6

இலக்கியத்தில் சிறிய தொடர்கள் இடம் பெறுகிற சூழல்கள் யாவை?

தேவையும் சூழரும் கருதி நாடக உத்தி, உணர்ச்சிப் பீறல், ஆணையிடுதல், அறுதியிடுதல் முதலிய சூழல்களில் சிறிய தொடர்கள் இடம் பெறுகிறது.

சொல்லுக்கு ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் கூறும் நான்கு வகையான பொருட்கள் யாவை?

ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் கூறும் நான்கு வகையான பொருட்கள் அறிவு புலப்படுதல் (Sense), உணர்வு புலப்படுதல் (Feeling), தொனி அல்லது குறிப்புப் பொருள் (Tone) மற்றும் விருப்பம் அல்லது நோக்கம் (Intention) ஆகும்.

உருவகம், படிமம் – விளக்குக?

உருவகம் (Metaphor) என்பது உவம உருபுகள் நீங்கிப் போகச் செரிவுடைய ஓர் உவம வடிவமாகும். படிமம் (Image) என்பது சொல்லப்படும் பொருளை கேட்பு அல்லது காட்சி வடிவில், உருவெளித் தோற்றம் என்ற நிலைக்கு கொண்டுவருவது ஆகும்.

‘மாண்ட’ என்ற சொல், வழங்குகிற விதத்தைக் கூறுக?

இன்றைய வழக்கியல் ‘மாண்ட’ என்ற சொல்லுக்கு ‘இறந்துபோன’ என்பது பொருள். பழைய வழக்குக்கு மாண்(பு) என்பது அடிச்சொல்; புதிய வழக்கிற்கு ‘மாள்’ என்பது அடிச்சொல்.

குறிப்பிட்ட இலக்கியம் எந்தக் காலத்தில் தோன்றியதோ அந்தக் காலத்தின் மொழிநிலையை அது சார்ந்திருக்கும் என்று சொல்லுவதில் உள்ள நிலைப்பாடுகள் என்ன?

சிறு சிறு வேறுபாடுகள் இருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட காலத்தின் இலக்கியங்களிலுள்ள மொழி நிலைகளையெல்லாம் குறிப்பிட்ட ஒரே தளத்துக்குள் கொண்டு வந்து விடுகிறோம்.

வட்டார மொழி என்றால் என்ன?

    வட்டார மொழி (dialect) என்பது, முக்கியமாக இடம் சார்ந்தது. குறிப்பிட்ட இலக்கியம் சித்தரிக்கின்ற சமுதாயம், எந்தப் பகுதியைச் சார்ந்ததோ, அந்தப் பகுதியில் வழங்குகின்ற அல்லது அந்தப் பகுதியை இன்னதென அடையாளங் காட்டுகின்ற     மொழியையே அது தனது தளமாகக் கொண்டிருக்கிறது.

மொழியியல் வழிப்பட்ட திறனாய்வு என்றால் என்ன?

    இலக்கியத்திற்கு அடிப்படையானது அல்லது இலக்கியம் என்றால் இன்னது என்று இனங்காட்டுவது, இலக்கியத்தனம் அல்லது இலக்கியப் பண்பே (Literariness) என்று கூறுவர், மேலும் அது மொழியின் விசேடமான பண்புகளில் உள்ளது என்றும் மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

மொழியின் செயலில் இடைவெளி அல்லது போதாமை இருக்கிறது- யார் யாருக்கு எதற்கு இடையே?

மொழி - மொழியை பயன்படுத்தும் படைப்பாளி - அதனை உள்வாங்க வேண்டிய வாசகருக்கு இடையே ஆகும்.

கலை, கலைக்காகவே எனும் வாதம், நம்முன் வைக்கும் பிரச்சனைகள் என்ன?

கலை, இலக்கியம் என்பது அழகாகவும் நேர்த்தியாகவும் செய்யப்படுவதே அல்லாமல், அதற்கு என்று செயல்பாடு கூறுவது சரியாகுமா: இந்தக் கேள்வி, கலையின் இலக்குப் பற்றிப் பேசுகிறது. இலக்கு, கலையோடு முடிந்துவிடுகிறதா அல்லது அதற்கு அப்பாலும் செல்கிறதா என்று பேசுகிறது.

கலை, கலைக்காகவே என்னும் வாதத்திற்கு நேர் எதிரான கொள்கை எது? அது முக்கியமாக என்னசொல்கிறது?

 கலை, கலைக்காகவே என்னும் வாதத்திற்கு நேர் எதிரான கொள்கை பயன்பாட்டுக் கொள்கை (utility or Pragmatism) ஆகும். கலை, பிரச்சாரத்துக்காகவே இருக்கிறது. நீதி சொல்லுவதற்காகவே இருக்கிறது என்பது இந்தக் கொள்கை.

சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை முதலியவற்றைப் பார்த்தவுடன் ஏற்படுகிற உணர்வுகள் என்ன?

முதலில், ஒரு பிரமிப்பு; ஒரு வியப்பு. பின்னர் அவற்றோடு ஒரு லயிப்பு. பிறகு- ஒரு மகிழ்ச்சி;     ஓர்     இன்பம்; கவலைகளையும், சுற்றுப்புறங்களையும் மறந்த ஒரு இதமான உணர்வு ஏற்படுகின்றன.

வாசகன் மனநிலை பற்றி சார்த்தர் எனும் அறிஞர் கூறுவது யாது?

கடினமான அல்லது இறுக்கமான உணர்வுடைய வாசகன் கூட, குறிப்பிட்ட இலக்கியத்தில், அது கூறும் வாழ்க்கைச் சித்திரத்தோடு ஒன்றிவிடுகிறபோது, மனம் கசிந்து விடுகிறான்; நெக்குருகி விடுகிறான் என்று சார்த்தர் கூறுகிறார்.

‘கலை, கலைக்காகவே’ என்ற கொள்கை பற்றி ஏ.சி.பிராட்லி கூறுவது யாது?

ஏ.சி.பிராட்லி, கலை ஒரு தனி உலகம். அதனை அனுபவிக்கத் தொடங்குகிறபோது, புறவுலகு நினைவே சிறிதும் வரலாகாது. கற்பனையின் துணையுடன் கவிதை, சில அனுபவங்களை வெளியிடுகின்றது. அவற்றை நாமும் அப்படியே பகிர்ந்து கொள்ளலாமே தவிர, வேறு பயன் தேடக் கூடாது என்று சொல்கிறார்.

சிலம்பு எனும் பாட்டுடைச் செய்யுளை இளங்கோவடிகள் எழுதுவதற்கு உந்துதலாக இருந்த காரணங்கள் என்ன?

அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்

எனும் மூன்று உண்மைகளை நிலைநாட்டுவதற்காக ஆகும்.

காந்தியடிகளுக்கு மன எழுச்சி தந்த எழுத்தாளர்கள் யார்?

காந்தியடிகளுக்கு மன எழுச்சி தந்த எழுத்தாளர்கள் ஜான்ரஸ்கின், ருசிய நாவலாசியரியர், லியோ டால்ஸ்டாய் ஆகியோராகும்.

கலையின் நோக்கம் பற்றித் தமிழ் மரபில் ஆழமாகவேரூன்றியுள்ள கருத்து, யாது?

    கலை இலக்கியத்தின் நோக்கம் வாழ்க்கையைச் சித்திரிப்பது; வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு ஓரளவாவது உதவுவது ஆகும்.

கலையின் நோக்கம் வெற்றிபெற வேண்டுமானால்,அது எவ்வாறிருக்க வேண்டும்?

கலையின் பண்பும் பயனும் இணைந்து அமைகிறபோது தான், கலையின் நோக்கம் வெற்றி பெறும்.

கலை என்றால் என்ன? விளக்குக?

கலையென்றால், சொல்லுகிற அல்லது சொல்ல விரும்புகிற செய்திகளை அழகும் நேர்த்தியும் படச் சொல்வது.கலைகளின் வகைகள் யாவை?