78

நம்பி அகப்பொருள் - 2

பாடம் - 1

வரைவியல் – I

1.0 பாட முன்னுரை

நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப் பொருள் என்னும் இலக்கண நூலின் மூன்றாம் இயல் வரைவியல் ஆகும். அது களவியலுக்கு அடுத்து அமைந்துள்ளது.

களவு வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளை – தடைகளை- நீக்கி, காதல் வாழ்வை நிலைபெறச் செய்ய விழையும்போது அதற்குரிய தீர்வாக அமைவதே வரைவு (திருமணம்) ஆகும். அது பற்றிய இலக்கணச் செய்திகளை வரைவியல் வழங்குகிறது.

வரைவியல் என்னும் மூன்றாம் இயலில் இடம் பெறும் இலக்கணச் செய்திகளை விளக்குவதாக இம்முதல் பாடமும் இதனை அடுத்து வரும் ஒரு பாடமும் அமைகின்றன. வரைவியலின் முதல் ஒன்பது நூற்பாக்களை உள்ளடக்கி விளக்குவதாக இப்பாடம் அமைகிறது.

1. வரைவின் இலக்கணம்

2. வரைவின் இருவகைக் கிளவிகள்

3. வரைவு மலிதலின் வகை

4. வரைவு மலிதலின் விரி

5. அறத்தொடு நிற்றலின் இருவகை

6. தலைவி அறத்தொடு நிற்கும் கிளவிகள்

7. பாங்கி அறத்தொடு நிற்கக் காரணம்

8. செவிலி அறத்தொடு நிற்கும் முறை

முதலான செய்திகள் இப்பாடத்தில் இடம் பெறுகின்றன.

1.1 வரைவு வரைவு என்னும் சொல் திருமணத்தைக் குறிக்கும். அவ்வாறே கரணம் என்பது திருமண நிகழ்வைக் குறிக்கும் சொல்லாகும். இவற்றை முந்தைய பாடங்களில் கண்டு தெளிந்தோம். இனி, இங்கு வரைவு என்பதற்கான இலக்கண விளக்கத்தைக் காண்போம்.

இலக்கணம்

நம்பியகப் பொருள் நூலாசிரியர் வரைவின் இலக்கணத்தைக் கீழ்க்காணும் நூற்பா வழி வகுத்து வழங்குகிறார்.

வரைவு எனப்படுவது உரவோன் கிழத்தியைக்

குரவர் முதலோர் கொடுப்பவும் கொடாமையும்

கரணமொடு புணரக் கடியயர்ந்து கொளலே

- (வரைவியல் – 1)

1.1.1 இருவகை வரைவு தலைவன் தலைவியை மணந்து கொள்வது வரைவு எனப்படும். அது கரணம் எனப்படும் சடங்கு முறைகளுடன் கூடியதாக அமையும். அவ்வாறு நிகழும் வரைவு என்னும் திருமணம்.

1. பெண்ணின் பெற்றோர் உடன்பட்டு மகட்கொடை (மகளைத் தருதல்) வழங்க நிகழ்வது.

2. பெண்ணின் பெற்றோர் உடன்பட்டு வழங்காமல் தலைமக்கள் தம்விருப்பப்படி நடத்திக் கொள்வது.

என இரு நிலைப்பாடுகளை உடையது.

1.1.2 வரைவிற்குரிய கிளவிகள் அகத்துறை நிகழ்வுகளில் பங்குபெறும் தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலானோர் நிகழ்த்தும் உரையாடல்கள் கிளவி என்றும் அவற்றின் தொகுப்பு கிளவித் தொகை என்றும் அழைக்கப்படும்.

நம்பியகப் பொருள் நூலாசிரியர், வரைவிற்குரிய கிளவித் தொகைகளை இரண்டு பிரிவுகளில் பாகுபடுத்தி உரைத்துள்ளார்.

அவை,

1. வரைவு மலிதல்

2. அறத்தொடு நிற்றல்

என்பன.

1.2 வரைவு மலிதல்

திருமணம் தொடர்புடையதாகத் தொடங்கி, தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும் பேச்சுகளும் வரைவு மலிதல் எனப்படும். களவு வாழ்வை மாற்றிக் கற்பு வாழ்வை நிலைப்படுத்தத் தொடர்ந்து நடக்கும் மகிழ்ச்சியான முயற்சி மிகுதலை வரைவு மலிதல் என்றார் ஆசிரியர்.

1.2.1 வரைவு மலிதலின் வகை வரைவு மலிதல் எனப்படும் திருமணம் தொடர்பான முயற்சிகளும் நிகழ்ச்சிகளும் நான்கு வகையாகப் பாகுபடுத்தி உரைக்கப்பட்டுள்ளன. அவையாவன:

வரைவு முயல்வு உணர்த்தல்  :    திருமணம் தொடர்பான முயற்சிகளைத் தலைவன் தொடங்கிவிட்டான் என்பதனைத் தோழி தலைவிக்குத் தெரிவித்தல்.

வரைவு எதிர்வு உணர்த்தல்        :    தலைவன் தொடங்கிய திருமண முயற்சியை அவனது உறவினர், தலைவியின் பெற்றோரிடம் முன் மொழிய, அதைப் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர் என்பதைத் தோழி, தலைவியிடம் கூறுதல்.

வரைவு அறிந்து மகிழ்தல்           :    பெற்றோர், தன் மனம் விரும்பும் தலைவனையே மணமகனாக ஏற்க இசைந்தனர் என்ற செய்தியை அறிந்த தலைவி, மனம் மகிழ்தல்; தனக்குள் பேசி மகிழ்தல்.

பராவல் கண்டு உவத்தல் (பராவல் = பராவுதல், வழிபடுதல்)    :    தான் விரும்பும் மணவாழ்வு உறுதிப்படுவதை உணர்ந்த தலைவி அதற்கு நன்றிபாராட்டும் நோக்குடன் தெய்வத்தை வணங்கி நிற்பாள். அதைக் கண்டு தலைவன் மகிழ்தல்.

1.2.2 வரைவு மலிதலின் விரி மேலே நான்காக வகைப்படுத்தி உரைக்கப்பட்ட வரைவு மலிதல் என்னும் செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தி எழுவகைக் கிளவிகளாக (கூற்றுகளாக) வரிசைப்படுத்தி வழங்கியுள்ளார் நூலாசிரியர். அவையாவன :

காதலன் மணமுயற்சி

காதலன், காதலியை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்து, அதற்கு ஈடாக (விலையாக)த் தான் தர விரும்பும் பொருள் இது எனச் சொல்லி அனுப்புதல். இச் செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

விலை என நல்கினன் நாடே            – (ஐங்குறுநூறு – 147)

என்னும் சங்க இலக்கியத் தொடர் தலைமகளை மணக்கும் நிலைக்கு விலையாகத் தன் நாட்டையே வழங்கத் தலைவன் இசைந்ததை வெளிப்படுத்தும்.

காதலி, நற்றாய் உள்ள மகிழ்ச்சி உள்ளல்

தான் விரும்பும் தலைவனொடு திருமணம் நிகழுமானால் தாயும் மிக மகிழ்வாள் எனத் தலைவி, தாய் அடையப் போகும் மகிழ்வை எண்ணிப் பார்த்து இன்புறுதல். (உள்ளல் – நினைத்தல்)

தலைவன் உறவினர் மணம் பேசல்

தலைவனின் உறவினர் மணம் பேச வந்தபோது, அவர்களைத் தங்கள் பெற்றோர் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு வரவேற்ற இன்பச் செய்தியைத் தோழி, தலைவிக்குச் சொல்லுதல்.

தலைவியின் உவகை

தன் பெற்றோர் தலைமகனது விருப்பத்திற்கு உடன்பட்டதைத் தோழி மூலமாக அறிந்த தலைவி, மிகுந்த மகிழ்ச்சியால் தன் மனத்துடன் தானே பேசுதல்.

தலைவனைப் பாங்கி வாழ்த்தல்

உரிய நேரத்தில் – உரிய முறையில் வரைவு விருப்பத்தைத் தலைவியின் பெற்றோரிடம் முன்வைத்து இசைவு பெற்ற தலைவனைத் தோழி வாழ்த்துதல்.

தலைவி பராவுதல்

(பரவுநிலை = வழிபடும் நிலை)

தான் விரும்பும் தலைவனோடு திருமணம் நிகழப்போவதை அறிந்த தலைவி, தெய்வத்தை வணங்கி நிற்பதைத் தோழி தலைவனுக்குக் காட்டுதல்.

கண்டோன் மகிழ்வு

தான் விரும்பும் தலைவனோடு திருமணம் நிகழப் போவதை அறிந்த தலைவி, தெய்வத்தை வணங்கி நிற்பதைத் தோழி, தலைவனுக்குச் சுட்டிக் காட்ட, அதைக் கண்ட தலைவன் அகம் மிக மகிழ்தல்.

மேற்கண்ட எழுவகைப் பிரிவுகளும் வரைவு மலிதலின் விரிவுகளாக அமைகின்றன.

1.3 அறத்தொடு நிற்றல்

அகப்பொருள் இலக்கணத்தில் அறத்தொடு நிற்றல் என்பது முதன்மையானதொரு மரபு ஆகும். தலைமக்களின் வாழ்வை அறவழியில் நிலைப்படுத்த விரும்பும் தோழி முதலானோர் தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் காதல் கொண்ட உண்மையை உரியவர்க்கு உரியவாறு எடுத்துரைப்பது அறத்தொடு நிற்றல் ஆகும். இதனால் தலைவன் தலைவியின் காதல் வெற்றி பெறும் ; திருமண நிகழ்ச்சி நடைபெற முயற்சிகள் மேற்கொள்ளப்பெறும்.

தலைவன் தலைவியின் அன்பு கலந்த காதல் வாழ்க்கையை நிலைபெறச் செய்து கற்பு வாழ்வை மலரச் செய்வதே அறத்தொடு நிற்றலின் பயன் ஆகிறது. சுருங்கச் சொன்னால் களவைக் கற்பாக்கும் அருஞ்செயலே – அறச்செயலே – அறத்தொடு நிற்றல்.

அகப்பொருள் இலக்கணத்தில் இடம்பெறும் தலைவி, தோழி, செவிலி முதலானோர் அவ்வாறு அறம் நிலைநிறுத்தச் செயல்படும் திறத்தை இப்பகுதியில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

1.3.1 அறத்தொடு நிற்றலின் வகை தலைவியின் களவு வாழ்க்கையை அடுத்தவர்க்கு எடுத்துரைக்கும் அறத்தொடு நிற்றல் இருவகைப்பட்டதாய் அமைகிறது.

அவையாவன :

முன்னிலை மொழி              :    முன் நிற்பார்க்கு நேரே கூறுதல்.

முன்னிலைப் புறமொழி    :   முன் நிற்பார்க்குக் கூற வேண்டிய செய்தியைப் பிறருக்குக் கூறுவார் போலக் கூறுதல்.

1.3.2 தலைவி அறத்தொடு நிற்றல் – கிளவிகள் தலைவி, தனக்கும் தலைவனுக்கும் இடையிலான மறைமுகக் காதல் வாழ்வைத் தோழியிடம் வெளிப்படுத்தும்போது நிகழ்த்தும் கூற்றுகளாக ஏழினைக் குறிப்பிட்டுள்ளார் நம்பியகப் பொருள் ஆசிரியர்.

அவையாவன :

1. தோழி தன் கண்ணீரைத் துடைத்தபோது அதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு, தான் கலங்கி நிற்பதற்கான காரணத்தைக் கூறுதல்.

2. தலைவன் தெய்வத்தைச் சான்றாக வைத்துத் தன்னை மணந்து கொள்ளும் உறுதி கூறியதை வெளிப்படுத்துதல்.

3. அவ்வாறு கூறிய பிறகு தலைவன் தன்னை விட்டு நீங்கியதை, தோழியிடம் கூறுதல்.

4. தோழி, தலைவனின் பண்புகளைப் பழித்துக் கூறுதல் ; அது கேட்ட தலைவி தலைவனது பண்புகளைப் புகழ்ந்து கூறுதல்.

5. தெய்வத்தை வேண்டிக் கொள்ள இருவரும் செல்வோம் என்று தலைவி கூறுதல்.

6. தன் தாய் தன்னை வீட்டுக்காவலில் வைத்தாள் என்று தோழியிடம் கூறுதல்.

7. செவிலித் தாய் இரவு நேரத்தில் தலைவன் வந்ததைப் பார்த்து விட்டாள் என்று தோழியிடம் கூறுதல்.

1.3.3 பாங்கி அறத்தொடு நிற்றல் தலைவியின் காதல் வாழ்வு பற்றிய உண்மைச் செய்தியைத் தோழி (பாங்கி) எடுத்துரைப்பது, பாங்கி அறத்தொடு நிற்றல் எனப்படும். அவ்வாறு தோழி அறத்தொடு நிற்றல், செவிலி (வளர்ப்புத் தாய்) தலைவியைப் பற்றிய ஐயப்பாட்டை எழுப்பி வினவியபோதே நிகழும். அது இரண்டு கூறுபாடுகளை உடையது.

பாங்கி அறத்தொடு நிற்றல் – I

செவிலித் தாய் தலைவியின் உடல் தோற்றத்திலும், செயல்பாடுகளிலும் தற்போது நிகழ்ந்துள்ள வேற்றுமைகளுக்குக் காரணம் யாது? எனக் கேட்ட போது தோழி அறத்தொடு நிற்பாள்.

பாங்கி அறத்தொடு நிற்றல் – II

தலைவியின் மாறுபாட்டிற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக வேலனை அழைத்து வந்து வெறியாட்டு என்னும் நிகழ்ச்சியைச் செவிலி மேற்கொள்வாள். அப்போது, அத்தகைய வெறியாட்டை எந்தப் பயனையும் தராது என்று கூறி, வெறியாட்டைத் தடுத்து நிறுத்தும் தோழி உண்மைக் காரணத்தைப் புலப்படுத்தி அறத்தொடு நிற்பாள்.

களவின் காரணம்

செவிலி வினவிய போது தலைவியின் களவு வாழ்க்கையை அறத்தொடு நின்று வெளிப்படுத்தும் தோழி, தலைவனின் காதல் உறவானது மலர்ந்ததற்கு மூன்று நிலைகளைக் காரணமாகக் காட்டுவாள்.

அவை யாவன :

1. பூத்தரு புணர்ச்சி           :    தலைமகன் தலைவியின் கூந்தலில் மலர்க் கொத்தைச் சூட, அவனையே தலைவனாகத் தலைவி மனத்தளவில் முடிவு செய்தல்.

2. புனல் தரு புணர்ச்சி    :    தலைவி ஆற்று வெள்ளத்தில் மகிழ்ந்து நீராட, அப்போது நிகழ்ந்த இடையூற்றில் இருந்து மீட்ட ஆடவனையே தனக்குரிய காதல் தலைவனாகக் கொள்ளுதல்.

3. களிறு தரு புணர்ச்சி   :    தலைவி தினைப் புனம் காவல் புரிந்த காலத்தில் களிறு (யானை) ஒன்றின் தாக்குதலில் இருந்து தன்னைக் காத்த தலைவனையே தனக்குரியவனாக உள்ளத்தளவில் முடிவு செய்தல்.

மேற்காணும் மூவகைப்பட்ட இயல்பான சூழல்களில் ஏதேனும் ஒன்று நிகழ, அதன் தொடர்ச்சியாய்த் தலைவிக்குக் காதலும், களவு வாழ்க்கையும் மலர்ந்து வளர்ந்ததாகத் தோழி குறிப்பிடுவாள். இவை, அவள் அறத்தொடு நிற்கும்போது எடுத்துரைக்கும் காரணங்களாக அமைகின்றன.

1.3.4 செவிலி அறத்தொடு நிற்றல் தலைவியின் வளர்ப்புத் தாயான செவிலி தோழியிடம் சில வினாக்களை எழுப்பி அவற்றின் மூலமாகத் தலைவியின் களவு ஒழுக்கத்தை உணர்ந்து கொள்வாள். அவ்வாறே தலைவியின் தாய் (நற்றாய்) தன் மகளின் வேறுபாடு கண்டு அதற்கான காரணத்தைச் செவிலித் தாயிடம் வினவுவாள். அப்போது களவு வாழ்க்கை பற்றிய உண்மையைச் செவிலித் தாய் புலப்படுத்தி நிற்பாள்.

செவிலி அறத்தோடு நிற்கும் முறை

முன்னிலை மொழி, முன்னிலைப் புறமொழி என அறத்தொடு நிற்கும் முறைகள் இரண்டை முன்னர்க் குறிப்பிட்டோம். அவற்றுள் ஒன்றான முன்னிலை மொழி என்னும் முறையில், செவிலி நேரடியாகவே நற்றாயிடம் உண்மையை உணர்த்தி நிற்பாள்.

1.4 தொகுப்புரை

இப்பாடத்தில் பின் வரும் செய்திகளைக் கற்றுணர்ந்தோம்.

1. வரைவின் இலக்கணம்.

2. வரைவு மலிதல், அறத்தொடு நிற்றல் என்னும் வரைவின் இருவகைக் கிளவித் தொகைகள்.

3. அறத்தொடு நிற்றலின் இருவகை.

4. தலைவி, பாங்கி, செவிலி முதலானோர் அறத்தொடு நிற்கும் முறை.

5. தலைவி அறத்தொடு நிற்கும் போது வெளிப்படுத்தும் கூற்றுகள்.

6. தோழி அறத்தொடு நிற்கக் காரணம்.

பாடம் - 2

வரைவியல் – II

2.0 பாட முன்னுரை

நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப் பொருள் என்னும் இலக்கண நூலின் மூன்றாம் இயல் வரைவியல் ஆகும். அது களவியலுக்கு அடுத்து அமைந்துள்ளது.

வரைவியலில் மொத்தம் 29 நூற்பாக்கள் உள்ளன. இவற்றுள் முதல் ஒன்பது நூற்பாக்களில் கூறப்பட்ட வரைவு மலிதல், அறத்தொடு நிற்றல் ஆகியன பற்றி முன் பாடத்தில் கண்டோம். வரைவியலில் ஏனை இருபது நூற்பாக்களில் கூறப்படும் இலக்கணச் செய்திகளை விளக்குவதாக இப்பாடம் அமைகிறது.

களவு வெளிப்படும் சூழலில் நிகழும் உடன்போக்கு, கற்பொடு புணர்ந்த கவ்வை, மீட்சி என்னும் மூவகைக் கிளவித் தொகைகள்.

உடன்போக்கின் வகை, விரிவு.

செவிலி புலம்புதல், நற்றாய் புலம்புதல், மருட்சி, கண்டோர் இரங்குதல், செவிலி பின்தேடிச் செல்லுதல் என்னும் கற்புத் தொடர்பான கவ்வையின் வகைகள்.

மீட்சி என்பதன் வகை, விரிவு.

தன்மனை வரைதலின் விரிவு.

உடன்போய் வரைந்து மீளுதலின் விரிவு.

உடன்போக்கில் இருந்து மீண்டு வரைவதன் விரிவு.

உடன்போக்கு இடையீட்டு வகையின் விரிவு.

முதலான செய்திகள் இப்பாடப் பகுதியில் இடம் பெறுகின்றன.

2.1 களவு வெளிப்பாட்டுக் கிளவிகள்

களவு ஒழுக்கம் வெளிப்படாத போது, வரைவு மலிதல், அறத்தொடு நிற்றல் முதலான செயல்பாடுகள் நிகழும். அவற்றின் வழி, கற்பு வாழ்வு மலரும். அதற்கு மாறாகத் தலைமக்களின் களவு வாழ்க்கை வெளிப்படும் வண்ணம் அதுபற்றியே பலரும் அலர்தூற்றிப் பேசும் நிலையில் நிகழும் கிளவிகளை, களவு வெளிப்பாட்டுக் கிளவிகள் என்பர்.

அவற்றை, உடன்போக்கு – கற்பொடு புணர்ந்த கவ்வை – மீட்சி என்னும் மூன்று வகையான நிகழ்ச்சிகளாக வரிசைப்படுத்தி வழங்குவார் நாற்கவிராச நம்பி. அவை ஒவ்வொன்றும் உட் பிரிவுகளாகச் சில வகைகளையும் அவற்றுக்கெனச் சில கிளவிகளையும் உடையன.

தலைவன் தலைவியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லுதல் உடன்போக்கு எனப்படும். தலைவி தலைவனுடன் செல்லுதல் என்பதாகவும் இச்சொல்லுக்கு பொருள் கூறலாம். இருவகைப் பொருளும் ஒரு செயலையே உணர்த்தும்.

உடன்போக்கு நிகழ்தல்

தலைவன் தலைவியின் காதல் மலர்ந்து வளர்ந்த களவு வாழ்க்கை ஊரார்க்குத் தெரியவரும் முன்னரே தோழி அறத்தொடு நிற்பாள். திருமணம் முடிக்க வற்புறுத்துவாள். அதற்கு மாறாக, களவு வெளிப்பட்டுவிடும் சூழலில் பலரும் அறிந்து அலர் பேசும் நிலையில் உடன்போக்கு நிகழும்.

அகத்திணை நெறியில் களவு வாழ்க்கை கற்பாக மாறுவதற்கு இரண்டு வழிகள் குறிப்பிடப் பெற்றுள்ளன. ஒன்று அறத்தொடு நிற்றல். மற்றொன்று உடன்போக்கு. இவற்றுள் ஒன்று நிகழ்ந்தால் மற்றொன்று நிகழாது. அறத்தொடு நின்ற பின் உடன்போக்கு நிகழாது. அவ்வாறே உடன்போக்கின் பின்னர் அறத்தொடு நிற்பதால் பயன் ஒன்றும் இல்லை. இவ்விரண்டில் ஒன்றுதான் களவு நாடகத்தின் நிறைவுக் காட்சியாக அமையும்.

2.2.1 உடன்போக்கின் வகைகள் தலைவனும் தலைவியும் ஒன்று சேர்ந்து செல்லும் உடன்போக்கு என்பது எட்டு வகைகளை உடையது. அவையாவன :

1. போக்கு அறிவுறுத்தல்      :    தலைவியை உடன் அழைத்துச் செல்லுமாறு தோழி தலைவனுக்குச் சொல்லுதல்.

2. போக்கு உடன்படாமை    :    தோழி கூறியவாறு உடன் போக்காகச் செல்வதற்குத் தலைவனும், தலைவியும் மறுத்தல்.

3. போக்கு உடன்படுத்தல்    :    உடன்போக்காக அழைத்துச் செல்வதைத் தவிர, தலைவிக்கு வேறு பாதுகாப்பும் ஆதரவும் இல்லை என்று தலைவனிடம் கூறுதல். அவ்வாறே தலைவனுடன் செல்லுவது அன்றிக் கற்பு மேம்பாட்டை நிலை நிறுத்த வேறு வழியில்லை என்று தலைவியிடம் கூறுதல். அவ்வாறு இருவரிடமும் கூறி அவ்விருவரையும் உடன்போக்கிற்கு உடன்படச் செய்தல்.

4. போக்கு உடன்படுதல்       :     தோழியின் விளக்க உரைகளைக் கேட்ட தலைவனும் தலைவியும் உடன் போக்காகச் செல்வதற்கு ஒப்புக் கொள்ளுதல்.

5. போக்கல்    :    உடன் போக்காகச் செல்வதற்கு இருவரும் உடன்பட்ட பிறகு, தலைவி தலைவனுடன் செல்வதற்குத் தோழி வழியேற்படுத்திக் கொடுத்தல்.

6. விலக்கல்   :    உடன் போக்காகச் சென்ற தலைவியின் இயலாமை (தளர்ச்சி) கண்டோர் அவள் மீது அன்பு காட்டுதல்; உடன் போக்கை விலக்கிக் கொண்டு தங்கள் இருப்பிடத்தில் தங்கிச் செல்லுமாறு கூறுதல்.

7. புகழ்தல்      :    தலைவன் உடன்போக்கில் இடைவழியில் தலைவியைப் புகழ்ந்து கூறுதல்.

8. தேற்றல்     :    இடைவழியில் இயலாமை காரணமாகத் தளர்ச்சி அடைந்து தங்கிய தலைவியிடம் தன் ஊர் அருகில்தான் உள்ளது என்று கூறித் தலைவன் அவளைத் தேற்றல்.

மேற்கண்ட எட்டும், உடன்போக்கின் வகைகளாக அமைகின்றன. உடன் போக்காகச் செல்லுமாறு தோழி வழங்கும் அறிவுரையில் தொடங்கி, தலைவன் அவனது ஊரை நெருங்கும் நேரம் வரையிலான செயல்பாடுகளின் வகைப்பாடுகளாக மேற்கண்ட எட்டும் அமைகின்றன.

2.2.2 உடன்போக்கின் விரிவு தலைவனும் தலைவியும் ஒன்றாகச் சேர்ந்து புறப்பட்டுச் செல்லும் உடன்போக்கு என்னும் நிகழ்வு மேற்கண்டவாறு எட்டு வகைப்பாடுகளை உடையது. அவ்வாறு எட்டாக அமைந்த வகைப்பாடுகளையே மேலும் விளக்கமாகவும் விரிவாகவும் கிளவிகளாகப் பிரித்துரைக்கும் போது பதினெட்டாக விரிவடைகிறது. அப்பதினெட்டையும் மேற்கண்ட எட்டு வகைகளுக்குள் அடக்கிக் காட்டுவதும் உண்டு.

போக்கு அறிவுறுத்தலின் விரிவு

1. பாங்கி தலைவனுக்கு உடன்போக்கு உணர்த்துதல்.

2. பாங்கி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்துதல்.

போக்கு உடன்படாமையின் விரிவு

1. தலைமகன் மறுத்தல்.

2. தலைவி நாணம் அழியுமே என்று இரங்கிக் கூறுதல்.

போக்கு உடன்படுத்தலின் விரிவு

1. பாங்கி தலைவனை உடன்படுத்தல்.

2. கற்பின் மேம்பாட்டைப் பாங்கி தலைவிக்குக் கூறல்.

போக்கு உடன்படுதலின் விரிவு

1. தலைவன் போக்கு உடன்படுதல்.

2. தலைவி ஒருப்பட்டு (ஒப்புக்கொண்டு) எழுதல்.

3. தோழி சுரத்து (வழி) இயல்பு உரைத்தவழி, தலைவி சொல்லுதல்.

போக்கலின் விரிவு

1. பாங்கி கையடை (அன்புப் பரிசு) கொடுத்தல்.

2. பாங்கி வைகிருள் (மிகுந்த இருள் பொருந்திய இடை யாமம்) விடுத்தல்.

3. தலைமகளைத் தலைமகன் சுரத்து உய்த்தல். (சுரம்-பாலைவழி)

விலக்கலின் விரிவு

1. தலைமகன் தலைமகள் அசைவு (வருத்தம்) அறிந்து இருத்தல்.

2. கண்டோர் காதலின் விலக்கல். (உடன்போக்கைத் தடுத்தல்)

புகழ்தலின் விரிவு

1. உவந்து அலர் (மலர்) சூட்டி உள் மகிழ்ந்து உரைத்தல்.

2. கண்டோர் அயிர்த்தல். (அயிர்த்தல் – ஐயமுற்றுக் கூறுதல்)

தேற்றலின் விரிவு

1. தன் பதி அணிமை சாற்றல்.

(தலைவன், தன் ஊர் அருகில் உள்ளது எனல்)

2. தலைவன் தன் பதி அடைந்தமை சாற்றல்.

குறிப்பு    :    எட்டு வகையாக அமையும் உடன்போக்கின் வகைகளையே மேலும் விளக்கமாகவும் படிப்படியாகவும் எடுத்துரைப்பதாக இவ்விரிவுக் கிளவிகள் அமைகின்றன.

2.3 கற்பொடு புணர்ந்த கவ்வை

உடன்போக்காகத் தலைவி தலைவனுடன் சென்ற பிறகு அவளது களவு வாழ்க்கையைப் பற்றி அயலவர் பலரும் அறிந்து கொள்ளுவர். அதன் தொடர்ச்சியாய் அது பற்றியே பேசுவர். அதற்கு அலர் என்று பெயர். அவ்வாறு அலர் எழுந்து பலர் அறியக் களவு வெளிப்படுதலின் தொடர்ச்சியாய் நிகழும் நிகழ்ச்சிகளைக் கற்பொடு புணர்ந்த கவ்வை என்று கூறுவர். கவ்வை என்பது ஒலி, பழிச்சொல், துன்பம், கவலை முதலிய பல பொருள்களைத் தரும். அது ஐந்து வகைகளை உடையது. அவையாவன:

1. செவிலி புலம்பல்    :    தலைவி காதலனுடன் உடன்போக்காகச் சென்று விட்டதை அறிந்து செவிலித் தாய் புலம்புதல்.

2. நற்றாய் புலம்பல்   :    தன் புதல்வி காதலனுடன் உடன் போக்காகச் சென்றுவிட்டதை அறிந்து நற்றாய் புலம்புதல்.

3. கவர் மனை மருட்சி   :    நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு வருந்துதல்.

4. கண்டோர் இரக்கம்     :    தலைவியின் தாயும் தோழியரும் அவளது உடன்போக்கினை, அறிந்து அப்பிரிவைத் தாங்க முடியாமல் வருந்திப் பேசுதலை மற்றவர் கண்டு இரங்கிக் கூறுதல்.

5. செவிலி பின்தேடிச் சேறல்    :    உடன் போக்காகச் சென்ற தலைவியைத் தேடிக்கொண்டு, செவிலி பின்தொடர்ந்து செல்லுதல்.

2.3.1 கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரிவுகள்

உடன்போக்கின் பின் களவு வெளிப்பட்டு அதன் பின் நிகழும் நிகழ்ச்சிகளைக் கற்பொடு புணர்ந்த கவ்வை என்று கண்டோம். செவிலி புலம்பல், நற்றாய் புலம்பல், கவர் மனை மருட்சி, கண்டோர் இரக்கம், செவிலி பின்தேடிச் சேறல் என்னும் ஐந்தும் அக்கவ்வையின் பகுதிகளாகும். அவற்றின் உட்பிரிவுகளாக (விரிவுகளாக) அமையும் கிளவிகளை (கூற்றுகளை) இனிக் காண்போம்.

செவிலி புலம்பலின் விரிவு

தன் வளர்ப்பு மகளான தலைவி காதலனுடன் உடன் போக்காகச் சென்று விட்டதை அறிந்து கொண்ட செவிலித்தாய் புலம்புவாள். இது செவிலி புலம்பல் எனப்படும். அவளது புலம்புதலின் விரிவுகளாகச் சிலவற்றை அகப்பொருள் விளக்க நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அவையாவன :

1. தலைவியின் உடன்போக்கை, தோழி வழியாக உணர்ந்த செவிலி வருந்துதல் ; அப்போது அவளைத் தேற்றுவோர்க்கு வருத்தத்துடன் பதில் கூறுதல்.

2. தலைவி தான் தலைவனுடன் செல்லப்போவதைக் குறிப்பினால் உணர்த்தியும் அறியாமல் போனதற்காக நொந்து கூறுதல்.

3. செவிலி தெய்வத்தை வாழ்த்துதல்.

நற்றாய் புலம்பலின் விரிவு

தலைவி உடன்போக்காகச் சென்றதைச் செவிலி நற்றாய்க்கு வெளிப்படுத்துவாள் அது அறத்தொடு நிற்றல் ஆகும். அவ்வாறு செவிலி வழியாக உணர்ந்துகொண்ட தாய் புலம்பிக் கூறுதல் நற்றாய் புலம்பல் எனப்படும். நற்றாய் புலம்பலின் விரிவுகளாவன :

1. பாங்கியுடன் நற்றாய் புலம்புதல்.

2. அயலாருடன் நற்றாய் புலம்புதல்.

3. தலைவி பழகி விளையாடிய இடங்களோடு வருந்திப் பேசுதல்.

மனை மருட்சியின் விரிவு

நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு வருந்துதல் மனை மருட்சி எனப்படும். அது ஐவகைப்பட்ட விரிவுச் செய்திகளை உடையது.

1. தலைவி நல்லபடி இல்லம் திரும்ப வேண்டும் என்பதற்காகக் காக்கை கரைதல் முதலான நல்ல நிமித்தங்களைப் போற்றுதல்.

2. தலைமகள் நடந்து செல்லும் காட்டின் வெம்மைத் தன்மை மாறிக் குளிர்ச்சி தருவதாக ஆகட்டும் என்று நற்றாய் விரும்பி உரைத்தல்.

3. தலைவியின் மென்மைத் தன்மைக்கு இரங்குதல்.

4. தன் மகளின் (தலைவியின்) இளமைத் தன்மைக்கு மனம் இரங்குதல்.

5. தன் மகளின் (தலைவியின்) அச்சத் தன்மைக்கு இரங்குதல்.

கண்டோர் இரக்கம்

தலைவி தன்னொடு உடன் பழகி விளையாடிய தோழியர் கூட்டமும் தன்னைப் பெற்றெடுத்த நற்றாயும் வருந்துமாறு தலைவனுடன் உடன்போக்காகச் செல்வாள். அப்போது ஆயத்தாரும் (தோழியர்) நற்றாயும் வருந்தி நிற்பதைக் கண்டார் தங்கள் வருத்தத்தைப் புலப்படுத்துதல் கண்டோர் இரக்கம் எனப்படும். இதற்கு உட்பிரிவுகளும் விரிவுகளும் குறிக்கப்பெறவில்லை.

செவிலி பின்தேடிச் சேறலின் விரிவு

தலைவி தனது நட்பு வட்டமும் நற்றாயும் வருந்துமாறு உடன் போக்காகச் சென்ற பாதையிலேயே பின் தொடர்ந்து செவிலி தேடிச் செல்லுதல் செவிலி பின் தேடிச் சேறல் எனப்படும். இது ஒன்பது வகையான விரிவுகளை உடையது. அவையாவன :

1. தலைவியின் பிரிவைத் தாங்காத நற்றாயைத் தேற்றுதல்.

2. செல்லும் வழியில் மூன்று தண்டுகளைக் கையில் கொண்ட அந்தணரை (முக்கோல் பகவர்) வினவுதல்.

3. அந்தணர் செவிலியிடம் ‘உடன்போக்கு உலக இயல்புதான்’ என்று காரணம் கூறி விளக்குதல்.

4. செவிலி, பாலை நிலத்தில் செல்லும் போது இடைவெளியில் சந்தித்த ஒரு பெண்ணிடம் புலம்பிக் கூறுதல்.

5. செவிலி இடைவழியில் கண்ட குரா என்னும் மரத்துடன் புலம்பிப் பேசுதல்.

6. தான் செல்லும் வழியில் பாதச் சுவடுகளைக் கண்டு அவை தலைவியின் பாதச் சுவடுகளாகுமோ என்று வருந்திப் பேசுதல்.

7. செவிலி போகும் வழியில் எதிர்ப்படும் தலைமக்களைப் பார்த்துத் தன் மகள் சென்ற விவரம் கேட்டல்.

8. எதிரில் வந்தோர் செவிலியின் புலம்புதலைக் கேட்டு அவளுக்கு ஆறுதலான சில வார்த்தைகளைக் கூறுதல்.

9. செவிலி, நெடுந்தூரம் நடந்தும் தன் புதல்வியைக் காணாமையால் துன்பம் மிகுந்து வருந்திக் கூறுதல்.

மேற்கண்ட யாவும் செவிலித்தாய் தலைவியை தேடிச் சென்ற முயற்சியின் போது அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகளின் விளக்கங்களாகும்.

2.4 மீட்சி

செவிலித்தாய் தலைவியைத் தேடிச் சென்று காணாமல் திரும்பி வருதல் மீட்சி எனப்படும். உடன்போக்காகச் சென்ற தலைவனும் தலைவியும் மீண்டு வருதலையும் மீட்சி என்று குறிப்பிடுவர். இவ்விரு நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக அமையும் மீட்சி என்பது நான்கு வகைகளை உடையது.

தெளித்தல்

உடன் போக்காகச் சென்ற தலைவியைத் தேடிக் காணாமல் திரும்பி வந்த செவிலித்தாய் நற்றாயிடம் ‘தலைவி நெடுந்தூரம் சென்று விட்டாள்’ என்று கூறி அவளைத் தெளிவித்தல் தெளித்தல் எனப்படும். அவ்வாறே தலைவன் மீண்டு வரும்போது தலைவியினது ஊர் நெருங்கிவிட்டதனைக் கூறுதலும், தெளித்தல் ஆகும்.

மகிழ்ச்சி

தலைவி தலைவனுடன் திரும்பி வருவதை, அவளுக்கு முன்னே செல்லும் சிலர் தோழியிடம் சென்று கூறுவர். அது கேட்டு, தோழி மகிழ்வாள்; உடனே தோழி சென்று நற்றாயிடம் கூறுவாள். அவளும் அதைக் கேட்டு மகிழ்வாள். இவ்விரண்டும் மகிழ்ச்சி என்னும் வகையின் விளக்கங்கள் ஆகும்.

வினாதல்

தலைவி மீண்டு வருவதை அறிந்த நற்றாய் தன் மகளைத் தலைவன் நம் மனைக்குக் கொண்டு வருவானா அல்லது தன் நகர்க்கே கொண்டு செல்வானா என்று, வெறியாட்டு நிகழ்த்தும் வேலனிடம் கேட்பது வினாதல் எனப்படும்.

செப்பல்

தலைவியின் வருகையை அவளுக்கு முன் சென்றோர் தோழியிடம் கூறுதல் செப்பல் எனப்படும்.

2.4.1 மீட்சியின் விரிவு மேலே நான்கு வகைப்பட்டதாக உரைக்கப்பட்ட மீட்சி என்பது ஆறு வகைப்பட்ட விரிவுக் கிளவிகளைக் கொண்டதாகும். அவையாவன :

1. தலைவி நெடுந்தூரம் சென்றதைச் செவிலி நற்றாயிடம் கூறுதல்.

2. திரும்பி வரும்போது தலைவன் தாம் தலைவியின் ஊரை நெருங்கி விட்டதைத் தலைவிக்கு கூறுதல்.

3. தனது வருகையைத் தோழிக்கு அறிவிக்குமாறு தனக்கு முன் செல்கின்றவரிடம் தலைவி கூறுதல்.

4. முன் சென்றோர் தோழிக்குத் தலைவியின் வருகையைத் தெரிவித்தல்.

5. தலைவியின் வருகையைத் தெரிந்துகொண்ட தோழி அதனை நற்றாய்க்குக் கூறுதல்.

6. தலைவியின் வருகையை உணர்ந்த நற்றாய் வேலனைப் பார்த்துத் தலைவன் தன் மகளுடன் இங்கு வருவானோ தன் நகர்க்கே செல்வானோ என்று வினவுதல்.

இவை யாவும் மீட்சியின் விரிவுக் கிளவிகளாக அமைகின்றன.

ஒரு வகையில் மீட்சியின் நான்கு வகைகளுக்கான விளக்கவுரைகளாகவும் இவற்றைக் கொள்ளலாம்.

2.5 வரைதல்

வரைதல் எனப்படும் திருமணம் சார்ந்த சிந்தனைகளையும், அதனை ஒட்டி நிகழும் செயல்பாடுகளையும் விளக்கி உரைத்த காரணத்தாலேயே இவ்வியலுக்கு வரைவியல் என்னும் பெயர் வந்தது. களவியல் கற்பியலாக மாறுவதற்கு இடைப்பட்ட காரண காரியமாக அமைவது வரைவு என்னும் திருமண நிகழ்வே ஆகும். இவ்வரைவு

1. உடன்போக்காகச் சென்று வரைந்து கொள்ளுதல்.

2. உடன்போக்கு இடையில் தடைப்பட்டு, மீண்டு வந்து தலைவன் தன் மனையில் வரைதல்.

3. உடன்போக்கு இடையில் தடைப்பட்டு, மீண்டு வந்து தலைவன் தலைவியின் மனையில் வரைதல்.

என மூன்று நிலைப்பாடுகளை உடையது.

இவற்றுள் தன் மனை வரைதல் என்பதற்கு மட்டும் வகையும், விரிவுக் கிளவிகளும் இங்கே எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

2.5.1 தன்மனை வரைதல் உடன்போக்காகச் சென்ற தலைவன் திரும்பி வருவது மீட்சி எனப்படும். அவ்வாறு மீண்டு வந்த தலைவன் தலைவியைத் தன் ஊருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள தன் மனையில் திருமணம் செய்து கொள்வது, தன்மனை வரைதல் எனப்படும்.

தன்மனை வரைதலின் வகைகள்

தலைவன் தலைவியைத் தன் மனையின்கண் வரைந்துகொள்ளும் நிகழ்ச்சியில் மூன்று உட்பிரிவுகள் வகைகளாக அமைந்துள்ளன. அவையாவன :

வினாதல்

நற்றாய் “நம் வீட்டிற்கு வந்து தலைவிக்குத் திருமணம் நடத்தும்படியாகத் தலைவனின் நற்றாயிடம் கேட்கலாமா?” என்று செவிலியைப் பார்த்து வினவுதல் வினாதல் எனப்படும்.

செப்பல்

தலைமகன், தலைவியைத் தன் மனையின் கண்ணேயே மணந்து கொண்ட செய்தியைத் தோழி செவிலிக்கும் செவிலி நற்றாய்க்கும் என்றவாறு ஒருவர் பிறருக்குச் சொல்லுதல் செப்பல் எனப்படும்.

மேவல்

தலைமகன் தன் மனையிலேயே தலைவியை மணந்துகொண்ட செய்தியை ‘உன் உறவினரிடம் கூறுக’ என்று தோழிக்குக் கூறுதல் மேவல் எனப்படும்.

தன்மனை வரைதலின் விரிவுக் கிளவிகள்

வினவுதல், செப்புதல், மேவுதல் என்னும் மூன்று நிலைப்பாடுகளில் நிகழ்ந்த தன்மனை வரைதலின் விரிவுக் கிளவிகளாகப் பலவற்றை நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுச் சொல்கிறார். அவை யாவும் தன்மனை வரைதல் என்னும் நிகழ்ச்சியின் வகைகளை விளக்குவன. அவையாவன :

1. தலைவியின் மணவிழாவினைத் தன் மனையின்கண்ணே காணும் வேட்கையுடன் (விருப்பத்துடன்) நற்றாய், ”நம் மனைக்கு அழைத்து வந்து நம் புதல்வியைத் தலைவன் திருமணம் செய்து கொள்ளும்படி அவனுடைய அன்னையரைக் கேட்கலாமா?” என்று செவிலியிடம் வினவுதல்.

2. தலைவன் தன் மனைக்கண் மணந்து கொண்ட செய்தியைச் செவிலி தோழி வாயிலாக அறிந்து கொள்ளுதல்.

3. தான் அறிந்த செய்தியைச் செவிலி நற்றாய்க்குக் கூறுதல்.

4. தலைவன், தங்கள் வரைவைச் சுற்றத்தவரிடம் சொல்லுமாறு தோழியிடம் கூறுதல்.

5. அச்செய்தியை “நான் முன்பே சொல்லிவிட்டேன்” என்று தோழி கூறுதல்.

இவ்வைந்தும் தன்மனை வரைதலின் விரிவுகள் ஆகும்.

2.6 உடன்போக்கு இடையீடு

தலைவனும் தலைவியும் ஒன்றுபட்டு உடன்போக்காக ஊரை விட்டுச் செல்லுவர். அவ்வாறு செல்லும் உடன்போக்கு, இடையில் சுற்றத்தவரால் தடைப்படுதல் உடன்போக்கு இடையீடு எனப்படும்.

தலைவன் தலைவியை உடன்போக்கிச் சென்றான் என்பதை அறிந்த தலைவியின் சுற்றத்தார் அவர்களைப் பின்தொடர்ந்து செல்வர். அப்போது தலைவன் தலைவியைச் சுற்றத்தாரிடம் விட்டு விட்டுச் செல்லுதல் என்பதையும் உடன்போக்கு இடையீடாகக் குறிப்பிடுவர்.

2.6.1 உடன்போக்கு இடையீட்டின் வகைகள் உடன்போக்கு இடையீடு, போக்கு அறிவுறுத்தல், வரவு அறிவுறுத்தல், நீக்கம், இரக்கமொடு மீட்சி என்னும் நான்கு வகைகளை உடையது.

போக்கு அறிவுறுத்தல்

தலைவனுடன் தன் ஊரைவிட்டு நீங்கும் தலைவி செல்லும் வழியில் எதிரே வரும் அந்தணர்களிடம் தன் செலவைத் தோழிக்கும் நற்றாய்க்கும் உணர்த்துமாறு வேண்டுதல்; அவ்வாறே தலைவியின் உடன்போக்கை அந்தணர்கள் சென்று நற்றாய்க்கு உணர்த்துதல். இவ்விரண்டும் போக்கு அறிவுறுத்தல் எனப்படும்.

வரவு அறிவுறுத்தல்

தன்னுடைய சுற்றத்தினர் பின்தொடர்ந்து வருவதைத் தலைமகள் தலைவனுக்கு எடுத்துக் கூறுதல் வரவு அறிவுறுத்தல் எனப்படும்.

நீக்கம்

தலைவியின் சுற்றத்தினர் பின்தொடர்ந்து வருவதை உணர்ந்த தலைவன் தலைவியை விட்டுவிட்டுத் தான் மட்டும் நீங்கிச் செல்லுதல் நீக்கம் எனப்படும்.

இரக்கமொடு மீட்சி

தன் சுற்றத்தினரைக் கண்டதும் தன்னைத் விட்டுத் தலைவன் நீங்கி விட்டதற்காக மிகுந்த வருத்தப்பட்ட தலைவி, முடிவில் சுற்றத்தினருடன் மீண்டு தன் ஊருக்கே திரும்புதல் இரக்கமொடு மீட்சி எனப்படும்.

2.6.2 உடன்போக்கு இடையீட்டின் விரிவு தலைமக்களின் உடன்போக்கு சுற்றத்தவரால் தடுத்து நிறுத்தப்படுதலை உடன்போக்கு இடையீடு என்று கண்டோம். அதற்குரிய விரிவுக் கிளவிகளை இனிக் காண்போம்.

1. தன் ஊரை விட்டு நீங்கும் தலைவி எதிரில் வரும் அந்தணரிடம் தான் தலைவனுடன் செல்லும் செய்தியைத் தோழியிடம் கூறுமாறு சொல்லுதல்.

2. தன் ஊரை விட்டு நீங்கும் தலைவி அவர்களிடம், அச்செய்தியைத் தன் தாயிடம் சொல்லுமாறு வேண்டுதல்.

3. தலைவியின் உடன்போக்கை அந்தணர் நற்றாயிடம் கூறுதல்.

4. தலைவியின் உடன்போக்கை அறிந்த சுற்றத்தார் கோபப்பட்டுக் கூட்டமாகப் பின் தொடர்ந்து செல்ல, அதைக் கண்ட தலைவி அச்செய்தியைத் தலைவனுக்குக் கூறுதல்.

5. தலைவியின் சுற்றத்தாரை எதிர்த்துத் தாக்க விரும்பாத தலைவன் தலைவியைச் சுற்றத்தினரிடமே விட்டுவிட்டுத் தனித்துச் செல்லுதல்.

6. சுற்றத்தினருடன் திரும்பிச் செல்லும் தலைவி புறங்காட்டிச் செல்லும் தலைவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே செல்லுதல்.

இவையாவும் உடன்போக்கு இடையீட்டின் விரிவுக் கிளவிகள் ஆகும்.

மணம் முற்றுப் பெறல்

வரைவியலின் நிறைவாக அமையும் இறுதி நூற்பா, வரைதல் என்றால் என்ன என்பதைப் பற்றி விளக்குவதாக அமைகிறது.

தன்னூரிலும் தன் மனையிலும் வரைதல் நிகழாதபோது தலைவன் தலைவியின் இல்லத்திற்கு வர அவனைத் தலைவியின் பெற்றோர் எதிர்கொண்டு அழைப்பர். பின்னர் அந்தணர், சான்றோர் முன்னிலையில் உரிய கொடை கொடுத்து, தலைவன் தலைவியை மணந்து கொள்ளுதல் தகுதியான செயல்பாடாகும் என்பது வரைதல் பற்றிய அகப்பொருள் விளக்கமாகும்.

2.7 தொகுப்புரை

இப்பாடத்தில் பின் வரும் செய்திகளைக் கற்றுணர்ந்தோம்:

1. களவு வெளிப்படும் சூழலில் நிகழும் உடன்போக்கு என்பதைப் பற்றிய விளக்கம்.

2. உடன்போக்கு நிகழ்ந்த பிறகு செவிலி புலம்புதல் முதலாக நிகழும் கவ்வைகள்.

3. தலைவனும் தலைவியும் மீண்டு வருதல் பற்றிய செய்திகளின் தொகுப்பாகிய மீட்சி என்பது.

4. உடன்போய் மீண்டு வந்த தலைவன் தலைவியை மணந்து கொள்வதில் அமையும் வகைப்பாடுகள்.

5. தலைவனும் தலைவியும் மேற்கொண்ட உடன்போக்கில் ஏற்பட்ட இடைத்தடையாகிய இடையீடு பற்றிய விளக்கம்.

6. தலைவன் தன் ஊரிலும் தன் மனையிலும் வரைந்து கொள்ளாத போது நிகழ்வது உலகியல் மாறாத பொதுவான வரைதல் ஆகும். அது பற்றிய விளக்கம்.

பாடம் - 3

கற்பியல்

3.0 பாட முன்னுரை

நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப்பொருள் என்னும் இலக்கண நூலின் நான்காம் இயல் கற்பியல் ஆகும். களவு என்பது மறைமுகத் காதல் வாழ்க்கை. அது, வரைவு என்னும் திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு கற்பாக மாறுகிறது. எனவே களவியல் – வரைவியல் இரண்டுக்கும் பிறகு கற்பியல் என்னும் பிரிவை நாற்கவிராச நம்பி அமைத்துள்ளார்.

பத்து நூற்பாக்களைக் கொண்ட கற்பியல் என்னும் நான்காம் இயலில் இடம் பெறும் இலக்கணச் செய்திகளை விளக்குவதாக இப்பாடம் அமைகிறது.

கற்பின் இலக்கணம்

கற்பிற்குரிய கிளவிகள்

இல்வாழ்க்கையின் வகையும், விரிவும்.

பரத்தையிற் பிரிவின் வகையும் அதற்குரிய கிளவிகளும்.

ஓதற் பிரிவு முதலான எஞ்சிய ஐவகைப் பிரிவுகளுக்கும் உரிய கிளவிகள்.

முதலான செய்திகள் இப்பாடத்தில் இடம் பெறுகின்றன.

3.1 கற்பு கற்பு என்பது, தலைமக்கள் வரைவு (திருமணம்) மேற்கொண்டு நடத்தும் இல்வாழ்க்கையைக் குறிப்பதாகும். களவு என்னும் மறைமுகக் காதல் வாழ்க்கையை மாற்றி, அறநெறியில் ஊரறிய மணம் செய்து கொண்டு உலகியலுக்கு ஏற்ப வாழும் வாழ்க்கை ; தலைமக்கள் தங்களுக்கென்று சில வாழ்க்கை நெறிகளைக் கற்பித்துக்கொண்டு, அவற்றைப் பின்பற்றி வாழும் முறையான இல்லறம். பெற்றோர், செவிலித்தாய், சான்றோர் முதலானவர்கள் இல்லறத்திற்குரிய நன்னெறிகளைக் கற்பிப்பதால் கற்பு என்றும் விளக்கம் கூறுவர்.

பொற்பமை சிறப்பில் கற்பெனப் படுவது

மகிழ்வும் ஊடலும் ஊடல் உணர்த்தலும்

பிரிவும் பிறவும் மருவியது ஆகும்

என்பது கற்பியலின் முதல் நூற்பா ஆகும்.

இந்நூற்பாவின் வழி, கற்பு என்னும் அறநெறி வாழ்க்கையில் உள்ளடங்கும் கூறுகளை நாற்கவிராச நம்பி வகுத்துக் கூறியுள்ளார். மகிழ்ச்சி, ஊடல், உணர்த்தல், பிரிவு என்னும் நான்கும் இணைந்ததாக அமைவதே கற்பு என்பது அவர் தரும் விளக்கம். இந்நான்கும் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து நிகழும் வாய்ப்புடையவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

3.1.1 கற்பிற்குரிய கிளவிகள் நாற்கவிராச நம்பி கற்பிற்குரிய நான்கு பகுதிகளை ஏழு என வகைப்படுத்தி வரையறுத்து விளக்கியுள்ளார். அவற்றைக் கிளவிகள் என்பர். அவையாவன :

1. இல்வாழ்க்கை

2. பரத்தையிற் பிரிவு

3. ஓதல் பிரிவு

4. காவல் பிரிவு

5. தூதிற் பிரிவு

6. துணைவயின் பிரிவு

7. பொருள்வயின் பிரிவு

இவற்றுள் முதலில் அமையும் கிளவித் தொகையான இல்வாழ்க்கை என்பது கற்புநெறி மேற்கொண்டு தலைவனும் தலைவியும் நடத்தும் குடும்ப வாழ்க்கையைக் குறிப்பதாகும். எஞ்சிய ஆறும் பிரிவின் வகைகளாகும். அவை யாவும் தலைவியுடன் கூடி இல்லறம் நடத்தும் தலைவன் இடையிடையே பிரிந்து செல்லும் செயல்பாடுகளை விளக்குவதாகும்.

3.2 இல்வாழ்க்கை

தலைவனும் தலைவியும் இல்லத்தின்கண் தங்கி வாழும் மகிழ்ச்சியான வாழ்க்கையின் சிறப்பினைக் கூறுதல் இல்வாழ்க்கை எனப்படும். இது நால்வரது மகிழ்ச்சியை ஒன்று சேர்த்ததாக அமையும்.

“தலைவன் மகிழ்ச்சி, தலைவி மகிழ்ச்சி, தோழி மகிழ்ச்சி, செவிலி (வளர்ப்புத் தாய்) மகிழ்ச்சி என்று இல்வாழ்க்கை நான்கு கூறுகளை உடையது” என்பது நம்பியகப் பொருள் இலக்கணமாகும்.

3.2.1 தலைவன் மகிழ்ச்சி இதனைக் கிழவோன் மகிழ்ச்சி என்று இலக்கணம் குறிப்பிடும். தலைமகன் தலைவிக்கு முன்னால் தோழியைப் புகழ்ந்துரைப்பது இதற்குரிய கிளவியாக அமையும்.

“தலைவியே ! உன் தோழி என்னை வற்புறுத்தி வரைவு மேற்கொள்ளச் செய்த அன்பு மிகுதியால் அன்றோ நமக்கு இத்தகைய இல்லற வாழ்க்கை அமைந்தது” என்று தலைவன் பாங்கியைப் புகழ்வதாக அமையும் தஞ்சைவாணன் கோவைப் பாடல் கருத்து இக்கிளவிக்கு உரிய உதாரணமாகும்.

நின் துணைவி என்மேல் எடுத்த இயல்பின் அன்றோ பெற்றது

– (செய்யுள்-267)

என்பது அப்பாடலில் இடம் பெறும் தலைவன் கூற்றாகும்.

3.2.2 தலைவி மகிழ்ச்சி

இது கிழத்தி மகிழ்ச்சி என்று நம்பி அகப்பொருளில் உரைக்கப்பட்டுள்ளது. தலைவி தனது வருத்தம் நீங்கி மகிழ்ந்து வாழும் வாழ்க்கையைப் பற்றித் தோழியிடம் கூறுவது கிழத்தி மகிழ்ச்சியாகும். இதனைப் பெருமகள் உரைத்தல் என்னும் கிளவியாக நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுள்ளார்.

“தோழியே ! தலைவன் எனக்குக் கொடுத்த அசோக மரத்தின் தழைகளால் ஆகிய கையுறைப் பொருளையே தெப்பமாகக் கொண்டு நான் துன்பமாகிய வெள்ளத்தை நீந்திக் கரையேறினேன்” என்று தஞ்சைவாணன் கோவைத் தலைவி கூறுவது குறிப்பிடத்தக்கது.

3.2.3 தோழி மகிழ்ச்சி இது தலைமக்கள் மேற்கொண்ட இல்லற வாழ்க்கையின் போது தோழிக்கு ஏற்படும் மகிழ்ச்சியாகும். இதனைப் பாங்கி மகிழ்ச்சி என்று நம்பி அகப்பொருள் குறிப்பிடும். இது ஐந்து வகைப்பட்ட விரிவுக் கிளவிகளை உடையது.

அவையாவன :-

1. தலைவனைப் பாங்கி வாழ்த்துதல்.

2. வரைவு என்னும் திருமணம் நடக்கும் நாள் வரையில் எவ்வாறு பிரிவுத் துன்பத்தைத் தாங்கிக்கொண்டு இருந்தாய் என்று தலைவியைக் கேட்டல்.

3. வரைவு என்னும் திருமணம் நடக்கும் நாள் வரையில் எவ்வாறு தாங்கிகொண்டு இருந்தாய் என்று தலைவனைக் கேட்டல்.

4. தலைமக்கள் இல்லறம் நடத்தும் இடத்திற்கு, செவிலித் தாய் வர, தோழி அவளிடம் தலைவன் தலைவியிடம் அன்பு காட்டும் சிறப்பைக் கூறுதல்.

5. தலைமக்கள் இல்லறம் நடத்தும் இடத்திற்கு வந்த செவிலித் தாயிடம் தலைவன் தலைவி மேற்கொள்ளும் இல்வாழ்க்கை முறை நன்று என்று தோழி கூறுதல்.

இவ்வைந்தும், தான் விரும்பி உடனிருந்து அமைத்துக் கொடுத்த இல்வாழ்க்கையைத் தலைவனும் தலைவியும் சிறப்புடன் மேற்கொள்வதைக் கண்டு தோழி மகிழ்ந்து கூறும் செய்திப் பிரிவுகளாகும்.

3.2.4 செவிலி மகிழ்ச்சி செவிலி என்னும் வளர்ப்புத் தாய் தன் வளர்ப்பு மகள் இல்லறம் நடத்தும் மணமனைக்குச் சென்று திரும்புவாள். அப்போது தலைவியும் தலைவனும் நடத்தும் இல்லறச் சிறப்பைக் கண்டு மகிழ்வாள். பின்னர் அங்கிருந்து மீண்டு வந்து தான் கண்ட மனை வாழ்க்கைச் சிறப்புகளை நற்றாயிடம் சொல்லிச் சொல்லி மகிழ்வாள். இது மூன்று பிரிவுகளாக எடுத்துக் காட்டப்படுகிறது. அவையாவன :-

1. மணமனைக்குச் சென்று வந்த செவிலி தலைவியின் கற்பு வாழ்க்கைச் சிறப்பை நற்றாய்க்கு உணர்த்துதல்.

வடக்கிருந்தாள் மடப்பாவை அருந்ததியே என்று அமையும் தஞ்சைவாணன் கோவைப் பாடல் தொடர், செவிலி தலைவியின் கற்புச் சிறப்பிற்கு அருந்ததியை உதாரணம் காட்டும் பெருமைக்குரியது.

2. மணமனைக்குச் சென்று வந்த செவிலி தலைவியின் இனிய மனைவாழ்க்கைத் தன்மையை நற்றாய்க்கு உணர்த்துதல்.

தான் சமைத்த நல்லுணவை இனிது எனக் கணவன் விரும்பி உண்டதால் தலைவி நுட்பமாக மகிழ்ந்தாள் என்னும் சங்க இலக்கிய மேற்கோள் (குறுந்தொகை – 167) தலைவியின் நல்ல மனை வாழ்க்கைச் சிறப்பைக் காட்டுவது ஆகும்.

3. மணமனைக்குச் சென்று வந்த செவிலி தலைமக்களின் காதல் சிறப்பை நற்றாய்க்கு உணர்த்துதல்.

‘போருக்குச் சென்றாலும் ஒரு நாள் கூடத் தலைவனது தேர் பாசறையில் தங்காது’ என்று அமையும் தஞ்சைவாணன் கோவை மேற்கோள் பாடல் கருத்து இருவரும் இல்லற வாழ்வில் காதல் மிகுந்து மகிழ்ந்து வாழ்கின்றனர் என்பதைக் குறிப்பாக உணர்த்தி நிற்பதாகும்.

3.3 பரத்தையிற் பிரிவு

தலைமகன் கற்பு வாழ்க்கையில் மேற்கொள்ளும் பிரிவுகள் ஆறு வகைப்படும். அவற்றுள் முதலில் அமைவது பரத்தையிற் பிரிவு என்பதாகும்.

தனக்கே உரிய தனிப்பெருமை மிக்க தலைவியோடு கூடி இல்லறம் மேற்கொள்ளும் தலைவன் நிறைந்த மகிழ்ச்சியில் சிறந்த வாழ்க்கை நடத்துவான். எனினும் இலக்கிய இலக்கணப் போக்கின்படி, அத்தகு வாழ்க்கையில் அவர்கள் வாழ்க்கையில் வேறுபட்ட நிலையாக, தலைவன் பரத்தையர் எனப்படும் பொதுமகளிர் வாழும் பகுதிக்குச் (சேரிக்கு) சென்று பரத்தையுடன் கூடிச் சில காலம் வாழ்வதாகவும் அமைத்துக் காட்டுகின்றனர்.

கற்பு வாழ்க்கையின் முதல் கூறு மகிழ்வாகவும் அடுத்து வருவது ஊடலாகவும் அமைவதைத் தொடக்கத்தில் கண்டோம். மகிழ்ச்சி மாறி ஊடல் பிறப்பதற்கு இவ்வகைப் பரத்தையிற் பிரிவும் ஒரு முதன்மைக் காரணமாக அமைகிறது.

3.3.1 பரத்தையிற் பிரிவின் வகை பரத்தையிற் பிரிவென்பது தலைவியைப் பிரிந்து பொதுமகளிராகிய பரத்தையர் வாழும் பகுதிக்குச் சென்று அங்குள்ள ஒரு பெண்ணோடு சில காலம் மகிழ்ந்து வாழ்ந்து மீண்டும் தலைவன் திரும்பி வருவதைப் பற்றியது. இப்பரத்தையிற் பிரிவு நான்கு வகைகளை உடையது. அவையாவன :

வாயில் வேண்டல்

தலைவியைப் பிரிந்து பரத்தையிடம் சென்று தங்கிய தலைமகன் திரும்பி வருகிறான். அப்போது தலைவி ஊடல் கொள்கிறாள். தனக்கு வாயிலாக (தூதுவராக) இருந்து தலைவியோடு இருக்கும் முரண்பாட்டை நீக்கி உடன்பாட்டை ஏற்படுத்துமாறு தோழியிடம் வேண்டுதல்.

வாயில் மறுத்தல்

தலைமகன் பாணன் முதலானவர்களை, சமாதானத் தூதுவர்களாக (வாயிலாக) அனுப்ப, தலைவி அவர்களின் முயற்சியை ஏற்காமல் மறுத்துத் திருப்பி அனுப்புதல்.

வாயில் நேர்வித்தல்

வாயிலாகச் செயல்படும் பலர், தங்களது சமாதான முயற்சிகள் தொடக்கத்தில் தோல்வியுற்றாலும், தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு தலைவியைச் சம்மதிக்கச் செய்து, தலைவனை ஏற்றுக்கொள்ளும்படிச் செய்தல்.

வாயில் நேர்தல்

தலைவி பலரது சமாதான முயற்சிகளை முதலில் மறுத்தாலும் பின்னர் ஏற்றுக்கொள்வாள். அதன்பின் தலைவன் மீண்டும் அவளுடன் சேர்ந்து கொள்வான். அதற்கு வாய்ப்பாக, தலைவி வழங்கிய உடன்பாட்டை (சம்மதத்தை) வாயில் நேர்தல் என்பர்.

3.3.2 உணர்த்த உணரும் ஊடற்குரிய கிளவிகள் பரத்தையிற் பிரிந்த தலைவன் மீண்டு வந்து வாயில்கள் மூலமாக, தலைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வான். அப்போது வாயில் என்ற நிலையில் செயலாற்றும் பலர் தலைவியின் ஊடலை (கோபத்தை)த் தீர்ப்பதற்காக முயற்சி மேற்கொள்வர். பல உண்மைகளை உணர்த்துவர். அவ்வாறு உணர்த்த உணரும் ஊடலுக்கான கிளவிகள் பல உள்ளன. அவையாவன :

1. ‘தலைவன் பிரிந்து சென்றதற்குக் காரணம் இது’ என்று கண்டோர் கூறுதல்.

2. தலைவன் பிரிந்த பிறகு தனித்திருந்த தலைவி, துன்ப மிகுதியால் அழுது வருந்துதல்.

3. தலைவியைச் சந்தித்த தோழி ‘நீ அழுது கொண்டிருந்ததற்குக் காரணம் என்ன?’ என்று வினவுதல்.

4. தலைவன் தன்னைப் பிரிந்து பரத்தையிடத்தில் சென்று தங்கினான் என்று தலைவி தோழியிடம் கூறுதல்.

5. இவ்வாறு கூறுதல் முறையன்று என்று தோழி தலைவியிடம் கூறுதல்.

6. தலைவி, தோழியைச் செவ்வணி (சிவந்த ஆடை முதலியன) அலங்காரம் செய்து தலைவன் இருக்கும் இடத்திற்கு அனுப்பியதைக் கண்டு அயல் மனையார் மனமிரங்கிப் பேசுதல்.

7. செவ்வணி அலங்காரத்தோடு பரத்தையர் சேரிக்குச் சென்ற தோழியைப் பார்த்த பரத்தையர் அவளைப் பழித்துக் கூறுதல்.

8. பரத்தையர் சேரியில் இருந்து தலைவன் திரும்பி வருவதைக் கண்ட தாதிகள் அச்செய்தியைத் தோழியிடம் கூறுதல்.

9. அதைக்கேட்ட தோழி தலைவன் மீண்டு வரும் அச்செய்தியைத் தலைவியிடம் சென்று சொல்லுதல்.

10. தலைவி, தலைவனை எதிர் சென்று வரவேற்றுப் பணிதல்.

11. தலைவனும் தலைவியும் இல்லற இன்பத்தில் மகிழ்ந்திருத்தல்.

மேற்காணும் கிளவித் தொகைகள் பதினொன்றும் உணர்த்த உணரும் ஊடலுக்குரியவை.

3.3.3 உணர்த்த உணரா ஊடற்குரிய கிளவிகள் பரத்தையிற் பிரிந்த தலைவன் மீண்டு வந்து வாயில்கள் மூலமாகத் தலைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வான். அப்போது வாயில் என்ற நிலையில் செயலாற்றும் பலர் தலைவியின் ஊடலை (கோபத்தை)த் தீர்ப்பதற்காக முயற்சி மேற்கொள்வர். பல உண்மைகளை உணர்த்துவர். அவ்வாறு உணர்த்தியும் உணராமல் தலைவி மறுத்துரைக்கும் போக்கும் உண்டு. அவற்றை உணர்த்த உணரா ஊடலுக்கான கிளவிகள் என்பர். (இவ்வகைப் பட்ட தலைவியின் செயல்பாடுகளுக்கும் முடிவாக ஊடல் நீங்கி ஒன்று சேரும் நிலையே அமைகிறது.)

உணர்த்த உணரா ஊடற்குரிய கிளவிகள் 19 ஆகும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவற்றைக் காண்போம்.

1. தலைவி வெள்ளணி (வெண்மையான ஆடை முதலியன) என்னும் முறையில் தோழியை அலங்கரித்துத் தலைவன் இருக்கும் இடத்திற்கு அனுப்பிவைப்பாள். அப்போது தோழியிடம் தலைவன் தலைவியின் ஊடலைத் தீர்த்து வைக்குமாறு வேண்டுதல்.

2. தோழி, ‘தலைவி புதல்வனைப் பெற்று உரிய (நெய்யாடுதல் – எண்ணெய் தேய்த்துக் குளித்தல் முதலான) சடங்குகளை முடித்து நிற்கிறாள்’ என்று தலைவனிடம் கூறுதல்.

3. தலைவி புதல்வனைப் பெற்று மகிழ்ந்திருக்கும் செய்தியைக் கேட்ட தலைவன் தன் மன மகிழ்ச்சியைத் தோழியிடம் வெளிப்படுத்துதல்.

4. ‘புதல்வன் பிறந்த செய்தி கேட்டதும் இது நாள் வரை வராத தலைவன் இரவில் நம் மனையில் வந்து நின்றார்’ என்ற செய்தியைத் தோழி தலைவியிடம் கூறுதல்.

5. தலைவன் வந்து நிற்கும் உண்மையை உணர்ந்த தலைவி தலைவனிடம் ஊடல் கொண்டு பேசுதல் முதலியன.

6. பாணன், விறலி முதலானவர்களின் ஊடல் தீர்க்கும் பணியை மறுத்த தலைவி விருந்தோடு தலைவன் வந்தபோது தன் கோபத்தை மறைத்துக்கொண்டு வரவேற்றல் ; அதைக் கண்டு தலைவன் மகிழ்தல்.

7. விருந்தினர்கள் வந்ததால் மறைத்துக்கொண்ட ஊடலை (பிணக்கை), அவர்கள் சென்றபின் மீண்டும் தலைவி வெளிப்படுத்தல். அது கண்டு அஞ்சிய தலைவன், தான் செய்த பிழையைப் பொறுத்தல் வேண்டும் எனக் கூறி, அவள் பாதங்களில் விழுந்து வணங்குதல்.

8. தன் பாதங்களில் விழுந்து வணங்கிய தலைவனின் செயலைக் கண்ட தலைவி, ‘இதை எம் தங்கையர் (பரத்தையர்) கண்டால் நன்று’ என்று பழித்துப் பேசுதல்.

9. தலைவனோடு தொடர்புடைய காமக்கிழத்தியைத் தெருவில் தான் கண்டதாகத் தலைவி தலைவனிடம் கூறுதல்.

10. ஆடவர் தவறு செய்தலும் அதைப் பெண்கள் பொறுத்துக் கொள்ளுதலும் உலகியற்கை என்று உதாரணம் கூறித் தலைவியின் கோபத்தைத் தோழி தணித்தல்.

11. தேரில் பரத்தையர் சேரிக்குச் சென்ற தலைவன், குறுக்கே வந்த தன் புதல்வனைத் தழுவியெடுத்துக்கொண்டு ஆற்றாமையுடன் தலைவியின் இருப்பிடத்திற்கு வர அப்போது தலைவி எதிர்கொண்டு வந்து அவனை ஏற்றுக்கொள்ளுதல்.

12. தலைவனைத் தமது இல்லத்திற்குத் தேருடன் தடுத்து அழைத்து வந்த புதல்வனின் இனிய செயல்பாட்டைத் தலைவி தோழியிடம் புகழ்ந்து கூறுதல்.

13. ‘கணவனை விட நெருங்கிய சுற்றம் இல்லை என்று பெரியோர் கூறிய சிறப்பை இன்று கண்டேன்’ என்று தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறுதல்.

14. தொடக்கத்திலும் தொடர்ந்தும் உடன்படாமல் ஊடல் கொண்டு முரண்பட்டாலும் முடிவில் தலைவனை ஏற்று அவன் பெருமையை உணர்ந்த தலைவியை, ‘கற்பிலக்கணம் அனைத்தும் ஓர் உருவாகப் பெற்ற பெருமைக்குரியவள்’ என்று தோழி புகழ்தல்.

இவையாவும் உணர்த்த உணரா ஊடற்குரிய கிளவிகளாகத் தொகுத்துரைக்கப்பட்டன. இவற்றில் உணர்த்த உணராத தன்மை வெளிப்படும் கிளவிகளும் (கூற்றுகளும்) உண்டு. அதே சமயம் தலைவி உணர்ந்து ஊடலை மறந்து ஒன்று சேர்ந்த கிளவிகளும் உண்டு. இவ்வாறு இரு நிலைப்பாடுகளும் இணைந்து கலந்ததாக இக்கிளவித்தொகை அமைந்துள்ளது.

3.4 எஞ்சிய ஐவகைப் பிரிவுகள்

கற்பியலில் வகுத்துரைக்கப்பட்ட பிரிவுகள் ஆறு வகைப்படும். அவற்றுள் பரத்தையிற் பிரிவு என்பது பல்வேறு கிளவித் தொகைகளை உடையது. எனவே அது தனியொரு செய்திப்பிரிவாக இப்பாடத்தில் இடம் பெற்றது.

எஞ்சிய ஐவகைப் பிரிவுகளும் ஒரே வகையான கிளவித் தொகை அமைப்பினை உடையன. அப்பிரிவுகளாவன :

1. ஓதல் பிரிவு     :    தலைவன், கல்வி பயிலுதல் காரணமாகப் பிரியும் பிரிவு.

2. காவல் பிரிவு  :     தலைவன், நாடு காத்தல் பொருட்டுப் பிரியும் பிரிவு.

3. தூதிற் பிரிவு    :    அரசர் இருவர் தமக்குள் மாறுபட்டுப் போர் மேற்கொண்ட போது, அதனைத் தடுத்து இருவர்க்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்காகத் தலைவன் மேற்கொள்ளும் பிரிவு.

4. துணைவயின் பிரிவு    :    தன் நண்பனாகிய அரசனுக்குப் பகை வேந்தர்களால் இடையூறு நேர்ந்தவழி அதனை நீக்கும் பொருட்டுத் தலைவன் துணையாகச் செல்லுதல்; அதற்காகப் பிரிதல்.

5. பொருள்வயின் பிரிவு  :    தலைவன் தனது இல்லற வாழ்க்கைக்குத் தேவையான பொருள் ஈட்டுதல் காரணமாகப் பிரிதல்.

3.4.1 பொதுவான கிளவிகள் ஓதல் பிரிவு முதலான எஞ்சிய ஐவகைப் பிரிவுகளும் தலைவனால் மேற்கொள்ளப்படும். அத்தகு சூழ்நிலைகளில் நிகழும் கிளவிகள் பொதுவானவை. அவை ஒன்பது வகைப்படும். அவையாவன :

1. பிரிவு அறிவுறுத்தல்     :    தலைவன் ஒரு காரணம் கருதிப் பிரிந்து செல்ல இருப்பதைத் தோழி தலைவிக்கு உணர்த்துதல்.

2. பிரிவு உடன்படாமை   :    அவ்வாறு தலைவன் பிரிய இருப்பதைத் தலைவி ஒப்புக்கொள்ளாமை.

3. பிரிவு உடன்படுத்தல்   :    ‘சூழ்நிலை கருதித் தலைவன் பிரிந்து செல்லுதல் தவிர்க்க முடியாதது’ என்று கூறும் தோழி, தலைவியை அப்பிரிவுக்கு உடன்படச் செய்தல்.

4. பிரிவு உடன்படுதல்      :     தொடக்கத்தில் பிரிவுக்கு உடன்படாத தலைவி பின்னர் உரிய காரணத்தைத் தோழியின் மூலமாக உணர்ந்து தலைவனின் பிரிவுக்கு உடன்படுதல்.

5. பிரிவுழிக் கலங்கல்      :      தலைவன் பிரிந்து சென்ற பிறகு அதற்காகத் தலைவி வருந்துதல்.

6. வன்புறை    :    அவ்வாறு பிரிவுக்கு வருந்தும் தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுதல்.

7. வன்பொறை    :    தோழியின் ஆறுதல் மொழிகளைக் கேட்ட தலைவி, தலைவனின் பிரிவை வலிந்து பொறுத்துக் கொள்ளுதல்.

8. வருவழிக் கலங்கல்    :    தலைவியைப் பிரிந்து சென்று செயலாற்றிய தலைவன் பணிமுடிந்து மீண்டு வரும் வழியில் தலைவியின் நிலையை எண்ணி வருந்துதல்.

9. வந்துழி மகிழ்ச்சி    :    பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வந்த போது தலைவியும், தோழியும் மகிழ்தல்

இவையாவும் ஓதற் பிரிவு முதலான ஐவகைப் பிரிவுகளுக்கும் உரிய பொதுவான கிளவிகள் ஆகும்.

3.5 செவ்வணியும் வெள்ளணியும்

இவ்விரண்டும் தலைவி தோழிக்குச் செய்யும் அலங்காரம் என்பது பொதுவான செய்தி. தான் பூப்பெய்தி இருப்பதையும் மகப்பேற்றுக்குப் பின் நீராடி இருப்பதையும் தலைவனுக்கு உணர்த்த விரும்பும் தலைவி அதற்குரிய அடையாளங்களோடு தோழியை அவன் தங்கியிருக்கும் பரத்தையர் சேரிக்கு அனுப்பி வைப்பாள். இரு வேறுபட்ட செய்திகளை உணர்த்த இருவேறு வகைப்பட்ட அணி அலங்காரங்களைத் தோழிக்குச் செய்வது பண்டைய மரபாகும்.

3.5.1 செவ்வணி தலைவி பூப்பெய்தி மூன்று நாள் சென்றபின் நான்காம் நாள் நீராடுவாள். அந்நிகழ்ச்சியைப் பரத்தையிற் பிரிந்த தலைவனுக்கு உணர்த்தும் முறை செவ்வணி எனப்படும். அதாவது தலைவி தோழிக்குச் சிவப்பு நிற மலரைச் சூட்டிச் செவ்வாடை உடுத்தி, செஞ்சாந்து பூசி, செவ்வணி பூட்டிச் செப்புப் பாத்திரத்தில் செம்பூவும் நீரும் இட்டுக்கொடுத்துத் தலைவன் இருக்கும் இடத்திற்கு அனுப்புவாள். தோழியும் பரத்தையர் சேரிக்கண் தலைவனைக் கண்டு அவனது பாதங்களில் செப்புப் பாத்திரத்தில் உள்ள பூவையும், நீரையும் பெய்து திரும்புவாள். அதனால் பூப்பு நிகழ்ச்சியைத் தலைவன் உணர்வான்.

3.5.2 வெள்ளணி இது தலைவி புதல்வனைப் பெற்றுப் பதினைந்து நாள்கள் சென்று பதினாறாம் நாள் நெய்யாடிய பின், அந்நிகழ்ச்சியைப் பரத்தையிற் பிரிந்த தலைவனுக்கு உணர்த்தும் முறை வெள்ளணி எனப்படும். அதாவது, தலைவி தோழிக்கு வெண்மை நிறப் பூக்களைச் சூட்டி, வெள்ளாடையுடுத்தி, வெண்சாந்து பூசி, வெண்முத்துப் பூட்டிச் செப்புப் பாத்திரத்தில் வெண்பூவும் நீரும் இட்டுக்கொடுத்துத் தலைவன் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைப்பாள். தோழியும் பரத்தையர் சேரிக்கண் தலைவனைக் கண்டு அவனது பாதங்களில் செப்புப் பாத்திரத்தில் உள்ள பூவையும் நீரையும் பெய்து திரும்புவாள். தலைவன் அதனாலே புதல்வன் பிறந்தமை உணர்வான்.

3.6 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் கீழ்க்காணும் இலக்கணச் செய்திகளை அறிந்து கொண்டோம்.

1. தலைவனும் தலைவியும் பல அறநெறிகளைக் கற்றுக்கொண்டு வாழ்வது கற்பு.

2. கற்பு எனப்படும் இல்வாழ்க்கை தலைவன், தலைவி, தோழி செவிலி என்னும் நால்வரது மகிழ்ச்சியின் ஒருங்கிணைப்பாக அமைகிறது.

3. கற்பு வாழ்க்கையில் சூழ்நிலை காரணமாகப் பல்வேறு பிரிவுகளைத் தலைவன் மேற்கொள்வான்.

4. தலைவன் மேற்கொள்ளும் பிரிவுகளில் பெரிதுபடுத்திப் பேசப்படுவது பரத்தையிற் பிரிவு என்பதாகும்.

5. பரத்தையிற் பிரிந்த தலைவன் வாயில்கள் எனப்படும் பாணன், விறலி, தோழி முதலானவர்கள் மூலம் மீண்டும் தலைவியைச் சேரும் முயற்சியை மேற்கொள்வான்.

6. கற்பு வாழ்க்கை மேற்கொள்ளும் தலைவன், ஓதல், காவல், தூது, துணை, பொருள் என்னும் ஐவகைப்பட்ட காரணங்களுக்காகவும், பிரிந்து செல்லுதல் உண்டு.

பாடம் - 4

ஒழிபியல் – I

4.0 பாட முன்னுரை

நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப் பொருள் என்னும் இலக்கண நூலின் இறுதி இயல் ஒழிபியல் ஆகும். முன்னர் அமைந்த அகத்திணை இயல், களவியல், கற்பியல், வரைவியல் என்னும் நான்கு இயல்களிலும் சொல்லப்படாமல் விட்டுப்போன செய்திகளைக் கூறுவதாக ஒழிபியல் அமைந்துள்ளது. ‘சொல்லாது ஒழிந்த’ செய்திகளைச் சொல்லும் இயல் என்னும் அடிப்படையில் ‘ஒழிபியல்’ என்னும் பெயர் அமைந்தது.

ஒழிபியல் என்னும் இறுதியியல் உணர்த்தும் செய்திகளை, அகப்பாட்டு உறுப்புகள், அகப்பாட்டினுள் வரும் பொருள்கள், அகப்புறக் கைக்கிளை, அகப்பொருட் பெருந்திணை, அகப்புறப் பெருந்திணை, அகப்பாடல்களில் பாடப்படுவோர், வழுவும் அமைதியும் என்னும் உட்பிரிவுகளில் பகுத்துக் காணலாம்.

இவற்றுள் அகப்பாட்டு உறுப்புகள் பற்றிய இலக்கணச் செய்திகளை விளக்கி உரைப்பதாக இப்பாடம் அமைகிறது.

4.2 திணையின் தொடர்புடையவை

திணையின் தொடர்புடையனவாகத் திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடம், காலம் என்பனவற்றைக் கொள்ளலாம்.

4.2.1 திணையும், கைகோளும் திணை, கைகோள் என்னும் இரண்டும் அகப்பாட்டு உறுப்புகள் பன்னிரண்டில் முதல் இரண்டாக இடம் பெற்றவை. இவற்றுள் திணை என்பது குறிஞ்சி முதலான ஏழு என்றும், கைகோள் என்பது களவு, கற்பு என்னும் இரண்டு என்றும் முன்னர்க் கண்டோம்.

இவ்விரு அகப்பாட்டு உறுப்புகளும் முறையான வரிசை முறை பற்றி இங்குக் கூறப்பட்டன. ஆனால் நம்பி அகப்பொருள் நூலின் தொடக்க இயலாகிய அகத்திணையியலில் இவ்விரண்டும், விரிவாக விளக்கப்பட்டு விட்டன. இதனையே நாற்கவிராச நம்பி

அவற்றுள், முன்னவை இரண்டும் சொன்னவை ஆகும்       (ஒழிபியல்,3)

என்று ஒரு நூற்பாவாக்கிக் குறிப்பிட்டுள்ளார்.

4.2.2 கூற்று இது அகப்பாட்டு உறுப்புகளில் மூன்றாவதாக இடம்பெறுவது. அகப்பாடல்களில் பேசுவோர் யார் என்பதை உணர்த்தும் பகுதி கூற்று எனப்படும். இதனை மூன்று நிலைகளில் பிரித்துக் காணலாம். அவையாவன:

களவில் கூற்றிற்கு உரியோர்

கற்பில் கூற்றிற்கு உரியோர்

கூற்றிற்கு உரிமை இல்லாதோர்

களவில் கூற்றிற்கு உரியோர்

தலைமக்களின் மறைமுகக் காதல் வாழ்க்கைக்குக் களவு என்று பெயர். அவ்வாறு களவு வாழ்க்கை நிகழும் போது, பேசுவதற்கு உரியவர்களாக, தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலி என்னும் அறுவகைப்பட்டோரை நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுச் சொல்கிறார்.

களவில் கூற்று – சிறப்புச் செய்திகள்

தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலி என்னும் அறுவரும் களவில் கூற்று நிகழ்த்துவர். அவ்வாறு கூற்று நிகழ்த்தும்போது அவர்கள் கூற்றிற்குக் குறிப்பிடத்தக்க சில சிறப்புச் செய்திகளை நாற்கவிராச நம்பி குறிப்பிடுகின்றார். அவற்றை இனிக் காண்போம்.

தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு உடன் போக்காகச் செல்லும்போது அவளது உறவினர் வந்தால் தலைவியைப் பார்த்து ‘ஆணை’ இடுவதுபோல் சில சொற்களைக் கூறுவான்.

தலைவன் பிரியும்போது தலைவியானவள் பாலைவனத்தின் கொடுமையைக் குறிப்பிடுதலும், அதையும் மீறித் தலைவன் பிரிந்து சென்றபோது தன் நெஞ்சோடும் பிறரோடும், வருத்தத்தை வெளிப்படுத்திப் பேசுதலும் உண்டு.

தலைவி உடன்போக்காகச் சென்ற பிறகு, அதுபற்றிச் செவிலித்தாய் தோழியோடும் நற்றாயோடும் பேசுவாள்.

தலைவி அஃறிணை உயிர்கள் மற்றும் உயிரற்ற பொருட்களைப் பார்த்து அவை தன் சொற்களைக் கேட்பன போலவும், தனக்குப் பதில் சொல்வன போலவும், தன் கட்டளையை நிறைவேற்றுவன போலவும், தனக்குத் தானே நினைத்துக்கொண்டு பேசுவதும் உண்டு.

கற்பில் கூற்றிற்கு உரியோர்

தலைமக்கள் ‘களவு’ வாழ்க்கையில் இருந்து மாறி ‘வரைவு’ என்னும் திருமணத்தின் பிறகு மேற்கொள்ளும் புதிய இல்லற வாழ்க்கைக்குக் ‘கற்பு’ என்று பெயர். அவ்வாறு நிகழும் கற்பு வாழ்க்கையிலும் நற்றாய், கண்டோர், பாணன், கூத்தர், விறலி, பரத்தை, அறிவர் (சான்றோர்) என்னும் எழுவரும் கூற்று நிகழ்த்துவர். இவ்வெழுவர் தவிர, களவில் கூற்று நிகழ்த்திய தலைவன் முதலான அறுவரும் கூற்று நிகழ்த்துவர். அவ்வகையில் கற்பில் கூற்றிற்கு உரியவர்கள் பதின்மூவர் ஆவர்.

கற்பில் கூற்று – சில சிறப்புச் செய்திகள்

தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலி என்னும் அறுவரும், நற்றாய், கண்டோர், பாணன், கூத்தர், விறலி, பரத்தை என்னும் எழுவரும் ஆகப் பதின்மூவரும் கற்பில் கூற்று நிகழ்த்துவர். அவ்வாறு கூற்று நிகழ்த்தும் போது அவர்கள் கூற்றிற்குக் குறிப்பிடத்தக்க சில சிறப்புச் செய்திகளை நாற்கவிராச நம்பி குறிப்பிடுகின்றார். அவற்றை இனிக் காண்போம்.

நற்றாய், தனது மகள் (தலைவி) தலைவனுடன் உடன்போக்காகச் சென்றதை அறிந்தபின் தெய்வம், அறிவர், அந்தணர், அயலோர், செவிலி, தோழி, கண்டோர் முதலான அனைவரோடும் கூற்று நிகழ்த்துவாள்.

உடன்போக்காகச் செல்லும் தலைவன் தலைவியை இடைவழியில் சந்திப்பவர்கள் கண்டோர் எனப்படுவர். அவர்கள் நற்றாய், தோழி, தலைவன், தலைவி என்னும் நால்வரோடும் கூற்று நிகழ்த்துவர்.

பார்ப்பான், பாங்கன், பாணன், கூத்தர், விறலி, பரத்தை, அறிவர் என்னும் எழுவரும் எல்லா இடங்களிலும் தலைவன் தலைவி இருவருக்கும் பொருத்தமானவற்றை எடுத்துக்கூறும் கூற்று நிகழ்த்துவர்.

கூற்று நிகழ்த்துவதற்குரிய பதின்மூவரும் தமக்குத் தாமே பேசிக் கொள்வதாகவும் சில கூற்றுகள் அமைவதுண்டு.

கூற்றிற்கு உரிமை இல்லாதோர்

தந்தை, தன் ஐயர் (தலைவியின் தமையன்மார்), தலைவியின் காமநோய் அறிவோர், ஊரவர், அயலோர், சேரியோர் என்னும் அறுவரும் களவு கற்பு என்னும் இரண்டு இடங்களிலும் கூற்று நிகழ்த்துதல் இல்லை. இவர்களையே கூற்றிற்கு உரிமை இல்லாதோர் என்று குறிப்பிட்டார் நாற்கவிராச நம்பி.

4.2.3 கேட்போர் இது அகப்பாட்டு உறுப்புகளில் நான்காவதாக இடம்பெறுவது. அகப்பாடல்களில் பலரும் கூற்று நிகழ்த்துவர் அவர்கள் நிகழ்த்தும் கூற்றுகளைக் கேட்போர் யாவர் என்பதை இப்பிரிவில் நாற்கவிராச நம்பி விளக்கியுள்ளார்.

தலைவன் தலைவி என்னும் இருவர் கூற்றுகளையும் நற்றாய் தவிர மற்ற யாவரும் கேட்பர். பார்ப்பான், அறிவர் என்னும் இருவரது கூற்றுகளை எல்லோரும் கேட்பர்.

4.2.4 இடம் இது அகப்பாட்டு உறுப்புகளில் ஐந்தாவதாக இடம் பெறுவது.

அகப்பாடல்களில் உணர்த்தப்படும் காதல் செயல்பாடுகள் நிகழும் நிலம், இடம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தலைமக்கள் சந்திக்கும் இடம், பேசும் இடம், குறி இடம், புணர்ச்சிக்குரிய இடம் என்பனவாகப் பல நிலைகளில் விரிவுபடுத்திப் பொருள் உணர்ந்து கொள்ளலாம்.

4.2.5 காலம் இது அகப்பாட்டு உறுப்புகளில் ஆறாவதாக இடம் பெறுவது. பொதுவாகக் காலம் என்பது மூவகைப்படும். இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பன அவை, இம்மூன்றே அகப்பாடல்களில் உணர்த்தப்படும் செய்திகளுக்கும் உரிய காலங்களாக அமைகின்றன.

4.3 பாடல் தொடர்புடையவை

பாடல் தொடர்புடையன, பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள்வகை, துறை என்பனவாகும்.

4.3.1 பயன் இது அகப்பாட்டு உறுப்புகளில் ஏழாவதாக இடம்பெறுவது. ஒவ்வொரு பாடலுக்கும் அதனால் விளையும் பயன் என்பது உண்டு. அவ்வாறே அகப்பொருள் பாடல்களின் வழி அடையும் பயன்பாட்டை விளக்குவதாக இவ்வுறுப்பு அமைகிறது. அகப்பாடல்களில் ஒருவர் கூற்று நிகழ்த்த, அதன் பயனாய் அவர் அடைவது யாது என விளக்குவதே பயன் என்னும் உறுப்பாகும்.

கூறாய் தோழி யான் வாழுமாறே

என்று தலைவி தோழியைப் பார்த்துக் கேட்கும்போது, தனது நல்வாழ்வாகிய இல்வாழ்விற்கு வழிவகை காணுமாறு தோழியை வேண்டுவதும், அதுகேட்ட தோழி, தலைவனை வலியுறுத்திக் கற்பு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதும் பின்னர் நிகழும்; இதுவே இப்பாடலின் பயனாகும்.

4.3.2 முன்னம் இது அகப்பாட்டு உறுப்புகளில் எட்டாவதாக இடம் பெறுவது. முன்னம் என்னும் சொல்லுக்குக் குறிப்பு என்று பொருள். ஓர் அகப்பாடல் வெளிப்படையாக உணர்த்தி நிற்கும் பொருள் உண்டு. அதற்கும் மேலாகப் பாடலின் பொருளைக் கொண்டே அப்பாடல் யார் கூறியது? அதன் உட்பொருள் என்ன? முதலான செய்திகளை எல்லாம் உணரமுடியும். அவ்வாறு உணர்வதை முன்னம் என்பர்.

என் அழகை அவர் எடுத்துக்கொண்டு, பசலை நோயை எனக்குத் தந்தார்

என்ற பொருளில் ஓர் அகப்பாடல் அமைகிறது. இதன் பொருளை உற்றுநோக்கும்போது பசலை நோய் அடைதல் பெண்டிர்க்குரியது என்னும் குறிப்பின் வழி இது தலைவி கூற்று என்பதை உணர்கிறோம். இதுவே ‘முன்னம்’ எனப்படும்.

4.3.3 மெய்ப்பாடு இது அகப்பாட்டு உறுப்புகளில் ஒன்பதாவதாக இடம் பெறுவது. மெய்ப்பாடு என்னும் சொல்லுக்குப் பொருட்பாடு, வெளிப்பாடு, புலப்பாடு எனப் பல விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. மெய் என்பது உடலைக் குறிக்கும்.

உள்ளத்து உணர்வுகள் பேச்சில் வெளிப்படுவதன் முன்பாக உடலில் புலப்படுவது உண்டு. பேச்சே இல்லாமல் உடல் மொழியில் மட்டுமே கருத்துகளை உணர்த்தமுடியும். இதையே மெய்ப்பாடு என்று வகுத்தனர்.

இம் மெய்ப்பாடு நகை, அழுகை, இளிவரல் (இழிவு), மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம் (வீரம்), உவகை, வெகுளி (கோபம்) என்று எட்டு வகைப்படும். இவ் எட்டு உணர்ச்சிகளையும் உடல் வழியாகவே உணர்த்துதல் மெய்ப்பாடு ஆகிறது. இம் மெய்ப்பாடு அகப்பாடல்களில் கூற்று நிகழ்த்தும் தலைமக்களுக்குப் பெரிதும் பயன்தருவது.

4.3.4 எச்சம் இது அகப்பாட்டு உறுப்புகளில் பத்தாவது இடம் பெறுவது. எச்சம் என்னும் சொல்லுக்கு ‘எஞ்சி நிற்பது’ என்று பொருள். அகப்பாடலில் – ஒன்றைச் சொல்ல, அதன் வழி சொல்லாமல் விட்ட பிறிதொன்றையும் உணர்வது எச்சம் எனப்படும்.

எச்சம் இருவகைப்படும்.

சொல் எச்சம்

ஒரு சொல் அல்லது தொடர் குறைந்து நின்று அவற்றை வருவித்துப் பொருள் முழுமை பெறுவது சொல் எச்சம் எனப்படும்.

குறிப்பு எச்சம்

சொல் விடுபடுதலின்றி ஒரு கருத்து விடுபட்டு நின்று அதனைக் குறிப்பாக உணர்ந்து கொள்வது குறிப்பெச்சம் எனப்படும்.

உதாரணமும், விளக்கமும்

கழல் தொடிச் சேஎய் குன்றம்

குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

(குறுந்தொகை, 1)

என்னும் பாடல் முருகனுக்குரிய மலையாகிய குறிஞ்சி நிலத்தைப் பற்றியது. மலையில் சிவந்த நிறமுடைய காந்தள் பூக்கள் நிறைய உள்ளன என்னும் பொருள் தருவதாக மேற்கண்ட பாடல் பகுதி அமைந்துள்ளது.

இதனைத் தோழி தலைவனிடம் சொன்னதாக வைத்துக்கொண்டு பொருள் காண்பது ஒரு வகை. அப்போது, ‘எங்கள் மலையிலேயே காந்தள் மலர்கள் கிடைக்கும்’ என்று கூறி, நின் பரிசாக அதே காந்தள் மலரை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறாமல் விடுவதாகும். இது சொல் எச்சம் ஆகும்.

இதனைத் தோழி தலைவியிடம் சொன்னதாக வைத்துக்கொண்டு பொருள் காண்பது மற்றொரு வகை. அப்போது, ‘நான் செங்காந்தள் மலர்களைக் கொய்து வரும் வரை இங்கேயே இரு’ என்று தோழி தலைவியிடம் கூறுவதாக அமையும். அதன்படி தலைவி காத்திருக்கும் போது அங்குத் தலைவன் வர, அவனுடன் கூடி மகிழ்வாள் என்று குறிப்புக் காட்டுவது குறிப்பெச்சம் ஆகும்.

4.3.5 பொருள் வகை இது அகப்பாட்டு உறுப்புகளில் பதினொன்றாவதாக இடம் பெறுவது, பொருள் வகை என்பதைப் பாடலில் பொருள் உணர்ந்து கொள்ளும் முறை என்று அமைத்துக் கொள்ளலாம். இதனைப் பொருள்கோள் என்றும் வழங்குவர்.

ஒரு பாடலில் அமைந்த சொற்கள் எவற்றையும் மாற்றாமல் உள்ளது உள்ளவாறே வைத்துப் பொருள் கொள்ளமுடியும். அவ்வாறன்றிச் சில சொற்களை முன்பின்னாக மாற்றி அமைத்தும் பொருள் கொள்வர். அப்போதே பாடலின் பொருள் முறையாகவும் முழுமையாகவும் அமையும்.

அவ்வாறு அமையும் பொருள்கோள்களை ஒன்பதாக வகைப்படுத்துவர். அவையாவன:

புனல் யாற்றுப் பொருள் கோள்.

நிரல் நிறை மொழி மாற்றுப் பொருள்கோள்.

சுண்ண மொழிமாற்றுப் பொருள்கோள்.

அடிமறி மொழிமாற்றுப் பொருள்கோள்.

அடிமொழி மாற்றுப் பொருள்கோள்.

பூட்டுவில் பொருள்கோள்.

தாப்பிசைப் பொருள்கோள்.

அளைமறிப் பாப்புப் பொருள்கோள்.

கொண்டுகூட்டுப் பொருள்கோள்.

குறிப்பு :

இப்பொருள்கோள்களைப் பற்றிய வரையறைகளையும் விளக்கங்களையும் இலக்கணப் பாடங்களான நன்னூல், யாப்பருங்கலக் காரிகை என்னும் இரண்டிலும் சிற்சில வேறுபாடுகளுடன் படித்தறியலாம்.

4.3.6 துறை இது அகப்பாட்டு உறுப்புகளில் பன்னிரண்டாவதாக இடம்பெறுவது, ஓர் அகப்பாடல், தலைவன் – தலைவி முதலான மாந்தர்களில் எவரேனும் ஒருவர் பேசுவதாகவும் வேறொருவர் கேட்பதாகவும் வரும். இதுவே பெரும்பான்மையாக அமைவது. இவ்வாறு இல்லாமல் உரைப்போரும். கேட்போரும் இன்றிப் பாடலை எழுதிய புலவன் தானே கூறுவதாக அமைவதையே துறை என்னும் அகப்பாட்டு உறுப்பாகக் கருதுவர்.

பெருந்தகை தேறப் பெரிது உயிர்த்து

வறிதே முறுவல் செய்தாள் தஞ்சை வாணன் வரையணங்கே

என்னும் பாடல் துறை என்னும் அகப்பாட்டு உறுப்பிற்குச் சான்றாக அமைகிறது.

இப்பாடலில் தலைவனது வருத்தம் நீங்குமாறு தலைவி மெல்லியதாக ஒரு புன் முறுவல் செய்தாள் என்று வருகிறது. இக்கருத்தைத் தலைவன் கூற்றாகவோ அல்லது தலைவி கூற்றாகவோ கருத முடியாது. இருவரையும் பற்றிப் புறத்தே நின்று வேறொருவர் (கவிஞர்) கருத்துரைப்பதாக அமைகிறது.

இவ்வாறு தொடர்புடைய அகப்பாடல் மாந்தர் எவரும் கூற்று நிகழ்த்தாது பாடலைப் படைத்த கவிஞனே பேசுவதாக அமைவதை துறை என்று குறிப்பிடுவர்.

4.4 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் கீழ்க்காணும் செய்திகளைக் கற்றுணர்ந்தோம்.

அகப்பாடல்கள் ஒவ்வொன்றும் பல உறுப்புகளை உள்ளடக்கியதாக அமைகின்றன என்பதைக் கண்டுணர்ந்தோம்.

களவு, கற்பில் எவரெவர் கூற்று நிகழ்த்துவதற்கு உரியவர் என்னும் வரையறையை அறிந்தோம். அவ்வாறே, கூற்றினைக் கேட்போர், கூற்று நிகழும் இடம் – காலம் – கூற்றின் பயன் முதலான உறுப்புளைப் பற்றிய விளக்கங்களைக் கண்டுணர்ந்தோம்.

ஓர் அகப்பாடல், செய்திகளைக் கருத்து வெளிப்பாடாகப் புலப்படுத்துவது இயல்பானது. அதற்கு மேலாக – அதைவிட முன்னதாக – உடல்வழிப் புலப்பாடாக – நகை, அழுகை முதலான உணர்ச்சிகளைப் புலப்படுத்துதல் உண்டு. அது மெய்ப்பாடு எனப்படும் என்னும் கருத்தினை உணர்ந்தோம்.

அகப்பாடல் செய்யுட்களில் சொற்கள் உள்ளது உள்ளபடியே வைத்துப் பொருள் காண்பது இயல்பானது. அதற்கு மாறாகச் சில பாடல்களில் சொற்களை முன்பின்னாகக் கொண்டு கூட்டிப் பொருள்கொள்ளும் முறையும், தேவையும் உண்டு. அதுவே பொருள்கோள் எனப்படும் என்னும் விளக்கத்தை அறிந்துகொண்டோம்.

அகப்பாடல் தலைமக்கள் கூற்று நிகழ்த்தாத சில இடங்களில், தேவை கருதிச் சிறப்புக் கருத்தாகப் பாடல் இயற்றும் கவிஞனே பேசும் இடங்களைத் துறை என்னும் இறுதி அகப்பாட்டு உறுப்பாக வரையறுத்துள்ளனர்.

பாடம் - 5

ஒழிபியல் – II

5.0 பாட முன்னுரை

நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப் பொருள் என்னும் இலக்கண நூலின் இறுதி இயல் ஒழிபியல் ஆகும். முன்னர் அமைந்த அகத்திணை இயல், களவியல், கற்பியல், வரைவியல் என்னும் நான்கு இயல்களிலும் சொல்லப்படாமல் விட்டுப்போன செய்திகளைக் கூறுவதே ஒழிபியல் என்பதை முந்தைய பாடத்தின் மூலம் அறிந்து கொண்டோம்.

ஒழிபியலில் இடம் பெறும் அகப்பாட்டு உறுப்புகள் பன்னிரண்டைப் பற்றிய செய்திகளை முந்தைய பாடத்தில் அறிந்தோம்.

ஒழிபியலில் இடம் பெற்ற பிற செய்திகளான அகப்பாட்டினுள் வரும் உவமைப் பொருள் – இறைச்சிப் பொருள் என்னும் இருவகைப் பொருள்கள், அகப்புறக் கைக்கிளை, அகப்பொருட் பெருந்திணை, அகப்புறப் பெருந்திணை, அகப்பாடல்களில் பாடப்படுவோர், வழுவும் அமைதியும் முதலான செய்திகளை இப்பாடத்தில் காணலாம்.

5.1 உவமைப் பொருள்

அகப்பாட்டினுள் வரும் இருவகைப் பொருள்களில் முதலாவதாக அமைவது உவமைப் பொருளாகும். இது உள்ளுறை உவமம், வெளிப்படை உவமம் என இரண்டு வகைப்படும்.

5.1.1 உள்ளுறை உவமம் உள்ளுறை என்னும் சொல்லை, உள்+உறை எனப் பிரித்துப் பொருள் காணலாம். ஒரு பாடலில், உட்கருத்தாக ஒன்று மறைந்து நிற்பது உள்ளுறை எனப்படும். அவ்வாறு மறைந்து நிற்கும் கருத்துக்கு கருப்பொருள் நிகழ்ச்சி அடிப்படையாக (உவமைபோல) அமையும்போது அதனை உள்ளுறை உவமம் என்று கூறுவர்.

உள்ளுறை உவமம் பெரும்பான்மையும் அகப்பொருட் செய்யுட்களில் இடம்பெறும். கருப்பொருளை மையப்படுத்தி வெளிப்படையாகச் சொல்லப்பட்ட செய்தியை உவமையாகக் கொண்டு அதன் மூலம் உணரத்தக்க வேறோர் செய்தியை அறிவதே உள்ளுறை உவமம் ஆகும்.

உள்ளுறை உவமம் பற்றிய இலக்கணத்தை நாற்கவிராச நம்பி

உள்ளுறை உவமம் உய்த்துணர் வகைத்தாய்ப்

புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும் (238)

என்று ஒரு நூற்பாவின் மூலம் வரையறுத்துள்ளார்.

உதாரணம்   :

வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்

குறைபடு தேன்வேட்டும் குறுகும் : – நிறைமதுச் சேர்ந்து

உண்டாடும் தன் முகத்தே செவ்வி உடையதோர்

வண்தாமரை பிரிந்த வண்டு

இப்பாடலில் கருப்பொருளை வைத்துச் சொல்லப்பட்ட உவமையின் மூலம் குறிப்பால் கொள்ளப்படும் பொருள் யாது என்பதைக் கீழ்க்காணும் ஒப்பீடு இனிது விளக்கும்.

சொல்லப்பட்ட உவமை                         குறிப்பால் கொள்ளும் பொருள்

வண்டு                                                             தலைவன்

செவ்வியுடையதோர் தாமரை            அழகிய தலைவி

வண்டு தாமரையில் நிறை                   தலைவன் தலைவியிடம் இன்பம் நுகர்தல்

மதுச்சேர்ந்து உண்டாடுதல்

தாமரையை வண்டு நீங்குதல்             தலைவியைத் தலைவன் நீங்குதல்

காவி (குவளை மலர்)                               பரத்தை

இனவண்டுகள் காவியின்                      பரத்தர் (ஆடவர் பலர்) அப்பரத்தையை நுகர்தல்

தேன் உண்ணல்

குவளை மலர் வண்டுகளால்                பரத்தரால் (ஆடவர் பலரால்)

நுகரப்பட்டுத் தேன்குறைதல்                துய்க்கப் பெற்றுப் பரத்தை பொலிவிழத்தல்

தேன்குறைந்த குவளை மலரை          பொலிவிழந்த பரத்தையைத்

வண்டு விரும்பிச் சேர்தல்                     தலைவன் விரும்பிச் சேர்தல்

5.1.2 வெளிப்படை உவமம் இது உவமையின் பிறிதோர் வகையாகும். உள்ளுறை போலப் பொருள் மறைந்து நிற்றல் இல்லாமல் வெளிப்படையாக விளங்குவது இவ்வகை. இதனை நான்கு பிரிவுகளில் காணலாம்.

வ. எண்.           பிரிவுகள்                        விளக்கம்                                 உதாரணம்

1.                      வினை உவமம்            செயல் பற்றியது                  புலி போலப் பாய்ந்தான்

2.                     பயன் உவமம்                பயன் பற்றியது                     மாரி (மழை) போன்றவன் பாரி

3.                     மெய் உவமம்                வடிவம் பற்றியது                வேல் போன்ற விழி

4.                     உரு உவமம்                  நிறம் பற்றியது                       பவளம் போன்ற வாய்

5.2 இறைச்சிப் பொருள்

இறைச்சி என்னும் சொல் ‘இறு’ என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றியது. ‘தங்குதல்’ என்னும் பொருள் உடையது. கவிஞர்கள், தாம் கூறும் சொற்களுக்கு அடைமொழியாகக் கூறப்படும் பிற சொற்கள் தமது ஆற்றலால் பிறிதொரு பொருளைக் குறிப்பால் புலப்படுத்தி நிற்கும். அத்தகைய சொல் திறனை – புரிந்து – அறிந்து – உணர்ந்து கொள்ளும் நுட்பம் இறைச்சி எனப்படுகிறது.

உள்ளுறையைப் போலவே இறைச்சிக்கும் கருப்பொருளே அடிப்படையாக அமைகிறது. இதனை

கருப்பொருள் பிறக்கும் இறைச்சிப் பொருளே (240)

என்று நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுச் சொல்கிறார்.

சொல்லின் பொருள், அதனால் பெறப்படும் குறிப்புப் பொருள், இரண்டுக்கும் மேலாக மேலும் ஒரு குறிப்புப் பொருள் புலப்படுமாயின் அதுவே இறைச்சி என்றும் அறிஞர் விளக்கம் கூறுவர்.

உதாரணம்   :

அரும்பெறல் அமிழ்தம் ஆர்பத மாகப்

பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை

தம்இல் தமதுண் டன்ன சினைதொறும்

தீம்பழம் தூங்கும் பலவின்

ஓங்குமலை நாடனை வரும்என் றோளே

(குறுந்தொகை, 83)

விளக்கம்   :

இப்பாட்டில் தோழி கூறும் வெளிப்படையான கருத்து   :

இனிமை தரும் சுளைகளை உள்ளே கொண்டிருந்தும், வெளியே இன்னாத முட்களையுடையனவாய்க் காணப்படும் பலாக் கனிகளை உடைய நாட்டின் தலைவன் வருவான் என்று செவிலி கூறினாள் என்பது.

தோழி உணர்த்த விரும்பும் கருத்து    :

உள்ளத்தில், வரைந்து (மணந்து) கொண்டு இல்லறத்தொழுகி இன்பம் அடையும் எண்ணம் இருந்தும், புறத்தே இன்னல் தரும் களவிலே காதலுடையான்போல் காணப்பட்டான் தலைவன் என்பது,

தோழிகூற்றின் புறத்தே பிறிதொரு பொருள் தோன்றினமையான் இப்பாடலில் இறைச்சி என்னும் பொருள் அமைப்பு உள்ளது.

5.2.1 உள்ளுறை – இறைச்சி : ஒற்றுமையும் வேற்றுமையும் உள்ளுறை உவமம், இறைச்சி இரண்டும் சில ஒற்றுமைக் கூறுகளையும் வேறு சில நுட்பமான வேறுபாடுகளையும் உடையவை.

ஒற்றுமை   :

1. இரண்டும் குறிப்பால் அறியப்படுவன.

2. இரண்டும் கருப்பொருளின் அடிப்படையில் அமைவன.

3. இரண்டும் அகப்பாடலுக்கே உரியன.

வேற்றுமை   :

1. உள்ளுறையில் கருப்பொருள் தொடர்பான சொல்லும், பொருளும் அதனால் பெறப்படும் குறிப்புப் பொருளும் நேருக்கு நேர் பொருந்தி வரும். கருப்பொருள் உவமை போலவும், அதன் வழி நாம் குறிப்பாக உணர்ந்து கொள்ளும் உட்கருத்து உவமேயம் போலவும் அமையும்.

2. இறைச்சியில் கருப்பொருளும் உட்பொருளும் ஒத்து முடியாமல் எதிர் மறையாகவும் முடியலாம். சொற்பொருள் – அதற்கு இணையான குறிப்புப் பொருள் என்னும் இரண்டுக்கும் மேலாக வேறு ஒரு கருத்தும் வெளிப்படுவது இறைச்சியின் தனிப்பண்பாகும்.

புலவன் சொல்லுகின்ற உவமத்தோடு ஒத்துக் கூறக் கருதிய பொருள் வந்து முடியுமாறு அமைந்திருப்பது உள்ளுறை உவமம், புலவன் இயற்றிய செய்யுளின் பொருளுக்குப் புறத்தே தோன்றுவது இறைச்சி.

5.3 கைக்கிளையும் பெருந்திணையும்

குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகைத் திணைகளையும் அன்பின் ஐந்திணை என்பர்.

அவற்றிற்கு மாறாக அமையும் எஞ்சிய திணைகள் இரண்டு. அவையாவன:

1. கைக்கிளை

2. பெருந்திணை

இவற்றையே,

1. அகப்பொருட் கைக்கிளை

2. அகப்புறக் கைக்கிளை

3. அகப்பொருட் பெருந்திணை

4. அகப்புறப் பெருந்திணை

என்று மேலும் விரிவு படுத்திக் கூறுவர்.

இவற்றுள் அகப்பொருட் கைக்கிளை என்பது ஏற்கெனவே முன்னைய பாடங்களில் (D02111, D02113) அகத்திணை இயலில், விளக்கப்பட்டது. எனவே, எஞ்சிய மூன்றும் இவ்வியலில் விளக்கப்படுகின்றன.

5.4 அகப்புறக் கைக்கிளை

கைக்கிளை என்பது தலைவன் தலைவி என்னும் இவ்விருவரில் ஒருவரிடம் மட்டும் தோன்றும் அன்பைக் குறித்ததாகும். அவற்றுள் ஒன்றான அகப்பொருள் கைக்கிளை என்பது ஒரு பக்கத்து அன்பாயினும், அதனை உணரத்தக்க காமத் தன்மை வாய்ந்த பெண்ணிடம் தலைவன் பேசுவதாக அமைந்தது.

தலைவி தன் உடன்பாட்டை அல்லது மறுப்பைக் குறிப்பாக உணர்த்தாதபோதும் தலைவன் மட்டும் வெளிப்படுத்திய அன்பு என்பதனால் அதனை அகப்பொருட் கைக்கிளை என்றனர்.

மாறாக, அகப்புறக் கைக்கிளை என்பது ஒரு தலைவன் காமத்தன்மை உணரும் பக்குவம் அடையாத இளம் பெண்ணிடம் சென்று தன் விருப்பத்தைக் குறிப்பிட்டு அவள் குறிப்பை அறியாமல் மேன்மேலும் பேசிச்கொண்டிருப்பதாகும்.

தலைவன்    -    தலைவி என்னும் இருவரில் ஒருவர் மட்டும் கொள்ளும் காதல் அல்லது காமம் கைக்கிளை ஆகிறது. எதிரில் இருக்கும் இன்னொருவர் அக் காமம் அல்லது காதலை உணரும் தன்மை உடையவராக இல்லாதபோது, அதுவே அகப்புறக் கைக்கிளையாகும்.

5.4.1 அகப்புறக் கைக்கிளைக்கு உரியவர் தலைமைக்குரிய தகுதிப்பாடு இல்லாதவர்கள், இழிந்த குலத்தவர்கள் முதலானவர்கள் அகப்புறக் கைக்கிளைக்கு உரியவர்கள்.

5.5 அகப்பொருட் பெருந்திணை

‘பெருந்திணை’ என்பது பொருந்தாக் காமம் ஆகும். ஒருவன் – ஒருத்தியிடம் அளவுக்கு அதிகமாகக் காமம் கொள்ளுதல், தன்னைவிட வயது முதிர்ந்த பெண்ணை விரும்புதல் எனப் பல நிலைகளில் பெருந்திணை அமையும். இது அகப்பொருளுக்கு உட்பட்டதாக அமையும்போது அதனை அகப்பொருட் பெருந்திணை என்பர்.

நம்பியகப் பொருள் ஆசிரியர் நாற்கவிராச நம்பி கீழ்க்காணும் செய்திப் பிரிவுகளை அகப்பொருட் பெருந்திணைக்கு உரியன என்று பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.

1. தலைவி தலைவன் பிரிந்தபொழுது மனம் கலங்கி நிற்றல்.

2. தலைவன் மடலேறுவேன் என்று கூறுதல்.

3. பகற் குறி, இரவுக்குறி முதலான சந்திப்பு வாய்ப்புகள் தடைப்பட்டுப் போதல்.

4. வேலனை அழைத்து வந்து வெறியாட்டு நிகழ்த்துதல்.

5. உடன்போக்காகப் புறப்பட்டுச் செல்லுதல்.

6. தலைவி பூப்பு எய்தி நிற்பதை வெளிப்படுத்துதல்.

7. பரத்தையிற் பிரிந்த தலைவன் பொய்யாக வாக்குறுதி வழங்குதல்.

8. ஊடலை உணராமல் முரண்பாடு நீடித்து நிற்றல்.

9. தலைவியைப் பிரிந்து செல்ல முடிவுசெய்த தலைவன், அதனை உடனே மேற்கொள்ளாமல், தயங்கித் தயங்கி நிற்றல்.

10. தலைவியைப் பிரிந்து சென்று பாசறையில் தங்கிய தலைவன் அங்கேயும் பிரிவை எண்ணிப் புலம்புதல்.

11. இயற்கைப் பருவம் மாறுபடுதலால் வருந்திப் பேசுதல்.

12. பொறுத்துக் கொள்ளச் சொல்லும் தோழியின் வன்புறை வார்த்தைகளுக்கு எதிராகத் தன் வருத்தத்தைத் தலைவி புலப்படுத்துதல்.

13. காட்டுக்குச் சென்று தலைவியுடன் தவம் மேற்கொள்ளுதல்.

இவையாவும் அகப்பொருட் பெருந்திணையின் உள்ளடங்கிய செய்திப்பிரிவுகளாகும்.

5.6 அகப்புறப் பெருந்திணை

பெருந்திணை என்பது அகத்திணை இலக்கணத்திற்கு இசைந்ததாக – ஒத்து வருவதாக – ஏற்கத் தக்கதாக அமையும்போது அதனை அகப்பொருட் பெருந்திணை என்று குறிப்பிட்டனர். அதற்கு மாறாக, அகத்திணைக்கு அடங்காமல் – முரண்பட்டதாக அமையும் பெருந்திணைச் செய்திகளை அகப்புறப் பெருந்திணை என்று வகைப்படுத்தினர்.

5.6.1 அகப்புறப் பெருந்திணையின் பிரிவுகள் நாற்கவிராச நம்பி அகப்புறப் பெருந்திணையின் பிரிவுகளாக எண்வகைப்பட்ட செய்திகளை விளக்கிச் சென்றுள்ளார். அவையாவன:

1. மடலேறுதல்

தன் குறை நீங்காத தலைவன் பனை மடலால் குதிரையைச் செய்து அதன் மீது ஏறி நின்று தன் விருப்பத்தை வெளிப்படுத்துதல்.

2. விடை தழாஅல்

தலைவன் தான் விரும்பிய தலைவியை மணத்தல் பொருட்டு, ஆற்றல் மிகுந்த ஓர் எருதினைத் தழுவி அடக்குதல். இதனை ஏறு தழுவுதல் என்று கூறுவர். (விடை-எருது, ஏறு, காளை; தழாஅல்-தழுவுதல்)

3. குற்றிசை

தலைவன் தலைவியை முற்றிலுமாகத் துறந்து நிற்றல்.

4. குறுங்கலி

தன்னை முற்றிலுமாகத் துறந்து நீங்கிய தலைவனைத் தலைவி பழிதூற்றிப் பேசுதல்.

5. சுரநடை

தலைவியோடு சென்ற தலைவன் இடைவழியில் அவளை இழந்து அதற்காக வருந்துதல்.

6. முதுபாலை

தலைவனோடு சென்ற தலைவி இடைவழியில் அவனை இழந்து அதற்காகப் புலம்புதல்.

7. தாபதநிலை

தலைவனை இழந்த தலைவி மேற்கொள்ளும் தவ வாழ்க்கை.

8. தபுதார நிலை

தலைவியை இழந்த தலைவன் மேற்கொள்ளும் தனிமை வாழ்க்கை.

5.7 அகப்பாட்டினுள் பாடப்படுவோர்

அகப்பாடல்களில் பாடப்படும் தலைவன் இரு நிலைப் பட்டவனாக அமைகிறான். இதனை அகப்பொருள் விளக்க நூலாசிரியர் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

பாட்டுடைத் தலைவன் கிளவித்தலைவன் எனப்

பாட்டினுள் பாடப் படுவோர் இருவர் (245)

அவருள், உயர்ந்தோன் பாட்டுடைத் தலைவன் ஆகும் (246)

இந்நூற்பாக்களின்படி, அகப்பாட்டினுள் பாடப்படுவோர் பாட்டுடைத் தலைவன் – கிளவித்தலைவன் என இருநிலைப்பட்டவராக அமைகின்றனர்; இவ்விருவருள் உயர்ந்தோன் பாட்டுடைத் தலைவன் ஆவான்.

5.7.1 அகப்பாட்டினுள் பாடப்படுவோர் பெயர்கள் அகப்பாட்டினுள் பாடப்படும் பாட்டுடைத்தலைவன், கிளவித் தலைவன் என்னும் இருவருக்கும் கூறப்படும் பெயர்கள் பல உள்ளன. அவற்றை நிலப்பெயர், வினைப்பெயர், பண்புப்பெயர், குலப்பெயர், இயற்பெயர் என்னும் ஐந்து பிரிவாக வகுத்துள்ளனர்.

இவற்றுள் இயற்பெயர் என்பது கிளவித் தலைவனுக்குக் கூறப்படுவதில்லை. ஏனைய நிலப்பெயர் முதலான நான்கு பெயர்கள் கூறப்படும். பாட்டுடைத் தலைவனுக்கு இயற்பெயர் உட்பட ஐந்து வகைப் பெயர்களும் கூறப்படும்.

ஐவகைப் பெயர்களுக்கும் சான்றுகளைக் காண்போம்.

1. நிலப்பெயர்            :   மலைநாடன், ஊரன்

2. வினைப்பெயர்    :   மலையைப் பிளந்தான், வேட்டுவன்

3. பண்புப்பெயர்       :   நெடுஞ்சேரலாதன், பெருவழுதி, அண்ணல்

4. குலப்பெயர்          :   சேரன், சோழன், பாண்டியன், குறவன், ஆயன்

5. இயற்பெயர்         :    அவரவர் பெற்றோர், ஆசிரியர் வைத்த குறியீட்டுப் பெயர்.

5.8 முப்பொருட்களின் வழுவும் அமைதியும்

முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன முப்பொருள்களாகும். இவை தத்தமக்கு உரிய திணைகளோடு பொருந்தி வருதல் இயல்பானது. அவ்வாறின்றிப் பிற திணையோடு மாறி – கலந்து – மயங்கி வருதல் உண்டு. அவற்றைத் திணை மயக்கம் என்னும் தலைப்பில் குறிப்பிடுவர். அவ்வாறு வருவது குற்றமாயினும் ஏற்றுக்கொள்ளலாம் என்று வழங்கும் சமாதானம் வழு அமைதி எனப்படும்.

இவ்வாறு முதல், கரு, உரி என்னும் மூவகைப் பொருளும் மயங்கி வருவதைச் சங்க இலக்கியத்தில் பற்பல பாடல்களில் காணமுடிகிறது.

உதாரணம்

புலிகொல் பெண்பால் பூவரிக் குருளை

வளைவெண் மருப்பின் கேழல் புரக்கும்

குன்றுகெழு நாடன் மறந்தனன்

பொன்போல் புதல்வனோடு என்நீத் தோனே

(ஐங்குறுநூறு, 265)

விளக்கம்

இப்பாடலில் இடம்பெற்ற முப்பொருள்களாவன:

முதற்பொருள்         குன்று (மலை)                                     இது குறிஞ்சித் திணை

கருப்பொருள்           புலி, பன்றி                                              இவையும் குறிஞ்சித் திணைக்கு உரியவை

உரிப்பொருள்          புதல்வனையும், என்னையும்        இது மருதத் திணைக்கு உரியது.

விட்டுவிட்டுத் தலைவன்

பரத்தையிடம் சென்று விட்டான்

என்று கூறித் தலைவி பிணக்குக்

கொள்வது (ஊடல்)

குறிப்பு    :    இப்பாடலில் குறிஞ்சித் திணையில் மருதத்திற்கு உரிய உரிப்பொருளாகிய ஊடல் மயங்கி வந்துள்ளதை மேற்காணும் விளக்கம் நன்கு புலப்படுத்தும்.

5.9 தொகுப்புரை

ஒழிபியலின் பிற்பகுதிச் செய்திகளை உள்ளடக்கி அமைந்த இப்பாடத்தினால் கீழ்க்காணும் இலக்கணச் செய்திகளைக் கற்றுணர்ந்தோம்.

அகப்பாட்டின் பொருள், உவமை, இறைச்சி என்னும் இரண்டு நிலைகளில் அமைகின்றது.

உள்ளுறை, வெளிப்படை என்னும் இரண்டு கூறுபாடுகளை உடையது உவமை.

உள்ளுறை உவமையைப் போலவே இறைச்சியும் கருப்பொருள் அடிப்படையில் பிறந்தாலும் நுட்ப வேறுபாடுடையது.

கைக்கிளையும், பெருந்திணையும் அகப்பொருளுக்கு உரியவை, அகப்பொருளுக்குப் புறத்தே அமைபவை என்னும் இரண்டு நிலைகளை உடையன.

அகப்பாடல்களில் பாடப்படும் தலைவன் இருநிலைப் பட்டவனாக அமைகிறான்.

அகப்பாடல்களில் முதல், கரு, உரி முதலான பொருள்கள் மயங்குவது வழு அமைதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பாடம் - 6

நம்பியகப் பொருள் பொருளமைப்பும், வகைப்பாடும்

6.0 பாட முன்னுரை

நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் என்னும் நூல் 252 நூற்பாக்களைக் கொண்டது. அவற்றை இரண்டு இலக்கணத் தாள்களாகப் (பாடங்களாகப்) பிரித்து நாம் கற்றுணர்ந்து வருகிறோம்.

இலக்கணம் – 3 (D021) என்னும் தாளில் ஆறு பாடங்களிலும், இலக்கணம் – 4 (D031) என்னும் தாளில் முதல் ஐந்து பாடங்களிலும் கற்றுணர்ந்த செய்திகளின் மேம்பட்ட விளக்கப்பகுதியாக D02126 என்னும் இப்பாடம் அமைகிறது.

முந்தைய பாடங்களில் கற்றுணர்ந்த இலக்கணச் செய்திகள் வழியாக நாம் உய்த்துணரும் அகப்பொருள் இலக்கணச் சிறப்புப் பண்புகளைத் தொகுத்தும் வகுத்தும் மீள்பார்வை செய்தல், நம்பியகப் பொருள் இலக்கணப் பாடப் பயிற்சிக்குத் துணை புரியும் வகையில் வரையறைகள், வகைப்பாடுகள் கண்டறிதல் என்பன இப்பாடத்தின் செய்திப் பகுப்புகளாக அமைகின்றன.

6.1 அகப்பொருள் சிறப்பு

நாற்கவிராச நம்பி 252 நூற்பாக்கள் வழியாக ஐந்து இயல்களில் முறைப்படுத்தி வழங்கிய அகப்பொருள் இலக்கணச் செய்திகளைப் பதினோரு பாடத் தொகுப்புகளாகக் கற்றுணர்ந்தீர்கள். இனி அப்பாடச் செய்திகள் வழியாக நாம் மேற்கொண்டு உய்த்துணரும் பற்பல சிறப்புப் பண்புகளைக் கண்டுணரலாம். ஒரு வகையில் இப் பாடத்தில் காணும் செய்திகள் முந்தையப் பாடப் பகுப்புகளில் இடம்பெற்றவையாகவும் இருக்கலாம். எனினும், அவை சிறப்புப் பார்வையுடன் மீளவும் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.

6.1.1 நாற்கவிராச நம்பி நூலாசிரியரின் சிறப்புப் பண்புகளாகச் சில செய்திகளை மீளவும் இவண் நினைவு கூர்தல் தக்கதாகும்.

அவையாவன:

1. நம்பி, நாற்கவிராசன் எனப்பட்டார். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நான்கு வகைகளிலும் பாடல்கள் இயற்றுவதில் வல்லவர் என்பதைப் இப்பெயர் வெளிப்படுத்துகிறது.

2. தமது நூலாக்கத்தின் நோக்கத்தைத் தலைப்பிலேயே புலப்படுத்துவதாக அகப்பொருள் விளக்கம் என்றே பெயர் அமைத்துள்ளார்.

3. நூலாசிரியரே உரையும் வரைந்துள்ளார்.

4. இலக்கணக் கூற்றுகளுக்கு – கிளவிகளுக்கு – பொருத்தமான இணையான விளக்கம் வழங்கவல்ல நூலாகப் பொய்யாமொழிப் புலவரின் தஞ்சைவாணன் கோவை என்னும் இலக்கண நூலை ஆசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.

5. “முந்து நூல் கண்டு” என்பதற்கேற்பத் தொல்காப்பியத்தை மனம் கொண்டும், சிந்தித்தும், சங்க அக இலக்கியப் போக்கினைச் சேர்த்துச் சிந்தித்தும் நூலாக்கினார் நாற்கவிராச நம்பி. இது அந்நூலின் சிறப்புப் பாயிரம் வெளிப்படுத்தும் சிறப்புச் செய்தியாகும்.

6.1.2 நம்பியகப்பொருள் நாடகப் பாங்குடைய புனைந்துரை, நடைமுறைக்கேற்ற உலகியல் எனும் இரு நெறிகளிலும் அகப்பொருள் இலக்கணச் செய்திகளை அகத்திணை இயல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்னும் ஐந்து இயல்களில், நம்பியகப் பொருள் தொகை வகைப்படுத்தி வழங்குகின்றது. மேற்கண்ட இயல் அமைப்புகளே ஆற்றொழுக்கான முறையில் அகவாழ்வின் படிநிலைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையன.

அகத்திற்கான சூழலும் அறிமுகச் செய்திகளும் முதல் இயலான அகத்திணையியலில் விளக்கப்படுகின்றன. உரிய சூழலில் மலரும் காதல் களவியல் ஆகிறது. களவு கற்பாக மாறுவதற்கான காரணமும் அதையொட்டி நிகழும் கரணமும் வரைவியலில் விளக்கப்படுகின்றன. வரைவுக்குப் பின் தலைமக்கள் உயரிய நெறிகளைக் கற்பித்துக்கொண்டு மேற்கொள்ளும் இல்லற மாண்புகள் கற்பியல் ஆகிறது. இவை அனைத்திலும் விடுபட்ட குறிப்பிடத்தக்க செய்திகளும் கூடுதலான விளக்கங்களும் ஒழிபியல் என்னும் இறுதி இயலில் உணர்த்தப்படுகின்றன. இவ்வாறு முறையான வாழ்வியலை, உரிய முறைவைப்போடு உணர்த்திச் செல்லும் இலக்கணப் போக்கினை நம்பியகப் பொருளில் காணமுடிகிறது.

நூற் பொருள்

தமிழ்மொழியில் இலக்கண வகைப்பாடு கண்டவர்கள் பொருள் இலக்கணம் என்பதை மூன்றாவது கூறாக அமைத்துள்ளனர். இலக்கணத்தில் பொருள் என்பது ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய அகராதிப் பொருள் (Meaning) என்பதற்கும் மேலாக, இலக்கிய நூலின் பாடுபொருள் (Content) என்னும் உயர் கருத்துடையது. இதனை நாம் முன்னரே உணர்ந்தோம். இவ்வாறு, இலக்கியங்களில் பாடப்படும் பொருள் எது? அது எவ்வாறு அமைய வேண்டும் என்பதைத் தெளிவாக வரையறுத்த பெருமை தமிழிலக்கணப் புலவர்களுக்கு உண்டு.

இலக்கியம் என்பது மக்களிடம் இருந்து – மக்களுக்காக என்று குறிப்பிடத்தக்கவாறு, பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வியல் பிழிவாக அமைகிறது. அதன்வழி, வாழும் வழிகளையும் வழங்குகிறது. இது கருதியே “பொருளதிகாரம் வாழ்க்கைக்கு வழங்கப்பட்ட இலக்கணம். இவ்வாறு வாழ்விலக்கணம் வகுத்த பெருமை தமிழர்க்கே உரிய தனித்தன்மை” என்னும் புகழ் மொழி நின்று நிலவி வருகிறது.

நாடகமும் உலகியலும்

அகப்பாடல் நாடக வழக்கு – உலக வழக்கு என்னும் இரண்டையும் அடியொற்றியது என்பது முதல் நூல் ஆசிரியர் தொல்காப்பியரின் விளக்கம். அவ்வாறே புனைந்துரை – உலகியல் என்னும் இரண்டு முறைகளில் அகப்பொருள் சொல்லப்படும் என்று நாற்கவிராச நம்பியும் குறிப்பிட்டிருப்பது சிந்தனைக்குரிய செய்தியாகும்.

நாடகமாகவும் புனைந்துரையாகவும் சொல்லப்பட்டவற்றுள் ஏற்ற செய்திகளை ஏற்றுப் பின்பற்றுவதும், உலகியலாக உரைக்கப்பட்டவற்றை முழுமையாக ஏற்பதும் இயலக்கூடியவையே.

அகப்பொருள்

பாடுபொருள் அகம், புறம் என இரண்டாயினும் அகமே பெரிதும் பாடப்பட்ட தன்மையினைச் சங்க இலக்கியத் தொகுப்பு புலப்படுத்துகிறது. அவ்வாறே, பொருள் இலக்கண நூல்கள் பலவும் அகப்பொருளை முதன்மைப்படுத்தி மொழிகின்றன.

சங்க இலக்கியத் தொகுப்பில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டு அகம் சார்ந்தது. அது தமிழ்நெறி அறியாத ஆரிய மன்னன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழ் அறிவித்தலுக்காகப் பாடப்பெற்றது என்பர். ஆகவே தமிழறிவித்தல் என்பதற்கு அகப்பொருளின் சிறப்பை அறிவித்தல் என்பது பொருள்.

இறையனார் அகப்பொருள் உரையில் ‘இந்நூல் தமிழ் நுதலிற்று’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே அகப்பொருள் இலக்கண நூல் ஒன்றுக்குத் தமிழ் நெறி விளக்கம் என்றே பெயர் அமைந்துள்ளது. அறுவகை இலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர் ‘புனிதத் தமிழனுக்கு ஆவியாவது அகப்பொருள்’ என்று கூறியுள்ளார். இவையாவும் அகமே தமிழ் என்பதைப் புலப்படுத்துவன.

தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி என்ற நூலின் ஆசிரியர் ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் தமிழில் உள்ள பொருள் இலக்கணத்தைப் போல ஒரு பகுதி வடமொழி இலக்கண நூல்களில் இருப்பதாகத் தெரியவில்லை என்று கருத்துரைத்துள்ளார். சிவஞான முனிவர் தமது சூத்திர விருத்தியில் அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடு தமிழில் மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் தமிழிலக்கண மரபினை வடமொழியுடன் ஒப்பிட்டதும் அகப்பொருள் பற்றிய தனித்தன்மையை வெளிப்படுத்தியிருப்பதும் உணரவேண்டிய உண்மைகளாகும்.

சிறப்புப் பெயரீடுகள்

அகத்துறை சார்ந்த திணைகள் ஏழு. அவற்றை மூன்று கூறுகளாக்கி மொழிவது இலக்கண மரபு. அன்பின் ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை என்பனவே அவை.

இவ்வாறு ஏழு திணைகளுக்குமாக அகப்பொருள் இலக்கணத்தார் அமைத்த பெயரீடுகள் சிறப்புத் தன்மை வாழ்ந்தவை.

ஐந்திணைகளுக்கு மட்டுமே ‘அன்பு ‘இன்பம்’ என்னும் அடைமொழிகள் சேர்த்து

ஐந்திணை உடையது அன்புடைக் காமம்

– (நம்பி -1, அகத்திணை இயல் -4)

அளவில் இன்பத்து ஐந்திணை

– (நம்பி. அகத்திணை இயல் 26)

என்பனவாக வழங்கி இருப்பதும், (கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றில்) கை, பெரு என்னும் அடைமொழிகள் மற்ற இரு திணைகளுக்குமான தன்மைகளைப் புலப்படுத்தி நிற்பதும் எண்ணிப் பார்த்தற்கு உரியவை.

கை என்பது ஒரு பக்கத்து அன்பை உணர்த்த வந்த அடைமொழியாகும். பொருந்தாத இணைவு பற்றிய திணையைப் பொருந்தாத் திணை என்று கூறாமல், பெருந்திணை என்று கூறியிருப்பது அதுவே பெரும்பகுதியாய் – அதிக அளவினதாய் அமைந்திருப்பதை வெளிப்படுத்துகிறது.

அன்பின் ஐந்திணை என்பதே சிறப்பானது. எனினும் அன்பு முன் மொழியப்பட்டு ஏற்கப்படும் நிலை அமையும் வரை, எல்லாக் காதல் முன்மொழிவுகளும் ஒரு பக்கத்து அன்பாகவே அமையும். எனவே, கைக்கிளை என்பதை ஐந்திணையின் முந்தைய படிநிலை அல்லது காதலின் முதல் படிநிலை என்றும் கருதலாம்.

முப்பொருளின் அமைப்பு

அகப்பொருள் என்பது பாடுபொருள். அது உரிப்பொருளாய் உணர்த்தப்படும். எனினும், அதற்குப் பின்புலமாய் அமைவது முதற்பொருள். உரிப்பொருளை நிகழ்த்துவோர், துணைநிற்போர் எனப் பலரும், பிற உயிரினங்களும் கருப்பொருளாய் விளக்கம் பெறுகின்றன.

அகப் பொருள் இலக்கணத்தார் முதற் பொருளை நிலம், பொழுது என இரண்டு பிரிவாக்கினர். மேலும் நுணுகி நோக்கிப் பொழுது என்பதைப் பெரும்பொழுது, சிறுபொழுது என வகைப்படுத்தினர். பின்னும் தெளிந்த நோக்காக ஓர் ஆண்டின் உட்பிரிவுகளைப் பெரும் பொழுது என்றும், ஒரு நாளின் உட்பிரிவுகளைச் சிறுபொழுது என்றும் வகைப்படுத்தினர்.

தொல்காப்பியத்தில் கருப்பொருள் என்பது தெய்வம், உணவு, விலங்கு, பறவை, பறை, யாழ், தொழில் என்னும் ஏழு வகையாக மட்டுமே அமைந்திருக்கிறது. நம்பியகப் பொருள் ஆசிரியர் அதனை இரு மடங்காக்கித் தெய்வம், உயர்ந்தோர், அல்லோர், பறவை, விலங்கு, ஊர், நீர், மலர், மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் எனக் குறிப்பிட்டிருப்பது கருப்பொருள் பற்றிய சிந்தனை வளர்ச்சியாகக் கருதத்தக்கது.

6.1.3 இயற்கைப் புணர்ச்சி தகுதி வாய்ந்த தலைமகனும் தலைமகளும் எதிர்ப்படுதல் இயற்கையாய் நிகழ்ந்து, அவர்களுக்குள் அரும்பும் அன்பு மேலிட்டு அது காதலாய் மலரும். அதன்பின் இருவரும் உள்ளத்தால் ஒன்றுபடுவர். அதுவே இயற்கைப் புணர்ச்சி எனப்படும். இவ்வாறு தொடர்புடைய இருவருக்கும் முன்னேற்பாடு – திட்டமிடுதல் ஏதும் இன்றி நிகழ்வது என்பதனால் இதனை இயற்கைப் புணர்ச்சி என்று கூறினர். எனினும் அத்தகு புணர்ச்சிக்குத் தொன்மைத் தமிழ் நூலான தொல்காப்பியத்தில் ஒரு பின்னணி சொல்லப்படுகிறது. அதுவே பாலது ஆணை என்பதாகும். பால் என்பதற்கு தெய்வம், ஊழ், விதி என விளக்கங்கள் கூறுவர். அது, ஒன்று படுத்துதல் – வேறுபடுத்துதல் என்னும் இரண்டில் ஒன்றை இயற்றும் இயல்புடையது. தலைமக்கள் வாழ்வில் பாலது ஆணை ஒன்றுபடுத்துவதாக அமைகிறது.

நம்பியகப் பொருள் ஆசிரியர் இயற்கைப் புணர்ச்சியை இரண்டு நிலைகளில் விளக்குகிறார். முதலாவதாக, தெய்வத்தால் நிகழும் இயற்கைப் புணர்ச்சி முயற்சி இன்றி முடிவது என்றும், அடுத்து தலைவியால் எய்தப்படும் இயற்கைப் புணர்ச்சியானது முயற்சியால் முடிவதாகும் என்றும் ஒரு வளர்நிலைச் சிந்தனையை முன்மொழிந்துள்ளார்.

6.1.4 தலைமக்களின் பண்புகள் பாலது ஆணையால் தகுதி வாய்ந்த தலைமகனும் தலைமகளும் எதிர்ப்படுதல் இயற்கைப் புணர்ச்சி என்று கண்டோம். அத்தகு தலைமக்களிடையே அமைய வேண்டிய தகுதிப் பண்புகளை ஒரு நூற்பாவில் நாற்கவிராச நம்பி சுட்டிக்காட்டுகிறார்.

பொருவிறந் தோற்குப் பெருமையும் உரனும்

நல்நுதற்கு அச்சமும் நாணும் மடனும்

மன்னிய குணங்கள்

– (அகத்திணை இயல்-35)

என்பது நூற்பா.

இதற்கு உரை வகுத்தவர்கள் வழங்கும் விளக்கத்தை அறிவது தலைமக்களின் சிறப்புப் பண்புகளை உணர்வதாக அமையும்.

பெருமை –    பழியும் பாவமும் அஞ்சுதல்.

உரன்       -    அறிவு ; தக்கது அறிதல்.

அச்சம்    -    காணாதது ஒன்று கண்டால் பெண்டிர் இடத்து நிகழ்வது.

நாணம்   -    பெண்டிர்க்கு இயல்பாகிய குணம்.

மடம்       -    பேதைமை.

6.1.5 இரு வகைக் கைக்கிளை கைக்கிளை என்பது ஒரு பக்கத்து அன்பென்பதை முன்னரே உணர்ந்தோம். ஒரு பக்கம் என்பது பெரும்பாலும் தலைவன் பக்கத்து அன்பாகவே அமைகிறது. காதலை முதலில் முன்மொழியும் நிலை தலைவனுடையதாகக் காட்டப்படுகிறது. அதையும் அகப்பொருட் கைக்கிளை, அகப்புறக் கைக்கிளை என இரண்டாக வகைப்படுத்தினர். இவ்விரு வகைப்பாடு அமைந்ததற்கான நுட்ப வேறுபாட்டை, அவ்விரண்டையும் விளக்கும் இடங்களில் நாற்கவிராச நம்பி வெளிப்படுத்தியுள்ளார்.

அகப்பொருட் கைக்கிளையில் காமம் நுகர்தற்கு அமைந்த, ஏற்ற பருவமுடைய தலைவியிடம் தன் காதலைத் தலைவன் வெளிப்படுத்துவான். ஆனால், அகப்புறக் கைக்கிளையிலோ அவ்வாறு காமம் நுகர்தற்கான பருவம் எய்தாத இளமைத் தன்மையுடைய பெண்ணிடம் தலைவன் தன் காதலை வெளிப்படுத்துவான் என்பதே நம்பி குறிப்பிடும் நுட்ப வேறுபாடாகும்.

6.1.6 உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும் தலைமக்களின் காதல், தொடக்கத்தில் அவரவர் உயர் பண்புகள் காரணமாக உள்ளத்தளவில் அமையும். அது உடனடியாக மெய்யுறு புணர்ச்சி ஆகாது. மெய்யுறு புணர்ச்சி நிகழ்வதற்கு முன் இருவரும் மேற்கொண்ட காதல் பயணத்தின் பாதையில் பத்து வகையான செயல்பாடுகள் படிப்படியாக நிகழும் என்பதை நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுச் சொல்கிறார். அதையும் மிகச் சுருக்கமாக ‘காட்சி முதலாகச் சாக்காடு ஈறாகக் காட்டிய பத்து’ (அகத்திணை இயல்-36) என்று தொகுத்துச் சுட்டுகிறார். காட்சியில் தொடங்கிய காதல், சாக்காடு என்னும் இறுதி நிலைக்கு வரும்போது மெய்யுறு புணர்ச்சி அமையும் என்பது கருத்து. (பத்துப் படி நிலைகளின் விளக்கத்தை அகத்திணை இயலில் கண்டோம்.)

6.1.7 தோழியின் முதன்மை அகப்பொருள் இலக்கணத்தில் முதன்மைக்குரிய மாந்தர்களாகத் திகழ்பவர் மூவரே. தலைவன், தலைவி, தோழி என்போரே அம்மூவர். இவர்களில் பாடுபொருளின் முதன்மை மாந்தராய் முதல் இருவரும் அமைவதை நாம் அறிவோம். தலைமக்களுக்கு அடுத்த தலைமைச் சிறப்பு தோழிக்கே வழங்கப்பட்டுள்ளது. இம் முதன்மையை ஒரு நூற்பாவில் (அகத்திணை இயல்-110) நாற்கவிராச நம்பி இனிது விளக்கியுள்ளார்.

இந்நூற்பா, ‘தோழி – செவிலியின் மகள் ; நன்மை, தீமையை ஆராயும் அறிவுடையவள் ; தலைவிக்கு நீங்காத நற்றுணை ; அவளது வருத்தத்தைத் தீர்க்கும் அன்புத் துணை’ என்னும் செய்திகளை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு தோழி முதன்மை பெற்றுத் திகழ்வதற்குக் காரணமே அவள் தலைமக்களின் காதலை வளர்த்தெடுத்து, அதற்கு நிகழும் இடையூறுகளை எல்லாம் அறுத்தெறிந்து, அக்காதலைக் கற்பாக்குவதற்கான நேர்மையான காரணங்கள் இருப்பதை உரிய நேரத்தில் உரியவாறு எடுத்துரைத்து, அறத்தை நிலை நிறுத்தும் பணியாற்றுவதே என்பதை அகப்பொருள் இலக்கணத்தைக் கற்பார் இனிது உணர்வர்.

தலைவனின் காதலை உணர்ந்தாலும் கூடப் பல சூழ்நிலைகளில் அவனுக்கு உதவி புரிவதற்கு உடன்படாமல் மறுத்து நிற்கும் தன்மையைத் தோழியிடம் காணமுடிகிறது. அவ்வாறு முதற்கண் உடன்படாமல் மறுத்துரைப்பது ஒரு வகையில் தலைவனின் உள்ள உறுதியைத் தோழி உணரும் வாய்ப்பாக அமைகிறது.

முதலில் மறுத்தாலும் பிறகு அவன் குறையை ஏற்று இருவரையும் சேர்த்து வைத்தல், தலைவியின் இடர்ப்பாட்டைத் தலைவனுக்கும், தலைவனின் அன்பைத் தலைவிக்கும் கூறி ஆற்றுவித்தல், இருவருக்குமே சில உலகியல் நீதிகளை உணர்த்துதல் என்று அவர்களின் காதல் வளர்ச்சிக்கு உடனிருப்பதும் தோழியே.

களவுக் காதல் அவ்வாறே நீடிப்பதை ஒரு போதும் உடன்படாத தோழி வரைவு கடாதல் என்னும் செயல் மூலம் திருமணத்தை வற்புறுத்துகிறாள். இருவரது திருமணத்திற்குத் தலைவியின் பெற்றோர் இசையாத போது உடன் போக்கு நிகழ்த்தத் திட்டம் வகுத்தும் செயல்படுத்துகிறாள். இவ்வாறு தலைமக்களின் களவு, கற்பாக மலருவதற்கு வழிகாண்பவள் தோழியே.

களவைக் கற்பாக்கும் உயரிய பணியாகத் தோழியின் அறத்தொடு நிற்றல் என்னும் செயலும் குறிப்பிடத்தக்கது. செவிலித்தாய் தோழியிடம் தலைவியின் மாற்றத்திற்கான காரணம் வினவுகிறபோது, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு காதலை வெளிப்படுத்துகிற இடத்தில் தோழியின் திறமை வெளிப்படுகிறது.

தலைவியின் காதலை ஏற்று, பெற்றோர் திருமணத்திற்கு இசைந்த போதும், திருமணத்தின் பிறகு கற்பு வாழ்வில் தலைவி செம்மையுற வாழ்வதைக் காணும்போதும் தோழி அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. தலைவனும், தமக்கு ஏற்பட்ட இல்லறம் என்னும் நல்லற வாழ்விற்குக் காரணமாக அமைந்தவள் தோழியே என்பதை வெளிப்படுத்துகிறான்.

6.1.8 பிரிவு – சில சிறப்புச் செய்திகள் நம்பியகப் பொருள் நூலில் வெவ்வேறு இடங்களில் இடம் பெறும் பிரிவு பற்றிய செய்திகளை ஒப்பிட்டுக் காணும்போது சில சிறப்புச் செய்திகளை உணர முடிகிறது. அவையாவன :

1. அகப்பொருள் இலக்கணத்தில் பிரிவு என்பது குறிப்பிடத்தக்க ஒரு கூறாகும். அது களவு, கற்பு என்னும் இருவகைப்பட்ட வாழ்க்கை நிலையிலும் நிகழும். களவில் திருமணத்திற்கான பொருளீட்டுதல் காரணமாகத் தலைவன் பிரிவு மேற்கொள்வது உண்டு.

2. திருமணத்திற்குப் பிறகு மேற்கொள்ளும் கற்பு வாழ்க்கையில் ஓதல், பகை, தூது, துணை, பொருள் தேடுதல் என்னும் ஐவகைப் பட்ட காரணங்களால் தலைவன் பிரிவு மேற்கொள்கிறான். இவற்றுள் ஓதல் எனப்படும் கல்விக்கு மட்டும் மூன்று ஆண்டுகள் பிரிந்து செல்வது ஏற்கப்படுகிறது. இதன் வழி அக்காலத் தலைமக்கள் திருமணம் புரிந்து கொண்ட பிறகும் கற்றல் என்னும் செயல்பாட்டில் ஈடுபட்ட தன்மை புரிகிறது.

3. தலைவன் பிரிவு மேற்கொள்ளவே விரும்பாமல் தயங்கி நிற்றலும், பிரிவை மேற்கொண்டு இடை வழியில் திரும்பி வருதலும், பிரிந்து சென்ற பிறகு பாசறையில் இருக்கும்போது தலைவியை நினைத்துப் புலம்புதலும் கூறப்பட்டுள்ளன.

6.1.9 அகப்பொருள் மரபுகள் நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப் பொருள் நூல் முழுமையும் உற்று நோக்கும்போது அகப்பொருள் சார்ந்த பல்வேறு மரபுகளைக் கோட்பாடுகளாக கண்டு உணர முடிகிறது. அவற்றுள் முதன்மைக்குரியவற்றை இனிக் காண்போம்.

1.அகப்பொருள் பாடல்களில் இடம் பெறும் தலைவனது இயற்பெயரைக் குறிப்பிடுதல் கூடாது.

2. பூத்தருதல், புனலிடைக்காத்தல், களிற்றிடமிருந்து காத்தல் என்னும் சூழல்கள் வாய்க்கும்போது தலைவியிடம் தலைவன் தன் காதலை வெளிப்படுத்துவான். இவையே களவுக்கான காரணங்களாக அமைகின்றன.

3. தலைவியின் உடல் மற்றும் உள்ள நலிவுக்கான காரணங்களைக் கண்டறிய முயலும் பெற்றோர் வேலன் என்பானை அழைத்து வெறியாடுதல் என்னும் நிகழ்ச்சியை நடத்துவர்.

4. தலைவன் தனக்குரிய தலைவியை மணந்துகொள்வதற்கான சூழல் வாய்க்காதபோது மடலேறுதல் என்னும் செயலை மேற்கொள்வான். பனை ஓலைகளால் செய்யப்பட்ட குதிரை வடிவத்தை ஊர் நடுவே கொண்டு வந்து நிறுத்தித் தனது காதலைப் புலப்படுத்தி அதன் மீது ஏறுவேன் என்று தலைவன் கூறுவது அல்லது செய்வது மடலேறுதல் ஆகும்.

5. தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கு முன்பு ஆற்றலை வெளிப்படுத்தும் செயல்பாடாக விடைதழாஅல் என்னும் நிகழ்ச்சி நடைபெறும். இதை ஏறு தழுவுதல் என்று கூறுவர். ஆற்றல் மிகுந்த காளையை அடக்கி வீரத்தை வெளிப்படுத்தித் தலைவியை மணந்து கொள்வது ஒரு வகை மரபாக அக்காலத்தில் நிலவியது.

6. அகத்துறை மாந்தர்களில் கூத்தர், பாங்கர், அறிவர் ஆகியோர் அறிவுரை சொல்வதற்கு உரியவர்கள்.

7. கற்பியலில் இல்லறத் தலைவி – தலைவனோடு சேர்ந்து வாழும் புணர்ச்சிக்கு ஏற்புடையவளாகத் திகழ்கிறாள் என்பதை வெளிப்படுத்துவதற்கு நெய்யாடுதல், வெள்ளணி அணிவித்தல், செவ்வணி அணிவித்தல் முதலான நிகழ்ச்சிகளை அக்காலத்தில் நடத்தி உள்ளனர். ஒவ்வொன்றும் ஒரு கால கட்டத்தில் தலைவியின் குறிப்பை வெளிப்படுத்துவதற்கான குறியீடாக அமைந்துள்ளது.

8. தலைவி பூப்பெய்திய பின் பன்னிரண்டு நாட்கள் தலைவன் அவளைப் பிரியாது வாழ வேண்டும் என்னும் குறிப்பை வெளிப்படுத்தும் நாற்கவிராச நம்பி, அது மகப்பேறு வாய்ப்பதற்கான காலம் என்னும் அறிவியல் சார்ந்த குறிப்பையும் புலப்படுத்தியுள்ளார். இதுவே நலவியல் சார்ந்த குறிப்பாகவும் அமைகிறது.

9. தமிழ் இலக்கண மரபுப் படி துறவு என்பது மக்களொடு மகிழ்ந்து மனையறம் காத்து மிக்க காமவேட்கை தீர்ந்த பிறகே மேற்கொள்ளப்படுவதாகும். தலைவன் தலைவியோடு சேர்ந்தே அத்துறவை மேற்கொள்ளலாம் என்பதையும் இலக்கண நூலார் வலியுறுத்தியுள்ளனர்.

6.2 வரையறைகள்

அகப்பொருள் இலக்கணத்தில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்களுக்கு உரிய விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. முதற்பொருள் : நிலமும், அதைச் சார்ந்த பொழுதுகளும்

2. சிறு பொழுது : ஒரு நாளின் ஐவகைப்பட்ட கூறுபாடு

3. பெரும் பொழுது : ஓர் ஆண்டின் அறுவகைப்பட்ட உட்பிரிவுகள்

4. கருப்பொருள் : ஐவகை நிலங்களில் இடம் பெறும் உயிருள்ள, உயிரற்ற பொருள்கள்.

5. உரிப்பொருள் : ஐவகைப்பட்ட நிலத்திற்குரிய ஒழுக்கம்.

6. நிமித்தம் : அகப்பொருள், உரிப்பொருள் (ஒழுக்கம்) தொடர்பான முன் பின் செயல்பாடுகள்

7. கைகோள் : தலைவன் தலைவி இருவரும் கைக்கொள்ளும் ஒழுக்க நடைமுறைகள்

8. களவு : மறைமுகக் காதல் வாழ்க்கை

9. கற்பு : வரைவு என்னும் திருமணத்திற்குப் பிந்தைய இல்லற வாழ்க்கை

10. கைக்கிளை : தலைமக்களில் ஒருவருக்குத் தோன்றும் காதல்

11. பெருந்திணை : பொருத்தம் இல்லாத காதல்

12. குறிப்பறிதல் : தலைவிக்குத் தன் மீது விருப்பம் உள்ளதா என்பதை அவளது பார்வை வழியாகத் தலைவன் புரிந்து கொள்ளுதல்.

13. இயற்கைப் புணர்ச்சி : தலைவனும் தலைவியும் முதன் முதலாகத் தாமே கண்டு கூடுவது.

14. இடம் தலைப்பாடு : தலைமக்கள் கூடி மகிழ்ந்த குறிப்பிட்ட இடத்திலேயே மீண்டும் (மறுநாளும்) சந்திப்பது.

15. பாங்கன் கூட்டம் : தலைவன், தன் தோழன் மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது.

16. பாங்கியிற் கூட்டம் : தலைவன் தோழி மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது.

17. உள்ளப் புணர்ச்சி : தலைமக்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு மகிழ்தல்.

18. மெய்யுறு புணர்ச்சி : உள்ளத்தால் அன்பு கலந்து ஒன்றிய தலைமக்கள் இருவரும் உடலால் சேரும் சேர்க்கை

19. பூத்தரு புணர்ச்சி : தலைமகன் தலைவியின் கூந்தலில் மலர்க் கொத்தைச் சூட, அவனையே தலைவனாகத் தலைவி மனத்தளவில் முடிவு செய்தல்.

20. புனல் தரு புணர்ச்சி : தலைவி ஆற்று வெள்ளத்தில் மகிழ்ந்து நீராட, அப்போது நிகழ்ந்த இடையூற்றில் இருந்து மீட்ட ஆடவனையே தனக்குரிய காதல் தலைவனாகக் கொள்ளுதல்.

21. களிறு தரு புணர்ச்சி : தலைவி தினைப் புனம் காவல் புரிந்த காலத்தில் களிறு (யானை) ஒன்றின் தாக்குதலில் இருந்து தன்னைக் காத்தவனையே தலைவனாக ஏற்றல்.

22. மதியுடன்பாடு : தலைவியின் களவுக் காதலைத் தோழி அறிந்து கொள்ளுதல்.

23. நேர்தல் : பாங்கன், தலைவனது கருத்துக்கு உடன்பட்டு, செயல்பட முடிவு செய்தல்.

24. முன்னுற உணர்தல் : தலைவியை, உற்றுநோக்கி, தோழி அவளது காதலை உணர்தல்.

25. குறையுற உணர்தல் : தலைவன் வந்து தன் குறையைக் கூற, அதன் வழித் தோழி தலைவியின் காதலை உணர்தல்.

26. சேட்படை : தலைவனது வேண்டுகோளைத் தலைவி உடனடியாக ஏற்காமல் மறுப்பது.

27. குறைநயப்பித்தல் : தலைவனின் மனக்குறையைத் தோழி ஏற்றல்.

28. மடல் : பனை ஓலையால் செய்யப்பட்ட குதிரை வடிவம்.

29. மடல் கூற்று : தலைவன் தலைவி மீது தனக்குள்ள காதலைப் புலப்படுத்தி மடலேறுவேன் என்று சொல்வது.

30. மடல் விலக்கு : தலைவன் மடலேறுதல் கூடாது என்று தோழி தடுத்துப் பேசுவது.

31. குறி இடம் : தலைவனும் தலைவியும் சந்திக்கும் இடம்.

32. பகற்குறி : பகலில் தலைமக்கள் சந்திக்கும் இடம்.

33. இரவுக் குறி : இரவில் தலைமக்கள் சந்திக்கும் இடம்

34. குறி இடையீடு : தலைமக்கள் குறியிடத்தில் சந்திக்கும் நிலைக்கு ஏற்படும் இடர்ப்பாடு.

35. அல்லகுறிப் படுதல் : இரவுக் குறியில் தலைவனது வருகைக்கான அறிவிப்பைப் பிழையாகப் புரிந்துகொண்டு ஏமாற்றம் அடைதல்.

36. அறத்தொடு நிற்றல் : தலைவியின் காதலை உரியவருக்கு உரியவாறு எடுத்துரைத்துக் கற்பு வாழ்வை மலரச் செய்யும் அருஞ்செயல்.

37. முன்னிலை மொழி : ஒரு செய்தியை நேரடியாக உரியவரிடம் கூறுதல்.

38. முன்னிலைப் புறமொழி : ஒரு செய்தியை உரியவரிடம் நேரடியாகக் கூறாமல் அவர் முன்னிலையில் வேறு யாருக்கோ கூறுவது போலச் சொல்லுதல்.

39. இற்செறிப்பு : தலைவி வெளியில் செல்லாதவாறு வீட்டுக் காவலில் வைத்தல்.

40. அறப்புறம் காவல் : அறமன்றங்கள், ஆலயங்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதற்காகத் தலைவியைப் பிரிவது.

41. வாயில்கள் : தலைவியின் ஊடலை நீக்கி மீண்டும் தலைவனை ஒன்று சேர்க்கும் செயல் புரிபவர்கள்.

42. வரைவு கடாதல் : தோழியோ தலைவியோ, தலைவனிடம் திருமணத்தை வற்புறுத்துதல்.

43. வரைவு மலிதல் : திருமணம் தொடர்பான முயற்சிகள் தொடங்கி, தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள்.

44. ஆற்றாமை : தலைவனது பிரிவைத் தாங்காமல் தலைவி வருந்துதல்.

45. உவர்த்தல் : தலைவனது களவுத் தொடர்பை – அதுவே தொடர்வதைத் தோழி வெறுத்தல்.

46. செலவு அழுங்குதல் : தலைவன், தலைவியைப் பிரிந்து செல்லும் செயல்பாட்டை உடனே மேற்கொள்ளாமல் தாமதப்படுத்துதல்.

47. வன்புறை – 1 : தலைவியின் ஐயத்தைத் தீர்க்கும் நோக்கில் தலைவன் உண்மையை வற்புறுத்திக் கூறுதல்.

48. வன்புறை – 2 : தோழி, தலைவியை இடித்துரைத்து அறிவுரை கூறுதல்.

49. வன்புறை – 3 : தலைவனது பிரிவு அவசியமானது; அதனை ஏற்றுப் பொறுத்திருத்தலே பொருத்தமுடையது என்று தோழி கூறுதல்.

50. வன்பொறை : தலைவி, தன் மெல்லிய இயல்பிற்கு மாறாகத் தோழியின் அறிவுரைகளுக்குப் பிறகு, தலைவனது பிரிவைப் பொறுத்துக் கொண்டிருத்தல்.

51. மருளுற்று உரைத்தல் : தலைவி பிரிந்து சென்றபோது தலைவன் மயக்கம் கொண்டு பேசுதல்.

52. தெருளுற்று உரைத்தல் : தலைவி பிரிந்து சென்றபோது தலைவன் தெளிவு பெற்றுப் பேசுதல்.

53. தெய்வம் தெளிதல் : இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைத் தன்னோடு இணைத்த தெய்வம் இடந்தலைப்பாட்டிலும் அவ்வாறு செய்யும் என்று தலைவன் தெளிவுடன் பேசுதல்.

54. விடை தழாஅல் : தலைவன் ஆற்றல் மிகுந்த ஓர் எருதினைத் தழுவி அடக்குதல். இதனை ஏறு தழுவுதல் என்றும் கூறுவர்.

55. குற்றிசை : தலைவன் தலைவியை முற்றிலுமாகத் துறந்து நிற்றல்.

56. குறுங்கலி : தன்னை முற்றிலுமாகத் துறந்து நீங்கிய தலைவனைத் தலைவி பழிதூற்றிப் பேசுதல்.

57. சுரநடை : தலைவியோடு சென்ற தலைவன் இடைவழியில் அவளை இழந்து அதற்காக வருந்துதல்.

58. முதுபாலை : தலைவனோடு சென்ற தலைவி இடைவழியில் அவனை இழந்து அதற்காகப் புலம்புதல்.

59. தாபத நிலை : தலைவனை இழந்த தலைவி மேற்கொள்ளும் தவ வாழ்க்கை.

60. தபுதார நிலை : தலைவியை இழந்த தலைவன் மேற்கொள்ளும் தனிமை வாழ்க்கை.

61. போக்கு : தலைவன் தலைவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லுதல். இதுவே உடன்போக்கு என்றும் கூறப்படும்.

62. கற்பொடு புணர்ந்த கவ்வை : தலைவியின் காதலைப் பற்றிப் பலர் பேசும் அலர் எழுந்து அதன் தொடர்ச்சியாய் நிகழும் நிகழ்ச்சிகள்.

63. மனை மருட்சி : இதனை அனை மருட்சி என்றும் கூறுவர். நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு தலைவியின் பிரிவிற்காக வருந்துதல்.

64. மீட்சி – (1) : உடன்போக்காகச் சென்ற தலைவியைத் தேடிச் சென்ற செவிலி அவளைக் காணாமல் திரும்பி வருதல்.

65. மீட்சி – (2) : உடன்போக்காகச் சென்ற தலைவனும் தலைவியும் மீண்டு வருதல்.

66. பிரமம் : தகுதியுடைய பிரம்மசாரிக்குப் பெண்ணைக் கொடுப்பது.

67. பிரசாபத்தியம் : தலைவன் தலைவி இருவரது பெற்றோரும், உடன்பட்டுத் திருமணம் செய்து வைப்பது.

68. ஆரிடம் : ஒன்றோ இரண்டோ பசுவும், காளையும் தானமாகப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது.

69. தெய்வம் : வேள்விகள் பலவும் இயற்றும் ஓர் வேள்வி ஆசிரியனுக்குப் பெண்ணைக் கொடுப்பது.

70. கந்தர்வம் : கொடுப்போரும், கேட்போரும் இன்றித் தலைமகனும், தலைமகளும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது.

71. ஆசுரம் : பெண்ணின் தந்தைக்குப் பணம் கொடுத்து, பெண்ணுக்கும் அணிகலன்களை அணிவித்து, அப்பெண்ணை வாங்கி மணந்து கொள்வது.

72. இராக்கதம் : தலைவியை அவளது விருப்பமோ அவளது உறவினர் ஒப்புதலோ இன்றி அடைவது.

73. பைசாசம் : உறங்கிய பெண், (கள் உண்டு) களித்திருக்கும் பெண், பித்துப்பிடித்த பெண் முதலானவர்களுடன் கூடிக் களிப்பது.

74. செவ்வணி : பூப்பெய்திய தலைவி நீராடியதை அறிவிக்கச் செய்யும் முறை. தோழிக்குச் சிவப்பு ஆடையும், சிவந்த அணி மணிகளும் அணிவித்தல்.

75. வெள்ளணி : புதல்வனைப் பெற்றுப் பதினைந்து நாள்கள் கடந்து நெய்யாடுதல் முடிந்தமையைத் தோழி மூலமாகத் தலைவனுக்கு உணர்த்துதல். தோழிக்கு வெள்ளாடை, வெள்ளை அணிகளை அணிவித்தல்.

76. புனைந்துரை : அகப்பாடலின் நாடகப் பாங்கினைக் குறிப்பது, கற்பனையானது.

77. உலகியல் : உலகியல்பை உள்ளவாறே அகப்பாடலில் அமைப்பது.

78. பாலது ஆணை : முன்பின் அறிமுகம் இல்லாத தலைவன் தலைவியை ஒன்று சேர்த்து வைக்கும் ஊழ்.

79. யாழோர் கூட்டம் : கந்தர்வர் எனப்படும், வானில் திரியும் தலைமக்கள் கூடி மகிழ்வது.

80. கிளவித் தொகை : அகப்பொருள் செய்திகளைப் பிரித்து விளக்கும் துறைத் தொகுதி.

81. கிளவித் தலைவன் : அகப்பாடலில் இயற்பெயர் சுட்டப் படாமல் இடம்பெறும் தலைவன்.

82. பயன் : அகப்பாடலில் ஒருவர் கூற்று நிகழ்த்த அதனால் அடையும் பயன்.

83. முன்னம் : ஓர் அகப்பாடல் குறிப்பாக உணர்த்தும் செய்தி.

84. மெய்ப்பாடு : உள்ளத்து உணர்வுகள் பேச்சில் வெளிப்படுவதன் முன்னர் உடல் வழியாகப் வெளிப்படுவது.

85. எச்சம் : சொல்லோ, கருத்தோ விடுபட்டு நின்று அதையும் உணர்ந்து பொருள் கொள்ளும் இலக்கண அமைப்பு.

86. உள்ளுறை : புலவன் தான் சொல்லுகிற உவமத்தோடு ஒத்த வேறொரு பொருள் புலப்படுமாறு அமைக்கும் அணி அழகு.

87. இறைச்சி : புலவன் செய்யுளில் கூறிய பொருளுக்குப் புறத்தேயும் வேறு ஓர் கருத்து புலப்படச் செய்வது.

88. திணை மயக்கம் : முதற்பொருளும், கருப்பொருளும் ஒரே திணைக்கு உரியதாக அமைய, உரிப்பொருளாகிய ஒழுக்கம் வேறொரு திணைக்குரியதாக மாறியிருப்பது.

6.3 வகைப்பாடுகள்

நம்பியகப் பொருள் நூல் முழுவதும் இடம் பெற்ற இலக்கணச் செய்திகளில் அமைந்த வகைப்பாடுகளை ஒருங்கு தொகுத்து ஓரிடத்தே காண்பதாகக் கீழ்க்காணும் பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது.

இலக்கணப் பிரிவு     அதன் வகை   இவையே அவை

தமிழ் இலக்கணம்     5    எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

பொருள் இலக்கணம்   2    அகப்பொருள், புறப்பொருள்

அகப்பொருள் திணைகள்   3    கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை

ஐந்திணை          5     குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்

கைக்கிளை    2    அகப்பொருட் கைக்கிளை, அகப்புறக் கைக்கிளை

அகப்பொருட் கைக்கிளையின் பாகுபாடு  4    காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல்

பெருந்திணை   2    அகப்பொருட் பெருந்திணை, அகப்புறப் பெருந்திணை

அகப்பொருள் சொல்லும் முறை  2 புனைந்துரை, உலகியல்

முதற் பொருள் 2    நிலம், பொழுது

பொழுது       2     பெரும் பொழுது, சிறு பொழுது

சிறுபொழுது    5    மாலை, யாமம், வைகறை, எற்பாடு, நண்பகல்

பெரும்பொழுது   6    இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக் காலம்

கைகோள்      2    களவு, கற்பு

களவுப் புணர்ச்சி நிலை    4    இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கன் கூட்டம், பாங்கியிற் கூட்டம்

குறியிடம்      2    பகற் குறி, இரவுக் குறி

பகற் குறி வகை  3    இரங்கல், வன்புறை, இற்செறிப்பு உணர்த்தல்

பகற் குறி இடையீடு    3  விலக்கல், சேறல், கலக்கம்

இரவுக் குறி    9    வேண்டல், மறுத்தல், உடன்படுதல், கூட்டல், கூடல், பாராட்டல், பாங்கிற் கூட்டல், உயங்கல், நீங்கல்

இரவுக் குறி இடையீடு   2    அல்லகுறிப்படுதல், வரும் தொழிற்கு அருமை

வரைவு   2         களவு வெளிப்படும் முன்பு வரைதல், களவு வெளிப்பட்ட பின்பு வரைதல்

அறத்தொடு நிற்கும் முறை     2      முன்னிலை மொழி, முன்னிலைப் புறமொழி

கற்பு  2    களவின் வழி வந்த கற்பு, களவின் வழி வாராத கற்பு

கற்பில் பிரிவுகள்   6      பரத்தையிற் பிரிவு, ஓதல் பிரிவு, காவல் பிரிவு, தூதிற் பிரிவு, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு

காவல் பிரிவு    2    அறப்புறம் காவல், நாடு காவல்

மறையோர் திருமண முறை 8    பிரம்மம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தர்வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம்

வினை  2        நல்வினை, தீவினை

இயற்கைப் புணர்ச்சி    2      தெய்வத்தால் எய்துவது, தலைவியால் எய்துவது

வன்புறை     2    ஐயம் தீர்த்தல், பிரிவு அறிவுறுத்தல்

பிரிவுழிக் கலங்கல்      2     மருளுற்று உரைத்தல், தெருளுற்று உரைத்தல்

இடம்தலைப்பாடு   3     தெய்வம் தெளிதல், கூடல், விடுத்தல்

பாங்கி மதியுடன்பாடு   3    முன்னுற உணர்தல், குறையுற உணர்தல், இருவரும் உள்வழி அவன்வர உணர்தல்

வரைதல் வேட்கையின் காரணம்    3    அச்சம், உவர்த்தல், ஆற்றாமை

வரைவு கடாதல்    4        பொய்த்தல், மறுத்தல், கழறல், மெய்த்தல்

களவுப் பிரிவு      2     ஒருவழித் தணத்தல், வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல்

ஒருவழித் தணத்தல்    7    செலவு அறிவுறுத்தல், செலவு உடன் படாமை, செலவு உடன்படுத்தல், செலவு உடன்படுதல், சென்றுழிக் கலங்கல், தேற்றி ஆற்றுவித்தல், வந்துழி நொந்துரை

வரைவு வகை   2    பெண்ணின் பெற்றோர் உடன்பட்டு வழங்கும் மகட்கொடை, தலைமக்கள் தாமே நிகழ்த்தும் வரைவு

வரைவின் கிளவிகள்     2    வரைவு மலிதல், அறத்தொடு நிற்றல்

உடன்போக்கு    8    போக்கு அறிவுறுத்தல், போக்கு உடன்படாமை, போக்கு உடன்படுத்தல், உடன்படுதல், போக்கல், விலக்கல், புகழ்தல், தேற்றல்

கற்பொடு புணர்ந்த கவ்வை  5    செவிலி புலம்பல், நற்றாய் புலம்பல், கவர்மனை மருட்சி, கண்டோர் இரக்கம், செவிலி பின்தேடிச் செல்லுதல்

மீட்சி   4    தெளித்தல், மகிழ்ச்சி, வினாதல், செப்பல்

தலைவி தோழிக்குச் செய்யும் அணி     2    செவ்வணி, வெள்ளணி

அகப்பாட்டு உறுப்புகள்      12    திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள் வகை, துறை

காலம்  3    இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்

மெய்ப்பாடு   8    நகை, அழுகை, இளிவரல், மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை

எச்சம்     2    சொல்லெச்சம், குறிப்பெச்சம்

அகப்பாட்டினுள் வரும் பொருள்      2    உவமைப் பொருள், இறைச்சிப் பொருள்

உவமைப் பொருள்      2    உள்ளுறை உவமம், வெளிப்படை உவமம்

வெளிப்படை உவமம்    4    வினை உவமம், பயன் உவமம், மெய் உவமம், உரு உவமம்

அகப்பாட்டினுள் பாடப்படும் தலைவர்   2    பாட்டுடைத் தலைவன், கிளவித் தலைவன்

பாட்டுடைத் தலைவனின் பெயர்கள்   5    நிலப்பெயர், வினைப்பெயர், பண்புப்பெயர், குலப் பெயர், இயற்பெயர்

பொருள் வகை (பொருள்கோள்)     9    புனல் யாற்றுப் பொருள்கோள் முதலியன.

இல்வாழ்க்கைக் கூறுகள்    4    தலைவன் மகிழ்ச்சி, தலைவி மகிழ்ச்சி, தோழி மகிழ்ச்சி, செவிலி மகிழ்ச்சி

பரத்தையிற் பிரிவு    4    வாயில் வேண்டல், வாயில் மறுத்தல், வாயில் நேர்வித்தல், வாயில் நேர்தல்

ஊடல் கிளவிகளின் வகை    2    உணர்த்த உணரும் ஊடற்குரியவை, உணர்த்த உணரா ஊடற்குரியவை

6.4 தொகுப்புரை

இப்பாடத் தொகுப்பின் மூலமாகக் கற்றுணர்ந்த செய்திகளாவன :

1. அகப்பொருள் தொடர்பான இலக்கண அமைப்புகளை உணர்ந்தோம்.

2. அகப்பொருள் இலக்கணத்தில் சிற்சில அமைப்புச் சிறப்புகளை அறிந்தோம்.

3. பாலது ஆணை அல்லது தலைவியின் முயற்சி இயற்கைப் புணர்ச்சிக்குக் காரணமாதலைக் கற்றறிந்தோம்.

4. இரு வகைக் கைக்கிளைக்கு இடையே அமைந்த நுட்ப வேறுபாட்டை உணர்ந்தோம்.

5. அகப்பொருள் வாழ்வியலில் தோழியின் முதன்மைச் சிறப்பை உணர்ந்து தெளிந்தோம்.

6. அகப்பொருள் மரபுகள் பலவற்றைக் கற்றுணர்ந்தோம்.

7. அகப்பொருள் இலக்கண அறிவுபெறும் சூழலில் பயன்படும் அருஞ்சொற்கள், வரையறைகள், வகைப்பாடுகள் போன்றவற்றை ஒருங்கு தொகுத்து உணர்ந்தோம்.