74

ஐங்குறுநூறும் அகநானூறும் (அக இலக்கியம் - 2)

பாடம் - 1

ஐங்குறுநூறு – 1

1.0 பாட முன்னுரை தமிழுலகிற்குக் கிடைத்த பழமையான முழுமையான இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும். சங்க இலக்கியம் என்ற தொகுப்பில் பாட்டும் தொகையும் எனப் பதினெட்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன. இவை மேல்கணக்கு என்றும் குறிக்கப்படும். நெடும்பாடல்கள் பத்து பத்துப்பாட்டு எனவும், குறும்பாடல்கள் எட்டு நூல்களாகத் தொகுக்கப்பட்டு அவை எட்டுத்தொகை எனவும் வழங்கப்பட்டன. பத்துப்பாட்டு நூல்களை,

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்

பாலை கடாஅத்தொடும் பத்து.

என்ற பழம்பாடலும், எட்டுத் தொகை நூல்களை,

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று

இத்திறத்த எட்டுத் தொகை.

என்ற பழம்பாடலும் பட்டியலிட்டுள்ளன. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறுநூற்றின் ஆசிரியர்கள், நூல் அமைப்பு, படைப்பு ஆகியன பற்றி இப்பாடம் எடுத்துரைக்கிறது.

1.1 ஐங்குறுநூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஐங்குறுநூறு. இது அகப்பொருள் உணர்த்தும் நூல். ஐந்து நூறு பாடல்கள் கொண்டிருப்பதாலும், அவை குறிய பாடல்களாக இருப்பதாலும் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.

அகநானூறு, புறநானூறு, நற்றிணை நானூறு என்பவை போல அக ஐந்நூறு எனப் பெயர் கொடுக்காது ஐங்குறுநூறு (ஐ+குறு+நூறு) எனப் பெயர் கொடுத்தமைக்குக் காரணம் உண்டு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற ஐந்து திணைக்கும், திணைக்கு நூறு பாடல்கள் என்ற அடிப்படையில் அமைந்திருப்பதால் அதை உணர்த்தும் வகையில் ஐந்து குறுநூறு > ஐங்குறுநூறு எனப்பட்டது. இச்சிறப்பு சங்க அக இலக்கியத்தில் வேறு எந்த நூலுக்கும் இல்லை. அரசனுக்குப் பத்துப்பாடல் என்ற அடிப்படையில் நூறு பாடல்களுக்குப் பதிற்றுப்பத்து என்ற பெயர் புற இலக்கியத்தில் உண்டு.

• நூலமைப்பு

ஐங்குறுநூற்றின் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையையும் ஆறு அடிப் பேரெல்லையையும் கொண்டவை. ஒவ்வொரு திணைக்கும் உரிய நூறு பாடல்களும் பத்துப் பத்துப் பாடல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பத்துப் பாடல்களின் பகுப்பிற்கும் ஒரு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பத்துப் பாடல்களில் பயின்றுள்ள அத்திணைக்கு உரிய உரிப்பொருளோ, கருப்பொருளோ, கூற்று உரைப்போரோ, கேட்போரோ பகுப்பிற்குப் பெயராக அமைந்திருக்கின்றது.

1.1.1 நூலாசிரியர்கள் எந்த ஒரு நூலைக் கற்பதானாலும் அதற்கு முன் முன்னுரையைப் படிக்க வேண்டும். முன்னுரை பழந்தமிழ் இலக்கியத்தில், இலக்கணத்தில் பாயிரம் என்ற பெயரால் குறிக்கப்பட்டுள்ளது. பாயிரம் படிக்காது நூலுக்குள் சென்றால் குன்றில் மோதிய குருவி போலவும், வேடர் குடியிருப்புக்குள் நுழைந்த மான் போலவும் தொல்லைப்பட நேரும் என்பது அறிஞர் கொள்கை. பாயிரத்தின் முன்னுரையில் முதல் செய்தி நூலாசிரியரைப் பற்றியதாகும். எனவே ஐங்குறுநூற்றின் ஆசிரியர்களைப் பற்றி அறிவது இன்றியமையாததாகும்.

திணை பற்றிப் பாடுவதில் வல்லமை பெற்ற ஐம்பெரும்புலவர்கள் இந்நூலின் பாக்களை இயற்றியுள்ளனர். ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் என்பாரே அப்பெரும் புலவர்கள். இவர்கள் பெயரையும், இவர்கள் பாடிய திணை எது என்பதையும்

மருதம் ஓரம்போகி நெய்தல் அம்மூவன்

கருதும் குறிஞ்சி கபிலன் – கருதிய

பாலைஓ தலாந்தை பனிமுல்லை பேயனே

நூலைஓது ஐங்குறு நூறு.

என்ற பழம்பாடல் விளக்கியுள்ளது.

• ஓரம்போகியார்

ஐங்குறுநூற்றின் முதல் நூறு பாடல்கள் மருதத்திணைப் பாடல்களாகும். அவற்றைப் பாடியவர் ஓரம்போகியார் ஆவார். இதுவே இவரது இயற்பெயராகும். இவரது பெயர் ஓரேர் போகியார், ஒன்னார் உழவர், காம்போதியார் எனச் சில படிகளில் காணப்படுகிறது.

இப்புலவரை ஆதரித்தவன் ஆதன் அவினி என்னும் சேர மன்னன். இவர் தம்மை ஆதரித்த ஆதன் அவினியோடு கடுமான் கிள்ளி, ஆமூரைத் தலைநகராகக் கொண்ட ஒரு சோழன் முதலிய வேறு சிலரையும் தம் பாடல்களில் பாடியுள்ளார்.

ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள் மொத்தம் 10. இவற்றுள் அகத்திணை 9, புறத்திணை ஒன்று. அகத்திணையின் ஒன்பது பாடல்களில் ஏழு மருதத்திணைப் பாடல்களாகும். இதனால் இவர் மருதத்திணையைப் பாடுவதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர் என்பது விளங்குகிறது.

• அம்மூவனார்

ஐங்குறுநூற்றின் இரண்டாவது நூறு, நெய்தல்திணைப் பாடல்களாகும். இவற்றைப் பாடியவர் அம்மூவனார் ஆவார். இவரது இயற்பெயர் மூவன் என்பதாகும். இத்துடன் அ அடைமொழி சேர்க்கப்பட்டு அம்மூவன் > அம்மூவனார் என ஆகியிருக்கலாம்.

இப்புலவர் பெருமகனைச் சேரரில் ஒருவன், பாண்டியரில் ஒருவன், காரி ஆகியோர் ஆதரித்துள்ளனர்.

ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள் 27 ஆகும். இவை யாவும் அகப்பாடல்களே. இவற்றுள் 23 பாடல்கள் நெய்தல் திணைப் பாடல்களாகும். இதனால் நெய்தல் திணையைப் பாடுவதில் இவர் வல்லவர் என்பது விளங்குகிறது.

• கபிலர்

ஐங்குறுநூற்றின் மூன்றாவது நூறு குறிஞ்சித்திணைப் பாடல்களாகும். இவற்றை எழுதியவர் கபிலர். இவர் அந்தணர் என்பது இவரது கூற்றாலேயே அறியக் கிடக்கிறது. இவரது ஊர் மதுரை நகருக்குக் கிழக்கில் உள்ள வாதவூர் என்று நம்பப்படுகிறது. பாரி என்ற வள்ளலுக்கு நண்பராய் விளங்கியவர். பாரி இறந்த பின் அவனது மகளிருக்குத் திருமணம் செய்து வைத்தவர். இவரால் பாடப்பட்டோர் பலராவார்.

ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய அகப்பாடல்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 103 ஆகும். இவற்றுள் 97 பாடல்கள் குறிஞ்சித்திணைப் பாடல்களாகும். இவற்றுள் நெடும்பாட்டான குறிஞ்சிப்பாட்டும் அடங்கும். இதனாலேயே இவர் குறிஞ்சிக்கோர் கபிலர் என்று சிறப்பிக்கப்பட்டார்.

• ஓதலாந்தையார்

ஐங்குறுநூற்றின் நான்காவது நூறு, பாலைத்திணைப் பாடல்களாகும். இவற்றைப் பாடியவர் ஓதலாந்தையார். இவரது இயற்பெயர் அதன் தந்தை என்பதனின் மரூஉ ஆந்தை என்பர். இவரை ஆதரித்த அரசர்கள் பற்றிய செய்திக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.

ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள் மொத்தம் மூன்று. இவற்றுள் இரண்டு பாலைத் திணைப் பாடல்களாகும். இதனால் இவர் பாலை பாடுவதில் மட்டுமே பேரார்வம் கொண்டிருந்தார் என்பது விளங்குகிறது.

• பேயனார்

ஐங்குறுநூற்றின் ஐந்தாம் நூறு முல்லைத்திணைப் பாடல்களாகும். இவற்றைப் பாடியவர் பேயனார் ஆவார். இவரது இயற்பெயர் பேயன் என்பதாகும். இவரை ஆதரித்த அரசர்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள் ஐந்து. இவற்றுள் மூன்று பாடல்கள் முல்லைத்திணைப் பாடல்களாகும். இதனால் இவர் முல்லையைப் பாடுவதில் வல்லவர் என்பது விளங்குகிறது.

ஐங்குறுநூற்றின் ஐந்து திணைகளையும் பாடியவர்கள், அவ்வத் திணையில் ஈடுபாடு கொண்டவர்கள், துறை போகியவர்கள் என்பது அவர்கள் பாடிய அகத்திணைப் பாடல்களின் எண்ணிக்கை வழி தெளிவாகிறது.

நூலாசிரியர் பற்றிச் சிறிது அறிந்து கொண்டோம். இனி ஐங்குறுநூற்றில் அமைந்த ஐந்து திணைப் பாடல்களையும் காணலாம்.

ஒவ்வொரு திணையும் நூறு பாடல்களைக் கொண்டது. நூறு பாடல்களும் பத்துப் பத்தாக ஒவ்வொரு தலைப்பின் கீழ் அமைந்துள்ளன. ஒவ்வொரு தலைப்பும் பத்து என்றே இருக்கும்.

எடுத்துக்காட்டு:

வேட்கைப் பத்து, வேழப் பத்து (மருதம்), தாய்க்கு உரைத்த பத்து (நெய்தல்), அன்னாய் வாழிப் பத்து (குறிஞ்சி). இவை போலவே மற்றவைகளும் அமைந்துள்ளன. திணைக்கு ஒன்று அல்லது இரண்டு பத்துகளிலிருந்து சில பாடல்களை விளக்கமாகக் காணலாம்.

1.2 மருதம்

தலைவனின் பரத்தையர் பிரிவை மையமாகக் கொண்டு தலைவி கொள்ளும் ஊடலையும் ஊடல் சார்ந்த நிகழ்வுகளையும் ஒழுக்கமாகக் கொண்டது மருதத்திணை. இத்திணைக்கு வயலும் வயல் சார்ந்த இடங்களும் முதற்பொருள் ஆகும். இப்பகுதி வாழ் மக்களும் விலங்குகளும் பறவைகளும் பிறவும் கருப்பொருளாய் அமைந்து இத்திணைப் பாடல்களை நடத்திச் செல்லும். இங்கு மருதத் திணைப் பாடல்களைப் பகுப்புவழிக் காணலாம்.

1.2.1 பாடல்கள் வேட்கைப் பத்து, வேழப் பத்து, களவன் பத்து, தோழிக்கு உரைத்த பத்து, புலவிப் பத்து, தோழி கூற்றுப் பத்து, கிழத்தி கூற்றுப் பத்து, புனலாட்டுப் பத்து, புலவி விராய பத்து, எருமைப் பத்து ஆகிய பத்துப் பகுதிகள் இந்த மருதம் பகுதியில் உள்ளன.

• வேட்கைப் பத்து

வேட்கை = விருப்பம், பத்து = பத்துப் பாடல்கள். களவிலோ, கற்பிலோ தலைவியைப் பிரிந்திருந்த தலைமகன் தான் பிரிந்திருந்த காலத்துத் தலைமகள் எவ்வாறு ஆற்றியிருந்தாள் என்பதை அறிய விரும்புவான். அப்போது தோழி, தலைவி விரும்பிய திறத்தையும் (வகையையும்) தான் விரும்பிய திறத்தையும் எடுத்துக் கூறுவாள். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வேட்கைப் பத்து என அமைக்கப்பட்டுள்ளது.

வாழி ஆதன், வாழி அவினி

நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!

எனவேட் டோளே யாயே; யாமே

நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்

யாணர் ஊரன் வாழ்க

பாணனும் வாழ்க! எனவேட் டேமே!

– (21)

(வேட்டோள் = விரும்பினாள்; யாய் = தாய்; யாணர் = புது நீர்வரவு ; ஊரன் = ஊரை உடையவன், தலைவன்)

என்ற பாடல் தலைவி, அரசன் சிறந்து வாழ வேண்டும். நாட்டில் வளம் சிறக்க வேண்டும் என்று விரும்பி வேண்டி வாழ்ந்தாள். தோழி தலைவனின் பரத்தமையை நினைந்து அவன் மீள வரவேண்டும் என்று விரும்பி வேண்டி வாழ்ந்தாள் என்ற செய்தியைத் தருகிறது. இது பரத்தையர் பிரிவு குறித்து அமைந்திருப்பதால் கற்பு வாழ்க்கை, கற்பு என்ற கைகோள் குறித்த பாடலாகிறது.

• வேழப் பத்து

மருத நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்று வேழம் எனக் குறிக்கப்படும் வேழக் கரும்பு. இவ்வேழக் கரும்பு இடம் பெறும் பத்துப் பாடல்களின் தொகுதி வேழப் பத்து என்று குறிக்கப்படுகிறது.

மனைநடு வயலை வேழம் சுற்றும்

துறைகேழ் ஊரன் கொடுமை நாணி

நல்லன் என்னும் யாமே;

அல்லன் என்னும்என் தடமென் தோளே!

- (11)

(வயலை = பசலைக்கொடி; வேழம் = வேழக் கரும்பு; சுற்றும் = படரும்)

என்ற பாடலில் வீட்டில் நட்ட பசலைக்கொடி வெளியே வேழக்கரும்பில் சுற்றிப் படர்வது சுட்டப்பட்டுள்ளது. தலைவன் பரத்தையை நாடிச் சென்றதை இது குறிக்கிறது. இதையே கொடுமை என்று தலைவி குறிப்பிடுகிறாள். என்றாலும் தலைவன் நல்லவன் என்று நாங்கள் கூறுகிறோம்; ஆனால் பிரிவால் மெலிந்துள்ள என் தோள்கள் அவன் நல்லவனல்லன் என்று சுட்டுகின்றன என்று கூறுகிறாள்.

• களவன் பத்து

களவன் என்பது மருத நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்றான நண்டைக் குறிக்கும். நண்டு இடம் பெற்ற பத்துப் பாடல்களின் தொகுதி களவன் பத்து என்று குறிக்கப்படுகிறது. இதனைக் கள்வன் பத்து என்றும் குறிப்பதுண்டு.

முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்

புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்

தண்துறை ஊரன் தெளிப்பவும்

உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய்!

- (21)

(முள்ளி = முள்ளிச்செடி; கள்வன் = களவன் = நண்டு; தெளிப்ப = தெளிவுபடுத்த; பசப்பது = மாறுபடுவது; எவன்கொல் = ஏன்)

என்ற பாடலில் ஆம்பல் தண்டினை அறுக்கும் நண்டு உள்ளுறைக்காக இடம் பெற்றுள்ளது. தலைவன் தனக்குப் பரத்தைத் தொடர்பு இல்லை என்று தெளிவுபடுத்தியும் உன் கண் ஏன் சிவக்கிறது என்று தோழி தலைவியைக் கேட்கிறாள். இவ்வாறே, மருதம் பகுதியில் பிற பத்துக்களும் மருதத் திணைக்கு உரிய செய்திகளை வெளிப்படுத்துகின்றன.

• தோழிக்கு உரைத்த பத்து

அக இலக்கியத்தில் இன்றியமையாத இடம் வகிப்பவள் தோழி. தோழியே தலைவிக்கு உற்ற துணையாவாள். தலைவி, தோழியிடம் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கூற்றுகள் (பேச்சு) நிகழ்த்திய பாடல்களின் தொகுதி தோழிக்கு உரைத்த பத்து என்று குறிக்கப்படுகிறது.

• புலவிப் பத்து

மருதத்திணைக்குரிய உரிப்பொருள் ஊடல். ஊடலின் வேறு பெயர் புலவி. புலவியை மையமாகக் கொண்டு அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி புலவிப் பத்து என்று வழங்கப்படுகிறது.

• தோழி கூற்றுப் பத்து

அகத்திணையில் இரு கைகோளிலும் தோழி கூற்று இன்றியமையாதது ஆகும். தோழி கூற்று அமைந்த பாடல்களே மிகுதி. ஐங்குறுநூற்றில் தோழி கூற்றில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தோழி கூற்றுப் பத்து என்று குறிக்கப்படுகிறது.

• கிழத்தி கூற்றுப் பத்து

தலைவனின் புறத்தொழுக்கம் (பரத்தையர் ஒழுக்கம்) கண்ட தலைவி, அவனோடு புலந்து உரைக்கும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி கிழத்தி கூற்றுப் பத்து என்று குறிக்கப்படுகிறது.

• புனலாட்டுப் பத்து

ஆற்று நீரில் விளையாடுதல் என்பது மருத நிலத்துக் கருப்பொருளாகும் விளையாட்டில் ஒன்று. ஆற்று நீரில் விளையாடுதலே புனலாட்டு என்பதாகும். புனலாட்டு இடம் பெறும் பத்துப் பாடல்களின் தொகுதி புலனாட்டுப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

• புலவி விராய பத்து

புலவி குறித்துத் தலைவி, தோழி, பரத்தை ஆகியோர் கூறுவதும் வாயில் மறுத்துக் கூறுவதும் விரவி (கலந்து) வரும் பத்துப் பாடல்களின் தொகுதி புலவி விராய பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

குருகுடைத் துண்ட வெள்ள கட்டியாமை

அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்

மலரணி வாயில் பொய்கை ஊரநீ

என்னை நயந்தனென் என்றி ! நின்

மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே.

– (81)

(குருகு = நாரை; அகடு = வயிறு; யாமை = ஆமை; அல்குமிசை = உண்ணும் உணவு; என்றி = என்றாய்)

என்ற பாடலில் பரத்தை, தலைவியையும் தலைவனையும் ஒருசேரப் பழிக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.

• எருமைப் பத்து

மருத நிலத்தின் கருப்பொருள்களில் ஒன்று எருமை. எருமை இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி எருமைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

நெறிமருப்பு எருமை நீல இரும்போத்து

வெறிமலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும்

கழனி ஊரன் மகளிவள்

பழன வெதிரின் கொடிப் பிணையலளே!

– (91)

(இரும்போத்து = பெரிய ஆண் விலங்கு; மயக்கும் = சிதைக்கும்)

என்ற பாடலில் எருமை ஆம்பல் மலரின் நன்மையை நுகராது அதனைச் சிதைப்பது போல, தலைவனின் தன்மையை நினையாமல் ஊர் அல்லல் படுத்தும் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

மருதத்திணைப் பகுப்பு, வேட்கை, புலவி, புனலாட்டு, புலவி விராயது என நான்கு உரிப்பொருளை மையமாகக் கொண்டும், வேழம், கள்வன், எருமை என மூன்று கருப்பொருள்களை மையமாகக் கொண்டும், கிழவி கூற்று, தோழி கூற்று, தோழிக்கு உரைத்தது என மூன்று இயலை மையமாகக் கொண்டும் பெயர் பெற்றுள்ளது.

1.3 நெய்தல்

தலைவன் ஏதோ ஒரு காரணம் குறித்துப் பிரிந்து சென்றிருப்பான். அவ்வேளையில் பிரிவுத் துயர் ஆற்றாது (தாங்காது) தலைவனோ தலைவியோ புலம்புவது நெய்தல் திணை ஒழுக்கம் (உரிப்பொருள்) ஆகும். இத்திணைக்குக் கடலும் கடல் சார்ந்த இடமும் முதற்பொருள். இப்பகுதியில் வாழும் மக்களும் விலங்குகளும் பறவைகளும் பிறவும் கருப்பொருளாய் அமைந்து இத்திணைப் பாடல்களை நடத்திச் செல்லும். இங்கு நெய்தல் திணைப் பாடல்களை அவற்றின் பகுப்பு வழிக் காணலாம்.

1.3.1 பாடல்கள் தாய்க்கு உரைத்த பத்து, தோழிக்கு உரைத்த பத்து, கிழவற்கு உரைத்த பத்து, பாணற்கு உரைத்த பத்து, ஞாழற் பத்து, வெள்ளாங்குருகுப் பத்து, சிறுவெண்காக்கைப் பத்து, தொண்டிப் பத்து, நெய்தற் பத்து, வளைப்பத்து ஆகிய பத்தும் நெய்தல் பகுதியின் பிரிவுகளாகும்.

• தாய்க்கு உரைத்த பத்து

தலைவன் களவிலோ கற்பிலோ பிரிந்திருக்கும் போது வருந்தும் தலைவியின் நிலை குறித்துத் தாய் (செவிலித்தாய்) வருந்துவாள். வருந்தும் தாய்க்குத் தோழி சில சொல்லுவாள். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தாய்க்கு உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

அன்னை வாழி வேண்டன்னை உதுக்காண்

ஏர்கொடிப் பாசடும்பு பரிய ஊர்புஇழிபு

நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள்

பூப்போல் உண்கண் மரீஇய

நோய்க்கு மருந்தாகிய கொண்கன் தேரே- (101)

(உதுக்காண் = அதோ பார்; பாசடும்பு = பசிய அடப்பங்கொடி; பரிய = வருந்துமாறு; ஊர்பு இழிவு = ஏறியிறங்கி; உண்கண் = மையுண்ட கண்; கொண்கன் = கணவன்)

என்ற பாடலில் தலைவியின் பிரிவு நோய்க்கு மருந்தாகிய தலைவனின் தேர் வந்து விட்டது என்று தோழி செவிலியிடம் கூறும் ஆறுதல் செய்தி இடம் பெற்றுள்ளது. அறத்தொடு நிற்கும் பாடல்களும் இப்பகுப்பில் இடம் பெற்றுள்ளன. அன்னை வாழி, அம்ம வாழி போன்றவை விளிகள்.

• தோழிக்கு உரைத்த பத்து

தலைவி தனது நிலை குறித்தோ, களவு வாழ்க்கை இல்லத்தாருக்குத் தெரிந்தமை குறித்தோ தோழியிடம் எடுத்துக் கூறுவாள். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தோழிக்கு உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப் படுகிறது. இப்பகுப்பின் ஒரு பாடல் மட்டும் கற்புக் காலப் பாடலாக உள்ளது.

அம்ம வாழி தோழி பாணன்

சூழ்கழி மருங்கின் நாண் இரை கொளீஇச்

சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை

பிரிந்தும் வாழ்துமோ நாமே

அருந்தவம் முயறல் ஆற்றா தேமே.

- (111)

(கழி = உப்பங்கழி; நாண் = தூண்டில்; முயறல் = முயலுதல்; சினைக்கயல் = சினையாக உள்ள கயல்மீன்கள்; ஆற்றாதேம் = இயலாதவர்களாகிய நாங்கள்)

என்ற பாடலில் தலைவன் பிரியாமல் இருக்கத் தவம் இயற்றவில்லை என்றாலும் பிரிவை ஆற்றியிருக்கும் திறம் பெற்றிருக்கிறேன் எனத் தலைவி தோழியிடம் உரைக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.

• கிழவற்கு உரைத்த பத்து

கிழவன் என்ற சொல் தலைவனைக் குறிக்கும். கற்பு வாழ்க்கையில் பரத்தை, தலைவனை எள்ளி நகையாடி உரைக்கும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி கிழவற்கு உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. பரத்தைக்குச் சிறப்பின்மையால் தலைவன் பெயரால் குறிக்கப்பட்டது. “கண்டிகு மல்லமோ கொண்க நின்கேளே?” என்ற தொடர் பத்துப் பாடல்களிலும் இடம் பெற்றிருந்தாலும் இதனால் பெயர் அமையாது கேட்போரைக் கொண்டு பெயர் குறிக்கப் பெறுவது குறிப்பிடத் தக்கது.

கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே?

முண்டகக் கோதை நனையத்

தெண்டிரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே

- (121)

(கண்டிகும் அல்லமோ = நாங்கள் பார்த்ததில்லையா என்ன?; கேள் = உறவு; முண்டகக் கோதை = தாமரை மாலை)

என்ற பாடலில் பரத்தை, தலைவனிடம் தலைவி குறித்துப் பேசிய செய்தி இடம் பெற்றுள்ளது.

• பாணற்கு உரைத்த பத்து

அகத்திணையில் சிற்சில சூழ்நிலைகளில் தலைவன் தலைவியரிடையே சந்து (சமாதானம்) செய்விப்போர் வாயில்கள் எனப்படுவர். வாயிலாக உள்ள பாணனிடம் தலைவி, தோழி, பரத்தை ஆகியோர் கூற்று நிகழ்த்துவதாக அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி பாணற்கு உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

நன்றே பாண கொண்கனது நட்பே

தில்லை வேலி இவ்வூர்க்

கல்லென் கௌவை எழாஅக் காலே

– (131)

(தில்லை = ஒரு வகை மரம்; கௌவை = பழிச்சொல்)

என்ற பாடலில் தலைவி, ‘ஊரார் பழிச்சொல் கூறா விட்டால் தலைவனின் நட்பு ஏற்றுக் கொள்ளத் தக்கதே’ என்று பாணனிடம் வாயில் மறுக்கும் (மறுத்துரைக்கும்) செய்தி இடம் பெற்றுள்ளது.

• ஞாழற் பத்து

ஞாழல் என்பது ஒரு வகை மரம். இது கொன்றை மர வகையைச் சார்ந்தது. நெய்தல் நிலக் கருப்பொருள். இக்கருப்பொருள் இடம் பெறும் வகையிலும் அதன்வழி உட்பொருள் விளங்கவும் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி ஞாழற் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

• வெள்ளாங்குருகுப் பத்து

நீர்ப்பறவை இனத்துள் ஒன்று வெள்ளாங்குருகு. நெய்தல் நிலத்துக் கருப்பொருள். வெள்ளாங்குருகு இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வெள்ளாங்குருகுப் பத்து என்ற பெயரால் குறிக்கப் படுகிறது. இப்பகுதியில் தலைவி, வெள்ளாங்குருகை உள்ளுறையாக வைத்து, தலைவனுக்கு வாயில் மறுக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.

• சிறுவெண்காக்கைப் பத்து

நெய்தல் நிலக் கருப்பொருள்களில் ஒன்று சிறுவெண் காக்கை. இக்காக்கை இடம் பெறவும் அதன்வழி உட்பொருள் விளங்கவும் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி சிறுவெண்காக்கைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்

பயந்துநுதல் அழியச் சாஆய்

நயந்த நெஞ்சம் நோய்ப்பால் அஃதே!

- (161)

(கருங்கோடு = கரிய கிளை; புன்னை = புன்னை மரம் ; பயந்து = பசந்து; நுதல் அழிய = நெற்றி ஒளி மங்க; சாய் = மெலிந்து; நயந்த = விரும்பிய; நோய்ப்பாலஃது = நோய்வாய்ப்பட்டது)

என்ற பாடலில் தலைவன் ஒருவழித்தணந்த வழி, தலைவி ஆற்றாமை மிக்கு உரைக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் சிறுவெண் காக்கை வழி உள்ளுறை ஒன்றும் வெளிப்பட்டுள்ளது. (ஒருவழித் தணத்தல் – அலர் அடங்குவதற்காகத் தலைவன் சில நாட்களுக்குத் தலைவியைக் காண வாராதிருத்தல்)

• தொண்டிப் பத்து

தொண்டி என்பது ஒரு கடற்கரை நகரம். இந்நகரம் பெண்ணின் அழகுக்கு உவமையாகும் வகையிலும் நகரின் நிகழ்வுகளைக் கூறும் வகையிலும் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தொண்டிப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

திரைஇமிழ் இன்னிசை அளைஇ அயலது

முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறும் இசைக்கும்

தொண்டி அன்ன பணைத்தோள்

ஒண்தொடி அரிவைஎன் நெஞ்சு கொண்டோளே

- (171)

(மறுகு = தெரு)

என்ற பாடலில், இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன், தலைவியின் அழகை, தொண்டி நகரத்தால் உவமிக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.

• நெய்தற் பத்து

நெய்தல் நிலக் கருப்பொருள்களில் ஒன்று நெய்தல் மலர். இந் நெய்தல் மலர் இடம் பெறும் வகையிலும் அதன் வழிப் பொருள் விளக்கமுறும் நிலையிலும் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி நெய்தற் பத்து என்ற பெயரால் குறிக்கப் படுகிறது. இப்பகுதியில் நெய்தல் மலர் உவமையாக இடம் பெற்றுள்ளது.

• வளைப்பத்து

வளை என்ற சொல் சங்கைக் குறிக்கும்; இது நெய்தல் நிலக் கருப்பொருள்களில் ஒன்று. வளை – வளையல் இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வளைப்பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

கடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக்

கழிப்பூத் தொடர்ந்த இரும்பல் கூந்தல்

கானல் ஞாழல் கவின்பெறும் தழையள்

வரையர மகளிரின் அரியளென்

நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே.

- (191)

பாங்கன், உன் மனத்தைக் கவர்ந்தவள் எத்தகையவள் என்று கேட்க, தலைவன் அவளைப் பற்றிக் கூறிய கருத்தமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது இந்தப் பகுதி.

நெய்தல் திணைப் பகுப்புகளில் தாய், தோழி, தலைவன், பாணன் ஆகிய நான்கு இயல் கொண்டு அதாவது கேட்போரைக் கொண்டு பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஞாழல், குருகு, காக்கை, நெய்தல், வளை ஆகிய ஐந்து கருப்பொருள் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன. தொண்டி நகரத்தைக் கொண்டு ஒன்று தொகுக்கப்பட்டுள்ளது.

1.4 குறிஞ்சி

புணர்தலையும் புணர்தல் சார் ஒழுக்கங்களையும் ஒழுக்கமாக, உரிப்பொருளாகக் கொண்டது குறிஞ்சித் திணை. இத்திணைக்கு மலையும் மலை சார்ந்த இடங்களும் முதற்பொருள் (நிகழிடம்) ஆகும். இப்பகுதி வாழ் மக்களும் விலங்குகளும் பறவைகளும் பிறவும் கருப்பொருளாய் அமைந்து இத்திணைப் பாடல்களை நடத்திச் செல்லும். இங்கு, குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பகுப்பு வழிக் காணலாம்.

1.4.1 பாடல்கள் அன்னாய் வாழிப் பத்து முதலாகப் பத்துப் பகுப்புகள் குறிஞ்சித் திணை பற்றிப் பாடுகின்றன.

• அன்னாய் வாழிப் பத்து

தோழியைத் தலைவியும் தலைவியைத் தோழியும் அன்னாய் என விளித்து, வாழி என வாழ்த்தி, தங்கள் கருத்தைக் கூறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி அன்னாய் வாழிப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

அன்னாய் வாழி வேண்டன்னை! என்னை-

தானும் மலைந்தான் எமக்கும் தழையாயின

பொன்வீ மணிஅரும் பினவே

என்ன மரங்கொல் அவர்சாரல் அவ்வே.

- (201)(என்னை- என்+ஐ = என் தலைவன்; தழை = ஆடை; மலைந்தான் = அணிந்தான்; பொன்வீ = பொன்மலர்; சாரல் அவ்வே = மலைச்சாரலில் உள்ள அவை)

என்ற பாடலில் தலைவி, தலைவனின் மலைச் சாரலில் உள்ள மரங்களின் பூக்கள் தலைக்குப் பயன்பட்டன; தழை ஆடை ஆகியது எனக் கூறு முகத்தான் தோழியிடம் அறத்தொடு நிற்கும் செய்தி இடம் பெறுகிறது.

• அன்னாய்ப் பத்து

தோழி, தலைவியிடமும் செவிலியிடமும் தனித்தனியே செய்திகளைக் கூறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி அன்னாய்ப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. பாடலின் இறுதியிலேயே அன்னாய் என்ற விளி அமைந்திருக்கிறது.

• அம்ம வாழிப் பத்து

தலைவி தோழியிடமும், தோழி தலைவியிடமும், ‘அம்ம வாழி தோழி’ என விளித்து, வாழ்த்தி, பின்பு செய்திகளைக் கூறும் பாங்கில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி அம்ம வாழிப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. தலைவியும் தோழியும் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது போல் சிறைப் புறத்தில் இருக்கும் தலைவனுக்குக் கருத்தை வெளிப்படுத்துவர்.

அம்ம வாழி, தோழி காதலர்

பாவை அன்னஎன் ஆய்கவின் தொலைய

நன்மா மேனி பசப்பச்

செல்வல் என்பதம் மலைகெழு நாடே.

- (221)

(பாவை = பதுமை; கவின் = அழகு; பசப்ப = வெளிர; செல்வல் = செல்வேன்)

என்ற பாடலில், ஒருவழித் தணிப்பேன் என்ற தலைவனுக்கு உடன்படாத தலைவி, அவன் சிறைப்புறத்தானாகத் தோழியை விளித்துத் தன் கருத்தைத் தெரிவிக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.

• தெய்யோப் பத்து

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ‘தெய்யோ’ என்னும் இடைச்சொல் இடம்பெறும் பத்துப் பாடல்களின் தொகுதி தெய்யோப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. ஒருவழித் தணத்தல், வரைவு கடாஅதல், உடன் போக்கு போன்ற நிலைகளில் தெய்யோப் பத்து அமைந்துள்ளது. தெய்யோ என்பது அசைநிலை; குறிப்பிட்ட பொருள் என்று ஏதும் இல்லாதது.

• வெறிப்பத்து

நறுமணம் என்ற பொருளிலும் வெறியாட்டு என்ற பொருளிலும் வெறி என்ற சொல் பயின்று வந்த பத்துப் பாடல்களின் தொகுதி வெறிப்பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

நம்முறு துயரம் நோக்கி அன்னை

வேலன் தந்தன ளாயின், அவ்வேலன்

வெறிகமழ் நாடன் கேண்மை

அறியுமோ தில்ல செறிஎயிற் றோயே

- (241)

(வெறி = மணம்; கேண்மை = நட்பு; எயிற்றோய் = பற்களை உடையவள்)

என்ற பாடலில் வெறி என்ற சொல் நறுமணம் என்ற பொருளில் இடம் பெற்றுள்ளது.

அறியாமையின் வெறியென மயங்கி

அன்னையும் அருந்துயர் உழந்தனள்

- (242)

எனத் தொடங்கும் பாடலில் வெறி என்ற சொல் வெறியாட்டு என்ற பொருளில் இடம் பெற்றுள்ளது.

• குன்றக் குறவன் பத்து

குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருளில் குறவர் முக்கியப் பங்கு வகிப்பர். குன்றத்தில் வாழும் குறவன் என்ற பொருளால் குன்றக் குறவன் என்ற சிறுதொடர் பயின்று வரும் பத்துப் பாடல்களின் தொகுதி குன்றக் குறவன் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

• கேழற் பத்து

கேழல் என்ற சொல் காட்டுப் பன்றியைக் குறிக்கும். குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருள்களில் ஒன்று. கேழல் என்ற சொல்லோ பன்றி என்ற சொல்லோ பயின்று வர அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி கேழற் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

மென்தினை மேய்ந்த தறுகண் பன்றி

வன்கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன்

எந்தை அறிதல் அஞ்சிக்கொல்

அதுவே மன்ற வாரா மையே

– (261)(தறுகண் = ஆண்மை; அடுக்கல் = மலை)

என்ற பாடலில் பன்றி (கேழல்) இடம் பெற்றுள்ளது.

• குரக்குப் பத்து

குறிஞ்சித்திணைக் கருப்பொருள்களில் ஒன்று குரங்கு. குரங்கு, மந்தி, கடுவன் என்ற சொற்கள் இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி குரக்குப் பத்து என்று குறிக்கப்படுகிறது. குரங்கு என்பது வலித்தல் விகாரமாய்க் குரக்கு எனப்பட்டது.

• கிள்ளைப் பத்து

கிள்ளை என்பது கிளியைக் குறிக்கும் சொல். குறிஞ்சித் திணைக் கருப்பொருள்களில் ஒன்றான கிளி இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி கிள்ளைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

• மஞ்ஞைப் பத்து

மஞ்ஞை என்பது மயிலைக் குறிக்கும் சொற்களுள் ஒன்று. குறிஞ்சித் திணைக் கருப்பொருள்களில் மயிலும் ஒன்று. மஞ்ஞை, மயில் என்ற சொற்கள் இடம் பெறும் வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி மஞ்ஞைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. இப்பகுப்புகளில் முதல் மூன்று பகுப்புகள் கேட்போர் இயல் குறித்துப் பெயர் பெற்றுள்ளன. ஒன்று இடைச்சொல்லால் பெயர் பெற்றுள்ளது. ஒன்று வெறியாட்டு என்ற ஒழுக்கத்தால் பெயர் பெற்றுள்ளது. எஞ்சிய ஐந்தும் கருப்பொருளால் பெயர் பெற்றுள்ளன.

1.5 பாலை

தலைவன், தலைவியை உடன் கொண்டு தமரை (உறவினரை)ப் பிரிதலும் தலைவியைப் பிரிதலும் என இருவகையான பிரிவு நிகழ்வுகளை ஒழுக்கமாகக் கொண்டது பாலைத்திணை. இத்திணைக்கு முல்லை நிலமோ, குறிஞ்சி நிலமோ தன்னியல்பு அழிந்து உருவாகும் நீர் வறண்ட வெப்ப நிலம் முதற்பொருளாகும். இந்நிலத்தில் வாழும் மக்களும், விலங்குகளும், பறவைகளும், பிறவும் கருப்பொருளாய் இத்திணைப் பாடல்களை நடத்திச் செல்லும்.

1.5.1 பாடல்கள் இங்கு, பாலைத்திணைப் பாடல்களைப் பகுப்பு முறையில் காணலாம்.

• செலவு அழுங்குவித்த பத்து

பிரிவிற்குரிய காரணங்களில் ஒன்றான பொருளீட்டுதல் பொருட்டு, தலைவன், தலைவியைப் பிரியக் கருதுவான். அங்ஙனம் பிரியக் கருதுபவனைப் பிரியாமல் தோழி தடுப்பாள். இங்ஙனம் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி செலவழுங்குவித்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. செலவு – பிரிவு; அழுங்குவித்தல் – தடுத்தல். இது பாலை ஒழுக்கம்.

• செலவுப் பத்து

தலைவன், தலைவியைப் பிரிந்து சென்றமையை மையமாகக் கொண்டுள்ள பத்துப் பாடல்களின் தொகுதி செலவுப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

• இடைச்சுரத்துப் பத்து

தலைவியைப் பிரிந்து தலைவன் செல்லும் வழியில் தலைவியின் குணநலன்களையும் அவள் வருந்துவதையும் நினைவுகூர்வான். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி இடைச்சுரத்துப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை

அலறுதலை ஓமை அம்கவட்டு ஏறிப்

புலம்புகொள விளிக்கும் நிலங்காய் கானத்து

மொழிபெயர் பன்மலை இறப்பினும்

ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே

- (321)

(உலறுதலை = காய்ந்த தலை; இறப்பினும் = கடந்தாலும்; உளிவாய் = உளியைப் போன்ற வாயினை உடைய; அலறுதலை ஓமை = விரிந்த தலையினையுடைய ஓமை மரம்; அம்கவட்டு = அழகிய கிளையில்; புலம்பு = தனிமை; மொழிபெயர் பன்மலை = வேற்றுமொழி மக்கள் வாழும் பல மலைகள்)

என்ற பாடலில் தலைவன் தலைவியைப் பிரிந்து பல மலைகளைக் கடந்து வந்திருப்பினும் தலைவியின் சிறந்த குணங்கள் மனத்தை விட்டு நீங்காதவையாக இருக்கின்றன என்று நினைக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.

• தலைவி இரங்கு பத்து

தலைவன் ஏதேனும் ஒரு காரணம் குறித்துப் பிரிந்து செல்வான். அவன் செல்லும் கொடிய பாதை குறித்துத் தலைவி அஞ்சுவாள். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தலைவி இரங்கு பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. தலைவன் சென்ற காட்டுநெறி இன்னாதது என்று தலைவி இரங்கும் (அஞ்சும்) செய்தி பாடல் 331இல் இடம் பெற்றுள்ளது.

• இளவேனிற் பத்து

இளவேனிற் பருவம் என்பது பாலைத் திணையின் முதற்பொருளில் பெரும்பொழுது. இளவேனில் பருவத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் அந்தக் காலம் வந்தும் அவன் வாராமையால் வருந்திக் கூறுவது பாலையின் உரிப்பொருள். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி இளவேனிற் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. இளவேனிற் காலம் வந்த பொழுதும் அவரோ வாரார் எனத் தலைவி வருந்தும் செய்தி இப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.

• வரவுரைத்த பத்து

பலவேறு காரணங்களில் ஒன்று குறித்துப் பிரிந்து சென்ற தலைமகன் மீண்டு வருதலை மையமாகக் கொண்டு அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வரவுரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. காடு பின்னொழியத் தலைவன் திரும்பி விட்டான் நீ உன் கவலைகளை ஒழிப்பாயாக என்று தோழி, தலைவியிடம் கூறும் செய்தி இடம் பெற்றுள்ளது.

• முன்னிலைப் பத்து

தலைவன், தலைவி, தோழி ஆகியோர் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் முன்னிலைப்படுத்திக் கூற்று நிகழ்த்துவர். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி முன்னிலைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

• மகட்போக்கியவழித் தாய் இரங்கு பத்து

களவில் புணர்ந்த தலைமகன், தலைவியை மணங்கொள்ள உடன் கொண்டு (அழைத்துச்) செல்வான். அப்போது மகளைப் பிரிந்த தாய் வருந்திப் பேசுவாள். இவ்வகையில் அமைந்த பாடல்களின் தொகுதி மகட்போக்கியவழித் தாய் இரங்கு பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. இப்பகுதியில் தலைவனுடன் தலைவி செல்லும் காட்டு நெறி மழை பொழிந்து இனிதாக வேண்டும் என நற்றாய் வேண்டும் செய்தி இடம் பெற்றுள்ளது.

• உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

உடன்போக்கு நிகழ்கையில் தலைவன், தலைவி தங்களுக்குள்ளும் இவர்களிடத்துக் காண்போரும் பிறரும் கூற்றுக்கள் (உரையாடல்) நிகழ்த்துவர். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி உடன்போக்கின்கண் இடைச்சுரத்து உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து

செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர்

யார்கொல் அளியர் தாமே வார்சிறைக்

குறுங்கால் மகன்றில் அன்ன

உடன்புணர் கொள்கைக் காத லோரே?

- (381)

(பைங்காய் நெல்லி = பசிய நெல்லிக்காய்; மிசைந்து = தின்று; மராஅத்த = மரத்தின்; குறுங்கால் = குறுகிய கால்களை உடைய; மகன்றில் = இணைபிரியாத ஒருவகைப் பறவை) அளியர் = இரக்கத்துக்குரியவர்)

என்ற பாடலில் இடைச்சுரத்தில் தலைவனையும் தலைவியையும், கண்டோர் வியந்து கூறும் செய்தி இடம் பெற்றுள்ளது.

• மறுதரவுப் பத்து

உடன்போக்கில் ஈடுபட்ட தலைவனும் தலைவியும் மீண்டு வருதலும் மீண்டு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தலும் உண்டு. இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி மறுதரவுப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை

அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்

பச்சூன் பெய்த பைந்நிண வல்சி

பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ

வெஞ்சின விறல்வேல் காளையொடு

அஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே!

- (391)

(மறுவில் தூவி = குற்றமற்ற இறகு; கிளை = சுற்றம்; ஆர = உண்ண; பச்சூன் பெய்த பைந்நிண வல்சி = இறைச்சி கலந்த உணவு)

என்ற பாடலில், உடன்போன தலைவனும் தலைவியும் மீண்டு வர வேண்டும்; அதை அறிவிக்கக் காக்கை கரைய வேண்டும் எனச் செவிலி பராவும் (வேண்டும்) செய்தி இடம் பெற்றுள்ளது. பாலைத் திணைப் பகுப்பில் அமைந்த பத்துப் பெயரமைப்பும் உரிப்பொருளை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன. ஒரு பகுப்பு மட்டும் பெரும்பொழுது ஒன்றால் குறிக்கப்பட்டாலும் அதன் மையம் உரிப்பொருளாகவே அமைந்துள்ளது.

1.6 முல்லை

பொருளீட்டல் முதலான காரணங்களில் யாதேனும் ஒன்று குறித்துத் தலைவன் பிரிவான். அங்ஙனம் பிரிந்த தலைவன் மீண்டும் வரும் வரை ஆற்றியிருத்தல் (பிரிதல் இயற்கை என, அதற்கு வருந்தாது இருத்தல்). முல்லைத் திணையின் ஒழுக்கம் (உரிப்பொருள்) ஆகும். இத்திணைக்கு, காடும் காடு சார்ந்த இடமும் முதற்பொருள் (நிகழிடம்) ஆகும். இப்பகுதிவாழ் மக்களும், விலங்குகளும், பறவைகளும், பிறவும் கருப்பொருளாய் இத்திணைப் பாடல்களை நடத்திச் செல்லும்.

1.6.1 பாடல்கள் இங்கு, முல்லைத்திணைப் பாடல்களைப் பகுப்பு வழிக் காணலாம்.

• செவிலி கூற்றுப் பத்து

திருமணம் நிகழ்ந்த பின்பு தலைவியின் குடும்ப வாழ்க்கை நிலையைத் தலைவனின் இல்லத்திற்குச் சென்று அறிந்து வந்து செவிலி, நற்றாயிடம் உரைப்பாள். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி செவிலி கூற்றுப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

மறியிடைப் படுத்த மான்பிணை போலப்

புதல்வன் நடுவண னாக நன்றும்

இனிது மன்றஅவர் கிடக்கை முனிவின்றி

நீல்நிற வியலகம் கவைஇய

ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே

- (401)

(நடுவணன் = நடுவில் இருப்பவன்; கிடக்கை = படுத்திருத்தல்; வியலகம் = கடல்; கவைஇய = சூழ்ந்த; ஈனும் = இவ்வுலகத்தும்; மறி = குட்டி; உம்பரும் = மேலுலகத்தும்)

என்ற பாடலில் கன்றை நடுவில் உறங்க வைத்திருக்கும் மான் பிணைகள் போல மகவை நடுவில் படுக்க வைத்திருக்கும் தலைவன் தலைவியின் செயலை, செவிலி நற்றாயிடம் கூறும் செய்தி இடம் பெற்றுள்ளது.

• கிழவன் பருவம் பாராட்டுப் பத்து

வினைக்குச் செல்லும் தலைவன் கார்காலம் (மழைக் காலம்) வரும்போது தானும் மீண்டு வருவேன் என்று கூறிச் செல்வான். எனினும் சில தருணங்களில் குறித்த பருவம் வருவதற்கு முன்பே வந்து நிற்பான். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி கிழவன் பருவம் பாராட்டுப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. கிழவன் – தலைவன். ‘ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறி’ என்று தொடங்கும் பாடலில் (411) கார்காலம் தொடங்கும் தறுவாயில் மீண்டு வந்த தலைவன், தலைவியை நீராட அழைக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.

• விரவுப் பத்து

முல்லைத் திணைக்குரிய ஒழுக்கத்தில், தலைவன் பிரியாமைக்குக் காரணமான காதலை உணர்ந்தவர் கூற்றும், பருவ வரவு குறித்த கூற்றும், பிரிவானோ என்று தலைவி ஐயம் கொண்ட போது தலைவியைத் தேற்றும் தலைவன் கூற்றும் எனப் பலருடைய கூற்றுகள் விரவி வந்த பத்துப் பாடல்களின் தொகுதி விரவுப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

• புறவணிப் பத்து

புறவு என்பதற்குக் காடு என்பது பொருள். முல்லைத் திணையின் முதற்பொருளான காட்டின் அழகு குறித்த பத்துப் பாடல்களின் தொகுதி புறவணிப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. இப்பகுதியின் முதற் பாடலில் (431) தலைவன் சென்ற முல்லைக் காடு அழகுடையது. ஊறு செய்யாதது என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

• பாசறைப் பத்து

வினையின் பொருட்டுப் பிரிந்த தலைவன், பாசறையில் தங்கியிருப்பான். தான் குறித்த கார்காலம் வரும்போது தலைவியின் நினைவு வரும். அப்போது அவன் பலவற்றையும் நினைந்து புலம்புவான். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி பாசறைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

• பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து

ஆற்றியிருக்கும்படித் தலைவன் சொல்லிச் சென்ற பருவம் (கார்காலம்) வந்த போது தலைவி தனக்குள்ளும் தன் தோழியோடும் கூற்று நிகழ்த்துவாள். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. இப்பகுதியின் முதற்பாடலில் (451) குறித்த பருவத்தில் தலைவன் வாராமல் இருக்கின்ற போது தலைவன் தரப்பிலிருந்து வந்த தூதுச் செய்தி கேட்டு ஆற்றாளாய் இருக்கும் தலைவி பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது.

• தோழி வற்புறுத்த பத்து

தலைவன் பிரிந்திருக்கும் போது அவன் குறித்துச் சென்ற காலம் வாராதிருக்கும் போதே தலைவி வருந்துவாள். அப்போது தோழி அவளை வற்புறுத்தி ஆற்றுவிப்பாள். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தோழி வற்புறுத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

• பாணன் பத்து

பருவ வரவையும் வினை முடித்த தலைவனின் வரவையும் பாணன் முன்னதாக வந்து தலைவிக்கு உரைப்பான். அவனிடம் தலைவி, தோழி ஆகியோர் கூற்று நிகழ்த்துவர். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி பாணன் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

• தேர்வியங் கொண்ட பத்து

வினை முடித்து மீளும் தலைவன், தலைவியின் நிலை நினைந்தவனாய், பாகனை விரைவாகத் தேரைச் செலுத்தக் கட்டளை இடுவான். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி தேர்வியங் கொண்ட பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.

• வரவுச் சிறப்புரைத்த பத்து

தலைவன் வினை முடித்து மீண்டு வந்த போது, அவன் தலைவியிடம் பேசுவான். தோழி தலைவியிடமும், தலைவனிடமும் பேசுவாள். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வரவுச் சிறப்புரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. இப்பகுப்புகளில் ஒன்பது பகுப்புகள் முல்லைக்குரிய ஒழுக்கத்தை (உரிப்பொருளை) அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. புறவணிப்பத்து என்ற பகுப்பு மட்டும் முல்லைத் திணையின் முதற்பொருளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

1.7 தொகுப்புரை

சங்க இலக்கியத் தொகுப்பு முறையில் ஐங்குறுநூற்றிற்குத் திணைக்கு நூறுபாக்கள் என்ற தனிச்சிறப்பு உண்டு.

தொகை நூல்களில் ஐந்து ஆசிரியர்களால் மட்டுமே பாடப்பட்ட இரு நூல்களில் இதுவும் ஒன்று.

மற்றொன்று கலித்தொகை. ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் ஆகிய இவர்கள் ஐங்குறுநூற்றில் தாம் பாடிய திணையில் வல்லுநர்கள்.

ஐங்குறுநூற்றின் ஒவ்வொரு திணைப் பாடல்களும் பத்துப் பத்தாகப் பகுக்கப்பட்டுள்ளன. பாடல்கள் உரிப்பொருள், கருப்பொருள், முதற்பொருள், கூற்று உரைப்போர், கூற்றைக் கேட்போர், விளி, இடைச்சொல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தொகை, வகை செய்யப்பட்டுப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சிறப்பு வேறு எந்த அகநூலுக்கும் இல்லை.

உரிப்பொருள் சார்ந்த பகுப்புகள் முதலிடத்திலும், கருப்பொருள் சார்ந்த பகுப்புகள் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. இடைச்சொல்லால் மட்டுமே பெயர் கொண்ட பகுப்புகளும் உண்டு.

2.0 பாட முன்னுரை

ஐங்குறுநூறு ஓர் அக இலக்கியம். அகத்திணையைக் கூறும் நூல். தொல்காப்பியம் அகத்திணை ஏழு என்று கூறுகிறது. கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என்பவை அந்த ஏழு திணைகளாகும். இவற்றுள் கைக்கிளை, பெருந்திணை அல்லாத ஐந்து திணைகள் ஐங்குறுநூற்றில் இடம் பெற்றுள்ளன. அகப் பொருண்மையையும் ஐங்குறுநூற்றையும் ஒப்பிட்டு நோக்குவது இப்பாடப் பகுதி.

2.3 தொகுப்புரை

இதுவரை ஐங்குறுநூற்றில் அமைந்த அகத்திணைக் கொள்கைகள் சிலவற்றைக் கண்டோம். இவற்றைச் சுருக்கமாக மீண்டும் ஒருமுறை காண்போம்.

முப்பொருள்கள் எவை என்பது பற்றியும், அவை ஒவ்வொரு திணைப் பாடலிலும் இடம் பெற்றுள்ள திறத்தையும் கண்டோம்.

ஒரு திணைக்குரிய பொழுதும் கருப்பொருள்களும், மற்றொரு திணையில் மயங்கும் என்பதும், அவை மயங்கிய திறத்தையும் கண்டோம்.

திணைப் பாடல்களுக்கு வலிமை சேர்க்கும் உவமை அதன் இரு கூறுகளான உள்ளுறை உவமம், ஏனை உவமம் என்ற அடிப்படையில், பாடல்களில் பயின்றுள்ளமையை அறிந்தோம்.

பாடம் - 3

ஐங்குறுநூறு – 3

3.0 பாட முன்னுரை

இயல்பான இல்வாழ்க்கை இருவகைக் கைகோளுக்குள் அடங்குவதாகும். களவு, கற்பு என்பவையே இருவகைக் கைகோள்கள். கைகோள் என்ற சொல் ஒழுக்கம் என்ற பொருளைத் தரும். களவொழுக்கம், கற்பொழுக்கம் என்ற இரு பெரும்பிரிவுகளில் ஐங்குறுநூற்றுப் பாடல்களைக் காண்போம்.

3.1 களவு களவு என்பதற்கு பிறர்க்குரிய பொருளை மறையில் கோடல் (பிறர் அறியாது கொள்ளுதல்) என்று பொருள் கூறுவர் இளம்பூரணர். தமக்கு உறவு அல்லாத ஒரு பெண்ணை அவளது உறவினர் கொடுக்கக் கொள்ளாது, கேட்டுப் பெறாது பெண்ணின் விருப்பத்தோடு யாரும் அறியாமல் கூடி, பின்னும் அந்நிலை வழாஅமல் வாழ்தல் களவு என அகப்பொருளில் வழங்குகிறது.

ஊழ் கூட்டுவிக்க ஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவனும் தலைவியும் சந்தித்துக் காதல் கொண்டு தொடர்வது களவு வாழ்க்கை ஆகும்.

ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

(தொல்காப்பியம் -2)

என்று களவின் தொடக்கத்தைத் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. இதை இயற்கைப் புணர்ச்சி என்பர். இதன்மேலும் இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் எனக் களவு தொடரும். ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள களவொழுக்கப் பாடல்களை இனிக் காண்போம்.

3.1.1 பால் அல்லது ஊழ்மனிதனுக்கு நடக்கும் நன்மை தீமைகளுக்குப் பால் அல்லது ஊழ் அல்லது விதிதான் காரணம் என்பது நம்மில் பெரும்பாலான மக்களின் நம்பிக்கை. ஊழின் வலியாலேயே தலைவனும் தலைவியும் சந்திப்பர். களவு வாழ்க்கையைத் தொடங்குவர். இதனை ஒரு தலைவியின் கூற்றால் அறிய முடிகிறது. அன்னை வாழி வேண்டன்னை – புன்னை

பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை

என்னை என்னும் யாமே ; இவ்வூர்

பிறிதொன் றாகக் கூறும்

ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே

(110)

(என்னை = என் + ஐ = என் தலைவன் ; பிறிதொன்று = வேறொன்று ; பால் = ஊழ்)(அந்தத் துறைவனே என் தலைவன் என்று நான் நினைக்கிறேன். இந்த ஊர் வேறு ஒருவருக்கு என்னை மணம் பேசுகிறது.) முன்பு ஒரு நாள் என்னை ஒரு தலைவனுடன் சேர்த்து வைத்த பால்/ஊழ், இவ்வூர் கூறுவது போல வேறொருவனுக்கு மனைவியாக்குமா- எனத் தலைவி வினவுவதாகப் பாடல் அமைந்துள்ளது. இச்செய்தி ஊழ்தான் தலைவன் தலைவியை ஒன்று சேர்த்து வைக்கிறது என்ற கருத்திற்குச் சான்றாகும்.

3.1.2 இயற்கைப் புணர்ச்சிஒப்பாரும் மிக்காரும் அற்ற தலைவனும் தலைவியும் விதி வயத்தால் சந்திக்க நேரும். சந்தித்த இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறிப்பறிந்து புணர்ச்சி மேற்கொள்வர். இது இயற்கைப் புணர்ச்சி எனப்படும். இது காட்சி, ஐயம், தெளிவு, துணிவு என்னும் நான்கு நிலைகளில் நிகழும். திரை இமிழ் இன்னிசை அளைஇ அயலது

முழவு இமிழ் இன்னிசை மறுகுதொறும் இசைக்கும்

தொண்டி அன்ன பணைத்தோள்

ஒண்தொடி அரிவை என் நெஞ்சு கொண்டோளே

(171)

(மறுகு = தெரு ; இசைக்கும் = ஒலிக்கும் ; தொண்டி = ஒரு நகரம் ; அரிவை = பெண்)

இது நெய்தல் திணையில் அமைந்த பாடலாகும். இயற்கைப் புணர்ச்சியில் மகிழ்ந்து நீங்கும் தலைவன், தலைவி ஆயத்தோடு (தோழிகள் கூட்டத்தோடு) செல்வதைக் கண்டு, அவள் நலம் (அழகு) பாராட்டி, தன் நெஞ்சம் கவர்ந்த நிலையைக் கூறுகின்றான். இது இயற்கைப் புணர்ச்சி குறித்ததாகும்.

3.1.3 இடந்தலைப்பாடுஇயற்கைப் புணர்ச்சியில் முதல் நாள் ஈடுபட்ட தலைவன் மீண்டும் அவ்விடத்து அந்நேரத்துச் சென்றால் அவளைச் சந்திக்கலாம் என்று கருதுவான். தலைவியும் இங்ஙனமே கருதினால் சந்திப்புகள் நிகழும். இது இடந்தலைப்பாடு (இடத்தை அடைதல்) எனப்படும். இடந்தலைப்பாட்டில் தலைவன் தலைவியைத் தவிர வேறு யாருக்கும் பங்கு இல்லை. இலங்குவளை தெளிர்ப்ப அலவ னாட்டி

முகம்புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே –

புலம்புகொள் மாலை மறைய

நலங்கே ழாகம் நல்குவள் எனக்கே

(197)

(தெளிர்ப்ப = ஒலிக்க ; அலவன் = நண்டு ; கதுப்பு = கூந்தல்)

இது நெய்தல் திணைப் பாடலாகும். இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் தலைவியைக் காண்போம் என்று தலைவன் சென்று அங்குத் தலைவியைக் கூடுகிறான். மாலை மறைந்ததும் தலைமகள் கூடுவாள் என்ற எதிர்பார்ப்பைக் குறிக்கும் வகையில் பாடல் அமைந்துள்ளது.

3.1.4 பாங்கற் கூட்டம் இடந்தலைப்பாட்டிற்குப் பின் தலைவியைச் சந்திக்க முடியாத நிலை ஏற்படும் போது தலைவன், பாங்கனின் (தோழனின்) உதவியை நாடுவான். சந்திக்க முடியாமல் வருந்தி உடல் மாறுபட்டு இருக்கும் தலைவனைக் கண்டு பாங்கனே உதவவும் முன் வருவான். இங்ஙனம் தலைவனுக்கும் தலைவிக்கும் நிகழும் கூட்டம் பாங்கற் கூட்டம் (பாங்கனால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு) எனப்படும்.

ஒண்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே

வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்

உரவுக்கட லொலித்திரை யென்ன

இரவி னானும் துயிலறி யேனே.

(172)

இது நெய்தல் திணைப் பாடல். தூங்காமல் அல்லல்படும் தலைவனைப் பார்த்து வினவ, ஒண்தொடி அரிவை என் உள்ளம் கொண்டாள் எனத் தன் துன்பத்திற்கான காரணத்தைத் தலைவன் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

தலைவியைத் தலைவன் சந்திக்கும் இடத்தில் சென்று பார்த்து வந்த பாங்கன், இத்தகு அழகு வாய்ந்த தலைவியைச் சந்திப்பவர்கள் இரவு நேரத்தில் மணியைத் தொலைத்து விட்ட நாகப்பாம்பு அடையும் துன்பத்தைப் போலத் துன்பம் அடைவது உறுதி எனத் தனக்குள்ளே கூறும் செய்தி 173ஆம் பாடலாக அமைந்துள்ளது.

குறி நல்கினாள் எனப் பாங்கன் கூறும் செய்தி, (174) பாங்கற் கூட்டத்திற்கு அவன் ஏற்பாடு செய்தமையைக் காட்டுகிறது.

3.1.5 பாங்கியிற் கூட்டம்பாங்கற் கூட்டமும் இடையீடு படுகின்ற போதோ, சந்திக்கவே இயலாத போதோ தலைவன் தோழியின் உதவியை நாடுவான். பாங்கியிற் கூட்டம் / தோழியிற் கூட்டம் களவுப் புணர்ச்சியில் மிகப்பெரும் பங்கு வகிக்கும். பாங்கற் கூட்டத்தின் போதே, எதிர்காலத்தில் தோழியின் உதவி தேவை என்பதைத் தலைவன் உணர்கிறான். இதை அறிவுறுத்தும் பாடல் ஒன்று ஐங்குறுநூற்றில் (175) இடம் பெற்றுள்ளது. அடுத்த சந்திப்பின் போது தோழியையும் உடனழைத்து வரவேண்டும் என்ற தலைவனின் வேண்டுகோளை இது எடுத்துச் சொல்கிறது.

தோழியிற் கூட்டம் என்பது பாங்கி மதி உடன்பாடு, பகற்குறி, இரவுக்குறி, அலர், சேட்படை, மடல் திறம், வெறியாட்டு, நொதுமலர் வரைவு, வரைவு கடாதல், அறத்தொடு நிற்றல், ஒருவழித் தணத்தல், உடன்போக்கு என்ற நிலைகளில் அமையும்.

• பாங்கி மதிஉடன்பாடு

தலைவன், தலைவி மீது கொண்டுள்ள காதலைத் தோழி அறியச் செய்தலும் காதலை ஏற்கச் செய்தலும் மதியுடன்பாடு ஆகும். இது முன்னுறவு உணர்தல், குறையுற உணர்தல், இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல் என்ற நிலைகளில் நிகழும்.

குறையுற உணர்தல் என்பது, தலைவன், தலைவியைச் சந்திக்க முடியாமல் தவிக்கும் தன் குறையைத் தீர்க்கக் கோரித் தோழியிடம் முறையிட்டுத் தழை ஆடை கொடுக்க, அதனை ஏற்ற தோழி, தலைவியைக் கூட்டத்திற்கு உடன்படச் சொல்லும் செய்தியைக் கூறுகிறது. தழையுடை என்பது கையுறை என்ற சொல்லால் அக இலக்கியங்களில் குறிக்கப்படும். தழையுடையைத் தலைவியிடம் தலைவன் நேராகக் கொடுப்பதும், தோழி வாயிலாகக் கொடுப்பதும் தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள காதலைப் புறத்தார்க்குப் (மற்றவர்களுக்கு) புலப்படுத்தும் குறியீடு ஆகும். மதியுடன்பாட்டின் தொடர்ச்சியாகப் பகற்குறி, இரவுக்குறிகள் நிகழும்.

• சேட்படை

தலைவன் தோழியிடம் குறையிரந்து நிற்கும் போது, தோழி உடன்படாது தலைவனை அவ்விடத்தை விட்டு அகற்ற முற்படுவாள். இது சேட்படை என்னும் நிலை-துறை – ஆகும்.

நொதும லாளர் கொள்ளார் இவையே

எம்மொடு வந்து கடலாடு மகளிரும்

நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்

உடலகம் கொள்வோர் இன்மையின்

தொடலைக் குற்ற சிலபூ வினரே

(187)

என்ற பாடல் தோழி தலைவனிடம் கூறும் செய்தியைக் கொண்டது. உங்களுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத – பகையோ நட்போ இல்லாத- நொதுமலாளராகியவர்கள் நீங்கள் கொடுப்பதை ஏற்க மாட்டார்கள் என்றும் நெய்தல் நிலத்தில் கிடைக்காத இத்தழையுடையை ஏற்றால் பார்ப்போருக்கு ஐயம் ஏற்படும் என்றும் கூறி, தோழி தலைவனை அகற்ற முயலும் செய்தி பாடலில் இடம் பெற்றுள்ளது. இதுவே சேட்படை.

தலைவியது இளமையைக் கூறி, மணத்திற்கான தகுதியை அடையாதவள் என்று கூறித் தலைவனை அகற்றும் முயற்சியிலும் தோழி ஈடுபடுவாள்.

• பகற்குறி

மதியுடன்பாட்டில் வெற்றி கண்ட தலைவன் தோழியின் உதவியோடு மீண்டும் மீண்டும் தலைவியைப் பகற்பொழுதில் ஒரு குறித்த இடத்தில் சந்திப்பது பகற்குறி ஆகும். பகற்குறி இல்ல வளாகத்திற்கு வெளியில் நிகழும்.

பாடல் (215) பகற்குறியைக் குறிப்பிடுவதோடு இரவுக்குறி நயத்தலையும் (விருப்பத்தையும்) குறிப்பிட்டுள்ளது. ‘புதல் மலர் மாலையும் பிரிவோர்’ என்ற தொடர் பகற்குறியில் வந்து திரும்புவதை விளக்குவதாகும்.

பகலில் வந்து செல்வதால் ஏற்படும் இடையூறுகளையும் இரவில் சந்திப்பதால் ஏற்படும் நன்மைகளையும் கருத்தில் கொண்டு பகற்குறியை மறுத்து இரவுக்குறியை விரும்புவது உண்டு. மேற்காட்டிய பாடல், பகற்குறிக் கண் வந்து நீங்கும் தலைவன் சிறைப்புறத்தில் (வளாக எல்லைக் கோட்டில்) இருக்க, அவன் கேட்கும் வகையில் பகற்குறி மறுத்து இரவுக்குறி விரும்பி, தலைவி தோழிக்கு உரைப்பதாக அமைந்துள்ளது.

• இரவுக்குறி

இரவுக்குறி என்பது இரவு நேரத்தில் ஒரு குறித்த இடத்தில் தலைவன், தலைவியைத் தோழியின் உதவியுடன் சந்திப்பதாகும். இரவுக்குறி இல்ல வளாகத்தில் நிகழும்.

பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்

கழனி ஊர!நின் மொழிவல் ; என்றும்

துஞ்சுமனை நெடுநகர் வருதி ;

அஞ்சா யோஇவள் தந்தைகை வேலே

(60)

என்ற பாடல் தோழி தலைவனிடம் கூறுவதாக அமைந்ததாகும். இப்பாடலில் இடம் பெற்றுள்ள ‘துஞ்சுமனை நெடுநகர் வருதி’ என்ற தொடர் இரவுக்குறியைக் குறிப்பதாகும்.

பகற்குறி, இரவுக்குறி குறித்த பாடல்கள் எல்லாம் அவற்றை மட்டும் குறிப்பதாக இல்லாமல் வேறு செய்திகளையும் குறிக்கும். பகற்குறி மறுத்து இரவுக்குறி விரும்புவதும் பின் இரவுக்குறியின் இடர்ப்பாடுகளைக் குறிப்பிட்டு வரைவுக்கு முயலச் சொல்வதும் ஆகிய செய்திகள் பாடல்களில் இடம் பெறும். மேற்காட்டிய பாடலில் உள்ள ‘அஞ்சாயோ இவள் தந்தை கைவேலே?’ என்ற தொடர் மறைமுகமாக வரைவு கடாவுவது (திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லுவது) ஆகும்.

• அல்ல குறி

இரவுக்குறியின் போது தவறுகள் ஏற்படுவது உண்டு. ஏதோ ஓர் ஒலியைத் தலைவன் குறிப்பிட்ட ஒலி என்று கருதி, குறியிடத்து வந்து தலைவன் இல்லாதது கண்டு வருந்தி, தலைவி இல்லத்திற்குத் திரும்புவதும், தலைவன் வந்து ஒலி எழுப்புகின்றபோது தலைவி பழையதை நினைத்து வாராதிருப்பதும் அல்லகுறிகள் ஆகும்.

காமம் கடவ, உள்ளம் இனைப்ப

யாம் வந்து காண்பதோர் பருவ மாயின்

ஓங்கித் தோன்றும் உயர்வரைக்கு

யாங்கெனப் படுவது நும்மூர், தெய்யோ?

(237)

(இனைப்ப = வருந்த)

என்ற பாடல் அல்லகுறிக்குச் சான்று ஆகும். தோழி தலைவனிடம் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது. தலைவன் தலைவியைச் சந்திக்க இரவுக்குறிக்கு வருகிறான். ஏதோ காரணத்தால் (அல்லகுறி) சந்திக்க இயலாமல் போய்விடுகிறது. மறுமுறை வருகிறான் அப்போது தோழி முதல் நாள் வரவில்லை என்று கருதித் தலைவனிடம் வெகுண்டு பேசுகிறாள். ‘காதல் உந்துகின்ற காரணத்தால் நாங்கள் உம்மைச் சந்திக்க வருகின்றோம். உம்முடைய ஊர் எங்கே இருக்கிறது?’ என்பதாகப் பாடல் அமைந்துள்ளது.

• வரைவு கடாஅதல்

பகற்குறியிலும் இரவுக்குறியிலும் ஈர்க்கப்பட்ட தலைவன், வரைதலில் (திருமணம்) நாட்டமின்றி, களவொழுக்கத்தையே விரும்பி வாழ்வான். இந்நிலையில் தோழி பல்வேறு நிலைகளை – சூழல்களை எடுத்துக்கூறித் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவாள். இது வரைவு கடாஅதல் ஆகும்.

பகலில் வருபவனை இரவில் வா என்பதும் இரவில் வருபவனிடம் வரும் வழிக்கு அஞ்சுகின்றோம் என்பதும் வரைவு கடாதல் ஆகும்.

கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல்

அருக்கல் மஞ்ஞை கவரும் நாட

நடுநாள் கங்குலும் வருதி

கடுமா தாக்கின் அறியேன் யானே !

(296)

(கொடிச்சி = குறிஞ்சி நிலத் தலைவி ; அடுக்கல் = மலை; ஏனல் = தினை; கடுமா = யானை)

என்ற பாடல் இரவில் நள்ளிரவில் வருவதால் கொடிய விலங்குகளால் துன்பம் ஏற்படுமோ என்று அஞ்சுகின்றோம் என்று கூறுமுகத்தான் வரைவு கடாவுவதாக அமைந்துள்ளது.

ஏற்பட இருக்கின்ற அலரையும் இற்செறிப்பையும் (தலைவியை வெளியே செல்ல விடாது தடை செய்தல்) கருத்தில் கொண்டு தோழியை நடுவில் நிறுத்தித் தலைவியே வரைவு கடாதலும் உண்டு.

இற்செறிப்பார் எனக் கேட்ட தலைமகள் வரையாது வந்தொழுகும் தலை மகன் சிறைப் புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியதாகப் பாடல் (111) கூறுகிறது.

விளைந்த தினையைக் கிளி கவராமல் இருக்கக் காவலுக்குத் தலைவி இருப்பாள். இது பகற்குறிக்கு உதவியாக இருக்கும். தினை அறுவடைக்குட்பட்டாலோ இயற்கைச் சீற்றத்தால் அழிய நேரிட்டாலோ தலைவி காவலுக்கு வர இயலாது. பகலில் சந்திக்க இயலாது. இதைக் காரணமாகக் கொண்டு தோழி வரைவு கடாவுவாள். வேற்று வரைவு – வேற்றார் வந்து மணம் பேசுவதைக் காரணமாகக் கூறி வரைவு கடாவுவது உண்டு.

பாடல் 289இன் முதல் இரு அடிகளில் அமைந்துள்ள உள்ளுறை மூலம் நொதுமலர் (வேற்றார்) வரைவு கொண்டு வரைவு கடாதல் நிகழ்வதை அறியலாம்.

• ஒருவழித் தணத்தல்

களவொழுக்கத்தால் ஈர்க்கப்பட்டு, பகலும் இரவும் குறியிடம் சென்று தலைவன், தலைவியோடு பல காலம் கூட்டம் நிகழ்த்தி வந்தமையால் களவு வெளிப்பட்டுப் பலரும் அறிவதாகிப் பரவிவிடும். பலரும் அது பற்றிப் பேசுவர்; அது அலர் எனப்படும். அலர் அடங்குவதற்காகத் தலைவன் சிறிது காலம் தலைவியைச் சந்திக்க வருவதைத் தவிர்ப்பான். இது ஒருவழித் தணத்தல் எனப்படும்.

சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்

இருங்கல் விடரளை வீழ்ந்தென, வெற்பில்

பெருந்தேன் இறாஅல் சிதறும் நாடன்

பேரமர் மழைக்கண் கலிழத்தன்

சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய்

(214)

என்ற பாடல் தலைவன் ஒருவழித் தணப்பேன் என்று கூறிய வழி, அவன் சிறைப்புறத்தானாகத் தோழி, தலைவியிடம் அச்செய்தியைக் கூறுவதாக அமைந்துள்ளது. தலைவியே நீ அழும்படியாகத் தலைவன் சிறிது நாட்கள் தன் நாட்டிற்குச் செல்ல இருக்கின்றான். காரணம் அலர் தோன்றி விட்டது என்கிறாள் தோழி. அலர் தோன்றியிருப்பது உள்ளுறையால் விளக்கப் பட்டுள்ளது. பலாப்பழம் முதிர்ந்து விட்டது போல, களவு முதிர்ந்து விட்டது. பழத்தின் மணம் போலக் களவு வெளிப்பட்டு விட்டது. பழம் வீழ்ந்ததால் தேனடை சிதைந்தது போலக் களவும் சிதைகிறது என்பதாக உள்ளுறை அமைந்துள்ளது.

ஒருவழித் தணப்பேன் என்ற தலைவனிடம் தலைவி தனது கருத்தை வெளிப்படுத்துவாள். பிரிய வேண்டாம் என வற்புறுத்துவாள்.

வருவை அல்லை வாடை நனிகொடிதே

அருவரை மருங்கி னாய்மணி வரன்றி

ஒல்லென இழிதரும் அருவிநின்

கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ

(233)என்ற பாடல் தோழி, தலைவனிடம் நீ விரைந்து வாராய்; பனியும் வாடையும் தலைவியை வாட்டும் ; ஆகவே உம் நாட்டுக்குச் செல்ல வேண்டாம்’ என்று கூறுவதாக அமைந்துள்ளது.

• வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிவு

களவில் இரு பிரிவுகள் உண்டு. அலர் அடங்குவதற்காகச் சிறிது காலம் தலைவன் தலைவியைச் சந்திக்காமல் இருப்பான். இது ஒருவழித் தணத்தல். களவு வாழ்க்கையில் ஈடுபட்ட தலைமகன் திருமணத்திற்காகவும் கற்பு வாழ்க்கைக்காகவும் வேண்டிப் பொருள் தேடப் பிரிவான். இது வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவு. தலைவன் தானாகவே முன்வந்தோ தோழியால் அறிவுறுத்தப்பட்டோ வரைவுக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் பொருள் தேடுவதற்காகப் பிரிவான்.

பிரிவின் கண் தலைவி ஆற்றியிருக்கத் துணை செய்யும் தோழி, அவன் வரவையும் உணர்த்தும் செயலில் ஈடுபடுவாள்.

பாடல் (217) தலைவனின் வரவை உணர்த்தி, தலைவியைப் புத்துணர்வு கொள்ளச் செய்யும் தோழியின் செயற்பாட்டை விளக்கியுள்ளது.

• மண அறிவிப்பு / வரைவு

களவில் வந்தொழுகும் தலைமகன் வரைய முற்படுவான். ஏதோ ஒரு வகையில் தலைவனோடு தலைவியின் குடும்பத்தார் உடன்பட்டு, திருமணத்திற்கு முயல்வர். இதனைத் தோழி அறிந்து தலைவிக்குக் கூறுவாள்.

எக்கர் ஞாழல் மலரில் மகளிர்

ஒண்டழை அயரும் துறைவன்

தண்டழை விலையென நல்கினான் நாடே

(147)

(தழை விலை = இது ஆடை விலையென்று பொருள் பட்டாலும் திருமணத்துக்காகத் தலைவன் தந்த பொருளைக் குறிப்பிடுகிறது.)

என்ற பாடல் தலைவன் பரிசம் போட்டதை அறிவிப்பதாகும். சுற்றத்தார் வேண்டும் பொருள் கொடுத்து, தலைவன் வரைவு ஏற்பாடு செய்தமை அறிந்து மகிழ்ந்து தோழி அதனைத் தலைவிக்கு அறிவிக்கின்றாள். தழையின் விலைக்கு ஈடாகத் தனது நாடுகளைக் கொடுத்தான். அதாவது பரிசம் போட்டான் என்ற செய்தியைத் தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

• உடன் போக்கு

களவு வாழ்க்கை மேற்கொண்டிருந்த தலைவன், தானாக முன்வந்தோ தலைவியால் அறிவுறுத்தப்பட்டோ தலைவியை உடன் கொண்டு செல்வான். இது உடன்போக்கு எனப்படும். இதுவும் பிரிவு என்றே கொள்ளப்படும். இருப்பினும் இது தலைமகளை உடன் கொண்டு அவள் தமரைப் பிரியும் பிரிவாகக் கூறப்படும்.

உடன்போக்கிற்குத் தோழி ஏற்பாடு செய்வாள்.

தலைவி உடன்போக்கில் இருந்த போது அவளது தோழியை விட அவளது ஊர் கவலையில் இருந்த செய்தியைக் கூறுவதாகப் பாடல் 389 அமைந்துள்ளது.

உடன்போக்குக் குறித்த பாடல்களில், தலைவி, தோழி கேட்கும் வினாக்களுக்கு விடையிறுப்பதாகச் சில பாடல்கள் ஐங்குறுநூற்றில் உள்ளன.

உடன்போய் மீண்ட தலைவியிடம், நீ சென்ற நாட்டுக் குடிநீர் நன்றாக இருக்காது என்று தோழி கூறுகிறாள். இல்லை, இல்லை இனிமையான நீர் என்று பதிலிறுக்கிறாள் தலைவி. இது தலைவியின் அன்பை வெளிக் கொணர, தோழி கையாளும் உத்தி ஆகும்.

அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்

தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு

உவலைக் கூவல் கீழ

மான்உண்டு எஞ்சிய கலிழி நீரே

(203)

(படப்பைத் தேன் = தோட்டத்துத் தேன் ; உவலைக் கூவல் = தழை மூடிய கிணறு ; கீழ = அடியில் உள்ள ; கலிழி நீர் = கலங்கிய நீர்)

என்ற பாடல் மேற்கூறிய செய்தியைத் தாங்கி நிற்பதாகும்.

• மாற்று நிகழ்வுகள்

தோழியர் கூட்டத்தில் இங்ஙனம் ஆற்றொழுக்காக நிகழ்வுகள் அமையாமல் எதிர் விளைவுகளும் உண்டு. வெறியாட்டு, நொதுமலர் வரைவு போன்றவை மாற்று நிகழ்வுகளாக அமையும். அவற்றை இனிக் காண்போம்.

• வெறியாட்டு விலக்கல்

களவின் வழி ஒழுகும் தலைவியின் மேனி இற்செறிப்பு முதலியவற்றால் வேறுபடும் ; மெலியும். இந்த உண்மை அறியாத தாய், இவ்வேறுபாடு எதனால் ஆயிற்று என்று அறிவரை வினவ, அவர்கள் குறி பார்த்து முருகனால் ஆயிற்று என்பர். குறிபார்க்கக் கழங்கு முதலியவற்றைப் பயன்படுத்துவர். தலைவிக்கு ஏற்பட்ட குறையைப் போக்க வேலன் என்பவனால் பூசைகள் நிகழ்த்துவர். இது வெறியாட்டு எனப்படும். தோழி வெறியாட்டை விலக்க உண்மையை மறைமுகமாகச் சொல்வாள். இது வெறிவிலக்கல் ஆகும். வெறிவிலக்கலாய் அறத்தொடு நிலையும் ஆகும்.

பெய்ம்மணல் வரைப்பில் கழங்குபடுத்து அன்னைக்கு

முருகென மொழியும் வேலன் ; மற்றவன்

வாழிய – இலங்கும் அருவிச்

சூர்மலை நாடனை அறியா தோனே.

(249)

கழங்கை வைத்துத் தலைவிக்கு வந்த நோய் முருகனால் வந்தது என வேலன் மொழிந்ததைக் கேட்ட தாய், அதனை உண்மை என நம்புகிறாள் ; தாய் கேட்குமாறு, அந்த வேலன் தலைவிக்கும் தலைவனுக்கும் உள்ள தொடர்பை அறியாதவன் என்று தோழி தெரிவிக்கிறாள். இந்தப் பாடல் அதனை எடுத்துக் காட்டுகிறது.

குறிஞ்சித் திணைப் பகுதியில் அமைந்துள்ள வெறிப்பத்து பாடல்கள் யாவும் வெறியாட்டு, வெறிவிலக்கல், அறத்தொடுநிற்றல் என்ற நிலைகளில் அமைந்தவை ஆகும்.

• அறத்தொடு நிற்றல்

அறத்தின் வழி ஒழுகுதல் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். கற்பென்னும் கடைப்பிடியில் நின்று களவொழுக்கத்தைப் பெற்றோர்க்கு வெளிப்படுத்துதல் என்பது இத்துறையின் பொருளாகும். தலைவி ஏற்கெனவே கற்பு நெறிப்பட்டு விட்டாள், அறத்தோடு பொருந்தவே நடந்துள்ளாள் என்பதை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அறிவிப்பது அறத்தொடு நிற்பதாகும்.

தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்பாள். தோழி, செவிலிக்கு அறத்தொடு நிற்பாள். செவிலி, நற்றாய்க்கு அறத்தொடு நிற்பாள். நற்றாய், தந்தை மற்றும் தமையனார்க்கு அறத்தொடு நிற்பாள்.

அறத்தொடு நிலை இரண்டு சூழலில் ஏற்படும். தலைவிக்கு இற்செறிப்பு நிகழ்ந்து, உடல் மெலிந்து, வெறியாட்டு நடக்கின்ற போது அறத்தொடு நிலை நிகழும். தலைவிக்கு வேற்றுவரைவுக்கு முயலும் போதும் அறத்தொடு நிற்றல் இடம் பெறும்.

• முதல் நிலை

இற்செறித்த இடத்துத் தலைவிக்கு எய்திய வேறுபாடு கண்டு இது தெய்வத்தான் வந்தது என்று கருதி வெறியாட்டு எடுக்க முற்படுகின்ற போது தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்பது முதல் நிலை (பாடல் 28).

பொய்படுபு அறியாக் கழங்கே ! மெய்யே

மணிவரைக் காட்சி மடமயில் ஆலும்நம்

மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன்

ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள்

பூண்தாங்கு இளமுலை அணங்கி யோனே

(250)

(பொய்படுபு அறியா = பொய்யாகாத ; வேள் = முருகன் ; இவள் பூண்தாங்கு இளமுலை அணங்கியோன் = இவளை வருத்தும் நோயைத் தந்தவன்)

என்ற பாடல் நேரிடையாகவே, நோய் முருகனால் வந்தது அல்ல, இது காதல்நோய் என்று கூறி அறத்தொடு நிற்பதாக அமைந்துள்ளது.

• இரண்டாம் நிலை

வேற்று வரைவு நிகழ்த்த முயலுகையில் அறத்தொடு நிற்பது இரண்டாம் நிலை.

தலைவியை அயலார் மணம் பேச வந்தனர். இப்போது செவிலி கேட்கும் வகையில் தலைவி தனக்கும் தலைவனுக்கும் உள்ள தொடர்பைத் தோழியிடம் எடுத்துரைக்கின்றாள் (201).

அவ்வாறே, நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்பாள்.

வேற்றுவரைவின் கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றதைப் பாடல் 110 கூறுகிறது. புன்னை மலர்கள் பரந்து உதிர்ந்து கிடக்கும் துறையை உடையவன் தலைவன். அத்தகையவனை யாம் எம் தலைவன் என்று கூறுகிறோம். இவ்வூரில் உள்ளவர் வேறொன்றாகக் கூறுவர். ஆதலால் ஊழ் அவ்வண்ணமும் ஆக்குமோ? என்று தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கிறாள் (110).

தலைவன் தலைவி களவு வாழ்க்கை வெற்றிகரமாக நடந்து கற்பு வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்கப் பல்வேறு வகைகளில் தோழி உதவுவாள். இவையே பாங்கியிற் கூட்டம் என்று விளக்கப்பட்டன.

• வாழ்த்து

மணம் முடித்துப் பள்ளியறைக்குச் செல்லும் தலைவனிடம் தோழி ஒரு வேண்டுகோளை வைக்கின்றாள்.

எக்கர் ஞாழல் பூவின் அன்ன

சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு

அணங்குவளர்த்து அகறல் வல்லா தீமோ.

(149)

இவளுக்கு வருத்தம் உண்டாக்கிப் பிரியாதிருப்பாய் ஆகுக என்பதே தோழியின் வேண்டுகோள்.

3.1.6 களவில் பிறர்களவு வாழ்க்கையில் உடன்போக்கு, அறத்தொடு நிற்றல் ஆகியவற்றில் செவிலி, நற்றாய், கண்டோர் ஆகியோரின் பங்கு உண்டு. சிலவற்றைக் காண்போம்.

• செவிலி

உடன்போகிய தலைவியை எண்ணிப் புலம்புவதும் சுரத்தில் (பாலை வழியில்) சென்று தேடுவதும் கண்டோரை வினவுவதும் செவிலியின் செயற்பாடுகள் ஆகும்.

• நற்றாய்

தலைவி தலைவனுடன் போகியவழி நற்றாய் புலம்புவது உண்டு. ஐங்குறுநூற்றில் மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து என்ற பகுப்பே இந்நிலையில் அமைந்துள்ளது. இப்பகுப்பில் முதல் ஒன்பது பாடல்கள் நற்றாய் புலம்புவதாகும்.

மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்

உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச்

சுரநனி இனிய ஆகுக தில்ல

அறநெறி இதுவெனத் தெளிந்தஎன்

பிறைநுதல் குறுமகள் போகிய சுரனே

(371)

(சுரம், சுரன் = பாலை நிலம்)

என்ற பாடல் உடன்போகிய தன் மகளுக்கு அதாவது தலைவிக்கு இடையூறு எதுவும் ஏற்படக் கூடாது என வேண்டும் நற்றாய் கூற்றைக் கொண்டுள்ளது. இதுவே அறநெறி என்று தெளிவான முடிவு எடுத்துக் காதலனுடன் சென்ற என் மகளுக்கு அவள் செல்லும் பாலை வழி இனியதாக அமையட்டும் என்பது இதன் பொருள்.

• கண்டோர்

உடன்போக்கில் இருக்கும் தலைவன் தலைவியைக் கண்டோர் வியந்து கூறுவது, அறிவுரை கூறுவது, தலைவன் தலைவியர் கூறுவதை அறிந்து ஆயத்தாரிடம் கூறுவது எனக் களவு வாழ்க்கையில் கண்டோர் (பிறர்) பங்கு அமையும். உடன்போக்கின்கண் இடைச் சுரத்து உரைத்த பத்து என்ற பகுப்பில் கண்டோர் கூறுவதும், கண்டோரிடம் தலைவி கூறுவதும் இடம் பெற்றுள்ளன.

பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து

செங்கான் மராஅத்த வரிநிழ லிருந்தோர்

யார்கொல் அளியர் தாமே – வளர்சிறைக்

குறுங்கால் மகன்றில் அன்ன

உடன்புணர் கொள்கைக் காத லோரே?

(381)

(நெல்லி = நெல்லிக்காய்; மிசைந்து = தின்று; அளியர் = இரக்கத்துக்குரியவர்; உடன்புணர் கொள்கை = உடன்போக்கு மேற்கொண்டுள்ள)

என்ற பாடல் உடன்போக்கில் வழியிடையே தலைவன் தலைவியரைக் கண்டவர் வியந்து சொல்லியது ஆகும்.

தலைவி தலைவனுடன் சென்ற செய்தியைத் தன் தாயிடம் கூறுமாறு தலைவி கண்டோரிடம் கூறுவதுண்டு (385). இதுபோல் ஆயத்தார்க்குச் சொல்லி அனுப்புவதும் உண்டு. (ஆயம் – தோழியர் கூட்டம்)

இடைச்சுரத்தில் கண்டார் தாமே வந்து தாயாரிடம் உரைப்பதுண்டு. இடைச்சுரத்தில் தேடி வரும் செவிலித்தாயிடம் உலக இயற்கை கூறிச் செல்வதிலும் கண்டோரின் பங்கு உண்டு.(387)

3.2 கற்பு

அகத்திணை ஒழுக்கத்தில் களவை அடுத்துத் தொடரும் ஒழுக்கம் கற்பு ஆகும். மறைந்தொழுகிய காதலர்கள் ஊரறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் பகுதியே இது. கற்பு வாழ்க்கையில் பல்வேறு பிரிவுகளை மையமாகக் கொண்டு பாடல்கள் அமையும்.

3.2.1 திருமணம் களவு வழியிலும் திருமணம் நடைபெறும். களவின்றியும் நிகழும். களவு வழியில் நிகழும் திருமணம், களவு வெளிப்படா முன்னும் நிகழும் வெளிப்பட்ட பின்னும் நிகழும்.

• களவு வழி : களவு வெளிப்படாமுன்

பாடல் (280) களவின் வழி வந்த திருமணத்தை, அதிலும் களவு வெளிப்படா முன் நிகழ்ந்த திருமணத்தைக் குறித்துக் கூறுகிறது. வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிந்து பின் மணங்கொள்வதெல்லாம் களவு வெளிப்படா முன் நிகழும் திருமணங்களாகும்.

• களவு வழி : களவு வெளிப்பட்ட பின்

பாடல் (399) நற்றாய் கூற்று ஆகும். திருமணம் தலைவி இல்லத்தில் நடைபெறுகிறது. தலைவனின் தாயிடத்தில் யாரேனும் சென்று சொல்ல வேண்டும் என்று நற்றாய் விரும்புகிறாள். தலைவனின் தாய், தலைவியின் தாய் எல்லாருக்கும் தெரிந்த பின் இம்மணம் நடப்பதால் இது களவு வெளிப்பட்டபின் நிகழும் மணமாயிற்று.

• களவு வழி வாராத் திருமணம்

களவு வாழ்க்கையில் தொடராமல் பெரியோர் பேசி முடிக்கும் திருமணங்களும் உண்டு. இத்தகைய திருமணம் நடைபெறும் வகையில் பாடல் சான்று ஐங்குறுநூற்றில் இல்லை. எனினும் குறிப்புகள் உள்ளன. நொதுமலர் வரைவு, வேற்று வரைவு முயற்சிகள் அறிந்து தோழி அறத்தொடு நிற்பது, களவு வழி வாராமல் திருமணங்கள் நடக்கின்றன என்பதற்குச் சான்று ஆகும்.

எவ்வழியில் கற்பு வாழ்க்கை (திருமண வாழ்க்கை) வரினும் சிறப்புடையதே ஆகும். திருமணத்திற்குப் பின் இல்லறத்தை இனிதாக நடத்த வேண்டும்.

3.2.2 இல்லறத்தில் அன்பு கற்பு வாழ்க்கை மேற்கொண்டிருக்கும் தலைவன் தலைவியரிடையே அன்பு மிக்கிருக்க வேண்டும்.

இல்லறத்திற்கு இன்றியமையாதது அன்பு. தலைவன் தலைவியரிடையே அமைந்த அன்பு பற்றி, செவிலித்தாய் நற்றாயிடம் பல பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளாள்.

மாதர் உண்கண் மகன்விளை யாடக்

காதலித் தழீஇ இனிதிருந் தனனே

– 406

(மகன் விளையாடுவதைப் பார்த்த படியே தான் விரும்பிய மனைவியைத் தழுவிக் கொண்டு மகிழ்ச்சியோடு இருந்தான்.) எனவும், இன்னும் பலவாறும், தலைவன் தலைவி மீதும், குழந்தை மீதும் கொண்ட அன்பு செவிலியால் விளக்கப்பட்டுள்ளது.

3.3 பிரிவு இல்லறத்தில், கற்பு வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தலைவன் தலைவி இன்பத்தை மட்டுமே நுகர்ந்ததாய் அமையும் பாடல்களைவிடப் பிரிந்து துன்புறுவதாய் அமையும் பாடல்களே மிகுதி. பிரிவிலேதான் அன்பை மிகுதியாக வெளிப்படுத்த முடியும் என்பதால் பிரிவுப் பாடல்கள் மிகுதியாயின.

ஓதற் பிரிவு, நாடுகாத்தல் பொருட்டுப் பிரிவு, இரு அரசர்களைச் சந்து (சமாதானம்) செய்தல் பொருட்டுப் பிரிவு, அரசன் ஆணைப்படி ஏதாவது ஒரு காரணத்திற்காகப் பிரிவு, பொருள் தேடுதற் பொருட்டுப் பிரிவு, பரத்தையிற் பிரிவு என, கற்பு வாழ்க்கையில் பல பிரிவுகள் உண்டு. இவற்றுள் சில பிரிவுகள் ஐங்குறுநூற்றில் இடம் பெற்றுள்ளன.

3.3.1 வேந்தன் பொருட்டுப் பிரிவு நாடு காத்தல், அரசர்களுக்குச் சந்து செய்வித்தல், அரசன் ஆணைப்படி ஏதாவது காரணத்திற்காகச் செல்லுதல் என மூன்று பிரிவுகளும் வேந்தன் பொருட்டு மேற்கொள்ளும் பிரிவுகளாகும். இப்பிரிவையும், பிரியாமல் தவிர்த்தலையும் (செலவழுங்குதலையும்) குறித்துச் சில பாடல்கள் அமைந்துள்ளன.

பாசறைப் பத்து என்ற பகுப்பில் இடம் பெறும் பாடல்கள் வேந்தன் பொருட்டுப் பிரிந்து பாசறைக்கண் தங்கியிருக்கும் தலைவன், வினை (மேற்கொண்ட செயல்) முடியாமல் நீண்டதால் வருந்தி உரைப்பனவாய் அமைந்துள்ளன.

விரவுப் பத்து என்ற பகுப்பில் அமைந்த பாடல்கள் யாவும் தலைவன் தலைவியின் குறிப்புக் கண்டு தானே செலவழுங்கும் (பிரிவைத் தவிர்க்கும்) கருத்தைக் கொண்டு அமைந்துள்ளன.

3.3.2 பொருள் வயிற் பிரிவு இல்லறத்தை இனிது நடத்தப் பொருளும் தேவை. பொருளின் தேவையை உணர்ந்த தலைவன் பொருளுக்காகப் பிரிவான். இந்நிலையில் பல்வேறு கோணங்களில் பாடல்கள் அமையும்.

ஒரு தலைவன் பொருள்வயின் பிரியக் கருதுகிறான். அதனைத் தோழியிடம் சொல்கிறான். தோழி, தலைவி வருந்துவாள் எனக் கூறி அவன் போக்கைத் தடுக்கின்றாள் (301).

நீ பிரியும் பிரிவால் பொருள் கிடைக்காமலும் போகலாம். நீ போகாமல் தலைவியும் உன்னைத் தடுக்கலாம். எனவே, பிரியாமல் இருப்பதே நல்லது என்று கூறி, தோழி பொருள் வயிற் பிரிவைத் தடுப்பதும் உண்டு. (302)

3.3.3 இடைச்சுரத்து நினைதல் வேந்தன் பொருட்டு அல்லது பொருள்வயிற் பிரியும் தலைவன், பிரிந்து சென்று கொண்டிருக்கும் பாதையில் தலைவியின் குணநலன்களை நினைவு கூர்வான்.

321, 322ஆம் பாடல்கள், தலைவன் தலைவியை இடைச்சுரத்தில் நினைப்பதையும், நினைப்பதால் வெம்மையான கானம் குளிர்ச்சி தருவதாய் அமைவதையும் காட்டுகின்றன.

3.3.4 வினை மீட்சியில் நினைதல் வேந்தன் பொருட்டு அல்லது பொருள் வயிற் பிரிந்த தலைவன் மீண்டு வரும் போது தேர்ப்பாகனிடம் பேசுவான்.

தலைவி வருத்தம் தீர்வாள் என்பதாகவும் (422), தன் வருத்தம் தீரும் (425) என்பதாகவும், தலைவன் வினை மீட்சியின் போது இடைச்சுரத்தில் தேர்ப்பாகனிடம் கூறுகிறான்.

3.3.5 பரத்தையர் பிரிவு தலைவனுக்கு, மணம் செய்து கொண்ட தலைவி அல்லாமல் வேறு சில பெண்களோடும் தொடர்பு உண்டு. அவர் பரத்தையர் எனப்படுவர். பரத்தையரில் பல்வேறு வகையினர் உண்டு. கற்பு வாழ்க்கையில் இருக்கும் தலைவன், இப்பரத்தையர் பொருட்டாகத் தலைவியைப் பிரிந்து செல்வான். இது பரத்தையர் பிரிவு எனப்படும். இப்பிரிவில் தோழி, தலைவன், பாணன் முதலிய வாயில்கள் ஆகியோர் வழி, கூற்றுகள் நிகழும். இதன் அடிப்படையில் சில பாடல்களைக் காண்போம்.

• தலைவி – தலைவன்

பரத்தையர் பிரிவு தொடர்பாகத் தலைவன் தலைவியரிடையே கூற்று நிகழும். பல பரத்தைகளைத் தொடர்ந்து மணக்கும் தலைவன் இனி இங்ஙனம் செய்யேன் என்று கூறுகின்ற போது தலைவி மறுத்துக் கூறுவது உண்டு (61).

தவற்றை உணர்ந்த தலைவன் தானே வந்தும் வாயில்கள் மூலமும் குறையிரந்து (வேண்டி) நிற்பான். அந்நிலையில் தலைவி அவனையும் வாயில்களையும் இகழ்ந்து கூறுவாள் (41).

இப்பாடல் பரத்தையர் பொருட்டுப் பிரிந்த தலைவன், தன் பிள்ளையையே தின்னும் முதலை போன்ற கொடியவன் எனக் குறிப்பால் கூறி, தலைவி ஏற்க மறுக்கும் செய்தியைத் தாங்கி நிற்கிறது.

• தோழி – தலைவி

தலைவனின் புறத்தொழுக்கம் (இல்லறநெறி கடந்த பரத்தையர் பிரிவு) குறித்துத் தோழியிடம் தலைவிக்குக் கூற்று நிகழும்.

தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தைத் தலைவி தோழிக்கு உரைப்பாள் (15).

பரத்தையர் பிரிவு இயல்பு என்று கூறுகின்ற தோழியை மறுத்தும் தலைவி கூறுவாள்.

• தலைவி – வாயில் மறுத்தல்

தலைவனை ஏற்கச் சொல்லிப் பாணன் முதலிய வாயில்கள் தலைவியிடம் முறையிட்டு நிற்கும். அப்போது தலைவி வாயிலை ஏற்க மறுப்பாள். இது வாயில் மறுப்பதாகும். தலைவன் தொடர்பு கொண்டுள்ள பரத்தையர் நள்ளிரவு நேரத்திலும் துயிலாதவர்கள். உண்மை இங்ஙனமிருக்கத் தலைவன் எப்படி அவர்களைப் பிரிந்து வருவான் எனத் தலைவி பேசுவதாகப் பாடல் (13) அமைந்துள்ளது. இவ்வகையில் பல பாடல்கள் (18, 131, 16) அமைந்துள்ளன.

• தோழி – தலைவி

தலைவனுக்கு ஆதரவாக அல்லது வாயில் நேரக் கூறும் வகையில் தோழி தலைவியிடம் பேசுவதுண்டு. (27)

• தோழி – தலைவன்

தலைவன் பரத்தையர் காரணமாகப் பிரிந்து மீண்டுவந்து தோழியிடம் குறையிரந்து நிற்பான். அப்போது அவனை ஏற்றோ, மறுத்தோ அவள் பேசுவதுண்டு.

தலைவன் வாயில் வேண்டி நிற்கும் போது தோழி, தலைவியின் குறிப்பறிந்தோ, தானாகவோ வாயில் மறுத்துப் பேசுவாள் (55).

• பரத்தை . தலைமகன்

பரத்தை தலைமகளை எண்ணித் தலைவனிடம் கூற்று நிகழ்த்துவாள்.

பாடல் 121 பரத்தை, தலைவி குறித்துப் பேசியதற்குச் சான்று ஆகும். அவள் தலைவி குறித்து நகையாடிப் பேசுவதும் உண்டு. இந்நிலையில் கிழவற்கு உரைத்த பத்து என்ற பகுப்பில் அமைந்த பாடல்கள் உள்ளன.

• பரத்தை – பரத்தையின் தோழி

தலைவன், தலைவியின் இல்லத்திற்குச் செல்லக் கருதுவான். அதனைப் பரத்தையர் தோழி அறிந்து பரத்தைக்கு உரைப்பாள். அங்ஙனம் உரைக்கும் தோழிக்குப் பரத்தை பதில் கூறுவாள். (38)

………………………………… நம்வயின்

திருந்திழைப் பணைத்தோள் நெகிழப்

பிரிந்தனன் ஆயினும் , பிரியலன் மன்னே

- 39

என்ற பாடல் பரத்தையின் நலனை (அழகை) எல்லாம் உண்டு பிரிந்தான் என்று தலைவி கூறியதாகக் கேள்விப்பட்ட பரத்தை, தன் தோழிக்குக் கூறுவது போல் கூறியதாகும். அதாவது, பரத்தையை விட்டுத் தலைவன் வீடு திரும்பினாலும், ‘அவன் மனத்தளவில் நம்மை விட்டுப் பிரிய முடியாதவன்’ என்று பரத்தை பெருமிதத்தோடு சொல்கிறாள்.

3.4 தொகுப்புரை

களவு, கற்பு என்னும் இரு கைகோள்களின் வழி ஐங்குறுநூற்றுப் பாடல்களை அறிய முற்பட்டதில் கீழ்க்காணும் செய்திகளை அறிய முடிந்தது.

களவு வாழ்க்கை இயற்கைப் புணர்ச்சியாக, பாலது ஆணையில் தொடங்கி நான்கு வகைக் கூட்டங்களில் நடப்பதை அறிய முடிந்தது. அதில் பாங்கியிற் கூட்டம் மிகுதியாக இருந்ததை அறிய முடிந்தது.

கற்பு வாழ்க்கை களவின் வழியும், களவு வழி அல்லாமலும் தொடங்கி இல்லறச் சிறப்பில் மேன்மையுற்றதை அறிய முடிந்தது. அன்பின் மிகுதியை வெளிப்படுத்தப் பிரிவுகளும் பிரிவுப் பாடல்களும் மிகுந்த அளவிலிருப்பதை அறிய முடிந்தது.

பாடம் - 4

அகநானூறு – 1

4.0 பாட முன்னுரை

தமிழ் இலக்கிய உலகின் முழுமையான முன்னோடி இலக்கியங்கள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகும். இவை சங்க இலக்கியங்கள் எனப் பெருவழக்காகவும் பதினெண் மேல்கணக்கு நூல்கள் என்று அருகிய வழக்காகவும் குறிக்கப்படுகின்றன. இந்தப் பாடம் சங்கத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூறு என்ற அக இலக்கியம் பற்றியது. அகநானூற்றின் அமைப்பையும் சிறப்பையும் இது விளக்குகிறது.

4.1 அகநானூறு ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் பாடல்கள் நானூறு தொகுக்கப்பட்டு அகநானூறு என்ற பெயரால் குறிக்கப்பட்டன. பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்ற மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மன் என்ற புலவர் இந்நூலைத் தொகுத்துள்ளார். 145 புலவர் பெருமக்கள் இந்நானூறு பாடல்களையும் பாடியுள்ளனர். இந்நூலுக்கு நெடுந்தொகை என்ற வேறு பெயரும் உண்டு. இது அருகிய வழக்காகவே உள்ளது. களிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது இந்நூல். களவு, கற்பு என்ற இரு கைகோளிலும் (ஒழுக்கத்திலும்) அமைந்த முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய திணைப்பாடல்களைக் கொண்டது; இலக்கியத் தரம் மிக்கது.

4.1.1 அகத்தில் சிறப்பு எட்டுத்தொகை என்ற தொகுப்பில் உள்ள நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய நூல்களும் முழுமையாக அகம் பற்றியே அமைந்துள்ளன; அகத்தைக் கூறவே எழுந்தன. இருப்பினும் இந்நூலுக்கே அகம் என்ற சொல் கொடுத்து அகநானூறு என்று வழங்கியுள்ளனர். இது இந்நூலில் அகப்பொருள் சிறந்திருத்தலைக் காட்டுகிறது

• நெடுந்தொகை – பெயர்ச் சிறப்பு

இந்நூலுக்குரிய நெடுந்தொகை என்னும் பெயருக்கும் தனிச்சிறப்பு உண்டு. மிக அதிகமான அடிகளைக் கொண்ட நெடும் பாட்டுகள், தனித் தனியாகப் பெயரிடப்பட்டுப் பத்துப்பாட்டு எனப் பெயரிடப்பட்டன. சிறு சிறு பாடல்களின் தொகுப்பே எட்டுத்தொகை எனப்பட்டது. எட்டுத்தொகையில் அகநானூற்றைக் காட்டிலும், பரிபாடல், கலித்தொகை ஆகிய இரு நூல்களும் மிகுதியான அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டவையாகும். இருப்பினும் அகநானூற்றிற்கே நெடுந்தொகை என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ‘நெடு’ என்ற அடை, அடிகளின் மிகுதியைக் குறிக்கவில்லை எனத் தெரிகிறது. ‘நெடு’ என்ற அடைமொழி அகநானூற்றுப் பாடல்களின் பொருட் சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவே வழங்கப்பட்டுள்ளது.

4.1.2 முப்பகுப்பு அகநானூறு மூன்று பெரும் பகுப்புகளை உடையது. இப்பகுப்பு ஐங்குறுநூறுபோலத் திணையையும் பாடல்களின் எண்ணிக்கையையும் கொண்டோ, கலித்தொகை போலத் திணையை அடிப்படையாகக் கொண்டோ பகுக்கப்பட்டது அல்ல. பாடல்களின் நடை அமைப்பைக் கொண்டு பகுக்கப்பட்டதாகும். இதுவும் இந்நூலுக்குரிய தனிச் சிறப்பாகும்.

அகநானூற்றின் பாயிரப் பகுதி (முன்னுரைப் பகுதி) இப்பகுப்பைச் சுட்டியுள்ளது. மூன்று பகுப்பிலும் இடம் பெற்றுள்ள பாடல்கள் எவை என்பதைப் பாயிரத்தைத் தொடர்ந்து வரும் உரைநடைப்பகுதி விளக்கியுள்ளது.

அதாவது, முதல் 120 பாடல்கள் களிற்றியானை நிரை என்றும், 121 முதல் 300 வரை அமைந்த 180 பாடல்கள் மணிமிடை பவளம் என்றும், இறுதி 100 பாடல்கள் நித்திலக் கோவை என்றும் பகுக்கப்பட்டுள்ளன.

காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்

ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு

மணிமிடைந்தன்ன குன்றம்

(14)

மணிமிடை பவளம்போல அணிமிகக்

காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்

ஈயன் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப

(304)என்ற அகநானூற்றுப் பாடற் பகுதிகள் மணிமிடை பவளம் என்ற சொல்லாட்சியை உவமைக்காகப் பயன்படுத்தியுள்ளன. இது கொண்டு மூன்று பகுப்புகளும் ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப் பட்டுள்ளன என்று உணரமுடிகிறது.

4.1.3 முறை வைப்பு சங்கப் பாடல்களின் முதல்பகுப்பு, பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்பதாகும். நெடும்பாடல்கள் பத்து தனித்துக் கூறப்பட்டது. எட்டுத்தொகை நூல்களின் பகுப்பு, பல கூறுகளை உடையது. முதற்பகுப்பு பாடுபொருளை அடிப்படையாகக் கொண்டது. பாடுபொருள்கள் அகம், புறம் என்பனவாகும். பல்வேறு புலவர்களால் பாடப்பட்டு ஆசிரியப்பாவால் அமைந்த நானூறு புறப்பாடல்களின் தொகுப்பு புறநானூறு எனப்பட்டது. பத்துப் புலவர்கள் பாடிய பப்பத்துப் புறப்பாடல்களின் தொகுப்பு பதிற்றுப் பத்து எனப்பட்டது.

பாடுபொருளால் பிரிக்கப்பட்ட நூல்கள், யாப்பு வகையால் வேறு பகுக்கப்பட்டன. ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் என்ற யாப்பு வகைகள் இப்பகுப்பிற்கு உரியவை. பல்வேறு புலவர்கள் பாடிய அகமும் புறமும் தழுவிய பரிபாடல் யாப்பு, பரிபாடல் என்னும் தனி நூலாயிற்று. திணைக்கு ஒரு புலவர் என ஐந்து புலவர்கள் கலிப்பாவில் பாடிய அகப்பாடல்களின் தொகுப்பு திணை முறைவைப்பில் கலித்தொகை எனப்பட்டது.

பாடுபொருள்-யாப்பு எனப் பிரிக்கப்பட்டு, யாப்பு வகையில் மிகுந்து காணப்பட்ட ஆசிரியப்பாக்கள், அடிவரையறையால் பாகுபடுத்தப்பட்டன.

திணைக்கு ஒருவர், நூறு பாடல்கள் என ஐந்து புலவர்கள் பாடிய ஐந்நூறு பாடல்களின் தொகுப்பு ஐங்குறு நூறு எனப்பட்டது. இது மூன்று அடிகள் முதல் ஆறுஅடிகள் வரையிலான பாடல்களைக் கொண்டது. 205 புலவர்கள் பாடிய நான்கு அடிகள் முதல் எட்டு அடிகள் வரையிலான பாடல்களின் தொகுப்பு குறுந்தொகை எனப்பட்டது. 175 புலவர்கள் பாடிய 9அடிகள் முதல் 12 அடிகள் வரையிலான பாடல்களின் தொகுப்பு நற்றிணை எனப்பட்டது. 145 புலவர்கள் பாடிய 13 அடிகள் முதல் 31 அடிகள் வரையிலான பாடல்களின் தொகுப்பு அகநானூறு எனப்பட்டது.

பல புலவர்கள் பல திணைகளில் பாடிய பாடல்கள் ஒன்றோ பலவோ கொண்ட அகநூல்கள் மூன்று ஆகும். அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்பனவாகும். இவற்றுள் அகநானூறு பாடல் எண், மற்றும் திணை முறைவைப்பில் ஓர் ஒழுங்கினைப் பின்பற்றியிருப்பது தனிச் சிறப்பிற்குரியதாகும்.

!–s–>

1. 3, 5, …………399 எனவரும் பாடல்கள் பாலைத்திணை -200

(ஒற்றைப்படை எண்கள் அனைத்தும்)

2. 8, 12, ………398 எனவரும் பாடல்கள் குறிஞ்சித்திணை- 80

(பின்வருவன தவிர்த்த இரட்டைப்படை எண்கள் அனைத்தும்)

4, 14, ……………..394 எனவரும் பாடல்கள் முல்லைத்திணை- 40

(4இல் முடிவன)

6, 16, ……………..396 எனவரும் பாடல்கள் மருதத்திணை – 40

(6இல் முடிவன)

10, 20,……………..400 எனவரும் பாடல்கள் நெய்தல்திணை – 40

(0இல் முடிவன)

இதுவே அகநானூற்றில் காணப்படும் முறைவைப்பாகும். இச்சிறப்பு வேறு எந்த நூலிலும் காணப்படவில்லை. இம்முறைவைப்பை,

ஒன்றுமூன்று ஐந்துஏழ்ஒன் பான்பாலை ஓதாது

நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே

ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு

கூறுதலைக் குறிஞ்சிக் கூற்று

என்ற பழம்பாடல் குறிப்பிடும்.

4.1.4 பிற சிறப்புகள்அகநானூற்றில் இடம்பெற்றுள்ள உள்ளுறை, உரிப்பொருள் போன்றவை அகநானூற்றின் சிறப்புக் கூறுகளாக அமைந்துள்ளன. இதில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் செய்திகளும் சிறப்புக் கூறுகளாக அமைந்துள்ளன. • உள்ளுறைச் சிறப்பு

உள்ளுறையைப் பயன்படுத்திய அக நூல்களில் அகநானூறு நான்காவது இடத்தில் உள்ளது. மொத்தம் 51 பாடல்களில் உள்ளுறை அமைந்துள்ளது.

குறிஞ்சித் திணையில் 22 பாடல்களிலும் மருதத் திணையில் 14 பாடல்களிலும், நெய்தல் திணையில் 11 பாடல்களிலும், பாலைத் திணையில் 4 பாடல்களிலும் ஆக 51 பாடல்களில் உள்ளுறை இடம் பெற்றுள்ளது. முல்லைத் திணைப் பாடல்களில் உள்ளுறை இடம்பெறவில்லை.

• உரிப் பொருள் சிறப்பு

தொல்காப்பிய அகத்திணை இயலில் ஐந்து திணைகளின் உரிப்பொருளுக்குச் சான்று காட்டியுள்ள உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல்களை மட்டுமே காட்டி உள்ளது இந் நூலுக்குக் கிடைத்த சிறப்பு எனலாம்.

• வரலாற்றுச் சிறப்பு

இந்நூலில் மிகுதியான அளவில் வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. 116 பாடல்களில் ஏறத்தாழ 87 அரசர்கள் மற்றும் படைத் தலைவர்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஒரே பாடலில் (44) ஒன்பது அரசர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுவும் இந் நூலுக்குரிய சிறப்பு ஆகும்.

4.2 இலக்கிய மதிப்பு

இலக்கியம் என்பது கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இது மேல்நாட்டார் கூறும் இலக்கியக் கொள்கையாகும் .இந்த அடிப்படைக் கூறுகள் இன்றி, உலகில் எந்த மொழியிலும் இலக்கியம் உருவாக முடியாது. எனவே, அகநானூற்றை இந்த அடிப்படைக் கூறுகளின் வழிஅறிவோம்.

4.2.1 கருத்துஇலக்கியம் என்றால் அது ஏதேனும் கருத்தை உணர்த்த வேண்டும். அகநானூறு அகப்பொருளை – அகப்பொருட் கருத்தை – உணர்த்த வந்தது. அகப்பொருள் அதாவது அக ஒழுக்கம் களவொழுக்கம், கற்பொழுக்கம் என இருவகைப்படும். • களவொழுக்கம்

தனக்கு நிகராகவோ தனக்கு மேலாகவோ ஒருவரும் இல்லாத தலைவன், அதே போன்ற தகுதி உடைய தலைவியை விதிவயத்தால் சந்தித்து உறவுகொள்வான். தனியே சந்திப்பதில் தடைகள் ஏற்படும்போது தோழன், தோழி ஆகியோரில் யாரேனும் ஒருவர் உதவியுடன் சந்திப்பான். இந்த ஒழுக்கம் பல்வேறு கூறுகளை உடையது. இதுவே களவொழுக்கம் எனப்படும்.

ஒரு தலைவன் விதி வழி நடத்த ஒரு தலைவியைத் தனியிடத்தில் கூடி மகிழ்கிறான். மறுநாளும் அவளைச் சந்தித்து மகிழலாம் என்று செல்கிறான். ஆனால் யாது காரணத்தாலோ அவள் அங்கு வரவில்லை. அதனால் வருத்தமடைந்த தலைவன் நேற்றைய மகிழ்வையும் இன்றைய துயரையும் நினைந்து புலம்புகின்றான் (அல்லகுறிப்பட்டுழித் தலைவன் வருந்தியது).

பாடல் 62 இக் கருத்தைத் தழுவி அமைந்துள்ளது.

• கற்பொழுக்கம்

கற்பொழுக்கம் என்பது தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்துவதாகும். இந்த இல்வாழ்க்கை களவு வாழ்க்கையின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம். பெற்றோர் செய்து வைத்த திருமணத்தைத் தொடர்ந்ததாகவும் இருக்கலாம். தலைவியின் இல்லறச் சிறப்பு, விருந்துபசரிப்பு, தலைவன் பொருளீட்டவோ நாடு காக்கவோ தலைவியைப் பிரிதல், பரத்தையர் பொருட்டுப் பிரிதல் போன்ற பலகூறுகளைக் கொண்டு கற்பு வாழ்க்கை அமையும்.

காதல் மனைவியைப் பிரிந்து ஒரு தலைவன் போருக்காகச் சென்றிருக்கின்றான், அவன் பாசறையில் இருக்கும்போது, தானும் தலைவியும் பிரிந்திருத்தலை எண்ணிப் புலம்புகிறான்:

…………………

புறவுஅடைந் திருந்த அருமுனை இயவில்

சீறூ ரோளே ஒண்ணுதல் -யாமே

…………………

அருந்திறை கொடுப்பவும் கொள்ளான், சினம்சிறந்து

வினைவயின் பெயர்க்கும் தானைப்

புனைதார் வேந்தன் பாசறை யேமே

(84)

(புறவு = காடு; சீறூரோள் = சிற்றூரில் இருக்கிறாள்; வினைவயின் பெயர்க்கும் = போரின் மேற்செல்லும்; தானை = சேனை; பாசறையேம் = பாசறையில் உள்ளோம்; இயவு = நெறி; திறை = கப்பம்)

4.2.2 வாழ்க்கைப் பாடம்அகநானூறு அகப்பொருளைக் கூற வந்தது என்றாலும் அறக் கருத்துகளையும் கூறத் தவறவில்லை.

———————- தண்துறை ஊர

விழையா உள்ளம் விழையும் ஆயினும்

என்றும் கேட்டவை தோட்டியாக மீட்டு ஆங்கு

அறனும் பொருளும் வழாமை நாடி

தன் தகவு உடைமை நோக்கி, மற்றதன்

பின்ஆ கும்மே முன்னியது முடித்தல்

அனைய பெரியோர் ஒழுக்கம் ; அதனால்

அரிய பெரியோர் தெரியுங் காலை

நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன

பொய்யொடு மிடைந்தவை தோன்றின்

மெய்யாண்டு உளதோஇவ் வுலகத் தான

(286)

(கேட்டவை = கேள்வியறிவு; தோட்டி = அங்குசம்; வழாமை = தவறாமை; முன்னியது = கருதியது; மிடைந்தவை = கலந்தவை)

என்ற பாடற்பகுதி வாழ்க்கைப் பாடம் கூறுவதாகும். ”பற்றற்ற உள்ளம் ஒரு சமயத்தில் ஒன்றை விரும்பினாலும் தாம் கேட்டறிந்த அறங்களைக் கருவியாகக் கொண்டு ஆசையை அடக்கி, அறத்தினும் பொருளினும் வழுவாமல் நின்று தன் தகுதியுடைமைக்குத் தக்கவாறு ஒழுகி, செய்யக் கருதியதைச் செய்து முடித்தலே செயல் சிறப்பும் பெரியோர் ஒழுக்கமும் ஆகும். அரிய பெரியோராக இருப்பவரிடத்தும் பொய்யானவை இருந்தால் இந்த உலகத்தில் உண்மையை எங்கே தேடுவது” என்ற கருத்தே மேற்கூறிய பாடற்பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இங்ஙனம் தாம் உணர்த்த வந்த அகப்பொருள் கருத்துகளோடு உலகுக்குத் தேவையான அறக்கருத்துகளையும் அகநானூற்றுப் பாடல்கள் வழங்குகின்றன. இங்ஙனம் அகநானூற்றுப் பாடல்கள் கருத்தமைதியில் சிறந்துள்ளன.

4.3 கற்பனை

ஒரு படைப்பாளன் தான் சொல்ல வந்த கருத்தை அழகுபடச் சொல்வதற்கு உதவுவது கற்பனை ஆகும். உள்ளதை உள்ளவாறு சொல்லாமல் உணர்ந்தவாறு சொல்லுதல் கவிதைக்கு அழகு செய்யும். அழகுக்கு உதவி செய்யும் கற்பனை உவமை, உருவகம் போன்ற வடிவங்களில் அகநானூற்றில் மிளிர்ந்துள்ளது.

4.3.1 உவமைகள் பெண்களை வர்ணிப்பதும் உவமிப்பதும் அனைத்து இலக்கியங்களுக்கும் ஒப்ப முடிந்த ஒன்று. இத்தகு உவமைகளே கற்பனை நயம் வாய்ந்த அணிகளாகும்.

• ஐய உவமை

பொருளை வேறொன்றாக மாற்றிப் பார்த்தல் ஐய உவமை எனலாம். இதனை மருட்கை உவமை என்றும் அறிஞர்கள் கூறுவர்.

ஆன்ற கற்பின் சான்ற பெரியள்

அம்மா அரிவையோ அல்லள்

தெனாஅது ஆஅய் நன்னாட்டு அணங்குடைச் சிலம்பில்

கவிரம் பெயரிய உருகெழு கவாஅன்

ஏர்மலர் நிறைசுனை உறையும்

சூர்மகள் மாதோ என்னும்என் நெஞ்சே.

(198;12-17)

என்ற பாடற் பகுதியில் ஐய உவமை அமைந்துள்ளது. தலைவியைப் பார்த்த தலைவன் அவளது அழகைப் போற்ற நினைக்கின்றான். அவளை மானுடப் பெண்ணாகத் தன்னுடைய நெஞ்சு ஏற்றுக்கொள்ளவில்லை, மாறாகச் சுனையிலே வசிக்கும் தெய்வப் பெண்ணாகவே கருதுகிறது என்று கூறுகிறான். உவமைக்கும் பொருளுக்கும் ஐயத்தை உண்டாக்குகிறான். எனவே, இது ஐய உவமையாகும்.

• விபரீத உவமை

வழக்கமாகப் பொருளாக வருவதை உவமையாக்கி, உவமையாக வருவதைப் பொருளாக்கிக் கூறுவது விபரீத உவமையாகும். அகநானூற்றில், ‘கண்போல் நெய்தல்’ (170:4) என்று விபரீத உவமை இடம்பெற்றுள்ளது. பொதுவாகக் கண்களுக்கு நெய்தற்பூவை உவமையாக்குவது மரபு. இங்கு நெய்தல் மலருக்குக் கண் உவமையாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

• இணைப்பு உவமை

உவமையையும் பொருளையும் இரட்டை இரட்டையாகக் கூறுவது சங்க இலக்கியத்தில் காணப்படும் சிறப்பாகும். இது அகநானூற்றிலும் உண்டு.

ஓவத் தன்ன வினைபுனை நல்லில்

பாவை அன்ன பலர்ஆய் மாண்கவின்

……………………………… மகள்

(98;11.13.)

என்ற பாடற் பகுதியில் இணைப்பு உவமை அமைந்துள்ளது. ஓவியம் போன்ற இல்லத்திலே பாவை போன்ற தலைவி இருப்பதாக உவமை அமைக்கப்பட்டுள்ளது.

• கருத்து விளக்க உவமைகள்

பொருளுக்கு அழகு சேர்ப்பதற்கு அல்லாமல் தாம் சொல்ல வந்த கருத்தை விளக்குவதற்குக் கவிஞர்கள் உவமைகளைக் கையாளுவார்கள். இங்ஙனம் அமையும் உவமைகளைக் கருத்து விளக்க உவமைகள் என்று குறிப்பிடலாம். இத்தகு உவமைகள் அகநானூற்றில் மிகுதி.

தலைவியது அழகு தலைவனுக்குப் பயன்படாமல் வீணாகிறது. அதாவது அவளது அழகு வெளிப்படாமல் இருக்கிறது. இதனை விளக்க நினைக்கின்றார் புலவர். வறியவர்களுக்கு ஒன்று ஈயாதவனுடைய செல்வம் வெளிப்படாததை உவமையாகக் கூறி விளக்குகிறார்.

இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல்

பரந்து வெளிப்படா தாகி

வருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே.

(276:13-15)என்பது அகநானூற்றுப் பாடற் பகுதியாகும்.

காம உணர்ச்சியை அடக்காமல், பலர் அறிய வெளிப்படுத்துபவர்களை நாணமற்றவர்கள் என்பார்கள். இதன் பொருள் காமத்தை அடக்கி ஆளவேண்டும் என்பதாகும். இருப்பினும் காமத்தை நாணத்தால் அடக்க முடியாது என்பதே உண்மை. இக்கருத்தை அழகான உவமை கொண்டு அகநானூற்றுப் புலவர் விளக்கியுள்ளார்.

உப்புச் சிறைநில்லா வெள்ளம் போல

நாணுவரை நில்லாக் காமம்

(208:19-20)என்பது பாடற்பகுதி. பெருக்கெடுத்து வருகின்ற வெள்ளத்தை (தண்ணீரை) உப்பால் அணை கட்டித் தடுக்க முடியுமா? அதுபோலத்தான் பெருக்கெடுத்துவரும் காமத்தை நாணம் என்ற அணை கொண்டு தடுக்க முடியாது என்று புலவன் தரும் விளக்கம் என்றும் போற்றற்குரியது.

• வரலாற்று உவமைகள்

ஏதேனும் ஒன்றை விளக்குவதற்காக வரலாறுகளைப் பயன்படுத்தும் போக்கு அகநானூற்றில் மிகுதி. வரலாற்றை உவமையாகப் பயன்படுத்தி உள்ளனர். உவமையாக வரலாறுகள் பயன்பட்டமையைக் காண்போம்.

• அடையாளம் காட்டும் வரலாறு

தலைவன் சென்ற காட்டை, காட்டுப் பாதையை விளக்கவும் அடையாளம் காட்டவும் வரலாறு உவமையாகி உள்ளது.

விளங்கு புகழ்நிறுத்த இளம்பெருஞ் சென்னி

……………..

வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்

கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்

அஞ்சுவரு மரபின் வெஞ்சுரம்.

(375:11-16)இளம்பெருஞ் சென்னி வடுகரை வீழ்த்திய வரலாறு இங்கே சுட்டப்படுகிறது.

• அழகுக்கு வரலாறு

பெண்களின் அழகுக்கு நகரங்கள் உவமையாகி உள்ளன. அப்போது அந்த நகரங்களின் அரசர்கள் பேசப்பட்டுள்ளனர்.

வான வரம்பன் வெளியத்து அன்னநம்

மாண்நலம்

(359:6-7)

குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்

மாந்தை அன்னஎன் நலம்

(376:17-18)

ஆரியர் அலறத் தாக்கிப் பேர் இசைத்

தொன்றிமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து

வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்

வஞ்சி அன்ன என் நலம்

(396:16-19)வஞ்சிவேந்தன் இமயத்தில் வில்லைப் பொறித்த செய்தி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடுகளின் அழகுக்கும் செழுமைக்கும் நகரங்கள் உவமையாகி உள்ளன.

கடல்அம் தானைக் கைவண் சோழர்

கெடல்அரு நல்லிசை உறந்தை அன்ன

நிதியுடை நல்நகர் புதுவது புனைந்து

(369:14-16)• அலரை விளக்க வரலாறு

தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள களவொழுக்கம் பற்றியும், பரத்தையர் ஒழுக்கம் குறித்தும் எழும் அலரை, வெற்றி பெற்ற வீரர்களின் ஆரவாரத்தோடோ விழாவின் ஒலியோடோ ஒப்பிடுவது அக்கால மரபு.

……………………………………. அலரே

காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால்

………………………………………………….. பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,

மொய்வலி அறுத்த ஞான்றை,

தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.

(246:7-14)(கரிகாலன் சிற்றரசர் பதினொருவரை வென்ற செய்தி)

எனப் போர் ஆரவாரமும்

………………………………….. கொங்கர்

மணியரை யாத்து மறுகின் ஆடும்

உள்ளி விழவின் அன்ன

அலர் ஆகின்றது

(368:16-19)(கொங்கர் நாட்டு விழா)

என விழாவும் அலருக்கு உவமை ஆகி உள்ளன.

இவைபோல் பலவற்றுக்கு வரலாற்றுச் செய்திகள் உவமையாகி உள்ளன.

• உள்ளுறை உவமைகள்

சொல்ல வந்த கருத்தை மறைமுகமாகச் சொல்வது உள்ளுறை. அக இலக்கியத்தில் முக்கியக் கூறு உள்ளுறை ஆகும். இதுவும் ஒருவகையில் உவமையே. ஆயினும் இதில் உவம உருபுகேளா அதுபோல இது என்ற விளக்கமோ இருக்காது. அகம் என்பது புறத்தார்க்குப் புலனாகாத – புலனாகக் கூடாத ஒழுக்கம். புறத்தார்க்குப் புலனாகக் கூடாத அகத்திற்கு உள்ளுறை அவசியம். அகநானூற்றில் இடம்பெற்றுள்ள உள்ளுறைகளைத் திணைக்கு ஒன்றாகக் காண்போம்.

பல குரங்குகளுக்குத் தலைமையேற்றிருக்கின்ற ஓர் ஆண் குரங்கு, ஒரு பலாப் பழத்தைத் தன் உடலோடு சேர்த்தெடுத்துச் சென்று தன் பெண் குரங்கை அழைக்கும் என்ற செய்தி ஒரு பாடலில் இடம்பெற்றுள்ளது. இது தலைவனும் தலைவியை அங்ஙனமே காப்பான் என்ற மறை பொருளைத் தருகிறது. இச் செய்தி குறிஞ்சித் திணையின் தலைவி கூற்றில் இடம்பெற்றுள்ளது.

முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்

பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்

…………………………………………..

முழவன் போல அகப்படத் தழீஇ

இன்துணைப் பயிரும் குன்ற நாடன்

(352:1-7)எருமை ஒன்று பொய்கையிலே இருக்கின்ற ஆம்பல் மலர்களைத் தின்று, சேற்றிலே கிடந்து உறங்கி, விடியற் காலையிலே வரால் மீன்கள் துண்டாகும்படி அவற்றை மிதித்து, பகன்றைக் கொடிகளை மேலே பற்றிக்கொண்டு போர் வீரரைப்போல ஊருக்குள் நுழைகிறது என்ற செய்தி ஒரு பாடலில் இடம்பெற்றுள்ளது. இது, தலைவன் ஒருவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு, இரவில் அங்கேயே தங்கி, விடியற்காலையில் எல்லாரும் பார்க்கும் வகையில் வெளியேறி, குடிப்பெருமையைச் சிதைத்து, அடையாளங்களுடன் வந்தான் என்ற செய்தியை மறைமுகமாகத் தருகிறது. இச் செய்தி மருதத்திணையில் தோழி கூற்றில் இடம்பெற்றுள்ளது.

துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை

அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு

ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத்

தூங்குசேற்று அள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்

பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து

குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்

போர்ச் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்

(316:1-7)

ஒரு யானை, கிடைத்த சிறிதளவு நீரில் தன் பெண் யானையைக் குளிக்கச் செய்து, எஞ்சிய சேற்று நீரில் தான் குளிக்கின்றது என்ற செய்தி ஒரு பாடலில் இடம்பெற்றுள்ளது. இது, தலைவனும் அதுபோலத் தலைவியைக் காப்பான் என்ற செய்தியைத் தருகிறது. இச் செய்தி பாலைத் திணையின் தலைவன் கூற்றில் இடம்பெற்றுள்ளது.

தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்

கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச்

சேறு கொண்டாடிய வேறுபடு வயக்களிறு

(121:4-6)ஒரு கரடி இருப்பைப் (இலுப்பை) பூக்களை விரும்பித் தின்று, கொன்றைப் பழங்களைக் கோதிவிட்டுப் போகின்றது. இது, தலைவன் கிடைத்தவுடன் தலைவி, தோழியரையும் பிறரையும் ஒதுக்கிவிட்டுச் செல்கிறாள் என்ற செய்தியைத் தருகிறது. இச்செய்தி பாலைத் திணையின் தாய் கூற்றில் இடம்பெற்றுள்ளது.

அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்

துய்த்த வாய, துகள்நிலம் பரக்க,

கொன்றை யம்சினைக் குழல்பழம் கொழுதி

வன்கை எண்கின் வயநிரை பரக்கும்.

(15:13-16)யாமை (ஆமை) ஒன்று மறைவான இடத்தில் முட்டையிட, அதனைக் குஞ்சு பொறிக்கும்வரை ஆண் யாமை பேணிக் காக்கிறது. இது, தலைவன் களவொழுக்கத்தைத் திருமணம் வரை யார்க்கும் தெரியாமல் மறைத்துக் காப்பான் என்ற செய்தியைத் தருகிறது. இச்செய்தி நெய்தல் திணையின் தோழி கூற்றில் இடம்பெற்றுள்ளது.

நிறைச்சூல் யாமை மறைத்துஈன்று புதைத்த

கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டை

பார்ப்புஇடன் ஆகும் அளவை, பகுவாய்க்

கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்.

(160:5-8)இவை போன்று ஏனைய உள்ளுறைகளும் சுவையாக அமைந்திருக்கின்றன.

4.3.2 உருவகம் உவமைக்கும் பொருளுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து, இரண்டையும் ஒன்றுபோலக் காட்டுவது உருவகம் ஆகும். இது பலவகை ஆகும்.. அவற்றுள் முற்றுருவகம் குறிப்பிடத் தக்கதாகும். இது ஒரு பொருளின் அனைத்து உறுப்புகளையும் உருவகிப்பது ஆகும்.

ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில்

கோடை அவ்வளி குழலிசை யாகப்

பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்

தோடமை முழவின் துதைகுரல் ஆகக்

கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு

மலைப் பூஞ்சாரல் வண்டு யாழாக

இன்பல் இமிழ்இசை கேட்டுக் கலிசிறந்து,

மந்தி நல்லவை மருள்வன நோக்கக்

கழைவளர் அடுக்கத்து இயலி ஆடுமயில்

நனவுப்புகு விறலியின் தோன்றும்

(82:1-10)

என்ற பாடற்பகுதி முற்றுருவகம் அமைந்ததாகும். மூங்கிலில் அமைந்த துளையில் கோடைக் காற்றுப் புகுந்து குழலிசையாகவும் இனிய அருவியின் இசை முழவின் இசையாகவும் கலைமான் கூட்டங்களின் ஒலி பெருவங்கியத்தின் ஒலியாகவும் வண்டுகளின் ஒலி யாழாகவும் இனிய பல இசைகளைக் கேட்டு மகிழும் மந்திகள் பார்வையாளர்களாகவும் மலைப்பகுதிகளில் ஆடும் மயில்கள் விறலியராகவும் உருவகப் படுத்தப்பட்டுள்ளன. இங்கு ஒரு சோலை முற்றிலும் ஒரு நாடக அரங்கமாக உருவகிக்கப்பட்டு முற்றுருவகம் ஆகிறது.

இவ்வாறு உருவகங்கள் பல வந்து அகநானூற்றைச் சிறப்பிக்கின்றன.

4.4 உணர்ச்சி

மனிதனின் அகத்தெழு உணர்வுகளே உணர்ச்சிகள் என்ற பெயரால் குறிக்கப்படும். சொல்லப்படுகின்ற கருத்துக்கேற்பவே பாடல்களில் உணர்ச்சிகள் அமையும். உணர்ச்சிகளைத் தமிழ் இலக்கணங்கள் சுவை என்று குறிப்பிடும். அவை எட்டு ஆகும். நகை, அழுகை, இளிவரல், அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, மருட்கை என்பவை எண்சுவைகளாகும். இச்சுவைகள்-உணர்வுகள் அமைந்த பாடல்கள் சிலவற்றைக் காண்போம்.

4.4.1 நகை ஒருவர் மற்றொருவரைப் பார்த்து எள்ளிநகையாடுவது நகை என்னும் சுவை அல்லது உணர்ச்சி ஆகும். நகை தோன்றுவதற்குப் பல காரணங்கள் உண்டு.

பாணன் ஒருவன் தலைவன் ஒருவனைப் பரத்தையர் இல்லத்தில் இருக்கச் செய்துவிட்டுத் தலைவி இருக்கும் தெருவில் உலவுகின்றான். அப்பொழுது கன்றினை ஈன்று சில நாட்களே ஆன பசுவானது அவன்மீது பாய்கிறது. அதற்கு அஞ்சிய அவன் தலைவியின் இல்லத்திற்குள் நுழைந்து தப்ப முயல்கிறான். அது நகைப்பாக இருந்தது. அவன் அருகில் சென்ற தலைவி, இது உன் வீடல்ல, அதோ தெரிகிறதுபார் உன்வீடு என்கிறாள். அப்போது பாணன் வருந்தும் உள்ளத்தோடு தலைவியைத் தொழுது நிற்கிறான். நேற்று நடந்த இந்நிகழ்ச்சி நினைக்க நினைக்க எனக்கு நகையைத் தருகிறது என்று தலைவி தோழியிடம் தெரிவிக்கின்றாள். இந்நகைச்சுவையை,

நகை ஆகின்றே தோழி! நெருநல்

——————————–

————-பாணன் தெருவில்

புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ்இட்டு

எம்மனைப் புகுதந் தோனே, அதுகண்டு

மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று

இம்மனை அன்று;அஃது உம்மனை என்ற

என்னும் தன்னும் நோக்கி

மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே

(56)என்ற பாடற்பகுதி அழகாக வெளிப்படுத்தியுள்ளது.

4.4.2 அழுகை இழப்புப் போன்ற காரணங்களால் ஏற்படுவது அழுகை ஆகும். இச்சுவை பட, பல பாடல்கள் அகநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

ஒரு தலைவன் பொருளுக்காகப் பிரிய நினைக்கின்றான். இச்செய்தியைத் தோழி மூலம் தலைவிக்கு உணர்த்த நினைக்கின்றான். அதன்படியே செய்கின்றான். இச்செய்தியைக் கேட்டவுடன் தலைவி அழத்தொடங்கிவிட்டாள். இதனைத் தோழி தலைவனிடம் கூறுகின்றாள். தனது வருத்தத்தையும் தெரிவிக்கின்றாள். பிரிவு காரணமாக அழுகை உணர்வு மேலிடுவதை,

செய்வினைப் பிரிதல் எண்ணிக் கைம்மிக

——————————-

——————————-

வெம்மலை அஞ்சுரம் நீந்தி ஐய!

சேறும் என்ற சொற்கு இவட்கே

——————————

————– துவலையின் மலர்ந்த

தண்கமழ் நீலம் போலக்

கண்பனி கலுழ்ந்தன நோகோ யானே

– 143என்ற பாடற்பகுதி வெளிக்காட்டியுள்ளது.

வெள்ளிவீதியார் என்ற பெண்பாற்புலவர் தனது அழுகை உணர்வை வெளிப்படுத்தியதோடு ஆதிமந்தி என்ற பெண்ணின் உணர்வையும் வெளிக் கொணர்ந்துள்ளார்.

—————————— யானே

காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய்கூர்ந்து

ஆதி மந்தி போலப் பேதுற்று

அலந்தனென் உழல்வென் கொல்லோ – பொலந்தார்

——————————–

——————————–

உடைமதில் ஓர்அரண் போல

அஞ்சுவரு நோயொடு, துஞ்சா தேனே!

– 45என்ற பாடற்பகுதி தத்தம் கணவரைத் தொலைத்துவிட்டு அழும் இரு பெண்களின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளது.

4.4.3 அச்சம் ஒருவருக்கு அச்ச உணர்வு எப்படி வரும் – எப்பொழுது வரும் என்று யாரும் விளக்கத் தேவையில்லை. இருப்பினும் அணங்கு, விலங்கு, கள்வர், அரசன் போன்றவற்றால் அச்ச உணர்வு ஏற்படும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடும்.

பொருளீட்டப் பிரிந்து சென்றுள்ள தலைவன் போன காட்டுப் பாதை ஒன்று அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கள்ளிச்செடிகள் மண்டிக் கிடக்கும் காட்டில் புள்ளிகள் பொருந்திய கலைமானை விரட்டிச் சென்ற புலியானது அதனைப் பாதி தின்றுவிட்டு மீதியை விட்டுச் சென்றதால் புலால் நாற்றம் வீசும் பாதை. அந்தப் பகுதியில் காட்டு அரண்களில் உள்ளவர்கள் அலறுமாறு அவர்களைக் கொன்று தாம் கவர்ந்து வந்த நிரைகளைப் (பசுக்களை) பங்கிட்டுக் கொண்டு பெரிய கற்பாறையினது முடுக்கிலே தசையை அறுத்துத் தின்பர் கொலைத் தொழிலில் வல்ல வலிய வில்லினையுடைய வெட்சி வீரர். இவர்களைப் போல் பெரிய தலையையுடைய கழுகுகளுடன் பருந்துகள் பலவும் ஒருங்கு வந்து சூழ்ந்துள்ள அரிய காட்டுப்பாதை என்பது அச்சத்தை ஊட்டுவதாகும்.

கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை

வறன்உறல் அம்கோடு உதிர, வலம்கடந்து

புலவுப் புலிதுறந்த கலவுக்கழி கடுமுடை

இரவுக் குறும்புஅலற நூறி நிரைபகுத்து

இருங்கல் முடுக்கர்த் திற்றி கொண்டும்

கொலைவில் ஆடவர் போலப் பலவுடன்

பெருந்தலை எருவையொடு பருந்துவந்து இறுக்கும்

அருஞ்சுரம் இறந்த கொடியோர்

- 97என்ற பாடற்பகுதி அச்ச உணர்வை வெளிப்படுத்துவதாய் அமைந்ததாகும்.

4.4.4 மருட்கை மருட்கை என்பதற்கு வியப்பு என்பது பொருளாகும்.. இயல்புக்கு மாறானவற்றைக் காணும்போது நமக்கு வியப்பு (ஆச்சரியம்) ஏற்படும். யாருமே தூக்க இயலாத வில்லை இராமன் எடுத்து வளைத்து நாண் ஏற்ற முயன்றபோது அது முறிந்தே விடுவது வியக்கத்தக்கது. நளன் வேகமாகத் தேரோட்டி வருகிறான். தேருக்குள் அமர்ந்திருக்கும் மன்னன் மேலாடை கீழே விழுந்துவிடுகிறது. அதை உடனே தெரிவித்துத் தேரை நிறுத்தச் சொல்கிறான் மன்னன். நளனோ அந்தக் கணநேரத்தில் தேர்பல காத தூரம் வந்துவிட்டதைக் கூறுகிறான். இதுவும் வியப்புணர்வை மேலிடச் செய்வதாகும்.

அகநானூற்றில் வரும் தேரின் வேகமும் வியப்பை ஏற்படுத்துகிறது. போருக்காகச் சென்ற தலைவன் இல்லத்திற்குத் திரும்புகின்றான். அவன் தேரில் ஏறி அமர்ந்தது மட்டுமே அவனுக்குத் தெரிகிறது. வந்த வழியே தெரியவில்லை. வீடு வந்துவிட்டது, தேரைவிட்டு இறங்குங்கள் என்று தேர்ப்பாகன் கூறுகின்றான். வியப்படைந்த தலைவன் தேர்ப்பாகனைப் பார்த்து விண் வழியே செல்லும் காற்றைத் தேரில் பூட்டி ஓட்டினாயா? அல்லது உனது மனத்தையே குதிரையாக்கித் தேரில் பூட்டி ஓட்டினாயா? என்று கேட்கின்றான். இவ்வியப்பு உணர்வை,

இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்

புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்

ஏறிய தறிந்தன்று அல்லது வந்தவாறு

நனியறிந் தன்றோ இலனே ——–

——————————–

——————————–

மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ

இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே

வான்வழங்கு இயற்கை வளிபூட் டினையோ?

மானுரு வாகநின் மனம்பூட் டினையோ?

உரைமதி வாழியோ வலவ ———-

– 384

என்ற அகநானூற்றுப் பாடல்வழி அறியலாம் – அடையலாம்.

4.4.5 உவகை உவகை என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும். மகிழ்ச்சி எதனால் வரும் என்று சொல்லத் தேவையில்லை. இருப்பினும் அகப்பொருளில் உவகை உணர்வு என்பது தலைவன் தலைவியைக் கூடுதல், தலைவியுடனோ பரத்தையுடனோ நீர்நிலையில் விளையாடுதல் போன்றவற்றால் ஏற்படுவது என்று இலக்கணங்கள் கூறுகின்றன.

கோடைக்காலத்தில் மழைபெய்து நீர்நிலைகள் நிரம்பினால் உழவன் எப்படி மகிழ்வானோ அத்தகைய மகிழ்ச்சி தலைவிக்கு ஏற்படுகிறது. காரணம் தலைவன் தலைவியை மணந்து கொள்ள உடன்பட்டு இல்லம் வந்ததுதான். பின் தலைவியின் உவகையை அளவிட முடியுமோ?

பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறை

பல்லோர் உவந்த உவகை எல்லாம்

என்னுள் பெய்தந் தற்றே சேண்இடை

ஓங்கித் தோன்றும் உயர்வரை

வான்தோய் வெற்பன் வந்த மாறே

– 42

என்ற பாடல் அகநானூற்றுத் தலைவி ஒருத்தியின் உவகை உணர்வை வெளிக்காட்டியுள்ளது.

4.5 தொகுப்புரை

சங்க அக நூல்களில் அகநானூறு பொருட்சிறப்பு, நடைச்சிறப்பு, பகுப்பு முறை, முறை வைப்பு, வரலாற்றைக் கையாளுதல் போன்றவற்றால் தனித் தன்மை பெற்றுள்ளது. இலக்கியத்தின் அடிப்படைக் கூறுகளான கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம் ஆகியவை அகநானூற்றில் சிறந்திருப்பதைக் காட்ட ஓரிரு எடுத்துக்காட்டுகள் மட்டுமே சான்றாகத் தரப்பட்டன. அகநானூறு முழுமையும் இலக்கியச் சுவையுடன் மிளிர்வதை முழுவதுமாகப் படித்து அறியலாம்.

பாடம் - 5

அகநானூறு – 2

5.0 பாட முன்னுரை

அகநானூறு, ஓர் அக இலக்கியம். அதாவது ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு தலைவனும் தலைவியும் காதலிப்பதும், பின் முறைப்படித் திருமணம் செய்துகொள்வதும், காதலிக்காமலேயே பெற்றோர் திருமணம் செய்து வைப்பதும், திருமணத்தின்படி இல்வாழ்க்கை மேற்கொள்வதும் ஆகிய நிகழ்வுகளைக் கூறும் இலக்கியம் ஆகும். காதலிக்கின்ற நிகழ்வுகளைக் களவு என்ற பெயராலும் இல்வாழ்க்கை நிகழ்வுகளைக் கற்பு என்ற பெயராலும் இலக்கணங்கள் குறித்துள்ளன. இந்த அகப் பொருள் மரபுகள் அகநானூற்றில் அமைந்துள்ள திறத்தை இப்பாடம் விளக்குகிறது.

5.1 அகத்திணை அகப்பொருளின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது அகத்திணை ஆகும். அகம் என்பது காதல் கொண்ட இருவரின் அனுபவங்கள் அல்லது இல்லறம் மேற்கொண்டுள்ள இருவரின் அனுபவங்கள் பற்றியதாகும். அகத்திணை ஏழு ஆகும். திணை என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்று பொருள் என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என்பவை ஏழு திணைகளாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டே அகப்பொருள் பாடல்கள் அமையும். இவற்றுள் கைக்கிளை மற்றும் பெருந்திணையில் அமைந்த பாடல்கள் அகநானூற்றில் இடம்பெறவில்லை.

5.1.1 முப்பொருள் அகத்திணைப் பாடல்களில் மூன்று வகையான பொருள்கள் இடம் பெற்றிருக்கும். இவற்றை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற பெயர்களால் குறிப்பிடுவர்.

தொல்காப்பியம் இம்மூன்று பொருள்களின் விளக்கங்களையும் உட்கூறுகளையும் விவரித்துள்ளது. முதற் பொருள் நிலம், பொழுது என இருவகையாகும். இவற்றுள் பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும். மேலும் ஐந்து திணைக்கும் உரிய முதற்பொருள்கள் எவை என்பதையும் உரிப்பொருள்கள் எவை என்பதையும் தொல்காப்பியம் விளக்கியுள்ளது. கருப்பொருளை மட்டும் பட்டியலிட்டதோடு நிறுத்திவிட்டது. உரை ஆசிரியர்களே திணைக்குரிய கருப்பொருள்களைப் பட்டியலிட்டுள்ளனர். இவற்றின் வழி அகநானூற்றுப் பாடல்களில் இடம்பெற்றுள்ள முதல், கரு, உரிப்பொருள்கள் பற்றி அறியலாம்.

5.1.2 முல்லைத் திணை தொல்காப்பியர் பட்டியலிடும்போது முதலாவதாகக் குறிப்பிடும் திணை இதுவாகும்.

• முதற்பொருள்

முல்லைத் திணையின் முதற்பொருளில் நிலம் முல்லை நிலமாகும். அதாவது காடும் காடுசார்ந்த இடமும் ஆகும். காடு, கானம், புறவு முதலிய சொற்களால் அகநானூற்றில் இது குறிப்பிடப் பெறுகிறது.

பெரும்பொழுது கார்காலம் ஆகும். சிறுபொழுது மாலைப்பொழுது ஆகும். கார், மாலை, அந்தி பற்றிய குறிப்பு பல பாடல்களில் உள்ளது.

• கருப்பொருள்

மக்கள், தெய்வம், தொழில், இசைக்கருவி, விலங்குகள், பறவைகள், உணவு முதலிய பொருள்கள் கருப்பொருள் எனப்படும்.

முல்லைக்குரிய தெய்வம் மாயோன் (திருமால்) என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அகநானூற்றில் முல்லைத்திணைக்கு உரிய கருப்பொருள் பற்றிய செய்திகள் பல உள்ளன.

• மக்கள் – நாடன், கிழத்தி, இடையன், இடைச்சி, கோவலர்

• தொழில் – ஆடு, மாடு மேய்த்தல்

• விலங்கு – மான் (திரிமருப்பு இரலை), பசு (கறவை), ஆடு (மறி)

• மரம் – குருந்து, கொன்றை

• பறவை – அன்னம் (எகினம்), கிளி (செந்தார்ப் பைங்கிளி)

• இசைக்கருவி – குழல், யாழ்

• பண் – செவ்வழி

• மலர் – முல்லை, தோன்றி, கொன்றை, வேங்கை

• உணவு – வரகு, பால்

• உரிப்பொருள்

முல்லைத் திணையின் உரிப்பொருள் இல்லிருத்தல் ஆகும். அதாவது, பிரிந்திருக்கும் தலைவன் மீது வருத்தம் கொள்ளாமல், தானும் வருந்தாமல் ஆற்றியிருத்தலும், ஆற்றியிருக்கக் கூறுதலும் ஆகும்.

முல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு

பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ,……

மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்

உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்,……

ஆய்தொடி அரிவை நின் மாணலம் படர்ந்தே.

(4)

என்ற அகநானூற்றுப் பாடலை முல்லை உரிப்பொருள் சிறப்பிற்குச் சிறந்த சான்றாக இலக்கண உரையாசிரியர்கள் காட்டியுள்ளார்கள். கார்காலம் வரும்போது தானும் வருவதாகக் கூறிப் பிரிந்து சென்றிருக்கிறான் தலைவன். கார்காலம் வந்துவிட்டது. கார்காலம் வரும்வரை ஆற்றி இருந்த தலைவியிடம் தலைவனின் வரவைத் தோழி எடுத்துக் கூறுகிறாள். இதில் முல்லையின் உரிப்பொருள் சிறந்திருக்கிறது.

5.1.3 குறிஞ்சித் திணை தொல்காப்பியத்தில் இரண்டாவதாக வைத்து எண்ணப்படும் திணை குறிஞ்சி. இது களவொழுக்கத்தைத் தழுவிய பாடல்களைக் கொண்டதாகும்.

• முதற்பொருள்

குறிஞ்சித் திணையின் முதற்பொருளில் நிலம் மலையும் மலையைச் சார்ந்த இடமும் ஆகும். குறிஞ்சி நிலத்தை மலை, பாறை, நல்வரை, ஓங்கல் வெற்பு, நெடுவரை, சிலம்பு, அடுக்கம் எனப் பல பெயர்களில் அகநானூறு குறிப்பிடுகிறது.

பெரும்பொழுது கூதிர்காலம், சிறுபொழுது யாமம்.

அகநானூற்றில் ஆலங்கட்டியுடன் மழைபொழிந்த நள்ளிரவு என்றும், வாடைக் காற்று வீசும் இரவு என்றும் கூதிர்காலம் குறிப்பாகச் சுட்டப்படுகிறது.

உருகெழு நடுநாள், பானாள் கங்குல், அரைநாள் யாமம் என்று சிறுபொழுது பல பாடல்களில் குறிக்கப் பெறுகிறது.

• கருப்பொருள்

குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருள்கள் அகநானூற்றின் பல பாடல்களில் பயின்று வருகின்றன.

• தெய்வம் – முருகன்

• மக்கள் – மலை நாடன், வெற்பன், குறவர், கொடிச்சி, கானவர்

• உணவு – தினை (ஏனல்), தேன்

• விலங்குகள் – புலி (உழுவை), குரங்கு, பன்றி, கரடி (பெருங்கை ஏற்றை, உளியம்), யானை, கடுவன்.

• பறவைகள் – மயில், கிளி

• மரங்கள் – வாழை, மூங்கில் (வேய், அமை, கழை), வேங்கை, பலா, சந்தனமரம்

• மலர்கள் – குறிஞ்சி, காந்தள், வேங்கை

• தொழில் – தினை விளைத்தல், தேனெடுத்தல்

• ஊர் – சிறுகுடி

• இசைக்கருவி – முழவு, யாழ்

• இசை – குறிஞ்சிப்பண்

• உரிப்பொருள்

குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருள் புணர்தலாகும். அதாவது தலைவன் ஒருவன், தலைவி ஒருத்தியை அவளது இல்லத்தார் அறியாமல் புணருவதும் அதற்கான முயற்சிகளும் ஆகும்.

‘கிளை பாராட்டும் கடுநடை வயக்களிறு’ எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல் (218) குறிஞ்சி உரிப்பொருள் சிறப்பிற்குத் தக்க சான்று ஆகும். தலைமகனைச் சந்திக்க வேண்டிய இடத்தில் இரவில் தலைவியை விட்டு வந்த தோழி, எதிரே வந்த தலைவனிடம் கூறுவதாக அமைந்தது இப்பாடல். தலைவனைக் கூடாது தலைவியால் வாழமுடியாது என்ற நிலை. இதே நிலை தலைவனுக்கும். வருவோரைக் கொன்று தின்னக் காத்திருக்கும் புலிகள் உலவும் காட்டில் இருள் அடர்ந்த இரவில் மழையில் தலைவியைச் சந்திக்க வருகிறான் தலைவன். அவனிடம் தோழி பகற்பொழுதில் சந்திக்க வரும்படி வேண்டுகோள் விடுக்கின்றாள். அதன் மூலம் திருமணம் செய்து கொள்ளுமாறு குறிப்பாக உணர்த்துகிறாள். இதில் களவுப் புணர்ச்சி பேசப்பட்டுக் குறிஞ்சிக்குரிய உரிப்பொருள் சிறந்திருக்கிறது.

5.1.4 பாலைத் திணை தொல்காப்பியரால் நடுவண் ஐந்திணையில் நடுவணதாகப் போற்றப்படுவது பாலைத்திணை. இது, களவில் உடன்போக்கையும் கற்பில் பல வகைப் பிரிவுகளையும் உள்ளடக்கியது.

• முதற்பொருள்

பாலைத் திணையின் முதற் பொருளான நிலம் இது என இலக்கணங்கள் சுட்டிக் காட்டவில்லை. முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் வறட்சியால் தம் இயல்பு அழிந்து பாலை நிலம் என்ற நிலையை அடையும் என்று சிலப்பதிகாரம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலை சுரம், காடு என்ற பெயர்களால் அக இலக்கியங்களில் சுட்டப்படும். வறம் கூர் கடம், வெம்பரல் அதர குன்று, வெம்முனை அருஞ்சுரம் என்று அகநானூற்றில் பாலை நிலம் குறிப்பிடப்படுகிறது.

பாலைத் திணையின் பெரும்பொழுது வேனில் காலமும் பின் பனிக் காலமும் ஆகும்.

சிறு பொழுது நண்பகல் ஆகும்.

நிலமும், காலங்களும் பற்றிய வருணனை அகநானூற்றில் பல பாடல்களில் சிறப்பாக அமைந்துள்ளது.

• கருப்பொருள்

பாலை நிலக் கருப்பொருள்கள் பல அகநானூற்றுப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன:

• தெய்வம் – கொற்றவை (கானமர் செல்வி)

• மக்கள் – மறவர், அத்தக் கள்வர், விடலை, மழவர்

• தொழில் – வழிப்பறி (ஆறலைத்தல்)

• விலங்கு – செந்நாய், மான் (நவ்வி)

• மரம் – முருங்கை, மராம், பெண்ணை, இலவம்

• பறவை – பருந்து (எருவை), புறா, காக்கை, கூகை (குடிஞை, ஆந்தை)

• இசைக்கருவி – முழவு, கறங்கு, யாழ், சில்லரி, கிணை, துடி

• மலர்கள் – எருக்கு, களரியாவிரை, இருப்பை

• நீர்நிலை – சுனை, கான்யாறு

• ஊர் – மூதூர், முதுபதி

• உரிப்பொருள்

பாலைத் திணைக்கு உரிய உரிப்பொருள் பிரிதல் ஆகும். இல்வாழ்க்கைக்கு வேண்டிய பொருளைத் தேடவும், போர் செய்து நாட்டைக் காப்பதற்கும் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வதும், அது தொடர்பான நிகழ்வுகளும் பாலைத் திணைப் பாடல்களுக்கு உரிப் பொருளாகும். களவு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த தலைவன், தலைவியின் வீட்டார் அறியாமல் அவளை அழைத்துக்கொண்டு தன் ஊருக்குச் செல்லும் உடன் போக்கும் பாலைத் திணையே ஆகும்.

‘வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்’ எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல் (1) பாலை உரிப்பொருள் சிறந்த பாடலாகும். பிரியமாட்டேன் என்று வாக்குக் கொடுத்திருந்த தலைவர் பொருள் ஈட்ட வேண்டி என்னைப் பிரிந்து கடிய பாதையில் சென்றுள்ளார் என்று தோழியிடம் தலைவி புலம்புவதாக அமைந்துள்ள இப்பாடலில் பாலை உரிப்பொருள் சிறந்துள்ளது.

உடன் போக்கின்போது செவிலித்தாய் வருந்திப் புலம்புவாள். “இல்லத்திற்குள்ளேயே சிறு விளையாட்டுகள் ஆடினால்கூட உடல் நோகின்றது என்று கூறும் என் மகள் (தலைவி) தலைவனோடு சேர்ந்து கடிய காட்டை எப்படிக் கடந்து செல்வாள்” என்று செவிலித்தாய் புலம்புகின்றாள் (அகநானூறு. 17).

5.1.5 மருதத் திணை தொல்காப்பியத்தில் நான்காவதாக எண்ணப்படுவது மருதத் திணை. பரத்தையரோடு தொடர்புடைய பாடல்களைக் கொண்டதாக இத்திணை இயங்கும்.

• முதற்பொருள்

மருதத் திணையின் முதற்பொருளில் ஒன்றான நிலம் வயலும் வயல்சார்ந்த இடமும் ஆகும். கழனி, வளவயல் என அகநானூற்றில் குறிப்பிடப் பெறுகிறது.

ஆறு பெரும்பொழுதும் மருதத் திணைக்கு உரியவை ஆகும். சிறுபொழுது வைகறை ஆகும். அதாவது விடியற்காலை ஆகும்.

• கருப்பொருள்

• தெய்வம் – இந்திரன்

• மக்கள் – ஊரன், மகிழ்நன், உழவன்

• உணவு – நெல், தேறல், மீன், கரும்பு

• விலங்கு – எருமை (செங்கண் காரான்), நீர்நாய், ஆமை, வாளைமீன், வரால் மீன்

• மரம் – மருது, ஈங்கை

• பறவை – குருகு, கோழி

• தொழில் – உழவு

• மலர்கள் – தாமரை, ஆம்பல், பகன்றை

• இசைக்கருவி – யாழ், முழவு

• நீர்நிலை – பொய்கை, துறை

என்று மருதத்திணைக் கருப்பொருள்கள் அகநானூற்றில் பயின்று வருகின்றன.

• உரிப்பொருள்

மருதத் திணைக்குரிய உரிப்பொருள் ஊடல் ஆகும். காமக் கிழத்தி, காதற் பரத்தை, சேரிப் பரத்தை என இவர்களைச் சந்திக்க வேண்டித் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வான். ‘புறத்தொழுக்கம்’ எனப்படும் இத்தீய ஒழுக்கத்தில் ஈடுபட்டுத் திரும்பி வரும் தலைவனிடம் தலைவி பொய்க் கோபம் கொள்வாள். இதுவே ஊடல் எனப்படும். இல்லம் வர விரும்பும் தலைவனுக்காகத் தூது வரும் பாணன் முதலியோரிடமும் சினம் கொண்டு பேசுவாள். இவை எல்லாம் மருதத் திணைப்பாடல்களில் காணப்படும் உரிப் பொருளாகும்.

‘சேற்றுநிலை முனைஇய செங்கண் காரான்’ எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல் (46) மருதத்திணை உரிப்பொருள் சிறப்பிற்குத் தக்க சான்று ஆகும். ‘நீ வேறு ஒரு பெண்ணை மணந்துகொண்டாய் என்று இந்த ஊரார் கூறுகின்றனர். அப்படி நடந்தது பற்றி நான் கருத்து எதுவும் கூறப்போவதில்லை. உனது பிரிவால் எனது உடல் மெலிந்து வருந்தினும் பரவாயில்லை. உன்னைத் தடுக்கவும் நான் தயாராக இல்லை. நீ உன் மனம் போல் நடந்துகொள்ளலாம்’ என்று தலைவி கோபம் கொண்டுள்ளதாகத் தோழி பேசுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

5.1.6 நெய்தல் திணை தொல்காப்பியத்தில் இறுதியாக எண்ணப்படுவது நெய்தல். பிரிந்திருக்கின்ற தலைவனை நினைத்துத் தலைவி புலம்புவதாகப் பாடல்கள் அமையும்.

• முதற்பொருள்

நெய்தல் திணைக்குரிய முதற் பொருளில் ஒன்றான நிலம் கடலும் கடல் சார்ந்த பகுதியும் ஆகும்.

கடல், புணரி, துறை, பெருந்துறை, கழி, பெருமணல் அடைகரை, பல்பூங்கானல், தண்ணறுங்கானல், புன்னையங்கானல் போன்ற சொற்களால் இந்நெய்தல் நிலம் அகநானூற்றில் குறிக்கப் பெறுகின்றது.

இத்திணைக்கு ஆறு பெரும்பொழுதும் உரியதாகும். சிறு பொழுது எற்பாடு ஆகும். அதாவது பகற்பொழுதின் பிற்கூறு என்பர். இது முன்னிரவைக் குறிக்கலாம். எல்லி என்று இந்தப் பொழுது அகநானூற்றுப் பாக்களில் குறிக்கப்பெறுகிறது. அரைநாள் என்றும் வழங்குகிறது.

• கருப்பொருள்

• தெய்வம் – வருணன்

• மக்கள் – துறைவன், சேர்ப்பன், புலம்பன், பரதவர், உமணர் (உப்பு வணிகம் செய்பவர்கள்)

• தொழில் – மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்; விற்றல்.

• மரம் – பெண்ணை (பனை), தாழை, புன்னை.

• செடிகொடி – முண்டகம், அடும்பு.

• பறவை – நாரை, அன்னம், கொக்கு, சிறுவெண்காக்கை

• விலங்கு – சுறா, புரவி (குதிரை), கோவேறு கழுதை (அத்திரி), ஆமை, அலவன்

• ஊர் – ஊர், சிறுகுடி.

• மலர்கள் – செருந்தி, நெய்தல், காவி, தாழை, புன்னை

• உணவு – நெல், மீன் (இறவு, அயிலை, சுறவு)

• நீர்நிலை – நெடுங்கழி

என்று நெய்தல் திணைக் கருப்பொருள்கள் பல அகநானூற்றில் இடம் பெறுகின்றன.

• உரிப்பொருள்

நெய்தல் திணையின் உரிப்பொருள் இரங்கல் ஆகும். பாலைத் திணைக்குக் கூறியதுபோல ஏதேனும் ஒரு காரணத்தின் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வான். அவன் திரும்பி வருவதாகக் கூறிச்சென்ற காலம் வந்தவுடனோ வருவதற்கு முன்போ தலைவி, அக்காலம் வந்ததாகவும் தலைவன் வரவில்லை என்று வருந்துவது இரங்கல் ஆகும்.

‘கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப’ (40) எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடல் நெய்தல் திணை உரிப்பொருள் சிறந்திருப்பதற்குச் சான்று ஆகும். “பிரிந்தவர்கள் வருந்துமாறு வீசும் கீழைக் காற்றினால், நாமும் செயலற்று வருந்தும்படிப் பிரிந்த தலைவர் சொல்லிய காலத்தில் மீண்டும் வந்து நம்மைச் சேரவில்லை. ஆனாலும் அவர் நம்மேல் கொண்ட நட்பு ஒழிந்து போகாமல் இருக்கட்டும். அவரிடம் சென்ற என் நெஞ்சம் அவர் அன்பு செய்யவில்லையே என்று அவரை விட்டு நீங்கி நம்மிடம் வராமல் இருக்கட்டும்” என்று தலைவி தனது கையற்ற நிலையைக் கூறி, இரங்கற் பொருண்மையை வெளிப்படுத்துவதாய்ப் பாடல் அமைந்துள்ளது.

5.2 அகப்பொருள் துறைகள்

அகப்பொருள் நிகழ்வுகளும் சூழல்களும், துறைகள் என்ற பெயரால் குறிக்கப்படும். யார் யாரிடம் எதற்கு எப்படி எந்தச் சூழ்நிலையில் பேசினார் என்பனவற்றின் தொகுப்பே துறை ஆகும். எடுத்துக்காட்டாக, துறை என்பது ‘பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது’ என அமையும். ஏதோ ஒன்றன் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றுள்ளான். பிரிவுத் துயரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத தலைவி, தனது துன்பத்தைத் தோழியிடம் எடுத்துச் சொல்வது இத் துறைக்கு விளக்கமாகும். துறைகள் எல்லாம் கூற்றுகளால்தான் இயங்கும். கூற்று என்பதன் பொருள் ‘கூறிய சொற்கள்’ ஆகும். எனவே, கூற்றுகள் என்ற அடிப்படையில் அகநானூற்றுத் துறைகள் சிலவற்றையும் அவற்றிற்குரிய பாடல்களையும் பற்றிக் காண்போம்.

அகப்பொருள் மாந்தர்களாகத் தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலி, நற்றாய், பாணன், கண்டோர் ஆகியோர் அமைவர்.

5.3 தலைவன்

இவனுக்கும் தலைவிக்கும் உள்ள உறவை அடிப்படையாகக் கொண்டே அகப்பாடல்கள் தோற்றம் கொள்கின்றன. தலைவன் தன்னுடைய நெஞ்சம், தேர்ப்பாகன், தலைவி, தோழி, பாங்கன் ஆகியோரிடம் பேசுவதாக அகநானூற்றுப் பாடல்கள் அமைந்துள்ளன. அவை வெவ்வேறு சூழலில் அமைந்தனவாகும்.

5.3.1 தலைவன் -> நெஞ்சம் தலைவன் கூற்றாக அமைந்த பாடல்களில் ஐம்பது விழுக்காட்டிற்கும் மேலானவை அவன் நெஞ்சுடன் (மனத்துடன்) பேசுவதாக அமைந்தவையாகும்.

தலைவி, தான் சொன்ன நன்மொழிகளை நம்பி மழைபொழியும் இரவில் வந்து தன்னைக் கூடியபின் திரும்பிப் போவதைக் காண்கிறான் தலைவன். தலைவியின் இச்செயலை நினைந்து நினைந்து மகிழ்கிறான். ‘இவள் ஒரு தெய்வ மகளே’ என்று அதை நெஞ்சிடம் வெளிப்படுத்துகின்றான். இது ‘புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது’ என்னும் துறையாகும் (பாடல் 198) இதைப்போன்று தலைவியைப் பற்றி நெஞ்சிற்குக் கூறும் பாடல்கள் பல உள்ளன.

தலைவன், தலைவியை முன்குறிப்பிட்டவாறு குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கலாம், பேசலாம் என்று வருகிறான். தலைவியைச் சந்திக்க முடியவில்லை. மனம் வருந்தி – புலம்பி – திரும்பிச் செல்கிறான். இது ‘அல்லகுறிப்பட்டுழித் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது’ என்னும் துறையாகும் (பாடல்கள் 212, 322, 338, 342, 372).

இவற்றைப் போன்ற களவுக்காலத்துப் பாடல்கள் – துறைகள் – கூற்றுகள் அகநானூற்றில் பல உள்ளன.

கற்புக் காலத்தில் தலைவன் நெஞ்சிடம் பல சூழல்களில் பேசுவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.

மனைவி மக்களோடு இன்பமாக வாழ்வதற்குப் பொருள் இன்றியமையாத் தேவை ஆகும். பொருளைத் தேடுவதற்காகத் தலைவன் வேற்றூர் செல்ல விரும்புகின்றான். இதை உணர்ந்து கொண்ட தலைவி பாலை நிலத்தைக் கடந்து செல்லும்போது தலைவன் அடையும் துன்பங்களை எண்ணி வருந்துகிறாள். அவன் பிரிந்து செல்லக் கூடாது என்ற தன் விருப்பத்தைப் ‘பேசா ஓவியமாக’ அவனுக்கு உணர்த்துகிறாள். தலைவி பற்றிய அந்த நினைவு அவன் வேற்றூருக்குச் செல்வதைத் தடுக்கிறது. இது, ‘பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது’ (பாடல் 5) என்னும் துறையாகும்.

ஒரு தலைவன் பொருளுக்காகப் பிரியக் கருதுகிறான். பிரிந்தும் செல்கிறான். செல்லும் வழியில் தலைவியின் நினைவு வருகிறது. அதனால், அவளது அழகையும் செயலையும் தன் நெஞ்சிடம் விவரிக்கிறான். ஆயினும், அவள் மகிழப் பொருளைத் தேடிவருவோம் என்னுடன் விரைந்து வா என்று நெஞ்சுக்கு உரைக்கிறான். இஃது ‘இடைச் சுரத்து நின்று மீளலுற்ற நெஞ்சைக் கழறியது’ என்னும் துறை ஆகும் (பா.21). அகநானூற்றில் பல பாடல்கள் இத்துறையில் அமைந்துள்ளன.

ஒரு தலைவன் நாடுகாவல் பொருட்டு வேந்தனின் படையுடன் போருக்குச் செல்கிறான். பாசறையில் தங்கியிருக்கிறான். அப்பொழுது தலைவியின் நினைவு வருகிறது. தன் நெஞ்சிடம் புலம்புகின்றான். இது, ‘பாசறைப் புலம்பல்’ என்னும் துறையாகும் (பாடல்கள் 84, 214, 304).

5.3.2 தலைவன் -> தேர்ப்பாகன் பிரிந்த தலைவன் பொருள் ஈட்டித் திரும்பும் காலத்தில் தேரோட்டிச் செல்பவன் தேர்ப்பாகன் ஆவான். தலைவன் தேர்ப்பாகனிடம் பேசும் நிகழ்வுகள் கற்பொழுக்கத்தில் மட்டுமே நிகழும். நெஞ்சத்தை அடுத்த நிலையில் தேர்ப்பாகனிடமே தலைவன் கூற்றுகள் மிகுதியாய் நிகழும். அகநானூற்றில் இத்துறையில் அமைந்த பாடல்கள் பல உள்ளன.

ஒரு தலைவன் வினையின் (வேலையின்) பொருட்டு வெளியூர் செல்கிறான். கார்காலம் வரும்போது தானும் வருவதாகக் கூறிச் செல்கிறான். வினையும் முடிகிறது; கார்காலமும் வருகிறது. ஊருக்குப் புறப்படுகின்றான். வழியில் தேர்ப்பாகனிடம், தேரை விரைந்து செலுத்தச் சொல்கிறான். இது, ‘வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது’ என்னும் துறையாகும்.

தான் தலைவியை விரைவில் சென்று அடைய வேண்டும் என்று நினைத்தாலும் தனது விரைவு மற்ற உயிரினங்களின் இன்பத்திற்கு இடையூறு செய்யக் கூடாது என்ற உயர்ந்த உள்ளம் கொண்டவனாகத் தலைமகன் விளங்கினான். அவன் தேர்ப்பாகனிடம் கூறிய சொற்கள் இதற்குச் சான்று ஆகும் (பாடல் 134).

தலைவன் குதிரையை அடித்து விரட்டித் தேரை ஓட்டவேண்டாம் என்று பாகனிடம் கூறுகின்றான். குதிரை, தேர் இவற்றின் ஒலி கேட்டுச், சேர இருக்கின்ற ஆண்மானும் பெண்மானும் மருண்டு பிரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு கூறுகின்றான்.

5.3.3 தலைவன் -> தலைவி தலைவன், தலைவியிடம் கூற்று நிகழ்த்தும் இடங்கள் மிகச் சிலவே. இக்கூற்று, களவுக் காலத்திலும் நிகழும்; கற்புக் காலத்திலும் நிகழும்.

தலைவன் தலைவி களவொழுக்கம் தலைவியின் பெற்றோருக்குத் தெரிந்து விடுகிறது. ஆயினும் திருமணம் செய்து கொள்ள முடியாத சூழல். இதனால், பிறர் அறியாமல் தலைவியைத் தலைவன் தனது ஊருக்கு அழைத்துச் செல்வான். அது உடன்போக்கு எனப்படும். உடன்போக்கின்போது தலைவியிடம் தலைவன் பேசுவான். இங்ஙனம் அமையும் கூற்றுகள் பல வகைப்படும். அவற்றுள் ஒன்று, ‘உடன்போக்கின்கண் தலைமகளைத் தலைவன் மருட்டிச் சொல்லியது’ என்னும் துறையாகும். இது செல்லும் வழியில் உள்ள தீங்கு பற்றித் தலைவன் தலைவியிடம் குறிப்பிடுவதாகும்.

5.3.4 தலைவன் -> தோழி களவு வாழ்விலும் கற்பு வாழ்விலும் இன்றியமையாத பங்கு வகிப்பவள் தோழி ஆவாள். அத்தோழியிடம் களவுக் காலத்தில் தலைவன் குறையிரந்து (வேண்டி) நிற்பதும் கற்புக் காலத்தில் பிரிவுணர்த்தி நிற்பதுமாகக் கூற்றுகள் நிகழும். தங்கள் திருமண நாள் இரவில் தலைவி கொண்ட நாணம் பற்றித் தோழியிடம் தலைவன் கூறுவதாக அமைந்த பாடல் (86) மிக அழகியது.

5.3.5 தலைவன் -> பாங்கன் களவுக் காலத்தில் தலைவனுக்கு உதவியாக இருப்பவன் பாங்கன் – தோழன். இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைப் புணர்ந்த தலைமகன் மீண்டும் அவளைச் சந்திக்க இயலாதபோது, பாங்கனின் உதவியை நாடுவான். இதனைப் பாங்கற் கூட்டம் என இலக்கணங்கள் கூறும். பாங்கனே தலைவனின் செயற்பாடுகளில் மாற்றம் இருப்பதனால் கேட்டுத் தெரிந்துகொண்டு உதவுவதும் உண்டு.

நெய்தல் நிலத்துத் தலைவியின் கண்களால் தான் கொண்ட காதல் நோயைத் தலைவன் பாங்கனிடம் கூறும் பாடல் (140) நயம் மிக்கது.

5.4 தலைவி

அகப்பாடல்களின் தலைவி. இவளுக்கும் தலைவனுக்கும் உள்ள உறவையே அகப்பாடல்கள் உணர்த்துகின்றன. தலைவி தோழி, தலைவன், பாணன், விறலி ஆகியோருடன் கூற்று நிகழ்த்துவாள். அவற்றுள் ஒரு சிலவற்றைக் காண்போம்.

5.4.1 தலைவி -> தோழி தலைவிக்கு உற்ற துணையாகக் களவுக் காலத்திலும் கற்புக் காலத்திலும் இருப்பவள் தோழி ஆவாள். தோழியின் துணை இன்றித் தனியே தலைவியின் இயக்கம் இல்லை என்று சொல்லும் அளவிற்குத் தோழி பெரும்பங்கு வகிக்கின்றாள். இதனால் தலைவி தோழியிடம் பேசும் பேச்சுகளே மிகுதி. இவை பல்வேறு துறைகளாய் அமைகின்றன.

கற்பு வாழ்க்கையில் ஒரு தலைவன் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவால் வாடுகின்றாள் அவன் மனைவி. தன் வருத்தத்தைத் தோழியிடம் வெளிப்படுத்துகின்றாள். இது, ‘தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், தோழிக்குச் சொன்னது’ என்னும் துறையாகும். ஆட்டன் அத்தியை ஆற்று வெள்ளம் கொண்டுபோக, அவனைப் பிரிந்து தவித்துத் துடித்த ஆதி மந்தி போன்று பிரிவுத் துன்பத்தால் தான் வருந்துவதாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள் (பாடல் 135).

5.4.2 தலைவி -> தலைவன் தலைவி தலைவனுடனும் கூற்றுகள் நிகழ்த்துவாள். இருப்பினும் இவை மிகச் சிலவே. இவை களவு, கற்பு ஆகிய இரு ஒழுக்கங்களிலும் நிகழும். கூற்றுகள் நேரிடையாகப் பேசுவதாகவோ தோழியிடம் பேசுவதுபோல மறைமுகமாகவோ அமையும்.

கற்பு வாழ்க்கையில் பரத்தையர் பொருட்டுப் பிரிந்து மீண்டும் வரும் தலைவனிடம் தலைவி கூற்று நிகழ்த்துவாள். ஒரு தலைவன் பரத்தையுடன் இருந்து, பின் தன் இல்லம் திரும்புகின்றான். அவனது தகாத ஒழுக்கத்தைக் குறித்துத் தலைவி வினவுகின்றாள். அவன் ஒன்றும் தெரியாதவன் போல் நடிக்கின்றான். அவனது ஏமாற்றுத்தனத்தைத் தலைவி அவனிடமே வெளிப்படுத்துகின்றாள். இது, ‘பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், யாரையும் அறியேன் என்றாற்குத் தலைமகள் சொன்னது’ என்ற துறையாகும் (பாடல் 16).

“தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நமது மகனை வழியில் வந்த அந்தப் பெண் வாரியெடுத்து மகிழ்ந்தாள். நான் அங்குச் சென்றதும் களவு செய்தவரைப் போல விழித்தாள். நீயும் இவனுக்குத் தாயே என்றேன். நாணித் தலை குனிந்தாள்” என்பது இப்பாடலின் கருத்து.

5.4.3 தலைவி -> பாணன் தலைவனுக்கும் தலைவிக்கும் தூதாக இருப்பவன் பாணன் ஆவான். தலைவிக்குத் தலைவன் மீதுள்ள ஊடலைத் தீர்க்கும் வாயில்களில் ஒருவனாகப் பாணன் கருதப்படுகிறான். பெரும்பாலும் மருதத் திணையிலேயே பாணனின் செயற்பாடுகள் இருக்கும். தலைவன் பொருட்டுத் தூதாக ஊடல் தீர்க்க வரும்போது தலைவி பாணனுடன் கூற்று நிகழ்த்துவாள். பாணனின் கோரிக்கையை ஏற்பதாகவோ (வாயில் நேர்தல்) மறுப்பதாகவோ (வாயில் மறுத்தல்) கூற்று இருக்கும். ‘வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைவி வாயில் மறுத்தது’ என்னும் துறையில் அமைந்த பாடல் (146) நயம் மிக்கது.

“பரத்தையர் சேரிக்குள் தலைவனின் தேர் நாள் தவறாமல் வந்து செல்கிறது என்றால், அந்தப் பொய்யனின் பேச்சுகளைக் கேட்டு ஏமாந்து என்னைப் போலத் தன் இளமை நலத்தையெல்லாம் அவனிடம் இழந்த யாரோ வேறு ஒரு பேதைப் பெண் இருக்கிறாள் என்று பொருள். இரக்கத்திற்குரிய அவளிடம் சென்று வாயில் வேண்டி அவளது ஊடலைத் தணிக்க முயற்சி செய். என்னிடம் வராதே” என்று பாணனிடம் வாயில் மறுக்கிறாள் தலைவி.

5.5 தோழி

அகப்பொருள் மாந்தர்களில் முதன்மையான இடம் வகிப்பவள் தோழி ஆவாள். தலைமக்களுக்குக் களவு, கற்பு என்ற இரு ஒழுக்கத்திலும் இடையறாது துணை புரிபவள். செவிலித் தாயின் மகளாகப் பிறந்து, தலைவிக்கு உற்ற துணையாக இருந்து, அவளது வாழ்க்கைப் பயணம் சிறக்கப் பாடுபடுபவள். தலைவன், தலைவி, செவிலி, பாணன் ஆகியோரிடம் தோழி கூற்று நிகழ்த்துவாள்.

5.5.1 தோழி -> தலைவன் தோழி தலைவனுடன் களவு, கற்பு என்ற இரு ஒழுக்கத்திலும் தலைவன், தலைவி இருவருக்கும் இடையே ஒரு பாலம் போன்று உடன் இருப்பாள். தோழி, தலைவனுடன் கூற்று நிகழ்த்துவதே அகநானூற்றில் மிகுதி. களவில் பாங்கியிற் கூட்டம் என்ற பெரும்பகுதியே உண்டு. மதி உடன்பாடு, பகற்குறி; இரவுக்குறிகள், அலர், சேட்படை, மடல்திறம், வெறியாட்டு, நொதுமலர் வரைவு, வரைவு கடாஅதல், அறத்தொடு நிற்றல், ஒருவழித் தணத்தல், உடன்போக்கு என்ற நிலைகளில் அவற்றின் உட்கூறுகளில் தோழி கூற்று நிகழ்த்துவாள்.

இப்பாடத்தில் குறிஞ்சி உரிப்பொருள் பற்றிய விளக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாடல் (218) தோழி கூற்றாக அமைந்ததுதான்.

கற்பு வாழ்க்கையில் வினையின் பொருட்டுப் பிரிகின்ற தலைவனைச் செலவழுங்குவித்தலும் (பிரிவைத் தவிர்த்தல்), பரத்தையர் பிரிவு மேற்கொண்டு திரும்பும் தலைவனுக்கு வாயில் மறுத்தலும் வாயில் நேர்தலும் எனத் தோழி கூற்றுகள் நிகழும். செலவு அழுங்குவித்தல் துறையில் தோழி கூற்றாக அமைந்த ஒரு பாடலில் (215), “பாலை நிலத்தைக் கடந்து செல்வோர் அடையும் துன்பங்களை விரிவாக எடுத்துரைத்து, அத்தகைய கடுவழியில் சென்று வெற்றியோடு திரும்பிவா என்று உன்னிடம் சொல்லும் உள்ளத்தின் வலிமை தலைவிக்கு இல்லை” என்று அழகாகச் சொல்கிறாள் தோழி.

5.5.2 தோழி -> தலைவி களவு, கற்பு என்ற இரு ஒழுக்கத்திலும் தோழி தலைவியுடன் கூற்று நிகழ்த்துவாள்.

களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவன், திருமணம் செய்யும் ஏற்பாட்டுடன் தலைவியின் ஊருக்கு வருகிறான். இது வரைவு மலிதல் எனப்படும். “மழை பெய்யாமையால் நாடு வறுமையுற்று ஏர்த்தொழில் இன்றிக் கலப்பைகள் உறங்கிப்போன வறட்சிக் காலத்தில், பெரு மழை பொழிந்து குளங்கள் நிரம்பினால் மக்கள் மனங்களில் எவ்வளவு மகிழ்ச்சி பொங்குமோ அவ்வளவு மகிழ்ச்சியை என் மனத்தில் நிரப்பியது இச்செய்தி” என்கிறாள் தோழி (பாடல் 42). இது ‘தலைமகன் வரைவு மலிந்தமையைத் தோழி, தலைமகளுக்குச் சொல்லியது’ என்னும் துறையாகும்.

கற்புக் காலத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கும் போது ஆற்றாமல் தலைவி புலம்புவாள். அவளை ஆற்றுவித்துத் தோழி பேசுவாள்.

5.5.3 தோழி -> செவிலி தோழி, தலைவியின் களவொழுக்கத்தைத் தன் தாயாகிய செவிலியிடம்தான் தெரிவிப்பாள். இது அறத்தொடு நிற்றல் எனப்படும். இத்துறையில் சிறந்த பாடல்கள் அகநானூற்றில் உள்ளன (48, 110, 190).

5.6 செவிலி

செவிலி தலைவியின் வளர்ப்புத்தாய். நற்றாய்க்குத் தோழியாக இருந்தவள். களவு, கற்பு என்ற இரு ஒழுக்கத்திலும் செவிலி கூற்று நிகழ்த்துவாள். தலைவியின் வேறுபாடு கண்டு தோழியை வினாவுதலும், நற்றாய்க்கு அறத்தொடு நிற்றலும், உடன்போக்கின்போது புலம்புதலும், கண்டோரை வினவுதலும், கற்புக் காலத்தில் தலைவியின் இல்வாழ்க்கைச் சிறப்பைக் கண்டு வந்து நற்றாயிடம் உரைப்பதும் செவிலி கூற்றுகள் நிகழும் துறைகள் ஆகும்.

உடன்போகிய தலைவியை நினைத்துச் செவிலி புலம்பும் துறையில் அமைந்த பாடல்கள் அகநானூற்றில் மிகுதி. “திருமண விழாவில், பெற்ற தாய் ‘சிலம்பு கழிநோன்பு’ செய்து கழற்ற வேண்டிய தன் சிலம்பைத் தலைவியாகிய என் மகள் தலைவனோடு உடன்போக்கில் செல்ல இரவில் புறப்பட்ட போது, உறங்கும் தாயை ஒலிசெய்து எழுப்பிவிடுமே என்று, தானே கழற்றி வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். அவள் தன் காதலனுடன் காட்டில் ஓர் ஒதுக்கிடத்தில் நடை தளர்ந்து தங்கியிருக்கிறாளோ, அச்சம் தரும் அப்பாலை வழியில் அவனுக்கும் முன்னால் நடந்து கொண்டிருக்கிறாளோ” என்று செவிலி புலம்பும் கயமனாரின் பாடல் (321) மிக அழகியது.

5.6.1 நற்றாய் நற்றாய், தலைவியைப் பெற்றெடுத்தவள். தலைவியின் வேறுபாடு கண்டு செவிலியை வினாவுதலும், தந்தை; தன்னையர்க்கு அறத்தொடு நிற்றலும், உடன்போக்கின்போது புலம்புதலும், கண்டோரை வினவுதலும் என நற்றாய் கூற்றுகள் – துறைகள் அமையும்.

அக இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் நற்றாய்க்கும் தலைவிக்கும் உள்ள தொடர்பு மேலோட்டமாகவே காட்டப்பட்டுள்ளது. தலைவி மீது நற்றாய்க்கு அக்கறையும் பாசமும் இல்லாதது போலவே எண்ணத் தோன்றும்.

உடன்போக்கு மேற்கொண்ட தன் மகளை எண்ணி நற்றாய் வருந்துகிறாள். அலர் பேசும் பெண்டிர் தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள தொடர்பைத் தங்களுக்குள்ளும் பேசிக்கொள்கின்றனர்; நற்றாயிடமும் தெரிவிக்கின்றனர். “தலைவியின் செயலால் மகிழ்ச்சி அடைவதோ துன்பப்படுவதோ நம்முடைய வேலை, இதில் ஏன் மற்றவர்கள் மூக்கை நுழைக்கிறார்கள்?” என்று வெகுள்கிறாள் – வேதனைப்படுகிறாள், நற்றாய்.

தன் மகள் நாணுவாள் என்பதால்தான் அலர்வாய்ப் பெண்களின் கூற்றைத் தன் மகளிடம் விசாரிக்காமல் இருக்கின்றாள். தன் மகள் தனது உள்ளம் என்ன என்பதை அறியாமலேயே சென்றுவிட்டாளே என்று வருந்துகிறாள்.

அவர்கள் போகும் பாதையில் உள்ள சிற்றூரில், நொச்சி மரம் சூழ்ந்த குடிசையில் வாழும் ஒரு பெண்ணாக மாற்றுருக்கொண்டு, அவர்களை வரவேற்று, விருந்து உபசரிக்க எண்ணுகின்றாள். இதுவே அகநானூறு 203 ஆம் பாடலில் இடம்பெற்றுள்ள செய்தி.

இப்பாடல் நற்றாய், தலைவியைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருப்பதையும், அவளது காதலுக்கு ஆதரவாய் இருப்பதையும், காதலனுடன் சென்றுவிட்ட மகள்மீது கோபம் கொள்ளாமல் இருப்பதையும் எடுத்துக்காட்டி, தலைவி மீது நற்றாய்க்கு உள்ள அக்கறையையும் பாசத்தையும் வெளிப்படுத்தி உள்ளது. அக இலக்கியங்களில் இத்தகு அரிய பாடல் இது ஒன்றே எனலாம்.

5.6.2 பரத்தை தலைவனுக்குத் தலைவி அல்லாமல் வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருக்கும். அவர்கள் பரத்தையர் எனப்படுவர். உரிப் பொருளாகிய ஊடலுக்குக் காரணமாய் அமைந்து, மருதத்திணையை இயக்குபவர்கள் பரத்தையர்களே ஆவர். தலைவன், தலைவனுக்குப் பாங்காயினார், தலைவிக்குப் பாங்காயினார், தமக்குப் பாங்காயினார் என இவர்களிடம் பரத்தையர், தலைவனின் இயல்பைப் பழித்துப் பேசுவர். (பாங்காயினார் = நெருங்கியவர்கள், நண்பர்கள்)

“தலைவன் தன் மனைவியிடம், “உன் கோபத்திற்குக் காரணமான அந்தப் பெண்ணை எனக்குத் தெரியவே தெரியாது; அவளோடு நான் காவிரிப் புதுப்புனல் ஆடவில்லை. அந்தத் தவற்றை நான் செய்திருந்தால் தெய்வம் என்னை வருத்தட்டும்” என்று சூள் (சத்தியம்) உரைத்து அவளைத் தேற்றுகிறானாம். அப்படியானால் நேற்று என்னுடன் நீராடிக் களித்தவன் யார்? வேறு ஒருவனா?” என்று தனக்குப் பாங்காயினாரிடம் தலைவனைப் பழிக்கிறாள் பரத்தை (பாடல் 166).

5.6.3 கண்டோர் உடன்போக்கின்போது தலைவன், தலைவியரின் கண்ணிலும் தேடிச்செல்லும் செவிலி கண்ணிலும் படுபவர்கள் கண்டோர் ஆவர். இவர்கள் பேசுவதாகவும் பாடல்கள் உள்ளன.

5.7 தொகுப்புரை அகநானூறு ஐந்திணைகளிலும் நிகழும் களவு, கற்பு என்ற இரு கைகோளிலும் அமைந்த பாடல்களைக் கொண்டது. அகத்திணையின் அடிப்படைக் கூறுகளான முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியன சிறந்து விளங்குகின்றன. அகப்பொருள் நிகழ்வுகள், கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கூற்றுகள் சிறப்பாக அமைந்து அகநானூறு அகப்பொருண்மையில் சிறப்புற்று விளங்குகிறது. இனிய நண்பர்களே! இப்பாடத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள பாடல் எண்களைக் கொண்டு அகநானூற்றுப் பாடல்களை மின்னூலகத்தில் முழுமையாகப் படித்துச் சுவைக்கலாம்.

பாடம் - 6

அகநானூறு – 3

6.0 பாட முன்னுரை

இலக்கியம் என்பது காலத்தைக் காட்டும் கண்ணாடி, வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என மேலை நாட்டார் இலக்கியங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். இக்கொள்கை, காலத்தைக் கடந்தும் இடத்தைக் கடந்தும், தனிமனிதப் பழக்க வழக்கங்களையும் சமுதாய நிலைகளையும் இலக்கியம் நமக்கு எடுத்துச் சொல்லுவதால் ஏற்பட்டதாகும்.

தமிழில் இலக்கியத்தை இலக்கு + இயம் = இலக்கியம் எனப் பிரித்துக் குறிக்கோளைக் கூறுவது என்று பொருளுரைப்பர். எனவே, இலக்கியம் என்பது இருந்ததை – இருப்பதை எடுத்துக் காட்டுவதோடு நில்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் இருக்க வேண்டும்.. இந்த இரு நிலைகளிலேயே தமிழ் இலக்கியங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் அகநானூறு குறிப்பிடத்தக்கது. இப்பாடம் அகநானூறு காட்டும் சமுதாய நிலையை விளக்குகிறது.

6.1 இல்லறம் கணவனும் மனைவியும் மக்களைப் பெற்று இல்வாழ்க்கைக்குரிய அறங்களைச்செய்தல் – மனையறம் காத்தல் இல்லறம் ஆகும். அகநானூறு திருமணத்தில் தொடங்கி மனையறத்தின் பல்வேறு கூறுகளையும் கூறுகிறது. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

6.1.1 திருமணம் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தாங்களே சந்தித்தித்துக் காதல் கொண்டு; உடன்போக்கு மேற்கொண்டு திருமணம் செய்துகொள்ளல், காதல்கொண்டோர் பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ளல், பெற்றோரின் ஏற்பாட்டில் திருமணம் செய்துகொள்ளல் என்ற மூன்று வகையான திருமணங்களிலும் இல்லறம் தொடங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முன்னும் பின்னும் பல சடங்குகள், நடைமுறைகள் வழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

• பருவப் பெண்ணுக்குப் பாதுகாப்பு

பெண்கள் பருவம் அடைந்ததும் அவர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்புக் கொடுப்பது, இன்று மட்டுமல்ல அன்றும் நிலவிய பழக்கம் ஆகும். இதற்கு இற்செறிப்பு என்று பெயர். கீழ்க் காணும்பகுதி இதற்குச் சான்று ஆகும்.

பெண்துணை சான்றனள் இவளெனப் பன்மாண்

கண்துணை யாக நோக்கி நெருநையும்

அயிர்த்தன்று மன்னே நெஞ்சம், பெயர்த்தும்

அறியா மையின் செறியேன் யானே

(315)என்ற பாடற் பகுதி, ஒரு தாயின் புலம்பலாகும். தனது பெண்ணின் பருவ வளர்ச்சியை அவளது பெண்மை உறுப்புகளின் வளர்ச்சியால் தாய் தன் கண்ணால் நோக்கி அறிந்து கொண்டாள். பெண்மை காரணமாகப் பாதுகாப்புக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கவில்லை. அதற்காக வருந்துகிறாள்.

• வீட்டைப் புதுப்பித்தல்

திருமணத்திற்காக வீட்டைப் புதுப்பிக்கும் பழக்கம் இருந்தது. இதனை,

கடலம் தானைக் கைவண் சோழர்

கெடலரு நல்லிசை உறந்தை அன்ன

நிதியுடை நல்நகர் புதுவது புனைந்து

தமர்மணன் அயரவும்

– (369)

என்ற பாடற் பகுதியால் அறியலாம். இப் பாடற் பகுதி சுற்றத்தாருடன் கூடிப் பெற்றோர் செய்யும் திருமணம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. சோழரின் புகழ் படைத்த உறந்தை நகர் போலச் செல்வம் நிறைந்த நல்ல மனையைப் புதுப்பித்து, சுற்றத்தார் திருமணம் செய்தனர் என்ற செய்தி பாடலில் இடம்பெற்றுள்ளது.

• சிலம்புகழி நோன்பு

திருமணத்திற்கு முன்பாகப் பெண்ணின் வீட்டில் அவளது தாய், தலைவி அணிந்திருக்கும் சிலம்புகளை அகற்றுவாள். இது ஒரு விழாவாக நடைபெறும். இதற்குச் சிலம்பு கழி நோன்பு என்று பெயர். காதலனுடன் சென்றுவிட்ட தன் பெண்ணுக்குச் சிலம்பு கழி நோன்பு செய்ய முடியாத தாயின் புலம்பலில் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன.

… என் சிறுமடத் தகுவி

சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்

நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை

ஓர்ஆ யாத்த ஒருதூண் முன்றில்

ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇ

மேயினள் கொல்?என நோவல் யானே.

(369)

என்பது சிலம்பு கழி நோன்பு பற்றிய செய்திகளைத் தரும் பகுதியாகும். இந் நோன்பு பெண் வீட்டில் நடப்பதே முறை என்றும் அழைத்துச் சென்ற ஆடவன் வீட்டில் நடப்பதை இழுக்காகவும் கருதியுள்ளனர் என்பதை மேற்கூறிய பாடற்பகுதிகள் விளக்குகின்றன.

• பரிசம் போடுதல்

திருமணத்திற்கு முதல்நாள் மாலை அல்லது முன்இரவில் பரிசம் என்ற சடங்கு இன்றளவும் கிராமப்புறங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று மணமகன் வீட்டார், வரதட்சணை என்ற பெயரில் பணமும் பொருளும் பெறுவது போல, முன்னர் மணமகள் வீட்டார் முலை விலை, சிறுவளை விலை, பாசிழை விலை என்ற பெயரில் பணமும் பொருளும் பெற்றனர். இதைப் பரிசம் போடுதல், பரியம் போடுதல் என்ற சடங்காகவே நடத்தினர். இப்பாசிழை விலை குறித்த சான்று அகநானூற்றில் உள்ளது.

கருங்கண் கோசர் நியமம் ஆயினும்

உறும்எனக் கொள்குநர் அல்லர்.

நறுநுதல் அரிவை பாசிழை விலையே!

(90)கோசர்களின் (ஓர் அரச பரம்பரையினர்) வளப்பம் மிக்க, புது வருவாயை உடைய நியமம் என்ற ஊரையே பாசிழை விலையாகக் கொடுத்தாலும் இவள் வீட்டார் ஏற்பார் அல்லர் என்ற செய்தி பாடலில் இடம்பெற்றுள்ளது.

• திருமண நிகழ்வு

திருமணம் என்ற நிகழ்வு, பல சடங்குகளை உள்ளடக்கியது ஆகும். நல்லாவூர் கிழார் என்ற புலவர் அச் சடங்குகளையெல்லாம் தொகுத்து வழங்கியுள்ளார்.

பாடற் பகுதி (86) சடங்குகளில் பலவற்றைக் குறிப்பிட்டுள்ளது. அவை வருமாறு,

தீய கோள்களின் தொடர்பு இல்லாத வளைந்த வெண்சந்திரனை, புகழுடைய உரோகிணி விண்மீன் கூடிய நல்ல நாளைத் திருமணத்திற்குத் தேர்ந்தெடுத்தனர்.

இருள் முற்றிலும் நீங்கிய இனிய காலைப் பொழுதில் திருமணம் நடந்தது.

வாசலில் வரிசையாகக் கால்கள் நட்டு, பந்தல் போட்டு அதில் மணல் பரப்பப்பட்டது.

பந்தலின் ஒரு பகுதியில் மனைவிளக்கு ஏற்றப்பட்டது. மாலைகள் தொங்கவிடப்பட்டன.

தலையிலே குடத்தையும் கைகளிலே கலயங்களையும் உடையவரும் குரவை ஒலி எழுப்புபவரும் ஆகிய முது பெண்டிர் வேண்டியவற்றை முறையாக எடுத்துக் கொடுத்தனர்.

பிள்ளைகளைப் பெற்றெடுத்த, ஆபரணங்கள் அணிந்த பெண்கள் நால்வர் கூடி, கற்பிலிருந்து வழுவாமல், கணவனோடு அவனை என்றும் விரும்பிப் பேணுபவளாக இனிது வாழ்க என வாழ்த்தி, திருமணத்தை நடத்தினர்.

அலரிப் பூ, நெல் ஆகியவை கலந்த நீரைத்தெளித்து வாழ்த்தினர்.

திருமணத்தின்போது உழுந்து கலந்து குழைவாகச் சமைத்த சோற்று உருண்டைகளை உணவாக அளித்தனர்.

இப்படியாக வதுவை என்னும் மணம் நடந்தது.

எனத் திருமணம் நடந்த விதத்தைப் பாடல் விளக்கியுள்ளது. இதற்கு மேலும் பல தகவல்களை விற்றூற்று மூதெயினனார் பாடல் (136) தருகிறது.

பறவைச் சகுனம் பார்த்தனர்.

கடவுளை வாழ்த்தினர் – வழிபட்டனர்.

மணமுழவையும் முரசங்களையும் ஒலிக்கச் செய்தனர்.

வெள்ளிய நூலில் வாகை இலையையும் புதிதாக முளைத்து வந்த அருகம் புல்லையும் சேர்த்துக் கட்டி, காப்பாக அணிவித்தனர்.

புத்தாடை அணிவித்தனர்.

திருமண விருந்தாக நெய்யும் இறைச்சியும் கலந்து சமைத்த சோற்றை வழங்கினர்.

• முதல் இரவு

திருமணம் முடிந்த அன்றைய தினமே முதலிரவை நடத்தினர். அன்றைய தினம் பெண்கள், பேசா மடந்தையாக – புத்தாடைக்குள் முகத்தை முற்றிலுமாக மறைத்துக் கொள்ளும் மிகுநாண் கொண்டவர்களாக விளங்கியுள்ளனர்.

தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின்

உவர்நீங்கு கற்பின்எம் உயிர்உடம் படுவி!

முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்

பெரும்புழுக் குற்றநின் பிறைநுதல் பொறிவியர்

உறுவளி ஆற்றச் சிறுவரை திறஎன

ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்

உறைகழி வாளின் உருவுப்பெயர்ந்து இமைப்ப

மறைதிறன் அறியாள் ஆகி,

ஒய்யென நாணினள்

(136)(முருங்கா = கசங்காத; பிறைநுதல் = பிறை போன்ற நெற்றி; கலிங்கம் = புத்தாடை; பொறிவியர் = அரும்பும் வியர்வை)

என்ற பாடற் பகுதிகள் மேற்கூறிய செய்திகளுக்குச் சான்றுகளாகும்.

6.1.2 பிள்ளைப் பேறுகுடும்ப வாழ்க்கை முழுமை பெறுவது பிள்ளைப் பேற்றிலேயே ஆகும். குழந்தை பெற்ற பெண்கள் போற்றப்பட்டனர். குழந்தை, குடும்ப விளக்காகக் கருதப்பட்டது. கடவுள் கற்பொடு குடிக்கு விளக்காகிய

புதல்வற் பயந்த புகழ்மிகு

சிறப்பின் நன்ன ராட்டி

(184)

என்ற பாடற்பகுதி மேற்கூறிய செய்தியைத் தருகிறது.

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

மறுமைப் பயனும் மறுவின்று எய்துப

செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்

சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்

பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்

வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி!

(66)

பிள்ளைச் செல்வம் இம்மையில் இனிமை பயப்பதற்கு மட்டும் அல்லாமல் மறுமைப்பயன் தரக்கூடியது என்று மக்கள் நம்பினர். வீடுபேறு (மோட்சம்) அடைவதற்குக் குழந்தைப் பேறு இன்றியமையாதது. இறந்த பின் ஈமச்சடங்குகள் நடத்தவும் ஆண்டுக்கு ஒருமுறை தென்புலத்தார் கடன் செய்யவும் பிள்ளை அவசியம் என்பதைப் பழைய இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அதில் அகநானூறும் தன் பங்கைச் செலுத்தியுள்ளது.

6.1.3 இல்லறத்தார் கடமைஇல்வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத் தம் குடும்பக் கடமையோடு சமுதாயக் கடமையும் இருக்கிறது என்று வாழ்ந்தவர்கள் சங்க காலத் தமிழர்கள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றும் அறநூலும் ஆகிய திருக்குறள், இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

(41)

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை. (42)

தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

(43)

என்ற குறள்களின் வழி இல்லறத்தார் ஆற்ற வேண்டிய சமுதாயக் கடமைகளைப் பட்டியலிட்டுள்ளது.

இறந்தவர்களுக்காக வேண்டி அவ்வப்போது செய்யப்படும் சடங்குகள் தென்புலத்தார் கடன் என்ற பெயரால் குறிக்கப்படும். இதை ஒரு சமுதாயக் கடமையாகக் கொண்டனர். உதியன் சேரலாதன் என்ற சேரப் பேரரசன் துறக்கம் (மோட்சம் – முத்தி – வீடுபேறு) அடைந்த தன் முன்னோருக்காக வேண்டிச் செய்த தென்புலத்தார் கடன் அகநானூற்றில் பதிவாகியுள்ளது.

மறப்படைக் குதிரை, மாறா மைந்தின்

துறக்கம் எய்திய தொல்லா நல்லிசை

முதியோர்ப் பேணிய உதியஞ் சேரல்.

(233)

என்ற பாடற் பகுதி மேற்கூறிய செய்திக்குச் சான்று ஆகும். இறந்தவர்களுக்குக் கடமை ஆற்றியதோடு தங்கள் கடமை முடிந்தது என்று வாழவில்லை. வறியர் முதலானோருக்கு உதவ வேண்டும் என்றும் வாழ்ந்தனர். இதனை வெளிப்படுத்துவதாக,

இரப்போர் ஏந்துகை நிறையப் புரப்போர்

புலம்பில் உள்ளமொடு புதுவ தந்துவக்கும்

அரும்பொருள் வேட்டம்

- 389

என்னும் பாடலும் 53, 173, 231 ஆகிய பாடல்களும் அமைந்துள்ளன. இவை, வறியவர்களுக்கு வழங்குதல், சுற்றத்தாரைப் பேணுதல், இல்லறம் பிழையாமல் வாழ்தல் ஆகியவற்றைப் பழந் தமிழர்கள் தம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார்கள் என்பதைப் பறைசாற்றுகின்றன. காதல் மனைவியைப் பிரிந்து பொருளீட்டச் செல்வது மனைவியருக்கும் துன்பம், கணவன்மாருக்கும் துன்பம் என்றாலும் அடுத்தவர்களுக்கு உதவுவதற்காக அத்துன்பங்களை ஆடவரும் பெண்டிரும் ஏற்றுக்கொண்டது எண்ணி வியக்கத் தக்க செயலாகும்.

மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை

விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே!

(384)

என்ற பாடற்பகுதி விருந்து ஓம்பும் சங்கத் தமிழனின் சால்பைப் பறைசாற்றுவதாகும். வெளிநாடு சென்றிருந்த கணவன் வீடு திரும்பியதால் மனைவி பெற்ற அழகு, விருந்து உபசரித்தல் என்று அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் படம்பிடித்துள்ளது.

6.2 தனி மனித ஒழுக்கங்கள்

தனிமனித ஒழுக்கங்கள் சரியாக இருப்பதே சமுதாயத்தை நல்வழியில் கொண்டு செல்லும். எனவே, தனிமனித ஒழுக்கத்திற்கு இன்றியமையாமை கொடுத்துள்ளனர் சங்க காலத்துச் சான்றோர்.

6.2.1 பெரியோர் ஒழுக்கம் சான்றோர்கள் எங்ஙனம் வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சான்றோர்கள் எதன் மீதும் ஆசை கொள்ளமாட்டார்கள். மாறாக உள்ளத்தில் ஆசை எழுந்தால், அது குறித்து முன்னோர் சொற்களைக் கருவியாகக் கொண்டு தம்செயல் அறத்திற்கும் பொருளுக்கும் தவறின்றி இருக்கின்றதா? தம் தகுதிக்கு அச்செயல் சரியானதுதானா? என்பவற்றை ஆராய்வர் அதன்பின்புதான் தம் ஆசையை நிறைவேற்ற முற்படுவர். சான்றோர்களின் – பெரியோர்களின் இப் பண்பை,

விழையா உள்ளம் விழையும் ஆயினும்

என்றும் கேட்டவை தோட்டியாக மீட்டுஆங்கு

அறனும் பொருளும் வழாமை நாடித்

தன்தகவு உடைமை நோக்கி, மற்றதன்

பின்ஆ கும்மே முன்னியது முடித்தல்

அனைய பெரியோர் ஒழுக்கம்

(286)

(தோட்டி = அங்குசம்; வழாமை = பிழை செய்யாமை)

என்ற பாடற் பகுதி அழகாக விளக்கியுள்ளது.

6.2.2 பிற உயிர்களிடத்து அன்பு மக்கள் தங்கள் இன்பத்திற்காக மற்ற உயிரினங்களுக்கு இடையூறு செய்வதில்லை. ஓர் ஆடவன் தன் நாட்டிற்குக் கடமையாற்றுவதற்காக மனைவியைப் பிரிந்து சென்று மீண்டு வருகின்றான். வரும்போது, விரைந்து வந்து மனைவியைச் சந்திக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கை. அப்போது வேறு எதுவும் கவனத்திற்கு வாராது. இருப்பினும் வழியில், சேர்ந்திருக்கும் இணை வண்டுகள் தேரின் மணி ஓசையால் அஞ்சி விலகிடக்கூடாது என்பதற்காகத் தேரில் உள்ள மணிகளின் நாவினை ஒலிக்காதவாறு கட்டுகின்றான் அந்த ஆடவன். இதனை,

நரம்பு ஆர்த்தன்ன, வாங்குவள் பரிய

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த

தாதுண் பறவை பேதுறல் அஞ்சி

மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்

(4)என்ற பாடற்பகுதி வெளிப்படுத்துகின்றது.

ஒரு தலைவன் தன் தேரில் பூட்டிய குதிரையை அடிக்காமலும் மணி ஓசையால் மான்கள் தம் சேர்க்கையைவிட்டு அஞ்சி ஓடாமல் இருக்கும் வகையிலும் தேரைச் செலுத்துமாறு தேர்ப்பாகனிடம் கேட்டுக்கொள்கிறான். (134) இவை அக்கால மக்கள் பிற உயிர்கள் மீது கொண்டிருந்த பரிவினைக் காட்டுகின்றன.

6.3 சமய வாழ்க்கை

இறைவனை வழிபடும் நிலை, சமய வாழ்க்கையாகும். குறிஞ்சி முதலான நிலத்திற்கு, முருகன் முதலான கடவுளரை நிலத்தெய்வங்களாகக் கொண்டிருந்தமை தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளது. இறைவழிபாடும் இறை பற்றிய கதைக் குறிப்புகளும் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன.

6.3.1 வழிபாடு செயல்களைத் தொடங்குவதற்கு முன்னர்க் கடவுளை வணங்கினர். இதனை, ‘கடிமனை புனைந்து, கடவுள் பேணி’ – (136) என்ற தொடரால் அறியலாம். திருமணம் நடத்துவதற்கு முன் கடவுளை வழிபட்டமையை இத்தொடர் காட்டுகிறது.

• கோயில்

செங்கல் சுவர் வைத்துக் கட்டப்பட்ட கோயில்களில் கடவுளை ஓவியத்தில் எழுதி வைத்து வழிபட்டுள்ளனர். அப்படி இருந்த கோயில் ஒன்று இடிந்துவிட்டதை ஒரு பாடற் பகுதி வெளிப்படுத்தியுள்ளது. (167)

• நடுகல் வழிபாடு

தமிழர், நாட்டுக்கு உழைத்த நல்லவர்களைக் கடவுளாகக் கண்டனர். அதன் விளைவே நடுகல் வழிபாடு. நாட்டுக்காகப் போரிட்டு, போரிலே உயிர் துறந்தவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு; அக்கல்லில் இறந்தவரது பெயரையும் சிறப்பையும் எழுதிவைத்து அவ்வப்போது ஒப்பனை செய்து, விழா நடத்தி, இசை முழக்கி, பலியிட்டு வழிபடுவது நடுகல் வழிபாடாகும்.

நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்

பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்

(67)

(அமர் = போர்; பீடு = பெருமை; அதர் = வழி)

பாடல்கள் 35, 131, 387 ஆகியவையும் நடுகல் வழிபாடு குறித்த தகவல்களைத் தருகின்றன.

6.3.2 முருகன் குறிஞ்சி நிலக் கடவுளாக முருகன் போற்றப்பட்டுள்ளான். அகப்பொருளில் தலைவனைச் சந்திக்காததால் தலைவியின் உடலிலும் மனத்திலும் ஏற்பட்ட சோர்வினை, முருகனால் ஏற்பட்டதாகக் கருதிய பெற்றோர், அச்சோர்வினைப் போக்க முருகனுக்கு வழிபாடு நடத்தினர். இது வெறியாட்டு எனப்பட்டது. வெறியாட்டு வழிபாட்டை நடத்தியவன் வேலன் என்ற பெயரால் குறிக்கப்பட்டான். இது பற்றிய செய்தியைப் பாடல் 98இல் காண்கிறோம்.

முருகன் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் கோயில் கொண்டிருப்பதும் அவன் சூரபதுமன் முதலான அரக்கர்களை அழித்ததும் ஆகிய செய்திகள்,

சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்

சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து

அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை

(59)

(அந்துவன் = நல்லந்துவனார் என்னும் புலவர்; சூர் = அரக்கன்; சந்து = சந்தனமரம்; வரை = மலை)

திருமணி விளக்கின் அலைவாய்ச்

செருமிகு சேஎயொடு

(266)

(அலைவாய் = திருச்செந்தூர்; சேய் = முருகன்)

என்ற பாடற் பகுதிகளால் புலனாகின்றன.

6.3.3 திருமால்

முல்லை நிலக் கடவுளாகத் திருமால் போற்றப்பட்டுள்ளார். திருமாலின் இரண்டு அவதாரச் செய்திகள் அகநானூற்றில் உவமைகளாக இடம்பெற்றுள்ளன.

கண்ணன் அவதாரத்தின்போது, யமுனை ஆற்றில் நீராடிய ஆயர்குலப் பெண்களுக்காகக் குருந்த மரத்தை வளைத்துக் கொடுத்து, அவர்கள் தழை ஆடை அணிந்துகொள்ள உதவி செய்தான். இச் செய்தி,

வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை

அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்

மரம்செல மிதித்த மாஅல்

(59)

(தொழுநை = யமுனை; அண்டர் மகளிர் = ஆயர் மகளிர்; உடீஇயர் = உடுத்திக் கொள்வதற்காக; மரம் செல = மரம் வளையுமாறு)

என்ற பாடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இராமன் அவதாரத்தின்போது, திருவணைக்கரை என்ற ஊரில் ஓர் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து, இலங்கைப் போர் குறித்த ஆலோசனையை நடத்தினான். அப்போது ஆலமரத்தில் இருந்த பறவைகள் ஆலோசனைக்கு இடையூறாக ஓசை எழுப்பின. இராமன் அவற்றை அமைதியாக இருக்கும்படி செய்தான். இச் செய்தி,

வென்வேல் கவுரியர் தொன்முது கோடி

முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன்துறை

வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த

பல்வீழ் ஆலம் போல ஒலிஅவிந்து

(70)

(கோடி = திருவணைக்கரை என்னும் ஊர்; பௌவம் = கடல்; இரங்கும் = ஒலிக்கும்; மறை = இரகசியம்; கவுரியர் = பாண்டியர்; அவித்த = நிறுத்திய)

என்ற பாடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

6.4 தொழில்கள்

அக்காலத்து நடைபெற்ற தொழில்கள் பற்றிய பல குறிப்புகள் அகநானூற்றில் காணக் கிடைக்கின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

6.4.1 உழவுசங்க காலத்தில் உழவே தலைமையான தொழிலாக விளங்கிற்று. உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்த புலவர்கள் உழவின் நுட்பங்கள் பற்றிப் பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். நெல் பயிரிடுதலில் பல்வேறு நிலைகள் உள்ளன. நிலத்தை உழுதல், நீர் பாய்ச்சுதல், விதை விதைத்தல், நாற்று நடுதல், உரமிடுதல், களையெடுத்தல், பின் உரிய காலத்தில் அறுவடை செய்தல் என்பன அவை. இவற்றுள் உழவுக்குரிய கலப்பை – நாஞ்சில் பற்றிய குறிப்பு, பாடல் 141இல் இடம்பெற்றுள்ளது. ‘இருங்கழிச் செய்யின் உழாஅது செய்த வெண்கல் உப்பின்’ – (140) எனவரும் தொடர், உழுது விளைவிப்பது பயிர்; உழாது விளைவிப்பது உப்பு என்ற பொருளைத் தருகிறது. (செய்யில் – வயலில்)

உழவுத் தொழிலுக்கு அடிப்படையான நீர்நிலைகளை இரவும் பகலும் காத்து நீரை ஒழுங்குபடுத்தும் காவலர்கள் இருந்துள்ளனர் என்ற செய்தியைப் பாடல் 252 கூறுகிறது.

6.4.2 வணிகம் வெளிநாட்டு வணிகம், உள்நாட்டு வணிகம் என்ற இரு நிலைகளில், பண்டமாற்றாகவும் பொற்காசுப் பரிமாற்றத்திலும் வணிகம் நிகழ்ந்துள்ளது. இவற்றில் சிலவற்றுக்கான சான்றுகள் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன.

• உள்நாட்டு வணிகம்

உள்நாட்டு வணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையில் நடைபெற்றது. வணிகத்தில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபட்டதற்கான குறிப்புகள் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன.

கதழ்கோல் உமணர் காதல் மடமகள்

சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி

நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்

சேரி விலைமாறு கூறலின்.

(140)

நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!

கொள்ளீ ரோஎனச் சேரிதொறும் நுவலும்

அவ்வாங்கு உந்தி அமைத்தோ ளாய்நின்

(390)ஆகிய பாடற்பகுதிகளில் உப்பைக் கொடுத்து, நெல்லை ஈடாகப் பெற – வணிகம் செய்ய- பெண்கள் ஊர் ஊராகச் சென்ற செய்தி இடம்பெற்றுள்ளது.

ஒருத்தி நெல்லை ஏற்காமல் கழற்சிக் காய் அளவிலான முத்துக்களையும் ஆபரணங்களையும் பண்டமாற்றுப் பெறுகிறாள். இதனைப் பாடல் 126ஆல் அறியலாம்.

• வெளிநாட்டு வணிகம்

அயல்நாட்டுப் பொருட்களைக் கொணர்வதும் தம் நாட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதும் ஆகிய அன்னியச் செலாவணியில் அன்றைய தமிழகம் சிறந்திருந்தது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளம்கெழு முசிறி

(149)

(கலம் = கப்பல்; கறி = மிளகு; பெயரும் = திரும்பும்)

என்ற பாடற்பகுதி, யவனர் தம் அழகான வேலைப்பாடு அமைந்த மரக்கலங்களில் பொன்னைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, மிளகை ஏற்றிச் செல்லும் செய்தியைக் குறிப்பிட்டுள்ளது. மேலும், முசிறி என்ற துறைமுகத்தையும் குறிப்பிட்டுள்ளது. கடல் வாணிகத்தின் சிறப்பை விளக்கும் வகையில், அதற்கு ஆதாரமான துறைமுகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கொற்கைத் துறைமுகம் பற்றிப் பாடல்கள் 27, 130, 201, 350 ஆகியவற்றில் பேசப்பட்டுள்ளது. இது, கடல் வணிகத்தின் சிறப்பைக் காட்டுகிறது.

6.5 பொழுதுபோக்குகள்

பொழுதுபோக்கிற்கு விளையாட்டுகள் இருந்தன. பெருக்கெடுத்து வரும் ஆற்று நீரில் நீந்தி விளையாடுதலை மக்கள் மிகவும் விரும்பியுள்ளனர்.

வட்டாடுதல், பந்து விளையாடுதல், கழங்கு விளையாடுதல் எனப் பல விளையாட்டுகளில் இல்லத்திற்குள்ளும் இல்ல வளாகத்திற்குள்ளும் பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.

6.5.1 விழாக்கள் அக்காலத்தில் பொழுதுபோக்கின் கூறாகவும் வழிபாட்டின் அங்கமாகவும் விழாக்கள் நடந்துள்ளன. திங்களை உரோகிணி கூடுகின்ற நிறைமதி (பௌர்ணமி) நாளில் மாலை நேரத்தில் தெருக்களில் மாலைகள் தொங்கவிட்டு, விளக்குகளை ஏற்றிக் கார்த்திகை விழாக் கொண்டாடியுள்ளனர்.

இதுபோலவே, கொங்கு நாட்டவர் உள்ளி விழா என்ற விழாவை நடத்தியுள்ளனர். (368)

6.6 தொகுப்புரை

இல்லறம் என்ற குடும்ப வாழ்க்கை, பல சடங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. திருமணம் பல வகைகளையும் பல முறைகளையும் கொண்டுள்ளது. பிள்ளைப்பேறு இம்மைக்கும் மறுமைக்கும் இன்றியமையாதது. மக்கள் தமக்காகவே மட்டுமல்லாமல் பிறர்க்கெனவும் வாழ்ந்துள்ளனர். தனி மனித ஒழுக்கங்கள் சிறப்பாக அமைந்திருந்தன. கடவுளர் நம்பிக்கையோடு கதைகளும் வழக்கத்தில் இருந்தன. வாழ்க்கைக்கு ஆதரவாகப் பல்வேறு தொழில்கள் நடைபெற்றன. பொழுதுபோக்கிற்காகவும் சமயச்சடங்கிற்காகவும் விழாக்களை நடத்தினர். அரசர்கள் ஒருவருக்கொருவர் பகைகொண்டு போரிட்டுக் கொண்டனர். நாடி வந்தோருக்குப் பொருள் வழங்கினர். இச்செய்திகள் அக்காலச் சமுதாய நிலையைக் காட்டுவதாக அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன.

2.1 முப்பொருள்

அகத்திணைப் பாடல்களின் அடிப்படை முப்பொருள். அவை முதல், கரு, உரிப்பொருள் என்பனவாகும்.

முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே

நுவலுங் காலை முறைசிறந் தனவே

பாடலுள் பயின்றவை நாடுங் காலை

(பொருள். அகத்திணை இயல் - 3)

என்று முப்பொருள் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. இம்முப்பொருள்கள் ஐங்குறுநூற்றில் பெறும் இடத்தை இனிக் காணலாம்.

• முதற்பொருள்

முதற்பொருள் நிலம், பொழுது என இருவகைப்படும். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என நிலம் ஐந்து ஆகும். நிலத்தின் பெயரே திணைக்கு ஆகி வந்துள்ளதெனக் கூறலாம். பெரும்பொழுது, சிறுபொழுது எனப் பொழுது இரண்டு வகைப்படும். ஓர் ஆண்டின் ஆறு பெரும் பருவங்கள் பெரும் பொழுதாகும். ஒரு நாளின் ஆறு கூறுகள் சிறுபொழுதாகும். கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக் காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம் என்ற ஆறும் பெரும் பொழுதுகளாகும். இவை ஆவணியில் தொடங்கிப் பருவத்திற்கு இருமாதங்கள் வீதம் ஆடியில் முடிவடையும். வைகறை, விடியல், எற்பாடு, நண்பகல், மாலை, யாமம் என்பவை சிறுபொழுதுகள் ஆகும். பத்து நாழிகை / நான்குமணி காலஅளவு கொண்டதாகச் சிறுபொழுது அமையும். இனி ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள முதற் பொருள்களைக் காண்போம்.

2.1.1 மருதம் ஐங்குறுநூற்றின் முதல் திணை மருதம் ஆகும். மருதத்தை முதலாகக் கொண்டது ஐங்குறுநூறு மட்டுமே. மருதத் திணையின் நிலம் மருத நிலம். அதாவது வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகும். பாடல்களில் இடம்பெறும் நிலம், சில இடங்களில் வெளிப்படையாகவும், சில இடங்களில் பொருள்களைக் கொண்டு அடையாளம் காணும் வகையிலும் இடம் பெறும். கழனி (பாடல் 4, 25, 29.....), செறு (26, 27, 57......), பழனம் (53, 60.....) என்ற சொற்கள் வயலைக் குறிப்பவை ஆகும். இச்சொற்களோடு வயல் (85) என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளது.

• பொழுது

திணைகளுக்குப் பொழுது வகுத்த தொல்காப்பியம் ‘வைகறை விடியல் மருதம்’ என்று குறிப்பிடுகிறது. சிறுபொழுது மட்டும் வரையறுத்துள்ளதால் பெரும்பொழுது ஆறும் மருதத்திற்கு உரியதாகின்றன. மருதத்திணைப் பாடல்களில் கூதிர் (45), வேனில் (45, 54) ஆகிய பெரும்பொழுதுகள் இடம் பெற்றுள்ளன. சிறுபொழுது உய்த்துணரவே கிடக்கின்றது. சிறு பொழுதைக் குறிக்கும் சொற்கள் இடம் பெறவில்லை என்றே கூறலாம்.

• கருப்பொருள்

திணைக்குரிய கருப்பொருள்களாகச் சிலவற்றைத் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது.

தெய்வம் உணாவே மாமரம் புள்பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவும் கருவென மொழிப

(பொருள். அகத்திணை - 20)

என்பது தொல்காப்பிய நூற்பா. தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், பண் என்ற எட்டைத் தொல்காப்பியம் கூற, இளம்பூரணர் அவ்வகை பிறவும் என்பதனால் பூ, நீர் நிலை ஆகியவற்றையும் குறிப்பிடுவார். தொல்காப்பியர் திணை மக்களைத் தனித்துக்கூற, பிற்கால அக இலக்கணங்கள் மக்களைக் கருப்பொருளில் அடக்கிக் கூறுகின்றன.

ஐங்குறுநூற்று மருதத்திணைப் பாடல்களில் ஊரன் (1, 2,... ) எனத் திணை மாந்தரும், உழவர் (3,....) என நில மக்களும், வெண்ணெல் (48, 49, 58....) போன்ற உணவும், மருதம் (31, 70, 74.....) போன்ற மரங்களும், எருமை (91 - 100), நீர்நாய் (63) போன்ற விலங்குகளும், அரிப்பறை (81....) என்ற பறையும், தாமரை (53, 68.....) என்ற பூவும், பொய்கை (34, 41, 44....), ஆறு (45) போன்ற நீர்நிலைகளும் இடம் பெற்றுள்ளன. இவை மருதத் திணைக்கு உரிய கருப்பொருள்கள் என இலக்கண நூல்கள் வரையறுத்தவை ஆகும்.

• உரிப்பொருள்

ஒவ்வொரு திணைக்கும் உரிய ஒழுக்கம் உரிப்பொருள் எனப்படும். இதனை மையமாகக் கொண்டே பாடல்கள் அமையும். ஒவ்வொரு திணைக்கும் உரிய உரிப்பொருளை,

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை

தேருங் காலைத் திணைக்குஉரிப் பொருளே

(பொருள். அகத்திணை - 16)

என்று தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது.

மருதத் திணையின் உரிப்பொருள், தலைவன் மீது தலைவி ஊடல் கொள்வதாகும். மேலும் ஊடல் கொள்வதற்கான காரணங்கள் மற்றும் ஊடல் தீர்க்கும் முயற்சிகள் ஆகியனவும் இப்பகுதியைச் சேர்ந்தவையே. புலவிப் பத்து என்று உரிப்பொருள் பெயராலேயே ஒரு பத்தின் தொகுப்பு இத்திணையில் அமைந்துள்ளது.

துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்

வஞ்சி ஓங்கிய யாணர் ஊர

தஞ்சம் அருளாய் நீயேநின்

நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே.

(50)

என்ற பாடலில் தலைவன் பரத்தையர் மாட்டுப் பிரிந்து சென்றமையால் தலைவி ஊடியும் வருந்தியும் இருப்பதையும் அதனால் இல்லத்திற்குத் திரும்ப வேண்டும் எனத் தோழி வலியுறுத்துவதையும் காணலாம்.

2.1.2 நெய்தல் ஐங்குறுநூற்றின் இரண்டாவது திணை நெய்தல் திணை. இதற்கு நிலம் நெய்தல் நிலம். அதாவது கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் ஆகும். கடல் (101, 105...), பௌவம் (121) என நெய்தல் முதற்பொருளான நிலம் பாடல்களில் இடம் பெற்றுள்ளது.

• பொழுது

நெய்தற்குரிய பொழுதை ‘எற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்’ என்று தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. சிறுபொழுது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதால் பெரும்பொழுது ஆறும் நெய்தல் திணைக்கு உரியதாகிறது.

பெரும்பொழுதைக் குறிக்கும் சொற்கள் இத்திணைப் பாடல்களில் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. மாலை (197) என்று எற்பாடு - சிறுபொழுது இடம் பெற்றுள்ளது. பலர்மடி பொழுது (104) என்ற சொல் சிறுபொழுதைக் குறிப்பதாக அமைந்துள்ளது. இதற்கு, பலரும் உறங்கும் யாமம் என்றும், பலரும் வருந்துகின்ற பொழுது என்றும் பொருள் கொள்ளலாம். பலரும் வருந்தும் பொழுது என்கின்ற நிலையில் அது நெய்தற்குரியது எனலாம்.

• கருப்பொருள்கள்

சேர்ப்பன் (112, 117), புலம்பன் (120, 133), கொண்கன் (124, 125...) என நெய்தல் திணைத் தலைவன் பாடல்களில் இடம் பெறுகின்றான். பரதவர் (195) என நிலமக்களும், கயல் (111), இறால் (188) என உணவுப் பொருள்களும், புன்னை (103, 110...), முண்டகம் (108, 121..) போன்ற மரங்களும், காக்கை (166) போன்ற பறவைகளும், முத்துவிற்றல் (195) போன்ற தொழில்களும், நெய்தல் (101, 109....) போன்ற பூக்களும், கடல்நீர் (105, 107) போன்ற நீர் ஆதாரங்களும் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. இவை இலக்கணங்கள் வரையறுத்த கருப்பொருள்கள் ஆகும். இவை அல்லாது வேறு திணைக்குரிய கருப்பொருள்களும் இத்திணைப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

ஞாழல், வெள்ளாங்குருகு, சிறுவெண்காக்கை, நெய்தல், வாளை ஆகிய கருப்பொருள்கள் இத்திணைப் பாடல்களின் பகுப்பிலேயே இடம் பெற்றுள்ளன.

• உரிப்பொருள்

களவிலோ கற்பிலோ பிரிந்திருக்கும் தலைவனை, நினைந்து தலைவி வருந்துவதும், அது தொடர்பான நிகழ்வுகளும் நெய்தல் திணையின் உரிப்பொருள் ஆகும்.

தோளும் கூந்தலும் பலபா ராட்டி

வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்

குட்டுவன் தொண்டி அன்ன

எற்கண்டு நயந்துநீ நல்காக் காலே

(178)

என்ற பாடல், களவில் தலைவியை அடையாது வருந்துகின்ற தலைவன் தன் வருத்தத்தைத் தோழியிடம் முறையிடும் உரிப்பொருளைக் கொண்டு அமைந்துள்ளது.

2.1.3 குறிஞ்சி ஐங்குறுநூற்றில் மூன்றாவதாக இடம் பெற்றிருப்பது குறிஞ்சித் திணை ஆகும். இதற்குரிய முப்பொருள்கள் பற்றி இனிக் காண்போம்.

• முதற்பொருள்

நிலம்

இதற்குரிய நிலம் மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும். ‘சேயோன் மேய மைவரை உலகம்’ எனத் தொல்காப்பியம் குறிப்பிடும். வரை(204, 208,.....), குன்றம் (207, 209, 210), சிலம்பு (211), வெற்பு (214, 231), பெருங்கல் (218), மலை (219) எனப் பல பெயர்களில் குறிஞ்சி நிலம் ஐங்குறுநூற்றுப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது.

பொழுது

இத்திணைக்குரிய பெரும்பொழுது கூதிர்காலம் ஆகும். முன்பனிக்காலமும் இதற்குரிய காலம் என்று தொல்காப்பியர் குறிப்பிடுவார். கூதிர்ப் பெருந்தண்வாடை (252), அற்சிரம் (முன்பனி) (223) எனப் பெரும்பொழுது பாடல்களில் இடம் பெற்றுள்ளது. சிறுபொழுது குறிக்கும் சொற்கள் இடம் பெறவில்லை எனினும் நிகழ்வுகளால் அறியக் கிடக்கின்றது.

• கருப்பொருள்

இத்திணைக்குரிய தெய்வமான முருகன் முருகு (245, 247....), விறல்வேள் (250), கறிவளர் சிலம்பின் கடவுள் (243) என இடம் பெற்றுள்ளான். நாடன் (214, 215....) எனத் திணை மக்கள் இடம் பெற்றுள்ளனர். கானவர் (208, 213), புனவர் (246), கொடிச்சி (260, 298), குறமகள் (285) என நிலமக்கள் இடம் பெற்றுள்ளனர். தினை (207, 230....), ஐவனம் (267, 285), வெதிர்நெல் (278) என உணவுப்பொருள்களும், புலி (216, 218....), யானை (239, 218) போன்ற விலங்குகளும், வேங்கை (208, 217...), சந்தனம் (212, 240), அகில் (212) போன்ற மரங்களும், மயில் (250, 292), கிள்ளை போன்ற பறவைகளும், தேன் எடுத்தல் (214, 216), வள்ளிக்கிழங்கு தோண்டுதல் (208) போன்ற தொழில்களும், காந்தள் (26,.....) போன்ற மலர்களும், சுனைநீர் (225) போன்ற நீர் ஆதாரங்களும் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. இவை தவிர வேறு பொருள்களும் பிறதிணைக் கருப்பொருள்களும் இடம் பெற்றுள்ளன. குறவன், கேழல், குரங்கு, கிள்ளை, மஞ்ஞை ஆகிய கருப்பொருள்கள் பகுப்பிற்குத் துணைநின்று பெயர் பெற்றுள்ளன.

• உரிப்பொருள்

இத்திணைக்குரிய உரிப்பொருள் புணர்தலும் புணர்தல் தொடர்பான முன்பின் நிகழ்வுகளும் ஆகும்.

சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை அன்ன

நலம்பெறு கையின்என் கண்புதைத் தோயே

பாயல் இன்துணை யாகிய பணைத்தோள்

தோகை மாட்சிய மடந்தை

நீயல துளரோஎன் நெஞ்சமர்ந் தோரே?

(293)

என்ற பாடல் தலைவியைக் கூடுவதற்குப் பகற்பொழுதில், பகற்குறியில் வந்த தலைமகன் பின்னால், அவன் அறியாமல் வந்து அவள் கைகளால் கண்களைப் பொத்தியபோது தலைவன் பேசும் நிகழ்வை உரிப்பொருளாகக் கொண்டு அமைந்துள்ளது. வெறிப்பத்து என உரிப்பொருளால் ஒரு பகுப்பு அமைந்துள்ளது.

2.1.4 பாலை ஐங்குறுநூற்றின் நான்காவது திணை பாலைத் திணை ஆகும். இத்திணைப் பாடல்களில் முப்பொருள் அமைந்துள்ள திறத்தை இனிக் காணலாம்.

• கருப்பொருள்

நிலம்

பாலைத் திணைக்கு எனத் தனியாக நிலம் கிடையாது. முல்லை அல்லது குறிஞ்சி தன் இயல்பு அழிந்து, வறண்டு, மிக்குத்துயர் செய்யும் நிலை அடையும் போது அப்பகுதி பாலை என்ற பெயரை ஏற்கும் என்பது சிலப்பதிகாரம். காடு (311), பாலை வெங்காடு (317), அருஞ்சுரம் (301, 303) என, பாலை நிலம் பாடல்களில் இடம் பெற்றுள்ளது.

பொழுது

இத்திணைக்குரிய பெரும்பொழுதுகளாக இளவேனில், முதுவேனில், பின்பனி ஆகியவற்றைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. வேனில் (309, 322, 325) எனவும், எரிகால் இளந்தளிர் ஈனும் பொழுது (349) எனவும் பெரும் பொழுது பாடல்களில் இடம் பெற்றுள்ளது. சிறு பொழுது நண்பகல் ஆகும். கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் (322) என்று நண்பகல் இடம் பெற்றுள்ளது. இளவேனிற் பத்து எனப் பெரும்பொழுதால் ஒரு பகுப்பு அமைந்துள்ளது.

• கருப்பொருள்கள்

புலம்பன் (302), குரிசில் (306), விடலை (364) எனத் திணை மக்களும், எயினர் (363, 364), எயிற்றி (364, 360) என நில மக்களும், யானை (304, 314, 327), புலி (307, 316), செந்நாய் (323, 354) போன்ற விலங்குகளும், ஒத்திமரம் (301), இலவம் (324, 338), கடம்பு (331), ஈந்து போன்ற மரங்களும், பருந்து (321), கழுகு (314, 315) எனப் பறவைகளும் இத்திணைப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

• உரிப்பொருள்

பாலைத் திணையின் உரிப்பொருள் பிரிதலும் பிரிதலுக்குக் காரணமான நிகழ்வுகளும் ஆகும். பாலைப்பிரிவு இரு வகைப்படும். (1) தலைவன் தலைமகளைப் பிரிதல், (2) தலைவன் தலைமகளை உடன் அழைத்துக் கொண்டுபோக, அவள் தமரைப் பிரிதல். இரண்டாவது பிரிவை உடன்போக்கு என்பர்.

பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்தத்

தேரகல் அல்குல் அவ்வரி வாட

இறந்தோர் மன்ற தாமே பிறங்குமலைப்

புல்லரை ஓமை நீடிய

புலிவழங்கு அதர கானத் தானே

(316)

என்ற பாடல் தலைவன், தலைவியைப் பிரிந்து பாலைப் பெருவழி சென்ற நிகழ்வைக் கொண்டுள்ளது.

புன்கண் யானையொடு புலிவழங்கு அத்தம்

நயந்த காதலன் புணர்ந்து சென்றனளே

நெடுஞ்சுவர் நல்லில் மருண்ட

இடும்பை உறுவிநின் கடுஞ்சூல் மகளே !

(386)

என்ற பாடல் தலைவன் தலைவியை உடன் கொண்டு செல்லும் செயலைப் பொருளாகக் கொண்டு அமைந்துள்ளது. பாலைத் திணையில் அமைந்த பத்துப் பகுப்புகளில் எட்டுப் பகுப்புகள் உரிப்பொருளால் பகுக்கப்பட்டுப் பெயரிடப்பட்டவை ஆகும்.

2.1.5 முல்லை ஐங்குறுநூற்றின் இறுதிப் பகுதி முல்லைத் திணைப் பாடல்களாகும். முல்லைத் திணைப் பாடல்களில் முப்பொருள் அமைந்துள்ள திறத்தை இனிக் காணலாம்.

• முதற்பொருள்

நிலம்

இத்திணைக்குரிய நிலம் முல்லை நிலம். அதாவது காடும் காடு சார்ந்த இடமும் ஆகும். புறவு (405, 406) என முல்லை நிலம் பாடல்களில் பயின்றுள்ளது.

பொழுது

முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது கார்காலம். சிறுபொழுது மாலைக்காலம் ஆகும். பொழுதுகளை வரையறுத்துள்ள தொல்காப்பியத்தின் முதல் நூற்பா ‘காரும் மாலையும் முல்லை’ என்பதாகும். கார் (411, 413...) எனப் பெரும் பொழுது பாடல்களில் பயின்றுள்ளது.

கருவி வானம் கார்சிறந் தார்ப்ப,

பருவம் செய்தன பைங்கொடி முல்லை

(476)

எனக் கார்காலம் பேசப்படுகிறது. சிறு பொழுதான மாலை, மாலை (421, 445) என்ற சொல்லாலேயே பாடல்களில் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘முல்லை மலரும் மாலை (489) எனவும் பேசப்பட்டுள்ளது. இரண்டு பகுப்புகள் பருவத்தை, பெரும்பொழுதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. (கிழவன் பருவங்கண்டு பாராட்டுப் பத்து, பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து)

• கருப்பொருள்

குரிசில் (471, 473, ....) எனத் திணை மாந்தரும், கோவலர் (476) ஆகிய நில மாந்தரும் பாடல்களில் இடம் பெற்றுள்ளனர். மேலும் மான் (401), முயல் (421) ஆகிய விலங்குகளும், கொன்றை (412, 420) போன்ற மரங்களும், புறா (425) போன்ற பறவைகளும், நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை (445) என நிரைமேய்த்தலாகிய தொழிலும், கொன்றை (412, 420), தளவம் (422, 454.....) பிடவம் (412, 461), தோன்றி (420), காயா (412, 420) ஆகிய பூக்களும் முல்லைத் திணைப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

• உரிப்பொருள்

வேந்தன் பொருட்டுத் தலைவன் பிரிவதும், அவன் குறித்துச் சென்ற காலம் (கார்காலம்) வரும் வரை தலைவி ஆற்றியிருப்பதும் இல்லிருத்தல் என்ற பெயரால் உரிப்பொருளாகக் குறிக்கப்படுகிறது.

பிணிவீடு பெறுக, மன்னவன் தொழிலே !

பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை

ஆடுசிறை வண்டு அவிழ்ப்ப,

பாடல் சான்ற ; காண்கம், வாணுதலே

(447)

என்ற பாடல், வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் அவன் வினை முற்றி மீளும் வேட்கையுடையவனாய்ப் பருவ வரவின்கண் தலைமகளை நினைத்துச் சொல்லியது ஆகும்.

2.1.6 திணை மயக்கம் ஒவ்வொரு திணைக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற முப்பொருள்கள் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. இருப்பினும் முதற்பொருளில் பொழுதும், கருப்பொருள்களும் ஒருதிணைக்குரியவை, மற்றொரு திணைப் பாடலில் சில சமயங்களில் இடம் பெறும். இதனைத் திணை மயக்கம் என்பர். இவ்வாறு மயங்கி வந்துள்ளமையை இனிக் காணலாம்.

• கால மயக்கம்

குறிஞ்சித் திணைக்குரிய சிறு பொழுது யாமம் ஆகும். இது

பரியுடை நன்மான் பொங்குளை அன்ன

அடைகரை வேழம் வெண்பூப் பகரும்

தண்டுறை ஊரன் பெண்டிர்

துஞ்சூர் ; யாமத்தும், துயிலறி யலரே

(13)

என மருதத் திணைப் பாடலில் இடம் பெற்றுள்ளது.

காலைப் பொழுது மருதத் திணைக்கு உரியது. என்று இலக்கணங்கள் கூறுகின்றன. இக்காலைப் பொழுது

அம்ம வாழி தோழி ! நாம்அழ

நீல இருங்கழி நீலம் கூம்பும்

மாலை வந்தன்று மன்ற

காலை அன்ன காலை முந்துறுத்தே

(116)

(காலை அன்ன = காலனைப் போன்ற; கால் = காற்று, தென்றல்; முந்துறுத்து = முன் இட்டுக் கொண்டு)

என்ற நெய்தற் திணைப் பாடலில் பயின்று முதற்பொருளில் காலம் மயங்கிய திணை மயக்கமாகிறது.

• கருப்பொருள் மயக்கம்

முருகன் குறிஞ்சி நிலக் கடவுள். இம் முருகன்,

பல்லிருங் கூந்தல் மெல்லியலோள் வயின்

பிரியாய் ஆயினும் நன்றே ; விரியிணர்க்

காலெறுழ் ஒள்வீ தாஅய

முருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே

(308)

(முருகு = முருகன்; எறுழ் ஒள்வீ = ஒளிபொருந்திய எறுழ மலர்)

என்ற பாலைத் திணைப் பாடலில் இடம் பெற்றுள்ளான். கருப்பொருளின் முதற்பொருளான தெய்வம் மயங்கி வந்துள்ளது. இப்பாடலில் குறிப்பிடத்தக்க வேறு ஒன்றும் உள்ளது.

திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே

நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிப

புலன் நன்குணர்ந்த புலமை யோரே.

(பொருள். அகத்திணை. 14)

என்பது தொல்காப்பியம். இதன் அடிப்படையில் முதற்பொருளில் காலம்/ பொழுது மட்டுமே மயங்கும். நிலம் மயங்காது. ஆனால் இப்பாடலில் மாமலை எனக் குறிஞ்சி நிலம் பாலையில் மயங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கருப்பொருள்களில் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் இடம் பெறுபவர் நில மக்கள் ஆவர். கோவலர் என்ற முல்லை வாழ் மக்கள்,

கல்லாக் கோவலர் கோலித் தோண்டிய

ஆனீர்ப் பத்தல் யானை வௌவும்

கல்லதர்க் கவலை செல்லின் மெல்லியல்

புயல்நெடுங் கூந்தல் புலம்பும் ;

வயமான் தோன்றல் வல்லா தீமே

(304)

(கல்லா = கல்வியறிவில்லாத; கோவலர் = ஆநிரை மேய்ப்போர்; கோலித் தோண்டிய = கோலால் தோண்டிய; பத்தல் = பள்ளம்; வல்லாதீமே = மாட்டேன் என்று சொல்வாயாக)

என்ற பாலைத் திணைப் பாடலில் இடம் பெற்றுள்ளனர். இது கருப்பொருள் வழிவந்த திணை மயக்கம்.

முல்லைத் திணைக்குரிய விலங்கினமாகக் கூறப்படும் மான்,

அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத்

தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு

உவலைக் கூவல் கீழ

மான்உண்டு எஞ்சிய கலிழி நீரே

(203)

(படப்பைத்தேன் = தோட்டத்திலுள்ள தேன்; உவலை = தழை; கூவல் = கிணறு; கீழ = கீழேஉள்ள; கலிழி = கலங்கல் நீர்)

என்ற குறிஞ்சித் திணைப் பாடலில் பயின்றுள்ளது. இது மட்டுமன்றிப் பாலைக்குரிய நீர் ஆதாரமான கூவல் (சிறுகேணி) இக்குறிஞ்சித் திணைப் பாடலில் இடம் பெற்றுள்ளது.

இவை போல் பல பாடல்களில் திணை மயக்கம் அமைந்துள்ளது.

2.2 உவமை

அகத்திணையில் இடம் பெறும் உவமைகளை இரண்டாகப் பிரிப்பர். ஒன்று உள்ளுறை உவமம். மற்றொன்று ஏனை உவமம் ஆகும். அகத்திணை மரபாகவே உள்ளுறை உவமம் போற்றப்படுகிறது. அகம் - அகஉணர்வு வெளிப்படையாகப் பேச முடியாதது. வெளிப்படையாகப் பேசமுடியாத இந்த அக உணர்வைக் குறிப்பால் பொருளுணரச் செய்ய உள்ளுறை பெரும்பாலும் பயன்படுகிறது. இவ்வகை உவமைகளில் ‘அதுபோல இது’ என்ற எடுத்துக்காட்டு இருக்காது. உவம உருபுகள் இடம் பெறா.

2.2.1 உள்ளுறை உவமம் உள்ளுறுத்து இதனொடு ஒத்துப்பொருள் முடிகென

உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம்.

(பொருள். அகத்திணை. 51)

என்பது தொல்காப்பியம் .குறிப்பால் பொருள் கொள்ளக் கிடப்பது உள்ளுறை உவமம் என்பது இதன் சுருக்க விளக்கம். தெய்வம் அல்லாத கருப்பொருள்களைக் கொண்டு உள்ளுறை உவமம் அமைக்கப்படும். ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள சில உள்ளுறை உவமைகளைத் திணைக்கு ஒன்றாகக் காண்போம்.

• மருதம்

பரத்தையர் பிரிவு மேற்கொண்டு பின்திருந்தி, திரும்பிய தலைவன், நீவிர் எப்படி வாழ்ந்தீர் எனக் கேட்க, அப்பொழுது தோழி பதிலிறுக்கின்றாள்.

வாழி யாதன், வாழி அவினி

பகைவர் புல்லார்க ! பார்ப்பார் ஓதுக !

எனவேட் டோளே யாயே ; யாமே

பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்

கழனி ஊரன் மார்பு

பழன மாகற்க எனவேட் டேமே.

- (4)

(முதலிரண்டு வரிகள் வாழ்த்து; வேட்டோள் = விரும்பினாள்; யாய் = தாய்; இங்குத் தலைவியைக் குறித்தது)

என்பது பதிலிறுக்கும் பாடல். தலைவி நாட்டு நலனை நினைந்து வாழ்ந்தாள். நான் (தோழி) மலர்ந்து விளங்கும் கரும்பும் விளைந்து சிறக்கும் நெல்லும் உடைய கழனியூரனின் மார்பு எல்லாருக்கும் உரிய வயலாய் ஆகாது ஒழிக என்று வேண்டிக் கொண்டேன் என்பது பாடலின் பொருள்.

‘கழனி ஊரன் மார்பு பழனமாகற்க’ என்பது எல்லாரும் இறங்கும் வயல்போல் எல்லாரும் தழுவும் மார்பாக ஆகக் கூடாது என்ற ஒரு குறிப்பைத் தருகிறது.

பூத்த கரும்பின், காய்த்த நெல்லின் என்பது, கழனிக்கு அடைமொழியாக இல்லாமல், பூத்தாலும் காய்க்காத, பயன்படாத கரும்பு - மகப்பேறு இல்லாத பரத்தை. காய்த்துப் பயன்படும் நெல் - மகப்பேற்றுக்குத் தகுதி உடைய தலைவி ஆகிய செய்திகளைக் குறிப்பால் உள்ளுறையாக உணர்த்தி, இருப்பினும் இவ்விருவரையும் ஒன்றாகக் கருதும் தலைவனின் குணத்தையும் சுட்டுகிறது. இல்லறத்தின் பயன் மகப்பேறு ஆகும். மகப்பேறு இல்லாத பரத்தையால் பயனில்லை என்பதாகப் பாடல் அமைந்துள்ளது.

கழனி, பழனம் ஆகிய மருத முதற்பொருளும், கரும்பு, நெல் ஆகிய மருதக் கருப்பொருளும் இங்கு, உள்ளுறைக்கு உதவின.

• நெய்தல்

அன்னை வாழி வேண்டன்னை உதுக்காண்

ஏர்கொடிப் பாசடும்பு பரிய ஊர்புஇழிபு

நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள்

பூப்போல் உண்கண் மரீஇய

நோய்க்கு மருந்தாகிய கொண்கன் தேரே

-(101)

(பாசடும்பு = பசுமையான அடம்பங்கொடி; பரிய = வருந்த; ஊர்பு இழிபு = ஏறியிறங்கி; வந்தன்று = வந்தது; உதுக்காண் = அதோ பார்)

என்ற பாடல் நெய்தல் திணையைச் சார்ந்தது. ‘நின்மகளின் நீலநிறம் வாய்ந்த மலரைப் போன்ற மை பூசப் பெற்ற கண்ணில் பரவிய பசலை நோயானது அகல்வதற்குரிய மருந்தான தலைவனின் பெரிய தேர் நீண்ட கொடிகளையுடைய பசுமையான அடம்பங்கொடி சிதையும்படி நெய்தல் கொடிகளையும் சிதைத்துக் கொண்டு வருகிறது’ என்று செவிலியிடம் தோழி கூறும் செய்தி இடம் பெற்றுள்ளது. இது வெளிப்படைப் பொருள்.

ஏர்கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு நெய்தல் மயக்கி வந்தன்று..... கொண்கன் தேரே என்பது தேர்ச்சக்கரத்தின் அடியில் சிக்கி அடம்பங்கொடி அறுபடுவதுபோல் தலைவனின் வரவால் அம்பலும் அலரும் அறுபடும் என்ற உள்ளுறையைத் தருகிறது. இதில் அடம்பங்கொடி, நெய்தல் ஆகிய நெய்தல் திணைக் கருப்பொருள்கள் இடம் பெற்றுள்ளன.

• குறிஞ்சி

சிறுக்கண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு

குறுக்கை இரும்புலி பொரூஉம் நாட !

நனிநா ணுடைமைய மன்ற

பனிப்பயந் தனநீ நயந்தோள் கண்ணே !

(266)

(பன்றி ஒருத்தல் = ஆண் பன்றி; பொரூஉம் = போரிடும்; நனி = மிகவும்; நாண் உடைமைய(ம்) = நாணம் உடையோம்)

என்ற பாடல் குறிஞ்சித் திணை ஆகும். இதில் தோழி, தலைவனிடம், ‘சிறிய கண்களையுடைய ஆண் பன்றியோடு குறுகிய முன் கால்களையுடைய பெரிய புலி போரிடுகின்ற நாடனே ! நீ விரும்பிய இவளுடைய கண்கள் தெளிவாக மிக்க நாணுடையவை. ஆதலால் பசலை கொண்டு நீர் சொரியலாயின’ என்று கூறி, வரைவு கடாஅவும் செய்தி இடம் பெற்றுள்ளது.

இதில் பன்றியோடு புலி போரிடும் நாடு என்பது இயற்கை வருணனை அன்று; உள்ளுறை தருவது ஆகும். தன்னால் எளிதில் வீழ்த்தப்படுவதற்குரிய ஆண் பன்றியோடு இரும்புலி நாணாது பொரும் என்றது அயல்வரைவு வருதல் கண்டும் நாணாது களவே விரும்பி ஒழுகும் தலைவனின் தவற்றைச் சுட்டிக்காட்டுவதாகும். அதன்வழி வரைவு கடாவுவதும் ஆகும். உள்ளுறைக்குக் குறிஞ்சிக் கருப்பொருள்கள் உதவியுள்ளன.

• முல்லை

மாலை வெண்காழ் காவலர் வீச

நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும்

புன்புல நாடன் மடமகள் நலங்கிளர் பணைத்தோள் விலங்கின செலவே

- 421

இப்பாடல் முல்லைத் திணைப் பாடலாகும். பல பிரிவுகள் மேற்கொண்ட தலைவன் தற்பொழுது பிரியாதிருக்கும் காதலை, உணர்ந்தோர் சொல்லியதாகப் பாடல் அமைந்துள்ளது.

‘புனத்தைக் காப்பவர் தம் கையில் உள்ள குறுந்தடியை மாலை நேரத்தில் எறிவர். அதனால் நறுமணப் பூக்கள் நிறைந்த காட்டில் மறைந்திருக்கும் முயல்கள் ஓசை கேட்டு ஓடும் புன்புலங்களையுடைய நாடனின் மடப்பம் பொருந்திய தலைவியின் மூங்கில் போன்ற தோள்களே தலைவனின் செயலை, பிரிவைத் தடுத்தன’ என்பது பாடல் தரும் பொருள்.

மாலை வெண்காழ் காவலர் வீச

நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும்.

என்பது குறிப்பால் வேறொரு பொருளைத் தந்து நிற்கிறது. காவலர் வறிதே தம் கையில் உள்ள குறுந்தடியை வீசியபோது புதரில் மறைந்திருக்கும் முயல் அஞ்சி ஓடும் என்பது தலைவன் பிரிவை எண்ணிய போதே இல்லத்தில் தங்கிய தலைவியின் மேனி நலம் வாடும்’ என்ற பொருளைத் தந்து நிற்கிறது.

ஐங்குறுநூற்றில் மருதத் திணைப் பாடல்களில் மிக அதிக அளவிலும் முல்லைத் திணைப் பாடல்களில் மிகக் குறைந்த அளவிலும் உள்ளுறை உவமைகள் அமைந்துள்ளன.

2.2.2 இறைச்சி உள்ளுறை போன்றே அகப்பாடல்களில் தனிச்சிறப்புடையது இறைச்சி. இதுவும் உள்ளுறை போன்றதே. ‘இறைச்சியில் பிறக்கும் பொருளுமார் உளவே’ (226) என்றும், ‘இறைச்சி தானே பொருள் புறத்ததுவே’ (225) என்றும் தொல்காப்பியம் (பொருள். பொருளியல்) குறிப்பிட்டுள்ளது. ஐங்குறுநூற்றில் இறைச்சிப் பொருள் அமைந்த பாடல் ஒன்றைக் காண்போம்.

அன்னாய் வாழி வேண்டன்னை என்னை

தானும் மலைந்தான் எமக்கும் தழையாயின

பொன்வீ மணியரும் பினவே

என்ன மரங்கொல் அவர்சார லவ்வே

- 201

(என்னை = என்+ ஐ = என் தலைவன்; மலைந்தான் = அணிந்தான்)

இது ஒரு குறிஞ்சித் திணைப் பாடல். தலைவி ஒருத்தி தலைவன் ஒருவனுடன் காதல் கொண்டிருக்கிறாள். இவள் காதலை உணராத பெற்றோர் அவளுக்கு வேறு ஒரு இடத்தில் மணம் பேசுகின்றனர். இந்தச் சூழலில் தனது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தி வேற்று வரைவைத் தடுக்க, செவிலி கேட்கும்படி, தோழியிடம் கூறும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.

“தோழியே வாழ்க. அந்த நம்பியின் மலைச் சாரலில் உள்ள மணி போல் ஒளிவிடும் பூக்களை உடைய மரங்கள் என்ன மரங்கள் என்று தெரியவில்லை. அவனும் அவற்றின் தளிரையும் பூவையும் சூடிக் கொண்டுள்ளான். எனக்கும் அவை தழை உடை ஆகி இருக்கின்றன” என்று தலைவி தோழியிடம் கூறுவதாக இப்பாடலின் பொருள் அமைந்துள்ளது.

தலைவி தான் உணர்த்த வேண்டிய செய்தியைச் செவிலிக்கு உணர்த்திவிட்டாள். உணர்த்திய செய்தியே இறைச்சிப் பொருள் ஆகும். தலைவி உணர்த்த வந்த பொருள், ‘அன்னையே நான் ஒரு நம்பியைக் காதலித்து விட்டேன். ஆதலின் என்னை மணக்கக் கருதிப் பெண் வேண்டி வரும் புதியவருக்கு எனது தந்தை பெண் கொடுக்காமல் தடுத்து விடுக. நான் (தற்போது) காதலிக்கும் அத்தலைவனுக்கே என்னை மணம் செய்விக்க இப்பொழுதே ஏற்பாடு செய்க’ என்பதாகும். இப்பொருள் தலைவி கூறிய செய்தியாக இருந்தும் அவள் பயன்படுத்திய சொற்களில், மொழியில் வெளிப்படையாகத் தொடர்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் அமையும் செய்தி இறைச்சி என்று போற்றப்படுகிறது.

2.2.3 ஏனைய உவமம் உள்ளுறை அல்லாத உவமம் ஏனை உவமம் எனப்படுகிறது. ‘ஏனை உவமம் தானுணர் வகைத்தே’ என்று தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. தான் உணரும் வகையாவது, வண்ணத்தால், வடிவால், பயனால், அல்லது தொழிலால் உவமிக்கப்படும் பொருளோடு எடுத்துக் கூறுதல் என்று இளம்பூரணர் விளக்கம் அளித்துள்ளார். ஆக எல்லாரும் பொருள் உணரும் வகையில் உவமையும் பொருளும் சேர்ந்து இடம்பெறும் உவமை ஏனை உவமம் என்பது தெளிவாகிறது. உவமைகள் இருவகை நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. சொல்ல வந்த கருத்தை விளக்குவதற்காகவும், சொல்லும் பொருளுக்கு அழகு சேர்ப்பதற்காகவும் அவை வருகின்றன. எனவே கருத்து விளக்க உவமைகள், அணி உவமைகள் என்ற பெயரில் ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள சில ஏனை உவமங்களைக் காண்போம்.

• கருத்து விளக்க உவமைகள்

தெரிந்த ஒன்றைக் கொண்டு தெரியாத ஒன்றை விளக்குவதாகக் கருத்து விளக்க உவமைகள் அமையும்.

• குடும்பம்

ஒரு தலைவன் தலைவியைப் பிரிந்து அவளுக்கு எந்த உதவியும் செய்யாமல் இருக்கிறான். இருப்பினும் அவள், அவன் மார்பை நினைந்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தலைவியின் இந்த நிலை, தாய் தங்களைக் கவனிக்காவிடினும் தாயின் முகம் நோக்கி வாழும் வளரும் ஆமைக் குஞ்சுகளின் நிலையால் விளக்கப்படுகிறது.

தீம்பெரும் பொய்கை ஆமை இளம்பார்ப்புத்

தாய்முகம் நோக்கி வளர்ந்திசி னாஅங்கு

அதுவே ஐயநின் மார்பே. ... ... ...

- 44

என்பது மேற்கூறிய கருத்தை விளக்கும் பாடற்பகுதி.

தலைவனின் இல்லத்திற்குச் சென்று தலைவியின் இல்வாழ்க்கைச் சிறப்புப் பற்றி அறிந்து அதனை நற்றாயிடம் கூறுகிறாள் செவிலி.

இல்லறத்தில் எந்தக் குற்றங்களும் நெருங்காமல் இல்லற தர்மங்களைத் தலைவி மேற்கொண்டு சிறப்பாக வாழ்கிறாள் என்று செவிலி கூற நினைக்கிறாள். காற்றால் அணைக்க முடியாத பெரிய திரிகளை உடைய பாண்டில் என்ற விளக்கை உவமை ஆக்குகிறாள்.

ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல

மனைவிளக் காயினள் மன்ற

- 405

என்பது மேற்கூறிய செய்தியைத் தரும் பாடற்பகுதி ஆகும்.

தலைவி, தன் கணவனோடும் புதல்வனோடும் வாழும் வாழ்க்கைத் திறத்தை அறிந்த செவிலி அதனை மான் இனத்தோடு உவமித்துச் சொல்கிறாள்.

மறியிடைப் படுத்த மான்பிணை போலப்

புதல்வன் நடுவ ணாக நன்றும்

இனிது மன்றஅவர் கிடக்கை

- 401

என்பது பாடற்பகுதி. தலைவன், தலைவி, புதல்வன் ஆகிய மூவரும் ஒரே படுக்கையில் இருக்கும் காட்சி மான்பிணை தன் குட்டியோடும் ஆண் மானோடும் இருக்கும் காட்சியால் விளக்கப்பட்டுள்ளது. இந்நிலையின் இனிமை,

புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி

நசையினன் வதிந்த கிடக்கை பாணர்

நரம்புளர் முரற்கை போல

இனிதால் அம்ம பண்புமார் உடைத்தே

- 402

என யாழ், நரம்பு, இசை ஆகியவற்றாலும் விளக்கப்பட்டுள்ளது.

• பிற

குடும்ப நிகழ்வுகளை விளக்குவதற்கு மட்டுமல்லாமல் பிற நிகழ்வுகளை விளக்குவதற்கும் உவமைகள் இந்த அகப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. அது கிள்ளிவளவனுக்கு உரிமையான யானை பகைவரின் மதிலை அழிப்பதைப்போல விரைந்து வந்து கரையை அழிக்கிறது என உவமை அமைந்துள்ளது.

கதிரிலை நெடுவேல் கடுமான் கிள்ளி

மதில்கொல் யானையின் கதழ்பு நெறிவந்த

சிறையழி புதுப்புனல் ஆடுகம்

- 78

(கதழ்பு = விரைந்து)

என்பது பாடல் பகுதி.

மலை நீர் வழிந்து வழுவழுப்பாகக் காட்சியளிக்கிறது. இவ்வழுவழுப்பை அளக்க இரு உவமைகள் இடம் பெற்றுள்ளன.

நிணம்பொதி வழுக்கின் தோன்றும்

மழைதலை வைத்து

- 207

என்ற பகுதியில் கொழுப்பின் வழுவழுப்பு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன

வயலையம் சிலம்பு

- 211

என்ற பாடற்பகுதியில் நெய்யும் உளுத்தமாவும் கலந்த கலவையின் வழுவழுப்பு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

குளத்தில் எருமை நீராடிக் கொண்டிருக்கிறது. அது பாதி உடல் நீருக்குள்ளும் பாதி உடல் நீருக்கு வெளியிலும் இருக்கும்படி நீராடுகிறது. இதற்குக் கட்டப்பட்டிருக்கும் சிறு ஓடம் உவமையாக்கப் பட்டுள்ளது.

தண்புன லாடும் தடங்கோட்டு எருமை

திண்பிணி அம்பியின் தோன்றும் ஊர

- 98

(அம்பி = ஓடம்; திண்பிணி = வலிமையாகக் கட்டப்பட்ட)

என்ற பாடற் பகுதி எருமைக்கு ஓடத்தை உவமையாக்கியுள்ளது.

2.2.4 அணி உவமைகள் பொருளுக்குச் சிறப்புச் சேர்ப்பதற்காகச் சொல்லப்படும் உவமைகள் அணி உவமைகள் ஆகும்.

தலைவனின் மார்புக்குச் சிறப்புச் சேர்க்க உவமை அமைகிறது. பெருவரை அன்ன திருவிறல் வியன்மார்பு (220), காவிரி மலர்நிலை அன்ன நின் மார்பு (42) என்ற பாடல் பகுதிகளில் வரையும் (மலையும்) காவிரிப் பரப்பும் உவமையாக வந்துள்ளன.

தலைவியின் அழகுக்கு, கொல்லிப் பாவையின் அழகு உவமையாகிப் பாவை அன்ன என் ஆய்கவின் (221) எனவும் அவளின் நெற்றிக்குப் பிறை உவமையாகி,

இலங்கு நிலவின் இளம்பிறை போலக்

காண்குவெம் தில்லஅவள் கவின்பெறு சுடர்நுதல்

- 443

எனவும் பாடல் பகுதிகள் அமைந்துள்ளன.

உவமையாக வருவதைப் பொருளாக்கி, பொருளாய் வருவதை உவமையாக்கி உரைப்பது என்பது விபரீத உவமை அணி ஆகும்.

எரிமருள் வேங்கை இருந்த தோகை

இழையணி மடந்தையின் தோன்றும்

- 294

என்ற பாடற்பகுதி, பெண் போல மயில் காட்சி தருகிறது என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. மயில் போலப் பெண் இருக்கிறாள் என்பது மரபு. இம்மரபை மாற்றி இப்பகுதியில் விபரீத உவமை அமைந்துள்ளது.

கொடிச்சி கூந்தல் போலத் தோகை

அஞ்சிறை விரிக்கும்

- 300

என்ற பாடற்பகுதியில் கூந்தல் போல மயில் தோகை காட்சி தருகிறது. இதுவும் மேற்காட்டிய உவமையே.

உவமையைக் காட்டிலும் பொருளுக்குச் சிறப்புத் தோன்ற உரைப்பது நிந்தையுவமை என்னும் உவமை அணி ஆகும்.

பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்

அஞ்சில் ஓதி அசைநடைக் கொடிச்சி

கண்போல் மலர்தலும் அரிது;இவள்

தன்போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே

- 299

என்ற பாடற் பகுதியில் வழக்கமாகக் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும் குவளை மலரைக் காட்டிலும் கண்ணுக்குச் சிறப்புத் தோன்றக் கூறுவதாலும் சாயலுக்கு உவமையாக வரும் மயிலைக் காட்டிலும் தலைவிக்குச் சிறப்புத் தோன்றக் கூறுவதாலும் நிந்தை உவமை அணி ஆயிற்று.