77

நம்பி அகப்பொருள் - 1

பாடம் - 1

அகப்பொருள் இலக்கணம்

1.0 பாட முன்னுரை தமிழ், இலக்கண வளமுடைய மொழி. எள்ளில் இருந்து எண்ணெய் கிடைப்பது போல், இலக்கியங்களில் இருந்து கிடைக்கப் பெற்றது இலக்கணம். தமிழ் ஏறத்தாழ ஐம்பது இலக்கண நூல்களைக் கொண்டுள்ளது.

தமிழ் இலக்கண நூல்கள் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து இலக்கணங்களைக் கூறுவன. எழுத்து – எழுத்துகளால் உருவாகும் சொல் – சொல் உணர்த்தும் பொருள் – பொருளைச் சொல்வதற்குரிய வடிவமைப்பு (யாப்பு) முறை – சொல்லும் முறைக்குப் பயன்படும் அணி என ஐவகை இலக்கணங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாக உள்ளன.

இவற்றுள் எழுத்தும், சொல்லும் பொருளைக் குறிக்க வந்தவை. யாப்பும் அணியும் அப்பொருள் சிறக்க வந்தவை. நடுநாயகமாய் நனி சிறந்து விளங்குவது ‘பொருள்’ ஒன்றே! அப்பொருள் இலக்கணத்தின் ஒரு பிரிவாகிய அகப்பொருள் பற்றிக் கூறுவதாக இப்பாடம் அமைகிறது.

1.1 பொருள் இலக்கணம் தமிழ் இலக்கணப் பிரிவுகளில் மூன்றாவதாக அமைவது பொருள் இலக்கணம். இங்குப் ‘பொருள்’ என்பது சொல் தரும் பொருள் (meaning) அன்று. சொற்களைக் கொண்டு பாடப்படும் இலக்கிய நூலின் பொருள் (content – பாடு பொருள்) ஆகும். தமிழ் மக்களின் வாழ்க்கை நெறிகளை அடிப்படையாகக் கொண்டு புலவர்கள் இலக்கியங்களைப் படைத்தனர். அவ்விலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு இலக்கண ஆசிரியர்கள் பொருள் இலக்கணத்தை (வாழ்வின் இலக்கணத்தை) வரைந்து கொடுத்தனர்.

1.1.1 அகமும் புறமும் அவ்வாறு அமைந்த பொருள் இலக்கணம் அகம் – புறம் என இருவகைப்படும். அகம் என்பது தலைவன் தலைவியர் இடையே அகத்தே (மனத்துள்) தோன்றும் காதல் உணர்வுகளைப் பற்றியது. புறம் என்பது போரும் வெற்றியும் ஈகையும் புகழும் பற்றியது. அறம், பொருள், இன்பம் எனக் கூறப்படும் உறுதிப் பொருள்களுள் இன்பம் என்பது அகப்பொருளைக் குறிப்பது. அறமும் பொருளும் புறப்பொருளைக் குறிப்பன. முன்னது வீட்டு வாழ்க்கை; பின்னது நாட்டு வாழ்க்கை. இவற்றை முறையே அகத்திணை, புறத்திணை என்றும் வழங்குவர்.

1.1.2 அகம்-புறம் இலக்கண அணுகுமுறை புறப்பொருள் இலக்கியங்களும் இலக்கணங்களும் பெரும்பாலும் அரசர்களின் போர் நிகழ்வுகள், வீரம், கொடை, புகழ் குறித்தே அமைகின்றன. புற இலக்கியங்கள் உண்மை வாழ்வின் நிகழ்வுகளையும் வரலாற்றில் இடம் பெறத்தக்க தலைவர்களின் செயல்களையும் கூறுவன. புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற நூல்களில் பாடப்பெறும் அரசர்கள் கற்பனைப் பாத்திரங்கள் அல்லர். ஆனால் அகப்பொருள் பாடல்களில் இடம்பெறும் தலைவன், தலைவி, தோழி, செவிலி போன்றோர் முற்றும் கற்பனைப் பாத்திரங்களே. அவர்களின் இயற்பெயர், ஊர்ப்பெயர் போன்றவை குறிப்பிடப்படுவதி்ல்லை. இந்த அடிப்படை வேறுபாடு கொண்டே அக-புற இலக்கியங்களும் இலக்கணங்களும் அமைகின்றன.

1.2 ‘அகம்’ - பொருளும் பொருத்தமும்

அகம் என்ற சொல்லின் பொருள் உள் – உள்ளே – உள்ளிருப்பது – அகத்துள் இருப்பது என விரியும். தலைவனும் தலைவியும் தம் உள்ளத்துள் உணர்ந்து அனுபவிக்கும் இன்பம் இத்தன்மையுடையது எனப் பிறர்க்கு விளக்க இயலாததாக இருப்பது. தம்முள்ளும் ஒருவர்க்கொருவர் விளக்க இயலாததாக இருப்பது. ஆகவே காதல் ஒழுக்கத்தை ‘அகம்’ என்றது மிகவும் பொருத்தமாகும். ‘அகம்’ என்பதை ‘ஆகுபெயர்’ என்றார் நச்சினார்க்கினியர். அகம் என்பது அகத்தே (உள்ளத்தே) நிகழும் இன்பத்திற்கு ஆகி வந்தது என்பது அவர் கருத்து.

காதலுக்கு உள்ளமே முதன்மை; உள்ளத்து ‘அவாவே’ (ஆசை) தூண்டுதலாகக் ‘காதல்’ வெளிப்படும்; உடல் கருவியேனும் உள்ளமே காரணம்; காதலில் மொழியும் செயலும் உள்ளத்தின் வழிச்செல்லும்; உள்ளத்துள் நினைக்கும் நினைவும் காதல் நுகர்ச்சிக்குச் சமம். இவையாவும் காதலை – அன்புணர்ச்சியை ‘அகம்’ என்று வழங்கும் சொல்லாட்சியின் பொருத்தத்தைப் புலப்படுத்துவன. தலை மக்கள் தத்தம் உள்ளத்து உள்ளேயே எண்ணி மகிழும் ஏற்றத்தைக் குறிப்பது அகம். பின்னர்த் தோன்றிய தொன்னூல் விளக்கம் என்னும் நூலும், ‘அகத்திணை என்பது மனத்தின் ஒழுக்கம்’ என்று வரையறுப்பது குறிப்பிடத்தக்கது.

1.2.1 அகப்பொருளின் தனிச்சிறப்பு அகப்பொருள் பற்றிய இலக்கண நெறி தமிழுக்கே உரியது; இது உலகறிய வேண்டிய பேருண்மை! இதற்கான சான்றுகள் பல உள்ளன.

குறிஞ்சிப்பாட்டு

சங்க இலக்கியங்களில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டு களவொழுக்கத்தைப் பற்றியது. அது ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடப் பெற்றது என்பர். ‘தமிழ் அறிவித்தல்’ என்பதற்குத் தமிழின் அகப்பொருள் சிறப்பை எடுத்துரைப்பது என்பது பொருள். ஆரிய மன்னன் இச்சிறப்பை அறியாதிருந்தான் என்பதிலிருந்து அகப்பொருள் இலக்கண மரபு தமிழுக்கேயுரிய தனிச்சிறப்பு என்பது புலப்படுகிறதல்லவா!

பரிபாடல்

பரிபாடலில் குன்றம்பூதனார் பாடிய ஒன்பதாம் பாடல் களவொழுக்கம் பற்றியது. அதனுள் ‘தள்ளாப் பொருளியல்பின் தண்டமிழ்’ என்ற தொடர் வருகிறது. அது பொருள் இலக்கணம் தமிழின் தனிச்சிறப்பு என்பதைக் காட்டுகின்றது.

இறையனார் அகப்பொருள்

இறையனார் அகப்பொருள் உரையில் வரும், ‘இந்நூல் என் நுதலிற்றோ எனின், தமிழ் நுதலிற்று’ (இந்த நூல் என்ன சொல்லுகிறது என்றால் தமிழ் சொல்கிறது.) என்ற பகுதி அகமே தமிழ் என்பதைச் சுட்டி நிற்கிறது.

தமிழ்நெறி விளக்கம்

அகப்பொருள் இலக்கணத்தைப் பற்றிக் கூறும் பழந்தமிழ் இலக்கண நூல் ஒன்றுக்குத் ‘தமிழ்நெறி விளக்கம்’ என்றே பெயர் அமைந்திருப்பதும் இங்கு எண்ணத்தக்கது.

கலைக் களஞ்சியம்

கலைக் களஞ்சியத்தில் பேராசிரியர் மு. அருணாசலம், ‘இக் காதல் ஒழுக்கத்தை இலக்கண நெறியால் வரையறுத்துக் கூறுதல் தமிழர்க்கே உரிய தனிப் பெருஞ் சிறப்பாகும்’ (தொகுதி – 1) என்று வரைந்துள்ள விளக்கமும் குறிப்பிடத்தக்கது. மேற்காட்டியவற்றுள் ‘தமிழ்’ என்ற சொல் தமிழ் அக இலக்கியம், அக இலக்கணம், தமிழர் அகவாழ்வு நெறி என அனைத்துப் பொருளும் தருவதை உணரலாம்.

தமிழுக்கே உரியது

அகப்பொருட் பாடல்கள் வடமொழி உள்ளிட்ட வேறு பல மொழிகளிலும் உண்டு. எனினும் அகப்பொருள் பாடல்களின் அமைப்புக்கு வழிகாட்டும் இலக்கணப் பாகுபாடுகள் தமிழில் மட்டுமே உண்டென்பது உணர்தற்குரியது.

தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி என்ற நூலின் ஆசிரியர் ஏ.வி.சுப்பிரமணிய அய்யர் குறிப்பிடும் கீழ்க்காணும் செய்திகள் ஒப்பிட்டு உணரத்தக்கன.

“வடமொழியில் சில பாடல்களையும், பாடல் தொகுதிகளையும் ஊன்றிக் கவனித்தால், அவற்றில் தமிழ் அகப்பொருள் இலக்கணத்தின் இயல்புகள் காணப்படுகின்றன.”

“வடமொழி இலக்கண நூல்களில், பொருள் இலக்கணத்தைப் போல் ஒரு பகுதி இருப்பதாகத் தெரியவில்லை.”

இவ்வாறே – “தொல்காப்பிய முதல் சூத்திர விருத்தி” என்ற உரை வரைந்த சிவஞான முனிவர் வடமொழியில் இருந்து பெறப்படாமல் தமிழில் மட்டுமே உள்ளதாகப் பல இலக்கணக் கூறுகளைப் பட்டியலிட்டுள்ளதைக் குறிப்பிடலாம். அவற்றுள் ஒன்று ‘அகம்-புறம் என்ற பொருட்பாகுபாடு’ என்பதாகும்.

பூவின் மணமெனப் புனிதத் தமிழினுக்கு

ஆவி ஆகும் அகப்பொருள் இயல்பே

மலருக்கு நறுமணம் இன்றியமையாதது; அதுபோலத் தூய தமிழுக்கு அகப்பொருள் இலக்கணம் இன்றியமையாதது என்பது பொருள்.

இது அறுவகை இலக்கணம் எனும் நூலை இயற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அறுதியிட்டு உரைக்கும் பேருண்மை!

1.3 தமிழில் அகப்பொருள் இலக்கியங்கள்

அகப்பொருள் என்ற பாடுபொருளும் அது பற்றிய இலக்கண வரையறைகளும் தமிழில் தனித்தன்மையும் முதன்மையும் பெற்றிருப்பதைப் பல சான்றுகள் கொண்டு உணர்ந்தோம். அந்த முதன்மையை மேலும் வலியுறுத்துவது போல் தமிழ் இலக்கிய நூல்களும் அமைந்துள்ளன.

எத்ட்டுதொகை

சங்க இலக்கியங்களில் பெரும்பான்மை இடம் பெற்றிருப்பவை அகப்பாடல்களே ஆகும். எட்டுத்தொகையில் உள்ள நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்னும் ஐம்பெருந் தொகுப்புகளும் அகப்பொருள் பற்றியன. பரிபாடலிலும் அகச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டில் உள்ள முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களும், ஒரு வகையில் நெடுநல்வாடையும் அகத்துறை சார்ந்தவை. சங்கத் தமிழ்ப் பாடல்கள் மொத்தம் 2381; அவற்றுள் அகம் சார்ந்தவை 1862 என்றொரு கணக்கீடும் கருதற்கு உரியது.

கீழ்க்கணக்கு நூல்கள்

சங்க காலத்திற்குப் பின் எழுந்த கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது ஆகியவையும் திருக்குறளின் ஒரு பிரிவாகிய காமத்துப் பாலும் அகப்பொருள் பற்றியன.

அகப்பாடல்கள் பெருகக் காரணம்

பழந்தமிழகத்தில் தம் உரிமையைக் காப்பதற்காக அன்றிப் பிறர் உரிமையைப் பறிப்பதற்காகவும் மன்னர்கள் போரிட்டனர். வேறு சிலர் புகழ் கருதியும் போர் நிகழ்த்தினர். இவற்றை உற்று நோக்கிய சங்கத் தமிழ்ச் சான்றோர் பகையை மிகுவிக்கும் புற வாழ்க்கையைப் பெரிதும் பாடாது, அன்பினை மிகுவிக்கும் அகவாழ்வை மிகப் பாடினர் எனக் கருதலாம். அகமே, கல்லான நெஞ்சையும் கனிவிக்கும் வல்லமை மிக்கது.

1.4 இலக்கண நூல்களில் அகப்பொருள் பொருள் இலக்கணம் தொடர்பாகத் தோன்றிய நூல்கள் பல; அவற்றுள்ளும் அகப்பொருள் பற்றிய நூல்களே மிகுதி. இறையனார் அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், நம்பியகப் பொருள், களவியல் காரிகை, மாறன் அகப்பொருள் என்னும் ஐந்து நூல்கள் அகப்பொருள் இலக்கணத்தை மட்டுமே கூறுவன.

தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம் ஆகிய நூல்களில் பிற இலக்கணங்களோடு அகப்பொருள் இலக்கணமும் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது.

தஞ்சைவாணன் கோவை, திருப்பதிக்கோவை என்ற இரண்டு நூல்களும் முறையே நம்பியகப் பொருள், மாறன் அகப்பொருளுக்கான மேற்கோள் தொகுப்பாக வழங்கி வருகின்றன.

1.4.1 அகப்பொருள் இலக்கண நூல்கள் அட்டவணை பெரிதாக்குக

எண்     நூலின் பெயர்       ஆசிரியர் பெயர்         காலம்                        பகுப்புகள்                                  நூற்பாக்கள்

1.          தொல்காப்பியம்     தொல்காப்பியர்                கி.மு.3                       பொருளதிகாரம் 4 இயல்கள்                     214

2.         இறையனார்             இறையனார்                      கி.பி.7                       களவு, கற்பு                                                   60

அகப்பொருள்

3.        தமிழ்நெறி                 ஆசிரியர் பெயர்                கி.பி.9                        பொருளியல்                                               25

விளக்கம்                     தெரியவில்லை

4.        வீரசோழியம்              புத்தமித்திரர்                    கி.பி.11                       பொருட்படலம்                                          21

5.       நம்பியகப்பொருள்     நாற்கவிராச நம்பி       கி.பி.13                            அகத்திணையியல்,                                      252

களவியல்,வரைவியல்,கற்பியல்,ஒழிபியல்

6.       களவியற்                ஆசிரியர் பெயர்                 கி.பி.13                      அகப்பொருள்                                                 23

காரிகை                   தெரியவில்லை                                                     தோழியிற்கூட்டம்

கற்பொழுக்கம்

7.      மாறன்                      திருக்குருகைப்                     கி.பி.16                     களவு, கற்பு, வரைவு                                     106

அகப்பொருள்        பெருமாள்

கவிராயர்

8.     இலக்கண                வைத்தியநாத                        கி.பி.17                     அகத்திணையியல்                                         226

விளக்கம்                     தேசிகர்

9.     தொன்னூல்            வீரமாமுனிவர்                     கி.பி.18                      பொருளியல்                                                 58

விளக்கம்

10.    முத்துவீரியம்         முத்துவீரிய                           கி.பி.19                   அக ஒழுக்க இயல்,                                           92

உபாத்தியாயர்                                                      களவு ஒழுக்க இயல்,

கற்பு ஒழுக்க இயல்

11.    சுவாமிநாதம்       சுவாமி கவிராயர்                   கி.பி.19                   அகத்திணை மரபு,                                            58

கைகோள் மரபு

12.    அறுவகை              வண்ணச்சரபம்                  கி.பி.19                   பொருளியல்   அகப்பொருள்                         56

இலக்கணம்            தண்டபாணி

சுவாமிகள்

1.5 நம்பியகப் பொருள்

தொன்மைத்தமிழ் நூலான தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் ஒரு பகுதியாக அகப்பொருளை விரிவாக விளக்கியுள்ளது. அடுத்துத் தோன்றிய இறையனார் அகப்பொருள் களவு – கற்பு எனும் இரு பிரிவுகளில் அகத்திணை குறித்த விளக்கம் வழங்குகிறது. அதன் பின் தமிழ்நெறி விளக்கம் என்னும் நூலொன்று சிறிய அளவில் அகப்பொருள் இலக்கணத்தைக் கூறுகின்றது. தொடர்ந்து கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நம்பி அகப்பொருள் என்ற  நூலே  அகப்பொருள் இலக்கணத்துக்கென்று உள்ள ஒரு தனிப்பெரும் நூலாகத் திகழ்கிறது.

1.5.1 ஆசிரியர் இந்நூலின் ஆசிரியர் நாற்கவிராசநம்பி ஆவார். இவர் புளிங்குடி என்ற ஊரினர். உய்யவந்தான் என்பாரின் மைந்தர். சமண சமயத்தவர். தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர். ஆசுகவி – மதுரகவி – சித்திரக்கவி – வித்தாரக்கவி என்னும் நால்வகைப் பாக்களும் புனையும் ஆற்றல் பெற்றவர். அது கருதியே ‘நாற்கவிராசன்’ என அழைக்கப்பட்டவர். நம்பி, என்பதே இவரது இயற்பெயர்.

நம்பி தம் அகப்பொருள் நூலுக்கு “அகப்பொருள் விளக்கம்” என்று பெயரிட்டுள்ளார். இவரே நூலுக்கு உரையும் எழுதியுள்ளார். தமது உரையில் பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவைச் செய்யுட்களை உதாரணம் காட்டியுள்ளார். தம் நூலைப் பாண்டியன் குலசேகரன் அவையில் அரங்கேற்றியுள்ளார்.

தொல்காப்பியர் வகுத்துரைத்த அகப்பொருள் இலக்கணத்தை மனத்தில் கொண்டு, சங்கப் புலவர் செய்யுட்களில் காணப்பட்ட கூற்றுகளையும் சேர்த்துச் சிந்தித்துச் சூத்திரம் யாத்து உரையும் வகுத்தார் நாற்கவிராச நம்பி என்று, இந்நூலின் சிறப்புப்பாயிரம் கூறுவது குறிப்பிடத்தக்கது.

1.5.2 நூலின் அமைப்பு இந்நூல் சிறப்புப்பாயிரத்தோடு தொடங்குகிறது. அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்னும் 5 பகுதிகளைப் பெற்றுள்ளது. 252 நூற்பாக்களைக் கொண்டது. இவற்றிலிருந்து அகத்திணை இயல் (116 நூற்பாக்கள்) களவியல் (54 நூற்பாக்கள்) என்னும் இரண்டு இயல்களும் இலக்கணம் 3 (D021) என்னும் தாளுக்குரிய பாடப் பகுதிகளாக உள்ளன. எஞ்சிய வரைவியல், கற்பியல், ஒழிபியல் ஆகிய 3 பகுதிகளும் இலக்கணம் 4 (D022) தாளுக்குரிய பாடப்பகுதிகள் ஆகும்.

1.6 அகத்திணை ஒழுக்கம் - பொதுப்பார்வை

அகத்திணை ஒழுக்கம் பற்றிய பொதுவான சில செய்திகள் கீழே தொகுத்து வழங்கப்படுகின்றன.

ஏழு திணை

அகப்பொருள் இலக்கண நூல்கள் உணர்த்தும் அகத்திணை ஒழுக்கம் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், கைக்கிளை, பெருந்திணை என ஏழு வகைப்படும். இவற்றுள் முதல் ஐந்தும் தலைவன் – தலைவி ஆகிய இருவரின் ஒத்த அன்பின் வழிப்பட்டவை ; உயர்வுடையவை. கைக்கிளை ஒருபக்கக் காதல் ஆதலால் ஒத்த அன்பு தோன்றுவதில்லை. பெருந்திணையில் பொருத்தம் இன்மை புலப்படும்.

பாலது ஆணை

எத்தனையோ பேரைப் பார்த்தாலும் ஒருவரைப் பார்க்கும் போது மட்டுமே காதல் உணர்வு தோன்றுகிறது. இது பால் அல்லது தெய்வம் அல்லது விதியின் ஆணையால் நிகழ்வது என அகப்பொருள் கூறுகிறது. (பால் = ஊழ், கடவுள்)

களவும் கற்பும்

அகத்திணை பற்றிய வாழ்வியல் கூறுகளைக் களவு, கற்பு என இருபெரும் பிரிவுகளில் வழங்குவர். களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியா வண்ணம் தம் காதலை மறைத்து இயங்குவது. கற்பு என்பது பிறர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் இல்லற வாழ்க்கை. களவு கற்பொழுக்கமாக மாறும்; அதற்குக் காதலர்களின் விருப்பம் மட்டுமன்றித் துணைவர்களின் உதவியும் தேவைப்படும்.

அறத்தொடு நிற்றல்

களவு ஒழுக்கத்தைக் கற்பு அறமாக ஆக்கும் அருஞ்செயல் ‘அறத்தொடு நிற்றல்’ வழி நிகழும். அக ஒழுக்கத்தின் இன்றியமையாத கூறு அது! அதற்குத் தோழி முதலான மாந்தர்கள் துணை நிற்பர். தலைவன் – தலைவி திருமணத்தை நோக்கமாகக் கொண்டு அவர்களின் களவுக் காதலைப் பெற்றோர்க்கு வெளிப்படுத்துவது ‘அறத்தொடு நிற்றல்’ ஆகும்.

கந்தர்வமும் களவும்

இத்தகு அகத்திணைக் களவொழுக்கத்தை வடநூல் மரபில் சொல்லப்படும் கந்தர்வத்தோடு ஒப்பிடுவர். கந்தர்வம் கொடுப்பாரும் கேட்பாரும் இன்றித் தலைவனும் தலைவியும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடுவது. எனினும் வேறுபாடு உண்டு; கந்தர்வம் கற்பு (மணவாழ்வு) இன்றியும் அமையும்; தமிழ் வழிக் களவுக்குக் கற்பு இன்றியமையாதது. களவு கற்பாவதே முழுமை.

முப்பொருள்

அக ஒழுக்கத்தைப் பாடும் பாடல்களில் தலைவன் – தலைவி காதல் உணர்வுகளையும் பேச்சுகளையும், அவை நிகழும் இடம், காலம், பின்னணி ஆகியவற்றையும் மூன்று பொருள்கள் கொண்டு புலவர்கள் வெளிப்படுத்துவர். அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன.

முதற் பொருள்

முதற்பொருள் என்பது நிலமும் பொழுதும் ஆகும். இது ஐந்து வகை நிலங்களையும் (குறிஞ்சி, முல்லை முதலியன) காலப் பகுதிகளையும் குறிப்பிடுவது. வேனில் முதலிய பருவங்களும், (பெரும்பொழுது) காலை மாலை முதலிய ஒரு நாளின் பகுதிகளும் (சிறுபொழுது) இதில் அடங்கும்.

கருப்பொருள்

ஐவகை நிலப்பகுதிகள் ஒவ்வொன்றிலும் வாழும் மக்கள் அவர்களது பழக்கங்கள், அங்குள்ள பறவை, விலங்கு, மரம், மக்கள் செய்யும் தொழில், அவர்கள் வணங்கும் தெய்வம் முதலியவற்றைக் கருப்பொருள் என்று குறிப்பிடுவார்கள். அகப்பொருள் பாடல்களில் இவை பின்புலமாக அமையும்.

உரிப்பொருள்

தலைவனும் தலைவியும் கூடுதல், பிரிதல், எதிர்பார்த்துக் காத்திருத்தல், காலம் நீடிக்கும்போது வருந்துதல், தலைவனிடம் தலைவி ஊடல் கொள்ளுதல் ஆகியவை உரிப்பொருள் எனப்படும். உரிப்பொருளாகிய வாழ்க்கை ஒழுக்கமே மூன்று பொருள்களிலும் முதன்மை பெறும்.

1.7 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் கீழ்க்காணும் செய்திகள் அறியப்படுகின்றன.

ஐவகை இலக்கணமும் அவற்றுள் அகப்பொருள் பெறும் சிறப்பும் கூறப்பட்டன.

‘அகம்’ பற்றிய இலக்கணம் தமிழுக்கே உரியது என்ற உயரிய உண்மை புலப்படுத்தப்பட்டது.

தமிழ் இலக்கியங்களில் அகம் சார்ந்த பாடல்களின் பெருக்கமும் அதற்கான காரணமும் தெரிய முடிந்தது.

தமிழில் எழுதப்பட்டுள்ள அகப்பொருள் இலக்கண நூல்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றன.

நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் நூல் பற்றிய பொது அறிமுகம் கூறப்பட்டது.

அகத்திணை ஒழுக்கம் பற்றிய பொதுவான சில செய்திகள் தெரிவிக்கப்பட்டன.

பாடம் – 2

அகத்திணை இயல் – I

2.0 பாட முன்னுரை

‘நம்பி அகப்பொருள்’ என்னும் அகப்பொருள் இலக்கண நூலின் முதல் இயல் ‘அகத்திணை இயல்’ என்பதாகும். அது 116 நூற்பாக்களை உடையது. அந்நூற்பாக்கள் அகத்திணை பற்றிய பொது இலக்கணங்கள் பலவற்றை விளக்குகின்றன.

அகத்திணை ஏழு என்ற பாகுபாடும், அகத்திணைக்கு அடிப்படையான முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனும் முப்பொருள் பாகுபாடும் முதல் 25 நூற்பாக்களில் விளக்கப்பட்டுள்ளன. அச்செய்திகள் இப்பாடப் பிரிவில் இடம் பெறுகின்றன.

2.1 அகப்பொருள் வகை அகத்திணைகள் மொத்தம் ஏழு; எனினும் அவற்றை இலக்கண நூலார் மூன்று பிரிவுகளில் அடக்கிக் காட்டுவர்.

அவையாவன   :

கைக்கிளை

ஐந்திணை

பெருந்திணை

இம் மூன்றே எண்ணிக்கை அடிப்படையில் கூறும் போது

கைக்கிளை      -   1

ஐந்திணை        -   5

பெருந்திணை -   1

என 7 பிரிவுகளாகிறது.

மலர்தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த

அருந்தமிழ் அகப்பொருள், கைக்கிளை, ஐந்திணை

பெருந்திணை எனஎழு பெற்றித்து ஆகும் (1)

என்பது நம்பியகப் பொருள் நூற்பா!

அகப்பொருள் சொல்லப்படும் முறை

அகத்திணை ஏழினையும் புனைந்துரை, உலகியல் எனும் இரு முறைகளில் கூறலாம்.

புனைந்துரை

புனைந்துரை என்பது நாடகப் பாங்குடையது. புலவர் தாமே கற்பனையாகப் படைத்து மொழிவது.

உலகியல்

உலகியல் என்பது உண்மைத் தன்மை உடையது. இயல்பாக, உலகில் நடப்பதை உள்ளவாறே உரைப்பது.

2.1.1 கைக்கிளை அகப்பொருள் வகைகளில் முதலில் வைத்துக் கூறப்பட்டது ‘கைக்கிளை’ ஆகும்.

கைக்கிளை என்ற சொல்லைக் கை+கிளை எனப் பிரித்துப் பொருள் காண்பர். ‘கை’ என்பதற்கு ‘ஒரு பக்கம்’ என்றும், ‘சிறுமை’ என்றும் இருவகைப் பொருள்கள் உள்ளன. ‘கிளை’ என்பதற்கு ‘உறவு’ என்று பொருள். எனவே ‘ஒரு பக்கத்து உறவு’ அல்லது ‘சிறுமைத் தன்மையுடைய உறவு’ என்பதே ‘கைக்கிளை’ என விளக்கம் தருவர். இதனை ‘ஒரு தலைக் காமம்’ என்ற தொடரால் குறிப்பிடுகிறது நம்பியகப்பொருள் நூல்.

2.1.2 பெருந்திணை ‘பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்’ என்பது இலக்கண விதி.

பொருந்தாத காதல் பெருந்திணை எனப்பட்டது. தலைவன் அல்லது தலைவி, பொருந்தாத வகையில் அன்பு காட்டுவது இது! இதுவே உலகில் பெருமளவில் (பெருவழக்காக) நிகழ்வதால் ‘பெருந்திணை’ எனப் பெயர் பெற்றது என்பர் வெள்ளை வாரணர்.

2.1.3 ஐந்திணை இதனை அன்பின் ஐந்திணை என்பர். தலைவன் தலைவி இருவரும் தம்முள் உள்ளம் ஒன்றி, அன்பு மேலிட்டு வாழும் காதல் வாழ்க்கை ஐந்திணை எனப்படும். இது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலங்களின் அடிப்படையில் பெயர் பெற்றுத் திகழ்கிறது. தமிழ் நூல்களில் அதிக அளவில் போற்றிப் பாடப் பெற்றவை இத்தகு அன்பின் ஐந்திணையே.

2.2 ஐந்திணைக்கும் உரிய பொருள்கள்

நிலங்களின் அடிப்படையில் பெயர் பெற்ற ஐந்திணைகளுக்கும் உரிய பொருள்கள் பல. அவற்றை மூவகைப்பட்ட பாகுபாடுகளுக்குள் அடக்கிக்காட்டுவது இலக்கண மரபு. அவை:

(1) முதற்பொருள்    :     நிலமும், நிலத்துக்குரிய பொழுதுகளும்

(2) கருப்பொருள்    :     நிலத்தில் உள்ள பொருள்கள்

(3) உரிப்பொருள்    :     நிலத்துக்குரிய ஒழுக்கம்

இம் மூவகைப் பொருள்களும் நிலத்தின் அடிப்படையிலேயே வகுக்கப் பெற்றுள்ளன.

2.3 முதற்பொருள்

ஐந்திணைகளுக்கும் உரிய மூன்று பொருள்களில் முதன்மையானது நிலம் ஆகும்.

நிலத்துடன், அந்த நிலத்துக்குரிய ‘பொழுது’ என்ற காலத்தையும் சேர்த்து ‘முதற்பொருள்’ என வழங்குவர். இதனை,

நிலமும் பொழுதும் என முதல் இரு வகைத்தே (8)

என்ற நம்பியகப் பொருள் நூற்பா இனிது விளக்கும்.

2.3.1 திணையும் நிலமும் நிலம் என்பது முதற்பொருளின் பகுதி ; குறிஞ்சி முதலான 5 திணைகளுக்கும் உரிய நிலங்கள் எவை என்பதைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகிறது.

வரையே சுரமே புறவே பழனம்

திரையே அவையவை சேர்தரும் இடனேஎனஈர்

ஐவகைத்து அனையியல் நிலமே (9)

வரை     :     மலைமலையும், அதைச் சார்ந்த இடமும் குறிஞ்சி

சுரம்       :     மணல் மணலும் அதைச் சார்ந்த இடமும் பாலை

புறவு     :     காடு காடும், காடு சார்ந்த இடமும் முல்லை

பழனம் :    வயல்வயலும் அதைச் சார்ந்த இடமும் மருதம்

திரை     :    கடல்கடலும், அதைச் சார்ந்த இடமும் நெய்தல்

இவ்வாறு ஐந்து திணைகளுக்கும் ஐவகைப்பட்ட நிலங்களை வகுத்துள்ளனர்.

2.3.2 திணையும் பொழுதும் பொழுது என்பது காலத்தைக் குறிக்கும். அது சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும்.

சிறுபொழுது

இது ஒரு நாளின் சிறுபிரிவு:

மாலை

யாமம் (நள்ளிரவு)

வைகறை (அதிகாலை நேரம்)

எற்படு காலை (சூரியன் மறையும் நேரம்)

நண்பகல்

எனச் சிறுபொழுது 5 பிரிவுகளை உடையது.

பெரும்பொழுது

இது ஓர் ஆண்டின் உட்பிரிவு ஆகும்.

இளவேனில் (சித்திரை, வைகாசி மாதங்கள்)

முதுவேனில் (ஆனி, ஆடி மாதங்கள்)

கார்காலம் (ஆவணி, புரட்டாசி மாதங்கள்)

கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்)

முன்பனிக்காலம் (மார்கழி, தை மாதங்கள்)

பின்பனிக்காலம் (மாசி, பங்குனி மாதங்கள்)

ஐந்து திணைகளுக்கும் உரிய சிறுபொழுது, பெரும்பொழுதுகள் எவையெவை என்பதைக் கீழ்வரும் அட்டவணை விளக்கும்.

பெரிதாக்குக

நிலம்                               சிறுபொழுது                                 பெரும்பொழுது

(அல்லது)திணை

குறிஞ்சி                                யாமம்                                                           கூதிர், முன்பனி

பாலை                                  நண்பகல்                                                     வேனில், பின்பனி

முல்லை                               மாலை                                                          கார்

மருதம்                                 வைகறை                                                      கார்காலம் முதலான  ஆறும் உரியன.

நெய்தல்     எற்படு காலை (சூரியன் மறையும் நேரம்)        கார்காலம் முதலான ஆறும் உரியன.

2.4 கருப்பொருள்

ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்களில் வாழும் உயிரினங்களும் வழங்கும் பொருள்களும் ‘கருப்பொருள்’ என வழங்கப்படுகின்றன. அந்தந்த நிலங்களுக்கு ஏற்ப வேறு வேறாக விளங்கும் அக்கருப்பொருள்களை இலக்கண நூல்கள் பலவாறு வகைப்படுத்தும். நம்பியகப் பொருள் 14 வகையான கருப்பொருள்களைப் பட்டியல் இட்டுக் காட்டுகிறது. அவையாவன

ஆரணங்கு (தெய்வம்)

உயர்ந்தோர்

உயர்ந்தோர் அல்லோர்

புள் (பறவை)

விலங்கு

ஊர்

நீர்

பூ

மரம்

உணவு

பறை

யாழ்

பண்

தொழில்

குறிஞ்சி முதலான ஐவகைத் திணைகளுக்கும் (நிலங்களுக்கும்) உரிய கருப்பொருள்களின் தொகுப்பாகக் கீழ்வரும் பட்டியல் தரப்பட்டுள்ளது.

ஐந்திணைக் கருப்பொருள்கள்

பெரிதாக்குக

எண்     கருப் பொருள்கள்        குறிஞ்சி                   பாலை                      முல்லை                    மருதம்                     நெய்தல்

1.          ஆரணங்கு (தெய்வம்)        முருகன்                    கொற்றவை                      திருமால்                          இந்திரன்                        வருணன்

2.           உயர்ந்தோர்                         பொருப்பன்,           விடலை, மீளி,                 குறும்பொறை              ஊரன், மகிழ்நன்,            சேர்ப்பன்

வெற்பன்,                    எயிற்றி                         நாடன் தோன்றல்,         மனைவி

சிலம்பன்,                                                          கிழத்தி

குறத்தி,

கொடிச்சி

3.          தாழ்ந்தோர்                            கானவர்,               எயினர்- எயிற்றியர்,    இடையர் – இடைச்சியர்,  உழவர் -உழத்தியர்         நுளையர்-                                                                                                                                                                                                                                                    நுளைச்சியர்

குறவர் – குறத்தியர்                                                 ஆயர் – ஆய்ச்சியர்        கடையர்- கடைசியர்            பரதர்-பரத்தியர்

மறவர் – மறத்தியர்

4.           புள் (பறவை)                     கிளி, மயில்                புறா,பருந்து,கழுகு          காட்டுக்கோழி             அன்னம், நாரை, மகன்றில்     கடல் காகம்

5.          விலங்கு                               புலி, யானை,              செந்நாய்                         மான், முயல்                  எருமை, நீர்நாய்     சுறாமீன்

கரடி, சிங்கம்

6.          ஊர்                                   சிறுகுடி                          குறும்பு                           பாடி                               பேரூர், மூதூர்                   பாக்கம், பட்டினம்

7.          நீர்                                      அருவி நீர்,                     ———                            குறுஞ்சுனை,                 ஆறு, கிணறு, குளம்         உவர்நீர்க் கேணி

சுனை நீர்                                                              காட்டாறு

8.          பூ                                      குறிஞ்சிப் பூ,            குரவம் பூ மரவம் பூ                 முல்லை,                  தாமரை, குவளை           நெய்தல்,தாழை

காந்தள் பூ,                                                           பிடவம், தோன்றி

வேங்கைப் பூ

9.        மரம்                                 சந்தனம்,தேக்கு,                உழிஞை,                      கொன்றை,                           காஞ்சி,                        புன்னை, ஞாழல்

அகில், மூங்கில்                 பாலை, ஓமை              குருந்தம், காயா                வஞ்சி, மருதம்

10.      உணவு                            மலைநெல்,                    வழிப்பறி,                               வரகு,                           நெல்லரிசி                      மீனும் உப்பும் விற்றுப்                                                                                                                                                                                                                                 பெற்ற உணவுப் பொருள்

தினை,                      கொள்ளையிட்டுக்                   சாமை,

மூங்கில்அரிசி               கவர்ந்தவை                         முதிரை

11.       பறை                           தொண்டகப் பறை            துடி                              ஏறுகோட்பறை                     நெல்லரி, கிணை,       மீன்கோட் – பறை,

மண முழவு                   நாவாய்ப் பம்பை

12.       யாழ்                           குறிஞ்சி யாழ்                    பாலை யாழ்                   முல்லை யாழ்                        மருத யாழ்                   விளரி யாழ்

13.       பண்                           குறிஞ்சிப் பண்                 பஞ்சுரம்                          சாதாரி                                   மருதப் பண்               செவ்வழிப் பண்

14.       தொழில்                     வெறியாடல்,                  போர், பகற்சூறை           சாமை, வரகு                         வயல் களை-கட்டல்;      மீன் பிடித்தல்,

தினையும் மலை                 ஆடல்                         விதைத்தல் களை                  அரிதல், கடா விடல்   ,   உப்பு உண்டாக்கல்,

நெல்லும் விதைத்தல்,                                             கட்டல்,கடா விடல்,              விழாச்செய்தல்,              மீன் உணக்கல்

தேன் அழித்தல்,                                                      குழலூதுதல் குரவை              புதுநீர் ஆடுதல்                கடல் ஆடுதல்.

கிழங்கு எடுத்தல்,                                                   ஆடுதல், கொல்லேறு தழுவுதல்

அருவி நீர் ஆடல்

2.5 உரிப்பொருள்

முப்பொருள் வகைப்பாட்டில் மூன்றாவதாக அமைவது உரிப்பொருள் ஆகும். ஐவகைப்பட்ட திணைகளுக்கும் உரிய ஒழுக்கங்களை உரிப்பொருள் என்று பெயரிட்டு வழங்குவர். அந்த ஒழுக்கங்கள் ஐந்திணை பற்றிய செய்யுட்களுக்கு உரிய பாடுபொருள் என்பதனாலும் உரிப்பொருள் எனப்பட்டது. அவ்வத் திணைகளுக்கு உரிமை உடைய ஒழுக்கங்கள் என்று விளக்கம் தருவதும் பொருத்தம் உடையதே ! (உரி = உரியது, உரிமை உடையது)

2.5.1 ஐந்திணை உரிப்பொருள்கள் ஐந்திணைகளுக்கும் உரிய உரிப்பொருள்களைக் கீழ்க்காணுமாறு வகுத்துள்ளனர்.

முல்லைக்குரியது

இருத்தலும், அதன் நிமித்தமும்

மருதத்துக்குரியது

ஊடலும், அதன் நிமித்தமும்

நெய்தலுக்குரியது

இரங்கலும், அதன் நிமித்தமும் சொற்பொருள் விளக்கம்

புணர்தல்

தலைவனும் தலைவியும் கூடுதல்.

பிரிதல்

தலைவன், யாதேனும் ஒரு காரணமாகத் தலைவியை விட்டுப் பிரிந்து செல்லுதல்.

இருத்தல்

தலைவி, தலைவனது பிரிவைப் பொறுத்துக் கொண்டு இருத்தல்.

ஊடல்

தலைவி, யாதேனும் ஒரு காரணம் கருதித் தலைவன் மீது கோபப்படுதல்.

இரங்கல்

தலைவி, தலைவனது பிரிவைத் தாங்க இயலாது வருந்துதல்.

நிமித்தம்

நிமித்தம் என்றால் அந்த ஒழுக்கம் தொடர்பான முன்/ பின் செயல்பாடுகள் என்று பொருள்.

2.6 தொகுப்புரை

இப்பாடப் பிரிவில் நாம் பயின்ற இலக்கணப் பகுதியில் இருந்து அறியப்பட்ட செய்திகள்

தமிழில் அகப்பொருள் மூன்று பிரிவாகவும், ஏழு என்ற எண்ணிக்கையோடும் உள்ளது.

ஐந்திணை என்பதே சிறப்பானது. அது அன்பு வழிப்பட்டது.

ஐந்திணைகளும் நில அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டு விளக்கப் பெறுகின்றன.

ஐந்திணைகளுக்கும் உரிய பொருள்கள் முதல், கரு, உரி என மூன்றாகும்.

பாடம் – 3

அகத்திணை இயல் – II

3.0 பாட முன்னுரை

நம்பியகப் பொருள் என்னும் இலக்கண நூலின் முதல் இயல் அகத்திணை இயல் ஆகும். அந்த இயலின் இரண்டாம் பிரிவாக இப்பாடப் பகுதி அமைகிறது. இப்பாடப் பகுப்பில்,

களவு, கற்பு எனும் இரு கைகோள்கள்

களவிலும், கற்பிலும் நிகழும் புணர்ச்சிகள்

அறத்தொடு நிற்றலும், வரைவும்

களவிலும், கற்பிலும் நிகழும் பிரிவுகள்

ஊடலும், அதைப் போக்கும் வாயில்களும் பற்றிய செய்திகள்

துறவறம்

முதலான செய்திகள் இடம் பெறுகின்றன. இச்செய்திகளை அகத்திணை இயலின் 26 முதல் 116 வரை உள்ள நூற்பாக்களின் வழி அறியலாம்.

3.1 கைகோள் வகை

கைகோள் என்றால் ஒழுக்கம் என்று பொருள். கைக்கொள்ளப்படும் நெறிகள், பின்பற்றப்படும் ஒழுக்கங்கள் என்றும் குறிப்பிடலாம்.

அளவில்லாத இன்பத்தைத் தரும் ஐந்திணையின் தலைமக்கள் மேற்கொள்ளும் நெறிமுறைகளைக் களவு – கற்பு எனும் இருவகைக் கைகோள் ஆகப் பகுத்து வழங்குவது அகப்பொருள் இலக்கண மரபு ஆகும்.

களவும் – கற்பும்

களவு என்பது தலைவனும் தலைவியும் மேற்கொள்ளும் மறைமுகக் காதல் வாழ்க்கை. அது இயற்கையாய்த் தொடங்கி, தொடர்ந்து நிகழ்வது.

களவு வெளிப்படும் சூழலில் – களவு முறையிலேயே அன்பு கலந்த காதல் வாழ்க்கையைத் தொடர முடியாத சூழலில் – அதனைத் தலைமக்கள் கற்பு வாழ்க்கையாக மாற்றி அமைத்துக் கொள்வர். வரைவு என்னும் திருமணம் மூலம் களவு – கற்பாக மலரும்.

3.1.1 களவுப் புணர்ச்சி வகை இருவகைக் கைகோள்களில் முதலாவதாகிய களவு முறையில் தலைமக்கள் கூடும் புணர்ச்சி என்பது நான்கு வகையாக நிகழும். அவையாவன :-

இயற்கைப் புணர்ச்சி

இடந்தலைப்பாடு

பாங்கன் கூட்டம்

பாங்கியிற் கூட்டம்

இயற்கைப் புணர்ச்சி

முன்னர் அறிமுகம் இல்லாத தலைவனும் தலைவியும் இயற்கையாக ஓரிடத்தில் எதிர்பாராத விதமாகச் சந்தித்தல்; கூடிமகிழ்தல்; அன்பு காட்டுதல் ஆகியவை இயற்கைப் புணர்ச்சி எனப்படும். இது தெய்வத்தால் நிகழும்; அல்லது தலைவி விருப்பத்தால் நிகழும்.

இடந்தலைப்பாடு

இயற்கைப் புணர்ச்சியின் போது, சந்தித்த இடத்திலேயே தலைமக்கள் மீண்டும் கூடி மகிழ்வது இடந்தலைப்பாடு எனப்படும் (இடம் – முதலில் சந்தித்த இடம், தலைப்பாடு – மீண்டும் கூடுதல்).

பாங்கன் கூட்டம்

தலைவன், தனது பாங்கன் (தோழன்) மூலமாகத் தலைவியைக் காணும் வாய்ப்பைப் பெற்றுக் கூடி மகிழ்வது பாங்கன் கூட்டம் எனப்படும்.

பாங்கியிற் கூட்டம்

தலைவன், தான் விரும்பும் தலைவியின் தோழி வாயிலாகத் தலைவியை மீண்டும் காணும் வாய்ப்பைப் பெற்றுக் கூடி மகிழ்வது பாங்கியிற் கூட்டம் எனப்படும்.

3.1.2 களவுப் புணர்ச்சியின் இருபெரும் திறம் இயற்கைப் புணர்ச்சி முதலான நான்கு வகைகளிலும் தலைவனும், தலைவியும் சந்தித்துப் பழகும் களவுப் புணர்ச்சி இரு பெரும் திறங்களாக அமையும் என்பது அகப்பொருள் மரபு ஆகும். அவையாவன :-

உள்ளப் புணர்ச்சி

மெய்யுறு புணர்ச்சி

இக்கருத்தை,

உ ள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும்

கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய (34)

என்ற நூற்பா எடுத்துக் காட்டுகிறது.

உள்ளப் புணர்ச்சி

தலைமக்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு மகிழ்தல் உள்ளப் புணர்ச்சி எனப்படும். மனம் ஒன்றுபட ஏற்படும் காதல் உணர்வே களவில் முதற்கண் நிகழ்வது.

பழி பாவங்களுக்கு அஞ்சுதலும், தக்கது எது என அறியும் ஆற்றலும் உடையவன் தலைவன். அச்சமும், நாணமும், அறியாமையும் உடையவள் தலைவி.

இருவர்க்கும் உரிய இத்தகு இயற்கைப் பெருங்குணங்கள் காரணமாக இருவருமே முதலில் உள்ளத்தால் இணையும் உள்ளப் புணர்ச்சியை மட்டுமே மேற்கொள்வர்.

மெய்யுறு ணபுர்ச்சி

உள்ளத்தால் அன்பு கலந்து ஒன்றிய தலைமக்கள் இருவரும் உடலால் சேரும் சேர்க்கை மெய்யுறு புணர்ச்சி எனப்படும். (மெய் – உடல்)

காலமும் – காரணமும்

மெய்யுறு புணர்ச்சிக்கான காலமும் காரணமும் பற்றியும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

ஒருவரை ஒருவர் காணுதலாகிய காட்சி, வேட்கை, ஒருதலை உஎ்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்புதல், நாணுவரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம் சாக்காடு எனச் சொல்லப்படும் பத்துவகையான வளர்நிலைச் செயல்கள் நிகழ நிகழத் தலைவனும், தலைவியும் உடலால் புணரும் மெய்யுறு புணர்ச்சி மேற்கொள்வர்.

3.1.3 களவுப் புணர்ச்சிக்குரிய இடம் உள்ளப் புணர்ச்சியும், தொடர்ந்து மெய்யுறு புணர்ச்சியும் நடைபெறும். மெய்யுறு புணர்ச்சியை மேற்கொள்ளும் தலைமக்கள் பகலிலும் இரவிலும் சந்தித்துக் கொள்ளும் இடம் குறி எனப்படும்.

இருவகைக் குறி இடம்

தலைவன், தலைவி இருவரும் சந்தித்துக் கொள்ளும் குறி இடம் இரண்டாகும். அவை

பகற்குறி

இரவுக் குறி

பகற்குறி      -    இது பகல் பொழுதில் தலைவனும் தலைவியும் சந்திக்கக் குறித்த இடமாகும். இது தலைவியின் வீட்டின் எல்லையைக் கடந்ததாக அமையும்.

இரவுக்குறி  -   இவ்விடம் இரவு நேரங்களில் தலைவனும், தலைவியும் சந்திக்க ஏற்ற இடமாகும். இது தலைவியின் வீட்டின் எல்லையைக் கடவாதது. வீட்டை ஒட்டிய பகுதியில் அமைவது.

3.2 வரைவு பற்றிய இலக்கணம்

களவுப்புணர்ச்சி தொடர்ந்து நிகழும்போது பகற்குறியிலோ அல்லது இரவுக் குறியிலோ அதனைப் பிறர் அறியக் கூடிய சூழல்கள் ஏற்படும். அதன் பின்னரோ அல்லது அவ்வாறு களவு வெளிப்படுவதற்கு முன்னரோ தலைமக்கள் மேற்கொள்ளும் திருமண நிகழ்ச்சிக்கு வரைவு என்று பெயர். (வரைதல் – மணந்து கொள்ளுதல்)

3.2.1 வரைவின் வகைகள் வரைவு இரு வகைப்படும். அவையாவன:-

களவு வெளிப்படும் முன் வரைதல்

களவு வெளிப்பட்ட பின் வரைதல்

களவு வெளிப்படும் முன் வரைதல்

இயற்கைப் புணர்ச்சி முதலான நான்கு வகைப் புணர்ச்சிகளிலும் தலைவன் தலைவியோடு மகிழ்வான். இவ்வாறு மகிழ்ந்த தலைவன் இதன்பின் களவை நீட்டிக்க விரும்பாது, தலைவியைத் திருமணம் செய்து கொள்ள முயல்வான். அல்லது பாங்கனாலோ பாங்கியாலோ அறிவுறுத்தப்பட்டுத் தெளிவு பெற்று வரைவு மேற்கொள்வான். இதுவே களவு வெளிப்படும் முன் வரைதல் எனப்படும்.

களவு வெளிப்பட்ட பின் வரைதல்

தலைமக்கள் பிறர் அறியாதவாறு மறைந்து ஒழுகிய களவு என்னும் காதல் வாழ்க்கை பலருக்கும் தெரியவரும். அச்சூழலில் வரைவு நிச்சயம் நிகழும். அதுவும் மூன்று நிலைகளில் நிகழும். அவையாவன:-

தலைவனும், தலைவியும் சேர்ந்து ஊரைவிட்டுப் புறப்பட்டுச் சென்று வேற்று ஊரில் திருமணம் செய்து   கொள்ளுதல்.

ஊரைவிட்டு, உடன்போக்காகச் சென்றவர்கள் மீண்டும் வந்து தலைவன் ஊரிலோ தலைவி ஊரிலோ வரைவு        மேற்கொள்ளுதல்.

உடன்போக்கின் இடையே தலைவியை அவளது தமர் (உறவினர் – பெற்றோர்) அழைத்துச் செல்ல, தலைவன் அவர்களை வழிபட்டு உடன்படச் செய்து வரைதல்.

இதனை,

உடன்போய் வரைதலும் மீண்டு வரைதலும்

உடன்போக்கு இடையீடுற்று வரைதலும்

களவு வெளிப்பட்டபின் வரைதல் ஆகும் (44)

என்ற நூற்பா விளக்குகிறது.

3.3 அறத்தொடு நிற்றல்

அகப்பொருள் இலக்கணத்தில் அறத்தொடு நிற்றல் என்பது முதன்மையானதொரு மரபு ஆகும். தலைமக்களின் வாழ்வை அறவழியில் நிலைப்படுத்த விரும்பும் தோழி முதலானோர் தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் காதல் கொண்ட உண்மையை உரியவர்க்கு உரியவாறு எடுத்துரைப்பது அறத்தொடு நிற்றல் ஆகும். இதனால் தலைவன் தலைவியின் காதல் வெற்றி பெறும்; திருமண நிகழ்ச்சி நடைபெற முயற்சிகள் மேற்கொள்ளப் பெறும்.

தலைவன் தலைவியின் அன்பு கலந்த காதல் வாழ்க்கையை நிலைபெறச் செய்து கற்பு வாழ்வை மலரச் செய்வதே அறத்தொடு நிற்றலின் பயன் ஆகிறது. சுருங்கச் சொன்னால் களவைக் கற்பாக்கும் அருஞ்செயலே – அறச்செயலே – இது.

3.3.1 அறத்தொடு நிற்கக் காரணங்கள் ஒருவர் பிறருக்கு உண்மை உணர்த்தி நிற்கும் அறத்தொடு நிலை நிகழ்வதற்கான காரணங்களாவன :-

ஆற்று ஊறு அஞ்சுதல் (ஆறு = வழி ; ஊறு =துன்பம்)

தலைவன், தலைவியைச் சந்திக்க வரும் வழியில் உள்ள இடர்ப்பாடுகளுக்குப் பிறர் அஞ்சுதல்.

அவன் வரைவு மறுத்தல்

தலைவியை விரும்பும் தலைவன் அவளை மணந்து கொள்ள உறவினர் மறுத்து விடுதல்.

வேற்று வரைவு நேர்தல்

தலைவியோடு களவில் சந்தித்த தலைவனை விடுத்து, வேறு ஒருவரைத் தலைவிக்கு மணம் முடிக்கும் சூழல் ஏற்படல்.

காப்புக் கைம்மிகுதல் (காப்பு = காவல்)

பகற்குறியிலோ அல்லது இரவுக் குறியிலோ தலைவி தலைவனைக் காணமுடியாதபடி – களவுப் புணர்ச்சி தொடர வாய்ப்பு இன்றி – வீட்டுக் காவல் மிகுதல்.

3.3.2 அறத்தொடு நிற்போரும் முறைகளும் தலைவி, தோழி, செவிலி, நற்றாய் என்னும் நால்வரும் அறத்தொடு நிற்பார்கள். தலைவி தோழிக்கும், தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தந்தை, தன் ஐயர்க்கும் அறத்தொடு நிற்பர் (தன் ஐயர் – தமையன்).

முறைகள்

களவுப் புணர்ச்சியைச் செவிலி கண்டவிடத்தும், காவல் மிகுந்த போதும் தலைவி அறத்தொடு நிற்பாள்.

முன்னிலை மொழி, முன்னிலைப் புறமொழி – எனும் இரு முறைகளில் தோழி அறத்தொடு நிற்பாள்.

முன்னிலை மொழி     -     முன்னிற்பார்க்கு நேரே கூறுதல்.

முன்னிலைப் புறமொழி     -     முன்னிற்பார்க்குக் கூற வேண்டிய

செய்தியைப் பிறருக்குக் கூறுவது போலக் குறிப்பிடுவது.

(முன்நிற்பார் = எதிரில் இருப்பவர்)

3.4 கற்பு என்னும் கைகோள்

அகத்திணை இயலில் வகுக்கப்பட்ட கைகோள்கள் இரண்டு; அவற்றுள் இரண்டாவதாக அமைவது கற்பு.

இல்வாழ்க்கைக்குரிய நெறிகளைக் கற்பித்துக் கொண்டு, அவற்றுக்கு ஏற்ப வாழத் தொடங்கும் இல்லற வாழ்வே கற்பு எனப்படும்.

3.4.1 கற்பு – இருவகைகள் வரைவு எனும் திருமணத்தின் பின் தொடங்கி நிகழும் கற்பு வாழ்வை, அதன் முந்தைய சூழலை வைத்து இரண்டாக வகைப்படுத்துவர்.

களவின் வழி வந்த கற்பு

களவின் வழி வராத கற்பு

களவின் வழி வந்த கற்பு (காதல் திருமணம்)

தலைமக்கள் களவு என்னும் காதல் வாழ்க்கை வாழ்வர். பின்னர் அறத்தொடு நிற்பதன் வாயிலாகத் திருமணம் நடைபெறும். இவ்வாறு காதல் வாழ்க்கை வாழ்ந்தபின் கற்பு வாழ்க்கைக்கு வருவதைக் களவின் வழிவந்த கற்பு என்பர். இது உடன்போக்காகச் சென்ற போதும் நடைபெறும். எனவே, சுற்றத்தினரால் ஏற்கப்படாத தன்மையும் இதற்கு உண்டு.

களவின் வழி வாராக் கற்பு (பெற்றோர் நிச்சயித்த திருமணம்)

காதல் வாழ்க்கைக்கு வாய்ப்பு இல்லாமல் தலைவனின் பெற்றோரும், தலைவியின் பெற்றோரும் பேசி முடிக்கும் திருமணம் களவின் வழி வாராக் கற்பு எனப்படும்.

3.4.2 கற்பில் புணர்ச்சி – சில வகைப்பாடுகள் கற்பு வாழ்க்கையில் தலைவன் மேற்கொள்ளும் புணர்ச்சி (கூடி மகிழும்) வகைகள் சில உள்ளன. அவையாவன :-

குரவரில் புணர்ச்சி

பெற்றோர் முன்நின்று திருமணம் செய்விக்க அதன் மூலம் தலைவியோடு கூடி மகிழுதல்.

வாயிலிற் கூட்டம்

வாயில்களாக வருபவர் மூலம், தலைவியின் ஊடல் தீர்த்து, கூடி மகிழுதல்.

மறையிற் புணர்ச்சி

காதல் பரத்தையர் எனப்படும் மகளிரோடு, கற்புக் காலத்தும் மனைவி அறியாது தலைவன் கூடி மகிழுதல்.

மன்றல் புணர்ச்சி (மண உறவு மூலம் மகிழ்தல்)

காமக்கிழத்தியர், பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தியர் முதலானவருடன் உரிமையும், மண உறவும் கொண்டு தலைவன் கூடி மகிழுதல்.

3.5 பிரிவும் அதன் வகைகளும்

தலைவன், தலைவியைத் தனித்திருக்கச் செய்து பிரிந்து செல்லும் நிகழ்ச்சிக்குப் பிரிவு என்று பெயர். இச்செயல்பாடு களவு – கற்பு எனும் இரு வகைப்பட்ட வாழ்விலும் நிகழும்.

3.5.1 களவில் நிகழும் பிரிவுகள் மிகுந்த அன்பு கொண்டு பழகி வாழும் களவு வாழ்வின் போது நிகழும் பிரிவுகள் இருவகைப்படும்.

ஒருவழித் தணத்தல்

வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்

ஒருவழித் தணத்தல்

களவு வாழ்வை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஏதுவாகத் திருமணம் புரிந்து கொள்ளுமாறு தோழி தலைவனிடம் அறிவுறுத்துவாள். அதற்கு உடன்பட்ட தலைவன் தன் ஊருக்கு ஒருவழி (முறை) போய் வருகிறேன்; பிறகு மணமுடிப்பேன் என்று கூறிச் செல்வது ஒருவழித் தணத்தல் எனப்படும்.

இது, ஓர் ஊரின்கண்ணும் ஒரு நாட்டுக்குள்ளும் நிகழும் பிரிவாகும். ஆகவே, இதற்குக் கால வரையறை சொல்லப்படவில்லை.

வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்

(வரைவு = திருமணம்)

திருமணம் புரிந்து கொள்ள முடிவு செய்த தலைவன் அதற்கு வேண்டும் பொருள் ஈட்டுதல் காரணமாகப் பிரிதல் இவ்வகை. இது காடு இடையிட்டும், நாடு இடையிட்டும் செல்வதாக அமையும். இப்பிரிவுக்குரிய காலம் இரண்டு மாதமாகும்.

3.5.2 கற்பில் நிகழும் பிரிவுகள் கற்பு வாழ்க்கை வாழும் காலத்தே தலைவன் தலைவியைப் பிரிந்து மேற்கொள்ளும் செயல் (பிரிவு) ஆறு வகைப்படும்.

பரத்தையிற் பிரிவு

ஓதல் பிரிவு

காவல் பிரிவு

தூதிற் பிரிவு

துணைவயின் பிரிவு

பொருள்வயின் பிரிவு

பரத்தையிற் பிரிவு

தலைவன் பரத்தையிடம் விருப்பம் கொண்டு தலைவியைப் பிரிந்து, பரத்தையர் வாழும் பகுதிக்குச் செல்லுதல் பரத்தையிற் பிரிவு எனப்படும். இது,

அயல்மனைப் பிரிவு

அயற்சேரிப் பிரிவு

புறநகர்ப் போக்கு

என மூன்று உட்பிரிவுகளை உடையது.

அயல்மனைப் பிரிவு

தலைவன் காமக்கிழத்தியோடு கூடி மகிழ ஓர் ஊரிலேயே வேறு வீட்டில் சென்று தங்குதல்.

அயற்சேரிப் பிரிவு

தலைவன் பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தியையும், காதல் பரத்தையையும் கூடி மகிழ்வதற்காகவும், விழா நிகழ்ச்சிகளைக் காண்பதற்காகவும், வேறு ஓர் பகுதிக்குச் சென்று தங்குதல்.

புறநகர்ப் போக்கு

தலைவன் புதியவளாகிய பரத்தையைத் தேரிலேற்றிக் கொண்டு சோலையில் விளையாடவும், புனலாடவும் நகர்ப் புறத்திற்குச் சென்று தங்குதல்.

ஓதல் பிரிவு

தலைவன் கல்வி கற்றலின் காரணமாகத் தலைவியைப் பிரிந்து செல்லுதல் ஓதல் பிரிவு எனப்படும். இதற்குரிய கால வரையறை 3 ஆண்டுகளாகும். இது

வேதம் ஓதுதல்

வேதமல்லாக் கல்வி கற்றல்

என இரண்டு உட்பிரிவுகளை உடையது.

காவல் பிரிவு

பாதுகாத்தல் தொழிலை மேற்கொள்ள வேண்டி, தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வது காவல் பிரிவு எனப்படும். இது

அறப்புறம் காவல்

நாடு காவல்

என இரு உட்பிரிவுகளை உடையது.

அறப்புறம் காவல்

அறமன்றங்கள் முதலான இடங்களைப் பாதுகாப்பதற்காகத் தலைவன் மேற்கொள்வது இப்பிரிவு.

நாடு காவல்

பகைவர்களிடமிருந்து தன் நாட்டைக் காப்பதற்காக மேற்கொள்ளும் இப்பிரிவு அரசருக்கு மட்டுமே உரியது.

தூதிற் பிரிவு

அரசர் இருவர் தம்முள் வேறுபட்டுப் பகை கொண்டு போரிட எண்ணிய சூழலில், அவ்விருவரிடையே பகை நீங்குவதற்காகத் தலைவன் தூது செல்லுதல் இப்பிரிவாகும். இது அந்தணர்க்கும், அரசருக்கும் உரியது. இதற்குரிய காலம் ஓர் ஆண்டு ஆகும்.

துணைவயின் பிரிவு

ஓர் அரசனுக்குப் பகைவர்களால் இடையூறு நேர்ந்த வழி அதனைப் போக்குவதற்குத் துணைபுரியும் நோக்குடன் தலைவன் மேற்கொள்ளும் பிரிவு துணைவயின் பிரிவு எனப்படும். இது அரசர், வணிகர், வேளாளர் என்னும் மூவருக்கும் உரியது. இதற்குரிய காலம் ஓர் ஆண்டு ஆகும்.

பொருள்வயின் பிரிவு

தலைவன் தன் இல்லற வாழ்வுக்குத் தேவைப்படும் பொருளை ஈட்டுதல் காரணமாகப் பிரியும் பிரிவு பொருள்வயின் பிரிவு எனப்படும். இது அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு பிரிவினர்க்கும் உரியது. இதற்குரிய காலம் ஓர் ஆண்டு ஆகும்.

பிரிவு பற்றிய சில சிறப்பு விதிகள்

தலைவன் நிகழ்த்தும் அறுவகைப் பிரிவிற்குமான சில சிறப்பு விதிகளை நம்பி அகப்பொருள் நூல் வகுத்து வழங்குகிறது. அவை வருமாறு:

எல்லா வகைப்பிரிவின் போதும் தலைவன் தலைவியிடம் சொல்லிச் செல்வதும் உண்டு, சொல்லாமல் செல்வதும் உண்டு.

தலைவியிடம் சொல்லாமல் செல்லும் போதும் தோழியிடம் சொல்லி விட்டுச் செல்வான்.

நாடு இடையிட்டுச் (தன் நாடு விட்டு வேற்று நாட்டுக்கு) செல்லும் பிரிவின் போது தலைவன் – நடந்து செல்லுதல், கப்பலில் செல்லுதல், ஊர்தியில் செல்லுதல் என்னும் மூன்று வழிமுறைகளில் ஒன்றை மேற்கொள்வான்.

தலைவிக்கும்கூட, தன் பிரிவைக் குறிப்பினால் உணர்த்திச் செல்வான்.

அந்தணர்கள் கப்பலில் செல்வதும், அரசர், வணிகர், வேளாளர் என்னும் மூவரும் பெண்களுடன் கப்பலில் செல்வதும், பெண்களுடன் பாசறையில் சென்று தங்குவதும் கூடாது.

பிரிவு மேற்கொள்ளாமல் தலைவன் தாமதித்தல் உண்டு. அதற்குச் செலவு அழுங்குதல் என்று பெயர்.

தலைவன் ஓதற் பிரிவு மேற்கொண்ட காலத்தே பிரிவை நினைத்துப் புலம்புதல் கூடாது. தூது காரணமாகவும், துணைபுரிதல் காரணமாகவும் பிரிந்து சென்ற தலைவன் அச்செயலின் காலம் நீட்டிக்கும் போது தலைவியை நினைந்து புலம்பலாம்.

3.6 ஊடல் தீர்க்கும் வாயில்கள்

தலைவி, தலைவன் மீது கொள்ளும் பிணக்கு ஊடல் எனப்படும். கற்பு வாழ்வின் போது, பரத்தையிற் பிரிவு நிகழ்த்தும் தலைவன் அயல்மனை, அயற்சேரி, புறநகர் என்ற மூன்று இடங்களுக்கும் சென்று தங்கிவிடுவான். அப்போது தலைவிக்கு ஊடல் ஏற்படும்.

தலைவிக்கு ஏற்படும் ஊடலைத் தீர்த்து மீண்டும் தலைவன், தலைவியின் கற்பு வாழ்வை (இல்லற வாழ்வை) இணைத்து வைக்கும் இனிய பணியை ஆற்றுபவர்கள் ஊடல் தீர்க்கும் வாயில்கள் எனப்படுவர்.

கொளைவல் பாணன் பாடினி கூத்தர்

இளையர் கண்டோர் இருவகைப் பாங்கர்

பாகன் பாங்கி செவிலி அறிவர்

காமக் கிழத்தி காதற் புதல்வன்

விருந்து ஆற்றாமை என்றுஇவை ஊடல்

மருந்தாய்த் தீர்க்கும் வாயில்கள் ஆகும்

என்ற நம்பி அகப்பொருள் நூற்பா(68) ஊடல் தீர்க்கும் வாயில்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. பாணன், விறலி, கூத்தர், ஏவலர், (தலைவி ஊடியுள்ள நிலையைக்) காண்பவர்கள் (இவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களாக இருப்பர்) பாங்கன், பாங்கி, தேர்ப்பாகன், செவிலி, சான்றோர், காமக்கிழத்தி, புதல்வர், விருந்தினர், தலைவியின் ஆற்றாமை (பொறுத்துக் கொள்ள முடியாத தனிமையும் வருத்தமும்) ஆகியவை ஊடல் தீர்க்கும் வாயில்களாகக் கூறப்பட்டிருக்கின்றனர். இனி, வாயில்களாகத் திகழும் சிலரது செயல்பாடுகளைக் காண்போம்.

பாணர் செயல்கள்

ஊடல் தீர்க்க வந்த வாயிலாகத் தன்னை ஏற்க வேண்டுதல், இசைவு பெறுதல், தலைவியின் ஊடல் தீர்த்தல், அவள் அழகு அழிந்தமை கண்டு கலங்குதல், தலைவனிடம் சென்று தலைவி சொல்லிய செய்தியை உரைத்தல், தலைவன் மீண்டு வருவதைத் தலைவிக்குச் சொல்லுதல், தலைவன் வரவு அறிந்த தலைவி அழகு பெற்றதை அறியார்போல வினவுதல் முதலியன பாணரின் செயல்களாகும்.

விறலிக்குரிய செயல்கள்

பிரிவின் போது தலைவிக்கு ஆறுதல் கூறுதல், ஊடல் தீர்த்தல், தலைவனோடு சேர்த்தல் முதலியன விறலிக்குரிய செயல்களாகும். (விறலி – ஆடல் மகள்)

கூத்தர் செயல்கள்

தலைவியின் செல்வச் செழிப்பை வாழ்த்துதல், நல்லறிவு புகட்டுதல், ஆறுதல் மொழி கூறுதல், தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஏற்பட்டு விட்ட இடைவெளியைச் சுட்டிக் காட்டுதல், பாசறைக்குச் சென்று தலைவனிடம் செய்தி கூறுதல், தலைவன் திரும்பி வருவதைத் தலைவிக்கு உரைத்தல் முதலானவை கூத்தர் செயல்களாகும்.

இளையோர் செயல்கள்

(இளையோர் = ஏவலர்)

வாயில் வேண்டி உடன்படச் செய்தல், தலைவியின் ஊடல் தீர்த்தல், அதனைத் தலைவனுக்கு உணர்த்துதல், தலைவனுக்கும் தலைவிக்கும் பணிவிடை செய்தல், தலைவன் வருவதைத் தலைவிக்கு உரைத்தல், தலைவனின் ஆற்றலைத் தலைவிக்கு உணர்த்தல் முதலானவை இளையோர்க்குரிய செயல்களாகும்.

கண்டோர்க்குரிய செயல்கள்

ஊடல் தீர்த்தல், தலைவன் வரவைத் தலைவிக்கு உணர்த்துதல் முதலானவை கண்டோர்க்குரிய செயல்களாகும்.

பாங்கர் செயல்கள்

இளமை, செல்வம், வாழ்க்கை முதலான எதுவுமே நிலையற்றது என்ற நிலையாமைத் தத்துவத்தை உணர்த்துதல், தலைவன் பிரிவைத் தடுத்தல், பின்னர் பிரிவுக்கு உடன்படுதல் முதலானவையும் நன்மை தரும் வழியில் தலைவனை நிலைநிறுத்துதலும், தீமையிலிருந்து விலக்குதலும் பாங்கரின் செயல்களாகும்.

பாகன் செயல்கள்

தலைவியிடம் வாயில் ஏற்க வேண்டுதல், ஊடல் தீர்த்தல், நெடுந்தூரம் சென்ற தலைவன் விரைவில் வருவான் எனக் கூறித் தலைவியை ஆற்றுதல் முதலானவை பாகன் செயல்களாகும்.

பாங்கியின் செயல்கள்

பிரிவை விலக்குதல், பிரிவைத் தாமதிக்கச் செய்தல், பிரிவை ஏற்றுக்கொள்ளுதல், நோற்றல் முதலானவை பாங்கியின் செயல்களாகும்.

செவிலி, அறிவர் செயல்கள்

நீதிமுறை, உலகியல் முறைகளை வெளிப்படையாகக் கூறுதல் செவிலிக்கும் அறிவர்க்கும் உரிய செயல்களாகும்.

3.7 துறவறம்

கற்பு வாழ்வின் முடிவாக – நிறைவாக – பயனாகத் தலைவனும் தலைவியும் மேற்கொள்ளும் துறவறம் பற்றிய நூற்பா கீழ் வருமாறு:-

மக்களொடு மகிழ்ந்து, மனையறம் காத்து,

மிக்க காம வேட்கை தீர்ந்துழித்

தலைவனும், தலைவியும் தம்பதி நீங்கித்

தொலைவில் சுற்றமொடு துறவறம் காப்ப (116)

இதன்படி,

மக்களைப் பெற்று மகிழ்தல்

இல்லறத்திலிருந்து ஏனைய அறம் புரிதல்

காம வேட்கையைத் தீர்த்துக் கொள்ளுதல்

இவையாவும் நிகழ்த்திய பிறகு தலைமக்கள் தம் ஊரை விட்டு நீங்கி, ஆனால் சுற்றத்தினரை விட்டு நீங்காமல் மேற்கொள்ளும் பற்றற்ற வாழ்வே துறவறம் ஆகும்.

3.8 தொகுப்புரை

இப்பாடத் தொகுப்பிலிருந்து பின்வரும் செய்திகளைக் கற்று உணர்ந்தோம்:

களவில் நிகழும் புணர்ச்சிகள்.

உள்ளப் புணர்ச்சியே முதன்மை இடம் பெற்ற தன்மை; அதற்கான காரணம்.

வரைவு மேற்கொள்ளும் முறைகள்.

அறநெறிப்படுத்தும் உயர் செயலாகிய அறத்தொடு நிற்றல்.

கற்பு வாழ்வின் அமைப்பும் அவ்வாழ்வில் மேன்மேலும் தலைவன் மேற்கொள்ளும் புணர்ச்சிகளும்.

களவிலும், கற்பிலும் தலைவன் நிகழ்த்தும் பிரிவுகள்.

பிரிவை மேற்கொள்வோர்க்குரிய வரையறுக்கப்பட்ட சிறப்புச் செய்திகள்.

தலைமக்கள் இருவரிடமும் மகிழ்ச்சியை நிலைபெறச் செய்ய வழி மேற்கொள்ளும் வாயில்களாக வருபவர்களின் செயல்பாடுகள்.

துறவறம் பற்றிய வரையறை.

இச்செய்திகள் மூலம் பண்டைத் தமிழர் மேற்கொண்ட பண்பட்ட அகவாழ்வினை அறிய முடிகிறது.

பாடம் – 4

களவியல் – I

4.0 பாட முன்னுரை

நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் (நம்பியகப் பொருள்) என்னும் இலக்கண நூலின் இரண்டாம் இயல் களவியல் ஆகும். அப்பகுதியில் இடம் பெறும் செய்திகளைத் தருவதாக இப்பாடமும், இதன் அடுத்த இரு பாடங்களும் அமைகின்றன. அதன் முதல் 21 நூற்பாக்கள் வழங்கும் இலக்கண விளக்கங்களை உள்ளடக்கி இப்பாடத்தொகுப்பு அமைகிறது.

களவின் இலக்கணம்

கைக்கிளையின் பாகுபாடுகள்

களவிற்கு உரிய கிளவித்தொகைகள்

இயற்கைப் புணர்ச்சி, வன்புறை, தெளிவு, பிரிவுழி மகிழ்ச்சி, பிரிவுழிக் கலங்கல், இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் முதலான கிளவிகளுக்கான விளக்கங்கள்.

ஆகியவை இப்பாடப் பகுதியில் இடம் பெறுகின்றன.

4.1 களவின் இலக்கணம் தலைவன் – தலைவி ஆகிய தலைமக்கள் வாழும் அன்பு வாழ்க்கை களவு, கற்பு என இருவகைப்படும். இவற்றுள் களவு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் தர வந்த அகப்பொருள் விளக்க நூலாசிரியர் கீழ் வருமாறு நூற்பா வகுத்தார்.

உளமலி காதல் களவு எனப்படுவது

ஒரு நான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்

யாழோர் கூட்டத்தின் இயல்பினது என்ப

(களவியல் நூற்பா -1)

4.1.1 எண்வகை மணங்கள் மேற்கண்ட நூற்பாவில் நால்வேத நெறியினர் வகுத்த எட்டு வகைத் திருமண முறைகள் குறிப்பிடப்படுகின்றன.

அவை பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தர்வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன இவற்றுக்கான விளக்கம் வருமாறு:

பிரமம்                  : தகுதியுடைய பிரம்மச்சாரிக்குப் பெண்ணைக் கொடுப்பது.

பிரசாபத்தியம் : தலைவன் தலைவி இருவரது பெற்றோரும் உடன்பட்டுத் திருமணம் செய்து வைப்பது.

ஆரிடம்               : ஒன்றோ இரண்டோ பசுவும், காளையும் தானமாகப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது.

தெய்வம்            : வேள்விகள் பலவும் இயற்றும் ஓர் வேள்வி ஆசிரியனுக்குப் பெண்ணைக் கொடுப்பது.

கந்தர்வம்           : கொடுப்போரும், கேட்போரும் இன்றித் தலைமகனும், தலைமகளும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது. இதுவே யாழோர் கூட்டம் எனப்படும்.

ஆசுரம்                : பெண்ணின் தந்தைக்குப் பணம் கொடுத்து, பெண்ணுக்கும் அணிகலன்களை அணிவித்து, அப்பெண்ணை ஏற்று மணந்து கொள்வது.

இராக்கதம்       : தலைவியை அவளது விருப்பமோ அவளது உறவினர் ஒப்புதலோ இன்றி அடைவது.

பைசாசம்          : உறங்கிய பெண், (கள் உண்டு) களித்திருக்கும் பெண், பித்துப்பிடித்த பெண் முதலானவர்களுடன் கூடிக்களிப்பது.

4.1.2 கந்தர்வமே களவு மேற்கண்ட எண்வகைப்பட்ட வேத வழிப்பட்ட மணமுறைகளில் ஒன்றாக இடம் பெறும் கந்தர்வம் என்பது தமிழ் இலக்கண நூல்கள் குறிப்பிடும் களவுக்கு இணையானது.

இம்முறையில்தான் தலைமக்களின் அன்புக்கு முதன்மை உள்ளது. முன் ஏற்பாடும் திட்டமிடுதலும் இன்றி இயற்கையாய் எதிர்ப்பட்ட இருவரும் விரும்பி, உளம் ஒத்து, அன்பு கலந்து கூடுகின்ற இம்முறையே தமிழ் மரபு வழிப்பட்ட களவுக்கு இணையானது.

இவ்விளக்கங்களைக் கொண்டு ‘தலைமக்கள் தாமே எதிர்ப்பட்டுப் பிறர் அறியாதவாறு அன்பு காட்டி வாழும் காதல் வாழ்வே – களவு’ என வரையறை செய்துகொள்வது பொருத்தமுடையது.

4.2 கைக்கிளையின் பாகுபாடு

முதல் நூற்பா களவுக்கு வரையறை செய்தது. அடுத்த நூற்பா, தலைவனும் தலைவியும் அறிந்து சந்திப்பதற்கு முன்னதாக நடைபெறும் நிகழ்வுகளை எடுத்துரைக்கின்றது.

காட்சி

ஐயம்

துணிவு

குறிப்பறிதல்

எனும் நான்கும் களவிற்கு முன் நிகழ்வனவாகும். இந்நான்கும் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்வன. இவற்றைப் படிநிலைகள் என்றும் குறிப்பிடலாம். இந்நான்கும் தலைவனின் விருப்பம் என்கிற ஒருபக்கக் காதலை மட்டும் அடிப்படையாகக் கொண்டன. எனவே ஒருதலைக் காமம் என்கிற கைக்கிளை ஒழுக்கமாக இவை கருதப் பெறுகின்றன.

4.2.1 காட்சி காட்சி – காண்பது.

தலைவனும் தலைவியும் தனி இடத்து எதிர்ப்பட்டு ஒருவரை ஒருவர் காண்பது காட்சி ஆகும். இக்காட்சி நல்வினைப் பயனாக ஏற்படுவதாகும்.

வினை இருவகைப்படும். அவை நல்வினை, தீவினை என்பனவாகும்.

நல்வினை -   தலைமக்களை ஒன்றுசேர வைப்பது.

தீவினை    -    தலைமக்களைப் பிரிப்பது.

இவற்றுள் சேர்த்து வைக்கும் பாங்குடைய நல்வினைப் பயனாய் – முதன் முதலாக எதிர்ப்படும் தலைமக்கள் ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்வது – காட்சி எனப்படும்.

தலைமக்கள் இருவரும் எல்லா நிலைகளிலும் ஒத்தவராய் இருப்பர்; இருக்க வேண்டும். எனினும் தலைவன் மேம்பட்டவனாய் இருப்பதும் குற்றமில்லை என்பதும் ஓர் இலக்கணம் ஆகும்.

4.2.2 ஐயம் ஐயம் – சந்தேகப்படுதல்.

இது, கைக்கிளையில் தலைவனிடம் நிகழும் என்பது இலக்கண விதி.

ஒரு பெண்ணின் தோற்றமும், அவளைக் கண்ட இடமும் சிறப்பு மிக்கதாக அமைந்துவிடும் போது, அவளைப் பற்றிய ஐயம் தலைவனுக்கு எழுவது இயற்கை.

அப்பெண் மானுடப் பெண்ணா ! தெய்வப் பெண்ணா! என்பது போலத் தலைவன் உயர்ந்த எண்ணத்தில் ஐயம் கொள்வான்.

சான்று :

அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. – (குறள், 1081)

என்னும் குறட்பா தலைமகன் ஐயம் கொண்டதற்குச் சான்றாகும்.

தன் முன் வந்து தோன்றும் அழகிய தலைவியைக் காணும்போது அவள் சாதாரண மானுடப் பெண்ணா? தெய்வமா? ஆடும் மயிலா? என்றெல்லாம் தலைவன் ஐயுறுவதாக இக் குறட்பா அமைந்துள்ளது. (தலைவிக்கு ஐயம் ஏற்படுதல் மரபு இல்லை)

4.2.3 துணிவு தலைவியைக் கண்டபோது அவள் தெய்வப் பெண்ணா? மானுட மகளா? என்று ஐயப்பட்ட தலைவன், பின்னர்த் தன் ஐயம் நீங்கி, அவள் மானுடப் பெண்ணே என்ற முடிவுக்கு வருவான். அவ்வாறு அவன் ஐயம் நீங்கி ஒரு முடிவுக்கு வருவதைத் துணிவு என்று கூறுவர். அத்தகைய துணிவுக்கு வர, சில அடையாளங்கள் துணைபுரிவதாக அமையும். அவையாவன:

உடலில் எழுதப்பட்ட வல்லிக்கொடி

அணிந்திருக்கும் அணிகலன்களின் அமைப்பு

சூடிய மலர் வாடுதல்

மலரை வண்டு மொய்த்தல்

பாதம் தரையில்பட நடந்து வருதல்

இமைக்கின்ற கண்கள்

தலைவி அடைகின்ற அச்சம்

இவை காரணமாக, தலைவன் தலைவியை மானிடப் பெண் எனக் கண்டு ஐயம் தீர்வான்.

4.2.4 குறிப்பறிதல் தலைவியைக் காண்பது; ஐயம் கொள்வது; மானுடப் பெண்ணே என்று துணிவது; இவற்றின்பின் தலைவி தன்னை விரும்புகிறாளா என்பதை அறியும் ஆவல் தலைவனுக்கு ஏற்படும். அதற்காக, தலைவி ஏதேனும் குறிப்புக் காட்டுகிறாளா என்று நோக்குவது தலைவனது இயல்பு. அதையே குறிப்பறிதல் என்று குறிப்பிடுவர்.

தலைமகள், தன் உள்ளத்தில் உள்ள தலைவன் மீதான விருப்பத்தைக் கண்களின் வழிப் புலப்படுத்துவாள். இதுவே அவள் காட்டும் குறிப்பாகும் என்பது இலக்கண வரையறை.

அரிவை நாட்டம் (தலைவியின் கண்கள் காணும் பார்வை)

அகத்துநிகழ் வேட்கை (மன விருப்பம்)

தெரிய உணர்த்தும் (வெளிப்படுத்தும்)

குரிசிற்கு என்ப (தலைவனுக்கு)

என்பது அகப்பொருள் நூற்பா (6).

குறிப்பு    :    காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என்னும் இந்நான்கும் நிகழ்ந்த பின்னரே (தலைவியின் காதல் குறிப்பு வெளிப்பட்ட பின்னர்) ஐந்திணைக்குரிய களவு தொடங்கும். அதுவரை தலைவனிடம் மட்டுமே காதல் உணர்வு இருப்பதால் இந்நான்கையும் கைக்கிளைக்குரிய படிநிலைகளாகவே ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

4.3 களவிற்கு உரிய கிளவித்தொகை

களவு என்னும் மறைமுகக் காதல் ஒழுக்கத்தை விரிவாக விளக்கும் இயல் களவியல் ஆகும். அவ்வியலில் இடம்பெறும் செய்திகளை ஒருங்கு தொகுத்து ஒரு நூற்பாவில் உணர்த்தியுள்ளார் நாற்கவிராசநம்பி. அதுவே “களவிற்கு உரிய கிளவித்தொகை” எனப்படுகிறது. (கிளவி – கூற்று) அந்நூற்பாவில் பதினேழு வகைப்பட்ட கிளவிகளைக் குறிப்பிட்டுள்ளார். அவையாவன:

இயற்கைப்புணர்ச்சி

வன்புறை

தெளிவு

பிரிவுழி மகிழ்ச்சி

பிரிவுழிக் கலங்கல்

இடந்தலைப்பாடு

பாங்கன் கூட்டம்

பாங்கிமதி உடம்பாடு

பாங்கியிற் கூட்டம்

பகற்குறி

பகற்குறி இடையீடு

இரவுக்குறி

இரவுக்குறி இடையீடு

வரைதல் வேட்கை

வரைவு கடாதல்

ஒருவழித் தணத்தல்

வரைவு இடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்

குறிப்பு   :    இப்பாடப்பகுதியில் இயற்கைப் புணர்ச்சி முதலாகப் பாங்கன் கூட்டம் வரை உள்ள ஏழு கிளவிகளுக்கான விளக்கங்கள் இடம் பெறுகின்றன. அடுத்தடுத்த பாடங்களில் மற்றையவை இடம் பெறுகின்றன.

4.4 இயற்கைப் புணர்ச்சி

இது களவிற்குரிய கிளவிகளில் ஒன்று.

முதன் முதலாகத் தலைவனும் தலைவியும் தாமே கண்டு கூடுவது இயற்கைப் புணர்ச்சி எனப்படும். தெய்வம் கூட்டுவிக்கத் தன்மனம் வேறாய் (திரிந்து) நின்ற தலைவன், தலைவியைக் கூடுவான். இதனை,

தெய்வத்தால் எய்துவது

தலைவியால் எய்துவது

என இருநிலைகளாகக் காணலாம்.

4.4.1 தெய்வத்தால் எய்துவது கலந்து மகிழ்தல்

அழகினைப் பாராட்டல்

ஏற்ற அணிகளை அணிதல்

என்னும் மூன்றும் தெய்வத்தால் அடையப்பெறும் இயற்கைப் புணர்ச்சியின் விரிவுகள் ஆகும்.

4.4.2 தலைவியால் எய்துவது இவையாவும் தலைவியால் நிகழும் இயற்கைப் புணர்ச்சியின் விரிவுகளாகும்.

தலைவியால், தலைவன் கூடும் இயற்கைப் புணர்ச்சியானது

தலைவிக்குத் தலைவன் தன் வேட்கையை உணர்த்துதல்.

தலைவனது வேட்கையைத் தலைவி முதலில் மறுத்தல்.

தலைவனது வேட்கையைத் தலைவி பின்னர் ஏற்று உடன்படுதல்.

அதன்பின் தலைவனும் தலைவியும் கூடி மகிழ்தல்.

என நான்கு பிரிவுகளை உடையது.

தலைவியால் அடையும் இயற்கைப் புணர்ச்சியின் விரிவு

இயற்கைப் புணர்ச்சியின் ஒரு வகை தலைவியின் மூலம் நிகழும் என்று கண்டோம். அக்கூட்டத்தினை ஒட்டி நிகழும் பல்வேறு செயல்பாடுகளை அகப்பொருள் இலக்கண நூல் தொகுத்துக் கூறியுள்ளது. அவையாவன :

1. இரந்துபின் நிற்றற்கு எண்ணல் : தலைவன் தலைவியைப் பணிந்து வேண்டி நிற்பதற்கு நினைத்தல்.

2. இரந்து பின்னிலை நிற்றல்        : தலைவன் தலைவியைப் பணிந்து வேண்டி நிற்றல்.

3. முன்னிலையாக்கல்                     : தலைவன் தலைவியை முன்னிலைப்படுத்திக் கூறுதல்.

4. மெய் தொட்டுப் பயிறல்              : தலைவன் தலைவியின் உடலைத் தொட்டு நெருங்கிப் பழகுதல்.

5. பொய் பாராட்டல்                            : தலைவன் தலைவியிடம் உள்ளதையும் இல்லாததையும் சேர்த்துக் கூறுதல்.

6. இடம் பெற்றுத் தழால்                  : தலைவன் தலைவி நிற்கும் இடத்திற்குச் சென்று அவளைத் தழுவ விரும்பிக் கூறுதல்.

7. வழிபாடு மறுத்தல்                        : மேற்கண்டவாறெல்லாம் தலைவன் கூறியதைத் தலைவி முழுவதுமாக மறுத்தல்

8. இடையூறு கிளத்தல்                    : தலைவி நாணிக்கண் புதைத்ததனால் (வெட்கப் பட்டுக் கண்ணை மூடியதால்) உண்டான  துன்பத்தைத் தலைவன் கூறுதல்.

9. நீடு நினைந்து இரங்கல்              : தலைவன் தலைவியைப் பற்றி நீண்ட நேரம் நினைத்துப் பார்த்து வருத்தப்பட்டுப் பேசுதல்

10. மறுத்து எதிர்கோடல்                : தலைவி, முன்பு மறுத்ததனை மாற்றிக் கொண்டு தலைவன் கருத்தை ஏற்றல்.

11. வறிதுநகை தோற்றல்               : தலைவியின் முகத்தில் சிறிது புன்னகை தோன்றுதல்.

12. முறுவல் குறிப்பு உணர்தல்   : தலைவியின் புன்முறுவல் புலப்படுத்தும் குறிப்பைத் தலைவன் உணர்ந்து கொள்ளுதல்.

13. முயங்குதல் உறுத்தல்            : தலைவி தன்னோடு சேர்வதற்கு உடன்பட்டதைத் தலைவன் வலியுறுத்திக் கூறுதல்.

14. புணர்ச்சியின் மகிழ்தல்          : தலைவன் தலைவியோடு கூடிய புணர்ச்சியால் மகிழ்தல்.

15. புகழ்தல்                                          : தலைவியின் அழகு நலத்தைத் தலைவன் புகழ்ந்துரைத்தல்.

4.5 வன்புறையும் தெளிவும்

வன்புறை களவுக்குரிய கிளவித் தொகைகளுள் ஒன்று.

வன்பு – வலிமை ; உறை – உறுத்தல், வற்புறுத்திக் கூறுதல்.

தலைவி ஐயுற்றவழித் தலைவன் அவளது ஐயம் தீர உண்மையை வற்புறுத்திக் கூறுதல் வன்புறை எனப்படும்.

4.5.1 வன்புறை வகை வன்புறை இருவகைப்படும். அவையாவன:

ஐயம் தீர்த்தல்

பிரிவு அறிவுறுத்தல்

ஐயம் தீர்த்தல்

தலைவிக்கு உண்டான ஐயத்தைத் தலைவன் தீர்த்து வைத்தல் ஐயம் தீர்த்தல் எனப்படும். இது,

கலைந்துபோன தன் அணிகலனைச் சரிசெய்து தலைவன் அணிவிக்க அது மாறுபட்டுள்ளதைக் கண்டு தோழி ஐயுறுவாள் என்று கருதிய தலைவியின் ஐயம் தீர்த்தல்.

மீளவும் வருவேன் என்று, தான் கொண்டுள்ள அளவுக்கதிகமான காதலைக் கூறித் தலைவன் ஐயம் தீர்த்தல்.

‘விதி நம்மைப் பிரிக்காது’ என ஊழின் வலிமையைக் கூறித் தலைவியின் ஐயம் தீர்த்தல்.

என மூன்று உட்பிரிவுகளை உடையது.

பிரிவு அறிவுறுத்தல்

தலைவன் தன் பிரிவைத் தலைவிக்குத் தெரிவித்தல் பிரிவு அறிவுறுத்தல் எனப்படும். இது வன்புறையின் இரண்டாம் வகை. இது,

பிரியமாட்டேன் எனல்.

பிரிந்து மறுபடியும் திரும்பி வருவேன் எனல்.

தான் பிரிந்து செல்லும் இடம் அருகில்தான் உள்ளது எனல்.

என மூன்று உட்பிரிவுகளை உடையது.

4.5.2 தெளிவு இது களவிற்குரிய கிளவித்தொகைகளுள் ஒன்று. தலைவன் தனது நிலைப்பாட்டை வற்புறுத்தி உரைப்பது வன்புறை என்று கண்டோம். அந்த வன்புறை வார்த்தைகளை ஏற்று, ‘தலைவன் சொல்வது உண்மையானதுதான்; ஏற்புடையதுதான்’ என்று தெளிந்து தலைவி ஆற்றியிருப்பது தெளிவு எனப்படும்.

தலைவன் மாற்றம் தலைவி தேற்றம்

தெளிவாம் என்பர் (13)

என்பது இலக்கண நூற்பா.

4.6 பிரிவுழி மகிழ்ச்சியும் பிரிவுழிக் கலங்கலும்

பிரிவுழி மகிழ்ச்சி, களவிற்குரிய கிளவித்தொகைகளுள் ஒன்று.

தலைவனும் தலைவியும் ஓரிடத்தில் களவு வழியில் கூடி மகிழ்ந்தனர். அப்புணர்ச்சிக்குப்பின் அங்கிருந்து தலைவி பிரிந்து செல்ல, அப்போது தலைவியோடு கூடிய கூட்டத்தை எண்ணி, தலைவன் மனமகிழ்வுடன் பேசுவது பிரிவுழி

மகிழ்ச்சி எனப்படும்.

4.6.1 பிரிவுழி மகிழ்ச்சியின் இரு நிலைகள் பிரிவுழி மகிழ்ச்சி இருநிலைகளை உடையது. அவையாவன:

செல்லும் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்.

செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல்.

செல்லும் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்

கூடிப்பிரிந்து செல்லும் தலைவியின் தன்மை கண்டு தலைவன் தன் மனத்தொடு பேசி மகிழ்வது.

செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல்

கூடிப்பிரிந்து செல்லும் தலைவியின் தன்மை கண்டு தலைவன் தன் பாகனிடம் பேசி மகிழ்வது.

4.6.2 பிரிவுழிக் கலங்கல் இது களவிற்குரிய கிளவித்தொகைகளுள் ஒன்று. தலைவி பிரிந்து சென்றபோது தலைவன் மனம் கலங்கிப் பேசுவது பிரிவுழிக் கலங்கல் எனப்படும். இது,

மருளுற்று உரைத்தல் – மயக்கம் கொண்டு பேசுதல்

தெருளுற்று உரைத்தல் – தெளிவு பெற்றுப் பேசுதல்

என இருநிலைகளை உடையது.

4.6.3 பிரிவுழிக் கலங்கல் – விரிவு மேற்கண்ட இரு நிலைகளின் அடிப்படையில் நிகழும் பிரிவுழிக் கலங்கல் என்னும் செயல்பாட்டின் விரிவாகக் கீழ்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார் நாற்கவிராசநம்பி.

தோழியர் கூட்டம், வழிவிட்டு வழிபடத்தக்கவளாக விளங்கும் தலைவியை நாம் கூடியது வியப்புக்குரியதே என மயங்கிக் கூறுதல்.

தோழியைத் தூதாகப் பெற்று இனியும் கூடி மகிழ்வேன் என்று கூறுதல்.

தலைவியின் அழகுப் பண்புகளைத் தலைவன் பாராட்டிக் கூறுதல்.

அத்தகு அழகியைப் பெற்றெடுத்த பெற்றோரை வாழ்த்துதல்.

தலைவன் இரவில் உறக்கமின்றி வருந்தி உரைத்தல்.

இவையாவும் பிரிவுழிக் கலங்கலின் விரிவுகளாகும்.

4.7 இடந்தலைப்பாடு

இது களவிற்குரிய கிளவித்தொகைகளுள் ஒன்று.

இடம் – முதன்முதலாகக் கூடிய இடம்.

தலைப்பாடு – மீண்டும் அவ்விடத்தே வந்து கூடுதல்.

முதன்முதலாக இயற்கைப் புணர்ச்சியில் கூடி மகிழ்ந்த தலைவன் (மீண்டும்) அடுத்த நாளும் அவ்விடத்தே வந்து தலைவியைக் கூடுதல் இடந்தலைப்பாடு எனப்படும்.

4.7.1 இடந்தலைப்பாடு வகை இடந்தலைப்பாடு மூன்று வகைப்படும். அவையாவன:

தெய்வம் தெளிதல்

கூடல்

விடுத்தல்

தெய்வம் தெளிதல்

முன்னே முதல்முறையாகத் தலைவியை நம்மோடு கூட்டி வைத்த தெய்வம் மறுபடியும் அதே இடத்தில் தலைவியை நம்மோடு சேர்த்து வைக்கும் என்று தலைவன் தெளிவுடன் உரைப்பது.

கூடல்

அவ்வாறே தலைவன், தலைவியைக் கூடி மகிழ்தல்.

விடுத்தல்

கூடி மகிழ்ந்த பிறகு தலைவியை அவளது தோழியர் கூட்டத்தின்பால் செல்லுமாறு தலைவன் அனுப்பி வைத்தல்.

4.7.2 இடந்தலைப்பாட்டின் விரிவுச் செய்திகள் இம்மூவகைப்பட்ட இடந்தலைப்பாட்டு நிகழ்ச்சியையே ஐந்து நிலைகளாக விரிவுபடுத்தியும் வழங்குவர். அவையாவன:

தந்த தெய்வம் மீண்டும் தரும் எனச் செல்லுதல்

தன் முன்னே தலைவியைக் காணுதல்

கூடி மகிழ்தல்

புகழ்தல்

தோழியர் கூட்டத்தில் தலைவியைச் சேர்த்தல்.

4.8 பாங்கன் கூட்டம்

இது களவிற்குரிய கிளவிகளுள் ஒன்று.

தலைவன்   –    தலைவியின் முதல் கூட்டம்: இயற்கையாய் நிகழும்.

தலைவன்   -   தலைவியின் அடுத்த கூட்டம்: அதே இடத்தில் மீண்டும் சந்தித்து நிகழும்.

தலைவன் -    தலைவியின் மூன்றாம் கூட்டம்: பாங்கன் எனப்படும் தோழன் மூலமாக நிகழும். அதனைப் பாங்கன் கூட்டம் என்பர்.

4.8.1 பாங்கன் கூட்டத்தின் வகை இப்பாங்கன் கூட்டம் சார்தல், கேட்டல், சாற்றல், எதிர்மறை, நேர்தல், கூடல், பாங்கியோடு கூடி இருக்கச் செய்தல் என ஏழு வகைகளாக அமையும். அவற்றிற்கும் மேலாக 24 வகைப்பட்ட விரிவுகளையும் கூறியுள்ளார் அகப்பொருள் விளக்க நூலாசிரியர். அந்த 24 செய்திப் பிரிவுகளையும் மேற்கண்ட 7 வகைகளுக்கும் உரியவாறு பாகுபடுத்தியும் கூறியுள்ளார்.

சார்தல், கேட்டல், சாற்றல்

இம்மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய செயல்பாடுகளாகும்.

சார்தல்   :   தலைவன், பாங்கனிடம் சென்று சேர்தல்.

கேட்டல் :  பாங்கன், தலைவனது வாட்டம் கண்டு, அதற்கான காரணம் கேட்டல்.

சாற்றல் :   தலைவன், பாங்கனிடம் தன் வாட்டத்திற்கான காரணத்தைக் கூறுதல்.

எதிர்மறை

தலைவனது காதலைக் (களவை) கேட்டறிந்த பாங்கன் நினக்கு இது தக்கது அன்று என்று தலைவனிடம் இடித்துரைப்பது எதிர்மறை எனப்படும்.

இது பாங்கன் மறுத்துப் பேசுவது, தலைவன் அதற்கு விடை சொல்வது, பாங்கன் தலைவனைப் பழித்துப் பேசுவது, தலைவி மீது கொண்ட காமம் என்னால் தாங்க முடியாதது என்று தலைவன் கூறுவது முதலான விரிவுகளை உடையது.

நேர்தல்

தலைவன் தனது தாங்க இயலாத காதல் தன்மையை உணர்த்தினான். அதனை உணர்ந்த பாங்கன் தலைவனது கருத்துக்கு இசைந்து செயல்பட முடிவு செய்கிறான். அவனுக்காகத் தலைவியைச் சென்று கண்டு வருகிறான். இதுவே நேர்தல் எனப்படும்.

(நேர்தல் – தலைவனது கருத்துக்கு உடன்பட்டுச் செயல்பட முடிவு செய்தல்)

இது பல விரிவுக் கூறுபாடுகளை உடையது.

பாங்கன் தன் மனத்திற்குள் இரங்குதல்.

பாங்கன் தலைவனிடத்தில் இரக்கத்தைப் புலப்படுத்திப் பேசுதல்.

தலைவியின் உருவம், அவளைக் கண்ட இடம் முதலானவற்றைக் கேட்டறிதல்.

தலைவன் ‘தலைவியின் உருவம் இவ்வகைத்து – கண்ட இடம் இது’ எனக் கூறுதல். (இவ்வகைத்து = இன்ன தன்மையில் அமைந்தது)

‘தலைவ! நான் அவ்விடத்திற்குச் சென்று கண்டு வருகிறேன் கவலைப்படாதே’ என்று பாங்கன் கூறுதல்.

அவ்வாறே குறிப்பிட்ட அந்த இடத்திற்குப் பாங்கன் செல்லுதல்.

தலைவியை, குறிப்பிட்ட இடத்தில் பாங்கன் காணுதல்.

அவளது பேரழகைக் கண்ட பாங்கன், அறிவில்லாமல் தலைவனை இகழ்ந்து விட்டோமே என்று நெகிழ்ந்து பேசுதல்.

இத்தகு பேரழகியைக் கண்ட பின்னும் – காதல் வயப்பட்ட பின்னும் தலைவன் மீண்டும் வந்தது வியப்பிற்குரியது எனல்.

தலைவியைப் பற்றி வியப்பு மேலிட்டுப் பேசுதல்.

மீண்டு வந்து, தலைவி குறியிடத்தில் நிற்கும் நிலையைப் பற்றித் தலைவனிடம் கூறுதல்.

இவையாவும் நேர்தல் என்பதன் விரிவுகளாகும்.

கூடல்

பாங்கன் மூலமாக அமைந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தலைவன் தலைவியைக் கூடி இன்புறுதல் கூடல் எனப்படும். இது,

தலைவன் செல்லுதல்

தலைவியைக் காணுதல்

புணர்ந்து மகிழ்தல்

புணர்ச்சியின்பின் தலைவியைப் புகழ்தல்

என நான்கு உட்கூறுகளை (விரிவுகளை) உடையது, இது.

பாங்கிற் கூட்டல்

பாங்கன் வாயிலாகத் தலைவியைக் கூடி மகிழ்ந்த தலைவன் ‘இனி நீ வரும்போது நின் உயிர்த்தோழியோடு வருக!’ என்று கூறி, தலைவியை அவளது தோழி இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தல் பாங்கிற் கூட்டல் எனப்படும்.

4.9 தொகுப்புரை

இப்பாடத்தொகுப்பில் பின்வரும் செய்திகளைக் கற்றுணர்ந்தோம்.

களவின் இலக்கணம்

களவும், கந்தர்வமும் ஒன்றிவரும் நிலை.

காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என்னும் கைக்கிளையின் வகைகள்.

இயற்கைப் புணர்ச்சி, வன்புறை, தெளிவு பற்றிய செய்திகள்.

கற்பு வாழ்வின் அமைப்பும் அவ்வாழ்வில் மேன்மேலும் தலைவன் மேற்கொள்ளும் புணர்ச்சிகளும்.

தலைவியால் அடையும் இயற்கைப் புணர்ச்சியின் விரிவுகள்.

இடந்தலைப்பாடு, பாங்கன் கூட்டம் பற்றிய செய்திகள்.

மேற்கண்ட செய்திகளை அறிவதன் மூலம் பண்டைத் தமிழ் இலக்கணம் வரையறுத்து வழங்கும் களவு பற்றிய நெறிமுறைகளையும், மரபுகளையும் அறிந்து இன்புறலாம்.

பாடம் – 5

களவியல் – II

5.0 பாட முன்னுரை

நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கத்தின் இரண்டாம் இயல் களவியல் ஆகும். அவ்வியல் களவொழுக்கம் பற்றிய இலக்கணக் கூறுகளை விளக்குகிறது. இப்பாடப்பகுப்பில் களவியல் செய்திகளின் ஒரு பகுதி (நூற்பா 22 முதல் 46 வரை) இடம் பெறுகிறது.

பாங்கி மதி உடன்பாடு

பாங்கியிற் கூட்டம், அதன் விரிவுகள்.

பகற்குறி, இரவுக்குறி.

என்பன பற்றிய விளக்கங்களை இப்பாடத்தில் கற்று உணரலாம்.

5.1 பாங்கி மதி உடன்பாடு – விளக்கம் பாங்கி (தோழி) எப்போதும் தலைவியுடன் இருப்பவள். உற்ற துணையாய், நட்புரிமை பூண்டு வாழ்பவள்; எனினும் அவள் அறியாத வகையில் தலைவி ஒரு தலைவனோடு காதல் உறவு கொண்டாள்.

இயற்கைப் புணர்ச்சி, இடம் தலைப்பாடு, பாங்கன் கூட்டம் என்னும் மூன்று நிலைகளில் அக்களவு ஒழுக்கம் தொடர்ந்து நிகழ்ந்தது.

அக்களவு ஒழுக்கத்தின் காரணமாகத் தலைவியின் புறத் தோற்றத்திலும் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றைக் கண்ட தோழி அவை காதலால் ஏற்பட்டனவாக இருக்கலாம் என எண்ணுகிறாள். தன் அறிவோடு உடன்படுத்தி ஆராய்ந்து அஃது உண்மையே என்ற முடிவுக்குத் தோழி வருகிறாள்.

இவ்வாறு தோழி தன் மதியோடு (அறிவோடு) உடன்படுத்தி ஆராய்ந்து முடிவு காண்பது பாங்கிமதி உடன்பாடு எனப்படும். இது மூன்று நிலைகளை உடையது. அவையாவன:

முன்னுற உணர்தல்.

குறையுற உணர்தல்.

இருவரும் உள்வழி அவன் வர உணர்தல்.

5.1.1 முன்னுற உணர்தல் தலைவி தன் முன் வந்து நிற்க, அவளை உற்றுநோக்கிய தோழி, அவளின் காதல் உண்மையை உணர்தல் முன்னுற உணர்தல் எனப்படும்.

பாங்கற் கூட்டத்தின்போது தலைவனைக் கூடி மீண்ட தலைவி தோழி முன் வந்து நிற்பாள். அப்போது தலைவியின் வேறுபாட்டைக் கண்டு, களவு ஒழுக்கம் நிகழ்ந்துள்ளது என்ற உண்மையைத் தோழி அறிவாள். இதுவே முன்னுற உணர்தல் ஆகும். இது மூன்று உட்பிரிவுகளை உடையது.

ஐயப்படுதல்.

ஐயம் தீர்தல்

சொல்லால் ஆராய்தல்

என்பன அவை.

ஐயப்படுதல், ஐயம் தீர்தல்

தலைவியிடம் காணப்படும் மணம் (நாற்றம்), அவளது தோற்றத்தில் நிகழ்ந்துள்ள புதிய மாற்றம், தலைவி பின்பற்றும் புதிய செயல்கள் (ஒழுக்கம்), உண்ணும் உணவின் அளவு குறைதல், தலைவி தன் செயலைத் தோழியிடம் மறைத்தல், தோழியர் கூட்டத்தை விட்டு அவ்வப்போது பிரிதல், குறிப்பிட்ட ஓரிடத்திலேயே எப்போதும் இருத்தல் (பயில்வு) முதலான ஏழு வகையிலும் தலைவியின் களவு ஒழுக்கம் பற்றிய ஐயம் தோழிக்கு ஏற்படும். அவற்றினைக் கொண்டே களவு உண்மையைப் பற்றிய ஐயம் தீர்தலும் நிகழும்.

குறிப்பு     :      உணவு குறைதல் ஐயத்தை ஏற்படுத்தும் : நோய்வாய்ப் படல் முதலான எந்தக் காரணமும் இன்றி உணவு குறையும்போது அது காதலால் (களவால்) நிகழ்ந்த மாற்றம் என்று ஐயம் தீர்ந்து, தெளிவும் ஏற்படும். இவ்வாறே மற்றவற்றையும் எண்ணிப்பார்த்தல் வேண்டும்.

சொல்லால் ஆராய்தல்

தோழி, தலைவியை நோக்கிச் சொல்லும் சொற்களால் அவளது களவு ஒழுக்கத்தை உணர முயல்வதும், உணர்ந்துள்ளதைச் சுட்டிக் கட்டுவதும் உண்டு. நீர்ச் சுனையைப் புகழ்தல், வியத்தல், தலைவியின் புற அழகு மாற்றத்தைப் புனைந்து உரைத்தல் என்பன போன்ற உரையாடல்கள் வழி, தலைவியின் களவு ஒழுக்கத்தைத் தோழி உணர்வாள்.

“மலை அணங்கே! சிவந்த கண்ணும் வெளுத்த வாயும் இல்லை எனில் எங்கள் தலைவியும் உன்னைப் போன்றவளே” என்று தோழி கூறுவதாக வரும் தஞ்சைவாணன் கோவைப் பாடல் (எண். 67) இதற்குச் சான்றாகும். (கண் சிவப்பதும், வாய் வெளுப்பதும் களவுக் கூட்டத்தினால் தலைவிக்கு நிகழ்ந்த மாற்றம், அதைக் குறிப்பிட்டுச் சொல்லாடல் நிகழ்த்தினாள் தோழி)

5.1.2 குறையுற உணர்தல் தலைவன் வந்து, தன் குறையைத் தோழியிடம் உரைக்க அதன் மூலம் தலைவன், தலைவியரின் களவு ஒழுக்கத்தைத் தோழி உணர்வது குறையுற உணர்தல் எனப்படும்.

தலைவன் தோழியிடம் சென்று நின்று, ஊர்- பெயர் வினவுவதும், கெட்ட (தொலைத்த) பொருள் ஒன்றைப் பற்றிக் கேட்பதும் அதன்வழித் தோழி தேர்ந்து தெளிவதும் இவ்வகைப்படும்.

‘இக்காட்டிற்கு நான் மிகப் புதியவன்! தனியாக வந்துள்ளேன்; உம் ஊர் எது?’ எனத் தலைவன் கேட்பான். தோழி இதற்கு விடை தாராத போது,

பெயரேனும் உரைமின்களே! (தஞ்சைவாணன் கோவை-78)

என்று தலைவன் கேட்பான்.

‘அம்புபட்டுப் புண்பட்ட யானை இவ்வழி வந்ததா’? என்று கேட்பது கெடுதி வினவுதல் (கெட்ட அல்லது தொலைந்த பொருள் பற்றிக் கேட்டல்) ஆகும்.(தஞ்சைவாணன் கோவை-72)

இவ்வாறெல்லாம் தலைவன் வினவும் வினாக்களைக் கொண்டு, தோழி உண்மை உணர்வாள்.

5.1.3 இருவரும் உள்வழி அவன்வர உணர்தல் தலைவியும் தோழியும் ஒன்றாக ஓரிடத்து இருந்தபோது, அவ்விடத்துக்கு மாலையும் தழையும் எடுத்துக் கொண்டு தலைவன் வருவான். அதன்வழித் தலைவிக்கும், அங்கு வந்த தலைவனுக்கும் இடையே ஓர் உறவு இருப்பதைத் தோழி உணர்ந்து கொள்வாள். இதுவே இருவரும் உள்வழி அவன்வர உணர்தல் எனப்படும். இது பின்வரும் உட்பிரிவுகளை உடையது.

தலைவன் பரிசுப் பொருள் (கையுறை) கொண்டு வருதல்.

தலைவன் கெடுதி (தொலைந்தது) நிகழ்ந்தது பற்றி வினவுதல்.

தலைவனுக்குத் தோழி மறுமொழி கூறுதல்.

தலைவன் சென்ற பின்பு தலைவி முன்பாக அவனைத் தோழி எள்ளி நகையாடுதல்.

தோழி தன் அறிவாற்றலால் தலைவன் – தலைவியின் மனக்குறிப்பை ஆராய்ந்து கூறுதல்.

5.2 பாங்கியிற் கூட்டம்

பாங்கி (தோழி) வழியாகத் தலைவன் தலைவியைச் சேர்வது பாங்கியிற் கூட்டம் எனப்படும். தோழி, தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள களவு வழிப்பட்ட காதல் ஒழுக்கத்தை முன்னுற உணர்தல், குறையுற உணர்தல், இருவரும் உள்வழி அவன்வர உணர்தல் என்னும் மூவகையில் ஏதேனும் ஒன்றாலோ, பலவற்றாலோ உணர்ந்து தெளிவாள். பின் தலைவனது வேண்டுகோளை ஏற்று, தலைவியுடன் அவன் களவு ஒழுக்கத்தைத் தொடர்ந்திட வழிவகை காண்பாள். இதுவே பாங்கியிற் கூட்டம் எனப்படும்.

5.2.1 பாங்கியிற் கூட்டத்தின் வகை பாங்கியிற் கூட்டமானது பன்னிரு வகைப்பாடுகளை உடையது. எனினும் அவற்றை வகுத்தும் தொகுத்தும் வழங்கும்போது கீழ்வருமாறு பாகுபடுத்தியுள்ளார் நூலாசிரியரான நாற்கவிராசநம்பி.

இரந்து பின் நிற்றலும் சேட்படையும்.

மடற்கூற்றும் மடல் விலக்கும்.

குறைநேர்தலும் மடற்கூற்று ஒழிதலும்

குறை நயப்பித்தலும் மறுத்தலும்

குறை நயப்பித்தலும் நயத்தலும்

கூட்டலும், கூடலும், ஆயங்கூட்டலும், வேட்டலும்

இவற்றுக்கான விளக்கங்களை இனிக் காண்போம்.

இரந்துபின் நிற்றலும் சேட்படையும்

தலைவன், தோழியிடம் சென்று நின்று தன் குறையைத் தீர்க்க வேண்டும் என்று சொல்வது இரந்து பின் நிற்றல் எனப்படும்.

தோழியோ தலைவனது வேண்டுகோளை உடனடியாக ஏற்காமல், மறுத்துவிடுவாள். அது சேட்படை எனப்படும். (உடன் சேர்க்காமல் தூர விடுதல் அல்லது அகற்றுதல் சேட்படை ஆகும். சேண் – நெடுந்தூரம்)

இவ்விரு பகுதிகளையும் ஒரே கூறாக்கி இவற்றுக்கென 20 உட்பிரிவுச் செய்திகளை வழங்குகிறது அகப்பொருள் இலக்கண நூல்.

இதனுள் தலைவன் உட்கோள் சாற்றல் முதலாக, பாங்கி ஆற்றுவித்து அகற்றுதல் ஈறாக 20 உட்பிரிவுகள் அடங்கும். அப்பிரிவுச் செய்திகளைக் கீழ்வருமாறு வரிசைப்படுத்தி விளங்கிக் கொள்ளலாம்.

தலைவன் தன் உள்ளத்தில் கொண்ட காதலைத் தோழியிடம் சொல்லுதல் – தோழி தங்கள் தலைவியின் குலப்பெருமை கூறி, இக்காதல் பொருந்தாது எனல்.

தோழி ஏதுமறியாதவள் போன்று தலைவனைப் பார்த்து, ‘நீ எந்தப் பெண்ணிடம் காதல் கொண்டாய்?’ எனல் – தலைவன் தான் காதல் கொண்ட தலைவியின் இயல்புகளை எடுத்தியம்புதல்.

தலைவன் ‘தலைவி இல்லாமல் என் வாழ்வு இல்லை’ எனல் – தோழி ‘உன் குறையை நீயே சென்று தலைவியிடம் சொல்’ எனல்.

தலைவி அறியாமை உடையவள் என்று தோழி கூறுதல் – தலைவன் அதை மறுத்து, தலைவியின் அறிவாற்றலைப் பற்றிக் கூறுதல்.

‘உலக முறைப்படி சான்றோர் முன்னிலையில் தலைவியை மணந்து கொள்’ என்று தோழி அறிவுறுத்துதல் – அதுகேட்ட தலைவன் ‘போகும் என் உயிரை நீ முதலில் காப்பாற்று. பிறகு நான் நீ கூறும் முறைப்படி மணம் செய்வேன்’ எனல்.

தலைவன் தான் கொண்டு வந்துள்ள (கையுறை) பரிசுப் பொருள் பற்றிப் புகழ்ந்து பேசுதல் – தோழி அதை வாங்க மறுத்துப் பேசுதல்.

ஆற்றாமை புலப்படுத்தித் தலைவன் பேசுதல் – அது கேட்ட தோழி ‘வருந்தாதே நாளை வா’ எனல்.

இவையாவும் முதற்பிரிவான இரந்து பின்னிற்றல், சேட்படை (சேண் + படை) என்னும் இருவகைப்பட்ட செயல்பாடுகளுக்கும் உரிய உட்பிரிவுகளாகும்.

மடற்கூற்றும் மடல் விலக்கும்

தலைவன் தன் காதலைப் பலருக்கும் புலப்படுத்தி நிற்பது மடலேறுதல் எனப்படும். அவன் பனைமரப் பொருள்களால் வண்டியும் குதிரையும் போல உருவத்தைச் செய்து கொள்வான். ஒரு துணியில் தலைவியின் உருவத்தை ஓவியமாக எழுதி, கொடிபோல் கையில் பிடித்துக்கொண்டு நகரின் நடுப்பகுதியில் அக்குதிரையின் மேல் ஏறி அமர்வான். அமர்ந்து கொண்டு, தலைவன் தலைவிமீது தனக்குள்ள காதலைப் புலப்படுத்துவான். இது மடலேறுதல் ஆகும். இச்செயலைச் செய்வேன் எனத் தலைவன் கூறுவது மடற்கூற்று எனப்படும். அது வேண்டாம் என்று தோழி விலக்குவது (நீக்குவது) மடல் விலக்கு எனப்படும்.

இந்த இரண்டாம் கூறு இரந்து குறைபெறாது வருந்திய தலைவன் மடலே பொருள் என மதித்தல் முதலாகப் பாங்கி கொண்டு நிலை கூறல் ஈறாக ஏழு செய்திப் பிரிவுகளை உடையது.

மடலேறுவதைத் தவிர வேறுவழி இல்லை என்று தலைவன் தனக்குள்ளே கூறிக் கொள்ளுதல்.

அவ்வாறு மடலேறுவது காதல் கைவிடாத இளைஞர் செயல் எனப் பொதுப்படையாகக் கூறுதல்.

தானும் அவ்வாறே செய்ய நேரும் என்று தன்மீது ஏற்றிக்கூறுதல்.

‘நீ ஓவியமாகத் தீட்ட இயலாத பேரழகுடையவள் எங்கள் தலைவி’ எனத் தோழி கூறுதல் – ‘என்னால் தலைவியின் பேரழகை ஓவியமாக்கிட இயலும்’ என்று தலைவன்கூறுதல்.

மடலேறுதல் தக்கது அன்று என்று தோழி மறுத்துக் கூறுதல்.

முதலானவையே இரண்டாம் கூறு கூறும் செய்திகளாகும். இவற்றுள் தலைவன் கூற்றாக வருவன மடற்கூற்று ஆகும். தோழி கூற்றாக வருவன மடல் விலக்கு ஆகும்.

குறை நேர்தலும் மடற்கூற்று ஒழிதலும்

இது பாங்கியிற் கூட்டத்துச் செய்தியின் மூன்றாம் வகையாகும். இதனுள்ளும் இரு கூறுகள் இணைந்துள்ளன.

குறை நேர்தல் என்றால் தலைவன் வெளிப்படுத்திய செய்திகளை உணர்ந்து அவனுக்குள்ள மனக்குறையைத் தீர்த்துவைக்கத் தோழி உடன்படுதல் ஆகும்.

மடற்கூற்று ஒழிதல் என்பது, அவ்வாறு தோழி உடன்பட்டபின் இனி மடலேற மாட்டேன் என்று தலைவன் அச்செயலைக் கைவிடுதல் ஆகும்.

தலைவி இளமைத் தன்மை பாங்கி தலைவனுக்கு உணர்த்துதல் முதலாகக் கிழவோன் ஆற்றல் ஈறாக அமையும் ஒன்பது செய்திகளும் இப்பிரிவுக்குரியன.

தோழி தலைவியின் இளமை எழிலைத் தலைவனுக்கு உணர்த்துதல்- தலைவி நஞ்சு போன்ற விழியால் என் உயிரை வருத்தினாள் எனத் தலைவன் கூறுதல்.

‘தலைவியிடம் சென்று உன்னைப் பற்றிச் சொல்வதே எனக்கு எளிதான செயல் அன்று’ என்று தோழி கூறுதல் – ‘நீ என்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கியதுமே ஆசைமேலிட உன்பால் அன்பு காட்டுவாள் தலைவி’ என்று தலைவன் கூறுதல்.

‘என்னை மறைத்து நீங்கள் இருவரும் கூடுவது எளிதன்று’ என்று தோழி நகைத்துக் கூறுதல் – ‘தோழியே! நீ ஆறுதல் கூறுவதற்குப் பதிலாகச் சிரித்துப் பேசுகிறாய். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது’ என்று தலைவன் கூறுதல்.

தோழி தலைவனுக்கு ஆறுதல் கூறிப் பரிசுப்பொருளை (கையுறையை) ஏற்றல் – தலைவன் தன் துன்பம் நீங்கிப் பேசுதல்.

இவையாவும் மூன்றாம் பிரிவுக்கு உட்பட்ட செய்திகளாகும்.

குறை நயப்பித்தலும் மறுத்தலும்

கு றை               -     தலைவனுக்குள்ள மனக்குறை (தலைவியோடு சேர முடியாத நிலை)

நயப்பித்தல்   -    அக்குறையை முடித்து வைக்க விரும்பும் தோழி, தலைவிக்கும் அவ்விருப்பம் உண்டாக்க முயலுதல். அதற்கேற்பப் பேசுதல்.

மறுத்தல்         -    தலைவனுக்காகப் பரிந்து பேசும் தோழியின் கருத்துக்கு உடன்படாத தலைவி மறுத்துப் பேசுதல்.

இது இறைவன் தனக்குக் குறைநேர்பாங்கி இறைவிக்கு அவன் குறை உணர்த்துதல் முதலாக, கையுறை புகழ்தல் ஈறாக ஆறு செய்திப் பிரிவுகளை உடையது.

தலைவனுக்கு அவனது மனக்குறையைத் தீர்த்து வைப்பதாக உடன்பட்ட தோழி, அதன்பின் தலைவனது மனக்குறை இது எனத் தலைவியிடம் கூறுதல்.

தலைவனைப் பற்றி எதுவுமே அறியாதவள் போல, தலைவி, வேறு ஓரு கருத்தைப் புலப்படுத்திப் பேசுதல். (தோழி பேசியதற்குத் தொடர்பு இல்லாததுபோல் பதில் கூறுதல்)

தோழி ‘தலைவன் இங்கு வந்ததை நான் கண்டேனே!’ என்று நேரடியாகப் பேசுதல்.

மறுபடியும் தலைவி மறுத்து மொழிதல்.

‘உனக்கு நான் வேறா? என்னிடம் ஏன் மறைக்கிறாய்?’ என்று தோழி கேட்டல்.

தலைவன் கொண்டு வந்து தந்த பரிசுப் பொருள் (கையுறை) சூடத் தக்கதே அன்றி வாடத்தக்கது அல்லவே என்று தோழி புகழ்ந்து பேசுதல்.

இவையாவும் நான்காம் வகைப்பாட்டின் செய்திப் பிரிவுகள் ஆகும்.

குறை நயப்பித்தலும், நயத்தலும்

குறை நயப்பித்தல்   –    தலைவனின் மனக்குறையைத் தோழி ஏற்று உடன்படுதல்.

நயத்தல்                        –    முதலில் மறுத்த தலைவியும் பின்னர் உடன்படுதல்.

தலைவனது மனக்குறையைத் தீர்க்க, தோழியிடம் முதலில் மறுத்த தலைவி பின்னர் உடன்படுகிறாள். இதுவே குறை நயப்பித்தலும், நயத்தலும் என்னும் ஐந்தாம் பிரிவாகும்.

இப்பகுதி, தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல் முதலாகக் கையுறை ஏற்றல் ஈறாக ஆறு செய்திப் பிரிவுகளை உடையது. அதற்குரிய விளக்கங்கள் வருமாறு:

தலைவன் தனது காமவேட்கையால் அடையும் துயரத்தை தோழி, தலைவியிடம் கூறுதல்.

‘தலைவன் மீண்டும் வந்தால் என்னால் மறுக்க இயலாது’ என்று தோழி கூறுதல்.

‘தலைவன் இரந்து நிற்கவில்லை; நம்மிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து நிற்கிறான் – அவனது எண்ணம் வேறு’ என்று தோழி கூறுதல்.

தோழி, தலைவியைக் கோபித்துக் கொள்ளுதல்.

தலைவி தன் மனதுக்குள் தோழியைக் கோபித்துக் கொள்ளுதல்.

தோழி மூலமாகத் தலைவன் கொடுத்தனுப்பிய கையுறையைத் தலைவி ஏற்றுக்கொள்ளுதல்.

கூட்டல்-கூடல்-ஆயங்கூட்டல்-வேட்டல்

தலைவனது மனக்குறையைத் தீர்க்குமாறு தோழி வேண்டுவாள்; அதனை முதலில் மறுத்த தலைவி பிறகு உடன்படுவாள். அவ்வாறு உடன்பட்டபின் நிகழும் பாங்கியிற் கூட்டத்தின் செயல்பாடுகளை ஒரு கூறாக்கிக் கூட்டல், கூடல், ஆயம் கூட்டல், வேட்டல் என வரிசைப் படுத்தியுள்ளார் நாற்கவிராசநம்பி.

கூட்டல்                : தோழி தலைவனிடம் தான் குறிப்பிட்ட குறியிடத்திற்குத் தலைவியை அழைத்துச் செல்லுதல்.

கூடல்                    : குறிப்பிட்ட அந்த இடத்தில் தலைவனும் தலைவியும் கூடி மகிழ்தல்.

ஆயங்கூட்டல்  : கூடி மகிழ்ந்த பிறகு தலைவியை அழைத்து வரும் தோழி அவளைக் (தோழியர்) கூட்டத்தில் சேர்த்தல்.

வேட்டல்              : தலைவனைத் தங்கள் ஊருக்கு ஒரு முறை வந்து விருந்து உண்டு மகிழ வேண்டும் என்று விரும்பி அழைத்தல்.

இவை நான்கும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. தோழி வழியான கூட்டத்திற்குத் தலைவி ஒப்புக்கொண்ட பின் அடுத்தடுத்து நிகழக்கூடியவை. எனவே ஒன்றாக இணைத்துக் காட்டியுள்ளார் நாற்கவிராசநம்பி. இது பாங்கியிற் கூட்டத்தின் இறுதி வகைப்பாடு ஆகும். இது பதின்மூன்று செய்திப் பிரிவுகளை உடையது.

தலைவி கையுறை (பரிசுப்) பொருளை ஏற்றுக் கொண்டதைத் தோழி தலைவனிடம் கூறுதல்.

தலைவன் வந்து சந்திப்பதற்குரிய இடத்தைத் தோழி அறிவித்தல்.

அந்த இடத்திற்குத் தலைவியை அழைத்துச் செல்லுதல்.

குறியிடத்துத் தலைவியை விட்டுவிட்டுத் தோழி திரும்புதல்.

தலைவி, தலைவனுக்கு முன்பாகத் தோன்றுதல்.

இருவரும் கூடி மகிழ்தல்.

தலைவியைத் தலைவன் புகழ்தல்.

தலைவன் தோழியர் கூடியிருக்கும் இடத்திற்குச் செல்லுமாறு தலைவியை அனுப்பி வைத்தல்.

பின்னர் அங்கு வந்த தோழி ஏதும் அறியாதவள் போல் தன்னிடம் உள்ள கையுறைப் பொருளைத் தலைவியிடம் காட்டுதல்.

தோழி தம் பாங்கியர் கூட்டத்தில் தலைவியையும் கொண்டு சேர்த்தல்.

திரும்பி வந்த தோழி தலைவனைப் பார்த்து ‘இனி நீ தலைவியை மறவாது இருக்க வேண்டும்’ என்று ஓம்படைக்கிளவி கூறுதல்.

தலைவனைத் தங்கள் ஊருக்கு வந்து தங்கிச் செல்லுமாறு தோழி வேண்டுதல். (இது பகற்குறியை நீக்கி இரவுக்குறிக்கு வழிவகுப்பது ஆகும்)

தலைவியும் தோழியும் விருப்பத்துடன் வழங்கும் ஊன் உணவு சிறந்தது எனத் தலைவன் கூறுதல்.

“வெண்ணெய் போன்ற மான் கறியும், பசிய தேனும் இளகிய பொன் போன்ற தினை அரிசிச் சோறும் எம்போன்ற விருந்தினர்க்கு இனிய அமுதம் ஆகும்” என்று தஞ்சைவாணன் கோவை நூலில் ஒரு தலைவன் விருந்து விரும்பிப் பாடுகிறான்.

5.3 பகற்குறி

தலைவனும் தலைவியும் சந்தித்துக் கொள்ளும் இடம் குறியிடம் எனப்படும். அவர்கள் பகற்பொழுதில் சந்திக்கும் இடம் பகற்குறி எனப்படும். அவ்வாறே இரவுப் பொழுதில் சந்திக்கும் இடம் இரவுக்குறி ஆகும்.

5.3.1 குறி இடையீடு பகலிலோ, இரவிலோ தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காகக் குறிப்பிடப்பட்ட இடத்தில் சந்திக்க முடியாதபடி இடர்ப்பாடுகள் ஏற்படும். அதற்குக் குறி இடையீடு என்று பெயர். பகற்குறியிலும், இரவுக்குறியிலும் வெவ்வேறு காரணங்களால் இந்த இடர்ப்பாடு ஏற்படலாம்.

5.3.2 பாங்கியிற் கூட்டத்தில் அமையும் பகற்குறி பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்திப்பது, பெரும்பாலும் தோழி வழியாக நிகழும். எனவே, பாங்கியிற் கூட்டத்துக்குரியதாக இறுதியில் இடம் பெற்ற கூட்டல்- கூடல்- ஆயங்கூட்டல் – வேட்டல் என்னும் நான்கும் பகற்குறியின் வகை என்பார் நாற்கவிராசநம்பி.

5.3.3 ஒருசார் பகற்குறியின் வகை ‘ஒருசார் பகற்குறியின் வகை’ என்ற தலைப்பின் கீழ் மேலும் மூன்று பகற்குறி வகைப்பாடுகளை அகப்பொருள் விளக்க நூலாசிரியர் அமைத்துள்ளார். அவை:

இரங்கல்                                 :    தலைவன் பிரிவிற்குத் தலைவி வருந்துதல்; தோழியும் புலம்புதல்.

வன்புறை                               :    தோழி, தலைவியை இடித்துரைத்தல் (அறிவுரை கூறுதல்)

இற்செறிப்பு உணர்த்தல் :    தலைவி வெளியே வரமுடியாதபடி வீட்டுக் காவல் ஏற்பட்டதைத் தோழி தலைவனிடம் கூறுதல்.

ஒருசார் பகற்குறியின் விரிவு

இரங்கல் – வன்புறை – இற்செறிப்பு உணர்த்தல் என மூன்று வகைப்பட்ட ‘ஒரு சார் பகற்குறி’ யானது ‘கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம் பொழுது கண்டு இரங்கல்’ முதலாக, ‘கிழவோன் தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல்’ ஈறாக, 14 செய்திப் பிரிவுகள் உடையது. அப்பிரிவுகளுக்கான விளக்கத்தை இனிக் காண்போம்.

பகற்குறியில் அதற்குரிய இடத்துக்கு வந்து தலைவன் தலைவியைப் புணர்ந்து, பிரிந்து சென்ற பிறகு தலைவி மாலைப் பொழுதைக் கண்டு வருந்திப் பேசுதல்.

தோழி புலம்பிப் பேசுதல்.

பகற்குறிக்குத் தலைவன் வருவது தாமதம் ஆகும் போதும், தலைவி மனம் வருந்திப் பேசுதல் – ‘நீ வருந்துவது முறையன்று’ என்று தோழி தலைவியிடம் இடித்துரைத்தல்.

தலைவி தோழி மீது வெறுப்புற்று அவளை நேருக்கு நேர் நோக்காமல் புறமொழியாகப் பேசுதல் – அது கேட்ட தோழி தலைவியை மகிழ்வுடன் உபசரித்து அவளுடைய வெறுப்பை நீக்க, அதன் பின் மீண்டும் தலைவி பேசுதல்.

தலைவியை அச்சுறுத்தி, தோழி பேசுதல்.

தலைவனை விட்டுப் பிரியமுடியாத தன்மையை எண்ணித் தலைவி தனக்குள் பேசுதல்.

தலைவன் வருவதைத் தோழி அறிவித்தல்.

தலைவன் குறியிடத்தில் வேலி ஓரமாக வந்து நிற்க அவன் உணரும்படி தலைவிக்கு உள்ள வீட்டுக் காவலைத் தோழி அறிவித்தல்.

தலைவன் வந்து நிற்க அதை அறியாதவள் போலத் தோழி தலைவியிடம் பேசுதல். (முன்னிலைப் புறமொழி)

தலைவன் வந்து நிற்க அவனுக்கு முன் தமது வீட்டுக் காவலை (இற்செறிப்பைத்) தோழி நேரடியாகச் சொல்லுதல்.

அதனைத் தொடர்ந்து தோழி தலைவனிடம் ‘எம்மை மறவாமை வேண்டும்’ என்று ஓம்படையாகப் பேசுதல். (ஓம்படை = பாதுகாப்பு; மறவாமை)

தலைவன் தன் நெஞ்சோடு தானே பேசுதல்.

இவை யாவும் ஒருசார் பகற்குறியின் விரிவுச் செய்திகள் ஆகும்.

5.3.4 பகற்குறி இடையீடு தலைவனும் தலைவியும் பகற்பொழுதில் சந்தித்துக் கூடி மகிழும் இடம் பகற்குறி எனப்படும். அவ்வாறு பகற்குறியில் கூடி மகிழ்வதற்கு ஏற்படும் தடை பகற்குறி இடையீடு எனப்படும்.

பகற்குறி இடையீட்டு வகை

பகற்குறி இடையீடு மூன்று வகைப்படும்.

விலக்கல்    :     தலைவனும் தலைவியும் பகற்குறிக்கு உரிய இடத்திற்கு வருவதைத் தோழி விலக்குதல் (தடுத்தல்) விலக்கல் எனப்படும்.

சேறல்           :    தோழி தலைமகளை அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்தை விட்டு வேறு இடம் சென்று சேர்வது சேறல் எனப்படும்.

கலக்கம்      :     தோழியால் குறி விலக்கித் தலைவன் தலைவியர் பிரிந்த பிறகு, இருவரும் மனம் கலங்குதல் கலக்கம் எனப்படும்.

பகற்குறி இடையீட்டின் விரிவு

பகற்குறி தடைப்படுதலே இடையீடு எனப்பட்டது. அது இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல் முதலாகக் குறுந்தொடி வாழும் ஊர் நோக்கி மதிமயங்கல் ஈறாக 7 பிரிவுகளை உடையது. அவற்றுக்கான விளக்கம் வருமாறு:

தலைவனைப் பகற்குறி இடத்திற்கு வரவிடாமல் தோழி விலக்குதல்.

தலைவியைப் பகற்குறி இடத்திற்கு வரவிடாமல் தோழி விலக்குதல்.

தான் விளையாடும் இடத்தைப் பார்த்துத் தலைவி மயங்கியும் தயங்கியும் நிற்றல்.

அந்த விளையாட்டு இடத்தை விட்டு நீங்கித் தலைவியை அழைத்துக் கொண்டு தோழி தம் ஊர் செல்லுதல்.

பிறகு ஓர் நாள் தலைவன் தமது சந்திப்பு இடம் (குறியிடம்) பக்கமாக வந்து நின்று வருந்துதல்.

தலைவியின் காவல் இல்லாத, தினைப் புனத்தைப் பார்த்துத் தலைவன் வருந்துதல்.

தலைவியின் சொந்த ஊர் நோக்கித் தலைவன் மதிமயங்கிப் போதல் இவையே பகற்குறி இடையீட்டின் விரிவுகளாகும்.

5.4 இரவுக் குறி

தலைவனும் தலைவியும் இரவு நேரத்தில் களவில் சந்தித்துக் கூடி மகிழும் இடம் இரவுக்குறி எனப்படும்.

5.4.1 இரவுக் குறியின் வகை இரவுக்குறி ஒன்பது வகைப்படும். அவையாவன :

1. வேண்டல் : தலைவன் தலைவியை மறுபடியும் சந்திக்க விழைந்து தோழியிடம் இரவுக்குறி வேண்டிப் பேசுதல். அச்செய்தியைத் தோழி தலைவியிடம் கூறுதல்.

2. மறுத்தல்                    :    தோழியும், தலைவியும் தலைவனது வேண்டுகோளை மறுத்து விடுதல்.

3. உடன்படுதல்            :    தோழியும், தலைவியும் தலைவனது வேண்டுகோளை ஏற்று இரவுக்குறிக்கு உடன்படுதல்.

4. கூட்டல்                       :     தோழி தலைவியை அழைத்துச் சென்று இரவுக்குறிக்குரிய இடத்தில் விட்டு வருதல்.

5. கூடல்                           :      தலைவனும் தலைவியும் இரவுக்குறி இடத்தில் கூடி மகிழ்தல்.

6. பாராட்டல்                  :      இரவுக்குறியில் நிகழ்ந்த புணர்ச்சியின் பின் தலைவன் தலைவியைப் புகழ்தல். தலைவன் தந்த பரிசினைத் தோழி புகழ்தல்.

7. பாங்கிற் கூட்டல்    :      இரவுக்குறியில் கூடி மகிழ்ந்த தலைவன் காத்திருந்த தோழியிடம் தலைவியை ஒப்படைக்க, அவள் தலைவியை இல்லத்திற்கு அழைத்துச் செல்லுதல்.

8. உயங்கல்                   :     இரவுக்குறியில் சந்திப்பதற்குத் தலைவன் வரும் வழியில் உள்ள இடையூறுகளை எண்ணித் தலைவி வருந்துதல். அதைக் கண்டு தலைவனும் வருந்துதல். (உயங்கல் – வருத்தம்)

9. நீங்கல்                        :     தோழி தலைவியைக் குறியிடத்தில் விட்டு விட்டு நீங்குதலும், தலைவன் தலைவியைக் கூடிப் பின் நீங்குதலும் நீங்கல் எனப்படும்.

இரவுக்குறியின் விரிவுகள்

தலைவனும் தலைவியும் இரவில் குறிப்பிட்ட ஓர் இடத்தில் சந்தித்துக் கூடி மகிழ்வது இரவுக்குறி என்றும், அது ஒன்பது வகைகளை உடையது என்றும் அறிந்தோம். அதுவே 27 விரிவுபட்ட செயல்களாகவும் விளக்கப்படுகிறது. அவற்றுள் முதன்மையான செய்திப் பிரிவுகளை இனிக் காண்போம்.

தலைவன் இரவுக்குறியை விரும்புதல்.

தலைவன் வரும்வழி இரவில் வர ஏற்றதன்று எனத் தோழி கூறுதல் – தலைவனோ தான் வரும் வழி எளிதானது என வலியுறுத்தல்.

தலைவனும் தோழியும் அவரவர் நாட்டு அணிகலன் பற்றியும் அதன் சிறப்பையும் பேசுதல்.

தோழியின் கருத்தை முதலில் உடன்படாத தலைவி தன் நெஞ்சோடு பேசுதல் ; பிறகு உடன்பட்டுத் தோழியிடம் பேசுதல்.

தலைவி இரவுக்குறி உடன்பட்டதை, தோழி தலைவனிடம் கூறுதல்.

தாய் உறங்கிவிட்டாளா என்பதைத் தோழி கண்டறிதல்.

தலைவன் வந்திருப்பதைத் தோழி தலைவியிடம் கூறுதல்.

தலைவியைக் குறியிடத்துக்குத் தோழி அழைத்துச் செல்லுதல். அங்கு விட்டுவிட்டுத் திரும்புதல்.

தலைவன் தலைவிக்கு முன் தோன்றுதல்.

வரும் வழியின் இடர்ப்பாடு கூறித் தலைவி வருந்துதல் ; அவளைத் தலைவன் தேற்றுதல்.

புணர்தல் ; அதன்பின் புகழ்தல்.

‘இரவுக்குறியில் இனி வராதே’ என, தலைவி தலைவனைத் தடுத்தல்.

தலைவன் தலைவியை அவளது வீட்டிற்குச் செல்லவிடுத்தல்.

தோழி தலைவியை மீளவும் இல்லத்திற்கு அழைத்துச் செல்லுதல்.

தோழி தலைவனை இரவுக்குறி விலக்குதல் (தடுத்தல்) – தோழியின் சொல் கேட்டுத் தலைவன் மயங்குதல் – தோழி தலைவனிடம் தலைவியின் மனத்துயர் கூறுதல்.

தலைவன் சென்று தன் இருப்பிடம் சேருதல்.

5.4.2 இரவுக்குறி இடையீடு தலைவன் தலைவியை இரவு நேரத்தில் சந்திப்பது இரவுக்குறி எனப்படும். அவ்வாறு இரவுக்குறியில் சந்திப்பது சில காரணங்களால் தடைப்படும். அதனை இரவுக்குறி இடையீடு என்பர்.

இரவுக்குறி இடையீட்டு வகை

இரவுக்குறி இடையீட்டை இரண்டாக வகைப்படுத்துவர். அவையாவன:

1. அல்லகுறி

2. வரும் தொழிற்கு அருமை

5.4.3 அல்ல குறி இரவுக்குறியில் சந்திக்க வரும் தலைவன் தன் வருகையை அறிவிக்கச் சில செயல்பாடுகளை நிகழ்த்துவான். அவை அடையாளக் குறியீடுகள் ஆகும். பறவை போல ஒலி எழுப்புதல், தண்ணீரில் கல் எறிதல், இளநீரைப் பறித்துப் போடுதல் போன்ற செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை நிகழ்த்தி, தலைவன் தன் வருகையை உறுதி செய்வான். அதை உணர்ந்து தலைவியும் குறியிடத்திற்குச் சென்று கூடுவாள். சிலசமயம் மேற்சொன்ன அடையாளச் செயல்பாடுகள் வேறு காரணத்தினால் அல்லது வேறு ஒன்றினால் அல்லது இயல்பாக நிகழ்ந்து விடுவது உண்டு. ஆனால் தலைவியோ அது தலைவன் நிகழ்த்திய அடையாளமே எனக் கருதிக் குறியிடத்திற்குச் சென்று, தலைவனைக் காணாது திரும்பி விடுவாள். தலைவனும் அவ்வாறே வந்து தலைவியைக் காணாது, காரணமும் புரியாது திரும்பி விடுவான். இதுவே அல்லகுறிப்படுதல் எனப்படும்.

அல்லகுறிப்படுதல் – விரிவுச் செய்திகள்

இறைவிக்கு இகுளை இறைவு உணர்த்துவழி தான் குறி மருண்டமை தலைவி அவட்கு உரைத்தல் (இறைவி = தலைவி; இகுளை = தோழி) முதலாக என்பிழைப்பு அன்று என்று இறைவி நோதல் ஈறாக அல்லகுறிப்படுதல் பற்றிய விரிவுச்செய்திகள் 12 உள்ளன. அவற்றை இனிக் காண்போம்.

தலைவன் வருகையைத் தோழி தலைவிக்குச் சொல்லுதல் – தனக்கு அல்லகுறிப்பட்டது என்று தோழியிடம் தலைவி கூறுதல்.

தலைவன் தீங்கு செய்தான் எனத் தோழி கூறுதல்.

அல்லகுறிப்பட்டது அறியாத தலைவன், தலைவியைக் காணாமல் வருந்தித் திரும்புதல் முதலியவாகும்.

வரும்தொழிற்கு அருமை

இரவுக்குறியில் தலைவியைக் காணத் தலைவன் வருவான். அப்படி வரும் வழியில் சில இடையூறான நிகழ்ச்சிகள் நிகழும். அதனால் இரவில் வரும் செயல் எளிதாக இருக்காது. அரிதாகவே அமையும். இதையே வரும்தொழிற்கு அருமை என்பர்.

வரும் தொழிற்கு அருமையின் விரிவுச் செய்திகள்

இப்பிரிவுக்குரிய விரிவுச் செய்திகள் 7 ஆகும். அவையாவன:

1. தாய் துஞ்சாமை               :    தலைவியின் தாய் உறங்காது இருத்தல்.

2. நாய் துஞ்சாமை               :    ஊரிலிருக்கும் நாய் உறங்காது இருத்தல்.

3. ஊர் துஞ்சாமை                 :    தாயும் நாயும்துயின்றாலும் ஊரில் உள்ளவர் துயிலாது இருத்தல்.

4. காவலர் துஞ்சாமை        :    இரவுக்காவல் புரியும் நகரக் காவலர்கள் துடியடித்துக் கொண்டு எதிரில் வருதல்.

5. நிலவு வெளிப்படுதல்     :    தலைவன் இரவுக்குறியில் வருவதற்கு இடையூறாக ஒளி வீசும் நிலவு வெளிப்படுதல்.

6. கூகை குழறுதல்               :    கோட்டான் குரல் எழுப்ப அதுகேட்டுத் தலைவி அஞ்சுதல்.

7. கோழி குரல் காட்டுதல்  :   தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் இடையூறாகக் கோழி குரல் எழுப்புதல்.

5.5 தொகுப்புரை

களவியல் பற்றிய இரண்டாம் பகுப்பான இப்பாடத் தொகுப்பின் மூலம் பின்வரும் செய்திகளை அறிந்து கொண்டோம்.

தலைவன் விருப்பத்தைப் பாங்கி உடன்படுதல்; அதன் மூன்று நிலைகள்.

பாங்கியின் மூலம் நிகழும் தலைவன் தலைவியரின் கூட்டத்தின் வகைப்பாடுகள்.

மடலேறுதல் பற்றிய விளக்கம்.

தலைவனும் தலைவியும் பகலிலும் இரவிலும் சந்தித்துக் கொள்ளும் குறியிடம் – குறி இடையீடு பற்றிய விளக்கங்கள்.

அல்லகுறிப்படுதல் – தலைவன் இரவில் வரும் வழியின் அருமைப் பாடு முதலான சிறப்புச் செய்திகள்.

மேற்கண்ட செய்திகளை அறிவதன் மூலம் தலைமக்கள் திறமையுடன் மேற்கொண்ட களவு வாழ்க்கையின் அருமைப்பாட்டை உணர முடிகிறது.

பாடம் - 6

களவியல் – III

6.0 பாட முன்னுரை

நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் என்னும் இலக்கண நூலின் இரண்டாம் இயல் களவியல் ஆகும். அவ்வியலின் செய்திகள் மூன்று பாடத் தொகுப்புகளில் விளக்கப்படுகின்றன. பாடம் நான்கு (களவியல் – I) முதல் 21 நூற்பாக்கள் பற்றியும், பாடம் ஐந்து (களவியல் – II) அடுத்து வரும் 25 நூற்பாக்கள் பற்றியும் விளக்கம் தந்தன.

இப்பாடம் களவியலின் இறுதிப் பகுதியாக எஞ்சியுள்ள 47-54 வரையுள்ள 8 நூற்பாக்களை விளக்குவதாக அமைகிறது. இப்பாடத்தில்

வரைதல் வேட்கை

வரைவு கடாதல்

ஒருவழித் தணத்தல்

வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்

என்னும் நான்கு கிளவிகளுக்குரிய செய்திகள் விளக்கப் பெறுகின்றன.

6.1 வரைதல் வேட்கை வரைவு – திருமணம்; வரைதல் – வரைந்து கொள்ளுதல்; திருமணம் செய்து கொள்ளுதல்.

களவு வாழ்க்கையில் இருந்து மாறி, தலைவனும் தலைவியும் திருமணம் புரிந்து கொண்டு வாழ விரும்புதல் வரைதல் வேட்கை எனப்படும்.

6.1.1 வரைதல் வேட்கையின் வகை வரைதல் வேட்கை மூன்று காரணங்களால் ஏற்படும். அவையாவன:

அச்சம்

உவர்த்தல்

ஆற்றாமை

அச்சம்

தலைவன் தலைவியை அடைவதற்கு இடையூறான நிகழ்ச்சிகள் சில நடைபெறும். அவற்றால் தலைவனது காதல் உறவு விடுபட்டுப் போய்விடுமோ என்ற பயம் தலைவிக்கு ஏற்படும். இதையே அச்சம் என்பர்.

உவர்த்தல்

உவர்த்தல் என்றால் (வெறுத்தல்) என்று பொருள். தோழி, தலைவனை – அவனது வருகையை வெறுத்துக் களவு ஒழுக்கத்திற்கு உதவி புரியாமல் இருப்பாள். அது உவர்த்தல் எனப்படும். அதன்பின் களவு முறையில் தொடர்ந்து பழக வாய்ப்பில்லாமல் போகும். எனவே தலைவனுக்கு வரைதல் வேட்கை ஏற்படும்.

ஆற்றாமை

தோழி உடன்படாமல் வெறுத்தல் காரணமாகத் தலைவனது வருகை தடைப்படும். அவனது பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலாமல் தலைவி வருந்துவாள். அதுவே ஆற்றாமை எனப்படும். தலைவிக்கு நிகழும் ஆற்றாமை அவள் மனத்தில் திருமண விருப்பத்தை ஏற்படுத்தும்.

6.1.2 வரைதல் வேட்கையின் விரிவுச் செய்திகள் அச்சம், உவர்த்தல், ஆற்றாமை என மூவகைப்படும் வரைதல் வேட்கை 18 வகையான விரிவுச் செய்திகளை உடையது.

பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி அருமறை செவிலி அறிந்தமை கூறல் முதலாக, குரவரை வரைவு எதிர்கொள்ளுவித்தல் ஈறாக அமையும் பதினெட்டும் வரைதல் வேட்கையின் விரிவுகளாகும். இப்பதினெட்டையும் மேற்கண்ட மூவகைக்கு ஏற்பப் பிரித்துக் காட்டுவர்.

அச்சத்திற்குரியவை

தலைவியிடம், ‘உனக்கு ஏற்பட்ட துன்பம் யாது?’ எனத் தோழி கேட்ட போது, ‘அருமை வாய்ந்த நம் களவு ஒழுக்கம் செவிலிக்குத் தெரிந்துவிட்டது’ என்று தலைவி கூறுதல்.

தலைவன் வரும் வழியில் உள்ள இடர்ப்பாடுகளைப் பற்றித் தோழியிடம் தலைவி கூறுதல்.

ஊரில் உள்ளவர்கள் பழிதூற்றும் செயல் (அலர்) காரணமாக எழுந்த அச்சத்தால் தலைவி தோழியிடம் பேசுதல்.

தலைவன் வரும்வழி பற்றிய அச்சத்தைத் தலைவி, தோழியிடம் உரைத்தல்.

தலைவன் வரும் வழியை விலக்குமாறு (தவிர்க்கும் படி) தோழியிடம் தலைவி கூறுதல்.

தலைவன் தன்னைக் காணவரும் இரவு நேரச் சந்திப்பைத் தடுத்து நிறுத்துமாறு (விலக்குமாறு) தலைவி தோழியிடம் கூறுதல்.

தாய் வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்துகிறாள் என்பதைச் சுட்டிக் காட்டித் தலைவன் வருவதைத் தடுத்து நிறுத்துமாறு தோழியிடம் தலைவி கூறுதல். (வெறியாடல் : தலைவி ஏதேனும் தெய்வம் காரணமாக அச்சம் கொண்டிருப்பாள்; அதனால் அவள் உடலில் மெலிவு ஏற்பட்டுள்ளது எனக் கருதித் தாய் அச்சம் தெளிவிக்க முற்படுவாள். அதற்காக அவள், முருகக் கடவுளின் உணர்வு மேல் எழும் வேலனிடம் சென்று வேண்ட வேலன் (முருக வழி்பாட்டினன்) தெய்வமேறிய நிலையில் கூறும் நிகழ்வு.)

மாற்றார் மணம் பேச வருவதனைத் தடுத்து நிறுத்துமாறு தோழியிடம் தலைவி கூறுதல்.

அச்சம் இவ்வாறான காரணங்களால் உண்டாகும். எனவே (அச்சம் காரணமாக), திருமணத்தை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும். என்னும் எண்ணம் ஏற்படும்.

உவர்த்தலுக்கு உரியவை

தோழி, தலைவனைப் பழித்துரைத்தல்.

தோழி, தலைவியிடம் ‘நின்குறையைத் தலைவனிடம் நீயே சொல்’ எனக் கூறுதல்.

ஆற்றாமைக்குரியவை

தலைவனது ஊருக்குச் சென்றுவரத் தோழி உடன்படுதல்.

‘தலைவன் நம்மைப் பொருட்படுத்தாமல் இருப்பது, நம் ஊழ்வினைப்பயனே’ (தலைவிதியே) என்று தலைவி கூறுதல்.

தலைவன் வந்து கூடியதாகக் கண்ட கனவினைத் தலைவி தோழியிடம் கூறுதல்.

பிரிவால் தன் அழகு நலன் அழிந்ததைத் தோழியிடம் தலைவி கூறுதல்.

தலைவனிடம் சென்று தன் துன்பத்தைக் கூறுமாறு தலைவி தோழியிடம் வேண்டுதல்.

மிகுந்த காமத்தினால் துயருற்றுத் தலைவி பேசுதல்.

பிரிவைத் தாங்க முடியாமல் செயலற்ற தன்மையுடன் தலைவி தனக்குத் தானே பேசுதல்.

‘தலைவனது உறவினரை, வரைவு பற்றிப் பேச வருமாறு ஏற்பாடு செய்’ என, தலைவி தோழியிடம் கூறுதல்.

வரைதல் வேட்கையின் காரணங்கள் – ஒரு தொகுப்பு

வரைதல் வேட்கையின் விரியாக நாம் மேலே கண்ட செய்திகளின் வழியாக, வரைவு நிகழ்வதற்குரிய – அல்லது – திருமணத்தை விரும்புவதற்குரிய காரணங்களாகப் பின் வருவனவற்றைத் தொகுத்துக் கூறலாம்.

செவிலித்தாய் களவு பற்றி அறிதல்.

தலைவன் வரும் வழியில் உள்ள இடர்ப்பாடுகள்.

குறிஇடையீடு, அல்ல குறிப்படுதல், குறிவிலக்குதல் – இவற்றால் ஏற்பட்ட இடைவெளி.

தலைவனைப் பிரிந்திருக்க இயலாத தலைவியின் தன்மை.

களவு பற்றிப் பிறர் பழி தூற்றுதல். (அலர்)

தாய் நிகழ்த்திய வேலன் வெறியாட்டு.

மாற்றார் மணம் பேச வருதல்.

6.2 வரைவு கடாதல் (திருமணம் செய்து கொள்ள வேண்டுதல்)

களவு வாழ்க்கையைத் தொடர வழியின்றி – காதல் உறவு நிலைக்க வழிதேடும் தலைவியும் தோழியும் வரைவு (திருமணத்தின்) மீது விருப்பம் கொள்வர். அவ்விருப்பத்தைத் தலைவனிடமும் புலப்படுத்தி வலியுறுத்துவர். அவனை நேரடியாகவோ, குறிப்பாகவோ மணம் செய்து கொள்ளுமாறு கேட்பர். இதுவே வரைவு கடாதல் எனப்படும்.

6.2.1 வரைவு கடாதலின் வகை தலைவனை மணம் செய்து கொள்ளுமாறு வேண்டும் வரைவு கடாதல் நான்கு வகைப்பாடுகளை உடையது. அவையாவன:

பொய்த்தல்

மறுத்தல்

கழறல்

மெய்த்தல்

பொய்த்தல்

தலைவன் தலைவியை மணந்து கொள்ளும்படி செய்ய நினைத்த தோழி தலைவனிடம் பொய்யான சில செய்திகளைத் தானே புனைந்து கூறுவாள். இது பொய்த்தல் எனப்படும்.

மறுத்தல்

தலைவன் பகற்குறி அல்லது இரவுக்குறியில் தலைவியைச் சந்திக்க வருவதைத் தோழி வெளிப்படையாகவோ குறிப்பாகவோ மறுத்துப் பேசுதல் மறுத்தல் எனப்படும்.

கழறல்

கழறல் – சொல்லுதல்; நேரடியாகச் சொல்லுதல், ‘நீ தலைவியை மணந்து கொள்ளாமல் தொடர்ந்து களவு முறையிலேயே இருத்தல் உன் நாட்டுக்கு ஏற்றதன்று; உயர் பண்பும் அன்று’ என்று தோழி தலைவனிடம் நேரடியாகக் கூறுதல் கழறல் எனப்படும்.

மெய்த்தல்

மெய் – உண்மை; மெய்த்தல் – உண்மையானவற்றைக் கூறுதல். தோழி தலைவனுக்கு உண்மைத் தன்மையை (உண்மையிலேயே தலைவிக்கு உள்ள சூழலைக்) கூறுதல் மெய்த்தல் எனப்படும்.

6.2.2 வரைவு கடாதலின் விரிவுச் செய்திகள் தலைவனிடம் திருமணத்தை வலியுறுத்தித் தோழி பேசும் வரைவு கடாதல் மேற்சொன்ன நான்கு வகைப்பாடுகளை உடையது. அவ்வகைப்பாடுகளின் அடிப்படையில் அது பல்வேறு விரிவுச் செய்திகளையும் உடையது.

வினவிய செவிலிக்கு மறைத்தமை தலைவர்க்குத் தோழி விளம்பல் முதலாகக் கவின் அழிவு உரைத்தல் ஈறாகச் சொல்லப்பட்ட இருபதும் வரைவு கடாதலின் விரிவுச் செய்திகள் ஆகும். இவ்விருபது விரிவுச் செய்திகளும் தோழி தலைவனிடம் கூறுவதாகவே அமைந்துள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி அவ்விரிவுச் செய்திகளை மேற்கண்ட வகைப்பாடுகளின் அடிப்படையில் பிரித்துக் காண்போம்.

பொய்த்தலுக்கு உரியவை

தலைவியின் களவு ஒழுக்கம் பற்றிச் செவிலி வினவியதாகவும், ஆனால், தான் அதை மறைத்துப் பேசியதாகவும் தோழி கூறுதல்.

ஊரார் தலைவியைத் தூற்றும் பழிச்சொல் (அலர்) மிகுந்துவிட்டது எனல்.

தாய், களவு ஒழுக்கத்தை அறிந்து கொண்டாள் எனல்.

தாய், வெறியாட்டு நிகழ்த்தும் வேலனைக் கொண்டு உண்மையறிய முயன்றாள் எனல்.

அயலார், தலைவியைப் பெண் கேட்டு வந்தனர் எனல்.

மறுத்தலுக்கு உரியவை

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்த தலைவனை வேறு ஒரு நேரத்தில் வருக என்று திருப்பி அனுப்புதல்.

பகலில் வரும் தலைவனை இரவில் வா எனல்.

இரவில் வரும் தலைவனைப் பகலில் வா எனல்.

தலைவனைப் பகலிலும் இரவிலும் வா எனல்.

தலைவனைப் பகலிலும் இரவிலும் வாராதே எனல்.

கழறலுக்கு உரியவை

கழறல் – இடித்துக் கூறுதல். தலைவனின் நாடு, ஊர், குலம், மரபு, புகழ், வாய்மை, நல்வினை முதலானவற்றின் பெருமைகளைக் கூறி, நீ தலைவியை மணந்து கொள்ளாமல் இருப்பது முறையன்று என நேரடியாகக் கூறுதல்.

மெய்த்தலுக்கு உரியவை

தலைவனிடம் ‘நீ வரைவு கூறி எம் நகர்க்கு வா; அவ்வாறு வந்தால் எம் உறவினர் எதிர்கொண்டு வருவர்’ எனல்.

தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கு உரிய காலம் (பருவம்) வந்துவிட்டது எனல்.

தலைவன் வரும் வழியில் விலங்குகளால் ஏற்படக் கூடிய அச்சத்தைச் சுட்டிக் காட்டி வரைவு வற்புறுத்துதல்.

பிரிவைப் பொறுத்துக் கொள்ள முடியாத தலைவியின் துன்பத்தைப் போக்கும் விதத்தில் திருமணம் செய்துகொள் என வற்புறுத்துதல்.

குறியிடத்தில் சந்திப்பதற்கு இடையூறாகக் காவல் மிகுந்துள்ளது என்று கூறுதல்.

தலைவிக்குக் காமவேட்கை அதிகமானது என்று கூறுதல்.

தலைவிக்குக் கனவினால் வந்த துன்பத்தைக் கூறுதல்.

தலைவியின் அழகு, தலைவனின் பிரிவினால் கெட்டது எனக் கூறுதல்.

6.3 ஒருவழித் தணத்தல்

தணத்தல் – பிரிந்து இருத்தல். தலைவியின் களவு ஒழுக்கம் ஊரார்க்குத் தெரிந்து பலரும் அது பற்றி இழித்தும், பழித்தும் பேசும் அலர் ஏற்படும். அதனால் ‘தலைவியை உடன் மணந்து கொள்க பருவமும் வந்துவிட்டது’ என்று தோழி வரைவு கடாதல் மூலம் வற்புறுத்துவாள். பலர் தூற்றும் அலர் மறைய நான் எனது ஊருக்கு ஒரு முறை சென்று சில காலம் தங்கித் திரும்புகிறேன் என்று கூறித் தலைவன் பிரிந்து செல்வான். அவன் பகற்குறியிலும், இரவுக் குறியிலும் வருவதைத் தவிர்ப்பான். அதுவே ஒருவழித் தணத்தல் எனப்படும்.

6.3.1 ஒருவழித்தணத்தலின் வகை ஒரு வழித்தணத்தல் ஏழு வகைப்படும். அவையாவன:

செலவு அறிவுறுத்தல்

செலவு உடன்படாமை

செலவு உடன்படுத்தல்

செலவு உடன்படுதல்

சென்றுழிக் கலங்கல்

தேற்றி ஆற்றுவித்தல்

வந்துழி நொந்துரை

செலவு அறிவுறுத்தல்

தற்காலிகப் பிரிவாகச் சில காலம் குறியிடங்களில் சந்திப்பதைத் தவிர்த்துத் தன் ஊருக்கு சென்று வர இருப்பதைத் தலைவன் தோழியிடம் கூறுதலும், தோழி தலைவியிடம் கூறுதலும் செலவு அறிவுறுத்தல் ஆகும்.

செலவு உடன்படாமை

தலைவன் ஒருவழித் தணத்தலாகத் தன் ஊருக்குச் செல்வதைத் தோழி உடன்படாமல் தடுத்தல் செலவு உடன்படாமை எனப்படும்.

செலவு உடன்படுத்தல்

தற்போது உள்ள சூழலில் ஒருவழித்தணத்தலாகத் தான் பிரிந்து செல்ல வேண்டியது இன்றியமையாதது என்று கூறித் தலைவன் தோழியை உடன்படச் செய்வது செலவு உடன்படுத்தல் எனப்படும்.

செலவு உடன்படுதல்

ஒருவழித் தணத்தலாகத் தான் பிரிந்து செல்ல வேண்டியது இன்றியமையாதது என்று தலைவன் உணர்த்த, அதை உணர்ந்த தோழி அப்பிரிவுக்கு உடன்படுவது செலவு உடன்படுதல் எனப்படும்.

சென்றுழிக் கலங்கல்

தலைவன் ஒருவழித் தணத்தலாகப் பிரிந்து சென்றபோது அப்பிரிவைத் தாங்க இயலாத தலைவி மனம்கலங்கிப் பேசுதல் சென்றுழிக் கலங்கல் எனப்படும்.

தேற்றி ஆற்றுவித்தல்

மனம் கலங்கிய தலைவிக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் அறிவுரைச் சொற்களைக் கூறி, தோழி தலைவியின் துயர் நீக்குதல் தேற்றி ஆற்றுவித்தல் எனப்படும்.

வந்துழி நொந்துரை

ஒருவழித் தணத்தலாகிய தற்காலிகப் பிரிவு முடிந்து, திரும்பி வந்த தலைவனிடம் தோழி வருந்திப் பேசுதலும், அவ்வாறே தலைவிக்கும் தோழிக்கும் தன் பிரிவால் ஏற்பட்ட துன்பம் பற்றித் தலைவன் வருந்திப் பேசுதலும் வந்துழி நொந்துரை எனப்படும்.

6.3.2 ஒருவழித் தணத்தலின் விரிவுச் செய்திகள் தலைவன் தன் ஊருக்குச் சென்று தங்குதல் ஒரு வழித் தணத்தல் ஆகும் என்றும் அது ஏழு வகைப்படும் என்றும் கண்டோம். அதுவே 12 வகைப்பட்ட விரிவுச் செய்திகளையும் உடையது. அவற்றை மேற்கண்ட ஏழு வகைப்பாடுகளின் கீழ்ப் பிரித்துக் காண்போம்.

செலவு அறிவுறுத்தலுக்கு உரியவை

தலைவன் தன் ஊருக்குச் செல்வதைத் தோழியிடம் கூறுதல்.

தலைவன் ஒருவழித் தணத்தலாகப் பிரிவு மேற்கொண்டதைத் தோழி தலைவிக்குச் சொல்லுதல்.

செலவு உடன்படாமைக்கு உரியது

தலைவன் ஒருவழித்தணத்தலாகப் பிரிந்து தன் ஊருக்குச் செல்வதைத் தோழி தடுத்தல்.

செலவு உடன்படுத்தலுக்கு உரியது

தலைவன் தனது பிரிவு இன்றியமையாதது என்று வேண்டிக் கூறித் தோழியை உடன்படுத்துதல்.

செலவு உடன்படுதலுக்கு உரியது

தலைவனின் வேண்டுகோளை ஏற்ற தோழி அவ்வாறே ஒருவழித் தணத்தல் மேற்கொள்ள இசைந்து அனுப்பி வைத்தல்.

சென்றுழிக் கலங்கலுக்கு உரியவை

தலைவன் பிரிவை எண்ணிய தலைவி தன் நெஞ்சிடம் வருந்திப் பேசுதல்.

பிரிந்த தலைவன் உடன் திரும்பாமல் காலம் நீட்டித்தபோது, அதனால் மிகுந்த காமம் காரணமாகத் தலைவி பேசுதல்.

தேற்றி ஆற்றுவித்தலுக்கு உரியவை

காமம் மிக்க துயரால் வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தல்.

பிரிவு முடிந்து தலைவன் திரும்பிவர அதனைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

வந்துழி நொந்துரைக்கு உரியவை

திரும்பி வந்த தலைவனிடம் தோழி வருத்தம் புலப்படுத்திப் பேசுதல்.

தலைவிக்குத் தன் பிரிவு தந்த துயருக்காகத் தலைவன் வருந்தித் தோழியிடம் பேசுதல்.

தலைவியின் பெரிய துயரை ஆற்றுவித்து அரிய உயிரைக் காத்திருந்த (காவல் செய்த) தன்மை இது எனத் தோழி தலைவனிடம் கூறுதல்.

6.4 வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்

திருமணத்தை முன்வைத்து அதற்குத் தேவைப்படும் பொருளீட்டுதல் காரணமாக, தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லுதல் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் எனப்படும்.

6.4.1 வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதலின் வகைகள் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் ஒன்பது வகைகளை உடையது. அவையாவன:

பிரிவு அறிவுறுத்தல்

பிரிவு உடன்படாமை

பிரிவு உடன்படுத்தல்

பிரிவு உடன்படுதல்

பிரிவுழிக் கலங்கல்

வன்புறை

வன்பொறை

வரும்வழிக் கலங்கல்

வந்துழி மகிழ்ச்சி

பிரிவு அறிவுறுத்தல்

திருமணத்தை முன் வைத்து, பொருளீட்டுதல் காரணமாகத் தான் பிரியப்போகும் செய்தியைத் தலைவிக்குத் தெரிவிக்கும்படி தோழியிடம் தலைவன் கூறுதல் பிரிவு அறிவுறுத்தல் எனப்படும்.

பிரிவு உடன்படாமை

திருமணத்தை முன்வைத்து, பொருளீட்டுதல் காரணமாகத் தலைவன் பிரிவதைத் தோழி உடன்படாமல் தலைவனிடம் மறுத்துக் கூறுதல் பிரிவு உடன்படாமை எனப்படும்.

பிரிவு உடன்படுத்தல்

உரிய காரணங்களையும் சென்று வரவேண்டியதன் இன்றியமையாமையையும் எடுத்துக் கூறிய தலைவன் தனது பிரிவைத் தோழி உடன்படுமாறு செய்தல் பிரிவு உடன்படுத்தல் எனப்படும்.

பிரிவு உடன்படுதல்

உரிய காரணங்களையும் சென்று வரவேண்டியதன் இன்றியமையாமையையும் தலைவன் எடுத்துரைக்க, அதை உணர்ந்த தோழி தலைவனது பிரிவை உடன்படுதல் பிரிவு உடன்படுதல் எனப்படும்.

பிரிவுழிக் கலங்கல்

வரைவிடை வைத்துப் பொருள் ஈட்டுதல் காரணமாகத் தலைவன் பிரிந்து செல்ல, அதனால் தலைவி மனம் கலங்கி இருத்தல் பிரிவுழிக் கலங்கல் எனப்படும்.

வன்புறை

தலைவனது பிரிவு அவசியமானது; அப்பிரிவை ஏற்றுப் பொறுத்து ஆற்றியிருத்தலே பொருத்தமுடையது என்று தோழி தலைவியிடம் வற்புறுத்திக் கூறுதல் வன்புறை எனப்படும்.

வன்பொறை

தலைவி தோழியின் சொற்களைக் கேட்டு ஆற்றி இருத்தல், வன்பொறை ஆகும். (பொறை – பொருத்துக்கொள்ளுதல்)

வரும்வழிக் கலங்கல்

பொருள்வயின் பிரிவு மேற்கொண்ட தலைவன், தன்பணி முடித்துத் திரும்புகிறான். திரும்பும் வழியில் தன் பிரிவால் தலைவிக்கு ஏற்பட்டிருக்கும் வருத்தம் – கலக்கம் – தாங்க இயலாத தன்மைகளை எண்ணி மனம் கலங்குகிறான். இதுவே வரும்வழிக் கலங்கல் எனப்படும்.

வந்துழி மகிழ்ச்சி

பொருளீட்டிக் கொண்டு திரும்பிவரும் வழியெங்கும் வருந்தியவாறே வந்த தலைவன் மீண்டு வந்ததும் அவனைக் கண்ட தலைவி மனம்மகிழ்தல் வந்துழி மகிழ்ச்சி எனப்படும்.

6.4.2 வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிதலின் விரிவுச் செய்திகள் மேற்கண்டவாறு ஒன்பது வகைப்பாடுகளை உடைய வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிதல் என்பது 21 விரிவுச்செய்திகளையும் உடையதாகும். என் பொருள் பிரிவு உணர்த்து ஏந்திழைக்கு என்பது முதலாக ஆற்றுவித்திருந்தமை பாங்கி கூறலும் என்பது ஈறாக அவ்விரிவுச் செய்திகள் அமைந்துள்ளன. அவற்றை வகைப்பாடுகளின் அடிப்படையில் காண்போம்.

பிரிவு அறிவுறுத்தலுக்கு உரியது

‘பொருள் காரணமாகப்பிரியும் என் பிரிவைத் தலைவிக்கு உணர்த்துக’ என்று தலைவன் தோழியிடம் கூறுதல்.

தோழி தலைவி்க்குத் தலைவனின் பொருள்வயின் பிரிவை உணர்த்துதல்.

பிரிவு உடன்படாமைக்கு உரியது

தோழி ‘உன் பொருட்பிரிவை நீயே தலைவியிடம் சொல்’ என்று தலைவனிடம் மறுத்துப் பேசுவது.

பிரிவு உடன்படுத்தல், பிரிவு உடன்படுதலுக்கு உரியது

‘பொருள்வயின் பிரிவில் நெடுங்காலம் நீட்டித்து இருக்கமாட்டேன். விரைவில் திரும்பி வருவேன்’ என்று தலைவன் தோழியிடம் கூறுதல்.

பிரிவுழிக் கலங்கலுக்கு உரியவை

தலைவி தலைவன்பிரிவுக்குவருந்துதல்.

பாங்கி தலைவியிடம் கொடிய சொற்களைப் பேசுதல்.

மழைக்காலம் வந்ததாகக் கருதித் தலைவி புலம்புதல்.

மழைக்காலம் வந்ததாகத் தோன்றுவது மாயத் தோற்றம் என்று கூறிய தோழியைத் தலைவி மறுத்துப் பேசுதல்.

பொருளீட்டச் சென்ற இடத்தில் தலைவன் புலம்புதல்.

வன்புறைக்கு உரியவை

தலைவி கொடுஞ்சொற்களைச்சொல்லுதல்.

தலைவன் விரைந்து மீண்டு வருவான் எனத் தோழி சொல்லுதல்.

பருவம் வந்ததாகத் தோன்றுவது மாயத் தோற்றமே என்று தோழி கூறுதல்.

தலைவனது வரவை அறிவிக்கும் தூதுவனாகவே கார்காலம் வந்தது என்று தோழி கூறுதல்.

வன்பொறைக்கு உரியது

தலைவி தோழியின் வார்த்தைகளைக் கேட்டு ஆற்றியிருத்தல்.

வரும்வழிக் கலங்கலுக்கு உரியவை

பொருளீட்டி மீண்டு வரும் தலைவன் தேர்ப்பாகனிடம் பேசுதல்.

பொருளீட்டி மீண்டு வரும் தலைவன் மேகத்திடம்பேசுதல்.

வந்துழி மகிழ்ச்சிக்கு உரியவை

தோழி வலம்புரிச் சங்கின் ஓசையைக் கேட்டு, தலைவன் வருகையைத் தலைவிக்குச் சொல்லுதல்.

தலைவி வலம்புரிச் சங்கை வாழ்த்திக் கூறுதல்.

திரும்பி வந்த தலைவனிடம் ‘பிரிந்திருந்த காலத்தில் எம்மை நினைத்தீரோ’ என்று தோழி வினவுதல்.

‘பிரிந்திருந்த காலத்தில்உம்மை யான் மறந்து அறியேன்’ என்று தலைவன் கூறுதல்.

தலைவியைப் பொறுத்திருக்கச் செய்து அவளைக் காப்பாற்றிய அருமைப்பாட்டைத் தலைவனிடம் தோழி கூறுதல்.

இவையாவும் வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிதலின் விரிவுச் செய்திகளாகும்.

6.5 தொகுப்புரை

இப்பாடப் பகுதியிலிருந்து கீழ்க்காணும் செய்திகளை உணர்ந்து தெளிந்தோம்.

வரைதல் வேட்கை எனப்படும திருமண, விருப்பமும் அதற்கான காரணமும்.

திருமணத்திற்கான பொருள் ஈட்டுதல் காரணமாகத் தலைவன் மேற்கொள்ளும் பிரிவு.

தலைவனது பிரிவைப் பொறுத்துக்கொள்ள இயலாத தலைவியின் மென்மையான உளப்பாங்கு.

தலைவியைப் போலவே, தலைவனும், பிரிவைத் தாங்காது பிரிவிலும்,     மீண்டு வரும் போதும் அவளையே நினைத்திருந்த உயர் மனப்பாங்கு.

தலைவன் தலைவி இருவரையும் நெறிப்படுத்தி உரையாடும் தோழியின் மதிநுட்பம் மிக்க செயல்பாடு.

இத்தகைய செய்திகளைக் கற்றுணர்வதன் மூலம் தலைமக்கள் களவு வாழ்க்கையில் உயர்ந்த உள்ளம் உடையவர்களாகத் திகழ்ந்தமையை அறிய முடிகிறது.