பாடம் - 1
இவ்விரு வகைத் தொகுப்பு நூல்களையும் சங்க நூல்கள் என்பர். இவற்றிற்குப் பதினெண் மேல்கணக்கு நூல்கள் என்னும் பெயரும் உண்டு. இப்பாடத்தில் பத்துப்பாட்டு நூல்கள் பற்றிச் சுருக்கமாகவும், அவற்றுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை பற்றி விரிவாகவும் விளக்கப்படுகிறது.
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
கூத்தராற்றுப்படை (அல்லது) மலைபடுகடாம்
முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
பட்டினப்பாலை
இவற்றை 1889ஆம் ஆண்டில் டாக்டர் உ.வே.சாமிநாதையர் அச்சு நூல் வடிவில் கொண்டு வந்தார்.
1.1.1 பாடியோரும் பாடப்பட்டோரும்
பத்துப்பாட்டைப் பாடியோரும் பாடப்பட்டோரும்:
வ.எண் நூலின் பெயர் பாடியோர்/ஆசிரியர் பாடப்பட்டோர்
1. திருமுருகுஆற்றுப்படை நக்கீரர் முருகக் கடவுள்
2. பொருநர்ஆற்றுப்படை முடத்தாமக்கண்ணியார் கரிகால் பெரு வளத்தான்
3. சிறுபாண்ஆற்றுப்படை நல்லூர் நத்தத்தனார் நல்லியக்கோடன்
4. பெரும்பாண்ஆற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார் தொண்டைமான்இளந்திரையன்
5. கூத்தர்ஆற்றுப்படை பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் நன்னன் சேய்நன்னன்
6. முல்லைப்பாட்டு நப்பூதனார் -
7. குறிஞ்சிப்பாட்டு கபிலர் -
8. மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனார் பாண்டியன் நெடுஞ்செழியன்
9. நெடுநல்வாடை நக்கீரர் -
10. பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங் கண்ணனார் -
பத்துப்பாட்டைப் பாடிய புலவர் எட்டுப்பேர்; பாடப்பட்டோர் ஆறு பேர். அவற்றுள் ஆற்றுப்படை இலக்கியங்கள் ஐந்து. அக இலக்கியங்கள் நான்கு. புற இலக்கியம் ஆறு. அக இலக்கியங்களில் பாட்டுடைத் தலைவனின் பெயர் சுட்டப்பெறும் மரபு தமிழ் இலக்கியங்களில் கிடையாது.
1.1.2 அடிவரையறையும் பா வகையும்
பத்துப்பாட்டின் அடி அளவு மற்றும் பா வகை பின்வருமாறு :
வ.எண் நூலின் பெயர் அடிகள் பா
1. திருமுருகு ஆற்றுப்படை 317 ஆசிரியப்பா
2. பொருநர் ஆற்றுப்படை 248 ஆசிரியப்பா
3. சிறுபாண் ஆற்றுப்படை 269 ஆசிரியப்பா
4. பெரும்பாண் ஆற்றுப்படை 500 ஆசிரியப்பா
5. கூத்தர் ஆற்றுப்படை 583 ஆசிரியப்பா
6. முல்லைப்பாட்டு 103 ஆசிரியப்பா
7. குறிஞ்சிப்பாட்டு 261 ஆசிரியப்பா
8. மதுரைக்காஞ்சி 782 ஆசிரியப்பா,வஞ்சிப்பா
9. நெடுநல்வாடை 188 ஆசிரியப்பா
10. பட்டினப்பாலை 301 ஆசிரியப்பா,வஞ்சிப்பா
மொத்தம் 3552
பத்துப்பாட்டில் உள்ள மொத்த அடிகள் 3552. பத்துப்பாட்டில் மிகப் பெரியது மதுரைக்காஞ்சி (782 அடிகள்); மிகச் சிறியது முல்லைப்பாட்டு (103 அடிகள்). அனைத்தும் ஆசிரியப்பாவால் ஆனவை.
புற நூல்கள் (ஆற்றுப்படை நூல்கள் 5 + மதுரைக்காஞ்சி) - 6
அக நூல்கள் – 4
—-
10
—–
ஆற்றுப்படை – விளக்கம்
பரிசு பெற்ற பாணர் முதலியோர் தாம் பெற்ற பெரும் செல்வத்தைத் தம் இனத்தைச் சார்ந்தவர்க்குக் கூறித் தம்மைப் போல் அவர்களும் பயன் பெற, தாம் பரிசுபெற்ற வள்ளல் அல்லது அரசனிடம் வழிப்படுத்துவது ஆற்றுப்படை ஆகும்.
இதனைச் சற்று விரிவாகப் பின்வருமாறு கூறலாம்:-
வறுமையால் துன்பப்பட்ட ஒருவன் ஓர் அரசனிடம் அல்லது வள்ளலிடம் சென்றான்; அவனைப் புகழ்ந்து பாடினான்; பரிசுகள் பல பெற்றான்; தன் வீட்டிற்குத் திரும்பி வருகிறான்.
பரிசு பெற்ற அவன் திரும்பி வரும் பொழுது அவ்வழியில் துன்பம் கொண்ட முகத்துடன் ஒருவன் எதிரே வருகிறான். அவனிடம், “துன்பமும் வாடிய முகமும் உடையவனே! உனது துன்பத்தைத் தீர்க்கும் ஒருவன் உள்ளான். அவன் இன்ன பெயரை உடையவன் (அரசன் அல்லது வள்ளல் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லுவான்). அவன் இன்ன ஊரில் இருக்கிறான். அவ்வூருக்குச் செல்லும் வழி இது. நீ அவனிடம் இவ்வழியாகச் செல்வாயாக. மிகுதியான பொருளைப் பெற்றுத் துன்பம் நீங்கி வாழ்வாயாக” என்று துன்பம் தீரும் வழிகளைக் கூறி அவனை அனுப்பி வைப்பான்.
இவ்வாறு பரிசு பெற்ற ஒருவன் பரிசு பெற விரும்பிச் செல்லும் ஒருவனுக்கு, ஓர் அரசன் அல்லது வள்ளலைப் பற்றியும் அவன் ஊருக்குச் செல்லும் வழிகளைப் பற்றியும் கூறுவான்.
இவ்வகை அமைப்பில் பாடல்கள் இருக்கும். இம் மரபிற்கு ஆற்றுப்படை என்பது பெயர். பத்துப்பாட்டுத் தொகுப்பில் உள்ள ஆற்றுப்படை நூல்கள்:
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
கூத்தராற்றுப்படை அல்லது மலைபடுகடாம்
திருமுருகாற்றுப்படை
இந்நூலின் பாட்டுடைத் தலைவன் (பாடப் பெறுபவன்) முருகக் கடவுள். இக்கடவுள் இருக்கின்ற இடங்கள், வழிபடும் முறைகள் ஆகியவற்றைக் கூறி முருகக் கடவுளின் அருளைப் பெறுவதற்கான வழிகள் இப்பாட்டில் கூறப்பட்டுள்ளன.
எனவே, அரசன் அல்லது வள்ளலிடம் பொருள்களைப் பெறுவதற்கு உரிய வழிகளைக் (ஆறுகளை) கூறுவது போல, முருகக் கடவுளின் அருளைப் பெறுவதற்கு உரிய வழிகளை இப்பாடல் கூறுவதால், இதற்குத் திருமுருகாற்றுப்படை என்னும் பெயர் வழங்கலாயிற்று. இந்நூலுக்குப் புலவராற்றுப்படை என்னும் பெயரும் உண்டு.
பொருநராற்றுப்படை
இந்நூலின் பாட்டுடைத் தலைவன் கரிகால் பெருவளத்தான்.
பொருநர் என்றால் புகழ்ந்து பாடுவோர் என்று பொருள். இவர்கள் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என்று மூவகையினர். பொருநராற்றுப்படையில் போர்க்களம் பாடுவோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கரிகால் பெருவளத்தான் என்னும் அரசனிடம் பொருநன் ஒருவன் பரிசு பெற்று வந்தான். அவன், தன் எதிரில் வந்த வேறு ஒரு பொருநனிடம் கரிகால் பெருவளத்தானிடம் சென்று பரிசு பெறும் வகையில் வழிப்படுத்தியதாக இந்நூல் அமைந்துள்ளது.
ஒரு பொருநன் வேறொரு பொருநனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் பொருநராற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.
சிறுபாணாற்றுப்படை
இந்நூல் பற்றிய செய்திகளை இப்பாடத்தில் 1.3 என்ற பகுதியில் காணலாம்.
பெரும்பாணாற்றுப்படை
இந்நூலின் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன். இவன் ஓர் அரசன்.
இவனிடம் பரிசு பெற்று வந்த ஒரு பெரும்பாணன், அவன் எதிரில் வந்த வேறு ஒரு பெரும்பாணனை அம்மன்னனிடம் சென்று பரிசு பெறும் வகையில் வழிகாட்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது.
ஒரு பெரும்பாணன் வேறொரு பெரும்பாணனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் பெரும்பாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.
கூத்தராற்றுப்படை
இந்நூலின் பாட்டுடைத் தலைவன் நன்னன் சேய் நன்னன். இந்நூலுக்கு மலைபடுகடாம் என்னும் பெயரும் உண்டு.
மலையில் அருவிநீர் விழுகின்ற பொழுது இனிய ஓசை ஏற்படும். இவ்வோசையைக் கடாம் என்று சிறப்பித்துக் கூறுவதால் மலைபடுகடாம் என்னும் பெயர் வழங்கலாயிற்று என்று கூறுவர்.
சிலர், யானையை மலையாகவும், அதன் மத நீரை அருவியாகவும் கற்பனை செய்து புலவர் பாடியமையால் மலைபடுகடாம் என்னும் பெயர் வழங்கலாயிற்று என்று கூறுவர்.
நன்னன் என்ற மன்னனிடம் பரிசு பெற்று வந்த கூத்தன் ஒருவன், தன் எதிரில் வந்த வேறு ஒரு கூத்தனை அம் மன்னனிடம் சென்று பரிசு பெறும் வகையில் வழிப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.
ஒரு கூத்தன் வேறொரு கூத்தனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் கூத்தராற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.
இந்நூலுக்குக் கூடல் தமிழ் என்னும் பெயரும் உண்டு. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
உலகில் உள்ள அனைத்தும் நிலை இல்லாதவை. காஞ்சி என்றால் நிலையாமையை வலியுறுத்துவது. பாண்டிய அரசன் நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை எடுத்துக் கூறி அவனை நல்வழிப் படுத்தும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு
நெடுநல்வாடை
பட்டினப்பாலை
அக இலக்கிய நூல்களில் பாட்டுடைத் தலைவனின் (பாடப்படும் தலைவனின்) பெயர் கூறுவது வழக்கம் இல்லை.
முல்லைப்பாட்டு
தமிழில் அன்பின் அகத்திணைகள் ஐந்து. அவை :
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை
இவற்றுள் முல்லைத் திணைக்கு உரிய அகப்பொருள் மரபுகளைப் (கொள்கைகளை) பின்பற்றி எழுதப்பட்ட நூல் முல்லைப்பாட்டு ஆகும்.
குறிஞ்சிப்பாட்டு
குறிஞ்சித் திணைக்கு உரிய அகப்பொருள் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல் குறிஞ்சிப்பாட்டு ஆகும்.
நெடுநல்வாடை அதாவது, தலைவனைப் பிரிந்த தலைவிக்கும் தலைவியைப் பிரிந்த தலைவனுக்கும் பிரிவினால் துன்பம் ஏற்படும் ; இத்துன்பம் கார்காலத்தில் வீசும் வாடைக்காற்றால் மிகுதிப்படும்.
இந்த வாடைக்காற்று, தலைவனைப் பிரிந்தமையால் தலைவிக்கு நீண்ட (நெடிய) வாடையாக உள்ளது. போரில் வெற்றி பெற்ற தலைவனுக்கு நல்ல வாடையாக உள்ளது. இவ்வாடைக்காற்றினால் ஏற்படும் துன்பம் பற்றிக் கூறும் இந்நூல் நெடுநல்வாடை என்னும் பெயர் பெற்றது. இந்நூல் அகப்பொருள் மரபுகளை மீறி அமைந்துள்ளதாகக் கூறி, சிலர் இதனைப் புறநூல் என்பர் (புற நூல் = புறப்பொருள் அடிப்படையில் அமைந்த நூல்).
பட்டினப்பாலை
பட்டினத்தைச் (காவிரிப்பூம்பட்டினம்) சிறப்பித்துக் கூறுவதால் இந்நூல் பட்டினப்பாலை என்னும் பெயர் பெற்றது. இதற்கு வஞ்சி நெடும்பாட்டு என்னும் வேறு பெயரும் உண்டு.
மிடற்று வழியாக (குரல் வழியாக-வாய் வழியே) இன்னிசையை இசைப்பவர் (பாடுபவர்) இசைப்பாணர் ஆவர்.
யாழ் என்னும் இசைக்கருவியை இசைப்பதில் திறம் பெற்றவர்களை யாழ்ப்பாணர் என்பர்.
யாழ்ப்பாணர்களுள் பெரிய யாழை இசைப்பவர் பெரும்பாணர், சிறிய யாழை இசைப்பவர் சிறுபாணர்.
நல்லியக்கோடன் என்பவன் ஒரு சிற்றரசன். இவனைப் புகழ்ந்து பாடிய சிறுபாணன் ஒருவன் பரிசு பெற்று வருகிறான். இவன், தன் எதிரில் வந்த வேறு ஒரு சிறுபாணனை இம்மன்னனிடம் சென்று பரிசுபெறும் வகையில் நெறிப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.
ஒரு சிறுபாணன் வேறு ஒரு சிறுபாணனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் சிறுபாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.
பாடியவர்
சிறுபாணாற்றுப்படையைப் பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். இப் பெயரில் மூன்று செய்திகள் அடங்கி உள்ளன. அவை:
1)நத்தத்தனார் – இது புலவரின் இயற்பெயர். சிலர், தத்தனார் என்பதே இயற்பெயர் என்பர். சான்றோர்களின் பெயர்களுக்கு முன்னால் ‘ந’ சேர்ப்பது பழங்கால மரபு என்பதால் ந + தத்தனார் என்பது நத்தத்தனார் என்று இலக்கண முறைப்படி வந்தது என்று கூறுவர்.
2)நல்லூர் – இஃது அவர் பிறந்த ஊர்.
3)இடைக்கழி நாடு – நல்லூர் என்னும் ஊர் இருந்த நாடு இஃது என்றும், சென்னைக்குத் தென் மேற்கில் மதுராந்தகத்துக்கு அருகில் எடக்கு நாடு என்னும் பெயரில் இன்றும் உள்ளது என்றும் கூறுவர்.
ஓய்மா நாடு என்பது இப்பொழுதைய திண்டிவனத்தை ஒட்டி உள்ள பகுதி. இந்நாட்டின் தலைநகர் கிடங்கில் என்னும் ஊர்.
பாடம் - 2
“பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ”
என்று தொல்காப்பியம் கூறுகிறது (பொருள், புறத்திணை, 88).
பரந்த உள்ளம்
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பரந்த உள்ளம் கொண்டவர்கள் பாணர்கள். வறுமையால் வாடிய தாங்கள் பரிசு பெற்று வறுமை நீங்கியதைப் போலவே வறுமையுற்ற பிறரும் பரிசு பெற்று வறுமை நீங்கி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று பாணர்கள் நினைத்தனர்.
இடம் பெறும் செய்திகள்
சிறுபாணாற்றுப்படையில் முதல் 40 அடிகளிலும் விரிவாகப் பாலை நிலம், விறலியர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
குறிஞ்சி – மலையும் அதனைச் சார்ந்த பகுதியும்
முல்லை – காடும் அதனைச் சார்ந்த பகுதியும்
மருதம் – வயலும் அதனைச் சார்ந்த பகுதியும்
நெய்தல் – கடலும் அதனைச் சார்ந்த பகுதியும்
பாலை – மணலும் அதனைச் சார்ந்த பகுதியும்
இவற்றுள் பாலைவனம் என்பது தமிழகத்தில் இல்லை. ஆயினும், குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் தமது இயல்புகளில் இருந்து மாறுபடுவது உண்டு. இங்ஙனம் மாறுபட்ட நிலப் பகுதி பாலை என்று அழைக்கப்பட்டது.
பாலை நிலத்தின் இயல்பு
விரிந்து பரந்த நெடிய மணல் பரப்பு.
பொதுவாக உயிரினங்கள் வாழ்வதற்குப் பொருத்தமற்ற சூழல்.
நீர் அற்ற வறண்ட பகுதி.
வெப்பம் மிக்க நிலப் பகுதி.
சுழல் காற்று (சுழன்று வேகமாக வீசும் காற்று) மிகுந்த பகுதி.
வழிப்பறிக் கொள்ளையர்கள் (வழிப் போக்கர்களைத் தாக்கி அவர்களின் பொருள்களைக் கவர்ந்து செல்வோர்) வாழும் பகுதி.
(1) பெரும்பொழுது – ஓர் ஆண்டின் பிரிவுகள்
(2) சிறுபொழுது – ஒரு நாளின் பிரிவுகள்
ஐவகை நிலங்களுக்கு உரிய பொழுதுகள்
நிலம் பெரும்பொழுது சிறுபொழுது
குறிஞ்சி கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை)
முன்பனிக் காலம் (மார்கழி, தை) யாமம் (இரவு 10 மணி – 2 மணி)
முல்லை கார்காலம் (ஆவணி, புரட்டாசி) மாலை (மாலை 6 மணி – இரவு 10 மணி )
மருதம் பெரும்பொழுது ஆறும் வைகறை (இரவு 2 மணி – காலை 6 மணி)
விடியல் (காலை 6 மணி – 10 மணி)
நெய்தல் பெரும்பொழுது ஆறும் எற்பாடு (பிற்பகல் 2 மணி – மாலை 6 மணி)
பாலை இளவேனில் காலம் (சித்திரை, வைகாசி),
முதுவேனிற்காலம் (ஆனி, ஆடி),
பின்பனிக் காலம் (மாசி, பங்குனி). நண்பகல் (காலை 10 மணி – பிற்பகல் 2 மணி)
பாலை நிலம் பற்றிய இப் புரிதலோடு சிறுபாணாற்றுப்படை தரும் பாலை நிலச் செய்திகளைத் தொடர்ந்து பார்க்கலாம்.
நில மடந்தை
நிலத்தைப் பெண்ணாகப் (நில மடந்தை) புலவர் உருவகம் செய்கிறார். அவள் மூங்கில் ஆகிய தோள்களை உடையவள். மலையில் இருந்து வீழும் அருவியே அவள் மார்பகத்தின் மேல் கிடக்கும் முத்துமாலை. அருவி, மலையைவிட்டு இறங்கி அருகில் உள்ள காட்டிற்குள் நுழைகிறது. பிறகு காட்டாறாக மாறுகின்றது.
மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று (அடிகள்: 1-3)
வேனில் காலம்
காட்டாற்றின் நீர், கரையை மோதித் தாக்குகிறது. அதனால் அங்கு உள்ள பூம்பொழில் வருந்துகிறது. இவ்வாறு குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்கள் கார் (மழை) காலத்தில் உள்ளன.
ஆனால், இப்பொழுது கார் காலம் முடிந்து விட்டது. வேனில் (வெயில்) காலம் தொடங்கி விட்டது. இக்காலத்தில் குறிஞ்சி மற்றும் முல்லை நிலக்காட்சி மாறுகிறது. மலையில் அருவிகள் இல்லை. காட்டாற்றில் நீர் இல்லை. அதனால் குயில்கள் பூம்பொழிலில் நுழைந்து விளையாடுகின்றன. தம் அலகால் பூக்களைக் குடைகின்றன (கொத்துகின்றன). பூக்கள் உதிர்ந்து கரிய நிறத்தில் உள்ள ஆற்று மணற் பரப்பில் கிடக்கின்றன.
இத்தகைய மணல் பரப்பு வெப்பத்தால் சூடாகிக் கிடக்கிறது. அம்மணலில் கிடக்கும் பரல் கற்களும் (பருக்கைக் கற்கள் – சிறிய கற்கள்) வெப்பத்தால் சூடாகிக் கிடக்கின்றன. வெப்பம் மிகுந்த மணலும், பரல் கற்களும் அவ்வழியாக நடந்து செல்லும் பாணர்களின் கால்களுக்கு மிகுந்த துன்பத்தைத் தருகின்றன.
வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப (அடி, 8)
வேனில் காலத்து வெயிலின் கொடுமை
இங்ஙனம், வறுமைத் துன்பம் வாட்ட, வழிநடைப் பயணமாகப் பாணர்கள் செல்கின்றனர். அவர்களது துன்பத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அவர்கள் செல்லும் பாலைநில வழி வெப்பம் மிகுந்து உள்ளது. பாலை நிலத்து வேனில் கால வெப்பம் கடுமையாக இருப்பதை,
காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப (அடி, 10)
என்று புலவர் குறிப்பிடுகிறார்.
வழக்கமாக ஒரு நாளில் வெப்பம் நண்பகல் வேளையில் மிகுதியாக இருக்கும். காலை, மாலை வேளைகளில் வெப்பம் குறைந்து இருக்கும். ஆனால், வேனில் காலத்தில் பாலை நிலத்தில் காலை, மாலை நேரங்களில் கூடச் சூரியனின் வெப்பம் நண்பகல் வெப்பத்தைப் போல இருப்பதாகப் புலவர் கூறுவது அறிந்து இன்புறத்தக்கதாகும்.
கேசாதிபாதம்
கேசம்+ஆதி+பாதம்
கேசம்= முடி (தலை)
ஆதி= முதல்
பாதம்= அடி
இதில் ஒவ்வோர் உறுப்பாக எடுத்துக் கொண்டு, உவமை கூறி வருணிப்பர்.
முடி முதல் அடி வரை அதாவது தலை முதல் கால் வரை வருணிப்பது கேசாதிபாதம் ஆகும்.
பாதாதிகேசம்
கேசாதிபாத வருணனைக்கு நேர் மாறானது பாதாதிகேச வருணனை.
பாதம் + ஆதி + கேசம். அதாவது அடி முதல் முடிவரை வருணித்தல் (பிற்காலத்தில் பாதாதிகேச வருணனை முறை தெய்வங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று இலக்கணம் வகுத்தனர்).
இந்நூலில் விறலியர் கேசாதிபாத வருணனை முறையில் வருணிக்கப்பட்டுள்ளனர்.
கூந்தல்
உலகிற்கு அருள் செய்ய வல்ல, மெல்லியதாய் வீழ்கின்ற மழையைப் போன்ற அழகு உடைய கருமையான கூந்தல்.
சாயல் (மென்மை)
மழை மேகத்தைக் கண்டு மயில்கள் தம் தோகையை விரித்து ஆடுவது இயற்கை. விறலியரின் கூந்தலை மழை மேகம் என்று மயில்கள் நினைத்தன. அதனால் மகிழ்ச்சியாகத் தம் தோகையை விரித்து ஆடின. ஆனாலும் அவற்றிற்கு வெட்கம் (நாணம்) வந்து விட்டது. ஏன் தெரியுமா? தமது தோகையின் சாயல் (மென்மை) விறலியரின் கூந்தல் சாயலுக்குச் சமமாகாது என்று மயில்கள் கருதியதால் ஆகும்.
நுதல்
நுதல் என்றால் நெற்றி. இது ஒளி மிக்கதாக உள்ளது. பெண்களின் நெற்றி ஒளி வீசக் கூடியது என்று கூறுவது வழக்கம்.
கண்
நீலமணி போன்ற கண்கள்.
பார்வை
மருட்சி உடைய இளமையான மானின் பார்வை போன்று உள்ளது.
எயிறு
எயிறு என்றால் பல். நுங்கின் இனிய நீர் போன்று சுவையை உடையதாக எயிற்று நீர் அமைந்துள்ளது.
முலை
கோங்கு என்ற மலரின் அரும்பைப் போன்று அணிகலன்களுக்கு இடையே அடங்கிக் கிடக்கும் மார்பகம்.
தொடை
கரிய பெண் யானையின் தும்பிக்கையைப் போன்ற செறிந்த தொடை.
ஓதி (மயிர் முடிப்பு)
வாழைப் பூவின் தோற்றம் போன்ற அழகிய ஓதி.
அடி
ஓடி இளைத்து வருந்துகின்ற நாயின் நாக்கைப் போன்ற பாதம். சிலம்பு முதலிய அணிகலன்கள் ஏதும் இன்றி அழகற்று இருக்கிறது.
சுணங்கு (தேமல்)
வண்டுகள் மொய்த்து ஆரவாரம் செய்கின்ற வேங்கை மலர் போன்ற சுணங்கு.
முல்லை சான்ற கற்பின் மெல்லியல்
மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்
(அடிகள் 30, 31)
என்னும் அடிகள் சுட்டுகின்றன.
கல்லாத இளைஞர்
மென்மைத் தன்மை உடைய விறலியர், பாலை நிலத்தின் கடும் வெப்பம், நடந்து வந்த களைப்பு முதலியவற்றால் வருந்திய அடிகளை உடையவர்களாக இருந்தனர். அவர்களுடைய மென்மையான பாதங்களை, தம் தொழிலைத் தவிர வேறு கல்வி அறிவு இல்லாத இளைஞர்கள் மென்மையாக வருடி, வலியைப் போக்கினர். இதனை,
நடைமெலிந்து அசைஇய நல்மென் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவர
(அடிகள் 32 – 33)
(அசைஇய = வருந்திய ; தைவர = வருட)
என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.
2.3.4 பாலைப் பண்
பண் என்றால் இசை என்றும் யாழ் என்றும் பொருள் உண்டு. பாலை நிலத்துக்கு உரிய பண் பாலைப்பண் ஆகும். இப்பண்ணைச் சிறுபாணன் இசைத்து வருகிறான்.
பொன் கம்பி போன்று முறுக்கு மிக்க நரம்பின் இனிய ஓசையை உடைய சிறிய யாழை இடப்பக்கத்தில் தழுவி (வைத்து) இருக்கிறான் பாணன். அதில் நட்டபாடை என்னும் பண்ணை (பாலைப்பண்) இனிமையாக அவன் இசைக்கிறான்.
இங்ஙனம் சிறிய யாழில் இனிய இசையை இசைத்துக் கொண்டு, வாரி வழங்கும் வள்ளல்கள் இல்லாததால் பரிசிலர் இயங்காத இவ்வுலகில் தருவாரை எதிர்பார்த்து வழிநடந்த களைப்பைப் போக்குவதற்காக மர நிழலில் சிறுபாணன் இளைப்பாறினான் (ஓய்வெடுத்தான்).
பாடம் - 3
மூவேந்தர்களும் சிறுபாணாற்றுப்படையும்
பழங்காலத்தில் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் ஆட்சி செய்தனர். இம் மூவேந்தர்களின் தலைநகர்களாக முறையே வஞ்சியும், உறந்தையும், மதுரையும் விளங்கின. அவற்றின் சிறப்பை இந்நூல் 41-83 அடிகளில் சிறப்பித்துக் கூறுகிறது.
சேர நாடு நீர் வளமும் நில வளமும் நிரம்பியது என்பதை மேற்கண்ட செய்தி வெளிப்படுத்துகிறது. கொழுத்த மீன்கள் விளையாடுவது நீர் வளத்தைச் சுட்டுகிறது. சேர நாட்டுச் செல்வங்களுள் தலைசிறந்தது மிளகு. மிளகுக்கொடி, பலாமரம், காட்டு மல்லிகை, மஞ்சள் என்பன நில வளத்தைக் காட்டுகின்றன. இவ்வளத்தை,
கொழுமீன் குறைய ஒதுங்கி, வள்இதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை
பைங்கறி நிவந்த பலவின் நீழல்,
மஞ்சள் மெல்இலை மயிர்ப்புறம் தைவர,
விளையா இளங்கள் நாற, மெல்குபு பெயரா,
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்
குடபுலம்…………………..
(சிறுபாணாற்றுப்படை 41-46)
(கயவாய் = பெரியவாய் ; பைங்கறி = பசிய மிளகுக்கொடி; பலவு = பலாமரம் ; மயிர்ப்புறம் = மயிர் நிரம்பிய முதுகு ; இளங்கள் = முற்றாத தேன்; மெல்குபு = மென்று ; குளவிப்பள்ளி = காட்டு மல்லிகையாகிய படுக்கை ; பாயல்கொள்ளும் = உறங்கும்)
என்று புலவர் காட்சிப்படுத்துகிறார்.
நாட்டில் எவ்வளவு வளம் இருந்தாலும் அதை அந்நாட்டில் வாழும் உயிரினங்கள் பெற்று இன்பமாக வாழ வழி வகை செய்வது அரசனின் திறம் ஆகும். அரசனின் அறம் தவறாத அரசியலும் எவருக்கும் அஞ்சாத அவனது வீரமும் சேரநாட்டு மக்களே அன்றி விலங்குகள் கூட மகிழ்வுடன் வாழ்வதற்குக் காரணமாயின.
அறநெறி தவறாமலும் வீர உணர்வுடனும் ஓர் அரசன் ஆட்சி செய்தால் அந்நாட்டில் உள்ள உயிரினங்கள் துன்பம் இல்லாமல் இன்பத்துடன் வாழும். இதன் குறியீடு தான் சேர நாட்டின் எருமை துயில் கொண்ட செய்தி.
பாண்டிய அரச மரபினர் பலரும் தமிழ் மொழி மீது மிகுந்த பற்று வைத்திருந்தனர். தமிழ்மொழி என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்று கருதினர். அதனால் முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் மூன்று சங்கங்களை ஏற்படுத்தினர். அச்சங்கங்கள் தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதில் முழுக் கவனம் செலுத்தின. அச்சங்கங்கள் ஆய்ந்த பழந்தமிழ் நூல்கள் பற்பல. ஆயினும் அவற்றுள் எண்ணில் அடங்காத நூல்கள் அழிந்து போயின.
சங்கம் கண்ட சிறப்பால் மதுரை மாநகரம் முழுவதும் தமிழ் மணம் கமழ்ந்தது என்று கூறலாம். இங்ஙனம், முத்தையும் முத்தமிழையும் ஒரு சேரப் பெற்ற பெருமைக்கு உரியது பாண்டிய மன்னனின் மதுரை நகரம் ஆகும்.
அம்மந்திகள் அவர்தம் குடும்பத்தினருடனும் குழந்தைகளுடனும் முத்துகள் பெய்த கிளிஞ்சல் சிப்பிகளைக் கொண்டு கிலுகிலுப்பை (விளையாட்டுப் பொருள்) ஆட்டி மகிழும்.
சோழர்கள்
தமிழகத்தின் கீழ்த் திசையில் அமைந்துள்ள நிலப் பகுதிகளைச் சோழ நாடு என்பர். அதனைப் பல காலமாக ஆட்சி செய்த மன்னர் மரபினர் சோழர்.
சோழர் மரபில் தோன்றிய செம்பியன் என்பவன் குடிமக்களின் நலம் காக்கும் வகையில், பகைவரின் தொங்கும் அரண்களை முற்றிலுமாக அழித்தான். அதனால் அவன் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் என்று சிறப்பிக்கப் பெற்றான்.
இந்நாட்டில் நீர்வளமும் நிலவளமும் ஒருங்கே சிறப்புற்று இருப்பதை, சிறுபாணாற்றுப்படை ஒரு நாடகத்தின் அழகுபட விவரிக்கிறது.
நிலவளம்
சோழநாட்டில் ஒரு பொய்கை (நீர்நிலை) உள்ளது. அது நல்ல நீரை உடையது. அப் பொய்கையைக் கடப்ப மரங்கள் சூழ்ந்துள்ளன. அம்மரத்தில் மலர்கள் மாலைகள் போலத் தொங்குகின்றன. அம்மலர்களினின்றும் இந்திரகோபம் போன்ற தாதுக்கள் விழுகின்றன. இங்ஙனம் வீழ்வது ஓவியத்தை ஒத்து விளங்குகின்றது (இந்திர கோபம் = தம்பலப்பூச்சி).
இத்தகு வளம் பொருந்திய பொய்கைத் துறையிடத்தே, எழுகின்ற மார்பகத்தினை ஒத்த தாமரை மொட்டுகள் உள்ளன. அது சாதிலிங்கக் குழம்பு தோய்ந்த உள்ளங்கை போன்ற சிவந்த இதழ்களைக் கொண்டது. அழகிய முகம் போல அது மலர்ந்து இருக்கிறது. அதன் பொன் நிறமான பொகுட்டின் (மொட்டு) மீது தும்பி (வண்டு) தன் பெடையைத் தழுவிக் கொண்டு சீகாமரம் என்னும் பண்ணை (இசையை) இசைத்து மகிழ்கிறது.
கொடைவளம்
செந்தமிழ் நாட்டு மூவேந்தர்களுடைய கொடைத் தன்மை, வெற்றிச் சிறப்பு, நாட்டு வளம் முதலியவற்றை, வறுமையில் வாடும் பாணனிடம் பரிசு பெற்ற பாணன் எடுத்துக் கூறுகிறான். அப்பொழுது இவர்களது வள்ளல் தன்மையைக் காட்டிலும் நல்லியக்கோடனின் வள்ளல் தன்மை மேம்பட்டது என்று அவன் புகழ்ந்து கூறுகிறான்.
1) பேகன்
2) பாரி
3) காரி
4) ஆய்
5) அதிகன் (அதியமான்)
6) நள்ளி
7) ஓரி
இனி, இவர்கள் செய்த அருங்கொடையைப் பற்றிக் காணலாம்.
பருவ மழை தவறாது பெய்யும் வளம்மிக்க மலை நாட்டை உடையவன் பேகன். மயில் காட்டில் அகவியதை இவன் கேட்டான். குளிரால் நடுங்கியே மயில் அகவியது என்று எண்ணினான். அதன் மீது மிகுந்த இரக்கம் கொண்டான். அம் மயில் மீது தன் போர்வையைப் போர்த்தினான்.
இத்தகு அரிய கொடையால் இவன் அழியாப் புகழ் பெற்றான். இதனால் இவன்,
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
………… ……………. ……………. ……………….. …………….
பெருங்கல் நாடன் பேகன்…
(சிறுபாணாற்றுப்படை 85-87)
(கானம் = காடு; மஞ்ஞை = மயில்; கலிங்கம் = ஆடை; பெருங்கல் = மலை)
என்று குறிக்கப்பெறுகிறான்.
சுரும்புகள் (வண்டுகள்) உண்ணுமாறு தேன் வழங்கும் சிறப்பு உடைய சுரபுன்னைகள் நிறைந்த வழிப்பாதை, அப்பாதையின் வழியே பாரி தன் தேர் மீது ஏறிச் சென்றான். அப்பாதையில், சிறிய பூக்களை உடைய முல்லைக் கொடி பற்றிப் படர்வதற்குக் கொழுகொம்பு இல்லாமல் தவித்தது. இதைக் கண்ட பாரி தான் ஏறி வந்த தேரை அவ்விடத்தில் நிறுத்தினான். அதில் முல்லைக் கொடியைப் படரவிட்டான். இத்தகு இரக்கக் குணம் கொண்டவன் பாரி. இதனால் இவன்,
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
……………. ……………… …………………..
பறம்பின் கோமான் பாரி
(சிறுபாணாற்றுப்படை – 89-91)
(வீ = பூ; பறம்பு = பறம்பு மலை; கோமான் = அரசன்)
என்று பாடப் பெறுகிறான்.
உலகமே வியக்கும் வகையில் போரில் புகழ்மிக்க தன் குதிரையையும், பெரும் பொருளையும் இரவலர்க்குக் கொடுத்தான். இதனால் இவன்,
ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த
……………………… …………….. ……..
கழல்தொடித் தடக்கைக் காரி …
(சிறுபாணாற்றுப்படை 93-95)
என்று சிறப்பிக்கப்படுகிறான்.
இவன் வலிமையான தோள்களை உடையவன்; இனிய மொழிகளைப் பிறரிடத்துப் பேசி மகிழ்பவன். பெறுவதற்கு அரிய சிறந்த மணியையும், ஆடையையும் இவன் பெற்றிருந்தான். சிவபெருமான் மீது கொண்டிருந்த பேரன்பால் அவற்றை அவ் இறைவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தான். இவன், ஆர்வ நன்மொழி ஆய் என்று அழைக்கப்படுகிறான்.
அதிசய நெல்லிக்கனி
அதிகன், ஒருமுறை வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றான். அங்கு உள்ள மலைச்சாரலில் மருத்துவத் தன்மை உடைய நெல்லி மரத்தில் ஒரே ஒரு பழம் பழுத்துத் தொங்கியது. அதை அதிகன் பறித்து வந்தான். அக்கனியை உண்போர் நீண்ட நாள் உயிர் வாழ்வர் என்பதை இவன் அறிந்து கொண்டான். அத்தகு சீரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஒளவையாருக்கு வழங்கினான் (ஒளவையார் சங்க காலத்து மிகச் சிறந்த பெண் புலவர்). இச்செய்தியை,
அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த
…………….. …………………. …………….. ………..
அரவக் கடல்தானை அதிகனும்…
(சிறுபாணாற்றுப்படை 101-103)
(அமிழ்து விளை = இறவாமை தரும்; தீம் = இனிய; அரவம் = ஒலி ; தானை = சேனை)
என்று இந்நூல் சுட்டுகிறது.
முட்டாது கொடுப்போன்
தன்னிடம் வந்த இரவலர்கள் மனம் மகிழ்கின்ற வகையில் பரிசுப்பொருள்களை அள்ளிக் கொடுப்பவன் இவன்.
தன்னிடம் வந்தவர்கள் மீண்டும் வறுமையில் வாடாதவாறும் வேறொருவரிடம் சென்று இரவாதவாறும் நிரம்பக் கொடுக்கும் இயல்பு உடையவன் நள்ளி. இதனால் இவன்,
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை
………… ……….. ………………. ………………
நளிமலை நாடன் நள்ளி…
(சிறுபாணாற்றுப்படை 105-107)
(முட்டாது = தடையில்லாது; முனை = போர்முனை; நளிமலை = குளிர்ந்த மலை)
என்று பாராட்டப்படுகிறான்.
நறும்போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த
………… …………. ……………. ………………
ஓரிக் குதிரை ஓரி………
புன்னை மரங்களையும் குன்றுகளையும் உடைய நாடுகளைக் கூத்தருக்குக் கொடுத்த ஓரி என்று இந்நூல் அவனைப் புகழ்கிறது.
“உன்னைப் போல் நானும் வறுமையில் வாடினேன்; செய்வது தெரியாமல் விழித்தேன். நல்லியக்கோடனிடம் சென்று பரிசு பெற்றமையால் என் வறுமைத் துன்பம் முற்றிலும் நீங்கியது. எனவே, நீயும் அவ்வள்ளலிடம் சென்று பரிசு பெற்று, துயர் நீங்குவாயாக” என்று பரிசு பெற்ற பாணன் வறுமையில் வாடும் பாணனை வழிப்படுத்துகிறான்.
பாடம் - 4
இம்மன்னன் வலிமை பொருந்திய ஓவியர் குடியில் பிறந்தவன். இவன் முன்னோர்களான ஓய்மான் நல்லியாதன், ஓய்மான் வில்லியாதன் ஆகிய இருவரும் வள்ளல்களாகத் திகழ்ந்தனர்.
இந்த மாவிலங்கை வளம் மிக்க நாடு. இவ்வூரில் பெருக்கெடுத்து ஓடுகின்ற நீரின்கண் மகளிர் விளையாடி மகிழ்வர். இப்பெண்கள் நீரில் நீந்தி விளையாடுவதற்குத் தெப்பக்கட்டைகளாக அகில், சந்தனம், சுரபுன்னை ஆகிய மரக்கட்டைகளைப் பயன்படுத்துவர் (தெப்பக் கட்டை = நீரில் மிதக்கும் கட்டை). இப்பெண்களுக்கு இம் மரக்கட்டைகளை ஓடி வருகின்ற நீரோட்டமே கொண்டு வந்து சேர்க்கும்.
நறுவீ நாகமும் அகிலும் ஆரமும்
துறையாடு மகளிர்க்குத் தோள்புணை ஆகிய
பொருபுனல் தரூஉம்
(அடிகள். 116-118)
இத்தகு வளமும் பெருமையும் புகழும் கொண்ட நாடு மாவிலங்கை (பெரிய இலங்கை). இதனை ஆட்சி செய்த பல மன்னர்களுள் இவன் தலைசிறந்தவன் ஆவான்.
இங்குக் கூறப்படும் இலங்கை வேறு; இராவணன் ஆண்ட இலங்கை வேறு. இலங்கை என்னும் பெயர் கொண்ட ஊர்கள் தமிழகத்தில் பல இருந்தன.
வீரம்
நல்லியக்கோடன் வீரம் மிக்கவன். பகைவரை மார்பிலும் முகத்திலும் வெட்டி வெற்றி கொள்ளும் வீரம் நிறைந்தவன். புலி போன்ற வலிமை உடையவன். இதனை வடுவில் வாய்வாள், உறுபுலித் துப்பின் என்னும் சொற்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கொடை
இவன் மழை மேகம் போன்று பலனை எதிர்பார்க்காது வாரி வழங்கும் கொடைத் திறம் மிக்கவன். இதனை, பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கை என்ற அடி சுட்டுகின்றது.
மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்
உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்
. . . . . . . . . . . . . . . . . .
பிடிக்கணம் சிதறும் பெயன்மழைத் தடக்கைப்
பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை
நல்லியக் கோடன்….
(அடிகள் 121-126)
ஆம்பி பூத்தது
திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறையான் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சோர், முதுசுவர்க் கணச்சிதல் அரித்த
பூழி பூத்த புழல்கால் ஆம்பி
(அடிகள் 130-134)
ஆம்பி என்றால் காளான் என்று பொருள். பாணன் வீட்டில் அடுப்புப் பற்ற வைத்துப் பல நாட்கள் ஆகிவிட்டன. இதனால் அடுக்களையில் (அடுப்பில்) காளான் முளைத்திருந்தது. இதனை அடுக்களை ஆம்பி பூத்தது என்ற அடி சுட்டுகிறது. தீ மூட்டிப் பல நாட்கள் ஆன அடுப்பில் நாய் ஒன்று குட்டிகளைப் பெற்றெடுத்தது. அந்த நாய் தன் குட்டிகள் மீது மிகுந்த அன்பும், பாசமும், பற்றும் வைத்திருந்தது. ஆனாலும் பிறந்து சில பொழுதே ஆன – கண்களைத் திறந்து பார்க்காத தன் இளம் குட்டிகளுக்குத் தேவையான பால் அந்நாயிடத்தில் இல்லை. அதனால் பால் குடிக்க வந்த தன் இளம் குட்டிகளைப் பால் கொடுக்காது துரத்தியது. அதனையும் மீறி நாய்க்குட்டிகள் தாயின் பால் மடியைப் பற்றி இழுத்தன. வலி தாங்காது நாய் அலறித் துடித்தது. இத்தகைய வீட்டில் கொடிய வறுமையில் நான் வாடினேன் என்று பரிசில் பெற்ற பாணன் வறுமையில் வாடும் பாணனிடம் கூறினான்.
அக்காட்சி இது:
உணவு சமைப்பதற்குத் தேவையான அரிசி உள்ளிட்ட பொருள்கள் இல்லாது அடுக்களை வெறிச்சோடிக் கிடந்தது.
மிகவும் பழைமையானதும் சிதைந்ததுமான வீட்டுச் சுவர். இதில் கறையான் புற்றுக் கிளம்பி இருந்தது.
வீட்டுக் கூரையில் இருந்த கழிகள் (மூங்கில்கள் – வீடுகட்டப் பயன்படும் மரம்) கட்டுகள் அறுந்து கீழே விழுந்தன.
மனைவி
பாணனின் மனைவியின் வறுமைக் கோலத்தைப் பாருங்கள்.
பசியால் இளைத்த உடலை உடையவள்.
வயிறு ஒட்டிக் கிடந்தது.
கைகளில் வளையல்களைத் தவிர வேறு அணிகலன்கள் எதுவும் இல்லை.
வறுமையிலும் செம்மை
பசித் துன்பம் வாட்டியதால் தன் வீட்டுக் குப்பையில் தானாகவே முளைத்துக் கிடந்த வேளைக் கீரையைப் பறித்து வந்தாள். தன் கை நகங்களினால் கிள்ளி வேக வைத்தாள். பணச்செலவு இல்லாமல் கிடைத்த அந்த கீரைக்கு இட வேண்டிய உப்புக்கூட அந்த வீட்டில் இல்லை. எனவே, உப்பில்லாமலேயே வெந்த கீரையை உண்ண அவ்வீட்டில் உள்ள பலரும் காத்திருந்தனர்.
வறுமையிலும் செம்மை என்பது போல, தன் குடும்ப வறுமை வெளியில் எவருக்கும் தெரியாதவாறு வீட்டு வாயில் கதவை மூடினாள்; உப்பில்லாமல் சமைத்த வெந்த கீரையை அனைவரும் உண்டனர்; இவ்வாறு வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என்ற வறிய சூழலில் பாணனின் குடும்பம் இருந்தது.
ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்கில்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்….
(அடிகள் 135-140)
சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி
யாம்அவண் நின்றும் வருதும்….
(அடிகள் 142-143)
நீங்களும் செல்க
வறுமையில் வாடும் பாணனே! கொடிய வறுமையைப் போக்கும் நல்லியக்கோடனிடம் நீயும் செல்க. நீயும் உனது சுற்றமும் தயங்காமல் அம்மன்னனிடம் செல்லுங்கள். அங்ஙனம் சென்றால், “அவன் உங்களை அன்போடு வரவேற்பான். பரிசுப் பொருள்கள் பலவற்றை வழங்கி உங்கள் துன்பத்தைப் போக்குவான். எனவே தயங்காமல் செல்லுங்கள்” என்று பரிசு பெற்ற பாணன் வறிய பாணனை வழிப்படுத்தினான். இச்செய்திகள் 142 முதல் 163 வரையிலான அடிகளில் நாடகக் காட்சிபோல வருணிக்கப்படுகின்றன.
இந்நகரங்களில் வாழ்ந்து வரும் மக்கள், அவர்தம் பழக்க வழக்கங்கள், நில அமைப்பு, மக்கள் அன்போடு அளிக்கும் விருந்து (உணவு) முதலானவை மிகத் தெளிவாகவும் சுவையாகவும் கூறப்பட்டுள்ளன. இந்நகரங்களைப் பற்றிய இச்செய்திகள் மிக விரிவாக 143 முதல் 195 வரையிலான அடிகளில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
விருந்து
எயிற்பட்டினத்தில் கடல் அலைகள் கொண்டு வந்து ஒதுக்கிய அகில் மரக் கட்டைகள் உறங்குகின்ற ஒட்டகங்கள் போன்று கிடந்தன. அத்தகைய அகில் மர விறகினால் தீ மூட்டிக் காய்ச்சி அரித்த (வடிகட்டிய) தேறலை (கள்) மீனவப் பெண்கள் மீனவர்களுக்கு உணவாகக் கொடுப்பர். விறலியரோடு செல்லும் நீங்கள் கிடங்கில் கோமானைப் (நல்லியக்கோடனை) பாடியும் குழல் ஓசைக்கு ஏற்ப ஆடியும் செல்லும் பொழுது அப்பரதவரின் வீடுகள் தோறும் அவர்கள் மகிழ்ந்து கொடுக்கும் குழல் மீன் சூட்டைப் (ஒரு வகை சுட்ட மீன்) பெற்று உண்டு மகிழலாம்.
இச்செய்திகள் 146 முதல் 163 வரையில் உள்ள அடிகளில் சுவைபடக் கூறப்பட்டுள்ளன.
வேலூரின் வளம்
வேலூர் வளம் நிறைந்த ஊர். அவரைக்கொடி பவழம் போல் பூத்து விளங்கும். கருமையான நிறம் கொண்ட காயாம் பூக்கள் மயிலின் கழுத்துப் போன்று மலர்ந்திருக்கும்.
முசுண்டைச் செடியில், பனை ஓலையால் பின்னப்பட்ட கொட்டம் (சிறு பெட்டி) போன்று பூக்கள் மலர்ந்திருக்கும். செங்காந்தள் மலர்கள் கைவிரல்கள் போன்று பூத்திருக்கும். செல்லும் வழிகள் எல்லாம் இந்திர கோபம் எனும் பூச்சிகள் ஊர்ந்து செல்லும். முல்லைக் கொடிகள் படர்ந்து கிடக்கும் அழகிய காட்டிடத்தே மலைகளில் இருந்து அருவிகள் வீழ்ந்தோடும் வளம் மிக்க ஊர் வேலூர்.
விருந்து
பாணனே! இத்தகைய முல்லை நிலப்பகுதி வழியாக, பகல் பொழுதில் சென்று கொண்டே இருந்தால் மாலைப் பொழுதில் வேலூரைச் சென்று அடையலாம். அங்கு, உள்ளேயிருப்போரை வருத்தும் வெப்பம் மிகுந்த குடிலில் (குடில் – வீடு) முல்லை நில மக்களாகிய எயினர்கள் இருப்பர். அக்குலப் பெண்கள் (எயிற்றியர்) தாங்கள் சமைத்த மான் இறைச்சி கலந்த புளியஞ்சோற்றை உனக்கு வழங்குவார்கள். அவ்விருந்தையும் நீ உண்டு மகிழலாம்.
இச் செய்திகள் 164 முதல் 177 வரையிலான அடிகளில் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன.
ஆமூரின் வளம்
நீர் வளமும், நில வளமும், நெல் வளமும் நிரம்பப் பெற்ற ஊர் ஆமூர் ஆகும். அவ்வூரின்கண் பூமாலைகள் கட்டித் தொங்க விடப்பட்டதைப் போன்று பூங்கொத்துகள் தொங்கும் காஞ்சி மரங்கள் வளர்ந்தோங்கி நிற்கும். அம்மரத்தின் கிளைகளில் தங்களுக்கு உணவாகும் மீன்களை எதிர்பார்த்து, சிச்சிலிப் பறவைகள் அமர்ந்து இருக்கும்.
அப்பறவைகளால் கிழிக்கப்பட்ட இலைகளையும், நீண்ட தண்டினையும் கொண்ட தாமரையினின்றும் மொட்டுகள் அவிழ்கின்றன. மலர்ந்த தாமரை மலரின் தேனை உண்ண வண்டுகள் வந்து குவிந்துள்ளன. தேனை உண்ண வந்த வண்டுகளின் வரிசை தாமரை மலரை மொய்த்துள்ளமை நிலவை விழுங்க வந்த கரும்பாம்பு போல் உள்ளது என்று நத்தத்தனார் உவமை நயம்படக் கூறுகிறார். பாணனே! இக்காட்சியை எல்லாம் பார்த்துக் கொண்டே சென்றால் ஆமூர் வந்து சேரும்.
விருந்து
ஆமூர் குளிர்ந்த வயல்களை உடையது; சான்றோர்களை உடையது; மிக்க காவலைக் கொண்டது; பெரிய வீடுகளை உடையது; ஆழமான அகழிகளைக் கொண்டது. இத்தகைய வளம் மிக்க ஊரில் மருதநில மக்களாகிய உழவர்களும் உழத்திகளும் வாழ்ந்து வருகின்றனர்.
உழவர்கள் வலிமையான எருதுகளை உடையவர்கள். உழத்தியர், பெண் யானைகளின் துதிக்கையைப் போன்ற பின்னல் கிடக்கும் முதுகினையும், வளையல் அணிந்த கையினையும் உடையவர்; இவர்கள் தங்கள் இல்லத்தின் உள்ளே இருந்துகொண்டு தங்கள் மக்களால் உன்னையும் உன் சுற்றத்தையும் அன்புடன் வரவேற்பர். மருத நில வாழ் மக்கள் விருந்து உபசரிப்பதில் தலைசிறந்தவர்கள். ஆதலால், உழத்தியர் வெண்மையான அரிசிச் சோற்றை நண்டின் கறியுடன் சேர்த்து உங்களுக்கு விருந்து அளிப்பர். இச் சோற்றை உண்டு மகிழலாம்.
இச்செய்திகள் 178 முதல் 195 வரையிலான அடிகளில் அழகு நயம்படக் கூறப்பட்டுள்ளன.
இதன் காரணமாக இவ்வூர் முழுவதும் புழுதி பறந்து புகை மூட்டமாக இருக்கும். வீரம் செறிந்த யானைகளின் மதநீர் அருவி போல ஓடுவதால் ஓயாத விழாக்களால் ஏற்பட்ட புழுதி அடங்கிப் போகும்.
இந்த யானைகளைப் பற்றி, நத்தத்தனார் கூறுவதைப் பாருங்கள்: போர்க்களத்தில் தான் கொன்ற பிணங்களைக் காலால் இடறுவதால் இரத்தம் தோய்ந்து சிவந்து தோன்றும் கால்களை உடையனவாக இந்த யானைகள் நிற்கும். யானைகளின் கால் நகங்கள் எவ்வாறு இருந்தன என்பதற்கு ஓர் உவமை காட்டுகிறார் புலவர். தீப்பிழம்பு சாய்ந்தது போன்ற நாக்கு, விளங்கும் பற்கள், வெள்ளாட்டுக் குட்டிகளை அணிகலனாக அணிந்துள்ள செவி, பிளவுபட்ட அடி ஆகியவற்றை உடைய பெண் பேய் நிணம் தின்று சிரித்தபோது தெரிந்த பற்களைப் போன்று அவை குருதி தோய்ந்து இருந்தனவாம்.
இத்தகு விழாக்கோலம் நிறைந்தது நல்லியக்கோடனின் தலைநகரம். இச்செய்திகளை 196 முதல் 202 வரையிலான அடிகள் கூறுகின்றன.
பாடம் - 5
நல்லியக்கோடனின் அரண்மனை
நல்லியக்கோடனின் அரண்மனை பெரிய மேரு மலையைப் பெயர்த்து வைத்தது போன்று காட்சி அளித்தது. அந்த அரண்மனையின் வாயில் கதவு திறந்து இருந்த காட்சி மேரு மலையானது கண் ஒன்றைத் திறந்து வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்று இருந்தது. இம்மன்னனிடம் பரிசு பெற விருப்பமுடன் வரும் பொருநர், புலவர், அருமறை அந்தணர் போன்றோர் தங்குதடையின்றி உள்ளே வருவதற்கு வசதியாக அரண்மனையின் வாயில் கதவு எப்பொழுதும் மூடப்படாமல் திறந்தே இருக்கும். இதை அடையா நெடுங்கதவம் என்று சிறப்பித்துக் கூறுவர் (அடையா வாயில் – அடி 206).
5.1.1 சான்றோர் புகழ்தல்
நன்றி மறவாத நல்ல பண்பைப் பிறவிக் குணமாகக் கொண்டவன் நல்லியக்கோடன். சிற்றினம் சேராதவன். இன்முகம் உடையவன். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதவன். முகம் நக மட்டுமன்றி அகம் நகவும் (உள்ளம் மலர) பரிசிலர்களை வரவேற்பவன். இத்தகைய சிறந்த பண்பு நலன்களை எல்லாம் அவனை நன்கு அறிந்த சான்றோர்கள் எந்நாளும் புகழ்ந்து கூறுவர். இதனை,
செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்
இன்முகம் உடைமையும் இனியன் ஆதலும்
செறிந்துவிளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த
(சிறுபாணாற்றுப்படை, 207-209)
என்னும் அடிகள் உணர்த்துகின்றன.
பகைப் படையினரைக் கண்டு அஞ்சாது அவர்களை அழிக்கும் ஆற்றல் உடையவன்.
தன்னை அடி பணிந்து தன் கீழ் அடங்கி ஆட்சி செய்யும் பகைவரிடத்துக் கோபம் கொள்ளாது இரக்கம் காட்டும் அருள் உள்ளம் உடையவன்.
பயந்து நடுங்கி ஓடும் தன் படையினரைச் சுற்றி வளைத்து அவர்களுக்கு வீரமொழிகள் கூறி, அவர்களை வீரமுடன் போரிடச் செய்பவன்.
இவ்வீரத் தன்மையை,
அஞ்சினர்க்கு அளித்தலும் வெஞ்சினம் இன்மையும்
ஆண்அணி புகுதலும் அழிபடை தாங்கலும்
வாள்மீக் கூற்றத்து வயவர் ஏத்த
(சிறுபாணாற்றுப்படை, 210- 212)
என்னும் அடிகள் போற்றிக் கூறுகின்றன.
கருதியது முடித்தலும் காமுறப் படுதலும்
ஒருவழிப் படாமையும் ஓடியது உணர்தலும்
அரியேர் உண்கண் அரிவையர் ஏத்த
(சிறுபாணாற்றுப்படை, 213-215)
என்னும் அடிகள் விளக்கிக் கூறுகின்றன.
அறிவு மடம்படுதல்
அறிவு நிரம்பப் பெறாதவர்கள் தன்னிடம் வந்து தவறானவற்றைக் கூறினால், அவற்றை அறியாதவன் போல விரும்பிக் கேட்பான். அறிந்தும் அறியாதவன் போல் இருக்கும் இப்பண்பை அறிவு மடம்படுதல் என்பர்.
வரிசை அறிந்து பரிசு நல்கல்
பரிசில் பெறும் நோக்கோடு தன்னிடம் வந்த பரிசிலர்களுக்கு வேண்டுவன வழங்கும் வள்ளல் குணம் கொண்டவன் இம்மன்னன். ஆயினும், பரிசிலரின் தகுதி அறிந்து அவர்களின் தகுதிக்கு இழுக்கு ஏற்படாத வகையில் வாரி வழங்குவான். இப்பண்பை வரிசை அறிந்து பரிசு நல்கல் என்பர்.
வரையாது வழங்குவோன்
பரிசிலரின் வரிசை அறிந்து பரிசு நல்குபவன் இவன்; எனினும் பரிசிலரின் நெஞ்சம் நிறையுமாறும் அவர்கள் மட்டுமன்றி அவர்களின் உறவினர்களும் பெற்றுப் பயன் அடையும் வகையிலும் அளவில்லாப் பரிசுப் பொருள்களை வாரி வழங்குவான். இத்தன்மையை வரையாது வழங்கும் வள்ளல் தன்மை என்று சிறப்பித்துக் கூறுவார்.
நல்லியக்கோடனின் வள்ளல் தன்மையை எடுத்துரைக்கும் அடிகள் இவை:
அறிவுமடம் படுதலும் அறிவுநன்கு உடைமையும்
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த
(சிறுபாணாற்றுப்படை, 216-218)
வீற்றிருத்தல்
இத்தகைய கொடைத் திறம் மிக்க மன்னன் விண்மீன்களுக்கு இடையே ஒளி வீசும் நிலவைப் போல அறிஞர், வயவர் (மறவர் வீரர்), அரிவையர், பரிசிலர் ஆகியோர் சூழ அரசு வீற்றிருந்தான்.
கருங்குரங்கு தன்னைக் கடிக்கவரும் பாம்பினிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அதன் தலையைப் பிடித்துக் கொள்ளும். அப்போது அப்பாம்பு குரங்கின் கையை ஓரிடத்தில் இறுக்கமாகவும் ஓரிடத்தில் நெகிழ்ச்சியாகவும் சுற்றிக்கொள்ளும். அதுபோல யாழ்த் தண்டினிடத்தில் நெகிழ வேண்டிய இடத்தில் நெகிழ்ந்தும் இறுக வேண்டிய இடத்தில் இறுகியும் உள்ள நரம்பு கட்டியிருக்கும் கட்டுகளை உடையது அந்த யாழ்.
மணிகளை வரிசையாகக் கோத்து வைத்ததைப் போன்று இரண்டு விளிம்பையும் சேர்த்துத் தைத்து முடுக்கின ஆணிகளைக் கொண்டது.
யாழின் ஒரு பகுதி குடம் போலப் பருத்திருக்கும் (அதனை வயிறு போல எனக் குறிப்பிடுகிறார் புலவர். அதனைப் பத்தர் என்பர்). ஒழுங்குபட்ட தொழில்வகை அமைந்த பத்தரை உடையது; குமிழம் பழம் போன்ற நிறம் உடைய போர்வைத் தோலால் போர்த்தப்பட்டது அந்த யாழ்.
அமிழ்தத்தைத் தன்னிடத்தே பொதிந்து வைத்திருக்கும் தேனை ஒழுக விட்டதைப் போன்ற முறுக்கு அடங்கின நரம்புகளைக் கொண்டது. யாழின் அமைப்பை இவ்வாறு சிறப்பிக்கிறார் நத்தத்தனார்.
பைங்கண் ஊகம் பாம்புபிடித் தன்ன
அம்கோட்டுச் செறித்த அவிழ்ந்துவீங்கு திவவின்
மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்குபுரி நரம்பின் . . .
(அடிகள் 221-227)
அங்ஙனம் நீங்கள் நல்லியக்கோடனைப் பாடும் பொழுது, “ஐம்பெரும் குரவர்க்கும் எப்பொழுதும் குவித்த கைகளை உடையவனே! ஏரினை உடைய குடிமக்களின் துன்பம் நீக்கி அவர்களுக்கு நிழல் போல இன்பம் அளிக்கும் செங்கோலை (சிறந்த ஆட்சியை) உடையவனே! பகை அரசர்க்குத் துன்பம் தரும் வேலினை உடையவனே! என்றவாறெல்லாம் அவனின் பெருமையைப் புகழ்ந்து பாடுங்கள்” என்கின்றான். (ஐம்பெரும்குரவர் – அரசன், ஆசிரியர், தாய், தந்தை, தமையன் ஆகியோர்.)
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்,
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்,
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்,
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்,
நீசில மொழியா அளவை . . . . . .
(அடிகள், 231-235)
மானம் காத்த பிறகு அவனின் உயிர் காத்தல் அடுத்த பணி ஆகும். அதனால் அவன் வயிறார உண்ணுவதற்கு ஏற்றவாறு அறுசுவை உணவை வழங்கினான். அந்த உணவையும் அரசன் அவர்களின் அருகில் இருந்து தானே பரிமாறினான்.
உடை
நல்லியக்கோடன் ஆடை வழங்கும் தன்மை பற்றி,
“பாணர்களே! நீங்கள் அணிந்திருக்கும் கந்தல் ஆடையைக் களையச் செய்து மூங்கிலின் உள்பட்டையை உரித்ததைப் போன்ற தூய்மையான, மென்மையான ஆடைகளை உங்களுக்குத் தந்து உடுத்தச் சொல்வான்.
. . . . . . . . . . மாசில்
காம்புசொலித் தன்ன அறுவை உடீஇ”
(அடிகள், 235-6)
என்கிறான் பரிசு பெற்ற பாணன்.
உணவு
நல்லியக்கோடன் உணவு வழங்கும் தன்மை பற்றி,
“மயக்கமும் மகிழ்ச்சியும் தருகின்ற தெளிந்த கள்ளைக் கொடுத்து உங்களைப் பருகச் செய்வான். சமையல் கலையில் வல்லவன் வீமன். அவன் எழுதிய நூலில் கூறியவாறு சுவை தரும் வகையில் சமைத்த பல்வேறு உணவு வகைகளைப் பொன் பாத்திரத்தில் இட்டு உங்களை உண்ணச் செய்வான். அருகில் நின்று அவனே உங்களுக்கு உணவு வழங்கி மகிழ்வான்” என்று ஆற்றுப்படுத்தும் பாணன் கூறினான்.
பகைவர்களை விரட்டி அடித்த தன் படைத் தலைவர்கள் கொண்டு வந்த பொன் குவியலுடன் தொழிலில் சிறந்த தச்சர்கள் செய்த சிறப்பு மிக்க தேர், குதிரைகள், வெள்ளை எருது, பாகனொடு ஊரும் யானை, அணிகலன் ஆகிய பொருட்களைக் கொடுத்து மகிழ்ந்தான்.
மென்தோளும், ஆடிய சாயலும் உடைய மகளிர் அகில் புகை ஊட்டுவதன் பொருட்டுத் தம் கூந்தலை விரிப்பர். பெண்களின் விரிந்த கூந்தலைப் போன்று மயில் தன் தோகையை விரித்து ஆடுவதற்குக் காரணமான கருமேகங்கள் வெண் மேகங்களிடையே தவழ்கின்ற மலை; மூங்கில்கள் நிறைந்த மலை; யாராலும் ஏறுவதற்கு அரிய உயர்ந்த உச்சியைக் கொண்ட மலை. இத்தகைய மலைகள் சூழ்ந்த நிலத்திற்குத் தலைவனும் கொடைத்திறம் மிக்கவனுமாகிய நல்லியக்கோடனை நாடி நீங்கள் செல்லுங்கள்; பரிசில்களைப் பெறுங்கள்; சுற்றம் சூழ வறுமை நீங்கி வாழுங்கள் என்று பரிசில் பெற்ற பாணன் வறிய பாணனுக்குப் பரிசு பெற வழிகாட்டுகிறான். தான் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற உதவுகிறான்.
வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . .
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடைப் பாகரொடு
மாசெலவு ஒழிக்கும் . . . . . தரீஇ
அன்றே விடுக்கும் அவன் பரிசில் . . .
. . . . . . . . . . . . . . . . .
குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க்கண்ணிச்
செல்லிசை நிலைஇய பண்பின்
நல்லியக் கோடனை நயந்தனிர் செலினே.
(அடிகள், 249-269)
பாடம் - 6
படைப்பின் சிறப்பு
இலக்கியத்தைக் காலக் கண்ணாடி என்பர். ஏனெனில் இலக்கியங்கள் தம் காலத்துச் சமுதாய நிகழ்வுகளைச் சுற்றி அமைவதே காரணம். புலவன் தன் சமகாலத்துச் செய்திகளை இலக்கியங்களில் பதிவு செய்வான்; இப்பதிவுகளைத் தன் அன்றாட வாழ்க்கை அனுபவத்தினின்றும், தான் கண்ட, கேட்ட செய்திகள், பொருள்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் அமைப்பான்.
தான் கண்டும் கேட்டும் மகிழ்ந்தும் உணர்ந்த அல்லது அறிந்த செய்திகளை, உள்ளது உள்ளவாறே புலவன் படைத்தளிப்பான் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படியே அளித்தாலும் அவனது படைப்பு இலக்கிய நயம் மிக்கவையாக அமையாது. ஆகையால் தான் கூற விரும்பும் செய்திகள் உண்மைத் தன்மை உடையனவாக இருந்தாலும் அவற்றில் உவமை, கற்பனை உள்ளிட்ட இன்னும் பிறவற்றைக் கலந்து நயம் கூட்டுவான். அப்பொழுதுதான் அவனது படைப்புகள் சுவை மிகுந்தனவாய் இருக்கும். இத்தகைய ஆற்றல் வாயிலாக, படைப்பாளனே காலத்தால் அழியாதவனாய் இருப்பான்.
(1) வினை
(2) பயன்
(3) வடிவம்
(4) வண்ணம்
சிறுபாணாற்றுப்படையிலும் இந்நான்கு வகை உவமைகள் அமைந்துள்ளன.
பெரிய புலி போலும் வலிமை பொருந்தியவன் நல்லியக்கோடன் என்பது இதன் பொருள் ஆகும். இங்கு நல்லியக்கோடனின் செயல் வலிமைக்குப் புலியின் செயல் வலிமை உவமையாகக் கூறப்பட்டது. ஆகையால் இது வினை உவமம் ஆயிற்று.
பெண்கள் சடையின் வடிவத்திற்கு யானையின் தும்பிக்கை ஒப்புமை கூறப்பட்டமையால் இது வடிவ உவமம் ஆயிற்று. இதனை மெய் உவமம் என்றும் கூறுவர். இவ்வுவமையைக் கூறும் வரிகள் இவை:
உரன்கெழு நோன்பகட்டு உழவர் தங்கை
பிடிக்கை அன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ. . . .
(அடிகள், 190-192)
கானக் குமிழின் கனிநிறம் கடுப்பப்
புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு
(அடிகள் 225-6)
என்னும் அடிகள் கூறுகின்றன. இவ்வுவமை நிறத்தின் அடிப்படையில் அமைந்தது ஆகும்.
அதுபோல், நல்லியக்கோடன் பரிசிலர்க்கு வழங்கும் ஆடை தூய்மையான வெள்ளை நிறம் உடையது. இந்த ஆடைக்கு மூங்கிலின் உள்ளே இருக்கும் வெள்ளிய தோல் உவமை ஆக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இரண்டு உவமைகளும் வண்ணத்தின் அடிப்படையில் அமைந்தமையால் வண்ண உவமை (உரு உவமை) ஆயிற்று.
புலவன் தன் கருத்தை வெளிப்படுத்தும் வழி முறைகளில் ஒன்றான வருணனை முறை சிறுபாணாற்றுப்படையில் அமைந்துள்ள தன்மையைத் தொடர்ந்து நோக்கலாம்.
அழகை வருணிப்பதில் தலையில் தொடங்கிக் கால் வரை வருணிப்பது ஒரு முறை. இதனைக் கேசாதிபாத வருணனை என்பர். அதுபோல் காலில் தொடங்கித் தலை வரை வருணிப்பது மற்றொரு முறை. இதனைப் பாதாதி கேச வருணனை என்பர். இவற்றுள் விறலியரைக் கேசாதிபாத வருணனை முறையில் வருணிக்கிறார் புலவர். இது இரண்டாம் பாடத்தில் 2.3.2 என்னும் பகுதியில் விரிவாகத் தரப்பட்டுள்ளது. விறலியர் வருணனையில் ஒரு சிறு பகுதியை மட்டும் இங்குக் காண்போம்.
விறலியர்கள் அழகு ஓவியங்களாக உள்ளனர். அவர்கள் நெடுந்தொலைவு நடந்து வந்தமையால் அவர்களின் அழகிய, மென்மையான பாதங்கள் சிவந்து போயின. இதனைக் கண்ணுற்ற புலவருக்கு நீண்ட தூரம் ஓடி இளைத்த நாயின் நாக்கு நினைவிற்கு வந்தது.
நீண்ட தூரம் ஓடிய நாயின் நாக்கும் சிவந்து இருக்கும். எனவே, விறலியரின் சிவந்திருந்த பாதங்கள் ஓடி இளைத்த நாயின் நாக்குப் போன்று சிவந்து இருந்தன. அதாவது ஓடி இளைத்த நாயின் நாக்குப் போன்று செம்மையும் மென்மையும் உடையதாம் விறலியரின் பாதம். இதனைக் காட்டும் அடிகள் இதோ:
.. . . . . . . . . . . . . சாஅய்
உயங்குநாய் நாவின் நல்லெழில் அசைஇ
வயங்கிழை உலறிய அடியின்
(அடிகள் 16-18)
வீட்டுச் சுவர் மிகவும் பழைமையானது. ஆங்காங்கே கறையான் புற்றுகள் கிளம்பி இருந்தன.
வீட்டுக் கூரையில் கீற்றுகள் இருந்தாலும் இல்லாதது போன்றே காட்சி அளித்தது.
வீட்டுக் கூரையின்கண் இருந்த கழிகளின் கட்டுகள் அறுந்து கீழே விழும் நிலையில் கழிகள் இருந்தன.
வீட்டில் உணவு சமைத்துப் பல நாட்கள் ஆயிற்று. அதனால் அடுக்களை (அடுப்படி) காளான் பூத்துக் கிடந்தது. (அடிகள் 132-134)
இக்கற்பனை பாணனின் வறிய இல்லத்தை ஓவியக் காட்சிபோல் படிப்போர் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
தொண்டை மண்டலக் குறிஞ்சி நிலத்தைப் பேரழகு வாய்ந்த பெண்ணாகப் புலவர் வருணிக்கிறார். அம்மலையில் வளரும் மூங்கிலை அவளது அழகிய தோள்களுக்கு ஒப்பிடுகிறார். மலைவீழ் அருவியை அந்த நிலப்பெண் அணிந்துள்ள முத்தாரமாகக் கற்பனை செய்கிறார்.
பெண்கள் அகில் புகை ஊட்டுவதற்காகத் தம் கருநிறக் கூந்தலை விரித்து நின்றமை அம்மலையில் வாழும் மயில்கள் கார் கால மேகம் கண்டு தோகை விரித்து ஆடுவது போன்று இருந்தது.
இத்தகைய மணல் படுகை சுழல் காற்றின் சுழற்சிக்கு உட்பட்டு அலை அலையாய்ப் படிந்து கிடக்கும் காட்சி நிலமகளின் கூந்தல் நெளி நெளியாக இருப்பதை ஒத்து இருக்கிறது.
இம் மணல் வெயில் கால வெப்பத்தை மிகுதியாக ஏற்றுக்கொண்டு கொல்லன் உலைக்கல்லில் சூடேற்றிய இரும்பு போலக் கொதிக்கிறதாம். இது,
கதுப்பு விரித்தன்ன காழ்அக நுணங்குஅறல்
அயில்உருப்பு அனைய ஆகி ஐதுநடந்து
வெயில்உருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
வேனில் நின்ற வெம்பத வழிநாள்
காலை ஞாயிற்றுக் கதிர்கடா வுறுப்ப
பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன்முதல் மராஅத்த வரிநிழல் அசைஇ
(சிறுபாணாற்றுப்படை – 6-12)
என்று வருணிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
நறுநீர்ப் பொய்கை ஓவியம் போன்று உள்ளது. இப்பொய்கையின் கரைகளில் கடப்ப மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. இம்மரங்களில் இருந்து பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூமாலைகள் போல் தொங்குகின்றன. இம்மலர்களில் இருந்து இந்திர கோபத்தை ஒத்த மகரந்தப் பொடிகள் பொய்கை எங்கும் வீழ்கின்றன. இப்பொடிகளின் இடைவிடாத தூறலால் முகிழ்த்த தாமரை மொட்டுகள் கட்டவிழ்ந்து திறந்து கொள்கின்றன. இதனால் தாமரையின் பொகுட்டுகள் வெளிப்படுகின்றன. அப்பொகுட்டின் மீது வண்டினங்கள் தங்கள் பெண் இன வண்டுகளைத் தழுவியவாறே சீகாமரப் பண்ணைப் பாடிக் கொண்டே மொய்க்கின்றன. இவ்வழகிய வருணனை சிறுபாணாற்றுப்படையின் 68 முதல் 78 வரையிலான அடிகளில் காணப்படுகிறது.
இளவேனில் பொழுதில் நன்கு செழித்து வளரக் கூடிய நெய்தல் நிலச் செருந்தி, கண்டார் வியக்கும் வகையில் பொன் நிறத்தில் பூத்துக் கிடக்கிறது. கழிமுள்ளிச் செடிகள், உப்பங்கழிகள் தோறும் பரந்து வளர்ந்திருக்கின்றன. அவற்றில் இருந்து பூக்கள் கொத்துக் கொத்தாகக் கருநிற மணிகள் போன்று பூத்துள்ளன.
கடற்கரையில் நெடிது உயர்ந்து நிற்கும் புன்னை மரங்கள் முத்துகள் போல அரும்புகளை அந்நிலம் முழுவதும் உதிர்த்து வைத்திருக்கின்றன. புலவனின் கற்பனையில் உதித்த அடிகள் இதோ:
அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்
தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி காஅலவும்
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்
கானல் வெண்மணல் கடல்உலாய் நிமிர்தரப்
பாடல் சான்ற நெய்தல் நெடுவழி.
(சிறுபாணாற்றுப்படை, 146-151)
இங்ஙனம் சிறுபாணாற்றுப்படையில் குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், முல்லை ஆகிய ஐவகை நிலங்களும் அழகிய முறையில் வர்ணிக்கப் பட்டுள்ளன.
பைந்நனை அவரை பவழம் கோப்பவும்
கருநனைக் காயா கணமயில் அவிழவும்
கொழுங்கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்
கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும்
முல்லை சான்ற முல்லையம் புறவின் . . ..
(அடிகள் 164-169)
இத்தேர்ச் சக்கரத்தின் ஆரக்கால்கள் குறட்டுடன் (குடம்) நன்கு பொருத்தப்பட்ட அழகிய தோற்றத்தை உடையன. இத்தேர்த் தட்டின் உட்புறப் பலகைகள் முருக்க மரப் பூ நிறத்தை ஒத்த அரக்கால் செந்நிறம் ஊட்டப் பெற்றன. இத்தகைய அழகிய தேர்களை வெள்ளோட்டமாக ஓட்டிப் பார்த்து மனநிறைவு பெற்ற பின்னரே அரசன் பரிசிலர்களுக்கு வழங்கினான்.
பத்தர்
பெரிய வயிற்றை ஒத்த வெற்று அறையுடன் கூடிய யாழின் அடிப் பகுதியைப் பத்தர் என்பர்.
தண்டு
பத்தருடன் படம் எடுத்த பாம்பின் தோற்றத்துடன் பொருத்தப் பட்டிருக்கும் மரத்தண்டு.
திவவு
மேல்நோக்கிப் பத்தருடன் நிறுத்தப்பட்ட தண்டின் முனைப் பகுதியையும் கடைப் பகுதியையும் நரம்புகள் பலவற்றால் இணைத்திருப்பர். அவ்வாறு இணைக்கப்பட்ட நரம்புகளை, ஒரு பக்கம் இழுத்து வைத்து இறுக்கிச் சுற்றவும் தளர்ந்து போகுமாறு விடவும் தண்டின் முனைப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் மரத் திருகுக் கருவியைத் திவவு என்பர்.
பச்சை
பருத்த வயிறாக வெற்று அறையுடன் கூடிய பத்தரைப் பசிய விலங்கின் தோல் கொண்டு போர்த்திய நிலையில், காற்றின் அதிர்வினால் நரம்பின் வழியாக இன்னிசை பிறக்கும். இங்ஙனம் போர்த்தப்பட்ட தோலில் சுருக்கம் ஏற்படாதவாறு பத்தரின் விளிம்பு முழுவதுமாக நுண்ணிய வார் கொண்டு தைத்திருப்பர். அவ்வாறு தைக்கப்பட்டுப் பத்தரின் மேல் போர்த்தப்பட்ட விலங்கின் தோலையே பச்சை என்பர்.
நண்பர்கள் நஞ்சைக் கொடுத்தாலும் அது நஞ்சு என்று தெரிந்தும் உண்பர். இதனை நயத்தக்க நாகரிகம் என்பார் திருவள்ளுவர். தமிழர்களின் இந்நனி நாகரிகத்தைச் சுட்டும் குறள் இது:
பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
(குறள் – 580)
உலகம் முழுவதையும் தம் சொந்த ஊராகவும் அதில் வாழும் அனைவரையும் தம் உறவினர்களாகவும் தமிழர் உறவாடி மகிழ்ந்ததைக் கணியன்பூங்குன்றன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று எடுத்துக் கூறுகிறார்.
தனக்கென முயலாது பிறர்க்கென வாழும் பண்பாளரால்தான் உலகம் நிலைபெற்றிருக்கிறது என்று கூறி கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் சங்கப் புலவன் சான்றாண்மைக்கு அடையாளம் காட்டுகிறான்.
இத்தகைய சிறந்த பண்பாடுகளுக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள். அவர்களின் சிறந்த பண்பாடுகளுள் தலைசிறந்தது விருந்தோம்பல் என்னும் பண்பாகும்.
ஆனால், இன்றைய நிலையில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உணவு படைப்பதே விருந்தோம்பல் என்ற நிலை உள்ளது. விருந்து படைக்கும் இப்பண்பு தமிழர்களுக்கே உரியது எனில் அது மிகையன்று. இச் சிறந்த பண்பு பற்றித் திருவள்ளுவர் விருந்தோம்பல் என்னும் ஓர் அதிகாரமே படைத்துள்ளார்.
சிறுபாணாற்றுப்படையில் விருந்து
கிடைப்பதற்கு அரிய அமிழ்தமே ஆனாலும் தமிழர்கள் தாம் மட்டுமே அதை உண்ணார். பலருக்கும் கொடுத்துப் பகிர்ந்து உண்பர். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் இத்திறம் தமிழர்களின் தலையாய அற உணர்வின் வெளிப்பாடாகும். இத்திறம் சிறுபாணாற்றுப்படையிலும் காணக் கிடக்கிறது.
“அகில் மர விறகினால் தீ மூட்டிக் காய்ச்சி அரித்த (வடிகட்டிய) தேறலை (கள்) மீனவப் பெண்கள் மீனவர்களுக்கு உணவாகக் கொடுப்பர். விறலியரோடு செல்லும் நீங்கள் கிடங்கில் கோமானை (நல்லியக்கோடனை)ப் பாடியும் குழல் ஓசைக்கு ஏற்ப ஆடியும் செல்லும் பொழுது அப்பரதவரின் வீடுகள் தோறும் அவர்கள் மகிழ்ந்து கொடுக்கும் குழல் மீன் சூட்டைப் (ஒரு வகை சுட்ட மீன்) பெற்று உண்டு மகிழலாம்” எனவும்
முல்லை நிலப்பகுதி வழியாக, பகல் பொழுதில் சென்று கொண்டே இருந்தால் மாலைப் பொழுதில் வேலூரைச் சென்று அடையலாம். அங்கு, உள்ளேயிருப்போரை வருத்தும் வெப்பம் மிகுந்த குடிலில் (குடில் – வீடு) முல்லை நில மக்களாகிய எயினர்கள் இருப்பர். அக்குலத்துப் பெண்கள் (எயிற்றியர்) தாங்கள் சமைத்த மான் இறைச்சி கலந்த புளியஞ்சோற்றை வழங்குவர்கள். எனவும்
உழவர்கள் வலிமையான எருதுகளை உடையவர்கள். உழத்தியர் தங்கள் இல்லத்தின் உள்ளே இருந்துகொண்டு தங்கள் மக்களால் அன்புடன் வரவேற்பர். மருத நில வாழ் மக்கள் விருந்து உபசரிப்பதில் தலைசிறந்தவர்கள். ஆதலால், உழத்தியர் வெண்மையான அரிசிச் சோற்றை நண்டின் கறியுடன் சேர்த்து விருந்து அளிப்பர். இச் சோற்றை உண்டு மகிழலாம் எனவும், வரும் இவற்றின் மூலம், எளிய உணவாக இருந்தாலும்கூட விருந்தோம்புகின்ற பண்பில் இருந்து தமிழர் சிறிதும் விலகினார் இல்லை என்பது தெளிவாகிறது.
தமிழர் விருந்தோம்புகின்ற சீரிய திறத்தைச் சிறுபாணாற்றுப்படையில் பரதவர், எயினர், உழவர் ஆகியோர் பாணனுக்கு அளிக்கும் முறைமையில் பரக்கக் காண முடிகிறது.

