82

யாப்பருங்கலக்காரிகை - 2

பாடம் - 1

பாக்கள்- 1

1.0 பாட முன்னுரை

மாணவ நண்பர்களே ! பாக்களின் இலக்கணம் பயில இருக்கிறீர்கள். யாப்பு என்னும் சொல்லுக்குக் கட்டுதல் என்பது பொருள் என்பதையும், அசை, தளை, தொடை என்னும் சொற்களும் கட்டுதல், இணைத்தல், தொடுத்தல் ஆகிய பொருள்களைத் தரும் என்பதையும் முந்தைய பாடங்களில் அறிந்திருக்கிறீர்கள். யாப்பு, பாட்டு, செய்யுள், பா, கவிதை எனப் பல்வேறு சொற்களால் அறியப்படும் செய்யுளின் உறுப்புகளாகிய எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றின் இலக்கணங்கள் உங்கள் மனத்தில் நன்கு பதிவாகியிருக்கும் அல்லவா ! அப்பதிவு தெளிவாயிருந்தால் இப்பாடம் தொடங்கி நீங்கள் பயிலவிருக்கும் பா இலக்கணம் உங்களுக்கு எளிமையாக இருக்கும். ஒருவேளை உறுப்பிலக்கண அறிவில் போதுமான தெளிவு இல்லையென்றால், நீங்கள் உறுப்பிலக்கணத்தை (யாப்பருங்கலக் காரிகை, உறுப்பியல்) மீண்டும் ஒருமுறை பயின்ற பின், பா இலக்கணம் பயில்வது நல்லது. உறுப்புகளால் இணைத்துக் கட்டி உருவாக்கப்படும் பாக்களின் இலக்கணங்களை இனிக் காண்போம்.

1.1 பாவகைகள்

பாக்கள் நால்வகைப்படும். அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியன. இவற்றுடன் வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து அமையும் மருட்பாவையும் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வெல்லாப் பாக்களுக்கும் உட்பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பா இலக்கணத்தையும் அதன் உட்பிரிவுகளுடன் காணலாம். இப்பாடத்தில் வெண்பா, ஆசிரியப்பா ஆகிய இரு பாவகைகளின் இலக்கணத்தைப் பயிலலாம்.

1.2 பாவுக்குரிய அடியும் ஓசையும்

ஒரு பாவைப் பார்க்கும் போதே அதன் அடி அமைப்பும், ஓசையுடன் படிக்கும்போது அல்லது கேட்கும்போது அதன் ஒலி அமைப்பும் முதலில் நம் கவனத்தில் பதியும் அல்லவா ! அதனால்தான் பாக்களின் இலக்கணத்தைச் சொல்வதற்கு முன்னர் அவற்றிற்குரிய அடி அமைப்பையும் ஓசை அமைப்பையும் தெரிவித்துத் தொடங்குகிறார் காரிகை ஆசிரியர். ஓசை தொடர்பாக இங்கு ஒரு குறிப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பல்வகைப்பட்ட பாக்களின் ஓசை நுட்பங்கள் பற்றிய இலக்கணத் தெளிவை இப்போது கிடைக்கும் நூல்களைக் கொண்டு பெற இயலவில்லை. உரையாசிரியரும் தெளிவுபடுத்தவில்லை. ஒரு பாவுக்கு அதன் தளை அமைப்பை மட்டுமே கொண்டு ஓசை இலக்கணம் கூறுகிறார் உரையாசிரியர். ஆகவே நாமும் அதனையே ஏற்கவேண்டியுள்ளது. இப்பாடத்தில் நாம் பயில இருக்கின்ற வெண்பா, ஆசிரியப்பா என்னும் பாக்களுக்குரிய அடிகளும் ஓசைகளும் யாவை என்பதை முதலில் காணலாம்.

1.2.1 வெண்பாவுக்குரிய அடி அடிகள் குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும் என்பதை அறிவீர்கள். இவற்றுள் வெண்பாவுக்குரிய அடி எது? வெண்பாவுக்குரிய அடி நாற்சீரடியாகிய அளவடி ஆகும். ஆயினும் வெண்பாவின் ஈற்றடி (இறுதி அடி) மட்டும் முச்சீரடியாகிய சிந்தடியாக அமையும். ஒரு வெண்பாவில் எத்தனை அடிகள் இருப்பினும் ஈற்றடி ஒழிந்த ஏனைய எல்லா அடிகளும் அளவடியாக வரும் என்பதனாலேயே நூற்பாவில் வெண்பாவின் அடி அளவடி எனக் குறிப்பிடுகிறார் காரிகை ஆசிரியர்.

வெண்பா அகவல் கலிப்பா அளவடி

(யாப்பருங்கலக் காரிகை, 21)

(எ.டு)

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற

(திருக்குறள், 34)

(ஆதல் = ஆகுக ; அனைத்து = அவ்வளவே ; ஆகுல நீர = ஆரவாரத் தன்மை உடையவை)

மேற்காட்டிய வெண்பாவில் ஈற்றடி சிந்தடியாகவும், ஏனைய அடி அளவடியாகவும் அமைந்திருப்பதைக் காணுங்கள்.

1.2.2 ஆசிரியப்பாவுக்குரிய அடி அகவற்பா எனப்படும் ஆசிரியப்பாவுக்குரிய அடியும் அளவடியே ஆகும். இவ்வாறு சொல்லப்பட்டாலும் இரண்டு வகை ஆசிரியப்பாக்களில் வேறுவகை அடிகளும் இடம்பெறும். நேரிசை ஆசிரியப்பாவில் ஈற்றயலடி (இறுதியடிக்கு முந்திய அடி) சிந்தடியாக வரும். இணைக்குறள் ஆசிரியப்பாவில் இடையே அளவடிகளோடு, இரண்டும் அதற்கு மேற்பட்டும் குறளடிகளும் சிந்தடிகளும் வரும். (குறளடி = இரண்டு சீர் அடி; சிந்தடி= முச்சீர் அடி)

(எ.டு)

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த

செங்கோல் அம்பின் செங்கோட் டியானைக்

கழல்தொடிச் சேஎய் குன்றம்

குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

குறுந்தொகை, 1)

(அவுணர் = அரக்கர் ; தேய்த்த = அழித்த; கோல் = திரண்ட; செங்கோட்டியானை = சிவந்த கொம்பையுடைய யானை ; கழல் தொடி = கழல்கின்ற வளையல், இறுக்கமில்லாதது ; சேஎய் = முருகன் ; காந்தட்டே = காந்தளை உடையது)

மேற்காட்டிய பா நேரிசை ஆசிரியப்பா ஆகும். அதன் ஈற்றயலடி சிந்தடியாகவும் ஏனைய அடிகள் அளவடிகளாகவும் அமைந்திருப்பதைக் காணுங்கள்.

(எ.டு)

நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்

சாரச் சார்ந்து

தீரத் தீரும்

சாரல் நாடன் கேண்மை

சாரச் சாரச் சார்ந்து

தீரத் தீரத் தீர்பொல் லாதே

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(தண்மை = குளிர்ச்சி ; வெம்மை = சூடு; சார = நெருங்க ; கேண்மை = நட்பு, காதல் ; தீர்பு ஒல்லாதே = நீங்கிப் போகாது)

மேற்காட்டிய பா இணைக்குறள் ஆசிரியப்பா ஆகும். அதன் இடையிடையே குறளடியும் சிந்தடியும் இரண்டிரண்டு வந்திருப்பது காணுங்கள்.

1.2.3 வெண்பாவுக்குரிய ஓசை வெண்பாவுக்குரிய ஓசை செப்பல் ஓசை எனப்படும். செப்பல் = (விடை கூறுதல்). ஒருவர் கேட்கும் வினாவுக்கு மற்றொருவர் விடைசொல்லும் போது ஒருவகை ஓசை அமைப்புத் தோன்றும்; அதுவே செப்பல் ஓசை. அறமுரைக்கும் சான்றோர்களிடம் மக்கள் தமது வாழ்வியல் தொடர்பாக வினவிய போது, அச்சான்றோர்கள் விடையளிப்பதற்காக வெண்பா யாப்பைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அற நூல்களான திருக்குறள், நாலடியார் போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவ்வுண்மைக்குச் சான்று.

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

(திருக்குறள், 291)

என்னும் குறட்பாவில் ‘யாது எனின்’ என்ற வினாவைச் சொல்லி, அதன் பின் விடையைச் சொல்கிறார் வள்ளுவர். பல குறட்பாக்களில் வினாக்கள் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அமைந்திருப்பதை நீங்களே கண்டு அறியலாம். ஆக, விடையளிக்கும் ஓசை அமைப்பு வெண்பாவுக்குப் பொருத்தமானதென உணரலாம்.

முன்பே குறிப்பிட்டது போலத் தளை அமைப்பைக் கொண்டுதான் செப்பல் ஓசை விளக்கப்படுகிறது. செப்பல் ஓசை மூன்று வகைப்படும். அவை ஏந்திசைச் செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல் என்பன ஆகும்.

ஏந்திசைச் செப்பல்

ஒரு வெண்பா முழுமையும் வெண்சீர் வெண்டளை மட்டுமே அமைந்து வந்தால் அந்தப் பாவின் ஓசை ஏந்திசைச் செப்பல் ஓசை ஆகும்.

(எ.டு)

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு

(திருக்குறள், 397)

(ஆல் = அசை ;என் = ஏன்? ; சாந்துணையும் = சாகும் வரையும்)

காய்முன் நேர் வர அமைவது வெண்சீர் வெண்டளை என்பதை உறுப்பியலில் கற்றீர்கள். மேற்காட்டிய குறள் வெண்பாவில் முழுமையாக வெண்சீர் வெண்டளையே அமைந்திருப்பதைக் காணுங்கள். ஈற்றுச்சீர் தவிர மற்ற எல்லாச் சீர்களும் காய்ச்சீர்கள். அடுத்தடுத்து வரும் சீர்கள் அனைத்தும் நேரசையில் தொடங்குகின்றன. ஆகவே நின்றசீரும் வருஞ்சீரும் காய்முன் நேர் எனப் பொருந்திப் பாடல் முழுவதிலும் வெண்சீர் வெண்டளை மட்டுமே அமைந்துள்ளது. இவ்வாறு வருவதால் இப்பாடலின் ஓசை ஏந்திசைச் செப்பல் ஆகிறது.

தூங்கிசைச் செப்பல்

ஒரு வெண்பா முழுமையும் இயற்சீர் வெண்டளை மட்டுமே அமைந்து வருவது தூங்கிசைச் செப்பல் ஓசை ஆகும். மாமுன் நிரையும், விளம் முன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை.

(எ.டு)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக (திருக்குறள், 391)

மேற்காட்டிய குறள்வெண்பாவில் ஈற்றுச்சீர் ஒழிந்த அனைத்துச் சீர்களும் இயற்சீர்களே. இச்சீர்களிடையே மாமுன்நிரை, விளமுன்நேர் என இயற்சீர் வெண்டளை மட்டுமே அமைந்திருப்பதைக் காணுங்கள். ஆகவே இப்பாடலின் ஓசை தூங்கிசைச் செப்பல் ஆகும்.

ஒழுகிசைச் செப்பல்

ஒரு வெண்பாவில் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை ஆகிய இரு வெண்டளைகளும் கலந்து வருவது ஒழுகிசைச் செப்பல் ஆகும்.

(எ.டு)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு (திருக்குறள், 396)

(தொட்டனைத்து = தோண்டிய அளவிற்கு ;கற்றனைத்து = கற்ற அளவுக்கு)

மேற்காட்டிய வெண்பாவில் இயற்சீர்களும் வெண்சீர்களும் கலந்து வந்துள்ளன. 1, 2, 5, 6 ஆகியவை இயற்சீர்கள். 3, 4 ஆகியவை வெண்சீர்கள். ஆகவே இயற்சீர் வெண்டளையும் (1-2 ; 2-3 ; 5-6; 6-7) வெண்சீர் வெண்டளையும் (3-4; 4-5) கலந்து வந்துள்ளன. இவ்வாறு வருவதால் இப்பாடலின் ஓசை ஒழுகிசைச் செப்பல் ஆகும்.

1.2.4 ஆசிரியப்பாவுக்குரிய ஓசை ஆசிரியப்பாவின் ஓசை அகவல் ஓசை ஆகும். அகவல் என்பது அழைத்தல் என்னும் பொருள் தருவது ; மயிலின் ஓசையையும் குறிப்பது. ஏதோ ஒரு வகையில் ஆசிரியப்பாவின் ஓசையை அழைப்பு ஓசையாக நம் முன்னோர் குறித்துள்ளனர். அகவல் ஓசையும் ஏந்திசை அகவல், தூங்கிசை அகவல், ஒழுகிசை அகவல் என மூன்று வகைப்படும். ஆசிரியப்பாவில் இடம் பெறும் தளைகளின் அமைப்பைக் கொண்டே இவ்வகைகள் விளக்கப்படுகின்றன.

ஏந்திசை அகவல்

மாமுன் நேர் என அமையும் நேரொன்றாசிரியத்தளை மட்டுமே இடம் பெறும் ஆசிரியப்பாவின் ஓசை, ஏந்திசை அகவல் ஓசை ஆகும்.

(எ.டு)

போது சாந்தம் பொற்ப ஏந்தி

ஆதி நாதற் சேர்வோர்

சோதி வானம் துன்னு வாரே

(யாப்பருங்கலக் காரிகை, உரை மேற்கோள்)

(போது = பூ ;சாந்தம் = சந்தனம் ;பொற்ப = அழகாக ; ஆதிநாதன் = அருகக் கடவுள் ; துன்னுவார் = அடைவார்)

மேற்காட்டிய ஆசிரியப்பா முழுவதும் மாமுன்நேர் என்னும் அமைப்புடைய நேரொன்றாசிரியத் தளையால் அமைந்து வந்துள்ளது காண்க. ஆகவே இப்பாடலின் ஓசை, ஏந்திசை அகவல் ஆகும்.

தூங்கிசை அகவல்

விளம் முன் நிரை என அமையும் நிரையொன்றாசிரியத் தளை மட்டுமே இடம் பெறும் ஆசிரியப்பாவின் ஓசை, தூங்கிசை அகவல் ஓசை ஆகும்.

(எ.டு)

அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய

மணிதிகழ் அவிரொளி வரதனைப்

பணிபவர் பவம்நனி பரிசறுப் பவரே

(யாப்பருங்கலக் காரிகை, உரை மேற்கோள்)

(அவிரொளி = விளங்கும் ஒளி ; வரதன் = அருகன் ; பவம் = பிறப்பு)

மேற்காட்டிய ஆசிரியப்பாவின் சீர்களிடையே விளம்முன் நிரை என அமையும் நிரையொன்றாசிரியத்தளை மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆகவே இதன் ஓசை, தூங்கிசை அகவல் ஆகும்.

ஒழுகிசை அகவல்

நேரொன்றாசிரியத் தளை, நிரையொன்றாசிரியத் தளை என்னும் இருவகை ஆசிரியத் தளையும் விரவி, அவற்றுடன் பிறதளைகளும் கலந்து வருவது ஒழுகிசை அகவல் ஓசை ஆகும்.

(எ.டு)

குன்றக் குறவன் காதல் மடமகள்

வரையர மகளிர் புரையும் சாயலள்

ஐயள் அரும்பிய முலையள்

செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே

(ஐங்குறுநூறு, 255)

(வரை = மலை ; அரமகளிர் = தெய்வப் பெண்கள் ; ஐயள் = வியக்கத் தக்கவள் ; செய்ய = சிவந்த; சுணங்கு = தேமல்)

மேற்காட்டிய ஆசிரியப்பாவில் குறவன் – காதல் (மாமுன்நேர்) – நேரொன்றாசிரியத் தளை; மடமகள் – வரையர (விளம்முன்நிரை) – நிரையொன்றாசிரியத் தளை; குன்றக் – குறவன் (மாமுன்நிரை) – இயற்சீர் வெண்டளை; வாயினள் – மார்பினள் (விளம்முன்நேர்) – இயற்சீர் வெண்டளை என இவ்வாறு இருவகை ஆசிரியத் தளைகளுடன் இயற்சீர் வெண்டளையும் விரவி (கலந்து) வந்துள்ளன. ஆகவே இப்பாடலின் ஓசை ஒழுகிசை அகவல் ஆகும்.

1.3 வெண்பாவின் பொது இலக்கணம்

ஏனைய பாக்களை விட வரையறுத்த இலக்கணக் கட்டுக் கோப்புடையது வெண்பா. வெண்பாவுக்கு உரிய அல்லாத சீர்களோ தளைகளோ வெண்பாவில் இடம் பெற முடியாது. அவை இடம் பெற்றால் அந்தப் பாடல் வெண்பாவாகக் கொள்ளப்படாது. இத்தகைய கட்டுப்பாடு காரணமாகவே வெண்பாவை ‘வன்பா’ எனக் குறிப்பிடுவர் ; ‘வெண்பா புலவர்க்குப் புலி’ எனவும் கூறுவர். இனி, வெண்பாவின் பொது இலக்கணம் காண்போம். பாவில் அமைய வேண்டிய சீர்கள், தளைகள், அடிகள், தொடை அமைப்பு, ஓசை, பாவின் இறுதி ஆகியவற்றைத் தொகுத்துக் கூறுவதே பொது இலக்கணம்.

சீர்

வெண்பாவில் வெண்பாவுரிச்சீரும் (காய்ச்சீர்) இயற்சீரும் (ஈரசைச் சீர்) வரும். ஈற்றுச் சீராக மட்டும் அசைச்சீர் (ஓரசைச்சீர்) வரலாம். இவை தவிர மற்ற சீர் எதுவும் வெண்பாவில் வராது.

தளை

வெண்டளைகள் (இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை) மட்டுமே அமையும். வேற்றுத் தளைகள் வெண்பாவில் வாராது.

அடி

வெண்பா அளவடிகளால் அமையும். ஈற்றடி மட்டும் சிந்தடியாய் வரும். ஏனைய அடி எதுவும் வராது.

வெண்பாவின் அடிச்சிறுமை (குறைந்த அடி எண்ணிக்கை) இரண்டடி. அடிப்பெருமை (அதிக அடி எண்ணிக்கை) பாடுவோன் உள்ளக் கருத்தின் அளவாகும். எத்தனை அடியும் வரலாம்.

தொடை அமைப்பு – விகற்பம்

வெண்பா ஒரு விகற்பத்தாலோ பல விகற்பத்தாலோ வரும். விகற்பம் என்பது இங்கு எதுகை அமைப்பைக் குறிக்கும். ஒரு பாவில் எல்லா அடிகளிலும் எதுகை அமைப்பு ஒன்றாக இருந்தால் அது ஒரு விகற்பம்; பாவில் பல எதுகை அமைப்புகள் வந்தால் அது பல விகற்பம். வெண்பாவுக்குரிய எடுத்துக் காட்டுப் பாடல்களைப் பார்க்கும் போது விகற்ப இலக்கணம் உங்களுக்குத் தெளிவாகும்.‘எதுகை என்பது இரு சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது’ என்பதை அறிவீர்கள் அல்லவா?

ஓசை

வெண்பாவின் ஓசை செப்பலோசை ஆகும்.

ஈறு

வெண்பாவின் ஈற்றுச் சீர் நாள், மலர் என்னும் வாய்பாடுகளையுடைய அசைச்சீராகவோ, காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளையுடைய, குற்றியலுகரத்தில் முடியும் நேரீற்று இயற்சீராகவோ (மாச்சீர்) வரும். முற்றியலுகரத்தில் முடியும் நேரீற்றியற்சீரும் வரலாம். வேறு எவ்வகைச் சீரும் வெண்பா ஈற்றில் வராது.

1.4 வெண்பாவின் வகைகள்

வெண்பா ஐந்து வகைப்படும். அவை குறள்வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சிந்தியல் வெண்பா ஆகியன. அடி எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தால் குறள், சிந்தியல் என்னும் பெயர்கள் அமைந்தன. ஓசையில் உள்ள சிறு வேறுபாடுகள் காரணமாக நேரிசை, இன்னிசை என்னும் பெயர்கள் அமைந்தன. பல தொடைகள் (பல அடிகள் தொடுத்து) வருவதன் காரணமாகப் பஃறொடை வெண்பா (பல்+தொடை) என்னும் பெயர் அமைந்தது. இவற்றைத் தனித்தனியாகக் காணும்போது, வகைகளின் பெயர்க்காரணத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

1.4.1 குறள் வெண்பா · வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று இரண்டடியால் வருவது குறள் வெண்பா. அடி எண்ணிக்கையால் குறைந்தது, குறுகியது என்பதால் இப்பெயர் பெற்றது. (குறள் = குறுகிய வடிவம்)

· இது ஒருவிகற்பத்தாலும் இருவிகற்பத்தாலும் வரும்.

(எ.டு)

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய் (திருக்குறள், 69)

மேற்காட்டிய குறள்வெண்பா, வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்றுள்ளது. ஈன்ற – சான்றோன் என ஒரே எதுகை அமைப்பு உள்ளதால் இது ஒரு விகற்பத்தால் வந்த குறள்வெண்பா. ஈற்றடி சிந்தடியாகவும், ஈற்றுச்சீர் தாய் என்பது நாள் என்னும் வாய்பாடு கொண்ட அசைச்சீராகவும் அமைந்துள்ளது காண்க. சீர், தளை, ஓசை ஆகியவை வெண்பாவிற்குரியனவாக இருப்பதனை நீங்களே கண்டறியலாம்.

(எ.டு)

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்

கச்சாணி அன்னார் உடைத்து (திருக்குறள், 667)

மேற்காட்டிய குறள்வெண்பா வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்றுள்ளது. இது உருவு – அச்சாணி என எதுகை ஒரே அமைப்பில் இல்லாமையால் இருவிகற்பத்தால் வந்த குறள்வெண்பா. உடைத்து என்னும் ஈற்றுச்சீர் பிறப்பு என்னும் வாய்பாட்டில் அமைந்துள்ளது.

1.4.2 நேரிசை வெண்பா இயல்பான, நேரான இசையுடையது என்பது இப்பெயர் தரும் பொருள்.வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய், இரண்டாம் அடியின் இறுதிச்சீர் தனிச்சீராக வருவது நேரிசை வெண்பா என இப்பாவின் இலக்கணத்தைச் சுருக்கமாகச் சொல்லலாம். ஆயினும் காரிகை இந்தப் பாவை இரண்டு வகைகளாகப் பிரித்து விரிவாக விளக்குகிறது. காரிகை வழிநின்று அவற்றின் இலக்கணங்களைக் காணலாம். நேரிசை வெண்பா 1) இருகுறள் நேரிசை வெண்பா 2) ஆசிடை நேரிசை வெண்பா என இருவகைப்படும்.

இருகுறள் நேரிசை வெண்பா

1) இரண்டு குறள் வெண்பாக்களை அடுத்தடுத்து நிறுத்தி, முதற் குறள்வெண்பாவின் இறுதியில் ஒரு தனிச்சொல் (தனிச்சீர்) இட்டு, அடியை நிரப்பி, இருகுறள் வெண்பாக்களையும் இணைப்பது இருகுறள் நேரிசை வெண்பா.

2) அவ்வாறு இடப்பெறும் தனிச்சொல் முதற்குறள் வெண்பாவின் இறுதிச் சீருடன், அதாவது மூன்றாம் சீருடன் வெண்டளைப் பொருத்தம் உடையதாக இருத்தல் வேண்டும். மேலும் முதற் குறள் வெண்பாவுடன் எதுகைப் பொருத்தம் உடையதாகவும் இருத்தல் வேண்டும்.

3) இப்பாடல் ஒரு விகற்பமாகவும் வரலாம் ; இரு விகற்பமாகவும் வரலாம். அதாவது நான்கடிகளும் ஒரே எதுகை அமைப்புப் பெற்று ஒருவிகற்பத்தால் வரலாம் ; அல்லது முன்னிரண்டடி ஓர் எதுகை அமைப்பும், பின்னிரண்டடி வேறோர் எதுகை அமைப்பும் பெற்று இருவிகற்பத்தாலும் வரலாம்.

(எ.டு)

அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே

பெரிய வரைவயிரம் கொண்டு – தெரியின்

கரிய வரைநிலையார் காய்ந்தால்என் செய்வார்

பெரிய வரைவயிரம் கொண்டு

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(வரைகீண்டு = மலையைக் கல்லிப் பெயர்த்து ; வரைவயிரம் = வயிரம்பற்றிய மூங்கில் ; வரைநிலையார் = மலைபோன்ற உறுதியுடையார் ; காய்ந்தால் = சினந்தால்)

மேற்காட்டிய பாடலில் ‘தெரியின்’ என்ற தனிச்சொல்லை நீக்கிவிட்டுப் பாருங்கள். இரண்டு குறள்வெண்பாக்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது தெரியும். ‘கொண்டு’ என்னும் சீர் ‘காசு’ என்னும் வாய்பாட்டையுடையது. இரு குறள் வெண்பாக்களையும் ‘தெரியின்’ என்னும் தனிச்சொல் இணைக்கின்றது. ‘கொண்டு – தெரியின்’ என முதற்குறள் வெண்பாவுடன் தளைப் பொருத்தம் (மாமுன்நிரை – இயற்சீர் வெண்டளை) அமைகிறது. அரிய – பெரிய – தெரியின் என முதற்குறள் வெண்பாவுடன் தனிச்சொல் எதுகைப் பொருத்தமும் கொண்டுள்ளது. இவ்வாறு தனிச்சொல்லால் இணைக்கப்பட்டு நான்கடியும் ஒரேவிகற்பமாக (அரிய – பெரிய – கரிய – பெரிய) வருவதால் இப்பாடல் ஒருவிகற்பத்தால் வந்த இருகுறள் நேரிசை வெண்பா ஆகும்.

(எ.டு)

பதுமம் களிக்கும் அளியுடைத்துப் பாவை

வதனம் மதர்நோக் குடைத்துப் – புதையிருள்சூழ்

அப்போ தியல்பழியும் அம்போ ருகம்வதனம்

எப்போதும் நீங்கா தியல்பு

(தண்டியலங்காரம், வேற்றுமை அணி, உரைமேற்கோள்)

(பதுமம் = தாமரை மலர் ; அளி = வண்டு ; அம்போருகம் = தாமரை மலர்)

மேற்காட்டிய வெண்பாவில் இரு குறள் வெண்பாக்கள் அடுத்தடுத்து நிற்கின்றன. முதற்குறள்வெண்பா ‘பிறப்பு’ என்னும் வாய்பாட்டில் அமைந்த ‘உடைத்து’ என்னும் சீரில் முடிகிறது. இருகுறள் வெண்பாக்களையும் ‘புதையிருள்சூழ்’ என்னும் தனிச்சொல் இணைக்கிறது. உடைத்து – புதையிருள் சூழ் எனத் தளைப் பொருத்தம் (மாமுன்நிரை – இயற்சீர் வெண்டளை) அமைகிறது. பது – வத – புதை என முதற்குறள் வெண்பாவுடன் தனிச்சொல்லுக்கு எதுகைப் பொருத்தமும் அமைந்துள்ளது. நான்கடிகளில் முதலிரண்டடிகள் ஒருவகை எதுகையும் (பது-வத) பின்னிரண்டடிகள் வேறுவகை எதுகையும் (அப்போது – எப்போதும்) கொண்டுள்ளதனால் இப்பாடல் இருவிகற்பத்தால் வந்த இருகுறள் நேரிசை வெண்பா.

ஆசிடை நேரிசை வெண்பா

ஆசு = பற்றாசு ; பொற்கொல்லர் நகைகளில் இணைப்புக்குப் பயன்படுத்தும் பொடி. இங்குச் சீர்களைத் தளை, ஓசைப் பொருத்தத்துடன் இணைக்கப் பயன்படுத்தும் ஒன்று அல்லது இரண்டு அசைகளை ‘ஆசு’ எனக் குறிப்பிடுகின்றனர். கீழ்வரும் விளக்கத்தைக் கவனம் கொள்ளுங்கள். இரண்டு குறள்வெண்பாக்களை அடுத்தடுத்து நிறுத்தித் தனிச்சொல் கொண்டு இணைக்கும் போது, முதற்குறட்பாவுடன் தனிச் சொல்லுக்குத் தளைப் பொருத்தம் ஏற்படவில்லையென்றால் வெண்பாவின் ஓசை கெடும். இதனைச் சரிசெய்ய முதற்குறட்பாவின் இறுதியில் ஓர் அசையோ, இரண்டசையோ சேர்த்து வெண்டளை அமையுமாறு செய்யப்படும். இவ்வாறு ஓசை பிறழாமைக்காகச் சேர்க்கப்படும் இணைப்பு அசைகளுக்கு ‘ஆசு’ என்று பெயர். ஆசு இடையிலே சேர்க்கப்பட்டு வரும் நேரிசை வெண்பா ஆசிடை நேரிசை வெண்பா எனப்படும். இது ஒருவிகற்பத்தாலோ இருவிகற்பத்தாலோ வரும்.

இருகுறள் நேரிசை வெண்பா

1) இரண்டு குறள் வெண்பாக்களை அடுத்தடுத்து நிறுத்தி, முதற் குறள்வெண்பாவின் இறுதியில் ஒரு தனிச்சொல் (தனிச்சீர்) இட்டு, அடியை நிரப்பி, இருகுறள் வெண்பாக்களையும் இணைப்பது இருகுறள் நேரிசை வெண்பா.

2) அவ்வாறு இடப்பெறும் தனிச்சொல் முதற்குறள் வெண்பாவின் இறுதிச் சீருடன், அதாவது மூன்றாம் சீருடன் வெண்டளைப் பொருத்தம் உடையதாக இருத்தல் வேண்டும். மேலும் முதற் குறள் வெண்பாவுடன் எதுகைப் பொருத்தம் உடையதாகவும் இருத்தல் வேண்டும்.

3) இப்பாடல் ஒரு விகற்பமாகவும் வரலாம் ; இரு விகற்பமாகவும் வரலாம். அதாவது நான்கடிகளும் ஒரே எதுகை அமைப்புப் பெற்று ஒருவிகற்பத்தால் வரலாம் ; அல்லது முன்னிரண்டடி ஓர் எதுகை அமைப்பும், பின்னிரண்டடி வேறோர் எதுகை அமைப்பும் பெற்று இருவிகற்பத்தாலும் வரலாம்.

(எ.டு)

அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே

பெரிய வரைவயிரம் கொண்டு – தெரியின்

கரிய வரைநிலையார் காய்ந்தால்என் செய்வார்

பெரிய வரைவயிரம் கொண்டு

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(வரைகீண்டு = மலையைக் கல்லிப் பெயர்த்து ; வரைவயிரம் = வயிரம்பற்றிய மூங்கில் ; வரைநிலையார் = மலைபோன்ற உறுதியுடையார் ; காய்ந்தால் = சினந்தால்)

மேற்காட்டிய பாடலில் ‘தெரியின்’ என்ற தனிச்சொல்லை நீக்கிவிட்டுப் பாருங்கள். இரண்டு குறள்வெண்பாக்கள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது தெரியும். ‘கொண்டு’ என்னும் சீர் ‘காசு’ என்னும் வாய்பாட்டையுடையது. இரு குறள் வெண்பாக்களையும் ‘தெரியின்’ என்னும் தனிச்சொல் இணைக்கின்றது. ‘கொண்டு – தெரியின்’ என முதற்குறள் வெண்பாவுடன் தளைப் பொருத்தம் (மாமுன்நிரை – இயற்சீர் வெண்டளை) அமைகிறது. அரிய – பெரிய – தெரியின் என முதற்குறள் வெண்பாவுடன் தனிச்சொல் எதுகைப் பொருத்தமும் கொண்டுள்ளது. இவ்வாறு தனிச்சொல்லால் இணைக்கப்பட்டு நான்கடியும் ஒரேவிகற்பமாக (அரிய – பெரிய – கரிய – பெரிய) வருவதால் இப்பாடல் ஒருவிகற்பத்தால் வந்த இருகுறள் நேரிசை வெண்பா ஆகும்.

(எ.டு)

பதுமம் களிக்கும் அளியுடைத்துப் பாவை

வதனம் மதர்நோக் குடைத்துப் – புதையிருள்சூழ்

அப்போ தியல்பழியும் அம்போ ருகம்வதனம்

எப்போதும் நீங்கா தியல்பு

(தண்டியலங்காரம், வேற்றுமை அணி, உரைமேற்கோள்)

(பதுமம் = தாமரை மலர் ; அளி = வண்டு ; அம்போருகம் = தாமரை மலர்)

மேற்காட்டிய வெண்பாவில் இரு குறள் வெண்பாக்கள் அடுத்தடுத்து நிற்கின்றன. முதற்குறள்வெண்பா ‘பிறப்பு’ என்னும் வாய்பாட்டில் அமைந்த ‘உடைத்து’ என்னும் சீரில் முடிகிறது. இருகுறள் வெண்பாக்களையும் ‘புதையிருள்சூழ்’ என்னும் தனிச்சொல் இணைக்கிறது. உடைத்து – புதையிருள் சூழ் எனத் தளைப் பொருத்தம் (மாமுன்நிரை – இயற்சீர் வெண்டளை) அமைகிறது. பது – வத – புதை என முதற்குறள் வெண்பாவுடன் தனிச்சொல்லுக்கு எதுகைப் பொருத்தமும் அமைந்துள்ளது. நான்கடிகளில் முதலிரண்டடிகள் ஒருவகை எதுகையும் (பது-வத) பின்னிரண்டடிகள் வேறுவகை எதுகையும் (அப்போது – எப்போதும்) கொண்டுள்ளதனால் இப்பாடல் இருவிகற்பத்தால் வந்த இருகுறள் நேரிசை வெண்பா.

ஆசிடை நேரிசை வெண்பா

ஆசு = பற்றாசு ; பொற்கொல்லர் நகைகளில் இணைப்புக்குப் பயன்படுத்தும் பொடி. இங்குச் சீர்களைத் தளை, ஓசைப் பொருத்தத்துடன் இணைக்கப் பயன்படுத்தும் ஒன்று அல்லது இரண்டு அசைகளை ‘ஆசு’ எனக் குறிப்பிடுகின்றனர். கீழ்வரும் விளக்கத்தைக் கவனம் கொள்ளுங்கள். இரண்டு குறள்வெண்பாக்களை அடுத்தடுத்து நிறுத்தித் தனிச்சொல் கொண்டு இணைக்கும் போது, முதற்குறட்பாவுடன் தனிச் சொல்லுக்குத் தளைப் பொருத்தம் ஏற்படவில்லையென்றால் வெண்பாவின் ஓசை கெடும். இதனைச் சரிசெய்ய முதற்குறட்பாவின் இறுதியில் ஓர் அசையோ, இரண்டசையோ சேர்த்து வெண்டளை அமையுமாறு செய்யப்படும். இவ்வாறு ஓசை பிறழாமைக்காகச் சேர்க்கப்படும் இணைப்பு அசைகளுக்கு ‘ஆசு’ என்று பெயர். ஆசு இடையிலே சேர்க்கப்பட்டு வரும் நேரிசை வெண்பா ஆசிடை நேரிசை வெண்பா எனப்படும். இது ஒருவிகற்பத்தாலோ இருவிகற்பத்தாலோ வரும்.

(எ.டு)

வஞ்சியேன் என்றவன்றன் ஊர்உரைத்தான் யானுமவன்

வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் – வஞ்சியான்

வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்

வஞ்சியாய் வஞ்சியார் கோ

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(வஞ்சியேன் = வஞ்சி நகரத்தைச் சேர்ந்தவன் ; வஞ்சியான் = வஞ்சிக்க மாட்டான் ; வாய்நேர்ந்தேன் = ஏற்றுக் கொண்டேன் ; வஞ்சியாய் = வஞ்சியைச் சேர்ந்த தோழியே ; கோ = தலைவன்)

மேற்காட்டிய பாடலில் முதற்குறள் வெண்பாவின் இறுதிச்சீர் ‘வாய்’ (நாள்சீர்)என முடிவதே பொருத்தம். ஆனால் அச்சீர் வாய் – வஞ்சியான் எனத் தனிச்சொல்லுடன் தளைப்பொருத்தமின்றிச் செப்பலோசை கெடுகிறது. ஆகவே ‘வாய்’ என்பதுடன் நேர்ந்-தேன் எனும் இரண்டசைகள் ஆசுகளாகச் சேர்க்கப்பட்டன. இப்போது வாய்நேர்ந்தேன் – வஞ்சியான் என்பது காய்முன்நேர் என வந்து வெண்சீர் வெண்டளை அமைகிறது. வெண்பாவின் ஓசை சரிசெய்யப்படுகிறது. இவ்வாறு வருவதனால் இது ஆசிடை நேரிசை வெண்பா ஆகும். நான்கடியும் ஒரே எதுகை அமைப்பில் வருவதனால் இது ஒரு விகற்பத்தால் வந்த ஆசிடை நேரிசை வெண்பா ஆகும்.

இனிக் குறள் வெண்பா, நேரிசை வெண்பா ஆகியவற்றின் இலக்கணம் கூறும் யாப்பருங்கலக் காரிகை நூற்பாவைக் காணலாம்.

ஈரடி வெண்பாக் குறள் ; குறட் பாவிரண் டாயிடைக்கண்

சீரிய வான்தனிச் சொல்லடி மூஉய்ச்செப்ப லோசைகுன்றா

தோரிரண் டாயும் ஒருவிகற் பாயும் வருவதுண்டேல்

நேரிசை யாகும் நெரிசுரி பூங்குழல் நேரிழையே

(காரிகை, 23) பொருள் : இரண்டடியால் ஆன வெண்பா குறள் வெண்பா. இரண்டு குறள் வெண்பாக்கள் இடையே ஒரு தனிச்சொல்லால் அடி நிரம்பிச், செப்பலோசை குன்றாமல், இருவிகற்பமாகவோ ஒருவிகற்பமாகவோ வருவது நேரிசை வெண்பா.

1.4.3 இன்னிசை வெண்பா · வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி வருவது இன்னிசை வெண்பா எனப்படும்.

· இது ஒரு விகற்பத்தாலும் பல விகற்பத்தாலும் வரும். இங்குப் பல விகற்பம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட விகற்பங்களைக் குறிக்கும். தடையின்றி வரும் ஓசை காரணமாக இது இன்னிசை வெண்பா எனப்பட்டது.

(எ.டு)

துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்

பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க

அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்

சகடக்கால் போல வரும்

(நாலடியார், 2)

(துகடீர் = துகள்தீர் = குற்றமற்ற ; பகடு = எருது ; கூழ் = உணவு ; அகடுற = நிலையாக; சகடக்கால் = வண்டிச்சக்கரம்)

மேற்காட்டிய பாடல் வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்றுள்ளது. இது நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி ஒருவிகற்பத்தால் (துக-பக-அக-சக) வந்த இன்னிசை வெண்பா ஆகும்.

(எ.டு)

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது

பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி

ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்

மருவுமின் மாண்டார் அறம்

. (நான்மணிக்கடிகை, 18)

(பின்றையே = பின்னால்; ஒருவுமின் = நீங்குக ; மருவுமின் = தழுவிக்கொள்க ; மாண்டார் = மாட்சிமைப்பட்டோர்)

மேற்காட்டிய பாடல் வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி வருகிறது. ஆகவே இது இன்னிசை வெண்பா. இன்று – பின்றை என ஒருவிகற்பமும், ஒருவு – மருவு என மற்றொரு விகற்பமும் பெற்றுள்ளது. ஆகவே இது பல விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா ஆகும்.

பிறவகை இன்னிசை வெண்பாக்கள்

இன்னிசை வெண்பாவின் தனி அடையாளம் அது தனிச்சொல் இன்றி இருப்பதுதான். ஆயினும் தனிச்சொல் பெற்று, நேரிசை வெண்பாவில் அடக்கமுடியாதவாறு சில மாறுபாடுகளைக் கொண்டுள்ள நான்கடி வெண்பாக்களை இன்னிசை வெண்பாவினுள் அடக்குகின்றனர் இலக்கணக் காரர்கள். அவை கீழ்வருமாறு :

1. இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று மூன்று விகற்பத்தால் வருவன.

2. மூன்றாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று இரண்டு விகற்பத்தால் வருவன.

3. அடிதோறும் ஒரூஉத் தொடை (முதற்சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை) பெற்று வருவன.

மேற்குறிப்பிட்டவற்றுள் முதலாவது வகைக்கு மட்டும் எடுத்துக்காட்டுக் காண்போம்.

மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்முள்

ஒலியும் பெருமையும் ஒக்கும் – மலிதேரான்

கச்சி படுவ கடல்படா கச்சி

கடல்படுவ எல்லாம் படும்

(தண்டியலங்காரம், வேற்றுமை அணி, உரைமேற்கோள்)

(மலி = மிகுந்த ; கச்சி = காஞ்சிபுரம் ; படுவ = தோன்றுபவை)

மேற்காட்டிய வெண்பாவில் இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் வருவது காண்க. மலி – ஒலி ; கச்சி – கடல் என மூன்று விகற்பங்கள் வந்துள்ளன. இவ்வகையில், இது நேரிசை வெண்பாவில் அடங்காது மாறுபடுவதையும் உணர்க.

1.4.4 பஃறொடை வெண்பா பல் + தொடை = பஃறொடை. ஒரு தொடை என்பது இரண்டடிகளைக் குறிக்கும். பலதொடை = பல இரண்டடிகள். அதாவது, வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடிக்கும் அதிகமான அடிகளைப் பெற்று வருவது பஃறொடை வெண்பா ஆகும். இது ஒருவிகற்பத்தாலும், பலவிகற்பத்தாலும் வரும்.

(எ.டு)

பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்

என்னோடு நின்றார் இருவர் ; அவருள்ளும்

பொன்னோடை நன்றென்றாள் நல்லளே ; பொன்னோடைக்

கியானைநன் றென்றாளும் அந்நிலையள் ; யானை

எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்

திருத்தார்நன் றென்றேன் தியேன்

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(ஓடை = யானையின் முகபடாம், அணி ; எருத்தம் = பிடரி ; தியேன் = தீயேன்)

மேற்காட்டிய வெண்பா ஆறடியால் வந்த பலவிகற்பப் பஃறொடை வெண்பா ஆகும். பன்-என்-பொன், கியா, எருத்த-திருத்தார் எனப் பல விகற்பங்கள் அமைந்துள்ளமை காண்க.

இனி, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா ஆகியவற்றின் இலக்கணம் கூறும் நூற்பாவைக் காண்போம்.

ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல்

இன்றி நடப்பினஃ தின்னிசை துன்னும் அடிபலவாய்ச்

சென்று நிகழ்வது பஃறொடை யாம்…………….

(யாப்பருங்கலக் காரிகை, 24)

பொருள் : நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி ஒரு விகற்பத்தாலோ, பல விகற்பத்தாலோ வருவது இன்னிசை வெண்பா ; நான்குக்கும் மிகுதியான பல அடிகளால் வருவது பஃறொடை வெண்பா.

1.4.5 சிந்தியல் வெண்பா இரண்டடியாலும், நான்கடியாலும், பல அடியாலும் வரும் வெண்பாக்களை அறிந்தோம். இனி, மூன்றடியால் அமையும் வெண்பாவின் இலக்கணம் காண்போம். வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று மூன்றடியால் வரும் வெண்பா சிந்தியல் வெண்பா எனப்படும். குறுகிய அடி எண்ணிக்கையுடைய வெண்பா குறள்வெண்பா எனப்பட்டது போலவே, அடி எண்ணிக்கையில் சிறியதாக (சிற்றியல் – சிந்தியல்) உள்ள வெண்பா சிந்தியல் வெண்பா எனப் பெயர் பெற்றது. இது 1) நேரிசைச் சிந்தியல், 2) இன்னிசைச் சிந்தியல் என இருவகைப்படும்.

நேரிசைச் சிந்தியல் வெண்பா

மூன்றடியாய், இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று ஒருவிகற்பத்தாலோ, இரண்டு விகற்பத்தாலோ வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா. நேரிசை வெண்பாவைப் போல இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சீர் பெறுவதால் இது இப்பெயர் பெற்றது.

(எ.டு)

அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து

செறிந்தார்க்குச் செவ்வன் உரைப்ப – செறிந்தார்

சிறந்தமை ஆராய்ந்து கொண்டு

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(அறிந்தான் = கடவுள் ; செறிந்தார் = புலமை மிகுந்தவர் ; செவ்வன் = செம்மையாக ; உரைப்ப = உரைப்பர்)

மேற்காட்டிய வெண்பா மூன்றடியாய், இரண்டாமடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று ஒருவிகற்பத்தால் (அறி-செறி-சிற) வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

மூன்றடியாய்த் தனிச்சொல் இன்றி ஒரு விகற்பத்தாலோ பலவிகற்பத்தாலோ வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஆகும். இன்னிசை வெண்பாப்போலத் தனிச்சொல் இன்றி வருவதால் இது இன்னிசைச் சிந்தியல் வெண்பா என்னும் பெயர் பெற்றது.

(எ.டு)

சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய

யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப

கானக நாடன் சுனை

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(ஆழ = மூழ்க ; வரை = மலை ; நீத்து = நீந்துதல் ; நிலை = நிற்றல், சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயலுக்கு நீத்து என மொழி (சொல்) மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்.)

மேற்காட்டிய வெண்பா மூன்றடியாய்த் தனிச்சொல் இன்றிப் பலவிகற்பத்தால் (சுரை – யானை, கான) வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா ஆகும்.

இதுவரை, வெண்பாவின் ஐந்து வகைகளுக்கும் உரிய இலக்கணங்களை விரிவாக அறிந்தோம். வெண்பாவின் பொது இலக்கணத்தில் வெண்பாவின் ஈறு எவ்வாறமையும் என்பதைப் பார்த்தோம். ஈறு பற்றி யாப்பருங்கலக் காரிகை தனியே எடுத்துரைத்துள்ளது. அதனை இனிக் காண்போம்.

1.4.6 வெண்பாவகைகளின் ஈறு வெண்பாவின் ஈற்றடி சிந்தடியாக வரும். ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர் என்னும் வாய்பாடுகளையுடைய அசைச்சீராக வரும். அசைச்சீர் மட்டுமன்றி ஈரசைச் சீர்களுள் நேரசையில் முடியும் சீர்களும் (நேர் ஈற்று இயற்சீர்) வெண்பாவின் ஈற்றுச் சீராக வரலாம். ஆனால் அந்த நேர் ஈற்று இயற்சீர்கள் (நேர்நேர், நிரைநேர்) குற்றியலுகரத்தில் முடிவனவாக இருக்க வேண்டும். அவற்றிற்குரிய வாய்பாடுகள் காசு (நேர்நேர்), பிறப்பு (நிரைநேர்) என்பனவாகும். இவ்விரண்டு வாய்பாடுகளும் குற்றியலுகரத்தில் (சு,பு) முடிந்திருப்பதைக் காணலாம்.

(எ.டு)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார் (திருக்குறள், 10)

மேற்காட்டிய வெண்பாவின் ஈற்றுச்சீர் நாள் சீர் ஆகும்.

(எ.டு)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக (திருக்குறள், 391)

மேற்காட்டிய வெண்பாவின் ஈற்றுச்சீர் மலர்ச்சீர் ஆகும்.

(எ.டு)

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு (திருக்குறள், 987)

மேற்குறித்த வெண்பாவின் ஈற்றுச்சீர் காசு என்னும் வாய்பாட்டுச் சீர் ஆகும்.

(எ.டு)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு (திருக்குறள்,1)

இப்பாடலின் ஈற்றுச்சீர் பிறப்பு என்னும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.

வெண்பாக்கள் சிலவற்றில் ஈற்றுச்சீர் முற்றியலுகரத்தில் முடிவடையும் நேரீற்றியற்சீராக வருவதும் உண்டு. அவற்றையும் காசு, பிறப்பு எனும் வாய்பாட்டிலேயே அடக்கிக் கூறுவர்.

(எ.டு)

இனமலர்க் கோதாய் இலங்குநீர்ச் சேர்ப்பன்

புனைமலர்த் தாரகலம் புல்லு

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்.)

(கோதாய் = மாலை அணிந்தவளே!; சேர்ப்பன் = கடல் துறைத் தலைவன்; தார் = மாலை ; அகலம் = மார்பு ; புல்லு = அணைத்துக் கொள்)

(எ.டு)

மஞ்சுசூழ் சோலை மலைநாட மூத்தாலும்

அஞ்சொல் மடவாட் கருளு

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(அஞ்சொல் = அழகிய சொற்கள்; மடவாட்கு = மடவாளுக்கு, இளந்தலைவிக்கு; அருளு = அருள்செய்)

மேற்காட்டிய பாக்களில் புல்லு, அருளு என வரும் ஈற்றுச் சீர்கள் லு, ளு எனும் முற்றியலுகரங்களில் முடிவடைந்துள்ளன. (கு, சு, டு, து, பு, று அல்லாத ஏனைய உகர ஈறுகள் முற்றியலுகரங்களே என்பதை எழுத்திலக்கணத்தில் அறிந்திருப்பீர்கள்). இச்சீர்கள் நேரீற்று இயற்சீர்கள். ஆகவே இவற்றைக் காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டுச் சீர்களாக ஏற்றுக் கொள்கிறது யாப்பிலக்கணம்.

இனிச் சிந்தியல் வெண்பாவின் இலக்கணத்தையும் வெண்பாவின் ஈற்றடி அமைப்பையும் கூறும் காரிகை நூற்பாவைக் காணலாம்.

நேரிசை இன்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால்

நேரிசை இன்னிசைச் சிந்தியல் ஆகும் ; நிகரில்வெள்ளைக்

கோரசைச் சீரும் ஒளிசேர் பிறப்புமொண் காசுமிற்ற

சீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே

(யாப்பருங்கலக் காரிகை, 25)

பொருள் : நேரிசை வெண்பாப் போல இரண்டாமடி இறுதியில் தனிச்சொல் பெற்று, மூன்றடியாய் வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா. இன்னிசை வெண்பாப் போலத் தனிச்சொல் இன்றி, மூன்றடியாய் வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. வெண்பாவின் ஈற்றடி சிந்தடி (முச்சீரடி)யே யாகும். ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஓரசைச் சீராகவோ, காசு பிறப்பு என்னும் வாய்பாடுகளையுடைய, குற்றியலுகர ஈறுகொண்ட நேரீற்று இயற்சீராகவோ வரும்.

மாணவர் கவனத்திற்கு

யாப்பிலக்கணத்தில் சில பெயர்களில் மாணவர்க்குக் குழப்பம் நேர்வதுண்டு. அடி இலக்கணத்தில் (உறுப்பியல்) குறள்அடி, சிந்தடி எனவரும் பெயர்களையும் பா இலக்கணத்தில் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா எனவரும் பெயர்களையும் தெளிவாக வேறுபடுத்தி அறிந்து கொள்ள வேண்டும். குறள் அடி இருசீர்களால் ஆகிய அடி ; குறள் வெண்பா இரண்டு அடிகளால் ஆகிய வெண்பா. சிந்தடி மூன்று சீர்களால் ஆகிய அடி ; சிந்தியல் வெண்பா மூன்று அடிகளால் ஆகிய வெண்பா.

1.5 ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்

நால்வகைப் பாக்களுள் இலக்கணக் கட்டுக்கோப்புகள் குறைவாக அமைந்து, கவிஞனின் மனப்போக்குக்கும் மொழிவழி வெளியீட்டுக்கும் இடைவெளி ஏற்படாதபடி அவனுக்கு அதிக உரிமையை வழங்குவது ஆசிரியப்பாவே ஆகும். இது அகவற்பா எனவும் வழங்கும். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை,பெருங்கதை போன்ற காப்பியங்கள் ஆகியவற்றில் பெருமளவு இடம் பெற்றிருப்பது ஆசிரியப்பாவே ஆகும். இனி ஆசிரியப்பாவின் சீர், தளை, அடி, ஓசை போன்ற பொது இலக்கணங்களைக் காண்போம்.

சீர்

ஆசிரியப்பாவில் ஆசிரிய உரிச்சீர்கள் (ஈரசைச் சீர்கள்) மிகுந்து வரும் ; பிற சீர்களும் கலந்துவரும். ஆனால் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீர்கள் (நிரையசையை நடுவில் கொண்ட வஞ்சியுரிச்சீர்கள் அதாவது கருவிளங்கனி, கூவிளங்கனி ஆகிய சீர்கள்) இரண்டும் ஆசிரியப்பாவில் வாரா.

தளை

ஆசிரியப்பாவுக்குச் சிறப்பானவைகளாகிய நேரொன்றா சிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை     ஆகிய இரண்டும் மிகுந்துவரும்; பிற தளைகளும் கலந்து வரும்.

அடி

ஆசிரியப்பா அளவடிகளால் அமையும். ஆயினும் நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயலடி சிந்தடியாக வரும்; இணைக்குறள் ஆசிரியப்பாவின் இடையே இரண்டும் பலவும் ஆகக் குறளடிகளும் சிந்தடிகளும் வரும்.

ஆசிரியப்பாவின்     அடிச்சிறுமை     மூன்றடியாகும். அடிப்பெருமை புலவன் உள்ளக் கருத்தைப் பொறுத்தது. எத்தனை அடியும் வரலாம்.

தொடை

ஆசிரியப்பாவில் பொழிப்பு மோனையும் (முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் அமையும் மோனை), அடி எதுகையும் (அடிதோறும் முதற்சீரில் அமையும் எதுகை) வருவது சிறப்புடையதாகும். வேறுவகையான தொடைகளும் வரலாம். ‘மோனை என்பது முதல் எழுத்து ஒன்றி வருவது’ என்பதை அறிவீர்கள்.

ஓசை

ஆசிரியப்பாவுக்குரிய ஓசை அகவல் ஓசையாகும். மேற்குறித்தவாறு சீர், தளை இலக்கணங்கள் பொருந்தி வரும் போது அகவல் ஓசை இயல்பாக அமையும்.

ஈறு

ஆசிரியப்பா வகைகள் நான்கிலும் ஈற்றுச்சீர் ‘ஏ’ என முடியும். நிலைமண்டில ஆசிரியப்பா ‘என்’ என முடிவது சிறப்பானது. இவையல்லாமல் ஓ, ஈ, ஆய், ஐ என்னும் ஈறுகளையும் ஆசிரியப்பா பெறுவதுண்டு.

இனி ஆசிரியப்பாவின் வகைகளை அறியலாம்.

1.6 ஆசிரியப்பாவின் வகைகள்

நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அடி அமைப்பு வேறுபாட்டின் அடிப்படையில் இவ்வகைகளுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன. இவற்றின் இலக்கணங்களைத் தனித்தனியே காணும்போது இவற்றின் பெயர்க் காரணத்தைப் புரிந்து கொள்வீர்கள்.

1.6.1 நேரிசை ஆசிரியப்பா ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, ஈற்றயலடி சிந்தடியாக (முச்சீரடி)வருவதுநேரிசை ஆசிரியப்பா ஆகும் . ஆசிரியப்பாவுக்குரிய ஈறுகளுள் ஏகார ஈறு நேரிசை ஆசிரியப்பாவுக்குச் சிறப்பானதாகும். சங்க இலக்கியத்தில் பெரும்பாலான பாக்கள் நேரிசை ஆசிரியப்பாக்களே ஆகும். இயல்பான (நேரான) ஓசையுடையது என்னும் பொருளில் இப்பாவுக்கு இப்பெயர் அமைந்தது.

(எ.டு)

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரல்

கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

(குறுந்தொகை, 3)

(உயர்ந்தன்று = உயர்ந்தது ;     ஆர்அளவின்று = பெரிய அளவையுடையது ; கோல் = கொம்பு ; தேன் = தேனடை)

இப்பாடல் ஈற்றயலடி     முச்சீரடியாய் ஏகாரத்தில் முடிவதைக் காண்க. ஆசிரியப்பாவிற்குரிய தளையும் ஓசையும் அமைந்திருப்பதையும் காணலாம். ஆகவே இது நேரிசை ஆசிரியப்பா ஆகும்.

1.6.2 இணைக்குறள் ஆசிரியப்பா ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, முதலடியும் ஈற்றடியும் அளவடியாய் (நாற்சீரடி) இடையிடையே , இரண்டும் அதற்கு மேற்பட்டும் குறளடியும் (இருசீரடி)சிந்தடியும் (முச்சீரடி) வருவது இணைக்குறள் ஆசிரியப்பா ஆகும்.

இங்கே ‘குறள்’ என்னும் சொல் குறுகிய அடிகளாகிய குறளடி, சிந்தடி ஆகிய இரண்டையும் குறிக்கிறது. இணை = இரண்டு. ‘இரண்டு அல்லது அதற்கு மேல் குறுகிய அடிகளைக் கொண்டது’ என்பது பொருள்.

(எ.டு)

நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்

சாரச் சார்ந்து

தீரத் தீரும்

சாரல் நாடன் கேண்மை

சாரச் சாரச் சார்ந்து

தீரத் தீரத் தீர்பொல் லாவே

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

மேற்காட்டிய பாடலில்     முதலடியும் ஈற்றடியும் அளவடிகளாய் நிற்க, இடையடிகள் குறளடியும் சிந்தடியுமாக வந்திருப்பது காண்க.

1.6.3 நிலைமண்டில ஆசிரியப்பா எல்லா அடியும் அளவடிகளாக வருவது நிலைமண்டில ஆசிரியப்பா. ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்றிருப்பதில் ஏனைய ஆசிரியப்பாக்களைப் போன்றது இது. எனினும் என் என்னும் ஈற்றில் முடிவது நிலைமண்டில ஆசிரியப்பாவுக்குச் சிறப்பானது.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களில் உள்ள காதைகள் ஒவ்வொன்றும் ‘என்’ என முடியும் நிலைமண்டில ஆசிரியப்பாக்களாக அமைந்திருப்பதை இணைய நூலகத்தில் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.

‘மண்டிலம்’ என்பது வட்டம் எனப் பொருள்படும். தொடங்கிய இடத்திலிருந்து தடையின்றி ஒரே சீராக வந்து தொடங்கிய     இடத்திலேயே முடிவதுதானே வட்டம் ! நாற்சீரடியாகத் தொடங்கி, நாற்சீரடியாகவே மாற்றமில்லாமல் தொடர்ந்து நாற்சீரடியாகவே முடிவு பெறுவதன் காரணமாக இவ்வாசிரியப்பா நிலைமண்டில ஆசிரியப்பா எனப்பெயர் பெற்றது.

(எ.டு)

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட செவ்வியை ஆகுமதி

யாரஃ தறிந்திசி னோரே சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்

உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே

(குறுந்தொகை, 18)

(வேரல் = மூங்கில் ;செவ்வியை ஆகு = மணந்து கொள்ளும் விருப்பத்தைக் கொள் ;    அறிந்திசினோர் = அறிவார்கள் ; கோடு = கொம்பு ; தவ = மிக ; காமம் = காதல்)

மேற்காட்டிய குறுந்தொகைப் பாடல் ஆசிரியப்பாவுக்குரிய தளை, ஓசை ஆகியவற்றைப் பெற்றிருப்பதையும், எல்லா அடிகளும் அளவடிகளாக அமைந்திருப்பதையும் காண்க. ‘என்’ என்று முடியாமல், ஈற்றில் ஏகாரம் வந்துள்ளது. ஏகாரம் நால்வகை ஆசிரியப்பாவுக்கும் பொது ஈறு ஆகும்.

1.6.4 அடிமறி மண்டில ஆசிரியப்பா இதுவும்     ஒரு ‘மண்டில’ ஆசிரியப்பாவே ஆகும். அதாவது எல்லா அடியும் அளவடியாக வரும். அவற்றுள் எந்த அடியையும் முதலடியாகவோ, இடையடியாகவோ, இறுதி அடியாகவோ மாற்றி வைத்துப் பார்த்தாலும் பாடலின் ஓசையோ பொருளோ கெடாது. அடிகளை மறித்து (இடம் மாற்றி) வைத்தாலும் ஓசையும் பொருளும் பிழைபடாது வருவதனால் இது அடிமறி மண்டில ஆசிரியப்பா என்னும் பெயரைப் பெறுகிறது.

(எ.டு)

சூரல் பம்பிய சிறுகான் யாறே

சூரர மகளிர் ஆரணங் கினரே

வாரலை எனினே யானஞ் சுவலே

சாரல் நாட நீவர லாறே

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(சூரல் = பிரம்புக் கொடி; சூர்அரமகளிர் = காட்டுத் தெய்வப் பெண்கள்; அணங்கினர் = அச்சம் தருவர் ; வாரலை = நீ வரவில்லை ; அஞ்சுவல் = அஞ்சுவேன் ; ஆறு = வழி)

மேற்காட்டிய பாடலில் எல்லா அடிகளும் அளவடிகளாக இருக்கின்றன ; எனவே அடிகளை முன் பின்னாக மாற்றிப் பார்த்தாலும் ஓசை கெடாது என்பது தெளிவு. பொருளும் கெடாது என்பது எவ்வாறு? பாட்டில் உள்ள அடிகளின் பொருள் அமைப்பே அதற்குக் காரணம். ஓர் அடியில் சொல்லவரும் பொருள் அந்த அடியிலேயே முடிவடைந்து விடுகிறது ; அடுத்த அடிக்குத் தொடர்வதில்லை.

அடிகளின் பொருள் அமைப்பைப் பாருங்கள்

தலைவியைச் சந்திப்பதற்காக மலைப்பகுதியில் இரவில் பயணப்பட்டு வரும் தலைவனிடம், ‘இவ்வாறு வருவது தலைவிக்கு அச்சம் தருவதாக உள்ளது; எனவே விரைவில் அவனை மணம்செய்து கொள்’ என உணர்த்தும் முறையில் தோழியோ தலைவியோ பேசும் பேச்சு இது.

பிரம்புக் கொடிகள் பின்னிக் கிடக்கும் காட்டாறுகள் உள்ளன ; காட்டுப் பெண்தெய்வங்கள் மிகுந்த அச்சம் தருவன ; ஒருநாள் நீ வரவில்லை என்றால்கூட உனக்கு என்னநேர்ந்ததோ என அஞ்சுகிறேன் ; சாரல் நாடனே ! நீ வரும் வழி இன்னல்கள் நிறைந்துள்ளது.

அடிவரிசைப்படி மேலே தரப்பட்டுள்ள பொருளைப் பாருங்கள். அடிகளை எந்த வகையில் மாற்றிப் போட்டாலும் தலைவி அல்லது தோழி கூறும் பாடல் பொருள் மாறாது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இவ்வாறு அமைந்திருப்பதால் இப்பாடல் அடிமறி மண்டில ஆசிரியப்பா ஆகும்.

இனி, ஆசிரியப்பா வகைகளின் இலக்கணம் கூறும் காரிகை நூற்பாவைக் காண்போம்.

கடைஅயற் பாதம்முச் சீர்வரின் நேரிசை ; காமருசீர்

இடைபல குன்றின் இணைக்குறள் ; எல்லா அடியும்ஒத்து

நடைபெறு மாயின் நிலைமண் டிலம் ;நடு வாதிஅந்தத் தடைதரு பாதத் தகவல் அடிமறி மண்டிலமே         (யாப்பருங்கலக் காரிகை, 28)

பொருள் : ஈற்றயலடி முச்சீரடியாக வருவது நேரிசை ஆசிரியப்பா ; இடையே பல அடிகள் குறளடியாகவும் சிந்தடியாகவும் குறுகிவருவது இணைக்குறள் ஆசிரியப்பா; எல்லா அடிகளும் அளவடிகளாக ஒத்து வருவது நிலைமண்டில ஆசிரியப்பா; நடு, முதல், இறுதி என அடிகளை முன்பின்னாக மாற்றி வைத்துப் பார்த்தாலும் ஓசையோ பொருளோ கெடாதிருப்பது அடிமறிமண்டில ஆசிரியப்பா.

1.7 தொகுப்புரை

யாப்பருங்கலக் காரிகையின் வழியில் நின்று, வெண்பா ஆசிரியப்பா ஆகிய இரு பாக்களின் அடி, ஓசை அமைப்புகளை இப்பாடத் தொடக்கத்தில் அறிந்து கொண்டீர்கள். பின்னர் வெண்பாவின் பொது இலக்கணங்களையும், அதன் ஐந்து வகைகளின் இலக்கணங்களையும் எடுத்துக்காட்டுகளின் துணை கொண்டு நன்கு புரிந்து கொண்டீர்கள். அதன்பின் ஆசிரியப்பாவின் இலக்கணங்களையும் அதன் நான்கு வகைகளின் இலக்கணங்களையும் எடுத்துக்காட்டுகளுடன் தெளிவுபடுத்திக் கொண்டீர்கள். உறுப்பியல் இலக்கணத்தில் தெளிவு பெற்று, இந்தப் பாட இலக்கணங்களையும் நன்கு புரிந்து கொண்டீர்களாயின், இப்போது உங்களால் வெண்பாவும் ஆசிரியப்பாவும் படைக்க இயலும். ஆயினும் கவிதை படைக்கக் ‘காரிகைத்துணை’ மட்டும் போதாதே ! கற்பனையும் உணர்வெழுச்சியும் வேண்டுமல்லவா ! அவை ‘கற்பித்து’ வருவன அல்ல. நீங்களே முயன்று அடையவேண்டியவை !

பாடம் - 2

பாக்கள் – 2

2.0 பாட முன்னுரை

யாப்பருங்கலக் காரிகை நால்வகைப் பாக்களாகிய வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா,வஞ்சிப்பா ஆகியவற்றுடன் மருட்பா எனும் பாவகையையும் விளக்கியுரைக்கின்றது என்பதை அறிவீர்கள். அவற்றுள்    வெண்பா,    ஆசிரியப்பா     எனும் முதல் இருவகைப் பாக்களின் இலக்கணங்களை அவற்றின் வகைகளுடன் பாக்கள் – 1 எனும் பாடத்தில் தெளிவாகப் படித்தறிந்தீர்கள். இப்பாடத்தில் கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா எனும் பாக்களின் இலக்கணங்களை விரிவாகக் காணலாம். தமிழ் இலக்கியத்தில் வெண்பாவும் ஆசிரியப்பாவும் பெற்றிருக்கும் அளவுக்குப் பெரும் இடம் பெற்றவை அல்ல இப்பாவகைகள். ஆயினும் ஓசை இனிமையில் முந்தையவற்றை விடக் கலிப்பா சிறப்பிடம் பெறுவது என்பதை இப்பாடம் முடிவுறும் போது நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். சங்க நூலாகிய கலித்தொகை முற்றிலும் கலிப்பாக்களால் ஆகியது. முதலில் இப்பாக்களின் அடியும் ஓசையும் பற்றி யாப்பருங்கலக் காரிகை வழியில் நின்று காணலாம்.

2.1 அடியும் ஓசையும்

பா இலக்கணத்தில் தவறாமல் கண்டுணர வேண்டியது பாவின் ஓசையாகும். ஓசை பாவுக்குப் பா வேறுபடும். ஓசை அமைப்பையும் அடியமைப்பையும் கொண்டே பாக்களை இன்ன பா என்று நாம் கண்டறிய வேண்டும். இன்று, அச்சு வடிவில் நூல்களில் நீங்கள் பாக்களைப் பார்க்கிறீர்கள்.அடிகள், சீர்கள் நன்கு இடைவெளியிட்டுப் பிரிக்கப்பட்டு அச்சிட்டிருப்பதால் அடிகள்,அவற்றில் உள்ள சீர்கள்ஆகியவற்றின் எண்ணிக்கையைப் பார்த்த பார்வையில் சொல்லி விடுகிறீர்கள்.    பழந்தமிழகத்தில் செய்யுள்கள் ஏடுகளில் எழுதப்பட்டிருந்தன. சீர் அடி ஆகியவை பிரித்துக் காட்டப்படாமல் பாக்கள் தொடர்ச்சியாக எழுதப் பட்டிருக்கும். எங்கும் முற்றுப்புள்ளி அரைப்புள்ளி போன்ற நிறுத்தற் குறிகளும் இரா. ஏட்டைப் படிக்கும் போது சீர் , அடி ஆகியவற்றைப் பிரித்துப் படிப்பது எப்படி? யாப்பிலக்கணம் அறிந்தவர்களுக்குப் பாவின் ஓசை நன்கு தெரிந்திருக்கும்.படிக்கும் போதே ஓசையை உணர்ந்து இன்ன பா இது, இதில் இத்தனை அடிகள் உள்ளன என்று சரியாகச் சொல்லிவிடுவர். அதனால்தான் யாப்பிலக்கண ஆசிரியர் பாக்களின் இலக்கணத்துக்குள் நுழைவதற்கு முன்னரே பாக்களின் அடியும் ஓசையும் பற்றிய விளக்கங்களைத்     தருகிறார்.    வெண்பா ஆசிரியப்பா ஆகியவற்றிற்குரிய அடி , ஓசை இலக்கணங்களை முன்னைய பாடத்தில் அறிந்தீர்கள் அல்லவா ! ஏனைய பாக்களின் அடி, ஓசை இலக்கணங்களை இப்பாடத்தில் காணலாம்.

2.1.1 கலிப்பா கலிப்பாவுக்குரிய அடியும் ஓசையும் பற்றி இனிப்பார்ப்போம்.

கலிப்பாவுக்குரிய அடி

வெண்பாவையும் ஆசிரியப்பாவையும் போலக் கலிப்பாவும் அளவடியால் ( நாற்சீரடியால் ) அமைந்துவரும் . இதற்குச் சில விதிவிலக்குகள் உண்டு.

I. பொதுவாகக் கலிப்பா பெரும்பாலும் நாற்சீரடிகளால்அமையும் எனினும் கலிப்பாவின் ஓர் உறுப்பாகிய ‘அம்போதரங்கம்’ குறளடியாலும்(இருசீரடி), சிந்தடியாலும் (முச்சீரடி) வரும்.

II. கலிப்பாவின் மற்றோர் உறுப்பாகிய ‘அராகம்’ அளவடிகளால் மட்டுமன்றி நெடிலடி (ஐஞ்சீரடி ), கழிநெடிலடி ( ஆறும் அதற்கு மேற்பட்டும் சீர்கள் கொண்ட அடி ) ஆகியவற்றாலும் வரும்.

இவ்வுறுப்புகள் தொடர்பான பிற விளக்கங்களைப் பின்னர்க் கற்பீர்கள்.

III. கலிப்பாவின் ஒரு வகையாகிய வெண்கலிப்பாவின் ஈற்றடி     சிந்தடியாகவரும்.

கலிப்பாவுக்குரிய ஓசை

கலிப்பாவின் ஓசை, துள்ளல் ஓசை ஆகும். துள்ளித்துள்ளிச் செல்லும் ஓசை என்பதனால் கலிப்பாவின் ஓசை, துள்ளல் ஓசை எனும் பெயர் பெற்றது. கலிப்பாவின் உறுப்புகளாகிய தரவு, தாழிசை, அராகம்,அம்போதரங்கம் ஆகியவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஓசை அமைப்பை உடையவை.இவ்வுறுப்புகள் அடுத்தடுத்து வரும்போது ஓசை அமைப்பும் மாறிமாறி வரும். குதிரை துள்ளிச் செல்லும் அமைப்பை இது நினைவுபடுத்தும். ஆகவே துள்ளல் ஓசை எனும் பெயர் இப்பாவின் ஓசைக்கு மிகப் பொருத்தமானது என உணரலாம். கலிப்பாவின் வகைகளைப் பற்றிப் படிக்கும் போது ஓசைகள் மாறித் துள்ளி வருவதை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.

மற்றொரு கருத்தை இங்கே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ‘கலி’ என்னும் சொல் துள்ளும் விலங்கைக் குறிக்க வருவதுண்டு. குதிரையின் ஒரு பெயர் கலிமா என்பது. இனித் துள்ளல் ஓசையின் அமைப்பு, அதன் வகைகள் பற்றிக் காணலாம். பாவில் அமையும் தளை அமைப்பைக் கொண்டு துள்ளல் ஓசையை மூவகையாகப் பகுப்பர்.

(i) ஏந்திசைத் துள்ளல் ஓசை

பா முழுவதிலும் கலித்தளை மட்டுமே அமைந்து வருவது ஏந்திசைத் துள்ளல் ஆகும்.

(எ.டு)

முருகவிழ்தா மரைமலர்மேல் முடியிமையோர் புடைவரவே

வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மனமுடையார்

இருவினைபோய் விழமுனியா வெதிரியகா தியையரியா

நிருமலராய் அருவினராய் நிலவுவர்சோ தியினிடையே

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(முருகு = அழகு ; புடைவர = சூழ்ந்திருக்க ; சினனார் = அருகன் ; முனியா எதிரிய = சினந்து எதிர்க்கும்; காதி = கர்மங்கள் ; அரியா = அறுத்து ; நிருமலராய் = தூய்மையானவராய்)

உறுப்பியலில் தளை காணும் முறை பற்றி அறிந்துள்ளீர்கள் அல்லவா! மேற்காட்டிய பாவில் அனைத்துச் சீர்களுக்கும் இடையில் காய் முன் நிரை எனும் அமைப்புடைய கலித்தளையே வந்திருப்பதைக் காணுங்கள். ஆகவே இக்கலிப்பாவின் ஓசை, ஏந்திசைத் துள்ளல் ஓசை ஆகும்.

(ii) அகவல் துள்ளல் ஓசை

பாவில் கலித்தளையுடன் வெண்சீர் வெண்டளையும் கலந்து வருவது அகவல் துள்ளல் ஆகும்.

(எ.டு)

செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி

முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்

எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்

மல்லல்ஓங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

இப்பாடல், உறுப்பியலில் தளை இலக்கணத்தில் முன்னரே நீங்கள் படித்த பாடல்தான்.

இப்பாடலில் சினவாழி – முல்லைத்தார்; முருக்கிப்போய் – எல்லைநீர் ; மதியம்போல் – மல்லல்ஓங் எனவரும் சீர்ச்சந்திப்புகளில் வெண்சீர் வெண்டளையும்,ஏனைய இடங்களில் கலித்தளையும் வந்துள்ளன. ஆகவே இது அகவல்துள்ளல் ஓசை ஆகும்.

(iii) பிரிந்திசைத்துள்ளல் ஓசை

கலித்தளையுடன் பலதளைகளும் கலந்து வருவது பிரிந்திசைத்துள்ளல் ஆகும்.

(எ.டு)

குடநிலைத் தண்புறவிற் கோவலர் எடுத்தார்ப்பத்

தடநிலைப் பெருந்தொழுவில் தகையேறு மரம்பாய்ந்து

வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தேறப்போய்க்

கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப

எனவாங்கு

ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும்

கானுடைத் தவர்தேர் சென்ற வாறே

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(குடம் = தயிர்க்குடம் ; புறவு = முல்லை நிலம் ; தகையேறு = காளை ; கயிறு ஒரீஇ = கயிற்றை அறுத்துக் கொண்டு ; கலை = மான் ; ஆன் = பசு ; புதல் = புதர்)

இப்பாடலில் எடுத்தார்ப்ப – தடநிலை, பெருந்தொழுவில் -தகையேறு,தகையேறு- மரம்பாய்ந்து என்பன போன்ற இடங்களில் கலித்தளையும்,தண்புறவில் – கோவலர், மரம் பாய்ந்து -வீங்குமணி போன்ற இடங்களில் வெண்சீர் வெண்டளையும், குடநிலைத் – தண்புறவில் என்பதில் இயற்சீர் வெண்டளையும், கோவல – ரெடுத்தார்ப்ப என்பதில் நிரையொன்றாசிரியத் தளையும் எனப் பலதளைகளும் கலந்து வந்துள்ளமையால் இப்பாடலின் ஓசை, பிரிந்திசைத்துள்ளல் ஆகும்.

2.1.2 வஞ்சிப்பா வஞ்சிப்பாவுக்குரிய அடியும் ஓசையும் பற்றிப் படிப்போம்.

வஞ்சிப்பாவுக்குரிய அடி

வஞ்சிப்பா அடி அமைப்பில் ஏனைய பாக்களிலிருந்து வேறுபட்டது. குறளடிகளால் அல்லது சிந்தடிகளால் அமைந்து வருவது வஞ்சிப்பா.வேறு எவ்வகை அடியும் வஞ்சிப்பாவில் வராது.

வஞ்சிப்பாவுக்குரிய ஓசை

வஞ்சிப்பாவின் ஓசை, தூங்கல் ஓசை எனப்படும். தூங்கல் எனும் சொல்லுக்கு யானை எனும் பொருள் உண்டு. யானை நின்று கொண்டிருக்கும் போதே இருபுறமும் மாறி மாறி அசைந்துகொண்டு நிற்பதைப் பார்த்திருப்பீர்கள். நீண்ட சீர்கள் (கனிச்சீர்கள்) இரண்டு கொண்டமைந்த அடிகள் அடுத்தடுத்து வரும்போது அந்த ஓசை, யானையின் நீண்ட அசைவை நினைவுபடுத்தக் கூடும். ஆகவே வஞ்சிப்பாவின் ஓசையைத் தூங்கல் ஓசை என்றனர். இவ்வோசை மூவகைப்படும்.

(i) ஏந்திசைத் தூங்கல் ஓசை

பா முழுவதும் ஒன்றிய வஞ்சித்தளையால் அமைந்திருந்தால் அது ஏந்திசைத் துள்ளல் ஆகும்.

(ii) அகவல் தூங்கல் ஓசை

பாடல் முழுவதும் ஒன்றாத வஞ்சித் தளையால் வருவது அகவல் தூங்கல் ஓசை ஆகும்.

(iii) பிரிந்திசைத் தூங்கல் ஓசை

வஞ்சித் தளைகளுடன் பிற தளைகளும் விரவி வருவது பிரிந்திசைத் தூங்கல் ஓசை ஆகும்.

2.1.3 மருட்பா மருட்பாவின் இலக்கணத்தை விரிவாகப் பின்னர்க் காண்போம். இப்போதைய நோக்கிற்கேற்ப அதனைச் சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்ளலாம். மருட்பா என்பது நால்வகைப் பாக்களிலிருந்து வேறுபட்ட ஒரு தனிப்பா அன்று. வெண்பாவாகத் தொடங்கி, ஆசி்யப்பாவாக முடியும் ஒரு கலப்புப் பாவே மருட்பா. ஆகவே மருட்பாவுக்கு அடி, ஓசை ஆகிய இலக்கணங்களை, இலக்கண ஆசிரியர்கள் தனியாக எடுத்துச் சொல்வதில்லை. மருட்பாவில் உள்ள வெண்பா அடிகளில் வெண்பாவுக்குரிய செப்பல் ஓசையும் ஆசிரிய அடிகளில் ஆசிரியப்பாவுக்குரிய அகவல் ஓசையும் அமைந்திருக்கும். மருட்பா இலக்கணம் காணும்போது இதனை நீங்கள் விரிவாகப் படித்தறியலாம்.

இனிக் கலிப்பாவின் பொது இலக்கணம்,அதன் வகைகள் ஆகியன பற்றிக் காணலாம்.

2.2 கலிப்பாவின் பொது இலக்கணம்

ஒவ்வொரு பாவின் பொது இலக்கணத்தையும் அதற்குரிய சீர், தளை, அடி, தொடை, ஓசை, ஈறு ஆகியவற்றைக் கொண்டே நாம் அறிந்து வருகிறோம். கலிப்பாவின் பொது இலக்கணத்தைச் சீர், தளை, அடி, ஓசை, உறுப்பு, ஈறு எனும் தலைப்புகளால் அறியலாம்.

1) சீர்

நிரை முதலாகிய வெண்பாவுரிச்சீர் ( புளிமாங்காய், கருவிளங்காய்) மிகுந்துவரும். நேர் ஈற்று இயற்சீர் (தேமா, புளிமா), நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் (கருவிளங்கனி, கூவிளங்கனி) ஆகியவை கலிப்பாவில் வாரா. இங்குக் குறிப்பிடப்படாத ஏனைய சீர்களும் வரலாம்.

விதிவிலக்கு

கலிப்பாவின் வகைகளாகிய வெண்கலிப்பாவிலும், கொச்சகக் கலிப்பாவிலும் நேரீற்றியற்சீர் வரலாம். கொச்சகக் கலிப்பாவில் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீரும் வரலாம்.

2) தளை

கலிப்பாவுக்குரிய கலித்தளைகளுடன் பிறதளைகளும் கலந்துவரும்.

3) அடி

கலிப்பாவுக்குரிய அடி அளவடி. அம்போதரங்க உறுப்பில் குறளடி, சிந்தடிகளும், அராக உறுப்பில்     நெடிலடி, கழிநெடிலடிகளும் வரும்(இவை முன்பே நீங்கள் அறிந்தவை). மிக அருகிக் கலிப்பாவின் தரவு தாழிசை எனும் முதல் உறுப்புகளில் ஐஞ்சீரடி வருதலும் உண்டு. கலிப்பாவின் அடிச்சிறுமை நான்கடி ; பெருமைக்கு வரம்பு இல்லை.

4) ஓசை

கலிப்பாவின் ஓசை, துள்ளல் ஓசை. (இதனை முன்னரே பார்த்தோம்)

5) உறுப்பு

கலிப்பா ஒன்றையொன்று தொடரும் உறுப்புகளால் ஆகியது. அவை தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறுமாகும். இவற்றுள் தரவு, தாழிசை என்பன கலியோசையைச் சிறப்பாகக் கொண்டவை ;ஆகவே முதலுறுப்புகள் எனப்படும். இனி இவ்வுறுப்புகளின் விளக்கத்தைக் காணலாம்.

இவை பாவில் எவ்வாறு அமைந்து வரும் என்பதைக் கலிப்பா வகைகளின் இலக்கணம் காணும் போது பார்க்கலாம்.

தரவு

தரவு என்னும் உறுப்பு கலிப்பாவின் தொடக்கத்தில் வரும் உறுப்பு.இதற்கு எருத்தம் எனும் பெயரும் உண்டு.(தரவு = தருதல், முதலாவதாகத் தரப்படுவது.எருத்தம் = பிடரி, யானைப்பிடரி = தலைமையாக அமையும் உறுப்பு.)

தாழிசை

கலிப்பாவில் தரவை அடுத்து வரும் உறுப்பு தாழிசை ஆகும். தரவின் ஓசையைவிடச் சற்றுத் தாழ்ந்து வரும் ஓசை என்பதனால் இது தாழிசை எனப்பட்டது. தரவுக்கும் ஏனைய உறுப்புகளுக்கும் இடையில் வருவதால் இது இடைநிலைப்பாட்டு எனவும் பெயர் பெறும்.

அராகம்

இவ்வுறுப்பு இசை இனிமை உடையது. அதனால் வண்ணகம் எனவும் பெயர் பெறும். விரைந்து செல்லும் ஓசையுடையது என்பதனால் முடுகியல் எனவும் பெயர் பெறும். ஓசை அடுக்கி வருவது என்பதனால் அடுக்கியல் எனவும் பெயர் பெறும்.

அம்போதரங்கம்

அம்பு = தண்ணீர் ; தரங்கம் = அலை. நீரலை பெரிதாகத் தொடங்கிக் கரைசேரச் சேரச் சுருங்கி முடிவது போல நாற்சீரடி, முச்சீரடி,இருசீரடி என அடு்த்தடுத்து வரும் உறுப்பு இது. ஆகவே இது அம்போதரங்கம் எனப்பட்டது. அம்போதரங்க உறுப்பில் ஒரு சொல்லே ஒரு சீராக வருவதால் சொற்சீரடி எனவும்,ஓர் அசையே சீராக வரும் அடிகள் கொண்டிருப்பதால் அசையடி எனவும் இதற்கு வேறு பெயர்கள் உண்டு. சீர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதால் எண் எனும் பெயரும் உண்டு.

தனிச்சொல்

கலிப்பாவின் இறுதி உறுப்பாகிய சுரிதகத்தை ஏனைய உறுப்புகளின் இணைப்பதற்காகச் சுரிதகத்தின் முன் வரும் ஒரு தனிச்சொல் அல்லது தனிச்சீர், தனிச்சொல் என்னும் உறுப்பாகும்.

சுரிதகம்

இதுவே கலியுறுப்புகளுள் இறுதி உறுப்பு. சுருங்கி முடிவது என்பது இதன் பொருள்.ஈற்றில் வைக்கப்படுவது எனும் பொருளில் வைப்பு எனவும் இறுதி வரம்பாக வருவது என்பதனால் வாரம் என்றும் இது பிற பெயர்கள் பெறும்.சுரிதகம் ஆசிரியப்பாவுக்குரிய அடியாகவோ,வெண்பாவுக்குரிய அடியாகவோ அமையும்.ஆசிரியச் சுரிதகம், வெள்ளைச் சுரிதகம் என முறையே பெயர் பெறும். எல்லாவகைக் கலிப்பாக்களிலும் இவ் ஆறு உறுப்புகளும் வாரா. எவ்வெவ் வகைக் கலிப்பாக்களில் எவ்வெவ் வுறுப்புகள் வரும் என்பதை அவ்வகைகளின் இலக்கணத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஈறு

கலிப்பா, தனிச் சொல்லும் சுரிதகமும் கொண்டு முடியும்.

2.3 கலிப்பாவின் வகைகள்

கலிப்பா அடிப்படையாக (1) ஒத்தாழிசைக்கலி (2) வெண்கலி (3) கொச்சகக்கலி எனும் மூன்று வகைப்படும். இவை ஒவ்வொன்றுக்கும் உள்வகைகள் உள்ளன. கீழ்க்காணும் அட்டவணையில் அவற்றைக் காணலாம். கலிப்பா, அதில் உள்ள உறுப்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப் படுகிறது.

தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம் போன்ற உறுப்புகளின் அடிப்படையில் இவ்வகைமை அமைந்திருப்பதைக் காணுங்கள். இனி, இவற்றின் இலக்கணங்களைத் தனித்தனியே காணலாம்.

2.3.1 ஒத்தாழிசைக் கலி தாழிசை என்பதற்கான விளக்கத்தை முன்பு அறிந்து கொண்டீர்கள். தாழிசை என்பது பாக்களிலும் பா இனங்களிலும் ‘ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி’ வருவதே வழக்கம். அதாவது ஒரு தாழிசை இரண்டு அடிமுதல் நான்கடி வரை பெற்றுவரும். அத்தகைய தாழிசைகள் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று அடுக்கி வருவது ‘ஒத்தாழிசை’ எனப்படும். மூன்று தாழிசைகளும் ஒரு பொருள் பற்றியதாகவே இருக்கும். சொற்களும், சொல்லும் முறையும் மூன்று தாழிசைகளிலும் ஒரே மாதிரித் திரும்பத்திரும்ப வரும்.

இவ்வாறு வரும் தாழிசைகளைக் கொண்ட கலிப்பாவையே ஒத்தாழிசைக்கலி என்பர். அது மூவகைப்படும் ( பார்க்க. அட்டவணை ) இனி இவற்றின் இலக்கணத்தை எடுத்துக்காட்டுகளுடன் காணலாம்.

நேரிசை ஒத்தாழிசைக் கலி

நேரிசை எனப் பாவகைக்குப் பெயர் அமைவதை முன்னரே பார்த்திருக்கிறீர்கள் அல்லவா! நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா என்பவை அவை. ‘நேரிசை’ என்பது இயல்பாக அமைவது எனப் பொருள்படும் எனவும் அறிந்திருக்கிறீர்கள். அடிப்படையான உறுப்புகளாகிய தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகிய நான்கு உறுப்புகளை மட்டும் கொண்டு அமையும் கலிப்பாவை, இயல்பான கலிப்பா எனும் பொருளில் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எனக் குறித்தனர். இப்பாவின் இலக்கணம் வருமாறு:

(i) முதலில் ஒரு தரவு வரும். தரவு குறைந்த அளவு மூன்றடி பெறும். அதிக அளவுக்கு வரம்பு இல்லை. எத்தனை அடியும் வரலாம்.

(ii) தரவைத் தொடர்ந்து மூன்று தாழிசைகள் ஒரு பொருள்மேல் மூன்றாக அடுக்கி வரும். தாழிசையின் அடிச்சிறுமை இரண்டடி; அதிக அளவு நான்கடி. தரவை விடத் தாழிசை ஓரடியாவது குறைந்துவர வேண்டும். அதாவது தரவு மூன்றடி வந்தால் தாழிசை இரண்டடி ; தரவு 5 அல்லது அதற்கு மேற்பட்ட அடிகள் வந்தால் தாழிசை நான்கடிக்கு மிகாமல் வரவேண்டும்.

(iii) தாழிசைகளைத் தொடர்ந்து ஒரு தனிச்சொல் வரும்.

(iv) தனிச் சொல்லுக்குப் பின் சுரிதகம் வரும். அது ஆசிரியச் சுரிதகமாகவோ வெள்ளைச் சுரிதகமாகவோ இருக்கலாம்.

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலி

‘அம்போதரங்கம்’ என்னும் கலி உறுப்பின் விளக்கத்தை முன்பு அறிந்து கொண்டிருக்கிறீர்கள். அம்போதரங்க உறுப்பு அமைந்த ஒத்தாழிசைக் கலிப்பா அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும். இப்பாவின் இலக்கணம் வருமாறு :

(i) முதலில் தரவு வரும் அத்தரவு ஆறு அடியாக வரும். (சிறுமை, பெருமை இல்லை)

(ii) தரவைத் தொடர்ந்து மூன்று தாழிசைகள் ஒரு பொருள்மேல் அடுக்கி வரும். தாழிசையின் அடிச்சிறுமை இரண்டடி ; அடிப்பெருமை நான்கடி.

(iii) தாழிசைகளுக்குப் பின்னர் அம்போதரங்க உறுப்பு வரும். அம்போதரங்க உறுப்பு அடிஅளவில் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கி வருவது என்பதை முன்பு தெரிந்து கொண்டீர்கள். முதலில் நான்கு சீர்களைக் கொண்ட இரண்டடிகள் பொருள் தொடர்ச்சியுடன், ஒரே எதுகை அமைப்புப் பெற்று, இரண்டு எண்ணிக்கையில் வரும். இது நாற்சீர் ஈரடி இரண்டம்போதரங்கம் எனப்படும். இது பேரெண் எனவும் வழங்கப்படும். எடுத்துக்காட்டுக் கொண்டு இதனை நன்கு புரிந்து கொள்ளலாம்.

(எ.டு)

(1) இலங்கொலி மரகத மெழில்மிகு வியன்கடல்

வலம்புரித் தடக்கை மாஅல் நின்னிறம்

(2) விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்

பொருகளி றட்டோய் புரையும் நின்னுடை

இதுவே பேரெண் இதனைத் தொடர்ந்து நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம் வரும்.

(எ.டு)

கண்கவர் கதிர்முடி கனலும் சென்னியை ;

தண்சுடர் உறுபகை தவிர்த்த ஆழியை ;

ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியினை ;

வலிமிகு சகடம் மாற்றிய அடியினை.

நாற்சீரடிகள் நான்கு தனித்தனியே முடிந்து வந்துள்ளன. அது அளவெண் ஆகும்.

இதைத் தொடர்ந்து சிந்தடிகள் எட்டு வரும்.இது இடையெண் எனப்படும். சிந்தடிகள் நான்காக வருவதும் உண்டு.

(எ.டு)

போரவுணர்க் கடந்தோய் நீ

புணர்மருதம் பிளந்தோய் நீ

நீரகலம் அளந்தோய் நீ

நிழல்திகழ்ஐம் படையோய் நீ

இடையெண்ணைத் தொடர்ந்து இறுதியாகக் குறளடிகள் பதினாறு வரும். இது சிற்றெண் எனப்படும். சிற்றெண் எட்டடியாக வருவதும் உண்டு.

(எ.டு)

ஊழி நீ

உலகு நீ

உருவும் நீ

அருவும் நீ

ஆழி நீ

அருளும் நீ

அறமும் நீ

மறமும் நீ

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(iv) இவ்வாறு வரும் அம்போதரங்க உறுப்பிற்குப் பின் ஒரு தனிச்சொல் வரும்.

(v) தனிச்சொல்லைத் தொடர்ந்து ஆசிரியச் சுரிதகமோ வெள்ளைச் சுரிதகமோ கொண்டு அம்போதரங்க ஒத்தாழிசைக்கலிப்பா முடியும்.

இனி நேரிசை, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாக்களின் இலக்கணம் கூறும் காரிகை நூற்பாவைக் காணலாம்.

தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொல் சுரிதகமாய்

நிரலொன்றின் நேரிசை ஒத்தா ழிசைக்கலி நீர்த்திரைபோல்

மரபொன்றும் நேரடி முச்சீர் குறள்நடு வேமடுப்பின்

அரவொன்றும் அல்குல தம்போ தரங்கஒத் தாழிசையே.

(யாப்பருங்கலக் காரிகை, 30)

பொருள் :

ஒரு தரவு, மூன்று தாழிசை, தனிச்சொல், சுரிதகம் கொண்டு வருவது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும். தாழிசைக்குப்பின் அளவடி, சிந்தடி, குறளடிகளால் ஆன அம்போதரங்கம் வருவது அம்போதரங்க ஒத்தாழிசைக்கலி ஆகும்.

வண்ணக ஒத்தாழிசைக் கலி

அம்போதரங்க உறுப்புடன் அராகம் என்னும் உறுப்பும் சேர்ந்து வரும் கலிப்பா வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும். இக்கலிப்பா கலியின் உறுப்புகளாகிய தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறும் கொண்டு அமைவது.

(i) முதலில் தரவு வரும். அதன் அடி எண்ணிக்கை ஆறு(சிறுமை, பெருமை இல்லை).

(ii) தரவைத் தொடர்ந்து ஒரு பொருள் மேல் அடுக்கிய மூன்று தாழிசைகள் வரும். தாழிசைகளின் அடி எண்ணிக்கை முன்பு சொல்லப்பட்டதுபோல இரண்டு முதல் நான்கடி ஆகும்.

(iii) தாழிசைகளைத் தொடர்ந்து அராக உறுப்பு வரும். அராகம் இசைத்தன்மை கொண்ட உறுப்பு என்பது முன்னரே கூறப்பட்டது. நாற்சீரடி மட்டுமன்றி நெடிலடி, கழிநெடிலடிகளாலும் அராகம் வரும் என்பதை அறிவீர்கள். அராகம் நான்கடிச் சிறுமையும், எட்டடிப் பெருமையும் கொண்டது.

(எ.டு)

தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன

பொழில்

போதுறு நறுமலர் புதுவிரை தெரிதரு கருநெய்தல்

விரிவனகழி

தீதுறு திறமறு கெனநனி முனிவன துணையொடு பிணைவன துறை

மூதுறு மொலிகலி நுரைதரு திரையொடு கழிதொடர்

புடையது கடல்

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

மேற்கண்ட அராகம் இசைத்தன்மை கொண்டதாக, விரைந்து செல்லும் ஓசையுடையதாக அமைந்திருப்பதைப் பாருங்கள்.

(iv) அராக உறுப்பைத் தொடர்ந்து பேரெண், அளவெண், இடையெண், சிற்றெண் எனும் வரிசையில் அம்போதரங்க உறுப்பு வரும்.

(v) அம்போதரங்கத்தின் பின் தனிச்சொல் வரும்.

(vi) தனிச்சொல்லின் பின் ஆசிரியச் சுரிதகமோ வெள்ளைச் சுரிதகமோ வந்து வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா முடிவடையும்.

ஒத்தாழிசைக் கலிப்பாவின் மூன்று வகைகளுக்குமென இலக்கணத்தைப் புரிந்து கொண்டீர்கள்.தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் எனும் அமைப்பு மூவகை ஒத்தாழிசைக் கலிக்கும் பொதுவானது. அவற்றுடன் அம்போதரங்கம் இணைவது அம்போதரங்க ஒத்தாழிசைக்கும், அராகம் அம்போதரங்கம் இரண்டும் இணைவது வண்ணக ஒத்தாழிசைக்கும் சிறப்பானது.

எடுத்துக்காட்டுப் பாடல்களின் நீளம் கருதி நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கு மட்டும் முழுமையான எடுத்துக்காட்டுத் தரப்பட்டுள்ளது. பின் அம்போதரங்கம், அராகம் ஆகிய உறுப்புகளுக்கு மட்டும் எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன. அம்போதரங்க ஒத்தாழிசை, வண்ணக ஒத்தாழிசை ஆகியவற்றின் முழுமையான எடுத்துக்காட்டுப் பாடல்களைக் காண வேண்டுமென்றால் தமிழ் இணையப் பல்கலைக் கழக நூலகத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

2.3.2 வெண்கலி ‘வெண்கலி’ என்னும் பெயரைக்கொண்டே கலிப்பாவுடன் வெண்பாவின் இயல்புகள் கலந்தமைந்தது இக்கலிப்பா என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

(i) கலித்தளை அமைந்து கலியோசை (துள்ளல் ஓசை) கொண்டும், வெண்டளை அமைந்து வெள்ளோசை (செப்பல் ஓசை) கொண்டும் வருவது வெண்கலிப்பா ஆகும்.

(ii) இது வெண்பாவைப் போல ஈற்றடி சிந்தடியாகவும் ஏனைய அடிகள் அளவடிகளாகவும் ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு வாய்பாடு எனும் சீர்களுள் ஒன்று கொண்டும் முடியும்.

(iii) கலித்தளை, வெண்டளைகளுடன் அருகி வேறுதளைகள் கலந்து வருவதும் உண்டு.

(iv) அடிச்சிறுமை நான்கடி ; அடிப்பெருமை புலவன் உள்ளக் கருத்தைப் பொறுத்தது. வெண்கலிப்பாவை வெண்கலிப்பா, கலிவெண்பா என இரு வகைகளாகக் குறிப்பிடுவதுண்டு.

வெண்கலிப்பா

கலித்தளைகள் மிகுந்து சிறுபான்மை வெண்டளைகள் கலந்து வருவது வெண்கலிப்பா. இவைகளன்றி வெண்கலிப்பாவில் வேறு தளைகள் கலந்து வருவதும் உண்டு.

(எ.டு)

ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தன்

வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருந்தியவென்

தார்வரை அகன்மார்பன் தனிமையை அறியுங்கொல்

சீர்மலி கொடியிடை சிறந்து

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

இப்பாடலில் நறுங்கோதை – எருத்தலைப்ப; எருத்தலைப்ப – இறைஞ்சித்தன் ; தடங்கண்ணார் – வலைப்பட்டு ; வலைப்பட்டு – வருந்தியவென் ; அகன்மார்பன் – தனிமையை – எனும் சீர் இணைப்புகளில் கலித்தளை வரக் காணலாம். இறைஞ்சித்தன் – வார்மலர் ;வருந்தியவென் – தார்வரை; அறியுங்கொல் – சீர்மலி என்பவற்றில் வெண்சீர் வெண்டளை அமைந்துள்ளது – ஏர்மலர் – நறுங்கோதை ;தார்வரை – அகன்மார்பன் ;சீர்மலி – கொடியிடை போன்றவற்றில் நிரையொன்றாசிரியத் தளை அமைந்துள்ளது. இவ்வாறு கலித்தளையுடன் பிறதளைகளும் கலந்தமைந்து ஈற்றடி வெண்பாப்போல முடிவதால் இது வெண்கலிப்பா ஆகும்.

கலிவெண்பா

வெண்டளைகளால் அமைந்து, வெள்ளோசை கொண்டு பல அடிகள் வந்து, ஈற்றடி சிந்தடியாக வருவது கலிவெண்பா ஆகும். பல அடிகளால் வரும் வெண்பா, பஃறொடை வெண்பா என முன்பு அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் கலிவெண்பாவுக்கும் பஃறொடை வெண்பாவுக்குமிடையே உள்ள வேறுபாடு யாது? காரிகை இலக்கணத்திலோ உரையிலோ தெளிவான வேறுபாடு சொல்லப்படவில்லை. தொல்காப்பியர் வெண்பாவுக்குக் கூறிய இலக்கணத்தின்படி பஃறொடை வெண்பா 12 அடிகளுக்குள் அமையும். அதற்கு மேல் அடிகள் பெற்று வருவது கலிவெண்பா என்று கொள்ளலாம்.இது ஒரு கருத்து. ஒரே பொருள் பற்றியதாக வருவது கலிவெண்பா என்றும், அவ்வாறு வராதது பஃறொடை வெண்பா என்றும் வேறுபாடு காட்டுவது மற்றொரு கருத்து. எவ்வாறு இருப்பினும் கலித்தளைகளோ, பிறதளைகளோ கலக்காமல் முழுமையும் வெண்டளைகளால் மட்டுமே அமைந்து ஈற்றடி சிந்தடியாக அமையும் பாவைக் கலிப்பாவுடன் தொடர்புபடுத்துவது எப்படி என்ற ஐயத்திற்குத் தெளிவான விளக்கம் காண்பது இயலாததாகவே உள்ளது. இந்த அளவுக்கு நீங்கள் அறிந்து கொள்வது போதுமானது.

(எ.டு)

சுடர்த்தொடீஇ! களோய்! தெருவில்நாம் ஆடும்

மணற்சிற்றில் காலில் சிதையா அடைச்சிய

கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி

நோதக்க செய்யும் சிறுபட்டி மேல்ஓர்நாள்

அன்னையும் யானும் இருந்தேமா ‘இல்லிரே

உண்ணுநீர் வேட்டேன்’ எனவந்தாற்கன்னை

அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்

உண்ணுநீர் ஊட்டிவா’ என்றாள் எனயானும்

தன்னை அறியாது சென்றேன்மற் றென்னை

வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு

‘அன்னாய் இவனொருவன் செய்ததுகாண்’ என்றேனா

அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்

உண்ணுநீர் விக்கினான் என்றேனா அன்னையும்

தன்னைப் புறம்பழித்து நீவமற்றென்னைக்

கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டம்

செய்தானக் கள்வன் மகன் (கலித்தொகை, 51)

மேற்காட்டிய பாடல் முழுமையும் வெண்டளைகள் அமைந்து, வெண்பாப்போல முடிவுற்றிருப்பதைக் காணுங்கள். கலித்தொகையில் இப்பாடலுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ‘ இது பன்னீரடியின் இகந்து ஒரு பொருள் நுதலி வந்த கலிவெண்பாட்டு’ என்று குறிப்பிட்டிருப்பது அறியத்தக்கது. வெண்பாவின் இலக்கணம் அமைந்து பன்னிரண்டடிகளைத் தாண்டி வந்ததனால் இதனைக் கலிவெண்பா எனக் குறிப்பிட்டனர் எனக் கொள்ளலாம்.

இனி வண்ணக ஒத்தாழிசைக்கலி, வெண்கலி ஆகியவற்றின் இலக்கணம் கூறும் நூற்பாவைக் காணலாம்.

அசையடி முன்னர் அராகம்வந்து எல்லா உறுப்புமுண்டேல்

வசையறு வண்ணக ஒத்தா ழிசைக்கலி வான்தளை தட்

டிசைதன தாகியும் வெண்பா இயைந்தும்இன் பான்மொழியாய்

விசையறு சிந்தடி யாலிறு மாய்விடின் வெண்கலியே

(யாப்பருங்கலக்காரிகை – 37)

பொருள் :

அம்போதரங்க உறுப்புக்கு முன்னர் அராகம் வந்து, ஆறு உறுப்புகளும் கொண்டு அமைவது வண்ணக ஒத்தாழிசை, கலித்தளை அமைந்து கலியோசையுடனும் வெண்டளை அமைந்து வெள்ளோசையுடனும் வந்து சிந்தடியாய் முடிவது வெண்கலிப்பா.

2.3.3 கொச்சகக் கலி புடவை உடுத்தலில் உள்ள மடிப்பைக் கொசுவம் என்கிறோம். இச்சொல்லின் பழைய வடிவம் கொச்சகம் என்பது. தரவு, தாழிசை போன்ற உறுப்புகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் அடுக்கி மடிந்து வருவதன் காரணமாகக் கொச்சகக் கலிப்பா என இந்தப் பா பெயர் பெற்றது. இது ஐந்து வகைப்படும். (பார்க்க. அட்டவணை)

தரவு கொச்சகக் கலிப்பா

ஒரு தரவு மட்டும் வந்து தனிச்சொல், சுரிதகம் பெற்று முடிவது தரவு கொச்சகக் கலிப்பா ஆகும். இப்பாவிற்குத் தரவின் அடிச்சிறுமை நான்கடியாகும்.

பிரிந்திசைத் துள்ளல் ஓசைக்கு எடுத்துக் காட்டாகத் தரப்பெற்ற ‘குடநிலைத் தண்புறவில் ……’ எனத் தொடங்கும் பாடலைப் பாருங்கள் [கலிப்பாவுக்குரிய ஓசை,(iii)] அதில் தரவு நான்கடி வந்து ஒரு தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு முடிவது காண்க.

தனிச்சொல்லும் சுரிதகமும் இல்லாமல் வெறும் தரவு மட்டும் வரும் தரவு கொச்சகக் கலிப்பாவும் உண்டு. இதன் அடிச் சிறுமையும் நான்கடியே யாகும். ஏந்திசைத் துள்ளல் ஓசைக்கு எடுத்துக் காட்டாக நீங்கள் படித்த ‘முருகவிழ்தா மரைமலர்மேல்’ எனத் தொடங்கும் பாடலும் [கலிப்பாவுக்குரிய ஓசை.(i)] அகவல் துள்ளல் ஓசைக்கு எடுத்துக் காட்டாகக் கண்ட ‘செல்வப்போர்க் கதக்கண்ணன்’ எனத் தொடங்கும் பாடலும் [கலிப்பாவுக்குரிய ஓசை.(ii)] இத்தகைய தரவு கொச்சக் கலிப்பாக்கள் ஆகும்.

தரவிணைக் கொச்சகக் கலிப்பா

இணை = இரண்டு. இரண்டு தரவுகள் வரும்.அவற்றுக்கிடையே ஒரு தனிச்சொல் வரும். அதன்பின் மீண்டும் தனிச்சொல்லும் சுரிதகமும் வந்து முடியும்.சுரிதகம் இல்லாமலும் வரலாம். இவ்வாறு வருவது தரவிணைக் கொச்சகக் கலிப்பா.இந்தப் பாவுக்குத் தரவின் அடிச்சிறுமை மூன்றடியாகும்.

(எ.டு)

வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய

கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்கும் காவலனாம்

கொடிபடு மணிமாடக் கூடலார் கோமானே

(இது தரவு)

எனவாங்கு

(இது தனிச்சொல்)

துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம்

துறப்புண்டாங்

கிணைமலர்த்தார் அருளுமேல் இதுவிதற்கோர் மாறென்று

துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ

(இது தரவு)

அதனால்

(இது தனிச்சொல்)

செவ்வாய்ப் பேதை இவள்திறத்து

தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே

(இது சுரிதகம்)

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(கடி = வாசனை ; துணை = இரண்டு ; நலம் = அழகு ; தார் = மாலை ; மாறு = மாற்று, ஏறுதல் ; இவள்திறந்து = இவளைக் குறித்து)

சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

சில் + தாழிசை = சிஃறாழிசை. தரவு, தரவிணைக் கொச்சகக் கலிப்பாக்களில் தாழிசை வருவதில்லை எனப் பார்த்தீர்கள். தரவுடன் சில தாழிசைகள் வந்து தனிச்சொல், சுரிதகம் பெற்று முடிவது சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா. நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிலும் தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் எனும் வரிசையில் உறுப்புகள் வருவதை முன்பு கண்டோம். அதற்கும் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவுக்கும் சிறுவேறுபாடு மட்டுமே உண்டு. சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவில் மூன்று தாழிசைகள் வரும் போது,ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரு தனிச்சொல் வரும். நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவில் தாழிசைகளுக்கிடையே தனிச்சொல் வராது. மற்றபடி தாழிசைகள் ஒருபொருள் மேல் அடுக்கி வருவதிலும் சொல்லும், சொல்கின்ற முறையும் ஒத்து வருவதிலும் மாற்றம் இல்லை. இப்பாவுக்குத் தரவின் அடிச் சிறுமை மூன்றடி, தாழிசை இரண்டு முதல் நான்கடி வரை வரும். இப்பாடலுக்கான எடுத்துக் காட்டை இணைய நூலகத்தி்ல் யாப்பருங்கலக் காரிகையில் கண்டு கொள்க. (‘உச்சியார்க் கிறைவனாய்’ எனத் தொடங்கும் பாடல்)

பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

பல + தாழிசை = பஃறாழிசை. தரவுக்குப் பின் மூன்றுக்கும் மேற்பட்ட பல தாழிசைகளைக் கொண்டது இது. பலதாழிசைகள் வருவதானால் தாழிசைகளிடையே தனிச்சொல் வராது. எத்தனை தாழிசைகள் வந்தாலும் அவை ஒருபொருள்மேல் அடுக்கியே வரும். தாழிசைகளின் பின் தனிச்சொல்லும் சுரிதகமும் வரும். இப்பாவுக்குத் தரவின் அடிச்சிறுமை மூன்றடி. தாழிசை அடி எண்ணிக்கை இரண்டு முதல் நான்கு ஆகும்.

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

மயங்குதல் – கலத்தல், மாறி வருதல். கலியுறுப்புகளாகிய ஆறும் அவற்றுக்குச் சொல்லப்பட்ட அளவைவிட மிகுந்தும், குறைந்தும், இடம் மாறியும், ஓசை மாறியும், அடி மாறியும், கலிப்பாவில் வாரா என்று விலக்கப்பட்ட நேரீற்று இயற்சீரும் நிரைநடுவாகிய வஞ்சி உரிச்சீரும், ஐஞ்சீரடியும் வந்தும் – இவ்வாறு முன்பு சொல்லப்பட்ட கலிப்பா வகைகளிலிருந்து வேறுபட்டு வருவது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.

2.4 வஞ்சிப்பாவின் பொது இலக்கணம்

சீர்

வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்களால் ஆயது வஞ்சிப்பா. சிறுபான்மை காய்ச்சீர்களும் கலந்து வரலாம்.

தளை

ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையும் வரும். சிறுபான்மை பிறதளைகளும் வரலாம்.

அடி

வஞ்சிப்பாவிற்குரிய அடி குறளடியும் சிந்தடியும் ஆகும். அதாவது ஒரு வஞ்சிப்பா முழுமையும் குறளடிகளாய் வரும் ; அல்லது சிந்தடிகளாய் வரும். வஞ்சிப்பாவின் அடிச்சிறுமை மூன்றடி ;பெருமைக்கு வரம்பு இல்லை. வஞ்சிப்பா இரண்டடியாலும் வரும் என மயேச்சுரர் என்னும் இலக்கண ஆசிரியர் கூறினார்.

ஓசை

வஞ்சியடிகளின் இறுதியில் ஒரு தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு வஞ்சிப்பா முடிவடையும்.

2.5 வஞ்சிப்பாவின் வகைகள்

இதுவரை நீங்கள் படித்து வந்துள்ள பாக்கள் பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளதை அறிவீர்கள். அடிகளின் எண்ணிக்கை கொண்டோ, ஈற்றயலடியின் தன்மை கொண்டோ, பாவில் இடம் பெறும் உறுப்புகளைக் கொண்டோ வகைப்படுத்தப் பெற்றன. வஞ்சிப்பா பாவுக்குரிய அடியை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றது. அது குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா என இருவகைப்படும்.

2.5.1 குறளடி வஞ்சிப்பா குறளடிகளால் அமைந்து, தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு முடிவது குறளடி வஞ்சிப்பா ஆகும்.

2.5.2 சிந்தடி வஞ்சிப்பா சிந்தடிகளால் அமைந்து, தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு முடிவது சிந்தடி வஞ்சிப்பா.

2.6 மருட்பாவின் பொது இலக்கணம்

மருள்+பா = மருட்பா. மருள் = மயக்கம். மயக்கம் என்பது ஒன்றோடு மற்றொன்று கலந்து வருவதைக் குறிக்கும்.வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து அமையும் பா,மருட்பா.முதலில் வெண்பா அடிகளும் பின்னர் ஆசிரியப்பா அடிகளும் இணைந்து வரும். இப்பாவுக்கு அடிவரையறை சொல்லப்படவில்லை. எனினும் உரையாசிரியர்கள் மருட்பாவுக்குக் காட்டும் எடுத்துக்காட்டுப் பாடல்களை வைத்துப் பார்க்கும் போது, முதலில் வரும் வெண்பா அடிகள் குறைந்த அளவு இரண்டடி வரும் ; அதிக அளவுக்கு வரம்பு இல்லை ; இறுதியில் ஆசிரியப்பா அடிகள் இரண்டடியாக வரும் எனப் புரிந்து கொள்ளலாம்.

2.7 மருட்பாவின் வகைகள்

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு பாக்களும் எவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன என்பதை முந்தைய பாடத்திலும் இந்தப் பாடத்திலும்     அறிந்து கொண்டிருக்கிறீர்கள். பாவிலுள்ள அடி எண்ணிக்கை, அடிவகை (குறளடி, சிந்தடி, அளவடி), உறுப்புகள் (தரவு, தாழிசை போல) ஆகியவற்றின் அமைப்பைக் கொண்டு அவை வகைபிரிக்கப்பட்டன. பாடலில் சொல்லப்படும் பொருள் அடிப்படையில் அவை பகுக்கப்படுவதில்லை. ஆனால் மருட்பா மட்டும் பாவின் உள்ளடக்கமாக உள்ள பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப் படுகிறது. மருட்பா, புறநிலை வாழ்த்து மருட்பா, கைக்கிளை மருட்பா,வாயுறை வாழ்த்து மருட்பா,செவியறிவுறூஉ மருட்பா என நான்கு வகைப்படும்.

2.7.1 புறநிலை வாழ்த்து மருட்பா தெய்வத்தை வாழ்த்துவது வாழ்த்து.     தெய்வத்தை முன்னிலையாக்கி வாழ்த்துவதும் உண்டு ; படர்க்கையில், புறத்தே நிறுத்தி வாழ்த்துவதும் உண்டு. இவ்வாறு புறத்தே நிறுத்தி வாழ்த்துவது புறநிலை வாழ்த்து ஆகும். அதாவது தெய்வத்தை வணங்கி நிற்கும் ஒருவனை ‘நீ வழிபடும்தெய்வம் உன்னைக் காக்க, பழியில்லாத செல்வத்துடன் உன் குலத்தார் அனைவரும் வழிவழியாகச் சிறப்பாக வாழுங்கள்’ என்று வாழ்த்துவது புறநிலை வாழ்த்து. இத்தகைய புறநிலை வாழ்த்தைப் பொருளாகக் கொண்டு அமையும் மருட்பா புறநிலை வாழ்த்து மருட்பா ஆகும்.

2.7.2 கைக்கிளை மருட்பா கைக்கிளை என்பது ஒருதலைக் காமத்தைக் குறிக்கும் என்பதை அறிந்திருப்பீர்கள். ஒத்த தலைவனும் தலைவியும் முதன் முதலில் சந்திக்கும் போது தொடக்கத்தில் ஒருவரிடம் மட்டும் தோன்றும் காதல் கைக்கிளைக் காதல் (பின்னர் அது இருபுறக் காதலாக மலரும்) இவ்வாறு வரும் ஒரு தற்காலிக ஒருதலைக் காதலே கைக்கிளைக் காதல். இத்தகைய கைக்கிளைக் காதலைப் பொருளாகக் கொண்டு அமையும் மருட்பா கைக்கிளை மருட்பா ஆகும்.

2.7.3 வாயுறை வாழ்த்து மருட்பா வாய் = வாய்மை, மெய்ம்மை ; வாயுறை = மருந்து எனவும் பொருள்படும். வாயுறை     வாழ்த்து = மெய்ப்பொருளை உள்ளடக்கியுள்ள வாழ்த்து. வேப்பங்காயும் கடுக்காயும் போன்ற ஒவ்வாத சுவைகளையுடைய ஆன்றோர் சொற்கள் முதலில் கசப்பாயிருந்தாலும் பின்னர் நன்மை பயக்கும். இத்தகைய சொற்களைத் தடையின்றி, நல்ல நோக்கத்துக்குப் பயன்படுத்தி அறிவுறுத்துவது வாயுறை வாழ்த்து ஆகும். இத்தகைய வாயுறை வாழ்த்தைப் பொருளாகக் கொண்டு அமையும் மருட்பா வாயுறை வாழ்த்து மருட்பா ஆகும்.

2.7.4 செவியறிவுறூஉ மருட்பா புறநானூற்றில் பாடாண்திணையில் செவியறிவுறூஉத்துறையில் அமைந்த பாடல்களைப் படித்திருப்பீர்கள்.செவியில் நன்கு படுமாறு அறிவுறுத்திச் சொல்வது என்பது இதன் பொருள். பெரியோர்களின் முன்னிலையில் அடங்கி அறங்களைப் பின்பற்றி வாழ்க என வாழ்த்துவது செவியறிவுறூஉ. இத்தகைய செவியறிவுறூஉவைப் பொருளாகக் கொள்வது செவியறிவுறூஉ மருட்பா ஆகும்.

2.8 தொகுப்புரை

இப்பாடத்தில் கலிப்பா,வஞ்சிப்பா,மருட்பா ஆகிய மூவகைப் பாக்களின் இலக்கணம், அவற்றின் வகைகள் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகளுடன் தெளிவாக அறிந்து கொண்டீர்கள். கலிப்பா உறுப்புகளின் அமைப்பைக் கொண்டும், வஞ்சிப்பா அடிகளின் தன்மை கொண்டும், மருட்பா பாடலின் பொருள் கொண்டும் வகைப்படுத்தப் படுவதைத் தெரிந்து கொண்டீர்கள்.

பாடம் - 3

பாவினம் – 1

3.0 பாட முன்னுரை

தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தை ஆர்வத்துடன் பயின்றுவரும் மாணவர்களே !முந்தைய இரு பாடங்களில் நால்வகைப் பாக்களான வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனும் பாக்கள் மற்றும் மருட்பா ஆகியவற்றின் இலக்கணங்களை அவற்றின் வகைகளுடன் அறிந்து கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பாடத்திலும் அடுத்துவரும் பாடத்திலும் நால்வகைப்பாக்களுக்குரிய ‘இனங்களின் இலக்கணங்களை அறியவிருக்கிறீர்கள். இந்தப் பாடத்தில் வெண்பா, ஆசிரியப்பா ஆகியவற்றுக்குரிய இனங்களின் இலக்கணம் விளக்கப்படுகிறது. ஒவ்வொரு பாவுக்கும் உரிய இனங்கள் தாழிசை, துறை, விருத்தம் என மூன்று வகைப்படும்.

3.1 பாவகை, பா இனம் - ஒற்றுமை வேற்றுமைகள்

வெண்பாவின் வகைகளாகிய குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சிந்தியல் வெண்பா ஆகியவற்றையும் ஆசிரியப்பாவின் வகைகளாகிய நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா ஆகியவற்றையும் முதல் பாடத்தில் படித்து அறிந்திருக்கிறீர்கள். இங்கே, நீங்கள் காணவிருக்கும் பா     ‘இனங்களு’க்கும் முன்பு கண்ட பா ‘வகைகளு’க்கும் இடையே ஒற்றுமை வேற்றுமைகள் யாவை என முதலில் காணலாம்.

பாக்களின் பொது இலக்கணம் அவற்றின் வகைகளில் முற்றிலுமாக அமைந்திருக்கும்.எடுத்துக் காட்டாக ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் அதன் வகைகளில் ஒன்றாகிய நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்திருப்பதைக் காணலாம். ஆனால் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை ஆசிரியப்பாவின் இனங்களாகிய ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய விருத்தம் ஆகியவற்றில் காண முடியாது.மிக மேலோட்டமான சில ஒற்றுமைகளைக் கொண்டே பா இனங்கள் அந்தந்தப் பாக்களின் பெயரால்     வகைப்படுத்தப் படுகின்றன. எடுத்துக்காட்டாக வெண்டாழிசையைப் பார்க்கலாம்.

நண்பி தென்று தீய சொல்லார்

முன்பு நின்று முனிவ செய்யார்

அன்பு வேண்டு பவர்

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

இதில் வெண்பாவுக்கு உயிரான செப்பல்     ஓசையோ, வெண்டளைகளோ இல்லை.    இதனை வெண்பாவில் எக் காரணத்தாலும் சேர்க்க முடியாது. ஆனால் முதலிரண்டடிகளும் நாற்சீரடியாகவும் ஈற்றடி சிந்தடியாகவும் அமைந்திருக்கும் ஒரே காரணத்தால் இது சிந்தியல் வெண்பாவை ஒத்துத் தோன்றுகிறது. இது, மேலோட்டமான ஒற்றுமையே ஆகும். இந்த ஒற்றுமை கருதி, இதனை வெண்பாவின் இனத்துள் அடக்கி ‘வெண்டாழிசை’ என வகுக்கின்றனர். ஏனைய இனங்களும் இவ்வாறே தோற்ற ஒற்றுமையால் அந்தந்தப் பாக்களின்     இனங்களாக வகுக்கப்பட்டுள்ளன.     இதனை அவ்வவ்வினங்களின் இலக்கணத்தைப்     படிக்கும்போது மேலும் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள். ஒன்றை இப்போது தெளிவாக மனத்துள் இருத்திக் கொள்ள வேண்டும். பாக்களின் ‘வகை’ என்பது வேறு; ‘இனம்’ என்பது வேறு.

3.2 வெண்பாவின் இனங்கள்

தாழிசை, துறை, விருத்தம் என்பன ஒவ்வொரு பாவுக்கும் உரிய இனங்கள் என முன்பு பார்த்தோம். இச்சொற்களின் பொருள் கொண்டு இவற்றை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது. தாழ்ந்துவரும் இசையுடையது ‘தாழிசை’ எனப் பாக்கள் பற்றிய பாடத்தில் அறிந்தீர்கள்.‘துறை’ என்பது ஒரு பிரிவு எனும் பொருள் தருவது. ‘விருத்தம்’ எனும் சொல் வடமொழிப் பாவினத்தின் பெயரைக் குறிக்கும் வடசொல். ஆயினும் பெயர்தான் வடமொழிச் சொல்.அது குறிக்கும் இனம் முற்றிலும் தமிழ் யாப்பே ஆகும்.இனி, வெண்பாவின் இனங்கள் யாவை எனப் பார்ப்போம்.

இரண்டடிகளில் அமையும் வெண்பா இனங்களைக் குறள் வெண்பாவின் இனங்கள் எனவும், மூன்றடி முதல் பல அடிகள் வரை கொண்டு அமையும் இனங்களைப் பிற வெண்பாக்களின் இனங்கள் என்றும் பகுத்துள்ளனர். இத்தகைய பகுப்புக்கு அடிப்படை என்ன என்பது உங்களுக்குப் புரியும். குறள் வெண்பா இரண்டடியாலாகியது. ஆகவே வெண்பா இனங்களுள் இரண்டடியாலானது குறள்வெண்பாவின் இனம் ஆயிற்று. சிந்தியல் வெண்பா முதல் பஃறொடை வெண்பா வரையிலான வெண்பாக்கள் முறையே மூன்றடி முதல் பலவடிகள் வரை பெறுவன என்பதால் மூன்று முதல் பலவடிகள் வரை பெறும் இனங்களைப் பிறவெண்பாக்களின் இனம் என்றனர்.

குறள் வெண்பாவின் இனங்கள் இரண்டு. அவை குறள்வெண் செந்துறை, குறட்டாழிசை என்பன. குறள்வெண்பாவுக்கு விருத்தம் எனும் இனம் இல்லை. பிற வெண்பாக்களின் இனங்கள் வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் என மூன்று.

3.2.1 குறள்வெண் செந்துறை இது, செந்துறை வெள்ளை எனவும் பெயர் பெறும்.

(i) இரண்டடியாய் வரும்.

(ii) இரண்டடியும் தம்முள் அளவு ஒத்து வரும். அளவு ஒத்து வருதல் என்பது இரண்டடியிலும் சீர் எண்ணிக்கை சமமாக வருவது.

(iii) ஒழுகிய ஓசையும் (தடையில்லாத இனிய ஓசையும்) விழுமிய பொருளும் (மேன்மையான பொருளும்) பெற்று வரும்.

(எ.டு)

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை

(முதுமொழிக்காஞ்சி – 1)

(ஆர்கலி = ஒலிக்கும் கடல் ; சிறந்தன்று = சிறந்தது)

மேற்காட்டிய பாடல் இரண்டடியாய்த் தம்முள் அளவொத்து ஓசையினிமை யுடையதாக வருவது காண்க.‘ஓதுவதினும் மலோனது ஒழுக்கம்’ என மலோன பொருளையும் இப்பாடல் கொண்டிருக்கிறது. ஆகவே இது குறள் வெண்செந்துறை ஆகும்.

3.2.2 குறட்டாழிசை குறட்டாழிசை என்பது,

(i) இரண்டடியாய் வரும்.

(ii) அவ்வடிகள் நான்கு சீர்களுக்கும் அதிகமான சீர்களைப் பெற்று, முதலடியைவிட ஈற்றடி சில சீர்கள் குறைவாகக் கொண்டிருக்கும். (குறள் + தாழிசை = குறட்டாழிசை)

(எ.டு)

நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர

சாய ஞானநல்

கண்ணி னானடி யேயடை வார்கள் கற்றவரே

(யாப்பருங்கலக்காரிகை, உரைமேற்கோள்)

(நண்ணுவார் = நெருங்கி வணங்குவோர் ; நைய = அழிய ; நாடொறும் = நாள்தோறும்)

மேற்காட்டிய பாடல் நாற்சீரினும் மிகுந்த சீர்கள் கொண்ட இரண்டடியால் ஆகி, முதலடியை விட ஈற்றடி சில சீர்கள் குறைந்து வருவதனால் குறட்டாழிசை ஆகும். (முதலடி = 8 சீர் ; ஈற்றடி = 5 சீர்)

இனி, வேறு இருவகைப் பாடல்களையும் குறட்டாழிசையில் அடக்குவது உண்டு ;அவை செந்துறை சிதைந்த குறட்டாழிசையும், குறள்வெண்பா ஓசை கெட்டுவரும் பாடலும் ஆகும்.

(i) குறள்வெண் செந்துறை போலவே இரண்டடியாய், அளவு ஒத்து வரினும், இனிய ஓசையும் விழுமிய பொருளும் இல்லாமல் வருவதைக் குறட்டாழிசையுள் அடக்கிக் கூறுவர். இது, ‘செந்துறைச் சிதைவுக் குறட்டாழிசை’ எனப்படும்.

(எ.டு)

பிண்டியின் நீழல் பெருமான் பிடர்த்தலை

மண்டலம் தோன்றுமால் வாழி அன்னாய்

(யாப்பருங்கலக்காரிகை, உரைமேற்கோள்)

(பிண்டி = அசோகமரம் ; பெருமான் = அருகன் ; மண்டிலம் = உலகம்)

இரண்டடிகள் அளவொத்து வந்துள்ளன.ஆயினும் பாடலின் பொருள் மலோனதாக இல்லை.அருக தேவனின் தலைமீது உலகம் இருக்கிறது என்பது பொருள். கடவுளின் பாதங்களில் உலகம் இருக்கிறது எனக் கூறுவதுதான் கடவுளுக்குப் பெருமை. இவ்வாறு பொருட் சிறப்பில்லாமல் அமைந்திருப்பதால் இது செந்துறைச் சிதைவுக் குறட்டாழிசை ஆயிற்று.

(ii) குறள்வெண்பா எழுதும் போது வெண்டளை அல்லாத வேற்றுத்தளை கலந்து, செப்பலோசை சிதைந்துவிடுமாயின் அது குறள்வெண்பா ஆகாது. அதனைக் குறட்டாழிசையுள் அடக்குவர்.

(எ.டு)

வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்

பண்டையள் அல்லள் படி

(யாப்பருங்கலக்காரிகை, உரைமேற்கோள்)

(கோதை = மாலை ; பண்டையள் = பழைய நாளில் இருந்தது போன்றவள்)

மேற்காட்டிய பாடல் குறள்வெண்பாப் போலவே தோன்றினும் வரிவளைக்கைத் – திருநுதலாள் என்னும் சீர் இணைப்பில் கலித்தளை அமைந்திருப்பதைக் (காய் முன் நிரை) காணுங்கள். இவ்வாறு, வேற்றுத்தளை கலந்திருப்பதால் இது குறட்டாழிசை ஆயிற்று.

குறள்வெண் செந்துறை, குறட்டாழிசை ஆகிய இரண்டுக்கும் உரிய இலக்கணம் கூறும் நூற்பாவைக் காண்போம்.

அந்தமில் பாதம் அளவிரண் டொத்து முடியின்வெள்ளைச்

செந்துறை யாகும் திருவே அதன்பெயர் சீர்பலவாய்

அந்தம் குறைநவும் செந்துறைப் பாட்டின் இழிபுமங்கேழ்ச்

சந்தம் சிதைந்த குறளும் குறளினத் தாழிசையே

(யாப்பருங்கலக் காரிகை. 27)

நூற்பாவின் பொருள் : ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் உடைய இரண்டு அடிகள் தம்முள் அளவொத்து வருவது குறள்வெண் செந்துறை ஆகும். பல சீர்கள் கொண்ட இரண்டடிகளாய் முதலடியை விட ஈற்றடியில் சில சீர்கள் குறைந்து வருவது குறட்டாழிசை ஆகும். அதுமட்டுமன்றிக் குறள்வெண் செந்துறை இனிய ஓசையும் விழுமிய பொருளும் இல்லாதிருந்தால் அதுவும் குறட்டாழிசை எனப்படும். மேலும் குறள்வெண்பாவில் வேற்றுத் தளை கலந்து செப்பலோசை சிதைந்து வருவதும் குறட்டாழிசை என்றே வகைப்படுத்தப்படும்.

3.2.3 வெண்டாழிசை (i) மூன்றடியாய், ஈற்றடி வெண்பாப் போலச் சிந்தடியாய் வருவது வெண்டாழிசை ஆகும். இதற்கு வெள்ளொத்தாழிசை என்பதும் பெயர்.

(ii) மூன்று சிந்தியல் வெண்பாக்கள் ஒருபொருள் மேல் அடுக்கி வருவதையும் வெள்ளொத்தாழிசை என்று குறிப்பிடுவர். (வெண்பா + தாழிசை = வெண்டாழிசை)

(எ.டு)

நண்பி தென்று தீய சொல்லார்

முன்பு நின்று முனிவு செய்யார்

அன்பு வேண்டு பவர்

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(நண்பிது = நட்புக்குரியது ; முனிவு = தீமை)

மேற்காட்டிய பாடலில் மூன்றடிகள் வந்துள்ளன. சிந்தியல் வெண்பாப் போலத் தோன்றினாலும் வெண்டளைகள் வரவில்லை ; செப்பலோசை இல்லை. ஈற்றடி சிந்தடியாக உள்ளது. ஆகவே இது வெண்டாழிசை ஆகும்.

கலிப்பாவின் இலக்கணம் படிக்கும்போது தாழிசைகள் மூன்று ஒருபொருள் மேல் அடுக்கிவருவது ஒத்தாழிசை என அறிந்தீர்கள். பா இனத்திலும் தாழிசை ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வருவதுண்டு. வெண்பாவின் இலக்கணம் பிழையாத சிந்தியல் வெண்பாக்கள் ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவது வெளளொத்தாழிசை எனப்படும்.

(எ.டு)

அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி

ஒன்னார் உடைபுறம் போல நலம்கவர்ந்து

துன்னான் துறந்து விடல்

ஏடி அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி

கூடார் உடைபுறம் போல நலம்கவர்ந்து

நீடான் துறந்து விடல்

பாவாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி

மேவார் உடைபுறம் போல நலம்கவர்ந்து

காவான் துறந்து விடல்

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

மேற்கண்டவை மூன்றும் சிந்தியல் வெண்பாக்கள். மூன்றிலும் பொருள் ஒன்றே ;சொல்லமைப்புகளும் ஒரே மாதிரியாக உள்ளன. ‘தலைவன் தலைவியின் அழகை நுகர்ந்தபின் அவளைப் பிரிந்து செல்வது அறம்தானா’ என்னும் கேள்வியே மூன்று பாடல்களிலும் உள்ள பொருள். அறங்கொல், நலங்கிளர் சேட்சென்னி, உடைபுறம்போல, நலங்கவர்ந்து, துறந்துவிடல் ஆகிய சொற்களும் தொடர்களும் மூன்று பாடல்களிலும் வருகின்றன. இவ்வாறு, சிந்தியல் வெண்பா மூன்று, ஒருபொருள்மேல் அடுக்கி வந்தமையால் இது வெள்ளொத்தாழிசை ஆகும்.

3.2.4 வெண்டுறை வெண்டுறை என்பது,

(i) குறைந்த அளவு மூன்றடிகளும் அதிக அளவு ஏழடிகளும் பெற்று வரும்.

(ii) முதலில் வரும் அடிகளை விடப் பின்னர் வரும் அடிகள சில சீர்கள் குறைவாகக் கொண்டிருக்கும்.

(iii) முதலில் வரும் சில அடிகள் ஓர் ஓசை அமைப்பிலும் பின்னர் வரும் அடிகள் வேறு ஓர் ஓசை அமைப்பிலும் வந்தால் அது வேற்றொலி வெண்டுறை எனப்படும்.எல்லா அடியும் ஒரே மாதிரியான ஓசை அமைப்பில் வந்தால் அது ஓரொலி வெண்டுறை எனப்படும். (வெண்[பா] + துறை = வெண்டுறை)

(எ.டு)

தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்கால் என்னாம்

என்னாம்

ஆளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்

பீலிபோல் சாய்த்துவிழும் பிளிற்றி யாங்கே

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(தாளாளர் = முயற்சியுடையோர் ; ஆளி = சிங்கம் ; கோடு

= கொம்பு ; பீலி = மயில்தோகை)

மூன்றடியாய், முதலடியை விடப் பின்னிரண்டடிகளும் இருசீர் குறைந்து வருவதால் இது வெண்டுறையாகும். பாடல் முழுதும் ஒரே ஓசையமைப்பில் (ஒரே மாதிரிச் சீர்கள்) உள்ளமையால் இது ஓரொலி வெண்டுறை.

3.2.5 வெளிவிருத்தம் (i) மூன்று அல்லது நான்கடிகளாய் வரும்.

(ii) ஒவ்வோர் அடியின் இறுதியிலும் (நான்கு சீர்களைத் தாண்டி) ஒரு தனிச்சொல் வரும்.

இவ்வாறு வருவது வெளிவிருத்தம் ஆகும். (வெண்பா + விருத்தம் = வெளிவிருத்தம்)

(எ.டு)

கொண்டல் முழங்கினவால் கோபம் பரந்தனவால் -

என்செய்கோயான்

வண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால் -

என்செய்கோயான்

எண்டிசையும் தோகை இருந்தகவி ஏங்கினவால் -

என்செய்கோயான்

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(கொண்டல் = மேகம் ; கோபம் = இந்திரகோபப்பூச்சி ; வரி = வரிப்பாட்டு ; தளவம் = முல்லை ; அகவி = கூவி; என்செய்கோ = என்ன செய்வேன்)

இது, மூன்றடியாய், ஒவ்வோரடியின் இறுதியிலும் ஒரு தனிச்சொல் பெற்று வந்திருப்பதால் வெளிவிருத்தம் ஆகும்.

இனி, இவற்றின் இலக்கணம் கூறும் நூற்பாவைக் காணலாம்.

மூன்றடி யானும் முடிந்தடி தோறும் முடிவிடத்துத்

தான்தனிச் சொல்பெறும் தண்டா விருத்தம்வெண்

தாழிசையே

மூன்றடி யாய்வெள்ளை போன்றிறும் மூன்றிழி

பேழுயர்வாய்

ஆன்றடி தாம்சில அந்தம் குறைந்திறும்

வெண்டுறையே

(யாப்பருங்கலக் காரிகை, 27)

நூற்பாவின் பொருள்

மூன்று அல்லது நான்கடியாய் வந்து ஒவ்வோரடியின் இறுதியிலும் ஒரு தனிச்சொல் பெற்று வருவது வெளிவிருத்தம்; மூன்றடியாய், வெண்பாவைப் போல ஈற்றடி சிந்தடியாய் வருவது வெண்டாழிசை மூன்றடிச் சிறுமையும் ஏழடிப் பெருமையும் கொண்டு முதலில் வரும் அடிகளைவிடப் பின்னர்வரும் அடிகளில் சில சீர்கள் குறைந்து வருவது வெண்டுறை.

வெண்பாவின் இனங்களை அறிந்து கொண்டீர்கள். இவை வெண்பாவின் இனங்களாக வகுக்கப்பட்டமைக்கான காரணங்களை (மேலோட்டமான ஒற்றுமைகளை ) நீங்களே சுட்டிக் காட்டிவிட முடியும்.

(i) இரண்டடியாய் வருபவையும், இரண்டாமடி முதலடியை விடக் குறுகி வருபவையும், இரண்டடியாய் வரும் குறள்வெண்பாவின் இனமாக வகுக்கப் பெற்றன.

(ii) மூன்றடியாயும் அதற்கு மேற்பட்டும் வரும் பாடல்கள் பிறவெண்பாக்களின் இனங்களாக வகுக்கப்பெற்றன. அவற்றுள் வெண்டாழிசையில் ஈற்றட சிந்தடியாக வருதல், வெண்டுறையில் பின்னர் வரும் அடிகள் சீர் எண்ணிக்கை குறைந்து வருதல், வெளிவிருத்தத்தில் அடிகளின் இறுதியில்

தனிச்சீர் வருதல் ஆகியவை வெண்பாவில் உள்ள தன்மைகளை உங்களுக்கு நினைவூட்டியிருக்கும்.

(iii) மூன்றடியாய் வரும் வெண்டாழிசையைச் சிந்தியல் வெண்பாவின் இனமாகவும், வெளிவிருத்தம் நான்கடியாய் வரும்போது அதனை நேரிசை வெண்பாவின் இனமாகவும், அதிக அளவாக ஏழடிகள் வரை பெறும் வெண்டுறையைப் பஃறொடை வெண்பாவின் இனமாகவும் கொள்ள வேண்டும்.

3.3 ஆசிரியப்பாவின் இனங்கள்

ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய விருத்தம் எனும் மூன்றும் ஆசிரியப்பாவின் இனங்கள் ஆகும். ஆசிரியப் பாவுக்கும் அதன் இனங்களுக்கும் இடையேயான ஒற்றுமை மேலோட்டமானதே என்பதை இனங்களின் இலக்கணத்தை அறியும்போது புரிந்து கொள்வீர்கள்.

3.3.1 ஆசிரியத் தாழிசை ஆசிரியத் தாழிசை என்பது,

(i) மூன்றடியாய் வரும்.

(ii) மூன்றடியும் சீர் எண்ணிக்கையால் அளவு ஒத்து வரும்.

(iii) தனியே மூன்றடியாய் வருவது மட்டுமன்றி, மூன்று தாழிசை ஒருபொருள் மேல் அடுக்கி வருவதும் ஆசிரியத்தாழிசையே.

தனியாக வருவதைஆசிரியத் தாழிசை எனவும்,ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வருவதை ஆசிரிய ஒத்தாழிசை எனவும் குறிப்பிடுவர்.

(எ.டு)

வானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை

பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை

நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(பான்மதி = பால்மதி, பால்போன்ற நிலவு ; நீனிற வண்ண = நீலநிறமுடைய திருமாலே ; நிரைகழல் = இரு பாதங்கள்)

மேலேயுள்ள பாடல் மூன்றடியாய், அடிதோறும் நான்குசீர்கள் அளவு ஒத்து வந்திருப்பதால் இது ஆசிரியத் தாழிசை.

(எ.டு)

கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்

இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்

கொன்றையம் தீங்குழல் களோமோ தோழி !

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்

ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்

ஆம்பலந் தீங்குழல் களோமோ தோழி !

கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன்

எல்லிநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்

முல்லையந் தீங்குழல் களோமோ தோழி !

(சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை 1, 2, 3)

(குணில் = குறுந்தடி ; ஆன் = பசுக்கள் இருக்குமிடம்,ஆயர்பாடி; களோமோ = கேட்போமா ;குருந்து = குருந்த மரம் ;ஒசித்த= அழித்த ; எல்லி = பகற்பொழுதில்.கொன்றை, ஆம்பல்,முல்லை என்பவற்றைச் சிலர் கருவி எனவும் பொருள் கொள்வர்)

மேற்காட்டிய பாடல் மூன்றடியாய்த் தம்முள் அளவொத்து வருவதுடன், ஒருபொருள்மேல் மூன்று தாழிசைகள் அடுக்கியும் வந்துள்ளன. ‘கண்ணன் நம் ஆயர் பாடிக்கு வந்தால் அவனிடம் புல்லாங்குழல் கேட்போம்’ என மகளிர் பாடி ஆடுவதாக வரும் ஒரே பொருள்தான் மூன்று தாழிசைகளிலும் அடுக்கி வருகிறது. மாயவன், ஆனுள் வருமேல் அவன்வாயில், தீங்குழல் களோமோ தோழி என்னும் தொடர்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. இவ்வாறு ஒருபொருள் மேல் மூன்றடுக்கிவருவதால் இது ஆசிரிய ஒத்தாழிசையாகும்.

3.3.2 ஆசிரியத் துறை ஆசிரியத் துறை என்பது,

(i) நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வரும்.

(ii) இடையே வரும் அடிகள் இடைமடக்காகவும் ( வந்த அடியே திரும்பவும் அடுத்த அடியாய் வருதல்) வரும்.

(iii) நான்கடியாய் இடையிடை குறைந்து வருவதும் உண்டு.

(iv) நான்கடியாய் இடை இடை குறைந்து, இடைமடக்காக வருவதும் உண்டு.

(v) ஆசிரியத் துறையில் எவ்வகைச் சீரும் வரலாம் ; எவ்வகை அடியும் வரலாம். மிக நீண்ட கழிநெடிலடிகள் கூட வரலாம்.

(vi) ஈற்றயலடி மட்டும் குறைந்து வரும் ஆசிரியத்துறை ஆசிரிய நேர்த்துறை என்றும், இடையிடை குறைந்து வருவது ஆசிரிய இணைக்குறள் துறை என்றும் கூறப்படும்.

(எ.டு)

வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய் வடிவே

போலத்

தண்டளிர்ப்பூம் பிண்டித் தழையேந்தி மாவினவித்

தணந்தோன் யாரே

தண்டளிர்ப்பூம் பிண்டித் தழையேந்தி வந்துநம்

பண்டைப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து

படர்ந்தோ னன்றே

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(வண்டுளர் = வண்டுகள் ஒலிக்கின்ற ; தார் = மாலை; செம்பூட்சேய் = சிறந்த அணிகளை அணிந்த முருகக் கடவுள்; பிண்டி = அசோகமரம் ; மா = விலங்கு ; தணந்தோன் = நீங்கியவன் ; பதி = ஊர் ; படர்ந்தோன் = சென்றவன்)

இப்பாடல்,     நான்கடியாய்     ஈற்றயலடி     குறைந்து, இரண்டாமடியே இடைமடக்காகி மூன்றாம் அடியாக வந்துள்ளது காண்க. ஆகவே இது ஆசிரியத்துறை. இதனை ஆசிரிய நேர்த்துறை எனவும் கூறலாம்.

(எ.டு)

இரங்கு குயில்முழவா இன்னிசையாழ் தேனா

அரங்கு மணிபொழிலா ஆடும் போலும் இளவேனில்

அரங்கு மணிபொழிலா ஆடு மாயின்

மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்ததிளவேனில்

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(இரங்கு = கூவுகின்ற ; தேன் = வண்டு ; மணிபொழில் = அழகிய சோலை)

இப்பாடல் நான்கடியாய் இடையிடை குறைந்து (முதலடியும், மூன்றாமடியும் ) வந்திருக்கிறது. இரண்டாமடியே மடங்கி மூன்றாமடியாய் வந்துள்ளது. ஆகவே     இது ஆசிரிய இணைக்குறள் துறை ஆகும். நீண்ட கழிநெடிலடிகளும் ஆசிரியத் துறையில் வரலாம் எனக்     கண்டோம் அல்லவா! எடுத்துக்காட்டுக்காக ஆசிரியத் துறையில் உள்ள ஒரு நீண்ட அடியை மட்டும் காணலாம்.

(எ.டு)

கொன்றார்ந் தமைந்த குருமுகத் தெழில்நிறக்

குருதிக் கோட்டின் இருந்தாள் பெருங்கைக்

குன்றாமென அன்றாமெனக்

குமுறா நின்றன கொடுந்தொழில் வேழம்

(குருமுகம் = ஒளிமுகம் ; கோடு = கொம்பு ;இருந்தாள் = கரிய கால்கள் ; வேழம் = யானை)

இது பதினான்கு சீர்கள் கொண்ட ஓரடி.

3.3.3 ஆசிரிய விருத்தம் பாவினங்களுள் விருத்த வகைகளே தமிழ் இலக்கியத்தில் மிகுந்து காணப்படுவன. கம்பராமாயணம்,சீவக சிந்தாமணி, பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், சீறாப்புராணம் போன்ற பெருங்காப்பியங்களில் மிகப்பெரும்பான்மையாக அமைந்திருப்பவை விருத்தங்களே. சிலப்பதிகாரத்தில் இசைப்பாடல்களாக வருபவற்றுள் ஆசிரிய விருத்தங்கள் பல உள்ளன.அக்காலத்தில் அவற்றுக்கு இப்பெயர் இல்லை.தேவாரம், திவ்வியப்பிரபந்தம் ஆகியவற்றிலும் ஆசிரிய விருத்தங்கள் உள்ளன. பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் போன்ற நூல்கள் ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவையே. இந்த அளவுக்கு இவை புலவர்களிடையேயும், படிப்போரிடையேயும் சிறப்புப் பெறுவதற்குக் காரணம் இவற்றின் இனிய சந்த ஓசை அமைப்புகளேயாகும். இனி ஆசிரிய விருத்தத்தின் இலக்கணம் காண்போம்.

(i) நான்கு கழிநெடிலடிகளால் ஆகி, நான்கடியும் அளவொத்து வருவது ஆசிரிய விருத்தம்.

(ii) நான்கடியும் ஒரே எதுகை அமைப்பைப் பெற்றிருக்க வேண்டும்.

(iii) நான்கடியும் ஒரே வகையான சந்த ஒழுங்கைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது முதலாம் அடி‘விளம் மா தேமா விளம் மா தேமா’எனும் சீர் அமைப்பைப் பெற்றிருந்தால் எஞ்சிய மூன்றடிகளும் அதே விதமான சீர் அமைப்பையே பெற்று வரவேண்டும். இதுவே சந்த ஒழுங்கு எனப்படுவது. சந்த அமைப்பில் பல்வேறு வகைகளைப் புலவர்கள் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர்.

(iv) கழிநெடிலடிகள் என்பதனால் ஓர் அடியில் ஆறுசீர்களும் ஆறுக்கு மேற்பட்ட எத்தனை சீர்களும் வரலாம். ஆயினும் ஓர் அடியில் எட்டுச்சீர் வரை வருவது சிறப்பான ஆசிரிய விருத்தம் எனவும்,அதற்கு மேல் வருவன சிறப்பில்லாதவை எனவும் கூறுவர்.

(v) ஆசிரிய விருத்தத்தை அதில் உள்ள சீர்களின் எண்ணிக்கை கொண்டு வகைப்படுத்துவர். அறுசீரடிகளால் வருவது அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். எழுசீரடிகளால் வருவது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இவ்வாறே பிறவும் பெயர் பெறும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அறுசீர் அடிகள் நான்கு ஒரே எதுகைஅமைப்பில் வருவது. முதலடியின் சந்த ஒழுங்கு ஏனைய அடிகளிலும் வரும். இவை நீங்கள் அறிந்தவை. சந்த ஒழுங்குகள் பலவகையாக அமையும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை மூன்று. அவை,

விளம்     மா     தேமா     விளம்     மா     தேமா

மா     மா     காய்     மா     மா     காய்

காய்     காய்     காய்     காய்     மா     தேமா

என்பன. ஒவ்வொன்றுக்கும் ஓர் எடுத்துக் காட்டுக் காண்போம்.

(எ.டு)

புவியினுக் கணியாய் ஆன்ற

பொருள்தந்து புலத்திற் றாகி

அவியகத் துறைகள் தாங்கி

ஐந்திணை நெறிய ளாவிச்

சவியுறத் தெளிந்து தண்ணென்

றொழுக்கமும் தழுவிச் சான்றோர்

கவியெனக் கிடந்த கோதா

வரியினை வீரர் கண்டார்

(கம்பராமாயணம், சூர்ப்ப. 1)

(புலம் = அறிவு ; அவி = கட்டுள்ள; ஐந்திணை நெறி = முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ; சவி = அழகு ; ஒழுக்கம் = ஒழுக்கம், ஒழுகிச்செல்லல்)

மேற்கண்ட அறுசீர்விருத்தத்தில் ‘விளம் மா தேமா விளம் மா தேமா’ எனும் சந்த ஒழுங்கு எல்லா அடிகளிலும் அமைந்திருப்பதைப் பாருங்கள்.‘பொருள்தந்து’ எனும் சீர் மட்டும் புளிமாங்காய்ச் சீர். விளச்சீருக்குப் பதிலாக மாங்காய்ச்சீரும் வரலாம்.

(எ.டு)

வெய்யிற் கேற்ற நிழலுண்டு

வீசும் தென்றற் காற்றுண்டு

கையில் கம்பன் கவியுண்டு

கலசம் நிறைய மதுவுண்டு

தெய்வ கீதம் பலவுண்டு

தெரிந்து பாட நீயுண்டு

வையம் தருமிவ் வளமன்றி

வாழும் சொர்க்கம் வேறுண்டோ

(உமார்கய்யாம் பாடல், கவிமணி)

மேற்காட்டிய அறுசீர் ஆசிரிய விருத்தம் ‘மா மா காய் மா மா காய்’ எனும் சந்த ஒழுங்கை எல்லா அடிகளிலும் கொண்டு அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

(எ.டு)

வெள்ளெருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி

மேலும் கீழும்

எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி

இழைத்த வாறோ

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில்

கரந்த காதல்

உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ

ஒருவன் வாளி

(கம்பராமாயணம், இராவணன்வதை, 237)

(சடைமுடியான் = சிவன் ; வெற்பு = மலை, கைலாய மலை ; கள் = தேன் ; கரந்த = ஒளித்துவைத்த ; ஒருவன் = இராமன் )

மேற்காட்டிய அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் ‘காய் காய் காய் காய் மா தேமா’ எனும் சந்த அமைப்பு எல்லா அடிகளிலும் வந்திருப்பது காண்க.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எழுசீரடிகள் நான்கு ஒரே எதுகை அமைப்பில் வருவது. எழுசீர் விருத்தச் சந்தங்களுள் சிறப்பானது ‘விளம் மா விளம் மா விளம் விளம் மா’ என்னும் சந்தமாகும். விளச்சீருக்குப் பதில் சில இடங்களில் மாங்காய்ச்சீரும் வரலாம்.

(எ.டு)

தடித்தவோர் மகனைத் தந்தையீண் டடித்தால்

தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்

பிடித்தொரு தந்தை அணைப்பனிங் கெனக்குப்

பேசிய தந்தையும் தாயும்

பொடித்திரு மேனி அம்பலத் தாடும்

புனிதநீ ஆதலால் என்னை

அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்

அம்மையப் பாவினி ஆற்றேன்

(திருவருட்பா, 3386)

(பொடித்திருமேனி = சுடலைப்பொடி பூசிய மேனி ; அம்பலம் = சிதம்பரம்)

மேற்காட்டிய எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் ‘விளம் மா விளம் மா விளம் விளம் மா’ எனும் சந்தம் எல்லா அடிகளிலும் வந்துள்ளது. ‘அணைப்பள்தாய்’ என ஒரு சீர் மட்டும் புளிமாங்காய்ச்சீர். விளச்சீருக்குப் பதில் சில இடங்களில்

மாங்காய்ச்சீர் வரலாம் என முன்பே பார்த்தோம்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எண்சீர் அடிகள் நான்கு ஒரே எதுகை அமைப்பில் வருவது. பாரதிதாசன் போன்றோர் எண்சீர் விருத்தத்தால் முழுக் காவியங்களே (பாண்டியன்பரிசு) பாடியுள்ளனர். மிகுந்த பெருவழக்குடைய எண்சீர் விருத்தத்தில் இருவகைச் சந்தங்கள் சிறப்பானவை. அவற்றை இனிக் காணலாம். காய் காய் மா தேமா காய் காய் மா தேமா எனவருவது ஒருவகை எண்சீர் விருத்தம்.

(எ.டு)

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்

கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச்

சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்

தொட்டவிடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்

மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற

மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்

சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம்

தனிலந்த அழகென்பாள் கவிதை தந்தாள்

(பாரதிதாசன், அழகின் சிரிப்பு)

(பரிதி = சூரியன் ; இலகுகின்ற = விளங்குகின்ற) மேற்காட்டிய சந்தம் இப்பாடலில் அமைந்துள்ளதனைக் காணலாம்.

‘காய் காய் காய் மா காய் காய் காய் மா’ என வருவது மற்றொருவகை எண்சீர் விருத்தம்.

(எ.டு)

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே

ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்

ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே

(திருவருட்பா, 4091)

மேற்காட்டிய சந்தம் இப்பாடலில் அமைந்திருப்பது காண்க.

இனி, ஆசிரியப்பா இனங்களின் இலக்கணம் கூறும் நூற்பாவைக் காணலாம்.

தருக்கியல் தாழிசை மூன்றடி ஒப்பன நான்கடியாய்

எருத்தடி நைந்தும் இடைமடக் காயும் இடையிடையே

சுருக்கடி யாயும் துறையாம் குறைவில்தொல் சீரகவல்

விருத்தங் கழிநெடில் நான்கொத் திறுவது மெல்லியலே

(யாப்பருங்கலக் காரிகை, 30)

நூற்பாவின் பொருள்: மூன்றடியாய்த் தம்முள் அளவொத்து வருவன தாழிசை. நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வருவனவும், நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வருவனவும் நான்கடியாய் இடையிடை குறைந்து வருவனவும், நான்கடியாய் இடையிடை     குறைந்து இடைமடக்காய் வருவனவும் ஆசிரியத்துறை. கழிநெடிலடி நான்காய்த் தம்முள் அளவொத்து வருவன ஆசிரிய விருத்தம்.

இனி, ஆசிரியப்பாவுக்கும் ஆசிரியப்பா இனங்களுக்கும் இடையேயுள்ள மேலோட்டமான ஒப்புமைகளைப் பார்ப்போம்.

(i) ஆசிரியத் துறை ஈற்றயலடி குறைந்து வருவது, ஈற்றயலடி குறைந்துவரும் நேரிசை ஆசிரியப்பாவை நினைவுபடுத்துகிறது.

(ii) ஆசிரியத் துறையில் இடையிடையே அடிகள் குறைந்து வருவது இணைக்குறள்ஆசிரியப்பாவை நினைவுபடுத்துகிறது.

இவை முறையே ஆசிரிய நேர்த்துறை எனவும், ஆசிரிய இணைக்குறள் துறை எனவும் பெயர் பெறுவது இந்த ஒப்புமையைத் தெளிவுபடுத்துகிறது.

3.4 தொகுப்புரை

மாணவர்களே ! இந்தப் பாடத்தில் பாக்களின் வகைகளுக்கும் பாக்களின் இனங்களுக்கும் இடையே அடிப்படையான இலக்கண ஒற்றுமைகள் இல்லை;மேலோட்டமான சில தோற்ற ஒற்றுமைகள் கொண்டே ஓர் இனம் ஒரு குறிப்பிட்ட பாவுக்குரிய இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வெண்பா இனங்களுள் குறள் வெண்பாவின் இனமும் பிறவெண்பாக்களின் இனமும் தனித்தனியாக வகைப்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டீர்கள். அனைத்துப் பாக்களுக்கும் தாழிசை, துறை, விருத்தம் என இனம் மூன்றாக வகைப்படுத்தப் பட்டுள்ளதனை அறிந்துகொண்டீர்கள்.தமிழ் இலக்கியத்தில் ஆசிரிய விருத்தம் என்னும் இனம் பெருவழக்கில் இருப்பதைத் தெரிந்து கொண்டீர்கள்.தாழிசைகள் இனிய ஓசையுடையவை என்பதையும் விருத்தங்கள் குறிப்பிட்ட சில சந்த ஒழுங்குகளில் அமைவன என்பதையும் உதாரணப் பாடல்களின் துணைகொண்டு உணர்ந்து கொண்டீர்கள். அடுத்துவரும் பாடத்தில் (பாவினங்கள் – 2) கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களின் இனங்கள் பற்றி அறிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

பாடம் - 4

பாவினம் – 2

4.0 பாட முன்னுரை

பாக்களின் வகைகள் பற்றியும் இனங்கள் பற்றியும் முந்தைய பாடங்களில் பார்த்தோம். வெண்பா, ஆசிரியப்பா ஆகியவற்றின் இனங்கள் குறித்த இலக்கணங்களைச் சென்ற பாடத்தில் (D03123) அறிந்து கொண்டோம். இந்தப் பாடத்தில் கலிப்பாவுக்கும் வஞ்சிப்பாவுக்கும் உரிய இனங்களின் இலக்கணங்களை அறிந்து கொள்ளலாம். பாடத்தின் நுழைவாசலில் இரண்டு கருத்துகளை மீண்டும்நினைவுக்குக் கொண்டு வந்து நிறுத்தி வைப்போம்.

(1) இனங்கள் என்பன குறிப்பிட்ட பா இலக்கணத்துடன் முழுமையும் பொருந்தி வருவன அல்ல;மேலோட்டமான சில ஒற்றுமைகளை மட்டுமே கொண்டவை.

(2) ஒவ்வொரு பாவும் தாழிசை, துறை, விருத்தம் என மூன்று இனங்களைக் கொண்டிருக்கும்.

4.1 கலிப்பாவின் இனம்

வெவ்வேறு ஓசை அமைப்புகளையுடைய உறுப்புகளின் தொடர்ச்சியால் துள்ளித் துள்ளி வரும் ஓசை ஒழுங்குடையது கலிப்பா என அறிவீர்கள். துள்ளல் ஓசையும் உறுப்புகளின் இணைவும் இல்லாவிடினும் கலிப்பாவின் இனங்களும் சிறப்பான ஓசையினிமை உடையனவே. அதனால்தான் கலிவிருத்தத்தையும் கலித்துறையையும் காப்பியக் கவிஞர்களாகிய கம்பர், திருத்தக்க தேவர், சேக்கிழார் போன்றோர் மிகுதியாகவும் அழகாகவும் பயன்படுத்தினர்.இனிக் கலிப்பாவின் இனங்களாகிய கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம் ஆகியவற்றின் இலக்கணங்களைக் காண்போம்.

4.1.1 கலித்தாழிசை (1) கலித்தாழிசை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிகளால் அமையும்.

(2) ஈற்றடி சற்று நீண்டு ஏனைய அடிகள் தம்முள் அளவு ஒத்து வரும்; ஒவ்வாதும் வரும்.(அளவு ஒத்து வருதல் = பாடல் முழுவதிலும் அடிகளில் சீர் எண்ணிக்கை ஒத்து வருதல்)

(3) ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது சிறப்பான கலித்தாழிசை; தனியே வருவதும் உண்டு.

(ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது பற்றி வெள்ளொத் தாழிசை, ஆசிரியத் தாழிசை, ஒத்தாழிசைக் கலிப்பா ஆகியவற்றின் இலக்கணங்களில் முன்பே படித்திருக்கிறீர்கள்.)

எடுத்துக்காட்டு:

கொய்தினை காத்தும் குளவி அடுக்கத்தெம்

பொய்தல் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்

ஆய்தினை காத்தும் அருவி அடுக்கத்தெம்

மாசில் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்

மென்தினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக்

குன்றச் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்

- (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)

(காத்தும் = காக்கின்றோம்; குளவி அடுக்கம் = மல்லிகை பூத்த மலைச்சாரல்; வாரல் = வாராதே)

மேற்காட்டிய இரண்டடித் தாழிசை முதலடியை (நாற்சீரடி) விட ஈற்றடி (ஐஞ்சீரடி) நீண்டு ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்திருப்பது காண்க. மூன்று தாழிசைகளிலும் சொற்களும் தொடர்களும் பொருளும் திரும்பத் திரும்ப அடுக்கி வந்துள்ளன.

அடுக்காது தனியே வரும் கலித்தாழிசைக்கு எடுத்துக்காட்டுக் காண்போம்.

எடுத்துக்காட்டு :

வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம்

கேள்வரும் போழ்தில் எழால்வாழி வெண்திங்காள்

கேள்வரும் போழ்தில் எழாலாய்க் குறாலியரோ

நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்

- (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)

(வாள் = ஒளி; சிறுநெறி = சிறு காட்டுவழி; எம்கேள் = எம் தலைவன்; எழால் = தோன்றாதே; எழாலாய்க்கு = தோன்றாத உனக்கு ; உறாலியர் = உறாது நீங்குக ; நாகம் = பாம்பு ; எயிறு = பல்)

தலைவன் வரும்போது தோன்றாதிருந்தால் நிலவைப்பாம்பு விழுங்காதிருக்கும் என்கிறாள் தலைவி.

நான்கடிகளாய் அமைந்த இக்கலித்தாழிசையில் ஈற்றடி நீண்டு (ஐஞ்சீரடி), ஏனைய அடிகள் அளவொத்து (நாற்சீரடி) வந்திருப்பது காண்க.

ஈற்றடி நீண்டு ஏனைய அடிகள் அளவு ஒவ்வாது வரும் கலித்தாழிசைக்கு எடுத்துக்காட்டுக் காண்போம்.

எடுத்துக்காட்டு:

பூண்ட பறையறையப் பூதம் மருள

நீண்ட சடையான் ஆடுமே

நீண்ட சடையான் ஆடும் என்ப

மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே

- (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)

(நீண்ட சடையான் = சிவன்; மாண்ட சாயல் = மாண்புடைய அழகு; மலைமகள் = உமை)

நான்கடிகளால் அமைந்த இக்கலித்தாழிசையில் ஈற்றடி நீண்டுள்ளது (ஐஞ்சீரடி). ஏனைய அடிகள் தம்முள் ஒவ்வாது வருகின்றன. நாற்சீர், முச்சீர், நாற்சீர் என அவ்வடிகள் வருகின்றன.

பரணி இலக்கியக் கலித்தாழிசை

காரிகையில் சொல்லப்படாத ஒரு கலித்தாழிசை வகையும் உண்டு. பரணி என்னும் சிற்றிலக்கியம் இவ்வகை கலித்தாழிசையால் அமைவது. காரிகைக்குப் பின்வந்த இலக்கணங்களில் இதன் இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. காரிகை சொல்லும் இலக்கணத்திலிருந்து இது வேறுபடுவது. கலிங்கத்துப் பரணி போன்ற கவிச்சுவை மிக்க இலக்கியங்களில் முழுமையாக அமைந்திருப்பதனால் இத்தாழிசையின் இலக்கணத்தை அறிந்து கொள்வது இன்றியமையாதது.

(1) இரண்டடிகளால் மட்டுமே வரும்.

(2) குறளடி முதல் கழிநெடிலடி வரை எவ்வடியாலும் வரும்; ஆனால் இரண்டடியும் அளவொத்து வர வேண்டும்.

(3) இரண்டடிகளிலும் ஒரே மாதிரியான சந்த ஒழுங்கு அமைந்திருக்கும். (சந்த ஒழுங்கு = முதலடியில் எந்தச் சீர் என்ன சீராக (மா, விளம், காய்) உள்ளதோ அவ்வாறே அடுத்த அடியிலும் வருவது)

எடுத்துக்காட்டு:

செக்கச் சிவந்த கழுநீரும் செகத்தில் இளைஞர்

ஆருயிரும்

ஒக்கச் செருகும் குழல்மடவீர் ஒண்பொற் கபாடம்

திறமினோ

- (கலிங்கத்துப் பரணி, கடைதிறப்பு)

மேற்குறித்த தாழிசை அளவொத்த இரு கழிநெடிலடிகளால் அமைந்தது. மா மா காய் மா மா காய் எனச் சீர் (சந்த) ஒழுங்கு இரண்டடிகளிலும் ஒரே மாதிரியாக அமைந்திருப்பது காண்க.

4.1.2 கலித்துறை (1) நெடிலடி நான்காய் வரும்.

(2) நான்கடிகளும் எதுகை அமைப்பில் ஒன்றியிருக்கும்.

(3) கலித்துறை பல்வேறு விதமான ஓசை அமைப்புகளுடையது.

ஆழ்வார் பாடல்கள், சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் இக்கலித்துறை மிகுதியும் இடம் பெற்றுள்ளது.

எடுத்துக்காட்டு:

நன்றுடை யானைத் தீயதில் லானை நரைவெள்ளே

றொன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை

சென்றடை யாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக்

குன்றுடை யானைக் கூறஎன் உள்ளம் குளிரும்மே

- (சம்பந்தர் தேவாரம், 1058)

(நரை வெள்ளேறு = காளை வாகனம்)

ஆவி அந்துகில் புனைவதொன் றன்றிவே றறியாள்

தூவி அன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்

தேவு தெண்கடல் அமிழ்துகொண் டனங்கவேள் செய்த

ஓவி யம்புகை யுண்டதே ஒக்கின்ற உருவாள்

- (கம்பராமாயணம், சுந்தரகாண்டம், 340)

(தேவு தெண்கடல் = பாற்கடல்; அனங்கவேள் = மன்மதன்)

இரண்டு எடுத்துக் காட்டுகளிலும் நான்கடிகளும் ஒரே எதுகை அமைப்புப் பெற்றிருப்பது காண்க. இரண்டும் வெவ்வேறு ஓசை அமைப்புடையனவாக இருப்பதனையும் காண்க.

கட்டளைக் கலித்துறை

கலித்துறையின் ஒரு வகை கட்டளைக்கலித்துறை. கட்டளை= எழுத்தின் அளவு. இக்கலித்துறையில் நான்கடிகளிலும் எழுத்தெண்ணிக்கை ஒரே மாதிரியாக வருவதால் இப்பெயர் பெற்றது.கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் யாப்பருங்கலக் காரிகையில் சொல்லப்படவில்லை. ஆனால் காரிகை நூற்பாக்கள் அனைத்தும் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தவை. பின் ஏன் இதன் இலக்கணத்தை அமிதசாகரர் சொல்லாது விட்டார்?44 நூற்பாக்களையும் படிக்கின்ற மாணவனுக்கு அதன் இலக்கணம் சொல்லாமலேயே பதியும் என அவர் எண்ணியிருக்கலாம். காரிகைக்குப் பின் வந்த இலக்கணங்களில் கட்டளைக்கலித் துறையின் இலக்கணம் சொல்லப்படுகிறது. கோவை எனும் சிற்றிலக்கியம் முழுமையும் கட்டளைக்கலித்துறையால் அமைந்தது. காப்பியங்கள், பக்தி இலக்கியம், பட்டினத்தார் பாடல் போன்றவற்றில் பெருவழக்காக உள்ள யாப்பு இது. கட்டளைக் கலித்துறையால் அமையும் நூற்பாவுக்கே காரிகை எனும் பெயர் உண்டு. இதன் இலக்கணத்தைக் காண்போம்.

(1) நெடிலடி நான்காய் வரும்.

(2) ஒவ்வோரடியிலும் முதல் நான்கு சீர்கள் பெரும்பாலும் ஈரசைச் சீர்களாக வரும்; சிறுபான்மை தேமாங்காய், புளிமாங்காய்ச் சீர்களும் வரலாம். ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீராக வரும்.

(3) ஒவ்வோரடியிலும் முதல் நான்கு சீர்களும் வெண்டளை அமைந்து வரும். அதாவது அடி முழுதும் வெண்டளை அமைந்து வரும்.ஆனால் அடியின் இறுதிச் சீருக்கும் அடுத்த அடியின் முதற் சீருக்கும் இடையே வெண்டளை வரவேண்டியதில்லை.

(4) ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடியும்.

(5) நேரசையில் தொடங்கும் அடி ஒற்று நீங்கப் பதினாறு எழுத்துகளையும் நிரையசையில் தொடங்கும் அடி ஒற்று நீங்கப் பதினேழு எழுத்துகளையும் பெற்றிருக்கும். ( ஒற்று- மெய்யெழுத்து)

(எழுத்தெண்ணி எழுத வேண்டியதில்லை.வெண்டளையும் ஈற்றில்விளங்காய்ச் சீரும் அமைந்தால் இந்த எழுத்து எண்ணிக்கை தானே அமையும்.)

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில்

தேங்கடம்பின்

மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்

வேல்பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்புமவன்

கால்பட் டழிந்ததிங் கென்தலை மேல்அயன் கையெழுத்தே

- (கந்தரலங்காரம்)

(சேல் = மீன்; கடம்பு = கடப்பம்பூ ; மால் = மயக்கம் ; வேலை = கடல்; வெற்பு = மலை; அயன் = பிரமன்)

இப்பாடல் நேரசையில் தொடங்கும் அடிகளைக் கொண்டது. ஒவ்வோரடியிலும் ஒற்று நீங்கப் பதினாறு எழுத்துகள் வந்திருப்பதைக் காண்க. முதல் நான்கு சீர்களில் வெண்டளை அமைப்பு. ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீர். ஏகார முடிவு ஆகிய இலக்கணங்களும் பொருந்தியிருப்பது காண்க.

எடுத்துக்காட்டு:

குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர். . ..

- (யாப்பருங்கலக் காரிகை – 12)

எனத் தொடங்கும் காரிகை நூற்பா நிரையசையில் தொடங்கிப் பதினேழு எழுத்துகள் பெற்று வந்திருப்பது காண்க.

4.1.3 கலி விருத்தம் (1) அளவடி (நாற்சீரடி) நான்காய் வருவது கலிவிருத்தம்.

(2) நான்கடிகளும் எதுகை அமைப்பில் ஒன்றியிருக்கும்.

(3) ஆசிரிய விருத்தம் போலவே நான்கடியிலும் சந்த ஒழுங்கு ஒன்றியிருக்கும்.பல்வேறு வகையான கலிவிருத்தச்சந்தங்கள் உண்டு.

ஆசிரிய விருத்தம் போலவே கலிவிருத்தம் காப்பியங்களில் மிகுதியாக இடம் பெறுவது.

எடுத்துக்காட்டு:

பேணநோற் றதுமனைப் பிறவி பெண்மைபோல்

நாணநோற் றுயர்ந்தது நங்கை தோன்றலான்

மாணநோற் றீண்டிவள் இருந்த வாறெலாம்

காணநோற் றிலனவன் கமலக் கண்களால்

- (கம்பராமாயணம், சுந்தரகாண்டம் – 402)

(மனைப் பிறவி = குடிப்பிறப்பு; பெண்மை = பெண் பிறப்பு; நோற்றது = தவம் செய்தது; நங்கை = சீதை;அவன் = இராமன்)

மேற்காட்டிய கலிவிருத்தத்தில் விளம் விளம் மா விளம் எனும் சந்த ஒழுங்கில் நான்கடிகளும் அமைந்திருப்பது காண்க. சில கலிவிருத்தங்களில் சந்த ஒழுங்கு சற்றுப் பிறழ்ந்து வருதலும் உண்டு.

இனி, இவ்வினங்களின் இலக்கணம் கூறும் நூற்பாவைக் காணலாம்.

அடிவரை இன்றி அளவொத்தும் அந்தடி நீண்டிசைப்பின்

கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும் ; கலித்துறையே

நெடிலடி நான்காய் நிகழ்வது ; நேரடி ஈரிரண்டாய்

விடினது வாகும் விருத்தம் திருத்தகு மெல்லியலே

(யாப்பருங்கலக் காரிகை, 33)

நூற்பாவின் பொருள் :

அடிவரையறை இன்றி இரண்டடியும் பலவடியும் வந்து ஈற்றடி நீண்டு ஏனைய அடிகள் தம்முள் ஒத்து வருவதும் ஒவ்வாது வருவதும் கலித்தாழிசை. நெடிலடி நான்காய் வருவது கலித்துறை. அளவடி நான்காய் வருவது கலிவிருத்தம்.

இனிக் கலிப்பாவின் இனங்கள் கலிப்பாவுடன் எவ்வகையில் மேலோட்ட ஒற்றுமைகள் கொண்டுள்ளன எனக் காணலாம்.

(1) நான்கு பாக்களுள்ளும் ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வரும் தனிச்சிறப்புடைய தாழிசை உறுப்பு கலிப்பாவுக்குரியது. கலித்தாழிசை அவ்வாறு ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வரும் தன்மையைக் கொண்டுள்ளது. (பிற பாக்களின் இனங்களிலும் தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும்.)

(2) கலிப்பாவின் தாழிசைக்கு அடிச்சிறுமை இரண்டடி ; கலி இனமாகிய தாழிசைக்கும் அடிச்சிறுமை இரண்டடியே யாகும்.

(3) சுரிதகம் இல்லாத தரவுகொச்சகக் கலிப்பாவுக்கும் கலிவிருத்தத்திற்கும் இடையே ஒற்றுமை உண்டு.இரண்டுமே அளவடி நான்காய் வருவன;நான்கடியும் எதுகைஅமைப்பில் ஒன்றியிருப்பன. (ஆனால் தரவு கொச்சகக் கலிப்பா காய்ச்சீர்கள் மிகுந்து கலித்தளை அமைந்து துள்ளலோசை பெற்று வரும் ; கலிவிருத்தம் பெரும்பாலும் இயற்சீர்களால் ஆகியது ; துள்ளலோசை பெறாதது.மேலும் கொச்சகத்தில் இல்லாத சந்த ஒழுங்கு தாழிசையில் உண்டு.)

(4) கொச்சகக் கலிப்பாவில் ஐஞ்சீரடி அருகிவரும். ஆகவே ஐஞ்சீரடிகளால் அமையும் கலித்துறை ஒருவகையில் கொச்சகத்தோடு ஒற்றுமையுடையது.

4.2 வஞ்சிப்பாவின் இனம்

தமிழ்க் கவிதை இலக்கியத்தில் மிக மிகக் குறைவான அளவுக்கே இடம் பெற்றிருப்பது வஞ்சிப்பா. இதன் இனங்களாகிய வஞ்சித் தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் ஆகியனவும் அவ்வாறே குறைந்த ஆட்சி உடையனவே.     அவற்றின் இலக்கணங்களைக் காண்போம்.

4.2.1 வஞ்சித் தாழிசை (1) குறளடி நான்காய் வரும்.

(2) வஞ்சித் தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி மட்டுமே      வரும்; தனியே வராது; தனியே வரின் அது வஞ்சித்      துறையாகி விடும்.

எடுத்துக்காட்டு:

மடப்பிடியை மதவேழம்

தடக்கையான் வெயில்மறைக்கும்

இடைச்சுரம் இறந்தார்க்கே

நடக்குமென் மனனேகாண்

பேடையை இரும்போத்துத்

தோகையான் வெயில்மறைக்கும்

காடகம் இறந்தார்க்கே

ஓடுமென் மனனேகாண்

இரும்பிடியை இகல்வேழம்

பெருங்கையான் வெயில்மறைக்கும்

அருஞ்சுரம் இறந்தார்க்கே

விரும்புமென் மனனேகாண்

(பிடி = பெண் யானை; தடக்கை = பெரிய கை; சுரம் = பாலை; மனன் = மனம்; போத்து = ஆண் பறவை)

மேற்காட்டிய பாடல் குறளடி நான்கு, பிரிந்து சென்ற தலைவனையே தலைவி மனம் நாடுகிறது எனும் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வந்திருப்பது காணலாம். ஒவ்வொரு தாழிசையிலும் வெயில்மறைக்கும், இறந்தார்க்கே,மனனே காண் எனும் சொல்லும் தொடரும் திரும்ப வந்து அடுக்கியிருப்பது காண்க.

4.2.2 வஞ்சித் துறை (1) குறளடி நான்கு தனித்து வருவது வஞ்சித் துறை.

(2) வஞ்சித்துறை பல்வேறு ஓசை அமைப்புகளில் வரும்.

எடுத்துக்காட்டு:

மைசிறந்தன மணிவரை

கைசிறந்தன காந்தளும்

பொய்சிறந்தனர் காதலர்

மெய்சிறந்திலர் விளங்கிழாய்

(மணிவரை = அழகிய மலை;     விளங்கிழாய் = விளங்கும் அணிகலன் அணிந்த பெண்ணே)

மேற்கண்ட பாடலை விட இன்னும் குறுகியதாக ஓசை அமைப்பு வேறுபடும் (இயற்சீர்களால் ஆகிய) வஞ்சித் துறையும் உண்டு.

எடுத்துக்காட்டு:

உள்ளம் உரைசெயல்

உள்ளஇம் மூன்றையும்

உள்ளிக் கெடுத்திறை

உள்ளில் ஒடுங்கே

- (திருவாய்மொழி – 2693)

4.2.3 வஞ்சி விருத்தம் (1) சிந்தடி நான்காய் வருவது வஞ்சி விருத்தம்.

(2) இது பல்வேறு ஓசை அமைப்புகளில் வரும்.

எடுத்துக்காட்டு:

ஊனு யர்ந்த உரத்தினால்

மேனி மிர்ந்த மிடுக்கினான்

தானு யர்ந்த தவத்தினால்

வானு யர்ந்த வரத்தினான்

- (கம்பராமாயணம், யுத்த. – 1378)

(ஊன் = உடல்; உரம் = வலிமை)

கும்பகருணனைப் பற்றிய பாடல்.

எடுத்துக்காட்டு:

நீறணி மேனியன் நீள்மதியோ

டாறணி சடையினன் அணியிழையோர்

கூறணிந் தினிதுறை குளிர்நகரம்

சேறணி வளவயற் சிரபுரமே

- (சம்பந்தர் தேவாரம், 1177)

இவ்விரண்டு எடுத்துக் காட்டுகளும் சிந்தடி நான்காய் வந்துள்ளன. ஆயினும் வேறு வேறு ஓசை அமைப்புகளைக் கொண்டிருப்பது காண்க.

இனி, இவ்வினங்களின் இலக்கணம் கூறும் நூற்பாவைக் காணலாம். இந்நூற்பா வஞ்சிப்பாவின் ஈறு பற்றியும் கூறுகிறது.

குறளடி நான்கின மூன்றொரு தாழிசை கோதில்வஞ்சித்

துறையொரு வாது தனிவரு மாய்விடின் சிந்தடிநான்

கறைதரு காலை அமுதே விருத்தம் தனிச்சொல் வந்து

மறைதலில் வாரத்தி னாலி றும் வஞ்சிவஞ் சிக்கொடியே

- (யாப்பருங்கலக் காரிகை – 34)

நூற்பாவின் பொருள்:

குறளடி நான்கு ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவது வஞ்சித் தாழிசை; குறளடி நான்கு தனித்து வருவது வஞ்சித் துறை; சிந்தடி நான்கு வருவது வஞ்சி விருத்தம். வஞ்சிப்பாவில் வஞ்சியடிகளின் இறுதியில் தனிச்சொல் பெற்றுப் பிறகு ஆசிரியச் சுரிதகத்தால் முடியும்.

(வஞ்சிப்பாவிற்குத் தனியாக இலக்கணம் கூறும் பகுதி இல்லை. உறுப்பியலில் நான்கு பாவுக்குமுரிய அடிச் சிறுமை பெருமைகள் பற்றிய ‘வெள்ளைக் கிரண்டடி’ எனத் தொடங்கும் நூற்பாவிலும், செய்யுளியலில் பாவுக்குரிய அடி பற்றிய நூற்பாவிலும் வஞ்சிப்பாவிற்குரிய இலக்கணங்கள் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளன. அவற்றில் சொல்லப்படாமல் விடுபட்ட ‘ஈறு’ இலக்கணத்தை, இனம் பற்றிய இந்த நூற்பாவில் குறித்திருக்கிறார் அமிதசாகரர்)

இனி வஞ்சிப்பாவின் இலக்கணங்கள் வஞ்சிப்பாவுடன் எவ்வகை ஒற்றுமைகள் கொண்டுள்ளன எனக் காணலாம்.

(1) குறளடி வஞ்சிப்பா குறளடிகளால் ஆகியது. வஞ்சித் தாழிசையும் வஞ்சித் துறையும் குறளடிகளால் அமைந்திருப்பதால் அவை குறளடி வஞ்சிப்பாவின் இனங்களாகும்.

(2) சிந்தடி வஞ்சிப்பா முச்சீரடிகளால் ஆகியது. வஞ்சி விருத்தம் முச்சீரடிகள் கொண்டு அமைவதால் அது சிந்தடி வஞ்சிப்பாவின் இனம் ஆகும்.

4.3 தொகுப்புரை

மாணவர்களே! பாவினம்- 2 எனும் இப்பாடத்தில் கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றின் இனங்களுக்குரிய இலக்கணங்களைத் தெளிவாக அறிந்து கொண்டீர்கள். கலி, வஞ்சி ஆகிய பாக்களுக்கும் அவற்றின் இனங்களுக்கும் இடையேயுள்ள மேலோட்ட ஒற்றுமைகள் யாவை எனப் புரிந்து கொண்டீர்கள். யாப்பருங்கலக் காரிகையில் சொல்லப்படாத, ஆனால் அதன் நூற்பாக்களின் யாப்பாகிய கட்டளைக்கலித்துறையின் இலக்கணத்தை விளக்கமாகத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். பாவினம்- 1 என்னும் முந்தைய பாடத்தை மீண்டும் படித்துப் பாருங்கள் எல்லாப் பாக்களுக்கும் உரிய தாழிசை இனங்கள் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வரும் ஒற்றுமையை உணர்வீர்கள். அதே போல நான்கு பாக்களின் விருத்தங்களும் சிறந்த ஓசை ஒழுங்கு பெற்றிருப்பதைக் காண்பீர்கள். அடுத்து வரும் பாடங்களில் ஒழிபியல் இலக்கணம் காண்போம்.

பாடம் - 5

ஒழிபியல் – 1

5.0 பாட முன்னுரை

யாப்பியல் மாணவர்களே !

பல நூற்றாண்டுகளாகச் செழித்து வளர்ந்து வந்துள்ள தமிழ் யாப்பியலில் முதன்மையான இருபெரும் பகுதிகளாக உள்ள உறுப்பியலையும் செய்யுளியலையும் யாப்பருங்கலக் காரிகை இலக்கணத்தின் வழியே தெளிவாகக் கற்றிருக்கிறீர்கள். எனினும் நீங்கள் பெற்றுள்ள யாப்பறிவு முழுமையானது எனக்கூற முடியாது. முதலிரண்டு இயல்களைக் கற்கும்போது உங்களில் சிலர் அல்லது பலர் சில ஐயங்களை எழுப்பிக் கொண்டு, அவ்வவ்விடங்களில் விடை காண முடியாமல் தவித்திருக்கக் கூடும். எடுத்துக்காட்டாக, சீரின் முதலில் தனிக்குறில் நேரசை ஆகுமா, அளபெடை வரும்போது அலகிடுவது எப்படி, எதுகை மோனைக்குச் சொல்லப்பட்ட இலக்கணங்களிலிருந்து வேறுபட்டு அவை பல செய்யுட்களில் அமைந்திருப்பதேன்     என்பன     போன்ற     ஐயங்கள் எழுந்திருக்கலாம். அவற்றுக்கெல்லாம் விடை தந்து உங்கள் யாப்பறிவை முழுமையாக்கும் இயல்தான் காரிகையின் இறுதி இயலாகிய ஒழிபியல். இந்தப் பாடத்திலும் (ஒழிபியல் – 1) அடுத்து வரும் பாடத்திலும் (ஒழிபியல்-2) ஒழிபியலின் கருத்துகளை விரிவாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

மாணவர்களே !

முதலிரண்டு இயல்களைப்     படிக்கும் போதே (நூற்பாக்களில் சொல்லப்படா விடினும் உரையில் சுட்டிக் காட்டப்பட்ட) சில செய்திகள் உங்களுக்குப் பாடத்தில் வழங்கப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக, பாக்களின் பொது இலக்கணம் கூறும்போது பாக்களில் அவற்றுக்குரியவை அல்லாத பிற தளைகளும்     மயங்கிவரும்     எனக் கூறப்பட்டுள்ளதை, மறுபடி ஒருமுறை திருப்பிப் பாருங்கள். இந்த இலக்கணம் ஒழிபியல் நூற்பாவில்தான் உள்ளது. இங்குத்தான் நூற்பா வழியில் அந்த இலக்கணங்களைக் கற்க இருக்கிறோம்.

5.1 ஒழிபியல் விளக்கம்

ஒழிபு என்பது ஒழிந்தது, நீங்கியது, விடுபட்டது எனப் பொருள் தரும். உறுப்பியலிலும் செய்யுளியலிலும் சொல்லாது விடுபட்டவற்றை மொத்தமாகத் தொகுத்துத் தருவதுதான் ஒழிபியல். ஒழிபியலில் மூன்று வகையான இலக்கணக் கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன.

(1) முதலிரண்டு இயல்களில் சொல்லப்படாமல் விடுபட்டவை.

(2) முன்பு சொல்லப்பட்டவற்றிற்குப் புறனடையாக, வேறுபட்டு வரும் கருத்துகள்.

(3) இதுவரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கருத்துகள்

பொதுவாக இலக்கணங்கள் ‘இது சரி, இது தவறு’ என எடுத்துக் காட்டும் விதிமுறைகளே. எனினும் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் சில விதிமுறைகள் மீறப்படுவதுண்டு. பின்னர் வரும் இலக்கண நூல்கள் இந்த விதிமுறை மீறல்கள் மொழியின் அடிப்படைக்கு எதிரானவை அல்ல என்றால் அவற்றை ஏற்றுக் கொண்டு புதிய விதிகளை வகுப்பதுண்டு. நீங்கள் நன்னூல் படித்திருப்பீர்கள். ‘இதோ வருவேன்’ என எதிர்காலத்தில் சொல்ல வேண்டியதை ஒருவன் விரைவு கருதி ‘இதோ வந்துவிட்டேன்’ என இறந்த காலத்தில் சொல்வதுண்டு. இதில் காலம் வழுவானது எனினும் இலக்கண ஆசிரியர் இதனை ‘வழுவமைதி’ என ஏற்கிறார். (நன்னூல் -384) எழுத்துகளுக்கு மாத்திரை அளவுகள் கூறிய பின் ‘இசை, விளி, பண்ட மாற்று’ ஆகியவற்றில் இந்த மாத்திரை அளவுகள் நீண்டு வருவதும் உண்டு என்கிறார். (நன்னூல், 101)

ஏற்கப்படும் விதி மீறல்களைப் ‘புறனடை’ என்பர். விதிகளைத் தொடர்ந்து ஆங்காங்கே புறனடைகளைச்சொல்லிச் செல்வதும் உண்டு.ஒவ்வோர் இயலின் இறுதியிலும் பொதுவான புறனடைகள் சொல்வதும் உண்டு. ‘இதற்கு இதுதான் முடிவான இலக்கணம் என்று வரையறுத்து எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது ; சொல்லப்பட்ட இலக்கணங்களைக் கொண்டு, சொல்லப்படாதவற்றை வகுத்துக் கொள்ளுக’ என நன்னூலார் எழுத்ததிகார இறுதியில் புறனடை (நன்னூல், 257) சொல்கிறார். புறனடைகள் மட்டும் அல்லாமல் புதிதாகச் சொல்லப்பட வேண்டிய கருத்துகளையும் சேர்த்துப் பொதுவியல், எச்சவியல், ஒழிபியல் எனபது போல இறுதியில் ஒரு முழு இயலாகச் சொல்வது இலக்கண ஆசிரியர்களின் வழக்கம்.

காரிகையின் ஒழிபியலில் மேலே சொன்னவாறு மூன்று வகைகளில்     புறனடைகள்,     புதிய     கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. இனி அவற்றை விரிவாகக் காண்போம்.

5.2 எழுத்துகளுக்குப் புறனடை

உறுப்பியலில் எழுத்துகளின் அளவு (மாத்திரை) பற்றி அறிந்தீர்கள். சில எழுத்துகள் செய்யுளில் இடம்பெறும் போது, செய்யுளின் ஓசை அமைப்பில் பிழை நேராதிருப்பதற்காக, அவற்றின் அளவு மாறுவதுண்டு. அதாவது அலகிடும்போது (அசையாக்கிப் பிரிக்கும் போது) இந்த மாற்றங்கள் தேவைப்படலாம். அதனை இங்குக் காணலாம்.

5.2.1 குற்றியலிகரமும் குற்றியலுகரமும் உறுப்பியலில் குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகியவை அரை மாத்திரை பெறும் எனக் கூறப்பட்டது.ஒற்றெழுத்துகளும் அரை மாத்திரை பெறுவனவே. எனினும் எழுத்துகளைக் கூட்டி அலகிடும் போது குற்றியலிகரத்தையும் குற்றியலுகரத்தையும் பிற குற்றெழுத்துகளைப் (ஒரு மாத்திரை பெறுவன) போலக் கொண்டு அலகிடுவதே வழக்கமானது. ஆனால் செய்யுளில் அவை இடம்பெறும் சீர்களில் ஓசை அமைப்புக் கெட்டுச் சீரும் தளையும்     சிதையுமானால்     குற்றியலிகரத்தையும், குற்றியலுகரத்தையும் ஒற்றுப் போலக் கொண்டு, அலகிடாமல் விட்டுவிட வேண்டும்.

குற்றியலிகரம்

சிறுநன்றி இன்றிவர்க்கியாஞ் செய்தக்கால் நாளைப்

பெருநன்றி மன்னும் பெரிதென் – றுறுநன்றி

தானவாய்ச் செய்வதூஉம் தானமன் றென்பவே

வானவாம் உள்ளத் தவர்.

- (யாப்பருங்கலக் காரிகை, உரை மேற்கோள்)

(இன்று இவர்க்கு யாம் = இன்றிவர்க்கியாம் = கி, குற்றியலிகரம் ; மன்னும் = மேலும் ; அவாய் = விரும்பி ; வான் = விண்ணுலகு)

மேற்காட்டிய     வெண்பாவில்     இன்றிவர்க்கியாம் – செய்தக்கால் என்னும் சீர்களை இயல்பாக அலகிட்டால் கூவிளங்கனி-தேமாங்காய் என வரும். கனி முன் நேர் என ஒன்றாத வஞ்சித் தளை வரும். வெண்பாவில் கனிச்சீரும் வஞ்சித் தளையும் வரக்கூடாது. ஆகவே வெண்பாவின் செப்பலோசையைக்     காக்கக் ‘கி’ என்பதில் உள்ள குற்றியலிகரத்தை அலகிடாமல் விட்டுவிட வேண்டும். விட்டுவிட்டால் இன்றிவர்க்க்யாம் என அச்சீர் கூவிளங்காய்ச் சீராகும். காய்முன் நேர் என வெண்சீர் வெண்டளையும் அமையும். சீரும் தளையும் சிதையாமலிருக்கும்.

எடுத்துக்காட்டு :

அருளல்ல தியாதெனில் கொல்லாமை கோறல்

பொருளல்ல தவ்வூன் தினல்.

- (திருக்குறள், 254)

(அருள் அல்லது யாதெனில் > அருளல்லதியாதெனில் = தி குற்றியலிகரம். அருள் இல்லது = அருளும் இல்லாததும் ; கோறல் = கொல்லுதல்)

இவ்வெண்பாவில்     அருளல்ல     தியாதெனில் > புளிமாங்காய் – கருவிளம், காய் முன் நிரை எனக் கலித்தளை வரும். வெண்பாவில் கலித்தளை வரக்கூடாது. ஆகவே ‘தி’ எனும் குற்றியலிகரத்தை அலகிடாமல் விட்டுவிட வேண்டும். அருளல்ல யாதெனில் > புளிமாங்காய், கூவிளம் > காய்முன்நேர் என வெண்சீர் வெண்டளை அமையும்.வெண்பா ஓசை சிதையாது. இனிக் குற்றியலுகரத்தை அலகிடும் முறை பற்றிக் காண்போம்.

குற்றியலுகரம்

கொன்றுகோடுநீடு குருதிபாயவும்

சென்றுகோடுநீடு செழுமலைபொருவன

வென்று கோடுநீடு விறல்வேழம்

(கோடு = யானைக் கொம்பு, மலைக்குவடு ; பொருவன = மோதுவன ; விறல் = வலிமை)

என வரும் வஞ்சிப்பா அடிகளைப் பாருங்கள். வஞ்சிப்பாவில் கனிச் சீர்கள், பொதுச் சீர்கள் (நாலசைச் சீர்) மிகுந்துவரும். ஓரளவு காய்ச்சீரும் வரலாம். ஆனால் மேற்காட்டிய வஞ்சியடிகளில் ஆறசைச்     சீர்கள்     வந்துள்ளன. கொன்-று-கோ-டு-நீ-டு (இங்கு மாணவர்க்கு ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. கொன்-றுகோ-டுநீ-டு என அலகிட்டால் அது நாலசைச் சீர்தானே எனலாம். இது சரிதான். ஆயினும் ஒரு சீருக்குள் பல சொற்கள் வரும்போது ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியே அலகிடுவதும் ஒருமுறை அம்முறைப்படி அலகிட்டால் மேற்குறிப்பிட்டது போல ஆறசைச் சீர் வருகிறது.) எந்தப் பாவிலும் ஆறசைச் சீர் வரக்கூடாது. ஆகவே று, டு எனும் குற்றியலுகரங்களை (அடிக்கோடிடப் பெற்றவை) அலகிடாமல் விட்டுவிட்டால் (கொன்-கோ-நீ) அச்சீர்கள் மூவசைச் சீர்களாகி விடும். சீரும் தளையும் சிதையாமலிருக்கும்.

5.2.2 உயிரளபெடை உயிரளபெடை மூன்று மாத்திரை பெறும் என உறுப்பியலில் கூறப்பட்டது. ஆனால் சீரும் தளையும் சிதையும் நிலை வருமானால் அளபெடை நெட்டெழுத்துப் போலவே கொண்டு அலகிடப் பெறும்.

எடுத்துக்காட்டு :

பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள்

சொல்லுக்குத் தோற்றின்னும் தோற்றிலவால் – நெல்லுக்கு

நூறோஒநூ றென்பாள் நுடங்கிடைக்கும் மென்முலைக்கும்

மாறோமால் அன்றளந்த மண்.

- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(தோற்றில = தோன்றவில்லை ; நூறோஒநூறு = விலை கூவி விற்றல் ; மாறு = ஒப்பு)

மேற்காட்டிய வெண்பாவில் அளபெடை வரும் சீரை இயல்பாக நூ-றோ-ஒ-நூ என நான்கசையாக அலகிட வேண்டும். (இவ்வாறு அலகிடுவது பற்றி அடுத்த நூற்பாவில் விளக்கப்படும்) இவ்வாறு அலகிட்டால் வெண்பாவில் வரக்கூடாத நாலசைச் சீர் வந்து சீரும் தளையும் சிதையும். ஆகவே உயிரளபெடையை வெறும் நெடில் போலக் கொண்டு – அளபெழுந்த அறிகுறியாக வரும் குறிலைக் கணக்கிடாமல் நூ-றோ-நூ என அலகிட வேண்டும். இவ்வாறு அலகிட்டால் தேமாங்காய்ச் சீராகும். நூறோநூ-றென்பாள் > காய்முன் நேர் > வெண்சீர் வெண்டளை ஆகும். வெண்பா ஓசை காக்கப்படும்.

5.2.3 ஐகாரக் குறுக்கம் ஐகாரக் குறுக்கம் ஒன்றரை மாத்திரை பெறும் என உறுப்பியலில் கூறப்பட்டது.ஆயினும் அலகிடும்போது ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்தைப் போலக் கொள்ளப்பட்டு அதன்பின் வரும் குறில் அல்லது நெடிலுடன் சேர்த்து நிரையசையாக அலகிடப் பெறும்.

எடுத்துக்காட்டு :

அன்னையையான் நோவ தவமால் அணியிழாய்

புன்னையையான் நோவன் புலந்து

- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(அவம் = வீண் ; நோவன் = வருந்துவேன் ; புலந்து = சினந்து)

மேற்காட்டிய     வெண்பாவில்     ஐகாரத்தை நெடில்போலவோ, 1.5 மாத்திரை பெறும் குறுக்கமாகவோ கொண்டு அன்னையையான், புன்னையையான் எனும் சீர்களை அன்-னை-யை-யான் எனவும் புன்-னை-யை-யான் என்று பிரித்தால் அவை நாலசைச் சீர்கள் ஆகும். வெண்பாவில் நாலசைச் சீர்களுக்கு     இடமில்லை. ஆகவே ஐகாரக் குறுக்கத்தை ஒரு மாத்திரை பெறும் குறில் போலக் கொண்டு அன்-னயை-யான், புன்-னயை-யான் என அலகிட வேண்டும். அச்சீர்கள் கூவிளங்காய்ச் சீர்கள் ஆகி, வெண்பா ஓசை காக்கப் பெறும்.

(ஐகாரக்     குறுக்கம்     தொடர்பாகக் காரிகையில் சொல்லப்படாத ஒரு விதியை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சொல்லின் முதல், இடை, கடை என மூன்றிடங்களிலும் ஐகாரம் குறுகும் என்பது இலக்கணம். அதனை அப்படியே நடைமுறைப்படுத்தினால் ஐயர் என்பதை அயர், ஐயிரு என்பதை அயிரு என்பனபோல அலகிட வேண்டியிருக்கும். ஆகவே சில இலக்கண ஆசிரியர்கள் மொழி முதலில், அதாவது சீரின் முதலில் வரும் ஐகாரத்தை நெடில் போலவோ, 1.5 மாத்திரை பெறும் குறுக்கமாகவோ கொண்டு தனியே பிரித்து நேரசையாகக் கொள்ள வேண்டும் என இலக்கணம் வகுத்துள்ளனர். ஐயர் > ஐ-யர்; ஐயிரு > ஐ-யிரு என அலகிட வேண்டும்.

எடுத்துக்காட்டு :

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும். – (திருக்குறள் – 774)

(பறியா = பறித்து ; நகும் = சிரிப்பான்)

மேற்காட்டிய வெண்பாவில் கைவேல் என்பதில் சீரின் முதலில் உள்ளது ஐகாரக்குறுக்கமே யாயினும் கை-வேல் எனத் தனி நேரசையாக அலகிட்டால்தான் வெண்பா இலக்கணம் அமையும். (குறில்போலக் கொண்டு நிரையசையாக அலகிட்டால் இலக்கணம் சிதையும்.)

5.2.4 ஒற்றளபெடை ஒற்றுகள் சிலவும் ஆய்தமும் அளபெடுக்கும் என்பதை உறுப்பியலில் அறிந்தீர்கள். ஒற்று அளபெடுக்கும்போது அதனை எவ்வாறு அலகிடுவது எனும் இலக்கணம் இங்குக் கூறப்படுகிறது. சீர்களை அலகிடும்போது ஒற்றுகளுக்கு அலகு மதிப்பு இல்லை என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால் ஒற்று அளபெடுக்கும் போது ஒரு நேரசையாகக் கொள்ளப்படும். அதன் முன்னும் பின்னும் உள்ள எழுத்துகளுடன் சேர்த்து நிரையசை யாக்கக் கூடாது.

எடுத்துக்காட்டு :

கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு

பொன்ன் பொறிசுணங்கு போழ்வாய் இலவம்பூ…

- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

மேற்கண்ட     வெண்பா     அடிகளில்     வரும் ஒற்றளபெடைகளைக் க-ண்ண் >    நேர்நேர் > தேமா ; பொ-ன்ன் > நேர்நேர் > தேமா என அலகிட வேண்டும். இவ்வாறு அலகிட்டால்தான் மாமுன் நிரை என வெண்டளை அமையும்.

எடுத்துக்காட்டு :

எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர்

வெஃஃ குவார்க்கில்லை வீடு

- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(எஃஃகு = ஆயுதம் ; வெஃஃகு = விரும்புதல்)

மேற்காட்டிய வெண்பாவில் ஆய்த     எழுத்து அளபெழுந்துள்ளது.     எ-ஃஃ >    நேர்நேர் > தேமா ; வெ-ஃஃ > நேர்நேர் > தேமா என அலகிட வேண்டும். இவ்வாறே இலங்ங்கு என ஒரு சீர் வந்தால் இல-ங்ங்-கு > நிரை நேர் நேர் > புளிமாங்காய் என அலகிட வேண்டும்.

5.2.5 சீரும் தளையும் சிதையாத போது சீரும் தளையும் சிதைய வரும்போது குற்றியலிகரமும் குற்றியலுகரமும் அலகுபெறா எனப் பார்த்தோம். சீரும் தளையும் சிதையாத போது அவற்றை எவ்வாறு கொள்வது? அவற்றைக் குறில் போலக் கொண்டு அலகிட வேண்டும்.

எடுத்துக்காட்டு :

வந்துநீ சேரின் உயிர்வாழும் – வாராக்கால்

முந்தியாய் பெய்த வளைகழலும் . . . . .

- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(வாழும் = வாழ்வாள் ;     முந்து+யாய் > முந்தியாய் = முன்பு தாய் ; பெய்த = இட்ட)

மேற்காட்டிய வெண்பா அடிகளில் வந்துநீ எனும் சீரில் உள்ள குற்றியலுகரத்தை வந்-துநீ > நேர்நிரை > கூவிளம் எனவும், முந்தியாய் எனும் சீரில் உள்ள குற்றியலிகரத்தை முந்-தியாய் > நேர்நிரை > கூவிளம் எனவும் குறில் போலக் கொண்டு அலகிட வேண்டும். ஏனெனில் இங்கு இவற்றைக் குறிலாகக் கொள்வதனால் வெண்பாவுக்குரிய சீரோ தளையோ கெடவில்லை. விளமுன் நிரை என வெண்டளை சரியாக அமைகிறது.

சீரும் தளையும் சிதையாத போது உயிரளபெடையை எவ்வாறு அலகிடுவது என்பது அடுத்த நூற்பாவில் விளக்கப்படும்.

இதுவரை விளக்கப்பட்ட இலக்கண விதிகளைக் கூறும் நூற்பாவின் பொருள் :

செய்யுளில் சீரும் தளையும் சிதைய வரும் இடங்களில் அச்சிதைவை நீக்குவதற்காகக் குற்றியலிகரம், குற்றியலுகரம், உயிரளபெடை ஆகியவை அலகு பெறா ; ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்துப் போல அலகிடப் பெறும் ; ஒற்றளபெடை ஓர் அலகு (நேரசை) பெறும்.

மாணவர்களே !

இந்த நூற்பாவில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் உறுப்பியலில் சொல்லாமல் விடுபட்ட கருத்துகள் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். அடுத்து அசைக்குப் புறனடை கூறும் நூற்பாவின் கருத்துகளைக் காண்போம்.

5.4 சீர்க்கும் தளைக்கும் புறனடை

பாக்களிலும் பாவினங்களிலும் எவ்வெச் சீர்கள், தளைகள் வரலாம், எவையெவை வரலாகாது என்னும் இலக்கணங்கள் செய்யுளியல் உரையில் சொல்லப்பட்டுள்ளன. செய்யுளியல் பாடத்தில் அவை சுட்டிக் காட்டப் பெற்றுள்ளன. அச்செய்திகளை நூலாசிரியர் அமிதசாகரர் இந்த ஒழிபியல் நூற்பாவில்தான் விளக்குகிறார்.

5.4.1 கலிப்பா நேரீற்றியற் சீரும் (நேர் ஈற்று இயற்சீர்) (தேமா, புளிமா எனும் மாச்சீர்கள்) நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீரும் (கருவிளங்கனி, கூவிளங்கனி எனும் சீர்கள்) கலிப்பாவில் வாரா. இவையொழிந்த எல்லாச் சீர்களும் கலிப்பாவில் வரும். கலித்தளையுடன் பிற தளைகளும் கலிப்பாவில் மயங்கி வரும்.

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவில் நேரீற்றியற்சீரும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் அருகிவரும், வெண்கலியுள் நேரீற்றியற்சீர் வரும் எனும் செய்திகள் செய்யுளியல் உரையில் சொல்லப்பட்டிருப்பதை இங்குச் சொல்லப்படும் புறனடைக்குப் புறனடையாக நினைவில் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டு :

குடநிலைத் தண்புறவில் கோவலர் எடுத்தார்ப்ப

தடநிலைப் பெருந்தொழுவில் தகையேற மரம்பாய்ந்து

வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தேறப்போய்க்

கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப

எனவாங்கு

ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும்

கானுடைத் தவர்தேர் சென்ற வாறே.

- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(குடநிலை = கண்ணன் ஆடிய குடக்கூத்து ; தடநிலை = பெரிய ; தகை ஏறு = காளை ; ஒரீஇ = நீங்கி ; ஏறப்போய் = பாய்ந்து சென்று ; இரிய = அஞ்சி ஓட ; ஆன் = பசு ; முனையும் = செல்லும்)

மேற்காட்டிய தரவு கொச்சகக் கலிப்பாவில் நேரீற்றியற்சீரும், நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீரும் வரவில்லை. நிரையீற்று இயற்சீர் (குடநிலை, தடநிலை, கோவலர்), வெண்பாவுரிச்சீர் (தண்புறவில், எடுத்தார்ப்ப, தேறப்போய்), நேர்நடுவாகிய வஞ்சியுரிச்சீர் (வீங்-கு-மணி = தேமாங்கனி) ஆகிய சீர்கள் வந்துள்ளன.

வெண்டளை -

(குடநிலைத் – தண்புறவில் > விளமுன் நேர் > இயற்சீர் வெண்டளை ; கயிறொரீஇத் – தாங்குவனத் > காய்முன்நேர் > வெண்சீர் வெண்டளை)

ஆசிரியத்தளை -

(கோவலர்-எடுத்தார்ப்ப > விளமுன்நிரை > நிரை யொன்றாசிரியத்தளை)

கலித்தளை -

(பெருந்தொழுவில்-தகையேறு> காய்முன்நிரை> கலித்தளை)

வஞ்சித் தளை -

(வீங்குமணிக்- கயிறொரீஇ > ஒன்றிய வஞ்சித்தளை)

எனப் பல தளைகளும் மயங்கி வந்துள்ளன.

5.4.2 ஆசிரியப்பா ஆசிரியப்பாவில் நிரைநடுவாகிய வஞ்சி உரிச்சீர்கள் (கருவிளங்கனி, கூவிளங்கனி) வாரா. ஏனைய எல்லாச் சீர்களும் வரும். ஆசிரியத் தளைகளுடன் பிற தளைகளும் மயங்கி வரும்.

எடுத்துக்காட்டு :

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்

பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது

போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ

ஊர்கொள வந்த பொருநனொ

டார்புனை தெரியல் நெடுந்தகை போரே -

(புறநானூறு, 82)

(சாறு = விழா ; தலைக்கொண்டென = தொடங்க ; பெண் = மனைவி ;மாரி = மழை ; ஞான்ற ஞாயிறு = ஞாயிறு மறைய; நிணக்கும் = பின்னும் ; இழிசினன் = புலையன் ;போழ்தூண்டு ஊசி = வாரைச் செலுத்தும் ஊசி ; பொருநன் = போரிடுபவன்; தெரியல் = மாலை)

மேற்காட்டிய ஆசிரியப்பாவில், பட்ட, மாரி, ஞான்ற, நினைக்கும், ஊர்கொள எனும் ஆசிரிய உரிச்சீர்களும் விரைந்தன்று என வெண்பா உரிச்சீரும் சாறுதலை (சா-று-தலை) என நேர்நடுவாகிய வஞ்சி உரிச்சீரும் வந்துள்ளன. நிரைநடுவாகிய வஞ்சி உரிச்சீர் வரவில்லை.

ஆசிரியத் தளைகளும் (பட்ட – மாரி> நேரொன்றாசிரியத் தளை ; ஆர்புனை – தெரியல் > நிரையொன்றாசிரியத் தளை), வெண்டளைகளும் (கட்டில்-நிணக்கும் > இயற்சீர் வெண்டளை ; ஞாயிற்றுக் கட்டில் > வெண்சீர் வெண்டளை), வஞ்சித் தளையும் (சாறுதலைக் – கொண்டென > ஒன்றாத வஞ்சித்தளை) வந்துள்ளன.

5.4.3 வெண்பா ஆசிரியம், கலி, வஞ்சி ஆகிய பாக்களில் அவற்றுக்குரியவை எனச் சொல்லப்பட்ட சீர்களும் தளைகளும் அல்லாத பிற சீர்களும் தளைகளும் மயங்கி வருமென மேலே கண்டோம். ஆனால் வெண்பாவில் மட்டும் அதற்குரியதல்லாத வேறு சீரும் (வஞ்சியுரிச்சீர்கள்), வேறு தளையும் (வெண்டளையல்லாத வேறு தளைகள்) கலக்கக் கூடாது. கலந்தால் செப்பலோசை கெட்டு வெண்பா இலக்கணம் சிதையும். (இந்தக் கருத்து செய்யுளியலில் வெண்பாப் பற்றிய இலக்கணத்தில் முன்பே சொல்லப்பட்டுள்ளது.)

ஆக, சீர் தளை இலக்கணத்தைப் பொறுத்தவரை வெண்பாவுக்குப் புறனடை எதுவும் இல்லை.

கனிச்சீர் வெண்பாவில் வருவது தவறு என்பதே இலக்கண, இலக்கிய ஆசிரியர் அனைவரின் கருத்தும் ஆகும்.

5.4.4 வஞ்சிப்பா கலிப்பா, ஆசிரியப்பா ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட மிகச் சில சீர், தளை வரையறைகள் கூட வஞ்சிப்பாவுக்கு இல்லை. எல்லாச் சீரும் எல்லாத் தளையும் வஞ்சிப்பாவில் வரும். பிற பாக்களில் பெரும்பாலும் வாராத பொதுச்சீர்கள் கூட (நாலசைச்சீர்) வஞ்சிப்பாவில் வரும் என்பதை உறுப்பியல் பாடத்தில் படித்தீர்கள்.

எடுத்துக்காட்டு :

மண்டிணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்புதைவரு வளியும்

வளித்தலைஇய தீயும்

தீமுரணிய நீருமென்றாங்

கைம்பெரும் பூதத் தியற்கை போல

- (புறநானூறு, 2)

(நிலன் ஏந்திய விசும்பு = நிலத்தின் மேல் ஓங்கிய ஆகாயம் ;தைவரு = தடவுகிற ; வளி = காற்று ; தலைஇய = தொடர்புடைய ; முரணிய = மாறுபட்ட)

மேற்காட்டியவை வஞ்சி அடிகள். புறநானூற்று ஆசிரியப் பாவின் தொடக்கத்தில் இவை வருகின்றன. இவ்வஞ்சி யடிகளில் நிலனும், விசும்பும், வளியும், தீயும் ஆகியவை நேரீற்று இயற்சீர்கள் ; மண்டிணிந்த – வெண்பாவுரிச்சீர் ; நிலனேந்திய , தீ முரணிய என்பன வஞ்சியுரிச்சீர்கள். விசும்-பு-தை-வரு, வளித் – தலை- இ – ய என நாலசைச் சீர்களும் வந்துள்ளன.

மண்டிணிந்த – நிலனும் > கலித்தளை

நிலனேந்திய – விசும்பும் > ஒன்றிய வஞ்சித்தளை

தீ முரணிய – நீரும் > ஒன்றாத வஞ்சித்தளை

நிலனும் – நிலனேந்திய > இயற்சீர் வெண்டளை

தீயும் – தீ முரணிய > நேரொன்றாசிரியத் தளை

இவ்வாறு எல்லாத் தளைகளும் மயங்கி வந்துள்ளன.

5.4.5 பாவினங்கள் செய்யுளியலில் பாவினங்களின் இலக்கணம் படித்தபோது அவற்றுக்கு அடி எண்ணிக்கையும், சீர் எண்ணிக்கையுமே இலக்கணங்களாகச் சொல்லப்பட்டன என்பதைப் பார்த்திருப்பீர்கள். சீர் வரையறை இல்லை என உரையாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். எந்தச் சீரும் வரலாம் எனும்போது எந்தத் தளையும் வரலாம் என்பதுதானே புலப்படுகிறது அல்லவா ! அதனை ஒழிபியலில் காரிகையாசிரியரும் உரையாசிரியரும் வெளிப்படையாகச் சொல்கின்றனர்.

‘முழங்குதிரைக் கொற்கை வேந்தன். . . . .’ எனத் தொடங்கும் வெண்டுறையில் (பார்க்க, இணைய நூலகம் -செய்யுளியல் வெண்பாவின் இனங்கள்)

முழங்குதிரை, வழங்குதல் என்பன வஞ்சியுரிச்சீர்கள்.

கோமான், பாடி > இயற்சீர்கள்

முழுதுலகம் > வெண்சீர்

முழங்குதிரைக் கொற்கை வேந்தன் > ஒன்றாத வஞ்சித்தளை

கைவேல் – பாடி > ஆசிரியத்தளை

பாடிக் – கலங்கிநின் > இயற்சீர் வெண்டளை

பொலங் கொள்பூ – தடங்கட்கே > கலித்தளை

இவ்வாறு எல்லாச் சீரும் தளையும் மயங்கி வந்துள்ளன.

நூற்பாவின் பொருள் :

மாச்சீர்கள் கலிப்பாவில் வாரா ; விளங்கனிச் சீர்களும் வாரா ; ஆசிரியப்பாவிலும் விளங்கனிச் சீர்கள் வாரா. அல்லாத எல்லாச் சீர்களும் எல்லாப் பாவிலும், பாவினத்திலும் வரும். தளையும் அவ்வாறே. எல்லாத் தளையும் எல்லாப் பாக்கள், பாவினங்களில் வரும். ஆனால் வெண்பாவில் கனிச்சீர் வாரா ; வெண்டளை தவிரப் பிற தளைகள் வாரா.

மாணவர்களே !

மாச்சீருக்கும் விளங்கனிச்சீருக்கும் இங்குச் சொல்லப்பட்ட இலக்கணங்கள் முன்பு நூலாசிரியரால் சொல்லப்படாத புதிய செய்திகளே. தளை பற்றிய இலக்கணமும் புதிய செய்தியே. உறுப்பியல், செய்யுளியல் நூற்பாக்களை மீண்டும் படித்து இவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

5.5 அடி மயக்கம்

மாணவர்களே!

செய்யுளியலின் முதல் நூற்பாவில் வெண்பா, அகவல், கலிப்பா அளவடி பெறும் ; வஞ்சிப்பா குறளடி அல்லது சிந்தடி பெறும் என அறிந்தீர்கள். நான்கு பாவுக்கும் உரிய ஓசைகளையும் அறிந்தீர்கள். அளவடியாய்ச் செப்பலோசை பெற்று வந்தால் அது வெள்ளடி ;அளவடியாய் அகவலோசை பெற்று வந்தால் அது ஆசிரிய அடி ; அளவடியாய்த் துள்ளலோசை பெற்றுவந்தால் அது கலியடி ; குறளடியாகவோ சிந்தடியாகவோ வந்து தூங்கலோசை பெற்று வந்தால் அது வஞ்சியடி. இவ்வடிகள் இவற்றுக்குரிய பாக்களில் இடம்பெறும் என்பது நாம் முன்பு உணர்ந்துள்ள கருத்து. இவற்றுக்குப் புறனடையான கருத்துகளை இங்குக் காண்போம். ஒரு பாவுக்குரிய அடி மற்றொரு பாவில் மயங்கி (கலந்து) வருமா? வெண்பாவைத் தவிர மற்ற எல்லாப் பாக்களிலும் பிற பாக்களுக்குரிய அடிகள் மயங்கி வரும்.

5.5.1 ஆசிரியப்பா ஆசிரியப்பாவில் இயற்றளை வெள்ளடியும் (இயற்சீர் வெண்டளைகள் அமைந்த வெள்ளடி) வஞ்சியடியும் மயங்கி வரும்.

எடுத்துக்காட்டு :

எறும்பி அளையிற் குறும்பல் சுனைய

உலைக்கல் அன்ன பாறை ஏறிக்

கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்

கவலைத் தென்பவவர் தேர்சென்ற ஆறே ;

அதுமற் றவலம் கொள்ளாது

நொதுமற் கழறுமிவ் வழுங்கல் ஊரே.

- (குறுந்தொகை, 12)

(எறும்பி அளை = எறும்புப் புற்று ;    சுனைய = சுனைகளையுடைய ;      பகழி = அம்பு ; மாய்க்கும் = தீட்டும் ; கவலை = பிளவுபட்ட பாதைகள் ; நொதுமல் = அயல்தன்மை ; கழறும் = கடிந்துரைக்கும்)

மேற்கண்ட நேரிசை ஆசிரியப் பாவின் முதலடியைக் கவனியுங்கள். எறும்பி அளையில் > இயற்சீர் வெண்டளை ;

அளையில் குறும்பல் > இயற்சீர் வெண்டளை ;

குறும்பல் சுனைய > இயற்சீர் வெண்டளை ;

சுனைய உலைக்கல் > இயற்சீர் வெண்டளை.

இவ்வாறு அடி முழுதும் இயற்சீர் வெண்டளையால் ஆகியிருப்பதால் இது இயற்றளை    வெள்ளடி. இவ்வடி ஆசிரியப்பாவில் மயங்கி வந்துள்ளது.

எடுத்துக்காட்டு :

‘முனைத்தெவ்வர் முரணவிய’ எனத் தொடங்கும் புறநானூற்று ஆசிரியப்பாவில் (புறநானூறு, 98) சில அடிகள் :

தோல்செறிப்பினின் வேல்கண்டவர்

தோல்கழியொடு பிடிசெறிப்பவும்

வாள்வாய்த்த வடுப்பரந்தநின்

மறமைந்தர் மைந்துகண்டவர்

புண்படுகுருதி அம்பொடுக்கவும்

நீயே, ஐயவி புகைப்பவும் தாங்கா தொய்யென

உறுமுறை மரபின் புறம்நின் றுய்க்கும்

கூற்றத் தனையை ஆகலின் போற்றார் . . . . .

(தோல் செறிப்பில் = உறையில் இடப்படாத ; தோல் = கேடயம் ;மைந்து = வலிமை ; ஐயவி = வெண்சிறு கடுகு ; போற்றார் = பகைவர்)

மேற்காட்டிய பாவில் முதல் ஐந்தடிகள் குறளடியாலான வஞ்சியடிகள், 1, 2, 5 ஆகிய அடிகளில் வஞ்சித்தளை அமைந்திருப்பது காண்க.

தோல்செறிப்பினின் – வேல்கண்டவர் > கனிமுன் நேர் > ஒன்றாத வஞ்சித்தளை

தோல்கழியொடு – பிடிசெறிப்பவும் > கனிமுன் நிரை > ஒன்றிய வஞ்சித்தளை

இவ்வாறு ஆசிரியப்பாவில் வஞ்சியடிகள் மயங்கி வந்துள்ளன.

· ஆசிரியப்பாவில் வெண்சீர் வெள்ளடி, கலியடி அருகி வரல்

நூற்பாவில் வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும் ‘விதப்புக் கிளவி’ எனும் முறையில் இதுவும் நூலாசிரியர் கருத்தே எனக் கொண்டு, உரையாசிரியர் வெண்சீர் வெள்ளடியும் கலியடியும் ஆசிரியப்பாவில் அருகிவரும் என்கிறார்.

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

அதனால், யானுயிர் என்ப தறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே

- (புறநானூறு, 186)

(மலர்தலை = பரந்த இடம் ; அறிகை = அறிவது)

மேற்காட்டிய நேரிசை ஆசிரியப்பாவின் முதலடியில் உயிரன்றே எனும்இரண்டு வெண்சீர்கள் வந்துள்ளன.நெல்லும் – உயிரன்றே > இயற்சீர் வெண்டளை ; உயிரன்றே – நீரும் > வெண்சீர் வெண்டளை. ஆகவே இவ்வடி வெண்சீர் வெள்ளடி.

எடுத்துக்காட்டு :

வேந்துமேம் பட்ட பூந்தார் மாற

கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்

நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன்மறவரும் என

நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட

அறநெறி முதற்றே அரசின் கொற்றம் . . . .             (புறநானூறு, 55)

(மாற = மாறனே ! ; சினத்த = சினமுடைய ; கதழ்பரிய = விரைந்து செல்லும் ; கலிமா = குதிரை ; நெஞ்சு = ஊக்கம் ; புகழ் = போரை விரும்பும்)

மேற்கண்ட அடிகள் ஆசிரியப் பாவில் வருவன. இப்பாவில் ஆசிரிய அடிகளுக்கிடையே ‘கடுஞ்சினத்த . . .’ எனத் தொடங்கி இரண்டு கலியடிகள் வந்துள்ளன. கடுஞ்சினத்த – கொல்களிறும் > கலித்தளை. இது போலவே மேலும் ஐந்து சீரிணைப்புகளில் கலித்தளை வந்திருப்பதைப் பாருங்கள்.

இவ்வாறு ஆசிரியப்பாவில் வெண்சீர் வெள்ளடியும் கலியடியும் அருகி வந்துள்ளன.

5.5.2 வஞ்சியப்பா வஞ்சிப்பாவில் ஆசிரிய அடிகள் மயங்கி வரும். கலியடியும் வெள்ளடியும் அருகி வரும்.

எடுத்துக்காட்டு :

பட்டினப்பாலை ஒரு நீண்ட வஞ்சிப்பாட்டு. 301 அடிகளைக் கொண்ட அவ்வஞ்சிப்பாவில்,

நுண்ணிதின் உணர நாடி நண்ணார் – (அடி-225)

என்பது போல ஆசிரிய அடிகள் பல வந்துள்ளன. அடி முழுவதும் சீர்களிடையே ஆசிரியத்தளை வருவது காண்க.

கொள்வதூஉ     மிகைகொளாது     கொடுப்பதூஉம் குறைகொடாது (அடி 210) என்னும் அடி முழுவதிலும் காய் முன் நிரை வந்து கலித்தளை அமைந்துள்ளது. இவ்வாறு கலியடி அருகி வந்துள்ளது.

கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை – (அடி, 23)

என்னும் அடி முழுவதிலும் மா முன் நிரை என இயற்சீர் வெண்டளை அமைந்துள்ளது. இவ்வாறு வெள்ளடியும் அருகி வந்துள்ளது.

5.5.3 கலிப்பா கலிப்பாவில் வெண்பா அடிகளும் ஆசிரிய அடிகளும் மயங்கி வரும்.

எடுத்துக்காட்டு :

காமர் கடும்புனல் . . .எனத் தொடங்கும் கலித்தொகை 39ஆம் பாடல் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா ஆகும். அப்பாடலில்,

வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்தொடா

கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர்

அல்ல புரிந்தொழுக லான் – (அடிகள், 12-14)

(வள்ளி = கிழங்கு ;     கீழ் = வேர் ;    வரை = மலை ; தொடா = தொடுக்க மாட்டா ; குரல் = கதிர்)

மேற்கண்டவை போன்ற வெண்பா அடிகள் கலந்து வந்துள்ளன.

எடுத்துக்காட்டு :

இமையவில் வாங்கிய . . . . எனத் தொடங்கும் கலிப்பாவில் (கலித்தொகை, 38)

நீடிரு விடரகம் சிலம்பக் கூய்த்தன் (அடி, 8)

(விடர் = மலைப்பிளவு ; சிலம்ப = ஒலிக்க)

எனும் அடி முழுமையும் ஆசிரியத் தளைகள் அமைந்த ஆசிரிய அடி.

நூற்பாவின் பொருள் :

ஆசிரியப்பாவில் இயற்சீர்களால் அமைந்த வெண்பா அடியும், வஞ்சியடியும் மயங்கி வரும் ; வெண்சீர் வெள்ளடியும் கலியடியும் அருகி வரும். வஞ்சிப்பாவில் ஆசிரிய அடிகள் மயங்கி வரும் ; கலியடியும் வெள்ளடியும் அருகி வரும். கலிப்பாவில் வெண்பா அடிகளும் ஆசிரிய அடிகளும் மயங்கி வரும்.

மாணவர்களே !

இந்த நூற்பாவில் சொல்லப்பட்டவை, செய்யுளியலில் உணர்த்தப்பட்ட கருத்துகளுக்குப்     புறனடையானவை என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

5.6 அடிக்கும் தொடைக்கும் புறனடை

செய்யுளியல் முதல் நூற்பாவில் ‘வெண்பா, அகவல், கலிப்பா அளவடி ; வஞ்சி என்னும் ஒண்பா அடி குறள், சிந்து’ என்று படித்திருப்பீர்கள். அதற்குப் புறனடையான ஒரு கருத்தை இங்குப் படிக்கவிருக்கிறோம். மேலும் முரண்தொடை தொடர்பான ஒரு புதிய இலக்கணத்தையும் அறிந்து கொள்ள விருக்கிறோம்.

5.6.1 அடிக்குப் புறனடை அளவடிகளால்     அமைவதற்குரிய     கலிப்பாவிலும் ஆசிரியப்பாவிலும் ஐஞ்சீர் அடிகள் அருகி வரும்.

எடுத்துக்காட்டு :

அணிகிளர் சிறுபொறி அவிர்துத்தி மாநாகத் தெருத்தேறித்

துணியிரும் பனிமுந்நீர் தொட்டுழந்து மலைந்தனையே

- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(அணி = அழகு ; பொறி = புள்ளி ; துத்தி = பாம்புப் படம் ; நாகம் = பாம்பு ; எருத்து = தலை ; மலைந்தனை = கொன்றாய்)

மேற்காட்டிய கலிப்பா அடிகளில் முதலடி ஐஞ்சீரடியாக வருவது காண்க.

எடுத்துக்காட்டு :

உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்தலை

ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்கா

டின்னா என்றி ராயின்

இனியவோ பெரும தமியோர்க்கு மனையே

- (குறுந்தொகை, 124)

(உமணர் = உப்பு வணிகர் ; அகன்தலை = அகன்ற இடம் ; ஓமை = ஒரு வகை மரம்)

மேற்காட்டிய நேரிசை ஆசிரியப்பாவின் முதலடி ஐஞ்சீரடியாக வந்திருப்பது காண்க.

5.6.2 முரண்தொடைக்குப் புதிய இலக்கணம் உறுப்பியலில்     முரண்தொடை     இலக்கணம் படித்திருக்கிறீர்கள். அடிதோறும் முதற்சீரில் சொல்லாலோ பொருளாலோ முரண்படத் தொடுப்பது முரண்தொடை. அது முதல் தொடை எனப்படும். ஓரடிக்குள்ளேயே முதற்சீரில் தொடங்கிப் பிற சீர்களினிடையே முரண் அமைவது விகற்பத் தொடை எனப்படும் (வழித்தொடை , உறழ்ச்சித் தொடை). அவற்றை மறுபடி படித்துவிட்டுக் கீழ்க்காணும் புதிய முரண்தொடை அமைப்புகளைப் பாருங்கள். இவை ஐந்து ஆகும்.

கடை முரண்

அடிதோறும் இறுதிச் சீரில் சொல்லோ பொருளோ முரண்படத் தொடுப்பது. எடுத்துக்காட்டு :

கயன்மலைப் பன்ன கண்ணிணை கரிதே

தடமுலைத் திவளும் தனிவடம் வெளிதே

- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(கயல் = மீன் ; திவளும் = அசையும்)

மேற்காட்டிய பா அடிகளின் இறுச் சீர்களில் கரிதே x வெளிதே எனக் கடை முரண் அமைந்து வந்துள்ளது.

கடை இணை முரண்

அடிகளில் இறுதி இரு சீர்களில் சொல்லோ பொருளோ முரண்படத் தொடுப்பது.

எடுத்துக்காட்டு :

மீனாய்ந் தருந்திய கருங்கால் வெண்குருகு

தேனார் ஞாழல் விரிசினைக் குழூஉம்

(குருகு = கொக்கு ; ஞாழல் = ஒரு வகை மரம் ; குழூஉம் = ஒன்று சேரும்)

மேற்காட்டிய பா அடிகளில் இறுதி இரண்டு சீர்களில் கருமை x வெண்மை, விரிதல் x ஒன்றிணைதல் எனும் முரண்பொருள் அமைந்து வந்திருப்பது காண்க.

பின் முரண்

இரண்டாம் சீரிலும் நான்காம் சீரிலும் முரண் அமைவது.

எடுத்துக்காட்டு :

சாரல் ஓங்கிய தடந்தாள் தாழை

கொய்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து

- (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)

(தடந்தாள் = பெரிய தண்டு)

மேற்காட்டிய அடிகளில் ஓங்குதல் x தாழ்தல், குவிதல் x விரிதல் எனும் பொருள்பட முரண் அமைந்திருப்பது காண்க. (ஓங்கிய x தாழை என்பது முரணா? ஆம். அது பொருள் முரண் அன்று ; சொல் முரண். தாழை என்பது தாழஞ்செடியைக் குறித்தாலும் சொல் அளவில் ‘தாழ்தல்’ எனும் பொருளும் தருகிறது. ‘கரிசல் காட்டில் வெள்ளாடு என்பது முரணா? ஆம். வெள்ளாடு வெண்மையான ஆடு எனப் பொருள்படாது. ஆயினும் சொல் அளவில் உள்ள “வெண்மை, கரிசல் என்பதற்கு முரண். அதுபோலத் தான் இங்கு ஓங்கிய x தாழை எனும் சொல் முரண் அமைந்துள்ளது.)

கடைக்கூழை முரண்

இறுதி மூன்று சீர்களில் முரண் அமைவது.

எடுத்துக்காட்டு :

காவியங் கருங்கண் செவ்வாய்ப் பைந்தொடி

- (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)

(காவி = குவளை மலர்)

மேற்காட்டிய அடியில் இறுதி மூன்று சீர்களில் கருமை x செம்மை x பசுமை என முரண் அமைந்திருப்பது காண்க. (இந்த எடுத்துக் காட்டிலும் பைந்தொடி என்பது சொல் முரணே. பை = பசுமை எனும் பொருள் தரும் சொல்லே. ஆனால் இங்குப் புதிய, அழகிய எனும் பொருளைத் தருகிறது. எனவே சொல் மட்டும் முரண்படுகிறது.)

இடைப்புணர் முரண்

நடு இரு சீர்களில் முரண் அமைவது.

எடுத்துக்காட்டு :

கோதையின் தாழ்ந்த ஓங்குவெள் ளருவி

- (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)

(கோதை = மாலை)

மேற்காட்டிய அடியில் நடு இரு சீர்கள் தாழ்ந்த x ஓங்கு என முரண்பட்டு வருவது காண்க.

பிற தொடை வகைகளிலும் புதிய விகற்பங்கள்

மேற்காட்டிய     ஐந்தும்     முரண்தொடைக்குச் சொல்லப்பட்ட புதிய விகற்பங்கள். இவற்றை மோனை, இயைபு, எதுகை, அளபெடை எனும் தொடை வகைகளுக்கும் சேர்த்துக் கொள்ளலாம் என உரையாசிரியர் கூறியுள்ளார்.

மோனைத் தொடையின்     புதிய விகற்பங்கள் கடைமோனை, கடையிணை மோனை, பின் மோனை, கடைக்கூழை மோனை, இடைப்புணர் மோனை.

இயைபுத் தொடை : கடையியைபு, கடையிணையியைபு, பின்னியைபு, கடைக்கூழை யிழைபு, இடைப்புணரியைபு.

எதுகைத் தொடை : கடையெதுகை, கடையிணை எதுகை, பின்னெதுகை,     கடைக்கூழை     எதுகை, இடைப்புணரெதுகை.

அளபெடைத் தொடை : கடையளபெடை, கடையிணை யளபெடை, பின்னளபெடை, கடைக்கூழையளபெடை, இடைப்புணரளபெடை.

இனி, இவ்விலக்கணங்களை உணர்த்தும் நூற்பாவின் பொருள் :

கலிப்பாவிலும் ஆசிரியப் பாவிலும் அருகி ஐஞ்சீரடியும் வரலாம் என்பர் தமிழ் அறிஞர். வேறொரு பிரிவினர் முரண்தொடைக்குக் கடை, கடையிணை, பின், கடைக்கூழை, இடைப்புணர் என வேறு ஐந்து விகற்பங்களும் கூறுவர்.

மாணவர்களே !

முதலில் சொல்லப்பட்டுள்ள கருத்து புறனடை, பின் சொல்லப்பட்ட கருத்து முன்பு சொல்லப்படாத புதிய கருத்து என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

5.7 தொகுப்புரை

மாணவர்களே ! ஒழிபியலின் ஒரு பகுதியை இப்பாடத்தில் படித்திருக்கிறீர்கள். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றுக்கான புறனடைக் கருத்துகளை நன்கு விளங்கிக் கொண்டிருப்பீர்கள். மீண்டும் உறுப்பியலையும் செய்யுளியலையும் படித்து இப்பாடத்தின் கருத்துகளை அவற்றுடன் இணைத்துப் பார்த்துத் தெளிவுபெற்றுக் கொள்ளுங்கள். அடுத்த பாடத்தில் எதுகை, மோனை தொடர்பான புறனடைகளையும் வேறு பல புதிய செய்திகளையும் படித்தறிவோம்.

பாடம் - 6

ஒழிபியல் – 2

6.0 பாட முன்னுரை

மாணவர்களே! ஒழிபியலின் இறுதியும் யாப்பருங்கலக் காரிகையின் இறுதியுமாகிய பாடத்தினுள் நுழைகின்றோம். ஒழிபியல் முதல் பாடத்தில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றுக்குரிய புறனடைக் கருத்துகளை அறிந்து கொண்டோம். அவற்றுள், உறுப்பியலிலும் செய்யுளியலிலும் சொல்லப்படாத புதிய இலக்கணக் கருத்துகள் சிலவும் இருக்கக் கண்டோம். இப்பாடத்தில் எதுகை, மோனை எனும் முக்கியமான தொடைகளுக்குரிய விரிவான புறனடைக் கருத்துகளையும்,இதுவரை இவ்வியலிலும் சொல்லப்படாத புதிய கருத்துகள் சிலவற்றையும் காண்போம்.இறுதியில் முழுநூலிலும் சொல்லப்பட்ட கருத்துகளின் தொகுப்புச்     சுருக்கத்தையும் காண்போம்.

6.1 எதுகைக்கும் மோனைக்கும் புறனடை

யாப்பு மாணவர்களே! நீங்கள் சங்கப்பாடல், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களைப் படித்திருப்பீர்கள். நீங்கள் காரிகை உறுப்பியலில் படித்த மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை எனும் ஐந்து வகைத் தொடைகளுள் அந்த இலக்கியங்களில் மிகுதியாகவும், தவறாமலும் இடம் பெறும் தொடைகள் மோனையும்     எதுகையும்தாம் என்பதைக் கண்டிருக்கிறீர்களா?’இல்லை’ என்றால் ஒரு மறுபார்வை பார்த்துக் கண்டுணருங்கள். எதுகையும் மோனையுமே பல நூற்றாண்டுகளாக (புதுக்கவிதை தோன்றும் வரை) தமிழ்க் கவிதையின் ஓசை இனிமைக்கு முழுப்பொறுப்பு ஏற்றிருந்தவை. ஆகவே அவை தொடர்பான இலக்கணக் கருத்துகளே மிகுதி. உறுப்பியலில் சொல்லப்பட்டதற்கு அப்பால் அவற்றுக்குப் புறனடையாக அமையும் பல கருத்துகளும், புதிய கருத்துகளும் ஒழிபியலில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காண்போம்.     எதுகை எனப்படுவது யாது? அடிதோறும் முதற்சீர் முதல் எழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை. ஓரடிக்குள்ளும் சீர்களில் எதுகை வரும். இவை உறுப்பியலில் நீங்கள்கற்றவை.இரண்டாம் எழுத்து ஒன்றி வராமல் (கற்க – நிற்க என்பது போல் அல்லாமல்) வேறு சில வகைகளில் ஓசை ஒப்புமை உடையவற்றையும் எதுகை என ஏற்கலாம் என்கிறது யாப்பிலக்கணம். அவை வருக்க எதுகை, நெடில் எதுகை, இன எதுகை என மூவகைப்படும். முதல் எழுத்து ஒன்றி வருவதாகிய மோனையும் மேற்குறித்த அடிப்படையில் வருக்க மோனை, நெடில் மோனை, இன மோனை என மூவகைப்படும்.

6.1.1 வருக்க எதுகை வருக்கம் (வர்க்கம்) என்பது ஒரு மெய்யெழுத்தோடு பன்னிரண்டு உயிரெழுத்தும் சேர்ந்து வரும் பன்னிரண்டு உயிர்மெய்யெழுத்தைக் குறிக்கும்.(க்+அ=க.) இவ்வாறே கா,கி,கீ, கு, கூ, கெ,கே, கை, கொ,கோ, கௌ எனும் உயிர்மெய்கள் பிறக்கும். இந்தப் பன்னிரண்டும் ஒரு வருக்கமாகும்.18 மெய்க்கும் இவ்வாறு தனித்தனியே வருக்கம் உண்டு என்பதை அறிவீர்கள். அதன் வருக்க எழுத்து எதுகையோடு வந்தால் அது வருக்க எதுகை எனப்படும்.

(எ.டு)

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோ டூர்ந்தான் இடை

(திருக்குறள். 37)

(அறத்தாறு =அறத்தின் பயன்;சிவிகை = பல்லக்கு;பொறுத்தான் = சுமப்பவன்; ஊர்ந்தான் = ஏறிச்செல்பவன்)

மேற்கண்ட குறட்பாவில் முதலடி முதற்சீர் இரண்டாமெழுத்து ‘ற’; அடுத்த அடி முதற்சீர் இரண்டாமெழுத்து றகரத்தின் வருக்கமான ‘று’. இவ்வாறு வரும் எதுகையே வருக்க எதுகை.

6.1.2 நெடில் எதுகை இரண்டாம் எழுத்து ஒன்றாவிடினும் அந்த எழுத்தின் மேல் நெடில் ஏறி ஒன்றிவந்தால் அது நெடில் எதுகை எனப்படும்.

(எ.டு

ஆவா வென்றே அஞ்சினர் ஆழ்ந்தார் – ஒருசாரார்;

கூகூ வென்றே கூவிளி கொண்டார் – ஒருசாரார்;

மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தார் – ஒருசாரார்;

ஏகீர் நாய்கீர் என்செய்தும் என்றார் – ஒருசாரார்.

(ஆவா = ஆ!ஆ!; கூவிளி = கூவி அழைத்தல்;ஏகீர் = செல்லுக; நாய்கீர் = தலைவர்களே! என்செய்தும் = என்ன செய்வோம்)

மேற்காட்டிய பாடலில் அடிதோறும் முதற்சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வரவில்லை; ஆயினும் அவ்வெழுத்துகளின் மேல் ஆ, ஊ, ஆ, ஈ என நெடில்கள் ஏறி ஒருவகை ஓசை இனிமை தருகின்றன. ஆகவே இது நெடில் எதுகை ஆகும்.

6.1.3 இன எதுகை இரண்டாம் எழுத்து ஒன்றாதாயினும் அதன் இன எழுத்து எதுகையாய் வருவது இன எதுகை எனப்படும். இனம் என்பது வல்லினம், மெல்லினம், இடையினம் எனும் மெய்யெழுத்து வகைகளைக் குறிக்கும் என்பதை அறிவீர்கள். முதலடி முதற்சீர் இரண்டாம் எழுத்து ஒரு வல்லினமெய்யாக வந்து அடுத்த அடி முதற்சீர் இரண்டாம் எழுத்து வேறொரு வல்லின மெய்யாக வந்தால் அது வல்லின எதுகை;மெல்லின மெய் வந்து வேறொரு மெல்லினமெய் எதுகையாக வந்தால் அது மெல்லின எதுகை; இடையினமெய் வந்து வேறொரு இடையினமெய் எதுகையாக வந்தால் அது இடையின எதுகை.

வல்லின எதுகை

(எ.டு)

தக்கார் தகவிலர் என்ப தவரவர்

எச்சத்தாற் காணப் படும்      (திருக்குறள். 114)

(எச்சம் = பிள்ளைகள்)

மேற்குறித்த குறட்பாவில் ‘க்’ எனும் வல்லின மெய்க்கு ‘ச்’ எனும் மற்றொரு வல்லினமெய் எதுகையாக வந்துள்ளது. ஆகவே இது வல்லின எதுகை.

மெல்லின எதுகை

(எ.டு)

அன்பீனும் ஆர்வ முடைமை; அதுவீனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு

(திருக்குறள். 74)

(நண்பு = நட்பு)

மேற்காட்டிய குறட்பாவில் ‘ன்’ எனும் மெல்லின மெய்க்கு ‘ண்’ எனும் வேறொரு மெல்லினமெய் எதுகையாக வந்துள்ளது. ஆகவே இது மெல்லின எதுகை.

இடையின எதுகை

(எ.டு

எல்லா விளக்கும் விளக்கல்ல; சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு      (திருக்குறள். 299)

மேற்காட்டிய குறட்பாவில் ‘ல்’ என்னும் இடையின மெய்க்கு ‘ய்’ எனும் மற்றொரு இடையினமெய் எதுகையாக வந்துள்ளது. ஆகவே இது இடையின எதுகை.

6.1.4 வருக்க மோனை. அடிதோறும் முதற்சீர் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை என அறிவீர்கள். முதலடி முதற்சீரில் ஓர் உயிர்மெய் எழுத்து வர,அடுத்த அடி முதற்சீர் முதல்எழுத்து அவ்வுயிர்மெய் எழுத்தின் வருக்க எழுத்தாக வந்தால் அது வருக்க மோனை அதாவது முதற்சீர் ஒன்றாமல் வருக்க எழுத்து வருவது.

(எ.டு

………………

புலாக்களம் செய்த கலாஅத் தானையன்

பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே

பொருநர்க் கோக்கிய வேலன் ஒருநிலைப்

பகைப்புலம் படர்தலும் உரியன்

……………                (புறநானூறு, 69)

(புலாக்களம் = பிணங்கள் கிடக்கும் போர்க்களம்; கலாஅ = கலாம், போர்;பிறங்குநிலை = விளங்குகின்ற; பொருநர்; போரிடுவோர்; ஓக்கிய = ஏந்திய; படர்தல் = செல்லுதல்)

மேற்குறித்த புறநானூற்றுப் பாடல் அடிகளில் ‘பு’ எனும் உயிர்மெய்க்கு ‘பி’, ‘பொ’, ‘ப’ எனும் அதன் வருக்க எழுத்துகள் மோனையாக வந்திருப்பதால் இது வருக்க மோனை ஆகும்.

6.1.5 நெடில் மோனை அடிதோறும் முதல் எழுத்து ஒன்றாவிடினும், அவை நெடில்களாக வந்தால் அது நெடில்மோனை எனப்படும்.

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற்

சிறந்தன் றொழுக்க முடைமை (முதுமொழிக்காஞ்சி – 1)

(ஆர்கலி = பெருங்கடல்; சிறந்தன்று = சிறந்தது)

மேற்காட்டிய பாடலில் முதற்சீர் முதல் எழுத்துகள் ‘ஆ’ ‘ஓ’என நெடில்களாக வந்தமையால் இது நெடில்மோனை.

6.1.6 இன மோனை இன எதுகை போலவே இனமோனையும் மூவகைப்படும். அடிதோறும் முதற்சீர்களில் முதல் எழுத்து ஒன்றாவிடினும், ஒரு வல்லின உயிர்மெய்க்கு வேறொரு வல்லின உயிர்மெய் மோனையாக வருவது வல்லின மோனை;மெல்லின உயிர்மெய்க்கு மற்றொரு மெல்லினஉயிர்மெய் மோனையாக வருவது மெல்லின மோனை. ஒர் இடையின உயிர்மெய்க்கு வேறோர் இடையின உயிர்மெய் மோனையாக வருவது இடையின மோனை.

வல்லின மோனை

(எ.டு)

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை                  (திருக்குறள் – 55)

(கொழுநன் = கணவன்)

மேற்கண்ட குறட்பாவில் ‘தெ’ எனும் வல்லின உயிர்மெய்க்குப் ‘பெ’ எனும் வேறொரு வல்லின உயிர்மெய் மோனையாக வந்தமையால் இது வல்லின மோனை.

மெல்லின மோனை

(எ.டு)

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து     (திருக்குறள். 90)

(விருந்து = விருந்தினர்)

மேற்காட்டிய குறட்பாவில் ‘மோ’ எனும் மெல்லின உயிர்மெய்க்கு ‘நோ’ எனும் வேறொரு மெல்லின உயிர்மெய் மோனையாக வந்துள்ளது. ஆகவே இது மெல்லின மோனை.

இடையின மோனை

(எ.டு)

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற      (திருக்குறள். 300)

மேற்காட்டிய குறட்பாவில் ‘யா’ எனும் இடையின உயிர்மெய்க்கு ‘வா’ எனும் மற்றோர் இடையின உயிர்மெய் மோனையாக வந்துள்ளது. ஆகவே இது இடையின மோனை.

6.2 தலை, இடை, கடை எதுகை மோனைகள்

உறுப்பியலில் நீங்கள் அறிந்து கொண்ட எதுகை மோனைகளிலிருந்து மேலே கண்ட வருக்க, நெடில், இன எதுகை மோனைகள் வேறுபட்டிருப்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். சிறப்பில்லாத இவற்றையும் எதுகை மோனைகளாக ஏற்றுக் கொள்ளலாம் என்றுதான் ஒழிபியல் உணர்த்துகிறது. இவ்வுண்மையைத் தெளிவாக்கும் வகையில் காரிகை உரையாசிரியர் எதுகை மோனைகளை முறையே தலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை எனவும் தலையாகுமோனை, இடையாகு மோனை, கடையாகு மோனை எனவும் தரவரிசைப்படுத்துகிறார். அவற்றை எடுத்துக் காட்டுகளுடன் காண்போம்.

6.2.1 தலையாகு எதுகை இரண்டாம் எழுத்துமட்டுமின்றிச் சீர்முழுவதும் ஒன்றிவருவது தலையாகு எதுகை. அதாவது சிறப்பான எதுகை எனப்படும்.

(எ.டு)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு (திருக்குறள். 392)

மேற்காட்டிய குறட்பாவில் இரண்டாமெழுத்தாகிய ‘ண்’ என்பது மட்டுமின்றிச் சீரின் மற்ற எழுத்துகளும் ஒன்றிவந்துள்ளன.ஆகவே இது தலையாகு எதுகை.கற்க- நிற்க;கண்ணுடையர் -புண்ணுடையர்; நல்லார்கண் – கல்லார்கண்; தலைப்பட்டார் – வலைப்பட்டார்; பொய்யாமை – செய்யாமை என்பனபோலப் பல இடங்களில் திருக்குறளில்தலையாகு எதுகை வந்துள்ளதனை நீங்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

6.2.2 இடையாகு எதுகை எதுகை இலக்கணத்தில் சொல்லப்பட்டபடி,இரண்டாம்எழுத்து ஒன்றிச் சீரின் பிற எழுத்துகள் ஒன்றாது வருவது இடையாகு எதுகை.

(எ.டு

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்

முதற்றே உலகு (திருக்குறள் . 1)

மேற்காட்டிய குறட்பாவில் இரண்டாம் எழுத்து மட்டுமே ஒன்றி வந்திருப்பதால் இது இடையாகு எதுகை.

6.2.3 கடையாகு எதுகை இரண்டாம் எழுத்து ஒன்றாமல், நாம் முன்பு கண்ட வருக்க, நெடில், இன எழுத்து எதுகையாக வருவன கடையாகு எதுகை ஆகும்.அதாவது வருக்க எதுகை, நெடில் எதுகை, இன எதுகை ஆகியன சிறப்பில்லாத, கடையாகு எதுகைகளாகும்.

(எ.டு)

தக்கார் தகவிலர் என்ப தவரவர் எ

ச்சத்தாற் காணப் படும் (திருக்குறள் – 114)

மேற்காட்டிய பாவில் க்-ச் என வல்லின எழுத்துகளே ஒன்றுக்கொன்று எதுகையாக வருகின்றன. இது வல்லின எதுகை; ஆகவே கடையாகு எதுகை ஆகும்.

6.2.4 தலையாகு மோனை அடிதோறும் முதற்சீர் முதல் எழுத்து ஒன்றி வருவது மட்டுமன்றி, ஓரடிக்குள்ளும் சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது சிறப்பானதாகிய தலையாகு மோனை.

(எ.டு

பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு (திருக்குறள்.350)

(பற்றற்றான் = இறைவன்)

மேற்காட்டிய குறட்பாவில் இரண்டடிகளிலும் முதற்சீர் முதல் எழுத்து ஒன்றி வந்தது மட்டுமன்றி முதலடியிலும் இரண்டாம் அடியிலும் மற்ற சீர்களிலும் அந்த முதல் எழுத்து ஒன்றி வந்திருப்பது காண்க. ஆகவே இது தலையாகு மோனை.

6.2.5 இடையாகு மோனை அடிதோறும் முதற்சீர் முதல் எழுத்து மட்டும் ஒன்றி வருவது இடையாகு மோனை.

(எ.டு)

மாவும் புள்ளும் வதிவயிற் படர

மாநீர் விரிந்த பூவும் கூம்ப

மாலை தொடுத்த கோதையும் கமழ

மாலை வந்த வாடை

மாயோள் இன்னுயிர்ப் புறத்திறுத் தன்றே

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(மா = விலங்குகள்; புள் = பறவைகள்; வதி = இருப்பிடம்; படர = செல்ல; கோதை = மாலை ; புறத்திறுத்தன்று = பக்கமாகத் தங்கியது)

மேற்கண்ட ஆசிரியப்பா அடிகள் அனைத்திலும் முதற்சீர் முதலெழுத்து ஒன்றி ஏனைய சீர்களில் ஒன்றாதிருப்பது காண்க. ஆகவே இது இடையாகு மோனை.

6.2.6 கடையாகு மோனை ஒழிபியலில் (இப்பாடத்தில்) நாம் கண்ட வருக்க மோனை, நெடில்மோனை, இனமோனை ஆகியவை சிறப்பில்லாத,கடையாகு மோனை ஆகும்.

(எ.டு)

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை (முதுமொழிக்காஞ்சி . 1)

மேற்காட்டிய பாடலில் ஆ-ஓ என நெடில் மோனை வந்துள்ளது. இது கடையாகு மோனையாகும்.

மாணவர்களே! கடையாகு எதுகை, கடையாகு மோனை எனும் சிறப்பில்லாத தொடைகளுக்குத் திருவள்ளுவர் போன்ற பெரும்புலவர்களின் பாக்கள் எடுத்துக்காட்டுகளாக அமைந்திருப்பதைப் பார்த்தீர்கள். மிகப்பெரும்பாலான தமிழ்ப் பாக்களில் தலையாகு எதுகை மோனைகளைப் பார்க்க முடியாது. இதிலிருந்து ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கண்டிப்பான இலக்கண வரையறைகளைவிடத் தன் கருத்து வெளிப்பாட்டு ஒழுங்கையே புலவன் பெரிதும் பின்பற்றுகிறான். பின்னர் அவனுடைய இலக்கண மீறல்கள் புறனடையாக இலக்கண ஆசிரியர்களால் ஏற்கப்படுகின்றன. கடையாகு எதுகை மோனை என (இலக்கண உரையாசிரியரால்) குறிப்பிடப் படுவனவற்றைப் பயன்படுத்துவது புலவனுக்கு எவ்வகையிலும் தாழ்வாகாது.

6.3 சிறப்பில்லாத வேறு சில எதுகை மோனைகள்

எதுகைகளில் உயிர் எதுகை, ஆசு எதுகை, இடையிட்டு எதுகை,இரண்டடி எதுகை, மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை எனச் சிறப்பில்லாத வேறு ஐந்து வகை எதுகைகளைக்காரிகை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இவற்றுடன் உரையாசிரியர் விட்டிசை வல்லொற்று எதுகை, இரண்டடிமோனை, விட்டிசை மோனை எனும் மூன்று தொடைகளையும் குறிப்பிடுகிறார். இனி, அவற்றைத் தனித்தனியே காண்போம்.

6.3.1 உயிர்எதுகை இரண்டாம் எழுத்து ஒன்றாதாயினும் இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றி வருவது உயிர் எதுகை எனப்படும்.

(எ.டு)

சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்

நீரோர் அன்ன சாயல்

தீயோர் அன்னவென் உரனவித் தன்றே

(குறுந்தொகை, 95)

மேற்காட்டிய குறுந்தொகை அடிகளில் ‘ரோ’ என்பதற்கு ‘யோ’ என்பது எதுகையாகி வந்துள்ளது. இரண்டாம் எழுத்து ஒன்றவில்லை. ஆனால் மெய்யின்மேல் ஏறிய ‘ஓ’ எனும் உயிர்மட்டும் ஒன்றி வந்துள்ளது. ஆகவே இது உயிர்எதுகை ஆகும்.

6.3.2 ஆசு எதுகை மாணவர்களே! ஆசு என்னும் சொல்லைச் செய்யுளியலில் அறிந்திருக்கிறீர்கள்.ஆசிடை நேரிசை வெண்பா என்பது நேரிசை வெண்பாவின் ஓர் உட்பிரிவு. அங்கே ஆசு என்பது பற்றாசு (உலோகத் துண்டுகளைப் பற்றவைக்கப் பயன்படுத்தும் பொருள்) போலச் சீர்களை இணைக்கும் ஒன்று அல்லது இரண்டு அசைகளைக் குறிக்கும்.இங்கு நாம் காணவிருக்கும் ஆசு என்பது ய,ர,ல,ழ எனும் இடையின மெய்களைக் குறிக்கும். இந்த மெய்கள் சில சமயம் பேச்சு வழக்கில் ஒலிப்பில்லாமல் மறைவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். காய்கறி > காகறி, கால்கிலோ > காகிலோ, பார்த்து > பாத்து எனும் வழக்குகள் உண்டு. இம்மெய்கள் ஒலிப்பில் மறையக் கூடிய தன்மையைக் கொண்டு, எதுகை அமைப்பில் இவை வரும்போது இவைஇல்லாதது போலக்கருதி, அடுத்து வரும் எழுத்தோடு எதுகை ஒப்புமை கொள்வதுண்டு. இது ஆசு எதுகை எனப்படும்.

(எ.டு)

காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்

பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து…..

(சீவகசிந்தாமணி, 31)

(கமுகு = பாக்கு; தொடை = தேனடை; வருக்கை = பலா)

(எ.டு)

மாக்கொடி மாலையும் மௌவல் பந்தரும்

கார்க்கொடி முல்லையும் கலந்து மல்லிகை….

(யாப்பருங்கலக்காரிகை, உரைமேற்கோள்)

(மௌவல் = மல்லிகை)

(எ.டு)

ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த

பால்வே றுருவின அல்லவாம் – பால்போல் ……

(நாலடியார். 118)

(ஆ பயந்த = பசு கொடுத்த)

(எ.டு

வாழ்கின்றேம் என்று மகிழன்மின் வாழ்நாளும்

போகின்ற பூளையே போன்று

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(மகிழன்மின் = மகிழாதீர்)

மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள். அவற்றில் உண்மையாக எதுகையாய் வருவன முறையே, மா-மா, க்-க், வே-வே, கி-கி என்னும் எழுத்துகளே ஆகும். இடையே வருகின்ற ய், ர், ல், ழ் எனும் ஆசு எழுத்துகளாகிய மெய்கள் ஒலிப்பில்லாதவை போல நிற்கின்றன. எதுகைக்குக் கணக்கில் கொள்ளப்படவில்லை. ஆகவே இவை ஆசு எதுகைகள் அல்லது ஆசிடை எதுகைகள் எனப்படும்.

6.3.3 இடையிட்டு எதுகை அடுத்தடுத்த அடிகளில் அமையாமல் இடையே ஓரடி விட்டு அடுத்த அடியில் எதுகை அமைவது இடையிட்டு எதுகை எனப்படும்.

(எ.டு)

தோடார் எல்வளை நெகிழ நாளும்

நெய்தல் உண்கண் பைதல் கலுழ

வாடா அவ்வரி புதைஇப் பசலையும்

வைகல் தோறும் பைபயப் பெருகின ……..

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(தோடார் எல்வளை = நன்கு அமைக்கப்பட்ட ஒளிமிக்க வளையல்; நெய்தல் = நெய்தல்பூ ; கலுழ = கலங்க; புதைஇ = நிறைந்து)

மேற்காட்டிய பாடல் அடிகளில் ஓரடி இடை விட்டு எதுகை அமைந்திருப்பதால் இது இடையிட்டு எதுகை.

6.3.4 இரண்டடி எதுகை முன்னிரண்டடி ஓர் எதுகையாகவும் பின்னிரண்டடி மற்றோர் எதுகையாகவும் வருவது இரண்டடி எதுகை. நான்கடியாக வரும் நேரிசை வெண்பாவில் இத்தகைய அமைப்பைப் பார்த்திருப்பீர்கள். பல அடிகளாய் நீளும் கலிவெண்பாவிலும் இரண்டிரண்டு அடிகளாக எதுகை ஒன்றி வருவதைக் காணலாம்.

(எ.டு)

சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி

முலைவிலங்கிற் றென்று முனிவாள் – மலைவிலங்கு

தார்மாலை மார்ப தனிமை பொறுக்குமோ

கார்மாலை கண்கூடும் போது

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

மேற்கண்ட வெண்பாவில் முன்னிரண்டடி ஓர் எதுகை, பின்னிரண்டடி வேறோர் எதுகை வந்திருப்பதால் இது இரண்டடி எதுகை.

6.3.5 இரண்டடி மோனை இரண்டடி எதுகை போலவே முன்னிரண்டடி ஒரு மோனை, பின்னிரண்டடி வேறொரு மோனை வருவது இரண்டடி மோனை எனப்படும்.

(எ.டு)

ஆகம் கண்டக ராலற்ற ஆடவர்

ஆகம் கண்டகத் தாலற்ற அன்பினர்

பாகம் கொண்டு பயோதரம் சேர்த்தினார்

பாகம் கொண்டு பயோதரம் நண்ணினார்

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(ஆகம் = மார்பு; கண்டகராலற்ற = வாளால் வெட்டுப்பட்ட ; ஆகம் = உடல்; அகத்தால் அற்ற அன்பினர் = தம் உயிர் மீது அன்பற்ற மனைவியர் ; பயோதரம் = முலை ; பயோதரம் = மேகமண்டலம்; நண்ணினார் = அடைந்தார்)

மேலே காட்டப்பட்ட பாடலில் முன்னிரண்டடிகளில் ஆ-ஆ என ஒரு மோனையும், பின்னிரண்டடிகளில் பா-பா என வேறொரு மோனையும் வந்திருப்பது காண்க. ஆகவே இது இரண்டடி மோனை.

6.3.6 மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை இரண்டாம் எழுத்து ஒன்றாமல் மூன்றாம் எழுத்து ஒன்றி வருவது.

(எ.டு)

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்

கினத்தியல்ப தாகும் அறிவு (திருக்குறள், 452)

(அற்றாகும் = அதுபோல ஆகும்)

மூன்றாம் எழுத்தாகிய ‘த்’ ஒன்றி வந்திருப்பதனால் இது மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை.

6.3.7 விட்டிசை வல்லொற்று எதுகை தனிக்குற்றெழுத்து சீரின் முதலில் விட்டிசைத்து வரும் போது நேரசையாகும் என்பதனைச் சென்ற பாடத்தில் அறிந்திருக்கிறீர்கள். இங்கு விட்டிசைத்து வரும் எழுத்துத் தொடர்பான வேறோர் இலக்கணத்தைக் காண்போம். ‘அ’ ‘ஆ’ இரண்டுக்குமிடையே உள்ள ஓசைத் தடையே விட்டிசை என்பது உங்களுக்குத் தெரியும். அஆ, இஈ, உஊ, எஏ, ஒஓ எனும் உயிரெழுத்துகளை அப்படியே பலமுறை உச்சரித்துப் பாருங்கள். தடைக்கு இடையில் விளக்கிச் சொல்ல முடியாத(க் போன்ற) ஒரு வல்லினமெய் இருப்பது போலத் தோன்றுகிறதல்லவா! அதற்கு எழுத்துவடிவம் இல்லை. எழுத்திலக்கணம் இந்தச் சிறு வல்லின ஒலியை ஏற்பதுமில்லை. ஆனால் ஓசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யாப்பிலக்கணத்தார் ‘அஆ’ என்பவற்றுக்கிடையே ஒலிக்கும் எழுத்தற்ற வல்லினமெய்யை ஏற்கின்றனர். முதற்சீரில் விட்டிசை வந்து அடுத்த அடியிலோ முந்திய அடியிலோ முதற்சீர் இரண்டாம் எழுத்து வல்லின மெய்யானால் அவ்வல்லின மெய்க்கு விட்டிசை வல்லொற்றை எதுகையாகக் கொள்ளலாம். இதுவே விட்டிசை வல்லொற்று எதுகை எனப்படும்.

(எ.டு)

பற்றிப் பலகாலும் பால்மறி உண்ணாமை

நொ அலையல் நின்ஆட்டை நீ

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(மறி = குட்டி; உண்ணாமை = உண்ணவிடாமல்; நொஅலையல் = துன்புறுத்தாதே)

மேற்காட்டிய பாடலில் ‘ற்’ எனும் வல்லின மெய்க்கு ‘நொஅ’ என்பவற்றுக் கிடையுள்ள விட்டிசை வல்லொற்று எதுகையாக வந்துள்ளது. ஆகவே இது விட்டிசை வல்லொற்று எதுகை.

6.3.8 விட்டிசை மோனை அடிதோறும் அல்லது ஓரடிக்குள் உள்ள சீர்களில் முதல் எழுத்து விட்டிசைத்து வருவது விட்டிசை மோனை.

(எ.டு)

அஅவனும் இஇவனும் உஉவனும் கூடியக்கால்

எஎவனை வெல்லார் இகல்

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

மேற்காட்டிய பாடலில் அ-இ-உ-எ எனும் உயிர்க் குறில்கள் சீரின் முதலில் வந்துள்ளன. இயல்பாக, இலக்கணப்படி, இவை ஒன்றுக்கொன்று மோனையாகக்கூடிய எழுத்துகள் அல்ல. எனினும் விட்டிசைத்து வரும் ஒற்றுமை நோக்கி இவை விட்டிசை மோனை எனப்படுகின்றன.

6.3.9 இன எழுத்தும் மருட்செந்தொடையும் மோனை தொடர்பான ஒரு முக்கிய இலக்கணத்தை இங்குக் காணவிருக்கிறோம். உறுப்பியலில் முதல் எழுத்து ஒன்றி வருவது (‘க’வுக்குக் ‘க’,’ம’வுக்கு ‘ம’ என்பது போல வருவது) மோனை எனக் கற்றோம். இந்தப் பாடத்தின் தொடக்கத்தில் வருக்க, நெடில், இன மோனைகளைப் பற்றிப் படித்தோம்.

இனமோனை என்பது வல்லினத்துக்கு வல்லினம், மெல்லினத்துக்கு மெல்லினம், இடையினத்துக்கு இடையினம் மோனையாக வருவது, அது கடையாகு மோனையாகும் எனவும் படித்தோம். இங்கு நாம் காணவிருப்பது கவிதைகளில் மிக அதிக அளவில் காணப்படும் மோனையாகும்.இதுவும் இன எழுத்து ஒன்றி வரும் மோனையே. ஆனால் இங்கு இனம் என்பது வல்லின மெல்லின இடையினங்கள் அல்ல. ஓசை அடிப்படையில் ஓர் எழுத்துக்கும் மற்றோர் எழுத்துக்கும் உள்ள ஒற்றுமை கொண்டு அவற்றை ஓரின எழுத்துகளாகக் கொள்வர். அத்தகைய ஓரின எழுத்துகள் ஒன்றுக்கொன்று மோனையாகும்.

1) உயிர்கள்

அ ஆ ஐ ஒள – ஓரினம்

இ ஈ எ ஏ – ஓரினம்

உ ஊ ஒ ஓ – ஓரினம்

இவை உயிர்மெய்யாக வரும் போதும் ஓரினமே.எடுத்துக்காட்டாக, ச,சா,சை,சௌ என்பன ஓரினம்.

2) மெய்கள்

ஞ் – ந் - ஓரினம்

த் – வ் – ஓரினம்

ம் - ச் – ஓரினம்

மெய்கள் மொழி முதலில் தனித்து வருவதில்லை அல்லவா! ஆகவே இவை உயிர்மெய் வடிவில் ஒன்றுக் கொன்று மோனையாக, வரும். மேலே கண்ட உயிர் இனங்களுடன் இம் மெய் இனங்கள் சேர்ந்து மோனையாகும். எடுத்துக்காட்டாக,

ஞ – ந;ஞா-நா

ம – வ;மீ – வெ

த – ச;து – தொ

என வந்து மோனை அமையும்.

3) உயிர்மெய்

யா எனும் உயிர்மெய் இ ஈ எ ஏ என்பனவற்றுடனும் இனமாகும் ;

அ ஆ ஐ ஒள என்பனவற்றுடனும் இனமாகும்.

இவ்வாறு வரும் மோனைகளை இனமோனை, கிளைமோனை எனும் பெயர்களால் வழங்குவர். ஏற்கனவே ஓர் இனமோனை (6.1.6) பற்றி நாம் பார்த்துள்ளோம். ஆகவே, தெளிவுக்காக இவற்றைக் கிளைமோனை என்றே வழங்கலாம்.

(எ.டு)

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

(திருக்குறள், 25)

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையா

(திருக்குறள், 104)

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடி

(திருக்குறள், 554)

ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும்

(சிலப்பதிகாரம், 15: 217)

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

(திருக்குறள், 118)

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

(திருக்குறள், 300)

மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளில் ஐ – ஆ – அ என ஓரின உயிர்கள் மோனையாக வந்தன. தி – செ; த்-ச் மெய்களும் அவற்றின் மீதேறிய இ-எ உயிர்களும் மோனையாக வந்தன. கூ-கு-கோ; ஊ, உ, ஓ எனும் ஓரின உயிர்கள் மெய்யேறி மோனையாக வந்தன.

ஞா – நா; ஞ் – ந் மெய்கள் உயிரேறி மோனையாக வந்தன.

மா வ; ம் – வ் மெய்களும் அவற்றின் மீதேறிய ஆ – அ எனும் ஓரின உயிர்களும் மோனையாக வந்தன.

யா – இ – எ : யா எனும் உயிர்மெய் இகர இனத்துடன் மோனையாக வந்தது.

மாணவர்களே! இவ்வாறு இன எழுத்துகள் மோனையாக அமைந்து வருவது இயல்பு எனப் புரிந்து கொள்ளுங்கள்.

எதுகை, முரண் தொடைகள் வரும் முறை

ஓரடிக்குள் அமையும் வழி எதுகையும், வழி முரணும் சிறப்பானவை.

(எ.டு)

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்கு (திருக்குறள், 623)

இது ஓரடிக்குள் நான்கு சீர்களிலும் வந்த வழி எதுகை.

(எ.டு)

செய்யவாய்ப் பசும்பொன் ஓலைச்

சீறடிப் பரவை அல்குல் (சூளாமணி, 673)

ஓரடிக்குள் செம்மை,பசுமை, சிறுமை, பெருமை என வழி முரண் வந்தது.

மருட்செந்தொடை

உறுப்பியலில் தொடை வகைகளைப் பற்றிப் படித்தபோது ‘செந்தொடை’ எனும் தொடை பற்றிப் படித்தீர்கள். மோனை இயைபு முதலிய எந்தத் தொடை அமைப்பும் இல்லாத பாடலைச் செந்தொடைப் பாடல் என்பர். அதன் புறனடையே மருட்செந்தொடை. மேலே நாம் கண்ட கிளைமோனை மட்டும் பெற்று வேறு எவ்வகைத் தொடையும் தொடை விகற்பமும் அமையாமல் வருவது மருட்செந்தொடை ஆகும்.

(எ.டு)

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ் (திருக்குறள், 64)

மேற்காட்டிய பாடலில் அ – ஆ எனக் கிளைமோனை அமைந்திருப்பது தவிர எதுகை, இயைபு, முரண் போன்ற எந்தத் தொடையும் இல்லை. ஆகவே இது மருட்செந்தொடை.

மாணவர்களே! இப்பகுதியில் சொல்லப்பட்ட இலக்கணங்கள் அனைத்தும் உறுப்பியல் கருத்துகளுக்குப் புறனடையாக வருவனவே என்பதை உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.

இனி, இவ்விலக்கணக் கருத்துகளைக் கூறும் நூற்பாவின் பொருள் : வருக்க எழுத்தும், நெடில் எழுத்தும், இன எழுத்தும் எதுகையும் மோனையுமாக வந்தால் அவை வருக்க எதுகை, நெடில் எதுகை, இன எதுகை எனவும், வருக்க மோனை, நெடில் மோனை, இன மோனை எனவும் பெயர்பெறும். உயிர் எதுகை, ஆசு எதுகை, இடையிட்டு எதுகை, இரண்டடி எதுகை, மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை எனும் சில எதுகைகளும் உள; ஆயினும் அவை சிறப்பில்லாதவை.

6.4 தரவு தாழிசைகளுக்குப் புறனடை

செய்யுளியலில், கலிப்பா இலக்கணத்தில் கலிப்பாவின் உறுப்புகளாகிய தரவு, தாழிசை ஆகியவை பற்றிப் படித்திருக்கிறீர்கள். செய்யுளியல் நூற்பாவில் தரவு, தாழிசை ஆகியவற்றுக்கு அடிவரையறை சொல்லப்படவில்லை. அங்கு விடுபட்டவை இங்குச் சொல்லப்படுகின்றன.

6.4.1 தரவு l. அம்போதரங்க ஒத்தாழிசை ; வண்ணக ஒத்தாழிசை ஆகிய இருவகைக்கலிப்பாக்களுக்கும் தரவின் அடி அளவு ஆறடியே ஆகும். சிறுமை, பெருமை இல்லை.

ll. ஏனைய கலிப்பாக்களுக்குத் தரவின் அடிச்சிறுமை மூன்றடியாகும்.அவை நேரிசை ஒத்தாழிசைக்கலியும் கொச்சகக் கலியும் ஆகும். அவற்றுள் தனிச்சொல்லும் சுரிதகமும் இல்லாமல் தரவு மட்டும் தனித்து வரும் தரவுகொச்சகக் கலிப்பாவுக்கு அடிச்சிறுமை நான்கடி ஆகும். இச்செய்தி உறுப்பியலுள் (நூற்பா. 14) சொல்லப்பட்டுள்ளது.

இந்தக் கலிப்பாக்களுக்கு அடிப்பெருமை எவ்வளவு? மேற்குறித்த உறுப்பியல் நூற்பாவை மறுபடி படித்துப் பாருங்கள். ‘உரைப்போர் உள்ளக் கருத்தின் அளவே பெருமை’ எனச் சொல்லப்பட்டுள்ளது. தரவு, கலிப்பாவின் முதல் உறுப்பு. ஆகவே ஏனைய பாக்களைப் போலவே தரவுக்கும் அடி மேல் வரம்பு விதிக்கப்படவில்லை. வேறுசில இலக்கண நூல்களில் தரவுக்கு மேல்வரம்பு குறிக்கப்பட்டுள்ளது. தரவின் அடிப்பெருமை பன்னிரண்டடி என்கிறார் புலவர் குழந்தை (யாப்பதிகாரம், செய்யுளியல்)

6.4.2 தாழிசை தாழிசைகளுக்கு அடிச்சிறுமை இரண்டடி; பெருமை நான்கடி. கலிப்பாவில் தரவைவிடத் தாழிசை அடிஅளவு சற்றுக் குறைந்தே வரும். தரவு மூன்றடியானால் தாழிசை இரண்டடி ; தரவு ஆறடியானால் தாழிசை இரண்டடி முதல் நான்கடிவரை வரலாம். மாணவர்களே ! செய்யுளியலில் நீங்கள் பார்த்த கலிப்பா இலக்கணத்தில் இந்த அடி அளவுகள் அமைந்த தரவு, தாழிசைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

52

6.5 எல்லாப் பாக்களுக்கும் உரிய சில புதிய இலக்கணங்கள்

உறுப்பியலிலும் செய்யுளியலிலும் நீங்கள் அறியாத புதிய இலக்கணக் கூறுகளை இப்பகுதியில் காண இருக்கிறீர்கள்.இவற்றுள் சில, செய்யுளின் வடிவு சார்ந்தவை: வேறுசில செய்யுளின் பொருள் சார்ந்தவை. (செய்யுளியலில் மருட்பா இலக்கணம் மட்டுமே, நீங்கள் படித்திருப்பவற்றுள், பொருள் அடிப்படையில் வகைப்படுத்திச் சொல்லப்பட்ட இலக்கணம்) இனி இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

6.5.1 கூன் கூன் என்பதை ஒரு தனிச்சொல் எனலாம். இது ஒரு சொல்லாகவும் (சீராகவும்) இருக்கலாம் ; ஓர் அசையாகவும் இருக்கலாம். வெண்பா, கலிப்பா இலக்கணங்களில் நீங்கள் பார்த்த தனிச்சொல்லிலிருந்து இது வேறுபட்டது. கூன் நால்வகைப் பாக்களிலும் வருவது.

பாவினது பொருளைத்தழுவி அடி முதலில் தனியே ( அடியின் சீர் எண்ணிக்கைக்குள் அடங்காது தனியே) வருவது கூன்.

1. வஞ்சிப்பாவில் அடி முதலில் வருவது மட்டுமின்றி அடி இறுதியிலும் கூன் வரும் ; நடுவிலும் வரும். இடையிலும் இறுதியிலும் அசை கூனாக வருவது சிறப்புடையது; சீர் கூனாக வந்தால் உகரத்தில் முடியும். மாச்சீராக மட்டுமே வரும்.

2. ஆசிரியப்பாவில் வெண்பா, கலி ஆகியவற்றில் அடி முதலில் மட்டுமே கூன் வரும்; அடி இடையிலும் இறுதியிலும் வராது.

3. எல்லாப் பாவிலும் சீர் கூனாக வருவதே பெரும்பான்மை; அசை அருகியே கூனாக வரும்.

4. கொச்சகக் கலியில் ஓர் அடியே கூனாக வருவதும் உண்டு.

(எ-டு)

உதுக்காண், சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன்

பரந்தானாப் பல்புகழைப் பாடி ………………

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

( உதுக்காண் = அதோ பார் ; சுரந்து ஆனா = குறையாத ; வண்கை = ஈகை)

மேற்காட்டிய வெண்பாவில் பாடலின் பொருளைத் தழுவி ‘உதுக்காண்’ எனும் சீர் அடிமுதலில் கூனாக வந்தது காண்க.

(எ.டு)

அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை

வாடா வள்ளியங் காடிறந் தோரே …………………

(குறுந்தொகை, 216)

(விழுப்பொருள் = மலோன செல்வம் ; தருமார் = கொண்டு வருவதற்காக ; இறந்தோர் = கடந்து சென்றார்)

மேற்காட்டிய ஆசிரியப்பா அடி முதலில் ‘அவரே’ என ஒரு சீர் கூனாக வந்துள்ளது காண்க.

(எ.டு)

அவரும், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக்                 கண்சேந்

தொருபகல் எல்லாம் உருத்தெழுந் தாறி ………..

(கலித்தொகை , 39: 22-23)

(கணை = அம்பு ; சிலை = வில் ; சேந்து = சிவந்து; உருத்து = சினந்து)

மேற்காட்டிய கலியடியின் முதலில் ‘அவரும்’ எனச் சீர் கூனாக வந்துள்ளது.

(எ.டு)

உலகே, முற்கொடுத்தார் பிற்கொளவும்

பிற்கொடுத்தார் முற்கொளவும்

உறுதிவழி ஒழுகுமென்ப ……………..

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

மேற்காட்டிய வஞ்சிப்பாவின் அடி முதலில் ‘உலகே’ எனச் சீர் கூனாக வந்துள்ளது.

(எ.டு)

தேரோடத் துகள் கெழுமின, தெருவு

மாமறுகலின் மயக்குற்றன, வழி

கலங்கழாலின், துறை, கலக்குற்றன. …………….

(புறநானூறு, 345: 2-4)

(மா மறுகலின் = குதிரைகள் ஓடுவதால் ; கலம் = படைக் கருவிகள்; கழால் = கழுவுதல்)

மேற்காட்டிய வஞ்சியடிகளில் ‘தெருவு’ என அடி இறுதியில் உகரவீற்று மாச்சீரும், ‘வழி’ என அடி இறுதியில் அசையும்,’துறை’ என அடி இடையில் அசையும் கூனாக வந்துள்ளன.

(எ.டு)

சிறுகுடி யீரே சிறுகுடி யீரே

வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்தொடா…………..

(கலித்தொகை, 39)

(கீழ் = கிழங்கு; தேன் = தேனடை)

மேற்காட்டிய கொச்சகக் கலிப்பா அடியின் (வள்ளிகீழ்….என்பதன் முன்வந்த) முதலில் அடிக்கோடிடப் பெற்ற அடி கூனாக வந்ததாகும்.

6.5.2 விகாரம் விகாரம் = வேறுபாடு. வழக்கமாக, இயல்பாக இருப்பதிலிருந்து வேறுபட்டிருப்பது விகாரம்.நன்னூல் பாடத்தில், புணர்ச்சி காரணமாக வரும் விகாரங்கள் பற்றியும், செய்யுள் விகாரங்கள் பற்றியும் படித்திருப்பீர்கள். யாப்பு, செய்யுளுக்குரிய இலக்கணமாதலால் செய்யுள் விகாரங்கள் பற்றி ஒழிபியல் கூறுகிறது.வழக்கில் இல்லாமல்,செய்யுளின் ஓசைத் தேவைக்காகப்

புலவன் அமைப்பது செய்யுள் விகாரம்.

செய்யுள்     விகாரம் அடிப்படையாக ஆறுவகைப்படும். அவை வலித்தல் விகாரம், மெலித்தல் விகாரம், விரித்தல் விகாரம்,தொகுத்தல் விகாரம்,நீட்டல் விகாரம்,குறுக்கல் விகாரம் என்பன. இவற்றுடன் முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை எனும் விகாரங்களையும் சேர்த்துச் சொல்வர்.

வலித்தல் விகாரம்

மெல்லின மெய் வல்லின மெய்யாக விகாரப்பட்டுவருவது.

(எ.டு)

குறுத்தாட் பூதம் சுமந்த

அறக்கதிர் ஆழியெம் அண்ணலைத் தொழினே

(யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)

குறுந்தாள் என்பதில் உள்ள மெல்லினமெய் வல்லின மெய்யாக மாறி வந்துள்ளமையால் இது வலித்தல் விகாரம்.

மெலித்தல் விகாரம்

வல்லினமெய் மெல்லின மெய்யாக விகாரப்பட்டு வருவது.

(எ.டு)

தண்டை இனக்கிளி கடிவோள்

பண்டையள் அல்லள் மான்நோக் கினளே

(யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)

தட்டை என்பது தண்டை என வந்துள்ளது. ஆகவே இது மெலித்தல் விகாரம்.

விரித்தல் விகாரமும் தொகுத்தல் விகாரமும்

ஒரு சொல்லின் இடையே ஓரிரு எழுத்துகளை இணைத்துச் சொல்லை விரிப்பது விரித்தல் விகாரம்; ஒரு சொல் அல்லது தொடரில் உள்ள ஓர் எழுத்தை நீக்கி அதனைச் சுருக்குவது தொகுத்தல் விகாரம்.

(எ.டு)

சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே

(நன்னூல், நூற்பா 155 மேற்கோள்)

சிறிய+இலை = சிறிய விலை என வரவேண்டும். இங்கு அகரம் மறைந்து (சிறிய + இலை = சிறியிலை) வந்துள்ளது. ஆகவே இது தொகுத்தல் விகாரம். விளையுமே என்பது இயல்பான சொல். செய்யுளின் ஓசைத் தேவைக்காக விளையுமே என்பதன் இடையில் ‘ம்’ எனும்     மெய் கொடுத்து விளையும்மே என விரிக்கப் பட்டிருப்பதால் இது விரித்தல் விகாரம்.

நீட்டல் விகாரம்

குறில் நெடிலாக விகாரப்பட்டு வருவது நீட்டல் விகாரம்.

(எ.டு)

ஈசன் எந்தை இணையடி நீழலே

(தேவாரப்பாடல் அடி)

நிழலே என்பது நீழலே என நீண்டு வருவதால் இது நீட்டல் விகாரம்

குறுக்கல் விகாரம்

நெடில் குறிலாக விகாரப்பட்டு வருவது குறுக்கல் விகாரம்.

(எ.டு)

திருத்தார்நன் றென்றேன் தியேன்

(யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)

தீயேன் என்பதில் உள்ள நெடில் குறுகித் தியேன் என வந்துள்ளது. ஆகவே இது குறுக்கல் விகாரம்.

முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை

சீரின் முதலெழுத்து மறைந்து வருவது முதற்குறை.

(எ.டு)

மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி

(யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)

தாமரை என்பதன் முதல் எழுத்து குறைந்து மரை என வந்துள்ளது.

சீரின் இடையே எழுத்துக்குறைந்து வருவது இடைக்குறை.

(எ.டு)

வேதின வெரிநின் ஓதி முதுபோத்து

(குறுந்தொகை, 140)

இங்கு ஒந்தி என்பதன் இடையில் உள்ள’ந்’குறைந்து ஓதி என வந்துள்ளது.

சீரின் இறுதி குறைந்து வருவது கடைக்குறை.

(எ.டு)

நீலுண் துகிலிகை கடுப்ப

(யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)

இங்கு நீலம் என்பதன் இறுதி ‘அம்’ குறைந்து நீல் என வந்துள்ளது. ஆகவே இது கடைக்குறை.

6.5.3 வகையுளி வகை = வகுப்பு, பிரிப்பு; உளி = உள்ளடக்கியது. அதாவது பிரிக்கப்படுவது என்பது பொருள். செய்யுளில் ஓசை ஒழுங்காய் அமைவதற்காகச் செய்யுள் விகாரங்கள் அமைவதை முன்னர்ப் பார்த்தோம். வகையுளியும் செய்யுளில் ஓசை, ஒழுங்காக அமைவதற்காகவே செய்யப்படுவது.

செய்யுள் ஓசை சீர், தளை அமைப்பைப் பொறுத்தது என்பதை அறிவீர்கள். அவை சரியாக அமைவதற்காக ஒரு சொல்லைப் பிரித்து முன்சீரிலும் பின் சீரிலுமாகச் சேர்ப்பதுதான் வகையுளி.

(எ.டு)

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்      (திருக்குறள், 3)

‘நீடு வாழ்வார்’ எனச் சொற்கள் வருகின்றன. செய்யுளில் இவற்றை இப்படியே அமைத்தால் வெண்பாவில் வரக்கூடாத நேரொன்றாசிரியத் தளை வரும்; ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு எனும் வாய்பாட்டில் அடங்காத மாச்சீராக வரும்;வெண்பா இலக்கணம் கெடும். ஆகவே ‘வாழ்வார்’ என்பதை வாழ் – வார் எனப்பிரித்து முன் சீரிலும் பின் சீரிலும் சேர்த்திருப்பதைக் காண்க. இவ்வாறு பிரித்தபின் நீடுவாழ் – வார் = இயற்சீர் வெண்டளை ; ஈற்றுச்சீர் ‘நாள்’ என வெண்பா இலக்கணம் சரியாக அமைகிறது.

6.5.4 வாழ்த்தும் வசையும் இதுவரை நாம் பார்த்த இலக்கணங்கள் செய்யுளின் வடிவ அமைப்புக் குறித்தவை. இப்போது பார்க்கவிருப்பன செய்யுளின் பொருள் அமைப்பைப் பற்றியவை. அணியிலக்கணத்தில் புகழாப் புகழ்ச்சி, மாறுபடு புகழ்நிலை, வஞ்சப் புகழ்ச்சி என்றெல்லாம் அணிகளைப் படிப்பீர்கள். அவற்றை ஒத்தவைதாம் வாழ்த்தும் வசையும்.

வாழ்த்து

வாழ்த்து இருவகைப்படும். அவை மெய்வாழ்த்து, இருபுற வாழ்த்து என்பன. உண்மையான வாழ்த்து மெய்வாழ்த்து. வாழ்த்துப் போன்ற வசை, இருபுற வாழ்த்து.

(எ.டு)

கார்நறு நீலம் கடிக்கயத்து வைகலும்

நீர்நிலை நின்ற பயன்கொலோ – கூர்நுனைவேல்

வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியால்

கொண்டிருக்கப் பெற்ற குணம் (முத்தொள்ளாயிரம்.)

‘கூர்வேலும் வண்டுசூழும் மாலையும் தாவும் குதிரையும் கொண்ட வழுதியால் சூடப்பெற்றுள்ளது நீலமலர். இந்தப் பேற்றுக்குக் காரணம் அது குளத்தில் நாள்தோறும் நின்று செய்த தவமோ? ‘ என்பது பாடலின் பொருள். இதில் வழுதி உண்மையாகவே வாழ்த்தப் பெற்றிருப்பதால் இது மெய்வாழ்த்து.

(எ.டு)

பண்டும் ஒருகால் பைந்தொடியைக் கோட்பட்டு

வெங்கடத்து வில்லேற்றிக் கொண்டிருந்தான் -

தென்களந்தைப்

பூமான் திருமகளுக் கின்னும் புலம்புமால்

வாமான்தேர் வையையார் கோ

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

‘முன்பும் ஒருமுறை அம்மன்னன் தன் மனைவியை ஒருவன் கவர்ந்து செல்ல, (மன்னர்களைத் திருமாலின் அவதாரம் என்று கொள்வது மரபு) காட்டில் வில்லேந்தி அலைந்தான். இப்போதும் தென்களந்தை மன்னனின் ‘திருமகளுக்காகப் புலம்புகிறான்’ – என்பது பொருள். மன்னனை இராமனோடு ஒப்புமைப் படுத்துவது வாழ்த்துப் போலத் தோன்றினாலும் திருமகளை அடைய முடியாமல் புலம்புவதாகக் கூறுவதால் இது இருபுற வாழ்த்து.

வசை

மெய்வசை, இருபுற வசை என இது இருவகைப்படும். உண்மையான வசை மெய்வசை. வசைபோன்ற வாழ்த்து இருபுற வசை.

(எ.டு)

தந்தை இலைச்சுமடன்; தாய்தொழிலி; தான்பார்ப்பான்

எந்தைக் கிதெங்ஙனம் பட்டதுகொல் …………….

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

ஒருவரை ‘இவர் தந்தை இலை சுமந்து விற்பவன்; தாய் வேலைக்காரி; இவர் மட்டும் பார்ப்பான். இது எப்படி முடியும்?’ எனப் பழிப்பதால் இது மெய்வசை.

(எ.டு)

படையொடு போகாது நின்றெறிந்தான் என்றும்

கொடையொடு நல்லார்கண் தாழ்ந்தான்……………….

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

ஒரு வீரனை ‘இவன் படையோடு உடன் செல்லாமல் நின்ற இடத்திலிருந்தே எறிந்தான் ; கொடை கொடுத்து நல்லாரிடம் தாழ்ந்தவன்’ எனப்பாடுவது இப்பாடல். படையோடு செல்லாமை, தாழ்த்தல் என்பன ஆண்மைக்குக் குறைவானவை. ஆகவே இது வசை போலத் தோன்றுகிறது. எனினும் நின்ற இடத்திலிருந்தே பெரும் முயற்சியில்லாமல் பகைவரை அழித்தான் எனவும் நல்லவர்க்குப் பணிந்தான் எனவும் வரும் பொருள் உண்மையில் அவனைப் போற்றுவதே. ஆகவே இது இருபுற வசை.

6.5.5 வனப்பு செய்யுளுக்குரிய சிறப்புகள் (அழகுகள்) வனப்பு எனப்படும். ‘வனப்பு’ செய்யுளின் பொருள் அமைப்பையும்     சொல் அமைப்பையும் குறிக்கும் இலக்கணம். வனப்பு எட்டு வகைப்படும்.

1) அம்மை

மென்மையான சில சொற்களால், குறைந்த அடிகளால் அமைந்து சிறப்பாக வரும் யாப்பே ‘அம்மை’. இதற்குத் திருக்குறள் பாக்கள் எடுத்துக் காட்டுகளாகும்.

2) அழகு

செய்யுளுக்குச் சிறப்பாக உரிய திரிசொற்களால் அமையும் செய்யுளே ‘அழகு’ எனப்படும். இதற்குச் சங்க இலக்கியச் செய்யுட்கள் எடுத்துக் காட்டுகளாகும்.

3) தொன்மை

பழைய நிகழ்ச்சி, பழங்கதை கூறுவது ‘தொன்மை’. இது உரைநடையோடு கூடியது. மாபாரதம் போன்ற நூல்கள் இதற்கு எடுத்துக்காட்டு.

4) தோல்

நல்ல ஓசை இனிமையுள்ள மென்மையான சொற்களால் மேன்மையான பொருளில் அமைந்தவையும் எல்லா வகைச் சொற்களாலும் பல அடிகளாலும் வருவனவும் ‘தோல்’ எனப்படும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும், நீங்கள் அறிந்துள்ள புறநானூற்றுப் பாடல் சொல்லினிமை, பொருள் மேன்மை கொண்டது. அதனைத் ‘தோல்’ எனலாம்.

5) விருந்து

புதிய பொருளைச் சொல்லும் செய்யுள் ‘விருந்து’. யாப்பிலக்கணம் செய்யப்பட்ட காலத்திற்குப் பின்னால் புதிய வடிவில் அமைந்தவற்றை ‘விருந்து’ என்றனர். அவ்வகையில் அக்காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்கள் ‘விருந்து’ ஆகும். இன்றைய சிறுகதை, புதினம் ஆகியவற்றையும் ‘விருந்து’ எனலாம்.

6) இயைபு

ஞணநமனயரலவழள எனும் பதினொரு மெய்யும் ஈறாக வந்த பாட்டை ‘இயைபு’ என்பர்.

7) புலன்

அனைவர்க்கும் புரியும் இயற்சொற்களால் அமைந்து,தேடிப் பார்க்காமல் எளிதாகப் பொருள் புலப்படுத்துவது புலன். பாரதி பாடல்களைப் ‘புலன்’ எனலாம்.

8) இழைபு

வல்லொற்று வராமல், தொல்காப்பியர்     கூறியுள்ள, எழுத்தெண்ணிக்கை அடிப்படையிலான குறளடி     முதல் கழிநெடிலடி வரை ஐந்து வகை அடிகளும் (4 எழுத்து முதல் 20 எழுத்து வரை பெற்று வரும் 17 அடிகள்) உடையதாக, ஓங்கிய சொற்களால் வருவது ‘இழைபு’.

6.5.6 பொருளும் பொருள்கோளும் பொருள் என்பது அகப்பொருளையும் புறப்பொருளையும் குறிக்கும். செய்யுள் இவ்விரு பொருள்களையும் உள்ளடக்கமாகக் கொண்டு அமைவது.

பொருள்கோள் என்பது ஒரு செய்யுளில் பொருள் கொள்ளும் முறைகளைக் குறிப்பது. பொருள்கோள் ஒன்பது வகைப்படும் . பொருள்கோள் இலக்கணத்தை நன்னூலில் படித்திருப்பீர்கள்.

1) நிரல்நிறைப்பொருள்கோள்

நிரல் = வரிசை ; நிறை = நிறுத்துதல். பெயர்ச்சொற்கள் முதலில் ஒரு வரிசையில் நிறுத்தப்பட்டு அவற்றோடு பொருள் தொடர்புடைய பெயர்ச்சொற்கள் அடுத்த     வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும். வரிசை முறைப்படி அச்சொற்களைப் பொருளுக்கேற்ப இணைத்துப்     பொருள் காண்பது வினைச்சொற்களை இவ்வாறே வரிசைப்படி பொருத்திப் பொருள்காண்பது வினைநிரல் நிறைப் பொருள்கோள்.

(எ.டு)

கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி;

மதிபவளம் முத்தம் முகம்வாய் முறுவல்;

பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல்

வடிவினளே வஞ்சி மகள்

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

பெண்ணின் உறுப்புகளுக்கும் அழகுக்கும் உவமையாகும் பொருள்கள் முதல்வரிசையாகவும் உறுப்புகள்     அடுத்த வரிசையாகவும் முறைமாறாமல் நிறுத்தப்பட்டுள்ளன. பொருளுக்கேற்ப அவற்றை இணைத்துப்பொருள் காணவேண்டும்.

கொடி – நுசுப்பு (இடை) எனவும், குவளை – உண்கண் எனவும், கொட்டை (தாமரையின் நடுவில் உள்ள உறுப்பு)- மேனி எனவும், மதி – முகம் எனவும், பவளம் – வாய் எனவும்,முத்தம் – முறுவல் (பல்) எனவும்,பிடி (பெண்யானை) – நடை எனவும்,பிணை (மான்) – நோக்கு எனவும்,மஞ்ஞை (மயில்)- சாயல் எனவும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

வினை நிரல்நிறை எடுத்துக்காட்டை இணைய நூலகத்தில் பார்த்துக் கொள்க.

2) சுண்ண மொழி மாற்றுப் பொருள்கோள்

ஓரடிக்குள், பொருள்     தொடர்புடைய சொற்கள் முறைமாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும்.அவற்றைப்பொருளுக்கேற்ப மாற்றிப் பொருள் காண்பது சுண்ண மொழி மாற்று.

(எ.டு)

சுரைஆழ அம்மி மிதப்ப வரையனைய

யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப

கானக நாடன் சுனை

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(சுரை = சுரைக்குடுக்கை; ஆழ = மூழ்க; நீத்து = நீந்தும்; நிலை = நிற்கும்)

இச்செய்யுளின் சொற்களை இதே வரிசையில் பொருள் கொள்வது தவறாக முடியும். ‘சுனையில் சுரை மூழ்கும், அம்மி மிதக்கும்’ என்பது சரியாக வருமா? ஆகவே சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு (முயலுக்கு) நீத்து என அந்தந்த அடிகளுக்குள் சொற்களை மாற்றிப் பொருள் காண வேண்டும். இவ்வாறு காண்பது சுண்ணமொழி மாற்று.

3) அடிமறி மொழிமாற்றுப் பொருள்கோள்

செய்யுளின் அடிகளை எவ்விதமாக முன் பின் மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாமலிருப்பது அடிமறி மொழி மாற்று.

(எ.டு)

சூரல் பம்பிய சிறுகான் யாறே;

சூரர மகளிர் ஆரணங் கினரே;

வாரலை எனினே யானஞ் சுவலே;

சாரல் நாட! நீவர லாறே!

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

இந்தப் பாடலை அடிமறி மண்டில ஆசிரியப்பாவுக்கு எடுத்துக்காட்டாக முன்னரே படித்திருக்கிறீர்கள். தலைவன் தலைவியை இரவில் சந்திக்கக் காட்டு வழியாக வருவதில் உள்ள இடையூறுகளைச் சொல்லித் தோழி தன் அச்சத்தைத் தெரிவிப்பது பாடலின் பொருள். இப்பாடலில் ஒவ்வொரு கருத்தும் ஓரடிக்குள் சொல்லி முடிக்கப்பட்டுவிடுகிறது.ஆகவே எந்த அடியையும் முதல், நடு, இறுதி என மாற்றிப் படித்தாலும் ஓசையோ பொருளோ கெடுவதில்லை.    ஆகவே இது அடிமறி மொழிமாற்றுப் பொருள்கோள்.

4) அடி மொழி மாற்றுப் பொருள்கோள்

ஓரடிக்குள் சொற்களை மாற்றிப் பொருள் கொள்வது சுண்ணமொழி மாற்று என அறிவோம். இரண்டடிகளில் உள்ள சொற்களை முன் பின் மாற்றிப் பொருள் கொள்வது அடிமொழிமாற்று.

(எ.டு)

ஆலத்து மேல குவளை; குளத்துள

வாலின் நெடிய குரங்கு

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

‘ஆலமரத்தின் மேல் குவளை உள்ளது; குளத்தில் குரங்கு உள்ளது. ‘எனப் பொருள் தருமாறு செய்யுள் அமைந்துள்ளது. இதனை ‘ஆலத்துமேல குரங்கு’ ‘குளத்துள குவளை’ என இரண்டடிகளிலும் சொற்களை மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். ஆகவே இது அடிமொழி மாற்றுப் பொருள்கோள்.

5) பூட்டுவில் பொருள்கோள்

வில்லைப் பூட்டுதல் என்பது வில்லை வளைத்து ஒரு நுனியில் கட்டப்பட்டுள்ள நாணை மறு நுனியில் கோப்பதாகும். செய்யுளின் ஒரு முனையில் (முதலில்) உள்ள சொல்லை மறுமுனையில் (இறுதியில்) பொருத்திப் பொருள் காண்பது பூட்டுவில் பொருள்கோள் ஆகும்.

(எ.டு)

திறந்திடுமின், தீயவை பிற்காண்டும்; மாதர்

இறந்து படிற்பெரிதாம் ஏதம் – உறந்தை யர்கோன்

தண்ணார மார்பின் தமிழர் பெருமானைக்

கண்ணாரக் காணக் கதவு

(முத்தொள்ளாயிரம், 42)

பவனிவரும் உறையூர்ச் சோழ மன்னனை இளம்பெண்கள் கண்ணாரக் காணக் கதவு திறந்திடுங்கள் என்று முதுபெண்கள், இளம்பெண்களின் தாயரைப் பார்த்துச் சொல்வதாக அமைந்த பாடல் இது. இல்லை என்றால் அவர்கள் இறந்துவிடக் கூடும் எனும் எச்சரிக்கையும் பாட்டில் உள்ளது. செய்யுளின் முதலில் உள்ள திறந்திடுமின் எனும் சொல்லுடன் இறுதியில் உள்ள கதவு எனும்     சொல்லைச் சேர்த்துப்     பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே இது பூட்டுவில் பொருள்கோள் ஆகும்.

6) புனல்யாற்றுப் பொருள்கோள்

ஆற்றோட்டம் போல,செய்யுளில் எச்சொல்லையும் எங்கும் மாற்றாமல், இருந்தபடியே நேராகப் பொருள் கொள்வது புனல்யாற்றுப் பொருள்கோள்.

(எ.டு)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

(திருக்குறள், 131)

(விழுப்பம் = மேன்மை)

இப்பாடலில் சொற்களை முன்பின் மாற்றாமல் நேர்வரிசையில் பொருள்கொள்ள முடிகிறது. ஆகவே இது புனல்யாற்றுப் பொருள்கோள் ஆகும்.

7) அளைமறி பாப்புப் பொருள்கோள்

அளை = புற்று ; பாப்பு = பாம்பு.புற்றில் நுழையும் பாம்பு, தன் இடைப்பகுதியையும் வால்பகுதியையும் பாதுகாக்க, புற்றில் நுழைந்தவுடன் தலையை மடித்து மேலே நிமிர்த்திக் கொள்ளும். முழு உடலும் புற்றுக்குள் சென்றபின் தலையை உள்ளிழுத்துக் கொள்ளும்.அதுபோல, செய்யுளின் இறுதிச் சொற்களை முதலிலும் இடையிலும் பொருத்திப் பொருள் காண்பது அளைமறி பாப்புப் பொருள்கோள். (புற்றில்நுழையும் பாம்பின் தலை வெளியிலிருந்து பார்ப்பவர்க்குக் ‘கடை’ வால்தான் முதல் எனும் அடிப்படையில் இதனைப் புரிந்து கொள்க)

(எ.டு)

தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித்

தளர்வார் தாமும்

சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியில்

சுழல்வார் தாமும்

மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே

முனிவார் தாமும்

வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி

முயலா தாரே

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(யாக்கை = உடம்பு ; விளிந்து = அழிந்து ; நாற்கதி = தேவ, மக்கள், விலங்கு,நரகர் பிறப்புகள்; மூழ்ந்த = வளைத்த; முனிவார் = வெறுப்பார்; முன்னி = எண்ணி)

மேற்காட்டிய பாடலில்     ஈற்றடியை முதல் இடை அடிகளுடன் சேர்த்துப் பொருள்கொள்ள வேண்டும். வாழும் போதே வான் எய்தும் வழி நாடி முயலாதவர்கள் தண்டூன்றித் தளர்வார், நாற்கதியில் சுழல்வார்; முனிவார் என்று பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள்கொள்ளக் கிடப்பதால்

இது அளைமறி பாப்புப் பொருள்கோள் ஆகும்.

8) தாப்பிசைப் பொருள்கோள்

தாப்பு = தாம்பு; கயிறு ; ஊஞ்சல் கயிறு. ஊஞ்சல் கயிறு நடுவிலிருந்து முன்னும் பின்னும் செல்வது போல, செய்யுளில் நடுவில் உள்ள சொல், முதலிலும் இறுதியிலும் சென்று பொருள் தருவது தாப்பிசைப் பொருள்கோள். அணியிலக்கணத்தில் இதனை ‘இடைநிலைத் தீவக அணி’ எனப் படிப்பீர்கள்.

(எ.டு)

உண்ணாமை உள்ள துயிர்நிலை; ஊன்உண்ண

அண்ணாத்தல் செய்யா தளறு     (திருக்குறள், 255)

(உயிர்நிலை = உயிர்கள் நிலை பெற்றிருத்தல்; அண்ணாத்தல் = வாய்திறத்தல்; அளறு = நரகம்)

இப்பாடலில் இடையே உள்ள ஊன் எனும் சொல்லை முதலில் கொண்டு வந்து ‘ஊன் உண்ணாமை’ எனவும், பின்னர் ‘ஊன் உண்ண’ எனவும் சேர்த்துப் பொருள்கொள்ளக் கிடப்பதால் இது தாப்பிசைப் பொருள்கோள்.

9) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

செய்யுள் முழுவதிலுமிருந்து,பொருளுக்கேற்பச் சொற்களைக் கொண்டு கூட்டிப்    பொருள்கொள்வது     கொண்டு கூட்டுப் பொருள்கோள்.

(எ.டு)

தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்

வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி

அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே

வங்கத்துச் சென்றார் வரின்

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(தெங்கங்காய் = தேங்காய்; அஞ்சனம் = மை;வங்கம் = கப்பல்)

இச்செய்யுளில் சொற்களை     இருந்தபடியே     நிறுத்திப் பொருள்கொள்ள முடியாது. தேங்காய் போலக் கூந்தல், முட்டை உடைத்தாற்போல மேனி,மைபோன்ற பசலை எனப் பொருத்தமற்ற பொருளே     வரும். ஆகவே செய்யுளில் அனைத்து அடிகளிலுமிருந்து பொருளுக்கேற்பச் சொற்களை எடுத்து முன்பின்னாக மாற்றிச் சேர்க்க வேண்டும். கப்பலில் சென்றுள்ள தலைவன் திரும்பி வந்தால் தலைவியின் பசலை நோய் தணியும் என்பது செய்யுளின் கருத்து. அதற்கேற்ப, ‘வங்கத்துச் சென்றார் வரின், அஞ்சனத் தன்ன பைங்கூந்தலையுடைய தலைவியின் மாமேனிமீது, தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட கோழி முட்டையை உடைத்தாற் போன்றிருக்கின்ற பசலை தணிவாகும்’ எனச் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள

வேண்டும்.

6.5.7 குறிப்பிசை ஒலிக்குறிப்பு இடைச்சொற்கள்பற்றி நன்னூல் இடையியலில் படித்திருப்பீர்கள். பேச்சு வழக்கில் நாம் பல ஒலிக்குறிப்புச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். கலகலவெனச் சிரித்தான், பளாரென அறைந்தான் என்பன போன்றவை அவை.புலவர்களும் சில சமயங்களில் ஒலிக்குறிப்புச் சொற்களைக் கவிதையில் படைப்பர். அப்போது அவற்றை ஏனைய சொற்களைப் போலவே அலகிட்டுச் சீர், அடி, தொடை பிழையாமல் அமைத்துக் கொள்ள வேண்டும்.

(எ.டு)

மன்றலங் கொன்றை மலர்மிசைந் துஃகுவஃ

கென்று திரியும் இடைமகனே …………….

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

இப்பாடலில் இடையன் உஃகுவஃகு என்று திரிகிறான் என ஒலிக்குறிப்புச் சொல் இடப்பெற்றுள்ளது.உஃ / குவஃ என அச்சீர் நேர்நிரை > கூவிளம் விளமுன் நேர் இயற்சீர் வெண்டளை எனச் செய்யுளில் அமைத்துக் கொள்ளப் படுகின்றது.

6.5.8 ஒப்பு இதுவரை உறுப்பியலிலும் செய்யுளியலிலும் சொல்லப்பட்ட சீர், தளை, அடி வரையறைகள் பாவிலோ, பாவினத்திலோ சற்றுத் திரிந்தோ, மிகுந்தோ, நிறைந்தோ வந்தால் அவற்றை ஒருவகை ஒப்புமை நோக்கி ஏதாவது ஒரு பாவிலோ பாவினத்திலோ அடக்கிக்கொள்ள வேண்டும். இது ஒரு புறனடைக் கருத்து.

(எ.டு)

சுற்றுநீர் சூழ்கிடங்கில்

பொற்றாமரை பூம்படப்பைத்

தெண்ணீர் நல்வயல் ஊரன் கேண்மை

அல்லிருங் கூந்தற் கலரா னாவே.

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(படப்பை = சோலை; கேண்மை = காதல்; அல் = இரவு; கூந்தல் = கூந்தலையுடைய தலைவி ; அலர் = தூற்றுதல் பேச்சு)

மேற்காட்டிய பாடலில் வஞ்சியடிகள் இரண்டு மட்டுமே யுள்ளன. வஞ்சிப்பாவின் அடிச்சிறுமை மூன்று என்னும் இலக்கணம் இதில் இல்லை. தொடர்ந்து ஆசிரியச் சுரிதகம் வருகிறது. இடையே தனிச்சொல் இல்லை. எனினும் ஓரளவு ஒப்புமை நோக்கி இதனை வஞ்சிப்பாவில் அடக்குவர். இதுவே ஒப்பு எனப்படும்.

6.5.9 வேறு சில இலக்கணங்கள் வண்ணம், புனைந்துரை, அடியின்றி நடப்பன எனும் இலக்கணங்களை நூலாசிரியர் சொல்லவில்லை;     எனினும் உரையாசிரியர் எடுத்துச் சொல்கிறார்.c

6.6 நூற்பொருள் தொகுப்பு

நூல் முழுவதிலும் சொல்லப்பட்ட கருத்துகளைச் சுருக்கித் தொகுத்து நினைவூட்டுகிறார் நூலாசிரியர்.

6.6.1 குற்றங்கள் செய்யுள் படைக்கும் புலவர் ஆறுவகைக் குற்றங்களும் தோன்றாமல் படைக்க வேண்டும் என உரையாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். அவை:

1.எழுத்துக் குற்றம்

2. சொற்குற்றம்

3. பொருட்குற்றம்

4.யாப்புக் குற்றம்

5.அலங்காரக் குற்றம்

6.ஆநந்தக் குற்றம்

என்பனவாம்.

இவற்றுள் முதல் ஐந்தும் எழுத்து, சொல்,பொருள், யாப்பு, அணி நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. ஆநந்தக் குற்றம் என்பது மட்டும் இங்கு விளக்கப்படுகிறது.ஆநந்தக் குற்றங்களுள் இரண்டை மட்டும் இங்குக் காண்போம்.

எழுத்தாநந்தம்

ஒரு பாடலில் ‘திரையவோஓ’ எனத் தலைவனின் இயற்பெயர் குறிப்பிடப்படுகிறது. இயற்பெயரில் அளபெடை வருவது எழுத்தாநந்தம் எனும் ஆநந்தக் குற்றம்.

சொல்லாநந்தம்

ஒரு பாடலில் ‘விசயன் எரிந்திலங்குவேலின் மீது மதியம் எழும்’ என வருகிறது. தலைவன் பெயரையொட்டி ‘எரிந்தது’ எனும் சொல் வருவது சொல்லாநந்தம்.

மாணவர்களே! இங்குச் சொல்லப்பட்ட ஆநந்தக்குற்றம் போன்றவை வடமொழி இலக்கணச் செல்வாக்கினால் தமிழில் நுழைந்தவை. வெண்பாவை அந்தணர் பா     எனவும் வஞ்சிப்பாவைச் சூத்திரர்பா எனவும் பாக்களுக்கெல்லாம் சாதி வகுத்த இலக்கணங்கள் உண்டு. இவை தமிழ் மரபுக்கு முரணானவை. யாப்பருங்கலக் காரிகை     உரையாசிரியர் சொல்லியிருப்பதால் ஆநந்தக் குற்றங்கள் இங்குச் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளன.

6.7 தொகுப்புரை

மாணவர்களே!

யாப்பிலக்கணத்தின் இறுதிப் பாடமாகிய இப்பாடத்தில் எதுகை, மோனை ஆகிய தொடைகள் பற்றி உறுப்பியலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்குப் புறனடையான இலக்கணங்களை அறிந்து கொண்டீர்கள். செய்யுளியலில் சொல்லாது விடுபட்ட தரவு, தாழிசை, அடி வரையறைகளை இப்பாடத்தில் தெரிந்து கொண்டீர்கள். முதலிரண்டு இயல்களிலும் சொல்லப்படாத, முற்றிலும் புதிய கூன், வகையுளி போன்ற சில இலக்கணக் கூறுகளை விளக்கமாக அறிந்து கொண்டீர்கள். இவற்றுள் சில, செய்யுளின் வடிவம் பற்றியவை. சில, பொருள் பற்றியவை என வேறுபடுத்தி அறிந்து கொண்டீர்கள்.

நூலாசிரியர் சொல்லாத வண்ணம் போன்ற இலக்கணங்களையும் தெரிந்து கொண்டீர்கள். இவ்வாறு யாப்பிலக்கணத்தை முறையாகவும் முழுமையாகவும் கற்றதன் பயனாக, நீங்கள் படிக்கும் இலக்கியங்களில் ஓசை நுட்பத்துடன் பொருள் நுட்பம் இணைந்து வரும் கவிதை அழகைச் சுவைத்துணர முடியும். மேலும், படைப்புத் தூண்டுதல் உள்ளோர் இந்த யாப்பை ஒட்டியும், மீறியும் கவிதைகளைப் படைக்கவும் முடியும்.

5.3 அசைக்குப் புறனடை

எழுத்து தனித்தும் ஒன்றோடொன்று சேர்ந்தும் அசையாகும் முறைகள் பற்றி உறுப்பியலில் படித்திருக்கிறீர்கள். தனிக்குறில் ஒரு நேரசையாகும் என்பது     அங்குச் சொல்லப்பட்டது. இங்கு ஒழிபியலில் அதற்கு ஒரு புறனடை சொல்லப்படுகிறது. (உறுப்பியல் பாடத்தில் இந்தப் புறனடை சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.) உயிரளபெடை வரும் போது அதனை அலகிடுவது எவ்வாறு என்ற புதிய செய்தியும் இப்பகுதியில் சொல்லப்படுகிறது.

5.3.1 தனிக்குறில் நேரசையாக வரும் இடம் அசை பற்றிய நூற்பாவில் (குறிலே நெடிலே குறிலிணை- 5) தனிக்குறில் நேரசையாக வரும் எனக் கூறப்பட்டுள்ளது. சீரின் முதலிலோ இடையிலோ தனிக்குறில் நேரசையாக வராது என நூற்பாவிலோ உரையிலோ வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை.

(1) தனிக்குறில் நேரசைக்கு நூற்பாவில் எடுத்துக் காட்டுத் தரப்பட்டுள்ளது. ஆழி, ஆ-ழி =ஆ-தனிநெடில் நேரசை ; ழி- தனிக்குறில் நேரசை. இதன் மூலம் தனிக்குறில் சீரின் முதலில் நேரசையாக வராது என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் அமிதசாகரர்.

(2) இரு குறில் இணைந்தால் அது நிரையசை என வகுப்பதன் மூலம் சீரின் முதலில் வரும் குறில், அடுத்து வரும் குறில் அல்லது நெடிலுடன் சேர்த்து நிரையசையாக்கப்பட     வேண்டும்     என்பது உணர்த்தப்படுகிறது. கசடற என்பதை க-ச-ட-ற எனத் தனித்தனி நேரசைகளாகப் பிரிக்க முடியாது. கச-டற என இரு நிரையசைகளாக்க வேண்டும்.

ஆக. உறுப்பியலில் தனிக்குறில் சீரின் முதலிலும் இடையிலும் நேரசையாகாது என்பது நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. எனினும் சீரின் முதலில் தனிக்குறில் நேரசையாக வரும் இடமும் உண்டு.

சீரின் முதலில் ஒரு குற்றெழுத்து விட்டிசைத்து வரும்போது அக்குற்றெழுத்துத் தனித்து ஒரு நேரசையாக வரும். விட்டிசைத்தல் என்றால் என்ன? தமிழில் இரண்டு உயிரெழுத்துகள் அடுத்தடுத்து நிற்பதில்லை ; அவ்வாறு வர நேர்ந்தால் அவற்றை இணைக்க நடுவே ஓர் உடம்படுமெய் (யகரம் அல்லது வகரம்) வரும் எனும் இலக்கணத்தை நன்னூலில்     படித்திருப்பீர்கள்.     கோ+இல் (ஓ+இ) > கோ+வ்+இல் > கோவில் என்பதில் இரண்டு உயிர்களை இணைக்க வகர உடம்படு மெய் வந்திருப்பது காண்க. ஆனால் புலவர்கள் செய்யுள் செய்யும்போது சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அடுத்தடுத்து இரண்டு உயிர்களை நடு இணைப்பு எதுவுமின்றி     நிறுத்துவார்கள். அப்போது அவ்வுயிர்களுக்கிடையே ஓர் ஓசைத்தடை ஏற்படும். இதுவே விட்டிசை. அ, ஆ, இ, ஈ . . . . . என உயிர்களை நீங்கள் உச்சரித்துப் பாருங்கள். உயிர்களுக்கிடையே ஒலித்தடை வருவதை உணர்வீர்கள்.சீரின் முதலில் வரும் குற்றெழுத்துக்குப் பின் மற்றோர் உயிர் வந்தால் இங்கு ஏற்படும் விட்டிசை காரணமாக, முதலில் வரும் குற்றெழுத்துத் தனித்து நேரசை யாகிவிடும். முதலில் மட்டுமின்றி இடையிலும் இறுதியிலும் விட்டிசைத்து வரும் குறில்கள் நேரசைகளாகவே வரும்.

செய்யுளில் விட்டிசை அமைவதற்கான இடங்கள் அல்லது காரணங்கள் யாவை?

(1) ஏவல்

(2) தற்சுட்டு

(3) குறிப்பு

(4) வினா

(5) சுட்டு

ஆகிய காரணங்களால் விட்டிசை அமையும்.

எடுத்துக்காட்டு :

அஉ அறியா அறிவில் இடைமகனே

நொஅலையல் நின்ஆட்டை நீ

- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(அஉ= அகரம் உகரம் ஆகிய எழுத்து ; நொ அலையல் = துன்புறுத்தாதே)

அஉ எனும் சீரில் உயிர்கள் விட்டிசைப்பதால் அ-உ > நேர் நேர் > தேமா என அலகிட வேண்டும். இங்கு அ, உ என்பன அந்த எழுத்துகளையே குறிப்பதால் இது தற்சுட்டில் வந்த விட்டிசை. நொஅ (ஒஅ) எனும் விட்டிசையில் ‘நொ’ முன்னிலை ஏவல். ஆகவே இது ஏவல் விட்டிசை.

எடுத்துக்காட்டு :

அஅவனும் இஇவனும் உஉவனும் கூடியக்கால்

எஎவனை வெல்லார் இகல்

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

இந்தச் செய்யுளில் அ இ உ என்பன சுட்டு ; என என்பது வினா. இந்நான்கும் மொழி முதலில் தனி நேரசைகள் ஆகும்.

பிற பொருள்களில் வரும் விட்டிசைக்கான எடுத்துக் காட்டுகளை இணைய நூலகத்தில், காரிகை நூலில் காண்க.

5.3.2 உயிரளபெடையை அலகிடும் முறை சீரும் தளையும் சிதையும் போது அளபெடையை நெடில்போலக் கொண்டு அலகிட வேண்டும் எனச் சென்ற நூற்பாவில் பார்த்தோம். சீரும் தளையும் சிதையாத போது இயல்பான நிலையில் உயிரளபெடையை எவ்வாறு அலகிட வேண்டும் என இங்குப் பார்ப்போம்.

(1) தனிநெட்டெழுத்து அளபெடுத்தால் நெடிலையும் அளபெடை அறிகுறியான குறிலையும் பிரித்து நேர் நேர் என அலகிட வேண்டும். ஆஅதல் என்பதை ஆ-அ-தல் > நேர் நேர் நேர் என அலகிட வேண்டும். அறிகுறி எழுத்தைப் பின்னால் வரும் குறில் அல்லது நெடிலோடு சேர்த்து நிரையசை யாக்கவும் கூடாது.

(2) ஒரு குறிலை அடுத்து வரும் நெட்டெழுத்து அளபெடுத்தால் குறில் நெடில் நிரையசை, அளபெடை அறிகுறி எழுத்து நேரசை என, அதாவது நிரை நேர் என அலகிட வேண்டும். படாஅம் என்பதைப் படா-அம் > நிரை நேர் என அலகிட வேண்டும்.

(3) உயிரளபெடை சில சமயம் மூன்று மாத்திரைக்கு மேலும் நீண்டு வரும். அவ்வாறு வந்தாலும் மேற்குறித்தவாறு நேர் நேர், நிரை நேர் எனவே அலகிடப்படும்.     செறாஅஅய்     என்பதை செறா-அஅய் > நிரை நேர் என்றே கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டு :

ஏஎர் சிதைய அழாஅல் எலாஅநின்

சேயரி சிந்தின கண்

- (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(ஏஏர் = அழகு ;     அழாஅல் = அழாதே ; எலாஅ = தோழீ)

மேற்கண்ட பாடலில் வரும் உயிரளபெடைகளைக் கீழ்க்காணுமாறு அலகிட வேண்டும்.

ஏஎர் > ஏ-எர் >     நேர் நேர் > தேமா அழாஅல் > அழா-அல் > நிரை நேர் > புளிமா எலாஅநின் > எலா-அ-நின் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்

இனி, இவ்விலக்கணங்களைக் கூறும் நூற்பாவின் பொருள் :

சீரின் முதலில் விட்டிசைத்து வந்தால் அன்றித் தனிக்குறில் நேரசையாக வராது. தனிநெடில் அளபெடுத்தால் நேர் நேர் எனவும், குறிலோடிணைந்த நெடில் அளபெடுத்தால் நிரைநேர் எனவும் அலகிட வேண்டும்.

மாணவர்களே !

இந்த நூற்பாவில் நீங்கள் அறிந்து கொண்டவற்றுள்,

(1) விட்டிசைத்தால் தனிக்குறில் சீரின் முதலில்     நேரசையாகும் என்பது புறனடைக் கருத்து.

(2) உயிரளபெடையை     அலகிடும் முறை முன்பு     சொல்லப்படாத புதுக்கருத்து.

அடுத்து, சீருக்கும் தளைக்கும் உரிய புறனடைகளைக் காண்போம்.