83

தண்டியலங்காரம்

பாடம் - 1

அணி இலக்கணம் – பொது அறிமுகம்

1.0 பாட முன்னுரை

ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும் புரிந்துகொள்ளவும் கருவியாக அமைவது மொழி. மேலும், ஒரு சமுதாயத்தில் பேசப்படும் மொழி, அந்தச் சமுதாயத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் புலப்படுத்துகிறது; சமுதாய மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறது.

ஒருமொழியைப் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் துணைபுரிவன அம்மொழியில் உள்ள இலக்கண நூல்களாகும். பழைய இலக்கியங்களைப் படிக்கவும், புதிய இலக்கியங் களைப் படைக்கவும் அவை பயன்படுகின்றன.

தமிழ்மொழியில் காணப்படும் இலக்கண வகைகளைப் பற்றியும், அவற்றுள் அணி இலக்கணத்தின் சிறப்புப் பற்றியும், தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூல் பற்றியும் இப்பாடத்தில் காணலாம்.

1.1 தமிழில் ஐந்திலக்கணம்

தமிழ்மொழியில் உள்ள இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை    எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் என்பன வாகும். இவ்வைந்தும் தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கிய வடிவமைப்பிற்கும் உரியனவாகும்.

1.1.1 மொழிக்கான இலக்கணம் பொருள்களை அறிந்து கொள்ளவும், கருத்துகளைப் புரிந்து கொள்ளவும், எழுப்புகின்ற ஒலிவடிவம் பற்றியும், எழுதுகின்ற வரிவடிவம் பற்றியும் எடுத்துரைப்பது எழுத்திலக்கணம் ஆகும். எழுத்து சொல்லாகும் முறைமை பற்றியும், சொல்லின் வகைகளைப் பற்றியும் விளக்குவது சொல் இலக்கணம் ஆகும். இவை இரண்டையும் அறிந்தால் தவிர, ஒரு மொழியைப் புரிந்து கொள்ளுதல் இயலாது. எனவே, இவ்விரண்டும் மொழிக்கு அமைந்த அடிப்படை இலக்கணங்கள் ஆகும்.

1.1.2 இலக்கியத்திற்கான இலக்கணம் வாழ்க்கை பற்றிய இலக்கணம் பொருள் இலக்கணமாகும். பொருள் இலக்கணம் தமிழுக்கே அமைந்த சிறப்பிலக்கணம் ஆகும். இது அகப்பொருள், புறப்பொருள் என இருவகைப்படும். அன்பும் இல்லறமும் பற்றியது அகப்பொருள் ஆகும். வீரமும் சமுதாயமும் பற்றியது புறப்பொருள் ஆகும். பிறமொழிகளில் இத்தகைய பாகுபாடு இல்லை.

இலக்கியங்களின் வடிவத்தைப் பற்றி     விவரிப்பது யாப்பிலக்கணம் ஆகும். இலக்கியங்களில் கருத்துகளை அழகுபட எடுத்துரைக்கும் முறையைப் பற்றி விளக்குவது அணி இலக்கணம் ஆகும்.

எனவே, இம்மூவகை இலக்கணங்களும், இலக்கியத்திற்கு அமைந்த இலக்கணங்கள் ஆகும். இம் மூன்றனையும் அறிந்தால்தான் ஒரு மொழியில் உள்ள இலக்கியங்களைப் படித்துச் சுவைக்கவும், படைத்துக் களிக்கவும் இயலும்.

1.2 தமிழ் இலக்கண நூல்வகைகள்

தமிழில் காணப்படும் இலக்கண நூல்களை, அவை எடுத்துரைக்கும் இலக்கணங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்தலாம். மூவகை இலக்கண நூல், ஐவகை இலக்கண நூல், அறுவகை இலக்கண நூல், தனித்தனி இலக்கண நூல் என்பன அவ்வகையினவாகும்.

1.2.1 மூவகை இலக்கண நூல் தமிழ் மொழியில் முதன்மையாகவும், முழுமையாகவும் கிடைக்கும் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பகுதிகள் உள்ளன.அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் பொருளதிகாரத்துள் காணப்படும் செய்யுளியல், யாப்பிலக்கணம் பற்றிய கருத்துகளை எடுத்துரைக்கின்றது.     பொருளதிகார     உவமவியல் அணி இலக்கணம் பற்றி விளக்குகின்றது.

யாப்பும் அணியும் பெரிதும் வளர்ந்து, தனித்துப் பிரிவதற்கு முன் அவை பொருளதிகாரத்திற்கு உள்ளேயே அடங்கியிருந்தமையை இதன் மூலம் அறிகிறோம்.

1.2.2 ஐவகை இலக்கண நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து வகை இலக்கணங்களையும் குறித்து ஐந்து பெரும்பகுதிகளில் எடுத்துரைப்பன ஐந்திலக்கண நூல்கள் ஆகும். வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம்,முத்துவீரியம், சுவாமிநாதம் ஆகியன இவ்வகையில் அடங்கும்.

இவை காலவேறுபாட்டிற்கு ஏற்பவும், கருத்து வேறுபாட்டிற்கு ஏற்பவும் தமக்குள் சிற்சில வேறுபாடுகளை உடையனவாக உள்ளன.

1.2.3 அறுவகை இலக்கண நூல் ஐந்திலக்கணங்களுடன் புலமை இலக்கணம் என்பதையும் சேர்த்து அறுவகை இலக்கணம் என்னும் இலக்கண நூலை வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றியுள்ளார். கி.பி. 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் இது. வேறு எவரும் புலமை இலக்கணத்தைக் கணக்கில் கொண்டு இதுபோல் ஆறாவதாக இலக்கணம் இதுவரை எழுதவில்லை.

1.2.4 தனித்தனி இலக்கண நூல் ‘அகல உழுவதிலும் ஆழ உழுவதே மேல்’ என்னும் பழ மொழிக்கு ஏற்ப, ஐந்திலக்கணங்களிலும் செலுத்தும் ஆர்வத்தை ஒர் இலக்கணத்தில் செலுத்துவோம் என்னும் எண்ணத்தினராய் ஏதேனும் ஓர் இலக்கணத்தை மட்டும் சிலர் இயற்றலாயினர்.

அவ்வகையில், நம்பியகப் பொருள்     என்னும் அகப் பொருள் நூலை நாற்கவிராச நம்பி     இயற்றினார். புறப்பொருள்    வெண்பாமாலை என்னும்     நூலை ஐயனாரிதனார்     படைத்தார்.    அமிதசாகரனார் யாப்பருங்கலக்காரிகையை     எழுதினார். தண்டியாசிரியர் தண்டியலங்காரத்தையும், திருக்குருகைப் பெருமாள் கவிராயர் மாறனலங்காரத்தையும் இயற்றினர்.

பவணந்தி முனிவர், எழுத்துக்கும்     சொல்லுக்கும் இலக்கணம் கூறும் நன்னூல் என்னும் நூலை இயற்றியுள்ளார். (நன்னூல், ஐந்திலக்கணமும் கூறும் நூல்     எனவும், ஏனைய மூன்று    இலக்கணப்     பகுதிகளும் கிடைக்க வில்லை எனவும் அறிஞரிடையே ஒரு கருத்து நிலவுகிறது.)

1.3 அணி இலக்கணம்

ஒரு மொழியின் அழகை விளக்குவது, அதிலுள்ள அணி இலக்கணம் ஆகும். அணிகளின் இலக்கணத்தினை விளக்குவது அணி இலக்கணம் எனப்படும். அணி என்பதன் பொருள் விளக்கம், சிறப்பு, தொன்மை, வகைகள், பயன் ஆகியவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.

அணி – பொருள் விளக்கம்

அணி – அழகு. உடலின் அழகை நகைகள் ஆகிய அணிகள் அழகுபடுத்துகின்றன. செய்யுளின் கருத்தை அணிகள் அழகுபடுத்துகின்றன. சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது அணி இலக்கண இயல்பாகும். வடமொழியில் அணியை, அலங்காரம் என்று கூறுவர்.

அணி இலக்கணச் சிறப்பு

எழுத்து, சொல், பொருள், யாப்பு ஆகிய நான்கு இலக்கணங்களும் மொழிக்கு மொழி வேறுபடுவன ; மாறுபடுவன. ஆனால் அணி இலக்கணம் எல்லா மொழிகளுக்கும் பொதுவானது ஆகும். எடுத்துக்கூற விரும்பும் கருத்தை எந்த நடையில் எந்தெந்த முறையில் எடுத்துரைப்பது எனக் கூறுவது எல்லா மொழிகளிலும் உள்ள நூல்களுக்கும் பொதுவானதாக உள்ளது. இது, பிற இலக்கணங்களுக்கு இல்லாத தனிச் சிறப்பு ஆகும்.

அணி இலக்கணத் தொன்மை

தொல்காப்பிய ‘உவமவியல்’, அணி இலக்கணம் பற்றி எடுத்துரைப்பது என்பதை முன்னமே கண்டோம். அந்த இயலிலுள்ள நூற்பாக்களில்,

விரவியும் வரூஉம் மரபின என்ப (நூற்பா-2)

உவமப் போலி ஐந்துஎன மொழிப (நூற்பா-24)

என வருவனவற்றுள் என்ப, மொழிப என்னும் சொல்லாட்சிகள் காணப்படுகின்றன. என்ப, மொழிப என்னும் இச்சொற்களுக்கு ‘ஆசிரியர்கள் இவ்வாறு கூறுவார்கள்’ என்பது பொருள். தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 3 அல்லது 4ஆம் நூற்றாண்டு என ஆராய்ச்சியாளர் கூறுவர். எனவே அதற்கும் முற்பட்ட காலத்தில் அணி இலக்கணக் கருத்துகள் தமிழில் இருந்துள்ளமையை அறியமுடிகிறது.

1.3.1 அணி இலக்கணப் பகுதிகள் அணி இலக்கணம் பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பகுதிகளாகத் தண்டியலங்கார நூலில் காட்டப் பெற்றுள்ளது.

பொதுவணியியல்

செய்யுளில் இடம்பெறும் அணிகள் குறித்த பொதுவான இலக்கணத்தைக் கொண்டது இப்பகுதியாகும்.

பொருளணியியல்

தன்மை அணி, உவமை அணி, உருவக அணி முதலான பொருள் அடிப்படையிலான பல அணிகள் இப்பகுதியில் எடுத்துக் காட்டுடன் விவரிக்கப் பெறும்.

சொல்லணியியல்

மடக்கணி, சித்திரக்கவி என்னும் சொல் அடிப்படையிலான இரண்டு அணிகளை விவரிக்கும் பகுதி இது.

1.3.2 அணி இலக்கணப் பயன் அணி இலக்கணம்     பொருள்     புலப்படுத்துதலும், அழகுபடுத்துதலும் ஆகிய பயன்பாடுகளை உடையது.

பொருள்புலப்பாடு

அணிகளுக்கெல்லாம்     தாயாகவும், முதன்மையாகவும் விளங்குவது உவமையணி ஆகும். தெரியாத பொருள்களைப் பற்றித் தெரிவிக்க, தெரிந்த பொருள்களை உவமையாகக் கூறுவது மரபு. காட்டுவழியில் சென்ற ஒருவன் முதன்முறையாக ஒரு காட்டுப் பசுவைக் காண்கிறான். காட்டுப் பசு என்பது நாட்டிலுள்ள பசுவைப் போன்ற தோற்றத்தை உடையது எனக் கேள்விப்பட்டிருந்ததால், இது காட்டுப்பசு என அறிந்து கொள்கிறான். இதனை, ஆப்போலும் ஆமா(ஆ – பசு; ஆமா – காட்டுப்பசு) என இளம்பூரணர் தொல்காப்பிய உரையில் சான்று காட்டி விளக்குகின்றார்.

அழகுபடுத்தல்

தெரிந்த பொருள்களைப் பற்றி எடுத்துரைக்கும்போதும் நயம்பட உரைக்கும் நிலையில், உவமை பிற்காலத்தில் பயன்படலானது. தாமரை போன்றது பெண்களின் முகம் என வரும் உவமைப் பகுதியில் அழகுபடுத்தலே அமைகின்றது. பிற அணிகளும், இவ்வாறு அழகுபடுத்தி உரைத்தற்கு ஏற்பட்டனவே ஆகும். பெரிய மாளிகைக்கு அதன் முன்புறத்தில் அமையும் ஓவியமும், பெரிய நகரத்திற்கு அதன் பகுதியில் அமையும் கோபுரமும் அழகு சேர்ப்பதுபோல் செய்யுளுக்கு அழகு சேர்ப்பது அணி ஆகும்.

1.4 அணி இலக்கண வளர்ச்சி

தொல்காப்பியத்தில் இடம்பெறும் உவமவியல் கருத்துகளே, பிற்கால அணி இலக்கண நூல்களுக்கு மூலமாக அமைந்தன. வடமொழியில் காணலாகும் அணி இலக்கணச் சிந்தனைகளின் தாக்கம், பிற்கால அணி இலக்கண நூல்களில் பெருமளவில் உள்ளது.

1.4.1 தொல்காப்பிய உவமவியல் செய்திகள் தொல்காப்பிய உவமவியலில் உவமையின் தோற்றம், நிலைக்களன், உவம உருபுகள், உள்ளுறை உவமை, மரபு, புறனடை ஆகியன பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

உவமையின் தோற்றம்

வினை(செயல்), பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகிய நான்கின் அடிப்படையில் இருபொருள்களுக்கிடையில் உவமை அமையும். இவற்றுள் ஒருகூறு மட்டும் அல்லாமல், இரண்டு, மூன்று கூறுகளும் பொருந்தி வரலாம். உவமையாகக் காட்டப்படுவது பொருளை விட உயர்ந்ததாகவே அமையும்.

1.4.2 தொல்காப்பியமும் தண்டியலங்காரமும் பிற்கால அணி இலக்கண நூல்களுள் சிறந்து விளங்குவது தண்டியலங்காரம் ஆகும். இந்நூல் தொல்காப்பிய உவமவியல் கருத்துகளையும் வடமொழித் தாக்கத்தையும் கொண்டு அமைந்துள்ளது.

1.4.3 அணிகளும் வடமொழித்தாக்கமும் இறையனார் களவியலுரை என்னும் நூலில், பாண்டிய மன்னன் ஒருவன் எழுத்தும் சொல்லும் யாப்பும் அறிந்த புலவர்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், பொருள் இலக்கணம் அறிந்தார் கிடைக்கப் பெறவில்லையே என ஏங்கிச் சிவபெருமானிடம் முறையிட, அவர் இறையனாராகத் தோன்றி அகப்பொருள் இலக்கணத்தை அறுபது நூற்பாக்களில் இயற்றியருளினார் என்னும் செய்தி காணப்படுகிறது. இப் பகுதியில் அணி இலக்கணம் கிடைக்கப் பெற்றது என்றோ, கிடைக்கப் பெறவில்லை என்றோ எவ்விதக் குறிப்பும் இல்லை. எனவே அணி இலக்கணம் என்ற ஒன்று தனித்து அக்காலத்தில் இல்லை என அறிஞர்கள் கூறுவர்.

அணிகளும் வடமொழிப் பெயர்களும்

தமிழில் காணப்படும் அணி இலக்கண நூல்களில் (தண்டியலங்காரம், மாறனலங்காரம்) ‘அலங்காரம்’ என்ற சொல்லே உள்ளது.

அணிகளின் பெயர்களும் தமிழ்மொழியின் தன்மைக்கு ஏற்ப வடிவ மாற்றங்களைப் பெற்றுள்ளன.

இவற்றால், தொல்காப்பிய உவமவியல் சிந்தனைகளை அடியொற்றியும், வடமொழி நூல்களைத் தழுவியும் அணி இலக்கண நூல்கள் தமிழில் எழுந்துள்ளமையை அறிய முடிகிறது.

1.4.4 பிற்கால அணிகளின் வளர்ச்சி அணி இலக்கண வளர்ச்சியைப் பொருள் அணி வளர்ச்சி, சொல்லணி வளர்ச்சி என இரண்டாகப் பகுத்துக் கொள்ளலாம்.

தொல்காப்பியர் உவமவியலில் உவமை அணியை மட்டுமே எடுத்துரைத்துள்ளார். அதற்கு உரைவரைந்த பேராசிரியர் உவமையின் வகைகள் சிலவற்றைக் காட்டியுள்ளார். தொல்காப்பிய உவமவியலில் பொருள் அணி பற்றிய கருத்தே இடம் பெற்றுள்ளது; சொல்லணி இடம் பெறவில்லை. ஆனால் தொல்காப்பியச் செய்யுளியலில் உள்ள அந்தாதி, மடக்கு முதலான பகுதிகள் சொல்லணிக்கான விதைகளாக உள்ளன.

பொருள் அணி வளர்ச்சி

நூல்பெயர்                                                      பொருள்அணிகளின் எண்ணிக்கை

1.    யாப்பருங்கல விருத்தி உரை                                                                         27

2.   சேந்தன் திவாகரம்                                                                                                28

3.   வீரசோழியம்                                                                                                            35

4.தண்டியலங்காரம்                                                                                                    35

5.மாறனலங்காரம்                                                                                                       64

6.திருத்தணி விசாகப்பெருமாள் ஐயர் அணி இலக்கணம்                      100

7.குவலயானந்தம்                                                                                                       120

சொல்லணி வளர்ச்சி

நூல்பெயர்                                                                                              சொல்லணிகளின் எண்ணிக்கை

1.    திருஞான சம்பந்தர் தேவாரத்தில் இடம் பெற்றுள்ள அணிகள்                                       10

2.   வீரசோழியம்                                                                                                                                               2

3.    திவாகரம்                                                                                                                                                     21

4.    தண்டியலங்காரம்                                                                                                                                    2

5.    யாப்பருங்கலம்                                                                                                                                         22

6.    யாப்பருங்கல உரை                                                                                                                                33

7.    மாறனலங்காரம்                                                                                                                                          2

8.   மாறனலங்கார உரை                                                                                                                                  2

இவ்வாறு காலந்தோறும் வளர்ச்சி காணப்படுகிறது.

1.5 அணி இலக்கணமும் ஐந்திலக்கணமும்

ஐந்திலக்கணம் கூறும் இலக்கண நூல்களுள் காலத்தால் முந்தியதாகத் திகழ்வது வீரசோழியம். எனினும் இதற்கு முற்பட்ட காலத்திலேயே அணிஇலக்கண வளர்ச்சி சிறப்புற் றிருந்தமையைத் திவாகர நிகண்டினால் அறிகிறோம். திவாகர நிகண்டில் பல்பொருள் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதியில் 28 பொருள் அணிகளும் 21 சொல்லணிகளும் சுட்டப் பட்டுள்ளன. எனவே, தொல் காப்பியத்துக்கும் வீர சோழியத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அணி இலக்கணம் கூறும் நூல்கள் இருந்துள்ளமையை அறிய முடிகிறது. எனினும் அவை கிடைக்கப் பெறாத நிலையில் கிடைத்துள்ளனவாகிய வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம் ஆகியன பற்றிக் காண்போம்.

வீரசோழியம்

தமிழில் கிடைக்கப் பெறும் ஐந்திலக்கண நூல்களுள் முதன்மையானது இது. வீரராசேந்திர சோழனின் வேண்டுகோளுக்கு இணங்கப் புத்தமித்திரரால் பாடப்பெற்றது. இந்நூலில் அணி இலக்கணம் அலங்காரப் படலம் எனக் குறிக்கப்படுகிறது. தொல்காப்பியத்தையும் காவியாதரிசம் என்னும் வடமொழி நூலையும் அடியொற்றி எழுதப்பட்டது. இந்நூல், 35 பொருள் அணிகளையும், 2 சொல்லணிகளையும் பற்றிக் குறிப்பிடுகிறது. காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு ஆகும்.

இலக்கண விளக்கம்

திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டது இந்நூல். இதன் கருத்துகள் பெரும்பாலும் முன்னூல்களில் கூறப்பட்டவற்றின் தொகுப்பாகவே உள்ளன. தொல்காப்பியக் கருத்துகள் கால மாற்றத்திற்கேற்ப, சுருக்கியும் பெருக்கியும் கூறப்படுதலின் இதனைக் குட்டித் தொல்காப்பியம் எனவும் கூறுவர். அணி இலக்கணப் பகுதி பெரும்பாலும் தண்டியலங்காரத்தை் ஒட்டியதாகும், இதில் 35 பொருள் அணிகளும், 2 சொல்லணிகளும் இடம் பெற்றுள்ளன. காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியாகும்.

தொன்னூல் விளக்கம்

இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர் என்பவரால் இயற்றப்பட்டது இது. ஐந்திலக்கணக் கருத்துகளை விரித்துரைக்கும் நூல் இது. இதில் 30 பொருள்அணிகளும், 30 சொல்லணிகளும். கூறப்பெற்றுள்ளன இந்நூல், தற்குறிப்பேற்ற அணியை ‘ஊகாஞ்சித அணி’ எனச் சுட்டு்கின்றது. விடையில் வினா அணி, வினாவில் விடை அணி போன்ற புதிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டு ஆகும்.

முத்து வீரியம்

உறையூர் முத்துவீர உபாத்தியாயரால் இயற்றப்பட்டது இந்நூல். இதில் பொருளணிகள் 58, சொல்லணிகள் 14 என அணிகள் இடம் பெற்றுள்ளன. காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு ஆகும்.

சுவாமிநாதம்

சாமிகவிராசர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது இது. இதில் அணி இலக்கணப் பகுதி, அணி அதிகாரம் எனப் பெயர் பெற்றுள்ளது. இப்பகுதி, பொருள் அணி மரபு, சொல்லணிமரபு, அமைதிமரபு என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் 31 பொருள் அணிகளும், 23 சொல்லணிகளும் இடம் பெற்றுள்ளன. அமைதி மரபுப் பகுதி, சில வழுவமைதிகளை எடுத்துரைக்கின்றது. இதன் காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

அறுவகை இலக்கணம்

திருவாமாத்தூர் ‘வண்ணச்சரபம்’ தண்டபாணி சுவாமிகள் இயற்றிய நூல் இது. இந்நூலின் ஐந்தாவது இயலாக அணி இலக்கணம் விளங்குகிறது. இப்பகுதி உவமை, உடைமை, கற்பனை, நிகழ்ச்சி, ஆக்கம் ஆகிய ஐவகைப் பாகுபாடுகளைக் கொண்டுள்ளது. காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு ஆகும்.

இவ்வாறு அணி இலக்கணத்தைத் தம் ஒரு கூறாகக் கொண்டு திகழும் இலக்கண நூல்கள், சிறப்புற அணிகளைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

1.6 தனித்த அணி இலக்கண நூல்கள்

ஒரு துறைப் புலமையில் ஆழ்ந்த அறிவும், திட்பநுட்பமும் செறிந்திருக்க வேண்டும் என்று விரும்பிய இலக்கண ஆசிரியர்கள், இலக்கண வகைகளுள் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்     கொண்டு அதற்கு இலக்கணம் எழுதத் தொடங்கினர். அவ்வகையில்     அணி இலக்கணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அணிகளின் வகைகளைக் குறிப்பிட்டு, சான்றுப்பாடல்கள் இயற்றி நூல்கள் இயற்றத் தொடங்கினர்.

தண்டியலங்காரம், மாறனலங்காரம் எனத் தமிழின் நீர்மை (இயல்பு)க்கேற்ப அமைந்தனவும்,     சந்திராலோகம், குவலயானந்தம், தொனி விளக்கு, சித்திரக்கவிகள் என வடமொழி நூல்களின் மொழி பெயர்ப்பாக அமைந்தனவும் இவ்வகையில் அடங்கும். இவற்றைப் பற்றியும், கிடைக்கப் பெறாத அணி நூல்கள் சிலவற்றைப் பற்றியும் இங்குக் காண்போம்.

தண்டியலங்காரம்

வீரசோழியத்தை அடுத்துத் தோன்றியது இந்நூல். தண்டி என்பவரால் இயற்றப்பட்டது இது. தொல்காப்பியத்தையும், வடமொழி நூலாகிய காவியாதரிசத்தையும் அடியொற்றி எழுதப்பட்டது. இதில் 35 பொருள் அணிகளும், 2 சொல்லணி களும் இடம் பெற்றுள்ளன. காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு ஆகும்.

மாறனலங்காரம்

திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் இயற்றப்பட்டது இந்நூல். ‘மாறன்’ என்பது நம்மாழ்வாரின் பெயர்களுள் ஒன்று. இந்நூலாசிரியர் நம்மாழ்வார் மீது கொண்ட பக்தியின் காரணமாக, நூலுக்கு, மாறனலங்காரம் எனப் பெயரிட்டுள்ளார். இந்நூல், தண்டியலங்காரத்தைப் பெரிதும் அடியொற்றியது. இதில் 64 பொருள் அணிகளும், 2 சொல்லணிகளும் இடம் பெற்றுள்ளன. காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு ஆகும்.

சந்திராலோகம்

திருத்தணிகை விசாகப் பெருமாள் ஐயர், சந்திராலோகம் என்னும் வடமொழி நூலை, அதே பெயரில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இது, 100 பொருள் அணிகளையும், 2 சொல்லணிகளையும் கொண்டுள்ளது. காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு ஆகும்.

குவலயானந்தம்

அப்பைய தீட்சிதரால் இயற்றப்பட்டது இந்நூல். இது, சந்திராலோகத்தின் வடமொழி உரையாகும். இது தமிழில் அதே பெயருடன் வந்துள்ளது. இதனைச் சண்முக சிகாமணிக் கவிராயர் இயற்றினார். இது 120 பொருள் அணிகளைக் கொண்டுள்ளது. இதன் காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு ஆகும்.

தொனிவிளக்கு

ஆனந்தவர்த்தனர் வடமொழியில் தொன்யாலோகம் என்னும் அணிஇலக்கண நூலை இயற்றியுள்ளார். அதனைத் தொனிவிளக்கு எனத் தமிழில் பின்னங்குடி சா.சுப்பிரமணிய சாத்திரியார் மொழி பெயர்த்துள்ளார். இவர் காலம் கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

சித்திரக்கவிகள்

இவை, சொல்லணி வகையைச் சார்ந்தனவாகும். கி.பி. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தனவாகும்.

சித்திரக்கவி     -   நா.க.உ. கல்விக் களஞ்சியப்புலவர்

சோடச பங்கி, இரட்டை நாகபந்தம்    -  திரு.கா.மு. செட்டியார்

மாலைமாற்று ஏகபாதம்    -  வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்

சித்திரக்கவிப் புஞ்சம்    -    மதுரகவிப்புலவர்

மாலை மாற்று மூலம்     -  சோழவந்தான் அ. சண்முகம்பிள்ளை

கிடைக்கப் பெறாத அணி நூல்கள்

மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள், மறைந்துபோன தமிழ் நூல்கள் என்னும் நூலில் மறைந்துபோன இலக்கண நூல் பெயர்கள் பலவற்றைச் சுட்டுகிறார். அவற்றுள் அணி இலக்கண நூல்களாகக் கருதப்படுபவை     1. அணியியல், 2.கவிமயக்கறை, 3. புணர்ப்பாவை,     4. போக்கியம், 5. இரணியம்,    6. வதுவிச்சை,     7. பெரிய முப்பழம் ஆகியனவாகும். இவை வருங்காலத்தில் கிடைக்கப் பெறும் என நம்புவோம்.

1.7 தண்டியலங்காரம்

தொல்காப்பியத்தை அடுத்து அணி இலக்கணம் பயிலப் பெரிதும் பயன்படுவது தண்டியலங்காரம் ஆகும். இது     தொல்காப்பியத்தையும், வடமொழி காவியா தரிசத்தையும் அடியொற்றி எழுதப்பட்டது. இக்கருத்தை,

பன்னிரு புலவரில் முன்னவன் பகர்ந்த

தொல்காப் பியநெறி பல்காப் பியத்தும்

அணிபெறும் இலக்கணம் அரிதினில் தெரிந்து

வடநூல் வழிமுறை மரபினில் வழாது

எனவரும் தண்டியலங்காரச் சிறப்புப் பாயிரத்தால் அறியலாம்.

1.7.1 தண்டியலங்காரம் – நூலமைப்பு இந்நூல்,     பொதுவணியியல்,     பொருள்அணியியல், சொல்லணியியல் என மூன்று பிரிவுகளை உடையது. இவற்றுள் பொதுவணியியல் செய்யுள் வகைகளையும், செய்யுள் நெறிகளையும் பற்றி விவரிக்கின்றது. பொருள்அணியியல் தன்மை அணி முதல் பாவிக அணி வரையில் உள்ள முப்பத்தைந்து பொருள் அணிகளை விளக்குகின்றது. சொல்லணியியல் மடக்கு அணி, சித்திரக்கவி என்னும் இரண்டு சொல்லணிகளைப் பற்றி எடுத்துரைக்கிறது. வழு, மலைவு பற்றிய கருத்துகளும் சொல்லணியியலில் இடம் பெற்றுள்ளன.

நூலாசிரியர் தண்டி அவர்கள், அணிகளின் வகைகள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டு வெண்பாக்களை எழுதி யுள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும். இதிலுள்ள நூற்பாக்கள் ‘நூற்பா’ யாப்பில் அமைந்தவையாகும்.

1.7.2 தண்டியலங்காரமும் அணியியலும் தண்டியலங்காரம்     அணியின்      இலக்கணத்தை எடுத்துரைப்பதால் அணியதிகாரம் எனவும் கூறப்படும். அணியியல் என்னும் பெயரும் தண்டியலங்காரத்துக்கு உரியது என்பர். சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையில் காணலாகும் நூற்பாக்களும், மாறனலங்கார    உரையில் காணலாகும் நூற்பாக்களும் ‘அணியியல்’    நூலுக்குரியவை     என்பர். அந்நூற்பாக்கள் தண்டியலங்காரத்திலும் இடம் பெறுதலின் அணியியல் என்பது தண்டியலங்காரத்தின் வேறு பெயரே எனக் குறிப்பிடுவர்.

ஆனால், யாப்பருங்கல விருத்தி உரையும், நேமிநாத விருத்தி உரையும் சுட்டும் ‘அணியியல்’     நூற்பாக்கள், தண்டியலங்காரத்தில் இடம்    பெறவில்லை.     ஆதலால், அணியியல் என்பது தண்டியலங்காரத்திற்கு முற்பட்ட நூலாக இருந்திருக்கலாம் என்றும் அதிலுள்ளவற்றைத் தண்டியலங்கார ஆசிரியர் மேற்கோளாகக் கொண்டிருக்கலாம் என்றும் அறிஞர் குறிப்பிடுவர்.

எனவே, அணியியல்    என்பது,     தண்டியலங்காரத்தி லிருந்து வேறான நூல், அதற்கு முற்பட்ட நூல் என்பது தெரிய வருகிறது.

1.7.3 தண்டியலங்கார நூலாசிரியர் வடமொழியில் உள்ள அணி    இலக்கண நூலாகிய காவியாதரிசம் என்பதன் ஆசிரியர் தண்டி என்பவராவார். தமிழிலுள்ள தண்டியலங்கார அணி இலக்கண நூலின் ஆசிரியர் பெயரும்    தண்டி என்றே காணப்படுகிறது. இப்பெயர், இவரது இயற்பெயரா? வடமொழி ஆசிரியர் மீது கொண்ட அன்பால் தாமே வைத்துக் கொண்ட புனைபெயரா? அறிஞர்கள் பாராட்டி வடநூல் தண்டிக்கு இணையானவர் எனப் போற்றிய புகழ்ப் பெயரா? என வரையறுத்துக் கூற இயலவில்லை.

தண்டியலங்காரச் சிறப்புப்பாயிரம், இவரைக் கவிச் சக்கரவர்த்தி கம்பரின் பெயரன் ; அம்பிகாபதியின் மகன்; வடமொழி, தென் மொழிகளில் வல்லவர்; சோழநாட்டினர் எனச் சுட்டுகின்றது. நூலில் காணப்படும் சோழன் பெயரில் அமைந்த எடுத்துக்காட்டு வெண்பாக்களான 45 பாடல்களில் அனபாயன் என்னும் பெயரைக்    குறிப்பிடுபவை    6 பாடல்களாகும். அனபாயன் என்னும் பெயர், கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் அரசுபுரிந்த இரண்டாம்    குலோத்துங்க சோழனைக் குறிப்பதாகும். இந்நூல் அனபாயன் அவையில் அரங்கேற்றப் பட்டது எனவும் சிறப்புப்பாயிரம் குறிப்பிடுகின்றது.

1.7.4 தண்டியலங்காரத் தனிச்சிறப்புகள் ‘தண்டியாசிரியர், நூற்பாவும் செய்து, உரையும் உதாரணமும் எழுதினார்’ என்று கி.பி. 18 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிரயோகவிவேகம்    என்னும்    நூல்    குறிப்பிடுகின்றது. தண்டியலங்கார உதாரணப் பாடல்கள் இலக்கணக் கருத்துக்குப் பொருத்தமானவை ; எளிமையானவை.

காப்பிய இலக்கணம் பற்றிப் பல அரிய செய்திகளை இது எடுத்துரைக்கின்றது.

கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தி.ஈ.சீனிவாச ராகவாச்சாரியார், தண்டியலங்காரக் கருத்துகளைத் தொகுத்து, ‘தண்டியலங்கார சாரம்’ என்னும் வசன உரைநடை நூலை எழுதியுள்ளார்.

இவை இந்நூலின் தனிச்சிறப்புகளாகும்.

1.7.5 தண்டியலங்கார உரையும் பதிப்பும் தண்டியலங்காரத்திற்குப் பழைய உரைஒன்று சுப்பிரமணிய தேசிகரால் இயற்றப்பட்டது. இதனை அடியொற்றியே பிற உரைகளும் பதிப்புகளும் தோன்றின.

வை.மு. சடகோப ராமாநுஜாச்சாரியார் உரை     - கி.பி. 1901

இராமலிங்கத் தம்பிரான் குறிப்புரை – கழகம்     - கி.பி. 1938

சி.செகந்நாதாச்சாரியார் (சொல்லணி) உரை     - கி.பி. 1962

புலவர் கு. சுந்தரமூர்த்தி (பாடபேத உரை)     - கி.பி. 1967

புலியூர்க் கேசிகன் எளிய உரை     - கி.பி. 1989

வ.த. இராம சுப்பிரமணியம் உரை     - கி.பி. 1998

1.8 தொகுப்புரை

அணி இலக்கணம், மொழிகள்அனைத்திற்கும் பொதுவானது. தொல்காப்பிய     உவமவியல் அணி இலக்கணம் பற்றி எடுத்துரைக்கிறது. அதற்கு முன்பும் அணி பற்றிய சிந்தனை இருந்துள்ளது. ஐந்திலக்கண நூல்களும், தனி அணி இலக்கண நூல்களும் அணிகள் பற்றி எடுத்துரைக்கின்றன. பிற்காலத்தில் எழுந்த அணி இலக்கண நூல்கள் வடமொழி இலக்கணத்தைத் தழுவியே அமைந்துள்ளன. அணி இலக்கண நூல்கள் சில கிடைக்கப் பெறவில்லை.

காலந்தோறும் பொருள் அணிகளும், சொல்லணிகளும் வளர்ந்து வந்துள்ளமையைக் கண்டோம். அணி இலக்கண நூலான தண்டியலங்காரம் பற்றிய சிறப்புகளைத் தெளிவாக அறிந்தோம்.

பாடம் - 2

செய்யுள் வகை

2.0 பாட முன்னுரை

செய்யுள் நூல்களைச் சுவையுணர்ந்து படிக்கவும், சுவை அமையப் படைக்கவும் இலக்கண நூல்கள் இயற்றப்பட்டன. எழுத்திலக்கணமும்,    சொல்லிலக்கணமும் கற்ற     பிறகு, இலக்கியத்தின் பாடுபொருள் ஆகின்ற காதலும் வீரமும் குறித்து அறிந்துணரப் பொருளதிகாரத்தைப் படைத்தார் தொல்காப்பியர். அதில் அகத்திணையியல், புறத்திணையியல் போன்றவை செய்யுளுக்குரிய     கருத்தைப் (பாடுபொருள்) பற்றி உரைக்கின்றன. செய்யுளியல், கருத்தினை வெளிப் படுத்துவதற்கான செய்யுள் வடிவம் பற்றி விளக்குகின்றது. மெய்ப்பாட்டியல், உவமவியல் போன்றன    கருத்தை வடிவமாக்கும்போது கற்போர் விரைந்து புரிந்து கொள்ளவும், சுவையுணர்ந்து உளம் மகிழவும் செய்யுள் அமைக்கப்படும் முறையை     எடுத்துரைக்கின்றன.     இக்கருத்து, பிற்கால அகப்பொருள், புறப்பொருள், யாப்பு, அணி இலக்கண நூல்களுக்கும் பொருந்தும்.

தண்டியலங்காரம், மிகச் சிறந்த அணி இலக்கண நூலாகத் திகழ்கின்றது. தண்டியலங்காரம் விளக்கும் அணி இலக்கணக் கருத்துகளை அறிந்து கொள்வதற்கு முன், அவ்வணிகள் அமைந்து விளங்கும் செய்யுள்களின் வகையைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

கருத்துக்கும் செய்யுளுக்கும் இடையிலான தொடர்பின் அடிப்படையில்     செய்யுள்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தண்டியலங்காரப் பொதுவணியியல் குறித்தும், அவ்வியலில் கூறப்படும் செய்யுள் வகை குறித்தும் இப்பாடப் பகுதியில் காண்போம்.

2.1 பொதுவணியியல்

தண்டியலங்காரம், பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் முதலாவதாகத் திகழ்வது பொதுவணியியல் ஆகும். இது, பொதுவியல் எனவும் கூறப்படும்.

2.1.1 பொதுவணியியல் – விளக்கம் பொருளணியியலுக்கும், சொல்லணியியலுக்கும் பொதுவான இலக்கணத்தை எடுத்துரைப்பதால் இது, பொதுவணியியல் எனப் பெயர் பெற்றது.

2.1.2 பொதுவணியியலின் தேவை தனிப்பாடல், தொகைப்பாடல் எனப் பல நிலைகளிலும் இலக்கியங்கள் அமைகின்றன. சொல்லால்    தொடர்தலும், பொருளால் தொடர்தலும் எனச் செய்யுள்கள் தொடர்புடையன வாக அமைவதை அறிந்து கொள்வதும் இன்றியமையாதது ஆகும்.

காப்பியம், அந்தாதி போன்றவற்றிற்கான அமைப்பையும், செய்யுளுக்கான சொல்லமைப்பு வகைகளையும் அறிவிப்பது பொதுவணியியலாகும். இதனை அறிந்து கொண்டால்தான் பழைய இலக்கியங்களின் சிறப்பை உணர்ந்து அவற்றைப் படிக்கவும், புதியதாக இலக்கியங்களை படைக்கவும் இயலும். எனவே, பொதுவணியியல் மிக அவசியமாகின்றது.

2.1.3 பொதுவணியியலும் தண்டியலங்காரமும் தண்டியலங்காரத்தின் பொதுவணியியல், 25 நூற்பாக்களைக் கொண்டுள்ளது. செய்யுள்வகை, செய்யுள் நெறி என்னும் இருபெரும் பிரிவுகளாக இது அமைந்துள்ளது. அவற்றுள் செய்யுள் வகைப்பகுதி, காப்பிய இலக்கணம் போன்றவற்றை விவரிக்கின்றது. தமிழில் காப்பிய இலக்கணம் குறித்து எடுத்துரைக்கும் முதல் இலக்கண நூல் தண்டியலங்காரமே ஆகும். இதனைப் பின்பற்றியே மாறனலங்காரம், பாட்டியல் நூல்கள் போன்றன காப்பியம் பற்றி விளக்கம் அளிக்கின்றன.

செய்யுள் நெறிப்பகுதி, செய்யுளின் சொல்லமைப்பு குறித்த வைதருப்ப நெறி, கௌடநெறி என்னும் இருவகை நெறிகளைப் பற்றி விவரிக்கின்றது.

2.2 செய்யுள் வகை

செய்யுள் அமையும் முறையைச் செய்யுள் வகை என்னும் பகுதி எடுத்துரைக்கின்றது. செய்யுள் அமைப்பை அறிந்து கொண்ட பிறகே, அணியிலக்கணம் பற்றிய கருத்துப் பயன் தரும் ஆதலின் செய்யுள் வகை முதலில் கூறப்படுகின்றது.

எவ்வகைப்பட்ட பாடல்களும்     முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய நான்கு வகைகளுள் ஒன்றாக அமையும். இவற்றுள், முத்தகம். குளகம் ஆகியன வடமொழிப் பெயர்கள் என்பர். தொகைநிலை, தொடர்நிலை ஆகியன தமிழ்ப் பெயர்களாகும்.

செய்யுள் என்பவை தெரிவுற விரிப்பின்

முத்தகம் குளகம் தொகைதொடர் நிலைஎன

எத்திறத் தனவும் ஈரிரண் டாகும்

(தண்டியலங்காரம் : நூற்பா :2)

(தெரிவுற = விளக்கமாக

விரிப்பின் = விவரித்தால்

ஈரிரண்டு = நான்கு)

செய்யுள் வகை நான்கும் குறித்து இனி விரிவாகக் காண்போம்.

2.3 முத்தகச் செய்யுள்

முத்தகச் செய்யுள் என்பது தனியே நின்று ஒருபொருள் தந்து முற்றுப் பெறுவது ஆகும். அதாவது பாடற்கருத்து, ஒரே செய்யுளில் எழுவாயும் பயனிலையுமாக அமைந்து முற்றுப் பெறுவதாகும்.

அவற்றுள் முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும்

(நூற்பா : 3)

எனவரும் நூற்பா இக்கருத்தை விளக்கும்.

2.3.1 முத்தகச் செய்யுள் – சான்று என்ஏய் சிலமடவார் எய்தற்கு எளியவோ?

பொன்னே ! அநபாயன் பொன்நெடுந்தோள் – முன்னே

தனவேஎன்று ஆளும் சயமடந்தை தோளாம்

புனவேய் மிடைந்த பொருப்பு

(ஏய்     =    போன்ற ; உவமஉருபு

பொன்னே    =    பொன் போன்றவளே ; மகடூஉ முன்னிலை

தனவே     =    தன்னுடையதே

சயமடந்தை    =    வெற்றிக்கு உரிய கொற்றவை

புனவேய்     =    காட்டுமூங்கில்

மிடைந்த    =    நெருங்கிய

பொருப்பு    =    மலை)

பொன்போன்ற பெண்ணே! அநபாய சோழனின் அழகிய பெரியதோள் மலைபோன்றது. கொற்றவையின் மூங்கில் போன்ற தோள்கள் நெருங்கிச் சேர்ந்திருக்கும் மலை அது.

அந்தக் கொற்றவை தனக்கே உரியதெனக் கருதி, அநபாயன் தோளில் பிரியாமல் தங்கியிருப்பாள். அத்தகைய தோள்கள் என்னைப் போன்ற பெண்களால் அடைவதற்கு எளியதாக இருக்குமோ? இருக்காது. (இது, அநபாய சோழன் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தோழியிடம் கூறியதாக அமைந்த பாடல் ஆகும்)

இப்பாடலில், தோள் ஆகிய பொருப்பு என்னும் எழுவாய், எய்தற்கு எளியவோ என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்தது. சொற்றொடரும் ஒரே பாடலில் முற்றுப் பெற்றது. பாடல் கருத்தும் அடுத்த பாடலைத் தேடித் தொடராமல், ஒரே பாடலில் முடிவுற்றது. எனவே, இது முத்தகச் செய்யுள் வகை ஆயிற்று.

முத்தகச் செய்யுள் நூல்கள்

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றுள் காணப்படும் பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்தனிப் பாடல்களாகக் கருதப்படும் நிலையில் அவை முத்தகச் செய்யுள் அமைந்த நூல்களே ஆகும்.

தனிப் பாடல்கள், நீதி     நூல்களில் தனித்தனிக் காணப்படும் செய்யுள்கள் இவ்வகையினவே. பக்தி இலக்கியப் பாடல்களும், மறுமலர்ச்சிப் பாடல்களும் இவ்வகையினவே ஆகும்.

2.4 குளகச் செய்யுள்

பல பாடல்கள் ஒருவினையைக் கொண்டு முடியுமாறு அமைந்து வருவது குழுவகச் செய்யுள் வகையாகும். ஒரே பாடலில் கருத்தும், சொற்றொடர் அமைப்பும் முற்றுப் பெறாமல், எச்சமாக அமைந்து, பல பாடல்கள் ஒருங்கிணைந்த நிலையில் முற்றுப் பெறுவது இவ்வகையாகும்.

குளகம் பலபாட்டு ஒருவினை கொள்ளும்

(தண்டியலங்காரம்-4)

என்பது நூற்பா.

பல பாடல்கள் தொடர்ந்து ஒரு வினையைக் கொண்டு முற்றுப் பெறுவதோடு அல்லாமல், ஒரு பெயரினைக் கொண்டு முற்றுப் பெறுவதும் இவ்வகையில் அடங்கும். அதாவது, நூற்பாவில் இடம்பெறும் ‘வினை’ என்பது முடிக்கும் சொல்லைக் குறிக்கும். அச்சொல் பெயர்ச்சொல்லாகவும் அமையலாம் ; வினைச் சொல்லாகவும் அமையலாம் என்பது கருத்து.

குளகச் செய்யுள் வகைகள்

பாடல்கள் பல தொடர்ந்து நின்று, ஒரே வினைமுடிவைப் பெறுவது குளகம் எனக் கூறப்பட்டுள்ளதே தவிர எத்தனைப் பாடல்களில் முடிவு பெற வேண்டும் என வரையறை குறிக்கப் பெறவில்லை. எனினும் உரையாசிரியர்கள், வடநூல் கருத்தைக் கருத்தில் கொண்டு வகைப்படுத்தியுள்ளனர். எண்ணிக்கையின் அடிப்படையில் விசேடம், கலாபம் முதலிய பெயர் தந்திருக்கிறார்கள்.

2.4.1 குளகச் செய்யுள் – சான்று குளகச் செய்யுள் வகையில் எண்ணிக்கைக்கேற்ப வெவ்வேறு பெயர்கள்     உரையாசிரியர்களால் கூறப்பெற்றிருப்பினும், நூலாசிரியரின் கருத்திற்கேற்ப,     ஒன்றுக்கு மேற்பட்ட செய்யுள்களில் சொற்றொடரும் பொருள்முடிவும் இடம்பெறுவது குளகம் எனக்கொண்டு, இருசெய்யுட்கள் ஒருவினை கொண்டு முடிவதையும்,     இரு     செய்யுட்கள் ஒருபெயர் கொண்டு முடிவதையும் இங்குச் சான்றாகக் காண்போம்.

வினைகொண்டு முடிதல்

தருமன் உரைகேட்ட தாமரைச்செவ் வாயன்

பெருமைச் சகதேவன் பேச – ஒருமையுறும்

நெஞ்சினனாய்த் தான்சென்று நேராய்த் தனியிடத்தே

விஞ்சிடவே ஏகிநிற்கும் வேளை

ஆங்குஅவனும் காட்சிபல ஆற்றுவிக்க நன்மருகன்

தாங்கரிய அன்பால் தனைக்கட்ட – ஓங்கிவளர்

கண்ணபிரான் நல்லருளைக் காட்டுவித்தான் பாண்டவரைத்

திண்ணம்எனக் காக்கும் திறத்து,

(தாமரைச் செவ்வாயன் = கண்ணபிரான்

நன்மருகன் = சகதேவன்)

வனவாசம் முடிந்த நிலையில், போர்நிகழாமல் நாட்டைப் பெறவேண்டும் என்று தருமன் கருதுகிறான்.

‘தருமனின் கருத்தைக் கேட்டறிந்த கண்ணபிரான், தன்னிடத்தில் தனித்துப் பேச விரும்பிய சகதேவனின் எண்ணத்திற்கு உடன்பட்டுத் தனித்து நிற்கும் பொழுது’

‘போரில் வெற்றி தோல்வியும், மரணம் அடைதலும் இருபக்கத்தினருக்கும் பொதுவாதலால், சகதேவன் அன்பின் வயத்தால் கண்ணபிரானைக் கட்டுக்குள் ஆழ்த்தி, பாண்டவர் ஐவரும் மரணம் அடையாமல் இருக்கவும் போரில் வெற்றி அடையவும் உறுதி பெற்றுக் கொள்கிறான்.’

இவை அவ்விரண்டு பாடல்களின்     கருத்தாகும். முதற்பாடலின் தாமரைச் செவ்வாயன் என்னும் எழுவாய், அடுத்த செய்யுளில் ஆற்றுவிக்க என்னும் வினைக்குத் தொடர்புடையதாகிறது. இருபாடல்கள் சேர்ந்து ஒரு கருத்தினை விளக்கி நிற்கின்றன.

பெயர் கொண்டு முடிதல்

முன்புலகம் ஏழினையும் தாயதுவும், மூதுணர்வோர்

இன்புறக்கங் காநதியை ஈன்றதுவும் – நன்பரதன்

கண்டிருப்ப வைகியதும், கான்போ யதும்இரதம்

உண்டிருப்பார் உட்கொண் டதும்

வெந்த கரியதனை மீட்டுமக வாக்கியதும்

அந்தச் சிலையினைப்பெண் ஆக்கியதும் – செந்தமிழ்தேர்

நாவலன்பின் போந்ததுவும், நன்னீர்த் திருவரங்கக்

காவலவன் மாவலவன் கால்

(தாயது = தாவிஅளந்தது

மூதுணர்வோர் = துறவிகள்

கங்கா = கங்கை

கான் = காடு

இரதம் = (மெய்ஞ்ஞானச்) சுவை

உள் = உள்ளம்

மகவு = குழந்தை

சிலை = கல்

பெண் = அகலிகை

நாவலன் = திருமழிசை ஆழ்வார்

காவலவன் = காவலன்

மாவலவன் = குதிரை செலுத்துபவன்

கால் = திருவடி)

‘முன்பு ஒரு காலத்தில் மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூவடி மண் பெற்ற சூழலில் ஏழு உலகங்களையும் தாவி அளந்ததும், சான்றோர் மகிழக் கங்கை நதியைத் தோற்றுவித்ததும், பரதன் கண்டு போற்ற இராமனாகத் தோன்றிய நிலையில் தங்கியிருந்ததும், தசரதனின் கட்டளைக்கு இணங்கக் காடு சென்றதும், ஞானச் சுவையை உண்பவர்களின் உள்ளத்தில் நிலைத்திருப்பதும்’.

‘வெந்துவிட்ட கரியை மீண்டும் குழந்தையாக்கியதும், கல்லாய்க் கிடந்த அகலிகையை மீண்டும் பெண்ணாக ஆக்கியதும், திருமழிசை ஆழ்வாரின் பாடல் கேட்டு, அவர்தம்    வேண்டுகோளுக்கு இணங்க அவரைப் பின் தொடர்ந்ததும், நல்ல காவிரி சூழ்ந்த திருவரங்கப் பெருமானாகிய குதிரை செலுத்துவதில் வல்ல திருமாலின் திருவடியாகும்’.

இது இருபாடல்களின் திரண்ட பொருளாகும். தாவியது, ஈன்றது, வைகியது, உட்கொண்டது, மகவாக்கியது, பெண் ஆக்கியது, போந்தது என இரு பாடல்களிலும் தொடர்ந்து அமைந்த வினைமுற்றுகள் இரண்டாம் பாடலின் இறுதியில் அமைந்த கால் என்னும் பெயர்ச்சொல்லைக் கொண்டு முற்றுப் பெற்றன.

இவ்வாறு குளகச் செய்யுட்கள் வினை கொண்டும், பெயர் கொண்டும் முடிவனவாக உள்ளன.

குளகச் செய்யுள் நூல்கள்

சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம், நளவெண்பா முதலான காப்பிய நூல்கள் குளகச் செய்யுள்வகை அமைந்த நூல்களாகும்.

விருத்தம், வெண்பா என்னும் யாப்பு அமைந்த நூல்களில் குளகச் செய்யுள்கள் மிகுந்து காணப்படும்.

தல புராணங்களிலும் குளகச்     செய்யுள் வகை அமைந்திருப்பதைக் காணலாம்.

2.5 தொகைநிலைச் செய்யுள்

பல பாடல்கள் ஒருங்கு தொகுக்கப்பட்டு அமைவது தொகைநிலைச் செய்யுள் ஆகும். எட்டுத்தொகை என அமைந்த சங்க இலக்கியத் தொகுப்புப் போன்றன இவ்வகையுள் அடங்கும்.

தொகுதல் என்பதன் பொருள் சேர்தல், கூடுதல் என்பனவாகும். ஒரு செய்யுள் சொல் அளவிலோ பொருள் அளவிலோ அடுத்த செய்யுளை எதிர்பார்க்காமல் தனித்து அமைய, அவ்வாறான செய்யுள்கள் ஒற்றுமை நயம் கருதி ஒரு சேரத் தொகுக்கப்படுதல் தொகைநிலைச் செய்யுள் எனப்படும்.

2.5.1 தொகைநிலைச் செய்யுள் வகை ஒருவரால் பாடப்பட்டன, பலரால் பாடப்பட்டன, பொருளால் தொகுக்கப்பட்டன, இடத்தால் தொகுக்கப்பட்டன, காலத்தால் தொகுக்கப்பட்டன, தொழிலால் தொகுக்கப்பட்டன, பாட்டு வகையால் தொகுக்கப்பட்டன, அளவால் தொகுக்கப்பட்டன என எட்டு வகைகளில் தொகைநிலைச் செய்யுள்கள் அமைகின்றன.

எட்டு வகைகளுக்குமான சான்றுகள் பின்வருமாறு :

ஒருவரால் பாடப்பட்டன

ஒருவரால் பாடப்பட்ட பல்வேறு பாடல்களின் தொகுப்பாக அமைவது.

சான்று : திருக்குறள்

திருவள்ளுவர் என்னும் புலவர் ஒருவரால் பாடப்பட்ட 1330 குறட்பாக்களின் தொகுப்பு இந்நூல்.

பழமொழி நானூறு, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி, நன்னெறி, நீதிநெறிவிளக்கம் போன்ற நூல்கள் அனைத்தும் ஒருவரால் பாடப்பட்டுத் தொகுக்கப்பட்டவையாகும்.

பலரால் பாடப்பட்டன

புலவர் பலரால் பாடப்பட்ட பாடல்கள் ஒரு நூலாகத் தொகுக்கப்படுவது.

சான்று : நெடுந்தொகை (அகநானூறு)

கபிலர், பரணர், ஒளவையார் முதலான புலவர் பலரின் பாடல் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது.

நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, கலித்தொகை போன்ற தொகைநூல்கள் அனைத்தும் இவ்வகையில் அடங்கு வனவாகும்.

பொருளால் தொகுக்கப்பட்டன

பாடுபொருளின் அடிப்படையில் பல பாடல்கள் ஒருநூலாகத் தொகுக்கப்படுதல்.

சான்று : புறநானூறு

வீரம், கொடை, புகழ் போன்றவற்றை உள்ளடக்கியது புறப்பொருளாகும். புறப்பொருள் அமைந்த பாடல்களின் தொகுப்பாகப் புறநானூறு அமைகின்றது.

அகநானூறு, நற்றிணை போன்ற நூல்களும் அகப்பொருள் பற்றிய பாடல்களைக் கொண்டிருப்பதால் இவ்வகையில் அடங்கும்.

இடத்தால் தொகுக்கப்பட்டன

ஓர் இடத்தில் நிகழப் பெற்ற நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக அமைவன.

சான்று : களவழி நாற்பது

போர்க் களத்தில் நிகழ்ந்த போர்ச் செயல்களை விரித்துரைக்கும்    செய்யுள்களின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது.

ஏர்எழுபது போன்ற நூல்கள் இவ்வகைக்குத் தக்க சான்றுகள் ஆகும்.

காலத்தால் தொகுக்கப்பட்டன

ஒரு காலத்து நிகழும் நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பு.

சான்று : கார்நாற்பது

கார்காலம் ஒன்றினையே மையப்படுத்திப் பாடும் பாடல்களின் தொகுப்பாக அமைதலின் இவ்வகையில், இந்நூல் அமைந்தது.

தொழிலால் தொகுக்கப்பட்டன

ஒரு தொழில் உணர்த்தும் பாடல்கள் பல ஒருங்கு தொகுக்கப்படுதல்.

சான்று : ஊஞ்சல்

ஊஞ்சலாடுதல் ஆகிய தொழில் குறித்த பாடல்களை ஒருங்கு கொண்டது இது.

அம்மானை, தெள்ளேணம் போன்றனவும் இவ்வகையில் அடங்கும்.

பாட்டு வகையால் தொகுக்கப்பட்டன

பாட்டின் வகையைக் கருத்திற்கொண்டு, ஒரே வகையான பாட்டால் தொகுக்கப்படுதல்.

சான்று : கலித்தொகை

கலிப்பா என்னும் பாட்டில்(பா வகையில்) அமைந்த பாடல்களின் தொகுப்பு நூலாகக் கலித்தொகை உள்ளது.

பரிபாடல் போன்றன இவ்வகையில் அடங்கும்.

அளவால் தொகுக்கப்பட்டன

பாடலின் அடிவரையறையைக் கொண்டும், எண்ணிக்கையைக் கொண்டும் பாடல்கள் பல தொகுக்கப்படுவது.

சான்று : குறுந்தொகை

குறுகிய அடிகளையுடைய பாடல்களின் தொகுப்பு நூலாதலின் இது குறுந்தொகை எனப்பட்டது. 4 முதல் 8 அடி வரையிலான பாடல்கள் கொண்டது இந்நூல்.

இவ்வாறு தொகை     நிலைச்     செய்யுள்    எட்டு வகைகளில் அமைவதைத்    தண்டியலங்காரம் பின்வரும் நூற்பாவால் குறிப்பிடுகிறது.

தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின்

ஒருவர் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்

பொருள்இடம் காலம் தொழில்என நான்கினும்

பாட்டினும் அளவினும் கூட்டிய வாகும்

(தண்டியலங்காரம் : 5)

(தோன்ற = தெளிவாக அறியுமாறு

பகர்ந்தவும் = கூறியனவும்)

2.5.2 தொகைநிலைச் செய்யுள் நூல்கள் தொகைநிலைச் செய்யுள் வகைகள் குறித்து விளக்கம் கண்டபோதே அவற்றிற்கான சான்று நூல்களையும் அறிந்து கொண்டோம். அவ்வாறு சுட்டப்பெற்ற நூல்களில் ஒரே நூலே பல தொகைநிலைச்     செய்யுள் வகைக்கும் சான்றாக அமைவதையும் காண்கிறோம்.

ஒரே நூல் பல தொகைநிலைச் செய்யுள் வகைக்குச் சான்றாவது பின்வருமாறு :

குறுந்தொகை

அகப்பொருள், பாடல் அளவு, பலர் உரைத்தது.

கலித்தொகை

அகப்பொருள், பாட்டு வகை, பலர் உரைத்தது.

திருக்குறள்

நீதிநூல், பாட்டு வகை, ஒருவர் உரைத்தது.

இவ்வாறு ஒரே நூலே பலவகைகளுக்கும் சான்றாக அமைவதை உணர்ந்து வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2.6 தொடர்நிலைச் செய்யுள்

ஒரு செய்யுளும் அடுத்த செய்யுளும் சொல்லாலோ, பொருளாலோ ஒன்றற்கு ஒன்று தொடர்புடையதாக அமையும் செய்யுள் வகை, தொடர்நிலைச் செய்யுள் எனப்படும்.

முன்நின்ற     செய்யுளோடு     எவ்விதப் பொருள் எதிர்பார்ப்பும்    நெருக்கமும் இன்றிப் பல செய்யுள்கள் அடுத்தடுத்து அமையத் தொகுக்கப்படும் தொகைநிலைச் செய்யுளிலிருந்து வேறுபட்டு, ஒன்றை ஒன்று அவாவி (எதிர்பார்த்து)     நிற்குமாறு     தொடர்ந்து    அமையும் வகையாதலின் இது தொடர்நிலைச் செய்யுள் எனப் பெயர் பெற்றது.

சொற்றொடர் முடிவு ஒரு செய்யுளுக்குள்ளேயே முடிந்துவிடும் முத்தகச் செய்யுள்களும், சொற்றொடர் முடிவு ஒன்றுக்கு மேற்பட்ட செய்யுள்களில் தொடர்ந்து சென்று நின்று பொருள் முடிவு பெறும் குளகச் செய்யுள்களும் இத்தொடர்நிலைச் செய்யுள் வகை நூல்களின் பகுதியாக அமைவது இயல்பு.

தொடர்நிலைச் செய்யுள் இருவகைகளை உடையது. அவை பொருள் தொடர்நிலைச் செய்யுள், சொல் தொடர்நிலைச் செய்யுள் ஆகியனவாகும்.

பொருளினும் சொல்லினும் இருவகை தொடர்நிலை

(தண்டியலங்காரம் : 6)

2.6.1 பொருள் தொடர்நிலைச் செய்யுள் முன்செய்யுளோடு பின்செய்யுள் பொருளினால் தொடர்ந்து வரப்பெறுவது பொருள் தொடர்நிலைச் செய்யுள் ஆகும். ஏதேனும் ஒரு பொருளை மையப்படுத்தி அது தொடர்பான கருத்துகளை அடுத்தடுத்துத் தொடர்ந்து பல செய்யுட்களைக் கொண்டு எடுத்துரைத்து, இறுதியாக ஒரு செய்யுளில் அப்பொருள் முற்றுப் பெறுமாறு அமையும் இயல்புடையது இது.

ஒரு வரலாற்றைத் தொடர்ச்சியாக எடுத்துரைக்கும் நூல் இவ்வகைச் செய்யுள் அமைப்பைக் கொண்டு விளங்கும். அவ்வரலாறு நிகழ்ந்ததாகவும் இருக்கலாம். புனைந்துரையாகவும் இருக்கலாம்.

பெருங்காப்பியம், காப்பியம் ஆகிய இரண்டும் பொருள் தொடர்நிலைச் செய்யுளின் வகைகள் ஆகும். (இவை குறித்து அடுத்த பாடத்தில் காணலாம்).

பெருங்காப் பியமே காப்பியம் என்றாங்கு

இரண்டாய் இயலும் பொருள்தொடர் நிலையே

(தண்டியலங்காரம் : 7)

பொருள் தொடர்நிலைச் செய்யுள் நூல்கள்

(1) கம்பராமாயணம், வில்லிபாரதம் போன்ற இதிகாசக் கதைகளை விவரிக்கும் இலக்கியங்கள்.

(2) சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற வாழ்வியல் நிகழ்ச்சிகளை உள்ளிட்ட புனைந்துரைக்கப் பெற்ற காவியங்கள்.

(3) திருவிளையாடற் புராணம், காஞ்சிப் புராணம் முதலான புராண வரலாறுகளை விவரிக்கும் தலபுராணங்கள்.

(4) காந்திமகான் கதை, கவிராஜன் கதை போன்ற தலைசிறந்த தலைவர்களின் வாழ்வியல்களைச் சுவைபட உரைக்கும் இலக்கியங்கள்.

இவ்வாறு பொருள்தொடர்நிலைச் செய்யுள்கள் பலவகைகளில் அமைகின்றன.

பொருள் தொடர்நிலைச் செய்யுள் – சான்று

கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், கங்கைகாண் படலத்தில் இடம்பெறும் தொடர்நிலைச் செய்யுளின் ஒரு பகுதியைச் சான்றாகக் காண்போம்.

ஆடு கொடிப்படை சாடி அறத்தவ ரேஆள

வேடு கொடுத்தது பார்எனும் இப்புகழ் மேவீரோ

நாடு கொடுத்தஎன் நாயக னுக்கிவர் நாம்ஆளும்

காடு கொடுக்கில ராகி எடுத்தது காணீரோ

(ஆடு = அசைகின்ற

அறத்தவர் = இராமன்

வேடு = வேடர்கூட்டம்

எடுத்தது = படையெடுத்தது)

என்பன சொல்லி இரும்பன மேனியர் ஏனோர்முன்

வன்பணை வில்லினன் மல்உயர் தோளினன் வாள்வீரற்கு

அன்பனும் நின்றனன் நின்றது கண்டுஅரி ஏறுஅன்ன

முன்பனின் வந்து மொழிந்தனன் மூரிய தேர்வல்லான்

(ஏறு = ஆண்சிங்கம்

மூரிய = வலிய

தேர்வல்லான் = சுமந்திரன்

மல்உயர் = மற்போரில் சிறந்த

வன்பணை = வலிய, பெரிய)

கங்கைஇரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்

உங்கள்குலத் தனிநாதற்கு உயிர்த்துணைவன் உயர்தோளான்

வெங்கரியின் ஏறுஅனையான் வில்பிடித்த வேலையினான்

கொங்குஅலரும் நறுந்தண்தார்க் குகன்என்னும் குறிஉடையான்

(நாவாய் = படகு

குலத்தனிநாதன்= இராமன்

வெங்கரியின் ஏறு = ஆண்யானை

கொங்குஅலர் = தேன்சொரிகின்ற

தார் = மாலை

குறி = பெயர்)

இவற்றுள் முதற்பாடல்     குகனின்     வீரவுரையைக் குறிப்பதாகவும், அடுத்துள்ள இரண்டு பாடல்கள் சுமந்திரன், பரதனுக்குக் குகனைப் பற்றி அறிவிப்பதாகவும் அமைந்துள்ளன.

‘அசைகின்ற கொடிகளையுடைய தேருடன் வரும் (பரதனின்) படைகளைத் தோற்கடித்து, தருமமே வடிவான இராமன் மீண்டும் அரசாட்சி பெறுமாறு உதவி புரிந்தது வேட்டுவர் கூட்டம் என உலகம் நம் தொண்டினைப் புகழுமாறு போரிடுங்கள். நாட்டை ஆளுமாறு விட்டுக் கொடுத்த இராமனுக்குக் காட்டை ஆளவும் விடாமல், பின் தொடர்ந்து அழிக்க    வரும் படையின் கொடுமையை என்னென்பது’ என்கிறான் குகன்.

‘இவ்வாறு பல வீரவுரைகளை எடுத்துரைத்து, இரும்பு போன்ற வலிய உடலுடைய வேட்டுவ வீரர்முன், வலிய பெரிய வில்லேந்தியவனும், மற்போரில் வல்ல தோள்களை உடையவனும் ஆகிய குகன் நின்றான். அவன் நின்ற காட்சியைக் கண்ட ஆண்சிங்கம் போன்ற பரதனின் முன்னால் நின்று வலிய தேரினை இயக்கவல்ல சுமந்திரன் குகனைக் குறித்துக் கூறலுற்றான்.’

‘கங்கையாற்றின் இரண்டு     கரைகளுக்கும் உரிமை உடையவன்; எண்ணற்ற படகுகளை உடையவன் ; உங்கள் ரகுவம்சத்திற்கு ஒப்பற்ற தலைவனாகத் திகழும் இராமனுக்கு உயிர் நண்பனாகத்    திகழ்பவன்;    உயர்ந்த தோளை உடையவன்; ஆண்யானை போன்றவன்; வில்லேந்தியவன்; தேன் சொரியும் மணம்மிக்க மாலையை உடையவன்; குகன் என்னும் பெயருடையவன்’.

இவ்வாறு கதையானது, அடுத்து வரும் செய்யுள்களில், தொடர்ந்துவரக் காணலாம்.

2.6.2 சொல் தொடர்நிலைச் செய்யுள் முன்செய்யுளோடு பின்செய்யுள் சொல்லினால் தொடர்ந்து வரப்பெறுவது சொல் தொடர்நிலைச் செய்யுள் எனப்படும்.

அந்தாதியாகப் பாடப்படும் நூல்கள் இவ்வகையில் அமையும்.

செய்யுள் அந்தாதி சொல்தொடர் நிலையே

(தண்டியலங்காரம் : 12)

அந்தாதி – விளக்கம்

ஒரு செய்யுளின் இறுதியில் அமையும் எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்த பாட்டின் தொடக்கமாக அமைவது அந்தாதி எனப்படும்.

நூலில் தொடர்ந்து வரும் செய்யுள்களில் அந்தாதித் தொடை அமைந்து, நூலின் இறுதிப் பாடலின் இறுதி, நூலின் முதல் பாடலின் தொடக்கத்துடன் அந்தாதி அமைப்பில் தொடர்புடையதாக    அமையும். இவ்வாறு அமையும் முறையை, ‘மண்டலித்து முடிதல்’ என்று கூறுவர்.

சொல்தொடர்நிலைச் செய்யுள் – நூல்கள்

சொல்தொடர்நிலைச் செய்யுளுக்கு அந்தாதி, சதகம், கலம்பகம், பிள்ளைத்தமிழ் போன்ற சிற்றிலக்கியங்கள் சான்றாகும்.

சொல்தொடர்நிலைச் செய்யுள் – சான்று

காரைக்காலம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி யிலிருந்து சில சான்றுகள் காண்போம்.

பிறந்து மொழிபயின்ற பின்எல்லாம் காதல்

சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் – நிறம்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே !

எஞ்ஞான்று தீர்ப்பது இடர்     (அற்புதத் திருவந்தாதி:1)

(மொழி = பேச்சு

மை = கருமை

ஞான்ற = தங்கிய

கண்டம் = கழுத்து

எஞ்ஞான்று = எப்பொழுது

இடர் = பிறவித்துன்பம்)

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்

படரும் நெறிபணியா ரேனும் – சுடர்உருவில்

என்புஅறாக் கோலத்து எரிஆடும் எம்மானார்க்கு

அன்புஅறாது என்நெஞ்சு அவர்க்கு     (அற்புதத் திருவந்தாதி:2)

(களையார் = நீக்கார்

படரும் = பின்பற்றும்

சுடர்= நெருப்பு

என்புஅறா = எலும்புமாலை நீங்காத

கோலம் = வடிவம்

எரிஆடல் = நெருப்புஏந்தி ஆடுதல்

எம்மான் = தலைவன்)

அடுத்த பாட்டு

அவர்க்கே எழுபிறப்பும்…….. என்று தொடங்கும்.

இவ்வாறு அந்தாதிப் பாடல்கள் தொடர்கின்றன.

இப்பாடல்களின் திரண்ட கருத்தாவது :

‘பிறந்து பேசத்     தொடங்கிய நாளிலிருந்து நின் திருவடியிலேயே அன்பு கொண்டு நினைத்திருக்கின்றேன். கரிய கழுத்தையுடையவனே! தேவர் தலைவனாகிய சிவபெருமானே! என் பிறவித்துயரை நீ தீர்ப்பது எப்போது?’

‘என் துயரத்தை நீக்காவிட்டாலும், என் மீது மனமிரங்கா விட்டாலும், தகுதியான வழி இது என்று எடுத்துரைக்காவிட்டாலும், நெருப்பு வடிவமாகி எலும்பை மாலையாக அணிந்து, தீயை ஏந்தி ஆடும் சிவபெருமானாகிய என் தலைவன் மீது கொண்ட அன்பு என் நெஞ்சை விட்டு நீங்காது’.

அற்புதத் திருவந்தாதியின் முதல் பாடல் பிறந்து என்று தொடங்குகிறது. அந்நூலின் இறுதிப் பாடல் பேராத காதல் பிறந்து என்று முடிகிறது.

ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற நூல்கள் அகரவரிசைப்படி அமைந்த பாடல்கள் தொடர்ந்து வரப்பெறும் அமைப்புடையன.

அறம் செய விரும்பு

ஆறுவது சினம்

இயல்வது கரவேல்

ஈவது விலக்கேல்

… ….. ….. ……. ……….. (ஒளவையார் : ஆத்திசூடி)

என வருவன அவை,

சொல் தொடர்நிலை, பொருள் தொடர்நிலை ஆகிய இரு கூறுகளும் ஒருங்கே அமைவது சொற்பொருள் தொடர்நிலைச் செய்யுள்    எனப்படும். என்று உரையாசிரியர்கள், மேலும் ஒருவகையைச் சுட்டுகின்றனர்.

திருவாசகம், திருமந்திரம் போன்றன. இவ்வகைக்குத் தக்க சான்று என உரைப்பர்.

இவ்வாறு தொடர்நிலைச் செய்யுள் வகை அமைகின்றது.

2.7 தொகுப்புரை

தண்டியலங்காரத்தின்     முப்பகுதிகளில்     முதல்பகுதி பொதுவணியியல் ஆகும். இது சொல்லணி. பொருளணிகளுக்குப் பொதுவானது. செய்யுள் வகைகளையும், செய்யுள் நெறிகளையும் உரைப்பது.

செய்யுள் நால்வகைப்படும். தனியே நின்று பொருளும் தொடரும் முடிவது முத்தகச் செய்யுள். பல செய்யுள்கள் தொடர்ந்து நின்று சொற்றொடர் முடிவு பெறுவது குளகச் செய்யுள். பொருள், இடம், காலம் போன்றவற்றால் தொகுக்கப் பெறுவது தொகைநிலைச் செய்யுள். சொல்லாலோ, பொருளாலோ செய்யுள்கள் தொடர்ந்து அமையப் பெறும் அந்தாதி, காப்பியம் போன்றன தொடர்நிலைச் செய்யுள் ஆகும்.

பாடம் - 3

காப்பிய இலக்கணம்

3.0 பாட முன்னுரை

செய்யுள் வகை நான்கனுள் தொடர்நிலைச் செய்யுள் என்பதும் ஒன்று எனக் கடந்த பாடத்தில் அறிந்தோம். அது, சொல் தொடர்நிலைச் செய்யுள், பொருள் தொடர்நிலைச் செய்யுள் என இருவகைப்படும். பொருள் தொடர்நிலைச் செய்யுள் காப்பியம் எனப்படும். செய்யுளில் கூறப்பெறும் நீண்ட கதை, காப்பியம் என்று கூறப்படும்.

தமிழ் இலக்கிய நெடும்பரப்பில், சங்க இலக்கியங்களை அடுத்துத் தோன்றியன காப்பியங்கள் ஆகும். அன்று தொட்டு இன்று வரை காப்பியங்கள் தோன்றியவாறே உள்ளன.

காப்பியம் என்பதற்கான சொற் பொருள் விளக்கம், காப்பிய வகைகள், காப்பிய அமைப்பு, காப்பியத்தில் இடம்பெற வேண்டிய இன்றியமையாத வருணனைகள், தமிழ்க்காப்பியங்களின் இயல்பு ஆகியன குறித்த கருத்துகளை இந்தப் பாடத்தின்வழி நாம் தெரிந்து கொள்ளலாம்.

3.1 காப்பியம்

காப்பியம் என்னும் சொல் காவியம் என்னும் வட சொல்லின் திரிபு எனவும், தமிழில் அமைந்த இயற்சொல்லே எனவும்     இருவிதமான     கருத்துகள் கூறப்படுகின்றன. காப்பியத்தைக் குறிக்க வேறு பெயர்களும் வழங்கப் பெறுகின்றன. காப்பியம் என்னும் சொல்லாட்சி தமிழ் இலக்கியங்களில் காலந்தோறும் பயின்று வருவதையும் காண்கிறோம்.

3.1.1 காப்பியம் – பெயர்க்காரணம் காப்பியம்     என்பதன்      பெயர்க்காரணம் குறித்து அறிஞர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

காவியம் என்பது ‘கவி’ என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது. கவிஞர்களிடமிருந்து தோன்றியது என்பது இதன் பொருள். இதுவே காப்பியம் என்று தமிழில் திரிந்து வரலாயிற்று.

‘கவி’ என்ற வடசொல், செய்யுளையும் செய்யுள் செய்பவனாகிய கவிஞனையும் குறிக்கும் ; தமிழிலும் அப்படியே கூறும் மரபு உண்டு. கவியால் செய்யப்படுவது காவியம் ; காவியம் காப்பியமாயிற்று.

காப்பியம் என்பது தமிழ்ச் சொல்லேயாகும். இது காவியம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு அன்று; காப்பு + இயம் என்னும் தமிழ்ச்    சொற்சேர்க்கையே காப்பியம் எனப்பட்டது.

காப்பியாறு,     காப்பியக்குடி, தொல்காப்பியம் என்ற சொற்களில் தொன்று தொட்டு வழங்கப் பெற்ற காப்பியம் என்னும் சொல், வடமொழியில் இடம் பெறும் காவியம் என்பதற்கு இணையான சொல்லாகக் கருதப்பெற்றுப் பிற்கால வழக்கில் நிலைபெறலானது எனக் கொள்வது பொருத்த முடையதாகும்.

3.1.2 காப்பியம் – பிற பெயர்கள் காப்பியம் என்னும் இலக்கிய வகையைக் குறிக்கப் பல்வேறு பெயர்கள் தமிழில் வழங்கப் பெறுகின்றன.

தொடர்நிலைச் செய்யுள்

பொருள் அடிப்படையில் செய்யுள்கள் தொடர்ந்து அமைதலின், பொருள் தொடர்நிலைச் செய்யுள் எனக் காப்பியங்களைக் குறிப்பிடுவது உண்டு.

தொடர்நடைச் செய்யுள்

பல செய்யுள்கள் கூடிப் பொருள் தொடர்பு அமைய நடைபெறும் (தொடர்ந்து செல்லும்) இயல்புடையது ஆதலின், காப்பியம், தொடர்நடைச் செய்யுள் எனவும் கூறப் பெறும்.

வித்தாரக்கவி

விரிவாக அமையுமாறு கதையினைச் செய்யுளில் எடுத்துரைத்தலின், அகலக்கவி, பெருங்கவி, வித்தாரக்கவி எனவும் இதனைக் குறிப்பது உண்டு. (வித்தாரம் = விரிவு)

கதைப்பாட்டு

பாட்டு என்பது செய்யுளைக் குறிக்கும். கதையை உரைநடையில் கூறாமல் பாட்டு வகையில் கூறலால் காப்பியம் இப்பெயர் பெறலானது. கோவலன் கதை, நல்லதங்காள் கதை எனக் கிராமப் புறங்களில் இன்றும் கதைப் பாடல்கள் பாடியும் கேட்டும் மகிழும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

செய்யுள் நடையில் கூறப்பெறும் கதை, இடையிடையே உரைநடை விரவி வரப் பாடப்பெறுவதும் உண்டு. சிலப்பதிகாரம், பாரதவெண்பா, அரிச்சந்திர வெண்பா போன்றன இவ்வகையில் அடங்கும்.

சரிதம்

வரலாறு என்னும் பொருள்படும் சரிதம் என்பதும் காப்பியத்தைக் குறிக்கும். சீவகசிந்தாமணி, சீவகசாமி சரிதம் எனவும், சூளாமணி, செங்கண் நெடியான் சரிதம் எனவும், நைடதம், நிடதர்கோன்புகழ் சரிதம் எனவும் வழங்கப்பெறுதல் இதற்கான சான்றுகளாகும்.

நாடகம்

காப்பியம், நாடகம் எனவும் கூறப் பெறுகிறது. கம்பராமாயணம், கம்பநாடகம் எனச் சுட்டப் பெறுவது இதற்குச் சான்றாகும்.

கதை

கதை என்பது செய்யுளில் அமைந்த கதையாம் காப்பியத்தைக்     குறிப்பதும்     உண்டு. பெருங்கதை, விம்பசாரன்கதை போன்றன இதற்கான சான்றுகளாகும்.

இவ்வாறு பல பெயர்களால், காப்பியம் சுட்டப் பெறுகின்றது.

3.1.3 காப்பியம் – இலக்கிய ஆட்சி காப்பியம் என்னும் சொல், மணிமேகலை என்னும் காப்பியத்தில், நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர்     (19 : 80) என்ற தொடரில் பெற்றுள்ளது. அடுத்து, பெருங்கதையில் காப்பியக் கோசம் (1-38 ; 167), காப்பிய வாசனை (4-3 ; 42) என இடம்பெறக் காண்கிறோம். சீவகசிந்தாமணி, காப்பியம் இயற்றும் கவிஞர்களைக் காப்பியக் கவிகள்(1585) எனக் குறிக்கின்றது. காப்பியம் என்பதனை முதலில் தொடர்நிலை எனக் கையாள்வது தண்டியலங்காரமேயாகும்.

காவியம் என்னும் சொல்வழக்கு, யசோதரகாவியம், நாககுமார காவியம், உதயண குமார காவியம் என நூற்பெயரிலேயே இடம் பெற்றுள்ளமையும் சிந்திக்கத்தக்கதாகும்.

பெருந்தொகையில்     பஞ்சகாவியம்(1259)     எனவும், தமிழ்விடுதூதில், பஞ்சகாப்பியம் (கண்ணி-52) எனவும் சுட்டக் காண்கிறோம்.

எனவே, காப்பியம், காவியம் ஆகிய இரு சொல்லாட்சிகளும் சமகால வழக்கிலிருந்தமையை அறிய முடிகின்றது.

3.1.4 காப்பிய இலக்கணம் காப்பியம் ஒரே வகைச் செய்யுளால் அமைவதும் உண்டு. பலவகைச் செய்யுட்களால் அமைவதும் உண்டு. செய்யுளாக அமைவது மட்டுமன்றி இடையிடையே உரைநடையும் பிறமொழிச் சொற்களும் கலந்து வருவதாக அமைவதும் உண்டு.

அவைதாம்

ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்

உரையும் பாடையும் விரவியும் வருமே

(தண்டியலங்காரம்-11)

(ஒருதிறம் = ஒருவகை

பாடை = பிறமொழி

விரவி = கலந்து)

ஒரே வகை யாப்பில் (செய்யுளில்)    அமைவது கம்பராமாயணம். அது விருத்தத்தால் அமைந்தது. பல வகை யாப்பில் அமைவது சிலப்பதிகாரம். உரைநடை விரவி வருவதற்கும் அதுவே சான்றாகிறது.

3.2 காப்பிய வகைகள்

பொருள் தொடர்நிலைச்     செய்யுளாகிய காப்பியம், பெருங்காப்பியம், காப்பியம் என இரு வகைப்படும்.

பெருங்காப் பியமே காப்பியம் என்றாங்கு

இரண்டாய் இயலும் பொருள்தொடர் நிலையே

(தண்டியலங்காரம்-7)

அடைமொழி இன்றிக் காப்பியம் என்று    சுட்டப் பெறுவதைச் சிறுகாப்பியம் என அடைமொழி கொடுத்துச் சுட்டுவதும் உண்டு.

3.2.1 பெருங்காப்பியம் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருளையும் தன்கண் கொண்டு விளங்குவது பெருங்காப்பியம் ஆகும்.

தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும் பெருங்காப்பியம் எனப் படுகின்றன. இவற்றை ஐம்பெருங்காப்பியங்கள் எனக் குறிப்பிடுவர்.

3.2.2 சிறுகாப்பியம் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப்பொருள்கள் நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வரும் காப்பியம் சிறுகாப்பியம் எனப்படும். சிறுகாப்பியம், காப்பியம் எனக் குறிக்கப் பெறுகிறது.

அறமுதல் நான்கினும் குறைபாடு உடையது

காப்பியம் என்று கருதப் படுமே

(தண்டியலங்காரம்-10)

தமிழில், யசோதரகாவியம், உதயணகுமார காவியம், நாககுமார காவியம், நீலகேசி, சூளாமணி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும்.

3.3 காப்பிய வடிவம்

காப்பியத்தின் தொடக்கம் எவ்வாறு அமைதல் வேண்டும், காப்பிய உட்பிரிவுகள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பன பற்றிய செய்திகளும், காப்பியத்தில் இடம்பெறும் சுவைகள், காப்பியத்தின் பயன் எனப்படும் மையக் கருத்து ஆகியன பற்றிய செய்திகளும் காப்பிய வடிவம் என்னும் இப்பகுதியில் இடம்பெறுகின்றன.

3.3.1 காப்பிய முகப்பு காப்பியம் தொடங்கப் பெறுவதற்கு முன், வாழ்த்து, வணக்கம், வருபொருள் உரைத்தல் ஆகியன இடம்பெறுதல் வேண்டும்.

வாழ்த்து

நூல் இனிது நிறைவுறும் பொருட்டு இறைவனை வாழ்த்துதலும் வணங்குதலும் மேற்கொள்ளப் பெறும்.

சான்று :

உலகெ லாம்உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு லாவிய நீர்மலி வேணியன்

அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

(பெரியபுராணம்-1)

(ஓதல் = பாடுதல்

நீர் = கங்கை

வேணி = சடை

அலகு = அளவு)

உலகம் அனைத்தும் உணர்ந்து ஓதுவதற்கு அரிய புகழுடையவன்; பிறை    நிலவும் கங்கையும் தங்கிய சடையையுடையவன்; அளவற்ற சோதிவடிவானவன்; தில்லைச் சிற்றம்பலத்தில் நடனமிடுபவன்;    அவனது சிலம்பணிந்த அடிகளை வாழ்த்தி வணங்குவேன் என்பது இப்பாடலின் பொருள்.(நூல் இனிது நிறைவுறுதற் பொருட்டு என்பது நோக்கம்)

வணக்கம்

இறைவனின் பெருமைகளை எடுத்துரைத்துப் போற்றி வணங்குவதும் நூல் முகப்பில் அமையும்.

சான்று :

உலகம் யாவையும் தாம்உள வாக்கலும்

நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகுஇ லாவிளை யாட்டுஉடை யார்அவர்

தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே

(கம்பராமாயணம்-பாயிரம்-1)

(உளவாக்கல் = உண்டாக்குதல்

நிலைபெறுத்தல் = காத்தல்

நீக்கல் = அழித்தல்

அலகு = எல்லை, அளவு

சரண் = அடைக்கலம்)

உலகனைத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் அளவில்லாத விளையாடல் புரியும் இறைவனே நமக்குத் தலைவர் ; அவர் திருவடியே நமக்கு அடைக்கலம் ஆகும் என்பது இதன் பொருள்.

வருபொருள் உரைத்தல்

காப்பியக் கதைக் கருவாக எடுத்துக் கொண்ட பொருளை முன்மொழிதலாக அமைவது இது.

சான்று :

அளவுஇ லாத பெருமைய ராகிய

அளவுஇ லாஅடி யார்புகழ் கூறுகேன்

அளவு கூட உரைப்புஅரிது ஆயினும்

அளவுஇல் ஆசை துரப்ப அறைகுவேன்

(பெரியபுராணம்-5)

(உரைப்பு = கூறுதல்

துரப்ப = செலுத்த

அறைதல் = கூறுதல்)

எல்லையற்ற பெருமையுடைய அடியவர்களின் புகழினை முழுமையாகக் கூற இயலாது ஆயினும் எல்லையற்ற ஆசை செலுத்தலால் கூறத் தொடங்கினேன் என்பது பொருள்.

இவை மூன்றும் காப்பிய முகப்பாக அமையும்.

3.3.2 காப்பிய உட்பிரிவு காப்பியத்திற்கு உரிய நீண்ட கதையைப் பல கூறுகளாகப் பகுத்துக் கொண்டு அவற்றிற்குப் பெயரிடுதல் வழக்கம். அவ்வாறான உட்பிரிவுகளுக்குச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் ஆகியவற்றுள் ஒன்றைப் பெயராக அமைப்பர்.

சருக்கம் என்பது வில்லிபாரதத்தில் அமைகின்றது. (எ.கா) சூதுபோர்ச் சருக்கம்.

இலம்பகம் என்பது சீவகசிந்தாமணியில் அமைந்துள்ளது. (எ.கா) கேமசரியார் இலம்பகம்.

பரிச்சேதம் என்னும் பாகுபாடு உடைய இலக்கியம் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை.

காதை என்பது சிலப்பதிகாரத்திலும் புராணம் என்பது பெரியபுராணத்திலும் உட்பிரிவுகளின் பெயர்களாக அமைவதும் இங்கு எண்ணத்தக்கன. (எ.கா) கடலாடு காதை, மெய்ப்பொருள் நாயனார் புராணம்.

3.3.3 காப்பியச் சுவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை (மகிழ்ச்சி) ஆகிய எண்வகைச் சுவையும் காப்பியங்களில் கலந்து வருமாறு இயற்றப் பெறும். இவை எண் வகை மெய்ப்பாடுகள் எனப்பெறும். சாந்தம் (நடுநிலை) என்னும் சுவையுடன் கூட்டி நவரசம் (ஒன்பான்சுவை) என்பர் வடமொழியாளர். வெகுளிச்சுவைக்கு ஒரு சான்று :

‘எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையை

முள்ளுடைக் காட்டின் முதுநரி ஆக’எனக்

கவுந்தி இட்ட தவந்தரு சாபம்

(சிலம்பு-நாடுகாண்காதை – 231-233)

(எள்ளுநர் = கேலிசெய்தல்

பூங்கோதை = கண்ணகி

முதுநரி = கிழ நரி)

ஏளனம் செய்வோராய்க் கண்ணகியைப் பற்றி நகைத்த இக்கீழ்மக்கள் முள் அமைந்த காட்டில் கிழ நரிகள் ஆவார்களாகுக எனக் கவுந்தி சபித்தார் என்பது பொருள்.

இவ்வாறு பிற சுவைகளும் அமையும்.

3.3.4 காப்பியப் பயன் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகைப் பொருள்களே காப்பியங்களின் கதைகளிடையே மையப்படுத்தப் படுவன ஆகும்.

அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே

(நன்னூல்-பாயிரம்-10)

என்பார் பவணந்திமுனிவர்.

நூலெங்கும் மணிகளைக் கோக்கும் நூல்போல ஊடுருவி நிற்கும் அந்நாற்பொருளும், ஒரு சில பாடல்களில் வெளிப்பட நிற்பதும் உண்டு.

அறம்

பெரியவர் தம்மைக் காய்ந்தான்

பிறங்கல்கல் லியகோல் ஒப்பான் ;

புரிவன புரியப் பட்டுப்

புலம்புவன் ஒத்தார்க் காய்ந்தான் ;

எரிநரகு அதனில் வீழ்வன்

இழிந்தவர்க் காய்ந்தான் – என்றால்

ஒருவர்தம் இடத்தும் சீற்றம்

உறாமையே நன்று மாதோ

(பிரபுலிங்கலீலை-சித்தராமையர்கதி-61)

(காய்தல் = சினத்தல்

உறாமை = அடையாமை

மாதோ = அசைநிலை)

தன்னினும் பெரியோரிடம் சினம் கொண்டவன், மலையைப் பெயர்த்த இரும்புக்கோல் (கடப்பாரை) போன்று வருந்துவான்; தன்னையொத்தவனிடம் சினந்தவன் உரிய தீங்கு பிறரால் பெற்று வருந்துவான் ; தன்னிலும் வலிமை குறைந்தவர்களைச் சினந்தவன் எரியும் நரகில் வீழ்ந்து வருந்துவான். எனவே யாரிடமும் சினம் கொள்ளக் கூடாது. இவ்வாறு அறவுரை கூறப்பெறுகிறது.

பொருள்

ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும்

கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலும்

சுற்றம் சூழ்ந்துபெ ருக்கலும் சூதுஅரோ

கொற்றம் கொள்குறிக் கொற்றவற்கு என்பவே

(சீவகசிந்தாமணி-விமலை-33)

(ஒற்றரின் = ஒற்றரால்

ஆய்தல் = அறிதல்

சூது = உபாயம்

அரோ = அசைநிலை)

ஒற்றரை ஒற்றரால் அறிதலும், கற்றோரைப் போற்றலும், சுற்றத்தாரை ஆதரித்தலும் அரசர்க்கு நல்ல உபாயங்களாகும். இது அரசாட்சி தொடர்பான பொருட்பால் சிந்தனையாகும்.

இன்பம்

வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்பும் தேனும்

பாணியாழ் கனியும் வென்ற பைங்கிளி மழலைத் தீஞ்சொல்

வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்லர் என்னாப்

பூண்முலை பொதிர்ப்பப் புல்லிப் புனைநலம் பருகி னானே

(சீவக-கேமசரியார்-89)

(பாணி = பாட்டு

பொதிர்ப்ப = வீங்க

என்னா = என்று வியந்து கூறி)

பால், அமுது, கரும்பு, தேன், கனி ஆகியன போன்ற இனிமையுடைய வாயால் யாழும் குழலும் கிளியும் போன்ற சொற்களைப் பேசும் கேமசரியை முதல் இழக்காத வணிகர் திறன்போல் என்னை இழக்காதவள் நீ என்று பாராட்டி அவளின் கொங்கை பொங்க இறுகத் தழுவிக் கொண்டான் சீவகன் என்பது பொருள். இது இன்பம் பற்றியது.

வீடு

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி

அறவாநீ ஆடும் போதுஉன் அடியின்கீழ் இருக்க என்றார்

(பெரியபுராணம்-காரைக்கால்-60)

(இறவாத = குறையாத

அறவா = அறத்தின் வடிவான சிவபெருமானே)

காரைக்காலம்மையார்     சிவபெருமானிடம் குறையாத அன்பையும், மீண்டும் பிறவாத நிலையில் வீடுபேற்றையும், மீண்டும் பிறந்தால் இறைவனை மறவாத நிலையையும், நடனக் காட்சியை அருகிலிருந்து காணும் வரத்தையும் வேண்டுகின்றார். இது வீடுபேறு பற்றியது.

இவ்வாறு நாற் பொருள்களும் காப்பியங்களில் இடம் பெறுகின்றன.

3.4 காப்பிய வருணனை

காப்பியங்களில் கதையைத் தொடங்குவதற்கு முன் கதைத் தலைவர், நாட்டு இயற்கைக் காட்சிகள், மலை, கடல், ஆறு, நாடு, நகரம், பொழுதுகள், சூரிய சந்திர உதயங்கள் ஆகியவற்றை நயம்பட வருணித்துப் பாடுதல் இன்றியமையாததாகும். இவற்றுள் சில கதையின் இடையிடையே வருதலும் உண்டு.

எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் காணலாம் :

3.4.1 கடல், ஆறு தண்டியலங்காரத்தில் கடல் வருணனை எனக் குறிக்கப் பெறினும், ஆற்று     வருணனையையே     காப்பியங்களில் மிகுதியாகக் காண முடிகின்றது.

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,

மருதத்தை முல்லை ஆக்கி,

புல்லிய நெய்தல் தன்னைப்

பொருஅரு மருதம் ஆக்கி,

எல்லைஇல் பொருள்கள் எல்லாம்

இடைதடு மாறும் நீரால்

செல்லுறு கதியில் செல்லும்

வினைஎனச் சென்றது அன்றே

(கம்ப-ஆற்றுப்படலம்-17)

(புல்லிய = பொருந்திய

பொருஅரு = நிகரற்ற)

சரயு நதியானது முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைநிலங்களில் பாயும் நிலையில் அடித்து வரும் பொருள்களால் திணைப் பொருள்களையே மாற்றி விடுகின்றது. இது விதிவழியே உயிர்களின் செயல்கள் நடைபெறுவதுபோல் உள்ளது.

3.4.2 நாடு காய்மாண்ட தெங்கின் பழம்வீழத் கமுகின் எற்றிப்

பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து

தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும்

ஏமாங் கதம்என்று இசையால்திசை போயது உண்டே

(சீவக-நாமகள்-2)

(தெங்கு = தேங்காய்

கமுகு = பாக்கு

வருக்கை = பலா

இசை = புகழ்)

தேங்காய், பாக்கின் மீதும், பலாக்கனியின் மீதும், தேமாங்கனியின் மீதும் முறையே வீழ்ந்து புகழ்சேர்க்கும் என்பது பொருள். ஏமாங்கத நாட்டுவளம் இவ்வாறு பேசப் படுகிறது.

3.4.3 நகர் எறிசுறவு இளையவர் ; ஏந்து பூங்கொடி

மறிதிரை ; வரைபுரை மாடம் மாக்கலம் ;

பெறலரும் திருவனார் அமுதம் ; பேரொலி

அறைகடல் வளநகர் ஆயது என்பவே

(சீவக-கேமசரி-35)

(சுறவு = சுறாமீன்

மாடம் = மாளிகை

மாக்கலம் = கப்பல்)

பேரொலியை உடைய நகர், வீரர் சுறாமீனாகவும், கொடி    அலைகளாகவும், மாளிகைகள் மரக்கலமாகவும், மகளிர் அமுதமாகவும் அமைய ஒரு கடல்போல அமைகின்றது.

3.4.4 சூரிய உதயம் காலன் மேனியில் கருகுஇருள் கடிந்து உலகு அளிப்பான்

நீல ஆர்கலித் தேரொடு நிறைகதிர்க் கடவுள்

மாலின் மாமணி உந்தியில் அயனொடு மலர்ந்த

மூல தாமரை முழுமலர் முளைத்தென முளைத்தான்

(கம்ப-பால-அகலிகை-41)

(காலன் = எமன்

கடிந்து = நீக்கி

ஆர்கலி = கடல்

உந்தி = கொப்பூழ்)

சூரியன், எமனையொத்த கரிய இருளை நீக்கி, திருமாலின் கொப்பூழில் பிரமனொடு சேர்ந்து மலர்ந்த தாமரை மலர் உதித்தாற் போல உதித்தான்.

3.4.5 சந்திர உதயம் தெரிந்துஒளிர் திங்கள்வெண் குடத்தி னால்திரை

முரிந்துஉயர் பாற்கடல் முகந்து மூரிவான்

சொரிந்ததே ஆம்எனத் துள்ளும் மீனொடும்

விரிந்தது வெண்நிலா மேலும் கீழுமே

(கம்ப-சுந்தர-ஊர்தேடு-53)

(மூரி = வலிமை

மீன் = விண்மீன்)

திங்களாகிய குடத்தினால் பாற்கடலிலிருந்து முகந்து, விண்ணிலிருந்து ஊற்றினாற்போன்று, வெண்ணிலவின் ஒளி, நட்சத்திரங்களுடன் கூடி விரிந்து நின்றது.

இவ்வாறு இயற்கை வருணனைகள் காப்பியங்களில் அமைகின்றன.

3.5 காப்பியக் கதை நிகழ்ச்சிகள்

காப்பியக் கதைத்தலைவனின் வாழ்வில் நிகழும் திருமணம் முதலான     அகநிகழ்ச்சிகளும்,     முடிசூடல் முதலான புறநிகழ்ச்சிகளும் காப்பியங்களில் விரவிக் காணப்படும். இல்லற வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையுமாகப் பின்னிப் பிணைந்த வரலாறு சுவைபடக் காப்பியங்களில் எடுத்துரைக்கப்படும். இவற்றை அகப்பொருள் நிகழ்ச்சிகள், புறப்பொருள் நிகழ்ச்சிகள் என்று இருவகைப்படுத்திக் காண்போம்.

3.5.1 அகப்பொருள் நிகழ்ச்சிகள் திருமணம் புரிதல், பொழில் விளையாடல், நீராடல், கள்ளுண்டு களித்தல், சிறுவரைப் பெறுதல், புலவியில் புலத்தல், கலவியில் களித்தல் ஆகியன குறிப்பிடத்தக்க அகப்பொருள் நிகழ்ச்சிகளாகும்.

திருமணம்

கோமகன் முன்சன கன்குளிர் நல்நீர்

பூமக ளும்பொரு ளும்என நீஎன்

மாமகள் தன்னொடும் மன்னுதி என்னா

தாமரை அன்ன தடக்கையின் ஈந்தான்

(கம்ப-பால-கடிமண-86)

(கோமகன் = இராமன்

பொருள் = மெய்ப்பொருள், திருமால்

மன்னுதி = நிலைபெறுக)

சனகமன்னன், இராமனிடம் தன் மகள் சீதையைத் தாரை வார்த்து, பூமகளும் பொருளும்போல் (இலக்குமியும் திருமாலும்) நிலைபெறுக என்று கைகளில் அளித்தான்.

பொழிலாடல்

இது சோலையில் உலாவுதலை வருணிப்பதாகும்.

புனைமலர்த் தாரி னானும் போதுஅணி கொம்ப னாளும்

நனைமலர்க் காவும் அம்தண் வாவியும் நல்ல ஆடிச்

சுனைமலர்க் குவளை குற்றுச் சூழ்மலர் கண்ணி சூட்டி

வினைநலம் நுகர்ந்து செல்வார் விதியினான் மிக்கநீரார்

(சீவக-கேமசரி-84)

(நனை = தேன்

கா = சோலை

வாவி = தடாகம் (நீர்நிலை)

குற்று = பறித்து)

சீவகனும் கேமசரியும் பூங்காவிலும், தடாகத்திலும் ஆடி மகிழ்ந்து, சுனை மலர்களைப் பறித்து மாலையாக்கிச் சூட்டிக் கொண்டு மகிழ்ந்து செல்லத் தொடங்கினர்.

களியாட்டு

சுவைதரும் தேன் பொருந்திய தீங்கற்ற மதுவினை அளவோடு ஆடவரும் பெண்டிரும் அக்காலத்து அருந்தி வந்தனர்.

பூக்கமழ் ஓதியர் போது பொங்கிய

சேக்கையின் விளைசெருச் செருக்கும் சிந்தையர்

ஆக்கிய அமிழ்தென அம்பொன் வள்ளத்து

வாக்கிய பசுநறா மாந்தல் மேயினார்

(கம்ப-பால-உண்டாட்டு-6)

(ஓதி = கூந்தல்

போது = மலர்

போக்கிய = தூவிய

செரு = கலவிப்போர்

வள்ளம் = கிண்ணம்

வாக்கிய = ஊற்றிய

நறா = தேன்(மது)

மாந்தல் = பருகுதல்)

பூக்கமழும் கூந்தலுடைய மகளிர், கலவிப் போர் புரியும் சிந்தையராய் அமுதம் போன்று பொற்கிண்ணத்தில் ஊற்றிய புது மதுவினைப் பருகலாயினர்.

இதுபோலவே, மக்கட்பேறு, ஊடல், கலவி முதலிய பிற அகப்பொருள் நிகழ்ச்சிகளும் காப்பியத்தில் இடம் பெறும்.

3.5.2 புறப்பொருள் நிகழ்ச்சிகள் பொன்முடி (மகுடம்) கவித்தல், மந்திரம் (ஆலோசனை), தூது, செலவு (பயணம்), இகல் (பகை), வெற்றி ஆகியன குறிப்பிடத்தக்க புறப்பொருள் நிகழ்ச்சிகளாகும்.

முடிசூடுதல்

கதைத்தலைவன் நாடாளும் பொறுப்பேற்று மகுடம் சூடும் நிகழ்ச்சி.

அரியணை அனுமன் தாங்க

அங்கதன் உடைவாள் ஏந்தப்

பரதன்வெண் குடைக விக்க

இருவரும் கவரி பற்ற

விரிகடல் உலகம் ஏத்தும்

வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்

மரபுளோர் கொடுக்க வாங்கி

வசிட்டனே புனைந்தான் மௌலி

(கம்ப-யுத்த-திருமுடி-16)

(கவரி = விசிறி

மௌலி = மகுடம்)

இராமபிரான் முடிசூடிய போது அனுமன் அரியணையைத் தாங்கினான் ;    அங்கதன்     உடைவாள்     ஏந்தினான்: பரதன் குடைபிடித்தான் ; இலக்குவனும் சத்துருக்கனும் கவரி வீசினர் ; சடையனின் முன்னோர் கொடுக்க, வசிட்டர் மகுடம் சூட்டினார்.

மந்திராலோசனை

மந்திரம், ஆலோசனை, கலந்துரையாடல், சூழ்ச்சி, மந்திராலோசனை ஆகியன யாவும் ஒரேபொருள் உடையவை. போர், அரசாட்சி தொடர்பாக     அரசன், அரசவை உறுப்பினர்களை அழைத்துக் கலந்து பேசுதலாகும்.

நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு

எல்லைஇல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்

ஒல்லைவந்து உறுவன உற்ற பெற்றியின்

தொல்லைநல் வினைஎன உதவும் சூழ்ச்சியார்

(கம்ப-அயோத்தியா-மந்திர-9)

(ஒல்லை = விரைந்து

பெற்றி = இயல்பு

சூழ்ச்சி = யோசனை)

நல்லன, தீயன இவை இவை என ஆராய்ந்து, மருத்துவனைப் போன்றும், நல்வினை போன்றும் ஆலோசனை கூறவல்லவர்கள் அரசவையினர்.

தூது

பகைநாட்டின்மேல் படையெடுக்குமுன், அரசன் போர் மூளாதிருக்கப் பகையரசனிடம் சில நிபந்தனைகள் அமையத் தூது அனுப்புதல் ‘தூது’ எனப்படும். தூதினால் பல போர்கள் தவிர்க்கப்பட்டதும் உண்டு. காப்பியங்களில் காணும் தூதுகள் போரைத் தடுத்து நிறுத்த முயன்றும். போர்கள் தடைபட்டதாகத் தெரியவில்லை.

தூதுவன் ஒருவன் தன்னை

இவ்வழி விரைவில் தூண்டி

மாதினை விடுதி யோஎன்று

உணர்த்தவே மறுக்கும் ஆகின்

காதுதல் கடன்என்று உள்ளம்

கருதியது அறனும் அஃதே

நீதியும் அஃதே என்றான்

கருணையின் நிலையம் அன்னான்’

(கம்ப-யுத்த-அங்கதன்தூது-2)

(மாது = சீதை

காதுதல் = அழித்தல்

கடன் = கடமை)

இராமபிரான், ‘இராவணனிடம் தூதுவிடுத்துச் சீதையை விடுவிக்குமாறு கூறுவோம் ; அவன் மறுத்தால் போரிட்டு அழிப்போம் ; அதுவே முறை’ என்கிறார்.

இதுபோன்றே செலவு (படையெழுச்சி), இகல் (போர்), வெற்றி (போரில் பெற்ற வெற்றி) முதலிய புறப்பொருள் காட்சிகளும் அவற்றின் வருணனைகளும் காப்பியங்களில் இடம்பெறும்.

3.6 தண்டியலங்காரமும் காப்பிய இலக்கணமும்

தண்டியலங்காரப் பொதுவணியியல், காப்பிய இலக்கணங்களை வரையறுத்துரைக்கின்றது. இவ்விலக்கணங்கள், காவியாதரிசம் போன்ற வடமொழி இலக்கண நூல்களின் தாக்கத்தால் தோன்றியவை.

காப்பியம் தன்னிகரற்ற தலைவனைப் பெற்றிருத்தல், வாழ்த்து, வணக்கம், வருபொருள் உரைத்தல் ஆகியவற்றுள் ஒன்றைக் கொண்டிருத்தல், நாற்பொருள் பயத்தல், இயற்கை வருணனை, அகப்பொருள் மற்றும் புறப்பொருள் நிகழ்வுகளைக் கொண்டிருத்தல், உட்பிரிவுகளும் எண்வகைச் சுவைகளும் பெற்றிருத்தல் ஆகிய இலக்கணங்களை உடையது. இவற்றை,

பெருங்காப் பியநிலை பேசுங் காலை

வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின் ஒன்று

ஏற்புடைத் தாகி முன்வர இயன்று

நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்

தன்னிகர் இல்லாத் தலைவனை உடைத்தாய்,

மலைகடல் நாடு வளநகர் பருவம் ……………..

எனத் தண்டியலங்காரம் விளக்குகிறது.

பெருங் காப்பியத்திற்குரிய     இவ்விலக்கணங்களுள் நாற்பொருள் பயத்தல் என்னும் இலக்கணம் மிக இன்றியமையாதது ; ஏனையவற்றுள் ஒருசில குறைந்து வரினும் குற்றமில்லை.

கூறிய உறுப்பில் சிலகுறைந்து இயலினும்

வேறுபாடு இன்றுஎன விளம்பினர் புலவர்

(தண்டியலங்காரம்-9)

என்பது நூற்பா.

(இயலினும் = வந்தாலும்

இன்று = இல்லை)

இவை தண்டியலங்காரம் கூறும் காப்பிய இலக்கணமாகும்.

3.7 தமிழ்க் காப்பியங்கள்

சங்க இலக்கியங்களை அடுத்துத் தமிழில் காப்பியங்கள் தோன்றலாயின. தமிழில் முதன்முதலில் தோன்றியனவும், பிறமொழிகளிலிருந்து தமிழிற்கு வந்தனவும், சமயம் தழுவி எழுந்தனவும், தலபுராணங்களும் எனக் காப்பிய வரிசை தொடர்ந்து வருகின்றது. தொடக்க காலக் காப்பியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என இருவகைப் படுத்தப்பட்டுள்ளமையை முன்பே கண்டோம்.

3.7.1 தமிழ் முதன்மைக் காப்பியங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியங்கள் ஆகும். பிற எம்மொழியிலிருந்தும் தழுவியோ மொழிபெயர்த்தோ எழுதப் பெறாதது இவை.

பெரியபுராணம் தமிழில் எழுந்த காப்பியம், தமிழகத்தில் வாழ்ந்த சிவனடியார்களின் சிறப்பினை எடுத்துரைப்பது. சிலர் இதனை வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது என்பர். அவர்தம் கருத்து தவறானது.

3.7.2 பிறமொழிக் காப்பியங்கள் சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி    ஆகிய பெருங்காப்பியங்களும்,     உதயணகுமார     காவியம், நாககுமார காவியம், யசோதரகாவியம், நீலகேசி, சூளாமணி ஆகிய ஐஞ்சிறுகாப்பியங்களும், பெருங்கதையும் வடமொழி, பாலி, பிராகிருதம் போன்ற     மொழிகளில் அமைந்த காவியங்களைத்     தழுவியும் மொழிபெயர்த்தும் எழுதப் பட்டனவாகும்.

பிரபுலிங்கலீலை என்னும் காப்பியம், கி.பி. 17ஆம் நூற்றாண்டில் துறைமங்கலம்     சிவப்பிரகாச     சுவாமிகளால் கன்னட மொழியிலிருந்து மொழி பெயர்த்து எழுதப்பட்டது.

சீறாப்புராணம், இயேசு காவியம் போன்ற காப்பியங்கள் அரபிமொழி, யூதமொழி ஆகியவற்றின் மூலக்கதைகளைத் தமிழின் தன்மைக்கேற்ப அமைத்து எழுதப்பட்டனவாகும்.

இவை மொழி பெயர்ப்பும், தழுவலுமாக அமைந்த போதிலும் தமிழில் தோன்றிய காப்பியம் போலவே தமிழ் நடையும், பெயரமைப்பும் சொல்லாட்சியும் பெற்று அமைந்துள்ளன.

3.7.3 சமயக் காப்பியங்கள் மணிமேகலை பௌத்தத்தைப் போற்றும் நிலையில் எழுந்தது. சீவகசிந்தாமணி சமணம் பரப்ப எழுந்தது ; வளையாபதி சமண சமயத்தது. குண்டலகேசி பௌத்தத்தைப் போற்றுவது.

ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண சமயத்தனவாகும்.

கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வைணவ சமயக் காப்பியங்களாகும். பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், கந்தபுராணம் முதலின சைவ சமயக் காப்பியங்களாகும். சீறாப்புராணம் இசுலாமியக் காப்பியம். இயேசு காவியம் கிறித்துவக் காப்பியம் ஆகும்.

சமயம் பரப்பும் நோக்கில்தான் காப்பியங்களின் வளர்ச்சி அமைந்தது என்றே உறுதிபடக் கூறலாம்.

3.7.4 வடமொழி இலக்கணத் தாக்கம் வடமொழித் தண்டியாசிரியர் இயற்றிய காவியாதரிசம் என்னும் வடமொழி இலக்கண நூல் கூறும் காப்பிய இலக்கணங்களைத் தமிழ்த் தண்டியலங்காரமும் வழிமொழிந்து உரைக்கின்றது.

தண்டியலங்காரம், காப்பியத்திற்கு என வகுத்த இலக்கணக் கூறுகளைக்     காலத்தால்     அவ்விலக்கண நூலுக்கு முற்பட்டனவாகிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றுடன் பொருத்திப் பார்த்து, சில கூறுகள் இக்காப்பியங்களில் அமையவில்லை ; சில     வேறுபட்டுள்ளன என்றெல்லாம் ஆராய்வது முறையானதாகாது.

தண்டியலங்காரக் கருத்துகளை அடுத்து வந்த காப்பியங் களில் அமைத்துப் பார்த்துப் பொருந்திவந்தால் அதுகண்டு மகிழ்தல் முறை. முந்தையவற்றை ஒப்பிட்டுக் குறை கூறுதல் கூடாது.

3.8 தொகுப்புரை

காப்பியம் தொடர்நிலை, தொடர்நடை, கதை, கதைப்பாட்டு, சரிதம் எனப் பிறபெயர்களால் சுட்டப் பெறுவதும் உண்டு.

தண்டியலங்காரத்தில் காப்பிய இலக்கணம் வரையறுத்து உரைக்கப்பட்டுள்ளது. காப்பிய முகப்பு, வருணனை, கதை நிகழ்ச்சிகள், காப்பியச் சுவை, காப்பியப்பயன் இன்னவாறு அமைய வேண்டும் என அது கூறுகின்றது.

நாற்பொருளும் கொண்டிருப்பது பெருங்காப்பியம் ; அவற்றுள் ஒருசில குறைந்து வருவது காப்பியம் எனக் காப்பியம் இருவகைப்படும்.

சமய அடிப்படையிலும் தலபுராண அடிப்படையிலும் எண்ணற்ற காப்பியங்கள் தமிழில் தோன்றியுள்ளன.

தமிழில் முதலில் தோன்றியன, பிறமொழியிலிருந்து தழுவியும் மொழி பெயர்த்தும் எழுதப்பட்டன என இருவகையில் காப்பியங்கள் உள்ளன.

இவற்றை இப்பாடத்தின் வழி நன்கு அறிந்து கொண்டோம்.

பாடம் - 4

செய்யுள்நெறி – வைதருப்பம் (முதற்பகுதி)

4.0 பாட முன்னுரை

அணியிலக்கண     நூலாகிய      தண்டியலங்காரம் பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பொதுவணியியல் செய்யுள் வகைகளையும், காப்பிய இலக்கணத்தையும், செய்யுள் நெறிகளையும் பற்றி விளக்குகின்றது.

செய்யுள் நெறி குறித்தும், அதன் வகைகளைக் குறித்தும், வைதருப்ப நெறியின் முதல் ஐந்து குணப்பாங்குகளைக் குறித்தும் இந்தப் பாடத்தில் காண்போம்.

4.1 செய்யுள்நெறி

நெறி என்பது சொல்லமைப்பு வகையினைக் குறிக்கும். செய்யுளில் அமையும் சொல்லமைப்பு வகைகளை எடுத்துரைப்பது செய்யுள்நெறி ஆகும்.

செய்யுள்நெறி கீழ்க்காணும் கூறுகளைக் கொண்டுள்ளது.

1)உயிரெழுத்து (குறில், நெடில்) அமையும் நிலை.

2)மெய்யெழுத்தின் வகைகள் (வல்லினம், மெல்லினம், இடையினம்) தனித்து வருதலும் கலந்து வருதலும்.

3)பொருள்தெளிவுக்கு உரிய சொற்கள் இடம் பெறுதலும் வருவித்தலும்.

4)வெளிப்படைப் பொருள் அமைதலும் குறிப்புப் பொருள் அமைதலும்.

5)ஓசை நலம் குன்றாமை.

6)சொல்நலம், பொருள்நலம் அமைதல்.

7)கருத்து, வருணனைகளின் நம்பகத்தன்மை.

8)வேற்றுமை உருபுகள் மறைந்து வரும் நிலை.

9)ஒன்றன் இயல்பை வேறொன்றில் ஏற்றி உரைத்தல்.

4.2 செய்யுள்நெறி - வகைகள்

செய்யுள்நெறி இருவகைப்படும். அவை : (1) வைதருப்ப நெறி, (2) கௌட நெறி

இதனைத் தண்டியலங்காரம் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறது.

மெய்பெறு மரபின் விரித்த செய்யுட்கு

வைதருப் பம்மே கௌடம் என்றுஆங்கு

எய்திய நெறிதாம் இருவகைப் படுமே

(தண்டியலங்காரம் : 13)

(மெய் = உண்மை

வைதருப்பம்மே = வைதருப்பம் (ஏ – அசைநிலை)

எய்திய = பொருந்திய)

4.2.1 வைதருப்ப நெறி விதர்ப்ப நாட்டார் ஆதரித்த நெறி ஆதலால் வைதருப்பநெறி எனப்பட்டது. இது எளிமையாகவும் இயல்பாகவும் அமையக் கூடியது. பத்துக் குணங்களைத் தன்னிடத்துக் கொண்டது. அவை,

01) செறிவு

02) தெளிவு

03) சமநிலை

04) இன்பம்

05) ஒழுகிசை

06) உதாரம்

07) உய்த்தல்இல் பொருண்மை

08) காந்தம்

09) வலி

10) சமாதி

ஆகியனவாகும்.

செறிவே தெளிவே சமநிலை இன்பம்

ஒழுகிசை உதாரம் உய்த்தல்இல் பொருண்மை

காந்தம் வலியே சமாதி என்றுஆங்கு

ஆய்ந்த ஈரைங் குணனும் உயிரா

வாய்ந்த என்ப வைதருப் பம்மே

(தண்டியலங்காரம் : 14)

(உதாரம் = அதிசயம்

உய்த்தல் = வருவித்தல்

உயிரா = உயிராக

வாய்ந்த = வாய்த்த)

4.2.2 கௌட நெறி கௌடரால் மேற்கொள்ளப்பட்ட நெறி, கௌட நெறியாகும். கௌடர் என்னும் பெயர், கௌட நாட்டினர் என ஒரு நாட்டினரைக் குறிப்பதும் ஆகலாம் ; தனி ஒருவருக்கு அமைந்த இடுகுறிப் பெயரும் ஆகலாம். இது குறித்து உரைநூல்களில் தெளிவான விளக்கம் காணப்படவில்லை.

வைதருப்ப நெறியை மறுத்து எழுந்தது கௌட நெறியாகும். இதுவும் கீழ்க்காணும் பத்துக் குணங்களை உடையது :

01) செறிவு

02) தெளிவு

03) சமநிலை

04) இன்பம்

05) ஒழுகிசை

06) உதாரம்

07) உய்த்தல்இல் பொருண்மை

08) காந்தம்

09) வலி

10) சமாதி

வைதருப்பர் தம் செறிவு முதலான இப்பத்து குணங்களுள் சிலவற்றைத் தழுவியும், சிலவற்றை மறுத்தும் அமைவது கௌட நெறியாகும்.

கௌடம் என்பது கருதிய பத்தொடும்

கூடாது இயலும் கொள்கைத்து என்ப

(தண்டியலங்காரம் : 15)

(கூடாது = பொருந்தாது

இயலும் = அமையும்)

பத்தொடும் கூடாது என்பதில் இடம் பெறும் உம்மை முற்றும்மையாக அமையாமல் ‘சிலவற்றொடு மட்டும் கூடி வரும்’ என்னும் எச்சப் பொருள் தருவதும் உண்டு.

கௌட நெறி குறித்துத் தனியே நூற்பாக்கள் இடம் பெறவில்லை; உரைகளின் வழி இடம்பெறும் சான்றுகளைக் கொண்டே அவற்றை அறிய முடிகின்றது. (கௌடநெறி குறித்துப் பாடம்- 6 இல் விரிவாகக் காண்போம்.)

4.3 வைதருப்பம் - செறிவு

வைதருப்பநெறியின் பத்துக் குணங்களுள் முதலாவதாக இடம்பெறுவது செறிவு என்பதாகும். செறிவு என்பது இறுகுதல், நெருங்குதல் என்னும் பொருளுடையது.

செறிவுஎனப் படுவது நெகிழிசை யின்மை

(தண்டியலங்காரம் : 16)

என்பது தண்டியலங்கார நூற்பா.

செறிவு என்பது, நெகிழ்ந்த இசை இன்றி வரத் தொடுப்பது ஆகும். வல்லினம் விரவாமல் மெல்லினமோ, இடையினமோ தொடர்ந்து வருமாறு அமைவது நெகிழிசை எனப்படும். எனவே, அதற்கு மாறாய் (முரணாக) வல்லினமோ நெடிலோ செறிவாக அமையுமாறு செய்யுள் தொடுக்கப்படுவது செறிவு என்பதாகும்.

செறிவு என்பது,

1) வல்லின ஒற்றுகள் சார்ந்து வருதல்.

2) வல்லின ஒற்றுகள் சாராது வருதல்.

3) நெட்டெழுத்துகள் மிகுதியாக வருதல்.

என மூவகைகளில் அமையும்.

4.3.1 வல்லொற்றுச் சார்ந்து வருதல்

க், ச், ட், த், ப், ற் என்பனவாகிய வல்லின ஒற்றுகள் தொடர்ந்து செறிவாக இடம் பெறுமாறு செய்யுள் அமைதல் செறிவு வகையாகும்.

சான்று :

துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோடல்

தொடுத்த தொடைகடுக்கை பொன்போற் – பொடித்துத்

தொடைபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்

கடிபடைத்துக் காட்டித்து காடு

(காளமேகப்புலவர் : பாடல் : 73)

(கோடல் = காந்தள்மலர்

கடுக்கை = கொன்றை

தோகை = மயில்

கடி = வாசனை

தோடுடித்த = தோள் துடித்த எனப் பிரிக்க)

என்பது கார்காலம் குறித்த காளமேகப்புலவரின் பாடல்.

காந்தள் மலர்கள் முகிழ்த்து ஒளிகொண்டு அரும்புகளை எடுத்தன; கொன்றைகள் பொன்போல் ஒளிரும் மாலைகளைத் தொங்கவிட்டன; வளையல் அணிந்த மகளிர் தோள்கள் துடித்தன ; மயில்கள் கூத்தாடின. இவ்வாறு காடு புதுமணம் படைத்துக் காட்சி தந்தது என்பது இச்செய்யுளின் பொருள்.

4.3.2 வல்லொற்றுச் சாராது வருதல் வல்லின ஒற்றுகளைச் சாராமல், வல்லின உயிர்மெய்கள் வருமாறு அமையும் செய்யுளும் செறிவு வகையில் அடங்கும்.

சான்று :

சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி

முலைவிலங்கிற் றென்று முனிவாள் – மலைவிலங்கு

தார்மாலை மார்ப ! தனிமை பொறுக்குமோ

கார்மலை கண்கூடும் போது

[சிலை = வில்

ஒசிய = வளைய

முனிதல் = ஊடுதல்

கார் மாலை = கார் கால மாலைப் பொழுது]

தோழி தலைவனிடம் தலைவியின் நிலையைக் கூறும் தன்மையது இப்பாடல், ‘மாலையணிந்த, மலை போன்ற தோளுடைய தலைவனே ! நீ இறுக அணைக்கும் பொழுது, தனது மார்பகம் சற்றுப் பிசகினாலும், வில்போன்ற புருவத்தை வளைத்து ஊடும் இயல்புடையவள் தலைவி. அப்படிப்பட்டவள் நீ பிரிவு மேற்கொண்டால் அதனைத் தாங்கிக் கார்கால மாலைப் பொழுதில் தனித்து இருப்பாளோ? எண்ணிப்பார்’ – என்பது பாடலின் பொருளாகும்.

4.3.3 நெடில் மிக வருதல் உயிர் நெட்டெழுத்துகளும், உயிர்மெய் நெட்டெழுத்துகளும் பயின்று (தொடர்ந்து) வருமாறு அமையும் செய்யுளும் செறிவு வகையில் அடங்கும்.

சான்று :

நூலாம்நா லாயிரநா னூற்றுநாற் பத்தொன்பான்,

பாலாம்நா னூற்றுநாற் பத்தொன்பான், – மலோம்நாற்

பத்தொன்பான் சங்கம்அறு பத்துநா லாடலுக்கும்

கர்த்தன் மதுரையிற்சொக் கன்

(காளமேகம் : 27)

(கர்த்தன் = தலைவன்)

நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பது நூல்களையும், அவற்றை இயற்றிய நானூற்று நாற்பத்தொன்பது புலவர்களையும், அவர்களின் தலைவர்களாகிய நாற்பத்தொன்பது புலவர்களையும் உடைய முச்சங்கங்களுக்கும்     அறுபத்து     நான்கு திருவிளையாடல்களுக்கும் தலைவர் மதுரைச் சொக்கநாதப் பெருமானே ஆவார்.

இச்செய்யுளில் நெடில் எழுத்துகள் பயின்று வந்துள்ளன.

வைதருப்ப நெறியின் செறிவுச் செய்யுள் இவ்வாறு அமைய, கௌட நெறியோ இடையின எழுத்துச் செறிந்து வருவதைச் செறிவு எனச் சுட்டி நிற்கும்.

4.4 வைதருப்பம் - தெளிவு

பாடலின் பொருள் நன்கு புலப்படுமாறு அமைவது தெளிவு எனப்படும். செய்யுளில் திரிபுச் சொற்கள், கடினமான புணர்ச்சி விதிகள், குறிப்புப்பொருள்கள் ஆகியன அமையாமல், இயற்சொற்களாலும் எளிமையான     சொற்புணர்ச்சிகளாலும் அமைவது ‘தெளிவு’ என்னும் குணத்தில் அடங்கும்.

தெளிவு என்பது வெளிப்படை என்னும் பொருள் உடையது.

தெளிவுஎனப் படுவது பொருள்புலப் பாடே

(தண்டியலங்காரம் : 17)

சான்று : 1

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்

(திருக்குறள் : 319)

(இன்னா = துன்பம்

முற்பகல் = முற்பொழுது, இளமை, முற்பிறவி

பிற்பகல் = பிற்பொழுது, முதுமை, மறுபிறவி)

ஒருவன் பிறருக்குத் துன்பம் செய்யின் அத்துன்பம் அடுத்துவரும் காலத்தில் அவன் அனுபவிக்க வேண்டியதாகத் தானே அவனைச் சென்று அடையும்.

சான்று : 2

கொம்புஉளதற்கு ஐந்து ; குதிரைக்குப் பத்துமுழம் ;

வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே ; வம்புசெறி

தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து

நீங்குவதே நல்ல நெறி

(நீதிவெண்பா)

(வெம்புகரி = மதயானை

வம்புநெறி = தொல்லைமிக்க)

கொம்பு உள்ள விலங்குகளை விட்டு ஐந்துமுழம் தூரமும், குதிரையை விட்டுப் பத்து முழம் தூரமும், மதம் மிகுந்த யானையை விட்டு ஆயிரம் முழம் தூரமும் விலகியிருக்க வேண்டும். ஆனால் தீயவர்களின் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் நீங்கி நிற்பதே நல்லதாகும் என்பது இதன் பொருள்.

இவ்வாறு வருவனவே தெளிவு என்னும் குணத்தனவாகும்.

கௌடநெறி சொல்லாற்றல் மிக்கதாகத் தெளிவினைச் சுட்டி நிற்கும்.

4.5 வைதருப்பம் - சமநிலை

வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூவகை மெய் எழுத்துகளும் சமமான நிலையில் இடம் பெறுவது சமநிலை ஆகும்.

விரவத் தொடுப்பது சமநிலை யாகும்

(தண்டியலங்காரம் : 18)

(விரவ = கலந்துவர)

சான்று : 1

சோகம் எவன்கொல் இதழிபொன் தூக்கின சோர்குழலாய்

மேகம் முழங்க விரைசூழ் தளவம் கொடியெடுப்ப

மாகம் நெருங்கவண் டானம் களிவண்டு பாடஎங்கும்

தோகை நடஞ்செய்யும் அன்பர்திண் தேர்இனித் தோன்றியதே

(இதழி = கொன்றை

தூக்கின = தொங்கவிட்டன

சோர்குழல் = தொங்கும் கூந்தல்

விரை = மணம்

தளவம் = முல்லை

வண்டானம்(வண்தானம்) = அழகிய தானம்

தோகை = மயில்

அன்பர் = தலைவர்

இனி = இதோ இப்பொழுது)

நீண்டு தொங்கும் கூந்தலை உடையவளே! கொன்றை மலர்கள் பொன்மயமாய் நறுமணம்     வீசவும், மேகம் முழங்கவும், மனம் மிகுந்த வெண்மையான மலர்களைத் தரும் முல்லைக்கொடி அசையவும், அழகிய தானத்திலே வண்டுகள் நெருங்கி வந்து முழக்கம் செய்து பாடவும், மயில்கள் மகிழ்ந்து இனிது நடனம்    செய்யும் வேளையில் நம் தலைவர் உறுதியான தேரில் ஏறி நின்னைக் காண வந்தனர். அவர் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்த துயரத்தை இப்போது எங்கே செல்ல விடுத்தனை?

இது, தோழி தலைவனின் வருகையை அறிவித்துத் தலைவியின் துயர் போக்கியது.

இப்பாடலில் வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூவின மெய்களும் விரவி வந்துள்ளன.

சான்று : 2

துதிவாணி வீரம் விசயம்சந் தானம் துணிவுதனம்

அதிதானி யம்சவு பாக்கியம் போகம் அறிவழகு

புதிதாம் பெருமை அறம்குலம் நோவகல் பூண்வயது

பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே

(காளமேகம் : 177)

(துதி = புகழ்

வாணி = கல்வி

விசயம் = வெற்றி

சந்தானம் = மக்கட்பேறு

சவுபாக்கியம் = சிறந்த இன்பம்

நோவகல் = நோய் இல்லாத)

‘மதுரையில் குடிகொண்டிருக்கும் மலோன பொருளே! புகழ், கல்வி, மனவுறுதி, வெற்றி, மக்கட்பேறு, தைரியம், செல்வம், அதிக தானிய வளம், சிறந்த இன்பம், நல்ல அனுபோகம் (துய்ப்பு) ஞானம், பொலிவு, நாளும் வந்தமையும் சிறப்பு, அறம் செய்யும் பண்பு, நல்ல குடிப்பிறப்பு, நோயில்லாமையுடன் கூடிய நீண்ட ஆயுள் ஆகிய பதினாறு பேறுகளையும் எனக்குத் தந்து அருள்செய்வாயாக’ என்பது இப்பாடலின் பொருள்.

இப்பாடலில் மூவின மெய்களும் விரவி வந்துள்ளன.

4.6 வைதருப்பம் - இன்பம்

சொற்களின் வகையாலும் மற்றும் அதன் பொருளின் வகையாலும் சுவைபடச்     சொல்வது ‘இன்பம்’ என்னும் குணப்பாங்கு ஆகும்.

இன்பம் – இனிமையுடையது.

சொல்லினும் பொருளினும் சுவைபடல் இன்பம்

(தண்டியலங்காரம் : 19)

என்பது தண்டியலங்காரம். எனவே, செய்யுளில் இடம்பெறும் இன்பத்தைச் சொல்லின்பம்,     பொருளின்பம் என இருவகைப்படுத்தலாம்.

4.6.1 சொல்லின்பம் எதுகை, மோனை, சிலேடை, மடக்கு, முரண், வந்தசொல்லே வருதல் ஆகிய நிலைகளில் சொல்லின்பம் அமையும்.

எதுகை

இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை ஆகும். எதுகையழகு சொல்லின்பம் தரும்.

சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்துசும் மாஇருக்கும்

எல்லையுள் செல்ல எனைவிட் டவா! இகல் வேலன்நல்ல

கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக்

கொவ்வைச் செவ்வாய்

வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள்அண்ணல் வல்லபமே

(கந்தர் அலங்காரம் : 10)

(இகல்வேலன் = தீமைக்குப் பகையான வேலினையுடைவன்

கொல்லி = ஒருவகைப் பண்

சொல்லி = வள்ளி

வல்லி = கொடி

வல்லபம் = திறமை

புல்லுதல் = அணைத்தல்)

இப்பாடலில் முதலடியில் 1, 2, 3 சீர்களிலும், இரண்டாம் அடியில் 1, 2 சீர்களிலும், மூன்றாம் அடியில் 1, 3, 4 சீர்களிலும், நான்காம் அடியில் 1, 2, 5 சீர்களிலும் லகர ஒற்று எதுகையாய் அமைந்து இன்பம் பயக்கின்றது.

‘வலிமையான வேலுடைய முருகப் பெருமான், சொல்ல இயலாத எல்லையில் சும்மா இருக்கும் அனுபவ எல்லையில் என்னைச்    சேர்த்தார். கொல்லிப் பண்ணை ஒத்த வள்ளியம்மையாகிய    கொவ்வைப்     பழமொத்த செவ்வாயினையுடைய கொடியை அணைக்கின்ற பெரிய தோளாகிய மலையினையுடைய அப்பெருமானின் வல்லபத்தை என்னென்பேன்’ என்பது பொருளாகும்.

மோனை

முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத் தொடை ஆகும்.

முன்னைத்தம் சிற்றில் முழங்க கடல்ஓதம்

மூழ்கிப் போக

அன்னைக்கு உரைப்பன் அறிவாய் கடலேஎன்று

அலறிப் பேரும்

தன்மை மடவார் தளர்ந்துஉகுந்த வெண்முத்தம்

தயங்கு கானல்

புன்னை அரும்புஏய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும்

புகாரே எம்மூர்

(சிற்றில் = மணலால் ஆன சிறுவீடு

பேரும் = பெயரும், திரும்பும்

உகுத்தல் = உதிர்த்தல்

தயங்குதல் = விளங்குதல்

கானல் = பொழில்

ஏய்ப்ப = ஒப்ப

பேதுறுத்தல் = மயக்குதல்)

இப்பாடலில் அடிதோறும் 1, 3, 5-ஆம் சீர்கள் மோனை அமைந்துள்ளது. ஓரடியில் இடையிட்டு வரும் மோனை வழிமோனை எனப்படும். இவ்வாறு வழிமோனை அமைந்து திகழ்கின்றது.

‘சிறுமிகள் குழுமிக் கடற்கரையில் மணலால் சிறு வீடு கட்டி விளையாட, கடல் அலை வந்து அவ்வீடுகளைக் கரைத்து அழிக்க, அவர்கள் எம் அன்னையரிடம் உன்னைப் பற்றி உரைப்போம் எனக் கடலிடம் சினம் கொண்டு கூறித் தம் கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையை அறுத்துதிர்த்த முத்துகள், கடற்கரையின் புன்னை அரும்புகளைப் போல் காட்சியளித்துக் காண்போரை மயக்கிக் குழம்பச் செய்யும் காவிரிப்பூம்பட்டினமே எம் ஊர் ஆகும்.’ என்பது இப்பாடலின் பொருளாகும்.

சிலேடை

சிலேடை என்பது ஒரு சொல் அல்லது சொற்றொடர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள் தருமாறு அமைவதாகும்.

பாம்புக்கும் எலுமிச்சம் பழத்துக்கும் சிலேடையாகக் காளமேகப் புலவர் பாடிய பாடலாவது :

பெரியவிட மேசேரும் பித்தர்முடி ஏறும்

அரியுண்ணும் உப்புமே லாடும் – எரிகுணமாம்

தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில்

பாம்பும்எலு மிச்சம் பழம்

(காளமேகம் : 52)

பாம்பு :

1)     பெரிய விடமே சேரும் –     மிகுதியான விடத்தை உடையதாயிருக்கும்.

2)     பித்தர்முடி ஏறும்     –     பித்தராகிய சிவபெருமானின் திருமுடிமேல் விளங்கும்.

3)     அரி உண்ணும்    –     காற்றைப் புசிக்கும்.

4)     உப்பும் மலோடும்     –     உடலை உப்பிக் கொள்ளும் ; மலோகத் தலைதூக்கி ஆடும்.

5)     எரிகுணமாம்     –     சினமுடைய குணத்தினதும் ஆகும்.

எலுமிச்சம்பழம் :

1)     பெரிய இடமே சேரும்     -     பெரியவர்களிடத்திலே கொடுக்கப்பட்டுச் சேர்ந்திருக்கும்.

2)     பித்தர் முடிமேல் இருக்கும்     -     பித்துடையவர்களின் தலையில் தேய்க்கப்பட்டுப் பித்து தீர்க்கும் மருந்தாகும்.

3)     அரி உண்ணும்     -     அரியப்படும்.

4)     உப்பு மலோடும்     -     உப்பிட்டு ஊறுகாய் ஆக்கப்படும்.

5)     எரிகுணமாம்     -     சாறுபட்டால் எரிச்சல் தரும் குணம் உடையது ஆகும்.

திருமலைராயனின், தேன் பொழிகின்ற சோலைகள் சூழ்ந்த திருமலையில் பாம்பும் எலுமிச்சம் பழமும் ஒப்பாகும்.

மடக்கு

ஒரு முறை வந்த சொல்லோ சொற்றொடரோ மீண்டும் வந்து வேறொரு பொருள் தருவது மடக்கு எனப்படும்.

மாலை அருளாது வஞ்சியான் வஞ்சியான்

மேலை அமரர் கடைவேலை வேலை

வளையார் திரைமேல் வருமன்ன மன்ன

இளையாள் இவளை வளை

(வஞ்சியான் = வஞ்சிநாட்டுச் சேரன், வஞ்சிக்க மாட்டான்

வேலை = பொழுது,

வரும் அன்னம் அன்ன = வரும் அன்னம் போன்ற

இவளை வளை = இவளது அழகிய வளையல்கள்)

‘முன்பு பாற்கடல் கடைந்த போது, சங்கு நிறைந்த அலையமைந்த நீர்நிலையில் வந்த அன்னம் போன்ற இளையவள் இத்தலைவி. இவளது அழகிய வளையலை, தன் மாலையைத் தராதவனாகச் சேரன் வஞ்சித்துவிட மாட்டான்’ என்பது இப்பாடலின் பொருள்.

வஞ்சியான், வேலை, மன்ன, வளை என்பனவாகிய சொற்கள் மடங்கி வந்து வெவ்வேறு பொருள் தந்தன.

முரண்

முரண்பட்ட சொற்களமைய வருவது முரண் அணி. இவ்வணி பாடலில் அமைந்து சொல்லின்பம் பயக்கும்.

காலையும் மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால்

மேலை வினையெல்லாம் கீழவாம் – கோலக்

கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்

பெருமானைச் சிற்றம் பலத்து

இப்பாடலில் காலை, மாலை ; கை, கால் ; மேலை, கீழ்; கருமை, வெண்மை, செம்மை, பசுமை; பெருமான், சிற்றம்பலம் என்பன தம்முள் முரண்பட வந்துள்ளன.

அழகிய கரிய யானைத் தோலையும், வெண்மையான திருநீற்றையும் சிவந்த திருமேனியையும், பசிய கொன்றை மாலையையும் உடைய சிவபெருமானைச் சிற்றம்பலம் சென்று காலைமாலை வேளைகளில் கைகூப்பித் திருவடிகளைத் தொழுதவர்களுக்கு முற்பிறவி வினைகள் எல்லாம் கீழ்ப்பட்டு நீங்கிவிடும் என்பது பாடலின் பொருளாகும்.

ஒரே சொல் பயின்று வருதல்

ஒரு செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் இடம்பெறுதல்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

(திருக்குறள் : 350)

‘எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறி என்று மனத்துக் கொள்க; விடாது வந்த பற்று விடுவதற்குப் பற்றுக் கொண்டு அதன்கண் உபாயத்தை அம்மனத்தால் செய்க’ என்பது பரிமேலழகர் உரை.

இவ்வாறு ‘பற்று’ என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து, இன்பம் பயக்கின்றது.

சொல்லின்பம் இவ்வாறு பலவகைகளில் அமைகிறது.

4.6.2 பொருளின்பம் சிறந்த பொருளின்பம் தரும் செய்யுள்கள் தமிழில் பல உள்ளன. கற்பனை நயத்துடன் கூடியதாக்ச் சிவப்பிரகாச சுவாமிகள் பாடும் பாடல் ஒன்று பின்வருமாறு :

சான்று: 1

கையன்று தாமரை கண்ணன்று இளமென் கயல்எனவே

பொய்யன்று கங்கையை நீர்என்று சாதிப்பர் போர்விடையார்

மெய்யென்று நீகொண் டிரேல்அறல் ஆயின்என் மென்கையிடைப்

பெய்யென்று பின்னை அறிவாய்தென் குன்றைப் பெரியம்மையே

(பெரிய நாயகியம்மை கட்டளைக் கலித்துறை : 4)

[கயல் = மீன்

போர்விடையார் = சிவபெருமான்

அறல் = ஆற்று மணல்

குன்றை = திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)]

‘பெரியநாயகியம்மையே! பழமலைநாதர் தம் தலையில் செஞ்சடையில் கங்கையாகிய பெண்ணை வைத்துள்ளார். உன்னிடம் அங்கிருப்பது பெண் அன்று ; நீர் (ஆறு) என்று கூறுவார். நீ அதனை நம்பிவிடாதே! கங்கைக்குக் கை காணப்படுகிறதே என நீ கேட்டால் அது கை இல்லை தாமரை என்பார். அதோ அவள் கண் உள்ளதே என்றால் அது கண்இல்லை மீன் என்று சாதிப்பார். கூந்தலை நீ இது ஏது எனக் கேட்டால் அது பாசியென்று கூறினும் கூறுவார் ஆதலால் என் கையில் அவ்வறல்நீரைப் பெய்வாயாக என்று கேள். அதற்கு அடுத்து அங்கிருப்பது நீர்நிலை அன்று; கங்கையாகிய பெண் என்னும் உண்மையை உணர்வாய்’ என்பது இப்பாடலின் பொருளாகும்.

உவமை, உருவகம் என வரும் தன்மையைப் புராணக் கதையுடன் இயைத்து நயம்பட உரைத்த பொருள்நலம் உணர்ந்து மகிழத்தக்கது.

கௌடநெறியும் இவ்வாறே சொல்லின்பம், பொருளின்பம் குறித்து ஒத்த கருத்துடையதாக விளங்குகின்றது.

4.7 வைதருப்பம் - ஒழுகிசை

செவிக்கு இனியதாய்ச் செல்லும் மெல்லிசை ஒழுகிசை எனப்படும்.

வெறுக்கத்தகும் இன்னா இசை இன்றி வரத் தொடுப்பது ஒழுகிசை என்பது தண்டியலங்காரக் கருத்து.

ஒழுகிசை என்பது வெறுத்திசை யின்மை

(தண்டியலங்காரம் : 20)

என்பது நூற்பா.

இமையவர்கள் மௌலி இணைமலர்த்தாள் சூடச்

சமையந் தொறும்நின்ற தையல் – சிமைய

மலைமடந்தை வாச மலர்மடந்தை எண்ணென்

கலைமடந்தை நாவலோர் கண்

(இமையவர்கள் = தேவர்கள்

மௌலி = மகுடம்

சமையம் = சமயம்

சிமையம் = சிகரம்

மலைமடந்தை = பார்வதி

மலர்மடந்தை = திருமகள்

எண்ணென் = அறுபத்து நான்கு

கலைமடந்தை = கலைவாணி

நாவலோர் = நாவினில் வல்லவர்கள்)

‘தேவர்களின் மணிமகுடம் வந்து பொருந்துகின்ற திருவடித் தாமரைகளை உடையவள்; எல்லாச் சமயங்களின் உட்பொருளாக இருப்பவள்; மலைமகளாகவும், திருமகளாகவும், கலைமகளாகவும் திகழ்பவள்; நாவன்மை மிக்கவர்களின் கண்ணாக விளங்குபவள். அவளைத் தொழுவோம்’ என்பது இப்பாடலின் பொருள்.

மென்மையான நடையுடன்     திகழும்     இப்பாடல் ஒழுகிசைக்குச் சான்றாகிறது.

மென்மையாக வரும் நிலையில் இடையிடையே வல்லொற்று மிக்கது போலவும், வல்லொற்றுக்கு இடையிடையே உயிரெழுத்து மிக்கது போலவும் அறுத்திசைப்பது போலவும் வருவன வெறுப்பான இசையினவாகும்.

ஆக்கம் புகழ்பெற்றது ஆவி இவள்பெற்றாள்

பூக்கட் குழற்கார் பொறைபெற்ற – மாக்கடல்சூழ்

மண்பெற்ற ஒற்றைக் குடையாய் வரப்பெற்றெம்

கண்பெற்ற இன்று களி

(ஆக்கம் = பெருக்கம்

குழற்கார் = கூந்தலாகிய மேகம்

மண் = உலகம் கடை = வெண்கொற்றக் குடை)

‘பெரிய கடல் சூழ்ந்த இவ்வுலகை உன் ஒற்றை வெண்குடையின் கீழ்ப்படுத்தி ஆளும் அரசனே! உன் வரவால் கூந்தலாகிய மேகத்தில் தலைவி பூச்சூடினாள். செல்வம் புகழ் பெற்றது ; தலைவி தன் உயிரையே பெற்றவளானாள். எம் கண்கள் களிப்பு அடைந்தன’ எனத் தோழி கூற்றாக இப்பாடல் கருத்து அமைந்துள்ளது.

இப்பாடலில் பூக்கட் குழற்கார், கண்பெற்ற இன்று என்னும் இடங்கள் வெறுத்திசை தோன்ற வருதலின் இவ்வாறு வருவன ஒழுகிசைக்கு மாறுபட்டவை என்று கூறுவர்.

கௌட நெறியும் ஒழுகிசை குறித்த வைதருப்ப நெறியை வழி மொழிந்து ஏற்கின்றது.

4.8 தொகுப்புரை

செய்யுளின் சொல்லமைப்பு வகையே செய்யுள்நெறி எனப்படும். அது வைதருப்பநெறி எனவும் கௌடநெறி எனவும் இருவகைப்படும். அவை ஒவ்வொன்றும் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தல்இல் பொருண்மை, காந்தம், வலி, சமாதி எனப் பத்துக் குணப்பாங்குகளை உடையன.

எளிமையாக அமையும் வைதருப்ப நெறியிலிருந்து சில வேறுபாட்டுத் தன்மைகளைக் கொண்டதாக எழுந்தது கௌடநெறியாகும்.

வைதருப்ப நெறியிலான செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை ஆகிய ஐந்து குணப்பாங்குகளை உரிய சான்றுகளுடன் இப்பாடத்தில் நாம் அறிந்து கொண்டோம்.

பாடம் - 5

அணி இலக்கணம் – பொது அறிமுகம்

5.0 பாட முன்னுரை

செய்யுளின் சொல்லமைப்பு வகையைச் செய்யுள்நெறி என்பர். செய்யுள் நெறியானது, வைதருப்பம், கௌடம் என இருவகைப்படும். ஒவ்வொரு நெறியும் பத்துப் பத்துக் குணப்பாங்குகளை உடையது. அவற்றுள் முதலாவதாகிய வைதருப்பநெறியின் முதல் ஐந்து குணப்பாங்குகளைச் சென்ற பாடத்தில் (பாடம்-4) அறிந்து கொண்டோம். வைதருப்ப நெறியின் அடுத்த ஐந்து குணப்பாங்குகள் குறித்து இந்தப் பாடத்தில் அறிந்து கொள்வோம்.

5.1 வைதருப்பம் - உதாரம்

உதாரம் – பெரியது, மேம்பாடுடையது. ஓதப்படும் செய்யுளின்கண்     அதன்     சொற்களால் தோன்றும் பொருளேயன்றி வேறு ஒரு பொருளைக் குறிப்பினால் உணர்த்துவது உதாரம் என்னும் குணப்பாங்கு ஆகும். குறிப்பு என்பது புத்தியினால் அறியப்படுவது ஆகும்.

உதாரம் என்பது ஓதிய செய்யுளில்

குறிப்பின் ஒருபொருள் நெறிப்படத் தோன்றல்

(தண்டியலங்காரம் : 21)

பெரிய புராணத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள், அப்பூதியடிகளிடம் ‘மூத்த திருநாவுக்கரசு எங்கே?’ என வினவியபொழுது, அவர், ‘இப்போது இங்கு அவன் உதவான்’ என்று உரைப்பது உதாரம் என்னும் குணப்பாங்கு உடையது. அது அவன் இறந்துபட்ட செய்தியைக் குறிப்பால் உணர்த்துகிறது.

உதாரம் என்பதற்கான சான்று வருமாறு :

செருமான வேற்சென்னி தென்உறந்தை யார்தம்

பெருமான் முகம்பார்த்த பின்னர் – ஒருநாளும்

பூதலத்தோர் தம்மைப் பொருள்நசையால் பாராவாம்

காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்

(செரு = போர்

மான = பெருமை, வலிமை

தென் = தெற்குத்திசை

உறந்தை = உறையூர்

பூதலத்தோர் = ஏனைய உலக மாந்தர்

தாழ்ந்திரப்போர் = வறுமையால் தாழ்ந்து இரந்து உயிர் வாழ்பவர்கள்

பொருள் நசை = பொருள் விருப்பம்)

பொருட்செல்வத்தின் மீது பற்றுடையவர்கள் ஆகி, அவற்றையே குறிக்கோளாகக் கொண்டு இரந்துண்டு வாழும் வறியவர்களின்    கண்கள், வெற்றிவேலினை உடையவனும் உறையூரில் தலைமை கொண்டு விளங்குபவனும் ஆகிய சென்னி என்னும் மன்னவனின் இனிய முகத்தைக் கண்ட பின்னர் இவ்வுலகத்தில் உள்ள ஏனையோரைப் பார்க்கமாட்டா.

இச்செய்யுளில் கண்ணால் நோக்கமாட்டா என்ற பொருள் மேலோட்டமாகத் தென்படுகிறது. எனினும் சோழன் வேண்டிய பொருள் தருதலால் வறுமை என்பது இனி நேராதவர்களாகி, யாரிடத்தும் சென்று பொருள் வேண்டிக் கையேந்தி நிற்க மாட்டார்கள் என்னும் மனத்தால் நோக்குதல் சார்ந்த பொருளைக் குறிப்பால் அளிக்கின்றது.

சான்று : 2

அவிழ்ந்த துணியசைக்கும் அம்பலமும் சீக்கும்

மகிழ்ந்திடுவார் முன்னர் மலரும் – கவிழ்ந்து

நிழல்துழாம் யானை நெடுந்தேர் இரவி

கழல்தொழா மன்னவர்தம் கை

(இசைத்தல் = முடித்தல்

சீத்தல் = துடைத்தல்

துழாம் = துழாவும்

இரவி = சூரியன், சூரியகுலத்துச் சோழர்)

கவிழ்ந்து தன்னுடைய நிழலையே பகைத்து அதனைத் தாக்கத் தும்பிக்கையால் பூமியைத் துழாவும் யானையையும், பெரிய தேரினையும் உடையவன் சூரிய குலத்து வந்த சோழன். அவனிடம் பணிந்து நில்லாமல் பகை கொண்ட மன்னவர்களின் கைகளானவை, உடுக்க வேண்டின் அவிழ்ந்த துணிகளைப் பின்பு முடித்துக் கொண்டும், படுக்க வேண்டின் பொது இடமாகிய அம்பலத்தைத் துடைத்துக் கொண்டும், உணவு இடுவோர் முன்னர் சென்று நின்று யாசித்தல் பொருட்டு மகிழ்வுடன் விரிந்து கொண்டும் நிற்கும்.

‘இடுவார் முன்னர் உவகையோடு விரியும்’ என்றதனால் இடாதார் முன்னர் உவகையின்றி விரியும் எனக் கொள்க.

வைதருப்ப நெறியினரின் உதாரம் குறித்த இந்தக் கருத்தைக் கௌட நெறியினரும் முற்றிலும் ஏற்பர்.

5.2 வைதருப்பம் - உய்த்தல்இல் பொருண்மை

உய்த்தல்இல் பொருண்மை என்பது, பிற சொற்களை வருவித்துச் சேர்த்து விளக்க வேண்டிய நிலைமையில்லாத பொருளுடைமையாகும்.

கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற்கு

உரியசொல் உடையது உய்த்தல்இல் பொருண்மை

(தண்டியலங்காரம் : 22)

என்பது நூற்பா.

செய்யுளில் உள்ள சொற்களைக் கொண்டு அதற்குரிய பொருளைக் காணுதல் சிறப்புடைமையாகும். சிலவகைப் பாடல்களில் சில சொற்களை வருவித்தும் கூட்டியும் அதற்குரிய பொருளைக் காண வேண்டியிருக்கும். அத்தகைய நிலைமை இன்றி அச் செய்யுளில் இயல்பாகவே உரிய பொருள் அமைந்தி- ருக்கும் குணப்பாங்கு இது.

இன்றுஉமையாள் மாசிலா வாள்முகம்கண்ட ஏக்கற்றோ

அன்றி விடஅரவை அஞ்சியோ – கொன்றை

உளராஆறு ஓடும் ஒளிர்சடையீர் சென்னி

வளராவாறு என்னோ மதி

(வாள் = ஒளி

ஏக்கறுதல் = ஏங்குதல்

உளரா = கலங்காத

ஆறு = கங்கையாறு

சென்னி = தலை

வளராவாறு = வளராத தன்மை

மதி = சந்திரன்)

கொன்றை மலரையும் கங்கையையும் ஒளிரும் சடைமுடியில் ஏற்று விளங்கும் பெருமானே ! உமாதேவியாரின் மாசற்ற ஒளி முகத்தைக் கண்டு அத்தகைய சிறப்பு தனக்கு இல்லையே என்கின்ற ஏக்கத்தாலோ அல்லது நீவிர் விடம் பொருந்திய பாம்பை அணிந்தமையால் அது தன்னை விழுங்கிவிடும் என்ற அச்சத்தாலோ, யாது காரணம் கொண்டு நின் சடைமுடியில் ஒளிரும் சந்திரன் பிறையாகிய நிலையிலிருந்து வளர்ந்து அரை நிலவாகவோ முழுநிலவாகவோ மாறாமல் உள்ளது? என்பது இப்பாடலின் பொருள்.

செய்யுளில் உள்ள சொற்களைக் கொண்டே உரிய பொருள் முழுமையாக இங்கு விளக்கப் பெற்றது. புதியதாகச் சொற்களை வருவித்துரைக்கவில்லையாதலின், இச்செய்யுள், உய்த்தல்இல் பொருண்மைக்கு உதாரணம் ஆயிற்று.

இதே பாடலுக்கு இச் சொற்களைக் கொண்டு பொருள் காண்பதோடு விட்டுவிடாமல், ஏக்கத்தாலோ? அச்சத்தாலோ? என இரு வினா எழுப்பியுள்ள இச் செய்யுளில் ‘யாதனாலோ?’ என ஒரு சொல் வருவித்துப் பொருள் காணும் நிலையும் உள்ளது. அவ்வாறான நிலை ‘உய்த்தல் பொருண்மை’ எனப்படும்.

உய்த்தல் பொருண்மையே வைதருப்பருக்கும் கௌடருக்கும், உடன்பாடு ; உய்த்தலில் பொருண்மை வைதருப்பருக்கு மட்டுமே உடன்பாடு ; கௌடருக்கில்லை என்கிறார் உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் (வர்த்தமானன் பதிப்பு, 1989).

5.3 வைதருப்பம் - காந்தம்

ஒன்றைப் புகழ்ந்து கூறும்பொழுது, உலகியல் ஒழுக்கம் மாறுபடாமல் கூறுவது காந்தம் எனப்படும். மனத்தினை மகிழ்விப்பது இதன் இயல்பு எனலாம்.

உலகொழுக் கிறவா துயர்புகழ் காந்தம்

(தண்டியலங்காரம் : 23)

உலக ஒழுக்கத்தைக் கடந்து செல்லாத உயர்ந்த புகழினை உடையது காந்தம் என்பது இதன் பொருளாகும்.

சான்று :

ஒருபே ருணர்வுடனே ஒண்ணிறையும் தேய

வரும்ஏது உறவுஎன்பால் வைத்த – ஒருபேதை

போதுஅளவு வாசப் புரிகுழல்சூழ் வாண்முகத்துக்

காதளவு நீண்டுஉலவும் கண்

(நிறை = ஒழுக்க உணர்வு

தேய = கெட

ஏது = ஏதம், குற்றம் (வருந்துதல் என்னும் பொருளது)

போது = மலர்)

நறுமண மலரின் வாசனையுடன் விளங்கும் கூந்தலும் ஒளிபொருந்திய முகத்தில் காதளவு நீண்டு உலவுகின்ற கண்களும் உடைய பெண் ஒருத்தி, என்னுடைய உள்ளம் வருந்திப் புலம்புமாறும் நிறையும் உணர்வும் ஒருங்கு கெடுமாறும் வந்து நின்றாள் என்பது இதன் பொருளாகும்.

இதில் உலக வழக்கு மிகாமல் கற்பனையும் கருத்தும் அமைந்தன. உலக இயல்பைக் கடவாததாக இப்பாடற் கற்பனை உள்ளது. காந்தம் என்பது உலக வழக்கிறந்தது என்பார் கௌடர்.

5.4 வைதருப்பம் - வலி

செய்யுளில் தொகைச் சொல் மிகுதியாக வருமாறு தொடுப்பது வலி எனப்படும். வலி – வன்மையுடையது.

வலிஎனப் படுவது தொகைமிக வருதல்

(தண்டியலங்காரம் : 24)

தொகைச்சொல்     என்பது     அறுவகைத் தொகைச் சொற்களையும் குறிக்கும்.

வேற்றுமைத் தொகை, வினைத்தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை ஆகியவை அவை என்று முன்பு படித்தது நினைவிருக்கலாம்.

இவ்வாறான தொகைச் சொற்கள் பல அமையுமாறு வருவது வலி என்னும் குணப்பாங்காகிறது.

இனி, வலி என்பதற்கான செய்யுள் சான்று பின் வருமாறு :

கால்நிமிர்த்தால் கண்பரிவ வல்லியோ புல்லாதார்

மான்அனையார் மங்கலநாண் அல்லவோ – தான

மழைத்தடக்கை வார்கழற்கால் மானவேற் கிள்ளி

புழைத்தடக்கை நால்வாய்ப் பொருப்பு

(தானம் = கொடை

கண் = இரும்புச் சங்கிலியின் பூட்டுவாய்

பரிவ = அறுபடுவன

வல்லி = சங்கிலி

புல்லாதார் = பகைவர்

மங்கல நாண் = தாலி

மழை = மேகம்

தட = பெரிய

வார் = நீண்ட

மானம் = பெருமை

புழை = துளை

நால்வாய் = தொங்கும் வாய்

பொருப்பு = மலை (இங்கு, யானை)

வரையாது வழங்கும் மேகம் போன்ற பெரிய கையும், வீரக்கழல் அணிந்த காலும், பெருமைமிக்க வேலும் உடைய கிள்ளியாகிய சோழ மன்னனின் நீண்ட துதிக்கையும் தொங்கும் வாயும் உடைய யானை சினந்தால் அதைக் கட்டியிருக்கும் கால் சங்கிலியின் பூட்டு வாய் மட்டுமோ அறுபடும்? பகைவர்தம் மனைவியரின் கழுத்திலிருக்கும் தாலியும் அல்லவோ அறுபடும். அதாவது, பகையரசர்கள் இறந்து படுவது உறுதி என்பது பாடலின் பொருளாகும்.

கால் நிமிர்த்தல் – காலை நிமிர்த்தல் (ஐ)

கண்பரிவ – கண்ணைப் பரிவன (ஐ)

கழற்கால் – கழலையுடைய கால் (ஐ உடைய)

வேற்கிள்ளி – வேலையுடைய கிள்ளி (ஐ உடைய)

புழைத் தடக்கை – புழையை உடைய தடக்கை (ஐ, உடைய)

தான மழை – தானத்தை உடைய மழை (ஐ, உடைய)

மானவேல் – மானத்தையுடைய வேல் (ஐ, உடைய)

புல்லாதார் மான்அனையார் – புல்லாரது மான்அனையார் (அது)

மான் அனையார் மங்கல நாண் – மான் அனையாரது மங்கல நாண் (அது)

இவை வேற்றுமைத் தொகை.

புழைத்தடக்கை நால்வாய்ப் – பொருப்பு     புழைத்தடக்கையையும் நால்வாயையும் உடைய பொருப்பு (உம்)

இது உம்மைத் தொகை.

இவ்வாறு தொகைச் சொற்கள் மிக வருதல் வலி ஆகும்.

சான்று : 2

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று

(குறள் : 259)

(அவி = ஆகுதிப்பொருள்

வேட்டல் = வேள்வி செய்தல்

செகுத்தல் = கொல்லல்)

நெய் முதலிய ஆகுதிப் பொருள்களை     இட்டு ஆயிரக்கணக்கான வேள்விகளைச் செய்வதைவிட ஓர் உயிரைக் கொல்லாமையும் உண்ணாமையுமா செயல் நல்லனவாகும்,

அவிசொரிந்து     -     அவியைச் சொரிந்து (ஐ)

வேட்டலின் நன்று     -     வேட்டலினும் நன்று (உயர்வு சிறப்பும்மை தொக்கது)

உயிர்செகுத்து     -     உயிரைச் செகுத்து (ஐ)

இவ்வாறு, பல செய்யுள்களிலும் பதவுரை காண முற்படும் போது உருபு விரித்தலின் அருமையையும் அழகையும் நாம் அறியலாம்.

வலி என்னும் குணப்பாங்கில் ஓரளவு தொகைச் சொற்கள் இடம் பெறுதலை வைதருப்பநெறி சுட்டுகின்றது. மிக அதிகமாகத் தொகைச் சொற்கள் இடம் பெற வேண்டும் எனக் கௌட நெறி குறிப்பிடுகின்றது.

5.5 வைதருப்பம் - சமாதி

சமாதி என்னும் சொல்லுக்கு ஒரு பொருளைப் பிறிதொரு பொருளுடன் ஐக்கியப்படுத்திக் காட்டல் என்பது பொருளாகும். சமாதி என்னும் குணப்பாங்கு, ‘உரிய பொருளின் வினையை ஒப்புடைய பொருளின்மேல் ஏற்றி உரைப்பது’ என்னும் பொருள் படுவதாகும்.

உரிய பொருளின்றி ஒப்புடைப் பொருள்மேல்

தரும்வினை புணர்ப்பது சமாதி யாகும்

(தண்டியலங்காரம் : 25)

(புணர்ப்பது = பொருத்துவது)

வினைக்கு மட்டுமன்றிப் பெயருக்கும்     இவ்வாறு உரைக்கப்படும் என்பது உரையாசிரியர்கள் கருத்து.

சான்று : 1

அகலிரு விசும்பின் பாயிருள் பருகிப்

பகல்கான்று எழுதரு பல்கதிர்ப் பரிதி

(பெரும்பாண் : 1-2)

(அகல் = அகன்ற

இருவிசும்பு = பெரிய வானம்

பாய் = பரவிய

பருகி = குடித்து

கான்று = உமிழ்ந்து

பரிதி = சூரியன்)

அகன்ற வானில் தோன்றிப் பரவிய இருளை உட்கொண்டு பருகி    இல்லாமையாக்கி,     பேரொளியான     பகலைத் தோற்றுவிப்பவன் சூரியன் என்பது பொருள்.

சூரியன் இருளை அகற்றும்; ஒளியை வீசும். இவையே அதன்    செயலுக்குரிய வினைச் சொற்களாகும். ஆனால், இருளைப் பருகும்; ஒளியைக் காலும் (உமிழும்) என உயர்திணையும், அஃறிணையுமாகிய உயிருள்ள பொருள்களின் வினைச் சொற்கள் சூரியனின்மேல் ஏற்றிக் கூறப்பட்டன.

சான்று : 2

விழித்த குவளைக் கழிப்போது வாக்கிய

கள்ளுண்டு களித்த வண்டினம்

(கழி = உப்பங்கழி

போது = மலர்கள்

வாக்கிய = சொரிந்த)

‘விழித்துத் (மலர்ந்து) திகழும் குவளை மலரானது சொரிந்த கள்ளினை உண்டு களிப்படைந்தன வண்டினங்கள்’ என்பது பொருளாகிறது.

கண்ணுக்குரிய விழித்தல், மலரின் மலர்தலாகிய வினைக்கு இணையாகக் கூறப்பட்டது. வாக்குதல் (சொரிதல்), குவளையின் தேன் பொங்கும் செயலுக்குக் கூறப்பெற்றது. களித்தல், வண்டின் செயலுக்கு உரைக்கப்பட்டது.

சான்று : 3

கன்னி எயில்; குமரி ஞாழல்

கன்னி என்பது புதியது ; முதலாவது என்னும் பொருளது. எயில் – மதில் சுவர். மறுவற்ற மதில் சுவர் கன்னி எயில் எனப்பட்டது. உயர்திணையில் பெண்பாலுள் மணமாகாதவரைக் குறிக்கும் (புதியவர்) ‘கன்னி’ என்பது, அஃறிணைக்குரியதாக வழங்கப்பெற்றது.

அழியாத இளமை பொருந்திய ஞாழல் மரமானது ‘குமரி ஞாழல்’ எனப்பட்டது.

உயர்திணையில் மணமாகாப் பெண்ணைக் குறிக்கும் ‘குமரி’ என்னும் சொல், ஞாழலின் இளமைக்கு ஏற்றிக் கூறப்பட்டது.

இவ்வகையில் இது, சமாதி என்னும் குணப்பாங்கிற்குச் சான்று ஆயிற்று.

கௌட நெறியாரும் ‘சமாதி’ குறித்த குணப்பாங்கின் இக் கருத்தை முற்றும் உடன்படுவர்.

5.6 வைதருப்பமும் கௌடமும்

செய்யுள்நெறியின் இருபெரும் வகைகளாக உள்ள வைதருப்பம், கௌடம் ஆகிய இரண்டும் தம்முள் ஒற்றுமையும் வேற்றுமையும் ஒருங்கு கொண்டு விளங்குகின்றன.

ஒற்றுமைக் கூறுகளாக உள்ள குணங்கள் ஒழுகிசை, பொருளின்பம், உதாரம், சமாதி ஆகியனவாகும்.

வேற்றுமைக் கூறுகளாவன :

வ.எண்                                          வைதருப்பம்                                                                                                          கௌடம்

1)                  செறிவு முதலான பத்துக் குணங்களை உடையது.                              பத்துக் குணங்களுள் சில ஏற்கும்.

2)                வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூவினத்தாலும்  ஓரின எழுத்துகளால் ஆன பாடல் உடையது.

அமைந்த பாடலுடையது.

3)               பொருள் எளிதில் விளங்க வேண்டும்.                                                        பொருள் எளிமையுடன் நயமும் வேண்டும்.

4)               மோனைகள், தொகைகள் ஓரளவே போதுமானது.                             மோனைகள், தொகைகள் மிகுதியும் தேவை.

5)                  உலகியல் நெறிக்கேற்பப் புகழுரை அமைதல் வேண்டும்.              உலகியலுக்கு அப்பாற்பட்டும் கற்பனை வளம்

பெருகிடும் புகழுரை அமையலாம்.

6)               உய்த்தல்இல் பொருண்மை காணுதல்.                                                        உய்த்தல் பொருண்மை காணுதல்.

இவ்வாறு இருவகைச் செய்யுள் நெறிகளும் தமக்குள் தொடர்பு கொண்டுள்ளன.

5.7 புறனடை

தண்டியலங்காரத்தின் முதற்பகுதியாகிய பொதுவணியியலின் இறுதியில் செய்யுள் வகைக்கும் செய்யுள் நெறிக்கும் பிற இலக்கணங்களுக்குமாகப் புறனடை நூற்பா அமைகின்றது. (புறனடை = குறிப்பிட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டவைகளைப் பொருத்திக் காட்ட உதவுவது.)

ஏற்ற செய்யுட்கு இயன்ற அணியெலாம்

முற்ற உணர்த்தும் பெற்றியது அருமையின்

காட்டிய நடைநெறி கடைப்பிடித்து இவற்றொடு

கூட்டி உணர்தல் ஆன்றோர் கடனே

(தண்டியலங்காரம் : 26)

என்பது அந்நூற்பா,

செய்யுளுக்கு உரிய அணிகள் யாவற்றையும் ஒன்று விடாது உணர்த்துவது அரிதாகும். முந்தைய விதிகளைக் கடைப்பிடித்து, வேண்டிய வகையில் ஒழுகுதல் சான்றோர் கடமையாகும்.

பொருள் எளிதில் விளங்கும் தன்மையுடையதாய்ச் சொற்செறிவு    இல்லாததாய்     விளங்குகின்ற மிடுக்கற்ற நடையொன்று உளது. அது வைதருப்பம் என்பதாகும்.

பொருட்செறிவும் சொற்செறிவும் உடைய மிடுக்கான நடையுடையது ஒன்று உளது. அது கௌடம் என்பதாகும்.

எந்த நடைக்கும் ஓசையினிமையும், பொருட்செறிவும் இன்றியமையாதவையாகும்.

வைதருப்பம், கௌடம் தவிர வேறு நெறிகளும் உள்ளன. இவற்றுள் வெளிப்படையான பேதமுடையவை வைதருப்பமும் கௌடமுமேயாகும். பிற, நுட்பமான பேதமுடையன.

நூலாசிரியர் தண்டியடிகள் வடநாட்டுக் கவிநயங்களில் விரிந்த பயிற்சி பெற்றவர். எனவே, அவற்றை எடுத்துக் காட்டி விளக்குகின்றார்.

இவை புறனடை நூற்பாவில் பெறப்படும் கருத்துகளாகும்.

5.8 தொகுப்புரை

உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி ஆகிய ஐவகை குணப்பாங்குகள் வைதருப்ப நெறியின் பிற்பகுதியாக அமைகின்றன.

வைதருப்பமும் கௌடமும் தம்முள் ஒற்றுமைக் கூறுகளையும் வேற்றுமைக் கூறுகளையும் கொண்டு திகழ்கின்றன.

இவை இப்பாடத்தின் வழி நாம் அறிந்து கொண்டனவாகும்.

பாடம் - 6

செய்யுள்நெறி – கௌடம்

6.0 பாட முன்னுரை

செய்யுளில் இடம்பெறும் ஒற்றுகள்,     சொல்நிலை, பொருள்நிலை, ஓசைநயம் ஆகியவற்றின் அடிப்படையில் செய்யுளை இனம்பிரித்து அறிதல் செய்யுள்நெறி எனப்படும்.

தொல்காப்பியர் பொருளதிகாரம் செய்யுளியலில் இருபது வண்ணங்களையும்     தமிழின்     இயல்பிற்கேற்ப எடுத்துரைத்துள்ளார். இதுபோன்று வடஇந்தியாவில் வழங்கப் பெறும் சமஸ்கிருதம் முதலான மொழிகளில் செய்யுள்நெறி எனச் சில, மொழிக்கு ஏற்பக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் விதர்ப்ப நாட்டினரும், கௌட நாட்டினரும் கடைப்பிடித்து     வரும் வைதருப்பம், கௌடம் ஆகிய இருநெறிகள் சிறப்புடையன. தண்டியாசிரியர் அவ்விரு நெறிகளையும் தண்டியலங்காரத்தில் எடுத்துரைத்துள்ளார்.

வைதருப்பநெறி குறித்துக் கடந்த இருபாடங்களிலும் (பாடம் 4,5) அறிந்து கொண்டோம். இப்பாடத்தில் கௌடநெறி குறித்துக் காண்போம்.

6.1 கௌடநெறி

செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தல்இல் பொருண்மை, காந்தம், வலி, சமாதி ஆகிய பத்துக் குணப்பாங்குகளும் குறித்த கௌட நாட்டினரின் நெறி, ‘கௌடநெறி’ எனப்படும்.

வைதருப்ப நெறியினர் கூறும் பத்துக் குணப்பாங்குகளில் சிலவற்றொடு வேறுபட்டு அமைவது கௌடநெறியின் இயல்பாகும்.

கௌடம் என்பது கருதிய பத்தொடும்

கூடாது இயலும் கொள்கைத்து என்ப

(தண்டியலங்காரம் : 15)

(கூடாது = பொருந்தாமல் இயலும் = அமையும்)

என்பது தண்டியலங்காரம்.

6.2 செறிவும் தெளிவும்

கௌட நெறிக்கு என்று தனித்த நூற்பாக்கள் தண்டியலங்காரத்துள் இடம் பெறவில்லை. உரையாசிரியர்கள் காட்டும் சான்றுகளைக் கொண்டு கௌடநெறியை அறிந்து கொள்கிறோம். வைதருப்ப நெறியைச் சுட்டும் நூற்பாக்களைக் கொண்டு, அவற்றினின்றும் கௌடநெறி வேறுபடுதலைக் காண்போம்.

6.2.1 செறிவு செறிவு எனப் படுவது நெகிழிசை யின்மை (16)

என்பது தண்டிலயங்கார நூற்பா. வல்லொற்று மிகுந்தும், குறைந்தும், நெடிலெழுத்து மிகுந்தும் நெகிழ்ந்த ஓசையின்றி இறுக்கமாகத் தொடுக்கப்படுவது செறிவு என்பது இந்நூற்பாவின் கருத்து. வைதருப்பநெறி இது.

நெகிழிசையுடைமையே செறிவு என்பது கௌடநெறியாகும். நெகிழிசையாவது இடையின எழுத்துகள் செறிந்து வருவதாகும்.

சான்று :

விரவலராய் வாழ்வாரை வெல்வாய் ஒழிவாய்

இரவுஉலவா வேலை ஒலியே – வரவுஒழிவாய்

ஆயர்வா யேஅரிவை ஆருயிரை ஈராவோ

ஆயர்வாய் வேயோ அழல்

(விரவலர் = துணைப்பிரிந்தார்

வாழ்வார் = தனித்திருப்பார்

ஒழிவாய் = விலகுவாய்

உலவா = ஓயாத

வேலை = கடல்

வரவு = வருதல்

ஆயர் = தாய்மார், இடையர்

ஈர்தல் = பிளத்தல்

வேய் = குழலோசை

அழல் = நெருப்பு)

‘இரவெல்லாம் ஓயாமல் அலைகின்ற கடலலையின் ஒலியே! நீ துணையைப் பிரிந்து வாழ்வாரை வருத்தி வெல்ல விழைகின்றாய்;    அவரை வெல்வாயோ இரக்கமுற்று விட்டுவிடுவாயோ அறியேன். எனினும் ஒன்று கூறுகிறேன். தாயர்தம் வாய்ச்சொல்லே மகளிரை வருத்துகின்றது. இடையர் ஊதும் குழலோசையும் அவருயிரைப் பிளக்கின்றது. எனவே நின் வருகையை நிறுத்தி ஓய்வு கொள்வாயாக’ என்பது பாடற்பொருள்.

‘யரலவழள’ என்னும் இடையின மெய்யும் உயிர்மெய்யும் விரவி வந்து நெகிழிசை கொண்டு செறிவுக்குச் சான்றானது.

6.2.2 தெளிவு கவிஞனால்     கருதப்பட்ட பொருள், கற்போர்க்கு வெளிப்படையாகப் புலப்பட அமைவது தெளிவு என்பதாகும்.

தெளிவுஎனப் படுவது பொருள்புலப் பாடே (17)

என்பது நூற்பா. பலபொருள் பயக்கும் திரிசொற்கள் இடம்பெறாமையே தெளிவுக்குக் காரணம் என்பர் வைதருப்பர்.

பொருள் புலப்பாடு இல்லாதது எனினும், விசேடமான (சிறப்பான)    பொருளை     உணர்த்தும் சொல்லாற்றல் உடையதாகத் தொடுக்கப்படுவதே தெளிவு என்பது கௌடநெறி.

சான்று : 1

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று

(திருக்குறள் : 297)

பொய்யாமையாகிய ஒழுக்கத்தைத் தொடர்ந்து கடைப் பிடிப்போர், வேறு பிற அறச்செயல்களைச் செய்தொழுக வேண்டிய தேவையில்லை.

பொய்யாமை (வாய்மை)யைப் பொய்யாமை (நீங்காதபடி) கடைப்பிடித்தல் எனவும் சொல்வரிசைக்குப் பொருள் காணலாம்.

சான்று : 2

கரிக்காய் பொரித்தாள் கன்னிக்கா யைத்தீய்த்தாள்

பரிக்காயைப் பச்சடியாப் பண்ணாள் – உருக்கமுள்ள

அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்

உப்புக்காண் சீச்சீ உமி

(காளமேகம் : 46)

என்பது கரி எனத் தொடங்கி உமி என முடிக்க வேண்டும் என்றபோது காளமேகப் புலவர் பாடியது.

என் அத்தைமகள் கரிக்காய் (அத்திக்காய்) பொரித்தாள்; கன்னிக்காய் (வாழைக்காய்) வதக்கினாள்; பரிக்காய் (மாங்காய்) கொண்டு பச்சடி செய்தாள்; விருப்பத்துக்குரிய அப்பைக்காய் (கத்தரிக்காய்) நெய்துவட்டல் செய்தாள். எனினும் அத்தனையிலும் அன்பு மிகுதிபோல் உப்புமிகுதியாகி விட்டாள் என்செய்வது? உமிழவேண்டியதுதான் உணவை.

சொல்லாற்றலால் இச்செய்யுள் அழகு பெற்றுத் திகழ்கின்றது.

6.3 சமநிலையும் இன்பமும்

முன்னர்க் கூறியதுபோல் வைதருப்பநெறியில் காட்டிய நூற்பாக்களைக் கொண்டே கௌட நெறியின் இவ்விரு பிரிவுகளைப் பற்றிக் காண்போம்.

6.3.1 சமநிலை வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூவகை மெய்யெழுத்துகளும் விரவிவரத் தொடுப்பது சமநிலை என்பார் வைதருப்பர்.

விரவத் தொடுப்பது சமநிலை யாகும் (18)

என்பது நூற்பா.

வல்லின எழுத்துகள் ஏனைய இருவகை     மெய் எழுத்துகளினும் மிகுந்து வருமாறு இயற்றப் பெறுவது சமநிலையாகும் என்பது கௌடநெறி.

சான்று : 1

இடர்த்திறத் தைத்துற பொற்றொடி

நீயிடித் துத்தடித்துச்

சுடர்க்கொடித் திக்கனைத் திற்றடு

மாறத் துளிக்குமைக்கார்

மடக்குயிற் கொத்தொளிக் கக்களிக்

கப்புக்க தோகைவெற்றி

கடற்படைக் கொற்றவன் பொற்கொடித்

தேரினிக் கண்ணுற்றதே

தோழி ஒருத்தி தலைவனின் வருகையைக் காத்திருக்கும் தலைவிக்கு அறிவிக்கும் செய்யுள் இது.

(பொற்றொடி = (பொன் வளையல் அணியும்) தலைவி இடித்துத் தடித்து = பேரிடி முழக்கம் சுடர்க்கொடி = மின்னல் துளிக்கும் = மழை பொழிதல் மைக்கார் = கருமேகம் தோகை = மயில் கடற்படை = கடல்போலும் படை கொற்றவன் = தலைவன் இனி = இப்போது)

‘பொன் வளையலணியும் தலைவியே! கரிய மேகத்தில் இடியும் மின்னலும் பெருமளவில் தோன்றி மழை பொழிய, மடப்பம் மிகுந்த குயிலானது அஞ்சி நடுங்க, தோகைமயில் களிப்படைய, கடல்போலும் படையுடைய தலைவன் ஒளியுடைய கொடியமைந்த தேரில் இதோ வருகின்றான். எனவே இனி நீ வருத்தத்தை விடுக’ என்பது பொருள்.

இச்செய்யுளில் வல்லெழுத்துகள் ஏனையவற்றிலும் மிக்கு வந்துள்ளன.

சான்று : 2

அவுணர் உரத்துதிரக்

குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்

களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே

(கந்தர்அலங்காரம் : 7)

(அவுணர் = அசுரர் உரம் = மார்பு, உடல் உதிரம் = இரத்தம் களம் = போர்க்களம் கழுது = பேய் காவலன் = முருகன்)

‘அசுரரின் உடலில் பெருகிய இரத்தக் குளத்தில் குதித்தும் குளித்தும் மகிழ்ச்சியடைந்து குடித்தும் பேய்க்கணங்கள் போர்க்களத்தில் ஆடி மகிழுமாறு வலோயுதத்தைச் செலுத்திய முருகன்’ என்பது அருணகிரிநாதர் முருகனைப் போற்றித் துதிக்கும் இப் பாடற்பகுதியின் பொருளாகும்.

இப்பாடலிலும் ஏனையவற்றினும் வல்லினம் மிக்கு வந்துள்ளமையை அறியலாம்.

6.3.2 இன்பம் இன்பம் என்பது சொல்வகையாலும் பொருள் வகையாலும் சுவைபடச் சொல்வதாகும்.

சொல்லினும் பொருளினும் சுவைபடல் இன்பம் (19)

என்பது நூற்பா.

வைதருப்ப நெறியின் கருத்திற்கு ஒப்பக் கௌடரும் இவ்வின்பத்தைச் சொல்லின்பமும் பொருளின்பமும் என வகைப்படுத்திக் காட்டுவர்.

சொல்லின்பம்

மோனைத்தொடை அளவோடு அமைவது வைதருப்ப நெறி சுட்டும் சொல்லின்பமாகும். மோனைத் தொடை மிகுந்து வருமாறு அமைவது கௌட நெறி சுட்டும் சொல்லின்பமாகும்.

சான்று

துனைவருநீர் துடைப்பவராய்த் துவள்கின்றேன்

துணைவிழிசேர் துயிலை நீக்கி

இனவளைபோல் இன்னல்சோர்ந்து இடர்உழப்ப

இறந்தவர்நாட்டு இல்லை போலும்

தனியவர்கள் தளர்வுஎய்தத் தடங்கமலம்

தளையவிழ்க்கும் தருண வேனில்

பனிமதுவின் பசுந்தாது பைம்பொழிலில்

பரப்பிவரும் பருவத் தென்றல்

(துனை = விரைவு துணை = இரண்டு இனவளை = கை வளையல்கள் இறந்தார் = பிரிந்து சென்றவர் தருணம் = பக்குவம் வேனில் = கோடைக்காலம் பனி = குளிர்ச்சி மது = தேன்)

இது, தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி, தோழியிடம் கூறியது.

‘துயரமிகுதியால் என் கண்ணிலிருந்து விரைந்து வழியும் கண்ணீரைத் துடைத்தும், உறக்கத்தை நீக்கியும், சேர்ந்திருக்கும் வளையல்கள் கழலல் போல் என் அழகும் குறையுமாறும் யான் துயருறுமாறும் என்னைப் பிரிந்து சென்றார் தலைவர். அவர் சென்ற நாட்டில் பிரிந்தோரை வருத்துவதும் தாமரை மொட்டை மலர்விப்பதுமாகிய இளவேனிற் பொழுதும், குளிர்ந்த தேனையும் தாதுக்களையும் சோலையெங்கும் பரப்பி வரும் இளந்தென்றலும் இல்லையோ’ என்பது பாடற்பொருள்.

இப்பாடலில் அடிதோறும் முதல் ஐந்து சீர்களில் மோனைத் தொடை சிறப்புற்று விளங்கிச் சொல்லின்பம் அளிக்கின்றது.

பொருளின்பம்

பொருளின்பத்தில் வைதருப்பநெறியைக் கௌடரும் ஏற்று வழிமொழிவர்.

காரென்று பேர்படைத்தாய் ககனத்து உறும்போது ;

நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்ததற்பின் ;

வாரொன்று மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்

மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

(காளமேகம் : 198)

என்னும் பாடல், மிகுதியாக நீர் கலந்து மோர் விற்றாள் ஒருத்தியைக் கண்டு பாடியது.

(கார் = மேகம் ககனம் = வானம் உறுதல் = பொருந்துதல் தரை = பூமி வார் = மார்புக்கச்சை)

‘வானத்தை அடையும்போது நீ மேகம் என்று பெயர் பெற்றாய்; பூமியை அடைந்த பின் நீர் என்று பெயர் பெற்றாய்; கச்சணிந்த ஆய்ச்சியர் கையை அடைந்தபின் மோர் என்று பெயர் பெற்றாய்! இப்படி மூன்று பெயர்களைப் பெற்றாய். நின் சிறப்புத்தான் என்னே’ என்பது இப்பாடலின் பொருள்.

பொருட்சிறப்புடன் திகழும் இப்பாடல் சிறந்த பொருளின்பம் அளிக்கின்றது.

6.4 ஒழுகிசையும் உதாரமும்

ஒழுகிசையும் உதாரமும் பற்றி இனிப் பார்ப்போம்.

6.4.1 ஒழுகிசை வெறுக்கத்தகும் இன்னாஇசை இல்லாமல், செவிக்கு இனியதாகச் சொல்லப் பெறும் மெல்லிசை ஒழுகிசையாகும்.

ஒழுகிசை என்பது வெறுத்திசை யின்மை (20)

என்பது நூற்பா.

வைதருப்பமும் கௌடமும் ஒழுகிசை குறித்த கருத்தில் ஒன்றுபடுகின்றன.

சான்று :

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை ;

என்றும் வணங்குவது உன்மலர்த் தாள் ; எழு தாமறையின்

ஒன்றும் அரும்பொரு ளே,அரு ளே,உமை யே,இமையத்து

அன்றும் பிறந்தவ ளே,அழி யாமுத்தி ஆனந்தமே

(அபிராமி அந்தாதி : 10)

(எழுதாமறை = வேதம்)

என்பது அபிராமிப்பட்டர் அருளிய பாடல்.

‘எழுதப்படாத வேதத்தில் பொருந்திய அரியபொருளே! அருள்வடிவே! உமையவளே! முன்பு பர்வதராசனின மகளாகப் பிறந்தவளே! அழிவற்ற முத்தி தரும் ஆனந்தமே! நான் நின்று கொண்டும், அமர்ந்திருந்தும் படுத்திருந்தும், நடந்து கொண்டும் எப்போதும் வணங்குவது உன் திருவடித் தாமரைகளையே ஆகும்’ என்பது பாடலின் பொருள்.

செவிக்கினிய இசைநலம் கொண்டு ஒழுகிசைக்குத் தக்க சான்றாகத் திகழ்கின்றது இப்பாடல்.

6.4.2 உதாரம் உதாரம் என்பது உரிய பொருளேயன்றி, குறிப்பால் வேறொரு பொருளையும் உணர்த்தி நிற்பதாகும்.

உதாரம் என்பது ஓதிய செய்யுளில்

குறிப்பின் ஒருபொருள் நெறிபடத் தோன்றல் (21)

என்பது தண்டியலங்காரம். வைதருப்பரும் கௌடரும் இக்கருத்தில் ஒன்றுபட்டுள்ளனர்.

சான்று : 1

காளமேகப்புலவர்,     நாகைப்பட்டினம்     காத்தான் வருணாதித்தன் சத்திரத்தில் உண்ணக் காத்திருந்து, இரவு நெடுநேரம் கழித்து உணவு உண்ட நிலையில் பாடிய பாடல் :

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போதில் அரிசிவரும் – குத்தி

உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளி எழும்

(கத்து = ஒலிக்கும்

நாகை = நாகைப்பட்டினம்

அத்தமித்தல் = மறைதல், அந்தி, சூரியன் மறைதல்

வெள்ளி = வைகறை விண்மீன்)

‘ஒலிக்கும் கடல் சூழ்ந்த நாகைப்பட்டினத்தில் உள்ள காத்தான் சத்திரத்தில் மாலைப்பொழுதில் அரிசி வந்து சேரும்; அதனைக் குத்தி உலையில்    போட ஊரே அடங்கும் முன்னிரவாகும்; சமைத்துப் பரிமாறும் பொழுது வெள்ளி முளைத்துவிடும். அதாவது விடிந்துவிடும்’ என்பது பாடற்பொருள்.

இதுவும் ஒரு சத்திரமோ? என்னும் குறிப்பைத் தருகிறது இப்பாடல்.

சான்று : 2

ஈட்டு புகழ்நந்தி பாண! நீ எங்கையர்தம்

வீட்டிருந்து பாட விடியளவும் – கேட்டிருந்து

பேய்என்றாள் அன்னை பிறர்நரிஎன் றார்தோழி

நாய்என்றாள் ; நீஎன்றேன் நான்

(நந்திக்கலம்பகம் : தனிப்பாடல் : 13)

என்பது தலைவி, வாயிலாக வந்த பாணனிடம் கூறுவதாக அமைவது.

‘பெருகிவரும் புகழுடைய நந்திவன்மனின் பாணனே! நீ எம் தங்கையராகிய பரத்தையர் வீட்டில் இருந்து இரவு முழுக்கப் பாடினாய், அதுகேட்டு உண்மை உணராமல் எம் அன்னை ‘பேய்குரலெடுத்துக் கத்துகிறது’ என்றாள். மற்றவர்கள் ‘நரியின் ஊளையிடல் இது’ என்றனர். தோழி ‘நாய் குரைக்கிறது’ என்றாள். நான்தான் இது உனது குரல் என உணர்ந்து கூறினேன்’ என்பது பாடலின் பொருள்.

தலைவனைப் பரத்தையர்பால் கொண்டு சேர்த்த பாணனின் பண்பும் ஒழுக்கமும் வெறுத்தற்குரியன என்னும் குறிப்பை உட்கொண்டு, பாணனின் பாடலை இகழ்ந்தாள் அவள். வேறு குறிப்புப்பொருள் கொண்டிருத்தலின் உதாரத்துக்கு இப்பாடல் சான்றாயிற்று.

6.5 உய்த்தல்இல் பொருண்மை

ஒரு செய்யுள் தான் கூற வந்த கருத்தை எடுத்துரைக்க வேறு ஒரு சொல் வேண்டப்படாமல், தன்னகத்தேயே உரிய சொற்களைப் பெற்றுத் திகழும் தன்மை, உய்த்தல்இல் பொருண்மை எனப்படும்.

கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற்கு

உரியசொல் உடையது உய்த்தல்இல் பொருண்மை (22)

என்பது தண்டியலங்காரம்.

சான்று : 1

நால்வர் நான்மணிமாலையில் சிவப்பிரகாச சுவாமிகள் சுந்தரரை நோக்கி வினவுவதாக அமையும் பாடல் ஒன்று :

போதம் உண்ட பிள்ளை என்பு

பொருகண் மாது செய்ததோ

காதல் கொண்டு சொல்லின் மன்னர்

கல்மி தப்ப உய்த்ததோ

வாய்தி றந்து முதலை கக்க

மகனை நீஅ ழைத்ததோ

யாது நம்பி அரிது நன்று

எனக்கு இயம்ப வேண்டுமே (12)

(போதம் = ஞானப்பால்

பொருகண் = காதை மோதும் கண்

சொல்லின் மன்னர் = நாவுக்கரசர்

நன்று = நல்லது, பெரியது)

‘ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர், மயிலாப்பூரில் பாம்பு தீண்டி இறந்து சாம்பராகிக் கிடந்த பூம்பாவையை அழகிய பருவப் பெண்ணாக்கினார். திருநாவுக்கரசர் சமணர் கல்லில் கட்டிக் கடலில் தம்மை இட்ட போது அக்கல்லோடு மிதந்து வந்தார். சுந்தரமூர்த்தியாகிய தாங்கள், முன்பு ஒரு காலத்து, குளத்திலிருந்த ஓர் முதலையானது அந்தணச் சிறுவனை விழுங்கிய நிலையில் நீரையும் முதலையையும் வரவழைத்து அதன் வாயிலிருந்து அச்சிறுவனையும் மீட்டளித்தீர்கள். உங்கள் மூவர் செயல்களுள் எவர் செயல் சிறந்தது? எனக்குக் கூறுக’ என்பது பாடற்பொருள்.

வேறு சொற்களை வரவழைக்க வேண்டிய நிலையின்றி, செய்ததோ? உய்த்ததோ? அழைத்ததோ? யாது அரிது? எனக் கேட்பதாக அமைந்து ‘உய்த்தல்இல் பொருண்மை’க்குச் சான்றாகிறது இப்பாடல்.

உய்த்தல்இல் பொருண்மை வைதருப்பம், கௌடம் ஆகிய இரு நெறியார்க்கும் உடன்பாடாகும்.

தண்டியலங்காரத்துக்கு உரைவரைந்த புலியூர்க்கேசிகன் அவர்கள், ‘உய்த்துணர்தல்’ மட்டுமே கௌட நெறியார்க்கு உடன்பாடு; உய்த்தல்இல் பொருண்மை உடன்பாடன்று என்பார். (வர்த்தமானன் பதிப்பகம், 1989, ப.29)

இதே பாடலுக்கு ‘உய்த்தல் பொருண்மை’ நிலையிலும் பொருள் காணலாம்.

திருஞான சம்பந்தர், சாம்பராகிய பொருளைக் கொண்டுதான் பெண்ணை உயிர்ப்பித்தார் திருநாவுக்கரசர் கல்லாகிய பொருளைக் கொண்டுதான் கரையேறினார். ஆனால் சுந்தர மூர்த்தியாரோ இல்லாத நீரையும் முதலையையும் வரவழைத்து, அம்முதலையின் வாயிலிருந்து பிள்ளையையும் வரவழைத்தார். எனவே சுந்தரர் செயலே சிறந்தது என்பதாம். இவற்றுள் யாது அரிது என ‘இவற்றுள்’ என்னும் சொல்லை வரவழைப்பதும், பொருள் அடிப்படையில் உரிய விளக்கம் காண்பதும் என ‘உய்த்தல்பொருண்மை’ இதில் அமைந்துள்ளது.

6.6 காந்தம், வலி, சமாதி

ஒன்றைப் புகழ்ந்துரைக்கும்போது, உலக இயல்பைக் கடவாதவாறு உரைப்பது, காந்தம் எனப்படும்.

வேற்றுமைத் தொகை முதலிய தொகைகள் மிகுதியாக வருவது வலி ஆகும்.

சமாதி என்பது வினையை இடம்மாற்றி வேறு பொருளுடன் இணைத்துச் சொல்வதாம்.

காந்தம்

உலகஒழுக்கு இறவாது உயர்புகழ் காந்தம் (23)

என்பது நூற்பா. இது வைதருப்ப நெறி.

ஆனால், கௌடநெறி உலக இயல்பைக் கடந்த நிலையிலும் அமையும் கற்பனைகளைக் கொண்டதாகும்.

சான்று :

சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய திருக்கூவப்புராணத்தில் வரும் செய்யுள் ஒன்று :

சேட்டிள வாளை தாக்கத்

தெங்கிள நீர்மார்த் தாண்டன்

பூட்டுவெம் பரித்தேர் காறும்

விசையினிற் போதத் தெண்ணீர்

வேட்டுஅவண் இருந்த பாகன்

விரைவினில் பற்றி உண்ணும்

ஊட்டும்ஊழ் எங்குற் றாலும்

அனைவர்க்கும் ஊட்டி டாதோ

(திருக்கூவ-திருத்தலச்சருக்கம் : 15)

(சேடு = இளமை

மார்த்தாண்டன் = சூரியன்

ஊழ் = விதி

வேட்டு = விரும்பி

பாகன் = அருணன்

விசை = விரைவு)

‘ஒரு வாளைமீன் மிக வேகமாகத் துள்ள, அது தென்னையின் இளநீரைத் தாக்க, அவ்விளநீர் மேலே சூரியனின் தேர்வரை செல்ல, அங்குத் தாகமுற்றிருந்த     தேரோட்டி அருணன் அதனைப் பற்றிப் பருகினான், விதி எங்கிருப்பினும் வந்து உரிய பயன் தரும் அன்றோ!’ என்பது பாடற்கருத்து.

உலகியல் கடந்த கற்பனையில் இயற்கை வருணனையாகிய புகழ்ச்சி அமைதலின்,     இது காந்தம் என்னும் குணப்பாங்கின்பாற்படும்.

வலி

வேற்றுமைத் தொகை முதலான தொகைச் சொற்கள் மிகுதியாக வருமாறு அமைவது வலி என்னும் குணப்பாங்கு ஆகும்.

வலியெனப் படுவது தொகைமிக வருதல் (24)

என்பது நூற்பா.

தொகைச் சொற்கள் ஓரளவு இடம் பெறுதல் வைதருப்பநெறி. தொகைச் சொற்கள் மிக அதிக அளவு இடம்பெறுவது கௌட நெறியாகும்.

சான்று :

செங்கலசக் கொங்கைச் செறிகுறங்கிற் சீறடிப்பேர்ப்

பொங்கரவ அல்குற் பொருகயற்கட் – செங்கனி வாய்க்

காருருவக் கூந்தற் கதிர்வளைக்கைக் காரிகைத்தாம்

ஓருருவென் உள்ளத்தே உண்டு

(குறங்கு = தொடை)

‘சிவந்த கலசம் போன்ற கொங்கையும், பருத்த தொடையும், சிறிய அடியும், பொங்கும் பாம்பனைய அல்குலும், மோதுகின்ற மீன்போன்ற கண்ணும், சிவந்த கனி போன்ற வாயும், மேகம் போன்ற கூந்தலும், ஒளி பொருந்திய வளையல் அணிந்த கையும் கொண்ட பெண்ணுருவம்     ஒன்று என் உள்ளத்தே நிலைபெற்றுள்ளது’ என்பது பாடற்கருத்து.

1)     செங்கலசம், சீறடி, செங்கனி, காருருவம் ஆகியன பண்புத்தொகைகள்.

2)     கலசக்கொங்கை, கயற்கண், கனிவாய் ஆகியன உவமைத் தொகைகள்.

3)     செறிகுறங்கு, பொங்கரவம்,     பொருகயல் ஆகியன வினைத்தொகைகள்.

4)     கொங்கை – குறங்கு – அடி – அல்குல் – கண் – வாய்- கூந்தல் – கை – காரிகை என வருவதில் எண்ணும்மை உள்ளது.

5)     வளைக்கை என்பது வேற்றுமைத்தொகை.

இவ்வாறு தொகைகள் பல மிகுதியாக இடம்பெறுதலின் இது வலி என்பதற்குச் சான்று ஆயிற்று.

சமாதி

ஒரு பொருளின் வினையை அதற்கு ஒப்பாகிய பொருளின் மேல் ஏற்றிக் கூறுவது சமாதி என்னும் குணப்பாங்கு ஆகும்.

உரியபொருள் இன்றி ஒப்புடைப் பொருள்மேல்

தரும்வினை புணர்ப்பது சமாதி யாகும் (25)

என்பது நூற்பா.

வைதருப்பநெறியும் கௌடநெறியும் சமாதி என்னும் குணப்பாங்கில் முற்றிலும் ஒன்றுபட்டுள்ளன.

சான்று :

அகலிரு விசும்பின் பாயிருள் பருகிப்

பகல்கான்று எழுதரு பல்கதிர்ப் பருதி

என்பதில் பருகுதலும் காலுதலும் (கக்குதல், உமிழ்தல்) சூரியனின் செயல்களாகக் (வினைகள்) கூறப்பட்டன.

சூரியன் உயிரற்ற பொருள். அதன் செயல்களாக உயிருள்ளவற்றிற்கு உரிய பருகுதலும் உமிழ்தலும் கூறப்பட்டுள்ளமை ‘சமாதி’ என்னும் குணப்பாங்கைச் சுட்டுகின்றன.

வினைச்சொல்     மட்டுமன்றி,     வேறொன்றுக்குரிய பெயர்ச்சொல்லும் வந்தமைவது ‘சமாதி’ என்பதாகும்.

‘கன்னி எயில்’ என்பதில் உயர்திணைக்குரிய கன்னி என்ற பெயர்ச்சொல் புதிய மதிலுக்கு உரியதாகக் கூறப்பட்டது.

6.7 கௌடம், வைதருப்பம் வேறுபாடு

1)               செறிவு                                                                      கௌடநாட்டினர்நெறி இடையின ஒற்றுமிக்கு வருவது.

வைதருப்பம் வல்லொற்று மிக்கு வருவது.

2)              தெளிவு                                                                    கௌடம் சொல்லாற்றல் மிக்கது. வைதருப்பம் பொருள்

தெளிவுடையது.

3)             சமநிலை                                                                   கௌடம் வல்லொற்று மேலோங்கியிருக்கும். வைதருப்பம் மூவின

மெய்யும் கலந்து வரும்.

4)            சொல்லின்பம்                                                          கௌடம் மோனைத் தொகை மிக்கு வரும். வைதருப்பம் மோனைத்

தொடை அளவோடு அமையும்.

5)          உய்த்தல்இல் பொருண்மை                              கௌடம் உய்த்தல் பொருளது. வைதருப்பம் உய்த்தல்இல் பொருளது.

(புலியூர்க் கேசிகன் கருத்து)

6)            காந்தம்                                                                      கௌடம் உலகியல்பு கடந்தது. வைதருப்பம் உலகியல்புக்கு உட்பட்டது.

7)              வலி                                                                            கௌடம் தொகைச்சொல் மிக்கது. வைதருப்பம் தொகைச்சொல்

அளவானது.

6.8 தொகுப்புரை

செய்யுள் அணி இயல்பு குறித்தும், வகை குறித்தும் பொதுநிலையில் அறிந்தோம்.

கௌடநாட்டு நெறியினர்தம் பத்து வகைக் குணப் பாங்குகளைத் தக்க சான்றுகளுடன் தெரிந்து கொண்டோம்.

கௌடநாட்டு நெறி, வைதருப்பநாட்டு நெறியிலிருந்து எவ்வெவ்வகைகளில் வேறுபடுகின்றது எனவும் தெளிவாக அறிந்தோம்.

இவை இப்பாடத்தின் வழி நாம் அறிந்துகொண்ட செய்திகளாகும்.