பாடம் - 1
இப்பாடத்தில் தும்பைத் திணை முதலில் விளக்கப்படுகிறது. தும்பைத் துறைகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. போர்ச் சூழல், தும்பைப் போரின் தனியியல்பு, போர்க்களத்தில் வீரச் செயல்கள், போர்க்களத்து ஆடல்கள் வீரச் சிறப்பு என்னும் தலைப்புகளில் 23 துறைகள் விளக்கப்படுகின்றன.
அதன் துறைகள் ஆகியவற்றின் பெயர்களைச் சூத்திரம் தொகுத்துச் சொல்கிறது.
தானை மறம்
யானை மறம்
குதிரை மறம்
தார் நிலை
தேர் மறம்
பாண்பாட்டு
இருவரும் தபு நிலை
எருமை மறம்
ஏம எருமை
நூழில்
நூழிலாட்டு
முன்தேர்க் குரவை
பின்தேர்க் குரவை
பேய்க் குரவை
களிற்றுடனிலை
ஒள்வாள் அமலை
தானை நிலை
வெருவரு நிலை
சிருங்கார நிலை
உவகைக் கலுழ்ச்சி
தன்னை வேட்டல்
தொகை நிலை
என்பன தும்பைத் துறைகள். இவற்றில் தானை மறம், தார்நிலை, தன்னை வேட்டல் ஆகிய துறைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்கள் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியரால் தரப்பட்டுள்ளன.
தொல்காப்பியத்தில் தும்பைத் திணைக்கு 12 துறைகள் மட்டுமே தரப்பட்டிருப்பது இங்கு நினைக்கத் தகும். தும்பை அரவம், தேர் மறம், பண்பாட்டு, முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை, பேய்க்குரவை, தானை நிலை, வெருவரு நிலை, சிருங்கார நிலை, உவகைக் கலுழ்ச்சி, தன்னை வேட்டல் முதலாயின புறப்பொருள் வெண்பா மாலையில் புதிதாகச் சொல்லப்பட்டுள்ள துறைகள். புறத்திணையின் வளர்ச்சியை இது உணர்த்துகிறது.
செங்களத்து மறம்கருதி
பைந்தும்பை தலைமலைந்தன்று (கொளு – 1)
(தலைமலைதல் = தலையில் சூடுதல்)
‘வெண்மையான தும்பைப் பூவைச் சூடிக் கொண்டு, குருதி பெருக்கெடுத்து ஓடக்கூடிய போர்க்களம் செல்லக் கருதுதல்’ என்பது இதன் பொருள். தும்பை என்பதன் பொருள் இதுவே.
தும்பை பற்றிய கொளுவின் கருத்தை, அதற்குரிய வெண்பா நன்கு விளக்குகிறது. இலக்கிய நயத்தோடு செய்தியை விளக்க வெண்பா உதவுகிறது.
கார்கருதி நின்றதிரும் கௌவை விழுப்பணையான்
சோர்குருதி சூழா நிலம்நனைப்பப் – போர்கருதித்
துப்புடைத் தும்பை மலைந்தான் துகள்அறுசீர்
வெப்புடைத் தானைஎம் வேந்து
‘புகழையும் சினம் மிக்க படையினையும் மேகம் போன்று முழங்குகின்ற முரசினையும் உடையவன் எம் வேந்தன். அவன், குருதி ஒழுகி நிலத்தை நனைக்கும் வண்ணம் செய்கின்ற கடும் போரையே நோக்கமாகக் கொண்டுள்ளான். அதற்காகத் தும்பை மாலையைச் சூடிப் போரினை மேற்கொண்டான்.’ வெண்பா, ஒரு வீரனின் கூற்றாக அமைந்துள்ளது. தும்பைப் போரின் கடுமையைக் ‘குருதி ஒழுகி நிலத்தை நனைக்கும்’ என்ற குறிப்பு உணர்த்துகிறது.
பொன்புனைந்த கழல்அடியோன்
தன்படையைத் தலையளித்தன்று (கொளு – 2)
‘பொற்கழல் புனைந்த மன்னன் தன் படைவீரர்களுக்குத் தலையளி (சிறப்பு) செய்வான் என்பது கொளுவின் கருத்து. சிறப்புச் செய்தல் என்பது ஊக்கப்படுத்துவதற்கேயாகும். எத்தகைய பொருள்கள் கொடுத்து மன்னன் ஊக்கப்படுத்துவான் என்பதைத் துறைக்குரியை வெண்பா விளக்கமாகக் காட்டுகிறது.
வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும்
கொல்களிறும் மாவும் கொடுத்தளித்தான் . . . .
. . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . .
என வெண்பா சிறப்புகளைச் சுட்டுகிறது. போர்ப் பூவாகிய தும்பையையும், நாடுகளையும், சிறந்த பொருள்களையும், மருத நிலத்தையும், களிறு, குதிரை முதலானவற்றையும் பரிசிலாக வழங்குவான். இந்த ஆரவாரமே தும்பை அரவம் எனப்படுகிறது.
தாம்படைத் தலைக்கொள்ளாமை
ஓம்படுத்த உயர்புகூறின்று – (கொளு – 3)
என்பது முதல் விளக்கம். ‘போரை மேற்கொண்ட இருபடைகளும் தாம் போர் செய்து மடியாமல் காத்த உயர்வைக் கூறுதல்’ என்பது கொளுவின் பொருள். அதாவது, இருபடைகளும் வலிமையில் சமமானவை என்பதால் அழிவு மிகுதியாகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்பது இதன் நோக்கம் எனலாம். இதனை வெண்பா,
கழுதார் பறந்தலைக் கண்ணுற்றுத் தம்முள்
இழுதார்வேல் தானை இகலில் – பழுதாம்
செயிர்காவல் பூண்டொழுகும் செங்கோலார் செல்வம்
உயிர்காவல் என்னும் உரை
எனக் காட்டுகிறது. ‘பேய்கள் நடமாடும் போர்க்களத்தில் இருபக்க வேற்படையினரும் மோதுதல் தீங்காகும். இத்தீங்கு நடக்காமல் காக்கும் மன்னர்கள் பல உயிர்களையும் காப்பாற்றிய பெருமை உடையவர்கள்.’ போர் மேற்கொள்கையில் இத்தகைய கருத்துகள் கூறப்படுதலுக்கு மாறான கருத்துகளைப் பின்னிரண்டு விளக்கங்கள் காட்டுகின்றன.
இரண்டாம் விளக்கம் படை மடியும் என்றெல்லாம் கருதாமல் போரில் வெற்றி கிடைக்கும் என்பதையே கருத வேண்டும் என்கிறது. இதற்கான கொளு,
பூம்பொழில் புறம்காவலனை
ஓம்படுத்தற்கும் உரித்துஎனமொழிப - (கொளு – 4) ‘அரசன் போரினை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்’ என்பதும் இதன் கருத்து. இதனை வெண்பா,
. . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . உயிர்மேல்
பலகழியு மேனும் பரிமான்தேர் மன்னர்க்(கு)
உலகழியும் ஒர்த்துச் செயின் நன்கு சிந்தித்துப் போரில் ஈடுபட்டால் பகைவர் அழிவர் என்பது இதன் கருத்து. அதாவது, அழிவு பற்றிக் கவலை கொள்ளாமல் போரில் ஈடுபடவேண்டும் எனத் தூண்டுவதை இது காட்டுகிறது.
மூன்றாம் விளக்கம் ‘நமது படை போர் செய்தால் பகைப் படை அழிவது உறுதி’ என்கிறது. இதனைக் கொளு,
வேல்தானை மறம்கூறி மாற்றாரது அழிபுஇரங்கினும்
ஆற்றின் உணரின் அத்துறை யாகும் – (கொளு-5)
‘வேல் படையின் வீரத்தைச் சொல்லிப் பகைவருடைய அழிவை உறுதிப்படுத்துதல்’ என்பது இதன் பொருள். இதனை வெண்பா,
ஒன்னார் நடுங்க உலாய் நிமிரின் – என்னாங்கொல்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பாழித்தோள் மன்னர் படை
எனக் காட்டுகிறது. ‘நம்படை எழுந்தால் பகை மன்னர் படை என்னாவது?’ என ஊக்கப்படுத்துதலை இது உணர்த்துகிறது.
போரின் தொடக்க நிலையில் இத்தகைய மாறுபட்ட கருத்துகள் மன்னர்களிடம் கூறப்படுவதைத் தானை மற என்ற துறையில் வெண்பா மாலை ஆசிரியர் காட்டியுள்ளார்.
எழும்அரவக் கடல்தானையான்
மழகளிற்றின் மறம்கிளர்ந்தன்று. – (கொளு-6)
என்று விளக்குகிறது. ‘கடல் போன்று பரந்ததாகவும் ஆரவாரம் மிக்கதாகவும் இருக்கின்ற படையினைக் கொண்ட மன்னனின் இளம் களிற்றின் வீரத்தைச் சொல்லுதல்’ என்பது இதன் பொருள்.
இதனை வெண்பா,
. . . . . . . . . . . . . . . . . கடற்படையுள்
பேயும் எருவையும் கூற்றும்தன் பின்படரக்
காயும் கழலான் களிறு.
என நயம்பட விளக்குகிறது. ‘நம் யானை போரிடப் புகின் உறுதியாக எதிரிகள் அழிவர்; அதனால் உண்ண ஊன் கிடைக்குமெனப் பேய்களும் கழுகுகளும் பின்தொடர்கின்றன. பற்றுவதற்கு உயிர்கள் கிடைக்கும் என கூற்று (எமன்) பின் தொடர்கிறது.’ இவ்வாறு வெண்பா யானையின் வீரத்தைப் போற்றுகிறது. இவ் வெண்பா காண்போர் கூற்றாக அமைந்துள்ளது. அரசனும் வீரர்களும் இத்தகைய கூற்றால் ஊக்கம் கொள்வர்.
எறிபடையான் இகல்அமருள்
செறிபடைமான் திறம்கிளந்தன்று – (கொளு-7)
‘கொல்லும் படைகளைக் கொண்ட அரசனின் குதிரை போர் செய்யும் திறத்தைச் சொல்லுதல்’ என்பது இதன் பொருள்.
குதிரையின் விரைவு வெண்பாவில் பாராட்டப்படுகிறது.
. . . . . . . . . . . . . வாள்அமருள் – வெந்திறல்
ஆர்கழல் மன்னன் அலங்குளைமா வெஞ்சிலை
வார்கணையின் முந்தி வரும்.
‘போர்க்களத்தில் அரசனின் குதிரை, எய்யப்பட்ட அம்பினைப் போல விரைந்து பாயும்’ என்று சிறப்பிக்கிறது வெண்பா. இதுவும் அரசனுக்கும் வீரருக்கும் போர் ஊக்கம் தருவதாகும். குதிரை மறம் என்ற துறை நொச்சித் திணையில் இடம் பெற்றிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
முன்எழுதரு படைதாங்குவன்என
மன்னவற்கு மறம்கிளர்ந்தன்று - (கொளு-8)
(முன்எழுதருபடை = தூசிப்படை)
‘பகைவரின் தூசிப்படையை நானே தடுத்துவிடுவேன் என அரசனிடம் வீரன் ஒருவன் கூறுதல்’ என்பது இதன் பொருள். போர்க்களத்தில் போரிடுவதற்கு முன்னே வரும் படை ‘தூசிப்படை’ எனப்படும்.
இச்செய்தியை வெண்பா,
உறுசுடர் வாளோ டொருகால் விலங்கில்
சிறுசுடர்முன் பேரிருளாம் கண்டாய் – எறிசுடர்வேல்
தேன் குலாம் பூந்தெரியல் தேர்வந்தே நின்னொடு
பாங்கலா மன்னர் படை.
எனச் சுவையான உவமை மூலம் விளக்குகிறது.’
‘வாளுடன் பகையரசனின் பெரும்படையை நான் தடுப்பேன். என் முன் அப்பெரும் படை சிறு விளக்கின் முன் இருள் ஓடுவது போல ஓடும்’ என அரிய உவமை மூலம் வெண்பா புலப்படுத்துகிறது. இது வீரன் கூற்றாக உள்ளது.
இத்துறைக்கான மற்றொரு விளக்கமும் முதல் விளக்கம் போன்றதே. போரில் ஒரு வேந்தனை வேந்தர் பலர் சூழ்ந்து கொள்ளுமிடத்துத் தனி ஒருவனாக வீரன் அவர்களை எதிர்கொள்ளுதல் என்பது தார் நிலை ஆகும்.
ஒருகுடை மன்னனைப் பலகுடை நெருங்கச்
செருவிடைத் தமியன் தாங்கற்கும் உரித்தே – (கொளு-9)
என்பது இதற்கான கொளு. இதற்கான வெண்பாவும் சுவைபட இதனை உவமை மூலம் விளக்குகிறது. பகை மன்னர்கள் யானைகளில் மீதிருந்து அவற்றைச் செலுத்தி மன்னனைச் சூழ்ந்து கொள்ள, வீரன் தடுத்து யானைகளை வீழ்த்துவது.
காலால் மயங்கிக் கதிர்மறைத்த கார்முகில்போல்
வேலான்கை வேல்பட வீழ்ந்தனவே.
என்னும் அடிகளில் காட்டப்படுகிறது. ‘மேகங்களைக் காற்று கலைப்பதைப் போல, யானைகளைத் தனி வீரன் வீழ்த்தினான்’ என்று அரிய உவமை கூறப்படுகிறது. தொல்காப்பியர் தும்பைத் திணையில் இத்தார் நிலை என்னும் துறையைக் கூறியுள்ளார்.
முறிமலர்த்தார் வயவேந்தன்
செறிமணித்தேர்ச் சிறப்புரைத்தன்று. – (கொளு-10)
(முறி = தளிர், வய = வலிமை)
‘தளிர்கள் கலந்து தொடுக்கப்பட்ட பூமாலையை அணிந்த வலிமை மிக்க வேந்தனுடைய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரினது சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள்.
இந்தத் துறையை விளக்கும் வெண்பா, ‘அரசன் செலுத்தும் தேர், பகைவர்களது முதுகின்மேலே ஊர்ந்து செல்கையில் பகைவரது குருதி பெருகித் தேரின் சக்கரம் செல்லும் வழியிலேயே ஓடி வரும்’ என விளக்குகிறது.
. . . . . . . . . . . . . . . செங்குருதி வெள்ளம்
அருமுரண் ஆழி தொடர – வரும் அரோ
. . . . . . . . . . . . . . …
ஒட்டார் புறத்தின்மேல் ஊர்ந்து.
என்பது வெண்பா அடிகள். தேரின் சிறப்பைக் கூறுவதும் போர் ஊக்கம் தருவதாகும்.
வெண்கோட்ட களிறுஎறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக்
கைவல்யாழ்ப் பாணர் கடனிறுத் தன்று. – (கொளு-11)
‘குருதியால் சிவந்த போர்க்களத்தில் பகைவரது யானைகளைக் கொன்ற பின்னர், இறந்த வீரர்களுக்கு யாழிசை வல்ல பாணர்கள் உரிமை செய்தது’ என்பது இதன் பொருள்.
இதற்கான வெண்பா, பாணர் கடன் செய்யும் முறையை எடுத்துக் காட்டுகிறது.
. . . . . . . . . . . . . . . . . .
களரிக் கனல்முழங்க மூட்டி – விளரிப்பண்
கண்ணினார் பாணர் களிறெறிந்து வீழ்ந்தார்க்கு
என்னும் அடிகளில் நெருப்பு மூட்டி, விளரிப்பண் பாடிக் கடன்செய்வது காட்டப்படுகிறது. பாணர் பாடிக் கடன் செய்வதால் பாண்பாட்டு எனப்படுகிறது. இத்துறை புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியரால் புதிதாகக் கூறப்பட்டதாகும்.
பொருபடை களத்தவிய
இருவேந்தரும் இகல்அவிந்தன்று – (கொளு-12)
இருதிறத்துப் படையும் போரிட்டு மடிந்தமையால் ‘தும்பை அரசர் இருவரும் போரிட்டு மடிதல், இரு அரசரும் போரிட்டு மடிந்த பின்னர், இரு படையினரும் போரிட்டு மடிதல்’ என இருவகையாக இதைக் கொள்ளலாம். இத்துறைக்குரிய வெண்பா, இரண்டாம் கருத்தையே கூறுகிறது.
வேந்தர் இருவரும் விண்படர. . .
. . . . . . . . . . . . . . . . . . . .
இருபடையும் நீங்கா இகல்.
என்கிறது வெண்பா.
வெயர்பொடிப்பச் சினம்கடைஇப்
பெயர்படைக்குப் பின்நின்றன்று – (கொளு-13)
எனக் கொளு சுட்டுகிறது. ‘வியர்வை அரும்பச் சினம் கொண்டு புறமுதுகிட்ட தன் படையினருக்குப் பின்னே நிற்றல்’ என்பது இதன் பொருள்.
இதற்குரிய வெண்பா,
கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி
நெடுங்கைப் பிணத்திடை நின்றான் – நடுங்கமருள்
ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேல்ஊன்றி
வாள்வெள்ளம் தன்மேல் வர
என விளக்குகிறது. ‘நடுங்கத்தக்க போரில் படைவீரர் வெள்ளம் ஓடத் தறுகண் வீரன், பகைவரது வாள் வெள்ளம் தன்மீது பாய்ந்தும் பின்னிடாது களிற்றுப் பிணக்குவியலிடையே வேலை ஊன்றி நெருப்பு விழிப்பது போல விழித்து நின்றான். வீரன், எருமை போன்று குறுக்கிட்டு நிற்றலால் எருமை மறம் எனப் பெயர் பெற்றுள்ளது எனலாம். இதனைக் கூழை தாங்கிய மறம் எனத் தொல்காப்பியர் சுட்டுகிறார்.
குடைமயங்கிய வாள்அமருள்
படைமயங்கப் பாழிகொண்டன்று – (கொளு-14)
என விளக்குகிறது. மன்னர் குடைகள் மோதிக் கொள்ளும் வண்ணம் நெருங்கிச் செய்த போரிலே வீரன் தன் ஆயுதத்தை விட்டு உடல் வலியால் வெற்றி பெறுதல் என்பது இதன் பொருள். ‘வேலைக் களிற்றின்மீது பாய்ச்சிய வீரன் தன் தோள்களையே கொம்பாகக் கொண்டு எருதுபோல் பாய்ந்து போரிட்டு வெற்றி கொண்டான்’ என வெண்பா விளக்குகிறது. பாழிகொள் ஏமம் எனத் தொல்காப்பியம் இதனைக் குறிப்பிடுகிறது.
கழல்வேந்தர் படைவிலங்கி
அழல்வேல்திரித்(து) ஆட்டுஅமர்ந்தன்று – (கொளு-15)
‘வீரக்கழல் அணிந்த பகைமன்னர் படையைக் கொன்று அழலும் வேலைத் திரித்து ஆடுதலை விரும்புதல்’ என்பது பொருள்.
வெண்பா இதனை,
ஆடலமர்ந்தான் அமர்வெய்யோன். . . . . .
. . . . . . . . . . . . . . . . . .
. . . . . ஞாட்பின் மலைந்தவர் மார்பம்
திறந்தவேல் கையில் திரித்து.
எனக் காட்டுகிறது. தொல்காப்பியர் நூழில் என்னும் துறையைக் குறிப்பிட்டுள்ளார். இதனை வெண்பா மாலை ஆசிரியர் நூழில், நூழிலாட்டு என இரண்டாக வகுத்துக் கூறியிருக்கிறார். நூழில் என்பதற்குத் தொல்காப்பியர் தந்துள்ள விளக்கத்தை அவர் நூழிலாட்டு என்ற துறைக்கு உரியதாக ஆக்கியுள்ளார்.
களம்கழுமிய படைஇரிய
உளம்கிழித்தவேல் பறித்துஓச்சின்று – (கொளு-16)
என விளக்குகிறது. ‘போர்க்களத்துக் கூடிய படைகள் ஓடத் தன் மார்பில் பதிந்த வேலைப் பறித்து எறிந்தது’ என்பது இதன் பொருள்.
வெண்பா இதனை,
மொய்யகத்து மன்னர் முரண்இனி என்னாம்கொல்
கையகத்துக் கொண்டான் கழல்விடலை – வெய்ய
விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த
படுசுடர் எஃகம் பறித்து.
எனக் காட்டுகிறது. ‘கழல் அணிந்த வீரன் தன் மணம் நாறும் மார்பைப் பிளந்த வேலைப் பறித்துத் தன் கையில் எடுத்துக்கொண்டான்; பகை மன்னர் என்னாவரோ?’ என்பது வெண்பா தரும் விளக்கம்.
தும்பைப் போரிலே வென்ற மன்னனது படைவீரர்கள் போர்க் களத்திலேயே வெற்றியைக் கொண்டாடி மகிழ்வர். வெற்றி பெற்ற மன்னனது தேரின் முன்னேயும் பின்னேயும் ஆடுதல், அரசனுடன் சேர்ந்து ஆடுதல், களிற்றைக் கொன்று அதன் கீழ்ப்பட்டவனைப் பாராட்டுதல், வெற்றி பெற்ற அரசனை இருபக்க வீரர்களும் பாராட்டுதல் என வெற்றி கொண்டாடப்படுகிறது. இதை முன்தேர்க் குரவை, பின்தேர்க்குரவை, பேய்க் குரவை, களிற்றுடன் நிலை, ஒள்வாள் அமலை, தானை நிலை முதலான துறைகள் சுட்டுகின்றன.
எழுஉறழ் திணிதோள் வேந்தன் வெல்தேர்
முழுவலி வயவர் முன்ஆ டின்று – (கொளு-17)
‘கணைய மரத்தைப் போன்று வலிய தோள்களையுடைய அரசனது வெற்றி மிக்க தேரின் முன் வலிமையில் சிறந்த வீரர் ஆடுதல்’ என்பது இதன் பொருள்.
வெண்பா,
ஆனா வயவர்முன் ஆட அமர்க்களத்து
வானார்மின் னாகி வழிநுடங்கு – நோனாக்
கழுமணிப் பைம்பூண் கழல்வேந்தன் ஊரும்
குழுமணித் திண்தேர்க் கொடி.
என்று காட்டுகிறது ‘வீரர்கள் தேரின் முன்னே ஆட, மின்னல் ஆடுவது போன்று தேரின் கொடி ஆடும்’ என்பது இதன் பொருள். இத்துறை தொல்காப்பியத்தில் கூறப்படவில்லை.
கருங்கழல் மறவரொடு வெள்வளை விறலியர்
பெருந்தகை தேரின் பின்ஆ டின்று. – (கொளு-18)
என விளக்குகிறது. ‘கழல் அணிந்த வீரரொடு வளையலணிந்த விறலியர் பெருந்தகையான அரசனது தேரின் பின் ஆடியது’ என்பது பொருள்.
வெண்பா, பெரும்படையைக் கொண்ட அரசனின் தேர் யாழ்வல்ல பாணர் கூட்டம் வெற்றி வீரர்களுடன் இசையுடன் ஆடி வரும் என விளக்குகிறது.
தும்பைத் திணையில் பேய்க்குரவைத் துறையில் இக்குறிப்பு காணப்படுகிறது. பேய்கள் குரவை ஆடுதலைக் கூறியது பேய்க்குரவை.
மன்னன் ஊரும் மறமிகு மணித்தேர்ப்
பின்னும் முன்னும் பேய்ஆ டின்று. – (கொளு-19)
அரசன் செலுத்தும் ஒலிக்கும் மணியையுடைய தேரின் முன்னும் பின்னும் பேய்கள் ஆடுதல். கடல் போன்ற பெரும்படையைக் கொண்ட அரசனின் பெரிய தேரின் சிறப்பை வாழ்த்திப் பேய்கள் தேரின் முன்னும் பின்னும் நிழல்கள் ஆடுவதுபோல ஆடும் என வெண்பா விளக்குகிறது. பேய்கள் ‘நிழல் போல் இருக்கும்’ என்று குறிப்பிட்டிருப்பது அது குறித்த நம்பிக்கையின் தன்மையைக் காட்டுகிறது. வெண்பாமாலை வாகைத் திணையிலும் இதே பெயரில் துறை உண்டு. இத்துறை தொல்காப்பியத்தில் கூறப்படவில்லை.
ஒளிற்றுஎஃகம் படவீழ்ந்த
களிற்றின்கீழ்க் கண்படுத்தன்று. – (கொளு-20)
ஒளிமிக்க வேல் பாய வீழ்ந்த யானையின் கீழ்ப்பட்டு வீரன் இறத்தல். வெண்பா இதனை உவமையாக விளக்குகிறது.
இறுவரை வீழ இயக்கற்று அவிந்த
தறுகண் தகைஅரிமாப் போன்றான் – சிறுகண்
பெருங்கைக் களிறுஎறிந்து பின்அதன்கீழ்ப் பட்ட
கருங்கழல் செவ்வே லவன்.
வீரக்கழலையும் வேலையும் உடைய வீரன், பெருமலை வீழ, வேறு வழியின்றி அதன் கீழ் சிக்கி இறந்த சிங்கம் போன்று சிறிய கண்ணையும் பெரிய துதிக்கையையும் உடைய யானையை வலோல் எறிந்து அது வீழ அதன் கீழ்ப்பட்டு இறந்தான்.
இத்துறை தொல்காப்பியத்தில் களிறெதிர்ந்தோர் பாடு (பெருமை) என உள்ளது. போர் முடிந்த பின்பு நிகழும் மகிழ்ச்சி ஆரவாரங்களுடைய இத்துறை இருப்பது பொருந்துவதா என்பது சிந்தித்தற்குரியது. வீரனின் பெருமையைச் சொல்லிப் பெருமிதப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
வலிகெழுதோள் வாய்வயவர்
ஒலிகழலான் உடன்ஆடின்று – (கொளு-21)
வீரர்கள் ஆடும் நிலையைக் குளத்தில் மீன்கள் பிறழ்வது போலக் கூரிய வாள்களைச் சுழற்றிக்கொண்டு வென்ற மன்னன் வீரர்கள் அவனுடன் கூடி ஆடினர் என்று வெண்பா கூறுகிறது. போர்க்களத்தில் வாள்களை உயர்த்தி ஆட்டும் தோற்றம் ‘வாளை பிறழும் கயங்கடுப்ப’ இருப்பதாக வெண்பா குறிப்பிடுவது நயம். தொல்காப்பியர் இதனை வாளோர் ஆடும் அமலை என்கிறார். களிற்றோடு பட்ட பகை வேந்தனைச் சுற்றி அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலை என்பது தொல்காப்பியர் கருத்து.
இருபடையும் மறம்பழிச்சப்
பொருகளத்துப் பொலிவெய்தின்று. – (கொளு-22)
போர்க்களத்திலுள்ள இரு வேந்தர் படையும் தனது வீரத்தைப் பாராட்டும்படி மறவன் ஒருவன் சிறப்பெய்தியது. பகைவரது படை வலிமை பற்றிக் கவலை கொள்ளாது, தன் வாளையும் உறையிலிருந்து எடுக்காது, வாட்படை, குதிரைப் படை, யானைப் படை எனத் தம் படையினர் அனைவரையும் தாங்கித் தூண்போல நின்றவன் என வெண்பா சிறப்பினை விளக்குகிறது. ‘கம்பாகின்றான்’ என்று வெண்பாவில் கூறுவது சிலேடையாகத் தூண்போல நின்றான் என்றும் நடுக்கம் தரும் வகையில் நின்றான் என்பதும் இரு பொருள்பட அமைகிறது.
விலங்குஅமருள் வியல்அகலம் வில்உதைத்த கணைகிழிப்ப
நிலம்தீண்டா வகைப்பொலிந்த நெடுந்தகைநிலை உரைத்தன்று – (கொளு-23)
பகைவரைத் தடுக்கும் போரில் அகன்ற மார்பில் அம்புகள் தைக்க இறந்து, அவ்வம்புகளாலே தாங்கப்பட்டுத் தரையில் படியாமல் குத்திட்டு நின்ற நிலையைச் சொல்லுதல். வெண்பா, வேற்போரினுள் அம்புகளை எய்ய உடம்பின் உயிர்நிலையான எவ்விடத்தும் அவை தைப்பச் சிவந்த கண்ணுடன் புலால்நாறும் வாளையும் கொண்டவனான வீரனின் உடலை நிலத்தில் விழாதபடி அம்புகள் தாங்கின என்கிறது. இது தொல்காப்பியத்தில் ‘யாக்கை இருநிலம் தீண்டா அருநிலைவகை’ எனச் சுட்டப்படுகிறது.
பகைபுகழக் கிடந்தானை
முகைமுறுவலார் முயக்கமர்ந்தன்று. – (கொளு. 24)
பகைவரும் புகழும் வண்ணம் வீர மரணம் அடைந்தானை முல்லைப் பற்களையுடையை பெண்கள் தழுவுதல். விழுப்புண்ணைப் பெற்று இறந்த வீரர்களின் புண்பட்ட மார்பை மனைவியர் தழுவிக் கொள்வர். இதனால் அவ்வீரர்களிடம் பரத்தையர் கொண்டிருந்த உரிமையைக் கெடுப்பர். அவ்வாறு வெண்பா விளக்குகிறது. இத்துறை தொல்காப்பியத்தில் இல்லை.
வாள்வாய்த்த வடுவாழ்யாக்கைக்
கேள்கண்டு கலுழ்ந்துவந்தன்று – (கொளு-25)
வாளால் ஏற்பட்ட வடுக்கள் நிறைந்த கணவன் உடம்பினைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் சிந்துதல்.
வெண்பா நயமாக வீரனின் பெருமையை உணர்த்துகிறது.
வெந்தொழில் கூற்றமும் நாணின்று வெங்களத்து
வந்த மறவர்கை வாள்துமிப்பப் – பைந்தொடி
ஆடுஅரிமா அன்னான் கிடப்ப அகத்துவகை
ஓடரிக்கண் நீர்பாய் உக.
வீரர்களின் வாளால் வெட்டப்பட்டுச் சிங்கம் போல் கணவன் கிடக்க, அவனது வீரமரணம் கண்டு மனைவி உள்ளத்து மகிழ்ச்சியால் உவகைக் கண்ணீர் வடிக்க, அவனுயிரைக் கொண்ட கொடுந்தொழில் கூற்றம், தனக்கு இத்தகைய வீரம் இல்லையே என வருந்தியது என வெண்பா வீரத்தைச் சிறப்பிக்கிறது. இத்துறை தொல்காப்பியத்தில் சுட்டப்படவில்லை.
தம்மிறைவன் விசும்படைந்தென
வெம்முரணான் உயிர்வேட்டன்று. – (கொளு-26)
தமது அரசன் விண்ணுலகை அடைந்தான் என வீரன் ஒருவன் தன் உயிரை ஆகுதியாகத் தந்தது. நெய்யைப் பெய்து நெருப்பை வளர்த்து வேள்வி செய்தலை உவமையாகக் கூறி வீரனின் களப்பலியைப் புலப்படுத்துகிறது வெண்பா. போராகிய நெருப்பில் வீரத்தை விறகாகவும், மானத்தை நெய்யாகவும், வாளை நெய் ஊற்றும் துடுப்பாகவும் கொண்டு தனது உயிரை வேள்வி செய்தான் என்கிறது வெண்பா.
வானம் இறைவன் படர்ந்தென வாள்துடுப்பா
மானமே நெய்யா மறம்விறகாத் – தேன்இமிரும்
கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோன் வாளமர்
ஒள்ளழலுள் வேட்டான் உயிர்.
தன்னை வேட்டல் என்பதற்கு இன்னொரு வகையாக விளக்கம் கூறுவர்.
காய்கதிர் நெடுவேல் கணவனைக் காணிய
ஆயிழை சேறலும் அத்துறை ஆகும். – (கொளு-27)
பகைவரைக் கொல்கிற வேலினைக் கொண்ட கணவனைக் காண அவன் மனைவி போர்க்களம் நோக்கிச் சென்றது என்பது பொருள். கண்டோர் கூற்றாக, ‘தன் உயிராகிய கணவனைக் காண குடிப்பிறப்பையும் நாணத்தையும் மறந்து மனை எல்லையைக் கடந்து போரில் வீரர்கள் இறந்து கிடந்த போர்க்களத்திற்குத் தனியாக வந்தாள்’ என்று வெண்பா கூறுகிறது.
அழிவு இன்று புகழ்நிறீஇ
ஒரழிவுஇன்று களத்துஒழிந்தன்று – (கொளு-28)
அறியாதபடி தமது புகழை உலகில் நிலைநிறுத்திப் போரிட்ட இரு பெரும் வேந்தரும், படைஞரும் ஒருவர் எஞ்சாமல் மடிந்தது தொலைநிலை எனப்படுகிறது. இவ் அழிவு நிலையை வெண்பா உணர்ச்சி மிகக் காட்டுகிறது.
மண்டமர்த் திண்தோள் மறங்கடைஇ மண்புலம்பக்
கண்திரள்வேல் மன்னர் களம்பட்டார் – பெண்டிர்
கடிதெழு செந்தீக் கழுமினார் இன்னும்
கொடிதேகாண் ஆர்ந்தின்று கூற்று.
தமது தோள் வலிமையைப் புலப்படுத்திப் பகை மன்னர் இருவரும் உலகத்தை ஆள ஆளில்லாத வகையில் மடிந்தனர். அவருடைய மனைவியரும் தீப்பாய்ந்தனர். இப்படியாயினும் இன்னும் கூற்றின் வயிறு நிரம்பவில்லை. கொடியதே கூற்று. தொகை நிலை என்பது தும்பைப் போரின் உச்சம். மொத்தமாக அழியும் அவலம் இதில் உணர்த்தப்படுகிறது. தொகைநிலை என்னும் துறை உழிஞைப் படலத்திலும் உள்ளது.
தும்பைப் போரின் சூழலையும், தும்பைப் போரின் தனித்த இயல்பையும், போர்க்களத்து வீரச்செயல்களையும், போர்க்களத்து ஆடல்களையும், வீரத்தைச் சிறப்பிக்கும் தன்மையையும் இந்த 23 துறைகளும் காட்டுகின்றன.
பாடம் - 2
வாகைப் படலமும் துறைகளும் முதலில் விளக்கப்படுகின்றன. அடுத்து வாகைத் திணை விளக்கப்படுகிறது. அரசன் உறழ்ந்து பெறுகிற வெற்றி உறழ்ச்சி வெற்றி – 1 என்ற பகுதியில் கூறப்படுகிறது. பார்ப்பனர், வணிகர், வேளாளர், பொருநர், அறிவர், தாபதர் ஆகியோர் பிறரோடு உறழ்ந்து பெறுகிற வெற்றி உறழ்ச்சி வெற்றி – 2 என்ற பகுதியில் சொல்லப்படுகிறது. வெற்றி பெறும் நோக்கில் காரணமாக அரசன் உறுதியுடன் பாசறையில் இருந்த நிலை பாசறை இருப்பு என்ற பகுதியில் சொல்லப்படுகிறது. அரசரும் பிறரும் பெற்ற இயல்பான வெற்றி இயல்பு வெற்றி என்ற பகுதியில் சொல்லப்படுகிறது. பிற செய்திகள் பிற என்ற பகுதியில் காட்டப்படுகின்றன. வாழ்க்கையில் அடைய வேண்டிய தெளிவு உண்மையான வெற்றி என்ற பகுதியில் காட்டப்படுகிறது.
வாகைத் துறைகள் 32. அவை,
1.வாகைஅரவம்
2.அரச வாகை
3. முரச வாகை
4. மறக்களவழி
5. களவேள்வி
6. முன் தேர்க்குரவை
7. பின் தேர்க்குரவை
8. பார்ப்பன வாகை
9. வாணிக வாகை
10. வேளாண் வாகை
11.பொருந வாகை
12.அறிவன் வாகை
,13. தாபத வாகை
14. கூதிர்ப் பாசறை
15. வாடைப் பாசறை
16. அரச முல்லை
17. பார்ப்பன முல்லை
18. அவைய முல்லை
19. கணிவன் முல்லை
20. மூதின் முல்லை
21.ஏறாண் முல்லை
22.வல்லாண் முல்லை
23. காவல் முல்லை
24. பேராண் முல்லை
25. மற முல்லை
26. குடை முல்லை
27. கண்படை நிலை
28. அவிப்பலி
29. சால்பு முல்லை
30. கிணை நிலை
31. பொருளொடு புகறல்
32. அருளொடு நீங்கல்
ஆகியன. தொல்காப்பியர் சுட்டாத வாகை அரவம், முரச வாகை, களவேள்வி, அரச முல்லை, பார்ப்பன முல்லை, கணிவன் முல்லை, மூதின் முல்லை, ஏறாண் முல்லை, காவல் முல்லை, பேராண் முல்லை, மற முல்லை, குடை முல்லை, கண்படை நிலை, கிணை நிலை என்னுமிவை புறப்பொருள் வெண்பா மாலையில் மிகுதியாகக் கூறப்பட்டுள்ளமை வாகைத் திணை வளர்ச்சியைக் காட்டுகிறது எனலாம்.
இலைபுனை வாகை சூடி இகல்மலைந்(து)
அலைகடல் தானை அரசுஅட்டு ஆர்த்தன்று – (கொளு-1)
(இகல் = பகை, அட்டு = அழித்து)
‘கடல் போன்ற பெரிய படையையுடைய பகைஅரசனை அழித்துப் போரில் வெற்றி பெற்ற அரசன், இலைகள் சேர்த்துத் தொடுத்த வாகை மாலையைச் சூடி ஆரவாரித்தல்’ என்பது இதன் பொருள். பகையரசனைக் கொன்று வாகை சூடி ஆரவார்த்த வெற்றியை அறிவுடைய புலவர் பலரும் போற்றினார் என வெண்பா விளக்குகிறது. இதனை,
சூடினான் வாகைச் சுடர்த்தெரியல் – சூடுதலும்
பாடினார் வெல்புகழைப் பல்புலவர்…
என்கிறது வெண்பா.
வெண்கண்ணியும் கருங்கழலும்
செங்கச்சும் தகைபுனைந்தன்று – (கொளு-2)
(கண்ணி = மாலை, தகை = அழகு)
எனப் புலப்படுத்துகிறது. ‘வெண்ணிற வாகை மாலையையும் வலிய கழலையும் சிவந்த கச்சினையும் அழகுற அணிதல்’ என்பது பொருள். அரசனும் வீரரும் வெற்றியைக் குறிக்கும் வகையில் அணிவர். வெண்பா, வெற்றி மகிழ்ச்சியினால் பட்ட புண்களையும் மறந்து மகிழ்வார்கள் என்று குறிப்பிடுகிறது.
அனைய அமருள் அயில்போழ் விழுப்புண்
இனைய இனிக்கவலை இல்லை – புனைக
அழலோ(டு) இமைக்கும் அணங்குடைவாள் மைந்தர்
கழலோடு பூங்கண்ணி கச்சு.
பகலன்ன வாய்மொழி
இகல்வேந்தன் இயல்புரைத்தன்று. – (கொளு-3)
எனக் காட்டுகிறது. ‘நுகத்தடியின் பகலாணி போன்ற நடுநிலைமையான சொல்லைக் கொண்டவனும் பகையை வென்றவனுமாகிய அரசனின் தன்மையைச் சொல்லுதல்’ என்பது பொருள். வெண்பா, அரசனின் தகுதிகளை எடுத்துக் காட்டுகிறது.
காவல் அமைந்தான் கடலுலகம் காவலால்
ஓவல் அறியாது உயிர்க்குவகை – மேவருஞ்சீர்
ஐந்தொழில் நான்மறை முத்தீ இருபிறப்பு
வெந்திறல் தண்ணளிஎம் வேந்து
‘ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிலுதல், பல்லுயிர் ஓம்புதல் என்னும் ஐந்து வகைத் தொழில்களையும் குறைவின்றிச் செய்பவன் எம் அரசன். நான்கு மறைகளைக் கற்றவன்; முத்தீ வளர்த்து வழிபடுபவன்; பூணூல் அணிதலின் முன், அணிந்த பின் என இரு பிறப்பினை உடையவன்; கருணை மிக்கவன். அவன் நடுவு நிலைமை தவறாது காத்தலால் நாட்டு உயிர்கள் மகிழ்வோடிருகின்றன’. இவ்வாறு வெற்றி பெற்ற அரசனைப் பாராட்டுவர்.
ஒலிகழலான் அகல் நகருள்
பலிபெறுமுரசின் பண்புஉரைத்தன்று – (கொளு-4)
‘ஒலிக்கின்ற சூழல் அணிந்த அரசனின் அகன்ற அரண்மனையில் உள்ள வீரரிடத்துப் பலியைப் பெறும் முரசின் தன்மையைக் கூறுதல்’ என்பது பொருள். வெண்பா, முரசு அரண்மனையில் இனிதாக முழங்குவதாகச் சுட்டுகிறது.
முழவு உறழ் திணிதோளானை
உழவனாக உரைமலிந்தன்று – (கொளு-5)
‘முழவு போன்று திரண்ட தோளினை உடைய அரசனை, உழும் வேளாளனாகப் புகழ்ந்து பேசுதல்’ என்பது இதன் பொருள்.
வெண்பா, அரசனையும் உழவனையும் ஒப்பிட்டுச் சிறப்பிக்கிறது.
அஞ்சுவரு தானை அமர்என்னும் நீள்வயலுள்
வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்கும்-செஞ்சுடர்வேல்
பைங்கண் பணைத்தாள் பகட்டுழவன் நல்கலான்
எங்கட்கு அடையா இடர்.
மன்னனாகிய உழவன் போர்க்களம் என்னும் வயலிலே வேலாகிய கோலினை ஓச்சி, யானையாகிய காளையைக் கொண்டு உழுது, சினம் என்கிற வித்தினை விதைத்து வளர்த்து, புகழ் என்னும் விளைச்சலை எடுக்கிறான். இவன் காத்தலால் எம் நாட்டு மக்களுக்கு வறுமை என்பது இல்லை.’ புறநானூறு 373ஆம் பாடல் இத்துறை சார்ந்தது.
அடுதிறல் அணங்குஆர
விடுதிறலான் களம்வேட்டன்று – (கொளு-6)
‘கொல்லும் வலிமை மிக்க பேய்கள் வயிறார உண்ணுமாறு மிக்க வலிமையுடைய வேந்தன் களவேள்வி செய்தல்’ என்பது பொருள். வேந்தன் களவேள்வி செய்த திறத்தினை வெண்பா விளக்குகிறது.
பிடித்தாடி அன்ன பிறழ்பல்பேய் ஆரக்
கொடித்தானை மன்னன் கொடுத்தான்-முடித்தலைத்
தோளொடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக
மூளையஞ் சோற்றை முகந்து
‘பிறழ்ந்த பற்களையுடைய பேய் உண்ணுமாறு, மகுடம் அணிந்த தலையாகிய மிடாவில், தோளோடு வெட்டப்பட்டு வீழ்ந்த தொடிக்கையைத் துடுப்பாகக் கொண்டு மூளையாகிய சோற்றை முகந்து மன்னன் வழங்கினான்.
வென்றுஏந்திய விறல்படையோன்
முன்தேர்க்கண் அணங்குஆடின்று – (கொளு-7)
பகைவரை வென்ற சிறப்பைக் கொண்ட படையினையுடைய மன்னனது தேரின் முன் பேய் ஆடுதல் என்பது பொருள். வெண்பா, பேய்கள் தங்களுக்கு உணவு கிடைக்க வகை செய்த மன்னனை வாழ்த்தி ஆடுவதாகக் குறிப்பிடுகிறது. ‘புலவாய புன்தலைப்பேய்’ என்று ‘புலால் நாறும் வாயினையும் சிவந்த தலை மயிரினையும் உடைய பேய்’ என வெண்பா பேயைக் காட்டுகிறது.
பெய்கழலான் தேரின்பின்
மொய்வகைவிறலியர் வயவரொடுஆடின்று – (கொளு-8)
‘வீரக்கழலை அணிந்த மன்னனது தேரின் பின், வளையல்கள் அணிந்த விறலியர் வீரரொடு ஆடுதல்’ என்பது பொருள். ஆடும் விறலியர் வீரர் ஆகியோருக்கு வெண்பா, ‘குன்றோர் மழகன்றும் கூந்தல் பிடியும் போல்’ என்று உவமை காட்டுகிறது.
கேள்வியால் சிறப்புஎய்தியானை
வேள்வியால் விறல்மிகுத்தன்று – (கொளு-9)
கேள்வி அறிவு மிக்குச் சிறப்பெய்திய அந்தணன், வேள்வி செய்வதால் அடையும் பெருமையைக் கூறுதல்’ என்று பொருள். வேதத்தைக் கரைகண்டு அறவேள்வி செய்து தீவினைகளுக்கு தீயே போல நல்ல நெறியில் வாழும் இயல்பைச் சொல்லுதல்’ என வெண்பா அந்தணருள் வெற்றி பெற்ற அந்தணன் பெருமையை இது காட்டுகிறது.
செறுதொழிலின் சேண்நீங்கியான்
அறுதொழிலும் எடுத்துஉரைத்தன்று – (கொளு-10)
‘நெறியற்ற செயல்களைச் செய்ய நாணுகிற வாணிகருடைய அறுதொழில்களை வெற்றிகரமாகச் செய்தலைக் கூறுதல் என்பது பொருள். வெண்பா ஆறு தொழில்கள் எவையென விளக்குகிறது.
உழுது பயன்கொண்டு ஒலிநிரை ஓம்பிப்
பகுதிலாப் பண்டம் பகர்ந்து – முழுதுணர
ஓதி அழல்வழிபட்(டு) ஓம்பாத ஈகையான்
ஆதி வணிகர்க் கரசு.
‘உழுது பயன்கொள்ளல், ஆநிரை காத்தல், பண்டம் விற்றல், ஓதல், வேட்டல், ஈதல் ஆகியவற்றில் சிறப்படைந்தவன் வணிகர்களில் அரசன். இவ்வாறு வெண்பா, வணிக வெற்றியைக் குறிப்பிடுகிறது.
மேல்மூவரும் மனம்புகல
வாய்மையான் வழிஒழுகின்று – (கொளு-11)
மேற்பட்டவரான அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூவரும் விரும்பும் வண்ணம் அவர்கள் இட்ட பணியைச் செய்து முடிக்கும் வேளாளர் வெற்றியைச் சொல்வது என்பது பொருள். மூவரின் ஏவலின்படி செயல்பட்டு, வயலுள் உழுவான் உலகுக்கு உயிர் என்று வெண்பா வேளாளன் சிறப்புரைக்கிறது.
புகழொடு பெருமை நோக்கி யாரையும்
இகழ்தல் ஓம்பென எடுத்துரைத் தன்று. – (கொளு-12)
புகழும் சிறப்பும் மிக்கவர்கள் பிறர் புகழையும் சிறப்பையும் ஒப்பு நோக்கி (பொருநுதல்) இகழ்தல் கூடாது எனல். அவ்வாறு இருப்பது வெற்றி என்பது கருத்து.
செருக்கடையக் கூடாதென்ற கருத்து, வெற்றியைக் கருதியே சொல்லப்படுகிறது. வெண்பா இதனை விளக்குகிறது. வெண்பா அமைச்சர் கூற்றாக அரசனுக்கு வெற்றி பெறும் வழி சொல்வதாக அமைந்துள்ளது.
வெள்ளம்போல் தானை வியந்து விரவாரை
எள்ளி உணர்தல் இயல்பன்று – தெள்ளியார்
ஆறுமேல் ஆறியபின் அன்றித்தம் கைக்கொள்ளார்
நீறுமேல் பூத்த நெருப்பு.
கடல் போல் பெரிய படையை உடையேம் என்று எண்ணிப் பகைவரை இகழ்தல் நல்ல இயல்பன்று. அறிவு மிக்கோர் நீறுபூத்த நெருப்பை அது ஆறிவிட்டது என உறுதிசெய்த பின்பே கையில் எடுப்பர். தம் வலிமை யொன்றையே பெரிதெனக் கருதாது பிறர் வலிமையையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்; அப்போதுதான் வெற்றி கிட்டும் என்பது இதன் கருத்து.
புகழ்நுவல முக்காலமும்
நிகழ்புஅறிபவன் இயல்பு உரைத்தன்று. – (கொளு-13)
‘உலகோர் புகழும் வண்ணம் முக்காலத்தையும் உணர்ந்த அறிவனுடைய இயல்பைச் சொல்லுதல் என்று பொருள். இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனும் மூன்று கால நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கூறும் ஆற்றலுடையவரை அறிவன் என்பர். வெண்பா, அறிவரை கீழ், மேல், நடு என்னும் மூன்று உலகத்திற்கும் ஒளி ஊட்டும் கதிரவனோடு ஒப்பிட்டுப் பேசுகிறது; இவர்கள் சொல் என்றும் தவறுடையதாகாது என்றும் கூறுகிறது.
தாபத முனிவர் தவத்தொடு முயங்கி
ஓவுதல் அறியா ஒழுக்குரைத் தன்று – (கொளு-14)
‘தவம் செய்பவர்கள் தாம் செய்யும் தவத்தோடு பொருந்தி, அவ்வொழுக்கத்திலிருந்து பிறழாத தன்மை என்பது பொருள். வெண்பா, தவம் செய்யும் முறை குறித்தும் பெறும் சிறப்புக் குறித்தும் பேசுகிறது.
நீர்பலகால் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச்
சோர்சடை தாழச் சுடர்ஓம்பி – ஊரடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத்(து) உய்க்கும் வழி.
நீரில் பலகாலும் மூழ்கி, தரையிலே படுத்து, மரவுரியை உடுத்து, நெகிழ்ந்த சடை தொங்க, தீயைப் பேணி, மக்கள் வாழும் ஊரின் கண் காட்டிலுள்ள காய், கனி, கிழங்கு, இலை முதலியவற்றை உணவாகக் கொண்டு, கடவுள் வழிபாடும், துறவோர் வழிபாடும் செய்தல் தம்மைத் துறக்க உலகத்திற்குச் செலுத்தும் வழியாகும். தவச்சிறப்பும் வெற்றியும் வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.
கூற்றனையான் வியன்கட்டூர்க் கூதிர்வான் துளிவழங்க
ஆற்றாமை நனிபெருகவும் அயில்வேலோன் அளிதுறந்தன்று
- (கொளு-15)
என்று கூறுகிறது. கூற்றை ஒத்த அரசனின் அகன்ற பாசறையில், கூதிர்காலத்து மேகம் மழைத்துளியைப் பெய்யப் பிரிவாற்றாமை மேன்மேல் பெருகினாலும் கூரிய வேலையுடையவன் தலைவியிடம் கருணை கொள்ளாது கடமை செய்தது என்பது பொருள். வெண்பா இக்கருத்தை நன்கு விளக்குகிறது.
கவலை மறுகில் கழுங்கண் மறவர்
உவலைசெய் கூரை ஒடுங்கத் – துவலைசெய்
கூதிர் நலியவும் உள்ளான் கொடித்தேரான்
மூதின் மடவாள் முயக்கு
வீரர்கள் சிறுதுளியைப் பெய்யும் கூதிர்காலம் வருத்தப் பாசறையில் தழையால் செய்த குடியிருப்பில் ஒடுங்குவர். கொடி ஆடுகின்ற தேரினையுடைய அரசர்கள் அத்தகைய காலத்தில் தனது இல்லத்தில் இருக்கும் தன் மனைவியைத் தழுவுதலைக் கருதாமல் இருக்கிறான். போரை கருதிப் பாசறையில் இருக்கிறான் என்பது குறிப்பு.
வெந்திறலான் வியன்பாசறை வேல்வயவர் விதிர்ப்புஎய்த
வந்துஉலாய்த் துயர்செய்யும் வாடையது மலிபுஉரைத்தன்று
- (கொளு-16)
வகைமை கொண்ட அரசனது பாசறையில், வேல்வீரர் நடுங்கும்படி துயர் செய்கின்ற வாடைக்காற்றின் மிகுதியைக் கூறுதல் என்பது பொருள். அதாவது வாடை வருத்தினும் பாசறையை விட்டு அரசன் நீங்கான் என்பதைக் கூறுவது இத்துறை. இதனை வெண்பா,
வாடை நலிய வடுக்கண்ணான் தோள் நசை
ஓடை மழகளிற்றான் உள்ளான்கொல் – கோடல்
முகையோ(டு) அலம்வர முற்றெரிபோல் பொங்கிப்
பகையோடு பாசறை யுளான்
என்று குறிப்பிடுகிறது.
யானையை உடைய இவ்வரசன் வாடைக் காற்று தன்னை வாட்டவும் காந்தள் செடி வாடும்படி வளைத்துக் கொண்ட காட்டுத்தீப் போலச் சினந்து பகைவர் ஓடும் வண்ணம் பாசறையில் இருக்கிறான். மாவடுப் போன்ற கண்களைக் கொண்ட தன் மனைவியின் தோளைத் தழுவ இவன் நினைக்க மாட்டான் போலும். இவ்வாறு அரசன் வாடையில் பாசறை இருக்கும் தன்மையை விளக்குகிறது.
செருமுனை உடற்றும் செஞ்சுடர் நெடுவேல்
இருநிலங் காவலன் இயல்பு உரைத்தன்று -(கொளு-17)
எனக் காட்டுகிறது.
போர்க்களத்தில் பகைவரை வருத்தும் நெடிய வேலைக் கொண்டவனும் பெரிய நிலவுலகத்தைக் காவல் செய்கிறவனும் ஆகிய அரசனின் தன்மையைக் கூறுதல் என்பது பொருள். இயல்பாக வெற்றி பெறுபவனுக்குரிய தன்மைகளை வெண்பா விளக்குகிறது.
செயிர்க்கண் நிகழாது செங்கோல் உயரி
மயிர்க்கண் முரசு முழங்க – உயிர்க்கெல்லாம்
நாவல் அகலிடத்து ஞாயி(று) அனையனாய்க்
காவலன் சேறல் கடன்.
அரசன், குற்றம் அற்றவனாகி இருக்க வேண்டும். வெற்றி முரசினை முழங்கும் வண்ணம் திகழ வேண்டும். எல்லா உயிர்க்கும் செங்கோன்மை காட்ட வேண்டும். எல்லா உயிர்க்கும் நன்மை செய்யும் கதிரவன்போல் நடக்க வேண்டும். இதுவே அரசன் கடமை.
கான்மலியும் நறுந்தெரியல் கழல்வேந்தர் இகல்அவிக்கும்
நான்மறையோன் நலம்பெருகு நடுவுநிலை உரைத்தன்று. – (கொளு-18)
என்று விளக்குகிறது.
மணம் மிக்க மாலையையும் வீரக்கழலையும் அணிந்த அரசர்கள் இருவரின் பகையை ஒழித்து அவர்கள் நண்பராகும் வண்ணம் நடுவுநிலையில் சமாதானம் பேசும் பார்ப்பனது இயல்பைக் கூறும் பகுதி. அந்தணரின் செம்மையை இது உணர்த்துகிறது. பார்ப்பனன் சந்து செய்விக்கும் தன்மையை வெண்பா கூறுகிறது.
ஒல்லென்நீர் ஞாலத்து உணர்வோ விழுமிதே
நல்லிசை முச்செந்தீ நான்மறையோன் – செல்லவும்
வென்றன்றி மீளா விறல்வேந்தர் வெம்பகை
என்றன்றி மீண்ட திலர்.
நல்ல புகழும் முத்தீ வளர்த்தலும் நான்மறை ஓதலும் உடைய அந்தணன், சந்து செய்விக்கச் சென்ற அளவில், படையெடுத்தால் வெற்றி பெறாமல் நாடு திரும்பாத கொள்கையை உடைய வேந்தர் இருவரும் போரினை நிறுத்தித் தத்தம் நாடுகளுக்குத் திரும்பினர் என்ற கண்டோர் கூறும் வகையில் சந்து செய்விக்க வேண்டும்.
நவைநீங்க நடுவுகூறும்
அவைமாந்தர் இயல்புஉரைத்தன்று – (கொளு-19)
என்று காட்டுகிறது.
குற்றம் நீங்கும் வண்ணம் நடுநிலையோடு பேசும் அவைக்களத்துச் சான்றோர் இயல்பைக் கூறுதல் என்பது பொருள். அவை மாந்தர் என்பது அறங்கூறவையத்தாரைக் குறிக்கிறது. அவர்கள் தீர்ப்பு வழங்கும் பொறுப்பு உடையவர்கள். இது பற்றிய வெண்பா:
தொடைவிடை ஊழாத் தொடைவிடை துன்னித்
தொடைவிடை ஊழ்இவை தோலாத் – தொடை வேட்(டு)
அழிபடல் ஆற்றால் அறிமுறையேன்று எட்டின்
வழிபடர்தல் வல்ல(து) அவை.
குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறு இன்மை, அவா இன்மை என்னும் எட்டுப் பண்புகளும் தம்மிடம் ஒருங்கே அமையப் பெற்ற அறங்கூறவையத்தார், வழக்கிடுவோரை ஆராய்ந்து வினவி, அவர் கூறும் விடையை நன்கு ஆராய்ந்து, அவ்வினா விடை வாயிலாக உண்மையை உணர்ந்து துணிந்து தீர்ப்பு வழங்குதல் கடமை.
துணிபுணரும் தொல்கேள்விக்
கணிவனது புகழ்கிளந்தன்று – (கொளு-20)
என்று காட்டுகிறது.
‘பலவற்றையும் முற்ற அறிந்தவனும் கேள்வி அறிவுமிக்கவனும் ஆன கணிவனின் மேம்பாட்டைச் சொல்லுதல்’ என்பது பொருள்.
புரிவின்றி யாக்கைபோல் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங்(கு) அறியத் – திரிவின்றி
விண் இவ் உலகம் விளைக்கும் விளைவெல்லாம்
கண்ணி உரைப்பான் கணி.
தன் உடலைப் பேணுவதைப் போலக் கல்வி அறிவைத் தவறாது பேணி, மக்கள் வருந்தாமல் உண்மையை உணரும் வாகையால் தவறு ஏதும் இன்றி வானமும் நிலவுலகும் விளைவிக்கும் நிகழ்ச்சிகளை எல்லாம் எண்ணிக் கூறுவான் கணிவன்.
அடல்மேல் ஆடவர்க்(கு) அன்றியும் அவ்வில்
மடவரல் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று – (கொளு-21)
என்பது கொளு.
‘வேலையுடைய ஆடவர்க்கு மட்டுமன்றி வீரக்குடியில் பிறந்த பெண்டிர்க்கும் வீரப் பெருமிதம் உண்டு எனக் கூறுதல்’ என்பது பொருள். வெண்பா,
வந்த படைநோனாள் வாயில் முலைபறித்து
வெந்திறல் எஃகம் இறைக்கொளீஇ – முந்தை
முதல்வர்கல் தான்காட்டி மூதில் வடவாள்
புதல்வனைச் செல்கஎன்றாள் போர்க்கு.
என வீரச்சிறப்பை உணர்த்துகிறது. பகைப்படை தன்நாட்டின்மீது எதிர்த்து வருதலைப் பொறாதவளாய்ப் பாலுண்ணும் தன் பிள்ளையிடம், வீட்டிலிருந்த வேலினை வளைவு நிமிர்த்திக் கையில் கொடுத்து, தன் முன்னோர் வீரமரணம் எய்தி நடுகல்லில் தெய்வமாக நிற்கும் மாட்சியை அவனுக்குக் காட்டி, அவனைப் போர்க்களம் நோக்கிச் செல்ல விடுப்பாள் வீரத்தாய்.
ஏறுஆண் முல்லை
மாறு இன்றி மறம்கனலும்
ஏறு ஆண்குடி எடுத்துஉரைத்தன்று – (கொளு-22)
என்பது கொளு.
பகைவரைச் சந்திக்காத பொழுதிலும் சினம் மிகுந்து காணப்படுகின்ற மேன்மேல் உயர்கின்ற ஆண்மைத் தன்மையுள்ள குடியின் சிறப்பைக் கூறுதல் என்பது பொருள். வெண்பா இத்தகைய குடியின் சிறப்பை நன்கு எடுத்துக்காட்டுகிறது.
கல்நின்றான் எந்தை கணவன் களப்பட்டான்
முன்நின்று மொய்அவிந்தார் என்ஐயர் – பின்நின்று
கைபோய்க் கணைஉதைப்பக் காவலன் மேலோடி
உய்போல் கிடந்தான்என் ஏறு.
‘என் தந்தை முன்நாள் போரிலே இறந்து நடுகல்லில் பொறிக்கப்பட்டான். என் கணவனும் போர்க்களத்தில் இறந்தான். என் தமையன்கள் பகைவர் முன் ஓயும்வரை போரிட்டு இறந்தனர். என் மகன் பின்வாங்கி ஓடும் படையைத் தாங்குபவன் போல நின்று, பகைவர் அம்புகள் தைக்க முள்ளம்பன்றிபோல் கிடந்தான். இவ்வாறு மறத்தாய் கூற்றாக வெண்பா, வீரக்குடியின் சிறப்பைக் கூறுகிறது.
வல்ஆண் முல்லை
இல்லும் பதியும் இயல்பும் கூறி
நல்ஆண் மையை நலம்மிகுத் தன்று – (கொளு-23)
எனக் கொளு காட்டுகிறது.
‘ஒரு மறவனது குடிச்சிறப்பையும், ஊரின் சிறப்பையும் வீர இயல்பையும் கூறி அவனது மேதக்க ஆண்மைத் தன்மையினை மிகுத்துப் பேசுவது’ என்பது பொருள். வெண்பா, ‘போர்க்களத்தில் தன் அரசன் முன் அவனுக்குத் துணையாக நின்று மார்பில் வேல் மூழ்க விழுப்புண்பட்டுப் புகழ் மாலை சூடியவன் இவன்’ என உயர்த்திக் கூறுகிறது.
காவல் முல்லை
இதற்கு இரண்டு விளக்கங்கள் உள்ளன.
தவழ்திரை முழங்கும் தண்கடல் வேலிக்
கமழ்தார் மன்னவன் காவல் மிகுத்தன்று – (கொளு-24)
கடல் சூழ்ந்த உலகத்தை காக்கும் அரசனின் காவல் சிறப்பைக் கூறுவது என்பது பொருள். ஒருநாள் அவன் காவல் தொழில் தவறினாலும் அறங்கூறு அவையத்தார் செயல்பட முடியாது என்று வெண்பா, அரசாட்சிச் சிறப்பைப் போற்றுகிறது.
தக்காங்குப் பிறர் செறினும்
அத்துறைக்(கு) உரித்தாகும் – (கொளு-25)
காவல் இயல்பை மன்னனுக்கு எடுத்துக் கூறுவதும் இத்துறையில் அடங்குகிறது என்பது பொருள். ‘தந்தை போன்றே ஆறில் ஒருபங்கு வரி வாங்கி அதனைப் பிறர்க்குக் கொடுத்துத் தானும் நுகர்ந்து தன் ஆளுகைக்கு உட்பட்ட உயிர்கள் தீதின்றி நல்வாழ்வு வாழுமாறு பாதுகாக்க வேண்டும்’ எனச் சான்றோர் கூறுவது இதில் அடங்குமென வெண்பா விளக்குகிறது.
பேர்ஆண் முல்லை
உளம்புகல மறவேந்தன்
களம்கொண்ட சிறப்புரைத்தன்று – (கொளு-26)
என்பது கொளு.
‘வீரம் மிக்க அரசன், மறவர்கள் விரும்பும்படி போர்க்களத்தில் வென்ற சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள். ‘பகைவருடைய போர்க்களத்தை அடைந்து தன் வாளால் பகைவரின் யானைப்படை ஓடும் வண்ணம் போரிட்டுப் போர்க்களத்தைத் தனக்கு உரிமையாகக் கொண்டு வென்றான்’ என்று வெண்பா எடுத்துக் காட்டுகிறது.
வெள்வாள் வேந்தன் வேண்டிய(து) ஈயவும்
கொள்ளா மறவன் கொதிப்புஉரைத் தன்று – (கொளு-27)
என விளக்குகிறது.
‘வாள் வேந்தன், விரும்பிய பொருளைக் கொடுப்பினும் அதை ஏற்றுக் கொள்ளாத வீரன் பகைவரை வெல்லுதலையே குறிக்கோளாகக் கொண்டு சினக்கும் மறவனது சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள். ‘தன் கடமைக்கு எந்தப் பரிசிலையும் விரும்பாத வீரத்தின் உயர்நிலையை இது காட்டுகிறது.’ ‘அரசன் பொருள் கொடுக்கவும் அதை வாங்காது தனது வாளைக் கையில் ஏந்தி வீரவுரைகள் கூறி நின்றான் வீரன்’ என்று வெண்பா காட்டுகிறது.
மொய்தாங்கிய முழுவலித்தோள்
கொய்தாரான் குடைபுகழ்ந்தன்று – (கொளு-28)
என விளக்குகிறது.
‘போரினைத் தடுத்த மிகுந்த வலிமையினைக் கொண்ட தோள்களில் மாலையணிந்த அரசனின் கொற்றக் குடையின் சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள். இதுவும் அரசனின் சிறப்பைக் கூறுவதாகும். வெண்பா இதனை நயம்பட விளக்குகிறது.
வேயுள் விசும்பு விளங்கு கதிர்வட்டம்
தாய புகழான் தனிக்குடைக்குத் – தோயம்
எதிர்வழங்கு கொண்மூ இடைபோழ்ந்த சுற்றுக்
கதிர்வழங்கு மாமலை காம்பு
இவ்வெண் கொற்றக் குடைக்கு வானமே மேல்துணியாம்; கதிரவனே மேலே உள்ள வட்டமாம்; நீர்த்தாரை சொரியும் மேகமே சுற்று மாலையாம்; திங்களும் ஞாயிறும் திரியும் மேரு மலையே காம்பாம்’ எனப் புகழ்தலை வெண்பா காட்டுகிறது.
மண்கொண்ட மறவேந்தன்
கண்படைநிலை மலிந்தன்று – (கொளு-29)
என விளக்குகிறது.
பகைவரின் மண்ணைக் கைப்பற்றிய வீரவேந்தனின் உறக்கத்தைப் பாராட்டுதல்’ என்பது பொருள். வெண்பா இதனை மிகுத்துக் காட்டுகிறது. ‘திறை கொடாத மன்னர் எல்லாம் திறை கொடுத்தனர். கூற்றுவனையும் வருத்தும் ஆற்றலுடைய வேந்தனுடைய குடைக்கீழ் நிலமகளும் தங்குகிறாள். அதனால் அவன் விழிகள் அழல் வீசாமல் உறக்கம் கொண்டன.’ இவ்வாறு கடமையை முடித்த சிறப்பு இத்துறையில் பேசப்படுகிறது.
வெள்வாள் அமருள் செஞ்சோறு அல்லது
உள்ளா மைந்தர் உயிர்பலி கொடுத்தன்று – (கொளு-30)
என விளக்குகிறது.
கடுமையான வாட்போரில் அரசனுக்காகச் செஞ்சோற்றுக் கடன் கழித்தலை அன்றிப் பிறவற்றை நினைக்காத வீரர்கள் தம் உயிரைப் பலியாகக் கொடுத்தல் என்பது பொருள். பலிகொடுத்தல் என்பது யாகம் செய்தலின் ஒரு பகுதி. வெண்பா, யாகத்தையும் போரையும் ஒப்பிட்டு இத்துறையை விளக்குகிறது.
சிறந்த(து) இதுவெனச் செஞ்சோறு வாய்ப்ப
மறந்தரு வாளமர் என்னும் – பிறங்(கு)அழலுள்
ஆருயிர் என்னும் அவிவேட்டார் ஆங்கஃதால்
வீரியர்எய் தல்பால வீடு.
செஞ்சோற்றுக் கடன் கழிப்பதே ஒழுக்கங்களில் சிறந்தது என்று உணர்ந்து போர்க்களம் என்னும் தீயிலே தம் உயிர் என்னும் அவியை இட்டுத் தம் வீரப்பண்பிற்கேற்ப வீரசுவர்க்கம் புகுதல் என்று வெண்பா விளக்குகிறது.
வான்தோயும் மலைஅன்ன
சான்றோர்தம் சால்பு உரைத்தன்று – (கொளு-31)
என்பது கொளு.
விண்ணைத் தொடும் மலை போல் உயர்ந்த சான்றோர்களது அமைதியைச் சொல்லல் என்பது கொளு தரும் விளக்கம்.
உறையார் விசும்பின் உவாமதி போல
நிறையா நிலவுதல் அன்றிக் – குறையாத
வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ
சங்கம்போல் வான்மையார் சால்பு.
‘சங்கினைப் போன்று தூய தன்மையைக் கொண்ட சான்றோரது வாழ்க்கை முழுநிலாப் போல என்றும் நிறைந்து நிலைபெறுமே அல்லாமல், கடல் போன்று மிகுந்த பொருள் கிட்டுமாயினும் மாறாது.’ இவ்வாறு வெண்பா, பெரியோரது இயல்பைக் கூறுகிறது.
தண்பணை வயல் உழவனைத்
தெள்கிணைவன் திருந்துபுகழ்கிளந்தன்று – (கொளு-32)
எனக் கொளு விளக்குகிறது.
‘நல்ல கிணைப் பறையைக் கொட்டுபவன், மருத நிலத்தில் உழுது தொழில் செய்யும் வேளாளனுடைய நல்ல புகழினைச் சொல்லுதல்’ என்பது கொளுவின் பொருள். வேளாளனுடைய கடமை பிறர் பசி தீர்ப்பது. அப்புகழைப் பொருநன் பாடுவதாக வெண்பா காட்டுகிறது.
பகடுவாழ்(க) என்று பனிவயலுள் ஆமை
அகடுபோல் அங்கண்தடாரி – துகள்துடைத்துக்
குன்றுபோல் போர்வில் குருசில் வளம்பாட
இன்றுபோம் எங்கட்கு இடர்
‘குளிர்ந்த கழனியுள் ஆமையினது வயிறு போன்ற நடுப்புறத்தைக் கொண்ட (கண்ணையுடைய) கிணைப் பறையினைத் துடைத்து, ‘ஏர் வாழ்க’ என்று வாழ்த்தி, குன்று போன்ற வைக்கோற் போரினை உடமையாகக் கொண்ட வேளாளனின் செல்வ வளத்தைப் பாடிய உடனே எம் வறுமை அகன்றுவிடும்.’ இவ்வாறு கிணை வாசிப்பவன் போற்றுவதை வெண்பா காட்டுகிறது.
வையகத்து விழை(வு)அறுத்து
மெய்யாய பொருள் நயந்தன்று – (கொளு-83)
எனக் கொளு உணர்த்துகிறது.
உலகப் பொருள்களின் மீதுள்ள பற்றினை நீக்கி, மெய்ப்பொருளை விரும்புதல் என்று பொருள். அதாவது உண்மையான தத்துவப் பொருளை ஆய்ந்து வாழ்வதே வெற்றி என உணர்த்துதல். இதனை வெண்பா,
ஆம்இனி மூப்பும் அகன்ற(து) இளமையும்
தாம்மேனி நோயும் தலைவரும் – யாம்இனி
மெய்ஐந்து மீதூர வைகாது மேல்வந்த
ஐஐந்தும் ஆய்வ(து) அறிவு.
என விளக்குகிறது.
‘நமது இளமைப் பருவம் சென்றது ; இனி முதுமை வருதல் தவிர்க்க முடியாதது ; இனி நோய்களும் வரும் ; ஆதலால் உடல் முதலான ஐந்து பொறிகளும் நம்மை வெற்றி கொள்ள விடாமல், இருபத்தைந்து தத்துவங்களையும் ஆய்ந்து உணர்வதே நல்லறிவாகும். ஐந்து ஐந்தாக உள்ள புலன்கள், பூதங்கள், உணர்வுகள், கன்மங்கள், அந்த கரணமும், சீவனும் என்பன ஐயைந்து எனப்படுகின்றன.
இத்துறையை,
ஒலிகடல் வையகத்து
நலிவுகண்டு நயப்புஅவிந்தன்று – (கொளு-34)
எனக் கொளு எடுத்துக் காட்டுகிறது.
முழங்கும் கடலையுடைய உலகத்தின் துன்பத்தை உணர்ந்து அதன் மீதுள்ள பற்றைத் தவிர்த்தல் என்று கொளு விளக்குகிறது.
கயக்கிய நோயவாய்க் கைஇகந்து நம்மை
இயக்கிய யாக்கை இறாமுன் – மயக்கிய
பட்படா வைகும் பயன்ஞால நீள்வலை
உட்படாம் போதல் உறும்.
‘நிலையற்றதும் நோய்க்கு இடமானதுமான இந்த ஊன் உடம்பு அழிவதற்கு முன்பாகவே, இந்த உலகின் வஞ்சனையான இயல்பை அறிந்து, அனைத்து உயிர்களிடமும் அன்பும் அருளும் காட்டும் பெருநோக்கத்துடன் வாழ்ந்து உலகம் என்னும் வலையில் சிக்காமல் தப்பிப் போதலே உறுதியானது.’ இவ்வாறு உறுதிப்பொருள் எது என வெண்பா விளக்குகிறது.
பாடம் - 3
பாடாண் படலம் 47 துறைகளைக் கொண்டது. அவை
1. வாயில் நிலை
2. கடவுள் வாழ்த்து
3. பூவை நிலை
4. பரிசில் துறை
5. இயன்மொழி வாழ்த்து
6. கண்படை நிலை
7. துயிலெடை நிலை
8. மங்கல நிலை
9. விளக்குநிலை
10. கபிலை கண்ணிய புண்ணிய நிலை
11. வேள்வி நிலை
12. வெள்ளி நிலை
13. நாடு வாழ்த்து
14. கிணைநிலை
15. களவழி வாழ்த்து
16. வீற்றினிதிருந்த பெருமங்கலம்
17. குடுமி களைந்த புகழ்சாற்றுநிலை
18. மணமங்கலம்
19. பொலிவு மங்கலம்,
20. நாள் மங்கலம்
21. பரிசில் நிலை
22. பரிசில் விடை
23. ஆள்வினை வேள்வி,
24. பாணாற்றுப்படை
25. கூத்தராற்றுப்படை
26. பொருநராற்றுப் படை
27. விறலியாற்றுப்படை
28. வாயுறை வாழ்த்து
29. செவியறிவுறூஉ
30, குடைமங்கலம்
31. வாள் மங்கலம்
32. மண்ணு மங்கலம்
33. ஓம்படை
34. புறநிலை வாழ்த்து
35. கொடி நிலை
36. கந்தழி
37. வள்ளி
38. புலவராற்றுப்படை
39. புகழ்ந்தனர் பரவல்
40. பழிச்சினர் பணிதல்
41. கைக்கிளை
42. பெருந்திணை
43. புலவிபொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு
44. கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம்
45. கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்
46. குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி
47. ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி
ஆகியன.
தொல்காப்பியர் பாடாண் திணையில் 21 துறைகள் கூறியுள்ளார். பூவை நிலை, வெள்ளி நிலை, நாடு வாழ்த்து, கிணைநிலை, களவழி வாழ்த்து, வீற்றினிதிருந்த பெருமங்கலம், குடுமி களைந்த புகழ்சாற்று நிலை, மண மங்கலம், பொலிவு மங்கலம், ஆள்வினை வேள்வி, புலவராற்றுப்படை, கைக்கிளை, பெருந்திணை ஆகியன வெண்பாமாலையில் மிகுதியாகக் கூறப்பட்டுள்ள துறைகள். இது பாடாண் திணை வளர்ச்சியைக் காட்டுகிறது.
ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்
அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று (கொளு.1)
என விளக்குகிறது. ‘அரசனுடைய புகழையும் வலிமையையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாது பிறர்க்கு ஈயும் வள்ளல் தன்மையையும் அருளுடைமையையும் ஆய்ந்து கூறுதல்’ என்பது இதன் பொருள்.
வெண்பா, மேற்கண்ட தன்மைகளைப் புகழும் முறையை எடுத்துக் காட்டுகிறது.
மன்னர் மடங்கல் மறையவர் சொல் மாலை
அன்ன நடையினார்க்(கு) ஆரமுதம் – துன்னும்
பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப் பைந்தார்
எரிசினவேல் தானைஎம் கோ
‘எங்கள் மன்னன் அரசர் பலருள் அரிமாப் போன்றவன்; அந்தணர்களுக்குப் புகழ்மாலை போன்றவன்; அன்ன நடைப் பெண்களுக்கு அமுதத்தை ஒத்தவன்; பரிசிலர்க்கு முகில் போன்றவன்’. இவ்வாறு வெண்பா பாடாண் படலத் தன்மையை விளக்குகிறது. பாடாண் படலத்தின் துறைகளைக் குறித்த விளக்கங்களைப் பகுத்துக் காண்போம்.
புரவலன் நெடுங்கடை குறுகிய என்னிலை
கரவின்(று) உரையெனக் காவலற்(கு) உரைத்தன்று (கொளு.2)
தன்னுடைய திறனையும் வருகையையும் நோக்கத்தையும் மறைக்காது காவலன் சொல்லவேண்டும் எனப் புலவன் கேட்டுக்கொள்வான். இதற்கு வெண்பா தகுந்த விளக்கமளிக்கிறது.
நாட்டிய வாய்மொழி நாப்புலவர் நல்லிசை
ஈட்டிய சொல்லான் இவனென்று – காட்டிய
…………………………………………………………………………..
வாயிலோய் வாயில் இசை
‘வாயில் காவலனே, வந்துள்ள புலவன், என்றும் நிலைக்கும் வகையில் பாடும் ஆற்றல் பெற்ற அறிவினையுடையோர் புகழும் வண்ணம், நின்னைப் புகழ்ந்து பாடும் சொல்லாற்றல் பெற்றவன்; வந்துள்ளான் என்று அரசனிடம் கூறுவாயாக’ என்பது வெண்பாவின் பொருள். தன் ஆற்றலைப் புலவன் வெளிப்படுத்தி அரசனைக் காண அனுமதி வேண்டுகிறான்.
கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல் என்பது இதன் பொருள். இதனைக் கொளு,
காவல் கண்ணிய கழலோன் கைதொழும்
மூவரில் ஒருவனை எடுத்து உரைத்தன்று (கொளு.3)
எனக் காட்டுகிறது. ‘உலகைக் காக்கும் அரசன் கைகூப்பி வணங்கும் முப்பெருந் தெய்வங்களுள் ஒன்றை வாழ்த்துதல்’ என்பது பொருள்.
வெண்பா, திருமாலின் சிறப்பை வாழ்த்துவதைக் காட்டுகிறது.
‘வைய மகளை அடிப்படுத்தாய் வையகத்தார்
உய்ய உருவம் வெளிப்படுத்தாய் – வெய்ய
அடுந்திறல் ஆழி அரவணையாய் என்றும்
நெடுந்தகை நின்னையே யாம்’
‘திருமாலே! நீ நிலமடந்தையைத் திருவடியில் அடக்கினாய்; உலகில் உள்ளோர் பலரும் உய்ய அவதாரம் எடுத்தாய்; சக்கரப்படையையும் பாம்புப் படுக்கையையும் கொண்டுள்ளாய்’ என்று வாழ்த்துதல் பற்றி வெண்பா கூறுகிறது.
பூவை நிலை
பூவை எனில் காயாமரம் என்று பொருள். காயாம்பூவைப் புகழ்தல் என்பது பூவை நிலை.
கறவை காவலன் நிறனொடு பொரீஇப்
புறவுஅலர் பூவைப் பூப்புகழ்ந் தன்று (கொளு. 4)
‘ஆனிரையைக் காக்கும் காவலன் (திருமால்) நிறத்தொடு ஒப்புக்காட்டிக் காட்டில் மலர்ந்த காயாம் பூவைப் புகழ்தல்’ என்பது பொருள். காயாம்பூ நிறம் திருமாலின் நிறத்தை ஒத்திருக்கும் தன்மைக்காக அதைப் பாராட்டுதல் என்பதும் இறைவனின் மேனி நிறத்தைப் பாராட்டுதலேயாம்.
வெண்பா இதனை
‘பூவை விரியும் புது மலரில் பூங்கழலோய்
யாவை விழுமிய யாமுணரேம் – மேவார்
மறத்தொடு மல்லர் மறம்கடந்த காளை
நிறத்தொடு நேர்தருத லான்’
‘மாயவனது நிறத்தோடு உவமை கொள்ளுதலால் காயா மலரைப் போலச் சீரியவை எவை என நாங்கள் அறிந்திலேம்.’
பரிசில் துறை.
பரிசில் வேண்டுதலைக் காட்டும் துறை என்பது இதன் பொருள்.
மண்ணகம் காவல் மன்னர் முன்னர்
எண்ணிய பரிசில் எதுஎன உரைத்தன்று (கொளு.5)
என விளக்குகிறது. ‘நாட்டைக் காக்கும் மன்னனிடம் இரவலன் எண்ணிய பரிசில் இது எனக் கூறுதல்’ என்பது பொருள்.
இரவலன் வேண்டும் பரிசு இன்னதென எடுத்துக்காட்டி, வெண்பா விளக்குகிறது.
வரிசை கருதாது. வான் போல் தடக்கைக்
குரிசில் நீ நல்கயாம் கொள்ளும் – பரிசில்
அடுகளம் ஆர்ப்ப அமரோட்டித் தந்த
படுகளி நால்வாய்ப் பகடு.
‘கார்மேகம் போலக் கொடுக்கும் கைகளைக் கொண்ட மன்னனே! என் தகுதியைப் பாராதே. போர்க்களத்தில் பகைவரை வென்று நீ கைப்பற்றிக் கொண்டுவந்த களிறுகளில் ஒன்றை யான் பரிசிலாகப் பெறத் தருவாயாக’ என்பது வெண்பா தரும் எடுத்துக்காட்டு.
இயன்மொழி வாழ்த்து
இயல்பைக் கூறி வாழ்த்துதல் என்பது பொருள். பரிசில் பெறுவதற்காக இத்தகைய வாழ்த்து மொழியப்படும். இத்துறைக்கு இரண்டு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
‘இன்னோர் இன்னவை கொடுத்தார் நீயும்
அன்னார் போல அவை எமக்(கு) ஈக என
என்னோரும் அறிய எடுத்துரைத் தன்று (கொளு.6)
எனக் கொளு விளக்குகிறது.
‘இத்தன்மையையுடையவர்கள் இத்தன்மையுடைய பொருளை வழங்கினார்கள்; நீயும் அத்தன்மையுடைய பொருள்களை வழங்குவாயாக என எல்லோரும் அறியச் சொல்லுதல்’ என்பது பொருள்.
பாரியும் பேகனும் கொடுத்த கொடைகளைக் காட்டி அதுபோலத் தர வேண்டுமெனக் காட்டுகிறது, வெண்பா.
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத்(து) இசைவிளங்கத் – தொல்லை
இரவாமல் ஈந்த இறைவர்போல் நீயும்
கரவாமல் ஈகை கடன்
பாரி முல்லைக்குத் தேரும், பேகன் மயிலுக்குப் போர்வையும் அவை கேளாமலே கொடுத்தனர். அதனால் உலகில் புகழ்பெற்றனர். அவர்கள் போல நீயும் எனக்குக் கொடுக்கவேண்டும்’ என வெண்பா விளக்குகிறது.
2. மன்னனின் சிறப்பு இயல்புகளைக் கூறுவதும் இயன்மொழி வாழ்த்து என இரண்டாவது விளக்கம் அமைந்துள்ளது.
மயல்அறு சீர்த்தி மான்தேர் மன்னவன்
இயல்பே மொழியினும் அத்துறை ஆகும்’ (கொளு.7)
‘மிக்க புகழையும் தேரினையும் உடைய அரசனின் தனிமையைச் சொல்லுதலும் அத்துறை சார்ந்தது’ என்பது பொருள். புறநானூற்றில் இத்தகைய இயன்மொழி வாழ்த்துப் பாடல்களைக் காண முடியும். வெண்பா, ‘போரில் அரசன் தன் உயிரைப் பாதுகாத்தலை நினையான்; இரவலர்க்குக் கொடுக்கும்போது இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என வரையறை கொள்ளான்; உயிர்களைப் பேணுதலில் இன்னாரையே காக்க வேண்டும் என்று வரையறை செய்யான்’ எனச் சிறப்பு இயல்புகளை எடுத்துக்காட்டுகிறது.
கண்படை நிலை
உறக்கம் கொள்ளும் நிலை என்பது இதன் பொருள். கொளு,
நெடுந்தேர்த் தானை நீறுபட நடக்கும்
கடுந்தேர் மன்னவன் கண்படை மலிந்தன்று (கொளு. 8)
என விளக்குகிறது. ‘தேரினையுடைய பகைவர் தூளாகும்படி செல்லும் வலிய தேரையுடைய அரசனது உறக்கத்தைச் சிறப்பித்துக் கூறுதல்’ என்பது கொளுவின் பொருள். வெண்பா அரசன் தன் திறனால் பாதுகாப்புகளை ஏற்படுத்திவிட்டுக் கவலையின்றி உறக்கம் கொள்வான் எனக் காட்டுகிறது.
‘போரில் பகைவரை வென்று, நாட்டில் செங்கோலால் கொடியவற்றை நீக்கிக் கவலை இல்லாததால் அரசன் கண்கள் உறக்கத்தை மேவின’ எனக் காட்டுகிறது வெண்பா. ‘கண்படைநிலை’ வாகைத் திணையிலும் துறையாக இடம் பெற்றுள்ளது. ‘கண்படைநிலை’ என்பது தனிவகைச் சிற்றிலக்கியமாகப் பின்னர் உருவாயிற்று.
துயில் எடை நிலை
துயில் எழுப்பல் என்று இதற்குப் பொருள். கடமை ஆற்றுவதற்கு அரசனை உறக்கத்திலிருந்து எழுப்பும் தன்மையைக் கூறுதல். இது பள்ளி எழுச்சி எனவும் குறிப்பிடப்படுகிறது. இறைவனுக்குப் பள்ளியெழுச்சி பாடுதல் மரபாக உள்ளது. கொளு,
அடுதிறல் மன்னரை அருளிய எழுகஎனத்
தொடுகழல் மன்னனைத் துயில் எடுப்பின்று (கொளு.9)
‘வீரக்கழல் அணிந்த மன்னனை, நின்பகை மன்னருக்கு அருள் செய்ய எழுந்திருப்பாயாக எனக் கூறி உறக்கத்திலிருந்து எழுப்புதல்’ என்பது பொருள்.
வெண்பா, ‘மன்னனே! உலகத்து மன்னர் பலர் திறைப்பொருளுடன் உன்னை வணங்கும் வகையில் உன் தாமரைக் கண்கள் உறக்கத்திலிருந்து எழுவனவாக’ என்று விளக்குகிறது. ‘துயில் எடை நிலை’ என்பதும் தனிச் சிற்றிலக்கியமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
மங்கல நிலை
மங்கலம் கூறுதல் என்பது இதன் பொருள். தூங்கி எழுந்த அரசன் முன் இவ்வாறு மங்கலம் கூறுதல் மரபு இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அரசன் பொழுது புலரும் வரை இன்பங்கள் துய்த்ததைக் கூறுவதும் இத்துறையில் அடங்கும்.
1. கங்குல் கனைதுயில் எழுந்தோன் முன்னர்
மங்கலம் கூறிய மலிவுரைத் தன்று (கொளு.10)
எனக் கொளு விளக்குகிறது: இரவின்கண் நன்கு துயில் கொண்டு எழுந்த அரசன் முன்னர் மங்கலச் செய்திகளைச் சொல்வதைக் கூறுதல் என்பது இதன் பொருள்.
‘மங்கலம்’ மங்கலம்’ என்று செய்திகளைச் சொல்லும் மரபு வெண்பாவில் காட்டப்படுகிறது.
விண்வேண்டின் வேறாதல் மங்கலம் வேந்தர்க்கு
மண்வேண்டின் கைகூப்பல் மங்கலம் – பெண்வேண்டின்
துன்னல் மடவார்க்கு மங்கலம் தோலாப்போர்
மன்னன் வரைபுரையும் மார்பு’
‘பகையரசர் சுவர்க்கம் அடைய விரும்பின் உன்னிடம் மாறுபட்டுப் போருக்கு எழுவர்; வேற்றரசர்கள் தம் நாடுகளைத் தம் வசமே வைத்துக்கொள்ள வேண்டுமெனில் நின்னை அடிபணிந்து வாழ்வர்; மகளிர் இன்பம் வேண்டின் நின் மார்பினை முயங்கி மகிழ்ச்சியடைவர்.’ இவ்வாறு வெண்பா அரசனுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்திகளைக் காட்டுகிறது.
2. ‘மன்னிய சிறப்பின் மங்கல மரபில்
துன்னினன் என்றலும் அத்துறை ஆகும் (கொளு.11)
‘நின்று நிலைத்த மங்கலத்தை மரபினால் அடைந்தான் என்பதும் மங்கலநிலை என்னும் துறை சார்ந்தது’ என்பது இதன்பொருள். அரசன் பொழுது விடியும் வரை இரவில் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று ஐம்பொறி இன்பத்தை நிறையத் துய்த்தனன் என்று கூறுவதை மங்கல நிலைக்கு விளக்கமாக வெண்பா காட்டுகிறது.
விளக்கு நிலை
விளக்கின் தன்மை என்பது இதன் பொருள். அரசனது விளக்கின் சிறப்பைக் கூறுதலும் மரபு. செங்கோற் சிறப்பைக் கூறுவது போன்றது இது. இத்துறைக்கும் இரண்டு விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. அரசனை உலகின் விளக்காகிய கதிரவனோடு ஒப்பிட்டுக் கூறுவதும் இத்துறையே ஆகும்.
1. அளப்பரும் கடல் தானையான்
விளக்குநிலை விரித்துரைத்தன்று (கொளு. 12)
‘கடல்போல் பெரிய படையினைக் கொண்ட அரசனது திருவிளக்கின் சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள்.
விளக்கு எரியும் நிலையைக் கொண்டு அரசனின் வெற்றியைக் கணிப்பதை வெண்பா காட்டுகிறது. ‘காற்றுவேகமாக வீசினும் அரசனது திருவிளக்கு வலமாகச் சுழன்று ஒளி மிகுந்து காணப்படுவதால், அவன் எப்பொழுதும் வெற்றி வீரனாகவே திகழ்வான்’ என்று வெண்பா விளக்குகிறது.
2. அடர்அவிர் பைம்பூண் வேந்தன் தன்னைச்
சுடரொடு பொருவினும் அத்துறை ஆகும் (கொளு. 13)
‘பொன்னும் மணியும் பூண்டு, ஒளிர்கின்ற மன்னனைக் கதிரவனோடு ஒப்பிட்டுக் கூறுவதும் இத்துறை ஆகும்’ என்பது பொருள்.
வெண்பா இதனை நன்கு விளக்குகிறது. ‘கதிரவன் தோன்றியவுடனேயே இரவில் வானில் ஒளிவீசிய விண்மீன் முதலியன ஒளி மழுங்கினாற்போல், இம்மன்னன் அரியணை ஏறிய பின் ஏனைய வேந்தர் திரள் ஒளியிழந்து நிற்கும்’ என வெண்பா காட்டுகிறது.
கபிலை கண்ணிய புண்ணிய நிலை
கபிலைப் பசுக்களைத் தானம் செய்தல் என்பது இதன் பொருள். கபிலை என்பது செந்நிறப்பசுவைக் குறிக்கிறது. குறிப்பாக அந்தணர்களுக்குத் தானம் செய்தலை இது கூறுகின்றது.
அண்ணல் நான்மறை அந்த ணாளர்க்குக்
கண்ணிய கபிலை நிலைஉரைத் தன்று (கொளு.14)
‘சிறப்பு மிக்க நான்கு மறைகளையும் கற்ற அந்தணர்களுக்குத் தானமாகக் கொடுக்கக் கருதிய ஆவினது தன்மையைக் கூறுதல்’ என்பது பொருள். ‘பகைவர் நடுங்கும் வண்ணம் காலையில் முரசம் ஒலிக்க, பருத்த மாணிக்கங்களையும் பொன்னையும் அந்தணர்கள் தாமே எடுத்துக் கொள்ளச் செய்து, கபிலை நிறமுடைய ஆன்களைத் தானமாகக் கொடுத்தான் அரசன்’ என்று வெண்பா விளக்கியுள்ளது.
வேள்வி நிலை
வேள்வி செய்தல் என்பது பொருள்.
‘அந்தமில் புகழான் அமரரும் மகிழச்
செந்தீ வேட்ட சிறப்புரைத் தன்று’ (கொளு.15)
‘குறையாத புகழைக் கொண்ட அரசன், தேவர்களும் மனம் மகிழும்படி தீ வளர்த்து வேள்வி செய்த சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள்.
வேந்தன் வேள்வி செய்ததைத் தேவர் ஏற்றுக் கொண்டதை வெண்பா கூறுகிறது. ‘புகழுடைய வேந்தன் வேள்வி செய்ய அந்தணர் மகிழ்தலே அன்றி, வானுலகில் உள்ள தேவர்களும் அக்னி தேவனைத் தம் வாயாகக் கொண்டு முறையாக அவியுணவை ஏற்றுக் கொண்டனர்’ என்கிறது வெண்பா.
துயர்தீரப் புயல்தரும்என
உயர்வெள்ளி நிலைஉரைத்தன்று (கொளு.16)
‘மழையின்மையால் உலகடைந்த துயர்தீர மேகம் மழை தரும் என வெள்ளிக் கோளின் தன்மையைக் கூறுதல்’ என்பது பொருள். வெள்ளிக் கோள் வானில் நல்ல நிலையில் நின்று ஒளிபரத்தலால், மேகம் நீர்த்தாரைகளைச் சொரிந்து வெள்ளத்தை உருவாக்கும் என வெண்பா விளக்குகிறது.
இப்பிரிவில் கூறப்படும் ஐந்து துறைகளும் அரசனின் ஆட்சிச் சிறப்பையும் வீரச்சிறப்பையும் எடுத்துக் காட்டுவன. அரசனின் வளம் மிக்க நாட்டின் சிறப்பு அரசாட்சி குறித்துக் கிணை கொட்டுபவன் பாராட்டல், போரில் மன்னர் கைப்பற்றிய செல்வ வளம், அரியணையில் அரசன் வீற்றிருக்கும் சிறப்பு, பகைவரது முடியைக் களைந்த வீரம் ஆகியவற்றை இவை காட்டுகின்றன. கிணைநிலை வாகைத்திணையிலும் துறையாக இடம் பெற்றுள்ளது.
நாடு வாழ்த்து
நாட்டினை வாழ்த்துதல் என்பது இதன் பொருள். அரசனது நாட்டுச் சிறப்பைக் கூறுவது இத்துறை.
தாள்தாழ் தடக்கையான்
நாட்டது வளம்உரைத்தன்று (கொளு.17)
நீண்ட கைகளையுடைய அரசனது வளம் மிக்க நாட்டை வாழ்த்துதல் என்பது பொருள்.
வளத்துக்கான காரணங்களை வெண்பா சுட்டுகிறது. எட்டு வகையான கேடுகள் இன்றி நாடு வளமாக உள்ளது என்று சொல்வதன் மூலம் அரசனின் ஆட்சிச் சிறப்பைக் எடுத்துக்காட்டுகிறது. விட்டில், கிளி, யானை, வேற்றரசுப் படையெடுப்பு, உள்நாட்டுக் குழப்பம், மழைக் குறைவு, மழை மிகுதி, புயல் என எண்வகை இடையூறுகள் இன்றி நெற்பயிர்களூடே குவளை மலர்கள் களைகளாக விளங்கும் வண்ணம் தேவருலகம் போல் கவலையற்று வாழும் இன்ப வாழ்க்கையை இம்மன்னன் நாடு மக்களுக்கு வழங்கியுள்ளது என்று வெண்பா புலப்படுத்துகிறது.
கிணை நிலை
தடாரிப்பறை கொட்டுபவனின் இயல்பு என்பது இதன் பொருள்.
திருக்கிளரும் அகன்கோயில்
அரிக்கிணைவன் வளம்உரைத்தன்று (கொளு.18)
அரசனது செல்வம் பெருகும் அகன்ற மாளிகையில் அழகிய தடாரிப்பறையைக் கொட்டுபவனின் செயலைக் கூறுதல் என்பது கொளுவின் பொருள்.
கிணை வாசிப்பவன் அரசனது கொடைச் சிறப்பைக் கூறுவதை வெண்பா காட்டுகிறது. ‘வெள்ளி முளைத்த விடியற்காலத்தில் வள்ளலான அரசனது அரண்மனையை அடைந்து வாயிலில் கிணைப் பறையைக் கொட்டி ‘நின் யானை வாழ்க’ என்று சொல்லுவதன் முன் அவன் கொடுக்கும் பரிசிலால் வறுமைத்துயர் ஒழிந்தது’ என்று கிணைவாசிப்பவன் கூற்றாக வெண்பா விளக்குகிறது. கிணைநிலை என்னும் துறை வாகைப் படலத்திலும் உண்டு. அது குறித்து முந்தைய பாடத்தில் படித்திருப்பீர்கள்.
களவழி வாழ்த்து
போர்க்கள வெற்றியை வாழ்த்துதல் என்பது இதன் பொருள். யாழ்ப் பாணர்கள் போர்க்களத்தில் நிகழ்வுகளைக் கண்டு வாழ்த்துவர்.
செங்களத்துச் செழுஞ்செல்வம்
வெண்துறையாழ்ப் பாணர்விளம்பின்று (கொளு. 19)
‘மன்னன் போர்க்களத்தில் அடைந்த பெருஞ் செல்வத்தைப் பற்றிப் புகழ்ந்து கூறுதல்’ என்பது பொருள்.
வெண்பா, பாணன் போர்க்களத்தில் அரசனிடமிருந்து யானையைப் பரிசிலாகப் பெற்றதைக் குறிப்பிடுகிறது.
வீற்றினிதிருந்த பெருமங்கலம்
இனிதாக அரியணையில் வீற்றிருக்கும் தோற்றம் என்பது இதன் பொருள்.
கூற்றிருந்த கொலைவேலான்
வீற்றிருந்த விறல் மிகுத்தன்று (கொளு.20)
‘கூற்றுவன் குடியிருப்பது போன்ற கொடுந்தன்மை மிக்க வேலையுடைய அரசன் வீற்றிருக்கும் சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள்.
செம்மாந்த நிலையை வெண்பா விளக்குகிறது. ‘அரசர்கள் பலரும் வாழ்த்தி நிற்க, கடல் சூழ்ந்த நாவலம் தீவு முழுமைக்கும் அரசன் எனக் கழல் அணிந்து அரியணையில் வீற்றிருந்தான்’ என வெண்பா சிறப்பிக்கிறது.
குடுமி களைந்த புகழ் சாற்றுநிலை
குடுமியைக் களைந்த புகழ்மிக்க செயலைக் கூறும் நிலை என்பது பொருள். ‘களைந்த’ என்பதற்கு ‘முடிந்த’ என்று பொருள்கொண்டு குடுமியை முடிந்த புகழ்மிக்க செயலைக் கூறும் நிலை என்றும் பொருள் கூறுவர். பெரும்பாலான உரைகளில் ‘களைந்த’ எனவே பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. வென்ற மன்னன் பகைவனது குடுமியைக் களையச் செய்வான் என்று பொருள் கொள்கின்றனர். வெற்றிபெற்ற பின் குடுமியை முடிவேன் என்று சபதம் செய்து அதை நிறைவேற்றுவது என்றும் பொருள் கொள்கின்றனர். பகைவரது மணிமுடியை நீக்குதல் என்றும் பொருள் கொள்வர். இதனை,
நெடுமதில் எறிந்து நிரைதார் மன்னன்.
குடுமி களைந்த மலிவு உரைத்தன்று (கொளு.21)
எனக் காட்டுகிறது. பெரிய கோட்டையை அழித்து மன்னன், பகை வேந்தன் தன் குடுமி களைந்த வீரத்தைக் கூறுதல் என்று பொருள். ‘களைந்த’, ‘முடிந்த’ என்னும் இருபொருள்களும் கொள்ளும் வகையில் கொளு அமைந்துள்ளது. வெண்பா, வென்ற அரசனை முருகனுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறது. ‘சரவணப் பொய்கையில் பிறந்து வானுலகின் வேந்தன் இந்திரனை வென்ற முருகன்போல அரசன், பகையரசன் கோட்டையைக் கைப்பற்றிக் குடுமி களைந்தான்’ என்கிறது.
‘நெடுமதில் கொண்டு நிலமிசையோர் ஏத்தக்
குடுமி களைந்தான்எம் கோ’
என்னும் வெண்பா அடிகளுக்குக் ‘குடுமி முடிந்தான்’, ‘மணிமுடியை நீக்கினான்’ என்றும் பொருள் கொள்ளலாம்.
மணமங்கலம்
இகல்அடு தோள் எறிவேல் மன்னன்
மகளிரொடு மணந்த மங்கலம் கூறின்று (கொளு.22)
‘பகையை வெல்லும் வலிமை மிக்க தோள்களையும் வேலினையும் கொண்ட மன்னன், மகளிரை மணந்த தன்மையைக் கூறுதல்’ என்பது கொளுவின் பொருள்.
வெண்பா, பெருவேந்தனது அழகிய மகளை அரசன் மணந்துகொண்டான் எனக் காட்டுகிறது. இத்துறைக்கு, அரசன் உரிமைப் பெண்கள் மகிழும் வண்ணம் கூடி மகிழ்ந்த சிறப்பைக் கூறுதல் எனவும் பொருள் கூறுகின்றனர்.
பொலிவு மங்கலம்
வேல்வேந்தன் உள்மகிழப்
பாலன்பிறப்பப் பலர்புகழ்ந்தன்று (கொளு.23)
வேலினைக் கொண்ட அரசன் மகிழ அவனுக்குப் புதல்வன் பிறத்தலைப் பலரும் கொண்டாடுதல் என்பது பொருள். அரசனுக்கு மகன் பிறந்த நிகழ்வை விண்ணோர்களும் உலகிலுள்ளார்களும் புகழ்வதாகவும் பகைவர்கள் பகை மறந்ததாகவும் வெண்பா காட்டுகிறது.
அறந்தரு செங்கோல் அருள்வெய்யோன்
பிறந்தநாள் சிறப்பு உரைத் தன்று (கொளு.24)
தருமத்தினை விளைக்கும் செங்கோலினையும் அருளினையும் கொண்ட அரசனின் பிறந்த நாளின் தன்மையைச் சொல்லுதல் என்று கொளு விளக்குகிறது.
அரசன், தனது பிறந்த நாளில் இரவலர்க்கு மட்டும் அன்றிப் பகைவர்க்கும் இனியனாக இருப்பான் என்பதை வெண்பா காட்டுகிறது.
‘கரும்பகடும் செம்பொன்னும் வெள்ளணிநாள் பெற்றார்
விரும்பி மகிழ்தல் வியப்போ – சுரும்பிமிழ்தார்
வெம்முரண் வேந்தரும் வெள்வளையார் தோள்விழைந்து
தம்மதில் தாம்திறப்பர் தாள்.’
மன்னன் பிறந்த நாளிலே யானையையும் பொன்னையும் பெற்றவர்கள் மகிழ்தல் சிறப்பாகுமோ? பகை மன்னர்கள் கூட அச்சம் நீங்கித் தமக்குரிய பெண்களின் தோள்களைத் தழுவத் தாம் அடைத்திருந்த கோட்டையின் தாள்களைத் தாமே திறப்பது அல்லவா சிறப்பு! இவ்வாறு எடுத்துக்காட்டு வெண்பா, பிறந்த நாள் சிறப்பைக் காட்டுகிறது.
பரிசில் நிலை
புரவலன் மகிழ்தூங்க
இரவலன் கடைக்கூடின்று (கொளு.25)
‘புரவலன், இரவலனுக்கு விடை தராமல் தன் வேலையில் மகிழ்ந்திருக்க, அவன் தன் இருப்பிடத்திற்குப்போக ஒருப்படுதல்’. என்பது கொளு தரும் விளக்கம்.
விடை தராத அரசனிடம் இரவலன் விடை தர வேண்டுதலை வெண்பா காட்டுகிறது. ‘தேரைப்பரிசாக வழங்கிய பின்னும் மன்னன் விடை தரக் காலம் தாழ்த்த, இரவலனுடைய சுற்றம், பகைவர் நாடு கலங்குவதைப் போலக் கலங்கும் என்று இரவலன் வேண்டுகிறான்.
பரிசில் விடை
வேந்தன் உள்மகிழ வெல்புகழ் அறைந்தோர்க்கு
ஈந்து பரிசில் இன்புற விடுத்தன்று (கொளு.26)
‘அரசனது உள்ளம் மகிழும்படி அவனது புகழைக் கூறிய பரிசிலர்க்குப் பரிசில் கொடுத்து மகிழ்வுடன் விடை அளித்தல்’ என்பது இதன் பொருள்.
இரவலரை வழியனுப்பும் முறையை வெண்பா காட்டுகிறது.
படைநவின்ற பல்களிறும் பண்ணமைந்த தேரும்
நடைநவின்ற பாய்மாவும் நல்கிக் – கடையிறந்து
முன்வந்த மன்னர் முடிவணங்கும் சேவடியால்
பின்வந்தான் பேரருளி னான்
‘மன்னன், படையில் பயின்ற களிறு பலவற்றையும் ஒப்பனை செய்யப்பட்ட தேரினையும் தாளகதியில் நடையிடும் குதிரைகளையும் வழங்கி, இரவலரை வழியனுப்பத் தானே வாயிலையும் கடந்து நடந்துவந்தான்’ என்று வெண்பா விளக்குகிறது.
வினை முற்றிய கனைகழலோன்
மனைவேள்வி மலிவு உரைத்தன்று (கொளு.27)
‘தான் மேற்கொண்ட வினையை முடித்த அரசனது இல்லறக் கடமையைக் கூறுதல்’ என்று பொருள் அரசனது இல்லறச் சிறப்பைக் காட்டுவது இத்துறை. ‘வாட்போரினை முடித்த அரசன், தன் இல்லத்திற்கு விருந்தினராக வருபவர் வரலாம் என்று சொல்வதன்மூலம் எல்லா உயிரும் மகிழும்படி பாதுகாத்தலால் அவன் புகழ் நீண்ட காலம் வாழும்.’ என்று வெண்பா விளக்கமளிக்கிறது.
சேண்ஓங்கிய வரைஅதரில்
பாணனை ஆற்றுப்படுத்தன்று (கொளு.28)
‘ஓங்கி உயர்ந்த மலைப்பாதையில் பரிசில் பெற்றுவரும் பாணன் தன் எதிரில் வந்த பாணனைப் பரிசில் பெறும் வழியைக்காட்டிச் செலுத்துதல்’ என்பது கொளுவின் பொருள்.
இன்தொடை நல்இசை யாழ்ப்பாண எம்மைப் போல்
கன்றுடை வேழத்த கான்கடந்து – சென்றடையில்
காமரு சாயலாள் கேள்வன் கயமலராத்
தாமரை சென்னி தரும்.
யாழ்வல்ல பாணனே! எம்மைப்போல் யானைகள் நடமாடும் காட்டினைக் கடந்து போய் வள்ளலது நாட்டை அடைந்தால் அவன் பொற்றாமரை மலரை நின் தலையில் சூட்டுவான்’ என்று பரிசில் பெற்ற பாணன் கூற்றாக உள்ளது வெண்பா.
ஏத்திச்சென்ற இரவலன்
கூத்தரை ஆற்றுப்படுத்தன்று (கொளு.29)
பரிசில் பெறுதற்காக வள்ளலை வாழ்த்திச் சென்ற இரவலனாகிய கூத்தன், வழியே வந்த கூத்தரை வள்ளலிடம் ஆற்றுப்படுத்துதல் என்று பொருள் கூத்தன் என்பவன் ஆடற்கலைஞன்.
‘கொலைவில் புருவத்துக் கொம்(பு) அன்னார் கூத்தின்
தலைவ தவிராது சேறி – சிலைகுலாம்
காரினை வென்ற கவிகையான் கைவளம்
வாரினைக் கொண்டு வரற்கு’
‘விறலியர் ஆடும் கூத்தின் தலைவனே! மேகத்தினை வெல்லும் வகையில் வள்ளல் வாரி வழங்கும் செல்வத்தினை வாரிக்கொண்டு வருவதற்குத் தவறாமல் அவன் பால் செல்வாயாக’ என ஆற்றுப்படுத்துவதை வெண்பா காட்டுகிறது.
பெருநல்லான் உழையீர்ஆகெனப்
பொருநனை ஆற்றுப்படுத்தன்று (கொளு.30)
‘மிக நல்லவனாகிய அவ்வள்ளலிடம் செல்க எனப் பொருநனை ஆற்றுப்படுத்துதல்’ என்பது கொளு தரும் பொருள்.
‘தெருவில் அலமரும் தெள்கண் தடாரிப்
பொரு(வு) இல் பொருந நீ செல்லின் – செருவில்
அடுதடக்கை நோன்தாள் அமர்வெய்யோன் ஈயும்
நெடுந்தடக்கை யானை நிரை’
‘தெருக்கள் தோறும் கிணை வாசிக்கின்ற பொருநனே, போரில் வெல்லும் ஆற்றல்மிக்க அவ்வள்ளலிடம் சென்றால், கொல்லும் துதிக்கையையும் வலிய காலடிகளையும் கொண்ட யானைக் கூட்டத்தைப் பரிசாகக் கொடுப்பான்’- என வெண்பா விளக்குகிறது.
திறல் வேந்தன் புகழ்பாடும்
விறலியை ஆற்றுப்படுத்தன்று (கொளு.31)
வெற்றியைக் கொண்ட மன்னனது புகழைப்பாடும் விறலியை வள்ளலிடத்தில் ஆற்றுப்படுத்தல் என்று பொருள்.
சில்வளைக்கைச் செவ்வாய் விறலிசெருப் படையான்
பல்புகழ் பாடிப் படர்தியேல் – நல் அவையோர்
ஏத்த இழை அணிந்(து) இன்னே வருதியால்
பூத்த கொடிபோல் புனைந்து
‘விறலியே! படைவலிமை மிக்க அவ்வள்ளலின் புகழைப் பாடிக்கொண்டு சென்றால், அவன் தரும் அணிகலன்களால் பூங்கொடி போலப் பொலிவு பெறுவாய்’ என, வெண்பா விறலியை ஆற்றுப்படுத்தும் வகையைக் காட்டுகிறது.
பின்பயக்கும் எம்சொல்என
முற்படர்ந்த மொழிமிகுந்தன்று (கொளு.32)
‘பின்னர்ப் பயன்படும் என் பேச்சு எனச் சொல்லிய சான்றோர்களின் சொல்லைச் சிறப்பித்தல்’ என்பது பொருள். இவை அரசனுக்கு நன்மை தரக் கூடிய சொற்கள்.
வெண்பா, அவ்வறிவுரையின் பெருமையைக் கூறுகிறது. ‘அரசன் எம் சொல்லைக் கேட்டு அதன் வழி நடப்பானாயின் கடல் சூழ்ந்த இந்த நிலவுலகத்தை அடையப் பெறுவான்’ என்று சான்றோர் கூறுவதாக வெண்பா காட்டுகிறது. ‘வாயுறை வாழ்த்து’ என்பது சிற்றிலக்கிய வகையாகவும் இருக்கிறது.
மறம்திரி(வு) இல்லா மன்பெரும் சூழ்ச்சி
அறம் தெரி கோலாற்(கு) அறிய உரைத்தன்று (கொளு.33)
‘அறத்தினை அறிந்த செங்கோல் மன்னவனுக்கு வீரத்திற்கு வழுவில்லாத பெரும் கருத்தினை உணரும்படி கூறுதல்’ என்பது பொருள். வெண்பா, வேந்தனுக்குக் கூறப்படும் அறிவுரை ஒன்றைக் காட்டுகிறது.
‘வேந்தே! சான்றோர், மூத்தோர், பெற்றோர் போன்றோரிடம் அடக்கத்துடன் ஒழுகுதலே மிக்க நலம் பயக்கும்’ என்பது வெண்பா காட்டும் அறிவுரை. புறநானூற்றில் இத்துறையில் அமைந்த பாடல்கள் உள்ளன.
நால்திசையும் புகழ்பெருக
வீற்றிருந்தான் குடைபுகழ்ந்தன்று (கொளு.34)
‘நான்கு திசைகளிலும் தன் புகழ் பெருகும்படி அரசுவீற்றிருந்த மன்னனின் குடையைப் புகழ்தல்’ என்பது பொருள்.
சார்ந்தோர்க்கு நிழல் தருவதாகவும் சாராதோர்க்கு அழல் தருவதாகவும் குடை அமைகிறது என வெண்பா காட்டுகிறது.
‘தன்னிழலோர் எல்லோர்க்கும் தண்கதிராம் தற்சேரா
வெந்நிழலோர் எல்லோர்க்கும் வெங்கதிராம்……. ……’’
‘தன்னைச் சேர்ந்தார்க்குக் குளிர்ந்த நிழல் தந்து, தன் பகைவர்களுக்குக் கதிரவன்போல் வெப்பம் தரும்’ என்று குடையை வெண்பா சிறப்பிக்கிறது.
கயக்கருங் கடல்தானை
வயக்களிற்றான் வாள்புகழ்ந்தன்று (கொளு.35)
எனக் கொளு விளக்குகிறது. ‘கலக்குவதற்கு இயலாத பெரிய கடல் போன்ற படையினையும் வலிமை மிக்க களிற்றையும் உடைய அரசனது வாளைப் புகழ்தல்’ என்பது பொருள்.
வெற்றி மன்னனுடைய வாளின் சிறப்பை வெண்பா சிறப்பிக்கிறது. ‘அரண்மனையுள் மகளிர் அரசனது செங்கோலின் சிறப்பைப்பாட, வெற்றியைப் பெறும் பொருட்டு அவன் கைவாள் சினத்தை வெளிப்படுத்தும்’ எனக் காட்டுகிறது, வெண்பா.
எண்ணரும் சீர்த்தி இறைவன் எய்தி
மண்ணும் மங்கல மலிவுஉரைத் தன்று (கொளு.36)
எனக் குறிப்பிடுகின்றது.
‘எண்ணுதற்கரிய பெரும் புகழைக் கொண்ட அரசன் திருமுழுக்குக் கொள்ளும் சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள்.
அரசன் கங்கை நீரில் நீராடிய சிறப்பை வெண்பா காட்டுகிறது. ‘பெண்கள் வாழ்த்த, அரசன் கங்கைப் பெண்ணின் நீராகிய மார்பைத் தழுவினான்’ என்று நீராடிய சிறப்பு காட்டப்படுகிறது. மண்ணுமங்கலம் உழிஞைத் திணையிலும் துறையாக உள்ளது.
இன்னது செய்தல் இயல்பென இறைவன்
முன்னின்(று) அறிவன் மொழிதொடர்ந் தன்று (கொளு.37)
‘சான்றோர் அரசன் முன்னே நின்று இன்ன செயலைச் செய்தல் அரசர்க்கு இயல்பாகும் என்று மெய்ம்மொழியினைச் சொல்லுதல்’ என்பது பொருள்.
வெண்பா இதனைச் சிறப்பாக விளக்குகிறது.
ஒன்றில் இரண்(டு) ஆய்ந்து மூன்(று)அடக்கி நான்கினால்
வென்று களம்கொண்ட வேல்வேந்தே – சென்று(உ)லாம்
ஆழ்கடல் சூழ் வையகத்துள் ஐந்துவென்று ஆறுஅகற்றி
ஏழ் கடிந்து இன்புற்(று) இரு
“மெய்யறிவு ஒன்றினால் நன்மை தீமை இரண்டையும் ஆய்ந்து, பகை நட்பு நொதுமல் என்ற முப்பகுதியையும் கண்டு, தன் நால்வகைப் படையாலே வென்று போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட வேல் வேந்தனை, இவ்வுலகில் ஐம்பொறிகளையும் அறிவால் வென்று படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறு உறுப்புகளையும் பெருக்கி, வேட்டம் (பேராசை), கடுஞ்சொல், மிகுதண்டம் (அளவுக்கு மீறிய தண்டனை), சூது, பொருளீட்டம் (பொருள் சேர்த்தல்), கள், காமம் என்ற ஏழு குற்றங்களையும் நீக்கி, இன்புற்றிருப்பாயாக!’’ என்று கூறுவதை ஓம்படை என வெண்பா காட்டுகிறது.
வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப
வழிவழி சிறக்கென வாய்மொழிந் தன்று (கொளு.38)
நீ வழிபடுகின்ற கடவுள் உனக்குப் பாதுகாவலாக இருக்க, நீ வழிவழி சிறந்து வாழ்க என வாழ்த்துதல் என்பது பொருள்.
வெண்பா இதனை விளக்குகிறது. ‘சூலத்தையும் கொன்றை மாலையையும் கொண்ட இறைவன் பாதுகாக்க, நீ நாவலந்தீவில் நிலைத்து நிற்கும் மாமேரு என்னும் மலை போல நெடுங்காலம் இவ்வுலகில் நிலைத்து வாழ்வாயாக என்று வாழ்த்துவதை வெண்பா காட்டுகிறது.
மூவர்கொடி உள்ளும் ஒன்றொடு பொரீஇ
மேவரு மன்னவன் கொடிபுகழ்ந் தன்று (கொளு.39)
‘திருமால் சிவன் பிரமன் என்னும் முதற்கடவுளர் மூவருடைய கொடிகளுள் ஒன்றை உவமைகாட்டி மன்னனுடைய கொடியைப் புகழ்தல்’ என்பது பொருள்.
மன்னன் ஒருவனது கொடியைத் திருமாலின் கருடக் கொடியுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறது வெண்பா. ‘மன்னன் கொடி பல்யானை மன்னர்கள் பணிந்து வணங்க, அழகிய கண்களையும் நெடிய திருமுடியினையும் காயாம் பூவை ஒத்த மேனியையும் உடையவனின் கருடக் கொடிக்கு ஒப்ப ஓங்குக’ என வெண்பா காட்டுகிறது.
சூழுநேமியான் சோஎறிந்த
வீழாச்சீர் விறல்மிகுத்தன்று (கொளு.40)
‘ஆழிப்படையை உடைய திருமால், சோ என்னும் கோட்டையினை அழித்த வெற்றியைக் கூறுதல்’ என்பது பொருள்.
‘திருமால் கருணை காட்டாமல் சினந்து நிற்கும் அளவில் எதிரிகளுடைய வீரக்கழல்கள் நெகிழ்கின்றன. கண்கள் அழல்கின்றன; அவர்தம் மகளிர் மயங்குகின்றனர்; அவர்கள் கோட்டை நெருப்பால் சூழப்பட்டது; திருமாலுடைய மாயம் இத்தன்மையது என்பதால் அவனைப் பசுக்கூட்டத்தை மேய்க்கும் இடையன் என்று கருதவேண்டாம்’, இவ்வாறு வெண்பா சிறப்பிக்கிறது.
பூண்முலையார் மனம்உருக
வேல்முருகற்கு வெறிஆடின்று (கொளு.41)
‘அணிகலன்களை அணிந்த மகளிர் தங்கள் நெஞ்சம் நெகிழும்படி வேல் முருகனுக்கு வெறி என்னும் கூத்தை ஆடுதல் என்பது பொருள். வெண்பா வெறிக் கூத்து ஆடும் முறையை விளக்குகின்றது, ‘இளநங்கையர்கள் இசைக்கருவிகளின் முழக்கத்திடையே சூலத்தை ஏந்திய சிவபெருமானின் மகனாகிய முருகனுக்காக வேலனுடன் ஆடும் வெறிக்கூத்து வீடுபேறு நல்குவது’ என்று வெண்பா விளக்குகிறது.
இருங்கண்வானத்(து) இமையோர்உழைப்
பெரும்புலவனை ஆற்றுப்படுத்தன்று (கொளு.42)
பரந்த வானுலகத்தில் வாழும் தேவர்களிடத்துப் பேரறிவாளனை வழிப்படுத்தல் என்பது பொருள்.
ஆற்றுப்படை முறையை வெண்பா காட்டுகிறது.
வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் வடிவத்தோய் நீயும் – பொறிகட்கு
இருள்ஈயும் ஞாலத்(து) இடரெல்லாம் நீங்க
அருள்ஈயும் ஆழி அவன்
‘அறிஞனே! அருவி ஒலிக்கும் வேங்கட மலைக்குச் சென்றால், அங்கு எழுந்தருளியுள்ள சக்கரப்படையைக் கொண்ட திருமால் ஐம்பொறிகளுக்கும் மயக்கத்தைத் தருகிற இவ்வுலகத் துன்பங்கள் எல்லாம் உன்னை விட்டு நீங்கும்படி உனக்குத் திருவருளை வழங்குவான்,’ இவ்வாறு வெண்பா கிடைக்கக் கூடிய அருளையும் கூறுகிறது.
இன்னதொன்(று) எய்துதும் இருநிலத்(து) யாம்எனத்
துன்னரும் கடவுள் தொடுகழல் தொழுதன்று (கொளு.43)
‘பெரிய நிலவுலகத்தில் யாம் இன்ன ஒரு பேற்றைப் பெறுவோமாக என்று கிடைத்தற்கரிய தெய்வத்தின் வீரக்கழல் கட்டிய திருவடியைத் தொழுதல்’ என்பது பொருள்.
வெண்பாவில் இதன் விளக்கம் காணப்படுகிறது. ‘பிறை சூடிய இறைவனே. பேய்கள் சூழ்ந்த சுடுகாடாகிய சாம்பல் அரங்கத்தில் ஓயாமல் ஆடியும் களைக்காத உன் திருவடிகளைப் பலமுறை பணிந்து பாடி வணங்குவோம்’ என்பது புகழ்ந்தனர் பரவல்.
வயங்கியபுகழ் வானவனைப்
பயன்கருதப் பழிச்சினர் பணிந்தன்று (கொளு.44)
புகழையுடைய இறைவனை இவ்வுலகப் பேறுகளைப் பெறக் கருதி வாழ்த்திப் பணிதல் என்பது இதன் பொருள்.
வீடுபேறு பெறக் கருதி வணங்காமல் உலகியல் பயன் கருதி வணங்குதல். ஈசனை வணங்கினால் எல்லாம் பெறலாம் என வெண்பா சுட்டுகிறது. ‘உமையவளை ஒருபக்கத்தே கொண்ட கூத்தாடும் பெருமானின் கழுத்தில் மாலையாகத் தவழும் பாம்பு அவனைத் தழுவும் பேறு பெற்றுள்ளது; ஆதலால் அவனுடைய அடியைப் பணிந்தவர்கள் என்னதான் பெற முடியாது?’ என்று வெண்பா காட்டுகிறது.
தண்டாக் காதல் தளரியல் தலைவன்
வண்தார் விரும்பிய வகையுரைத் தன்று (கொளு.45)
குறையாத காதலையும் அசையும் தன்மையையும் கொண்ட தலைவி, தலைவனது மாலையை விரும்புதல் என்பதாகக் கொளு விளக்கும்.
மழைபெய்யும் கார்காலத்து மாலையில் தனிமை கொண்டு ஏங்கும் தலைவி, சோழ அரசன் இரவில் தன்னிடத்து வந்து தன்னைத் தழுவுவானா? என ஏங்குவதாக வெண்பா கைக்கிளையின் இயல்பை விளக்குகிறது.
பெய்கழல் பெருந்தகை பேணா முயக்கிவர்ந்து
மல்கிருள் செல்வோள் வகைஉரைத் தன்று (கொளு.46)
வீரக்கழலையும் தலைமைத் தன்மையையுமுடைய தலைவன் விரும்பாமல் இருந்தும், அவன் தழுவுதலை விரும்பி இரவில் அவனிடத்துச் செல்பவளது இயல்பைக் கூறுவது என்பது இதன் விளக்கம்.
பாண்டியனது மலைபோன்ற தோள்களைத் தழுவ ஆள் நடமாட்டம் ஓய்ந்த அவனது தெருவில் இருளில் செல்லும் பெண் அஞ்சாதிருக்கும் வகையில், மேகம் மின்னி வெளிச்சம் தந்தது என வெண்பா விளக்கமளிக்கிறது.
வில்லேர் நுதலி விறலோன் மார்பம்
புல்லேம் யாமெனப் புலந்துரைத் தன்று (கொளு.47)
என்கிறது கொளு. அழகிய நெற்றியையுடைய பெண் வீரனது மார்பைத் தழுவேன் என ஊடுதல் என்பது இதன் விளக்கம்.
பரத்தையர் பலரும் தோயும் தலைவனது மார்பில் யாம் தோயோம் என ஊடியதாக வெண்பா கூறுகிறது. பெண்கள் பலரும் விரும்பும் தன்மையை உடையவன் தலைவன் என்ற பாராட்டு ஊடலுக்குள் புதைந்திருக்கிறது.
இமையா நாட்டத்(து) இயங்கிழை மகளிர்
அமையாக் காதல் அமரரை மகிழ்ந்தன்று (கொளு.48)
இமையாத தன்மையுடைய தெய்வ மகளிர் கடவுளரை விரும்பியது என்பது பொருள்.
வெண்பா, உமாதேவியின் ஊடல் தீர்க்க முடியாது தவிக்கும் இறைவன் நிலையைக் காட்டித் தெய்வமகளிர் கடவுள் மீதுகொண்ட காதலை உணர்த்துகிறது.
முக்கணான் முயக்கம்வேட்ட
மக்கட் பெண்டிர் மலிவுரைத்தன்று (கொளு.49)
என்று கொளு கூறுகிறது. மூன்று கண்களைக் கொண்ட சிவனைத் தழுவ விரும்பிய மானிடப் பெண்களின் தன்மையைக் கூறுவது என்பது பொருள்.
பெண்ணுடைய நலத்தைச் சுவைத்தவன் இயற்கை வளம் மிக்க திருப்பாசூரைப் பதியாகக் கொண்டவன் என்று வெண்பா மானிடப் பெண்டிர் கடவுளை விரும்பியதைப் புலப்படுத்துகிறது.
இளமைந்தர் நலம்வேட்ட
வளமங்கையர் வகையுரைத்தன்று (கொளு.50)
என்பது கொளு. குழவிப்பருவத்து மைந்தரிடம் அன்பு செலுத்தும் பெண்களின் இயல்பைக் கூறுதல் என்பது இதன் பொருள்.
‘சிறுவனே! இச்சிறுமி வருந்த அவள் பந்தினை ஒளித்துவைத்தாய். உன் தந்தையே வந்து பரிந்துரைத்தாலும் என்னை அணைத்துக்கொள்ள விடேன்’ என்று தாய் கூறுவதை வெண்பா காட்டுகிறது. சிறுவனது குறும்பு விளையாட்டைக் குறைப்பதற்காகக் கூறுதல் போன்று இது அமைந்துள்ளது.
நீங்காக் காதல் மைந்தரும் மகளிரும்
பாங்குறக் கூடும் பதியுரைத் தன்று (கொளு.51)
என்பது கொளு.
‘கொண்ட ஊடல் அகல மனநெகிழ்ச்சியுடன் தழுவி மகிழும் பெண்டிர் இரவு நீடிக்கட்டும் என்று கைகூப்பி வணங்கும் இயல்பையுடையது காஞ்சிநகர்’ என வெண்பா இதனை விளக்குகிறது.
பாடம் - 4
பொதுவியல் திணை என்பது வெட்சி முதல் பாடாண் வரையிலான ஒன்பது திணைகளில் அடக்கிக் கூறமுடியாத பொதுவான செய்திகளைக் கூறும் திணை. இது யாப்பு முதலான பிற இலக்கண நூல்களில் இடம்பெறுகிற ஒழிபியல் போன்றது. இது பொதுவியல் பால, சிறப்பிற் பொதுவியல் பால, காஞ்சிப் பொதுவியல்பால, முல்லைப் பொதுவியல்பால என நான்கு பிரிவுகளில் செய்திகளைக் கூறுகிறது.
மூவேந்தர்களுக்குரிய அடையாளப் பூவைச் சிறப்பித்தல், தளர்ச்சி யில்லாத வீரத்தைச் சிறப்பித்தல், போர்க்களத்து வீரச் செயல் புரிந்து இறந்துவிட்ட வீரனுக்கு நடுகல் நாட்டல் ஆகிய செய்திகள் பொதுவியற்பால என்ற முதல் பகுதியில் கூறப் படுகின்றன. இப்பகுப்பின் அடிப்படையில் பொதுவியல்பால என்ற பகுதிச் செய்திகள் பாடத்தில், மூவேந்தருக்குரிய பூக்கள், வீரத்தைப் போற்றுதல், நடுகல் ஆகிய மூன்று தலைப்புகளில் தரப்படுகின்றன.
சிறப்பிற் பொதுவியல்பால என்ற இரண்டாம் பகுதியில் பெண்ணோ ஆணோ தன் இணையை இழந்து தவிக்கும் நிலையும், தாய் குழந்தையை இழந்து தவிப்பதும், பிள்ளை தாயை இழப்பதும், இழப்பு வருமோ என நிமித்தங்கள் கண்டு அஞ்சுவதுமாகிய இழப்புச் செய்திகள் சொல்லப்படுகின்றன. இவை சிறப்புப் பொதுவியல் என்ற தலைப்பில் பாடத்தில் இடம் பெறுகின்றன.
தொல்காப்பியர் காஞ்சித்திணையில் குறிப்பிட்ட நிலையாமைச் செய்திகளும் உறுதிப்பொருள் குறித்த செய்திகளும் புறப்பொருள் வெண்பா மாலையில் காஞ்சிப் பொதுவியற் பால என்ற மூன்றாம் பகுதியில் கூறப்படுகின்றன. காஞ்சித் திணையைப் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் போர்த் திணையாக, மண்மீட்கும் செயலைக் குறிப்பதாகக் கொண்டுள்ளார் என்பதை அத்திணை குறித்த பாடத்தில் அறிந்திருப்பீர்கள். எனவே இச்செய்திகள் பொதுவியலில் இடம்பெற்றுள்ளன. பாடத்தில் இச்செய்திகள் காஞ்சிப் பொதுவியல் என்ற தலைப்பில் தரப்படுகின்றன.
முல்லைப் பொதுவியற்பால என்னும் நான்காம் பகுதியில் பிரிந்த தலைவன் தலைவி கூடி மகிழ்வதும், இல்லறச் சிறப்பும், தலைவியின் கற்பு மாண்பும் பேசப்படுகின்றன. முல்லைப் பொதுவியல் என்ற தலைப்பில் இவற்றை இப்பாடம் தருகிறது.
நான்கு பகுதிகளுக்கும் முறையே 12, 11, 6, 8 என மொத்தம் 37 துறைகள் இத்திணையில் கூறப்படுகின்றன. அவ்வத் துறைகளுக்கான கொளுக்கள் பாடத்தில் தரப்படுகின்றன. வெண்பாவின் கருத்து, தரப்படுகிறது. ஒரு சில வெண்பாக்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன. இணையப் பல்கலைக்கழகத்தின் மின்நூலகத்தில் உள்ள புறப்பொருள் வெண்பா மாலை நூலில் காணும் வெண்பாக்களை நீங்கள் படித்து மகிழலாம்..
போந்தை வேம்பே ஆர்என வரூஉம்
மாபெருஞ் தானையர் மலைந்த பூவும் (புறத்திணை இயல். 5)
என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பொதுவான செய்தி என்பதால் பொதுவியலில் இது கூறப்படுகிறது.
கலவா மன்னர் கண்ணுறு ஞாட்பில்
புலவேல் வானவன் பூப்புகழ்ந் தன்று
என்று விளக்குகிறது. பகைவேந்தரோடு நிகழ்த்தும் போரில் புலால்நாறும் வேலினையுடைய சேரன் சூடும் பூவைப் புகழ்தல் என்பது இதன்பொருள். இதற்குரிய வெண்பா பனம்பூவின் சிறப்பைப் புலப்படுத்துகிறது. போர் வரின் சேரன் தனக்குரிய கொல்லிமலையில் பூத்த செங்கழுநீரைச் சூடாமல் பனம்பூவைச் சூடுவான் என்று சிறப்பித்துக் கூறுகிறது.
விரும்பார் அமரிடை வெல்போர் வழுதி
சுரும்பார் முடிமிசைப் பூப்புகழ்ந் தன்று
என்று விளக்குகிறது. பகைவருடனான போரின்போது பாண்டியன் தன் முடியில் சூடும் வேப்பம்பூவைப் புகழ்தல் என்பது இதன் பொருள். ‘வீரர்கள் போர்ப்பூவைச் சூடிக்கொள்ளப் பாண்டியன் வேப்பம் பூக்கொத்தினைத் தன் மகுடத்தில் சூடிக்கொள்வான்’ என வெண்பா விளக்குகிறது.
விறல்படை மறவர் வெஞ்சமம் காணின்
மறப்போர்ச் செம்பியன் மலைபூ உரைத்தன்று
என்கிறது. பகைவரது கொடிய போரினை எதிர்கொள்ளும் சோழன் புனைந்த ஆத்தி மலரைப் புகழ்தல் என்பது இதன்பொருள்.
வெண்பா இதனை அழகுற விளக்குகிறது.
கொல்களி(று) ஊர்வர் கொலைமலி வாள்மறவர்
வெல்கழல் வீக்குவர் வேல்இளையர் – மல்கும்
கலங்கல் ஒலிபுனல் காவிரி நாடன்
அலங்கல் அமர்அழுவத் தார்
‘கொலைத்தொழில் சிறந்த வாள் வீரர்கள் கொல்யானையைச் செலுத்துவர்; வெல்லும் ஆற்றலை மிக்க வேல்வீரர் வீரக்கழலை அணிவர்; காவிரி நாடனான சோழன் ஆத்திமாலை சூடுவான்’ என்பது வெண்பாவின் கருத்து.
துன்னரும் சிறப்பில் தொடுகழல் மன்னனை
உன்னம் சேர்த்தி உறுபுகழ் மலிந்தன்று
என்பது கொளு. ‘சிறப்பையுடையவனும் கழல் அணிந்தவனுமாகிய மன்னனை உன்ன மரத்தோடு சேர்த்து அவன் புகழைக் கூறுதல்’ என்பது பொருள். ‘இவ்வரசனுக்கு அடங்காத மன்னரெல்லாம் இப்பொழுது தோற்று அடங்கும்வண்ணம் உன்ன மரமே! நம் அரசனின் நல் ஊழை விளக்குவது போன்று தளிர்ப்பாயாக’ என்பது வெண்பா. அரசனின் வெற்றிக்காக உன்னமரத்தினை வேண்டுதல் என்பது இதில் புலப்படுகிறது. உன்ன மரத்தைக் கொண்டு நிமித்தம் பார்க்கும் வழக்கம் இருந்திருப்பது இதனால் புலப்படுகிறது.
ஏழகம் ஊரினும் இன்னன் என்றவன்
தாழ்வில் ஊக்கமொடு தகைபுகழ்ந் தன்று
ஏந்துபுகழ் உலகின் இளமை நோக்கான்
வேந்து நிற்றலும் ஏழக நிலையே
என்பன கொளுக்கள். ‘ஆட்டுக்கிடாயில் ஊர்ந்து போருக்குச் செல்லும் நிலையினன் எனினும் அவன் வீரமும் ஊக்கமும் குறைவுடையன அல்ல என்று பாராட்டுதல்’ என்பது முதல் கொளுவின் விளக்கம்.
‘ஆட்டுக்கிடாயின் ஊரும் இளையவன் ஆயினும் அரசனாக ஆளும் தகுதிமிக்கவன் என்றும் போற்றுதல்’ என்பது இரண்டாம் கொளுவின் விளக்கம். யானை, குதிரை மேல் அன்றி ஓர் ஆட்டுக்கிடாய் மீது ஏறிச் சென்றாலும் அரசன் ஆற்றல் குறைந்ததன்று; அவனுடைய பகைவர்கள் அவனுக்கு அஞ்சித் தாழிட்டு இருப்பர்’ என்பது முதல் கொளுவிற்கான வெண்பா தரும் விளக்கம். ‘ஆட்டுக்கிடாய் மேல் ஏறி விளையாடும் இளமைப் பருவத்திலேயே அரசாட்சியை ஏற்றுத் திறம்பட ஆளும் இவனை இளையவன் என்று விலக்க வேண்டாம்; சிங்கம் குட்டி எனினும் பெரிய யானையை அழிக்கும் ஆற்றலுடையது’ என்பது இரண்டாம் கொளுவிற்கான வெண்பாவின் கருத்தாகும்.
அடுமுரண் அகற்றும் ஆள்உகு ஞாட்பில்
கடுமுரண் வயவன் கழல்புனைந் தன்று
என்பது கொளு. வீரர்கள் இறந்துபடும் கடிய போரில் கலந்து கொள்வதற்காக அரசன் ஒருவன் கழல் அணிந்த நிலையைப் புகழ்வது என்பது பொருள். ‘சில ஆண்டுகளுக்கு முன்னர்க் கிண்கிணி அணிந்த கால்களில் இவ்வரசன் வீரக்கழலைக் கட்டிக் கொண்ட செய்தி, பகைவர்க்கு அழிவைத் தருவது; இவனை எதிர்ப்பவர் வீர சுவர்க்கம் புகுதல் உறுதி’ என்பது வெண்பா தரும் விளக்கம்.
காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று
இருமூன்று மரபில் கல்லொடு புணர (புறத்திணை இயல், 5)
என்பார். இதனையே காதைகளாக இளங்கோவடிகள் காட்சிக்காதை முதலாக அமைத்தார். தமிழகத்தில் இத்தகைய நடுகற்கள் நிறையக் கிடக்கின்றன. புறப்பொருள் வெண்பா மாலை நடுகல் அமைத்தலைத் துறைகளாகப் பொதுவியல் திணையில் கூறுகிறது. கல்காண்டல், கல்கோள் நிலை, கல் நீர்ப்படுத்தல், கல் நடுதல், கல் முறைப்பழிச்சல், இற்கொண்டு புகுதல் என்பன நடுகல் பற்றிய துறைகள்.
ஆனா வென்றி அமரில்வீழ்ந் தோற்குக்
கான நீளிடைக் கல்கண் டன்று
என்பது கொளு. பெரிய வெற்றியைப் பெற்ற போரில் இறந்துவிட்ட வீரனுக்கு நடுகல் செய்யக் காட்டில் கல்லைத் தேர்ந்தெடுத்தல் என்பது பொருள். ‘பகைவரைப் பொருது அவர் அம்பாலே மாண்டு விண்ணுலகம் சென்ற இளம் வீரனுக்கு நடுகல் ஆதற்குரிய கல்லினைத் தேர்ந்தெடுத்தனர் வீரர்கள்’ என்பது வெண்பா தரும் விளக்கம்.
மண்மருளத் துடிகறங்க
விண்மேயாற்குக் கல்கொண்டன்று
என்பது. ‘மண் மருளும் வண்ணம் துடியை முழக்கி, வீரசுவர்க்கம் அடைந்த வீரனுக்குக்குரிய கல்லினை எடுப்பது’ என்பது பொருள். ‘நீரையும் மலரையும் சிதறி நறும்புகை காட்டி மணிகளை ஒலிக்கச் செய்து, பகைவரது சினத்தைக் கிளறிப் போரில் மாண்டவனுக்கு நடுகல் ஆதற்குரிய கல்லைக் கைக்கொண்டார்’ என்று வெண்பா விளக்கமளிக்கிறது.
வண்டுசூழ் தாமம் புடையே அலம்வரக்
கண்டு கொண்ட கல்நீர்ப் படுத்தன்று
என்பது. வண்டுகள் சூழும் மாலை சூட்டப்பட்ட அக்கல்லினை நீரில் இடுதல் என்பது கொளுவின் பொருள். நீரில் இடப்பட்ட முறையினை வெண்பா விளக்குகிறது. ‘காடே எரியும் வண்ணம் கதிரவன் வெப்பத்தைப் பொழிதலால், அந்த வெப்பம் தணிய நறுமணப் பொருள்களால் மஞ்சனமாட்டி வாவியில் கல்லை இட்டனர்’ என்பது வெண்பாவின் கருத்து.
கல் நீர்ப்படுத்தல் என்பதற்கு இன்னொரு விளக்கத்தையும் புறப்பொருள் வெண்பா மாலை தருகிறது. கல் நடும் இடத்திற்கு அதனைக் கொண்டுபோதலும் கல் நீர்ப்படுத்தல் என்பதற்குப் பொருளாகும் என்கிறது.
ஓங்கியகல் உய்த்தொழுக்கல்
ஆங்(கு)எண்ணினும் அத்துறைஆகும்
என்பது கொளு.
அவன்பெயர்கல் மிசைப்பொறித்துக்
கவின்பெறக் கல்நாட்டின்று
என்கிறது. ‘வீரனுடைய பெயரைக் கல்லில் செதுக்கி, அக்கல்லை நடுதல்’ என்பது பொருள்.
வெண்பா, கல் நடும் முறை பற்றியும் அதற்குச் செய்யப்படும் சிறப்பினையும் புலப்படுத்துகிறது.
மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப்
பீலி அணிந்து பெயர்பொறித்து – வேல்அமருள்
ஆண்தக நின்ற அமர்வெய்யோற்(கு) ஆகுஎன்று
காண்தக நாட்டினார் கல்
‘மாலைசூட்டி, மணி ஒலித்து, மதுவைத் தெளித்து, மயிற்பீலியைச் சூட்டி, அவன் பெயரை எழுதி வேற்போரில் ஆண்மைத்தன்மை வெளிப்படப் போரிட்ட வீரனுக்கு இது உருவமாகட்டும் என்று காணுமாறு கல்லை நட்டார்கள்’ என்கிறது வெண்பா.
நிழலவிர் எழில்மணிப்பூண்
கழல்வெய்யோன் கல்வாழ்த்தின்று
என்று விளக்குகிறது. ஒளி வீசும் அழகிய மணிஅணியையும் வீரக்கழலையும் உடைய வீரனுக்கு எடுக்கப்பட கல்லைப் புகழ்தல் என்பது பொருள். பாணனை விளித்துக் கல்லை வணங்குமாறு கூறுவதாக வெண்பா அமைந்துள்ளது. “பாணனே! வீரன், பகைவரைக் கொன்ற வீரத்தினைச் சொல்லிச் சொல்லி, பொறுக்க முடியாத துன்பத்தோடு இருக்கும் சுற்றத்தாரோடு, கொடைத் தன்மை மிக்க இவ்வள்ளலுக்கு எடுக்கப்பட்ட கல்லினை வணங்கிச் செல்வாயாக” என்கிறது வெண்பா.
வேத்த மருள் விளிந்தோன் கல்லென
ஏத்தினர் துவன்றி இற்கொண்டு புக்கன்று
என விளக்குகிறது. ‘வேந்தர்களுக்கிடையிலான போரில் இறந்தவனுக்கு எடுக்கப்பட்ட கல் என்று சொல்லி வாழ்த்தி ஒன்றுகூடிக் கோயில் எடுத்தல்’ என்பது இதன் விளக்கம். நடுகல்லைச் சுற்றிக் கோயில் எடுத்துச் சிறப்பித்தமையை வெண்பா காட்டுகிறது; ‘வாளுக்குப் பலிஊட்டி மணி ஒலிக்க, வீரர் பலரும் கோயிலினுள் வீரக்கல்லை இருக்கச் செய்தார்’ என்கிறது.
காம்புயர் கடத்திடைக் கணவனை இழந்த
பூங்கொடி மடந்தை புலம்(பு)உரைத் தன்று
என விளக்குகிறது. மூங்கில் நிறைந்த பாலை நிலத்தில் எதிர்பாரா வகையில் கணவனை இழந்த தலைவியின் தனிமையைக் கூறுதல் என்பது பொருள். வெண்பா, இத்துயரின் கொடுமையைச் சித்திரித்துக் காட்டுகிறது; கணவனை இழந்த பெண்ணின் கூற்றாக அமைக்கப்பட்டுள்ளது.
நீர்மலி கண்ணொடு நின்றேன் நிலைஇரங்காய்
தார்மலி மார்பன் தகைஅகலம் – சூர்மகளே!
வெள்ளில் விளை(வு)உதிரும் வேய்ஓங்கும்
வெம்சுரத்துக்
கொள்ளல்நீ கோடல் கொடிது
‘பேய்மகளே! விளங்கனிகள் உதிரும் இக்கொடிய பாலையில் கணவன் இறக்க, அவன் பிணத்தை வைத்துப் புலம்பும் என் துயர்கண்டு இரங்காமல் அவன் உடலை உன் உணவுக்காகக் கைப்பற்ற முயலும் உன் செயல் மிகக் கொடியது’ என்று பெண்ணின் துயரைக் காட்டுகிறது.
மூதுஅரில் நிவந்த முதுகழை ஆரிடைக்
காதலி இழந்த கணவன்நிலை உரைத்தன்று
என்பது கொளு. முதிர்ந்த மூங்கில்களையுடைய பாலை நிலத்தில் தலைவியை இழந்த வீரனின் நிலையைச் சொல்வது என்பது பொருள். வெண்பா, வீரனின் கூற்றாக அமைக்கப்பட்டுள்ளது. ‘நெருப்பு மூட்டியது போன்ற வெப்பம் மிக்க பாலையில் வஞ்சனையாக என் மனைவியின் உயிரைக் கைப்பற்றிய கூற்றுவனே! என் கண்முன் வந்தால் என் கைவலோல் உன்னை மாய்ப்பேன்’ என்பது வெண்பாவின் கருத்து.
புனைஇழை இழந்தபின் புலம்பொடு வைகி
மனையகத்(து) உறையும் மைந்தன்நிலை உரைத்தன்று
என விளக்குகிறது. ‘நகையணிந்த மனைவியை இழந்து தனிமையில் வீட்டில் துன்புறும் ஆண்மகன் நிலையைக் கூறுதல்’ என்பது இதன்பொருள். ஒருவன் மனைவியை இழந்த செய்தியைக் கேட்பவன் கூற்றாக வெண்பா அமைந்துள்ளது. ‘தன் மனைவியை இழந்து அதனால் வருந்தும் வள்ளலாகிய இளைய தலைவனின் துயர்நிலையைக் களோமல் என் காதுகள் செவிடாகட்டும்’ என்று கூறுவதாக வெண்பா அமைந்துள்ளது.
குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக்
கருந்தடங் கண்ணி கைம்மைகூ றின்று
என விளக்கமளிக்கிறது. ‘குருந்தப் பூ மாலை அணிந்த கணவன் இறக்க, பெரிய கண்களை உடைய மனைவி கைம்மை நிலையை ஏற்றதைக் கூறுதல்’ என்பது பொருள். கைம்மை பூண்ட பெண்ணின் நோன்பு நிலையை வெண்பா விளக்குகிறது. ‘தன் கணவனைக் கூற்றுவன் பிரித்துவிட, தான் இறந்துபோகாது நொந்து வருந்தும் மனைவி, தன்னை விட்டுவிட்டு இறந்து போனவனின் மாலையிடம் கோபித்துத் தான் பூச்சூடாமல் வெற்றுத் தரையில் படுத்துக் கரிய இலை உணவை உண்டு வாழ்கிறாள்’ என்கிறது வெண்பா.
இன்கதிர் முறுவல் பாலகன் என்னும்
தன்கடன் இறுத்ததாய் தபுநிலை உரைத்தன்று
என்று விளக்குகிறது. இனிய ஒளிநகையுடைய பிள்ளை என்னும் தான் கொடுக்க வேண்டியதனைக் கொடுத்து, தாய் சிலநாட்களில் இறந்தமையைச் சொல்வது என்பது பொருள். இளம்வயதினளான தாய் இறந்த கொடுமையை வெண்பா விளக்குகிறது. ‘உலக இயல்பு மிகக் கொடியது! முள்போன்ற பற்களையுடைய தாய், பிள்ளையைத் தரவேண்டிய தன் கடமையை முடித்து விட்டு, கூற்றுவன் (சாவின்) வாயில் அகப்பட்டாள்’ என்று வெண்பா இரங்குகிறது.
பல்லிதழ் மழைக்கண் பாலகன் மாய்ந்தெனப்
புல்லிய பெருங்கிளைப் பூசல்கூ றின்று
என்பது ஒரு விளக்கம். ‘மழைபோல் குளிர்ந்த அழகிய பூப் போன்ற கண்களையுடைய சிறுவன் இறந்தானாகப் பெரிய சுற்றத்தினர் கொண்ட துயரப் புலம்பலைக் கூறுதல்’ என்பது பொருள். ‘பிள்ளைக்காகத் தன்னிடத்தே பாலையும் கொஞ்சும் சொற்களையும் கொண்ட தாய் இருக்க, அவ்வீட்டின் மூலமாகிய குழந்தையைக் கைப்பற்றிய கூற்றுவன், பிரிவால் புலம்பும் உறவினரின் துயரத்திற்கு இரங்குவானோ?’ என்று வெண்பா இதனைப் புலப்படுத்துகிறது.
பூசல் மயக்கு என்பதற்கு இன்னொரு விளக்கமும் தரப் பட்டுள்ளது. மன்னன் இறக்க அந்நாட்டிலுள்ளோர் வருந்துவதும் இதில் அடங்கும். இதனைக் கொளு,
வேந்தன் மாய்ந்தென வியலிடம் புலம்பினும்
ஆய்ந்த புலவர் அதுவென மொழிப
என விளக்குகிறது. இதனையும் வெண்பா புலப்படுத்துகிறது.
கதிர்வேல் கணவனொடு கனைஎரி முழுக
மதிஏர் நுதலி மாலைநின்(று) அன்று
என விளக்குகிறது. ‘ஒளி மிகுந்த வேலைக் கொண்ட கொழுநன் இறக்க அவனை இடும் ஈம நெருப்பில் புக வேண்டிப் பிறை ஒத்த நெற்றியைக் கொண்ட மனைவி, மாலைக்காலத்தில் நின்றது’ என்பது இதன் விளக்கம். கண்டோர் கூற்றாக வெண்பா அமைந்துள்ளது.
‘பகைவரைக் கொல்வேன்; அல்லது களத்தில் மாய்வேன்’ என்று கூறிப் போருக்குச் சென்ற கணவன் சொன்னதை நினைத்த மனைவி, இறந்துபட்ட அவனை எரிக்கும் ஈமத்தீயில் அவனுக்குத் துணையாகத் தானும் புகுந்தாள்’ என வியந்து கூறுவதை வெண்பா காட்டுகிறது.
கயல்ஏர் கண்ணி கணவனொடு முடிய
வியல்நெறிச் செல்வோர் வியந்துரைத்(து) அன்று
என்பது ஒரு விளக்கம். கயல்விழிகளையுடையாள் தன் கணவன் இறந்த உடனே தானும் இறந்துவிட அவ்வழியே போவார்கள் கண்டு வியந்து சொல்லியது’ என்பது இதன் பொருள். வெண்பா, இருவரும் ஒருசேர இறந்ததனைக் கண்டோர் கூற்றாக அமைந்துள்ளது. ‘வேலினை உடைய வீரன் உயிரும் அவன் மனைவி உயிரும் ஒரே நேரத்தில் பிரிந்தது கண்டு அவர்களுக்கு இரண்டு உயிர்கள் என்று சொல்லுதல் தவறு; இருவருக்கும் உயிர் ஒன்றே என வேண்டும்’ என்கிறது வெண்பா.
வீரன் ஒருவன், பகைவருடைய அம்புகள் தன்மீது பாய்தலால், தன் செயலை முடிக்காமல் இறந்துபோனதைக் கூறுவதும் மூதானந்தத்தில் அடங்கும் என்பது இன்னொரு விளக்கம். அதற்கான கொளு,
கொடியான் கூர்ங்கணை குளிப்பத் தன்தொழில்
முடியான் அவிதலும் மூதா னந்தம்
என்பது. ‘போர் தொடங்கியவுடன் குதிரையில் ஏறிப் போர்க்களம் சென்று அனைவருக்கும் முன்னே நின்று பகைவர் அம்புகளை எல்லாம் தடுத்துப் படைவீரர்களுக்குக் கரை போல் நின்ற இவ்வீரன் பகைவர் அம்புகளால் விழுப்புண் பட்டு வெற்றித் தொழிலை முடிக்காமலேயே இறந்துவிட்டான்’ என்று போற்றுவதாக வெண்பா அமைந்துள்ளது.
ஆடமைத் தோளி விரிச்சியும் சொகினமும்
வேறுபட அஞ்சி விதுப்புற்(று) அன்று
என்று விளக்குகிறது. இது ஒரு விளக்கம். ‘மூங்கில் தோள்களையுடையாள் நற்சொல்லும் சகுனமும் மாறுபட அஞ்சி நடுக்கமுறுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா அவள் அச்சத்தை விளக்குகிறது. ‘அரசர்கள் ஆரவாரித்துச் செய்த போரிலே வேற்படைகளைத் தடுத்தவனுடைய மார்பில் பட்ட புண் ஆறவில்லை. நிமித்தமும் பொருத்தமாக இல்லை. அவன் புண் ஆறி வாழ்வானா? இப்பேதை என்ன ஆவாள்?’ என்பதாக வெண்பா அமைந்துள்ளது.
பெரும் போருக்குச் சென்ற கணவன் நிலை என்னாகுமோ? என மனைவி கவலைப்படுவதும் இத்துறையில் அடங்கும். இதற்கான கொளு,
தவப்பெரிய வெஞ்சமம்குறுகும்
அவற்(கு) இரங்கினும் அத்துறையாகும்
என விளக்குகிறது. ‘நிமித்தங்கள் மாறுபட்டுள்ளன; நற்சொல்லும் இசைவாயில்லை; மன்னர் பலர் கூடி வந்துள்ள இப்போருக்குச் சென்றுள்ளானே! என்ன ஆகுமோ?’ என்று மனைவி தவிப்பதை வெண்பா காட்டுகிறது.
விழுமம் கூர வேய்த்தோள் அரிவை
கொழுநன் வீயக் குழைத்(து) உயங் கின்று
என விளக்குகிறது. ‘மூங்கில் தோளாள், கணவன் இறப்பத் துன்பம் மிகுந்து வருந்துதல்’ என்பது பொருள். மனைவி கூற்றாக அமைந்துள்ள வெண்பா துறையைத் தெளிவுபடுத்துகிறது. ‘அவன் புகழ் பூமியில் தங்க, விண்ணுலகம் சென்றான் வீரன்; அவனுடன் உயிரோடு சேர்ந்து செல்லாமல், இன்னும் தன் உயிர் இருக்கிறதே’ என்று பெண் வருந்துவதாக வெண்பா அமைந்துள்ளது.
செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்
கையறவு உரைத்துக் கைசோர்ந்(து) அன்று
என விளக்குகிறது. ‘வீரக் கழல் அணிந்த மன்னன் இறந்தானாக, அவனால் புரக்கப்பட்டோர் வருந்தி உரைத்துச் செயலற்று இருத்தல்’ என்பது பொருள். வெண்பா, சுற்றத்தாருள் ஒருவர் கூற்றாக இதனை விளக்குகிறது. ‘ஈ’ என இரந்தோர்க்கு இல்லை என்ற வார்த்தையைச் சொல்லாத தாய் போன்ற அரசன், மாற்றாரோடு பொருது மறைந்தான். நீ என்னவானாய் நெஞ்சே’ என்று கையறுநிலையைப் புலப்படுத்துகிறது.
இறந்தவனுடைய புகழை அன்பு காரணமாகச் சொல்லினும் அதுவும் கையறு நிலையாகும் என்பது மற்றொரு விளக்கம். இதனைக் கொளு,
கழிந்தான் தன்புகழ் காதலித்(து) உரைப்பினும்
மொழிந்தனர் புலவர் அத்துறை என்ன
என விளக்குகிறது. வெண்பா மாலையில் கையறுநிலைத் துறை கரந்தைத் திணையிலும் கூறப்பட்டுள்ளது.
பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள்முடி(பு) உணரக்கூ றின்று
என விளக்குகிறது. ‘பலராலும் புகழப்படும் அறிவுடையோர் மாசற்ற அறம் முதலிய உறுதிப் பொருள்களின் இயல்பு இன்னதென. ஆராய்ந்து கூறிய செய்திகளைக் கூறுதல்’ என்பது பொருள். வெண்பா, சில உறுதிப் பொருள்களை எடுத்துக்காட்டுகிறது. ‘அருளுடைமையே அறம்; சேர்த்து வைக்காமல் வறியவர்களுக்குக் கொடுப்பதே செல்வம்; கணவன் விருப்பப்படி செயல்படும் கற்புடைய பெண்ணுடன் வாழ்வதே உண்மையான இன்பம்’ ஆகியவற்றை வெண்பா குறிப்பிடுகிறது.
மலைஓங்கிய மாநிலத்து
நிலையாமை நெறிஉரைத்தன்று
என விளக்குகிறது. ‘மலைகள் ஓங்கிய இம்மாநிலத்தின் நிலையாத தன்மையைச் சொல்லுதல்’ என்பது பொருள். ‘இவ்வுலகம் நிலையற்றது. இன்றோ நாளையோ எமன் நம்மைத் தேடி வரக்கூடும்; பாடுபட்டுப் பெரும்பொருளைச் சேர்த்து வைத்து, வறியோர்க்கு வழங்காது வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ள வேண்டாம்’ என வெண்பா நிலையாமை உணர்ந்து, நிலைத்ததைச் செய்ய வேண்டுகிறது.
எரிந்(து) இலங்கு சடைமுடி முனிவர்
புரிந்து கண்ட பொருள்மொழிந்(து) அன்று
என விளக்கமளிக்கிறது. ‘சடைமுடி முனிவர் தெளிந்து கூறும் உண்மையைச் சொல்லுதல்’ என்பது பொருள். ‘தீதான மயக்கத்திலே இருக்காமல் அகன்ற பூமியில், பெருமைமிக்க சடை தாங்கிய முனிவரின் வழியில் சென்று அருள் பெறுவாய் நெஞ்சே’ என வெண்பா இதனை மேலும் விளக்குகிறது.
நுழைபுலம் படர்ந்த நோய்அறு காட்சி
விழைபுலம் கடந்தோர் வீடுஉரைத்(து) அன்று
என விளக்குகிறது. ‘நுண்ணிய அறிவினால் புலனடக்கம் மிக்கவர்கள் விரும்பும் மேல் உலகத்தைப் பற்றிச் சொல்லுதல்’ என்பது பொருள். வெண்பா மேலுலகத்தின் தன்மையை விளக்குகிறது.
பொய்யில் புலவர் புரிந்துறையும் மேலுலகம்
ஐயம் ஒன்று இன்றி அறிந்துரைப்பின் – வெய்ய
பகலின்(று) இரவின்று பற்றின்று துற்றின்(று)
இகலின்(று) இளிவரவும் இன்று
‘உண்மை ஞானிகள் எய்தும் வீட்டு உலகம் இரவும்பகலும் அற்றது; பாசம் அற்றது; உணவு அற்றது; மாறுபாடற்றது; தாழ்வற்றது’ என அதன் தன்மையை விளக்குகிறது வெண்பா.
தலைவரும் பொருளைத் தக்காங்(கு) உணர்த்தி
நிலைநிலை யாமை நெறிப்பட உரைத்தன்று
என்று விளக்குகிறது. ‘மலோன உறுதிப் பயன்களை நன்கு உணர்த்தி வீடுபேற்றின் நிலைத்த சிறப்பினையும் பிறவற்றின் நிலையாமையையும் உணர்த்தல்’ என்பது பொருள். இளமைப் பருவம் தளர, மூப்பினால் உடலில் கூனல் தோன்ற, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை இவற்றை உணர்ந்து பற்று அறுத்து உலகத் தொடர்பினின்றும் விலகிப் போதலே மேம்பட்ட செயலாகும்’ என வெண்பா விளக்குகிறது.
பல்லவர்க்(கு) இரங்கும் பாடுஇமிழ் நெய்தல்
கல்என ஒலிக்கும் காடுவாழ்த் தின்று
பலருக்கும் சாவின்போது ஒலிக்கப்படும் சாப்பறை, சுடுகாட்டை வாழ்த்துவது போன்று இருப்பதைக் கூறுதல் என்பது பொருள். ‘இவ்வுலக இயல்பை நமக்கு உணர்த்தும் சுடுகாடு, பலரும் அழியவும், தான்மட்டும் அழியாமல் நிற்கிறது’ என நிலையாமையின் நிலைத்த தன்மையை வெண்பா உணர்த்துகிறது.
தடவரை மார்பன் தன்னமர் காதல்
மடவரல் புணர்ந்த மகிழ்ச்சிநிலை உரைத்தன்று
என விளக்குகிறது. ‘பெரிய மலை போன்ற மார்பினை உடையவன், தன்னிடத்தே அன்பினைக் கொண்ட பெண்ணுடன் கூடி மகிழ்ந்ததைக் கூறுதல்’ என்பது விளக்கம். ‘காற்றில் அசையும் மணக்கும் முல்லைக் கொடி போன்ற இடையுடைய பெண்ணுடலைத் தழுவித் துயர் தீர்ந்தேன்’ என ஆண்மகன் கூற்றாக வெண்பா விளக்குகிறது.
அருந்திறல் கட்டூர் அவர்வா ராமுன்
கருங்கடல் முகந்து கார்வந் தன்று
என விளக்குகிறது. ‘காவலையுடைய பாசறையிலிருந்து தலைவன் வரும்முன் அவன் வரவை அறிவிப்பதைப் போலக் கார்கால மேகம் வந்தது’ என்பது விளக்கம்.
‘தலையாட்டத்தினையுடைய குதிரை பூட்டிய தேர்ப் படை களையுடைய போரினை மேற்கொண்டிருந்த தலைவர் வரும் முன்னே கடல் நீரை முகந்துகொண்டு வந்தது மேகம்’ என்று வெண்பா விளக்குகிறது.
உருத்தெழு மன்னர் ஒன்னார் தம்நிலை
திருத்திய காதலர் தேர்வர(வு) உரைத்தன்று
என விளக்குகிறது. ‘சினந்து வரும் பகைவர்களை வென்று மீண்டு வரும் தலைவர் தேர் ஊர்ந்து வரும் காட்சியைப் புகழ்ந்து கூறுதல்’ என்பது பொருள். ‘பகைவரை வென்று திறை கொடுக்கச் செய்து, வெற்றியுடன் மீண்டு வரும் நம் கொழுநர் தமது தேரினைச் செலுத்தி வர, அத்தேர் ஒலி கேட்டு மான்கள் அஞ்சி ஓடுகின்றன’ எனத் தலைவி கூற்றில் வெண்பா விளக்கமளிக்கிறது.
செறுநர் நாணச் சேயிழை அரிவை
வறுமனை வைகித் தற்காத் தன்று
என விளக்குகிறது. ‘தன்னைப் பிரிந்து தலைவன் போர்க்களத்தில் இருக்க, தலைவி இல்லத்திலே தன் நாணமே துணையாக இருத்தலைக் கூறுதல்’ என்பது இதன் விளக்கம். ‘கணவன் பிரிந்த பின்பு அவன் இல்லாமையால் பொலிவு இழந்த இல்லத்தில் தலைவி தனது நாணமே நல்ல துணையாகத் தன்னைக் காத்துக் கொண்டிருந்த நிலையைச் சிறப்பித்தல்’ என வெண்பா விளக்கமளிக்கிறது.
கழுமிய காதல் கணவனைப் பழிச்சி
இழுமென் சீர்த்தி யின்மலி(பு) உரைத்தன்று
என்று விளக்குகிறது. காதல் கணவனைத் தொழுது, பலரும் புகழும் அவன் இல்லத்தில் மனைவி வாழும் சிறப்பைக் கூறுதல் என்பது விளக்கம். ‘கணவன் காலடிகளை வணங்கியும் விருந்தினரைப் பேணியும் இரந்தவர்க்கு ஈந்தும் மனநிறைவுடன் வாழும் இல்லறச் சிறப்பைக் கூறுதல்’ என்பது வெண்பா தரும் விளக்கம்.
வயல்மிகு சிறப்பின் வருத்தமும் நோன்மையும்
வியன்மனைக் கிழவனைப் பகட்டொடு பொரீஇயன்று
என விளக்குகிறது. ‘வளமைக்கும் முயற்சிக்கும் காரணமான பகட்டுடன் இல்லத்தின் சிறப்பிற்குக் காரணமான தலைவனை ஒப்பக் கண்டு பாராட்டல்’ என்பது பொருள். வெண்பா இதனை மேலும் விளக்குகிறது. பெரும்பாரம் தாங்குவதிலும், விரைந்து நடத்தலிலும், வயலில் களைப்பின்றி உழுதலிலும் மேம்பட்டு விளங்கும் காளையைப் போலக் குடும்ப பாரத்தைத் தடையின்றித் தொடர்ந்து தாங்கி எல்லாருக்கும் ஆதாரமாக நிற்பவன் என்று தலைவனைத் தலைவி பாராட்டுவதாக வெண்பா காட்டுகிறது.
அரிபாய் உண்கண் ஆயிழைப் புணர்ந்தோன்
பரிவகல் உள்ளமொடு பால்வாழ்த் தின்று
என விளக்குகிறது. ‘மையுண்ட விழிகளையும் அணிகளையும் உடையவளான பெண்ணை மணந்தவன். அதற்குக் காரணமான விதியை (பாலை) வாழ்த்துதல்’ என்று பொருள். ‘அழகிய கண்களையும் குயிலின் இனிய குரலையும் அழகிய பற்களையும் சிவந்த வாயினையும் வளையல்களையும் உடைய தலைவியை எனக்குத் தந்த விதி சுவர்க்கத்தைப் பெறட்டும்’ என்று வாழ்த்துவதை வெண்பா காட்டுகிறது.
பொன்திகழ் சுணங்கின் பூங்கண் அரிவை
நன்றறி கொழுநனை நலம்மிகுத் தன்று
என விளக்கமளிக்கிறது. ‘பொன் போன்ற சுணங்கினையும் அழகிய கண்ணினையும் உடைய மடந்தை, நல்ல கொழுநனின் நன்மை பெருகட்டும் என வாழ்த்துதல்’ என்பது பொருள். வெண்பா, கணவனுக்கு உடன்பட்டு வாழும் பெண்ணின் கற்புநிலையை உணர்த்துகிறது. ‘நெய்யில் பொறிக்கப்பட்ட நிணமும் தசையும் கலந்த சோற்றைப் பிறரருந்துக; தளிரையுடைய கீரை உணவாயினும் கணவன் ஈட்டிய இலையுணவை உண்பதே பெருமை மிக்கது என்று கணவன் இல்லத்தை மனைவி சிறப்பித்தலை’ வெண்பா காட்டி விளக்குகிறது.
கற்புமுல்லை என்பதற்கு வேறு இரு விளக்கங்களும் உள்ளன.
மேவருங் கணவன் தணப்பத் தன்வயின்
காவல் கூறினும் அத்துறை ஆகும்
திருவளர் நன்னகர் அடைந்த கொழுநன்
பெருவளம் ஏத்தினும் அத்துறை ஆகும்
என்று கொளுக்கள் விளக்குகின்றன.
(1) கணவன் பிரிந்த காலத்தில் தலைவி தன் உள்ளத்துத் துன்பம் பிறர்க்குத் தோன்றாமல் காக்கும் தன் நிறையே தனக்குக் காவலாக வாழ்வதைச் சிறப்பித்தல்.
(2) நாளும் விருந்தோம்பும் செல்வம் செழித்த புக்ககம் சென்ற தலைவி, அத்தகைய கணவனது பெருஞ் செல்வத்தைப் புகழ்ந்து கூறுதல்.
மேற்கூறிய இரு விளக்கங்களும் கற்புமுல்லைத் துறைக்கு உரியன.
பாடம் - 5
கைக்கிளை என்ற தொடருக்குச் சிறிய உறவு என்பது பொருள் ;சிறிது காலமே நிற்கும் உறவு இது எனலாம். கை என்பதற்குத் தனிமை என்றும் பொருள் உண்டு. கைம்பெண் என்பதில் இப்பொருளைக் காணலாம். எனவே கை்கிளை என்பது தனித்த உறவு என்றும் பொருள்படும். ஆணோ, பெண்ணோ தாமே கொள்ளும் காதலைக் கைக்கிளை என்பர். கைக்கிளை ஒருதலைக்காமம் என்று நம்பி அகப்பொருள் விளக்குகிறது.
தொல்காப்பியர் காலத்தில் காமப் பருவம் அடையாத பெண்ணைப் பருவம் அடைந்தவளாகக் கருதிக் காதல் கொள்வது கைக்கிளை எனப்பட்டது. கைக்கிளை என்பது ஆண்மகனுக்குரியது என்றும் கூறப்பட்டது. காமப்பருவம் எய்தாத ஆணிடம் பெண் காதல் கொள்வது கூறப்படவில்லை. ஆனாலும் பருவம் அடைந்த ஆணைப் பெண் ஒருதலையாக விரும்புதல் புறமாகக் கொள்ளப்பட்டது. நக்கண்ணையார், ஆமூர்மல்லனைப் பற்றிப் பாடிய கைக்கிளைப் பாடல் புறநானூற்றில் (83, 84, 85) தொகுக்கப்பட்டுள்ளது என்பது இதற்குச் சான்று எனலாம். ஆண்பால் கைக்கிளைப் பாடல்கள் கலித்தொகையில் (56, 57, 58, 109) இடம்பெறுகின்றன. முத்தொள்ளாயிரத்தில் அகப்பாடல்கள் எல்லாமே ஒருதலைக் காதலைக் கூறும் கைக்கிளைப் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கலம்பகத்தின் உறுப்பாகவும் கைக்கிளை உள்ளது.
நம்பியகப்பொருள் அகத்திணையாகவும் அகப்புறத்திணையாகவும் கைக்கிளையைக் கொள்கிறது. காதலின் தொடக்க நிலையை அது அகக் கைக்கிளை என்கிறது. காமப்பருவம் அடையாத பெண்ணிடம் காதலைப் புலப்படுத்துதலை அகப்புறக்கைக்கிளை என்கிறது. புறப்பொருள் வெண்பா மாலை பருவமடைந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் ஒருதலைக் காதலைக் கைக்கிளைத் திணையாகக் கொள்கிறது.
பெரும்பாலும் போர்த்திணைகள் பற்றிப் பேசும் புறப்பொருள் வெண்பா மாலை ஒருதலைக் காதலையும் அகச்சிறப்பற்றதாகக் கருதிப் புறத்தில் சேர்த்திருக்கிறது. இதில் காணும் துறைக்கொளுக்களும் வெண்பாக்களும் காதலைச் சுவைபடக் கூறுகின்றன. பாடப்பகுதியில் ஆண் ஒருதலைக் காதல் கொள்ளும் நிலையை ஆண்பால் கூற்று I என்றும், அக்காதலால் தவிக்கும் நிலையை ஆண்பால் கூற்று II என்றும் கொண்டு பகுத்து விளக்கப்படுகிறது. அதுபோலவே பெண் ஒருதலைக் காதல் கொள்ளும் நிலையும் இரண்டு பிரிவாக விளக்கப்படுகிறது.
சுரும்பிவர் பூம்பொழில் சுடர்வேல் காளை
கருந்தடம் கண்ணியைக் கண்டுநயந்(து) அன்று
என விளக்குகிறது. ‘வண்டுகள் சுற்றும் பூக்களையுடைய சோலையில், வேலினை ஏந்திய காளை, கறுத்த பெரிய கண்களைக் கொண்ட பெண்ணைக் கண்டு விரும்புதல்’ என்பது இதன்பொருள். வெண்பா இதனை அழகுபட விளக்குகிறது : ‘மூங்கில் போன்ற தோள்களையும் பெண் தன்மையையும் கொண்ட இப்பெண்ணின் சிவந்த வாய் தளிர்போல் காணவும், அரும்பு மார்புகள் பூங்கொத்தாகத் தோன்றவும், பூங்கொடி போன்ற பெண்ணின் கண்களே பூக்களை மொய்க்கும் வண்டுகளாகத் தோன்றும் ; இத்தகைய பெண்ணைப் பார்த்தேன். என் விழிகள் மகிழ்ந்தன’ என்று தலைவன் கூறுவதாக வெண்பா அமைந்துள்ளது.
கல்நவில் தோளான் கண்டபின் அவளை இன்னள்என்(று)
உணரான் ஐயம்உற்(று) அன்று
என விளக்குகிறது. ‘கல் போன்ற தோள்களையுடையவன் அப்பெண்ணைக் கண்டபின் இன்னவள் என்று அறியமுடியாமல் ஐயப்படுதல்’ என்பது பொருள். இவ் ஐயத்தன்மையினை வெண்பா புலப்படுத்துகின்றது ; ‘தாமரையில் இருக்கும் திருமகளோ? செழித்த சோலைகள் நிறைந்த வானஉலகத்து மகளோ? இனிய குரலையும் மைதீட்டிய விழிகளையும் உடைய இப்பெண் யாரெனப் புலப்படாது ஐயத்தில் என் மனம் துயரத்தில் அழுந்துகின்றது’.
மாநிலத்(து) இயலும் மாதர் ஆமெனத்
தூமலர்க் கோதையைத் துணிந்து உரைத்தன்று
என விளக்குகிறது. ‘பூமாலை அணிந்த அப்பெண்ணை இப்பரந்த உலகில் வாழும் மானிடப்பெண் எனத் தெளிவது’ என்பது பொருள். வெண்பா இத்தெளியும் தன்மையை,
திருநுதல் வேரரும்பும் தேங்கோதை வாடும்
இருநிலம் சேவடியும் தோயும் – அரிபரந்த
போகிதழ் உண்கணும் இமைக்கும்
ஆகும் மற்றிவள் அகலிடத்(து) அணங்கே
என்று அழகுபட விளக்குகிறது. வான் உலகத்துப் பெண்களுக்குரிய அடையாளங்கள் இல்லாமல் இம்மண்ணுலகத்துப் பெண்ணுக்குரிய தன்மையில் அவள் இருப்பது கொண்டு தலைவன் தெளிவதாக வெண்பா காட்டுகிறது: ‘அழகிய நெற்றியில் வியர்வை அரும்புகிறது; அவள் அணிந்துள்ள மாலை வாடுகிறது; கால்கள் நிலத்தில் தோய்கின்றன; செவ்வரி பரந்த கண்கள் இமைக்கின்றன. இந்த அடையாளங்களால் இவள் மானிடப்பெண் என்பது தெளிவாகிறது’ என்பது பொருள். வியர்வை அரும்பாமையும் மாலை வாடாமையும் கால்கள் நிலத்தில் தோயாமையும் கண்கள் இமைக்காமையும் வானுலகப் பெண்ணின் அடையாளங்கள்.
இணர்ஆர் கோதைஎன் நெஞ்சத்(து) இருந்து
உணராள் என்னைஎன உட்கொண்(டு) அன்று
என்பது கொளு. மாலை அணிந்த இப்பெண் என் மனத்தில் இருந்தும் என்னை அறியாதவளாய் இருக்கிறாள் எனத் தலைவன் உள்ளத்திலே எண்ணம் கொள்வது இதன் பொருள். வெண்பா தலைவனது உணர்வை விளக்குகிறது. ‘என் மனத்திலே கலந்த காமத்தீ என் ஆற்றலைச் சுடுகின்றது; சிவந்த இதழ்களையும் அழகிய நெற்றியையுமுடைய இவள் என் நெஞ்சிலேயே இருந்தும் தன் இனிய சொற்களால் அத்தீயை அவியாது இருக்கிறாளே!’ என்பது வெண்பா தரும் விளக்கம்.
இவள்பயந்து எடுத்தோர் வாழியர் நெடிதுஎன
அவள்பயந் தோரை ஆனாது புகழ்ந்தன்று
என விளக்குகிறது. ‘இவளைப் பெற்றவர்கள் நீடுவாழ்வாராக எனப் பெற்றவர்களை வாழ்த்துதல்’ என்பது பொருள். ‘வளையல் சூடியும் பெருங்கூந்தலைக் கொண்டும் மயிலைப்போலவும் இருக்கும் இவ்வழகிய பெண், யானைகள் முழங்கும் மலைப்பகுதியில் நீராடி மகிழ்கிறாள்; இவளைப் பெற்றவர்கள் மண்ணுலகில் நீண்ட காலம் வாழ்வாராக’ என்பது வெண்பா தரும் விளக்கம்.
அழிபடர் எவ்வம் கூர ஆயிழை
பழிதீர் நன்னலம் பாராட் டின்று
என்று விளக்குகிறது. ‘காதல் துயரம் மிகும்வண்ணம் பெண்ணின் அழகினைப் பாராட்டுதல்’ என்பது பொருள். வெண்பா, அழகினைப் பாராட்டும் பாங்கைப் புலப்படுத்துகிறது :
அம்மென் கிளவி கிளிபயில ஆயிழை
கொம்மை வரிமுலை கோங்(கு) அரும்ப – இம்மலை
நறும்பூஞ் சாரல் ஆங்கண்
குறுஞ்சுனை மலர்ந்தன தடம்பெருங் கண்ணே
‘அவளது இனிய குரலைக் கேட்டுக் கிளிகள் மொழி பேசிப் பழகுகின்றன; அவளுடைய மார்புகளைப் போலக் கோங்கு அரும்பை முகிழ்க்கிறது; அவளுடைய கண்களைப் போலக் குவளை மலரைச் சுனைகள் பூத்தன’ என்று அவள் அழகு இயற்கையழகையும் விஞ்சியதாக இருப்பதைத் தலைவன் நலம்பாராட்டலில் வெளிப்படுத்துகிறான்.
கொய்தழை அல்குல் கூட்டம் வேண்டி
எய்துதல் அருமையின் இறப்பப் புகழ்ந்தன்று
என விளக்குகிறது. ‘தழையாடை அணிந்த பெண்ணுடன் கூடுதலை விரும்பி, அது நிறைவேறாது என்ற நிலையை எண்ணி அதன் காரணமான வருத்தத்தால் அவள் அழகை மிகவும் புகழ்தல்’ என்று பொருள்.
வெண்பா இதனை அழகுற உணர்த்துகிறது :
பெருமட நோக்கின் சிறுநுதல் செவ்வாய்க்
கருமழைக்கண் வெண்முறுவல் பேதை – திருமுலை
புல்லும் பொறியி லேன்உழை
நில்லா(து) ஓடும்என் நிறையில் நெஞ்சே
முரண்தொடையால் வெண்பா தலைவனின் துயரை விளக்குகிறது.
‘பெரிய கண்களின் மென்மையான பார்வையையும் சிறிய நெற்றியையும் கரிய குளிர்ந்த கண்களையும் சிவந்த இதழ்களையும் வெண்பற்களின் சிரிப்பையும் கொண்ட பேதையாகிய இவளின் அழகிய முலைகளைத் தழுவும் பேறு கிடைக்காத நிலையிலும் என்னுடைய உள்ளம் அவளிடத்தேயே ஓடுகின்றது’. இதில் பெரு, சிறு என்றும், செம்மை, கருமை, வெண்மை என்றும் முரண்தொடை அமைந்துள்ளது.
உணரா எவ்வம் பெருக ஒளிஇழைப்
புணரா இரக்கமொடு புலம்புதர வைகின்று
என விளக்குகிறது. ‘சுடரும் அணிகளை அணிந்த இப்பெண்ணைத் தழுவ இயலவில்லை என்ற பிறர் அறிய இயலாத துன்பத்தோடு தலைவன் தனிமையில் இருத்தல்’ என்பது பொருள். வெண்பா ஆண்மகனின் கூற்றாக இத்துயர்நிலையை உணர்த்துகிறது: ‘மணம் மிக்க மாலையினையும் அழகிய வளையல்களையும் அணிந்த பெண்ணைத் தழுவுதல் கூடாமையால், பிறர் இகழக்கூடிய சூழல் உருவாகும் நிலையாலும் உள்ள வருத்தத்தாலும் என் உயிர் பாதுகாத்தற்கு அரியதாக இருக்கிறது’.
அந்தழை அல்குல் அணிநலம் புணரா
வெந்துயர் பெருக வெளிப்பட இரந்தன்று
என விளக்குகிறது. ‘அழகிய தழையாடையை அணிந்த அல்குலை உடையாளுடன் கூட இயலாத மிகுந்த வருத்தம் புலப்படக் காதலை இரத்தல்’ என்பது பொருள். வெண்பா, ஆண்கூற்றாக இதனை மேலும் விளக்குகிறது. ‘ஆரவாரத்தையுடைய கடலையும் தாண்டுமளவு பரந்த என் காதல் துயரம் பெருக, முட்போன்ற பற்களில் புன்சிரிப்பையும் வளையலையும் கொண்ட அவளிடம் இரக்க, அவள் ஏற்கவில்லை. எனவே, என்னுடைய உயிர் நீங்கும்’.
தேம்பாய் தெரியல் விடலையைத் திருநுதல்
காம்புஏர் தோளி கண்டுசோர்ந்(து) அன்று
என விளக்கமளிக்கிறது. ‘தேன் நிறைந்த பூமாலை அணிந்த காளையை, அழகிய நெற்றியையும் மூங்கில் தோள்களையும் உடைய பெண் கண்டு காதல் ஏக்கம் கொள்ளல்’ என்பது பொருள். வெண்பா, பெண்ணின் கூற்றாக இத்திணையை விளக்குகிறது: ‘என் ஆசை என்னை நெருக்க அவனிடம் மயங்கியது கண்டு ஊர் அலர்தூற்றவும் அவன் என்னைக் காணவில்லை. அவனையே பார்த்தபடி இருக்கிறேன் நான்’.
கல்நவில் திணிதோள் காளையைக் கண்ட
நல்நுதல் அரிவை நயப்புஉரைத்(து) அன்று
என விளக்கமளிக்கிறது. ‘திண்ணிய தோள்களையுடைய தலைவனைக் கண்ட நல்ல நெற்றியினைக் கொண்ட பெண்ணின் ஆசையைச் சொல்லுதல்’ என்பது பொருள். வெண்பா, பெண்கூற்றாக இதனை மேலும் விளக்குகிறது. ‘மலையைஒத்த தோள்களை உடையவளைக் கண்டேன்; என் கண்ணுக்கு அவன் அழகு அமுதமாக இனிக்கிறது. அவன் தோள்கள் என் மார்புகளைத் தழுவினால் எப்படி இருக்கும்’.
வண்டுஅமர் குஞ்சி மைந்தனை நயந்த
ஒள்தொடி அரிவை உட்கொண்(டு) அன்று
என விளக்குகிறது. ‘தலைவனை விரும்பிய தலைவி காதலை நெஞ்சில் கொண்டது’ என்பது பொருள். வெண்பா இதனை,
உள்ளம் உருக ஒளிவளையும் கைநில்லா
கள்அவிழ் தாரானும் கைக்(கு) அணையான் – எள்ளிச்
சிறுபுன் மாலை தலைவரின்
உறுதுயர் அவலத்(து) உயலோ அரிதே
எனப் புலப்படுத்துகிறது. ‘காதல் துன்பத்தால் மெலிய, வளையல்களும் கழல்கின்றன; தேன் சிந்தும் மாலையை உடைய தலைவன் என் கைகளுக்குக் கிட்டவில்லை; மாலைக்காலம் செய்கின்ற துன்பத்திலிருந்து பிழைத்தல் அரிது!’
ஒன்றார் கூறும் உறுபழி நாணி
மென்தோள் அரிவை மெலிவொடு வைகின்று
என விளக்கம் அளிக்கிறது. ‘பிறர் கூறும் அலருக்கு நாணி மென்தோள்களையுடைய பெண் வாடியிருத்தல்’ என்பது பொருள். காதலனைப் பெற முடியவில்லை என்ற ஏக்கத்தால் வாடுதலே இதன்பொருள். வெண்பா இதனை நன்கு புலப்படுத்துகிறது: ‘குரும்பை போன்ற மார்புகளின் மீது என் கண்ணீர் முத்துக்கள் சிந்துகின்றன; காமன் எனக்குக் காதல் நோய் தந்து வாட்ட, எனக்கு இரங்கி என் காதலை ஏற்றுக் கொள்ளாத இவனுக்காக என் அழகெல்லாம் அழிகிறது’.
மணிவளை நெகிழ மாண்நலம் தொலைய
அணிஇழை மெலிவின் ஆற்றல்கூ றின்று
என விளக்குகிறது. அணிகள் அணிந்த பெண்ணின் ‘மாணிக்க வளையல்கள் கழல, நல்ல அழகு கெட வாடுகின்ற பெண்ணின் தளர்ச்சியின் மிகுதியைக் கூறுதல்’ என்பது பொருள். வெண்பா, இதனைப் ‘பிறை நிலவை ஒத்த நெற்றியானது பீர்க்கம்பூப் போல் பசலை நிறம் கொள்ள, கைகளிலுள்ள வளையல் கழன்று ஓட, கட்டுப்பாடு என்னும் தெப்பத்தால் காமம் என்கிற பெரிய கடலைக் கடந்தேன்; ஆயினும், ஆசை என்னும் நெருப்பு என் நெஞ்சை எரிக்கிறதே !’ எனத் தலைவி கூற்றில் விளக்குகிறது.
பிறைபுரை வாள்நுதல் பீர்அரும்ப மென்தோள்
இறைபுனை எல்வளை ஏக – நிறைபுணையா
யாம நெடுங்கடல் நீந்துவேன்
காம ஒள்எரி கனன்(று) அகம் சுடுமே
மைவரை நாடனை மடந்தை பின்னரும்
கைவளை சோரக் காண்டல் வலித்தன்று
என விளக்குகிறது. காமத்தால் கைவளையல்கள் கழல்வதால் மலைநாட்டுத் தலைவனைத் தலைவி மீண்டும் காணவிரும்புதல் என்பது இதன் பொருள். வெண்பா இதனை நயமுற விளக்குகிறது. ‘என் கண்கள் உறக்கத்தை இழந்தன. திரும்பவும் அந்தத் தலைவனைக் காட்டுக என்று சொல்லி என்மேனி பசந்துவிட்டது. விரும்பியதைக் கண்டால் ஆசை தீரும் என்பது பொய் போலும்’.
புரிவளை நெகிழப் புலம்பொடு நின்றோள்
பருவரல் உள்ளமொடு பகல்முனி(வு) உரைத்தன்று
என விளக்குகிறது. வளையல்கள் நெகிழத் தனிமையில் இருக்கும் தலைவி, துயர் மிகுந்து பகல் பொழுதை வெறுத்தமையைச் சொல்லுதல்’ என்பது பொருள். வெண்பா இதற்கு மேலும் விளக்கமளிக்கிறது. ‘அவன் அருளை வேண்டினேன்; அவன் அருளவில்லை; இந்த வருத்தத்தைவிட மானம் பெரிதென்று வாளா இருக்கிறேன். என்னுடைய நிலையை அழிக்கும் ஆற்றலுடையதாக இருக்கிறது இப்பகல்பொழுது.’
புலம்பொடு வைகும் பூங்குழை கங்குல்
கலங்கினேன் பெரிதெனக் கசிந்துரைத்(து) அன்று
என விளக்குகிறது. ‘தனிமையில் வாடும் தலைவி இரவில் பெரிதும் மனம் மயங்கினேன் என நெகிழ்ந்து சொல்லுதல்’ என்பது பொருள். வெண்பா
பெண்மேல் நலிவு பிழைஎண்ணாய் பேதுறீஇ
விண்மேல் இயங்கு மதிவிலக்கி – மண்மேல்
நினக்கே செய்பகை எவன்கொல்
எனக்கே நெடியை வாழியர் இரவே
எனப் பெண்கூற்றாக விளக்குகிறது. இரவைப் பார்த்துப் பெண் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது. ‘பெண்ணுக்குத் துன்பம் செய்வதைத் தவறு என்று எண்ணாய்; அறிவற்று வானத்து நிலவைப் போகாதபடி செய்துவிட்டாய்; நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்?; எனக்கு ஏன் இவ்வளவு நீண்டதாக இருக்கிறாய், இரவே !’
ஒள்தொடி மடந்தை உருகெழு கங்குலில்
கண்டவன் கரப்பக் கனவில் அரற்றின்று
என விளக்குகிறது. தலைவி அச்சம் தரும் இரவில் கனவில் கண்ட தலைவன் மறைய வாய்விட்டுப் புலம்புதல் என்பது பொருள். வெண்பா இதனைத் தலைவி கூற்றாக விளக்குகிறது. ‘மயக்கத்தோடு நின்ற என்னுடைய நினைப்பினால் வந்த காதல் நோய் நீங்கக் கனவில் எனக்குக் காட்சிதந்து கனவிலேயே மறைந்து நான் தனியளாக இருக்கும்படி செய்தாய். இது துன்பத்தைத் தருகிறது’ எனத் தலைவனைப் பார்த்துக் கூறுவதாக வெண்பா அமைந்துள்ளது.
இத்துறைக்கு இன்னொரு விளக்கம் உள்ளது. அதற்கான கொளு,
பெய்வளை அவனொடு பேணிய கங்குல்
உய்குவன் வரின்என உரைப்பினும் அதுவே
என்பதாகும். ‘வளையல் அணிந்தவளான அப்பெண், தலைவனொடு சேரும் வகையிலான இரவுப் பொழுதுவரின் நான் பிழைப்பேன் எனக் கூறுதல்’ என்பது இதன்பொருள். இதற்கான வெண்பா கருத்தை விரித்துரைக்கிறது. அவள் தலைவனுடன் இருக்கும் இரவை எதிர்பார்ப்பதை வெண்பா உணர்த்துகிறது. ‘தலைவனின் மாலை கசங்கியது குறித்து யான் ஊடலாய் வினவ, அவன் என் சிற்றடிகளில் தலைவைத்து வணங்கி வேண்ட அமையும் இரவு ஒன்று கைகூடின் பிழைப்பேன்.’
அஞ்சொல் வஞ்சி அல்இருள் செலீஇய
நெஞ்சொடு புகன்ற நிலைஉரைத்(து) அன்று
எனப் புலப்படுத்துகிறது. ‘இனிமையாகப் பேசும் இப்பெண் (தலைவனைத் தேடி) இருளின்கண் செல்ல விரும்பித் தன் மனத்திடம் கூறுதல்’ என்பது பொருள். வெண்பா, நெஞ்சுடன் தலைவி பேசுவதுபோல் அமைந்துள்ளது : ‘நெஞ்சே! மற்போர் வல்லவனான தலைவனின் அன்பிற்கு ஆசைப்பட்டு மயக்கம் தரும் இருளில் செல்லவேண்டாம் என்று என்னிடம் சொல்கிறாய்; ஆனால் என் அணிகலன்கள் சோர்ந்து விழும் நிலையை நீ எண்ணிப்பார்க்கவில்லையா?’
இதற்கு இன்னுமொரு விளக்கமும் உள்ளது. அதற்கான கொளு,
வரிவளை நெகிழ்த்தோன் முன்செல வலித்தேன்
அரிவையர் அறிகென உரைப்பினும் அதுவே
‘வளையல்களை நெகிழச் செய்தவன் இடத்திற்குச் செல்லக் கருதியுள்ளேன்; பெண்கள் அனைவரும் இதனை அறிக என்று கூறுதல்’ என்பது இதன் பொருள். இதன் வெண்பா, அழகிய வளையல் கழல என் அழகினை அழியச் செய்கிறவனைக் காணக் கருதியுள்ளேன்; புதுப்புது வார்த்தைகளில் பெண்களே என்னைப் பற்றி அலர்தூற்றுங்கள்’ என விளக்குகிறது.
பாடம் - 6
தொல்காப்பியர் கருத்துப்படி பெருந்திணை என்பது காதல் மிகையே ஆகும். பெரும் என்ற அடை மிகுதியையே குறிக்கிறது. மடலேறுதலும், இளமைக்காலம் சென்ற பின்பும் காதல் நுகர்வில் ஈடுபாடு காட்டலும், பிரிவின்போது ஆற்றாது மிக்க காமத்தை வெளிப்படுத்துவதும், பிரிவில் ஆற்றாது மிகுந்த துன்பம் கொள்ளலும் பெருந்திணையாகும். இவற்றைத் தொல்காப்பியர் ஏறிய மடல்திறம், இளமை தீர்திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடல் எனக் குறிப்பிடுவார்.
பிற்காலத்தில் இது பொருந்தாக் காமம் என்று கொள்ளப்பட்டது. நம்பி அகப்பொருள் இவ்வாறே குறிப்பிடுகிறது. புறப்பொருள் வெண்பா மாலை பெருந்திணையில் பெண்ணின் உணர்வையே மிகுதியாகக் காட்டுகிறது. பெண்பாற் கிளவி, இருபால் கிளவி என்ற பகுதிகளில் இது விளக்கப்படுகிறது. இது தவிரப் பெருந்திணை வென்றி என்ற பகுதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
புறப்பொருள் வெண்பா மாலையில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை முதலான போர்த்திணைகளிலும் வாகை, பாடாண் முதலான போர் தொடர்பான திணைகளிலும் கூறாது விடுபட்ட செய்திகளைப் பொதுவியல் திணை கூறுகிறது. கைக்கிளை, பெருந்திணை என்பவை அகமாக இருந்துபின் புறமான ஆன திணைகள். இவற்றில் பெருந்திணையில் பெண்பால் கூற்று, இருபால் பெருந்திணை என்று தலைவன் தலைவியரின் பெருந்திணை உணர்வுகளைக் கூறுகிறார். இத்துடன் பெருந்திணை வென்றி என்ற பகுதியும் நூலில் இடம்பெறுகிறது. பாடாண் திணையிலும் வாகைத்திணையிலும் கூறப்படாத செய்திகள் இதில் கூறப்படுகின்றன. இது ஒழிபு எனத் தரப்பட்டிருக்கிறது. பொதுவியல் போன்றதுதான் இப்பகுதி. இதில் கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல், வாணிக வென்றி, மல்வென்றி, உழவன் வென்றி, ஏறுகோள் வென்றி, கோழி வென்றி, தகர் வென்றி, யானை வென்றி, பூழ் வென்றி, சிவல் வென்றி, கிளி வென்றி, பூவை வென்றி, குதிரை வென்றி, தேர் வென்றி, யாழ் வென்றி, சூது வென்றி, ஆடல் வென்றி, பாடல் வென்றி, பிடி வென்றி எனப் பதினெட்டுத் துறைகள் கூறப்பட்டுள்ளன. ஒழிபு எனும் தலைப்பில் தரப்பட்ட இவற்றுக்குக் கொளு கிடையாது. விளக்கம் தரும் வெண்பாக்கள் மட்டுமே உண்டு. பெருந்திணையோடு தொடர்பற்ற இப்பகுதிகள் இப்பாடத்தில் விளக்கப்படவில்லை.
பெண்பாற் கூற்று என்பது பெண்ணின் தனித்த உணர்வுகளைக் கூறுவது, பிறருடைய ஊடாட்டத்தால் ஏற்படும் உணர்வுகளைக் கூறுவது என இருபகுதியாக அமைந்துள்ளதால் பெண்பாற் கூற்று I, பெண்பாற் கூற்று II என விளக்கப்படுகிறது. இதேபோன்று இருபால் பெருந்திணை என்பதும் இருபால் பெருந்திணை I, இருபால் பெருந்திணை II என விளக்கப்படுகிறது.
கைஒளிர் வேலவன் கடவக் காமம்
மொய்வளைத் தோளி முந்துற மொழிந்தன்று
என விளக்குகிறது. ‘கையில் வேலினை ஏந்திய தலைவனிடம் தொடியணிந்த தோளினை உடையாள் தன் வேட்கையைக் கூறுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா தரும் விளக்கம்: ‘புலியை ஒத்த வலிமையுடைய தலைவனே! சந்தனம் குங்குமம் பூசப்பட்ட உன் மார்பு எனக்கே உரியதாக வேண்டுமென்று நாள்தோறும் அழுதழுது பொறுக்கமுடியாது வேண்டுகிறேன். வெற்றி வேலினை உடையவனே! நான் உயிர்வாழும் வண்ணம் உன் காதலை அருள்வாயாக!’
முன்இழந்த நலன்நசைஇப் பின்நிலை மலிந்தன்று
என்பது. ‘தலைவனைக் கண்டதால் இழந்த தன் அழகை மீண்டும் பெறவேண்டுமென்று தலைவி, அவன் காதலை இரந்து நிற்றல்’ என்பது இதன்பொருள். ‘மற்போர் செய்து திண்மையடைந்த தோள்களை உடைய வேல்வீரனான மேம்பட்ட இத்தலைவனைக் கண்டு நான் பசலையுற்று என் அழகிய நிறத்தை இழந்தேன்; யானையின்மீது அமர்ந்திருந்த அவனிடம் என்னைக் காணுமாறு கையைக் குவித்து வேண்டி நின்றேன்; அவனோ என்னைப் பார்க்கவே இல்லை’ என்று தலைவி கூற்றாகப் பின்நிலை முயறலை வெண்பா விளக்குகிறது.
இறைவளை நெகிழ இன்னாது இரங்கிப்
பிறைநுதல் மடந்தை பிரிவிடை ஆற்றின்று
என்று விளக்குகிறது. ‘முன்கையில் உள்ள வளையல்கள் கழலும் வண்ணம் வருந்தி, பிறை நுதலினை உடையாள் தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றியிருத்தல்’ என்பது இதன் பொருள். ‘வளையல்கள் கழன்று செல்லட்டும்; ஊர் என்னைப் பற்றி அலர் தூற்றட்டும்; ஆயினும் தாழை இதழ்கள் சங்குபோல் எங்கும் பூக்கும் கானலின் தலைவன், இந்த மயக்கம் தரும் மாலை நேரத்தில் என் நெஞ்சிலே நிலைபெற்று இருக்கிறான்.’
ஓடுக கோல்வளையும் ஊரும் அலர்அறைக
தோடவிழ் தாழை துறைகமழக் – கோடுடையும்
பூங்கானல் சேர்ப்பன் புலம்புகொள் மால்மாலை
நீங்கான்என் நெஞ்சத்துள் நின்று
என வெண்பா விளக்குகிறது. தலைவனை நினைத்துக் கொண்டே தலைவி ஆற்றியிருக்கும் தன்மை இதில் புலப்படுகிறது.
முகைபுணர முறுவல் முள்எயிற்று அரிவை
வகைபுனை வளமனை வரவுஎதிர்ந் தன்று
என விளக்கமளிக்கிறது. ‘முல்லை அரும்பு போன்ற பற்களையுடையாள், தன் பெரிய செல்வ மனையில் தலைவனது வருகையை எதிர்நோக்கியிருத்தல்’ என்பது இதன் பொருள். ‘நெஞ்சே! காமமாகிய பெரிய கடலை நீந்துவதற்குத் தலைவனொடு படுக்கையில் சேர்ந்திருத்தல் என்னும் தெப்பத்தைத் துணையாகக் கொள்ளவேண்டும். அதற்காகத் தலைவனிடம் வேண்ட நீ விரைந்து செல்ல மாட்டாய்! தலைவன் இங்கு வருவதற்கும் நினைக்கமாட்டாய் ; உன் மயக்கம் நீங்கிச் செயல்படுவாயாக!’ என்று வெண்பா அழகுற அவள் தவிப்பை விளக்குகிறது.
நெடுவேய்த் தோளி நிமித்தம் வேறுபட
வடிவேல் அண்ணல் வாராமைக்கு அழிந்தன்று
என விளக்கமளிக்கிறது. ‘மூங்கில் தோள்களையுடையாள் தலைவனை எதிர்பார்த்து இருக்கையில் எதிரான நிமித்தத்தால் அவன் வாரான் என வருந்துதல்’ என்பது இதன்பொருள். ‘அருவி ஆரவாரித்து விழும் மலைப்பகுதியில் மயக்கம்தரும் மாலை வேளையில் என் காதலன் வாரான் போலும்; என் பெரிய கண்கள் வலப்பக்கம் அல்லவா துடிக்கின்றன!’ என்று வெண்பா இந்நிலையை விளக்குகிறது. அன்புடையாரின் வரவுக்கு வரும் தடைகளை எண்ணித் துன்புறும் நிலை இதில் விளக்கப்படுகிறது.
காண்டல் வேட்கையொடு கனையிருள் நடுநாள்
மாண்ட சாயல் மனைஇறந்து அன்று
என விளக்குகிறது. ‘தலைவனைக் காணவேண்டுமென்ற ஆசையால் இருள் செறிந்த நள்ளிரவில் மென்மையான இவள் தன் வீட்டினின்றும் புறப்படுதல்’ என்பது இதன் விளக்கம். இதற்கான வெண்பா,
பணையாய் அறைமுழங்கும் பாயருவி நாடன்
பிணையார மார்பம் பிணையத் – துணையாய்க்
கழிகாமம் உய்ப்பக் கனைஇருட்கண் செல்கேன்
வழிகாண மின்னுக வான்
என அழகுறப் புலப்படுத்துகிறது; ‘வீரமுரசு கொட்டுவது போல அருவி பாறையில் மோதி ஒலிக்கும் நாடனுடைய மார்பினைத் தழுவ என் ஆசையே துணையாகக் கொண்டு இருளில் செல்கிறேன்; எனக்கு வெளிச்சம் தரும் வகையில் மேகம் மின்னட்டும்!’ என்று தலைவி கூறுவதை வெண்பா உணர்த்துகிறது.
இல்லவை சொல்லி இலங்குஎயிற்று அரிவை
நல்வயல் ஊரனை நகைமிகுத்து அன்று
என விளக்கமளிக்கிறது. ‘அழகிய பற்களை உடைய பெண் உள்ளன அல்லாதவற்றை உரைத்து வயல்கள் சூழ்ந்த ஊரனை நகைத்தல்’ என்பது இதன் பொருள். வெண்பா தலைவி கூற்றாக இதனை மேலும் விளக்குகிறது; ‘இளம் மார்பினை உடைய பெண்கள் தழுவ உன் பூமாலை வாடிய தோற்றம் சிரிப்பைத் தருதலின், உன்னைச் சேரவேண்டாம் எனக் கருதினாலும் தலைவனே உன்னோடு ஊடேன்; ஏனெனில் உன்னுடன் ஊடினால் என்னால் தாங்க இயலாது.’
நல்வளை மடந்தை நல்தார் பரிந்து
புலவி ஆற்றாள் புலம்புஉற்று அன்று
என விளக்குகிறது. ‘அழகிய வளையல்களை அணிந்த பெண், ஊடலால் தலைவனின் மாலையை அறுத்து ஆற்றாளாய்த் தனிமையுறுதல்’ என்பது பொருள். வெண்பா தரும் விளக்கம் : ‘வேலினை உடைய தலைவன் அவளது ஊடலைத் தணிக்க வணங்கியும், தன் சினத்தை அடக்காதவளாய் அவனுடைய மாலையை அறுத்து எறிந்து அதனால் ஏற்பட்ட துயரத்தால் அவள் கண்கள் கண்ணீரில் மிதக்கின்றன.’
நிற்றல் ஆற்றாள் நெடிதுஉயிர்த்து அலமரும்
பொன்தொடி அரிவை பொழுதுகண்டு இரங்கின்று
என விளக்கம் தருகிறது.
கழலும் பொன்வளையல் அணிந்த தலைவி மாலைப் பொழுதைக் கண்டு உயிர் போகுமாறு ‘பெருமூச்செறிதல்’, வருந்துதல் என்பது இதன்பொருள்.
வெண்பா தரும் விளக்கம் : ‘கைகளிலிருந்து வளையல்கள் கழலுகின்றன; மைபூசிய கண்கள் கண்ணீரைச் சொரிதலையும் நிறுத்தவில்லை ; கதிரவன் மறைந்த இம்மாலைப் பொழுதில் காதல்நோய் மிகுந்து என் உயிர் கரைந்து வருந்தும்.’
அணிவயல் ஊரனொடு அப்புவிழவு அமரும்
பணிமொழி அரிவை பரத்தையை ஏசின்று
என்பது. ‘அழகிய வயல்களையுடைய ஊரில் தலைவனுடன் நீர் விளையாட்டினை விரும்பும் தலைவி பரத்தையை ஏசுதல்’ என்பது இதன்பொருள். தலைவி கூற்றாக வெண்பா விளக்குகிறது. ‘புதுவருவாயினை உடைய கழனிகள் சூழ்ந்த தலைவனின் மாலை அணிந்த மார்பை என் கொங்கைகளால் தழுவி நீர் விளையாடுதற்குப் பரத்தையரின் சேரிகளில் இரவுநேரத்தில் எழும் ஆரவாரம் தடையாக இருக்கிறது’ என வெண்பா விளக்குகிறது. பரத்தையர் தனது இன்பத்திற்குத் தடையாக இருப்பதைத் தலைவி கடிகிறாள்.
உறுவரை மார்பன் ஒள்இணர் நறுந்தார்
கறுவொடு மயங்கிக் கண்சிவந்து அன்று
என்பது. ‘பெரிய மலை போன்ற மார்பினை உடையவனது மாலையைக் கண்டு சினத்துடன் தலைவியின் கண் சிவத்தல்’ என்பது இதன் பொருள். தலைவன் தலைவியை அணுகினான்; அவன் மாலையில் உள்ள குவளைப் பூ, கொடிபோன்ற பெண்ணைத் தழுவியதால் அவள் மார்பில் பூசின சந்தனத்துடன் காணப்பட்டதால் தலைவியின் (கண்களாகிய) குவளை பொறுக்க இயலாமல் சினத்தைக் காட்டியது’ என்று வெண்பா நயமுற விளக்குகிறது.
கூடிய கொண்கன் குறுகக் கொடிமார்பின்
ஆடிய சாந்தின் அணிதொடர்ந்து – வாடிய
தார்க்குவளை கண்டு தரியா இவள்முகத்த
கார்க்குவளை காலும் கனல்
என்பது வெண்பா.
மைவரை நாடன் மார்பகம் பொருந்திக்
கைவிடல் அறியாக் காதலில் களித்தன்று
என்பது. ‘மலைநாடனுடைய மார்பைத் தழுவி அன்பினால் தலைவி மகிழ்தல்’ என்பது பொருள். அவள் மகிழ்ச்சியின் தன்மையை வெண்பா காட்டுகிறது : ‘காதல் மிகுதியால் மகிழ்ந்து அவன் மாலையும் இவள் கோதையும் வாட அப்பெண் தழுவினாள்; தழுவியிருக்கும் போதே விடிந்துவிட, போய்விட்ட அந்த இரவின் மீது சினம் கொண்டாள்’.
காதல் பெருகக் கணவனைக் கண்ணுற்றுக்
கோதையால் பிணித்துக் கொண்டுஅகம் புக்கன்று
என்பது. ‘அன்புமிகக் கொழுநனைக் கண்டு தன் மாலையால் அவனைக் கட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்லுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா தரும் விளக்கம் : ‘மலைநாடனான தலைவனைக் கண்டு மகிழ்ந்து மை பூசிய கயற்கண்களில் கண்ணீர் முட்டத் தன் மாலையாலே அவன் மார்பைக் கட்டி வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்’.
பெய்தார் அகலம் பிரிதல் ஆற்றாக்
கொய்தழை அல்குல் கூட்டத்துக் குழைந்தன்று
என்பது. ‘தலைவனது மாலையணிந்த மார்பினை விட்டு விலகுதலைப் பொறுக்காத அன்புடைய தலைவி புணர்ச்சியில் உள்ளம் நெகிழ்தல்’ என்பது இதன் பொருள். வெண்பா தரும் விளக்கம் : தலைவனது பெரிய மலை போன்ற மார்பினைத் தழுவிக் களிப்படைந்தும், பிரிவு அச்சத்தால் பூங்கொம்பு போலத் தளர்ந்து ‘நான் தனிமைப்பட நீ பிரிகின்றாயோ’ என்று தலைவி கூறுதல்’.
நள்ளிருள் மாலை நடுங்குஅஞர் நலிய
வெள்வளைத் தோளி ஊடலுள் நெகிழ்ந்தன்று ‘
இருள் செறிந்த மாலைக்காலத்தில் காதல் துயரம் நெருக்க, தொடியணிந்த தோளினை உடையாள் ஊடலில் குழைதல்’ என்பது பொருள். இதற்கு வெண்பா தரும் விளக்கம் தலைவி தன் நெஞ்சிடம் கூறுவதாக அமைந்துள்ளது : ‘நெஞ்சே! தலைவனது தவறு பற்றி ஆராயாது நாம் ஊடினோம் ; இருப்பினும் அவன் விளக்கம் தந்து நம்மை நெருங்கினும் நீ விரும்பவில்லை ; அப்படி விரும்பாத நீயே இரவிலே நாங்கள் உறங்கமாட்டோம் என்று மாறுபடச் சொல்கிறாயே’. ஒரே நேரத்தில் ஊடலையும் கூடல் விருப்பத்தால் தளர்ச்சியையும் நெஞ்சம் காட்டுவதாகத் தலைவி கூறுகிறாள்.
துயரொடு வைகிய சூழ்வளைத் தோளி
உயர்வரை நாடன் உரைகேட்டு நயந்தன்று
என்பது. ‘துன்பத்தோடு இருந்த தொடியணிந்த தோளினாள் உயர்ந்த மலைநாடனின் சொற்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைதல்’ என்பது இதன் பொருள். வெண்பா, தலைவி கூற்றாக அமைந்துள்ளது : ‘முற்றிய கதிர்களால் வளைந்த தினைத்தாளில் நூழில் என்னும் கொடி சுற்றும் மலைநாடனுடைய சொற்களைக் கேட்பதால் இனி என் உயிர் துயரத்தில் ஆழாது தளிர்க்கும்’.
கோடுஉயர் வெற்பன் கூப்பிய கையொடு
பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கின்று
என்பது. ‘உயர்ந்த குவடுகளைக் கொண்ட மலைநாடன் கூப்பிய கைகெளாடு சிலம்பு அணிந்த தலைவியின் அழகிய காலடிகளில் வணங்கிய பின்பு மனம் நெகிழ்தல்’ என்பது இதன் பொருள். தலைவி தன் நெஞ்சிடம் கூறுவதாக வெண்பா அமைந்துள்ளது : ‘அழகிய சிறந்த சிலம்புகள் ஒலிக்கும் காலடிகளில், அழகிய மலை போன்ற மார்பினையுடைய தலைவன் வணங்கியும், வன் நெஞ்சே நீ இன்னும் சிறிது நேரம் ஊடியிருப்பேன் என்கிறாயா! நீ வாழ்க’ வாழ்க என்பது தலைவி தலைவனுக்காக இரங்கிப் பிடிவாதமாக இருக்கும் தன் நெஞ்சிடம் சினம் காட்டுவதைக் குறிக்கும் கேலிச் சொல்.
மாயிரும் கங்குல் மாமலை நாடனைப்
பாயல் நீவிப் பள்ளிமிசைத் தொடர்ந்தன்று
என்பது. ‘இரவு நேரத்தில் உறக்கத்தை விட்டு உறங்கும் மலைநாடனைக் கட்டிவைத்தல்’ என்பது இதன் பொருள். தலைவி கட்டிவைத்த செயலை வெண்பா உணர்த்துகிறது. தலைவி தலைவனிடம் கூறுவதுபோல் வெண்பா அமைந்துள்ளது : ‘யானையைக் கொடியால் கட்டியது போல நான் என் முன்தானையால் உன்னைக் கட்டியிருக்கவும் இரவிலே. மானையும் மயக்கும் செவ்வரி பரந்த கண்களைக் கொண்ட பெண்ணைத் தேடிச் சோலைக்குப் போகின்றாயோ !’
பாயிருள் கணவனைப் படர்ச்சி நோக்கிச்
சேயிழை அரிவை செல்கஎன விடுத்தன்று
என்பது. ‘பரந்த இருளில் கணவன் செல்வதைப் பார்த்துத் தலைவி போவாயாக என அவனை விடுத்தல்’ என்பது பொருள். தன்னை விட்டு வேறொரு பெண்ணைத் தேடிச் செல்லும் அவனைச் செல்க என்று தலைவி அனுப்புவதை வெண்பா காட்டுகிறது : ‘உன்னைத் தடுப்பவர் இங்கு யாரும் இல்லை ; செல்வாயாக ; குறியிடத்தில் உன்னைக் காணாமல் ஆபரமணிந்த பெண்ணாள் மயங்கிக் காத்திருப்பாள் ; அவள் வருந்தாத வண்ணம் நீ விரைந்து செல்ல நிலா உன் வழியில் வெளிச்சமிடட்டும்.’
நிலவுவேல் நெடுந்தகை நீள்கழை ஆற்றிடைச்
செலவுமுன் வலித்துச் செலவுஅழுங் கின்று
என்பது. ‘நிலவு போல் ஒளிவிடும் வேலினையும் பெரும் மேம்பாட்டினையும் உடைய தலைவன் உயர்ந்த மூங்கில்கள் நிறைந்த வழியில் போகக் கருதிப் பின்னாப் போதலைத் தவிர்த்தல்’ என்பது இதன் பொருள். வெண்பா தரும் விளக்கம்: ‘மணம் கமழும் நெற்றியையுடைய தலைவி நடுங்கிப் பீர்க்கம்பூப் போலப் பசப்பு உற்று மெலிந்து வருந்துதலைத் தவிர்க்கும் வண்ணம், கொடிய அம்பினையுடைய வேடர்கள் இருக்கும் உயர்ந்த மலை வழியில் செல்ல வேண்டாம். போதலைத் தவிர்ப்பாய் நெஞ்சே !’
ஒன்றுஅல்ல பலபாடி
மன்று இடை மடல் ஊர்ந்தன்று
என விளக்கம் அளிக்கிறது. ‘ஒன்று அன்றியே பலவற்றையும் சொல்லி மன்றின் நடுவே மடல்மாவைச் செலுத்துதல்’ என்பது பொருள். மடல் ஏறும் தலைவன் கூற்றாக வெண்பா அமைந்துள்ளது : ‘மான் போன்ற பார்வையை உடையவளின் மிகுந்த அழகைக் கொண்டாடி அம்பத்திலே நான் பனை மடலில் குதிரை செய்து மடல் ஏறக் கருதியதால், காமன் தன் வெற்றிக்கொடியை உயர்த்துகிறான்’.
ஊழி மாலை உறுதுயர் நோக்கித்
தோழி நீங்காள் தூதிடை ஆடின்று
என விளக்கமளிக்கிறது. காதலில் ஏங்கும் தலைவிக்கு மாலைக்காலம் ஊழி போல் தோன்றித் துன்புறுத்த அதனைப் பார்த்த தோழி தலைவனிடத்தே தூதாகிச் செல்லுதல்’ என்பது இதன் பொருள். தலைவனிடம் தூதுரைக்கும் தோழி கூற்றாக வெண்பா விளக்கமளிக்கிறது : ‘வண்டுகள் மொய்க்கும் மாலை அணிந்த மலைபோன்ற மார்பனே உன்னை வணங்கித் தூதுரைக்கின்றேன் ; இந்த வாள் போன்ற மாலை வேளையிடமிருந்து அவள் பிழைக்க வேண்டும். உன் தேரினைச் செலுத்துவாயாக’.
மான்ற மாலை மயில்இயல் வருத்தல்
தோன்றக் கூறித் துயரவற்கு உரைத்தன்று
என விளக்குகிறது. ‘மயில் போன்ற பெண்ணை மயக்கம் தரும் மாலைக்காலம் வருத்துதலைத் தோழி தலைவனுக்குச் சொல்லுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா தரும் விளக்கம் : வேலினையுடையவனே! நெஞ்சில் துயரம் மிகத் தலைவி இந்த மாலைவேளையை இகழ்கிறாள் ; இந்த இருள்மிக்க மாலை வெள்ளத்தைக் கடக்க உன் மார்பினைத் தெப்பமாகக் கொடுத்தால் அவள் உயிர் பிழைப்பாள்’.
போதார் கூந்தல் பொலம்தொடி அரிவை
காதல் கைம்மிகக் கண்டுகை சோர்ந்தன்று
என விளக்குகிறது. ‘மலர்க்கூந்தலையும் வளையலையும் உடைய தலைவியின் அன்பு எல்லை மீறிச் செல்லக் கண்ட தோழி தன் செயலில் சோர்தல்’ என்பது இதன் பொருள். வெண்பா தோழி கூற்றாக இதனை மேலும் விளக்குகிறது : ‘ஆம்பல் தண்டு போன்ற வளையல் கழலும் ; கயல்போலும் விழிகளும் துயில் இழந்தன ; மூங்கிலைவிட அழகுவாய்ந்த தோளினை உடையாள், கடற்கரைச் சோலை தரும் தனிமையில் என்ன ஆவாளோ?’
உருவ வால்வளை உயங்கத் தோழி
பருவம் மயங்கிப் படர்உழந்தன்று
என்பது. ‘அழகிய வளையலையுடைய தலைவி வருந்தத் தோழி இது (தலைவன் வருகைக்கு) உரிய காலம் அல்ல என்று மருண்டு வருத்தமுறுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா தரும் விளக்கம் : மூங்கில் தோள்களைப் பிரிந்து சென்ற தலைவர் என்னை நினைத்து வரும் காலம் இல்லையோ? அல்லது உரிய காலம்தானோ? கொன்றைக் காடெல்லாம் பொன்போல் பூத்திருக்கிறது ; அழகிய மயிலும் மலையிடத்தே அகவுகிறது’. இத்துறைக்கு இன்னுமொரு விளக்கமும் உள்ளது. அது ‘தலைவன் வரும் காலம் அன்று என்று தலைவி தெளிதல்’ என்பது. இதற்கான கொளு,
ஆங்கவர் கூறிய பருவம் அன்றுஎனத்
தேன்கமழ் கோதை தெளிதலும் அதுவே
என்பது. ‘மயில் அகவியது ; சோலை மலர்கள் தேன்துளியைச் சிதற, முல்லையும் தோன்றியும் கார்காலமெனக் கருதித் தவறாகப் பூத்துவிட்டன ; தலைவர் வரும் காலம் இது அன்று’ என்பது வெண்பா தரும் விளக்கம்.
காமுறு காமம் தளைபரிந்து ஏங்கி
ஏமுற்று இருந்த இறைவன் உரைத்தன்று
என்பது. ‘வேட்கை மிகும் ஆசை எல்லை கடந்துவிடக் காதல் ஏக்கமுற்று மயங்கியிருக்கும் தலைவன் சொல்லுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா இதனை நயமுற விளக்குகிறது. ‘இரண்டு கயல்களையே கண்களாகக் கொண்ட தலைவியைத் தழுவக் கருதிய எனக்குப் பகலிலும் இரவிலும் மகிழ்ச்சி இல்லாமல் போனது. ஒருவேளை (தலைவியின் முகம் போன்ற) நிலவைக் கண்டால் நான் பிழைத்திருக்கக் கூடும்.’ தலைவன் கூற்றில் அவனது வேட்கை வெளிப்படுகிறது.
வெள்வளை நெகிழவும் எம்உள் ளாத
கள்வனைக் காணாதுஇவ் ஊர்எனக் கிளந்தன்று
என்பது. காதல் ஏக்கத்தால் வளையல் கழலவும், ‘என்னை நினைக்காமல் இருந்து என் வளையல்களைக் கவர்ந்தவனை இந்த ஊர் அறியவில்லை’ எனத் தலைவி சொல்லுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா இதனை அழகுற விளக்குகிறது : ‘இந்த ஊர் வானகத்திலுள்ள நிலவில் கானகத்து முயலையே காணும்; ஆனால் என் வளையல்கள் கழலக் காரணமானவனைக் காணமாட்டாது’.
தேன்கமழ் கோதை செம்மல் அளிநினைந்து
ஆங்குஅந் நிலைமை யாய்அறி யாமை
வேங்கைஅம் சிலம்பற்கு வெறிஆடின்று
என்பது. ‘தலைவி, தலைவனது அருளைப் பெறக் கருதி, அதனைத் தாய் அறியாதபடி வேங்கை மரங்கள் பூத்திருக்கும் தன் வீட்டில் முருகன் அருள் வேண்டும் வெறிக்கூத்தை ஆடுதல்’ என்பது இதன் பொருள். இதற்கு வெண்பா தரும் விளக்கம் : காதல் ஏக்கத்தால் வெப்பமான பெருமூச்சினை விட்டுத் தலைவன் வருவானோ, வரமாட்டானோ என்ற ஐயம் நீங்கத் தலைவி அவனது அருளைப் பெற விரும்பினாள் ; பக்கத்து வீட்டுப் பெண்களும் தாயும் அறியாதபடி தன் வீட்டிடத்தில் வெறிக்கூத்தை ஆடினாள்.
மாண்இழைக்கு வயல்ஊரன்
பாண்வரவு பாங்கிமொழிந்தன்று
என்பது. ‘சிறந்த அணிகலன்களை அணிந்த தலைவியிடம் தோழி, வயல்கள் நிறைந்த ஊரின் தலைவனுடைய பாணன் காண வந்திருப்பதைக் கூறுதல்’ என்பது பொருள். வெண்பா தரும் விளக்கம் : ‘இனிய சொற்களையும் மூங்கில் தோள்களையும் அணிகளையும் கொண்ட தலைவியே! மயக்கத்தைத் தரும் இம் மாலைவேளையில் நமது இருப்பிடத்திற்கு, தான் சொல்லும் பொய்யைப் பற்றிக் கவலைப்படாத பாணன் யாழுடன் வந்திருக்கிறான். எதற்கோ?’
தேன்கமழ் சிலம்பன் தார்எமக்கு எளிதுஎனப்
பாங்கவர் கேட்பப் பரத்தை மொழிந்தன்று
என்கிறது. ‘மணம் கமழும் மலையில் தலைவன் அணிந்திருக்கும் மாலையைப் பெறுவது எளிது எனத் தன்னைச் சார்ந்தவர் கேட்கப் பரத்தை சொல்லுதல்’ என்பது இதன் பொருள். தலைவனை அடைதல் தனக்கு எளிது என்பது இதன் குறிப்பு. வெண்பா தரும் விளக்கம் : ‘விறலியே ! பல பொய்களையும் சொல்லித் தலைவன் வருவான் என்று தலைவியிடம் கூறிக் (அவளிடம் பொருள்பெற்று) கொண்டாடுகிறாய் ; ஆனால் தலைவன் எம்மிடம் வருதல் உறுதி’ எனப் பரத்தை கூறுவதாக வெண்பா அமைந்துள்ளது.
பேணிய பிறர்முயக்கு ஆரமுது அவற்கெனப்
பாணன் விறலிக்குப் பாங்கி மொழிந்தன்று
என விளக்கமளிக்கிறது. ‘விரும்பிய பரத்தையர்களது தழுவுதலைப் பெறுதல் தலைவனுக்கு அரிய அமுதத்தோடு ஒக்கும் என விறலியிடம் தோழி கூறுதல்’. வெண்பா தரும் விளக்கம் : ‘அரும்பிற்கு, மலர்ந்த பூவினது வாசம் உண்டா? விறலியே! நீர்வளம் மிக்க ஊரின் தலைவனுக்கு முதிர்ந்த மார்புகளைக் கொண்ட பெண்களைத் தழுவுதல் என்பது அமுதம் சுவைப்பது போன்றதல்லவா!’ தலைவியின் சிறப்பு பரத்தையிடம் இல்லை என்பதை ‘அரும்பிற்கும் உண்டோ அலரது நாற்றம்’ என்ற அடியால் புலப்படுத்துகிறாள் தோழி.
ஆங்கவன் மூப்பவர்க்கு அருங்களி தரும்எனப்
பாங்கி கேட்ப விறலி பகர்ந்தன்று
என்கிறது. தலைவனின் மூப்புப் பரத்தையருக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும் எனச் சொல்லித் தோழி கேட்க விறலி கூறுதல் என்பது இதன் பொருள். வெண்பா தரும் விளக்கம் : தலைவன் மீது வெறுப்புடையவர்கள் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். முறுவல் முளைத்த வாயினராகிய பரத்தையர்க்குத் தலைவனது முதுமை, முற்றிய பழைய கள்ளைப் போல மிகுந்த களிப்பைத் தரும்.
உளைத்தவர் கூறும் உரையெல்லாம் நிற்க
முளைத்த முறுவலார்க்கு எல்லாம் – விளைத்த
பழங்கள் அனைத்தாய்ப் படுகளி செய்யும்
முழங்கும் புனல்ஊரன் மூப்பு
உம்மில் அரிவை உரைமொழி ஒழிய
எம்மில் வலவனும் தேரும் வருமெனப்
பரத்தை வாயிற்குப் பாங்கி பகர்ந்தன்று
என்பது. ‘உங்கள் இல்லத்திலிருந்து எம் இல்லத்திற்குத் தேரில் ஏறித் தலைவன் வருதல் உறுதி எனப் பரத்தையின் தூதுவரிடம் தலைவியின் தோழி கூறுதல்’ என்பது பொருள். வெண்பா இதற்கு, மேலும் விளக்கம் தருகிறது : ‘உன் தலைவியாகிய பரத்தை (தலைவன் தலைவியிடம் செல்லான் எனக்) கூறிய சொல் வீணாகும்படி, தலைவன் தேரில் ஏறி எம்முடைய இல்லத்திற்கு வருவது உறுதி’. தோழி கூறுவதாக அமைந்துள்ள வெண்பா, துறையை விளக்குகிறது.
மற்றவர் சேரியின் மைந்தன் உறைந்தமை
இற்றென விறலி எடுத்துரைத் தன்று
என விளக்குகிறது. ‘பரத்தையர் சேரியில் தலைவன் தங்கியது உண்டு என விறலி (தலைவிக்கு) எடுத்துரைத்தல்’ என்பது இதன் பொருள். வெண்பா விறலி கூற்றாக அமைந்துள்ளது : ‘தலைவியாலே நான் நன்மைகள் பெற்றேன். கழனிகள் நிறைந்த ஊரினனான தலைவன், மாலையை அணிந்து ஒப்பனை செய்து கொண்டு இருக்கும் பரத்தையர் சேரியுள் தங்கிய செய்தி எனக்குத் தெரியும் என்பதைச் சொல்வேன். ஆனாலும் அது எனக்குத் தெரியாது’. தலைவியிடம் பொருள் பெற்றதால் தலைவனின் பரத்தமைத் தொடர்பைக் கூறவிரும்பும் விறலி, தலைவன் மீதுள்ள அச்சத்தால் அதை மறுத்தும் பேசுகிறாள்.
பொற்றார் அகலம் புல்லிய மகளிர்க்கு
அற்றாங்கு ஒழுகாது அறம்கண்மா றின்று
என்பது. ‘தலைவனுடைய மார்பைத் தழுவிய தலைவியுடன் இறுதிவரை வாழாது இடையே கைவிடுதல்’ என்பது இதன் பொருள். வெண்பா தரும் விளக்கம் : ‘கரிய பெரிய கண்களையும் வளையல் அணிந்த அழகிய கைகளையும் கொண்ட தலைவியை, மெய்யுணர்ந்தவன் போலத் தலைவன் கைவிடுதல் அறம் அன்று.’
நாறிருங் கூந்தல் மகளிரை நயப்ப
வேறுபடு வேட்கை வீயக் கூறின்று
என்பது. ‘தலைவியைக் கைவிட்டுத் தலைவன் நறுமணம் மிக்க கூந்தலையுடைய பிற மகளிரை நயக்கும் வேட்கை கெடும்படி கூறுதல்’ என்பது பொருள். வெண்பா தரும் விளக்கம் : ‘பண்ணே விரும்பும் இனிய குரலையும் பவளவாயினையும், பெரிய அல்குலையும் உடைய தலைவியினது கண்கள் பீர்க்கம்பூப் போலப் பசக்கும்படி பிரிந்து இவள் தொடர்பை விட்டுவிடுதல் அறமாகுமோ?’

