மனிதனின் செயல்பாடுகள் அனைத்தும் பொதுவில் நன்மை தரக்கூடியவையாக இருத்தல் வேண்டும். அவ்வாறு பொது நன்மையைக் கருத்தில் கொள்ளாமல் ‘தனக்கு மட்டும்’ என்னும் தன்னல நோக்கம் கொண்டதாகச் செயல்பாடு இருந்தால் அந்தச் சமுதாய அமைப்பில் சிக்கல்கள் எழும்.
அவ்வாறு சிக்கல்கள் எழாமல் சமுதாயம் சீராகச் செயல்படுவதற்குச் சில பொதுவான அறங்களை முன்னோர்கள் உருவாக்கியுள்ளார்கள். அந்த அறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பின்னர்த் தோன்றிய அறநூல்கள் பின்வருமாறு.
1. ஆத்திசூடி
2. கொன்றை வேந்தன்
3. மூதுரை (வாக்குண்டாம்)
4. நல்வழி
5. வெற்றிவேற்கை (நறுந்தொகை)
6. உலகநீதி
7. நீதிவெண்பா
8. நீதிநெறிவிளக்கம்
9. நன்னெறி
10. அருங்கலச்செப்பு
11. அறநெறிச்சாரம்
12. கபிலர் அகவல்
13. நீதிச் சதகங்கள்
14. நீதி சிந்தாமணி
15. நீதிநூல்
16. பெண்மதிமாலை
17. அறநூல்
18. பாரதியாரின் புதிய ஆத்திசூடி
19. பாரதிதாசனின் புதிய ஆத்திசூடி
20. பாரதிதாசனின் இளையோர் ஆத்திசூடி
முதலியவை ஆகும்.
இதே காலத்தில் மடங்களும் கல்விப் பணியை ஆற்றியுள்ளன. இந்தக் கல்விப் பணிக்கும் எளிய அறநூல்கள் தேவைப்பட்டன. இதற்காகவும் பல அறநூல்கள் தோன்றியுள்ளன. கல்வி பயிற்றும் இடங்களுக்கு ஏற்ப அந்தப் பகுதிகளில் அறநூல்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
ஒளவையார் இயற்றிய பெரும்பாலான அறநூல்களில் காப்புச் செய்யுள்கள் சைவ சமயக் கடவுளர்களை வாழ்த்துகின்றன. அதே காலத்திலும் அதற்கு அடுத்த நூற்றாண்டிலும் அருங்கலச்செப்பும் அறநெறிச்சாரமும் தோன்றியுள்ளன. இவை சமண சமய கருத்துகளுக்கு இடையே அறநெறிகளைத் தெரிவிக்கின்றன. சமண சமயம் சார்ந்த பள்ளிகளில் கற்பிப்பதற்கு என்று இந்நூல்கள் தோன்றியிருக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில் சிவன்மீதும் முருகன்மீதும் விநாயகன்மீதும் காப்புச் செய்யுள்களைக் கொண்ட ஒளவையார் பாடல்களுக்கு மாற்றாக, சமணர்கள் இந்நூல்களைப் பயன்படுத்தியதாகக் கொள்ளமுடியும்.
உலக நீதி விருத்தப்பா வகையைச் சேர்ந்தது. மூதுரை, நல்வழி, நீதிநெறி விளக்கம், நன்னெறி, நீதிவெண்பா ஆகியவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் போன்று வெண்பாவில் அமைந்துள்ளன.
பிற்கால அறநூல்களை அறிமுகம் செய்யும் இத்தொகுதியில்,
1. ஆத்திசூடி
2. கொன்றை வேந்தன்
3. மூதுரை
4. நல்வழி
5. வெற்றிவேற்கை
6. உலகநீதி
7. நீதிவெண்பா
8. நீதிநெறி விளக்கம்
9. நன்னெறி
என்னும் ஒன்பது நூல்கள் பாடங்களாக அமைக்கப்பட உள்ளன. இவை அனைத்தும் பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டவை ஆகும்.
ஏனைய பதினொரு நூல்களும் இப்பாடத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன. இவற்றில் அருங்கலச்செப்பு, அறநெறிச்சாரம் ஆகிய இரண்டும் சமண சமய இலக்கியப் பாடங்களில் இடம்பெறும். கபிலர் அகவல், நீதிச் சதகங்கள் ஆகியவை சிற்றிலக்கியங்கள் ஆகும். எனவே இவை சிற்றிலக்கியங்கள் பற்றிய பாடங்களில் இடம்பெறும். பாரதியாரின் புதிய ஆத்திசூடி, பாரதிதாசனின் புதிய ஆத்திசூடி, இளையோர் ஆத்திசூடி முதலியவை பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகள் தொடர்பான பாடங்களில் இடம்பெறும். நீதி சிந்தாமணி, நீதிநூல், பெண்மதிமாலை ஆகியவை மிகவும் பிற்காலத்தவை. மேலும் இந்நூல்களை எழுதிய ஆசிரியர்களின் படைப்புகளைப் படிக்கும்போது இவையும் அவற்றுடன் இடம்பெறும்.
இந்தப் பதினோர் அறநூல்களைப் பற்றிய ஒரு பொது அறிமுகத்தை இங்கே காண்போம். ஏனைய ஒன்பது அறநூல்களைப் பற்றிய செய்திகளும் அந்தந்தப் பாடங்களிலே இடம்பெறும்.
இவை அனைத்தும் சைன சமய இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய கடமைகளை உணர்த்துகின்றன.
அறத்தின் பெருமையை யார்க்கும் உரைத்தல்
அறத்தை விளக்குதல் நற்கு
(அருங்கலச்செப்பு, 24)
(நற்கு = நன்கு)
என்னும் குறள் அறத்தை விளக்க வேண்டிய தேவையை எடுத்து உரைக்கிறது.
அறியாமை உடையவர்களுக்கு அந்த அறியாமை அகலும் வகையில் அறக்கருத்துகளை நன்கு எடுத்துக் கூறுவது ‘அறம் விளக்கல்’ என்பதாகும். இதில் தெரிவிக்கப்பட்டுள்ள ‘அறம் விளக்கல்’ என்பது ‘நற்காட்சி’யின் எட்டு உறுப்புகளில் ஒன்று. நற்காட்சி என்பது மெய்ப்பொருள் தெளிதலைக் குறிக்கும். இதைப் போன்று அருங்கலச் செப்பு என்னும் இந்நூலில் உள்ள குறட்பாக்கள் அனைத்தும் சமண சமய அறங்களை விளக்குகின்றன.
ஆணவம் என்னும் செருக்கு யாரிடம் இருந்தாலும் அவர்களிடம் அறம் இருக்காது. இதை அருங்கலச் செப்பு, பின் வரும் குறள் மூலம் விளக்கியுள்ளது.
இவற்றால் பெரியோம்யாம் என்றே எழுந்தே
இகழ்க்கில் இறக்கும் அறம்
(35)
என்னும் குறள், தன்னைப் பெரியவர்களாகக் கருதிக்கொண்டு செயல்படுபவர்களின் ஆணவப் போக்கால் அறம் அழியும் என்று தெரிவித்துள்ளது.
இக்குறட்பாவில் பெரியவர்கள் என்னும் ஆணவம் தோன்றுவதற்குரிய காரணங்கள் கூறப்பட்டுள்ளன. ‘இவற்றால்’ என்னும் சொல் இக்காரணங்களை உள்ளடக்கியதாக உள்ளது. சாதி, குலம், வலிமை, செல்வம், அழகு, பெருமை, தவம், அறிவு என்னும் எட்டுக் காரணங்களால் ஆணவம் ஏற்படுகிறது. ஆணவத்தால் பிறரை இகழ்ந்து பேசினால் அறப்பண்பு அழிந்துவிடும் என்று இக்குறள் தெரிவிக்கிறது.
இதில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணவத்திற்கான எட்டுப் பொருள்களையும் பின்வரும் குறள் எடுத்துக் கூறுகிறது.
பிறப்பு, குலம், வலி, செல்வம், வனப்பு,
சிறப்பு, தவம், உணர்வோடு எட்டு
(34)
மேற்கூறிய பொருட்களால் மனித வாழ்க்கையில் மதிப்புக் கூடும். ஆனால் இவற்றின் காரணமாக ஆணவம் கொள்ளக்கூடாது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
விதிப்பட்ட நூல்உணர்ந்து வேற்றுமை நீக்கிக்
கதிப்பட்ட நூலினைக் கைஇகந்து ஆக்கிப்
பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்தில் பட்ட மறு
(74)
(விதி = ஒழுக்க நெறி; கதி = நற்கதி; பதி = ஊர்; மதி = நிலவு; கைஇகந்து = அளவில்லாமல்; மறு = கறை)
என்னும் அறநெறிச்சார வெண்பா, கற்றவர் செய்யும் தவறு கண்ணுக்குப் ‘பளிச்’ எனத் தெரியும் என்பதைக் கூறுகிறது.
இப்பாடல் கற்றவர்க்கு அடையாளமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது.
1.ஒழுக்க நூல்களைக் கற்று உணர்தல்.
2.ஒழுக்க நூல்களுக்கு வேறானவற்றைச் செய்யாமல்
இருத்தல்.
3.நற்கதி வழங்கும் நூல்களை உருவாக்கல்.
4.அமைதியுடன் ஓரிடத்தில் வாழ்தல்.
இந்த நான்கு பண்புகளுடன் வாழ்கின்றவர் அனைவராலும் உயர்ந்தவராகப் போற்றப்படுவார். இத்தகைய உயர்ந்தவர்கள் செய்கின்ற பழிச்செயல்கள் எல்லோருக்கும் ‘பளிச்’ எனத் தெரியும் என்று அறநெறிச்சாரம் அறிவிக்கிறது.
இப்பாடலில் கற்றவர்கள் செய்யும் தவறு எல்லோருக்கும் தெரியும் என்பதை விளக்குவதற்கு முனைப்பாடியார் ஓர் உவமையைக் குறிப்பிட்டுள்ளார் பார்த்தீர்களா?
மதிப்புறத்தில் பட்ட மறு
என்பதுதான் அந்த உவமை. மதி என்பது நிலவுக்கு வழங்கப்படும் வேறு பெயர். மறு என்றால் களங்கம் அல்லது கரும்புள்ளி என்று பொருள். நிலவு நமது கண்ணுக்கு வெள்ளைப்பந்து போல் தெரியும்போது அதில் இருக்கும் மறுவும் நம் அனைவரின் கண்களுக்கும் தெரிகிறது. அதுபோல் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் செய்யும் தவறுகளும் அனைவருக்கும் தெரியும் என்பது இந்த உவமை உணர்த்தும் கருத்து ஆகும்.
இதில் நிலவை உயர்ந்தவர்களுக்கும் அதில் தெரியும் களங்கத்தை உயர்ந்தவர்கள் செய்யும் பழிச்செயலுக்கும் முனைப்பாடியார் ஒப்புமைப் படுத்தியுள்ளார்.
ஒன்றே செய்யவும் வேண்டும் ஒன்றும்
நன்றே செய்யவும் வேண்டும் நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும் இன்றும்
இன்னே செய்யவும் வேண்டும்…
(29 – 32)
(இன்னே = இப்போதே)
என்னும் அடிகள் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த உதவுவன ஆகும்.
ஒரு நேரத்தில் ஒரு செயலைச் செய்திட வேண்டும். அந்த ஒரு செயலையும் நல்ல செயலாகத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அந்தச் செயலை நாளை செய்யலாம் என்று தள்ளிப் போடாமல் இன்றே செய்ய வேண்டும். இன்றும் அப்புறம் செய்துகொள்ளலாம் என்று நேரத்தைக் கடத்தாமல் இப்போதே செய்யத் தொடங்கிட வேண்டும் என்று, ஒரு செயலைச் செய்யும் வகையைத் தெளிவுபடுத்துகிறது.
இந்த உலகில் வாழ்கிற மக்கள் தங்களுக்குள் சாதி வேறுபாடு இன்றி ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்னும் கருத்தைக் கபிலர் அகவல் பின்வருமாறு தெரிவித்துள்ளது.
மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ
மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ
வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும்
கீழ்நான்கு சாதிக்கு உணவு காட்டிலுமோ
திருவும் வறுமையும் செய்தவப் பேறும்
சாவதும் வேறுஇலை தரணியோர்க்கே
குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே
(124 – 133)
என்னும் அடிகள் பிறப்பினால் சாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்பதை விளக்குகின்றன.
ஒரு பகுதியில் உள்ளவர்களில் சிலருக்கு மட்டும் என்று மழை பெய்வதில்லை. காற்றும் சிலரை ஒதுக்கிவிட்டுப் பிறருக்கு மட்டும் வீசுவதில்லை. இழிகுலத்தார் என்று யாரையும் பூமி சுமக்க மறுப்பதில்லை. கதிரவனும் சிலருக்கு வெப்பத்தைத் தர மாட்டேன் என்று ஒதுக்குவதில்லை. உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்குத் தேவையான உணவை நாடும், தாழ்ந்த சாதியினர்க்கான உணவைக் காடும் வழங்குவதில்லை. எல்லோர்க்கான உணவையும் நாடுதான் வழங்குகிறது. செல்வமும், வறுமையும், தவத்தினால் உண்டாகும் நற்பயன்களும், மரணமும் இந்த உலகில் உள்ள எல்லோர்க்கும் பொதுவானவைதாம். உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இவை வேறு வேறாக ஏற்படுவதில்லை. எனவே சாதியில் ஏற்றத் தாழ்வு காணும் நோக்கத்துடன் செயல்படுவது மனிதப் பண்பு ஆகாது என்னும் கருத்தைக் கபிலர் அகவல் விளக்கியுள்ளது.
எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்க்கலாம்:
பன்னக வேணிப் பரமர் தண்டலையார்
நாட்டில்உள பலரும் கேளீர்!
தன்அறிவு தன்நினைவு தன்மகி மைக்கு
ஏற்றநடை தகுமே அல்லால்
சின்னவரும் பெரியவர் போலே நடந்தால்
உள்ளதும் போம்! சிறிய காகம்
அன்னநடை நடக்கப்போய்த் தன் நடையும்
கெட்ட வகை ஆகும் தானே!
(பாடல்: 78)
(பன்னக வேணிப் பரமர் = சிவபெருமான்)
என்னும் தண்டலையார் சதகப் பாடல் அவரவர் இயல்புக்கு ஏற்ப வாழ வேண்டும் என்று தெரிவிக்கிறது.
ஒருவன் தனது அறிவுக்கும் திறமைக்கும் பெருமைக்கும் ஏற்ப வாழ்ந்திட வேண்டும். அவ்வாறு வாழாமல் அறிவு, திறமை, பெருமை முதலியவற்றை மிகுதியாகப் பெற்றவரைப் போல் வாழ நினைக்கக் கூடாது. அவ்வாறு வாழ்ந்தால் தம்மிடம் இருக்கின்ற பெருமையையும் இழக்க நேரிடும்.
இந்தக் கருத்தை விளக்குவதற்கு இந்தப் பாடலில் ஓர் உவமை குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சிறிய காகம் அன்ன நடை நடக்கப் போய்த் தன் நடையும் கெட்ட வகை ஆகும்’ என்பது அந்த உவமை.
காக்கையின் நடைக்கும் அன்னத்தின் நடைக்கும் வேறுபாடு உண்டு. இவை இரண்டின் நடையிலும் அன்னத்தின் நடை அழகாக இருப்பதாக உலக மக்களும் புலவர்களும் கருதுகிறார்கள். எனவே அழகிய நடையைக் குறிப்பிடுவதற்கு அன்ன நடை என்று கூறுகிறார்கள். அன்னத்திற்கு அதன் நடையால் கிடைத்த பெருமை, தனக்கும் கிடைக்க வேண்டும் என்று காகம் எண்ணியதாம். எனவே, அது அன்னம் நடப்பதைப் போல் நடப்பதற்கு முயற்சி செய்ததாம். முடிவில் தனது நடையையும் சரியாக நடக்க முடியாமல் போனதாம். அதைப்போல, தமது பெருமையின் அளவைப் புரிந்துகொள்ளாமல் அறிவில் பெரியவர்களைப் போல நடக்கத் தொடங்கினால் தம்மிடம் இருக்கும் பெருமையையும் இழந்து துன்பப்படுவார்கள் என்று தண்டலையார் சதகம் குறிப்பிடுகிறது.
அறநூல் என்னும் இந்நூலில் இல்லறம், துறவறம், தொண்டு, ஒழுக்கம், கல்வி, முயற்சி முதலான கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம்.
வீடுகளின் ஈட்டம் விரிநாடாம்; ஆதலினால்
வீடு என்றே நாட்டை விரும்பு
(நாடு – 5)
(ஈட்டம் = கூட்டம், விரி = பெரிய)
என்னும் குறள் நாட்டுப்பற்றை வலியுறுத்துகிறது.
பல வீடுகள் சேர்ந்தே பெரிய நாடு என்ற நிலையை அடைகிறது. ஆகவே எல்லோரும் வீட்டை விரும்புவது போல் நாட்டையும் விரும்ப வேண்டும் என்று இக்குறள் தெரிவிக்கிறது.
இல்லறம் ஈசன்அருள் எய்திய நல்லறம்அஃது
இல்லேல்பூ இல்லையாம் எண்
(இல்லறம் – 5)
(ஈசன் = கடவுள், எய்திய = அடைந்த, இல்லேல் = இல்லை என்றால், பூ = பூமி, எண் = எண்ணிப் பார்)
என்னும் அறநெறிக் குறள் இல்லறத்தின் சிறப்பை விளக்குகிறது.
இல்லறம் என்பது கடவுள் அருளால் மனிதன் அடைந்த நல்லறம் ஆகும். இந்த இல்லற வாழ்க்கை இல்லை என்றால் இந்த உலகமே இல்லை என்பதை எண்ணிப் பார்த்து இல்லறத்தைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று இக்குறள் தெரிவிக்கிறது.
தேவன் என்றே இவ்வுலகைத் தேர்ந்து தனைமறந்த
தூய்வினை ஆற்றல் துறவு
(துறவு – 2)
(தேர்ந்து = அறிந்து, தனைமறந்த = தன்னலம் மறந்த, தூய்வினை = தூயசெயல், ஆற்றல் = செய்தல்)
என்னும் அறநெறிக் குறள் துறவறத்தின் சிறப்பை விளக்குகிறது. இந்த உலகத்தைத் தெய்வமாகக் கருதி, தன்னலத்தை மறந்து இந்த உலகிற்காகச் சிறந்த பணியாற்றுவதே துறவு என்று இக்குறள் தெரிவிக்கிறது.
தொண்டால் உறும்மகிழ்வே தொல்புவியும் செய்தோனும்
அண்டரும் போற்றும் அமிழ்து
(வினைமாட்சி – 4)
(உறும் = அடையும், மகிழ்வே = மகிழ்ச்சியே, தொல்புவி = பழமையான உலகம், செய்தோன் = தொண்டு செய்தவன், அண்டர் = தேவர்,)
என்னும் அறநெறிக் குறள் தொண்டின் சிறப்பை விளக்குகிறது.
தன்னலம் அற்ற தொண்டு செய்வதால் ஏற்படும் மகிழ்ச்சிதான் மனிதர்களாலும் தேவர்களாலும் போற்றப்படும் அமிர்தம் என்று தொண்டின் பெருமையைச் சுத்தானந்த பாரதியார் குறிப்பிட்டுள்ளார்.
உலக நடை தேர்ந்தே உயர்அறனே செய்வான்
பலகற்றோன் ஆவானே பார்
(நற்பழக்கம் – 5)
என்னும் அறநெறிக் குறள், உலக நடைமுறைக் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.
உலகத்தின் போக்கை நன்கு அறிந்து, உயர்ந்த அறச் செயல்களைச் செய்கிறவன் நூல் அறிவு பெறவில்லை என்றாலும் பல நூல்களைக் கற்றவர்க்கு இணையானவன் ஆவான் என்று அறநெறிக் குறள் தெரிவிக்கிறது.
இதே கருத்தைத் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்துள்ளார்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
(திருக்குறள் – 140)
என்னும் திருக்குறளில் உலக நடைமுறையை நன்கு அறிந்து வாழ அறியாதவர் பல நூல்களைக் கற்று, கல்வி அறிவு உடையவராக இருந்தாலும் கல்வி அறிவு பெறாதவராகவே கருதப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறநெறிக்குறள் இதே கருத்தைச் சற்று மாற்றித் தெரிவித்துள்ளது.
ஒருவர் கல்வி அறிவு இல்லாதவராக இருந்தாலும் உலக நடைமுறையை அறிந்தவராக இருந்தால் அவர் அறிவு உடையவராகவே கருதப்படுவார் என்று அறநெறிக் குறள் தெரிவித்துள்ளது.
புதிய ஆத்திசூடியின் பரம்பொருள் வாழ்த்தில் சிவன், திருமால், நபிகள் நாயகத்திற்கு மறை உணர்த்தியவன், இயேசுவின் தந்தை என்று பல மதத்தினர் வழிபடும் கடவுளர்களைப் பாரதியார் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பல மதத்தினரும் வழிபடும் பரம்பொருள் ஒன்றுதான்; அதன் இயல்பு, அறிவும் ஒளியும் ஆகும் என்று பாடியுள்ளார்.
ஒளவையார் ‘அறம் செய விரும்பு’ என்று தமது ஆத்திசூடியைத் தொடங்கினார். பாரதியார் ‘அச்சம் தவிர்’ என்று தொடங்கியுள்ளார். ஒளவையார் வாழ்ந்த காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. அந்தக் காலச்சூழலுக்கு ஏற்ப ஒளவையார் ‘அறம் செய விரும்பு’ என்று பாடியுள்ளார்.
பாரதியார் வாழ்ந்த காலம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். அப்போது நமது நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தது. மக்கள் அஞ்சி, அஞ்சி வாழ்ந்தனர். இந்த அச்சத்தைப் போக்க விரும்பிய பாரதியார் `அச்சம் தவிர்’ என்று பாடியுள்ளார்.
இனப்பற்றும் நாட்டுப் பற்றும் உலகப் பற்றுக்கு வழி வகுக்க வேண்டும். அவ்வாறு உலகப் பற்று வரவில்லை என்றால் உலகில் அமைதி நிலவாது என்பதை,
நவில்இனப் பற்றும் நாட்டுப் பற்றும்
வையப் பற்றை வளர்க்கும் நோக்கத்தன
இல்லை ஆயின் இன்று இவ்வுலகில்
தொல்லை அணுகுண்டு தொகு கொலைக்கருவி
பொல்லா நச்சுப் புகைச்சல் இவற்றை
அகற்றல் எப்படி? அமைதி யாங்ஙனம்?
(பாரதிதாசன் ஆத்திசூடி, பாயிரம்: 1 – 6)
என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.
ஒளவையார் பாடியது ஆத்திசூடி என்று அழைக்கப்பட்டதால் பாரதியாரின் ஆத்திசூடி, புதிய ஆத்திசூடி என்று அழைக்கப்பட்டது. பாரதியாரின் ஆத்திசூடி, புதிய ஆத்திசூடி என்று அழைக்கப்பட்டதால் அதற்குப் பின் தோன்றிய பாரதிதாசனின் ஆத்திசூடி, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’ என்று அழைக்கப்பட்டது.
பாரதியார் வாழ்ந்த காலத்தில் இந்திய ஒற்றுமை பெரிதாகக் கருதப்பட்டது போல் பாரதிதாசனின் காலத்தில் உலக ஒற்றுமை பேணப்பட்டது. எனவே பாரதிதாசன், ‘அனைவரும் உறவினர்’ என்று தமது ஆத்திசூடியைத் தொடங்கி, உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதிப் பாடியுள்ளார்.
• இளையோர் ஆத்திசூடி
குழந்தைகளுக்கு என்று ஆத்திசூடியைப் பாடிய பாரதிதாசன் இளைஞர்களுக்கு என்றும் ஓர் ஆத்திசூடியைப் பாடியுள்ளார். அது இளையோர் ஆத்திசூடி என்று அழைக்கப்படுகிறது. பாரதிதாசனின் இளையோர் ஆத்திசூடி 88 அடிகளைக் கொண்டுள்ளது.
இளைஞர்கள் எதையும் தாங்கும் இதயத்தையும் தீமையை எதிர்த்துப் போரிடும் வீரத்தையும் குன்றாத பொறுமையையும் கொண்டு விளங்க வேண்டும். இத்தகு சிறந்த குணங்களைப் பெற்று விளங்கவேண்டிய இளைஞர்கள் செய்வது அறியாது திகைத்து நிற்கக் கூடாது; தேம்பி அழக்கூடாது என உணர்த்த விரும்பினார் பாரதிதாசன். எனவே அவர் இளையோர் ஆத்திசூடியை ‘அழுபவன் கோழை’ என்னும் தொடருடன் தொடங்கியுள்ளார்.
பாடம் - 2
ஆத்திசூடி, கொன்றைவேந்தன் இரண்டுமே ஓரடிப் பாடல்களைக் கொண்டவை. ஐந்து வயது கொண்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அறங்கள் இந்நூல்களில் அடங்கி உள்ளன.
ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் எளிமையான நூல் அமைப்புடன் எளிய சொற்களில் அமைந்துள்ளன. எனவே, இந்நூல்கள் தோன்றிய காலம்முதல் இன்றுவரை அனைவராலும் படிக்கப்படுகின்றன.
ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலியவற்றைப் பாடிய ஔவையார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறிய முடிகிறது. இந்த ஔவையாரே மக்களால் நன்கு அறியப்பட்ட ஔவையார் ஆவார். ஔவையார் என்னும் சொல்லுக்கு வயது முதிர்ந்த பெண் என்பது பொருள்.
ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்; புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார். ஒரு பாடல் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா? இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள்.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
(ஒளவையார் தனிப் பாடல்:42)
என்பதே அப்பாடல்.
இப்பாடலில் கோடி என்று ஒரு கோடி பொன் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரை மதித்து அவரது வீட்டின் முன்பகுதியை மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள்)
2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். இப்பாடலில் முதல் இரண்டு கருத்துகளையும் எதிர்மறைப் பொருளில் பாடிய ஒளவையார் இறுதி இரண்டு கருத்துகளையும் உடன்பாட்டுப் பொருளில் பாடியுள்ளார்.
நல்ல பண்புகளை மதிக்காதவர் வீட்டுக்குச் செல்லாதே!
விரும்பி உண்ணச் சொல்லாதவரின் வீட்டில் உண்ணாதே!
என்பவை எதிர்மறை ஆகும்.
நல்ல குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்!
சொன்ன சொல் தவறாமல் வாழ்!
என்பவை உடன்பாடு ஆகும்.
ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது.
அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது. வெயிலில் நடந்து வந்த ஒளவையாருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார்.
அந்த நாவல் மரத்தின் மேல் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். நாவல் மர நிழலில் களைப்புடன் இருந்த ஒளவையாரை அவன் பார்த்தான்.
‘பாட்டீ….! நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்… நாவல் பழம் சாப்பிடுகிறீர்களா?’ என்று ஒளவையாரைப் பார்த்துக் கேட்டான்.
ஆடு, மாடு மேய்க்கும் அந்தச் சிறுவனை ஒளவையார் மிகவும் சாதாரணமாகக் கருதினார். எனவே, ‘சரி… அப்பா…. நாவல் பழங்களைப் பறித்துப் போடு!’ என்றார்.
ஒளவையாரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் ‘பாட்டீ…. உங்களுக்குச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டான்.
ஒளவையாருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நாவல் பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று எதுவும் கிடையாதே!’ என்று எண்ணினார். என்றாலும் இந்தச் சிறுவனிடம், சுட்ட பழத்திற்கும் சுடாத பழத்திற்கும் விளக்கம் கேட்பது தமது புலமைக்கு இழிவு என்று அவர் கருதினார்.
‘சுட்ட பழமாகவே நீ பறித்துப் போடப்பா…..’ என்று ஒளவையார் கூறினார். மரத்தில் இருந்த சிறுவன் நன்கு பழுத்த நாவல் பழங்களைப் பறித்து மண்ணில் வேகமாகப் போட்டான்.
மண்ணில் கிடந்த நாவல் பழங்களை ஒளவையார் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார். அவற்றில் நிறைய மண் ஒட்டி இருந்தது. அந்த மண்ணைத் துடைப்பதற்காக ஒளவையார் ‘ஃபூ….. ஃபூ’ என்று ஊதினார்.
ஒளவையார் பழத்தை ஊதுவதை மரத்தின் மேலிருந்த சிறுவன் கண்டான்.
‘பாட்டி….! பழம் சுடுகிறதா? நன்றாக ஊதிச் சாப்பிடுங்கள்!’ என்று கூறினான்.
அப்போதுதான் ஒளவையாருக்குச் ‘சுட்ட பழம் எது? சுடாத பழம் எது?’ என்பது புரிந்தது.
ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், தன்னை வென்று விட்டானே என்று வெட்கப்பட்டார்.
தனது வெட்கத்தை நினைத்து வருந்திய ஒளவையார் பின்வரும் பாடலைப் பாடினார்.
கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் – பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்
(கருங்காலிக் கட்டை = ஈட்டி மரக்கட்டை, நாணா = கலங்காத, கோடாலி = கோடரி, கதலித்தண்டு = வாழைத்தண்டு, ஈரிரவு = இரண்டு இரவு, துஞ்சாது = தூங்காது)
கருங்காலிக் கட்டை மிகவும் உறுதியானது. அதை எளிதில் பிளக்கக் கூடிய கோடரி, வாழைத்தண்டை வெட்டும்போது சறுக்கும். அதுபோல நானும் எருமை மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் தோற்றுவிட்டேன். எனவே இரண்டு இரவுகள் எனக்குத் தூக்கம் வராது என்று வருந்தினார்.
ஆடு, மாடு மேய்ப்பவனாக வேடம் தாங்கி அங்கே இருந்தவன் முருகன் ஆவான். ஒளவையாரின் மனவருத்தத்தைப் போக்க அவன் கருதினான். எனவே, அவன் தனது உண்மை வடிவுடன் ஒளவையாருக்குக் காட்சி அளித்தான்.
‘முருகன்தான் ஆடு, மாடு மேய்ப்பவன் போல் வேடமிட்டு வந்து தனது கர்வத்தைப் போக்கினான்’ என்பதை அறிந்த ஒளவையார் மனம் தெளிந்தார். முருகனை வணங்கினார்.
ஒளவையாரைப் பார்த்து முருகன், ‘ஒளவையே உமது அமுதத் தமிழைக் கேட்கவும் சில ஐயங்களுக்குத் தெளிவு பெறவுமே நான் வந்தேன். எனது ஐயங்களைத் தங்கள் அன்பு மொழியால் போக்குங்கள்’ என்றான்.
‘முருகா! நீ அறியாதது எதுவும் உண்டா? நீ சாமிநாதனாக இருந்து உன் தந்தைக்கே மந்திரம் சொன்னவன் அப்பா! உனது ஐயத்தைப் போக்கும் பெருமை என் தமிழுக்குக் கிடைக்கட்டும்’ என்றார் ஒளவையார்.
அப்போது முருகன் கொடியது, இனியது, பெரியது, அரியது எவை என்று கேட்டான். அதற்கு ஒளவையார் விடையாக இந்தப் பாடல்களைப் பாடியுள்ளார்.
கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது;
அதனினும் கொடிது இளமையில் வறுமை;
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்;
அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்;
அதனினும் கொடிது இன்புற
அவர்கையில் உண்பதுதானே
(ஒளவையார் தனிப் பாடல் : 54)
இந்த உலகில் மிகவும் கொடுமையானது எது என்றால் வறுமைதான். அந்த வறுமையும் இளமைப் பருவத்தில் வந்தால் மிக மிகக் கொடுமையானது. அத்தகைய வறுமையை விடக் கொடுமையானது தீராத கொடிய நோய் ஆகும்.
தீராத கொடிய நோயைவிடக் கொடுமையானது அன்பே இல்லாத பெண்ணுடன் வாழ்வது. அதைவிடக் கொடுமையானது அந்தப் பெண்ணிடம் உணவைப் பெற்று உண்பது ஆகும் என்று கொடுமையானவற்றுள் எல்லாம் மிகவும் கொடுமையானது அன்பு இல்லாத பெண் இடும் உணவை உண்பதுதான் என ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே!
(ஒளவையார் தனிப் பாடல்:55)
இந்த உலகில் மிகவும் இனிமையானது எது என்றால், தனிமையில் இருப்பதுதான். அதைவிட இனிமையானது இறைவனை வணங்குவது.
இறைவனை வணங்குவதை விட அறிவு உடையவர்களைச் சேர்ந்து வாழ்வது இனிமையானது. அதைவிட இனிமையானது கனவிலும் நனவிலும் அறிவு உடையவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பது ஆகும்.
இப்பாடலில் தனிமை, இறைவனை வணங்குதல் முதலியவற்றை இனிமையானது என்று ஒளவையார் தெரிவித்துள்ளார். என்றாலும் இவற்றை விட இனிமையானதாக அறிவுடையாரைப் பார்ப்பதை ஒளவையார் கூறியுள்ளார். இதிலிருந்து அறிவுக்கு இருக்கும் மதிப்பை நாம் அறிந்து கொள்ள முடியும்.
பெரிது பெரிது புவனம் பெரிது;
புவனமோ நான்முகன் படைப்பு;
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!
(ஒளவையார் தனிப் பாடல் : 56)
உலகில் மிகப்பெரியது எது என்று கேட்டால், இந்த உலகம்தான் பெரியது. ஆனால் இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது. எனவே நான்முகன்தான் பெரியவன் என்றால் நான்முகனோ திருமாலின் உந்தியில் (தொப்புள்) தோன்றியவன். எனவே திருமால்தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன். திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் அடங்கியது. எனவே அகத்தியர்தான் பெரியவர் என்றால், அந்த அகத்தியரும் கலயத்தில் (சிறு மண்குடம்) அடங்கி இருந்தவர். எனவே, கலயம் தான் பெரியது என்றால் அந்தக் கலயமோ இந்தப் பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது. எனவே, பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேடன் என்னும் பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது. பூமியைத் தாங்கும் ஆதிசேடன் என்னும் பாம்புதான் பெரியது என்றால் அந்தப் பாம்பை, உமையவள் தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். எனவே உமையவள்தான் பெரியவள் என்றால், அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள். எனவே சிவன்தான் பெரியவன் என்றால், அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் உலகில் பெரியது என்று ஒளவையார் பாடியுள்ளார்.
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே
(ஒளவையார் தனிப் பாடல் : 57)
உலகில் மிகவும் அரியது எது என்றால், மானிடராகப் பிறப்பது தான் அரியது. மானிடராகப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது. இந்தக் குறைகள் நீங்கிப் பிறந்தாலும் அறிவும் கல்வியும் விரும்பிக் கற்றவனாக ஆதல் அரியது. அறிவும் கல்வியும் பெற்றாலும் பிறருக்குக் கொடுக்கும் ஈகையும் நோன்பும் உடையவராய் இருத்தல் அரியது. ஈகையும் நோன்பும் உடையவராக வாழ்கின்றவர்களுக்கு வான்உலகப் பெருவாழ்வு கிடைக்கும் என்று ஒளவையார் பாடியுள்ளார்.
மேலே நீங்கள் பார்த்த ஒளவையாரின் நான்கு தனிப்பாடல்களிலும்
நெடிய வெவ்வேலோய்
தனிநெடு வேலோய்
எரிதவழ் வேலோய்
வரி வடிவேலோய்
என்னும் தொடர்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் வரும், ‘வேலோய்’ என்னும் சொல் வேலை உடையவனை அழைக்கும் சொல்லாய் அமைந்துள்ளது. வேலை உடையவன் வேலன். அவனது வேலின் தன்மையை இத்தொடர்கள் விளக்குகின்றன.
இவ்வாறு ஒளவையாரைப் பற்றி, பல நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக ஒளவையாரின் கவித்திறனையும் பெருமையையும் நாம் அறியமுடியும். இனி ஒளவையார் பாடிய ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் ஆகிய நூல்களை நாம் காண்போம்.
காப்புச் செய்யுள் என்பது கவிஞன் தான் புனைய முனைந்துள்ள நூலினை முழுமையாக இயற்றி முடிப்பதற்கு இறைவன் துணை நின்று காக்க வேண்டும் என்ற கருத்தில் நூல் முதலில் அமையும் செய்யுள் ஆகும்.
ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே
(ஆத்திசூடி, காப்புச் செய்யுள்)
ஆத்தி மாலையைச் சூடி வீற்றிருக்கும் சிவபெருமானை நாம் போற்றி வணங்குவோம் என்று ஆத்திசூடி தொடங்குகிறது. இந்நூல் 109 அடிகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் உள்ள அடிகள் அகரவரிசையில் அமைந்துள்ளன. படிக்கின்றவர்கள் தாங்கள் படித்தவற்றை மனத்தில் எளிதில் பதிய வைப்பதற்கு இந்த அகர வரிசை உதவும்.
• நூல் பல கல்
‘நூல் பல கல்’ (71) என்பது ஆத்திசூடியில் இடம்பெற்றுள்ள தொடர். பல வகை நூல்களைக் கற்க வேண்டும் என்பது இதன்பொருள். இதே கருத்தை, ‘கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்’ என்னும் பழமொழியும் உணர்த்துகிறது. கண்ணில் காணும் நூல்களை எல்லாம் கற்கின்ற ஒருவன் அறிஞன் ஆவான் என்பது இப்பழமொழி உணர்த்தும் கருத்து ஆகும். இதற்கு ஏற்பவே ஆத்திசூடியும் சிறு சொற்றொடரின் துணையுடன் ‘நூல் பல கல்’ என்று குறிப்பிட்டுள்ளது.
• ஓதுவது ஒழியேல்
ஓதுதல் என்பது கற்றலையும் கற்பித்தலையும் குறிக்கும். கல்வியும் கற்பித்தலும் தொடர்ந்து நடைபெற வேண்டிய செயல்கள். கற்கக் கற்க அறிவு வளரும். கல்வியைக் கற்காமல் இடையில் நிறுத்தினால் அறிவு வளர்ச்சி குறைவது மட்டும் அல்லாமல் முன்பு கற்ற கல்வியும் மறந்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே தான் ஒளவையார்,
ஓதுவது ஒழியேல் (11)
என்று பாடியுள்ளார்.
அறிவுக்கு அடிப்படையானது கல்வி. கல்விக்குக் கரை கிடையாது. ஆனால் அதைக் கற்கின்ற மனிதனின் வாழ்நாள் குறைவு. இந்தக் குறைந்த வாழ்நாளைக் கொண்ட மனிதன் இடைவிடாது கற்க வேண்டும். அவ்வாறு கற்றால்தான் அறிவைப் பெறமுடியும் என்பது இதன் பொருள்.
• எண் எழுத்து இகழேல்
எண் என்பது கணிதம் முதலான அறிவியல் கல்வியையும் எழுத்து என்பது இலக்கியம் முதலான கலையியல் கல்வியையும் குறிக்கும். இவை இரண்டும் மனிதனின் இருகண்களைப் போன்றவை. மனிதனின் இரு கண்களும் சேர்ந்து ஒரு பார்வையைக் கொடுப்பது போல அறிவியல் கல்வியும் கலையியல் கல்வியும் சேர்ந்து மனிதனுக்கு அறிவைக் கொடுக்கின்றன. எனவே மனிதன் தனது வாழ்நாளில் அறிவியல் கல்வியையும் கலையியல் கல்வியையும் இகழ்ந்து ஒதுக்கக் கூடாது. ‘எண் எழுத்து இகழேல்’ (7) என்னும் ஆத்திசூடி வரி இதையே கூறுகிறது. தொடர்ச்சியாகக் கற்கும் இயல்பைக் கொண்ட மனிதன் அறிவியல் கல்வியையும் கலையியல் கல்வியையும் தொடர்ந்து கற்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
• இளமையில் கல்
கல்வியை ஒருவன் முறையாகக் கற்றுக் கொள்ள விரும்பினால் அவன் அதை இளமை முதலாகக் கற்றல் வேண்டும். இளமையில் ஒருவன் கற்கின்ற கல்வி அவனது நெஞ்சில் பசுமரத்து ஆணிபோல் எளிதில் சென்று பதியும். எனவே தான்,
இளமையில் கல்
(29)
என்று ஒளவையார் பாடியுள்ளார்.
இளமைப் பருவம் என்பது தொல்லைகள் இல்லாமல் துள்ளித் திரியும் காலம். இந்தக் காலத்தில் கற்கின்ற கல்வியானது அவனது வாழ்க்கை முழுவதும் உதவும் வகையில் உள்ளத்தில் ஆழ்ந்து பதியும். இளமையில் கற்காமல் மனம்போன போக்கில் வாழ்கிறவர்கள் முதுமையில் துன்பப்பட நேரிடும் என்பதை நாம் அன்றாட வாழ்வில் காண இயலும். எனவே ஒவ்வொருவரும் இளமையில் முயன்று கல்வி கற்றல் வேண்டும்.
• கேள்வி முயல்
கற்றல் இருவகையில் நிகழும். ஒன்று: நூல்களில் இருக்கும் பல்வேறு கருத்துகளை நாமே படித்து அறிந்து கொள்ளுதல். இன்னொன்று: நல்ல கல்வி அறிவு உடையவர்களின் அறிவுரைகளைக் கேட்டல் என்பவை ஆகும். கற்றலை விடவும் கேட்டலே நன்று என்று நம் முன்னோர்கள் கருதினார்கள். அதையே ஒளவையாரும்
கேள்வி முயல் (39)
என்று பாடியுள்ளார்.
ஒவ்வொரு நூலாகத் தேடிப் பிடித்து நாம் கற்பது என்றால் அதற்கு நெடுங்காலம் ஆகும். ஆனால் பல நூல்களைக் கற்று அறிந்த அறிஞர்களின் உரையைக் கேட்பதன் மூலம் அந்த நூல் கருத்துகளை நம்மால் சில மணிநேரத்தில் அறிந்து கொள்ள முடியும்.
கேள்வி அறிவு என்பது கற்றவர்களுக்கும் அறிவைக் கொடுக்கும். கல்வி அறிவு இல்லாதவர்களுக்கும் அறிவைக் கொடுக்கும். இதைத் திருவள்ளுவர்,
கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை
(414)
(ஒற்கம் = மனத்தளர்ச்சி, ஊற்று = ஊன்றுகோல்)
என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒருவன் கல்வி அறிவு பெற்றவன் இல்லை என்றாலும், கல்வி அறிவு பெற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்க வேண்டும். அது அவனுக்குத் தக்க சமயத்தில் உதவும், அந்த உதவி எவ்வாறு இருக்கும் என்பதற்குத் திருவள்ளுவர் ஓர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.
முதுமையினால் தளர்ச்சி ஏற்பட்டவனுக்கு ஊன்றுகோல் எவ்வாறு உதவியாய் இருக்குமோ அதுபோல் மனத்தளர்ச்சி ஏற்படும் போது கேள்வியறிவு உதவும் என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். இதையே நாலடியாரும்,
கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர்
(139)
என்று குறிப்பிட்டுள்ளது.
• தனிமனித ஒழுக்கம்
ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறையின் நிலைப்பாடுதான் தனிமனித ஒழுக்கம். ஒளவையாரின் ஆத்திசூடி, தனிமனித ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுத்துள்ளது. தனிமனிதனைப் பார்த்துக் கட்டளையிட்டுக் கூறுவது போன்றே ஆத்திசூடித் தொடர்கள் அமைந்துள்ளன.
அறம் செய விரும்பு (1)
என்னும் முதல் தொடரின் இறுதிச் சொல் ‘விரும்பு’ என்பது. இந்தச் சொல் கட்டளையிடுவது போல் அமைந்திருப்பதை நீங்கள் காணமுடியும்.
எல்லோருமே அறம் செய்ய விரும்ப வேண்டும் என்றாலும் ஒரு மனிதனை நோக்கிச் சொல்வதை நாம் உணர முடியும்.
அறம்:வாழ்க்கைக்குத் தேவையான நெறி முறையும் ஈதல்
முதலான கொடைச் செயல்களும் அறம் ஆகும்
பிறருக்குக் கொடுத்து வாழ்கின்ற வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கையை மனிதன் கடைப்பிடிக்க வேண்டும்; அவ்வாறு வாழ விரும்ப வேண்டும் என்பதை ஒளவையார் இதன்மூலம் தெரிவித்துள்ளார்.
தனிமனிதனை நிலைகுலையச் செய்வதில் சினம் தலைமை இடத்தைப் பெறுகிறது. எனவே, ஒருவன் சினத்தை அடக்க வேண்டும். இதை, ஒளவையார்,
ஆறுவது சினம்
(2)
என்று குறிப்பிட்டுள்ளார்.
இவையும் இவை போன்ற பிற தொடர்களும் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதை நாம் காணமுடியும்.
• சமுதாய ஒழுக்கம்
மனிதன் சமுதாயமாகக் கூடி வாழும் இயல்பு கொண்டவன். ஒவ்வொரு தனி மனிதனும் தத்தமக்கு உரிய ஒழுக்க நெறிப்படி வாழ்ந்தால் சமுதாயத்தில் ஒழுக்கம் நிலவும். என்றாலும் சமுதாயத்தில் ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடு இல்லாமல் கலந்து வாழ்வதற்குச் சில பொதுவான ஒழுக்க நெறிகளைப் பின்பற்ற வேண்டும். அந்த ஒழுக்க நெறிகளையும் ஒளவையார் தமது ஆத்திசூடியில் பாடியுள்ளார்.
• ஒப்புரவு ஒழுகு
உலக மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் வாழவேண்டும். அவ்வாறு வாழாமல் மாறுபட்டு வாழ்பவன் தனிமரமாகி நிற்பான் என்னும் கருத்தை ‘ஒப்புரவு ஒழுகு’(10) என்னும் தொடர் வாயிலாக ஒளவையார் பாடியுள்ளார். இதே கருத்தைத் திருவள்ளுவரும்,
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
(140)
என்று பாடியுள்ளார்.
உலக நடைமுறைக்கு ஏற்ப வாழத்தெரியாதவர் பல நூல்களைக் கற்றவராக இருந்தாலும் அறிவு இல்லாதவராகவே கருதப்படுவார் என்பது இக்குறளின் கருத்து. இந்த உலகுடன் பொருந்தி வாழச்சொல்லி ஒளவையார் தனிமனிதனிடம் எடுத்துச் சொல்வது சமுதாய ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
• ஊருடன் கூடிவாழ்
மனிதன் சேர்ந்து வாழத்தொடங்கியதும் ஊர் என்னும் அமைப்பு ஏற்பட்டது. அந்த ஊரில் பலதிறப்பட்ட மனிதர்கள் வாழ்வார்கள். அந்த மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும். ஊருக்கு என்று நிகழும் பொது நிகழ்ச்சிகளிலும் தனியாள் வீட்டில் நிகழும் நல்ல, கெட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றல் வேண்டும் என்பது சேர்ந்து வாழ்தலின் பொருள். இதை ஊருடன் கூடிவாழ் (103) என்று ஆத்திசூடி தெரிவித்துள்ளது.
• தானமது விரும்பு
பிறருக்குப் பொருள்களை வழங்குவதற்கு விரும்ப வேண்டும். ஒருவருக்கு ஒரு பொருளைக் கொடுக்கின்றோமே என்று வேண்டா வெறுப்பாகக் கொடுக்கக் கூடாது. எவர்க்கும் பொருள்களை விரும்பிக் கொடுக்க வேண்டும் என்பதே இதன் பொருள். பிறருக்குப் பொருளைக் கொடுக்க ஏன் விரும்ப வேண்டும் என்னும் கேள்வி நம்மிடையே எழுகிறது அல்லவா? ஒருவர் நம்மிடம் ஒரு பொருளுக்காக இரங்கி நிற்கிறார் என்றால் அவர் தமது பெருமைகளையும் மானத்தையும் கருதாமல்தான் வந்து நிற்கிறார் என்பதை நாம் உணர்ந்து அவருக்கு உதவ வேண்டும் என்னும் கருத்தைத் ‘தானமது விரும்பு’ (55) என்று ஒளவையார் பாடியுள்ளார்.
• இயல்வது கரவேல்
வறுமை நிலையை அடைந்த ஒருவர், பொருள் வேண்டி வந்து நின்றால் அந்தப் பொருளை அவருக்குத் தயங்காமல் வழங்கிட வேண்டும். நம்மால் கொடுக்கக் கூடியதை, ‘இல்லை‘ என்று சொல்லி அப்பொருளை மறைத்து வைக்கக்கூடாது என்னும் கருத்தை ‘இயல்வது கரவேல்‘ (3) என்று ஒளவையார் கூறியுள்ளார்.
• ஈவது விலக்கேல்
பிறருக்குத் தேவைப்படும் பொருளைக் கொடுத்து உதவுவது பண்புகளில் மிகச்சிறந்தது. அந்தச் சிறந்த பண்பு நம்மிடம் இருந்தால் அதை விட்டுவிடக்கூடாது. நம்மிடம் வந்து ஒரு பொருளைக் கேட்கும் நிலைக்குத் தாழ்ந்து விட்ட ஒருவருக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்பது எல்லார்க்கும் பொதுவானது. அந்தச் சிறந்த பண்பு ஒருவரிடம் இயல்பாக இருந்தால் அந்த ஈகைப் பண்பை ஒருபோதும் நிறுத்தி விடக்கூடாது என்பதை உணர்த்த ‘ஈவது விலக்கேல்’(4) என்று ஒளவையார் பாடியுள்ளார். இதற்குப் பிறர் வழங்கும் ஈகைச் செயலைத் தடுக்கக் கூடாது என்றும் பொருள் கூறுவார்கள்.
இரு நாடுகளுக்கு இடையிலும் இரு குழுக்களுக்கு இடையிலும் ஏற்படும் போர்களால் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் அழிகின்றன. மனிதன் தனது எதிர்கால வாழ்க்கைக்கு என்று சேர்த்து வைத்த பொருட் செல்வம் அழிகிறது. கண்ணைக் கவரும் வகையில் உருவாகி இருக்கும் இயற்கை வளங்களும் செயற்கைக் கட்டுமானங்களும் அழிகின்றன. எனவே, அறிஞர்கள் போர் இல்லா உலகை விரும்பியுள்ளார்கள்.
• போர்த் தொழில் புரியேல்
உலகை நன்றாக உருவாக்குவதற்கு என்று பலவகைத் தொழில்கள் இருக்கின்றன. அத்தொழில்களை ஒதுக்கிவிட்டு, உலகை அழிக்கும் போர்த் தொழிலைச் செய்யாதே என்னும் கருத்தை இத்தொடர் விளக்குகிறது.
இனத்தின் காரணமாகவோ, நிறத்தின் காரணமாகவோ வேறு எந்தக் காரணமாகவோ மனிதன் போர் புரிய வேண்டிய தேவையில்லை. அறநூல்கள் தெரிவிக்கும் அறவழியில் வாழ்ந்து போர் இல்லாத சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் ஒளவையார், ‘போர்த் தொழில் புரியேல்‘ (86) என்று குறிப்பிட்டுள்ளார்.
• முனைமுகத்து நில்லேல்
மனிதனுக்கு எந்த வகையான நெருக்கடி ஏற்பட்டாலும் இன்னொரு நாட்டுடன் போர் புரியும் நோக்கத்துடன் போர்முனைக்குச் செல்லக் கூடாது என்பது இதன் பொருள். அவ்வாறு போர் முனைக்குச் சென்று போர் புரிவதன் மூலம் ஏற்படும் வெற்றியுடன் இழப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இழப்புகளே மிகுதி என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். எனவேதான் ஒளவையார் ‘முனைமுகத்து நில்லேல்’ (92) என்று பாடியுள்ளார். மேலும் தகுந்த ஏற்பாடுகள் இல்லாமல் போர் முனைக்குச் செல்லக் கூடாது என்பதையும் இத்தொடர் விளக்குகிறது.
கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே
(காப்பு)
என்று அமைந்துள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள கொன்றை வேந்தன் என்பது சிவனைக் குறிக்கிறது; கொன்றை வேந்தன் செல்வன் என்பது சிவன் மகனாகிய முருகனைக் குறிக்கிறது. இந்தக் காப்புச் செய்யுளில் முதலில் இடம் பெற்றுள்ள கொன்றை வேந்தன் என்பதே இந்நூலுக்கு உரிய தலைப்பு ஆனது.
கொன்றை மாலையை விரும்பிச் சூடிக் கொண்ட சிவபெருமானின் செல்வனாகிய முருகப் பெருமானை நாள்தோறும் நாம் போற்றி வணங்குவோம் என்று இந்தக் காப்புச் செய்யுள் தெரிவிக்கிறது.
• எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்
மனித உறுப்புகளில் கண் சிறப்பிடம் பெறுகிறது. அந்தக் கண்ணுக்கு இணையாகக் கல்வியை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார். நமது முகத்தில் இரண்டு கண்கள் இருக்கின்றன. அந்த இரண்டு கண்களுக்கு இணையாகக் கருதத் தக்கவை எண்ணும் எழுத்தும். எனவே, ஒளவையார்
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
(7)
என்று பாடியுள்ளார். எண்ணும் எழுத்தும் எவற்றைக் குறிக்கின்றன என்பதை ஆத்திசூடியில் படித்துவிட்டீர்கள். அதே பொருளில் தான் அவை இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
• கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
நாம் பலவகையான செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அவற்றை விடவும் சிறந்த செல்வம் கல்வி ஆகும். ஏனைய செல்வங்கள் அனைத்தும் நம்மைவிட்டு நீங்கும். ஆனால் கல்விச் செல்வம் நம்மைவிட்டுச் செல்லாது. எனவே, ஏனைய செல்வங்கள் மெய்யான செல்வங்கள் அல்ல. கல்விச் செல்வம் மட்டுமே மெய்யான செல்வமாகக் கருதப்படும். இதையே ஒளவையார்,
கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
(22)
என்று பாடியுள்ளார்.
ஒருவன் கையில் இருக்கும் பொருள் செல்வத்தை விட, அவன் கற்ற கல்வியே உண்மையான செல்வம் என்பது இது தெரிவிக்கும் பொருள்.
• நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
கல்வி கற்றவர்கள் நல்ல ஒழுக்கம் உடையவர்களாய் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அவர்கள் உண்மையே பேசுவார்கள். நேற்று ஒன்றாகவும் இன்று வேறாகவும் பேசமாட்டார்கள். அதை ஒளவையார்,
நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை (50)
என்னும் தொடர்மூலம் விளக்கியுள்ளார். எப்படிக் கற்க வேண்டும் என்பதை இத்தொடர் விளக்கியுள்ளது.
கல்வியைக் கற்கும்போது அது நம் மனத்தில் பதியும்படியாகக் கற்க வேண்டும். அவ்வாறு மனத்தில் நிலைக்கும்படியாகக் கற்றவர்கள், தாங்கள் சொன்ன சொல்லிலிருந்து தவறமாட்டார்கள் என்பது இதன் பொருள்.
• நூன்முறை தெரிந்து சீலத்து ஒழுகு
மனத்தில் பதியும்படியாகக் கற்றவர்கள், தாம் கற்றவற்றிற்கு ஏற்ப ஒழுக்க வாழ்வு வாழ வேண்டும். ஒழுக்க வாழ்க்கை வாழ்கின்ற உயர்ந்தவர்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாய் வாழ்வார்கள். அந்த ஒழுக்க வாழ்க்கைக்கு அடிப்படை கல்வி ஆகும்.
நூன்முறை தெரிந்து சீலத்து ஒழுகு (53)
என்று, ஒழுக்க வாழ்க்கைக்கு அறநூல்களைக் கற்றல் அடிப்படை என்பதை ஒளவையார் பாடியுள்ளார்.
அறநூல்களைக் கற்று உணர்ந்து, அந்த அறவுரைகளுக்கு ஏற்ப ஒழுக்கத்தோடு வாழவேண்டும் என்பதே இத்தொடரின் பொருள் ஆகும்.
கற்றவற்றின்படி நடக்க வேண்டும் என்பதை இத்தொடர் விளக்குகிறது.
• ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்
கல்வி அறிவு இல்லாதவர்கள் நல்ல உணர்வும் நல்ல ஒழுக்கமும் உடையவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே, எல்லோரும் அற நூல்களைக் கற்றல் வேண்டும். இதை,
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்
(9)
என்று ஒளவையார் தெரிவித்துள்ளார்.
நல்ல அற நூல்களைப் படிக்காதவர்களுக்கு நல்ல உணர்வும் நல்ல ஒழுக்கமும் இருப்பது இல்லை என்பது இதன் பொருள் ஆகும்.
கல்வி அறிவு இல்லாமையால் ஏற்படும் இழிவை இத்தொடர் விளக்குகிறது.
முயற்சி உடையவர்களுக்குத் தேவையான வழிகள் திறக்கும். அந்த வழிகள் திறப்பதற்கான முயற்சிகளை, அவர்களை அறியாமலேயே அவர்கள் செய்து முடித்திருப்பார்கள்.
• போனகம் என்பது தான் உழந்து உண்டல்
முயற்சியின் சிறப்பை ஒளவையார்,
போனகம் என்பது தான் உழந்து உண்டல்
(69)
என்று குறிப்பிட்டுள்ளார்.
போனகம் என்பது உணவைக் குறிக்கும். உழந்து என்பது வருந்தி உழைப்பதைக் குறிக்கும்.
உழைத்தவர்களுக்கு மட்டுமே உண்பதற்கு உரிமை உண்டு என்பதை இத்தொடர் விளக்குகிறது. தான் முயன்று உழைத்து உருவாக்கிய செல்வத்தால் உண்பதே உணவு எனப்படுவது. தான் முயன்று சம்பாதித்த உணவுப் பொருளைப் பிறருக்கும் கொடுத்து உண்பது பெருமை உடையது ஆகும்.
• ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
ஒருவனுக்குச் சிறந்த அழகைத் தருவது தளரா முயற்சி. தளர்ச்சியில்லா முயற்சி இல்லாதவனிடம் இருக்கும் செல்வம் நிலைக்காது. அது குறைந்து கொண்டே போகும். முயற்சி உடையவனிடம் இருக்கும் செல்வமே மேலும் கூடும். எனவே,
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
(86)
என்று ஒளவையார் பாடியுள்ளார்.
ஒருவன் முயற்சி உடையவனாக இருப்பதே சிறந்த செல்வமும் அழகும் ஆகும் என்பது இதன் பொருள்.
• தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
இருக்கின்ற செல்வத்தைப் பாதுகாப்பதற்கு உரிய வழி எது என்றால் மேலும் முயற்சி செய்து செல்வத்தைச் சேர்ப்பதே ஆகும். அவ்வாறு சேர்க்காமல், இருக்கின்ற செல்வத்தைச் செலவு செய்து கொண்டே இருந்தால் அனைத்துச் செல்வத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எல்லாச் செல்வத்தையும் ஒருவன் இழந்துவிட்டால் அதுவே அவனுக்குப் பெரிய துன்பம் ஆக முடியும்.
தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
(44)
(பாடு = துன்பம்)
என்னும் தொடரின் வாயிலாக ஒளவையார் இதைத் தெளிவாக்கியுள்ளார்.
• சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
முயற்சி செய்து உழைக்காமல் இருப்பவர்கள் சோம்பர் என்று அழைக்கப்படுவார்கள். அவ்வாறு சோம்பராய் இருப்பவர்கள் தங்களிடம் இருக்கின்ற செல்வத்தையும் இழந்து திண்டாடுவார்கள். இதை,
சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
(36)
என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
முயற்சி செய்து உழைக்கின்றவர்களுக்கு எச்செயலையும் செய்வதற்குத் துணிவு ஏற்படும். முயற்சியுடன் துணிந்து செயல்படுகிறவர்களுக்குத் தோல்வி வருவதற்கு வாய்ப்பே கிடையாது. அவ்வாறு முயற்சியும், துணிவும், உழைப்பும் இல்லாமல் சோம்பலுடன் இருப்பவர்கள் துன்பத்துடன் அலைவார்கள் என்பதை யாரும் தெரிந்து கொள்ளமுடியும்.
• சீரைத்தேடின் ஏரைத் தேடு
உழவுத் தொழிலை ஏர்த் தொழில் என்றும் கூறுவார்கள். ஏர் கொண்டு நிலத்தை உழுது உணவுப்பொருள் உற்பத்தி செய்வதால் இதை ஏர்த்தொழில் என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த ஏர்த் தொழிலின் சிறப்பை ஒளவையார்,
சீரைத் தேடின் ஏரைத்தேடு
(29)
என்று பாடியுள்ளார்.
ஒருவன் தனது வாழ்க்கையில் சிறப்பு வேண்டும் என்று தேடினால் ஏர்த் தொழிலைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். பிற தொழில்களைச் செய்கிறவர்கள் தாங்கள் உயிர்வாழ்வதற்கு மட்டுமே பொருள் ஈட்டுகிறார்கள். ஆனால் ஏர்த்தொழில் செய்கிறவர்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருளுடன் உலக மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் ஈட்டுகிறார்கள். எனவேதான் ஒளவையார், சிறப்பைத் தேடுபவர்களைப் பார்த்து ஏர்த் தொழிலைத் தேடச் சொல்லியுள்ளார்.
• மேழிச் செல்வம் கோழைபடாது
ஏர்த் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளுள் முதன்மையானது கலப்பை. கலப்பையை மேழி என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார். கலப்பை என்னும் கருவியால் செய்யும் ஏர்த் தொழிலால் உருவான செல்வம் எல்லாக் காலத்திலும் ஒருவனைக் காக்கும் என்பதை அவர்,
மேழிச் செல்வம் கோழை படாது
(77)
என்று பாடியுள்ளார். இந்த உழவுத் தொழிலின் மூலம் ஈட்டிய செல்வம் என்றும் குறைவுபடாது என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது.
• உழுது ஊண் இனிது
உணவானது அதன் சுவையால் மட்டுமே இனிமை தருவதில்லை. அது எந்த வழியில் வந்தது என்பதன் அடிப்படையிலும் இனிமையைத் தரும் என்று கொன்றை வேந்தன் தெரிவிக்கிறது.
தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது
(46)
என்னும் கொன்றை வேந்தன் தொடர் இக்கருத்தை விளக்குகிறது.
ஒருவரிடம் அடிமையாக இருந்து அவரை வணங்கிப் பெற்று உண்ணும் உணவு சுவையானதாக இருந்தாலும் அது இனியது அல்ல. உழவுத் தொழிலால் உருவாக்கி உண்ணும் உணவில் சுவை குறைவாக இருந்தாலும் அந்த உணவே இனிமையானது என்று ஒளவையார் தெரிவித்துள்ளார்.
உறவினர்களுடன் இணக்கமாய் வாழத் தெரிந்தவனுக்கு மற்றவர்களுடன் இணக்கமாக வாழவும் தெரியும். விருந்தினர்கள், உறவினர்களாக இருந்தாலும் உறவு அல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு விருந்து படைக்கும் இன்முகம் கொண்டவர்கள் தமிழ்ப் பெண்கள்.
• மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
தங்களிடம் இருக்கும் உணவுப் பொருள்களைப் பிறருக்கும் கொடுத்துப் பகிர்ந்து உண்ணும் வழக்கமே விருந்தோம்பலின் அடிப்படை. இந்தப் பகிர்ந்து உண்ணும் பழக்கம் கொண்டவர்கள், கிடைத்தற்கு அரிய அமிர்தமே கிடைத்தாலும், தாங்கள் மட்டும் தனியாக உண்போம் என்று கருதாமல் அதையும் விருந்தினருடன் பகிர்ந்து உண்பார்கள்.
இந்தப் பண்பு உடையவர்களின் வாழ்க்கையில் இன்பம் குடிகொண்டிருக்கும். ஏனென்றால் இவர்கள் பிறர் மகிழ்ந்து உண்பதைப் பார்த்து இன்பம் அடையும் நல்ல குணம் கொண்டவர்கள். இந்த விருந்தோம்பல் பண்பில் மக்கள் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்று கருதிய ஒளவையார்,
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
(70)
(மருந்து = அமிர்தம்)
என்று குறிப்பிட்டுள்ளார்.
கிடைத்தற்கு அரிய அமிர்தமே கிடைத்தாலும் அதையும் விருந்தினருடன் சேர்ந்து உண்ண வேண்டும் என்பது இதன் பொருள் ஆகும்.
• விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
இல்லற வாழ்க்கையின் சிறப்புகளுள் ஒன்று விருந்தோம்பல் ஆகும். விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்று உணவு வழங்கும் பண்பு இல்லாதவர்கள் இல்லற வாழ்வின் சிறப்பைப் பெற இயலாது. இதை,
விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
(83)
என்று ஒளவையார் பாடியுள்ளார்.
பொருந்திய ஒழுக்கம் என்பது இல்லற வாழ்க்கையைக் குறிக்கும். விருந்தினரைப் பேணும் பண்பு இல்லாதவர்க்கு இல்லற வாழ்க்கையின் பயன் கிடைப்பது இல்லை என்பது இதன்பொருள்.
இத்தொடர் விருந்தோம்பலின் சிறப்பை விளக்குவது ஆகும்.
இவை தவிர, கொன்றை வேந்தன் வாயிலாக, இல்லறத்தின் பெருமை, ஒற்றுமையின் வலிமை, சான்றோர் பெருமை முதலியவற்றையும் அறிந்து கொள்ள முடியும்.
ஆத்திசூடியில்,
நூல்பல கல்
ஓதுவது ஒழியேல்
எண் எழுத்து இகழேல்
இளமையில் கல்
கேள்வி முயல்
என்னும் தொடர்கள் கல்வியின் சிறப்பையும் கேள்வியின் தேவையையும் விளக்குகின்றன.
தனிமனித ஒழுக்கத்திற்கு வழிவகுக்கும்,
அறம் செயவிரும்பு
ஆறுவது சினம்
முதலிய தொடர்களையும்,
சமுதாய ஒழுக்க மேம்பாட்டிற்கு அழைத்துச் செல்லும்
ஒப்புரவு ஒழுகு
ஊருடன் கூடிவாழ்
ஆகிய தொடர்களையும் ஆத்திசூடி வழங்கியுள்ளது.
தானமது விரும்பு
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
முதலிய தொடர்கள் ஈகையின் பெருமையை எடுத்துக் கூறுகின்றன.
போர்த்தொழில் புரியேல்
முனை முகத்து நில்லேல்
என்னும் ஆத்திசூடித் தொடர்கள், போர்களால் மக்கள் அடையும் இன்னல்களை எடுத்துக் கூறுகின்றன.
கொன்றை வேந்தன் என்னும் அறநூல், கல்வியின் சிறப்பு, முயற்சியின் உயர்வு, உழவுத் தொழிலின் பெருமை, விருந்தோம்பல் பண்பு முதலிய வாழ்க்கை மேம்பாட்டுச் செய்திகளையும் பிற அறக்கருத்துகளையும் வழங்கியுள்ளது.
பாடம் - 3
மூதுரையில் முப்பது பாடல்கள் உள்ளன. இவை தனித்தனிக் கருத்துகளை உணர்த்துவனவாய் உள்ளன. இச்செய்யுள்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன.
வாக்குஉண்டாம் நல்ல மனம்உண்டாம் மாமலராள்
நோக்குஉண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்புஆர் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
(மூதுரை)
(வாக்கு = சொல்வன்மை, மாமலராள் = திருமகள், நோக்கு = அருள் பார்வை, மேனி = உடல், துப்பு = பவளம், நுடங்காது = சோர்வு அடையாது, ஆர் = போன்ற, தும்பிக்கையான் = விநாயகப் பெருமான்)
எனும் கடவுள் வாழ்த்துப் பாடலில் தும்பிக்கையான் என்று விநாயகர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இப்பாடலில் விநாயகனை வணங்குகிறவர்கள் பெறும் பயன்களாகப் பின்வருவனவற்றை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
1. சொல்வன்மை பெருகும்.
2. நல்ல எண்ணங்கள் உருவாகும்.
3. செல்வ வளம் பெருகும்.
என்பனவற்றில் ‘செல்வ வளம் பெருகும்’ என்னும் கருத்தைக் குறிப்பிடுவதற்கு, ‘மாமலராள் நோக்கு உண்டாம்’ என்று பாடியுள்ளார்.
‘மாமலராள்’ என்னும் சொல், தாமரைப் பூவில் வீற்றிருக்கும் திருமகளைக் குறிக்கும். ‘நோக்கு’ என்னும் சொல் அருள் பார்வையை உணர்த்தும். திருமகளின் அருள் பார்வையைப் பெற்றவர்கள், செல்வ வளம் பெற்று விளங்குவார்கள் என்று ஒளவையார் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பாடலில் விநாயகப் பெருமானின் நிறம் சிவப்பு என்பதற்கு ஓர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார். ‘துப்பு’ என்றால் பவளம் என்று பொருள். பவளத்தின் நிறம் சிவப்பு, பவளம் போன்ற சிவந்த நிறம் கொண்டவன் விநாயகன் என்பதை விளக்குவதற்கு ‘துப்பு ஆர் திருமேனி’ என்னும் தொடரை ஒளவையார் பயன்படுத்தியுள்ளார்.
மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புஉடையன்; மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்புஇல்லை; கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு
(மூதுரை:26)
(மாசு அற = குற்றம் நீங்கும் படியாக, மன்னனின் = மன்னனை விட, கற்றோற்கு = கல்வி கற்றவனுக்கு, சிறப்பு = பெருமை.)
மன்னனுக்கு அவனது நாட்டில் மட்டும்தான் பெருமை உண்டு. ஆனால் கல்வி உடையவனுக்குச் சென்ற இடங்களில் எல்லாம் பெருமை வந்து சேரும். எனவே, மன்னனை விடவும் கற்றவனுக்கே பெருமை உண்டு என்று இப்பாடல் தெரிவிக்கிறது.
செல்வநிலையிலும் வாழ்க்கை முறையிலும் உயர்ந்த நிலையில் இருப்பவன் மன்னன். அந்த மன்னனை விடவும் கல்வி அறிவு பெற்றவனை உயர்வுபடுத்தியிருப்பதன் மூலம் கல்வி, பெருமைப்படுத்தப் பட்டுள்ளது.
• கற்றாரைக் கற்றவர் விரும்புவர்
கல்வி அறிவு பெற்றவர்களால்தான் கற்றவர்களின் பெருமையை அறிய முடியும். கல்வி அறிவு இல்லாதவர்களால் கற்றவர்களின் அறிவுத் திறனை அறிந்து கொள்ள இயலாது.
நல்தா மரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்; கற்புஇலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்; முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்
(மூதுரை :24)
(கயம் = குளம், காமுறுவர் = விரும்புவர், கற்புஇலா = கல்வி இல்லா, முகப்பர் = விரும்புவர், உகக்கும் = விரும்பும்)
தாமரைப்பூக்கள் பூத்திருக்கும் குளத்தில் அன்னப்பறவைகள் நீந்தி மகிழும். அதைப்போல, கற்றவர்களுடன் கற்றவர்கள் சேர்ந்து மகிழ்வார்கள். இடுகாட்டில் உள்ள பிணங்களைக் காக்கை விரும்பி உண்ணும். அதைப்போல, கல்வி அறிவு இல்லாதவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்களுடன் விரும்பிச் சேர்ந்து வாழ்வார்கள்.
இந்தச் செய்யுளில் இரண்டு உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1. நல்தாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல்.
2. முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்.
என்பவை அந்த உவமைகள் ஆகும். இவ்வுவமைகளில் கற்றவர்களின் பெருமையைக் குறிப்பிடுவதற்குத் தாமரைக் குளத்தையும் அன்னத்தையும் உவமையில் பயன்படுத்தியுள்ளார். ஆனால் கல்வி அறிவு இல்லாதவர்களின் இழிவைக் குறிப்பிடுவதற்குக் காக்கையையும் பிணத்தையும் உவமையில் பயன்படுத்தியுள்ளார். உயர்ந்த பொருள்களை உயர்ந்த கருத்திற்கு உவமையாகவும் இழிந்த பொருள்களை இழிந்த கருத்திற்கு உவமையாகவும் மூதுரை வழியாக ஒளவையார் தெரிவித்துள்ள நுட்பம் சிறப்பு உடையது ஆகும்.
• கல்லாதவர் நிலை
கல்வி அறிவு இல்லாதவர்கள் பெருமை பெற இயலாது என்பதை மூதுரை தெரிவித்துள்ளது. கல்வி அறிவு பெற்றவர்களுக்குக் கிடைக்கும் பெருமையைப் பார்த்து, கல்வி அறிவு பெறாதவர்களும் அதுபோல் பெருமையைப் பெற விரும்பிச் செயல்பட்டால் அவர்களுக்குப் பெருமை வந்து சேராது. இதை உணர்த்த, மூதுரை
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்து, தானும்தன்
பொல்லாச் சிறகைவிரித்து ஆடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி
(14)
(கானம் = காடு, பாவித்து = நினைத்துக்கொண்டு, பொல்லாச்சிறகு = அழகு இல்லாச் சிறகு, கவி = கவிதை)
என்னும் பாடலைத் தந்துள்ளது.
கல்வி அறிவு உடையவன் அழகிய கவிதைகளை எழுதுவான். அக்கவிதைகளில் நல்ல கருத்துகள் நிறைந்திருக்கும். அதைப் பார்த்து, கல்வி அறிவு இல்லாதவனும் கவிதை எழுதினால் அது சிறப்பாக இருக்காது. இது மூதுரை தெரிவிக்க விரும்பிய கருத்து ஆகும். இதை விளக்குவதற்கு ஓர் உவமையைக் காட்சியாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. இதோ அந்த உவமைக் காட்சியைக் காணுங்கள்.
காட்டில் ஒரு மயில் தனது தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து அதன் அழகிலும் ஆட்டத்திலும் ஒரு வான்கோழி மயங்கியது. தோகை உடைய மயில் ஆடுவதைப் போல் தோகை இல்லாத வான்கோழியும் ஆடுவதற்கு ஆசைப்பட்டது என்பதுதான் அந்த உவமைக் காட்சி.
இந்த உவமையில் மயிலைக் கல்வி அறிவு பெற்றவனுக்கும் மயிலின் தோகை விரித்த ஆட்டத்தைக் கல்வி அறிவு உடையவன் எழுதிய கவிதைக்கும் ஆசிரியர் உவமித்துள்ளார்.
வான்கோழியைக் கல்வி அறிவு இல்லாதவனுக்கும் அதன் ஆட்டத்தைக் கல்வி அறிவு இல்லாதவனின் கவிதைக்கும் உவமையாக்கியுள்ளார்.
கல்வி அறிவு இல்லாதவனின் இழிவை விளக்குவதற்கு மூதுரை மேலும் ஒரு பாடலைத் தெரிவித்துள்ளது.
கவைஆகி, கொம்புஆகி, காட்டகத்தே நிற்கும்
அவைஅல்ல நல்ல மரங்கள்; சபைநடுவே
நீட்டுஓலை வாசியா நின்றான், குறிப்புஅறிய
மாட்டா தவன்நல் மரம்
(மூதுரை:13)
(கவை = கிளை, கொம்பு = மரக்கிளையின் ஒரு பகுதி, சபை = அவை, நீட்டு ஓலை = ஓலைச்சுவடி)
என்பதே அப்பாடல்.
கற்றவர்கள் நிறைந்த அவையில் நிற்கும் ஒருவனிடம் ஓர் ஓலை கொடுக்கப்படுகிறது. அந்த ஓலையில் எழுதப்பட்டுள்ளதை அவன் படிக்க வேண்டும். கல்வி அறிவு இல்லாத அவனால் அதைப் படிக்க இயலவில்லை. எனவே அவன் அப்படியே நிற்கிறான். அவனை ‘மரம்’ என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார். கல்வி அறிவு இல்லாதவனை ‘மரம்’ என்று குறிப்பிட்ட ஒளவையார் மரங்களை ‘மரம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கிளைகளாகப் பிரிந்து நீண்ட கொம்புகளைக் கொண்டு காட்டில் நிற்கும். அவை மரங்கள் அல்ல. கற்றோர் அவையில் கொடுக்கப்பட்ட ஓலையைப் படிக்க இயலாமல் நிற்பவனும் அவையின் குறிப்பை அறியமாட்டாதவனும் ஆகியவனே ‘நல்ல மரம்’ ஆவான் என்று மேலும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே; நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று
(8)
இச்செய்யுளில், நல்லவர்களின் தொடர்பு நான்கு நிலைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. நல்ல பண்பு உடையவர்களைக் காண்பது நன்மை தரும்.
2. நல்லவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நன்மை தரும்.
3. நல்லவர்களின் நற்பண்புகளைக் கூறுவது நன்மை தரும்.
4. நல்லவர்களுடன் நட்புக்கொண்டு வாழ்வது நன்மை தரும்.
இச்செய்யுளில் மனிதனின் இன்றியமையா உறுப்புகளான கண், காது, வாய், மெய் ஆகியவற்றின் செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நல்லவர்களைக் காணும் கண்ணின் வேலையையும், நல்லவர்களின் அறிவுரைகளைக் கேட்கும் காதின் வேலையையும், நல்லவர்களின் நற்பண்புகளைக் கூறும் வாயின் வேலையையும் நல்லவர்களுடன் நட்புக்கொண்டு அருகிருக்கும் மெய்யின் வேலையையும் மூதுரை தெரிவித்துள்ளது.
ஐம்புலன்களில் மூக்கின் வேலையைத் தவிர ஏனைய உறுப்புகளின் வேலைகள் அனைத்தையும் தெரிவித்திருப்பதன் மூலம் நல்லவர்கள் தொடர்பின் பெருமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
• பொற்குடம் உடைந்தாலும் பொன் ஆகும்!
சான்றோரின் பெருமை எந்த நிலையிலும் குறையாது. அவர்கள் செல்வ நிலையில் உயர்ந்து இருந்தாலும் தாழ்ந்து இருந்தாலும் அவர்களின் பெருமை குறைவதில்லை.
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்ஆகும்? – சீரிய
பொன்னின் குடம்உடைந்தால், பொன்ஆகும்; என்ஆகும்
மண்ணின் குடம்உடைந்தக் கால்?
(மூதுரை -18)
(சீரியர் = சான்றோர், கெட்டாலும் = செல்வத்தில் குறைந்தாலும், உடைந்தக்கால் = உடைந்தால்)
நல்ல சான்றோர்கள் ஏதோ காரணத்தால் தங்கள் நிலையிலிருந்து தாழ்ந்தாலும், தங்கள் உயர்ந்த பண்பிலிருந்து மாற மாட்டார்கள்; மதிப்பும் குறையாது என்பதை மூதுரை இச்செய்யுளில் குறிப்பிட்டுள்ளது. இதை விளக்குவதற்கு இரண்டு செய்திகளை அது சுட்டிக் காட்டியுள்ளது.
பொன்னின் குடம் உடைந்தால், பொன் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தால் என் ஆகும்?
என்பனவே அந்தச் செய்திகள்.
பொன்னால் செய்யப்பட்ட குடம் உடைந்தால் அது தண்ணீர் பிடிப்பதற்கு உதவாது. எனினும் உடைந்த அந்தப் பொன்குடத்தின் மதிப்புக் குறைவதில்லை. ஏனென்றால் பொன்குடத்திற்கு மதிப்பு, பொன்னால் வருகிறது. அதைப் போல, செல்வ நிலையிலிருந்து சான்றோர்கள் தாழ்ந்தாலும் அவர்களின் மதிப்புக் குறைவதில்லை. ஏனென்றால் சான்றோர்களின் மதிப்பு, அவர்களின் பண்பால் வருகிறது.
சான்றோரைப் பற்றித் தெரிவித்த மூதுரையின் இந்தச் செய்யுள், தீயோரைப் பற்றியும் தெரிவித்துள்ளது. தீயோர்களின் செல்வ நிலையில் குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு மதிப்புக் கிடைப்பதில்லை. ஏனெனில் தீயோருக்கு அவர்களின் நற்பண்பால் மதிப்புக் கிடைக்கவில்லை. அவர்களின் செல்வ நிலையின் காரணமாகவே ஓரளவு மதிப்புக் கிடைத்தது என்பதை அறிந்து கொள்ள முடியும். இக்கருத்தை விளக்குவதற்கு,
என் ஆகும், மண்ணின் குடம் உடைந்தக்கால்?
என்ற வினா எழுப்பப்பட்டுள்ளது.
மண்ணால் செய்யப்பட்ட குடம் உடைந்தால் அது தண்ணீர் பிடிப்பதற்கும் உதவாது; அதற்கு மதிப்பும் கிடையாது. அதைப்போல, தீயோர்களிடம் செல்வம் இல்லை என்றால் அவர்களுக்கு மதிப்புக் கிடையாது. ஏனென்றால் தீயோருக்குக் கிடைத்த ஓரளவு மதிப்பும் அவர்களின் செல்வத்திற்குக் கிடைத்தது ஆகும்.
• கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
சான்றோரின் சிறப்பை மேலும் ஒரு மூதுரைப் பாடல் பின்வருமாறு தெரிவிக்கிறது.
அட்டாலும் பால்சுவையின் குன்றாது அளவளாய்
நட்டாலும், நண்புஅல்லார் நண்புஅல்லர்;
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளே;சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்
(மூதுரை:4)
(அட்டாலும் = காய்ச்சினாலும், குன்றாது = குறையாது, அளவளாய் = கலந்து பழகி, நட்டாலும் = நட்புக் கொண்டாலும், கெட்டாலும் = நிலையில் தாழ்ந்தாலும்)
அடுப்பில் வைத்து, பாலைக் காய்ச்சுவதால் பாலின் சுவை குறையாது. மாறாகச் சுவை கூடும். நெருப்பில் போட்டுச் சுடுவதால் சங்கின் வெண்மை குறையாது. மாறாக வெண்மை கூடும். இவற்றைப் போல, சான்றோர்கள் வறுமையால் துன்பப்பட்டாலும், தங்கள் நல்ல பண்பிலிருந்து மாறமாட்டார்கள். ஆனால், தீயோர்களிடம் எவ்வளவு நட்பாகப் பழகினாலும் அந்த நட்புக்குத் தகுதி உடையவர்களாகப் பழக மாட்டார்கள் என்பதே இப்பாடலின் கருத்து ஆகும்.
இந்தப் பாடலில் சான்றோர்களின் உயர்ந்த பண்பிற்கு இரண்டு உவமைகளைத் தெரிவித்துள்ள ஆசிரியர் தீயோருக்கு உவமை எதுவும் கூறாமல் விட்டுள்ளார்.
சான்றோருக்குக் கூறப்பட்டுள்ள இரண்டு உவமைகளிலும் வெண்மை நிறப்பொருள்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒன்று பால், மற்றொன்று சங்கு. இவை, சான்றோரின் மாசற்ற உள்ளத்தைக் குறிப்பாகக் காட்டுகின்றன.
இந்த இரண்டு பொருள்களும் வெப்பத்தால் தங்கள் இயல்பில் குறைவதில்லை. இவற்றைப் போன்றே சான்றோர்களும் துன்பத்தால் தங்கள் நற்பண்புகளிலிருந்து மாறுவதில்லை என்பதை மூதுரை உணர்த்துகிறது.
• பயன் கருதா உதவி
உதவி செய்கிறவர்கள் பயனைக் கருதாமல் உதவிசெய்ய வேண்டும் என்பதைப் பின்வரும் மூதுரைப் பாடல் விளக்குகிறது.
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாள்உண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்
(மூதுரை :1)
(நன்றி = உதவி, தெங்கு = தென்னைமரம், தாள் = அடிமரம்)
ஒருவருக்கு ஓர் உதவியைச் செய்தவுடன் அந்த உதவிக்கான பலனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. தென்னை மரத்தின் அடிப்பகுதியில் தண்ணீரை விட்டு வளர்க்கிறோம். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தலைப்பகுதி இனிய இளநீரைத் தருகிறது. அதைப்போல், பிறருக்கு நாம் செய்த உதவியும் பின்னர், பயனைத் தரும் என்று இப்பாடல் தெரிவித்துள்ளது.
• உதவியின் பயன்
ஒருவர் செய்கின்ற உதவியைப் பெறுகின்றவரின் தன்மைக்கு ஏற்பவே அந்த உதவி, உயர்வாகவோ தாழ்வாகவோ கருதப்படும். நல்லவர்களுக்கு உதவி செய்தால் அந்த உதவி மதிக்கப்படும். தீயவர்களுக்கு உதவி செய்தால் அந்த உதவி அப்போதே மறக்கப்படும்.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே; அல்லாத
ஈரம்இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்
(மூதுரை :2)
(காணுமே = தெரியுமே, ஈரம் இலா = இரக்கம் இல்லாத, உபகாரம் = உதவி)
என்னும் பாடல் நல்லவர்க்குச் செய்த உதவியையும் தீயவர்க்குச் செய்த உதவியையும் தெரிவிக்கிறது. நல்லவர்க்குச் செய்த உதவியானது கல்லில் பொறித்த எழுத்தைப் போல் நிலைத்து நிற்கும். தீயவர்க்குச் செய்த உதவியானது நீரின் மேல் எழுதிய எழுத்தைப் போல் உடனே அழிந்து போகும்.
இச்செய்யுளில் ஒளவையார் இரண்டு உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
1. கல்மேல் எழுத்து.
2. நீர்மேல் எழுத்து.
கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்து எந்தச் சூழ்நிலையிலும் நிலைத்து இருக்கும்; வெள்ளத்தால், காற்றால், தீயால் வேறு இயற்கைச் சீற்றங்களால் அழிந்து போகாது. அதைப் போன்று நல்லவர்க்குச் செய்த உதவி, காலம் கடந்தும் நிலைத்து நிற்கும்; நாட்டு மக்களால் விரும்பிப் போற்றப்படும். ஆனால், நீரில் எழுதிய எழுத்தானது, எழுதிய நொடியிலேயே அழிந்து விடும். அதைப்போல, தீயவர்களுக்குச் செய்த உதவி, அதன் பயனைப் பெற்றவர்களாலேயே கூட நினைக்கப்படாமல் உடனே மறக்கப்பட்டு அழிந்து விடும்.
• தீயவருக்குச் செய்த உதவி
மேலும் ஒரு மூதுரைப்பாடல் தீயவர்க்குச் செய்த உதவியின் தன்மையை விளக்குகிறது.
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்குஅதனுக்கு ஆகாரம் ஆனாற்போல் பாங்குஅறியாப் புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்
(மூதுரை :15)
(நோய் = துன்பம், விடகாரி = மருத்துவன், பாங்கு அறியா = பண்பு அறியாத, புல்லறிவாளர் = தீயவர், கலம் = பாத்திரம்)
இச்செய்யுளில், தீயவர்களுக்கு உதவி செய்தால், அந்தத் தீயவர்கள், உதவி செய்தவர்களுக்கே துன்பம் ஏற்படும்படி செய்து விடுவார்கள் என்னும் கருத்து விளக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தை விளக்குவதற்கு ஒரு காட்சி விளக்கத்தையும் ஓர் உவமையையும் மூதுரை பயன்படுத்தியுள்ளது.
விடகாரி என்பவன் உடலில் பரவியுள்ள நஞ்சை அகற்றும் மருத்துவன் ஆவான்.
ஒரு வேங்கைப் புலியானது உடலில் நஞ்சு பரவி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த நஞ்சு முறிவு மருத்துவர், அந்தப் புலிக்கு மருத்துவம் செய்து காப்பாற்றினார். உயிர் பிழைத்த அந்தப் புலிக்குப் பசி எடுத்தது. தன்னை உயிர் பிழைக்கச் செய்த மருத்துவன் என்றும் கருதாமல் அந்த மருத்துவனையே கொன்று தனது பசியைத் தீர்த்துக் கொண்டது.
இந்த நிகழ்ச்சியில், உயிர் பிழைத்த புலியானது, தனக்கு மருத்துவ உதவி செய்தவரையே கொன்றுவிட்டது. அதைப்போல, தீயவர்களுக்கு உதவிசெய்தால், உதவி செய்தவர்களுக்கே தீமையாக முடிந்து விடும்.
இதை மேலும் வலியுறுத்துவதற்கு, ‘கல்லின் மேல் இட்ட கலம்‘ என்னும் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. கலம் என்பது பாத்திரத்தைக் குறிக்கும். இங்கே அது மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தைக் குறிக்கிறது.
மண்ணால் செய்யப்பட்ட பாத்திரம் கல்லில் விழுந்தால் எப்படி உடைந்து பயன் இல்லாமல் போகுமோ அதைப் போல, தீயவர்களுக்குச் செய்த உதவியும் பயன் இல்லாமல் போகும். மண் பாத்திரம் எவ்வாறு உடைந்து போகுமோ அதைப் போன்று, தீயவர்களுக்கு உதவி செய்தவர்களும் துன்பம் அடைவார்கள் என்பதை இப்பாடல் விளக்குகிறது.
இதே கருத்தை விளக்கும் வகையில் ‘பாத்திரம் அறிந்து பிச்சை இடு’ என்னும் பழமொழியும் உள்ளது.
இத்தகைய நட்பின் சிறப்பை மூதுரை இரண்டு பாடல்களில் தெரிவித்துள்ளது.
• எது நல்ல நட்பு?
இருவர் சிலநாள் நெருங்கிப் பழகுவதால் ஏற்படுவது அல்ல நட்பு. அந்த இருவருக்கு இடையே அன்பாலும் அறிவாலும் ஏற்படும் இணைப்புத் தான் நட்பாகச் சிறந்து விளங்கும். நல்ல நண்பர்கள், நண்பனுக்குத் துன்பம் ஏற்பட்ட வேளையில் உதவுவார்கள். தீய நண்பர்கள், நண்பனுக்குத் துன்பம் ஏற்படும் போது அவர்களை விட்டு விலகி விடுவார்கள்.
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவுஅல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு
(மூதுரை :17)
(அற்ற = நீர் இல்லாத, அறு = அகன்று செல்லும், உற்றுழி = துன்பம் ஏற்பட்ட வேளை, தீர்வார் = விலகிச் செல்கிறவர், கொட்டி, ஆம்பல், நெய்தல் = நீர்த் தாவரங்கள், உறுவார் = நட்புக் கொள்கிறவர்)
என்னும் மூதுரைப் பாடல் நல்ல நண்பர்களையும் தீய நண்பர்களையும் அடையாளம் காட்டியுள்ளது.
குளத்தில் கொட்டி என்னும் நீர்க் கொடியும் ஆம்பல் என்னும் கொடியும் நெய்தல் கொடியும் நிறைந்து இருக்கும். அதே குளத்தில் உள்ள மீன்களை உண்ணும் நோக்கத்துடன் பறவைகளும் இருக்கும். குளத்தில் நீர் நிறைந்து இருக்கும் போது அங்கே தங்கி இருக்கும் பறவைகள், நீர் வற்றிவிட்டால் வேறு குளத்திற்குப் பறந்து போய் விடும். ஆனால் கொட்டி, ஆம்பல், நெய்தல் முதலிய நீர்க் கொடிகள் நீர்வற்றி விட்டாலும் அந்தக் குளத்திலேயே கிடந்து வாடும்.
குளத்தில் நீர்வற்றிய உடன் பறந்து விடும் பறவையைப் போன்றவர்கள் தீய நண்பர்கள். நீர்வற்றிய பிறகும் அங்கேயே கிடக்கும் கொட்டி, ஆம்பல், நெய்தல் முதலிய கொடிகளைப் போன்றவர்கள் நல்ல நண்பர்கள் என்று மூதுரை தெரிவித்துள்ளது.
• சுற்றமும் நட்பும்
நம்முடன் பிறந்தவர்கள் மட்டுமே நமது சுற்றத்தார் என்று முழுமையாக நம்பி இருக்க வேண்டாம். அந்த உடன்பிறந்தார் நமது உயிரைப் போக்கும் அளவிற்குத் துன்பம் செய்து விடுவதும் உண்டு. ஆனால் உடன்பிறவாத நண்பர்கள் நமக்கு நன்மை செய்வார்கள் என்பதைப் பின்வரும் மூதுரைப் பாடல் விளக்குகிறது.
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றுஇருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்;
அம்மருந்து போல்வாரும் உண்டு
(மூதுரை :20)
(சுற்றத்தார் = உறவினர், வியாதி = நோய், பிணி = நோய்)
நோயானது நமது உடலிலே தோன்றி நமது உயிரையே பறிக்கும் கொடுமை உடையது. ஆனால், நம்முடன் தோன்றாமல் தொலைவில் உள்ள மலையில் தோன்றிய அரிய மூலிகை மருந்து அந்த நோயைப் போக்கி நமது உயிரைக் காக்கும். அதைப் போன்று, நம் உடன் பிறந்தோர் நமக்குத் துன்பம் செய்வது உண்டு. ஆனால் உடன் பிறவாமல் தொலைவில் இருந்தே நமக்கு உதவும் நண்பர்களும் உண்டு. எனவே, நண்பர்களை நமது உறவினர்கள் இல்லை என்று ஒதுக்கிட வேண்டாம் என மூதுரை தெரிவிக்கிறது.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துஉனக்கு நான்தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா
(நல்வழி : கடவுள் வணக்கம்)
(கோலம் = அழகு, துங்க = பெருமை மிகுந்த, கரிமுகம் = யானை முகம், தூமணி = தூய மணி, தமிழ் மூன்று = இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ்)
பெருமை மிகுந்த யானை முகத்தைக் கொண்ட விநாயகக் கடவுளே! நான் உனக்கு இனிய பாலையும் தெளிந்த தேனையும் வெல்லப் பாகினையும் பருப்பு வகைகளையும் கலந்து படைக்கின்றேன். நீ எனக்கு இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தருவாயாக! என்று ஒளவையார் வேண்டுகிறார்.
இச்செய்யுளில் விநாயகக் கடவுள் பின்வருமாறு வருணிக்கப் பட்டுள்ளார்.
விநாயகக் கடவுள் அழகிய அணிகலன்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளார்; பெருமை மிகுந்த யானை முகத்துடன் விளங்குகிறார்; தூய்மையான மணி போன்ற ஒளியுடன் காட்சி அளிக்கிறார் என்று ஒளவையார் பாடியுள்ளார்.
ஆற்றுப் பெருக்குஅற்று அடிசுடும் அந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் உலகுஊட்டும்; ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
‘இல்லை’என மாட்டார் இசைந்து
(நல்வழி :9)
(பெருக்கு = வெள்ளப்பெருக்கு, அற்று = இல்லாமல், அடி = பாதம், ஊற்று = நீரூற்று, உலகு = உலக மக்களுக்கு, ஊட்டும் = தண்ணீரைக் கொடுக்கும், ஏற்றவர்க்கு = தேடி வந்தவர்களுக்கு, நல்கூர்ந்தார் = வறுமை நிலையை அடைந்தார், இசைந்து = மனமார)
வழி வழியாகப் பிறருக்குப் பொருளை வழங்கும் நல்ல குடியில் பிறந்தவர்களை ‘வள்ளல் குடியினர்’ என்று சிறப்பித்துக் கூறுவார்கள். அத்தகைய வள்ளல் குடியில் பிறந்தவர்கள் வறுமை நிலையை அடைந்தாலும், தங்களைத் தேடி வந்தவர்களுக்குப் ‘பொருள் இல்லை’ என்று சொல்ல மாட்டார்கள். அவ்வாறு சொல்வதற்கு அவர்களது உள்ளம் விரும்பாது.
இதை விளக்குவதற்கு ஒளவையார் ஆற்றை உவமைப் படுத்தியுள்ளார். ஆற்றிலே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது அந்த நீரை ஊர்மக்கள் பயன்படுத்துவார்கள். அந்த ஆற்றிலே நீர் வற்றிப் போன கோடைகாலத்தில் அதில் தோண்டப்பட்ட சிறிய ஊற்றுகளின் வாயிலாக அது ஊர்மக்களுக்கு நீர் வழங்கும். அதைப் போன்று, வள்ளல் குடியில் பிறந்தவர்கள் செல்வம் இருக்கும் போதும் வழங்குவார்கள்; வறுமை நிலையை அடைந்துவிட்டாலும் பிறருக்கு வழங்குவார்கள் என்று வள்ளல்களின் தன்மையை நல்வழி தெரிவிக்கிறது.
• வெறும் பானை பொங்குமோ?
நம்மிடம் செல்வம் இருக்கும் போது நாம் பிறருக்கு வழங்க வேண்டும். அவ்வாறு பிறருக்கு வழங்குவது அறச் செயல் ஆகும். இந்த அறச் செயலைச் செய்கின்றவர்களுக்குச் செல்வம் வந்து சேரும். அவ்வாறு செய்யாதவர்களுக்குச் செல்வம் வந்து சேராது.
செய்தீவினை இருக்க, தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் – வையத்து
அறும்பாவம் என்றுஅறிந்து அன்றுஇடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்
(நல்வழி :17)
(செய் = செய்த, தீவினை = தீய செயல், நொந்தக்கால் = வருத்தப்பட்டால், எய்த = அடைய, இருநிதியம் = பெருஞ்செல்வம், வையத்து = உலகத்து, அறும் = நீங்கும், இடார்க்கு = கொடுக்காதவர்க்கு)
தொடர்ந்து தீய செயல்களைச் செய்து விட்டு, கடவுளை வணங்கினால் பெருஞ்செல்வம் சேராது. அவ்வாறு செல்வம் சேரவில்லையே என்று கடவுளை நினைத்து வருந்துவதாலும் பயன் கிடையாது. செய்த தீய செயல்களால் ஏற்பட்ட பாவம் நீங்க வேண்டும் என்றால் செல்வம் இல்லாதவர்களுக்குச் செல்வத்தை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் பாவம் நீங்குவதோடு புண்ணியம் சேரும்.
இதை விளக்குவதற்கு ஒளவையார், ‘வெறும்பானை பொங்குமோ மேல்’ என்னும் உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.
பானையில் எதுவும் போடாமல் நெருப்பு மூட்டினால் அந்தப் பானையிலிருந்து எதுவும் பொங்கி மேலே வராது. அதுபோல, பாவம் நீங்கும் படியாகப் புண்ணியம் செய்யாதவர்களுக்குச் செல்வம் வந்து சேராது என்பது இதன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
• தீயாரும் இடுவர்!
தாம் சேர்த்த பொருளைப் பிறருக்கு வழங்குவதற்கு நல்ல குணம் வேண்டும். அந்த நல்ல குணம் இல்லாதவர்களும் சில வேளைகளில் வழங்குவார்கள். எப்போது அவர்கள் வழங்குவார்கள் என்பதைப் பின்வரும் நல்வழிப்பாடல் தெளிவாக்குகிறது.
பெற்றார், பிறந்தார், பெருநாட்டார், பேர் உலகில்
உற்றார், உகந்தார் என வேண்டார், மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்
(நல்வழி : 18)
(பெற்றார் = பெற்ற தாய், தந்தை, பிறந்தார் = உடன் பிறந்தவர், பெருநாட்டார் = தன் நாட்டைச் சேர்ந்தவர், உற்றார் = உறவினர், உகந்தார் = வேண்டியவர், மற்றோர் = அயலார், இரணம் = துன்பம், சரணம் = தாள் பணிதல்)
பெற்ற தாயும் தந்தையும், உடன்பிறந்தவர்களும் தன் நாட்டைச் சேர்ந்தவர்களும், உறவினரும், வேண்டிய நண்பர்களும் கெஞ்சிக் கேட்டாலும் வள்ளல் குணம் இல்லாதவர்கள் சிறிது பொருளும் கொடுக்க மாட்டார்கள். ஆனால், தொடர்பே இல்லாதவர்கள் மிரட்டித் துன்புறுத்திக் கேட்டால் அவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள் என்று ஈகைக் குணம் இல்லாதவர்களின் இழி குணத்தை நல்வழி கூறுகிறது.
இத்தகைய ஈகைக் குணம் இல்லாதவர்கள் அஞ்சி, பொருள் வழங்குவதற்கு என்ன காரணம்?
யாருக்கும் வழங்காமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பதால் கருமிகளிடம் செல்வம் மிகுதியாகச் சேர்ந்து விடுகிறது. மிகுதியான பொருள் சேர்ந்து விடுவதால் அந்தப் பொருளைப் பாதுகாப்பதில் அவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. மேலும் உறவினர்கள், நண்பர்கள் என்று யாருடனும் நல்ல உறவு இல்லாததால் அவர்களின் உதவியையும் கருமிகள் இழந்து விடுகிறார்கள். எனவே, கருமிக்கு அச்சம் மேலும் கூடுகிறது. இத்தகைய கருமிகளை மிரட்டினால் அவர்கள் அஞ்சி, பொருளைக் கொடுத்துவிடுகிறார்கள்.
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்றுஅங்கு எதிர்கொள்வர்; இல்லானை
இல்லாளும் வேண்டாள்;மற்று ஈன்றுஎடுத்த
தாய்வேண்டாள்; செல்லாது அவன்வாயின் சொல்
(நல்வழி :34)
(கைப் பொருள் = செல்வம், எதிர்கொள்வர் = வரவேற்பர், இல்லானை = செல்வம் இல்லாதவனை, ஈன்று = பெற்று, இல்லாளும் = மனைவியும், வாயின் சொல் = வாய்ச்சொல், பேச்சு)
கல்வி அறிவு உடையவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவர். கல்வி அறிவு இல்லாதவர்கள் அவ்வாறு மதிக்கப்படுவதில்லை. ஆனால், கல்வி அறிவு இல்லாதவனுக்குச் செல்வம் இருந்தால் அவனையும் எல்லோரும் சென்று போற்றிப் புகழ்வார்கள்.
செல்வம் இல்லாதவனை அவனது மனைவி கூட விரும்பமாட்டாள்; அவனைப் பெற்ற தாயும் விரும்பமாட்டாள்; அவன் சொல்லும் சொல்லை யாரும் பெரிதாகக் கருதி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று செல்வத்தின் உயர்வை ஒளவையார் பாடியுள்ளார்.
• செல்வத்தின் நிலை
செல்வம் எப்போதும் ஒருவரிடமே நிலைத்து இருப்பதில்லை. அது அடிக்கடி ஒருவரைவிட்டு வேறு ஒருவரிடம் செல்லும். இந்த இயல்பை ஒளவையார் பின்வரும் பாடலில் அழகிய உவமையின் வாயிலாக விளக்கியுள்ளார்.
ஆறுஇடும் மேடும் மடுவும்போல் ஆம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்! – சோறு இடும்;
தண்ணீரும் வாரும்; தருமமே சார்புஆக,
உள்நீர்மை வீறும், உயர்ந்து
(நல்வழி :32)
(இடும் = உருவாக்கும், மடு = பள்ளம், ஏறிடும் = உயர்ந்திடும், வீறும் = மிகும்.)
ஆற்றில் தண்ணீர் ஓடும் வேகத்திற்கு ஏற்ப மேடுகளும் பள்ளங்களும் மாறி மாறி அமையும். அதைப்போல், செல்வமும் ஒருவரிடம் நிலைத்து இருப்பது இல்லை. ஒருவரிடம் மிகுதியாகச் செல்வம் சேரும். வேறு ஒருவரிடம் குறைவாகச் சேரும். அதுவும் நிலையாக இருப்பதில்லை. எனவே, செல்வம் இருக்கின்ற போதே அந்தச் செல்வத்தைப் பயன்படுத்தி உணவளித்தல், தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் முதலிய அறச்செயல்களைச் செய்தல் வேண்டும். இவ்வாறு அறச்செயல்கள் செய்தால் நமது உள்ளம் மகிழ்ச்சி அடையும் என்று நல்வழி தெரிவிக்கிறது.
ஆற்றங் கரையின் மரமும், அரசுஅறிய
வீற்றிருந்த வாழ்வும், விழும்அன்றே; ஏற்றம்
உழுதுஉண்டு வாழ்வதற்கு ஒப்புஇல்லை கண்டீர்;
பழுதுஉண்டு வேறுஓர் பணிக்கு
(நல்வழி :12)
(ஏற்றம் = உயர்வு, பழுது = குறை)
ஆற்றங்கரையில் நிற்கின்ற மரம் ஆற்றில் ஓடும் நீரின் உதவியால் நன்கு செழித்து வளரும், நீண்ட காலம் நிலைத்து நிற்கும். அந்த மரமும், மண் அரிப்பின் காரணமாக ஒரு நாள் விழும். அரசனுக்கு இணையாக வாழ்கின்றவனின் உயர்ந்த வாழ்விலும் தாழ்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. பிற தொழில்களிலும் ஏதோ ஒரு வகையில் குறை உண்டு. ஆனால், உழவுத் தொழில் செய்து அதனால் கிடைக்கும் விளைச்சலில் உணவு உண்டு உயிர் வாழ்கின்றவர்களுக்கு வாழ்வில் எந்நாளும் ஏற்றமே நிலைக்கும்.
உழவுத் தொழிலின் மேன்மையைத் திருக்குறள் பத்துக் குறட்பாக்களில் தெரிவிக்கிறது. ஒளவையாரின் நல்வழி ஒரே ஒரு பாடலில் உழவுத்தொழிலின் மேன்மையைத் தெரிவித்தாலும் மிகவும் தெளிவாகத் தெரிவித்துள்ளதை இப்பாடல் வழியாக நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை
(478)
என்று வரவு செலவு பற்றி, திருக்குறள் கூறியுள்ளது.
வருவாய் குறைவாக இருந்தாலும் செலவு மிகாமல் இருந்தால் தவறு இல்லை என்பது இதன் பொருள். வருவாயை விடவும் செலவு மிகுதியாக இருந்தால் ஏற்படும் இழிநிலையை நல்வழி பின்வரும் செய்யுள் வாயிலாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆன முதலில்அதிகம் செலவு ஆனால்
மானம் அழிந்து மதிகெட்டு, போனதிசை
எல்லார்க்கும் கள்ளன்ஆய், ஏழ்பிறப்பும் தீயன்ஆய்
நல்லார்க்கும் பொல்லன்ஆம் நாடு
(27)
(முதலில் = வருவாயில், மதி = அறிவு, பொல்லன் = தீயன், ஏழ் பிறப்பு = தோன்றும் பிறப்பு)
வரவுக்கு மேல் செலவு செய்கிறவர்களின் மானம் அழியும்; அறிவு கெடும்; சென்ற இடங்களில் எல்லாம் திருடன் என்ற இழிபெயரை ஏற்க வேண்டிவரும்; அடுத்து வரும் பிறவிகளிலும் இந்தத் தீமை தொடர்ந்து வரும்; நல்லவர்கள் கூட அவர்களைத் தீயவர்கள் என்று இகழ்வார்கள். எனவே, வரவுக்கு மேல் செலவு செய்யக்கூடாது என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுஉருவும் கோல்பஞ்சில் பாயாது; நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை, பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்
(33)
(வெட்டென = கடுமையாகப் பேசும் பேச்சுகள், மெத்தென = மென்மையான பேச்சுகள், வேழம் = யானை, உருவும் = வெளியேறும், கோல் = வேல், நெட்டிருப்புப்பாரை = நீண்ட கடப்பாரை, நெக்கு = உடைதல், பசுமரம் = பச்சைமரம்)
என்று பாடியுள்ளார்.
கடுமையாகப் பேசும் பேச்சுகளால் மென்மையான பேச்சுகளை வெல்ல இயலாது என்ற உண்மையை ஒளவையார் உணர்த்த விரும்பியுள்ளார். அதற்காக இரண்டு உவமைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். வலிமையான யானையின் மேல் எறியப்பட்ட கூர்மையான ஈட்டி, அதன் ஒருபக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குச் செல்லும். ஆனால் அதே ஈட்டியால் மென்மையான பஞ்சின்மேல் பாய இயலாது என்பது ஓர் உவமை.
பெரிய கடப்பாரையால் கூடப் பிளக்க இயலாத வலிமை வாய்ந்த பாறையானது, பச்சை மரத்தின் வேரால் பிளவுபடும் என்பது மற்றோர் உவமை.
முதல் உவமையில் கூர்மையான ஈட்டியால் பஞ்சைப் பிளக்க முடியாது என்பது உணர்த்தப்பட்டுள்ளது. இரண்டாவது உவமையில் மென்மையான வேரால், வலிமையான பாறையைக் கூடப் பிளக்க முடியும் என்பது உணர்த்தப்பட்டுள்ளது.
முதல் உவமையில் கூறப்பட்டுள்ள கூர்மையான ஈட்டி வன்சொல் போன்றது. வன்சொல்லால், மென்சொல்லை வெல்ல முடியாது என்பது இதன்மூலம் அறிய வருகிறது. இரண்டாம் உவமையில் கூறப்பட்டுள்ள மென்மையான வேர், இன்சொல் போன்றது. இன்சொல்லால், வன்சொல்லை வெல்ல முடியும் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது.
கல்வி கற்றவர்களுக்குச் ‘சென்ற இடம் எல்லாம் சிறப்பு’ என்றும், கல்வி கற்றவர்களின் பெருமையைக் கல்வி கற்றவர்களே அறிவார்கள் என்றும் கல்வியின் சிறப்பை மூதுரை தெரிவித்துள்ளது.
சான்றோர்கள் நற்பண்புகளின் இருப்பிடமாக விளங்குவார்கள். அவர்கள் தங்கள் செல்வ நிலையில் தாழ்ந்தாலும், சான்றாண்மைப் பண்பிலிருந்து பிறழமாட்டார்கள் என்று மூதுரை அறிவித்துள்ளது.
இயன்ற அளவு எல்லாருக்கும் உதவவேண்டும் என்றும், தீயவர்களுக்கு உதவி செய்வதால் தமக்குத் தீமை வரும் என்றால் அந்த உதவியைச் செய்யக்கூடாது என்றும் ஒளவையார் தெரிவித்துள்ளார்.
நல்வழி என்னும் நூல் வள்ளல்களின் இயல்பையும், செல்வத்தின் பெருமையையும், உழவுத்தொழிலின் உயர்வையும், வரவுக்கேற்ற செலவே வாழ்க்கைக்கு உதவும் என்பதையும் தெரிவித்துள்ளது.
பாடம் - 4
இவர், நைடதம், காசிக்காண்டம், திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி முதலிய வேறு நூல்களையும் இயற்றியுள்ளார்.
இந்த நூலின் பயனைத் தெரிவிக்கும் பாடல் ‘வெற்றிவேற்கை‘ என்று தொடங்குகிறது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம் முதலிய அறநூல்கள் செய்யுளின் முதல் சொல்லால் அழைக்கப் படுவதைப் போல் இந்த நூலும் ‘வெற்றிவேற்கை’ என்று அழைக்கப் படுகிறது.
வெற்றி வேற்கை வீரராமன்
கொற்கை ஆளி, குலசேகரன், புகல்
நல்தமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலா தவரே
(வெற்றிவேற்கை)
(ஆளி = ஆட்சி செய்பவன், களைவோர் = போக்குவோர், புகல் = உரைத்த)
என்னும் நூல்பயன் பாடலில் இடம் பெற்றுள்ள ‘வெற்றிவேற்கை’ என்பதே நூலின் தலைப்பு ஆகிவிட்டது. இங்கே வெற்றி வேற்கை என்பது அதிவீரராம பாண்டியனுக்கு அடைமொழியாக வந்துள்ளது. வெற்றிதரும் வேலைக் கையில் ஏந்திய வீரராமன் என்பது இதன் பொருள். இந்தப் பாடலின் மூலம், அதிவீரராம பாண்டியன் கொற்கையை ஆட்சி செய்தவன் என்பதையும் குலசேகரன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவன் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே
என்னும் கடவுள் வாழ்த்தில் விநாயகப் பெருமான் ஐங்கரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். ஐங்கரன் என்பது ஐந்து கரங்களைக் கொண்டவன் என்பதை உணர்த்தும். விநாயகன் வலப்பக்கத்தில் இரண்டு கைகளையும் இடப்பக்கத்தில் இரண்டு கைகளையும் முன்பக்கத்தில் தும்பிக்கையையும் கொண்டவன். இவ்வாறு ஐந்து கரம் கொண்டுள்ளதால் ஐங்கரன் என்று அழைக்கப்பட்டுள்ளான். பிரணவ மந்திரத்தின் பொருளாக ஐங்கரன் விளங்குகிறான் என்பதையும் இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடல் தெரிவிக்கிறது.
கல்வி கற்றவர்கள் பிறரால் மதிக்கப்படுவார்கள். கல்வி கல்லாதவர்கள் அவ்வாறு மதிக்கப்படுவதில்லை. கல்வி கல்லாதவர்கள் செல்வத்தில் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் உலகம் அவர்களை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்பதை வெற்றி வேற்கை தெரிவித்துள்ளது.
• கசடு அற மொழிதல்
கல்வி பெருமையுடையது; கற்றவர்கள் மதிக்கப்படுவார்கள் என்பதில் எள் அளவும் ஐயம் இல்லை. ஆனால், ஒருவன் கல்வி அறிவு பெற்றவன் என்பதை எதன் மூலம் அறிய முடியும்? அதற்கு அதிவீரராம பாண்டியன் ஒரு வழியைக் காட்டியுள்ளார்.
கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்
(வெற்றிவேற்கை : 2)
(கசடு = குற்றம், அற = நீங்க)
ஒருவன் குற்றம் இல்லாத சொற்களைத் தெளிவாகப் பேசுவதிலிருந்தே அவன் கல்வி கற்றவன் என்பதை அறிந்து கொள்ளமுடியும் என்று இந்த அடி தெரிவிக்கிறது.
• கற்கை நன்றே!
கல்வி கற்பது ஒன்றே ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு நன்மையைத் தரும். கல்வி மட்டும்தான் நன்மையைத் தரும் என்றால் அந்தக் கல்வியை எந்த வகையிலாவது பெற வேண்டும் அல்லவா? கல்வி கற்பதற்குப் பொருள் தேவைப்படுகிறது. அந்தப் பொருள் இல்லாதவர்கள் அதற்குத் தேவையான பொருளை முயன்று திரட்ட வேண்டும். முயற்சி செய்தும் பொருள் திரட்ட இயலவில்லை என்றால் அவர்களால் கல்வி கற்க இயலாது அல்லவா? அவர்கள் கல்வி கற்க வேண்டாமா? இதற்கு வெற்றிவேற்கை என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?
கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே
(35)
என்னும் வரிகள், இதற்கு விளக்கம் தருகின்றன.
ஒருவன் செல்வம் இல்லாதவனாக மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டாலும், அந்த நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்பதை இந்த வரிகள் உணர்த்துகின்றன.
• கற்றவரே உயர்ந்தோர்
நமது சமுதாயத்தில் குலத்தால் உயர்வு, தாழ்வு பார்க்கும் இழிநிலை இருக்கிறது. குலத்தை நான்காகப் பிரித்து வைத்துள்ளார்கள். அவை, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பவை. இந்த நான்கு குலத்திலும் அந்தணரை உயர்ந்தோர் என்றும், அடுத்த நிலையில் அரசர்கள் என்றும், அதற்கும் அடுத்த நிலையில் வணிகர்கள் என்றும், கடைநிலையில் வேளாளர்கள் என்றும் தரப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்தத் தர வரிசையில் முதலில் இருக்கும் அந்தணர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் கல்வி அறிவு பெறவில்லை என்றால் அவனும் கீழ்க்குலத்தைச் சேர்ந்தவனாகவே கருதப்படுவான் என்று வெற்றிவேற்கை கூறுகிறது.
நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே
(37)
இந்தத் தொடரின் மூலம் அதிவீரராமபாண்டிய மன்னனின் காலத்தில் வருணப் பிரிவு இருந்ததை அறிய முடிகிறது. இந்த வருணப் பிரிவால் உயர்வு தாழ்வு இருந்ததையும் அறிய முடிகிறது. எனினும், கல்வி கற்றவர்களின் உயர்வை வெளிப்படுத்தும் வகையில் கடைநிலையில் இருப்பவர்களும் கற்றவர்களாக இருந்தால் முதல்நிலையில் வைத்துப் போற்றப்படுவார்கள் என்பதையும் பின்வரும் தொடர் வெளிப்படுத்துகிறது.
எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை ‘மேல்வருக‘ என்பர்
(38)
மேற்கூறிய நால்வருணத்தில் எந்தக் குடியில் யாராக இருந்தாலும், கற்றவராக இருந்தால் அவரை அறிஞர்கள் வரவேற்பார்கள். இந்த இரு தொடர்களும் வருணப்பிரிவைத் தெரிவிக்கின்றன. என்றாலும், கற்றோருக்கு வருணப் பிரிவு இல்லை என்பதைத் தெரிவித்து, கல்வியின் சிறப்பைத் தெரிவிக்கின்றன.
• கல்லாமை
கல்வி அறிவு இல்லாதவன் எதற்கும் பயன்அற்றவன். அவன் தனது குலத்தின் பெருமையைக் கற்றவர்களிடம் பேசுவதால் அவனுக்குப் பெருமை வந்து சேராது. இதை உணராமல் கல்லாத ஒருவன் தனது குலப்பெருமையைப் பேசினால் அவன் ‘பதர்’ ஆகக் கருதப்படுவான் என்பதை,
கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே
(36)
என்னும் தொடர் தெரிவிக்கிறது.
நெல்லின் உள்ளே அரிசி இருந்தால் அதை நெல்மணி அல்லது நெல் என்று கூறுவோம். அரிசி இல்லாமல் உமியால் மட்டும் மூடப்பட்டு இருக்கும் நெல்லைப் பதர் என்று கூறுவார்கள். அரிசி இல்லாமல் வெறும் உமிமட்டும் இருக்கும் பதர், உணவுக்குப் பயன்படாது. அதைப்போல, கல்வி அறிவு இல்லாதவனும் பயன்படமாட்டான் என்பது இத்தொடரின் பொருள். இவ்வாறு கல்வியறிவு இல்லாமல் பிறருக்குப் பயன்படாமல் இருப்பவன், கற்றவர்களிடம் தன் குலத்தை உயர்த்திப் பேசுவது நெல் போன்றே காட்சி தரும் பதருக்கு இணையானது என்று அதிவீரராம பாண்டியன் கூறியுள்ளார்.
உதவி செய்வதற்கு மிகுதியான பொருள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொருள் குறைவாக இருந்தாலும் நிறைந்த மனம் இருந்தால் போதும் என்பதை வெற்றிவேற்கை அறிவித்துள்ளது.
தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை
தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையிலும்
நுண்ணிதே ஆயினும், அண்ணல் யானை
அணிதேர், புரவி, ஆள் பெரும்படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே
(17)
என்பதே அப்பாடல் ஆகும். இந்தப் பாடலில் உதவியின் சிறப்பு வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. உதவியின் சிறப்பை விளக்கும் ஓர் உவமை மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. அந்த உவமையைக் கண்முன் காட்சியாக விரியும் வகையில் தெளிவாக விளக்கியுள்ளார் அதிவீரராம பாண்டியன்.
நன்கு வளர்ந்த ஆலமரத்தில் ஆலம்பழங்கள் கனிந்து இருக்கும். அவற்றின் உள்ளே சிறிய விதைகள் இருக்கும். அந்த விதைகள் சிறிய மீனின் முட்டையை விடவும் அளவில் சிறிதாக இருக்கும். ஆனால் அந்த விதை மரமாக வளர்ந்து பெரிய ஆலமரமாக நிற்கும்.
அந்த ஆலமரத்தின் நிழலில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட் படை என்னும் நால்வகைப் படையைக் கொண்ட மன்னனும் தங்க முடியும். அதைப்போல, குறைந்த அளவு செல்வம் கொண்டவர்களாக இருந்தாலும் மனம் இருந்தால் பிறருக்கு உதவ முடியும்.
• செல்வரின் கடமை
செல்வம் இருப்பவர்கள் அச்செல்வத்தின் மூலம் பிறருக்கு உதவ வேண்டும். அதை அவர்கள் தங்கள் கடமையாகக் கருதிச் செயல்படவேண்டும். இதை வெற்றிவேற்கை பின்வரும் தொடர் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே
(58)
ஒருவர் இரந்து உண்ணும் நிலைக்கு வருகிறார் என்றால் அவர் தமது மதிப்புநிலையைத் துறந்து வருகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
தமது மதிப்பை இழந்து ஒருவர் இரக்கின்ற நிலைக்கு வருகிறார் என்றால் அவரது வறுமைக் கொடுமையை உணர்ந்து செல்வம் இருக்கின்றவர்கள் உதவவேண்டும். அது, செல்வம் இருப்பவர்களின் கடமையும் ஆகும்.
• உதவாமை
செல்வம் குறைவாக இருந்தாலும் நல்ல மனம் கொண்டவர்கள் பிறருக்கு உதவி செய்யும் இயல்புடன் இருப்பதை முன்பே நாம் கண்டோம். மிகுதியாகச் செல்வம் கொண்டவர்களும் பிறருக்கு உதவாதவர்களாக இருப்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.
தேம்படு பனையின் திரள்பழத்து ஒருவிதை
வான்உற ஓங்கி, வளம்பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே
(16)
பனைமரத்தின் பழம் திரண்டு பெரியதாக இருக்கும். அதன் விதையும் பெரிதாக இருக்கும் அந்த விதையிலிருந்து வளரும் பனைமரமும் வானளாவ ஓங்கி வளரும். பனைமரம் உயரமாக வளர்ந்தாலும் அதன் நிழலில் ஒருவர் கூடத் தங்க இயலாது. இந்தப் பனைமரத்தைப் போல, செல்வம் மிகுதியாக உடையவராக இருந்தாலும், பிறருக்கு உதவும் மனப்பான்மை இல்லாதவர்கள் உதவி செய்ய மாட்டார்கள்.
பிறருக்கு உதவுவதற்கும் உதவாமல் இருப்பதற்கும் செல்வம் தேவை தான் என்றாலும் அது மட்டுமே அடிப்படை ஆகாது. ஏனெனில் பிறருக்கு உதவும் மனம் வேண்டும் என்னும் கருத்தை வெற்றிவேற்கை தெளிவாக உணர்த்தியுள்ளது.
அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
சுடினும் செம்பொன் தன்ஒளி கெடாது
அரைக்கினும் சந்தனம் தன்மணம் அறாது
புகைக்கினும் கார்அகில் பொல்லாங்கு கமழாது
கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது
(23-27)
(அடினும் = காய்ச்சினாலும், கார் அகில் = கறுத்த அகில் கட்டை, பொல்லாங்கு = தீய மணம்)
இந்த ஐந்து தொடர்களிலும் ஐந்து பொருள்கள் குறிக்கப் பட்டுள்ளன. அவை ஆவின்பால், செம்பொன், சந்தனம், அகில், கடல் ஆகியவை ஆகும். இவை ஐந்தின் நிலைத்த தன்மைகளை நல்லவர்களின் நல்ல குணத்திற்குச் சான்றாக வெற்றிவேற்கை கூறியுள்ளது.
அடுப்பில் வைத்துக் காய்ச்சுவதால் பசும் பாலின் சுவை குறையாது.
நெருப்பில் போட்டுச் சுடுவதால் பொன்னின் ஒளி இல்லாமல் போகாது.
கல்லில் வைத்து அரைப்பதால் சந்தனத்தின் மணம் போகாது.
நெருப்பில் போட்டு அகில் கட்டையைப் புகைத்தால் கெட்ட மணம் வராது.
கலக்குவதால் கடல்நீர் சேற்று நீராக மாறாது.
இந்த ஐந்து பொருள்களும் அவற்றின் இயல்பான தன்மையில் மாறாதது போல் நல்லவர்களும் தங்கள் நல்ல குணத்திலிருந்து மாறமாட்டார்கள்.
• தீயவர்கள்
தீயவர்களுக்கு எவ்வளவு நல்ல நெறிகளைக் கூறினாலும் அவர்கள் திருந்துவதில்லை. அவர்களின் இயல்பான தீய குணமே வெளிப்படும். இதை வெற்றிவேற்கையின் இரண்டு தொடர்கள் விளக்குகின்றன.
அடினும் பால்பெய்து, கைப்பு அறாது, பேய்ச்
சுரைக்காய்
(28)
(கைப்பு = கசப்பு, அறாது = நீங்காது)
என்பது ஒருதொடர். இதனை,
‘பால் பெய்து அடினும், பேய்ச்சுரைக்காய் கைப்பு அறாது’
என்று படித்துப் பொருள் கொள்ள வேண்டும்.
பேய்ச்சுரைக்காய் கசப்புச் சுவை கொண்ட காய். இது கடற்கரைகளில் வளரும். இந்தப் பேய்ச்சுரைக்காயை எவ்வளவுதான் பால் விட்டுச் சமைத்தாலும் அதிலுள்ள கசப்புச் சுவை மாறாது. அதைப்போல, தீயவர்களிடம் எவ்வளவு நல்ல கருத்துகளை எடுத்துக் கூறினாலும் அவர்கள் தீய செயல்களையே செய்வார்கள்.
ஊட்டினும் பல்விரை, உள்ளி கமழாதே
(29)
(விரை = நறுமணம்)
என்பது மற்றொரு தொடர்.
உள்ளி என்பது வெங்காயத்தின் வேறு பெயர். இந்த வெங்காயத்துடன் எவ்வளவு மணப்பொருள்களைக் கலந்தாலும் அதன் இயல்பான வெங்காய வாசம் மாறாது. அதைப் போல, தீயவர்கள் நல்லவர்களுடன் சேர்ந்து இருந்தாலும் அவர்களின் தீய குணம் போகாது.
• நிலை உயர்வு
பொருள் எதுவும் இல்லாமல் ஏழையாக இருக்கும் ஒருவர் பொருள் உடையவராக மாறவும் வாய்ப்பு உண்டு. ஏனெனில் செல்வம் நிலையற்ற தன்மை கொண்டது.
இதைத் திருவள்ளுவர்,
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்
(248)
(பூப்பர் = பொருள் உடையவர் ஆவார்)
என்று குறிப்பிட்டுள்ளார். பொருள் இல்லாதவர் மன்னனாகக் கூட முடியும் என்பதை அதிவீரராம பாண்டியன்,
அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர்
(52)
என்று பாடியுள்ளார்.
வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்டு வாழ்கின்ற இரவலன்கூட அரசனுடன் சேர்ந்து, ஒருநாள் அரசனாகி நாட்டை ஆள்வதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்பது இதன் பொருள். இது ஒரு தனி மனிதனின் நிலை உயர்வைக் காட்டுகிறது.
பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொன்தொடி மகளிரும் மைந்தரும் கூடி
நெல்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்
(55)
(பெற்றம் = எருது, தொடி= வளையல்)
என்னும் பாடலில் பாழான நிலம், பெரிய நகரமாக நிலைமையில் உயர்வதற்கும் வாய்ப்பு உண்டு என்று வெற்றிவேற்கை கூறியுள்ளது.
வயல்வெளி இல்லாத மேட்டு நிலத்தில் மாடுகளும் கழுதைகளும் மேயும். அப்படிப்பட்ட மேட்டு நிலம் கூட ஒரு நாள், ஆண்களும் பெண்களும் மகிழ்ந்து வாழும் பெரிய நகரமாக மாறும். அதைப்போல நிலைமையில் தாழ்ந்தவரும் உயர்ந்தவராக மாறுவார். எனவே, யாரையும் இகழ்ச்சியுடன் பார்க்கக்கூடாது என்பதை இவ்வடிகளின் உதவியால் புரிந்து கொள்ள முடியும்.
• நிலை தாழ்வு
எல்லா வகையான செல்வங்களையும் பெற்று இன்பமாக வாழ்கின்ற ஒருவர், இன்று போல் என்றும் இன்பமாகவே வாழ்வார் என்று யாரும் எதிர்பார்க்க இயலாது. எதிர்பார்க்காத மாற்றங்கள் நிகழ்வது உண்டு. அந்த எதிர்பாராத தாழ்வுகளை ஐந்து பாடல்களில் வெற்றிவேற்கை தெரிவித்துள்ளது.
குடைநிழல் இருந்து, குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந்து, ஓர்ஊர் நண்ணினும் நண்ணுவர்
(50)
(குஞ்சரம் = யானை, நண்ணுவர் = அடைவர்)
வெண்கொற்றக் குடையின் கீழிருந்து ஆட்சி செய்யும் மன்னர் யானைமேல் ஊர்வலம் செல்லும் உயர்ந்த நிலையில் இருப்பவர். அந்த உயர்ந்த நிலையில் இருக்கும் மன்னரும் தமது நிலையில் தாழ்ந்து, அந்த ஊரில் வாழ இயலாது வேறு ஓர் ஊருக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்பதை இந்த வரிகள் தெரிவிக்கின்றன.
சிலப்பதிகாரத்தில் காவியத்தலைவனாக இருப்பவன் கோவலன். காவியத் தலைவி கண்ணகி. சோழமன்னனுக்கு இணையாகப் பூம்புகாரில் வாழ்ந்து வந்தவன் கோவலன். அவனும் தனது நிலையில் மாறி, பாண்டிய நாட்டிற்குச் சென்று தொழில் செய்து பிழைக்க வேண்டிய நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான். எனவே, எப்போதும் உயர்ந்த நிலையிலேயே இருப்போம் என்று எண்ணக்கூடாது என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.
மன்னனாக வாழ்ந்தவன் தனது நாட்டை இழந்து வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. புகழும் செல்வமும் உடையவர்கள் அன்ன சத்திரத்துக்குப் போய் உண்டு வாழக்கூடிய வறுமை நிலையை அடைந்தாலும் அடைவார்கள். இதை
சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்
(51)
என்னும் பாடல் தெரிவிக்கிறது.
குன்று அத்தனை இருநிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்
(53)
(இருநிதி = பெருஞ்செல்வம்)
என்னும் பாடலில், மலையளவு பெருஞ்செல்வம் உடையவராக இருந்தாலும் ஒரே நாளில் அந்தப் பெருஞ்செல்வத்தை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாகவும் வாய்ப்பு உண்டு என்பது விளக்கப்பட்டுள்ளது.
எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்கு
கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும்
(54)
(உக்கு = அழிந்து)
பல அடுக்குகளைக் கொண்ட மாடி வீடுகூட, தூண் சாய்ந்து கழுதை மேயும் மேடாகவும் மாறிவிடும் என்பது இதன் பொருள்.
இந்த நிலையாமைக் கருத்துகளை ஆசிரியர் ஏன் வலியுறுத்த வேண்டும்? செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அனைவரும் சோம்பியிருக்க வேண்டும் என்று சொல்கிறாரா? இல்லை, செல்வமும் புகழும் சேரும் பொழுதும், விலகும் பொழுதும் நாம் நிலை தடுமாறிவிடக் கூடும் என்பதால் இவை ஓர் எச்சரிக்கையாக அமைகின்றன. செல்வம் சேரும் பொழுது ஆணவம் வந்து விடக் கூடாது, அது விலகும் பொழுது துன்பத்தினால் மீளாத்துயரில் ஆழ்ந்து விடக்கூடாது என்பதே ஆசிரியர் கருத்து.
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்
(குறள்:629)
என்ற குறளின் கருத்துக்குச் சார்புடைய கருத்தாகும் இது.
நல்லவர்களின் நட்பானது பிறைநிலவு வளர்வதைப் போல் வளரும். தீயவர்களின் நட்பானது, முழுநிலவு தேய்வதைப் போல் தேயும் என்று திருக்குறள் கூறுவதை அறிவோம். வெற்றிவேற்கையும்,
ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே
(34)
(கேண்மை = நட்பு)
என்று பெரியோர் நட்பின் சிறப்பைக் கூறுகிறது.
‘இருநிலம்’ என்பதன் பொருள் என்ன? ஏற்கனவே ‘இருநிதி’ என்ற சொல்லைப் படித்தீர்கள் அல்லவா! ‘நிதி’ என்றால் செல்வம், ‘இருநிதி’ என்றால் ‘பெருஞ்செல்வம்’ அதுபோல் ‘இருநிலம்’ என்பது …… ஆம்! ‘பெரிய நிலம்’ என்பது தான் அதன் பொருள்!
பெரியவர்கள் ஒருவரிடம் ஒருநாள் மட்டுமே பழகினாலும் ஆழ்ந்த நட்புடையவர்களாக இருப்பார்கள். மரத்தின் வேரானது பெரிய நிலத்தைப் பிளந்து போய், மரத்தைக் கீழே விழாமல் தாங்குவது போல் அவர்களின் நட்பு உறுதி உடையதாக இருக்கும். ஆனால், அறிவற்றவரின் நட்பு எவ்வளவு நாள் பழகினாலும் நிலைக்காமல் போய் விடும். இதை,
நூறுஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே
(33)
என்னும் வெற்றிவேற்கைப் பாடல் தெரிவிக்கிறது.
நீர் நிலையில் காணப்படும் தாவரங்களில் ஒன்று பாசி என்பது. இது எவ்வளவு காலம் நீரில் கிடந்தாலும் இதன் வேரானது நீர் நிலையின் அடிப்பகுதிக்குச் சென்று நிலத்தில் பதிவது இல்லை. அதைப்போல அறிவற்றவர்கள் எவ்வளவு காலம் நட்புக் கொண்டாலும் அந்த நட்பு நிலைத்து இருப்பது இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து
(645)
ஒருவன் ஒரு கருத்தை வலியுறுத்திப் பேசும் போது பிறரால் அக்கருத்தை மறுத்துப் பேச இயலாத அளவிற்குச் சொல்லைத் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும் என்பது இதன் பொருள். அவ்வாறு பேசும் போது சொல்ல விரும்பும் கருத்துகளை வரிசைப்படுத்தித் தெளிவாகச் சொல்பவர்களின் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.
• சொல்திறம்
தனது சொல்லாற்றலால் ஒருவன் எந்தச் செயலையும் நிலைநாட்ட முடியும் என்பதை வெற்றிவேற்கை பின்வரும் பாடல் மூலம் அறிவித்துள்ளது.
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய் போலும்மே; மெய்போலும்மே
(73)
பொய்யைப் பேசுகிற ஒருவனும் சொல்லைத் திறமாகக் கையாளுபவனாக இருந்தால் அவன் தனது பேச்சுத்திறத்தால் பொய்யையும் மெய்யாகக் காட்டி விடுவான் என்பதே இதன் பொருள். இதன் மூலம் சொல்திறம் கொண்டவர்களால் எதையும் பேச்சில் வெற்றி கொள்ள முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
• சொல்திறம் இன்மை
சொல்ல விரும்பும் கருத்துகளை ஒருவனால் சரியாக எடுத்துச்சொல்ல இயலவில்லை என்றால் அவனால் எந்தக் கருத்தையும் நிலை நாட்ட இயலாது. அவன் உண்மையைச் சொன்னாலும் பொய்யாகவே கருதுவார்கள்.
மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்
பொய் போலும்மே; பொய் போலும்மே
(74)
என்னும் வெற்றிவேற்கைப் பாடல் சொல்திறம் இன்மையைத் தெரிவிக்கிறது.
உண்மையைப் பேசவிரும்பும் ஒருவனால் கருத்துகளைச் சரியாக எடுத்துக்கூற இயலாவிட்டால் அவனது உண்மையான சொற்களும் பொய்யாகவே கருதப்படும். எனவே, ஒருவன் சொல்திறம் பெற்றவனாக இருக்க வேண்டும் என்பதை அறியலாம்.
உலகநீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு
(கடவுள் வாழ்த்து)
(கரிமுகன் = யானை முகம் கொண்ட விநாயகன்)
‘உலகநீதி புராணம்’ என்னும் அறநூலைச் சொல்வதற்கு யானைமுகம் கொண்ட விநாயகன் காவல் செய்ய வேண்டும் என்று விநாயகனை வேண்டுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.
கடவுள் வாழ்த்தில் உலகநீதி என்னும் இந்நூல் ‘உலகநீதி புராணம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (புராணம் என்பதற்குப் பல பொருள்கள் வழங்குகின்றன. அவற்றில் ‘வேதப் பொருள்களை வலியுறுத்தும் நூல்’ என்பதும் ஒரு பொருள்) இங்கே, புராணம் என்பதற்கு ‘அறக்கருத்துகளை வலியுறுத்தும் நூல்’ என்று பொருள் கொள்ளலாம்.
உலகநீதி என்பது உலக மக்கள் நன்றாக வாழ்வதற்கு உதவும் அறக்கருத்துகளைக் குறிக்கும். எனவே ‘உலகநீதி நூல்’ என்பதற்கு உலக மக்கள் நன்றாக வாழ்வதற்கு உதவும் அறக் கருத்துகளைக் கூறும் நூல் என்று பொருள் கொள்ள முடியும்.
வள்ளி, குறவர்குடியில் தோன்றியவள். குறவர்கள் வலிமை மிக்கவர்கள். காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடித் திரிவது குறவர்களின் வழக்கம். வேட்டையாடிக் கிடைத்த பொருள்களைக் கொண்டு நிறைவாழ்வு வாழ்கிறவர்கள் குறவர்கள்.
குறவர்கள் மலைச்சாரலில் தினையைப் பயிர் செய்வார்கள். அந்தத் தினைப்பயிரை நாரைகள் கவர்ந்து செல்லாதவாறு அதைக் காவல் புரிவார்கள். வேட்டையாடுதலிலும் பயிர் செய்தலிலும் சிறந்து விளங்கிய குறவர்கள் பெருமையுடன் விளங்கினார்கள். குறிசொல்வது குறத்தியர் வழக்கம். இத்தகைய புகழ்நிறைந்த குறவர்குடியில் தோன்றியவள் வள்ளி என்று குறவர்குடியின் பெருமை வெளிப்படும் படியாக வள்ளியை உலகநாதர் பெருமைப்படுத்தியுள்ளார்.
உலகநாதர் காலத்தில் பெரிதும் மதிக்கப்பட்ட நல்ல பண்புகள் பலவற்றை உலகநீதி தெரிவித்துள்ளது. அப்பண்புகளைப் பின்பற்றுவதால் சமுதாயமாகக் கூடி வாழும் வாழ்க்கையில் எழும் சிக்கல்கள் மறைவதற்கு வாய்ப்பு உண்டு.
உலகநீதி தெரிவிக்கும் அறப்பண்புகளில் சில இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லிஇனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்
(306)
என்று குறிப்பிட்டுள்ளார். சினம் இரண்டு வகையில் துன்பத்தைக் கொடுக்கிறது.
1. சினம் கொண்டவரை அது அழிக்கிறது.
2. அவருக்குத் துன்பம் ஏற்படும் காலத்தில் உதவி செய்கிறவர்களையும் அது அழிக்கிறது.
தன்னிடத்தில் வந்து சேர்ந்தவர்களை அழிக்கும் இயல்பு கொண்டது நெருப்பு. எனவே அதைச் சேர்ந்தாரைக் கொல்லி என்று கூறுவார்கள். இங்கே திருவள்ளுவர் சினத்தையும் ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, சேர்ந்தாரைக் கொல்லக் கூடிய சினம், சினம் கொண்டவருக்கு உதவி செய்கிறவர்களையும் அழித்து விடுகிறது என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார்.
திருவள்ளுவர் கூறியிருப்பது போல் சினத்தின் இயல்பை உலகநாதர் குறிப்பிடவில்லை என்றாலும் சினம் கொண்டவர்கள் துன்பத்தை அடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதை,
சினம்தேடி, அல்லலையும் தேடவேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
(3)
என்னும் உலகநீதி வரிகள் விளக்குகின்றன.
சினம் துன்பத்தைத் தருவதால் யாரும் சினம் கொள்ள வேண்டாம். தான் சினம் கொள்ளாமல் இருந்தால் மட்டும் போதாது. சினம் கொள்பவர் வீட்டுக்குப் பக்கத்தில் கூட, போகக் கூடாது என்று உலகநாதர் அறிவுறுத்தியுள்ளார்.
பொய்யாமையின் சிறப்பை உலகநீதி
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் (2)
என்றும்,
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்லவேண்டாம் (10)
என்றும் கூறியுள்ளது.
மேற்காணும் இரு அடிகளில், மனமறிந்து ஒருவன் பொய் சொல்லக்கூடாது என்று முதல் அடி தெரிவிக்கிறது.
பொய் சொல்லக்கூடாது என்னும் உறுதியை மேற்கொண்ட ஒருவன் தனது உயிரே போகின்ற நிலை வந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்பதை இரண்டாம் அடி தெரிவிக்கிறது.
மனிதனின் உயிரைவிட உண்மையையே உலகநீதி பெரிதும் போற்றுகிறது என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும்.
புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம் (9)
என்னும் தொடரில் பிறரது மனம் புண்படும்படியாகக் கொடிய சொல் எதையும் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு முன்னால் நின்று கொண்டு அவரைப் பற்றிக் கொடிய சொற்களைச் சொல்வது மட்டும் இன்னாச்சொல் இல்லை. அவரைப் பற்றி அவர் இல்லாத போது பழித்துப் பேசுவதும் கொடிய சொல்தான் என்பதை உலகநீதியின் பின்வரும் அடி தெரிவிக்கிறது.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் (1)
என்று கூறிய உலகநாதர், வீண்விவாதம் செய்வதையும் இழிவாகக் கூறியுள்ளார். இதை,
வாதாடி வழக்கு அழிவு சொல்ல வேண்டாம் (10)
என்று குறிப்பிட்டுள்ளார்.
வாதிடுவதால் எந்த முடிவையும் எட்டமுடியாது. வாதம் செய்வதால் பிரச்சனை மேலும் சிக்கலாகவே வாய்ப்பு உள்ளது. இதை உணர்த்தவே உலகநாதர் இத்தொடரைப் படைத்துள்ளார்.
இத்தொடர்களின் மூலம், புறங்கூறுதல், வீண் விவாதம் செய்தல் முதலியவையும் தீமை தரும் சொற்களைப் பயன்படுத்துவதற்கு ஒப்பானது ஆகும் என்பதை உணரமுடியும்.
1. துணி வெளுப்பவர்
2. முடி திருத்துபவர்
3. ஆசிரியர்
4. மருத்துவச்சி
5. மருத்துவர்
என்னும் ஐவரே அவர்கள் ஆவார்கள். இதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.
அஞ்சுபேர் கூலியைக் கைக் கொள்ள வேண்டாம்;
அதுஏது இங்கு என்னின், நீ சொல்லக் கேளாய்!
தஞ்சமுடன் வண்ணான், நாவிதன் தன் கூலி;
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சம் அற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் தன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாதபேரை
ஏது ஏது செய்வானோ ஏமன் தானே!
(11)
(ஓதுவித்த = கற்பித்த, நஞ்சு அறுத்த = தொப்பூள் கொடி அறுத்த, நோவு = நோய், ஏமன் = யமன்)
என்னும் பாடலில் குறிப்பிட்டுள்ள இந்த ஐவரும் மனித வாழ்க்கைக்கு எவ்வாறு அடிப்படையானவர்கள் என்பதை இனிக் காண்போம்.
மனிதனின் பிறப்புக்குத் துணை புரிவதால் மருத்துவச்சி அடிப்படையானவள் ஆகிறாள். நோய் ஏற்படும்போது அந்நோயைப் போக்கி உதவுவதால் மருத்துவரும் அடிப்படை ஆகிறார். முடி திருத்துபவரும் துணி வெளுப்பவரும் தங்கள் தொழில்களின் வாயிலாக உதவுகின்றனர். எனவே இவர்களும் அடிப்படையானவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். வாத்தியார் என்று இங்கே குறிப்பிடப் பட்டுள்ளவர் கல்வி கற்பித்த ஆசிரியர் ஆவார். முன்பு கண்ட நால்வரும் மனிதனின் புறவாழ்க்கையுடன் தொடர்பு உடையவர்கள். ஆசிரியர் மட்டுமே மனிதனின் அகவாழ்க்கையுடன் தொடர்பு உடையவர் ஆவார். ஆசிரியர் மனிதனின் அகவாழ்க்கையுடன் எவ்வாறு தொடர்புடையவர் ஆவார் என்பதைப் பார்ப்போமா?
ஆசிரியர் நமக்குக் கல்வி கற்பிப்பவர். அவர் கற்பிக்கும் கல்வியை நன்கு கற்றுத் தேறுகிறவர்களின் மனம் செம்மை அடையும். ஒருவருடைய மனம் எந்த அளவிற்குச் செம்மை அடைந்துள்ளது என்பதை நம்மால் அளந்து அறிய இயலாது. அவரது செம்மையான செயல்பாட்டின் மூலமாகவே நம்மால் அறிய முடியும். இதன் வாயிலாக இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ஐவரும் மனிதவாழ்க்கைக்கு அடிப்படையானவர்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.
கல்வியின் சிறப்பை எல்லா அறநூல்களும் தெரிவித்துள்ளன. அதே கல்வியின் சிறப்பை வெற்றிவேற்கை மாறுபடுத்திக் கூறியுள்ளது. பிச்சை எடுக்கக்கூடாது என்றும் அறநூல்கள் கூறியுள்ளன. கல்வியின் சிறப்பை வலியுறுத்திக் கூற விரும்பிய வெற்றிவேற்கை, ‘பிச்சை எடுக்க வேண்டிய நிலை வந்தாலும் கற்க வேண்டும்’ என்று கூறியுள்ளது.
இதைப் போன்றே கல்வி கற்காதவரின் இழிவையும் வெற்றிவேற்கை கூறியுள்ளது. பிச்சை எடுத்தாவது கல்வி கற்க வேண்டும் என்று கூறியதால் இரப்பவர்களுக்கு ஈவது, செல்வம் உடையவர்களின் கடமை என்று வெற்றிவேற்கை உணர்த்தியுள்ளது.
உலகநீதி என்னும் நூல் அறக்கருத்துகளைக் கூறியதுடன் முருகன், வள்ளி ஆகியோர் பெருமைகளையும் கூறியுள்ளது.
பாடம் - 5
ஒவ்வொரு செய்யுளாகப் பாடி அவற்றின் பொருளை விரிவாக விளக்கினார் குமரகுருபரர். ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல் தொடையின் பயனே’ என்று தொடங்கும் பாடலுக்குக் குமரகுருபரர் பொருள் விளக்கிக் கொண்டிருந்தார். அந்த விளக்கத்தில் தன்னை மறந்த மீனாட்சி அம்மை, அருச்சகர் மகளின் வடிவத்தில் அங்கே தோன்றினார். நேரே திருமலை மன்னரிடம் சென்று அவரது கழுத்திலிருந்த மணிமாலையைக் கழற்றி அதைக் குமரகுருபரரின் கழுத்தில் அணிவித்துவிட்டு மறைந்தார்.
குமரகுருபரர் அதன்பிறகு திருவாரூர், சிதம்பரம் முதலிய ஊர்களுக்குச் சென்று பல நூல்களைப் பாடினார். பின்னர் அவர் துறவறம் மேற்கொண்டார்; காசிக்குச் சென்று அங்கே ஒரு மடத்தை நிறுவினார். தமிழ், இந்துஸ்தானி மொழிகளில் அங்கே சைவசித்தாந்தம், கம்பராமாயணம் முதலியவை பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
2. மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்
3. மதுரைக் கலம்பகம்
4. நீதிநெறி விளக்கம்
5. திருவாரூர் நான்மணிமாலை
6. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்
7. சிதம்பர மும்மணிக் கோவை
8. சிதம்பரச் செய்யுள் கோவை
9. பண்டார மும்மணிக் கோவை
10. காசிக் கலம்பகம்
11. சகல கலாவல்லி மாலை
12. காசித் துண்டி விநாயகர் பதிகம்
13. மதுரை மீனாட்சி அம்மை குறம்
14. கயிலைக் கலம்பகம்
15. மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
16. தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
ஆகிய பதினாறு நூல்களைக் குமரகுருபரர் படைத்துள்ளார். இவற்றுள் கயிலைக் கலம்பகம், காசித் துண்டி விநாயகர் பதிகம் ஆகிய நூல்கள் கிடைக்கவில்லை.
நீரில் குமிழி இளமை, நிறை செல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் – நீரில்
எழுத்து ஆகும் யாக்கை, நமரங்காள் என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று
(சுருட்டும் = உருட்டும், நெடுந்திரைகள் = பெரிய அலைகள், நமரங்காள் = நம்மவர்களே, வழுத்தாதது = வணங்காதது, போற்றாதது; மன்று = தில்லை)
இப்பாடலில் இளமை நிலையில்லாதது, செல்வம் நிலையில்லாதது, உடல் நிலையில்லாதது என்று குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்று நிலையாமைக் கருத்தையும் விளக்குவதற்கு அவர் மூன்று நிலையில்லா உவமைகளையும் தெரிவித்துள்ளார்.
நீரில் தோன்றும் குமிழியானது தோன்றிய சில நொடிகளில் அழிந்து விடும். அதைப் போல மனித வாழ்க்கையில் இளமையும் நிலையில்லாது அழிந்துவிடும் என்கிறார். நீரில் உருண்டும் சுருண்டும் வரும் பெரிய அலையானது வருவதும் போவதுமாகிய தன்மை உடையது. அதைப் போல, செல்வமும் நிலையில்லாமல் வருவதும் போவதுமாய் இருக்கும் என்கிறார்.
நீரில் எழுதும் எழுத்து நிலைத்து நிற்காது; எழுதும் போதே அழிந்துவிடும். அதைப் போல மனித உடலும் நிலைத்து நிற்காமல் அழிந்துவிடும் என்று குமரகுருபரர் கூறியுள்ளார். இந்த உண்மையை அறிந்த பிறகும் இந்த மனித உடலைப் போற்றுகிறார்களே என்று குமரகுருபரர் வருந்தியுள்ளார்.
மனிதன் நிலையற்றவன் என்றால் இந்த உலகில் நிலையானது எது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா? இந்த உலகில் நிலையானவன் இறைவன் ஒருவன்தான். நிலையான இறைவனை வணங்காமல் நிலையற்ற மனிதனைப் போற்றுகிறார்களே என்று குமரகுருபரர் வருந்தியுள்ளார்.
மனித வாழ்க்கை நிலையற்றது என்றாலும் வாழும் காலம் வரையில் நல்ல வழி எது, தீய வழி எது என்பதை மனிதன் அறிந்து நல்ல வழியில் வாழவேண்டும். அதற்குத் தேவையான அறக் கருத்துகளை நீதிநெறி விளக்கத்தின் வாயிலாகக் குமரகுருபரர் தெரிவித்துள்ளார்.
கல்வியை ஒருவன் கற்கத் தொடங்கும் போது சிறிது துன்பமாகத்தான் இருக்கும். ஆனால் கற்கத் தொடங்கிவிட்டால் அதுவே இன்பமாக மாறும் என்று குமரகுருபரர் பாடியுள்ளார்.
தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி … (2)
(பயக்கும் = கொடுக்கும், மடம் = அறியாமை, கொன்று = அழித்து, அகற்றும் = விரிவுபடுத்தும்)
இந்தப் பாடல் கூறும் கருத்துப்படி, தொடங்கும்போது துன்பமாக இருக்கின்ற கல்வியானது எப்படி இன்பமாக மாறும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா? அந்த எண்ணத்திற்கும் குமரகுருபரர் விளக்கம் தந்துள்ளார்.
நம்மிடம் இருக்கும் அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குகிறது கல்வி. நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவானதால் கல்வியில் இன்பம் தோன்றுகிறது.
கல்வி, அறியாமையைப் போக்குவது என்பதை நான்மணிக் கடிகையும் தெரிவித்துள்ளது.
கற்பக் கழிமடம் அஃகும் (47)
என்பது நான்மணிக்கடிகையின் அடி. அஃகும் என்றால் நீங்கும் என்று பொருள். கழிமடம் என்பது அறியாமை மிகுதியைக் குறிக்கும். கல்வி கற்பதால் நம்மிடம் உள்ள அறியாமை நம்மைவிட்டு நீங்குகிறது என்பதை இந்த அடியும் விளக்குகிறது.
அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்இசையும் நாட்டும் உறும்கவல்ஒன்று
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை
சிற்றுயிர்க்கு உற்ற துணை (1)
(புறங்கடை = வெளி வட்டாரம், இசை = புகழ், நாட்டும் = நிறுத்தும், உறும் = அடையும், கவல் = கவலை, உற்றுழி = ஏற்பட்ட வேளை, ஊங்கு = சிறந்தது)
என்னும் நீதிநெறி விளக்கப் பாடல் உணர்த்துகிறது.
அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றின் வாயிலாகத்தான் மனிதன், வீடுபேறு என்னும் முக்தி நிலையை அடையமுடியும். எனவே நால்வகைப் பயனையும் கல்வியால் பெறமுடியும் என்பதை உணர்த்த விரும்பிய குமரகுருபரர் ‘அறம், பொருள், இன்பமும்’ என்று தனியாகச் சொல்லி அதன் பிறகு ‘வீடும்’ என்று பிரித்துக் கூறியுள்ளார்.
கல்வி கற்றவர்கள் மேலே கண்ட நால்வகைப் பயனைப் பெறுவதுடன் உலகில் நல்ல புகழையும் அடைவார்கள். மேலும், கவலை ஏற்படும் போது அந்தக் கவலையிலிருந்து மீள்வதற்கு உரிய வழியையும் கல்வி தரும் என்பதையும் குமரகுருபரர் கூறியுள்ளார். எனவே மனிதனுக்குக் கல்வியைத் தவிர வேறு எதுவுமே சிறந்த துணையாக இருக்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
கற்று, பிறர்க்கு உரைத்து, தாம் நில்லார் வாய்ப்படூஉம்
வெற்று உரைக்கு உண்டு ஓர்வலி உடைமை – சொற்ற நீர்
நில்லாதது என்? என்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன்
சொல்லாமே சூழ்ந்து சொலல் (20)
(நில்லார் = கற்றபடி வாழாதவர், வாய்ப்படூஉம் = உரைக்கும், சொற்ற நீர் = சொன்ன நீங்கள், என் = ஏன், நாண் உறைப்ப = வெட்கப்படும்படி, சொல்லாமே = சொல்லாத வண்ணம், சூழ்ந்து = ஆராய்ந்து)
அறநெறிகளைக் கற்று, அந்த அறக் கருத்துகளைப் பிறர்க்கு உரைக்கின்ற ஒருவர் அந்த அறநெறிகளைப் பின்பற்றாவிட்டால் அவர் கூறுகின்ற உரை வெற்றுரை ஆகும். இவ்வாறு அறநெறிகளைப் பின்பற்றாமல் வெற்றுரைகளைக் கூறுகின்ற ஒருவரைப் பார்த்து, ‘அறநெறிகளை விளக்கும் நீங்கள் அந்த அறநெறிகளைப் பின்பற்ற வில்லையே’ என்று சுட்டிக் காட்ட நேரிடும். அவ்வாறு நேராமல் இருக்க வேண்டும் என்றால் கற்றவர்கள் தாங்கள் கற்றவற்றைப் பின்பற்றி வாழவேண்டும் என்று குமரகுருபரர் உணர்த்தியுள்ளார்.
கற்றபடி வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதைத் திருக்குறளில் திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார். ‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ (391) என்னும் அடியில் இதே கருத்து இடம் பெற்றிருப்பதை நீங்கள் காணமுடியும்.
கற்றவற்றை முறையாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு, மேலும் கல்வி கற்பதும் பயனற்ற செய்கையே!
வருந்தித்தாம் கற்றன ஓம்பாது, மற்றும்
பரிந்துசில கற்பான் தொடங்கல் – கருந்தனம்
கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட்டு, அரிப்புஅரித்து
ஆங்குஎய்த்துப் பொருள்செய் திடல் (8)
(ஓம்பாது = பாதுகாக்காமல், பரிந்து = விரும்பி, கருந்தனம் = பெருஞ்செல்வம், கைத்தலத்த = கையில் உள்ள, உய்த்துச் சொரிந்திட்டு = கீழே சிதறிவிட்டு, எய்த்து = வருந்தி)
என்று குமரகுருபரர் பாடியுள்ளார்.
கல்வியைக் கற்கத் தொடங்கும் போது சிறிது துன்பமாகத்தான் இருக்கும் என்பதை நாம் முன்பே படித்தோம். அவ்வாறு துன்பப்பட்டுக் கற்ற கல்வியை வாழ்க்கைக்குப் பயன்படுத்தாமல் மேலும் வேறு ஒன்றைக் கற்கத் தொடங்குவதை இப்பாடல் ஓர் உவமை வாயிலாகத் தெரிவித்துள்ளது.
ஒருவன் தான் கற்ற கல்வியைப் பயன்படுத்தாமல் மேலும் கற்கத் தொடங்குவது, தனது கையில் உள்ள செல்வத்தை மண்ணில் சிதறிவிட்டு, மண்ணுடன் கலந்துள்ளதை எடுத்து, சல்லடையில் போட்டு அரித்து எடுப்பதைப் போன்றது என்று நீதிநெறி விளக்கியுள்ளது.
கற்றார்க்குக் கல்வி நலனே கலன்அல்லால்
மற்றுஓர் அணிகலம் வேண்டாவாம்; முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா; யாரே
அழகுக்கு அழகு செய்வார் (12)
(நலன் = சிறப்பு, கலன் = அணிகலன், முற்ற முழுமணிப் பூண் = நன்கு வடிவமைக்கப் பட்ட மணி, பூண் = அழகுசெய்தல்)
என்னும் பாடலில் அழகை யாரும் அழகுபடுத்த விரும்பமாட்டார்கள். அதுபோல, கல்வி கற்றவர்களுக்கு எந்த அணிகலமும் தேவை இல்லை என்று நீதிநெறி விளக்கம் விளக்கியுள்ளது.
கல்வியே கற்புடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே தீம்கவியா – சொல்வளம்
மல்லல் வெறுக்கையா மாண்அவை மண்ணுறுத்தும்
செல்வமும் உண்டு சிலர்க்கு (3)
(தீம்கவி = இனிய கவிதை, மல்லல் = வளம், வெறுக்கை = செல்வம், மண்ணுறுத்தும் = மகிழ்விக்கும்)
என்னும் பாடலில் கல்வியைக் கற்புடைய பெண்ணாகக் குமரகுருபரர் உருவகம் செய்துள்ளார். கவிதையைக் கற்புடைய பெண் ஈன்றெடுக்கும் மகனாகவும் கவிதைக்கு உரிய சொல்வளத்தைச் செல்வமாகவும் உருவகம் செய்துள்ளார். இவ்வாறு கல்விச்செல்வத்தைப் பயன்படுத்தி, சொல்வளம் மிக்க கவிதையை உருவாக்கி, அவையை (சபையை) அழகு செய்யும் திறம், சிறந்த கல்விச்செல்வம் என்று குமரகுருபரர் பாடியுள்ளார்.
இப்பாடலில் கல்விச் செல்வம் கொண்ட ஒருவனது வாழ்க்கையானது கற்புடைய மனைவியுடன் இல்லறம் நடத்துவதற்கு ஒப்பானது என்பதைக் குமரகுருபரர் தெளிவுபடுத்தியுள்ளார். கற்புடைய மனைவியுடனும் மக்களுடனும் வாழும் ஒருவனது வாழ்க்கை இன்பமாக இருப்பதுபோல், கல்விச் செல்வம் கொண்டவனின் வாழ்க்கையும் இன்பமாக இருக்கும் என்பது இப்பாடல் உணர்த்தும் உட்பொருள்.
எத்துணைய ஆயினும் கல்விஇடம் அறிந்து
உய்த்துணர்வு இல்எனின் இல்லாகும்-உய்த்து உணர்ந்தும்
சொல்வன்மை இன்றுஎனின் என்ஆகும்? அஃது உண்டேல்
பொன்மலர் நாற்றம் உடைத்து (4)
(எத்துணை = எவ்வளவு, உய்த்து உணர்வு = ஊகித்து அறிதல்)
என்னும் நீதிநெறி விளக்கப் பாடல் இக்கருத்தை விளக்கியுள்ளது.
ஒருவன் எவ்வளவு சிறந்த முறையில் கல்வியைக் கற்றிருந்தாலும் எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டுமோ அந்த இடத்தில் அப்படிப் பேசத் தெரியவில்லை என்றால் அவன் கற்ற கல்வியால் எந்தப் பயனும் இல்லை. கல்வி அறிவும் இடம் அறிந்து சிறப்பாகப் பேசும் ஆற்றலும் ஒருவனிடம் இருந்தால் அவனால் எளிதில் வெற்றிபெற முடியும். பொன்னால் செய்யப்பட்ட மலர் அழகாக இருக்கும். அழகுடைய அந்தப் பொன்மலரில் நறுமணமும் இணைந்து இருந்தால் எவ்வளவு உயர்வாகக் கருதப்படுமோ அதைப் போன்றே கல்வி அறிவுடன் சொல்லாற்றலும் பெற்றவன் மதிக்கப்படுவான் என்று குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார்.
கற்றவற்றை அவையில், சிறந்த முறையில் எடுத்துக்கூற இயலாதவன் கல்வி அறிவு பெற்றவனாய் இருப்பது பயனற்றது என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.
அவைஅஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவைஅஞ்சா ஆகுலச் சொல்லும்- நவைஅஞ்சி
ஈத்துஉண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்நலமும்
பூத்தலின் பூவாமை நன்று (5)
(அவை அஞ்சி = அவையில் பேசுவதற்கு அச்சப்பட்டு, மெய்விதிர்ப்பார் = உடல் நடுங்குவார், ஆகுல = ஆரவார, நவை = குற்றம், ஈத்து = கொடுத்து, நல்கூர்ந்தார் = வறுமையாளர், இன்நலம் = அழகு)
என்னும் பாடலில், அவையில் கருத்துகளை எடுத்துக் கூற இயலாமல் இருப்பவனின் கல்வியும், அவையில் அச்சம் இல்லாமல் கூறும் ஆரவாரச் சொல்லும், பிறருக்குக் கொடுக்காதவன் என்னும் பழி ஏற்படும் என்று உணராமல் பிறருக்கு வழங்காமல் வைத்து உண்பவனின் செல்வமும், வறுமை அடைந்தவனின் அழகும் இருப்பதை விடவும் இல்லாமல் போவதே நல்லது என்று குமரகுருபரர் விளக்கியுள்ளார். இதை விளக்குவதற்குப் ‘பூத்தலின் பூவாமை நன்று’ என்னும் தொடரைக் குமரகுருபரர் பயன்படுத்தியுள்ளார்.
கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
மலரவன் வண்தமிழோர்க்கு ஒவ்வான் – மலரவன்செய்
வெற்றுஉடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு
மற்றுஇவர் செய்யும் உடம்பு (6)
(முகத்தது = முகத்தில் உள்ள நாவில் உள்ளது, மலரவன் = பிரம்மன், வண்தமிழோர் = தமிழ்ப் புலவர், ஒவ்வான் = ஒப்பாக மாட்டான், மாய்வன = அழிவன, மாயா = அழியா)
என்னும் பாடலில் குமரகுருபரர் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் புலவர்களுக்கு நான்முகன் எவ்வாறு ஒப்பாக மாட்டான் என்பதைப் பார்ப்போமா?
நான்முகன் படைக்கின்ற மனித உடல்கள் எதுவுமே நிலையாக இருப்பதில்லை. அவை அழிந்து விடுகின்றன. ஆனால் வளம் பொருந்திய தமிழில் தமிழ்ப் புலவர்கள் படைத்துள்ள கவிதைகள் நான்முகனின் படைப்புகளைப் போல் அழிவதில்லை. அவை காலம் கடந்தும் நிலைத்த புகழுடன் விளங்குகின்றன. எனவே தமிழ்ப்புலவர்களின் படைப்புகளுக்கு நான்முகனின் படைப்புகள் ஒப்புமை ஆகா என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினும்ஒன்று இல்லானேல்
வன்சொல்லின் அல்லது வாய்திறவா – என்சொலினும்
கைத்துடையான் கால்கீழ் ஒதுங்கும் கடல்ஞாலம்
பித்துஉடைய அல்ல பிற (10)
(தாழ்நடையன் = பணிவானவன், ஒன்று = செல்வம், வன்சொல் = கொடுஞ்சொல், கைத்துடையான் = செல்வம் உடையவன், ஞாலம் = உலகம்)
ஒருவன் எல்லோரிடமும் இனிமையாகப் பேசிப் பழகும் இயல்பு கொண்டவன்; பணிந்து அடங்கி நடக்கும் பண்பு கொண்டவன் என்று அனைவராலும் அறியப்பட்டாலும் அவனிடம் செல்வம் இல்லை என்றால் அவனுடன் யாரும் இனிமையாகப் பேசிப் பழகுவது இல்லை. மாறாக அவனை நோக்கிக் கொடிய சொற்களையே வீசுவார்கள்.
ஒருவன் யாரிடமும் இனிமையாகப் பேசிப் பழகமாட்டான்; பணிந்து அடங்கி நடக்க மாட்டான் என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் அவனிடம் செல்வம் இருந்தது என்றால் அவனுடன் இனிமையாகப் பேசிப் பழகுவார்கள். உலகில் பலரும் அவன் காலால் இடும் வேலையைச் செய்வதற்குக் காத்துக் கிடப்பார்கள். இவ்வாறு செல்வத்தின் நிலையைக் குமரகுருபரர் விளக்கியுள்ளார்.
இவறன்மை கண்டும் உடையாரை யாரும்
குறையிரந்தும் குற்றேவல் செய்ப; பெரிதும்தாம்
முற்பகல் நோலாதார், நோற்றாரைப் பின்செல்லல்
கற்புஅன்றே; கல்லாமை அன்று (11)
(இவறன்மை = ஈயாத் தன்மை, உடையாரை = செல்வம் உடையவரை, குறையிரந்து = குறை நீங்கிடப் பொருள் கேட்டு, குற்றேவல் = சிறு எடுபிடி வேலைகள், நோலாதார் = தவ வலிமை இல்லாதவர், நோற்றார் = தவ வலிமை உடையவர், கற்பு அன்றே = கல்வி அறிவு உடைய செயல் தான், அன்று = இல்லை)
தவ வலிமை இல்லாதவர்கள், தவ வலிமை உடையவர்களைப் பின்பற்றி வாழ்தல் அறிவுடைய செயல்தான்; அறிவற்ற செயல் என்று சொல்ல இயலாது. அதுபோல, பிறருக்குப் பொருள் வழங்காத இயல்பு உடையவன் என்று தெரிந்தும் அவன் பொருள் தருவான் என்று எண்ணி அவனுக்குச் சிறு எடுபிடி வேலைகளைச் செய்து அவனைப் பின்பற்றி வாழ்வதும் அறிவுடைய செயல்தானோ? என்று குமரகுருபரர் வினா எழுப்பியுள்ளார். இப்பாடல் வழியாகச் செல்வத்தை ஈயாதவர்களின் இழிவையும் செல்வம் வேண்டி அவர்கள் பின்னால் செல்கின்றவர்களின் அவல நிலையையும் வெளிக்காட்டியுள்ளார்.
பொதுமகளே போல்ப தலையாயார் செல்வம்;
குலமகளே ஏனையோர் செல்வம்; கலன்அழிந்த
கைம்மையார் பெண்மை நலம்போல் கடையாயார்
செல்வம் பயன்படுவது இல் (65)
(பொதுமகள் = விலைமகள், தலையாயார் = சிறந்தவர், கலன் அழிந்த = தாலி இழந்த, கைம்மையார் = கணவனை இழந்தார், கடையாயார் = கருமியர்)
யாரிடம் இருக்கும் செல்வம் பிறருக்குப் பயன்படும் என்பதை விளக்குவதற்குக் குமரகுருபரர் மூவகைப் பெண்களை உவமையாகக் காட்டியுள்ளார். அந்த மூவகைப் பெண்களும் யார் என்பதைப் பார்ப்போமா? 1. விலைமகள் 2. குலமகள் 3. கைம்பெண்
விலைமகள் என்பவள் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கட்டுப்பாட்டில் வாழ்வதில்லை. எனவே அவள் எல்லோருக்கும் பொதுவானவளாக இருக்கின்றாள்.
ஒருவனுக்கு ஒருத்தி என்னும் குடும்ப எல்லையில் வாழ்பவள் குலமகள். எனவே, அவள் அவளது கணவனுக்கு மட்டுமே உரியவள்.
கணவனை இழந்தவள் கைம்பெண். அவள் யாருக்கும் உரியவள் அல்லள்.
விலைமகள் எல்லோருக்கும் பொதுவானவளாக வாழ்வது போல் சிறந்தவர்களிடம் இருக்கும் செல்வம் எல்லோருக்கும் பயன்படும். குலமகள் கணவனுக்கு மட்டும் உரியவளாக வாழ்வதுபோல் இடைப்பட்டாரின் செல்வம் அவர்களின் குடும்பத்திற்கு மட்டும் பயன்படும். கைம்பெண் யாருக்கும் உரியவளாய் இல்லாமல் வாழ்வது போல் கடைப்பட்டாரின் செல்வமும் யாருக்கும் பயன்படுவது இல்லை என்று இந்தப் பாடல் விளக்குகிறது.
இப்பாடலில் விலைமகள், பண்பில் இழிந்தவள் என்றாலும் அவளது பொதுத் தன்மையைக் கருதி, சிறந்தவர்களின் செல்வம் பொதுவாக எல்லோருக்கும் பயன்படும் நிலைக்கு அதனை உவமைப்படுத்தியுள்ளார், குமரகுருபரர்.
செல்வம் இருப்பவனிடம் ஈகைத்தன்மை இல்லை என்றால் அச்செல்வத்தால் பயன் இல்லை. எனவே ஈகைத்தன்மை இல்லாதவனிடம் இருக்கும் செல்வத்தை விடவும் செல்வம் இல்லாதவனிடம் இருக்கும் வறுமையே சிறப்புடையது என்கிறார் குமரகுருபரர். செல்வம் இல்லாதவனின் வறுமை ஏன் சிறப்பிக்கப் பட்டுள்ளது என்பதை நாம் அறிய வேண்டாமா? இதோ நீதிநெறி விளக்கப் பாடல் அதை விளக்குகிறது.
வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின் மற்றையோன் நல்குரவே போலும் நனிநல்ல; கொன்னே
அருள்இலன், அன்புஇலன், கண்ணறையன் என்று
பலரால் இகழப் படான் (66)
(வள்ளன்மை = வள்ளல்தன்மை, நல்குரவு = வறுமை, கொன்னே = அசைச்சொல் [பொருள் இல்லாச் சொல்], கண்ணறையன் = இரக்கம் இல்லாதவன்)
செல்வம் இருப்பவன், செல்வம் இல்லாதவர்களுக்குப் பொருளை வழங்கவில்லை என்றால் அவனைக் கருணை இல்லாதவன், அன்பு இல்லாதவன், இரக்கம் இல்லாதவன் என்று எல்லோரும் இகழ்வார்கள். ஆனால் வறியவனிடம் செல்வம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அவனால் பிறருக்கு எதையும் கொடுக்க இயலாது என்று உணர்ந்து வறியவனை யாரும் இகழ்வது இல்லை. எனவே வறியவனே சிறந்தவன் என்று கருதப்படுகிறான்.
திருக்குறள் ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்று தெரிவித்துள்ளது. ஆத்திசூடி ‘ஊக்கமது கை விடேல்’ என்று கூறியுள்ளது. முன்னோர் வழியில் நின்று குமரகுருபரரும் முயற்சியைப் பாடியுள்ளார்.
உறுதி பயப்ப கடைபோகா ஏனும்
இறுவரை காறும் முயல்ப; இறும்உயிர்க்கும்
ஆயுள் மருந்துஒழுக்கல் தீதுஅன்றால்; அல்லனபோல்
ஆவனவும் உண்டு சில (48)
(உறுதி பயப்ப = நன்மை தரும் செயல்கள், கடை போகா ஏனும் = வெற்றி பெறாவிட்டாலும், இறுவரைகாறும் = இறுதிவரை, இறும் = சாகின்ற, ஒழுக்கல் = கொடுத்தல், தீது அன்று = தீமை இல்லை, அல்லன = வெற்றி பெறாதன, ஆவன = வெற்றி பெறுவன)
என்னும் பாடல் இக்கருத்தை விளக்குகிறது.
உயிர் போகின்ற நிலையில் இருப்பவரின் உயிரைக் காப்பாற்றும் கடைசி முயற்சியாக மருந்து கொடுப்பது உண்டு. அந்த மருந்தால் அவர் உயிர் பிழைத்தாலும் பிழைப்பார். அதுபோல நன்மை தரும் ஒரு செயல் ‘வெற்றியாக முடியாது’ என்று கருதினாலும் அச்செயலைச் செய்வதற்கு இறுதிவரை முயற்சி மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியின் விளைவாக அந்தச் செயல் வெற்றியாக முடிந்தாலும் முடிந்துவிடும். எனவே முயற்சியைக் கைவிடக்கூடாது என்கிறது நீதிநெறிவிளக்கம்.
முயலாது வைத்து முயற்று இன்மையாலே
உயல்ஆகா, ஊழ்த்திறந்த என்னார்- மயலாயும்
ஊற்றம் இல்விளக்கம் ஊழ்உண்மை காண்டும்என்று
ஏற்றார் எறிகால் முகத்து (49)
(முயலாது = முயற்சி செய்யாது, முயற்று = முயற்சி, உயல் = வெற்றிபெறல், ஊழ்த்திறந்த = விதி வலிமையால், மயலாயும் = அறியா மயக்கத்தில், ஊற்றம் இல் = பாதுகாப்பு இல்லாத, ஏற்றார் = ஏற்றி வைக்க மாட்டார், எறி கால் முகத்து = காற்று வீசும் இடத்தில்)
விதியின் பயனால் விளக்கு அணையாது என்று காற்றடிக்கும் இடத்தில் அதனை ஏற்றி வைக்கக் கூடாது. காற்று மிகுதியாக வீசாத இடத்தில் விளக்கைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதைப்போல எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று முயற்சி செய்யாமல் இருக்கக்கூடாது. முயற்சியால் விதியை மாற்றி அமைத்து வெற்றிபெற முடியும் என்று குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார்.
விதியை முயற்சியால் வெல்லமுடியும் என்பதற்குக் குமரகுருபரர் ஒரு சான்றைப் பின்வரும் பாடலில் காட்டியுள்ளார்.
உலையா முயற்சி களைகணா, ஊழின்
வலிசிந்தும் வன்மையும் உண்டே – உலகுஅறியப்
பால்முளை தின்று மறலி உயிர்குடித்த
கால்முளையே போலும் கரி (50)
(உலையா = தளரா, களைகண் = பற்றுக்கோடு, ஆ = ஆகா, மறலி = எமன், பால்முளை = ஊழ்வினையின்முளை, கால்முளை = மார்க்கண்டேயன், கரி = சான்று)
தளராத முயற்சியால் வெற்றிபெற முடியும் என்பதற்கு மார்க்கண்டேயனே சான்று ஆவான். எனவே விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்று யாரும் முயற்சி செய்யாமல் இருக்கக்கூடாது என்று குமரகுருபரர் கூறியுள்ளார்.
• மார்க்கண்டேயன்
மிருகண்டு என்னும் முனிவருக்கும் மருத்துவதி என்னும் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவன் மார்க்கண்டேயன். விதிப்படி இவன் பதினாறாம் வயதில் இறப்பான் என்று இருந்தது. அந்த விதியை மாற்றுவதற்காக மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்தபடி வணங்கிக் கொண்டிருந்தான். அந்த வேளையில் அவனது உயிரைக் கவர வந்த எமன் தனது பாசக் கயிற்றை மார்க்கண்டேயன்மீது வீசினான். தன்னை வணங்கிக் கொண்டிருக்கும்போதே மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க வந்த எமன் மேல் சிவன் ஆத்திரம் கொண்டு அவனை மிதித்துக் கொன்றான். மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயதாகவே இருக்கும் என்று சிவன் அருள்புரிந்தான். பின்னர் பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி எமனைச் சிவன் உயிர்பெறச் செய்தான். இதில் மார்க்கண்டேயன் தனது விடாமுயற்சியால் இறவாநிலை பெற்றான் என்று குமரகுருபரர் தெரிவித்துள்ளார்.
காலம் அறிந்துஆங்கு இடம்அறிந்து செய்வினையின்
மூலம் அறிந்து விளைவுஅறிந்து – மேலும்தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும் (51)
(செய்வினை = செய்யும் செயல், மூலம் = செயலைத் தொடங்கும் காரணம், விளைவு = பயன், சூழ்வன = ஆராய வேண்டியன, துணைமை = உதவி செய்வோர், வலி = வலிமை, ஆள்வினை = செயல், ஆளப்படும் = செய்யப்படும்)
ஒரு செயலைச் சிறப்பாகச் செய்ய விரும்புபவன் அச்செயலைச் செய்வதற்கு உரிய காலத்தையும் இடத்தையும் முதலில் நன்கு அறிந்து கொள்ளவேண்டும்; அதன்பிறகு அச்செயலை எதிலிருந்து தொடங்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்; அச்செயலைச் செய்வதன் மூலம் ஏற்படும் விளைவையும் நன்கு ஆராய்ந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு அச்செயலைச் செய்வதற்கு யாரெல்லாம் நமக்கு உதவியாய் இருப்பார் என்பதையும் அவர்களின் வலிமையையும் அறிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் சிறப்பாகச் செய்து முடிக்க இயலும் என்று நீதிநெறிவிளக்கம் வழிகாட்டுகிறது.
மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார் (52)
(மெய்வருத்தம் = உடல் துன்பம், பாரார் = பொருட்படுத்தமாட்டார், துஞ்சார் = தூங்கமாட்டார், செவ்வி = காலம்)
ஒரு செயலைச் சிறப்பாகச் செய்து முடிக்க விரும்புபவர்கள் தமது உடலளவில் ஏற்படும் துன்பத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள்; பசியையும் தூக்கத்தையும் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்; பிறர் செய்யும் தீமைகளுக்காக வருந்தமாட்டார்கள்; காலத்தின் அருமையையும் கருதமாட்டார்கள்; பிறர் தம்மை அவமதிப்பதை எண்ணியும் வருந்த மாட்டார்கள் என்று செயல் செய்யும் முறையை நீதிநெறி விளக்கம் தெரிவித்துள்ளது
சிறுமுயற்சி செய்துஆங்கு உறுபயன் கொள்ளப்
பெறும்எனில், தாழ்வரோ? தாழார் – அறன்அல்ல
எண்மைய ஆயினும் கைவிட்டு, அரிதுஎனினும்
ஒண்மையின் தீர்ந்துஒழுக லார் (69)
(உறுபயன் = பெரும்பயன், தாழ்வரோ = இழிந்த செயல் செய்வரோ, தாழார் = இழிசெயல் செய்யமாட்டார், எண்மைய = எளிமையான, ஒண்மை = நல்ல செயல், ஒழுகலார் = செய்யமாட்டார்)
சிறிதளவு முயற்சியினாலேயே இழிந்த செயலைச் செய்துவிடமுடியும்; மிகுந்த முயற்சி மேற்கொண்டால்தான் அறம் சார்ந்த நற்செயல்களைச் செய்யமுடியும் என்னும் நிலை ஏற்பட்டாலும் நல்லவர்கள் மிகுந்த முயற்சி செய்து நல்ல செயல்களையே செய்வார்கள்; எளிமையாக இருக்கிறது என்று எண்ணி இழிந்த செயல்களைச் செய்யமாட்டார்கள்.
மேலே நாம் படித்தபடி நல்ல செயல்களைச் செய்கின்றவர்கள் பிறரது பாராட்டுக்காக ஏங்கித் தவிக்கமாட்டார்கள். பயனற்ற செயலைச் செய்கிறவர்கள் ஆரவாரத் தன்மை கொண்டு அந்தப் பயனற்ற செயலைப் பிறர் புகழவில்லையே என்று புலம்பித் திரிவார்கள்.
அல்லன செய்யினும் ஆகுலம் கூழாக்கொண்டு
ஒல்லாதார் வாய்விட்டு உலம்புப; வல்லார்
பிறர்பிறர் செய்பபோல் செய்தக்க செய்துஆங்கு
அறிமடம் பூண்டு நிற்பார் (71)
(அல்லன செய்யினும் = பயன் இல்லாதவற்றைச் செய்தாலும், ஆகுலம் = ஆரவாரம், கூழாக்கொண்டு = வருவாயாக எதிர்பார்த்து, ஒல்லாதார் = திறமையில்லாதவர், உலம்புப = புலம்புவர், செய்பபோல் = செய்ததுபோல், செய்தக்க = பயனுள்ள செயல்கள், அறிமடம் பூண்டு = அறிந்தும் அறியாதவர் போல்)
என்னும் பாடலில் நல்ல செயல் செய்கிறவர்களின் அடக்கம் போற்றப்பட்டுள்ளது. இந்தப் பாடல் கருத்துக்கு ஏற்ப ‘குறைகுடம் கூத்தாடும்; நிறைகுடம் நீர் தளும்பல் இல்’ என்னும் பழமொழி கூறப்படுகிறது.
குறைவாக நீர் இருக்கும் குடத்தை எடுத்துச் சென்றால் அந்தக் குடத்தில் இருக்கும் நீர் தளும்பி வழியும். ஆனால் நீர் நிறைந்த குடத்தை எடுத்துச் சென்றால் அவ்வாறு தளும்பி வழிவதில்லை. அதுபோல, சான்றோர்கள் தாங்கள் செய்து முடித்த அரிய செயல்களைப் பற்றிப் பிறர் புகழவில்லை என்று வருந்தாமல் அடக்கமாக இருப்பார்கள். ஆனால் பயனற்ற செயலைச் செய்தவர்கள் ஆரவாரம் செய்வார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
கண்நோக்கு அரும்பா, நகைமுகமே நாள்மலரா,
இன்மொழியின் வாய்மையே தீங்காயா- வண்மை
பலமா, நலம்கனிந்த பண்புடையார் அன்றே
சலியாத கற்ப தரு (36)
(நோக்கு = பார்வை, நகை = சிரிப்பு, வண்மை = ஈகைப்பண்பு, பலம் = பழம்)
கற்பகத் தரு என்பது கற்பக மரத்தைக் குறிக்கும். இதைத் தேவலோக மரம் என்று கூறுவார்கள். இம்மரம் கேட்டவர்க்குக் கேட்ட பொருளைக் கேட்ட உடனே கொடுக்கும் இயல்பு உடையது. எனவே பிறர் கேட்ட பொருளை உடனே வழங்குபவர்களைக் கற்பக மரம் போன்றவர்கள் என்று புலவர்கள் போற்றிக் கூறுவார்கள். இங்கே சான்றோர்களைக் கற்பகத் தருவுக்கு ஒப்பாகக் கூறியுள்ள குமரகுருபரர் அதை எவ்வாறு ஒப்புமைப்படுத்தியுள்ளார் என்று பார்ப்போமா?
கற்பக மரத்தில் அரும்பு, மலர், காய், பழம் முதலியவை கிடைக்கும். அதைப்போல, நல்ல பண்புடைய சான்றோர்களின் அருள்பார்வை அரும்பைப் போன்றும், சிரித்த முகம் மலரைப் போன்றும், இனிய சொல் இனிய காயைப் போன்றும் அவர்களின் ஈகைப்பண்பு பழத்தைப் போன்றும் இருப்பதால் சான்றோர்கள் கற்பகத் தருவைப் போன்றவர்கள் என்று குமரகுருபரர் கூறியுள்ளார்.
சான்றோர்கள் பிறருக்குத் தேவைப்படும் உதவிகளைத் தேவைப்படும் நேரத்தில் செய்கின்ற இயல்பு கொண்டவர்கள் என்னும் கருத்தைப் பின்வரும் பாடல் விளக்குகிறது.
எவர்எவர் எத்திறத்தர் அத்திறத்த ராய்நின்று
அவர்அவர்க்கு ஆவன கூறி – எவர்எவர்க்கும்
உப்பாலாய் நிற்ப,மற்று எம்உடையார் தம்உடையான்
எப்பாலும் நிற்பது என (97)
(எத்திறத்தர் = எத்தன்மை உடையவர், உப்பாலாய் = மேற்பட்டவராய், எம் உடையார் = ஆசிரியர், சான்றோர்; தம்உடையான் = இறைவன், எப்பாலும் = எல்லா இடங்களிலும்)
இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பான். என்றாலும் எந்த இடத்திலும் சாராமலும் இருப்பான். அதைப்போல, சான்றோரும் யார் எத்தன்மை உடையவரோ அத்தன்மைக்கு ஏற்ப அவரவர்க்கு வேண்டிய நல்லறிவுரைகளை வழங்கி அவர்களுடன் சாராமல் இருப்பர் என்று நீதிநெறி விளக்கம் சான்றோரின் செயலை விளக்கியுள்ளது.
பெண்மை வியவார்; பெயரும் எடுத்து ஓதார்;
கண்ணொடு நெஞ்சு உறைப்ப நோக்குறார் ; பண்ணொடு
பாடல் செவிமடார்; பண்புஅல்ல பாராட்டார்
வீடுஇல் புலப்பகையி னார் (84)
(வியவார் = வியந்து போற்றமாட்டார், ஓதார் = சொல்ல மாட்டார், உறைப்ப = பதியும் படியாக, பண் = இசை, செவிமடார் = கேட்கமாட்டார், பாராட்டார் = போற்றமாட்டார்; புலப்பகையினார் = புலன்களை வென்றவர்கள்)
துறவியர் தங்கள் புலன்களின் வழியே மனத்தைச் செலுத்தாமல் துறவற வழியில் புலன்களை அடக்கியாளும் தன்மை உடையவர்கள். எனவே நல்ல துறவியரைப் புலப்பகையினார் என்று குமரகுருபரர் விளக்கியுள்ளார். இத்தகைய நல்ல துறவியர், பெண்மைத் தன்மையை வியந்து போற்றமாட்டார்கள்; பெண்களின் பெயரைக்கூடச் சொல்ல மாட்டார்கள்; பெண்களின் உருவம் மனத்தில் பதியும்படியாகப் பார்க்க மாட்டார்கள்; மனத்தில் கிளர்ச்சியூட்டும் இசைப் பாடல்களைக் கேட்க மாட்டார்கள்; பண்புக்கு ஒவ்வாத செயல்களைப் போற்றமாட்டார்கள் என்று நல்ல துறவியரின் இயல்பை எடுத்துக் கூறியுள்ளார்.
தூக்கத்தால் ஏற்படும் இன்பத்தை நல்ல துறவியர் பெரிதாகக் கருதமாட்டார்கள். அதுபோன்றே அறுசுவை உணவால் அடையும் இன்பத்தையும் விரும்பமாட்டார்கள் என்றும் நீதிநெறி விளக்கத்தின் எண்பத்தைந்தாம் பாடல் எடுத்துரைக்கிறது.
அறுசுவை உணவை மிகுதியாக உண்பதால்தான் துறவியருக்குத் தூக்கத்தால் உண்டாகும் இன்பத்தின் மேலும் பெண்களைத் தழுவுவதால் ஏற்படும் இன்பத்தின் மேலும் நாட்டம் ஏற்படுகிறது. எனவே அவர்கள் எளிமையான உணவைக் குறைவாக உண்ண வேண்டும் என்று குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார்.
துறவற நெறியில் சிறந்து விளங்குபவர்கள் தங்கள் உடலைப் போற்ற மாட்டார்கள்.
அன்பொடு அருள்உடைய ரேனும் உயிர்நிலை மற்று
என்புஇயக்கம் கண்டும் புறந்தரார்- புன்புலால்
பொய்க்குடில் ஓம்புவரோ, போதத்தால் தாம்வேய்ந்த புக்கில் குடிபுகுது வார் (86)
(என்பு = எலும்பு, புறந்தரார் = கொள்கையில் விலகமாட்டார், பொய்க்குடில் = பொய்யான உடம்பு, ஓம்புவரோ = பாதுகாக்கமாட்டார், போதத்தால் = அறிவால், புக்கில் = வீட்டில், குடிபுகுதுவார் = குடியேற விரும்புபவர்)
துறவியர் பிற உயிர்களின்பால் அன்பும் கருணையும் உடையவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் உடலைப் பாதுகாக்க விரும்பமாட்டார்கள். தங்கள் உடலைப் புலால் கொண்ட பொய்க்குடில் என்றே இகழ்வார்கள். தங்கள் உடலில் உள்ள எலும்புகள் வெளியே தெரியும்படியாக மெலிவு ஏற்பட்டாலும் உடலைப் பாதுகாக்கமாட்டார்கள். அறிவின் தெளிவாக அவர்கள் கருதும் பேரின்ப வீட்டு வாழ்க்கையையே பெரிதாகக் கருதுவார்கள் என்று துறவியரின் இயல்பை நீதிநெறிவிளக்கம் தெரிவித்துள்ளது.
நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுகம் அன்று; பிறிதுஒன்றே- கஞ்சுகம்
எப்புலமும் காவாமே, மெய்ப்புலம் காக்கும்;மற்று
இப்புலமும் காவாது இது (92)
(புறம்பா = துறவற எண்ணம் இல்லாமல், கஞ்சுகம் = ஆடை, பிறிது = வேறானது)
மனத்தில் துறவற எண்ணம் இல்லாமல் உடலில் மட்டும் துறவறத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொண்டு வாழ்கின்றவர்கள் போலித் துறவியர். இந்தப் போலித் துறவியர் அணிந்துள்ள ஆடைகளால் அவர்களின் எந்தப் புலனையும் காக்க இயலாது. எனவே துறவற வாழ்க்கை என்பது மனத்தில் வரவேண்டிய ஒன்று என்பதைத் துறவியர் புரிந்துகொள்ள வேண்டும் என்று குமரகுருபரர் உணர்த்தியுள்ளார்.
தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நல்நீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை
வியவாமை அன்றே வியப்பு ஆவது இன்று
நயவாமை அன்றே நலம் (18)
(வியப்பிப்பான் = பாராட்ட விரும்பி, தற்புகழ்தல் = தன்னைப் புகழ்தல், நயவாமை = புகழாமை, நலம் = புகழ்)
நெருப்பைப் பெரிதாக எரியச் செய்ய வேண்டும் என்றால் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். தண்ணீரை ஊற்றினால் நெருப்பு எரியுமா? எரியாது. மாறாக அணைந்து போகும். அது போல ஒருவன் தனக்குப் புகழ் வரவேண்டும் என்று விரும்பித் தன்னைப் புகழ்ந்தால் அவனுக்குப் புகழ்ச்சி வந்து சேராது. சமுதாயத்தில் வாழ்கின்ற ஒரு மனிதனிடம் தற்புகழ்ச்சி செய்யும் இயல்பு இருந்தால்கூட ஓரளவு மன்னிக்கலாம். ஆனால் இந்தத் தற்புகழ்ச்சி இயல்பு துறவியரிடம் இருந்தால் அவர்கள் செய்யும் நல்ல செயல்களும் தீய செயல்களாகவே முடியும்.
விலக்கிய ஓம்பி, விதித்தனவே செய்யும்
நலத்தகையர் நல்வினையும் தீதே – புலப்பகையை
வென்றனம்; நல்ஒழுக்கின் நின்றேம், பிறஎன்று
தம்பாடு தம்மில் கொளின் (17)
(விலக்கிய ஓம்பி = விலக்கியவற்றைச் செய்யாமல், நலத்தகையார் = துறவியர், தம்பாடு தம்மில் கொளின் = தமது துறவின் பெருமையை எண்ணினால்)
என்னும் நீதிநெறிவிளக்கப் பாடல், துறவியரின் தற்புகழ்ச்சியால் வரும் இழிவை விளக்குகிறது.
துறவோர் செய்யக்கூடாது என்று ஒதுக்கியவற்றை ஒதுக்கி, செய்யவேண்டும் என்று விதித்தவற்றைச் செய்வதே துறவியரின் இயல்பு. அத்தகைய துறவியர் ‘ஐம்புலனையும் வென்றுவிட்டோம்’ என்று ஆணவம் கொண்டு தமது துறவின் பெருமையை எண்ணினால் அவர்கள் செய்யும் நற்செயல்களும் தீய செயல்களாகிவிடும் என்று துறவியருக்குக் குமரகுருபரர் உணர்த்தியுள்ளார்.
குலமகட்குத் தெய்வம் கொழுநனே; மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும்; அறவோர்க்கு
அடிகளே தெய்வம்; அனைவோர்க்கும் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை (26)
(குலமகள் = குடும்பப் பெண். கொழுநன் = கணவன், இலைமுகப் பைம்பூண் இறை = இலை வடிவ வேல்தாங்கிய முருகன்)
நல்ல ஒழுக்க நெறிப்பட்ட பெண்ணுக்கு அவளது கணவன் தான் தெய்வம். குழந்தைகளுக்கு அன்னையும் தந்தையும் தெய்வம். மாணவர்களுக்கு ஆசிரியர்களே தெய்வம். எல்லோருக்கும் இலை வடிவ வேலைக் கையில் தாங்கிய முருகனே தெய்வம் என்று குமரகுருபரர் கூறியுள்ளார்.
அன்னை, தந்தை, ஆசிரியர், ஆண்டவன் என்று நால்வரையும் தெய்வமாகக் கருதும் மரபு மக்களிடையே காணப்படுகிறது. ஔவையார் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று கொன்றை வேந்தனில் அன்னையையும் தந்தையையும் தெய்வமாகக் காட்டியுள்ளார். இந்த மரபை நன்கு உணர்ந்த குமரகுருபரர் அன்னை, தந்தை, ஆசிரியர் ஆகியோரைத் தெய்வமாகக் கூறி அவர்கள் உள்ளடங்கிய அனைவருக்கும் முருகனே தெய்வம் என்று முருகனை முழுமுதற் கடவுளாகக் காட்டியுள்ளார்.
கல்வியின் சிறப்பையும் செல்வத்தின் தேவையையும் எடுத்துக் கூறுகிறது. மனிதன் தனது விடா முயற்சியின் உதவியால் விதியையும் மாற்றி அமைக்கமுடியும் என்னும் நம்பிக்கையை இந்நூல் வாயிலாகக் குமரகுருபரர் ஊட்டுகிறார்.
செயல்திறம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதையும், சான்றோர்கள் கடவுளைப் போல் அனைவருக்கும் உதவி செய்வார்கள் என்பதையும் இந்நூல் தெரிவிக்கிறது.
ஆசைகளைத் துறந்து துறவியர் வாழவேண்டும் என்பதையும் அவர்கள் அறுசுவை உணவையும் தூக்கத்தையும் மிகுதியாக விரும்பக் கூடாது என்பதையும் அறியமுடியும்.
போலித் துறவியர் கொண்டுள்ள தவ வேடத்தால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்னும் உண்மையையும் நீதிநெறிவிளக்கம் தெரிவித்துள்ளது.
பாடம் - 6
இவரது காலம் பதினேழாம் நூற்றாண்டு.
முப்பத்திரண்டு ஆண்டுகள் மட்டுமே இம்மண்ணில் வாழ்ந்த சிவப்பிரகாசர் முப்பது நூல்கள் படைத்துள்ளார். இவர் படைத்துள்ள நூல்கள் முழுவதையும் நீங்கள் இணைய நூலகத்தில் பார்த்துப் படிக்கலாம். இந்தப் பாடத்தில் அவர் இயற்றிய நன்னெறியில் இடம்பெற்றுள்ள அறக் கருத்துகளை மட்டும் பார்ப்போம்.
நன்னெறி என்னும் இந்நூல் நாற்பது பாடல்களைக் கொண்டது. இந்நூலில் உள்ள பாடல்களைச் சிவப்பிரகாசர் முதலில் கடற்கரையில் உள்ள மணலில் எழுதினார். பின்னர் அவருடைய மாணவர்கள் அவற்றை ஏடுகளில் எழுதினார்கள் என்று இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடல்கள் ‘மகடூஉ முன்னிலை’யாக அதாவது ஒரு பெண்ணை அழைத்துக் கூறுவது போல அமைந்துள்ளன.
செயற்குஅரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்குஅரிய யாவுள காப்பு (781)
என்று கூறியுள்ளது. திருக்குறள் நல்ல நட்புக் கிடைப்பதை மிகவும் அரியது என்று குறிப்பிட்டுள்ளது. அந்த நல்ல நட்புக் கிடைத்துவிட்டால் அந்த நட்பே ஒருவனுடைய செயலுக்குச் சிறந்த பாதுகாப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.
நல்லார் செயும்கேண்மை நாள்தோறும் நன்றாகும்
அல்லார் செயும்கேண்மை ஆகாதே – நல்லாய்கேள்
காய்முற்றின் தின்தீங் கனியாம் இளம்தளிர்நாள்
போய்முற்றின் என்ஆகிப் போம் (38)
(கேண்மை = நட்பு, அல்லார் = நண்பர் அல்லாதவர். ஆகாது = உதவாது, நல்லாய் = பெண்ணே)
காயானது முற்றினால் தின்பதற்குப் பயன்படும் இனிய கனியாகும். இளம்தளிர் முற்றினால் அது சருகாகிப் பயன்படாமல் போகும். இவை போன்றே நல்லவர் நட்பு நாள்தோறும் நன்கு வளர்ந்து நன்மையைத் தரும். தீயவர் நட்பு நாள்தோறும் தேய்ந்து துன்பம் தருவதாகவே இருக்கும் என்று சிவப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பாடலில் நல்லவர் நட்பிற்கு உவமையாகக் காய் முற்றி, கனி ஆவதையும் தீயவர் நட்பிற்கு உவமையாக இலை முற்றி, சருகு ஆக மாறுவதையும் உணர்த்தியுள்ள பாங்கு உணர்ந்து இன்புறத்தக்கது. நட்பு என்பது ஒன்று. அதில் நன்மை தருவது ஒருவகையாகவும் தீமையைத் தருவது இன்னொரு வகையாகவும் அமைந்துள்ளதைக் காண்கிறோம். அது போன்றே செடி என்பது ஒன்று தான். அதில் உள்ள காய் முற்றினால் கனியாகப் பயன்தருகிறது. அதில் உள்ள இலை முற்றினால் சருகாகிப் பயனற்றுப் போகிறது என்று ஒரே பொருளை அடிப்படையாகக் கொண்டு உவமை அமைத்துள்ள தன்மையைக் காணமுடிகிறது.
கற்றுஅறியார் செய்யும் கடுநட்பும் தாம்கூடி
உற்றுழியும் தீமைநிகழ்வு உள்ளதே – பொற்றொடீ
சென்று படர்ந்த செழுங்கொடியின் பூமலர்ந்த
அன்றே மணம் உடையதாம் (39)
(கடுநட்பு = ஆழ்ந்த நட்பும், உற்றுழி = நட்புக் கொண்ட உடனே, பொற்றொடீ = தொடி என்னும் நகையணிந்த பெண்ணே)
கொடியில் பூக்கின்ற மணமிக்க பூவானது பூத்த அன்றே வாடிவிடும் இயல்பைக் கொண்டது. அது போல, கல்வி அறிவு இல்லாத தீயவரிடம் கொண்டுள்ள நட்பும் தோன்றிய அன்றே மறைந்துவிடும் இயல்பு உடையது என்பதை இப்பாடல் விளக்குகிறது. நிலையற்ற நட்பை உணர்த்துவதற்கு நிலையற்ற பூவை உவமைப்படுத்தியுள்ள திறம் போற்றுதற்கு உரியது ஆகும்.
நீக்கம் அறும்இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் – பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம் (5)
(நீக்கம் = விலகுதல், நொய்து = இழிவு, புல்லினும் = சேர்ந்தாலும், திண்மை = உறுதி)
என்னும் பாடலில் நட்பில் பிரிவு கூடாது என்பதை விளக்குவதற்கு ஓர் உவமையை அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லின் உட்பகுதியில் அரிசி இருக்கும். அதன் வெளிப்பகுதியில் அரிசிக்குப் பாதுகாப்பாய் உமி இருக்கும். அந்த உமியில் பிளவு ஏற்பட்டு அரிசி வெளியே வந்தபிறகு மீண்டும் அந்த உமியைப் பொருத்தி அரிசிக்குப் பாதுகாப்பைக் கொடுக்க இயலாது. அதுபோல இருவரது நட்பில் பிரிவு ஏற்பட்டால் மீண்டும் அந்த நட்பில் பழைய உறுதிநிலை இருக்காது என்று சிவப்பிரகாசர் உணர்த்தியுள்ளார். எனவே நண்பர்கள் தங்களுக்குள் பிரிவு ஏற்படாமல் நட்பைக் காத்துக்கொள்ள வேண்டும்.
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதுஎன்க – ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நல்நுதால் ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு (2)
(பிறிது = வேறு, ஈசற்கு = சிவனுக்கு, நல்லோன் = சாக்கிய நாயனார், எறிசிலை = எறிந்த கல், கரும்பு வில்லோன் = கரும்பு வில் கொண்ட மன்மதன், நல்நுதால் = அழகிய நெற்றியை உடைய பெண்ணே)
என்னும் பாடலில் உள்ளத்தில் கள்ளம் இல்லாமல் ஒருவர் சொல்கின்ற கொடிய சொல்லும் இன்சொல்லே என்று அவர் கூறுகிறார்.
உள்ளத்தில் கள்ளம் இல்லாதவர்கள் பிறருக்குத் தீமை செய்ய மாட்டார்கள். அவ்வாறு தீமை செய்யாத நல்லவர்கள் கொடிய சொல்லைச் சொல்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு காரணத்தால்தான் அவ்வாறு சொல்லியிருப்பார்கள். அந்தக் கொடிய சொல்லால் பிறருக்கு நன்மையே விளையும்.
மாணவனைப் பார்த்து ஆசிரியர் சொல்லுகின்ற கொடுஞ்சொல்லும், மகனைக் கண்டிக்கும் தந்தையின் கொடுஞ்சொல்லும் உண்மையில் கொடுமையானவை அல்ல. அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகக் கூறுபவை. எனவே, அந்தக் கொடுஞ்சொற்களும் இன்சொற்களாகவே கருதப்படும் என்று நாம் அறிதல் வேண்டும்.
இந்தக் கருத்தை விளக்கும் வகையில் ஒரு பழமொழியும் நிலவுகிறது. ‘மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்’ என்பதே அப்பழமொழி.
நெல்லிக்காயை உண்ணும்போது அது முதலில் கசக்கும். பின்னர் அதுவே இனிக்கும். அதைப் போன்றே பெரியவர்கள் சொல்லும் அறிவுரையும் முதலில் நமக்கு மனக் கசப்பைத் தந்தாலும் அந்த அறிவுரைகள் நமது வாழ்க்கையில் பயன்படும்போது நமக்கு இனிப்பைத் தரும் என்பதே இப்பழமொழியின் விளக்கம். இந்தப் பழமொழிக்கு ஏற்பவே சிவப்பிரகாசரும் ‘வன்சொல்லும் இன்சொல்லே’ என்று விளக்கியுள்ளார்.
இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே-பொன்செய்
அதிர்வளையாய்! பொங்காது அழல்கதிரால் தண்என்
கதிர்வரவால் பொங்கும் கடல் (18)
(இருநீர் = கடல், வியன்உலகம் = அகன்ற உலகம்; பொன்செய் அதிர்வளையாய் = பொன்னால் செய்யப்பட்ட வளையல் அணிந்த பெண்ணே, அழல்கதிர் = சூரியன், தண்என்கதிர் = நிலவு)
என்னும் பாடலும் இன்சொல்லின் சிறப்பை விளக்குகிறது. இனிய சொற்களைப் பேசினால் இந்த உலக மக்கள் எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள். வன்சொல் பேசினால் அவர்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள் என்ற உண்மையை ஓர் உவமையின் வாயிலாக நன்னெறி விளக்கியுள்ளது.
கதிரவனின் ஒளி வெப்பமானது. அந்த வெப்பத்தில் கடலின் அலைகள் பொங்கி எழுவதில்லை. நிலவின் ஒளி குளிர்ச்சியானதுதான். என்றாலும் கடலின் அலைகள் பொங்கி எழுகின்றன. அதைப் போல வன்சொல் பேசும்போது யாரும் மகிழ்வதில்லை; இன்சொல் பேசும்போது தான் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதில் அலை பொங்கி எழுவதை மகிழ்ச்சி பொங்குவதற்குச் சிவப்பிரகாசர் ஒப்புமைப்படுத்தியுள்ளார்.
அதிவீரராம பாண்டியனின் கருத்துக்கு ஏற்பவே கல்வியின் பெருமையை நன்னெறியும் தெரிவித்துள்ளது. அவற்றை இங்கே காண்போம்.
எழுத்துஅறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்துஅறிவார் காணின் இலையாம் – எழுத்துஅறிவார்
ஆயும் கடவுள் அவிர்சடைமுன் கண்டஅளவில்
வீயும் சுரநீர் மிகை (21)
(அறியார் = அறிவில்லாதவர், இலை = இல்லை, அவிர் = ஒளி, வீயும் = அடங்கும், சுரநீர் = விண்ணிலிருந்து பாயும் நீர். மிகை = மிகுதி)
என்னும் நன்னெறிப் பாடல் இக்கருத்தை விளக்குகிறது. இதற்குச் சிவனது சடைமுடியையும் வானதியாகிய கங்கையையும் பயன்படுத்தியுள்ளார்.
பகீரதன் என்பவன் விண்ணுலகில் பாய்ந்து கொண்டிருந்த கங்கையை மண்ணுலகுக்குக் கொண்டு வருவதற்காகத் தவம் செய்தான் என்று ஒரு புராணக்கதை கூறுகிறது. அதில் பகீரதனின் தவத்திற்கு ஏற்ப, விண்ணுலகக் கங்கை பூமிக்கு வந்து கொண்டிருந்தது. அவ்வாறு வரும்போது அதன் வெள்ளப் பெருக்கு மிகுதியாக இருந்ததால் அந்தப் பெருக்கில் பூமியே மூழ்கி விடும் என்று அனைவரும் அஞ்சினார்கள். கங்கையின் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி உதவ வேண்டும் என்று சிவனை நோக்கி, பகீரதன் தவம் செய்தான். பகீரதனின் தவத்திற்கு மனம் இரங்கிய சிவபெருமான், கங்கையின் வெள்ளப் பெருக்கைத் தனது தலையில் உள்ள சடைமுடியில் தாங்கி அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தியதாக அந்தக் கதை கூறுகிறது.
இந்தக் கதை நிகழ்வைச் சிவப்பிரகாசர் இப்பாடலில் உவமையாகப் பயன்படுத்தியுள்ளார். சிவபெருமானின் சடைமுடியைக் கண்டதும் ஆகாய கங்கையின் வெள்ளப்பெருக்கு அடங்குவதைப் போல், உண்மைக் கல்வி அறிவு பெற்றவர்களைக் கண்டதும் ஆரவாரக் கல்வி அறிவு பெற்றவர்கள் அனைவரும் அடங்கி விடுவார்கள் என்று நன்னெறி விளக்குகிறது.
கல்லா அறிவுஇல் கயவர்பால் கற்றுஉணர்ந்த
நல்லார் தமதுகனம் நண்ணாரே – வில்லார்
கணையில் பொலியும் கருங்கண்ணாய்! -
நொய்தாம் புணையில் புகும்ஒண் பொருள் (25)
(கனம் = பெருமை, நண்ணார் = அடையமாட்டார், கணை = அம்பு, நொய்து = குறைவு)
என்னும் நன்னெறிப் பாடல் இந்தக் கருத்தை விளக்கியுள்ளது.
புணை என்பதற்குத் தெப்பம் என்று பொருள். தெப்பம் நீரில் மிதக்கும் இயல்புடையது. எவ்வளவு கனமான பொருளைத் தெப்பத்தில் வைத்தாலும் அதுவும் தெப்பத்துடன் மிதக்கும்; தனது கனத்தை இழக்கும். அதைப்போல, கயவர்களுடன் பழகும் கற்றவர்களும் தங்கள் பெருமையை இழப்பார்கள். இப்பாடல் மூலம் கற்றவர்கள் கல்வி கற்காத கயவர்களுடன் பழகினால் தங்கள் பெருமையை இழக்க நேரிடும் என்பதைச் சிவப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார்.
உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் – மடவரால்
கண்அளவாய் நின்றதோ காணும் கதிர்ஒளிதான்
விண்அளவா யிற்றோ விளம்பு (26)
(கடவார் = அறியார்; விளம்பு = சொல், மடவரால் = பெண்ணே)
என்னும் நன்னெறிப் பாடல், உண்மை அறிஞரை அறிவதற்கு ஓர் உவமையைப் பயன்படுத்தியுள்ளது.
கதிரவனின் ஒளி நமது பார்வை செல்லும் தொலைவில் மட்டும் பரந்து உள்ளதா அல்லது விண்முழுவதும் பரந்து உள்ளதா என்று ஒரு கேள்வி கேட்கிறார். இந்தக் கேள்விக்கு உரிய பதிலைச் சிவப்பிரகாசர் எதிர்பார்த்துக் கேட்கவில்லை. ஏனெனில் கதிரவனின் ஒளி, உலகம் முழுவதும் பரந்து காணப்படுவதை அனைவரும் அறிந்துள்ளார்கள். இது உலக உண்மை.
விண்முழுவதும் பரந்து காணப்படும் கதிரவனின் ஒளியை எவ்வாறு நமது கண்ணால் அளவிட முடியாதோ அதைப்போல, கற்றவர்களின் அறிவுத்திறத்தை நமது கண்ணால் அளவிட முடியாது. அறிவால்தான் அளவிட முடியும் என்று நன்னெறி கூறியுள்ளது.
அறிவுடையார் அன்றி அதுபெறார் தம்பால்
செறிபழியை அஞ்சார் சிறிதும் – பிறை நுதால்
வண்ணம்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்
கண்அஞ்சு மோஇருளைக் கண்டு (34)
(அது பெறார் = அறிவில்லாதார், செறி = சேரும், பிறைநுதால் = பிறைபோன்ற நெற்றியைக் கொண்ட பெண்ணே)
என்னும் நன்னெறிப்பாடல், அறிவுடையவர்கள் பழிக்கு அஞ்சுவார்கள் என்பதைத் தெரிவிக்கிறது. ஒளி பொருந்திய கண்கள் இருளைக் கண்டு அஞ்சும். ஒளியே இல்லாத குருட்டுக் கண்கள் ஒளியைக் காணுவதும் இல்லை. அவை இருளைக் கண்டு அஞ்சுவதும் இல்லை. அது போல அறிவுடையவர்கள் தம்மேல் வரும் பழியைக் கண்டு அஞ்சுவார்கள், அறிவில்லாதவர்கள் பழியைக் கண்டு அஞ்சமாட்டார்கள்.
பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார்-நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
கைசென்று தாங்கும் கடிது (31)
(நேரிழாய் = பெண்ணே, வியன் = பெரிய; கடிது = விரைந்து)
என்னும் பாடலில் அறிஞர்களின் வீரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வீரமும் பிறருக்கு உதவும் பொருட்டே வெளிப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை உணர்த்துவதற்கு ஓர் உண்மையைச் சிவப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார்.
நமது உடலில் படுகின்ற அடியை விரைந்து சென்று கை தாங்கிக் கொள்ளும். அதைப்போல, பிறருக்கு நேரும் துன்பத்தைத் தாங்குவதற்கு அறிஞர்கள் வீரத்துடன் விரைந்து செல்வார்கள் என்று நன்னெறி கூறுகிறது.
இப்பாடலில் வீரம் என்பது, பிறர் துன்பத்தைத் தீர்ப்பது என்று பொருள் தருகிறது.
முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்
கனிவினும் நல்கார் கயவர் – நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்து
ஆயினும் ஆமோ அறை (28)
(முனிவினும் = கோபப்பட்டாலும், நல்குவர் = வழங்குவர், நனி = நன்றாக, விளைவில் = விளையாத, எட்டி = ஒருவகைக் காய். அறை = சொல்)
என்னும் பாடல் அறிஞர்கள் கோபப்பட்டாலும் பிறருக்கு உதவி செய்வார்கள் என்பதை விளக்குகிறது.
வாழைக்காய் பழுத்துப் பழமாகாமல் காயாக இருந்தால் கூட உணவுப் பொருளாகி உதவும். ஆனால் எட்டிக்காய் பழுத்திருந்தாலும் எதற்கும் உதவாது. அதைப்போல, அறிஞர்கள் கோபப்பட்டாலும் பிறருக்கு உதவுவார்கள். ஆனால், கயவர்கள் அன்பொழுகுமாறு பேசினாலும் பிறருக்கு உதவமாட்டார்கள் என்று சிவப்பிரகாசர் பாடியுள்ளார்.
இப்பாடலில் அறிஞர்கள் உதவி செய்வதை விளக்குவதற்கு வாழைக்காயையும் கயவர்கள் உதவி செய்யமாட்டார்கள் என்பதை விளக்குவதற்கு எட்டிக் கனியையும் உவமையாக நன்னெறி காட்டியுள்ளது. வாழைக்காய், காயாக இருந்தாலும் உணவுக்கு உதவும் என்பதன் மூலம் அறிஞர்கள் கோபப்பட்டாலும் உதவுவார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது. எட்டிக்காய் பழுத்த கனியாக இருந்தாலும் எதற்கும் பயன்படாது என்பதன் மூலம் கயவர்களின் உதவாத தன்மை விளக்கப்பட்டுள்ளது.
பொன்அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தாம் மற்றுஒவ்வார்- மின்னுமணி
பூணும் பிறஉறுப்புப் பொன்னே அது புனையாக்
காணும்கண் ஒக்குமோ காண் (40)
(புனையா = அணியா, ஒவ்வார் = ஒப்பாகமாட்டார், பூணும் = அணிகலன்களை அணியும், ஒக்குமோ = ஒப்பாகுமோ)
மன்னன் பலவகையான அணிகலன்களை அணிந்திருப்பான். ஆனால் அறிஞரோ அத்தகைய அணிகலன்களை அணிந்திருப்பதில்லை. என்றாலும் மன்னனை விடவும் அறிஞரே மதிக்கப்படுவார். மன்னனை விடவும் அறிஞர் எப்படி மதிக்கப்படுவார் என்னும் ஐயம் நம்முள் எழுகிறது அல்லவா? இதே ஐயம் சிவப்பிரகாசருக்கும் எழுந்துள்ளது. இந்த ஐயத்தை அகற்றுவதற்குச் சிவப்பிரகாசர் ஓர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார் பாருங்கள்.
நமது உடலில் பல உறுப்புகள் இருக்கின்றன. இந்த உறுப்புகளில் அழகுக்காகப் பல அணிகலன்களை அணிகிறோம். கையில் வளையலும் விரலில் மோதிரமும் மூக்கில் மூக்குத்தியும் கழுத்தில் மாலைகளும் காதில் தோடும் காலில் கொலுசும் அணிகிறோம். ஆனால் கண்ணில் ஏதேனும் அணிகலனை அணிகிறோமா? அணிவதில்லை. அணிகலன் எதுவும் அணியவில்லை என்று நாம் யாராவது கண்ணை இழிவாகக் கூறுவதுண்டா? உயர்வுபடுத்தித் தான் கூறுவோம். பேச்சு வழக்கில் உயர்வான பொருள்களைக் கூறுவதற்கு மட்டுமே கண்ணை உவமையாகக் கூறுவோம்.
கண்ணைப்போல் காப்பேன், கண்ணே,
என்றுதான் உவமைப்படுத்துகிறோம். எனவே, அணிகலன்களை அணிகிற உறுப்புகளை விடவும் அணிகலன்கள் எதையும் அணியாத கண்ணை உயர்வாகக் கூறுகிறோம். அதைப் போன்றே, பலவகையான அணிகலன்களை அணிகிற மன்னனை விட அணிகலன் எதுவும் அணியாத அறிஞரே உயர்ந்தவர் என்று அவர் கூறியுள்ளார். இப்போது கூறுங்கள்! யார் உயர்ந்தவர்? மன்னனா, அறிஞரா?
இந்தப் பாடலில் மேலும் ஒரு கருத்தையும் சிவப்பிரகாசர் தெரிவித்துள்ளார். கண் அணிகலன் எதையும் அணியவில்லை என்றாலும் கண்ணுக்கு அணிகலனாக அதன் ஒளி இருக்கிறது. அதைப் போன்றே அறிஞரும் அணிகலன் எதையும் அணியவில்லை என்றாலும் அவருக்கு அணிகலனாக அறிவு இருக்கிறது. இந்த இயற்கை அணிகலன்களைத் தவிர, செயற்கையாக அணியும் அணிகலன்களால் பயன் எதுவும் இல்லை என்பதும் இதன்மூலம் விளக்கப்பட்டுள்ளது.
என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்
சென்று பொருள்கொடுப்பர், தீதுஅற்றோர் – துன்றுசுவை
பூவின் பொலிகுழலாய்! பூங்கை புகழவோ,
நாவிற்கு உதவும் நயந்து (1)
(முகமன் = நேருக்கு நேர் புகழ்தல், துன்று = மிகுந்த, பொலி = விளங்கும், குழலாய் = கூந்தலைக் கொண்ட பெண்ணே, பூங்கை = அழகிய கை, நயந்து = விரும்பி)
நமது உடலுக்குத் தேவையான உணவுப் பொருள்களை நாக்குச் சுவைத்து வயிற்றுக்குள் செலுத்துகிறது. இந்த உணவுப் பொருள்களைக் கைதான் நாக்குக்கு எடுத்துக் கொடுக்கிறது. இவ்வாறு உணவுப் பொருள்களை நாக்குக்குத் தான் எடுத்துக் கொடுப்பதால் தன்னைப் புகழ வேண்டும் என்று கை எதிர்பார்ப்பதில்லை. அதைப்போல, பெரியோர்களும் தம்மைப் பிறர் புகழ வேண்டும் என்று கருதாமல் உதவி செய்வார்கள். அவ்வாறு அவர்கள் உதவிசெய்யும் போது யார் தம்மைப் புகழ்கிறவர் என்று பார்க்காமல் தேவைப்படும் எல்லோருக்கும் உதவி செய்வார்கள் என்று பெரியோர் பெருமையைச் சிவப்பிரகாசர் பாடியுள்ளார்.
இச்செய்யுளில் நாக்கானது சுவைத்து உண்ணும் பொருட்டு நமது கை, உணவுப் பொருளை எடுத்துக் கொடுப்பது என்பது இயல்பாக நாள்தோறும் நிகழும் நிகழ்ச்சி ஆகும். இந்த இயல்பான நிகழ்ச்சியைப் போன்றே பெரியோர்கள், பொருள் தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுத்து உதவுவதும் இயல்பான நிகழ்ச்சியே என்று இப்பாடல் தெரிவித்துள்ளது.
பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண்டு உள்ளம்
எரியின் இழுதுஆவர் என்க – தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிறஉறுப்பைக்
கண்டு கலுழுமே கண் (20)
(நோய் = துன்பம், எரி = நெருப்பு, இழுது = நெய், தெரியிழாய் = தேர்ந்தெடுக்கப் பட்ட அணிகலன்களை அணிந்த பெண்ணே, மண்டு = முற்றிய, கலுழும் = நீர் சொரியும்)
நமது உடலில் உள்ள ஏதாவது ஓர் உறுப்பில் ஏதேனும் காயம் ஏற்பட்டாலும் அக்காயத்திற்காகக் கண்கள் கண்ணீர் வடிக்கும். அதைப்போல, பிறரது துன்பத்தைக் கண்டு பெரியோர்கள் வருந்துவார்கள் என்பதே இப்பாடலின் பொருள் ஆகும். இதில் இரண்டு உவமைகள் இடம் பெற்றுள்ளன.
முதல் உவமையானது, பிறரது துன்பத்தைக் கண்டு பெரியவர்கள் படும் வருத்தத்தைக் கூறுகிறது. இரண்டாவது உவமையானது அவர்கள் எவ்வாறு வருத்தப்படுவார்கள் என்பதை விளக்குகிறது. முதல் உவமையின் விளக்கம் பாடலின் விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது. இனி, இரண்டாம் உவமையின் விளக்கத்தைக் காண்போமா?
‘நெருப்பில் இட்ட நெய் போல’ என்பதுதான் அந்த இரண்டாம் உவமை. நெய்யை நெருப்பில் வைத்தால் அது எவ்வாறு உருகுமோ அதைப்போல் பிறரது துன்பத்தைக் கண்டு பெரியவர்கள் உருகுவார்கள் என்பதே அதன் விளக்கம். இதன் மூலம், பெரியவர்களின் உள்ளம் எவ்வளவு மென்மையானது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
திருக்குறளிலும் இதே கருத்து இடம் பெற்றுள்ளது.
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை (315)
என்னும் குறளே அது.
பிறர் அடையும் துன்பத்தைத் தாம் அடையும் துன்பமாக எண்ணாதவர்கள் பெற்றுள்ள அறிவினால் எந்தப் பயனும் இல்லை என்பது இக்குறள் தரும் பொருள். இங்கே அறிவுடையவர்களுக்குக் கூறப்பட்டுள்ள பண்பு, நன்னெறியில் பெரியவர்களுக்கு உரியதாய்க் கூறப்பட்டுள்ளது. பிறரது துன்பத்தைக் கண்டு மனம் வருந்தும் அறிவுடையவர்களே பெரியவர்களாக மதிக்கப்படுவார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.
உதவி செய்யாமல் சேர்த்து வைக்கும் பொருளால் பயன் எதுவும் விளைவதில்லை. அந்தப் பொருள் வீணாகத்தான் அழியும். ஏனென்றால் இந்த உலகில் மனிதன் நிலையாக வாழ்வதில்லை. எனவே மனிதன் வாழும் காலத்திலேயே தான் சேர்த்த பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்கிறார் சிவப்பிரகாசர்.
கொள்ளும் கொடும்கூற்றம் கொள்வான் குறுகுதன்முன்
உள்ளம் கனிந்துஅறம் செய்து உய்கவே – வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என்செய்வார், பேசு (30)
(கொள்ளும் = உயிரைப் பறிக்கும், கூற்றம் = யமன், குறுகுதன் முன் = வந்து சேர்வதன் முன், உய்க = பிழைத்துக் கொள்க, அணைகோலி = அணைபோட்டு, பேசு = சொல்)
வெள்ளம் வருவதற்கு முன்பே அந்த வெள்ளத்தைத் தடுக்கும் வகையில் அணைபோட்டுவிட வேண்டும். வெள்ளம் வந்தபிறகு அணைபோட முயன்றால் அது முடியாது. வெள்ளத்தின் வேகமானது அணைபோடும் போதே அடித்துச் சென்றுவிடும். அது போல, எமன் வந்து நமது உயிரை எடுப்பதற்கு முன்பே நாம் சேர்த்த செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து நற்பயனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நன்னெறி கூறியுள்ளது.
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து (221)
என்று குறிப்பிட்டுள்ளார்.
பொருளில்லாத ஏழையால் பெறும் உதவிக்குப் பதில் உதவி செய்ய இயலாது. அப்படிப்பட்ட வறியவர்களுக்குச் செய்வதுதான் உதவி என்பது திருவள்ளுவரின் கருத்து. இதைச் சிவப்பிரகாசர்,
கைம்மாறு உகவாமல் கற்றுஅறிந்தோர் மெய்வருந்தித்
தம்மால் இயல்உதவி தாம்செய்வர் – அம்மா
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று (27)
(கைம்மாறு = பதில் உதவி, உகவாமல் = எதிர்பார்க்காமல், மெய்வருந்தி = உடல் வருந்துமாறு, எயிறு = பல், வலியன = கடினமான பொருள்கள்)
என்று பாடியுள்ளார்.
கல்வி அறிவு பெற்ற அறிஞர்கள் பயனை எதிர்பார்க்காமல் பிறர்க்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள். இவ்வாறு அவர்கள் செய்கின்ற உதவி எதைப் போன்று இருக்கிறது என்பதையும் நன்னெறி தெரிவித்துள்ளது.
வாயில் உள்ள பல்லானது உணவுப் பொருள்களை மென்று, உணவின் சுவையை நாவிற்கு உணர்த்துகிறது. உணவை மென்று நாவிற்குக் கொடுக்கும் பல், பயன் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அதைப்போன்றே கற்றறிந்தவர்கள் பயனை எதிர்பார்க்காமல் உதவி செய்வார்கள் என்று இப்பாடல் தெரிவிக்கிறது.
பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்கு ஏற்ப
விருப்ப மொடுகொடுப்பர் மேலோர் – சுரக்கும்
மலையளவு நின்ற முலைமாதே மதியின்
கலையளவு நின்ற கதிர் (13)
(பெருக்கம் = மிகுதி, சுருக்கம் = குறைவு, மதி = நிலவு, கலையளவு = வளர்தல், (தேய்தலின் அளவு)
நிலவின் அளவுக்கு ஏற்பவே நிலவின் ஒளி இருக்கும். அதாவது பிறைநிலவாய் இருக்கும்போது அதன் ஒளி குறைவாகவும் அது வளர வளர ஒளி மிகுதியாகவும் இருக்கும். அதைப்போல, பெரியவர்கள் பொருள் குறைவாக இருக்கும் போது குறைவாகவும், பொருள் மிகுதியாக இருக்கும்போது மிகுதியாகவும் கொடுத்து உதவுவார்கள் என்று சிவப்பிரகாசர் கூறியுள்ளார்.
பெரியோர்கள் அளவு அறியாமல் உதவி செய்து பொருள் எல்லாம் தீர்ந்து விட்டாலும் தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருப்பார்கள் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.
எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்று அவன்
மைந்தர்தம் ஈகை மறுப்பரோ – பைந்தொடீஇ
நின்று பயன்உதவி நில்லா அரம்பையின் கீழ்க்
கன்றும் உதவும் கனி (17)
(எந்தை = எம் தந்தை, நல்கூர்ந்தான் = வறுமை நிலை அடைந்தான், ஈந்து = கொடுத்து, பைந்தொடி = பசும்பொன்னால் ஆன வளையல் அணிந்த பெண்ணே, அரம்பை = வாழைமரம்)
அரம்பை என்பது வாழை மரத்தைக் குறிக்கும். வாழை மரத்தின் இலை, பூ, காய், பழம், தண்டு என்று அனைத்துப் பாகங்களும் உணவாகப் பயன்படும். ஒரு வாழைமரத்தின் அனைத்துப் பாகங்களும் உணவாகப் பயன்பட்டு இல்லாமல் போய்விட்டாலும் அந்த வாழைமரத்தின் கீழ்வளரும் கன்றும் வளர்ந்து உணவாகப் பயன்படும். அதைப்போல, தந்தை தம்மிடம் இருந்த பொருளை எல்லாம், இல்லாதவர்களுக்குக் கொடுத்து வறியவராகி விட்டார் என்று நினைத்து, அவரது மகன் பிறர்க்குக் கொடுப்பதை நிறுத்தி விடுவதில்லை. அவனும் தன்னால் இயன்ற அளவு பிறருக்கு உதவிசெய்து வாழ்வான் என்று சிவப்பிரகாசர் தெரிவித்துள்ளார்.
இப்பாடலில் உதவி செய்து வாழ்கின்ற வள்ளல் மனப்பான்மை கொண்டவரின் குலப்பெருமை விளக்கப்பட்டுள்ளதை நாம் காணமுடிகிறது.
தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துஉயர்ந்தோர்
தம்மை மதியார் தமைஅடைந்தோர் – தம்மின்
இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல் (16)
(இழியினும்= தாழ்ந்தவராக இருந்தாலும், இடர் = துன்பம், அல்கு கழியினும் = சுருங்கிய உப்பங்கழியிலும்)
கடலானது அளவில் மிகப்பெரியது. உப்பங்கழி அளவில் சிறியது. அளவில் பெரிய கடல்நீர், அளவில் சிறிய உப்பங்கழியிலும் சென்று பாயும். அதுபோல, சான்றோர்கள் தமது உயர்வைப் பெரிதாகக் கருதாமல், தாழ்ந்த நிலையில் இருப்பவர்களையும் தேடிப்போய் உதவி செய்வார்கள். இப்பாடலில் உதவி செய்வதற்கு உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் பார்க்கத் தேவையில்லை என்ற கருத்து விளக்கப்படுகிறது.
உதவி செய்யும் போது பேதம் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்திய சிவப்பிரகாசர் உதவி தேவைப்படுபவருக்கு உதவ வேண்டும் என்பதை அறிவித்துள்ளார். மேலும் அந்த உதவியைப்பெற விரும்புபவர் சமுதாயத்திற்குக் கேடு விளைவிப்பவராக இருந்தால் அத்தகையோருக்கு உதவி செய்யக்கூடாது என்பதையும் சிவப்பிரகாசர் தெரிவித்துள்ளார்.
தக்கார்க்கே ஈவர் தகார்க்குஅளிப்பார் இல்என்று
மிக்கார்க்கு உதவார் விழுமியோர் – எக்காலும்
நெல்லுக்கு இறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக்கு இறைப்பரோ போய் (36)
(தக்கார் = தகுதி உடையவர், ஈவர் = கொடுப்பர், தகார் = தகுதி இல்லாதவர், இல் = இல்லை, மிக்கார் = நல்வழியை மீறிச் செயல்படுபவர், உதவார் = உதவமாட்டார், விழுமியோர் = சிறந்த குணம் உடையவர், எக்காலும் = எந்தக் காலத்திலும், காட்டு முளி = காட்டில் காய்ந்து கிடக்கும புல்)
என்னும் பாடலில் நல்லநெறிப்பட்டு வாழாதவர்களுக்கு உதவக்கூடாது என்பது விளக்கப்பட்டுள்ளது.
வாய்க்காலில் வருகின்ற நீரை நெற்பயிருக்கு இறைத்து ஊற்றுவார்கள். காட்டில் உள்ள பயனற்ற புல்லுக்கு ஊற்றுவார்களா? ஊற்றமாட்டார்கள். அதுபோல, தகுதி உடையவர்களுக்கு மட்டுமே சான்றோர்கள் உதவி செய்வார்கள்; தீயவர்களுக்கு உதவ மாட்டார்கள்.
தங்கட்கு உதவிலர்கைத் தாம்ஒன்று கொள்ளின்அவர்
தங்கட்கு உரியவரால் தாம்கொள்க – தங்கநெடும்
குன்றினால் செய்தனைய கொங்கையாய் ஆவின் பால்
கன்றினால் கொள்ப கறந்து (3)
(உதவிலர் = உதவி செய்யாதவர், கைத்தாம் = கையில் இருக்கும் பொருள், உரியவர் = வேண்டியவர், ஆவின் = பசுவின்)
பசுவின் பாலைக் கறக்க விரும்புபவர்கள், முதலில் பசுவின் மடியில் கன்றைப் பால்குடிக்க விடுவார்கள். கன்று பால் குடித்துக் கொண்டிருக்கும் போது அதைப்பிடித்து இழுத்து அருகில் கட்டிவிட்டு, பாலைக் கறப்பார்கள். அவ்வாறு, கன்றை முதலில் பால் கறக்க விடவில்லை என்றால் பசுவின் மடியில் பால்சுரக்காது. பால் சுரக்காத மடியில் இருந்து பால் கறக்க முடியாது அல்லவா? எனவே, பசுவின் பாலைக் கறக்க வேண்டும் என்றால் கன்றுக்குட்டி முதலில் பசுவிடம் பால் குடிப்பது அவசியம். அதைப்போல, உதவி செய்யாதவர் ஒருவரிடம் இருந்து உதவிபெற வேண்டும் என்றால், அவருக்கு வேண்டியவர் மூலமாக முயற்சி செய்து உதவி பெற வேண்டும் என்று நன்னெறி வழி காட்டுகிறது.
ஆணவம் கொண்டவர்கள் தங்கள் ஆணவப் போக்கை அகற்றிக் கொள்ளவில்லை என்றால் வாழ்வில் இன்னல்களை அடைய நேரிடும். ‘நான்தான்’ என்னும் எண்ணம் மேம்படுதலே ஆணவத்தின் தொடக்கம். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றால் ‘நானும்’ என்னும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆணவம் கல்வி அறிவு மிகுதியாகப் பெற்றவர்களிடமும் செல்வம் மிகுதியாகக் கொண்டவர்களிடமும் ஏற்படும்.
கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனைய செருக்குஆழ்த்தி – விடலே
முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும் (7)
(அனையம் = போன்றவர், அடல் ஏறு = வலிமையான ஆண் சிங்கம், முனிக்கு அரசு = அகத்தியர், முகந்து = மொண்டு, முழங்கும் = ஒலிக்கும், பனிக்கடல் = குளிர்ந்த நீரைக் கொண்ட கடல்)
முனிவர்களுக்கு அரசர் என்று போற்றப்படுபவர் அகத்தியர். அவர் குள்ளமான உருவம் கொண்டவர். அந்தக் குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் பெரிய கடலையே குடித்துவிட்டார் என்னும் புராணக் கருத்து இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாரகன் முதலான அசுரர்கள் கடலில் மறைந்து கொண்டு, அவ்வப்போது தேவர்கள் முதலானவர்களுக்குத் துன்பம் செய்து வந்தனர். அந்தக் தாரகன் முதலான அசுரர்களை வெளியேற்றுவதற்காக அகத்தியர் கடலைக் குடித்தார் என்று மச்ச புராணம் தெரிவிக்கிறது. பெரிய கடலைக் கூட, குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் குடித்துவிட்டார். எனவே, கடல் அளவு மிகுதியான கல்வி அறிவு உடையவன் என்று ஆணவம் கொள்ளக்கூடாது என்று நன்னெறி கூறுகிறது.
தொலையாப் பெரும்செல்வத் தோற்றத்தோம் என்று
தலையா யவர்செருக்குச் சார்தல் – இலையால்
இரைக்கும்வண்டு ஊதும்மலர் ஈர்ங்கோதாய் மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு (14)
மேரு என்னும் மலை புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மிகப்பெரிய மலை, இந்த மலை நூற்றுக்கணக்கான சிகரங்களைக் கொண்டது; பொன்மலை என்று போற்றப்படுவது; உறுதிக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுவது. இத்தகைய உறுதியான மேரு மலையைக் கூட, சிவபெருமான் வில்லாக வளைத்துக் கையில் தாங்கினார். எனவே, குறையாத செல்வத்தைக் கொண்டவன் என்று யாரும் ஆணவம் கொள்ளக்கூடாது என்று சிவப்பிரகாசர் அறிவுறுத்தியுள்ளார்.
நல்ல நட்பின் பெருமையையும், நட்பில் பிரிவு கூடாது என்னும் அறிவுரையையும் சிவப்பிரகாசர் விளக்கியுள்ளார்.
இனிமையான சொற்களைப் பேசுவதால் ஏற்படும் நன்மைகளையும் கொடிய சொற்களைப் பேசுவதால் ஏற்படும் தீமைகளையும் நன்னெறி தெரிவித்துள்ளது. மேலும் நல்ல பண்பாளர்கள் சொல்லும் வன்சொல்லும் நன்மையைத்தான் தரும் என்றும் தெரிவித்துள்ளது.
கல்வியின் சிறப்பைப் பற்றியும், கற்றவர்களின் புறத்தோற்றத்தை வைத்து அவர்களின் அறிவுத் திறத்தை எடை போடக் கூடாது என்பதைப் பற்றியும் சிவப்பிரகாசர் கூறியுள்ளார்.
அறிஞர்களின் பெருமையையும் மன்னனை விடவும் அறிஞர்கள் மதிக்கப்படுவதையும் நன்னெறி வழியாக நாம் அறிய முடிகிறது.
பெரியோர்கள் புகழ்ச்சியில் மயங்குவதில்லை என்பதையும், அவர்கள் பிறருக்கு ஏற்பட்ட இன்னலைக் கண்டு உள்ளம் வருந்துவார்கள் என்ற உண்மையையும் சிவப்பிரகாசர் தெரிவிக்கிறார்.
உதவி செய்து வாழ வேண்டிய தேவையையும், உதவி செய்யும் போது பயன்கருதாமல் உதவி செய்ய வேண்டும் என்பதையும், சமுதாயத்தில் தீயவர்களாகக் கருதப்படுகிறவர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்பதையும் நன்னெறி உணர்த்துகிறது.
கல்வியாலும், செல்வத்தாலும் ஆணவம் கொள்ளக்கூடாது. அவ்வாறு ஆணவம் கொண்டவர்கள் கல்வியையும் செல்வத்தையும் இழக்க நேரிடும் என்றும் நன்னெறி அறிவுரை கூறியுள்ளது.