அவை போன்ற காரணங்களால் எழுத்தின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டு அந்த அடிப்படையில் நூல்கள் தமிழில் வெளிவருகின்றன. தமிழ்மொழி ஒரு வளரும் மொழி (developing language) என்று கூறும்போது, அதில் மாற்றங்கள் மேற்கொள்ளப் படுவதால் இன்றளவும் வெளிவரும் நூல்களில் எழுத்தின் எண்ணிக்கை, ஒவ்வொன்றிலும் மாறுபட்டுக் காணப்படுகின்றது.
அவற்றோடு மட்டும் அல்லாமல் தமிழில் பல்துறை நூல்கள் பெருகி வருகின்றன. மொழியைக் கல்விமொழி என்றும், ஆட்சிமொழி என்றும், நீதிமொழி என்றும் பிரித்துப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற காரணங்களாலும் எழுத்தின் எண்ணிக்கையில் வேறுபாடு ஏற்படுகிறது எனலாம்.
தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை வரலாற்றினை மொழியியல் அடிப்படையில் நோக்கும்போது தமிழின் ஒலியன்கள் (phonemes) மற்றும் மாற்று ஒலி (allophones) ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது.
சான்று :
உயிர் (Vowel)
‘இ’ – மேல் முன் உயிர் (high front vowel)
‘அ’ – கீழ் பின் உயிர் (low back vowel)
இவ்வொலிகள் உயிர்க்குறில்கள் (short vowels) ஆகும். இவைகளுக்கு இணையான உயிர் நெடில்களை long vowels என்பர். மொழியியலில் ஐந்து உயிர்க்குறில்கள், இவைகளுக்கு இணையான நெடில்களை ஒரே ஒலியன் ஆகக் கொண்டு மீக்கூற்று ஒலியன் (suprasegmental phoneme) என்று அழைப்பது வழக்கம்.
சான்று :
கப்பல்
மகன்
தங்கம்
இங்கு இடம்பெறும் க என்னும் ஒலியை உச்சரிக்கும் போது, சொல்லுக்கு ஏற்றபடி அதன் மாற்றுத் தன்மையை நம்மால் உணரமுடிகிறது.
சான்று :
உயிர் எழுத்துகள் (Vowels)
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்பன.
மெய் எழுத்துகள் (consonants)
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்பனவாகும். ஆய்தம் என்ற எழுத்தைச் சார்பு எழுத்துகளில் ஒன்றாகச் சுட்டுகிறது தொல்காப்பியம்.
சான்று :
அவைதாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன
(தொல்.எழுத்து, 2)b>
உயிர் எழுத்து அட்டவணை (Vowel chart)
குறில் (short) நெடில் (long)
மேல் முன் உயிர் இ ஈ
இடை முன் உயிர் எ ஏ
மேல் பின் உயிர் உ ஊ
இடை பின் உயிர் ஒ ஓ
கடை பின் உயிர் அ ஆ
ஈருயிர் (diphthong)
இதழ் குவியா உயிர் ஐ
இதழ் குவிந்த உயிர் ஒள
மெய் எழுத்து அட்டவணை (consonant chart)
கல்வெட்டு எழுத்துகள்
ஸ் – அண்ண – குழி உரசொலி (/s/ palatal sibilant)
ஷ் – வளைநா – குழி உரசொலி (//retroflex sibilant)
ஜ் – அண்ண – அடைப்பொலி (/j/ palatal stop)
ஹ் – பின் அண்ண – உடன்படுத்தொலி (/h/velar glide)
க்ஷ்வும் ஸ்ரீயும் இரண்டு ஒலிகளின் கூட்டொலியாகும்.
சான்று :
திருப்புகழ்
ஷ் குமர முஷிக முந்திய வைங்கர (திருசெந்தில் : 13)
ஜ் உபயகுல தீபதுங்க விருது கவிராஜசிங்க
(திருப்பழநி மாலை : 19)
ஹ் ஜெய ஜெய ஹர ஹர (திருச்செந்தூர் : 427)
க்ஷ் தெளிய மோக்ஷத்தை (குமரக்கோட்டம் : 52)
ஸ்ரீ பங்கய ஸ்ரீ பாத நூபுரி (திருச்செந்தூர் : 131)
பின்பு கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவ சுவாமிகளும் இலக்கண எழுத்துகளோடு கல்வெட்டு எழுத்துகளையும் பயன்படுத்தியுள்ளார். இங்கு ஸ் என்ற கல்வெட்டு எழுத்தும் பயன்பாட்டுக்கு வந்தது தெரிய வந்துள்ளது.
சான்று :
தாயுமான சுவாமிகள் பனுவல் திரட்டு
ஸ் – சண்மத ஸ்தாபனமும் (5-6)
இவ்வெழுத்துகளின் எண்ணிக்கை காலந்தோறும் வேறுபட்டு வந்ததைப் பற்றி அறிய மொழியின் பல்வேறு சான்றுகளை ஒப்பு நோக்க வேண்டும்.
அவையாவன :
1. எழுத்துக்கும் மொழிக்கும் உள்ள உறவு
2. எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள உறவு
3. தமிழின் ஒலி வளம்
4. எழுத்தின் எண்ணிக்கையும் – பயன்படுத்துவோரும்
இதுபோல் கி.பி.9ஆம், 10ஆம் நூற்றாண்டுகளில் வடமொழி தென்னாட்டில் கிரந்த (கல்வெட்டு) எழுத்துகளாலும், வடநாட்டில் நாகரி எழுத்துகளாலும் மராத்தி மொழி கி.பி.19ஆம் நூற்றாண்டு வரை மோடி எழுத்துகளாலும் எழுதப்பட்டு வந்தது. ரோமன் மொழி எழுத்துகள் (Roman transcription) முதன் முதலில் இலத்தீன் மொழிக்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய எல்லாக் கண்டங்களிலும் ரோமன் மொழி எழுத்துகள், பல மொழிகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றன எனலாம். ஆகவே, மொழிக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு இடுகுறி என்பதும், ஒரு மொழியைப் பலவித எழுத்துகளால் எழுதுவதும், ஒரு எழுத்தைப் பல மொழிகளுக்குப் பயன்படுத்துவதும் இயல்பானது என்பதும் தெளிவு.
உதாரணமாக, ஆங்கில எழுத்தில் c என்பது தனியாகச் சொல்லும்போது (Si) என்றும், அதாவது (s) என்ற மதிப்புப் பெறுகிறது. cat என்ற சொல்லில் k என்றும், cent என்ற சொல்லில் s என்றும் acknowledge என்ற சொல்லில் வெற்று ஒலியாகவும் (silent) ஒலிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட இரண்டு வகை உச்சரிப்புப் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். தனிப்பட்ட முறையில் எழுத்தை உச்சரிப்பதைத் தெரிந்து வேறு இசைத்தல் என்றும் சொற்களின் உறுப்பாக வரும்போது உச்சரிப்பதை மொழிப்படுத்து இசைத்தல் என்றும் வேறுபடுத்திவிட்டுத் தமிழில் இரண்டு வகை உச்சரிப்புக்கும் வேறுபாடு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினும்
எழுத்தியல் திரியா என்மனார் புலவர்
(தொல்.எழுத்து, 53)
இந்த உண்மை அவர் கால மொழிக்கே பொருந்தும். ஆனால் அவர் காலத்திற்குப் பிறகு மொழியில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவால் இன்று பல எழுத்துகள் வெவ்வேறு உச்சரிப்பை உடையனவாக அமைந்துள்ளன. உதாரணமாக, ந என்பதைத் தனியே கூறும்போது ன (na) ஆகவும், பந்து என்ற சொல்லில் ந் (nt) ஆகவும் உச்சரிக்கிறோம். எனவே, தமிழ் எழுத்துகளின் பல உச்சரிப்புகளையும் ஆராய்ந்து எழுத்து, ஒலி ஆகிய இரண்டுக்கும் உள்ள உறவைப் புரிந்து கொள்ளலாம்.
இன்னும் ஒரு வகையான உதாரணம், த என்பது ஒலிப்பிலா வல்லொலியாக (voiceless stop /t/) ஒலிக்கப்படுவதே பெரும்பான்மை.
சான்று :
தாய்
தந்தை
தொண்டு
துன்பம்
ஆகிய சொற்களில் இவ்வாறு உச்சரிக்கப்படுகின்றது. ஆனால் தோசை போன்ற வேறு சில சொற்களில் ஒலிப்புடை ஒலியாக (voiceth stop /d/) உச்சரிக்கப்படுகிறது. இவ்வுச்சரிப்பு வட்டார வழக்கினாலோ (regional dialect) அல்லது ஒரு குறிப்பிட்ட ஜாதி வழக்காலோ (caste dialect) ஏற்பட்டது அல்ல. பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிப்புடை ஒலியாக ‘தோசை’ என்ற சொல்லை உச்சரிப்பதைக் காணமுடிகிறது. இது போன்ற காரணங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக இருக்குமாயின் வெவ்வேறு உச்சரிப்பு உள்ள ஒலிகளுக்குத் தனியாக ஒரு எழுத்துத் தேவைப்படுகிறது. இது எழுத்தின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட வழிவகுக்கிறது எனலாம்.
சான்று :
g
-
gate
f
-
fast
b
-
bun
d
-
doctor
இன்றைய நிலையில் இச்சொற்களில் வரும் ஒலிகள் சொல்லுக்கு முதலிலும் இடையிலும் வந்து அவை இயல்பாக இயங்க ஆரம்பித்து விட்டன. இதனையே மொழியியலின்படி கூறவேண்டும் என்றால் வல்லொலிகளின் (stop sound) மாற்றொலியாக (allophone) இருந்தவை இன்று தனி ஒலியன்களாக (separate phoneme) அமைந்து விட்டன. எனவேதான் இன்று தனித்தனி எழுத்துகள் அமைக்க வேண்டியது அவசியமாகிறது. இவைகளுக்கு ஒலி உறழ்ச்சியும் அல்லது கட்டிலா மாற்றமும் (free variation) ஒரு காரணம் ஆகும்.
சான்று :
மேஜை - மேசை
ஜன்னல் - சன்னல்
ஸர்ப்பம் - சர்ப்பம்
போன்ற சொற்களில் உறழ்ச்சி எழுத்து நிலையில் மட்டுமே தவிர உச்சரிப்பில் வேறுபாடு இல்லை எனலாம். இந்த இரண்டு உச்சரிப்பும் ஒருவரிடமே இருப்பதில்லை. சிலர் ஜகரத்தை சகரமாக உச்சரிக்கிறார்கள். பெரும்பான்மையான படித்த நகர்ப்புற மக்கள் பேச்சில் ஜகரமும், படிக்காத கிராமப்புற மக்களிடையே சகரமும் வழக்கிலுள்ளன.
அதனால் மொழித்தூய்மை விளைவால் இரண்டு விதமாகவும் எழுதப்படுகின்றன. அதே சமயத்தில் சிலர் சகரமாக எழுதிவிட்டு ஜகரமாகவும் சொல்வதும் உண்டு.
சான்று :
ஜாதி – சாதி
ஜாதகம் - சாதகம்
ஜோதி - சோதி
இன்னும் பெரும்பாலோருடைய பேச்சில் ‘ஜவுளி’, ‘ஜல்லி’ போன்ற சொற்கள் ஜ ஒலியுடனே ஒலிக்கப்படுகின்றன. உண்மையில் எங்கு ஜ வரவேண்டும் என்று அறிந்தால்தான் அதைச் சகரமாக மாற்றி எழுத முடியும். ரகரமும் றகரமும் சில கிளை மொழிகளில் (regional dialect) வேறாகவும், ஏனைய கிளைமொழிகளில் ஒன்றாக உச்சரிக்கப்பட்டாலும், எழுத்து மொழியில் இரண்டு வடிவங்களையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். அது போலவே ச/ஜ வேறுபடுகிறது எனலாம்.
சான்று :
1.ஜீன் லாரன்ஸ் - தஞ்சை மாவட்டம்
ஜீன் லாறன்ஸ் - கன்னியாகுமரி மாவட்டம்
2.சீனி, ஜீனி
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
(தொல். சொல். 401)
என்ற நூற்பா அமைந்துள்ளது. சுருங்கச் சொன்னால் செம்மையாக்க வாதிகள் என்ற பெயருக்கு ஏற்ப, இவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள காலத்தைப் புறக்கணித்துப் பழைய காலமே தூய்மையையும், தனித்தன்மையையும் பாதுகாத்தது என்று பாராட்டி, அதையே இன்றைய தமிழுக்குரிய முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ள விழைகிறார்கள். இவர்களைப் போன்றவர்களால்தான் எழுத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தப்படுகிறது எனலாம்.
அவையாவன:
ஸ் – ஸ்பெஷல், டாக்ஸி, நாஸ்திகர்
ஷ் – வருஷம், விஷமம், கஷ்டம், கிருஷ்ணா
ஹ் – ஹோட்டல், ஹால், அக்ரஹாரம்
ஜ் – நிஜம், மேஜை, பூஜை, காமராஜ்
அதே சமயத்தில் ஷ், ஸ்ரீ போன்ற எழுத்துகள் அருகியே காணப்படுகின்றன. இவ்விலக்கியவாதிகள் இன்றைய பேச்சு மொழியில் வழங்கும் எல்லோருக்கும் பழக்கப்பட்ட சொற்களாகிய ‘நிமிடம், டாக்சி’ போன்றவைகளைக் கல்வெட்டு எழுத்துகளில் (நிமிஷம், டாக்ஸி) எழுதாமல் இலக்கண எழுத்துகளைக் கொண்டும் எழுதி வருகிறார்கள். மேலே சுட்டப்பட்டதுபோல் தமிழ் ஆசிரியராகவும், படைப்பிலக்கியவாதியாகவும் இருந்த மு.வரதராசனார் எழுத்துகளைக் கையாண்ட முறை அறிந்து கொள்ளத் தக்கது. அவர் பல துறைகளில் நூல்களை எழுதியுள்ளார். அவற்றை எழுதும்போது கல்வெட்டு எழுத்துகளைக் கையாண்டுள்ளார். அதே சமயம் போலீசுக்காரர், அலவன்சு, பிரான்சு, பூட்சு, ஆசுபத்திரி என்று இலக்கண எழுத்துகளைக் கொண்டும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல்வாதிகளில் பெரும்பாலோரின் எழுத்துகளில் (நூல்கள்) ஸ், ஷ், ஹ், ஜ் போன்ற கல்வெட்டு எழுத்துகளைக் காணலாம். இன்றைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி (1973) எழுதிய இனியவை இருபது என்ற அவரின் பயண நூலில் அவ்வெழுத்துகளைத் தவிர்த்து, மாறாக இலக்கண எழுத்துகளைக் கொண்டு எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கன:
செர்மன், துனிசியா, புரூட்டசா, கிளோடி, மார்க்கசு அரிலீயசு, ஆல்ப்சு போன்ற சொற்களாகும்.
ம.பொ. சிவஞானம் போன்றோர் கல்வெட்டு எழுத்துகளைப் பயன்படுத்தி நயத்தையும் பொருளையும் காப்பதே அறிவுடைமை ஆகும் என்று விளக்கியுள்ளனர்.
மொழியியலார் எல்லோரும் கல்வெட்டு எழுத்துகள் அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள்.
சட்டத்துறை நூல்களில் (1872ஆம் ஆண்டு இந்திய சாட்சியச் சட்டம் – தமிழ் மொழிபெயர்ப்பு) கல்வெட்டு எழுத்துகள் வந்துள்ளன. எவ்வளவுதான் தமிழில் உள்ள இலக்கண எழுத்துகளைக் கொண்டு மொழிபெயர்த்தாலும் சட்டத்தோடு நெருங்கிய தொடர்புகொண்டு வாழும் மக்களின் மனத்தில் குழப்பம் உண்டாகும் என்ற நோக்கத்தோடு மொழிபெயர்ப்பில் கல்வெட்டு எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன.
இவற்றை எல்லாம் நோக்கும்போது படைப்பிலக்கியத் தமிழில் மட்டுமன்றி, பல்வேறு பிற துறைகளிலும் உள்ள பெரும்பாலோர் கல்வெட்டு எழுத்துகளைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது.
சான்று:
ஸ்ரீ ராமேஸ்வரம்
ஸ்ரீ ஆதிசங்கரர்
ஸ்ரீல ஸ்ரீ சுவாமிகள்
இது போன்று ரோமன் எழுத்து வடிவத்தையும் (Roman transcription) பயன்படுத்தலாம் என்று கஸ்தூரிரங்கன் போன்றோர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
துக்ளக் என்ற அரசியல் வார இதழ் f என்ற எழுத்தைப் பயன்படுத்தி வந்தது.
சான்று:
fபைட் – (fight)
இன்னும் சிலர் சில குறியீடுகளைக் கையாண்டு புதிய ஒலிகளைக் குறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாணிக்கவேல் நாயக்கர் எழுத்து எண்ணிக்கையைக் கூட்டாமல் ஆய்தத்தையும் வல்லெழுத்தையும் சேர்த்து உரசொலியைக் குறிக்க வழிவகுத்தார் என்று கூறுவார்கள் (சான்று கிடைக்கவில்லை), மற்றும் இன்றைய அளவில் ஸ், ஷ், ஜ், ஹ், க்ஷ், ஸ்ரீ போன்ற எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அதே சமயம் ‘g, d, b, f’ போன்ற எழுத்துகளின் ஒலிகளைக் குறிக்கச் சிற்ப எழுத்துகளும் தேவைப்படுகின்றன. f என்பதைக் குறிக்க ஆய்தத்தையும் பகரத்தையும் இணைத்து எழுதுகின்ற வழக்கமும் இருக்கிறது.
எடுத்துக்காட்டாக,
ஃபன் (fun)
ஃபிளாட் (flat)
ஃபான் (fan)
ஃபார்ம் (farm)
ஃப்ளைட் (flight) முதலியன.
உலக மொழிகளில் உள்ள பல்வேறு ஒலிகளையும் குறிக்கத் தக்க வகையில் தமிழ் எழுத்துகளையே அடிப்படையாகக் கொண்டு மேலும் சில எழுத்துகளை உருவாக்கிக் கொள்வது தமிழ் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் உதவியாகவே இருக்கும் என்பர்.
“தொல்காப்பியர் கட்டின அரிச்சுவடி போதா வண்ணமாக நமது பாஷை வளர்ச்சி பெற்றவுடனே நமது முன்னோர்கள் மேற்காட்டிய எழுத்துகளைச் (ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ) சேர்த்தார்கள். நாமும் அப்படியே நமக்கு இக்காலத்தில் ஏற்படும் உச்சரிப்புக் கஷ்டங்களை நிவிருத்தி செய்து கொள்வதற்குக் கிரந்த எழுத்துகளைச் சேர்க்கலாமென்று சில பெரியோர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதைக் காட்டிலும் அடையாளங்கள் போடுவது சுலபமான வழி. இப்பொழுதுள்ள அரிச்சுவடியிலே பழகிய தமிழருக்கு மேற்படி அடையாளங்களால் எவ்வித சங்கடமும் நேரிடாது. தப்பாகவோ, சரியாகவோ வழக்கம்போல் வாசித்துக் கொண்டு போவதை அடையாளங்கள் தடுக்கமாட்டா. கிரந்த எழுத்துகளைக் கொண்டு சேர்த்தால் பாதி படிக்கும் போதே நிறுத்திவிட நேரிடும்.”
- (பாரதியார் -1915)
அதுபோல மு.வரதராசனாரும் தமிழ் மக்கள் பேசும் பேச்சைத் தமிழிலே எழுதிக் காட்டுவதற்குத் தமிழ் எழுத்துகள் போதவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்து 1974-இல் நடராஜன் என்பவர் தமிழில் 15 வல்லொலிகள் உள்ளன என்று சுட்டிக்காட்டிவிட்டு அவற்றைக் குறிக்க 15 குறியீடுகள் உண்டாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவர்களைப் புதுமைவாதிகளில் இலட்சியவாதிகள் எனலாம்.
அட்டவணை
இவ்வாறாக, தமிழின் எழுத்து எண்ணிக்கையில் வெவ்வேறு கால கட்டங்களிலும் மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளது. அதோடு எழுத்தின் எண்ணிக்கையைப் பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தி அதில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
இபிறமொழிச் சொல்லைத் ‘தத்து’ எடுத்து ஆளுவதால் மொழியின் அடிப்படையினையே அது சிதைக்கும். அது எழுத்துக் குழப்பம் தலை எடுப்பதற்கும் இடமாகிறது. அதோடு கடன் வாங்க ஆரம்பித்தால் எல்லையில்லாது போய்விடும். எழுத்துகளைப் பெருக்கிக் கொண்டுபோனால் எங்கு கொண்டுபோய் நிறுத்துவது என்று புரியாமல் போய்விடும். இவற்றை மனத்தில் கொண்டு எழுத்தின் தொகையைக் கையாள வேண்டும். ஆங்கில மொழியில் எவ்வளவோ கடன் வாங்கிய சொற்கள் இருந்தாலும் அதன் எழுத்துத் தொகையில் எவ்வித மாற்றமும் இன்றி நெடுங்காலமாக இருந்து வருகிறது. மொழி காலந்தோறும் மாறிக்கொண்டே வரும். எழுத்து மொழியை அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வழக்கம் உலகில் பல மொழிகளில் கிடையாது. ஆனால் சமுதாயத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் போது புதுநிலையாக்கம் செய்து எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பதும் எழுத்துகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது பற்றி எண்ணுவதும் இயற்கையானது.
பாடம் - 2
பன்னீர் உயிரும் மொழிமுதல் ஆகும்
(மொழி = சொல்) (தொல்.எழுத்து.59)
‘அடை, ஆடை, இடை, ஈயம்’ போன்ற சொற்களின் மூலம் அவ்வுயிர் எழுத்துகள் மொழி முதலில் வருகின்றன.
உயிர்மெய் எழுத்துகள் மொழிமுதலில் இடம் பெறும். ஆனால் தனி மெய் எழுத்துகள் (consonants) மொழி முதல் வரலாகாது என்கிறார் தொல்காப்பியர்.
உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா
(தொல்.எழுத்து.60)
அதுபோலவே சகரம் என்ற மெய் அ, ஐ, ஒள ஆகிய மூன்று உயிர்களுடன் சேர்ந்து சொல்லின் முதலில் வருவதில்லை என்கிறார் தொல்காப்பியர்.
சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே
அ, ஐ, ஒள எனும் மூன்று அலங்கடையே
(தொல்.எழுத்து.62)
ச- சை- சௌ- போன்று மொழிமுதலில் வருவது கிடையாது. ஆனால் சாளரம், சிலை, சுரும்பு போன்ற சொற்களில் ஏனைய உயிர்களுடன் சேர்ந்து மொழிமுதலில் சகரம் வருகிறது.
தொல்காப்பியத்தை அடுத்துத் தோன்றிய சங்க இலக்கியத்தில் சகரமெய் அகர உயிரோடு சேர்ந்து பல சொற்களிலும், ஐகார உயிரோடு சேர்ந்து ஒரு சொல்லிலும் மொழி முதலில் வரும் நிலையைக் காணலாம்.
சகடம் (நற்றிணை. 4:9)
சடை (புறநானூறு. 166:1)
சண்பகம் (கலித்தொகை. 150:21)
சையம் (பரிபாடல். 11:14)
‘வ’ எனும் மெய் எழுத்து ‘உ, ஊ, ஒ, ஓ’ என்னும் நான்கு உயிர்களுடன் சேர்ந்து மொழிமுதல் வருவதில்லை என்கிறது தொல்காப்பியம்.
‘உ, ஊ, ஒ, ஓ’ என்னும் நான்கு உயிர்
‘வ’ என் எழுத்தோடு வருவ தில்லை
(தொல். எழுத்து.63)
‘பிற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து மொழிமுதலில் வகரம் வருகின்றது. வளை, வாளி என வரும்.
‘ஞ’ என்னும் மெய் ஆ,எ,ஒ என்னும் மூன்று உயிர்களோடு கூடி மட்டுமே மொழி முதலாகும் என்கிறார் தொல்காப்பியர்.
‘ஆ, எ, ஒ’ எனும் மூவுயிர் ஞகாரத்து உரிய
(தொல். எழுத்து.64)
சங்க இலக்கியத்தில் ஞகரமெய் இம்மூன்று உயிர்களோடு மட்டும் அல்லாமல் அ, இ என்னும் இரண்டு உயிர்களோடு சேர்ந்தும் மொழி முதலாகி வருகிறது.
சான்று:
ஞமலி (அகநானூறு. 140 : 8)
ஞிமிறு (அகநானூறு. 124 : 5)
‘ய’ என்னும் மெய், ஆகார உயிரோடு கூடி மட்டுமே மொழிமுதலில் வரும் என்கிறார் தொல்காப்பியர்.
ஆவோடு அல்லது யகரம் முதலாது
(தொல். எழுத்து.65)
சங்க இலக்கியத்திலோ யகர மெய் ஆகாரத்தோடு மட்டுமன்றி, அகர உயிரோடும் ஊகார உயிரோடும் கூடி மொழி முதலாகும் வழக்கைக் காணலாம்.
சான்று:
யவனர் (அகநானூறு. 149 : 9)
யூபம் (புறநானூறு. 15 : 21)
இதுவரை நாம் சகரமும், வகரமும், ஞகரமும், யகரமும் குறிப்பிட்ட உயிர் எழுத்துகளுடன்தான் மொழிமுதல் வரும் எனவும், ஒருசில உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து மொழிமுதல் வருவதில்லை எனவும் கண்டோம்.
க, த, ந, ப, ம என்னும் ஐந்து மெய் எழுத்துகளும் பன்னிரண்டு உயிர் எழுத்துகளுடனும் சேர்ந்து மொழிமுதல் வரலாயின.
க, த, ந, ப, மஎனும் ஆவைந்து எழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
(தொல். எழுத்து. 61)
சான்று:
கலை, காளி, கிளி, கீரி,… தந்தை, தாடி, தீமை,… நடம், நாரை, நிலம், நீர், படை, பாடி, பிடி, மடம், மாலை, மிடறு, மீனம்.
மேலே குறிப்பிட்ட க, ச, ஞ, த, ந, ப, ம, வ, ய என்னும் ஒன்பது மெய் எழுத்துகளே சங்க காலத்தில் மொழி முதலாயின. ஏனைய ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் ஒன்பது மெய் எழுத்துகளும் சங்க காலத்தில் எந்த ஓர் உயிரோடும் சேர்ந்து மொழி முதலில் வரவில்லை.
எல்லா உயிர் எழுத்துகளும், அனைத்து மெய் எழுத்துகளும் சொல்லின் இடையில் வருகின்றன. ஆனால் சொல்லின் இறுதியில் குறிப்பிட்ட எழுத்துகள் மட்டுமே வருகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ‘ஒள’ சொல்லின் இறுதியில் வருவது கிடையாது.
உயிர்ஒள எஞ்சிய இறுதி ஆகும்
(தொல். எழுத்து. 69)
இந்நூற்பா ‘ஒள’ இன் உயிர்மெய்க்கும் பொருந்தும். அதாவது ‘ஒள’ என்ற உயிர் எழுத்துடன் யாதொரு மெய்எழுத்தும் சேர்ந்து மொழியின் இறுதியில் வருவதில்லை.
மெய் எழுத்துகளைப் பொறுத்தவரை ‘ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள’ எனும் பதினொன்றே சொல்லின் இறுதியில் புள்ளியுடன் வருகின்றன.
‘ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள’ என்னும்
அப்பதி னொன்றே புள்ளி இறுதி
(தொல். எழுத்து. 78)
சான்று:
உரிஞ், மண், வெரிந், மரம், பொன், பேய், வேர், வேல், யாழ், தேள்.
இவை தவிர ஏனைய மெய்கள் சொல்லின் இறுதியில் வராது என்ற ஒரு வழக்கம் சங்ககாலத்தில் இருந்தது. இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட எழுத்துகள் குறிப்பிட்ட இடத்தில்தான் வந்து அமைந்திருந்தமை தெரியவருகிறது.
சங்ககாலத்தில் சொல்லப்பட்டதுபோல் உயிர் எழுத்துகளும், உயிர் மெய், மெய் எழுத்துகளும் அதன்படியே இடைக்காலத்திலும் வரலாயின. ஆனால் ஒருசில மெய் எழுத்துகள் சொல்லின் இறுதியில் சங்ககாலத்தில் உள்ளதுபோல் வராமல் போயிற்று எனலாம்.
சான்று:
‘வெரிந்’
இங்குக் கடைசியில் வரும் /ந்/ இடைக்கால இலக்கியங்களில் காணப் படவில்லை.
கிரந்த எழுத்துகளின் வருகை
‘ஷ் – முஷிக (திருப்புகழ் 13. திருச்செந்தில்)
‘ஜ் – கவிராஜ ( ’’ 19. திருப்பழநிமாலை)
‘ஹ் – ஜெயஹர ( ’’ 427. திருச்செந்தூர்)
‘க்ஷ் – மோக்ஷத்தை ( ’’ 52. குமரக் கோட்டம்)
‘ஸ்ரீ – ஸ்ரீபாத நூபுரி ( ’’ 131. திருச்செந்தூர்)
மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள ‘ஸ்ரீ’ என்ற எழுத்துச் சொல்லின் முதலில் மட்டும் வருகிறது; இடையிலோ, அல்லது கடைசியிலோ வருவது இல்லை. ஏனைய எழுத்துகள் சொல்லின் இடையிலும் கடைசியிலும் வருகின்றன.
சங்ககாலத்தில் சொல்லின் இறுதியில் வந்த எழுத்து /ந்/ இடைக்காலத்தில் வழக்கொழிந்தது. அதுபோலவே சங்ககாலத்தில் யகாரம் சொல்லின் முதலில் வந்து இடைக்காலத்தில் ஆகாரம் ஆக மாறியது, இருப்பினும் மொழிமுதல் யகரம் கெட்டு விட்டது எனலாம். இதனால் யகரம் மொழி முதல் வராத சூழல் இருந்து வந்தது தெரிய வருகிறது.
சான்று:
ஆரிக் கொடுமை செய்தாரென்று அன்னை அறியின்
(சிலம்பு.7:38-4)
ஆரெனக் கேட்டீங் கறிகுவம் என்றே
(சிலம்பு.1:22)
இச்சான்றுகளில் யார் என்பது ஆர் என (யா>ஆ) மாறி வழங்குவதைக் காணலாம்.
சகரமெய் அ,ஐ,ஒள என்னும் மூன்று உயிர்களோடு சேர்ந்து மொழிமுதல் வாராது என்று தொல்காப்பியம் விதித்திருக்க, சங்க இலக்கியத்தில் அகர உயிரோடும், ஐகார உயிரோடும் சேர்ந்து மொழி முதலானதை மேலே கண்டோம். ஆனால் இடைக் காலத்தில் ஒளகாரத்துடன் இணைந்தும் மொழிக்கு முதலில் வருவதைக் காணமுடிகிறது.
சான்று:
‘சௌபலர்’ (வில்லிபாரதம். 3:4)
அது போன்றே சங்க காலத்தில் ரகரமும், லகரமும் முதலில் வருவது கிடையாது. இடைக்காலத்தில் இவ்விரண்டு எழுத்துகளும் முறையே ‘இ’, ‘உ’ என்னும் உயிர்களை மொழிமுதல் துணையாகக் கொண்டு வழங்கி வருகின்றன.
சான்று:
‘இராமன்’ (மணிமேகலை. 27:53)
‘இரவி குலத்து’ (மணிமேகலை. 24:58)
‘உலோகாயதம்’ (மணிமேகலை. 27:78)
சங்க இலக்கியங்களில் யகரம் அகரத்தோடும், ஆகாரத்தோடும், ஊகாரத்தோடும் இணைந்து வர இடைக் காலத்தில் தோன்றிய நூல்களிலோ ஓகாரத்தோடும் ஒளகாரத்தோடும் இணைந்து வருகிறது.
சான்று:
‘யோகம்’ (மணிமேகலை. 3)
‘யோசனை’ (மணிமேகலை. 6:211)
‘யௌவனம்’ (சூடாமணி நிகண்டு)
சொல்லின் இடையில் உயிர் எழுத்துகள் இரண்டு (vowel cluster) சேர்ந்து வருவதில்லை. அவ்வாறு வந்தால் அவற்றை உடன்படுத்த வகரம் அல்லது யகரம் அவற்றிற்கு இடையில் உடம்படுமெய்யாக வரும். சொல்லின் இடையில் மெய் எழுத்துகள் தன்னுடன் தானும் தன்னுடன் பிறவும் என்று பலவாறு மயங்கிவரும்.
சான்று:
பக்கம், அச்சம் – தன்னுடன் தான் மயங்கியது.
தங்கம், பஞ்சம் – தன்னுடன் பிற மயங்கியது.
சான்று:
ஃபைட் – ‘fight’
பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்து விட்டன எனப் பார்த்தோம். ஆதலால் அம்மொழிகளில் உள்ள சொற்களை அவற்றின்படியே உச்சரிப்பதற்காகத் தமிழ்மொழியில் அதற்கு இணையான எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டி வருகிறது. இதனால் பழைய தமிழ் இலக்கண மரபினைப் பின்பற்ற முடியாமல் போய் விடுகிறது.
தொல்காப்பியர் மெய் எழுத்துகள் தனியே மொழி முதலில் வருவதில்லை என்றார். ஆனால் தற்காலத் தமிழில் பிற மொழிச்சொற்கள் கலந்துள்ளதால் தொல்காப்பியர் கூற்று வலுவிழந்து விட்டது எனலாம். வேற்றுமொழிச் சொற்களை அவற்றின் ஒலியமைப்பிற்கு ஏற்ப அப்படியே எழுதும்போது மெய் எழுத்துகள் தனித்து மொழி முதலில் வருவதைக் காணலாம்.
சான்று:
க்ராஸ் ரோடு – ‘cross road’
ககர மெய்யில் சொல் ஆரம்பம் ஆவதைக் காண முடிகிறது.
மற்றும் எல்லாக் கிரந்த எழுத்துகளும் மொழி முதலில் வருகின்றன. சொல்லின் இடையில் அனைத்து உயிர் எழுத்துகளும், மெய்எழுத்துகளும் வருகின்றன.
சொல்லின் இறுதியில் தொல்காப்பியர் சுட்டிக்காட்டிய மெய்களே அல்லாமல், வேறுபல மெய் எழுத்துகளும் வருவதைக் காணமுடிகிறது. பழந்தமிழில் ஙகரம் சொல்லின் இறுதியில் வருவது கிடையாது. இன்றும் அவ்வாறே உள்ளது. இருப்பினும் பிறமொழிச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்வதால் ஙகரம் இறுதியில் வருகிறது.
சான்று:
‘வி.பி.சிங்’
இதுபோன்று இன்னும்பல மெய் எழுத்துகள் இறுதியில் வருகின்றன. (க், ச், ட், த், ப், வ்)
சான்று:
‘பேங்காக்’
‘பீச்’
‘வெங்கட்’
‘பாக்தாத்’
‘பஞ்சாப்’
‘மாதவ்’
இவை அல்லாமல் கல்வெட்டு எழுத்துகள் என்று கூறக்கூடிய கிரந்த எழுத்துகளில் (ஸ், ஷ், க்ஷ், ஜ், ஹ், ஸ்ரீ) சில எழுத்துகள் மொழி முதலிலும் கடைசியிலும் வருகின்றன.
சான்று:
‘ஸ்போர்ட்ஸ்’
‘ஹஜ்’
‘பிரஷ்’
இவ்வாறான வருகையால் மெய்மயக்கங்களிலும் (consonant cluster) பலவிதமான மாற்றங்கள் சங்க காலத்திலிருந்து இடைக்காலத்திலும், இடைக்காலத்திலிருந்து தற்காலத்திலும் தோன்றி நிலைபெற்றன.
தற்காலத்தில் ‘கட், தவ், க்த், ஹஜ், ரஷ், ட்ன், ட்ல, ட்ஜ், ன்ச் , ன்ய், ன்ஜ், ர்ர், ர்ஜ், லஷ்’ போன்ற புதிய புதிய மெய்மயக்கங்கள் பிறமொழிச் சொற்களால் தமிழினுள் வந்து புகுந்துவிட்டன எனலாம்.
மொழி, அடிப்படையாகப் பேச்சையே குறிக்கும். அது கட்டமைப்பும் ஒழுங்கும் உடையது. இருப்பினும் வட்டாரம், சமூகம், தொழில் முறை, சூழல் ஆகியவற்றால் மாறுபடக் கூடியது மொழி. பரந்து விரிந்து கிடக்கும் நிலப் பரப்பில் பேசப்படும் போது பல வட்டாரங்கள், பல சமூகங்கள், பல தொழில்கள் என்று புறப்பட்டு அரசியல், வணிகம், பொருளாதாரச் செயல்பாடு ஆகியவற்றால் சிறந்து விளங்கும் இயல்புடையது மொழி. குறிப்பிட்ட ஒரு வட்டாரத்தில் உள்ள மக்களின் மொழி, பிற வட்டார மக்களாலும் பிற சமூகங்களாலும் பின்பற்றப்படும் நிலை ஏற்படும்.
தற்காலத் தமிழில் அமைந்துள்ள கதைகளில் கதைமாந்தர்களின் உரையாடலாக வரும் பேச்சுமொழியின் பயன், செயல்பாடு பற்றி ஆராய்வது அந்த மாந்தர்களைப் பற்றி மட்டும் அல்லாமல் படைப்பாளியைப் பற்றியும் பல உண்மைகளைப் புலப்படுத்தும் பாங்கு உடையது.
சமூக மொழியியலார் (socio – linguists) கூறும் குறிக் கலப்பு (code mixing), குறித்தாவல் (code switching) என்ற இருவகைக் கருத்துகளைப் பயன்படுத்தி நாவல், சிறுகதை ஆகியவற்றில் கதைமாந்தர்களின் பேச்சில் வரும் பிறமொழிச் சொற்கள் அவர்களின் மனப்பாங்கைப் பிரதிபலிப்பதாக விளக்கமுடியும். சான்றாக ‘சேஞ்ச்’ (change) என்ற ஆங்கிலச்சொல்லைத் தமிழ் எழுத்துகளில் அப்படியே பயன்படுத்துகின்றனர். இதனை ஒலிபெயர்ப்பு (transliteration) எனலாம். இவ்வாறு எழுதுவதால் கதாபாத்திரத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது என்று படைப்பாளிகள் கூறுகின்றனர்.
தற்காலத் தமிழ், சமுதாயத்தின் பயன்பாட்டு அடிப்படையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறது. தமிழ் இலக்கணப்படி ‘பலர்பால்’ என்பது ஆண் பன்மையையும், பெண் பன்மையையும், ஆண்-பெண் பன்மையையும் குறிக்கும். ஏனென்றால் அந்த மூன்று வகைப் பெயர்ச் சொற்களுக்கும் ஒரே விகுதியைத்தான் வினைமுற்றுச் சொல்லில் கையாளுகிறோம் வந்தனர் அல்லது வந்தார்கள்). அதுபோன்று பெயர்ச் சொல்லில் ஒருமையில் மாணவன், மாணவி என்று ஆண்-பெண் வேறுபாடு இருப்பதால் பன்மையில் மாணவர்கள், மாணவிகள், மாணவ- மாணவிகள் என்று பெயர்ச்சொல்லில் வேறுபடுத்துகிறோம். இலக்கணப்படி ‘மாணவர்கள்’ என்ற ஒரு பன்மை வடிவமே சரியானது என்று ஒருவர் வாதாடினால் இன்றைய வழக்கைத் தவறு என்பதா?
தற்காலத் தமிழில் நகரமும், னகரமும் ஒன்றாகியுள்ளது எனலாம். எவ்வாறு எனில் சொல்லுக்கு முதலில் வரும்போது நகரமாகவும், இடையில் வரும்போது னகரமாகவும் எழுதப்பட்டு வருகிறது. இக்காலத்தில் நகரம், னகரம் இரண்டனுக்கும் உச்சரிப்பில் வேறுபாடு காண முடியவில்லை. இவ்விரண்டையும் ஒரே விதமாக உச்சரிக்கின்றனர்.
பிறமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்திருப்பதாலும் பழைய இலக்கணவிதிகளுக்கு மாறுபட்டு அமைந்திருப்பதாலும் குறிப்பிட்ட ஒலிகளை உச்சரிப்பதில் வேறுபாடு காண முடியாததாலும் தற்காலத் தமிழ் முந்தைய தமிழை விடப் பலவிதமான மாற்றங்களுடன் காணப்படுகின்றது. இத் தமிழையே தற்காலத்தமிழ் என்கிறோம். மொழியைப் பல துறைகளில் பயன்படுத்துவதால் அவர் அவர்களுக்கு ஏற்றாற்போல் பயன்படுத்துகின்றனர். இதனால் ஏற்படும் மாற்றங்களைத் தடுப்பது என்பதோ முடியாத காரியமாகிறது. இதனைப் பெரும்பாலோர் பின்னர்ப் பயன்படுத்துவதால் அதுவே நிலைத்து நின்றுவிடுகிறது. இதனையே மு. வரதராசனார் கூறும்போது,
‘பழைய இலக்கியங்களைக் கற்றுத் திகழும் சிலரும் அழகிய செறிவான நடையைப் போற்றித் திகழும் சிலரும் எவ்வளவுதான் தடுத்து நின்றபோதிலும் பெரும்பாலோராகிய இவர்களின் போக்கிலேயே மொழி செல்லும். தடைகள் ஒருசிலகாலம் ஈர்த்துப் பிடித்து நிறுத்தலாம். இறுதியில் வெற்றி பெறுவது பெரும்- பாலோரின் போக்கே ஆகும்’
என்று கூறுகிறார்.
பாடம் - 3
1.ஒலியன் சொல்லெழுத்து (Phonemic Spelling)
2.உருபொலியன் சொல்லெழுத்து (Morphophonemic Spelling)
3.உருபுச் சொல்லெழுத்து (Morphonemic Spelling)
4.சந்திச் சொல்லெழுத்து அல்லது புணர்ச்சிச் சொல்லெழுத்து (Sandhi Spelling)
5.ஓரெழுத்துப் பன்மொழிச் சொல்லெழுத்து (
மொழியின் கட்டமைப்பில் காலத்திற்கு ஏற்ப மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதனை விளக்கும் முகமாகப் பேச்சுமொழி ஒலியன்களுக்கான வரிவடிவ அமைப்புத் தோன்றுகிறது. அவ்வாறு அமைந்த வரிவடிவத்தை எழுத்து என்று கூறலாம்; எழுத்தின் எண்ணிக்கையையும், ஒரு சொல்லுக்கான எழுத்துகளின் வரையறை போன்றவற்றையும் எழுத்தாக்கம் எனலாம்.
மனித வரலாற்றில் ‘எழுத்தாக்கம்’ சற்று ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவாயிற்று எனலாம். அப்போது நான்கு வெவ்வேறு இடங்களில் எழுத்தாக்க முயற்சிகள் தனித்தனியே மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிகிறது. 1. ஆசியாக் கண்டத்தில் மெசபடோமியா 2. பழைய எகிப்து 3. பழஞ்சீனம் 4. பிற்காலத்தில் தென் அமெரிக்காக் கண்டத்தில் மாயா (Maya of Yucatan) ஆகிய இடங்களில் எழுத்தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்று உலகில் காணப்படும் எழுத்துமுறை எகிப்திய மெசபடோமியா முறையின் தழுவலாகவே கருதப்படுகிறது. உருபன் எழுத்து முறை (Morphophonemic writing system) ஏற்பட்ட பிறகே ஒலியன் எழுத்து முறை (Phonemic Writing System) தோன்றியிருக்க வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பேராம் பெயர்பெயர்த்துப் பேர்த்தாம் ஒடு ஓடாம்
நீராகும் நீயிர் எவனென்ப – தோருங்கால்
என்என்னை என்றாகும் யாமுதற்பேர் முதலாம்
அன்ன பொழுது போ தாம்.
(நேமிநாதம் – 36)
‘பெயர்’ என்னும் சொல் ‘பேர்’ என்றும், ‘பெயர்த்து’ என்னும் சொல் ‘பேர்த்து’ என்றும், ‘ஒடு’ என்னும் சொல் ‘ஓடு’ என்றும், ‘நீயிர்’ என்னும் சொல் ‘நீர்’ என்றும், ‘எவன்’ என்னும் சொல் ‘என்’ என்றும், ‘என்னை’ என்றும், ‘பொழுது’ என்னும் சொல் ‘போது’ என்றும் திரியும்; ‘யா’ என்று தொடங்கும் சொல் ‘ஆ’ முதலாகவும் வரும் என்று நேமிநாதம் இந்நூற்பாவில் கூறியுள்ளது.
‘ந்’ என்பதும் ‘ன்’ என்பதும் ஒரேவிதமாக இன்றைய வழக்கில் உச்சரிக்கப்படுகின்றன என்பதை அறிவோம். அதே சமயத்தில் இன்று ‘முந்நூறு’, ‘முன்னூறு’ என்ற இருவிதச் சொல்லெழுத்தும் காணப்படுகின்றன. இவ்விரண்டு வகைச் சொல்லெழுத்தும் எவ்வாறு வழங்க ஆரம்பித்தன என்ற வரலாற்றினைப் பற்றி இங்குக் காண்போம். இவ்விரு சொற்களுக்கும் மூலம் ‘மூன்று’ என்பதாகும். இது ஒரு கட்டிலா மாற்றத்தின் (Free Variation) வடிவம். இது அடையாக வரும் போது முதலில் உள்ள நெட்டெழுத்துக் குறுகி வரும்.
எண்ணிறை …………………….
முதல் ஈர்எண் முதல் நீளும் மூன்று ஆறு
ஏழ் குறுகும்……. (நன்னூல் – 188)
இவ்வாறு குறுகி வரும் என்றால் அதன் அடி வடிவம் ‘மு’ ஆகும். தொல்காப்பியர் காலம் முதலே கிளைமொழியின் ஆதிக்கத்தால் ‘மும்’ என்று மாறியிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் இன்று ‘முப்பது’, ‘ மும்மை’, ‘முந்நூறு’ எனப் பயன்படுத்திவருகிறோம். ‘மூன்றின்’ அடிப்படை வடிவம் ‘மு’ என்பதால் ‘முன்னூறு’ என்றும் சிலர் பயன்படுத்துகிறார்கள். எவ்வாறு எனில் நகரத்திற்கும், னகரத்திற்கும் அவ்வளவாகப் பேச்சு வழக்கில் வேறுபாடு காணமுடியாது. ஆகையால் ‘முன்னூறு’ என எழுதுகிறார்கள்.
இன்று படைக்கப்படும் சொற்கள்,
‘நடத்துநர்’
‘ஓட்டுநர்’
‘இயக்குநர்’
போன்றவை தொழில் பெயராக அமைகின்றன. எனவே, இங்கு ‘நர்’ என்ற விகுதி பெறும் தொழிற் பெயர் (Agentive) விகுதியாகப் பயன்படுகிறது.அவற்றோடு மட்டுமல்லாமல் ஒலி வேற்றுமை (Sound Change) இல்லாத காரணத்தாலும், னகரமாகப் பலராலும் எழுதப்படுகின்றது.
‘நடத்துனர்’
‘ஓட்டுனர்’
‘இயக்குனர்’
இங்கு இன்னொரு எழுத்து மரபையும் குறிப்பிட வேண்டியுள்ளது. வடமொழியில் னகர ஒலி (Dental Voiced Nasal Stop) இல்லாததால் அது போன்று அமைந்து வரும் சொற்களில் நகர ஒலி (Alveolar Voiced Nasal Stop) ஆக எழுதும் மரபு முன்பு அதிகமாக இருந்தது. அதுவும் இன்று ‘ன’ ஆகவே எழுதப்படுகிறது.
சான்று:
‘ஆநந்தம் – ஆனந்தம்’
‘அநுபவம் – அனுபவம்’
‘விநாயகர் – வினாயகர்’
ஆனால் இதிலும் ஒரு ஒழுங்கு ஏற்படவில்லை எனலாம். ஆயினும் ‘ன’ ஆக எழுதப்படுவதால் அதையே இன்றைய தமிழின் சொல்லெழுத்து முறை வளர்ச்சியில் ஏற்றுக் கொள்ளலாம்.
மற்றும் ஒரு சான்று – தொல்காப்பியர் காலத்தில் எண்ணாகிய ‘ஏழ்’ (Seven) என்ற சொல் புள்ளி எழுத்தாகிய மெய் எழுத்தை ஈறாகக் கொண்டு இருந்ததால் தொல்காப்பியர் இதனைப் ‘புள்ளி மயங்கியலில்’ சுட்டியுள்ளார்.
சான்று:
ஏழ்என் கிளவி உருபு இயல் நிலையும்
(தொல்.எழுத்து. 389)
ஆனால் இதனை நன்னூலார் ‘ஏழு’ எனக் கொண்டு உகர இறுதியாகச் சொல்லி ‘உயிரீற்றுப் புணரியலில்’ சுட்டியுள்ளார்.
சான்று:
ஏழ் குறுகும் ஆறு ஏழு அல்லவற்றின்
ஈற்றுயிர் மெய்யும் ஏழன் உயிரும்
ஏகும் ஏற்புழி என்மனார் புலவர்
(நன்னூல் எழுத்து – 188)
எனவே, சொல்லெழுத்து மாற்றம் (Spelling Change) நடைபெற்றதன் விளைவே இந்த இடமாற்றம் எனலாம்.
இலக்கண நூல்கள் மட்டுமல்லாமல் இலக்கிய நூல்களை ஒப்பிட்டுப் பார்த்தாலும் காலந்தோறும் பேச்சு மொழியில் ஏற்பட்ட மாற்றத்தால் சொல்லெழுத்துகளிலும் மாற்றம் ஏற்பட்டதைக் காணமுடிகிறது.
‘நான்கு’, ‘ஐந்து’ என்ற சொற்களின் வடிவங்களைத் தேவாரத்தில் ‘நாலு’, ‘அஞ்சு’ என்றே காணலாம்.
சான்று:
நாச்செய்து நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து
(தேவாரம் 4:69-6)
ஆன் அஞ்சாகம் முடியான் (தேவாரம் 2: 6-5)
எனவே, இலக்கண மரபும் இலக்கிய மரபும் சொல்லெழுத்து மாறி வந்திருப்பதைக் காட்டுகின்றன. சொல்லெழுத்தின் மாற்றத்திற்கு மொழி அமைப்பில் – ஒலி அமைப்பில் – ஏற்படும் மாற்றமே முக்கியக் காரணம் என்று கூறலாம்.
‘யானை’ என்ற சொல் ‘ஆனை’ என்று மாறியதற்குச் சொல்லுக்கு முதலில் வந்த யகர மெய் கெட்ட ஒலி மாற்றத்தின் விளைவு. ஆனால் தொல்காப்பியர் காலத்திலும், சங்க காலத்திலும் ‘நீயிர்’ என்று இருந்த சொல் ‘நீங்கள்’ என்று திருநாவுக்கரசர் தேவாரத்தில் மற்றொரு வடிவத்தைப் பெற்றதற்குக் கிளைமொழி மாற்றமே (Dialect change) காரணம்.
சான்று:
நெறிகெட விலங்கிய நீயிர் இச்சுரம்
அறிதலும் அறிதிரோ …………… (அகநானூறு 8.17-18)
கட்டிராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா
(தேவாரம் 4:41-2)
இன்றைய எழுத்துத் தமிழில் சொல்லெழுத்து எவ்வாறு மாற்றம் அடைந்து வருகின்றது என்பதனைச் சுட்ட மேலும் ஓரிரு சான்றுகளைக் காணலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டில் ஒரு சில சொற்கள் இருவிதமாக இரு வேறு காலங்களில் பயன்பட்டு வந்ததை நம்மால் இன்று காணமுடிகிறது. ‘கள்’ என்பது பன்மை விகுதியாகும். இதில் வரும் ககரம் ஒலிப்பிலா வல்லொலியாகச் (Voiceless Stop) சொற்களில் இன்று உச்சரிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இவ்வல்லினம் (ககரம்) இரட்டை வல்லினம் (Gemination) ஆக உச்சரிக்கப்பட்டது.
சான்று:
‘எழுத்துக்கள்’ (தொல். சொல்லதிகாரம். 8.1)
சில தமிழ் அறிஞர்கள் பேச்சில் ஒலிப்புடை ஒலியாக உச்சரிப்பதால் ஒற்றை வல்லெழுத்தால் எழுதுகிறார்கள்.
சான்று:
எழுத்துகள்
அமைப்புகள்
சொல்லின் நடுவில் வல்லொலிகள் ஒலிப்புடை ஒலியாக உச்சரிக்கப்படுவதற்கு ஏற்ப ஒற்றை வல்லெழுத்தால் எழுதப்படுகின்றன.
சான்று:
பத்திரிகை
அண்ணாதுரை
பலரும் இதுபோன்றே பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சான்று:
‘கருத்துகள்’ (வையை முதல் மலர் – முன்னுரை) ‘எழுத்துகள்’ – (தமிழ் – முதல் வகுப்பு – 1978)
சான்று:
‘Im – possible’
‘Il-legal’
‘Ir-regular’
‘In-decent’
இதனையே ஒலியன் சொல்லெழுத்து (Phonemic Spelling) எனலாம்.
சான்று:
எழுத்துவடிவம் (Written form) ஒலிவடிவம் (Sound Form)
‘தலை – வர்’ ‘தலை – வரு’
‘தலை – மை’ ‘தல-ம’
பேச்சுத்தமிழில் /தலை-வர்/ என்பதை, /தலை-வரு/ என்று உச்சரிக்கும்போது ‘தலை’ என்ற ஒலி மாறாமல் வருவதை நம்மால் உணர முடிகிறது.அதே சமயம் /தலை-மை/ என்பதை/தல-ம/ என்று உச்சரிப்பதை நம்மால் உணர முடிகிறது. எவ்வாறு எனில்/தலை-மை/ என்னும் இச்சொல்லில் இரு /ஐ/ கள் இருப்பதைக் காணமுடிகிறது. ஆதலால் முதலில் வரும் /லை/, /ல/ என்ற ஒலியுடனும், இரண்டாவது வரும் /மை/, /ம/ என்ற ஒலியுடனும் அதனுடைய உண்மையான உச்சரிப்புக் குறைக்கப்பட்டு /ஐ/ என்பது இரண்டு இடங்களிலும் /அ/ என உச்சரிக்கப்படுகின்றது. ஆனால் இவற்றை எழுதும்போது /தலைமை/ என்றே எழுதுகிறோம். இதுவே உருபொலியன் சொல்லெழுத்து ஆகும்.
குறிப்பாக றகரமும், ரகரமும் சில கிளைமொழிகளைத் தவிரப் (Dialects) பெரும்பாலானவற்றில் ரகரமாக உச்சரிக்கப்படுகின்றது.
சான்று:
சொல் உச்சரிப்பு
‘மரம்’ ‘மறம்’ ‘மரம்’
‘அரை’ ‘அறை’ ‘அரை’
‘கரி’ ‘கறி ‘கரி’
தமிழ்மொழியானது இரட்டை வழக்கினைக் கொண்டதாகும் (Diaglossia).இரட்டை வழக்கு என்பது தமிழை எழுதும்போது ஒரு விதமாகவும் (இதனை எழுத்துத்தமிழ் என்பர்), பேசும்போது இன்னொரு விதமாகவும் (இதனைப் பேச்சுத்தமிழ் என்பர்) பேசுகிறோம். அவ்வாறாக வரும்போது எழுத்துத் தமிழில் ‘மரம்’, ‘மறம்’ என்னும் இரு வேறு பொருள்களை உடைய சொற்களைப் பேச்சுத்தமிழில் ‘மரம்’ என ஒரே விதமாக உச்சரிக்கிறோம். இதனையே உருபுச் சொல்லெழுத்து என்பர்.
அதுபோன்று ‘ந்’, ‘ந’, ‘ன்’, ‘ன’, ‘ழ’, ‘ள’ என்று எழுத்தில் மட்டும் வேறுபடுவன எல்லாம் ஒரே உச்சரிப்பைக் கொண்டு வேறுவேறு பொருளை உணர்த்துகின்றன. ஆங்கில மொழியிலும் இது போன்றவற்றைக் காணலாம்.
சான்று:
I read now – ‘இப்போது நான் படிக்கிறேன்’ Yesterday he read – ‘நேற்று அவன் படித்தான்’
இங்கு ஒரே வித எழுத்து வெவ்வேறான உச்சரிப்பு.இதன் மூலம் பொருள் மாறுபடுவதைக் காணலாம். .
3.3.4 சந்தி அல்லது புணர்ச்சிச் சொல்லெழுத்து (Sandhi spelling)
ஒரே ஒலியை உடைய சொற்கள் புணர்ச்சி (சந்தி) நிலையில் வேறுபட்டு விளங்குகின்றன.
தமிழ் மொழியில் பேச்சுமொழிக்கும், எழுத்துத்தமிழுக்கும் இடையே அதுபோன்ற புணர்ச்சி மாற்றத்தை நம்மால் உணர முடிகிறது. பேச்சு மொழிக்கு எழுத்துரு இல்லாவிட்டாலும் உணரலாம் அல்லவா. மொழியியலின் அடிப்படையில் பயிலுவதால் பேச்சுமொழியில் இருந்தும் சான்றுகளைக் கொடுக்க வேண்டியுள்ளது அவசியமாகிறது.
சான்று:
பேச்சுமொழி எழுத்துமொழி
/பயிரு/ ‘பயிர்’
‘பயிறு’
பயிரு என்று பேச்சுமொழியில் வழங்குவதை எழுத்துமொழியில் பயிர்’ என்றும், ‘பயிறு’ என்றும் எழுதுகிறோம். இதுவும் உருபுச் சொல்லெழுத்தில் அடங்கும். ஆயினும் அவை இரண்டும் புணர்ச்சியின்போது மாறுபடுகின்றன.
சான்று:
எழுத்துமொழி பேச்சுமொழி
‘பயிர் ‘பயிரில்’ ‘பயிர்ல’
‘பயிறு’ ‘பயிற்றில்’ ‘பயித்தில்’
‘பயிற்றை’ ‘பயித்தை’
இந்தச் சொற்கள் பயன்படும் விதத்தை முழுவதும் அறியும்போது அவற்றின் சொல்லெழுத்து வேறுபடுவதை நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. இவையே பிற்காலத்தில் சொல்லெழுத்து வளர்ச்சியில் நிலைநாட்டப்படுகின்றன.
சான்று:
ஒலியன் பொருள்
‘பாவம்’ ‘pa:vam’ ‘sin’
‘ba:vam’ ‘expression’
இதுபோன்ற சொற்கள் பெரும்பாலும் பிற மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்ட (Borrowing) சொற்களாகவே இருக்கும். இவ்வாறாக வருவதை ஓரெழுத்துப் பன்மொழிச் சொல்லெழுத்து எனலாம்.
சான்று:
போலீஸ் – Policeman
‘போலீஸ்’
போலீசார் – Policemen
தமிழில் < ஸ் > என்ற எழுத்தன் சொல்லின் இறுதியிலும், < ச > சொல்லின் நடுவிலும் வருவதைக் காணலாம். இந்த வகையான சொல்லெழுத்தில் சொற்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு இல்லாமல் சரியாக அமைந்து வருவதைக் காணலாம்.
காங்கிரஸ் – Congress
காங்கிரஸ்
காங்கிரசார் – Congress party men
‘ஆபீஸ்’ – ‘Office’
ஆபீஸ்
‘ஆபீசர்’ – ‘Officer’
இந்த வகைச் சொல்லெழுத்துகளைப்போல் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவோரிடம் இன்னொரு வகைச் சொல்லெழுத்தைக் காணமுடிகிறது.
ஒலிப்பிலா வல்லொலியை (Voiceless Stop) ஒரு சொல்லுக்கு இறுதியில் வரும்போது ஒரு வல்லெழுத்தாலும் இடையே வரும்போது இரண்டு வல்லெழுத்தாலும் எழுதுகிறார்கள்.
சான்று:
‘பீச்’ – ‘பீச்சில்’ ‘டேப்’ – ‘டேப்பில்’
சொல்லெழுத்தில் மாற்றங்கள் ஏற்படுவது உலகமொழிகளில் இயல்பான ஒன்றாகும்.மொழியானது காலந்தோறும் சூழலுக்கு ஏற்ப மாறும் தன்மை உடையது. சொல்லெழுத்தில் மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் முடியாது. முற்காலத்தில் இலக்கியத்தமிழ் பக்தி இலக்கியமாகவும், காப்பியங்களாகவும் புலவர்களால் இயற்றப்பட்டன. அக்காலத்தில் கல்வெட்டுகளையும் சோதிட மருத்துவ நூல்களையும் எழுதியவர்கள் சாதாரணமாகப் படித்தவர்களே. அவர்கள் புலவர்களைப்போல் புலமை பெற்றிருக்கவில்லை. இவர்களால் பேச்சுமொழியில்தான் எதையும் வடிக்க முடியும். இதுபோன்ற காரணங்களாலும் சொல்லெழுத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன எனலாம். அதுபோலவே இன்றைய எழுத்துமொழியில் சொற்கள் பழைய வழக்கிலிருந்து மாறுபட்டுக் காணப்படுகின்றனவற்றை எல்லாம் பிழைகள் எனக் கருதக்கூடாது, அவ்வகையான மாற்றங்களுக்கான காரணங்களை ஆராய்ந்தால் அவற்றுள் சில கிளைமொழித் தமிழின் நேரடிச் செல்வாக்கு என்றும்,சில பேச்சுமொழியை ஒட்டி எழுத்துமொழியில் ஏற்பட்ட மாறுபாடு என்றும் உணர்ந்து கொள்ளமுடியும்.
சான்று:
‘முன்னூறு’ என்று இன்று எழுதுவதைக் காணமுடிகிறது. இதனைப் பார்த்து நம்முடைய இலக்கண அறிவைக் காட்டும் விதமாகவே பழைய இலக்கிய மேற்கோள்களைக் காட்டிப் புதிய சொல்லெழுத்துகளைத் தவறு என்று சுட்டுவது தவறாகும் எனலாம்.
‘மூன்று’ என்பதன் அடிப்படை வடிவம் ‘மு’ ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு மு+நூறு= முந்நூறு என்றாகி -ந்-, -ன்- போன்ற ஒலியன்களுக்கு வேறுபாடு இன்றையளவில் பேச்சுத்தமிழில் காணப்படாததால் ‘முன்னூறு’ என்று இன்று பலராலும் எழுதப்பட்டு வருகிறது. இது இலக்கணப் படி தவறாக இருந்தாலும் இன்றையளவில் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
பாடம் - 4
தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியத்திற்கும் நன்னூலுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன என அறிவோம். நன்னூலுக்கும் இன்றைய தமிழுக்கும் மொழி அமைப்பில் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவ்வகையான வேறுபாடுகள் மொழியின் பயன்பாட்டிலும், அதாவது மொழியைப் பயன்படுத்துவோரைப் பொறுத்தவரையிலும் தமிழ் மொழியைக் கையாளும் துறைகளைப் பொறுத்தவரையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டன. இங்கு அம்மாற்றங்களைப் பற்றி மொழியியல் (Luiguistics) கண்ணோட்டத்தில் காண்போம்.
பேச்சு வழக்குத்தான் இலக்கிய வழக்கிற்குக் காரணமாக இருந்தது. பேச்சுமொழி வந்த பிறகு இலக்கியங்கள் தோன்றலாயின. ஆனால் பின்னர் இலக்கியங்களுக்கும் அவற்றில் பயன்படுத்தப்படும் வழக்கிற்கு மட்டும் இலக்கணங்கள் தோன்றலாயின. மொழியியலார் (Linguists) பேச்சு வழக்கையும், இலக்கிய வழக்கையும் இரு கண்களாகக் காண்கின்றனர். அவ்வாறு காணும்போது தொல்காப்பியம் எழுந்த சங்ககாலம் முதல் தற்காலம் வரை மொழியின் பல்வேறுகூறுகளான எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிடுகின்றனர். அது போலவே எழுத்துகளின் புணர்ச்சியிலும் (Sandhi) மாற்றங்கள் தற்காலத்தில் ஏற்பட்டுள்ளன என்பது கண்கூடு.
இப்பாடத்தின் கீழ் விளக்கப்பட்டுள்ள அத்தனை சான்றுகளையும் மொழியியலார் ஏற்றுக் கொள்கின்றனர். ஏனெனில் உலகோடு ஒத்து வாழ வேண்டும் என்பதற்கு ஏற்ப மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஏற்பது அவசியமானதாகும்.
பிறமொழிச் சொற்கள் ஒரு மொழியில் புகும்போது பல விளைவுகள் ஏற்படுகின்றன எனலாம். ஒவ்வொரு மொழியிலும் அம்மொழிக்கே உரிய தனித்த ஒலிகள் காணப்படுகின்றன. தொல்காப்பியர் காலத் தமிழில் பிறமொழிக் கலப்புப் பெருமளவு இல்லை. அவ்வாறு இல்லாமல் போனதால் தொல்காப்பியர் இந்தத் துறைக்கு விரிவாக விதிகள் கூறவில்லை எனலாம். ஆனால் நன்னூலார் காலத்திலும் அதற்கு முன்பும் சமஸ்கிருதச் சொற்கள் பெருவாரியாகத் தமிழில் கலந்தன. எனவே சமஸ்கிருத மொழிக்குச் சிறப்பாக உரிய ஒலிகள் தமிழில் அம்மொழியின் ஒலியமைப்பிற்கு ஏற்ப எவ்வாறு மாறி அமையும் என்பதற்கு நன்னூலார் நன்னூல் பதவியலில் வடமொழியாக்கம் என்னும் தலைப்பில் (நூற்பா. 146- 50) விரிவாக விதிகள் கூறியுள்ளார்.
இதனை விளக்கவந்த நன்னூல் உரையாசிரியர் தோன்றல், திரிதல், கெடுதல் போன்ற புணர்ச்சி இலக்கணங்கள் இவ்வகையான சொற்களுக்குப் பொருந்தாது என்றார்.
இன்றைய தமிழில் ஒலியன்கள், ஒலியன்களின் வருகை, அடிநிலைக் கிளவிகள், மாற்றுருபுகள் ஆகியன எல்லா நிலைகளிலும் புது விதிகள் தோன்றி வருவதைச் சில சான்றுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
எழுத்துகளின் எண்ணிக்கை புணரியல் இலக்கணத்தோடு தொடர்புடையது. சான்றாக வல்லெழுத்துகளில் (க,ச,ட,த,ப) சகரம் நீங்கலாக ஏனைய நான்கு வல்லெழுத்துகளைச் சொல்லுக்கு இறுதியில் குரல் இலா ஒலியையும், குரல் உடைய ஒலியையும் குறிப்பதாகப் பயன்படுத்துவதால் புணர்ச்சியில் இரண்டு ஒலிகளுக்கும் வேறுபாடு காணப்படுகிறது.
சான்று:
‘டேப்’ (குரல் இலா ஒலி) [te:p] /tape/
‘பல்ப்’ (குரல் உடைய ஒலி) [balb] /bulb/
சான்று:
மரம் + கள் = மரங்கள்
1. வேற்றுமைப் புணர்ச்சி,
2. அல்வழிப் புணர்ச்சி
என்பனவாகும்.
வேற்றுமை குறித்த புணர்நிலை மொழியும்
வேற்றுமை அல்வழிப் புணர்நிலை மொழியும்
(தொல்.எழுத்து.113)
நிலைமொழி ஈறும், வரும்மொழி முதலும் புணர்வன எனப் பார்த்தோம். அவ்வகையில் நான்கு நிலைகளைக் காண முடிகின்றது.
1. உயிர் + உயிர் 2. உயிர் + மெய் 3. மெய் + உயிர் 4. மெய்+ மெய்.
இவற்றையே தொல்காப்பியர் உயிர் ஈறு முன் உயிர் முதல், உயிர் ஈறு முன் மெய் முதல் என்றும், மெய் ஈறு முன் உயிர் முதல், மெய் ஈறு முன் மெய் முதல் என்றும் விளக்குவார். தொல்காப்பியர் கூறாத புணர்ச்சி விதிகள் பல வீரசோழியத்தில் கூறப்படுகின்றன. இடைக்கால இலக்கியத்தையும், பேச்சுவழக்கையும் நன்கு ஆராய்ந்து புணர்ச்சி விதிகளைக் கூறியிருக்கின்றார் வீரசோழிய ஆசிரியர்.
சான்று:
‘கோச் /ko:c/ ரயில்பெட்டி’
‘கோஸ் /ko:s/ ‘முட்டைக்கோஸ்’
வேற்றுநிலை வழக்கில் இல்லாமல் வேறுபல சொற்களிலும் சொல்லுக்கு இறுதியில் இந்த ச், ஸ் என்னும் எழுத்துகள் வருகின்றன.
பீச், மேச்
போன்ற சொற்களின் இறுதியில் சகரம் /c/ என்ற ஒலியும்,
‘காங்கிரஸ்’
‘போலீஸ்’
‘கிளாஸ்’
‘ரைஸ்’
போன்ற சொற்களின் இறுதியில் ஸகரம் /s/ என்ற ஒலியும் வருகின்றன. இச்சொற்களின் புணர்ச்சி மாற்றமாக எழுத்துமாற்றம் நடைபெறும் முறை காணப்படுகிறது. அதனைக் கீழே காண்போம்.
ஸகர ஈற்றுச் சொற்கள், வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது அச்சொற்களின் இறுதியில் உள்ள ஸகரத்தைச் சகரமாக மாற்றி எழுதும் மரபைச் சிலர் கையாளுகின்றனர்.
சான்று:
‘போலீஸ்’ – போலீஸ் + இல் = போலீசில்
- போலீஸ் + ஐ = போலீசை
- போலீஸ் + உக்கு = போலீசுக்கு
‘காங்கிரஸ்’ – காங்கிரஸ் + இல் = காங்கிரசில்
- காங்கிரஸ் + ஐ = காங்கிரசை
- காங்கிரஸ் + உக்கு = காங்கிரசுக்கு
இங்கு உயிர் எழுத்தில் தொடங்கி வரும் வேற்றுமை உருபுகளோடு சேரும் போது புணர்ச்சியில் எழுத்துமாற்றம் நடைபெறுகிறது. இவ்வகையான புணர்ச்சி விதி முற்கால இலக்கண நூல்களில் இல்லை. இதில் கவனிக்க வேண்டியது எழுத்துமாற்றமே தவிர ஒலிமாற்றம் இல்லை எனலாம்.
சான்று:
‘அருண்சிங்’
‘சரண்சிங்’
இந்தச் சொற்களோடு ஐ, ஆல் முதலான வேற்றுமை உருபுகள் சேரும் போது இடையே ககர மெய் தோன்றுகிறது.
சான்று:
‘சிங் + ஐ = சிங்கை’
‘சிங் + ஆல் = சிங்கால்’
‘சிங் + இடம் = சிங்கிடம்’
ஙகர ஈற்றுச் சொற்கள் உயிர்எழுத்தில் தொடங்கும் சொற்களை ஏற்கும் போது இவ்விதமான ஒரு புதிய புணர்ச்சி விதியை பெறுகிறது.
சான்று:
‘முகாம்’
‘முஸ்லீம்’
‘ரூம்’
இச்சொற்கள் ‘-கள்’ என்ற பன்மை விகுதி சேரும்போது எவ்வித மாற்றமும் அடையாமல் அப்படியே இயல்பாக அமைந்து விடுகின்றன. இது ஒரு புதிய புணர்ச்சி விதியாகும்.
‘முகாம் + கள் = முகாம்கள்’
‘முஸ்லீம் + கள் = முஸ்லீம்கள்
‘ரூம் + கள் = ரூம்கள்’
இங்கு ஆகாரம், ஈகாரம், ஊகாரம் போன்ற உயிர்களை அடுத்துவரும் மகரம் இயல்பாகவே வருகிறது.
பாரம், வேஷம் போன்ற பிறமொழிச் சொற்களிலும் மகரமே ஈறாக வருகின்றது. ஆனால் அச்சொற்களுடன் ‘-கள்’ என்ற பன்மை விகுதி சேரும் போது மகரமெய் ஙகர மெய்யாக மாறிவிடுகிறது.
சான்று:
‘பாரம் + கள் = பாரங்கள்’
‘வேஷம் + கள் = வேஷங்கள்’
இங்கு மகரத்துக்கு முன்னால் ககர உயிர் இருப்பதால் மகரம் ஙகரமாக மாறுகிறது.
குரல் இலா ஒலி (voiceless sound)
/p/ – டேப் /te:p/ டேப்பில்
- பைப் /paip/ பைப்பில்
/c/ – பீச் /bi:c/ பீச்சில்
/k/ – ஈராக் /irra:k/ ஈராக்கில்
- பிளாஸ்டிக் /pla:stik/ பிளாஸ்டிக்கில்
/t/ – குஜராத் /kujara:t/ குஜராத்தில்
குரல் உடைய ஒலி (voiced sound)
/b/ – பல்ப் /balb/ பல்ப்பில்
- பஞ்சாப் /panja:b/ பஞ்சாப்பில்
/d/ – வசந்த் /vasand/ வசந்தின்
இச்சொற்களைப் பார்க்கும்போது குரல் இலா வல்லொலிகள், உயிர் எழுத்தை முதலாக கொண்ட விகுதிகள் சேரும்போது இரட்டிக்கும் என்றும், குரல் உடைய வல்லொலிகள் அவ்வாறான விகுதிகள் சேரும்போது இயல்பாகவே இருக்கும் என்றும் தெரிய வருகின்றது. அதே சமயத்தில் ‘-கள்’ என்ற பன்மை விகுதி இவ்விரு ஒலிகளுடன் சேரும்போது இடையே ‘உகரம்’ மிகுகிறது.
சான்று:
/p/ பிளாஸ்டிக் + உ + கள் = பிளாஸ்டிக்குகள்
/b/ பல்ப் + உ + கள் = பல்புகள்
இவ்விரு சான்றுகளை நோக்கும்போது உகர ஒலி ஒலித்துணையாக வருகிறது என்று கொண்டு அதன் பின்னரே பன்மை விகுதி (-கள்) சேருவதாகக் கொள்ள வேண்டும்.
சான்று:
‘நறுக்’
‘பளீச்’
இதில் உள்ள ‘நறுக்’ என்ற சொல் துல்லியமாக, சிறியதாக அதோடு விளக்கமாகவும் அமையும் வண்ணம் இருப்பதற்குக் கூறப்படும் சொல் ஆகும். அது போன்றே ‘பளீச்’ என்ற சொல்லும் ஆகும். இவ்வகையான சொற்களை ஒலிக்குறிப்புச் சொற்கள் என்கிறோம். இச்சொற்களைப் பயன்படுத்தும்போது இருவகையான எழுத்துமுறைகள் காணப்படுகின்றன. ஒன்று, மேற்கோள் குறியிட்டு வல்லின ஈறாக எழுதுவது.
சான்று:
‘நறுக்’ என்று
‘பளீச்’ என்று
இன்னொரு முறை நிரப்பியைச் (complimantizer) சேர்த்து எழுதும்போது அவ்வல்லெழுத்தை இரட்டித்து எழுதுவது.
சான்று:
‘நறுக்கென்று’
‘பளீச்சென்று’
இவ்வாறான புணர்ச்சி விதிகள் முன்பு இல்லாதவையாகும் எனலாம். ஏனெனில் இவை புதுச்சொற்களாகப் பயன்பாட்டில் அமைந்து வருகின்றன.
சான்று:
‘ரோடு’ ‘road’
என்ற சொல்லை ‘ரோட்டை, ரோட்டில்’ என்னும் வேற்றுமை உருபு ஏற்ற வடிவங்களாகப் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துவது பெரும்பான்மை வழக்கு. இது ஆங்கிலத்தில் ‘ரோட் – road’ என்று குரல் உடைய வல்லொலியை இறுதியாக உள்ள சொல்லாகும். இச்சொல்லைத் தமிழில் உச்சரிக்கும்போது ‘ரோடு’ என்கிறோம். தனி நிலையில் உகரம் சேர்த்தே உச்சரிக்கிறோம். எழுதவும் செய்கிறோம். இங்கு நெடில் தொடர்க் குற்றியலுகர ஈற்றுச்சொல்போல் (மாடு – மாட்டை) செயல்படுகிறது.
இதில் பல வகையான மாற்றங்கள் உள்ளன.
சான்று:
வாரம் – வாராவாரம் – ஒவ்வொரு வாரமும்
மாதம் – மாதாமாதம் – ஒவ்வொரு மாதமும்
வருஷம் – வருஷாவருஷம் – ஒவ்வொரு வருஷமும்
காலம் – காலாகாலம் – ஒவ்வொரு காலமும்
நேரம் – நேராநேரம் – ஒவ்வொரு நேரமும்
இங்கே காட்டிய சான்றுகளில் வாரம், மாதம் போன்றகாலப்பெயர்கள் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும் என்றபொருளில் இரட்டிக்கும்போது, நிலைமொழியின் (வாரம், மாதம்) இறுதியில் உள்ள மகரம் கெட்டு (வார, மாத), அதற்கு முன்னுள்ள அகரம் ஆகாரமாக (வார>வாரா, மாத>மாதா) மாறி, வாராவாரம், மாதாமாதம் என அமைவதைக் காணலாம். இம்மாற்றத்தைச் சொற்களில் ஏற்படும் மாற்றமாகக் கருதலாம்.
சான்று:
‘சம்பந்தா சம்பந்தம்’ (சம்பந்தம் + சம்பந்தம்)
‘போட்டா போட்டி’ (போட்டி + போட்டி)
இச்சான்றுகளில், ‘சம்பந்தா சம்பந்தம்’ என்ற தொடரில், ‘சம்பந்தம்’ என்ற நிலைமொழியின் ஈற்று மெய்யாகிய மகரம் கெட்டு (சம்பந்த), அதற்கு முன்னுள்ள அகர உயிர் ஆகாரமாக நீண்டு ‘சம்பந்தா’ என்று மாற்றம் பெற்று அமைவதைக் காணலாம்.
‘போட்டா போட்டி’ என்ற தொடரில், ‘போட்டி’ என்ற நிலைமொழியின் ஈற்று உயிராகிய இகரம் கெட்டு, அது ஆகாரமாக நீண்டு ‘போட்டா’ என்று மாற்றம் பெற்று அமைவதைக் காணலாம்.
சான்று:
ஏழை + மை = ஏழ்மை
இங்கே ‘ஏழை’ என்ற சொல், ஈற்று உயிர் ஆகிய ‘ஐ’ கெட்டு ‘ஏழ்’ என்றாவதைக் காணலாம். மைவிகுதி சேரும்போது ஈற்று உயிர் கெட்டுவிடுகிறது என்ற புதிய புணர்ச்சி விதி இத்தகைய சொல்லுக்கு மட்டுமே பொருந்தும்.
‘(அ)த்து’
(அ)ற்று’
‘அன்’
‘இன்’
என்னும் சில சாரியைகள் உள்ளன. இவை யாவும் இன்றைய தமிழில் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் பயன்பாடு குறித்துக் கீழே காண்போம்.
(அ)த்து
(அ)த்து சாரியை அகர உயிரை அடுத்து வரும் மகர ஈற்றுப் பெயர்களில் (மரம்) எல்லா வேற்றுமை உருபுகளுக்கு முன்னும் சேர்க்கப்படுகிறது.
சான்று:
படம் – படத்தை
- படத்தால்
- படத்தோடு
- படத்துக்கு
- படத்தில்
இது போன்று தமிழில் வழங்கி வரும் பிற மொழிச் சொற்களுடனும் ‘(அ)த்து’ சாரியை வருகிறது.
சான்று:
பாரம் – பாரத்தை
- பாரத்தால்
- பாரத்தோடு
- பாரத்துக்கு
- பாரத்தில்
இயற்பெயர்களோடும் ‘(அ)த்து’ச் சாரியை சேர்க்கப்படுகிறது.
சான்று:
ஆறுமுகம் – ஆறுமுகத்தை
- ஆறுமுகத்தால்
- ஆறுமுகத்தோடு
- ஆறுமுகத்துக்கு
ஆனால் ஆகார, ஈகார, ஊகார மெய்யை அடுத்து வரும் மகரத்தை இறுதியாக உடைய சொற்கள் பிற மொழிச்சொற்களே ஆகும். அவை இது போன்று ‘(அ)த்து’ச் சாரியை ஏற்பதில்லை எனத் தெரியவருகிறது. ‘(அ)த்து’ச் சாரியை இல்லாமலேயே வேற்றுமை உருபுகளை ஏற்று வரும்.
சான்று:
முகாம் – முகாமுக்கு, முகாமில்
டீம் – டீமுக்கு, டீமால்
ரூம் – ரூமுக்கு, ரூமில்
முஸ்லீம் – முஸ்லீமுக்கு, முஸ்லீமோடு
‘இன்’
‘இன்’ என்ற சாரியை இன்றைய தமிழில் ஆறாம் வேற்றுமைப் பொருளிலும், ஏழாம் வேற்றுமைப் பொருளிலும் வருவது ஓரளவு காணப்படுகிறது.
சான்று:
‘நூலின் விலை’ – ‘நூல் விலை’
‘ஏழையின் கண்ணீர் – ‘ஏழைக் கண்ணீர்’
‘வீட்டின் மேல்’ – வீடுமேல்
காலத்திற்கு ஏற்பப் பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்தமையால் அச்சொற்கள் தமிழ் மொழியில் ஏற்கனவே இருந்த புணர்ச்சி விதிகளில் இருந்து மாறுபட்டுக் காணப்படுகின்றன என்பது பற்றிப் படித்தீர்கள்.
பாடம் - 5
அடுத்து என்னென்ன தலைப்பின்கீழ் இக்கால எழுத்துத்தமிழ் பழந்தமிழிலிருந்து மாற்றம் அடைந்து உள்ளது என்பது பற்றி அறியலாம். அத்தலைப்புகள்:
1. எழுத்தின் எண்ணிக்கை
2. எழுத்தின் வருகை
3. எழுத்துப் புணர்ச்சி
4. சொல்லெழுத்து
5. எழுத்துச் சீர்த்திருத்தம்
6. வேற்றுமை உருபுகள்
7. சொல்லுருபுகள்
8. கால இடைநிலைகள்
9. துணை வினைகள்
10. பெயரடை
11. வினையடை
ஆகியனவாகும்.
இக்கால எழுத்துத்தமிழை வரலாற்று மொழியியலார் (
இதுபோல் இக்கால எழுத்துத்தமிழ், மொழியின் அமைப்பில் பல புதுமைகளைக் கொண்டுள்ளது.
இங்கு நாம் காண இருப்பது மொழி பற்றிய உணர்வும், அறிவும் மிகுந்து காணப்படுகின்ற தற்காலம் பற்றியது. மொழியின் பயன்பாடும் மிகுந்து விட்டதால் தமிழ்மொழியின் இலக்கணம் பற்றிய வாத விவாதங்கள் ஓரளவு நிறையவே இப்போது நடைபெற்று வருகின்றன எனலாம். அந்த வாதங்கள் பெரும்பான்மையும் பழந்தமிழ் இலக்கண – இலக்கிய நூல்களை ஒட்டியே அமைந்துள்ளன. இந்த நிலையில் இக்கால எழுத்துத்தமிழின் அமைப்புப் பற்றி மொழியியல் நோக்கில் இங்குஅறிந்து கொள்ளலாம்.
தொல்காப்பியர் எழுத்துகளின் எண்ணிக்கையை மொத்தம் 30 எனச் சுட்டியுள்ளார்.
எழுத்து எனப் படுப
அகர முதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப
(தொல்.எழுத்து.1)
கி.பி. 14ஆம் நூற்றாண்டுக்குள் எழுத்தின் எண்ணிக்கை பல்வேறு காரணங்களால் 31 ஆக உயர்ந்தது. ஆனால் இக்கால எழுத்துத்தமிழில் 31 எழுத்துகளின் கூட்டு வடிவம் 247. இவற்றோடு கல்வெட்டு எழுத்துகள் என்று சொல்லக்கூடிய (ஸ், ஷ், ஜ், ஹ், க்ஷ்) 5 கிரந்த எழுத்துகளும் அவற்றின் கூட்டு வடிவம் 60ம் ‘ஸ்ரீ’ என்னும் ஓர் எழுத்தும் சேர்ந்து வரத் தொடங்கியுள்ளன. இவ்வெண்ணிக்கை ஒரு சில காரணங்களால் இன்னும் அதிகரிக்கலாம் என்ற சூழல் இருப்பது தெரியவருகிறது. ஏனெனில் சிலர் குரல் உடை ஒலி எழுத்தினைத் (voiced sound) தடித்த எழுத்தில் எழுதி வருகின்றனர். அதனை வைத்துப் பார்க்கும்போது எழுத்தின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.
சான்று:
‘-ஸ்ர்’ – ‘இஸ்ரேல்’
‘-ட்ஜ்’ – ‘லாட்ஜ்’
‘-க்த்’ – ‘பாக்தாத்’
இது போன்று இன்னும் பலதரப்பட்ட மெய் எழுத்துகளின் வருகை அதிகமாக இக்காலத் தமிழில் காணப்படுகின்றது.
சான்று:
‘மரம் + கள் = மரங்கள்’
இப்பொழுது நாம் காண இருப்பது புதுவகையான புணர்ச்சி பற்றி ஆகும். கல்வெட்டு எழுத்துகளில் ஒன்றான ‘ஸ்’ என்பது சொல்லின் இறுதியில் வரும்போது /ஸ்/ ஆகவும், சொல்லின் இடையில் வரும்போது /ச்/ ஆகவும் வருகிறது. இது பற்றி முந்தைய பாடத்தில் பார்த்தோம்.
சான்று:
‘போலீஸ்’
‘போலீசுக்காரர்’
இதுபோன்றே இன்னொரு புதிய புணர்ச்சி விதி இக்காலத்தமிழில் வருகிறது. பிறமொழிச்சொல்லை அவ்வுச்சரிப்பின்படியே தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதுவதால் இப்புணர்ச்சி விதி வருகிறது.
சான்று:
‘அருண்சிங்’
‘சரண்சிங்’
இந்த /ங்/ என்ற மெய், சொல்லின் இறுதியில் பழங்காலத்திலும், இடைக்காலத்திலும் வருவது கிடையாது. ஆனால் தற்காலத்தில் இம் மெய் சொல்லின் இறுதியில் வருகிறது. இது ஒரு புது வருகை எனலாம். இந்த /ங்/ உடன் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு சேரும்போது இடையில் /க்/ என்ற மெய் வருகிறது.
சான்று:
‘சிங் + ஐ = சிங்கை’
‘சிங் + இடம் = சிங்கிடம்’
பொதுவாக மகர ஈற்றுச் சொற்களுடன் பன்மை விகுதி ஆகிய ‘- கள்’ சேர்ந்தால் அம்மகர மெய் /ங்/ என்ற மெய்யாக மாறுகிறது என முன்பே கண்டோம். ஆனால் ‘முகாம்’, ‘ரீம்’ போன்ற பிறமொழிச்சொற்கள் மகரத்தில் முடிந்தாலும் அவற்றுடன் ‘கள்’ விகுதி சேரும்போது எவ்வித மாற்றமும் நிகழாமல் இயல்பாக அமைந்து வருகின்றன. இது ஒரு புதிய புணர்ச்சி விதியாகும்.
சான்று:
‘முகாம் + கள் = முகாம்கள்’
‘ரீம் + கள் = ரீம்கள்’
இவை போன்ற புதிய புதிய புணர்ச்சி விதிகள், எழுத்தின் வருகை ஆகியன இக்கால எழுத்துத்தமிழில் காணப்படுகின்றன.
இடைக்காலத் தமிழில் ‘ஆநந்தம்’, ‘அநுபவம்’, ‘விநாயகர்’ என்று நகரம் அமைந்து வந்தது. இக்காலப் பேச்சுவழக்கில் நகரத்திற்கும், னகரத்திற்கும் இடையில் வேறுபாடு காணப்படாததால் நகரத்தை னகரமாகவே பலர் எழுதி வருகின்றனர்.
சான்று:
‘ஆநந்தம் – ஆனந்தம்’
‘அநுபவம் – அனுபவம்’
‘விநாயகர் – வினாயகர்’
அவ்வாறே ‘எழுத்துக்கள், அமைப்புக்கள்’ என்ற சொற்களில் ககரம் இரட்டித்து அதாவது இரட்டை வல்லெழுத்தாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எழுதப்பட்டு வந்தது. ஆனால் அந்நிலை மாறி இன்றையளவில் பலராலும் ‘எழுத்துகள்’, ‘அமைப்புகள்’ என்று ககரம் ஒற்றை வல்லெழுத்தாகவே எழுதப்பட்டு வருகின்றது.
இதே போலப் ‘பத்திரிக்கை’, ‘அண்ணாத்துரை’ என்னும் சொற்களும் ‘பத்திரிகை’, ‘அண்ணாதுரை’ என்று ஒற்றை வல்லெழுத்தால் எழுதப்பட்டு வருகின்றன.
தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்று, ஆணை பிறப்பித்து 1978 இல் அதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது.
ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை
(நன்னூல். 291)
தொல்காப்பியர் காலத்திற்கு முன் ஏழு வேற்றுமைகள் இருந்தன என்றும், தொல்காப்பியர் தமது நூலில் ‘விளி’ என்னும் ஒரு வேற்றுமையைச் சேர்த்து வேற்றுமையை எட்டாகக் கொண்டார் என்றும் தெரியவருகின்றது.
வேற்றுமை தாமே ஏழென மொழிப
(தொல்.சொல்.62)
என்றும்
விளிகொள் வதன்கண் விளியொடு எட்டே
(தொல்.சொல்.63)
என்றும் அவர் கூறுகிறார். ஆனால் இக்கால எழுத்துத்தமிழில் பத்துவகையான வேற்றுமைகள், அவற்றிற்கான உருபுகள் தனித்தனியே பயன்பாட்டில் இருந்து வருகின்றன என்பர் மொழியியலார். ஒரு சில வேற்றுமைகள் தமக்குள் இரண்டு விதமான பொருள் தந்து பின்னர்த் தனித்தனி வேற்றுமைகளாக மாறின எனலாம்.
பழந்தமிழில் மூன்றாம் வேற்றுமை (Instrumental case) என்று கூறக்கூடிய ஒன்று இக்கால எழுத்துத்தமிழில் இரண்டாகப் பிரிந்து ‘கருவி வேற்றுமை’ (Instrumental case) என்றும், ‘உடனிகழ்ச்சி வேற்றுமை’ (Sociative case) என்றும் ஆகியது. இவ்விரண்டும் தனித்தனியான வேற்றுமை உருபுகளுடன் இக்கால எழுத்துத்தமிழில் வழங்கி வருவதைக் காணமுடிகிறது.
சான்று:
‘குமார் கத்தியால் பழத்தை வெட்டினான்’
(ஆல் – கருவி வேற்றுமை)
‘குமார் அவனோடு வந்தான்’
(ஓடு – உடனிகழ்ச்சி வேற்றுமை)
இதுபோன்றே நான்காம் வேற்றுமை என்று பழந்தமிழில் கூறப்பட்டது இக்கால எழுத்துத்தமிழில் இரண்டாகப் பிரிந்து ‘Dative case’ என்றும், ‘Benefactive case’ (பயன்பாட்டு வேற்றுமை) என்றும் வழக்கில் இருந்து வருவதாக மொழியியலார் கூறுவர்.
சான்று:
‘குமாருக்கு வேண்டும்’ (நான்காம் வேற்றுமை)
‘குமாருக்காக வேண்டும்’ (பயன்பாட்டு வேற்றுமை)
ஆக மொத்தம் இக்கால எழுத்துத்தமிழில் 10 வகையான வேற்றுமைகள் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு:
1. முதல் வேற்றுமை – Nominative case
2. இரண்டாம் வேற்றுமை – Accusative case
3. மூன்றாம் வேற்றுமை – Instrumental case
4. நான்காம் வேற்றுமை – Dative case
5. ஐந்தாம் வேற்றுமை – Ablative case
6. ஆறாம் வேற்றுமை – Genetive case
7. ஏழாம் வேற்றுமை – Locative case
8. விளி வேற்றுமை – Vocative case
9. உடனிகழ்ச்சி வேற்றுமை – Sociative case
10. பயன்பாட்டு வேற்றுமை – Benefactive case
சான்று:
செய்தற் பொருட்டு (திருக்குறள். 21:212)
நம் பொருட்டால் (சிலம்பு. 19:23)
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி (புறநானூறு.55:2)
இக்கால எழுத்துத்தமிழிலும் கொண்டு என்ற ஒருசொல் தனியாக நின்று பொருள் தருகிறது.
சான்று:
‘குமார் கத்திகொண்டு பழத்தை வெட்டினான்’
அதே சமயத்தில் பழங்காலத் தமிழ் நான்கு வகை இலக்கணக் கூறுகளாகப் பிரிக்கப்பட்டு வழக்கில் இருந்தது (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்). இன்றையளவில் ‘சொல்லுருபு’ என்ற ஒரு இலக்கணக்கூறு தனித்த ஒன்றாக வளர்ச்சிபெற்று வருகிறது என்பர் மொழியியலார். எவ்வாறு எனில் இக்கால எழுத்துத்தமிழ் பலவிதமான புதிய புதிய சொல்லாக்கங்களையும், செய்திகளையும் பயன்படுத்துகிறது.இதனால் ஒரு சில சொல்லுருபுகள் மட்டுமே இருந்து வந்த தமிழில் இன்று 150க்கும் மேற்பட்ட சொல்லுருபுகள் இருப்பதாகக் கூறுவர்.
‘மூலம், அண்டை, பக்கம், கீழ்,பிறகு, உள், குறுக்கே, வெளியே, வழியாக, தவிர்த்து, பற்றி, வைத்து, ஒழிய, விட, பிந்தி, இல்லாமல்’ போன்றவை தற்காலத் தமிழில் வழங்கும் சில சொல்லுருபுகளாகும்.
1. இறந்தகாலம் 2. இறந்தகாலம் அல்லாதவை
பழங்காலத் தமிழில் இறந்த காலத்திற்கான கால இடைநிலைகள் தெளிவாகக் காணப்படுகின்றன. அதே சமயத்தில் இறந்தகாலம் அல்லாதவை என்ற பெயர் வருவதற்குக் காரணமாகிய கால இடைநிலைகள் சரிவரச் சுட்டப்படவில்லை (நிகழ்காலம், எதிர்காலம்) எனலாம். ஓரிரு சான்றுகள் இவற்றிற்குக் கிடைத்தாலும் அவ்வளவு தெளிவாகக் காண்பிக்கப்படவில்லை எனலாம்.
சான்று:
கல் பிறங்கு வைப்பின் கடறு அரையாத்த நின்
(பதிற்றுப்பத்து.53:4)
இங்கு இறந்தகாலத்தைச் சுட்டுவதுபோல், நிகழ்காலம், எதிர்காலம் என வேறுபடுத்திக் காட்ட முடியாத சான்றுகள் நமக்குப் பழந்தமிழ் வாயிலாகக் கிடைக்கப்பெறுகின்றன. இறந்தகாலம் அல்லாதவைக்கான கால இடைநிலைகள். ‘-ப்-, -ம்-. -க்-, -த்-’ என்பர் மொழியியலார்.
சான்று:
‘செய்யும்’ என்ற சொல்லைத் தொல்காப்பியர் பயன்படுத்தி இது எந்தக் காலத்தை உணர்த்துகிறது என்று கூறாமல் சென்றுள்ளார். இதில் நமக்கு ‘நிகழ்காலம், எதிர்காலம்’ ஏதும் தென்படவில்லை.
ஆனால் இக்கால எழுத்துத்தமிழில் மூன்று வகையான காலத்திற்கும் தனித்தனியேயான கால இடைநிலைகள் சுட்டப்படுகின்றன. அவை பின்வருமாறு:
இறந்தகாலம் – -த்-, -த்த்-, -ந்த்-, -ட்-, -இன்-
நிகழ்காலம் – -கிறு-, -கின்று-. -க்கிறு-, -க்கின்று-
எதிர்காலம் – -ப்-, -ப்ப்-. -வ்-
சான்று:
விதிர்த்துவிட்டன்ன அம்நுண் சுணங்கின்
(நற்றிணை.160:5)
இங்கு விடு என்னும் துணைவினை ஒருபொருளை உணர்த்தி வருகிறது. ஆனால் இக்கால எழுத்துத்தமிழில் எண்ணற்ற துணைவினைகள் பயன்பாட்டில் இருந்து வருவதைக் காணமுடிகிறது. அவற்றுள் சில: விடு, இரு, படு, செய், பண்ணு போன்றவையாகும். இன்றையளவில் ஒரு சில துணைவினைகள் பழங்காலத் தமிழில் காணப்பட்டதுபோல் ஒரு பொருளை மட்டும் தராமல் மூன்று விதமான வெவ்வேறு பொருளை உணர்த்திவருகின்றன என்பர் மொழியியலார்.
சான்று:
இரு
‘குமார் மதுரைக்குப் போயிருக்கிறான்’. இங்கு ‘செயல்முடிவு’ (perfect tense) என்ற பொருளில் அமைந்து வருகிறது.
‘குமார் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான்’. இங்கு ‘தொடர் செயல்’ (progressive aspect) என்ற பொருளில் வந்துள்ளது.
‘நேற்று இரவு மழை பெய்திருக்கும்’. இங்கு எதிர்காலத்திலுள்ள ‘எதிர்பார்ப்பு’ (supposition) என்ற பொருளில் அமைந்து வருகிறது.
இவ்வாறான பெரும் வளர்ச்சி இக்கால எழுத்துத்தமிழில் ஏற்பட்டுள்ளது எனலாம்.
சான்று:
நல்ல பையன்
அழகிய தீவு
சான்று:
மகிழ் மிகச்சிறப்ப மயங்கினள் கொல்லோ
(ஐங்குறுநூறு, 42:1)
இந்தச் சான்றில் வரும் மிக என்பது மிகுதியாக என்று இக்கால எழுத்துத்தமிழில் வழங்கிவருகிறது. முன்பு கூறப்பட்ட பெயரடை போன்றே வினையடையும் தனி ஒரு இலக்கணக் கூறாக இக்கால எழுத்துத்தமிழில் வழங்கி வருகின்றது.
பாடம் - 6
சங்ககாலம் முதல் தற்காலம் வரை தமிழில் மேற்கொள்ளப்பட்ட எழுத்துச் சீர்திருத்தப் பணிகளைத் தக்க சான்றுகளுடன் இப்பாடம் விரிவாக விளக்குகிறது. ஒரே காலகட்டத்தில் மூன்று வகையான எழுத்து முறைகள் அருகருகே பயன்படுத்தப்பட்டு வந்ததை விளக்குகிறது. உலகில் பல மொழிகளில் குறிப்பாக வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் எழுத்துச் சீர்திருத்தம் இன்னும் நடைபெறுகிறது என்பதை அறிய இருக்கிறோம்.
நாடு வளம் பெற எழுத்துமொழியை எளிமைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதற்குத் தகுந்தாற்போல் எழுதுபொருளிலும், எழுதும் முறையிலும் ஏற்பட்ட தொழிலியல் வளர்ச்சி, எழுத்து முறை பற்றிய சிந்தனைகளைத் தெளிய வைத்தது எனலாம். அதுவே எழுத்துச் சீர்திருத்தத்திற்கு ஒரு புதிய வேகத்தைக் கொடுத்தது என்று கூறலாம்.
1. ஓவிய எழுத்துமுறை
2. ஒலிசார் எழுத்து முறை
1. ஒலிசார் எழுத்து = ஒலி –> சொல் –> பொருள்
2. ஓவிய எழுத்து = பொருள் –> சொல்
மேலே குறிப்பிட்ட ஒலிசார் எழுத்தில் மற்ற இந்திய மொழிகளைவிடத் தமிழ்மொழி நல்ல முறையில் அமைந்திருப்பது தெரியவருகிறது. வடமொழியில் தர், ஸ்த்ர் போன்ற ஒலிகளைக் குறிக்க அவற்றிற்கு உள்ள ஒலியன்களைக் கூட்டெழுத்தின் துணைகொண்டே எழுதுவர். அவற்றோடு உயிர் சேர்ந்து உயிர்மெய் உருவாகும்போது அவற்றிற்கு உரிய வரிவடிவங்களும் சேர்ந்து அம்மொழியில் உள்ள வரிவடிவங்களின் எண்ணிக்கை மேலும் மிகுதியாகிறது. இதுபோன்ற கூட்டெழுத்து இடர்ப்பாடுகள் தமிழில் இல்லை எனலாம்.
1. சங்ககாலம்
2. இடைக்காலம்
3. தற்காலம்
தமிழ் நெடுங்கணக்கின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஆராய்ச்சி ஒரு புதிராகவே இன்றையளவும் அமைந்து இருக்கிறது. பலதரப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பலவிதமான கருத்துகளை அளிக்கின்றனர். ஆனால் ஏதோ ஒரு வரிவடிவத்திலிருந்து தோன்றி இன்றையளவில் மாற்றம் அடைந்தும், வளர்ச்சி அடைந்தும் வந்திருக்கின்றது எனலாம். அதற்கு ஒரு சான்று கூற வேண்டுமென்றால் தமிழ் எழுத்து முறை மிகத் தொன்மையானது என்றும், அந்த எழுத்துமுறை மேற்கு ஆசியாவிலிருந்து நேரே தென்னிந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்றும், இந்த எழுத்து முறையை வட இந்தியாவில் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்து இருக்கலாம் என்றும் கூறுவர்.
மெய் எழுத்துகள் புள்ளி இட்டு எழுதப்பட்டன.
உயிர் எழுத்துகளில் எகரம், ஒகரம் ஆகிய குறில்கள் இரண்டு மெய் எழுத்துகளைப் போலப் புள்ளி இட்டு எழுதப்பட்டன.
எ், ஒ் (இவை எ, ஒ என்னும் குறில்கள்) எ, ஒ (இவை ஏ, ஓ என்னும் நெடில்கள்)
3. மகர மெய்யானது, பகரமெய் போலவே எழுதப்பட்டது. ‘ப்’ என மேலே புள்ளி இட்டு எழுதினால் பகரமெய். அவ்வடிவத்தினுள் ப் மற்றொரு புள்ளி இட்டு எழுதினால் மகரமெய்.
இச் செய்திகளைத் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் பின்வரும் நூற்பாக்களில் உணர்த்துகிறார்.
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் (தொல்.எழுத்து.15)
எகர ஒகர இயற்கையும் அற்றே (தொல்.எழுத்து.16)
உட்பெறு புள்ளி உரு ஆகும்மே (தொல்.எழுத்து.14)
எகர, ஒகரக் குறில் உயிர்களும், மகர மெய்யும் தொல்காப்பியர் காலத்தில் பெற்றிருந்த வரிவடிவங்களும், இக்காலத்தில் அவை பெற்றிருக்கும் வரிவடிவங்களும் வேறுவேறு என்பதை நாம் அறியலாம்.
தொல்காப்பியர் காலத்தும் அவர் காலத்திற்கு முன்பும் ஐகாரமும் ஒளகாரமும் இருவேறு வகையான வரிவடிவங்களில் எழுதப்பட்டன.
1. ஐகாரம், அகரம் இகரம் ஆகிய இரண்டு உயிர்களின் கூட்டொலியாகக் கொண்டு நாம் இன்று எழுதுவதுபோல ஐ என ஓரெழுத்தாக எழுதப்பட்டது. அதேபோல ஒளகாரம், அகரம் உகரம் ஆகிய இரண்டு உயிர்களின் கூட்டொலியாகக் கொண்டு நாம் இன்று எழுதுவது போல ஒள என ஓரெழுத்தாக எழுதப்பட்டது.
அ + இ = ஐ
அ + உ = ஒள
2. ஐகாரம், அகர உயிரும் யகர மெய்யும் ஆகிய இரண்டன் கூட்டொலியாகக் கருதப்பட்டு, அய் என ஈரெழுத்தால் எழுதப்பட்டது. அதே போல ஒளகாரம், அகர உயிரும் வகர மெய்யும் ஆகிய இரண்டன் கூட்டொலியாகக் கருதப்பட்டு, அவ் என ஈரெழுத்தால் எழுதப்பட்டது.
அ + ய் = அய் (ஐ)
அ + வ் = அவ் (ஒள)
இன்று நாம் வாழும் தற்காலத்தில் கூட, ஐகாரம் ‘ஐ’ என்றும், ‘அய்’ என்றும் ஒளகாரம் ‘ஒள’ என்றும் ‘அவ்’ என்றும் இருவேறு வகையாக எழுதப்பட்டு வருவதைக் காணலாம்.
சான்று:
ஐயனார், அய்யனார்
ஒளவையார், அவ்வையார்
எழுத்துகளின் எண்ணிக்கையில் சீர்திருத்தம்
இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிய நூல்களிலும் உரைநடை நூல்களிலும் வடமொழியிலிருந்து பல சொற்கள் பயன்படுத்தப்பட்டன. சங்ககாலத்தில் வடசொற்கள் கலந்திருந்தாலும் அக்கலப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் இடைக்காலத்தில் வடசொற்களின் கலப்பு மிக அதிகமாகவே இருந்தது. இடைக்காலத்தில் தோன்றிய வீரசோழியம் போன்ற சில இலக்கண நூல்கள் வடமொழி இலக்கணத்தை பின்பற்றித் தமிழுக்கு இலக்கணம் அமைக்க முற்பட்டன. இடைக்காலத்தில் தமிழில் வடமொழிக் கலப்பின் வேகம் எந்த அளவு இருந்தது என்பதை இது உணர்த்துகிறது.
இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் கல்வெட்டு எழுத்துகள் என்று சொல்லக் கூடிய கிரந்த எழுத்துகளாகிய ஜ், ஷ், க்ஷ், ஸ், ஹ், ஸ்ரீ என்னும் ஆறு எழுத்துகளும் புதிய எழுத்துகளாக வந்து வழங்கத் தொடங்கின. ஒரு சிலர் வடமொழிச் சொற்களை, அச்சொற்களில் உள்ள ஒலிகளின்படியே தமிழில் உச்சரிக்க வேண்டும் அல்லது எழுதவேண்டும் என்பதற்காக இந்த ஆறு கிரந்த எழுத்துகளையும் தமிழ் நெடுங்கணக்கோடு சேர்த்துச் சீர்திருத்திக் கொண்டனர். இதன் விளைவாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை முன்பை விட அதிகமாயிற்று. இது குறித்து முந்தைய பாடங்களில் அறிந்துள்ளீர்கள்.
சங்காலத்திலும், இடைக்காலத்தின் பிற்பகுதி வரையிலும் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை பெரும்பாலும் 247 என்றே கொள்ளப்பட்டது.
உயிர் – 12
மெய் – 18
உயிர் மெய் – 216
ஆய்தம் – 1
——
247
——
மேலே கூறப்பட்ட கிரந்த எழுத்துகளில் ஜ், ஷ், க்ஷ், ஸ், ஹ் ஆகிய ஐந்தும் அகரம் முதலான பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் கூடி வரலாயின. இதனால் இவற்றின் கூட்டுவடிவம் 60 ஆயிற்று. எனவே ஜ், ஷ், க்ஷ், ஸ், ஹ் என்னும் கிரந்த எழுத்துகள் 5 , அவற்றின் கூட்டுவடிவம் 60 சேர்ந்து, இவற்றோடு ‘ஸ்ரீ’ என்ற தனியெழுத்தும் 66 ஆகி, ஏற்கனவே இருந்த 247 எழுத்துகளோடு சேர்ந்து தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை மொத்தம் 313 என்ற அளவில் பெருகி அமைந்தது.
கிரந்த எழுத்துகள் அல்லது கல்வெட்டு எழுத்துகள் என்று கூறப்படும் இந்த எழுத்துகள் இடைக்காலத்தின் இறுதிப் பகுதியில் தோன்றிய அருணகிரி நாதரின் திருப்புகழில் வருகின்றன.
சான்று: ‘ஷ் – குமர முஷிக முந்திய வைங்கர’ (திருச்செந்தில்: 13)
‘ஜ் – உபயகுல தீபதுங்க விருது கவிராஜசிங்க’ (திருப்பழநிமாலை: 15)
‘ஹ் – ஜெயஜெய ஹரஹர’ (திருச்செந்தூர்: 427)
‘க்ஷ் – தெளிய மோக்ஷத்தை’ (குமரக் கோட்டம்: 52)
‘ஸ்ரீ – பங்கய ஸ்ரீ பாதநூபுரி’ (திருச்செந்தூர்: 131)
எழுத்துகளின் வரிவடிவத்தில் சீர்திருத்தம்
இடைக்காலத்தின் பிற்பகுதி வரை (கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை), தொல்காப்பியர் காலத்தைப்போல எகர, ஒகரக் குறில் உயிர்கள் புள்ளி இட்டே எழுதப்பட்டு வந்தன.
கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் கூட, எகர ஒகரக் குறில் உயிர்கள் புள்ளி இட்டு எழுதப்படும் என்று கூறுகிறது.
தொல்லை வடிவின எல்லா எழுத்தும்; ஆண்டு
எய்தும் எகர ஒகரம், மெய் புள்ளி (நன்னூல்.98)
கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலி நாட்டிலிருந்து கிறித்தவ சமயம் பரப்ப வந்தவர் வீரமா முனிவர் (கி.பி. 1680 – 1747) ஆவார். இவரது இயற்பெயர் பெஸ்கி என்பதாகும். இவர் தமிழ்நாட்டில் தங்கியிருந்து கிறித்தவ சமயம் பரப்பியதோடு மட்டுமன்றி, தமிழ்ப்பணியும் செய்தவர் ஆவார். தேம்பாவணி என்னும் காப்பியத்தையும் சதுரகராதி, தொன்னூல் விளக்கம் போன்ற இலக்கண நூல்களையும் வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம் போன்ற உரைநடை நூல்களையும் இயற்றிய பெருமை உடையவர் வீரமாமுனிவர்.
வீரமாமுனிவர் செய்த தமிழ்ப்பணிகளில் குறிப்பிடத்தக்கது எழுத்துச் சீர்திருத்தம் ஆகும். சங்ககாலம் முதல் வீரமாமுனிவர் காலம் வரையிலும் எகர ஒகரக் குறில் உயிர்கள் புள்ளியுடனும் ஏகார, ஓகார நெடில் உயிர்கள் புள்ளிஇல்லாமலும் எழுதப்பட்டு வந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். வீரமாமுனிவர் ‘அ, இ, உ’ என்னும் ஏனைய குறில் உயிர்களுக்கு ஒப்பான வகையில், எகர ஒகரக் குறில் உயிர்களைப் புள்ளி இல்லாமல் அமைத்தார். அவற்றின் நெடில்களுக்கு அக்குறில் வடிவங்களின் கீழே சிறிது மாறுதல் செய்து அமைத்தார். குறில் எகரத்தின் கீழே இடப்புறம் சாய்வுக்கோடு இட்டு நெடில் ஏகாரத்தையும், குறில் ஒகரத்தின் கீழே ஒரு சுழி இட்டு நெடில் ஓகாரத்தையும் குறிக்கும் வடிவங்களாகக் கொண்டு எழுதும் புதிய எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார்.
பழைய எழுத்து வீரமாமுனிவர் செய்த
வடிவம் சீர்திருத்த வடிவம்
குறில் எ், ஒ் எ, ஒ
நெடில் எ, ஒ ஏ, ஓ
வீரமாமுனிவர் செய்த இந்த எழுத்துச் சீர்திருத்தம் இன்று வரையில் பயனுள்ளதாய்ப் போற்றப்படுகின்றது.
6.5.3 தற்காலம்
தற்காலத் தமிழில் அச்சுப்பொறி, தட்டச்சுப்பொறி, கணிப்பொறி (கணினி) ஆகியன இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இவற்றின் துணைகொண்டு இன்று கல்வி கற்பது, பல்துறை நூல்களை எழுதி வெளியிடுவது போன்றவை நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழில் உள்ள எழுத்துகளுக்கான வரிவடிவங்களில் ஓர் ஒழுங்கான அமைப்பினைக் கொண்டு வந்தால், பல எழுத்து வடிவங்களைக் கொண்ட தமிழை, மிகக் குறைந்த எழுத்து வடிவங்களைக் கொண்டு எளிதாக எழுதிவிடலாம் – கற்று விடலாம் என்ற எண்ணம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகவே தமிழ் அறிஞர் சிலரிடம் இருந்தது. அவ்வெண்ணத்தைச் செயலாக்குவதற்கு அவர்கள் ஆக்கப்பூர்வமான முயற்சியில் ஈடுபட்டனர் – ஈடுபட்டும் வருகின்றனர்.
தந்தை பெரியார் அவர்கள் தற்காலத் தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்துச் சீர்திருத்தம் செய்த பெருமைக்கு உரியவர் ஆவார். தமிழில் ‘க், ங், ச், ஞ், ட், த், ந், ப், ம், ய், ர், வ், ழ்’ என்னும் பதின்மூன்று மெய் எழுத்துகள் ‘ஆ, எ, ஏ, ஐ, ஒ, ஓ’ என்னும் ஆறு உயிர்களோடு சேர்ந்து உயிர்மெய்களாக வரும்போது அவற்றின் உயிர்மெய் வடிவங்கள் 78 ஓர் ஒழுங்கான அமைப்பில் உள்ளன.
சான்று:
கா, கெ, கே, கை, கொ, கோ.
சா, செ, சே, சை, சொ, சோ.
தா, தெ, தே, தை, தொ, தோ.
பா, பெ, பே, பை, பொ, போ.
ஆனால் ‘ண், ல், ள், ற், ன்’ ஆகிய ஐந்து மெய் எழுத்துகள் மேலே குறிப்பிட்ட ஆறு உயிர்களோடு சேர்ந்து உயிர்மெய்களாக வரும்போது அவற்றின் வரிவடிவங்கள் 30இல் 17 வரிவடிவங்கள் மேலே கூறப்பட்டுள்ளவாறு ஓர் ஒழுங்கான அமைப்பில் காணப்பட்டன. ஆனால் ஏனைய 13 வரிவடிவங்கள் ஒழுங்கான அமைப்பில் இல்லை; வேறுபட்ட அமைப்புடன் இருந்தன. அவற்றைக் கீழ்க்கண்ட பட்டியல் காட்டும்.
இப்பதின்மூன்று எழுத்து வடிவங்களையும், ‘கா, கெ, கே, கை, கொ, கோ’ போன்ற ஏனைய உயிர்மெய்களின் வரிவடிவ அமைப்பில் எழுதினால் ஓர் ஒழுங்கு முறையும், எளியமுறையும் கிடைக்கும் எனக் கருதிய தந்தை பெரியார் அவ்வெழுத்துகளின் வரிவடிவங்களில் சீர்திருத்தம் செய்தார். அவர் செய்துள்ள சீர்திருத்தத்தைப் பின்வரும் பட்டியல் தெளிவாகக் காட்டும்.
தந்தை பெரியார் செய்த இந்த எழுத்துச் சீர்திருத்தத்தின் விளைவாக, தமிழில் உள்ள ‘ஆ, எ, ஏ, ஐ, ஒ, ஓ’ என்னும் ஆறு உயிர் எழுத்துகளோடு பதினெட்டு மெய் எழுத்துகளும் சேர்ந்து வரும் 108 உயிர்மெய்கள் ஓர் ஒழுங்கான வரிவடிவ அமைப்புக்குள் வரலாயின.
தந்தை பெரியார் மேலே குறிப்பிட்ட எழுத்துச் சீர்திருத்தத்தினைக் கி.பி. 1935இல் தமது திராவிடர் கழக நாளிதழான விடுதலையில் அறிமுகப்படுத்திப் பின்பற்றி வந்தார். மேலும் அவர் இந்த எழுத்துச் சீர்திருத்தத்தை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் வந்தார்.
தந்தை பெரியார் பின்பற்றிய – வலியுறுத்திய இந்த மாபெரும் எழுத்துச் சீர்திருத்தத்தை, கி.பி. 1978இல் அப்போது இருந்த தமிழ்நாடு அரசு சட்டமாக்கி, ஆணை பிறப்பித்து நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
‘ஆ, எ, ஏ, ஐ, ஒ, ஓ’ மற்றும் ‘அ, ஒள’ ஆகிய எட்டு உயிர்களோடு பதினெட்டு மெய் எழுத்துகளும் சேர்ந்து வரும் 144 உயிர்மெய்கள் தமிழ் நெடுங்கணக்கில் தற்போது ஓர் ஒழுங்கான வரிவடிவ அமைப்பைப் பெற, ஏனைய ‘இ, ஈ, உ, ஊ’ ஆகிய நான்கு உயிர்களுடன் பதினெட்டு மெய் எழுத்துகளும் சேர்ந்து வரும் 72 உயிர்மெய்கள் ஒரு சீரான ஒழுங்கான வரிவடிவ அமைப்பில் அமையாமல், தனித்தனியே வேறுபட்ட வரிவடிவங்களாக அமைந்துள்ளன. சான்றாக, ‘க், ச், த், ந், ம்’ என்னும் மெய் எழுத்துகள் இந்த நான்கு உயிர்களோடு சேர்ந்து வரும்போது,
கி, கீ, கு, கூ
சி, சீ, சு, சூ
தி, தீ, து, தூ
நி, நீ, நு, நூ
மி, மீ, மு, மூ
என வெவ்வேறு வடிவங்களில் எழுதப்படுகின்றன.
எனவே, ‘இ, ஈ, உ, ஊ’ என்னும் நான்கு உயிர்களோடு பதினெட்டு மெய்கள் சேர்ந்து வரும் 72 உயிர்மெய்களின் வரிவடிவ அமைப்பிலும் ஒரு சீரான ஒழுங்குமுறையைக் கொண்டு வருவதற்கான முயற்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இத்தகைய அரிய முயற்சியில் ஐராவதம் மகாதேவன், டாக்டர் வா. செ. குழந்தைசாமி போன்றோர் அயராது பாடுபட்டு வருகின்றனர். இவர்களது முயற்சி வெற்றி பெற்றால் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளை மிகவும் குறைவான குறியீடுகளால் எழுதிவிட முடியும் என்பர்.
இக்காலத்தில் இன்னும் சிலர் தம்மைப் ‘புதுமைவாதிகள்’ எனக் கூறிக்கொண்டு தமிழ் எழுத்தில் சில புதிய உத்திகளைக் கையாளுகின்றனர். இவர்கள் குரல் இலா ஒலி (voiceless sound), குரல் உடைய ஒலி (voiced sound) என்பனவற்றை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகத் தமிழ் எழுத்தில் சற்றுத் தடித்த எழுத்தில் (bold) எழுதுகின்றனர். இதன் நோக்கம் ஒலிகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டினைக் காண்பதற்கே.
சான்று:
‘பாம்பு’
கி.பி. 7ஆம் மற்றும் 8ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ்நாட்டில் மூன்று எழுத்து முறைகள் காணப்பட்டன. அவையாவன:
1. கிரந்த எழுத்து (கல்வெட்டு எழுத்து)
2. தமிழ் எழுத்து
3. வட்டெழுத்து
சோழநாட்டிலும் தொண்டை மண்டலத்திலும் தமிழ் எழுத்துகள் புழக்கத்தில் இருந்தன. பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் வட்டெழுத்துகள் புழக்கத்தில் இருந்தன. பொதுவாக வடமொழிச் சொற்களை அப்படியே தமிழில் எழுத வேண்டும் என்று எண்ணிக் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தினர். ஆனால் ஒன்று நிச்சயம். இம் மூன்று எழுத்துகளும் ஒரே காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்தன என்பது தெளிவு. இதுபோன்ற காரணங்களால் எழுத்தில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. இதனையே எழுத்துச் சீர்திருத்தம் என்கிறோம்.
வளர்ந்து வரும் புத்துலகத் தேவைக்கு ஏற்ப மொழியிலும் எழுத்திலும் புதுமை செய்துகொள்ள நேரிடுவது இயற்கை. இதில் எவ்விதத் தயக்கமும் தேவையில்லை எனலாம். உலக வரலாற்றில் இப்படிப்பட்ட எழுத்துச் சீர்திருத்தங்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் நடந்திருக்கின்றன. ஆகவே, மொழியிலும் எழுத்திலும் புதுமையாக்கமும் சீர்திருத்தமும் தேவையே.
தெலுங்கு எழுத்தும் கன்னட எழுத்தும் அதிக ஒற்றுமை உடையனவாகும். அவை இரண்டையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற முயற்சி நடைபெற்று வருகிறது.
இந்திய மொழிகளில் ஒன்றான மராட்டியில் (அச்சு வாகனம் ஏற்பட்டதும்) ‘மோடி’ எழுத்துப் போய் நாகரி எழுத்துப் புகுத்தப்பட்டது.
இந்தோனேஷியா மொழியில் அந்நாடு சுதந்திரம் அடைந்த பிறகு (1945) நிறையச் சீர்திருத்தங்கள் ஏறக்குறைய ஐந்து முறை மேற் கொள்ளப்பட்டன. இருக்கின்ற எழுத்துகளில் அதிகம் பயன்படாமல் இருப்பதை இன்று தேவைப்படும் புதிய ஒலிகளைக் குறிக்கும்படிச் செய்தல் போன்றவற்றைச் செய்தனர். தமிழ்மொழியில் அதிகமாகப் பயன்படாமல் நிறைய எழுத்துகள் காணப்படுகின்றன.
சான்று:
ஙி, ஙீ
ஙு, ஙூ
ஙெ, ஙே,
ஙை ஙொ,
ஙோ, ஙௌ
என்பனவாகும்.
பொதுவாகக் கூற வேண்டும் என்றால் இந்தோனேஷிய மொழி எழுத்துச் சீர்திருத்தத்திற்குப் பெயர் பெற்ற ஒன்று எனலாம். எவ்வாறு எனில் இந்நாட்டின் வரலாற்றில் பெரிய அளவில் கலாச்சார மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. பலவிதமான மதங்களைத் தழுவியவர்கள் இந்நாட்டை ஆண்டு வந்ததால் அதிக எண்ணிக்கையில் எழுத்துச் சீர்திருத்தம் நடைபெற்றுள்ளது எனலாம்.
ஜெர்மானிய மொழி ‘கோதிக்’ (Gothic) வரிவடிவத்தில் எழுதப்பட்டது மாறி ரோமன் (Roman) எழுத்தில் எழுதப்படத் தொடங்கியது. இதற்கும் சமய வளர்ச்சியே காரணம் எனலாம்.
1. எழுத்துச் சீர்திருத்தத்திற்கான விளக்கம்.
2. எழுத்தின் தன்மை
3. எழுத்துச் சீர்திருத்தம் ஏன்?
4. வரலாற்று நோக்கில் எழுத்துச் சீர்திருத்தம்
5. தழுவல் முறை
6. பிறமொழிகளில் எழுத்துச் சீர்திருத்தம்
போன்றவற்றைப் பற்றிச் சான்றுகளுடன் கற்று அறிந்து இருப்பீர்கள்.

