அந்நாளைய இலக்கியங்கள் பெரும்பான்மையும் வீட்டையும் நாட்டையும் அஃதாவது, காதலையும் வீரத்தையும் பற்றியனவாகவே தோன்றின. வீடு என்பது காதல் வாழ்வு; நாடு என்பது போர்க்கள வாழ்வு. வேறுவகையில் சொன்னால், காதலும் வீரமும் இலக்கியங்களின் பாடுபொருளாயின என்றுதான் குறிக்க வேண்டும். பாடுபொருள் என்பது காலத்திற்குக் காலம் விரிந்து கொண்டே போவது அல்லவா?
இலக்கு-இலக்கணம். சிறந்த நடைக்கு எடுத்துக்
காட்டாக அல்லது கற்றோர் பின்பற்றும் இலக்காகக்
கூறப்பெறும் மொழியமைதி (Grammar).
எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்
பதமாம் – (நன்னூல்)
எனவே, இதலிருந்து காரண-காரிய முறைப்படி,
எழுத்து–> சொல்–> பொருள்,
என மூவகை இலக்கணங்கள் வகுக்கப்பட்டுள்ளமை தெரிய வரும்.
பண்டைநாள் இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் பாடுபொருளாகக் கொண்டு படைக்கப் பெற்றன என்று பார்த்தோம். இந்த இரண்டு பொருண்மையையும் குறித்துத் தோன்றிய இலக்கணம் பொருள் இலக்கணம் எனப்பட்டது. இவ்விரு பொருண்மைகளுள் ஒன்றாகிய காதல் வாழ்வைப் பற்றி வகுக்கப்பட்ட இலக்கணம் அகப்பொருள் இலக்கணம் என்றும், போரினை மையமாகக் கொண்ட போர்த்திற வாழ்வைக் குறித்து வரையப்பட்ட இலக்கணம் புறப்பொருள் இலக்கணம் என்றும் பொருள் இலக்கணம் வகைமைப்பட்டு விளங்குகின்றது.
இறையனார் களவியலுரை எழுதப் பெற்ற காலத்திற்கு முன்னமே அல்லது கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னரே, தொல்காப்பியரின் செய்யுளியலை ஒட்டித் தனித்த யாப்பிலக்கண நூல்கள் தோன்றிவிட்டன. சிலர், தொல்காப்பியரின் செய்யுளியலை யாப்பதிகாரம் என வழங்கவும் தலைப்பட்டிருந்தனர். எனவேதான் இறையனார் களவியல் உரைகாரர் யாப்பு ஒன்றினையும் கூட்டி இலக்கண வகை நான்கு என்றார்.
நன்னூல் ஆசிரியர் பவணந்தியார்க்கு முன்பே, அஃதாவது கி.பி.13ஆம் நூற்றாண்டிற்கு முன்னமே, தொல்காப்பியரின் உவம இயலையும், வடமொழித் தண்டியாசிரியரின் அலங்காரத்தையும் ஒட்டி அணியிலக்கண நூல்கள் தோன்றத் தொடங்கின. நன்னூல் காலத்தில் இலக்கணம் ஐவகைப்பட்டதை அறிகின்றோம். வண்ணச்சரபம் தவத்திரு. தண்டபாணி சுவாமிகள் புலமை இலக்கணம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். இன்று, தமிழிலக்கணம் அறுவகைப்பட்டு நிற்கின்றது. எனினும், ஐவகை இலக்கணம் என்பதே பெருவழக்கு.
அகம் என்பதன் விளக்கம்
அகமாவது, இவ்வுலகத்து வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை முறைகள் இரண்டனுள் ஒன்றாகும். மற்றொன்று புறம்.
‘அகமாவது, ஒத்த அன்பினராகிய தலைவனும் தலைவியும் தம்முள் கூடுகின்ற காலத்துப் பிறந்து, அக்கூட்டத்தின் பின்னர், அவ்விருவராலும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய், எப்பொழுதும் உள்ளத்து உணர்வாலேயே அனுபவிக்கப்படும் இன்பம்; இன்பம் பற்றி அகத்தே நிகழும் ஒழுக்கத்தை அகமென்றது ஆகுபெயர்’ என்றதொரு விளக்கத்தை நச்சினார்க்கினியர் வரைந்துள்ளார். இங்கு ஆகுபெயர் என்றது இடவாகு பெயரை. இடம் – மனம்; அகம்.
புறம் என்பதன் விளக்கம்
புறமாவது, மேற்கூறிய ஒத்த அன்புடையார் தாமேயன்றி, எல்லாராலும் அனுபவித்து உணரப்பட்டு, இவை இவ்வாறிருந்தன என்று பிறருக்கும் புறத்தார்க்கும் கூறப்படுவதாய் அறமும் பொருளும் என்னும் இயல்பினை உடையதாய்ப் புறத்தே நிகழும் ஒழுக்கமாம். இவ்வொழுக்கத்தைப் புறமென்றதும் ஆகுபெயர் இலக்கணம் பற்றியேயாம். புறம்-வெளி. இதுவும் அகம் என்பதைப் போல இடவாகு பெயரே,
வெண்பா மாலை என்பது ஆசிரியர் ஐயனாரிதனார் இட்ட பெயர். வெண்பாமாலை என்னும் பொதுமையினின்றும் பிரித்தறியப் புறப்பொருள் என்பது முன்னர் இணைக்கப் பெற்றது.
பெயர்க்காரணம்
இவ்வாசிரியர் இந்நூலுக்குப் பெயரிட்ட முறையைச் சிந்தித்துப் பார்த்தால் பெயர்க்காரணமும் புலனாகும். பொருள் இலக்கணத்தின் ஒருகூறாகிய புறப்பொருள் பற்றிப் பேசுவதால் புறப்பொருள்; பாவகைகளுள் ஒன்றாகிய வெண்பாவால் இயற்றப் பெற்றது ஆதலால், புறப்பொருள் என்பதனைச் சார்ந்து வெண்பா என்ற சொல் வைக்கப்பட்டுள்ளது. மாலை என்பதன் பொருள் வரிசை. பூக்களைக் கொண்டு தொடர்ச்சி அறாமல் ஓர் ஒழுங்கு முறையில் வரிசையாகத் தொடுப்பதால் உருக்கொள்வது பூமாலை அல்லவா? அது போல, வெண்பா யாப்பு என்ற பூவைக் கொண்டு போர் பற்றிய ஒழுகலாறுகளைத் தொடர்ச்சி அறாத வண்ணம் ஓர் ஒழுங்குறத் தொடுக்கப்பட்டமை கருதி மாலை என்ற சொல் புறப்பொருள் வெண்பா என்பதன் பின் வைக்கப்பட்டுள்ளது. எனவே, புறப்பொருள் வெண்பா மாலை எனப் பெயர் பெற்றதன் காரணம், ‘புறப்பொருளைப் பற்றி வெண்பாவினால் ஓர் ஒழுங்கமையத் தொடர்ச்சி இற்றுப் போகாத வகையில், பூமாலையைப் போல் தொடுக்கப்பட்ட பாமாலை’ என்பதாகும்.
நூலின் சிறப்பு
தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் புறப்பொருள் வெண்பாமாலையை வழிநூல் என்று குறிப்பிடுகிறார். பன்னிரு படலம் கிடைக்காததனால் புறப்பொருள் வெண்பா மாலை முதல் நூல் போலவே கருதப்படுகிறது. இந்நூற் செய்யுட்களை ஆளாத உரையாசிரியப் பெருமக்கள் ஒருவரும் இலர் என்று உறுதியாகக் கூறலாம். இலக்கணக் கொத்து என்னும் நூலின் ஆசிரியர் சாமிநாத தேசிகர், நன்னூலாரையும் நன்னூலையும்,
முன்னோர் ஒழியப் பின்னோர் பலரினுள்
நன்னூலார் தமக்கு எந்நூ லாரும்
இணையோ என்னும் துணிவே மன்னுக
என்ற வகையில் ஏத்துவார். இவ்வகையில் புறப்பொருள் வெண்பா மாலையையும் அதன் ஆசிரியரையும் போற்றலாம். ஏனெனில், அகப்பொருளில், நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம் என்ற நூலுக்குப் பின்னரும் மாறனகப் பொருள், இலக்கண விளக்கம், களவியற் காரிகை போன்றன தோன்ற, புறப்பொருள் வெண்பா மாலைக்குப் பின் புறப்பொருள் இலக்கணத்தைக் கூறும் தனி இலக்கண நூல்கள் எவையும் தோன்றவில்லை என்பது ஒரு காரணம்; ஐந்திலக்கணம் கூறவந்த பின்னாளைய நூல்களும் இத்தகைய விரிவையும் சிறப்பையும் கொண்டிருக்கவில்லை என்பது மற்றொரு காரணம். இவற்றால், இதனது சிறப்புப் புலப்படுவதை அறியலாம்.
நூலின் ஆசிரியர்
புகழ் பொருந்திய இப் புறப்பொருள் வெண்பா மாலையைத் தொடுத்தவர் – இயற்றியவர் – சேரவேந்தர் பரம்பரையில் தோன்றிய ஐயனாரிதனார் என்னும் இயற்பெயரினர் ஆவார். ஆர் – சிறப்புப் பெயர் விகுதி; புலமை நலம் கருதி வழங்கப்பட்டுள்ளது. இவர், சேரர் மரபினர் என்பதை,
ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட
வாங்குவில் தடக்கை வானவர் மருமான்
ஐயனா ரிதன் அகலிடத் தவர்க்கு
மையறு புறப்பொருள் வழாஅலின்று விளங்க
வெண்பா மாலை எனப் பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன்
என வரும் சிறப்புப் பாயிரப் பகுதி தெரிவிக்கின்றது.
ஆசிரியரின் சமயம்
ஐயனாரிதனார் சைவ சமயத்தைச் சார்ந்தவர் ஆவார். புறப்பொருள் வெண்பாமாலைக்கு இவர் எழுதியுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இரண்டு. இவற்றுள் ஒன்று விநாயகப் பெருமானைப் பற்றியது; மற்றொன்று சிவபெருமானைப் பற்றியது. எனவே இவரது சமயம் சைவ சமயம் என்பது புலனாகும்.
ஆசிரியரின் காலம்
ஐயனாரிதனார் வாழ்ந்த காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.12ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாகலாம். திரு.கா.சு.பிள்ளையவர்கள் கி.பி.8ஆம் நூற்றாண்டு என்கின்றார். நூற்றாண்டு வரிசையில் இலக்கிய வரலாற்றை எழுதிய அறிஞர் மு.அருணாசலம் அவர்கள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு என்கின்றார்கள். கி.பி.12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியினரான இளம்பூரணர் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுள்களைத் தமது உரையிடை ஆளுதலான், இளம்பூரணர்க்கு முன்னவர் இவர் என்பது வெளிப்படை.
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று;இவ் வுலகத்து இயற்கை (76)
போர் உணர்வை – வீரரின் மறப்பண்பைச் சங்கப் புலவர்கள் பலரும் பாராட்டியுள்ளமைக்குச் சான்றுகள் தொகைநூல்களுள் பலவாகக் காணப்படுகின்றன. ஏன்? இசைப் பாணர்கள் போர்க்களத்திற்கே சென்று பாராட்டிப் பாடியிருப்பதும் நாம் அறிவது தானே!
போர், சமுதாயத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டுள்ளது. கருதவில்லையென்றால், அகவாழ்க்கையுள் கற்புக்காலப் பிரிவுகளுள் பகைவயின் பிரிவு, துணைவயின் பிரிவு ஆகியன இடம் பெற்றிருக்குமோ?
மழையின்மை, பெருமழை, கடல் சீற்றம் போலும் இயற்கை நிகழ்வுகளால் மன்னனின் கருவூலம் காலியாகும் போது மன்னனுக்குக் கைகொடுப்பது ‘தெறுபொருள்’ (திறைப் பொருள்) ஒன்றே. அறம் கூற வந்த வள்ளுவரே மன்னர்க்குத் தெறுபொருள் வேண்டும் என்பதன் வாயிலாகப் போருக்குப் பச்சைக் கொடி அசைத்து விடுகின்றார்.
உறுபொருளும் உல்கு பொருளும் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள் – (756)
தெறுபொருள் பொன்னாசையைக் குறிப்பது. ஏனைய மண்ணாசை பெண்ணாசைகள் கூடப் போர்க்குரிய காரணங்களாகி விடுகின்றன. பெரும்பான்மையும் இந்த மூன்று காரணங்களாலேயே போர் நடந்திருப்பதைத் தமிழிலக்கியங்கள் குறிக்கின்றன.
போர்க்கான சிறப்புக் காரணங்கள்
தமிழகத்துப் போர்களுக்குரிய பொதுக் காரணங்களாக, தமிழ்நூல்களின் துணைகொண்டு கீழ்க்காணும் வகையில் பட்டியலிடுகிறார் முனைவர் ந.சுப்பிரமணியன் அவர்கள்.
(1) போர் மாந்தனுடைய இயற்கைச் செயல்.
(2) அரச குலப் பகைமைகள்
(3) வெற்றியையும் நாடு பிடித்தலையும் பெரிதும் விரும்புதல்
(4) பிறரிடத்து அதிகாரம், பெருமை, செல்வம், புகழ் என்பவை இருத்தலைப் பொறுக்கமுடியாத மனநிலை.
(5) மறக்குலத்தால் உந்தப் பெற்ற மறவுணர்ச்சி.
(6) போர்க்களத்தில் இறந்துபட்டோர் துறக்கம் அடைவர் என்ற நம்பிக்கை.
(7) மகட்கொடை (பெண் கொடுக்க) மறுத்தலால் ஏற்படும் மனத்தாங்கல்.
(8) படையும் போர் மரபுகளும் மன்னனுடைய புகழை மிகுவிக்கும் என்னும் எண்ணம்.
(9) நடுகல்லில் நிற்றல் வேண்டும் என்னும் அவா. (நடுகல் = போரில் இறந்தவரின் நினைவாக நடப்படும் கல். அதில் அவர் பெயரும் பெருமையும் பொறிக்கப்பட்டிருக்கும்.)
(10) கடிமரம் (காவல் மரம்) புனிதமானது என்ற எண்ணம்
(11) எல்லைகள் நிர்ணயிக்கப்படாத சிறுநாடுகள் இருந்தமை; சிற்றரசர்கள் முடியுடைய வேந்தர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்ற மனப்பான்மை. திறை செலுத்தும்படி வற்புறுத்தல், நிர்ணயிக்கப்படாத திறைப்பொருள் அளவு முதலியன.
(12) ஆதிக்க மனப்பான்மை முடிமன்னர்களிடம் இருந்தமை.
(13) போர், போரை விளைவித்தல்
போர் அறம்
திடுதிப்பென்று தாக்குவதற்கு இன்றுபோல் அன்று குண்டு பொழியும் பீரங்கிகள் இல்லை; அணுகுண்டுகள் இல்லை; ஏவுகணைகளும் இல்லை. அவர்களிடம் முன்னர்க் கூறியதுபோல அறத்திற்கும் ஏனை மறத்திற்கும் துணையாக நிற்கும் அன்புதான் இருந்தது. அவ்வன்பு அறவழியில் போரியற்ற அவர்களைச் செலுத்தியது. அறவழியிலேயே போரிட்டனர். பொதுமக்கட்கு ஏதம் வரலாகாது என்பது அவர்களின் கொள்கை. ஆதலால், தங்கள் இகலை வெளிப்படுத்த ஆநிரையைக் கவர்ந்தனர். முற்றுகைப் போரில் காவல் மரங்களை வெட்டினர்; சிலசமயம், பகை மன்னனின் மகளை மணத்தில் பெற வற்புறுத்தினர் அவ்வளவே.
ஆநிரை கவர்தல்
‘இன்ன நாளில் இன்ன போர்க்களத்தில் அரசர் இருவரும் போர் புரிய இருக்கின்றோம். இன்ன இன்னவர்கள் போர்க்களத்தினின்றும் விலகிச் சில காத தூரம் சென்று இருங்கள்’ என்று சொல்லிக் கொட்டும் முரசொலியைக் கேட்டு மக்கள் விலகுவர்; சில காதம் ஏகுவர். ஆநிரைகளால் ஏகல் இயலுமா? அவை நாட்டிற்காகப் பால் சுரப்பன; மன்னனது அரண்மனைக்கும் அவனுடைய பரிசனங்களின் (ஏவல் செய்வோர்) மனைக்கும் வளம் பயப்பன; திருக்கோயில் பூசனைக்கான ஐந்து பொருள்களை நல்குவன; தொழத்தக்கனவாகக் கருதப்படுவன; செல்வமென (மாடென)க் கருதப்படுவன; யாவற்றுக்கும் மேலாகப் ‘பொதுத்தாய்’ எனக் கருதப்பட்டு வருவன. ஆம். பால்நினைந்து ஊட்டுகின்ற ஈன்ற தாய், நமக்குச் சிறப்புத் தாய்; உலகக் குழந்தைகள் அனைத்துக்கும் தமது பாலைச் சுரத்தலால் ஆன் பொதுத்தாய் தானே. ஆன் இனம் பால் சுரக்க ஆன்ஏறு வேண்டுமல்லவா?
ஆவினத்தின் பயன்பாட்டைக் கருதியதால்தான் ஆநிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது என்று எண்ணுவதில் தவறில்லை. கொள்ளப்பட்டமை, அவற்றைத் துன்புறுத்தவோ, இந்நாள் போல வெட்டிச் சமைக்கவோ அல்ல. கவர்ந்த வீரர் அவற்றைக் காத்தனர்; வரும்வழியில் துன்புறுத்தாது செலுத்தினர். இதனைத் தொல்காப்பியரின் ‘நோயின்றுய்த்தல்’ என்னும் வெட்சித் துறையும், வெண்பா மாலையின் ‘சுரத்து உய்த்தல்’ என்னும் வெட்சித்துறையும் வெளிப்படுத்துகின்றன. மொத்தத்தில் ‘நிரை கவர்தல்’ என்பது பழங்காலத்தில் ஒரு பயனுடைய இராணுவ முன்னிகழ்ச்சி எனலாம்.
காக்கப்பட வேண்டியவர்கள்
போர் ‘மறம்’ என்றாலும் அதனை நிகழ்த்துவதில் அறம் மேற்கொள்ளப்பட்டது. போர் அறத்தை,
ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் மக்கட்
பெறாதோ ரும்எம் அம்புகடி விடுதும்
நும்அரண் சேர்மின்
என்ற எச்சரிக்கை மொழிகளில் காண்கின்றோம். இவ்வெச்சரிக்கை ஆவொழிந்த பார்ப்பனர் – பெண்டிர் – பிணியுடையார் – மக்கட் பெறாதார் ஆகியோருக்குப் பொருந்தும். ஆவுக்குப் பொருந்துமா? பொருந்தாது. அவற்றை உடையவனுக்கு இட்ட எச்சரிக்கையாகவே கொள்ளல் வேண்டும்.
இப்பாதுகாப்பு, போரின் முன்நிகழ்வு. இவ்வாறே, போர்க்களத்தின்கண் மேற்கொள்ள வேண்டிய அறநெறியும் உண்டு. இவ்வற நெறியான் காக்கப்பட வேண்டியவர்களைச் சிலம்பு அறிவிக்கின்றது.
சடையினர், உடையினர், சாம்பல் பூச்சினர்,
பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர்,
பாடு பாணியர், பல்இயத் தோளினர்,
ஆடு கூத்தர் ஆகி எங்கணும்
ஏந்துவாள் ஒழியத் தாந்துறை போகி
விச்சைக் கோலத்து வேண்டுவயின் படர்தர
- (சிலம்பு-26 ; 225-230)
என்ற சிலம்பின் அடிகளும், மேலும்,
பார்ப்பார் அறவோர் பசுபத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி
(மதுரைக்காண்டம், வஞ்சினமாலை, அடி, 52-54)
என்னும் இவரைத் தவிர்ந்த தீயவர்கள் மேல் தீ செல்லட்டும் என்ற கண்ணகியாரின் ஆணையும் காட்டும்.
திணை – துறை : பொருள்
திணை என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று ஒழுக்கம், ஒழுகலாறு என்பது. ஆற்றொழுக்கு எப்போதும் ஒரே சீராக இருப்பதுபோல, வாழ்வில் அமைய வேண்டிய நல்லவற்றை ஒழுகலாறு என்ற பெயரால் குறிப்பிட்டனர். பரந்து ஓடும் ஆற்றில் எவ்விடத்திலும் நீரை அடையலாம். எனினும், சில இடங்களைப் படைத்துக் கொண்டு அவற்றைத் துறையெனக் கூறி, அவ் விடத்தில் நீரை முகப்பதும், படிந்து நீராடுவதும் காண்கின்றோம். அவை படித்துறை எனப் பெறும். இவ்வாறே புறத்திணை ஒழுக்கமெனும் ஆற்றுக்கு, பிரிவு-கூறு-பகுதி என்ற பொருள்களத் தருவதாய துறை யென்னும் படிநிலைகளை (Steps) அமைத்துக் கொண்டனர். இன்ன நிகழ்வின் பின்னர் இன்னது நிகழும் என்ற வளர்ச்சிப் படிநிலைகளே துறை எனலாம்.
(1) வெட்சித் திணை
(2) கரந்தைத் திணை
(3) வஞ்சித் திணை
(4) காஞ்சித் திணை
(5) நொச்சித் திணை
(6) உழிஞைத் திணை
(7) தும்பைத் திணை
(8) வாகைத் திணை
(9) பாடாண் திணை
(10) பொதுவியல்
(11) கைக்கிளை
(12) பெருந்திணை
என்பனவாம்.
இத்திணைகளின் வரைவிலக்கணத்தையும் அவ்வத் திணைகளுள் வரும் துறைகளின் கருத்துகளையும் இனி வரும் பாடங்களில் விரிவாகப் படிக்கலாம். ஆதலால், திணைகள் கூறும் செய்தியைத் தொகுத்து நல்கும் பழஞ்செய்யுள் ஒன்றை மட்டுமே இங்குத் தருவது போதுமானது.
வெட்சி நிரைகவர்தல்; மீட்டல் கரந்தையாம்;
வட்கார்மேற் செல்வது வஞ்சியாம்; – உட்காது
எதிரூன்றல் காஞ்சி; எயில்காத்தல் நொச்சி;
அதுவளைத்தல் ஆகும் உழிஞை; – அதிரப்
பொருவது தும்பையாம்; போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்.
(நிரை – ஆநிரை, பசுக்கூட்டம்; வட்கார் = பகைவர்; உட்காது = அஞ்சாது; எதிரூன்றல் = எதிர்த்து வரும் படையைத் தடுத்து நிறுத்தல்; எயில் = கோட்டை, மதில், அரண்; பொருவது = போர் செய்வது; செரு = போர்)
இச்செய்யுள் போர் நிகழ்ச்சிகள் எட்டினையே குறிக்கின்றது. ஆகையால் ஏனைய ஒழிபு உள்ளிட்ட பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய நான்கும் நுவலும் செய்தி களையும் நோக்க வேண்டியுள்ளது.
பாடாண் திணையாவது, பாடப்படுகின்ற ஆண்மகன் ஒருவனுடைய சீர்த்தி, வலிமை, கொடை, தண்ணளி முதலியவற்றை ஆய்ந்து சொல்வதாகும். பொதுவியலாவது, வெட்சி முதலான திணைகட்கெல்லாம் பொதுவாகவுள்ளனவும் அத்திணைகளில் கூறாமல் தவிர்த்தனவும் ஆகிய இலக்கணங்களைக் கூறும் பகுதியாகும். கைக்கிளையாவது, ஒருதலைக் காமத்தைப் பற்றியது. பெருந்திணையாவது பொருந்தாக் காமம் பற்றியது. ஒழிபு என்பது பாடாண் திணைப் பகுதியிலும் வாகைத் திணைப் பகுதியிலும் கூறப்படாதுபோன புறத்துறைகளை உணர்த்துவது.
எயிலை (மதிலை) வளைத்து முற்றுகை இடுவது உழிஞை. முற்றுகையிடவும், எயிலைக் காப்பது நொச்சி. ஆதலால், உழிஞைத் திணையை அடுத்து நொச்சியை வைப்பது முறை என்பது போலத் தோன்றுகின்றது. இதனை, வெளிப்படுத்தும் சான்றுகள்:
உழிஞையும் நொச்சியும் தம்முள் மாறே – (பன்னிருபடலம்)
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
உட்குடை உழிஞை நொச்சி தும்பை என்று
இத்திறம் ஏழும் புறம்என மொழிப.
(பு.வெ.மாலை-நூ.19)
என்றாலும்,
எதிர் ஊன்றல் காஞ்சி; எயில் காத்தல் நொச்ச ;
அது வளைத்தல் ஆகும் உழிஞை
எனவரும் பழம்பாடலில் இடம் பெறும் ‘வைப்பு முறை’ பற்றி, ஐயனாரிதனார் நொச்சியை முன் வைத்துள்ளார் என்று கருத வேண்டியுள்ளது. வெள்ளம் வந்த பிறகு அணை போடல் ஆகாது; முன்னமேயே போட வேண்டும். அதுபோல, போர் வந்துற்ற போது காத்தலாகாது; முன்னரேயே காக்கப்பட்டு வரல் வேண்டும் என்பது ஆசிரியர்தம் நோக்கமாக இருக்கக் கூடும். இதுபற்றி நொச்சியை முன்னும் உழிஞையை அதன் பின்னும் வைத்திருக்கலாம் அல்லவா? நினைத்துப் பாருங்கள்!
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் என்னும் ஒன்பது திணைகளுக்கும் அவ்வத் திணைதோறும் திணை இலக்கணத்தைத் துறை வகையால் தொகுத்துரைக்கும் நூற்பாக்கள் ஒன்பதும் முதற்கண் அமைகின்றன. (9 நூற்பாக்கள்)
பத்தாவது படலம் பொதுவியற் படலம். இதன் பகுதியான இயல்கள் மூன்று. அவை :
(1) சிறப்பிற் பொதுவியல்
(2) காஞ்சிப் பொதுவியல்
(3) முல்லைப் பொதுவியல்
என்பனவாம். பொதுவியற்கு ஒன்றும், அதன் மூன்று பகுதிகட்கும் தலைக்கு ஒவ்வொன்றாக மூன்றும் என நான்கு நூற்பாக்கள் இடம் பெறுகின்றன. (1+3=4 நூற்பாக்கள்)
பதினொன்றாவதாகிய கைக்கிளைப் படலத்தின் பகுதிகளாகிய ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று என்ற இரண்டினுக்கும் தனித் தனி ஒரு நூற்பாவாக இரண்டு நூற்பாக்கள் இடம் பெறுகின்றன (1+1=2).
பன்னிரண்டாவதாகிய பெருந்திணைப் படலத்தைப் பெண்பாற் கூற்று, இருபால் பெருந்திணை எனப் பகுத்துத் துறைவகையான் அவற்றுக்கு இலக்கணம் கூறப்படுகின்றது. இவற்றுக்கான நூற்பா இரண்டு (2).
ஒழிபு குறித்த நூற்பா ஒன்றும், புறம் – புறப்புறம் என்பவற்றை விளக்கும் நூற்பா ஒன்றும் ஆக இரண்டு நூற்பாக்கள் ஒழிபியலில் இடம் பெறுகின்றன.(2) ஆக, இந்நூலில் மொத்தம் பத்தொன்பது (9+4+2+2+2=19) நூற்பாக்கள் காணப்படுகின்றன.
இந்நூல் 341 துறைகளைக் கொண்டுள்ளது. துறைகளைத் திணை அல்லது படலம் வாரியாகக் காண்போம்.
(அ) புறம்
(1) வெட்சி – 19 துறைகள்
(2) கரந்தை – 13 துறைகள்
(3) வஞ்சி – 20 துறைகள்
(4) காஞ்சி – 21 துறைகள்
(5) நொச்சி – 8 துறைகள்
(6) உழிஞை – 28 துறைகள்
(7) தும்பை – 23 துறைகள்
(ஆ) புறப்புறம்
(1) வாகை – 32 துறைகள்
(2) பாடாண் – 47 துறைகள்
(3) பொதுவியல் – 37 துறைகள்
(இ) அகப்புறம்
(1) கைக்கிளை – 19 துறைகள்
(2) பெருந்திணை – 36 துறைகள்
(1) ஒழிபு – 18 துறைகள்
வகை – 3, திணை – 12, ஆகத் துறைகள் – 341.
இந்த 341 துறைகளையும் விளக்க ஆசிரியர் ஐயனாரிதனார் 361 எடுத்துக்காட்டுகளைப் படைக்கின்றார். இந்த எடுத்துக்காட்டுகள் வெண்பா யாப்பிலும் மருட்பா யாப்பிலும் இயற்றப் பெற்றுள்ளன. இவ் வெண்பாக்களின் கருத்துகளைச் சுருக்கமாகக் கூறும் ஒரு பகுதி இருக்கிறது. இதனைக் கொளு என்று குறிப்பிடுவார்கள். கொளு எடுத்துக்காட்டு வெண்பாக்களின் முன்னர் இடம் பெறும்
இந்நூலில் இடம்பெறும் வெண்பாக்கள், கைக்கிளை ஒழிந்த ஏனைய திணைகளுக்கே காணப்படுகின்றன. கைக்கிளை 19 துறைகளை உடையதேனும் இதனுள் இடம்பெறும் ‘கனவின் அகற்றல்’ என்னும் துறைக்கு மட்டும் இரண்டு மருட்பாக்கள் உள்ளன.
ஒழிபியலின் துறைகள் 18. இவற்றை விளக்க வந்த எடுத்துக்காட்டு வெண்பாக்கள் 18. இப்பதினெட்டு வெண்பாக்களுக்கு முன்னர் மட்டும் ‘கொளு’ காணப்படவில்லை.
தொல்காப்பியருககுப் பின்னாளைய இலக்கண ஆசிரியர்கள் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் எனப் பகுத்தனர். இவ்வகையில், புறத்திணைகள் 7, புறப்புறம் என்பதன் பாற்படுவ (மூன்று) 3, அவை :
(1) வாகை, பாடாண் – பொது
(2) அகப்புறமாவன கைக்கிளை – பெருந்திணை என்னும் 2
(3) கூறாது ஒழிந்தவற்றைக் கூறும் ஒழிபு -1
சயங்கொண்ட சோழமண்டலத்து மேற்கா னாட்டு
மாகறலூர் கிழார் சாமுண்டி தேவ நாயகர்
- செந்தமிழ்த் தொகுதி -1, (45-46)
‘கிழார்’ என வருவது கொண்டு இவர் வேளாண் குடியினர் எனத் துணியலாம். இவரது காலம் கி.பி.13 அல்லது கி.பி.14ஆம் நூற்றாண்டு ஆகலாம்.
இவ்வுரையாசிரியர்க்கு முன்னரும் இந்நூலுக்கு ஏட்டு வழியிலோ, வாய்மொழி வகையிலோ உரைகள் இருந்துள்ளன. இதனை, இவ்வுரையாசிரியரின் ‘உரைப்பாரும் உளர்’, ‘பொருளுரைப்பாரும் உளர்’ என்னும் சொற்றொடர் ஆட்சிகளே மெய்ப்பிக்கின்றன. இவருடைய உரை இரத்தினச் சுருக்கமானது; பொழிப்புரையாய் அமைந்தது; வெண்பாவோ அன்றி மருட்பாவோ எந்த வண்ணம் அமைந்துள்ளதோ, அந்த வண்ணமாகவே உரைவகுப்பது. உரையை விளக்க, இவர் ஆளும் சில பாடல்கள் எந்த நூலில் இடம் பெறுகின்றன என்பது இந்நாளில் அறிய இயலவில்லை. இவருடைய உரையைக் கொண்டே இனிவரும் பாடங்களை, நீங்கள் படிக்க இருக்கின்றீர்கள்.
பாடம் - 2
குறிஞ்சித் திணை என்பது மலையையும் மலையைச் சார்ந்த இடத்தையும் (நிலம்) குறிக்கும்; புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாகிய ஒழுக்கத்தைக் (ஒழுக்கம்) குறிக்கும். குறிஞ்சி என்பது அந்நிலத்தில் பூக்கும் சிறந்த பூவாகும். பூவால் நிலமும் ஒழுக்கமும் சுட்டப் பெறுகின்றன.
வெட்சி தானே குறிஞ்சியது புறனே
- (தொல்.புறத்திணை இயல்- 1 : 3)
என்பது தொல்காப்பியம். குறிஞ்சியாகிய அகவொழுக்கத்திற்கு, வெட்சி ஒழுக்கமாகிய ஆனிரையைக் கவர்தல் புறனாகின்றது என்பது இதன் பொருள்.
ஆனிரையைக் கவரும் மறவர் வெட்சிப் பூவை அடையாளப் பூவாகச் சூடிக் கொள்வர். இவ்வாறு சூடுதல், மறவர் பிறரிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டவேயாம். வெட்சி, ஒருவகை மரத்தில் மலரும் பூ.
வெட்சி மறவர்களும் பகை மன்னனின் பாதுகாவலில் உள்ள பசுநிரையை இரவுப்போதில் கவர்ந்து செல்வர்; செல்லும் அவர்கள் அவற்றை நீருள்ள இடத்தில் பருகச் செய்தும் நிழலுள்ள இடத்தில் இளைப்பாறச் செய்தும் ஓட்டிச் செல்வர். இதனால், புறத்திணையின் வெட்சி, அகத்திணையின் குறிஞ்சிக்குப் புறனாவது புலப்படும். இவ்வாறே புறத்திணைகள் அகத்திணைப் பிரிவுகளுக்குப் புறனாக அமையும். அகத்திணையில் இடம்பெறும் ஒரு நிகழ்வைப் போல, அதற்கு இணையாக, புறத்திணையில் நிகழும் ஒரு நிகழ்வினைப் புறன் என்று குறிப்பிடுவார்கள்.
துறை என்பது ஒரு நிகழ்வுக்கான வளர்ச்சிப்படி நிலைகளுள் ஒன்று என்பதை முன்னைய பாடத்தில் படித்தோம் அல்லவா? வெட்சித் திணைக்குப் பத்தொன்பது துறைகள் கூறப்படுகின்றன. வெட்சித் திணையையும் அதற்குரிய துறைகளையும் புறப்பொருள் வெண்பாமாலையின் முதல் நூற்பா கூறும், அது வருமாறு,
வெட்சி, வெட்சி அரவம், விரிச்சி, செலவு,
வேயே, புறத்திறை, ஊர்கொலை, ஆகோள்,
பூசல் மாற்றே, புகழ்சுரத் துய்த்தல்,
தலைத்தோற் றம்மே, தந்துநிறை, பாதீடு,
உண்டாட்டு, உயர்கொடை, புலனறி சிறப்பே,
பிள்ளை வழக்கே, பெருந்துடி நிலையே,
கொற்றவை நிலையே, வெறியாட்டு உளப்பட
எட்டு இரண்டு ஏனை நான்கொடு தொகைஇ
வெட்சியும் வெட்சித் துறையும் ஆகும்.
வெட்சி ஒழுக்கத்தில் ஐந்து நிலைகளைக் காணமுடியும். அவை, கவர்தல், பேணல், அடைதல், பகுத்தல், வணங்கல் என்பனவாம். வெட்சித் திணையின் 19 துறைகளையும் இந்த 5 நிலைகளில் அடக்கலாம்.
வெட்சியின் ஐந்து நிலைகள்
எண் நிலைகள் எண்ணிக்கை துறைகள்
1 கவர்தல் 7 வெட்சியரவம், விரிச்சி, செலவு, வேய், புறத்திறை, ஊர்கொலை, ஆகோள்
2 பேணல் 2 பூசல் மாற்று, சுரத்துய்த்தல் (காட்டு வழியில் ஓட்டிச் செல்லுதல்)
3 அடைதல் 2 தலைத்தோற்றம், தந்துநிறை
4 பகுத்தல் 6 பாதீடு, உண்டாட்டு, கொடை, புலனறி சிறப்பு, பிள்ளை வழக்கு, துடிநிலை
5 வணங்கல் 2 கொற்றவை நிலை, வெறியாட்டு
19
அவற்றின் பொருளையும், சில துறைகளின் விளக்கங்களையும் காணலாம்.
வெட்சி இருவகைப்படும். அவை : (1) மன்னுறு தொழில், (2) தன்னுறு தொழில் என்பனவாம்.
அறவழியில் போர் புரிய விரும்பும் மன்னனுக்கு முதலில் உறுவதாகிய தொழில் அல்லது உற்ற (ஏற்ற அல்லது உரிய) தொழில் எது? அஃது ஆனிரை கவர்தலே. எனவே, அது உறுதொழில் எனப்பட்டது.
இதன் விளக்கம்
வெட்சி மன்னன், வீரச் செருக்கு உடையவனாகிய மறவன் ஒருவன் தனது அம்பின் கூர்மையை ஆராய்வதைக் கண்டான். கண்டு, ‘காளை போன்றவனே ! பகைவரது போர்முனை கலங்கி அலறும்படியாகச் சென்று அவர்களுடைய ஏறுகளோடு கூடிய பசுத்திரளைக் கைப்பற்றிக் கொண்டு வருவாயாக’ என்று கட்டளையிட்டான். அக்கட்டளைச் சொல் அந்த வெட்சி மறவனுக்கு மூண்டு எரிகின்ற நெருப்பில் மரத்தை வெட்டிப் போட்டது போன்று ஆயிற்று. இது மன்னுறு தொழில் ஆகும்.
கொளுப் பொருளும் கொளுவும்
பகைவரது ஆநிரைகளைக் கவர்வதற்காக, அவர்களது போர்முனைக்குச் செல்ல வெட்சி மறவர்கள் விரும்புவார்கள். அவ்வாறு விரும்பியதை விளம்புவது வெட்சி அரவம் என்னும் துறையாம்.
கலவார் முனைமேல்
செலவு அமர்ந்தன்று.
(கலவார் = பகைவர் ; முனை = போர்முனை ; செலவு = செல்லுதல் ; அமர்தல் = விரும்புதல் )
என்பது கொளு. நூற்பாவின் நுட்பத்தைச் சிறு சொற்களில் சுருக்கமாகக் கூறுவது கொளு எனப்படும். இதுவும் நூற்பாவைப் போலவே அளவில் சுருங்கியும் பொருள் ஆழம் மிகுந்தும் இருக்கும். இதனை விளக்கும் வகையில் ஒரு வெண்பாப் பாடல் வரும். இந்த அமைப்பை நூல் முழுதும் காணலாம். வெட்சியரவம் துறைக்குத் தரப்பட்டுள்ள வெண்பா :
நெடிபடு கானத்து நீள்வேல் மறவர்
அடிபடுத்து ஆரதர் செல்வான் – துடிபடுத்து
வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
கட்சியுள் காரி கலுழ்ம்.
இதன் பொருள்
நெடிய வேற்படையைக் கொண்ட வெட்சி மறவர்கள் தமது காலில் வீரக்கழலைப் பூட்டி, சிள்வீடு என்னும் வண்டுகள் ஒலிக்கும் காட்டின்கண் கடத்தற்கரிய வழியைத் துன்பமின்றிக் கடப்பதற்காகப் பாதங்களில் செருப்பை அணிந்து, துடியைக் கொட்டி வெட்சிப் பூவைச் சூடுகின்றார்கள். துடியைக் கொட்டியதும் பகைவருடைய ஆநிரைகள் தங்கும் காவற்காட்டில் காரி என்னும் பறவை தீநிமித்தத்தை அறிவிப்பது போல அழுகையொலியை எழுப்புகின்றது. வெட்சியார் நாட்டில் துடி ஒலி ; பகைவரது காவற்காட்டில் காரியின் அழுகை யொலி.
துறையமைதி
காட்டில் வண்டின் (சிள்வீடு என்னும் வண்டின்) அரவம், துடியின் அரவம், காரிப் புள்ளின் அரவம் எனப் பல்வேறு அரவங்கள் மறவர்களின் அரவமொடு இணையும் அழகைக் காண்கின்றோம்.
கொளுப் பொருளும் கொளுவும்
பகை மன்னனது ஆத்திரளைக் கைக்கொள்ள விரும்பிய வெட்சி மறவர், தாம் விரும்பிய ஆநிரை கவர்தலாகிய செயலின் விளைவு நன்மையில் முடியுமா என்று அறிவதற்காக இருள் மண்டிய மாலைப் போதில் தம்மொடு தொடர்பில்லாத அயலவரின் நற்சொல்லைக் கேட்பது விரிச்சி என்னும் துறையாம்.
வேண்டிய பொருளின் விளைவு நன்குஅறிதற்கு
ஈண்டுஇருள் மாலைச் சொல்ஓர்த் தன்று.
எடுத்துக்காட்டு வெண்பா
எழுஅணி சீறூர் இருள்மாலை முன்றில்
குழுஇனம் கைகூப்பி நிற்பத் – தொழுவில்
குடக்கள் நீ கொண்டுவா என்றாள் கனிவில்
தடக்கையாய் வென்றி தரும்.
இதன் பொருள்
நமது சிற்றூரில், இருள் சூழ்ந்த மாலை நேரத்தில், திருக்கோயில் முற்றத்தின்கண் நிமித்தம் பார்க்கும் நம்மவர்கள் கைகூப்பித் தெய்வத்தைத் தொழுது நின்றார்கள். நின்ற அவ்வேளையில், ஒருத்தி ‘ஏணியில் வைத்துள்ள குடத்துக் கள்ளை நீ கொண்டு வா’ என மற்றொருத்தியிடம் கூறினாள். ஆதலால், நம் செயல் உறுதியாக வெற்றியைத் தரும் என்று நிமித்தம் பார்த்த ஒருவன், படைத் தலைவனுக்குக் கூறுகிறான்.
துறையமைதி
‘தொழுவில் குடக்கள் நீ கொண்டு வா’ என்று ஒருத்தி ஏவும் நற்சொல்லைக் கேட்டோம்; ‘குனிவில் தடக்கையாய்! வெற்றி உண்டாகும்’ என்னும் கருத்து வெளிப்படுவதால் துறைக் கருத்துப் பொருந்துகின்றது. இவ்வாறே பிற துறைகளுக்கும் கொளுவும் உதாரண வெண்பாவும் புறப்பொருள் வெண்பாமாலையில் காணலாம்.
கொளுப் பொருளும் கொளுவும்
வெட்சியாருடைய ஒற்றர்கள், பகைவருடைய ஆநிரைகள் நின்ற காவற்காட்டின்கண் சென்று, காவற்காட்டின் (மிளை/இளை) வலி (பாதுகாப்பு), அதனைக் காக்கும் மறவர்கள் வலி (ஆற்றல், எண்ணிக்கை), ஆநிரைகளின் அளவு போன்றவற்றை அறிந்துவந்து உரைப்பது வேய் என்னும் துறையாம்.
பற்றார் தம்முனைப் படுமணி ஆயத்து
ஒற்று ஆராய்ந்த வகை உரைத்தன்று.
கொளுப் பொருளும் கொளுவும்
காவற்காட்டின் உள்ளிருப்போர் பல வழிகள், வாயில்கள் வழியே தப்பிப் போகாதபடி வெட்சி மறவர் அதன் புறத்தே தங்கியதைப் பேசுவது புறத்திறை என்னும் துறையாம்.
நோக்கஅரும் குறும்பின் நூழையும் வாயிலும்
போக்குஅற வளைஇப் புறத்து இறுத்தன்று.
(குறும்பு = சிற்றூர் ; நூழை = சிறு வாயில், துளை)
கொளுவின் பொருளும் கொளுவும்
வென்றி (வெற்றி)யை உடைய வெட்சி மறவர்கள் தங்கள் பகைவரை வென்று ஆரவாரம் செய்து காவற்காட்டில் இருந்த கன்றுகளுடனே ஆன்நிரையைக் கைப்பற்றியது ஆகோள் என்னும் பெயருடைய துறையாம்.
வென்றுஆர்த்து விறல்மறவர்
கன்றோடும் ஆதழீஇயன்று.
வெட்சி மறவர்கள் ஊர் நடுவில் புகுந்தார்கள். பகை மறவரின் காவலில் இருந்த ஆநிரையைக் கைப்பற்றினார்கள். கைப்பற்றியவர்கள், அந்த இடத்தினின்றும் அகலாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களது நிலை, புலிகள் பல தம்முள் இணைந்து ஓரிடத்தே கூடியிருந்ததனை ஒப்பதாய் இருந்தது. இதுவே உதாரண வெண்பாவின் கருத்து.
கொளுவின் பொருளும் கொளுவும்
அரும்சுரத்தும் அகன்கானத்தும்
வருந்தாமல் நிரைஉய்த்தன்று.
வருந்தாமல் உய்த்தலாவது, ஆநிரைகளுக்குப் புல்லும் நீரும் தந்து பாதுகாத்தல்.
கொளுவின் பொருளும் கொளுவும்
வெட்சி மறவன் ஆநிரைகளைக் கைப்பற்றிக் கொண்டு வருவதை அறிந்து அவனுடைய சுற்றத்தினர் மகிழ்ந்ததை மொழிவது தலைத் தோற்றம் என்னும் துறையாகும்.
உரவெய்யோன் இனம்தழீஇ வரவு உணர்ந்து
கிளைமகிழ்ந்தன்று.
கொளுவின் பொருளும் கொளுவும்
ஊரில் உள்ளோர் கண்டு மகிழ, கவர்ந்து வந்த ஆநிரை களை வெட்சி மறவர்கள் ஊர் அம்பலத்தே கொண்டு வந்து நிறுத்துவது தந்து நிறையாம்.
வார் வலந்த துடிவிம்ம
ஊர்புகல நிரைஉய்த்தன்று.
கொளுவின் பொருளும் கொளுவும்
கவர்ந்து வந்த ஆன்திரளை அந்த அந்த மறவர்கள் ஆற்றிய செயல்களை ஆய்ந்து அவரவர் தகுதிக்கேற்பப் பகுத்து ஈவது, பாதீடு என்னும் துறையாம்.
கவர்கணைச் சுற்றம் கவர்ந்த கணநிரை
அவர்அவர் வினைவயின் அறிந்துஈந் தன்று.
போரினைப் புரிந்த மறவர்கள், பகைவரது நிலத்திற்குச் சென்று ஒற்றி ஆராய்ந்து வந்து சொன்னவர்கள், நல்நிமித்தம் பார்த்துச் சொன்னவர்கள் ஆகிய எல்லார்க்கும் வெட்சி மறவர்கள் தங்களுடைய சிற்றூர் மன்றத்தில் கொண்டு வந்து நிறுத்திய ஆநிரைகளைப் பங்கிட்டார்கள். இதுவே உதாரண வெண்பாவின் கருத்து
கொளுவின் பொருளும் கொளுவும்
வெட்சி மறவர்கள் வெற்றியும் வேந்தனது வரிசையும் (சிறப்பும் பாராட்டும்) பெற்றார்கள். பெற்ற அதனால், கள்ளும் இறைச்சியும் உண்டு மனம் களித்தார்கள் ; ஆடினார்கள். இந்த நிகழ்வைக் கூறுவது உண்டாட்டு என்னும் துறையாம்.
தொட்டுஇமிழும் கழல்மறவர்
மட்டுஉண்டு மகிழ்தூங்கின்று.
(மட்டு = கள் ; மகிழ் = மகிழ்ச்சி ; தூங்கின்று = கூத்தாடியது)
கொளுவின் பொருளும் கொளுவும்
ஊர்ப் பொது மன்றில் தந்து நிறுத்திய ஆநிரைகளில் ஒன்றேனும் எஞ்சாதபடியும், வேண்டிவந்தவர்கள் ஒருவரும் விடுபடாதபடியும், தமக்குப் பின்னொரு காலத்து வேண்டுமென்று எண்ணாமல், பசுக்களை விரும்பி விரைந்து கொடுப்பது கொடை என்னும் துறையாம்.
ஈண்டிய நிரை ஒழிவு இன்றி
வேண்டியோர்க்கு விரும்பி வீசின்று.
கொளுவின் பொருளும் கொளுவும்
கொடிய பகைவர் நாட்டுக்குச் சென்று ஒற்றி (வேவு பார்த்து) அந்நாட்டின் நிலைமையை ஆய்ந்து உரைத்தவர்களுக்கு, போரிட்டு ஆத்திரளைக் கவர்ந்து வந்த மறவர்கள் பங்கினைவிட மிகுதியாகக் கொடுத்துச் சிறப்பித்தல் புலனறி சிறப்பு என்னும் துறையாம்.
வெம்முனை நிலை உணர்த்தியோர்க்குத்
தம்மினும்மிகச் சிறப்புஈந்தன்று.
கொளுவின் பொருளும் கொளுவும்
பிள்ளை என்னும் கரிக்குருவியின் புடைபெயர்ச்சியைக் கொண்டு தப்பாதபடி சகுனம் சொன்ன புலவர்க்கு மிகுதியாக வழங்கியதைக் கூறுவது பிள்ளை வழக்கு என்னும் துறையாம்.
பொய்யாது புள்மொழிந்தார்க்கு
வையாது வழக்குஉரைத்தன்று.
கொளுவின் பொருளும் கொளுவும்
துடிநிலையாவது, வெட்சி மறவர் தமது பழங்குடி முறைமையால் துடியனது கெழுதகைமையாம் பண்பைப் பாராட்டுவது ஆகும்.
தொடுகழல் மறவர் தொல்குடிமரபில்
படுகண்இமிழ்துடிப் பண்புஉரைத்தன்று.
எடுத்துக்காட்டு வெண்பா :
முந்தை முதல்வர் துடியர், இவன்முதல்வர் ;
எந்தைக்குத் தந்தை ; இவன்எனக்கு ; – வந்த
குடியொடு கோடா மரபினோற்கு இன்னும்
வடியுறு தீந்தேறல் வாக்கு.
இதன் கருத்து
துடியனாகிய இவனுடைய பாட்டனுக்குப் பாட்டன் முதலாயினோர், என் பாட்டனுடைய பாட்டன் முதலிய முந்தையோர்க்குத் துடிகொட்டுபவராக இருந்தனர். என் தந்தைக்கு இவன் தந்தை ; இந்நாளில், எனக்கு இவன் துடி கொட்டுகின்றான். எனது குடியொடு தொடர்ந்து இவனது குடியும் வருகின்றது. இத்தகையவனுக்கு இனிய கள்தெளிவை இன்னமும் வார்ப்பாயாக என்றான் ஒரு மறவன்.
கொளுவின் பொருளும் கொளுவும்
கொற்றவை, ஞானப் பாவை ; வெற்றியைத் தரும் சூலப் படையினை உடையவள். சற்றும் கருணையினின்றும் அகலாதவள். அவளது அருள் சிறப்பை வியந்து உரைப்பது கொற்றவை நிலை என்னும் துறையாம்.
ஒளியின்நீங்கா விறல்படையோள்
அளியின்நீங்கா அருள்உரைத்தன்று.
எடுத்துக்காட்டு வெண்பா :
ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
கூளி மலிபடைக் கொற்றவை – மீளி
அரண்முருங்க ஆகோள் கருதின் அடையார்
முரண்முருங்கத் தான்முந்து உறும்.
இதன் கருத்து
கொற்றவையாம் தெய்வம், நம்முடைய பகைவரின் அரண் அழியும்படி, நம் தலைவனின் படை புறப்படுவதற்கு முன்பாகப் புறப்பட்டு எழுந்து சென்று, வெற்றியை அருளுகின்றாள் என்று அவளது அருள்நிலையைப் போற்றிப் பராவுகின்றனர் வெட்சி மறவர்.
கொளுவின் பொருளும் கொளுவும்
தம்முடைய கணவன்மாராகிய வெட்சி மறவர்கள் பின்னர்ப் புரிய இருக்கும் போர்வினையை வெற்றியில் முற்றுவிக்கும் பொருட்டு, மறத்தியராம் மனைவியர்கள் வள்ளியைப் போல் வேடம் புனைந்து தெய்வம் ஏறப் பெற்ற வேலன் என்பானுடன் சேர்ந்து ஆடுவது வெறியாட்டு என்னும் துறையாம்.
வால்இழையார் வினைமுடிய
வேலனொடு வெறியாடின்று.
பாடம் - 3
திணைப் பூவை மட்டுமே சூடிக் கொள்ளும் வழக்கமும் உண்டு. மாணாக்கர்களே! வெட்சிப் பூவைச் சூடி, ஆநிரை கவர்ந்தமையை முன்னைய பாடத்தில் பார்த்தோம் அல்லவா? இப்பாடத்தில் நிரைமீட்டல் என்ற கரந்தை ஒழுக்கத்திற்குக் கரந்தைப் பூவைச் சூடிக் கொள்வர் என்பதை மனத்தில் கொண்டு, கரந்தைத் திணையும் அதன் துறைகளும் தரும் செய்திகளைக் காண்போம்.
வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
என்னும் பழம்பாடல் தெரிவிக்கின்றது. கரந்தை என்பது ஒரு வகைப் பூ. டாக்டர் உ.வே.சா. அவர்கள் ‘கொட்டைக் கரந்தை என்னும் பூடு (பூண்டு)’ என்கிறார். இங்குக் கரந்தை என்பது நிரை மீட்டலாகிய கரந்தை ஒழுக்கத்திற்கான குறியீடு ஆகும். எனவே, ஆகுபெயர். தொல்காப்பியர் கரந்தைத் திணையை ஒரு தனித் திணையாகக் கொள்ளவில்லை. கரந்தையை வெட்சியின் மறுதலையாகக் கொள்கின்றார். ஏனெனில், ஆநிரையைக் கவராத போது மீட்டல் நிகழாது. கரந்தை வெட்சியின் மறுதலை ஒழுக்கம் என்பதைத் தெரிந்து கொண்டால், கரந்தையும் குறிஞ்சியது புறன் ஆவதை உணர்வோம்.
கொளுப் பொருளும் கொளுவும்
பகை மன்னனுடன் (கரந்தை மன்னனோடு) கருத்து மாறுபட்டான் வெட்சி மன்னன். அவனுடைய மறவர்கள் கரந்தை மறவரோடு போர் புரிந்து அவர்தம் ஆநிரையைக் கவர்ந்தனர். கவர்ந்த அந்த ஆநிரையை, வெட்சியாரின் வலிமையைத் தொலைத்து அவர்களிடமிருந்து கரந்தையார் மீட்பது கரந்தைத் திணை எனப் பெறும்.
மலைத்து எழுந்தார் மறம்சாயத்
தலைக்கொண்ட நிரைபெயர்த்தன்று.
துறைகள் பதின்மூன்றனை உடையது கரந்தைத் திணை. அவை, கரந்தை அரவம், அதரிடைச் செலவு, போர் மலைதல், புண்ணொடு வருதல், போர்க்களத்து ஒழிதல், ஆளெறி பிள்ளை, பிள்ளைத் தெளிவு, பிள்ளையாட்டு, கையறுநிலை, நெடுமொழி கூறல், பிள்ளைப் பெயர்ச்சி, வேத்தியல் மலிபு, குடிநிலை என்பனவாம்.
இத்துறைகளை ஆநிரை மீட்கச் செல்லல், போரும் விளைவும் இளைஞர் சிறப்பு, போர் நிகழ்ச்சிகள், மன்னர் பெருமையும் வீரர் சிறப்பும் என்னும் ஐந்து நிலைகளில் வகைப்படுத்திக் காணலாம்.
கொளுவின் பொருளும் கொளுவும்
தமது ஆநிரைகளை வெட்சியார் கைப்பற்றிய செய்தியை அரசன் பறையறைந்து தெரிவித்தான். அதனைக் கேட்டவுடனேயே கரந்தையார் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை மேலும் தொடராமல் அப்படியே போட்டுவிட்டு விரைந்து ஓரிடத்தில் குழுமினர். குழுமிய அதனைக் கூறுவது கரந்தை அரவம் எனப்பெறும்.
நிரைகோள் கேட்டுச் செய்தொழில் ஒழிய
விரைவனர் குழூஉம் வகைஉரைத் தன்று.
எடுத்துக்காட்டு வெண்பா:
கால்ஆர் கழலார்; கடும்சிலையார்; கைக்கொண்ட
வேலார்; வெருவந்த தோற்றத்தார்; – காலன்
கிளர்ந்தாலும் போல்வார்; கிணைப்பூசல் கேட்டே
உளர்ந்தார்; நிரைப்பெயர்வும் உண்டு.
வெண்பாவின் பொருள்
கரந்தை மறவர்கள், தமது காலிலே வீரக்கழலை உடையவர்கள்; கையிலே, கொடுமையை வெளிப்படுத்தும் வில்லை உடையவர்கள்; வேலினையும் கொண்டவர்கள்; தம்மைக் கண்டவரை அஞ்சவைக்கும் தோற்றப் பொலிவை உடையவர்கள்; கூற்றுவனாகிய எமன் வெகுண்டது போன்ற சினத்தை உடையவர்கள். இவர்கள், ‘பசுநிரையை வெட்சிமறவர் கவர்ந்து சென்றனர்’ என்ற செய்தியை அறிவிக்கும் தடாரியின் ஓசையைக் கேட்டதும் போருக்கு எழுந்தனர். ஆதலால், இவர்கள் வெட்சியார் கவர்ந்து சென்ற பசுவின் திரளை மீட்கக் கூடும்.
துறைப் பொருத்தம்
இதனால், நிரை மீட்கும் போரில் ஒரு பகுதியை உரைத்தமை புலனாகின்றது.
கொளுவின் பொருளும் கொளுவும்
தம்மால் போற்றப்படாத வெட்சி மறவர் தாம் கவர்ந்து சென்ற ஆநிரையோடும் போன வழியில் கரந்தையார் அவற்றை மீட்கும் பொருட்டுச் சென்றதைச் சொல்வது, அதரிடைச் செலவு என்னும் துறையாகும்.
ஆற்றார் ஒழியக் கூற்றெனச் சினைஇப்
போற்றார் போகிய நெறியிடை ஏகின்று
கொளுவின் பொருளும் கொளுவும்
ஆரவாரத்தோடும் மின்னும் வேற்படைகளொடும் சென்ற கரந்தை மறவர்கள் வெட்சியாரைக் கண்டனர்; மேற்கொண்டு செல்லா வண்ணம் அவர்களைச் சூழ்ந்து வளைத்துக் கொண்டனர்; அச்சம் தோன்றும்படியாகத் தாக்கினர்; அதில் ஒரு சமயம் கரந்தையார் ஓங்கினர்; வெட்சியார் தாழ்ந்தனர், மற்றொரு சமயம் வெட்சியார் ஓங்கினர்; கரந்தையார் தாழ்ந்தனர். இவ்வாறு நிகழ்த்திய உறழ் போரைப் (மாறி மாறி வரும்) பற்றியது போர் மலைதல் என்னும் துறையாம்.
வெட்சி யாரைக் கண்ணுற்று வளைஇ
உட்குவரத் தாக்கி உறழ்செருப் புரிந்தன்று.
(உட்கு = அச்சம்)
கொளுவின் பொருளும் கொளுவும்
உலகம் உள்ளளவு தன்னுடைய புகழை நிலைக்கச் செய்து, மறவன் ஒருவன் கரந்தைப் போரில் தன்னுடல் அழிதற்குக் காரணமான விழுப்புண்ணை ஏற்று வெற்றியுடன் வந்தது புண்ணோடு வருதல் எனும் துறையாம்.
மண்ணோடு புகழ்நிறீஇப்
புண்ணொடு தான்வந்தன்று
கொளுவின் பொருளும் கொளுவும்
வெட்சி மறவர்களோடு கரந்தை மறவன் ஒருவன் அயர்வின்றி இறுதி வரையும் எதிர்நின்று போரிட்டான்; அப்போர்க்களத்திலேயே இறந்து பட்டான். இறந்து பட்டமையை இயம்புவது போர்க்களத்து ஒழிதல் என்னும் துறையாம்.
படைக்குஓடா விறல்மறவரைக்
கடைக்கொண்டு களத்தொழிந்தன்று
கொளுவின் பொருளும் கொளுவும்
பின்னிட்டு ஓடி வருகின்ற கரந்தை மறவரை, மேலும் ஓடாதபடிக்கு எதிர்சென்று தடுத்து, இகழ்து கூறி, வெட்சி மறவர்கள் அத்துணைப் பேர்க்கும் தான் ஒருவன் மட்டுமே அஞ்சாது நின்று, அவர்களை வெட்டி வீழ்த்திய செய்தியைக் கூறுவது, ஆளெறி பிள்ளை என்னும் துறையாம்.
வருவாரை எதிர்விலக்கி ஒருதானாகி ஆள்எறிந்தன்று.
வெட்சியார்க்கு ஆற்றாது களத்தினின்றும் பிறர் திரும்பவும், ஒரு கரந்தை மறவன் மட்டும் திரும்பானாய்த் தான் ஒருவனாகிப் பகைவர்களை எறிந்தான்.
கொளுவின் பொருளும் கொளுவும்
துடி என்னும் இசைக் கருவியின் கண்முகம் மகிழ்ந்து இசைக்கப்படுவதால் மிக்கு ஒலிக்கின்றது. ஒலிக்க ஒலிக்கப் போர்க்களத்தில் தான் ஏற்ற விழுப்புண்ணுக்கு மகிழ்ந்து கரந்தை மறவன் ஒருவன் ஆடுவதைக் கூறுவது பிள்ளைத் தெளிவு என்னும் துறையாம்.
கண்மகிழ்ந்து துடிவிம்மப்
புண்மகிழ்ந்து புகன்று ஆடின்று
(கண் என்பது துடியின் மையப் பகுதியைக் குறிக்கிறது.)
கொளுவின் பொருளும் கொளுவும்
வெட்சி மறவராகிய பகைவரின் குடலை மாலையாகத் தனது வேலில் சூட்டி, அவ்வேலினைக் கீழ்மேலாகத் திருப்பி விருப்பமுடன் போர்க்களத்தே கரந்தை மறவன் ஆடியதை அறிவிப்பது பிள்ளையாட்டு எனும் துறையாகும்.
கூடலர்குடர் மாலைசூட்டி
வேல்திரித்து விரும்பிஆடின்று.
கொளுவின் பொருளும் கொளுவும்
வாளினைக் கொண்டு போர் புரியும் போர்க்களம், அச்சம் வருவதற்குக் காரணமாக உள்ளது. இத்தகு போர்க்களத்தில் ஆநிரை மீட்கப் போரிட்ட கரந்தை மறவன் இறந்துபட்டான். அவன், மறவன் மட்டுமன்று; பாணர், பொருநர் முதலிய இசைக் கலைஞர்களான சுற்றங்களைப் பாதுகாத்த புரவலனும் ஆவான். அவனுடைய இறப்புப் பாண்மக்களைச் செய்வதறியாத நிலைக்குக் கொண்டு சென்றது. சென்ற அந்நிலையை உரைப்பது கையறு நிலை என்னும் துறையாம்
வெருவரும் வாளமர் விளிந்தோன் கண்டு
கருவி மாக்கள் கையறவு உரைத்தன்று.
(விளிந்தோன் = இறந்தவன்; கையறவு = துன்பம்)
எடுத்துக்காட்டு வெண்பா:
நாப்புலவர் சொல்மாலை நண்ணார் படைஉழக்கித்
தாப்புலி ஒப்பத் தலைக்கொண்டான் – பூப்புனையும்
நற்குலத்துள் தோன்றிய நல்லிசையாழ்த் தொல்புலவீர்
கல்கொலோ சோர்ந்திலஎம் கண்.
பாண் மாக்களைப் பல்காலும் புரந்த கரந்தையான் களத்தில் பட்டான். பட்ட அவனைக் கண்டு, உளநாளை இனிக் கழிப்பது யாங்ஙனம் எனப் பேதுறுகின்றனர்.
சான்றாகக் காட்டப்படும் வெண்பா கூறுவதாவது: “பகைவர் படையைப் புலிபோலக் கலக்கிய வீரன் வீழ்ந்து கிடக்கிறான். அதைக் கண்டும் நம் கண்கள் இற்றும் வீழவில்லை. கண்ணீரும் சோரவில்லை. அவை கல்லோ!” ‘கல்லோ’ என்ற வினாத் தொடர், கையறவை உணர்த்துகின்றது.
கொளுவின் பொருளும் கொளுவும்
கரந்தை மன்னனுக்கு, அவனுடைய படை மறவன் ஒருவன் தான் போர்க்களத்தில் சிறந்து செயல்பட்ட பெருமையைத்தானே எடுத்துக் கூறுவது நெடுமொழி கூறல் என்னும் துறையாம்.
மன்மேம் பட்ட மதிக்குடை யோனுக்குத்
தன்மேம் பாடு தான்எடுத்து உரைத்தன்று.
எடுத்துக்காட்டு வெண்பா:
ஆளமர் வெள்ளம் பெருகின் அதுவிலக்கி
வாளொடு வைகுவேன் யானாக – நாளும்
கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோய்! ஈயப்
பிழிமகிழ் உண்பார் பிறர்.
வெண்பாவின் பொருள்
அரேச! நான் ஒருவனே, வெட்சி மறவராகிய பகை வெள்ளம் மிக்குவருமாயின் அவ்வெள்ளத்தைக் கல் அணையாகி நின்று தடுத்து நிறுத்துவேன். என்னை ஒழிந்த பிற மறவர் எல்லாரும் நீ வழங்கும் கள்ளின் தெளிவை உண்டு உன்னொடும் இங்கேயே தங்கட்டும்.
தனது வீரத்தைப் பெரிதும் மேம்படுத்துக் கூறும் கரந்தை மறவன் ஒருவன், பகைவர் பகையை எதிர்கொள்ளத் தான் ஒருவனே போதும் என்கின்றான் என்பது கருத்து.
கொளுவின் பொருளும் கொளுவும்
ஆநிரையை மீட்கும் போரினைக் கரந்தை மறவன் ஒருவன் மேற்கொண்டான்; வெட்சி மறவர் புரியும் போரினைத் தாங்கினான். அப்போது, காரிப்புள் தீ நிமித்தம் காட்டியது. காட்டவும் அந்நிமித்தத்தைப் பொருட்டாகக் கொள்ளாமல் அதனைப் புறக்கணித்தான்; போரிட்டு நிரையை மீட்டான். மீட்ட அவனுக்குத் தார்மாலையணிந்த கரந்தை மன்னன் தண்ணளி செய்தான். தண்ணளி செய்ததை விளம்புவது பிள்ளைப் பெயர்ச்சி என்னும் துறையாம்.
போர்தாங்கிப் புள்விலக்கியோனைத்
தார்வேந்தன் தலையளித்தன்று.
எடுத்துக்காட்டு வெண்பா :
பிணங்குஅமருள் பிள்ளை பெயர்ப்பப் பெயராது
அணங்குஅஞர்செய்து ஆள்எறிதல் நோக்கி – வணங்காச்
சிலையளித்த தோளான் சினவிடலைக்கு அன்றே
தலையளித்தான் தண்ணடையும் தந்து.
வெண்பாவின் பொருள்
போர் புரியும் களத்தில் காரிப் பறவை தீ நிமித்தம் காட்டி விலக்கவும், அவ்விடத்தைவிட்டு நீங்காதவனாய், பகை மறவரை வெட்டி வீழ்த்தும் கரந்தை மறவனுக்குப் பார்த்த அந்த நாளிலேயே பரிசுப் பொருளாக மருத நிலத்தை அளித்தான் அரசன்.
கொளுவின் பொருளும் கொளுவும்
தோள் கொண்டு மலைவதில் வல்லவன், மறத்தைப் பொருந்திய கரந்தை மன்னன். அவனுடைய படைவீரரும் வாட்போரில் வலிமையுடையவருமாகிய கரந்தை மறவர்கள் அவனைப் புகழ்ந்து கூறுவது வேத்தியல் மலிபு என்னும் துறையாகும்.
தோள்வலிய வயவேந்தனை
வாள்வலிமறவர் சிறப்புரைத்தன்று.
(வயம் = வெற்றி)
கொளுவின் பொருளும் கொளுவும்
மண் செறிந்த இவ்வுலகத்தில் பழமையையும், வழிவந்த வன்கண்மையையும் அளவாக மனத்தில் கொண்டு பிறர் அறிய வருகின்ற தொல்வரவும் தோலும் உடைய குடியின் வரலாற்றைச் சொல்வது குடிநிலை என்ற துறையாகும். (தொல் வரவு – தொன்மை; தோல் – புகழ்)
மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
கொண்டு பிறர்அறியும் குடிவரவு உரைத்தன்று.
இதனை விளக்கும் பாடல்:
பொய்அகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்!
வையகம் போர்த்த வயங்கொலிநீர் – கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி.
இதன் கருத்து
மலை தோன்றி மண் தோன்றாத காலம் ஒன்று உண்டு. அக்காலத்திலேயே மறப்பண்புடன் தோன்றிய மூத்த குடியினர் கரந்தை மறவர்கள். இவர்கள் பகைவரை அழித்து ஆநிரையை மீட்டுவந்தது இயல்பே. இதில் வியப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.
துறைப் பொருத்தம்
மருத நிலம் தோன்றுவதற்கு முன்னமேயே இருந்த குறிஞ்சியில் முதற்கண் தோன்றிய மூத்தகுடியென்றும், அக்குடி தோன்றிய போதே வாளோடு தோன்றியதென்றும், அக்குடியில் பிறந்தோர் நாள்தோறும் மெய்யான புகழை வளர்த்துக் கொள்கின்றனர் என்றும் கூறியதால் மறக்குடியின் தொன்மையும் தோலும் புலப்பட்டு நிற்கின்றன. ஆதலால் துறைப் பொருள் பொருந்தி வருவது தெளிவு.
உடன்போக்கில் சென்றவர்களை மீட்டுவந்து திருமணம் தரும் அக வொழுக்கத்தொடு ஒப்பு நோக்கத்தக்கது இது. கவர்ந்து சென்ற ஆனிரைகளை மீட்டுவந்து இரு வேந்தரும் நாளும் இடமும் குறித்துத் தம்முள் போரிடும் புறவொழுக்கம் கரந்தை. எனவே, கரந்தையும் குறிஞ்சியின் புறன் ஆகும். (வெட்சி குறிஞ்சியின் புறன் ஆவதை முந்தைய பாடத்தில் படித்தோம்.)
கரந்தை என்பது நிரைமீட்டல், இதன் துறைகள் பதின்மூன்று. இவற்றைப் பற்றி இந்தப் பாடத்தில் படித்தோம்.
பாடம் - 4
போர்ப் பகுதிகளுள் ஒன்று வஞ்சி. தன்னை மதியாத அரசனது நாட்டைக் கைப்பற்றக் கருதி, வஞ்சிப் பூவைச் சூடி, அவன்மேல் போர் தொடுப்பதைச் சொல்வதாகும் இது. இதனை வட்கார் மேற்செல்வது வஞ்சி (பகைவர்மீது படையெடுப்பது வஞ்சி) என்னும் பழம்பாடல் அடியொன்று அறிவிக்கின்றது. போர் மேற்செல்லும் மறவர்கள் வஞ்சிப் பூவைச் சூடிக் கொள்வதைச் சிலப்பதிகாரமும் சொல்லுகின்றது.
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி
வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து
– (சிலம்பு. கால்கோள் – 50, 51)
நாட்டைக் கைப்பற்றக் கருதிய மறவர்கள் சூடிய வஞ்சிப்பூ, மரப்பூவா, கொடிப்பூவா என்பது தெரியவில்லை.
வஞ்சி வேந்தன் யார்? இது குறித்து இருவேறு கருத்துகள் உலவுகின்றன. மண் ஆசையால் போரினைச் செய்ய வரும் வேந்தன், அவனைத் தன் நாட்டு எல்லைக்குள் புகாதபடி தடுத்து போரிடும் வேந்தன் ஆகிய இரு வேந்தரும் வஞ்சி வேந்தர் என்பதாகவே இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் எண்ணுகின்றனர். (இவ்விருவரும் தொல்காப்பிய உரையாசிரியர்கள் என்பது நினைவிருக்கிறதல்லவா?) இது ஒரு கருத்து , ஆனால் இதற்கு மாறாக ,
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் ; உட்காது
எதிரூன்றல் காஞ்சி.
என்று பழைய பாடல் ஒன்று கூறியுள்ளது. இதன்படி போரினைச் செய்ய வரும் வேந்தனே வஞ்சி வேந்தன்; அவனை உள்ளே புகாதபடி தடுத்துப் போரிடும் வேந்தனோ காஞ்சி வேந்தன்என்பதாகும் . இது மற்றொரு கருத்து. இக்கருத்தை மனதில் கொண்டே ஐயனாரிதனார் வஞ்சி படையெடுத்தல் என்றும், காஞ்சி தடுத்து (எதிர்த்து) நிற்றல் என்றும் கொண்டார் எனத் துணியலாம். காஞ்சித் திணையைப் பற்றிப் பிறகு பார்க்கலாம்.
முல்லைத்திணையின் புறன் வஞ்சி. கார்காலத்தில் மழைநீர் பள்ளங்களில் தேங்கும். ஆகையால், தமது கன்றுகாலிகளை மேய்க்கும் ஆயர் மேட்டுப்புலங்களை நாடிச் செல்வர். மாலையில் வீடு திரும்புவர். மாலை வரையில் ஆயருடைய வருகையை எண்ணி ஆற்றியிருப்பது (பொறுத்துக் கொண்டிருப்பது) ஆய மகளிர் ஒழுக்கம். ஆய்மகள் இல்லில் இருந்தும், ஆயர்மகன் மேட்டுப்புலத்தில் ஆநிரைகளோடு தங்கியிருந்தும் பிரிவை ஆற்றி வாழ்வர். இவ்வாறே, பிறர் மண்ணை நச்சிய வேந்தரும் வீரரொடும் பாசறை இடத்துத் தங்கி ஆற்றியிருப்பர். அவர் தேவியரும், அவர்கள் வினைமுற்றி மீளும் வரையில் இல்லிடத்தே தோழியரொடும் கூடி ஆற்றியிருப்பர். இவ்வகையால், முல்லையின் புறனாக வஞ்சி ஒழுக்கம் ஒப்புமைப்பட்டு நிற்கின்றது.
தன்னை மதியாத அரசனது நாட்டைக் கைக்கொள்ளக் கருதிக் குடிப்பூவொடும் போர் அடையாளப் பூவாம் வஞ்சிப் பூவைச் சூடிக்கொண்டு அவன்மேல் மற்றொரு வேந்தன் படையெடுத்துச் செல்லுவது வஞ்சித் திணை. இவ்வஞ்சி ஒழுக்கத்தின் இலக்கணத்தை இயம்பும் இயல் வஞ்சிப் படலம். இனி, இவ்வியல் தரும் விளக்கங்களைக் காண்போம்.
கொளுப் பொருளும் கொளுவும்
வாடுதல் இல்லாத வஞ்சிப்பூ மாலையை ஒர் அரசன் தன் தலையில் சூடிப் பகைவருடைய நிலத்தைக் கைப்பற்றுவது குறித்தது வஞ்சித் திணை எனப்படும்.
வாடாவஞ்சி தலைமலைந்து
கூடார்மண் கொளல்குறித்தன்று
(கூடார் = பகைவர்)
எடுத்துக்காட்டு வெண்பா
செங்கண் மழவிடையின் தண்டிச் சிலைமறவர்
வெங்கள் மகிழ்ந்து விழவுஅமர – அங்குழைய
வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக்
குஞ்சி மலைந்தான்எம் கோ
வெண்பாவின் கருத்து
மறவர்கள் வில்விழாவாம் போரை விரும்பினார்கள். விரும்பவும், அவர்களுடைய மன்னன் வணங்காத பகைவரை வணங்கப் பண்ண வஞ்சி மாலையைச் சூடினான். அஃதாவது, பகைநாட்டின் மேல் போர் அறிவித்தான் என்பதாம்.
துறைப் பொருத்தம்
வணங்காதாரை வணக்க வஞ்சி வேந்தன் வஞ்சி மாலையைச் சூடினான்; மறவர் போரை விரும்பினர் என்பவற்றில் துறைப் பொருள் பொதிந்துள்ளதை அறிகின்றோம். துறை பொருந்துமாறும் புலனாகின்றது.
வாடா வஞ்சி, வஞ்சி அரவம்
கூடார்ப் பிணிக்கும் குடைநிலை, வாள்நிலை,
கொற்றவை நிலையே, கொற்ற வஞ்சி,
குற்றமில் சிறப்பின் கொற்ற வள்ளை,
பேராண் வஞ்சி, மாராய வஞ்சி,
நெடுமொழி வஞ்சி, முதுமொழி வஞ்சி,
உழபுல வஞ்சி, மழபுல வஞ்சி,
கொடையின் வஞ்சி, குறுவஞ் சிய்யே,
ஒருதனி நிலையொடு, தழிஞ்சி, பாசறை,
பெருவஞ் சிய்யே, பெருஞ்சோற்று நிலையொடு,
நல்லிசை வஞ்சியென நாட்டினர் தொகுத்த
எஞ்சாச் சீர்த்தி இருபத் தொன்றும்
வஞ்சியும் வஞ்சித் துறையும் ஆகும்
– (புறப்.வெண்.மாலை , சூ-3)
இந்நூற்பா வஞ்சித் திணையையும் சேர்த்து இருபத்தொன்று என்று கணக்கிடுகிறது.
வஞ்சித் திணையுள் இருபது துறைகள் (நிகழ்வுகள்) இடம் பெறுகின்றன. இவற்றைப் போருக்கு முன்னர், போரின் பின்னர் எனப் பிரிக்கலாம்.
கொளுப் பொருளும் கொளுவும்
வஞ்சியரவமாவது, ஒளி பொருந்திய வாளையுடைய படை மறவர்கள் வலிமையான வாரினாலே வலித்துக் கட்டிய முரசத்தோடு வலிய களிறுகள் பிளிற வெகுண்டு எழுந்ததைக் கூறுவதாகும்.
வள்வார் முரசமொடு வயக்களிறு முழங்க
ஒள்வாள் தானை உருத்துஎழுந் தன்று
முரசத்தின் முழக்கம், வஞ்சி சூடிய மறவரின் ஆர்ப்பரிப்பு, ஊழித் தீ அன்ன யானைப் படை மழைமேகமென ஆரவாரித்தல் ஆகியவற்றை ஒருசேர நோக்க, வஞ்சியரவம் என்னும் துறைப் பொருள் நிரம்புவதைக் காண்கின்றோம்.
கொளுப் பொருளும் கொளுவும்
தான் சூடிய மாலையின் வண்டினம் ஒலிப்பவும், புலவர் தன் புகழைப் பாடவும், தார்மாலை அணிந்த மன்னன், நல்ல நேரம் அமைந்த நாளில் தனது வெண் கொற்றக் குடையைப் புறவீடு செய்வது, குடைநிலை என்னும் துறையாம்.
பெய்தாமம் சுரும்புஇமிரப் பெரும்புலவர் புகழ்பாடக்
கொய்தார் மன்னவன் குடைநாள் கொண்டன்று
எடுத்துக்காட்டு வெண்பா
முன்னர் முரசுஇரங்க மூரிக் கடல்தானைத்
துன்னரும் துப்பில் தொழுதுஎழா – மன்னர்
உடைநாள் உலந்தனவால் ; ஓதநீர் வேலிக்
குடைநாள் இறைவன் கொள.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
வஞ்சி வேந்தன் தன்னைப் பணியாத மன்னர்மேல் போர் என்று குடையைப் புறவீடு செய்த அளவில், அவர்களுடைய வாழ்நாள் இல்லையாயிற்று.
கொளுப் பொருளும் கொளுவும்
வஞ்சியரசன் தன் பகைவர்மேலே தன்னுடைய படையைச் செலுத்தலை விரும்பித் தனது வெற்றிவாளை நல்ல முழுத்தத்திலே (நேரத்திலே) புறவீடு விட்டது, வாள்நிலை என்னும் துறையாகும்.
செற்றார்மேல் செலவுஅமர்ந்து
கொற்றவாள் நாள்கொண்டன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
சோதிட நூலார் குறித்த நேரத்தில் வாளினைப் புறவீடு செய்யவே, பகை நாட்டார்க்குத் தோல்வி வந்துறும் என்பதை அறிவிப்பதாய்க் கூகை (கோட்டான்) பகற்போதிலும் குழறுகின்றது (கூவுகிறது). குழறுவது, வாள்மங்கலம் (வாள்நிலை) செய்த மன்னனுக்கு வெற்றியுண்டாம் என்பது குறிப்பு.
கொளுப் பொருளும் கொளுவும்
நீண்ட தோள்களைக் கொண்ட வஞ்சி வேந்தன், மேற்கொண்ட போர் வினையில் வெற்றியைக் கொள்வானாக என, நல்ல பொருள்களால் நிரம்பிய அகன்ற மண்டையை (பெரிய அகலை) வெற்றியாக உயர்த்தி, பகைவரைப் புறங்காணும் கொற்றவையின் அருள்நிலையை வஞ்சி மறவர் கூறுவது கொற்றவை நிலை ஆகும்.
நீள்தோளான் வென்றிகொள்கஎன நிறைமண்டை வலனுயரிக்
கூடாரைப் புறங்காணும் கொற்றவைநிலை உரைத்தன்று
எடுத்துக்காட்டு வெண்பா
அணங்குடை நோலை பொரிபுழுக்கல் பிண்டி
நிணம்குடர் நெய்த்தோர் நிறைத்துக் – கணம்புகலக்
கைஇரிய மண்டைக் கணமோடி காவலற்கு
மொய்இரியத் தான்முந்து உறும்.
எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்
தன் கையிலே கொண்ட மண்டையையும், பூதகணங்களையும் உடைய கொற்றவை, வஞ்சி வேந்தனின் பகைவரது வலிமை கெட்டழியும்படி, தானே முன்னதாக எழுந்தருள்வாள்.
அதாவது, கொற்றவை, பகைவரை அழித்து வெற்றியை நல்க, வஞ்சிவேந்தனுக்கு முன்னாக எழுந்து அருள்வாள்.
இதுவும் அது (கொற்றவை நிலை)
கொளுப் பொருளும் கொளுவும்
மறத்துறைக்குத் தெய்வமாக விளங்கும் கொற்றவையின் அருள்நிலை மட்டும் அன்றி, வலிமையுடைய வஞ்சி மறவரின் போர்த் திறனைத் தெரிவிப்பதும் கொற்றவை நிலை என்னும் துறைப் பொருளாகும் என்பர் புலவோர்.
மைந்துடை ஆடவர் செய்தொழில் கூறலும்
அந்தமில் புலவர் அதுவென மொழிப
கொளுப் பொருளும் கொளுவும்
உலகவர் தன்னை வணங்கும்படியாக வாளாலே பகைவரை எறிந்தனன் என்று வீரக்கழல் அணிந்த வஞ்சிவேந்தனின் பெருமையைச் சொல்லுவது கொற்ற வஞ்சி என்னும் துறையாகும்.
வையகம் வணங்க வாளோச் சினன்எனச்
செய்கழல் வேந்தன் சீர்மிகுத் தன்று
கொளுப் பொருளும் கொளுவும்
வஞ்சி வேந்தனின் சீர்த்தியை (சிறப்பை) எடுத்தோதி, அதே சமயத்தில் பகைவர் நாடு அழிந்தமைக்கும் வருந்துவது, கொற்றவள்ளை என்னும் துறையின் பொருளாகும்.
மன்னவன் புகழ்கிளந்து
ஒன்னார்நாடு அழிபுஇரங்கின்று
(அழிபு = அழிவு)
கொளுப் பொருளும் கொளுவும்
நண்பினர் அல்லாத பகைவரது போர்முனையைத் தொலைத்த (அழித்த) தலைமைத் தன்மையுடைய வஞ்சி மறவர்க்கு அரசன் சிறப்பு வழங்கியதைச் சொல்லுவது, பேராண் வஞ்சி ஆகும்.
கேள்அல்லார் முனைகெடுத்த
மீளியார்க்கு மிகஉய்த்தன்று.
(கேள் அல்லார் = பகைவர் ; மீளியார் = மறவர்)
எடுத்துக்காட்டு வெண்பா
பலிபெறு நன்னகரும் பள்ளி இடனும்
ஒலிகெழு நான்மறையோர் இல்லும் – நலிவுஒரீஇப்
புல்லார் இரியப் பொருதார் முனைகெடுத்த
வில்லார்க்கு அருள்சுரந்தான் வேந்து.
கோயில், பள்ளியிடம், வேதம் ஓதும் அந்தணர் இல்லம் ஆகியன அழிவுக்குள்ளாகாதபடி பாதுகாத்தும் பகைவர் இரிந்து (சிதறி) ஓடும்படி போர் புரிந்தும் சிறந்த வஞ்சி மறவர்க்கு அவர்கள் மன்னன் மிக்க அருளைப் பொழிந்தான் என்று எடுத்துக்காட்டு வெண்பா கூறுகிறது.
இதுவும் அது (பேராண் வஞ்சி)
வஞ்சி மன்னன் திறையை ஏற்றுக் கொண்டு போரினைக் கைவிட்டு, தன் நாடு திரும்புதலும் பேராண் வஞ்சி எனப் பெறும்.
கொளுப் பொருளும் கொளுவும்
பெறற்கரிய திறைப் பொருளைப் பகைமன்னன் முகந்து கொடுக்கக் கோபம் தணிந்த வஞ்சிவேந்தன், அவனைத் தன் மறத்தால் மேலும் வருத்தாமல், போர்க்களத்தினின்றும் தன் நாட்டிற்கு மீண்டு போதலும் பேராண் வஞ்சித் துறை என்பார்கள்.
அருந்திறை அளப்ப ஆறிய சினத்தோடு
பெரும்பூண் மன்னவன் பெயர்தலும் அதுவே
கொளுப் பொருளும் கொளுவும்
வஞ்சி வேந்தன் தறுகண்மை உடையவன். அவனால் சிறப்புச் செய்யப் பெற்றார்கள் வஞ்சி மறவர்கள். இம்மறவர்கள் வெற்றிக்குக் காரணமான வேற்படையைக் கையில் கொண்டவர்கள். இவர்களுடைய மாண்பினை எடுத்துரைப்பது, மாராய வஞ்சி என்னும் துறையாம்.
மறவேந்தனின் சிறப்பெய்திய
விறல்வேலோர் நிலைஉரைத்தன்று
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
வஞ்சி மன்னன் சினந்து பார்த்த போர் முனையை அவனுடைய மறவர்கள் தாக்கினர். தாக்கிய போரில் பகைவரது வேலை ஏற்ற வஞ்சி மறவர்களின் மார்புகள் வஞ்சி மன்னன் வழங்கிய முத்துமாலையைச் சூடிக் கொண்டன.
கொளுப் பொருளும் கொளுவும்
மறவன் ஒருவன், பகைவருடைய படையை நெருங்கித் தனது ஆண்மைத் தன்மையை அவர்கள் அறியத் தானே சிறப்பித்துரைப்பது, நெடுமொழி வஞ்சி என்னும் துறையாகும்.
ஒன்னாதார் படைகெழுமித்
தன்ஆண்மை எடுத்துரைத்தன்று
எடுத்துக்காட்டு வெண்பா
இன்னர் எனவேண்டா, என்னோடு எதிர்சீறி
முன்னர் வருக. முரண்அகலும் – மன்னர்
பருந்துஆர் படைஅமருள் பல்லார் புகழ
விருந்தாய் அடைகுறுவார் விண்.
இன்னர் (இன்னதன்மையர் = இப்படிப்பட்டவர்) என வேண்டா. யாவராயினும் ஆகுக ; என் முன்னர் வருக ; வரும் அவரை விண்ணுலகிற்கு அனுப்புவன் எனத் தன் பெருமிதம் தோன்ற மொழிவதில் ‘ஒன்னாதார் படைகெழுமித் தனது ஆண்மையை’ எடுத்துரைத்தல் அமைகின்றது. இதனால் துறையமைதி புலப்படுகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
பழைய வீரவரலாற்றினை உடைய வாளொடு முன்தோன்றிய குடியின்கண் முன்னர் இருந்தமற வனது நிலைமையை மொழியும் வஞ்சித் துறை, முதுமொழி வஞ்சி என்பதாகும்.
தொல்மரபின் வாள்குடியின்
முன்னோனது நிலைகிளந்தன்று
எடுத்துக்காட்டு வெண்பா
குளிறு முரசம் குணில்பாயக் கூடார்
ஒளிறுவாள் வெள்ளம் உழக்கிக் – களிறுஎறிந்து
புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய் !
தண்ணடை நல்கல் தகும்.
வேந்தே! முரசு முழங்கச் சென்று பகைவரின் வாட்படை வெள்ளத்தைக் கலக்கி அவர்களின் களிற்றுப்படையை வெட்டிச் சாய்த்துப் புண்ணொடு முன்னாளில் வந்த மறவன் இப்பொழுது இலனாகலின், அவனுடைய புதல்வனுக்குப் பரிசென மருத நிலங்களை வழங்குவது பொருத்தமானதே யாகும்.
முரசு முழங்க, அதன் ஒலி கேட்டு, மறம் மூண்டு வாட்படை வெள்ளத்தைக் கலங்கச் செய்தவன்; களிற்றை வெட்டி வீழ்த்தி விழுப்புண்ணொடு முன்னாளில் வந்தவன் ஆகிய அவனுடைய மகன் இவன்’ என்பதில் குடிமுதல்வனின் புகழ் பொதிந்திருத்தலின், முதுமொழி வஞ்சி ஆவது தெளிவு.
கொளுப் பொருளும் கொளுவும்
வஞ்சி வேந்தன் தன் பகைவருடைய வளம் பொருந்திய நாட்டினை தீயைக் கொண்டு கொளுத்தியதை உழபுல வஞ்சி என்பர்.
நேராதார் வளநாட்டைக்
கூர்எரி கொளீஇயன்று
கொளுப் பொருளும் கொளுவும்
பகைவருடைய பகைப்புலத் வஞ்சி மறவர் கொள்ளையிட்டு அவர்களது இல்லங்களில் வளம் இல்லையெனும் படியாகக் கைப்பற்றிக் கொண்ட செயலைச் சொல்வது மழபுல வஞ்சி என்னும் துறையாம்.
கூடார்முனை கொள்ளைசாற்றி
வீடுஅறக்கவர்ந்த வினைமொழிந்தன்று
எடுத்துக்காட்டு வெண்பா
களமர் கதிர்மணி காலேகம் செம்பொன்
வளமனை பாழாக வாரிக் – கொளல்மலிந்து
கண்ஆர் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன்
நண்ணார் கிளைஅலற நாடு
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
வஞ்சி மறவர், பகைநாட்டில் வாழ்வோர் புலம்பவும், அவர்களது மனை பாழாகவும் பொருள்கள் பலவற்றையும் கவர்ந்தனர். அவர்களுடைய களமர்களையும் (ஏவல்மாக்கள்) கைப்பற்றினர்.
கொளுப் பொருளும் கொளுவும்
உச்சம், மந்தம், சமம் ஆகிய மூன்று இசைநிலைகளையும் அளந்து அறிந்து பாடிய பாணர்களுக்கு வஞ்சி வேந்தன் பரிசில் கொடுத்ததைச் சொல்வது கொடை வஞ்சித் துறை யாகும்.
நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கிப்
பாடிய புலவர்க்குப் பரிசில் நீட்டின்று
எடுத்துக்காட்டு வெண்பா
சுற்றிய சுற்றமுடன் மயங்கித் தம்வயிறு
எற்றி மடவார் இரிந்தோட – முற்றிக்
குரிசில் அடையாரைக் கொண்டகூட்டு எல்லாம்
பரிசில் முகந்தன பாண்
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
பகைவர் நாட்டை வளைத்துக் கைப்பற்றிய எல்லா வளங்களையும் போர்க் களத்தில் பாடும் பாணர்கள் பெறப் பரிசிலாகக் கொடுத்தான் வஞ்சிவேந்தன் என்பதாகும்.
துறைப் பொருத்தம்
அடையாரது பகைவரது நாட்டில் கொண்ட பொருள்களை வஞ்சிவேந்தன் வழங்கப் பாணர் முகந்து கொண்டனர் என்பதனுள் ‘பாடிய புலவர்க்குப் பரிசில் நீட்டியமை’ காணப்படுகின்றது. ‘பாண்’ என்பது பாணரைக் குறித்தது. இவ்வகையால் துறைப் பொருள் பொருந்துவதைக் காணலாம்.
கொளுப் பொருளும் கொளுவும்
சினத்தொடு எழுந்த வஞ்சி வேந்தனுக்குத் திறைப் பொருள் கொடுத்து, அந்நாட்டு வேந்தன் தன் குடிகளுக்கு அருள் செய்து காத்தது குறுவஞ்சியாம். மேற் செல்வதாகிய போர்த் தொழில் குறுகும் நிலைமையைத் திறைப் பொருள் செய்தது என்பது குறிப்பு.
மடுத்துஎழுந்த மறவேந்தர்க்குக்
கொடுத்தளித்துக் குடிஓம்பின்று
(ஓம்புத = காத்தல்)
எடுத்துக்காட்டு வெண்பா
தாள்தாழ் தடக்கைத் தனிமதி வெண்குடையான்
வாள்தானை வெள்ளம் வர,அஞ்சி – மீட்டான்
மலையா மறமன்னன் மால்வரையே போலும்
கொலை யானைப் பாய்மாக் கொடுத்து.
வெண்பாவின் பொருள்
பகை மன்னன் வீரமுடைய அரசனே. எனினும் அவன் வஞ்சி வேந்தனொடு மேலும் மலையவில்லை. காரணம், வஞ்சிவேந்தனின் வாள்மறவர்படை வெள்ளமென வரக் கண்டு அஞ்சியமையே ஆகும். தீயில் அழியவிருக்கும் நாட்டை மீட்டுத் தன்நிழல் வாழ் குடிகளைக் காத்தளிக்கப் பகை மன்னன், மலை போலும் பெரிய யானைப் படையையும், பாய்கின்ற புரவிப் படையையும் திறைப் பொருள்களாகக் கொடுத்தான். கொடுக்கக் கொண்ட வஞ்சி வேந்தன் போரைக் கைவிட்டான்.
பகைமன்னன் ‘யானைப் பாய்மாக் கொடுத்து மீட்டான்’ என்பது, ‘கொடுத்தளித்துக் குடியோம்பியமையை’ அறிவிக்கிறது.
இதுவும்அது (குறுவஞ்சி)
குறுமை – வஞ்சிப் போர் நிகழ்வுகளில் குறுமை (குறைவு). போர்ச் செயலைத் தவிர்த்து இருந்த மன்னனின் பாசறையின் தன்மையைக் கூறுதல் பற்றிக் குறுவஞ்சி எனப் பெற்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
பகைவரது நாட்டினைச் சூழ்ந்த காவற்காட்டில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராதலின் கட்டூர். கட்டூராவது பாசறை. வஞ்சி வேந்தன் படையிறங்கியிருந்த இப்பாசறையின் நிலையைக் கூறுவதும் குறுவஞ்சி எனப் பெறும்.
கட்டூரது வகைகூறினும்
அத்துறைக்கு உரித்தாகும்.
எடுத்துக்காட்டு வெண்பா
அவிழ்மலர்க் கோதையர் ஆட ஒருபால்,
இமிழ் முழவம் யாழோடு இயம்பக் – கவிழ்மணிய
காய்கடா யானை ஒருபால், களித்துஅதிரும்
ஆய்கழலான் கட்டூர் அகத்து.
எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்
பகை மன்னன் திறைப் பொருளை வழங்க, பெற்றுக் கொண்ட வஞ்சி வேந்தனின் பாசறையிடத்தே போர்க்கான ஆயத்தங்கள் குறுகின. ஆங்கே, களிப்புக்கு இடந்தருவனவே நிகழ்ந்தன. ஒருசார் (ஒருபக்கம்), மலர் சூடிய விறலியர் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்தம் ஆடலுக்கேற்ப மத்தளமும் யாழும் ஒத்திசைத்தன. ஒருசார், மணிகளையும் சினத்திற்கு அடையாளமான மதநீரையும் உடைய யானைகள் களித்துப் பிளிறிக்கொண்டிருந்தன.
போர் தவிர்ந்ததனால், பாசறை, விறலியர் ஆடலையும், களிறுகளின் களிப்பால் எழும் பிளிறலையும் உடையதாயிற்று.
கொளுப் பொருளும் கொளுவும்
போரில் வஞ்சி மறவன் ஒருவன், விசையொடு பெருகி வரும் கடும்புனலைக் கல்லால் கட்டிய அணை தடுத்து நிறுத்துமாறு போலத் தன்மேல் விரைந்து பெருமளவில் வரும் பகைமறவரைத் தான் ஒருவனாக நின்று தடுத்த நிலைமையைச் சொல்வது ஒரு தனி நிலை என்னும் துறையாம்.
பொருபடையுள் கற்சிறைபோன்று
ஒருவன்தாங்கிய நிலையுரைத்தன்று
எடுத்துக்காட்டு வெண்பா
வீடுஉணர்ந் தோர்க்கும் வியப்பாமால் இந்நின்ற
வாடல் முதியாள் வயிற்றிடம் – கூடார்
பெரும்படை வெள்ளம் நெரிதரவும் பேரா
இரும்புலி சேர்ந்த இடம்
இதன் கருத்து
கடுகிவரும் வெள்ளத்தைத் தாங்கும் கற்சிறை போலப் பகை மறவர் வெள்ளத்தைத் தாங்கியவன், முன்னம் இருந்த இடம், மறத்தியின் வயிறாகிய சிறிய இடம் ஆம். வயிற்றின் சிறுமையும் வீரனின் பெருமையும் சேர்த்தே எண்ணியதாக இப்பாடல் அமைகிறது.
கொளுப் பொருளும் கொளுவும்
வஞ்சியாரின் போர்ச் செயலுக்கு ஆற்றாது பகை மறவர் முதுகிடும் போது, அவர்மேல் கூரிய வாளினை எறிதல் வீறு அன்று என்ற மறப்பண்பை விரும்பி உரைப்பது தழிஞ்சி என்னும் துறையாம்.
அழிகுநர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக்
கழிதறு கண்மை காதலித்து உரைத்தன்று
(அழிகுநர் = போரில் தோற்று ஓடுவோர்)
எடுத்துக்காட்டு வெண்பா
கான்படு தீயின் கலவார்தன் மேல்வரினும்
தான்படை தீண்டாத் தறுகண்ணன் – வான்படர்தல்
கண்ணியபின் அன்றிக் கறுத்தார் மறம்தொலைதல்
எண்ணியபின் போக்குமோ எஃகு
எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்
காட்டின்கண் தோன்றும் நெருப்பு விரைந்து பரவுவதாகும். இந்நெருப்பைப் போல் பகைவர் தன்மேல் மீதூர்ந்து வந்த இடத்தும், போர் செய்து மாள்வதனால் விண்ணுலகம் எய்த வேண்டும் என்று துணிந்த இடத்தும் அல்லாமல், தன்னுடைய படையைத் தொடாத மறப்பண்புடைய வஞ்சி மறவன், வெகுண்டு போரிட்ட பகைமறவர் ஆற்றாது முதுகிட்டு ஓடுவதை எண்ணிய பின்னரும் அவர்மேல் தனது எஃகத்தைப் (வாளினைப்) போக்குவானோ? போக்கான்.
கொளுப் பொருளும் கொளுவும்
வஞ்சி வேந்தன், தன் பகைவேந்தர் எல்லாரும் தனது வெண் கொற்றக் குடைக்குக் கீழே அடங்கித் தமது இகல் (பகை) துறந்து நின்ற போதும், தன்னுடைய நகரத்திற்குப் பெயராதவனாய்ப் பாசறையில் தங்கியதைச் சொல்வது பாசறை நிலையாம்.
மதிக்குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லாம் மறம்துறப்பவும்
பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை இருந்தன்று
வெண்பாவின் கருத்து
பகைவரது வீரத்தைச் சாய்த்து, வயல், விளைநிலம் ஆகியவற்றை எரித்து, நீர்நிலைகளைக் கெடுத்து வென்ற வஞ்சியான் ஊர்க்கு மீளாமல், பாசறையில் தங்கியுள்ளான். இன்னும் எவற்றை எல்லாம் அழிப்பதற்காக?
கொளுப் பொருளும் கொளுவும்
‘நீயே புகல்’ என்று சொல்லிப் புகாத பகைவரது வளமிக்க நாட்டை வஞ்சி வேந்தன் முன்னர் ஒருமுறை எரியூட்டியதோடு அமையாமல் இரண்டாவதாகவும் சினந்து கொளுத்தியதை மொழிவது பெருவஞ்சியாகும்.
முன்அடையார் வளநாட்டைப்
பின்னரும்உடன்று எரிகொளீஇயன்று
வெண்பாவின் கருத்து
பகை மன்னர் அஞ்சும் வண்ணம், வஞ்சி வேந்தன் அவர்களது நாடு முழுமையும் நெருப்புக்கு உள்ளாக்கினான்.
கொளுப் பொருளும் கொளுவும்
பகைப்புலத்தை இம்மறவர்கள் அழித்துத் தருவர் எனப் பாராட்டி, அம்மறவர்களுக்கு உருட்டி வைத்த சோற்றை வஞ்சி வேந்தன், அவர்கள் பெற வேண்டிய வரிசை முறைமையின் கொடுப்பது, பெருஞ்சோற்று நிலையாம்.
திருந்தார் தெம்முனை தெறுகுவர் இவரெனப்
பெருஞ்சோறு ஆடவர் பெறுமுறை வகுத்தன்று.
எடுத்துக்காட்டு வெண்பா
இயவர் புகழ எறிமுரசு ஆர்ப்பக்
குயவரி வேங்கை அனைய – வயவர்
பெறுமுறையான் பிண்டம்கோள் ஏவினான் பேணார்
இறும் முறையால் எண்ணி இறை.
எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்
வஞ்சி வேந்தன், பகைவர்கள் அழியும் வகையை எண்ணி, இசைக் கருவிகளை இயக்குவோர் புகழும்படியும், கொட்டுகின்ற முரசு ஆரவாரிக்கும்படியும், வரிகளையுடைய புலியைப் போன்ற வஞ்சி மறவர்கள் பெறத்தகும் முறைப்படியே பெருஞ்சோறு பெறுமாறு பணித்தான்.
கொளுப் பொருளும் கொளுவும்
பகைமன்னருடைய வேற்றுப்புலம் கெடும்படி வெற்றி தங்கிய வேலினைக் கொண்ட வஞ்சி வேந்தனின் வெற்றியை மிகுதியும் சிறப்பிப்பது, நல்லிசை வஞ்சி என்னும் துறையின் பொருளாம்.
ஒன்னாதார் முனைகெடஇறுத்த
வென்வேல்ஆடவன் விறல்மிகுத்தன்று
வெண்பாவின் கருத்து
மேன்மேலும் பெருகும் படையைக் கொண்ட வஞ்சி வேந்தனுக்குப் பகைவர் நாட்டை அழித்த பின்னரும், அசைந்தெரியும் தீயைப் போலச் சினம் மிகுகின்றது, மீளவும் அவர்கள் மேல் போரிடுவதற்காக.
இதுவும்அது (நல்லிசை வஞ்சி)
வென்றவரது வீரத்தைப் புகழ்வது ஒருவகைப் புகழ்ச்சி. இம்மன்னனால் பகைவர் அழிந்துபட்டமை கூறி அவர்தம் அழிவுக்கு இரங்குவதும் ஒருவகையால் புகழ்ச்சியே. பகைவர்நாடு அழிந்தமைக்கு இரங்குவதிலும் வென்ற வேந்தின் புகழ் உறைவதால் இரங்குவதும் நல்லிசை வஞ்சி எனப் பெறுகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
வஞ்சி மன்னன் படையோடு சென்று பகைவர் நாட்டின்கண் தங்கிய பின்னர், அவனை நேர்முகமாகப் புகழ்வதை விட்டு, அவனால் வெல்லப்பட்ட பகைவரின் நாடு கெட்டமைக்கு வருந்துதலைக் கூறினாலும், வெளிப்படுவது வஞ்சி வேந்தனின் நல்லிசையே. ஆதலின் அழிவுக்கு இரங்கலும் நல்லிசை வஞ்சியே ஆகும்.
இறுத்தபின் அழிபுஇரங்கல்
மறுத்துரைப்பினும் அத்துறையாகும்.
எடுத்துக்காட்டு வெண்பா
குரைஅழல் மண்டிய கோடுஉயர் மாடம்
சுரையொடுபேய்ப் பீர்க்கும் சுமந்த – நிரைதிண்தேர்ப்
பல்லிசை வென்றிப் படைக்கடலான் சென்றுஇறுப்ப
நல்லிசை கொண்டுஅடையார் நாடு.
வெண்பாவின் கருத்து
தேரும் புகழும் படையும் உடைய வஞ்சியரசன் பாடி வீட்டில் தங்கிய அளவில், பகைவர் நாட்டில் மலைபோல் உயர்ந்த மாடங்கள் அழிக்கப் பெற்றமையால், அவ்விடத்தே சுரை, பீர்க்கு முதலியன முளைத்தன.
அடையார் (பகைவர்) நாட்டு மாடங்கள் சுரையும் பீர்க்கும் சுமந்தன என அவற்றின் அழிவுக்கு இரங்கும் வகையில், வென்ற மன்னனைப் புகழும் மறைமுகப் புகழ்ச்சி தென்படுவதால் துறைக் கருத்துப் புலனாகிறது.
இவற்றை விளக்க, பெயர்க்காரணம், வெண்பாவின் துறைப் பொருத்தம் ஆகியவையும் கூறப்பெற்றன.
முல்லையது புறன் வஞ்சி ஆவதற்கான காரணம்
பாடம் - 5
வட்கார் மேற்செல்வது வஞ்சியாம்; உட்காது,
எதிர் ஊன்றல் காஞ்சி
என்பது பழம்பாடல் ஒன்றன் அடி . இவ் எதிர் ஊன்றல் ஒழுக்கத்தின்போது மறவர்கள் காஞ்சிப் பூவைச் சூடிக்கொள்வர். காஞ்சி என்பது ஒரு மரம். இங்குக் காஞ்சி என்பது பூவினை உணர்த்தாமல், அதனைச் சூடிக் கடைப்பிடிக்கும் போர் ஒழுக்கத்தை உணர்த்தியது. காஞ்சி – ஆகுபெயர். காஞ்சியின் இலக்கணத்தை உணர்த்தும் சிறு பிரிவு, காஞ்சிப் படலம்.
வேம்சின மாற்றான் விடுதர வேந்தன்
காஞ்சி சூடிக் கடிமனை கருதின்று
கொளுப் பொருளும் கொளுவும்
அருவரை பாய்ந்துஇறுதும் என்பார்பண்டு இன்றுஇப்
பெருவரைச் சீறூர் கருதிச் – செருவெய்யோன்
காஞ்சி மலையக் கடைக்கணித்து நிற்பதோ
தோம்செய் மறவர் தொழில்?
வெண்பாவின் கருத்து
காஞ்சி மறவர்கள், தமது வீரத்தை நிலைநாட்டுதற்குரிய போரினை வாய்க்கப் பெற்றிலாமையால், மலையினின்று வீழ்ந்தேனும் இறப்போம் என்றிருந்த நிலையில், காஞ்சி மன்னன் தனது மலையகத்துச் சீறூரைக் காக்கக் காஞ்சிப் பூவைச் சூடி மலைந்தான். (சீறூர் = மலைப்பகுதியில் உள்ள சிறிய ஊர்) அது கண்ட மறவர்கள் போர்க்கென அணிவகுத்து நிற்கவில்லை; பகைவரைத் தாக்கச் சென்று விட்டனர். ‘எள்’ என்றால், ‘எண்ணெய்’ ஆகின்றனர்.
திணையமைதி
வெம்சின வேந்தன் படை வந்தமை கண்டு, போர் விரும்பும் காஞ்சி மன்னன் சீறூரைக் காக்க அடையாளப் பூவைச் சூடிச் சென்றான். அவனது மறவர்கள் அணிவகுப்பது குற்றமென்று எண்ணிப் பகைவரை எதிர்க்கச் சென்றனர் என்பதால் திணைப் பொருளாகிய எதிர் ஊன்றல் உறுதிப்படுத்தப்படுகிறது. (அணிவகுத்து நிற்பதால் காலம் கரையும். காலம் தாழ்த்தல் தவறு என்று கருதி வீரர்கள் உடனே போருக்குச் சென்றனர் என்பது இதன் கருத்து.)
வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறே
என்பது பன்னிரு படலம். பன்னிருபடலம் தோன்றிய காலத்தில் வஞ்சியும் காஞ்சியும் இருவேறு போர் ஒழுக்கங்களாக வழங்கியமை கருதியே இளங்கோவடிகளாரும்.
தென்திசை என்றன் வஞ்சியொடு வடதிசை
நின்றுஎதிர் ஊன்றிய நீள்பெருங் காஞ்சியும்
. . . . . . . . . . . . . . . . . . . . என்
வாய்வாள் மலைந்த வஞ்சி சூடுதும்
– (சிலம்பு, காட்சி, 135-149)
எனச் சேரன் செங்குட்டுவன் கூற்றில் வைத்துக் காட்டுகின்றார்.
தொல்காப்பியரின் காஞ்சித் துறைகளுள் மறக்கூறுகள் அமைந்த துறைகளையும், பன்னிருபடலம், சிலப்பதிகாரம் ஆகியவற்றுள் இடம் பெற்ற செய்திகளையும் கொண்டு ஐயனாரிதனார் காஞ்சித் திணையைப் படைத்துள்ளார். மேலும், தொல்காப்பியர் நிலையாமையை நவிலும் அறக்கூறுகள் பற்றிய துறைகளைப் பொதுவியல் படலத்துள் காட்டியுள்ளார்
பெருந்திணைப் புறன் காஞ்சி
காஞ்சி என்னும் திணை, பெருந்திணை என்ற அகத்திணைக்குப் புறன் என்பர் தொல்காப்பியர்.
காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
(1)காஞ்சி அதிர்வு
(2)தழிஞ்சி
(3)படை வழக்கு
(4)பெருங்காஞ்சி
(5)வாள் செலவு
(6)குடை செலவு
(7)வஞ்சினக் காஞ்சி
(8)பூக்கோள் நிலை
(9)தலைக்காஞ்சி
(10)தலைமாராயம்
(11)தலையொடு முடிதல்
(12)மறக்காஞ்சி
(13)பேய்நிலை
(14)பேய்க் காஞ்சி
(15)தொட்ட காஞ்சி
(16)தொடாக் காஞ்சி
(17)மன்னைக் காஞ்சி
(18)கட்காஞ்சி
(19)ஆஞ்சிக் காஞ்சி
(20)மகட்பாற் காஞ்சி
(21)முனைகடி முன்னிருப்பு
என்னும்இருபத்தொன்றனையும் சேர்க்க, காஞ்சித் திணை இருபத்திரண்டாம் என்று அறிஞர் சொல்லுவர்.
காஞ்சி; காஞ்சி அதிர்வே, தழிஞ்சி,
பெரும்படை வழக்கொடு, பெருங்காஞ் சிய்யே,
வாள்செலவு என்றா, குடையது செலவே,
வஞ்சினக் காஞ்சி, பூக்கோள் நிலையே,
புகழ்த்தலைக் காஞ்சி, தலைமா ராயம்,
தலையொடு முடிதல், மறப்பெயர்க் காஞ்சி,
மாற்றரும் பேய்நிலை, பேய்க்காஞ் சிய்யே,
தொட்ட காஞ்சி, தொடாக்காஞ் சிய்யே,
மன்னைக் காஞ்சி, கட்காஞ் சிய்யே,
ஆஞ்சிக் காஞ்சி, மகட்பாற் காஞ்சி,
முனைகடி முன்னிருப்பு, உளப்படத் தொகைஇ
எண்ணிய வகையான் இருபத்திஇ ரண்டும்
கண்ணிய காஞ்சித் துறையென மொழிப.
(புறப்பொருள் வெண்பா மாலை-4)
இப்பகுதியில், காஞ்சி அதிர்வு, தழிஞ்சி, படைவழக்கு, பெருங்காஞ்சி ஆகியவை பற்றிப் பார்ப்போம்.
கொளுப் பொருளும் கொளுவும்
தன்மேல் மோத வருகின்ற வஞ்சி மறவரது படையின் வரவை, சிறிதும் பொறாத வேல்தொழிலில் வல்லவனான காஞ்சி மறவனது வீரத்தைச் சிறப்பாக உரைப்பது காஞ்சி அதிர்வு என்னும் துறையாம்.
மேல்வரும் படைவரல் மிகவும் ஆற்றா
வேல்வல் ஆடவன் விறல்மிகுத் தன்று
எடுத்துக்காட்டு வெண்பா
மன்மேல் வரும்என நோக்கான் மலர்மார்பின்
வென்வேல் முகந்தபுண் வெய்துயிர்ப்பத் – தன்வேல்
பிடிக்கலும் ஆற்றாப் பெருந்தகை ஏவத்
துடிக்கண் புலையன் தொடும்
வெண்பாவின் பொருள்
காஞ்சி மறவன் அகன்ற மார்பில் வஞ்சி வேந்தனுடைய வேலினை ஏற்றதனால் ஏற்பட்ட புண்ணினால் பெருமூச்சு வாங்குகின்றான்; அவனால், தன் கைவேலையும் பிடிக்க இயலவில்லை. இயலாத நிலையிலும் மேம்பட்ட வீரத்தையுடைய அப்பெருந்தகை, தான் மீண்டும் எழுந்து போரிட்டால், வஞ்சி வேந்தன் தன்மேல் வருவான் என்பதையும் கருதாதவனாய்த் துடியனைத் துடிகொட்டும்படியாக ஏவுகின்றான். துடியன் கொட்ட, அவ்வொலி கேட்டு, மீளவும் அவன் மலைகின்றான் என்று, அதைப் பார்த்த ஒருவன் சொல்வதாக, வீர மிகுதியையும் துடியதிர்வையும் பேசுகின்றது இவ்வெண்பா.
துறையமைதி
வஞ்சி மறவன் எய்த வேலினால் உற்ற புண்வழி உயிர் ஓடவும், தனது வேலினைப் பிடிக்கலாற்றாத நிலைமையிலும் காஞ்சி மறவன் ஒருவன், மேலும் போர் புரியும் விருப்பம் மூண்டுத் துடியனை முழக்கும்படி ஏவினான் என்பதில், காஞ்சி அதிர்வின் துறைப் பொருளாகிய ‘வேல்வல் ஆடவன் விறல்’ என்பதும் துடியதிர்வும் தோன்றி, துறை பொருந்துவதைக் காணலாம்.
கொளுப் பொருளும் கொளுவும்
எவ்விடத்தும் பரவி வருகின்ற வஞ்சியார் படை, தமது நாட்டின் எல்லையில் புகாதபடி, வாயில்களைக் காப்பது தழிஞ்சி என்னும் துறையாம்.
பரந்துஎழுதரு படைத்தானை
வரம்புஇகவாமைச் சுரங்காத்தன்று
எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்
காஞ்சி மன்னன் காட்டரண் உடையவன். அவன் நாட்டினுள் புகுவதற்கரிய வாயில் வழியில் காட்டு மூங்கில் அசைந்து ஒலிக்கும். ஒன்றுக்கொன்று தம்முள் போரிடும் வேங்கை இனம் போன்ற மறவர்களால், அவ்வாயில் காக்கப்படும் காரணத்தால், வஞ்சி வேந்தன், காஞ்சியாரின் அரணைக் கைப்பற்ற விரும்பி வருகின்ற முயற்சியைக் கை விடுவானாக.
இதன் கருத்து
காவல் மிக்க காஞ்சி மன்னனின் அரணைக் கைப்பற்றும் முயற்சியை வஞ்சி வேந்தன் கைவிடல் வேண்டும். ஏனெனின், அது வேங்கை அன்ன மறவரால் காக்கப் பெறுவதேயாம்.
துறையமைதி
வேங்கை மறவரால் காக்கப் பெறுவதால் காஞ்சியாரின் அரணைக் கைப்பற்றும் நோக்கில் வீணே முயல வேண்டா என்பதில், வஞ்சி வேந்தனின் தானை எல்லை கடக்காமல் சுரங்காப்பது தெரிகிறது. இதனால் துறைப்பொருள் பொருந்தி நிற்பது புலனாகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
முத்து அணிகலன்களைப் பூண்கின்ற மறப்பண்பு வாய்ந்த காஞ்சி மன்னன், தன்னுடைய மறவர்க்குப் படைக் கருவிகளை வழங்கினான். வழங்கினமையைக் கூறுவது படைவழக்கு என்னும் துறையாம்.
முத்துஅவிர்பூண் மறவேந்தன்
ஒத்தவர்க்குப் படைவழங்கின்று
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
மறக்குடியில் வந்த காஞ்சி மறவர்க்கு மன்னன் படைக் கருவிகளை வழங்கினான்; இதனால் தனக்கு உணவு கிட்டுவது உறுதி எனக் கூற்று (யமன்) மகிழ்ந்தது. இதிலிருந்து துறைப்பொருள் பொருந்துவது புலப்படுகிறது.
இதுவும் அது (படை வழக்கு)
மன்னனால் படை வழங்கப் பெற்ற மறவர் ‘எமக்கு இன்ன படையை வழங்கினான்’ என எடுத்துப் பேசுவதும் படைவழக்கில் அடங்குவதால் இப்பெயர் பெற்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
காஞ்சி மன்னன் படைக்கலன்களை வழங்கிய பின்னர், அவற்றைப் பெற்ற வீரக்கழல் கட்டிய காஞ்சி மறவர், தமது மறப்பண்பினை வியந்து உரைத்தலும் மேற்கூறிய படை வழக்கு என்னும் துறையின் பாற்படும்.
கொடுத்தபின்னர்க் கழல்மறவர்
எடுத்துரைப்பினும் அத்துறையாகும்
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
‘ஒப்பரிய காஞ்சி மறவர்கள் சுற்றிச் சூழ்ந்திருந்த போது, காஞ்சி மன்னன் தனது வாளை என் கையில் தந்தான். மன்னனின் ஆணைக்கீழ் உலகமெல்லாம் அடங்கியுள்ளது முன்னமே தெரிந்ததுதான். மன்னன் விண்ணுலகையும் அடிமை கொள்ள அவாவுகின்றான். வாள் வழங்கப் பெற்ற நான் அதனையும் கிட்டச் செய்வேன்’ என்கின்றான் மறவன் ஒருவன்.
துறையமைதி
மண்ணுலகம் முழுமையும் தமது மன்னனின் ஆணைக்குட்படுத்திய வீரர் பலரும் சூழ்ந்திருக்கவும், தன்கை வாளை என்கை தந்த மன்னர்க்கு, விண்ணுலகையும் அடிமைப்படுத்துவேன் என்னும் வீரனின் கூற்றில் ‘படை வழங்கியமை எடுத்துரைத்தல்’ அமைதலால், துறை பொருந்துவதைக் காண்கிறோம்.
கொளுப் பொருளும் கொளுவும்
தம்மேல் வரும் பகைப் படையைத் தடுத்துத் தாங்கும் ஆற்றலையுடைய மறவர்கள், தங்கள் போர் ஆற்றலை, வஞ்சியாரின் பெரிய படையை எதிர்த்துத் தாங்கும் செயலால் வெளிப்படுத்துவது பெருங்காஞ்சித் துறையாம்.
தாங்குதிறல் மறவர் தத்தம் ஆற்றல்
வீங்குபெரும் படையின் வெளிப்படுத் தன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
காஞ்சி மறவரால் எய்யப்பட்ட அம்பு மாரி பாய்ந்து, எதிரில் நின்ற பகை மன்னரின் போர்க் களிறுகள் எல்லாம், தினை (கதிர்) அரியப்பட்டு எஞ்சிக் கிடந்த தாள்களையுடைய மலைபோலத் தோற்றம் அளிக்கின்றன.
துறையமைதி
காஞ்சி மறவர் தொடர்ந்து பாய்ச்சிய கணைகள், பகைவரின் வீரத்தையும், யானைகளையும் வீழ்த்தியதைக் கூறுவதால், இத்துறையின் பொருள் பொருந்துவது புலனாகும்.
கொளுப் பொருளும் கொளுவும்
வெல்லுதற்கரிய போர்முனையில் நின்று வஞ்சி வேந்தன், ‘தன்னோடு போர்க்கு வருக!’ எனக் கூவி அழைத்த பின், காஞ்சி மன்னன் போர்முனை நோக்கி வாளினைப் போக விடுவதைப் பற்றிச் சொல்வது வாள் செலவு என்னும் துறையாம்.
அருமுனையான் அறைகூவினபின்
செருமுனைமேல் வாள்சென்றன்று
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
புரவிப் படையை உடைய காஞ்சி மன்னன், பகைவர்கள் தன்னை வருத்துவதற்கென வந்த பின்னரே வாளினைப் புறவீடு செய்தான் என்பதாம்.
துறையமைதி
வஞ்சி வேந்தன், தன் பாசறையை விட்டு வந்த பின்னரே காஞ்சியான், அவனுடைய வாளினைப் புறவீடு செய்தான் என்பதனால், துறைப் பொருத்தம் தெளிவாகின்றது.
டையைப் புறவீடு செய்தல் பற்றிக் குடை செலவு என்னும் பெயர் பெற்றது இத்துறை.
கொளுப் பொருளும் கொளுவும்
கொதிக்கும் நெருப்பைப் போல் வெம்மையைப் பகைவர்க்குப் பயப்பவன் காஞ்சி வேந்தன். அவன், பழைய குடியில் பிறந்துவந்த காஞ்சி மறவர்கள் முன்னாகச் சூழ்ந்து செல்ல, தனது வெண் கொற்றக் குடையைப் பகைவர்தம் பாசறை நோக்கிச் செல்லவிட்டான். செல்லவிட்ட அதனைச் சொல்வது, குடை செலவு ஆகும்.
முதுகுடி மறவர் முன்னுறச் சூழக்
கொதிஅழல் வேலோன் குடைசென் றன்று.
எடுத்துக்காட்டு வெண்பா
. . . . . . . . நண்ணார்மேற் செல்கஎன்று
கூட்டிநாள் கொண்டான் குடை.
என்று குறிப்பிடுகிறது.
எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்
காஞ்சி மன்னன், வஞ்சி வேந்தனுடன் இன்ன நாளில் இன்ன இடத்தில் போரிடுவேன் என நாளும் களமும் குறிப்பிட்டு, எழுதிய ஓலையில் தனது இலச்சினையைப் பதித்து, அதனை அவ்வஞ்சி வேந்தன்பால் அனுப்பிய பின்பு நல்ல நாளில் குடையைப் புறவீடு செய்தான்.
துறையமைதி
‘வெய்யோன் . . .’, ‘கூட்டி நாள் கொண்டான் குடை’ என்றதில், துறைக் கருத்துப் பொருந்தி வருமாறு விளங்குகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
காஞ்சி வேந்தன் கொடிய சினத்தினன். அவன் சினந்து, தனக்கு வேற்றவராகிய (பகைவராகிய) வஞ்சியாரை அடிபணியச் செய்வதாகச் சூளுரை கூறிய வகையை மொழிந்தது வஞ்சினக் காஞ்சி என்னும் துறையாம்.
வெம்சின வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப
வஞ்சினம் கூறிய வகைமொழிந் தன்று.
எடுத்துக்காட்டு வெண்பா
இன்று பகலோன் இறவாமுன் ஒன்னாரை
வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின் – என்றும்
அரண்அவியப் பாயும் அடையார்முன் நிற்பேன்
முரண்அவிய முன்முன் மொழிந்து.
(பகலோன் = கதிரவன்; ஒன்னார் = பகைவர்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்
பகைவராகிய வஞ்சி மறவரை இன்று பகலவன் மறைவதற்கு முன்னதாகவே எனது வேற்படை கொண்டு வெல்வேன்; வென்று போர்க்களத்தைக் கைப்பற்றுவேன். கூறிய கால எல்லைக்குள் வென்று, களத்தைக் கைப்பற்றாது, எனது வேலினை உயர்த்திப் பிடிப்பேனாயின், மாற்றாரது அரண் அழியும்படி தாக்கும் வஞ்சியார் முன்பு எனது முரண் (பகைமை) அவிய எல்லாக் காலமும் பணிமொழி கூறி, தாழ்ந்து நிற்கும் இழிநிலையைப் பெறுபவனாக நான் ஆவேன் எனக் காஞ்சியான் வஞ்சினம் மொழிகின்றான்.
துறையமைதி
‘இன்னது பிழைப்பின் இன்னவாறு ஆகக் கடவேன்’ என்பது வஞ்சின மொழியென்று முன்னரே பார்த்தோம். இம்மொழி, ‘இன்று பகலோன் . . . . மொழிந்து’ என்பதனுள் பொதிந்துள்ளது; இதனால், இத்துறையாவதை அறியலாம்.
கொளுப் பொருளும் கொளுவும்
கரிய மேகத்தைத் தாங்கிய கடலைப் போலுள்ள தன் பெரும்படை மறவர்கள், வஞ்சி வேந்தனால் வந்துற்ற போரை எதிர் கொள்ளும் பொருட்டுக் காஞ்சி மன்னன் பூவினை வழங்கினான். அவனுடைய மறவர்கள் அதனைப் பெற்றுக் கொண்டதைக் கூறுவது, பூக்கோள் நிலை என்னும் துறையாம்.
கார்எதிரிய கடல்தானை
போர்எதிரிய பூக்கொண்டன்று
(கார் = கரிய மேகம்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
காஞ்சி மன்னன் வழங்கிய பூவினைக் கொண்ட காஞ்சி மறவர்கள் குறையாத வீரம் உடையவர்கள். வஞ்சி வேந்தனின் வீரம்கெடப் போர் புரிவார்கள் ; மாலைக்குள் வஞ்சியாரை வென்று, மாலை நேரத்துச் சிவந்த வானம் போலக் குருதி வெள்ளம் மண்ணில் பாய விடுவர் எனக் கண்டோர் பேசிக் கொள்கின்றனர்.
துறையமைதி
வஞ்சி வேந்தனைத் தோற்கடிப்பதற்காக, காஞ்சி மன்னன் தனது மறவர்களுக்குக் காஞ்சிப்பூ வழங்கினான் என்பதில் ‘போர் எதிரிய பூக்கொண்ட நிலை’ அமைதலின், துறைக் கருத்துப் பொருந்துவதாயிற்று.
பகைவர்க்கு அஞ்சாது போரிட்டு மாய்ந்த மறவனது தலையாம்.
கொளுப் பொருளும் கொளுவும்
தனது வலிமை போர்க்களத்தில் மேம்படும்படியாகப் பகைவரது மறத்தைக் கடந்து, அங்கே இறந்துபட்ட மறவனின் தலையின் மாட்சியைச் சொல்வது, தலைக்காஞ்சி என்னும் துறையாம்.
மைந்துயர மறங்கடந்தான்
பைந்தலைச் சிறப்புஉரைத்தன்று
(மைந்து = வலிமை; பைந்தலை = (வெட்டுப்பட்ட) பச்சை இரத்தம் சிந்தும் தலை)
எடுத்துக்காட்டு வெண்பா
விட்டிடின்என் வேந்தன் விலைஇடின்என் இவ்வுலகின்
இட்டுரையின் எய்துவ எய்திற்றால் – ஒட்டாதார்
போர்தாங்கி மின்னும் புலவாள் உறைகழியாத்
தார்தாங்கி வீழ்ந்தான் தலை.
(புல= புலால்; ஒட்டாதார் = பகைவர்)
வெண்பாவின் பொருள்
காஞ்சி மறவன், பகைவராகிய வஞ்சி மறவரின் போர்த் தொழிலைத் தடுத்தான். மின்னுகின்ற புலால் நாற்றம் உடைய வாளை உறையினின்றும் எடுத்தான் ; வஞ்சியாரது தூசிப் படையை (முதலில் வரும் கொடிப்படை)த் தான் நின்று தடுத்தான். தடுத்தவன், அக்களத்திலேயே வீழ்ந்து பட்டான். வீழ்ந்துபட்ட அவன் தலை, இனி இவ்வுலகில் புகழினால் அடையக் கூடியன யாவை? அவை எல்லாவற்றையும் அது அடைந்து விட்டது. ஆகலின், அத்தலையை மதியாமல் அப்போர்க்களத்திலேயே விட்டுவிட்டால்தான் என்ன? அன்றி, அரசன் மதித்து விலையிட்டுப் பெரும்பொருளைத் தந்தால்தான் என்ன?
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
போரிட்டு மடிந்த வீரனின் தலை, காஞ்சி வேந்தனால் மதிக்கப் பெறாமல் களத்தில் கிடப்பதனால் அடையப் போகிற இழிவும் இல்லை. மதிக்கப் பெறுவதனால் வந்து உறப்போகின்ற சிறப்பும் இல்லை. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் அவரவர்களுடைய கருமங்கள் உரைகல். வீரன், இனிமேல் பெறும் புகழும் பெருமையும் யாவை? அவை எல்லாமும் அடைந்தான் என்பது கருத்து.
துறையமைதி
மாய்ந்த மறவனின் உடல் உருக்குலைந்து, தலையே அவனை அடையாளப் படுத்துவதாய்க் களத்தில் அமைந்தது. அதனைக் கொண்டு வந்து அரசனிடம் காட்ட, மன்னவன் சிறப்புச் செய்தான் என்னும் செய்திகள் குறிப்பின் பெறப்பட்டதால் துறைப் பொருள் பொருந்துவது புலனாகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
மாற்றானது தூசிப் படையைத் தாங்கிக் களத்துள்பட்டான் ஒரு காஞ்சி மறவன். அவனுடைய தலையைக் கொண்டு வந்து ‘இத்தகையது இவன் வீரம்’ என மன்னனிடம் காட்டினான் மற்றொருவன். காட்டிய அவனது உள்ளம் களிப்பில் நிரம்பும்படியாக விற்படையை உடைய காஞ்சி வேந்தன் அவனுக்குச் செல்வம் ஈந்ததைச் சொல்வது, தலைமாராயம் என்னும் துறை.
தலைகொடு வந்தான் உள்மலியச்
சிலையுடைவேந்தன் சிறப்புஈந்தன்று.
(சிலை = வில்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
பகைவரே புகழ்ந்து பேசும் அளவுக்கு ஆண்மையோடு போர்புரிந்து உயிரை நீத்தானது தலையைக் கொண்டு வந்து தந்தவனுக்குக் காஞ்சி வேந்தன் மிக்க செல்வத்தைக் கொடுத்தான். பாடிவரும் இரவலர்க்கு வாரி வழங்கும் மன்னனுக்கு இவ்வாறு ஈதல் ஒன்றும் வியப்புக்குரியதன்று.
துறையமைதி
களத்தில் உயிரை நீத்த படைமறவனின் தலையைக் கொணர்ந்தவனுக்குக் கொடுப்பதாயினும், மன்னவன் செய்த அச்சிறப்புத் தலைக்கே செய்வதாக அமைதலின் தலைமாராயம் என்னும் துறைப்பொருள் நிரம்புவது காண்க.
கொளுப் பொருளும் கொளுவும்
படைஞர் தம்முள் நெருங்கிச் செய்கின்ற போரில் மாறுபடாத வலிமையை உடைய மறவன் மாய்ந்தான். மாய, அவன் மனைவி, தன்னைக் கொண்ட அக்கணவனின் தலையைக் கண்டு அதனுடன் மாய்ந்ததைச் சொல்லுவது தலையொடு முடிதல் என்னும் துறையாம்.
மண்டு அமருள் மாறா மைந்தின்
கொண்டான் தலையொடு கோல்வளை முடிந்தன்று
(மண்டு = நெருங்கி; மாறா = குறையாத; மைந்து = வலிமை; கொண்டான் = கணவன்; கோல்வளை = பெண்; முடிதல் = இறத்தல்)
எடுத்துக்காட்டு வெண்பா
கொலைஆனாக் கூற்றம் கொடிதே கொழுநன்
தலைஆனாள் தையலாள் கண்டே – முலையால்
முயங்கினாள் வாள்முகம் சேர்த்தினாள் ஆங்கே
உயங்கினாள் ஓங்கிற்று உயிர்.
(கூற்றம் = எமன் ; ஆனாள் = தாங்க முடியாதவளாய்; உயங்கினாள் = வருந்தினாள்; ஓங்கிற்று = பிரிந்தது)
எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்
மறத்தி ஒருத்தி, தன் கணவனுடைய தலையைக் களத்தில் கண்டாள். கண்டு உள்ளம் அமையாதவளாய் – அடங்காதவளாய்- அதனை மார்பால் தழுவினாள்; ஒளி பொருந்திய முகத்தைத் தன்முகத்தொடும் சேர்த்து அணைத்தாள். அப்போர்க்களத்தில் தனக்கு முன்னதாக மாய்ந்த தலைவனை எண்ணி வருந்தினாள். வருந்திய அளவில் அவளது உயிர் பிரிந்தது. அவளுடைய தலைவன் உயிரை உண்டபின்னும் அமையாது அவளது உயிரையும் பருகிய கூற்றம் கொடியதுதான்.
துறையமைதி
‘முயங்கினாள்’, ‘சேர்த்தாள்’, ‘ஆங்கே உயங்கினாள்’, ‘ஓங்கிற்று உயிர்’ என்னும் சொல்லமைப்பில் ‘கொண்டான் தலையொடு கோல்வளை முடிந்தன்று’ என்னும் கொளுப் பொருள் நிரம்புதல் காண்க.
கொளுப் பொருளும் கொளுவும்
பூவொடு இலையும் பொலியும் மாலை அணிந்தவன் காஞ்சி மன்னன். அவன், போரிலும் வல்லவன். வஞ்சியாரின் மலைத்தலை (எதிர்ப்பை) அழிக்கும் வகையில் தனது போர்த்தொழிலைச் செய்கின்றான். அதனைச் சொல்வது, மறக்காஞ்சியாம்.
இலைப்பொலிதார் இகல்வேந்தன்
மலைப்புஒழிய மறம்கடாயின்று
(மலைப்பு = எதிர்ப்பு, போர்; கடாதல் = செலுத்துதல்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
பகை மன்னர் வியக்கும்படியாகவும், பருந்தும் கழுகும் கருத்த தலையையும் தசையையும் இழுத்துக் கொண்டு செல்லும்படியாகவும், காஞ்சி மறவன் மறத்தொழிலை ஆற்றினான்.
துறையமைதி
தறுகண்மையில் (வீரத்தில்) குன்றாத காஞ்சி மறவன், பகைமறவரின் தலை முதலியவற்றைக் கழுகு, பருந்து ஆகியன கவர்ந்து செல்லும்படி மறத்தொழிலாற்றினான் என்பதில் வேந்தனின் பகை ஆற்றல் அழிந்தது புலனாகிறது. அதனால், துறைப் பொருள் பொருந்துவதும் அறிய வருகின்றது.
இதுவும்அது (மறக்காஞ்சி)
மறக்காஞ்சி மற்றொன்றையும் குறிக்கும். வாள் அல்லது வலோல் புண்பட்ட காஞ்சி மறவன், தன்னுடைய வீரம் தோன்றப் புண்ணைக் கிழித்துக் கொண்டு மாள்வதும் மறமே. ஆதலால், இத்தகைய மறமும் மறக்காஞ்சி எனும் பெயரைப் பெறுவதாயிற்று.
கொளுப் பொருளும் கொளுவும்
ஒப்பனையால் பொலிந்த காஞ்சி மறவன், பகைவருடைய மாறுபாட்டைப் பொறாதவனாய்த் தான் ஏற்றுக் கொண்ட புண்ணைக் கிழித்துக் கொண்டு இறந்தானாயினும் மேற்கூறிய மறக்காஞ்சித் துறையே என்பர் அறிஞர்.
மண்கெழு மறவன் மாறுநிலை நோனான்
புண்கிழித்து முடியினும் அத்துறை ஆகும்
(மாறுநிலை = பகைமை; நோனான் = பொறாதவனாகி)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
தன்பக்கத்து வீரர் நடுங்கவும் தான் நடுங்காத காஞ்சி மறவன் ஒருவன், வஞ்சிப் படைவீரர், தங்கள் நாட்டு எல்லையைக் கைப்பற்றிய பின்னரும் முன்னேறுவதைப் பொறாதவனாய் முன்னமே பெற்ற புண்ணைக் கிழித்துக் கொண்டு மாய்ந்தான்.
துறையமைதி
காஞ்சியான் தான் ஏற்ற புண்ணைத் தனது கைவேலினால் கிழித்துக் கொண்டு இறத்தல் மறக்காஞ்சி ஆகும்.
கொளுப் பொருளும் கொளுவும்
போர்க்களத்தில் தன்னுடைய வேலின் திறத்தை வெளிப்படுத்தும் காஞ்சி மறவன் ஒருவன் விழுப்புண்பட்டு வீழ்ந்துகிடக்க, அவனது நிலையைக் கண்ணால் கண்டு, மனத்தால் அன்பு கொண்டு பேய் ஒன்று அவனைப் பிரியாமல் காத்து நின்றதைக் கூறுவது பேய்நிலை என்னும் துறையாம்.
செருவேலோன் திறம்நோக்கிப்
பிரிவின்றிப் பேய்ஓம்பின்று
(ஓம்புதல் = காத்தல்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
போர்க்களத்திலுள்ள மறவர்கள் விரும்பும் வண்ணம் வெகுண்டு போர் செய்தான் காஞ்சி மறவன் ஒருவன்; அவன், வஞ்சி மறவர் வேலினால் புண்பட்டு வீழ்ந்தான். வீழ்ந்தவனது மனம் மகிழும்படி பேய்கூட அவனைக் காவல்காத்து நிற்கின்றது. ஆதலால், பலரும் பாராட்டுதற்குரிய திறனுடைய இம்மறவனுக்கு அன்பில்லாதவர் யாரும் இவ்வுலகில் இல்லை போலும் என நினைக்க வேண்டியுள்ளது. இதைக் கண்டவர்கள் இவ்வாறு பேசினார்கள்.
கொளுப் பொருளும் கொளுவும்
பிணங்கள் நிறைந்த போர்க்களத்தில் புண்பட்டு விழுந்த மறவரைப் பேய் அச்சுறுத்தியதைக் கூறுவது, பேய்க் காஞ்சி என்னும் துறையாம்.
பிணம்பிறங்கிய களத்துவீழ்ந்தார்க்கு
அணங்காற்ற அச்சுறீஇயன்று
எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்
பெண்பேய் ஒன்று, போர்க்களத்துக் குருதி வெள்ளத்தில் விழுப்புண்பட்டுக் கிடக்கும் மறவனைக் காண்கின்றது. அவனை அச்சமுறுத்துகின்றது. அவன் அஞ்சும் வண்ணம் அப்பேய் மகள் செய்யும் செயல்கள்களாவன, சுற்றிச் சுற்றிச் சுழன்று வருதல், தன்னுருவைப் பெரிதாக்கிக் காட்டல் ; தன்வடிவைக் குறுக்கிக் காட்டல் ; குடலை மாலையாகச் சூடிக்கொண்டு மகிழ்ச்சியோடு நகைத்தல் ; அவ்விடத்தை விட்டுப் போவது போலப் போக்குக் காட்டல் போல்வனவாம்.
கொளுப் பொருளும் கொளுவும்
இடமகன்ற வீட்டினுள் போர் மறவன் கிடந்த நிலையில் இருக்கின்றான். அவனது விழுப்புண்ணைச் சுற்றத்தார் மருந்திட்டு ஆற்ற முயன்று கொண்டுள்ளார்கள். அப்படிப் பாதுகாத்துக் கொண்டிருக்கும்போதே, தொங்கும் முலையும் பெரிய வாயும் உடைய பேய் மகள், கிடக்கும் மறவனின் புண்ணைத் தொடுகின்றாள். அதனால் அவன் இறப்பு நிகழும். தொடும் அந்தச் செயலைப் பேசுவது தொட்ட காஞ்சி என்னும் துறையாம்.
வியன்மனைவிடலை புண்காப்பத்
துயல்முலைப்பேழ்வாய்ப் பேய்தொட்டன்று.
(வியன்மனை = பெரிய வீடு; விடலை = மறவன்; துயல் = தொங்கு; பேழ்வாய் = பெரிய வாய்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
முன்பு, பகைவர்தம்மைத் தன்வேலினால் கொன்றவன், இன்று, புண்ணேற்றுக் கிடக்கின்றான். அவனை இறக்கப் பண்ணப் பேய்மகள் அவனது புண்ணைத் தொட்டாள்.
துறையமைதி
படைக் கருவிகள் பிளந்த புண்ணை ஏந்திய மார்பை, பேய்மகள் இருளில் சென்று, குறுகி, நோக்கி, உமிழ்ந்து, மறவன் பேருறக்கத்தை (மரணத்தை)த் தழுவத் தொட்டாள் என்பதில், பேயின் செயற்பாடுகள் பலவற்றுள் உயிர்ஏகத் தொட்டமையைச் சிறக்கச் சொல்வது காணப்படுகின்றது. அது ‘பேய் தொட்டன்று’ என்னும் துறைப் பொருள் காட்டுவதை அறிவிக்கின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
ஒரு மறவன். போர்முனையில் விழுப்புண்ணை ஏற்றான். அவனைக் காக்க, அவனது சுற்றத்தார் பேய்க்குப் பகையான ஐயவி (வெண் கடுகு) தூவல், மணப்பொருளைப் புகைத்தல் போன்றவற்றைச் செய்து கொண்டிருக்கின்றனர். அதனால், பேய்மகள் அவனைத் தொட நடுங்குகின்றாள் ; இடம் விட்டு இடம் பெயர்கின்றாள் எனப் பேயின் செயலைப் பேசுவது தொடாக் காஞ்சி என்னும் துறையாம்.
அடல்அஞ்சா நெடுந்தகைப்புண்
தொடல்அஞ்சித் துடித்துநீங்கின்று
(அடல் = போர்; நெடுந்தகை = வீரன்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
மறவனுடைய புண்ணை அவனுடைய மனைவியும் அவர்தம் சுற்றமும் சேர்ந்து வெண்கடுகு சிந்தியும் குங்குலியம், அகில் முதலிய நறுமணப் பொருட்களைப் புகைத்தும் பல்வகை மலர்களைத் தூவியும் குறிஞ்சிப் பண்ணைப் பாடியும் பாதுகாப்பதால், பேய்மகள் அஞ்சி அவனைத் தொடாமல் நீங்குகின்றாள்.
கொளுப் பொருளும் கொளுவும்
உலகத்தார் வியக்கும்படி போரிலே இறந்துபட்டு, விண்ணுலகம் சென்றான் காஞ்சி மறவன் ஒருவன். அம்மறவனுடைய மறப்பண்பைப் புகழ்ந்து பின், அவன் அழிவுக்கு (மறைவுக்கு) நொந்து வருந்துவது மன்னைக் காஞ்சி என்னும் துறையாகும்.
வியல்இடம்மருள விண்படர்ந்தோன்
இயல்புஏத்தி அழிபுஇரங்கின்று
(வியல் இடம் = அகன்ற உலகம்; அழிபு = அழிவு)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
களத்தில் பட்ட தலைவன், மன்னனுக்குப் போர்க்கடலைக் கடக்கும் புணை (தெப்பம்); சான்றோரைத் தாங்குவதில் துணை ; ஊர்க்கும் உலகுக்கும் உயிர் என்றிருந்தான். அவன் இறந்தமையால் இவையெல்லாம் இல்லையாயின. பகைவரது வேல், தருமம் செய்வோருக்கு எனத் திறந்திருந்த வாயிலை அடைத்தது. அஃதாவது, அறம் செய்து சுவர்க்கத்தை அடைவாரைவிட, அவன் மறம் சிறந்து நின்றது.
துறையமைதி
இதன்கண், படைத்தலைவன் ஒருவன், தான் வாழ்ந்த காலத்தில் பலருக்கும் உதவி செய்பவனாக இருந்ததும் அவன் இறந்ததனால் இனிமேல் அது இல்லை என்பதும் கூறப்பட்டன. இதனால் இறந்தவர்க்கு இரங்கல் வெளிப்படுத்தப்படுகின்றது. இவ்வகையில், இத்துறைப் பொருள் பொருந்தி வருவதனை அறிகின்றோம்.
கொளுப் பொருளும் கொளுவும்
தேன் மலிந்து, வாசனை உடைய மாலையை அணிந்த காஞ்சி மன்னன், மறமும் வலிமையும் வாய்ந்த தனது மறவர் போரில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று எண்ணி அவர்களுக்குக் கள்ளினை வழங்கியதைக் கூறுவது கள்காஞ்சி என்னும் துறையாகும்.
நறமலியும் நறும்தாரான்
மறமைந்தர்க்கு மட்டுஈந்தன்று.
(மட்டு = கள்)
வரலாறு (வெண்பா யாப்பில்)
ஒன்னா முனையோர்க்கு ஒழிக இனித்துயில்
மன்னன் மறவர் மகிழ்தூங்கா – முன்னே
படலைக் குரம்பைப் பழங்கண் முதியாள்
விடலைக்கு வெங்கள் விடும்.
(ஒன்னா = ஒத்துவராத; முனையோர் = போர் முனையிலுள்ள பகைவர்; முதியாள் = முதிய அன்னை; விடலை = மகனாகிய மறவன்; வெங்கள்-வெம்+கள் = விரும்பத்தக்க கள்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்
காஞ்சி மன்னன் தன் மறவர்கள் கள் உண்டு மகிழ்ந்தாடுவதற்கு முன்னரே, முதியாள் பயந்த இளம் மறவனுக்கு விரும்பத்தக்க கள்ளை வார்த்தான். இனிப் பகைவர்க்குத் தூக்கம் ஒழிவதாக. ஏனெனில், கள்வழங்கா முன்பே களித்தாடியவன், கள் பெற்ற பின்னர் எந்நேரமும் போரெனப் புகுவான்; எனவே விழித்திருங்கள் என்பதாம்.
துறையமைதி
முதியாள் பெற்ற விடலைக்குக் காஞ்சி மன்னன் கள்வார்த்ததைச் சொல்லியது ஆதலின், இத்துறையின் பெயர்ப் பொருத்தம் தெளிவாகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
அன்புமிக்க கணவன் இறந்துபட, அவனுடைய மனைவி அவனொடு எரியுள் மூழ்கினாள். காதல் மிக்க மெல்லிய தன்மையுடைய அம்மடந்தையின் சிறப்பை உரைப்பது ஆஞ்சிக் காஞ்சி யாம்.
காதல் கணவனொடு கனைஎரி மூழ்கும்
மாதர்மெல்லியல் மலிபுஉரைத் தன்று.
(எரி = தீ; மலிபு = சிறப்பு)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
வஞ்சி மறவர் படையால் புண்ணேற்று மடிந்த கணவனொடு தானும் எரியில் புகுவதற்காக, தன் தோழியரை வழிவிடுக என இறந்த வீரனின் மனைவி வேண்டுகிறாள்.
துறையமைதி
கணவனோடு மனைவியும் எரிபுக விரும்பும் சிறப்பைக் கூறுவதால், துறைப்பொருளும் பொருந்துவது தெரிகின்றது.
இதுவும்அது (ஆஞ்சிக் காஞ்சி)
எரிபாய்வது மட்டுமா கண்டோர்க்கு அச்சம் தருகிறது? தன் கணவனை மாய்த்த வேலினாலே தன்னைக் குத்திக் கொண்டு மாய்வதும் அச்சம் தரும் செயலே. அச்செயலும் ஆஞ்சிக் காஞ்சியே ஆகும்.
கொளுப் பொருளும் கொளுவும்
தன்னுடைய தலைவனின் உயிரைப் போக்கின வேலினாலே அவனுடைய மனைவி தன் இனிய உயிரைப் போக்கிக் கொள்வதும் முன் கூறப்பட்ட ஆஞ்சிக் காஞ்சி என்னும் துறையே ஆகும்.
மன்உயிர் நீத்த வேலின் மனையோள்
இன்னுயிர் நீப்பினும் அத்துறை ஆகும்.
எடுத்துக்காட்டு வெண்பா
கவ்வைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை
வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோன் – அவ்வேலே
அம்பின் பிறழும் தடங்கண் அவன்காதல்
கொம்பிற்கும் ஆயிற்றே கூற்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்
வெற்றியை விரும்பும் காஞ்சி மறவன் ஒருவன் பகைவரது வேலினால் வீழ்ந்துபட்டான். அவன் இறப்பதற்குக் காரணமாய் அமைந்த அவ்வேலே, அவனுடைய காதல் மனைவி மாய்வதற்கும் எமனாய் அமைந்தது. ஆதலால், கடலை வேலியாகவுடைய இவ்வுலகத்தில் கற்புடைமை என்னும் அறமும் கொடியதாகவே தோன்றுகின்றது.
துறையமைதி
வேலால் வீரன் வீழ்ந்தான் ; அவ்வேலே, அவன் காதல் மனைவிக்கும் கூற்று ஆயிற்று என்பதில் துறைப் பொருள் பொருந்துவதைத் தெளியலாம்.
கொளுப் பொருளும் கொளுவும்
அணிகலன்களை உடைய நின்மகளை எனக்குத் தருக என்னும் வஞ்சி வேந்தனோடு காஞ்சி மன்னன் மாறுபடுவது மகட்பாற் காஞ்சியாம்.
ஏந்திழையாள் தருக என்னும்
வேந்தனொடு வேறுநின்றன்று.
வரலாறு (வெண்பா யாப்பில்)
அளிய கழல்வேந்தர் அம்மா அரிவை
எளியள்என்று எள்ளி உரைப்பின் – குளியாவோ
பண்போல் கிளவிஇப் பல்வளையாள் வாள்முகத்த
கண்போல் பகழி கடிது.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
காஞ்சி மன்னனின் மகளை எளிதாக அடையலாம் என எண்ணிப் பகை வேந்தர் உரைப்பாராயின், அவர் மார்பில், அவளது கண்போலும் அம்பு பாய்வதும் உறுதி என்பதாம்.
துறையமைதி
கண்டோர் கூறிய இக்கூற்றில் ‘ஏந்திழையாள் தருக என்னும் வேந்தனொடு’ பகைமன்னன் ‘வேறு நிற்பது’ விளங்கித் தோன்றலின் துறைப்பொருள் பொருந்துவதாகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
வஞ்சி வேந்தனை மட்டும் அன்றி அவனுக்குத் துணையாக வந்த அரசர் எல்லாரையும் வென்று, அவர்கள் முன்பு தங்கியிருந்த போர் முனையினின்றும் ஓடும்படியாகக் காஞ்சி மன்னன் துரத்தியது முனைகடி முன்னிருப்பு ஆகும்.
மன்னர்யாரையும் மறம்காற்றி
முன்இருந்த முனை கடிந்தன்று.
(மறம் = வீரம்; காற்றி = அழித்து; முனை = போர்க்களம்; கடிதல் = விரட்டியடித்தல்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
காஞ்சி மன்னன் தான்மேற்கொண்ட எதிரூன்றல் போரில், வஞ்சி வேந்தனையும் அவனுக்குத் துணையென வந்த பிற அரசரையும், அவர்கள் தங்கியிருந்த இடத்தினின்றும் துரத்தினான்.
துறையமைதி
காஞ்சி வேந்தனின் செயற்பாடுகள், வஞ்சி வேந்தன், அவன் துணைவேந்தர் ஆகியோர்தம் மறத்தை அழித்ததையும், அவர்களைப் போர்முனையிலிருந்து விரட்டியதையும் கூறுவதால் துறைப்பொருளைப் பெறுகின்றோம்.
நிலையாமையாகிய அறத்தை எதிர் ஊன்றலாகிய மறத்தில் வைத்துக் காட்டல் பண்டைய இலக்கண ஆசிரியர்களின் கொள்கை.
வஞ்சியின் மறுதலை ஒழுக்கமாகிய எதிரூன்றல், காஞ்சியென்னும் ஒரு புறத்திணையாக வளர்ச்சியுற்றது. புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியரின் காஞ்சித் திணைக்கு அடித்தளங்களாகத் தொல்காப்பியம், பன்னிருபடலம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் தந்த செய்திகள் அமைந்தன.
காஞ்சி பெருந்திணைக்குப் புறன் ஆகும். அவ்வாறு புறன் என்பதற்கான காரணமும் காஞ்சித் திணையின் துறைகள் இருபத்தொன்றாக அமைவதும் இந்தப் பாடத்தில் விளக்கமாகக் கூறப்பெற்றன.
பாடம் - 6
நொச்சி – குறியீடு
நொச்சி என்பது ஒருவகைச் செடி. அதனுடைய பூவினை எயில் (மதில்) காக்கும் மறவர் சூடிக் கொள்வர். ஆதலின், எயில்காக்கும் ஒழுக்கத்தை நொச்சித் திணை என நம்மனோர் குறியீடு செய்தனர்.
எயில் காத்தல் – பின் நிகழ்வு
பகை அரசனால் வளைத்துக் கொள்ளப்பட்ட மதிலை, அம் மதிலுக்குரிய மன்னன் பகை அரசனிடமிருந்து காத்துக் கொள்வது எயில் காத்தல் எனப் பெறும். அதனால், எயில் காத்தல் பின் நிகழ்வு. எயில் வளைத்தலாகிய முற்றுகை முன் நிகழ்வு என்பன தெளிவு. பழம் பாடலொன்று,
. . . . . . . எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்தல் ஆகும் உழிஞை.
என்று கூறியிருப்பதால் நொச்சித் திணை உழிஞைக்குமுன் வைக்கப்பட்டுள்ளது என்று கொள்ளலாம்.
கொளுப் பொருளும் கொளுவும்.
அம்பினை எய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் துளைகளையுடைய அரணைக் காக்கும் மறவர்கள் சூடிய நொச்சிப் பூவினைப் புகழ்ந்தது நொச்சியாம். பூவினைப் புகழ்ந்தது எனப்பட்டாலும் அதனைச் சூடி எயிலைப் பாதுகாத்தல் நொச்சித் திணை எனக் கொள்ளல் வேண்டும்.
ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம்
காப்போர் சூடிய பூப்புகழ்ந் தன்று.
(ஏ = அம்பு)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
கூரிய நுனியை உடைய வேலினை உடையவர்கள் நொச்சி மறவர்கள். அவர்கள், பாம்பை அணிந்த சிவபெருமானார், தீ உண்ணும் வண்ணம் தமது நெற்றிக் கண்ணால் சினந்த போது, திரிபுரங்களைக் காக்கும் அவுணர் கூட்டம் தம்முள் கூடியதை ஒப்ப, மதிலின் உச்சிமேல் மதிலைக் காப்பதற்காக, நொச்சிப் பூவைச் சூடினார்கள்.
மதில் காத்தலும், ‘நொச்சி சூடினார்’ என்பதில் பூவைப் புகழ்தலும் அமைகின்றன. அதனால் திணைப் பொருள் பொருந்தி வருதல் தெளிவாகின்றது.
மருதத்தின் உரிப்பொருள் ஊடல். ஊடல் தோன்றற்குக் காரணம் தலைவனின் பரத்தமை. பரத்தையைக் கண்டு பழகிய பிறகு வீடு திரும்பும் தலைவன், நேரே உள்ளே புகாமல், வீட்டின் புறத்தே காத்துக் கிடக்கின்றான். இவ்வாறே முற்றுகையிடும் உழிஞை வேந்தனும் திறை முதலிய பொருள் காரணமாக நொச்சி வேந்தன் உறையும் அரண்மனையின் புறத்தே முற்றுகை செய்து கிடக்கின்றான். ஆதலால், புறம் எனலாம்.
தலைவனின் பரத்தமை காரணமாக மாறுபட்டு உள்ளிருக்கும் தலைவி, ஊடல் கொள்வாள். அதுபோல, உள்ளிருக்கும் நொச்சி மன்னன் எயில் காத்தலில் ஈடுபடுவான். ஆகையால், புறம் எனலாம். பிற காரணங்களை மேல் வகுப்புகளில் பயிலலாம்.
இனி, ஆசிரியர் ஐயனாரிதனார் வழி, நொச்சித் திணை, அதன் துறைகள் என்பவற்றைக் காண்போம்.
(1) மறனுடைப்பாசி
(2) ஊர்ச்செரு
(3) செருவிடை வீழ்தல்
(4) குதிரை மறம்
(5) எயிற்போர்
(6) எயில்தனை அழித்தல்
(7) அழிபடை தாங்கல்
(8) மகள் மறுத்து மொழிதல்
என்பனவாம். இவற்றோடு திணை ஒன்றனையும் கூட்டித் ‘திணையும் துறையும் ஒன்பது’ என்பர் ஆசிரியர்.
இவ்வுவமத்தை உழிஞையார்க்கு ஆக்கி, நீர்ப்பாசியைப் போன்று நீங்காமல் மதில் புறத்தே படர்ந்திருந்த உழிஞையாரைக் கலக்கிய நொச்சி மறவர்களின் மற மாண்பு கொல்லப்படுதலின் மறனுடைப் பாசி எனப் பெற்றதாகவும் கூறுவது உண்டு.
கொளுப் பொருளும் கொளுவும்
நொச்சியான், மதிலை முற்றிய (வளைத்த) உழிஞையானுடன் பொருது, புறங்கொடாது, போர்க்களத்தில் இறந்ததன் காரணமாக வீரசுவர்க்கத்திற்குச் சென்றதை உரைப்பது மறனுடைப் பாசி என்னும் துறையாம்.
மறப்படை மறவேந்தர்
துறக்கத்துச் செலவுஉரைத்தன்று.
எடுத்துக்காட்டின் கருத்து
அரணைச் சூழ்ந்து ஏறும் உழிஞையாரை நொச்சி மறவர்கள் வெட்டினர்; அவரது படையைத் தடுத்தனர். பிறகு மாய்ந்தனர் என்பது.
துறையமைதி
உழிஞை மறவர் நீர்ப்பாசியைப்போல, நொச்சியாரது ஊர்ப்புறத்தில் சூழ்ந்து இருந்ததும், அவர்கள் அழியும்படி நொச்சி மறவர்கள் பரவி, உழிஞையாரின் படையை விலக்கியதும் சேர்ந்து வருதலால் துறைப்பொருள் பொருந்துவதை உணர்கின்றோம்.
கொளுப் பொருளும் கொளுவும்
ஊர்ச்செருவாவது, நொச்சி மறவர்கள் தங்களுடைய காவற்காடும் அகழியும் ஆகிய இவை உழிஞை மறவரால் சிதைவு அடையாதபடி போர் செய்த சிறப்பினை உரைப்பதாகும்.
அருமிளையோடு கிடங்குஅழியாமைச்
செருமலைந்த சிறப்புரைத்தன்று.
(மிளை = காவற்காடு; கிடங்கு = அகழி)
எடுத்துக்காட்டின் கருத்து
உழிஞையார், சங்கும் கொம்பும் முழங்க வந்து வாளை வீசி, நொச்சியாரின் காவற் காட்டையும் அகழியையும் சிதைத்தனர். சிதைத்த உழிஞையாரின் படை கெட்டோடும்படியும், மீண்டும் வாராதபடியும் நொச்சியார் தடுத்து ஆரவாரம் செய்தனர்.
துறையமைதி
நொச்சி மறவரின் மதிலும் அகழியும் காவல் உடையன. அதனைக் குலைக்கும் வண்ணம் உழிஞையார் ஊர்ப்புறத்தே படர்ந்திருந்தனர். அவர்களை ஓடச் செய்தனர் நொச்சியார் என்பதில் துறைப்பொருள் உள்ளது உணரப்படும்.
கொளுப் பொருளும் கொளுவும்
அழகுடைய அகழி, காவற்காடு ஆகியவற்றை உழிஞை மறவரிடமிருந்து காத்து வீழ்ந்துபட்ட நொச்சி மறவர்களது திறலை மிகுத்துக் கூறுவது செருவிடை வீழ்தல் என்னும் துறையாம்.
ஆழ்ந்துபடு கிடங்கோடு அருமிளை காத்து
வீழ்ந்த வேலோர் விறல்மிகுத் தன்று.
எடுத்துக்காட்டின் கருத்து
சிங்கம் போன்ற நொச்சி மறவர்கள் தங்கள் காவற்காட்டினையும், நீண்ட அகழியையும் காக்கக் கருதித் தங்கள் உடம்போடு உயிரையும் காவாதவராயினர். அஃதாவது, காக்கும் முயற்சியில் களத்தில் இறந்துபட்டனர் என்பதாம்.
துறையமைதி
நொச்சியார் தம் எயில் காப்பதும், காக்கும் போரில் உயிர் நீத்தலும் இடம் பெற்றுத் துறைப் பொருள் பொருந்துவதைக் காண்கின்றோம்.
கொளுப் பொருளும் கொளுவும்
அம்பினை எய்யும் தொழிலால் சிறப்புப் பெற்ற நெடிய எயிலகத்தே, நொச்சியாரது தாவும் இயல்புடைய குதிரையின் மறத்தை விரிவாகச் சொல்வது குதிரை மறம் என்னும் துறையாகும்.
ஏமாண்ட நெடும்புரிசை
வாமானது வகைஉரைத்தன்று.
(வாமா = தாவும் குதிரை)
எடுத்துக்காட்டின் கருத்து
மலைபோல் உயர்ந்த மதில்மேல் ஒப்பனை செய்யப் பெற்ற குதிரை ஒன்று, உழிஞையாரின் உயிரை உண்ண மேகம்போல் ஓடி வருகின்றது. அதனைத் தடுக்காதீர் என்பது கருத்து.
துறையமைதி
பொங்கிப் பாய்ந்து வரும் குதிரை, மேகம் நீரைப் பருகுவதில் தப்பாதது போல மாற்றார் உயிரைப் பருகுவதில் பிழையாது என்றமையால், குதிரையின் மறப்பண்பு விளங்கித் தோன்றுகிறது. குதிரையின் மறப்பண்பைச் சிறப்பிப்பது தானே குதிரை மறம்.
கொளுப் பொருளும் கொளுவும்
கூர்மையான போர்க் கருவியால் அரணைக் காக்கின்ற நொச்சி மறவரின் போர்ச் செயலைச் சிறப்பித்துப் பேசுவது, எயிற்போர் என்னும் துறையாம்.
அயில்படையின் அரண்காக்கும்
எயில்படைஞர் இகல்மிகுத்தன்று.
எடுத்துக்காட்டின் கருத்து
மதிலின் உள்ளேயிருந்த நொச்சி மறவர்கள், தமது மார்பில் இரத்தம் ஒழுகவும் பொருட்படுத்தாதவர்களாய்ப் பொங்கி, மானமே பொருளெனக் கொண்டு எயிலின் வெளியே வந்து உழிஞை மறவரைக் கொல்வதற்கு விரும்பினார்கள்.
துறையமைதி
தமது மார்பில் குருதி பரந்து சோரும் போதும், விழுப்புண்ணுக்கும் நோய்க்கும் வருந்தாமல், வீர உணர்வோடு மதிலினின்றும் புறத்தே வந்து, பகைவரைக் கொல்ல விரும்பிய நொச்சி மறவரது தறுகண்மை பாராட்டப்படுதலான், எயிற்போரின் இலக்கணம் பொருந்தி வருவதனை அறிகின்றோம்.
கொளுப் பொருளும் கொளுவும்
அழகிய மதிலிடத்து உள்ளவனும், துணிவு உடையவனும், கழலினைக் காலில் அணிந்தவனும் ஆகிய நொச்சி மறவன் அழிந்து பட்டதை உரைப்பது எயில்தனை அழித்தல் என்னும் துறையாம்.
துணிவுடைய தொடுகழலான்
அணிபுரிசை அழிவுஉரைத்தன்று.
எடுத்துக்காட்டின் கருத்து
தாள்கள் (கால்கள்) அரணின் அகத்தேயும் தோள்கள் அரணின் புறத்தேயும் வீழ, வாட்படை மறவன் வானமகளிர் கொண்டாடித் தழுவ, இறந்துபட்டான்.
போரில் பட்டவர் விண்ணாடு எய்துவர் என்பதும், எய்துமவரை வானமகளிர் தழுவி வரவேற்பர் என்பதும் பண்டைத் தமிழர் நம்பிக்கைகள்.
துறையமைதி
தாள் அகத்தன; தோள் புறத்தன என்றது, மறவர் தலைவன் முதுகிடாது இறந்துபட்டான் என்பதை உணர்த்துகின்றது. அதுவே, மறவனின் அழிவை அறிவிப்பதாய் அமைந்து, துறைக் கருத்தை முற்றுவிப்பதும் தெளிவாகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
உழிஞையாரால் நொச்சியார் படை தாழ்வுற்றது. அதனால், வெகுண்டு அப்படையே அரணைக் காத்தமையைச் சொல்வது அழிபடை தாங்கல் என்னும் துறையாம்.
இழிபுஉடன்று இகல்பெருக
அழிபடை அரண்காத்தன்று
எடுத்துக்காட்டின் கருத்து
உழிஞைப் படை அரணைக் கொள்வதற்குப் பகைவர் படைகளை வீழ்த்தி எதிர்த்தது. மதில்மேல் இருந்த நொச்சிப் படையோ, உழிஞையார் உட்புகாதவாறு வெட்டி வீழ்த்தியது.
துறையமைதி
மதிலின் அடிப்பகுதியில் நின்று காத்த நொச்சி மறவர்கள் பலரும், உழிஞையாரால் வெல்லப்பட்டார்கள். தம் படைஞர் அழிந்தமையைக் கண்ட மதிலின் மேல் நின்று அரண் காக்கும் நொச்சியார் உழிஞையாரின் பாதம் அரணகத்துள் நுழையாதபடி அவர்களைத் துணித்தனர் என்பதால், அழிபடை அரண் காத்தது எனும் துறைப்பொருள் வெளிப்படுகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
கொடிய பகைமை உடைய உழிஞையான் நொச்சியானின் மகளைத் தனக்கு மணத்தில் தருமாறு வேண்ட, மதிலின் உள்ளிருக்கும் நொச்சி மன்னன் அவனது வேண்டுகோளை நிராகரிப்பது மகள் மறுத்து மொழிதல் என்னும் துறையாம்.
வெம்முரணான் மகள்வேண்ட
அம்மதிலோன் மறுத்துஉரைத்தன்று.
எடுத்துக்காட்டின் கருத்து
முன்நாளில் கருங்கண்ணியாகிய இவளின் இடையழகை நினைந்து, போரை ஏதுவாக வைத்து இவளை அடையலாம் என வந்த மன்னனுடைய மறவர்களின் யானைக் கோடுகளே (தந்தங்கள்) இவளது கட்டில் கால்கள் ஆகும்.
துறையமைதி
மேனாளில் மகள் கேட்டு வந்த மன்னனின் யானைத் தந்தங்கள் இவள் கட்டில் கால்களாயின என மறுத்துரைத்தலால் துறைப் பொருள் புலனாகின்றது.
உழிஞை – குறியீடு
உழிஞை என்பது ஒருவகைக் கொடி. இது முடக்கொற்றான் என்று இன்று வழங்கப் பெறும் மூலிகைக் கொடியே ஆகும். மாற்றரசனின் மதிலை முற்றுகை இடுவோர், முன்னாளில் குடிப்பூவுடன் உழிஞை என்னும் இக்கொடிப் பூவையும் அடையாளப் பூவாகச் சூடிக் கொண்டு போரிடுவார்கள். ஆதலால், முற்றுகைப் போராகிய ஒழுக்கத்தை உழிஞை என நம் இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உழிஞை – புறன்
‘எயில் காத்தல் நொச்சி – அது வளைத்தல் ஆகும் உழிஞை’ என்பது பழம் நூற்பா ஒன்றன் அடியாகும். உழிஞை, அகத்திணைகள் ஏழனுள் ஒன்றாகிய மருதத் திணைக்குப் புறன் என்பார் தொல்காப்பியர்.
உழிஞை தானே மருதத்துப் புறனே – (தொல்.புறத்- 9)
உழிஞை, மருதத்தின் புறன் என்பதற்கான காரணங்கள் பல. அவற்றுள் ஒன்று மட்டும் நொச்சித் திணையின் முன்னுரையில் தரப்பட்டுள்ளது. அதனை இங்கே இணைத்து நோக்குங்கள். பிற காரணங்களை மேல் வகுப்புகளில் தெரிந்து கொள்ளலாம்.
கொளுப் பொருளும் கொளுவும்
உழிஞைத் திணையாவது, மதிலைக் கைப்பற்றக் கருதிய உழிஞை மன்னன், தன் தலையில் உழிஞை மாலையை அணிந்து மாற்றானது எயிலைச் சூழ்ந்து கொண்டு, அதனைக் கைப்பற்றச் செயல்படும் திறங்களைக் கூறுவது ஆகும்.
முடிமிசை உழிஞை சூடி, ஒன்னார்
கொடிநுடங்கு ஆர்எயில் கொளக்கரு தின்று
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
எங்கள் அரசன் மாற்றார் மதிலைக் கைப்பற்றக் கருதி, உழிஞையைப் புனைந்து, பகைமன்னரின் சிறந்த மதிலை, களிறுகள் மோதிப் பாய, சான்றோரும், மகிழ்வோடு புகழ்ந்துரைக்கின்ற கீர்த்தி உடையவனாவான்.
திணையமைதி
இவ்வெண்பாவில், உழிஞை மன்னன் முற்றுகைக்கான பூவினைச் சூடியதும், பகை மன்னனது மதிலை யானைகளை ஏவிக் குத்தியதும், அதனால் அரணை வெல்வது உறுதியென நினைந்த சான்றோர் புகழ்ச்சிக்கு உரியவன் ஆனதும் கூறப்படுவதால் திணைப் பொருள் பொருத்தம் விளங்குகின்றது.
உழிஞை, குடைநாட் கோள், வாள்நாட் கோள், முரசவுழிஞை, கொற்றவுழிஞை, அரசவுழிஞை, கந்தழி, முற்றுழிஞை, காந்தள், புறத்திறை, ஆரெயில் உழிஞை, தோலுழிஞை, குற்றுழிஞை, புறத்துழிஞை, பாசி நிலை, ஏணி நிலை, எயிற் பாசி, முதுவுழிஞை, அகத்துழிஞை, முற்று முதிர்வு, யானை கைக்கோள், வேற்றுப் படை வரவு, உழுது வித்திடுதல், வாள் மண்ணுநிலை, மண்ணுமங்கலம், மகட்பால் இகல், திறை கொண்டு பெயர்தல், அடிப்பட இருத்தல், தொகைநிலை எனச் சொல்லப்பட்ட இவ்விருபத்தொன்பதும் உழிஞைத் திணையும் துறைகளும் ஆகும் என்பதாம்.
இவற்றுள் முதலாவது கூறப்பட்ட உழிஞை என்பது திணையைக் குறிக்கும். ஏனைய இருபத்தெட்டும் உழிஞைத் திணையின் துறைகளைக் குறிக்கும். உழிஞைத் திணையின் இலக்கணத்தை மேலே கண்டோம். இனி, உழிஞைத் திணையின் துறைகள் பற்றிய இலக்கணங்களை ஆசிரியர் ஐயனாரிதனார் வழியே காண்போம்.
கொளுப் பொருளும் கொளுவும்
உழிஞை வேந்தன், பகை மன்னனின் அரணைக் கைப்பற்றக் கருதி, தன் வெண்கொற்றக் குடையை நல்ல நாள் ஒன்றில் புறவீடு செய்தமையைச் சொல்வது குடைநாட் கோள் என்னும் துறையாம்.
சென்று அடையார் மதில் கருதிக்
கொற்ற வேந்தன் குடைநாள் கொண்டன்று.
(அடையார் = பகைவர்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உலகத்திலுள்ள அரண்கள் எல்லாம், உழிஞை மன்னன் தனது வெண்கொற்றக் குடையை நல்ல நாளில் புறவீடு செய்தும், தமது பகைமையை முழுமையாகக் கைவிட்டன. ஆகலான், இனி முற்றுகை வேண்டுவதில்லை. இது வரை செங்குருதியில் ஆடிய வேல், நெய் பூசிக் கொண்டு படைக்கலக் கொட்டிலில் கிடக்கலாம். தேர்கள் போரெனப் புறப்பட வேண்டுவதில்லை. உரிய நிலைகளுள் புகலாம். குதிரையும் களிறும் சாமரை, சேணம் முதலியவற்றால் ஒப்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை. ஒப்பனை செய்யப்பட்டிருப்பின், அவை அவற்றைக் களையலாம்.
துறையமைதி
உழிஞை மன்னன் குடை நாள் கொண்ட அளவில், மாற்றார் அரணங்கள் முரண் அவிந்தன; வேல், தேர், மா, களிறு ஆகியவை போர்க்கென்று செல்ல வேண்டுவதில்லை என்று மொழிவதில், நல்ல நாளில் நல்ல முழுத்தத்தில் குடையைப் புறவீடு விட்டமை புலப்படுகின்றது. குடைநாள் கோள் என்பதன் இலக்கணம் பொருந்துமாறும் தெளிவாகிறது.
கொளுப் பொருளும் கொளுவும்
பகைவருடைய அரணைக் கைப்பற்ற நினைந்த உழிஞை வேந்தன், தனக்கு வெற்றியைத் தருவதாகிய வாளினை நல்ல நாள் ஒன்றில் புறவீடு விட்டது வாள்நாட் கோள் என்னும் துறையாகும் .
கலந்துஅடையார் மதில்கருதி
வலம்தருவாள் நாட்கொண்டன்று
(வலம் = வெற்றி)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை வேந்தன் பகைவரது அரணைக் கொள்ளக் கருதித் தனது வாளை நல்ல நாளில் புறவீடு செய்தான். செய்த அளவில், பகைவர் மதிலினுள் உள்ள நடன மகளிர் ஆடுகின்ற அரங்கம், கைகளைக் கோத்துக் கொண்டு பேய்கள் ஏறி, மாறிமாறி ஆடும் களம் ஆயிற்று.
துறையமைதி
வாளினைப் புறவீடு செய்த அளவிலே, பகைவரது எயிலகத்துள்ள மகளிர் ஆடும் அரங்குகள், பேய்கள் கையைக் கோத்துக் கொண்டு ஏறி ஆடுதற்கான அரங்கம் ஆயின என்பதில் வலம்தரு வாள்நாள் கொண்டமை பேசப்பட்டதால், இத்துறை ஆயிற்று.
கொளுப் பொருளும் கொளுவும்
உழிஞை மறவர்கள் உழிஞைப் பூவைச் சூடி, ஆட்டுக்கிடாவினைப் பலியாய் ஏற்கின்ற முரசைத் தெய்வ நிலையில் வைத்துப் புகழ்வர். இந்நிகழ்வு முரசவுழிஞை எனப் பெறும்.
பொன்புனை உழிஞை சூடி மறியருந்தும்
திண்பிணி முரச நிலைஉரைத் தன்று
(மறி = ஆட்டுக்கிடா)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை மாலையை அணிந்த உழிஞை வேந்தனது அரண்மனையின் உள்ளே முரசு கரிய முகில் போல முழங்குகின்றது. ஆதலால், இனி, களிறு குத்திப் பாயும். பாய்ந்து குத்த, பகைவர் மதில்கள் குலைந்து விழும். இக்களிறுகளின் ஆற்றலுக்குக் குலைந்து அழியாத மதில்கள் உண்டோ? எல்லா மதில்களும் குலையும்.
துறையமைதி
‘முரசம் அதிர, மதில் குலைந்து விழும் ; வீழாத அரண்கள் இனி இரா‘ என்ற கண்டோர் தம் கூற்றில் வைத்து, முரசத்தின் நிலைமை உரைக்கப் பெற்றுள்ளதால், இத்துறை முரசவுழிஞை ஆவது தெளிவு.
கொளுப் பொருளும் கொளுவும்
தன்னைப் பணிந்து வந்து சேராத பகைமன்னனது அரணினைக் கைக்கொள்வதன் பொருட்டாக, உழிஞை மன்னன் தனது படையோடு சென்றது கொற்ற உழிஞை என்னும் துறையாம்.
அடையாதார் அரண்கொள்ளிய
படையோடு பரந்துஎழுந்தன்று
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
வாள், வேல் ஆகியவற்றோடு அருளையும் உடைய உழிஞை மன்னன், புகுதற்கு அரிய காவற் காடு, ஆழம் உடைய அகழி ஆகியவற்றைக் கொண்ட பகைவர்களது அரணைக் கைப்பற்றுவதன் பொருட்டு, தனது படையைக் கொண்டு வந்தான்.
துறையமைதி
நள்ளாதார் (பகைவர்) மதில் கொள்ள, படை கொண்டு எழுந்தான் என்பதில் துறைப் பொருள் நிறைந்து நிற்பதைக் காண்கின்றோம்.
கொளுப் பொருளும் கொளுவும்
மக்களுக்கு நிழல் தந்து, காக்கும் தொழிலைச் சிறக்க நடத்தும் உழிஞை வேந்தனின் புகழைச் சிறப்பாகச் சொன்னது அரச வுழிஞை யாம்.
தொழில்காவல் மலிந்துஇயலும்
பொழில்காவலன் புகழ்விளம்பின்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
மன எழுச்சியும், நல்ல ஆராய்ச்சியும், செல்வப் பெருக்கமும் உழிஞை வேந்தனிடம் எக்காலத்திலும் அகலாது உள்ளன; ஆதலால், உழிஞை வேந்தனுக்கு, இனிக் கையகப்படாத அரண்கள் இல்லையாகும். அரண்கள் யாவும் கைவசப்படும்.
துறையமைதி
‘அரசர்க்குரிய ஊக்கம் முதலியவற்றை நன்றாகவே உடைய மன்னன் ஆதலால், அவனுக்கு, அவன் மேற்கொண்ட மதில் கைப்பற்றும் செயல் நிறைவேறும் என்பது உறுதி’ என்ற குறிப்பினைத் தந்து, துறைப் பொருளாகிய மன்னனைப் புகழ்தல் என்பதைக் காட்டுவதில் பொருத்தம் இருப்பதைக் காணலாம்.
கொளுப் பொருளும் கொளுவும்
தார்மாலையை அணிந்தவனும் நீலமணி நிறத்தவனும் ஆகிய திருமால், வாணாசுரனுக்கு உரியதான சோ என்னும் அரணினை அழித்த வீரத்தைச் சொல்லியது கந்தழி எனப்படும்
மாவுடைத்தார் மணிவண்ணன்
சோஉடைத்த மறம்நுவலின்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
எல்லா நாளும், பகைவரது மார்பில், சக்கரப் படை நீங்காது நின்று எரிக்கும்படியாக, அந்நாளில் வாணாசுரனுக்குச் சொந்தமான சோ என்னும் பெயரிய அரணை அழித்தவனும் இவ்வுழிஞை வேந்தனே ஆவான். திருமாலாகிய இவனுக்கு மாறாக இந்நாளில் தங்களுடைய அரண்கள் வலிமையுடையன என்று கருதிக் கொண்டு எதிர்மலைவார் யார் இருக்கின்றார்? ஒருவரும் இலர்.
துறையமைதி
வாணாசுரனின் சோ என்னும் பெயரினையுடைய அரணைப் பண்டு அழித்த திருமாலே இன்று உழிஞை வேந்தனாக வந்துள்ளான். இவனை எதிர்ப்பார் ஒருவரும் இலர் – என்றதனில், மன்னன் புகழ்ச்சி தென்படுதலால் இது கந்தழியாகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
ஒளிவீசும் சடையையுடைய சிவன் கொன்றைப் பூவோடு உழிஞைப் போர் என்பது தோன்றச் சூடிய உழிஞைப் பூவின் சிறப்பைச் சொல்வது முற்றுழிஞை என்னும் துறையாகும்.
ஆடுஇயல் அவிர்சடையான்
சூடியபூச் சிறப்புரைத்தன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
சிவபெருமானும் பெருமை கொண்ட உழிஞை மாலையைச் சூடித் திரிபுரங்கள் மூன்றினையும் எரித்தான். சிவ பரம்பொருளாலும் முற்றுகையின் போது சூடப்பட்ட உழிஞை மாலையின் பெருமையை முற்ற அறிந்தவர்கள் யார் இருக்கின்றார்கள்? உழிஞையின் பெருமை அறிவதற்கு அருமையதேயாகும்.
துறையமைதி
செஞ்சடையானும் திரிபுர தகனத்தின் போது உழிஞையையே சூடினான்; அதன் பெருமை அறிவார் யாருளர்? என வினவி அதன் சிறப்பை விரித்தலின் இத்துறை முற்றுழிஞையாகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
கரிய நிறத்துக் கடலிடத்தே சூரபன்மனைப் பிளந்த முருகப் பெருமானின் காந்தள் பூவின் சிறப்பை உரைப்பது காந்தள் என்னும் துறையாம்.
கருங்கடலுள் மாத்தடிந்தான்
செழுங்காந்தள் சிறப்புஉரைத்தன்று.
(மா = மாமரம்; மா மர வடிவில் நின்ற அசுரனை முருகன் வேலால் அழித்தான்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
கிரௌஞ்சம் என்னும் பறவையின் பெயரைத் தன்பெயராகக் கொண்ட மலை கிரௌஞ்சகிரி. அதனை அழித்தவன் முருகப் பெருமான். இம்முருகப் பெருமானும் காந்தள் பூவைப் போரின் போது சூடிக் கொண்டான் என்றால், கடல் போன்ற பெரிய படையுடன் சென்று பகைவரோடு போர் செய்யக் கருதிய யார்தாம் பூச்சூடிக்கொள்ள மாட்டார்கள்? வென்றியை விரும்புவோர் அனைவரும் சூடிக்கொள்வர்
துறையமைதி
கடலுள் நின்ற சூர்மாவைத் தடிந்த முருகனும் காந்தள் பூவினைப் போர்ப்பூவாகச் சூடினான். அவனைப் போல் முடிக்கும் செயலைத் தொடங்குபவர்களில் யார்தாம் போர்ப்பூவாகிய உழிஞையைச் சூடிக் கொள்ளமாட்டார்? சூடுவர். காந்தளைப் புகழ்வது இதில் துறைப்பொருளை வெளிப்படுத்துகிறது.
கொளுப் பொருளும் கொளுவும்
உழிஞையார் முற்றுகைப் போர்க்கான நெறிமுறைகளில் துறைபோனவர்கள். அவர்கள் பெருமளவில் தம்முள் கூடி, பகைவரின் மதில் புறத்தே தங்கினார்கள். அவர்கள் தங்கின செய்தியைக் கூறுவது புறத்திறை என்னும் பெயர் தாங்கிய துறையாம்.
மறத்துறை மலிந்து மண்டி மற்றோர்
விறல்கொடி மதிலின் புறத்திறுத் தன்று.
(மறம் = வீரம்; மண்டி = நிறைந்த; விறல்= வெற்றி)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை வேந்தன், பகைவர்க்குப் புகலிடமும், ஓடிப் போவதற்கான வழியும் இல்லாதபடி செய்ய நினைத்து, தன் பகைவரது மதிலின் புறத்தே, படையைப் பரவச் செய்து தங்கினான்.
துறையமைதி
உழிஞை வேந்தன், பகை மன்னர் அழியும்படியாகவும், பிற மன்னர் கலங்கும்படியாகவும் மதிலின் புறத்தே, தனது படையைப் பரப்பித் தங்கியதைக் கூறுவது துறைப் பொருளை விளக்குவதாக அமைகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
தம்மை வணங்காத நொச்சியாரின் நீண்ட மதிலின் திண்மையை உழிஞையார் விதந்து (சிறப்பித்து) உரைப்பது ஆரெயில் உழிஞை எனப்படும்.
வாஅள்மறவர் வணங்காதார்
நீஇள்மதிலின் நிலைஉரைத்தன்று
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
நொச்சி வேந்தனின் மதில் ஏவறை முதலிய வஞ்சனையான அமைப்புகளை உடையது. இவர்கள் மதிலை, நம் உழிஞை மறவர்கள் கண்களில் தீப்பறக்கச் சினந்து, எயிலிடத்துள்ள நொச்சியார் மாயும் வண்ணம் போரினைச் செய்தாலும், நாம் வெற்றி காண்பது அரிதாகும் என்கின்றனர் உழிஞையாரின் ஒற்றர்கள்.
துறையமைதி
பொருதாலும் மதிலைக் கைப்பற்றல் இயலாதென உழிஞையாரின் ஒற்றர் ‘வணங்காதார் நீஇள் மதிலின் நிலை’ உரைப்பதால் துறைப்பொருள் பொருந்துவதைக் காண்க.
கொளுப் பொருளும் கொளுவும்
வெற்றியையும் புகழையும் விளைவிக்கும் என்று சொல்லும்படி பண்டுதொட்டு வந்த கிடுகுப் படையைப் பாராட்டுவது தோல்உழிஞை என்னும் துறையாம்.
வென்றி யோடு புகழ்விளைக் கும்எனத்
தொன்று வந்த தோல்மிகுத் தன்று.
(வென்றி = வெற்றி; தோல் = கிடுகுப்படை)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
‘நம் உழிஞை வேந்தன், பகைவரை வென்று விளங்கும் நம்முடைய கிடுகுப்படை, பணியாத பகைவரின் அரணைக் கைப்பற்ற வேண்டுமெனக் கருதின், அவ்வாறு கைப்பற்றுதல் எளியதாம் என்று சொன்னான். ஆதலால், கிடுகுப் படையைச் சேர்ந்த நாம் இதுவரை வந்த புகழ் ஒழியும்படியாகவும், நில்லா உயிரைக் காக்கும்படியாகவும் இன்று போரிடாமல் சோம்பலுடன் தங்கியிருந்தால், அஃது, இழிந்த செயலாகிப் போகும்’ என்கின்றான் கிடுகுப் படைத் தலைவன்.
துறையமைதி
‘தோல்படையானது, பகைவரது மதிலைக் கைப்பற்றக் கருதின், அஃது எளிதாகும் என்றான் உழிஞை வேந்தன்’, என்றதால் கிடுகுப் படையினது ஆற்றல் மன்னனால் கூறப்பட்டமை வெளிப்பட்டுத் தொன்றுதொட்டு வந்த தோலின் சிறப்பைக் கூறுவது என்னும் துறைப் பொருள் நிரம்புவது காண்க.
(அ) மதில் மேல் குறுகி, ஒருதானாகி மலைதல். (தான் ஒருவனேயாக உழிஞை மறவன் போரிடுதல்) (குறுகி = அடைந்து)
(ஆ) மிளையைக் கடந்து மலைதல் (மிளை = காவற்காடு)
(இ) ஆடலொடு அரணைக் குறுகல் (வீரர் ஆடிப்பாடி அரணை (நெருங்குதல்)
என மூன்று வகைப்படுத்தி மொழிகின்றார். இம்மூவகை பற்றி அவர் கூறுவனவற்றை விளக்கமாகக் காண்போம்
ஒரு தானாகி மலைதல் (குற்றுழிஞை)
மதிலைக் குறுகிச் சென்று மலைதலின் இது குற்றுழி்ஞை எனப்பட்டது.
கொளுப் பொருளும் கொளுவும்.
பகைவரது அழிவற்ற அரண் ஒன்றின்மேல், தான் ஒருவனுமே ஆக நின்று உழிஞை மறவன் ஒருவன் தன் வீரத்தை வெளிப்படுத்திப் போரிடுவது குற்றுழிஞை எனப்படும்.
கருதாதார் மதில்குமரிமேல்
ஒருதானாகி இகல்மிகுத்தன்று
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை வேந்தன் நொச்சியாரின் அரணை வென்று கைப்பற்றக் கருதினான். எயிலின் புறத்தே காத்து நின்ற நொச்சியாரை வென்று அரணின் வாயிலை அடைந்தான். அடைந்ததும் அவன் களிறுகளும், தமது கொம்புகளால் வாயில் கதவுகளும் உடையும்படி குத்திப் பாய்ந்தன.
துறையமைதி
உழிஞை வேந்தன் அரணத்தைக் கைப்பற்றிய அளவில் களிறுகள் வாயிற் கதவுகள் இறும்படியாகப் பாய்ந்து குத்தின. இதில் மதிற்போரைச் சிறப்பித்தது ஆகிய துறைப்பொருள் பயில்வது காணலாம்.
இதுவும் அது (குற்றுழிஞை) – மிளையைக் கடந்து மலைதல
மிளை – இளை = காவற்காடு, காவற்காட்டைக் கடந்து குறுகிச் சென்று மலைதலின் குற்றுழிஞை எனப் பெற்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
வீரச்சங்கம் முழங்க ஊதுகொம்பு ஆரவாரிக்க உழிஞை மறவர்கள் நொச்சியாரின் கடத்தற்கரிய காவல்காட்டினைக் கடந்து எயிலுக்குள் புகுவதும் குற்றுழிஞை என்னும் துறையாம்.
வளைஞரல வயிர்ஆர்ப்ப
மிளைகடத்தலும் அத்துறையாகும்.
(வளை = சங்கு; வயிர் = ஊதுகொம்பு)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை மறவருடைய வாள்கள், கடத்தற்கரிய காவற்காட்டில் நின்று போர் புரியும் நொச்சி மறவர் முதுகிடும்படி போரை வென்று, நொச்சி மறவருடைய மலை போன்ற மார்பிடத்தே தங்கின.
துறையமைதி
உழிஞை மறவர் வாள்கள், நொச்சி மறவருடைய மார்பின்கண் தங்கின என்றதனில் மிளை கடத்தல் என்னும் செய்தி வருதலின் இத்துறை பொருந்துவதாகின்றது.
இதுவுமது (குற்றுழிஞை) – ஆடலொடு அரணைக் குறுகல்
அரணினை ஆடலொடு குறுகினமை கருதிக் குற்றுழிஞை ஆயிற்று.
கொளுப் பொருளும் கொளுவும்
ஆடலொடு குறுகுதல் வழியமைந்த குற்றுழிஞையாவது, பெருமையினை உடைய கிடுகுப் படையைக் கொண்ட உழிஞை மறவர்கள் மறக்களிப்பால் கூத்தாடியபடி அரணினைக் குறுகுவது ஆகும்.
பாடருந்தோல் படைமறவர்
ஆடலொடுஅடையினும் அத்துறையாகும்.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
மிக்க வெற்றியை உடையவன் உழிஞை மன்னன். இவனுடைய மறவர்களும் வெற்றியாளரே. இவர்கள் கிடுகுப்படையைத் தம் கரங்களில் ஏந்தி மறக்களிப்பால் ஆடத் தொடங்கினார்கள்; ஆடியபடியே பெரிய மதிலின் உச்சியை விரைந்து சேர்ந்தார்கள். அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்த காட்சி மலையின் உச்சியை அடைந்த பறவைக் கூட்டம் போன்று இருந்தது.
துறையமைதி
கிடுகுப் படையை ஏந்திய உழிஞை மறவர்கள், ஆடலுடன் தொடர்ந்து மதிலின் உச்சியைக் குறுகியதைக் கூறுவதில் இத்துறையமைதியைக் காணலாம்.
கொளுப் பொருளும் கொளுவும்
விசும்பில் படிகின்ற அளவுக்கு உயர்ச்சியையுடைய பகைவரது காவற்காட்டினைக் கடந்து சென்ற உழிஞைப்படை ஆழ்ந்த அகழியின் கரைப் பக்கத்தில் தங்கியதைச் சொல்வது புறத்துழிஞை என்னும் துறையாம்.
விண்தோயும் மிளைகடந்து
குண்டுஅகழிப் புறத்துஇறுத்தன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை மன்னன், ஆட்களை அகப்படுத்திக் கொள்வதில் தப்பாத முதலைகளையுடைய ஆழ்ந்த நீர் அகழியிலுள்ள நீரையே பருகும் நீராகக் கொண்டு அதன் கரையில் வந்து தங்கினான். தங்கிய அதற்கே, மலைபோன்ற அரணுள்ளே இருக்கின்ற வளையல் அணிந்த பெண்டிர் வெப்பப் பெரு மூச்சினை விட்டார்கள்; வெல்லுதற்கரிய போராக இது அமையும் என்பது உறுதி என்று கண்டோர் கூறினர்.
துறையமைதி
அகழியின் தண்ணீரையே தன்னுடைய படைகள் பருகும் நீராகும்படி உழிஞை வேந்தன், அகழிக் கரையில் தங்கினான். தங்கிய அளவில் நொச்சி மறவருடைய மகளிர் பெரியதொரு போர் நிகழும் என வெய்துயிர்த்தனர் என்பதில் கரையில் தங்கிய செய்தி பேசப்படுதலின் இது புறத்துழிஞைத் துறையாகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
உழிஞை மறவர்கள் தம் பகைவராகிய நொச்சியாரின் வலி அழியும்படி அவர்கள் அகழியிடத்தே போர் புரிந்தது, பாசி நிலை என்னும் துறையாம்.
அடங்காதார் மிடல்சாய
கிடங்கிடைப் போர்மலைந்தன்று.
(கிடங்கு = அகழி)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
பகைவராகிய நொச்சி மறவர் ஒழிவில்லாமல், இடையறவில்லாமல், ஓடம், மரத்தோணி ஆகியவற்றின் மேல் ஏறிக் கொண்டு, போர்மேல் வரும் உழிஞை மறவரைத் தடுக்கின்றனர்; சினக்கின்றனர். உழிஞை மறவர் பலர் கிடங்கிடத்தே குருதிச் சேற்றிலே, அப்பகைவர் எய்த அம்புகளால் இறந்துபட்டார்கள்.
துறையமைதி
நொச்சியார் சினக்கவும் மலையவும் அகழியின்கண் குருதிச் சேற்றில் அம்புபட்டு இறந்த உழிஞையார் பலர் என்பதனில் ‘கிடங்கிடைப் போர் மலைந்தமை’ கூறப்படுதலின் இத்துறை பாசிநிலை ஆகியது.
கொளுப் பொருளும் கொளுவும்
உழிஞை மறவர், நெருங்கிச் சென்று, மறைவாக அமைக்கப்பட்ட ஏவறைகளை உடைய நொச்சியாரது மதிலிலே ஏணியைச் சாத்தியது ஏணி நிலை என்னும் துறையாம்.
தொடுகழல் மறவர் துன்னித் துன்னார்
இடுசூட்டு இஞ்சியின் ஏணிசாத் தின்று.
(துன்னி = நெருங்கி; துன்னார் = பகைவர்; சூட்டு = ஏவறை; இஞ்சி = மதில்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞையார், தாள கதிக்கு ஏற்ப நடைபோடும் புரவிப்படை உடையவர்; களிற்றுப்படை பல உடையவர். நொச்சி மறவர்கள் தமது எயிலில் பண்ணிவைத்த கல்பொறி, பாம்புப் பொறி, கனல் பொறி, குரங்குப் பொறி, வில் பொறி, வேல் பொறி ஆகியவைகள் தடுக்கவும் அவர்கள் அவற்றிற்கு அஞ்சாது, நொச்சியாரின் எயிலில் ஏறப் பல ஏணிகளைச் சாத்தினார்கள்.
துறையமைதி
மதில்மீது மறைவாக அமைக்கப்பட்டுள்ள கல், பாம்பு, கனல் முதலிய பொறிகள் தடுக்கவும், தயங்காதவராய்ப் பகைவர் மதில்மேல் ஏணியைச் சாத்தினர் உழிஞையார் என்பதில் கொளு கூறும் ‘ஏணி சாத்தின்று’ என்பது வருகிறது. இதனால், துறைப் பொருள் தெளிவாகப் பொருந்தி வருவது புலனாகும்.
கொளுப் பொருளும் கொளுவும
வெகுளியை உடைய உழிஞையார், நொச்சியாரின் காவல் மிகுந்த எயிலின் வலியழியும்படியாக, முன்பு எயில்மேல் தாம் சாத்திய ஏணியின் மீது ஊர்ந்ததைச் சொல்வது எயிற்பாசி எனப்படும்.
உடல்சினத்தார் கடிஅரணம்
மிடல்சாய மேல்இவர்ந்தன்று.
(உடல் = பொங்கு; கடி = காவல்; மிடல் = வலிமை; இவர்தல் = நகருதல், ஊருதல்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
சுட்ட செங்கல்லால் ஆகிய நெடிய மதிலைச் சுற்றி உழிஞை மறவர் பிரியாதவராய்ச் சூழ்ந்திருந்தனர். அவர்கள்மேல் நொச்சியார் எறிந்த வேல்கள் உடலை ஊடுருவிக் கொண்டு வெளிப் போந்தன. இதனால், உழிஞையார் சிலர் மாய்ந்தனர். மாய்ந்தவர்கள் போக எஞ்சிய உழிஞை மறவர் பலர், பாம்பும் உடும்பும் எவ்வாறு ஊர்ந்து மேலேறுமோ அதுபோல ஏணிமேல் ஏறினார்கள்.
துறையமைதி
அழிந்தவர்போக மிஞ்சிய உழிஞை மறவர் பலர் ஏணியின் மேல் பாம்பும் உடும்பும் போல் தொடர்ந்து ஊர்ந்து ஏறியது கூறப்பட்டதால் எயில் பாசி என்னும் துறைப் பொருள் பொருந்துவதாயிற்று.
கொளுப் பொருளும் கொளுவும்
மூங்கில்கள் தம்முள் பின்னிப் பிணைந்த (மயங்கிய) காவற்காட்டை உடையது நொச்சியாரின் அரண். இவ்வரணின் உள்ளே, உழிஞை மறவர், இரையைக் கண்டபோது விரைந்து பாயும் பறவையைப் போன்று பரவிக் குதித்தனர். குதித்தமையைக் கூறுவது, முதுவுழிஞை என்னும் துறையாம்.
வேய்பிணங்கிய மிளைஅரணம்
பாய்புள்ளின் பரந்துஇழிந்தன்று.
(வேய் = மூங்கில் ; புள் = பறவை; இழிதல் = இறங்குதல், குதித்தல்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உயர்ந்த மலை உச்சியின்மேல் இருந்து கொண்டு தமக்கு வேண்டிய இரையைத் தரையில் பார்த்து அவ் இரையைக் கவர எண்ணும் பறவைகள் தொகுதி பாய்ந்து குதிப்பதைப் போலப் பகைவராகிய நொச்சியாரது மன எழுச்சி கெட்டு அழியும்படி அவர்களது அரணுக்குள்ளே திரண்ட தோளினையுடைய உழிஞை மறவர்கள் ஆர்ப்பரித்துப் பாய்ந்தனர்.
துறையமைதி
உழிஞை மறவர் ஏணி ஊர்ந்து மதிலின் உச்சியை அடைந்து, அங்கிருந்து மதிலின் உள்ளே குதித்தனர் என்பது பறவைகள் உவமை வழியே பேசப்படுகின்றது. இது பாய்ந்து இறங்கியது போல என்று நோக்கத் துறைக் கருத்து பொருந்துவது வெளிப்படை.
இதுவும்அது – முதுஉழிஞை (அகத்து இகல் புகழ்வு)
‘அரணகத்துள்ளாரின் போரைப் புகழ்வதும்’ முதுவுழிஞைத் துறை ஆகும். இதனால், அப்புகழ் பெற்ற வீரரை வென்றார் உழிஞையார் என்ற குறிப்புத் தோன்றுவதால் இதுவும் முதுவுழிஞையாம்.
கொளுப் பொருளும் கொளுவும்
அரணகத்துள்ளே போர் செய்வதற்கு உரியவரான நொச்சியாரது வீரத்தைச் சிறப்பித்துப் பேசுவதும், உழிஞையாரது வெல்லுதற்கரிய எதிர்ப்பைச் சொல்வதாக அமைதலால் முதுவுழிஞைத் துறையாகின்றது.
செருமதிலோர் சிறப்புரைத்தலும்
அருமுரணான் அத்துறையாகும்.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
ஏவறைகள் நிரம்ப உடையது நொச்சியாரது மதில். இதனுள்ளே இருக்கின்ற அவர்கள், தம்முடைய மகளிரிடம் பொருந்திய வேட்கையால் மயங்கியுள்ளார்கள். மயக்கத்தில் இருக்கின்ற அவர்கள், நம் உழிஞை மறவர்கள் மதிலினுள் இறங்கிய பின்னரும், மதிலைக் கொள்ள வரும் நம் வரவை அறியாதவராய் இருக்கின்றார்கள்.
துறையமைதி
உழிஞையார் மதிலினுள்ளே குதித்த பின்பும் நொச்சி மறவர், மகளிர் வேட்கையினின்றும் நீங்காமல், மேல்வருவதனை அறியாதவராய் உள்ளனர் என்னும் பேச்சில், ‘செருமதிலோர் சிறப்பு’ உரைக்கப் பெறுவதால் துறைப் பொருத்தம் வெளிப்படுகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
சினம் மிக்க உழிஞையார் மதிலின் அகத்தே இருந்த நொச்சியாரைப் போரில் வென்றதை விளம்புவது அகத்துழிஞை என்னும் துறையாம்.
முரண்அவியச் சினம்சிறந்தோர்
அரண்அகத்தோரை அமர்வென்றன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
சினத்தால் சிவந்த கண்ணை உடைய உழிஞை மறவர். தம் வாளை, அரணின் உள்ளே உள்ள நொச்சி மறவர் உடல்களில் உலாவச் செய்கின்றனர். நொச்சி மறவர்கள், தங்கள் உரிமை மகளிர் அலறும் வண்ணம் மாய்ந்தார்கள். இவ்வாறாக, எயிலின் உள்ளே இருந்தவர்களைப் போரில் வென்றனர் உழிஞையர்.
துறையமைதி
திங்களன்ன முகத்தார், தங்கள் மறவர்கள் உழிஞையாரால் வெட்டுண்டு மாய்வதைக் கண்டு அலறும்படியாக அமரினை வென்றனர் உழிஞையர் என்பதில், ‘அரணகத்தோரை அமரில் வென்றது’ இடம் பெறுதலால் துறைப் பொருள் நிரம்புவது வெளிப்படையாகத் தெரிகிறது.
கொளுப் பொருளும் கொளுவும்
மதிலின் அகத்தே இருக்கும் நொச்சி மன்னனின் முரசம் வழக்கம்போலக் காலை நேரத்தில் முழங்க, அதனைக் கேட்ட மதிலின் புறத்தே இருந்த உழிஞையான் கொண்ட சினத்தின் மிகுதியைச் சொல்வது முற்று முதிர்வு என்னும் துறையாகும்.
அகத்தோன் காலை அதிர்முரசு இயம்பப்
புறத்தோன் வெம்சினப் பொலிவு உரைத்தன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
நொச்சி மன்னனின் மதிலகத்தே நாளும் காலைப் போதில் முழக்கப்படும் முரசம் இயல்பாக ஒலித்தது. அதைக் கேட்ட, உழிஞை மன்னன் கண்கள் கோபக் கனலுடன் நோக்கின. நோக்கிய அளவில், உழிஞை மறவர்கள், இன்று மாலைக்குள் இம்மதிலின் உள்ளே சோறு சமைப்போம் என்று சொல்லிச் சமைப்பதற்கான அகப்பை, துடுப்பு ஆகியவற்றை மதிலின் உள்ளே வீசினர்.
துறையமைதி
‘காலை முரசியம்பக் கண் கனன்றான் விறல் வெய்யோன்’ என்பது, முரசு இயம்பப் புறத்தே நின்ற மன்னன் வெஞ்சினம் மிகுந்தது வெளிப்படுத்துகின்றது. ‘மாலை அடுகம் அடிசில்’ என்ற கூற்றும் உழிஞையாரின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றது. ‘மூழையும் துடுப்பும் மதிலகத்து இட்டமை’, சினத்தின் மிகுதியையும், வெல்வதற்குச் சிறுபொழுதே போதும் என்பதையும் சாற்றுகின்றது. இவற்றால் துறையமைதி விளங்குகிறது.
கொளுப் பொருளும் கொளுவும்
தங்களோடு பகைமை கொண்ட நொச்சியாரது மதில் அழியும் வண்ணம் அவர்களுடைய களிற்றையும் காவலையும் வென்று கைப்பற்றியதைச் சொல்வது யானை கைக்கோள் என்னும் துறையாகும்.
மாறு கொண்டார் மதிலழிய
ஏறும் தோட்டியும் எறிந்து கொண்டன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை வேந்தன் தன்னை நொச்சியார் பணிந்து ஏத்தும் படியாக, அரணினைப் போரில் வென்று அழித்தான். அழித்தவன் காவலையும் யானைகளையும் கைக்கொண்டான்.
துறையமைதி
உழிஞை வேந்தன் நொச்சியார் அரணை அழித்து அவர்களுடைய காவலும் யானையும் கைப்பற்றினான் என்பதில் ‘ஏறும் தோட்டியும் எறிந்து கொண்ட’ கொளுச் செய்தி பயின்று யானை கைக்கோள் துறையாதல் காண்க.
கொளுப் பொருளும் கொளுவும்
உழிஞை வேந்தன், தனது முற்றுகையை விட்டு அகல்வதற்காக, நொச்சி மன்னனுக்குத் துணையாய் வேற்று வேந்தன் வந்ததை உரைத்தது வேற்றுப்படை வரவு என்னும் துறை.
மொய்திகழ் வேலோன் முற்றுவிட்டு அகலப்
பெய்தார் மார்பின் பிறன்வரவு உரைத்தன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
‘துணைப் படையாய் வந்து உதவுவதற்கு உரியவன் இவன் ஒருவேன’ என்று உலகவர் ஏத்தும் பெருமையுடையவன் இவ்வேற்று வேந்தன். இவனை அல்லாமல், இந்த நொச்சி மன்னன் மதிலை இந்நாளில் முற்றிய உழிஞை மறவர்கள் தம் முற்றுகையைக் கைவிடும்படி செய்வார் வேறு யார் இருக்கின்றார்கள்? ஒருவரும் இலர் என்று வேற்று வேந்தனின் வருகையைப் புகழ்கின்றனர் அயலார்கள்.
துறையமைதி
இவ்வேற்று வேந்தனை விட்டால், நொச்சி மன்னனின் துயரத்தை ஒழிப்பார் வேறு எவரும் இலர்; அவனது படைவரவு உழிஞையாரின் முற்றுகையைக் கைவிடப் பண்ணும் என்பதாக அமைந்து துறைப் பொருளை விளக்குகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
தாம் அழிதலை எண்ணாதவர்கள் பகைவரான நொச்சியர்கள். அவர்களது பல அரண்களையும் உழிஞை மறவர்கள் இடித்தனர். கழுதை பூட்டிய ஏரால் இடித்த இடத்தை உழுதனர். உழுதபின் கவடியும் (வரகு) கொள்ளும் வித்தினர். இவற்றைப் பற்றிப் பேசுவது உழுது வித்திடுதல் என்னும் துறை.
எண்ணார் பல்எயில் கழுதை ஏர் உழுவித்து
உண்ணா வரகொடு கொள்வித் தன்று.
(வரகொடு கொள் = வரகும் கொள்ளும்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை வேந்தனின் சினம், அழகிய மாடத்தின், மாளிகையின் எல்லா இடங்களையும் துகள் உண்டாக இடித்து, தனது கை வேலினை ஏரடிக்கும் கோலாகவும் கழுதையை ஏராகவும் கொண்டு இடித்த இடத்தை உழுது, உழுத பின்பு கவடியும் கொள்ளும் விதைத்த பின்னும் தணியாததாயிற்று எனக் கண்டோர் இயம்புகின்றனர்.
துறையமைதி
அரணைக் கைப்பற்றி மாடத்தை இடித்து, உழுது, விதைத்த பின்னரும் உழிஞையான் சினம் நீங்கியபாடில்லை என்றதனில், கொளுவின் கருத்து நிரம்புதல் காண்க. துறைப் பொருத்தமும் புலனாகும்.
கொளுப் பொருளும் கொளுவும்
உயர்ந்தவர்கள் வாழ்த்தி நிற்க, தூய நீரால் முழுக்காட்டிய வாளின் மறப்பண்பினைச் சொல்லியது வாள் மண்ணு நிலை என்னும் துறையாம்.
புண்ணிய நீரில் புரையோர் ஏத்த
மண்ணிய வாளின் மறம்கிளந் தன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை வேந்தன், இரண்டாவது முறையும், நொச்சியரது இந்த மதிலின் உள்ளே இடியைப் போன்ற முரசு முழங்கப் பண்ணி, சூழ்ந்துள்ள மன்னர் எல்லாரும் தனது புகழைச் சொல்லும்படியாகக் கூர்மையான கொற்ற வாளைப் புனித நீரால் கழுவினான்; மலர்களொடு நறுமணப் பொருள்கள் பிறவும் சொரிந்தான்; திசைகள் தோறும் தன்புகழே விளங்கக் களவேள்வியை விரும்பினான்.
துறையமைதி
முன்னரும் களவேள்வியை நடத்திய உழிஞை வேந்தன், இரண்டாவது முறையாகத் தனது கொற்ற வாளைப் புனித நீரில் ஆட்டினான் என்றதால், வாள் மண்ணப்பட்ட செய்தி இடம் பெற்றுத் துறைக் கருத்தும் பொருந்தி வந்தது.
கொளுப் பொருளும் கொளுவும்
உழிஞை மன்னன், தன்னைப் பணியாத நொச்சியாரது மதில் கன்னியொடு திருமணம் கூடிய (கொண்ட) சிறப்பை உரைப்பது மண்ணு மங்கலம் என்னும் துறையாகும்.
வணங்காதார் மதில்குமரியொடு
மணம்கூடிய மலிபுஉரைத்தன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை வேந்தன், நொச்சி வேந்தனது எயிலாகிய குமரியை, நல் ஓரை கூடிய மங்கல நாளில் நாங்கள் மகிழ்வு கொள்ளத் தேன் பொருந்திய மலர் மாலையும் ஒளி பொருந்திய அணிகலன்களும் அணிந்து மணந்தான். அணிந்து மணந்த உழிஞை மன்னனுடைய சேவடிக்கீழ், நொச்சி மன்னனும் துணைப்படையாக வந்த வேற்று மன்னனும் ஆகிய மன்னர்களுடைய தலையும், தலையில் பூண்ட முடியும் தங்கின.
துறையமைதி
இவ்வெண்பாவில் இருவேறு மன்னர்களின் தலைகளும், கிரீடமும் உழிஞை வேந்தனின் சேவடிக் கீழ் தங்கின என வந்தமையால், நொச்சி மன்னனும் துணையென வந்த மன்னனும் தோற்றுப் பணிந்ததும், உழிஞை வேந்தன் மதிலைக் கொண்டதும் பெறப்படுகின்றன. இதனால் துறைப் பொருளும் நிரம்புகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
மயில் போன்ற சாயலையுடையவள் நொச்சி மன்னனுடைய மகள். அவளை விரும்பிய உழிஞையானது நிலைமையை நவில்வது மகட்பால் இகல் என்னும் துறையாம்.
மயில்சாயல் மகள்வேண்டிய
கயில்கழலோன் நிலைஉரைத்தன்று.
(கயில் = பூட்டுவாய். (Clasp)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
நொச்சி மன்னனுடைய மகள் தன் மெல்லிய தோள், மாந்தளிர் நிறமுடைய மேனி ஆகியவற்றால், தன் தந்தையின் மதிலின் புறத்தே வைகும் உழிஞை வேந்தனுக்கு, தனிமை என்னும் ஏக்கத்தை உண்டாக்குவாள்.
துறையமைதி
உழிஞை வேந்தன், நொச்சியான் மகளது அழகைப் பாராட்டிக் கொண்டு, நொச்சியானது மதில் புறத்தில் – தனிமைத் துயரத்தில் – வருந்தும் நிலையைச் சுட்டி வருவதால் கயில் கழலோன் நிலை உரைக்கும் துறைப் பொருள் பொருந்துவதாகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
நொச்சி மன்னன் பணிந்து செலுத்திய கப்பத்தை ஏற்றுக் கொண்டு, அவனது நகரினின்றும் உழிஞை வேந்தன் தன்நகர்க்கு மீண்டது திறை கொண்டு பெயர்தல் என்னும் துறையாம்.
அடுதிறல், அரணத்து அரசுவழி மொழியப்
படுதிறை கொண்டு பதிபெயர்ந் தன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை வேந்தன், சங்கும் கொம்பும் முழங்கக் காவற் காட்டினை நெருப்புத் தழுவும்படியாக வெகுண்டு உலாவினான். பிறகு, அரணகத்து இருந்த பகைவர் தாழ்வு (தனக்குப் பணிவாகச்) சொல்லி வாழ்த்த, தனது பாடி வீட்டினின்றும் நீங்கித் தன்னகர்க்குப் புறப்பட்டான்.
துறையமைதி
உழிஞையான், திறையைப் பெற்றுப் பாடியினின்றும் பெயர்ந்தான் என்பதனுள், உழிஞையானின் பதிப் பெயர்வும் நொச்சியானின் பணிவும் வெளிப்படையாயின; திறை செலுத்தப் பெற்றமை குறிப்பினால் பெறப்பட்டது. இங்ஙனம், வெளிப்படையாகவும் குறிப்பினாலும் பெறப்பட்ட செய்திகளால், கொளுவின் கருத்து நிரம்புதல் காணலாம்.
கொளுப் பொருளும் கொளுவும்
பகைவர்கள், அவர்களது மறப்பண்பைத் தங்களிடமிருந்து விலக்கி விடும்படியாகவும், தனது ஆணையை ஏற்றுக் கொண்டு தனது காலடியில் பணியும்படியாகவும், உழிஞை மன்னன் தன் பாடியினின்றும் பெயராதவனாய் நீண்ட காலம் இருந்தது அடிப்பட இருத்தல் என்னும் துறையாம்.
பேணாதார் மறம்கால
ஆணைகொண்டு அடிப்படஇருந்தன்று.
(கால = அழிய)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை வேந்தன், இவனுடைய முற்றுகைப் போருக்கு முன்பு தம்முள் ஒத்துப் போகாத பகை நாட்டார்கள்கூட, முற்றுகைக்குப் பின்னர் ஒன்றிப் போனார்கள். ஒன்றிப் போன இப்பகைவர்கள் நாடு ஒருவழிப்பட்டு இவனது ஏவலைக் கேட்கும் பொருட்டும், வெற்றி பெறாத நொச்சியார், மீண்டும் போரிட முயற்சி செய்தால், அதனைத் தடுத்துப் போரிடும் பொருட்டும் உழிஞை மன்னவன் தான் தங்கியிருந்த பாடியினின்றும் பெயராதவனாய் இருந்தான். அஃதாவது, முற்றுகைப் போரில் வென்றும் அவன் தன் நகருக்கு மீளாது பாடியில் தங்கினான் என்பது கருத்து.
துறையமைதி
வெற்றி பெற்ற உழிஞை மன்னன், நொச்சி மன்னனும் அவன் நண்பரும் தன்னிடம் அடி பணிவதற்காகப் பாசறையில் தங்கியிருக்கிறான். வெற்றியை நிலைநாட்டவும் வெளிப்படுத்தவும் மேற்கொள்ளும் செயல்களை இனிக் காண்போம்.
கொளுப் பொருளும் கொளுவும்
தாம் அழிதலை எண்ணாதவர்கள் பகைவரான நொச்சியர்கள். அவர்களது பல அரண்களையும் உழிஞை மறவர்கள் இடித்தனர். கழுதை பூட்டிய ஏரால் இடித்த இடத்தை உழுதனர். உழுதபின் கவடியும் (வரகு) கொள்ளும் வித்தினர். இவற்றைப் பற்றிப் பேசுவது உழுது வித்திடுதல் என்னும் துறை.
எண்ணார் பல்எயில் கழுதை ஏர் உழுவித்து
உண்ணா வரகொடு கொள்வித் தன்று.
(வரகொடு கொள் = வரகும் கொள்ளும்)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை வேந்தனின் சினம், அழகிய மாடத்தின், மாளிகையின் எல்லா இடங்களையும் துகள் உண்டாக இடித்து, தனது கை வேலினை ஏரடிக்கும் கோலாகவும் கழுதையை ஏராகவும் கொண்டு இடித்த இடத்தை உழுது, உழுத பின்பு கவடியும் கொள்ளும் விதைத்த பின்னும் தணியாததாயிற்று எனக் கண்டோர் இயம்புகின்றனர்.
துறையமைதி
அரணைக் கைப்பற்றி மாடத்தை இடித்து, உழுது, விதைத்த பின்னரும் உழிஞையான் சினம் நீங்கியபாடில்லை என்றதனில், கொளுவின் கருத்து நிரம்புதல் காண்க. துறைப் பொருத்தமும் புலனாகும்.
கொளுப் பொருளும் கொளுவும்
உயர்ந்தவர்கள் வாழ்த்தி நிற்க, தூய நீரால் முழுக்காட்டிய வாளின் மறப்பண்பினைச் சொல்லியது வாள் மண்ணு நிலை என்னும் துறையாம்.
புண்ணிய நீரில் புரையோர் ஏத்த
மண்ணிய வாளின் மறம்கிளந் தன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை வேந்தன், இரண்டாவது முறையும், நொச்சியரது இந்த மதிலின் உள்ளே இடியைப் போன்ற முரசு முழங்கப் பண்ணி, சூழ்ந்துள்ள மன்னர் எல்லாரும் தனது புகழைச் சொல்லும்படியாகக் கூர்மையான கொற்ற வாளைப் புனித நீரால் கழுவினான்; மலர்களொடு நறுமணப் பொருள்கள் பிறவும் சொரிந்தான்; திசைகள் தோறும் தன்புகழே விளங்கக் களவேள்வியை விரும்பினான்.
துறையமைதி
முன்னரும் களவேள்வியை நடத்திய உழிஞை வேந்தன், இரண்டாவது முறையாகத் தனது கொற்ற வாளைப் புனித நீரில் ஆட்டினான் என்றதால், வாள் மண்ணப்பட்ட செய்தி இடம் பெற்றுத் துறைக் கருத்தும் பொருந்தி வந்தது.
கொளுப் பொருளும் கொளுவும்
உழிஞை மன்னன், தன்னைப் பணியாத நொச்சியாரது மதில் கன்னியொடு திருமணம் கூடிய (கொண்ட) சிறப்பை உரைப்பது மண்ணு மங்கலம் என்னும் துறையாகும்.
வணங்காதார் மதில்குமரியொடு
மணம்கூடிய மலிபுஉரைத்தன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை வேந்தன், நொச்சி வேந்தனது எயிலாகிய குமரியை, நல் ஓரை கூடிய மங்கல நாளில் நாங்கள் மகிழ்வு கொள்ளத் தேன் பொருந்திய மலர் மாலையும் ஒளி பொருந்திய அணிகலன்களும் அணிந்து மணந்தான். அணிந்து மணந்த உழிஞை மன்னனுடைய சேவடிக்கீழ், நொச்சி மன்னனும் துணைப்படையாக வந்த வேற்று மன்னனும் ஆகிய மன்னர்களுடைய தலையும், தலையில் பூண்ட முடியும் தங்கின.
துறையமைதி
இவ்வெண்பாவில் இருவேறு மன்னர்களின் தலைகளும், கிரீடமும் உழிஞை வேந்தனின் சேவடிக் கீழ் தங்கின என வந்தமையால், நொச்சி மன்னனும் துணையென வந்த மன்னனும் தோற்றுப் பணிந்ததும், உழிஞை வேந்தன் மதிலைக் கொண்டதும் பெறப்படுகின்றன. இதனால் துறைப் பொருளும் நிரம்புகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
மயில் போன்ற சாயலையுடையவள் நொச்சி மன்னனுடைய மகள். அவளை விரும்பிய உழிஞையானது நிலைமையை நவில்வது மகட்பால் இகல் என்னும் துறையாம்.
மயில்சாயல் மகள்வேண்டிய
கயில்கழலோன் நிலைஉரைத்தன்று.
(கயில் = பூட்டுவாய். (Clasp)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
நொச்சி மன்னனுடைய மகள் தன் மெல்லிய தோள், மாந்தளிர் நிறமுடைய மேனி ஆகியவற்றால், தன் தந்தையின் மதிலின் புறத்தே வைகும் உழிஞை வேந்தனுக்கு, தனிமை என்னும் ஏக்கத்தை உண்டாக்குவாள்.
துறையமைதி
உழிஞை வேந்தன், நொச்சியான் மகளது அழகைப் பாராட்டிக் கொண்டு, நொச்சியானது மதில் புறத்தில் – தனிமைத் துயரத்தில் – வருந்தும் நிலையைச் சுட்டி வருவதால் கயில் கழலோன் நிலை உரைக்கும் துறைப் பொருள் பொருந்துவதாகின்றது.
கொளுப் பொருளும் கொளுவும்
நொச்சி மன்னன் பணிந்து செலுத்திய கப்பத்தை ஏற்றுக் கொண்டு, அவனது நகரினின்றும் உழிஞை வேந்தன் தன்நகர்க்கு மீண்டது திறை கொண்டு பெயர்தல் என்னும் துறையாம்.
அடுதிறல், அரணத்து அரசுவழி மொழியப்
படுதிறை கொண்டு பதிபெயர்ந் தன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை வேந்தன், சங்கும் கொம்பும் முழங்கக் காவற் காட்டினை நெருப்புத் தழுவும்படியாக வெகுண்டு உலாவினான். பிறகு, அரணகத்து இருந்த பகைவர் தாழ்வு (தனக்குப் பணிவாகச்) சொல்லி வாழ்த்த, தனது பாடி வீட்டினின்றும் நீங்கித் தன்னகர்க்குப் புறப்பட்டான்.
துறையமைதி
உழிஞையான், திறையைப் பெற்றுப் பாடியினின்றும் பெயர்ந்தான் என்பதனுள், உழிஞையானின் பதிப் பெயர்வும் நொச்சியானின் பணிவும் வெளிப்படையாயின; திறை செலுத்தப் பெற்றமை குறிப்பினால் பெறப்பட்டது. இங்ஙனம், வெளிப்படையாகவும் குறிப்பினாலும் பெறப்பட்ட செய்திகளால், கொளுவின் கருத்து நிரம்புதல் காணலாம்.
கொளுப் பொருளும் கொளுவும்
பகைவர்கள், அவர்களது மறப்பண்பைத் தங்களிடமிருந்து விலக்கி விடும்படியாகவும், தனது ஆணையை ஏற்றுக் கொண்டு தனது காலடியில் பணியும்படியாகவும், உழிஞை மன்னன் தன் பாடியினின்றும் பெயராதவனாய் நீண்ட காலம் இருந்தது அடிப்பட இருத்தல் என்னும் துறையாம்.
பேணாதார் மறம்கால
ஆணைகொண்டு அடிப்படஇருந்தன்று.
(கால = அழிய)
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
உழிஞை வேந்தன், இவனுடைய முற்றுகைப் போருக்கு முன்பு தம்முள் ஒத்துப் போகாத பகை நாட்டார்கள்கூட, முற்றுகைக்குப் பின்னர் ஒன்றிப் போனார்கள். ஒன்றிப் போன இப்பகைவர்கள் நாடு ஒருவழிப்பட்டு இவனது ஏவலைக் கேட்கும் பொருட்டும், வெற்றி பெறாத நொச்சியார், மீண்டும் போரிட முயற்சி செய்தால், அதனைத் தடுத்துப் போரிடும் பொருட்டும் உழிஞை மன்னவன் தான் தங்கியிருந்த பாடியினின்றும் பெயராதவனாய் இருந்தான். அஃதாவது, முற்றுகைப் போரில் வென்றும் அவன் தன் நகருக்கு மீளாது பாடியில் தங்கினான் என்பது கருத்து.
துறையமைதி
பகைவர் மீண்டும் போரிட முயலாதவாறு தடுக்கவும், தன் ஆணைக்குக் கட்டுப்பட்டு வாழச் செய்யவும் உழிஞையான் பாடியிலேயே தங்கியிருந்தான் என்பது அடிப்பட இருத்தல் என்னும் துறைப் பொருளை முற்றிலும் நிறைவு செய்கிறது.
கொளுப் பொருளும் கொளுவும்
மதில்களை உடைய பகை மன்னர்கள் அனைவரும் தோற்ற நொச்சியானின் மதிலிடத்தே வந்து, உழிஞை வேந்தனின் அடிகளை அடைந்தது தொகை நிலை என்னும் துறையாம்.
எம்மதிலின் இகல்வேந்தரும்
அம்மதிலின் அடிஅடைந்தன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
இவ்வுலகத்துள், உழிஞை மன்னனோடு மாறுபாடு கொண்டு போர் விரும்பிய காவலர்கள் எல்லாரும், வீழ்ந்துபட்ட நொச்சி மன்னனின் மதிலின் முன்னே நின்று அவனுடைய (உழிஞை வேந்தனுடைய) அடிபணிந்து தத்தம் பகைமையை விட்டனர்.
துறையமைதி
உழிஞை மன்னனது ஆணையை ஏற்காது முரண்பட்ட காவலர் எல்லாரும், நொச்சி மன்னன் வீழ்ந்த பாட்டை நினைந்து, உழிஞை மன்னனால் வென்று கைப்பற்றப்பட்ட மதிலைச் சார்ந்து, தங்கள் முரணைத் துறந்து தாழ்வு சொல்லி வழிப்பட்டனர் என்றதில், கூட்டமாக அடிமைப்பட்டது அறியக் கிடக்கிறது. இதனால் துறைப் பொருத்தம் புலனாகின்றது.
பகைவர் மீண்டும் போரிட முயலாதவாறு தடுக்கவும், தன் ஆணைக்குக் கட்டுப்பட்டு வாழச் செய்யவும் உழிஞையான் பாடியிலேயே தங்கியிருந்தான் என்பது அடிப்பட இருத்தல் என்னும் துறைப் பொருளை முற்றிலும் நிறைவு செய்கிறது.
கொளுப் பொருளும் கொளுவும்
மதில்களை உடைய பகை மன்னர்கள் அனைவரும் தோற்ற நொச்சியானின் மதிலிடத்தே வந்து, உழிஞை வேந்தனின் அடிகளை அடைந்தது தொகை நிலை என்னும் துறையாம்.
எம்மதிலின் இகல்வேந்தரும்
அம்மதிலின் அடிஅடைந்தன்று.
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
இவ்வுலகத்துள், உழிஞை மன்னனோடு மாறுபாடு கொண்டு போர் விரும்பிய காவலர்கள் எல்லாரும், வீழ்ந்துபட்ட நொச்சி மன்னனின் மதிலின் முன்னே நின்று அவனுடைய (உழிஞை வேந்தனுடைய) அடிபணிந்து தத்தம் பகைமையை விட்டனர்.
துறையமைதி
உழிஞை மன்னனது ஆணையை ஏற்காது முரண்பட்ட காவலர் எல்லாரும், நொச்சி மன்னன் வீழ்ந்த பாட்டை நினைந்து, உழிஞை மன்னனால் வென்று கைப்பற்றப்பட்ட மதிலைச் சார்ந்து, தங்கள் முரணைத் துறந்து தாழ்வு சொல்லி வழிப்பட்டனர் என்றதில், கூட்டமாக அடிமைப்பட்டது அறியக் கிடக்கிறது. இதனால் துறைப் பொருத்தம் புலனாகின்றது.
(அ) நொச்சி, எயில் காத்தல் ஆகும். இது எயில்போரின் பின் நிகழ்வு. உழிஞை, எயில் வளைத்தல் அஃதாவது, முற்றுகையிடல். இது முன்னிகழ்வு. எனினும், புறப்பொருள் வெண்பாமாலையில் நொச்சிக்குப் பின்னரே உழிஞை வைக்கப்பட்டிருக்கின்றது .
(ஆ) உழிஞை மருதத்தின் புறன். தொல்காப்பியர் நொச்சியை உழிஞையின் மறுதலையாகக் கருதுகின்றார். எனவே இத்திணைகள் இரண்டும் மருதத்தின் புறனாகும்.
(இ) நொச்சித் திணையின் துறைகள் எட்டு. உழிஞையின் துறைகள் இருபத்து எட்டு. துறைகள் ஒவ்வொன்றும் அவ்வப் பெயர்களைப் பெற்றமைக்கான காரணங்கள், துறைப்பொருளை விளக்க வரும் வெண்பாக்களின் செய்திகள், அச்செய்திகள் கொளுக்களின் பொருள்களைக் கொண்டிருத்தல், துறையமைதி ஆகியவை வரிசையாக இடம் பெற்றன.

