நின்ற சொல்லர்
எனத் தொடங்கும் கபிலர் பாடல் (நற்றிணை – 1).
கபிலர்
குறிஞ்சித்திணையை மிகச் சிறப்பாகப் பாடிய கபிலர் குறிஞ்சிக் கபிலர் என்றே அழைக்கப்பட்டவர். புலவர்கள் போற்றும் புலவராக, பாரியின் ஆருயிர் நண்பராக, சங்கப் புலவர்களுள் மிகுதியான பாடல்களை வடித்தவராகக் கபிலரை அறிகிறோம். சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே (சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவதுபோல, இவள் உயிர் மிகச் சிறியது; ஆனால் இவள் காதலோ மிகப் பெரியதாய் உள்ளது என்பது இதன் பொருள்) என்பது போன்ற அருமையான உவமைகளும், குறிஞ்சி நில வருணனைகளும், நுட்ப உணர்வு வெளிப்பாடுகளும் கபிலர் கவிதையைத் தனித்து எடுத்துக் காட்டுவன.
கபிலரின் சங்கப்பாடல்கள் 234 ஆகும். அவை நற்றிணையில் 20, குறுந்தொகையில் 29, கலித்தொகையில் 29, ஐங்குறுநூற்றில் 100, பதிற்றுப்பத்தில் 10, அகநானூற்றில் 16, புறநானூற்றில் 30 மற்றும் பத்துப்பாட்டில் குறிஞ்சிப்பாட்டு எனும் நூல்.
திணை : குறிஞ்சி
கூற்று : பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.
தலைவன் பிரியக் கருதியதை அறிந்த தோழி தலைவியிடம் அதனைத் தெரிவிக்கிறாள். தலைவனது அன்பையும் மனப்போக்கையும் நன்கறிந்திருக்கும் தலைவி, அவன் பிரியமாட்டான் என உறுதியாகக் கூறுகிறாள்.
தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள்: ‘தோழி! என் தலைவர் நிலைத்து நிற்கும் வாய்மைச் சொல்லுடையவர்; பழகப்பழக நீடிக்கும் இனிமையுடையவர்; ஒரு நாளும் என் தோள்களைப் பிரிந்தறியாதவர். அவரைப் போன்ற மேலானவர்களுடைய நட்பு தாமரைத் தாதையும் சந்தனத் தாதையும் ஊதி எடுத்துச் சந்தன மரத்தில் அமைத்த தேன் இறால் போன்ற மேன்மையுடையது. நீரில்லா உலகம் வாழ முடியாததுபோல, ‘அவரில்லாமல் நான் வாழமாட்டேன்’ என்பதை அவர் அறிவார். பிரிவினால் ஏற்படும் என் நெற்றிப் பசலைக்கே அஞ்சுபவர் என்னைப் பிரிதலாகிய சிறுமைச் செயல் செய்வாரா? சொல்!’
பாடலில் தெரியும் சுவை உவகைச் சுவை. (உவகை = மகிழ்ச்சி) தலைவியின் உவகை, தலைவன் மீது அவள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றியது. தலைவனது சொல்லும் செயலும் உணர்வும் மேலானவை என்பதை அவள் சொற்கள் உணர்த்துகின்றன. இலட்சியக் காதல் எப்படியிருக்கும் என்பதை இத்தலைவியிடம் தெரிந்து கொள்கிறோம் அல்லவா! கபிலர், உயர்ந்த மானிடப் பண்புகள் சிலவற்றை இப்பாடலில் சுட்டிக் காட்டுகிறார்: 1) சொன்ன சொல்லை மீறுவது கூடாது 2) உண்மையான அன்புறவு நீடித்து இனியதாக இருப்பது.
அழுந்துபட வீழ்ந்த
எனத் தொடங்கும் பெரும்பதுமனார் பாடல் (நற்றிணை – 2).
பெரும்பதுமனார்
மீளிப் பெரும்பதுமனார் என்றும் இவர் வழங்கப்படுகிறார். பாலைத்திணையைச் சிறப்பாகப் பாடியவர். திருமணத்துக்கு முன்னர், தலைவியின் சிலம்பைக் கழற்றி நீக்கும் சிலம்புகழி நோன்பு என்னும் வழக்கம் இருந்ததை இவர் பாடலால் உணர்கிறோம்.
திணை : பாலை
கூற்று : உடன்போக்கில் செல்லும் தலைவனையும் தலைவியையும் இடைச்சுரத்தில் கண்டோர் தமக்குள் சொல்லிக் கொண்டது.
(உடன்போக்கு : தோழியின் தூண்டுதலால் தலைவியை மணந்து கொள்வதற்காகத் தலைவன் அவளைப் பிறர் அறியாமல் அழைத்துச் செல்லுதல். சுரம் : பாலைவழி)
கண்டோர் கூறுவது : ‘பெரிய குன்றம்; தழைத்த ஈச்ச மரங்கள் நிறைந்த காடு; காற்றுச் சுழன்றடிக்கிறது. புலிக்குட்டிகள் வழிச் செல்வோரின் தலைகளை மோதிச் சிதறிச் சிவந்த தலையும் குருதி படிந்த வாயுமாகக் காட்சி தருகின்றன. மாலைப் பொழுதில் அவை தாம் பதுங்கியுள்ள மரலின் தூறுகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. வழிநெடுக இண்டங்கொடிகளும் ஈங்கையும் பரவிக் கிடக்கின்றன. இத்தகைய கொடிய பாலை வழியில், இரவில், இந்த இளம்பெண்ணை முன்னே நடக்கவிட்டுப் பின்செல்லும் இந்தத் தலைவனின் உள்ளம் கொடியது; வேகக்காற்றுடன் மழைபெய்யும் போது பாறைகளைப் புரட்டி விடுகின்ற இடியைவிட மிகக் கொடியது இவன் உள்ளம்.’
இளையோன் உள்ளம்
காலொடு பட்டமாரி
மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே
எனும் கண்டோர் கூற்றில் வெளிப்படையாகத் தெரிவது உயிரைப் பொருட்படுத்தாத ஒரு காதல் பிணைப்பு.
(கால் = காற்று; உரும் = இடி; மரல் = கற்றாழை; ஈங்கை = ஒருவகைக்கொடி)
‘ஈன் பருந்துயவும்’
எனத் தொடங்கும் இளங்கீரனார் பாடல் (நற்றிணை – 3).
இளங்கீரனார்
பாலைத்திணையையும், பாலை நிலத்து வேடுவர் இயல்புகளையும் சிறப்பாகப் பாடியுள்ள இப்புலவர் வேடர் மரபில் வந்தவர் எனக் குறிப்பிடப்படுகிறார். தலைவியின் இனிமைக்கு, வினை (மேற்கொண்ட செயல்) முடித்தலால் வரும் இனிமையை உவமை காட்டிய இவரது கவிதை அகம்-புறம் இரண்டையும் சிறப்பாக இணைக்கிறது.
திணை : பாலை
கூற்று : முன்னொரு முறை பொருள்வயின் பிரிந்த தலைமகன் மீண்டும் பொருள் தேடப் புறப்படுமாறு தூண்டும் தன் நெஞ்சை நோக்கிச் சொல்லியது.
முன்னைய பிரிவின் போது, மாலைப் பொழுதில், தன் தலைவி எவ்வாறு வருந்துவாள் என்பதை நினைத்து வருந்தியிருந்த தலைவன், அதனை இப்போது தன் நெஞ்சிற்கு நினைவுபடுத்துகிறான்.
தலைவன் பேசுகிறான்: ‘நெஞ்சே! வழிப்போக்கரைத் துன்புறுத்தி வாழும் வில்வீரர்களின் பாலை நிலக்குடியிருப்பு அது. குஞ்சுகளை ஈன்ற (குஞ்சு பொரித்த) பருந்து அசதியுடன் தங்கியிருக்கும் வேப்ப மரத்தின் புள்ளி நிழலில் சிறுவர்கள் நெல்லிக்காயைக் கொண்டு பாண்டில் ஆடுவர். வெம்மையான அச்சிற்றூரில் தலைவியைப் பிரிந்து தனித்திருந்த போது என் மன வலிமையைக் கொல்லும் மாலைப் பொழுது வரும். கருதிய செயலை முடித்தால் எத்தகைய இனிமை கிட்டுமோ அது போன்ற இனிமையுடைய நம் தலைவி இந்த மாலைப்பொழுதில் விளக்கேற்றி அதன் முன் நின்று ‘அவர் இன்னும் வரவில்லையே’ என வருந்திக் கொண்டிருப்பாள் என நினைத்து நான் வருந்தினேன் அல்லவா!’
‘இதனை நன்கறிந்த நீ இப்போது பொருளுக்காகத் தலைவியைப் பிரியத் தூண்டலாமா?’ என்பது தலைவன் நெஞ்சினிடம் கேட்காமல் கேட்கும் கேள்வி. தலைவனுக்குள் நிகழும் மனப்போராட்டத்தில் பொருளாசையை வெல்கிறது காதல் உணர்வு. “வினை முடித்தன்ன இனியோள்” என்று தலைவியைக் குறிப்பிடுவது, அவளைப் பிரிந்து சென்று அடையக் கூடிய இனிமை வேறில்லை என்பதைப் புலப்படுத்துகிறது.
மரத்திலுள்ள பருந்துக்கு வருத்தம்; மரத்தடியில் விளையாடும் சிறுவர்க்கு மகிழ்ச்சி! இந்தக் காட்சி பிரிவை எண்ணி வருந்தும் தலைவனையும் பொருளை எண்ணி மகிழும் நெஞ்சையும் குறிப்பாக ஒப்புமைப்படுத்துவதை உணரலாம்.
“கானலஞ்சிறுகுடி”
எனத்தொடங்கும் அம்மூவனார் பாடல் (நற்றிணை – 4).
அம்மூவனார்
இவர் நெய்தல் திணையைப் பாடுவதில் சிறந்தவர். நெய்தல் நில வளங்களும் அழகுகளும் இவர் பாடலிற் காணப்படும் சிறப்பியல்புகள் ஆகும். ஐங்குறுநூற்றில் நெய்தல் திணைப்பாடல்கள் நூறும் இவர் பாடியவையே. கடற்கரைப் பட்டினங்களாகிய தொண்டியும், கொற்கையும் இவர் பாடல்களில் சிறப்பிக்கப்படுகின்றன. இவர் சேர நாட்டைச் சேர்ந்தவர் எனக் கருதப்படுகிறார்.
திணை : நெய்தல்
கூற்று : தலைவன் சிறைப்புறமாக நிற்கத் தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.
களவுக் காதலைப் பிறர் அறிந்தால் அலர் தூற்றுவர்; அன்னை இற்செறிப்பாள் என்பதனைத் தலைவியிடம் பேசுவது போலத் தலைவனுக்குச் சொல்லித் ‘தலைவியை மணந்து கொண்டு உனது ஊர்க்கு அழைத்துச் செல்வதே நல்லது’ எனக் குறிப்புணர்த்துகிறாள் தோழி. (சிறைப்புறம்: வேலிப்புறம்: அலர்: களவுக் காதலை அறியும் அயலார் பழிதூற்றுதல். வரைவு கடாதல் : திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுதல்.)
தோழி தலைவியை நோக்கிப் பேசுகிறாள் : ‘தோழி ! பரதவர்கள் மீன் பிடிக்கக் கடல் மீது செல்வதற்காக நல்லநேரம் பார்த்துப் புன்னையின் செழிப்பான நிழலில் தங்கியிருப்பர். மீன் பிடி வலைகள் மணலில் புலர்ந்து கொண்டிருக்கும். அத்தகைய கடல்துறைத் தலைவராகிய நம் தலைவரிடம் சென்று, நமக்குண்டாகிய பழிச்சொல்லை அன்னை அறிந்தால் இங்கே சந்தித்தல் அரிதாகிவிடும் என்பதைச் சொல்லிவிடலாமா? சொன்னால் அவர் நம்மைத் தம் ஊர்க்கு அழைத்துச் செல்ல மாட்டாரா? கடற்கழிகள் சூழ்ந்த அவரது ஊர் இனிய காட்சிகள் நிறைந்தது; உப்பு வாணிகரின் ஆரவாரத்தில் பசுக்கூட்டங்கள் திடுக்கிட்டெழும்; அவர்களின் வண்டிச்சக்கரங்கள் மணலில் எழுப்பும் நறநற எனும் ஓசைகேட்டுக் கழனியில் உள்ள நாரைகள் அஞ்சும். அவ்வூர்க்கு நம்மைக் கொண்டு செல்ல மாட்டாரா?’
முறைப்படி தலைவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் குறிப்பாகத் தெரிகிறது கவிதையில். வண்டிச்சக்கரம் எழுப்பும் ஓசைக்கு நாரைகள் அஞ்சும் என்பது, தலைவன் மணம்பேச வரும் முரசு ஒலி கேட்டால் அலர் தூற்றுவோர் அடங்குவர் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது.
“நீர்வளர் ஆம்பல்”
எனத் தொடங்கும் பரணர் பாடல் (நற்றிணை – 6).
பரணர்
தலைசிறந்த புலவரான கபிலருக்குப் பரணர் நண்பர். இவரும் தலைசிறந்த புலவரே. இலக்கணத்தில் உம்மைத் தொகைக்கு எடுத்துக் காட்டாகக் ‘கபிலபரணர்’ எனும் தொடரையே காட்டுவர். இது இவ்விருவரின் நட்பை மட்டுமன்றி, ஒப்பான புலமை மேம்பாட்டையும் குறிப்பதாகும். அகப்பாடல்களில் மன்னர், வள்ளல்கள், ஊர்கள் பற்றிய புறச் செய்திகளைப் பொருத்தமாக இணைத்துப் பாடுவதில் பரணர் இணையற்றவர். இவர் பாடலுக்குப் பரிசாகக் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் என்ற சேரமன்னன் தன் மகன் குட்டுவன் சேரலையே வழங்க முன் வந்தான் என்பது, பரணர் கவிதையின் மேன்மையையும் செங்குட்டுவனின் தமிழ்ச்சுவை ஆர்வத்தையும் ஒருங்கே உணர்த்தும் செய்தியாகும்.
திணை : குறிஞ்சி
கூற்று : இரவுக்குறியில் வந்து தலைவியைச் சந்திக்க முடியாது வருந்தும் தலைவன் தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. அதாவது இரவுக்குறி வேண்டி வந்தவன், தான் வந்திருக்கும் செய்தியைத் தலைவியிடம் போய்ச் சொன்னால் போதும்; ‘யார்’ என்று கேட்காமலே அவள் பெரிதும் மகிழ்வாள்; அவ்வாறு போய்ச்சொல்ல யாருமில்லையே என்று வருந்துகிறான். (இரவுக்குறி : தலைவன் தலைவியை இரவில் சந்திக்க ஏற்பாடு செய்து வைத்த இடம்)
தலைவன் தன் நெஞ்சை நோக்கிப் பேசுகிறான் : ‘என் நெஞ்சே ! ஆம்பல் பூவின் தண்டை உரித்தாற் போன்றிருக்கிற, சற்று அழகு குறைந்த மாமை நிறமும், குவளைக் கண்ணும், தேமல் படர்ந்த அல்குலும், பெரிய தோள்களும் உடைய நம் தலைவியிடம் நமது வருகையை யாரேனும் சென்று தெரிவித்தால் ‘அவர் யார்?’ என்று கேட்கமாட்டாள். குமிழ மரத்தின் கனிகளை இளமான்கள் விரும்பி உண்ணும் வல்வில் ஓரியின் கானம் போல நறுமணம் கமழ்கின்ற அடர்ந்த கருங்கூந்தலையுடைய அவள் ‘யாம் வந்திருக்கிறோம்’ என்பதைக் கேட்டவுடனே களிமயக்கம் கொள்வாள்’
‘அவ்வாறு சென்று சொல்ல யாருமில்லையே !‘ எனக் குறிப்புணர்த்தித் தனக்கு உதவுமாறு தோழியைத் தலைவன் வேண்டுவதை நாம் உணர்கிறோம். தலைவி அவனை நன்கறிவாள் என்பதையும் அவனுக்காகவே காத்திருக்கிறாள் என்பதையும் “இவர் யார் என்குவள் அல்லள்”, “பெரும்பேதுறுவள் யாம் வந்தனம் எனவே” எனும் கூற்றுகளால் உணரலாம்.
மானுக்குக் குமிழ மரத்தின் கனிபோலத் தலைவிக்குத் தலைவன் வரவு இனியது எனும் குறிப்புப் பொருள் கவிதையில் உணர்த்தப்படுகிறது.
வல்வில் ஓரி என்னும் மன்னனைப் பற்றிய குறிப்பு வரலாற்றை அறிய உதவுகிறது.
“சூருடை நனந்தலை”
எனத் தொடங்கும் நல்வெள்ளியார் பாடல் (நற்றிணை – 7).
நல்வெள்ளியார்
இவர் பெண்பாற் புலவர் ஆவார். இவரது ஊர் மதுரை. நற்றிணையில் 2, குறுந்தொகையில் 1, அகநானூற்றில் 1 என இவரது பாடல்கள் நான்கே எனினும் அழகான வருணனைகளாலும், மறைமுக உணர்ச்சிச் சித்திரிப்பினாலும் உயர்ந்த தரமுடையவை அவை.
திணை : பாலை
கூற்று : அறத்தொடு நிற்றலின் பின் (காதல் வெளிப்படுத்தப்பட்ட பின்பு) தலைமகன் உடனே மணந்து கொள்ளாமல், பொருள் தேடப் பிரிந்து போயிருக்கிறான். அவன் வருவதாகச் சொன்ன கார்காலம் வந்து விட்டது. தலைவி வருந்துகிறாள். மழைக்காலம் வந்துவிட்டதை அறியும் தலைவன் வந்துவிடுவான் எனத் தோழி தேற்றுகிறாள்.
தோழி தலைவியை நோக்கிப் பேசுகிறாள் : ‘யானை மூங்கில் நெல்லைத் தின்றுவிட்டு மகிழ்ச்சியுடன் உறங்கும் மலைப்புறம்; சந்தன மரங்கள் நிறைந்த “வாடு பெருங்காடு” அது. அங்கே பெருமழை பொழிந்தால் அச்சந்தரும் ஆழமான சுனைகளில் நீர் நிறையும்; மலைப்பக்கங்களில் அருவிகள் ஆர்ப்பரிக்கும்; கற்களைப் புரட்டிக் கொண்டு வேகமாக ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மூங்கில்களை மூழ்கடித்துக் காட்டில் மோதி ஆர்ப்பரிக்கும். இதோ, இப்போதே மழை பொழிய வானம் மின்னி முழங்கிக் கொண்டிருக்கிறது.’
தோழியின் பேச்சு வெறும் மழை வருணனையாக மட்டுமே நின்று விடுகிறது. வெறும் வருணனையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கவிதை அமைவது சங்க இலக்கியத்தில் இல்லை. ஆகவே தோழியின் பேச்சில் மறைபொருள் இருக்க வேண்டும். பல காலம் நீரின்றி வறண்டு கிடந்த சுனைகளும் அருவிகளும் காடும் செழிக்குமாறு மழை கனத்துப் பெய்யும் என்ற வருணனையில் பல நாட்கள் தலைவனைப் பிரிந்து தவித்துக் கொண்டிருந்த தலைவி மகிழுமாறு தலைவன் வந்துவிடுவான் என்ற இறைச்சி (குறிப்பு)ப் பொருள் அமைந்திருக்கிறது. அதேபோல் கவலையற்றுத் துயிலும் யானையும் இனிக் கவலையற்றுத் துயில விருக்கிற தலைவியைக் குறிப்பாக உணர்த்துகிறது.
“அழிவில முயலும்”
எனத் தொடங்கும் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல் (நற்றிணை – 9).
பாலை பாடிய பெருங்கடுங்கோ
‘பாலை பாடிய’ என்னும் அடைமொழி, இப்புலவர் பாலைத் திணையைச் சிறப்பாகப் பாடியவர் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. இவர் சேர அரச மரபைச் சேர்ந்தவர். அதனால் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ எனவும் அழைக்கப்படுபவர். செல்வம் தேடுதலின் சிறப்பு – முறையற்ற வழியில் வரும் செல்வம் – செல்வத்தின் இழிவு – கொடை என்று இவ்வாறு தம் பாடல்களில் பொருள் பற்றிப் பல இடங்களில் இவர் கூறியிருக்கும் கருத்துகள் இவரை ஏனைய புலவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவன. இவர் மன்னர் குடியிற் பிறந்து வளர்ந்தமையால் இவ்வகைக் கருத்தோட்டம் இவருக்கு அமைந்திருக்கக் கூடும். ‘தலைவியைப் பிரிந்து, பிரிந்த இடத்தில் மனம் பொருந்தியிருப்பேனாயின் இரவலர்கள் என்னைத் துறந்து போகும் நாட்கள் மிகுதியாகட்டும்’ என வஞ்சினம் கூறும் இவரது பாடலின் தலைவன் இவரது கருத்தையே எதிரொலிக்கிறான் என்பதை உணரலாம்.
திணை : பாலை
கூற்று : உடன் போகின்ற தலைமகன் தலைமகளுக்கு உரைத்தது. அதாவது பயணத்தில் துன்பமான பகுதிகளைத் தாண்டிய பின்பு சோலைகளும் சிற்றூர்களும் நிறைந்துள்ள எஞ்சிய பகுதியில் தலைவி விளையாடி மகிழ்ந்து மெல்ல வரலாம் எனக் கூறித் தலைவன் அழைத்துப் போகிறான்.
தலைவன் தலைவியை நோக்கிக் கூறுகிறான்: ‘தலைவி ! தம்செயல் சிதைவில்லாமல் முடிய வேண்டும் என்பதற்காகத் தெய்வத்தை வழிபடுவோர், அத்தெய்வத்தைக் கண்ணெதிரே கண்டாற்போல, உனக்காக ஏங்கியிருந்த வருத்தமெலாம் தீர உன்னை அடைந்துவிட்டேன். இப்போது நாம் சென்று கொண்டிருக்கிற வழியில் மாமரத்தின் அரும்புகளைக் கோதி மகிழ்ந்து குயில்கள் கூவுகின்ற குளிர்ந்த சோலைகள் நிறைந்துள்ளன; அடுத்தடுத்த சிறு சிறு ஊர்களும் உள்ளன. இனி நீ வருத்தமின்றி மகிழ்ந்து செல்லலாம். புன்க மரத்தின் தளிரைச் சுணங்கு நிறைந்த மார்பில் அப்பிக் கொண்டு, நிழல் காணும்போதெல்லாம் நெடுநேரம் தங்கி, மணல் காணும்போதெல்லாம் சிற்றில் செய்து விளையாடி மகிழ்ச்சியாகச் செல்லலாம்.!’
இவர்களுக்கு இரண்டு மகிழ்ச்சிகள் இருப்பது தெரிகிறதல்லவா! காதலுக்கு இருந்த இடையூறுகளைத் தாண்டி உடன்போக்கில் வந்துவிட்ட மகிழ்ச்சி ஒன்று: வழிநடைப் பயணத்தின் கொடுமைகளைத் தாண்டிப் பாதுகாப்பான பகுதிக்கு வந்துவிட்ட மகிழ்ச்சி இரண்டாவது. இயற்கையின் அரவணைப்பு தலைவிக்கும் தலைவியின் அரவணைப்பு தனக்கும் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியைத் தலைவனின் வருணனைகளில் காண்கிறோம்.
“அண்ணாந் தேந்திய”
எனத் தொடங்கும் பாடல் (நற்றிணை-10) (ஆசிரியர் பெயர் காணப்படவில்லை).
திணை : பாலை
கூற்று : உடன்போக்கும் தோழி கையடுத்தது.
அதாவது தலைவியின் விருப்பப்படி அவளைத் தலைவனிடம் கைபிடித்துக் கொடுத்த தோழி ‘உன் சொல்லை நம்பி உன்னுடன் வரும் இவளை முதுமை எய்திய பிறகும் கைவிடாது பாதுகாப்பாயாக’ என்று சொல்லி இரவில் வழியனுப்பியது. (உடன்போக்கு: மணந்து கொள்வதற்காக யாருமறியாமல் தலைவன் தலைவியை அழைத்துச் சென்று விடல்: கையடுத்தல்: கைபிடித்துக் கொடுத்தல்)
தோழி தலைவனை நோக்கிச் சொல்கிறாள். ‘தலைவ! இனிய, கடுப்பு மிகுந்த கள்ளையும் அணிமணிகள் பூண்ட பெரிய தேர்களையும் உடைய சோழ மன்னர்கள் கொங்கரை வென்று அடக்குவதற்காக ஒரு மாவீரனைப் பணியமர்த்தினர். அவன் யானைகள் நிறைந்த பேஎர் எனும் ஊரின் தலைவனான பழையன் ஆவான். அவனது தனிச்சிறப்பு அவனிடமிருந்த குறிதப்பாத வேற்படை. அந்த வேல்போல என்றும் தவறாதது உன் வாக்குறுதி எனத் தலைவி நம்பி ஏற்றுக் கொண்டிருக்கிறாள். இப்போது நான் உன்னிடம் ஒப்படைக்கும் இத்தலைவியின் அண்ணாந்து உயர்ந்த மார்புகள் தளர்ந்தாலும், பொன்மேனியில் நீலமணிபோலப் படர்ந்து கிடக்கும் நீண்ட அழகிய கூந்தல் நரைத்தாலும் இவளைப் பிரியாமல் பாதுகாப்பாயாக !‘
அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்….
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
என்ற அடிகளில் தோழி வெளிப்படுத்தும் உணர்வு உண்மைக் காதலின் உயர்வைப் புலப்படுத்துகிறது. வரலாற்றுத் தலைவனான பழையனின் குறிதப்பாத வேலை உவமையாக்கியதன் மூலம் தலைவன் தலைவிக்குத் தந்த வாக்குறுதியின் தீவிரத் தன்மை புலப்படுத்தப்படுகிறது.
“எழாஅயாகலின்”
எனத் தொடங்கும் கபிலர் பாடல் (நற்றிணை – 13).
திணை : குறிஞ்சி
கூற்று : இயற்கைப் புணர்ச்சியின் பின் தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்துப் பேசுவது கண்டு சொல்லியது. அதாவது தலைவனுடன் தலைவிக்கு இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்திருக்கிறது. தலைவியின் கண்சிவப்பு முதலிய உடல் வேறுபாடுகள் கண்டு இதை ஊகித்த தோழி தலைவியிடம் காரணம் கேட்கிறாள்; தலைவி உண்மையை மறைத்துப் பேசுகிறாள். எனினும் அவளது களவு ஒழுக்கத்தைத் தான் அறிந்து கொண்டிருப்பதைத் தோழி மறைமுகமாக உணர்த்துகிறாள். (இயற்கைப் புணர்ச்சி : தலைவனும் தலைவியும் முதன்முதலாகத் தாமே கண்டு புணர்தல்)
தோழி தலைவியை நோக்கிப் பேசுகிறாள் : ‘தினைப்புனம் காப்போர், புனத்தைத் தின்றழிக்க வந்த பன்றி முதலிய விலங்குகளை எய்துகொன்று, அவற்றினின்றும் பறித்தெடுத்த அம்புபோலச் சிவந்த குளிர்ந்த கண்களையும் அழகிய தோள்களையும் உடைய தலைவியே ! ஓங்கிய மலையில் மயில்களின் கூடுகள் உள்ளன; அவற்றின் மீது வேங்கைப் பூக்கள் உதிர்வது கொல்லன் உலையில் பொறிகள் சிதறுவது போல் உள்ளது. தினைக்கதிர்களைக் கிளிகள் கவர்ந்து போவதை அம்மயில்கள் அறியும். கிளிகளோ தம் செயலை யாரும் அறியவில்லை என நினைத்துக் கொள்கின்றன. சரி. அக்கிளிகளை ஓட்டுவதற்காக இவ்விடத்தைவிட்டு நீ எழுந்து வராவிட்டாலும், அயலாரிருக்கும் இவ்விடத்தில் உன் அழகு கெடுமாறு அழாமலாவது இரு’.
கிளிகளின் களவை மயில்கள் அறிந்திருப்பது கிளிகளுக்குத் தெரியாது என்னும் வருணனை தலைவியின் களவைத் தோழி அறிந்திருப்பது தலைவிக்குத் தெரியாது என்னும் குறிப்புப் பொருளை உணர்த்துகிறது. விலங்கின் மீது பாய்ந்து மீண்டும் பறித்தெடுக்கப்பட்ட சிவந்த அம்பு, ஒரு தலைவன் மீது பாய்ந்து மீண்ட தலைவியின் சிவந்த கண்ணுக்கு உள்ளுறை. ‘அழாதே’ என்பது அயலார் புரிந்து கொண்டு அலர்தூற்றக் கூடும் என்ற எச்சரிக்கை ஆகும்.
“புணரிற் புணராது பொருளே”
எனத் தொடங்கும் சிறைக்குடியாந்தையார் பாடல் (நற்றிணை – 16).
சிறைக்குடி யாந்தையார்
சிறைக்குடி எனும் ஊரைச் சார்ந்தவர் ஆந்தையார் எனும் இப்புலவர். இவர் பாடல்கள் தலைவன்-தலைவியருக்கிடையேயுள்ள, பிரியவே முடியாத குன்றாத காதல் பெருக்கைத் திரும்பத் திரும்பச் சொல்கின்றன. ஒரு பூவிதழ் இடையே வந்தாலும் பல ஆண்டுகள் பிரிந்திருந்தாற் போலத் துடிக்கும் மகன்றிற் பறவைகளின் உணர்ச்சியைத் தலைவன் – தலைவியிடையே கண்டு பாடியவர் இப்புலவர்.
திணை : பாலை
கூற்று : பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவழுங்கியது.
அதாவது, தலைவியைப் பிரிந்து சென்று பொருளீட்டத் தூண்டும் நெஞ்சை நோக்கிப் ‘பொருளைவிடத் தலைவியின் இன்பமே சிறப்பானது’ என்று கூறிப் பயணத்தை நிறுத்திவிடுதல். (பொருள் கடைக்கூட்டல் = பொருளைத் தேடுமாறு தூண்டல்; செலவு அழுங்குதல் = பயணத்தை தள்ளிவைத்தல்)
தலைவன் பேசுகிறான்: ‘என் நெஞ்சே ! தலைவியோடு சேர்ந்து மகிழ்ந்திருந்தால் பொருள் கிட்டாது என்பது உண்மையே ! ஆனால் பொருளுக்காக அவளைப் பிரிந்து சென்றால், அவளது புணர்ச்சி என்றுமே கிட்டாமல் போய்விடும்.
புணரிற் புணராது பொருளே பொருள்வயிற்
பிரியிற் புணராது புணர்வே
ஆகவே இவ்விரண்டையும் சீர்தூக்கிப்பார். நல்லது எதுவோ அதனைத் தேர்ந்தெடு. பொய்கை நீரில் மீன்செல்லும் பாதை இருந்த இடம் தெரியாது உடனே மறைவது போலப் பொருள் உடனே மறைந்து போகும். இந்த உலகையே மரக்காலாகக் கொண்டு ஏழு மரக்கால் அளவுக்குப் பெரும் நிதியைப் பெறுவதானாலும் அதனை நான் விரும்பேன். தலைவியின் செவ்வரி பரந்த குளிர்ந்த கண்கள் என்னை விரும்பி இனிமையாகப் பார்க்கும் பார்வையால் நான் பிணைக்கப்பட்டேன். பொருள் எப்படியோ போகட்டும்!’
பிரிந்தால் தலைவி இறந்து போவாள் என்பதைக் குறிக்கவே தலைவன் “பிரியின் புணராது புணர்வே” என்று சொல்கிறான். அவள் கண்களின் ஈர்ப்பு எவ்வளவு பெருநிதியையும் துச்சமாகக் கருதச் செய்யும் என்பதைச் ”சேயரி மழைக்கண் அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தனன்” என அவன் கூறுவதால் உணரலாம்.
தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போல
(நற்றிணை – 1)
தேன் கூடு காதல் கூட்டின் தன்மையை அழகாக உணர்த்திவிடுகிறது அல்லவா !
இடையூறுகள் பலவற்றையும் தாண்டி விடுகின்றனர் உடன்போக்கில் செல்லும் காதலர்கள். தலைவன் உள்ளத்தில் பெருக்கெடுக்கும் மகிழ்ச்சியை எப்படிச் சொல்வது? அவனைச் சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகளில் அவனது மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கச் செய்கிறார் பாலைபாடிய பெருங்கடுங்கோ. குளிர்ந்த சோலைகள், மகிழ்ந்து இசைக்கும் குயில்கள், எங்கும் இனிய நிழல், தலைவி விளையாட மணல், அருகருகே சிற்றூர்கள் – எனவரும் புறச்சூழலை அவனது அகமகிழ்ச்சிக்குப் பொருத்தமான பின்னணியாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா ! (நற்றிணை – 9)
பாலை நிலம் கடும் வெப்பமுடையது; அங்கு வாழ்வோர் வழிப்போக்கரைக் கொள்ளையடித்துத் துன்புறுத்தி வாழ்கிறவர்கள். இந்த விதமான புற-அகக் கொடுமைகள் இரண்டையும் இணைத்து ஒரே அடைமொழியில் சொல்கிறார் இளங்கீரனார். வெம்முனைச் சீறூர் – (நற்றிணை-3)
மாலைப் பொழுது பிரிந்துள்ளவர்களின் மனவலிமையைச் சிதைக்கிறது. பொழுதும் மனதும் முட்டிக் கொள்வதை, “உரன்மாய் மாலை“ எனச் சித்திரிக்கிறார். (நற்றிணை – 3) இவ்வாறு இயற்கை மனித உணர்வுகளுக்குள் குறுக்கும் நெடுக்குமாக இயங்குகிறது.
இயற்கைப் பொருள்களைக் கொண்டு உள்ளுறை, இறைச்சி எனக் குறிப்புப் பொருள் புலப்படுத்துவது சங்கப்புலவரின் வெளிப்பாட்டு முறை எனக் கண்டோம். உப்பு வணிகரின் வண்டிச் சக்கர ஓசையில் நாரைகள் திடுக்கிட்டு நிற்பது இயற்கைக்காட்சி. காட்சிக்கு உள்ளே, தலைவனின் மணமுரசொலி கேட்டுத் தலைவியைப் பழிதூற்றி வந்தவர்கள் திடுக்கிட்டு அடங்கும் வாழ்க்கைக் காட்சி மறைவாகப் பொதிந்திருக்கிறது. (நற்றிணை – 4)
அழிவில முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கட்கண்டாங்கு
(நற்றிணை – 9)
‘அழியக் கூடாத நன்முயற்சியில் ஈடுபட்டவர்கள், அதற்கு உறுதுணையாக வேண்டி வணங்கிய தெய்வத்தை எதிரில் கண்ணால் கண்டது போல’ எனத் தன் உணர்ச்சியைச் சொல்கிறான். அவளை அடையுமுன்பு எந்த அளவுக்கு உணர்ச்சி அழுத்தத்தில் அவன் இருந்திருப்பான் என்பதை இந்த உவமை நன்றாகப் புரியவைக்கிறது அல்லவா !
தலைவனிடம் தலைவியை ஒப்படைத்து உடன்போக்கில் வழி அனுப்புகிறாள் தோழி. இரவு நேரம். மூவரும் அதிகம் பேசிக்கொள்ள முடியாதபடி இறுக்கமான உணர்ச்சிகளில் இருக்கிறார்கள். இந்நிலையில் தோழி மட்டும் பேசுகிறாள். இனித் தலைவியின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும்? மன உளைச்சல்களை அடக்கிக்கொண்டு அறிவார்ந்த ஒரு மனநிலையில் நின்று கொண்டு பேசுகிறாள். ‘தலைவியின் புற அழகுகளான அழகிய மார்புகள், நீண்ட கருங்கூந்தல் இவைகளை விட அவளது அக அழகாகிய காதல் – உன் சொற்களைப் ‘பிழையா நன்மொழி’ எனப் போற்றும் அழியாத காதல் – அதுவே மேலானது; ஆகவே,
அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி
(நற்றிணை – 10)
என்று சொல்லி ஒப்படைக்கும் காட்சி நெஞ்சை நெகிழவைப்பது.
கபிலர் காட்டும் நாடகக் காட்சி ஒன்று. காட்சியின் நடுவில்தான் நாம் நுழைகிறோம். ‘எழுந்துவா! வராவிட்டாலும் சரி, அழாமலாவது இரு, அயலார் பார்க்கிறார்கள்’ என்ற தோழியின் குரல், அழுது கொண்டிருக்கும் தலைவியைச் சிலர் பார்த்துவிட்டுப் போவது போல ஒரு காட்சியைக் காட்டுகிறது.
எழாஅ யாகலின் எழில்நலந் தொலைய
அழாஅ தீமோ நொதுமலர் தலையே
(நற்றிணை – 13)
இங்கு என்ன நிகழ்கிறது? ஏன் இது நிகழ்கிறது என்பன போன்ற புதிர் வினாக்கள் நம்முள் எழுகின்றன. கவிதைத் தொடக்கம் ஆர்வக்கிளர்ச்சியை உண்டாக்குகிறது. காட்சி விரியவிரிய மேலும் விவரங்கள் தெளிவாகி, வாசகனுக்கு உணர்வுச் சமநிலை ஏற்படுகிறது.
தவறாத வாய்மையுடைய தலைவனின் ‘பிழையா நன்மொழி’க்கு ஓர் உவமை வேண்டும். குறிதவறாத பழையன் என்ற வீரத்தலைவனின் வேலை உவமையாக்குகிறார் பெயர் அறியப்படாத ஒரு புலவர். (நற்றிணை – 10)
நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்
என்றும் என்தோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா உலகம் போலத்
தம்மின் றமையா நம்நயந் தருளி
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பறி யலரே
இப்பாடலில் மேற்குறிப்பிட்ட நேரிசை ஆசிரியப்பா அமைப்பு இருப்பதை எளிதாகவே நீங்கள் கண்டு கொள்ள முடியும். எதுகை, மோனைக்காகவோ சந்தத்துக்காகவோ பொருளோட்டத்தை விட்டுக் கவிதை பிசகியிருப்பதாக எங்கும் காணமுடியாது. “நின்ற – நீடு”; “சிறுமை – செய்பு” என்பன போன்ற மோனை அமைப்பும், “என்றும் – என்தோள்”; “தாமரை -தண்டா” என்பன போன்ற வேறொருவகை மோனை அமைப்பும், “நின்ற – என்றும்”; “நறுநுதல் – சிறுமை” என்பன போன்ற எதுகை அமைப்பும் “சாந்தின் – தீந்தேன்” என்பது போன்ற வேறுவகை எதுகை அமைப்பும் இருப்பதைப் பாருங்கள். இவை எதனை உணர்த்துகின்றன? ஓசை ஒழுங்கை எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ள ஆசிரியப்பா இடம் தருகிறது என்பதை உணர்த்துகின்றன. மேலும் “நீரின் றமையா உலகம் போல”, “நறுநுதல் பசத்தல் அஞ்சி” என்ற அடிகளில் எதுகை மோனை எதுவும் இல்லை. ஆசிரியப்பா வடிவம் கவிஞனுக்கு இந்தச் சுதந்திரத்தை அளிக்கிறது.
சில சொற்கள், தொடர்கள் அடுக்கி வருவதன் மூலமாகப் பாடலின் உணர்ச்சியோ பொருளோ சிறப்பான வடிவு பெறுவதுண்டு. தலைவன் தலைவியை உடன் போக்கில் அழைத்துப் போகும் பாடலில்,
நிழல்காண் தோறும்நெடிய வைகி
மணல்காண் தோறும் வண்டல் தைஇ
எனும் அடிகளில் ‘தோறும்’ எனும் சொல் மீண்டும் வருவது தலைவிக்குத் தொடர்ந்து மகிழ்ச்சி தரும் வாய்ப்புகளே வருகின்றன என்பதைப் புலப்படுத்துகிறது. அல்லவா !
அண்ணாந்தேந்திய எனத் தொடங்கும் பாடலில் (நற்றிணை – 10) உள்ள நிகழ்வு, தோழி தலைவியைத் தலைவனிடம் ஒப்படைத்து உடன்போக்கிற்கு அனுப்பிவைப்பது. இயல்பாகச் சொல்வதென்றால் எப்படிச் சொல்வாள்? ‘தலைவி உன் சொல்லை நம்பி, உன்னை நம்பி உன்னுடன் வருகிறாள்; அவள் முதுமை அடைந்த பிறகும் அவளைக் கைவிடாமல் பார்த்துக்கொள்’ என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கவிஞர் இந்த வரிசை முறையை மாற்றி விடுகிறார். ‘தலைவியின் அழகுகள் குன்றி அவள் முதுமை அடைந்த பிறகும் அவளைப் பிரியாது பாதுகாத்துக்கொள்’ என்பதை முதலில் சொல்லி, இந்தக் காதல் பிணைப்புக்குக் காரணமான தலைவியின் நம்பிக்கையையும் அன்பையும் அடுத்துச் சொல்கிறாள். எடுத்துரை முறையில், உரைநடை முறைக்கு மாறான கவிதை முறை இங்கு அமைகிறது. தர்க்க முறையிலான காரணம் – காரியம் என்பது, உணர்வு முறையிலான காரியம் – காரணம் என மாறி வடிவு கொண்டிருப்பதால் கவிதையின் உணர்ச்சி படிப்பவர் மனத்தில் நேரடியாகப் பாய்கிறது.
பாடலின் தொடக்கமும் முடிவும் கவிதையின் சரியான வடிவமைப்புக்கு உதவும். “புணரிற் புணராது பொருளே; பொருள்வயின் பிரியின் புணராது புணர்வே” என ஒரு விவாதம் போல் தொடங்கும் கவிதை (நற்றிணை – 16) இடையே வரும் விவாத அலசல்களுக்குப் பிறகு “எனைய ஆகுக வாழிய பொருளே” என ஒரு தெளிந்த தீர்மானத்துடன் முடிகிறது. கணிதத் தொடக்கமும், செய்முறையும், விடையும்போல அமைந்த ஒரு வடிவமைப்பு இது.
எழாஅயாகலின் எழில்நலம் தொலைய அழாஅ தீமோ எனும் முதலடியில் (நற்றிணை – 13) தலைவி ஏன் அழுகிறாள், அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாதவள் போலப் பாவனை காட்டுகிறாள் தோழி. பாடல் இறுதியில், “மயிலறிபு அறியா மன்னோ பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே” எனத் தலைவியின் களவுக்காதலைத் தான் அறிந்து கொண்டிருப்பதாகவும், அதனைத் தலைவி அறியாள் எனவும் குறிப்புக் காட்டுகிறாள். தொடக்கமும் முடிவும் கவிதையின் தேவைக்கு (ஒருவரை யொருவர் மனத்துக்குள் துழாவிப் பார்த்தல்) ஏற்ற வடிவத்தைத் தருகின்றன.
பாடம் - 2
விரைப்பரி வருந்திய
எனத் தொடங்கும் மருதனிள நாகனார் பாடல் (நற்றிணை-21).
மருதனிளநாகனார்
மதுரையைச் சார்ந்தவர் இப்புலவர்; ஆகவே மதுரை மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார். மருதன் என்பது அவர் தந்தை பெயராகவும் இருக்கக் கூடும். நிலங்களைப் பற்றிய கற்பனைகளும், உள்ளுறைகளும், வெளிப்படை உவமைகளும் இவர் பாடல்களின் சிறப்பியல்புகள். உண்மைக்குச் சூரியனை உவமை கூறியவர் இவர். வீரர்களின் பெயரும் புகழும் எழுதி நடப்பட்டிருக்கும் நடுகற்களைப் பற்றிச் சிறப்பித்துப் பாடியவர் இப்புலவர்.
திணை : முல்லை
கூற்று : வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
பொருள் தேடுதலாகிய வினையை முடித்துத் திரும்பும் தலைமகன் தலைவியை விரைந்து சென்று காண்பதற்கு ஏதுவாகத் தேரை விரைவாகச் செலுத்துமாறு தேர்ப்பாகனிடம் சொல்லியது.
தலைவன் பாகனிடம், ‘பாகனே ! நம்முடன் வரும் நம் வீரர்கள் மிக வேகமான இந்தப் பயணத்தால் களைப்படைந்துள்ளனர். ஆகவே அவர்கள் இறுகக் கட்டிய இடுப்புக்கச்சையைச் சற்றுத் தளர்த்திக் கொண்டு தாங்கள் விரும்பும் இடங்களில் இடையிடையே தங்கி இளைப்பாறி விரும்பியவாறு மெல்ல நடந்து வரட்டும். நாம் விரைந்து செல்வோம்.
அதோபார், அந்தக் காட்டுக் கோழியை ! உருக்கிய நெய்யில் பாலைச் சிதறினாற் போன்ற குரல்; அழகிய சிறுசிறு புள்ளிகளோடு காண்போர் விரும்பும் அழகு. விடியற்காலையில் மழைநீர் வடிந்த அகன்ற காட்டில் ஈரமண்ணைக் கிளறி மண்புழுவைக் கவர்ந்து தன் பெட்டைக் கோழிக்கு ஊட்டுவதற்காகப் பெருமிதத்துடன் பேடையை நோக்கும் அன்பைப் பார் !
தலைவியை நான் விரைவில் காண வேண்டும். தேரை மிக விரைவாகச் செலுத்து. இதுவரை தீண்டாத தாற்றுமுள்ளால் குதிரையைத் தீண்டி விரைவாகச் செலுத்து’ என்று சொல்கிறான்.
தீண்டா வைமுள் தீண்டி நாம்செலற்கு
ஏமதி வலவ தேரே
(வைமுள் = கூரியமுள்;ஏமதி = ஏவுமதி = ஏவுவாயாக;வலவன் = தேரோட்டி.)
கவிதையில் தலைவியைக் காணத் தீவிர வேட்கை (ஆசை) கொண்ட தலைவனின் அவசரம் புரிகிறது.
தாற்றுமுள்ளை முதன்முறையாகப் பயன்படுத்தத் தூண்டுகிறான். உடன் அழைத்துப் போன பணியாட்களுடன் ஒன்றாகத் திரும்பப் பொறுமையில்லை; அதே நேரம் தன் வேகத்திற்கு அவர்களை வற்புறுத்தவும் விருப்பமில்லை. தேர்ப்பாகனுக்கு அவன் சுட்டிக்காட்டும் காட்டுக் கோழி, உள்ளுறையாகத் தலைவியைக் காணும் வேட்கை மிகுந்த தலைவனையே குறிக்க வருகிறது. புதிய உணவைத் தேடி எடுத்துப் பேடைக்குக் கொடுக்க விரும்பும் கோழியும், புதிய பொருளைத் தேடிச் சேர்த்துக் கொண்டு தலைவியைக் காணவிரும்பும் தலைவனும் உணர்வு நிலையில் ஒத்திருக்கிறார்கள், அல்லவா !
‘மாயோனன்ன’
எனத் தொடங்கும் கபிலர் பாடல் (நற்றிணை-32)
ஆசிரியர் கபிலர் பற்றிய குறிப்பை நற்றிணை – பாடம் எண் 1 இல் காண்க.
திணை : குறிஞ்சி
கூற்று : தலைவிக்குக் குறைநயப்புக் கூறியது.
தலைவியைச் சந்திக்க விரும்புகிறான் தலைவன். அவனுடைய குறைதீர்க்க ஒப்புக்கொண்ட தோழி, தலைவியிடம் அதனை மென்மையாகச் சொல்கிறாள். தலைவியோ தலைவனை அறியாதவள் போலப் பாவனை செய்கிறாள். இதனால் வருந்திய தோழி சற்று வன்மையாகப் பேசித் தலைவனது குறைநீக்க இசையுமாறு தலைவியை வேண்டுகிறாள். (குறைநயப்பு : குறைதீர்க்க வேண்டுவது)
தோழி தலைவியிடம், ‘தோழி ! திருமாலைப் போன்ற கரிய மலைப் புறத்தில், பலதேவனைப் போல வெள்ளருவி வழியும் அழகிய மலைநாட்டுத் தலைவன் நம்மை விரும்பி நாள்தோறும் நம் புனத்தருகே வந்து வருந்தி நிற்கிறான். நான் சொல்லும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள மறுக்கிறாய். என் சொல்லை ஏற்காவிட்டாலும் சரி. நீயே அவன் நிலையைப் பார். என்னைவிட உன் மீது அன்புடைய உன் தோழியரிடமும் பேசி ஆராய்ந்து கொள். அறிய வேண்டியதை அறிந்து அவனோடு அளவளாவு. ஏனென்றால் அவன் வேண்டுகோள் மறுப்பதற்கு அரியதாக உள்ளது.
சான்றோர்கள் தமது நட்பை வேண்டி வந்தவர்களிடம் முதலிலேயே அவர்களின் குணம் செயல்களை ஆராய்ந்து நட்புக் கொள்வர். முதலில் நட்புக் கொண்டுவிட்டுப் பிறகு அவர்களுடைய குணம் செயல்களை ஆராய்ந்து கொண்டிருக்கமாட்டார்கள்’ என்று கூறுகிறாள்.
பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே
நட்புக்கொண்டு விட்டபின் ஆராயக் கூடாது என்று தோழி சொல்வதிலிருந்து தலைவி தலைவனுடன் முன்பே இயற்கைப் புணர்ச்சியில் தொடர்பு கொண்டிருக்கிறாள் என்பது புலனாகின்றது.
நாடாது நட்டலில் கேடில்லை ; நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
எனும் திருக்குறள் (791) கருத்துத் தோழி கூற்றில் அமைந்துள்ளது ஒப்பு நோக்கற்குரியது.
மொத்தத்தில், அகப்பாட்டு மரபில் வெளிப் பேச்சின் பொருள் ஒன்றாகவும் உட்கருத்து வேறொன்றாகவும் இருப்பதற்கு இப்பாடலும் ஓர் எடுத்துக்காட்டு. தலைவி மறுப்பதுபோலிருப்பதும், தோழி கெஞ்சியும் மிஞ்சியும் வேண்டுவதுபோல் பேசுவதும் – இவை எல்லாம் காதலின் நளினமான மறைமகிழ்வு விளையாட்டுக்களே என்பதைப் புரிந்துகொள்வது கடினமில்லை.
இவளே கானல் நண்ணிய
எனத் தொடங்கும் பாடல் (நற்றிணை-45) புலவர் பெயர் காணப்படவில்லை.
திணை : நெய்தல்
கூற்று : குறைவேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது.
அதாவது, தலைவன் தன் குறை கூறிப் பாங்கியிடம் தலைவியைச் சந்திக்க உதவுமாறு பணிந்து வேண்டுகிறான். ‘எம்மைவிட உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவன் நீ. நாங்கள் உனக்குப் பொருத்தமானவர்கள் இல்லை’ எனப் பாங்கி குலமுறை கூறி மறுத்து விலக்குவது. (சேட்படை – விலக்குதல்)
தோழி தலைவனிடம், ‘கடற்கரைச் சோலையில் உள்ள அழகிய சிறுகுடியில் வாழ்வோர் பரதவர்கள். நீலப் பெருங்கடல் கலங்க அதன்மீது சென்று வலைவீசி மீன் பிடிப்போர். இத்தகைய பரதவர்குலப் பெண் இவள். ஆனால் நீயோ, பெருங்கொடிகள் அசைந்தாடும் வீதிகளையுடைய பழைமையான ஊரில், விரைந்து செல்லும் தேர்களையுடைய செல்வனுக்கு அன்பு மகன். இங்கே காய வைக்கப்பட்டிருக்கின்ற சுறாமீன் தசைகளைப் பறவைகள் கவர்ந்து செல்லாமல் ஓட்டிக் காக்கின்ற எமக்கு நீ என்ன நன்மை செய்துவிட முடியும்? சுறாவை அறுத்துப் பரப்பியுள்ள எங்கள் மீது நாறும் புலால் நாற்றத்தை உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆகவே எங்கள் அருகே வராதே. அகன்று போய்விடு. கடல்நீரையே விளைநிலமாகக் கொண்டு வாழும் எமது சிறிய வாழ்க்கை உன்னோடு ஒத்ததன்று. எமக்கு, எம் போன்ற பரதவர் குலத்திலும் உன்னைப் போன்ற செல்வர்கள் உண்டு ! என்று கூறுகிறாள்.
பெருநீர் விளையுள்எம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்மனோரின் செம்மலு முடைத்தே
(புரைவது = ஒப்பது)
இவ்வாறு தோழி தலைவனை விலக்குவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உண்மையான மறுப்பா இது? இல்லை. அகப்பாடல் மரபு அறிந்தோர் இதனைப் புரிந்து கொள்ள முடியும். தலைவியைச் சந்திக்க எளிதில் இடம் கொடாமல் தவிர்ப்பதன் மூலம், அவள் (கிடைத்தற்கு) அரியவள் என்பதை அவன் உணரவேண்டும்; மணந்து கொள்வதன் மூலமாக அன்றி அவளை எளிதில் அடையமுடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே தோழியின் நோக்கம்.
மலைகண்டன்ன
எனத் தொடங்கும் தூங்கலோரியார் பாடல் (நற்றிணை-60)
தூங்கலோரியார்
ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை – அதாவது ஒரு பசுவினால் வரும் ஊதியத்தைக் கொண்டு வாழும் வாழ்க்கை சிறப்பில்லாதது எனப் பாடியதன் மூலம் பொருளாதார வாழ்வுக்கு இவர் கொண்ட அளவுகோல் எது என்பது புலப்படுகிறது. நற்றிணையில் ஒன்றும் குறுந்தொகையில் இரண்டுமாக இவர் பாடிக்கிடைத்த பாடல்கள் மூன்றேயாகும்.
திணை : மருதம்
கூற்று : சிறைப்புறமாக உழவற்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பறிவுறீஇயது.
தோழி உழவனோடு பேசுவது போலத் தலைவனுக்குக் கருத்து உணர்த்துகிறாள். வேலிப்புறமாகக் காத்து நிற்கும் தலைவனுக்குத் தலைவி இற்செறிக்கப்பட்டதை மறைமுகமாகத் தெரிவித்து, விரைவில் அவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறாள்.
(இற்செறிப்பு :- தலைவியை அன்னை இல்லத்திற்குள் தடுத்து வைத்தல்)
உழவனை நோக்கித் தோழி சொல்கிறாள்: எருமைகளைப் பூட்டி உழுகின்ற உழவனே! மலைபோல உயர்ந்து தோன்றுகின்ற நெற்கதிர்க் குவியல்களை உடையவனே! விடியலிலேயே வயலுக்குச் செல்ல வேண்டும் என்பதனால் இரவில் உறங்காமல் காத்திருந்திருக்கிறாய்! குளிர்ந்த வைகல் பொழுதில், குழம்பில் கிடக்கும் கருங்கண் வரால் மீனின் பெரிய துண்டுகளோடு அரிசிச் சோற்றை விருப்பமிக்க கையால் நிறைய அள்ளி மயக்கமேற உண்டு, நீர்நிறைந்த கழனிச் சேற்றில் நாற்று நடுவதற்காக உழத்தியரோடு செல்கின்றாய். அவ்வயலில் உள்ள வளமான கோரைகளையும் நெய்தல்களையும் ‘களை’ என்று களையாமல் விட்டுவிடு. இப்போது வெளிவர முடியாத எங்கள் வீட்டுக் கருங்கூந்தல் மடந்தை பின்னர் வந்து கோரையை வளையலாகப் பூண்டுகொள்வாள்; நெய்தல் தழையை ஆடையாக அணிந்து கொள்வாள்!
இவ்வாறு தலைவி வீட்டுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைத் தோழி மறைமுகமாகத் தலைவனுக்கு உணர்த்துகிறாள்.
அமுதம் உண்க நம் அயலிலாட்டி
எனத் தொடங்கும் கபிலர் பாடல் (நற்றிணை-65)
கபிலர் : இப்புலவர் பற்றிய குறிப்பை நற்றிணை – பாடம் எண் 1-இல் காண்க.
திணை : குறிஞ்சி.
கூற்று : விரிச்சி பெற்று வந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.
வருவதாகக் குறித்த பருவத்தில் தலைவன் வரவில்லை. தலைவி வருந்தியிருக்கிறாள். தலைவன் வந்துவிடுவான் என்று தலைவியைத் தேற்றும் தோழி, அதற்கு ஆதாரமாக ஒரு நற்சொல் கேட்டுவந்திருப்பதைச் சொல்கிறாள். பக்கத்து வீட்டுப் பெண்மணி வேறொருத்தியோடு பேசிக்கொண்டிருக்கும் போது அவள் தன் போக்கில் ‘அவன் இப்போதே வந்துவிடுவான்’ என்று சொன்னதைக் கேட்ட தோழிக்கு, அது தங்களுக்கு வந்த நற்சொல்லாகத் தோன்றுகிறது. தலைவியிடம் அதனைத் தெரிவிக்கிறாள்.
(விரிச்சி கேட்டல் :- நல்ல நிமித்தமாக ஒரு நற்சொல் கேட்டல். இது அக்காலத்து நம்பிக்கை. மணியடித்தால், ‘நல்ல சகுனம்’ என்று இப்போது சொல்வது போன்றது.)
தோழி தலைவியிடம், ‘காட்டாற்றில் உள்ள பாசி அலையால் அடித்துச் செல்லப்பட்டு எங்கும் கலக்குமாறு வெள்ளருவி பாயும் துறையில் யானை புலியோடு பாய்ந்து போரிட்டுப் புண்பட்டுத் தளர்ந்து கிடக்கிறது. அந்த நிலையில் அதன் தந்தத்தை எடுக்க விரும்பும் அன்பற்ற வேடர்கள் யானையின் மீது அம்புகளைப் பாய்ச்சுகின்றனர். வலியால் பிளிறும் யானையின் பேரொலி இடிமுழக்கம் போல இருக்கிறது. இத்தகைய காட்சிகளையுடைய பெரிய மலைநாடன் இன்னும் வரவில்லையே என்ற கவலையுடன் நாம் இருக்கும்போது, நம் அயல்வீட்டுப் பெண்மணி, நமக்கு ஒரு நல்ல நிமித்தமாகக் கிடங்கில் என்ற ஊரைப் போன்ற இனிமையுடைய சொல்லால், ‘அவன் இப்போதே வருவான்’ என்று சொன்னாள். அவள் ‘அமுதம் உண்பாளாக’ என்று கூறுகிறாள்.
அமுதம் உண்கநம் அயலிலாட்டி
(அயல் இல் ஆட்டி = அடுத்த வீட்டுப் பெண்மணி)
ஒருவரை மகிழ்ந்து வாழ்த்தும்போது ‘அமுதம் உண்க’ என வாழ்த்துவது அக்கால மரபு. இப்பொழுது கூட நல்ல விதமாகச் சொல்பவரிடம் ‘உங்கள் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும்’ என்கிறோமல்லவா ! விரிச்சி கேட்பது, நம்புவது போன்றவை இப்போதும் உண்டு.
புலியோடு யானை போரிட்ட வர்ணனை உள்ளுறைப் பொருளுடையது. புலியோடு போரிட்டுப் புண்பட்ட யானை, காமநோயோடு போரிட்டுப் புண்பட்ட தலைவியையும், யானையின் கொம்புக்காக வேடர் அம்பு எய்துவது தலைவி உயிருக்கே அழிவு உண்டாகுமாறு அயலார் அலர் தூற்றுவதையும், யானை அலறுவது தலைவி வருந்துவதையும், யானை முழக்கம் இடிபோல மலைப்பக்கங்களில் சென்று கேட்பது தலைவியின் நிலை பற்றித் தலைவன் அறிந்ததையும் குறிப்பாக உணர்த்துகின்றன.
பல்கதிர் மண்டிலம்
எனத் தொடங்கும் சேகம் பூதனார் பாடல் (நற்றிணை-69)
சேகம் பூதனார்
மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் எனவும் இப்புலவர் அழைக்கப்படுகிறார். சேந்தன் என்பது இவர் தந்தையைக் குறிக்கலாம். பெரியோரைப் போற்றும் பண்புள்ளவர் இவர். திறவோர் செய்வினை அறவதாகும் என இவர் பாடுவது கொண்டு இதனை உணரலாம்.
திணை : முல்லை
கூற்று : வினைவயிற் பிரிதல் ஆற்றாளாகிய தலைவி சொல்லியது.
பிரிந்து போன தலைவன் குறித்த பருவத்தில் வரவில்லை. தலைவி ஆற்றாதவளாகிறாள். மாலைப் பொழுதில் வளரும் காதல் உணர்வுகளால் துன்புறுகிறாள். ‘இதே வகையிலான மாலைப் பொழுது தலைவர் இருக்கும் நாட்டிலும் வந்திருந்தால் அவர் வினையை விட்டு இங்கு வந்திருப்பாரே ! இத்தகைய மாலைப் பொழுது அங்கு வரவில்லை போலிருக்கிறது’ எனக் கூறி வருந்துகிறாள். (வினைவயிற்பிரிவு: ஓதல், பகை ஒழித்தல், தூது போன்ற காரணங்களுக்காகப் பிரிதல்.)
தலைவி தனக்குள் பேசிக்கொள்கிறாள் : ‘கதிரவன் பகலை உருவாக்கி முடித்து உயர்ந்த பெரு மலையின் பின்னே சென்று மறைகிறான்; பறவைகள் தம் குஞ்சுகள் இருக்கும் கூடுகளை அடைகின்றன; காட்டில், கரிய பிடரியையுடைய கலைமான் தன் இளம் பெண்மானைப் போய்த் தழுவுகிறது; முல்லை மொட்டு வாய் திறக்கிறது; புதர் தோறும் காந்தள் தழைத்துத் தன் மலர்களை விளக்குப்போல் ஏந்தி நிற்கின்றது; மதர்த்த பசுவினது கழுத்து மணியோசை வளைந்த கோலையுடைய இடையர்களின் குழலோசையோடு இணைந்து மென்மையாகக் கேட்கிறது. தலைவனைப் பிரிந்து தனித்திருக்கும் எனக்கு இந்த அழகிய மாலை அருளில்லாத (இரக்கமற்ற) மாலை. வினைமுடிக்கச் சென்றிருக்கும் தலைவர் இருக்கும் நாட்டிலும் இந்த ‘அருளில்மாலை’ இதே தன்மையுடன் தோன்றினால் வினைமேல் உறுதியோடு அங்கே தங்கியிருக்கக் கூடியவர் அல்லர் அவர். ஆகவே அங்கே மாலைப்பொழுது இத்தகையதாக இல்லைபோலிருக்கிறது !
பருவம் தாண்டியும் தலைவன் மீண்டுவராத போது தலைவியைத் துன்புறுத்தும் மாலையை ஓர் உயிர்ப்பொருள் போல ‘அருளில்மாலை’ என வருணிக்கிறார் புலவர். ‘உரன்மாய் மாலை’ என இளங்கீரனார் (நற்.3) வருணித்திருப்பதை இங்கு ஒப்பிடலாம். ‘பிரிந்து சென்றவர் இருக்கும் நாட்டில் தீப்போன்ற இந்த மாலை வருவதுண்டோ’ என இளங்கோவடிகள் காட்டும் தலைவி கூறுவதும் ஒப்பிடத்தக்கது.
தணந்தார் நாட்டு உளதாங்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருண் மாலை
(சிலப்பதிகாரம், கானல் வரி)
சிறுவெள்ளாங்குருகே
எனத் தொடங்கும் வெள்ளிவீதியார் பாடல் (நற்றிணை-70)
வெள்ளிவீதியார்
இவர் பெண்பாற் புலவர். இவர் பாடிய பல பாடல்கள் தம் சொந்த வாழ்வு அனுபவங்களிலிருந்து பிறந்தவை எனச் சொல்லப்படுகிறது. ஏதோ காரணத்தால் கணவனைப் பிரிந்து வாழ்ந்தவர்; ‘வெள்ளிவீதியைப் போலத் துன்புற்று அலைகிறேன்’ என ஒளவையார் பாடலில் வருவது கொண்டு இதை உணரலாம். பிரிவின் அவலம் மிகக் கூர்மையான வடிவு பெறுகிறது இவர் பாடல்களில்.
திணை : மருதம்
கூற்று : காமம் மிக்க கழிபடர் கிளவி.
இரவுக்குறியிலோ பகற்குறியிலோ தலைவியைச் சந்தித்து வந்த தலைவன் சிலநாட்களாக வரவில்லை. காதல் வேட்கையால் தலைவி வருந்துகிறாள். தலைவன் தன்னை வரைந்து (மணந்து) கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தை நாரைக்குச் சொல்வது போலத் தோழிக்கு உணர்த்துகிறாள். காமம் மிக்க கழிபடர் கிளவி : காமம் மிகுவதனால் உண்டாகிய மிகுந்த துயரத்தை உணர்த்தும் கூற்று.
தலைவி நாரையை நோக்கி ‘சிறுவெள்ளைக் குருகே ! சிறு வெள்ளைக் குருகே ! சலவைத் துறையில் துவைத்த தூய வெள்ளாடைமடி போன்ற ஒளிவிடும் சிறுவெள்ளைக் குருகே ! தலைவருடைய ஊரின் இனிய நீர் இங்குவந்து பரவும் அளவுக்கு அது அருகிலேயே உள்ளது; அங்கும் நீ இரைபெற முடியும். கழனிகள் மிகுந்த அவ்வூர்த் தலைவராகிய என் தலைவரிடம் சென்று என் அணிகலன்கள் கழலுமாறு நான் மெலிந்து வருந்துவதைச் சொல்லாமல் விட்டுவிட்டாயே ! வா ! எம்மூர்க்கு வந்து எமது பொய்கைத் துறையில் புகுந்து சினையுள்ள கெளிற்று மீனைத் தின்றுவிட்டு அவர் ஊர்க்குப் போ. இந்த நன்றியை மறவாமல் அவரிடம் என் துயரைச் சொல்லக்கூடிய அன்பு உன்னிடம் இருக்கிறதா? அல்லது பெரும் மறதிக்கு ஆட்படுவாயா?’ எனக் கேட்கிறாள்.
காம உணர்வு மறைவாக மனத்துள் இருப்பது; அதை வெளிப்படுத்துவது பண்பாட்டுக்குறைவே. ஆயினும் துயரம் மிகுதியாகி விடும்போது ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’யை மரபு அனுமதிக்கிறது. அவள் துயரத்தின் வெளிப்பாடாக மட்டுமன்றி, தோழி கேட்கக் கூறுவதனால் வரைதல் வேட்கையாகவும் அமைகிறது.
பிரசங் கலந்த
எனத் தொடங்கும் போதனார் பாடல் (நற்றிணை-110)
போதனார்
9 அடி முதல் 12 அடி வரையுள்ள பாக்களின் தொகுப்பு நற்றிணை. விதிவிலக்காக இருபாடல்கள் 13 அடி கொண்டு அமைந்தவை. அவற்றுள் ஒன்றைப் பாடியவர் இப்புலவர். இவரைப் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. இவருக்குப் போத்தனார் எனும் பெயரும் உண்டு.
இப்பாடல் பாலை, மருதம் எனும் இரண்டு திணைகளுக்கும் பொருந்துவதாக உள்ளது. தலைவனுடன் தலைவி உடன் போக்கில் சென்றுவிடும் நிகழ்வைக் குறிக்கிறது எனக்கொண்டால் இது பாலைத்திணை; துறை: மனைமருட்சி. மணம் புரிந்து வாழும் தலைவி தன் மனையில் எவ்வாறு வாழ்கின்றாள் என்பதைச் செவிலியோ, தோழியரோ கண்டு கூறுவது எனக்கொண்டால் இது மருதத்திணை. மருதத்திணையில் செவிலி கூற்றாகக் கொண்டால் ‘மகள் நிலையுரைத்தல்’ என்னும் துறை. தோழியர் கூற்றாகக் கொண்டால் ‘வாயில்கள் தமக்குள் கூறிக்கொண்டது’ என்னும் துறை.
அ) பாலை : மனைமருட்சி
தலைவி தலைவனோடு உடன்போக்கில் சென்று விட்டாள் என்பதை அறிந்த நற்றாய் (பெற்றதாய்) மிகுந்த இளமைத்தன்மையுடைய மகள் கணவனின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளுமளவு அறிவும் ஒழுக்கமும் எப்படிப் பெற்றாள் என வியந்தும் வருந்தியும் பேசுகிறாள். (மனைமருட்சி : மனையில் இருந்துகொண்டு வருந்துதல்.)
ஆ) மருதம் : மகள் நிலையுரைத்தல்
தனது மகளின் இல்வாழ்க்கைச் சிறப்பைப் பார்ப்பதற்காக மகள் வீடு சென்று திரும்பிய செவிலி, நற்றாயிடம், இளமை மாறாத மகள் கணவன் வீட்டு நிலைமைக்கேற்ப, குடும்பம் நடத்தும் அறிவும் ஒழுக்கமும் எங்குப் பெற்றாள் என வியந்து கூறுகிறாள்.
இ) மருதம்
தோழி முதலிய வாயில்கள் தம்முள் கூறிக்கொண்டது. இளமைத்தன்மை மாறாத தலைவி, கணவன் வீட்டுக்கு வந்தவுடன் இங்குள்ள நிலைமைகளுக்கேற்ப நடந்து கொள்ளும் அறிவும் ஒழுக்கமும் எவ்விதம் அறிந்தாள் என வியந்து தம்முள் பேசிக் கொள்கின்றனர். (வாயில் : சிலவேளைகளில் கணவன் சார்பாக மனைவியிடம் பேசுவோர்.) மூன்றாவதாகச் சொல்லப்பட்ட துறையே மிகவும் பொருத்தமானது எனலாம்.
பாடல்பொருள் : (செவிலி அல்லது நற்றாய் அல்லது தோழியர் கூற்று)
‘தேன்கலந்த சுவைப்பாலைப் பொற்கிண்ணத்தில் இட்டு ஏந்திக் கொண்டு, மற்றொரு கையில் பூங்கொத்தை நுனியிலுடைய சிறிய கோலை ஓங்கி வீசிப் ‘பாலை உண்ணு’ என்று சொல்லி அடித்தால், முத்துப் பரலையுடைய பொற்சிலம்பு ஒலிக்கப் பாய்ந்தோடுவாள். கூந்தல் நரைத்த முதிய செவிலியர்கள் பின்தொடர்ந்து ஓடிப் பிடிக்கமுடியாமல் தவிப்பார்கள். முன்றிலிலிருக்கும் பந்தலின் கீழே ஓடி நின்று கொண்டு ‘பாலை உண்ணமாட்டேன்’ என மறுத்துரைப்பாள். அப்படிப்பட்ட விளையாட்டுச் சிறுமி பக்குவமான அறிவு முதிர்ச்சியையும் ஒழுக்கத்தையும் எங்குக் கற்றாள்? தன்னைக் கைப்பிடித்த கணவனின் குடி வறுமையுற்ற நிலையில் தன்னை ஈன்ற தந்தையின் வளமான உணவை, செல்வத்தை நினைக்காமல், ஓடும் ஓடைநீரில் இடையிடையே நுண்மணல் திட்டு கிடப்பது போல் ஒரு நேரம் விட்டு ஒரு நேரம் உண்ணுகின்ற மனவலிமை பெற்று விட்டாளே !’
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்….
பொழுது மறுத்து உண்ணும் சிறுமதுகையளே
(வறன் = வறுமை; உள்ளாள் = நினையாள்; மதுகையள் = மனவலிமை உடையவள்.)
‘அவளா இவள்?’ என்பதைப் போன்ற வியப்பைக் காட்டும் பாடல் இது.
சிலரும் பலரும்
எனத்தொடங்கும் உலோச்சனார் பாடல் (நற்றிணை-149)
உலோச்சனார்
இவர் நெய்தல் திணையை மிகுதியாகச் சிறப்பித்துப் பாடுவது கொண்டும், அழகிய நெய்தல் நில வருணனைகள், பரதவர் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் தருவது கொண்டும் இவரைப் பரதவ மரபினர் எனக் கருதுவது உண்டு. உலோச்சு என்பது சமணர் செய்து கொள்ளும் கிரியை. ஆகவே இவர் சமணர் என்று கொள்ளுவதற்கும் இடம் உண்டு. இப்பாடலுக்கும் இரு துறைகள் சொல்லப்படுகின்றன.
திணை : நெய்தல்
துறை 1
தலைவி உடன்போக்கை ஏற்றுக்கொண்டு, தலைவனோடு செல்ல விரும்புவதைத் தோழியிடம் கூறுவது.
துறை 2
தோழி தலைவியை உடன்போக்கில் செல்லுமாறு வலியுறுத்துவது. இக்கருத்தை நேரடியாகத் தலைவியிடம் சொல்வதாகவும் கொள்ளலாம். தலைவன் சிறைப்புறமாக நிற்க, அவன் கேட்குமாறு சொல்வதாகவும் கொள்ளலாம்.
பாடல்பொருள்
தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள்: ‘தோழி ! நம் தெருவிலுள்ள பெண்கள் சிலரோ பலரோ ஆங்காங்குக் கூடிநின்று, கடைக்கண்ணால் நோக்கி, மூக்கில் விரல் வைத்துப் பழிச்சொல்லால் தூற்றுகிறார்கள். அதைக் கேட்ட அன்னை சிறுகோலால் என்னை அடிக்கிறாள். மிகவும் துன்புறுகிறேன். இதிலிருந்து விடுபட ஒருவழிதான் உண்டு. பூமணம் வீசும் பிடரிமயிரையுடைய, விரைந்து செல்லும் குதிரை பூட்டிய நெடுந்தேரைச் செலுத்திக் கொண்டு நடுயாமத்தில் வரும் தலைவனுடன் உடன்போக்கில் செல்வதற்கு நான் உடன்படுகிறேன். நான் போனபிறகு இந்த ஊர் என்ன செய்யும்? வேண்டுமானால் அலரைச் சுமந்து கொண்டு ஒழியட்டும் !’
செலவயர்ந் திசினால் யானே
அலர்சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே
(அழுங்கல் ஊர் = இரக்கத்துக்குரிய ஊர்.)
தோழி கூற்றாகக் கொண்டால், ‘நீ உடன்போக்கில் செல்ல நான் உடன்படுகிறேன்’ என்று தலைவியிடம் கூறியதாகக் கொள்ள வேண்டும்.
விளையாடு ஆயமொடு
எனத்தொடங்கும் பாடல் (நற்றிணை-172) ஆசிரியர் பெயர் காணப்படவில்லை
திணை : நெய்தல்
கூற்று : பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது.
குறிப்பிட்ட பகற்குறியில் இனிச்சந்திக்க வேண்டாம் எனச் சொல்வதன் மூலமாகத் தவைனிடம் தலைவியை மணந்து கொள்ளுமாறு வேண்டுகிறாள் தோழி. இப்பாடலுக்குக் ‘குறிபெயர்த்தீடு’ எனும் துறையும் சொல்லப்படுகிறது. குறியிடத்தை மாற்றி வேறொரு குறியிடம் கூறல் என்பது இதன்பொருள். பாடலில் இவ்விரு துறைக்கருத்துகளும் உள்ளன. (பகற்குறி : பகலில் தலைவன் தலைவியைச் சந்திக்க ஏற்பாடு செய்து வைத்த இடம்.)
தோழி தலைவனை நோக்கி, ‘புதியராக வந்த பாணர் பாடும் மெல்லிய இசைபோல வலம்புரிச் சங்கு ஒலி உண்டாக்குகின்ற நெய்தல் நிலத் தலைவனே ! முன்பொரு நாள் நாங்கள் தோழிகளோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது வெண்மணலில் முற்றிய புன்னை விதை ஒன்றைப் புதைத்து வைத்து மறந்துவிட்டுப் போய்விட்டோம். பின்னொரு நாள் பார்த்தபோது அது முளைவிட்டிருந்தது. மகிழ்ந்த நாங்கள் நெய் கலந்த பால் ஊற்றி அப்புன்னையை அன்பாக வளர்த்தோம். அதைப் பார்த்த எங்கள் அன்னை எங்களிடம் ‘நீங்கள் வளர்த்துவரும் புன்னை உங்களை விடச் சிறந்தது; உங்கள் தங்கை போன்றது’ என்றாள். இதோ நிற்கும் இந்தப் புன்னை எங்கள் தங்கை. இதன் எதிரில் உன்னோடு சிரித்து விளையாடி மகிழ்வதற்குத் தலைவி வெட்கப்படுகிறாள். நீ இவளை அணைத்து அருள் செய்ய விரும்பினால் வேறு மரநிழல் எவ்வளவோ உள்ளன’ என்று கூறுகிறாள்.
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
(நுவ்வை – நும் தங்கை.)
சந்திக்க வேறு மரநிழலும் உண்டு எனத் தோழி கூறினாலும் இனிப் பகற்குறிச் சந்திப்பு வேண்டாம் என்பதுதான் குறிப்பான வேண்டுகோள். அதன் உட்கருத்து தலைவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்பதாகும்.
பொருள் தேடப் பிரிந்த தலைவனுக்கு அவன் செயல் வெற்றி பெற்றவுடனே நீண்ட இடைவெளியைத் தாண்டித் தலைவியை உடனே காண வேண்டுமென்னும் வேட்கை தோன்றிவிடும். ‘விரைந்து தேரைச் செலுத்து, தலைவி வருத்தத்துடன் காத்திருப்பாள்’ என்று பாகனிடம் தலைவன் சொல்லும் முல்லைத்திணைப் பாடல்கள் பல உண்டு. அவன் திரும்பும் கார்காலமும் காட்டுப் பகுதியும், விலங்குகளும் பறவைகளும் பூக்களும் செடிகொடிகளும் தலைவனின் அந்த நேரத்து உணர்வுகளோடு ஒன்றிச் செய்தி சொல்வதாகப் புலவர்கள் பாடியிருக்கின்றனர். மருதனிள நாகனார் பாடலில் (நற்றிணை-21) ஒரு காட்டுக்கோழி தலைவன் உணர்வுக்குள் புகுந்து சலனப்படுத்துகிறது. உடலெங்கும் புள்ளிகள் கொண்ட காட்டுக்கோழி, ஈரமணலைக் கிளறி எடுத்த மண்புழுவுடன் தன் பேடையைத் தேடுகிறது. தேடிய பொருளுடன் தலைவியைக் காண விரையும் தலைவனுக்குக் காட்டுக் கோழியுடன் உணர்வு அளவில் ஒரு தோழமை உறவு உருவாகி விடுகிறது.
ஊர்ப்பற்று நாட்டுப்பற்றைவிடக் குறைவானதன்று என்பதை நம் அனுபவத்தில் உணர்கிறோம். சொந்த ஊர்போலவே வேறு சில ஊர்களும் நமக்குப் பிடித்திருக்கின்றன. சங்கப் புலவனுக்குத் தான் உவக்கும் ஊர்களைக் கவிதையில் பதிவு செய்யும் ஆர்வம் இருக்கிறது. பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர் (குறுந்தொகை-116) என்பதுபோல ஊரைப் புகழ்வது உண்டு. உறந்தைத் துறையின் அறல்மணல் போன்ற கூந்தல் (குறுந்தொகை-116), வல்வில் ஓரியின் காடு போல மணக்கும் கூந்தல் (நற்றிணை-6) என்பன போல ஊரைக் குறிப்பிட்டு அவ்வூர்ப் பொருள்களை உவமை சொல்வது உண்டு. இவற்றைத் தாண்டி அழகிய தலைவிகளுக்குத் தாங்கள் விரும்பும் அழகிய ஊர்களை (முழுமையாக) உவமை சொல்லும் புலவர்களும் உண்டு. தொண்டியன்ன என் நலம் (தொண்டி போன்ற என் அழகு) (குறுந்தொகை-238), இருப்பை என்ற ஊர் போன்றஎன்னை (நற்றிணை-260) என்பன போன்றவை இவ்வுவமைகள். இவ்வுவமைகளை எப்படிப் பொருத்தம் காண்பது? நேரடியாக உருவமோ நிறமோ வேறு அடிப்படைகளோ இங்கு உவமைக்குக் காரணம் இல்லை. கவிஞன் உள்ளத்துக்குள் அந்த ஊர்கள் ஏற்படுத்திய அழகுணர்ச்சியும் தலைவி ஏற்படுத்தும் அழகுணர்ச்சியும் ஒன்றாக உள்ளன. கவிஞனின் உணர்வுப் போக்கைப் புரிந்து கொண்டாலன்றி இந்த உவமைகளைப் புரிந்துகொள்ள முடியாது. கபிலரது அமுதம் உண்க எனும் நற்றிணைப் பாடலில் (65) இந்த உவமை மேலும் நுண்பொருள் (Abstract) உணர்த்துவதாக வருகிறது. அயல் வீட்டுப் பெண் சொல்லும் இனிய சொல்லைத் தோழி, கிடங்கில் என்ற ஊரைப் போன்ற இனிய சொல் என உவமிக்கிறாள். ஊரின் இனிமையும் சொல்லின் இனிமையும் கபிலர் உள்ளத்தில் எப்படியோ சந்தித்திருக்கின்றன !
சேகம்பூதனார் (நற்றிணை-69) தலைவியின் பிரிவுத் துயரத்தை வெளிப்படுத்தும் முறை சிறப்பாக அமைகிறது. பாடலின் பெரும்பகுதியை மாலைப் பொழுதின் அழகையும் மயக்கும் இனிமையையும் கொண்டு நிரப்பியிருக்கிறார். வெளிச்சம் மங்கும் மாலை, பறவைகளின் ஒடுங்கல், மான்களின் அன்புப் பிணைப்பு, பூக்களின் இனிய மலர்ச்சி, மாடுகளின் மணியோசையுடன் இடையர் குழலோசை – என்று எல்லாப் புலன்களையும் இன்பத்தால் நிரப்பும் புலவர், தலைவியின் சார்பாக நின்று மாலையின்மீது வழங்கும் தீர்ப்பு வேறுவிதமாக இருக்கிறது. அதனை ‘அருள் இல் மாலை’ எனக் குறிப்பிடுகிறார். கவிதையின் அழகுணர்ச்சி சட்டென்று அவல உணர்ச்சியாக மாறிவிடுகிறது. இரக்கமற்றது இயற்கை எனக் காணும் தலைவியின் உணர்ச்சி விரிவாகச் சொல்லப்படவில்லை. ஆயினும் கவிதையின் முழு உள்ளடக்கம் தலைவியின் உணர்ச்சிதான். இது தான் உணர்ச்சி வெளிப்பாட்டு முறையில் சங்க இலக்கியத்தின் தனித்தன்மை.
காதலைத் துன்பமான இன்பம் எனக் கவிஞர்கள் சொல்வதுண்டு. காதல் ஒன்றுதான்; அதுவே இன்பம், அதுவே துன்பம் என உணர்த்துகிறார்கள். ‘காதல் ஒரு வித்தியாசமான நெருப்பு; விலகியிருக்கும் போது சுடுகிறது, நெருங்கினால் குளிர்கிறது’ என்கிறார் திருவள்ளுவர். காதலின் இன்பப் பகுதியை அடைய நிறையத் துன்பப் பகுதியைத் தாண்ட வேண்டியுள்ளது. இந்தத் தாண்டலுக்காக ஊரைவிட்டே போய்விடத் துணிவு கொள்கிறாள் உலோச்சனார் பாடல் தலைவி. (நற்றிணை-149) பெண்கள் சிலரும் பலருமாகத் தெருக்களில் கூடிநின்று அவளது களவுக் காதலைப் பற்றிப் பழிதூற்றுகிறார்கள். அன்புள்ள அன்னையும் கடிந்து கொள்கிறாள். தாங்க முடியாத வருத்தம், தலைவனுடன் உடன்போக்குச் சென்றுவிடலாமா என நினைக்கத் தூண்டுகிறது. அதன் பின்விளைவு என்ன என நினைத்துப் பார்க்கிறாள். அவளைத் துன்புறுத்திய ஊர்தான் துன்புறும். பழிச்சொற்களைச் சுமத்தத் தலைவி இல்லாததால் அவற்றைப் பேசுவோர் தாமே சுமந்து அலைய நேரிடும். இந்த நினைவே தலைவிக்குச் சற்று ஆறுதல் தருவதாக இருக்கிறது.
ஒரு பொருளின் ஓர் அசைவு ஒரு காட்சியாக முடியுமா? ஆகுமென்றால் அதைப் படிமம் என்கின்றனர் இன்றைய இலக்கியவாதிகள். உவமை, உருவகம் போன்றவைகளைத் தாண்டி, ஒரே வீ்ச்சில் புலன் உணர்வு ஒன்றை உருவாக்கி விடும் உத்திதான் படிம உத்தி. ஒன்றோடு மற்றொன்றைப் பொருத்திக் காட்டுவது அன்று படிமம். ஒன்றினுள் ஒன்றாக உட்கலந்து ஒரே புலன்காட்சியாகத் தெரிவது அது. சங்கப் பாக்களில் செறிவான படிமங்கள் பல உண்டு. சேகம்பூதனாரின் (நற்றிணை-69) முல்லை நில வருணனையில் இத்தகைய படிமக் காட்சிகள் சிலவற்றைக் காணலாம். ஒருவர் ஒரு செயல் செய்கிறார் என்றால் அச்செயலால் உருவாகிய பொருள் ஒன்று இருக்குமல்லவா ! தச்சர் செய்வது நாற்காலி; தட்டார் செய்வது நகை; சிற்பி செய்வது சிலை என்பதுபோலச் சொல்லலாம். புலவர் கதிரவன் என்ன செய்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அவன் ‘பகல் செய்கிறான்’ என்கிறார். கதிரவன் கையில் பகல் ஓர் உற்பத்திப் பொருளாக நம் புலனுக்குப்படுகிறது அல்லவா ! இதுதான் படிமக்காட்சி. ‘முல்லை மலர்கிறது’ என்று சொல்லாமல், “முல்லை முகைவாய்திறப்ப என்பதன் மூலம் முல்லைக்கு வாய் இருப்பதை, அது திறந்து கொள்வதைக் காட்சிப்படுத்துகிறார். அதேபோலக் காந்தள் மலர்வதைக் காந்தள் விளக்கேற்றுகிறது எனப் படிமம் செய்கிறார். எல்லாவற்றிலும் மேலாக மாலைப்பொழுதை உயிரும் உணர்வும் உள்ள ஒரு மனிதப்பிறவி போலக் காட்டுகிறார். தன் அழகால் உலகுக்கெல்லாம் மகிழ்ச்சி தருகிறது; தலைவிக்கு மட்டும் ‘அருள் இல்லாத மாலை’யாகிக் கொடுமை செய்கிறது. இத்தகைய படிமக் காட்சிகளை நிமிட நாடகங்களாக்கிக் காட்டும் கலைத்திறன் பாராட்டுக்குரியது தானே!
குழந்தைகள், சிறுவர் சிறுமியர் விளையாடும் வீட்டுச்சூழல் இனியது. குழந்தைகளுக்குப் பாலோ உணவோ ஊட்டுவதற்குத் தாய்மார் படும்பாடு அறிவோம். காலம்காலமாக இந்தக் காட்சி அன்பும் அரவணைப்பும் கலந்ததாக ஒரேமாதிரி இருந்து வருகிறது. போதனாரின் பிரசங்கலந்த எனும் பாடல் (நற்றிணை-110) பாலுண்ண மறுத்து ஓடும் சிறுமியைக் காட்டுகிறது. பொற் கிண்ணத்தில் இட்டு ஏந்திய பாலுடனும், பொய் அடி அடிப்பதற்காக ஓங்கிய பூங்கொத்துடனும் பின்தொடரும் தாய், துரத்திப் பிடிக்க முடியாமல் களைத்து நிற்கும் முது செவிலியர், அவர்கள் உள்நுழைந்து பிடிக்க முடியாதபடி பூம்பந்தலுக்குள் நுழைந்து கொள்ளும் சிறுமி – இப்படி ஓர் அழகிய காட்சி விரிகிறது பாடலின் முன்பகுதியில். பாடலின் பின்பகுதிக் காட்சி முற்றிலும் எதிரானது. அதே பெண், இப்போது விளையாட்டுச் சிறுமியல்லள். இளம் மனைவி. அவள் இருப்பிடம் கணவனது மனை. இப்போதும் அவள் “பொழுது மறுத்து” (ஒரு பொழுதுவிட்டு ஒரு பொழுது) உண்ணுகிறாள். ஆனால் காரணம் வேறு. கணவன் குடும்பம் சற்று வறுமைப்பட்டிருக்கிறது. விளையாட்டுச் சிறுமியும் பக்குவ முதிர்ச்சியுள்ள இளம் மனைவியும் அடுத்தடுத்த காட்சிகளாகக் காட்டப்படுகின்றனர். இரு நிலைகளுக்கிடையே உள்ள பெரும் வேறுபாடு தோழியரையும் செவிலியையும் வியப்புக்குள்ளாக்குகிறது. நம்மையும் தான்!
சங்கப் புலவர்கள் தலைவன் தலைவி தோழி போன்ற தலைமைப் பாத்திரங்களை மட்டுமின்றி, ஏதோ ஒரு நோக்கத்துக்காக, எப்போதோ ஒருமுறை வந்துபோகும் மிகச்சிறு துணைப் பாத்திரங்களையும் கூடஒரு முழுமை தோன்றுமாறு கவனத்துடன் படைப்பார்கள். தூங்கலோரியார் பாடலில் (நற்றிணை-60) இடம்பெறும் ஓர் உழவனின் சி்த்திரம் அழகாக உருவாகிறது. தலைவன் – தலைவி காதல் நிகழ்வில் உழவனுக்குப் பங்கு எதுவுமில்லை. தோழி தலைவனுக்கு ஒரு செய்தியை – தலைவி இற்செறிக்கப்பட்டிருக்கிற செய்தியைத் தெரிவிக்க வேண்டும். நேரடியாகச் சொல்லாமல் ஓர் உழவனைப் பார்த்துப் பேசுவது போலப் பேசுகிறாள். உழவன் காதில் அது விழாமல் கூடப் போயிருக்கலாம். அது அவனுக்குரிய செய்தி அல்லவே! ஆனாலும் அந்த உழவனைக் கூட மனத்தில் முழுமையாகப் படியும் ஓவியமாக்கிக் காட்டுகிறார் புலவர். விடியலில் மேற்கொள்ள வேண்டிய நடவு வேலைக்காக இரவு உறக்கமில்லாதிருந்திருக்கிறான். விடியலில் புறப்படுமுன் அவன் உணவு உண்பதுதான் காட்சி. பெரிய வரால் மீன் துண்டுகள் கிடக்கின்ற குழம்புடன் அரிசிச் சோற்றை மயக்கமேற உண்கின்றான். அதை வருணிக்கின்ற புலவர் அவனுடைய மனத்தின், நாவின் ஆசை முழுவதையும் அவனுடைய கைக்கு மாற்றுகிறார். கவர்படு கையை கழும மாந்தி- ஆசை நிரம்பிய கை என்கிறார். இந்த அடியிலேயே பாத்திரத்தின் அந்த நேர உணர்வை முழுமையாக்குகிறார்.
அலர் தூற்றுவது பற்றிச் சங்கப் பாடல்கள் நிறையவே சொல்கின்றன. பெரும்பாலும் அது பாத்திரக் கூற்றாகவே வரும். உலோச்சனார் பாடலில் (நற்றிணை-149) அது அபிநயக் காட்சியாகக் காட்டப்படுகிறது. தெருக்களில் அங்கங்கே கூடி நிற்கிறார்கள் பெண்கள். ஓரிடத்தில் சிலர்; வேறோரிடத்தில் பலர். அலர்தூற்றப்படும் பெண் உயர்குலப் பெண் ஆகையால், கடைக்கண்ணால் ஒருவருக்கொருவர் சைகை செய்து கொள்கிறார்கள்; சுட்டுவிரலால் மூக்கி்ன் உச்சியை அவ்வவ்போது தொட்டுக்கொள்கிறார்கள். மௌனத்திலேயே தூற்றுதல் நிகழ்கிறது.
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்
றன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
என வரும் அடிகளிலும்,
மாயோனன்ன எனத் தொடங்கும் கபிலர் பாடலில் (நற்றிணை-32)
அரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே
என வரும் அடிகளிலும் ஓசை மிக இனிமையாக அமைந்திருப்பதைப் படித்துப் பார்த்து உணர்ந்திருப்பீர்கள்.
வெள்ளி வீதியார் பாடலில் (நற்றிணை-70)
சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே
துறைபோ கறுவைத் தூமடி அன்ன
நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே
என வரும் தொடர் அடுக்கு, தலைவியின் அவசர அழைப்பைக் காட்டி, அவளுக்குள்ளிருக்கும் உணர்ச்சிப் பெருக்குக்கு ஏற்ற ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது.
(நற்றிணை-65, கபிலர்)
என்று தொடங்குகிறது ஒருபாடல். யார் அவள்? அமுதம் உண்ணும் சிறப்புக்கு என்ன நற்செயல் செய்தாள்? இந்தக் கூற்று யார் யாருக்குச் சொல்வது? எனும் கேள்வி, வியப்புகளைப் பாடலின் முதல் அடி நமக்குள் எழுப்புகிறது. விடை ஈற்றடியில் கிடைக்கிறது. ‘தலைவன் வந்துவிடுவான்’ என்பதைச் சகுனமாக, விரிச்சியாகச் சொல்லியிருக்கிறாள் அவள் என்பதுதான் காரணம். பெருமலை நாடனை வரூஉம் என்றோளே. ஒரு காட்சியின் இடையில் நுழைந்து, சற்றே காத்திருந்தபின் பொருள் விளங்கிக் கொள்ளும் மகிழ்ச்சியைப் படிப்பவனுக்கு வழங்குகிறது இவ்வடிவமைப்பு.
பிரசங்கலந்த எனத் தொடங்கும் போதனார் பாடல் (நற்றிணை-110) உணர்வைத் தூண்டும் முரண்பட்ட இரு காட்சிகளை இடைவெளியின்றி அடுத்தடுத்து நிறுத்துகிறது. தலைவி விளையாட்டுச் சிறுமியாக ஓடி, ஆடித் தாயரை அலைக்கழித்து உண்ண மறுத்து ஒதுங்கும் காட்சி முதலாவது; இளம் மனைவியாகத் தலைவனின் வறுமை நிலைக்கேற்பத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு ஒரு பொழுதுவிட்டு ஒரு பொழுது உண்பது இரண்டாவது காட்சி. தலைவியின் நிகழ்கால வாழ்வைப் பார்க்கும் தோழியர், செவிலி ஆகியோர் மனத்தில் பின்னோக்குக் காட்சியாகத் (Flash Back) தெரிவதே இளம்பருவ விளையாட்டுக் காட்சி. முரண்பட்ட காட்சிகளை இணைக்கும் வடிவ அழகு, சிறந்த கவிதை இன்பத்தைத் தருகிறது.
விரைப்பரி வருந்திய என்ற மருதனிளநாகனார் பாடலை (நற்றிணை-21) வடிவமைப்பைக் கொண்டு மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. உடன் வந்த பணியாட்கள் மெல்ல, விருப்பம்போல் வரட்டும் எனத் தலைவன் சொல்வது. 2. தீண்டா முள்ளால் தீண்டித் தேர்க்குதிரையை விரைந்து செலுத்துமாறு தலைவன் பாகனைத் தூண்டுவது. 3. காட்டுக் கோழி கவ்விய இரையுடன் தன்பேடையைத் தேடுவதைத் தலைவன் பாகனுக்குச் சுட்டிக் காட்டுவது. முறையான ஒரு தர்க்க அமைப்பின் படி பார்த்தால் இப்பகுதிகள் 3,2,1 என்ற வரிசை முறையில் வருவதே பொருத்தமாகும். ஆனால் கவிதையின் உணர்ச்சி ஓட்டம், தலைவனின் மன வேகம் இவ்வாறு எண்ணங்களையும் செயல்களையும் முன்பின்னாக மாற்றி விடுகிறது. இந்த மாற்றத்தால் தான் உரைநடை கவிதை ஆகிறது.
பாடம் - 3
இலையில் பிடவம்
எனத் தொடங்கும் விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் பாடல் (நற்றிணை-242).
விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
தாம் பாடிய பாடலின் தொடரைத் தம்பெயருடன் கொண்ட புலவர்களுள் இவர் ஒருவர். பெருங்கண்ணனார் என்பது இவர் இயற்பெயர். மான்குட்டியை விழிக்கட்பேதை என வருணித்த அழகால் இவ்வடைமொழியைப் பெற்றார்.
திணை: முல்லை
கூற்று: வினைமுற்றி மீளும் தலைமகன் கார்ப்பருவத்தைக் கண்டு பாகனுக்குச் சொல்லியது.
தலைமகளை விரைந்து காணும் ஆவலால் தேரை விரைவாகச் செலுத்துமாறு சொல்கிறான் தலைவன். ‘பாகனே! இலைகள் பழுத்து உதிர்ந்த பிடவமரத்தில் இதோ, ஈரமலர்கள் நிறைவதற் கேற்றாற்போல் புதிய அரும்புகள் தோன்றியிருக்கின்றன; புதர்களில் ஏறிப்படர்ந்த முல்லைக் கொடிகளில் பூக்கள் அவிழத் தொடங்கிவிட்டன; கொன்றை மரங்களில் பொன்னிறப் பூக்கள் மலரத் தொடங்கிவிட்டன; காயாவின் சிறிய கிளைகளில் நீலமணி போல ஏராளமான பூக்கள் குலுங்குகின்றன; கார்காலம் தொடங்கிவிட்டது. மிக விரைவாக உன் தேர் செல்லட்டும்!
கார் தொடங் கின்றே காலை வல்விரைந்து
செல்க பாகநின் தேரே
(கார் = மழைக்காலம் ; தொடங்கின்று = தொடங்கியது ; காலை = இன்று காலை ; வல்விரைந்து = மிகவிரைவாக)
அதோ அங்கே பார்! அந்த இளம் பெண்மான் மருண்டு விழிக்கின்ற தன் பேதைக் குட்டியோடு கூட்டத்தினின்று விலகி ஓடுவதையும், அவற்றின் மீது அன்பு கொண்ட நெஞ்சத்தோடு விடாது பின்தொடர்ந்து ஆண்மான் தேடுவதையும் பார்! உன் தேர் விரைந்து செல்லட்டும்!’
வினைமுற்றி மீளும் தலைவன் பாகனிடம் பேசுவதாக வரும் முல்லைத் திணைப் பாடல்களில் வழக்கமாகக் காணப்படும் நிகழ்வு ஒன்று. தலைவன் பாகனுக்குக் காட்டுப்புற இயற்கை நிகழ்ச்சி ஒன்றைச் சுட்டிக்காட்டி, அதன் மூலம் தலைவியைக் காணவிரும்பும் தன் வேட்கையைக் குறிப்பாக உணர்த்துவான். மருதனிளநாகனார் பாடலில் (நற்றிணை-21) இரையைக் கவ்வி எடுத்துத் தன் பேடையைத் தேடும் காட்டுக்கோழி தலைவன் கவனத்தை ஈர்த்தது எனப் பார்த்தோம். இப்பாடலில் தலைவன் சுட்டிக்காட்டுவது, தன் பிணையையும், (பெண்மானையும்) குட்டியையும் ஆர்வத்துடன் தேடும் ஆண்மான். அது, தலைவியையும் தன் குழந்தையையும் காணவிரும்பும் தலைவனுக்கு உள்ளுறை.
மான்குட்டியை ‘விழிக்கட்பேதை’ என வருணித்தது கொண்டு பெருங்கண்ணனார் விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார் என அழைக்கப்பட்டார். ‘விழிக்கட்பேதை’ என்ற தொடர் இக்கவிதை முழுவதிலும் சிறந்தமைந்து, கவிதையை அடையாளம் காட்டும் தொடராகும். குட்டிமானின் பேதைமை முழுவதும் அதன் விழிகளில் திரண்டு நிற்பதைக் கண்டிருக்கிறது கவிஞனின் பார்வை. தோள்கண்டார் தோளே கண்டார் என்று இராமன் அழகைக் கம்பர் வருணிக்கிறார். அது போலப் பெருங்கண்ணனார் மான்குட்டியின் கண்ணைக் கண்டு அதையே கண்டவராகியிருக்கிறார்!
கழுநீர் மேய்ந்த
எனத் தொடங்கும் பரணர் பாடல் (நற்றிணை-260)
பரணர் : இப்புலவர் பற்றிய குறிப்பை நற்றிணை பாடம் எண் 1 இல் காண்க.
திணை : மருதம்
கூற்று : ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.
பரத்தையிற் பிரிந்து திரும்பிய தலைமகன் தலைவியைத் தழுவுகிறான். தலைவி தன் சினத்தை உள்ளடக்கிக் கொண்டு, ஊடல் நீங்காதவளாய்ச் சொல்கிறாள். (ஊடல் மறுத்தல் : ஊடலைக் கைவிட மறுத்தல்.)
தலைவி தலைவனை நோக்கிப் பேசுகிறாள்: ‘தலைவனே! உனது ஊரின் எருமையைப் பார்! பெரிய கால்களையுடைய அது செங்கழுநீர்ப் பூக்களை மேய்கிறது. அருகில் உள்ள வயலில் படர்ந்துள்ள குளி்ர்ச்சியான தாமரை மலரை உண்ணாமல் வெறுத்தொதுக்கி நடக்கிறது. எப்படிப்பட்ட நடை! தடியைக் கையில் ஏந்தி நடக்கும் வீரனின் நடை ! நடந்து சென்று அயலில் குன்றுபோல் குவிந்திருக்கும் வெண்மணலில் கிடந்து உறங்குகிறது. இத்தகைய காட்சிகளையுடைய ஊரின் தலைவனே ! நீ இப்பொழுது திடீரென்று என் மீது விருப்பம் கொண்டவன்போல வந்து என்னைத் தழுவிக் கொள்கிறாய் ! ஆனால் நான் மறக்கவில்லை! போரில் பகைவரை அழித்த செவ்வேல் வீரனாகிய விரான் என்பவனின் ‘இருப்பை’ எனும் ஊரைப் போன்ற அழகிய என்னைப் பிரிந்து சென்றாய். செழித்த என் கூந்தல் அழகுபெற, அரும்பு அவிழ் மாலையைச் சூடியிருந்தேன். அதை வீணாக வாடவிட்ட பகைவன் நீ ! உன் செயலை நான் மறக்கவில்லை !’.
வெய்யை போல முயங்குதி என்றதனால் தலைவன் காட்டும் விருப்பம் பொய்யானது என்பதைத் தலைவி உணர்த்துகிறாள். (முயங்குதல் = தழுவுதல்; வெய்யை = விருப்பமுடையை) தன் கூந்தல் மலர்கள் வீணாகிப் போயின என்பது தலைவன் தன்னைக் கூடாததால் தன் அழகு வீணாகிப் போயிற்று என்பதன் குறிப்பு.
பாடலில் ஓர் எருமையின் வருணனை வருகிறது. அது உள்ளுறைப் பொருள் தருவது. அப்படியானால் எருமை யாரைக் குறிக்க வருகிறது? வேறு யாரை? தலைவனைத்தான் குறிக்கிறது! மருதத்திணைப் பாடல்களில் பரத்தையிற் பிரிந்து சுற்றித்திரியும் தலைவனை, தறிகெட்டுச் சுற்றி அலையும் எருமையை உள்ளுறையாகக் காட்டித் தலைவியோ தோழியோ கண்டிப்பதாகக் குறிப்பிடுவது சங்கக் கவிதை மரபு. இப்பாடலில் எருமை தாமரையை வெறுத்துக் கழுநீரை மேய்வது, தலைவன் தலைவியைத் துறந்து காதற் பரத்தையை நுகர்வதைக் குறிக்கும். எருமை பின்னர் மணல் குன்றில் போய் உறங்குவது, தலைவன் காதற் பரத்தையையும் விட்டுச் சேரிப்பரத்தையின் வீடு சென்று உறங்குவதைக் குறிக்கும்.
தலைவி தன் எண்ணத்தை வெளிப்படையாகப் பேசி விட்டதனால் உளவியல் முறையில் அவளுக்குச் சற்று ஆறுதல் கிடைக்கிறது என்பது கவிதையின் வரிகளைத் தாண்டி நாம் புரிந்து கொள்ளக் கிடப்பது.
காதற்பரத்தை : யார் மீதும் தனிப்பட்ட விருப்பம் கொள்ளாத சேரிப்பரத்தையின் மகளே காதற்பரத்தை. ஆனால் இவள் தலைவனிடம் தனி அன்பு (காதல்) கொண்டு கூடுபவள். தலைவனால் மணந்து கொள்ளப் படுவதற்கும் இவள் உரியவள்.
சேரிப்பரத்தை : பொருள் ஒன்றே குறிக்கோளாகக் கொள்பவள். யார்மீதும் தனிப்பட்ட விருப்பம் கொள்ளாதவள்.
புறந்தாழ்பு இருண்ட
எனத் தொடங்கும் தேய்புரிப் பழங்கயிற்றினார் பாடல் (நற்றிணை-284)
தேய்புரிப் பழங்கயிற்றினார்
தாம் கூறிய உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற புலவர்களுள் இவர் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை.
திணை : பாலை
கூற்று : பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.
பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைமகன் தலைவியை நினைத்து ஆற்றாதவனாகிறான். அவனது நெஞ்சம் ‘தலைவியிடம் போவோம்’ என்கிறது. அறிவு, ‘பொருள் தேடி முடித்தபின் போவோம்’ என்கிறது. இந்தப் போராட்டத்தில் அவன் தவிக்கிறான்.
தலைவன் தன்னுள் சொல்லிக் கொள்கிறான்: ‘முதுகுப்புறம் தாழ்ந்து இருண்ட கூந்தலையுடையவள்; ஈர இமைகளும் நெய்தல் மலர்போன்ற மையுண்ட கண்களும் உடையவள்; என் உள்ளத்தைப் பற்றிப் பிணித்துக் கொண்டவள் என் தலைவி. ‘அவளிடம் திரும்பிச் செல்வோம், அவளுடைய துன்பத்தைத் தீர்ப்போம்’ என்று சொல்கிறது என் நெஞ்சம். என் அறிவோ, ‘தொடங்கிய செயலை முடிக்காமல் இடையில் விட்டுவிடுவது அறியாமை; இழிவும் தருவதாகும்’ என்று மறுத்துக் கூறுகின்றது. உறுதியாகச் செய்ய வேண்டியது எது என்பதைச் சீர் தூக்கிக் கண்ட அறிவு, நெஞ்சத்தை நோக்கி, ‘நெஞ்சமே! நிலையாக நில்! தலைவியை நோக்கி விரையாதே!’ எனச் சொல்கிறது. இப்போராட்டத்தில் எனது நிலை என்னாவது? இரண்டு யானைகள் எதிரெதிராக நின்று தேய்ந்த பழைய கயிற்றினைப் பற்றி இழுத்தால் கயிறு என்னாகும்? உடனே இற்றுப் போகும். அறிவுக்கும் நெஞ்சத்துக்கும் இடையில் சிக்கி என் நொந்த உடம்பும் அவ்வாறே அழியவேண்டியதுதானோ?
ஒளிறேந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவதுகொல் என் வருந்திய உடம்பே
(ஒளிறு = ஒளி ; மாறு = எதிர்த்து ; வீவது = அழிவது.)
தலைவனின் கொடுந்துயரத்தைச் சித்திரிக்க இப்புலவர் கையாண்ட இந்த உவமை இவருக்குப் ‘பெயர்’ கொடுத்திருக்கிறது. பாடலின் புலவர் பெயர் காணப்படாத காரணத்தால் இந்த அற்புத உவமையையே இவருக்குப் பெயராகச் சூட்டிவிட்டிருக்கிறார்கள். தாங்கள் சொன்ன மனங்கவரும் உவமைகளால் பெயர் கிடைக்கப்பெற்ற வேறு சில புலவர்களும் உண்டு. குப்பைக் கோழியார். அணிலாடுமுன்றிலார், கல்பொரு சிறுநுரையார், பாழூர் காத்த தனிமகனார் போன்றோர் அவர்கள்.
அம்மவாழி தோழி
எனத்தொடங்கும் மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் பாடல் (நற்றிணை-289).
மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார்
பாண்டி நாட்டில் உள்ள மருங்கூர் எனும் ஊரைச் சேர்ந்தவர். சேந்தன் என்பது இவர் தந்தை பெயர். ‘பூமியே நிலை குலைந்தாலும் காதலர் சொல் தவற மாட்டார்’ என்று, தலைவியின் நம்பிக்கை உறுதியை இவர் பாடியுள்ள திறம் போற்றத்தக்கது.
திணை : முல்லை
கூற்று : பிரிவிடைப் பருவம் கண்டு தலைவி தோழியிடம் சொல்லியது.
குறித்த பருவத்தில் தலைவன் வரவில்லை. ‘அவர் வாய்மை தவறாதவர், கார்காலம்தான் முந்தி வந்துவிட்டது’ என்று நொந்து சொல்கிறாள் தலைவி.
தலைவி தோழியிடம் சொல்கிறாள்: ‘தோழி! இந்த பூமி தன் நிலையிலிருந்து பெயர்ந்தாலும் நம் காதலர் தாம் சொல்லிய சொல் தவறமாட்டார்.
நிலம் புடைபெயர்வ தாயினும் கூறிய
சொற்புடை பெயர்தலோ இலரே
(புடைபெயர்தல் = நிலைமாறுதல் ; தவறிநடத்தல்)
இந்த மேகம்தான் உரியகாலம் வருமுன்பே கடல்நீரை முகந்து, செறிந்து இருண்டு, கனமழை பொழிந்து, கடுங்குரல் காட்டிக் கார்காலத்தைச் செய்துவிட்டது. என்னைத் துன்புறுத்தவே என்னுடனே இருந்து கொண்டிருக்கிறது.
வெட்டுண்ட பெருமரத்தின் வேரடிக் கட்டையில் இரவில் நெருப்பு வைத்துக் கொளுத்தும் கோவலர்கள் விடியலில் நெருப்பை அணைக்காமல் அப்படியே விட்டு விட்டுப் போய்விடுவார்கள். அது தானே வெந்து தணியும். அது போல எனது காமநெருப்பு, அணைப்பதற்குரிய தலைவர் இல்லாமையால் கனன்று கொண்டிருக்கிறது. அருளப்படாதவளாக, இரக்கத்திற்குரியவளாக ஆகிவிட்டேன்.’
கார்காலம் வந்துவிட்ட பிறகும், தலைவர் வார்த்தை பிறழமாட்டார், கார்காலம்தான் காலம்தவறி வந்து விட்டது எனக் கூறும் தலைவியின் உறுதியான நம்பிக்கைதான் இப்பாடலின் தனிச்சிறப்பு. குறுந்தொகைப் பாடல் ஒன்றில், ‘இந்தக் காடு கார்காலம் வந்து விட்டது என்பதைக் கொன்றைப் பூவைக் கொண்டு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன் ; அவர் பொய் சொல்ல மாட்டார்’ என்று சொல்லும் தலைவியை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
கானம் காரெனக் கூறினும்
யானோ தேறேன் அவர் பொய்வழங்கலரே
(குறுந்தொகை-21)
தீயும் வளியும்
எனத்தொடங்கும் புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் பாடல் (நற்றிணை-294)
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான்
நாணயம் சோதித்துப் பார்ப்பவரை வண்ணக்கர் என்பர். கம்பூர் எனும் ஊரைச் சார்ந்த இப்புலவர் நாணய சோதகராகப் புதுக்கயம் என்ற ஊரில் வந்து வாழ்ந்திருக்கக் கூடும். இவருடைய பெயரால் இவ்வுண்மைகள் புலப்படுகின்றன.
திணை : குறிஞ்சி
கூற்று : மணமனை உட்புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.
உடன்போக்கில் தலைவியைக் கொண்டுசென்ற தலைவன் தன் மனையில் அவளைத் திருமணம் செய்து கொண்டான். அங்குச் சென்ற தோழி தலைவியின் புதிய அழகு கண்டு வியந்து சொல்கிறாள். (கவின் = அழகு)
தோழி தலைவியை நோக்கிப் பேசுகிறாள்: ‘உன் தலைவனது மலைநாடு மிக அழகியது. பெருமலைப்புறம் எல்லாம் மூங்கில் அடர்ந்துள்ளது; கொறுக்கச்சி முளைத்துப் பரவியுள்ளது. புலியைக் கொன்று சிவந்த வலிய யானையின் கொம்புபோலச் சிவந்துள்ள காந்தள் பூக்கள் மலைச்சாரல் எங்கும் மணக்கின்றன. இத்தகைய இனிய மலைநாட்டுத் தலைவனது அகன்ற மார்பு இரண்டு தன்மைகளைப் பெற்றிருக்கிறது. தாங்க முடியாத நெருப்பையும் அதைத் தணித்துக் குளிர்விக்கின்ற காற்றையும் ஆகாயம் பெற்றிருக்கிறது. அதுபோலக் களவுக் காலத்தில் உன் அருகில் இல்லாததால் உனக்கு நோய் தந்ததாகவும், இப்பொழுது மணந்துகொண்டு பிரியாதிருப்பதால் இன்பம் தருவதாகவும் தலைவனது மார்பு உள்ளது. இது என்ன மாயமா? இல்லை, இது உண்மைதான்.’
தலைவியின் புதிய அழகுக்குக் காரணம் அவள் தன் தலைவனைப் பிரியாமல் கூடி வாழ்வதுதான் என்பதைத் தோழி கூற்று உணர்த்துகிறது. காந்தள் மலைச்சாரல் முழுவதும் மணக்கி்ன்றது என்பது தலைவனது அன்பு தலைவியைச் சார்ந்த அனைவர்க்கும் புலப்பட்டு மகிழ்ச்சி அளிக்கின்றது என்பதனைக் குறிக்கும் உள்ளுறைப் பொருள்.
(கொறுக்கச்சி = ஒருவகைப் புல்)
முரிந்த சிலம்பின்
எனத் தொடங்கும் ஒளவையார் பாடல் (நற்றிணை-295)
ஒளவையார்
இவர் பெண்பாற் புலவர். சங்கப் புலவருள் மிகவும் புகழ்பெற்ற புலவர் இவர். அதியமான் நெடுமானஞ்சி அமுதமயமான நெல்லிக் கனியை ஒளவைக்குக் கொடுத்துப் போற்றியது பலரும் அறியும் சிறந்த வரலாற்று நிகழ்வு. வள்ளலும் வீரனுமான அதியமானுடைய சிறப்பு, ஒளவையாரின் பாடல்களால் ஒளி பெற்றுத் தோன்றுகிறது. ஒளவையார் பெரும்புலவர்களாகிய கபிலரையும் பரணரையும் தம் பாடல்களில் மதித்துப் போற்றியுள்ளார்.
ஒளவையார் என்னும் பெயரில் பலர் இருந்தனர். ஆத்திசூடி போன்ற நீதி நூல்களைப் பாடிய ஒளவையார் பிற்காலத்தவர். இங்கு நாம் காண்பது சங்கப் பாடல்களைப் பாடிய ஒளவையாரையே ஆகும்.
திணை : நெய்தல்
கூற்று : தோழி செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது.
தோழி தலைவனை நெருங்கி, ‘தலைவியின் களவொழுக்கத்தை அறிந்த அன்னை அவளை இற்செறித்தாள். இனி எப்படி அவள் உன்னைச் சந்திக்க முடியும்?’ என வருந்திக் கூறித் தலைவியை மணந்துகொள்ளுமாறு குறிப்பாக வேண்டுகிறாள். (இற்செறித்தல்= வீட்டை விட்டு வெளியே செல்ல இயலாதவாறு அடைத்து வைத்தல்.) தலைவனிடம் நேரில் பேசாமல் அவன் ‘சிறைப்புறத்தில் நிற்க அவனுக்குக் கேட்குமாறு தலைவியிடம் பேசுவதுபோல வரைவுகடாயது’ எனும் துறையும் இப்பாடலுக்குப் பொருந்தும். (வரைவுகடாதல் = திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுவது.)
தலைவனிடம் தோழி கூறுகிறாள் : ‘தலைவியின் களவு ஒழுக்கத்தை ஊரவர் அறிந்தது போலத் தாயும் அறிந்தாள் ; எங்களை வீட்டிற்குள் இருத்திக் காவல் செய்கின்றாள்.
யாயும் அஃது அறிந்தனள்
அருங்கடி அயர்ந்தனள் காப்பே
(யாய் = தாய்; காப்பு = காவல்; அருங்கடி அயர்ந்தனள் = (செல்ல முடியாதவாறு) மிகுதிப்படுத்தினாள்.)
வெம்மையால் வேரோடு கருகிய வள்ளிக்கொடி மலைச்சரிவில் கிடப்பது போல, அழகு அழிந்த முதுகுப் புறத்தில் தாழ்ந்து கிடக்கும் அடர்ந்த கருங்கூந்தலையுடைய தோழியர் கூட்டம் மிகவும் வருந்துகிறது.
எங்கள் தந்தையின் பல்வேறு தொழில்நுட்ப அழகுடைய மரக்கலங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் காற்றின் துணையோடு வந்து கடல்துறையில் ஓங்கித் தோன்றும். அத்துறையில் போதைதரும் கள் வைத்திருக்கின்ற சாடிகள் வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சாடி போன்ற தலைவியின் இளமையும் அழகும் வீட்டுக்குள் அடைபடுவதால் அழியும்; நாங்கள் மனைக்குப் போகிறோம். அங்கேயே முதிர்ந்து முடிவோம். நீ நீடு வாழ்க’
‘வீட்டுக்குள்ளேயே கிடந்து முதிர்ந்து அழிவோம்’ என்று சொல்லும் தோழி தலைவனுக்கு உணர்த்த விரும்பும் குறிப்பு, இனிக் களவுக்கு வாய்ப்பில்லை, வரைந்து கொள்வதொன்றே வழி என்பதாகும்.
எம்
இளநலம் இற்கடை ஒழியச்
சேறும் வாழியோ முதிர்கம் யாமே
தடமருப்பு எருமை
எனத் தொடங்கும் ஆலங்குடி வங்கனார் பாடல் (நற்றிணை-330).
ஆலங்குடி வங்கனார்
ஆலங்குடி எனும் பெயரில் பல ஊர்கள் உள்ளன. இவர் எந்த ஆலங்குடியைச் சார்ந்தவர் என்பது தெரியவில்லை. இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் ஆறும் மருதத்திணை சார்ந்தனவே. குலமகளிரையும் பரத்தையரையும் ஒப்பிட்டுக் குலமகளிரின் மேன்மையைப் புலப்படுத்துவது இவரது பாடல்களின் தனிச்சிறப்பாகும்.
திணை : மருதம்
கூற்று : தோழி தலைமகனை வாயில் மறுத்தது.
அதாவது தலைவன் தலைவியின் ஊடலைத் தணிக்க அவனுக்கு வாயிலாக இருக்கத் தோழி மறுத்தது. பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த தலைவன் தோழியை வாயில் வேண்டுகிறான். ‘நீ நாடும் பரத்தையர் உண்மையற்றவர்; கற்புடைய குலப்பெண்டிரோடு சேர்த்துப் பார்க்கத் தகுதியில்லாதவர்கள்’ எனக் கூறி அவனைக் கடிந்துரைத்து வாயில் மறுக்கிறாள்.
வாயில் : ஊடல் கொண்டிருக்கும் தலைவியிடம் தலைவனின் சார்பாகப் பேசி ஊடலைத் தணிப்போர் வாயில்கள் எனப்படுவர். தோழி, செவிலி, பாணன், விறலி, பாகன், பணி இளைஞர் போன்றோர் வாயில்களாகப் பயன்படுவர். இவர்களுள் தோழி, வாயிலாக நின்று தலைவியிடம் பேசுவதுமுண்டு; மறுப்பதுமுண்டு.
தோழி தலைவனை நோக்கிச் சொல்கிறாள் : ‘தலைவனே! புதிய வருவாயை உடையது உன் ஊர். வளைந்த பெரிய கொம்பையும் வலிமையான பிடரியையும் உடைய கரிய எருமைக் கடா நீர் நிரம்பிய குளிர்ந்த பொய்கையில் நாரைக்கூட்டம் அஞ்சிப்பதறி ஓடும்படியாகத் ‘துடும்’ எனப் பாயும்; நாள் முழுதும் உழைத்த உழவுத் தொழில் வருத்தம் நீங்குமாறு பொய்கையில் கிடக்கும். களைப்பு நீங்கிய பின்னர் நீண்ட கிளைகளையுடைய இருண்ட மருதமர நிழலில் தங்கியிருக்கும். இத்தகைய ஊரின் தலைவனே! அழகிய அணிகலன்கள் அணிந்த பரத்தைப் பெண்களை எமது வீட்டுக்குக் கொண்டுவந்து குலமகளிரைப்போல மணந்து கொண்டு தழுவினாலும் அவர்களுடைய கீழான மனத்தில் மெய்ம்மை தோன்றுவது அரிது.
நின் மாணிழை மகளிரை
எம்மனைத் தந்துநீ தழீஇயினும் அவர்தம்
புன் மனத்து உண்மையோ அரிதே
அப்பெண்களும் குலமகளிர் பெறுவதுபோலக் குழந்தைகளைப் பெற்றாலும் சிறப்புமிக்க கற்போடு எங்கள் பக்கத்தில் அவர்கள் சேர்ந்து அமர்தல் அதனினும் அரிது.’
நன்றி சான்ற கற்போடு
எம்பாடு ஆதல் அதனினும் அரிதே
(நன்றி = நலம் ; பெருமை ; எம்பாடு ஆதல் = எம் அருகில் அமர்ந்திருத்தல்.)
அக்காலத்தில் பரத்தையரை வீட்டுக்குக் கொண்டு வந்து மணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது என்பதைத் தோழி கூற்றால் அறிகிறோம். பரத்தையரின் மன இயல்பைத் தலைவனுக்குத் தெரியப்படுத்துவதே தோழியின் நோக்கம். பாடலில் வரும் ‘எருமைக்காட்சி’ தலைவனின் பரத்தை ஒழுக்கத்தை உள்ளுறையாகக் குறிப்பது. முன்பே இத்தகைய உள்ளுறை ஒன்றைக் (நற்றிணை-260) கண்டிருக்கிறோம். எருமைக்கடாவாகக் குறிக்கப்படுபவன் தலைவனே. நாரையினம்: காமக்கிழத்தியர். பொய்கை : பரத்தையர் சேரி. மருதமர நிழல்: புதிய பரத்தையின் வீடு. தலைவியைப் பிரிந்த தலைவன், காமக்கிழத்தியர் அஞ்சி விலகப் பரத்தையர் சேரி சென்று, அதன் பின்னர்ப் புதிய பரத்தை ஒருத்தியின் மனையகம் புகுந்து தங்குகிறான் என்பதே குறிப்புப்பொருள்.
காமக்கிழத்தி : ஒருவனுக்கே அன்புரிமை உடையவளாக உள்ள குலப்பரத்தையின் மகள். மிகுந்த காதல் காரணமாகத் தலைவனால் மணந்து கொள்ளப்பட்டவள்.
பரத்தை, பரத்தையர் சேரி : பரத்தை என்பவள் யார் மீதும் தனி அன்பு கொள்ளாத பொதுமகள்; பொருள் நாட்டமே தலையாகக் கொண்டவள். இத்தகையோர் சேர்ந்து வாழும் பகுதி பரத்தையர் சேரி.
சிறுவீ முல்லை
எனத் தொடங்கும் மதுரைப் பேராலவாயர் பாடல் (நற்றிணை-361).
மதுரைப் பேராலவாயர்
மதுரை என்பது ஊரின் பெயர். பேராலவாயர் என்பது புலவர் பெயர். பேராலவாயர் என்பது சிவபெருமானுக்குரிய பெயராகும். மதுரையையும், வைகை ஆற்றையும், கொற்கைத் துறைமுகத்தையும் இப்புலவர் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
திணை : முல்லை
கூற்று : வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது.
(உறழ்தல் = மாறுபடுதல், முரண்படுதல்)
தலைவன் வேற்றுநாடு சென்று திரும்பும்போது அவன் குறித்த பருவம் கடந்திருக்கிறது. தலைவி சினம் கொண்டிருக்கக் கூடும் என்று வாயில்கள் கவலை கொள்கின்றனர். தோழி அவர்களை மறுத்துத் தலைவி மகிழ்ச்சி கொண்டிருக்கிறாள் எனத் தெரிவி்க்கிறாள்.
தோழி வாயில்களை நோக்கிப் பேசுகிறாள் : ‘நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? தலைவன் வந்துவிட்டான். வானத்தையே தாண்டுவது போன்ற வேகத்துடன் வந்த, பொன் அணிகள் அணிந்த அவனது குதிரைகள், கனமழை பொழிந்த குளிர்ந்த நறுமணம் வீசும் காட்டு வழியாகப் பயணம் செய்து, தேரின்மணி பெரிதாக ஒலிக்க, மணல் விரிந்த நமது மாளிகை வாசலில் அவனது தேரைக் கொண்டு வந்து நிறுத்தின. மணம் மிகுந்த சிறு முல்லை மலர்களைத் தலைவன் சூடியிருந்தான் ; அவனுடன் வந்த ஏவல் இளைஞரும் சூடியிருந்தனர்.
தலைவி முன்பு கொண்டிருந்த துன்பத்தைத் தூர விலக்கி விட்டுத் தலைவனுக்கு விருந்தளித்துக் கொண்டாடும் விருப்பம் மிகுந்து நிற்கிறாள்.
அரும்படர் அகல நீக்கி
விருந்தயர் விருப்பினள் திருந்திழை யோளே
(படர் = துன்பம்)
ஆகவே, தலைவி துயரமோ சினமோ கொள்வாள் என வருந்த வேண்டாம்.’
குதிரைகளின் வேகம், ஊரெல்லாம் அறிய முழங்கிய தேர் மணியின் ஓசை, தலைவன் முல்லைசூடி மகிழ்ச்சியுடன் காணப்பட்ட தோற்றம் ஆகியவற்றைக் கண்ட தலைவி அதற்கு முன் தான் கொண்டிருந்த துன்பத்தை எல்லாம் அந்த நொடியிலேயே போக்கிவிட்டாள் என்பதனைத் தோழி கூறும் வருணனை புலப்படுத்துகிறது. தலைவன்- தலைவிக்கிடையேயுள்ள வாழ்வில் ஊடல் – ஊடல் நீங்குதல், வருத்தம் – வருத்தம் நீங்குதல் போன்றவற்றை எவ்வளவு நெருங்கியிருப்பவர்களும் புரிந்து கொள்ள முடியாது. அன்பு விளைவிக்கும் எதிர்பாராத மாற்றங்கள் அத்தகையவை என்பதைப் பேராலவாயர் பாடல் புலப்படுத்துகிறது.
சொல்லிய பருவம்
எனத் தொடங்கும் கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் பாடல் (நற்றிணை-364).
கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் என்பது திண்டிவனத்தைக் குறிக்கும். காவிதி என்பது பட்டம். முல்லைத் திணையை இவர் அழகுறப் பாடியுள்ளார்.
திணை : முல்லை
கூற்று : தலைமகள் வரைவிடை மெலிந்தது.
தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிந்திருக்கிறான். அவன் வருவதாகக் குறித்த பருவம் வந்ததும் தலைமகள் ஆற்றாமல் வருந்துகிறாள். (வரைவிடை வைத்துப் பொருள்வயிற்பிரிவு = திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபின் அதற்காகப் பொருள்தேடப் பிரிதல்.)
தலைவி தோழியை நோக்கிப் பேசுகிறாள் : ‘தலைவர் வருவதாகச் சொன்ன பருவம் வந்து கடந்துபோய்விட்டது. பகல்கூட இரவு போலாகிவிட்டது. நள்ளிரவின் மயங்கிருளோடு பகல் ஒன்றி விட்டது. பெரும் இடிமுழக்கத்தையுடைய மேகம் மிகுந்த நீர்சுமந்து இயங்குகிறது. இந்தப் பனிக்கு என் மீது என்ன கோபம்? வாடைக் காற்றோடு வரும் பனி தன்கோபம் முழுவதையும் என் மீது கொண்டுவந்து இறக்குகிறது. இப்படியே சிலநாள் கழிந்தால் நான் அதிகநாள் வாழமாட்டேன்.
பனியின் வாடையொடு முனிவு வந்திறுப்ப
இன்ன சிலநாள் கழியின் பலநாள்
வாழலேன் வாழி தோழி
மாலைப்பொழுதும் வந்துவிட்டது. மாடுகளின் கழுத்தில் உள்ள மணிகள் ஒலிக்கும் குளிர்ந்த இனிய ஓசை ஊருக்குள் புகுந்து ஒலிக்கிறது. அவற்றைத் தெருவில் ஓட்டிக் கொண்டுவரும் ஆயர்கள் இசைக்கும் கொன்றைக் குழலின் இனிய ஓசை எல்லா இடங்களிலும் ஒலிக்கிறது. பிரிந்திருப்போர் உயிரைப் பிரியச் செய்யும் துன்ப மாலையும் வந்துவிட்டது. இவ்வாறு மாரியும் மாலையும் ஒன்று சேர்ந்து வந்து விட்டால் நான் அதிகநாள் வாழமாட்டேன்.’
மடல்மா ஊர்ந்து
எனத் தொடங்கும் மடல் பாடிய மாதங்கீரனார் பாடல் (நற்றிணை-377).
மடல்பாடிய மாதங்கீரனார்
மடலேறுதல் பற்றிப் பாடியதனால் ‘மடல்பாடிய’ எனும் அடைமொழி சேர்த்து வழங்கப்பட்டார்.
திணை : குறிஞ்சி
கூற்று : சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.
தலைவன் தலைவியைச் சந்திக்க விடாமல் மறுக்கிறாள் தோழி. அவன் காலம் நீட்டிக்காமல் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்பது அவள் நோக்கம். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத தலைவன் தலைவியை அடைவதற்காக மடலேறும் செயலில் ஈடுபடாமல், ‘இப்படியே துன்பம் பெருகி இறந்து போய்விட மாட்டோமா’ என்று தோழி கேட்பத் தன்னுள் புலம்புகிறான்.
சேட்படை : தூர விலக்குதல் அதாவது தலைவியைச் சந்திக்கவிடாமல் தலைவனை விலக்குதல். மடலேறுதல்: எவ்வளவு முயன்றும் களவுக்காதலில் தலைவியைச் சந்திக்க விடாமல் தோழி தடைப்படுத்தும் போது தலைவன் மடலேறுவேன் என அச்சுறுத்துவான். மடலேறுதல் என்பது பனைமடலால் செய்த குதிரை மீது ஏறி, எருக்கம்பூ மாலை அணிந்து, தலைவியின் உருவமும் பெயரும் எழுதி, ஊர் முழுதும் சுற்றித் தன் துயருக்குக் காரணம் அவளே என்பதை ஊரறியச் செய்தல். ஆனால் இது தோழியையும் தலைவியையும் உடன்படுத்துவதற்காகத் தலைவன் கூறும் ஒருவகை அச்சுறுத்தல் மட்டுமே.
தலைவன் தோழி கேட்குமாறு தனக்குள் பேசுகிறான் : ‘அகன்ற வானத்தில் பாம்பு விழுங்கிக் குறைந்த நிலாவைப் போலக் கூந்தலைச் சார்ந்து திகழ்கின்ற சிறு நெற்றியையுடைய தலைவி, நான் நினைக்கும் போதெல்லாம் என் எதிரே தோன்றி என்னைக் கடிந்து பேசுகிறாள். காமநோய் பெருகி மெலிகின்றேன். இத்துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக நாம் மடலேறலாமா? பனை மடலால் செய்த குதிரை மீதேறி, ஆவிரை, எருக்கம், பூளை, உழிஞை என்பவற்றின் மலர்களைக் கலந்து தொடுத்த மாலையை அணிந்து ஊர்தோறும் நாடுதோறும் சென்று தலைவியின்அழகைப் பாராட்டித் திரியலாமா? அல்லது இப்படியே மனத்தை நிலையாக நிறுத்தி அதுவே பிணியாகக் கொண்டு கிடந்து அழிந்து போய்விட மாட்டோமா?’
தலைவியின் மீது தான் கொண்டுள்ள அன்பின் தீவிரத்தை உணர்த்தவே மடலேறுவது பற்றி்ப் பேசுகிறான் ; அப்படி மடலேறினால் தலைவிக்கு இழுக்கு நேரும் என்பதனால் மடலேறக் கூடாது, நோய்முற்றி இறந்து போக வேண்டும் என்றும் தலைவன் பேசுகிறான். தோழி இரங்குவாள் என்பது அவனது எதிர்பார்ப்பு.
தலைவி தன்னைக் கடிந்து பேசுவதாகத் தலைவன் காண்பது அவன் மனக்கண்ணில் காணும் உருவெளித்தோற்றம். தலைவி அவனை ஏன் கடிந்து பேச வேண்டும்? மணந்து கொள்ளாமல் நீட்டிப்பது பற்றி அவனுக்குள்ளிருக்கும் குற்ற உணர்வு இவ்வாறு வெளிப்படுகிறது.
மடலேறுதல் பற்றிப் பாடிய புலவரை மடல்பாடிய மாதங்கீரனார் என்று அடைமொழியுடன் குறி்த்துள்ளனர். பாலைபாடிய பெருங்கடுங்கோ, முல்லைபாடிய நல்லுருத்திரன் எனவரும் பெயர்களில் பாலை, முல்லை எனத் திணை கொண்டு புலவர்க்கு அடைமொழி சேர்ந்தன. மாதங்கீரனாருக்கு மடற்கூற்று என்னும் துறைகொண்டு அடைமொழி சேர்ந்துள்ளது.
விழிக்கண்பேதைப் பெருங்கண்ணனாரது முல்லைத் திணைப் பாடலில் (நற்றிணை-242) மழையில் முல்லைநிலம் குளிர்வது, பிடவத்தின் ஈரமலர் அரும்புவது, முல்லை அரும்பு அவிழ்வது, கொன்றை பொன்போல் பூப்பது, காயாம் பூ நீலமணிபோல் மலர்வது என இவ்வாறு தலைவனுடைய பார்வைபடும் இடமெல்லாம் காடு, மலர்க்காடாகத் தோற்றமளிக்கிறது. தலைவனின் மன மலர்ச்சியும் இயற்கையின் மலர்ச்சியும் ஒன்றித் தோன்றுகின்றன. பிரிவுக்குப் பின் தலைவியை மீண்டும் கூடவிருக்கும் தலைவனின் மனச் சிலிர்ப்பை ஒரு சொல்லில் கூடச் சொல்லாமல் இயற்கையின் சிலிர்ப்பை மட்டுமே காட்டுகிறார் புலவர். இதைப் போன்றே, முல்லையின் அழகுகள் சேகம்பூதனார் பாடலில் (நற்றிணை-69) தலைவியின் மனநிலைக்கேற்பத் துன்பம் தருவதாகக் காட்டப்பட்டிருப்பதை முன்பு கண்டோம்.
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனாரது முல்லைத் திணைப் பாடல் (நற்றிணை-289) பிரிவிடைப் பருவம் கண்டு ஆற்றாத தலைவியின் நிலையைச் சொல்வது. பருவம் வந்து விட்டது. அதன் தோற்றமோ, அழகோ அல்ல, அதன் வருகையே தலைவியைத் துன்புறுத்துகிறது. தலைவர் வாய்மை தவறாதவர், பருவம்தான் முந்திவிட்டது எனக் கார்காலத்தைத் தன் எதிரியாகப் பார்க்கிறாள். மழையையும் இடியையும் வருணிக்கப் பயன்படுத்தும் வழக்கமான அடைமொழிகள்தாம் ‘கனைப் பெயல்’ என்பதும், ‘கடுங்குரல்’ என்பதும். இப்பாடலில் அவை தலைவியின் மனநிலையோடு ஒத்து இயற்கையைக் கொடுமையானதாகச் சித்திரிக்கின்றன.
கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனாரது முல்லைத்திணைப் பாடலில் (நற்றிணை-364) மாரிக்கால வருணனை சற்று வேறுபட்டது. பருவம் வந்தும் தலைவன் வராததனால் வருந்தும் தலைவிக்காகத் தாமும் வருந்துபவர் போலப் புலவர் இயற்கையைக் கடிந்து கொள்ளும் தொனியில் வருணிக்கிறார். அடர்ந்த மழைக்காலத்துப் பகற்பொழுதும்கூடச் சூரியன் வெளித்தெரியாமல் மாலைப்பொழுது போலக் காணப்படுவது நாமறிந்ததே. புலவர் சொல்கிறார், ‘பகல் இரவுக்குள் நுழைந்து விட்டது’ என்பதாக. மாலையும் இரவும் தலைவியைத் துன்புறுத்துபவை. பகற்பொழுதாவது வெளிச்சம், சுற்றுச் சூழலில் மனித நடமாட்டம் இவை காரணமாக ஓர் ஆறுதலாக இருக்கும். இப்போதோ, பகலிலும் பகல் இல்லாமல் போய் விட்டது எனக் காட்டுவதன் மூலம், தாம் படைத்த பாத்திரத்தின் உணர்ச்சியைத் தம் உணர்ச்சியாகவே காட்டுகிறார்.
சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்
மயங்கிருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி
(எல்லை = பகல் ; நடுநாள் = நள்ளிரவு ; மங்குல் = இருள்)
மழைக் காலத்தைத் தன் எதிரியாகப் பார்க்கும் தலைவியின் உளவியல் சித்திரிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. பனி, தன் கோபம் முழுவதையும் தன்மீது வந்து இறக்குவதாக எண்ணுகிறாள் தலைவி.
பனியின் வாடையொடு முனிவுவந் திறுப்ப
(முனிவு = கோபம்)
தலைவி மீது பனிக்கு என்ன கோபம்? இது அகவயமான பார்வை. எளிதாக விளக்க முடியாது. அவளுடைய துயர நேரத்தில் அவள் தன்னைச் சூழ்ந்துள்ள எல்லாவற்றையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறாள். காமவேதனையைத் தரும் மழைப் பருவத்துக்குத் தன்மீது ஏதோ கோபமிருக்கக் கூடும் என எண்ணிக்கொள்கிறாள். இது அவளது உளவுணர்வு.
மருதத் திணைப் பாடல்களில் பரத்தையிற்பிரிந்த தலைவன் மீது தலைவி ஊடல் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில், தலைவன் அவனது நிலத்து விலங்கான எருமையோடு உள்ளுறையாக உவமிக்கப்படுவது வழக்கம். பரணர் பாடலில் (நற்றிணை-260) பரத்தை ஒழுக்கத்துக்காகத் தலைவனைக் கடிந்து பேசும் தலைவி இவ்வாறுதான் உவமிக்கிறாள். எருமை தன் அருகிலிருக்கும் தாமரையை மேயாமல் கழுநீர்ப்பூக்களை மேய்ந்துவிட்டு வெண்மணல் குன்றில் போய் உறங்கும் சாதாரணமான இயற்கைக் காட்சியில், தலைவியை விரும்பாமல் காதற்பரத்தையை நுகர்ந்து, பின்னர்ச் சேரிப்பரத்தையின் மனையில் சென்று உறங்கும் தலைவனின் செய்கையைக் குறிப்பால் உணர்த்துகிறார் புலவர். பல பாடல்களில் இதே மாதிரியாக எருமை குறியீடாவதால், சங்கப் பாடல்களைப் பயிலும் வாசகன், மருதத்திணைப் பாடல்களில் எருமை வந்தால் உள்ளுறை இருக்கிறதா எனக் கவனிக்கத் தொடங்கி விடுவான்.
முன்பு நாம் கண்ட விழிக்கண்பேதைப் பெருங்கண்ணனாரது பாடலில் (நற்றிணை-242) கூட்டத்தினின்று விலகி ஓடும் குட்டிமானையும் பெண்மானையும் தேடும் ஆண்மான், தன் குழந்தையையும் தலைவியையும் காண விரும்பும் தலைவனுக்குக் குறியீடாகின்றது. இது வழக்கமான உள்ளுறையே. ஆண்மானுக்குக் கவிஞர் தரும் அடைமொழி விளக்கம் தான் இங்குக் கவனிக்கத் தக்கது. காமர் நெஞ்சமொடு அகலா… இரலை ஏறு ஆண்மானின் நெஞ்சம் காமர் நெஞ்சம் – அன்பு நெஞ்சம். விலங்குக்குரிய இயல்பான உணர்ச்சியை (instinct) விரிவும் ஆழமும் செய்து மனித நெஞ்சத்தை மானுக்குள் படைத்துக் காண்கிறார் கவிஞர்.
தேய்புரிப் பழங்கயிற்றினாரது பாலைத் திணைப் பாடலில் (நற்றிணை-284) பொருள் தேடச் செல்லும் தலைவனுக்குள் இடைவழியிலேயே ஒரு போராட்டம் நிகழ்கிறது. நடுவே நின்று விடுகிறான் தலைவன். தலைவியிடம் திரும்பிப் போகத் தூண்டுகிறது நெஞ்சம். நெஞ்சத்தைப் பிணித்திருக்கின்றவள் அவள். ‘அவளை வருந்தவிடலாமா? ஆகவே திரும்பிப் போகலாம்’ என்கிறது நெஞ்சம். அவன் அறிவோ இதனை எதிர்க்கிறது. ‘எடுத்தசெயலை முடிக்காமல் திரும்புவது இழிவு, அறியாமை. ஆகவே திரும்பாதே’ என்கிறது. இவ்வாறு அறிவுக்கும் மனத்துக்குமிடையே நிகழும் போராட்டத்தில் இடையே சிக்கித் திணறும் தலைவன், இரண்டு யானைகள் எதிரெதிர் நின்று பற்றி இழுக்கும் தேய்புரிப் பழங்கயிறு போலத் தன்னை உணர்கிறான். இந்த உவமையே இப்பாடலின் உணர்ச்சிச் சித்திரிப்புக்குத் தலையாய உத்தியாக அமைகிறது. ஏறத்தாழத் தன் இறுதி நெருங்கிவிட்டதோ என அஞ்சும் தலைவனைப் பாடலில் காண்கிறோம்.
மடல் பாடிய மாதங்கீரனாரது குறிஞ்சித் திணைப் பாடல் (நற்றிணை-377) தலைவனது அவல உணர்ச்சியைச் சற்று எல்லை தாண்டியதாகக் காட்டுகிறது. தலைவியைச் சந்திப்பது மறுக்கப்பட்ட நிலையில் அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனை போகிற போக்கில், மடலேறலாமா? அல்லது இப்படியே காமநோய் முற்றி இறந்து போய்விட மாட்டோமா? என்ற புலம்பலாக முடிகிறது. தோழியின் நோக்கம் அவனை வரைவுக்குத் (திருமணத்துக்கு) தூண்டுவதுதான். ஆனால் ஏதோ தடை காரணமாக உடன் வரைய முடியாது போயிருக்கலாம். இந்தக் குற்றவுணர்வு காரணமாகவே தலைவி தன் எதிரே தோன்றிக் கடிந்து பேசுவதாக அவனுக்கு உருவெளித்தோற்றம் உண்டாகிறது என்பதனை முன்னர்க் கண்டோம்.
ஒளவையாரது நெய்தல் திணைப் பாடல் (நற்றிணை-295) தலைவியின் மன உளைச்சலை வெளிப்படுத்துவது. தோழியின் கூற்றில் அது வெளிப்படுகிறது. தலைவி இற்செறிக்கப்பட்டு விட்டாள். தலைவன் விரைவாக வரைந்து கொள்ள வேண்டும். தவறினால் என்ன நடக்கும்? தோழி தலைவனிடம் உணர்ச்சி ததும்பச் சொல்கிறாள் : ‘நாங்கள் எங்கள் மனைக்குள் செல்கிறோம். கள் சாடி போன்ற தலைவியின் இளமையழகு வீட்டின் சுவர்களுக்கிடையே கிடந்து அழிந்து போகும்: அங்கேயே முதிர்ந்து முடிந்து போவோம் நாங்கள். நீ நீடு வாழ்க’ இவ்வாறு, எதிர்காலத்து அவலத்தைத் தலைவன் மனக்கண்ணில் நிறுத்துமாறு அமைகிறது தோழியின் உணர்ச்சிக் கூற்று.
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனாரது பாடல் (நற்றிணை-289) தலைவி, பருவம் வந்தும் தலைவன் வாராத துயரத்திலிருப்பவள், கார்காலம் தன்னோடு தன்னுள்ளேயே இருந்து கொண்டிருப்பதாக உணர்கிறாள். “கார் செய்து என்னுழையதுவே” கார்காலம் தன்னுடனேயே இருப்பதென்றால், இது என்ன விதமான உணர்வு? அவள் மனத்தை, உணர்வை, உடம்பைப் பீடித்து அலைக்கழிக்கும் பொருளாகி விடுகிறது பருவம். அடுத்து அவள் தனது ஆதரவற்ற நிலையைத் தெரிவிக்க ஓர் உவமை சொல்கிறாள். வெட்டப்பட்ட மரத்தின் வேரடியை இரவில் கொளுத்தும் கோவலர்கள் விடியலில் அதை அணைக்காமல் விட்டுப் போய்விடுவார்கள். அந்த நெருப்பு கனன்று கனன்று தானே தான் அணைய வேண்டும். தலைவி, அந்தக் கனலும் மரவேரடி போலத் தன்னைக் காண்கிறாள். தனது துன்பம் அணைக்க ஆளற்றது என்பதை எண்ணி நோகிறாள். தலைவியுடன் குளிர்ந்த கார்காலமும் இருக்கிறது: அவளுக்குள் கனலும் நெருப்பும் இருக்கிறது : இரண்டும் ஒரேவகைத் துன்பமே எனக் காட்டும் சேந்தன் குமரனாரது கவிதை, வாசகரிடம் அழுத்தமான உணர்வுப் பாதிப்பை உண்டாக்கக் கூடியது.
ஆலங்குடி வங்கனாரின் மருதத்திணைப் பாடலில் (நற்றிணை-330) தோழி தலைவனிடம் பேசும் பேச்சில் அறிவும் உணர்ச்சியும் சமமாகக் கலந்திருக்கின்றன. பரத்தையிற் பிரிந்து திரும்பி வந்த தலைவனிடம் தலைவிக்கு அவன் துரோகம்-துன்பம் இழைத்துவிட்டான் என்ற கண்டனத்தைத் தெரிவிக்கலாம்; குத்திக் காட்டலாம்; இனிச் செய்யாதே என்று அறிவுறுத்தலாம்; இங்கே திரும்பி வராதே என்று கூடச் சொல்லலாம். ஆனால் தோழி இத்தகைய வேக உணர்ச்சிகளை உள்ளடக்கிக் கொண்டு அறிவார்ந்த வாதம் ஒன்றைத் தொடுக்கிறாள். தலைவன் உள்ளத்தில் இருக்கிறதோ இல்லையோ அவளாக ஒரு கற்பனை நிகழ்வைப் படைத்துக் காட்டுகிறாள். ‘ஒருவேளை, உனக்கு விருப்பமானால், பரத்தையரை வீட்டுக்குக் கொண்டு வந்து மணம்செய்து வாழ்ந்து பார். கீழ்த்தரமான அவர்கள் மனத்தில் கபடமில்லாத உண்மை அன்பு இருக்குமா? இராது. அவர்கள் உன் குழந்தைகளையும் பெறக்கூடும். ஆனால் எக்காலத்தும் அவர்கள் கற்புடைய குலமகளிர் வரிசையில் அமரத் தகுதி பெற்றவர்களாக முடியாது’. தலைவன் போக்கிலேயே சென்று, தவறு என்று காட்டித் திருப்பிக் கொண்டு வரும் இந்த வாதத் திறமைக்குள் தோழியின் சின உணர்ச்சியும், வாயில் மறுப்பதில் அவள் கொண்டுள்ள உறுதியும் உள்ளடங்கியிருப்பதைக் காணமுடியும்.
இவ்வாறு அன்றி முகத்துக்கு நேராகக் கடுஞ்சொல் கூறும் உணர்ச்சி வெளிப்பாடும் உண்டு. பரணரின் மருதத்திணைப் பாடல் (நற்றிணை-260) இத்தகையது. பரத்தையிற் பிரிந்து திரும்பிய தலைவன், அவளைச் சமாதானப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு அவளைத் தழுவுகிறான். தலைவி வெடிக்கிறாள். வெய்யைபோல முயங்குதி – உண்மையான விருப்பமுள்ளவன் போலத் தழுவுகிறாயே என அவன் பொய்யன் என்பதை நேரடி வார்த்தைகளில் உணர்த்துகிறாள். அதனினும் கடுமையாகச் சொல்கிறாள். ‘என் அழகு உன் அன்புக்காகக் காத்திருந்தது. அதை வீணே வாட விட்டாய் ; உனக்காக என் கூந்தலில் சூடியிருந்த மலர்களையும் என் மனத்தையும் வாடவிட்டவன் நீ ; நீ என் பகைவன். இதை நான் மறக்கவே மாட்டேன்’ எனச் சாடுகிறாள். ‘பகைவன்’ என்பதை விடக் கடுமையான சொல் இருக்கமுடியுமா? இச்சொல் வெடித்துப் புறப்படும் மனத்து உணர்ச்சிகளின் கொதிநிலை நன்கு புரிகிறதல்லவா !
ஷேக்ஸ்பியர் நாடகங்களில், கம்பராமாயணம் போன்ற காப்பியங்களில், இக்கால நாவல்களில், திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஓர் உத்தி, உருவெளித்தோற்றக் காட்சி. மனத்துக்குள் தோன்றும் காட்சியை வெட்ட வெளியில் தோன்றுவதாகப் படைப்பாளி படைத்துக் காட்டுகிறான். நாடகத்துக்கு இவ்வுத்தி மிகப் பொருத்தமானது. பாத்திரத்தின் மனக்குழப்பம், அச்சம் போன்றவற்றைப் பாத்திரப் பேச்சு இல்லாமல் காட்சிப்படுத்த ஏற்ற உத்தி இது. மடல்பாடிய மாதங்கீரனார் பாடலில் (நற்றிணை-377) குழம்பிக் கலங்கியிருக்கின்ற தலைவன் முன்னால் உருவெளிக் காட்சியாகத் தலைவி தோன்றுகிறாள். பாதிக்குமேல் விழுங்கப்பட்ட நிலவும் விழுங்கிய பாம்பும் நினைவில் தோன்றுமாறு இருக்கின்றன அவளது அடர்கூந்தலும் நெற்றியும். இக்காட்சியில் அவள் அவனைக் கடிந்து பேசுகிறாள். இந்த உருவெளிக்காட்சியே தலைவனை மெலியச் செய்கிறது.
இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப்
புதலிவர் தளவம் பூங்கொடி அவிழப்
பொன்னெனக் கொன்றை மலர மணியெனப்
பன்மலர்க் காயாங் குறுஞ்சினை கஞல
அரும்ப, அவிழ, மலர, கஞல என வரும் வினைஎச்சங்களின் தொடர்ச்சி கவிதைக்கு ஒரு நடைவேகத்தைத் தருகிறது அல்லவா! தலைவனின் உணர்வு வேகத்துக்கு இணைகோடு போலக் கவிதை நடைவேகம் அமைகிறது. வடிவம் இங்கு உள்ளடக்கத்தைச் சிறப்புறச் செய்கிறது.
நற்றிணை 289ஆம் பாடலில் பெரும் முழக்கத்தோடு பொழியும் மழைக்கு ஏற்ற ஓசையமைப்பைக் காணலாம்.
நளிகடல் முகந்து செறிதக இருளிக்
கனைபெயல் பொழிந்து கடுங்குரல் பயிற்றி
கவிதைப் பொருளுடன் கவிதைப் புறவடித்தின் ஓசை பொருத்தமாக இணைகிறது.
தீயும் வளியும் விசும்புபயந் தாங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
கவிஞர் என்ன சொல்ல வருகிறார்? ‘வானம் தீயையும் காற்றையும் தன்னிடத்தில் கொண்டிருப்பது போல அது நோயாகவும் இன்பமாகவும் இருக்கிறது’ என்பது பொருள். இந்த ‘அது’ எது? கவிதையோடு கூடவே போய் இறுதியடியில் விடை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ‘அது’ இலங்குமலை நாடன் மார்பே – தலைவனது மார்பு. இவ்வாறு முன்னும் பின்னுமாக வரவேண்டியதைப் பின்னும் முன்னுமாக மாற்றி வைக்கும் வடிவம் பல கவிதைகளில் காணக்கிடைப்பது. இது கூட வேண்டுமென்றே செய்யப்படுவதன்று. பேச்சிலும், மன ஓட்டத்திலும் கருத்துகள் இப்படி இடம்மாறி வருவதைப் பார்க்கிறோம். இப்படி நடக்குமென்று நான் நினைக்கவேயில்லை என்று தொடங்கும் ஒருவர், பிறகுதான் எது, எப்படி, ஏன் நடந்தது என்பதை விவரிக்கிறார். மனஓட்டத்தையும் பேச்சு முறையையும் பின்பற்றி அமைந்தவை சங்கப்பாக்கள். அதற்கேற்ப அவை வடிவம் கொள்கின்றன.
அதேபோல், நற்றிணை 361ஆம் பாடலில்,
சிறுவீ முல்லைப் பெரிதுகமழ் அலரி
தானுஞ் சூடினன் இளைஞரும் மலைந்தனர்
எனவரும் தொடக்கமும் அமைந்துள்ளது. இது தலைவன், அவனுடைய வீரர்கள் ஆகியோரின் தோற்றத்தைக் குறிக்கிறது. இந்த அடிகளுக்குப் பின்னர்த்தான் அவர்கள் தேரில் வந்து இறங்கும் நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. அவர்கள் வந்த பிறகுதான் தோழி அவர்கள் பூச்சூடி வந்ததைக் கண்டிருக்க முடியும். ஏன் இப்படி அடிகள் மாறியுள்ளன? தோழியைச் சார்ந்தவர்கள் தலைவி வருந்துவாளோ என்ற ஐயத்தில் இருந்தனர். அவர்களை மனம் தெளியச் செய்யவே, தலைவன் மகிழ்ச்சி மிக்க, கண்டவுடன் எந்தக் கோபமும் மறைந்து விடுமாறு புத்துணர்ச்சிமிக்க தோற்றத்தில் இருப்பதை முதலில் சொல்கிறாள். கம்பராமாயணத்தில் தூது சென்று திரும்பிய அனுமன் இராமனின் மனநிலை அறிந்து ‘கண்டனென்’ என்ற உடன்பாட்டுச் சொல்லால் தொடங்கிப் பிறகு மற்ற விவரங்கள் சொல்வதை இங்கு ஒப்பிடலாம். கவிதையை வடிவமைக்கிற கவிஞன் வெறும் சொற்களை அடுக்கிக் கட்டுகிறவன் அல்லன். கவிதை வடிவத்தின் மூலம் மனங்களை, உணர்ச்சிகளை வடிவமைப்பவன்.
பாடம் – 4
கொங்குதேர் வாழ்க்கை
எனத் தொடங்கும் இறையனார் பாடல் குறுந்தொகை-2)
இறையனார்
மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுளே இறையனார் என்னும் புலவர் எனக் கூறுவர். திருவிளையாடற் புராணம், கடம்பவன புராணம், தமிழ்விடுதூது போன்ற பிற்கால நூல்களில் சிவன் தருமிக்குப் பொற்கிழி கிடைப்பதற்காகக் ‘கொங்கு தேர் வாழ்க்கை’ எனும் பாடலைப் பாடிக் கொடுத்தார் எனக் கூறப்படுவது காணலாம்.
திணை : குறிஞ்சி
கூற்று : இயற்கைப் புணர்ச்சியின்போது தலைவன் தலைவியின் நாணம் நீங்குவதற்காக, மெய்தொட்டுப் பயிறல் (உடலைத் தொட்டுப் பழகுதல்) முதலிய செயல்களைச் செய்து, அவள் மீதுள்ள அன்பு தோன்ற அவள் நலம் பாராட்டுத ல் (நலம் = அழகு).
இப்பாடலில் தலைவன் தலைவியின் கூந்தலில் அமர்ந்துள்ள வண்டைப் பார்த்துப் பேசுவதுபோல அவள் அழகைப் பாராட்டுகிறான். வண்டை விரட்டுவது போலத் தலைவியின் தலையைத் தொடும் குறிப்பு இருப்பதால் மெய்தொட்டுப் பயிறல் துறையும் இப்பாடலுக்குப் பொருந்தும் எனலாம். இப்பாடல் தலைவன் கூற்று.
தலைவன் தலைவி கூந்தலில் அமர்ந்துள்ள வண்டை நோக்கிப் பேசுகிறான் “அழகிய சிறகுகளையுடைய வண்டே! தேனைத் தேடி ஆராய்ந்து உண்பதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறாய். ஆதலால் நீ சொல்! என் மன விருப்பம் அறிந்து எனக்காக ஒருதலைப் பட்சமாகச் சொல்ல வேண்டாம்; உன் அனுபவத்தில் நீ கண்டுணர்ந்த உண்மையையே சொல். என் தலைவி பல பிறவிகளிலும் என்னோடு காதல் உறவு பூண்டு நெருங்கிய பேரன்பினையுடையவள். மயில் போன்ற சாயலைக் கொண்டவள். அழகிய பல்வரிசையை யுடையவள். நீ அறிந்துள்ள பூக்களுள் இவளது கூந்தல் போலச் சிறந்த நறுமணமுள்ள பூக்களும் உண்டோ?
மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே
(மயிலியல் = மயில்போன்ற சாயல். சாயல் என்பது இன்னது என உணர்த்த முடியாத அழகு. அது அழகின் மென்மை. உடலின் சிறு சிறு அசைவுகளில் தோன்றும் அழகு, செறிஎயிறு = செறிவான பல்வரிசை)
இயற்கைப் புணர்ச்சியில் இப்போதுதான் கண்டு புதிதாகப் பழகும் தலைவன், பல பிறவிகளிலும் அவளே தன் காதல் இணையாக இருந்தவள் என உணர்த்துவதன் மூலம் தலைவியின் உள்ளத்தில் ஒரு பாதிப்பை உருவாக்குகிறான். அவள் மனத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டு அவள் அவன்மீது நம்பிக்கை கொள்ளப் பயிலியது கெழீஇய நட்பு என்னும் தொடர் உதவும், ‘பயின்று பல பிறவிகளிலும் சேர்ந்த நட்பு’ என்பது பொருள்.
தலைவியின் கூந்தல் நறுமணத்தைப் பற்றித் தீர்ப்புரைக்கத் தகுதியானது தேன் உண்ணும் வண்டு. “கொங்குதேர் வாழ்க்கை”யையுடைய வண்டு! ‘ஒருதலைப்பட்சமாகச் சொல்லி விடாதே’ என்று தலைவன் வண்டினிடம் சொல்வதற்குக் காரணம், அது அவனது மலைப்புறத்து வண்டு என்பதாகும். இக்குறிப்பின் மூலம் தலைவிக்குத் தலைவன் குறிப்பாக உணர்த்த விரும்புவது அவனது ஊரும் தொலைவில் இல்லை, அருகில்தான் உள்ளது என்பதாகும். இக்குறிப்பும் தலைவிக்கு ஒரு நம்பிக்கை உருவாக்குவதாகும்.
இப்பாடலைத் தொடர்புபடுத்தும் புராணக்கதை ஒன்று உண்டு. அதற்கு ஒரு காரணம் பாடலைப் பாடிய புலவர் பெயர் ‘இறையனார்’ என்றிருப்பதாகும். தன் தேவியின் கூந்தல் மணம் இயற்கையானதா எனச் சிந்தித்த பாண்டிய மன்னன் தன் ஐயம் இன்னதென்று வெளிப்படுத்தாமல், அதனைத் தீர்க்கும் புலவனுக்கு ஆயிரம் பொன் பரிசு தருவதாக அறி்வித்ததும், தருமி என்ற ஏழைப் புலவனுக்கு உதவச் சிவபெருமான் “கொங்கு தேர் வாழ்க்கை” என்ற பாடலைப் பாடித் தருமிக்கு வழங்கியதும், அரசவையில் நக்கீரர், பாட்டில் பொருட்குற்றம் இருக்கிறது என்று சொல்லிப் பரிசைத் தடுத்ததும், சிவன் வந்து வாதாடியும் ‘குற்றம் குற்றமே’ எனப் பிடிவாதம் செய்ததும், சிவனின் நெற்றிக் கண்ணால் சுட்டெரிக்கப்பட்டதும், பின் சாப விடுதலை பெற்றதும் திருவிளையாடற் புராணத்தில் விரிவாகச் சொல்லப்படுகின்றன.
நள்ளென்றன்றே யாமம்
எனத் தொடங்கும் பதுமனார் பாடல் (குறுந்தொகை-6).
பதுமனார்
பதுமனார் எனும் பெயர்கொண்டு இவரைச் சமணர் எனக் கூறுவாரும் உண்டு. பெரும்பதுமனார் என்பது வேறொரு புலவரைக் குறிக்கும் பெயர். பதுமனார் தலைவியின் பிரிவுத் துயரை, ‘நனந்தலை உலகமும் துஞ்சும்’ என அவள் வருந்துவதைக் கூறி, அழகுற வெளிப்படுத்தியுள்ளார்.
திணை : நெய்தல்
கூற்று : தலைவன் வரைவிடை வைத்து (திருமணத்தைத் தள்ளி வைத்து)ப் பிரிந்தபோது ஆற்றாளாகிய தலைமகள் தோழி கேட்குமாறு சொல்லியது.
தலைவியை மணப்பதற்காகப் பொருளீட்டத் தலைவன் பிரிந்து போயிருக்கிறான். பிரிவு ஆற்றாத தலைவி, இரவில் தனக்கு ஆறுதல் தரும் துணையாக விழித்திராமல் உறங்கிய தோழியைப் பழித்துத் தன் வருத்தம் தோன்றப் பேசுகிறாள். இது தலைவி கூற்று.
தலைவி தோழி கேட்குமாறு தன்னொடு பேசுகிறாள் : ‘இந்த நடு இரவு ‘நள்’ என்ற ஓசையுடையதாயிருக்கிறது. என்னைப் பற்றி அலர் தூற்றுதலை விட்டு மக்களும் இனிதாக உறங்குகின்றனர். என்மீதுள்ள வெறுப்பை மறந்து இந்த அகன்ற உலகமும் துஞ்சுகிறது. நான் ஒருத்தி மட்டும்தான் துயிலாதிருக்கிறேன்’
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சாதேனே
(நனந்தலை = அகன்ற இடத்தை உடைய ; துஞ்சும் = உறங்கும்; மன்ற = மிகவும்)
‘நான் ஒருத்தி மட்டுமே துயிலாதிருக்கிறேன்’ என்று தலைவி சொல்வதன் குறிப்பு, துன்ப நேரத்தில் துணையாக இருக்க வேண்டிய தோழியும், இரவின் கொடிய கைகளில் தலைவியை விட்டுவிட்டு உறங்கிவிட்டாள் என்பதாகும். திருவள்ளுவர் படைத்த தலைவியும் இதே போன்ற உணர்வை வெளிப்படுத்துகிறாள்.
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை (திருக்குறள்-1168)
‘எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்ட இந்த இரவு, பாவம், எந்த நேரமும் இறந்துபோகக்கூடிய என்னைப்போய்த் துணையாகக் கொண்டிருக்கிறது!’ என இரவுக்காக வருந்துவது போல் தன் வருத்தத்தை வெளிப்படுத்துகிறாள்.
கழனி மாத்து
எனத் தொடங்கும் ஆலங்குடி வங்கனார் பாடல் (குறுந்தொகை-8).
ஆலங்குடி வங்கனார் : இப்புலவரைப் பற்றிய குறிப்பை நற்றிணை பாடம் 3-இல் கண்க
திணை : மருதம்
கூற்று : தலைவி தன்னைப் புறம்பேசினாள் எனக் கேள்விப்பட்ட காதற்பரத்தை, தலைவியோடு தொடர்புடைய தோழியர் முதலியோர் கேட்கும்படியாகச் சொல்லியது.
இப்பாடல் பரத்தை கூற்று.
காதற்பரத்தை சொல்கிறாள் : ‘வயல் வரப்பிலுள்ள மாமரத்தில் விளைந்து காம்பு இற்றுத் தானே விழுகின்ற இனிய பழத்தைப் பக்கத்திலுள்ள பொய்கையில் வாழும் வாளைமீன் கவ்விக் கொள்ளும். இத்தகைய இனிய ஊரைச் சார்ந்த தலைவன், என் வீட்டில் இருக்கும்போது என்னைப் பெருமைப்படுத்தும் சொற்களைச் சொல்கிறான் ; தன் வீட்டிற்குப் போகும்போது, கண்ணாடிமுன் நின்று கையையும் காலையும் தூக்கும் கணத்திலேயே அதில் தோன்றும் உருவமும் அவ்வாறே செய்வதைப் போலத் தன் புதல்வனின் தாயான மனைவி என்ன விரும்புகிறாளோ அவற்றை அறிந்து, அவள் விரும்பிய கணத்திலேயே செய்கிறான்.’
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே
(ஆடிப்பாவை = கண்ணாடியில் தெரியும் உருவம் ; மேவன = விரும்புவன)
தன்னைப் புறம்பேசிய தலைவியைப் பழிக்காமல், அவள் பழிப்பதற்குக் காரணமாக இருக்கிறான் என்று தலைவனைப் பழிக்கிறாள் பரத்தை. தலைவன் தலைவிக்குப் பணிந்து ஆண்மைக்கு இழிவு தோன்ற இயங்குகிறான் என்பது பரத்தையின் குற்றச்சாட்டு. இவ்வாறிருப்பதால் தான் தலைவி, பரத்தையைப் புறம்பேசிப் பழிக்கிறாள் என்பது பரத்தையின் சினக்குறிப்பு.
இனி, ஓர் ஆண்மகனை அடக்கி ஆள்வது பெண்மைக்கு இழுக்கு என்று தோன்றுமாறும் அமைகிறது இந்தப் பரத்தை கூற்று.
கழனி மாமரத்திலிருந்து கனிந்து தானே உதிரும் பழத்தை வாளைமீன் கவ்விக் கொள்ளும் என்ற வருணனை குறிப்புப் பொருளுடையது. தலைவிக்குரிய தலைவன், பரத்தையிடம் தானே விரும்பி வருகிறான்; அவனுடன் அவள் மகிழ்கிறாள் என்பதுதான் குறிப்புப் பொருள். தன்னைக் கண்டிக்கத் தலைவிக்கு உரிமையில்லை என்ற எண்ணம் இதில் வெளிப்படுகிறது.
உள்ளார் கொல்லோ
எனத் தொடங்கும் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல் (குறுந்தொகை-16).
பாலைபாடிய பெருங்கடுங்கோ : இப்புலவர் பற்றிய குறிப்பை நற்றிணை பாடம் 1-இல் காண்க.
திணை : பாலை
கூற்று : பொருள் வயிற் பிரிந்தபோது தலைமகள் ஆற்றாமை கண்டு தோழி கூறியது.
பொருள்வயிற் பிரிந்த தலைவன் மீண்டு வாராமை கண்டு வருந்திய தலைவியைத் தோழி, ‘அவர் வந்துவிடுவார்’ என்று கூறி ஆற்றுவித்தது. ‘தலைவர் செல்லும் பாலை நிலத்தில் உன் நினைவை உண்டாக்கும் நிகழ்ச்சி எதுவும் நிகழலாம் ; அது கண்டு அவர் உன்னை நினைத்து மீண்டு வருவார்’ எனத் தோழி காரணம் கூறுகிறாள். இப்பாடல் தோழி கூற்று.
தோழி தலைவியை நோக்கிச் சொல்கிறாள் : ‘தலைவர் கள்ளிக் காடுகள் மிகுந்த பாலையைக் கடந்து செல்கின்றார். அங்கே ஆறலை கள்வர்கள் தீட்டிய அம்பின் இரும்பு நுனியைச் சரி செய்வதற்காக நகத்தில் புரட்டிப் பார்ப்பார்கள் அப்படி புரட்டும்போது எழும் ஓசை போல, பாலை நிலத்தில் செங்கால் பல்லி, தன் பெண் பல்லியை அழைக்கும்போது எழுப்பும் ஓசை இருக்கும். அந்தக் காதல் அழைப்போசையைக் கேட்கும் தலைவர் நம்மை நினைக்க மாட்டாரா?’
உள்ளார் கொல்லோ தோழி?
(உள்ளுதல் = நினைத்தல் ; உள்ளார் கொல் = நினைக்கமாட்டாரா?)
‘ஆண்பல்லியின் ஓசை தரும் தூண்டலால் உன்னை நினைத்து விரைவில் திரும்பி வருவார் ; ஆகவே ஆற்றியிரு’ என உணர்த்துகிறாள் தோழி.
விலங்குகள், பறவைகள், பூச்சிகள் எல்லாவற்றுக்கும் தம் துணையை அழைப்பதற்கென்று தனிப்பட்ட ஓசை எழுப்பும் தன்மை உண்டு. அத்துணைகள் அத்தனியோசைகளை அறிந்து கொள்ளும். இவ்வாறே பல்லியும் ஓசை எழுப்பும். அவ்வோசை பாலை நிலத்தின் அச்சம் தரும் ஓசையாகிய ஆறலை கள்வர் அம்புநுனியை நகத்தில் தேய்க்கும் ஓசை போலிருக்கிறது. இந்த உவமை சிறப்பான பொருத்தத்தால் மட்டுமன்றி வேறொரு காரணத்தாலும் பாராட்டுக்குரியதாகிறது. பல்லி ஓசை தலைவனுக்குத் தலைவியை நினைவுபடுத்தும் ; அம்பு தேய்க்கும் ஓசை, பல்லியை நினைவுபடுத்தி மீண்டும் தலைவியையே நினைவுபடுத்தும். பாலைவழிப் பயணத்தில் இவ்விரு ஓசைகளும் மாறிமாறிக் கேட்குமாதலால் தலைவனுக்குத் தலைவி நினைவு தோன்றும் வாய்ப்புகள் இரட்டிப்பாக உள்ளன என்பதை இவ்வுவமை மூலம் காட்டுகிறார் புலவர்.
வேரல்வேலி
எனத் தொடங்கும் கபிலர் பாடல் (குறுந்தொகை-18).
ஆசிரியர் கபிலர் பற்றிய குறிப்பை நற்றிணை பாடம் 1-இல் காண்க.
திணை : குறிஞ்சி
கூற்று : இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு வேண்டியது.
(இரவுக்குறி = இரவு நேரத்தில் தலைவன் தலைவியைத் சந்திக்கக் குறிக்கப்பட்ட இடம்.) அது தலைவியின் வீட்டுத் தோட்ட எல்லைக்குள் இருப்பது. இரவுக்குறியில் தலைவியைச் சந்தித்துத் திரும்பும் தலைவனைத் தோழி தனியே கண்டு ‘தலைவியின் காமவேதனை அவளால் தாங்க முடியாததாக உள்ளது; விரைவில் அவளை மணந்துகொள்’ என்று குறிப்பாக வேண்டுகிறாள். வரைவு கடாவுதற்குரிய பல காரணங்களுள் ஒன்று இப்பாடலில் அமைந்துள்ள ‘காதல் மிகுதி உரைத்தல்’ என்பது. இப்பாடல் தோழி கூற்று.
தோழி தலைவனிடம் கூறுகிறாள் : ‘மூங்கிலாகிய வேலியையுடையதும், வேரிலேயே குலைகளையுடையதுமாகிய பலாமரங்கள் நிறைந்த அழகிய மலைச்சாரல் நாட்டையுடைய தலைவனே ! தலைவியுடன் மகிழ்ந்து காதல் இன்பம் துய்த்தற்குரிய செவ்வியை (உரிய வேளை, சூழல்) அறிந்து கொள்வாயாக ! உன்னைத் தவிர வேறு யார் அதனைச் சரியாக உணர முடியும்? மலைப்பக்கத்துப் பலாமரத்தில் சிறிய கொம்பில் கனமான பெரிய பழம் கனிந்து தொங்குவது போல, இவள் உயிரை இவளது காமம் வருத்திக் கொண்டிருக்கிறது. இவள் உயிர் மிகச் சிறிது; இவள் காமமோ மிகப்பெரிது.’
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே
பழத்தின் சுமையைத் தாங்க முடியாமல் கிளை எப்போதும் முறியலாம் ; அதுபோலக் காமநோயின் கடுமையைத் தாங்கமுடியாமல் தலைவியின் உயிர் எப்போதும் பிரியலாம் என்னும் எச்சரிக்கையை இந்த உவமையின் வாயிலாகத் தோழி தலைவனுக்குத் தெரிவிக்கிறாள்.
தலைவன் நாட்டுப் பலாப்பழங்கள் வேரிலேயே காய்ப்பதால் பழத்திற்கோ மரத்திற்கோ கேடில்லை. அவை ‘வேர்க்கோட் பலா’க்கள். வேரிலேயே குலை கொண்டவை. தலைவி நாட்டுப் பலாப் பழங்களோ கிளைகளில் தொங்கிக் கிளைகளை வருத்துபவை. இந்த வேறுபாட்டைச் சுட்டிக் காட்டுவதன் மூலம், தலைவியின் மனச் சுமையைத் தலைவன் உணரவில்லை என அவனுக்குக் குறிப்புணர்த்துகிறாள் தோழி.
வண்டுபடத் ததைந்த
என்று தொடங்கும் ஓதலாந்தையார் பாடல் (குறுந்தொகை-21).
ஓதலாந்தையார்
‘ஆந்தை’ எனும் பெயர் வேறு சில புலவர்க்கும் உண்டு. ‘ஆதன் தந்தை’ என்பது ‘ஆந்தை’ என மருவி வழங்கியது. இப்புலவர் பாலைத்திணையைப் பாடுவதில் வல்லவர். ஐங்குறுநூற்றில் நான்காம் நூறாகிய பாலைத் திணையை இவர் பாடியுள்ளார். தலைவிக்குத் தலைவன் மீது உள்ள நம்பிக்கையைக் கானம் காரெனக் கூறினும் யானோ தேறேன் ; அவர் பொய் வழங்கலரே எனும் தலைவி கூற்றில் அழகுறக் கூறியுள்ளார்.
திணை : முல்லை
கூற்று : தலைவன் குறித்த பருவம் வரும்வரை தலைவியை ஆற்றுவித்த தோழி, அப்பருவம் வந்தவுடன், இனித் தலைவியை எவ்வாறு ஆற்றுவிப்பது எனக் கவலை கொண்டபோது, குறிப்பால் இதனை உணர்ந்த தலைவி, ‘கவலைப்படாதே! நான் ஆற்றியிருப்பேன்’ எனும் பொருளில் சொல்லியது.
தலைவி கூற்று இது.
தலைவி தோழியை நோக்கிச் சொல்கிறாள் : ‘தோழி ! கொன்றை மரங்கள் நிறைந்தது இக்காடு. இம்மரங்களில் ஏராளமான வண்டுகள் வந்து மொய்க்கும்படி புதிய பூக்கள் நெருங்கி நீண்ட கொத்துகளாகப் பூத்துத் தொங்குவது, பொன் அணிகளை அணிந்த பெண்களின் கூந்தல்போல உள்ளது. இந்தப் புதிய பூக்கள் பூத்த கொன்றை மரங்கள் நிறைந்த காடு, ‘இது கார்காலம்தான்’ என்று தெரிவித்தாலும் நான் நம்பமாட்டேன். ஏனெனில், ‘கார்ப்பருவத் தொடக்கத்தில் வந்து விடுவேன்’ என்று சொன்ன தலைவர் பொய் சொல்பவர் அல்லர்.
புதுப்பூங் கொன்றைக்
கானம் காரெனக் கூறினும்
யானோ தேறேன் ; அவர் பொய்வழங்கலரே
கொன்றை கார்ப்பருவத்தில் மலர்வது. கவிஞர் “புதுப்பூங்கொன்றை” என்று தெளிவுபடுத்துவது கார்காலம் வந்துவிட்டதைத் தெரிவிக்கத்தான். ஆயினும் தலைவன் சொல்லை உறுதியாக நம்பும் தலைவி ‘பருவம்தான் பொய் சொல்கிறது ; தலைவர் பொய்சொல்லமாட்டார்’ என உணர்த்துகிறாள். இந்த நம்பிக்கைதான், தலைவன் வரும்வரை ஆற்றியிருக்கக் கூடிய மனவலிமையை அவளுக்குத் தருகிறது.
அடர்ந்த இலைகள் நிறைந்து பசுமையாகத் தோன்றும் கொன்றைக் கிளைக்கு மகளிர் கூந்தலும், மஞ்சள் நிறத்தில் கொத்தாகப் பூத்துத் தொங்கும் மலர்களுக்குக் கூந்தலில் அணிந்துள்ள பொன் நகைகளும் பொருத்தமான உவமையாகின்றன.
அகவன் மகளே
எனத் தொடங்கும் ஒளவையார் பாடல் (குறுந்தொகை-23).
ஆசிரியர் வரலாறு : ஒளவையாரைப் பற்றி நற்றிணை – பாடம் 3-இல் காண்க.
திணை : குறிஞ்சி
கூற்று : கட்டுக் காணிய (குறி கேட்க) நின்றவிடத்துத் தோழி அறத்தொடு நின்றது.
அதாவது, இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்ப் பிரிந்த தலைவனைக் கூடமுடியாமல் தலைவி ஆற்றாமை கொண்டு மெலிகிறாள் ; அவள் நோய்க்கும் காரணம் அறிவதற்காகச் செவிலி கட்டுவிச்சி (குறி கூறுபவள்)யை அழைத்துக் குறிகேட்கிறாள் ; அப்போது இடையே குறுக்கிடும் தோழி, ‘இந்நோய் தெய்வத்தால் வந்ததன்று, ஒரு தலைவனால் வந்தது’ என்பதைச் செவிலிக்கும் குறிப்பாக உணர்த்தித் தலைவியின் களவுக் காதலை வெளிப்படுத்துகிறாள். இது தோழி கூற்று. (அறத்தொடு நிற்றல் : தலைவன் – தலைவிக்கிடையேயுள்ள களவுக்காதலை வெளிப்படுத்தல்)
தோழி கட்டுவிச்சியை நோக்கிக் கூறுகிறாள்: ‘கட்டுவிச்சியே! கட்டுவிச்சியே! சங்குமணி மாலை போன்ற அழகிய வெண்மையான நீண்ட கூந்தலையுடைய கட்டுவிச்சியே! நீ இப்பொழுது பாடிய பாட்டையே மீண்டும் பாடு! குறி கூறுதலை விட்டு அந்தப் பாட்டையே மீண்டும் பாடு! அவருடைய அழகிய பெரிய குன்றைப் பற்றிப் பாடினாயே, அந்தப் பாட்டையே பாடு!’
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே,, அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே
கட்டுவிச்சி குறி சொல்வதற்கு முன் தெய்வங்கள் உறையும் மலைகளைப் பாடுவது மரபு. அவ்வாறு பாடிவரும் போது, முருகன் உறையும் மலையைப் பாடுகிறாள். அந்த மலைதான் தலைவனது மலையும். அறத்தொடு நிற்க வாய்ப்பைத் தேடிக் கொண்டிருந்த தோழி, அந்தப் பாடல் முடிந்தவுடன் வேறு எதையும் பாடவிடாமல் குறுக்கிட்டு, அந்தப் பாடலையே பாடுமாறு கட்டுவிச்சியை வற்புறுத்துகிறாள். தோழியின் குறுக்கீட்டையும், திரும்பத் திரும்ப ஒரு மலையை – அவர் நன்னெடுங் குன்றத்தைப் பாடச் சொல்வதன் குறிப்பையும் செவிலி கவனித்துக் களவுக்காதலை உணர்வாள், அல்லது தோழியை மேலும் கேட்டு அறிவாள் என்பது தோழியின் திட்டம். களவுக் காதலை வெளிப்படுத்தும் (அறத்தொடு நிற்கும்) முறை எந்த அளவு நாகரிகமாகவும் மென்மையாகவும் இருந்தது என்பதற்கு ஒளவையாரது இப்பாடல் சிறந்த சான்றாகும்.
யாரும் இல்லை
எனத் தொடங்கும் கபிலர் பாடல் (குறுந்தொகை-25).
ஆசிரியர் வரலாறு : முன்னரே பார்த்தோம்.
திணை : குறிஞ்சி
கூற்று : வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
அதாவது, தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்குக் காலம் நீட்டிப்பது கண்டு வருந்திக் கூறுவது. தலைவி கூற்று.
தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள் : ‘தோழி! தலைவர் என்னைக் களவுப் புணர்ச்சியில் கூடிய பொழுது அவ்விடத்தில் சாட்சியாகக் கூடியவர் ஒருவரும் இல்லை. அது நிகழ்ந்த களத்தில் (இடத்தில்) இருந்தவர் அவர் ஒருவரே ! அவர் எனக்குக் கூறிய உறுதிமொழியைப் பொய் ஆக்குவார் ஆனால், நான் என்ன செய்ய முடியும்?
யாரும் இல்லைத் தானே களவன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
ஓடைநீரில் ஆரல்மீன் வருகிறதா என்று கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த, தினைத்தாள் போன்ற சிறிய கால்களையுடைய கொக்கு மட்டும் அவ்விடத்தில் இருந்தது’.
‘களவன்’ என்ற சொல்லுக்குக் களத்தில் – இடத்தில் இருப்பவன் என்பது பொருள். ஊர் அவையில் (களத்தில்) இருந்து பிறர்க்கு நீதி வழங்குபவன் என்னும் பொருளும் உண்டு, ‘இவ்வாறு நீதி உரைப்பவனாகிய தலைவனே’ உன்னை விரைவில் மணந்து கொள்வேன்’ என்ற உறுதிமொழியைப் பொய் ஆக்கிவிட்டால் என் நிலை என்னவாகும்?’ எனக் கலக்கமடைகிறாள் தலைவி.
‘தந்த உறுதிமொழியில் தவறமாட்டார்கள்’ என்று தலைவர்கள் மீது முழு நம்பிக்கை கொண்ட தலைவியரை நாம் பார்த்திருக்கிறோம். நின்ற சொல்லர் என்று பாராட்டுகிறாள் நற்றிணைத் தலைவி (நற்றிணை-1). ‘நிலம்புடை பெயர்ந்தாலும் என் தலைவர் தான் சொன்ன சொல் தவறமாட்டார்’ என்று நம்புகிறாள் மற்றொரு தலைவி (நற்றிணை-289). ‘காடு கார்காலம் வந்துவிட்டது எனச் சொன்னாலும் நான் நம்பமாட்டேன் ; அவர் பொய் சொல்பவர் அல்லர்’ என்று தலைவனைப் போற்றுகிறாள் வேறொரு குறுந்தொகைத் தலைவி (குறுந்தொகை-21). இவர்கள் எல்லாம் திருமணமானவர்கள்; களவுக்காதலின் தொடக்க நிலையைத் தாண்டியவர்கள். பிரிந்து போயிருக்கும் தலைவர் தம் செயல்முடித்துத் திரும்புவதற்காகக் காத்திருப்பவர்கள்.
ஆனால், இந்தப் பாடலில் வரும் தலைவி களவுக்காதலின் தொடக்க நிலையில் இருப்பவள்; திருமணத்தை எதிர் நோக்கிக் காத்திருப்பவள். காத்திருக்கும் காலம் நீட்டித்துக் கொண்டு போவதால் ஐயமும் அச்சமும் அவளுக்குத் தோன்றுவது இயல்பே.
தான் தலைவனைக் கூடிய இடத்தில் யாரும் இல்லை என்ற தலைவி, அங்கே கொக்கு மட்டும் இருந்தது என்கிறாள்; கொக்கு சான்று கூறாது என்பது மட்டுமன்றி, அது காதலர் பக்கம் பாராமல் ஓடைநீரில் ஆரல் மீனைத் தேடிக் கொண்டிருந்தது என்றும் சொல்கிறாள்.
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்,
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே
தனக்குச் சாட்சி இல்லாத, ஆதரவில்லாத நிலையை இவ்வாறு உணர்த்துகிறாள்.
கன்று முண்ணாது
எனத் தொடங்கும் வெள்ளிவீதியார் பாடல் (குறுந்தொகை-27).
வெள்ளிவீதியார் : இப்புலவர் பற்றிய குறிப்பை நற்றிணை பாடம் எண் 2-இல் காண்க.
திணை : பாலை
கூற்று : பிரிவிடை ஆற்றாள் எனக் கவலை கொண்ட தோழிக்குத் தலைவி, ‘நான் ஆற்றுவேன்’ என்று பொருள்படக் கூறுவது.
தலைவி கூற்று.
தலைவி தோழியிடம் சொல்கிறாள் : ‘நல்ல பசுவினது இனிய பால் கன்றும் உண்ணாமல், கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், மண்ணில் வீணாகச் சிந்தியது போலத் தேமல் படர்ந்த அல்குலையுடைய என் மாமை அழகு எனக்குப் பயன்படாமலும் என் தலைவர்க்கு இன்பம் செய்யாமலும் வீணாகிக் கொண்டிருக்கிறது. அவ் அழகைப் பசலை விரும்பி உண்டு கொண்டிருக்கிறது’.
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல்என் மாமைக் கவினே
(என்னை = என்+ஐ= என்தலைவன்; பசலை = பிரிவினால் ஏற்படும் நிறமாற்றம். இது பீர்க்கம் பூ நிறத்தில் உடலை மூடுவதால் தலைவியின் மாமை (மாந்தளிர் நிற) அழகு மறைகிறது. உணீஇயர் = உண்ண ; வேண்டும் = விரும்புகிறது. திதலை = தேமல்.)
ஆவின்பால் கன்றுக்குரியது; அதுபோலத் தலைவியின் அழகு தலைவிக்கு உரியது. தலைவிக்கு அவள் அழகு பயன்படுவது என்றால் என்ன? அவ்வழகு அவளைவிட்டு நீங்காதிருந்து அவளை மனத்தாலும் உடலாலும் செழிக்கச் செய்வது. கன்றுக்குப் போக எஞ்சிய பால் கறக்கும் பாத்திரத்தில் விழ வேண்டியது. அது போலத் தலைவியின் அழகு தலைவனுக்கு இன்பம் தர வேண்டியது. பால் இருபயனும் தராமல் வீணாவது போல் தலைவியின் அழகும் இருபயனும் தராமல் வீணாகிறது எனும் உவமை மிகச் சிறப்பானது. பால் மண்ணாலும், அழகு பசலையாலும் உண்ணப்படும் அவலத்தைப் புலவர் எடுத்துக் காட்டுகிறார்.
‘நான் ஆற்றியிருப்பேன்’ என வெளிப்படையாகத் தலைவி சொல்லவில்லை. ஓதலாந்தையார் பாடல் (குறுந்தொகை-21) தலைவி ‘அவர் பொய் சொல்லமாட்டார்’ என்று தன் நம்பிக்கையை வெளிப்படுத்துவதன் மூலம், தான் ஆற்றியிருப்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்கிறாள். வெள்ளிவீதியார் காட்டும் தலைவியோ ஆறுதல் அற்றவளாகவே தோன்றுகிறாள். தன் காதல் வேதனையையும், உடல் அழகு வீணாகும் இழப்பையும் மறைக்காமல் சொல்லி, ‘அவ்வாறு இருப்பினும் நான் பொறுத்துக் கொள்கிறேன்’ என்பது போலத்தான் அமைகிறது அவளது வெளிப்பாடு. தலைவி இறந்து விடுவாளோ என்று தோழி கவலைப்படும் அளவுக்குத் தலைவியின் நிலை இருக்கிறது. இத்தகைய நிலையை அகப்பொருள் இலக்கணம் ‘காதல் கைம்மிகல்’ (காதல் அளவு கடந்து பெருகுதல்) என விளக்குகிறது.
இப்பாடலை இயற்றிய வெள்ளிவீதியார் எனும் பெண்பாற் புலவரின் சொந்த வாழ்க்கைப் பிரிவுத் துயரமே இக்கவிதை என உரைக்குறிப்புக் கூறுகிறது. பாடலில் தம் பெயரையோ, தம் தலைவன் பெயரையோ கூறாது விட்டதனால் அகப்பொருள் மரபின்படி இது பொதுவான ஒரு காதல் பாடலாகக் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது என உரையாசிரியர் குறித்துள்ளார். கரிகாற் சோழனின் மகள் எனக் கருதப்படுகின்ற ஆதிமந்தி, தன் கணவன் ஆட்டனத்தியைப் பிரிந்து ஊர்தோறும் நாடுதோறும் அவனைக் கடல்கொண்டதோ, ஆறுகொண்டதோ என்று புலம்பித் தேடித் திரிந்ததாகப் பரணர் (அகநானூறு-236) கூறுகிறார். ‘ஆதிமந்திபோலப் பேதுற்று உழல்வேனோ’ என்று வெள்ளிவீதியாரது பாடல்-45) தலைவி கூறுகிறாள். எல்லாவற்றுக்கும் மேலாக ஒளவையார் (அகநானூறு-147) ‘நீண்ட காட்டில் தன் தலைவனைத் தேடிச் சென்ற வெள்ளிவீதி போல’ என உவமை சொல்கிறார். இவைகளைக் கொண்டு பார்க்கும்போது புலவராகவும் காதல் தலைவியாகவும் இருக்க நேர்ந்த வெள்ளிவீதியாரின் சொந்த வாழ்வு அவரது படைப்பில் வெளிப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. புறப்பொருள் பாடல்களில் சுயவரலாறு வருவது வெளிப்படையாகத் தெரியும். ஒளவை அதியமான் தந்த நெல்லிக்கனி உண்டது, பாரிமகளிர் பறம்பைவிட்டு நீங்கும்போது மனமுருகிப் பாடியது போன்றவை எடுத்துக் காட்டுகள். அகப்பாடலில் சுயவரலாற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
யாயும் ஞாயும்
எனத் தொடங்கும் செம்புலப் பெயல்நீரார் பாடல் (குறுந்தொகை-40).
செம்புலப்பெயல்நீரார்
இயற்பெயர் அறியப்படாமல், தாம் படைத்த உவமைகளால் பெயர் பெற்ற புலவர்களுள் இவரும் ஒருவர். அன்பு நெஞ்சங்களின் காதல் கலப்பைச் செம்புலத்தில் பெய்த மழைநீர்க் கலப்பாக உவமித்துக் காட்டிய இவர் புலமைத்திறம் போற்றத்தக்கது.
திணை : குறிஞ்சி
கூற்று : இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர்த் ‘தலைவர் பிரிவாரோ’ என எண்ணி அஞ்சிய தலைமகளின் மனக்குறிப்பை உணர்ந்து கூறிய தலைமகன் கூற்று.
தலைவனும் தலைவியும் யாரும் கூட்டுவிக்காமல் தாமே எதிர்ப்பட்டுப் புணர்ந்தனர். அப்போது, ‘இவன் எந்த ஊரோ, நம்மைப் பிரிந்து போய்விடுவானோ, மறப்பானோ, துறப்பானோ, அவ்வாறு துறந்தால் நாம் உயிர்வாழ்வது எப்படி?’ என்பன போன்ற ஐயங்கள் தலைவிக்கு எழுந்தன. அவள் மனத்தில் ஓடுவதை அவளது முகக்குறிப்பால் அறிந்த தலைவன், ‘நம் உறவு பிரிக்க முடியாதது’ என்பதை உணர்த்தி அவளைத் தேற்றுகிறான்.
தலைவன் தலைவியை நோக்கிக் கூறுகிறான் : ‘தலைவியே! என் தாயும் உன் தாயும் ஒருவருக்கொருவர் என்ன உறவுடையவர்கள்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவாகுவர்? இங்குச் சந்திப்பதற்குமுன் நானும் நீயும் எவ்வாறு ஒருவரையொருவர் அறிவோம்? எனினும் செந்நிலத்தில் பெய்த மழைநீர் அந்நிலத்தியல்போடு ஒன்றிக் கலந்துவிடுவதுபோல, அன்புடைய நம் நெஞ்சங்கள் தாமாகவே கலந்துவிட்டன!’
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே
இவர்களுக்கிடையே தாய்வழி உறவும் இல்லை ; தந்தைவழி உறவும் இல்லை ; இவ்விருவரும் இதற்குமுன்பு சந்தித்ததும் இல்லை. பின் எவ்வாறு நெஞ்சங்கள் கலந்தன? இக்கேள்வியைத்தான் தலைவன் தலைவியின் நெஞ்சத்தில் எழுப்புகிறான். நெஞ்சங்களின் கலப்பில் இருவருக்கும் ஐயம் இல்லை ; அது உண்மையானது ; பிரிக்க முடியாதபடி நிகழ்ந்து முடிந்துவிட்டது இந்தக் கலப்பு (செம்புலப் பெயல்நீர்போல). இக்கேள்வியை எழுப்பும் தலைவன், ‘இது தெய்வத்தால் ஆகிய புணர்ச்சி, வழிவழியாகப் பல பிறவிகளில் தொடர்ந்து வரும் பிணைப்பு’ எனத் தலைவிக்கு உணர்த்த முயல்கிறான். இயற்கைப் புணர்ச்சி இருவகைப்படும் என விளக்குகிறது அகப்பொருள் இலக்கணம். 1. தெய்வத்தான் எய்தும் புணர்ச்சி 2. தலைவியால் எய்தும் புணர்ச்சி. இப்பாடலில் நிகழ்ந்துள்ளது தெய்வத்தான் எய்தும் புணர்ச்சியே என உணர்கிறோம்.
இவ்வாறு தெய்வமே இணைத்து வைத்திருப்பதால் பிரிதல், மறத்தல், துறத்தல் என்பவற்றுக்கு இடம் ஏது? தலைவிக்குத் தலைவனின் வெளிப்பேச்சில் உள்ள உள் அர்த்தங்கள் நன்கு புரிந்திருக்கும் என்பதை இந்த அழகிய பாடல் காட்டுகிறது.
சங்கப் பாக்களில் இடம்பெறும் மிகச்சிறப்பான உவமைகளுள் ஒன்று ‘செம்புலப் பெயல்நீர் போல’ என்பது. இந்த உவமைச் சிறப்புக் காரணமாகவே, இயற்பெயர் அறிய முடியாத இந்தப் புலவரைச் ‘செம்புலப்பெயனீரார்’ என்று அழைத்துள்ளனர். தேய்புரிப் பழங்கயிற்றை உவமையாகச் சொன்ன புலவரைத் ‘தேய்புரிப் பழங்கயிற்றினார்’ எனக் குறித்ததை முன்னர்க் கண்டோம் (நற்றிணை-284).
அணிற்பல்லன்ன
எனத் தொடங்கும் அம்மூவனார் பாடல் (குறுந்தொகை-49).
அம்மூவனார் : இப்புலவர் பற்றிய குறிப்பை நற்றிணை பாடம் எண் 1-இல் காண்க.
திணை : நெய்தல்
கூற்று : பரத்தையிடம் தலைவன் சென்றிருந்த போது வருந்தியிருந்த தலைவி, அவன் மீண்டு வந்தபின் ஆற்றாமை நீங்கிப் புணர்ச்சிக்குப் பின் மகிழ்ச்சி மிகுதியால் தலைவனை நோக்கிக் கூறியது.
தலைவி கூற்று.
தலைவி தலைவனை நோக்கிக் கூறுகிறாள் : ‘அணிற்பல் போன்ற முள்ளும், கொங்கும் நிறைந்த கழிமுள்ளிச் செடிகளையும், நீலமணி போன்ற கரிய நீரையும் உடைய கடற்கரைப் பகுதித் தலைவனே ! இப்பிறவி நீங்கி நமக்கு மறுபிறவி வந்தாலும், அப்போதும், நீயே என் கணவனாவாயாக! உன் உள்ளம் ஒத்த தலைவி நானே ஆவேனாக!’
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர்நின் நெஞ்சு நேர்பவளே
பரத்தையிற் பிரிந்து திரும்பும் தலைவன்மீது ஊடல் கொண்டு வாயில்மறுக்கும் தலைவியரை மருதத் திணைப் பாடல்கள் பலவற்றில் காணலாம் ; தலைவனது தூதை ஏற்கும்போது கூடத் தோழி தலைவனை இடித்துரைப்பதைக் காணலாம்; ‘தலைவியின் வருத்தத்துக்குக் காரணமானாய்’ என்பதையும், ‘தலைவி பெருந்தன்மையுடன் உன்னை மன்னித்தாள்’ என்பதையும் அவள் கூறுவாள். ஆனால், இப்பாடலில் தலைவனை ஏற்று மகிழ்ந்த தலைவி, மிகமிக மென்மையான முறையில் அவன் பரத்தையொழுக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறாள். தலைவனுக்கும் பரத்தைக்குமிடையே உள்ள காம உறவைவிடப் பிறவிதோறும் தொடரும் தலைவன்-தலைவி அன்புறவை மேம்படுத்திப் பேசுவதுடன் நிறுத்திக் கொள்கிறாள். கழிமுள்ளிச் செடியில் முள்ளும் கொங்கும் (பூந்தாது) சேர்ந்திருப்பது போலத் தலைவனிடம் பரத்தைமை ஒழுக்கமும் இல்லற ஒழுக்கமும் ஒருங்கே உள்ளன என்ற உள்ளுறைப் பொருள் அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகம் என்ற வருணனையில் அமைந்திருக்கிறது.
பரத்தை காதலியாக இருக்கமுடியும் ; மனைவி மட்டுமே நெஞ்சு நேர்பவளாக (உள்ளம் ஒத்தவளாக) இருக்க முடியும் என்பதே தலைவி பேச்சின் உயிரான குறிப்பு.
இடிக்கும் கேளிர்
எனத் தொடங்கும் வெள்ளிவீதியார் பாடல் (குறுந்தொகை-58).
வெள்ளிவீதியார் : இப்புலவர் பற்றிய குறிப்பை முன்னரே பார்த்தோம்.
திணை : குறிஞ்சி
கூற்று : கழற்றெதிர் மறை.
(கழறு+எதிர் மறை) கழறுதல் = தலைவியிடம் நெஞ்சம் பறிகொடுத்துத் தவிக்கும் தலைவனைப் பாங்கன் கண்டித்தல். எதிர் மறை = அதற்குத் தலைவன் மறுப்புரைத்தல். அதாவது, இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவியைக் காணப் பெறாமல் பெரிதும் துன்புற்று நலிந்த தலைவனைப் பாங்கன் ‘இது நின் பெருமைக்குத் தகாதென’ இடித்துக் கூறிய பொழுது, தலைவன் அவனுக்கு மறுமொழியாகக் கூறியது. தலைவன் கூற்று.
தலைவன் பாங்கனை நோக்கிக் கூறுகிறான்: ‘இடித்துரைக்கும் நண்பரே! உங்களுடைய இந்த இடித்துரை என் உடம்பு உருகி அழியாமல் தடுத்து நிறுத்துமாயின் அதனை விட நற்செயல் வேறொன்றும் இல்லை. சூரியன் கடுமையாகக் காய்வதால் வெப்பமுற்றிருக்கிறது பாறை. பாறையின் மீது வைக்கப்பட்டுள்ளது ஒரு வெண்ணெய்க் கட்டி. அதனைப் பாதுகாக்க நிறுத்தப்பட்டுள்ளவனோ கையில்லாத ஊமையன். பார்வையால் மட்டுமே ‘பாதுகாப்பவன்’. அவ்வெண்ணெய் உருகி வீணாவதை என் உடம்பும். காமவெப்பம் உடலில் பரவுகிறது ; உருகுகிறேன். அதைத் தடுக்கமுடியாத கையில்லாத ஊமையன்போல நானிருக்கிறேன்’.
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே
(உணங்கல் = உருகி அழிதல்)
கையில்லாத ஊமையனின் காவலில் உள்ள வெண்ணெய் உருகுவதை அவனும் காக்க முடியாது, பிறரை அழைத்தும் காக்கமுடியாது என்னும் பொருள்படும் உவமை மூலம் தலைவன் தன் அழிவைத் தன்னாலும் தடுக்கமுடியவில்லை; பிறர் உதவியைப் பெறவும் முடியவில்லை எனத் தெளிவாக்குகிறார் புலவர்.
யாரினும் இனியன்
எனத் தொடங்கும் வடமவண்ணக்கன் தாமோதரனார் பாடல் (குறுந்தொகை-85).
வடமவண்ணக்கன் தாமோதரனார்
வண்ணக்கன் எனும் சொல் நாணயப் பரிசோதகரைக் குறிக்கும் என முன்பே கண்டோம். ‘வடம’ என்பது கொண்டு இவர் வடதிசையிலிருந்து வந்தவராக எண்ணப்படுகிறார்.
திணை : மருதம்
கூற்று : வாயில் வேண்டிச் சென்ற பாணனுக்குத் தோழி வாயில் மறுத்தது.
தலைவனது பரத்தைமை காரணமாகத் தலைவி ஊடியிருக்க, அவ்ஊடல் தீர்ப்பதற்காகத் தலைவன் பாணனைத் தலைவியிடம் தூதாக அனுப்புகிறான். பாணன் தலைவியிடம் சென்று தலைவன் நல்லவன், அன்புடையவன் எனக்கூறித் தலைவியின் ஊடலை நீக்க முயல்கிறான். அப்போது தோழி தலைவன் நல்லவன் என்பதை மறுத்துக் கூறி வாயில் மறுக்கிறாள். தோழி கூற்று.
பாணன் = பாடற்கலைஞன். தலைவனுக்கு வாயில் ஆவோரில் ஒருவன்.
தோழி பாணன் கேட்கக் கூறுகிறாள் ‘ஊருக்குள் வாழ்கின்ற ஊர்க்குருவி அது; துள்ளித்துள்ளி நடக்கும் ஆண் குருவி. அது கர்ப்பம் முதிர்ந்த தன் பேடை முட்டையிடுவதற்காக மென்மையான ஒரு நல்ல கூடு அமைக்க விரும்புகிறது. அதற்காகக் கரும்புத் தோட்டத்திற்குப் பறந்து சென்று தேன்பொதிந்த இனிய கரும்பின் மணமற்ற வெண்பூவைக் கோதித் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய இனிய காட்சிகளையும், அன்றாடம் புதிய நீர் வரத்தும் உடைய ஊருக்குத் தலைவன், இந்தப் பாணனின் வாய்ப்பேச்சில் மட்டுமே எல்லாரினும் மிக இனிமையானவன், பேரன்புடையவன் !
யாரினும் இனியன் பேரன்பினனே
யாணர் ஊரன் பாணன் வாயே
‘பாணனுக்குத்தான் தலைவன் இனியவன் ஆக, அன்பன் ஆகத் தோன்றுகிறான், எங்களுக்கல்ல’ என உணர்த்தும் தோழியின் கூற்றில் தலைவன் அன்பற்றவன் என்ற குற்றச்சாட்டும், பாணன் பொய்யன் என்ற பழிப்பும் கலந்துள்ளன. தலைவி மீது தலைவனுக்கு அன்பும் ஈடுபாடும் இல்லை எனத் தோழி குறிப்பாகச் சொல்கிறாள். ஆண்குருவி தன் பேடைக்குக் கூடு அமைப்பதற்காகத் தொலைதூரம் சென்று மென்மையான கரும்பின் பூக்களைத் தன் சிறிய அலகால் கிள்ளிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டுவந்து சேர்க்கிறது. ஒரு சிறிய கூட்டைக் கட்டுவதென்றாலும் குருவி எவ்வளவு பெரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும்? தலைவன் அன்றாடம் பார்க்கக் கிடைக்கும் உள்ளூர்க்குருவி அது. அக்குருவி தன் பெண்குருவி மீது காட்டும் அன்பைத் தலைவன் தலைவியிடம் காட்டவில்லை என்பது குறிப்பு.
தோழி நேரடியாகப் பாணனிடம் பேசாமல், அவன் காதில் விழுமாறு வேறுபுறம் பார்த்துப் பேசுவது அவளது கோபத்தைக் காட்டுகிறது.
பார்க்கும் பொருளில் மட்டுமன்றிக் கேட்கும் ஒலியிலும் பிரிந்துசெல்லும் தலைமகனுக்குத் தலைவியை நினைவூட்டும் தன்மை இருக்கிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாடலில் (குறுந்தொகை-16) தோழி தலைவிக்கு நம்பிக்கையூட்டும் விதமாகக் காட்டும் பாலைக்காட்சி எளியதும் அருமையானதும் ஆகும். தலைவன் பிரிந்துசெல்லும் வழியில் அந்த நிலத்துக்குரிய காதல் குரல் கேட்கும்; ஆண்பல்லி தன் பெண்பல்லியை அழைக்கும் ஓசை அது. ‘அதைக் கேட்டதும் தலைவன் உன்னை நினைத்துத் திரும்பி வருவான்’ என்று தலைவியைத் தேற்ற, பாலைநிலத்துப் பல்லிகூடத் தோழிக்கு உதவுகிறது.
கபிலரது குறிஞ்சித்திணைப் பாடலில் (குறுந்தொகை-18) பலாமரக் கிளையும், பழமும், வேர்ப்பலாவும் காதல் உணர்வில் எவ்வாறு ஊடாடுகின்றன என்பதைப் பார்த்தோம். இரவுக்குறியில் வந்து தலைவியைச் சந்தித்துத் திரும்பும் தலைவனுக்கு ஏதேனும் இடர் நேருமோ, களவுக்காதல் ஊரார்க்கு வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சம், மறுநாள் தலைவன் வரும்வரையிலான நேரத்தில் பிரிவு வேதனை – என்று இவ்வாறு பலவகைச் சஞ்சலங்களில் ஆழ்ந்திருக்கும் தலைவியின் நிலையைத் தலைவனுக்குப் புரிய வைப்பது எப்படி? தோழி ஒரு பலாமரத்தைத் தலைவனுக்கு நேரில் சுட்டிக்காட்டுகிறாள். மற்றொரு பலாமரம் அவன் ஊரில் இருப்பது ; அதனை அவன் மனக்கண்ணில் எழுப்பிக் காட்டுகிறாள். தோழி சுட்டிக் காட்டும் பலாமரத்தில் ஒரு மென்மையான கிளையில் கனத்த பலாப்பழம் தொங்குகிறது; எப்போது கிளை முறியுமோ என்ற நிலை. ‘தலைவனே! இந்தக் கிளை தான் தலைவியின் உயிர் : இந்தப் பழம்தான் அவளது காமநோய். இனி நீ என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்’ என்பதுபோல் அமைகிறது தோழியின் பேச்சு. கிளையின் வலியை அவன் அறிய மாட்டான் என்பதை உணர்த்தவே, அவன் நாட்டுப் பலாப்பழங்கள் வேரில் காய்த்துத் தரையில் கிடப்பதைச் சுட்டிக்காட்டுகிறாள்.
பரத்தைமை ஒழுக்கத்தையும் இல்லற ஒழுக்கத்தையும் ஒருங்கே கொண்ட தலைவன் ஒருவன். தலைவியும் தோழியும் எவ்வளவு முயன்றும் அவனை மாற்றமுடியவில்லை. ஏனைய தலைவிகளைப் போல ஊடல்கொண்டு தலைவனை மறுக்கும் தலைவி அல்லள் அவள். அவனது குறையுடனே அவள் அவனை நேசிக்கிறாள். அவனும் அவள்மீது அன்பு மிகவுடையவன். ஆகவே அவன் வரும்போது கூடிமகிழ்கிறாள். அவள் புரிந்துணர்வுடன் அவனை ஏற்றுக் கொள்வதை விளக்குவதற்கு, அவர்கள் வாழும் நெய்தல் நிலத்துக் கழிமுள்ளிச் செடி கவிஞருக்குப் பயன்படுகிறது. அணிற்பல் போன்ற முள்ளையும், தாதுவையும் ஒருங்கே கொண்ட முள்ளிச் செடியைத் தலைவனின் இருமைக் குணத்துக்கு உள்ளுறையாகுமாறு காட்டுகிறார் புலவர் அம்மூவனார் (குறுந்தொகை-49).
ஆலங்குடி வங்கனாரின் பாடலில் (குறுந்தொகை-8) வேறொரு விதமான உணர்ச்சி வெளிப்பாடு காணலாம். ஒரு தலைவன் – இரு காதலிகள் (ஒருத்தி மனைவி – மற்றொருத்தி காதற்பரத்தை) என்ற நிலையில் பெண்களுக்கிடையே ஏற்படும் மனப்புழுக்கம் கவிதையாகியிருக்கிறது. இருவரில் தலைவன் மீது உரிமையுடையவள் மனைவி. பரத்தையோ தலைவனுடைய அன்புக்குரியவள் எனினும் உரிமை இல்லாதவள். தன்னிடம் இருக்கும்போது ‘பெருமொழிகள்’ பேசும் தலைவன், மனைவியிடம் கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல உடனுக்குடன் அவள் விரும்புவதைச் செய்யும் பணிவுடையவனாக இருக்கிறான் எனத் தன் சினத்தைத் தலைவன் மீது திருப்புகிறாள் பரத்தை. தலைவனை இகழும் அவள் பேச்சில் அவளது சினம், ஏமாற்றம், தாழ்வு மனப்பான்மை எல்லாம் வெளிப்படச் செய்கிறார் புலவர்.
கலையும் இலக்கியமும் தோன்றிய நாள் தொட்டுக் காதல் உணர்வுகள் பற்றிய ‘ஆய்வு’ முடிவின்றித் தொடர்கிறது. ‘இன்ன தன்மையுடையது’ என்று சொல்ல இயலாதிருப்பதால்தான் காதலை ‘அகம்’ (உள்ளிருப்பது) என்றனர். பழந்தமிழில் காமம் என்ற சொல்லுக்குக் காதல் என்பதுதான் பொருள். கபிலர் (குறுந்தொகை-18) காமத்தின் முதிர்நிலையைச் ‘செவ்வி’ என்ற சொல்லால் காட்ட முயல்கிறார். திருவள்ளுவர் பயன்படுத்தும் சொல் ‘செவ்வி’.
மலரினும் மெல்லிது காமம் ; சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார் (திருக்குறள்-1289)
காதல் மலரைவிட மென்மையானது. அதன் பக்குவ முதிர்ச்சி நிலையை (செவ்வி) அறிந்து அனுபவிப்போர் சிலரே என்கிறார் வள்ளுவர். கபிலர் பாடலில் தோழி தலைவனை நோக்கித் தலைவியின் காம முதிர்ச்சி நிலையை (செவ்வி) அறியக்கூடியவன் நீதான். அச்செவ்வி வாடிப் போகுமுன்பு அவளை மணந்துகொள் எனக் குறிப்புணர்த்துகிறாள். இங்கே காமமுதிர்ச்சி – செவ்வி- எத்தகையது என வெளிப்படையான விளக்கம் இல்லை. தலைவன் – தலைவி உள்ளங்களே அதனை அறியும். தோழியால் ஒன்றுமட்டும் சொல்லமுடிகிறது. செவ்வி தவறினால் தலைவி இறந்து போகக்கூடும் என்பதுதான் அது. சிறுகோட்டுப் பெரும்பழத்தை உவமையாக்கி அதனை வெளிப்படுத்துகிறாள். இவ்வாறு சொல்லமுடியாத ஓர் உணர்வு நிலையைப் பேச்சு, காட்சி, உவமை ஆகியவற்றின் வாயிலாகச் சொல்லி வெல்கிறார் கபிலர்.
வெள்ளிவீதியார் தமது சொந்தக் காதல் அனுபவத்திலிருந்து கவிதை படைத்திருக்கக் கூடும் என்பதை முன்பு கண்டோம் (குறுந்தொகை-27) ‘காதலனைக் காணாமல் தேடித்திரிந்த வெள்ளிவீதி’ எனும் குறிப்பு ஒளவையார் பாடலில் (அகநானூறு-147) வருகிறது. இந்த அனுபவம், வெள்ளிவீதியாருடைய பாடலில் உணர்ச்சிகரமாக எதிரொலிப்பதைக் காணலாம். தாங்க முடியாத பிரிவு வேதனையைத் தலைவி வெளிப்படையாகச் சொல்கிறாள். ‘கன்றும் உண்ணாமல் கலத்திலும் படாமல் பாலை மண் உண்பதுபோலத் தன் அழகு தனக்கும் பயன்படாமல் தலைவனுக்கும் பயன்படாமல் பாலைக்கு உணவாகிறது’ என அருமையான உவமை கொண்டு தன் இழப்பு எவ்வளவு கொடியது என்பதைப் புலப்படுத்துகிறாள். கபிலர் பாடலில் பார்த்த காமத்தின் ‘செவ்வி’ தவறிக் கொண்டிருக்கும் அவலத்தை வெள்ளிவீதியார் பாடல் நன்கு காட்டுகிறது.
அழகிய படிமக் காட்சிகள் சிலவற்றையும் இப்பாடப் பகுதிப் பாடல்களில் காணலாம். கானம் கார் எனக் கூறினும் (குறுந்தொகை-21) – காடு இது கார்காலம் என்று சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்’ என்கிறாள் தலைவி. காடு இங்கே தன் மலர்கள் மூலம் பேசுவதாகக் காட்டுவது படிமக்காட்சி. பசலை உணீஇயர் வேண்டும் – ‘பசலை என்அழகை உண்கிறது’ என்பதில் பசலை நோய் ஒரு படிமமாகிறது. தலைவியின் அழகை உண்ணுகின்ற படிமமாகிறது (குறுந்தொகை-27).
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே
ஆசிரியப்பாவின் ஓசை சிறப்பாக அமைந்திருப்பதைப் படிக்கும் போதே உணரலாம். பாட்டின் அமைப்புச் சிறப்பு அதன் வேக நடையில் உள்ளது. தோழியின் அவசரம், ஆர்வம், வேகம் ஆகியவை பாடல் அமைப்பால் நன்கு காட்டப்படுகின்றன. அகவன் மகளை அடுத்தடுத்து மூன்றுமுறை விளிப்பது, ‘பாடுக பாட்டே’ என்பதை இருமுறை அடுக்குவது இவற்றால் பாடலின் இயக்க வேகம் கூடுகிறது. வேறு நினைவுக்கு, வேறு பேச்சுக்கு, வேறு செயலுக்கு இடமில்லாதபடி பாடல் ஒருமுகப்பட்ட நோக்கத்திற்கேற்ப வடிவம் கொள்கிறது.
இயற்கைப் புணர்ச்சிக்குப்பின் தலைவன் மீது தலைவியின் மனத்தில் ஐயம் எழுகிறது. அவளது முகக்குறிப்பால் இதனை உணரும் தலைவன் அவளுடைய ஐயத்தைப் போக்கி மனநிறைவைத் தரவேண்டும். கவிதை வடிவம் எப்படி அமைந்தால் இந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கும்? புலவர் தலைவன் கேட்பதாக மூன்று கேள்விகளை அடுக்குகிறார்.
யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
பதிலை உள்ளடக்கிய கேள்விகள் இவை. கருத்துக் கூறும் சாதாரண வாக்கிய வடிவமாக அன்றி, வினா வடிவாக அமைவது தலைவியைச் சிந்திக்க வைக்கும் நோக்கத்திற்குப் பொருத்தமாக உள்ளது. அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்ற இறுதியடியில் தலைவிக்கு முடிவான விடை கிடைக்கிறது.
பாடம் – 5
இன்னளாயினள்
எனத் தொடங்கும் கோக்குளமுற்றனார் பாடல் குறுந்தொகை-98).
கோக்குளமுற்றனார்
கோக்குளம் என்பது இப்புலவரின் ஊர். தலைவனது பிரிவினால் தலைவியின் மேனி பசலை பாய்ந்து அழகு அழிந்த செய்தியே இவர் பாடிய இரண்டு பாடல்களிலும் குறிப்பிடப்படுவது.
திணை : முல்லை
கூற்று : பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குரைத்தது.
(அழிதல் : மனம் அழிதல், மிக வருந்துதல்) தலைவன் தான் வருவதாகக் குறித்த பருவம் வந்தும் அவன் வரவில்லை; அதனால் ஆற்றாளாகிய தலைமகள் தோழியிடம் தன் வருத்தத்தைத் தெரிவிக்கிறாள் தலைவி கூற்று.
தலைவி தோழியை நோக்கிப் பேசுகிறாள் : ‘தோழி ! நம்வீட்டுத் தோட்டத்தில் மழை வடிகின்ற இடத்திலுள்ள பீர்க்கு பசும்புதர் மீது படர்ந்து தழைத்திருக்கிறது. மாரிப்பருவத்தில் மலர்வதாகிய அதன் மலர்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு தலைவரை நெருங்கிச் சென்று, ‘முன்பு அழகிய நெற்றியையுடையவளாயிருந்த உங்கள் தலைவி இப்போது இந்தப் பூக்களின் நிறத்தை அடைந்திருக்கிறாள்’ என்று சொல்லக் கூடிய யாரேனும் கிடைத்தால் நன்றாயிருக்கும் ; அப்படியாரும் இல்லையே !’
இன்னள் ஆயினள் நன்னுதல் என்றவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழிதோழி
(இன்னள் = இத்தகையவள் ; துன்ன = நெருங்கி)
இப்பாடல், பிரிவினால் தலைவிக்கு ஏற்பட்டுள்ள பசலை நோயைப் பற்றி மட்டுமே பேசுகிறது. தலைவனைப் பிரிந்திருப்பதால் தலைவியின் உடலில் தோன்றும் ஒருவிதமான வெளிர் மஞ்சள் நிறத்தையே பசலை என்பர். பீர்க்கம்பூ இந்நிறமாதலால் பசலைக்குப் பீர்க்கம் பூவை உவமை கூறுவது வழக்கம். தலைவனிடம் சென்று ‘தலைவி பசலை நோய் கொண்டிருக்கிறாள்’ என்று வெறும் கூற்றாகக் கூறுவதைவிடப் பீர்க்கம்பூவைக் காட்டி ‘இதுபோல ஆகிவிட்டாள்’ என்று கூறும்போது தலைவன் மனதில் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதைக் கவிஞர் நமக்கு உணர்த்துகிறார்.
இருள் திணிந்தன்ன
எனத் தொடங்கும் ஐயூர் முடவனார் பாடல் (குறுந்தொகை-123).
ஐயூர் முடவனார்
ஐயூர் என்பது சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். முடவனார் எனும் பெயர் இவரது உடற்குறைபாடு காரணமாக அமைந்த பெயராகலாம். தாமான் தோன்றிக்கோன் எனும் வள்ளலிடம் வண்டி இழுப்பதற்குக் காளை வேண்டுமென்று பாடி மாடுகளும் வண்டியும் பரிசாகப் பெற்றவர்.
திணை : நெய்தல்
கூற்று : பகற்குறியிடத்துத் தலைவன் சிறைப்புறமாக நிற்கத் தோழி அவனைக் காணாதவள் போல் கூறியது.
அதாவது, பகற்குறியிடத்து (பகல் நேரத்தில் குறிப்பிட்ட இடம்) வந்த தலைமகன், தலைமகள் தன்னைக் காணாமல் தவிப்பதைப் பார்க்க வேண்டும் என விரும்பி அருகில் ஒரு வேலிப்புறமாக மறைந்து நிற்கிறான். அவனையும் அவனது எண்ண ஓட்டத்தையும் கண்டு கொண்ட தோழி, அவனைக் காணாதவள் போல் பாவனை செய்து, அவனுக்குக் கலக்கம் ஏற்படும் வகையில் தலைவியிடம் பேசியது. தோழி தலைவியை நோக்கிக் கூறுகிறாள் : ‘தோழி ! நிலா ஒளியைத் திரட்டிக் குவித்து வைத்தாற் போன்றிருக்கிற வெண்மணல் குவியலின் ஒரு பக்கமாக உள்ள இந்தச் சோலைதான் தலைவர் வந்து உன்னைச் சந்திப்பதற்குரிய பகற்குறியிடம்! கரும் கொம்புகளையுடைய புன்னைமரச்சோலை! இருள் திணிந்து கிடப்பது போன்ற ஈரமான, குளிர்ந்த, செழிப்பான நிழலையுடைய சோலை ! நம் தலைவர் தாம் சொன்னபடி இன்னும் வராததால் இந்தச் சோலை தனிமையில் கிடக்கிறது. தலைவர் வரவில்லை என்றாலும், அதோபார், கடலில் பலவகை மீன்களையும் வேட்டையாடச் சென்ற நம் தமையன்மாருடைய படகுகள் கரைநோக்கி வருகின்றன’.
ஏமாற்ற நினைத்த தலைவன் ஏமாறுகிறான் என்பதாக உணர்த்துகிறது தோழியின் கூற்று. தலைவியை ஏமாற்றத் தலைவனும், அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டு அவனை ஏமாற்றத் தோழியும் விளையாடும் இந்த விளையாட்டு சுவையானது. ‘படகுகள் வருகின்றன’ என்றவுடனே, தலைவியைச் சந்திக்க முடியாதே என்ற எண்ணத்தில் உடனடியாகத் தலைவன் திடுக்கிட்டுப் போவான். இல்லற வாழ்வில் காணமுடியாத, களவுக் காதலில் மட்டுமே காணக்கூடிய ஒளிமறைவு விளையாடல் அழகாகச் சொல்லப்பட்டிருக்கும் பாடல் இது.
பகற்குறியிடமான சோலையைப் புலவர் வருணிக்கும் அழகு கவனிக்கத்தக்கது. அது ஒளியும் இருளும் அருகருகே உள்ள இடம். பரந்த மணல் வெளி நிலா ஒளிபோல உள்ளது. அருகிலேயே இருள் திணிந்து கிடப்பது போன்ற புன்னைமரச்சோலை. உள்ளிருப்போரை வெளியிலிருப்போர் காணமுடியாத அடர்த்தியான சோலை! மிகச் சிறந்த இயற்கைப் பின்னணி சொல்லப்பட்டுள்ளது.
ஆடமை புரையும்
எனத் தொடங்கும் ஓரேருழவனார் பாடல் (குறுந்தொகை-131).
ஓரேருழவனார்
இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. தலைவியைக் காண விரையும் தலைவனது பரபரப்பைக் காட்டுவதற்கு ‘ஓரேர் உழவன்போல’ எனக் கூறிய உவமையின் சிறப்பால் பெயர் பெற்றவர் இவர்.
திணை : பாலை
கூற்று : வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது.
அதாவது, தலைவியைப் பிரிந்து வினைமேல் சென்றவன், அவ்வினை முடிந்த நிலையில், தான் மீண்டு வருவதாகத் தலைவிக்குக் குறித்த பருவம் வந்துவிட்டதைக் கண்டு தனக்குள் சொல்லியது.
தலைவன் தனக்குள் பேசிக்கொள்கிறான் : ‘அசையும் மூங்கில் போன்ற அழகிய திரண்ட தோள்களையும் மிகுந்த விருப்பம் தருகின்ற கண்களையும் உடைய என் தலைவி இருக்கும் ஊர், விரைவில் சென்றடைய முடியாத நெடுந்தொலைவில் உள்ளது. அவளை உடனே காணத் துடிக்கும் என் நெஞ்சமோ, மழைபெய்து உழுவதற்கேற்ற பக்குவமுடைய ஈர நிலத்தை அப்பக்குவம் மாறுமுன் உழுது முடிக்கவேண்டிய, ஆனால் ஒரே ஓர் ஏரைமட்டும் உடைய உழவனைப்போலப் பெருந்தவிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. செய்வதறியாமல் வருந்துகின்றேன் நான் !”
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து
ஓரேர் உழவன் போலப்
பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே
(செவ்வி = பக்குவம் ; விதுப்பு = விரைவு ; ஏர் = கலப்பை ; நோகோ யானே = நான் வருந்துகிறேன்.)
மழை பெய்த நிலப்பக்குவம் மாறி, அது கெடுமுன் உழுதாக வேண்டும். அவனோ ஒரே ஓர் ஏரினையுடைய உழவன். அதே போலிருக்கிறது தலைவனின் நிலை. பருவம் வந்துவிட்டது. தலைவியின் தாங்கும் திறன் கெடுவதற்குள் அவளைப்போய்க் காணவேண்டும் ; ஆனால் தலைவனால் விரைவில் கடக்க முடியாத பெருந்தொலைவு, அவனைப் பெருந்தவிப்பு அடையச் செய்கின்றது.
உவமையாற் பெயர்பெற்ற மற்றும் ஒரு புலவர் ஓரேருழவனார் (ஓர் ஏர் உழவனார்). தேய்புரிப் பழங்கயிற்றினாரையும், செம்புலப்பெயனீராரையும் நினைவில் வைத்திருப்பீர்கள் அல்லவா !
வேனிற் பாதிரிக் கூன்மலரன்ன
எனத் தொடங்கும் கோப்பெருஞ்சோழன் பாடல் (குறுந்தொகை-147).
கோப்பெருஞ்சோழன்
பிசிராந்தையார் என்னும் புலவரின் அன்புக்குரிய நண்பராக விளங்கியவரே இப்புலவர். மன்னர்களில் சிலர் நல்ல புலவர்களாகவும் திகழ்ந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாவோர் அறிவுடைநம்பி, பெருங்கடுங்கோ, கோப்பெருஞ்சோழன் போன்றோராவர்.
திணை : பாலை
கூற்று : தலைமகன் பிரிந்திருக்கும் இடத்தில் தலைவியைக் கனவில் கண்டு சொல்லியது.
கனவில் தலைவியைக் கண்டு மகிழ்ந்தவன் துயில் கலைந்தபோது ஆற்றாமை கொண்டு கனவை நோக்கிக் கூறியது.
தலைவன் கனவை நோக்கி : ‘கனவே! என் தலைவி வேனிற்காலத்தில் மலரும் பாதிரியின் வளைந்த பூவில் உள்ள துய் (பூ இதழினுள் காணும் மிக மெல்லிய நார் போன்ற பகுதி) போன்ற, அழகிய வரிசையாக அமைந்த மயிர் ஒழுங்கை உடையவள்; அழகு ஒழுகும் மாமை நிறத்தை உடையவள்; நுட்பமான வேலைப்பாடுகளைக் கொண்ட அணிகலன்களை அணிந்தவள். அத்தகைய தலைவியைக் கண்முன் தந்தது போலக் காட்டி, அந்த இனிய துயிலில் இருந்தபோதே எழுப்பிவிட்டாய்! இவ்வாறு ஏமாற்றும் செயல் காரணமாகத் தங்கள் துணையைப் பிரிந்திருப்போர் உன்னை இகழமாட்டார்களா? என்று கேட்கின்றான்.
எள்ளார் அம்ம துணைப்பிரிந்தோரே
பிரிந்து தவிக்கும் தலைவியரைப் போலவே, தலைவர்களும் தாமிருக்கும் இடத்தில் இருந்துகொண்டு வருந்துவதையும், புலம்புவதையும் சங்கப்பாடலில் காணலாம். கோப்பெருஞ்சோழனுடைய இப்பாடல் ஒரு தனித் தன்மையுடையது. அகப்பாடல்களில் தோழியை, தலைவியை, தலைவனை, செவிலியை மற்றுமுள்ளோரை முன்னிலைப்படுத்தும் பேச்சுகள் மிகுதி. தலைவனோ தலைவியோ தம்நெஞ்சை முன்னிலைப் படுத்திப் பேசுவதையும், யாரையும் எதனையும் முன்னிலைப் படுத்தாமல் தம்முள் பேசிக்கொள்வதையும் காணலாம். அடுத்து வண்டு, நாரை போன்றவற்றை முன்னிலைப் படுத்தியிருப்பதையும் அறிவோம். ஆனால் இப்பாடலில் புலன்களுக்குப் பிடிபடாத அடிமன இயக்கமாகிய கனவை முன்னிலைப்படுத்திப் பேசுவது தனித்தன்மையாகிறது.
குறுந்தொகை 30-ஆம் பாடலில், தலைவன் தன்னைத் தழுவியிருப்பதைப் போலக் கனவுகண்டு, விழித்துத் தலைவன் உண்மையிலேயே அங்கிருக்கிறானோ எனப் படுக்கையைத் தடவிப் பார்க்கிறாள் தலைவி எனக் கூறப்பட்டுள்ளது ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியவொன்று.
யாரணங்குற்றனை
எனத் தொடங்கும் அம்மூவனார் பாடல் (குறுந்தொகை-163).
அம்மூவனார் : இப்புலவர் பற்றிய குறிப்பை முன்னரே படித்தோம். (பாடம் எண் : 1 – நற்றிணை – 1)
திணை : நெய்தல்
கூற்று : தன்னுள் கையாறெய்திடு கிளவி.
(கையாறு = செயலற்ற தன்மை. கிளவி = சொல்.) அதாவது தலைவனது பிரிவால் வருந்தி ஆற்றாமை கொண்ட தலைவி, காமநோயின் கொடுமையால் செயலற்றுக் கூறியது. தலைவி கடலை நோக்கிப் பேசுவது போலத் தன் காமத்துன்பத்தை வெளிப்படுத்துகிறாள்.
தலைவி கடலை நோக்கி : ‘கடலே ! நீயும் வருந்திப் புலம்புகிறாயே, நீ யாரால் இத்துன்பம் அடைந்தாய்? பூழி நாட்டினரது சிறிய தலையை உடைய வெள்ளாட்டுக் கூட்டம் போல, மீனுண்ணும் கொக்கின் கூட்டம் பரவியிருக்கும் கடற்கரைச் சோலைகள் சூழ்ந்த பெரிய துறையில், வெள்ளை நிறப் பூக்களையுடைய தாழையை அலைகள் மோதி மோதி அலைக்கழித்துக் கொண்டிருக்கிற இந்த நள்ளிரவிலும் உன் பெருங்குரல் கேட்டுக் கொண்டிருக்கிறதே ! யாரால் இத்துயரம் அடைந்தாய்?’ எனக் கேட்கின்றாள்.
யாரணங் குற்றனை கடலே ……
நள்ளென் கங்குலும் கேட்கும் நின்குரலே
(அணங்குறுதல் = துன்புறுதல் ; கங்குல் = இரவு)
கடலின் ஓசை இடைவிடாது எப்பொழுதும் கேட்பதுதான். தலைவியின் உறக்கமின்மை – நள்ளிரவில் தானும் கடலும் தனித்திருந்து வருந்துவதாக உணரும் ஒருவகைத் துன்பத்துத் தோழமை – அதன் காரணமாகக் கடலிடம் அவளுக்கு ஏற்படும் பரிவு – இவை கவிதைச் சுவையை மேம்படுத்துகின்றன.
இயல்பான கடலின் ஓசையை, யாராலோ துன்புறுத்தப்பட்டு அது எழுப்பும் ஓசை எனக் குறிப்பிடுவது தற்குறிப்பேற்ற அணி என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இப்பாடலில் உள்ளுறைக் குறிப்பும் உள்ளது. கடலோரத்துத் தாழையை அலைகள் ஓயாமல் அலைக்கழித்துக் கொண்டிருப்பது, தலைவியைக் காமத்துன்பம் அலைக்கழிப்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது.
பூழிநாடு எனும் தமிழகத்துப் பகுதி, வெள்ளாடுகளுக்குப் பெயர் பெற்றதாக இருந்திருப்பதை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. அம்மூவனார் அகப்பாடல்களில் புறப்பொருள் செய்திகளை இணைத்துத் தருபவர் என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.
முளிதயிர் பிசைந்த
என்ற கூடலூர்கிழார் பாடல் (குறுந்தொகை-167).
கூடலூர் கிழார்
இவர் மலைநாட்டைச் சேர்ந்த கூடலூரை இருப்பிடமாகக் கொண்டவர்; வேளாளர். ஓர் எரிநட்சத்திர வீழ்ச்சியைக் கண்டு கோச்சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்னும் அரசன் இன்னநாளில் இறப்பான் என்று முதலில் கணித்திருந்து, அவ்வாறே அவன் இறந்ததுகண்டு பிரிவாற்றாமல் வருந்தினார். இச்செய்தி இவர் கணிதத்தில் வல்லவராக இருந்தார் என்பதைப் புலப்படுத்துகிறது. ஐங்குறுநூறு என்னும் தொகை நூலைத் தொகுத்தவர் இவரே.
திணை : முல்லை
கூற்று : கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது.
அதாவது தலைவி தலைவனை மணந்துகொண்டு அவன் வீட்டில் இல்லறம் நடத்தும்போது அங்குச் சென்றுவந்த செவிலித்தாய், தலைவி இல்லறம் நடத்தும் பாங்கை நற்றாய்க்கு எடுத்துக் கூறியது. (கடிநகர் = காவல்மிக்க நகர்) செவிலி கூற்று.
செவிலி நற்றாயிடம் கூறியது : ‘நம் மகள் தன் தலைவன் வீட்டில் இல்லறம் நடத்தும் சிறப்பைக் கேள் ! நான் பார்த்த காட்சி : முதிர்ந்த கெட்டித் தயிரைத் தன் காந்தள் போன்ற மெல்லிய விரல்களால் பிசைந்தாள்; அப்போது தாளிக்க வேண்டிய நிலை வந்ததால் உடன் எழுந்தாள். எழுந்தபோது அவள் ஆடை நெகிழ்ந்தது. தயிர் பிசைந்த கையைக் கழுவாமலே ஆடையைப் பற்றி உடுத்திக் கொண்டாள். தாளித்தபோது குவளை மலர் போன்ற அவளது கண்களில் தாளித்ததால் ஏற்பட்ட புகை நிறைந்தது. இவ்வாறு முயன்று தானே தன் விரல்களால் பிசைந்து சமைத்த இனிய புளிக்குழம்பை அவள் கணவன் ‘இனிதாயிருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டே உண்டான். அப்போது அவளுடைய ஒளிமிக்க நெற்றியை உடைய முகம் மிக மகிழ்ச்சியாகக் காணப்பட்டது’ என்று செவிலி தான் கண்ட காட்சியைச் சொன்னாள்.
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே
இந்த இல்லறம் மகிழ்ச்சி நிரம்பியது. பெற்ற தாயையும் வளர்த்த தாயையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவது. தலைவியின் சமையலைத் தலைவன் பாராட்டி உண்ணும் ஒரு காட்சியை மட்டுமே காட்டி அவர்கள் வாழ்வின் நிறைவைக் கவிஞர் உணர்த்துகிறார். ஏதுமறியாச் சிறுமியாக விளையாடி மகிழ்ந்திருந்த தங்கள் மகளின் இன்றைய இந்தப் பக்குவ நிலையைக் காணும் செவிலியும், நற்றாயும் வியப்பும் மகிழ்ச்சியும் கொள்வது இயல்பே.
போதனாருடைய நற்றிணைப் பாடலின் (110) தலைவி, கணவன் வீட்டில் வீட்டு நிலைமைக்கேற்ப ஒரு நேரம் விட்டு ஒருநேரம் உண்டாள் என்பதைப் பார்த்தோம். அக்காட்சியில் தலைவியின் வேறொரு பக்குவநிலை காட்டப்பட்டது.
தாஅ அஞ்சிறை
எனத் தொடங்கும் கச்சிப்பேட்டு நன்னாகையார் பாடல் (குறுந்தொகை-172).
கச்சிப்பேட்டு நன்னாகையார்
இவர் பெண்பாற்புலவர். உண்மைபோலத் தோன்றிப் பொய்யாக முடியும் கனவை வாய்த்தகைப் பொய்க்கனா என்று செறிவாகக் குறிப்பிட்டவர் இவர். யானைப் பாதத்தின் நகத்துக்குப் பேயின் பல்லை உவமை கூறியவர்.
திணை : நெய்தல்
கூற்று : வரைவிடை ஆற்றாள் எனக் கவன்ற (வருந்திய) தோழிக்குத் தலைமகன் கூறியது.
அதாவது, திருமணத்தின் பொருட்டுப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் பிரிந்து சென்றிருக்க, ஆற்றாமை மிக்க தலைவி அவனுக்காக வருந்தித் தோழிக்குக் கூறியது. தலைவி கூற்று.
தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள் : ‘தாவித்தாவியும் மெத்தெனவும் பறக்கும் அழகிய சிறகுகளையுடைய வௌவால்கள் பழுத்த மரங்களைத் தேடிச் செல்லும் மாலைப்பொழுது ! பிரிந்தோர்க்குத் துன்பம் மிக்க மாலையாகும் இப்பொழுதில் இங்கே நாம் தனித்திருக்க, நம்மைப் பிரிந்தவர்கள் அங்கே தனிமையில் இனிமையாக இருக்க முடியுமோ?
எமிய மாக ஈங்குத் துறந்தோர்
தமியராக இனியர் கொல்லோ
(எமியம் = நாம் மட்டும் தனித்து ; தமியர் = தனித்து இருப்பவர்.)
அவர் நிலையை எண்ணிப்பார்க்கும் என் நெஞ்சம், ஏழு ஊர்களில் உள்ள மக்களுக்குத் தேவையான வேலை முழுவதையும் செய்வதற்காக ஓர் ஊரில் மட்டுமே உள்ள கொல்லன் உலையின் துருத்தியைப் போன்று வரம்பற்ற துன்பச் சுமையால் வருந்துகிறது’.
தலைவி தனது வருத்தம் பற்றி நினைக்கவில்லை. தலைவனது வருத்தத்திற்காகத்தான் வருந்துகிறாள். ஏழூர்ப் பணிக்குப் பயன்படும் ஒற்றைத் துருத்தி இரவு பகல் இன்றி எந்நேரமும் உழைப்பதுபோல் அவள் நெஞ்சம் ஓயாது உளைகிறது.
ஒருநாள் வாரலன்
எனத் தொடங்கும் வருமுலையாரித்தியார் பாடல் (குறுந்தொகை-176).
வருமுலையாரித்தியார்
இவர் பெண்பாற் புலவர். ஒளவையாரின் பாடல் தொடர்களைத் தம் பாடலில், தாம் சொல்லும் பொருளுக்கேற்ப இவர் எடுத்தாண்டிருக்கும் திறம் போற்றத் தக்கது.
திணை : குறிஞ்சி
துறை : தோழி கிழத்தியைக் குறைநயப்பக் கூறியது.
அதாவது தன்னிடம் பலமுறை வந்து தன் குறை சொல்லிப் பணிந்து வேண்டிச் செல்லும் தலைவனுக்கு இரங்கிய தோழி தலைவியிடம் சென்று ‘நீ தலைவன் குறையைத் தீர்ப்பாயாக’ என்னும் பொருள்படக் கூறியது. (குறை நயப்பு : குறையை ஏற்றுக் கொள்ளுதல்) தோழி கூற்று.
இங்குத் தோழியின் செயல், ஒரு நடிப்பு, ஒரு பாவனை ஆகும். தலைவனோடு இயற்கைப் புணர்ச்சியில் இணைந்ததைத் தலைவி தோழிக்குத் தெரியாமல் மறைத்திருக்கிறாள். தலைவன் தோழியிடம் வந்து இரந்து வேண்டும் போதுதான் தோழிக்கு உண்மை தெரிகிறது. தலைவியிடம் நேரடியாக இது பற்றிக் கேளாமல், அவள் வாயிலிருந்தே உண்மையை வரவழைப்பதற்காகத் தோழி ஒரு தந்திரம் செய்கிறாள். தன்னை ஒருவன் விரும்பிப் பலமுறை வந்து தன் நெஞ்சை நெகிழச் செய்ததாகவும், பின் பிரிந்து சென்றுவிட்டதாகவும் சொல்லித் தலைவியை ‘ஆழம்’ பார்க்கிறாள். தோழி கையாளும் இந்த உத்தி ‘கவர்பொருள் நாட்டம்’ எனப்படும். (கவர்பொருள்: இருபொருள்.) தலைவியின் காதல் போலவும், தன்காதல் போலவும் இருபொருள் படும்படிப் பேசி உண்மையை அறிதல்.
தோழி தலைவியிடம் கூறுகிறாள் : ‘தோழி ! அத்தலைவன் ஒருநாள் இருநாள் அல்ல, பலநாளும் வந்து என்னிடம் பணிவான மொழிகளைப் பேசினான். எனது நன்னெஞ்சத்தை நெகிழச் செய்தான்.
ஒருநாள் வாரலன், இருநாள் வாரலன்,
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றிஎன்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை
(பின்றை = பின்னர்)
அதன்பின் அவனைக் காணவில்லை. மலையில் உள்ள முதிர்ந்த தேன் இறால் திடீரென்று காணாமல் போய்விடுவது போல, மனம் அழிந்து எங்கோ போய்விட்டான். பலர்க்கும் ஆதரவாக இருக்கும் தந்தை போன்ற தலைமைத்தன்மையுடைய அவன் இப்போது எந்த நாட்டில் இருக்கிறானோ? என்நெஞ்சம் கலங்குகிறது. வேற்றுநாட்டில் பெய்த மழைத் தண்ணீர் நம் நாட்டுக்குள் கலங்கி வருவதுபோல என் நெஞ்சம் கலங்குகிறது.
இங்கே தோழி, தன் கற்பனைக் காதலனைப் பற்றிக் கூறுவது போலப் பேசினாலும் தலைவியின் காதலனை, அவனது பண்பை, அவனது தகுதியை ஆசாகுஎந்தை (பலர்க்கும் பற்றுக்கோடாக இருக்கக் கூடிய தந்தை போன்றவன், தலைமைத் தன்மையுடையவன்) என்னும் தொடரில் உணர்த்துகிறாள். தலைவி தலைவனைக் காதலிப்பது தனக்கு உடன்பாடே என இதன் மூலம் புரியவைக்கிறாள்.
தோழி தனது காதல் பற்றிச் சொல்வதுபோலப் பேசினாலும், களவுக்காதல் செய்யும் தலைவிக்குத் தோழியின் உள்கருத்து புரியும், ‘வேற்று நாட்டில் பொழிந்த மழைநீர், நம் நாட்டில் கலங்கி வருகிறது’ என்ற உவமையிலும் ஒரு குறிப்பு இருக்கிறது. ‘தலைவியின் களவுக்காதல் என்னைக் கலங்கச் செய்கிறது’ என்பது அக்குறிப்பு.
தலைவன் திடீரென்று காணாமல் போனதை, ‘முதிர்ந்த தேனிறால் மறைந்து விடுவதுபோல’ எனக் கூறியுள்ள உவமையின் பொருள் என்ன? தேனிறால் முதிரட்டும் எனக் காத்திருந்தவர்கள் முதிர்ந்தவுடன் கவர்ந்து போய்விடுவர். ‘நேற்று இருந்ததே, இன்று காணவில்லையே எனக் காண்பவர்கள் சொல்லுமாறு மறைந்துவிடும்.
வரைமுதிர் தேனிற் போகியோனே
இப்பாடலின் மற்றொரு சிறப்பு, புறநானூற்றில் அதியமானைப் பற்றி ஒளவையார் பாடிய இரு பாடல்களின் தொடர்களை அப்படியே எடுத்தாண்டிருப்பதாகும்.
ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ (புறம் – 101)
என ஒளவை அதியமானின் விருந்தோம்பலைப் போற்றுகிறார். பாடலின் முதலடியை வருமுலையாரித்தியார் எடுத்தாண்டிருக்கிறார். அதியமான் இறந்தபோது பாடிய கையறுநிலைப் பாடலில்
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ (புறம் – 235)
என்று கண்ணீர் விடுகிறார் ஒளவையார். அந்த அடி குறுந்தொகைப் பாடலில், சாவுக்காக அன்றிப் பிரிவுக்காக வருந்தும் வருத்தம் குறிக்க எடுத்தாளப் பட்டிருக்கிறது. ஒளவையாருடைய பாடல்களின் அழகும் உணர்ச்சியும் வருமுலையாரித்தியைக் கவர்ந்திருக்கக்கூடும் எனலாம். மேற்காட்டிய அடி புறநானூறு 307ஆம் பாடலில் அள்ளூர் நன்முல்லையாராலும் எடுத்தாளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேம்பின் பைங்காய்
எனத் தொடங்கும் மிளைக்கந்தனார் பாடல் (குறுந்தொகை-196).
மிளைக்கந்தனார்
மிளை என்பது இவரது ஊர். மிளைப்பெருங்கந்தனார் என்பவர் இதே ஊரைச் சார்ந்த வேறொரு புலவர். பாரி பறம்பின் சுனை நீரின் சுவையை இவர் புகழ்ந்துள்ளார். பொருத்தமான உவமைகள் கொண்டு களவுக் காலத்திலும் கற்புக் காலத்திலும் வேறுபட்டுத் தோன்றும் ஆண்மனநிலையை அழகாகச் சித்திரித்தவர் இவர்.
திணை : மருதம்
கூற்று : வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது.
அதாவது, தலைவனின் பரத்தமையால் ஊடல் கொண்டிருந்த தலைவியின் ஊடல் தீர்த்து உடன்படச் செய்யுமாறு தோழியைத் தலைவன் வேண்டியபோது தோழி தலைவனுக்குக் கூறியது.
தோழி தலைவனிடம் சொல்கிறாள் : ‘ஐயனே! களவுக்காலத்தில் நீ அடைவதற்கு இயலாதவளாக இருந்தாள் தலைவி. அப்போதெல்லாம் அவள் உனக்கு வேம்பின் பசுங்காயைக் கொடுத்தாலும் அதனை ‘இனிய கரும்பின் கட்டி’ (கற்கண்டு) என்று பாராட்டிப் பேசினீர்கள். திருமணமாகி, எப்பொழுதும் உடனிருக்கும் இந்நாட்களில், பாரிவள்ளலின் பறம்பு மலையில் உள்ள குளிர்ந்த, தெளிந்த சுனைநீரைக் குளிர்ச்சியான தை மாதத்தில் கொடுத்தாலும் ‘இது வெப்பமுள்ளதாக உள்ளது, உவர்க்கிறது’ என்று கூறுகிறீர்கள். உங்களுடைய அன்பின் நிலை இத்தகையதுதானா?’
வேம்பின் பைங்காய்என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் ; இனியே
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
(தேம்பூங்கட்டி = கற்கண்டு; தண்ணிய = குளிர்ச்சியாக; வெய்ய = வெம்மையானது.)
தோழி தலைவனின் பழைய அன்பையும், இப்போதைய அன்பின்மையையும் ஒப்பிட்டு அவனுக்கு உறைக்குமாறு உதாரணம் காட்டிப் பேசுகிறாள். வேப்பங்காய், சுனைநீர் என்னும் இருபொருள்களைக் கொண்டு, அவன் பண்பு மாற்றத்தை அம்பலப்படுத்துகிறாள்.
மருதத் திணைப் பாடல்கள் பலவற்றிலும் களவுக் காலத்திலிருந்த அன்பைக் கற்புக் காலத்தில் (மணவாழ்வில்) தலைவன் காட்டவில்லை என்ற குறை சொல்லப்படுகிறது. அக்காலத்து நடைமுறை வாழ்க்கை இப்படித்தான் இருந்தது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. முன்பே சொன்னவாறு, சங்க அகப்பாடல்கள் நாடக வழக்கை மரபை (இலக்கிய மரபு) அதிகம் பின்பற்றுபவை. மருதத் திணைக்குரிய உரிப் பொருள் ‘ஊடலும் ஊடல் நிமித்தமும்’ என இலக்கணமரபு விதித்திருக்கிறது. ஊடல் எதனால் உண்டாகும்? தலைவனுடைய பரத்தமையால். அதனால்தான் பரத்தையிற் பிரிவு, தலைவியின் ஊடல், வாயில் வேண்டல், வாயில் மறுத்தல் போன்ற நிகழ்ச்சிகளே பெரும்பாலான பாடல்களில் சொல்லப்படுகின்றன. விதிவிலக்காக, நாம் பார்த்த முளிதயிர் பிசைந்த என்பன போன்ற சில பாடல்களைக் குறிப்பிடலாம். இல்லற ஒற்றுமையை அப்பாடலில் கண்டோம்.
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர் என்ற வருணனை நன்னாகனாருடைய புறநானூற்றுப் பாடலில் (176) இடம் பெறுகிறது.
நோமென் நெஞ்சே
எனத் தொடங்கும் அள்ளூர் நன்முல்லையார் பாடல் (குறுந்தொகை-202).
அள்ளூர் நன்முல்லையார்
இவர் பெண்பால் புலவர். அள்ளூர் என்பது பாண்டி நாட்டில், சிவகங்கைக்கு அருகில் உள்ள ஊர். இவர் பாடிய சங்கப்பாடல்கள் 11-இல் 9 பாடல்கள் குறுந்தொகையில் உள்ளவை.
திணை : மருதம்
கூற்று : வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது.
அதாவது, பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த தலைவனை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிய தோழியைத் தலைவி மறுத்துக் கூறியது.
தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள் : ‘தோழி! என் நெஞ்சு நோகின்றது! என் நெஞ்சு நோகின்றது! புன்செய் நிலத்தில் அடர்ந்து படர்ந்த சிறிய இலையையுடைய நெருஞ்சி முதலில் கண்ணுக்கு இனிய புதுமலர் பூக்கிறது; பின்னால் அதுவே உடலுக்கு வேதனைதரும் முள்ளைத் தருகிறது. அதுபோல முன்னர் நமக்கு இனியவற்றைச் செய்த நம் காதலர், இப்பொழுது இன்னாதவற்றைச் செய்கிறார். அதனால் என் நெஞ்சு நோகின்றது.’
கட்கின் புதுமலர் முட்பயந்தாங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோமென் நெஞ்சே
(கட்கு = கண்ணுக்கு ; முட்பயந்தாங்கு = முள்ளைத் தந்ததுபோல ; நோம் = நோகும்)
தோழி தலைவியை மனம் மாறச் செய்வதற்காகத் தலைவன் கடந்த காலத்தில் செய்த இனிய செயல்களை நினைவு படுத்தியிருக்கிறாள். அதற்குத் தலைவியின் பதில் போலத்தான் இப்பாடல் அமைந்துள்ளது. ‘முள்ளும் மலரும்’ என உவமை காட்டுவது இன்றுவரை நீடிக்கிறது. ஒரே பொருளில் இன்பமும் துன்பமும் கலந்துள்ளதைச் சொல்வதற்கு மிகப் பொருத்தமான உவமை நெருஞ்சிப்பூவும் நெருஞ்சிமுள்ளும். இந்த உவமை முழுப்பொருத்தமாக அமைவதற்குக் காரணம் முதலில் மலராக இருப்பதே சிலநாட்களில் முள்ளாக மாறுவதுதான். இந்த முன்-பின் முரண்பாடே கவிதையின் மூச்சாக உள்ளது.
வேம்பின் பைங்காய் (குறுந்தொகை-196) எனும் பாடலிலும் தலைவனின் “அன்றும் – இன்றும்” இயல்பு மாற்றம் தான் சொல்லப்படுகிறது. அங்கே தோழி சுட்டிக் காட்டுகிறாள், இங்கே தலைவி சுட்டிக் காட்டுகிறாள்.
திண்டேர் நள்ளி
எனத் தொடங்கும் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடல் (குறுந்தொகை-210).
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
இவர் பெண்பால் புலவர். இவர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மீது பதிற்றுப்பத்தில் உள்ள ஆறாம் பத்தைப் பாடி ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசுகளும் பரிசாகப் பெற்றவர். தலைவன் வருகையைக் கரைந்து தெரிவித்த காக்கைக்கு நன்றி செய்வது பற்றி உணர்ச்சி ததும்பப் பாடியதனால் காக்கைபாடினியார் எனும் அடைமொழி பெற்றார்.
திணை : முல்லை
கூற்று : பிரிந்து வந்த தலைமகன் நன்கு ஆற்றுவித்தாய் என்றவனுக்குத் தோழி உரைத்தது.
அதாவது, பிரிந்த தலைவன் மீண்டுவந்தபின் தோழியைப் பார்த்து, ‘நான் வரும்வரை பெரும் முயற்சி செய்து தலைவியை ஆற்றியிருக்கச் செய்தாய்’ என்று பாராட்ட, அப்போது தோழி கூறியது.
தோழி தலைவனை நோக்கிக் கூறுகிறாள் : ‘என் தோழியாகிய தலைவியின் அழகிய தோள்களை மெலியச் செய்த பிரிவுத் துயரிலிருந்து அவள் விடுபடும் வண்ணம், ‘யாரோ விருந்தினர் வரப்போகிறார்கள்’ என்பதைக் கரைந்து தெரிவித்தது காக்கை.
என்தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கை
(செல்லில் = துன்பம்)
உன் பாராட்டும் நன்றியும் தலைவியை ஆற்றியிருக்கச் செய்த காக்கைக்கே உரியன. திண்மையான தேரையுடைய நள்ளி என்ற வள்ளலின் காட்டில் வாழும் இடையர்களிடம் வளமான பசுக்கள் பலப்பல உண்டு. அப்பசுக்களின் கொடையாகிய மொத்த நெய்யையும் எடுத்துக்கொள்ள வேண்டும். தொண்டி என்னும் பேரூரில் விளைந்த மொத்த நெல்லரிசியையும் கொண்டு சமைத்த சோற்றில் அந்நெய்யைக் கலந்து ஏழு கலங்களில் வைத்து நாள்தோறும் அக்காக்கைக்கு ஊட்டினாலும் அந்தப் படையல் அக்காக்கையின் நன்றிக்கு ஈடாகாது.’
காக்கை கரைந்தால் விருந்து வரும் என்ற ‘நம்பிக்கை’ அக்காலத்திலும் இருந்திருக்கிறது. தோழி தலைவனின் பாராட்டை எதிர்கொள்ளும் போது காட்டும் ஒரு தன்னடக்கம், உணர்ச்சிப் பெருக்கு மித மிஞ்சிவிடாமல் ஓர் இயல்பு நிலையைக் கொண்டுவரும் அறிவு, பேச்சிலுள்ள இனிமை – இவை தோழியை உயர்ந்த பக்குவ நிலையில் காட்டுகின்றன. பாடலில் கூறப்பெறும் நள்ளி என்னும் மலை நாட்டுத் தலைவன் ஏழு வள்ளல்களுள் ஒருவன். அவன் நாட்டுப் பசுக்கள் வளமானவை என்பதும், தொண்டி நெல்விளைச்சலுக்குப் பெயர் பெற்றது என்பதும் இப்பாடல் மூலம் நாம் அறியும் புறச்செய்திகள்.
காக்கைச் சகுனத்தை அகப்பாடல் சுவையோடு சேர்த்த அழகு காரணமாக நச்செள்ளையார் என்ற இந்தப் பெண்பாற் புலவர் காக்கை பாடினியார் என்ற அடைமொழியோடு பெயர் பெற்று விளங்குகிறார். மடல் பாடிய புலவரை மடல் பாடிய மாதங்கீரனார் (நற்றிணை-337) என அழைப்பது போன்றது இது.
பழமழைக் கலித்த
என்று தொடங்கும் ஒக்கூர் மாசாத்தியார் பாடல் (குறுந்தொகை-220).
ஒக்கூர் மாசாத்தியார்
இவர் பெண்பாற்புலவர். பாண்டி நாட்டில் திருக்கோட்டியூருக்கு அருகில் உள்ள ஊர் ஒக்கூர். மறக்குடியின் வீரத்தைப் போற்றும் இவரது புறநானூற்றுப் பாடல் குறிப்பிடத்தக்கது.
திணை : முல்லை
கூற்று : பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது.
அதாவது கார்ப்பருவத்தில் மீண்டு வருவேன் என்று கூறிச்சென்ற தலைவன் அப்பருவம் வந்தபின்னரும் வராமையால் ஆற்றாமை மிகுந்த தலைவி தோழிக்குக் கூறியது. தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள் : ‘வரகுகதிர் அறுவடை செய்யப்பட்ட புனத்தில் பழைய மழை காரணமாகத் தாள் தளிர்க்கிறது. ஆண்மான் மேய்ந்தமையால் நுனி குறைந்த அத் தாளின் அருகில் முல்லைக் கொடி பூத்திருப்பது காட்டுப்பூனை சிரித்தாற்போல் இருக்கிறது. மெல்லிய பிணிப்பையுடைய குறு மொக்குகள் மலர்கின்ற மணமிக்க முல்லை நிலத்தில், மலர் ஊதும் வண்டுகள் சூழ்கின்ற இந்த மாலைப் பொழுதிலும் பொருள்தேடப் பிரிந்து சென்ற தலைவர் வரவில்லை. பார், இந்தக் கொடுமையை!’
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
வண்டுசூழ் மாலையும் வாரார்
கண்டிசின் தோழி பொருட்பிரிந்தோரே
(குறுமுகை = சிறிய அரும்பு ; புறவு = முல்லை நிலம்.)
பழைய மழையினால், அறுவடையான தாள் தழைத்ததாகத் தலைவி சொல்வது, ‘தலைவனின் பழைய உறுதிமொழியால்தான் நான் துன்பத்தைத் தாங்கி இன்னும் உயிரோடிருக்கிறேன்’ என்ற குறிப்பை உள்ளடக்கியிருக்கிறது.
இவன் இவள் ஐம்பால் பற்றவும்
எனத் தொடங்கும் மோதாசனார் பாடல் (குறுந்தொகை-229).
மோதாசனார்
ஆணையும் பெண்ணையும் கூட்டுவிக்கும் ஊழின் வலிமையைக் கண்டு வியந்து பாடியவர் இப்புலவர்.
திணை : பாலை
கூற்று : இடைச்சுரத்துக் கண்டோர் தம்முள்ளே சொல்லியது.
அதாவது, தலைவன் தலைவியை உடன்போக்கில் அழைத்துச் செல்லும் பாலை வழியில், இவர்களைக் காண்கின்ற, இவர்களைப் பிள்ளைப் பருவத்திலிருந்து அறிந்திருக்கின்றவர்கள் கூறியது.
கண்டோர் கூறுகிறார்கள் : ‘இவர்கள் சிறார்களாக இருந்த போது, இவன், ஐந்து பிரிவாக ஒப்பனை செய்யப்பட்ட இவளது கூந்தலைப் பற்றி இழுப்பான்; இவள் இவனது மெல்லிய தலைமயிரைப் பிடித்து வளைக்கத் துரத்துவாள். இவ்விருவருடைய அன்பான செவிலியர்கள் இடைமறித்து இவர்களை விலக்குவர்; எனினும் விலகாமல் ஒருவருக்கொருவர் அயலார்போலச் சிறு போரே நிகழ்த்துவர். ஊழே ! உனது நல்ல செயல் தெளிவாகத் தெரிகிறது. முன்பு இவர்கள் முரண்பட்டிருந்ததைப் பார்த்த எங்கள் கண் முன்னர், இவர்கள் மென்மையான இரட்டைமலர் மாலைபோல இயற்கை மணம் புரிந்துகொண்டு மகிழ்ந்திருக்கும் இயல்பைக் காட்டினாயே!’
நல்லைமன் றம்ம பாலே மெல்லியல்
துணைமலர்ப் பிணையல் அன்ன இவர்
மணமகிழ் இயற்கை காட்டியோயே
(நல்லை = நன்மையை உடையாய் ; பால் = ஊழ்வினை; துணைமலர்ப்பிணையல் = பொருந்தக் கட்டிய மலர்மாலை.)
உண்மையில் மனங்களை இணைக்கும் காதல் என்னும் இயற்கை வியப்பைத் தருவதுதான். பால்வரைத்தெய்வம் என்று அகப்பொருளில் குறிப்பிடப்படும் ஊழின்மீது மதிப்பை வெளிப்படுத்தும் ‘கண்டோர்’ தலைவன் – தலைவி காதல் மீது கனிவு காட்டுகிறார்கள்.
அன்பு – காதல் உண்மையானது என்றால் கால மாற்றங்களைத் தாண்டி அது ஒரே நிலையில் நிலைத்திருக்கும். அல்லவா! அவ்வாறு நிலைத்திராமல் மாறிப் போய்விட்டால் என்ன முடிவுக்கு வருவோம்? அந்தக் காதல் உண்மையானதன்று என முடிவு செய்வோம். அதைத்தான் ஒரு தோழி தலைவனிடம் தெரிவிக்கிறாள் (குறுந்தொகை-196) பரத்தையிற் பிரிந்திருந்தவன், திரும்பிவந்து வாயில் வேண்டுகிறான். தோழி சொல்கிறாள்: ‘களவுக் காலத்தில் தலைவி வேப்பங்காயைக் கொடுத்தால் கூட அதைக் கற்கண்டு என்றாய்!, இப்போது பாரிமலைச் சுனைநீரைக் கொடுத்தால் கூட வெப்பமானது, உவர்க்கிறது என்கிறாய்! எப்படியிருக்கிறது உனது அன்பின் நேர்மை, பார்த்தாயா?’ – ஆக, இரண்டு சந்தர்ப்பங்களிலுமே தலைவன் போலித்தனமே செய்திருக்கிறான் என்று குற்றம் சாட்டுகிறாள் தோழி. தலைவனது போலித்தனத்தை அம்பலப்படுத்த மிளைக்கந்தனாருக்கு வேப்பங்காயும் பறம்புமலைச் சுனை நீரும் கை கொடுத்திருக்கின்றன.
ஒருவருடைய தோற்றமும் மனத்து உண்மையும் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கக் கூடும். முன்பு அன்பாக இருந்தவன்தான்; இப்போது பரத்தையிற் பிரிந்து தலைவியைத் தவிக்கச் செய்கிறான். அள்ளூர் நன்முல்லையார் (குறுந்தொகை-202), அழகிய பூவாக இருந்து அதுவே முள்ளாக மாறிவிடும் நெருஞ்சியைத் தலைவனுக்கு உவமையாக்கி அவனருகில் நிறுத்துகிறார். தலைவனுடைய இரட்டை நிலையைச் சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறது நெருஞ்சி.
இன்னள் ஆயினள் நன்னுதல் என்றவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழிதோழி
பிரிந்து போகும்போது தலைவன் பார்த்திருந்த தலைவியின் அழகுத் தோற்றத்திற்கும், பீர்க்கம் பூவைக் காட்டி “இன்னள் ஆயினள்” என்று சொன்னால் அவன் மனக்கண்ணில் தோன்றும் பசலை படர்ந்த, வாடிய தோற்றத்திற்கும் இடையேயுள்ள பெரிய இடைவெளியைப் புலவர் உணரச் செய்கிறார்.
மாலையை உரன்மாய் மாலை (நற்றிணை-3), அருளில் மாலை (நற்றிணை-69) என்று தலைவன் தலைவியர் சார்பாகப் புலவர்கள் வருணித்துள்ளனர். பிரிந்திருக்கும் நிலையும் உணர்வுக் கொதிப்பும் தரும் துன்பத்தை மாலை தரும் துன்பமாகத் தலைமக்கள் உணர்கின்றனர். கச்சிப்பேட்டு நன்னாகையார் பாடலில் (குறுந்தொகை-172) தலைவி பிரிவுத்துயரம் பொறுக்க முடியாதவளாய்ப் பையுள் மாலை என மாலையை வருணிக்கிறாள். (பையுள் = இடும்பை, துன்பம்) தலைவி அனுபவிக்கும் மாலை, இரவு விழித்து இரைதேடும் பறவையான வௌவால்களோடு சேர்ந்து வருகிறது. வௌவால்கள் மாலையின் தோற்றத்தில் மேலும் ஒரு கொடுமையைக் கூடுதலாக்குகின்றன. இத்தகைய கொடிய மாலை தலைவன் இருக்குமிடத்தில் அவனை என்ன செய்துவிடுமோ என்பது தலைவியின் வருத்தம். மாறிமாறித் தனக்காகவும் அவனுக்காகவும் இடைவிடாது வருந்தும் அவள் நிலைக்குப் பொருத்தமான உவமை தருகிறார் புலவர். ஏழு ஊர் மக்களுக்கு வேலை செய்வதற்கு அமைந்த ஒரே ஒரு கொல்லன் உலையில் உள்ள துருத்தி எவ்வாறு பெருமூச்சு விட்டு நெருப்பை ஊதிக் கொண்டே இருக்குமோ அவ்வாறிருக்கிறாள் தலைவி எனக்காட்டும் போது, புலவர் தலைவியின் உணர்ச்சியை முழுமையாக வெளிப்படுத்தி விடுகிறார்.
அடுத்துத் தலைவர்களின் உணர்ச்சி வெளிப்படப் புலவர்கள் என்ன உத்திகளைக் கையாளுகிறார்கள் என்பதைக் காணலாம். ஓரேருழவனாரின் பாடலில் (குறுந்தொகை-131) தலைவியைப் பிரிந்து வினைமேற் சென்ற தலைவன் வினையை முடித்து விட்டான். திரும்ப முனையும்போதே அவன் குறித்த பருவம் வந்துவிட்டது. உடனே தலைவியைக் காண வேண்டும் ; அவள் துயரைப் போக்க வேண்டும். ஆனால் இடையிலுள்ள தூரம் மிகப்பெரியது நெடுஞ்சேண் ஆரிடையது. எளிதில் கடக்கமுடியாத பாதையும் கூட. தவிக்கிறான் தலைவன். புலவர் தலைவனுடைய மனவெளியைக் காட்டுகிறார். அங்கே தலைவியின் மூங்கில் போன்ற தோள்களும், பெரும் விருப்பத்தை உண்டாக்கும் விழிகளும் தாம் சுற்றிச் சுழல்கின்றன. அழைக்கும் கண்களையும் அணைக்கும் தோள்களையும் நினைத்துக் கலங்கும் தலைவனின் செயலற்ற தன்மையை உணர்த்த அருமையான உவமையைக் கையாளுகிறார் புலவர். மழைபெய்து உழவுக்குரிய பக்குவத்தில் உள்ள பெரிய நிலம் – பக்குவம் மாறுமுன் உழவேண்டிய உழவனோ, தனித்த ஓர் ஏர் உழவன் ! அந்த உழவனைத் தவிக்கும் தலைவனுக்கு உவமையாக்குகிறார் புலவர்.
கோப்பெருஞ் சோழனின் பாடல் தலைவன் (குறுந்தொகை-147) பிரிந்து சென்ற இடத்தில் இருந்து கொண்டு பிரிவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பவன். கனவில் தலைவியைக் கண்டு, விழித்து, ‘கனவின்பத்தையும் இழந்துவிட்டோமே’ என்று வருந்துகிறவன். ‘மடந்தையைத் தந்ததுபோலக் காட்டித் துயிலைக் கலைத்தும் விட்டாயே’ என்று கனவைக் கடிந்து கொள்கிறான். கனவை முன்னிலைப்படுத்தி அவன் பேசுவதாகக் கவிஞர் காட்டுவது புதுமையாக இருக்கிறது. இது மனத்தின் மிகமிக நுட்பமான (Abstract) இயக்கம். கனவில் தலைவியை அவன் காணும் தோற்றம் கவனிக்கத் தக்கது. பாதிரி மலரின் மெல்லிய துய் (நார் போன்றிருப்பது) போன்ற உடல் மயிர் ஒழுங்கு, அழகு ஒழுகும் மாமை நிறம், அணிகலன்கள் அணிந்த தோற்றம் இவை காமத்தூண்டலானவை. இது புலவர் படைத்த கனவுதான். எனினும் கனவுபற்றி உளவியல் அறிஞர் ஃபிராய்டு சொன்ன கோட்பாட்டை ஒத்திருக்கிறது. நிறைவேறாத ஆசைகள், ஏக்கங்கள் உறக்கத்தின்போது அடிமனத்திலிருந்து கிளம்பி, தளர்ந்திருக்கும் கட்டுப்பாட்டைத் (censorship) தாண்டி மேல்மனத்தில் நுழைந்து கனவாகக் காட்சி தருகின்றன. இவ்வாறு வெளிவருவது மன இறுக்கம் தளர்வதற்கு உதவும் என்பது அவர் கோட்பாடு. இந்தத் தலைவனும் இக்கனவில் அடிமன உணர்ச்சி வெளிப்பட்டுவிட்டதன் மூலம் மனநோயாளியாவதினின்றும் தப்பினான் என ஊகிக்கலாம்.
தலைவியைத் தோழி துப்பறியும் காட்சியை ஒரு நாள் வாரலன் என்ற பாடலில் காணலாம் (குறுந்தொகை-176). பாடல் முழுமையும் ஒரு மறை நாடகம்; ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, புரியாதது போன்ற பாவனை காட்டி நடிக்கும் நாடகம். அகப்பொருள் மரபுகள் காதலை மிக மிக நளினமாக, நாகரிகமாக எடுத்துக்காட்டும் உத்திகளை உள்ளடக்கியிருக்கின்றன. வெளிப்படையான பேச்சுகளும் செய்கைகளும் குறைவு. குறிப்பு மொழிகள், சொல்லாத சொற்கள் அதிகம். தலைவி தன் காதலைத் தோழிக்கு மறைக்கிறாள். தலைவன் மூலமாக உண்மை அறிந்த தோழி நேரடியாகத் தலைவியிடம் கேட்காமல், அவள் வாயிலிருந்தே உண்மையை வரவழைக்கும் நோக்கில் ஒரு கற்பனைக் காட்சியை உருவாக்கித் தலைவியிடம் சொல்கிறாள். அதாவது தோழியை ஒருவன் விரும்பிப் பல நாட்கள் திரும்பத் திரும்ப வந்து பணிந்துபேசி அவள் உள்ளத்தை நெகிழச்செய்ததாகவும், அவளிடமிருந்து சரியான பதில் கிடைக்காததால் மாயமாக மறைந்து போனதாகவும் சொல்லி, ‘பாவம், இப்போது எங்கிருக்கிறானோ என்று கலங்குகிறேன்’ என்றும் சொல்கிறாள். உண்மைக் காதலை வெளிக்கொணர ஒரு கற்பனைக் காதலைப் படைக்கிறாள். அகப்பொருளில் இந்த விதமாகத் தோழி நடிப்பது, ‘பல்வேறு கவர்பொருள் சொல்லி நாடல்’ எனப்படும். இருபொருள் படும்படியாகப் பேசித் தலைவியின் மனமறைவை அறிந்து கொள்ள முயலுதல் என்பது பொருள். ஒளவையார் அதியமான் இறந்தபோது மனம் உருகிப் பாடிய பாடலில் வரும் ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ? என்ற சோக அடியை இங்கே ஒரு கற்பனைத் துயரத்திற்கு – நாடகமாடலுக்குப் பயன்படுத்துகிறாள். irony எனப்படும் குறிப்பு முரண் இக்காட்சியில் அழகாகச் செயல்படுகிறது.
கூடலூர் கிழாரின் முளிதயிர் பிசைந்த என்ற பாடல் (குறுந்தொகை-167) மிகச்சிறந்த சங்கப் பாடல்களுள் ஒன்று. பரவலாகப் பலராலும் படித்துச் சுவைக்கப்படுவது. காட்சிச் சிறப்பினாலும் காட்சியினூடே நிறைந்து கமழும் அன்பின் மணத்தினாலும் அனைவரையும் கவர்வது. தன் இளம் மகள் – தற்போதுதான் திருமணமானவள் கணவன் வீட்டில் எப்படி இல்லறம் நடத்துகிறாள் என்பதைப் பார்க்கப் போன செவிலிக்குக் கிடைத்த அருமையான காட்சி கவிதையாகிறது. செவிலி நற்றாய்க்கு விவரிக்கும் முறையில் பின்னோக்காகக் (Flash Back) காட்சி சித்திரிக்கப்படுகிறது. அடுத்தடுத்த இரண்டு காட்சிகள். முதல் காட்சியில் தலைவி சமையல் செய்கிறாள். கெட்டித் தயிரைப் பிசைகிறாள்; செவிலியின் கண்கள் தலைவியின் விரலை நோக்குகின்றன. “காந்தள் மென்விரல்” என்று வருணனை தருகிறார் புலவர். தலைவி திடுமென எழுகிறாள். எழும்போது ஆடை நெகிழ்கிறது. உடனே தயிர் பிசைந்த கையால் பற்றி ஆடையை உடுத்துக் கொள்கிறாள். தாளிக்கும்போது கண்களில் புகை நிறைகிறது ; செவிலி ஆதங்கத்தோடு பார்க்கிறாள். ‘குவளைக்கண்கள் அல்லவா’ என்று புலவர் குறிப்புத் தருகிறார். இவ்வாறு புளிக்குழம்பு செய்து முடிக்கிறாள் தலைவி. அடுத்த காட்சியில் தலைவன் உண்டு கொண்டிருக்கிறான். ‘இனிது’ என்கிறான். செவிலி கண் தலைவியின் முகத்தைப் பார்க்கிறது. அந்த முகத்தில் வார்த்தைகளில் சொல்ல முடியாத மிக நுட்பமான மகிழ்ச்சி பரவுகிறது. நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. தலைவியின் ஆடை நெகிழ்தல், கைகழுவாமல் அவள் உடுத்துக் கொள்ளல், தாளிப்புப் புகையைக் கண்களில் நிறைய விடல் – என்பன தலைவி சமையலுக்கு மிகவும் புதியவள், இளையள் என்பதை உணர்த்துவன. செவிலி வருணிக்கும் காட்சியில் கேட்கும் ஒரே பேச்சுக்குரல் தலைவன் சொன்ன “இனிது” என்ற ஒற்றைச் சொல்தான். மற்றபடி இது அன்பினால் இயக்கப்பட்ட ஒரு மௌன நாடகம்.
குறுந்தொகையின் இக்காட்சியைப் பார்ப்போர்க்குச் சிலப்பதிகாரத்தில் கண்ணகி கோவலனுக்குச் சமைத்துப் பரிமாறும் காட்சி நினைவுக்கு வராமல் போகாது. கண்ணகி மென்விரல் சிவப்பக் காய்களை அரிந்ததும், முகம் வியர்ப்பச் செங்கண் மேலும் சிவப்ப அடுப்பின் முன் நின்றதும், “கையறி மடைமையின் காதலற் காக்கியதும்” இங்கு ஒப்பிடத்தக்கவை.
நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோமென் நெஞ்சே
தொடக்கமும் இறுதியுமாக வரும் நோமென்நெஞ்சே என்ற தொடரும், கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு எனும் அடியில் வரும் எதுகை அழகும், “இனிய இன்னா” எனவரும் முரண்தொடை அழகும் பாடலின் ஓசைநயமிக்க வடிவ ஒழுங்குக்குக் காரணமாக உள்ளன.
ஒளவையாரின் பாடல்களின் அடிகளைச் சற்று மாற்றியும், மாற்றாமல் அப்படியே மேற்கொண்டும் வருமுலையாரித்தியார் தம் நோக்கிற்கேற்ப அமைத்த கவிதை வடிவம் கவனிக்கத் தக்கது. ஒருநாட்செல்லலம் இருநாட்செல்லலம் பலநாட் பயின்று பலரொடு செல்லினும் என்ற ஒளவையாரின் அடிகளை ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன் பலநாள் வந்து பணிமொழி பயிற்றி எனச் சற்று மாற்றித் தருகிறார் குறுந்தொகைப் புலவர். ஒளவையார் பாடிய புறநானூற்றுப் (235) பாடல் அடி ஒன்று மாறாமல் இப்பாடலில் இடம் பெற்றிருக்கிறது. ஆசாகெந்தை யாண்டுளன் கொல்லோ என்பது அவ்வடி. புறப்பொருளில் பயன்பட்ட நல்ல வரிகளைப் பொருத்தமறிந்து அகப்பொருளுக்குப் பயன்படுத்திய திறம் பாராட்டுக்குரியது.
பாடம் – 6
பாசவலிடித்த
எனத் தொடங்கும் குன்றியனார் பாடல் (குறுந்தொகை-238).
குன்றியனார்
இப்புலவர் நெய்தல் திணையில் களவு, கற்பு என்னும் இருவகை ஒழுக்கங்களையும் சிறப்புறப் பாடியுள்ளார். மேற்குக் கடற்கரை நகரமான தொண்டியை வருணித்துள்ளார்.
திணை : மருதம்
கூற்று : பரத்தையிடமிருந்து திரும்பிய தலைமகன், தோழியிடம் சென்று சூள் உரைத்துத் தலைவியின் ஊடல் நீங்க வாயிலாகுமாறு அவளை வேண்டியபோது, தோழி வாயில் மறுத்தது
இது தோழி கூற்று.
(சூள் உரைத்தல் : தான் தவறு செய்யவில்லை என உறுதிமொழி கூறல்.)
தோழி தலைவனை நோக்கி : ‘ஒளிமிக்க வளையல் அணிந்த பெண்கள் நெல்லை வறுக்காமல் பச்சையாகவே இட்டு அவல் இடிப்பர் ; பிறகு கரிய, வயிரம் பாய்ந்த உலக்கைகளை, நெற்கதிர் நிறைந்த வயல் வரப்பாகிய படுக்கையில் கிடத்திவிட்டு அருகில் உள்ள இடத்தில் விளையாடுவர். இத்தகைய அழகுடையது தொண்டிப் பட்டினம். அப்பட்டினத்தை ஒத்த பெண்மை அழகுடையவள் தலைவி. அப்பெண்மை அழகைத் திருப்பிக் கொடுத்துவிட்டு நீ இப்போது கூறிய உன் சூள்மொழிகளை நீயே எடுத்துக் கொண்டுபோ’ என்று கூறுகிறாள்.
தொண்டி அன்னவென் நலம்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே
(சென்மோ = செல்)
தோழியின் கூற்றிலிருந்துதான் தலைவன் எவ்வாறு சூள் உரைத்திருப்பான் என்பது புரிகிறது. தன்மீது தவறு இல்லை என அவன் கூறும் சூள் முற்றிலும் நம்பமுடியாதது ; ஆகவே அவற்றை ‘உன்னோடு எடுத்துக் கொண்டுபோ’ என்கிறாள். ‘போகுமுன்பு உன் பரத்தமை காரணமாக அழிந்துபோன தலைவியின் அழகைக் கொடுத்துவிட்டுப் போ’ என்கிறாள். ‘சொல்லை எடுத்துப்போ’ என்பதும் ‘அழகைக் கொடுத்துவிட்டுப் போ’ என்பதும் கவித்துவம் மிக்க கூற்றுகள். எனினும் பேச்சுமொழியில் இத்தகைய கூற்றுகள் வழக்கில் இருப்பவையே.
பரத்தமை ஒழுக்கம் காரணமாகத் தலைவியின் அழகு கெடுமாறு செய்துவிட்டான் என்றோ, தலைவியுடன் வாழ்ந்து அவள் அழகைக் கவர்ந்து கொண்டபின் பரத்தையரிடம் சென்றுவிட்டான் என்றோ தலைவன்மீது குற்றம் சொல்லப்படுவதை மருதத்திணைப் பாடல்கள் சிலவற்றில் காணலாம். மாண்நலம் தா என வருந்தற் கண்ணும் எனத் தொல்காப்பியம் இது பற்றிக் கூறுகிறது. தந்தனை சென்மோ …. நீ உண்ட என் நலனே எனக் குறுந்தொகைத் தலைவி ஒருத்தி தலைவனிடம் கேட்கிறாள் (236) நலத்தை – அழகைத் திருப்பிக் கொடுத்தல் எப்படி? தலைவன் முழுமையாகத் தலைவிக்கே உரியவனாக வாழ்ந்தால் அவள் இழந்த அழகைத் திரும்பப் பெறுவாள் என்பதுதான் கருத்து.
தொண்டி : சேரனின் துறைமுகப் பட்டினம். இது அழகான ஊராக இருந்திருக்க வேண்டும். திண்டேர்ப் பொறையன் தொண்டி அன்ன என் நலம்தந்து (அகநானூறு-60) என்பது போலச் சங்க இலக்கியத்தில் சில பாடல்களில் தலைவியின் அழகுக்குத் தொண்டி உவமையாகிறது.
பெருங்கடற்கரையது
எனத் தொடங்கும் கபிலர் பாடல் (குறுந்தொகை-246).
கபிலர்
கபிலரைக் குறித்து முன்னரே படித்தோம். (பாடம் எண் : 1 – நற்றிணை – 1)
திணை : நெய்தல்
கூற்று : இரவுக் குறியில் வந்த தலைவன் சிறைப்புறமாக நிற்கத் தலைவி அதை அறியாதவள் போலத் தனக்குள்ள கட்டுக்காவல் மிகுதியைத் தோழியிடம் சொல்லும் முறையில் தலைவனைக் குறிப்பாக வரைவு கடாயது.
இது தலைவி கூற்று.
தலைவி தோழியை நோக்கி கூறுகிறாள் : ‘தோழி! பெரிய கடற்கரையில் வாழும் சிறுவெண் காக்கை, யானைக் காது போன்ற பசிய ஆம்பல் இலைகளைக் கசக்கிக் குளிர்ந்த கழிநீரை இரைக்காகத் துழாவிக் கொண்டிருக்கும் நடு இரவில், தனியாக ஒரு தேர் வந்து சென்றது என்று அயலார் சொன்னார்கள். அச்செய்தியைக் காரணமாகக் கொண்டு அன்னை என்னைத் துன்புறுத்துகின்றாள்.
தனித்தோர்
தேர்வந்து பெயர்ந்த தென்ப ; அதற்கொண்டு
ஓரும் அலைக்கும் அன்னை
(அதற்கொண்டு = அதன் காரணமாக ; ஓரும் = சிந்திக்கிறாள்; அலைக்கும் = துன்புறுத்துகிறாள்.)
என்னைப் போன்ற இளவயதுப் பெண்கள் எவ்வளவோ பேர் இவ்வூரில் உள்ளனர். பின்னித் தொங்கவிட்ட கூந்தலையும் மின்னும் அணிகலன்களையும் உடைய இளம் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் தங்களைத் துன்புறுத்தாத தாய்மார்களோடு வாழும் நல்ல விதியையுடையவர்கள் !”
தலைவன் இரவுக் குறியில் வந்து சென்றதைக் குறிக்கவே ‘ஒரு தேர் வந்து சென்றது’ என்று ஊரார் பேசிக்கொண்டனர் என்கிறாள். தலைவியின் தாய் களவுக் காதலை உணர்ந்து கொண்டு தலைவியைக் காவல் செய்கின்றாள் என்ற செய்தியின் மூலம் இனி இரவுக் குறிச் சந்திப்பு இயலாது. ஆகவே விரைவில் வரைந்து கொள்ள வேண்டும் என்னும் குறிப்பைத் தலைவி புலப்படுத்துகிறாள்.
சிறுவெண் காக்கை : கழுத்துப் பகுதியில் மட்டும் சிறு வெண்மையையுடையது கடற்காக்கை. பெரும்பகுதி கருமையும் சிறுபகுதி வெண்மையும் உடையது. இவ்வருணனை, தலைவன் பெரும்பாலும் நற்குணங்களுடையவனாயினும் இரவில் வந்து இடர்தரும் சிறுஅளவு பேதைமைக் குணமும் உடையவனாக இருக்கிறான் என்பதை உணர்த்தும் உள்ளுறை.
அருவியன்ன பருவுறை
எனத் தொடங்கும் அழிசி நச்சாத்தனார் பாடல் (குறுந்தொகை-271).
அழிசி நச்சாத்தனார்
தலைவன் மீது ஊடல் கொண்ட தலைவியின் மனச்சலிப்பை ‘ஒருநாள் கொண்ட நட்பு, பலநாள் துன்பத்திற்குக் காரணமாயிற்று’ என அருமையாக விளக்கிய புலவர் இவர்.
திணை : மருதம்
கூற்று : தலைமகனுக்கு வாயிலாகத் தலைவியிடம் புகுந்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
அதாவது பரத்தையிற் பிரிந்து திரும்பிய தலைமகன் தலைவியின் ஊடலைப் போக்குவதற்காகத் தோழியை இரந்து வேண்டினான்; தோழி அதற்கு உடன்பட்டு அவனை ஏற்குமாறு தலைவியை வேண்டிய போது, தலைவி வருத்தத்துடன் தான் உடன்பட்டது தோன்றச் சொல்லியது.
தலைவி தோழியை நோக்கி ‘மலையருவி சிதறுவது போலப் பெரிய துளிகளைச் சிதறி, ஆறுகள் தம் வெள்ளத்தை ஊர்கள் தோறும் வழங்கும் வளமான நாட்டைச் சார்ந்தவன் நம் தலைவன். அவனை நல்லவன் என நம்பி அவனோடு நட்புக் கொண்டது ஒருநாள்தான். அந்த ஒருநாள் தவறு, மிகப்பல நாட்கள் நம் தோளோடு கலந்து நமது அழகையெல்லாம் கவர்ந்து கொள்ளும் நோயாக விளைந்துவிட்டதே !’ எனச் சொல்கிறாள்.
உற்றது மன்னும் ஒருநாள் மற்றது
தவப்பன்னாள்தோள் மயங்கி
வௌவும் பண்பின் நோயாகின்றே
(உற்றது = சேர்ந்தது ; தவ = மிக ; பன்னாள் = பல நாள் ; வௌவும் = கவரும்)
‘தலைவனை ஒருநாள் சந்தித்து நட்புக் கொண்ட தவறு இப்போது பெரும் நோயாகிவிட்டது’ எனத் தன்னைத்தான் நொந்து கொள்வது போலத் தலைவி சொல்வதிலிருந்து ‘இனி என்ன செய்ய முடியும்’ என வருத்தத்துடன் அவனை ஏற்றுக்கொள்ள இசைகிறாள் என்ற குறிப்பு வெளிப்படுகிறது.
ஊர்கள் தோறும் ஆறு தன் வெள்ளத்தை வழங்கும் என்ற வருணனை, தலைவன் தன் நலத்தைப் பரத்தையர்க்கு வழங்குகின்றவன் என்பதைக் குறிக்கும் உள்ளுறை.
கேளிர் வாழியோ கேளிர்
எனத் தொடங்கும் நக்கீரனார் பாடல் (குறுந்தொகை-280).
நக்கீரனார்
சங்கப் புலவருள் பெரும்புலவராக மதிப்பிடப் படுகின்ற கபிலர், பரணர், ஒளவையார் போன்றோருடன் இணையாகச் சொல்லப்படத்தக்கவர் நக்கீரர். குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு ஆகிய தொகை நூல்களில் 33 பாடல்களைப் பாடியதுடன், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் இவர் பாடியுள்ளார். இறையனார் அகப்பொருளுக்கு முதன்முதல் உரை இயற்றியவர் இவர். சிவனுடன் இவர் வாதிட்டதாகக் கூறப்படும் செய்திகள் திருவிளையாடற் புராணம் போன்றவற்றில் காணப்படுகின்றன.
திணை : குறிஞ்சி
கூற்று : கழற்றெதிர்மறை. அதாவது தலைவன் தன்னை இடித்துரைத்த பாங்கனிடம் தலைவியின்றித் தான் வாழ முடியாது என மறுத்துரைப்பது.
இது தலைவன் கூற்று.
(கழறுதல் = கடிந்துரைத்தல் ; எதிர்மறை = அதற்கு மறுப்புரைத்தல்)
தலைவன் பாங்கனை நோக்கிக் கூறுகிறான். ‘நண்பரே! நீங்கள் வாழ்க! அழகிய கூந்தலும் பருத்த தோள்களும் இளமையும் உடைய தலைவி என் நெஞ்சைத் தன்னோடு பிணித்துக் கொண்டவள். அவளுடைய சிறிய மென்மையான மார்பை ஒருபொழுது கூட முடிந்தால் கூடப் போதும்! அதற்குப்பின் அரைநாள் வாழ்க்கை கூட எனக்குத் தேவையில்லை.’
பெருந்தோள் குறுமகள் சிறுமெல் லாகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே
(ஆகம் = மார்பு ; வேண்டலென் = வேண்டேன்)
‘சிறந்த ஆண்மைத் தன்மையையுடைய நீ இந்த அளவுக்குக் காதல் நோய் கொள்ளலாமா? தலைவிபால் கொண்ட காதல் அத்துணைச் சிறப்பானதா?’ என்பன போன்ற கடிந்துரைகளைப் பேசிய பாங்கனுக்குத் தலைவன் தந்த பதில் இப்பாடல். தலைவியின் இன்றியமையாமையைக் கூர்மையாக அவன் எடுத்துரைக்கும் முறை மிகச்சிறப்பானது. ஒருமுறை அவளைக் கூடுதலே தன் முழுப் பிறவிப்பயன் என உறுதிப்படுத்துகிறான். பாங்கனைக் “கேளிர்” என (நண்பன்) இருமுறை அழைப்பதிலும், “வாழியோ” என வாழ்த்துவதிலும் தலைவனது கண்டனக் குறிப்பு உள்ளது. தலைவனது துன்பத்தில் உறுதுணையாக இருக்க வேண்டிய உயிர் நண்பன், அதற்கு மாறாகக் கழறுவது (கடிந்துரைப்பது) குறித்த கண்டனம் அது.
உள்ளது சிதைப்போர்
எனத் தொடங்கும் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல் (குறுந்தொகை-283).
பாலை பாடிய பெருங்கடுங்கோ
இப்புலவரைப் பற்றி முன்னரே படித்தோம். (பாடம் எண் : 1 – நற்றிணை – 1)
திணை : பாலை
கூற்று : தலைமகன் பொருள்வயின் பிரிந்தபின், தலைவி ஆற்றாதிருக்கிறாளே எனக் கவலை கொண்டாள் தோழி. அப்போது தலைவி ‘நான் வருந்துவது அவர் பிரிவுக்காக அன்று ; அவர் போன காட்டின் தன்மையை நினைத்துத் தான்’ எனக் கூறுவது.
இது தலைவி கூற்று.
தலைவி தோழியிடம் கூறுகிறாள் : ‘தோழி ! ‘தாமே தம் முயற்சியால் பொருள் ஈட்டாமல், முன்னோர் ஈட்டி வைத்துள்ள செல்வத்தைச் சிதைப்பவர்கள் செல்வமுடையோர் எனச் சொல்லப்பட மாட்டார்கள். தாமே ஈட்டும் பொருள் இல்லாதவர்களின் வாழ்க்கை இரந்து வாழ்வதைவிட இழிவானதாகும்’ என்று அறிவுமிக்கவர்கள் கூறிய ஆண்மைத் தன்மையை நமக்குத் தெளிவுறுத்திப் பொருள் தேடப் பிரிந்தார் நம் தலைவர்.
உள்ளது சிதைப்போர் உளரெனப் படார்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி
(உள்ளது = முன்னோர் தேடிவைத்த செல்வம் ; சிதைப்போர் = அழிப்போர்.)
தலைவர் சென்ற வழி மிகக் கொடுமையானது. கூற்றுவனைப் போன்ற கொலைவேல் மறவர்கள் வழிச்செல்வோரைக் கொல்வதனால் அங்குக் கிடக்கும் மனித இறைச்சியைத் தமக்கு உணவாக எதிர்பார்த்திருக்கும் பருந்துகளையுடைய வழி அது ; நீண்ட பழைமையான அவ்வழி நீரற்றதும் ஆகும். இத்தகைய வழியில் அவர் சென்றாரே ! அவர் வாழ்க !’
தலைவனுடைய தெளிவுரையால் அவனுடைய பிரிவை ஏற்றுக் கொண்டாலும் ஆறலை கள்வரின் கொடுஞ்செயல் அவளைக் கலக்கப்படுத்துகிறது. வழிக்கொடுமை நினைத்து வருந்தும் பாலைத் திணைப் பாடல்கள் பல உள்ளன. இப்பாடல் மனித வாழ்வின் நெறியையும் காட்டுகின்றது. தன் முயற்சியால் வாழும் வாழ்வு போற்றற்குரியது என்ற உண்மை புலப்படுத்தப்பட்டுள்ளது.
காமந் தாங்குமதி
எனத் தொடங்கும் கல்பொரு சிறுநுரையார் பாடல் (குறுந்தொகை-290).
கல்பொரு சிறுநுரையார்
உவமையாற் பெயர்பெற்ற புலவருள் இவரும் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. ‘வெள்ளம் கல்லில் மோதும்போது தோன்றும் சிறுநுரைக் கூட்டம் சிறிது சிறிதாக அழிவது போல மெல்ல மெல்லச் சாகிறேன்’ என்று தலைவி கூற்றில் நுட்பமான உவமையை இப்புலவர் அமைத்தார். சுவைப்போர், மனம்மகிழ்ந்து அவ்வுவமையாலேயே இவரை அழைத்தனர்.
திணை : நெய்தல்
கூற்று : வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது.
அதாவது ‘தலைவன் பிரிவின்போது நீ ஆற்றியிருத்தலே அறிவுடைமை’ என்று தோழி வற்புறுத்தியபோது, ‘நீ காமத்தின் தன்மை அறியாமல் இவ்வாறு பேசுகிறாய்’ எனத் தலைவி கடிந்து கூறியது.
தலைவி தோழி கேட்குமாறு முன்னிலைப் புறமொழியாகச் சொல்கிறாள் : ‘காமநோயைப் பொறுத்துக்கொள்’ என்று என்னை வற்புறுத்துவோர் அந்நோயின் இயல்பை அறியாதவர்களோ? அல்லது அதைத் தாங்குமளவு அத்துணை வலிமை உடையவர்களோ?
காமந் தாங்குமதி என்போர் தாமஃது
அறியலர் கொல்லோ? அனை மதுகையர்கொல்?
(தாங்குமதி = பொறுத்துக்கொள் ; அனை = அந்த அளவு ; மதுகையர் = வலிமை உடையவர்கள்.)
நானோ என் காதலனைக் காண முடியாத பொழுது, செறிந்த வருத்தம் தேங்கிய உள்ளத்தோடு, பெரிய வெள்ளம் கல்லை மோதும்போது உண்டாகும் சிறுநுரை மெல்லத் தேய்ந்து இல்லாமல் போவதுபோல மெல்ல மெல்லத் தேய்ந்து இல்லாமல் போகிறேன்’.
பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லாகுதுமே
(இல்லாகுதும் = இல்லாதுபோவேன்)
சாவைக் காமநோயின் எல்லையாக அகப்பொருள் இலக்கணம் குறிப்பிடுகிறது. தாங்க முடியாமையின் இறுதி எல்லை அழிவு, சாவு என்பது நாம் காண்பதே. மெல்ல மெல்ல இல்லாமல் போவதற்குக் கல்மீது நீரலை மோதியதால் தோன்றிய சிறு நுரையை உவமையாக்கிய சிறப்பினால் பெயர் அறியப்படாத இப்புலவர் கல்பொரு சிறுநுரையார் என அழைக்கப்படுகிறார்.
மண்ணிய சென்ற
எனத் தொடங்கும் பரணர் பாடல் (குறுந்தொகை-292).
பரணர் :
பரணர் பற்றி முன்னரே படித்துள்ளோம். (பாடம் எண் : 1 – நற்றிணை – 1)
திணை : குறிஞ்சி
கூற்று : தலைவன் இரவுக்குறியில் வந்து சிறைப்புறமாக நிற்க, தோழி அதை அறியாதவள் போலத் தலைவியிடம் பேசும் முறையில், தலைவிக்குத் தாயின் காவல் கடுமையாகிவிட்டதைத் தெரிவிப்பது.
தோழி தலைவன் கேட்குமாறு தலைவியிடம் பேசுகிறாள் : ‘தோழியே, கேள் ! ஒருநாள் விருந்தினர்களோடு விருந்தினனாகத் தலைவன் நம் இல்லத்துக்கு வந்துவிட்டான். அவன் மீது ஐயம்கொண்ட அன்னை அன்று தொடங்கி உறங்காதிருக்கின்றாள். போர் நடைபெறும் இடத்தில் உள்ள ஊரைச் சார்ந்தோர் உறங்காதிருப்பது போல உறங்காதிருக்கின்றாள்.
ஒருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே
நீராடுவதற்காக ஆற்றிற்குச் சென்ற இளம்பெண் ஒருத்தி ஆற்றில் மிதந்துவந்த பசிய மாங்காயை அது யாருடையது என அறியாமல் தின்றாள். நன்னன் என்ற மன்னனின் சிறப்புக்குரிய மாமரத்திலிருந்து உதிர்ந்தது அக்காய். இத்தவற்றுக்காக, அப்பெண்ணின் குடும்பத்தார் எண்பத்தோரு யானைகளையும், அவள் எடையளவு பொன்னால் செய்யப்பட்ட பதுமையையும் தண்டமாகக் கொடுக்க முன்வந்தனர். ஆயினும் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் அப்பெண்ணைக் கொலை செய்து விட்டான் நன்னன். அந்தக் கொடியவன் சென்ற எல்லையற்ற நரகத்துக்கு நம் அன்னையும் செல்வாளாக !
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
(வரையா = எல்லையற்ற ; நிரையம் = நரகம் ; செலீஇயரோ = செல்க)
நன்னனின் கொடுஞ் செயலுக்கு ஒப்பானது தாயின் செயல், நன்னனுக்குக் கிடைத்த முடிவு தாய்க்கும் கிடைக்கட்டும் என்பது தலைவியின் வேக உணர்வாகக் கூடும்.
தலைவிக்கு நேர்ந்துள்ள காவல் கட்டுப்பாட்டைத் தோழி தலைவனுக்குத் தெரிவித்து விட்டாள். இனி இரவுக்குறியில் தலைவியைச் சந்திப்பது இயலாது என்பதும், ‘வரைந்து கொள்வதே வழி’ என்பதும் குறிப்பாக உணர்த்தப்பட்டுவிட்டன.
தலைவன் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் விருந்தினர்களோடு தானும் ஒரு விருந்தினன் போலத் தலைவியின் வீட்டிற்குள் புகுவது அகப்பொருள் இலக்கண மரபில் சொல்லப்படுவது (தொல்காப்பியம், களவியல், நூற்பா. 16). ஒரு பாடலில், தலைவியின் வீட்டு வாயிற் காவலர்கள் இரவில் கதவைச் சாத்து முன்பாக வெளியில் பார்த்து விருந்தினர் எவரும் உள்ளார்களா என விசாரிக்கும் வேளை வந்துவிட்டது ; ஆனால் தலைவன் வரவில்லையே என்று தலைவி ஏங்குகிறாள். (குறுந்தொகை-118)
எட்டு அடிகளையுடைய பாடலில் இறுதி மூன்றடிகள் மட்டுமே அகப்பொருள் நிகழ்வைக் குறிப்பவை. முதல் ஐந்து அடிகளில் நன்னன் பெண்கொலை புரிந்த உண்மையான, (புறப்பொருள் சார்ந்த) நிகழ்ச்சி விரிவாகச் சொல்லப்படுகிறது. அன்னைக்கு உவமை சொல்ல எவ்வளவோ பொருள்கள் பரணருக்குக் கிடைக்கக் கூடும். நன்னனை ஏன் உவமையாக்கினார்? புலவர்களுள் பரணர் வேறுபட்ட தனித்தன்மை யுடையவர். அரசியல், சமூக நிகழ்வுகள் அவரைப் பாதிக்கின்றன. அவற்றை ஏதாவது ஒருவழியில் தாம் பாடும் அகப்பாடல்களில் பதிவு செய்கிறார். புறப்பாடல்களில் இடம் பெறாத புறச்செய்திகள் கூடப் பரணரது அகப்பாடல்களில் இடம்பெறுகின்றன. பரணருடைய அகநானூற்றுப் பாடல்களில் இவ்வாறு பல புற நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன.
நன்னன் என்ற பெயரில் உள்ள மன்னர் இருவர். ஒருவன் மலைபடுகடாம் எனும் நூலில் பாராட்டப்படுபவன் ; வள்ளல். பரணர் கூறும் நன்னன் கொண்கானவேள் நன்னன் என்பவன். மனித வரலாற்றின் மிகக்கொடூரமான அரக்கச் செயல் ஒன்றை, அக்காலத்து மக்களும் புலவர்களும் வெறுத்த ஒன்றைப் பதிவு செய்ததன் மூலம் பரணர் தமிழகப் பண்பாட்டு வரலாற்றுக்கு உதவியவரும் ஆகிறார்.
கடலுடனாடியும்
எனத்தொடங்கும் அஞ்சியாந்தையார் பாடல் (குறுந்தொகை-294).
அஞ்சியாந்தையார்
அஞ்சில் ஆந்தையார் என்றும் இவர் பெயர் வழங்குகிறது. அஞ்சில் என்பது இவரது ஊர். ஆதன் தந்தை என்பதன் மருவிய வடிவமே ஆந்தை என்பது. இவர் குறிஞ்சி, நெய்தல் வளங்களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
திணை : நெய்தல்
கூற்று : பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பறிவுறீஇயது.
அதாவது தலைவி, தன் வீட்டில் தன்னை அடைத்து வைக்கும் நிலையைக் கூறியது. பகற்குறியில் வந்த தலைமகன் சிறைப்புறமாக நிற்கிறான். அவன் வரவை அறியாதவள் போலத் தோழி தலைவியிடம் பேசுகிறாள் : தாய் தலைவியை வீட்டிற்குள் தடுத்துவைக்க எண்ணியிருப்பதாகத் தெரிவிக்கிறாள். இவ்வாறு தலைவனிடம் பகற்குறியில் இனி வரவேண்டாம் என்று உணர்த்துகிறாள்.
தோழி தலைவியோடு பேசுவதுபோலப் பேசுகிறாள்: ‘தோழி ! நாம் கடலில் ஆடியும், கடற்கரைச் சோலையில் தங்கியும், மாலை அணிந்த தோழியர் கூட்டத்துடன் கைகோத்துத் தழுவிக் குரவை ஆடியும் விளையாடும்போது தலைவன் அயலார் போலத் திடீரென்று நம்மை வந்து தழுவிப் போயிருப்பானென்றால்கூட அது அலராகிவிடும். அவ்வாறிருக்கையில் தேமல் படர்ந்த, அகன்ற, அணிகலன்கள் கிடந்து அசைகின்ற அல்குலின் மீது அணிந்துள்ள பசுமையான தழையாடையை விட நமக்கு நெருக்கமாகி நம்மைவிட்டு அகலாதவனாக இருக்கிறான் தலைவன். தாய் நம்மை வெளியே போகாமல் தடுத்துக் காக்கும் நிலைமையை இவ்வாறு அவன்தான் உண்டாக்கினான்!
தழையினும் உழையிற் போகான்
தான் தந்தனன் யாய் காத்தோம்பல்லே
(உழையில் = பக்கத்திலிருந்து ; யாய் = தாய் ; ஓம்பல் = காத்தல்)
தழையாடை போல விட்டுப் பிரியாதிருந்த தலைமகன் இனி என்ன செய்வான் என்பது அவனது சிந்தனைக்கு விடுக்கப்பட்ட வினா. இற்செறிப்புக்குக் காரணமானவனே அவள் விடுபடுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்பது குறிப்பு.
தழையாடை : பூக்களும், இலைகளும், மரம் செடிகொடிகளும், அருவிகளும் மற்றுமுள்ள இயற்கைப் பொருள் அனைத்தும் வாழ்வின் நிகழ்வுகளிலும் நினைவுகளிலும் பிணைத்துக் காட்டப்படுவது சங்க அக இலக்கியத்தின் தனிச்சிறப்பு எனலாம். இளம் பெண்கள் பூக்களை அணிவது மட்டுமன்றிப் பசுந்தழைகளை ஆடையாகத் தைத்துத் தாம் விளையாடும் சோலைகளில் தம் ஆடையின் மேல் ஆடையாக அணிந்து கொள்வது வழக்கம். தலைவர்கள் தலைவிகளுக்குத் தழையாடையைப் பரிசாகக் கொடுப்பதும் வழக்கம்.
கண்தர வந்த காம ஒள்ளெரி
எனத் தொடங்கும் குப்பைக்கோழியார் பாடல் (குறுந்தொகை-305).
குப்பைக்கோழியார்
இயற்பெயர் அறியப்படாமல், தாம் படைத்த உவமைகளின் சிறப்பால் பெயர் பெற்ற புலவர்களுள் குப்பைக் கோழியாரும் ஒருவர். தலைவனை அடையத் துணைபுரிவார் யாருமின்றித் தவிக்கும் தலைவியின் நிலைக்கு, விலக்குவார் இல்லாத குப்பைக் கோழிகளின் போரை உவமை கூறிய பொருத்தம் வியக்கத்தக்கது.
திணை : மருதம்
கூற்று : காவல் மிகுதியானபோது, தோழி அறத்தொடு நிற்கவேண்டுமென விரும்பித் தலைவி தன் ஆற்றாமை தோன்றத் தன்னுள்ளே கூறியது.
அதாவது, பெற்றோரது காவல் காரணமாகத் தலைவனைச் சந்திக்க முடியாதிருக்கும் தலைவி, தன் களவு ஒழுக்கத்தைத் தாய் முதலியோர்க்குத் தோழி வெளிப்படுத்த வேண்டுமென விரும்புகிறாள். தன் ஆற்றாமையைச் சொல்வதன்மூலம் தோழியை அறத்தோடு நிற்கத் தூண்டுகிறாள்.
தலைவி தோழி கேட்கத் தன்னுள் கூறிக்கொள்கிறாள். ‘தலைவனைக் கண்ட கண்கள் காம நெருப்பைத் தந்தன. அந்நெருப்பு எலும்புவரை சுட்டுப் பொசுக்குகிறது. ஆயினும் அவர் இருக்குமிடம் சென்று அவரைத் தழுவிக் கொள்ளலாம் என்றால் அவரைக் காண்பது அரிதாயிருக்கிறது. அவரும் வந்து நம் துன்பத்தைக் களையவில்லை. இந்நிலையில் என்னிடம் அவரை அனுப்பி விடுவாரும் இல்லை; அல்லது இங்கிருந்து நம்மைப் பிரித்து அவரிடம் சேர்த்து நம் இன்னலைக் களைவாரும் இல்லை. குப்பையில், செலுத்துவாரும் விலக்குவாரும் இல்லாமல் தாமே போரிட்டுக் கொள்ளும் குப்பைக் கோழிகளின் தனிமையான போர்போல நம் காமநோய், தானே அழியும் காலத்தில் அழிவதன்றி இடை நுழைந்து அதனைக் களைவார் இல்லை’ எனக் கூறிக்கொள்கிறாள்.
குப்பைக் கோழித் தனிப்போர் போல
விளிவாங்கு விளியின் அல்லது
களைவோரிலை யாம் உற்றநோயே
(விளிவாங்கு = அழியும்போது ; களைவோர் = நீக்குவோர்.)
குப்பைக் கோழிப்போர் விலக்குவார் இல்லாதது, அது கோழியின் சாவு வரையிலும் கூடப் போகலாம். அதுபோலத் தன்நோயும் தனது அழிவோடுதான் முடியும் என வருந்தியுரைக்கிறாள் தலைவி. ‘நம் நோய் களைவோர் இல்லை’ எனத் தலைவி சொல்வது தோழியைத் தூண்டவே. தோழி அறத்தொடு நின்று களவுக் காதல் திருமணத்தில் முடிய உதவ வேண்டும் என்பது தலைவியின் நோக்கம். மிகப்பொருத்தமான, அருமையான உவமை கூறியதன் மூலம் ‘பெயர்’ பெற்றுக் கொண்ட புலவருள் குப்பைக் கோழியாரும் ஒருவராகிறார்.
கொடுங்கால் முதலை
எனத் தொடங்கும் கவைமகனார் பாடல் (குறுந்தொகை-324).
கவைமகனார்
இவர் இயற்பெயர் தெரியவில்லை. ‘கவை மகவு’ என்பது இரட்டைக் குழந்தைகளைக் குறிக்கும் தொடர். தன் இரட்டைக் குழந்தைகள் நஞ்சுண்ட நிலையில் யாரை முதலில் காப்பாற்றுவது எனத் தடுமாறும் தாயுள்ளத்தை உவமையாக்கிக் கூறியமையால் இவர் இப்பெயர் பெற்றார்.
திணை : நெய்தல்
கூற்று : தலைவி இற்செறிக்கப்பட்டதனைத் தோழி மூலம் அறிந்த தலைவன் ‘இரவுக் குறியில்வந்து சந்திப்பதாகவும், பின்பு வரைந்து கொள்வதாகவும் கூறியபோது தோழி அதனை மறுத்து வரைவு கடாயது.
தோழி தலைவனை நோக்கிக் கூறுகிறாள் : ‘பெருமானே ! கொல்வதில் வல்ல, வளைந்த கால்களையுடைய ஆண் முதலைகள் கடற்கரைக் கானலில் திரியும். அதனை அறிவோர் அவ்வழியே வருவதைத் தவிர்ப்பர். ஆயினும் நீ தலைவி மீதுள்ள பேரன்பு காரணமாக அவ்வழியாக வருகிறாய். மீன்கள் நிறைந்த கடற்கழிகளை நீந்திக் கடந்து வருகிறாய். தலைவியோ தன் அறியாமை காரணமாக உனக்கு இடர் நேருமோ என அஞ்சி வருந்துகிறாள். உங்கள் இருவர்க்கும் இடைப்பட்ட நான் இருவர்க்கும் இன்னல் விளைவிக்கும் இரவுக் குறிக்கு அஞ்சுகிறேன். தன் இரட்டைக் குழந்தைகள் நஞ்சுண்டால் தாய் அவ்விருவர்க்குமாக எவ்வாறு வருந்துவாளோ அவ்வாறே நானும் அஞ்சி வருந்துகிறேன்’.
கவைமக நஞ்சுண்டாஅங்கு
அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே
(கவைமக = இரட்டைக் குழந்தைகள் ; அஞ்சுவல் = அஞ்சுகின்றேன்)
தோழியின் நயமான பேச்சு இப்பாடலின் சிறப்பு. தோழியின் பார்வையில் தலைவன் – தலைவி இருவரும் இரவுக் குறி என்னும் நஞ்சை உண்ட குழந்தைகள். நஞ்சை – இரவுக் குறியை அகற்றிவிடவேண்டும் ; தலைவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பு.
சிறந்த உவமை காரணமாகப் பெயர் பெற்றவர்களின் வரிசையில் ‘கவைமக’னாரும் சேர்கிறார்.
நீர் நீடாடிற் கண்ணும் சிவக்கும்
எனத் தொடங்கும் கயத்தூர் கிழார் பாடல் (குறுந்தொகை-354).
கயத்தூர் கிழார்
இவர் சோழநாட்டிலுள்ள கயத்தூர் என்னும் ஊரைச் சார்ந்தவர்; வளோளர். உணர்ச்சிகளை அழுத்தமாகவும் மென்மையாகவும் வெளிப்படுத்தும் திறன் பெற்றவர் என்பதை இவர் பாடல் உணர்த்துகிறது.
திணை : மருதம்
கூற்று : பரத்தையிற் பிரிந்து திரும்பிய தலைவன் வாயில் வேண்டியபோது தோழி வாயில் மறுத்தது.
தோழி தலைவனை நோக்கி : ‘நீரில் நீண்டநேரம் விளையாடினால் கண்களும் சிவக்கும் ; பலநாட்கள் பருகுவோர்க்குத் தேனும் புளிக்கும். இது உலக இயற்கை. நீ தலைவியுடன் நெடுநாள் வாழ்ந்தமையால் சலிப்புற்று அவளைப் பிரிந்தாய். அப்படியாயின், எங்களை எங்கள் வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடு. அழகிய குளிர்ந்த பொய்கைகளையுடைய எம் தந்தையினது ஊரில் இரவில் கடும்பாம்புகள் திரியும் எம் தெருவில் வந்து எமது நடுங்கும் துயரை நீ களைந்தாய், களவுக் காலத்தில் ! இப்போது எங்களை எங்கள் வீட்டிலேயே கொண்டுபோய் விட்டுவிடு’ என்று கூறுகிறாள்.
நீர்நீடாடிற் கண்ணும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனை யாயின் எம் இல்லுய்த்துக் கொடுமோ
(ஆர்ந்தோர் = மிகுதியாக உண்டோர்; தணந்தனை = பிரிந்தாய்; உய்த்துக்கொடுமோ = சேர்ப்பித்து விடு)
இப்பாடலில், ‘தலைவியிடம் வராதே’ என்ற சாதாரண வாயில் மறுப்பு நிலையைத் தாண்டி, இனித் தலைவியும் இங்கிருக்கமாட்டாள் என்ற நிலைக்குப் போகிறது தோழியின் பேச்சு. பாம்புகளைப் பொருட்படுத்தாமல் களவுக் காலத்தில் வந்து காட்டிய அன்பையும், இப்போது கற்புக் காலத்தில் காட்டுகின்ற அலட்சியத்தையும் தலைவன் மனத்தில் பாயுமாறு கூறுகிறாள் தோழி. வேப்பங்காயையும் பறம்புமலைச் சுனை நீரையும் கொண்டு தலைவனுடைய அன்றைய – இன்றைய மனநிலைகளைச் சுட்டிக் காட்டிய தோழியை முன்னர்ப் பார்த்தோம் (குறுந்தொகை-196) இப்பாடலில் ‘மிகுதியாக உண்டோர் வாயில் தேன் புளிப்பதை’ உதாரணம் காட்டித் தலைவி மீது தலைவன் கொண்ட காதல் காலப்போக்கில் மாறிப்போனது என்கிறாள் தோழி. அவனுடைய பரத்தமைக்கு இச்சலிப்பே காரணம். அவ்வாறானால் அவன் கொண்டிருந்தது வெறும் உடற்காதல் தான் ; உண்மைக் காதல் அன்று என்பது தோழியின் பேச்சில் உணரக்கிடக்கிறது.
அரிற்பவர்ப் பிரம்பின்
எனத் தொடங்கும் ஒளவையார் பாடல் (குறுந்தொகை-364).
ஒளவையார்
ஒளவையார் பற்றி முன்னரே படித்துள்ளோம். (பாடம் எண் : 3 – நற்றிணை – 3)
திணை : மருதம்
கூற்று : இற்பரத்தை தன்னைப் புறம்பேசிய சேரிப்பரத்தையின் தோழியர் கேட்பச் சொல்லியது.
(இற்பரத்தை : தலைவன் ஒருவனுக்கே உரிமையுடைய பரத்தை. சேரிப்பரத்தை : அத்தகைய வரையறை இல்லாத பொதுமகள்.)
இற்பரத்தை சேரிப்பரத்தையின் தோழியர் கேட்கக் கூறுகிறாள்: ‘பிணங்கிக் கொடியாய்க் கிடக்கும் பிரம்பு போன்ற வரிகளை முதுகில் கொண்ட நீர்நாய், காலை உணவாக வாளை மீனைப் பெறுகின்ற வளமான ஊரின் தலைவன் அவன். ஒளிவீசும் பொன் வளையல்களை அணிந்த, தன்னைத் தானே தகுதியுள்ளவள் என்று சொல்லிக் கொள்கிற அவனது சேரிப்பரத்தை என்னைப் புறங்கூறுகிறாள் என்று சொல்கின்றனர். அவள் கூற்றுப் பொய்யாவதை எல்லாரும் உணரும் விழாநாள் வந்துவிட்டது. அழகாக வளையும் முன்கையையும் மூங்கில் போன்ற தோள்களையும் உடைய பெண்கள் கைகோத்துத் துணங்கைக் கூத்தாடும் விழாநாட்களும் வந்துவிட்டன. அம்மகளிரை மணம் கொள்வதற்காக வீரர்கள் கண்ணோடு கண் மாறுபட்டுச் செய்யும் விளையாட்டுப் போரும் வந்துவிட்டது.’
(கண்பொர = கண்ணொடுகண் மாறுபட ; ஒருவரோடு ஒருவர் கண்கள் கலக்க)
சேரிப்பரத்தை என்ன புறம் கூறினாள்? இற்பரத்தை தலைவனை வெளியே விடாமல் மயக்கித் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டாள் என்று புறம்பேசியிருக்கிறாள். அதற்குப் பதில் கூறும் முறையில்தான் இற்பரத்தை பேசுகிறாள். நீர்நாய் தானே விரும்பி வாளை மீனை உண்கிறது என்னும் வருணனையில், தலைவன் தன் விருப்பப்படியேதான் தன்னோடு இருக்கிறான் என்பதை உள்ளுறைப் பொருளாகக் குறிக்கிறாள் இற்பரத்தை. மேலும் பிற பரத்தையரைவிடத் தன்னையே தலைவன் விரும்புகிறான் என்ற உண்மையைத் துணங்கைக் கூத்தில் அனைவரும் காணலாம் என அறைகூவல் விடுக்கிறாள். கூத்தில் அவன் அவளுக்குச் சிறப்பிடம் தருவான் என்பது அவள் தரும் குறி்ப்பு.
(துணங்கைக் கூத்து : பெண்கள் கைகோத்து ஆடும் கூத்து. இதில் ஆடவரும் இடம் பெறுவர்.)
தலைவன் மீது முழு உரிமையுடைய தலைவி இப்பாடலில் இல்லை. அவளை விட்டுவிட்டுப் பரத்தையர் இருவர் தலைவன் மீது உரிமைக்காக மோதிக் கொள்வதைக் காட்டும் வேறுபாடான பாடல் இது.
எல்லை கழிய
எனத் தொடங்கும் கங்குல் வெள்ளத்தார் பாடல் (குறுந்தொகை-387).
கங்குல் வெள்ளத்தார்
இயற்பெயர் அறியப்படாத இப்புலவர், கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே எனத் தலைவியின் துயரை அழகாக வடித்த திறத்தால் அத்தொடர் கொண்டே இப்பெயரைப் பெற்றார்.
திணை : முல்லை
கூற்று : தலைவன் பிரிந்தபோது, ‘ஆற்றியிருத்தலே நல்லது’ என வற்புறுத்தும் தோழியை மறுத்து, மனம் வருந்தித் தலைவி கூறியது.
தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள் : ‘தோழி! பகற்பொழுது கடந்துவிட்டது, முல்லைகள் மலர்கின்றன, கதிரவனது சினம் தணிந்த மாலை – செயலற்றுத் தவிக்கச் செய்யும் மாலை வருகிறது. இரவை எல்லையாகவுடைய இந்த மாலையைக் கூட நீந்திக் கடந்துவிடலாம். அதன்பின் வரும் இரவாகிய வெள்ளம் கடலைக் காட்டிலும் பெரியதாகுமே! நீந்திக் கடக்க முடியாதே! அவ்வாறிருக்கையில் மாலையை நீந்திக் கடப்பதன் பயன்தான் என்ன?’
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே
(கங்குல் = இரவு)
பிரிந்து வாழ்வோர்க்கு மாலையும் இரவும் தாங்க முடியாத துயர்ப்பொழுதுகள். இரவைக் கடலினும் பெரிய கங்குல் வெள்ளம் என உருவகித்த அழகுக்காக இப்புலவர் ‘கங்குல் வெள்ளத்தார்’ எனப்பெயர் சூட்டப்பட்டார்.
ஊருண் கேணி
எனத்தொடங்கும் பரணர் பாடல் (குறுந்தொகை-399).
பரணர்
பரணர் பற்றி முன்னரே படித்துள்ளோம். (பாடம் எண் : 1 – நற்றிணை – 1)
திணை : மருதம்
கூற்று : வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
அதாவது தலைவன் தலைவியை மணந்து கொள்வதில் கருத்தில்லாமல் களவின்பத்தையே விரும்பி வந்து சென்று கொண்டிருக்க, அதனால் தனக்கு நேரும் துன்பத்தைத் தலைவி தோழிக்குக் கூறியது.
தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள் : ‘தோழி ! நீருண்ணும் கேணியில் படிந்துள்ள பாசியை ஒத்தது பசலை நோய். நீரை எடுக்கக் கைவைக்கும் போது விலகும் பாசி, கையை எடுத்தவுடன் மூடிக்கொள்வது போலக் காதலர் என்னை அணைக்கும் தோறும் அணைக்கும் தோறும் விலகி, அவர் பிரியும் தோறும் பிரியும் தோறும் மீண்டும் பரவிக் கொள்கிறது பசலை நோய்.
ஊருண் கேணி உண்டுறைத் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே
(உண்டுறை = உண்துறை = நீர் உண்ணும் துறை ; தொக்க = சேர்ந்து நிறைந்த ; தொடுவுழி = தொடும்போது ; விடுவுழி = விடும்போது)
இவ்வாறு கூறுவதன் மூலம் தலைவனை வரைவுக்குத் தூண்டுமாறு தோழி்க்குக் குறிப்புணர்த்துகிறாள் தலைவி.
சிறுபொழுதுப் பிரிவுகூடத் தலைவிக்குப் பசலை நோயைத் தந்துவிடுகிறது. இதனை உணர்த்தப் பரணர் கையாண்ட உவமை அன்றாடம் நாம் காணும் குளத்துப் பாசி. பாசி விலகலையும் மூடலையும் கொண்டு பசலை விலகலையும் சேர்தலையும் மனத்தில் அழுந்தப் பதிய வைக்கிறார் புலவர். கலித்தொகையில் பரணரின் சொல்லையும் கருத்தையும் ஒத்த வரிகள் வருகின்றன.
விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே
(கலித்தொகை – 130)
ஒரு பாடல் முழுவதுமே காலப் பின்னணியைச் சொல்லித் தலைவியின் பிரிவுத் துயரை உணரச் செய்வதைக் கங்குல் வெள்ளத்தார் பாடலில் (குறுந்தொகை-387) காணலாம். ‘ஆற்றியிரு’ என அறிவுரை சொல்லும் தோழிக்குத் தலைவி மாலையையும் இரவையும் சுட்டிக் காட்டுகிறாள். கதிர் சினம் தணிந்த கையறு மாலை – ‘கதிரவனின் வெப்பம் தணிந்த’ என்று சொல்லாமல் ‘சினம் தணிந்த’ என்கிறாள். கதிரவனுக்கு யார்மீது சினம்? தன் மீது தான் என நினைக்கிறாள் தலைவி. சரி, மாலை எப்படி இருக்கிறது? கையறு மாலை – வேறு எதையும் நினைக்க முடியாமல், எந்தச் செயலையும் செய்ய முடியாமல், அவளைக் கையற்றுப் போகச் செய்யும் மாலை. மாலைக்காவது ஒரு வரம்பு, எல்லை உண்டு. இரவுதான் அந்த எல்லை. ‘இரவு என்ற எல்லையைப் பார்த்துக் கொண்டே மிகுந்த துன்பத்துடன் மாலையை ‘நீந்திக்’ கடந்து விடலாம். ஆனால் இரவு, ‘கரைகாணாக் கடல்’ ஆகிவிடுகிறதே, அதை எப்படி நீந்திக் கடப்பேன்?’ என்று தவிக்கிறாள் தலைவி. மன உளைச்சல் மிக்கவர்கள் இரவு உறக்கம் அற்றுப் போனால் எத்தகைய துன்பத்துக்கு ஆளாவார்கள் என்பது நாம் அறிந்ததே. உறங்கிக் கடக்க வேண்டிய இரவை உறங்காது கடக்க நேரிட்டவர்கள் தலைவி கூறும் “கங்குல் வெள்ளம்” என்ற அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடியும். நண்பகலும், மாலையும், இரவும் தலைவியின் உணர்வுகளுக்குள் புகுந்து அலைக்கழிப்பதைப் புலவர் மிக அருமையாகப் படம் பிடித்திருக்கிறார்.
கல்பொரு சிறுநுரையார் பாடலில் (குறுந்தொகை-290) காமம் தாங்கு – ‘பொறுத்துக் கொள்’ என்னும் தோழியைப் பார்த்துத் தலைவி ‘தாங்கக்கூடிய வேதனையா அது? உனக்குத் தெரியாதா’ என்னும் பொருள்படச் சொல்லிவிட்டுப் பிரிவுத் துயரத்தின் உச்சநிலை ‘இல்லாமல் போவது’ என ‘முடிவு’ சொல்கிறாள். அவள், சாவை நெருங்குவதாக உணர்வதைப் புலவர் அருமையான ஓர் உவமையின் மூலமாக எடுத்துக் காட்டுகிறார். அவள் நினைக்கின்ற, அல்லது எதிர்பார்க்கின்ற சாவு கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருவது. உவமை அதற்குப் பொருத்தமாக அமைகிறது. கல்லில் வெள்ளம் மோதும் போது உருவாகும் சிறு நுரை ஒவ்வொன்றாகச் சிறிது சிறிதாக அழிந்து முற்றிலும் இல்லாமல் போவது போல, ‘மெல்ல மெல்ல இல்லாமல் போவேன்’ என்கிறாள் தலைவி. தலைவியின் உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே” (குறுந்தொகை-18) என்று சொன்ன தோழியின் உணர்வுதான் இங்கும் சொல்லப்படுகிறது. ஆனால், இங்கு அணு அணுவாகச் சாதல் என்பது ஒரு காட்சி போலச் சித்திரிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.
குப்பைக் கோழியார் பாடலிலும் (குறுந்தொகை-305) பிரிவுத்துயர் தாங்காத தலைவி ‘யாராலும் கவனிக்கப்படாமல் நான் அழிந்து போகிறேன் ; என் முடிவுடன் தான் என் துயர்போகும்’ – விளிவாங்கு விளியின் அல்லது களைவோர் இல்லையான் உற்ற நோயே என்று புலம்புவதைப் பார்க்கிறோம்.
இந்த மூன்று பாடல்களிலும் பிரிவின் துயரம் சாவை எல்லையாகக் கொண்டிருக்கிறது எனத் தலைவன் – தலைவியர் உணர்வதைப் பார்க்கிறோம். காதல் வயப்பட்டவர்களுடைய இத்தகைய உணர்ச்சி நிரந்தரமானதன்று; இணைகள் சேரும் போது இவ்வுணர்ச்சி மறையும் என்பதை வாழ்வைக் கவனிக்கின்ற எல்லாருமே புரிந்துகொள்ள முடியும்.
கங்குல் வெள்ளத்தார் பாடலில் (குறுந்தொகை-387) ‘கதிரவன் சினம் தணிந்தது’, தலைவி ‘மாலையை நீந்திக்கடப்பது’ ‘கடலைவிடப் பெரிய, நீந்தமுடியாத வெள்ளமாக இரவு விரிவது ஆகியவைகள் படிமக் காட்சிகளாக மனத்தைக் கவர்கின்றன.
கேளிர் வாழியோ கேளிர் நாளுமென்
நெஞ்சு பிணிக்கொண்ட அஞ்சில் ஓதிப்
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே
கேளிர் – கேளிர் ; நெஞ்சு – அஞ்சில் – எனவரும் எதுகை அழகுகளும், பெருந்தோள் – குறுமகள் – சிறுமெல்லாகம் எனவும், ஒருநாள் – அரைநாள் எனவும் வரும் முரண்தொடை அழகுகளும் பாடலின் வடிவச் சிறப்புக்குக் காரணமாகின்றன.
1. களவுக் காலத்தில் தலைவன் தலைவியைச் சந்திக்கும் அன்பும் ஆர்வமும் மிக்கவனாக இரவு நேரத்தில் பாம்புகள் திரியும் தெருவில் நடந்து வந்தவன்.
2. இப்போது தலைவியைப் புறக்கணித்துப் பரத்தையிடம் செல்கிறான்.
3. ஆகவே தோழி சொல்கிறாள் : ‘எங்களை எங்கள் தந்தை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடு’ என்று, கருத்தமைப்பு இந்த முறையில் வருவதைப் புலவர் மாற்றுகிறார். இந்த வரிசை மாற்றம் காரணமாகக் கவிதைக்கு ஒரு வேகம் கிடைக்கிறது. தோழி – தலைவி உணர்ச்சிகள் அழுத்தமாக வெளிப்படுகின்றன
என்பதை நீங்கள் கவனிக்க முடியும். மாற்றப்பட்ட வரிசைப்படி:
1. தொடர்ந்து நீராடினால் கண் சிவக்கும்; நிறையத் தேன் உண்டால் அது புளிக்கும்.
2. எங்கள் வீட்டில் கொண்டுபோய் எங்களை விட்டுவிடு.
3. நீ பாம்புகள் பற்றிப் பொருட்படுத்தாமல் தலைவியை இரவில் சந்திக்க வந்தவன்.
இவ்வாறு கருத்துகளை, எண்ணங்களை அவற்றின் தர்க்க வரிசை முறையை மாற்றி்த் தருவதன் மூலம் கவிதைப் பொருளைச் சிறப்பாகத் தரும் வடிவமைப்பு முறையை இப்பாடலில் உள்ளது போலவே பல பாடல்களிலும் காணமுடியும்.

