடம்பு செற்றும்

கெடாஅத நல்லறமும் செய்யார் – கொடாஅது

வைத்தீட்டி னார்இழப்பர் வான்தோய் மலைநாட

உய்த்தீட்டும் தேனீக் கரி.

(நாலடி – 10)

(செற்றும் = கெட்டும்; கரி = சாட்சி)

இளமை நிலையாமை கூனி வளைந்து, தலை நடுங்கி, தடியினை ஊன்றி நடக்கிறாள் முதியவள் ஒருத்தி. இவளும் இளமையில் கண்டோர் வியக்கும் தெய்வப் பெண்ணாக இருந்திருப்பாள். அழகும் இளமையும் நிலைத்து நில்லாதன என்பதைத்தானே இவை காட்டுகின்றன.

கடுங்காற்று அடிக்கும் போது முதிர்ந்த பழங்கள் உதிர்கின்றன. பிஞ்சுகளும் உதிர்ந்து விடுதல் உண்டு. கூற்றுவன் முதியவரை மட்டுமல்லாது இளைஞரையும் எடுத்துக் கொள்வதுண்டு. அதனால் நாம் இளைஞர், பின்னால் அறம் செய்து கொள்ளலாம் என்று காலம் தாழ்த்த வேண்டாம். எனவே இப்போதே அறம் செய்க என்றுரைக்கும் பாடல் இதோ.

மற்றறிவாம் நல்வினை யாம்இளையோம் என்னாது

கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம்செய்ம்மின்

முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு

(நாலடி – 19)

(தீவளி = கடுங்காற்று; நற்காய் = பிஞ்சுகள்; கரவாது = மறைத்து வைக்காது)

எனவே இளமையிலேயே அறம் செய்க என்று எச்சரிக்கை செய்கிறது இப்பாடல்.

யாக்கை நிலையாமை பிறப்பு உண்டென்றால் இறப்பும் உண்டு. பிறந்தவர் யாவரும் இறந்துதான் ஆக வேண்டும். தவிர்க்க இயலாது. ஒரு நாள் கழிந்தது என்றால் வாழ்நாளின் ஒரு பகுதி குறைந்தது என்று பொருள். கூற்றுவன் ஒவ்வொரு நாளாக அளந்து மனிதனின் வாழ்நாளை உண்ணுகிறான். இதனை வள்ளுவர்,

நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்

வாள துஉணர்வார்ப் பெறின்

(குறள் – 334)

என்கிறார். ஒருவனின் ஒரு நாள் உணவு ‘நாழி’யளவென்பர். நாளை அளந்துண்ணும் கூற்றுவனும் ஞாயிற்றை நாழியாகக் கொள்கிறான். மனிதனின் வாழ்நாளாகிய தானியத்தைத் தினம் தினம் அளந்து உண்ணுகிறான். உண்ண உண்ண மனிதனின் வாழ்நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு நாள் ஒன்றுமே இல்லாமல் போய்விடுகிறது. கூற்றுவன் ஒரு மனிதனை உண்டு முடித்து விடுகிறான். இதனை,

தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்

கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் – ஆற்ற

அறம்செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும்

பிறந்தும் பிறவாதார் இல்

(நாலடி – 7)

என்ற பாடல் மூலம் எவ்வளவு அருமையான நிலைமையை எடுத்துரைக்கிறது நாலடியார்!

நீர் மேல் குமிழியே இவ்வுலக வாழ்க்கை. பறவைகள் தாம் தங்கியிருக்கும் மரக்கிளையை விட்டுப் பறந்து சென்று விடும். அது போல உடலை விட்டு உயிர் பறந்து செல்லும் இயல்புடையது. இதனை உணர்ந்து அறச் செயல்களை விரைந்து செய்க என்று வலியுறுத்துகிறது நாலடியார் (நாலடி-30). நிலையாமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவரும் உயிரைப் பறவைக்கு ஒப்பிட்டுச் சொல்கிறார். முட்டைக்குள் இருக்கும் கரு உரிய காலம் வந்தபோது முட்டை தனித்துக் கிடக்கும். அது போன்ற உறவும் நட்பும் தான் நம் உடம்புக்கும் உயிருக்கும் இடையே இருக்கிறது. இக்கருத்தைக் கூறும் குறட்பா,

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு

(குறள் – 338)

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி

இன்னினியே செய்க அறவினை

(நாலடி – 29)

என்று நிலையாமைக்குப் பொருத்தமான உவமையாகப் புல் நுனி மேல் உள்ள நீரைச் சுட்டி விரைந்து அறம் செய்ய வேண்டுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது நாலடியார்.

செல்வம், இளமை, யாக்கை ஆகியவற்றின் நிலையாமையை உணர்ந்து செய்யும் அறத்தின் பயன் மிகப் பெரியது. மிகச் சிறிய ஆலம் விதை வளர்ந்து மரமாகிப் பெரிய நிழலைத் தரும். அது போல் தகுதியுடையவர்க்குச் செய்யும் அறமும் அளவால் சிறியதாயினும் அதன் பயன் வானத்தை விடப் பெரிதாகி வளர்ந்து நிற்கும் (நாலடி – 38).

இல்லற நெறி

இல்லற நெறி என்பது இல்லத்தில் மனையாளோடு கூடிவாழும் ஒழுக்கம்.

இல்லறத்திற்குரிய அறங்களை இல்லறவியலில் நாலடியார் கூறுகிறது. இல்லறத்திற்குத் தேவையான நல்லறங்களை விவரிக்கின்றது.

இல்லறத்திற்கு வேண்டியன நல்லறமாகிய இல்லறத்திற்குத் தேவையானவை எவை என்று பார்ப்போமா? ஈகை, பொறுமை முதலிய நற்குணங்கள் இனிய இல்லறத்திற்கு அடிப்படையாகும்.

• ஈகை

ஈகை என்றால் கொடுத்தல்; இல்லாதவர்க்குக் கொடுத்தல்.

இரப்போர்க்கு இல்லையென்னாது கொடுப்பது சிறந்த அறமாகும். நம்மிடம் இருப்பதில் அரிசி அளவாவது மற்றவர்க்குக் கொடுக்க வேண்டும். மற்றவர்க்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கின்றதா? சிலருக்கு ஈகைக் குணம் உண்டு. சிலருக்கு இல்லை என்பதைத் தக்க உவமை கொண்டு விளக்கும் நாலடிப் பாடற் கருத்தைப் பாருங்கள்.

ஈகைக் குணம் உடையவர், ஊரின் நடுவே பலரும் அணுகிப் பயன் பெற முடியும் மரம் போன்று பலருக்கும் பயன் தருபவர்; ஊர் நடுவே இருப்பதால் பெண்பனையைப் போன்றவர். ஈயாதவர் சுடுகாட்டில் உள்ள ஆண்பனையைப் போன்று பயன் தராதவர். மேலும் அணுக இயலாத இடம் என்று பனை மரங்களின் இயல்புகளை மக்களின் பண்புக்கு உவமையாக்கும் அழகை நாமும் ரசிக்கலாம். அவை எளிய உவமைகள்; நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற உவமைகள் (நாலடி – 97).

முரசின் ஒலி ஒரு குறிப்பிட்ட தூர அளவுக்குக் கேட்க இயலும். இடியின் ஒலி இன்னும் அதிக தூரம் கேட்கும். சான்றோர் ஒருவர் யாசித்தவர்க்கு ஒன்றைக் கொடுத்தார் என்ற சொல் மூன்று உலகங்களிலும் கேட்கப்படும் சிறப்பை உடையது என்று ஈகையின் சிறப்பைச் சுவைபடச் சொல்லும் ஒரு நாலடிப் பாடல் (நாலடி – 100).

• பொறையுடைமை

ஈகைக்கு அடுத்தபடியாகப் பொறுமை உடைமை. அதாவது பொறையுடைமை இல்லறத்திற்கு அடிப்படையான ஒன்று எனலாம். இப்பொறுமைப் பண்பு சிறந்தது. பொறுமை இன்றி இருத்தல் பழிக்குக் காரணமாகிவிடும் (நாலடி – 72). கீழ் மக்கள் அறியாமையால் செய்யும் செயல்களைப் பொறுக்க வேண்டும். பொறுமையின்மை பழியை உண்டாக்கும் என்பதால் பொறுக்க வேண்டும் என்பார். நட்பில் கூடப் பொறுமை வேண்டுமென்பார். தன்னுடைய நண்பர்கள் இனிமையல்லாதவற்றைக் கூறும் போதும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பார் (நாலடி – 73).

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை

(குறள் – 151)

தன்னைத் தோண்டக் கூடியவரையும் பொறுத்துக் கொள்ளும் நிலம் போலத் தம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளுதல் தலை சிறந்த அறமாகும்.

• சுற்றம்

இல்லறத்தில் உறவுப்பாலம் அமைப்பவர்கள் சுற்றத்தார். வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் அன்புள்ள உறவினரைக் கண்டால் நீங்கிவிடும். இப்படிப் பட்ட உறவினரைப் பாதுகாப்பவனே சிறந்தவன். தன்னிடம் வந்த உறவினரைப் பாதுகாத்துப் பழுத்த மரம் போலப் பலர்க்கும் பயன்படுபவனே சிறந்தவன். துன்பமடைந்தவர்க்கு உதவும் பண்பு இல்லறத்தார்க்கு வேண்டும். வெயிலினைத் தாங்காது வருகின்றவர்களுக்கு நிழலைத் தந்து இடம்தரும் ஆலமரம் போலவும்; பறவைகள் பலவும் உண்ணும் பழங்களைத் தரும் ஆலமரம் போலவும் சுற்றத்தினருக்கு உதவ வேண்டும் (நாலடி – 202).

பல காய்களைத் தாங்கும் மரக்கிளை போலப் பெரியவர்கள் தம்மை வந்தடைந்த உறவினரைக் காப்பாற்ற மாட்டோம் என்று கூற மாட்டார். உண்மையான உறவின் உயர்வைக் கூறும் கருத்துச் சிறப்பை நாலடிப்பாடலில் காணலாம். பால் சோறு மிக இனிமையானதுதான். ஆனால் பகைவரிடமிருந்து அதைப் பெறும்போது அது இனிப்பதில்லை. ஆனால் உயிர் போன்ற உறவினரிடம் பெறும் உப்பிலாக் கஞ்சியோ இன்பம் தரும் என்கிறது. (நாலடி – 206)

இல்லறத்தார் விலக்க வேண்டியன இல்லறத்திற்குப் பொருந்தாதவையாக உள்ளனவற்றை நாலடியார் எடுத்துரைக்கின்றது. உலகமே பெறுவதாயினும் பொய் பேசக் கூடாது. நல்லோரைக் கெடுத்தல், பிறன் மனை நயத்தல் ஆகியன இல்லறமாகிய நல்லறத்தைக் கெடுப்பனவாம்.

• பொய்யாமை

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு

(குறள் – 299)

என்று பொய்யாமையை ஒளி தரும் விளக்காகக் கூறுகிறார் திருவள்ளுவர். நாலடியார் பொய்யாமை பற்றி என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

இரவலன் ஒருவன் பொருளை ஒருவனிடம் யாசிக்கிறான். அவன் உடனடியாகப் பொருளைத் தரவில்லை. கொடுக்க மாட்டேன் என்று மறுக்கவுமில்லை. பிறகு என்ன செய்தான் தெரியுமா? கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்து நீண்ட காலம் கழித்துச் சொன்ன சொல்லைப் பொய்யாக்கி விட்டான். இந்தப் பொய்யைத் தான் பெரிய குற்றம் என்கிறது நாலடியார். எவ்வளவு பெரிய குற்றம் என்றால், பிறர் செய்த நன்றியைக் கொன்றவரது குற்றத்தைக் காட்டிலும் பெரிய குற்றம் உடையதாகும்.

இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்

வசையன்று வையத் தியற்கை – நசையழுங்க

நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி

கொன்றாரின் குற்றம் உடைத்து.

(நாலடி – 111)

(வசையன்று = குற்றமன்று; நசை = விருப்பம்; அழுங்க = குறைய; நிரைதொடீஇ = வரிசையாக வளையல்களை அணிந்த பெண்ணே)

• பிறர் மனை நயவாமை

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் பண்பாடு, பிறர் மனை நயப்பது பண்புக்கு மாறுபட்டது. பிறர் மனை நயப்பதால் வரும் அச்சம் பெரிது. ஆதலால் நல்லோர் பிறர் மனைவியை விரும்ப மாட்டார். பிறர் மனைவியை விரும்புவாரிடம் அறம், புகழ், நட்பு, பெருமை இந்நான்கும் சேரா. பகை, பழி, பாவம், அச்சம் ஆகிய நான்கும் சேர்வனவாம் (நாலடி – 82). குலப்பழி உண்டாகும்(நாலடி – 84).

முற்பிறப்பில் அயலார் மனைவியை விரும்பியவரே, இப்பிறப்பில் பேடிகளாய்ப் பிறந்து கூத்தாடி உண்பவர்கள்; என்று பிறன்மனை விரும்பியதால் வரும் தீங்கு அடுத்த பிறவியிலும் தொடரும் என்ற எச்சரிக்கையும் செய்யப்படுகிறது. (நாலடி – 85) இப்பிறவியில் செய்யும் வினைக்குப் பயன் மறுபிறவியிலும் தொடரும் என்ற சமண சமயக் கொள்கையினையும் இங்குக் காணலாம்.

சமுதாயம்

அறத்துப்பாலை அடுத்துவரும் பொருட்பாலில் அரசியலுக்குரிய தகுதிகள், தகுதியின்மைகள் விளக்கப்படுகின்றன. கல்விச் சிறப்பும் சான்றோர் பண்புகளும் கூறப்படுகின்றன. பெரியவர்களிடம் தவறு இழைக்காதிருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையும் செய்யப்படுகிறது. தாளாண்மை (முயற்சி) மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்பதனையும் எடுத்துரைக்கிறது.

கல்வி சமுதாயத்தை மேம்படுத்தும் ஆற்றல் உடையது கல்வி. தலைமுடி அழகும், ஆடை அழகும், மஞ்சள் அழகும் அழகல்ல. கல்வி அழகே சிறந்த அழகாகும். கல்விச் செல்வம் கற்பவர்க்கு இன்பத்தைக் கொடுக்கும். மற்றவர்க்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையாது. மாறாக அதிகரிக்கும் பண்புடையது. கல்வி, புகழைக் கொடுக்கும்; அறியாமையைப் போக்கும் சிறந்த மருந்து. பிறரால் திருட முடியாதது. அரசரின் சினமும் அதைப் பறிக்க இயலாது. ஆதலால் கல்விச் செல்வத்தையே ஒருவன் தன் மக்களுக்குச் சேர்க்க வேண்டும். இத்தகைய கல்வியின் அழகை,

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு

(நாலடி – 131)

(குஞ்சி = தலைமுடி; கொடுந்தானை = வளைவுள்ள ஆடை)

என்று பாராட்டுகிறது நாலடியார். நெஞ்சத்தில் யாம் நற்குணமுடையோம் என்று கருதும் கல்வியால் வரும் நடுவுநிலைமையே அழகாகும்.

அழகை மட்டுமா தருகிறது கல்வி? இல்லையென்கிறது நாலடி. வேறு என்ன பயன்களைத் தருகிறது என்று பார்க்கலாமா?

இந்தப் பிறப்பின் பயனைத் தரும். பிறர்க்குக் கொடுப்பதால் குறைவுபடாமல் மேன்மேலும் வளரும் தன்மையது. தம்மை இன்னாரென்று அறியச் செய்யும். அழிதல் இல்லாதது. அதனால் கல்விபோல் அறியாமை நோயை நீக்கும் மருந்து யாம் பார்த்ததில்லை. (நாலடி -132) அறியாமையை நோயாக்கி, அதனைத் தீர்க்கும் மருந்தாகக் கல்வியை உருவகப் படுத்தியிருப்பது சிறப்பாகும்.

கற்றவர் நட்பு மகிழ்ச்சி தரும். அவரோடு செய்யும் நட்பு கரும்பை நுனியிலிருந்து அடிவரை தின்றது போல் நாள் செல்லச் செல்ல இன்பம் மிகுப்பதாகும். நற்குணம் இல்லாதார் நட்பு கரும்பை அடியிலிருந்து தின்பது போல்வதாகும். அதாவது நாளாக ஆக இனிமை குறைந்து கொண்டே வரும் (நாலடி- 138).

கல்வி கரையிலாதது. கற்பவர் வாழ்நாளோ சிறியது. ஆதலால் பொருத்தமான நூல்களையே கற்றல் வேண்டும். இக்கருத்தை எவ்வளவு எளிமையாகச் சொல்கிறது இப்பாடல்! பாலையும் நீரையும் கலந்து வைத்தாலும் நீரை விட்டு விட்டுப் பாலை மட்டுமே உண்ணும் அன்னப்பறவை. அதுபோல நாமும் தரமற்ற நூல்களை விட்டு நல்ல நூல்களைக் கற்க வேண்டும் என்கிறது,

கல்வி கரையில கற்பவர் நாள்சில

மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்

ஆராய்ந்து அமைவுடைய கற்பவே – நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து

(நாலடி – 135)

(அமைவுடைய = தரமான; குருகு = அன்னம்)

பொருட்பாலில் அரசியலில் முதலாவதாகக் கல்வியைப் பற்றிப் பேசப்படுகிறது. கல்வியை அரசியலில் வைத்ததால் பொது மக்களுக்குக் கல்வி தேவையில்லையென்று பொருளில்லை. மன்னன் எவ்வழி அவ்வழி மக்கள். அவன் கல்வியறிவு உடையவனாய் இருந்தால் மக்களையும் அறிவுடையர்களாக ஆக்க முயற்சியை மேற்கொள்வான். அதனால் பொருட்பாலில் கல்வி பேசப்பட்டுள்ளது.

ஆளுகின்றவர்க்குத் தேவையான பண்புகளை விளக்கிப் பேசுகிறது நாலடியார். முதலில் கல்வி, பின் குடிச்சிறப்பு. இவை மட்டும் போதாது. நல்லினத்தைச் சேர்தலும் தேவையாகும்.

குடிச்சிறப்பு குடிச்சிறப்பு ஆட்சியாளருக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்பாகும். நற்குணங்கள், நல்லொழுக்கம் இவை இவர்க்கு இயல்பாகும். தீயனவற்றுக்கு அஞ்சுதல் இவர்தம் இயல்பு, வறுமையிலும் தம் கடமையை மறக்காமல் செய்வர். வறுமையில் இவர்கள் செய்யும் அறங்களை அற்பர்கள் செல்வக் காலத்திலும் செய்யமாட்டார்கள்.

நல்லினம் சேர்தல் நல்லோர் இணக்கத்தால் குற்றங்கள் நீங்கும். பாலோடு சேர்ந்த நீர் தன் நிறம் மாறுதலைப் போல, பெரியோரைச் சேர்தலால் சிறியோர் இழிகுணங்களும் வெளிப்பட்டுத் தோன்றாது. எளியவராயிருப்பினும் நல்லோரைச் சார்ந்தவரைப் பகைவரின் சினம் ஒன்றும் செய்யாது. சேர்கின்ற இனத்தைப் பொறுத்தே ஒருவரின் உயர்வும் தாழ்வும் அமையும்.

நல்ல கல்வியும் சிறப்பும் பெற்றிருந்தாலும் நல்ல இனத்தோடு ஒருவன் சேர்ந்திருக்க வேண்டும். காலையில் புற்களின் மீது பனி படர்ந்திருக்கிறது. வெயில் ஏற ஏறப் புற்களின் மீதுள்ள பனி நீங்கி விடுவதைப்போல முன்னர் தம்மிடத்துள்ள குற்றங்கள் கூட நீங்கப் பெறுவராம் (நாலடி -171).

ஒளி பொருந்திய திங்களைச் சேர்ந்திருத்தலால் அதனிடத்துள்ள முயலும் வணங்கப்படும். பெரியோர் நட்பினைக் கொண்டால் சிறப்புக் குறைந்தவரும் சிறப்பினைப் பெறுவர். இக்கருத்தை எளிமையாக விளக்குகிறது நாலடியார் (நாலடி -176).

பாலோடு கலந்த நீர் பாலாக மாறுமே தவிர நீராகத் தன் நிறத்தினை வேறுபடுத்திக் காட்டாது. அதுபோலவே நல்லினம் சேர்ந்தால் சிறியவரது இழிந்த குணங்களும் தோன்றாமல் போகும். சேர்கின்ற இனத்தைப் பொறுத்தே ஒருவன் உயர்வும், தாழ்வும் அமையும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது (நாலடி -177).

மனத்தில் குற்றமற்றவர்களாயினும் தாங்கள் சேர்ந்த கூட்டத்தின் தீமையால் இகழப்படுவர். அதனால் நல்லினத்தைச் சேர வேண்டும் என்பதற்கு அழகான உவமை கூறப்படுகிறது. வெட்டப்பட்ட மரச் செறிவில் நெருப்புப் பற்றினால், அக்காட்டிலுள்ள வாசனை வீசுகின்ற சந்தன மரமும் வேங்கை மரமும் கூட வெந்து போகும். வாசனை உடைய மரம் என்பதால் அது வேகாமலா போகும்? அது போல, குற்றமற்றராயினும் தாங்கள் சேர்ந்த கூட்டத்தின் தீமையால் இகழப்படுவர். (நாலடி -179) அதனால் நல்லினத்தைச் சேர வேண்டும் என்பர். இப்படிப்பட்ட உவமைகள்தாம் அறக்கருத்துகளைக் கூறும்போது இலக்கியச் சுவையைத் தந்து இனிமை பயக்கின்றன.

பெரியாரைப் பிழையாமை ‘நல்லினம் சேர வேண்டும் என்று கூறிய பின் பெரியோரைப் பிழையாமை’ வேண்டுமென்று அறிவுறுத்துகிறது நாலடி. பெரியவர்களைத் துணையாகக் கொண்டால் சமுதாயத்தில் முன்னேற முடியும். சமுதாயமும் மேம்படும். பெரியோர்தம் வெறுப்பால் வரும் துன்பங்களை நீக்குதல் அரிது. எனவே பெரியோர் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்யக் கூடாது. வளைக்குள் இருக்கும் நாகமும் இடியோசைக்கு அஞ்சும். பெரியோரின் சினத்துக்கு ஆட்பட்டவர்கள் கோட்டைக்குள் ஒளிந்திருந்தாலும் பிழைக்க மாட்டார்கள் என்று பெரியாரைப் பிழைத்தலின் வரும் துன்பம் கூறப்படுகிறது (நாலடி – 164).

தாளாண்மை சமுதாய மேம்பாட்டிற்கும் தனி மனித உயர்வுக்கும் இன்றியமையாத ஒன்று தாளாண்மை.

ஓடியாடி உழைக்கும் முயற்சி உடையவர்கள் பெருமை உடையவர்கள். இவர்களுக்குப் பிறரை எதிர்பார்த்து வாழும் சிறுமையாகிய குற்றம் உண்டாகாது. எப்படி? இவர்கள் எக்காலத்திலும் சோர்வு அடைவதில்லை. வலிமை மிக்க புலி, தக்க இறைச்சி கிடைக்க வில்லையெனில், ஒரு நாள் சிறிய தவளையையும் பிடித்து உண்ணுமாம். எத்தொழிலையும் அற்பமான தொழிலென்று கருத வேண்டாம். அதுவே முயற்சியால் மேலான தொழிலாக மாறும் (நாலடி -193). தவம், கல்வி, முயற்சி என்ற இவற்றாலேயே ஒரு குலம் உயர்வுடையதாகும் (நாலடி. 195).

நட்பு நட்பின் பல நிலைகளை நட்பியலில் நாலடியார் விளக்குகிறது. திருக்குறளை அடியொற்றி, நட்பாராய்தல், கூடாநட்பு போன்ற அதிகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

• நட்பாராய்தல்

நம் வாழ்க்கையின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக அமையக் கூடியவர்கள் நண்பர்கள். எத்தகைய நட்பைப் போற்ற வேண்டும். யாருடைய நட்பை நீக்க வேண்டும் என்று வாழ்வு சிறக்க வழி கூறுகிறது, நாலடியார். யானையை ஒத்தவர் நட்பினை நீக்குக. நாயைப் போன்றவர் நட்பினைப் போற்றுக என்றும் நண்பரைத் தேர்ந்தெடுக்க வழி கூறுகிறது.

யானை தினம் தனக்கு உணவு கொடுக்கும் பாகன் ஏதேனும் ஒரு நாள் தவறு செய்யின் அவனையே அழித்து விடும். எவ்வளவு உயர்ந்த மனிதனும் ஏதேனும் தவறு செய்யக் கூடும். ஆதலால் ஒருவன் தான் செய்த உதவியினை உள்ளத்தில் கொண்டு தீங்கு செய்தாலும் பொருட்படுத்தாத ஒருவனையே தன் நண்பனாகக் கொள்ளுதல் வேண்டும். உதவிகள் பல செய்தாலும் ஒரு போது செய்த தீங்கினையே கருத்திற் கொண்டு, காலம் பார்த்து அழிப்பவன் யானை போன்றவன். எனவே யானை போன்றவர் நட்பினை நீக்க வேண்டும்.

ஒரு வேளை உணவிட்டாலும் அதையே நினைத்திருக்கும் நாய் அந்த நன்றியை மறவாது. அந்த நாயை வேல் கொண்டு எறிந்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு நிற்கும். அப்படிப்பட்டவரின் நட்பினையே போற்ற வேண்டும் என்று நட்பாராய்தலில் விளக்குகிறது நாலடியார் (நாலடி – 213).

பக்கத்தில் இருப்பதால் அன்பு பெருகாது. தூரத்தில் இருப்பதால் நட்பு விலகாது என்றும் நட்பின் திறத்தினை வரையறை செய்கிறது.

மூவகை மரங்களை உவமையாக்கி மூவகை மக்களின் பண்புகளை வெளிப்படுத்தும் நாலடிப் பாடல் நயமுடையது. பண்பிலா மக்கள் நாள்தோறும் நீர் பாய்ச்சப் பயன்தரும் கமுக மரத்தை ஒப்பர். இடைப்பட்டவர் விட்டு விட்டு நீர் பாய்ச்சப் பயன்தரும் தென்னை மரத்தை ஒப்பர். விதையிட்ட நாளில் நீர் இடப்பட்டதன்றி, தானே வளர்ந்து பயன்தரும் பனைமரம் ஒப்பர் மேன்மக்கள் என்று, அன்றாடம் மக்கள் பார்த்துப்பழகிய பொருள்களையே உவமையாகக் கூறுவது சிறப்பு (நாலடி – 216).

• கூடாத நட்பு

யாரை நட்பாகக் கொள்ள வேண்டும் என்று கூறியபின் யாருடைய நட்பை விலக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

தம்முடைய காரியம் ஆகும் வரை ஒத்திருந்து காரியம் முடிந்ததும் விலகிச் செல்பவர் நட்புக் கூடாத ஒன்று. அன்புப் பிணிப்பு இல்லாதவர் நட்பு வைக்கோலில் பற்றிய தீ போல் நீடித்து நிற்றலின்றி அழியும் (நாலடி – 234). மன ஒற்றுமை இல்லாதவர் நட்பு துன்பம் தரும் என்ற எச்சரிக்கையும் செய்யப்படுகிறது (நாலடி – 237).

சான்றோர் இயல்பு

தனி மனித அறம் சிறப்பானது, தனி மனித அறம் மேம்பட்டுத் திகழ்ந்தால் சமுதாயமும் மேம்படும். ஒளி பரப்பும் நிலவும் சான்றோரும் ஒப்பாவர். சான்றோர் கெட்ட சொற்களை ஒரு போதும் சொல்லார். பொய் கூற மாட்டார். தீயனவும், தேவையற்றனவும் எதிர்ப்படும் நிலையில் செவிடராகவும், குருடராகவும், ஊமையராகவும் நடந்து கொள்ளும் திறம் பெற்றவர்கள் என்று சான்றோர் இயல்பை மிக நுட்பமாகச் சித்திரிக்கும் நாலடிப் பாடல் இது.

பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்து

ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய

புறங்கூற்றில் மூங்கையாய் நிற்பானேல் யாதும்

அறங்கூற வேண்டா அவற்கு

(நாலடி – 158)

(மூங்கையாய் = ஊமையாய்)

அறிவுடைமை சான்றோர் அறிவுடையராய் இருத்தலின் அவர் சேர்க்கையும் நட்பும் இன்பம் தரும். அறிவுடைமை என்னும் செல்வத்தைப் பெற்றவர் சான்றோர். சான்றோர் வறுமையில் வாடவும், பண்பிலா மக்கள் செல்வம் பெற்றிருக்கவும் கூடும். வினைப்பயனே இதற்குக் காரணம். முற்பிறவியில் செய்த வினைகளின் விளைவு இப்பிறவியைச் சாரும் என்பதிலும் சமணர்கள் கொண்ட நம்பிக்கை நாலடியாரில் ஆங்காங்கு வெளிப்படுவதைக் காணலாம்.

மானம் சான்றோர் மானம் உடையவர். நற்குணம் இலாதவர் செய்கையால் மனம் கொதிப்பர். எனினும் பண்பிலா மக்களிடம் தம் குறைகளைச் சொல்ல மாட்டார்கள். இறக்க நேர்ந்தாலும் பழி பாவம் உண்டாக்கும் செயல் செய்ய மாட்டார்கள்.

வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்

மானம் அழுங்க வரின்

(நாலடி – 300)

( கையுறினும் = கிடைத்தாலும்; விழுமியோர் = சான்றோர்; அழுங்க = அழிய /கெட )

வானுலகம் கிடைப்பதாக இருந்தாலும் மானம் கெட வருவனவற்றை விரும்ப மாட்டார்கள் என்று மானம் உடையவரின் மன உறுதி மேற்கூறிய பாடலில் எடுத்துரைக்கப்படுகிறது.

இரவாமை சான்றோர் இரவாமைப் பண்பு உடையவர். இரந்து உண்ணுதலை விடப் பசியோடிருப்பது சிறந்தது என்று எண்ணும் தகைமையர்.

கரவாத திண்அன்பின் கண்ணன்னார் கண்ணும்

இரவாது வாழ்வதாம் வாழ்க்கை

(நாலடி – 305)

கேட்பவர்களுக்கு மறைக்காத அன்புடையார் மாட்டும் யாசிக்காமல் இருப்பதுதான் சிறந்த வாழ்க்கை என்று சான்றோரின் சிறப்பு மேற்கூறிய பாடலில் பேசப்படுகிறது.

தொகுப்புரை

சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் வாழ்க்கைக்குரிய பல அறங்களை எடுத்துரைக்கிறது. இளமையும், செல்வமும் யாக்கையும் நிலைத்தன அல்ல என்பதைப் பல பாடல்கள் எடுத்துரைக்கின்றன. அறம் செய்து வாழ்தலே சிறப்பு என்பதை மனத்தில் பதியுமாறு கூறுகிறது.

இல்லற இயலில் தனி மனிதனுக்கும், இல்லறத்தார்க்கும் இருக்க வேண்டிய பண்புகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. அரசியலில் ஆட்சியாளருக்கு இருக்க வேண்டிய கல்வி முதலான பண்புகள் வலியுறுத்தப்படுகின்றன. மேன்மக்கள் இயல்பும், பண்பிலார் இயல்பும் பட்டியலிட்டுக் காட்டப்படுகின்றன.

நட்பின் பல நிலைகளை நயம்பட எடுத்துரைக்கின்றது. இது உயர்ந்தது, இது சிறந்தது, இது கீழானது, இது பயனற்றது என்று வாழ்வியல் மதிப்புகளை மனம் கொள்ளக் கூறுகிறது நாலடியார்.

சமணத் துறவிகள் இயற்றிய நூல் ஆதலின் துறவுக் கொள்கையையும், வினைகளுக்குப் பயன் பிறவிதோறும் தொடரும் என்ற கொள்கையையும் நூலில் பல இடங்களில் காணலாம்.

அறக்கோட்பாடுகளைக் கூறும் நூலாக இருந்தாலும் எளிமையான உவமைகளையும் உருவகங்களையும் கொண்டு தான் கூற வந்த கருத்துகளை விளக்கிச் செல்கிறது. எதுகையும் மோனையும் நாலடிப் பாடல்களை இனிமையாகச் சுவை பயக்கும்படி செய்கின்றன. இவற்றால் அற நூலாகிய நாலடியார் அற இலக்கியமாகிப் படிப்போர் உள்ளத்திற்குச் சுவை நல்கி இன்பத்தைத் தருகின்றது என்று கூறலாமல்லவா?

வாழ்க்கையில் என்றும் நிலைத்திருக்கக் கூடிய உண்மைகளைப் பேசும் திருக்குறளைப் போல் நாலடியாரும் சிறந்து விளங்குகிறது.

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

என்ற பழமொழியும் மேற்கூறியதையே தெளிவாக்குகிறது.

பாடம் - 2

நான்மணிக்கடிகை

பாட முன்னுரை

பிற உயிரினங்களை விட மனிதன் உயர்ந்தவன், சிந்திக்கத் தெரிந்தவன், துன்பங்களையே நினைத்து வருந்திக் கொண்டிராமல் தெளிவாகச் சிந்தித்துத் துன்பங்களைப் போக்க வழி கண்டு பிடிக்கும் திறன் உடையவன். இம்முறையில்தான் சிந்தனையாளர் பலரும் தாம் கண்ட உண்மைகளைப் பிறர் அறிந்து பயன்பெற ஏட்டில் எழுதி வைத்தனர். இவ்வாறு எழுதப்பட்ட நூல்கள் மக்கள் வாழ்க்கைக்கு வழி காட்டுகின்றன. இப்படி வழிகாட்டும் இலக்கியங்களுள் ஒரு வகை என அறநூல்களைச் சொல்லலாம். பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நான்மணிக்கடிகை என்ற அறநூலைப் பற்றி இப்பாடத்தில் படிக்கலாம்.

பாடல்களில் கூறப்பெறும் நான்கு கருத்துகளினால் நான்மணிக்கடிகை என்று இந்நூல் பெயர் பெற்றது. கடிகை என்ற சொல்லுக்குரிய பொருள்களில் துண்டம் என்பது ஒன்றாகும். ஆதலின் நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்று பொருள்படும். நான்கு வகையான நீதி மணிகளால் கோக்கப்பட்ட அணிகலன் எனவும் பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு பாடலிலும் சிறந்த நான்கு கருத்துகளைத் தேர்ந்தெடுத்துச் சிறந்த முறையில் கூறியுள்ளமை படித்துப் பயன்பெறும் வகையில் உள்ளது.

• ஆசிரியர்

இந்த நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் ஆவர். நாகனார் என்பது இவரது இயற்பெயர் எனவும் விளம்பி என்பது ஊர்ப் பெயர் எனவும் கொள்வர். கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இரண்டும் திருமாலைப் பற்றியவை. ஆதலின் இவர் வைணவ சமயத்தைச் சேர்ந்தவர் எனக் கொள்ளலாம்.

அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே

இல்லத்துத் தீங்கொழுகுவாள்

(நான்மணிக்கடிகை.85)

என்ற பாடல் அடி ‘அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றமாம்‘ என்னும் சிலப்பதிகார அடிகளை ஒத்துள்ளது. எனவே ஆசிரியர் சிலப்பதிகார காலத்தை அடுத்து வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம்.

• நூல் அமைப்பும் பாடுபொருளும்

கடவுள் வாழ்த்து உட்பட 106 பாடல்கள் இந்நூலில் உள்ளன. பாடல்கள் வெண்பா யாப்பால் ஆனவை. வாழ்க்கை நெறிகளை அறிவுறுத்துவது இந்நூலின் நோக்கமாக உள்ளது.

வாழ்வியல் உண்மைகளைப் பல கோணங்களில் எடுத்துரைக்கிறது இந்நூல். நல்லறமாகிய இல்லறத்தின் சிறப்பைப் பேசுகிறது. கல்வியின் உயர்வையும் சிறப்பையும் எடுத்துக் கூறி, கற்றலை வலியுறுத்துகிறது. செல்வத்தின் சிறப்பையும் வலிமையையும் எடுத்துக்காட்டிப் பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற உண்மையைச் சுட்டிக் காட்டுகிறது.

நட்பின் சிறப்பு நயமுறக் காட்டப்படுகிறது. இனியவை கூறவும், வன்சொல் தவிர்க்கவும் பழகிக் கொள்வதே பண்புடைமை என்பதும் உணர்த்தப்படுகிறது. இவ்வுலகில் காணப்படும் சில பொருள்களின் இயல்பைக் கூறி வாழ்க்கை நெறிகளை அவற்றோடு தொடர்புபடுத்திக் கூறும் முறையினை இந்நூலில் காணலாம். தம் செயலாலும், தாம் செய்யும் தொழிலாலும் வேறுபடும் பலவகை மாந்தர்களின் இயல்புகளைத் தொகுத்துரைக்கிறது நான்மணிக்கடிகை.

குதிரைகள் அவற்றில் ஏறிச் செலுத்துவோன் திறத்திற்கேற்பவே இயங்கும் என்றும் (நான்.73), நீரின் இருப்பை வானம்பாடிப் பறவை அறியும் என்றும் (நான்.97) அசுணப்பறவைகள் பறையோசை கேட்டால் இறந்துபடும் என்றும் (நான்.4) யானையைக் கட்டுத்தறியாலும், பாம்பை மந்திரமொழியாலும் மக்கள் வயப்படுத்துவர் என்றும் (நான்.12) விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் இயல்பைச் சுட்டிக்காட்டி நீதி உரைப்பதை நான்மணிக்கடிகையில் ஆங்காங்கே காணலாம்.

நல்ல மணமுள்ள அகில்கட்டை கள்ளிமரத்தின் நடுவில் உண்டாகும். ஒளியுள்ள அரிதாரம் என்ற பொருள் மான் வயிற்றில் பிறக்கும். மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய கடலில் தோன்றும். அதுபோல் எக்குடியிலும் நன்மக்கள் தோன்றுவர் என்ற கருத்தில் அமைந்த,

கள்ளி வயிற்றில் அகில்பிறக்கும் மான்வயிற்றில்

ஒள்ளரி தாரம் பிறக்கும் – பெருங்கடலுள்

பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்

நல்லாள் பிறக்கும் குடி?

(நான்.6)

(விலைய = விலைமதிப்புடைய; முத்தம் = முத்து)

என்னும் புகழ்பெற்ற பாடல் இந்நூலில்தான் உள்ளது.

இல்லறம்

மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவது இல்லற வாழ்க்கை. இல்லறத்தை இனிமையாக்கும் மகளிர் சிறப்பு, மக்கட்பேறு முதலியவற்றை விளம்பி நாகனார் எளிமையாக எடுத்துரைக்கின்றார். அவை என்னவென்று பார்ப்போமா?

மகளிர் சிறப்பு மனைக்கு விளக்கம் தருபவள் நல்ல மனைவி. மனைவிக்கு விளக்கம் சிறந்த மக்கள். அம்மக்களுக்கு விளக்கமாக அமைவது கல்வி. கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு (தத்துவ ஞானம்) என்று தொடர்ந்து வரும் நன்னெறிகளுக்கு அடிப்படையானவர் மகளிர் என்று ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்தி உரைப்பதைக் காணலாம். பாடலைப் பாருங்கள்.

மனைக்கு விளக்கம் மடவார் மடவார்

தமக்குத் தகைசால் புதல்வர் – மனக்கினிய

காதல் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்

ஓதில் புகழ்சால் உணர்வு

(நான் – 105)

(விளக்கம் = ஒளி, சிறப்பு)

பெண், கணவனோடு ஒருமைப்பட்டு நிற்பவள். காவல் இன்றியும் கற்புடன் இருப்பவள். சுற்றத்தாரைப் போற்றியும் உறவைப் பாதுகாத்தும் வாழ்பவர் மகளிர். இதனால் மகளிர் குடும்ப வாழ்க்கையை மேம்படுத்தக் கூடியவர் என்பது சொல்லாமலே விளங்கும். மகளிர் நிலைகளில் தாய் என்ற உறவு மிகச் சிறந்தது. இத்தனை சிறப்புகளை உடைய பெண் இல்லாத மனை எப்படி இருக்கும்? பாழ்மனையைப் போல் இருக்கும் என்கிறது நான்மணிக்கடிகை ‘மனைக்குப் பாழ் வாள்நுதல் இன்மை‘ (நான் – 22).

(மனை – வீடு; வாள்நுதல் – ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண், மனைவி).

இனி மக்கட்பேறு பற்றி நான்மணிக்கடிகை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

மக்கட்பேறு ஒருவனது மணவாழ்வைச் சிறப்பிக்க வருவது மக்கட்பேறு. குழந்தைகளைப் பெறாதவர் அதனால் வருந்துவர். உலகம் அவர்களை இகழ்ச்சியாய்ப் பார்க்கும்; அவர்களைப் பழிக்கவும் கூடும். இத்தனை குறைகளை நீக்க வரும் மக்கட்பேறு பெற்றோர்க்கு ஒளிதரும் செல்வமாகும். இக்கருத்தைக் கூறவரும் நான்மணிக்கடிகை ‘மக்களின் ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை’ (நான்-57) இதன் பொருள், பெற்றோர்களுக்குத் தம் மக்களை விட உயர்ந்த பொருள் வேறு ஏதும் இல்லை என்பதாகும்.

(ஒண்மையவாய் = ஒளிபொருந்தியவையாக; சான்ற = உயர்ந்த)

பழியின்மை மக்களால் காண்க

(நான் – 64)

என்னும் மற்றொரு பாடலில் குழந்தைகளால் பழி நீங்குகிறது என்றும் சொல்கிறது இந்நூல்.

தந்தையின் நன்மையைப் புதல்வன் தன் இயல்பினால் அறிவிப்பான். அன்புடைய மக்கள் அணிகலனுக்கு ஒப்பாவர். மனைமாட்சியின் சிறப்பையும், மக்கட்பேற்றின் சிறப்பையும் இணைத்து,

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு

(குறள் – 60)

என்று கூறுகிறார் வள்ளுவர். இக்குறட்பாவில் மக்கட்பேற்றை நல்ல அணிகலனுக்கு ஒப்பிட்டுச் சொல்வதைக் காணலாம்.

சிறப்புத்தருவன

இவ்வுலகில் சிறப்புடையன, பெருமைக்குரியன என்று கூறத்தக்கன யாவை என்பது பற்றி நான்மணிக்கடிகை என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?

எந்தப் பொருளிலும் அந்தந்தப் பொருளுக்குரிய சிறப்பு உண்டு. ஆற்று நீரைத் தம்முள் அடக்கும் குளங்களும் உள்ளன. அரசர்களால் விரும்பப்படும் குடிமக்களும் உள்ளனர். வேதக் கருத்துகளை உடைய பழைய பாடல்களும் உள்ளன. வேள்விகளுக்கு ஒப்பான கொடைகளும் உள்ளன. (நான் – 54) என்று கூறும் ஆசிரியர் மனிதனுக்குச் சிறப்புத் தருவனவற்றைக் கூறுவதைப் பாருங்கள்.

கல்வி விளம்பி நாகனார் கூறும் ‘சிறப்புத் தருவன‘ வரிசையில் ஒருவருக்குத் துணையாக நிற்பது கல்வியே ஆகும் என்று காட்டுகிறார்.

நான்கு மணியான கருத்துகளை ஒவ்வொரு பாடலிலும் சொல்வது நான்மணிக்கடிகை என்று முன்னரே பார்த்தோம் அல்லவா? சிறப்பானவற்றைக் குறிப்பிடும் போது செல்வத்தைப் போல் ஒருவனுக்கு வலிமை உடையது வேறில்லை. கல்வியைப் போல் துணையாவது பிறிதில்லை. வறுமையைப் போல் துன்பமானது வேறில்லை. கேட்டவனுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதைப் போல் திட்பமானது வேறில்லை. (நான் – 32) என்று கூறிக் கல்வியின் உயர்வைக் காட்டுகிறார்.

கல்வி எப்படித் துணையாக நிற்கிறது?அது நெருப்பில் வேகாது. தண்ணீரால் அழியாது. திருடரால் களவாட முடியாது. பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்கப் பெருகும் தன்மை உடையது. இவ்வளவு சிறப்புகளை உடைய கல்வி நிச்சயம் நமக்குத் துணை செய்யும் அல்லவா? ஒருவருக்குத் துன்பம் வந்த காலத்து அவர் கற்ற கல்வி அறிவு துணை நிற்கும் என்று கல்வியின் சிறப்பைச் சொல்லுகிறார் ஆசிரியர்.

தனக்கு ஒன்று உறுவுழி நிற்பது அறிவு

(நான் – 31)

(தனக்கு = ஒருவனுக்கு; உறுவுழி = துன்பம் ஏற்படும்போது; நிற்பது = துணையாக இருப்பது)

இடர் வந்தபோது துணை நிற்பதால் கல்வியைப் போல் துணையானது பிறிதில்லை; தளர்ச்சியுற்ற காலத்துக் கற்றவர் முயன்று எழுகின்றனர்; கல்லாதவர் கால் முறிந்தவர் போல் ஆகிவிடுகின்றனர் என்ற கருத்தைச் சொல்லும் பாடலைப் பாருங்கள்.

கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத

பேதையான் வீழ்வானேல் கால்முறியும்

(நான் – 75)

கற்றவர் உலக இயற்கையை அறிவர். இவ்வுலகில் புகழும், மறுமையில் வீடுபேறும் அடைவர். கல்வி இத்தகைய சிறப்புடையது. இதனால் தான்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து

(குறள் – 398)

என்று வள்ளுவர், ஒரு பிறப்பில் கற்ற கல்வி அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஏழு பிறப்பிற்கும் உதவும் என்று பாடியுள்ளார்.

செல்வம் பொருட்செல்வம் இல்லாதவர்கள் இவ்வுலக இன்பங்களை அனுபவிக்க இயலாது. ஈட்டி எட்டிய மட்டும் தான் பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும் என்ற பழமொழியையும் நாம் அறிவோம். செல்வத்தின் வலிமையை விளம்பி நாகனார் எப்படிக் கூறுகிறார் என்று பார்ப்போம்.

ஒளியுள்ள மணிகள் மலையில் பிறக்கும். இன்பம் காதலியின் சொல்லில் கிடைக்கும். அறநெறிகள் அருளில் கிடைக்கும். அறமும், அறத்தோடு பொருந்திய இன்பமும் ஆகிய எல்லாமும் செல்வத்தினாலேயே கிடைக்கும் என்பதை நான்மணிக்கடிகை பின்வருமாறு சொல்கிறது.

கல்லில் பிறக்கும் கதிர்மணி காதலி

சொல்லில் பிறக்கும் உயர்மதம் – மெல்லென்று

அருளில் பிறக்கும் அறநெறி எல்லாம்

பொருளில் பிறந்து விடும்

(நான் – 7)

(கல் = மலை, கதிர் = ஒளிவீசுகின்ற, மதம் = இன்பம்)

பொருட் செல்வம் எல்லாவற்றையும் தருவதால்தான் செல்வத்தைப் போல் வலிமை உடையது வேறில்லை என்ற கருத்தை,

திருவின் திறல்உடையது இல்லை

(நான் – 32)

(திறல்=வலிமை) என்ற பாடல் புலப்படுத்துவதைக் காணலாம்.

நட்பின் சிறப்பு இவ்வுலகில் நட்பைப்போல் உயர்ந்தது வேறில்லை. பாகன் தன்னை வருத்தினாலும் யானையும் யானைப்பாகனும் பிரிவதில்லை. தாய் அடித்தாலும் குழந்தை தாயிடமே செல்லும். நண்பர்கள் சினந்து கூறினாலும் பிரியமாட்டார்கள். சேர்ந்தே இருப்பர். ஆனால் பகைவரோ எக்காலத்திலும் ஒன்றாகப் பொருந்துவதில்லை என்று கூறுகிறது நான்மணிக்கடிகை.

மலைப்பினும் வாரணம் தாங்கும் அலைப்பினும்

அன்னேயென்று ஓடும் குழவி – சிலைப்பினும்

நட்டார் நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார்

உடன்உறையும் காலமும் இல்

(நான் – 25)

(மலைப்பினும் = தண்டித்தாலும்; அலைப்பினும் = அடித்துத் துரத்தினாலும்; சிலைப்பினும் = சினந்து கூறினாலும்; நட்டார் = நண்பர்; ஒட்டார் = பகைவர்)

அன்பின் அடிப்படையில் அமையும் நட்பில் பிரிவுக்கே இடமில்லை என்கிறார் ஆசிரியர்.

இனிய சொற்கள் சொற்கள் மகிழ்ச்சியையும் உண்டாக்கும். சினத்தையும் உண்டாக்கும். இன்சொல்லால் மகிழ்ச்சியும் வன்சொல்லால் கோபமும் உண்டாகும் அல்லவா?

அன்பிலாதார் வாயில் பழிச்சொற்கள் தோன்றும். கற்றார் வாயில் வஞ்சனைச் சொற்கள் தோன்றா. பண்பிலார் வாயில் பழிச் சொற்கள் தோன்றும்.

வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச்

சாயினும் தோன்றா கரப்புச்சொல் – தீய

பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல்

கீழ்கள்வாய்த் தோன்றி விடும்

(நான் – 98)

(வடுச்சொல் = குற்றம் நிறைந்த சொல்; நயமில்லார் = அன்பில்லாதவர்; சாயினும் = நிலை தாழ்ந்தாலும்; கரப்பு = வஞ்சனை; கீழ்கள் = கீழ்மக்கள்)

சொற்களே செயலைக் காட்டிலும் மிக்க துன்பத்தைத் தருவன. அச்சொற்கள் மனத்துள் வடு (தழும்பு) வாய்க்கிடந்து என்றும் ஆறாது துன்புறுத்தும். சுட்ட புண் புறத்தே இருக்கும். எனவே ஆராய்ந்து பாராமல் படபடப்பாக விரைந்து பழிப்பன கூறுதல் வேண்டாம் என்கிறார் விளம்பி நாகனார். பதறிய நாக்கினால் நட்பு கெடும் என்பதை, ‘நாவன்றோ நட்பறுக்கும். (நான் – 81) என்ற பாடலடி உணர்த்துகிறது.

இன்சொல்லால் நட்புரிமை உண்டாகும். வன்சொல்லால் கெடுநினைவு உண்டாகும். நயமான சொற்களால் அருள் உண்டாகும். ஒருவன் நிலையை அறிஞர்கள் அவன் சொல்லினால் அறிவர் (நான் – 80) என்ற கருத்துரைக்கும் பாடல் இனி இப்படிப் பேச வேண்டும் என்று உங்களைச் சிந்திக்க வைக்கிறது அல்லவா?

சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற

நீரான் அறிப மடுவினை – யார்கண்ணும்

ஒப்புரவி னான்அறிப சான்றாண்மை மெய்க்கண்

மகிழான் அறிப நறா

(நான் – 80)

(மெல்லென்ற = குளிர்ந்த; மடுவினை = மடுவின் ஆழத்தை; ஒப்புரவு = உதவுதல்; மகிழ் = மகிழ்ச்சி; நறா = கள்)

இயல்பும் சிறப்பும்

உலகில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் சில

இயல்புகள், சிறப்புகள் உண்டு. அழுக்குச் சேர்ந்தாலும் நல்ல மணியின் பெருமை குறையாது. கழுவி எடுத்தாலும் இரும்பின் கண் மாசு உண்டாகும். இதை எவ்வளவு எளிமையாக நான்மணிக்கடிகை சொல்கிறது பாருங்கள்.

மாசு படினும் மணிதன்சீர் குன்றாதாம்

பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசு ஒட்டும்

(நான் – 100)

(மாசு = அழுக்கு)

மணி, இரும்பு ஆகியவற்றின் இயல்பைக் கூறியது போல் மன்னர், மாந்தர் ஆகியோரின் இயல்பையும் இந்நூல் சொல்கிறது.

அரசர் இயல்பு முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் அரசன் இறைவன் என்று சொல்லத்தக்கவன் என்கிறார் வள்ளுவர் (குறள் – 388). முறையாக ஆட்சி செய்பவனே சிறந்த அரசன். அரசன் நல்ல ஆட்சி செய்யவில்லையென்றால் நாட்டில் மழை பெய்யாது. மழையில்லா விட்டால் மக்களுக்கு நன்மையில்லை. மக்கள் இல்லையென்றால் அரசனும் இல்லை. ஏனெனில் அரசன் குடிமக்களுக்காகவே வாழ்கிறான் என்ற கருத்தைச் சொல்லும் பாடலைப் பாருங்கள்.

மழையின்றி மாநிலத்தார்க் கில்லை; மழையும்

தவம்இல்லார் இல்வழி இல்லை; தவமும்

அரசன் இலாவழி இல்லை; அரசனும்

இல்வாழ்வார் இல்வழி இல்

(நான் – 49)

மன்னர், தாம் ஆளும் ஆட்சியால்தான் சிறப்படைவர் என்பது நான்மணிக்கடிகை கூறும் கருத்தாகும். இனி, கற்றவர் இயல்பைக் காண்போமா?

கற்றவர் இயல்பு கற்றவர்க்கு எந்த ஊரும் தம்மூர் ஆகும். எண்ணற்ற பொன்னும் பொருளும் பெற்ற மன்னனுக்குக் கூடத் தன்னாட்டில்தான் பெருமையும் சிறப்பும் உண்டு. கற்றவருக்கோ சென்றவிடமெல்லாம் சிறப்பு.

விளம்பி நாகனார், கற்றவர் சிறப்பை வலியுறுத்தக் கல்லாதார்க்கு ஏற்படும் இழிநிலையைச் சுட்டிக் காட்டுகிறார். கல்லாத ஒருவர்க்கு அவருடைய வாய்ச்சொல்லே எமனாக அமையும். வாழைமரத்துக்கு அதனுடைய குலையே சாவை உண்டாக்கும். தீயவை செய்வார்க்கு அறக்கடவுளே கூற்றுவன் (எமன்) ஆவான். இல்லத்தில் இருந்து கற்பு கெடுபவள் கொண்டவனுக்குக் கூற்றுவனே என்கிறார். இந்தக் கருத்தைக் கூறும் பாடலைப் பாருங்கள்.

கல்லா ஒருவர்க்குத் தம்வாயில் சொல்கூற்றம்

மெல்லிலை வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம்

அல்லவை செய்வார்க்கு அறம்கூற்றம் கூற்றமே

இல்லத்துத் தீங்கொழுகு வாள்.

(நான் – 85)

கல்லாத மூத்தவனை இவ்வுலகம் மதியாது. கற்றவன் இளைஞனாயினும் மதித்துப் பாராட்டும் என்ற கருத்தை

ஒரு குடியில் . . . . .

கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்

இளமைபா ராட்டும் உலகு.

(நான் – 66)

என்ற பாடல் அடிகள் எடுத்துரைக்கும்.

கல்வியின் இன்றியமையாமையை வலியுறுத்துகிறார் விளம்பி நாகனார். கல்வியின்மை தனிஒருவரின் குற்றம் மட்டும் ஆகாது. கல்வியறிவு இல்லாமல் குழந்தைகளை வளரவிடுதல் சமுதாயத்துக்கே தீங்காக முடியும். இதை ஒட்டித், தீமையானவற்றை ஒரு பட்டியல் போட்டுத் தருகிறார் இந்நூலாசிரியர். உயிர்களை எந்தவகையில் கொன்றாலும் அது தீமை. நாணமற்ற பெண்களின் அழகு தீமை பயக்கும். உயர்ந்த கொள்கைகளைக் கைவிடுவது ஒருவன் குலத்துக்கே தீங்கு விளைவிக்கும். இக்கருத்துகளைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.

எல்லா இடத்தும் கொலைதீது மக்களைக்

கல்லா வளரவிடல் தீது – நல்லார்

நலம்தீது நாணற்று நிற்பின் குலம்தீது

கொள்கை அழிந்தக் கடை

(நான் – 95)

(நல்லார் = பெண்கள்)

மக்கள் இயல்பு தம் செயலாலும், தாம் செய்யும் தொழிலாலும் வேறுபடும் பலவகை மாந்தர்களின் இயல்புகளைத் தொகுத்து உரைக்கிறது நான்மணிக்கடிகை.

மலர் இருப்பதை அதன் மணத்தால் அறிகிறோம். அதுபோல் ஒருவன் செயல்திறனை அவன் சொல்லால் அறியலாம். ஒருவன் உள்ளக் குறிப்பை அவன் முகத்தால் அறியலாம்.

நாற்றம் உரைக்கும் மலர்உண்மை கூறிய

மாற்றம் உரைக்கும் வினைநலம் தூக்கின்

அகம்பொதிந்த தீமை மனம்உரைக்கும் முன்னம்

முகம்போல முன்உரைப்பது இல்

(நான் – 48)

(நாற்றம் = மணம்; வினைநலம் = செயல்திறமை; முன்னம் = உள்ளக்குறிப்பு, கருத்து)

உழவு மாடு உடையவன் வேளாளன். எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன் அந்தணன் (நான்- 55). நன்மை செய்யாதவன் துணையின்றி இருப்பான். நற்குணங்களை உடையவன் இனிமையானவன் (நான் – 61).

பிறர்க்குக் கொடுத்து உண்பவனே புகழ் உடையவன். (“ஈத்துண்பான் என்பான் இசை நடுவான்”) கொடுப்பவன் கைப்பொருளைப் பறித்து உண்பவன் பேராசைக்காரன். (நான் – 62) என்றெல்லாம் அறநோக்கில் மாந்தர் இயல்புகளை வகைப்படுத்துவதைக் காணலாம்.

அழகும் இளமையும் வறுமையால் கெடும். குலத்தின் உயர்வும் குலத்தின் ஒழுக்கமும் கல்லாமையால் கெடும் (நான் – 83) என்று மனிதர் நிலையாலும், நடத்தையாலும் அவர்தம் இயல்பு வேறுபடுவதைச் சுட்டிக் காட்டுகிறது நான்மணிக்கடிகை.

வாழ்வியல் உண்மைகள்

வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவை எவை என்பது இந்நூலில்

வலியுறுத்தப்படுகிறது. நீக்க வேண்டியவை எவை என்று எச்சரிக்கையும் செய்யப்படுகிறது. துன்பம் நீக்கும் வழிகளும் கூறப்படுகின்றன.

பின்பற்ற வேண்டியவை சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் நெறிகள் பலவற்றை விளம்பி நாகனார் சுட்டிக்காட்டுகிறார். பிறர் செய்த தீமைகளுக்காக அவரை வெறுக்காமல் இருக்க வேண்டும். ஆனால் அவர் செய்த நன்மைகளை மறக்காமல் இருக்க வேண்டும்.

கன்றாமை வேண்டும் கடிய பிறர்செய்த

நன்றியை நன்றாக் கொளல்வேண்டும்

(நான் – 13)

(கன்றாமை = சினவாமை)

எப்போதும் பிறருடைய நற்குணங்களையே காணும் மனித நேயத்தின் மாண்பல்லவா இவ்வழி!

கொடுப்பதானால் ஏழைகட்கு உணவு கொடுக்க வேண்டும். விடுவதானால் பற்றை விட்டுவிட வேண்டும். உதவி செய்வது என்றால் சுற்றத்தாருள் ஏழைகளை ஆதரிக்க வேண்டும். வெகுளியைக் கெடுக்க வேண்டும். இவையெல்லாம் மனிதனை மாண்பு மிக்கவனாக்கும் வழிமுறைகள் ஆகும். பாடலைப் பாருங்கள்.

கொடுப்பின் அசனம் கொடுக்க – விடுப்பின்

உயிரிடை ஈட்டை விடுக்க – எடுப்பில்

கிளையுள் கழிந்தார் எடுக்க கெடுப்பின்

வெகுளி கெடுத்து விடல்

(நான் – 82)

(அசனம் = உணவு; ஈட்டை = பற்றை; எடுப்பில் = உயர்த்த விரும்பினால்; கிளை = உறவு; கழிந்தார் = வறியவர்; எடுக்க = காப்பாற்றுக; கெடுப்பின் = கைவிடுவதாயின்; வெகுளி = கோபம்)

இல்லாத இயல்புகள் அறக்கருத்துகளைச் சொல்லும் நிலையில் விளம்பி நாகனார் பல்வேறு உத்திகளைக் கையாண்டிருப்பதை நான்மணிக்கடிகையில் காணலாம். கருத்துகளை நேரிடையாகச் சொல்வது, வலியுறுத்திச் சொல்வது, நகைச்சுவை இழையோடச் சொல்வது, தத்துவமாகச் சொல்வது என்ற வகைகளே அவ்வுத்திகள் ஆகும். பின்பற்றுக, நீக்குக என்று முன்னிலைப்படுத்திச் சொல்லாமல் பற்றற்ற நிலையில் சொல்வது போல் அறிவுரை கூறும் அழகைப்பாருங்கள்.

சென்று விட்ட பொருள்களைப் பற்றிய துன்பம் கற்றுத் தெளிந்தவரிடம் இல்லை. முயற்சித் துன்பம் ஊக்கம் உடையாரிடத்து இல்லை. அறத்தின் உண்மைகள் தீயவை செய்வாரிடத்து இல்லை. சினம் கொண்டவரிடம் எந்த நன்மைகளும் இல்லை என்ற கருத்தை என்னும் பாடல் விளக்குகிறது.

கற்றார்முன் தோன்றா கழிவிரக்கம் காதலித்தொன்று

உற்றார்முன் தோன்றா உறாமுதல் – தெற்றென

அல்ல புரிந்தார்க்கு அறம்தோன்றா எல்லாம்

வெகுண்டார்முன் தோன்றாக் கெடும்

(நான் – 10)

(கழிவிரக்கம் = வருத்தம், துன்பம்; உறா முதல் = முயற்சித் துன்பம்; தெற்றென = தெளிவாக; அல்ல = நல்லது அல்லாத)

கேடு விளைவிப்பன உடலுக்கும், உள்ளத்துக்கும் கேடு விளைவிப்பன யாவை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது நான்மணிக்கடிகை.

ஒற்றுமையின்மை நம் வலிமையைக் கெடுக்கும். பொய்ம்மை உடம்பைக் கெடுக்கும். தூய்மையற்ற பாத்திரம் பாலின் சுவையைக் கெடுக்கும். தகாதவரிடம் கொண்ட நட்பானது குலத்தை அழிக்கும். இக்கருத்தைச் சொல்லும் பாடலைப் பார்க்கலாம்.

மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்

பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் பெய்த

கலம்சிதைக்கும் பாலின் சுவையைக் குலம்சிதைக்கும்

கூடான்கண் கூடி விடின்

(நான் – 23)

(மொய் = வலிமை, கூடார் = தகுதியற்றவர்)

இனி, கேடு எப்பொழுது வரும் என்பதையும் நான்மணிக்கடிகை கூறுகிறது.

ஒருவனுக்கு நாணம் நீங்கினால்செல்வம் அழியும். ஐம்பொறிகள் நல்வழி நடந்தால் செய்யும் தீவினை கெட்டுப்போகும். நீர் இல்லையென்றால் பயிர் விளைச்சல் கெடும். நன்மை மாறினால் நட்புக் கெடும்.

பொறிகெடும் நாணற்ற போழ்தே நெறிப்பட்ட

ஐவரால் தானே வினைகெடும் – பொய்யா

நலம்கெடும் நீரற்ற பைங்கூழ் – நலமாறின்

நண்பினார் நண்பு கெடும்

(நான் – 46)

என்பது அப்பாடல்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

(குறள் – 788)

என்று உற்றுழி உதவுதலை வள்ளுவர் குறிப்பிடுகிறார் அல்லவா? அத்தன்மை இல்லாதபோது நட்பு கெட்டுப்போகும் என்கிறார் விளம்பி நாகனார்.

இதையடுத்துத் துன்பம் செய்வன எவை என்று காட்டுகிறார் ஆசிரியர். அவை, பிணியுள்ள உடம்பில் சேரும் உணவு துன்பம் தரும். அறிவிலாரை அவர் வாய்ச்சொல்லே வருத்தும். முன் செய்த தீவினைகள் இம்மையில் வந்து துன்புறுத்தும் என்பனவாம். (நான் – 52)

உலக இயல்பு உலக இயல்பு, மாந்தர் இயல்பு என்று வகைப்படுத்தி, சில உண்மைகளைச் சுட்டிச் காட்டுவதை நான்மணிக்கடிகையில் காணலாம்.

எக்குடியிலும் நன்மக்கள் தோன்றுவர். உயிர்கள் பிறக்கும் போதே நீங்கென நீங்காது. இறக்கும்போது நில்லென நில்லாது. விண்மீன்களும், திங்களும், சூரியனும் என்றும் உள்ளன. நோயும் முயற்சியும் என்றும் உள்ளன. ஈவாரும் ஏற்பாரும் என்றும் உள்ளனர். பிறப்பாரும் இறப்பாரும் என்றும் உள்ளனர்.

என்றும் உளவாகும் நாளும் இருசுடரும்

என்றும் பிணியும் தொழில்ஒக்கும் – என்றும்

கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்

சாவாரும் என்றும் உளர்

(நான் – 60)

(நாள் = நட்சத்திரம்; இருசுடர் = சூரியன், சந்திரன்; தொழில் = முயற்சி)

இவையே இவ்வுலக இயல்பு என்று கூறுகிறது நான்மணிக்கடிகை.

உலகில் எதுவுமே நிலைத்து நிற்பதில்லை, எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு என்பதை எவ்வளவு எளிமையாகச் சொல்கிறார் விளம்பிநாகனார், பாருங்கள்!

உலகில் இறவாத உயிர்களும் இல்லை. கெடாத வலிமைகளும் இல்லை. மூப்பு அடையாத இளமையும் இல்லை. குறையாத செல்வங்களும் இல்லை என்ற இக்கருத்தை,

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்

தாவாத இல்லை வலிகளும் – மூவாது

இளமை இசைந்தாரும் இல்லை வளமையிற்

கேடுஇன்றிச் சென்றாரும் இல்

(நான் – 79)

(தாவாத = கெடாத; மூவாது = முதிராது; வளமை = செல்வம்)

என்ற பாடலில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

தொகுப்புரை

நான்கு மணிகள் போன்ற நீதிகளை ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கிறார் விளம்பிநாகனார். இல்லற நெறிகள் எவை என்று கூறுகிறார் ஆசிரியர். வாழ்வியல் உண்மைகளைப் பல கோணங்களில் அவர் கூறுவதைக் காண முடிகிறது. கல்வியின் பயன் நல்லொழுக்கமே என்பது வலியுறுத்தப்படுகிறது.

உலக இயல்பு, மாந்தர் இயல்பு, கற்றார் இயல்பு என்று வகுத்தும், தொகுத்தும் உரைக்கிறார் விளம்பி நாகனார்.

வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளைக் கற்பவர் மனத்தில் பதியும் வண்ணம் சிறப்பாகச் சொல்கிறது நான்மணிக்கடிகை.

எவற்றையெல்லாம் நீக்கினால் மனிதனாக வாழ்ந்து சிறப்படைய முடியும் என்பதையும் பட்டியல் இடுகிறது இந்நூல்.

உலக இயல்பு என்ற நிலையில் வாழ்வியல் உண்மைகள் பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளைத் தொகுத்துரைக்கும் சிறந்த நூல் நான்மணிக்கடிகை எனலாம்.

பாடம் - 3

திரிகடுகம்,சிறுபஞ்சமூலம்,ஏலாதி

பாட முன்னுரை

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும் என்பது பழமொழி. சுவர் இடிந்து போனால் அதன் மேலே உள்ள சித்திரமும் அழிந்து போகும். அதுபோல் உடல் நலிந்தால் வாழ்க்கையே சிதைந்து போகும். அதனால் இவ்வுலகில் எச்செயலையும் செய்து முடிக்க உடல் நலத்தைப் பேணிப் பாதுகாப்பது இன்றியமையாதது. உடம்பின் சார்பில்தான் உயிர் நிற்கிறது. உடம்பு அழியும் போது உயிரும் அழிந்து போகிறது. இதனால் தான் திருமூலரும்,

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

என்றும்,

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

(திருமந்திரம் – 708)

என்றும் கூறுகிறார்.

உடலை வருத்தும் நோயை வராமல் செய்வதுதான் மருந்து.

மறுப்பது உள் நோய் மருந்து எனல் சாலும்

(திருமூலர் – எண்ணாயிரம்)

என்கிறார் திருமூலர். உடம்பினை அழியாது வைத்து இயங்கச் செய்யும் மருந்து முறையே வைத்தியம் எனப்பெறும். இந்த வைத்தியத்தை இறைவன் திருவருளால் கண்டறிந்தவர்கள் சித்தர்கள். இதனால் இது சித்த வைத்தியம் எனப் பெயர் பெறும். சித்த வைத்தியத்தில் எளிய மக்களும் நல்வாழ்வு பெற்று உய்வதற்காக அதிகச் செலவில்லாமல் மிகுந்த பயன் விளைவிக்கும் மருந்துகள் கூறப்பெற்றுள்ளன.

சித்தர் மருந்துகள் பல உள்ளன. அவை தம்முள் சிறந்தனவாகத் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்பனவற்றைக் குறிப்பிடலாம். உடல் நோயைத் தீர்க்கும் மருந்துகளைப் போல உள நோயைத் தீர்க்கும் மருந்துகள் நல்லொழுக்க முறைகளே. அவற்றைத் தொகுத்துத் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்று உடல் நோய் மருந்துப் பெயர்களையே இட்டு உளநோய் மருந்து நூல்களைப் பாடியிருக்கின்றனர் மூன்று புலவர்கள். கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டைக் குறிக்கும் கீழ்க்காணும் பாடல்.

நாலடி நான்மணி நானாற்ப(து) ஐந்திணைமுப்

பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே

கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

கடுகம், திரிகடுகத்தையும், மாமூலம் சிறுபஞ்சமூலத்தையும் குறிக்கிறது. ஏலாதி, ஏலாதி என்றே குறிக்கப்பட்டுள்ளது.

மருந்துப் பெயர் கொண்ட திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்ற இம்மூன்று நூல்களும் மூன்றாவது பாடமாக வருகின்றன. இப்பாடம் மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியில் திரிகடுகம் பற்றியும், இரண்டாவது பகுதியில் சிறுபஞ்சமூலம் பற்றியும், மூன்றாவது பகுதியில் ஏலாதி பற்றியும் பார்க்கலாம். இனி முதற்பகுதியான திரிகடுகம் பற்றிப் பார்ப்போமா?

திரிகடுகம்

காரம், கார்ப்பு (உறைப்பு) என்று பொருள்படும். கடுக்கும் பொருளாகிய சுக்கு, மிளகு, திப்பிலிகளுள் ஒன்றையோ அல்லது இம்மூன்றையுமோ கடுகம் என்பது உணர்த்தும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும்போது இது திரிகடுகம் என்று சொல்லப்பெறும். (பிங்கல நிகண்டு, 352)

• ஆசிரியர்

திரிகடுகம் என்ற உயிர் மருந்து நூலை ஆக்கியவர் நல்லாதனார். ஆதனார் என்பது இயற்பெயர். ‘நல்’ என்பது அடைமொழி. காப்புச் செய்யுளில், பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

நூல் அமைப்பும் சிறப்பும் திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. முதற் பாடலிலேயே நூலின் பெயர்க்காரணத்தை, ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று ஆசிரியரே குறிப்பிடுகின்றார். திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களின் கருத்துகளை இந்நூல் பெரிதும் பின்பற்றுகிறது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும் அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது. இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும் நூலாகும். ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன.

இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது. இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது. இது இல்லறத்தின் உயர்வை உணர்த்தும் வகையில் விளங்குகிறது. ‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி. பெய் எனப் பெய்யும் மழை’ (திரி-96) என்று இல்லறத்தில் மனையாள் பெருமை பேசப்படுகிறது.

பாடுபட்டுச் செல்வத்தைச் சேர்த்து அதைப் பாதுகாக்கவும் முற்படுகின்றனர் மக்கள். தம்மையே புகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தக்கார் துணையைப் பெறுதல் முடியாது. அதனால் அவர்தம் செல்வம் குறையும். காரணமின்றியே பலரையும் சினந்துரைப்பவரிடத்தில் உள்ள செல்வம் பகையினால் அழியும். தன் நிலை அறியாமல் பார்க்கும் பொருளையெல்லாம் விரும்புபவரிடத்தும் செல்வம் நில்லாமல் நீங்கும் என்பதைச் ‘செல்வம் உடைக்கும் படை’ எனக் குறிப்பிடுகிறார்.

தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்

கொன்னே வெகுளி பெருக்கலும் – முன்னிய

பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும்

செல்வம் உடைக்கும் படை

(திரி – 38)

(கொன்னே = வீணாக; வெஃகுதல் = விரும்புதல்)

மேலே கூறிய மூன்றும் செல்வத்தை முற்றிலுமாக அழிக்கும் என்ற கருத்தை இந்தப் பாடல் உணர்த்துகிறது அல்லவா!

அரசர் இயல்பு, அமைச்சர் இயல்பு, இளவரசன், ஒற்றர் ஆகியோர் செய்ய வேண்டுவன என்றெல்லாம் கூறப்படும் கருத்துகள் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய நோய் நீக்கும் மருந்துகளாகும்.

தக்க வயது வந்ததும் திருமணம் செய்து கொள்ள நினைப்பதும், மக்கட் பேற்றை விரும்புவதும் மனித இயல்பு. ஆனால் எல்லோருக்கும் இப்பேறு கிடைப்பதில்லை அல்லவா! மக்கட் பேற்றினைப் பெறவும் மனிதன் நல்ல அறங்களைச் செய்திருக்க வேண்டும் என்று கூறி அறத்தை வலியுறுத்தும் பாடலும் திரிகடுகத்தில் உண்டு (திரி-62).

காப்பாற்ற வேண்டியன பெண்டிர், பொருள், உணவு ஆகியவை இவை உரிய முறையில் காப்பாற்றப் படாமல் போனால் கெட்டுப்போகும் என்று காட்டுகிறது ஒரு பாடல் (திரி-47).

நட்புக் கொள்ளத் தகுதியற்றவர், நட்புக்கொள்ள ஏற்றமுடையவர் யாரென்பதை எடுத்துச் சொல்கிறார் நல்லாதனார் (திரி-12,15).

கல்வியின் பயன்கள் கூறப்படுவதால் கல்வியின் வலிமையும் பயனும் நமக்கு உணர்த்தப்படுகிறது.

வாழ்வியல் உண்மைகள் பல ஆங்காங்கே வெளிப்படுவதைத் திரிகடுகத்தில் காணலாம். எப்படி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதும் பயன்தராத செயல்கள் எவை என்பதும் எடுத்துரைக்கப்படுகின்றன.

பிறப்பு நீக்குவது வாழ்வின் முடிந்த நோக்கமாகும் என்பதையும் திரிகடுகம் எடுத்துரைக்கிறது.

அறத்தின் உயர்வும் சிறப்பும் இளமையில் கல்வி கற்பதும், பெற்றோர்களை வழிபட்டுப் போற்றுதலும், சான்றோர் நெறியில் செல்வதும் உயர்ந்த அறங்களாகும். நல்லவருள் நல்லவர் எனப்படுதல், நட்பு கொள்வதில் சிறந்தவர் எனப்படுதல் ஆகியன நல்லவர் மேற்கொள்ளும் அறங்களாகும்.

உலகிலேயே சிறந்த அறம் வறியவர்க்கு வேண்டுவன கொடுத்தல் ஆகும். வறுமை நிலையிலும் கீழான செயல்களைச் செய்யாதிருத்தல் சிறந்த அறம் ஆகும். (திரி-41)

• இயற்கையும் அறமும்

அறச் செயல்களுக்கும் இயற்கை நெறிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மன்னனும் மக்களும் நெறி தவறி நடந்தால் இயற்கை தன் நிலை மாறும். குடிமக்களை வருத்தி வரி வாங்கும் அரசனுடைய நாட்டில் மழை பெய்யாது. பொய் பேசுபவர் நாட்டில் மழை பெய்யாது. வலிமை வாய்ந்த இயற்கையை நெறிப்படுத்தும் ஆற்றல் அறத்திற்கு உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது திரிகடுகம். (திரி-50)

• அறத்திற்கு வழி வகுப்பன

அறம் செய்தால் இன்பத்தையும் அறம் அல்லாத செயல் செய்தால் துன்பத்தையும் தரும் என்பதை எடுத்துச் சொல்லி மனிதரை நல்வழிப்படுத்துகிறது திரிகடுகம்.

கடன்படாது வாழ்பவன், வந்த விருந்தினரைப் போற்றுபவன், ஒருவர் சொல்லியதை மறவாது மனத்தில் வைப்பவன் இம்மூவரையும் நண்பர்களாகப் பெறுவது நன்மை தருவதாகும். அது அறம் செய்ய வழிவகுப்பதாகும். (திரி-12)

• துன்பம் பயப்பன

மூடரோடு சேர்தல், மன உறுதி கொண்ட மனைவியை அடித்தல், பகைவர் முன்னே தம் செல்வத்தைக் காட்டுதல், பகைவருடன் நட்பு கொள்ளுதல் ஆகியன இறப்பது போன்ற துன்பத்தைத் தரும் (திரி-3).

எனவே, அத்தகையை செயல்களை நீக்க வேண்டும் என்கிறார் நல்லாதனார்.

நல்ல குடும்பப் பண்பு கணவன், மனைவி, மக்கள் அடங்கியது குடும்பம். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பார் பாரதிதாசன்.

குடும்ப உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று திரிகடுகம் சொல்கிறது. ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது ஆன்றோர் வாக்கு. பெற்றோர் ஏவாமல் தாமாகச் செய்யும் இயல்பு மக்களுக்கு வேண்டும். அவர்கள் என்றும் கெடாத நல்ல மருந்தைப் போன்றவர்கள். ஏவியும் கேளாத மக்கள் பயனற்றவர். இல்லறத்தில் தனக்குரிய அறம் மறந்து மனைவியைப் போற்றாத கணவன் பயனற்றவன். செல்வத்தைப் பெருக்குபவளாக மனைவி இருக்க வேண்டும். வீட்டின் செல்வத்தைத் தேய்க்கின்ற மனைவி பயனற்றவள் என்று குறிப்பிடுகிறார் நல்லாதனார் (திரி-49).

தனி மனித நலம் – குடும்ப நலமாய் – சமுதாய நலமாய் விரிகிறது. எனவே, நல்ல சமுதாயம் உருவாக அடிப்படையாய் அமைவது நல்ல குடும்பங்களே. அவை நலம் உடையதாய் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் குடும்ப உறுப்பினர் எப்படி இருக்கக் கூடாது என்பதைச் சொல்லி விளக்கும் பாடலைப் பாருங்கள்.

ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது

வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் – பொய்தெள்ளி

அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்

இம்மைக் குறுதியில் லார்

(திரி – 49)

(இளம்கிளை = மக்கள்; தலைமகன் = கணவன்; வைது = ஏசி; எள்ளி = இகழ்ந்து)

கல்வியின் பயன்கள் சிறந்த கல்வியின் பயன்கள் என்னவென்று பார்ப்போமா? கற்றதன் பயன் கற்றதற்கேற்ப நடந்து கொள்ளும் போதுதான் கிடைக்கிறது. அவ்வாறு நடந்து கொள்ளாதவர்கள் கல்வியறிவைக் கைவிட்டவராவர். எனவே தான் வள்ளுவர்,

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

(குறள் – 391)

என்றார்.

முதுமைக் காலத்தும் ஆசைகளைத் துறக்காதவர்கள், வீண்மொழி பேசும் துறவிகள் ஆகியோர் கல்வியறிவைக் கைவிட்டவர் ஆவர். (திரி-17)

நல்ல கல்வி இப்பிறவியில் மட்டுமல்லாது மறுபிறவிக்கும் பயன் கொடுக்க வல்லது. கல்வி முயன்றும், விரும்பியும் கற்க வேண்டிய ஒன்று என்பது தெளிவாகிறதல்லவா?

• துன்பத்தைத் தருவன

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுதலும் சுற்றத்தார் பசித்திருக்கத் தாம் சோம்பலை மேற்கொள்வதும் கல்லாதவன் என்று ஒருவனை இகழ்தலும் இவை மூன்றும் துன்பத்தைத் தருவன.

வருவாயில் நான்கிலொருபங்கை அறவழியில் செலவு செய்தல், எளிதில் விளங்கித் தோன்றும் சிறப்புடையவராக அமைதல், பலவற்றையும் ஆராய்ந்து நல்லவற்றைப் படித்தல் ஆகியன சான்றோர்க்கு உரிய கொள்கைகளாம். (திரி-21)

• வீடுபேறு அடையவழி

பற்று என்பது ஒருவனைக் கட்டும் விலங்கு; பொருள்களின் மேல் மனம் செல்லவிட்டு அப்பொருள்களை அடைய முயலும் விருப்பமே அவா; பகைவனைப் போலத் தவறாமல் தீங்கு விளைவிப்பது பொய். இந்த மூன்றையும் விலக்க வேண்டும். பற்று, அவா, பொய், ஆகியவற்றை நீக்கினால் வீடுபேறு அடையலாம் என்று கூறுகிறது. (திரி-22)

• உயர்ந்தோர் யார்?

கடமை தவறாத அந்தணன், நெறி தவறாத மன்னன், கவலையில்லாத குடிமக்கள் ஆகியோர் உயர்ந்தோர் எனப் போற்றப்படுவர். (திரி-34)

• பிறந்தும் பிறவாதார்

அருளில்லாதவனும், பொருளினைத் தானும் அநுபவிக்காமல் பிறர்க்கும் கொடுக்காமல் பூமியில் புதைத்து வைப்பவனும், பிறர் மனம் வருந்தும்படி பேசுகின்றவனும் ஆகிய இம்மூவரும் மக்களாய்ப் பிறந்தும் பிறவாதவர் ஆவார். (திரி-92)

பிற உண்மைகள் அறநெறியில் ஒழுகுதல் பற்றியும், இல்லாவிடில் வரும் கேடு பற்றியும், கல்வியின் பயன்கள் பற்றியும் பார்த்தோம். இனி உலகியலில் சில உண்மைகள் கூறி மனித வாழ்வை நெறிப்படுத்தும் பணியைப் பற்றித் திரிகடுகப் பாடல்கள் சொல்வதைக் காண்போமா!

• எச்சரிக்கையாய் இருக்க வேண்டுவன

வாழ்க்கையில் எது குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்? பின்னால் வரவிருக்கும் முதுமைப் பருவம், நண்பரிடையே பெருந்துன்பத்தைத் தரும் பிரிவு, உடம்பைக் கரையச் செய்து வருத்துகின்ற தீராத நோய் ஆகிய மூன்றும் கள்வரை விட அஞ்சக்கூடியன. அவற்றுக்கு அஞ்சி அதனால் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதை,

ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்கு

இருதலையும் இன்னாப் பிரிவும் – உருவினை

உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும்

கள்வரின் அஞ்சப் படும்

(திரி-18)

என்ற பாடல் உணர்த்துகிறது.

• பயன் தராத செயல்கள்

காலம் பொன்னை விட மேலானது. காலத்தை நாம் பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும் அல்லவா? அரிய பகைவனுடன் போரிடும் முயற்சி வீண். அறிஞர் அவைக்கு அஞ்சுபவன் கற்ற நூல் யார்க்கும் பயன்படாது வழக்கைத் தீர்க்கும் திறம் இல்லாதவர் சபையில் இருப்பதும் பயனற்றதே என்று காட்டுகிறது திரிகடுகம். (திரி-10)

ஒரு சிலர் மற்றவர் கல்வித் தகுதியை ஆராயாது குறை கூறிக் கொண்டே இருப்பர். இது போன்ற வீண் செயல் வேறெதுவும் இல்லை என்பதை மிக எளிய உவமையினால் விளக்குகிறது திரிகடுகம். ஒருவன் கல்வித் தகுதியை ஆராயாது குற்றம் கருதுதல் உமியைக் குத்துவது போலப் பயனற்றது என்கிறது. (திரி-28)

சிலர் வெகுண்ட பேச்சால் பிறரை வெல்லலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அது பயன் தராது என்கிறது திரிகடுகம்(28). தமக்கு வரும் துன்பம் கண்டு அஞ்சாதவரோடு கொண்ட நட்பு, விருந்தோம்பாத குணமுடைய மனைவியோடிருப்பது, நற்குணமில்லாதவர் அருகில் குடியிருப்பது ஆகியவை பயனற்றவை என்றும் காட்டுகிறது (திரி-63)

சிறுபஞ்சமூலம்

இனி இரண்டாவது மருந்து நூலாகிய சிறுபஞ்சமூலம் பற்றிப் பார்ப்போமா?

பஞ்ச என்ற சொல் ஐந்து என்ற எண்ணைக் குறிக்கும். மூலம் என்றால் வேர் என்று பொருள். மருத்துவ நூலில் கூறப்படும் ஐந்து வேர்கள் பின்வருவன: அவை

1.    கண்டங்கத்தரி வேர்

2.    சிறு வழுதுணை வேர்

3.    சிறுமல்லி வேர்

4.    நெருஞ்சி வேர்

5.    பெருமல்லி வேர்

என்பனவாகும்.

இந்த ஐந்து வேர்களும் மக்களின் உடல் நோயைத் தீர்க்க வல்லன. இது போல் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து பொருள்களும் மக்களின் பிறவி நோயைத் தீர்க்க வல்லன. அவை சிறந்த அற நெறிகள். நூலின் பெயர்க் காரணத்தை ஆசிரியர்,

ஒத்த ஒழுக்கம் கொலைபொய் புலால்களவொடு

ஒத்த இவையலவோர் நாலிட்டு – ஒத்த

உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர்

சிறுபஞ்ச மூலம் சிறந்து

(சிறுபஞ் – 1)

என்று முதல் பாடலில் கூறுகிறார்.

இதன் விளக்கமாவது:

கொலை, பொய், புலால், களவு ஆகியவற்றுக்கு மாறான கொலை செய்யாமை, பொய் கூறாமை, புலால் உண்ணாமை, களவு செய்யாமை ஆகிய நான்குடன் ஒழுக்கம் என்பதையும் இணைத்து, ஐந்தின் கூட்டாகச் சிறுபஞ்சமூலம் என்னும் இந்நூல் அமைந்துள்ளது. பஞ்சத்தைப் போக்கும் மழைபோல. இந்நூல் மக்களின் அறியாமையைப் போக்கும். மக்கள் மனத்தில் பதியுமாறு இதனை எடுத்துச் சொல்லுங்கள்.

• ஆசிரியர்

சிறுபஞ்ச மூலம் நூலின் ஆசிரியர் காரியாசான். காரி என்பது இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் வந்த பெயர்.

இவர் மாக்காயன் என்பவருடைய மாணவர். ‘மழைக்கை மாக்காரி யாசான்’ என்ற தொடர் நூலாசிரியர் கொடை வள்ளல் என்பதைப் புலப்படுத்துகிறது. இவரது காலம் நான்காம் நூற்றாண்டு.

ஆசிரியர் கொல்லாமையை வலியுறுத்திக் கூறுவதால் (சிறுபஞ். 51), அவர் சமண சமயத்தில் ஈடுபாடுடையவர் என்று கொள்ளலாம்.

நூல் அமைப்பும் சிறப்பும் சிறுபஞ்ச மூலத்தில் பாயிரச் செய்யுள் உட்பட 100 செய்யுள்கள் உள்ளன. பாடல்கள் நேரிசை வெண்பாவால் ஆனவை. முன்பு கூறியது போல் ஐவகை வேர்களும் நோயை நீக்குகின்றன. அதைப் போல் இந்த நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து கருத்துகளும் மக்களை நல்வழிப்படுத்தும் அறநெறிகளாகும். அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுமாறு ஆசிரியர் வலியுறுத்துகிறார். இந்த அறக்கருத்துகளே நூலில் பாடுபொருளாக விளங்குகின்றன. பல பாடல்கள் ‘மகடூஉ முன்னிலை’யாக அமைந்துள்ளன. ‘மகடூஉ முன்னிலை’ என்பது. ஒரு பெண்ணை நோக்கிக் கூறுவது போல, பாடலை அமைப்பது. எடுத்துக்காட்டாக, ‘கண்டல் அவிர்பூங் கதுப்பினாய்’ (சிறுபஞ். 14 தாழைமலர் அணிந்த கூந்தலையுடையவளே! என்பது இதன் பொருள்). பாடல்கள் 48,54,89,92 ஆகியவற்றிலும் இது போன்ற விளிகளைக் (அழைப்புகள்) காணலாம்.

இனி, சிறுபஞ்ச மூலம் கூறும் நெறிமுறைகளைப் பார்ப்போமா? உலகில் பஞ்சத்தின் காரணமாக ஏற்படும் விளைவின்மையை மழை நீக்குகிறது. அதுபோல் உடலுக்கு ஏற்பட்ட நோயைச் சிறுபஞ்சமூலம் என்ற மருந்து நீக்குகின்றது. அங்ஙனமே உயிரைப் பற்றிய பிணிகளைச் சிறுபஞ்ச மூலம் போக்குகிறது.

உயிரைப் பற்றிய பிணிகள் கொலை, பொய், புலால் உண்ணுதல், களவு செய்தல் என்பனவாகும். அவற்றிற்கு மருந்தாக அமையக் கூடியவை

1.     அருளுடைமை

2,     மெய்ம்மை

3.     புலால் உண்ணாமை

4.     திருடாமை

ஆகிய நான்கும் மருந்தாக அமையும். இந்த மருந்துகளைச் சிறுபஞ்சமூலம் விளக்குகிறது.

அறமும் அறச்செயல்களின் சிறப்பும் இந்நூலில் பேசப்படுகின்றன. வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை ஐந்து வகையாகப் பகுத்துரைக்கின்றார் காரியாசான். அறிவுடையார் செயல்கள், அறிவற்றோர் செயல்கள் ஆகியவை பகுத்துரைக்கப்படுகின்றன.

எது அழகு என்பது சுட்டப்படுகிறது. ஆசிரியரும் மாணாக்கரும் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இவ்வுலகில் ஒரு நோயும் இன்றி வாழ்பவர் யார், எண்பதாண்டுகளுக்கு மேலும் வாழ்பவர் யார் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

மக்கட்பிறவியும், அப்பிறவிப்பயனும் பற்றிக் கூறப்படுகிறது. யாருக்கு மீண்டும் பிறவி இல்லை என்பதை இரண்டு பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. ஆண்டுக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அருமையான பாடல்களும் சிறுபஞ்சமூலத்தில் உண்டு. அரசர், அமைச்சர், தலைவன், உழவர் ஆகியோர் இயல்புகள் வரையறுக்கப்படுகின்றன. பொது நல உணர்வுடையவன் சுவர்க்கம் புகுவான் என்ற கருத்தமைந்த பாடலும் உண்டு.

குளத்தைத் தோண்டல், மரக்கிளைகளை வெட்டி நடல், பாதைகளை அமைத்தல், மேடான நிலங்களை உள் தோண்டல், உழுகின்ற வயலாக்குதல், வளம்படத் தோண்டி கிணற்றை உண்டாக்குதல் ஆகிய ஐந்தும் மிகுதியாகச் செய்தவனே சுவர்க்கம் புகுவான் என்கிறார் காரியாசான் (சிறுபஞ்-66).

காரியாசான் சிறுபஞ்சமூலம் என்ற நூலின் வாயிலாகப் பண்டைய தமிழரின் வாழ்வியல் மதிப்பீடுகளை எடுத்துக்காட்டுகிறார். அறநெறிகளே சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை விளக்குவதே இந்நூலின் நோக்கமாக அமைவதைக் காணலாம். அவ்வாறு விளக்கும் போது விலங்குகளையும், மரங்களையும், பறவைகளையும் ஒப்பிடுவது சிறப்பாக உள்ளது. பூவாது காய்க்கும் மரங்கள், பூத்தும் காய்க்காத மரங்கள், காக்கைகள், செவ்வெறும்புகள், நண்டு, சிப்பி, வேய், கதலி ஆகியவற்றின் இயல்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்ற வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகிறார். உறுதிப் பொருள்களை எடுத்துரைக்கும் காரியாசான் அறவழியே நில்லுங்கள் என்று ஊக்கப்படுத்துகிறார். ஐந்து வேர்கள் உடல் நோயைத் தீர்க்கின்றன. அதுபோல இங்குக் கூறப்படும் உறுதிப் பொருள்கள் வாழ்வைத் தெளிவாக உணர்ந்து கொள்ளவும். வழி நடக்கவும் துணை புரிகின்றன. பிறவிப் பிணியைத் தீர்க்க வல்ல அருமருந்தாகவும் அது அமைகிறது. சிறு பஞ்சமூலம் சொல்லும் பெருநெறிகள் இவையே.

அறச்சிறப்பு கொல்லாமை, பொய்யாமை, புலால் உண்ணாமை, களவு செய்யாமை இவை நான்குடன் இவை அல்லாத ஏனைய அறங்கள் எல்லாம் ஓர் அறமாகக் கொண்டால், இந்த ஐவகை அறங்களும் மக்கள் வினையைத் தீர்க்கும் வலிமை படைத்தன என்கிறார் காரியாசான் (சிறுபஞ்-1).

குழந்தை நலன் காத்தல் நோயற்ற நல்ல சமுதாயத்தை உருவாக்குவதற்குரிய முதற்படி அல்லவா? அதனை விரிவாகப் பேசுகிறது சிறுபஞ்ச மூலம். ஈன்ற தாய் தன் குழந்தையை வளர்த்தல், தான் கொண்ட சூலை அழியாது காத்தல், வளர்ப்பார் இல்லாத குழவியை வளர்த்தல், சூல் ஏற்ற கன்னியையும் மிகவும் வருந்தியவனையும் தன் வீட்டில் வைத்துப் போற்றுதல் இவை பெரிய அறங்களாகும் என்பர் சான்றோர். இவை இக்காலத்துக்கும் மிகப் பொருந்துகின்றன அல்லவா?

• இல்லறச் சிறப்பு

மனைவியோடு கூடி வாழும் இல்வாழ்க்கை, துறவறத்திலும் நன்றாகும். நல்ல துறவறத்தார்க்கு உணவை ஆக்கியிட்டுத் தாமும் உண்ணும் சிறப்புடையவர்கள் இல்லறத்தார். இல்வாழ்க்கையைச் செம்மையாக நடத்தினால் அதுவே துறவற வாழ்க்கைக்கு ஒப்பாகும் என்கிறது சிறுபஞ்சமூலம் (92)

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்

போஒய்ப் பெறுவது எவன்

(குறள் – 46)

என்ற குறட்பாக் கருத்தை அடியொற்றி மேற்கூறிய கருத்து அமைவதைக் காணலாம்.

• ஈகை

இல்லறநெறியில் ஈகைக்கு இன்றியமையாத இடமுண்டு. ஈகைக்கு அடிப்படையாக அமைவது உள்ள நெகிழ்ச்சி. இரவலரைக் கண்டால் உள்ளம் நெகிழ்ந்து அவர்க்குத் தேவையானதைத் தர வேண்டும். எதைப்போல் உள்ளம் நெகிழ வேண்டும் என்று காரியாசான் சொல்கிறார் என்று பார்க்கலாமா?

நெருப்பைக் கண்ட வெண்ணெய், மெழுகு, நீர் சேர்ந்த மண், உப்பு, தன் அழகிய மகனைத் தழுவிய தந்தை என்று சொல்லப்பட்ட ஐந்தனுள் ஒன்றுபோல் இரவலரைக் கண்டால் உள்ளம் நெகிழ்ந்து ஈயவேண்டும். அவ்வாறு ஈயும் பொருள் சிறிதாயினும் அதனால் வரும் பயன் குன்று போலப் பெரிதாய்க் கூடும் என்று ஈகைச் சிறப்பு பேசப்படுகிறது. பாடலைப் பாருங்கள்,

வெந்தீக்காண் வெண்ணெய் மெழுகுநீர்சேர் மண்உப்பு

அந்த மகற்சார்ந்த தந்தையென்று – ஐந்தினுள்

ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயிற் சிறிதெனினும்

குன்றுபோல் கூடும் பயன்

(சிறுபஞ்-65)

(அந்த மகன் = அழகுடைய மகன்)

வாழ்வாங்கு வாழ்வார் நம் கண் முன்னால் நோய்வாய்ப்பட்டுத் துன்புறுவார் பலரைக் காண்கிறோம். ஒரு சிலரே நோயற்று வாழ்கின்றனர். இதன் காரணம் என்ன என்று ஆராய்ந்து சொல்கிறார் காரியாசான்.

நோயுற்றவர் கலங்கித் துன்புறுகின்றனர். மருத்துவர் சிலரோ கல் நெஞ்சம் உடையராகி நோயுற்றாரிடம் மிகுதியான பணம் கேட்கின்றனர். இரக்கமுள்ள மருத்துவர் நோயுற்றவரிடம் இனிமையாகப் பேசி நன்மருந்து தந்து அவர் உடல் நோயினைத் தீர்க்கின்றனர். மிகக் கொடிய தலைநோய் உற்றார், பித்தேறியவர், வாய்ப்புற்று உடையவர், சயநோய் உடையவர், மூலநோய் கண்டவர் ஆகியோர் நோய்களைத் துடைத்த அருளாளரே ஒரு நோயும் இன்றி வாழ்கின்றனர் என்கிறார் காரியாசான். (சிறுபஞ்-76)

• நீண்ட நாள் வாழ்வார்

பஞ்ச காலத்திலும் பகுத்து உண்பவர். மற்றவர்க்குக் கொடுத்து உண்பவர், படையுடைந்த காலத்து அஞ்சாது புகுந்து பலரையும் காக்கின்றவன், எந்நாளும் மற்றவர்க்குக் கொடுத்த பின்னரே உண்கின்றவன், பசித்த குழந்தைகளுக்குச் சோறளிப்பவன் ஆகியோர் எண்பது ஆண்டுகளுக்கு மேலும் வாழ்வார் என்று கூறுகிறது. (சிறுபஞ்-79)

மரங்களும் மக்கள் வாழ்க்கையும் பலா முதலிய மரங்கள் வெளிப்படையாகத் தெரியும் வகையில் பூக்காமல் காய்க்கின்றன. பூத்தாலும் காயாத பாதிரி முதலான மரங்களும் இருக்கின்றன. நூல்களைக் கற்றுவல்ல மேதையர் வயதில் இளையராயினும் அறிவினால் மூத்தவரே. நூல்களைக் கற்றுத் தெளியாத பேதையர் வயதில் முதிர்ந்தவர் ஆயினும் அறிவில் சிறியவரே.

ஆண்டில் இளைஞராயினும் அறிவினால் மூத்தவர் சிலர் வெளிப்படையாகப் பூக்காமல் காய்க்கும் மரம் போன்றவர்கள் (அத்தி, ஆல், பலா, அரசு போன்ற மரங்கள்). பிறர் அறிவிக்காமலேயே அறிவுடைய அறிவுடையோரும் உள்ளனர். இவர்கள் பாத்தி கட்டி விதைக்காமலே முளைக்கின்ற விதை போன்றவர்கள் என்று கூறுகிறது சிறுபஞ்ச மூலம் (22).

வயதும் அறிவும் பற்றி விளக்கும் பாடல்களைப் பாருங்கள்.

பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்

மூவாது மூத்தவர் நூல்வல்லார் – தாவா

விதையாமை நாறுவ வித்துள மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு

(சிறுபஞ் – 22)

(நாறுவ = முளைப்பன)

பூத்தாலுங் காயா மரம்உள நன்றறியார்

மூத்தாலும் மூவார்நூல் தேற்றாதார் – பாத்திப்

புதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்கு

உரைத்தாலும் செல்லா துணர்வு

(சிறுபஞ் – 23)

(நாறாத = முளையாத, பேதை = அறிவில்லாதவன்)

பிறவியற்றவர் உலகில் பிறப்பற்று வாழ்பவர் யார் என்று காட்டுகிறார் காரியாசான். கள் உண்ணாமலும், சூதாடாமலும் கயவருடன் நட்புக் கொள்ளாமலும், பிறர் மனம் வருந்த வன்சொல் கூறாமலும் , ஊன் உண்ணாமலும் இருப்பவர் மீண்டும் பிறத்தல்இல்லை என்பது ஆசிரியர் எண்ணம். (சிறுபஞ்-21)

மக்களாய்ப் பிறந்தும் இரண்டு கால் மாடுகள் என்று யாரைச் சொல்கிறார் காரியாசான் என்று பார்ப்போமா? முன்பு பொருள் உடைமையால் துன்பமில்லாமல் வாழ்ந்தோம் என்போரும், முன்பு யாமே அழகு உடையராய் இருந்தோம் என்று செருக்கித் திரிவோரும் இரண்டு கால்களோடு உலவும் மாடுகளுக்கு ஒப்பாவார் என்று கூறுகிறார். (சிறுபஞ்-20)

வாழ்வியல் உண்மைகள் வாழ்வியல் உண்மைகள் பலவற்றைக் காரியாசான் நூலின் இடையிடையே எடுத்துரைக்கின்றார். எது நன்று? எது நன்றன்று? எது வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதைப் பார்ப்போமா?

• எது நன்று? எது நன்றன்று?

பிறர் செய்த பிழையைப் பொறுத்தல் நன்று. பிறர் செய்த தீங்கை எண்ணிக் கொண்டிருத்தல் நன்றன்று. பிறர் பகை கெடவாழ்தல் நன்று (சிறுபஞ்-16).

• எது வேண்டும்? என்ன செய்ய வேண்டும்?

பிறவி நீங்கத் தவம் செய்க. புகழ் வேண்டும் எனில் ஈதலைச் செய்க. இரக்கம் வேண்டுமெனில் பிறர் மனை விரும்பாமை வேண்டும். தினம் சிறிதேனும் பொருள் சேர்த்தால் செல்வம் பெருகும் என்று ஒருவர் செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர். (சிறுபஞ்-5).

ஒருவனுடைய நாவில் தோன்றும் வசை மொழிகளே அவனுக்கு எமனாகும் என்ற கருத்தை எப்படிச் சொல்கிறார் காரியாசான் என்று பாருங்கள்.

சிலம்பிற்குத் தன்சினை கூற்றம் நீள்கோடு

விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் – வலம்படா

மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன் பார்ப்பு

நாவிற்கு நன்றல் வசை

(சிறுபஞ் – 11)

(கூற்றம் = எமன், கோடு = கொம்பு, வலம் = வெற்றி, மா = மான், ஞெண்டு = நண்டு, பார்ப்பு = குஞ்சு)

1.    சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டை எமன்

2.    மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகள் எமன்

3.    கவரிமானுக்கு அதன் மயிர் எமன்

4.    நண்டுக்கு அதன் குஞ்சு எமன்

5.    ஒருவன் நாவில் தோன்றும் வசைமொழியே அவனுக்கு

எமன் என்கிறார்.

நண்டு, சிப்பி, வேய், கதலி ஆகியவை நாசமுறும் காலத்தில் கொண்ட கருவழிக்கும் என்ற (நல்வழி-36) பாடல் அடி இந்த நான்கிற்கும் அவற்றின் குஞ்சே எமன் ஆகும் என்ற கருத்தை அரண்செய்யும் வகையில் உள்ளது.

• எல்லாச் செயலும் யார்க்கும் எளிதன்று

1.    வலிய தூக்கணாங் குருவி செய்யும் கூடும்

2.    பேரெறும்புகளால் செய்யப்படும் அரக்கும்

3.    தூய உலண்டு (ஒருவகைப் புழு) என்னும் புழுக்களால்

நூற்கப்பட்ட நூலும்.

4.    கோல் புழுவால் செய்யப்பட்ட கோல் கூடும்

5.    தேனீக்களால் திரட்டப்பட்ட தேன் பொதியும்

மற்றவர்களாலே செய்ய முடியாது. அவற்றாலேயே எளிதாக உருவாக்க முடியும். கற்றவர் அவற்றைத் தம்மால் செய்ய முடியும் என்று செய்ய முற்படார் . ஒவ்வொருவர்க்கும் அவரவர் செய்யும் செயல் எளிது. பிறர் செய்யும் செயல் அரிது என்பதை எவ்வளவு எளிமையாகச் சொல்கிறது சிறுபஞ்சமூலம் (27)!

• உறுதிப் பொருள்கள்

சிறுபஞ்சமூலம் கூறும் ஐந்து உறுதிப் பொருள்களும் மக்களை எச்சரிக்கை செய்து வாழ்வை நெறிப்படுத்துவனவாய் அமைகின்றன. அவை:

1.    நற்குணம் உடையவரைச் சேருங்கள்

2.    பிறர் பொருளைக் கவர நினைக்காதீர்கள்

3.    தீக்குணம் உடையவரை ஒழியுங்கள்

4.    தீய சொற்களைப் பேசாதீர்கள்

5.    இயமன் வருவது உறுதி

என்பனவாகும்(26).

ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதி என்பதும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏலாதி என்பது ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறு பொருள்களும் ஒரு குறிப்பிட்ட அளவோடு சேர்க்கப்பட்ட ஒரு வகை சூர்ணமாகும். இது உடலுக்கு வலிமை, பொலிவு, தெம்பு ஆகியவற்றைத் தரவல்லது. அதுபோல இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஆறு கருத்துகளும் மக்களின் அறியாமை நோயை நீக்கி அறிவைத் தரவல்லன. அதனால் இந்நூலுக்கு ஏலாதி என்ற பெயர் வந்தது என்பர். மருந்துப் பெயர் பெற்ற கீழ்க்கணக்கு நூல்கள் மூன்றனுள் இது மூன்றாவதாகும்.

ஆசிரியர் நூலின் ஆசிரியர் கணி மேதாவியார். இவரைக் கணி மேதையார் என்றும் அழைப்பர். கணித மேதை என்னும் தொடரினைக் கொண்டு சோதிடத்தில் வல்லவர் என்பர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திணைமாலை நூற்றைம்பதினை இயற்றியவரும் இவரே என்பர். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.

நூலின் அமைப்பும் பாடுபொருளும் இந்நூல் 82 பாடல்களைக் கொண்டுள்ளது. சிறப்புப்பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் ஆகிய இரு பாடல்களும் இதில் அடங்கும். இந்நூலும் ‘மகடூஉ முன்னிலை’ அமைப்பைக் கொண்டது. அதாவது, ஒரு பெண்ணை விளித்து, அவளுக்கு ஒரு கருத்தைக் கூறுகிற வகையில் பாடலை அமைப்பது. 1, 2, 6, 7, 13, 21, 28, 29, 31, 32, 33, 56, 76 ஆகிய எண்களைக் கொண்ட செய்யுள்களில் இந்த விளியைக் காணலாம்.

சமண சமயத்திற்குரிய சிறந்த அறநெறிகளாகிய கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை முதலியவற்றையும் காமம், கள் ஆகியவற்றையும் நீக்க வேண்டுமென்பதை வலியுறுத்திக் கூறுகிறது. இல்லறம், துறவறம் ஆகிய நெறிகளையும் விளக்குகிறது. சமண சமய நூலாக இருந்தாலும், இதில் கூறப்பட்டுள்ள அறநெறிகள் அனைவர்க்கும் பொதுவான பொதுமை நெறிகளாக அமைந்துள்ளமை இதன் சிறப்பு எனலாம். இந்நூலாசிரியர் காலம் நான்காம் நூற்றாண்டு.

உண்டி கொடுத்தலின் பயன் துறவிகள், மாணவர், வறியவர், தென்புலத்தார், துணையற்றவர், சிறுவர், சான்றோர் ஆகிய இவர்களுக்கு நல்ல உணவைப் பகுத்துக் கொடுத்தவர் மறுமையில் மன்னராய் ஆட்சி செய்வர் என்று கூறுகிறார் ஆசிரியர் (ஏலாதி-35).

பொய் பேசாமல், பிறர் சொல்லும் பொய்மைக்கு இணங்காமல், புலால் உண்ணாமல், எவரையும் வையாமல், விருந்தினர் முகம் கோணாது முகம் மலர்ந்து பகுத்துக் கொடுத்து உண்பவர் மண்ணரசராகி மகிழ்ந்து புகழ் பெறுவர் என்று ஏலாதி கூறுகிறது. (ஏலாதி-44).

இதுபோல் 21 பாடல்களில் ஆதரவற்றோர்க்கு உணவு, உடை, கொடுத்து ஆதரிப்பவர், தீயனவற்றைப் பேசாமலும், செய்யாமலும் உள்ளவர்கள், நோய் தீர்ப்போர் முதலியவர்கள் மண்ணாளும் அரசராவர் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதன் மூலம் பசித்துயரம் நீங்க உணவு கொடுத்து ஆதரிப்பவர் பெருவாழ்வு பெறுவர் என்ற கருத்தை ஏலாதி உறுதிப்படுத்துகிறது.

விண்ணுலகை அடையும் நெறி கொலை செய்யாது, மற்றவரைத் துன்புறுத்தாது வாழ்பவர், வஞ்சியாதவர் ஆகியோர் விண்ணவர்க்கும் மேலாவர் என்று உரைக்கிறது ஏலாதி (ஏலாதி-2). இது விருந்தாய் வருகின்ற அனைவரிடத்தும் இன்சொல் கூறி அறுசுவை உணவு அளித்தல் விண்ணக வாழ்வை அளிக்கும். விண்ணுலக வாழ்வினை அடைவதற்கான வழிகள் கூறப்படுகின்றன (ஏலாதி 7, 20, 32, 33, 34, 36, 40). இவற்றுள் பொய்யாமையும் கொலை புரியாமையும், புலால் உண்ணாமையும், உணவு கொடுத்தலும் ஆகிய அறங்களே விண்ணுலக வாழ்வினை அடையும் வழிகளாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக,

காலில்லார் கண்ணில்லார் நாவில்லார் யாரையும்

பாலில்லார் பற்றிய நூலில்லார் – சாலவும்

ஆழப் படும் ஊண் அமைத்தார் இமையவரால்

வீழப் படுவார் விரைந்து

(ஏலாதி-36)

கை கால் இழந்தவர், பார்வையற்றவர், ஊமையர், தமக்குத் துணையாக எவருமே இல்லாதவர், நூலறிவு இல்லாதவர் முதலியவர்களுக்கு வயிறார உணவளித்தவர்கள் தேவர்களால் விரும்பிப் போற்றப்படுவார்கள் என்பது இச்செய்யுளின் கருத்து.

கற்றவர்க்கு ஒப்பாவான் கல்வியின் சிறப்பை இலக்கியத்தில் பல நிலைகளில் எடுத்துரைப்பதைப் பார்த்திருப்பீர்கள். கற்றவர் என்று யாரைச் சொல்லலாம் என்று ஏலாதி கூறுவதைப் பாருங்கள்.

துன்பம் தீர்த்தல், பிறரை இகழாமை, கீழ்மைப் பண்புடைய மக்களோடு பழகாமை, பசித்துன்பம் போக்குதல், உலகம் பழிக்கும் நடையினின்று நீங்குதல், இனிய சொல் உடையவன் ஆதல் ஆகிய பண்புகளை உடையவன் கற்றவர்க்கு ஒப்பாவான் என்று காட்டுகிறது ஏலாதி. (ஏலாதி-4)

அந்தப் பாடலைப் பாருங்கள்.

இடர்தீர்த்தல் எள்ளாமை கீழ்இனம் சேராமை

படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் – நடைதீர்த்தல்

கண்டவர் காமுறும்சொல் காணில் கல்வியின்கண்

விண்டவர்நூல் வேண்டா விடும்

(ஏலாதி – 4)

(இடர் = துன்பம்; எள்ளாமை = இகழாமை; படர் = துன்பம் (பசித்துன்பம்) பழிப்பின் நடை = பழிப்பதற்குரிய நடை; காமுறும் சொல் = இன்சொல்; விண்டவர் நூல் = மேலோர் கூறிய ஒழுக்க நூல்கள்)

கல்வியின் பயன் நல்லொழுக்கத்தையும் நல்ல நெறிகளையும் உடையவராகச் செய்தலேயாகும். ஒருவர் மேற்கூறிய பண்புகளைப் பெற்றிருப்பாரேயாயின் அவர் கல்வியின் பயனை அடைந்ததாகவே கருதலாம். ஆனால், அத்தகையோர்க்குச் சான்றோர்களின் அறநூல்களும் தேவையற்றுப் போய்விடும்.

விருந்தோம்பல் பண்பு இல்லறத்திற்குரிய சிறந்த பண்பல்லவா? அதுபற்றி ஏலாதி என்ன சொல்கிறது? விருந்தினரிடம் இன்சொல் கூறலும், கலந்துறவாடலும் இருக்கை உதவலும், அறுசுவை உணவு அளித்தலும், கடுஞ்சொல் ஒழித்து மென்சொல் வழங்குதலும் ஒருவனிடம் அமைந்தால் அவனை வானோர் விருந்தினராய் ஏற்றுக்கொள்வராம் (ஏலாதி-7).

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு

(குறள் : 86)

என்ற குறட்பாக் கருத்தையொட்டி இது அமைந்துள்ளது.

இல்லறச் சிறப்பையும் புலனடக்கச் சிறப்பையும் எடுத்துரைக்கிறது. அமைச்சனாகும் தகுதி யாருக்கு உண்டு, தூதர் பண்புகள் யாவை என்பன போன்ற அரசியல் கருத்துகளையும் குறிப்பிடுகிறது இந்நூல்.

உடல் உறுப்புகளின் தொழில் ஆறு வகைப்படும் அவை உறுப்பினை எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிற்றல், கிடத்தல், ஆடுதல் என்பன என்று விவரிக்கிறது ஒரு பாடல் (ஏலாதி-69).

உடல் உறுப்புகளின் அழகெல்லாம் அழகல்ல. கல்வியழகே அழகு என்று காட்டுகிறது இன்னொரு பாடல் (ஏலாதி-74).

பல்லுயிர்க்கும் தாய் அறநெறிப்படி வாழ்வை நடத்துபவன் எப்படி இருப்பான்? புலனடக்கம், பிறர்க்கு ஈதல், பொறுமை, பொய் சொல்லாமை, ஊன் உண்ணாமை, நற்குணமுடைமை முதலிய ஆறு பண்புகளை உடையவனாக இருப்பான். அவன் பல உயிர்கட்கும் தாய்போலும் அன்பினை உடையவன் என்று தாய்மையைச் சிறப்பிக்கும் பாடலைப் பாருங்கள்.

நிறையுடைமை நீர்மை உடைமை கொடையே

பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண் – மறையுடைமை

வேயன்ன தோளாய் இவை உடையான் பல்லுயிர்க்கும்

தாய்அன்னன் என்னத் தகும்

(ஏலாதி-6)

(நிறை = மனக்கட்டுப்பாடு; நீர்மை = நற்பண்பு; வேயன்ன தோளாய் = மூங்கில் போன்ற தோள்களை உடைய பெண்ணே! (இது விளி) )

காலனுக்கு அஞ்சுக ஒருவருடைய வாழ்நாளின் இறுதிக்காலம் அறிந்து வருபவன் காலன். அவன் பகைவனின் வாளுக்கும் அஞ்சான். கண்ணோட்டம் இல்லாத வீரத்துக்கு அஞ்சான், ஆண்மைத் தோற்றம் கண்டு அஞ்சான், ஆட்சியைக் கண்டு அஞ்ச மாட்டான், பொருளுக்கும் அஞ்சான். எதற்கும் அஞ்சாது வருவான். அவன் வருமுன்னே நல்லொழுக்கம் மேற்கொண்டு வீட்டு நெறி நிற்றல் வேண்டும் என்கிறார் கணிமேதையார்.

வாளஞ்சான் வன்கண்மை அஞ்சான் வனப்பஞ்சான்

ஆள்அஞ்சான் ஆம்பொருள் தான்அஞ்சான் – நாளெஞ்சாக்

காலன் வரவொழிதல் காணில் வீடெய்திய

பாலின்நூல் எய்தப் படும்

(ஏலாதி – 22)

(நாள் எஞ்சா = குறிப்பிட்ட நாள் தவறாத, வீடெய்திய பாலின் நூல் = வீடு பேற்றுக்கு வழி கூறும் நூல்கள்)

காலன் வராமல் தடுப்பது எப்படி? காலனுக்கு அஞ்சி அறம் (தவம்) செய்து வீடுபெற முயல வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாடலைப் பார்ப்போமா?

அழப்போகான், அஞ்சான் அலறினால் கேளான்

எழப்போகான் ஈடற்றார் என்றும் – தொழப்போகான்

என்னேஇக் காலன்ஈடு ஓரான் தவமுயலான்

கொன்னே இருத்தல் குறை

(ஏலாதி – 37)

(அலறி = கதறி, எழ = எழுந்து உபசரித்தாலும், ஈடற்றார் = வலிமையில்லாதவர், ஓரான் = உணராமல், கொன்னே = வீணாக, குறை = தவறு)

சுவர்க்கமும் வீடும் சுவர்க்கமும் வீடுபேறும் பற்றி ஏலாதி இன்னும் என்னவெல்லாம் சொல்கிறது பாருங்கள்.

ஒருவன் கொடையினால் இம்மையில் இன்புற்று வாழலாம். தவத்தினால் விண்ணுலக வாழ்வு பெறலாம்.

மெய்யுணர்வினால் வீடு பேற்றை அடையலாம் என்கிறார் கணி மேதையார். விண்ணுலக வாழ்வினும் மேலான தன்மை உடையது வீடுபேறு என்னும் உண்மை இங்கு வலியுறுத்தப்படுவதைக் காணலாம் (ஏலாதி-76). தவம் இரண்டு வகையினதாகக் கூறப்படுகிறது. பயன் கருதிய தவத்தினால் விண்ணுலகம் எட்டும். பயன்கருதாத, மெய்யுணர்வு பொருந்திய தவ ஒழுக்கத்தால் வீடுபேறு கிட்டும்.

மும்மருந்தும் கூறும் முடிவு திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய மும்மருந்துகளின் பெயர்களால் அமைந்த நூல்களில் காணும் உண்மைகள் என்னவென்று பார்ப்போமா?

பணிவுடைமை முதலிய நல்லொழுக்கம் மேற்கொள்ளுதல், கொலை புரியாமை, புலால் உண்ணாமை, அருளுடைமை, இனிய முகத்துடன் வேண்டுவார்க்கு உணவு கொடுத்தல் ஆகிய இவையே இம்மைக்கும் மறுமைக்கும் பெருவாழ்வு தருவன.

தொகுப்புரை

திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய மூன்று நூல்களைப் பற்றி இப்பாடத்தில் பார்த்தோம். கீழ்க்கணக்கு நூலில் திரிகடுகம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்துப் பொருள்களைக் குறிக்கிறது. இவை உடல் நோயைத் தீர்க்க வல்லதைப் போல் திரிகடுக நூலில் கூறப்படும் கருத்துகளும் மக்களுடைய உள நோயைத் தீர்ப்பதாகும்.

அறத்தின் உயர்வு, இயற்கையும் அறமும், அறமும் இன்ப துன்பமும் என்று பல கோணங்களில் நல்லாதனார் திரிகடுகம் வாயிலாக அறக்கருத்துகளை எடுத்துரைக்கின்றார். அடிப்படைச் சமுதாய நிறுவனமாகிய குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் சிந்தனைகள் நல்ல சமுதாயம் உருவாக்கும் வழிகளாக உள்ளன.

இரண்டாவது பகுதியில் சிறுபஞ்சமூலம் என்ற மருந்துப் பெயர் கொண்ட அறநூல் விளக்கப்படுகிறது. ஐந்து வேர்கள் உடல் நோயைத் தீர்ப்பது போல் உளநோயைப் போக்கும் ஐந்து கருத்துகளைக் காரியாசான் ஒவ்வொரு பாடலிலும் சொல்கிறார். அறச் சிறப்புகள் விரிவாகப் பேசப்படுகின்றன. அறநெறிகளே நல்வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதைச் சிறுபஞ்சமூலத்தில் வலியுறுத்துகிறார்.

இல்லறச் சிறப்பும், வாழ்வியல் உண்மைகளும் விரித்துரைக்கப் படுகின்றன. வாழ்வியல் உண்மைகளை விளக்கச் செடி கொடிகள், மரங்கள், பறவைகள் இவற்றின் இயல்புகளை எடுத்துக் காட்டுகிறார். எல்லாச் செயலும் யார்க்கும் எளிதன்று என்பதை எடுத்துக் கூறி, உலகில் எப்பொருளும் இகழ்தற்குரியன அல்ல என்று எடுத்துக் காட்டுகிறார். அறநெறிகளே சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை எடுத்துரைப்பதே சிறுபஞ்சமூலம் என்னும் நூலின் நோக்கமாக அமைகிறது.

மூன்றாவது பகுதியில் ஏலாதி நூல் பற்றிய விளக்கம் இடம் பெறுகிறது. இந்நூலில் கணிமேதையார் பொதுவாக அறங்கள் செய்வது நன்று என்று மட்டும் சொல்லாமல் இத்தகைய அறங்களைச் செய்பவர்கள் மறுபிறவியில் மன்னராய்ப் பிறந்து ஆட்சி செய்வர் என்று 21 பாடல்களில் குறிப்பிடுகிறார். விண்ணவர்க்கும் மேலானவர் யார் என்பது எட்டுப்பாடல்களில் சொல்லப்படுகிறது. காலனுக்கு அஞ்சி அறம் செய்ய வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. அறநெறிகள் நன்னெறிகள் முதலியவற்றைப் பின்பற்றி வாழ்வில் உய்ய வேண்டும் என்பதே ஏலாதி நூலின் நோக்கமாக அமைவதைக் காணலாம்.

பாடம் - 4

இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும்

பாட முன்னுரை

இடைக்கால இலக்கியங்களில் அறநூல்கள்-1 வரிசையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் 11 அற நூல்கள் அடங்கும். அவற்றுள் நான்காவது பாடமாக இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரண்டு நூல்களையும் பார்க்கப் போகிறோம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் பாடலில் நானாற்பது என்று வரும் தொடர், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது என்ற நான்கு நூல்களையும் குறிக்கும். இவை ஒவ்வொன்றும் நாற்பது செய்யுட்களை உடையன. ஆதலால் இவை ‘நானாற்பது’ (நால் நாற்பது) என்ற தொடரால் வழங்கப்பட்டன.

இன்னா நாற்பது

இன்னா நாற்பது, துன்பம் தருவனவற்றைத் தொகுத்துத் தருகிறது. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கருத்திற்குப் பின்னும் ‘இன்னா’என எடுத்துக் கூறுவதாலும் நாற்பது பாடல்களைக் கொண்டிருப்பதாலும் ‘இன்னா நாற்பது’ என்ற பெயரை இந்நூல் பெற்றுள்ளது.

ஆசிரியர் இன்னா நாற்பது நூலை இயற்றியவர் கபிலர். இவர் சங்ககாலத்துக் கபிலர் அல்லர்; பிற்காலத்தவர். இவர் சைவ, வைணவ நெறிகளைப் பொதுவாக நோக்கியவர்.

உலகியலில் ‘இன்னாதன’ என்று தோன்றியவற்றை எல்லாம் நான்கு நான்காக ஒவ்வொரு பாடலிலும் அழகாகக் கூறியுள்ளார்.

நூல் அமைப்பும், பாடுபொருளும் இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 பாடல்கள் உள்ளன. பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு நீதிக் கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இது ஒரு சிறந்த நீதி நூலாக விளங்குவதால், பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

மக்கள் யாவரும் விரும்புவது இன்பமே, என்றாலும் இன்ப, துன்பங்களின் காரணங்களை அறிந்து அதற்கு ஏற்ப நடப்பதில்லை. இது எக்காலத்திற்கும் பொருந்துவதாகும். இன்பத்தின் காரணத்தை அறிந்து கொள்வதை விடத் துன்பத்தின் காரணத்தை, அறிந்து கொண்டு அதனை நீக்கி வாழ்வது அவசியம் என்பதால் இன்னா நாற்பது முதலில் படைக்கப்பட்டு, அதன் பின்னரே இனியவை நாற்பது படைக்கப்பட்டது எனக் கொள்ளலாம்.

இந்நூலில் நல் வாழ்க்கைக்குரிய நீதிகள் கூறப்படுகின்றன. தனி மனிதனின் கடமைகள், உரிமைகள், சமுதாயத்தில் அவன் சந்திக்கின்ற பலவகையான சூழல்கள் ஆகியவற்றில் அவனுக்கு ஏற்படும் துன்பங்களைத் தொகுத்துக் கூறுகின்றார் ஆசிரியர்.

குடும்பம் என்பது கணவன் மனைவி உறவு, அவர்கள் நடத்தும் இல்லறம், பெற்றோர், பிள்ளைகள் உறவு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. குடும்ப உறுப்பினர்களுக்குத் துன்பம் தருவன எவையெவை என்று சொல்கிறது இன்னா நாற்பது. அரசன், குடிமக்கள், உழவர், துறவிகள் என்று அவரவர் நிலையில் துன்பம் தருவன எவை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

கபிலரின் இன்னா நாற்பது துன்பங்களின் மூலங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களிலும் 164 இன்னாதவைகளைக் கபிலர் தொகுத்துக் கூறுகிறார். தனி மனிதப் பண்புகள் செம்மைப்பட்டால், சமுதாயம் சிறந்து விளங்கும் என்ற நோக்கில் அமைந்த அறக்கருத்துகளே இந்நூல் முழுவதும் காணக்கிடக்கின்றன.

ஒழுக்க முறைகள்

சில ஒழுக்க முறைகளும் பழக்க வழக்கங்களும் இந்நூலிருந்து நமக்குக் கிடைக்கின்றன. கொடுங்கோல் மன்னர் ஆட்சியின் கீழ் வாழ்வதை மக்கள் பெரும் துன்பமாகக் கருதினர்.

கொடுங்கோல் மறமன்னர் கீழ் வாழ்தல் இன்னா

(இன்னா நாற்பது – 3)

(மற மன்னர் = அறநெறி தவறிய)

என்று கபிலர் இதனைச் சுட்டிக் காட்டுகிறார்.

வீரம் இல்லாத மன்னன் போர்க்களம் செல்லுதல் கூடாது என்பது அக்கால மக்கள் கொள்கை. அக்காலத்தில் மன்னனுக்கு யானைப்படை முதன்மையாகக் கருதப்பட்டது. மன்னன் உலா வரும்போது யானைக்கு மணி கட்டியிருத்தல் வேண்டும். மணியில்லாத யானையின் மீது சென்றால் அரசனுக்குத் தீங்கு நேரும் என்று அவர்கள் அஞ்சினர்.

மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்தல் இன்னா

(இன். நாற். – 13)

(குஞ்சரம் = யானை)

அடைக்கலப் பொருளைத் தனதாக்கிக் கொள்ளும் வழக்கம் வெறுத்து ஒதுக்கப்பட்டது.

குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா

(இன். நாற். – 19)

என்று கல்லாமையின் இழிவு பேசப்படுகிறது.

பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா

(இன். நாற். – 26)

(யாத்த = நெருங்கிப் பிணைந்த; தொடர் = தொடர்பு)

என்று, பெரியோர் கேண்மையை விடல் துன்பமாகும் என்று எச்சரிக்கிறது.

தனி மனித அறமே சமுதாய அறத்திற்கு அடிப்படை, அறத்தின் வழிச் செல்லாத நிலையில் தனிமனிதனுக்குப் பல துன்பங்கள் ஏற்படுகின்றன. கற்றவன், கல்லாதவன், செல்வன், வறுமையுற்றார் என்ற போதும் துன்பங்கள் நீங்குவதில்லை. இந்தச் சமுதாயத்தில் துன்பம் தருவன எவை என்பதை இன்னா நாற்பது தொகுத்துக் கூறுவது பற்றி இனி விரிவாகப் பார்ப்போமா?

ஈகையும் இரத்தலும் மனத்தில் அருளும் கையில் பொருளும் உடையவரே வறியவர்க்குப் பொருளைக் கொடுக்க இயலும். இவை இல்லாதவர் வறியவர்க்குப் பொருள் கொடுத்தல் இயலாது. எனவே இச்செயல் அவர்க்குத் துன்பத்தையே தரும் என்கிறது இன்னா நாற்பது.

இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு

(இன். நாற். – 10)

(வண்மை = கொடை, புரிவு = செய்தல்)

தம்முடைய செல்வத்தை வறியவர்களுக்குக் கொடுக்கும் ஈகைக் குணம் இல்லாதவர்கள் அழகு பயனற்றது.

வண்மை யிலாளர் வனப் பின்னா

(இன். நாற். – 9)

‘இரக்கம் இல்லாதவரிடத்தில் இரந்து நிற்றல் துன்பம் தரும்’ (இன். நாற். – 10) என்ற கருத்தை ‘அருளில்லார் தங்கள் செலவு இன்னா’ எனச் சொல்கிறது இந்நூல்.

‘கொடுத்த அளவினால் மனம் நிறைந்து மகிழாதவர்க்குக் கொடுத்தல் துன்பம்’(இன். நாற். – 21) செல்வத்தைப் பெற்றவர் அச்செல்வத்தைப் பிறர்க்கும் கொடுத்துத் தாமும் அனுபவித்தல் வேண்டும். பொருளை அனுபவிக்காமல் வீணாகச் சேர்த்து வைப்பவர்கள் அப்பொருளால் அடைய வேண்டிய பயனை அடைய மாட்டார்கள். எனவே அனுபவியாமல் சேர்த்து வைக்கின்ற பெருஞ்செல்வத்தின் தொகுதி இன்பத்தைத் தராமல் துன்பத்தையே தரும்.

உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா

(இன். நாற். – 16)

என்கிறார் கபிலர்.

புலனடக்கமும் துன்பமும் உயர்ந்த நிலையில் உள்ள ஒருவன் தன்னுடைய பெருமையும் புகழும் கெடாதபடி தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். இதற்குப் புலனடக்கம் அவசியம் என்பதை இன்னா நாற்பது எடுத்துரைக்கிறது. புலனடக்கம் இல்லையென்றால் துன்பம் வரும் என்பதை,

தன்னைத்தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா

(இன். நாற். – 32)

(நன்கு = மிகவும்)

பிறன் மனையாளை விரும்பாத பேராண்மை ஒருவனுக்கு வேண்டும். மாறாக, பிறன் மனைவியை விரும்புதல் துன்பம் தருவதாகும்.

பிறன்மனையாள் பின்நோக்கும் பேதைமை இன்னா

(இன். நாற். -38)

(பேதைமை = அறிவின்மை)

வீரமும் வலிமையும் வீரமும் வலிமையும் ஒருவனுக்குத் தேவைதான். அவை மனிதனுக்குப் பெருமை தருவனவே. அவையும் எப்போது துன்பமாகும் என்று பாருங்கள்.

வீரர்கள் பலரை உடைய ஒருவன் பகைவரை எதிர்க்கத் தானே மார்பைத் தட்டுதல் நன்மையைத் தராது. தன்னை வியத்தல் என்றுமே துன்பமும் தருவது ஆகும்.

எந்தச் செயலை மேற்கொள்வதாக இருந்தாலும் எண்ணித் துணிய வேண்டும். இல்லையெனில் துன்பமே நேரும். சான்றாக நீரில் பாய்ந்து நீந்த விரும்புகின்றவன், அந்நீர் நிலையின் ஆழம், அதன் அடியில் இருக்கும் பாறை, மறைந்திருக்கும் மரக்கட்டைகள் ஆகியவற்றை அறிந்து பாய்ந்து நீந்த வேண்டும். அதனை அறியாமல் பாய்ந்து நீந்தினால் துன்பம் நிச்சயம் (இன். நாற். – 29).

உயர்ந்த மரத்திலிருந்து கீழே குதித்தல் துன்பம் பயக்கும்.

நெடுமரம் நீள்கோட்டு உயர் பாய்தல் இன்னா

(இன். நாற். -30)

(நீள்கோடு = நீண்ட கிளை)

இக்கருத்தையே,

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந் தூக்கின்

உயிர்க்கிறுதி யாகி விடும்

(குறள் : 476)

என்று குறட்பா கூறும்.

இது போல உயிருக்கு ஊறு விளைக்கவல்ல மூன்று வேறு செய்திகளையும் இப்பாடல் கூறும். அவை

1. மதம் பிடித்த யானைக்கு எதிரே செல்லுதல்

2. பாம்பு மறைந்து வாழும் வீட்டில் குடியிருத்தல்

3. கொடிய புலிகள் உலவும் வழியில் பயணம் செய்தல்

ஆகியவை, முள்ளுடைய காட்டில் நடத்தல் துன்பம். வெள்ளத்தில் அகப்பட்ட விலங்கைக் கொலை செய்வது கொடியது (இன். நாற். – 33). வீரமும் வலிமையும் ஒருவர்க்கு நன்மை பயக்கவல்லன. ஆனால் அதுவே தவறாகப் பயன்படுத்தப்படுமாயின் விளைவது துன்பமே என்கிறார் கபிலர்.

கல்வியும் வறுமையும் கற்றவர் சொல்லுக்கும் செயலுக்கும் தனி மதிப்பு உண்டு. கல்லாதவர் எத்துணைப் பெரிய செல்வராயிருந்தாலும் அவர்கள் கூறும் செயல்கள் நன்மை தராது.

கல்லார் உரைக்கும் கருமப்பொருள் இன்னா

(இன். நாற். – 15)

என்கிறது ஒரு பாடல்.

நற்குடியில் பிறந்தவன் கல்லாதிருத்தல் துன்பம். கல்வியற்றவர் சொல்லும் சொல்லின் பொருள் இன்னாதது. அவன் கற்றவர் நடுவே ஒன்றைச் சொல்லுதல் துன்பமே தரும். (இன். நாற்.-28)

இனி வறுமை நிலையால் வரும் துன்பம் பற்றி இன்னா நாற்பது என்ன சொல்கிறது என்று பாருங்கள். வறியவன் அழகு துன்பமே தரும்.

வளமை இலாளர் வனப்பு இன்னா

(இன். நாற். – 27)

(வனப்பு = அழகு)

பெரிய நகரத்தில் வாழ விரும்புபவன் அதற்கு ஏற்ற செல்வமும் உடையவனாய் இருத்தல் வேண்டும். செலவுக்குத் தகுந்த பொருள் கையில் இல்லாதவனாய் இருத்தல் துன்பம் தரும்.

நெடுமாட நீள்நகர்க் கைத்தின்மை இன்னா

(இன். நாற். – 36)

(கைத்து = கையகத்து; இன்மை = இல்லாமை)

செல்வம் இல்லாதவர் தம் வாய்ச் சொல் பயனற்றுப் போகும்.

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்

(குறள்:1046)

என்று தமிழ் மறை கூறுகிறது அல்லவா? இதே கருத்தை இன்னா நாற்பதும் கூறுகிறது? வறியவன் கூறுவதிலுள்ள நயமும் பிறரால் ஏற்றுக் கொள்ளப்படாது.

இல்லார்வாய்ச் சொல்லின் நயம் இன்னா

(இன். நாற். – 28)

தீயோரும் நட்பும் நட்புப் பற்றி இன்னா நாற்பது என்ன சொல்கிறது பாருங்கள். வன்சொல் கூறுவோர் நட்பு துன்பமானது. வறுமையுற்ற போது கைவிட்டு நீங்குவோர் நட்பு துன்பமானது. (இன். நாற்.-36) இது எந்த அளவுக்குத் துன்பம் தரும் என்பதை வள்ளுவர் எப்படிக் கூறுகிறார் தெரியுமா?

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை

உள்ளினும் உள்ளம் சுடும்

(குறள்:799)

என்று கூறுகிறார்.

தக்க சமயத்தில் உதவாது விலகிச் செல்பவர் நட்பானது சாகும் போது நினைத்தாலும் உள்ளம் கொதிக்கும் என்று, இக்குறட்பாவில் அத்துன்பத்தின் அளவைக் குறிப்பிடுவதைக் காணலாம்.

மனவறுமை உடையாரது சேர்க்கை துன்பமாகும். யாம் யாம் என்று இறுமாந்து இருப்பவரோடு செய்யும் நட்பும் துன்பமாம்.

ஆங்கின்னா, யாம்என் பவரொடு நட்பு

(இன். நாற். – 24)

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் புறங்கூற்றுத் துன்பம் தரும்.  (இன். நாற்.-32) வஞ்சமனத்தார் நட்பு துன்பமாகும்.

ஆங்கின்னா கள்ள மனத்தார் தொடர்பு

(இன். நாற். – 33)

என்று தீயோர் நட்பு தரும் துன்பங்களை விவரிக்கிறது.

உறவு முறைகள்

பெற்றோருக்கும் மகனுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், சமுதாயத்திற்கும் மக்களுக்கும், இல்லறத்திலுள்ளவர்களுக்கும் துறவிகளுக்கும் இடையிலான உறவுகளில் எவை எவை தீமை தரக் கூடியன என்று பல கருத்துகளை இன்னா நாற்பது குறிப்பிடுகிறது.

கணவன் மனைவி உறவில் இன்னாதவை கணவன், மனைவி ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் உண்மையான அன்பு கொண்டு நடத்தும் இல்லறமே நல்லறமாகும். குடும்ப உறவுகளுக்கு அடிப்படை அன்பல்லவா? அன்பில்லாத மனைவி அமைந்தால் அவள் அழகும் துன்பம் தரும் என்கிறது இன்னா நாற்பது. (இன். நாற். – 1) பிணி போன்ற மனைவி அமைவாளாயின் அதுவும் துன்பமாகும். (இன். நாற். – 13) அன்புள்ளம் கொண்ட மகளிர் பிரிவும் துன்பம் தரும் (இன். நாற். -14).

சுற்றத்தார் இல்லாத மனையின் வனப்பு இன்னா

(இன். நாற். – 1)

(வனப்பு = அழகு)

பொருந்தாத குலத்திலே மணம் செய்து கொள்ளல் துன்பமாகும் (இன். நாற். – 19). இளமைப் பருவத்தில் முதுமைக்குரிய தன்மைகள் தளர்ச்சி முதலாயின உண்டாதல் துன்பமாகும் (இன். நாற். – 27).

குழந்தைகள் அடையும் நோய் துன்பம் தரும்.

குழவிகள் உற்ற பிணி இன்னா

(இன். நாற். – 35)

சுற்றத்தினர் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பம் (இன். நாற்.-25) என்று குடும்பத்தில் துன்பம் தருவனவற்றைக் காட்டுகிறார்.

பெற்றோர் மகன் உறவில் இன்னாதவை தந்தையில்லாத பிள்ளையின் அழகு துன்பமாகும். மூதுரை என்னும் நீதி நூல் ‘தந்தையொடு கல்வி போம்’ என்று தந்தையற்ற பிள்ளைக்கு ஏற்படும் இழப்பைச் சொல்கிறது. இதனைத் ‘தந்தையில்லாத புதல்வன் அழகு இன்னா’ என்று முதல் பாடலில் கூறுகிறது இன்னா நாற்பது.

பெற்ற தாயைக் காப்பாற்றாமல் விடுதல் கொடியது.

ஆங்கின்னா ஈன்றாளை ஓம்பா விடல்

(இன். நாற். – 17)

அறிய வேண்டுவனவற்றை அறிய இயலாத பிள்ளைகளைப் பெறல் துன்பமாகும்.

அறிவறியா மக்கள் பெறல் இன்னா

(இன். நாற். – 29)

அறிவறிந்த மக்கட்பேறே சிறந்த பேறு என்பதைத் திருவள்ளுவர்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற

(குறள்:61)

என்கிறார்.

சமுதாயத்திற்கு இன்னா பயப்பன சமுதாயத்தில் மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் பற்றி இன்னா நாற்பது என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?

மனக்குழப்பம் இன்றி வாழ்தலே மக்களுக்கு இன்பமாகும். தெளிவில்லாமல் மனம் தடுமாற்றமடைந்து வாழ்தல் மக்களுக்குத் துன்பம். மிகுந்த செல்வம் உடையவர்பால் கோபம் கொள்ளுதல் இன்னாதது (இன். நாற்.- 4), மிகுந்த வலிமை உடையார்க்குத் தீமை செய்தல் இன்னா (இன். நாற்.- 4). புலாலை விரும்பி வாழ்தல் உயிர்களுக்கு இன்னாதது (இன். நாற்.- 12) மீண்டும் ஒருமுறை இதே கருத்தைக் கபிலர் கூறுகிறார். “ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா” (இன். நாற். -22).

அழகைப் பார்த்து நாம் ரசிக்கிறோம். அழகுடையதால் ஒருவர் ரசிக்கப்படுவாரா? கண்ணோட்டம் உடையவராக இருந்தால் அவர் மற்றவர்க்கு இன்பத்தைத் தருவார். இரக்கமாகிய கண்ணோட்டம் இல்லையென்றால் அவர் அழகு சிறப்பைத் தாராது. புற அழகை விட அக அழகே சிறப்பைத் தரும். கணித விதிகளை நன்கு அறிந்தவர் சோதிடம், வான சாத்திரம் முதலியவற்றை நன்கு உணர்வர். ஆனால் கணித நுணுக்கங்களை அறியாதவர் சோதிடர் போலவும், வான நூல் வல்லவர் போலவும் தம்மைக் கருதிக் கொண்டு செய்யும் செயல்கள் அவர்க்கும் பிறர்க்கும் துன்பத்தையே தரும். இதனை இன்னா நாற்பது

கண்இல் ஒருவன் வனப்புஇன்னா; ஆங்குஇன்னா

எண்ணிலான் செய்யும் கணக்கு

(இன். நாற். -16)

(கண் = கண்ணோட்டம்; எண் = கணக்கு)

என்று கூறும்.

அரசனுக்கு இன்னாதவை நாட்டை ஆளும் அரசன் மக்களைக் காத்தலால் இறைவன் என்று அழைக்கப்படுவான். குடிமக்களைக் காப்பாற்றாதவனாக அரசன் இருந்தால் நாடு துன்புறும். கொடுங்கோல் மன்னன் ஆட்சியின் கீழ் வாழ்தல் துன்பம்  (இன். நாற். -3).

வீரமில்லா அரசர் போர்க்களம் புகுதல் துன்பமே தரும். (இன். நாற். 38) மணி அணியப் பெறாத யானையில் அரசன் ஏறிச் செல்லல் நல்லதல்ல (இன். நாற். – 13). குதிரையை மணி இல்லாமல் ஏறிச் செலுத்துதல் தீமையாகும் (இன். நாற். -15).

இதையே, மற்றொரு பாடலிலும் குறிப்பிடுகிறார் கபிலர். சேணம் இல்லாத குதிரையின் வெறும் முதுகில் ஏறிச் சவாரி செய்தல் துன்பம் தரும்.

“வெறும்புறம் வெம்புரவி ஏற்றின்னா”

(இன். நாற். -38)

(புறம் = முதுகு)

இக்கருத்துகள் அக்கால நம்பிக்கைகளைக் குறிக்கின்றன.

குடி மக்களுக்கு இன்னாதவை மனிதர்க்கு ஆசை அளவோடு இருத்தல் வேண்டும். அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. பேராசை பல்வகையான துன்பங்களுக்கும் காரணமாகும். எனவே மிகுந்த ஆசை உயிர்க்குத் துன்பம் தரும்.

கள் இல்லாத ஊர் கள்ளுண்டு களிப்பவர்க்குத் துன்பம் தரும். காவல் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமாகும். (இன். நாற்.-24) காட்டாறு இடையில் உள்ள ஊரில் வாழ்தல் துன்பமாகும். (இன். நாற்.-22)குடி மக்களால் உழவர்க்கு ஏற்படும் துன்பங்கள் எவையெவை என்று இன்னா நாற்பது பட்டியலிட்டுக் காட்டுகிறது.

தமக்குச் சொந்தமான ஏரும், எருதும் உடைய உழவர்கள் உழவுத் தொழிலைச் சிறப்பாகச் செய்வர். நல்ல மழை பெய்தால் நிலத்தை உழுது பண்படுத்த எளிதாகும். தமக்குச் சொந்தமான எருதுகள் இல்லாத உழவர்களுக்கு உரிய காலத்தில் நிலத்தை உழ முடியாது. அப்போது நிலத்தின் ஈரம் வீணாய்ப் போகும். அவ்வாறு வீணாகப் போகின்ற நிலத்தின் ஈரம் துன்பத்தைத் தரும். இதனை இன்னா நாற்பது

எருதில் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா

(இன். நாற். – 4)

என்கிறது. அவர் நிலத்தில் போட்ட நல்விதைகள் முளைக்காமை இன்னா என்று மேலும் உழவர்க்கு ஏற்படும் துன்பத்தைச் சொல்கிறது.

வேலியில்லாத கரும்புப் பயிரைக் காத்தலும் துன்பமாகும். மழைக் காலத்தில் ஒழுகுகின்ற கூரை வீட்டில் வாழ்தலும் துன்பமாகும் (இன். நாற். – 5).

துறவிகளுக்கு இன்னாதவை இல்லறத்தில் இருப்பவர்க்கு மட்டுமன்றித் துறவிகளுக்கும் துன்பம் உண்டாம். அவை என்னவென்று பார்ப்போமா? துறவிகள், வீட்டில் இருந்து உண்ணுதல் இன்னாதது. (இன். நாற்.- 1) புலனடக்கம் இல்லாதவர் மேற்கொண்ட தவம் துன்பம் தரும். (இன். நாற்.-23) ஏனெனில் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு மனம் அடங்கி வாழ இயலாதவர் செய்யத் தொடங்குதல் துன்பமாகும். இல்லறம் தொடங்கித் துறவறம் வரை மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களைக் கபிலர் தொகுத்துச் சொல்லியதைப் பார்த்தோம். இதற்கு மாறுபட்டவை, மனிதனுக்கு இனிமையானவை எவை என்பதைக் கூறும் இனியவை நாற்பது பற்றி இனிப் பார்க்கலாமா?

இனியவை நாற்பது

இன்னா நாற்பதை அடுத்துத் தோன்றிய நூல் இனியவை நாற்பது. வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறுகிறது. ஆதலால் இந்த நூலிற்கு இனியவை நாற்பது என்ற பெயர் வந்தது. இனியது நாற்பது, இனிது நாற்பது, இனிய நாற்பது என்னும் பெயர்களும் இந்நூலுக்கு உண்டு.

ஆசிரியர் இந்த நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். ஆசிரியர் பெயர் சேந்தன். பூதன் என்பது இவர் தந்தையாரின் இயற்பெயர். இவர் மதுரையில் உயர்ந்த தமிழாசிரியராக விளங்கியதால் மதுரைத் தமிழாசிரியர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

பூதஞ்சேந்தனார் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் சிவபெருமானையும், அடுத்துத் திருமாலையும், பின்னர் பிரம்மனையும் குறிப்பிடுகின்றார். மும்மூர்த்திகளையும் பற்றிக் குறிப்பிடுவதால் இவர் வைதிக சமயத்தினராதல் வேண்டும்.

இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

நூல் அமைப்பும் பாடுபொருளும் இந்த நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாக்களைக் கொண்டுள்ளது. எட்டாவது பாடல் பஃறொடை வெண்பாவால் ஆனது. ஏனையவை இன்னிசை வெண்பாவில் அமைந்துள்ளன.

இன்னா நாற்பதில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாத பொருள்கள் கூறப்படுகின்றன. ஆனால் இனியவை நாற்பதில் 1,3,4,5 ஆகிய பாடல்களில் மட்டுமே நான்கு இனிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. ஏனைய பாடல்களில் மூன்று இனிய பொருள்களே கூறப்பட்டுள்ளன. இனிய என்பது இன்பத்தைத் தரும் என்று பொருள்படும்.

தனி மனிதனுக்கு இனியது இன்னின்ன என்பது இந்நூலில் கூறப்படுகிறது. இல்லறத்திற்கு இனியவை, துறவறத்திற்கு இனியவை இவையென்று எடுத்துரைக்கப்படுகின்றன. அரசனுக்கு இனியது, ஆண்டிக்கு இனியது, பண்பில் இனியது முதலிய அனைத்தும் இந்நூலில் கூறப்படுகின்றன.

• இனியவை நாற்பதும் திருக்குறளும்

பூதஞ்சேந்தனார் திருக்குறளை நன்கு கற்றவர் என்பது இந்நூலால் அறியக் கிடக்கிறது. இவர் பல இடங்களில் குறட்பா அடிகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.

குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்

மழலைச் சொல் கேளாதவர்

(குறள்:66)

என்ற குறட்கருத்தை அடியொற்றி

குழவி தளர்நடை காண்டல் இனிதே

அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே

(இனி. நாற். -14)

என்று கூறியுள்ளார்.

• இனியவை நாற்பதும் இன்னா நாற்பதும்

இன்னா நாற்பதின் சில கருத்துகளும் சொற்றொடர்களும் அப்படியே இந்நூலில் அமைந்திருப்பதைக் காணலாம்.

பொருள்உணர்வா ரில்வழிப் பாட்டுரைத்தல் இன்னா

(இன். நாற். -10)

என்ற கருத்தை இனியவை நாற்பது,

கற்றார்முன் கல்வி யுரைத்தல் மிக வினிதே

(இனி. நாற். -16)

என்று குறிப்பிடுகிறது.

இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் ஒன்றை ஒன்று சார்ந்து செல்வதை இதன் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ஒழுக்க நெறிகள்

இனியவை நாற்பதில் பல ஒழுக்க நெறிகள் கூறப்பட்டுள்ளன. பிறர் மனைவியை விரும்புதலாகிய தீய செயலை எல்லா அறநூல்களும் கண்டிக்கின்றன. திருக்குறளில் ‘பிறன்இல் விழையாமை’ என்று ஓர் அதிகாரம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். பிறன் மனைவியை நஞ்சு என்று கருதுவதே இனிமையானது என்று இனியவை நாற்பது கூறுகிறது. அதைக் கீழ்க்காணும் பாடல் அடிகள் தெரிவிக்கின்றன.

தடமென் பணைத்தோள் தளிரிய லாரை

விடமென் றுணர்தல் இனிது

(இனி. நாற்.-37)

(பணைத் தோள் = மூங்கில் போன்ற தோள், தளிரியலார் = தளிர் போன்ற மென்மை உடைய பிற பெண்டிர், விடம் = நஞ்சு)

இன்னா நாற்பதின் நேர் எதிராக இனியவை நாற்பது தோன்றினாலும் நீதிகளைச் சுவைபடச் சொல்வதைப் படித்து ரசிக்கலாம்.

கல்வி இனிமை தரும் கல்வி சிறந்தது. அது எப்போது இனிதாகும் தெரியுமா? கற்ற கல்வி நல்ல அவையின்கண் கைகொடுக்கிறதல்லவா? அப்போது அது இனிதாகிறது. கற்றலின் அருமை பெருமை உணர்ந்து, பிச்சை எடுத்தாவது கற்றல் இனிது. “பிச்சை புக்காயினும் கற்றல் மிக இனிதே” (இனி. நாற்.-1).

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

என்று வெற்றி வேற்கையும் சொல்லுகிறது. கற்றார் முன் கல்வி உரைத்தல் இனிது. அறிவால் மேம்பட்டவரைச் சேர்தல் இனிது. அதுபோல் கல்லாதவரிடமிருந்து நீங்குதலும் இனிதாகும். கையில் நிலைத்து நிற்கக் கூடிய பொருளைப் பெறுவதாயிருப்பினும் கல்லாதவரை விட்டு நீங்குதல் இனிது என்கிறார் பூதஞ்சேந்தனார்.

கைவாய்ப் பொருள்பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே

(இனி. நாற். -25)

(தீர்வு = விட்டுப்பிரிதல்)

கற்றவரிடம் சேர்ந்தால் நமக்கு நன்மை கிடைக்கும். கற்றவர் பொருள் உணர்ந்து சொல்கின்ற சொல்லை ஏற்றுச் செய்யும் செயலின் பயன் இனிதாகும் (இனி. நாற்.-32).

இனிய அறச் செயல்கள் இயன்றவரை அறம் செய்தல் இனிது. நம்மால் முடிந்தவரை செய்யக்கூடிய இடங்களில் எல்லாம் அறச் செயலைச் செய்யவேண்டும்.

ஆற்றும் துணையால் அறம்செய்கை முன் இனிதே

(இனி. நாற்.-6)

வள்ளுவரும்,

ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே

செல்லும் வாயெல்லாம் செயல்

(குறள்:33)

என்று இயன்றவரை அறம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறார். அறச்செயல் செய்து பாவங்களைச் செய்யாமை இனியது, சோலை வளர்த்தல், குளம் வெட்டுதல் போன்றவை இனியன. இக்கருத்தை,

காவோடு அறக்குளம் தொட்டல் மிகஇனிதே

(இனி. நாற்.-23)

(கா = சோலை, தொட்டல் = தோண்டுதல்)

என்று குறிப்பிடுகிறது இனியவை நாற்பது.

இந்தக் கருத்தையே,

காவோடு அறக்குளம் தொட்டானும்

செல்வர் எனப்படு வார்

(திரிகடுகம்-70)

என்று திரிகடுகமும்

காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல்

(பெரியபுராணம் – திருநாவுக்கரசர் புராணம் -36)

என்று பெரியபுராணமும் சிறப்பித்துப் பேசுகின்றன.

ஒருவர் செய்த நன்றியின் பயனைக்கருதி வாழ்வது இனிது. நியாய சபையின் கண் ஓரஞ் சொல்லாத மாண்பு இனிது (இனி. நாற். – 30).

(ஓரம் = ஒரு பக்கம் சாய்தல்)

முன்பு தன்னிடம் வைத்த அடைக்கலப் பொருளை, அறிவார் யாருமில்லை என்று அபகரிக்கக் கூடாது. அடைக்கலப் பொருளைக் காத்தலிலும் இனியது வேறொன்றில்லை (இனி. நாற்.-30).

• ஈகை இனியது

பொருள் உடையவரிடம் ஈகைப்பண்பு இருக்க வேண்டும். அதுவே இனியதாம். எள் அளவாயினும் பிறரிடம் இரத்தல் கூடாது. பிறர்க்குக் கொடுத்தலே இன்பம் தரும்.

ஒரு பொருளை விரும்பித் தன்னிடம் வந்தவர் விருப்பத்தைப் புறக்கணிக்காத மாண்பு இனியது. எந்த நிலையிலும் பிறர்க்குக் கொடுக்கக் கூடியவற்றை ஒளிக்காத அன்பு இனியது.

எத்திறத் தானும் இயைவ கரவாத

பற்றினின் பாங்குஇனியது இல்

(இனி. நாற்.-26)

(திறம் = வகை, இயைவ = முடிந்தவற்றை, கரவாத = ஒளிக்காத, பற்று = அன்பு)

இந்த அடிப்படையில் ஒரு கைப்பிடி அளவு அரிசியாவது நாள்தோறும் கொடுத்து வாழுங்கள். அது உண்மையான இன்பம் ஆகும் என்று நாலடியார் கூறுகிறது.

இம்மி யரிசித் துணையானும் வைகலும்

நும்மில் இயைவகொடுத் துண்மின்

(நாலடியார் -64)

நட்பில் இனிமை நல்லவர்களுடன் கொள்ளும் நட்பு இன்பம் தருவதாகும். ஆகவே, எங்கே செல்ல நேர்ந்தாலும் அங்கெல்லாம் நல்லவர்களைத் தேடிச் சென்று நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

‘தான் செல்லும் திசைகளில் எல்லாம் தக்காரை நட்புக் கொள்ளுதல் இனிது’ (இனி. நாற். – 3) நட்புடையவர்க்கு இனியன செய்தல் இனிது. எந்த நிலையிலும் தன் பகைவரோடு சேராதவரை நட்பாக்கிக் கொள்ளுதல் இனிது. (இனி. நாற். – 17).

இனிய நட்பைப் பாதுகாக்கவும் ஒரு வழி சொல்கிறது இனியவை நாற்பது. நட்புக் கொண்டவரைப் புறம் கூறாதவராய் வாழ்வது மிக இனியது (இனி. நாற். – 19). வலிய வந்து தாமாகவே நட்புக் கொள்ளினும் கயவருடைய நட்பை நீக்குதல் இனிது என்று நீக்க வேண்டிய நட்பு எது என்று கூறி நம்மை எச்சரிக்கை செய்கிறது (இனி. நாற். -20).

• பிற இனிய பண்புகள்

அன்றாட வாழ்க்கையில் நாம் பலரைச் சந்திக்கிறோம். பழகுவதற்கு இனியர் என்று சிலரைத்தான் சொல்கிறோம். இனியவராய் இருக்க என்ன பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்? பூதஞ்சேந்தனார் சொல்வதைக் கேட்போம். குற்றம் இல்லாமல் யாவர்க்கும் இரங்கி அன்புடையவராய் வாழ்தல் இனிது. தப்பு வழியில் சென்று விடாத மதி நுட்பம் இனிது (இனி. நாற். -11).

உயிர் போவதாயினும் உண்ணத்தகாதவர் கையில் உணவு உண்ணாமை பெருமை உடையது. சத்தியத்தைப் பாதுகாத்துப் பணிந்து ஒழுகல் இனிது. ஒருவர்க்குச் சார்பாகாத மனஎழுச்சி இனிது என்று நடுவு நிலைமைப் பண்பு, சத்தியம் போற்றல் ஆகிய பண்புகளை இனியன என்கிறார் பூதஞ்சேந்தனார் (இனி. நாற்.-11,19,22).

செல்வம் அழிந்தாலும் பாவச் சொற்களைச் சொல்லாத தெளிவு இனிது. இவர் வறியாரென்று இகழாமை இனிது. இயன்றவரை பிறர் மீது குற்றம் கூறாமை இனிது. பொறாமை கொள்ளாமை மிக இனிது. சினம் நீக்கி வாழ்தல் இனிது. மானம் உடையவர் மதிப்பு இனியது என்று வாழ்வியல் மதிப்புகளைப் பட்டியலிடுகிறது (இனி. நாற். – 28,29,30).

உறவு முறைகள்

இல்லறத்தில் ஈடுபடும் கணவன் மனைவி, பெற்றோர், அரசன், குடிமக்கள் ஆகியோருக்கு எவை எவை இனிமையானவை என்பனவற்றை இனியவை நாற்பது குறிப்பிடுகின்றது.

இல்லறம் கணவன், மனைவி இருவரும் உளமொத்து வாழ்வதே சிறந்த இல்லறமாகும். அவ்வாறு ஒன்றுபட்ட மணவாழ்க்கை அமையுமாயின், அம் மண வாழ்க்கை இனியது. அன்பில்லாத மனைவி அமைந்தால் அவளை விலக்கி விடுதல் இனிது. வரவுக்குத் தக்க செலவு செய்து வாழ்தல் இனிது. இதனை,

கடம்உண்டு வாழாமை காண்டல் இனிதே

நிறைமாண்புஇல் பெண்டிரை நீக்கல் இனிதே

(இனி. நாற். -10)

(கடம் = கடன்)

என்கிறது இனியவை நாற்பது.

• கடமைகள்

மக்கள் தமக்குரிய கடமைகளினின்று நீங்காமல் வாழ வேண்டும். விதைக்காக வைத்த தானியத்தை உண்ணக் கூடாது. விதை இல்லையேல் மேல் விளைவும் இல்லை. மேலும், விதை பயிராக விளையும் போது பலரும் உண்ணுவதற்கு உதவுகிறது. அதை ஒருவர் உண்பது என்பது பலர் உணவைப் பறிக்கும் செயல் போலாகும். (இனி. நாற். -40) பால் மிகக் கறக்கும் ஆவும் கன்றும் உடையவன் படைக்கும் விருந்து மிக இனிது (இனி. நாற். – 38) என்றும், மானம் அழிந்த பின் வாழாமை மிகவும் இனியது; தன் நிலை தாழாமல் அடங்கி வாழ்வது இனிமையானது (இனி. நாற். – 13) என்றும், ஊர் ஊராய்ச் சென்று இரந்து வாழாமை இனிது (இனி. நாற்.- 11) என்றும் இல்லறத்தார் கடமைகளை எடுத்துரைக்கின்றார் பூதஞ்சேந்தனார்.

இனிக்கும் உறவுகள் குடும்ப உறவுகளிலும் நட்பு நிலையிலும் இனிக்கும் உறவுகள் இருப்பின் வாழ்க்கை இனியதாகும் அல்லவா! குடும்பத்தில் பிள்ளைகள், பெற்றோர் ஏவலை மறுக்காமல் செய்யும் ஆற்றல் பெற்றவராய் இருப்பின் அது வாழ்வில் இனிமை சேர்க்கும் அல்லவா?

ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே

(இனி. நாற் -3)

(ஏவது = கட்டளையிடுவது, மாறா = மீறாத, இளங்கிளைமை = மக்கள்)

மிக்க சிறப்பினை உடைய தாய் தந்தையரைப் பணிந்து அவர் பாதங்களில் வீழ்ந்து எழுதல் இனிது (இனி. நாற். – 18). பெற்றோரைப் பணிந்து பாதங்களில் வீழ்தல் இனிது என்று சொல்லும் பூதஞ்சேந்தனார். தந்தையே ஆனாலும் அவன் தீநெறிக்கண் சென்றால் அவன் சொல்வழி நில்லாமை இனிது என்கிறார்.

தந்தையே ஆயினும் தான்அடங்கான் ஆகுமேல்

கொண்டுஅடையான் ஆகல் இனிது

(இனி. நாற். -7)

பழிபாவத்துக்கு அஞ்சாத சூதாடிகளை விட்டு விலகுவது இனிது. நிலையில்லாத அறிவினருடன் சேராது நீங்குதல் இனிது (இனி. நாற். -21).

அரசனுக்கு இனியது சமுதாயத்தில் அரசன் முதலாகிய அனைவரும் தமக்குரிய உரிமையுடன் வாழ்தல் இனிது. அரசன், குடிமக்கள் அனைவர்க்கும் இனியன எவை எனச் சொல்கிறார் பூதஞ்சேந்தனார்.

அரசன் போர்க்களத்தில் யானைப்போர் காணுதல் இனியது (இனி. நாற். – 4). அரசனுக்கு, ஒற்றரை ஒற்றரால் வேவு பார்த்து அவற்றின் பயனை ஆராய்தல் நன்மை பயக்கும். குற்றத்தை ஆராய்ந்து முறையாகத் தண்டனை கொடுத்தல் இனியது (இனி. நாற்.- 35). செங்கோலனாக அரசன் ஆளுதல் வேண்டும். ஒருவரையே நம்பியிராமல் எல்லாரிடத்தும் தானும் சென்று அறிதல் வேண்டும். இவையெல்லாம் அரசன் செய்தல் இனிது (இனி. நாற். 35).

எவற்றைச் செய்யாமலிருத்தல் இனிது என்பதை விளக்கும் இனிய பாடல் இதோ:

கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயம்

செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்

எய்தும் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்

பொல்லாங் குரையாமை நன்கு

(இனி. நாற். -5)

(கோல் கோடி = நீதி தவறி, மாராயம் = சிறப்பு)

குடிமக்களுக்கு இனியது முல்லை நிலத்து ஆற்றங்கரையில் உள்ள ஊர் வாழ்வதற்கு இனியது (இனி. நாற். – 4). குடிகள் மாட்டு அன்பு வையாத அரசன் கீழ் வாழாது இருத்தல் இனிது.

பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே

(இனி. நாற். – 32)

ஊரார் வெறுக்காதனவற்றைச் செய்து வருகின்ற பெருமை இனியது (இனி. நாற். – 33). ஒதுக்குப்புறமாய்க் குடியிருந்தாலும் துன்பம் அடையாத மாட்சிமை இனியது என்கிறார் பூதந்சேந்தனார் (இனி. நாற். -39).

தொகுப்புரை

கபிலரின் ‘இன்னா நாற்பது’ துன்பத்தின் மூலங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இவற்றைக் கற்பதன் வாயிலாகத் துன்பங்களைத் தடுத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. 164 இன்னாதவைகளைக் கபிலர் கூறுகிறார்.

அறவழி வாழ்க்கை நடத்தலே சிறப்பு என்பதைக் கபிலர் எடுத்துரைக்கின்றார். தனி மனிதப் பண்புகள் செம்மையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அவை ஈகை, கொல்லாமை, பொய்யாமை, நடுவு நிலைமை முதலியனவாம்.

பூதஞ்சேந்தனார் இனியவை நாற்பது என்ற தம் படைப்பில் தனி மனிதனுக்கும், இல்லறத்தார்க்கும், அரசனுக்கும் குடிமக்களுக்கும் இனியன யாவை என்பதைத் தொகுத்துரைக்கின்றார். 127 இனிய கருத்துக்கள் இந்நூலில் கூறப்படுகின்றன.

இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரண்டு நூல்களிலும் திருக்குறட் கருத்தை அடியொற்றிப் பல பாடல்கள் அமைந்துள்ளன. சில ஒழுக்க முறைகளையும், பழக்கவழக்கங்களையும் நம்மால் அறிய முடிகிறது.

கள்ளும் ஊனும் உண்ணுதல் வெறுக்கப்பட்டது. அடைக்கலப் பொருளைத் தனதாக்கிக் கொள்ளும் செயல் வெறுக்கப்பட்டது. வேதம் ஓதும் அந்தணனை விரும்பல், முறை செய்யும் அரசனைப் போற்றல் ஆகியவை இயல்பாக இருந்தன.

இன்னா நாற்பதின் நேர் எதிர்மறையாக இனியவை நாற்பது அமைந்துள்ளது எனலாம்.

யானையில் மன்னரைக் காண்டல் நனியின்னா

ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா

(இன். நாற்.-23)

யானை யுடையபடை காண்டல் முன்னினிதே

ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே

(இனி. நாற்.-4)

கல்லார் உரைக்கும் கருமப்பொருள் இன்னா

(இன். நாற்.-15)

கற்றறிந்தார் கூறும் கருமப்பொருள் இனிதே

(இனி. நாற்.-32)

இவ்வாறு கருத்துகளைச் சொல்லும் முறையில் இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் ஒன்றை ஒன்று சார்ந்து செல்லுகின்றன எனலாம்.

பாடம் - 5

ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி

பாட முன்னுரை

பதினெண்கீழ்க்கணக்கில் அறநூல்கள் வரிசையில் ஆசாரக்கோவையும் முதுமொழிக்காஞ்சியும் ஐந்தாவது பாடமாக வருகின்றன. அறத்தை வலியுறுத்த எழுந்த 11 அற இலக்கியங்களில் இவை சிறந்த அறநூல்களாகத் திகழ்கின்றன.

ஆசாரக்கோவை, மக்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை விளக்கிக் கூறுகிறது. ஆசாரம் என்றால் நல்ல முறையில் நடத்தல் என்பது பொருள். பொதுவாகக் கடவுள் வழிபாடு செய்கிறவர்கள் தினம் நீராடித் தூய ஆடை உடுத்து நல்ல உணவு உட்கொண்டு வாழ்கின்றனர். அவர்களை ஆசாரத்தோடு வாழ்கின்றவர்கள் என்று கூறுகிறோம். காலப்போக்கில் கடவுள் வழிபாடு செய்து நல்ல நெறிகளைக் கடைப்பிடித்துப் புறத்தே தூய்மையாக உடையவர்கள் ஆசாரம் உடையவர்கள் என்றாகிவிட்டது. இது முற்றிலும் தவறானது. உள்ளும், புறமும் தூய்மை உடைமையே ஆசாரமாகும். இவ்விருவகை ஆசாரத்தைப் பற்றியும் கூறுவதுதான் ஆசாரக்கோவை. ஐந்தாவது பாடத்தில் முதல் பகுதியாக ஆசாரக்கோவையைப் பார்க்கப் போகிறோம்.

இந்தப் பாடத்தின் இரண்டாம் பகுதியாக நாம் பார்க்க இருப்பது முதுமொழிக்காஞ்சி. முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளில் ஒன்று. இந்தத் துறையின் பெயரையே தலைப்பாகக் கொண்டு இந்த நூல் விளங்குகிறது.

ஆசாரக்கோவை

ஆசாரக்கோவை என்பதற்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருளாம். இந்த நூலினுள் ஆசார வித்து (1), ஆசாரம் எப்பெற்றியானும் படும் (96), ஆசாரம் வீடு பெற்றார் (100) என்று வரும் இடங்களில் ஆசாரம் என்ற சொல் ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. இந்த நூலுக்கு மூல நூல் ஆரிடம் என்ற வடமொழி நூலாகும்.

ஆசிரியர் இந்த நூலை இயற்றியவர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார். வண்கயத்தூர் என்பது இவரது ஊர்ப் பெயர். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடியேத்தி என்ற (எயில் – மதில்; மூன்று மதில்களை அழித்தவன் சிவபெருமான்) சிறப்புப் பாயிர அடிகளால் இவர் சைவ சமயத்தவர் எனலாம்.

ஆசிரியருடைய காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பர்.

நூலின் அமைப்பும் பாடுபொருளும் இந்நூல் பாயிரம் நீங்கலாக நூறு வெண்பாக்களைக் கொண்டது. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பா என வெண்பாவின் வகைகள் யாவும் இந்த நூலில் காணப்படுகின்றன. அடிப்படை ஒழுக்கங்களைத் தவிர நாள்தோறும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியவை இவை, தவிர்க்க வேண்டியவை இவை என்பதையும் இந்நூல் தெளிவாகக் கூறுகின்றது. பேரறிஞர்கள் தம் அனுபவத்தில் ஆராய்ந்து சொன்ன ஒழுக்க நெறிகள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று உறுதிப் பொருள்களும் இந்நூலுள் விரவி (கலந்து) நிற்பதைக் காணலாம்.

அன்றாட வாழ்க்கையில் நாம் காலையில் எழுந்திருக்கிறோம். நீராடுகிறோம்.உணவு உண்ணுகிறோம். அவரவர் வாழ்க்கைக்கும் இயல்புக்கும் தகுந்தாற்போல் அவரவர் விருப்பம்போல் காலையில் எழவும், குளிக்கவும் உண்ணவும் செய்கிறார்கள். இந்த அன்றாட வாழ்க்கை முறைகளில் கூட நாம் ஒரு நெறிப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை, பெருவாயின் முள்ளியார் இந்நூலில் சொல்கிறார்.

‘தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பது பழமொழி. இளம்பருவம் முதல் நல்ல பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டால் பின்னர் நற்பண்புகள் உருவாக வழிவகுக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்நூல் அமைந்துள்ளது.

இன்னின்ன செய்யத் தக்கவை, இதனால் இன்ன நலம் உண்டாகும் என்பதும் இன்னின்ன செய்யத் தகாதன, அவற்றைச் செய்யின் இன்னின்ன கேடுகள் உண்டாகும் என்பதும் இந்நூலில் தெளிவாக விளக்கப்படுகின்றன.

பின்பற்ற வேண்டிய நெறிகள்

இது வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய சிறந்த வழிமுறைகளைக் குறிப்பிடுவது ஆகும். நல்லொழுக்கங்களுக்குக் காரணமான நற்குணங்கள், வணங்க வேண்டியவர்கள், அறம் செய்தல், ஏனைய உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை போன்றவற்றைப் பற்றிப் பெருவாயின் முள்ளியார் விவரிக்கின்றார்.

நற்பண்புகள் ஆசாரக்கோவை முதற் பாடலிலே நல்லொழுக்கங்கட்கு வித்தாக, காரணமாக விளங்குவன எவை என்று வரையறை செய்து எட்டு நற்குணங்களைக் கூறுவதைக் காணலாம். நன்றியறிதல், பொறுமை, இன்சொல், எவருக்கும் இன்னாதன செய்யாமை, கல்வி, ஒப்புரவறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு சேர்தல் என்ற இந்த எட்டு வகைப் பண்புகளும் நல்லோரால் சொல்லப்பட்ட ஆசாரங்களுக்குக் காரணம் ஆகும் என்கிறார் ஆசிரியர். எல்லா நீதி நூல்களும் சொல்லக்கூடிய இந்த எட்டுப் பண்புகளையும் முதற்பாடலிலேயே குறிப்பிட்டுச் சொல்லி விடுகிறது, ஆசாரக்கோவை.

வணங்கத் தக்கவர் பக்தியின் அடிப்படையில் அவரவர் விரும்பும் தெய்வத்தை வணங்குதல் நம்முடைய மனச் செருக்கை அடக்கும் ஒரு சிறந்த நெறியாகும். காலையில் எழுந்தவுடன் பல்துலக்கிச் சுத்தம் செய்து தாம் வணங்கும் தெய்வத்தைத் தாம் அறியும் நெறியால் வணங்குக என்கிறார். பெருவாயின் முள்ளியார் (ஆசாரக்கோவை – 9).

தம்மைவிடப் பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் காட்டுவதே உயர்ந்த பண்பு. சிறு வயதிலிருந்தே அதைப் பழகிக்கொள்ள வேண்டாமா? அதனை ஒரு சிறந்த நெறியாகக் கூறுகிறது ஆசாரக்கோவை. அரசன், ஆசிரியர், தாய், தந்தை, நம்மைவிடப் பெரியவர் அனைவரையும் தொழுது வணங்க வேண்டும் என்பதே எல்லோரும் கண்ட நெறி என்கிறது.

அரசன் உபாத்தியான் தாய்தந்தை தம்முன்

நிகரில் குரவர் இவரிவரைத்

தேவரைப் போலத் தொழுதெழுக என்பதே

யாவரும் கண்ட நெறி

(ஆசாரக்கோவை – 16)

(குரவர் = பெரியோர்)

அறம் செய்தல் இயன்ற இடங்களில் எல்லாம் தம்மால் முடிந்தவரை அறம் செய்ய வேண்டும் என்பதை வள்ளுவர்,

ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே

செல்லும் வாயெல்லாம் செயல்

(குறள் :33)

என்று கூறுகிறார். திருமண நாளின் கண்ணும், தேவர்க்குரிய சிறப்பு நாளின் கண்ணும், முன்னோர்க்குச் சிறப்புச் செய்யும் நாளின் கண்ணும், விழா நாட்களிலும், யாகம் செய்யும் போதும் தானம் செய்வதுடன் விருந்தினர்க்குச் சோறிட வேண்டும் என்கிறது ஆசாரக்கோவை (48). தானத்தில் சிறந்தது அன்னதானம். போதும் போதும் என்று சொல்லும் வண்ணம் கொடுக்க முடிந்த தானம் இதுவே. ஆகவே அதை வலியுறுத்திக் கூறுவதைக் காணலாம்.

நல்லறிவுடையவர் நிறைஉவா (பௌர்ணமி) நாளில் மரங்களை வெட்ட மாட்டார்கள். பல் தேய்ப்பதற்குக் கூட மரத்திலிருந்து குச்சியை ஒடிக்க மாட்டார்கள். நிறைமதி நாளில் மரம், செடி, கொடி முதலிய உயிர்களுக்குக் கூட ஊறு செய்யலாகாது.

குரவர் உரையிகந்து செய்யார் விரதம்

குறையுடையார் தீர மறவார் – நிறையுவா

மெல்கோலும் தின்னார் மரம்குறையார் என்பதே

நல்லறி வாளர் துணிவு

(ஆசாரக்கோவை – 17)

(மெல்கோல் = பற்குச்சி, குறைத்தல் = வெட்டுதல், நிறையுவா = பௌர்ணமி நாள்)

என்ற பாடலில் இக்கருத்தை வலியுறுத்திப் பாடுவதைப் பாருங்கள்!

கற்றுக் கொள்ள வேண்டிய நெறிகள்

நாம், நம் வாழ்க்கையில் முன்னேறுவதற்குப் பிறரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நெறிகள் பல உள்ளன. நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களின் பழக்க வழக்கங்களிலிருந்து சிலவற்றைக் கற்று கொள்கிறோம், அதைப்போல நம் உடலைப் பாதுகாப்பதற்காக உண்ணும் உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்பதையும் பிறரிடமிருந்து தெரிந்து கொள்கின்றோம். இவை பற்றிய செய்திகளை ஆசாரக்கோவை எடுத்துரைக்கிறது.

இயற்கையிடமிருந்து கற்றல் மனிதர்கள் தம்மைச் சுற்றியுள்ள பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிடமிருந்தும் சில நல்ல பழக்கங்களைக் கற்றுத் தம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் பெருவாயின் முள்ளியார். சிறிய எறும்பும் கிடைக்கின்றபோதே உணவுப்பொருளை எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்துக் கொள்ளும். தூக்கணாங்குருவி குளிர், காற்று முதலியவற்றால் இடையூறு ஏற்படாத வகையில் தனக்குரிய வீட்டைக் கட்டிக் கொள்ளும். காக்கை தன் இனத்தாரை அழைத்த பின்னரே உண்ணும் பழக்கமுடையது. இம்மூன்று பழக்கங்களையும் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் சிறப்புறுவர். சுறுசுறுப்பும், எதிர்காலச் சேமிப்பும், சுற்றத்தாரை அழைத்து உண்ணலும் சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுவன அல்லவா? இவற்றைச் சொல்லும் பாடலைப் பார்ப்போமா?

நந்தெறும்பு தூக்கணம்புள் காக்கை யென்றிவைபோல்

தங்கருமம் நல்ல கடைப்பிடித்துத்-தங்கருமம்

அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்

எப்பெற்றி யானும் படும்

(ஆசாரக்கோவை – 96)

(நந்து = ஆக்கமுள்ள, சேகரிக்கும்; ஆசாரம் = ஒழுக்கம்; பெற்றி = தன்மை;  படும் = சிறப்படையும்)

உணவு உண்ணும் முறை உடலைப் பாதுகாக்க உணவு அவசியம் அல்லவா! அந்த உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்பது பற்றியும் உண்ணுதல் தொடர்பாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பற்றியும் ஆசாரக்கோவையில் பல பாடல்கள் சொல்லுகின்றன.

உடல் தூய்மையைக் காப்பது உடல் நலத்திற்கு முதற்படி அல்லவா? நீராடிய பின்னரே உண்ண வேண்டும் (ஆசாரக்கோவை-18). உணவினைத் தொழுது, சிந்தாமல் உண்ண வேண்டும் (ஆசா கோவை – 20). எப்படி உண்ணக்கூடாது? படுத்தோ, நின்றோ வெளியிடையில் இருந்தோ கட்டில் மேல் இருந்தோ உண்ணல் கூடாது.

இது போன்ற கருத்துகள் நாம் பின்பற்ற வேண்டிய நல்ல நெறிகள் அல்லவா? உணவுப்பொருளை வீணாக்கக்கூடாது. கிழக்குத் திசை நோக்கி இருந்து உண்ண வேண்டும் (ஆசா கோவை – 20, 23).

பிறநாடுகளில் உணவுப் பொருள்களில் எதை முதலில் உண்ண வேண்டும், எதைக் கடைசியில் உண்ண வேண்டும் என்ற பழக்கங்கள் உள்ளன அல்லவா? அதுபோல் நம் நாட்டிலும் உண்டு. நம் முன்னோர் அதனையும் அறிந்து வைத்துள்ளனர். முதலில் இனிப்பான பண்டங்களை உண்ண வேண்டும். இறுதியில் கசப்பானவற்றை உட்கொள்ள வேண்டும். வேறு சுவைப் பொருள்களை இடையே சுவைத்தல் வேண்டும். பாடலைப் பார்ப்போமா?

கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப

மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்

துய்க்க முறை வகையால் ஊண்

(ஆசாரக்கோவை – 25)

(கைப்பன = கசப்பன, கடை = கடைசி, தலை = முதல், துய்க்க = உண்க)

உண்டபின் வாயை நன்கு கொப்புளித்து எச்சில் இல்லாத வகையில் சுத்தம் செய்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் சொல்லப்படுகிறது (ஆசா கோவை – 27). இது உடல் நலத்தோடு வாழ வழி காட்டுகிறது அல்லவா?

விருந்தினர், மிக மூத்தோர், பசுக்கள், பறவைகள், பிள்ளைகள் இவர்களுக்குக் கொடுத்த பின்னரே ஒருவர் உணவு உண்ண வேண்டும் என்ற உயர்ந்த பண்பாட்டினையும் ஒரு பாடல் எடுத்துச் சொல்கிறது (ஆசா கோவை – 21).

நாம் எப்படி உணவு உண்ண வேண்டும், எப்படி நீர் பருக வேண்டும் என்பன போன்ற சாதாரண செய்திகளும் இங்கு நல்ல ஆசார அடிப்படையில் அமையும் அறிவுரைகளாகின்றன.

தண்ணீரை இரு கையாலும் குடித்தலாகாது. (ஆசா கோவை – 28) உண்ணும் போது உணவிலே கருத்துடையவனாய் உண்ணல் வேண்டும் (ஆசா கோவை-20).

மனக்கவலையால் பிறிதொன்றை நினைத்துக் கொண்டு உண்டால் அது உடல் நலத்துக்குக் கேடாகும் என்ற கருத்தைச் சொல்கிறது மேற்கூறிய பாடல் வரிகள்.

இனி, பிறரை உண்பிப்பதாகிய விருந்தோம்பல் பற்றி ஆசாரக்கோவை என்ன சொல்கிறது என்று பார்ப்போமா? விருந்தினர் நம் முகத்தைப் பார்த்தே நம் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொள்வார்கள். நம் முகம் மாறிவிட்டால் அவர்கள் உள்ளமும் மாறிவிடும். விருந்தினர் அனிச்ச மலரை விட மென்மையானவர்கள். அதனால் சிரித்த முகத்தோடு அவர்களை வரவேற்க வேண்டும். பின்னர் இனியவை கூற வேண்டும். அவர்கள் கால் கழுவ நீரும், படுக்கப்பாயும், அமர இருக்கையும் அளித்து அவர்களைப் பாராட்ட வேண்டும். இதன்பின்னர், நல்ல உணவு படைத்து அவர் பசியைப் போக்குதல் வேண்டும் என்பதை,

முறுவல் இனிதுரை கால்நீர் மணைபாய்

கிடக்கையோடு இவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு

ஊணொடு செய்யும் சிறப்பு

(ஆசாரக்கோவை – 54)

(முறுவல் = புன்னகை; இனிதுரை = இனிய பேச்சு; கிடக்கை = படுக்கை; தலைச் சென்றார் = விருந்தினர்)

என்ற பாடல் விளக்குவது புரிகிறதல்லவா?

அன்றாட வாழ்க்கை நெறி அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில நல்ல நெறிகளை ஆசாரக் கோவை எப்படிச் சொல்கிறது என்று பார்ப்போமா?

• தூய்மை பற்றியன

முதலில் நம் இல்லத்தை எப்படிப் பாதுகாத்தால் நமக்கு நன்மை கிடைக்கும்? அதிகாலையில் எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து பாத்திரங்களைத் துலக்கி வீடு முழுவதும் சாண நீர் தெளித்துத் தூய்மைப்படுத்த வேண்டும். பின்னரே அடுப்பினுள் தீ மூட்டுதல் வேண்டும் (ஆசா கோவை-46). இவ்வாறு செய்வதால் சுற்றுப்புறம் தூய்மை அடையும். சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை, அக்கால மக்கள் அறிந்திருந்ததை உணர முடிகிறது.

மேலும், குளம் முதலிய நீர் நிலைகளில் நீராடும் காலத்து எச்சில் உமிழ்தல் முதலியன செய்யக்கூடாது என நீரின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டுவதைக் குறிப்பிடுகிறது ஒரு பாடல் (ஆசா கோவை – 14). இப்பாடல் பஞ்ச பூதங்களுள் ஒன்றாகிய நீர் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்று அக்கால மக்களும் கருதியதைப் புலப்படுத்துகிறதல்லவா?

• பண்புகள் பற்றியன

பெரியோர் உவந்தனவற்றைத் தாம் விரும்புதலும், தம் இல்லத்தின்கண் கீழ்மைப் பண்புடையவரை அழைத்துச் செல்லாதிருத்தலும், தம்மோடு பழக்கமில்லாத சிறுவராய் இருப்பினும் இகழாதிருத்தலும் நன்னெறிகளாக ஆசாரக்கோவை காட்டுகிறது (ஆசா கோவை – 68).

மனிதராய்ப் பிறந்தவர் மற்றவரை மதிக்கும் மாண்புடையவராய் இருக்க வேண்டும். மனத்தில் கருணையும், அருளும், அன்பும், பணிவும் இருக்க வேண்டும். அவர்களே மற்றவர்களால் போற்றப்படுவர் என்று மனிதனுக்கு இருக்க வேண்டிய உயர் பண்புகளை உரைக்கிறது ஒரு பாடல்.

அந்தணர், தவம் உடையவர், சுமையை உடையவர், நோயுற்றவர், மூத்தவர், இளையவர், பசு, பெண்கள் என்னும் இவர்களுக்கு வழி விட்டு விலகினவர்களே மக்களால் போற்றப்படுவர் என்கிறது மற்றொரு பாடல் (ஆசா கோவை -64). இஃது அக்கால மக்களின் மனித நேய உணர்வைப் பிரதிபலிக்கிறது.

சான்றோர் நிறைந்த அவையில் அறிஞர் அங்க சேட்டை செய்யமாட்டார், கடுஞ்சொல் கூறமாட்டார், இருவராக இருந்து பேசுமிடத்திற்குப் போகமாட்டார் என்று அறிஞர் செயல் கூறி நன்னெறி உரைக்கிறது ஆசாரக்கோவை. இருவர் தனியே இருந்து பேசுமிடத்திற்குப் போகல் ஆகாது (ஆசா கோவை – 93) என்ற அறிவுரையில் பல நுட்பங்களைக் காணலாம். இருவர் பேசிக்கொள்வது மற்றவர் அறியக் கூடாத இரகசியமாக இருக்கலாம். அவர்கள் அந்தரங்கத்தில் குறுக்கிடக் கூடாது என்ற மனித நாகரிக மாண்பினைச் சொல்லும் அறவுரையல்லவா இது!

விலக்கக் கூடியன

நன்னெறிகளைக் கூறும் ஆசாரக்கோவை விலக்கக் கூடியன எவை என்பதையும் கூறுகிறது. பிறர் மனை நயத்தல், கள்ளுண்ணல், களவு செய்தல், கொலை செய்தல், சூதாடல் போன்றவை இகழ்ச்சிக்கும், நரகத்திற்கும் காரணமான செயல்கள் ஆகும். எனவே இவை விலக்க வேண்டியன என்று வலியுறுத்துகிறார் ஆசிரியர் (ஆசா கோவை – 37).

நினைக்கக் கூடாதவை ஒரு தீமை தொடர்ந்து பல தீமைகளுக்குக் காரணமாகிறது. பொய் பேசுதல், கோள் சொல்லுதல், பிறர் பொருளுக்கு ஆசைப்படல், பொறாமை கொள்ளுதல் என இவை நான்கினையும் நினைக்கவும் கூடாது. நினைத்தால் இம்மையில் பிச்சையெடுக்கும்படி வறுமை வரும். மறுமையில் நரகத்தில் செலுத்திவிடும் என்று கூறி மக்களை நல்வழிப்படுத்துகிறது (ஆசா கோவை – 38).

பேசக் கூடியவை ஒருவன் பேச்சு எப்படி இருக்க வேண்டும்? வஞ்சனையின்றி இருக்க வேண்டும். பயன் உடையதாய் இருக்க வேண்டும். எப்படி இருக்கக் கூடாது? ஒருவன் பேசும் மொழி வஞ்சனையாய் இருக்கக் கூடாது. பயனற்ற சொல்லாய் இருக்கக் கூடாது. நாவடக்கமின்றிப் பேசுதல் கூடாது. பிறரைப் பழித்துரைக்கக் கூடாது. நிலையான நல்லொழுக்கம் உள்ளவர் செயலாக இவற்றைச் சொல்கிறது ஆசாரக் கோவை.

படிறும் பயனிலவும் பட்டி யுரையும்

வசையும் புறனும் உரையாரே யென்றும்

அசையாத உள்ளத்தவர்

(ஆசாரக்கோவை – 52)

(படிறு = வஞ்சனை; பயனில = பயனற்ற சொல்; பட்டி உரை = நாவடக்கமில்லாத சொல்; வசை = தூற்றுதல்; புறன் = கோள்; அசையாத = உறுதியான)

இன்னும் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போமா? நாம் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும். அதை நாமே பாராட்டிக் கூறக் கூடாது. பிறர் இட்ட உணவை இகழ்தல் கூடாது. தம் அறச் செய்கையையும் நோன்பையும் தாமே புகழ்தலும் தகாது. ஆகையால் இவற்றைத் தவிர்க்க வேண்டும் (ஆசா கோவை – 88).

உலகியலில் ஒருவர் எங்காவது புறப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது எங்குப் போகிறீர்கள் என்று கேட்கக் கூடாது என்பர். கிளம்பும் பொழுது பின்னால் நின்று அழைக்கக் கூடாது, தும்மக் கூடாது என்பர். பெருவாயின் முள்ளியாரும் ஒரு பாடலில் இவற்றைச் சொல்கிறார். பாடலைப் பாருங்கள்.

எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும்

எங்குற்றுச் சேறீரோ என்னாரே முன்புக்கு

எதிர்முகமா நின்று உரையார் இருசார்வும்

கொள்வர் குரவர் வலம்

(ஆசாரக்கோவை – 58)

(கூவார் = கூப்பிட மாட்டார்; சேறீரோ = செல்கின்றீர்; இருசார்வு = இரண்டு பக்கங்கள்)

பேச்சு ஒரு கலை, ஒரே செய்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகச் சொல்வர். பலரும் பாராட்டும் வண்ணம் தக்கபடி சொல்வதன்றோ முறை! இது பற்றி ஆசாரச் கோவை என்ன சொல்கிறது? மிக விரைவாக ஒருவரிடம் ஒரு செய்தியைச் சொல்லக் கூடாது. பொய்யுரையும் மிகைப்படுத்தலுமின்றிக் கூறுதல் வேண்டும். எதைச் சொல்ல நினைக்கிறோமோ அதைச் சுருக்கமாகத் தெளிவாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். பாடலைப் பார்ப்போம்.

விரைந்துரையார் மேன்மேல் உரையார் பொய்யாய்

பரந்துரையார் பாரித்துரையார் – ஒருங்கனைத்தும்

சில்லெழுத்தி னாலே பொருளடங்கக் காலத்தால்

சொல்லுக செவ்வி யறிந்து

(ஆசாரக்கோவை -76)

(விரைந்து = வேகமாக; மேன்மேல் = அடுத்தடுத்து; பரந்து = விரித்து; பாரித்து = விவரித்து; சில்லெழுத்து = சில சொற்கள்)

வள்ளுவரும் சொல்வன்மை உடையவரை வெல்வது அரிது (647) என்பர். சொல்வன்மை உடைய அனுமான் சொல்லின் செல்வர் என்று பாராட்டப்படுகிறார் அல்லவா?

செய்யக் கூடாதவை ஒருவர் செய்யும் செயல்களே அவர் எத்தகைய பண்பை உடையவர் என்பதைக் காட்டும் அல்லவா?

ஒரு பொருளை வீசி எறிதல், கல்லெறிதல், மற்றவரை இகழ்ந்து பேசுதல், கை தட்டல் முதலியன தீயொழுக்கம் உடையார் செயல்களாம். எனவே, இவற்றை விலக்க வேண்டும் என்கிறது ஆசாரக்கோவை (53).

கிடைத்தற்கரியது என்று தெரிந்தவற்றை விரும்புதலும் இழந்த பொருளுக்கு வருந்தலும், அரிய துன்பத்திற்கு மனம் கலங்குதலும் பயனற்ற செயல்கள், இந்தப் பயனற்ற செயல்களை விலக்க வேண்டும் என்கிறார் பெருவாயின் முள்ளியார் (ஆசா கோவை – 89).

முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி, காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று. (காஞ்சித்திணை, பொதுவாக நிலையாமையைக் கூறும்). உலகியல் உண்மைகளைத் தெளிவாகப் பெருமக்கள் கூறுவது முதுமொழிக்காஞ்சி. அதுவே இந்நூலுக்குப் பெயராயிற்று. மேலும் ‘காஞ்சி’ என்பது மகளிர் அணியும் ஒருவகை அணிகலக் கோவையைக் குறிக்கும். பல மணிகள் கோத்த காஞ்சி அணிபோல முதுமொழிக்காஞ்சி என்று கருதுவாரும் உண்டு. அவ்வாறு பொருள் கொண்டால் முதுமொழிக்காஞ்சி என்பது அறிவுரைக்கோவை என்று பொருள்படும் என்பர் அறிஞர்.

ஆசிரியர் இந்த நூல் மதுரைக் கூடலூர் கிழாரால் இயற்றப்பட்டது. இவரது ஊர் கூடலூர். இவர் சங்க காலத்தில் வாழ்ந்த புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் அல்லர். சங்க காலத்திற்குப் பிற்பட்டவர். இருவரும் வெவ்வேறானவர் என்பதை உ.வே. சாமிநாதய்யர் குறிப்பிடுகிறார்.

நூலின் அமைப்பும் பாடு பொருளும் சிறந்த பத்து, அறிவு பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து, எளிய பத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து என்னும் பத்து அதிகாரங்களைக் கொண்டது இந்த நூல். ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள்களாக 100 பாடல்கள் உள்ளன. எல்லா அதிகாரத்திலும் முதல் செய்யுள் மட்டும் ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’ என்று தொடங்கி ஈரடியால் ஆன வெண்செந்துறை யாப்பில் அமைந்துள்ளது. ஏனைய ஒன்பது செய்யுள்களும் ஓரடியால் ஆனவை. முதல் அடியை ஏனைய அடிகளுக்கும் பொருத்திப் பொருள் கொள்ள வேண்டும் என்பது ஆசிரியர் கருத்தாக இருக்கலாம்.

பத்து என்பது பத்துப் பொருள்கள் ஆகும். முதல் பத்து சிறந்த பத்து. சிறந்தனவாகிய பத்துப் பொருள்கள் இப்பகுதியில் கூறப்பட்டுள்ளன. இதனால் இது சிறந்த பத்து என்னும் பெயரினைப் பெற்றுள்ளது. இதன் கண் உள்ள பத்து அடிகளிலும் சிறந்தன்று என்ற ஒரு சொல் பயின்று வந்துள்ளது. அதற்குச் “சிறந்தது” என்பது பொருள். பத்து அடிகளில் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு சிறந்த பொருளைக் கூறி அதைவிடச் சிறந்த இன்னொரு பொருளைக் கூறி விளக்குவது இதன் சிறப்பு.

சிறந்த பொருள்களை எவ்வாறு அறிவது என்பதை விளங்க வைப்பது ‘அறிவுப்பத்து’. பழியார் என்ற சொல்லால் உலகில் எதையெல்லாம் பழிக்க மாட்டார்கள் என்று பத்து அடிகளில் சொல்வது ‘பழியாப்பத்து’ எவையெல்லாம் நீங்காது என்பதைச் சொல்லும் அதிகாரம் ‘துவ்வாப்பத்து’. வாழ்க்கையில் அல்ல, அல்ல என்று கூறும் முறையால் நீதிகளைச் சொல்வது ‘அல்ல பத்து’. இல்லை என்பதைக் கூறும் பத்து முதுமொழிகளை உடையது ‘இல்லைப்பத்து’. ‘பொய்ம்மை’ கூறும் பத்து முதுமொழிகளை உடையது ‘பொய்ப்பத்து’. எளிமை கூறும் பத்து முதுமொழிகளை உடையது ‘நல்கூர்ந்த பத்து’. தவிராமை பற்றிக் கூறும் பத்து ‘தண்டாப்பத்து’. முதுமொழிக்காஞ்சி கூறும் வாழ்வியல் உண்மைகளை இனி விரிவாகக் காண்போமா?

சிறப்பானவை

நம் வாழ்க்கையில் சிறப்பானவையாகப் பல அமைந்துள்ளன அவற்றுள் எவை எவை சிறப்பானவை, அவற்றை எவ்வாறு அறிந்துகொள்வது, என்பன பற்றி முதுமொழிக் காஞ்சி பல கருத்துகளை வழங்கியுள்ளது.

சிறப்பை அறிதல் சிறந்தனவற்றைக் கூறியபின் அவற்றை அறியும் வகைகளைக் கூறுவது முறையல்லவா? ஒருவன் மனத்தில் இரக்கம் உடையவன் என்பதனை அவன் பிறர்க்குக் கொடுக்கும் முறையினால் அறியலாம். உயர்ந்த நட்புடைமையை அவன் நண்பர்களுக்குச் செய்யும் உதவியினால் அறியலாம்.

சோரா நல்நட்பு உதவியின் அறிப

(அறிவுப் பத்து : 3)

(சோரா = தளராத)

ஒருவனுடைய தவறுகளை அவனது மாறுபாடுள்ள சொல்லால் அறியலாம்.

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு

(குறள்:642)

என்ற குறட்பா சொல்லின் வன்மையை, வலிமையை வலியுறுத்துகிறதல்லவா? எனவே சொல்லின்கண் சோர்வு என்பது கூடாத ஒன்று.

சொல்லின்கண் சோர்வு இருந்ததால் தான் பாண்டிய மன்னன்,

தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு

கன்றிய கள்வன் கையது ஆகின்

கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்குஎன

(சிலப்பதிகாரம்,16,151-153)

என்று கூறினான், கோவலன் மாண்டான். சொல்லில் சோர்வு இல்லாவிடில், ‘கொல்ல அச்சிலம்பு கொணர்க’ என்று கூறியிருப்பான். எனவே சொல்கிற சொற்களில் இந்தப் பிழை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்பிழையை நீக்கிக் கொள்ளாத ஒருவன் தன்னிடத்தில் உண்டாகும் வேறு எந்தப் பிழைகளையும் அறிந்து கொள்ள மாட்டான். ஏனென்றால் இந்தப் பிழை அவனுடைய மற்றப் பிழைகளை அவன் அறியாமல் செய்துவிடும். ஆனால் மற்றவர்கள் அவனுடைய அந்தப் பிழைகளையெல்லாம் அறிவார்கள்.

இதனை முதுமொழிக்காஞ்சி

சொல்சோர்வு உடைமையின் எச்சோர்வும்அறிப

(அறிவுப் பத்து : 8)

(சொல்சோர்பு = சொல்வதில் தவறு)

என்று குறிப்பிடுகிறது.

ஒருவன் முயற்சியின் திறம் அவன் முடிக்கும் செயலால் அறியப்படும் என்பது அறிவுப்பத்தில் நாம் அறிந்து கொள்ளக்கூடிய செய்தியாகும். இனி பழிக்கப்படாதன யாவை என்பது பற்றி முதுமொழிக்காஞ்சி என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

மானிடப் பிறவி பிறப்பிலேயே மக்கட்பிறப்பு மிக உயர்ந்தது. ஆறறிவு பெற்றிருக்கின்றதால் நூல்களைக் கற்கும் வாய்ப்பும் அவர்களுக்கே உள்ளது. அவ்வாறு கற்கும் கல்வி அவர்களுக்குச் சிறப்பைத்தரும். ஆனால் அதைவிடச் சிறப்புடையது அவர்கள் கற்ற வழியில் நடந்து ஒழுக்கம் உடையவர்களாக இருத்தல். கற்றவர்கள் கற்றவழி நடந்தால்தானே மனித சமுதாயம் மாண்பு உடையதாக விளங்கும். இதனை முதுமொழிக்காஞ்சி

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை

(சிறந்த பத்து – 1)

(ஆர்கலி = நிறைந்த (கடல்) ஓசை, ஓதல் = கற்றல், சிறந்தன்று = சிறந்தது)

என்கிறது.

வண்மை என்பது வளம் பொருந்திய செல்வம். மக்கள், செல்வத்தைப் பெற்றிருப்பதன் பயன் இரப்போர்க்கு ஈதலே ஆகும்.

செல்வத்து பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே

(புறம் -189)

என்று புறநானூற்றுப் பாடலும், முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கார்க்கு உதவி செய்வதற்கே என்று திருக்குறளும் ஈதலின் இன்றியமையாமையை எடுத்துரைக்கின்றன. என்றாலும் பலர் செல்வம் வந்தபொழுது அந்த ஈகைப் பண்பை மறப்பதோடு, செல்வச் செருக்கினால் தீமைகள் பலவற்றையும் செய்வர். செல்வ மிகுதியால் கேடுகள் உண்டாகும் வாய்ப்புகளே மிகுதி. ஆனால் ஒருவர் வாய்மை உடையவர் ஆக இருந்தால் எப்படிப்பட்ட தீமையும் எவர்க்கும் உண்டாகாது. எனவே ஒருவர் பலவகைக் கேடுகளையும் விளைவிக்கக் கூடிய செல்வத்தைப் பெற்றிருப்பதை விட, நன்மையைச் செய்யும் வாய்மை உடையவராக இருப்பதே மிகுந்த சிறப்பாகும். இதனை முதுமொழிக்காஞ்சி

வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை

(சிறந்த பத்து : 4)

(சிறந்தன்று = சிறந்தது)

என்று கூறுகிறது.

இளமைப்பருவம் இன்பம் தரக் கூடியது. ஆனால் அதைவிட நோயற்ற வாழ்வு தரும் இன்பமே மிகச் சிறந்தது. கற்றல் சிறந்தது. கற்றலை விடக் கற்றாரை வழிபடல் சிறந்தது. இளமைக் காலத்தில் செல்வம் பெருகல் சிறந்தது. முதுமையில் அது குறையாமல் இருப்பது அதைவிடச் சிறந்தது என்பன போன்ற அரிய கருத்துகளையும் மதுரைக் கூடலூர் கிழார் கூறுகிறார்.

சிறப்பு இல்லாதவை

சிறப்பான பொருள்களைப் பற்றி இலக்கியங்கள் பேசுவது இயல்பு. சிறப்புள்ள பொருளும் சிறப்பில்லாமல் போவது எப்போது என்பதைப் பத்துப் பாடல்களில் சொல்கிறார் மதுரைக்கூடலூர் கிழார்.

விருப்பமில்லா விருந்து இல்லையென்று வந்தவர்க்கு இல்லையென்னாது கொடுப்பது ஈகை. அதுவே விருப்பம் இல்லாமல் பிறருடைய கட்டாயத்திற்காகக் கொடுக்கப்படும்போது ஈகையே சிறப்பில்லாமல் போய்விடும் என்பதை,

பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது

(துவ்வாப் பத்து : 4)

(பேணில் ஈகை = விருப்பமில்லாத ஈகை; துவ்வாது = நீங்காது)

என்ற பாடல் உணர்த்துகிறது.

ஒருவர்தாம் உண்ணும்பொழுது இரப்பவர்க்கு இயன்ற அளவு கொடுத்துவிட்டு உண்ண வேண்டும். தான் ஒருவனே உண்டு வாழும் வாழ்வு சிறப்புடையது அன்று. எவனொருவன் தன் ஒருவனுக்காகச் சமைத்துக் கொள்கிறானோ அவன் பாவத்தை உண்கிறான் என்று குறிப்பிடுகிறது பகவத் கீதை. எனவே ஒருவன் பிறர்க்கு ஈயாது தான் மட்டும் உண்டு வாழ்தல் கூடாதது ஆகும். இதனை முதுமொழிக்காஞ்சி,

தான்ஓர் இன்புறல் தனிமையில் துவ்வாது

(துவ்வாப் பத்து : 10)

என்று குறிப்பிடுகிறது. ஆசாரக்கோவையும் “தமக்கென்று உலை ஏற்றார்” (39) என்று கூறுவதைக் காணலாம்.

மாண்பில்லா மனைவி எதிர்மறையாகக் கூறும் உண்மைகள் ‘அல்ல பத்து’ என்ற தலைப்பில் வரும் முதுமொழிகளாகும். இல்லறத்தில் மனையாள் பங்கைச் சிறப்பிற்குரியதாக இலக்கியங்கள் பேசுகின்றன. மனையாள் மாண்புடன் இருந்தால் மனைவாழ்க்கை சிறப்படையும். இல்லையெனில் இல்லறம் நல்லறமாகாது என்பது

தாரம் மாணாதது வாழ்க்கை அன்று

(அல்ல பத்து : 2)

(மாணாதது = சிறவாதது)

என்னும் பாடலில் கூறப்பட்டுள்ளது.

அறமில்லா ஈகை ஈகையானது அறவழியில் இருக்கவேண்டும். வறியார்க்கு ஒன்று ஈதல், அறச்சாலைகட்குப் பயன்படுத்துதல், அறிவுமுறைகட்கு வழங்கல் முதலிய வகைகளில் அமைய வேண்டும். பசுவைக் கொன்று செருப்பைத் தானம் செய்வது போல அமையக்கூடாது. இதனை முதுமொழிக்காஞ்சி எப்படிச் சொல்கிறது பாருங்கள்!

அறத்தாற்றின் ஈயாதது ஈகை யன்று

(அல்ல பத்து : 8)

ஈகையும் அறவழியில் நிற்கும் தகுதியுடைவர்க்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் விட்டால் ஒழுகிவிடும் அல்லவா?

இளமைக்காலம் தொட்டு முதுமைக்காலம் வரை ஒருவன் அறம் செய்து பயன் அடையவேண்டும். அவ்வாறு அறம் செய்யாமல் அடைந்த மூப்பு சிறப்புடையதாகாது என்று வாழும் வாழ்க்கைக்குப் பொருளாயிருப்பது மற்றவர்க்கு உதவும் அறஉணர்வே என்பதை முதுமொழிக்காஞ்சி,

மறுபிறப் பறியாதது மூப்பு அன்று

(அல்ல பத்து : 10)

என்று சொல்கிறது. மறு பிறவி உண்டு என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி வாழாமல் முதிர்ந்த மூப்பு சிறந்த மூப்பாகாது என்பது இதன் பொருள்.

மக்கட்பேறு இல்லா வாழ்க்கை இவ்வுலகில் கிடைத்தற்கரிய பேறுகள் எத்தனையோ உள்ளன. அவற்றில் மக்கட்பேறே சிறந்த பேறு என்பதை,

பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த

மக்கட் பேறல்ல பிற

(குறள் : 61)

என்பார் திருவள்ளுவர்.

படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்

உடைப் பெருஞ் செல்வ ராயினும் . . . . .

மயக்குறு மக்களை யில்லோர்க்குப்

பயக்குறை யில்லை தாம்வாழும் நாளே

என்று புறநானூற்றுப் பாடலும் (188) மக்கட்பேற்றைச் சிறப்பித்துக் கூறுகின்றது.

இந்தக் கருத்தையே முதுமொழிக்காஞ்சி

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

மக்கட் பேற்றிற் பெறும் பேறில்லை

(இல்லைப் பத்து : 1)

என்று பிரதிபலிக்கிறது. செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தலை விடத் தக்க செயல் வேறில்லை.

விருப்பமும் விளைவும்

இன்பமும் துன்பமும் எல்லோரது வாழ்க்கையிலும் நிகழக் கூடியவை. இன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதைப் போல, துன்பத்தை ஏற்றுக் கொள்வதில்லை. துன்பத்தைக் கண்டு அஞ்சுவார்கள். சிலர் அதைப் பொறுமையோடு பொறுத்துக்கொள்வர். அத்தகையோருக்கு என்ன சிறப்பு கிட்டும் என்று ஆசாரக்கோவை கூறுகிறது.

சிலர், உடல் வளத்தை மனத்திற்கொண்டு, எப்பொழுதும் அளவுக்கு அதிகமான உணவையே உண்டு மகிழ்வர். அத்தகையோருக்கு எத்தகைய தீமை வரும் என்பதனை முதுமொழிக் காஞ்சி வெளிப்படுத்துகிறது.

துன்பமும் இன்பமும் ஒருவர் ஒரு நல்ல செயலை முயற்சியுடன் செய்கின்றபொழுது அதில் அவர்க்குப் பல துன்பங்கள் உண்டாகலாம். ஆனாலும் அவர் அத்துன்பங்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். துன்பங்களைக் கண்டு அஞ்சி, செயலைக் கைவிடுதல் கூடாது. அத்தகையவர்க்கு முடிவில் அச்செயல் கைகூடி இன்பம் உண்டாகும். எனவே ஒரு செயலைக் செய்து முடிப்பதில் உண்டாகக் கூடிய துன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்கின்றவர்கட்கு இன்பம் மிகவும் எளிமை உடையது ஆகும் (எளிய பத்து : 5).

துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது

(எளிய பத்து – 5)

(வெய்யோர் = விரும்புவோர்)

உணவும் நோயும் ஒருவன் உண்ணும் போது அளவறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால் நோய் உண்டாகாது. அளவு கடந்து உண்டால் அவ்வுணவு செரிக்காது. உண்டவனுக்கு மிகுந்த நோயை உண்டு பண்ணும். எனவே, உணவை அளவுக்கு மேல் உண்பவர்கட்கு நோயானது எளிமையாக வந்து சேரும்.

உண்டிவெய் யோர்க்கு உறுபிணி எளிது

(எளிய பத்து – 7)

(வெய்யோர் = விரும்புவோர்)

இவ்வாறு அளவறிந்து உண்ண வேண்டியதன் அவசியத்தை முதுமொழிக்காஞ்சி வலியுறுத்துகிறது, எனவேதான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்றார் ஆன்றோர்.

தொகுப்புரை

நம் வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளான உண்ணுதல், உறங்குதல், பேசுதல் போன்றவற்றிற்கும் விதிமுறைகளைக் கூறும் ஆசாரக்கோவை, கடவுள் வழிபாட்டை வலியுறுத்துகிறது. மனிதனின் உயர்பண்புகள் இவை, இப்பண்புகளைக் கொண்டவர்தான் சிறந்த மனிதன் என்று வாழ்வியல் மதிப்புகளை வரையறை செய்கிறது. முடியாட்சி நிலவிய சமுதாயமாகையால் அரசனை மையமாக வைத்துப் பல பாடல்கள் அமைந்துள்ளதை இந்நூலில் காணலாம்.

சான்றோர் செயல் இதுவெனக் கூறும் பாடல்கள் வாழ்க்கைக்குத் தேவையான நன்னெறிகளை எடுத்துரைக்கின்றன.

முதுமொழிக்காஞ்சி, காஞ்சித்திணையின் துறைகளில் ஒன்று. பத்துப் பாடல்களைக் கொண்ட பத்து அதிகாரங்களில் நூறு முதுமொழிகளை இந்நூலில் காணலாம்.

சிறந்தனவற்றைக் கூறி அவற்றை விடச் சிறந்த பொருள்களை எடுத்துரைப்பது இதன் சிறப்பாகும். சிறந்தனவற்றை எப்படி அறிவது என்பதை, இந்நூல் எடுத்துரைக்கிறது. எளிமையானவை எவை, பொய்யானவை எவை, பயன் இல்லாதன யாவை என்பதையும் இந்நூல் பட்டியலிடுகிறது. யாருக்கு எது எளிது என்பதையும் இந்நூல் எடுத்துச் சொல்கிறது.

எதிர்மறையால் கூறும் வாழ்வியல் உண்மைகளை, அல்ல பத்து, இல்லைப் பத்து என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறது.

வாழ்க்கையில் இன்ப துன்பங்களை, இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவ நிலையை மனிதன் அடைய வேண்டும் என்ற உண்மைகளையும் உணர வைக்கிறது. அளவில் சிறிய நூலாக அமைந்து, ஆன்றோர் அனுபவ மொழிகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நூலாக முதுமொழிக்காஞ்சி விளங்குகிறது.

பாடம் - 6

பழமொழி நானூறு

பாட முன்னுரை

பழமொழி நானூறு என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் பழமொழி என்றும் வழங்கப்படும். இந்நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக உள்ள நானூறு வெண்பாக்களும் நானூறு பழமொழிகளைக் கொண்டு விளங்குகின்றன. ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வொரு சிறந்த கருத்தை உணர்த்துகிறது. படிப்பவர் எளிமையாகக் கற்கும் வண்ணம் சொல்லும் கருத்துகளின் அடிப்படையில் 34 அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சில அதிகாரங்கள் 10 வெண்பாக்களைக் கொண்டுள்ளன. சில அதிகாரங்களில் 10-க்கு மேற்பட்ட வெண்பாக்கள் உள்ளன. எஞ்சியவற்றில் 10-க்குக் குறைவான வெண்பாக்கள் உள்ளன. இவற்றைப் பற்றிய கருத்துகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார். முன்றுறை என்பது ஊர். அரையனார் என்பதால் சிற்றரசராக இருக்கலாம். சமண சமயத்தைச் சேர்ந்த இவர் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.

பழமொழிகள்

பழமொழிகள் சான்றோர்களின் அனுபவ மொழிகள், மக்களை நன்னெறியில் செலுத்தக் கூடிய வழிகாட்டிகள். உலகெங்கிலும் பழமொழிகள் காணப்படுகின்றன.

எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும் பழமொழிகள் உண்டு. உலக நாடகக் கவிஞர் செகப்பிரியர் தம் நாடகங்களில் பழமொழிகளைப் பயன்படுத்தியிருக்கிறார். ‘விரும்பிய வண்ணமே’ (As you Like it) என்ற நாடகத்தில் எல்லாம் (கேடுகளும்) நன்மைக்கே என்ற கருத்தமைந்த பழமொழியைப் பயன்படுத்தியுள்ளார். அவருடைய நாடகத் தலைப்புகள் பழமொழிகள் போன்றே காணப்படுகின்றன. சான்றாகச் சிலவற்றைக் கீழே காணலாம்.

‘As you like it’, ‘Measure for Measure’. ‘Much Ado About Nothing’, ‘All’s well that ends well’.

ஏசுநாதர் தம் குழுவில் உள்ள நற்சீடர்களுக்குப் பழமொழிகள் வாயிலாகவே அறவுரை பகர்ந்திருக்கிறார். ‘மருத்துவனே, உன்னை முதலில் குணப்படுத்திக் கொள்’என்று அறிவுரை கூறுவார். ‘Physician, heal thyself’. அறிஞர் பெருமக்களான அரிஸ்டாட்டில்,     சாலமன் ஆகியோரும் பழமொழிப் பித்தர்கள் என்பார்கள்.

இலக்கியங்களில் பழமொழிகள் சங்க இலக்கியம் முதலாக அனைத்து இலக்கியங்களிலும் பழமொழிகள் பயின்று வருகின்றன.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

பழகப் பழகப் பாலும் புளிக்கும்

என்ற இரண்டு பழமொழிகளும் மக்களிடையே மிகவும் அறிமுகமானவை. குறுந்தொகையில் இப்பழமொழி எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்று பார்ப்போமா?

தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையிடம் (பொதுமகளிர்) சென்று விட்டான் தலைவன். தலைவி வருந்தியிருக்கிறாள். அவள் மீது அன்புடைய தோழி தலைவன் வந்தவுடன் அவனை வீட்டின் உள்ளே விடாமல் வாயிலில் நிறுத்திக் கீழே குறிப்பிட்டுள்ளவாறு பேசுகிறாள்.

குளிர்ச்சியான நீரில் அளவிற்கு மேல் நீராடினால் உடம்பிற்குத் துன்பம் உண்டாகும்.   தேன்இனிப்புடையதுதான். அதையே இடைவிடாது பலமுறை உண்டால் உண்டவர்க்கு அது வெறுப்பைக் கொடுக்கும். சுவை உடைய தேன் இப்போது புளிப்பாய் இருக்கும். அதுபோல நாங்களும் உனக்கு இதுநாள் வரை இனிய இன்பப் பொருளாய்த் தோன்றினோம். பழக்க மிகுதியால் இப்போது வெறுப்புடைப் பொருளாக மாறினோம் என்று கூறுகிறாள். இந்தக் கருத்தை உட்படுத்தி,

நீர் நீடாடிற் கண்ணும் சிவக்கும்

ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்

(குறுந்தொகை:354)

(நீடு ஆடில் = நீண்ட நேரம் நீராடினால், ஆர்ந்தோர் = அதிகமாக உண்டோர்)

என்ற பாடலைப் பாடுகிறார் புலவர் கயத்தூர் கிழார்.

காப்பியங்களிலும், புராணங்களிலும் பழமொழிகள் எடுத்தாளப்படுகின்றன. கம்பராமாயணம், வில்லிபாரதம், திருமுறைகள், திருவருட்பா ஆகிய நூல்களிலும் பல பழமொழிகளைக் காண முடிகிறது.

• நாடகங்களில் பழமொழி

நாடக இலக்கியங்களிலும் பழமொழிகள் பல இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக ‘பெண் என்றால் பேயும் இரங்குமே’ என இராம நாடகத்திலும், ‘பூவையை வளர்த்துப் பூனைக்கு ஈயவோ’ என்று மனோன்மணீயம் நாடகத்திலும் பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

• இலக்கியப் பெருமையும் பழமொழியும்

தமிழ் இலக்கியங்களில் சிறப்பு வாய்ந்தவை திருக்குறளும், நாலடியாரும். இவற்றின் பெருமையை வெளிப்படுத்துகின்ற வகையிலும் பழமொழிகள் வழங்குகின்றன.

பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்

ஆலும் வேலும் பல்லுக்குறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

என்பவை குறளுக்கும் நாலடியாருக்கும் சிறப்பைத் தரும் பழமொழிகள். அதைப்போல, ‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்று பழமொழிகளால் குறிப்பிடுவதைக் காணலாம்.

• தமிழ்மொழியின் சிறப்பு

ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற அனைத்து மொழிகளிலும் பழமொழிகள் உண்டு. ஆனால் எம்மொழியிலும் பழமொழிக்கென்று ஒரு தனி நூல் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழில் பழமொழிக்கென்று நூல்கள் உள்ளன. அவை ‘பழமொழி நானூறு’ மற்றொன்று பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம் என்பன. இத்தனைச் சிறப்பு பழமொழிக்கு உரியது ஆவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமோ?

பழமொழி – அமைப்பும் சிறப்பும் • பழமொழி என்ற சொல் – விளக்கம்

1.   பழமையான மொழி – தொன்மையானது (அனுபவ மொழிகள்)

2. பழம் போன்ற மொழி – பழம் போல் இனிமையானது. சுவை உடையது. (இலக்கியச் சுவை)

3.பழம் போல நன்மையளிப்பது (வாழ்க்கையில் நெறிப்படுத்துவது)

4.பழம் போல் நெகிழ்ந்த தன்மை – புரிந்து கொள்ள எளிமையானது.

என்கிற அனைத்துப் பொருளையும் உள்ளடக்கியுள்ளது. பழமொழி என்ற சொல் மிகவும் பொருளாழம் உடையது இல்லையா?

• இலக்கணம்

தொல்காப்பியர் பழமொழியை ‘முதுமொழி’என்று குறிப்பிடுகிறார்.

அங்கதம் முதுசொலோடு

(தொல்.பொருள்.செய்:79)

இம்முதுமொழிக்குரிய இலக்கணத்தைத் தொல்காப்பியர் வகுத்தும், தொகுத்தும் உரைக்கிறார்.

நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்

எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது முதலிய முதுமொழி யென்ப

(தொல்.பொருள்.செய்:177)

இதன் பொருளாவது:

1.பழமொழி கூர்மையோடு திட்ப நுட்பம் உடையதாய் இருத்தல் வேண்டும்.

2. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்.

3. சிறந்ததாக எளிமையாக அமைந்து இருக்க வேண்டும்.

4. குறித்த பொருள் ஒன்றினை வரையறுத்துக் கூற வேண்டும்.

ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் தொல்காப்பியர் பழமொழிக்கு வகுத்த இலக்கணங்கள், இன்று பழமொழிக்கு மேலைநாட்டார் கூறும் விளக்கத்தோடு பொருந்துகின்றன என்பது வியப்பைத் தருகிறது.

• மேலைநாட்டார் விளக்கம்

ஆர்.சி.டிரெஞ்ச் பழமொழிகளும் அவற்றின் படிப்பினைகளும் என்ற நூலில் பழமொழிக்குச் சில இலக்கணங்கள் வரையறுக்கிறார். அவை:

1.பழமொழி மூச்சை ஒருமுறை உள்ளெடுத்து வெளிவிடும் நேரத்திற்குள் குறைந்த சொற்களால் ஆக்கப்பட வேண்டும்.

2. நல்ல உணர்வுடன் இருக்க வேண்டும்.

3.நுட்பம் உடையதாய் இருக்க வேண்டும். உப்பிட்ட பண்டம் போல் தீமை தராத வகையில் அமைய வேண்டும்.

• தொல்காப்பியமும் பழமொழியும்

மேற்கூறிய கருத்துகள் பெரும்பாலும் தொல்காப்பியர் கருத்துகளுடன் ஒத்துச் செல்கின்றன. தொல்காப்பியர் கூறிய பழமொழி இலக்கணங்களுக்கு ஏற்பவே பழமொழி நானூறு சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது. எளிமையாக, அதே சமயம் கூர்மையாக, கூறவந்த கருத்தை வரையறுத்துச் சொல்வதாக இருக்கிறது. சுவையாக அமைந்து எக்காலத்தும் பயன்படுத்தும் வண்ணம் நின்று நிலவும் பெருமை உடையதாய் உள்ளது.

• அமைப்பு

முதல் இரண்டடிகளில் ஆசிரியர் தாம் எடுத்துக் கொண்ட பொருளைக் கூறுவார். மூன்றாமடியில் ஆணையோ, பெண்ணையோ விளித்துக் கூறுதலைக் காணலாம். அதனைத் தொடர்ந்து நான்காம் அடியில் பழமொழியைக் காணலாம்.

• வரலாற்றுக் குறிப்புகளும் புராணக் குறிப்புகளும்

பண்டைய வரலாற்று நிகழ்ச்சிகள் பல இந்நூலில் குறிக்கப்படுவதைக் காணலாம். மனுநீதிச் சோழன், பொற்கைப் பாண்டியன், பாரி, பேகன், கரிகாற் சோழன், சேரன் செங்குட்டுவன் ஆகியோரைப் பற்றிய செய்திகள் சில குறிக்கப்படுகின்றன.

தவறு செய்த தன் மகனைத் தேரின் சக்கரத்தால் கொல்லும்படி ஆணையிட்ட, மனுநீதிச் சோழனைப் பற்றிக்

கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்

(பழ – 242)

என்று பழமொழி கூறுகிறது.

தவற்றை நினைத்துத் தன் கை குறைத்தான் தென்னவனும்

(பழ – 76)

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

(பழ – 74)

நரைமுடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன்

(பழ – 6)

இராமாயண, மகாபாரதக் கதைக் குறிப்புகளும், மாவலி, வாமனன், மதுகைடவர் என்போரைப் பற்றிய புராணக் குறிப்புகளும் இந்நூலில் காணப்படுகின்றன.

கல்வி

கல்வியின் சிறப்பைப் பற்றி அறநூல்கள் கூறுகின்றன. அதைப்போல, பழமொழியும் கல்வியின் பெருமையைக் கூறுகின்றது. கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு உண்டு. அறிவுடையவர் புகழ் நான்கு திசைகளிலும் சென்று பரவும். எனவே அறிவுடையவர்க்கு எந்த நாடும் அயல்நாடாகாது. அவர் சொந்த நாடேயாகும். தன் சொந்த ஊரில் இருப்பது போல இருக்க முடியும். ஆதலால் வழியில் உண்பதற்கு உணவு கொண்டு செல்ல வேண்டியதில்லை. இதனை,

ஆற்றுணா வேண்டுவதில்

என்று பழமொழி (4) கூறுகிறது.

அறிவுடைய ஒருவனை அரசனும் விரும்புவான். செல்கின்ற இடந்தோறும் அவன் பலராலும் உபசரிக்கப்படுவான். அவனுக்கு வேண்டுவன கிடைக்கும் என்று கல்வியின் சிறப்பும் உயர்வும் கற்றவர் சிறப்பும் உயர்வும் ஒருங்கே உணர்த்தப்படுவதைக் காணலாம்.

• கற்றோர் சிறப்பு

பல நூல்களைக் கற்றுணர்ந்தவர்கள் அடக்கம் உடையவராய் இருப்பர். தம்மைப் புகழ்ந்து பேசமாட்டார்கள். நீர் நிறைந்த குடம் ஆரவாரம் செய்யுமோ? செய்யாதல்லவா? அதைப் போலவே நிறையக் கற்றுணர்ந்தவர்கள் ஆரவாரம் செய்யமாட்டார்கள் என்பதை விளக்க வந்த பழமொழி.

நிறைகுடம் நீர்தளும்பல் இல்

(பழ:9)

அறிவுடைமை அறிவுடையார் சிறப்புப் பற்றி, பழமொழி என்ன சொல்கிறது என்று பார்ப்போமா? அறிவுச் செல்வம் சிறந்த செல்வம். பொன்னும், இரத்தினமும், சந்தனமும், மாலையும் போன்ற பிற அணிகள் யாவும் ஒருவனை அழகுறச் செய்கின்றன. எப்போது? அவன் அணிந்திருக்கின்ற ஆடை ஒழுங்காக இருக்கும்போதுதான். அதுபோல் அறிவாகிய பெருமை ஒருவனுக்கு ஆடை போன்றது. அறிவாகிய பெருமை இல்லாதவன் செல்வத்தைப் பெற்றதனால் பெருமை அடையமாட்டான்.

அணியெல்லாம் ஆடையின் பின்

(பழ:26)

என்ற பழமொழி இவ்வாறு அறிவுடைமையின் சிறப்பைப் பேசுகிறது.

வானில் ஆயிரம் நட்சத்திரங்கள் மின்னுகின்றன. ஒப்பற்ற ஒரு சந்திரனும் வானில் ஒளி வீசிக் கொண்டிருக்கிறான். ஆயிரம் நட்சத்திர ஒளி ஒன்று கூடினாலும், ஒரு சந்திரனைப் போல் ஒளி தந்து உலகிற்குப் பயன்படாது. அறிவிலார் பலர் சேர்ந்தாலும் அறிவுடையான் ஒருவனுக்கு நிகராக மாட்டார்கள் என்ற கருத்தை விளக்கும் பழமொழிப் பாடல் இதோ:

ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்

மாயிரு ஞாலத்து மாண்(பு) ஒருவன் போல்கலார்

பாய்இருள் நீக்கும் மதியம்போல் பல்மீனும்

காய்கலா ஆகும் நிலா

(பழ:27)

கல்லாதவர் இனி,கல்லாதவர் நிலைபற்றிப் பழமொழி என்ன சொல்கிறதென்று பார்ப்போமா? நடக்க முடியாத முடவன் ஒருவன் ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு எழுகிறான். எழுந்து என்ன செய்யப் போகிறான்? யானையோடு விளையாடப் போகிறானாம். நமக்கு நகைப்பாக இருக்கிறது. திகைப்பாக இருக்கிறது. ஆனால் அவன் அடையப் போவது அவமானமும் துன்பமுமே. இதுபோன்ற அவமானத்தையும் துன்பத்தையும் தான் கல்லாதவர் கற்றவரோடு வாதம் செய்யின் அடைவர். இக்கருத்தைச் சொல்லும் பழமொழிப்பாடல் இதோ!

கல்லாதார் ஆற்றுவாரைக் கறுப்பித்துக் கல்லாதார்

சொல்தாற்றுக் கொண்டு சுனைத்துஎழுதல் எற்றெனின்

தானும் நடவான் முடவன் பிடிப்(பு) ஊணி

யானையோடு ஆடல் உறவு

(பழ:16)

(கறுப்பித்து = கோபமூட்டி; சுனைத்து = சினந்து; பிடிப்பு ஊணி = ஊன்று கோலை ஊன்றி)

அவையறிதல் அவையில் உள்ளாரின் இயல்பறிந்து, சூழல் அறிந்து பேசுதல் அவையறிதலாகும். அவையில் உள்ளவர் ஒருவர் ஒருவராகத் தம் கருத்தைக் கூறுதல் வேண்டும். மாறுபடுவோர் இருவரும் ஒரே காலத்தில் வாதம் செய்தால் அது தகுதி உடையது ஆகுமா? ஆகாதல்லவா? அவ்வாறு ஒரே நேரத்தில் வாதம் செய்தால் அது எப்படி இருக்கும்? ஒரே காலத்தில் இருவரும் ஒரு நாயைக் கொண்டு வேட்டை ஆடுதல்போலாகும்.

சிறிதேனும் இன்னாது, இருவர் உடன்ஆடல் நாய்

(பழ:18)

வாதம் செய்வோர் இருவரும் தம் கருத்தை ஒருவர் பின் ஒருவராகக் கூறினாலன்றி அவர்கள் கொண்ட கருத்தை நிலைபெறச் செய்ய முடியாது என்ற கருத்து இப்பழமொழியினால் தெளிவாகும்.

அவையில் ஒருவர் பேச்சைக் கேட்டபின் அதற்குரிய பதில் இறுத்தலே சரியானது. அவர் கூறுவதைக் கேளாமலே பதில் சொன்னால் அவையில் என்ன நடக்கும்? குழப்பம்தான் மிஞ்சும். இச்செயலுக்கு, பழமொழி எவ்வாறு உவமை கூறுகிறது பாருங்கள். முழந்தாள் கிழிந்து புண்பட்டவனை அஃது அறியாது மூக்கை நூல் கொண்டு கட்டுவதைப் போலாகும் என்கிறது.

முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு

(பழ:19)

இல்வாழ்க்கை

• இல்வாழ்க்கைக்கு உரிய சில நெறிகள்

விதையின்றி விளைவில்லை. செயல்கள் முயற்சியின்றி நடைபெறா. உணவு இல்லாது உயிர் வாழ்தல் இயலாது (பழ:327). குறிப்பறிதலும் விருந்தோம்பலும் உடைய பெண் இல்வாழ்க்கைக்கு உகந்தவள் (பழ:330). மக்களுக்கு அறிவு ஊட்டுதல் தந்தையின் கடன் (பழ:331). கல்வியறிவால் சிறந்த மக்களைத் தாயார் பெரிதும் விரும்புவர் (பழ:332) என்று இல்வாழ்க்கைக்கு உரிய நெறிகளைச் சொல்கிறது பழமொழி இலக்கியம்.

பொருளைப் போற்றுதல் இல்லறத்தில் இருப்போர்க்குப் பொருளைப் போற்றுதல் மிக அவசியம். ஏனென்றால் பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை. எனவே பொருள் ஈட்டும் காலத்து, பின்னாளில் உதவும் பொருட்டு, பொருளைச் சேமித்துக் காவல் செய்ய வேண்டும். நத்தை எதிர்காலத்தை நோக்கி நீரைச் சேமித்துக் காவல் செய்வதைப் போலப் பிற்காலத்திற்காகக் பொருளைச் சேமிக்க வேண்டும்.

சேணோக்கி நந்துநீர் கொண்டதே போன்று

(பழ:205)

(நந்து = நத்தை;  சேண் நோக்கி = எதிர்காலம் நோக்கி)

என்ற பழமொழி இக்கருத்தை விளக்குகிறது.

ஈகை இல்வாழ்பவன் ஈகைக்குணம் உடையவனாய் இருத்தல் வேண்டும். உலக வழக்கில் சிறிய மீனைப்போட்டு பெரிய மீனைப் பிடித்தல் என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இலாபநோக்கில் செய்யப்படும் ஒரு தந்திரமாகத்தான் இப்பழமொழியை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் முன்றுறையரையனார் உண்மையில் நம் வாழ்க்கைக்குப் பயன்தரத்தக்க ஓர் உயரிய வழியைத்தான் இப்பழமொழி வாயிலாகக் கூறுகிறார்.

இம்மையில் தம்மால் இயன்ற சிறிய பொருளை உள்ளன்போடு வறியவர்க்கு ஈய வேண்டும். இந்த நல்வினை செய்து மறுமையில் வீடுபேறு முதலியன பெற நினைக்க வேண்டுமாம். அப்படி நினைப்பவர்கள் அயிரை என்னும் சிறிய மீனைத் தூண்டிலில் கோத்துவிட்டுப் பெரிய வரால் மீனை இழுப்பவரோடு ஒப்பர்.

சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்

பெரிய பொருள் கருதுவாரே – விரிபூ

விராஅம் புனலூர வேண்டயிரை விட்டு

வராஅல் வாங்கு பவர்

(பழ:372)

(விராஅம் = கலந்திருக்கின்ற, அயிரை = ஒருவகை மீன், வராஅல் = ஒருவகை மீன்)

இறைத்தலால் குளத்து நீர் வற்றாதது போல

ஈதலால் செல்வம் குறைவுபடாது

(பழ:374)

வறியவர்க்குப் பொருள்ஈந்து ஏழையாயினார் இல்லை

(பழ:377)

இறைக்கின்ற கிணறு சுரப்பதைப்போலக் கொடுக்கக்

கொடுக்கப் பொருள் வளரும்

(பழ:378)

என்று சொல்லப்படும் கருத்துகள் மற்றவர்க்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கக் கூடியன.

• நன்றியில் செல்வம்

செல்வம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் அதை நன்கு பயன்படுத்தத் தெரிந்தவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் அச்செல்வம் பயனின்றி அழியும். எப்படித் தெரியுமா?

ஒரு நாயின் கையில் முழுத் தேங்காய் கிடைத்தது. அதை உண்ண நாய்க்கு அளவிட முடியாத ஆசை. ஆனால் அதை உரித்துத் தின்னும் வழியறியாது. மற்றவர்க்குக் கொடுக்கவும் மனமில்லாமல் தானும் உண்ண முடியாமல் உருட்டிக் கொண்டே இருக்கும். அதுபோலத்தான் மற்றவர்க்குக் கொடுக்கவும் தான் அனுபவிக்கவும் அறியாதவர் பெற்ற செல்வமும் பயனின்றி அழியும்.

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி

வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ

நாய்பெற்ற தெங்கம் பழம்

(பழ:216)

(வழங்கல் = ஈதல்; துய்த்தல் = அனுபவித்தல்; தெங்கம் பழம் = தேங்காய்)

சிலர் தம்மிடம் ஒரு பொருள் கேட்டவருக்குக் கொடுப்பதாகச் சொல்லிக் கேட்டவரை அலையவைப்பர். இத்தகைய ஏமாற்றுச் செயலைத் தக்க பழமொழியால் விளக்குகிறார் புலவர். பசுவுக்குப் புல் கொடுப்பார், வாயிலிடுவது போல்காட்டி, புல்லை அதன் கழுத்தில் கட்டி விட்டால் என்ன ஆகும்? பசு தன் கழுத்தில் கட்டிய புல்லைத் தின்னும் பொருட்டு முயன்று துன்புறும். அது போலவே பொருளைக் கேட்டவர் பொருளைப் பெற வேண்டும் என்ற ஆசையால் கால நீட்டிப்பினால் பலநாளும் வந்து துன்புறுவர்.

வாயுறைப் புற்கழுத்தில் யாத்து விடல்

என்பது பழமொழி (222).

அறம் செய்தல் வாழ்க்கையில் பொருள் ஈட்டுவது இன்றியமையாத ஒன்று. எல்லோரும் ஈட்டிய பொருளைச் செலவு செய்து அனுபவிப்பர். சேர்த்து வைப்பவரும் உண்டு. சேர்த்து வைக்கும் பொருள் பின்னால் நமக்கு உதவாது. ஆனால் செய்யத் தகுந்த இடம் நோக்கி அறம் செய்தால் பின்னால் தளர்ந்த காலத்து அதுவே உதவும் பொருளாகும். அதைத்தான் எய்ப்பினில் வைப்பு என்கிறது பழமொழி.

வைத்ததனை வைப்பென்று உணரற்க தாமதனைத்

துய்த்து வழங்கி இருபாலும் – அத்தகத்

தக்குழி நோக்கி அறம்செய்யின் அஃதன்றோ

எய்ப்பினில் வைப்பென் பது

(பழ:358)

(தக்குழி = தகுந்த இடம் நோக்கி; எய்ப்பினில் = தளர்ந்த காலத்து)

செய்ய வேண்டிய அறத்தைப் பின்னால் செய்து கொள்ளலாம் எனக் காலம் கடத்தினால் முதுமை வந்துவிடும். முதுமை வந்தால் நோயும் உடன் வரும். நோய் வந்தால் அறம் செய்ய இயலாது. சிந்தனை அறத்தில் நின்றாலும் நோய் அது செய்வதற்குத் தடையாகும். அந்நிலை, நாயைக் கண்ட பொழுது அதை ஓட்டக் கல்லைத் தேடினால் கல்லில்லாத தன்மையை ஒக்கும் என்பர்.

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்

என்ற உலகியல் வழக்கைக் கருத்தில் கொண்டு எழுந்த பாடல் இது.

மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை

ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து

நோய்காண் பொழுதின் அறம்செய்வார்க் காணாமை

நாய்காணின் கற்காணா வாறு

(பழ:361)

கலைவல்ல சிற்பி கல்லில் நாயைச் செதுக்கினான். நாய் கல்லில் அழகுற உருப்பெற்றது. காண்பவர் அதைக் கல்லென்று நினைத்தபோது கல்லாகத்தான் அது காட்சியளித்தது. நாயின் உருவத்தைக் காணும்போது அது நாயெனவே தோன்றியது. கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்ற சித்தாந்தப் பொருளையும் இப்பழமொழி விளக்கி நிற்கிறது.

உறவினர் உறவினர் பற்றிப் பழமொழி என்ன சொல்கிறது என்று பார்ப்போமா! உறவினர்க்கு உற்ற துன்பத்தைத் தமக்கு உற்றதாகவே உணர வேண்டும். உணர்ந்து அவர் துன்பங்களைக் களைய முற்படவேண்டும். அவ்வாறு களையாவிடில் அவர் நிலை உமியைக் குற்றுதலால் கை வருந்துமாற்றை ஒக்கும். உறவினரையே நம்பி அவர் வேறு முயற்சியின்றி இருத்தலின் அவர் கைவிட்ட விடத்து வருந்தித் துன்புறுவர்.

உமிக் குற்றுக் கை வருந்துமாறு

(பழ:348)

என்பது பழமொழி.

ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது அவர்க்கு நல்ல உறவினர் எனப்படுவார் விரைந்து அத்துன்பத்தை நீக்குபவரே. அவ்வாறு நீக்கும் செயல் ஆற்றல் உள்ள உறவினர், இல்லத்தின்கண் உள்ள மருந்து மரத்தினை ஒப்பர்

மனைமர மாய மருந்து

(பழ:350)

என்பது பழமொழி.

கோழி மிதித்தா குஞ்சு முடமாகி விடும்? என்ற பழமொழி நாம் அறிந்த ஒன்று. சுற்றத்தார், மனம் நோக உரைத்தாலும் அவரை நல்வழியில் நிறுத்தும் கருத்துடையர் என்பதை விளக்குகிறது ஒரு பழமொழிப் பாடல். தாயால் மிதிக்கப்பட்ட கால் முடம்படுதல் இல்லை அல்லவா? அதுபோல் மனம் வருந்த உரைக்கப்படும் மொழிகள் உறவினர்க்குத் துன்பம் தருவதில்லை. நன்மையே செய்யும். பாடலைப் பாருங்கள்!

உளைய உரைத்து விடினும் உறுதி

கிளைகள்வாய்க் கேட்பது நன்றே – விளைவயலுள்

பூமிதித்துப் புட்கலாம் பொய்கைப் புனலூர!

தாய்மிதித்து ஆகா முடம்

(பழ:353)

(உளைய = வருந்தும்படி;  கிளை = சுற்றம்)

நல் ஒழுக்கம் தான் அழிய நேர்ந்தாலும் பழியொடு பட்டவற்றைச் செய்யாதிருப்பதே நல்ஒழுக்கம். கடல் சூழ்ந்த இவ்வுலகில் மலைகள் தேய்வடையும், பழிச்சொல் மாறுதல் இல்லை. ஆதலால் தனக்குக் கேடு வருவதாக இருந்தாலும் தனக்கு ஒரு சிறிதும் பழி பயவாத செயல்களைச் செய்தலையே ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும்.

கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்

வடுவல்ல செய்தலே வேண்டும் – நெடுவரை

முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய

கல்தேயும் தேயாது சொல்….

(பழ:39)

(கெடுவல் = துன்பம் நேரும்; வடு = குற்றம்)

பிறர்க்கு இன்னா செய்யாமையும் நல் ஒழுக்கமே. எத்துணை எளியராயினும் தீங்கு செய்யக் கூடாது. (பழ:43). முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் (பழ:46). நம்மால் துன்புற்று ஒருவர் அழுத கண்ணீர் நம் செல்வத்தைத் தேய்க்கும் படை என்பார் வள்ளுவர் (குறள்:555). வலிமை உடையார் எளியாரை நலிவுறச் செய்தால் ஆற்றாது அவர் அழுத கண்ணீர் வலியவர்க்குக் கூற்றமாய் விடும் என்பது பழமொழி (பழ: 47).

அரசியல்

இல்லறத்தைப் பற்றிப் பேசிய பின் அரசியல்/அரசு பற்றிப் பேசுகிறது பழமொழி. குடும்பம் சமூகமாக விரிகிறது. அதற்குத் தலைமையான அரசன் பேசப்படுகிறான். அரசன் நடுவு நிலைமை உடையனாய் இருப்பது பற்றியும், அவன் வரி வாங்கும் விதம் பற்றியும் பழமொழி விளக்குகிறது. அமைச்சர்கள் இலக்கணம், பகைத்திறம், படைவீரர் பற்றியும் பழமொழி எடுத்துரைக்கிறது. முடியாட்சியில் அரசன் செங்கோன்மைச் சிறப்பும், அமைச்சர் சிறப்பும் அறிய முடிகிறது.

அரசியல்பு நாடாளும் அரசன் குடிமக்களைத் தன் கண்ணின் மணி போலக் காக்க வேண்டும். அனைவர்க்கும் நீதி கூறும் தலைமைப் பொறுப்பில் இருப்பவன் அரசன். எனவே, தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற கண்ணோட்டமின்றி நீதி கூற வேண்டும். செல்வன், வறியன் என்று நோக்காது நீதி கூறுதல் வேண்டும் (பழ:243).

•  தீயினம் சேராமை

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஓர் அறைக்குள்ளே பாம்புடன் இருப்பது என்பது எப்படி இருக்கும்? அப்படி ஒரு நிலையைச் சொல்கிறது பழமொழிப் பாடல். வஞ்சனை உடையாரைத் தலைமைப் பொறுப்பில் வைத்து உடன் இருக்கும் மன்னன் நிலையும் அப்படித்தான் இருக்கும் என்கிறார் புலவர்.

தலைமை கருதும் தகையாரை வேந்தன்

நிலைமையால் நேர்செய் திருத்தல் – மலைமிசைக்

காம்பனுக்கும் மென்தோளாய் அஃதொன்றோ ஓரறையுள்

பாம்போடு உடனுறையும் ஆறு

(பழ:253)

(காம்பனுக்கும் – காம்பு;  அனுக்கும் – மூங்கிலை வருத்தும்)

ஓரறையுள் பாம்போடு உடனுறைந்தற்று என்பது பழமொழி.

உட்பகை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் மனவேறுபாடு உடையாரோடு வாழ்தல் என்பது ஒரு குடிலின் உள்ளே பாம்போடு வாழ்தலை நிகர்க்கும் என்கிறார்.

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடனுறைந் தற்று

(குறள்:890)

ஒரு சிறு குடிலில் பாம்போடு வாழ்பவன் அப்பாம்பினால் தீண்டப்படுதல் உறுதி. வஞ்சனை உடையாருடன் வாழும் மன்னனும் அழியக்கூடும் என்ற கருத்தைத்தான் பழமொழியாக்கிப் பாடுகிறார் முன்றுறையரையனார்.

அமைச்சர் அரசனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் அமைச்சர். நல்லாட்சி நடைபெற இவர்கள் மன்னனுக்குத் துணையாக வேண்டும்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்

(குறள்:448)

இடித்துரைக்கும் அமைச்சர்கள் இல்லாத மன்னன் கெடுப்பார் இல்லாமலே கெட்டுவிடுவான் என்பது மேற்கூறிய குறட்பாவின் கருத்து. அறிவால் மூத்த அமைச்சர்கள் அரசன் நல்வழியில் செல்லவே அறிவுறுத்துவர். தீய நெறியில் செல்லும்போது இடித்துரைக்க வேண்டும். அரசனை வலியுறுத்தி அவனுக்கு உறுதியுரைக்கும்போது அச்சொற்கள் அப்போது துன்பம் தருவதாக இருந்தாலும் பின்னால் இன்பத்தையே அளிக்கும்.

செயல்வேண்டா நல்லன செய்விக்கும்; தீய

செயல்வேண்டி நிற்பின் விலக்கும்; இகல்வேந்தன்

தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால்

முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல்

(பழ:263)

என்ற பாடல் மேற்கூறிய கருத்தை விளக்குவதாகும்.

மன்னரைச் சேர்ந்தொழுகல் மன்னரைச் சேர்ந்து பணியாற்றக் கூடியவர்கள் எவ்வாறு வினை செய்ய வேண்டும் என்பதைப் பழமொழி நன்கு விளக்குகிறது. அரசன் ஆணையை உடனேயே அவன் கீழ் வாழ்வார் செய்தல் வேண்டும். அரசன் ஏவியதைத் தட்டாது செய்ய வேண்டும். அரசன் ஏவிய செயலைத் துன்புறுதலின்றிச் செய்யத் தொடங்குக என்பதனை, அச்செயல் செய்க என்று கூறியவன் உண்க என்று கூறியதை ஒக்கும் என்கிறது ஒரு பழமொழிப் பாடல் (பழ:267) .

வேலையைச் செய்யுமாறு தூண்டியவன் உண்க என்று சொல்லுதல்போல், ஏவிய அரசன் செயல் முடிதற்கேற்ப உதவி செய்து முடிப்பான் என்பதாகும். அரசரேயன்றி அவரைச் சார்ந்தோரும் பிறருக்கு அஞ்சார் என்ற கருத்தை விளக்க வந்த பழமொழி இது.

கூரிது எருத்து வலியநன் கொம்பு

(பழ:271)

அரசன் சீர்கெட்ட விடத்தும் அவனை இகழ்வார் தீமையையே அடைவர் என்ற கருத்தை விளக்க வந்த பழமொழி

இளைதென்று பாம்புஇகழ்வார் இல்

(பழ:277)

பகைத்திறம் பகையின் தன்மையை உணரும் ஆற்றல் மன்னனுக்கு இன்றியமையாதது. பகையில் சிறிய பகை பெரிய பகை என்ற வேறுபாடு பாராமல் அரசன் விரைந்து செயலாற்ற வேண்டும். பகை தோன்றிய காலத்திலேயே அவர்களுடைய நண்பர்கள் எல்லோரையும் முற்ற அறுத்துத் தன்னை விரும்புமாறு செய்து கொண்டால் அப்பகைமை முதிர்வதில்லை. தனியே ஒரு மரம் நின்று காடாதல் இல்லை. ‘தனிமரம் தோப்பாகாது’ என்று உலகில் வழங்கும் பழமொழியைப் பயன்படுத்தி, பகையைத் தோன்றியபோதே அழித்துவிட வேண்டும் என்ற கருத்தைக் கூறுகிறார் புலவர்.

இளைதாக முள்மரம் கொல்க என்ற குறட்பாக் கருத்தை இப்பழமொழியில் காணலாம்.

எதிர்த்த பகையை இளைதாய போழ்தே

கதித்துக் களையின் முதிராதே தீர்த்து

நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாந் தீரத்

தனிமரம் காடாதல் இல்

(பழ:286)

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதும் நாம் அறிந்த பழமொழி. முள்ளினை முள்ளாற் களைதல் போலப் பகைவரை அவரைச் சார்ந்தோர் துணையைப் பெற்றுக் களைய வேண்டும் என்கிற கருத்தைப் பின்வரும் பாடலில் காணலாம்:

தெள்ளி யுணரும் திறனுடையார் தம்பகைக்கு

உள்வாழ் பகையைப் பெறுதல் – உறுதியே

கள்ளினால் கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ

முள்ளினால் முட்களையு மாறு

(பழ:308)

படைவீரர் அரசர் வெற்றிக்குக் காரணமாக அமைவனவற்றுள் இன்றியமையாதது படைவீரர் இயல்பும் அவர்தம் இணையிலாத வீரமும் அல்லவா? அப்படை வீரர்களின் இயல்பும் சிறப்பும் பற்றிப் பழமொழி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போமா?

உண்மையான படைவீரர் தம் அரசர்க்கே பணிசெய்வர். ஒருபோதும் வஞ்சித்துப் பகைவரோடு ஒன்றுதல் இலர். மாறு கொண்ட இரண்டு எருதுகள் ஒரு துறையில் நீர் உண்ணாதல்லவா? அதுபோல உண்மையான படைவீரரும் பகைவரோடு ஒன்றமாட்டார்.

உற்றால் இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்

மற்றவர்க்கு ஒன்னாரோடு ஒன்றுமோ? – தெற்ற

முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? உண்ணா

இரண்டுஏறு ஒருதுறையுள் நீர்

(பழ:312)

வீரர்கள் தம்மை நலிய உரைத்தவர்களைப் பார்த்து, பதிலுக்குப் பேசுதல் கூடாது. செயலால் அடக்க வேண்டும். சொல்லால் அடக்கப் புகுதல் நரியின் ஊளையிடும் ஒலியால் கடல் ஒலியை அடக்கப் புகுதலையொக்கும் என்கிறது இன்னொரு பாடல் (பழ:316).

முயற்சி

சிறந்ததொரு வாழ்க்கைக்கு முயற்சி மிக மிகத் தேவை அல்லவா? நமக்கு யார் உதவி செய்வார்கள் என்று தேடிக் கொண்டிருக்கக் கூடாது. அளவுக்கு மீறி உண்டு நோயைத் தாமே உண்டாக்கிக் கொண்டால், அந்நோயைப் போக்குவதும் அவராலேயே முடியும். அதுபோல் நமக்கு வரும் துன்பங்களை நாமே போக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

தமக்கு மருத்துவர் தாம்

(பழ:149)

என்பது பழமொழி.

முயற்சி மிக உடையராய் வருந்தி வினை செய்பவர் வாழ்க்கையே சிறப்புறும். முயன்று பாடுபடாதவர் வாழ்க்கை செம்மை உறுவதில்லை. இக்கருத்தைச் சொல்லும் பழமொழி.

வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று

(பழ:151)

அறிவில்லாதவர் ஒரு தொழிலிலும் நிலைபெறாது சுற்றிச் சுற்றி வருவர். அதனால் எந்த நன்மையும் பெறாது வாழ்நாளை வீணே கழிப்பர். இக்கருத்தைச் சொல்ல முன்றுறையரையனார் பயன்படுத்தும் பழமொழியைப் பாருங்கள்!

உலக்கை மேல் காக்கை

(பழ:157)

காக்கை உரலின் கண் உள்ள அரிசியை உண்ணவும் உண்ணாது. உலக்கையை விட்டு நீங்கவும் செய்யாது. அதனைச் சுற்றி வருதல் போல அறிவிலாரும் ஒருவரிடமும் நிலைத்து நிற்கமாட்டார். எப்பயனும் பெறவும் மாட்டார்.

தெரிந்து செய்தல் புராண இதிகாசங்களில் வரும் நிகழ்வுகளையும் பழமொழியில் எடுத்தாளுகிறார் முன்றுறையரையனார். மாவலி என்ற மன்னனின் செருக்கை அடக்க, கண்ணன் மிகச் சிறிய வாமன வடிவம் எடுத்து வந்து நின்றான். மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்டான். உடன் இருந்த அமைச்சன் கண்ணன் தந்திரம் மிக்கவன்; நின் செருக்கை அடக்க வந்திருக்கிறான்; மூன்றடி நிலம்தர ஒத்துக்கொள்ள வேண்டாம் என்கிறான். அதைக் கேளாமல் இது எனக்கு எளியது என்று கருதித் தருகிறேன் என்றான் மாவலி. கண்ணன் பேருருவங்கொண்டு ஈரடியால் உலகளந்து மற்றோரடிக்கு இடமின்மையால் அவன் தலைமீதே கால் வைத்து அளந்தான். ஆராயாத செயலால் தனக்குத் தானே துன்பம் விளைவித்துக் கொண்டான் மாவலி. ஒரு செயலைச் செய்யத் தொடங்குமுன் ஆராய்ந்து அதனைச் செய்ய வேண்டும் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து.

ஆஅம் எனக்கெளி தென்று உலகம் ஆண்டவன்

மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்

தோஒ முடைய தொடங்குவார்க் கில்லையே

தாஅம் தரவாரா நோய்

(பழ:183)

(மேஎம் = மேவும், தன்னோடு பொருந்தியிருக்கும்; தாஅம் = தாமே; தோஒம் = குற்றம்)

கருமம் முடித்தல் ஒரு செயலைச் செய்து முடிக்க எண்ணுபவர் அதுவே குறிக்கோளாய் இருத்தல் வேண்டும். நம் செயலைச் செய்து முடிக்க வல்லாரது குறைகளைக் கூறித் திரியக் கூடாது. இக்கருத்தைச் சொல்ல வந்த முன்றுறையரையனார் பயன்படுத்தும் பழமொழி

தொளை எண்ணார் அப்பம் தின்பார்

(பழ: 165)

அப்பத்தை உண்ண விரும்பியவர்கள் அதைக் கையில் வாங்கிய பின்னர் அதில் உள்ள துளைகளை எண்ணிக் குற்றம் கூறி நீக்குவதில்லை. துளைகளை எண்ணாது அப்பத்தைத் தின்பது போல, நாமும் குறை கூறித் திரியாமல் கொள்ள நினைத்த பயனைக் கொள்ள வேண்டும்.

பசுவிடம் பால் கறக்க நினைப்பவர் கன்றினைச் செலுத்திப் பால் அருந்த விட்டுப் பின்னரே பால் கறக்க வேண்டும். அங்ஙனம் கறவாது அம்பினைச் செலுத்தி பசுவிடம் பால் கறக்க இயலுமா? அதுபோல நமது செயலைச் செய்வோரிடத்தில் அன்பாகவும் விரைவின்றியும் இருந்து செயலை முடித்துக் கொள்ள வேண்டுமாம். இக்கருத்தைக் கூறும் பாடலைப் பாருங்கள்!

அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது

நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது

கன்றுவிட்டு ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்

அம்புவிட்டு ஆக்கறக்கு மாறு

(பழ:166)

(ஆ = பசு)

வினை முடிக்கும் நிலையில் சோம்பல் உடையானைக் கொண்டு செய்வித்தல் ஆகாது. பொருள் உதவி செய்து செயலைச் செய்வித்துக் கொள்ள வேண்டும். நமக்காக நம் செயலைச் செய்பவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்பன போன்ற கருத்துகளையும் கூறுகிறார் முன்றுறையரையனார்.

ஊழ் தலையெழுத்து, தலைவிதி என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம் அல்லவா? அதைத்தான் ஊழ் என்று இலக்கியங்கள் பேசுகின்றன. ஊழிற் பெருவலி யாவுள? (குறள்-380) என்று வள்ளுவர் ஊழைவிட வலிமை படைத்தது இவ்வுலகில் என்ன இருக்கிறது என்று கேட்கிறார். மிகுந்த அறிவுடையாரிடத்தும் குற்றம் காணப்படுவது ஊழால்தான் என்கிறார் முன்றுறையரையனார்.

அறிவினை ஊழே அடும்

(பழ:228)

என்பது பழமொழி.

திருக்குறளின் ஊழ் அதிகாரத்தை ஒட்டிய பல கருத்துகளை நாம் பழமொழியில் காணலாம்.

தனக்கு ஆகாத செல்வத்தைப் பாதுகாப்பினும் நில்லாது

(பழ:231)

ஆகூழ் உடையார்க்குத் தீயனவும் நல்லனவாக முடியும்

(பழ:238)

(ஆகூழ் = நன்மை ஆக்குகின்ற ஊழ்)

நன்மை தீமை பற்றிய அறிவுடையவர்கள், ஊழால் செலுத்தப்படும் அம்புகள் தரும் துன்பத்தால் வருந்த மாட்டார். இதுபற்றி வள்ளுவரும்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்

(620)

என்கிறார்.

(உப்பக்கம் = புறமுதுகு; உஞற்றுபவர் = முயற்சி செய்பவர்)

துன்பமின்றி இடைவிடாது முயற்சி செய்பவர் ஊழையும் வலியிழக்கச் செய்வர் என்ற கருத்து இங்குக் கூறப்படுகிறது.

நட்பு

தனிமனிதருக்கும் அரசர்க்கும் நட்பு மிகத் தேவையானது. இனி நட்பு பற்றி பழமொழி என்ன கூறுகிறது என்று பார்ப்போமா? அன்பை வெளிப்படுத்தும் முறைகளில் சிறந்தது நட்புணர்வு. நல்லோர், நண்பர்களிடத்துத் தாம் வேறு அவர் வேறு என்னும் வேறுபாடின்றி ஒழுகுவர். விலங்குகளும் தம்மோடு கூடிப் பழகியவரை விட்டு நீங்குதல் செய்யாது. ஐந்தறிவுடைய விலங்குகளே இப்படி என்றால் ஆறறிவுடைய மனிதர்கள் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? பிரிதல் என்பது கொடியது. எவ்வளவு கொடியது என்பதை நுட்பமாகச் சொல்லும் பழமொழியைப் பாருங்கள்.

இன்னாதே பேயோ டானும் பிரிவு

(பழ:126)

(பேயோடானும் = பேயோடு ஆயினும்)

நண்பர் துன்புறுவாராயின் உடனே அவர் துன்பத்தைப் போக்க முயற்சி செய்ய வேண்டும். மன வருத்தமும் துன்பமும் நீங்க அவருக்கு ஆறுதல் மொழிகள் தேவை. அதுமட்டும் போதுமா? பனியால் குளம் நிரம்புமா? நிரம்பாதல்லவா? அதுபோலத்தான் நண்பர் துன்பம் நீங்கும் முயற்சி வெறும் உரைகளாக மட்டும் இல்லாமல் செயலாகவும் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான நட்பு.

இனியாரை உற்ற இடர்தீர் உபாயம்

முனியார் செயினும் மொழியால் முடியா

துனியால் திரையுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!

பனியால் குளம்நிறைதல் இல்

(பழ:127)

(துனி = சினம்)

தீயன செய்யும் பழைய நட்பை விட அஞ்சத்தகும் புதிய நட்பே நல்லது என்ற கருத்தைச் சொல்லும் இன்னொரு பாடல் இது.

பழமை கந்தாகப் பரியார் புதுமை

முழநட்பிற் சாணுட்கு நன்று

(பழ:129)

(கந்தாக = பற்றுக்கேடாக, பரியார் = நீங்கமாட்டார், உட்கு = அஞ்சத் தகும்)

நண்பர்கள் இருவருள் ஒருவராவது பொறுமை மேற்கொண்டு ஒழுகுதல், அவர்கள் நட்பு நீடித்து நிற்பதற்கு ஏதுவாகும் என்ற கருத்தைச் சுருக்கமாகச் சொல்கிறது. எளிமையாகச் சொல்கிறது இந்தப் பழமொழி.

ஒருவர் பொறை இருவர் நட்பு

(பழ:132)

நட்புக்குத் தகுதியிலார் நண்பர்களைத் தேர்ந்தெடுத்தல் என்பதும் நட்புக்குத் தகுதி இல்லாதவரை விலக்குதல் என்பதும் நாம் வரையறுக்க வேண்டியன. பண்பிலா மக்கள் நட்பை விலக்க வேண்டும். தம் காரியம் முடியும் அளவும் அதை முடிக்க வல்லாருடன் நண்பராய் இருந்து முடிந்தவுடன் விட்டு நீங்குவது பண்பிலார் இயல்பு. மச்சின்மீது ஏணியின் வழி ஒருவனை ஏற்றிவிட்டு அவன் இறங்குவதற்குள் ஏணியை நீக்குவது எப்படிப்பட்ட இழிந்த செயல்? இப்படிப்பட்ட செயலைச் செய்பவர்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள். இவர்கள் நட்பை விலக்க வேண்டும் என்கிறது பின்வரும் பழமொழிப்பாடல்.

எய்ப்புழி வைப்பாம் எனப்போற்றப் பட்டவர்

உற்றுழி ஒன்றுக்கு உதவலர் பைந்தொடீஇ

அச்சிடை யிட்டுத் திரியின் அதுவன்றோ

மச்சேற்றி ஏணி களைவு

(பழ:136)

(எய்ப்புழி = தளர்வு வந்தவிடத்து, வைப்பு = பெருநிதி, அச்சு = அச்சம்)

பண்பிலாரோடு கொண்ட நட்பு கானகத்து நிலாப் போலப் பயனின்றிப் போகும் என்பதும் நாம் காணும் மற்ற செய்தியாம்.

சான்றோர் இயல்பு சான்றோர் பெருமையை யாரும் மறைக்க இயலாது. அவர் வறியராயினும் தம்நிலையினின்றும் திறம்பார் (மாறுபடார்). புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதல்லவா?

பசிபெரிது ஆயினும் புல்மேயா தாகும் புலி

(பழ:70)

என்பது பழமொழி.

கொல்லன் தெருவில் ஊசி விற்பாருண்டோ என்பது நாமறிந்த பழமொழி. நற்குடிப் பிறந்தாரிடம் நற்குணங்கள் இயல்பாக அமைந்திருக்கும். கற்றோர் அவர்களிடம் நற்குணங்களை விரித்துரைக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தைச் சொல்ல வந்த பழமொழிதான்

கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்

(பழ:73)

(கொற்சேரி = கொல்லர் சேரி; துன்னூசி = தைக்கும் ஊசி)

படரக் கொம்பில்லாத முல்லைக் கொடிக்குத் தன் தேரை ஈந்தவன் பாரி. வாடையால் வாடி நின்ற மயிலுக்குத் தன் போர்வையை அளித்தவன் பேகன். பாரியும் பேகனும் முல்லையின் இடரையும், மயிலின் இடரையும் வேறு பொருள்களைக் கொடுத்து நீக்க அறிவார்கள். ஆனால் அறியார் போன்று உயர்வுடைய தம் பொருள்களைக் கொடுத்த செயல் ‘அறிமடம்’ எனப்படும். இது சான்றோர்க்கு அணியாகும் என்ற கருத்தைச் சொல்கிறது இந்தப் பாடல்.

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும் – சொல்லின்

நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப

அறிமடமும் சான்றோர்க் கணி

(பழ:74)

கீழ்மக்கள் இயல்பு பண்பிலா மக்கள் கீழ்மக்கள் ஆவர். நட்புக்கொண்ட ஒருவரைப் பொல்லாங்கு பேசுகிறார் ஒருவர். அப்படிப்பட்ட தீயவரை நம்பக் கூடாது. உண்பவர்கள் தேவரேயாயினும் வேம்பு கசக்கும் தன்மையது. தீயவர் தம்மோடு நட்புப் பூண்டவர்கள் மிகவும் சிறந்தவர்களாயினும் அவர்களுடன் நன்கு பழகமாட்டார்கள். இக்கருத்தைச் சொல்ல வந்த பழமொழிதான்,

கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு

(பழ:95)

என்பது, திங்களை நோக்கி நாய் குரைத்ததுபோல என்ற பழமொழியும் நாமறிந்ததே. சிறியோர் பெரியோரைப் பார்த்து அடாதவற்றைக் கூறுதல் திங்களைப் பார்த்து நாய் குரைத்தாற் போன்றதாகும். பெரியார் பெருமையை சிறியர் அறியும் தகுதியும் இல்லாதவர். எனவே, தகாதன கூறுதலே அவர் இயல்பாகின்றது. அதனால் துன்பம் அவர்க்குத்தானே ஒழிய பெரியோர்க்கில்லை. குரைக்கின்ற நாயைத் திங்கள் பொருட்படுத்தாததைப் போலப் பெரியோர் சிறியோரைப் பொருட்படுத்த மாட்டார் என்ற விளக்கத்தையும் காணலாம்.

தீயவர்களுக்கு நன்மை செய்வதும் கேடு தருவதாகவே முடியும். இக்கருத்தை ‘புலிமுகத்து உண்ணி பறித்து விடல்’ என்ற பழமொழி விளக்குகிறது. தீயவர்களுக்கு நன்மை செய்தல் புலியின் மீது இரக்கம் கொண்டு அதன் முகத்தில் உள்ள உண்ணிகளை எடுத்து விடும் செயல் போன்றது. புலி முகத்து உண்ணி பறிப்பவர் எவ்வாறு பிழைக்க மாட்டார்களோ அவ்வாறே தீயவர்களுக்கு உதவி செய்பவரும் பிழைக்க மாட்டார்கள். நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா? (நுணல் = தவளை)

மணலில் பதிந்து மறைந்திருக்கும் தவளை தன் குரலைக் காட்டுதலால் தன் வாயாலேயே தன்னைத் தின்பாரிடத்து அகப்பட்டுக் கொள்ளும். அதுபோலவே அறிவிலான் தன் வாயாலேயே தனக்குத் தீங்குத் தேடிக் கொள்வான்.

பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்

சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் – நல்லாய்

மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்

நுணலும்தன் வாயால் கெடும்

(பழ:114)

தொகுப்புரை

சான்றோர்களின் அனுபவ வெளிப்பாடான பழமொழி இலக்கியம் படிப்பதற்குச் சுவையானது. எக்காலத்தும் மக்களை வழிநடத்தும் சிறப்புடையது. சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை அனைத்து இலக்கியங்களிலும் பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. திருக்குறள், நாலடியார் கருத்துகள் பல பழமொழிகளில் பயின்று வருதலைக் காணலாம்.

வரலாற்றுச் செய்திகள், புராண இதிகாசக் கருத்துகள் பழமொழியில் பேசப்படுகின்றன. பொற்கைப் பாண்டியன் வரலாறும், அரக்கு மாளிகையில் பாண்டவர் தப்பியோடிய நிகழ்ச்சியும், கண்ணன் மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்டதும் பழமொழியில் பேசப்படுகின்றன.

ஒரு நாட்டின் அறிவின் மாட்சி, அறிவின் வழிப் பிறந்த நகைச்சுவை, இன்பம், வீரம் ஆகியவற்றை அந்நாட்டுப் பழமொழியினின்றும் அறியலாம். பண்டைத் தமிழரின் வாழ்க்கை, வாழ்க்கை அனுபவங்கள், அனுபவத்தை வெளிப்படுத்தும் அழகு, இலக்கியப் பயிற்சி ஆகியனவற்றைப் பழமொழி சுவைபட எடுத்துரைக்கிறது.

400 பழமொழிகளையும் இப்பாடத்தில் எடுத்துரைக்க இயலாது. எனினும் வழக்கில் உள்ள பல பழமொழிகள் இவ்விலக்கியத்தில் பயின்று வருவதைச் சில சான்றுகளால் காண்போமா?

உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்

(பழ:144)

(அகத்தின் அழகு முகத்தில் தெரியும்)

ஒழுக ஊரோடுமாறு……

(பழ:195)

(உலகத்தோடு ஒட்ட ஒழுகு)

விரையின் கருமம் சிதையும்

(பழ:164)

(பதறாத காரியம் சிதறாது) பதறிய காரியம் சிதறும் என்றும் சொல்வதுண்டு.

வெண்ணெய் மேல் வைத்து மயில் கொள்ளுமாறு

(பழ:210)

(கொக்குத் தலைமேல் வெண்ணெய் வைத்துப் பிடித்தல்)

நாய் வால் திருந்துதல் இல்…

(பழ:336)

(நாய் வாலை நிமிர்த்த முடியுமா?)

இறைத்தோறும் ஊறும் கிணறு

(பழ:378)

(இறைக்கின்ற கிணறு சுரக்கும்)

இதுவரை நாம் படித்த செய்திகளால் பழமொழி நானூற்றின் சிறப்பும், பழந்தமிழரின் அனுபவ வெளிப்பாட்டின் சிறப்பும் நன்கு அறியலாம்.