84

 தண்டியலங்காரம்

பாடம் - 1

பொருளணியியல் – I

1.0 பாட முன்னுரை

‘அணி’ எனும் சொல்லுக்கு அழகு என்பது பொருள்.புலவன் செய்யுளில் தான் கூறவந்த கருத்தை அழகுறச்சொல்வதற்காகப் பயன்படுத்தும் உத்திமுறைகள் ‘அணி’ எனப்படுகிறது. இவ்வணிகளுள் தலைமையான சிறப்புடையதுஉவமை அணி. தொல்காப்பியர் ‘உவமை இயல்’ எனும்பகுதியில் உவமை அணியின் இலக்கணத்தைக் கூறியுள்ளார்.பல்வேறு அணிகள் உவமை அணியிலிருந்து தோன்றியவை; அல்லது உவமை அணியின் சாயல் உடையவை. பிற்காலவளர்ச்சியை, பல்வேறு அணிகளின் இலக்கண விரிவைத்தமிழில் கொணர வேண்டும் எனும் நோக்கத்துடன் தமிழில்அணி இலக்கண நூல்கள் தோன்றின. அவற்றுள் ஒரு நூல்தண்டியலங்காரம். இதன் ஆசிரியர் தண்டி.

தண்டியலங்காரம் பொருளணியியலில் விளக்கிக் கூறப்படும்அணிகள் முப்பத்தைந்து. இவற்றில் முதற்கண் கூறப்படும் தன்மைஅணி, உவமை அணி, உருவக அணி, தீவக அணி ஆகிய நான்கும் இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன. ஒவ்வோர்அணியைப் பற்றியும் தண்டியாசிரியர் கூறும் போது முதற்கண்அதன் இலக்கணத்தைக்     கூறுகிறார். அவ்வணியானதுபல்வகைப்பட்டு அமையுமாயின் அவ்வகைகளையும் கூறுகிறார்.தண்டியலங்கார உரையில் ஒவ்வொரு வகைக்கும் தெளிவானவிளக்கம் தரப்படுகிறது; ஒவ்வொரு வகைக்கும் பொருத்தமான பாடல் சான்று காட்டப்படுகிறது; அப்பாடலுக்குப் பொருள் தரப்படுகின்றது; அணிப் பொருத்தம் ஆங்காங்கே சுட்டிக் கூறப்படுகிறது. இந்நெறி முறையில் இப்பாடத்தில் ஒவ்வோர்அணியையும் பற்றிய கருத்துகள் இடம் பெறுகின்றன.

1.1 தன்மை அணி

தண்டியலங்கார     ஆசிரியர்     பொருளணியியலில்குறிப்பிடும் முதலாவது அணி இதுவே. இதற்கு மற்றொருபெயர் ‘தன்மை நவிற்சி அணி’ என்பதாகும். தன்மைஎன்பதற்கு இயல்பு அல்லது இயற்கை என்று பொருள்.

1.1.1 தன்மை அணியின் இலக்கணம் எவ்வகைப்பட்ட பொருளையும் அதன் உண்மைத்தன்மையை விளக்குவதற்கு ஏற்ற சொற்களைக் கொண்டுபாடுவது தன்மை அணி ஆகும். இதனை.

எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்

சொல்முறை தொடுப்பது தன்மை ஆகும்

(தண்டி. 29)

என்ற நூற்பாவைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.பொருளின் இயல்பை நேரில் பார்த்ததுபோலத் தோன்றுமாறுஉள்ளபடி விளங்கச் சொல்லுவது தன்மை அணி. சுருங்கச்சொன்னால் ‘உள்ளதை உள்ளவாறு கூறல்’ தன்மை அணிஎனலாம்.

1.1.2 தன்மை அணியின் வகைகள் தன்மை அணி ‘பொருள், குணம், இனம், தொழில்’ என்னும்நான்கின் அடிப்படையில் தோன்றும் எனவே தன்மையணிபொருள் தன்மை, குணத் தன்மை, இனத் தன்மை,தொழில் தன்மை என நான்கு வகைப்படும். ஒருபொருளின் தன்மையைக் கூறுவது பொருள் தன்மை; ஒரு குணத்தின் தன்மையைக் கூறுவது குணத்தன்மை. ஒருஇனமின் – இனத்தின் தன்மையைக் கூறுவது இனத் தன்மை; ஒரு தொழிலின் தன்மையைக் கூறுவது தொழில் தன்மைஆகும். இவற்றுள் முதற்கண் கூறப்படும் பொருள் தன்மைஅணியைச் சான்றுடன் விளக்கமாகக் காண்போம்.

பொருள் தன்மை

ஒரு பொருளின் பல விதமான இயல்புகளைஉள்ளவாறு எடுத்துக் கூறுவது பொருள் தன்மையாகும்.

எடுத்துக்காட்டு:

நீல மணிமிடற்றன்; நீண்ட சடைமுடியன்;

நூல்அணிந்த மார்பன்; நுதல்விழியன்; -

தோல்உடையன்;

கைம்மான் மறியன்; கனல்மழுவன்; கச்சாலை

எம்மான் இமையோர்க்கு இறை

இப்பாடலின் பொருள்:

திருக்கச்சாலை என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானாகிய சிவபெருமான் கருங்குவளை மலர் போன்றஅழகிய கழுத்தை உடையவன்; நீண்ட சடைமுடியைஉடையவன்; முப்புரி நூல் அணிந்த மார்பினை உடையவன்;நெற்றிக்கண்ணை உடையவன்;     புலித்தோல் ஆடைஅணிந்தவன்; கையிலே மான் குட்டியையும் கனலையும்மழுவினையும் (கோடரியையும்) ஏந்தியவன்; அவன் தேவர்க்கும்இறைவன் ஆவான்.

அணிப் பொருத்தம்:

இப்பாடலில் ‘சிவபெருமான்’ என்ற பொருளின்(உருவத்தின்) பல விதமான தோற்ற இயல்புகளை நேரில்பார்ப்பது போல உள்ளவாறு கூறியிருப்பதால் இப்பாடல்பொருள் தன்மை அணி ஆயிற்று.

1.2 உவமை அணி

தொல்காப்பியர் உவமைஅணி குறித்துக் கூறியுள்ளார் என்பதையும் உவமை அணியே பொருளணிகளில் தலைமை சான்றது என்பதையும் முன்னர்க் கண்டோம். காலப்போக்கில்உவமை அணியிலிருந்து உருவகம், வேற்றுமை, ஒட்டணிமுதலிய பல அணிகள் தோன்றின. இதனால் உவமை அணியைத்’தாய் அணி’ என்று கூறுவர்.

1.2.1 உவமை அணியின் இலக்கணம் 1)ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக் கூறுவது உவமை அணி ஆகும். பலபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம்.

2)பொருள்களுக்கு இடையே உள்ள பண்பு ஒப்புமை,தொழில் ஒப்புமை, பயன்ஒப்புமை ஆகியவை காரணமாகஉவமை அமையும்.

3)ஆகவே அடிப்படையில் பண்பு உவமை, தொழில்உவமை,பயன் உவமை என உவமை மூன்று வகைப்படும்.

உவமை அணியின் இலக்கணத்தைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகிறது.

பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின்

ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்ந்து

ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை

(தண்டி, நூற்பா. 30)

1.2.2 உவமை அணி விளக்கம் உவமை அணியின் இலக்கணத்தைச் சற்று விரிவாகக்காண்போம். உவமை அணியில் நான்கு உறுப்புகள் இருப்பதைக்காணலாம். அவை,

1) உவமை அல்லது உவமானம்

2) பொருள் அல்லது உவமேயம்

3) ஒத்த பண்பு

4) உவமை உருபு

ஆகியன.

உவமானம், உவமேயம்

புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், ‘பொருள்’அல்லது ‘உவமேயம்’ எனப்படும். அப்பொருளை விளக்கவோ அழகுபடுத்தவோ அவர் இயைத்துக் கூறும் மற்றொரு பொருள்’உவமை’ அல்லது ‘உவமானம்’ எனப்படும்.

எடுத்துக்காட்டு:

தாமரை போன்ற முகம்

இங்குப் புலவர் விளக்கக் கருதிய பொருள் முகம்.ஆகவே ‘முகம்’ உவமேயம். முகத்தை விளக்குவதற்காகஅதனோடு அவர் இயைத்துக் கூறும் பொருள் ‘தாமரை’ஆகவே தாமரை உவமானம்.

ஒத்த பண்பு

உவமேயத்துக்கும் உவமானத்துக்கும் பொதுவாக உள்ள இயல்பைப் புலவர் சுட்டிக் காட்டியிருப்பார். இதுவே ‘ஒத்த பண்பு’ எனப்படும்.

எடுத்துக்காட்டு:

பவளம் போலும் செவ்வாய்

வாய்க்கும்     பவளத்துக்கும் ஒத்த தன்மையாகிய ‘செம்மை’ (செம்மை-வாய்) இங்குச் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதைப்பாருங்கள்.

உவமை உருபு

உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, புரைய, ஒப்ப, மான போன்ற இவை உவமை உருபுகள் எனப்படும்.

பொருளொடு பொருள் ஒப்புமைப்படுத்திக் கூறும் முறை

ஒரு பொருளொடு ஒரு பொருளும்

ஒரு பொருளொடு பல பொருளும்

பல பொருளொடு பல பொருளும்

பல பொருளொடு ஒரு பொருளும்

என     நான்கு     வகையாகப் பொருள்கள் இயைத்து (ஒப்புமைப்படுத்தி)க் கூறப்படும்.

ஒரு பொருளொடு ஒரு பொருள்

எடுத்துக்காட்டு:

செவ்வான் அன்ன மேனி

இங்கு ‘வானம்’ என்ற ஒரு பொருள் ‘மேனி’ என்றஒரு பொருளுக்கு உவமை ஆயிற்று.

ஒரு பொருளொடு பல பொருள்

எடுத்துக்காட்டு:

அவ்வான்

இலங்கு பிறை அன்ன விளங்கு வால் வை எயிறு

இங்குப் ‘பிறைச்சந்திரன்’ என்ற ஒரு பொருள் ‘பற்கள்’(எயிறு) என்ற பல பொருளுக்கு உவமை ஆயிற்று.

பல பொருளொடு பல பொருள்

எடுத்துக்காட்டு:

சுறவு இனத்து அன்ன வாேளார் மொய்ப்ப

இங்குச் ‘சுறா மீன் கூட்டம்’ என்ற பல பொருள்தொகுதி, ‘வாள் ஏந்திய வீரர் குழாம்’ என்ற பல பொருள்தொகுதிக்கு உவமை ஆயிற்று.

பல பொருளொடு ஒரு பொருள்

எடுத்துக்காட்டு:

பெரும்பெயர்க் கரிகாலன் முன்னிலைச் செல்லாப்

பீடு இல் மன்னர் போல

ஓடுவை மன்னா? வாடை நீ எமக்கே?

(பீடு-பெருமை; ஓடுவை-ஓடுவாய்)

இங்கு, கரிகாலனை எதிர்த்து நிற்க மாட்டாமல் தோற்றுஓடிய பகை மன்னர்கள் பலர் தலைவன் வந்தவுடன்தலைவிக்கு முன் செயலற்று ஓடப் போகின்ற வாடையாகியஒரு பொருளுக்கு உவமை ஆயினர்.

1.2.3 மூவகை ஒப்புமைகள் ‘பண்பு, தொழில்,     பயன்’     என்னும் மூன்றுஒப்புமைத்தன்மை காரணமாக உவமை அணி தோன்றும் எனமுன்பு கண்டோம். இங்கு இவற்றை விளக்கமாகக் காணலாம்.

பண்பு உவமை

ஒரு பொருளின் வடிவம், நிறம், சுவை, அளவுஆகியவை அப்பொருளின் ‘பண்பு’ எனப்படும். இப்பண்புகள்காரணமாக அமையும் உவமை பண்புஉவமை ஆகும்.

எடுத்துக்காட்டு:

பவளத்தன்ன மேனி (பவளம் போன்ற உடல்)

வேய் புரை பணைத்தோள்

(வேய்-மூங்கில், மூங்கில் போன்ற தோள்)

பால் போலும் இன்சொல்

(பால் போன்ற இனிய சொல)

இங்குக் காட்டிய சான்றுகளில் முறையே பவளத்தின்நிறம் மேனிக்கும், மூங்கிலின் வடிவம் தோளுக்கும், பாலின்சுவை சொல்லுக்கும், உவமைகளாயின. இவ்வாறு பண்புஒப்புமை காரணமாக உவமை அமைந்தமையால் இவை பண்புஉவமை ஆகும்.

தொழில் உவமை

ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாகஅமையும் உவமை தொழில் உவமை எனப்படும்.

எடுத்துக்காட்டு :

அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்

திருமா வளவன்

(அரிமா-சிங்கம்: அணங்கு-துன்பம்: துப்பு-வலிமை)

சிங்கத்தைப் போன்று பகைவருக்குத் துன்பம் தரும்வலிமையினை உடைய திருமாவளவன் என்பது இவ்வடிகளின்பொருள். துன்பம் தருதல் என்ற தொழில் ஒப்புமை காரணமாகஇது தொழில் உவமை ஆயிற்று.

பயன் உவமை

ஒரு பொருளால் கிடைக்கும் பயன் காரணமாக அமையும்உவமை பயன் உவமை எனப்படும்.

எடுத்துக்காட்டு:

மாரி அன்ன வண்கைத்

தேர்வேள் ஆயைக் காணிய சென்மே

(வண்கை-கொடைத்தன்மை, காணிய-காண,சென்மே-செல்லுக)

மழையை ஒத்த கொடைத் தன்மையை உடையஆய் வள்ளலைக் காண்பதற்குச் செல்வாயாக என்பது இவ்வடிகளின் பொருள். மாரியால் விளையும் பயனும் வள்ளலின்கொடையால் விளையும் பயனும் ஒத்தலின் இது பயன் உவமைஆயிற்று.

1.2.4 உவமை அணியின் வகைகள் உவமை அணி மொத்தம் இருபத்து நான்கு வகைகளைஉடையது. (தண்டி. நூ. 31). அவை வருமாறு;

1) விரி உவமை

2) தொகை உவமை

3) இதரவிதர உவமை

4) சமுச்சய உவமை

5) உண்மை உவமை

6) மறுபொருள் உவமை

7) புகழ் உவமை

8) நிந்தை உவமை

9) நியம உவமை

10) அநியம உவமை

11) ஐய உவமை

12) தெரிதரு தேற்ற உவமை     13) இன்சொல் உவமை

14) விபரீத உவமை

15) இயம்புதல் வேட்கை உவமை

16) பலபொருள் உவமை

17) விகார உவமை

18) மோக உவமை

19) அபூத உவமை

20) பலவயிற்போலி உவமை

21) ஒருவயிற்போலி உவமை

22) கூடா உவமை

23) பொதுநீங்கு உவமை

24) மாலை உவமை.

இவற்றுள் குறிப்பிடத்தக்க சிலவற்றைச் சான்றுடன் விளக்கமாகக்காண்போம்.

விரி உவமை

உவமானத்திற்கும் உவமேயத்திற்கும் இடையிலான பண்பு,தொழில், பயன் பற்றிய ஒப்புமைத் தன்மை வெளிப்படையாகஅமைவது விரி உவமை.

எடுத்துக்காட்டு:

பால்போலும் இன்சொல்; பவளம்போல் செந்துவர்வாய்;

சேல்போல் பிறழும் திருநெடுங்கண்; – மேலாம்

புயல்போல் கொடைக்கைப் புனல்நாடன் கொல்லி

அயல்போலும் வாழ்வ(து) அவர்

(துவர்-பவளம்; சேல்-சேல்மீன்; புயல்-மழை)

இப்பாடலின் பொருள்:

‘பால் போன்ற இனிய சொல்லையும், பவளத்தைப் போன்றசிவந்த வாயினையும், சேல் மீன்களைப் போலப் பிறழ்கின்றஅழகிய கண்களையும் உடைய அவர் (தலைவி) வாழும் இடம்,மழை போன்ற கொடைக் கையை உடைய சோழனின்கொல்லி மலைச் சாரலின் பக்கத்தே உள்ளது போலும்’ என்றுதலைவன் பாங்கனிடம் கூறுகிறான்.

அணிப் பொருத்தம்

இப்பாடலில் நான்கு உவமைகள் பயின்று வருகின்றன.இவற்றில் முறையே ‘இனிமை’, ‘செம்மை’ என்ற பண்புஒப்புமையும், ‘பிறழ்தல்’ என்ற தொழில் ஒப்புமையும், ‘கொடை’என்ற பயன் ஒப்புமையும் வெளிப்படையாக வந்துள்ளமைகாணலாம். ஆகவே இது விரி உவமை ஆகும்.

தொகை உவமை

ஒப்புமைத் தன்மை தொக்கி (மறைந்து) வருவதுதொகை உவமை.

எடுத்துக்காட்டு:

தாமரை போல்முகத்துத் தண்தரளம் போல்முறுவல்

காமரு வேய்புரைதோள் காரிகையீர்!

(தரளம்-முத்து; முறுவல்-நகை,பல்; காமரு-அழகிய; வேய்-மூங்கில்)

இப்பாடலின் பொருள் :

”தாமரை போன்ற முகத்தையும், குளிர்ந்த முத்துப்போன்ற நகையினையும் (பற்களையும்), மூங்கில் போன்றதோளினையும் உடைய மாதரீர்! என்று தலைவன் தோழி,தலைவி இருவரிடமும் பேசுகிறான்.

அணிப் பொருத்தம் :

இப்பாடலில் ‘தாமரை போல் முகம்’ என்ற உவமையில் ‘செம்மை’ என்ற நிறப்பண்பு மறைந்துள்ளது. ‘தண்தரளம் போல்முறுவல்’ என்ற உவமையில் ‘வெண்மை’ என்ற நிறப்பண்பு மறைந்துள்ளது, “வேய் புரை தோள்’ என்ற உவமையில்வடிவமாகிய பண்பும் மறைந்து வந்துள்ளது. இவ்வாறு ஒப்புமைக்குரிய பண்புகளைச் சுட்டிக் காட்டாததால் இது தொகைஉவமை ஆயிற்று.

இதர விதர உவமை

ஒரே பாடலில் உவமேயத்தை உவமானமாகவும்,உவமானத்தை உவமேயமாகவும் தொடர்ச்சியாகக் கூறுவது இதர விதர உவமை. அதாவது, முதலில் உவமானமும்உவமேயமுமாகச் சொல்லப்பட்ட பொருள்களையே பின்னர்உவமேயமும் உவமானமுமாக மாற்றிச் சொல்லுதல், இவ்வாறுசொல்வதன் நோக்கம், இப்பொருள்களுக்கு ஒப்புமையாகக்கூடிய மூன்றாவது பொருள் எதுவும் இல்லை எனக் குறிப்பதுஆகும்.

இதரவிதரம் என்ற தொடருக்கு ‘ஒன்றற்கொன்று’ என்பதுபொருள்.

எடுத்துக்காட்டு :

களிக்கும் கயல்போலும் நும்கண்; நும்கண்போல்

களிக்கும் கயலும்; கனிவாய்த் தளிர்க்கொடியீர்!

தாமரைபோல் மலரும் நும்முகம்; நும்முகம்போல்

தாமரையும் செவ்வி தரும்

(செவ்வி – அழகு)

இப்பாடலின் பொருள்

தளிரொடு கூடிய கொடி போன்ற நங்கையீர்! கயல்மீன்களைப் போல நும் கண்கள் களிக்கின்றன; நும்கண்களைப் போலக் கயல் மீன்களும் களிக்கின்றன; தாமரைபோல் நும் முகம் மலர்ந்துள்ளது; நும் முகம் போலத் தாமரையும்மலர்ந்து அழகு தருகின்றது.

அணிப் பொருத்தம் :

இப்பாடலில் முதலில் கயல் உவமானமாகவும் கண்உவமேயமாகவும் வந்து, பின்னர் அவை முறையேஉவமேயமாகவும் உவமானமாகவும் மாறி வந்தன. அதேபோலமுதலில் தாமரை உவமானமாகவும் முகம் உவமேயமாகவும்வந்து, பின்னர் அவை முறையே     உவமேயமாகவும்உவமானமாகவும் மாறி வந்தன. எனவே இப்பாடல் இதரவிதர (முன் பின்) உவமை ஆயிற்று.

அபூத உவமை

உலகில் இல்லாத பொருளை உவமையாகக் கூறுவதுஅபூத உவமை. (பூதம் – பொருள்(தனிமம்); அ – இல்லாத;அ பூதம் – இல்லாத பொருள்) இதனை ‘இல் பொருள்உவமை’ என்று கூறுவர். இதுவே பெருவழக்கு. கம்பராமாயணம், பெரிய புராணம், சீவகசிந்தாமணி போன்றகாப்பியங்களில் மிகுதியாக இவ்வணி பயில்வதைக் காணலாம்.கம்ப ராமாயணத்தில் ஒரு சான்று காண்போம்.

எடுத்துக்காட்டு :

வன்துணைப் பெருந்தம்பி வணங்கலும்

தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான்

நின்ற குன்று ஒன்று, நீள் நெடுங் காலொடும்

சென்ற குன்றைத் தழீஇ அன்ன செய்கையான்

(தழீஇஅன்ன-தழுவியது போன்ற)

பாடல் பொருள்

இராவணன் கும்பகருணனை எழுப்பி வரச் சொல்கிறான். எழுந்து வந்த கும்பகருணன். இராவணனை வணங்கினான். நின்றுகொண்டிருந்த இராவணன் கும்பகருணனை மார்பாரத் தழுவிக்கொள்கிறான். இது, நின்ற குன்று ஒன்று நீண்ட நெடியகால்கெளாடு நடந்து சென்ற ஒரு குன்றைத் தழுவியது போல்இருந்தது என்று கம்பர் கூறுகிறார்.

அணிப்பொருத்தம்

கால்பெற்று நடந்து செல்லும் குன்று என்பது உலகத்தில் இல்லாத ஒன்று; அவ்வாறு இல்லாத பொருளை உவமைகூறியதால் இது இல் பொருள் உவமை அணியாயிற்று.

1.2.5 எடுத்துக்காட்டு உவமை தண்டியலங்கார ஆசிரியர் உவமையணி வகைகளில் ஒன்றாக எடுத்துக்காட்டு உவமை அணியைக் குறிப்பிடாமல் விட்டார். ஆனால் திருக்குறள் முதலிய பல தமிழ் இலக்கியங்களில் இது மிகுதியாகப் பயில்கிறது.

உவமானமும் உவமேயமும் தனித்தனி வாக்கியங்களாக அமைந்து அவற்றிற்கு இடையே போல என்ற சுட்டிக்கூறும் உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டுஉவமையணி எனப்படும்.

எடுத்துக்காட்டு:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

(குறள் :1)

பாடல் பொருள் :

எழுத்துகள் எல்லாம் அகரத்தை முதலாக உடையன;அதுபோல இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது.

அணிப்பொருத்தம்

இத்திருக்குறளில் ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற வாக்கியம் உவமானம். ‘ஆதி பகவன் முதற்றே உலகு’ என்ற வாக்கியம் உவமேயம். இந்த இரு வாக்கியங்களுக்கும்இடையே ‘போல’ என்ற உவம உருபு மறைந்துவந்தமையால் இது எடுத்துக்காட்டு உவமை அணி ஆயிற்று.

1.3 உருவக அணி

உவமை அணியில் ஒரு பொருேளாடு ஒரு பொருளை ஒப்பிட்டுக் கூறும் போது அவை ஒப்புமை உள்ள வேறுவேறு பொருள்கள் எனவே காட்டப்படும். ஆனால் சிலபோது உவமைக்கும் அது கொண்டு விளக்கப்படும் பொருளுக்கும் இடையிலான ஒப்புமை மிக அதிகமாக உள்ளது எனக் காட்ட விரும்புகிறார். கவிஞர்.

‘தாமரை போன்ற முகம்’ எனக் கூறிவந்த கவிஞருக்கு, இரண்டினுக்கும் உள்ள ஒற்றுமை மிகுந்து, வேற்றுமை குறைவுஎனத் தோன்றுகிறது. காலப்போக்கில் அவை இரண்டினுக்கும் வேற்றுமை இல்லை; அவை இரண்டும் ஒன்றே என்றமனவுணர்வு தோன்றுகிறது,

முகம் ஆகிய தாமரை

என்று கூறிவிடுகிறார். இங்கு முகமே தாமரை எனப்பொருள் வருகிறது. இவ்வாறு வரும்போது உவமையணியிலிருந்து உருவக அணி தோன்றுவதை உணரலாம்.

1.3.1 உருவக அணியின் இலக்கணம் உவமையாகின்ற     பொருளுக்கும்    (உவமானம்) உவமிக்கப்படும் (உவமேயம்) பொருளுக்கும் இடையிலான வேறுபாட்டை நீக்கி, அவை இரண்டும் ஒன்றே என்னும் உள்ளுணர்வு தோன்றுமாறு ஒற்றுமைப் படுத்திக் கூறுவது உருவகம் என்னும் அணியாகும். அதாவது உவமேயத்தில் உவமானத்தை ஏற்றிக் கூறுதல். இதனை,

உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்று என மாட்டின் அஃது உருவகம் ஆகும்

(தண்டி. 35)

என்ற நூற்பாவால் அறியலாம்.

1.3.2 உருவக அணி விளக்கம் உவமையணியில் உவமானம் முன்னும் உவமேயம்பின்னும் இருக்கும். இரண்டினுக்கும் ஒப்புமை காட்ட இடையில்போல, புரைய, அன்ன முதலான உவமை உருபுகளுள் ஒன்றுவரும். உருவக அணியில் உவமேயம் முன்னும் உவமானம்பின்னும் வரும். இவற்றை ஒற்றுமைப் படுத்துவதற்காக ‘ஆகிய’என்ற உருபு இடையில் வரும். ‘ஆக’ என்ற உருபும்வருவதுண்டு. இவை ‘உருவக உருபுகள்’ என்று கூறப்படும்.இவை மறைந்து வருதலும் உண்டு.

மலர்போன்ற கண், மலர்க்கண் – உவமை

கண் ஆகிய மலர், கண்மலர் – உருவகம்

மலர் போன்ற கண் என்ற உவமையில் மலரும் கண்ணும்வேறு வேறு எனும் உணர்வு தோன்றுவதையும், கண் ஆகியமலர் என்ற உருவகத்தில் கண்ணே மலர், கண்ணும் மலரும்வேறுவேறல்ல என்னும் உணர்வு தோன்றுவதையும் நீங்கள்காணலாம்.

1.3.3 உருவக அணியின் வகைகள் உருவக அணி மொத்தம் பதினைந்து வகைப்படும் என்றுதண்டியலங்காரம் காட்டுகிறது. (தண்டி. 37) அவை வருமாறு:

1) தொகை உருவகம்

2) விரி உருவகம்

3) தொகைவிரி உருவகம்

4) இயைபு உருவகம்

5) இயைபு இல் உருவகம்

6) வியனிலை உருவகம்

7) சிறப்பு உருவகம்

8) விரூபக உருவகம்

9) சமாதான உருவகம்

10) உருவக உருவகம்

11) ஏகாங்க உருவகம்

12) அநேகாங்க உருவகம்

13) முற்று உருவகம்

14) அவயவ உருவகம்

15) அவயவி உருவகம்

இவற்றுள் குறிப்பிடத்தக்க சில வகைகளை மட்டும் விளக்கமாகக்காண்போம். மேலும் தண்டியாசிரியர் குறிப்பிடாததும் திருக்குறள்முதலான பழம்பெரும் இலக்கியங்களில் பயின்று வருவதுமாகிய’ஏகதேச உருவகம்’ என்பது குறித்தும் விளக்கமாகக் காண்போம்.

தொகை உருவகம்

‘ஆகிய’ என்னும் உருவக உருபு மறைந்து வருவதுதொகை உருவகம் ஆகும். அதாவது     உவமேயமும்உவமானமும் இணைப்புச்சொல் எதுவும் இன்றிச் சேர்ந்து வருவது.

எடுத்துக்காட்டு:

அங்கை மலரும் அடித்தளிரும் கண்வண்டும்

கொங்கை முகிழும் குழல்காரும் – தங்கியதோர்

மாதர்க் கொடி உளதால் நண்பா! அதற்கு எழுந்த

காதற்கு உளதோ கரை.

(முகிழ்-அரும்பு; கார்-மழை; மாதர்-விருப்பம்)

இப்பாடலின் பொருள் :

‘நண்பா! அழகிய கையாகிய மலரையும், அடியாகியதளிரையும், கண்ணாகிய வண்டையும், கொங்கையாகியஅரும்பையும், கூந்தலாகிய மேகத்தையும் உடைய விருப்பம்தரும் கொடி ஒன்று உளது. அக்கொடி மேல் எழுந்தகாதலுக்கு எல்லை உலகத்தில் உண்டோ இல்லை’ என்று தலைவன் பாங்கனிடம் கூறுகிறான்.

அணிப் பொருத்தம் :

இப்பாடலில் அங்கை ஆகிய மலர் என்னும் உருவகம்’ஆகிய’ எனும் உருபு மறைந்து ‘அங்கைமலர்’ எனவந்திருப்பதைக் காணலாம். இதுபோலவே ‘அடித்தளிர்,கண்வண்டு, கொங்கை முகிழ், குழல் கார்’ என்னும்உருவகங்களும் உருபு இன்றி வந்துள்ளன. எனவே இப்பாடல்தொகை உருவகம் ஆயிற்று.

விரி உருவகம்

‘ஆகிய, ஆக’ என்னும் உருபுகள் வெளிப்பட்டு நிற்பதுவிரி உருவகம்.

எடுத்துக்காட்டு:

கொங்கை முகையாக மென்மருங்குல் கொம்பாக

அங்கை மலரா அடி தளிரா – திங்கள்

அளிநின்ற மூரல் அணங்காம் எனக்கு

வெளிநின்ற வேனில் திரு

(மருங்குல்-இடை; அளி-அருள; மூரல்-முறுவல்; அணங்கு-தெய்வப்பெண்; திரு-திருமகள்)

இப்பாடலின் பொருள் :

‘கொங்கை அரும்பாக, நுண் இடை வஞ்சிக் கொடியாக,அழகிய கை மலராக, பாதம் தளிராகக் கொண்டவள்;நிலவு போன்ற ஒளியும் அருளும் முறுவலை உடையவள்;நேற்று அணங்கு போன்றிருந்தாள். இப்பொழுது எனக்குவேனில் காலத்தில் தோன்றிய திருமகளை ஒப்பவள் ஆனாள்’என்று தலைவன் பாங்கனிடம் தலைவியின் அழகை கூறுகிறான்.

அணிப் பொருத்தம் :

இப்பாடலில் கொங்கை முகையாகவும், இடை வஞ்சிக்கொடியாகவும், கை மலராகவும், பாதம் தளிராகவும்உருவகிக்கப் பட்டுள்ளதைக் காணுங்கள். இப்பாடலில்,முகையாக, கொம்பாக, மலரா, தளிரா என ‘ஆக’ ‘ஆ’ என்றஉருவக உருபுகள் விரிந்து வருதைக் காணலாம். ஆகவேஇது விரி உருவக அணி ஆகும்.

இயைபு உருவகம்

பல பொருள்களை உருவகம் செய்யும் பொழுது,அவற்றை ஒன்றற்கு ஒன்று இயைபு (பொருத்தம்) உடையபொருள்களாக வைத்துக் கூறுவது இயைபு உருவகம்.

எடுத்துக்காட்டு:

செவ்வாய்த் தளிரும் நகைமுகிழும் கண்மலரும்

மைவார் அளக மதுகரமும் – செவ்வி

உடைத்தாம் திருமுகம் என் உள்ளத்து வைத்தார்

துடைத்தாரே அன்றோ துயர்

(முகிழ்-அரும்பு; அளகம்-கூந்தல்; மதுகரம்-வண்டு;)

இப்பாடலின் பொருள் :

சிவந்த வாயாகிய தளிரையும், புன்முறுவலாகிய முல்லை அரும்பையும், கண்ணாகிய மலரையும், கரிய நீண்டகூந்தலாகிய வண்டையும் உடைய திருமுகத்தை என்உள்ளத்திலே வைத்தார். இதனாலே என்னுடைய உள்ளத்தில்உண்டாகிய துயரத்தை நீக்குவார் அன்றோ? (தலைவியைத்தலைவன் மரியாதையுடன் வைத்தார், நீக்குவார் என்றுகூறுகிறான்.)

அணிப் பொருத்தம் :

இப்பாடலில் வாய் தளிராகவும், புன்முறுவல் முல்லை அரும்பாகவும், கண் மலராகவும், கூந்தல் வண்டாகவும் உருவகப் பட்டுள்ளதைக் காண்கிறீர்கள். உருவகம் செய்யப்பயன்படுத்திய தளிர், முகிழ் (அரும்பு), மலர், மதுகரம்(வண்டு) என்ற நான்கும் ஒன்றோடு ஒன்று இயைபு உடையபொருள்களாகும். இவ்வாறு தொடர்புடைய பொருள்களைக்கொண்டு உருவகம் செய்தமையால் இது இயைபுஉருவக அணி ஆகும்.

இயைபு இல் உருவகம்

உருவகம் செய்யப்படும் பொருள்களை ஒன்றோடு ஒன்றுஇயைபு இல்லாத பொருள்களாக உருவகித்துக் கூறுவதுஇயைபு இல் உருவகம்.

எடுத்துக்காட்டு:

தேன் நக்கு அலர்கொன்றை பொன்னாக,

செஞ்சடையே

கூனல் பவளக் கொடியாக, – தானம்

மழையாக, கோடு மதியாகத் தோன்றும்

புழையார் தடக்கைப் பொருப்பு

(நக்கு-ஊறி; தானம்-மதம்; கோடு-கொம்பு;புழை-துளை; பொருப்பு-மலை;)

இப்பாடலின் பொருள் :

இப்பாடல் யானைமுகனான விநாயகப் பெருமானைக்குறிப்பது. துளை உடைய துதிக்கையைக் கொண்டயானையாகிய (விநாயகன்), மலையானது, தேனைச் சிந்தும்கொன்றை மலர் பொன்னாகவும், சிவந்த சடையே பவளக்கொடியாகவும், மதநீர் மழையாகவும், தந்தம் பிறைச்சந்திரனாகவும் கொண்டு தோன்றுகின்றது.

அணிப் பொருத்தம் :

இப்பாடலில், விநாயகன், அவன் அணிந்துள்ள கொன்றைமாலை, செஞ்சடை, மதநீர், தந்தம் ஆகியவை உருவகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வுருவகத்திற்குப் புலவர் கையாண்டமலை, பொன், பவளக்கொடி, மழை, பிறை ஆகியபொருள்கள் ஒன்றோடு ஒன்று இயைபு இல்லாதவைஎன்பதைக் காணலாம்.    இவ்வாறு இயைபு இல்லாதபொருள்களைக் கொண்டு உருவகம் செய்திருப்பதால் இதுஇயைபில் உருவக அணி ஆகும்.

ஏக தேச உருவகம்

இது உருவக அணி வகைகளில் ஒன்று. ஆனால் இது பற்றித். உருவகம் செய்யும் இரு பொருள்களுள் ஒரு பொருளை உருவகம் செய்து விட்டு அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏக தேச உருவகம் ஆகும்.

எடுத்துக்காட்டு:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

(குறள். 10)

இப்பாடலின் பொருள் :

இறைவன் அடியாகிய புணையைப் (தெப்பம்) பற்றிக்கொண்டோர்,     பிறவியாகிய பெருங்கடலை நீந்துவர்; அப்புணையைப் பற்றிக் கொள்ளாதோர் பிறவிப் பெருங்கடலைநீந்தமாட்டார்கள்.

அணிப் பொருத்தம் :

இக்குறளில், பிறவியைக் கடலாக உருவகம் செய்துவிட்டு, அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளாகியஇறைவன் திருவடியைத் தெப்பமாக உருவகம் செய்யாதுவிட்டமையால் இது ஏக தேச உருவகம் ஆயிற்று.

1.4 தீவக அணி

தண்டியலங்காரம்     பொருளணியியலில் சொல்அடிப்படையில் அமையும் சில அணிகள் இடம் பெறுகின்றன.பாடலில் வரும் சொற்கள் பொருள் விளக்கத்திற்குக் காரணமாகஇருப்பதால் இவை பொருளணியியலில் வைக்கப்பட்டன.இத்தகைய அணிகளில் தீவக அணியும் ஒன்று.

1.4.1 தீவக அணியின் இலக்கணம் ஒரு குணத்தையோ, தொழிலையோ, இனத்தையோ,பொருளையோ குறிக்கும் ஒரு சொல், செய்யுளின் ஓர்இடத்தில் நின்று, அச்செய்யுளில் பல இடங்களிலும் உள்ளசொற்கேளாடு சென்று பொருந்திப் பொருளைத் தருவது தீவக அணியாம். அது முதல் நிலைத் தீவகம்,இடைநிலைத் தீவகம், கடை நிலைத் தீவகம் என்னும்மூன்று விதமாக வரும்.

குணம் தொழில் சாதி பொருள் குறித்து ஒரு சொல்

ஒருவயின் நின்றும் பலவயின் பொருள் தரின்

தீவகம்; செய்யுள் மூவிடத்து இயலும்

(தண்டி. 39)

1.4.2 தீவக அணி – பெயர்க் காரணம் தீவகம் என்னும் சொல்லுக்கு ‘விளக்கு’ என்று பொருள்.ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்கேளாடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.

1.4.3 தீவக அணியின் வகைகள் பாடலில் தீவகமாக வரும் சொல் தீவகச் சொல்எனப்படும். இச்சொல் செய்யுளின் முதலில் வந்தால் அதுமுதல்நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் வந்தால் அதுஇடைநிலைத் தீவகம், இறுதியில் வந்தால் அது கடைநிலைத்தீவகம்’ ஆகும். தீவகச் சொல் குணம், தொழில், சாதி,பொருள் ஆகியவற்றைக குறித்து வரும் என முன்பு கண்டோம்.ஆகவே இந்நான்கு பொருளிலும், மூன்று இடங்களிலும்வருவது கொண்டு தீவக அணி மொத்தம் பன்னிரண்டு வகையாகவிரியும், அவை வருமாறு:

1) முதல் நிலைக் குணத் தீவகம்

2) முதல் நிலைத் தொழில் தீவகம்

3) முதல் நிலைச் சாதித் தீவகம்

4) முதல் நிலைப் பொருள் தீவகம்

5) இடைநிலைக் குணத் தீவகம்

6) இடைநிலைத் தொழில் தீவகம்

7) இடைநிலைச் சாதித் தீவகம்

8) இடைநிலைப் பொருள் தீவகம்

9) கடைநிலைக் குணத் தீவகம்

10) கடைநிலைத் தொழில் தீவகம்

11) கடைநிலைச் சாதித் தீவகம்

12) கடைநிலைப் பொருள் தீவகம்

இங்கு முதல்நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம்,கடைநிலைத் தீவகம் ஆகியவற்றை ஒவ்வொரு பாடல் கொண்டுவிளக்கமாகக் காண்போம்.

1.4.4 முதல் நிலைத் தீவகம் எடுத்துக்காட்டு:

சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்

ஏந்து தடந்தோள், இழிகுருதி – பாய்ந்து

திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,

மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து

(சேந்தன-சிவந்தன; தெவ்-பகைமை; சிலை-வில்;மிசை-மேலே; புள்-பறவை;)

இப்பாடலின் பொருள் :

அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன; அவைசிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள்சிவந்தன; குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன; வலிமை உடைய வில் பொழிந்த அம்புகளும் சிவந்தன;குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.

அணிப் பொருத்தம் :

இப்பாடலில் முதலில் நிற்கும் ‘சேந்தன’ (சிவந்தன)என்பது நிறம் பற்றிய குணச் சொல் (பண்புச் சொல்) இது.

வேந்தன் கண் சேந்தன

தெவ்வேந்தர் தோள் சேந்தன

குருதி பாய்ந்து திசை அனைத்தும் சேந்தன

அம்பும் சேந்தன

மிசைஅனைத்தும் சேந்தன

புள் குலமும் சேந்தன

என்று பாடலின் இடையிலும் இறுதியிலும் ஆகப் பல இடங்களிலும் உள்ள சொற்கேளாடு சென்று சேர்ந்து நின்றுபொருள் விளக்கம் தந்ததைக் காணலாம். இப்பாடல் முதல்நிலைக் குணத் தீவக அணியாகும்.

1.4.5 இடை நிலைத் தீவகம் எடுத்துக்காட்டு:

எடுக்கும் சிலைநின்று எதிர்ந்தவரும், கேளும்,

வடுக்கொண்டு உரம் துணிய, வாளி – தொடுக்கும்

கொடையும், திருவருளும், கோடாத செங்கோல்

நடையும் பெரும்புலவர் நா

(உரம்-மார்பு; வாளி-அம்பு; கோடாத-வளையாத;)

இப்பாடலின் பொருள் :

அரசன் தன்னை எதிர்த்த பகைவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் புண்பட்டு மார்பு பிளக்குமாறு, தான் எடுத்த வில்லிலிருந்து அம்புகளைத் தொடுப்பான். அவ்வளவிலே,புலவருடைய நாவானது, அவனுடைய ஈகையையும், சிறந்தஅருளையும், வளையாத செங்கோல் சிறப்பையும் பாடல்களில்தொடுக்கும் (தொடுத்துப் பாடும்).

அணிப் பொருத்தம் :

இப்பாடலில் இடையில் வந்த ‘தொடுக்கும்’ என்னும்சொல் தொழில் பற்றிய சொல்லாகும். இச்சொல்,

வாளி (அம்பு) தொடுக்கும்

பெரும்புலவர் நாத் தொடுக்கும்

என்று பாடலின் பிறஇடங்களில் சென்று பொருந்திப் பொருள்விளக்கம் செய்தமையால் இது இடைநிலைத் தொழில் தீவகஅணியாகும்.

1.4.6 கடை நிலைத் தீவகம் எடுத்துக்காட்டு:

புறத்தன, ஊரன, நீரன, மாவின்

திறத்தன, கொல்சேரி யவ்வே, – அறத்தின்

மகனை முறைசெய்தான் மாவஞ்சி யாட்டி

முகனை முறைசெய்த கண்

(புறத்தன-மான்; ஊரன-அம்பு; நீரன-தாமரை; மாவின் திறத்தன-மாவடு; கொல்சேரிய-கொல்லன் உலைக்களத்தில் உள்ள வாள; வஞ்சியாட்டி-வஞ்சி நகரத்தைச் சேர்ந்த பெண்;முகன்-முகம்;)

இப்பாடலின் பொருள் :

அறத்திற்காக மகனையே தேர்க்காலில் கிடத்தி அவன்மீது தேரைச் செலுத்திக் கொன்று முறை செய்த மனுநீதிச்சோழனுக்கு உரிய வஞ்சி என்னும் ஊரில் வாழும்தலைவியின் முகத்தை அழகு செய்த கண்கள் வெளியில் உள்ளமான்களுடைய கண்களைப் போன்றும், ஊரில் உள்ளஅம்புகளைப் போன்றும், நீரில் உள்ள தாமரை மலர்களைப்போன்றும், மாமரத்தில் உள்ள வடுக்களைப் போன்றும்,கொல்லன் சேரியில் உள்ள வாள்களைப் போன்றும் இருக்கின்றன.

அணிப் பொருத்தம் :

இப்பாடலில் இறுதியில் வந்துள்ள ‘கண்’ என்பதுபொருளைக் குறிக்கும் பெயர்ச்சொல். இது பாடலின் பலஇடங்களிலும் உள்ள ‘புறத்தன, ஊரன, நீரன, மாவின்திறத்தன, கொல்சேரிய,’ ஆகிய சொற்கேளாடு தனித்தனியேஇணைந்து நின்று பொருள் விளக்கம் செய்தமையால்கடைநிலைப் பொருள் தீவக அணியாகும்.

1.5 தொகுப்புரை

தன்மை அணி; எத்தகைய மிகையும் கற்பனையும்இல்லாமல் ஒரு பொருளின் இயல்புகளை உள்ளபடிஅழகுபடுத்திக் கூறுவதாகும். உவமை அணி, பொருளணிகள்எல்லாவற்றிலும் தலைசிறந்தது. பிற அணிகள் பலவும்இதிலிருந்தே தோன்றின; எனவே உவமை அணி தாய் அணிஎனக் கூறப்படும் சிறப்பு வாய்ந்தது. உவமை அணி, ‘பண்பு,தொழில், பயன்’ ஆகிய ஒப்புமைத்தன்மை காரணமாகத்தோன்றுவது. உவமை அணியிலிருந்து தோன்றிய முதலாவதுஅணி உருவக அணி. இது உவமைக்கும் பொருளுக்கும்இடையே உள்ள வேற்றுமையை ஒழித்து இரண்டும் ஒன்றேஎன்னும் உணர்வு தோன்றுமாறு சொல்வது. தண்டியலங்காரத்தில்கூறப்படாத ‘எடுத்துக்காட்டு உவமை அணி’ ‘.ஏகதேச உருவகஅணி’ ஆகிய இரண்டும் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன.தண்டியலங்காரம் பொருளணியியலில் சொல் அடிப்படையில்அமைந்த சில அணிகளும் இடம் பெறுகின்றன. இத்தகையஅணிகளில் தீவக அணியும் ஒன்று. பாடலில் ஏதேனும்ஓரிடத்தில் நின்ற சொல் அப்பாடலின் பல இடங்களிலும்உள்ள சொற்கேளாடும் சென்று பொருந்திப் பொருள் விளக்கம்தருவது தீவக அணி. இவையாவும் இப்பாடத்தின் வாயிலாகஅறியப்பட்டன.

பாடம் - 2

பொருளணியியல் – II

2.0 பாட முன்னுரை

தண்டியலங்காரம் பொருளணியியலில் விளக்கிக் கூறப்படும்அணிகள் முப்பத்தைந்து. இவற்றில் ஐந்து முதல் ஒன்பதுவரை கூறப்படும் அணிகளாகிய பின்வருநிலை அணி,முன்னவிலக்கு அணி, வேற்றுப்பொருள் வைப்பு அணி, வேற்றுமை அணி, விபாவனை அணி ஆகிய ஐந்தும்இந்த பாடத்தில் விளக்கப்படுகின்றன.

2.1 பின்வருநிலை அணி

தண்டியலங்காரம் பொருளணியியலில் சொல் அடிப்படையில்அமையும் அணிகள் சிலவும் இடம் பெற்றுள்ளன என்பதைச்சென்ற பாடத்தில் பார்த்தோம். அத்தகைய அணிகளில்இதுவும் ஒன்று.

2.1.1 பின்வருநிலை அணியின் இலக்கணம் ஒரு செய்யுளில் முதலில் வந்த சொல்லோ பொருளோ பின்னர்ப் பல இடங்களிலும் வருமாயின் அது பின்வருநிலை அணி எனப்படும்.

முன்வரும் சொல்லும் பொருளும் பலவயின்

பின்வரும் என்னில் பின்வரு நிலையே (தண்டி. 41)

2.1.2 பின்வருநிலை அணியின் வகைகள் பின்வருநிலை அணி மூவகைப்படும். அவை வருமாறு:

1) சொல் பின்வருநிலை அணி

2) பொருள் பின்வருநிலை அணி

3) சொல் பொருள் பின்வருநிலை அணி

சொல் பின்வருநிலை அணி

ஒரு செய்யுளில் முதலில் வந்த சொல் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொல் பின்வருநிலை அணி எனப்படும். முதலில் வந்த சொல் மட்டுமே மீண்டும் வரும்; அதன்பொருள் மீண்டும் வராது. அதாவது, முதலில் வந்த சொல், பின்னர்ப் பல இடங்களிலும் வரும்போது வேறுவேறு பொருள்களில் வரும்.

எடுத்துக்காட்டு:

மால்கரி காத்துஅளித்த மால் உடைய மாலைசூழ்

மால்வரைத்தோள் ஆதரித்த மாலையார் -

மால்இருள்சூழ்

மாலையின் மால்கடல் ஆர்ப்ப மதன்தொடுக்கும்

மாலையின் வாளி மலர்

(கரி = யானை; வரை = மலை; மதன் = மன்மதன்;

வாளி = அம்பு)

இப்பாடலின் பொருள்:

மதத்தால் மயங்கிய யானையின் இடர் தீர்த்துக் காத்தருளிய திருமாலுடைய மலர்மாலை சூழ்ந்த பெரிய மலை போன்ற தோள்களை விரும்பிய இயல்பினை உடைய பெண்களின் மீது, மயங்கிய இருள் சூழ்ந்த மாலைப் பொழுதில், கரிய கடல் ஆரவாரம் செய்ய, மன்மதன் இடைவிடாமல் மலர்களாகிய அம்புகளைத் தொடுப்பான்.

அணிப் பொருத்தம்:

இப்பாடலில் முதலில் வந்த ‘மால்’ அதை ஒத்த ‘மாலை’ ஆகிய இரு சொற்கள் பின்னர்ப் பல இடத்தும் பல பொருளில் வந்துள்ளன. ‘மால்’ என்னும் சொல் ,

மால் கரி

மால் உடைய

மால் வரைத்தோள்

மால் இருள்சூழ்

மால் கடல்     - மயக்கம் (மதமயக்கம்)

- திருமால்

- பெருமை (பெரிய)

- மயக்கம்

- கருமை (கரிய)

என்னும் நான்கு பொருள்களில் வந்துள்ளது. அதேபோல் ‘மாலை’ என்னும் சொல்,

மாலை சூழ்

மாலையார்

மாலை யின்

மாலை யின் வாளி     - மலர்மாலை

- இயல்பு

- மாலைப் பொழுது

- மாலை – வரிசை = இடைவிடாமை

என்னும் நான்கு பொருள்களில் வந்துள்ளது. ஆகவே இப்பாடல் சொல் பின்வருநிலை அணி ஆயிற்று.

பொருள் பின்வருநிலை அணி

ஒரு பாடலில் முதலில் வந்த சொல் (பொருள்) பின்னர்ப் பல இடங்களிலும் வேறுவேறு சொற்களில் (அதே பொருளில்) வருவது பொருள் பின்வருநிலை அணி எனப்படும்.

எடுத்துக்காட்டு

அவிழ்ந்தன தோன்றி; அலர்ந்தன காயா;

நெகிழ்ந்தன நேர்முகை முல்லை; மகிழ்ந்து இதழ்

விண்டன கொன்றை; விரிந்த கருவிளை;

கொண்டன காந்தள் குலை

(தோன்றி, காயா, முல்லை, கொன்றை, கருவிளை,

காந்தள் – மலர்கள்)

இப்பாடலின் பொருள்

தோன்றி மரங்கள் மலர்ந்தன; காயாஞ் செடிகள் மலர்ந்தன; அழகிய அரும்புகளை உடைய முல்லைக் கொடிகள் மலர்ந்தன; கொன்றை மரங்கள் மகிழ்வுற்று இதழ்கள் மலர்ந்தன; கருவிளைகள் மலர்ந்தன; காந்தள் குலைகளாக மலர்ந்தன.

அணிப் பொருத்தம்

இப்பாடலில் முதலில் வந்த ‘அவிழ்ந்தன’ என்ற சொல்லின் பொருள் மலர்ந்தன என்பதாகும். பின்னர் அதே பொருள் அலர்ந்தன,     நெகிழ்ந்தன, இதழ்விண்டன,     விரிந்த, குலைகொண்டன எனும் வெவ்வேறு சொற்களில் மீண்டும் வந்தது. ஆகவே இது பொருள் பின்வருநிலை அணி ஆகும்.

சொல் பொருள் பின்வருநிலை அணி

ஒரு செய்யுளில் முதலில் வந்த சொல்லும் அதன் பொருளும் பின்னர்ப் பல இடங்களில் மீண்டும் வருவது சொல் பொருள் பின்வருநிலை அணி எனப்படும். அதாவது முதலில் வந்த சொல் அதே பொருளில் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது.

எடுத்துக்காட்டு :

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃது உணரார்;

வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர்;

வைகலும் வைகற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்

வைகலை வைத்துஉணரா தார்

(வைகல் : நாள்)

இப்பாடலின் பொருள்

நாள்தோறும் நாள் கழிந்து வருவதைக் கண்கூடாகப் பார்த்திருந்தும், அப்படிக் கழிதலைத் தம் வாழ்நாள் மேல் வைத்து, அதுதான் இவ்வாறு கழிகின்றது என உணராதவர்கள், நாள்தோறும் நாள்கழிவதைக் கண்டு துன்புறாமல் இன்புறும் நாளாக எண்ணி மகிழ்வார்கள்.

அணிப் பொருத்தம்

இப்பாடலில், ‘வைகல்’ என்ற முன் வந்த சொல் பின்னும் பலவிடத்து ‘நாள்’ என்னும் ஒரே பொருளில் பின்னர்ப் பலவிடத்திலும் வந்தமையால் இப்பாடல் சொல் பொருள் பின்வருநிலை அணியாயிற்று.

சொல் பொருள் பின்வருநிலை அணி திருக்குறளில் பல இடங்களில் சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு சான்று காண்போம்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை     (குறள் : 411)

என்ற குறளில் ‘செல்வம்’ என்ற சொல் திரும்பத் திரும்ப ஐந்து இடங்களில் ஒரே பொருளில் வந்துள்ளமை காணலாம்.

2.2 முன்னவிலக்கு அணி

தண்டியலங்காரத்தில் ஆறாவதாகக் கூறப்படும் அணி முன்னவிலக்கு அணி. முன்னம் என்பதற்குக் ‘குறிப்பு’ என்று பொருள். பாடலில் கவிஞர் ஒரு பொருளைக் குறிப்பாகப் புலப்படுத்தலாம்; குறிப்பாக விலக்குதலும் செய்யலாம் முன்னவிலக்கு அணி இவற்றுள் பின்னைய வகையைச் சார்ந்தது.

2.2.1 முன்னவிலக்கு அணியின் இலக்கணம் ஒரு பொருளை (ஒரு கருத்தை அல்லது ஒரு செயலை)க் குறிப்பினால் விலக்கின் (மறுத்தால்) அது முன்னவிலக்கு என்னும் அணியாகும். அது இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்னும் மூன்று காலத்தோடும் தொடர்பு படலாம் அதாவது மூன்று காலப்பொருள்களும் மறுக்கப்படலாம்.

குறிப்பினால் அல்லாமல் கூற்றினால் (வெளிப்படையாக) மறுப்பதும் முன்னவிலக்கு அணியேயாகும்.

”முன்னத்தின் மறுப்பின் அது முன்ன விலக்கே

மூவகைக் காலமும் மேவியது ஆகும்” (தண்டி. 42)

2.2.2 முன்னவிலக்கு அணியின் வகைகள் முன்னவிலக்கு அணி ‘இறந்தவினை விலக்கு, நிகழ்வினை விலக்கு, எதிர்வினைவிலக்கு’ என மூவகைப்படும் என்று தண்டியலங்கார உரை கூறுகிறது.

இறந்த வினை விலக்கு,

இறந்த காலத்தில் நிகழ்ந்ததை மறுத்து விலக்குவது இறந்த வினை விலக்கு ஆகும்.

எடுத்துக்காட்டு :

பாலன் தனது உருவாய், ஏழ்உலகுஉண்டு,

ஆல்இலையின்

மேல் அன்று கண்துயின்றாய், மெய்என்பர்; -

ஆல்அன்று

வேலைநீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ?

சோலைசூழ் குன்றுஎடுத்தாய் சொல்

(குன்று – கோவர்த்தன மலை)

இப்பாடலின் பொருள்

‘சோலை சூழ்ந்த குன்றத்தைக் குடையாகப் பிடித்த திருமாலே! நீ ஊழிக்காலத்தில் ஏழு உலகத்தையும் உண்டு, குழந்தை வடிவம் கொண்டு, ஆல் இலையில் துயின்றாய் என்று கூறப்படும் கூற்று உண்மை என்று கூறுவர். அவ்வாறாயின் நீ உறங்கிய ஆல் இலையானது அன்றைய நாளில் கடலின் உள்ளே இருந்ததோ? விண்ணுலகில்     இருந்ததோ? மண்ணுலகில் இருந்ததோ? சொல்லுவாயாக.’

அணிப் பொருத்தம்

உலகம் முழுவதும் உண்ணப்பட்ட பின் ஆல் இலை ஒன்று மட்டும் தனியாக இருந்தது எனக் கூறுவது பொருந்தாது என்று அந்நிகழ்ச்சியைக் குறிப்பால் மறுத்துக்     கூறியமையால் முன்ன விலக்கு அணி ஆயிற்று. இறந்த காலத்தில் நிகழ்ந்த வினை (செயல்) ஒன்றைக் குறிப்பாக விலக்கியதனால் இறந்த வினை விலக்கு என்னும் வகை ஆயிற்று.

இங்குத் திருமாலின் செயல் நம்பமுடியாதது என மறுக்கப்பட்டது போலத் தோன்றினாலும் புலவர் கருத்து அஃது அன்று; மறுப்பது போலச் சொல்லித் திருமால் எத்தகைய அற்புதமும் செய்யவல்லவர் எனக் குறிப்பதே நோக்கம்

நிகழ் வினை விலக்கு

நிகழ்கால நிகழ்ச்சியை மறுத்து விலக்குவது நிகழ்வினை விலக்கு ஆகும்.

எடுத்துக்காட்டு:

மாதர் நுழைமருங்குல் நோவ, மணிக்குழைசேர்

காதில் மிகைநீலம் கைபுனைவீர்! – மீது உலவும்

நீள்நீல வாள்கண் நெடுங்கடையே செய்யாவோ?

நாள்நீலம் செய்யும் நலம்

(மாதர்-விருப்பம்; நுழை மருங்குல்-நுண்ணிய இடை;

நீலம் – நீலமலர்; நலம் – அழகு)

இப்பாடலின் பொருள்

இப்பாடலில் தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டிச் சொல்கிறான்: நுண்ணிய இடை வருந்துமாறு அழகிய குழை அணிந்த உம் காதின் மீது மிகையாக நீலமலரைச் செருகுகின்றீர்களே! அக் காதளவு சென்று உலாவுகின்ற நீண்ட நீல நிறத்தை உடைய உமது கண்களின் நெடிய கடையே நீல மலர்கள் தரும் அழகைத் தரும் அல்லவா!

அணிப் பொருத்தம்

இப்பாடலில், காதளவு ஓடிய நீண்ட நீல விழியுடைய தலைவி தன் காதுகளில் நீல மலர் சூடுவது மிகை என்று அவ்வொப்பனை குறிப்பாக விலக்கப்படுதலின் இப்பாடல் முன்ன விலக்கு அணி ஆயிற்று. நிகழ்காலத்தில் நிகழ்கின்ற வினை (ஒப்பனைச் செயல்) ஒன்றைக் குறிப்பாக விலக்கியதனால் இது நிகழ் வினை விலக்கு என்னும் வகை ஆயிற்று

எதிர் வினை விலக்கு,

எதிர்காலத்தில் நிகழவிருக்கும் வினை ஒன்றை மறுத்து விலக்குவது எதிர்வினை விலக்கு ஆகும்.

எடுத்துக்காட்டு:

முல்லைக் கொடிநடுங்க, மொய்காந்தள் கைகுலைப்ப,

எல்லை இனவண்டு எழுந்து இரங்க, – மெல்லியல்மேல்

தீவாய் நெடுவாடை வந்தால் செயல் அறியேன்

போவாய், ஒழிவாய், பொருட்கு

(மொய் = நெருங்கிய; இரங்க = ஒலிக்க)

இப்பாடலின் பொருள்

பொருள்தேடப் பிரிந்து செல்லவிருக்கும் தலைவனிடம் தோழிகூறுகிறாள்: தலைவனே! முல்லைக்கொடி நடுங்கவும், நெருங்கிய காந்தள் மலர்கள் கைகளைப் போலப் பூப்பவும், ஒளி பொருந்திய வண்டின் கூட்டம் எழுந்து ஒலிக்கவும், தீயின் தன்மையை உடைய நெடிய வாடைக் காற்றானது மெல்லிய இயல்பை உடைய தலைவியின் மேல் வந்தால் பின் விளையும் செய்தியைத் தோழியாகிய யான் அறியமாட்டேன். ஆதலின், தலைவியைப் பிரிந்து பொருள் தேடுவதற்குப் போவதையோ, அவளைப் பிரியாது உடன் இருப்பதையோ உன் விருப்பப்படி செய்வாயாக.’ தலைவன் பிரிந்து சென்றால் தலைவிக்குப் பெரும் தீங்கு நேரும் என்பது பொருள்.

அணிப் பொருத்தம்

இப்பாடலில், எதிர்காலத்தில் தலைவனது பிரிவால் நிகழக்கூடிய தலைவியின் துன்ப நிகழ்வைக் கூறி, அவனது பிரிவைக் குறிப்பாக விலக்கியதால் இப்பாடல் எதிர் வினை விலக்கு என்னும் வகை ஆயிற்று.

2.3. வேற்றுப்பொருள் வைப்பு அணி

தண்டியலங்காரத்தில் ஏழாவதாகக் கூறப்படும் அணி வேற்றுப்பொருள் வைப்பு அணியாகும். இலக்கியங்கள் பலவற்றிலும் குறிப்பாகக் கம்பராமாயணம், பெரியபுராணம், சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களில் இவ்வணி மிகுதியாக இடம்பெற்றுள்ளது.

2.3.1 வேற்றுப்பொருள் வைப்பு அணியின் இலக்கணம் முதலில் ஒரு பொருளினது திறத்தைத் தொடங்கிய கவிஞர் பின்னர் அதனைச் சிறப்பாக முடிப்பதற்கு ஏற்ற, வலிமை வாய்ந்த உலகறிந்த, வேறு ஒரு பொருளை, ஏற்றி வைத்துச் சொல்வது வேற்றுப்பொருள் வைப்பு அணி ஆகும். இவ்வாறு கவிஞன்     தான் சொல்லத் தொடங்கிய பொருளை உறுதிப்படுத்துவதற்காக வேற்றுப் பொருளைச் சொல்லி முடிப்பதால் இவ்வணிக்கு இப்பெயர் அமைந்தது.

முன்ஒன்று தொடங்கி மற்றுஅது முடித்தற்குப்

பின் ஒருபொருளை உலகுஅறி பெற்றி

ஏற்றிவைத்து உரைப்பது வேற்றுப்பொருள் வைப்பே

(தண்டி. 46)

வேற்றுப்பொருள் வைப்பு அணியில் கவிஞர் முன்னர்க் கூறும் பொருளைச் ‘சிறப்புப் பொருள்’ என்றும், பின்னர் அதனை முடித்தற்கு அவர் கூறும் உலகு அறிந்த, வலிமையான பொருளைப் ‘பொதுப் பொருள்’ என்றும் குறிப்பிடுவர். சிறப்புப் பொருளைப் பொதுப் பொருள் கொண்டு முடித்தல் வேற்றுப்பொருள் வைப்பு அணி என்று இதன் இலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறலாம்.

2.3.2 வேற்றுப்பொருள் வைப்பு அணியின் வகைகள் வேற்றுப்பொருள் வைப்பு அணி எட்டு வகைப்படும். குறிப்பிடுகிறார் (தண்டி. 48). அவை வருமாறு:

1) முழுவதும் சேறல்

2) ஒருவழிச் சேறல்

3) முரணித் தோன்றல்

4) சிலேடையின் முடித்தல்

5) கூடா இயற்கை

6) கூடும் இயற்கை

7) இருமை இயற்கை

8) விபரீதப்படுத்தல்

இவற்றுள், முழுவதும் சேறல், ஒருவழிச் சேறல், இரண்டையும் ஆகிய மேற்கோள் பாடல்கள் வழிநின்று விளக்கமாகக் காண்போம்.

முழுவதும் சேறல்

பாடலில் கூறப்படும் பொதுப்பொருள் உலகில் உள்ள பொருள்கள் அனைத்திற்கும் பொருந்துவதாக அமைவது முழுவதும் சேறல் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

புறம்தந்து இருள்இரியப் பொன்நேமி உய்த்துச்

சிறந்த ஒளிவளர்க்கும் தேரோன் – மறைந்தான்

புறஆழி சூழ்ந்த புவனத்தே தோன்றி

இறவாது வாழ்கின்றார் யார்?

(நேமி = சக்கரத்தை உடைய தேர்;

உய்த்து = செலுத்தி; ஆழி = கடல்)

இப்பாடலின் பொருள் :

உலகைக் காத்து, இருளை ஓடச்செய்து அழகிய சக்கரத்தைச் செலுத்திச் சிறந்த ஒளியைப் பரப்பும் தேரை உடையவனாகிய கதிரவன் மறைந்தான். புறத்தே கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பிறந்து இறவாமல் வாழ்பவர் யார்?

அணிப் பொருத்தம் :

இப்பாடல் ‘இருளை ஓடச்செய்து ஒளிபரப்பிய கதிரவன் மறைந்தான்’ என்பது கவிஞர் சொல்லக் கருதிய சிறப்புப் பொருள் ‘கடல் சூழ்ந்த உலகில் பிறந்து, இறவாமல் வாழ்வோர் யார்? என்பது அச்சிறப்புப் பொருளை முடிப்பதற்காகக் கூறிய உலகறிந்த பொதுப்பொருள். பொதுப் பொருள் கொண்டு சிறப்புப்     பொருள்     விளக்கப்பட்டமையால்     இது வேற்றுப்பொருள் வைப்பு அணி ஆயிற்று. பிறந்தவர் இறத்தல் என்பது உலகம் முழுவதிற்கும் பொருந்திய பொதுப்பண்பு ஆதலின் இப்பாடல் முழுவதும் சேறல் என்னும் வகை ஆயிற்று.

ஒருவழிச் சேறல்

பாடலில் கூறப்படும் பொதுப்பொருள் உலகில் உள்ள பொருள்கள் முழுவதிற்கும் உரியதாகாது, ஒரு பகுதிக்கு அல்லது சிலவற்றிற்கு மட்டுமே உரியதாக அமைவது ஒருவழிச் சேறல் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

எண்ணும் பயன்தூக்காது, யார்க்கும் வரையாது

மண்உலகில் வாமன் அருள்வளர்க்கும்; -

தண்நறுந்தேன்

பூத்துஅளிக்கும் தாராய்! புகழாளர்க்கு எவ்வுயிரும்

காத்துஅளிக்கை அன்றோ கடன்?

(வரையாது – அளவில்லாமல்; வாமன் – திருமால்)

இப்பாடலின் பொருள் :

குளிர்ந்த நல்ல தேனை மலர்ந்து கொடுக்கின்ற மாலையை அணிந்தவனே! கைம்மாறு கருதாமல், யாவர்க்கும் வரையறை இல்லாமல், இவ்வுலகில் திருமால் (வாமன்) கருணையை மிகுதியாகச் செய்தருள்கின்றான். புகழை உடையவர்களுக்கு எல்லா உயிர்களையும் பாதுகாத்து அருள் செய்வது கடமை அன்றோ?

அணிப் பொருத்தம் :

இப்பாடலில், ‘திருமால் யாவர்க்கும் கைம்மாறு கருதாமல் கருணை செய்கின்றான்’ என்பது கவிஞர் சொல்லக் கருதிய சிறப்புப் பொருள் ஆகும். எல்லா உயிர்களையும் பாதுகாத்து அருள் செய்வது புகழ் உடையவர்களுக்குக் கடமை அன்றோ? என்பது, அச்சிறப்புப் பொருளை முடிப்பதற்குக் கூறிய உலகறிந்த பொதுப் பொருள் ஆகும். இவ்வாறு சிறப்புப்பொருளைப் பொதுப் பொருள் கொண்டு முடித்துக் கூறியமையால் இப்பாடல் வேற்றுப்பொருள் வைப்பு அணி ஆயிற்று. பொதுப் பொருள் உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் பொருந்தாமல், ‘புகழாளர்’ என்னும் ஒரு பகுதிக்கு மட்டுமே பொருந்துவதால் இப்பாடல், ‘ஒருவழிச் சேறல்’ என்னும் வகை ஆயிற்று.

2.4 வேற்றுமை அணி

தண்டியலங்காரத்தில் எட்டாவதாகக் கூறப்படும் அணி வேற்றுமை அணி ஆகும். உவமை அணியிலிருந்து தோன்றிய அணிகளில் இதுவும் ஒன்று. உவமை அணியில் இரு பொருள்களுக்கு இடையிலான ஒப்புமை மட்டுமே சொல்லப்படும். ஒப்புமை உடைய இருபொருள்களுக்கு இடையிலான வேற்றுமையையும் சொல்வது வேற்றுமை அணி. ஆகவே இவ்வணி உவமை அணியிலிருந்து பிறந்து அதன் தொடர்ச்சியாக அமைவது. திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் இவ்வணி மிகுதியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.

2.4.1 வேற்றுமை அணியின் இலக்கணம் இரு பொருள்களுக்கிடையே உள்ள ஒப்புமையை வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ முதலில் கூறிப் பின்னர் அவற்றுக்கிடையே     வேற்றுமை தோன்றக் கூறுவது வேற்றுமை அணி ஆகும்

கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள்

வேற்றுமைப் படவரின் வேற்றுமை அதுவே

(தண்டி. 49)

(கூற்று – வெளிப்படையாகச் சொல்வது;

குறிப்பு – குறிப்பாக, மறைமுகமாகச் சொல்வது)

ஒப்புமையைக் கூறும் முறையால் கூற்று வேற்றுமை, குறிப்பு வேற்றுமை என வேற்றுமைஅணி இரு வகைப்படும் என்பது புலனாகிறது. இரு பொருள்களுக்கு இடையிலான ஒப்புமையை வெளிப்படையாகச் சொல்லுவது கூற்று வேற்றுமை எனப்படும். அவ்வொப்புமையை வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பாகச் சொல்லுவது குறிப்பு வேற்றுமை எனப்படும்.

இனி, வேற்றுமையை எடுத்துக்காட்டும் வகையிலும் வேற்றுமை அணி இருவகைப்படும்.     இருபொருள்களை வேற்றுமைப்     படுத்தும்போது, இரண்டும்     சமமான சிறப்புடையவையே எனத் தோன்றுமாறு கூறுவது வேற்றுமைச் சமம் எனப்படும். அவ்வாறு அல்லாமல், இரு பொருள்களுள் ஒன்று, மற்றொன்றைவிட உயர்ந்தது எனத் தோன்றுமாறு காரணத்துடன் சொல்வது உயர்ச்சி வேற்றுமை எனப்படும்.

ஒரு பொருளை மட்டும் வேற்றுமைப்படுத்துவது ஒரு பொருள் வேற்றுமை எனவும், இரு பொருள்களையும் வேற்றுமைப் படுத்துவது இரு பொருள் வேற்றுமை எனவும் குறிப்பிடப்படும்

2.4.2 வேற்றுமைச் சமம் வேற்றுமைப் படுத்தப்படும் இரு பொருள்களும் சமமான சிறப்புடையவையே எனக்காட்டுவது வேற்றுமைச் சமம் ஆகும்.

எடுத்துக்காட்டு :

அனைத்து உலகும் சூழ்போய், அரும்பொருள்

கைக்கொண்டு,

இனைத்து அளவைத்து என்றற்கு அரிதாம், -

பனிக்கடல்

மன்னவ! நின் சேனைபோல்; மற்று அது நீர்வடிவிற்று

என்னும் இது ஒன்றே வேறு

(அளவைத்து = அளவை உடையது;

வடிவிற்று = வடிவை உடையது)

இப்பாடலின் பொருள்

மன்னவனே! கடலும் நின் சேனையும் ஒரே வகையான இயல்பு, தொழில்களை உடையவை. குளிர்ந்த கடல், உலகம் முழுவதையும் சூழ்ந்து, பல அரிய பொருள்களைத் தன்னகத்தே கொண்டு, இன்ன அளவை உடையது என்று அளப்பதற்கு அரியதாய் உள்ளது; உன் சேனையும் பல நாடுகளையும் கைப்பற்றுவதற்கு உலகம் முழுவதையும் சூழ்ந்து, பகை நாட்டு அரசர்களின் அரிய பொருள்களை எல்லாம் கைக்கொண்டு, இன்னஅளவை உடையது என்று அளப்பதற்கு அரியதாய் உள்ளது. ஆனால் கடல், ‘நீர் வடிவில் உள்ளது’ என்னும் ஓர் இயல்பு மட்டும்தான் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும்.

அணிப் பொருத்தம்

இப்பாடலில், சேனை, கடல் என்னும் இரு பொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமைகள் முதலில் வெளிப்படையாகக் கூறப்பட்டன. பின்பு, கடல் என்னும் ஒரு பொருளுக்கு மட்டும் ‘அது நீர் வடிவிற்று’ என்னும் வேறுபாடு கூறப்பட்டது. வேற்றுமை கூறும்போது, ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்தது எனக் கூறவில்லை. ஆகவே இது வேற்றுமைச் சமம் ஆகும். கடல், நீர்வடிவை உடையது என ஒரு பொருள் மட்டுமே வேற்றுமைப் படுத்தப்பட்டதால் இது ஒருபொருள் வேற்றுமைச் சமம் எனப்படும்.

2.4.3 உயர்ச்சி வேற்றுமை வேற்றுமைப் படுத்தப்படும் இரு பொருள்களில் ஒன்று மற்றொன்றைவிட உயர்ந்தது எனப்புலப்படுமாறு வேற்றுமைப் படுத்துவது உயர்ச்சி வேற்றுமை ஆகும்.

எடுத்துக்காட்டு :

மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்முள்

ஒலியும் பெருமையும் ஒக்கும்; – மலிதேரான்

கச்சி படுவ கடல்படா; கச்சி

கடல்படுவ எல்லாம் படும்

(மலிதேரான் = மிகுந்த தேர்ப்படையை உடையவன்;

கச்சி = காஞ்சிபுரம்; படுவ = இருப்பவை)

இப்பாடலின் பொருள்

மிக்க தேர்ப்படையை உடைய எம் அரசனுடைய காஞ்சி மாநகரும் பெரிய கடலும் தமக்குள்ளே ஒலியாலும் பெருமையாலும் ஒத்தவை. எனினும் காஞ்சி மாநகரில் உள்ளவை எல்லாம் கடலில் இல்லை; கடலில் இருப்பவை எல்லாம் காஞ்சி மாநகரில் உள்ளன.

அணிப் பொருத்தம்

இப்பாடலில் ஒலியாலும், பெருமையாலும் காஞ்சிபுரமும் கடலும் ஒத்தவை என அவற்றின் ஒப்புமை வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது. பின்னர்க் கடலைவிடக் காஞ்சி மாநகர் உயர்ந்தது எனப்பொருள்படும்படி வேற்றுமை கூறப்பட்டது. ஆகவே இது உயர்ச்சி வேற்றுமை ஆயிற்று.

வேற்றுமை அணி, திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சான்றாகத் திருக்குறளில் இருந்து ஒரு குறள் பாவினைக் கொண்டு அதில் வேற்றுமை அணி அமைந்திலங்கும் திறத்தைக் காண்போம்.

தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு     (குறள். 129.)

இக்குறளின் பொருள்

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் கூறிச் சுட்ட வடு என்றும் ஆறாது.

அணிப் பொருத்தம்

இக்குறளில், தீயும் சுடும், நாவினால் கூறும் தீய சொல்லும் சுடும் என்று ஒப்புமை கூறி, பின்பு தீயினால் சுட்ட புண் ஆறிவிடும்; ஆனால் நாவினால் சுட்ட வடு ஆறாது என்று வேற்றுமை கூறியதால் வேற்றுமை அணி ஆயிற்று.

2.5 விபாவனை அணி

தண்டியலங்காரத்தில் ஒன்பதாவதாகக் கூறப்படும் அணி விபாவனை அணி ஆகும். விபாவனை என்பதற்கு சிறப்பாக எண்ணுதல் என்று பொருள். பொருளைக் குறிப்பாக உணர்ந்து கொள்ளும் வகையில் கூறப்படும் அணிகள் தண்டியலங்காரத்தில் பல உள்ளன. அவற்றுள் விபாவனை அணியும் ஒன்று.

2.5.1 விபாவனை அணியின் இலக்கணம் ஒரு பொருளின் செயலைக் கூறும்போது அச்செயலுக்குப் பலரும் அறியவரும் காரணத்தை நீக்கி வேறொரு காரணத்தால் அது நிகழ்ந்தது என்றோ, அல்லது காரணம் எதுவுமின்றி இயல்பாக நிகழ்ந்தது என்றோ உய்த்துணர்ந்து கொள்ளுமாறு குறிப்பாகக் கூறுவது விபாவனை என்னும் அணி ஆகும்.

உலகுஅறி காரணம் ஒழித்து ஒன்று உரைப்புழி

வேறுஒரு காரணம், இயல்பு குறிப்பின்

வெளிப்பட உரைப்பது விபாவனை ஆகும்

(தண்டி. 51)

(‘குறிப்பின் வெளிப்பட உரைப்பது’ = ‘சிந்தித்து ஆராய்தலினாலே வெளிப்படுதல்’ என்று பொருள்.)

2.5.2 விபாவனை அணியின் வகைகள் விபாவனை அணி இரண்டு வகைப்படும் அவை வருமாறு:

1) அயல் காரண விபாவனை அணி

2) இயல்பு விபாவனை அணி

இவற்றின் இலக்கணத்தை விளக்கமாகக் காண்போம்.

அயல் காரண விபாவனை அணி

அயல் காரணம் = வேறு காரணம். ஒரு பொருளின் செயலை உரைக்கும் போது, அச்செயலுக்குப் பலரும் அறியும் காரணங்களை நீக்கி, அது வேறு ஒரு காரணத்தால் நிகழ்ந்தது எனக் குறிப்பாக உணர்ந்து கொள்ளும் வகையில் கூறுவது அயல் காரண விபாவனை அணி எனப்படும்.

எடுத்துக்காட்டு

தீ இன்றி வேம் தமியோர் சிந்தை; செழுந்தேறல்

வாய் இன்றி மஞ்ஞை மகிழ்தூங்கும்; – வாயிலார்

இன்றிச் சிலர் ஊடல் தீர்ந்தார்; அமர் இன்றிக்

கன்றிச் சிலை வளைக்கும் கார்

(தமியோர் = தனித்திருப்போர்; தேறல் = மது;

மஞ்ஞை = மயில்; வாயிலார் = ஊடல் தீர்ப்போர்;

அமர் = போர்; சிலை = வில்; கார் = கார்காலம்)

இப்பாடலின் பொருள்

இணை பிரிந்து தனித்திருப்பார் (காதலர்) உள்ளமானது, தீயில்லாமலே வேகும்; மயில்கள் செழுமையான மதுவை வாயில் கொள்ளாமலே களிப்புற்று ஆடும்; சிலர் (ஊடல் கொண்ட மகளிர்) ஊடல் தீர்க்கும் வாயிலார் இல்லாமலே ஊடல் தீர்ந்தார்கள்; மேகமானது போர் இல்லாமலே வெகுண்டு (கறுத்து) வில்லை (வான வில்லை) வளைக்கும்.

அணிப் பொருத்தம்

இப்பாடலில், வேகுதல், களிப்புற்று ஆடுதல், ஊடல் தீர்தல், வில்லை வளைத்தல் ஆகிய வினைகளுக்கு (செயல்களுக்கு) உலகு அறிந்த காரணங்கள் முறையே தீ, செழுந்தேறல் (மது), வாயிலார், போர் ஆகியனவாம். ஆனால், இக்காரணங்களால் இல்லாமல் இவ்வினைகள் யாவும் ‘கார் காலம்’ என்ற வேறு ஒரு காரணத்தால் நிகழ்ந்தன என்பதைக் குறிப்பாக உணர்த்தியதால் இப்பாடல் ‘அயல் காரண விபாவனை அணி’ ஆயிற்று.

இயல்பு விபாவனை அணி

ஒரு செயல் உலகு அறிந்த காரணங்கள் இன்றி இயல்பாகவே நிகழ்ந்தது எனக் குறிப்பாக உணர்த்துவது இயல்பு விபாவனை அணி எனப்படும்.

எடுத்துக்காட்டு :

கடையாமே கூர்த்த கருநெடுங்கண்; தேடிப்

படையாமே ஏய்ந்த தனம்; பாவாய்! – கடைஞெமிரக்

கோட்டாமே கோடும் புருவம்; குலிகச்சேறு

ஆட்டாமே சேந்த அடி

(தனம் = மார்பு; ஞெமிர = அமுங்குமாறு;

கோட்டாமே = வளைக்காமலே;

குலிகச்சேறு = சாதிலிங்கக் குழம்பு)

இப்பாடலின் பொருள்

சித்திரப் பாவை போன்ற பெண்ணே! உன்னுடைய கரிய நெடிய கண்கள் கடைதல் செய்யாமலே (சாணை பிடிக்காமலே) கூர்மையைப் பெற்றன; பிறர் ஆராய்ந்து செய்யாமலேயே மார்புகள் தக்க உருவத்தோடு அமைந்தன; உன் புருவங்கள் இரு கோடிகளும் அமுங்குமாறு யாரும் வளைக்காமலேயே வளைந்துள்ளன; உன் பாதங்கள் சாதிலிங்கக் குழம்பு தோய்க்கப்படாமலேயே சிவந்துள்ளன.

அணிப் பொருத்தம் :

சாணை பிடித்துக் கூர்மை செய்தல், ஆராய்ந்து செய்து தக்க உருவம் படைத்தல், இரு கோடிகளையும் பற்றி வளைத்தல், சாதிலிங்கக் குழம்பு தோய்த்துச் சிவக்கச் செய்தல் ஆகிய உலகு அறிந்த காரணங்கள் இல்லாமல், இயல்பாகவே முறையே, தலைவியின் கண்கள் கூர்மை பெற்றன, மார்புகள் தக்க உருவத்தோடு அமைந்தன, புருவங்கள் வளைந்தன, பாதங்கள் சிவந்தன என்பனவற்றைக் குறிப்பாகக் கூறினமையால் இப்பாடல் இயல்பு விபாவனை அணி ஆயிற்று

2.6 தொகுப்புரை

பின்வருநிலை அணி மூவகையாகப் பாடப்படும். ஒரே சொல் பல இடங்களில் வெவ்வேறு பொருளில் வருமாறும், வெவ்வேறு சொற்கள் ஒரே பொருளில் வருமாறும், ஒரே சொல் பல இடங்களிலும் ஒரே பொருளில் வருமாறும் பின்வருநிலை அணி பாடப்படும். முன்னவிலக்கு அணி ஒரு கருத்தை அல்லது செயலைக் குறிப்பாக விலக்கும் வகையில் பாடப்படும் அணி ஆகும். கவிஞர்கள் தாம் கூறும் பொருளை வலியுறுத்திக் காட்ட அதனினும் வலிமை வாய்ந்த உலகு அறிந்த பொருளைக் கூறுவது வேற்றுப்பொருள் வைப்பு அணி. ஒப்புடை இரு பொருட்கள் தம்முள் வேற்றுமை தோன்றச் சொல்வது வேற்றுமை அணி. ஒரு பொருளின் வினை உரைக்குங்கால் அவ்வினைக்குப் பலரும் அறியும் காரணங்களை ஒழித்து, அவ்வினையானது வேறு ஒரு காரணமாகவோ, அல்லது இயல்பாகவோ நிகழ்ந்ததாகப் பாடுவது விபாவனை அணி. இவையாவும் இப்பாடத்தின் வாயிலாக அறியப்பட்டன. மேலும் பின்வருநிலை அணி, வேற்றுமை அணி ஆகிய அணிகள் தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகப் பயின்று வருவதை இப்பாடத்தின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது.

பாடம் - 3

பொருளணியியல் – III

3.0 பாட முன்னுரை

தண்டியலங்காரம் பொருளணியியலில் விளக்கிக் கூறப்படும்அணிகள் முப்பத்தைந்து. இவற்றில் பத்து முதல் பதினான்காவதுவரை உள்ள அணிகள் ஒட்டு அணி, அதிசய அணி,தற்குறிப்பேற்ற அணி, ஏது அணி, நுட்ப அணி ஆகிய ஐந்துமாம்.இப்பாடத்தில் இவ்வணிகள் ஒவ்வொன்றுக்கும் தண்டியலங்காரநூலின் அடிப்படையில் பொருத்தமான பாடல் மேற்கோள்,இலக்கண விளக்கம், அப்பாடலின் பொருள், அப்பாடலில்அமைந்துள்ள அணிப் பொருத்தம் ஆகியவை விளக்கமாகக்காட்டப்படுகின்றன.

3.1 ஒட்டு அணி.

இலக்கியத்திற்கு உரிய பண்புகளுள் தலைசிறந்த ஒன்றாகக் கருதப்படுவது குறிப்பாற்றல் (Suggestiveness) என்பதாகும். கவிஞர் பாடலில் தாம் கூற விரும்பும் கருத்தினைக் குறிப்பாகக் கூறி, படிப்பவர் சிந்திந்து உணர்ந்து கொள்ளச் செய்தால் படிப்பவர்க்குக் கவிதைச் சுவை மிகுதியாகும். பாடல் பொருளை மிகக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்குக் கவிஞர்கள் கையாண்ட அணிகள் பல. அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று ஒட்டு அணி ஆகும்.

3.1.1 ஒட்டு அணியின் இலக்கணம். கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை மறைத்து, அதனை வெளிப்படுத்துவதற்கு அதனோடு ஒத்த வேறு ஒரு பொருளைச் சொல்வது ஒட்டு என்னும் அணியாம். இதனை,

கருதிய பொருள்தொகுத்து அதுபுலப் படுத்தற்கு

ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டு என மொழிப

(தண்டி. நூ. 52)

என்ற நூற்பாவில் தண்டி ஆசிரியர் கூறுவர். இங்கு, ‘ஒத்த வேறு ஒரு பொருள்’ என்பது, கவிஞர் சொல்லக் கருதிய பொருளுக்கு உவமையாகத் தக்க பொருள் ஆகும். இவ்வாறு ‘பிறிது’ ஒரு பொருளை மொழிவதால் இவ்வணி ‘பிறிதுமொழிதல் அணி’ எனப் பெரும்பாலும் வழங்கப்படுகிறது.

எடுத்துக்காட்டு:

வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்தது ஓர் காவிக்

குறைபடுதேன் வேட்டும் குறுகும்; -நிறைமதுச்சேர்ந்து,

உண்டாடும் தன்முகத்தே, செவ்வி உடையது,ஓர்

வண்தா மரைபிரிந்த வண்டு

இப்பாடல், ‘பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனுக்கு வாயில் நேர்ந்த தோழி சொல்லியது’ என்னும் அகப்பொருள் துறையில் அமைந்தது.

(வெறி- களிப்பு; இனச்சுரும்பு – பல வண்டுகள்;

காவி – கருங்குவளைப்பூ; வேட்டும்- விரும்பி;

குறுகும் – சேரும்; மது – தேன்; தன்முகத்தே – தன்னிடத்து;

செவ்வி – வனப்பு; வண்தாமரை – வளமான தாமரை மலர்.)

பாடலின் பொருள்:

வனப்பையும் வளமையையும் உடைய தாமரை மலரில் குறைவற்ற நிறைந்த தேனை உண்டு களித்து விளையாடுகின்ற ஆண் வண்டானது, பல வண்டுகள் சேர்ந்து உண்டு வெறுத்து விட்ட ஒரு கருங்குவளைப் பூவில் உள்ள குறைபட்ட தேனை ஆசைப்பட்டுச் சேருகின்றதே!

அணிப்பொருத்தம்

கவிஞர் கூறக் கருதிய பொருள் இதுவன்று; வேறு ஒன்றாகும். அதனை இப்பாடலில் வெளிப்படையாகக் கூறாமல் மறைத்துக் கூறுகிறார். மறைத்துக் கூறும் அப்பொருள் வருமாறு:

வனப்பையும் வளப்பத்தையும் உடைய தலைமகளிடத்தில் குறைவற்ற நிறைந்த இன்பத்தைத் துய்த்து மகிழ்ந்த தலைமகன், அவளை விட்டு நீங்கி, பலரும் துய்த்து வெறுத்து விலக்கிய ஒரு பரத்தையினது குறைவாகிய இன்பத்தை விரும்பி அவளைச் சேர்கின்றானே”

கூறக் கருதிய பொருள்                                                                    கூறிய பொருள்

பலராலும் அனுபவித்து விடப்பட்ட பரத்தை           வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்தது ஓர் காவி

அப்பரத்தைபால் பெறும் குறைவாகிய இன்பம்       குறைபடு தேன்

வனப்பையும் வளப்பத்தையும் உடைய தலைவி   செவ்வி உடையது ஓர்வண்தாமரை

அத்தலைவிபால் பெறும் நிறைவாகிய இன்பம்       நிறைமது

தலைவியைப் பிரிந்த தலைமகன்                                  வண்தாமரை பிரிந்த வண்டு

இவ்வாறு கவிஞர் தாம் கூறக் கருதிய பொருளை மறைத்து, அதனோடு ஒத்த வேறு ஒரு பொருளைக் கூறி, அதன் வாயிலாக வெளிப்படுத்தியமையால் இப்பாடல் ஒட்டு அணியாயிற்று. இங்கு உவமானம் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது; உவமேயம் குறிப்பாகப் பெறப்படுகின்றது.

3.1.2 ஒட்டு அணியின் வேறு பெயர்கள் பின்னாளில் தண்டியலங்கார ஆசிரியர் கூறும் இந்த ஒட்டு அணியைத் தொல்காப்பியர் உள்ளுறை உவமம் என்றும் உவமப் போலி என்றும் குறிப்பிடுகிறார். வேறு சில அணி இலக்கண நூலாரும் பிறிது மொழிதல், நுவலா நுவற்சி, குறிப்பு நவிற்சி என்ற வேறு பெயர்களால் வழங்குகின்றனர்.

தொல்காப்பியர் குறிப்பிடும் உள்ளுறை உவமம் அல்லது உவமப் போலி என்பது அகப்பொருள் பாடல்களில் மட்டும் பயின்று வரும். தெய்வம் ஒழிந்த ஏனைய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு கூறப்படும். மேலே ஒட்டு அணிக்குச் சான்றாகத் தண்டியலங்கார ஆசிரியர் காட்டிய ”வெறிகொள் இனச்சுரும்பு” என்று தொடங்கும் பாடல், மருதத் திணைக்கு உரிய தாமரைமலர், காவிமலர் ஆகிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டிருப்பதைக் காணலாம். தொல்காப்பியர் குறிப்பிடும் உள்ளுறை உவமத்திற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணரும் இப்பாடலையே காட்டியுள்ளார்.

அகப்பொருளில் பயின்று வரும் ஒட்டு அணியை ‘உள்ளுறை உவமம்’ என்றும், புறப்பொருளில் பயின்று வரும் ஒட்டு அணியைப் ‘பிறிது மொழிதல் அணி’ என்றும் இலக்கண விளக்கம் என்ற நூலின் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் வேறுபடுத்திக் கூறுகின்றார்.

3.1.3 இலக்கியங்களில் பிறிது மொழிதல் அணி திருக்குறள், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி போன்ற தமிழ் இலக்கியங்களில் பிறிது மொழிதல் அணி மிகுதியாகப் பயில்கிறது. திருவள்ளுவர் திருக்குறளில் பல குறள்பாக்களில் பிறிது மொழிதல் அணியைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இத்திறத்தை ஒரு திருக்குறள் வழிநின்று காண்போம்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்

(குறள். 475)

(சாகாடு – வண்டி; பீலி – மயில் இறகு;

அச்சு – அச்சாணி; சால- மிகவும்.)

பாவின் பொருள்:

மென்மையான மயில் இறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப பண்டத்தை அளவோடு ஏற்றாமல் அளவுக்கு மீறி மிகுதியாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து போகும்.

அணிப்பொருத்தம்

திருவள்ளுவர் கூறக் கருதிய பொருள் இதுவன்று.

”ஓர் அரசன்     தன்     பகைவர்கள் தன்னைக் காட்டிலும் வலிமையில் குறைந்தவர்கள்    என்று கருதி, அவர்கள் மீது ஆராயாமல் போர் தொடுத்தால் அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கூடி அவனை எதிர்த்துப் போரிடும் பொழுது அந்த அரசன் தன் வலிமை கெட்டு அழிந்து போவான்.”

இதுவே வள்ளுவர் கூறக் கருதிய பொருள். ஆனால் இதனை வெளிப்படையாகக் கூறாமல் மறைத்து இதைப் புலப்படுத்துவதற்காக இதனோடு ஒத்த வேறு ஒரு பொருளைக் கூறினமையால் இக் குறள்பா பிறிது மொழிதல் அணியாயிற்று.

3.2 அதிசய அணி

பாடல் பொருளை உள்ளது உள்ளபடி அழகுபடுத்திக் கூறல் தன்மை அணி என்பதை முதல் பாடத்தில் பார்த்தோம். சில நேரங்களில் கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தைப் புலப்படுத்த வேண்டியும், படிப்போரை வியப்பில் ஆழ்த்த வேண்டியும் பாடல் பொருளை உயர்வுபடுத்திக் கூறுவர். அவ்வாறு கூறும் அணியே அதிசய அணி. இவ்வணியை ‘உயர்வு நவிற்சி அணி’ என்று கூறுவர்.

3.2.1 அதிசய அணி இலக்கணம் கவிஞர், தாம் கருதிய ஒரு பொருளினது அழகை உவந்து சொல்லும் போது,    உலகவரம்பைக் கடவாதபடி உயர்ந்தோர் வியக்கும்படி சொல்லுவது அதிசயம் என்னும் அணியாகும். அதிசய அணி மிகைப்படுத்திக் கூறுவதுதான். இங்கு ‘உலகவரம்பு கடவாமல்’ கூறுதல் என்பது, கவிஞர்கள் வழக்கமாக மிகைப்படுத்திக் கூறும் மரபுக்கு முரண்படாமல் கூறவேண்டும் எனப் பொருள்படும்.

மனப்படும் ஒருபொருள் வனப்பு உவந்து உரைப்புழி

உலகுவரம்பு இறவா நிலைமைத்து ஆகி

ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம்

(தண்டி, நூ. 54)

(உவந்து = மகிழ்ந்து; உரைப்புழி= சொல்லும்போது;

இறவா = கடவாத; சான்றோர் = உயர்ந்தோர்)

3.2.2 அதிசய அணி வகைகள் அதிசய அணி ஆறு வகைப்படும். அவை வருமாறு:

1) பொருள் அதிசயம் (ஒரு பொருளின் இயல்பை விளக்குமாறு

உயர்த்திக் கூறுவது.)

2) குண அதிசயம் (ஒரு குணத்தின் இயல்பை விளக்குமாறு

உயர்த்திக் கூறுவது)

3) தொழில் அதிசயம் (ஒரு தொழிலின் இயல்பை விளக்குமாறு

உயர்த்திக் கூறுவது.)

4) ஐய அதிசயம் (ஐயப்பட்டுக் கூறுவதன் மூலம்

ஒருபொருளைஉயர்த்திக் கூறுவது.)

5) துணிவு அதிசயம் (ஐயம் தெளிந்து கூறுவதன் மூலம்

ஒருபொருளை உயர்த்திக் கூறுவது)

6) திரிபு அதிசயம் (ஒரு பொருளை வேறுவேறு பொருளாக

மாற்றி (திரிபுற்று) வியக்குமாறு உயர்த்திக் கூறுவது.)

இவற்றுள் பொருள் அதிசயம், திரிபு அதிசயம் ஆகிய இரு வகைகளை இங்கு விளக்கமாகக் காண்போம்.

3.2.3 பொருள் அதிசயம் ஒரு பொருளின் இயல்பை அதிசயம் தோன்றக் கூறுவது ‘பொருள் அதிசயம்’ எனப்படும்.

எடுத்துக்காட்டு:

பண்டு புரம்எரித்த தீ மேல்படர்ந்து, இன்றும்

அண்ட முகடு நெருப்பு அறாது – ஒண்தளிர்க்கை

வல்லி தழுவக் குழைந்த வடமேரு

வில்லி நுதல்மேல் விழி

(புரம் – திரிபுரம், அரக்கர்களின் மூன்று கோட்டைகள்;

முகடு – உச்சி; வல்லி – மலைமகள்; உமையம்மை;

மேரு = மேருமலை; வில்லி = வில்லாக உடையவர்;

நுதல் – நெற்றி.)

பாடலின் பொருள்

ஒளிமிக்க தளிர் போன்ற கைகளை உடைய மலைமகள் தழுவியதால் குழைந்த திருமேனியையும், வட மேருமலையாகிய வில்லினையும், நெற்றியின் மேல் கண்ணினையும் உடைய சிவபெருமான் முன்னொரு காலத்தில் திரிபுரத்தை நகைத்து எரித்த தீயானது மென்மேலும் படர்ந்து ஓடுதலால், இன்றும் அண்டத்து உச்சியில் நெருப்பு நீங்காமல் உள்ளது.

அணிப்பொருத்தம்

இப்பாடலில் கூறப்படும் பொருள் ‘திரிபுரத்தை எரித்த தீ’ ஆகும். சிவபெருமான் நகையிலிருந்து புறப்பட்ட தீயானது இன்றும் அண்டமுகட்டில் அணையாமல் உள்ளது என்று யாவரும் வியக்கும்படி கூறியதால் இப்பாடல் பொருள் அதிசயம் ஆயிற்று.

3.2.4 திரிபு அதிசயம் திரிபு என்பதற்கு ஒன்றை வேறொன்றாகக் கருதி மயங்கல் என்பது பொருள். ஒன்றை வேறொன்றாகக் கருதி மயங்கும்வழி அதிசயம் தோன்றக் கூறுதல் திரிபு அதிசயம் எனப்படும். இதனை மயக்க அணி என்றும் கூறுவர்.

எடுத்துக்காட்டு:

திங்கள் சொரிநிலவு சேர்வெள்ளி வள்ளத்துப்

பைங்கிள்ளை பால் என்று வாய்மடுக்கும்; -

அங்கு அயலே,

காந்தர் முயக்கு ஒழிந்தார், கைவறிதே நீட்டுவரால்

ஏந்திழையார் பூந்துகிலாம் என்று

(வள்ளம் – கிண்ணம்; காந்தர் – காதலர், தலைவர்;

முயக்கு – புணர்ச்சி; வறிதே = வீணாக; துகில் – ஆடை.)

பாடலின் பொருள்

நிலவு சொரிந்த வெள்ளிய வெண்ணிறக் கதிர்கள், நிலா முற்றத்தில் இருந்த வெள்ளிக் கிண்ணத்தில் பாய்ந்தன. பசுங்கிளிகள், அக்கதிர்களின் ஒளியைப் பால் என்று மயங்கி, அதனை வாய்வைத்துப் பருக முயன்றன. அதுமட்டுமன்றி, அங்கு ஒரு புறத்தில் தம் காதலரைப் புணர்ந்து நீங்கிய மகளிர், நிலவுடைய வெள்ளிய நிலாக் கதிர்களைத் தமது வெண் துகிலாகக் கருதி, அதனைப் பற்றுவதற்காகக் கைகளை வீணாக நீட்டுவார்கள்.

அணிப்பொருத்தம்

இப்பாடலில், வெள்ளிக் கிண்ணத்தில் பாய்ந்த நிலவின் ஒளியைப் பசுங்கிளிகள் பால் என்றும், மகளிர் தம்முடைய துகில் என்றும்     திரித்து மயங்கியதை     அதிசயித்துக் கூறியதனால் இது திரிபு அதிசயமாயிற்று.

3.3 தற்குறிப்பேற்ற அணி

கவிஞர் தம்முடைய கற்பனைத் திறத்தைக் காட்டுவதற்குப் பாடலில் கையாளும் அணிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க அணி தற்குறிப்பேற்ற அணி. பாடலில் கவிஞர் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைப் பாடுகின்றார். அந்நிகழ்ச்சி இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சி. இயல்பாக நடைபெறும் அந்நிகழ்ச்சிக்குக் கவிஞர் தம் கற்பனையாக ஒரு காரணம் கற்பிக்கின்றார். இதனால் தாம் கூறும் நிகழ்ச்சிக்குப் புதிய சுவை உணர்வைத் தருகிறார். பாடலைப் படிப்போர் நெஞ்சிலும் இத்தகைய உணர்வைக் கிளர்ந்தெழச் செய்கிறார். இதன் பொருட்டுக் கையாளப்படும் அணியே தற்குறிப்பேற்ற அணி.

3.3.1 தற்குறிப்பேற்ற அணியின் இலக்கணம் பெயரும் பொருள், பெயராத பொருள் என்னும் இருவகைப் பொருளிலும் இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஒழித்து, கவிஞர் தாம் கருதிய வேறு ஒரு காரணத்தை அவற்றின் மீது ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும்.

பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்

இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று

தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்

(தண்டி, நூ. 56)

(பெயர்பொருள் = அசையும் பொருள்;

அல்பொருள் = அசையாத பொருள்)

எனவே தற்குறிப்பேற்ற அணி ‘பெயர்பொருள் தற்குறிப்பேற்ற அணி, பெயராத பொருள் தற்குறிப்பேற்ற அணி’ என இரு வகைப்படும்.

3.3.2 பெயர்பொருள் தற்குறிப்பேற்ற அணி எடுத்துக்காட்டு:

மண்படுதோள் கிள்ளி மதயானை, மாற்றரசர்

வெண்குடையைத் தேய்த்த வெகுளியால், – விண்படர்ந்து

பாயும்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்

தேயும் தெளிவிசும்பில் நின்று

(கிள்ளி – சோழன்; மாற்றரசர் – பகை அரசர்;

வெகுளி – கோபம்; விசும்பு – விண்,வான்.)

பனிமதியம் – குளிர்ச்சி பொருந்திய முழு நிலவு;

பாடலின் பொருள்:

நிலவுலகத்தைத் தாங்கிய தோள் வலிமையை உடைய சோழனுடைய மதயானையானது, பகை அரசர்களுடைய வெண்கொற்றக் குடையைச் சீறிச் சிதைத்தது கோபத்துடன், அக்குடையைப் போல உள்ள தன் மேலும் வானை நோக்கி வந்து பாயுமோ என்று அஞ்சி, குளிர்ச்சியை உடைய முழு நிலவானது தெளிந்த வானத்தில் நின்று தேய்கின்றது.

அணிப்பொருத்தம்

இப்பாடலில் கூறப்பட்ட பொருள் வானத்தில் உள்ள சந்திரன் ஆகும். இது பெயரும் பொருள் ஆகும். அதன் இயல்பு வளர்தலும் தேய்தலும் ஆகும். தேய்தல் நிலவில் இயல்பாக (இயற்கையாக) நிகழும் தன்மை. ஆனால் கவிஞர் அது இயல்பான நிகழ்வு என்பதை ஒழித்து, ‘சோழனுடைய மதயானை பகை அரசர்களுடைய வெண்கொற்றக் குடையைச் சீறிச் சிதைத்த சினத்தாலே, அக்குடையை ஒத்த தன் மேலும் வந்து பாயுமோ என்று அஞ்சியே தேய்கிறது’ என்று தாம் கருதிய வேறு ஒரு     காரணத்தை ஏற்றிக்     கூறியதால் இப்பாடல் பெயர்பொருள் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.

3.3.3 பெயராத பொருள் தற்குறிப்பேற்ற அணி எடுத்துக்காட்டு:

வேனில் வெயிற்கு உலர்ந்த மெய்வறுமை கண்டு

இரங்கி,

வானின் வளம்சுரந்த வண்புயற்கு, – தான்உடைய

தாதும் மேதக்க மதுவும் தடஞ்சினையால்

போதும் மீதுஏந்தும் பொழில்

(உலர்ந்த – வாடிய; மெய்வறுமை- மேனி வாட்டம்;

வண்புயல் – கார் மேகம், மழைமேகம்; தாது – மகரந்தம்;

மது -தேன்; தடஞ்சினை – பெரிய கிளை; போது – மலர்; பொழில் – சோலை.)

பாடலின் பொருள்:

முதுவேனில் காலத்தில் கதிரவன் வெயில் வெப்பம் தாளாமல் உலர்ந்து மேனி வாடியது சோலை. அதைக்கண்டு இரங்கி, வானிலிருந்து மழைவளத்தைப்     பொழிந்தது கார்மேகம். அச்செயலுக்குக் கைம்மாறாகச் சோலை, தன்னிடத்தில் உள்ள பெருமை     பொருந்திய மகரந்தம் நிறைந்த மலர்களையும், தேனையும் நிறைந்த தன் பெரிய கிளைகளாகிய கைகளால், மேகத்திற்குத் தருவதற்காக, மேல்நோக்கி ஏந்தி நிற்கிறது.

அணிப்பொருத்தம்

இப்பாடலில் கூறப்பட்ட பொருள் ‘பொழில்’ ஆகும். இது பெயராத பொருள் ஆகும். பொழில் தன்னிடத்தில் வளர்ந்து ஓங்கிய மரக் கிளைகளில் தாதும் பூவும் தேனும் கொண்டிருத்தல் இயல்பாக நிகழும் தன்மையாகும். ஆனால் கவிஞர் அத்தன்மையை ஒழித்து, ‘வேனில் காலத்தில் தனக்கு வெயிலின் வெப்பம் தீர்த்து உதவிய மழைமேகத்திற்குக் கைம்மாறாகக் கொடுப்பதற்காக அப்பொழில், தன் கிளைகளாகிய கைகளால் தாதையும், மலரையும், தேனையும் ஏந்தி நிற்கும்’ எனத் தாம் கருதிய வேறு ஒரு காரணத்தை ஏற்றிக் கூறுவதால் இப்பாடல் பெயராத பொருள் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.

3.3.4. இலக்கியங்களில் தற்குறிப்பேற்ற அணி தற்குறிப்பேற்ற அணி தமிழ் இலக்கியங்களில் மிகுதியாகப் பயில்கிறது. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், பெரிய புராணம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் இவ்வணியின் ஆட்சி அதிகம் இருப்பதைக் காணலாம். சில சான்றுகள் காண்போம்.

எடுத்துக்காட்டு – 1 சிலப்பதிகாரம்

கண்ணகி, கோவலன், கவுந்தியடிகள் மூவரும் ஒரு மரப்புணையில் (படகில்) ஏறி வையை ஆற்றைக் கடந்து மதுரை மாநகர் செல்கின்றனர். வையையில் வெள்ளம் நிறைந்து ஓடுகிறது. இரு மருங்கிலும் சோலைகளில் உள்ள மரங்கள் உதிர்த்த மலர்களைச் சுமந்து கொண்டு வையை செல்கிறது. இஃது இயற்கையாக நிகழும் நிகழ்ச்சி. ஆயின் இளங்கோவடிகள் கண்ணகிக்கு வரப் போகும் துன்பத்தை அவ் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி முன்பே அறிந்தவள் போல வருந்தி அழுத கண்ணீரே ஆறாக ஓடுகிறது என்றும் அதனைப் பிறர்க்குத் தெரியாமல் மறைக்க வேண்டி மலர் ஆடை போர்த்துக் கொண்டு செல்கிறாள் என்றும் கற்பனை நயம் தோன்ற வேறு ஒரு குறிப்பை ஏற்றிக் கூறுகிறார். இதனை,

வையை என்ற பொய்யாக் குலக்கொடி

தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்

புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்

கண் நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி

(புறஞ்சேரி இறுத்த காதை,170-173)

என்ற அடிகளால் அறியலாம்.

(தையல்=பெண், கண்ணகி; உறுவது = நேர இருப்பது;

கரந்தனள் = மறைத்தவளாக)

. எடுத்துக்காட்டு – 2 கம்பராமாயணம்

இராமன் வில் வளைத்துச் சீதையை மணக்க வேண்டி, விசுவாமித்திர முனிவருடனும், தம்பி இலக்குவனுடனும் மிதிலை மாநகரம் செல்கின்றான். அந்நகரத்து அருகில் செல்லும்போது, நகர் மதில் மேல் உள்ள கொடிகள் காற்றில் அசைந்தாடின. கொடிகள் காற்றில் அசைந்தாடுவது இயல்பாக நிகழும் நிகழ்ச்சி ஆகும். ஆனால் கம்பர், மதில் மேல் உள்ள கொடிகள் அசைந்தாடுவது, சீதையை விரைவில் வந்து மணம் புரியுமாறு இராமனைக் கை காட்டி அழைப்பது போல உள்ளது என்று தம் குறிப்பை (கருத்தை) ஏற்றிக் கூறுகிறார். இதனை,

……….. ………… செழுமணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக் கடிநகர் கமலச்

செங்கண்

ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது

அம்மா

(பால காண்டம், 563)

என்ற செய்யுள் வரிகளால் அறியலாம்.

(செழுமணி = அழகிய; கடிநகர் = காவல் மிகுந்த நகர்;

கமலம் = தாமரை; ஒல்லை = விரைவாக)

3.4 ஏது அணி

தண்டியலங்காரத்தில் பதின்மூன்றாவது அணியாகக் கூறப்படுவது ஏது அணி ஆகும். ஏது = காரணம். பாடலில் கூறப்படும் பொருள் நிகழ்வதற்கான காரணத்தைச் சிறப்பாக எடுத்துக் கூறுவதற்குக் கவிஞர்கள் கையாண்ட அணி ஏது அணி.

3.4.1 ஏது அணியின் இலக்கணம் ஏதேனும் ஒரு பொருளின் திறத்தைக் கூறும்போது இதனால் இது நிகழ்ந்தது என்று காரணத்தைச் சிறப்பாக எடுத்துச் சொல்வது ஏது என்னும் அணி ஆகும். ஏது அணி காரக ஏது, ஞாபக ஏது என்று இரு வகைப்படும்.

யாதன் திறத்தினும் இதனின் இது விளைந்தது என்று

ஏது விதந்து உரைப்பது ஏது; அதுதான்

காரகம், ஞாபகம் என இரு திறப்படும்

(தண்டி, 58)

(ஏது – காரணம்; காரகம் – செயலை இயற்றுவிப்பது;

ஞாபகம்- அறிவிப்பது, உணரச் செய்வது)

3.4.2 காரக ஏது கருத்தா, பொருள், கருமம், கருவி, ஏற்பது, நீக்கம் என்று சொல்லப்படும் இவை ஆறும் காரணமாகத் தோன்றுவது காரக ஏது ஆகும்.

(முதல்வன் – கருத்தா அல்லது வினைமுதல்;

பொருள்-செயப்படு பொருள்; கருமம் – செயல்;)

இவ்வகைகளுள் கருத்தா காரக ஏது, பொருள் காரக ஏது ஆகியவற்றைப் பற்றிச் சான்றுடன் விளக்கமாகக் காண்போம்.

3.4.3 கருத்தா காரக ஏது ஒரு கருத்தாவே தொழிலை இயற்றுவிப்பதாயும் (காரகமாகியும்), அதுவே பிற தொழில் நிகழ்ச்சிகள் தோன்றுவதற்குக் காரணமாயும் (ஏதுவாயும்) நிற்பின் அது கருத்தா காரக ஏது எனப்படும்.

எடுத்துக்காட்டு:

எல்லைநீர் வையகத்து எண்ணிறந்த எவ்வுயிர்க்கும்

சொல்லரிய பேரின்பம் தோற்றியதால்; – முல்லைசேர்

தாது அலைத்து, வண்கொன்றைத் தார் அலைத்து,

வண்டு ஆர்க்கப்

பூதலத்து வந்த புயல்

(எல்லைநீர் – கடல்; தோற்றியது – உண்டாக்கிற்று;

தாது – மகரந்தம்; தார் – மாலை பூ;

அலைத்து – அசைத்து; பூதலம் உலகம்; புயல் – மழை;)

பாடலின் பொருள்:

முல்லை மலர்களில் பொருந்திய மகரந்தத்தை அசைத்து, வளப்பம் மிகுந்த கொன்றைப் பூங்கொத்துகளையும் அசைத்து, வண்டுகள் ஆரவாரிக்குமாறு, இந்நிலவுலகத்து வந்த காற்றானது, கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தில் உள்ள எல்லா     உயிர்களுக்கும் சொல்லுதற்கு     அரிய பேரின்பத்தைத் தோற்றுவித்தது.

அணிப்பொருத்தம்

இப்பாடலில் கூறப்பட்ட கருத்தா ‘காற்று’ ஆகும். அந்தக் காற்றானது உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பேரின்பத்தைத் தோற்றுவித்தது என்பதால் காரகம், அது மகரந்தத் தாது அசைதல், கொன்றைப் பூங்கொத்து. அசைதல்    ஆகிய செயல்கள் நிகழ்வதற்கு ஏதுவாக அமைந்தது. ஆகவே இது கருத்தா காரக ஏது ஆயிற்று.

3.4.4 ஞாபக ஏது ஏது அணியின் இரண்டு வகைகளிலே மற்றொன்று ஞாபக ஏது ஆகும். காரக ஏதுவிற்குச சொல்லப்பட்ட காரணங்கள் அன்றிப் பிற காரணத்தினால், உய்த்துணரத் தோன்றுவது ஞாபக ஏதுவாம்.

ஞாபகம் என்பதற்கு அறிவிப்பது என்று பொருள். இதனால் இது விளைந்தது என்று அறிவிப்பது ஞாபக ஏதுவாம்.

காதலன்மேல் ஊடல் கரைஇறத்தல் காட்டுமால்

மாதர் நுதல்வியர்ப்ப, வாய்துடிப்ப, – மீது

மருங்கு வளை வில்முரிய, வாள் இடுக நீண்ட

கருங்குவளை சேந்த கருத்து

(காதலன் = தலைவன்; கரை இறத்தல் = அளவு கடத்தல்;

மாதர் = தலைவி; நுதல் = நெற்றி; மருங்கு = பக்கம்;

வளை வில் = வளைந்த வில் போன்ற புருவம்;

முரிய = வளைய; கருங்குவளை= கண்; சேந்த – சிவந்த;

கருத்து = குறிப்பு.)

பாடலின் பொருள்

தலைவியின் நெற்றி வியர்த்தது; வாய் துடித்தது; இரு பக்கமும் வளைந்த புருவங்களாகிய விற்கள் மேலும் மேலே சென்று வளைந்தன; வாள் படையும் தோற்கும்படியான நீண்ட கரிய நீலமலர் போன்ற கண்கள் சிவந்தன. இந்த மெய்ப்பாடுகள் யாவும் அவள் தன்னுடைய காதலன் மீது கொண்ட ஊடல் அளவு கடந்து செல்வதைத் தெரிவிக்கும்.

அணிப்பொருத்தம்

இப்பாடலில், நெற்றி    வியர்த்தல், வாய் துடித்தல், புருவங்கள்    மேலும் வளைதல், கண்கள் சிவத்தல் ஆகியவற்றுக்குத் தலைவி தன்னுடைய காதலன் மீது கொண்ட ஊடல் மிகுதியே காரணம் என அறிவிக்கப் படுவதால் இது ஞாபக ஏது ஆயிற்று.

3.5 நுட்ப அணி

கவிஞர் தாம் சொல்லக் கருதியதைக் கூற்றினால் (சொற்களால்), வெளிப்படையாகக் கூறுவதும் உண்டு. குறிப்பினால் (மறைமுகமாகக்) கூறுவதும் உண்டு. குறிப்பினால் உணர்த்தும் அணிகளுள் நுட்பஅணி ஒன்று. செயல்பாட்டாலும், செய்யும் தொழிலாலும் கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்தும் முறையில் அமைத்துப் பாடப்படுவது ஆகும்.

3.5.1 நுட்ப அணியின் இலக்கணம் பிறர்கருத்தைத் தெரிந்து கொண்டு அதற்கான பதிலை வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பினாலோ, செயலினாலோ அரிதாக நோக்கி உணரும் படி வெளிப்படுத்துவது நுட்பம் என்னும் அணியாம். அதாவது கருத்தை நுட்பமாக உணர்த்துவது ஆகும். இதனை

தெரிபுவேறு கிளவாது குறிப்பினும் தொழிலினும்

அரிது உணர் வினைத்திறன் நுட்பம் ஆகும்

(தண்டி, 64)

என்ற நூற்பாவால் அறியலாம்.

(தெரிபு = தெரிந்துகொண்டு;

வேறுகிளவாது = வெளிப்படையாகச் சொல்லாமல்)

நூற்பாவில் ‘குறிப்பினும் தொழிலினும்’ என்றமையால் நுட்ப அணி குறிப்பு நுட்பம், தொழில் நுட்பம் என இரு வகைப்படும் என்பது பெறப்படும்.

3.5.2 குறிப்பு நுட்பம் பிறருடைய கருத்தை அறிந்துகொண்டு, அதற்குத் தமது கருத்தை வெளிப்படையாகக் கூற முடியாத நிலையில் அதனை, அரிதாக நோக்கி உணர்ந்து கொள்ளும் வகையில் குறிப்பால் தெரிவிப்பது குறிப்பு நுட்பம் எனப்படும். குறிப்பு என்பது, மனத்தில் கருதியதைக் கண், முகம் போன்ற உடல் உறுப்புகளின் செயல்பாட்டால் தெரிவிப்பது ஆகும்.

எடுத்துக்காட்டு

காதலன் மெல் உயிர்க்குக் காவல் புரிந்ததால்,

பேதையர் ஆயம் பிரியாத – மாதர்

படர்இருள்கால் சீக்கும் பகலவனை நோக்கிக்

குடதிசையை நோக்கும் குறிப்பு

(பேதையர் = மகளிர்; ஆயம் = தோழியர் கூட்டம்;

மாதர் = தலைவி; சீக்கும் = போக்கும்;

குடதிசை = மேற்குத் திசை; குறிப்பு = உள்ளக் கருத்து.)

பாடலின் பொருள்

தோழியர் கூட்டத்தின் நடுவே இருக்கும் தலைவி, உலகத்தில் படர்ந்த இருளை அடியோடு போக்கும் கதிரவனைப் பார்த்துவிட்டுப் பின்பு மேற்குத் திசையைப் பார்க்கின்றாள். இந்தக் குறிப்பு, தலைவனுடைய மென்மையான உயிருக்குப் பாதுகாவலைத் தந்தது.

அணிப்பொருத்தம்

தலைவன் பகல் பொழுதில் தலைவியைச் சந்திக்க வேண்டி வருகிறான். அப்பொழுது தலைவி தன்னை விட்டு எப்பொழுதும் பிரியாது இருக்கின்ற தோழியர் கூட்டத்தின் நடுவில் இருக்கிறாள். எனவே இரவில் வந்து தன்னைச் சந்திக்குமாறு அவனிடம் கூற விரும்பினாள். ஆனால் தோழியர்கள் தன்னைப் புடை சூழ்ந்திருப்பதால் அதனை அவனிடம் சொற்களால் கூற முடியவில்லை. எனவே குறிப்பாக அதனை உணர்த்த விரும்புகிறாள். கதிரவனைப் பார்த்துவிட்டு உடனே மேற்குத் திசையை நோக்கித் திரும்பிப் பார்க்கின்றாள். இக்குறிப்பினால் கதிரவன் மறைந்த பின்பு இரவில் வந்து தன்னைச் சந்திக்குமாறு தலைவனுக்கு உணர்த்துகிறாள். தலைவனும் அக்குறிப்பின் உள்பொருளை அறிந்து கொள்கிறான். இவ்வாறு தலைவி தனது கருத்தைத் தலைவனுக்குக் குறிப்பால் நுட்பமாக உணர்த்தியமையால் இப்பாடல் குறிப்பு நுட்பமாயிற்று.

3.5.3 தொழில் நுட்பம் தன்னுடைய கருத்தை வெளிப்படையாகக் கூற முடியாத நிலையில் அதனைத் தான் செய்து கொண்டிருக்கும் செயலின் மூலம் குறிப்பாக உணர்த்தல் தொழில் நுட்பம் எனப்படும்.

எடுத்துக்காட்டு

பாடல் பயிலும் பணிமொழி தன்பணைத்தோள்

கூடல் அவாவால் குறிப்பு உணர்த்தும் – ஆடவற்கு மென்தீம் தொடையாழின் மெல்லவே தைவந்தாள்

இன்தீம் குறிஞ்சி இசை.

(பணிமொழி – பணிவான சொற்கள், குளிர்ந்த சொற்கள்;

பணை – பருத்த; கூடல் – புணர்ச்சி; அவா – விருப்பம்;

தொடை – நரம்பு; தீம் – இனிய;

தைவந்தாள் – நரம்பை வருடிப் பாடினாள்.)

பாடலின் பொருள்

பாடும் தொழிலைப் பயின்று கொண்டிருக்கும் தலைவி, தன்னுடைய பருத்த தோள்களினால் தலைவனைத் தழுவ வேண்டும் என்னும் விருப்பத்தாலே, அவனுக்குத் தன்னுடைய உள்ளக் கருத்தைக் குறிப்பாக உணர்த்த வேண்டி, தான் இசைத்துக் கொண்டிருந்த மெல்லிய இனிய நரம்பை உடைய யாழில் இனிய குறிஞ்சிப் பண்ணை மீட்டிப் பாடினாள்.

அணிப்பொருத்தம்

யாழ் மீட்டிப் பாடிக் கொண்டிருக்கிறாள் தலைவி, அந்நேரத்தில் தலைவன் வருகின்றான். தலைவி தலைவனிடம் தனக்குள்ள புணர்தல் விருப்பத்தையும் அதன்பொருட்டு யாமத்தில் (நள்ளிரவில்) அவன் வரவேண்டும் என்பதையம் ஒருசேரத் தெரிவிக்க எண்ணுகிறாள். ஆனால் அதனைப் பிறர் முன்பாக அவனிடம் நேரிடையாகத் தெரிவிக்க அவளால் முடியவில்லை. எனவே அவள் அதனைக் குறிப்பாக அவனுக்கு     உணர்த்த வேண்டி, யாழில் குறிஞ்சிப் பண்ணை மீட்டிப்    பாடத் தொடங்கினாள். குறிஞ்சிக்கு    உரிய    சிறுபொழுது     யாமம் (நள்ளிரவு). இப்பாடலில் தலைவி, குறிஞ்சிப் பண்ணைப் பாடுதலாகிய தொழிலால் அக்குறிஞ்சிக்கு உரிய இடை யாமத்தில் தலைவன் தன்னை வந்து தழுவ வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை நுட்பமாகத் தெரிவிக்கிறாள். எனவே இப்பாடல் தொழில் நுட்பமாயிற்று.

3.6 தொகுப்புரை

இதுகாறும் இப்பாடத்தில் ஒட்டு அணி, அதிசய அணி, தற்குறிப்பேற்ற அணி, ஏது அணி, நுட்ப அணி ஆகிய ஐந்து அணிகளைப் பற்றி விளக்கமாகப் பார்த்தோம். அவ்வணிகளின் இலக்கணம், வகைகள், வகைகளின் இலக்கணம், அவற்றுக்குரிய எடுத்துக்காட்டுப் பாடல்கள், அவற்றின் பொருள், அப்பாடல்களில் அவ்வணிகள் அமைந்திருக்கும் தன்மை ஆகியவற்றைத் தெளிவாக அறிந்தோம். பிறிது மொழிதல் அணியும், தற்குறிப்பேற்ற     அணியும் திருக்குறள்,     சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற     இலக்கியங்களில் சிறப்பாக அமைந்திருப்பதனைச் சில சான்றுகள் கொண்டு பார்த்தோம்.

பாடம் - 4

பொருளணியியல் – IV

4.0 பாட முன்னுரை

தண்டியலங்காரம் பொருளணியியலில் விளக்கிக் கூறப்படும் அணிகள் முப்பத்தைந்து. இவற்றில் பதினைந்து முதல் இருபத்தொன்றாவது வரை உள்ள அணிகள் இலேச அணி, நிரல்நிறை அணி, ஆர்வமொழி அணி, சுவை அணி, தன்மேம்பாட்டு உரை அணி, பரியாய அணி, சமாகித அணி ஆகிய ஏழுமாம். இவ்வணிகளின் இலக்கணங்களை இப்பாடத்தில் காணலாம். அவற்றின் வகைகளில் சிலவற்றையும் காணலாம். ஏழு அணிகளையும் அவற்றுக்கான எடுத்துக்காட்டுப் பாடல்களின் துணைகொண்டு இவ்வணிகளில் சில தமிழ் இலக்கியங்களில் பயின்று வருவதனைத் தக்க சான்றுகளுடன் காணலாம்.

4.1 இலேச அணி

ஒரு கருத்தை அல்லது உணர்வைக் குறிப்பாகக் காட்டுதல் அல்லது வெளிப்படுத்தல் பல அணிகளில் காணப்படுவது. ஒருவகையில் இலேச அணியும் குறிப்புணர்த்தலைச் செய்வது; ஆயினும் குறிப்புணர்த்தும் பிற அணிகளிலிருந்து வேறுபடுவது. மனத்தில் தோன்றும் ஓர் உணர்வைச் சொல்லாமல் மறைக்கிறோம். ஆனால் உடலில் (கண், முகம்) தோன்றும் மெய்ப்பாடுகள் நாம் மறைத்த உணர்வை வெளிப்படுத்திக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அந்நிலையில் உள்ளக் கருத்தை மறைப்பதற்காக, அம்மெய்ப்பாடுகளுக்கு வேறு காரணம் கற்பித்துக் கூறுகின்றோம். இவ்வாறு கூறுவதே இலேச அணி. (இவ்வாறு மறைக்கமுயன்றாலும் மனக்குறிப்பு தெரிந்துவிடுகிறது என்பதுதான் அணியின் தன்மை)

4.1.1 இலேச அணியின் இலக்கணம் மனத்தில் கருதியதை வெளிப்படுத்திக் காட்டும் சத்துவமாகிய குணங்களை (மெய்ப்பாடுகளை) வேறு ஒன்றால் நிகழ்ந்தன என மறைத்துச் சொல்லுவது இலேசம் என்னும் அணி ஆகும்.

குறிப்பு வெளிப்படுக்கும் சத்துவம் பிறிதின்

மறைத்து உரையாடல் இலேசம் ஆகும்

(தண்டி, 65)

சத்துவம் = மனம் கருதியதைப் புறத்தே வெளிப்படுத்திக் காட்டும் குணங்கள் : அவை சொல் தளர்வு, மெய்வியர்ப்பு, கண்ணீர் அரும்பல், மெய்விதிர்ப்பு (உடம்பு நடுக்கம்), மெய் வெதும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலியன.

எடுத்துக்காட்டு:

கல் உயர்தோள் கிள்ளி பரிதொழுது, கண்பனிசோர்

மெல்லியலார் தோழியர்முன் வேறு ஒன்று -

சொல்லுவரால்,

பொங்கும் படைபரப்ப, மீது எழுந்த பூந்துகள் சேர்ந்து,

எம்கண் கலுழ்ந்தனவால் என்று

(கல் – மலை; கிள்ளி – சோழன்; பரி – குதிரை;

ஆல் – அசை; துகள் – புழுதி, கலுழ்ந்தன = கலங்கின)

பாடலின் பொருள்:

மலை போன்ற உயர்ந்த தோள்களை உடைய சோழன் ஏறி வந்த குதிரையைத் தொழுது, (அதாவது அவன் மீது காதல் கொண்டு) அக்காதலால் கண்களில் நீர் தளும்ப நின்ற மெல்லியல் மகளிர் தம்முடைய தோழியரிடம், அவ்வுண்மையை மறைத்தனர்; ‘சினத்தை உடைய படைகள் பரந்து வர, விண்ணில் எழுந்த தூசியானது உள்ளே புகுந்தமையால், எம்முடைய கண்கள் நீர் சொரிந்தன’ என்று நிகழ்ந்ததை மறைத்து வேறு ஒன்றைச் சொல்கின்றனர்.

அணிப் பொருத்தம்

இப்பாடலில், குதிரையின் மேல் ஏறிச் சோழன் உலா வருகிறான். அவன் பின்னால் அவனுடைய பெரும்படை அணி வகுத்து வருகிறது. அப்போது சோழனைக் கண்ட நங்கையர் அவன் மீது மிக்க காதல் கொள்கின்றனர். அந்தக் காதல் முதிர்ச்சியால் அவர்கள் கண்களில் நீர்த்துளிகள் துளிர்க்கின்றன. அதைத் தோழியர் பார்த்துவிட்டால் என்ன செய்வது? என்று நாணத்தால், அவர்களிடம், ‘இந்தப் படைகள் பரந்து வருதலால் எழுந்த புழுதி கண்ணினுள் புகுந்துவிட்டது; அதனால் கண்கள் நீர் சொரிகின்றன’ என்று கூறுகின்றனர். சோழன் மேல் கொண்ட காதலைப் புறத்தே ‘கண்ணீர் அரும்பல்’ என்ற சத்துவக் குணம் காட்டிவிடுகிறது, அதை நங்கையர் மறைத்து, அது வேறு ஒன்றால் அதாவது புழுதி படிந்தமையால் நிகழ்ந்தது என்று கூறியமையால் இப்பாடல் இலேச அணி ஆயிற்று.

4.1.2 இலேச அணியின்பால் படும் அணிகள் புகழ்வது போலப் பழித்தல், பழிப்பது போலப் புகழ்தல் என்னும் இரண்டு அணிகளும் இலேச அணியின்பால் படுவன ஆகும்.

புகழ்வது போலப் பழித்தல்

ஒருபொருளைப் புகழ்வது போலப் பழித்துக் கூறுதல் உண்மைக் கருத்தை மறைத்து வேறு விதமாகச் சொல்வதால் இது இலேசத்துள் அடங்குகிறது.

எடுத்துக்காட்டு:

மேய கலவி விளைபொழுது, நம் மெல்லென்

சாயல் தளராமல் தாங்குமால் – சேயிழாய்!

போர்வேட்ட மேன்மைப் புகழாளன், யாம் விரும்பும்

தார்வேட்ட தோள்விடலை தான்

(மேய – பொருந்திய; கலவி – புணர்ச்சி; சாயல் – மென்மை;

தளராமல் – குன்றாமல்; வேட்ட – விரும்பிய;

தார் – மாலை; விடலை – தலைவன்.)

இப்பாடலின் பொருள்

‘தோழி! கேட்பாயாக! எப்பொழுதும் போர்த் தொழிலை விரும்பிய மேம்பட்ட புகழினை உடையவனும், யாம் விரும்பிக் காதலித்து மாலையிட்ட தோள்களை உடையவனும் ஆகிய தலைவன், எம்மொடு பொருந்திப் புணர்ச்சியினை நிகழ்த்தும் பொழுது, நம்முடைய மென்மைத் தன்மை குன்றாதவாறு நடந்து கொள்கிறான்’ என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

அணிப்பொருத்தம்

இப்பாடலில் தலைவி, புணர்ச்சியின்போது தன்னுடைய மென்மைத் தன்மை கெடாதவாறு தலைவன் நடந்து கொள்கிறான் என்று கூறுவதுர். புகழ்வது போலத் தோன்றுகிறது. ஆனால் புணர்ச்சிக் காலத்தில் உணர்ச்சி மேலிட்டு அறிவு அழியாமல் இருக்கிறான்; போரில் உள்ள அளவு விருப்பம் காதலில் அவனுக்கு இல்லை எனத் தலைவனைத் தலைவி மறைமுகமாகப் பழிக்கிறாள். ஆகவே இது புகழ்வது போலப் பழித்தல் ஆயிற்று.

பழிப்பது போலப் புகழ்தல்

ஒரு பொருளைப் பழிப்பது போலப் புகழ்ந்து கூறுதல். இதுவும்    உள்ளக்    கருத்தை மறைத்து வேறுவிதமாகச் சொல்வதால் இலேசத்துள் அடங்குகிறது.

எடுத்துக்காட்டு:

ஆடல் மயில் இயலி! அன்பன் அணிஆகம்

கூடுங்கால் மெல்லென் குறிப்புஅறியான் – ஊடல்

இளிவந்த செய்கை இரவாளன், யார்க்கும்

விளிவந்த வேட்கை இலன்

(இயல் = சாயல்; அன்பன் = தலைவன்;

அணி ஆகம் = அழகிய மார்பு; இளிவந்த = தகாத செயல்கள்;

விளிவந்த = வெறுக்கத்தக்க; வேட்கை = விருப்பம்.)

இப்பாடலின் பொருள்

‘ஆடும் மயில் போன்ற சாயலினை உடைய தோழியே!

தலைவன் என்னுடைய அழகிய மார்பகத்தைக் கூடும் போது

மென்மையான என் நலத்தைப் பாராட்டி நுகர்தலை அறியான் நான் ஊடல் கொண்டபோது, தன் தகுதிக்குப் பொருந்தாதபடி பணிந்து இரக்கும் இரவாளன்; யார்க்கும் வெறுக்கத்தக்க; ஆசை உடையவன் அல்லன். ஆகவே இகழ்தற்கு உரியவன்; என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

அணிப் பொருத்தம்

இப்பாடலில் தலைவி, புணர்ச்சியின்போது தலைவன் தலைவியினுடைய மென்மைத் தன்மை கெடுமாறு நடந்து கொள்கிறான் என்றும் தலைவியின் ஊடலைத் தீர்ப்பதற்காகத் தன் தகுதியிலிருந்து தாழ்ந்து கெஞ்சுகிறான் என்றும், விருப்பம் அற்றவன் என்றும் கூறுவது பழிப்பது போலத் தோன்றுகிறது. ஆனால் புணர்ச்சிக் காலத்தில் அவன் காமவசப்பட்டு அறிவழிந்தவனாக இருக்கிறான்; அதுவே தனக்கு இன்பமாக இருக்கிறது எனத் தலைவி மறைமுகமாகப் புகழ்கிறாள். ஆகவே இது பழிப்பது போலப் புகழ்தல் ஆகும்.

இவ்விரு அணிகளையும் ஒரே அணியாகக் கொண்டு அதற்கு ‘வஞ்சப் புகழ்ச்சி அணி’ என்று பெயரிட்டுக் கூறுவதும் உண்டு.

4.1.3 வஞ்சப் புகழ்ச்சி அணி புகழ்வது போலப் பழித்தும், பழிப்பது போலப் புகழ்ந்தும் கூறுவது வஞ்சப் புகழ்ச்சி அணி எனப்படும். புறநானூற்றில் ஒளவையார் பாடிய பாடல் ஒன்றில் வஞ்சப் புகழ்ச்சி அணி சிறப்பாக அமைந்துள்ளது.

அதியமான் போர்க்களம் பல கண்டவன். வெற்றி பல குவித்தவன். இருப்பினும் போரால் ஏற்படும் உயிர் இழப்புக் கண்டு மனம் வருந்திப் போரில் விருப்பம் இல்லாதிருந்தான். இந்நிலையில் தொண்டைமான் என்பவன் அதியமான் மீது போர் தொடுத்தான். ஒளவையார் போரைத் தடுத்து நிறுத்த வேண்டி அதியமான் பொருட்டு, தொண்டைமானிடம் தூது சென்றார். ஒளவையாரை வரவேற்ற தொண்டைமான் தனது படைக் கொட்டிலை அழைத்துச் சென்று காட்டினான். அதைக் கண்ணுற்ற ஒளவையார் அதனைப் புகழ்வது போலவும், அதே நேரத்தில் அதியமான் படைக்கலங்கள் இருக்கும் கொட்டிலை இகழ்வது போலவும் பின்வருமாறு பாடுகிறார்.

‘தொண்டைமானே! இப்படைக் கலங்கள் மயில் பீலி அணிந்து, மாலை சூட்டி, திரண்ட வலிய காம்புகள் திருத்தி, நெய் பூசப்பட்டுக் காவலை உடைய உன் அரண்மனையிலே உள்ளன. ஆனால் எம் அரசனாகிய அதியமானின் வேல்கேளா (படைக் கருவிகேளா) பகைவர்களைக் குத்தியமையால் நுனி முறிந்து கொல்லனுடைய உலைக்களத்தில் அன்றோ கிடக்கின்றன.

இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,

கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து,

கடியுடை வியன்நகர் அவ்வே; அவ்வே,

பகைவர்க் குத்தி, கோடுநுதி சிதைந்து,

கொல்துறைக் குற்றில மாதோ …. ….

அண்ணல் எம்கோமான் வைந்நுதி வேலே

(புறநானூறு, 95)

(இவ்வே = இவை; கண்திரள் = திரண்ட;

நோன் காழ் = வலிமையான காம்பு; கடி = காவல்;

வியன்நகர் = பெரிய அரண்மனை; அவ்வே = அவை;

கோடு = வேலின் கழுத்துப் பகுதி; நுதி = நுனி;

கொல்துறை = கொல்லனுடைய உலைக்களம்)

இப்பாடலில், ஒளவையார் தொண்டைமானுடைய படைக்கலங்களைப்     புகழ்வதுபோல, அவன் போர்ச்செயல் செய்யாதவன் என மறைமுகமாக இகழ்கிறார். அதே நேரத்தில் அதியமானது படைக் கருவிகள் எல்லாம் கோடும் நுனியும் முறிந்து கொல்லனது உலைக்களத்திலே உள்ளன என்பதன் வாயிலாக, போர்கள் பலவற்றைச் செய்து வெற்றி கண்ட அவனுடைய வீரத்தை மறைமுகமாகப் புகழ்கின்றார். இவ்வாறு தொண்டைமானைப் புகழ்வது போலப் பழித்தும், அதியமானின் பழிப்பது போலப் புகழ்ந்தும் பாடியுள்ளதால் இப்பாடல் வஞ்சப் புகழ்ச்சி அணி ஆயிற்று.

4.2 நிரல் நிறை அணி

தண்டியலங்காரம் பொருளணியியலில் சொல் பற்றிய அணிகள் சிலவும் இடம் பெற்றுள்ளன என்பதைச் சென்ற பாடங்களில் பார்த்தோம். தீவக அணி, பின்வருநிலை அணி ஆகியவற்றின் இலக்கணத்தை இங்கு நினைவுபடுத்திப் பாருங்கள். சொல் பற்றிய அணிகளில் நிரல் நிறை அணியும் ஒன்று.

4.2.1 நிரல்நிறை அணியின் இலக்கணம் நிரல் = வரிசை; நிறை = நிறுத்துதல்.

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும். அதாவது, சில சொற்களை ஒரு வரிசையில் நிறுத்தி, அவற்றோடு பொருள் தொடர்புடைய வேறுசொற்களை அடுத்த வரிசையில் நிறுத்திப் பொருத்தமாக இணைத்துப் பொருள் காண்பது.

நிரல் நிறுத்து இயற்றுதல் நிரல்நிறை அணியே

(தண்டி, 67)

அணியின் வகைகள்

நிரல்நிறை அணி இரண்டு வகைப்படும். அவை நேர் நிரல்நிறை அணி, எதிர் நிரல்நிறை அணி என்பன ஆகும்.

4.2.2 நேர் நிரல்நிறை அணி சொல்லையும் அச்சொல் கொண்டு முடியும் பொருளையும் முறைமாறாமல் வரிசையாக நிறுத்துதல் நேர் நிரல்நிறை அணி எனப்படும்.

எடுத்துக்காட்டு:

காரிகை மென்மொழியால், நோக்கால், கதிர்முலையால்,

வார்புருவத்தால், இடையால், வாய்த்தளிரால் -

நேர்தொலைந்த

கொல்லி, வடிநெடுவேல், கோங்கு அரும்பு, வில்கரும்பு,

வல்லி, கவிர்மென் மலர்

(காரிகை = பெண்; நோக்கு = கண்; கதிர் = ஒளி;

வார் = நீண்ட; நேர் தொலைந்த = அழகுகெட்டன;

கொல்லி = கொல்லிப்பண்; வல்லி = பூங்கொடி;

கவிர் = முள்முருங்கை)

பாடலின் பொருள்

மகளிருடைய மென்மையான சொல்லாலும், கண்ணாலும், ஒளி வீசும் முலையாலும், நீண்ட புருவத்தாலும், இடையாலும், வாயாகிய தளிராலும் முறையே, கொல்லி என்னும் பண்ணும், கூர்மை பொருந்திய நீண்ட வேலும், கோங்கினது அரும்பும், மன்மதனது கரும்பு வில்லும், பூங்கொடியும், மென்மையான முருக்க மலரும் அழகு இழந்தன.

அணிப்பொருத்தம்

இப்பாடலில், முதல் இரண்டு அடிகளில் பெண்களின் மென்மொழி, கண், முலை, புருவம், இடை, வாய் ஆகிய சொற்களை வரிசையாக நிறுத்தி, பின் இரண்டு அடிகளில் அவற்றால் அழகு இழந்து போன கொல்லிப்பண், வேல், கோங்கு அரும்பு, கரும்புவில், பூங்கொடி, முருக்க மலர் ஆகிய தொடர்புடைய பொருள்களை அதேவரிசையில் வைத்திருப்பதைக் காணலாம்,

மென்மொழியால் கொல்லிப் பண்ணும்

கண்ணால் வேலும்

முலையால் கோங்கு அரும்பும்

புருவத்தால் கரும்பு வில்லும்

இடையால் பூங்கொடியும்

வாய்த்தளிரால் முருக்க மலரும்

என ஒன்றுக்கொன்று நேராக நிறுத்திப் பொருள் கொள்ளுமாறு அமைத்தமையால் இது நேர் நிரல்நிறை அணி ஆயிற்று.

4.2.3 எதிர்நிரல்நிறைஅணி சொல்லையும் அது கொண்டு முடியும் பொருளையும் முறையாக இல்லாமல் எதிராக நிறுத்தல், எதிர் நிரல்நிறை அணி ஆகும்.

எடுத்துக்காட்டு:

ஆடவர்கள் எவ்வாறு அகன்று ஒழிவார் வெஃகாவும்

பாடகமும் ஊரகமும் பஞ்சரமா – நீடியமால்

நின்றான், இருந்தான், கிடந்தான், இதுஅன்றோ

மன்று ஆர் மதில்கச்சி மாண்பு

(பஞ்சரம் = இருப்பிடம்; மன்று = மன்றம், அவை;

ஆர் = நிறைவு; மதில் = கோட்டை;

கச்சி – காஞ்சி மாநகர்.)

பாடலின் பொருள்

நெடிய திருக்கோலத்தை உடைய திருமால், வெஃகா, பாடகம், ஊரகம் ஆகிய இடங்களைத் தனக்கு இடமாகக் கொண்டு, அவற்றில் முறையே கிடந்தான், இருந்தான், நின்றான்; மன்றங்கள் பல நிறைந்ததும், மதில் சூழ்ந்ததும் ஆகிய காஞ்சி மாநகரின் பெருமை இது அன்றோ? இத்தகைய சிறப்புமிக்க காஞ்சி மாநகரை மானிடர்கள் எவ்வாறு விட்டு நீங்குவார்கள்?

அணிப்பொருத்தம்

இப்பாடலில், முதல் இரண்டு அடிகளில் காஞ்சி மாநகரில் உள்ள வெஃகா, பாடகம், ஊரகம் ஆகிய திருமாலின் இருப்பிடங்கள் கூறப்படுகின்றன. ஆனால் பின் இரண்டு அடிகளில் அவ்விடங்களில் உள்ள திருமாலின் திருக்கோலங்கள் வரிசையாக இல்லாமல்,

வெஃகாவில் நின்றான்

பாடகத்தில் இருந்தான்

ஊரகத்தில் கிடந்தான்

என்று (எதிர் வரிசையாக) முறை மாறிக் கிடக்கின்றன. எனவே இவற்றை,

வெஃகாவில் கிடந்தான் (படுத்திருக்கும் திருக்கோலம்)

பாடகத்தில் இருந்தான்

(அமர்ந்திருக்கும் திருக்கோலம்)

ஊரகத்தில் நின்றான்

(நின்று கொண்டிருக்கும் திருக்கோலம்)

என்று மாற்றிப் பொருள் கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இது எதிர் நிரல்நிறை அணி ஆயிற்று.

நிரல்நிறை அணியை நன்னூலும் யாப்பருங்கலக் காரிகையும் பொருள்கோள்களுள் ஒன்றாகக் கொண்டு அதை ‘நிரல்நிறைப் பொருள்கோள்’ என்று குறிப்பிடுகின்றன.

4.3 ஆர்வமொழி அணி

இதுவும் ஒருவகையால் சொல் பற்றிய அணியே ஆகும். உள்ளத்தில் உள்ள ஆர்வத்தைச் சொற்கள் மூலம் வெளிப்படுத்திக் காட்டும் வகையில் அமைந்த அணி ஆகும்.

4.3.1 ஆர்வமொழி அணியின் இலக்கணம் ஆர்வம் = அன்பு, மகிழ்ச்சி. உள்ளத்திலே தோன்றிய ஆர்வத்தை வெளிப்படுத்தும் சொற்கள் அதிகம் தோன்றும்படி சொல்லுவது ஆர்வமொழி அணி எனப்படும்.

”ஆர்வ மொழி மிகுப்பது ஆர்வ மொழியே”

(தண்டி, 68)

எடுத்துக்காட்டு:

சொல்ல மொழிதளர்ந்து சோரும்; துணைமலர்த்தோள்

புல்ல இருதோள் புடைபெயரா; – மெல்ல

நினைவோம் எனில் நெஞ்சு இடம்போதாது; எம்பால்

வனைதாராய்! வந்ததற்கு மாறு

(புல்ல – தழுவ; புடைபெயரா = பக்கங்களில் நீளா;

வனைதாராய் = அழகிய மாலை அணிந்தவனே;

மாறு – கைம்மாறு.)

பாடலின் பொருள்:

அழகிய மாலையை அணிந்தவனே! உனக்கு முன்னே நின்று மறுமொழி கூறுவதற்கு முயன்றால் எங்களுடைய சொற்கள் தடுமாறிச் சோர்வுபடுகின்றன; உன்னுடைய இரண்டு தோள்களைத் தழுவ முயன்றால் எங்களுடைய இரண்டு தோள்களும் பக்கங்களில் நீண்டு வளர்ந்தவை அல்ல; மெல்ல உன்னுடைய புகழை நினைப்போமாயின் எங்களுடைய உள்ளத்தில் அதற்கு இடம் போதாது; நீ எம் இருப்பிடம் நோக்கி வந்த உன்னுடைய இப்பெருமைக்கு யாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்?

அணிப்பொருத்தம்

இப்பாடலில், தலைவி தலைவன்பால் கொண்டுள்ள அன்பு மிகுதியை ‘மொழிதளர்ந்து சோரும், தோள் புடைபெயரா, நெஞ்சு இடம்போதாது’ என மிகுதியான ஆர்வமொழிகள் கொண்டு வெளிப்படுத்துவதால் இது ஆர்வமொழி அணி ஆயிற்று.

4.4 சுவை அணி

சுவை = அச்சம், வியப்பு முதலிய மெய்ப்பாடுகள்.

கவிஞர் பாடலில் தாம் கூறும் கருத்தினை எண்வகைச் சுவை தோன்றப் பாடுவதால் அப்பாடலில் பொருள் அழகு பெற்றுத் திகழ்கின்றது. இதுவே சுவை அணி ஆகும்.

4.4.1 சுவை அணியின் இலக்கணம் உள்ளத்திலே நிகழும் உணர்வு வெளியிலே எட்டுவகைப்பட்ட மெய்ப்பாட்டினாலும் புலப்பட்டு விளங்கும். அவ்வாறு வெளிப்படுவதை எடுத்துரைப்பது சுவை என்னும் அணி ஆகும்.

உள்நிகழ் தன்மை புறத்துத் தோன்ற

எண்வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே

(தண்டி, 69)

. அணியின் வகைகள்

மேலே கூறிய எண்வகை மெய்ப்பாடுகள் வீரம், அச்சம், இழிவு, வியப்பு, காமம், அவலம், சினம், நகை என்பனவாம். எனவே சுவை அணி எட்டு வகைப்படும். இவற்றுள் சிலவற்றைச் சான்றுடன் விளக்கமாகக் காண்போம்.

4.4.2 அச்சச் சுவை அணி அச்சம் காரணமாகத் தோன்றும் சுவை அச்சச் சுவை ஆகும். அச்சம் தரும் தெய்வம், விலங்கு, கள்வர், இறை (அரசன்) என்னும் நான்கும் காரணமாக அச்சம் பிறக்கும் என்பர் தொல்காப்பியர்.

எடுத்துக்காட்டு:

கைநெரித்து, வெய்துயிர்ப்ப, கால்தளர்ந்து,மெய்பனிப்ப,

மை அரிக்கண் நீர்ததும்ப, வாய்புலர்ந்தாள் – தையல்

சினவேல் விடலையால் கை இழந்த செங்கண்

புனவேழம் மேல்வந்த போது

(வெய்துயிர்ப்ப = பெருமூச்சுவிட்டு; பனிப்ப = நடுங்க;

தையல் = தலைவி; விடலை = தலைவன்;

கை இழந்த = துதிக்கையை இழந்த;

புனவேழம் = காட்டு யானை.)

இப்பாடலின் பொருள்

சினம்    மிக்கவனும் வேலை ஏந்தியவனும் ஆகிய தலைவனால் துதிக்கை இழந்த சிவந்த கண்களை உடைய காட்டு யானை தன் எதிரே வந்த பொழுது, தலைவி, தன் கைகளை நெரித்துக் கொண்டு, பெருமூச்சு விட்டு, கால்கள் தளர்ந்து, உடல் நடுங்க, மை தீட்டிய செவ்வரி படர்ந்த கண்களில் நீர் ததும்ப, வாய் பசையற்று உலர்ந்து விட்டாள்.

அணிப்பொருத்தம்

இப்பாடலில் தலைவிக்கு, யானை என்னும் விலங்கு காரணமாக அச்சம் பிறந்தது. மனத்தில் தோன்றிய அச்சம் கைநெரித்தல், பெருமூச்சுவிடல், கால்தளர்தல், உடல்நடுங்கல், கண்ணீர் ததும்பல், வாய்புலர்தல் ஆகிய மெய்ப்பாடுகள் மூலம் வெளிப்பட்டது எனக் காட்டுவதால் இது அச்சச் சுவை அணி ஆயிற்று.

4.4.3 காமச் சுவை அணி காமம் காரணமாகத் தோன்றும் சுவை காமச் சுவை ஆகும். காமமாவது காதல் விருப்பம். தொல்காப்பியர் இதனை ‘உவகை’ என்று கூறுகிறார். இது செல்வம், புலன், புணர்ச்சி, விளையாட்டு என்னும் நான்கும் காரணமாகத் தோன்றும் என்றும் கூறுகிறார்.

எடுத்துக்காட்டு:

திங்கள் நுதல் வியர்க்கும்; வாய்துடிக்கும்;கண்சிவக்கும்;

அங்கைத் தளிர்நடுங்கும்; சொல்அசையும்;- கொங்கை

பொருகாலும் ஊடிப் புடைபெயரும் காலும்

இருகாலும் ஒக்கும் இவர்க்கு.

(திங்கள் = பிறை நிலவு; நுதல் = நெற்றி;

அங்கை = அழகிய கைகள்; அசையும் = தடுமாறும்;

பொருகாலும் = தழுவும் போதும்;

புடைபெயரும் காலும் = விலகும் போதும்)

பாடலின் பொருள்:

கொங்கைகள் என்மீது அழுந்துமாறு இவர் (தலைவி) என்னைத் தழுவும் காலத்திலும், என்பால் ஊடல் கொண்டு என் பக்கத்திலிருந்து நீங்கிச் செல்லும் காலத்திலும் இவர்க்கு, பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றி வியர்க்கும்; வாய் துடிக்கும்; கண்கள் சிவக்கும்; அழகிய கைகளாகிய தளிர்கள் நடுங்கும்; சொல் தடுமாறும். இம்மெய்ப்பாடுகள் தழுவும் காலத்திலும், பிரியும் காலத்திலும் இவர்க்கு ஒரு தன்மையன ஆகும்.

இப்பாடல் ஒரு தலைவன் தன் தலைவியின்பால் உள்ள காதல் மகிழ்ச்சி புலப்படக் கூறியதாகும்.

அணிப்பொருத்தம்

இப்பாடலில், நுதல் வியர்த்தல், வாய் துடித்தல், கண் சிவத்தல் கைநடுங்கல், சொல்தளர்தல் ஆகிய காமச் சுவைக்கு உரிய மெய்ப்பாடுகள் கூறப்பட்டுள்ளன. ஆகவே இது காமச் சுவை அணி ஆயிற்று.

4.5 தன்மேம்பாட்டு உரை அணி

ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து சொல்லுவது தன்மேம்பாட்டு உரை என்னும் அணியாகும். புகழ்தல் = தன் மேம்பாடு தோன்றச் சொல்லுதல்.

தான்தன் புகழ்வது தன்மேம் பாட்டு உரை

(தண்டி, 71)

எடுத்துக்காட்டு

எஞ்சினார் இல்லை எனக்கு எதிரா இன்னுயிர்கொண்டு

அஞ்சினார் அஞ்சாது போய் அகல்க – வெஞ்சமத்துப்

பேராதவர் ஆகத்து அன்றிப் பிறர்முதுகில்

சாரா என் கையில் சரம்

(வெஞ்சமம் – கொடிய போர்;

பேராதவர் – புறமுதுகு காட்டி ஓடாதவர்கள்;

ஆகம் – மார்பு; சரம் – அம்பு.)

இப்பாடலின் பொருள்

கொடிய போரில் எனக்கு எதிராக நின்று போர் செய்து, தமது இனிய உயிரைக் காப்பாற்றிக்கொண்டு பிழைத்து மிஞ்சியவர் ஒருவரும் இல்லை. ஆகவே அஞ்சியவர்கள் விலகிப் போவதற்குச் சிறிதும் அஞ்சாமல் விலகிச் செல்க. என் கையால் செலுத்தப்படும் அம்புகள் புறம் காட்டி ஓடாதவர்களின் மார்பில் பாயுமே அல்லாமல் புறம் காட்டி ஓடுபவர்களின் முதுகில் பாயமாட்டா.

அணிப்பொருத்தம்

இப்பாடலில், வீரன் ஒருவன் பகைவர் படைகளுக்கு முன் நின்று தன் ஆண்மைத் திறத்தைத் தானே புகழ்ந்து உரைக்கிறான், ஆகவே இது தன்மேம்பாட்டு உரை அணி ஆயிற்று. இவ்வாறு வீரன் ஒருவன் தன்னுடைய ஆண்மையைத் தானே புகழ்ந்து கூறுவது புறப்பொருள் இலக்கணத்தில் ‘நெடுமொழி கூறல்’ என்றும், ‘நெடுமொழி வஞ்சி’ என்று கூறப்படுகிறது.

4.6 பரியாய அணி

தான் கருதியதைக் கூறாது, அப்பொருள் தோன்றுமாறு வேறு ஒன்றைக் கூறுவது பரியாயம் என்னும் அணி ஆகும்.

கருதியது கிளவாது அப்பொருள் தோன்றப்

பிறிதுஒன்று உரைப்பது பரியா யம்மே

(தண்டி, 72)

(பரியாயம் – ஒன்றுக்குப் பதிலாக, சாமர்த்தியமாக வேறொன்றைச் சொல்லல்)

எடுத்துக்காட்டு

மின் நிகராம் மாதே! விரைச்சாந்து உடன்புணர்ந்து நின் நிகராம் மாதவிக்கண் நின்று அருள் நீ; -

தன் நிகராம்

செந்தீ வரமலரும் செங்காந்தள் போதுடனே

இந்தீ வரம்கொணர்வல் யான்

(மின் = மின்னல்; விரை = நறுமணம்;

சாந்து = சந்தனமரம்; மாதவி குருக்கத்திக் கொடி;

போது = மலர்; இந்தீவரம் = குவளை மலர்.)

இப்பாடலின் பொருள்

‘மின்னலை ஒத்த மாதே! நறுமணம் கமழும் சந்தன மரத்தில் படர்ந்து, உனக்கு நிகராகி நிற்கின்ற இக் குருக்கத்திக் கொடியின் கீழே நீ நிற்பாயாக. தனக்கு நிகரான சிவந்த தீயின் ஒளி தெரியும்படி மலர்ந்த சிவந்த காந்தள் மலருடனே, குவளை மலரையும் யான் சென்று பறித்து வருகிறேன்’ என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

அணிப்பொருத்தம்

தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காகக் குறிப்பிட்ட பகற்குறி இடத்தில் தலைவியைக் கொண்டுவந்து நிறுத்துகின்றாள் தோழி. அப்போது தான் அங்கே    நிற்பது அவர்கள் இன்பத்துக்குத் தடையாகும் என்று அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்லக் கருதுகிறாள். அதனை நேரடியாகக் கூறாமல், ‘காந்தள் மலரையும் குவளை மலரையும் பறித்து வரும் வரை நீ இங்கே குருக்கத்திக் கொடியின் கீழே இருப்பாயாக’ என்று சாமர்த்தியமாக வேறு ஒன்றைக் கூறியதால் இப்பாடல் பரியாய அணி ஆயிற்று.

பரியாய அணியின் இலக்கணத்தைப் பார்க்கும்போது அதுவும் ஒட்டு அணியும் ஒற்றுமை உடையன போலத் தோன்றும். தான் கருதிய கருத்தை மறைத்தலில் பரியாய அணிக்கும் ஒட்டு அணிக்கும் வேற்றுமை இல்லை. எனினும், ஒட்டு அணி தான் கருதிய கருத்தினைக் கூறாது அதனோடு உவமையாகக் கூடிய பிறிதொரு கருத்தைக் கூறுவது, பரியாய அணி தான் கருதிய கருத்தினைக் கூறாது அதற்கு வேறான பிறிதொரு கருத்தைக் கூறுவது.

4.7 சமாகித அணி

முன்பு ஒரு பயனை விரும்பி ஒரு செயல் செய்யப்படுகிறது; ஆனால் அப்பயன் கிட்டவில்லை. பின்னர் அச்செயலால் அல்லாமல், வேறொரு செயலால் அப்பயன் தானே கிட்டுவதாகக் கூறி முடிப்பது சமாகிதம் என்னும் அணி ஆகும்.

முந்துதான் முயல்வுறூஉம் தொழில்பயன் பிறிதுஒன்று தந்ததா முடிப்பது சமாகிதம் ஆகும்

(தண்டி, 73)

எடுத்துக்காட்டு

அருவியம் குன்றம் அரக்கன் பெயர்ப்ப,

வெருவிய வெற்பு அரையன் பாவை – பெருமான் அணி ஆகம் ஆரத் தழுவினாள், தான்முன்

தணியாத ஊடல் தணிந்து

(குன்றம் = கயிலை மலை; அரக்கன் = இராவணன்;

வெருவிய = அஞ்சிய; வெற்பு = மலை; அரையன் = அரசன்;

பாவை = பார்வதி; பெருமான் = சிவபெருமான்; ஆகம் – மார்பு.)

பாடலின் பொருள்

பார்வதி கங்கை காரணமாகச் சிவபெருமானிடம் ஊடல் கொண்டாள், சிவன் எவ்வளவோ முயன்றும் அவளுடைய ஊடல் தணியாதிருந்தது. அந்நேரத்தில் அருவி பாயும் கயிலை மலையை இராவணன் பெயர்த்து எடுத்தான், அதனால் ஏற்பட்ட நடுக்கத்தினால் அஞ்சிய பார்வதி தான் முன்பு தணியாத ஊடல் தணிந்து சிவபெருமானுடைய அழகிய மார்பினை ஆரத் தழுவிக் கொண்டாள்.

அணிப்பொருத்தம்

இப்பாடலில் சிவபெருமான் முன்னதாக முயன்ற செயல் பார்வதி தன்மீது கொண்ட    ஊடலைத் தணிவித்தல். அத்தொழிலினது பயன் பார்வதி ஊடல் தணிதல் ஆகும். ஆனால் இப்பயன் சிவபெருமான் முயன்ற தொழிலால் கிடைக்கவில்லை. அப்பயன் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்தலாகிய வேறு ஒரு காரணத்தால் கிடைத்ததாகக் கூறப்பட்டிருத்தலின் இது சமாகித அணி ஆயிற்று.

4.8 தொகுப்புரை

இதுகாறும் இப்பாடத்தில் இலேச அணி, நிரல்நிறை அணி, ஆர்வமொழி அணி, சுவை அணி, தன்மேம்பாட்டு உரை அணி, பரியாய அணி, சமாகித அணி ஆகிய ஏழு அணிகளின் இலக்கணங்களை விளக்கமாகப் பார்த்தோம். அவற்றுள் சிலவற்றின் சில வகைகளுக்கான இலக்கணங்களையும் அறிந்தோம். எடுத்துக்காட்டுப் பாடல்களில் இவ்வணிகள் அமைந்து கிடைப்பதைத் தெளிவாக அறிந்தோம். தண்டி அலங்காரத்தில் கூறப்படாத, ஆனால் பெருவழக்கில் சொல்லப்படும் வஞ்சப்புகழ்ச்சி அணி, இலேச அணியில் அடங்கும் என்பதைப் புரிந்து கொண்டோம். நிரல்நிறை அணியும், தன்மேம்பாட்டு உரை அணியும் சொல், பொருள் இலக்கணங்களில் வேறு     பெயர்களில் வழங்குவதையும் அறிந்தோம்.

பாடம் - 5

பொருளணியியல் – V

5.0 பாட முன்னுரை

தண்டியலங்காரம் பொருளணியியலில் விளக்கிக் கூறப்படும் அணிகள் முப்பத்தைந்து. இவற்றில் இருபத்திரண்டு முதல் இருபத்தேழாவது வரை கூறப்படும் அணிகள் உதாத்த அணி, அவநுதி அணி, சிலேடை அணி, விசேட அணி, ஒப்புமைக் கூட்ட அணி, விரோத அணி ஆகிய ஆறுமாம். இவ்வணிகளில் ஒவ்வொன்றைப் பற்றியும் தண்டியாசிரியர் கூறும்போது முதற்கண் அதன் இலக்கணத்தைக் கூறுகிறார். அவற்றின் வகைகளைக் கூறுகிறார். ஆறு அணிகளையும் அவற்றுக்கான எடுத்துக் காட்டுப் பாடல்களையும் இப்பாடத்தில் காணலாம். அப்பாடலில் அமைந்துள்ள அணிப் பொருத்தம் விரிவாக விளக்கிக் காட்டப்படுகிறது. இவ்வணிகளில் சில தமிழ் இலக்கியங்களில் பயின்று வருவதனைத் தக்க சான்றுகளுடன் காணலாம்.

5.1 உதாத்த அணி

பாடலில் பாடப்பெறும் பொருளை அடிப்படையாகக் கொண்டும் சில அணிகள் தண்டியலங்காரத்தில் கூறப்படுகின்றன. அவற்றுள் ஒன்று உதாத்த அணி ஆகும். உதாத்தம் என்பதற்கு ‘வேறு ஒன்றிற்கு இல்லாத தனிச் சிறப்பு’ என்று பொருள். இவ்வணிக்கு ‘வீறுகோள் அணி’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.

5.1.1 உதாத்த அணியின் இலக்கணம் வியக்கத்தக்க செல்வத்தினது சிறப்பையும், மேம்பட்ட உள்ளத்தினது உயர்ச்சியையும் அழகுபடுத்திக் கூறுவது உதாத்தம் என்னும் அணி ஆகும். இதனை,

வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும்

உயர்ச்சி புனைந்து உரைப்பது உதாத்தம் ஆகும்

(தண்டி, 74)

என்ற நூற்பாவால் அறியலாம்.

உதாத்த அணியின் வகைகள்

உதாத்த அணி செல்வ மிகுதி, உள்ள மிகுதி என இரு வகைப்படும்.

5.1.2 செல்வ மிகுதி வியக்கத்தக்க செல்வத்தின் சிறப்பை மிகுத்து அழகுபடுத்திச் சொல்லுதல் ‘செல்வ மிகுதி’ எனப்படும்.

”கன்றும் வயவேந்தர் செல்வம் பலகவர்ந்தும்,

என்றும் வறிஞர் இனம்கவர்ந்தும், – ஒன்றும்

அறிவு அரிதாய் நிற்கும் அளவினதால் அம்ம செறிகதிர்வேல் சென்னி திரு”

(கன்றும் – சினக்கின்ற; வய – வலிமைமிக்க; வறிஞர் – இரவலர்; இனம் – சுற்றம்; ஆல் – அசை; அம்ம – வியப்பு இடைச்சொல்; செறிகதிர் – நிறைந்த ஒளி; சென்னி – சோழ மன்னன்;

திரு – செல்வம். )

இப்பாடலின் பொருள்

சினத்துடன் தன்னை எதிர்த்து வருகின்ற வலிமைமிக்க வேந்தர்களுடைய செல்வங்கள் பலவற்றையும் நாள்தோறும் கவர்ந்து கொண்டு வருதலாலும், நாள்தோறும் இரவலர்கள் தங்களுடைய சுற்றத்துடன் சென்று வேண்டியவாறு எடுத்துக் கொள்வதாலும் நிறைந்த ஒளியை உடைய வேலை ஏந்திய சோழ மன்னனுடைய செல்வமானது சிறிதேனும் அளவு அறியப்படாததாய் நிற்கும்.

அணிப்பொருத்தம்

இப்பாடலில், சோழ மன்னன் கவர்ந்து வந்த செல்வம் பல என்றும், அதை வறியவர் கூட்டம் நாள்தோறும் வேண்டியவாறு வாரிச் சென்றாலும் அச்செல்வமானது சிறிது கூட அளவு அறியப்படாமல் இருக்கும் என்றும் கூறப்பட்டதால் இது ‘செல்வ மிகுதி’ கூறும் உதாத்த அணி ஆயிற்று.

தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இத்தகைய பொருள் கொண்ட அணி சிறப்பாகப் பாடப்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு சான்று காண்போம்.

பத்துப்பாட்டில் பட்டினப்பாலை என்னும் பாடலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். இப்பாடலில் அவர் ஓரிடத்தில் காவிரிப்பூம்பட்டினத்து மக்களின் செல்வ மிகுதியை ஓர் அழகான சிறு நிகழ்ச்சியால் பாடுகிறார். காவிரிப்பூம்பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற     மகளிர்     தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந்நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,

அகன்நகர் வியன்முற்றத்துச்

சுடர்நுதல் மடநோக்கின்

நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்

கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை

பொன்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்

முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும்

(பட்டினப்பாலை, 20-25)

என்ற அடிகளால் அறியலாம்.

(அகன்நகர் – அகன்ற நகர்; காவிரிப்பூம்பட்டினம்;

வியன் – பெரிய; நேர் இழை – செவ்வையான அணிகலன்கள்; உணங்கு – உலர்த்தும்; உணா – உணவு, நெல்;

கனங்குழை – கனமான காதணி; பொன் – அழகிய;

புரவி – குதிரை; இன்று – இல்லாமல்; விலக்கும் – தடுக்கும்.)

இதில் காவிரிப்பூம்பட்டினத்துச் செல்வப் பெருமை உயர்த்திக் கூறப்பட்டுள்ளதால் இது, ‘செல்வ மிகுதி’ கூறும் உதாத்த அணி ஆயிற்று.

5.1.3 உள்ள மிகுதி மேம்பட்ட உள்ளத்தின் உயர்ச்சியை மிகுத்து அழகுபடுத்திச் சொல்லுதல் ‘உள்ள மிகுதி’ எனப்படும்.

எடுத்துக்காட்டு

மண் அகன்று, தன்கிளையின் நீங்கி, வனம்புகுந்து,

பண்ணும் தவத்து இசைந்த பார்த்தன்தான் -

எண்இறந்த

மீதுஅண்டர் கோன்குலையும் வெய்யோர்

குலம்தொலைத்தான்

கோதண்ட மேதுணையாக் கொண்டு

(கிளை – சுற்றத்தார்; வனம் – காடு;

தவத்து இசைந்த – தவத்தால் இளைத்த;

பார்த்தன் – அருச்சுனன்; எண்இறந்த – அளவு இல்லாத;

அண்டர்- தேவர்கள்,சுரர்கள் கோன் – தலைவன், இந்திரன்;

வெய்யோர் – கொடியோர், அசுரர்; கோதண்டம் – வில்.)

இப்பாடலின் பொருள

நாட்டை விடுத்து, சுற்றத்தாரை விட்டு நீங்கி, காட்டை அடைந்து, தவம் செய்து அதனால் வருத்தமுற்று இளைத்த பார்த்தனாகிய அருச்சுனன், தனது வில்லையே துணையாகக் கொண்டு, மேல் உலகத்தில் உள்ள எண்ணற்ற சுரர்களுக்குத் தலைவனாகிய இந்திரனை நடுங்கும்படி செய்த கொடியோராகிய அசுரர்களின் குலத்தை அழித்தான்.

அணிப்பொருத்தம்

இப்பாடலில் அருச்சுனன் தவம் செய்து உடல் இளைத்த நிலையிலும், தான் ஒருவனாகவே இருந்து, தன்னுடைய வில்லின் துணைகொண்டு அசுரர் குலம்     தொலைத்தான் என அவனுடைய உள்ளத்து உயர்ச்சி கூறப்பட்டிருப்பதால் இது ‘உள்ள மிகுதி’ கூறும் உதாத்த அணி ஆயிற்று.

5.2 அவநுதி அணி

கவிஞர்கள் பாடலில் ஏதேனும் ஒரு பொருளைப் பற்றிப் பாடுவர். அப்பொருளுக்கு இயல்பான ஒரு தன்மை இருக்கும். ஆனால் அவர்கள் அதை மறுத்துப் பிறிது ஒரு தன்மையை அப்பொருளுக்கு ஏற்றிக் கூறுவர். அவ்வாறு கூறுவது அவர்கள் பாடுகின்ற பொருளுக்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதாகவே அமையும். இவ்வாறு பாடப்படும் அணியே அவநுதி அணி. இது பிறிது மொழிதல் அணி என்று தமிழில் உள்ளது

5.2.1 அவநுதி அணியின் இலக்கணம் சிறப்பினாலும், பொருளினாலும், குணத்தினாலும் ஆகிய உண்மையை மறுத்துப் பிறிது ஒன்றாக உரைப்பது அவநுதி என்னும் அணி ஆகும். இதனை,

சிறப்பினும் பொருளினும் குணத்தினும் உண்மை

மறுத்துப் பிறிது உரைப்பது அவநுதி ஆகும்

(தண்டி, 75)

என்ற நூற்பாவால் அறியலாம்.

அவநுதி என்பதற்கு மறுத்துரைத்தல் என்று பொருள். உண்மை – ஒன்றற்கு இயல்பாக உள்ள தன்மை. ஏதேனும் ஒரு பொருளில் உள்ள உண்மைத் தன்மையை மறுத்துப் பிறிது ஒரு தன்மையை அதன்கண் ஏற்றி உரைப்பது அவநுதி ஆகும். இவ்வாறு உண்மையை மறுத்துப் பிறிது ஒன்று உரைக்குங்கால் அப்பொருளுக்குச் சிறப்புத் தோன்றுமாறு அமையும்.

. அவநுதி அணியின் வகைகள்

அவநுதி அணி மூன்று வகைப்படும். அவை சிறப்பு அவநுதி, பொருள் அவநுதி, குண அவநுதி என்பனவாம். இவற்றுள் சிறப்பு அவநுதியைப் பார்க்கலாம்.

5.2.2 சிறப்பு அவநுதி எடுத்துக்காட்டு

நறைகமழ்தார் வேட்டார் நலன்அணியும் நாணும்

நிறையும் நிலைதளரா நீர்மை – அறநெறிசூழ்

செங்கோலன் அல்லன் கொடுங்கோலன்

தெவ்அடுபோர்

வெங்கோப மால்யானை வேந்து

(நறை – நறுமணம்; வேட்டல் – விரும்புதல்; நலன் – அழகு;

நாண் – நாணம், வெட்கம்; நிறை – கற்பு; தெவ் – பகைவர்;

அடு – அழிக்கும்; மால் = பெரிய.)

இப்பாடலின் பொருள்

போர்க்களத்தில் பகைவர்களை அழித்த கொடிய கோபத்தை உடைய பெரிய யானைக்கு உரிய அரசன், தனது நறுமணம் கமழும் மாலையை விரும்பிய பெண்களுடைய அழகும், அணிகலனும், நாணும், நிறையும் நிலை தளராதபடி தாங்கும் அறநெறி பொருந்திய செங்கோலை உடையவன் அல்லன்; கொடுங்கோலை உடையவன் ஆவான்.

அணிப்பொருத்தம்

இப்பாடலில், அரசனைச் சிறப்பித்துக் கூறும்போது, அவனுக்குச் சிறப்பாக உள்ள தன்மையாகிய செங்கோன்மையை மறுத்துக் கொடுங்கோன்மை என்ற பிறிது ஒரு தன்மையை அவன் மீது ஏற்றிச் சொல்லியிருத்தலின், இது சிறப்பு அவநுதி ஆயிற்று. அரசன் தனது மாலையை விரும்பும் பெண்களுக்குக் கொடுங்கோலன் ஆவான் என்று கூறப்பட்டிருப்பதால் அவன் தன் மனைவியை அன்றிப் பிற மகளிரை விரும்பாதவன் என்ற கருத்துப் பெறப்படுகிறது. இது அவனுடைய சிறப்பைக் காட்டலின் சிறப்பு அவநுதி ஆயிற்று.

5.3 சிலேடை அணி

கவிஞர்கள் தாங்கள் பாடுகின்ற பாடலில் பெரும்பாலும் ஒரு பொருளையே அமைத்துப் பாடுவர். சில நேரங்களில் ஒரே பாடலில் இருவேறு பொருள் அமையுமாறும் பாடுவர். தமிழில் ஒரு சொல் பல பொருள் உணர்த்துவதும் உண்டு. அதே போல ஒரு சொல்தொடரும் வெவ்வேறு வகையாகப் பிரிப்பதற்கு ஏற்ற வகையில் அமையும்போது பல பொருள் தருவது உண்டு. இத்தகைய சொற்களையும் தொடர்களையும் கவிஞர்கள் ஒரு பாடலில் அமைத்து இரு வேறுபட்ட பொருள்களைப் பாடத் தலைப்பட்டதன் விளைவாகவே சிலேடை அணி தோன்றியது. இதனை ‘இரட்டுற மொழிதல்’ என்று கூறுவர். இரண்டு பொருள்பட மொழிதலால் இவ்வாறு கூறப்பட்டது.

5.3.1 சிலேடை அணியின் இலக்கணம் ஒரு வகையாக நின்ற சொற்றொடர் பல வகையான பொருள்களின் தன்மை தெரிய வருவது சிலேடை என்னும் அணி ஆகும். இதனை,

ஒருவகைச் சொற்றொடர் பலபொருள் பெற்றி

தெரிதர வருவது சிலேடை ஆகும்

(தண்டி, 76)

என்ற தண்டியலங்கார நூற்பாவால் அறியலாம்.

சிலேடை அணியின் வகைகள்

சிலேடை அணி செம்மொழிச் சிலேடை என்றும், பிரிமொழிச் சிலேடை என்றும் இரு வகைப்படும்.

5.3.2 செம்மொழிச் சிலேடை ஒரு சொற்றொடரில் உள்ள சொற்கள் பிரிக்கப்படாமல் அப்படியே நின்று பல பொருள் தருவது செம்மொழிச் சிலேடை எனப்படும்.

எடுத்துக்காட்டு:

செங்கரங்க ளான்இரவு நீக்கும் திறம்புரிந்து

பங்கய மாதர் நலம்பயிலப் – பொங்குஉதயத்து

ஓர்ஆழி வெய்யோன் உயர்ந்த நெறிஒழுகும்

நீர்ஆழி நீள்நிலத்து மேல்

அருஞ்சொல் பொருள்

இப்பாடல் சூரியனுக்கும் சோழனுக்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள சொற்கள் சூரியனோடு பொருத்திப் பார்க்கும்போது, ஒரு பொருளையும், சோழனோடு பொருத்திப் பார்க்கும் போது வேறு ஒரு பொருளையும் தருகின்றன.

சூரியனோடு பொருத்திப் பார்க்கும்போது :-

கரங்கள் – கதிர்கள், கற்றைகள்; இரவு – இருள்;

பங்கயம் – தாமரை; மாதர் – காதல்; நலம் – அழகு; பயிலல் – உண்டாதல்; பொங்குதல் – மேல் நோக்கி வளர்தல்; உதயம் -தோற்றம்; ஓர் ஆழி -ஒற்றைச் சக்கரத்தை உடைய தேர்; வெய்யோன் – சூரியன்; உயர்ந்த நெறி – வான் வழி (விண் விசும்பு).

சோழனோடு பொருத்திப் பார்க்கும்போது:-

கரங்கள் – கைகள்; இரவு – வறுமை; பங்கய மாதர் – தாமரையில் வீற்றிருக்கும் திருமகள்; நலம் – செல்வம்; பயிலல் -பெருகுதல்; பொங்குதல் – மேம்படுதல்; உதயம் – பொருள் வருவாய்; ஓர் ஆழி – தனி ஆணைச் சக்கரம்; வெய்யோன் – விரும்பப்படுபவனாகிய சோழன்; உயர்ந்த நெறி – உயர்ந்த ஒழுக்கமாகிய நெறி.

இப்பாடலின் பொருள்

‘கடல் சூழ்ந்த புவி மீது சூரியன், தன்னுடைய சிவந்த கதிர்களால் இருளைப் போக்கும் திறன் மிக்கவன்; தாமரை மலர்கள் காதலிக்கும் அழகு உண்டாக, மேல் நோக்கி வளரும் தோற்றத்தை உடையவன்; ஒற்றைச் சக்கரத்தை உடைய தேரில் உயர்ந்த வான வெளியில் வலம் வருபவன்’ எனவும்,

‘கடல் சூழ்ந்த புவி மீது சோழன், தன்னுடைய சிவந்த கைகளால் உலகில் உள்ளவர்களுடைய வறுமையைப் போக்கும் திறன் மிக்கவன்; தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளின் செல்வம் பெருக மேம்படும் பொருள் வருவாயை உடையவன்; தனி ஆணைச் சக்கரத்தை உடையவன்; உலகத்தாரால் விரும்பப்படும் இயல்பு உடையவன்; சான்றோர் வகுத்த உயர்ந்த ஒழுக்க நெறியில் நடப்பவன்’ எனவும், இப்பாடல் இரு பொருள் கொள்ளப்படும்.

அணிப் பொருத்தம்

இப்பாடலில் உள்ள சொற்கள் பிரிக்கப்படாமல், அப்படியே நின்று, சூரியன், சோழன் ஆகிய இருவருக்கும் பொருந்துமாறு பொருள் தருவதால் இது, ‘செம்மொழிச் சிலேடை’ ஆயிற்று.

5.3.3 பிரிமொழிச் சிலேடை ஒரு சொற்றொடரில் உள்ள சொற்களை வேறுவேறு வகையாகப் பிரித்துப் பல பொருள் கொள்வது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.

எடுத்துக்காட்டு:

தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய

எள்ளா அரிமா னிடர்மிகுப்ப – உள்வாழ்தேம்

சிந்தும் தகைமைத்தே எங்கோன் திருவுள்ளம்

நந்தும் தொழில்புரிந்தார் நாடு

அருஞ்சொல் பொருள்

இப்பாடல், சோழனைப் பகையாதவர் (நட்புக் கொண்டோர்) நாட்டிற்கும், அவனைப் பகைத்தவர் நாட்டிற்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள சொற்கள், பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால் ஒரு வகையாகவும், பகைத்தவர் நாட்டின் மேல் செல்லுங்கால் வேறு ஒரு வகையாகவும் பிரிந்து இருவேறு பொருளைத் தருகின்றன.

சோழனைப் பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-

தள்ளா இடத்து – அழகு கெடாத விளைநிலத்தில்; ஏர் – பகட்டேர் அதாவது உழும் எருது; தடம் – பெரிய; தாமரை – தாமரை மலர்; எள்ளா – இகழாத; அரி – நெற்சூடு; மானிடர் – உழவர்;     மிகுப்ப – திரட்ட; உள்வாழ்தேம் – உள்ளே உண்டாகிய தேன்; சிந்தும் – பொழியும்; நந்தும் தொழில் புரிந்தார் – விரும்பும் பணி செய்தோர்.

சோழனைப் பகைத்தவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-

விடத்தேர் – முள்ளுடைய ஒருவகை மரம்; தள்ளா – அசையாத;தடம் – மலை; சிந்தும் – அழியும்; தா மரை – தாவுகின்ற மரை என்னும் மான்; எள்ளா – இகழாத; அரி மான் – சிங்கப் போத்து, ஆண் சிங்கம்; இடர் – துன்பம்; மிகுப்ப – செய்ய; உள்வாழ்தேம் – உள்ளத்தில் வாழும் நாடு; நந்தும் தொழில் புரிந்தார் – வேறுபடும் தொழில் செய்தோர்.

இப்பாடலின் பொருள்

அழகு கெடாத விளைநிலங்களில் உளதாகிய பகட்டேர் (உழுகின்ற எருது) பெரிய தாமரை மலரைப் பொருந்தவும், இகழப்படாத     நெற்கதிர்களை உழவர்கள் திரட்டவும், அத்தாமரை மலரில் உளதாகிய தேன் பொழியும் பெருமையை உடையது, எம் அரசனாகிய சோழனுடைய திருவுள்ளம் விரும்பும்படி நடந்தோருடைய நாடு.

அசையாத விடத்தேர் என்னும் முள்மரங்களை உடையதாய், பெரிய மலைச் சிகரங்களைத் தாவும் மான்களை உடையதாய், இகழப்படாத ஆண் சிங்கங்கள் துன்பமுறுத்த, நல்லோர் உள்ளங்களில் வாழும் இடங்கள் எல்லாம் அழிவுபடும் தன்மையை உடையது. எம் அரசனாகிய சோழனுடைய திருவுள்ளம் வெறுக்கும்படி நடந்தோருடைய நாடு.

அணிப் பொருத்தம்

இப்பாடலில் உள்ள சொற்கள், சோழனுடைய நண்பர்கள் நாட்டிற்கு ஆகுங்கால் ஒரு வகையாகவும், பகைவர்கள் நாட்டிற்கு ஆகுங்கால் வேறொரு வகையாகவும் பிரிந்து இருவேறு பொருள் தருவதால் இது, ‘பிரிமொழிச் சிலேடை’ ஆயிற்று.

தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் சிலேடை அணி மிகச் சிறப்பாகப் பாடப்பட்டிரு ப்பதைக் காணலாம். தனிப்பாடல்கள் பாடிப் புகழ் பெற்ற கவிஞர்களுள் ஒருவர் காளமேகப் புலவர். இவர் வைக்கோலுக்கும் யானைக்கும், ஆமணக்குக்கும் யானைக்கும், பாம்புக்கும் வாழைப் பழத்துக்கும், பாம்புக்கும் எலுமிச்சம் பழத்துக்கும், பாம்புக்கும் எள்ளுக்கும் என்றவாறு சிலேடை அணி அமைத்துப் பல பாடல்களைப் பாடியுள்ளார். ஒரு சான்று காண்போம்.

பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடை

எடுத்துக்காட்டு:

ஆடிக் குடத்து அடையும்; ஆடும்போதே இரையும்; மூடித் திறக்கின் முகம்காட்டும்; – ஓடிமண்டை

பற்றின் பரபரெனும் பாரில் பிண் ணாக்குண்டாம்

உற்றிடு பாம்பு எள்ளெனவே ஓது

(பிண்ணாக்கு என்னும் சொல், பாம்பிற்கு ஆகுங்கால் ‘பிள் + நாக்கு’ = பிண்ணாக்கு, பிளவுபட்ட நாக்கு என்றும், எள்ளுக்கு ஆகுங்கால் எள்ளுப் பிண்ணாக்கு என்றும் இருவேறு பொருள் தரும். மற்றச் சொற்கள் அப்படியே நேராக நின்று பாம்பிற்கும் எள்ளுக்கும் பொருந்துமாறு இரு வேறு பொருள் தரும்.)

இப்பாடலின் பொருள்

‘பாம்பானது, படம் எடுத்து ஆடிக் குடத்தினுள் புகும்; படம் எடுத்து ஆடும்போதே சீத்து, சீத்து என ஓசை உண்டாக்கும்; குடத்தில் இட்டு மூடிய பின் மூடியைத் திறந்து பார்த்தால் தனது தலையை எடுத்துக் காட்டும்; அது ஓடி ஒருவர் தலையைத் தீண்டுமானால் அவர்க்குப் பரபர என்ற உணர்ச்சி உண்டாகும்; அதற்குப் பிளவுபட்ட நாக்கும் உண்டு.’

‘எள்ளானது, செக்கில் ஆட்டப்பட்டுக் குடத்திலே அடைக்கப்படும்; செக்கில் ஆட்டும் போதே இரைச்சல் ஓசையை உண்டாக்கும்; குடத்தில் எண்ணெயை அசையாமல் வைத்து மூடித் திறந்து பார்த்தால் அது பார்ப்பவருடைய முகத்தைக் காட்டும்; எண்ணெயைத் தலையில் ஊற்றித் தேய்த்தால் குளிர்ச்சியான உணர்ச்சி உண்டாகும்; எண்ணெய் ஆட்டும் போது எள்ளுப் பிண்ணாக்கு உண்டாகும்.’

ஆதலால் இவ்வுலகில் பாம்பும் எள்ளும் சமம் என்று கூறுவாயாக.

அணிப் பொருத்தம்

இப்பாடலில், காளமேகப் புலவர் சொற்களைப் பாம்பு, எள் ஆகிய இரண்டனுக்கும் பொருந்துமாறு அமைத்துப் பாடியதால் இது, சிலேடை அணி ஆயிற்று.

5.4 விசேட அணி

கவிஞர்கள் தாங்கள் பாட எடுத்துக்கொண்ட பொருளின்பால் சிலபல காரணங்களால் உள்ள குறைகளையும் குறிப்பிட்டுப் பாடுவர். ஆனால் அக்குறைகளே அப்பொருளுக்குச் சிறப்பையும் பெருமையையும் சேர்ப்பது போலப் பாடலை அமைப்பர். இதனால் பாடலில் பாடப்படும் பொருள் வனப்பும் வலிமையும் பெற்றுத் திகழ்கிறது. இவ்வாறான சிறப்புத் தோன்ற பாடப்படும் அணியே விசேட அணி. அல்லது சிறப்பு அணி எனப்படும்

5.4.1 விசேட அணியின் இலக்கணம் குணமும், தொழிலும், சாதியும், பொருளும், உறுப்பும் குறைபடுதல் காரணமாக, ஒரு பொருளுக்கு மேம்பாடு தோன்றக் கூறுவது விசேடம் என்னும் அணி ஆகும்.

குணம்தொழில் முதலிய குறைபடு தன்மையின்

மேம்பட ஒருபொருள் விளம்புதல் விசேடம்

(தண்டி, 79)

விசேடம் என்பதற்கு மேம்பாடு அல்லது பெருமை என்று பொருள். நூற்பாவில் ‘முதலிய’ என்று கூறியதனால், குணம், தொழில் என்பனவற்றோடு இனம், பொருள், உறுப்பு ஆகியனவும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

விசேட அணியின் வகைகள்

விசேட அணி ஐந்து வகைப்படும். அவை, குணக்குறை விசேடம், தொழில்குறை விசேடம், இனக்குறை விசேடம், பொருள்குறை விசேடம், உறுப்புக்குறை விசேடம் என்பன ஆகும். இவற்றுள் குணக்குறை விசேடம் என்பதைச் சான்றுடன் காண்போம்.

5.4.2குணக்குறை விசேடம் குணத்தால் குறை கூறிச் செயலால் மேம்பாடு தோன்றக் கூறுவது குணக்குறை விசேடம் எனப்படும்.

எடுத்துக்காட்டு

கோட்டம் திருப்புருவம் கொள்ளா; அவர்செங்கோல்

கோட்டம் புரிந்த; கொடைச்சென்னி – நாட்டம்

சிவந்தன இல்லை; திருந்தார் கலிங்கம்

சிவந்தன, செந்தீத் தெற

(கோட்டம் – வளைதல்; சென்னி – சோழன்;

நாட்டம் – கண்கள்; திருந்தார் – பகைவர்;

கலிங்கம் – கலிங்க நாடுகள்.)

இப்பாடலின் பொருள்

கொடைத் தொழிலில் வல்ல சோழனுடைய அழகிய புருவங்கள் வளையத் தொடங்கவில்லை; ஆனால் அதற்குள் அவனுடைய பகைவர்களின் செங்கோல்கள் வளைந்து விட்டன. அச்சோழனுடைய கண்கள் சிவக்கவில்லை; ஆனால் அதற்குள் அவனுடைய பகைவர்களின் கலிங்க நாடுகள் எரியுற்றுச் சிவந்து விட்டன.

சோழன் பகைவர்கள் மீது சினம் கொள்வதற்கு முன்பே அவர்களுடைய நாடுகள் அழிந்துவிட்டன என்பது இப்பாடலின் கருத்து.

அணிப்பொருத்தம்

பகைவர் நாட்டை அழிப்பதற்குத் தோன்றும் சினத்தை அறிவிக்கும் குணங்கள் புருவம் வளைதல், கண் சிவத்தல் ஆகியனவாம். ஆனால் இக்குணங்கள் சோழனுக்கு ஏற்படுவதற்கு முன்பே பகைவர் நாடுகள் அழிந்துவிட்டன என்று கூறியதால் குணத்தால் குறை இருப்பினும் செயலால் மேம்படுதலின் இப்பாடல் குணக்குறை விசேடம் ஆயிற்று.

5.5 ஒப்புமைக்கூட்ட அணி

கவிஞர்கள் பாடலில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் பல பொருள்களை அடுக்கிக் கூறுவது உண்டு. அவ்வாறு கூறும்போது, அப்பொருள்களைச் சமமான தன்மை உள்ள பொருள்களாகக் கூறுவார்களாயின் அப்பாடல் அழகு பெற்றுத் திகழக் காணலாம். இதன் பொருட்டுக் கூறப்படும் அணியே ஒப்புமைக்கூட்ட அணி.

5.5.1 ஒப்புமைக்கூட்ட அணியின் இலக்கணம் கவிஞர் ஒரு பொருளைச் சொல்லும் போது, குணம் முதலாயினவற்றில் சிறந்த ஒரு பொருளைக் கூட்டி வைத்துச் சொல்லுவது ஒப்புமைக்கூட்டம் என்னும் அணி ஆகும்.

கருதிய குணத்தின் மிகுபொருள் உடன்வைத்து ஒருபொருள் உரைப்பது ஒப்புமைக் கூட்டம்

(தண்டி, 80)

ஒப்புமைக்கூட்டம் – சமமான தன்மை உடைய

பொருள்களை ஒருங்கு கூட்டுதல்.

கருதிய குணம்- புகழ்வதற்கு உரியனவும்,

இகழ்வதற்கு உரியனவும் என இருவகைக் குணங்கள்

ஒப்புமைக்கூட்ட அணியின் வகைகள்

ஒப்புமைக்கூட்ட அணி ஒரு பொருளைப் புகழ்ந்து கூறும்போதும், பழித்துக் கூறும்போதும் தோன்றும்.

புகழினும் பழிப்பினும் புலப்படும் அதுவே

(தண்டி, 81)

எனவே,     ஒப்புமைக்கூட்ட அணியானது புகழ் ஒப்புமைக்கூட்டம், பழிப்பு ஒப்புமைக்கூட்டம் என்று இரு வகைப்படும்.

5.5.2 புகழ் ஒப்புமைக்கூட்டம் புகழத்தக்க பொருள்களை ஒருங்கு சேர்த்துக் கூறுதல் புகழ் ஒப்புமைக்கூட்டம் எனப்படும்.

எடுத்துக்காட்டு

பூண்தாங்கு கொங்கை பொரவே குழைபொருப்பும், தூண்டாத தெய்வச் சுடர்விளக்கும், – நாண்தாங்கு வண்மைசால் சான்றவரும், காஞ்சி வண்பதியின்

உண்மையால் உண்டுஇவ் வுலகு

(பொருப்பு – மலை, மலையாகிய ஏகாம்பர நாதர்;

தெய்வச் சுடர்விளக்கு – நந்தா விளக்கு; )

இப்பாடலின் பொருள்

அணிகலன்களை     அணிந்த உமையம்மையாரின் கொங்கைகள் அழுந்துவதால் மேனி குழைந்த மலையாகிய ஏகாம்பர நாதரும், தூண்டும் தேவையற்ற தெய்வத்தன்மை பொருந்திய ஒளியுள்ள நந்தா விளக்கும், பிறர் நாணம் கொள்ளும்படியான கொடைத்தன்மை வாய்ந்த சான்றோரும் காஞ்சி என்னும் மாநகரில் உள்ளமையால் இவ்வுலகம் நிலைபெற்றிருக்கின்றது.

அணிப்பொருத்தம்

இப்பாடலில், ஏகாம்பர நாதர், நந்தா விளக்கு, சான்றோர் ஆகிய மூன்றும் காஞ்சியில் உள்ளமையால் உலகம் நிலைபெற்றிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இம்மூன்றும் புகழத்தக்க சமமான தன்மை உடைய பொருள்கள் ஆகும். எனவே இவற்றை ஒருங்கு சேர்த்துக் கூறியிருப்பதால் இப்பாடல் ‘புகழ் ஒப்புமைக்கூட்டம்’ ஆயிற்று.

இதேபோல, பழிக்கத்தக்க பொருள்களை ஒருங்கு சேர்த்துக்கூறுதல் பழிப்பு ஒப்புமைக் கூட்டம் ஆகும்.

5.6 விரோத அணி

யாப்பு இலக்கணத்தின் செல்வாக்கை அணி இலக்கணத்தில் காணலாம். யாப்பு இலக்கணத்தில் செய்யுள் உறுப்புகளில் ஒன்றாகக் கூறப்படுவது ‘தொடை’ என்பது. பாடலில் ஓசை நலம் பற்றியது தொடை.. தொடை வகையுள் ஒன்று ‘முரண் தொடை’ ஆகும் என்பதை யாப்பு இலக்கணத்தில் படித்திருப்பீர்கள். மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். முரண் தொடையே தண்டியலங்காரத்தில் விரோத அணி என்று கூறப்படுகிறது.

5.6.1 விரோத அணியின் இலக்கணம் மாறுபட்ட சொல்லாலும், பொருளாலும் மாறுபட்ட தன்மை தோன்றக் கூறுவது விரோதம் என்னும் அணி ஆகும்.

மாறுபடு சொல்பொருள் மாறுபாட்டு இயற்கை

விளைவுதர உரைப்பது விரோதம் ஆகும்

(தண்டி, 82)

விரோத அணியின் வகைகள்

விரோத அணி சொல் விரோதம், பொருள் விரோதம் என இரு வகைப்படும்.

5.6.2 சொல் விரோதம் சொற்களை ஒன்றோடு ஒன்று மாறுபடுமாறு அமைத்தல் சொல் விரோதம் எனப்படும்.

எடுத்துக்காட்டு

காலையும் மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால்

மேலை வினைஎல்லாம் கீழவாம் – கோலக்

கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப் பெருமானைச் சிற்றம் பலத்து

இப்பாடலின் பொருள்

அழகு பொருந்திய கரிய யானைத் தோலையும், வெண்மையான திருநீற்றையும், சிவந்த திருமேனியையும், பசுமையான கொன்றை மாலையையும் உடைய பெருமானைச் சிற்றம்பலத்தில் காலையிலும் மாலையிலும் கைகளைக் கூப்பி, அவனது திருவடிகளைத் தொழுதால் நாம் முன் செய்த தீவினைகள் எல்லாம் சிறிது சிறிதாகக் குறைந்து நம்மை விட்டு நீங்கிவிடும்.

அணிப்பொருத்தம்

இப்பாடலில், காலை -மாலை; கைகூப்புதல் -கால்தொழுதல்; மேல் – கீழ்; கருமை – வெண்மை – செம்மை – பசுமை; பெரு – சிறு எனச் சொற்கள் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு இருத்தலின் இது சொல் விரோதம் ஆயிற்று.

5.6.3 பொருள் விரோதம் பொருள்களை ஒன்றோடு ஒன்று மாறுபடுமாறு அமைத்தல் பொருள் விரோதம் எனப்படும்.

எடுத்துக்காட்டு

சோலை பயிலும் குயில்மழலை சோர்ந்துஅடங்க,

ஆலும் மயில்இனங்கள் ஆர்த்துஎழுந்த; – ஞாலம்

குளிர்ந்த; முகில்கறுத்த; கோபம் சிவந்த;

விளர்ந்த, துணைபிரிந்தார் மெய்

(மழலை – மழலைச் சொற்கள்; ஆலும் – ஆடும்;

ஞாலம் – உலகம்; முகில் – மேகம்;

கோபம் – இந்திரகோபம் என்னும் ஒருவகைப் பட்டுப்பூச்சி;

விளர்ந்த – வெளுத்த; மெய் – உடம்பு.)

இப்பாடலின் பொருள்

சோலைகளில் தங்கிய குயில்களின் மழலைச் சொற்கள் சோர்வுற்று அடங்க, ஆடுகின்ற மயில் கூட்டங்கள் ஆரவாரித்து எழுந்தன; உலகம் குளிர்ந்தது; மேகங்கள் கறுத்தன; இந்திர கோபப் பூச்சிகள் சிவந்தன; தம் துணைவரைப் பிரிந்தவருடைய உடல்கள் வெளுத்தன.

அணிப்பொருத்தம்

இப்பாடல், கார்கால வருணனை. இதில் முன்னிரண்டு அடிகளில் பொருள் விரோதம் அமைந்துள்ளது. குயில்மழலை சோர்ந்து அடங்கலும், மயில் இனங்கள் ஆர்த்து எழுதலும் ஒன்றற்கு ஒன்று மாறுபட்ட பொருள் ஆதலின் இது பொருள் விரோதம் ஆயிற்று. மேலும் இப்பாடலில் உள்ள பின்னிரண்டு அடிகளில் கறுத்த – சிவந்த – விளர்ந்த (வெளுத்த) எனச் சொற்கள் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு இருத்தலின் இது, சொல் விரோதமும் ஆயிற்று.

5.7 தொகுப்புரை

இதுகாறும் இப்பாடத்தில் உதாத்த அணி, அவநுதி அணி, சிலேடை அணி, விசேட அணி, ஒப்புமைக் கூட்ட அணி, விரோத அணி ஆகிய ஆறு அணிகளைப் பற்றி விளக்கமாகப் பார்த்தோம். செல்வத்தினது உயர்ச்சியையும், உள்ளத்தினது உயர்ச்சியையும் அழகுபடுத்திக் கூறுவது உதாத்த அணி ஆகும். ஏதேனும் ஒரு பொருளில் உள்ள உண்மைத் தன்மையை மறுத்துப் பிறிது ஒரு தன்மையை அதன்கண் ஏற்றி உரைப்பதன் வாயிலாக அப்பொருளுக்குச் சிறப்புச் சேர்ப்பது அவநுதி அணி ஆகும். ஒரே சொல்தொடரை ஒன்றற்கு மேற்பட்ட பல பொருள்களைத் தருமாறு அமைப்பது சிலேடை அணி ஆகும். சிலேடை அணி செம்மொழிச் சிலேடை     என்றும்     பிரிமொழிச் சிலேடை என்றும் இருவகைப்படும். சொல்தொடரில் உள்ள சொற்களைப் பிரிக்காமல் வைத்துப் பல பொருள் காண்பது செம்மொழிச் சிலேடை. சொற்களைப் பிரித்துப் பல பொருள் காண்பது பிரிமொழிச் சிலேடை. குணம், தொழில், சாதி முதலியன குறைபடுதல் காரணமாக ஒரு பொருளுக்குச் சிறப்புத் தோன்றக் கூறுவது விசேட அணி ஆகும். பாடலில் புகழ் பற்றியோ பழி பற்றியோ அமையும் ஒரு கருத்தை வலியுறுத்திக் காட்ட சம தன்மை உடைய பல பொருள்களை ஒருங்குக் கூட்டி உரைத்தல் ஒப்புமைக் கூட்ட அணி ஆகும். பாடலில் சொற்களையும் பொருள்களையும் மாறுபாடு தோன்ற உரைப்பது விரோத அணி ஆகும். இவை யாவும் இப்பாடத்தின் வாயிலாக விளக்கப்பட்டன.

பாடம் - 6

பொருளணியியல் – VI

6.0 பாட முன்னுரை

தண்டியலங்காரம்     பொருளணியியலில் விளக்கிக் கூறப்படும்     அணிகள்     முப்பத்தைந்து. இவற்றில் இருபத்தெட்டாவது முதல் முப்பத்தைந்தாவது வரை கூறப்படும் அணிகள் மாறுபடு புகழ்நிலை அணி, புகழாப் புகழ்ச்சி அணி, நிதரிசன அணி, புணர்நிலை அணி, பரிவருத்தனை அணி, வாழ்த்து அணி, சங்கீரண அணி, பாவிக அணி ஆகிய எட்டு அணிகள் ஆகும். இவ்வணிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் தண்டியாசிரியர் கூறும்போது முதற்கண் அதன் இலக்கணத்தைக் கூறுகிறார். அவ்வணியானது பல்வகைப்பட்டு அமையுமாயின் அவற்றின் வகைகளைக் கூறுகிறார். தண்டியலங்கார உரையில் அவ்வகைகள் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான பாடல் மேற்கோள் காட்டப்படுகிறது;     அப்பாடலுக்குப் பொருள் தரப்படுகின்றது. அப்பாடலில் அமைந்துள்ள அணிப் பொருத்தம் இப்பாடத்தில் விரிவாக விளக்கிக் காட்டப்படுகிறது. இவ்வணிகளில் சில தமிழ் இலக்கியங்களில் பயின்று வருவது தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டப்படுகிறது.

6.1 மாறுபடு புகழ்நிலை அணி

பாடல் கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்குக் கவிஞர் கையாண்ட அணிகள் பல. அவற்றுள் மாறுபடு புகழ்நிலை அணியும் ஒன்றாகும். கவிஞர் பாடலில் ஒன்றைப் பழித்துக் கூற நினைக்கிறார். ஆனால் அதை வெளிப்படையாகக் கூற முடியாத நிலை. எனவே தாம் மனத்தில் கருதிய அதனை மறைத்து, வேறொன்றைப் புகழ்ந்து கூறுவதன் வாயிலாக, அதனைக் குறிப்பாகப் புலப்படுத்திக் காட்ட விழைகிறார். இம்முறையில் பாடப்படும் அணியே மாறுபடு புகழ்நிலை அணி ஆகும்.

6.1.1 மாறுபடு புகழ்நிலை அணியின் இலக்கணம் கவிஞர், தாம் சொல்லக் கருதிய பொருளை மறைத்து அதனைப் பழித்தற்கு வேறு ஒன்றினைப் புகழ்ந்து உரைப்பது மாறுபடு புகழ்நிலை என்னும் அணி ஆகும்.

கருதிய பொருள் தொகுத்து ஆங்குஅது பழித்தற்கு

வேறுஒன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை

(தண்டி-82)

( தொகுத்து – மறைத்து )

எடுத்துக்காட்டு:

இரவுஅறியா; யாவரையும் பின்செல்லா; நல்ல

தருநிழலும் தண்ணீரும் புல்லும் – ஒருவர்

படைத்தனவும் கொள்ளா; இப் புள்ளிமான் பார்மேல் துடைத்தனவே அன்றோ துயர்

(இரவு- இரத்தல், பிச்சைஎடுத்தல்; தரு – மரம்.)

இப்பாடலின் பொருள்

இந்தப் புள்ளிமான்கள் பிறரிடம் சென்று இரத்தலை அறியமாட்டா; எவரிடத்தும் தம் குறைகளைச் சொல்லிப் பின் தொடர்ந்து செல்லமாட்டா; ஒருவர் படைத்தனவாகிய நல்ல மரத்தின் நிழலையும், குளிர்ந்த நீரையும், புல்லையும் கொள்ளா; அவற்றைத் தாமே பெறும்; ஆதலின், இம்மான்கள் இந்தப் பூமியின்மேல் துன்பத்தில் இருந்து நீங்கியன அன்றோ?

அணிப் பொருத்தம்

இப்பாடலில் கவிஞர் பழித்துக் கூறக் கருதிய பொருள், ‘செல்வர் பின் சென்று இரந்து, அவரிடம் தம் குறைகளைச் சொல்லி, அவர் நிழலில் தங்கி உயிர் வாழும் இரவலரை’ ஆகும். ஆனால் கவிஞர் அக்கருத்தை மறைத்துப் புள்ளிமானைப் புகழ்ந்து கூறுவதன் வாயிலாக அதனைப் புலப்படுத்தியமையால், இது மாறுபடு புகழ்நிலை அணி ஆயிற்று.

மாறுபடு புகழ்நிலை அணியும், முன்பு இலேச அணியின் பிரிவாகக் கூறிய அணிகளில் ஒன்றாகிய புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும் ஒன்று போலத் தோன்றும். ஆனால் இரண்டிறகும் வேறுபாடு உள்ளது.

மாறுபடு புகழ்நிலை, ஒன்றனைப் புகழ்வது, அதனோடு எவ்விதமான தொடர்பும் இல்லாத பிறிது ஒன்றற்குப் பழிப்பாய்த் தோன்றுவது ஆகும். புகழ்வது போலப் பழித்திறம் புனைதலோ, ஒன்றனைப் புகழ்வது, அதற்கே பழிப்பாய்த் தோன்றுவது ஆகும்.

மாறுபடு புகழ்நிலைக்கு ஈண்டுக் காட்டிய ‘இரவறியா’ என்று தொடங்கும் பாடலில் மானை வெளிப்படையாகப் புகழ அப்புகழ்ச்சி, இரவலர்க்குப் பழிப்பாய்த் தோன்றக் காணலாம்.

புகழ்வது போலப் பழித்திறம் புனைதலுக்குச் சான்றாகக் காட்டப்பட்ட ‘மேய கலவி’ என்று தொடங்கும் பாடலில் தலைவி, ‘புணர்ச்சியின்போது, தலைவன் என்னுடைய மென்மைத் தன்மை கெடாதவாறு நடந்து கொள்கிறான்’ என்று அவனைப் புகழ்ந்து கூறுகிறாள். இவ்வாறு புகழ்ந்து கூறுவது, ‘கூடும் காலத்தில் மென்மைத் தன்மை கெடுமாறு கூடவேண்டியிருக்க, அங்ஙனம் கூடும் தன்மையை அவன் சிறிதும் அறியாது இருக்கின்றானே’ என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்தலின் அவனுக்குப் பழிப்பாயிற்று.

6.2 புகழாப் புகழ்ச்சி அணி

பாடல் கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்குக் கவிஞர் கையாண்ட அணிகளில் இதுவும் ஒன்று. ஒன்றைப் பழிப்பது வேறு ஒன்றற்குப் புகழாய்த் தோன்றும் முறையில் பாடப்படும் அணி ஆகும்.

6.2.1 புகழாப் புகழ்ச்சி அணியின் இலக்கணம் பழித்துக் கூறுவது போன்ற முறையினால் ஒரு பொருளுக்கு மேம்பாடு தோன்றச் சொல்லுவது புகழாப் புகழ்ச்சி அணி என்னும் அணி ஆகும்.

பழிப்பது போலும் பான்மையில் மேன்மை

புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி

(தண்டி, 84)

(மேன்மை – மேம்பாடு, புகழ்.)

இவ்வணிக்குத் தண்டியலங்கார உரையில் இரண்டு பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டு – 1 :

போர்வேலின் வென்றதூஉம், பல்புகழால்

போர்த்ததூஉம்,

தார்மேவு திண்புயத்தால் தாங்குவதூஉம், – நீர்நாடன் தேர்அடிக்கூர் வெம்படையால் காப்பதூஉம்,

செங்கண்மால்

ஓர்அடிக்கீழ் வைத்த உலகு

இப்பாடலின் பொருள்

நீர் வளம் பொருந்திய நாட்டை உடைய சோழன், போர் செய்யும் வேலினால் வெற்றி கொண்டதும், தன்னுடைய பல்வேறு வகைப்பட்ட புகழால் மூடியதும், மாலையை அணிந்த தன்னுடைய வலிமையான தோளினால் தாங்குவதும், தேர்க்காலின் பெயரை உடைய கூர்மையும் கொடுமையும் உடைய ஆயுதத்தால் (அதாவது சக்கர ஆயுதத்தால்) காப்பதும், சிவந்த கண்களை உடைய திருமால் தனது ஒரு காலடியில் வைத்த இந்நிலவுலகமே ஆகும்.

அணிப் பொருத்தம்

இப்பாடலில், ‘திருமால் ஓர் அடியின் கீழ் வைத்த உலகு’ என உலகத்தைப் பழிப்பது போலக் கூறும் முறையால், அவ்வுலகம் முழுவதையும் மனிதனாகிய சோழன் வேலால் வென்றும், புகழால் போர்த்தியும், தோள் வலிமையால் தாங்கியும் பல விதமான துன்பங்கள்பட்டுப் பாதுகாப்பது செயற்கரிய செயல் என்னும் மேம்பாடு அவனுக்குத் தோன்றுமாறு குறிப்பாகச் சொல்லப்பட்டிருப்பதால் இது புகழாப் புகழ்ச்சி அணி ஆயிற்று.

எடுத்துக்காட்டு – 2:

நினைவுஅரிய பல்புகழார் நின்குலத்துத் தொல்லோர் அனைவரையும் புல்லினாள் அன்றே – மனுநூல்

புணர்ந்த நெறிஒழுகும் பூழிய! நீ இந்நாள்

மணந்த தடமலர்மேல் மாது

(புல்லினாள் – கூடினாள்; பூழியன் – சோழன்;

தடமலர் – பெரிய தாமரைமலர்; மாது – திருமகள்.)

இப்பாடலின் பொருள்

மனுவின் நீதிநெறிப்படி ஆட்சி செலுத்துகின்ற சோழனே! நீ இந்நாளில் உனக்கு உரிமையாகும்படி மணந்துள்ள, பெரிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் திருமகள், மனத்தாலும் நினைத்தற்கு அரிய பலவகைப் புகழை உடைய உன் குலத்து முன்னோர்கள் அனைவரையும் கூடினவள் அன்றோ?

அணிப் பொருத்தம்

இப்பாடலில், ‘சோழன் மணந்த திருமகள், அவனுக்கு முன்னே வாழ்ந்த அவனுடைய குலத்து முன்னோர்கள் அனைவரையும் கூடியவள்’ என்று அவளைப் பழிப்பது போலக் கூறும் முறையால், ‘சோழன், வழிவழியாக வந்த பெருஞ்செல்வத்தையும் அரசாட்சியையும் உடையவன்’ என்னும் மேம்பாடு அவனுக்குத் தோன்றுமாறு குறிப்பாகச் சொல்லப்பட்டிருப்பதால் இது புகழாப் புகழ்ச்சி அணி ஆயிற்று.

புகழாப் புகழ்ச்சி அணியும், முன்பு இலேச அணியின் பிரிவாகக் கூறிய அணிகளில் ஒன்றாகிய பழிப்பது போலப் புகழ் புலப்படுத்தலும் ஒன்று போலத் தோன்றும். ஆனால் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.

புகழாப் புகழ்ச்சி, என்பது ஒன்றனைப் பழித்துக் கூறுவது, பிறிது ஒன்றற்குப் புகழாய்த் தோன்றுவது ஆகும். பழிப்பது போலப் புகழ் புலப்படுத்தலோ, ஒன்றனைப் பழித்துக் கூறுவது, அதற்கே புகழாய்த் தோன்றுவது ஆகும்.

புகழாப் புகழ்ச்சிக்கு ஈண்டுக் காட்டிய பாடல்களில் ஒன்றாகிய ‘போர்வேலின்’ என்று தொடங்கும் பாடலில் ‘திருமால் ஓர் அடியின் கீழ் வைத்த உலகு’ என்று உலகத்தைப் பழித்துக் கூறுவது, அவ்வுலகைப் பல விதமான துன்பங்கள்பட்டுக் காக்கின்ற சோழனுக்குப் புகழாய்த் தோன்றக் காணலாம்.

பழிப்பது போலப் புகழ் புலப்படுத்தலுக்குச் சான்றாகக் காட்டப்பட்ட ‘ஆடல் மயில்இயலி’ என்று தொடங்கும் பாடலில், தலைவி, ‘புணர்ச்சியின்போது, தலைவன் என்னுடைய மென்மைத் தன்மை கெடுமாறு நடந்து கொள்கிறானே’ என்று அவனைப் பழித்துக் கூறுவது, ‘கூடும் காலத்தில் அவன் அவ்வாறு நடந்து கொள்வதே பேரின்பமாக உள்ளது’ எனபதைக் குறிப்பாகப் புலப்படுத்தலின் அவனுக்குப் புகழாயிற்று.

6.3 நிதரிசன அணி

உலகில் இயற்கையாகச் சில நிகழ்ச்சிகள் நிகழ்வதைக் கவிஞர்கள் காண்கிறார்கள். அவற்றை உலக மாந்தர் வாழ்க்கையோடு இயைத்துப் பார்க்கின்றனர். தாம் கண்ணுற்ற இயற்கை நிகழ்ச்சிகள் மாந்தருடைய நல்ல பண்புகளையும் தீய பண்புகளையும் எடுத்துக்காட்டுவதற்காவே நிகழ்கின்றன என்ற அரிய நோக்கில் பாடத் தலைப்படுகின்றனர். இப்பொருள்பட அமைந்த அணியே நிதரிசன அணி. அல்லது காட்சிப் பொருள் வைப்பு அணி என்று அழைக்கப் படுகிறது.

6.3.1 நிதரிசன அணியின் இலக்கணம் இயற்கையாக நிகழும் நிகழ்ச்சிகளின் பயன், வேறு ஒரு பொருளுக்கு நன்மையோ, தீமையோ தோன்றுமாறு இருப்பதாகச் சொல்லுவது நிதரிசனம் என்னும் அணி ஆகும்.

ஒருவகை நிகழ்வதற்கு ஒத்தபயன், பிறிதிற்குப்

புகழ்மை தீமை என்றுஇவை புலப்பட

நிகழ்வது ஆயின் நிதரிசனம் அதுவே

(தண்டி, 85)

(புகழ்மை – நன்மை.)

6.3.2 நிதரிசன அணியின் வகைகள் நிதரிசன அணி இரண்டு வகைப்படும். அவை, புகழ்மை நிதரிசனம், தீமை நிதரிசனம் என்பன ஆகும்.

6.3.2 புகழ்மை நிதரிசனம் ஒரு பொருளின் பயன் வேறு ஒரு பொருளுக்கு நன்மை புலப்பட நிகழ்வதாகச் சொல்லுவது புகழ்மை நிதரிசனம் எனப்படும். இதை நற்பொருள் காட்சி என்று கூறுவர்.

எடுத்துக்காட்டு:

பிறர்செல்வம் கண்டால் பெரியோர் மகிழ்வும்

சிறியோர் பொறாத திறமும் – அறிவுறீஇச்

செங்கமலம் மெய்மலர்ந்த; தேம்குமுதம் மெய்அயர்ந்த;

பொங்குஒளியோன் வீறுஎய்தும் போது

(செங்கமலம் – செந்தாமரை மலர்; மெய் – உடல்;

மலர்ந்த – மலர்ந்தன; தேம் – தேன்;

குமுதம் – அல்லி மலர்;அயர்ந்த – குவிந்தன;

பொங்குஒளியோன் – மிகுந்த ஒளியை உடைய கதிரவன்;

வீறு – ஒளி.)

இப்பாடலின் பொருள்

பிறர் செல்வத்தைக் கண்டால் பெரியோர் மகிழ்ச்சி அடைவதையும், சிறியோர் பொறாமை கொள்வதையும் அறிவுறுத்தி, மிகுந்த ஒளியை உடையவனாகிய கதிரவன் தோன்றி ஒளி மிகும் காலத்தில், செந்தாமரை மலர்கள் உடல் நெகிழ்ந்து மலர்ந்தன; தேன் பொருந்திய அல்லி மலர்கள் உடல் வாடிக் குவிந்தன.

அணிப் பொருத்தம்

இப்பாடலில் புகழ்மை நிதரிசனம், தீமை நிதரிசனம் ஆகிய இரண்டும் அமைந்துள்ளன.

1) கதிரவனின் ஒளியைக் கண்டு தாமரை மலர்கள் மலர்வது, பிறர் செல்வத்தைக் கண்டால் பெரியோர் மகிழ்ச்சி அடைவர் என்பதைக் காட்டுகிறது. இங்கே தாமரை மலர்களின் மலர்ச்சி ஆகிய பயன், பெரியோரிடத்து மகிழ்ச்சி என்னும் நன்மை புலப்பட நிகழ்வதாகச் சொல்லப்பட்டதால் இது புகழ்மை நிதரிசனம் ஆயிற்று.

2) கதிரவனின் ஒளியைக் கண்டு அல்லி மலர்கள் குவிவது, பிறர் செல்வத்தைக் கண்டால் சிறியோர் பொறாமை கொள்வர் என்பதைக் காட்டுகிறது. இங்கே அல்லி மலர்களின் குவிதல் ஆகிய பயன், சிறியோரிடத்துப் பொறாமை என்னும் தீமை புலப்பட நிகழ்வதாகச் சொல்லப்பட்டதால் இது தீமை நிதரிசனம் ஆயிற்று.

இப்பாடல் புகழ்மை, தீமை ஆகிய இருவகை நிதரிசனத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தாலும் தண்டியலங்கார உரையாசிரியர் இப்பாடலைப் புகழ்மை நிதரிசனுத்துக்கு மட்டுமே எடுத்துக் காட்டியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

6.3.3 தீமை நிதரிசனம் ஒரு பொருளின் பயன் பிறிது ஒரு பொருளுக்குத் தீமை புலப்பட நிகழ்வதாகச் சொல்லுவது தீமை நிதரிசனம் எனப்படும். இதைத் தீப்பொருள் காட்சிஎன்று கூறுவர்.

எடுத்துக்காட்டு:

பெரியோர் உழையும் பிழைசிறிது உண்டாயின்

இருநிலத்துள் யாரும் அறிதல் – தெரிவிக்கும்,

தேக்கும் கடல்உலகில் யாவர்க்கும் தெள்ளமுதம்

வாக்கும் மதிமேல் மறு

(உழையும் – இடத்தும்; பிழை – குற்றம்; இரு – பெரிய;

தேக்குதல் – நிறைதல்; வாக்கும் – பொழியும்; மதி – நிலவு;

மறு – களங்கம். )

இப்பாடலின் பொருள்

நீர் நிறைந்த கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் யாவருக்கும் தெளிவான அமுதத்தைத் தன் கதிர்களால் பொழிகின்ற நிலவின் மேல் உள்ள களங்கமானது, பெரியவர்களிடத்தும் சிறிதளவு குற்றம் உண்டானால், அது இப்பூமியில் உள்ள எல்லோராலும் அறியப்படும் என்பதை விளக்கிக் காட்டும்.

அணிப் பொருத்தம்

இப்பாடலில், நிலவிடம் பொருந்தி உள்ள களங்கமானது, பெரியவர்களிடமும் குற்றம் உண்டு என்ற தீமைப் பயனைத் தெரிவிக்கும் என்று கூறப்பட்டிருப்பதால் இது தீமை நிதரிசனம் ஆயிற்று. இப்பாடல்,

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக்கண் மறுப்போல் உயர்ந்து

( குறள், 957 )

என்னும் திருக்குறளின் கருத்தை ஒட்டி எழுந்ததாகும்.

6.4 புணர்நிலை அணி

தண்டியலங்காரத்தில் சொல் பற்றிய அணிகள் சிலவும் இடம் பெறுகின்றன என்பதைக் கடந்த பாடங்களில் பார்த்தோம். தீவக அணி, பின்வருநிலை அணி ஆகிய அணிகளை நினைவுபடுத்திப் பாருங்கள். சொல் பற்றிய அணிகளில் புணர்நிலை அணியும் ஒன்று.

6.4.1 புணர்நிலை அணியின் இலக்கணம் வினையாலும், பண்பாலும் இரண்டு பொருளுக்கு ஒரு சொல்லே முடிக்கும் சொல்லாகப் பொருந்துமாறு சொல்லுவது புணர்நிலை என்னும் அணி ஆகும்.

வினை, பண்பு எனும்இவை இருபொருட்கு ஒன்றே புணர மொழிவது புணர்நிலை ஆகும்

(தண்டி, 86)

. புணர்நிலை அணியின் வகைகள்

புணர்நிலை அணி வினைப் புணர்நிலை, பண்புப் புணர்நிலை என இரண்டு வகைப்படும்.

6.4.2 வினைப் புணர்நிலை கூறப்படும் இரண்டு பொருளுக்கும் பொதுவான ஒரு வினை பற்றிய சொல்லை முடிக்கும் சொ ல்லாக அமைத்துக் கூறுவது வினைப் புணர்நிலை எனப்படும்.

எடுத்துக்காட்டு:

வேண்டுருவம் கொண்டு, கருகி, வெளிபரந்து,

நீண்ட முகிலுடனே நீர்பொழிந்த, – ஆண்தகையோர் மேவல் விரும்பும் பெருநசையால் மெல்ஆவி

காவல் புரிந்திருந்தோர் கண்

(கருகி – கறுத்து;முகில் – மேகம்; நசை – காதல்; ஆவி – உயிர்.)

இப்பாடலின் பொருள்

ஆண்மை மிக்க தலைவரைச் சேர விரும்பிய பெருங்காதலாலே தம்முடைய மெல்லிய உயிர் போகாதபடி பாதுகாக்கும் தொழிலை மேற்கொண்டிருந்த தலைவியருடைய கண்கள், வேண்டிய உருவத்தைக் கொண்டு, கறுத்த நிறத்தை உடையதாய், வானம் எங்கும் பரந்து நீண்ட முகில்களுடனே நீரைப் பொழிந்தன.

அணிப்பொருத்தம்

இப்பாடலில் கூறப்பட்ட பொருள்கள் இரண்டு. ஒன்று, கண்; மற்றொன்று, முகில். இவ்விரு பொருளுக்கும் பொதுவான ‘நீர் பொழிந்த’ என்னும் வினை பற்றிய ஒரு சொல்லையே முடிக்கும் சொல்லாக அமைத்திருத்தலின் இது, வினைப் புணர்நிலை ஆயிற்று.

6.4.3 பண்புப் புணர்நிலை கூறப்படும் இரண்டு பொருளுக்கும் பொதுவான ஒரு குணம் (பண்பு) பற்றிய சொல்லை முடிக்கும் சொல்லாக அமைத்துக் கூறுவது பண்புப் புணர்நிலை எனப்படும்.

எடுத்துக்காட்டு:

பூங்காவில் புள்ஒடுங்கும் புன்மாலைப் போழ்துடனே, நீங்காத

வெம்மையவாய் நீண்டனவால், – தாம்காதல் வைக்கும்

துணைவர் வரும்அவதி பார்த்து ஆவி

உய்க்கும் தமியார் உயிர்

(புள் -பறவைகள்; அவதி – காலம்;)

இப்பாடலின் பொருள்

தாம் அன்பு வைத்த துணைவர் வரும் காலத்தை எதிர்பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் மடவாருடைய உயிரானது, பூக்கள் நிறைந்த சோலையிலே பறவைகள் எல்லாம் தங்கள் கூடுகளுக்குச் சென்று ஒடுங்கிய புல்லிய மாலைப் பொழுதுடனே, நீங்காத துயரம் செய்து நீண்டு கொண்டிருந்தன.

அணிப்பொருத்தம்

இப்பாடலில் கூறப்பட்ட பொருள்கள் இரண்டு. ஒன்று, தமியார் உயிர்; மற்றொன்று, மாலைப் பொழுது. இவ்விரு பொருளுக்கும் பொதுவான ‘நீண்டன’ என்னும் பண்பு பற்றிய ஒரு சொல்லையே முடிக்கும் சொல்லாக அமைத்திருத்தலின் இது, பண்புப் புணர்நிலை ஆயிற்று.

6.5 பரிவருத்தனை அணி

ஒரு பொருளைக் கொடுத்து, வேறு ஒரு பொருளைக் கைம்மாறாகக் கொள்ளும் செய்தியைச் சொல்லுவது பரிவருத்தனை என்னும் அணி ஆகும்.

பொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே

(தண்டி, 87)

பரிவருத்தனை – ஒன்று கொடுத்து வேறு ஒன்று வாங்குதல். இது மூவகைப்படும் என்று கூறுவாரும் உளர். அவை, கொடுத்தது குறைவாய்க் கொண்டது மிகையாய் இருத்தல், கொடுத்தது மிகையாய்க் கொண்டது குறைவாய் இருத்தல், கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்பன.

எடுத்துக்காட்டு – 1

காமனை வென்றோன் சடைமதியும் கங்கையும்

தாம நிழல்ஒன்று தாம்கொடுத்து, – நாமப்

பருவாள் அரவின் பணமணிகள் தோறும்

உரு ஆயிரம் பெற்றுள

(காமன் – மன்மதன்; காமனை வென்றோன்- சிவபெருமான்;

தாம- தம்முடைய; நிழல்- உருவம், (எதிரொளிக்கும்) பிம்பம்;

நாமம்- அச்சம்; வாள்- ஒளி; பணம் – படம்.)

இப்பாடலின் பொருள்

மன்மதனை வென்ற சிவபெருமானுடைய சடையில் தங்கியிருக்கும் பிறைமதியும், கங்கையும் தம்முடைய நிழல் (உருவம்) ஒன்றை மட்டும் தாம் கொடுத்து, அப்பெருமான் அணிந்த அச்சத்தைத் தரும் பாம்பின் படங்களில் பெரியதாய் இருக்கும் ஒளியினை உடைய மணிகள்தோறும், தத்தம் உருவம் எதிரொளிப்பதால் ஆயிரம் ஆயிரம் உருவங்களைப் பெற்றன.

அணிப்பொருத்தம்

இப்பாடலில், பிறைமதியும், கங்கையும் ஒவ்வோர் உருவம் மட்டுமே கொடுத்து, ஆயிரம் ஆயிரம் உருவங்களைப் பெற்றன எனப் பரிமாறுதல் கூறப்பட்டிருத்தலின் இது பரிவரித்தனை அணி ஆயிற்று. இது, கொடுத்தது குறைவாய்க் கொண்டது மிகையாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவரித்தனை அணி.

இப்பாடல் மட்டுமே பரிவருத்தனை அணிக்குத் தண்டியலங்கார உரையில் சான்றாகக் காட்டப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இவ்வணி அமைந்திலங்குகிறது. சான்றாகத் திருக்குறளில் இருந்து ஒரு குறள் வழிநின்று காண்போம்.

எடுத்துக்காட்டு – 2

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து

(குறள், 1183)

இது, தலைவன் தன்னைப் பிரிந்தமையால் பசலையுற்று வருந்திய தலைவி புலம்பிக் கூறியதாக அமைந்தது.

இப்பாடலின் பொருள்

காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாகக் கொடுத்துவிட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

அணிப்பொருத்தம்

இப்பாடலில் தலைவன் தலைவிக்குக் கொடுத்தனவும், அவளிடம் இருந்து கொண்டனவும் சமமாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இது, கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவருத்தனை அணி ஆகும்.

6.6 வாழ்த்து அணி

உலகில் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கூறுவதும் பாராட்டிக் கூறுவதும் இயல்பு. இவ்வாறு கூறுவதில் கூறுவார்க்கும் கேட்பார்க்கும் மகிழ்ச்சி சிறக்கிறது. மகிழ்ச்சி நிறைந்த உலகைக் காண்பதே கவிஞர்களின் நோக்கம். எனவே வாழ்த்திக் கூறும் மகிழ்ச்சிப் பொருளையே தனி ஓர் அணியாகத் தண்டி ஆசிரியர் கூறினார் எனலாம்.

6.6.1 வாழ்த்து அணியின் இலக்கணம் இன்ன தன்மையை உடையார்க்கு இன்னது நிகழ்க என்று கவிஞர் தாம் கருதியதைச் சிறப்பித்துக் கூறுதல் வாழ்த்து என்னும் அணி ஆகும்.

இன்னார்க்கு இன்னது இயைக என்றுதாம்

முன்னியது கிளத்தல் வாழ்த்துஎன மொழிப

(தண்டி, 88)

(முன்னியது – கருதியது;

கிளத்தல் – விதந்து கூறுதல் அஃதாவது சிறப்பித்துக் கூறுதல்.)

எடுத்துக்காட்டு

மூவாத் தமிழ்பயந்த முன்நூல் முனிவாழி!

ஆவாழி! வாழி அருமறையோர்! – காவிரிநாட்டு

அண்ணல் அனபாயன் வாழி! அவன்குடைக்கீழ்

மண்உலகில் வாழி மழை!

(மூவா – அழியாத; முன் நூல் – பழைமையான நூல்கள்;

முனி – அகத்திய முனிவர்; ஆ – பசு; அண்ணல் – தலைவன்.)

இப்பாடலின் பொருள்

அழியாத தமிழ் தோற்றுவித்த பழைமையான நூல்களைக் கற்றுணர்ந்த அகத்திய முனிவர் வாழ்க! பசுக்கள் வாழ்க! அரிய வேதங்களைக் (தமிழ் மறைகளைக்) கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்க! காவிரியாறு பாய்கின்ற சோழ நாட்டுத் தலைவனாகிய அனபாயன் வாழ்க! அவனுடைய அரசாட்சிக்கு உட்பட்ட இவ்வுலகில் மழை வாழ்க!

அணிப்பொருத்தம்

இப்பாடலில், அனபாய சோழன் வாழ்க எனவும், அவனுடைய நாட்டிற்கு இன்றியமையாதனவும் நன்மை பயப்பனவும் ஆகிய அகத்திய முனிவர், பசுக்கள், அந்தணர்கள், மழை என்ற அனைத்தும் வாழ்க எனவும் வாழ்த்திக் கூறியமையால் இது வாழ்த்து அணி ஆயிற்று.

6.7 சங்கீரண அணி

ஒரு பாடலில் ஓர் அணி மட்டுமே பயின்று வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பெரும்பாலும் ஓர் அணி அமையுமாறே பாடல் கவிஞர்களால் பாடப்படுகிறது. சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் அமையுமாறும் கவிஞர்கள் பாடலைப் புனைவது உண்டு. இவ்வாறு ஒரு பாடலில் பல அணிகள் கலந்து வரும்போது அப்பாடலின் பொருள், அழகு மிக்குத் திகழக் காணலாம். இதனால் பல அணிகள் கலந்து வருவதையே தனி ஓர் அணியாகக் கூறினர் அணி இலக்கண நூலார்.

6.7.1 சங்கீரண அணியின் இலக்கணம் மேலே கூறப்பட்ட தன்மை முதலான அணிகள் பலவும் தம்முள்ளே கலந்து ஓரிடத்திலே வருமாறு சொல்லப்படுவது சங்கீரணம் (கலப்பு) அணி ஆகும்.

மொழியப் பட்ட அணிபல தம்முள்

தழுவ உரைப்பது சங்கீ ரணமே

(தண்டி, 89)

சங்கீரணம் என்பதற்குக் கலப்பு என்று பொருள்.

(மொழியப்பட்ட அணி – தன்மை அணி முதல் வாழ்த்து அணி வரை கூறப்பட்ட முப்பத்து மூன்று அணிகள்.)

எடுத்துக்காட்டு

தண்துறைநீர் நின்ற தவத்தால் அளிமருவு

புண்டரிகம் நின்வதனம் போன்றதால்; – உண்டோ?

பயின்றார் உளம்பருகும் பால்மொழியாய்! பார்மேல்

முயன்றால் முடியாப் பொருள்

(அளி – வண்டு, கருணை; புண்டரிகம் – தாமரை;

வதனம் – முகம்; பார் – உலகம்.)

இப்பாடலின் பொருள்

அணைந்தாருடைய உள்ளத்தை வவ்வும் பால் போன்ற இனிய சொல்லை உடைய தலைவியே! குளிர்ந்த நீர்த் துறையிலே நின்று செய்த தவத்தினால் வண்டுகள் பொருந்திய தாமரை, கருணை பொருந்திய நின் முகம் போன்ற தோற்றம் உடையதாயிற்று. இவ்வுலகில் முயற்சி செய்தால் அடைய முடியாத பொருள் எதுவும் இல்லை.

அணிப்பொருத்தம்

இப்பாடலில் தற்குறிப்பேற்ற அணி, ஏது அணி, சிலேடை அணி, உவமை அணி, வேற்றுப்பொருள் வைப்பு அணி, சுவை அணி என்னும் ஆறு அணிகள் கலந்து வந்தள்ளன.

1) ‘தண்துறைநீர் நின்ற தவம்’ என்பதில் தற்குறிப்பேற்ற அணி அமைந்துள்ளது. தாமரை நீரின் மேல் மலர்ந்து நிற்பது இயல்பாக நிகழ்கின்ற ஒன்று. ஆனால் கவிஞர் தலைவியின் முகத்தைப் போலத் தோற்றம் பெறுவதற்காகத் தாமரை தண்ணீரில் நின்று தவம் செய்தது போல உள்ளது எனத் தம்முடைய குறிப்பை ஏற்றிக் கூறினமையால் தற்குறிப்பேற்றம் ஆயிற்று.

2) ‘தவத்தால்’ என்பதில் ஏது அணி அமைந்துள்ளது. ஏதேனும் ஒரு பொருள் திறத்து இதனால் இது நிகழ்ந்தது என்று காரணத்தைச் சிறப்பாக எடுத்துச் சொல்வது ஏது என்னும் அணி ஆகும். தாமரை மலரானது நீரில் நின்று செய்த தவத்தாலேயே தலைவியின் முகத்தைப் போன்ற தோற்றம் பெற்றது என்று கூறப்பட்டதால் ஏது அணி ஆயிற்று.

3) ‘அளிமருவு’ என்பதில்     சிலேடை அணி அமைந்துள்ளது. இத்தொடர் தாமரைக்கும் தலைவிக்கும் சிலேடையாக அமைக்கப்பட்டுள்ளது. இத்தொடரானது தாமரையின் மேல் செல்லுங்கால் ‘வண்டுகள் பொருந்திய’ என்றும், முகத்தின் மேல் செல்லுங்கால், ‘கருணை பொருந்திய’ என்றும் இருவகைப் பொருள்படும். (அளி – வண்டு, கருணை.)

4) ‘புண்டரிகம் நின்வதனம் போன்றது’ என்பதில் உவமை அணி அமைந்துள்ளது. இது பண்பு உவமை ஆகும்.

5) ‘பார்மேல் முயன்றால் முடியாப் பொருள் உண்டோ?’ என்பதில் வேற்றுப்பொருள் வைப்பு அணி அமைந்துள்ளது. இப்பாடலில், ‘தாமரை நீரிலே நின்று தவம் செய்து தலைவியின் முகத்தைப் போன்ற தோற்றத்தைப் பெற்றது’ என்று கூறியிருப்பது சிறப்புப் பொருள் ஆகும். இச் சிறப்புப் பொருளை, ‘உலகத்தில் முயற்சி செய்தால் அடைய முடியாத பொருள் எதுவும் இல்லை’ என்ற பொதுப்பொருள் கொண்டு முடித்துக் கூறியமையால் வேற்றுப்பொருள் வைப்பு அணி ஆயிற்று.

6) ‘பயின்றார் உளம்பருகும் பால்மொழியாய்’ என்பதில் சுவை அணி அமைந்துள்ளது.

இவ்வாறு இப்பாடலில் ஆறு அணிகள் கலந்து வந்திருப்பதால் இது சங்கீரண அல்லது கலப்பு அணி ஆயிற்று.

6.8 பாவிக அணி

தண்டியலங்காரம் பொருளணியியலில் கூறப்படும் கடைசி அணி, முப்பத்தைந்தாவது அணி இதுவாகும். இதுகாறும் நாம் பார்த்த முப்பத்து நான்கு அணிகளும் தனிநிலைச் செய்யுளில் (ஒரு தனிப்பாடலில்) அமையுமாறு தண்டி ஆசிரியரால் கூறப்பட்டவை ஆகும். பாவிக அணியோ, தொடர்நிலைச் செய்யுள் என்று கூறப்படும் ஒரு பெரிய காப்பியம் முழுவதும் ஊடாடி நிற்கும் கருத்தையோ, நீதியையோ பற்றியதாகக் கூறப்படுகிறது.

6.8.1 பாவிக அணியின் இலக்கணம் பாவிகம் என்று சொல்லப்படுவது, காப்பியமாகிய தொடர்நிலைச் செய்யுளில் கவிஞரால் கருதிச் செய்யப்படுவதோர் குணம் ஆகும். இதனைத் தண்டி ஆசிரியர்,

பாவிகம் என்பது காப்பியப் பண்பே

(தண்டி, 91)

என்ற நூற்பாவால் கூறுகிறார்.

கவிஞரால் கருதிக் கூறப்படும் காப்பியப் பண்பு, தொடர்நிலைச் செய்யுள் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவது அல்லாமல், தனித்து ஒரு பாட்டால் நோக்கிக் கொள்ளப் புலப்படாதது என்று தண்டியலங்கார உரை இவ்வணி அமையும் இயல்பு பற்றிக் குறிப்பிடுகிறது. எனவே ஏனைய முப்பத்து நான்கு அணிகளும் ஒரு பாடலில் கொள்ளப்படும் என்பது புலனாகும்.

தண்டியலங்கார உரையில் பாவிக அணிக்குச் சான்றாக, இராமாயணம், பாரதம், அரிச்சந்திர புராணம் ஆகிய காப்பியங்கள் முழுவதும் வைத்து நோக்கிக் கொள்ளப்படும் பண்புகள் மிக அழகாகவும் சுருக்கமாகவும் கூறப்படுகின்றன. அவை வருமாறு:

பிறன்இல் விழைவோர் கிளையொடும் கெடுப;

பொறையில் சிறந்த கவசம் இல்லை;

வாய்மையில் கடியது ஓர் வாளி இல்லை.

‘பிறன்இல் விழைவோர் கிளையொடும் கெடுப’ என்பதற்குப் பொருள், ‘பிறன் மனைவியை விரும்புவோர் சுற்றத்தொடும் கெடுவர்’ என்பதாகும். இஃது இராமாயணத்தால் உணரப்படும்.

‘பொறையில் சிறந்த கவசம் இல்லை’ என்பதற்குப் பொருள், ‘பொறுமையைக் காட்டிலும் சிறப்புற்ற பாதுகாப்பு இல்லை’ என்பதாகும். இது பாரதத்தால் உணரப்படும்.

‘வாய்மையில் கடியது ஓர் வாளி இல்லை’ என்பதற்குப் பொருள், ‘வாய்மையைக் காட்டிலும் துன்பத்தை அழிக்கத்தக்க கூர்மை உடையதோர் அம்பு இல்லை’ என்பதாகும். இஃது அரிச்சந்திர புராணத்தால் உணரப்படும்.

தண்டமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் ஊடாடி நிற்கும் காப்பியப் பண்புகளை இளங்கோவடிகள் மிக அழகாகப் பதிகத்தில்,

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்

என்று கூறுகிறார். பாவிக அணிக்கு இளங்கோவடிகள் கூறுவதும் நல்ல சான்றாக ஆன்றோரால் கொள்ளப்படுகின்றது.

6.9 தொகுப்புரை

இதுகாறும் இப்பாடத்தில் மாறுபடு புகழ்நிலை அணி, புகழாப் புகழ்ச்சி அணி, நிதரிசன அணி, புணர்நிலை அணி, பரிவருத்தனை அணி, வாழ்த்து அணி, சங்கீரண அணி, பாவிக அணி ஆகிய எட்டு அணிகளைப் பற்றி விளக்கமாகப் பார்த்தோம். கவிஞர், ஒன்றைப் பழித்தற்கு வேறு ஒன்றைப் புகழ்ந்து உரைப்பது மாறுபடு புகழ்நிலை அணி ஆகும். ஒன்றைப் பழித்துக் கூறுவது, பிறிது ஒன்றற்குப் புகழாய்த் தோன்றுவது புகழாப் புகழ்ச்சி அணி ஆகும். ஒரு பொருளின்கண் நிகழும் நிகழ்ச்சியின் பயன், பிறிது ஒரு பொருளுக்கு நன்மையோ தீமையோ புலப்பட நிகழ்வதாகச் சொல்லுவது நிதரிசன அணி ஆகும். பாடலில் கூறப்படும் இரண்டு பொருளுக்கும் பொதுவான ஒரு வினை பற்றிய சொல்லையோ அல்லது பண்பு பற்றிய சொல்லையோ முடிக்கும் சொல்லாக அமைத்துக் கூறுவது புணர்நிலை அணி எனப்படும். ஒரு பொருளைக் கொடுத்து, வேறு ஒரு பொருளைக் கைம்மாறாகக் கொள்ளும் செய்தியைக் குறிப்பிடுவது பரிவருத்தனை அணி ஆகும். வாழ்க, வாழ்க என்று வாழ்த்திப் பாடுதலைப் பொருண்மையாகக் கொண்டது வாழ்த்து அணி. பல வகையான அணிகளும் கலந்து வருமாறு பாடுவது சங்கீரண அணி ஆகும். தனமை முதல் வாழ்த்து வரை உள்ள முப்பத்து நான்கு அணிகளும் தனிநிலைச்     செய்யுளில் அமைத்துப் பாடப்படுவன ஆகும். பொருளணியியலின் இறுதி அணியாகக் கூறப்படும் பாவிக அணியோ, தொடர்நிலைச் செய்யுள் என்று கூறப்படும் ஒரு பெரிய காப்பியம் முழுவதும் ஊடாடி நிற்கும் கருத்தைப் பற்றியதாகக் கூறப்படுகிறது. இராமாயணம், பாரதம், அரிச்சந்திர புராணம் மற்றும் சிலப்பதிகாரம் ஆகிய கதை தழுவிய காப்பிய நூல்களில் பாவிக அணி சிறப்பாக அமைந்துள்ளது. இவை யாவும் இப்பாடத்தின் வாயிலாக அறியப்பட்டன.