76

புறநானூறும் பதிற்றுப்பத்தும் (புற இலக்கியம் - 2)

பாடம் - 1

புறநானூறு – 1

1.0 பாட முன்னுரை

புறம் என்ற சொல்லுக்குச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி 1. வெளியிடம், 2. அன்னியம், 3. புறத்திணை, 4. புறநானூறு, 5. வீரம், 6. பக்கம், 7. முதுகு, 8. புறக்கொடை, 9. பின்புறம், 10. புறங்கூற்று, 11. அலர்மொழி, 12. பட்சபாதம், 13. இடம், 14. இறையிலி நிலம் (வரி விதிக்கப்படாதநிலம்) 15. ஏழாம் வேற்றுமை உருபுகளில் ஒன்று, 16. திசை, 17. காலம் என்ற பொருள்களைத் தந்துள்ளது. இவற்றுள் இங்கு வெளியிடம், புறத்திணை, புறநானூறு, வீரம் என்ற நான்கு பொருள்கள் கருதத்தக்கன.

ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் காதல் வாழ்க்கை அகம் எனப்படும். இந்த அகவாழ்க்கையைப் பற்றிக் கூறும் இலக்கியம் அகப்பொருள் இலக்கியம் என்றும், இந்த அக ஒழுக்கம் அகத்திணை என்றும் கூறப்பெறும். இந்த அகவாழ்க்கை அல்லாத வாழ்க்கை புறம் எனப்படும். புற வாழ்க்கையைப் பற்றிக் கூறும் இலக்கியம் புறப்பொருள் இலக்கியம் என்றும் இப்புற ஒழுக்கம் புறத்திணை என்றும் கூறப்பெறும். புறவாழ்க்கை நிகழ்ச்சிகள் பலரும் அறிய வெளியிடங்களில் நடப்பன. புறப்பொருள் இலக்கியங்களில் வீரம் என்ற உணர்வு முதன்மை பெறுகின்றது.

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனப்பெறும் பதினெட்டு நூல்களில் இன்று நமக்குக் கிடைக்கும் பாடல்கள் 2361. இவற்றுள் அகப்பொருள் பற்றியன 1862; புறப்பொருள் பற்றியன 498.

புறப்பொருள் நூல்களில் புறநானூற்றில் 398 பாடல்களும், பதிற்றுப்பத்தில் 80 பாடல்களும் கிடைக்கின்றன. புறப்பொருள் பற்றிய நூல்களில் அளவில் பெரியது புறநானூறு ஆகும். பரிபாடலில் 14 பாடல்களும், பத்துப்பாட்டில் 6 பாடல்களும் புறப்பொருள் பற்றியன. ஆகப் புறப்பொருள் பற்றிய பாடல்கள் 498 என அறியலாம்.

புறநானூற்றில் உள்ள பாடல்கள் பல்வேறு சூழல்களில் பாடப்பெற்றவை. இந்நூலைக் குறித்துப் பேராசிரியர் மா.இராசமாணிக்கனார்,

“இந்நூலில் உள்ள செய்யுட்களைப் பாடிய புலவர்கள் ஒரு நாட்டாரல்லர்; ஓர் ஊராரல்லர்; தமிழகம் முழுமையும் வாழ்ந்தவராவர். இவருள் சேரர், சோழர், பாண்டியர், குறுநில மன்னர், அந்தணர், வேளாளர், பலவகை வணிகர், வீரர், அரசமாதேவியர், மகளிர், பலவகைத் தொழிலாளர் எனப் பல வகைப்பட்டவர் இடம் பெற்றுள்ளனர்.

சேர, சோழ, பாண்டிய நாடுகள், அவற்றின் தலைநகரங்கள், ஆறுகள், மலைகள், தமிழகத்தில் பேரரசர், சிற்றரசர் செய்த போர்கள், மன்னரது ஒழுக்கம், வீரர் செயல்கள், மறக்குடி மகளிர் செயல்கள், புலவர் அறிவுரைகள் எனப் பலதிறப்பட்ட செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

அக்கால மக்கள் பயன்படுத்திய போர்க் கருவிகள், பலவகை நகைகள், உடைகள், உலோகங்கள், உணவுகள், ஊர்திகள், கட்டில்கள், கொடிகள், பாத்திரங்கள், மாலைகள், வாத்தியங்கள் முதலியவற்றின் பெயர்களை இந்நூலிற் காணலாம். தெய்வங்களின் பெயர்கள், கோவில்களின் பெயர்கள், விலங்குகள் பறவைகள் மரங்கள் இவற்றின் பெயர்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சங்க காலத் தமிழருடைய உழவு, கைத்தொழில், வாணிகம், பழக்க வழக்கங்கள் முதலியவற்றையும் இந்நூல் கூறுகின்றது” (தமிழ் மொழி இலக்கிய வரலாறு, பக். 237 – 8) என்று கூறுகின்றார். இந்நூலின் 384 பாடல்களை நூற்று ஐம்பத்து ஏழு புலவர்கள் பாடியுள்ளனர்.

பதினான்கு பாடல்களைப் பாடியோர் பெயர் தெரியவில்லை. பாடப் பெற்றோர் எண்ணிக்கை 178. கபிலர், பரணர், நக்கீரர், ஒளவையார், கணியன் பூங்குன்றனார், கோவூர்கிழார், பொன்முடியார், ஒக்கூர் மாசாத்தியார் ஆகியோர் பாடிய புலவருள் சிலர். பாண்டியன் அறிவுடை நம்பி, பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன், சோழன் நலங்கிள்ளி, கோப்பெருஞ்சோழன், சேரன் கணைக்கால் இரும்பொறை ஆகிய வேந்தர்கள் பாடியுள்ள செய்யுட்களும் இந்நூலில் உள்ளன.

1.1 சங்க இலக்கியங்களில் புறநானூறு பெறும் இடம் சங்ககால அக இலக்கியங்களில் குறுந்தொகையும் புற இலக்கியங்களில் புறநானூறும் பலரால் எடுத்தாளப் பெற்ற சிறப்புடையன. புறநானூற்றில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல். கைக்கிளை, பெருந்திணை என்னும் பன்னிரண்டு திணைக்குரிய பாடல்கள் உள்ளன. இப் பாடல்களுக்குரிய துறைகள் அறுபத்தைந்து. திணை துறையில்லாத பாட்டு 289ஆம் பாட்டாகும். சங்க இலக்கியங்களில் மிகுதியான போர்ச் செயல்களைக் கூறும் நூல் இதுவே. எனினும் போரின்றி உலகோர் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய தேவையினையும் இந்நூல் வற்புறுத்துகின்றது. போற்றத் தக்க சான்றோர்களின் வரலாறாகத் திகழ்வது புறநானூறு. சங்க இலக்கியங்களில் இன்றும் பலராலும் விரும்பிப் பயிலப்பெறும் இலக்கியம் புறநானூறு ஆகும்.

1.1.1 புறநானூற்றின் பழைமையும் பெருமையும் புறநானூற்றில் உள்ள பாடல்களின் காலம் கி.மு. 1000 முதல் கி.பி. 300 வரையாகுமென அறிஞர்கள் கருதுகின்றனர். வேறு சிலர் கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை எனக் கருதுகின்றனர். எவ்வாறாயினும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியம் இஃது என அறியலாம். மகாபாரதப் போர் பற்றிய செய்தி இந்நூலின் இரண்டாம் செய்யுளில் உள்ளது. இராவணன் சீதையை வலிந்து கொண்டு சென்ற நிகழ்ச்சி இந்நூலின் 378ஆம் செய்யுளில் உள்ளது. பாரதப் போர் பற்றிக் கூறுகையில் பாரதப் படை வீரர்களுக்கு உதியன் சேரலாதன் என்ற சேர அரசன் பெருஞ்சோறு தந்தான் என்று குறிக்கப் பெறுகின்றது. எனவே இச்சேர அரசன் பாரதப் போர்க் காலத்தவன் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். இச்சான்றுகளால் புறநானூற்றின் சில பாக்கள் கி.மு. 300க்கும் முற்பட்டவை என அறியலாம். கரிகாற் பெருவளத்தான் என்ற சோழ மன்னனின் காலம் கி.பி. 75 முதல் 115 வரை எனக் கருதப் பெறுகின்றது. இவ்வேந்தனைப் பற்றிய பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. எனவே இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ஒரு தொகைநூல் புறநானூறு என அறியலாம்.

பண்டைத் தமிழரின் பண்பாட்டுச் சிறப்பைப் புறநானூறு நன்கு புலப்படுத்துகின்றது. சான்றோர் எனப் பெறுவோர் யார்? – என்ற வினாவிற்கு, ‘பழியோடு உலகனைத்தையும் பெறக்கூடிய வாய்ப்புக் கிடைக்குமாயின் அதனை ஏற்றுக்கொள்ளாதவர்; புகழ் எனின் உயிரையும் கொடுக்குவர்; தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவர் என்று விடை கூறுகின்றது. பழங்காலத் தமிழ்ப் புலவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் வேந்தரைப் பாடியவர் அல்லர். வேந்தனோ, சிற்றரசரோ செய்யாதவற்றைச் செய்ததாகக் கூறிப் போலிப் புகழுரை செய்தவரும் அல்லர். கல்வி, புலமை, அஞ்சாமை, நடுவுநிலைமை ஆகியன தலைசிறந்து விளங்கிய ஒருகாலத்தைக் காட்டும் பெருமையுடையது புறநானூறு.

1.1.2 புறநானூறு – ஒரு வரலாற்றுக் களஞ்சியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத் தமிழக வரலாற்றை எழுதுவதற்குப் புறநானூறே பெரிய ஆதார நூலாகும். மூவேந்தர்களுக்குள் நிகழ்ந்த போர்கள், வேந்தர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் இடையே நிகழ்ந்த போர்கள், வேந்தர்களிடையே இருந்த பகையைப் புலவர் நீக்கியது, ஒளவையார் அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றது, பெருந்தலைச் சாத்தனார் தம் உரையால், தமையனைக் கொல்ல விரும்பிய இளங்குமணன் மனத்தை மாற்றியது, மன்னன் வரிவாங்கும் நெறி பற்றிக் கூறிப் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அறம் உரைத்தது. வெள்ளைக்குடி நாகனார் கிள்ளி வளவனுக்கு அறிவுரை கூறி மக்களின் நிலத்திற்கு விதிக்கப்பட்ட பழைய வரியை நீக்கியது எனப் பலப்பல வரலாற்று நிகழ்வுகள் புறநானூற்றில் இடம்பெறுகின்றன. எனவே இந்நூலை ஒரு வரலாற்றுக் களஞ்சியம் எனலாம்.

1.1.3 புறநானூறு ஒரு பண்பாட்டு ஆவணம் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் என்ற நூலை எழுதிய அறிஞர் கனகசபைப் பிள்ளை அவர்களும் தமிழர் வரலாறு எழுதிய அறிஞர் பி.டி. சீனிவாச ஐயங்காரும் புறநானூற்றையே பெரிய சான்றாதாரமாகக் கொண்டனர். போர் செய்யப் புகும் அரசன் பசுக்கள், பார்ப்பனர், பெண்கள், நோயுற்றார், பிள்ளைகளைப் பெறாதோர் ஆகியோர் பாதுகாப்பான இடம் சென்று சேர்க என அறிவித்துப் பிறகே போர் செய்யும் பண்பாட்டைப் புறநானூறு (9) காட்டுகின்றது. ஒருவரது செல்வம் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் வளர்க்க வேண்டும் என்று இந்நூல் (28) கூறும். அரசரது வெண்கொற்றக்குடை வெயில் மறைப்பதற்கல்ல; குடிகளுக்கு நிழல் தர என இந்நூலிற் புலவர் (35) அறிவுறுத்துவர். இவ்வுலகில் புகழ்பெற வாழ்வோரே மறுமையுலகு எய்துவர் என இந்நூல் (50) காட்டும். கல்வியே ஒருவனுடைய மேன்மையைக் காட்டுமேயன்றிக் குடிப்பிறப்பன்று என இந்நூல் (183) கூறும். எங்கு மனிதர் நல்லவராய்த் திகழ்கின்றார்களோ அங்கு நிலமும் நல்லதாக அமையும் என இந்நூலின் ஒரு பாட்டு (187) உரைக்கும். சான்றோர் வாழும் சூழலில் இருப்போர் இளமை மாறாது இருப்பர் என ஒரு செய்யுள் (191) காட்டும். இவ்வாறு பல அரிய பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்நெறிகளையும் புறநானூறு வழி அறியலாம்.

1.2 இரண்டாம் பாடலும் ஒன்பதாம் பாடலும் புறநானூற்றின் இரண்டாம் பாட்டு மண்திணிந்த நிலனும் எனத் தொடங்குவது. இப்பாட்டின் ஆசிரியர் முரஞ்சியூர் முடிநாகராயர். இப்பாட்டு சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை நோக்கிப் பாடப் பெற்றது.

ஒன்பதாம் பாட்டு ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் எனத் தொடங்குவது. இப்பாட்டின் ஆசிரியர் நெட்டிமையார். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியது இப்பாட்டு.

இனி இப்பாடல்களின் உள்ளடக்கம், உருவம், கருத்துணர்த்தும் உத்திகளைக் காணலாம்.

1.2.1 பெருஞ்சோற்று நிலை (இரண்டாம் பாட்டு) போரிடும் காலத்து வேந்தர்கள் தத்தம் படைவீரர்களுக்குச் சோறளித்து உண்ணுக என்று விருந்தோம்புவது வழக்கம். இச்சோறு பெருஞ்சோறு எனப்படும். உதியஞ்சேரலாதன் பாரதப் போரில் ஈடுபட்ட படை வீரர்களுக்குச் சோறளித்தமை பற்றி இப்பாட்டுக் கூறும். இக்குறிப்பைக் கொண்டு உதியஞ்சேரன் பாரதப் போர்க் காலத்தவன் எனச் சிலர் கருதுவர். இப்பெருஞ்சோறு அளித்த செயல் சேர அரசனின் முன்னோன் செயல் என்றும், அச்செயல் இவன் மீது ஏற்றிக் கூறப்பட்டது என்றும் சிலர் கருதுவர்.

பாட்டும் கருத்தும்

இப்பாட்டு இருபத்து நான்கு அடிகளையுடையது. இப்பாட்டு முழுமையும் பயில விரும்புவோர் இணைய நூலகத்தை இயக்கிக் கண்டு பயிலலாம்.

மண் செறிந்த நிலம், நிலத்திற்கு மேல் ஓங்கிய வானம், வான்வெளியைத் தடவி வரும் காற்று, அக்காற்றால் இயக்கப்படும் தீ, அத்தீயோடு மாறுபட்ட நீர் ஆகியன ஐம்பெரும் பூதங்கள். இவற்றின் குணங்களைப் போலப் பகைவரது பிழையைப் பொறுத்தல், பகைவரை அழிக்கச் சிந்திக்கும் ஆழ்ந்த சிந்தனையின் அகலம், மனவலி, பிறரைத் தண்டிக்கும் ஆற்றல், பிறர்க்கு அருள் செய்தல் ஆகிய குணங்களைக் கொண்ட சேரலாதனே !

உன்னுடைய கிழக்குக் கடலில் தோன்றிய ஞாயிறு மாலையில் வெண்மையான அலைகளைக் கொண்ட உன் மேற்குக் கடலில் குளிக்கும். இவ்விடைப்பட்ட நிலத்தே புதிய வருவாய் நீங்காத ஊர்களை உடைய நாட்டிற்கு வேந்தனே! வானவரம்பன் எனப் பெற்றவனே! பெரியோனே !

அசையும் பிடரிமயிர் பொருந்திய குதிரையைக் கொண்ட பாண்டவர் ஐவரோடு சினம் கொண்டு, நிலத்தின் உரிமையைத் தம்மிடத்தே கொண்ட பொன்னாலாகிய தும்பைப் பூச்சூடிய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும், போரிட்டுப் போர்க்களத்தில் வீழும் வரையில் பெருஞ்சோறாகிய மிக்க உணவை நீ இருபடைக்கும் அளவில்லாது கொடுத்தாய் !

பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நான்கு வேத நெறி மாறுபட்டாலும், வேறுபாடில்லாத சிந்தனைத் திறமை மிக்க அலுவலர்களுடனே நீங்காமல் நீ நெடுங்காலம் நிலை பெறுவாயாக! பாறைகள் அடுக்கிய மலையிடத்தே பெரிய கண்ணைக் கொண்ட மான் பிணைகள் தம் குட்டிகளுடன், அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயின் ஒளியில் தூங்கும் பொற்சிகரங்களைக் கொண்ட இமயமலையும் பொதியமலையும் போல நீ அசையாமல் நிலைபெறுவாயாக! இது பாட்டின் கருத்துரையாகும்.

இப்பாட்டின் மனனப் பகுதியாகக் கொள்ள வேண்டிய அடிகள் வருமாறு:

அலங்கு உளைப்புரவி ஐவரொடு சினைஇ

நிலம்தலைக் கொண்ட பொலம்பூம் தும்பை

ஈரைம் பதின்மரும் பொருது களத்துஒழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!

வான வரம்பனின் ஆற்றலும் புலவர் அறிவுரையும்

வான வரம்பன் என்பது சேரர் குடியினர்க்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று. இப்பாட்டில் சேரனது பேராற்றல் சொல்லப்படுகின்றது. நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் என்பன ஐம்பெரும் பூதங்கள். இவற்றின் இயக்கத்திலும் இருப்பிலுமே உலகம் உள்ளது. இப்பூதங்களின் ஆற்றலும் பண்புகளும் சேரனிடம் உள்ளன.

பிறரின் பிழை பொறுக்கும் பண்பில் அவன் நிலம், பிறரை அழிக்க நினைக்கும் கருத்தின் அகலத்தில் அவன் வானம், மனவலிமையில் அவன் காற்று, அழிக்கும் செயலில் அவன் தீ, வழிபட்டால் அருள் செய்வதில் அவன் நீர்.

இத்தகைய சேரனை நோக்கிப் புலவர் ‘எந்தச் சூழலிலும் நீ மாறாது நீடு வாழ்வாயாக’ என்று வாழ்த்துகின்றார். பூதங்கள் இயற்கை மாறினால் உலகம் அழியும். சேரன் மாறினும் உலகழியும் எனவே அவன் மாறாது நிலைபெறுக என்றார்.

பாட்டின் திணை, துறை விளக்கம்

சங்க காலப் பாடல்கள் திணை, துறை என்ற அடிப்படை அமைப்புகளுள் அடங்குவன. அக்காலத்தில் அகத்திணைகள் ஏழாகவும், புறத்திணைகள் ஏழாகவும் இருந்தன. ஒவ்வொரு திணைக்கும் உட்கூறாக அமையும் துறைகள் பல இருந்தன. பிற்காலத்தில் புறத்திணைகள் பன்னிரண்டாகப் பெருகின. புறத்திணை பன்னிரண்டு என்ற அடிப்படையில் புறநானூற்றுக்குத் திணை துறைகள் வகுக்கப்பட்டன. இவ்வகையில் புறநானூற்றின் இவ்விரண்டாம் பாட்டு பாடாண் திணைக்குரியது. துறைகளில் இப்பாட்டு செவியறிவுறூஉத் துறைக்கு உரியது. (செவி + அறிவு + உறு = செவியறிவுறூஉ = செவி(காது) ஏற்றுக் கொள்ளும்படி அறிவு கூறுதல்)

பாடாண் திணையென்பது பாடப்படும் ஆண்மகனின் புகழ், ஆற்றல், கொடைமை, வீரம் ஆகிய போற்றத்தக்க பண்புகளைப் பாராட்டுவது. செவியறிவுறூஉ என்பது பெரியோர்க்கு அடங்கி அவர்கள் கூறும் மெய்ம்மொழிகளைச் செவியிற்கேட்டு அவற்றின் வழி நடக்க எனக் கூறுவது.

சேரன் ஐம்பெரும் பூதங்களின் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டவன் என்றும், ஞாயிறு தோன்றி மறையும் இரண்டு திசைகளுக்குட்பட்ட பெருநிலப்பரப்பை ஆண்டவன் என்றும் போற்றுவதால் இப்பாட்டுப் பாடாண் திணைக்குரியதாயிற்று.

பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நால்வேத நெறிமாறினாலும், நீ மாறாமல் இருக்க வேண்டும் எனச் சேரனை அறிவுறுத்தியதால் இப்பாட்டுச் செவியறிவுறூஉத் துறை ஆயிற்று.

1.2.2 வாழ்த்தும் மரபு (ஒன்பதாம் பாட்டு)

புலவர்கள் வேந்தர்களை வாழ்த்தும்போது, ‘நீ நெடுங்காலம் வாழ்க! வானம் வழங்கும் மழைத்துளிகளைவிட மிக்க பல ஆண்டுகள் வாழ்க, ஆற்று மணலைவிடப் பல்லாண்டுகள் வாழ்க’ என்றெல்லாம் வாழ்த்துவது பண்டைய மரபு. அத்தகைய வாழ்த்தினைப் புறநானூற்றின் ஒன்பதாம் பாட்டில் புலவர் நெட்டிமையார் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நோக்கி்க் கூறுகின்றார்.

பாட்டும் கருத்தும்

இப்பாட்டு பதினோர் அடிகளைக் கொண்டது. பாட்டை முழுமையாக நூலகப் பகுதிக்குச் சென்று அறியலாம்.

“பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ‘பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று அறநெறியோடு அறிவுறுத்திப் பிறகே போர் செய்யத் தொடங்கும் வலிமையும் மறமும் கொண்டவன். கொல்லுகின்ற யானை மீது எடுக்கப்பட்ட கொடிகள் ஆகாயத்தை மறைக்கும்; அத்தகைய சிறப்புடையவன் எம்முடைய வேந்தன். அவன், தனக்கு முன்னோனாகிய பசிய பொன்னைக் கூத்தர்க்கு வழங்கியவனும், கடல் தெய்வத்திற்கு விழா எடுத்தவனுமாகிய நெடியோன் என்ற வேந்தனால் உண்டாக்கப்பட்ட பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக” என்பது இப்பாட்டின் கருத்துரை.

புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்……

என்ற அடிகள் அக்காலத் தமிழர் போர் நெறி காட்டுவன.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பாடாண்; துறை இயன்மொழி.

பஃறுளி என்ற ஆற்றின் மணலைவிடப் பல்லாண்டுகள் நீ வாழ்க என வாழ்த்தியமையால் இப்பாட்டும் பாடாண் திணை ஆயிற்று. பாடப்பெறும் தலைவனின் இயல்பை மொழிவது இயன்மொழித்துறை. எம் அம்பு தொடுக்கப்படுகிறது. போரின் போது பாதுகாக்கப் பெறவேண்டிய நீங்கள் பாதுகாப்பான இடம் சேர்க என்று கூறும் அறநெறியைத் தன் பண்பாக, இயல்பாகக் கொண்ட சிறப்பை மொழிந்தமையால் இப்பாட்டு இயன்மொழித் துறை ஆயிற்று.

1.3 பத்தாம் பாடலும் முப்பதாம் பாடலும் பத்தாம் பாட்டு வழிபடு வோரை வல்லறி தீயே எனத் தொடங்குவது. இப்பாட்டின் ஆசிரியர் ஊன்பொதி பசுங்குடையார். இப்பாட்டில் பாடப் பெற்றவன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி என்னும் சோழ வேந்தன்.

முப்பதாம் பாட்டு செஞ்ஞாயிற்றுச் செலவும் எனத் தொடங்குவது. இப்பாட்டின் ஆசிரியர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார். சோழன் நலங்கிள்ளி பாடப்பெற்ற அரசன்.

1.3.1 நல்ல அறிவுரை (பத்தாம் பாட்டு) ஊன்பொதி பசுங்குடையார் சோழனுக்கு இப்பாட்டின் வழியாகச் சில நல்ல அறிவுரைகளை வழங்குகின்றார். புகழ்ச்சிக்கு மயங்குதல், பிறரைப் பற்றிப் பழி கூறுவோர் சொற்களை ஆராயாமல் ஏற்றல் போன்ற பண்புகள் வேந்தனுக்கு மிகவும் வேண்டாதன. உண்மையாக ஒருவன் தவறு செய்திருப்பின் அவனைத் தண்டிக்கலாம். தவறு செய்தவர் உணர்ந்து திருந்துவாராயின் தண்டனையும் விடத்தக்கது. இத்தகையனவும் வேந்தனுக்குத் தக்க நெறிகளாகும். இவற்றை இப்பாட்டு எடுத்துரைக்கின்றது.

பாட்டும் கருத்தும்

இப்பாட்டு பதின்மூன்று அடிகளைக் கொண்டது. பாட்டு முழுமையும் பயில விரும்புவோர் இணைய நூலகத்தை அணுகலாம்.

“உன்னை வணங்கி வாழுபவர்களை நீ விரைந்து அறிந்து கொள்ள வேண்டும். பிறரைக் குற்றம் சொல்பவர்களின் சொற்களை நீ ஆராய்ந்து தெளிய வேண்டும். நீயே பிறரிடத்து உண்மையாகத் தீமை உள்ளது எனக் கண்டால், அதனைக் குறித்து மனத்தில் ஆராய்ந்து, அக்குற்றத்திற்குத் தகுந்த தண்டனையை வழங்க வேண்டும். தவறு செய்வோர் உன் பாதங்களை அடைந்து உன் முன்னே நிற்பாரானால், பிழை செய்யாதவர்க்கு நீ அருள்வதை விட மிகுதியும் அருள் செய்ய வேண்டும். அமிழ்தத்தையும் தன் சுவையால் வென்ற நல்ல உணவை விருந்தினர்க்குக் குறையாமல் வழங்கும் குற்றமற்ற மனைவாழ்க்கை உடையவர் நின் பெண்டிர்; அப்பெண்டிரைத் தழுவுவதாலேயே நின்மார்பில் அணியும் மாலை மாறுபாடுகளை அடையுமே தவிரப் பகைவரது போரால் அது மாறுபாடுகளை அடையாது. அம்மாலை இந்திரவில் போன்றது. அதனை அணிந்த மார்பனே! ஒரு செயலைச் செய்துவிட்டுப் பின்பு பிழையானதைச் செய்து விட்டோமே என்று இரங்குமாறு இல்லாமல் திருந்தச் செய்யும் திறமும், மிகத் தொலைவிலும் விளங்கும் புகழும் கொண்டவனே! நெய்தலங்கானல் என்னும் ஊரை உடைய நெடியோனே! உன்னிடம் நெருக்கமாக வந்தேன்; உனது நல்ல பல குணங்களையும் போற்றுவேன்” என்பது பாட்டின் கருத்துரை.

வழிபடு வோரை வல்லறி தீயே

பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே

என்ற இரண்டடிகள் கூறும் அறிவுரைகள் எக்காலத்திலும் அதிகாரத்தில் இருக்கும் எவர்க்கும் ஏற்றவை. புகழ்ச்சிக்கு அடிமையாதல், பிறர் கூறும் பழிகேட்டல், தானே ஆராயாமை இவை ஆள்வோர்க்குப் பெரிய தீங்குகளை உண்டாக்கும். செய்திரங்காவினை என்ற தொடர் மிக அழகானது. பின்னர் நினைத்துப் பார்க்கும்போது இதை ஏன் செய்தோம் என்று வருந்தச் செய்யும் செயலைச் செய்தல் கூடாது. முன்னரே நீள நினைந்து அழிவதும் ஆவதும், இடையிலே உண்டாகும் நன்மையுமெல்லாம் கருதி, யாரும் எள்ளாதவாறு எண்ணிச் செயல்பட வேண்டுமென்பதை இத்தொடர் எடுத்துக் காட்டுகின்றது.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பாடாண்; துறை இயன்மொழி.

இளஞ்சேட்சென்னி பகைவரால் அணுக முடியாத மார்பினன் என்றும், செய்திரங்காவினை உடையவன் என்றும், மிகத்தொலைவிலும் மிக்க புகழ் கொண்டவன் என்றும் போற்றியமையால் பாடாண் திணை ஆயிற்று. இவ்வேந்தனின் இனிய இயல்புகளை மொழிந்தமையின் இயன்மொழித் துறையுமாயிற்று.

1.3.2 நலங்கிள்ளியின் பேராற்றல் (முப்பதாம் பாட்டு) இவ்வுலகில் அறிஞர்கள் பலர் உள்ளனர். அவர்கள் ஞாயிற்றின் இயக்கம், அவ்வியக்கத்தால் பொலியும் பார்வட்டம், காற்றியங்கும் திசைகளின் பரிமாணம், ஒன்றாலும் தாங்கப்படாமல் நிற்கும் ஆகாயம் ஆகிய இவற்றின் நுணுக்கங்களை அங்கங்கே சென்று அறிந்தோர்போலத் துல்லியமாகக் கணக்கிட வல்லவர்கள். அவர்களாலும் அளத்தற்கரிய பேராற்றல் படைத்தவன் நலங்கிள்ளியென்று புலவர் இப்பாட்டில் கூறுகின்றார்.

பாட்டும் கருத்தும்

இப்பாட்டு பதினான்கு அடிகளைக் கொண்டது. இதன் முழுவடிவை இணைய நூலகப் பகுதியில் காணலாம். “ஞாயிற்று மண்டிலத்தின் இயக்கமும், அஞ்ஞாயிற்றின் ஒளிவீச்சும், அவ்வொளி வீச்சால் ஏற்படும் வீதியும், ஞாயிற்றின் இயக்கத்தாற் சூழப்படும் பார்வட்டமும், காற்று இயங்கக் கூடிய திசைகளும், ஓர் ஆதாரமும் இல்லாமல் நிற்கும் ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை அங்கங்கே சென்று அளந்து அறிந்தவர்களைப் போல, இவை இவை இவ்வளவு அளவின என்று காணும் கல்வி வல்லார் உலகில் உள்ளனர். அத்தகைய அறிவாலும் அறியமுடியாத அடக்கத்தைக் கொண்டவன் நீ. யானை தன் கன்னத்துள்ளே அடக்கிய கல்லைப்போல உன் வலிமை வெளியே தெரியாது மறைந்திருக்கிறது. எனவே புலவர் உன்னுடைய எத்தன்மையைத் தெளிவாக எடுத்துக் கூறுவர்? கடலில் செல்லும் கலங்கள் கூம்பின் மேலே விரிக்கப்பட்ட பாயை மாற்றாமலும், அக்கப்பலில் உள்ள சுமையைக் குறைக்காமலும் ஆற்றின் முகத்துவாரத்தில் புகும்; அப்போது பரதவரும் உப்பு விளைப்போரும் ஆகிய எளிய நிலையினர் அக்கலங்களைத் தம் இனத்திற்கிடையே உள்ள பெரிய வழியில் கொண்டு செல்லும்போது, அக்கலங்களிலிருந்து விழுந்து கடலால் கொண்டுவரப்பட்ட பல வளங்களையும் கொண்ட நாட்டையுடையவனே!” என்பது இப்பாட்டின் கருத்து.

களிறு கவுளடுத்த எறிகல் என்பது யானை பகைவரைத் தாக்குதற்கு, பிறர் எறிந்த கல்லைத் தன் கன்னத்தில் மறைத்து வைத்திருக்கும். அதனைப் பார்த்தறிய இயலாது. அதுபோல வேந்தனின் எண்ணங்களையும் யாரும் அறிய முடியாது என்ற சிறந்த பொருள் தருவது.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பாடாண்; துறை இயன்மொழி. நலங்கிள்ளியின் அளவிட முடியாத ஆற்றலை எடுத்துக் கூறியதால் இது பாடாண் ஆயிற்று. அவன் கருத்தைப் பிறர் கணிக்க முடியாத அளவு செறிந்த குண இயல்புடையவன் என்றதால் இயன்மொழியும் ஆயிற்று.

1.4 நாற்பத்தேழாம் பாடலும் ஐம்பதாம் பாடலும்

நாற்பத்தேழாம் பாட்டு வள்ளியோர்ப் படர்ந்து எனத் தொடங்குவது. இப்பாட்டின் ஆசிரியர் கோவூர் கிழார். காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற அரசன், சோழன் நலங்கிள்ளியிடமிருந்து தன்னிடத்து வந்த புலவர் இளந்தத்தனை ஒற்றன் என்று தவறாகக் கருதிக் கொல்லத் துணிந்த போது கோவூர்கிழார் இப்பாடலைப் பாடிப் புலவரைக் காப்பாற்றினார். (துஞ்சிய = இறந்த ; காரியாறு = ஓர் ஊரின் பெயர்)

ஐம்பதாம் பாட்டு புலவர் மோசிகீரனாரால் பாடப்பட்டது. சேரன் தகடூர் எறிந்த பெருஞ்சேரமால் இரும்பொறையின் அரண்மனையில் இருந்த முரசம் நீராட்டப் பெறப் போயிருந்தது. அப்போது மிகத் தொலைவிலிருந்து வந்த புலவர் மோசிகீரனார் அறியாமல் அக்கட்டிலில் ஏறித் தூங்கிவிட்டார். நீராட்டிய முரசொடு வந்த சேரன், கட்டிலில் தூங்கிய புலவரை வாள்கொண்டு வீசாது கவரி கொண்டு வீசினான். அச்செயல் கண்டு மகிழ்ந்த நினைவில் புலவர் இப்பாட்டைப் பாடினார். இப்பாட்டு மாசற விசித்த எனத் தொடங்குவது.

1.4.1 பரிசில் வாழ்க்கை (நாற்பத்தேழாம் பாட்டு) புலவர்கள் அரசர்களையும் குறுநில மன்னர்களையும் பாடிப் பரிசில் பெறுவர். பரிசில் வாழ்க்கையை மேற்கொண்ட புலவர் பிறர்க்குத் தீதறிய மாட்டார். அந்நிலையில் புலவன் ஒருவனை ஒற்றன் என்று தவறாகக் கருதிக் கொல்லப் புகுந்தான் நெடுங்கிள்ளி என்ற சோழ அரசன். கோவூர் கிழார் பரிசில் வாழ்க்கை மேற்கொண்ட புலவர்களின் பெருமையை எடுத்துக் கூறிப் புலவர் இளந்தத்தனைக் கொலைப்படாமல் காப்பாற்றினார். பரிசில் வாழ்க்கை,

1. வளமிக்க கொடையாளிகளைத் தேடிச் செல்வதாக அமைவது.

2. தாம்செல்ல வேண்டிய இடம் மிகத் தொலைவானது என்றும் செல்ல அரிய வழிகளை உடையது எனவும் நினையாதது.

3. தம் தெளிந்த நாவால் தாம் அறிந்தவாறு பிறரைப் பாடுவது.

4. பாடிப் பெற்ற பொருளைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளாது பிறர்க்கும் வழங்குவது.

5. தம் சிறப்பறிந்து பிறர் பரிசில் வழங்க வேண்டும் என நினைவது

என்னும் இத்தகைய பண்புகளை உடையது எனக் கோவூர் கிழார் பாடுவார்.

பாட்டும் கருத்தும்

இப்பாட்டு பதினோரடிகளைக் கொண்டது. திணை வஞ்சி: துறை துணைவஞ்சி.

“பிறர்க்குப் பொருளை வழங்கும் தன்மை உடையோரை நினைந்து பழுத்த மரங்களைத் தேடிப் போகும் பறவை போல நெடுந்தொலைவு என்று கருதாமல் அரிய வழி பலவற்றையும் கடந்து பரிசிலர் செல்வர். சென்று பிழைபடாத தம் நாவால் தாம் பிறரை அறிந்த வண்ணம் பாடிப் பரிசில் பெறுவர்; அவ்வாறு பெற்ற பரிசிலைக் கொண்டு சுற்றத்தாரை உண்ணச் செய்வர். அப்பொருளைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளாமல், உள்ளம் வருந்தாது பிறர்க்கு அளிப்பர். தமக்குப் பரிசில் தருவோர் தம் சிறப்பறிந்து தர வேண்டும் எனக் கவலைப்படுவர். இத்தகைய பரிசில் வாழ்க்கை, பிறர்க்குக் கொடுமை செய்ய அறியாதது. பாகுபடுத்தி உணருமாறு கல்வியால் தம்மோடு மாறுபட்டாரை அவர் நாணும்படியாகத் தம் கல்வியால் வெல்வர்; அவ்வெற்றியால் தலை நிமிர்ந்து நடப்பர். இவ்வாறு இனிதே ஒழுகும் பரிசிலர் வாழ்க்கை நாட்டை ஆளும் செல்வம் பொருந்திய உம்மைப் போன்ற தலைமைத் தன்மையும் கொண்டது” என்பது இப்பாட்டின் பொருளாகும்.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை வஞ்சி. வஞ்சித்திணை என்பது தன் மண்ணின்மீது விருப்பம் கொண்ட வேந்தன் ஒருவன் மீது படையெடுத்துச் செல்லும் நிகழ்ச்சி. பகை வேந்தனாகிய நலங்கிள்ளியின் பகுதியிலிருந்து வந்த புலவனைச் சிறைப்படுத்தித் தனது போரிடும் குறிப்பை உணர்த்தியதால் இப்பாட்டு வஞ்சித் திணையாயிற்று.

இப்பாட்டின் துறை துணை வஞ்சி. பகை உள்ளத்தோடு இருக்கும் இருவரை அமைதிப்படுத்தி உடன்பாடு காணுமாறு உரைத்தல் துணைவஞ்சித் துறையாகும். புலவர் இளந்தத்தன் மீது கொண்ட மாறுபாட்டைப் போக்கியமையால் துணைவஞ்சித் துறையாயிற்று. இதனைச் சந்து செய்வித்தல் என்பர்.

1.4.2 முரசுகட்டில் (ஐம்பதாம் பாட்டு) முரசு என்பது பேரொலி எழுப்பும் தோற்கருவி. மன்னர்கள் போர்ச்செயல், அறம் வழங்குதல், கொடை கொடுத்தல் ஆகிய செயல்களுக்காக வேந்தர் முரசு முழக்கப்படும். வீரமுரசு, நியாயமுரசு, தியாகமுரசு என முரசு மூன்று வகைப்படும் என்பர். இம்மூன்றில் ஒன்றாக மணமுரசைக் கூறுவதும் உண்டு.

முரசை வைப்பதற்கென்று ஒரு கட்டில் இருக்கும். அக்கட்டிலில் யாரும் அமர்ந்தால், முரசுக்குரிய வேந்தனைச் சிறுமைப் படுத்துவதாகக் கருதப்படும். உடனே வேந்தன் அவ்வாறு செய்தவரை வாள்கொண்டு வெட்டவும் தயங்க மாட்டான். அத்தகு கட்டிலில் தூங்கிய புலவரைச் சேரன் வாள் கொண்டு வீசாமல் கவரி கொண்டு வீசியதை இப்பாட்டு உரைக்கின்றது.

பாட்டும் கருத்தும்

இப்பாட்டு பதினேழு அடிகளைக் கொண்டது. திணை பாடாண்; துறை இயன்மொழி.

“குற்றம் இல்லாமல் நன்கு இழுத்துக் கட்டப்பட்ட நீண்ட வாரை உடையது; கருமரத்தாற் செய்யப்பட்டது; கருமையான பக்கம் பொலிவு பெறுமாறு ஒளிமிகுந்த பொறியையும் நீலமணி போலும் நிறத்தையும் கொண்ட மயிற்பீலியால் தொடுக்கப்பட்ட மாலையைப் பொன்போலும் தளிர்களைக் கொண்ட உழிஞையோடு சூட்டப்பட்டது. குருதியைப் (இரத்தத்தை) பலியாக ஏற்கும் விருப்பத்தையும் சினத்தையும் கொண்டது. இப்பண்புகளைக் கொண்ட வீரமுரசத்தை நீராட்டி வரச் சென்றிருந்தனர். அம்முரசம் வைக்கும் கட்டில் எண்ணெயின் நுரையை முகந்து வைத்தாற் போன்ற மெல்லிய பூவால் நிரம்பியிருந்தது. அக்கட்டிலை முரசு கட்டில் என அறியாது நான் ஏறிக் கிடந்தேன். என்னை உன் சினந்தோன்ற உன் வாளால் இருகூறாக ஆக்காது விட்டாய்; நல்ல தமிழ் முழுதும் அறிந்த உன் பண்புக்கு அவ்வாறு செய்யாது விட்டது பொருந்தும். அவ்வாறு இருகூறாக என்னை வெட்டாமல் விட்டதுடன், என் அருகில் வந்து வலிமை மிக்க முழவு போன்ற உன் தோளை உயர்த்தி விசிறி கொண்டு வீசினாய் வெற்றி பொருந்திய தலைவனே ! நீ இவ்வாறு செய்தமைக்குக் காரணம், இவ்வுலகத்தில் நல்ல புகழைப் பெற்றவர்களுக்கே மேலுலகமாகிய உயர்ந்த இடத்தின் கண் வாழ இடம் கிடைக்குமென்றும் மற்றவர்கள் அவ்வுலகில் உறைதல் இயலாது என்பதும் நீ அறிந்த செயல் போலும்!” என்பது இப்பாட்டின் பொருளாகும்.

இவண்இசை உடையோர்க்கு அல்லது அவணது

உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை

என்பதால் புகழ்பெற்றவர்களே துறக்க உலகம் (சொர்க்க உலகம்) செல்ல முடியுமென்பது தமிழர் கொண்டிருந்த நம்பிக்கை என்பதறியப்படும்.

புலவர்களை வேந்தர்கள் மதித்துப் போற்றியதற்கு இப்பாடல் நல்ல எடுத்துக்காட்டாகும்.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பாடாண். சேர வேந்தனின் புகழை மதித்துப் போற்றும் வாழ்வின் பெருமையையும், அவனது இரக்க உணர்வையும், கவரி வீசிய பெருந்தன்மையையும் கூறியதால் இது பாடாணாயிற்று.

“அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்” என வேந்தனின் தமிழ்க் காதலைக் கூறியதாலும் புலவரென அறிந்து தண்ணென வீசிய கொடைப் பண்பையும் சொன்னதாலும் இயன்மொழித்துறை எனப்பட்டது.

1.5 எழுபத்து நான்காம் பாட்டு

எழுபத்து நான்காம் பாட்டு குழவி இறப்பினும் எனத் தொடங்குவது. இப்பாட்டைப் பாடியவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை. இவ்வேந்தன் திருப்போர்ப் புறம் என்ற இடத்தில் சோழன் செங்கணானோடு போரிட்டபோது, சோழனால் சிறைப்பிடிக்கப்பட்டு, சங்கிலியாற் பிணைக்கப்பட்டுச் சிறையிற் கிடந்தான். அப்போது அவன் சிறைக்காவலரிடம் தண்ணீர் வேண்டினான். அவர்கள் காலந்தாழ்த்து, அவனைச் சிறிதும் மதியாது தண்ணீர் தந்தனர். அந்நீரைப் பருகாமல், அவன் உயிர் விடுங்கால் இப்பாட்டை எழுதி வைத்துச் சென்றான். இதனால் சேரமன்னனின் மானம் காக்கும் பண்பு வெளிப்பட்டுள்ளது.

1.5.1 பாட்டும் கருத்தும் இப்பாட்டு ஏழு அடிகளைக் கொண்டது. திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.

“குழந்தை இறந்து பிறந்தாலும், உருவமின்றித் தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அரசக் குடியினர், அதனை ஆள் அன்று என்று கருதாமல் வாளால் பிளந்து அடக்கம் செய்வர். அப்படிப்பட்ட குடியிற் பிறந்த நான் பகைவர் வாளால் உயிர் விடாமல், சங்கிலியாற் பிணிக்கப்பட்ட (கட்டப்பட்ட) நாய்போலக் கட்டுண்டேன்; இவ்வாறு என்னை இங்கே இருத்தி வைத்துள்ள அல்லாத உறவினர்களின் உதவியால் வந்த தண்ணீரைப் பிச்சையாகக் கேட்டு உண்ணும் நிலையுடையேன் இல்லை என்று கூறும் மனவலிமை எனக்கு இல்லை. வயிற்றில் உண்டாகும் தீயை ஆற்ற வேண்டி இவ்வாறு தண்ணீரை இரந்து உண்ணும் நிலையினரை அரசக் குடியினர் இவ்வுலகத்திற் பெறுவார்களா? மாட்டார்கள்” என்பது இப்பாட்டின் பொருளாகும்.

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

ஆளன்று என்று வாளின் தப்பார்

என்பதால் அரசக்குடிப் பிறந்தார் வாளால் புண்பட்டுப் போர்க்களத்தில் வீரச் சாவு பெறுதலே தக்கது எனப் பழந்தமிழர் கருதியமை அறியப்படும். அவ்வாறின்றிப் பிறக்கும் போதே இறந்து பிறந்தாலும், கண் காது மூக்கு இன்றித் தசைப் பிண்டமாகப் பிறந்தாலும், அவற்றையும் வாளால் கீறி, போரில் இறந்தோர் செல்லும் வீர உலகத்திற்கு இவையும் செல்க என்று கூறி அடக்கம் செய்வர். [கேளல் கேளிர் (கேள் = உறவு) - கேள் அல்லாத கேளிர் = உறவு அல்லாத உறவினர், சிறைக்காவலர்: மதுகை = வலிமை.]

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பொதுவியல். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்ற ஏழு திணைகளிலும் கூறப்படாத, அவற்றுக்குப் பொதுவான செய்திகளைக் கூறுவது பொதுவியல். மானம் இழந்து உயிர் வாழ்தல் தக்கது அன்று என்ற மாந்தர் அனைவர்க்கும் பொதுவாக உரிய செய்தியைக் கூறியமையின் இது பொதுவியலாயிற்று.

இதன் துறை முதுமொழிக் காஞ்சி. சான்றோர் தாம் கண்ட வாழ்வியற் பேருண்மைகளைக் கூறுதல் முதுமொழிக் காஞ்சியாகும். மானத்தோடு வாழ்தல் வேண்டும். இல்லையேல் இறத்தலே தக்கது என உணர்த்தியமையின் முதுமொழிக் காஞ்சித் துறையாயிற்று.

1.6 தொகுப்புரை

உதியஞ்சேரல் என்ற அரசன் பாரதப் படைகளுக்குப் பெருஞ்சோறு அளித்ததை முடிநாகராயர் இரண்டாம் பாட்டில் பாடியுள்ளார். பதிற்றுப்பத்தின் முதல் பத்து இச்சேர அரசன் மீதே பாடப்பட்டிருக்க வேண்டும். அப்பத்து இப்போது கிடைக்கவில்லை. இவன் சேர அரசர்களில் தொன்மையானவன் என்பது அறியப்படும்.

ஒன்பதாம் பாட்டில் முந்நீர்விழவின் நெடியோன் என்று பாண்டியனின் முன்னோன் ஒருவன் கூறப்படுகின்றான். இம்முன்னோன் வடிம்பலம்ப நின்ற (அடி அலம்ப நின்ற) பாண்டியன் எனப்பட்டவன் என்பர். கடல் பாண்டி நாட்டைக் கவராமல் காத்ததனால் இப்பெயர் பெற்றான் எனவும் கூறுவர். இப்பாண்டிய வேந்தன் முந்நீர்விழா என்ற கடல் தெய்வத்துக்குரிய விழாவைக் கொண்டாடியவன். இவனே பஃறுளி என்ற ஆற்றை வெட்டியவன் (பல் + துளி = பஃறுளி). இந்தப் பஃறுளியாறும், பலமலை அடுக்கங்களும் கடல் வெள்ளத்தால் மறைந்தன.

பாடம் - 2

புறநானூறு – 2

2.0 பாட முன்னுரை

புறநானூறு பற்றிய அறிமுகமும் பிற செய்திகளும் முந்தைய பாடத்தில் தரப்பட்டுள்ளன. இப்பாடத்தில் 95, 107, 112, 163, 164, 182, 183 ஆகிய பாடல்கள் பற்றிய செய்திகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

2.1 தொண்ணூற்றைந்தாம் பாட்டு இப்பாட்டைப் பாடியவர் ஒளவையார். இப்பாட்டு அதியமான் பொருட்டுத் தொண்டைமானிடம் தூது சென்றபோது அவர் பாடியதாகும். அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் பகை இருந்தது. அந்நிலையில் அதியமானுக்காக ஒளவையார் தொண்டைமானிடம் தூது சென்றார். தூது வந்த ஒளவையாரிடம் தொண்டைமான் தன் படைக்கலக் கொட்டிலைப் பெருமையோடு காட்டியபோது இப்பாடலை அவர் பாடினார்.

ஒளவையின் தூது

தகடூரை ஆண்ட அதியமான் கடையெழு வள்ளல்களில் ஒருவன். உண்டாரை நெடுங்காலம் வாழவைக்கும் நெல்லிக்கனியை முயன்று பெற்று ஒளவைக்குக் கொடுத்தவன். அவனுக்கும் தொண்டைமானுக்கும் பகை இருந்ததென்றும் அப்பகை தவிர்க்க ஒளவை தூது சென்றார் என்றும் கூறப்படுகின்றது. இப்பாட்டில் தொண்டைமானைப் பெருமைப் படுத்துவது போல ஒளவை பாடியிருப்பினும் அதியமானின் சிறப்பையே பாடியுள்ளார். இதனைப் ‘பழித்தது போலப் புகழ்ந்தது’ என்று புறநானூற்றின் பழைய உரை குறிக்கும்.

2.1.1 பாட்டும் கருத்தும் இப்பாட்டு, இவ்வே பீலி அணிந்து என்று தொடங்குவது; ஒன்பதடிகளை உடையது. திணை பாடாண்; துறை வாள் மங்கலம்.

“இப்போர்க் கருவிகள் மயில் தோகை மாலை சூட்டப்பட்டுள்ளன. இவற்றின் உடற்பகுதிகளாகிய திரண்ட வலிய காம்புகள் அழகுறச் செய்யப்பட்டு உள்ளன. நெய் பூசப்பட்டுக் காவல் மிக்க அகன்ற அரண்மனைக் கண் உள்ளன. அப்போர்க் கருவிகள் (அதியமானுடையவை) பகைவரைக் குத்துதலால் கங்கும் நுனியும் முரிந்து கொல்லனது கொட்டிலில் கிடக்கின்றன. செல்வம் உண்டானபோது பிறர்க்கெல்லாம் உணவு தந்து, செல்வம் இல்லாதபோது உள்ளதனைப் பலரோடு சேர்ந்து உண்ணும் வறுமைப்பட்டவர்களின் சுற்றத்திற்குத் தலைவனாகிய எம் வேந்தனின் கூரிய நுனியையுடைய வேலும் கொல்லன் உலையை விரும்பிற்று” என்பது இப்பாட்டின் கருத்தாகும்.

உண்டாயிற் பதங்கொடுத்து

இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்

(பதம் = உணவு ; ஒக்கல் = சுற்றத்தார்)

என அதியமான் புகழப் பெற்றுள்ளான்.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பாடாண். அதியமானின் பெருவீரம் அவனுடைய போர்க் கருவிகள் எப்போதும் கொல்லன் உலைக்களத்தில் கிடக்கின்றன என்பதால் அறியப்படும். அவன் இல்லோர் ஒக்கல் தலைவன் என்றதால் அவன் கொடை மேம்பாடு அறியப்படும். இவ்வாறு அதியனின் பண்பு மேம்பாடு குறித்தமையால் இப்பாட்டுப் பாடாண் ஆயிற்று.

இப்பாட்டின் துறை வாண்மங்கலம் (வாள்மங்கலம்). தலைவனின் வாள் அல்லது போர்க் கருவிகளின் பெருமை கூறுவது இத்துறை. என் தலைவனின் வேல், வீரச்செயல் புரிந்து கொல்லனின் கொட்டிலில் கிடக்கிறது எனப் போர்க் கருவியின் பெருமை கூறப்பட்டதால் இப்பாட்டு வாண்மங்கலம் என்னும் துறை ஆயிற்று.

அதியமான் சிறப்பு

தொண்டைமானின் போர்க்கருவிகளைப் பார்த்து “இவை மயில்தோகை யணிந்து மாலை சூட்டிக் காம்புகள் திருத்தப்பட்டு, நெய்பூசிக் காவல் மிக்க இடத்தில் வைக்கப்பட்டுள்ளன” என்று கூறுவது பாராட்டுப் போன்று தோன்றினாலும், ”இவை போரின் கண் ஈடுபடுத்தப்படாமல், காட்சிப் பொருளாக வைக்கப் பட்டுள்ளன. இவற்றால் வரும் பெருமை யாது?” எனக் கேட்பதுபோல் தோன்றுகின்றது. எனவே இது புகழ்ச்சி அன்று இகழ்ச்சி என்பது புரியும்.

அதியமானின் போர்க் கருவிகள், பகைவரைக் குத்திக்கங்கும் நுனியும் முரிந்தன; அவை இப்போது கொல்லனின் கொட்டிலில் கிடக்கின்றன என்றமையால் அவன் இடையறாது போர் செய்யும் வீரன் என்பது உணர்த்தப்பட்டது. அதியனிடம் நல்ல போர்க்கருவிகள் இல்லை எனப் பழிப்பது போலத் தோன்றினும், அவன் வீரத்தைப் புகழ்வதாக உள்ளது.

2.2 நூற்று ஏழு, நூற்றுப் பன்னிரண்டாம் பாட்டுகள்

நூற்று ஏழாம் பாட்டு பாரி பாரி என்று பல ஏத்தி எனத் தொடங்குவது. இப்பாடலைப் பாடியவர் கபிலர். இப்பாடல் பாரி என்னும் குறுநில மன்னனைக் குறித்தது.

நூற்றுப் பன்னிரண்டாம் பாட்டு அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் எனத் தொடங்குவது. இப்பாடலைப் பாடியவர்கள் பாரி மகளிர் ஆவர்.

2.2.1 பாரியும் கபிலரும் (107ஆம் பாட்டு) பாரி பறம்பு நாட்டை ஆண்டவன்; குறுநில மன்னன்; கடையெழு வள்ளல்களில் ஒருவன்; முல்லைக்கொடி ஒன்று பற்றிக் கொள்ளக் கொம்பு இல்லாது வாடுவது கண்டு தன் தேரை அதற்குக் கொடுத்தவன். கபிலர் சங்கப் புலவருள் புகழ் மிக்கவர். பாரியோடு நீண்ட காலம் உடன் வாழ்ந்து நட்புச் செய்தவர். பாரி இறந்தபின், பாரியின் மகளிரை அழைத்துக் கொண்டு வேறு நாடு சென்றார் கபிலர். பின் நண்பனை எண்ணி உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டார் என்பது வரலாறு.

மாரியும் உண்டு

பாரியின் புகழ் பெருகியது. அது மூவேந்தரையும் வருத்தியது; பொறாமை கொள்ளச் செய்தது. பாரியின் பறம்பு நாடு வளமிக்கது. உழவர் உழாமலே வளங்கள் மிகுந்து காணப்பெறுவது. இவ்வளமிக்க நாட்டின் தலைவனாகிய பாரி போர்க்களத்தில் யாருடைய மார்பில் வேலை எறிவது வாளை வீசுவது என ஆராய்ந்து செயல்படுவான். ஆனால் உதவி வேண்டி வந்து நிற்போரில் இன்னாருக்குக் கொடுக்கலாம் இன்னாருக்குக் கொடுக்கக் கூடாது என்று பாகுபாடு செய்ய அறியாதவன். இந்த அறியாமையை அறிஞர் உலகம் கொடைமடம் என்று போற்றியது. பாரி படைமடம் கொண்டவன் அல்லன்; கொடைமடம் கொண்டவன் எனப் புகழ்ந்தது. ”பாரி ஒருவன்தானா உலகைக் காப்பாற்றுகின்றவன். மாரி (மழை) இல்லையா?” எனப் பாரியைக் குறைத்துக் கூறுவதைப்போல உயர்த்திப் பேசுகின்றார் கபிலர்.

பாட்டும் கருத்தும்

பாரி பாரி என்றுபல ஏத்தி

ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே

என்பது நான்கடிப் பாட்டு. இதன் பொருள் வருமாறு:

“பாரி பாரி என்று கூறி அவனுடைய பலவகைப்பட்ட புகழையும் வாழ்த்திச் சிறந்த புலமை மிக்க புலவர் அவன் ஒருவனையே போற்றுவர். பாரி ஒருவனே பெரிய வள்ளல் தன்மை உடையவன் அல்லன்; இவ்வுலகைப் பாதுகாப்பதற்கு மாரியும் இருக்கின்றது.”

மேகத்தைப் போன்றவன் பாரி என நேராகக் கூறாமல், மறைமுகமாகக் கூறிய உத்தி நினைதற்குரியது.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பாடாண். பாரியின் கொடை மேம்பாட்டைக் கூறியமையின் இது பாடாணாயிற்று. இதன் துறை இயன்மொழி. மாரியின் இயல்பு போலப் பாரியும் கொடை சுரந்து உலகு உயிர் பேணும் இயல்பினன் என்றமையின் இயன்மொழித் துறை ஆயிற்று.

2.2.2 பாரி மகளிர் (112ஆம் பாட்டு) பாரி மகளிர் இருவர் என்று கூறுவர். பிற்கால நூல்கள் இவர்கள் அங்கவை, சங்கவை என்ற பெயருடையவர்கள் எனக் கூறும். தந்தையோடு வாழ்ந்த காலத்தில் செல்வச் செழி்ப்போடு வாழ்ந்த பாரி மகளிர், பாரி இறந்தபின் துன்பம் அடைந்தனர். கபிலர் அவர்களைத் திருமணத்தின் பொருட்டாக அழைத்துக் கொண்டு பறம்பு மலையை நீங்கினார். ஊர் ஊராகச் சென்று அம்மகளிரை மணப்பதற்குரிய அரசக் குடியினரிடம் மணம் செய்து கொள்ள வேண்டினார். விச்சிக்கோன் என்பானிடம் சென்று “இவர்கள், முல்லைக் கொடி வாடியது பொறுக்காமல் தேரீந்த பாரியின் மகளிர்; நான் அந்தணன்; புலவன்; இவரை நான் கொடுப்ப நீ கொள்க” என்று கூறினார். பயனில்லை. இருங்கோ வேள் என்பானிடம் சென்று இவ்வாறே வேண்டினார். அங்கும் பயன் விளையவில்லை. இறுதியில் அம்மகளிரைப் பார்ப்பனரிடம் சேர்த்துவிட்டு வடக்கிருந்து உயிர் விட்டார். (வடக்கிருத்தல் – உண்ணா நோன்பு கொண்டு வடக்கு நோக்கியிருந்து உயிர் விடுதல்)

பாட்டும் கருத்தும்

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

என்பது அப்பாட்டு. இதன் கருத்து வருமாறு:

“மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தையை நாங்கள் பெற்றிருந்தோம். எங்களுடைய மலையையும் பிறர் கொள்ளவில்லை; எங்களிடமே இருந்தது. இந்த நிலாக் காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் வென்று ஒலிக்கும் முரசினைக் கொண்ட வேந்தர்கள் எம்முடைய மலையைக் கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம்”.

மூவேந்தர் ஒன்று கூடித் தம் தந்தையை வஞ்சித்துக் கொன்றதை உணர்த்த வென்றெறி முரசின் வேந்தர் என இகழ்ச்சியாற் குறித்தனர்.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பொதுவியல். முன்பு மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலை, பின்பு தோன்றிய அவலம் எனத் தம் வாழ்வியலை உரைக்கும் இப்பாட்டு ஏழு திணைகளிலும் காணாத பொதுச் செய்தியை உரைப்பதால் இது பொதுவியலாயிற்று. மாந்தர் அனைவர் வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் பொதுவாக நிகழக் கூடியன ஆதலாலும் பொதுவியல் திணை சார்ந்தது எனலாம்.

இப்பாட்டின் துறை கையறு நிலை. தம்மைச் சேர்ந்தோர் மாய்ந்த நிலையில் மனம் வெதும்பிப் புலம்புவது கையறு நிலையாகும். பாரி இறந்தபின் தமக்குற்ற அவலத்தை (துன்பத்தை) அவன் மகளிர் கூறியதால் கையறு நிலை ஆயிற்று இப்பாட்டு.

2.3 நூற்று அறுபத்து மூன்றாம் பாட்டு

இப்பாட்டின் ஆசிரியர் பெருஞ்சித்திரனார். இப்பாட்டு, குறுநில மன்னனாகவும் பெருவள்ளலாகவும் விளங்கிய குமணனைப் போற்றுவது.

குமண வள்ளல் பெருஞ்சித்திரனாரின் புலமையைப் பாராட்டிப் பெரும் பரிசில் தந்தான். அதனைப் பெற்று வந்த புலவர் வீட்டிற்கு வந்து தன் மனைவியை நோக்கி உரைத்ததாக அமைந்தது இப்பாட்டு.

முதிரத்துக் கிழவன்

குமணன் முதிர மலைக்குத் தலைவன் (கிழவன் = உரிமையாளன்). தன்னை நாடி வந்தவர் அனைவர்க்கும் வரையாமல் பெரும் பரிசில்கள் தந்தவன். பெருஞ்சித்திரனார் இம்மன்னனைக் குறித்து மற்றொரு பாட்டில் பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி ஆகிய ஏழு வள்ளல்களும் இறந்த பிறகு இரவலர் துன்பம் தீர்ப்பவன் எனப் போற்றியுள்ளார். குமணனின் நாடு அவன் தம்பி இளங்குமணனால் கொள்ளப்பட்டது. குமணன் காட்டில் சென்று தங்கினான். அந்நிலையிலும் இளங்குமணன் பகை தீரவில்லை. குமணனின் தலையைக் கொண்டு வருபவர்க்குப் பரிசில் தருவதாக அறிவி்த்தான். பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் காட்டிற்குச் சென்று குமணனைப் பாடினார். பரிசில் ஒன்றும் கொடுக்க இயலாத நிலையில் அவன் புலவரிடம் வாளைத் தந்து என் தலையை வெட்டிச் சென்று இளங்குமணனிடம் பரிசில் பெறுக என்றான். புலவர் வாளைக் கொண்டுபோய் இளங்குமணனிடம் காட்டிக் குமண வள்ளலின் பெருந்தன்மையைப் புலப்படுத்தினார். (புறநானூறு, 165)

2.3.1 பாட்டும் கருத்தும் நின்னயந்து உறைநர்க்கும் என்று தொடங்கும் இப்பாட்டு ஒன்பதடிகளைக் கொண்டது.

“எனது மனைக்குரியவளே! என்னிடம் அன்பு செய்து வாழும் உன்னைச் சார்ந்த மகளிர்க்கும், நீ அன்பு செய்தொழுகும் மகளிர்க்கும் பல குணங்களும் மாட்சிமை மிக்க கற்பும் உடைய உனது உறவினராகிய மூத்த மகளிர்க்கும், நம் சுற்றத்தின் பசி நீங்க நெடுநாட்களாகப் பொருள்களைக் கடனாக உதவியோர்க்கும், மற்றும் இவர் இத்தன்மையார் என்றெல்லாம் கருதாமல் பிறர்க்கும் வழங்குக! என்னைக் கேட்காமலும் வழங்குக! இப்பொருளைப் பலாப்பழம் முதலாயின விளைகின்ற முதிரமலைக்குத் தலைவனாகிய குமணன் நல்கினன். இதனை நீ எல்லார்க்கும் வழங்குக!”.

இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே

(சூழாது = ஆராயாது, வல்லாங்கு = சிறப்பாக, கொடுமதி = கொடு, மனைகிழவோய் = மனைக்கு உரியவளே)

எனப் பிறர்க்குதவும் உள்ளம் வெளிப்பட்டது. பொருளற்ற வறுமை நிலையிலிருந்தும், பொருள் வந்தபின் அதனைத் தமக்கு வேண்டுமெனக் கருதாது எல்லார்க்கும் கொடு என்றது புலவரின் பெருந்தன்மையாகும்.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பாடாண். குமணனின் கொடை மேம்பாடு பேசியமையின் பாடாண் ஆயிற்று. துறை பரிசில். குமணனிடம் தாம் பெற்ற பரிசில் பற்றிக் கூறுதலின் இத்துறையாயிற்று.

2.4 நூற்று அறுபத்து நான்காம் பாட்டு

நூற்று அறுபத்து நான்காம் புறப்பாட்டு காட்டிலிருந்த குமணனைக் கண்டு பரிசில் வேண்டிப் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் பாடியது. புலவரின் வறுமை நிலை, குமண வள்ளலின் கொடைத்திறம் ஆகியவற்றை இப்பாடல் காட்டுகின்றது.

நிற்படர்ந்திசினே நற்போர்க் குமண

குமணனின் தம்பி இளங்குமணன் குமணனிடமிருந்து நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். குமணன் காட்டில் சென்று வாழ்ந்தான். அந்நிலையில் புலவர் பெருந்தலைச் சாத்தனார் தம் வறுமையைப் போக்கிக் கொள்ளக் காட்டிலுள்ள குமணனிடம் வருகின்றார். குமணனிடம் தன் வறுமைக் கொடுமையைப் படம் பிடிக்கிறார். “பாலின்றி அழும் குழந்தை; அதனைக் கண்டு துயர் உறும் என் மனைவி; இவர்களைக் காணும்போது இந்த வருத்தம் தீர்த்தற்கு உரியவன் நீயே என எண்ணி வந்தேன்” என்கிறார். “உன்னிடம் நான் பரிசில் கொள்ளாமல் விடமாட்டேன்” என்றும் கூறுகிறார்.

2.4.1 பாட்டும் கருத்தும் ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பின் எனத் தொடங்கும் இப்பாட்டு பதின்மூன்றடிகளைக் கொண்டது. இப்பாட்டின் கருத்து வருமாறு:

“சமையலை அறவே மறந்த அடுப்பு; அதன் பக்கங்கள் ஓங்கி மேடாக உள்ளன. அங்குச் சமையல் நடைபெறாததால் காளான் பூத்துக் கிடக்கின்றது. குழந்தை பசியால் வருந்துகின்றது. என் மனைவியின் மார்பு பாலி்ன்மையால் தோலாய்ச் சுருங்கி அதன் துளை தூர்ந்து வறுமைப்பட்டுக் கிடக்கின்றது. அம்மார்பகத்தைச் சுவைக்கும் குழந்தை பால் பெறாமையால் சுவைக்கும் போதெல்லாம் அழுகின்றது. அழும் குழந்தையைக் கண்ட என் மனைவியின் ஈரம் பொருந்திய இமைகளையுடைய குளிர்ந்த கண்கள் நீரால் நிறைகின்றன. இத்தகைய துன்பத்தைக் காணும்போது இதனைத் தீர்க்கக் கூடியவன் நீயென்று நினைத்து உன்னிடம் வந்தேன். பலவகையான பண்களையும் எழுப்பி இசைத்தற்குரிய நரம்பினை உடையதும் தோலால் போர்க்கப்பட்டதுமாகிய நல்ல யாழையும், கரிய மண் பூசப் பெற்ற மத்தளத்தையும் கொண்ட கூத்தருடைய வறுமையைப் போக்கும் குடியில் நீ பிறந்தவன். எனவே வறுமையுற்று நிற்கும் நான் உன்னை வளைத்தாவது பரிசில் பெறாமல் போக மாட்டேன்”.

இப்பாடல் புலவரின் வறுமையைத் தெளிவாக உணர்த்துகிறது.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பாடாண். குமணன் இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தவன்; புலவர்களின் வறுமை துடைக்கும் கொடையாளி என அவ்வள்ளலின் கொடைச் சிறப்புக் கூறியதால் இது பாடாண் ஆயிற்று. இதன் துறை பரிசில் கடாநிலை. விளக்கம் முன்னர்க் கூறப்பட்டது. குமணனிடம் பரிசில் வேண்டியமையின் இப்பாடல் இத்துறை பெற்றது.

2.5 நூற்று எண்பத்திரண்டாம் பாட்டு

இப்பாட்டைப் பாடியவர் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி. இவர் சங்ககாலப் பாண்டிய வேந்தருள் ஒருவர். கடலில் சென்றபோது இறந்தமையால் கடலுள் மாய்ந்த என்ற அடை பெற்றார். இவ்வுலகம் இன்றும் நிலைபெற்றிருக்கக் காரணம் யாது? இப்பாட்டு அதனைக் கூறுகின்றது.

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்

தமிழர் தம் வாழ்வில் பெறுவதற்கு அரிய பேறாகக் கருதியது புகழை. புகழ் வருமெனின் உயிரையும் கொடுத்துவிடுவர் என்று கூறுகிறது இப்பாட்டு. அவர்கள் தம் உணவைப் பிறரோடு பகிர்ந்துண்பர்; யாரையும் வெறுக்க மாட்டார்; சோம்பல் அற்றவர், பழிக்கு அஞ்சுவர்; பழியோடு வரும் செல்வத்தை விரும்பார்; தமக்கென வாழார். இத்தகைய தன்மைகளை உடையவர் இருப்பதால்தான் இவ்வுலகம் இன்றும் இருக்கிறது என்கிறார் இப்பாண்டிய வேந்தர்.

2.5.1 பாட்டும் கருத்தும் உண்டால் அம்மஇவ் வுலகம் என்று தொடங்கும் இப்பாடல் ஒன்பதடிகளைக் கொண்டது. இதன் கருத்து வருமாறு:

“இந்திரர்க்குரிய அமிழ்தம், தெய்வத்தின் அருளாலோ, தவத்தாலோ கிடைக்குமாயினும் அதனை இனிதென்று கருதித் தனியாக உண்ணமாட்டார்கள்; யாரோடும் வெறுப்பற்றவர்கள்; பிறர் அஞ்சத்தகும் துன்பங்களுக்குத் தாமும் அஞ்சுவர்; அத்துன்பம் தீரும் வரை சோம்பிக் கிடக்க மாட்டார்கள்; புகழ் கிடைக்குமெனின் அதன் பொருட்டுத் தம் உயிரையும் கொடுப்பர். பழியென்றால் அதனோடு உலக முழுவதையும் பெறுவதானாலும் அதனை ஏற்கமாட்டார்கள். மனத்தின் கண் மாறுபட்ட எண்ணங்கள் இல்லாதவர்கள். இத்தகைய மதிப்புமிக்க தன்மையோடு தமக்கென்று முயலாத வலிய முயற்சியைக் கொண்ட, பிறர்க்கென முயல்பவர்கள். இப்பண்புகளை உடையோர் இருப்பதால்தான் இன்னும் இவ்வுலகம் நிலை பெற்றுள்ளது”

புகழ்எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்

என்பது சான்றோர்களின் சிறந்த பண்பைக் குறித்தது.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பொதுவியல். புறத்திணைகள் அனைத்திற்கும் பொதுவான செய்தி கூறியமையின் பொதுவியலாயிற்று. சான்றோர் தம் இயல்பு கூறினமையால், பொதுவியல் திணைக்குரித்தாயிற்று என்றும் கூறலாம். பாட்டின் துறை பொருண்மொழிக் காஞ்சி. சான்றோர்க்கு உரிய பண்புகள் சொல்லப்பட்டதால் பொருண்மொழிக் காஞ்சி ஆயிற்று.

2.6 நூற்று எண்பத்து மூன்றாம் பாட்டு

இப்பாட்டு பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியது. கல்வியின் பெருமை கூறுவதாக அமைந்த இச்செய்யுளைப் பாடியவன் பாண்டிய அரசன் என்பது எண்ணுதற்குரியது.

தாயும் மனம் திரியும்

பெற்றவள் உள்ளம், தன் பிள்ளை எக்குறைபாடு உடையதாயினும் பொறுத்துக் கொள்ளும்; குறை, பெற்றவளின் உள்ளத்திற் படாது. தன் பிள்ளை போல யாரும் இல்லை எனத் துணிந்து பேசும். பிள்ளை செய்த எக்குற்றத்தையும் தாயின் மனம் பொறுத்துக் கொள்ளும். ஆனாலும் தாய் தன் பிள்ளைகள் பலரில் கல்வி உடையோனிடம் கூடுதலான அன்பு காட்டுவாள். எல்லாப் பிள்ளைகளையும் சமமாக மதிக்க வேண்டிய தாய் கல்வி கற்றவனைப் பிறரைவிட நன்கு மதிப்பாள். தாயின் மனம் திரியும் இடம் இஃது என்கிறான் பாண்டியன் அறிவுடை நம்பி.

2.6.1 பாட்டும் கருத்தும் உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் என்று தொடங்குவது இப்பாட்டு. பத்து அடிகளைக் கொண்டது. இதன் கருத்து வருமாறு:

“தன் ஆசிரியர்க்கு ஒரு துன்பம் வந்த காலத்தில் அதைத் தீர்க்க உதவி செய்தல், மிகுந்த பொருளைக் கொடுத்தல், வழிபடும் நிலையிலிருந்து மாறாமல் கற்றல் ஆகிய நற்செயல்கள் அனைத்தையும் கடைப்பிடித்து ஒருவன் கல்வியைப் பெற்றுக் கொள்ள வெண்டும். ஏனெனில், தாய் ஒருத்தி தன் வயிற்றில் வேறுபாடில்லாமல் பிறந்த பல பிள்ளைகளில் கல்விச் சிறப்புடைய காரணத்தால் ஒன்றை நோக்கி மனம் வேறுபடக் கூடும். ஒரு குடியில் பிறந்த பலருள்ளே மூத்தோனை வருக என்று அழையாமல், அவர்களுக்குள்ளே அறிவுடையோன் சென்ற வழியில் அரசனும் செல்வான். வேறுபாடு சொல்லப்படும் நான்கு குலங்களுக்குள்ளும், கீழ்க்குலத்தான் எனப்படுபவன் ஒருவன் கல்வி கற்றுச் சிறந்திருந்தால், மேற்குலத்தான் எனப்படுபவனும் அவனிடம் சென்று வழிபடுவான்.”

இப்பாட்டு குலத்தாழ்ச்சி உயர்ச்சிகளைப் போற்றுவதன்று; அவற்றின் மீது நம்பிக்கை உடையாரும் கல்வியின் காரணமாக அந்நம்பிக்கையைக் கைவிடுவர் என்னும் கருத்துடையது.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

என அக்காலக் கல்வி முறை பேசப்பட்டது. கற்றவரே மேலோர் கல்லாதவரே கீழோர் என்ற கருத்தைக் கடையரே கல்லாதவர் (குறள்-395) என்ற திருக்குறளாலும் அறிக.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பொதுவியல். புறத்திணைகள் அனைத்திற்கும் பொதுவான கல்வி மேம்பாடு பற்றிக் கூறியமையின் இது பொதுவியல் ஆயிற்று. துறை பொருண்மொழிக் காஞ்சி. கல்வி வல்லவனையே தாயும், அரசும், சமூகமும் மதிக்கும் என்ற உண்மை கூறியமையின் பொருண்மொழிக் காஞ்சியாயிற்று.

2.7 தொகுப்புரை

பாடமாக அமைந்துள்ள புறப்பாடல்கள் வீரம் கூறுவன, கொடை மேம்பாடு கூறுவன, வாழ்வியலுக்கு வேண்டும் உறுதிப் பொருள் கூறுவன என்ற மூன்று பகுப்பில் அடங்கக் காணலாம். இப்பாடல்களைப் பாடியவர்களில் வேந்தர்களும் உள்ளனர் என்பது எண்ணுதற்குரியது.

பாடம் - 3

புறநானூறு – 3

3.0 பாட முன்னுரை

இனிய மாணவர்களே! புறநானூற்றுப் பாடல்களைக் குறித்த மூன்றாம் பாடம் இது. முன் இரண்டு பாடங்களை இப்போது நினைவு கூர்ந்து பாருங்கள். குறிப்பாகப் புறநானூற்றைக் குறித்துப் பொதுவாக முதற்பாட முன்னுரையில் கூறியனவற்றை எண்ணிப் பாருங்கள். அந்த நினைவுகளோடு இந்தப் பாடத்தைத் தொடர்ந்து படியுங்கள்.

புறநானூறு பழந்தமிழர்களின் வீரம் பற்றிப் பேசும் பாடல்களைக் கொண்டது என்று பேசப் பெறுகின்றது. வீரத்தோடு பழந்தமிழ் வேந்தர்கள், குறுநில மன்னர்கள், சீறூர்த் தலைவர்கள் ஆகியோரின் கொடை பற்றியும் இப்பாடல்கள் பேசுகின்றன. அரச மரபினரிடம் அவர்கள் செய்யாதவற்றைக் கூறிப் புகழ்ந்து பாடும் நோக்கம் அக்காலப் புலவர்க்கு இல்லை. செய்யாதவற்றைக் கூறிப் புகழ்வதற்கு என் சிறிய நாக்கு அறியாது என்பது புறநானூற்றுப் புலவர் ஒருவர் மொழி (148). அரசர்கள் தவறு செய்த போது புலவர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தவும், இடித்துரைக்கவும் தயங்கவில்லை.

புறநானூறு வாழ்விற்கு உதவும் பேருண்மைகளை உணர்த்தும் பல பாடல்களைக் கொண்டது. நல்லது செய்ய முடியாவிட்டாலும் தீயது செய்யாதிருங்கள் (195); மகிழ்ச்சியும் துன்பமும் நிறைந்தது இவ்வுலகம். இங்கு நல்ல செயல்களை அறிந்து செய்க (194); புகழென்றால் உயிரைக் கொடுக்கக் கூடிய, பழியென்றால் உலகத்தையே தந்தாலும் ஏற்றுக் கொள்ளாத சான்றோர் வாழ்வதாலேயே இவ்வுலகம் நிலை பெற்றிருக்கிறது (182); பொருளும் இன்பமும் அறத்தின் வழியே செல்லுதற்குரியன (31); நிலம் எத்தகையதாயினும், அங்கு வாழ்வோர் நல்லவராயின் நிலமும் நல்லதே (187); கல்வி என்ற தகுதியால் கீழான குடியிற் பிறந்த ஒருவனும் உயர்வாக எண்ணப் பெறுவான் (183) என்பன போன்ற வாழ்விற்காகும் உயர்ந்த கருத்துகளைப் புறநானூறு கூறுகின்றது.

புறநானூற்றுக் காலத்தில் மகளிரின் வீரம் போற்றத்தக்கதாகவும் வியக்கத்தக்கதாகவும் இருந்தது. தம் குடியினரின் உயிர் இழப்பைப் பொருட்படுத்தாது தம் நாட்டைக் காப்பாற்ற அவர்கள் கொண்டிருந்த முயற்சியும் ஊக்கமும் பழந்தமிழ்ப் பெண்களின் மற மாண்பை எடுத்துரைக்கும்.

மேற்கூறிய மூன்று வகைக்கும் உரிய பாடல்களைப் பற்றி இப்பாடத்தில் விரிவுறக் காணலாம்.

3.1 நூற்று எண்பத்து நான்காம் பாட்டு இப்பாடல் பதினோரடிகளைக் கொண்டது. பாட்டை முழுமையாக நூலகப் பகுதியிலிருந்து அறியலாம். இனி, பாட்டின் கருத்து வருமாறு:

“காய்ந்த நெல்லை அறுத்து ஒவ்வொரு கவளமாகக் கொடுத்தால், ஒரு மாவை விடக் குறைந்த நிலத்தில் விளையும் நெல்கூட யானைக்குப் பல நாள் உணவாக ஆகும். ஆனால் நூறு வயல்களாக இருந்தாலும் யானை அவ்வயல்களில் தானே புகுந்து தனித்துண்ண முற்படுமானால், அந்த யானையின் வாயில் புகக்கூடிய நெல்லைவிடக் காலால் மிதிபட்டு அழிவது அதிகமாகும். இது போலவே அறிவுடைய அரசன் குடிமக்களிடமிருந்து வரித்தொகையை வாங்கும் வழியறிந்து செயல்பட்டால் அவன் நாடு கோடிப் பொருளை உண்டாக்கிக் கொடுப்பதோடு தானும் வளமடையும். அவ்வாறு செய்யாமல் அரசன் அறிவற்றவனாகி நாள்தோறும் அவனுக்கு வேண்டும் உறுதிப் பொருளைக் கூறாமல் அவன் விரும்பும் செய்திகளையே கூறும் ஆரவாரமான சுற்றத்தோடு கூடி அன்பு இல்லாமல் கொள்ளும் பொருளை விரும்பினால் அவனுக்கும் பயனில்லை; உலகமும் கெடும்.”

இப்பாட்டு எந்தச் சூழலில் தோன்றியது தெரியுமா? பாண்டி நாட்டினை அறிவுடை நம்பி என்ற அரசன் ஆண்டு கொண்டிருந்தான். இவ்வரசன் நல்ல புலவனுமாவான். இவன் பாடிய பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. இவ்வரசன் தன் அதிகாரிகள் கூறியனவற்றை ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொண்டு மக்களிடம் அளவின்றி வரித்தொகையைப் பெறுமாறு ஏவினான். மக்கள் அல்லல் உற்றனர். இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு மனித நேயம் மிக்க புலவர் அமைதியாக இருக்க முடியுமா? அந்நாட்டைச் சேர்ந்த புலவர் பிசிராந்தையார் அரசனிடம் சென்றார் அஞ்சாமல் அவனுடைய செயல் தவறானது என அறிவுறுத்தினார்.

சிறிய அளவு நிலத்தில் விளையும் நெல்லைச் சோறாக்கி உருண்டை உருண்டையாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாள் உணவாக ஆகும். ஆனால் யானையே வயலில் புகுந்தால் உண்பதை விட மிதிபட்டு அழிவதே மிகுதியாகும் இது உவமை. அரசன் மக்களை ஒரே சமயத்தில் அலைத்து வரி வாங்குவதை விட நிலம் விளையும் போது கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது முறையானது இது உவமேயம். பழைய நிலவரிக் கடனை ஒரே சமயத்தில் பெற அரசனுடைய அதிகாரிகள் முனைந்தபோது இப்பாட்டுப் பிறந்ததென்பர் அறிஞர்.

3.1.1 செவியறிவுறுத்தல் அறவோர் மற்றவர்களுக்கு நல்ல நெறிகளைக் கற்பித்து அவற்றின் வழி நடக்க அறிவுறுத்துவர். இவ்வாறு செய்யும் செயல் செவியறிவுறுத்தல் எனப்படும். “அன்பும் அறமும் மறவாது போற்றுக” என்றும், “கொள்கை மிக்க சான்றோர் கூறும் வழியில் நடக்க” எனவும், “ஞாயிறு போன்ற வீரத் திறமையும், திங்களைப் போலக் குளிர்ந்த நோக்கமும் கொண்டு வறுமைப்பட்டோர்க்கு உதவி வாழ்க” எனவும், “உலகம் நிலையாதது என்பதை உணர்ந்து, நிலையான அறச்செயல்களைப் பேணுக” எனவும் கூறுதல் செவியறிவுறுத்தல் எனப்படும்.

3.1.2 பாட்டின் திணை துறை விளக்கம் இப்பாட்டின் திணை பாடாண்; துறை செவியறிவுறூஉ. பாடாண் என்பது பாடப்பெறும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறும் திணை என்பதை நீங்கள் அறிவீர்கள். செவியறிவுறுத்தல் என்பது இங்குச் செவியறிவுறூஉ எனப் பெற்றது. இது துறையின் பெயர்.

“அரசனே! நெறியறிந்து வரி கொண்டால் நீ போற்றப் பெறுவாய். எனவே நன்னெறியைப் பின்பற்றி வாழ்க” என்று கூறும் இப்பாட்டில், அரசன் ஒழுக வேண்டிய நெறியைக் கூறியமையால் இப்பாட்டுப் பாடாண் திணைக்குரியதாயிற்று.

“அரசனே! அறிவுடைய அரசன் வரி பெறும்போது குடிகள் துன்புறா வண்ணம் வரித்தண்டுதல் நிகழும். ஆனால், உன்னைச் சூழ்ந்திருப்பவர்களின் தவறான அறிவுரைகளுக்கு ஆட்பட்டுச் செயல்பட்டால் உனக்கும் பயனில்லை, நாடும் கெடும்” என்று அறிவுறுத்தியமையால் இது செவியறிவுறூஉத் துறைக்குரியதாயிற்று.

3.2 வாழ்வின் பேருண்மைகளை விளக்கும் பாடல்கள்- I (188, 189, 191)

இப்பகுதியில் பழங்காலத் தமிழ்ப் புலவர்கள் மக்களின் வாழ்க்கைக்குரிய மூன்று பேருண்மைகளை அழகுற எடுத்துக் கூறுவதை நாம் காணலாம். இப் பாடல்கள் முறையே வாழ்க்கையின் நிறைவுக்குக் குழந்தைப்பேறு மிகவும் இன்றியமையாதது (188); செல்வத்தின் பயன் இல்லாதவர்க்குக் கொடுத்தலேயாகும் (189); குடும்பத்தினரும் ஊராரும், அரசனும் நல்லவராக உள்ள சூழலில் வாழ்க்கை இனியதாகும்; உடற்கூறு கூடக் கெடாத நலம் உடையதாகும் (191) என்ற உண்மைகளை எடுத்துரைக்கின்றன.

3.2.1 நூற்று எண்பத்து எட்டாம் பாட்டு படைப்புப் பல படைத்துப் பலரோடுண்ணும் என்று தொடங்குவது இப்பாட்டு. ஏழடிகளைக் கொண்டது. இப்பாட்டு பாண்டியன் அறிவுடை நம்பியால் பாடப் பெற்றது. “படைக்கப்படும் செல்வம் பலவற்றையும் கொண்டு, பலரோடு சேர்ந்து உண்ணத் தக்க நிரம்பிய செல்வத்தை உடையவராயினும், மெல்லவும், குறுகக் குறுகவும் நடந்து சென்று தம் சிறிய கையை நீட்டி உணவு உள்ள கலத்தில் உள்ளதைத் தரையிலே எடுத்துப் போட்டும், கையை விட்டுத் தோண்டியும், வாயால் கவ்வியும், கையால் துழாவியும் நெய்யை உடைய சோற்றை உடம்பெங்கும் சிதறிக் கொள்ளும் குழந்தைகளைப் பெறாத நிலை பயனற்றது. அச்சிறுவர்கள் தம் இன்பமான செயல்களால் நம் அறிவை மயக்குவர். அத்தகைய புதல்வரைப் பெறாவிட்டால் நாம் உயிர் வாழும் நாளில் நம் வாழ்க்கைப் பயன் என்று கூறுதற்குரிய பொருள் இல்லையாகும்” என்பது இப்பாடலின் பொருள். பலரோடு சேர்ந்து உண்டாலும் குழந்தைகளோடு சேர்ந்து உண்ணும் இன்பம் தனியானது. அக்குழந்தைகள் சோற்றைப் பிசைந்து, துழாவி, சிதறி, உடம்பெல்லாம் பூசிக்கொண்டாலும், பெற்றோர்க்கு அக்காட்சி இன்பமே உண்டாக்கும். அதனால் ‘மயக்குறு மக்கள்’ என்று பாடினார் அரசப் புலவர் அறிவுடை நம்பி.

3.2.2 நூற்று எண்பத்து ஒன்பதாம் பாட்டு தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி எனத் தொடங்குவது இப்பாட்டு. எட்டடிகளைக் கொண்ட இதனைப் பாடிய புலவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவார்.

“தெளிந்த நீரால் சூழப்பட்டது இவ்வுலகம். இதனைப் பிறவேந்தர்க்கு உரிமையின்றித் தமக்கே உரியதாகக் கொண்டு வெண்கொற்றக் குடையால் ஆட்சியாகிய நிழல் செய்யக் கூடிய தன்மை உடைய பெருவேந்தர் இருப்பர்; அவர்கள் அல்லாமல் நடு இரவிலும், கடும்பகலிலும் தூங்காமல் விரைந்து செல்லக் கூடிய ஆடுமாடு போலும் விலங்குகளைப் பாதுகாக்கும் கல்வியறிவற்றவனான நிரை மேய்ப்பனும் உள்ளான். இவ்விரு வகைப்பட்ட மனிதர்க்கும் உண்ணப்படும் உணவு ஒருநாழி அளவினதே ஆகும். உடுக்கப்படும் உடைகளும் மேல், கீழ் என இரண்டேயாகும். எனவே செல்வத்தாற் பெறும் பயனாவது பிறர்க்கு ஈதலேயாகும். நாமே அனுபவிப்போம் என்று ஒருவர் கருதினால் அவரால் அனுபவிக்க முடியாதவாறு தவறுவன பலவாகும்” என்பது இப்பாட்டின் பொருள்.

அரசர்க்கும் ஆனிரை மேய்ப்பார்க்கும் உண்பனவும் உடுப்பனவும் ஒரு தன்மையனவேயாகும். நாழி அளவே ஒருவர் உண்ணலாம்; இரண்டு ஆடைகளையே உடுக்கலாம். பசி போக்க நாழி அளவு உணவு, மானம் காக்க இரண்டு ஆடைகள் இவைகளே ஒருவர்க்குரியன. இவற்றுக்கு மேலிருப்பனவற்றைப் பிறர்க்குக் கொடுப்பதே வாழ்வின் பயன். இவ்வாறு நக்கீரர் அறிவுறுத்துகின்றார்.

3.2.3 நூற்றுத் தொண்ணூற்று ஒன்றாம் பாட்டு பாட்டு யாண்டு பலவாக எனத் தொடங்குவது. இப்பாட்டு ஏழடிகளைக் கொண்டது. இப்பாட்டைப் பாடிய புலவர் பிசிராந்தையார்.

பிசிராந்தையாரைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவர் பாண்டி நாட்டுப் புலவர். இவர் சோழ நாட்டரசன் கோப்பெருஞ்சோழனைக் காணாமலே நட்புக் கொண்டவர்.

கோப்பெருஞ்சோழன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கும் அவனுடைய புதல்வர்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டாயிற்று. சோழன் மனம் கொதித்தான். தன் புதல்வர் இருவரையும் போரில் சந்திக்கத் துணிந்தான். அந்த நேரத்தில் புல்லாற்றூர் எயிற்றியனார் என்ற புலவர் சோழனைப் பார்த்து “இஃது உனக்குப் புகழ் தரும் போர் ஆகாது; இதனைவிட்டு மேல் உலகம் உன்னை விரும்பிக் கொள்வதற்குரிய செயலைச் செய்க” என்று அறிவுறுத்தினார். சோழன் உண்ணா நோன்பிருந்து உயிர்விட முனைந்தான். அப்போது அவன் தன் உடனிருந்த சான்றோரிடம் “பிசிராந்தை என்னைத் தேடி வருவான். நான் இறந்தபின் வரப்போகும் அவனுக்கு எனக்குப் பக்கத்தே இறக்க இடம் தருக” என்று கூறி உயிர் நீத்தான். சோழன் கூறியவாறே ஆந்தையார் வந்தார். அவரைக் கண்டு சான்றோர் வியப்படைந்தனர். அவருடைய இளமைத் தோற்றம் அவர்களை வியக்க வைத்தது. “பல ஆண்டுகளாக உங்களைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கின்றோம். அதற்கு மாறாக இளமையான தோற்றம் உடையவராய் இருக்கின்றீர்களே” என அவர்கள் கேட்டதற்கு விடையாகப் பிசிராந்தையார் கூறியதே இந்தப் பாட்டு,

“உங்களுக்குச் சென்ற ஆண்டுகள் பலவாக இருக்கவும், உங்களுக்கு நரையில்லையே அது எப்படி என நீங்கள் கேட்பீராயின் கூறுவேன். என் மனைவி மாட்சிமைப்பட்ட பண்புகளை உடையவள்; அவளோடு என் மக்களும் அறிவு நிரம்பியவர்கள். எனக்கு ஏவலர்களாக அமைந்தவர்கள் நான் கருதியதையே செய்பவர்கள். என் நாட்டு அரசனும் நீதி அல்லாதவற்றைச் செய்யாமல் காவல் காப்பவன். இவற்றுக்கும் மேலாக, நற்குணங்கள் நிரம்பிய, அடக்கம் உடையவராய், ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி வாழும் நல்ல நெறியுடைய சான்றோர் பலர் என் ஊரில் உள்ளனர்” என்பது இப்பாட்டின் கருத்து.

வீட்டில் மனைவி நல்லவள்; மக்கள் அறிவு நிரம்பியவர். ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது போல் ஏவலர் குறிப்பறிந்து நடப்பவர். எனவே வீட்டில் சிக்கல் இல்லை. அக அமைதி கூடிற்று. புறத்தேயும் அரசன் நல்லவன், ஊரார் சான்றோர். புறத்திலும் அமைதியே உண்டாயிற்று. கவலைகள் இல்லாத வாழ்க்கையால் நரை உண்டாகவில்லை என்பது பாட்டின் தெளி பொருள்.

3.2.4 பாடல்களின் திணை, துறை விளக்கம் 188, 189, 191 ஆகிய மூன்று பாடல்களுக்கும் திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.

மாந்தர் அனைவர்க்கும் பொதுவாகிய மகப்பேற்றுச் செல்வம், ஈத்துவக்கும் இன்பம், வாழ்க்கையின் இனிய சூழல் ஆகியன பற்றிக் கூறுவதால் இம்மூன்று பாடல்களும் பொதுவியல் என்ற திணைக்கு உரியன ஆயின. இது வெட்சி முதலாகப் பாடாண் ஈறான திணைக்குரிய செய்திகளை ஒழித்த பொதுச் செய்திகளைக் கூறும் திணையாகும்.

சான்றோர் தம் வாழ்வில் உண்மை எனக் கண்டு உணர்ந்து அனுபவித்த மெய்ப் பொருளைக் கூறுவது பொருண்மொழிக் காஞ்சித் துறையாகும். மகப்பேறற்ற வாழ்க்கை நிறைவுடைய தன்று, செல்வத்துப் பயனே ஈதல், வீடும் நாடும் இனிய எனின் வாழ்க்கை இனிதே என்ற மெய்ப்பொருள்களைக் கூறுவதால் இப்பாடல்கள் பொருண்மொழிக் காஞ்சித் துறைக்குரியன.

3.3 வாழ்வின் பேருண்மைகளை விளக்கும் பாடல்கள் - II (192, 214)

மேற்கண்ட பாடல்களைப் போலவே வாழ்வின் பேருண்மைகளை விளக்கும் இரு பாடல்களை இங்குக் காணலாம். இவை என்ன கூறுகின்றன? இவை முறையே 1) உயிர் என்பது ஊழின் வழியே செல்வது; 2) புகழ் பெற வாழ்ந்து இறப்பது சிறப்புடையது என்ற உயர் நெறிகளைக் கூறுவனவாக அமைந்தன.

3.3.1 நூற்றுத் தொண்ணூற்று இரண்டாம் பாட்டு பாட்டு யாதும் ஊரே யாவரும் கேளிர் எனத் தொடங்குவது. இது பதின்மூன்றடிகளைக் கொண்டது. இதனை இயற்றிய புலவர் கணியன் பூங்குன்றனார்.

கணியர் என்பார் இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்கால நிகழ்வுகளையும் கணித்துக் கூறும் சோதிட நூலாராவர். இக்கணியன் பூங்குன்றனார் சமண சமயத்தவரென்று சிலரும் ஆசீவக சமயத்தவரென்று சிலரும் கூறுவர். “எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் உறவினர்; கேடும் நன்மையும் தாமே வரும். அவை பிறர் நமக்குத் தர வருவன அல்ல. அவற்றைப் போன்றே துன்பப்படுதலும் துன்பம் தீர்தலும் தாமே நிகழ்வனவாகும். இறப்பு என்பது இவ்வுலகிற்குப் புதியதன்று; அவ்விறப்பு உயிர் கருவில் தோன்றிய நாள் தொடங்கியே உள்ளது. வாழ்வதை இனியதென்று மகிழ்ந்ததும் இல்லை. அதனை வெறுத்துத் துன்பமானது என்றும் கருதவில்லை. மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பெய்யும்; அது பெருகி அடங்காமல் கல்லை உருளச் செய்து ஒலிக்கும் வளமையான பேராறாக உருவெடுக்கும்.

அப்பேராற்றின் நீரின் வழியே செல்லுகின்ற தெப்பம் போல அரிய உயிர் விதியின் வழியே செல்லும் என அறிவுமிக்கவர் கண்டறிந்து கூறினர். அவ்வறிவைத் தெளிவாக அறிந்து கொண்டோம். ஆகவே பெருமை மிக்க பெரியோரை நாம் வியந்து போற்றுதலும் இல்லை; சிறியோரைப் பழித்தல் அப்போற்றுதலை விடவும் இல்லை” என்பது இப்பாட்டின் கருத்து.

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப் படூஉம்…..

(புணை = தெப்பம்; முறை = ஊழ், விதி)

என்பது ஊழின் (விதி) ஆற்றலை எடுத்துரைப்பதாகும். தத்தம் வினைகளாலேயே ஒருவர்க்கு நன்மை தீமைகள் வருமே அல்லாமல் பிறர் உண்டாக்க வருவன அல்ல என்பதால். உலகில் உள்ள எல்லாரையும் எமக்கு உறவினர் என்று கூறும் நிலை ஏற்பட்டது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

என்பது ஊழின் மேற்கொண்ட நம்பிக்கையால் தோன்றிய பக்குவமுற்ற நெஞ்சின் வாழ்க்கைப் பார்வையாகும்.

3.3.2 இருநூற்றுப் பதினான்காம் பாட்டு 214ஆம் பாட்டு செய்குவம் கொல்லோ நல்வினை எனவே எனத் தொடங்குவது. இது பதின்மூன்று அடிகளைக் கொண்டது. இதனை இயற்றியவர் கோப்பெருஞ்சோழன்.

கோப்பெருஞ்சோழன் சோழநாட்டு அரசன். தன் புதல்வர்களோடு கருத்து வேறுபட்ட நிலையில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர்விட முயன்றான். சான்றோர் பலரும் அவன் உயிரைப் போக்கிக் கொள்ளுதல் தகாது என்று கூறினர். அதற்கு மறுமொழியாகக் கூறப் பெற்றது இப்பாட்டு.

“நல்வினையைச் செய்வோமோ, மாட்டோமோ என்று எண்ணி ஐயம் கொள்பவர்கள் அழுக்குடைய காட்சி நீங்காத உள்ளத்தினை உடையோர் ஆவர்; அவர்கள் கருத்துத் தெளிவற்றவர்கள். யானை வேட்டைக்குச் செல்பவன் எளிதாக யானையைப் பெறக்கூடும்; ஆனால் குறும்பூழ்ப் பறவை (காடை) வேட்டைக்குச் செல்பவன் அது கிடைக்காமலும் திரும்பக் கூடும். அதனால் உயர்ந்த குறிக்கோள் உடையவர்களுக்குத் தாம் செய்த நல்வினைப் பயனை அனுபவிக்கும் பேறு கிடைக்குமாயின் அவர்களுக்கு வானுலக இன்பம் கிட்டும்; ஒருவேளை வானுலக இன்பம் கிடைக்காது போயினும் மறுபடி பிறந்து வரும் நிலைமை இல்லையாகும். மறுபடியும் பிறக்காவிடினும், இமயமலை போன்று உயர்ந்த தம்புகழை இவ்வுலகில் நிலை நிறுத்திக் குற்றமற்ற தம் உடம்போடு இறந்து படுதல் மிகச்சிறந்ததாகும். அது நல்வினைப் பயனால் விளைவது. எனவே நல்வினை செய்தல் தக்கது” என்பது பாட்டின் கருத்தாகும்.

வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும் உயர்ந்த குறிக்கோள் வேண்டும். அதனை அடைய முடியாவிட்டாலும் குற்றமில்லை நல்வினை செய்தால் வானுலகப் பேற்றை எய்தலாம். அதனை எய்தா விட்டாலும் மறுபடிப் பிறவாமை கிடைக்கும். எனவே புகழோடு வாழ்ந்து இறந்துபடல் இனிது எனப் புகழ்மிக்க வாழ்க்கையை வாழத் தூண்டுகிறது இச் செய்யுள்.

யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ்

வேட்டுவன் வறுங்கையும் வருமே

என உயர்ந்த குறிக்கோளோடு வாழ்தலை இப்பாட்டு வற்புறுத்தியது. பெரிய யானையைக் கருதிச் செல்லும் வேட்டையில் அது கிடைக்காவிட்டாலும் குற்றமில்லை. ஆனால் ஒரு காடையைப் பற்றி வருவேன் என்ற பெருநோக்கமில்லாத செயல் புகழ்தருவதன்று என்று கூறினார். யானை கிடைத்தாலும் கிடைத்துவிடக் கூடும்; காடைப் பறவை கிடைக்காமற் போனாலும் போகும். எனவே நோக்கம் உயர்ந்ததாக இருத்தல் நல்லது; முடிவைப் பற்றிக் கவலைப் படுதல் வேண்டா என்று அறிவுறுத்தினார்.

3.3.3 பாடல்களின் திணை, துறை விளக்கம்

192, 214 ஆகிய இரு பாடல்களும் பொதுவியல் திணைக்குரியன; பொருண்மொழிக் காஞ்சித் துறைக்குரியன. மாந்தர் அனைவர்க்கும் உரிய பொது அறங்களைக் கூறியமையின் இவை பொதுவியல் திணைக்குரியன. உயிர் விதி வழிப்பட்டது; நாம் அடையும் இன்ப துன்பங்களுக்கு நாமே காரணம் என்றும், புகழ் பெற வாழ்தலே தக்கது என்றும் சான்றோர் கண்ட பொருண்மைகளை இப்பாடல்கள் கூறுதலின் இவை பொருண்மொழிக் காஞ்சித் துறை பெற்றன.

3.4 முதுபெண்டிர் வீரம் (278, 312)

பழந்தமிழ் நாட்டு மக்கள் புகழ் விருப்பம் உடையவர்கள். போரில் புறமுதுகு காட்டுவதை மானக் கேடாகக் கருதினர் அவர்கள். மார்பில் புண்பட்டுப் போர்க்களத்தில் இறப்பதே புகழ் மிக்க துறக்க உலகத்திற்குச் (வீட்டுலகம்) செலுத்துமென்றும் அவர்கள் எண்ணினர். அக்கால மறக்குடி மகளிர் வீரம் மிகவும் போற்றத் தக்கதாக அமைந்தது. கணவன், மகன் ஆகியோர் இயற்கைச் சாவு எய்துவதைவிடப் போர்ப்புண் ஏற்றுப் புகழோடு இறப்பதையே அவர்கள் விரும்பினர். அத்தகைய மறக்குடி மகளிரின் வீரம் பற்றி இரண்டு பாடல்கள் வழி அறியலாம்.

3.4.1 இருநூற்று எழுபத்தெட்டாம் பாட்டு 278ஆம் பாட்டு நரம்பு எழுந்து உலறிய எனத் தொடங்குவது; ஒன்பது அடிகளைக் கொண்டது. இது காக்கை பாடினியார் நச்செள்ளையாரால் பாடப் பெற்றது.

இப்பாட்டைப் பாடிய புலவரின் இயற்பெயர் நச்செள்ளை என்பது. இவர் பெண்பாற் புலவர். இவர் ‘விருந்து வருவதை அறிவிக்கும் வகையில் காக்கை கரைகிறது’ என்று பாடிய பாடல் குறுந்தொகையில் உள்ளது. காக்கையைப் பற்றிப் பாடியமையால் இவர் காக்கை பாடினியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

“நரம்புகள் மேலே தோன்றுமாறு வற்றிய, வலிமையற்ற மெல்லிய தோளையும், தாமரை இலை போன்ற அடி வயிற்றையும் உடைய முதியவள் ஒருத்தியிடம் சென்று “உன் மகன் பகைவரின் படைக்கு அஞ்சி முதுகிட்டு மாண்டான்” என்றனர், உண்மை அறியாத பலர். அதற்கு அவள் “நெருங்கிய போரில் என் மகன் அஞ்சி முதுகிட்டிருப்பின் என்னிடத்து அவன் பால் உண்ட என் மார்புகளை அறுத்தெறிவேன்” என்று வஞ்சினம் கூறிக் கையில் கொண்ட வாளோடு களத்திற்குச் சென்றனள். அங்கு வாளினால் பிணங்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே வந்தவள் பிணங்களை மேலும் துழாவும்போது, குருதியால் சிவந்துபோன அப்போர்க்களத்தில் மார்பிற் புண்பட்டு உடல் சிதைந்து வெவ்வேறு பகுதியாகத் தன் மகன் கிடப்பதைக் கண்டு அவனைப் பெற்ற நாளில் அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்ந்தனள்” என்பது இப்பாட்டின் கருத்துரை.

செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய

படுமகன் கிடக்கை காணூஉ

ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே

(படுமகன் = வீழ்ந்த மகன் ; காணூஉ = கண்டு; ஞான்றினும் = பொழுதினும்)

என்று முதிய மறக்குல மங்கை அவன் இறந்த நாளைப் பிறந்த நாளை விட மகிழ்ச்சி கொள்ளும் நாளாகக் கருதுகின்றாள்.

திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை தும்பை; துறை உவகைக் கலுழ்ச்சி. தும்பைத் திணை என்பது கடும்போர் நிகழ்வுகளைக் கூறும் திணையாகும்.

செங்களத்து மறம்கருதிப்

பைந்தும்பை தலைமலைந்தன்று

என்பர் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர். இப்பாட்டில் தாயின் மறவுணர்வும் மகனின் வீரமும் வெளிப்படுத்தப் பெற்றமையால் இது தும்பைத் திணை பெற்றது. இப்பாட்டின் துறையாகிய உவகைக் கலுழ்ச்சி என்பது மகிழ்ந்து கலங்குதல் என்னும் பொருளுடையது. மகன் வீரச் சாவு பெற்றமை குறித்து மகிழ்வும், தொடர்ந்து நாடு காக்க அவன் இல்லாமற் போயினானே என்றதால் உண்டான கலக்கமும் குறித்தமையால் இஃது உவகைக் கலுழ்ச்சியாயிற்று.

3.4.2 முந்நூற்றுப் பன்னிரண்டாம் பாட்டு 312ஆம் பாட்டு ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே எனத் தொடங்குவது; ஆறடிகளை உடையது, இப்பாட்டைப் பாடியவர் பொன்முடியார் என்னும் புலமகள்.

“பெற்றுப் பாதுகாத்தல் எனக்குரிய கடமையாகும்; தன் குலத்துக்குரிய படைக்கலப் பயிற்சியாகிய கல்வி அதற்குரிய தகுதிகள் ஆகியவற்றால் நிறைவுடையவனாகச் செய்தல் தந்தைக்குரிய கடமையாகும்; போர் செய்வதற்குரிய படைக்கலத்தைத் திருத்தமாகச் செய்து கொடுத்தல் கொல்லனுக்குரிய கடமையாகும்; நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனின் கடமையாகும்; ஒளிவிடுகின்ற வாளைக் கையில் ஏந்திச் சென்று போர் புரிதற்கேற்ற களத்தில் பகைவரோடு மாறுபட்டுக் களிற்று யானையைக் கொன்று வெற்றியோடு மீளுதல் காளையாகிய வீர மகனுக்குரிய கடமையாகும்” என்பது பாட்டின் கருத்துரை.

‘என் தலைக்கடனே’ எனத் தாய் கூறுமாறு பாடியுள்ளமையால் இப்பாட்டை இயற்றிய பொன்முடியார் பெண்பாற் புலவர் என்பது அறியப்படும். போர்ப்பயிற்சி அளித்தல் தந்தையின் கடமையாகும். நன்னடை என்பதற்கு மாறாகச் சிலர் தண்ணடை என்று கொண்டு வீரர்களுக்குக் குளிர்ந்த நிலங்களை (தண்ணடை) வழங்குதல் வேந்தனின் கடமையென்பர். ‘ஒளிரு’ என இடம்பெற வேண்டிய சொல் பின்னர் வரும் ‘களிறு’ என்பதற்கேற்ப ‘ஒளிறு’ எனத் திரிந்தது. இங்குச் ‘சான்றோன்’ என்ற சொல்லுக்குப் போர்வீரன் என்பது பொருள்.

பாட்டின் திணை, துறை விளக்கம்.

312 ஆம் பாட்டுக்குரிய திணை வாகை. துறை மூதின் முல்லை. வாகைத்திணை என்பது ஒரு படையின் வெற்றியைக் கூறுவது. அலைகடல் போன்ற தானை வாகைப் பூவைச் சூடி ஆரவாரித்து வெற்றியைக் கொண்டாடுதலை வாகைத்திணை மொழியும். வீரன் களிற்று யானையை வென்று வருதல் பற்றிக் கூறினமையின் இப்பாட்டு வாகைத்திணைக்கு உரியதாயிற்று. மூதின் முல்லைத் துறை என்பது மறக்குடியில் ஆடவரைப் போலவே மகளிர்க்கும் வீரமுண்டு என்பதைக் காட்டுவதாகும். மகனின் போர்க் கடமையைத் தாய் பெருமையுடன் பேசுவதால் இப்பாட்டு மூதின் முல்லையாயிற்று (மூதில் = முதுமை+இல் = பழங்குடி).

3.5 தொகுப்புரை

இனிய மாணவர்களே! இதுவரை எட்டுப் புறநானூற்றுப் பாடல்களின் வரலாறு, பின்னணி, கருத்து ஆகியவற்றை அறிந்திருக்கின்றீர்கள். இப்பாடல்கள் சங்க கால மக்களின் பண்பாட்டைக் காட்டுவன. இவற்றின் திணை துறை விளக்கமும், பாடல் தோன்றிய சூழலும் கருத்திற் கொள்ள வேண்டியன.

சிறப்புச் செய்திகள்

பிசிராந்தையார் அறிவுடை நம்பியிடம் சென்று ‘வரி வாங்குவதில் ஒரு முறையைக் கடைப்பிடிப்பாயாக’ என அறிவுறுத்தியுள்ளார். பாண்டியன் இவருடைய அறிவுரையை ஏற்று நடந்திருக்கின்றான் என்பதை ‘யாண்டு பலவாக’ என்னும் பாட்டில் ‘வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்’ என்பதால் உணரலாம். கணியன் பூங்குன்றனார் பாடியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாட்டு நியதிக் (ஊழ்) கொள்கையைக் காட்டுவது. முன் செய்த வினைகளே தொடர்ந்து வந்து நல்லன தீயனவற்றை உண்டாக்கும் என்பது இப்பாட்டால் வற்புறுத்தப் பெறும்.

கோப்பெருஞ்சோழன் தான் உயிர்விடக் கருதியது புகழ் பெறுவதன் பொருட்டே என்று கூறுகிறான். வானுலக வாழ்க்கை பெறாவிடினும், பிறப்புகள் மீண்டும் வாரா வண்ணம் வினை முடியாவிடினும், இறந்தபின் புகழ் நிலைபெற்றால் அதுவே விரும்பத் தக்கது என்பது சோழன் கருத்தாகும்.

சங்க கால வாழ்வு வீரத்தைப் போற்றிய வாழ்வு, நோயிலும் பாயிலும் கிடந்து சாவதை விடப் போரில் புண்பட்டுப் புகழோடு இறப்பதை விரும்பிய வாழ்வு. இதனை 278ஆம் பாடல் விளக்குகின்றது. 312ஆம் பாட்டு வீட்டிற் பிறந்த ஒவ்வோர் ஆடவனுக்கும் உரிய போர்க் கடமையை உரைக்கின்றது.

பாடம் - 4

புறநானூறு – 4

4.0 பாட முன்னுரை

இனிய மாணவர்களே! புறநானூறு குறித்து மூன்று பாடங்களை இதுவரை படித்திருக்கின்றீர்கள். இது நான்காவது பாடம். இப்பாடத்தில் எட்டுப் பாடல்களைப் பற்றிய செய்திகளை அறிய இருக்கின்றீர்கள். அவ்வெட்டுப் பாடல்களின் எண்கள் வருமாறு : 226, 228, 229, 235, 239, 242, 243, 245.

இவ்வெட்டுப் பாடல்களும் வாழ்க்கை நிலையாமையைக் காட்டுவன. எனவே இவற்றின் திணை பொதுவியலாகவும், துறை கையறுநிலையாகவும், ஆனந்தப் பையுளாகவும் அமையக் காணலாம். விளக்கம் பின்னர் இடம்பெறும்.

4.1 இருநூற்று இருபத்து ஆறாம் பாட்டும் இருநூற்று இருபத்து எட்டாம் பாட்டும் 226ஆம் பாட்டு செற்றன் றாயினும் எனத் தொடங்குவது. ஆறடிகளை உடையது. இப்பாட்டு, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மீது மாறோக்கத்து நப்பசலை என்ற புலமகளால் பாடப் பெற்றது (துஞ்சிய = இறந்த). 228ஆம் பாட்டு கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே எனத் தொடங்குவது; பதினைந்து அடிகளை உடையது. இப்பாட்டு, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மீது ஐயூர் முடவனார் என்ற புலவராற் பாடப் பெற்றது.

4.1.1 கிள்ளிவளவனும் நப்பசலையாரும் சோழன் கிள்ளி வளவன் புகழ்மிக்க வேந்தன். இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டவன். இவ்வேந்தன் செய்யுள் இயற்றுதலில் வல்லவன். இவன் பாடிய பாட்டொன்று புறநானூற்றில் உள்ளது (173). இவ்வேந்தன் மீது புலவர்கள் பாடியுள்ள பதினேழு பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. இவன் குளமுற்றம் என்ற ஊரில் இறந்துபட்டமையால் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனப் பெற்றான். இவன் இறந்த போது பிரிவாற்றாது வருந்தி மாறோக்கத்து நப்பசலையார், ஐயூர் முடவனார், ஆடுதுறை மாசாத்தனார் என்ற புலவர் மூவர் வருந்திப் பாடினர். அவற்றுள் இரண்டு பாடல்கள் நமக்குப் பாடமாக அமைந்துள்ளன.

பாட்டும் கருத்தும்

சோழன் கிள்ளிவளவன் இறந்துவிட்டான். மக்களும் புலவர்களும் மனம் வருந்திக் குழுமியிருக்கின்றனர். ஆற்றல் மிக்க இப்பெருவேந்தனின் உயிரைக் காலன் எப்படி வந்து கவர்ந்திருக்க முடியும் என்று பலரும் கருதினர். அந்தச் சூழலில் நப்பசலையாரின் பாட்டுப் பிறந்தது.

“நெருங்கி வரும் போரில் தன்னை எதிர்த்து நிற்கும் பகைவரை எதிர்நின்று வெல்லுகின்ற படையை உடையவன் கிள்ளிவளவன்; அவ்வரசன் வலிமை மிக்க தேரைக் கொண்டவன்; பொன்னாலாகிய மாலையை அணிந்தவன். இத்தகையவன் உயிரைக் கூற்று (எமன்) எப்படிக் கவர்ந்திருக்க முடியும்? கூற்றுவன் தன் மனத்தே கறுவு கொண்டவனாயினும் வெளிப்படத் தன் கோபத்தை அவ்வேந்தனிடம் காட்டியிருக்க இயலாது; போர் செய்யும் நோக்கோடு நெருங்கி வந்த கையோடு உடம்பைத்தொட்டுச் சோழன் வருந்தச் செய்திருந்தால் அக்கூற்றுவன் பிழைத்திருக்க முடியாது. எனவே கூற்றுவன் பாடுகின்றவர்களைப் போலத் தோன்றி, கையால் தொழுது ‘உயிரைக் கொடுத்துவிடு’ என இரந்து பெற்றிருக்க வேண்டும்” என்பது பாட்டின் பொருளுரை.

காலனும் அஞ்சுகின்ற பேராற்றல் உடையவன் என்பது பாட்டின் கருத்தாகும்.

4.1.2 கிள்ளிவளவனும் ஐயூர் முடவனாரும் சோழன் கிள்ளிவளவன் இறப்பிற்கு வருந்தி ஐயூர் முடவனார் பாடிய பாடல் (228) இது. பழங்காலத்தில் புகழ்பெற வாழ்ந்து இறந்தவர்களை மண்ணால் சமைத்த பெரிய தாழியில் இட்டுப் புதைப்பது வழக்கம். இறந்த கிள்ளிவளவனின் புகழுக்குப் பொருந்தத் தாழி பெரியதாக அமைய வேண்டுமே என்று கருதினார் புலவர் ஐயூர் முடவனார். எனவே கலம் செய்யும் வேட்கோவரை (குயவர்) நோக்கிக் கூறுகின்றார்:

“சமைக்கின்ற கலங்களைச் செய்யும் குயவனே! சமைக்கின்ற கலங்களைச் செய்யும் குயவனே! உன்னுடைய சூளை இப்பழைய ஊரில் அகன்ற பெரிய இடத்தில் உள்ளது. அந்தச் சூளையிலிருந்து புகை எழுந்து விரிந்து பரந்த வானத்தில் சென்று நிற்கும். அப்போது இருள் ஓரிடத்தில் செறிந்து நிற்பது போல் தோன்றும். இத்தகு சூளையில் கலங்களைச் செய்யும் குயவனே! நீ மிகவும் இரங்கத்தக்கவன் ஆனாய்! நீ மிகப்பெரிய வருத்தம் அடைவாய்! கிள்ளிவளவனின் சேனை நிலம் முழுதும் பரந்து நின்றது. வானத்தின் கண் விளங்கும் சூரியன், அறிவுடையோரால் புகழப்பெற்ற பொய்யற்ற நல்ல புகழையும் சுடரினையும் உடையவன். அவனைப் போன்றே கிள்ளிவளவனும் புகழும் பெருமையும் மிக்கவன். சூரியன் அகன்ற ஆகாயத்தில் தொலைவில் இருந்தாலும் அதன் சுடர் பரந்து செல்வது போல, செம்பியர் (சோழர்) குடியில் தோன்றிய சோழனின் புகழும் திசைகளில் எல்லாம் சென்று விளங்கிற்று. அவ்வளவன் கொடிகள் அசைகின்ற யானையினை உடைய பெருமை உடையவன். அவன் தேவர்கள் வாழும் விண்ணுலகத்தை அடைந்தான். அதனால் இவ்வளவு பெரும் புகழ்க்குரிய ஒருவனைக் கவித்து மூடும் பெரிய தாழியை நீ செய்ய விரும்பினால் எப்படிச் செய்வாய்? இந்தப் பெரிய நிலத்தையே சக்கரமாகவும், இமய மலையையே மண்ணாகவும் கொண்டு தாழி செய்ய உன்னால் முடியாதே! ஆகவே நீ இரங்கத் தக்கவன்தான்” என்பது பாட்டின் கருத்து.

குயவர் மட்கலம் செய்யச் சக்கரமும் மண்ணும் வேண்டும். மிகப்பெரிய கலங்களைச் செய்ய அதற்கேற்றாற் போலச் சக்கரமும் மண்ணும் வேண்டும். கிள்ளிவளவனின் புகழுக்குத் தகுந்தாற் போல இவை அமைய வேண்டுமாயின், இந்நிலவுலகையே சக்கரமாகவும், இமய மலையை மண்திரளாகவும் கொள்ள வேண்டும். அந்த அளவு வளவனின் புகழ் பெரியது என்றார் புலவர்.

4.2 சேரல் இரும்பொறை (229ஆம் பாட்டு)

229ஆம் புறப்பாட்டு ஆடியல் அழற்குட்டத்து எனத் தொடங்குவது. இருபத்தேழு அடிகளை உடையது. இதனை மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர அரசனைக் குறித்துக் கூடலூர் கிழார் என்ற புலவர் பாடியுள்ளார்.

பாட்டின் சூழல்

மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவன் சேர வேந்தன். இவன் கண்கள் சிறிதானவை. எனவே இவன் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எனப்பட்டான். புலவர் கூடலூர் கிழார் ஒருநாள் இரவில் வானிலிருந்து ஒரு மீன் விழுவதைக் கண்டார். “அரசனுக்கு ஏதும் நோயுறாமல் இருக்க வேண்டுமே” என்று அஞ்சினார். அரசன் இன்ன நாளில் இறந்துபடக் கூடுமென்றும் கருதினார். அவர் கருதியவாறே நிகழ்ந்தது. அரசன் இறந்துவிட்ட சூழலில் இப்பாட்டைப் புலவர் பாடினார்.

4.2.1 பாட்டின் கருத்து கூடலூர் கிழார் பாடியுள்ள இப்பாட்டு பல வானியல் குறிப்புகளை உட்கொண்டது. வானியல் அறிவு மிக்க அப்புலவரைப் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் எனப் போற்றினர். அவர் பாடிய பாட்டின் கருத்து வருமாறு:

“மேஷ ராசியின் கார்த்திகை நட்சத்திரம்; அது கார்த்திகையின் முதல் பாதம். அந்த நாளின் பாதி இரவில் இருள் செறிந்த நேரம். வளைந்த பனைமரம் போன்ற வடிவை உடைய அனுஷ நட்சத்திரத்தின் தொகுதியில் முதலாவது தொடங்கிக் குளம் போன்ற வடிவை உடைய புனர்பூசத்தின் கடைசி வரை விளங்குவது பங்குனி மாதம். இந்தப் பங்குனியில் முதற்பதினைந்து நாளில் உச்சமாகிய உத்தர நட்சத்திரம் மேலிருந்து சாய்ந்தது. அதற்கு எதிரே அதன் எட்டாம் நட்சத்திரமாகிய மூலம் எழுந்தது. உத்தர நட்சத்திரத்திற்கு முற்பட எட்டாவதாக அமைந்த மிருக சீரிடம் தன் இடத்திலிருந்து கீழே இறங்கிற்று. அந்நிலையில் நட்சத்திரம் ஒன்று காற்றால் அலைந்து நல்ல திசையாகிய கிழக்கும் வடக்கும் போகாமல் தீய திசையாகிய தெற்கும் மேற்குமாகிய ஒரு திசையில் விழுந்தது. அதனைப் பார்த்து யாமும், பிறரும் பல்வேறு இரவலர்களும் ‘பறை போலும் இசையோடு ஒலிக்கும் அருவிகளை உடைய மலைநாட்டுக்கு வேந்தனாகியவன் நோயில்லாமல் இருப்பின் நல்லது’ என வருந்திய உள்ளத்தோடு அஞ்சிக் கூறினோம். அவ்வாறு அஞ்சிய, குறித்த ஏழாம்நாள் வந்தது. இன்று வலிமை மிக்க யானை தும்பிக்கையை நிலத்திலே கிடத்தித் துயில் கொண்டது. திண்மையான வாரால் கட்டப்பட்ட முரசம் கண்கிழிந்து உருண்டது. உலகைக் காக்கும் அரசனின் வெண் கொற்றக்குடை கால் ஒடிந்து விழுந்தது. காற்றைப் போல விரைந்து செல்லும் குதிரைகள் இயக்கமின்றிக் கிடந்தன. இவ்வாறாக அரசன் தேவர் உலகை அடைந்தான். பகைவரைச் சிறைப்படுத்தும் வலிமையையும், விரும்பி வந்தவர்க்கு அளந்து கொடுத்தலை அறியாத கொடையையும் உடைய நீலமலை போலும் வேந்தன் ஒளி பொருந்திய வளைகளை உடைய வான மகளிர்க்குத் துணையாகி, இந்நிலவுலகில் தனக்குத் துணையான மகளிரை மறந்தான் போலும்”.

பங்குனி மாதத்தில் நட்சத்திரம் வீழ்ந்தால் அரசனுக்குக் கேடு என்பர். அவ்வாறு மீன் வீழ்ந்த ஏழாம் நாளில் சேரன் உயிர் நீத்திருக்கின்றான்.

புலத்துறை முற்றிய புலவர்

கூடலூர் கிழார் வானியல் அறிந்தவர். ஆடு என்பது மேட ராசி. அக்கினியைத் தனக்குரிய தேவதையாகக் கொண்டமையால் கார்த்திகை அழல் என்ற பெயர் பெற்றது. பங்குனி மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் உள்ள நாள் சப்தமி ஆகும். எனவே அந்நாளின் பாதி இரவு செறிந்த இருளைப் பெற்றது. அனுஷத்தின் வடிவமாகிய ஆறு நட்சத்திரங்களின் தொகுதி வளைந்த பனைமரம் போன்ற தோற்றமுடையது. இன்ன நாளில் மீன் விழுந்தால் இன்னது நிகழும் என்பது சோதிட நூல் துணிபு. இச்செய்திகளை அறிந்த நிலையில் பின்னர் வரப்போவதை அறிந்து முன்னரே கூறினார் கூடலூர் கிழார்.

4.3 அதியமான் நெடுமான் அஞ்சி (235ஆம் பாட்டு)

235ஆம் பாட்டு சிறியகட் பெறினே எனத் தொடங்குவது; இருபது அடிகளைக் கொண்டது. அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஒளவையாரால் பாடப்பெற்றது இப்பாட்டு.

பாட்டின் சூழல்

அதியமான் நெடுமானஞ்சி தகடூரை ஆண்ட குறுநில மன்னன். கடையெழு வள்ளல்களில் ஒருவன். இம்மன்னன் ஒளவையாரோடு நெருங்கிய நட்புக் கொண்டிருந்தான். உண்டாரை நெடுங்காலம் வாழ வைக்கக் கூடிய அருநெல்லிக்கனி ஒன்றைக் காட்டில் மிகவும் முயன்று பெற்று அதனைத் தான் உண்ணாமல் ஒளவைக்குக் கொடுத்து உண்ணச் செய்தவன் இவன். பகைவர் எழுவரை ஒரு போரில் வென்று அவர்களுக்குரிய அணிகலன்களையும் அரச உரிமையையும் இம்மன்னன் கவர்ந்து கொண்டான். இவனுடைய திருக்கோவலூர் வெற்றியைப் பரணர் புகழ்ந்து பாடியுள்ளார். இம்மன்னன் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையால் வெல்லப்பட்டான். அதியமான் பகைவரோடு புரிந்த போரில் பகைவர் எறிந்த வேல் அவனுடைய மார்பில் தைக்க அவன் உயிரிழந்தான். ஒளவையார் ஆற்றாமல் வருந்திச் சிறியகட் பெறினே என்று தொடங்கும் இப்பாடலைப் பாடினார்.

4.3.1 பாட்டின் கருத்து இறந்துபட்ட அதியமானின் பல்வேறு நற்பண்புகளைச் சொல்லிப் புலவர் கலங்குவதாக அமைந்தது இப்பாட்டு. இதன் கருத்து வருமாறு:

“சிறிய அளவினை உடைய மதுவைப் பெற்றால் எங்களுக்குக் கொடுப்பான்; அந்நிலை போய்விட்டது. பெரிய அளவில் மதுவை அவன் பெற்றால் அதனை யாம் உண்டு பாட, எஞ்சிய மதுவைத் தான் மகிழ்ந்து அருந்துவான். அந்நிலையும் போயிற்று. எல்லார்க்கும் பொதுவான நிலையில் தனக்குக் கிடைக்கும் சோறு சிறு அளவினதாயினும் மிகப் பலரோடும் கலந்து உண்பான். பெரிய அளவினதாகிய சோறு கிடைப்பினும் மிகப் பலரோடும் கலந்து உண்பான். அதுவும் கழிந்தது. சோற்றின் இடையே எலும்பும் ஊனும் தட்டுப்பட்டால் அவற்றை எங்களுக்கு அளிப்பான். அதுவும் நீங்கிற்று. அம்போடு வேல் வந்து பாயும் போர்க்களங்களில் தான் சென்று முன்னிற்பான். அதுவும் இல்லையாயிற்று. தான் காதலிப்பார்க்குத் தன் கையால் மாலை சூட்டுதலால் நரந்தப் பூ மணம் வீசும் தன்னுடைய கையால் அருள்மிகக் கொண்டு புலால் நாறும் என் தலையைத் தடவுவான். அஃதும் இனி நிகழாதாயிற்று. அவனுடைய கரிய மார்பில் தைத்த வேல் அருங்கலை வளர்க்கும் பெரும்பாணர்களின் கையில் உள்ள மண்டைப் பாத்திரத்தை ஊடுருவியது; அவர்கள் கைகளையும் துளைத்தது; அழகிய சொற்களை ஆராய்ந்து கூறும் நுண்ணிய அறிவுடையார் நாவிலும் போய்த் தைத்தது. எங்களுக்குப் பற்றுக் கோடான எங்கள் தலைவன் எங்கே உள்ளானோ? இனிப் பாடுகின்றவரும் இல்லை; பாடுகின்றவர்களுக்கு ஈவாரும் இல்லை. குளிர்ந்த நீரை உடைய துறையில் தேனைக் கொண்ட பகன்றை மலர்கள் பிறராற் சூடப்படாமல் உதிர்வது போலப் பிறர்க்குப் பொருளைக் கொடுக்காமல் மாய்ந்து போகின்றவர்கள்தாம் இவ்வுலகில் பலராக உள்ளனர்”.

ஒளவையாரின் கண்ணீர்

அதியமான் அரசவைக்குத் தம் புலமையால் பெருமை சேர்த்தவர் ஒளவையார். உண்டாரை நெடுங்காலம் வாழவைக்கும் நெல்லிக்கனியை மலைப் பிளவுகளையெல்லாம் தாண்டிச் சென்று கொண்டு வந்து, அதன் பெருமையைக் கூறாமல் ஒளவை உண்ணுமாறு தந்தவன் அதியமான். ஒளவையார் அதியமானையும் பாடி அவன் மகன் பொகுட்டெழினியின் வீரத்தையும் பாடினார். அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றார். இவ்வாறு நட்புக் கொண்டிருந்த நிலையில் அதியன் இறந்துபட்டான். ஒளவையின் கண்ணீர்ப் பெருக்கு வற்றவில்லை. அவன் மார்பில் தைத்த வேல் அந்த அளவோடு நின்றதா! இல்லை,

அருங்கலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ

இரப்போர் கையுளும் போகிப்

புரப்போர் புன்கண் பாவை சோர

அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்

சென்றுவீழ்ந் தன்று…

என்று சொல்லி அழுகின்றார் ஒளவையார்.

இப்பாட்டில் ‘மன்’ என்னும் இடைச்சொல் பல இடங்களில் வந்தது. மன் என்பது கழிந்தது என்ற பொருளைத் தருவது.

4.4 நம்பி நெடுஞ்செழியன் (239ஆம் பாட்டு)

239ஆம் பாட்டு நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் பாடியதாகும். இப்பாட்டு தொடியுடைய தோள் மணந்தனன் எனத் தொடங்குவது; இருபத்தோரடிகளை உடையது.

பாட்டின் சூழல்

நம்பி நெடுஞ்செழியன் என்பான் மக்கள் போற்ற வாழ்ந்த அரசன். போர்க்களத்தின் முன்னின்று பகைப் படைகளைப் புறங்கண்டு ஓடச் செய்தவன். இரவலர்கட்குப் பெருங்கொடை நல்கியவன். வாழ்க்கையில் துய்க்கத் தகுவனவற்றைத் துய்த்து அறநெறி பிறழாது வாழ்ந்தவன். புகழ்பெற வாழ்ந்த இப்பெருந்தகை இறந்துபட்ட போது பேரெயின் முறுவலார் அவன் புகழ் போற்றும் வகையில் இப்பாட்டைப் பாடினர்.

4.4.1 பாட்டின் கருத்து நம்பி நெடுஞ்செழியன் இறந்த பிறகு அப்பெருமகனைப் புதைப்பது தகுமா, எரிப்பது தகுமா என்ற வினா எழுந்தது. அந்நிலையில் பேரெயின் முறுவலார் இவ்வாறு கூறினார்:

“இளம் பெண்களின் வளையணிந்த தோள்களை நம்பி நெடுஞ்செழியன் தழுவினான்; காவல் மிக்க சோலைகளின் பூக்களைச் சூடினான்; குளிர்ந்த மணம் வீசும் சந்தனத்தைப் பூசினான்; பகைவரை அவர்தம் சுற்றத்தாரோடு அழித்தான். நண்பர்களை மேம்படுத்திக் கூறினான். இவர்கள் வலியவர்கள் எனவே இவரைப் பணிவோம் என்று யார்க்கும் வழிபாடு சொல்லி அறிய மாட்டான்; இவர்கள் நம்மை விட எளியவர்கள் என்று கருதி அவர்களை விடத் தன்னை மேம்படுத்திச் சொல்லி அறிய மாட்டான். பிறரிடம் சென்று பொருள் வேண்டுமென்று இரத்தலை அறிய மாட்டான். ஆனால் தன்னை வந்து சூழ்ந்து நின்று இரந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லுதலை அறிய மாட்டான். அரசர்களின் அவைக் களங்களில் தன் சிறந்த புகழை வெளிப்படுத்தினான். தன் மேல் வரும் படையைத் தன் நாட்டு எல்லையுள் புகாமல் எதிர்நின்று தடுத்தான். புறங்காட்டி ஓடுகின்ற படையை அதன் பின் சென்று தாக்காது நின்றான். வேகமாகச் செல்லும் தன் குதிரையைத் தன் மனத்தைக் காட்டிலும் விரைவாகச் செலுத்தினான். நீண்ட தெருக்களில் தன் தேர் சூழ்ந்து வருமாறு செலுத்தினான். உயர்ந்த யானைகளில் அவன் ஊர்ந்து வந்தனன். இனிமை செறிந்த மதுவின் குடங்களைப் பலர்க்கும் வழங்கித் தீர்ந்து போகச் செய்தான். பாணர்கள் மகிழுமாறு அவர்களின் பசியைத் துடைத்தான். மயக்கம் தரும் சொற்களை மொழியாது நடுவு நிலை அமைந்த சொற்களை மொழிந்தான். இவ்வாறு அவ்வரசன் செய்யத் தகுவனவெல்லாம் செய்தான். ஆகவே புகழ் விரும்பி வாழ்ந்த அவன் தலையை வாளால் அறுத்துப் புதைத்தாலும் புதைக்க; அவ்வாறு செய்யாது சுட்டாலும் சுடுக. நீங்கள் விரும்பியவாறு செய்க.”

தலையைப் புதைப்பதாலும், சுடுவதாலும் அவனுக்கு ஒன்றும் பெருமையில்லை. அவன் புகழ்பட வாழ்ந்து முடிந்தனன். அவன் புகழ் நிலைபெறும் என்று கூறினார்.

பேரெயின் முறுவலார் பெருமிதம்

நம்பி நெடுஞ்செழியன் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று துறைகளிலும் ஒருவன் செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் செய்து முடித்து விட்டான். எனவே அவன் பெரும் புகழ் பெற்று, அவன் புகழுடம்பு நிலைபெற்று விட்டது. இனி அவனது பருவுடலை எது செய்தால் என்ன என்று கேட்கிறார் புலவர்.

செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்

இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ

என்று கூறினார். புதையுங்கள் அல்லது எரியுங்கள் அவன் புகழ் குன்றாது எனப் புலவர் பெருமிதம் தோன்றக் கூறினார். “வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவது இலர்” என்பது நாலடியார்(35) கூறும் செய்தியாகும். உடம்பைச் சரியாகப் பயன்படுத்திப் புகழ்மிக வாழ்ந்தவர்கள் இறப்பு வருவது குறித்து வருந்த மாட்டார்கள் என்பது இதன் கருத்து. இக்கருத்தே இப்புறப்பாட்டாலும் உணர்த்தப்பட்டுள்ளது.

4.5 பெருஞ்சாத்தன் (242ஆம் பாட்டு)

242ஆம் பாட்டு இளையோர் சூடார் எனத் தொடங்குவது; ஆறடிகளை உடையது. இப்பாட்டு ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குறித்துக் குடவாயிற் கீரத்தனாரால் பாடப் பெற்றது.

பாட்டின் சூழல்

ஒல்லையூர் கிழான் என்பானின் மகன் பெருஞ்சாத்தன். இவன் பெருங் கொடையாளி; ஆண்மை மிக்க போர்வீரன். இவன் இறந்து பட்டபோது ஊரே துயரம் கொண்டது. இந்தச் சூழலில் குடவாயிற் கீரத்தனார் முல்லைப் பூவைப் பார்த்துப் பாடுவது போலச் சாத்தன் இறந்த அவலத்தைப் பாட்டாக வடித்துள்ளார்.

4.5.1 பாட்டின் கருத்து குடவாயிற் கீரத்தனார் சாத்தன் இறந்தமை குறித்து நாடு உற்ற துயரைக் கீழ் வருமாறு காட்டுகின்றார். “முல்லைப் பூவே! உன்னை இன்று இளையவர்கள் சூட மாட்டார்கள்; வளையணிந்த மகளிரும் இன்று உன்னைப் பறிக்க மாட்டார்கள்; யாழின் கோட்டினாலே பாணன் கொடியை வளைத்து உன்னைப் பறித்துச் சூடமாட்டான்; பாடினியும் உன்னை அணிய மாட்டாள். தனது ஆண்மை வெளிப்படப் பகைவரை எதிர்நின்று வென்ற வன்மை மிக்க வேலைக் கொண்ட சாத்தன் இறந்த பிறகு ஒல்லையூர் நாட்டில் முல்லை மலரே ! நீ மட்டும் ஏன் பூத்தாய்?”

குடவாயிற் கீரத்தனாரின் அவலம்

முல்லை ஒவ்வொரு நாளும் பூக்கிறது. அதற்கு இன்ப துன்பமில்லை. ஆனால் நாட்டில் உள்ளவர்கள் சாத்தன் இறப்பால் துயருற்றனர். கீரத்தனார் தாமும் துயருற்றார்.

வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை

முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே

என்று கேட்டார் புலவர். நாடு முழுவதும் துயருற்றிருக்கும் போது நீ ஏன் மலர்ந்தாய் என்பது புலவர் வினா. அஃறிணைப் பொருளைப் பார்த்து இவ்வாறு கேட்பது ஓர் இலக்கிய மரபு. “நகுவை போலக் காட்டல் தகுமோ மற்றிது தமியோர் மாட்டே” என்று குறுந்தொகை (162)யில் தலைவன் முல்லைப் பூவைப் பார்த்துக் கேட்கின்றான். ‘தனித்திருக்கின்றவர்களைப் பார்த்து முல்லை மலரே! சிரிப்பதுபோல மலர்தல் தகுமா’ என்பது இதன் பொருள்.

4.6 இளமை நினைவுகள் (243ஆம் பாட்டு)

243ஆம் பாட்டு இனி நினைந்து எனத் தொடங்குவது; பதினான்கு அடிகளை உடையது. இப்பாடலைப் பாடிய புலவர் தொடித்தலை விழுத்தண்டினார்.

பாட்டின் சூழல்

அழகான ஒரு குளக்கரை. குளம் ஆழமாக உள்ளது. குளக்கரையில் உள்ள பெருமரங்களின் கிளைகள் குளத்தின் நீர்ப்பரப்பை நோக்கி வளைந்திருக்கின்றன.. கரையில் முதியவர் ஒருவர் நிற்கிறார். நரையும் திரையும் அவரிடம் மிகுந்துவிட்டன. உடல் வளைந்துவிட்டது. எனவே கையில் வளைந்த பிடியைக் கொண்ட ஒரு கோலை ஆதரவாக வைத்திருக்கின்றார். அவரால் தொடர்ந்து பேசக்கூட முடியாது. ஓரிரண்டு சொற்களைப் பேசுவதற்குள் இருமல் வந்துவிடும். ஆனால் அந்த நாளில் அவர் இப்படியா இருந்தார்? சிறுவனாக இருந்த போது இந்த மரத்தின் கிளையில் ஏறிக் குளத்தில் ‘துடும்’ எனக் குதித்து மூழ்கி நீராடி மணலை அள்ளிக் காட்டியது உண்டல்லவா? இப்படி நினைக்கிறார் முதியவர். இந்தச் சூழலில் பாட்டுப் பிறக்கிறது.

4.6.1 பாட்டின் கருத்து “இப்பொழுது நினைத்தால் வருத்தமாக உள்ளது. மணல் செறிந்த கரையில் செய்யப்பட்ட பொம்மைக்குப் (வண்டற்பாவை) பூவைப் பறித்துச் சூட்டி மகளிர் விளையாடுவர். அவரோடு கைகோத்துக் கொண்டு, தழுவிய போது தழுவியும், அசையும் போது அசைந்தும் மனத்தில் ஒளிவு மறைவு இல்லாமல் வஞ்சனையின்றிச் சிறுவர் விளையாடுவர். அச்சிறுவர்களில் ஒருவனாக உயர்ந்த கிளைகளைக் கொண்ட மருத மரத்தின் நீரில் வந்து படியும் கிளையிலே ஏறுவேன்; கரையிலே நிற்பவர் வியக்குமாறு, அலையெழுந்து நீர்த்துளிகள் தெறிக்க ஆழமிகுந்த மடுவில் (நீர்நிலையில்) துடுமென்று குதிப்பேன். மூச்சடக்கி ஆழத்தில் சென்று மணலைக் கையிலே அள்ளி வந்து காட்டுவேன். எதனையும் ஆழ்ந்து எண்ணிப் பாராத அந்த இளமை இப்போது இல்லையே என்பது இரங்கத்தக்கது. இப்போது பூண் மாட்டிய தலையைக் கொண்ட பெரிய கோலை ஊன்றிக்கொண்டு தளர்ந்து போய் இருமலுக்கிடையில் சில சொற்களைப் பேசும் பெரிய முதுமை கொண்ட எனக்கு அந்த இளமை எங்கே போயிற்றோ என நினைக்க வருத்தமாக உள்ளது.” என்பது இப்பாட்டின் கருத்தாகும்.

தொடித்தலை விழுத்தண்டினார்

இப்பாட்டை எழுதிய புலவரின் பெயர் அறியப்படவில்லை. ஆனால் ஒருவர் அடைந்த முதுமையை மிக அழகாக வருணித்துள்ளார்.

தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று

இருமிடை மிடைந்த சிலசொல்

பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே

என்று கூறும் போது முதியவர் கொண்ட கோலைத் ‘தொடித்தலை விழுத்தண்டு’ என்றார். பெயர் அறியப்படாத இப்புலவருக்கு இந்த அரிய தொடரே பெயராகி விட்டது. இவருடைய பெயர் ‘தொடித்தலை விழுத்தண்டினார்’ என்றே குறிக்கப்பட்டுவிட்டது.

39

4.7 மனைவி இறந்த துயர் (245ஆம் பாட்டு)

245ஆம் பாட்டு யாங்குப் பெரிதாயினும் எனத் தொடங்குவது; ஏழடிகளை உடையது. இப்பாட்டைப் பாடியவர் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்பவர்.

பாட்டின் சூழல்

சேரமான் மாக்கோதை சேர நாட்டை ஆண்ட அரசன். தன் மனைவி இறந்துபட்ட நிலையில் இச்சேரன் அழுது புலம்பி ஆற்றாமல் பாடிய பாட்டு இது. மனைவி இறந்து அவளைத் தீப்படுத்திய சூழலில், அவளைப் பிரிந்து வாழ முடியாத பெருந்துயரச் சூழலில் சேரமான் அரிய இப்பாட்டைப் பாடியுள்ளான்.

4.7.1 பாட்டின் கருத்து “எவ்வளவு பெரியதாக இருந்தாலும் என் துன்பத்தின் எல்லை என்பது எது? என் உயிரைப் போக்கிவிடக் கூடிய வலிமை என் துன்பத்திற்கு இல்லாது போயிற்று. கள்ளிச் செடிகள் வளர்ந்த ஊர்ப்புறக் காட்டில் வெட்ட வெளிக்கண் தீ மூட்டப்பட்டது; சிறிய விறகைக் கொண்ட படுக்கையில் ஒளி பொருந்திய தீப்பரவுமாறு செய்யப் பெற்றது; என் மனைவி மேலுலகம் போய்விட்டாள். அவள் இறந்த பிறகும் நான் உயிரோடு கூடி வாழ்கின்றேன். இவ்வுலகப் பண்பு இவ்வாறு இருக்கின்றதே!” என்பது பாட்டின் கருத்து.

மாக்கோதையின் மாண்பு

சங்க காலத்தில் கணவன் இறந்தபின் அவனோடு உயிர் துறந்த பெண்ணைக் குறித்துச் செய்தி உள்ளது. கணவன் இறந்த பின் கைம்மை நோன்பு ஏற்ற மகளிரைப் பற்றிய செய்தியும் உண்டு. இப்பாட்டு, மனைவி இறந்த பின்னும் இருக்கின்றேனே எனப் புலம்பும் ஒரு கணவனைக் காட்டுகிறது. இதனைப் பாடிய மாக்கோதை ‘என் உயிர் போகவில்லையே’ என வருந்துகின்றான். அரசக் குடியிற் பிறந்தவன் இவ்வாறு வருந்துவது எண்ணத் தக்கது. மனைவியிடத்து மாளாக் காதல் கொண்ட மாக்கோதையின் மாண்பைக் கூறுவது இப்பாட்டு.

4.8 பாடல்களின் திணை, துறை விளக்கம்

இங்குக் குறித்த எட்டுப் பாடல்களும் துன்பச் சுவை உடையனவே. இவற்றின் திணை துறை குறித்த பட்டியல் வருமாறு:

வரிசை எண்                       பாட்டு எண்       பாட்டின் தொடக்கம்                  திணை                            துறை

1.                                                       226                 செற்றன்றாயினும்           பொதுவியல்                 கையறுநிலை

2.                                                      228                 கலஞ்செய் கோவே            பொதுவியல்               ஆனந்தப் பையுள்

3.                                                      229                 ஆடியல் அழற் குட்டத்து    பொதுவியல்               ஆனந்தப் பையுள்

4.                                                      235                 சிறியகட் பெறினே               பொதுவியல்                   கையறுநிலை

5.                                                      239                  தொடியுடைய தோள்             பொதுவியல்                கையறுநிலை

6.                                                      242                  இளையோர் சூடார்                  பொதுவியல்                கையறுநிலை

7.                                                     243                    இனிநினைந்து                        பொதுவியல்              கையறுநிலை

8.                                                     245                     யாங்குப் பெரிதாயினும்           பொதுவியல்             கையறுநிலை

இவை எட்டுப் பாடல்களுக்கும் திணை பொதுவியல். வெட்சி முதலாகப் பாடாண் ஈறாகக் கூறப்பட்ட ஏழு திணைக்கும் பொதுவானவற்றைக் கூறுதலாலும், மனிதர் அனைவர்க்கும் பொதுவாக உரிமையுடைய செய்திகளைக் கூறுவதாலும் இவை பொதுவியல் எனப்பட்டன.

பாடல்கள் 228, 229 மட்டும் ஆனந்தப் பையுள் என்ற துறை உடையன. சுற்றத்தார் வருந்திக் கூறுவது ஆனந்தப் பையுள் என்னும் துறையாகும். இவ்விரு பாடல்களில் முறையே கிள்ளிவளவனையும், மாந்தரஞ் சேரலையும் இழந்து வருந்திய நிலையில் பாடியமையின் இவை ஆனந்தப் பையுள் துறை பெற்றன. ஆனந்தம், பையுள் ஆகிய இருசொற்களும் அக்காலத்தில் வருத்தத்தைக் குறிக்க வழங்கின.

எஞ்சிய ஆறு பாடல்கள் (226, 235, 239, 242, 243, 245) கையறு நிலைத் துறைக்குரியன.

செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்

கையறவு உரைத்துக் கைசோர்ந் தன்று

எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும். தம் மன்னன் இறந்ததற்கு வருந்திப் பாடுவது கையறு நிலை எனக் குறித்தாலும், எந்த இழப்பையும் எண்ணி வருந்துவது கையறு நிலைத் துறைக்குரியது. இந்த ஆறு பாடல்களில் 226, 235, 239, 242 ஆகிய நான்கும் மன்னர்கள் இறப்புக்கு வருந்திப் பாடியவை. 243ஆம் பாட்டு இளமை போயிற்றே என்று வருந்திப் பாடியது. 245ஆம் பாட்டு வேந்தன் ஒருவன் தன் மனைவியின் இறப்புக்கு வருந்திப் பாடியது.

4.9 தொகுப்புரை

வாழ்வு நிலையற்றது என்று பழந்தமிழர் கருதினர். எல்லாம் இறந்தாலும் இந்தச் சுடுகாட்டுக்கு இறப்பில்லை என்று பாடினார்கள் அவர்கள். உடம்பு நிலையாமையை மட்டுமல்லாமல், செல்வம், இளமை ஆகியனவும் நில்லாமல் மறையக் கூடியன என்று கூறி, வாழும் போது நல்லன செய்யத் தூண்டினர். இவ்வெட்டுப் பாடல்களும், மனிதர்களுக்கு வாழ்க்கையின் உண்மை இயல்பை எடுத்துரைத்தன.

மேலும் சிறப்புச் செய்திகளாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற இருபெரு வேந்தர்களைக் குறித்த பாடல்களை இப்பகுதியில் படிக்கும் நீங்கள், அதியமான், ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் போன்ற குறுநில மன்னர்களைப் பற்றிய பாடல்களையும் படிக்கின்றீர்கள்.

இப்பாடல்களிலிருந்து அறியப்படுவன யாவை?

1. புகழ் பலராலும் விரும்பிப் போற்றப்படுவது.

2. இளமையும் உடம்பும் நிலையாதவை.

3. ஒன்றி உடன் வாழ்ந்த அன்பு மறக்க முடியாதது என்பவையாகும்.

பாடம் - 5

பதிற்றுப்பத்து – 1

5.0 பாட முன்னுரை

இனிய மாணவர்களே! புறநானூறு குறித்த நான்கு பாடங்களைப் படித்துள்ள நீங்கள் இப்போது பதிற்றுப்பத்துக் குறித்த இரண்டு பாடங்களைப் படிக்கப் போகின்றீர்கள். அவ்விரண்டு பாடங்களில் இது முதற்பாடம்.

மாணவர்களே! சங்க இலக்கியம் என்பன பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகிய பதினெட்டு நூல்கள் என்பதை அறிவீர்கள். எட்டுத் தொகையில் பதிற்றுப்பத்து ஒரு நூலாகும்.

மூவேந்தர்களுள் சேரர் ஓர் இனம் என்று அறிவீர்கள். பத்துச் சேர அரசர்களைப் பற்றிப் பத்துப் புலவர்கள் ஒருவருக்குப் பத்துப் பாடல்களாகப் பாடியுள்ள நூறு பாடல்களின் தொகுப்பாக இந்நூல் விளங்குகின்றது. பத்து + பத்து = பதிற்றுப்பத்து (இடையில் சாரியை இடம் பெற்றது). இன்று இந்நூலில் முதற்பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. எஞ்சிய எட்டுப் பத்துகளின் எண்பது பாடல்கள் கிடைத்துள்ளன.

இரண்டாம் பத்தைக் குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குறித்துப் பாடியுள்ளார். மூன்றாம் பத்தைப் பாலைக் கௌதமனார் பல்யானைச் செல்கெழு குட்டுவன் மீது பாடியுள்ளார். நான்காம் பத்தைக் காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைக் குறித்து இயற்றியுள்ளார். ஐந்தாம் பத்தைப் பரணர் செங்குட்டுவனைக் குறித்ததாகப் படைத்துள்ளார். ஆறாம் பத்தைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மீது புனைந்துள்ளார். ஏழாம் பத்தைக் கபிலர் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் குறித்து இயற்றியுள்ளார். எட்டாம் பத்தை அரிசில் கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியதாக ஆக்கியுள்ளார். ஒன்பதாம் பத்தைப் பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரல் இரும்பொறையின் மீது புனைந்துள்ளார். இவற்றுள் ஐந்தாம் பத்து இங்கு உங்களுக்கு முதல் பாடமாக இடம் பெற்றுள்ளது.

5.1 பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்து பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்து, பரணரால் செங்குட்டுவன் மீது பாடப்பெற்றது என்பதை முன்னர்க் கண்டோம். பரணர் சங்க காலப் புலவர்களில் புகழ் மிக்கவர். சங்க இலக்கியங்களில் இவர் எண்பத்தாறு பாடல்களைப் பாடியுள்ளார். இவருடைய பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் மிகுதியாக இடம் பெறும்.

இப்பாட்டின் தலைவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன். இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன். மேற்குக் கடலில் வணிகக் கப்பல்களைக் கொள்ளையடித்துத் தொல்லை செய்து வந்தனர் கடற்கொள்ளையர்கள். இவர்களைத் தன் கப்பல் படை கொண்டு அடக்கி வெற்றி பெற்றான். இதனால், இவன் கடல் பிறக்கோட்டிய என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். இப்பத்துப் பாடல்களில் பரணர் செங்குட்டுவனின் வீரம், கொடை ஆகிய இருபெரும் பண்புகளைப் போற்றுகிறார்.

5.1.1 ஐந்தாம் பத்தின் பதிகம் பதிகம் என்பது முன்னுரை என்று அறிவீர்கள். பதிற்றுப் பத்தின் ஒவ்வொரு பத்துக்கும் ஒரு பதிகம் உள்ளது. இப்பதிகம் பாட்டுடைத் தலைவனைப் பற்றிய செய்திகளைக் கூறுவது. பாடல்களில் இல்லாத செய்திகளும் இப்பதிகத்தில் இடம்பெறக் காணலாம். ஐந்தாம் பத்தின் பதிகம் “செங்குட்டுவன், நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மணக்கிள்ளியின் மகளுக்கும் பிறந்தவன். கண்ணகியைத் தெய்வச் சிலையாக வடித்தற்குரிய கல்லைக் கொண்டு வருவதற்காக இமயம் சென்றவன். வடவாரிய மன்னரை வென்றவன். பழையன் என்ற குறுநில மன்னனின் காவல் மரமாகிய வேம்பினைத் துண்டுகளாக ஆக்கிப் பகை வேந்தனின் உரிமை மகளிர் கூந்தலைக் கயிறாக்கி யானைகளைக் கொண்டு இழுத்து வந்தவன்” என்று கூறுகின்றது. கண்ணகி சிலைக்குரிய கல்லெடுத்து வந்த செய்தி உள்ளே இருக்கும் பத்துப் பாடல்களிலும் இல்லை என்பது குறிக்கத்தக்கது. அந்நிகழ்ச்சி பதிற்றுப்பத்துப் பாடிய தன் பின் நிகழ்ந்திருக்கலாம் என்பர் அறிஞர்.

5.2 முதல் பாட்டும் இரண்டாம் பாட்டும்

பதிற்றுப் பத்தின் ஐந்தாம் பத்திலுள்ள சுடர்வீ வேங்கை மற்றும் தசும்பு துளங்கிருக்கை எனும் முதல் இரண்டு பாடல்களைப் பற்றிய செய்திகளைப் பார்க்கலாம்.

5.2.1 சுடர்வீ வேங்கை (முதல் பாட்டு) பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும், அப்பாட்டில் இடம் பெறும் அழகிய ஓர் அரிய தொடரே பெயராக வைக்கப் பெற்றுள்ளது. பத்துப் பாட்டில் மலைபடுகடாம் என்னும் பாட்டும் இம்முறையில் பெயர் பெற்றது. கவிதையைச் சுவைப்பதிலும், கவிதைத் தன்மை மிக்க கற்பனைகளைப் போற்றுவதிலும் தமிழர்களுக்கு அந்நாளில் இருந்த ஈடுபாட்டைக் காட்டும் அடையாளங்களே இவை. சுடர்வீ வேங்கை என்பதற்கு ‘ஒளிச் சுடர்கள் ஏற்றியது போன்ற பூக்கள் கொண்ட வேங்கை மரம்’ என்பது பொருளாகும்.

பாட்டின் கருத்து

”இசையை எழுப்புவதற்குரிய நரம்புகள் கட்டப் பெற்ற வளைந்த கோட்டை உடைய யாழை இளைய மகளிர் சுமந்து வருவர். பண்ணோடு பொருந்திய முழவு, ஒரு கண்ணை உடைய மாக்கிணை, மற்றும் ஆடல் துறைக்கு உரியதும், கணுவை இடைவிட்டு மூங்கிலால் அறுத்துச் செய்யப்பட்டதுமான பெருவங்கியம் (பிற இசைக் கருவிகள்) ஆகிய இவற்றையெல்லாம் ஒரு சேரக் கட்டி மூட்டையாக்குவர். அம்மூட்டையைத் தோளில் தொங்கும் காவடியில் ஒரு பக்கத்தில் கட்டி, அதை இளைஞர்கள் தூக்கிக் கொண்டு அச்சம் மிக்க காட்டு வழியில் என்னோடு நடந்து வருவர்.

நடைவருத்தம் மறப்பதற்காக அவர்கள் கடவுளை வாழ்த்திக் குரல் எழுப்புவர். அந்த ஓசை புலியின் உறுமல் போல் கேட்கும். அதைக் கேட்டு அங்குள்ள வலிமை மிக்க யானை, ஏற்றிய சுடர்கள் போல ஒளி வீசும் பூக்களை உடைய வேங்கை மரத்தை வீரம் மிக்க புலியின் தோற்றம் என்று தவறாகக் கருதிச் சினம் கொள்ளும்; வேங்கை மரத்தின் கிளையை வளைத்துப் பிடித்துப் பிளக்கும்; அதனைத் தன் தலையிலே அணிந்து கொள்ளும். பகைவர் மீது போர் கருதிச் செல்லும் வீரர் கையில் தண்டாயுதத்தைத் தாங்கி ஆரவாரிப்பது போல அந்த யானை பேரோசை எழுப்பும். அந்த ஓசை சுரபுன்னை மரம் நிறைந்த காடு முழுவதும் கேட்கும்.

மழை இல்லாமையால் பசையற்றுக் காய்ந்த மூங்கில்கள் உள்ள வழிகள் பல. அவற்றைக் கடந்து திண்மை மிக்க தேர்களையும் நல்ல புகழையும் கொண்ட உன்னைக் காண வந்தேன்.

பகைவரை வெல்வதாக உன்னுடன் சேர்ந்து வஞ்சினம் (சபதம்) கூறியவர்கள் உன் படை வீரர்கள். அதைத் தவறாது முடித்த வாய்மை மிக்கவர்கள் அவர்கள். அவர்களோடு சென்று முரசு முழங்கும் போரில் பகை அரசர் வீழ்ந்து படுமாறு போர் செய்தாய். நட்புக் கொண்ட அரசர் ஆக்கம் பெறச் செய்தாய். பகைவருடைய தலைகளை உலக்கையால் மிளகை இடிப்பதைப் போல் நீ ஏந்திய தோமரத்தால் (மரத்தால் ஆன ஆயுதம்) இடித்து அழித்தாய். முழங்குகின்ற கடல் போல உன் முரசு குறுந்தடியால் அடிக்கப்பட்டு முழங்கும். தலையாட்டம் என்னும் அணியை அணிந்த வெள்ளைக் குதிரை மீது ஏறி வருபவன் நீ. கடலின் அலைகள் திவலைகளாக (துளிகளாக) உடைந்து போகுமாறு நடந்து சென்று போர் செய்து வருந்தின உன் கால்கள். அக்கால்கள் தாம் கொண்ட வருத்தத்தை நீங்குமா? சொல்வாயாக.

இசைக்கருவிகளை எல்லாம் இளைஞர் சுமந்துவர நான் காடு பல கடந்து உன்னைக் காண வந்தேன். அதற்கே என் கால்கள் வருந்தினவே! கடலில் சலியாது போர் செய்த உன் கால்கள் மிக வருந்தியிருக்குமே” என்று பாணன் ஒருவன் கேட்பது போல் புலவர் இப்பாடலைப் பாடியுள்ளார்.

மழைபெயல் மாறிய கழைதிரங்கு அத்தம்

ஒன்றுஇரண்டு அலபல கழிந்து

(கழை = மூங்கில்; திரங்கு = காய்ந்து வற்றிய; அத்தம் = வழி)

பாணன் கடந்து வந்த பாலை வழிகள் பல. அவற்றின் கொடுமையை ஒரே வரியில் அழகாகக் கூறுவது எண்ணத்தக்கது.

பாட்டின் துறை முதலியன

பதிற்றுப்பத்தின் பாட்டு ஒவ்வொன்றுக்கும் உரியனவாகத் துறை, வண்ணம், தூக்கு, பெயர் ஆகிய நான்கும் கூறப்படும். இப்பாட்டுக்கு அவை வருமாறு:

துறை : காட்சி வாழ்த்து

வண்ணம் : ஒழுகு வண்ணம்

தூக்கு : செந்தூக்கு

பெயர் : சுடர்வீ வேங்கை

காட்சி வாழ்த்து என்பது அரசனை நேரிற் கண்டு வாழ்த்துதல். வண்ணம் என்பது பாட்டின் ஓசை நயம். ஒழுகு வண்ணம் என்பது ஆற்றின் ஓட்டம் போன்ற ஓசை. தூக்கு என்பது பாட்டு என்னும் பொருளுடையது. செந்தூக்கு என்பது ஆசிரியப்பாவாகும். பாட்டின் பெயர் சுடர்வீ வேங்கை.

ஏற்றி வைத்த சுடர்கள் போல ஒளி வீசும் மலர்களை உடைய வேங்கை என்ற அழகான கற்பனையைக் கொண்ட தொடராக இருப்பதால், இது பாட்டுக்கு உரிய தலைப்பாகச் சூட்டப்பட்டது.

5.2.2 தசும்பு துளங்கிருக்கை (இரண்டாம் பாட்டு) தசும்பு துளங்கிருக்கை என்பது இப்பாட்டின் பெயர். கள்குடங்கள் வைக்கப்பெற்ற அசைகின்ற இருக்கை என்பது பொருள்.

கள் நிரம்பிய மிகப் பெரிய குடங்கள் உருண்டு விடாதபடி அவற்றை ஓர் இருக்கையில் வைப்பார்கள். வீரர்கள் மீண்டும் மீண்டும் குடங்களிலிருந்து முகந்து கள்ளை உண்பார்கள். அதனால் கள் உண்டவர்கள் மயக்கத்தால் ஆடுவது போலவே கள் கொண்ட குடங்களும் ஆடும். இந்த இருக்கை கள் குடத்தின் ஆடல் மேடை போல் தோன்றும். அதுவும் சேர்ந்து ஆடும். வெற்றிக் களிப்பில் வீரர் அனைவரும் கூத்தாடும் போது, குடமும் இருக்கையும் ஆகிய உயிர் இல்லாத அஃறிணைப் பொருள்கள் கூட மகிழ்ந்து ஆடும் என்னும் அழகிய நயம் தோன்ற இத்தொடர் அமைந்துள்ளது. அழகிய கற்பனையைக் கொண்ட இத்தொடர் பாடலில் உள்ளதால் அதுவே, பாடலின் பெயர் ஆகச் சூட்டப்பட்டுள்ளது.

பாட்டின் கருத்து

”கருமையான பனம்பூ மாலையையும் பொன்னாலான வீரக் கழலையும் சூடிய அஞ்சாத வீரர்கள் மார்பில் வீரத் தழும்பு கொண்டிருப்பர். இதுவே விழுப்புண் எனப்படும். குளத்தில் மீனைப் பிடிக்கப் பாய்ந்து மேலே எழும் சிரல் என்னும் மீன்கொத்திப் பறவையின் அலகைப் போன்ற நீண்ட வெண்மையான ஊசியால் தைக்கப்பட்ட விழுப்புண்களால் உண்டானவை அத்தழும்புகள். அத்தகைய வீரர்கள் தம்மைப் போல மார்பில் புண்பட்ட வீரனோடு மட்டுமே தும்பைப் பூச்சூடிப் போர் புரிவர்; மற்றவர்கள் தமக்கு இணையான வீரர்களாய் இருந்தால் தும்பை சூடாமல் போர் செய்வர். இத்தகைய வீரர்களுக்குத் தலைவனே! நல்ல நெற்றியை உடைய இருங்கோ வேண்மாளுக்குக் (அரசிக்கு) கணவனே! பெரிய யானைகளையும் வெல்லுகின்ற போரையும் கொண்ட செங்குட்டுவனே!

வலிமை மிக்க போர்களில் வெற்றி பெற்றபின், இஞ்சியையும் மணமிக்க மலர்களையும் கலந்து தொடுத்த மாலை சூட்டிய சந்தனம் பூசிய கள்ளின் குடங்களிலிருந்து வீரர்களுக்கும் வெற்றியைப் பாடும் கூத்தர்களுக்கும் அளவின்றிக் கள்ளை அளிப்பாய். அக்கள் இனிய சுவையுடையது; நீலமணி போன்றது. அக்கள் இருக்கும் குடங்கள் ஆடும். அதனால் இருக்கையும் ஆடும். கூத்தர்களின் சுற்றத்தார் மகிழுமாறு நீ அவர்களுக்குத் தலையாட்டம் அணிந்த குதிரைகள் பலவற்றைப் பரிசிலாகக் கொடுத்தாய்.

உலகம் அஞ்சும்படியாகப் பல அரசர்களை வென்ற பின், இனி வெல்லுதற்கு யார் உள்ளார் என உன் வீரர்கள் உலகமெலாம் செல்லவும், உன் தேர் வீரர்களும், யானைமேல் ஊர்ந்து வரும் அரசரும் உன்னைப் பாராட்டவும், உன்னால் துரத்தி அடிக்கப்பட்ட கடலின் பெரிய நீர்ப்பரப்பில், நுரையாகிய வெள்ளைத் தலைகளைக் கொண்ட நீர்த்துளிகள் உடைந்து சிதறும்படி, மேலும் மேலும் வந்து மோதும் கடல் அலைகளை விட எண்ணிக்கையில் அதிகமான குதிரைகளை அல்லவா நீ இரவலர்க்கு வழங்கியுள்ளாய்!”

இவ்வாறு செங்குட்டுவனின் படை வீரத்தையும், கொடைத் திறத்தையும் பரணர் புகழ்கிறார்.

எண்ணிக்கை மிகுதிக்கு, கடலின் அலைகளை உவமை காட்டுவது சிறப்பாக உள்ளது அல்லவா? பிடரி மயிர் சிலிர்த்துக் குதித்து ஓடிவரும் குதிரைகளுக்கு நுரைபொங்கக் குதித்து வரும் கடல் அலைகளை உவமையாகும்படி, குறிப்பாகப் பாடி இருப்பதும் சிறந்த கற்பனை அல்லவா?

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை செந்துறைப் பாடாண் பாட்டு. செந்துறைப் பாடாண் என்பது தேவர்களை வாழ்த்தித் தொழுதல் போல் இல்லாமல் இயல்பாக மக்களைப் போற்றுவது போல் புகழ்தல். வண்ணமும் தூக்கும் முன்பாட்டுக்குக் கூறிய அவையேயாம். பாட்டின் பெயர் தசும்பு துளங்கிருக்கை.

5.3 மூன்றாம் பாட்டும் நான்காம் பாட்டும்

ஏறாஏணி என்ற பாடலும், நோய்தபு நோன்தொடை என்ற பாடலும் முறையே மூன்றாம் நான்காம் பாடல்களாக உள்ளன. அவை பற்றிய செய்திகள் கீழே கூறப்படுகின்றன.

5.3.1 ஏறா ஏணி (மூன்றாம் பாட்டு) கோக்காலி என்பது பொதுவாக ஏறுவதற்குப் பயன்படும் பெரிய உயர்ந்த நாற்காலி போன்ற ஏணி ஆகும். ஆனால் இந்தக் கோக்காலி ஏறுவதற்குப் பயன்படாமல் கள்குடம் வைக்கும் இருக்கையாய்ப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இது ஏறா ஏணி என்று நயமாகக் குறிப்பிடப்படுகிறது. அதுவே பாடலின் பெயராக அமைந்தது.

பாட்டின் கருத்து

”கவரிமானின் முடியைத் தம் மேகம் போன்ற கூந்தலில் கலந்து முடித்த கொண்டையினையும் ஊஞ்சலாடும் விருப்பத்தையும் உடைய, அணிகளை அணிந்த மகளிர் இமயமலைச் சாரலில் வாழ்கின்றனர். அவர்கள் காட்டில் யானைகள் செல்லுதலைக் காண்பர். உரல் போன்ற பெரிய காலையும், ஒளிமிக்க தந்தத்தையும் பெரிய கையையும் உடைய ஆண் யானைகளுடன் புதிதாக வந்த பெண் யானைகள் எத்தனை என அவர்கள் எண்ண முயல்வர். பின்பு அவை எண்ணிக்கைக்கு அடங்காமையால், எண்ணுவதைக் கைவிடுவர். அத்தகைய காடுகளில் கடவுளர் தங்கும் இடங்கள் இருக்கும். அத்தகு இடங்களைக் கொண்ட இமயமலையை வடக்கு எல்லையாகவும், குமரி முனையைத் தெற்கு எல்லையாகவும் கொண்ட அகன்ற நிலப்பகுதியில் ஆட்சி செய்த பகையரசர்களின் புகழ் மிக்க பல நாடுகளையும் வென்று, அவற்றின் நலத்தைக் கெடுத்தவனே! போரில் எப்போதும் வெல்கின்ற படையைக் கொண்ட, பொன்னாலாகிய மாலை அணிந்த குட்டுவனே!

பெரிய மழை பெய்யாமல் போவதால் காட்டில் உள்ள மூங்கில்கள் வாடி உலரும்; குன்றுகள் எல்லாம் பசும்புல் இல்லாமல் கெடும்; சூரியனின் வெயில் மிகுதியாய்த் தோன்றும்; அருவிகள் நீரற்றுக் கிடக்கும். இத்தகைய வறண்ட காலத்திலும் வற்றாத உன் பேரியாற்றில் கரைகள் உடைந்து நீர் ஓடும்படியாகவும், புதிய ஏரைப் பூட்டி உழுகின்ற உழவர்கள் கொன்றைப் பூவைச் சூடி மகிழும்படியாகவும், முழங்கும் மேகம் இடித்து மழையை மிகுதியும் பெய்தது போல, நீ உன்னை அடைந்த வறியவர்களுக்கு வாரி வழங்குவாய். அவர்களை உண்ணச் செய்து நீயும் உடன் உண்பாய். பாணர், கூத்தர் முதலானோர் மகிழ்ச்சி பெறப் பொன்னை அளவு இல்லாமல் கொடுப்பாய்.

அசைகின்ற சிறகைக் கொண்ட கின்னரப் பறவையின் இனிய இசையை வென்ற யாழின் இசையோடு ஒத்த குரலை உடைய விறலியர்க்குப் பல பெண் யானைகளைப் பரிசாகத் தருவாய். துய்யினை உடைய வாகைப் பூவை மேலே வைத்து, நுண்ணிய கொடியில் பூத்த உழிஞைப் பூவைச் சூடுகின்ற வெற்றி வீரர்கள் பெற்று மகிழ, கொல்லும் தொழிலையுடைய ஆண் யானைகளைப் பரிசிலாக அளிப்பாய். கணுக்களைக் கொண்ட நுண்ணிய கோலை ஏந்திச் சென்று தெருக்களில் உன் குலத்தைப் புகழ்ந்து வெற்றியை வாழ்த்திப் பாடும் பாணன் பெறுமாறு குதிரைகளைத் தருவாய். இவ்வாறு நீ கொடைத் தொழிலையும் போர்த் தொழிலையும் சமமாக விரும்பியிருக்கின்றாய். பகைவராலும் புகழப்படும் நல்ல கல்வி அறிவு ஒழுக்கங்களை நீ பெற்றுள்ளாய்.

வள்ளல் தன்மை மிகுந்த கையை உடையவனே! தூங்கலோசை உடைய பாட்டிற்குப் பொருந்த முழவு இசை முழங்குகிறது. உண்ணுதற்குரிய இறைச்சியைச் சுடும் புகை நாற்றமும், வெப்பமும் நீங்காமல் உள்ளன. நிரம்புதலும் குறைதலும் அறியாத கள் குடங்கள் கோக்காலியில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் கள் நிரம்பி நெடுநேரம் இருப்பதில்லை. வீரர்கள் முகந்து பருகிக் கொண்டே இருக்கின்றனர். அவை மீண்டும் நிரப்பப்படுவதால் குறைந்தும் நெடுநேரம் இருப்பதில்லை. ஏறாத ஏணியில் கள்ளின் மட்டம் மட்டும் எப்படித்தான் ஏறுகின்றதோ? இவ்வாறு விளங்கும் உன் செல்வப் பெருமையெல்லாம் கண்டேன். மகிழ்ச்சிப் பெருக்கைக் கண்டேன்.”

இவ்வாறு குட்டுவனை வாழ்த்துகிறார் பரணர்.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை இயன்மொழி வாழ்த்து. இயன்மொழி வாழ்த்து என்பது கொடை முதலான இயல்புகளைக் கூறி வாழ்த்துதல். வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரிய ஒழுகு வண்ணமும் செந்தூக்கும். பாட்டின் பெயர் ஏறா ஏணி.

5.3.2 நோய்தபு நோன்தொடை (நான்காம் பாட்டு) இப்பாட்டின் பெயர் நோய்தபு நோன்தொடை. இதன் பொருள் நோயில்லாத ஆற்றல் மிக்க உடம்பு என்பதாம். சேரனின் உடல் வலிமை, அழகு, நலம் இவற்றை மிகச் சிறிய தொடரால் வாழ்த்தியமையால் இப்பாட்டு இப்பெயர் பெற்றது.

பாட்டின் கருத்து

”நிலத்தை இடிப்பது போன்ற முழக்கத்தோடு, வானத்தைத் தடவுவது போல் உயர்ந்த கொடி தேரில் அசையப் பல போர்களைச் செய்தாய். அப்போர்களில் வென்று பெற்ற பொருள்கள் அரியவை; பெரியவை. ஆனாலும் தனக்கென்று எடுத்துக் கொள்ளாமல் பிறர்க்குக் குறையாமல் வாரி வழங்குபவனே! கனவிலும் பிறரிடம் சென்று என் துன்பம் நீக்குக என்று கேளாதவனே! குற்றமற்ற நெஞ்சத்தையும் பெருமிதமான நடையையும் உடைய தலைவனே!

நுண்ணிய கொடியாகிய உழிஞையின் பூவைச் சூடும் முற்றுகைப் போரில் வல்லவன் அறுகை என்பவன். ஆனால், அவன் மோகூரில் உள்ள பழையன் என்பவனுக்கு அஞ்சி ஓடி ஒளிந்தான். நெடுந்தொலைவில் இருந்தாலும் அறுகை உன்னைத் தன் நண்பன் என்று பலரும் அறியச் சொன்னவன். அதனால் அவனுக்கு உதவ வேண்டி மோகூர் மன்னனாகிய பழையன் என்பவனுடைய அரண்களைத் தெய்வத்தால் அழிக்கப்பட்ட இடம் போல் அழித்தாய். அவன் காவல் முரசைக் கைப்பற்றி அவன் கூறிய வஞ்சினத்தைச் சிதைத்தாய். அவனுடைய காவல் மரமாகிய வேம்பை வெட்டி வீழ்த்தி முரசு செய்வதற்குரிய துண்டுகளாக ஆக்கி வண்டியில் ஏற்றி யானைகளைக் கொண்டு இழுக்கச் செய்தாய். வீரர்கள் வியந்து புகழ்ந்து போற்றும் நோயற்ற உன் வலிமை மிக்க உடம்பை உன்னைப் பாடும் பாடினி கண்டு வாழ்த்திப் பாடுவாளாக.

பசுமையானதும் கொழுப்பற்றதுமான இறைச்சித் துண்டை வைத்த இடத்தை மறந்து விட்ட உச்சிக் கொண்டையை உடைய கோட்டான், கவலையோடு பிற கோட்டான்களையும் வருத்தக் கூவும் இடுகாடு; அங்கு அரசர் பலரை வென்று இவ்வுலகை ஆண்ட மன்னர் பலர் தாழியிலே இடப்பட்டு வன்னி மரத்தின் நிழலை உடைய இடுகாட்டு மன்றத்திலே புதைக்கப்பட்டனர். நோயற்ற உன் உடம்பினை அந்தத் தாழியாகிய மட்குடம் காணாது நீங்குவதாக. அதாவது, என்றும் நீ இறவாது நீடு வாழ்வாயாக” என்று பரணர் பாடியுள்ளார்.

அறுகை என்ற குறுநில மன்னனுக்காகச் செங்குட்டுவன் பழையன் மீது படையெடுத்து அவன் அரண்களை அழித்தான் என்ற வரலாற்றுக் குறிப்பு இப்பாட்டால் கூறப்பட்டது.

தபு என்றால் கொல்லும் என்று பொருள். நோய்தபு வன்மையான உடம்பு என்றால், நோயையே கொன்று வெற்றி கொள்ளும் வலிமை மிக்க உடம்பு என்றும் பொருள் தருகிறது. மேலும், போர்செய்து பகைவரை வென்று அடையும் பொருளைக் கொடையாக ஈந்து, பரிசிலர்களாகிய எங்களின் பசி முதலிய நோய்களை அழிக்கும் வலிமை மிக்க உடம்பு என்றும் நயப்பொருள் தருகின்றது. இந்த அருமை மிக்க அழகிய தொடரைக் கொண்டுள்ளதால் இப்பாட்டுக்கு அது பெயராகிறது.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரிய ஒழுகு வண்ணமும் செந்தூக்கும். இவற்றுக்குரிய விளக்கம் முன்னால் கூறப்பட்டது. பாட்டின் பெயர் நோய் தபு நோன்தொடை.

5.4 ஐந்தாம் பாட்டும் ஆறாம் பாட்டும்

ஐந்தாம், ஆறாம் பாடல்களாக இடம் பெற்றிருப்பவை ஊன்துவை அடிசில், கரைவாய்ப் பருதி என்பவையாகும்.

5.4.1 ஊன்துவை அடிசில் (ஐந்தாம் பாட்டு) ஊன்துவை அடிசில் என்பது இப்பாட்டின் பெயர். ஊன் என்பது கறி, இது மாமிசம், இறைச்சி எனப்படும். ஊனோடு குழைத்துச் சமைத்த சோறு என்பது இத்தொடரின் பொருள் இப்பாட்டு சேரன் செங்குட்டுவனின் வீரச் சிறப்பைக் கூறுகின்றது.

பாட்டின் கருத்து

”பொன்னால் செய்யப்பட்ட அழகிய தும்பைப் பூவையும், புற்றில் அடங்கிய பாம்பு போல நெருப்புப் பொறி பறக்கும் அம்பறாத் தூணியில் ஒடுங்கியிருக்கும் அம்புகளையும், வளையும் வில்லையும், வளையாத நெஞ்சையும் யானைகளைத் தாக்கிக் கொல்வதால் நுனி முறிந்த வேலையும் கொண்டவர்கள் உன் வீரர்கள். இவர்கள் செய்யும் போரின்கண், பகையரசர் எழுவரின் முடிப் பொன்னாற் செய்த ஆரத்தை மார்பில் அணிந்து தோன்றும் செங்குட்டுவனே! கேட்பாயாக! ஆழ்ந்த அகழிகளை உடைய மதில் பல கடந்து உட்புகுந்து அழித்த உன் வீரர்கள், அரண்களைக் காக்கும் அங்குள்ள கணைய மரம் போன்ற தம் தோளை உயர்த்தி ஆடுவர். அவர்கள் ஆடும் அக்களத்தில் பிணங்கள் குவிந்து கிடக்கும். இவ்வாறு முன்பும் பல முறை உன் வீரர்கள் வெற்றி பெற்ற களத்தில் துணங்கை என்னும் வெற்றிக் கூத்து நிகழ்த்தியிருக்கின்றனர். சோறு வேறு ஊன் வேறு என்று பிரித்து அறிய முடியாதவாறு ஊன் குழைந்த சோற்றைப் பகைவரை அழித்த வீரர்களுக்குப் பெருவிருந்தாகக் கொடுத்தல் அரசர்களின் வழக்கம். அவ்வாறு செய்த அரசர்களுக்குள் உனக்கு ஒப்பானவர் ஒருவரும் இல்லை.

பகைவரின் குதிரைகள் முதலியன வருவதைத் தடுக்க முள் இட்டு வைத்தலை அறியாத எல்லைப் புறத்தையும், பகைவரின் அம்பு வேகத்தை அடக்கும் கேடயத்தையும் கொண்ட அரசர்களில் நீ ஒப்பு அற்றவன்.

கடல், மேகங்கள் வந்து முகந்து கொள்ளுதலால் குறைந்து போவதில்லை. ஆறுகள் வந்து சேர்வதால் நிரம்பி வழிவதும் இல்லை. காற்றால் அசைக்கப்பட்டு அலைகள் ஓயாமல் உள்ளது அக்கடல். அதன் மீது வேலைச் செலுத்தி, அக்கடலிடத்தே எதிர்த்த பகைவரை வெற்றி கொண்ட உன்னை ஒத்தவர் இனிப் பிறக்கப் போவதில்லை. உன் முன்னோரிலும் ஒருவரும் இல்லை.” இவ்வாறு பரணர் சேரனைப் புகழ்கிறார்.

சோறு வேறு, ஊன் வேறு என்று பிரித்தறிய முடியாதவாறு இரண்டும் ஒன்றாய்க் குழைந்த சோறு ஊன் துவை அடிசில் ஆகும். அந்த உணவை உண்ணும் உன் வீரர்களுக்குத் ‘தம் உடம்பில் உள்ள ஊன் வேறு; நீ தந்த சோறு வேறு’ என்று பிரித்துப் பார்க்காத அளவுக்குச் செஞ்சோற்றுக் கடன் என்னும் நன்றி உணர்வு உள்ளது. அதனால்தான் மிக்க வீரத்துடன் போர் செய்கின்றனர். வெற்றியைக் குவிக்கின்றனர். இந்தக் குறிப்புப் பொருளை உணர்த்தும்படி நயமாக அமைந்துள்ளது இந்தத் தொடர். இதனால்தான் இப்பாடலுக்குப் பெயராக அமைந்தது.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை, வண்ணம், தூக்கு ஆகியன முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டனவே ஆகும். பாட்டின் பெயர் ஊன் துவை அடிசில்

5.4.2 கரைவாய்ப் பருதி (ஆறாம் பாட்டு)

கரைவாய்ப் பருதி என்பது இப்பாட்டின் பெயர். ஓரத்தில் குருதியின் சுவடு படிந்த தேர்ச் சக்கரம் என்பது பொருள். (பருதி = சக்கரம்; கரை = ஓரம், விளிம்பு)

பாட்டின் கருத்து

”நல்ல அணிகலன்களையும் காதில் குழைகளையும் கழுத்தில் மாலையையும் உடைய பெண்கள், ஒளிமிக்க வளையலை அணிந்த முன்கையைக் கொண்டவர்கள்; மணிமாலை விளங்கும் மார்பினை உடையவர்கள்; வண்டு மொய்க்கும் கூந்தலை உடையவர்கள்; அக்கூந்தலைக் கொண்டையாக முடித்தவர்கள் அந்தப் பாடல் மகளிர், அவர்கள் நரம்பால் தொடுக்கப் பெற்ற யாழில் பாலைப் பண்ணை அமைத்துப் பகைவர்க்குப் பணியாத குட்டுவனின் உழிஞைத் திணைச் செயலைப் புகழ்வர். அவர்களுக்குக் குட்டுவன் இனிய கொடை பல அளிப்பான். போர்க்களத்தில் காடுகள் போன்ற தடைவழிகள் பலவற்றின் வழியாகச் செலுத்தப்படும் தேரின் சக்கரத்தின் ஓரத்தில் குருதிக் கறை படியப் பல வீரர்களின் தலைகள் அச்சக்கரத்தில் அகப்பட்டு நலியும். அத்தகைய போர்கள் பலவற்றை வென்ற, கொல்லும் இயல்புடைய யானைகளையுடைய வேந்தன் குட்டுவன். தன் வேற்படையால் கடலை இடமாகக் கொண்டு போர் செய்தோரையும் தோற்றோடச் செய்தான். பெருமை மிக்க அச்செங்குட்டுவனின் புகழைப் பாடிப் பரிசு பெற்றோர் தம் ஊர்க்கு மீண்டு செல்லக் கருத மாட்டார்.

இவ்வாறு சேரன் பரிசில் பெற வரும் கலைஞர்களுக்கு அன்புடன் முகம் மலர்ந்து கொடை வழங்கும் பண்பைப் பரணர் பாராட்டுகிறார். அதே நேரத்தில் தன் பகைவர்களுக்கு எந்த அளவு கடுமை பொருந்தியவன் என்பதை, அவனது தேர்ச்சக்கரத்தை வைத்தே குறிப்பாக உணர்த்துகிறார். இனிய முகம் கொண்ட இவனது தேரின் சக்கரம் இரத்தக் கறை படிந்த வாயாகக் காட்டப்படுகிறது. இந்தச் சிறப்பினால் கரைவாய்ப் பருதி என்னும் தொடர் பாடலின் பெயராக ஆயிற்று.

உழிஞைத்திணை என்பது உழிஞைப் பூவைச் சூடிப் படையெடுத்துச் சென்று பகைவரின் கோட்டை மதிலை வளைத்து முற்றுகைப் போர் செய்வது.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை, வண்ணம், தூக்கு ஆகியன முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டனவே ஆகும். பாட்டின் பெயர் கரைவாய்ப் பருதி.

5.5 ஏழாம் பாட்டும் எட்டாம் பாட்டும்

நன்னுதல் விறலியர் என்ற ஏழாம் பாட்டில் இடம் பெற்றுள்ள செய்திகளையும், பேரெழில் வாழ்க்கை என்ற எட்டாம் பாட்டிலுள்ள செய்திகளையும் பார்ப்போம்.

5.5.1 நன்னுதல் விறலியர் (ஏழாம் பாட்டு) நன்னுதல் விறலியர் என்பது இப்பாட்டின் பெயர். நல்ல நெற்றியை உடைய ஆடுமகளிர் என்பது இதன் பொருள். நன்னுதல் என்னும் சொல் குறிப்பாகக் கற்பில் சிறந்தவள் என்பதை உணர்த்தும் மரபுச் சொல்.

பாட்டின் கருத்து

சேரன் பகைவரை அழித்து வேர் அறுக்கும் செயலில் ஓய்வதில்லை. ஒவ்வொரு முறை அவன் போரிடும் போதும், யானைகளைப் பரிசிலாகப் பெறுவதில் கலைஞர்கள் ஓய்வதில்லை. மலை மேலிருந்து வீழும் அருவி போல மாடங்களின் உச்சியில் இருந்து காற்றால் அலைக்கப் படும் கொடிகள் தெருவில் அசையும். அத்தெருக்களில் எரியும் விளக்குகளில் நெய்யை ஊற்றுவர். அந்நெய் விளக்கின் உட்பகுதியிலிருந்து நிரம்பி வழிவதால் விளக்கின் பருத்த திரி பெரிதாக எரியும். அவ்வொளியில் நல்ல நெற்றியையுடைய விறலியர் ஆடுவர். அத்தகைய ஊர்களில் எல்லாம் குட்டுவனைப் பற்றிய புகழுரைகள் ஓய்தல் இல்லை” என்று சேரனைப் புகழும் இப்பாடலில், ஆடும் தொழிலையுடைய மகளிரும் குலமகளிர்போல் கற்பிற் சிறந்து விளங்கினர் என்று அவன் நல்ல ஆட்சித் திறன் பாராட்டப்படுகிறது. இதனால் நன்னுதல் விறலியர் என்னும் தொடரால் இப்பாடல் பெயர் பெற்றது.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை, வண்ணம், தூக்கு முதலியன முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டவையே. பாட்டின் பெயர் நன்னுதல் விறலியர்.

5.5.2 பேரெழில் வாழ்க்கை (எட்டாம் பாட்டு) இப்பாட்டின் பெயர் பேரெழில் வாழ்க்கை. பெருமையும் அழகும் உடைய வாழ்க்கை என்பது இதன் பொருள்.

பாட்டின் கருத்து

”பாணர்களுக்குப் பொன்னால்ஆன தாமரையை அணியத் தருபவனே! விறலியர் சூடப் பொன்னரி மாலை அளிப்பவனே! பல புகழும் நிலைபெறக் கடற் பரப்பிற் சென்று பகைவரோடு போர் செய்த குளிர்ந்த கடல்துறையை உடைய பரதவனே! கடலில் மிக்க துன்பங்களுக்கு இடையே பகைவருடன் கடும்போர் செய்து, வென்று பெருஞ் செல்வங்களைக் கொண்டு வந்தாய். அவ்வாறு அரிய முயற்சியால் பெற்ற பொன்னையும் பொருளையும் இரக்கக் குணத்தினால் மிக எளிதாக வாரி வழங்கி விடுகிறாய். அதுவும், உன் புகழைச் சிறப்பாகப் பாடும் திறமையில்லாதவர்கள் பாடும் தகுதியற்ற பாடல்களுக்கு! இதனால் உன்னை, ‘பாட்டின் தரம் உணர இவன் உண்மையில் கல்லாதவன்’ என்று எண்ணிக் கொண்டு அந்தப் புலவர்களும் பாணர்களும் தங்கள் சுற்றத்தாராகிய மற்ற கலைஞர்களின் கைகளை ஏந்தச் செய்து பொருள்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

அன்புடையவர்களுக்கும், மகளிர்க்கும் வணங்கிய மென்மையினையும், பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையும் உடையவன் நீ. பகைவரின் ஊரைச் சுடுதலால் வாடிய மலர் மாலையையும் காய்ந்த சந்தனம் பூசிய மார்பையும் உடையவன் நீ! உன் நாட்டில் உள்ள மலையிலே தோன்றி, உன் நாட்டில் உள்ள கடலிலே கலக்கும் நீர் நிறைந்த ஆற்றில் கொண்டாடப்படும் புனலாட்டு விழாவும், சோலையில் கொண்டாடப்படும் வேனில் விழாவும் உடையது, பெருமையும் அழகுமுடையது, உன் வாழ்க்கை. உன்னுடைய சுற்றத்தாரோடு சேர்ந்து உண்டு செல்வ மக்கள் கூடி விளையாடும் காஞ்சி என்னும் ஆற்றின் துறையில் பரந்த நுண்ணிய மணலை விட எண்ணிக்கையில் மிகுந்த, பல்லாண்டுகள் நீ வாழ்வாயாக!”.

இவ்வாறு வாழ்த்தும் பரணர் குட்டுவனைக் கொடைமடம் கொண்டவனாகக் காட்டுகிறார். தகுதி இல்லாதவர்க்குக் கொடை தருவது கொடை மடம் ஆகும். ஆற்று மணலின் எண்ணிக்கையை விட அதிக ஆண்டுகள் வாழ்க என வாழ்த்துவது சங்க காலக் கவிதை மரபு.. வேனிற்காலத்தில் அரண்மனையில் வாழாமல், இனிய சோலையில் பகைவர் பற்றிய அச்சம் இன்றித் திரியும் குடிமக்களுடன் வாழும் அழகிய வாழ்க்கை பேரெழில் வாழ்க்கை எனப்பட்டது. இதுவே பாடலின் பெயர் ஆகியது.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை இயன்மொழி வாழ்த்து. இது செங்குட்டுவனின் கொடை இயல்பைக் கூறியமையின் இப்பாட்டு இயன்மொழி வாழ்த்துத் துறை பெற்றது. வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரியன. பாட்டின் பெயர் பேரெழில் வாழ்க்கை.

5.6 ஒன்பதாம் பாட்டும் பத்தாம் பாட்டும்

செங்கை மறவர் என்ற பாடலைப் பற்றியும், வெருவரு புனல்தார் என்ற பாடலைப் பற்றியும் அடுத்துப் பார்ப்போம்.

5.6.1 செங்கை மறவர் (ஒன்பதாம் பாட்டு) இப்பாட்டின் பெயர் செங்கை மறவர் என்பது. சிவந்த கையினையுடைய மறவர் என்பது இதன் பொருள்.

பாட்டின் கருத்து

யானைகள் பரந்து செல்ல, விரைந்து செல்லும் குதிரைகள் வீரர்களோடு அணியாகச் செல்ல, கொடியுடைய தேர்கள் சுழன்று செல்ல, வேற்படை வீரரைக் கொண்ட காலாட் படையினரும் வேந்தரும் குறுநில மன்னரும் ஒருங்கே சேர்ந்து செல்ல, மிக்க வலிமையோடு மனம் செருக்கி வந்தான் மோகூர்ப் பழையன். அவனுடைய படைத்திறன் சிதையுமாறு தாக்கினர் சேர வீரர்கள். பகைவரின் குருதியில் நனைந்ததனால் போர் வீரர்களின் கைகள் சிவந்தன. வீரர்களின் மார்பிலிருந்து ஒழுகிய குருதி மண்ணில் பாய்ந்து மழைநீர்க் கலங்கலைப் போல் பள்ளம் நோக்கிப் பாய்ந்தது. பகைவரின் பிணங்கள் குவியுமாறு ஊர்கள் பலவற்றையும் பாழ் செய்தான் குட்டுவன். வெற்றி முரசு முழங்கப் பழையனின் செல்வம் முழுவதும் கெட்டொழிய அங்கு வாழ்ந்தோர் பலரையும் கொன்றான். கரிய கிளைகளைக் கொண்ட காவல் மரமான வேம்பு குட்டுவனால் வீழ்த்தப் பெற்றது.

சினமிக்க போர் செய்த குட்டுவனைக் கண்டு வருவதற்காக நாங்கள் போகிறோம். அசையும் கூந்தலையும் ஆடும் இயல்பையும் கொண்ட விறலியர்களே! நீங்களும் வாருங்கள். இசைப்பாட்டில் திறமை மிக்க உங்கள் சுற்றத்தார் உடையும் உணவும் பெறுவர்”. இவ்வாறு சேரன் கொடைச் சிறப்பைப் படைச் சிறப்போடு சேர்த்துப் புகழ்கிறார் பரணர். அவன் நாடுகளை வெல்வதே விறலியர் பாணர் போன்றவர்களுக்குப் பரிசு வழங்குவதற்காகத்தான் என்கிறார்.

அள்ளி அள்ளிக் கொடுக்கும் வள்ளலின் கை சிவந்து போகும் போதுதான் அதைச் செங்கை என்று பாராட்டுவது வழக்கம். இங்குச் சேர வீரரைச் செங்கை மறவர் என்கிறார் பரணர். ஆனால் அவர்களது கை பகைவரின் இரத்தத்தால் செங்கை ஆனது. நம் போன்ற கலைஞர்களுக்குப் பொன், பொருளை வாரிக் கொடுப்பதற்காகப் போர் செய்ததால் அந்தக் கை அன்றே சிவந்து – வள்ளலின் செங்கை ஆகிவிட்டது என்று நயமாகக் குறிப்பு மொழியால் சொல்கிறார். இந்தப் பாடல் செங்கை மறவர் என்று பெயர் பெற்றது ஏன் என்று புரிந்து கொண்டீர்கள் அல்லவா?

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை விறலியாற்றுப்படை. விறலி என்பவள் நடனம் ஆடுபவள். வேந்தனிடம் பரிசில் பெற்ற ஒருவன் விறலியை நோக்கி, அவனிடம் சென்றால் இவ்வாறு நீயும் பரிசில் பெறலாமென்றும், எம்முடன் வந்தால் இன்னது பெறலாமென்றும் கூறுவது விறலியாற்றுப்படை ஆகும். வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டனவே. பாட்டின் பெயர் செங்கை மறவர்.

5.6.2 வெருவரு புனல்தார் (பத்தாம் பாட்டு) இப்பாட்டின் பெயர் வெருவரு புனல்தார். அஞ்சத் தக்க காலாட் படையாகிய வெள்ளம் என்பது இதன் பொருள்.

பாட்டின் கருத்து

”பெரிய மலையிடத்தே மேகம் முழக்கம் செய்வதால் மான் கூட்டம் அஞ்சும். காற்று அசைப்பதால் ஆலங்கட்டி சிதறக் கடுமழை பொழியும். கரும்பு வயல்களை உடைய நாடுகள் வளம் பெருகவும், வளம் பொருந்திய உலகைப் பாதுகாக்கவும் காவிரியாற்றின் வெள்ளம் நேர் கிழக்காக ஓடிவரும். அரசே! நீ அக்காவிரி போன்றவன் மட்டுமல்லன். பூக்கள் விரிந்த நீரைக் கொண்ட மூன்று ஆறுகள் சேரும் இடமான முக்கூடலையும் ஒத்தவன்.

கொல்லுகின்ற யானைகளாகிய பெரிய அலைகள் திரண்டு வர, வலிமை மிக்க விற்படை அம்புகளை நீர்த்துளிகளாகச் சிதறி வர, கேடயத்தின் மேலே மின்னும் வேல்கள் மீன்களாக விளங்க, போர்ப்பறையோடு முரசொலி கலந்து வெள்ளத்தின் ஓசையாய் முழங்க, அதனைக் கேட்டு அஞ்சிப் பணிகின்ற அரசர்களுக்குக் காவலாகவும், எதிர்த்தவரை அழிக்கும் பெரும் வெள்ளமாகவும் உன் காலாட்படை பாய்ந்து செல்லும். படையாகிய அந்த வெள்ளம் கடலிலும் மலையிலும் பிற இடத்திலும் உள்ள பகைவர் அரண்களை அழித்து, அவர் நாட்டின் நிலப்பரப்பு முழுவதிலும் பாய்ந்து பரவி நிரம்பிவிடும். பகைவரின் புகழ் கெடும். அவர்களின் சினம் என்னும் தீயை அவித்துவிடும். இக்காலாட் படைக்குத் தலைவனாகிய செங்குட்டுவனே! சாந்து பூசித் திலகமிட்டு, மைதீட்டிய பெண்களின் பல வண்ணங்களும் கலையும்படி அவர்களைக் கூடி அவர்களின் மென்மையான கூந்தலாகிய படுக்கையில் கிடந்து, அவர்களைத் தழுவிச் சிறுதுயில் பெறுவதை இழந்தாய். இவ்வாறு போர்க்களத்திலேயே நாள் பலவும் கழிந்தன. இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறு கழியுமோ?”.

”வாழும் நாட்களின் பெரும் பகுதியைப் போர்க்களத்திலேயே கழித்து விடுகிறாயே? எங்களைக் காக்கும் கடமைக்கே நாட்களை ஒதுக்கிவிட்டதால், உனக்கு இன்பம் தரும் காதலுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டதே” என்று கவலையோடு கேட்கிறார் பரணர்.

வீரன் குட்டுவனின் தன்னலம் அற்ற கொடை உள்ளம், தன் குடிமக்களுக்காகக் காதல் இன்பத்தைக் கூட இழக்கத் தயங்காதது என்று உணர்த்துகிறார். சேரனின் படையைப் பகைவர் நிலப்பரப்பை விழுங்கும் பெரு வெள்ளமாக உருவகம் செய்து பாடுகிறார். இதனால் வெருவரு புனல்தார் என்ற உருவகத் தொடர் பாடலின் பெயர் ஆகியது.

பாட்டின் துறை முதலாயின

இப்பாட்டின் துறை வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. தனது மண்ணின் மீது விருப்பம் கொண்டு போருக்கு வந்த மன்னர் அஞ்சுமாறு சென்று போர் தொடுத்ததைப் புகழ்ந்து கூறுவதால், இப்பாட்டு வஞ்சித்துறைப் பாடாண் பாட்டாயிற்று. இப்பாட்டின் வண்ணம் ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். ஒழுகு வண்ணம் என்பது ஆற்றொழுக்காகச் செல்லும் சந்தம் என்று அறிவீர்கள். அளவடி என்பது நான்கு சீர்கள் கொண்ட அடி. சொற்சீர் வண்ணமென்பது, அளவடியிற் குறைந்து வந்தாலும் அகவலோசையோடு வருதல். தூக்கு முந்திய பாட்டுக்குரியது. பாட்டின் பெயர் வெருவரு புனல்தார்.

5.7 தொகுப்புரை

கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்,

தன்னை வந்தடைந்த பரிசிலர்க்கு அளவு இல்லாது பெருஞ்செல்வம் அளிப்பவன்.

கடலிடத்தே எதிர்த்த பகைவரை வென்றவன்.

இமய முதல் குமரி வரையுள்ள அரசர் பலரை வென்று அவர் நாட்டை அழித்தவன்.

அறுகை என்ற தன் நண்பனுக்காக மோகூர்ப் பழையன் மீது படையெடுத்துச் சென்று வென்று, அவன் காவல் மரமாகிய வேம்பினை வெட்டி வீழ்த்தியவன்.

போர்க்களத்திலேயே தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழிப்பவன் என்ற சிறப்புகளுக்குரியவன் எனப் பரணர் இப்பத்தில் சித்திரித்துள்ளார்.

பாடம் - 6

பதிற்றுப்பத்து – 2

6.0 பாட முன்னுரை

இனிய மாணவர்களே! முன்பு நீங்கள் படித்த பாடத்தில் பதிற்றுப்பத்தைக் குறித்து அறிந்திருப்பீர்கள். பதிற்றுப்பத்தின் கிடைத்துள்ள எண்பது பாடல்களில், பத்துப் பாடல்கள் குறித்து முன்பு படித்தீர்கள். இப்போது மேலும் பத்துப் பாடல்கள் குறித்து இப்பாடத்தின் வழி அறிய இருக்கின்றீர்கள். சேர அரசர் ஒவ்வொருவர் குறித்தும் இவ்வளவு எண்ணிக்கையுடைய பாடல்கள் வேறு எவ்விலக்கியத்திலும் இல்லை. இப்பாடல்கள் நேராக அரசரைக் கண்டு பாடியன என்பதைப் பாட்டின் அமைப்பிலிருந்து அறியலாம்.

6.1 பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்து பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்து செல்வக் கடுங்கோ வாழியாதனைக் குறித்துக் கபிலர் பாடியது. பாரியுடன் வாழ்ந்த கபிலர் அவன் இறந்த பின் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கண்டு இப்பத்தைப் பாடியுள்ளார். புறநானூற்றிலும் வாழியாதனைக் குறித்துக் கபிலர் பாடிய இரண்டு பாடல்கள் உள்ளன. சேர மன்னர்கள் உதியஞ்சேரல், இரும்பொறை என்ற இருவேறு மரபுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை மரபைச் சார்ந்தவன். அந்துவஞ்சேரல் இரும்பொறையின் மகன்.

6.1.1 ஏழாம் பத்தின் பதிகம் வாழியாதன் சோம்பாத உள்ளமுடையவன். பகைவரை வென்று சிறைசெய்து கொண்டு வந்தவன். நுட்பமான கேள்வியறிவுடையவன். அந்துவஞ்சேரலுக்கும் பொறையன் தேவிக்கும் மகன். இவ்வேந்தன் பல வேள்விகளை இயற்றியவன். புரோகிதர்களைத் தன் அறிவால் வென்றவன். இச்செய்திகளைப் பதிகம் அளிக்கின்றது.

6.2 முதற் பாட்டும் இரண்டாம் பாட்டும் முதல் இரண்டு பாடல்களில் இடம் பெற்றுள்ள கருத்துகளைப் பார்ப்போம்.

6.2.1 புலாஅம் பாசறை (முதற்பாட்டு) புலா அம்பாசறை என்பது பாட்டின் பெயர். புலால் (ஊன்) நாற்றம் பொருந்திய பாசறை என்பது இதன் பொருள். பாசறை என்பது போர் செய்வதற்காக வீரர்கள் தங்கியிருக்கும் இடம்.

பாட்டின் கருத்து

”பலா மரத்தில் அதன் பழம் பழுத்து வெடித்து, புண் போன்ற அவ்வெடிப்பிலிருந்து தேன் ஒழுகும்; அத்தேனை வாடைக் காற்று சிதறும். இவ்வாறு தேன் மழை பொழியும் பறம்பு மலைக்குரிய பெருவீரனும், ஓவியத்தில் வரைந்தது போன்ற வேலைப்பாடு கொண்ட வீட்டிலிருக்கும் கொல்லிப் பாவை போன்ற அழகிய நல்ல பெண்ணுக்குக் கணவனுமான பாரி, பொன் போன்ற நிறம் கொண்ட பூவினையும் சிறிய இலையினையும் பொலிவு இல்லாத அடிமரத்தையும் உடைய உன்ன மரத்துக்குப் பகைவன். காய்ந்த சந்தனத்தையும், ஈரம் மிக்க வள்ளல் தன்மையையும் தன் அகன்ற நெஞ்சில் உடையவன். அந்தப் பெருவள்ளல் பாரி, சென்றவர் திரும்பி வராத மேல் உலகம் சென்று விட்டான். அதனால் இசைக்கலைஞர்கள் பாடுவதை மறந்தனர்.

இசைக்கப் படாததால் அவர்களின் முழவுகளின் மார்ச்சினை என்னும் மண் காய்ந்து போனது. பரிசில் பெற்று வாழும் எங்கள் கலைஞர் கூட்டமே காய்ந்து, வாடி வருந்துகிறது. “பாரி இறந்துவிட்டான், அதனால் எனக்கு நீ உதவுவாயாக” என்று உன்னிடம் இரந்து கேட்க வரவில்லை.

அதற்காக, உண்மை இல்லாததைப் புனைந்து உன்னைப் புகழ மாட்டேன். உன் பெருமையைக் குறைத்தும் கூறமாட்டேன். “செல்வக் கடுங்கோ வாழியாதன் பிறர்க்குக் கொடுப்பதால் தன் செல்வம் குறைகிறதே என்று வருந்த மாட்டான். கொடுக்கும் போதெல்லாம், ‘நாம் வாரிக் கொடுக்கிறோம்’ என்ற பெருமை கொண்டு மகிழ்ச்சி அடையவும் மாட்டான். ஒவ்வொரு முறை கொடுக்கும் போதும் மிகுந்த செல்வத்தைக் கொடுக்கும் பெரிய வள்ளல்” என்று உயர்ந்தவர்கள் உன்னைப் புகழ்ந்து கூறும் உண்மை மொழிகளைக் கேட்டேன். பாரியின் இந்தப் பண்புகள் உன்னிடமும் இருப்பதால் உன்னிடம் வந்திருக்கிறேன்.

ஒளிமிக்க வாள்களால் வெட்டுப்பட்ட வன்மையான களிறுகளும் வீரர்களும் பெற்ற புண்களில் இருந்து புலால் நாற்றம் வீசும் பாசறை! அதில் நிலவின் வெளிச்சம்போல ஒளி வீசும் உன் வேல்படை! அதைப் புகழ்ந்து பாடினி பாடுகிறாள். அப்பாடலுக்குத் தாள ஒலி தரும் முழவின் இசைக்கு ஏற்ப ஆடும் வெள்ளை நிறம் கொண்ட கைகளால் உன் அரசவை விழாக்கோலம் பூண்டு மகிழ்ந்து இருக்கிறது. இந்த அவையில் உன் புகழ்பாட வந்திருக்கிறேன்.”

இவ்வாறு கபிலர் பாடுகிறார். இப்பாடலில் கூறப்படும் உன்னம் என்பது ஒரு மரம். இது தளிர்த்தால் மன்னனுக்கு வெற்றி உண்டாகும்; வாடினால் தீமை உண்டாகும் என்பது அக்கால நம்பிக்கை. பாரி அந்த மரம் எப்படி இருந்தாலும் வெற்றியும் புகழுமே அடைபவன் என்பதால் அவனை உன்னத்துப் பகைவன் என்று கூறினார்.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை காட்சி வாழ்த்து. அரசனை நேரே கண்டு வாழ்த்துதல் எனப் பொருள்படும். கபிலர் கடுங்கோவை நேரிற் கண்டு வாழ்த்தியமையின் இத்துறை பெற்றது. வண்ணம் ஒழுகுவண்ணம். ஒழுகுவண்ணமாவது, ஆற்றின் ஓட்டம்போல ஒழுகிய ஓசை உடையது. தூக்கு செந்தூக்கு; செந்தூக்கென்பது ஆசிரியப்பா. பாட்டின் பெயர் புலா அம் பாசறை. பிளந்த புண்களில் இருந்து வந்த ஊனின் நாற்றம் வீசும் பாசறையை, நிலவொளி வீசுகின்ற நறுமணம் கமழும் சோலை போன்று கற்பனை செய்து பாடியிருப்பதால் இந்த அழகிய தொடர் இப்பாடலின் பெயர் ஆகிறது.

6.2.2 வரைபோல் இஞ்சி (இரண்டாம் பாட்டு) வரைபோல் இஞ்சி என்பது இப்பாட்டின் பெயர். மலையைப் போன்ற மதில் என்பது இதன் பொருள். சேர அரசனின் பகைவருடைய மதில்கள் வரை (மலை) போல் இருந்தன என்பதற்காக இத்தொடர் கூறப்பட்டது.

பாட்டின் கருத்து

”பசுமையான பொறிகளைச் சிதறும் ஒளிமிக்க நெருப்பு, பல சூரியன்கள் வந்த ஊழிக்காலம் போன்ற மாயத் தோற்றத்தோடு எங்கும் பரவி விளங்க, உயிர்களுக்குப் பொறுக்க முடியாத அழிவைச் செய்யும் கூற்றுவன் போல முழங்கி, மிக்க வன்மையோடு போர்த்துறையில் வெற்றி கண்ட அரசே!.

பொன்னோடை, பொன்னரி மாலை என அணி பல பூண்டு எழுகின்ற யானைகளின் பெரிய படையும், மழைமேகம் திரண்டு வந்தது போலத் தோன்றும் கரிய பெரிய கேடயங்களையும், வேலையும் வாளையும் ஏந்திய வீரரின் பெரும் படையும், நறுக்கிய பிடரி மயிர் கொண்ட குதிரைப் படையும் என்ற இம்மூன்றும் கொண்ட உனது சேனை பகைவரின் மதிலை நெருங்க வளைத்து மதிலின் புறத்தே தங்கி இருக்கும். அப்போது, நீர் மிகுந்து மதிலை மோதும் அலைகளை உடைய அகழியையும், மலைத்தொடர் போன்ற மதிலையும், பிறரை அழிக்கும் ஆற்றல் மிக்க பெரிய கையையும் உடைய அரசர் உன்னிடம் வந்து, வணங்கிய மொழிகளைக் கூறி உனக்குப் பணிந்து திறை செலுத்தினால், அந்தப் பகைவர் நாடு அழிவு அடையாது. மாறாக, கள் உண்டு மகிழும் வலிமையான கைகள் கொண்ட உழவர்கள், புல்நிறைந்த அகன்ற இடத்தில் ஆநிரைகளை மிகுதியாக மேய விடுவர். வயலின் கதிர்களிலிருந்து உதிர்ந்த, களத்தில் தூற்றப்படாத நெற்குவியலைக் காஞ்சி மரத்தின் அடியிலே சேரத் தொகுப்பர். கிடைத்தற்கரிய ஆம்பல் மலரைத் தலையில் சூடுவர். வண்டுகள் சிறகு விரித்துப் பறந்து அந்த ஆம்பல் மலர்களை மொய்க்கும். அவற்றை ஓட்டிப் பாடுவர். இவ்வாறு விரிந்த இடத்தையுடைய அந்தப் பகைவர் நாடுகள் மகிழ்ச்சிப் பாடல்கள் மிக்கனவாக ஆகும்.” இவ்வாறு கபிலர் செல்வக் கடுங்கோவின் வீரத்தைப் புகழ்கிறார்.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை செந்துறைப் பாடாண்பாட்டு. விளக்கம் ஐந்தாம் பாட்டில் (5,3,2) காண்க. வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரியன. பாட்டின் பெயர் வரைபோல் இஞ்சி. வரைபோல் இஞ்சி என்னும் அழகிய தொடர். சேரனின் படைகளால் சூழப்பட்ட பெரிய கோட்டை மதிலை, கடலால் சூழப்பட்ட பெரிய மலைத்தொடர் போன்று காட்சிப் படுத்தும் ஓவியத் தொடராக உள்ளது அல்லவா? அதனால் இப்பாடல் இப்பெயர் பெறுகிறது.

6.3 மூன்றாம் பாட்டும் நான்காம் பாட்டும்

மூன்றாம், நான்காம் பாடல்களாக அருவி ஆம்பல், உரைசால் வேள்வி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

6.3.1 அருவி ஆம்பல் (மூன்றாம் பாட்டு) இப்பாட்டின் பெயர் அருவி ஆம்பல். ‘அடையடுபு அறியா அருவி ஆம்பல்’ என்ற அடிக்கு உரையாசிரியர். ‘இலை அடுத்தலை அறியாத பூவல்லாத ஆம்பல்’ என்று எழுதுவதால் இஃது ஆம்பல் மலரைக் குறிக்காது. இங்கு ஆம்பல் என்பது (இலட்சம், கோடி போல) ஒரு பேரெண்.

பாட்டின் கருத்து

”அந்தணரைத் தவிர மற்ற எவர்க்கும் பணிந்து அறியாதவன் நீ. நட்பின் நிலையில் தாழ்வுபடாத உள்ளத்தால் நண்பர்க்குத் தவிர வேறெவர்க்கும் அஞ்சாதவன் நீ. வில் உரசும் உன் மணம் பொருந்திய மார்பினை உனக்கு உரிய மகளிர்க்குத் தவிர வேறு எவருக்கும் விரித்துத் தராதவன் நீ. இந்த நிலமே தன் நிலையிலிருந்து மாறுபட்டாலும் உன் வாயால் சொல்லிய சொல் பொய்ப்பதை அறியாதவன் நீ.

சிறிய இலைகளை உடைய உழிஞைப் பூமாலையை அணிந்து பகைப் புலத்தில் கொள்ளத் தக்க பொருள்மிக உண்டாகுமாறு குளிர்ந்த தமிழ் நாட்டை வென்று இணைத்தவன் நீ. மலைகள் நிலை கலங்க இடி ஒலிப்பது போலச் சினந்து சென்று, ஒரு முற்றுகையில் சோழனையும் பாண்டியனையும் வென்று புறங்கண்டவன் நீ. வாளேந்திச் செய்யும் போரில் மேம்பட்ட தானையினையும், எப்போரிலும் வெற்றியையும் உடையவனே! உன்னால் வெற்றி கொள்ளப்பட்ட வீரர் பகைவரிடமிருந்து மாறி உன்னிடம் வந்தனர். உன் தாள் நிழல் அடைந்து உன்வழி நிற்போம் எனக் கூறினர். உன் குலத்தவர்க்கு உரிய வீரத்தால் மேலும் பல போர்களில் நீ வென்றாய். அதனால் சேரர் குடித்தோன்றலே! செல்வக் கடுங்கோவே! காற்றால் சுருட்டப்படும் அலைகள் எறிய முழங்கும் கடலை வேலியாகக் கொண்ட இப்பெரிய உலகில் வாழும் நன் மக்கள் செய்த அறம் இருக்கிறது என்றால் நீ நெடுங்காலம் வாழ வேண்டும். இலைகளால் சூழப்படாத பூக்கள் அல்லாத பல ஆம்பல் என்னும் பேரெண்ணும், அதனை ஆயிரத்தால் பெருக்கிய வெள்ளம் என்னும் பேரெண்ணும் சேர்ந்த எண்ணிக்கை கொண்ட பல ஊழிக்காலம் நீ வாழ்வாயாக!” இவ்வாறு வாழ்த்துகிறார் கபிலர்.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை, வண்ணம், தூக்கு என்பன முந்திய பாட்டுக்குரியன. பாட்டின் பெயர் அருவி ஆம்பல். ஆம்பல் என்ற சொல் அல்லி என்னும் நீர்ப்பூ; பல ஆயிரம் அடங்கிய பேரெண் என்னும் இரு பொருள்களைக் குறிக்கும். பூவைக் குறிக்காமல் எண்ணிக்கையைக் குறிக்கும் ஆம்பல் என்று அதனை வேறுபடுத்திக் காட்டக் கபிலர் இலைகளுக்கிடையே மலராத ஆம்பல் என்று நயமாகக் கூறினார். ‘அடையடுத்து அறியா அருவி ஆம்பல்’ என்னும் அடியின் அருமை கருதி இப்பாட்டு அருவி ஆம்பல் என்று பெயரிடப் பெற்றது.

6.3.2 உரைசால் வேள்வி (நான்காம் பாட்டு)

உரைசால் வேள்வி என்பது இப்பாட்டின் பெயர். உயர்ந்த புகழமைந்த வேள்வி என்பது இதன் பொருள். அந்தணர் அத்தகைய வேள்விகளைச் செய்தனர் என இப்பாட்டுக் கூறுகின்றது.

பாட்டின் கருத்து

”வெற்றி உண்டாக முழங்கும் முரசினையும், தவறாத வாளினால் பெறும் வெற்றியினையும், அரசு உரிமையையும், பொன்னாற் செய்த அணிகலன்களையும் உடைய வேந்தர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களால் என்ன பயன்?

அறநூல்களை ஓதிப் பயின்ற நாவினையும், உயர்ந்த புகழமைந்த வேள்விகள் செய்தற்கேற்ற அறிவினையும் உடைய அந்தணர்களுக்குப் பெறுவதற்கு அரிய அணிகலன்களை நீ அளித்தாய். அவற்றை நீர்வார்த்துக் கொடுத்தலால் அரண்மனை முற்றம் சேறாயிற்று. களிறுகள் ஈரத்தில் நிற்பதை வெறுத்தன. மண் நிறைந்த அந்த முற்றத்தையும்; புலவர், கலைஞர் ஆகிய பரிசிலர் அல்லாத பிறர் செல்ல முடியாத காவலையும் உடையது உன் அரண்மனையின் அவ்விடம். அவ்விடத்தே கூத்தர்கள் வந்து நிற்பதைக் கண்டாலும், வேலையுடைய படைவீரர்கள் வென்று கொண்டு வந்தனவும் கத்தரித்து அழகு செய்யப்பட்ட பிடரியினையுடையனவும் ஆகிய குதிரைகளையும், அசைகின்ற காளைகள் பூட்டிய தேர்களையும் அவற்றுக்குரிய அணிகலன்களைப் பூட்டிக் கொடுப்பீராக என்று ஆட்களை ஏவி விரைந்து கொடுக்கும் கொள்கையை உடையவன் நீ. ஆதலால் உன்னைக் காணவந்தேன் நான்.

கரிய பெரிய வானத்தே ஞாயிறு தோன்றிப் பல விண்மீன்களின் ஒளியைக் கெடுத்தது போலச் சேரர் குடியில் நீ தோன்றிப் பகைவரின் புகழைக் கெடுத்தாய். உப்பங்கழியில் தோன்றி மலர்ந்த கருமையான நெய்தற் பூவைப் போன்ற அழகிய மேகத்தைக் காட்டிலும் நீ மிக்க பயனை வழங்குகின்றாய். அதனால் எப்போதும் பசிமிக்க இரவலரின் சுற்றம் பசி நீங்கியது. புகழ்மிக்கவனே! இப்பெருமையால் உன் வலிய தாள்களை வாழ்த்தி உன்னைக் காண உனது பாசறைக்கு வந்தேன்.” சேரனின் கொடைச் சிறப்பை இவ்வாறு கபிலர் புகழ்கிறார்.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை காட்சி வாழ்த்து. அரசனை நேரே கண்டு வாழ்த்தினமையான் இது காட்சி வாழ்த்தாயிற்று. வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரியன. பாட்டின் பெயர் உரைசால் வேள்வி. ‘இரவலர் பசி தீர்க்கும் சேரனின் ஈகையாகிய வேள்வி இனிய தமிழால் பாடப்பெறுதற்கு உரியது’ என்னும் குறிப்பைத் தருவதால் இத்தொடர் பாட்டின் பெயராக அமைந்தது.

6.4 ஐந்தாம் பாட்டும் ஆறாம் பாட்டும்

நாள் மகிழ் இருக்கை, புதல்சூழ் பறவை ஆகிய இரு பாடல்களும் ஐந்தாம் ஆறாம் பாடல்களாக இடம் பெற்றுள்ளன.

6.4.1 நாள் மகிழ் இருக்கை (ஐந்தாம்பாட்டு) இப்பாட்டின் பெயர் நாள் மகிழ் இருக்கை. பகற்காலத்தே அரசன் வீற்றிருக்கும் அவை நாள் மகிழ் இருக்கை எனப்பட்டது. இது திருவோலக்கம், நாளவை என்றும் கூறப்படும்.

பாட்டின் கருத்து

”விரைந்த ஓட்டத்தையும், பிணங்களை இடறிச் செல்வதால் குளம்புகளில் குருதிக் கறையையும் உடைய குதிரைகளின் தலையில் விரிந்த தலையாட்டம் என்னும் அணியை அணிவித்து அவற்றைச் செலுத்திப் பகைவர்க்கு அழிவை ஏற்படுத்திய சான்றோர் ஆகிய வீரர்களுக்குத் தலைவனே! வில் வீரர்களுக்கு உடற்கவசம் போன்றவனே! தன்னை அடைந்தோர்க்குச் செல்வமாகப் பயன்படுபவனே!

அணிகலன்களை அணிந்து அழகு பெற்ற, ஓவியத்தில் எழுதப்பட்டது போல் தோன்றும் மார்பினையும், அழகு மிக்க வரிகளை உடைய இடைப்பகுதியையும், அகன்ற கண்களையும், மூங்கிலைப் போலத் திரண்ட தோள்களையும், கடவுளரையும் ஏவல் கொள்ளும் கற்பினையும், தொலைவிலும் சென்று மணம் கமழும் நெற்றியினையும், செவ்விய அணிகளையுமுடையவளுக்குக் கணவனே!

பாணர் குடும்பங்களைக் காப்பவனே! பரிசிலர் செல்வமே! பூண்களை அணிந்து விளங்கும் புகழ்மிக்க மார்பை உடையவனே! இனிய இசை தொடுத்தற்குரிய நரம்பினால் பாலையாழ் வல்லவன் ஒருவன் அழுகைச் சுவைக்குரிய பாலைப்பண் ஒவ்வொன்றையும் மாற்றி மாற்றி இசைத்தாற்போல, பல வேறு சுவையுடைய கள்ளை மழையென அளவின்றி வழங்கும் விழாக் களம் போன்ற நாள் அவையின் கண் வீற்றிருக்கும் உனது மகிழ்ச்சிக்குரிய தோற்றத்தை நாங்கள் நன்கு கண்டு இன்புற்றோம்.”

இவ்வாறு, சேரனது அவைக் களத்தின் மகிழ்ச்சி மிக்க சூழலை இப்பாடலில் காட்டுகிறார் கபிலர்.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை பரிசில் துறைப் பாடாண் பாட்டு. ஒருவனின் புகழும், வீரமும், ஈகையும், அருளும் ஆகிய உயர் பண்புகளைப் பாடுவது பாடாண் திணை என்பதை அறிவீர்கள். பரிசில் துறை என்பது அரசன் முன் சென்று பரிசில் வேண்டி நிற்பது. வண்ணமும் தூக்கும் முற்பாட்டுக்குரியன. பாட்டின் பெயர் நாள்மகிழ் இருக்கை.

நாள் மகிழ் இருக்கை – பகலில் அரசன் வீற்றிருக்கும் அவைக்களம் இத்தொடரால் கூறப்படுகிறது. மகிழ்ச்சி பொருந்திய அரசவை என்று இது பொருள் தருகிறது. எனினும், மகிழ் என்ற சொல்லுக்குக் ‘கள்’ என்னும் பொருளும் உண்டு. இப்பாடலில் அரசவையில் கள் அருந்தி அனைவரும் மயக்கத்தில் ஆரவாரம் செய்து கொண்டிருப்பதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகிறார் கபிலர். மேலும், அரசனின் நாள் இருக்கை கண்ணாலேயே கள் அருந்தியது போன்ற காட்சி இன்பம் தருவது என்ற குறிப்புப் பொருளையும் இத்தொடர் தருகிறது. அதனால் நயமான இத்தொடர் பாட்டின் பெயராக ஆக்கப்பட்டிருக்கலாம்.

6.4.2 புதல்சூழ் பறவை (ஆறாம் பாட்டு) இப்பாட்டின் பெயர் புதல்சூழ் பறவை. புதரில் மொய்க்கும் வண்டினம் என்பது இதன்பொருள். வண்டுகளை அறுகாற் பறவைகள் எனக் குறித்தல் மரபு.

பாட்டின் கருத்து

”வளைந்த கரிய தண்டினையும், இனிய இசைக்குரிய நரம்புகளையும் கொண்ட, இசையின்பத்திற்கு இடமான பேரியாழில் பாலைப் பண்ணை அமைத்து, இசைத்துக் கொண்டு சேரனை நினைந்து செல்லும் முதிர்ந்த இசைப்புலமை மிக்க இரவலனே!

விடியற்காலத்தில் மலையுச்சியில் தங்கும் மேகக் கூட்டம் போன்ற கேடயங்களையும், ஒளிமிக்க வேற்படையையும் கொண்டு தம்மீது வெகுண்டு மேல் வரும் பகைவரைத் தடுக்கின்ற படை வகுப்பைக் கொண்டவர்கள் சேர வீரர். இவர்கள் போரில் இறத்தலையே விரும்புவர். நோய், முதுமை இவற்றால் இறத்தலை விரும்ப மாட்டார். இவர்கள் வெற்றி கொண்டு, வெற்றி மகளாகிய கொற்றவை விரும்பும் வாகைப் பூவைப் பனங்குருத்தோடு சேர்த்துத் தொடுத்ததுபோல, பூத்த முல்லைக் கொத்துகளின் மீது வண்டுகள் மொய்க்கும். அவை, தொடுத்தவை போன்று மலரும் பிடவ மரத்தின் பூக்களில் சென்று தங்கும். உயர்ந்த பளிங்குடன் விரவிய சிவந்த பரல்கற்கள் கிடக்கும் முரம்பு நிலத்தில் அங்கு வாழ்கின்றவர்கள் ஒளிமிக்க மணிகளைப் பெறுவர். இத்தகைய இயற்கை வளம் வாய்ந்த அகன்ற பல ஊர்களைக் கொண்ட நாட்டிற்குத் தலைவன் செல்வக் கடுங்கோ வாழியாதன்.

இடி முழக்கத்தைப் போல் ஓசை உண்டாக்கும் முரசை உடையவன்; தவறாத வஞ்சினம் கூறிப் பகைவருடைய வேலேந்திய கூட்டத்தைப் போரில் அழிப்பவன். இவன் பலரை முதுகு காட்டி ஓடச் செய்த போர்க்களத்தில், பிணங்கள் நிறைந்திருக்கும். தோற்ற வேந்தர் திறையாகச் செலுத்திய யானைகளோடு, நெல்லை அளக்கும் மரக்கால் அளந்து அளந்து உறை கழலுமாறு எல்லார்க்கும் நெல்லையும் அளந்து பரிசிலாகக் கொடுப்பவன் அவ்வாழியாதன் என்று அறிந்தோர் கூறுவர். அவனிடம் சென்று பரிசில் பெற்று மகிழ்வாயாக”.

இவ்வாறு பாணனைப் பார்த்துப் பாடுகிறார் கபிலர். இது பாணாற்றுப்படை என்னும் துறையில் அமையாது. ஏனெனில் இங்கு வாழியாதனிடம் செல்வது என்று பாணன் தானாகவே முடிவு செய்து வந்துகொண்டிருக்கிறான்.

பாட்டின் துறை முதலியன

பாட்டின் துறை செந்துறைப் பாடாண் பாட்டு. விளக்கம் இரண்டாம் பாட்டின் உரையிற் காண்க. வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரியன. பாட்டின் பெயர் புதல்சூழ் பறவை.

சேரனின் சின்னமான பனையின் குருத்தில் வெற்றியின் சின்னமாகிய வாகைப்பூச் சேர்ந்திருப்பதைப் போல் முல்லைப் புதரில் மொய்க்கும் வண்டுகள் இருக்கின்றன என்ற அழகிய உவமைத் தொடராக அமைந்துள்ளதால் இது இப்பாடலின் பெயராக ஆயிற்று.

6.5 ஏழாம் பாட்டும் எட்டாம் பாட்டும்

ஏழாம் பாட்டாகிய வெண்போழ்க் கண்ணி என்பது பற்றியும், எட்டாம் பாட்டாகிய ஏம வாழ்க்கை பற்றியும் இனிப் பார்ப்போம்.

6.5.1 வெண்போழ்க் கண்ணி (ஏழாம் பாட்டு) இப்பாட்டின் பெயர் வெண்போழ்க் கண்ணி. வெண்மையான பிளந்த பனந்தோட்டாலாகிய மாலை என்பது இதன்பொருள். (போழ் = பிளவு; பிளந்த பனம்பூ ; கண்ணி = மாலை)

பாட்டின் கருத்து

”படைத்தலைவர் போருக்கு ஏற்ற படைக் கருவிகளை ஆராய்வர். சேரனின் வெற்றிக் கொடி விண்ணிலே அசையும். பகைவர் உள்ளம் நடுங்கும். ஒளி வீசும் மணி பதித்த கொம்பென்னும் வாத்தியத்தோடு வலம்புரிச் சங்குகள் முழங்கும். களிறுகளின் கூட்டம் போர் வெறி கொண்டு போர்க்களத்தில் அலையும். கொழுப்புடன் தசை குவிந்து கிடக்கும் போர்க்களத்தில் பெரிய சிறகுகளை உடைய பருந்துக் கூட்டங்கள் பிணங்களின் இரத்தத்தை உண்ணும். தலை வெட்டுண்ட வீரரின் உடலோடு உருவற்ற பேய் மகள் ஆடும் கூத்து காண்போரை அச்சுறுத்தும். நாட்டிலுள்ளவர்கள் நடுங்கப் பல போர்களில் தன்னை எதிர்த்தவரைச் சேரன் வென்றழித்த போர்க்களம் இப்படிக் காட்சியளிக்கும்.

மணம் கமழும் கொன்றைப் பூவின் கொத்துகளைக் கலந்து தொடுத்த வெண்மையான பனந் தோட்டாலாகிய மாலையினை உடைய சேர வீரர், வாளின் வடுவை முகத்திலே பெற்றவர். ஒழுங்கான கொம்பும் பெரிய கண்ணும் கொண்ட எருதுகளையும் பிற விலங்குகளையும் இறைச்சியின் பொருட்டு வைத்து வெட்டும் அடிமணை என்னும் கட்டையில் வெட்டுத் தழும்புகள் நிறைந்திருக்கும். அது போல உடம்பெங்கும் விழுப்புண்களாகிய வெட்டுத் தழும்புகளைக் கொண்ட நிலையில் அவர்கள் தம் மார்பில் அவ்வடுக்களை மறைக்கச் சந்தனம் பூசியிருப்பர். இத்தகைய வீரர்க்குத் தலைவன் வாழியாதன்.

தெய்வத்திற்கு உரிய மலர்ந்த காந்தள் பூக்களில் சென்று தேன் உண்ட தும்பிகள் சிறகு தளர்ந்து பறக்க முடியாதன ஆயின. இத்தகைய பெருமை வாய்ந்த நேரி மலைக்குரிய தலைவன் வாழியாதன். இசை வல்லோர்க்குரிய மரபு அறிந்த பாணனே! நீ அச்சேரனைப் பாடிச் சென்றால் புகழ் பெற்ற உன் சுற்றத்தாருடன் கொடுமணம் என்ற ஊரின் அணிகலன்களையும், பந்தர் என்னும் ஊரின் கடற்கரையில் பெறப்படும் தென்கடல் முத்துக்களையும் பரிசிலாகப் பெறுவாய்.” இவ்வாறு, சேரனிடம் பாணனை ஆற்றுப்படுத்துகிறார் கபிலர்.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை பாணாற்றுப்படை, பரிசில் பெற்ற பாணன் ஒருவன் வழியிடையே எதிர்ப்படும் பரிசில் பெறாத பாணன் ஒருவனைக் கண்டு ‘இன்னாரைச் சென்று கண்டால் நீ இன்ன பரிசில் எல்லாம் பெறலாம்’ என்று கூறுவது என்பதை அறிவீர்கள். பாட்டின் வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரியன. பாட்டின் பெயர் வெண்போழ்க் கண்ணி.

ஊழி முதல்வனாகிய சிவபெருமான் அழித்தல் கடவுள். அவனது மாலை கொன்றை. அந்தக் கொன்றை மாலையுடன் சேரனின் குலமரபுப் பூவான பனம்பூவை மாலையாகத் தொடுத்து அணிந்த வீரர்கள் என்று வருணிக்கிறார். இவர்கள் அழித்தலில் சிவபெருமான் போன்றவர்கள் என்னும் நயம் தோன்றச் செய்யும் தொடர் இது. இதனால் பாடலின் பெயரானது.

6.5.2 ஏம வாழ்க்கை (எட்டாம் பாட்டு) இப்பாட்டின் பெயர் ஏம வாழ்க்கை. பாதுகாப்பான வாழ்க்கை என்பது இதன் பொருள். அச்சமற்ற வாழ்க்கை என்றும் கூறப்படும்.

பாட்டின் கருத்து

”தம் கணவரைப் பிரிந்த மகளிர்க்கு, பிரிவாற்றாமையால் உறக்கம் பெறாமல், மெலிவால் அணிந்திருக்கும் அணிகலன்கள் உடலிலிருந்து நெகிழும். உயர்ந்த மண் சுவர் கொண்ட நீண்ட பெரிய இல்லத்தின் ஓவியம் தீட்டப்பட்ட சுவரில், கணவரைப் பிரிந்த நாட்களை விரலால் கோடிட்டுக் குறித்து, அவற்றை மீண்டும் மீண்டும் தடவிப் பார்த்து எண்ணி, அதனால் இயல்பாகவே சிவந்த விரல்கள் மேலும் சிவக்கும். அழகிய வரிகளையுடைய சிலம்பையும் காண்பாரை வருத்தும் அழகையும் கொண்ட அத்தகைய மகளிரின் மனத்தைப் பிணித்து நிற்கும் சந்தன மணம் கமழும் மார்புடைய சேரனே! உன் அடி நிழலில் வாழ்வோர். பகைவர் நாட்டில் சென்று அமைத்துத் தங்கிய பாசறை நடுவில் வில்லின் ஒலியும், முரசின் ஒலியும், மோதுகின்ற காற்று குறுந்தடி போல வீசக் கடல் முழங்குவது போலப் பெருமுழக்கம் செய்யும். அவ்வொலி வானம் முழுவதும் கேட்கும்.

கண்டவர்கள் விரும்பும் அழகு மிக்க பகைவர் மதிலை அழிக்காமல் உண்ணுவதில்லை என்று வஞ்சினம் கூறி, உண்ணாமல் நாட்கள் பல கழிந்தன. அந்நிலையிலும், போரை விரும்பும் ஊக்கத்தைக் கொண்ட பகைவர் உடல் வலிமை குன்றும் வரை, அவர்களின் இருப்பிடங்களைக் கைக்கொள்ளக் கருதிப் பலநாட்கள் காத்திருப்பர் உன் வீரர். அவர்கள் பகைவேந்தர்கள் ஊர்ந்து வரும் யானைகளை வீழ்த்தித் தந்தங்களைக் கைக்கொள்வர். அவற்றை விலையாகத் தந்து கள்ளைப் பெற்று உண்டு மகிழ்வர். வடநாட்டில் உள்ள உத்தரகுரு என்னும் நகரில் வாழும் மக்களைப் போல இவர்களும் துன்பமே இல்லாமல் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எனின், இல்லை. ஏனெனில் இவர்கள் பகைப்புலத்தை வெல்லும் வரை உண்ண மாட்டோம் என நோன்பு கொண்டுள்ளனர். எனவே இவர்கள் வென்றாலும், சில நாள் இன்பம் பெறுவரேயன்றிக் கிடைத்த வெற்றி போதும் என அமைதி கொள்ளாதவர்கள். வேறு பகைவரைத் தேடிப் போர் செய்யவே செல்வார்கள்.

இவ்வாறு, சேரனும் படைவீரரும் தங்கள் காதல் இன்பத்தை, தம் நாட்டு மக்கள் இன்பம் பெறுவதற்காகத் துறக்கும் உயர் பண்பு கொண்டவர்கள் என்பதைக் கபிலர் விளக்குகிறார்.

பாட்டின் துறை முதலியன

பாட்டின் துறை செந்துறைப் பாடாண் பாட்டு. இதற்குரிய விளக்கத்தை இரண்டாம் பாட்டின் விளக்கத்தில் காண்க. வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரியவை. பாட்டின் பெயர் ஏம வாழ்க்கை. நாம மறியா ஏம வாழ்க்கை – அச்சமும் துன்பமும் என்னவென்றே அறியாத பாதுகாப்பான வாழ்க்கை என்று பொருள் தரும் தொடர். தம் நாட்டு மக்களுக்கு இப்படிப்பட்ட வாழ்க்கையைத் தந்து விட்டுத் தம் வாழ்க்கை முழுவதையும் போர்க்களத்தில் கழிக்கின்றனர் சேரனும் அவன் வீரர்களும். அவர்களின் பிறர் நலம் போற்றும் பொதுநல வாழ்க்கையை அழகாகச் சுட்டும் தொடர் இது. இதனால் இப்பாடலுக்குப் பெயர் ஆனது.

6.6 ஒன்பதாம் பாட்டும் பத்தாம் பாட்டும்

ஒன்பதாவது பாடலாகிய மண்கெழு ஞாலம், பத்தாவது பாடலாகிய பறைக்குரல் அருவி என்பவை வெளிப்படுத்தும் கருத்துகளை இனிப் பார்ப்போம்.

6.6.1 மண்கெழு ஞாலம் (ஒன்பதாம் பாட்டு)

இப்பாட்டின் பெயர் மண்கெழு ஞாலம். மண் செறிந்த இவ்வுலகம் என்பது இதன் பொருள். மண்ணுலகம் எனவும் கூறலாம்.

பாட்டின் கருத்து

”மலை போன்ற யானையின் மேல் வானளாவ எடுத்த வெற்றிக்கொடி மலைமேலிருந்து விழும் அருவி போல அசைந்து விளங்கும். கடல்போன்ற பெரும்படையின் நடுவே முழங்கும் முரசம் காற்றால் மோதப்பட்ட கடல் அலைபோல ஒலிக்கும். பகைவரை எறிந்து சிதைத்தனர் வாள்வீரர். இலை போன்ற முனையை உடைய வேலேந்திய வீரரும், பாய்ந்து போர்புரிந்து வாயில் நுரை தள்ளும் குதிரைகளும், போர் வேட்கை கொண்ட மறவர்களும் சென்று போர் புரிந்ததனால் பிணங்கள் குவிந்தன. இவ்வாறு பகைவரைப் போரில் கொன்று அழித்து அவர்தம் குடிகளை மறுவாழ்வு பெறச் செய்த வெற்றி வேந்தனே! நிலம் மிகுதியும் விளைவைத் தரவும், வெயில் தணியவும், வெள்ளியாகிய கோள் மழைதருவதற்கு உரிய வகையில் மற்ற கோள்களோடு பொருந்தி நிற்கவும். வானம் மழை பெய்வதற்குரிய மேகங்களால் உலகத்தைக் காக்கும் செயலைச் செய்யவும், நான்கு திசைகளிலும் வேறுபாடின்றித் தம் ஆணையைச் செலுத்தினர் உன் முன்னோர்! உன்னைப் போலவே அசையாத, உறுதியான கொள்கை உடையவராய் அவர்களும் இருந்தமையால் மண் திணிந்த இவ்வுலகை இனிது ஆண்டனர்.” இவ்வாறு பாராட்டுகிறார் கபிலர்.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. இதற்குரிய விளக்கத்தை ஐந்தாம் பத்தின் இறுதிப் பாட்டு உரை விளக்கத்தில் காணலாம். வண்ணம் ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் முந்திய பாட்டிற் கூறப் பெற்றன. தூக்கு செந்தூக்கு; இப்பத்தின் முதற்பாட்டில் விளக்கம் கூறப்பட்டது. பாட்டின் பெயர் மண்கெழு ஞாலம்.

அசைந்து கொண்டே இருக்கும் மண் உருண்டையாகிய இவ்வுலகை அசையாத கொள்கையுடன் சேர மரபினர் ஆண்டனர் என்பதைப் புலப்படுத்தும்- மண்கெழு ஞாலம் என்ற அழகிய தொடர் பாடலின் பெயரானது. ஞாலுதல் – அந்தரத்தில் தொங்குதல். ஞாலம் என்று பூமிக்குப் பெயர் இதனால் வந்தது.

6.6.2 பறைக்குரல் அருவி (பத்தாம் பாட்டு) பறைக்குரல் அருவி என்பது இப்பாட்டின் பெயர், பறை போன்ற முழக்கத்தை உடைய அருவி என்பது இதன் பொருள்.

பாட்டின் கருத்து

”களிறுகளைச் செலுத்தும் வன்மை மிக்க காலடிகளை உடையவர்; குதிரைகளைச் செலுத்திப் பழக்கப்பட்ட கால் விளிம்பு கொண்டவர்; பகைவரை அழிக்கும் வேற்படையையும் கல்லோடு மோதி அதை உடைக்கும் வலிமை மிக்க தோளையும் பெற்றவர்; வில்லால் பகைவரை வருத்திய வெற்றிக்குரியவர்; வண்டுகள் மொய்த்துப் பாடாத குவிந்த அரும்பு போலும் கூர்மையுடைய பனம்பூவோடு குவளைப் பூவையும் மாலையாக்கிச் சூடியவர் உன் வீரர்கள். கடுஞ்சினம் மிக்க பகைவேந்தர்களைப் போரில் அழித்து வீரக்கழல் அணிந்த அம்மறவர்களுக்குத் தலைவனே!.

விளையாட்டாகவும் பொய் கூறாத வாய்மையையும், பகைவர் கூறும் புறஞ்சொற்களைக் கேட்டுக் கொள்ளாத நல்ல அறிவினையும், குற்றம் நீங்கிய மார்பில் பூணோடு கூடிய ஆரத்தையும் உடைய வேந்தனே! பெண்மை சிறந்து நாணமும் மடமும் கற்பும் நிலைபெறக் கொண்ட ஒளிபொருந்திய நெற்றி கொண்ட ஒப்பற்ற பெண்ணுக்குக் கணவனே!

குன்றாத கொள்கையுடைய சான்றோராகிய அமைச்சர் முதலிய சுற்றத்தார் சூழ, வேள்வி செய்து கடவுளை மகிழ்வித்தாய். மேலுலகத்தில் வாழும் வீரர்களை, அவர்களது செயல்களைப் புலவர்களைக் கொண்டு பாட வைத்து மகிழ்வித்தாய்!

சான்றோரைப் பணிகின்ற மென்மையையும் பகைவர்க்கு வணங்காத ஆண்மையையும் கொண்டவனே! இளைய வயதினரான மக்களைக் கொண்டு பெரியோரைப் பேணி, மிகப் பழங்காலத்திலிருந்து முன்னோர் செய்து வரும் கடமையை ஆற்றும் வெல்போர் வேந்தனே! தேவர்கள் வாழும் பொன்னுலகத்திலும் கேட்கும்படி பறைபோல இனிமையாய் ஒலிக்கின்ற அருவிகள் மிகப்பெரிய உச்சிகள் எல்லாவற்றிலும் விளங்குகின்ற அயிரை என்னும் நெடிய மலையைப்போல நீ வாழும் நாளும் அழிவில்லாது நிலை பெறட்டும்.” இவ்வாறு சேரனை வாழ்த்துகிறார் கபிலர்.

பாட்டின் துறை முதலியன

பாட்டின் துறை செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் ஒழுகு வண்ணம். தூக்கு செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். இவற்றுக்குரிய விளக்கங்கள் முன்னுள்ள பாடல்களின் விளக்கங்களில் தரப்பட்டுள்ளன. பாட்டின் பெயர் பறைக்குரல் அருவி.

அருவியின் ஓசையைப் புகழை முழக்கும் இனிய பறையின் குரல் என்று பாடினார். அந்த ஓசையும் விண்ணுலகத்தில் இருக்கும் தேவர்களுக்கும், சேரனின் முன்னோர்களுக்கும் கேட்கும் என்று உயர்வு நவிற்சியாய்க் கற்பனை தோன்றக் கூறினார். இதனால் இந்த அழகிய தொடர் பாடலின் பெயராகியது.

6.7 தொகுப்புரை

செல்வக்கடுங்கோ வாழியாதன் கொடையிற் சிறந்தவன்; “ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்” என அவன் வள்ளல் தன்மை கூறப்பெறும். அவனைப் பகைத்த நாடுகள் வளம் இழக்கும். அவனைப் பணிந்து திறை செலுத்துவோர் நாடு வளம் கொழிக்கும். நிலம் பெயர்ந்தாலும் வாழியாதன் சொன்ன சொல் மாறாதவன்.

அந்தணர்கள் வேண்டுவன கொடுத்த செம்மல் அவன். பாணரும் பரிசிலரும் மகிழப் பெரும் பரிசில்கள் அளிப்பவன் அப்பெருமகன். அவன் தனது இல்லத்திலிருந்து நீங்கிப் பல நாட்கள் போர்க்களத்தில் கழிப்பவன். இவ்வாறு அவன் சிறப்புகள் கபிலரால் இப்பத்தில் போற்றப் பெறுகின்றன. அழகிய தொடர்களால் பாடலுக்குப் பெயர் சூட்டுவது பதிற்றுப்பத்தின் தனிச் சிறப்பு. இது, கவிதையைச் சுவைப்பதில் அன்றைய பெருமக்களுக்கு இருந்த ஈடுபாட்டின் அடையாளமாக விளங்குகிறது.