86

சொல் மாற்ற வரலாறு

பாடம் - 1

பதிலிடு பெயர்கள்

1.0 பாட முன்னுரை

உலக மொழிகள் அனைத்திலும் சொல் பாகுபாட்டில் பெயர்ச்சொல்லே முதலாவதாகக் கூறப்படுகிறது. பெயர்ச்சொல் இலக்கணம் கூற வந்த திரேக்ஸ் என்பவர் ‘பெயர் வேற்றுமை உருபை ஏற்கும்’ என்றும், ‘ஒரு பொருளைக் குறிக்கும்’ என்றும் கூறுவார் (A Noun is a part of speech with cases, denoting a thing). ஒரு பொருளை நேரடியாகக் குறிக்கும் வகையில் அமைந்த பெயர்கள் மிகப் பலவாக எல்லா மொழிகளிலும் உள்ளன. ஆனால் அத்தகைய பெயர்களுக்குப் பதிலாக நின்று அப்பொருளை உணர்த்த வழங்கும் பெயர்கள் மிகச் சிலவாகவே எந்த ஒரு மொழியிலும் உள்ளன. இத்தகைய பெயர்களையே மொழிநூலார் (Linguists) பதிலிடு பெயர்கள் (Pronouns) என்று குறிப்பிடுகின்றனர்.

தமிழில் மூவிடப் பெயர்கள், சுட்டுப் பெயர்கள், வினாப் பெயர்கள் ஆகிய மூன்றும் பதிலிடு பெயர்கள் என்று மொழியியலாரால் கூறப்படுகின்றன. இம்மூவகைப் பெயர்களையும் பழந்தமிழ் இலக்கண நூலாசிரியராகிய தொல்காப்பியர் தனித் தொகுதியாக்கிக் கூறியுள்ளமையைத் தொல்காப்பியத்தில் காணலாம்.

பதிலிடு பெயர்கள் யாவும் வடிவில் சிறியனவாய் உள்ளன; மக்கள் நாவில் நாளும் நடமாடும் இயல்புடையனவாய் உள்ளன; கால வெள்ளத்தைக் கடந்து நிற்கும் நிலைபேறு உடையனவாய் உள்ளன. பொதுவாகப் பதிலிடு பெயர்கள் மாற்றத்திற்கு உள்ளாவதில்லை என்பர். எனினும் நீண்ட கால வரலாற்றை உடைய தமிழ்மொழியில் பதிலிடு பெயர்கள் காலந்தோறும் சிறுசிறு மாற்றங்களைக் கண்டும் சில புதிய வடிவங்களைப் பெற்றும் அதனால் சில பழைய வடிவங்களை இழந்தும் வளர்ந்து வந்திருப்பதைக் காண்கிறோம். பதிலிடு பெயர்களின் இத்தகைய வளர்ச்சியினையும் மாற்றங்களையும் பற்றிய செய்திகள் வரலாற்று நெறிமுறையில் இப்பாடத்தில் தொகுத்துத் தரப்படுகின்றன.

1.1 பதிலிடு பெயர்களும் மொழியும்

பதிலிடு பெயர்கள் மொழியின் அடிப்படைச் சொற்களாகக் (basic vocabulary) கருதப்படுகின்றன. ஒரு மொழியின் வரலாற்றில் இவை முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. பதிலிடு பெயர்கள் பொதுவாக எளிதில் மாறும் தன்மை உடையன அல்ல. எனினும்     தமிழ்மொழியின் வரலாற்றை நோக்கினால், அம்மொழியில் பதிலிடு பெயர்கள் காலந்தோறும் சிற்சில மாற்றங்களையும் புது வடிவங்களையும் பெற்று வளர்ந்து வந்திருப்பதைக் காணலாம் ; புது வடிவங்களின் வரவால் பழைய வடிவங்கள் சில வழக்கிழந்து போயிருப்பதையும் அறியலாம்.

1.1.1 பதிலிடு பெயர் – விளக்கம் ஒரு பொருளை நேரடியாகக் குறிக்கும் பெயராக அமையாமல், அப்பெயருக்குப் பதிலாக – மாற்றாக (Substitute) நின்று, அப்பொருளை உணர்த்துவதற்கு வழங்கும் பெயரை மொழியியலார் திலிடு பெயர் (Pronoun) என்று குறிப்பிடுகின்றனர். இக்கருத்தைச் சில சான்றுகள் கொண்டு விளக்கிக் காண்போம்.

சான்று : 1

கண்ணன் வந்தான்

இத்தொடரில் கண்ணன் என்ற பெயர் ஒரு பொருளை நேரடியாகக் குறிக்கும் பெயர் ஆகும். எனவே இதனைத் தனிப்பெயர் (Proper noun) என்று குறிப்பிடுவர். இத்தொடரை,      அவன் வந்தான்

என்றும் கூறலாம். இத்தொடரில் அவன் என்பது நேரடியாக ஒரு பொருளைக் குறிக்கவில்லை. இருப்பினும் ெஎன்ற பெயருக்குப் பதிலாக வழங்குகிறது. எனவே அவன் என்பது பதிலிடு பெயர் எனக் கூறப்படுகிறது.

சான்று : 2

பூனை வந்தது

இத்தொடரில் பூனை என்ற பெயர் நேரடியாக ஒரு பொருளைக் குறிக்கிறது. இத்தொடரை,

அது வந்தது

என்றும் கூறலாம். இத்தொடரில் அது என்பது, பூனை என்ற பெயருக்குப் பதிலாக வழங்குகிறது. எனவே அது என்பது பதிலிடு பெயர் எனக் கூறப்படுகிறது.

மேலும் சில சான்றுகள்:

நீ வந்தாய்

நான் வந்தேன்

அவள் வந்தாள்

இத்தொடர்களில் முறையே நீ, நான், அவள் என்னும் பெயர்கள், அவரவர்க்குரிய நேரடியான பெயர்கள் அல்ல. அப்பெயர்களுக்குப் பதிலாக வழங்குகின்ற பெயர்களே ஆகும்.

மேலே சான்று காட்டிய தொடர்களில் நீ, நான் என்பன மூவிடப்பெயர்கள்; அவன், அவள், அது என்பன சுட்டுப்பெயர்கள். இப்பெயர்கள் எல்லாம் ஒரு பொருளை நேரடியாகக் குறிக்காமல், அப்பொருளை நேரடியாகக் குறிக்கும் பெயர்களுக்குப் பதிலாக நின்று வழங்குகின்றன. இத்தகைய பெயர்களையே மொழியியலார் பதிலிடு பெயர்கள் (Pronouns) என்று குறிப்பிடுகின்றனர். இவற்றை மாற்றுப் பெயர்கள் என்ற வேறொரு பெயராலும் மொழியியலார் குறிப்பிடுவர்.

1.1.2 பதிலிடு பெயர் வரும் இடங்கள் தமிழில் பதிலிடு பெயர் வரும் இடங்களை இக்கால மொழியியலார் வகைப்படுத்திக் கூறியுள்ளனர்.

பெயருக்குப் பதிலாக வருதல்

கண்ணன் வந்தான்; அவனுக்கு இடம் கொடு.

என்ற தொடரில் ‘கண்ணன்’ என்ற பெயருக்குப் பதிலாக, அவன் என்ற பதிலிடு பெயர் வருகிறது.

பெயர்த்தொடருக்குப் பதிலாக வருதல்

அங்கு வந்த பையன் நல்லவன்; அவனுக்கு இடம் கொடு.

என்ற     தொடரில்     ‘அங்கு வந்த பையன்’ என்ற பெயர்த்தொடருக்குப் (Noun Phrase) பதிலாக அவன் என்ற பதிலிடு பெயர் வருகிறது.

சொற்றொடருக்குப் பதிலாக வருதல்

கண்ணன் வந்தான்; அது நல்லதன்று.

என்பதில் ஒரு சொற்றொடருக்குப் (கண்ணன் வந்தது) பதிலாக, அது என்ற பதிலிடு பெயர் வருகிறது.

சொற்றொடரின் ஒரு பகுதிக்குப் பதிலாக வருதல்

அவன் சென்னையில் வெற்றி பெற்றான்; ஆனால் அது இங்கே நடக்காது.

என்ற சொற்றொடரில் ஒரு பகுதிக்குப் (வெற்றி பெறுதல்) பதிலாக அது என்ற பதிலிடு பெயர் வருகிறது.

மேலும் பதிலிடு பெயர்கள், முன்னால் சொன்ன பெயர் பற்றிய செய்திகள் அனைத்தையும் கொண்டு தரும்.

குழலி என் மாமன் மகள்; அவள் நல்லவள்.

என்பதில் அவள் என்பது பதிலிடு பெயர். இது ‘குழலி’, ‘மாமன் மகள்’ போன்ற எல்லாச் செய்திகளையும் தந்து நிற்றல் காணலாம்.

1.1.3 மொழியியலார் குறிப்பிடும் பதிலிடு பெயர்கள் தமிழில் உள்ள பதிலிடு பெயர்களை மொழியியலார் மூன்று வகையாகப் பிரித்துக் கூறுகின்றனர்.

1) மூவிடப் பெயர்கள் (Personal pronouns)

2) சுட்டுப் பெயர்கள் (Demonstrative pronouns)

3) வினாப் பெயர்கள் (Interrogative pronouns)

1.1.4 தமிழிலக்கண நூலாரும் பதிலிடு பெயர்களும் தொல்காப்பியர், நன்னூலார் போன்ற தமிழிலக்கண நூலாரும் பெயர்களை வகைப்படுத்திக் கூறும்போது, மொழியியலார் குறிப்பிடும் மூவகைப் பதிலிடு பெயர்களுக்கே முதன்மை இடம் தந்துள்ளனர்.

தொல்காப்பியர் பெயர்களை உயர்திணைப் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள், விரவுப் பெயர்கள் (இருதிணைக்கும் பொதுவான பெயர்கள்) என மூவகையாகப்     பகுக்கின்றார். ஒவ்வொரு வகையிலான பெயர்களைத் தொகுத்துக் கூறும்போது முதலில் பதிலிடு பெயர்களையே கூறுகின்றார்.

உயர்திணைப் பெயர்களைப் பற்றிப் பேசும்போது,

அவன்,இவன், உவன்,என வரூஉம் பெயரும்,

அவள்,இவள், உவள், என வரூஉம் பெயரும்,

அவர், இவர், உவர்,என வரூஉம் பெயரும்,

யான்,யாம் நாம்,என வரூஉம் பெயரும்,

யாவன், யாவள், யாவர், என்னும்

ஆவயின் மூன்றொடு, அப்பதி னைந்தும்

பால்அறி வந்த உயர்திணைப் பெயரே

(தொல்காப்பியம், சொல்லதிகாரம்-162)

என முதலில் பதிலிடு பெயர்களையே குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் இந்நூற்பாவில் குறிப்பிடும் அவன், இவன், உவன்; அவள், இவள், உவள்; அவர், இவர், உவர் என்னும் ஒன்பதும் சுட்டுப்பெயர்கள். யான், யாம், நாம் என்னும் மூன்றும் தன்மை இடப்பெயர்கள். யாவன், யாவள், யாவர் என்னும் மூன்றும் வினாப்பெயர்கள்.

இதேபோலத் தொல்காப்பியர் அஃறிணைப் பெயர்களைப் பற்றிப் பேசும்போது முதற்கண் அது, இது, உது; அவை, இவை, உவை என்னும் சுட்டுப் பெயர்களையும், யாது, யா, யாவை என்னும் வினாப்     பெயர்களையும்     குறிப்பிடுகிறார். விரவுப்பெயர்களைப் பற்றிப் பேசும்போது, நீ, நீயிர் என்னும் முன்னிலை இடப்பெயர்களையும், தான், தாம் என்னும் படர்க்கை இடப்பெயர்களையும் குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியருக்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்ட காலத்தில் தோன்றிய நன்னூலாரும்,

தன்மை யான், நான், யாம், நாம்; முன்னிலை

எல்லீர் நீயிர், நீவிர் நீர், நீ;

அல்லன படர்க்கை; எல்லாம் எனல்பொது

(நன்னூல் – 285)

என்ற நூற்பாவில் பதிலிடு பெயர்களில் ஒன்றாகிய மூவிடப்பெயர்களைத் தொகுத்துக் கூறுகிறார்.

இனி, மூவிடப்பெயர்கள், சுட்டுப்பெயர்கள், வினாப்பெயர்கள் என்னும் மூன்று வகைப் பதிலிடு பெயர்களும் தமிழ்மொழி வரலாற்றில் காலந்தோறும் அடைந்த மாற்றங்களையும் வளர்ச்சியையும் பற்றி விரிவாகக் காண்போம்.

1.2 மூவிடப்பெயர்கள்

மொழிகளின் உறவையும் மொழியினங்களின் தொடர்பையும் விளக்கும் வகையில் மூவிடப்பெயர்கள் (Personal pronouns) சிறந்து நிற்கின்றன. பொதுவாக ஒரு மொழியில் சொற்கள் காலந்தோறும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் மூவிடப்பெயர்கள் எவ்வளவு காலமாயினும் பெரும் மாற்றத்திற்கு     உள்ளாவதில்லை.     காலப்போக்கில் மூவிடப்பெயர்களில் சிறுசிறு மாறுதல்கள் ஏற்படுவது உண்டு. ஆயினும் பழைய சொல் வடிவுக்கும் புதிய சொல் வடிவுக்கும் உள்ள உறவு தெளிவாய்த் தெரியும். சான்றாகத் தமிழில், நனிமிகு பழங்காலத்தில் தன்மை ஒருமை இடப்பெயராக ‘யான்’ மட்டுமே வழங்கியது. காலப்போக்கில் ‘நான்’ என்ற புதிய வடிவம் வந்தது. இருப்பினும் இவ்விரு வடிவங்களுக்கும் உள்ள வேற்றுமை குறைவு. இதுபோன்ற சிறு மாறுதல் நிகழ்வதற்குக் கூட நெடுங்காலம் வேண்டியுள்ளது.

மூவிடப்பெயர்கள் தன்மை இடப்பெயர், முன்னிலை இடப்பெயர், படர்க்கை இடப்பெயர் என மூவகைப்படும்.

மூவிடப்பெயர்களும் பிற பெயர்ச்சொற்களும்

தமிழில் மூவிடப்பெயர்கள் பிற பெயர்ச்சொற்களினின்று பல நிலைகளில் வேறுபட்டு அமைந்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க சிலவற்றைக் காண்போம்.

1. பிற பெயர்ச்சொற்களோடு வேற்றுமை உருபுகள் சேரும்போது அப்பெயர்ச்சொற்களின் வடிவம் திரிவதில்லை.

சான்று :

இராமன் + ஐ = இராமனை

மலர் + ஐ = மலரை

ஆனால்     மூவிடப்பெயர்களோடு     வேற்றுமை உருபுகள் சேரும்போது, அப்பெயர்களின் வடிவம் திரியும். அதாவது நெடுமுதல் குறுகும். இவ்வாறு திரியும் வடிவத்தை உருபு ஏற்கத் திரிந்த பெயர் (Oblique form) என்றும், உருபு ஏலா நிலையில் உள்ள எழுவாய் வடிவத்தை உருபு ஏலாப்பெயர் (Nominative form) என்றும் மொழியியலார் குறிப்பிடுவர்.

சான்று:

உருபு ஏலாப்     வேற்றுமை உருபு ஏற்கத் திரிந்த      பெயர்     உருபு     வடிவம்

நான்     +     ஐ     = என்னை

நாம்     +     ஐ     =     நம்மை

நாங்கள் +     ஐ     =     எங்களை

நீ     +     ஐ     =     நின்னை, உன்னை

நீங்கள்     +     ஐ     =     உங்களை

2. பிற பெயர்ச்சொற்கள் இருதிணை ஐம்பால் காட்டி நிற்கும். (எடுத்துக்காட்டு) இராமன், சீதை, மக்கள், மரம், மரங்கள். ஆனால் மூவிடப்பெயர்களோ திணை, பால் காட்டா; ஒருமை, பன்மை என்ற எண் வேறுபாடு மட்டுமே காட்டும்.

சான்று:

நான், நீ, தான் – ஒருமை

நாம், நாங்கள், நீங்கள், தாம் – பன்மை

1.2.1 தன்மை இடப்பெயர்

பேசுகின்றவர் தன்னைத் தானே குறித்துக் கூறும்சொல் தன்மை இடப்பெயர் (First Person) ஆகும். இதனுள் இரு பிரிவுகள் உள்ளன.

1) தன்மை ஒருமை

2) தன்மைப் பன்மை

சங்ககாலம்

சங்ககாலத்தில் தோன்றிய நூல்களில் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம் ஆகும். இந்நூலை அடிப்படையாகக் கொண்டே தமிழ்மொழி வரலாற்றை மொழிநூலார் தொடங்குவர்.

தொல்காப்பியர்     தன்மை ஒருமைப்பெயராக யான் என்பதையும், தன்மைப் பன்மைப்பெயர்களாக யாம், நாம் என்பனவற்றையும் குறிப்பிடுகிறார். மேலும் இவற்றை உயர்திணைக்கு உரிய பெயர்கள் என்கிறார்.

யான் யாம் நாம் என வரூஉம் பெயரும்

(தொல்காப்பியம், சொல்லதிகாரம் – 162)

வேற்றுமை உருபேற்கும்போது யான் என்பது என் எனவும், யாம் என்பது எம் எனவும், நாம் என்பது நம் எனவும் திரிபடையும் என்கிறார் தொல்காப்பியர்.

தன்மை ஒருமைக்கு யான் என்ற ஒரு வடிவத்தை மட்டும் கூறிய தொல்காப்பியர், தன்மைப் பன்மைக்கு யாம், நாம் என்ற இரு வடிவங்களைக் கூறியுள்ளார். இதற்குக் காரணம் தன்மைப்பன்மை இருவேறு பொருளை உணர்த்துவதே     ஆகும். அவ்விரு பொருளையும் தனித்தனியே உணர்த்த வேண்டி இருவேறு பன்மை வடிவங்கள் தேவைப்பட்டன.

நாம் என்பது     தன்மையோடு     கேட்போராகிய முன்னிலையாரையும் உளப்படுத்தும் தன்மைப் பன்மை ஆகும். இதனை உளப்பாட்டுத் தன்மைப்பன்மை (Inclusive plural) என்பர்.

சான்று:

நாம் செல்வோம் (நானும் நீயும்; நானும் நீங்களும்)

யாம் என்பது கேட்போராகிய முன்னிலையாரை உளப்படுத்தாது, தன்னைச் சார்ந்தோரை (தன்மையாரை) மட்டும் உணர்த்தும் பன்மை ஆகும். இதனை உளப்படுத்தாத் தன்மைப்பன்மை (Exclusive plural) என்பர்.

சான்று :

யாம் செல்வோம்(நானும் என்னைச் சார்ந்தோரும்)

தொல்காப்பியத்தை அடுத்துத் தோன்றிய     சங்க இலக்கியங்களில் யான் என்பதோடு, நான் என்ற புதிய வடிவமும் தோன்றி வழங்குகிறது. ஆயினும் யான் என்பதே மிகுதியாக வழங்குகிறது. சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில்தான் நான் என்பது முதலில் வருகிறது. அது அந்நூலில் இரண்டு இடங்களில் வருகிறது.

சான்று :

நல்லாள் கரைநிற்ப நான் குளித்த பைந்தடத்து

(பரிபாடல், 6 : 87)

அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்

(பரிபாடல், 20 : 82)

இடைக்காலம்

இடைக்காலத்தில் தோன்றிய நூல்களில்     தன்மை ஒருமைப்பெயரைப் பொறுத்தவரையில் யான், நான் என்பனவே வழங்கின. ஆயினும் யான் என்ற பழைய வடிவத்தைக் காட்டிலும், பரிபாடலில் புதிதாகத் தோன்றிய நான் என்ற வடிவமே மிகுதியாக வழங்குகிறது. சான்றாக, திருநாவுக்கரசர் தேவாரத்தில் யான் என்பது 29 இடங்களில் மட்டும் வர, நான் என்பதோ 339 இடங்களில் வருகிறது.

சான்று :

கொடுமைபல செய்தன நான்அறியேன்

(திருநாவுக்கரசர் தேவாரம்,1)

தன்மைப் பன்மையைப் பொறுத்தவரை யாம், நாம் என்னும் வடிவங்கள் பயன்பட்டு வந்தாலும், இச்சொற்களுடன் ‘கள்’ என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேர்ந்து, யாங்கள், நாங்கள் என்னும் புதிய வடிவங்கள் தோன்றின. இப்புதிய வடிவங்களில் முதலில் தோன்றியது யாங்கள் என்பதாகும். இது முதன்     முதலில், சங்க மருவிய காலத் தொடக்கத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் வருகிறது.

சான்று :

நீ போ யாங்களும் நீள்நெறிப் படர்குதும்

(சிலப்பதிகாரம், 11 : 161)

யாங்கள் என்பது வேற்றுமை உருபு ஏற்கும்போது, எங்கள் எனத் திரிகிறது. இது முதன்முதலில் மணிமேகலையில் வருகிறது.

சான்று :

வெவ்வுரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்

(மணிமேகலை, 25 : 53)

நாங்கள்என்பது பெரியபுராணத்தில் வருகிறது. இது வேற்றுமை உருபு ஏற்கும்போது எங்கள் என்றும் நங்கள் என்றும் வழங்குகிறது.

சான்று :

நாங்கள் உன் உடம்பதனில் வெப்பை . . . .

தெய்வ முயற்சியால் தீர்த்தும்

(பெரிய புராணம், 2660)

அங்கு நன்மையில் வைகும் அந் நாள்சில அகல

நங்கள் தம்திரு நாவினுக் கரசரை நயந்து

(பெரிய புராணம், 2415)

சங்ககாலத்தில் உயர்திணைப் பெயர்களாக வழங்கிய தன்மை இடப்பெயர்கள் இடைக்காலத்தில் உயர்திணை, அஃறிணை ஆகிய இரு திணைக்கும் உரிய பொதுப்பெயர்களாகி விட்டன. சங்ககாலத்தில் எழுந்த இலக்கியங்களில் பறவைகள், விலங்குகள் போன்ற அஃறிணைப் பொருள்கள் பேசுவன போலப் பாடப்பெறவில்லை. ஆனால்     இடைக்காலத்தில்     எழுந்த காப்பியங்களில் அஃறிணைப் பொருள்கள் நான் என்று தன்னைக் குறித்துப் பேசுவனபோலப் பாடப்பட்டன. எனவே யான், நான், யாம், நாம் என்னும் தன்மை இடப்பெயர்களை நன்னூலார் ஏனைய முன்னிலைப் படர்க்கை இடப்பெயர்களைப்போல இருதிணைப் பொதுப்பெயர் என்று கூறலானார்.

தன்மை நான்கும், முன்னிலை ஐந்தும்,

எல்லாம் தாம்தான் இன்னன, பொதுப்பெயர்

(நன்னூல், 282)

இடைக்காலத்தில் தன்மைப் பன்மையில் யாங்கள், நாங்கள் போன்ற ‘கள்’ ஈற்று இரட்டைப் பன்மை வடிவங்கள் வழங்கியதை மேலே பார்த்தோம். இடைக்காலத்தில் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய நன்னூல் அவ்வடிவங்களைக் கூறவில்லை. தன்மைக்கு யான், நான், யாம், நாம் ஆகிய நான்கு வடிவங்களை மட்டுமே கூறுகிறது (நன்னூல், 285). ஆனால் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தோன்றிய வீரசோழியம் என்னும் இலக்கண நூல் நாம், நாங்கள் ஆகிய இரு வடிவங்களைக் குறிப்பிடுகிறது.

தற்காலம்

தற்காலத் தமிழில் தன்மை ஒருமைப் பெயராக நான் என்பது மட்டுமே வழங்குகிறது. இது வேற்றுமை உருபு ஏற்கும்போது என் என்று வழங்குகிறது.

தன்மைப் பன்மைப் பெயர்களாக நாம், நாங்கள் ஆகிய இரண்டு மட்டுமே வழங்குகின்றன. இவற்றுள் நாம் என்பது உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாக வழங்குகிறது; நாங்கள் என்பது உளப்படுத்தாத தன்மைப் பன்மையாக வழங்குகிறது.

சான்று:

நாம் செல்வோம் (நானும், நீயும் / நீங்களும் செல்வோம்)

நாங்கள் செல்வோம் (நானும் என்னைச் சார்ந்தோரும் செல்வோம்)

வேற்றுமை உருபு ஏற்கும்போது நாம் என்பது நம் என்றும், நாங்கள் என்பது எங்கள் என்றும் திரிந்து வழங்குகின்றன.

தன்மை இடப்பெயர்கள் தமிழ்மொழி வரலாற்றில் காலந்தோறும் மாற்றங்களையும் புதிய வடிவங்களையும் பெற்று வழங்கி வந்துள்ள முறையைப் பின்வரும் அட்டவணை காட்டும்.

இடம்

தன்மை ஒருமை

தன்மைப் பன்மை

காலம்

உருபு ஏலாப் பெயர்

உருபு ஏற்கத் திரிந்த பெயர்

உருபு ஏலாப் பெயர்

உருபு ஏற்கத் திரிந்த பெயர்

1. சங்ககாலம்

யான் நான்

என்

யாம் நாம்

எம் நம்

2. இடைக்காலம்     யான் நான்     என்     யாம் நாம் யாங்கள் நாங்கள்     எம் நம் எங்கள் நங்கள்

3. தற்காலம்     நான்     என்     நாம் நாங்கள்     நம் எங்கள்

1.2.2 முன்னிலை இடப்பெயர் யாரிடம் பேசுகிறோமோ அவரையே முன்னிலையாகக் குறித்துக் கூறும் சொல் முன்னிலை இடப்பெயர் எனப்படும். தன்மையைப் போல இதனுள்ளும் இரு பிரிவுகள் உள்ளன.

1) முன்னிலை ஒருமை

2) முன்னிலைப் பன்மை

சங்ககாலம்

தொல்காப்பியர் முன்னிலை ஒருமைப்பெயராக நீ என்பதையும் முன்னிலைப் பன்மைப்பெயராக     நீயிர்     என்பதையும் குறிப்பிடுகின்றார்.

நீயிர் நீ என வரூஉம் கிளவி

(தொல்காப்பியம், சொல்லதிகாரம், 188)

வேற்றுமை உருபு ஏற்கும்போது நீ என்பது நின் என்று திரியும் என்கிறார் தொல்காப்பியர்.

நீஎன் ஒருபெயர் நெடுமுதல் குறுகும்

ஆவயின் னகரம் ஒற்றா கும்மே

(தொல்காப்பியம், எழுத்திகாரம், 180)

நீயிர் என்பது வேற்றுமை உருபு ஏற்கும்போது நும் என்றாகும் என்றும் அவர் கூறுகிறார்.

சங்க இலக்கியங்களில் நீ, நீயிர் என்பன வருகின்றன. முன்னிலைப் பன்மையில் நீர் என்ற புதிய வடிவம் வந்து வழங்குகிறது. நீயிர் என்பதை விட இதுவே மிகுதியாக வழங்குகிறது. நீயிர் என்பது நான்கு இடங்களில் வர, நீர் என்பதோ பதினாறு இடங்களில் வருகிறது.

சான்று :

குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே

(புறநானூறு, 110 : 6)

நீயிர் இச்சுரம் அறிதலும் அறிதிரோ

(அகநானூறு, 8 :17)

சங்க இலக்கியங்களில் வேற்றுமை உருபேற்கத் திரிந்த வடிவங்களாகத் தொல்காப்பியர் கூறிய நின், நும் என்பனவற்றோடு உன், உம் என்ற புதிய வடிவங்களும் வருகின்றன.

சான்று :

கானக நாடன் உறீஇய நோய்க்கு உன்

மேனி ஆய்நலம் தொலைதலின்

(அகநானூறு, 222 : 2-3)

ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே

(புறநானூறு, 45 : 5)

இன்றே போல்க நும் புணர்ச்சி

(புறநானூறு, 58 : 28)

நின்னினும் நல்லன் அன்றே

(புறநானூறு, 66 : 5)

இடைக்காலம்

இடைக்காலத்தில் முன்னிலை ஒருமையைப் பொறுத்தவரை, நீ என்பது மட்டுமே வருகிறது. முன்னிலைப்     பன்மையைப் பொறுத்தவரை, சங்க காலத்தில் வழங்கிவந்த நீர், நீயிர் என்பனவற்றோடு நீவிர், நீம், நீர்கள், நீயிர்கள், நீவிர்கள், நீங்கள் என்னும் பல புதிய வடிவங்கள் இடைக்கால இலக்கியங்களில் வழங்குகின்றன.

சான்று :

நீவிர் இருவரும் கண்ட மன்றம் இதயமாம்

(திருவிளையாடற் புராணம், 804)

நீமே வென்றிக் களிற்றான் உழைச்செல்வது

வேண்டும் என்றான்

(சீவகசிந்தாமணி, 1932)

(நீமே – நீரே, நீங்களே)

அன்னையர்காள்! என்னைத் தேற்ற வேண்டா

நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு?

(நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 3474)

நூல் அவையார் போல நீங்கள் நோக்குமின் என்றாள்

(சீவகசிந்தாமணி, 1045)

மேலே கூறிய முன்னிலைப் பன்மை வடிவங்களில் நீம் என்பது சீவகசிந்தாமணியில்     மட்டுமே     வருகிறது. சீவகசிந்தாமணிக்கு உரை வரைந்த நச்சினார்க்கினியர் நீம் என்பதைத் திசைச்சொல் என்கிறார். திராவிட மொழிகளில் ஒன்றான கன்னடத்தில் முன்னிலைப் பன்மை வடிவங்களுள் ஒன்று நீம் என்பதாகும். சீவகசிந்தாமணி எழுதப்பட்ட காலத்தில், கன்னட மொழி பேசும் நாடு சமண சமயத்தின் உறைவிடமாகச் செல்வாக்குப் பெற்றிருந்தது. சீவக சிந்தாமணியை இயற்றிய திருத்தக்க தேவர் சமண முனிவர் ஆவார். எனவே அவர் அந்த மொழி வழக்கைப் போற்றி அதனைத் தம்முடைய காப்பியத்தில் கையாண்டிருக்கலாம். இப்போக்கு, மூவிடப் பெயர்களில் பிறமொழித் தாக்கமும் இருந்ததைப் புலப்படுத்தும்.

இடைக்கால இலக்கியங்களில் நீம், நீங்கள், நீர்கள் முதலான பன்மை வடிவங்கள் வழங்கவும், நன்னூலாரோ அவற்றைப் பற்றி நன்னூலில் குறிப்பிடவில்லை. முன்னிலைப் பன்மைக்கு நீயிர், நீவிர், நீர் என்னும் மூன்றை மட்டுமே குறிப்பிடுகிறார் (நன்னூல் 285). ஆனால் வீரசோழியமும் அதன் உரையும் நீர், நீயிர், நீவிர், நீங்கள், நீர்கள், நீயிர்கள், நீவிர்கள் என்னும் ஏழனைக் குறிப்பிடுகின்றன (வீரசோழியம்,     37 உரை).     எனவே மூவிடப்பெயர்களைப் பொறுத்தவரை, இடைக்காலத் தமிழின் இயல்பை வீரசோழியமும் அதன் உரையுமே தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன எனலாம்.

இடைக்கால இலக்கியங்களில் நீ என்பது வேற்றுமை உருபேற்கும் போது நின், உன், நுன் என்று திரிகிறது; முன்னிலைப் பன்மைப்பெயர்கள் நும், உம், நுங்கள், உங்கள் என்று நெடுமுதல் குறுகித் திரிகின்றன. இவற்றில் நுன், நுங்கள், உங்கள் என்பன இடைக்காலத்தில் வந்த புதிய வடிவங்கள்.

சான்று :

உன்னோடு இவ்வூர் உற்றது ஒன்று உண்டுகொல்

(மணிமேகலை, 2 : 17)

முதிர் வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின்

(சிலம்பு, பதிகம் : 45)

உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெலாம்

இறங்குகின்றது, இன்று காண்: எழுந்திராய்! எழுந்திராய்!

(கம்பராமாயணம், 7443)

தற்காலம்

தற்காலத்தில் முன்னிலை ஒருமை நீ என்பதே. இது வேற்றுமை உருபு ஏற்க நின், உன் என வழங்குகிறது. உன் என்ற வழக்கே மிகுதி. பன்மையில் நீங்கள் என்ற சொல்லே மிகுதியாக வழங்குகிறது. நீர் என்பதும், பழங்காலப் படர்க்கைப் பன்மையாகிய தாங்கள் என்பதும் முன்னிலைப் பன்மையில் வழங்குகின்றன. வேற்றுமை உருபேற்கும்போது நீங்கள் என்பது உம், உங்கள் என்றும், தாங்கள் என்பது தங்கள் என்றும் திரிந்து வழங்குகின்றன.

முன்னிலை இடப்பெயர்கள் காலந்தோறும் மாற்றங்களையும் புதிய வடிவங்களையும் பெற்று வழங்கி வந்துள்ள முறையைப் பின்வரும் அட்டவணை காட்டும்.

1.2.3 படர்க்கை இடப்பெயர் தன்மை முன்னிலை அல்லாத இடத்தினைப் படர்க்கை என்பர். இருவர்     பேசும்போது     அவர்களைக்     குறிப்பிடாமல் வேறொருவரையோ அல்லது வேறொரு பொருளையோ குறித்துக் கூறும் சொல் படர்க்கை இடப்பெயர் (Third Person) எனப்படும். தன்மை முன்னிலைகளைப் போல இதனுள்ளும் இரு பிரிவுகள் உள்ளன.

1) படர்க்கை ஒருமை

2) படர்க்கைப் பன்மை

சங்ககாலம்

தொல்காப்பியர் படர்க்கை ஒருமைப்பெயராகத் தான் என்பதையும் படர்க்கைப் பன்மைப்பெயராகத் தாம் என்பதையும் குறிப்பிடுகின்றார். இவை வேற்றுமை உருபு ஏற்கும்போது முறையே தன் எனவும் தம் எனவும் நெடுமுதல் குறுகுகின்றன.

மூவிடப் பெயர்களில் தன்மை, முன்னிலை ஆகிய இடப்பெயர்கள் பால் (Gender) காட்டுவதில்லை; ஒருமை, பன்மை என்ற எண் (Number) வேறுபாட்டை மட்டுமே காட்டும். அதேபோலப் படர்க்கை இடப்பெயர்களும் ஒருமை, பன்மை என்ற எண் வேறுபாட்டை மட்டுமே காட்டும். தான்- ஒருமை; தாம் – பன்மை. தன்மை, முன்னிலை இடப்பெயர்கள் கொண்டு முடியும் வினைகளும் பால் காட்டா; எண் மட்டுமே காட்டும். ஆனால் தான், தாம் ஆகிய இப்படர்க்கை இடப்பெயர்கள், அவை கொண்டு முடியும் வினைகளைக் கொண்டு பால் அறியப்படும்.

தான் வந்தான்

தான் வந்தாள்

தான் வந்தது

தாம் வந்தார்

தாம் வந்தன

சங்க இலக்கியத்தில், தான், தாம் ஆகிய இரண்டும் படர்க்கையிடத்தில் வழக்கில் இருந்தன.

யாரும் இல்லை, தானே கள்வன்

தான் அது பொய்ப்பின், யான்எவன் செய்கோ?

(குறுந்தொகை, 25 : 1-2)

என்ற பழம்பாடலில் தான் என்பது படர்க்கை ஒருமை இடப்பெயராக அவன் (தலைவன்) என்ற பொருளில் வருகிறது.

தான் அஃது அறிந்தனள் கொல்லோ

(நற்றிணை, 53 : 1-2)

என்ற பாடல் அடியில் தான் என்பது அவள் (தாய்) என்ற பொருளில் வருகிறது.

தொல்காப்பியம் தோன்றிய சங்க காலத்தில் தான், தாம் ஆகிய இவ்விருபெயர்களோடு, அவன், அவள், அவர் (அவர்கள்), அது, அவை போன்ற ஐம்பால் காட்டும் சுட்டுப்பெயர்களும் படர்க்கையிடத்தில் வழங்கிவரத் தொடங்கின. சங்க இலக்கியங்களில் கூட, தான், தாம் ஆகியவற்றைக் காட்டிலும் சுட்டுப்பெயர்களே படர்க்கை     இடத்தில்     பெருவரவினவாக வழங்குகின்றன. சுட்டுப்பெயர்கள் படர்க்கையிடத்தில் செல்வாக்குடன் வழங்கவும் தான், தாம் இரண்டும் படர்க்கை இடத்தில் வரும் வழக்கில் மறையத் தொடங்கின. ஆயினும் இவை இடைக்காலத்திலும் தற்காலத்திலும் வேறு பல நிலைகளில் வழங்கலாயின.

இடைக்காலம்

இடைக்கால இலக்கியங்களில் தான், தாம் ஆகியன படர்க்கைச் சுட்டுப் பெயர்களாக ஓரளவே வழங்குகின்றன. பெரும்பாலும் இவையிரண்டும் பெயர்களை அடுத்துப் பொருள் உணர்த்தாமல் அசைகளாக வருகின்றன.

கோவலன் தான் போன பின்னர்

(சிலம்பு, 7 : 52)

பெருங்காதல் உடையவர்தாம் புறத்தெய்தி

(பெரியபுராணம், 3319)

தன், தம் ஆகிய உருபு ஏற்கத் திரிந்த வடிவங்களும் பெயர்களின் பின்னர் அசைகளாக வருகின்றன.

பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட

(சிலம்பு, 20:74)

வென்றவர் தம் திருப்பேரோ

வேறொரு பேர் என வெகுள்வார்

(பெரியபுராணம், 1795)

தற்காலத் தமிழ்

தற்காலத் தமிழில் தான், தாம் ஆகியன மூன்று நிலைகளில் வருகின்றன.

1. தாம் என்பது கள் விகுதியோடு சேர்ந்து தாங்கள் என      வழங்குகிறது. தாங்கள் என்ற இந்தப் பன்மைச்சொல்      படர்க்கையில் வழங்காமல், முன்னிலையில் மரியாதைக்குரிய      மிக உயர்ந்த ஒருவரைக் குறிக்கும் உயர்வு      ஒருமைப்பெயராக வழங்கி வருகிறது.

சான்று:

தாங்கள் எப்போது வந்தீர்கள்?

தாங்கள் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும்

2. தான், தாம் ஆகியன தன்மை,     முன்னிலைப்      பெயர்களோடும், அவன், அவள், அவர்கள் போன்ற      சுட்டுப்பெயர்களோடும் பிற பெயர்களோடும் சேர்ந்து,      வலியுறுத்தல் பொருளைத் தரும்     சொற்களாக      வழங்குகின்றன.

சான்று :

நான்தான் வந்தேன்; நீதான் வந்தாய்;

அவன்தான் வந்தான்; அவள்தான் வந்தாள்;

அதுதான் வந்தது; இராமன்தான் வந்தான்;

சீதைதான் வந்தாள்; யானைதான் வந்தது.

நாங்கள்தாம் வந்தோம்; நீங்கள்தாம் வந்தீர்கள்;

அவைதாம் வந்தன; மாணவர்கள்தாம் வந்தனர்.

3. வேற்றுமை உருபு ஏற்கத் திரிந்த வடிவங்களாகிய தன், தம்,      தங்கள் என்பன தற்சுட்டுப்பெயர்களாக (Reflexive      Pronouns) வழங்குகின்றன.

சான்று :

அவன் தன்னையே நொந்து கொண்டான்

அவள் தன்னையே அடித்துக் கொண்டாள்

அவர்கள் தங்களை அடித்துக் கொண்டார்கள்

1.3 சுட்டுப்பெயர்கள்

பதிலிடு பெயர்களில் இரண்டாவது வகை சுட்டுப்பெயர்கள் ஆகும். தமிழில் அ, இ, உ என்னும் மூன்று உயிர்கள் சுட்டுப்பொருளில் நெடுங்காலந் தொட்டே வழங்கி வருகின்றன.

அகரம் சேய்மையில் (Remote) உள்ளதையும், இகரம் அண்மையில் (Proximate) உள்ளதையும், உகரம் சேய்மைக்கும் அண்மைக்கும் இடையில் (Intermediate) உள்ளதையும் சுட்டும். எனவே தமிழிலக்கண நூலார் இம்மூன்றையும் சுட்டெழுத்துகள் என்று குறிப்பிடுவர். இம்மூன்று சுட்டெழுத்துகளோடு ஐம்பால் காட்டும் அன், அள், அர், து போன்ற விகுதிகள் சேர்வதால் சுட்டுப்பெயர்கள் உருவாகின்றன.

சான்று :

அ + அன் = அவன்

அ + அள் = அவள்

அ + அர் = அவர்

அ + து = அது

இவ்வாறு உருவாகும் சுட்டுப்பெயர்கள் ஒரு பொருளை நேரடியாகக் குறிக்கும் பெயர்களுக்குப் பதிலாக வழங்குகின்றன. எனவே இவற்றை மொழியியலார் சுட்டுப் பதிலிடு பெயர்கள் (Demonstrative Pronouns) என்று குறிப்பிடுகின்றனர்.

இனிக் காலந்தோறும் தமிழில் சுட்டுப்பெயர்கள் வழங்கி வந்துள்ள முறையைக் காண்போம்.

சங்ககாலம்

தொல்காப்பியர் சுட்டுப்பெயர்களை உயர்திணைக்கு உரிய சுட்டுப் பெயர்கள், அஃறிணைக்கு உரிய சுட்டுப்பெயர்கள் என இரு வகைப்படுத்துகிறார். அவர் குறிப்பிடும் சுட்டுப் பெயர்களைப் பின்வரும் பட்டியல் காட்டும்.

சுட்டெழுத்துகள்

திணையும் பாலும்

உயர்திணை – ஆண்பால்

அவன்

இவன்

உவன்

உயர்திணை – ஆண்பால்

அவன்

இவன்

உவன்

உயர்திணை – பெண்பால்

அவள்

இவள்

உவள்

உயர்திணை – பலர்பால்

அவர்

இவர்

உவர்

அஃறிணை – ஒருமை

அது

இது

உது

அஃறிணை – பன்மை

அவை

இவை

உவை

மேலே காட்டிய பட்டியலை நோக்கின் சுட்டெழுத்துகளை அடியாகக் கொண்டு திணை, பால் உணர்த்தும் சுட்டுப்பெயர்கள் தமிழில் பண்பட்ட ஓர் ஒழுங்கான முறையில் உருவாகி அமைந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.

தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள சுட்டுப்பெயர்கள் யாவும் சங்க கால இலக்கியங்களில் வழங்குகின்றன. தற்காலத் தமிழில் இடைநிலைச் சுட்டுப் பெயர்களாகிய உவன், உவள், உவர், உது, உவை என்பன வழக்கில் இல்லை. ஆனால் சங்க கால இலக்கியங்களில் இவை வழக்கில் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

சான்று:

பாக்கத்து உவன் வரின் எவனோ? பாண!

(நற்றிணை, 127 : 3)

உதுக்காண் தோன்றும்எம் சிறுநல் ஊரே

(நற்றிணை, 264 : 9)

இடைக்காலம்

இடைக்காலத் தமிழில் சங்க காலத்தில் இருந்த சுட்டுப்பெயர்கள் யாவும் வழக்கில் இருந்துள்ளன. சங்க காலத்தைப் போலவே, இடைக்காலத்தில் தோன்றிய     இலக்கியங்களிலும் இடைநிலைச் சுட்டுப் பெயர்கள் காணப்படுகின்றன; ஆனால் மிக அருகியே காணப்படுகின்றன.

உவன் காண் குமுதன்; குமுதாக்கனும்

ஊங்கு அவன் காண்;

இவன் காண் கவயன்; கவயாக்கனும்

ஈங்கு இவன் காண்.

(கம்பராமாயணம், 7016 : 1-2)

என்ற கம்பராமாயணப் பாடல் அடிகளில் மூன்று சுட்டுப்பெயர்களும் வந்துள்ளன.

சுட்டுப்பெயர்களைப் பொறுத்தவரை இடைக்காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்தது. சங்க காலத்தில் அவர் என்பது பலரைக் குறிக்கும் பன்மைச் சுட்டுப்பெயர். ஆனால் அது ஒருவனையோ ஒருத்தியையோ மட்டும் குறிக்கும் உயர்வு ஒருமைப்பெயராகவும் சங்க காலத்தில் வழங்கியது. இவ்வாறு உயர்வு காரணமாக ஒருவரை மட்டும் அவர் என்ற சொல் குறிக்கவே, பலரைக் குறிக்க ‘அவர்’ என்பதோடு ‘கள்’ விகுதி சேர்த்து, அவர்கள் என்ற பன்மைச் சுட்டுப்பெயர் இடைக்காலத் தமிழில் உருவாக்கப்பட்டு வழங்கி வரலானது. மற்ற தன்மை, முன்னிலைப் பன்மைகளில் யாங்கள், நாங்கள், நீங்கள் போன்ற வடிவங்களிலும் கள் விகுதி இருப்பது இங்கே கருதத்தக்கது. இடைக்காலத் தமிழில் ஆழ்வார், நாயன்மார் பாடல்களில் அவர்கள் என்னும் வழக்கு மிகுதியாக உள்ளது.

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன

பிழைப்பில் பெரும்பெயரே பேசி

(இரண்டாம் திருவந்தாதி, 50)

இடைக்காலத்தில் தோன்றிய வீரசோழியம், அவர் என்பதோடு அவர்கள் என்பதையும் படர்க்கைச் சுட்டுப் பன்மைப்பெயராகக் குறிப்பிடுவது இங்கே கருதத்தக்கது.

தற்காலத் தமிழ்

தற்காலத் தமிழில் உகரச் சுட்டுப்பெயர்கள் காணப்படவில்லை. பிற அகர, இகரச் சுட்டுப் பெயர்கள் காணப்படுகின்றன. இடைக்காலத் தமிழில் போலவே தற்காலத் தமிழிலும் அவர் என்பது உயர்வு ஒருமைச் சுட்டுப் பெயராக வழங்குகிறது; அவர்கள் என்பதே பன்மைச் சுட்டுப்பெயராக வழங்குகிறது.

சான்று :

அவர் வந்தார்

அவர்கள் வந்தார்கள்

பதிலிடு பெயர்களில் இரண்டாவது வகை சுட்டுப்பெயர்கள் ஆகும். தமிழில் அ, இ, உ என்னும் மூன்று உயிர்கள் சுட்டுப்பொருளில் நெடுங்காலந் தொட்டே வழங்கி வருகின்றன.

அகரம் சேய்மையில் (Remote) உள்ளதையும், இகரம் அண்மையில் (Proximate) உள்ளதையும், உகரம் சேய்மைக்கும் அண்மைக்கும் இடையில் (Intermediate) உள்ளதையும் சுட்டும். எனவே தமிழிலக்கண நூலார் இம்மூன்றையும் சுட்டெழுத்துகள் என்று குறிப்பிடுவர். இம்மூன்று சுட்டெழுத்துகளோடு ஐம்பால் காட்டும் அன், அள், அர், து போன்ற விகுதிகள் சேர்வதால் சுட்டுப்பெயர்கள் உருவாகின்றன.

சான்று :

அ + அன் = அவன்

அ + அள் = அவள்

அ + அர் = அவர்

அ + து = அது

இவ்வாறு உருவாகும் சுட்டுப்பெயர்கள் ஒரு பொருளை நேரடியாகக் குறிக்கும் பெயர்களுக்குப் பதிலாக வழங்குகின்றன. எனவே இவற்றை மொழியியலார் சுட்டுப் பதிலிடு பெயர்கள் (Demonstrative Pronouns) என்று குறிப்பிடுகின்றனர்.

இனிக் காலந்தோறும் தமிழில் சுட்டுப்பெயர்கள் வழங்கி வந்துள்ள முறையைக் காண்போம்.

சங்ககாலம்

தொல்காப்பியர் சுட்டுப்பெயர்களை உயர்திணைக்கு உரிய சுட்டுப் பெயர்கள், அஃறிணைக்கு உரிய சுட்டுப்பெயர்கள் என இரு வகைப்படுத்துகிறார். அவர் குறிப்பிடும் சுட்டுப் பெயர்களைப் பின்வரும் பட்டியல் காட்டும்.

சுட்டெழுத்துகள

திணையும் பாலும்

உயர்திணை – ஆண்பால்

அவன்

இவன்

உவன்

உயர்திணை – ஆண்பால்

அவன்

இவன்

உவன்

உயர்திணை – பெண்பால்

அவள்

இவள்

உவள்

உயர்திணை – பலர்பால்

அவர்

இவர்

உவர்

அஃறிணை – ஒருமை

அது

இது

உது

அஃறிணை – பன்மை

அவை

இவை

உவை

மேலே காட்டிய பட்டியலை நோக்கின் சுட்டெழுத்துகளை அடியாகக் கொண்டு திணை, பால் உணர்த்தும் சுட்டுப்பெயர்கள் தமிழில் பண்பட்ட ஓர் ஒழுங்கான முறையில் உருவாகி அமைந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.

தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள சுட்டுப்பெயர்கள் யாவும் சங்க கால இலக்கியங்களில் வழங்குகின்றன. தற்காலத் தமிழில் இடைநிலைச் சுட்டுப் பெயர்களாகிய உவன், உவள், உவர், உது, உவை என்பன வழக்கில் இல்லை. ஆனால் சங்க கால இலக்கியங்களில் இவை வழக்கில் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

சான்று:

பாக்கத்து உவன் வரின் எவனோ? பாண!

(நற்றிணை, 127 : 3)

உதுக்காண் தோன்றும்எம் சிறுநல் ஊரே

(நற்றிணை, 264 : 9)

இடைக்காலம்

இடைக்காலத் தமிழில் சங்க காலத்தில் இருந்த சுட்டுப்பெயர்கள் யாவும் வழக்கில் இருந்துள்ளன. சங்க காலத்தைப் போலவே, இடைக்காலத்தில் தோன்றிய     இலக்கியங்களிலும் இடைநிலைச் சுட்டுப் பெயர்கள் காணப்படுகின்றன; ஆனால் மிக அருகியே காணப்படுகின்றன.

உவன் காண் குமுதன்; குமுதாக்கனும்

ஊங்கு அவன் காண்;

இவன் காண் கவயன்; கவயாக்கனும்

ஈங்கு இவன் காண்.

(கம்பராமாயணம், 7016 : 1-2)

என்ற கம்பராமாயணப் பாடல் அடிகளில் மூன்று சுட்டுப்பெயர்களும் வந்துள்ளன.

சுட்டுப்பெயர்களைப் பொறுத்தவரை இடைக்காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்தது. சங்க காலத்தில் அவர் என்பது பலரைக் குறிக்கும் பன்மைச் சுட்டுப்பெயர். ஆனால் அது ஒருவனையோ ஒருத்தியையோ மட்டும் குறிக்கும் உயர்வு ஒருமைப்பெயராகவும் சங்க காலத்தில் வழங்கியது. இவ்வாறு உயர்வு காரணமாக ஒருவரை மட்டும் அவர் என்ற சொல் குறிக்கவே, பலரைக் குறிக்க ‘அவர்’ என்பதோடு ‘கள்’ விகுதி சேர்த்து, அவர்கள் என்ற பன்மைச் சுட்டுப்பெயர் இடைக்காலத் தமிழில் உருவாக்கப்பட்டு வழங்கி வரலானது. மற்ற தன்மை, முன்னிலைப் பன்மைகளில் யாங்கள், நாங்கள், நீங்கள் போன்ற வடிவங்களிலும் கள் விகுதி இருப்பது இங்கே கருதத்தக்கது. இடைக்காலத் தமிழில் ஆழ்வார், நாயன்மார் பாடல்களில் அவர்கள் என்னும் வழக்கு மிகுதியாக உள்ளது.

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன

பிழைப்பில் பெரும்பெயரே பேசி

(இரண்டாம் திருவந்தாதி, 50)

இடைக்காலத்தில் தோன்றிய வீரசோழியம், அவர் என்பதோடு அவர்கள் என்பதையும் படர்க்கைச் சுட்டுப் பன்மைப்பெயராகக் குறிப்பிடுவது இங்கே கருதத்தக்கது.

தற்காலத் தமிழ்

தற்காலத் தமிழில் உகரச் சுட்டுப்பெயர்கள் காணப்படவில்லை. பிற அகர, இகரச் சுட்டுப் பெயர்கள் காணப்படுகின்றன. இடைக்காலத் தமிழில் போலவே தற்காலத் தமிழிலும் அவர் என்பது உயர்வு ஒருமைச் சுட்டுப் பெயராக வழங்குகிறது; அவர்கள் என்பதே பன்மைச் சுட்டுப்பெயராக வழங்குகிறது.

சான்று :

அவர் வந்தார்

அவர்கள் வந்தார்கள்

1.4 வினாப்பெயர்கள்

பதிலிடு பெயர்களில் மூன்றாவது வகை வினாப்பெயர்கள் (Interrogative pronouns) ஆகும். வினாப்பெயர்கள் சுட்டுப் பெயர்களைப் போலவே ஒருமை, பன்மை என்னும் எண் வேறுபாடு, ஆண் பால், பெண்பால் போன்ற பால் வேறுபாடு காட்டுவனவாக அமைந்துள்ளன.

சங்ககாலம்

தொல்காப்பியர் சுட்டுப்பெயர்களைப் போலவே வினாப் பெயர்களையும் உயர்திணைக்கு உரிய வினாப்பெயர்கள், அஃறிணைக்கு உரிய வினாப்பெயர்கள் எனப் பகுத்துக் கூறுகிறார்.

யாவன், யாவள், யாவர் என்னும் வினாப்பெயர்கள் உயர்திணைக்கு உரியன. இம்மூன்றும் முறையே ஆண்பால், பெண்பால், பலர்பால் பெயர்களை வினவுதற்கு உரியன. யாது, யா, யாவை என்னும் வினாப்பெயர்கள் அஃறிணைக்கு உரியன. இவற்றுள் யாது என்பது அஃறிணை ஒருமைப் பெயரையும், யா, யாவை என்பன அஃறிணைப் பன்மைப் பெயரையும் வினவுதற்கு உரியன.

சான்று:

அவன் யாவன்

அவள் யாவள்

அவர் யாவர்

அது யாது

அவை யாவை

யா என்னும் வினா எழுத்தை அடியாகக் கொண்டு, பால் உணர்த்தும் வினாப்பெயர்கள், சுட்டுப்பெயர்களைப் போலவே ஓர் ஒழுங்கான முறையில் அமைந்திருப்பது கருதத்தக்கது.

யாவர் என்பது யார் எனத் தொல்காப்பியர் காலத்தில் மருவி வழங்கியது. யார் என்னும் இவ்வினாச்சொல் உயர்திணை முப்பால் பெயர்களையும் வினவுவதற்குரிய பொது வினாச்சொல் என்பார் தொல்காப்பியர்.

யார் என்னும் வினாவின் கிளவி

அத்திணை மருங்கின் படர்க்கைச் சொல்லே

(தொல்காப்பியம், சொல். 210)

சான்று:

அவள் யார்; அவன் யார்; அவர் யார்.

சங்க இலக்கியங்களில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள வினாப்பெயர்கள் அனைத்தும் வருகின்றன. யார் என்னும் வினா, உயர்திணை முப்பாலுக்கும் உரியதாக வழங்குகிறது.

சான்று:

யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்

(கலித்தொகை, 89 : 1)

ஈங்கே வருவாள் இவள் யார் கொல்?

(கலித்தொகை, 56 : 6)

இவர் யார்? என்குவள் அல்லள்

(நற்றிணை, 6 : 6)

இடைக்காலம்

இடைக்காலத் தமிழில், சங்க காலத்தில் வழங்கிய வினாப்பெயர்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெறுகின்றன.

யாவர் என்பது சங்க காலத்தில் யார் என மருவி வழங்கியது என மேலே கண்டோம். இடைக்காலத்தில் இவ்வினாப்பெயர் யார் என வழங்குவதோடு, மொழி முதல் யகரமெய் வீழ்ச்சியுற்று, ஆர் எனவும் வழங்குகிறது.

சான்று:

ஆர் இக்கொடுமை செய்தார்?

(சிலம் பு, 7 :38-4)

யாவன், யாவள், யாவர், யாது, யாவை என்னும் வினாப்பெயர்களில் மொழிமுதலில் உள்ள யாகாரம் எகரமாகத் (யா > எ) திரிந்தது.

யாவன் > எவன்

யாவள் > எவள்

யாவர் > எவர்

யாது > எது

யாவை > எவை

யாவர் என்பது ஏவர் என்றும் திரிந்து வழங்குகிறது.

சான்று:

எவன் அவ் ஈசன் என்பார் பொர

(கம்பராமாயணம், 9730 : 2)

ஏவர் (எவர்) வெல்வர் என்று எண்ணலர் ஏங்குவர்

(கம்பராமாயணம், 9740 : 2)

அடியேன் அணுகப் பெறும் நாள் எவை கொலோ

(கம்பராமாயணம், 3742 : 2)

தற்காலம்

தற்காலத் தமிழில் எவன், எவள், எவர், யாவர், யார், எது, யாது, ஏது, எவை, யாவை போன்ற வினாப்பெயர்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. யார் என்பது இடைக்காலத் தமிழைப் போல, தற்காலத் தமிழில் பேச்சு வழக்கில் ஆர் என்று திரிந்து வழங்குகிறது. தற்காலத் தமிழில் மேற்கூறிய வினாப்பெயர்களுடன் என்ன, ஏன் போன்ற வினாச்சொற்களும் வழங்குகின்றன.

1.5 பதிலிடு பெயர்களின் வகைப்பாடு

மேலே இதுகாறும் நாம் கண்ட மூவிடப்பெயர்கள், சுட்டுப்பெயர்கள், வினாப்பெயர்கள் ஆகிய மூவகைப் பதிலிடு பெயர்களை, இக்கால மொழியியலார் அவை வழங்கும் முறை நோக்கி அவற்றை மேலும் ஒன்பது வகைகளாகப் பிரித்து ஆராய்கின்றனர். அவை வருமாறு:

1) உயர்வு ஒருமைப் பதிலிடு பெயர்கள்

2) வினாப் பதிலிடு பெயர்கள்

3) வரையறை இல்லாப் பதிலிடு பெயர்கள்

4) உள்ளடக்குப் பதிலிடு பெயர்கள்

5) பகிர்வுப் பதிலிடு பெயர்கள்

6) தற்சுட்டுப் பதிலிடு பெயர்கள்

7) பரிமாற்றப் பதிலிடு பெயர்கள்

8) முழுமைப் பதிலிடு பெயர்கள்

9) உடைமைப் பதிலிடு பெயர்கள்

1.5.1 உயர்வு ஒருமைப் பதிலிடு பெயர்கள் மூவிடப்பெயர்களிலும், சுட்டுப்பெயர்களிலும் உள்ள பன்மைப்பெயர்கள் பலரைக் குறிக்காமல், உயர்வு அல்லது மரியாதை காரணமாக ஒருவரை மட்டும் குறிப்பதும் உண்டு. இவ்வாறு ஒருவரை மட்டும் குறிக்கும் பன்மைச்சொற்கள், உயர்வு ஒருமைப் பதிலிடு பெயர்கள் (

onorific singular pronouns) எனப்படும்.

சான்று :

கண்ணன் வந்தார்; அவர்க்கு இடம் கொடு.

இந்திரா அம்மையார் வந்தார்; அவர்களைப் பார்த்தேன்

அண்ணா! நீங்கள் சொற்பொழிவு ஆற்ற வேண்டும்.

என்ற தொடர்களில் அவர் (பழந்தமிழில் பன்மை), அவர்கள், நீங்கள் என்ற பன்மைப் பதிலிடு பெயர்கள் உயர்வு காரணமாக ஒருவரை மட்டும் குறிக்கக் காணலாம்.

1.5.2 வினாப் பதிலிடு பெயர்கள் தமிழில் உள்ள வினாப்பெயர்கள் ஐம்பால் காட்டுவன ஆகும். அவற்றைப் பற்றி விரிவாக முன்னரே பார்த்தோம். பால் காட்டாமல் எண், அளவு போன்றவற்றைக் குறிக்கும் எத்தனை, எவ்வளவு, எத்துணை என்ற வினாப்பெயர்களும் பதிலிடு பெயர்களாக (Interrogative pronouns) வரும்.

சான்று:

பத்தில் மூன்று போனால் எத்தனை? (எண்)

எவ்வளவு மண் வேண்டும்? (அளவு)

எத்துணை துன்பம்? எத்துணை நட்பு? (அளவு)

1.5.3 வரையறை இல்லாப் பதிலிடு பெயர்கள் ஒருவரை அல்லது ஒன்றை, யார் என்றோ அல்லது எது என்றோ வரையறை செய்து குறிப்பிட முடியாத நிலையில் பயன்படுத்தப்படும் பதிலிடு பெயர்களே வரையறை இல்லாப் பதிலிடு பெயர்கள் (Indefinite pronouns) எனப்படும். தமிழில் இப்பதிலிடு பெயர்கள் யார், எது, என்ன போன்ற வினாப் பதிலிடு பெயர்களிலிருந்து உருவாகின்றன.

சான்று :

யாரோ வந்தார்

யாரையோ பார்த்தான்

யாருக்கோ கொடுத்தான்

எதையோ பார்த்தான்

என்னவோ செய்தான்

1.5.4 உள்ளடக்குப் பதிலிடு பெயர்கள் எல்லோரையும் அல்லது எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கூறும் பதிலிடு பெயர்கள், உள்ளடக்குப் பதிலிடு பெயர்கள் (Universal pronouns) எனப்படும். யார், எவன், எவள், எவர், எது போன்ற வினாப்பெயர்களுடன் உம் சேர்ந்து வரும்போது இத்தகைய உள்ளடக்குப் பதிலிடு பெயர்கள் உருவாகின்றன. பொதுவாக இப்பெயர்கள் எதிர்மறையில்தான் அதிகமாக வருகின்றன.

சான்று :

யாரும் வரவில்லை

எவனும் வரவில்லை

எவளும் வரவில்லை

எவரும் வரவில்லை

எதுவும் வரவில்லை

1.5.5 பகிர்வுப் பதிலிடு பெயர்கள் தனித்தனியாக ஒருவரை அல்லது ஒன்றனைக் குறித்து வரும் பதிலிடு பெயர்களே பகிர்வுப் பதிலிடு பெயர்கள் (Distributive pronouns) எனப்படும். ஒரு கூட்டத்தில் ஒவ்வொருவரையும் அல்லது ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கருதும்போதுதான் இப்பெயர்களைப் பயன்படுத்துகிறோம்.

சான்று:

ஒவ்வொருவராக வந்து வாங்கவும்

ஒவ்வொன்றையும் பார்த்து வாங்கினான்

1.5.6 தற்சுட்டுப் பதிலிடு பெயர்கள் ஒரு தொடரில் ஒரு செயலைச் செய்பவனும் செய்யப்படுபவனும் ஒருவராக இருக்கும்போது, செய்யப் படுபவனைக் குறிப்பதற்குக் குறிப்பிட்ட பதிலிடுபெயர்களைப் பயன்படுத்துவது உண்டு. அப்பதிலிடு பெயர்களைத் தற்சுட்டுப் பதிலிடு பெயர்கள் (Reflexive pronouns) என்பர். பொதுவாகச் செய்பவன் எழுவாயாக வரும்போதுதான் தற்சுட்டுப்பெயர்கள் செயப்படு பொருளுக்குப் பதிலாகப் பயன்படுகின்றன. தற்சுட்டுப்பெயர்கள் இரண்டாவதாக வரும்.

தமிழில் ஐம்பால் காட்டும் சுட்டுப்பெயர்கள், பெயர்ச் சொற்கள் ஆகியவற்றை அடுத்து தன்னை, தம்மை, தங்களை என்பனவும், தன்மை இடப்பெயர்களை அடுத்து என்னை, எங்களை என்பனவும், முன்னிலை இடப்பெயர்களை அடுத்து உன்னை, உங்களை என்பனவும் தற்சுட்டுப்பெயர்களாக வரும்.

சான்று:

அவன் தன்னையே அடித்துக் கொண்டான்

அவள் தன்னேயே பார்த்துக் கொண்டாள்

இராமன் தன்னையே நொந்து கொண்டான்

அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள்

நான் என்னையே அடித்துக் கொண்டேன்

நீ உன்னையே அடித்துக் கொண்டாய்

1.5.7 பரிமாற்றப் (கொண்டு கொடுக்கும்) பதிலிடு பெயர்கள் இருவர் அல்லது மேற்பட்டவர்கள் தம்முள் பரிமாற்றம் செய்து கொண்ட செயல்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பதிலிடு பெயர்கள், பரிமாற்றப் பதிலிடு பெயர்கள் (Reciprocal pronouns) எனப்படும். இது எப்போதும் பன்மையிலேயே வரும்.

சான்று:

அவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டார்கள்

அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டார்கள்

அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொண்டார்கள்

இத்தொடர்களில் தங்களுக்குள், ஒருவரை ஒருவர், ஒருவருக்கு ஒருவர் என்பன பரிமாற்றப் பதிலிடு பெயர்கள் ஆகும்.

1.5.8 முழுமைப் பதிலிடு பெயர்கள் முழுமையைக் குறித்து வரும் பதிலிடு பெயர்கள் முழுமைப் பதிலிடு பெயர்கள் (Pronouns of totality) எனப்படும். தமிழில் எல்லாரும், அனைவரும், எல்லாம், அனைத்தும் என்பன முழுமைப் பதிலிடு பெயர்களாகப் பயன்படுகின்றன.

சான்று :

எல்லாரும் வந்தார்கள்

அனைவரும் வந்தார்கள்

மக்கள் எல்லாரும் வந்தார்கள்

எல்லாம் வந்தன

அனைத்தும் வந்தன

எல்லா மாடுகளும் வந்தன.

1.5.9 உடைமைப் பதிலிடு பெயர்கள் உடைமையைக் காட்டும் பதிலிடு பெயர்களே உடைமைப் பதிலிடு பெயர்கள் (Possessive pronouns) எனப்படும். பல்வேறு பதிலிடு பெயர்களுடன் உடைய என்ற சொல் இணைய, அதனுடன் அது, அவை, அவன், அவள், அவர் போன்ற பெயர்களை இணைக்கும்போது உடைமைப் பதிலிடு பெயர்கள் உருவாகின்றன.

சான்று :

என் + உடைய + அவள் = என்னுடையவள்

உன் + உடைய + அவள் = உன்னுடையவள்

அவன் + உடைய + அவள் = அவனுடையவள்

யார் + உடைய + அது = யாருடையது

அவள் + உடைய + அவை = அவளுடையவை

1.6 தொகுப்புரை

இதுகாறும் மூவிடப்பெயர்கள், சுட்டுப்பெயர்கள், வினாப்பெயர்கள் என்னும் மூவகைப் பதிலிடு பெயர்கள் காலந்தோறும் பெற்ற வளர்ச்சி, மாற்றங்கள், புதுவடிவங்கள் ஆகியவற்றைப் பற்றித் தக்க சான்றுகளுடன் விளக்கமாகக் கண்டோம். புதுவடிவங்கள் வரவினால் பழைய வடிவங்கள் சில வழக்கிழந்து போனதை அறிந்து கொண்டோம். பதிலிடு பெயர் ஒன்றில் மாற்றம் ஏற்படும்போது, அதனோடு ஒத்த பிறவற்றிலும் அத்தகைய மாற்றம் ஒழுங்காக நிகழ்வதை அறிந்து கொள்ள முடிகிறது. தன்மைப் பன்மையில் யாங்கள், நாங்கள் ஆகியவற்றில் வரும் கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி, முன்னிலையில் நீங்கள், நீர்கள் போன்றவற்றிலும் படர்க்கையில் தாங்கள் என்பதிலும் சுட்டுப்பெயரில் அவர்கள் என்பதிலும் வருவதைக் காணலாம். சுருங்கக்கூறின் பதிலிடு பெயர்களில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் பழைய வடிவங்களுக்கும் புதிதாகத் தோன்றிய வடிவங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகவும் குறைவு என்பதை இப்பாடத்தின் வாயிலாக அறிந்து கொண்டோம்.

பாடம் - 2

வேற்றுமை உருபுகளும் பன்மை விகுதியும்

2.0 பாட முன்னுரை

தமிழ்மொழி நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆதலால் தமிழ்மொழியின் அமைப்பில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன எனலாம். பல போர்களால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் தமிழ் மொழியின் முன்னைய வடிவிலிருந்து சற்று மாறி இருப்பது இயல்பே. மாறுதல் ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் படியே. தமிழ்மொழியில் பல இலக்கணக் கூறுகள் உள்ளன. பொதுவாக எல்லா இலக்கணக் கூறுகளிலும் தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றங்களைப் பற்றி நாம் தொடர்ந்து கற்று வருகிறோம்.

இப்பாடத்தில் வேற்றுமை என்றால் என்ன? என்பதைப் பற்றிக் காண்போம். அவை எத்தனை வகைப்படும்? என்பதையும் அவ்வேற்றுமைகள் என்னென்ன பெயர்களால் சுட்டப்படுகின்றன? என்பதையும் பார்க்கலாம். வேற்றுமைகள் சங்க காலத்தில் என்னென்ன உருபுகளைப் பெற்றிருந்தன? இடைக்ககாலத்தில் அவை எவ்வாறு விரிவடைந்தன? பின்பு வெவ்வேறு காலச்சூழலுக்கு ஏற்ப அவை குறைந்தனவா? அல்லது விரிவடைந்தனவா? இவை போன்ற வினாக்களுக்கு இப்பாடத்தில் விடை காணலாம்.

பன்மை விகுதியான ‘கள்’ என்பதைப் பற்றியும் இப்பாடத்தில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றது. மேலும் தமிழ்மொழியின் இலக்கணக் கூறுகளை வரலாற்று நோக்கிலும் மொழியியல் அடிப்படையிலும் விளக்கும் போது இலக்கண இலக்கியங்களிலிருந்தும் பேச்சுத் தமிழில் இருந்தும் எடுத்துக்காட்டுகள் தரப்பட்டிருக்கின்றன.

2.1 காலப்பகுப்பு

தமிழ்மொழியின் வரலாற்றினைச் சங்ககாலத்தமிழ், இடைக் காலத் தமிழ், தற்காலத்தமிழ் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து, அந்தப் பிரிப்பின் அடிப்படையில் விளக்கங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் தோன்றிய காலம் சங்ககாலம் என்று பகுக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை     என்னும்     இரட்டைக் காப்பியங்களும்,     சீவகசிந்தாமணி,     பெரியபுராணம், கம்பராமாயணம் போன்ற பெருங்காப்பியங்களும், ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாடிய பக்தி இலக்கியங்களும், வீரசோழியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களும் தோன்றிய காலம் இடைக்காலம் என்று பகுக்கப்பட்டுள்ளது, 18 ஆம் நூற்றாண்டு முதல் இக்காலம் வரை தற்காலம் என்று பகுத்து அமைக்கப் பட்டுள்ளது..

2.2 வேற்றுமையாவது யாது?

பெயர்ப்பொருளை வேற்றுமை செய்வன ‘வேற்றுமை’ எனப்படும்.

ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப்பொருள்

வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை (நன்னூல். 291)

ஒரு சொற்றொடரில் உள்ள பெயர்ச்சொல்லுக்கும் வினைச் சொல்லுக்கும் இடையே உள்ள இலக்கண உறவுகளை வேறுபடுத்திக் காட்டுவதும் வேற்றுமையாகும்.

‘இராமன் அழைத்தான்’

‘இராமனை அழைத்தான்’

‘இராமனுடன் சென்றேன்’

‘இராமனுக்குக் கொடுத்தேன்’

‘இராமன் வீட்டில் இருந்தான்’

இவ்வாறு காணப்படும் சொற்றொடரில் பெயர்ச்சொற்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையே ஒரு விதமான பொருள் தொடர்பு இருப்பதை நம்மால் உணர முடிகிறது. இத்தகைய பொருள் (கருவி, காரணம், இடம் போன்ற) தொடர்பை உணர்த்திச் சில சொற்கள் ஒட்டுகளாகப் (affixes) பெயர்ச்சொல்லோடு இணைந்து வருகின்றன. இந்தப் பொருள் தொடர்பைத் தமிழில் ‘வேற்றுமை’ (case) என்கிறோம். ஒட்டுகளை ‘வேற்றுமை உருபு’ (case marker) என்கிறோம்.

வேற்றுமையை ஆங்கிலத்தில் ‘case’ என்று குறிப்பிடுகின்றனர். இந்த ‘case’ என்ற ஆங்கிலச்சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து உருவானதாகும். அச்சொல்லும் இலத்தீன் மொழிச்சொல்லாகிய ’causes’ என்ற சொல்லிலிருந்து உருவானது. இதுவும் கிரேக்க மொழிச்சொல்லாகிய ptosis என்பதிலிருந்து வந்தது. இச்சொல்லுக்கு ‘வீழ்ச்சி’ (fall) அல்லது ‘மாற்றம்’ (change) என்ற பொருளுண்டு. இந்நிலையில் இதனை ‘வேற்றுமை’ என்று தமிழில் அழைப்பது பொருத்தமானது.

2.2.1 வேற்றுமை எத்தனை? வேற்றுமையின் எண்ணிக்கையில் பல தரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதனை இங்குக் குறிப்பிடுவது பயன்தரும். வேற்றுமை என்ற உடனே நம் மனக்கண்முன் வருவன எட்டு வேற்றுமைகள். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு ‘ஏழு வேற்றுமைகள்’ இருந்தன. தொல்காப்பியர் ‘விளி’யையும் சேர்த்து எட்டு வேற்றுமைகளாகக் கூறினார்.

வேற்றுமையைப் பற்றிக் குறிப்பிட வந்த தொல்காப்பியர்,

வேற்றுமை தாமே ஏழென மொழிப (தொல்.சொல். 62)

என்றும்

விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே

(தொல்.சொல். 63)

என்றும் குறிப்பிட்டுள்ளார். இவற்றை ஒழுங்குபடுத்திக் கூற அவர்

அவை தாம்

பெயர் ஐ ஒடு கு

இன் அது கண் விளி என்னும் ஈற்ற

(தொல்.சொல். 64)

என்றார். நாம் தமிழ்மொழியில் எட்டு வேற்றுமைகள் இருக்கின்றன எனக் கொண்டு அவை எவ்வாறு வளர்ச்சியுற்றன என்பதனை இங்குக் காணலாம்.

2.2.2 வேற்றுமையின் பெயர்கள் 1)முதல் வேற்றுமை -எழுவாய் வேற்றுமை (Nominative/ subjective case)

2)இரண்டாம் வேற்றுமை-செயப்படுபொருள் வேற்றுமை (Accusative case)

3)மூன்றாம் வேற்றுமை-கருவி வேற்றுமை (Instrumental case)

4)நான்காம் வேற்றுமை-கொடை வேற்றுமை (Dative case)

5)ஐந்தாம் வேற்றுமை -நீங்கல் வேற்றுமை (Ablative case)

6)ஆறாம் வேற்றுமை -உடைமை வேற்றுமை (Genetive case)

7)ஏழாம் வேற்றுமை -இடவேற்றுமை (Locative case)

8)எட்டாம் வேற்றுமை -விளிவேற்றுமை (Vocative case)

மொழியில் அடிப்படையிலும் வரலாற்று நோக்கிலும் வேற்றுமை உருபுகளின் வளர்ச்சியைக் காண இருப்பதால் உருபன், உருபு, மாற்றுருபு, சூனிய உருபு போன்ற மொழியியலின் கூறுகளைப் பற்றிய விளக்கங்களையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

2.3 உருபன் - உருபு

இந்தப் பாடத்தில் உருபன், உருபு (Morpheme – Morph) என்னும் இரண்டு சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இவையிரண்டும் மொழியியலில் பயன்படுத்தப்படும் சொற்களாகும். தமிழ் இலக்கணத்தின்படி ‘உருபு’ எனும் சொல் வேற்றுமையோடு தொடர்புடையதாய் வேற்றுமைப் பொருளை வெளிப்படுத்துவாகும். எனவே இந்தப் பாடத்தில் அதனை வேற்றுமை உருபு என்று குறிப்பிடுவோம். ‘உருபு’ என்று மட்டும் வருவது மொழியியல் உருபு என்பதனைச் சுட்டுவதாகும்.

ஒரு மொழியில் காணப்படும் சொற்கள் பொதுவாகப் பொருளைக் காட்டுவன. இவ்வாறு ஒரு மொழியில் காணப்படும் பொருளைக் காட்டும் சின்னஞ்சிறு கூறே ‘உருபன்’ எனப்படும். ‘கண்’ போன்ற சொற்கள் ஒரு உருபனைக் கொண்டவை. ‘கண்கள்’ போன்ற சொற்கள் இரு உருபன்களை உடையன.

தமிழில் காணப்படும் -த்-, -ட்-, -ற்-, -இன்- ஆகியவை காலம் காட்டும் இடைநிலைகளாகும். இவற்றை ஒரு குழுவாகக் கருதி ‘இறந்த கால உருபன்’ என்றும் இந்த வேறுபட்ட வடிவங்களை உருபு என்றும் மொழியியலார் கூறுவர்.

சான்று:

கண்ணனைக் கண்டான் – கண்ணன் + ஐ

உழுதான் – உழு + த் + ஆன்

விழுங்கினான் – விழுங்கு + இன் + ஆன்.

2.3.1 மாற்றுருபு ஒரு உருபன் பொருளை உணர்த்தும் நிலையில் தன்னை அடுத்து வரும் சொல்லுக்குத் தகுந்தாற்போல் தன் உருவத்தில் மாற்றம் அடையும். இவ்வாறு மாறுவது மாற்றுருபு (allomorph) ஆகும். செந்தாமரை, செவ்வானம், செம்மணல், செங்கமலம், செஞ்சட்டி, சேவடி போன்ற சொற்களில் செஞ்-, செவ்-, செம்-, செம்-, செங்-, செஞ்-, சே- ஆகியவை சிவப்பு என்ற ஒரே பொருளை உணர்த்தி வருகின்றன. எனவே இவை மாற்றுருபுகளாகும்.

2.3.2 சூனிய உருபு மொழிகளில் பல இலக்கணக் கூறுகள் பல்வேறு உருபுகளால் காட்டப்படுகின்றன என்பதை அறிவோம். ஒரு பொருளையே காட்டுகின்ற பல மாற்றுருபுகள் (allomorphs) உள்ளன. கால இடைநிலைகளான ‘-த்-, -ட்-, -இன்-’ போன்றவைகள் இறந்தகாலம் காட்டுவதற்கான மாற்றுருபுகளாகும். அந்நிலையில் சில சொற்களில் எவ்வித மாற்றுருபுகளும் இன்றி ஒரே சொல் இரண்டு பொருளைக் காட்டுகின்ற நிலையைக் காணலாம். உதாரணமாக, ஆங்கிலத்தில் ‘Sheep’ என்ற சொல், சொற்றொடரில் இரண்டு விதமான பொருளைத் தருகின்றது. ஒன்று ஒருமை, மற்றொன்று பன்மை. அவ்வாறு வரும்போது எந்த விதமான உருபினையும் ஏற்காமல் பொருள் உணர்த்துவதால் இதனைச் ‘சூனிய உருபு’ (Zero Morph) எனலாம்.

ஆங்கிலத்தைப் போன்று தமிழிலும் சூனிய உருபு வருவதைக் காணமுடிகிறது.

சான்று:

வாராய்

இச்சொல் இருவிதமான பொருளை உணர்த்துகிறது. ஒன்று உடன்பாட்டுப் பொருள்; மற்றொன்று எதிர்மறைப் பொருள்.

வாராய் – வா (உடன்பாடு)

வாராய் – வாராதே (எதிர்மறை)

எதிர்மறைப்பொருளில் வரும்போது, இச்சொல்லில் எதிர்மறை உருபு எதுவும் வரவில்லை. இதனையே சூனிய உருபு என்கிறோம்.

வா(ர்) + + ஆய் = வாராய் (வாராதே).

2.3.3 உருபு ஏற்கும் முறை வடமொழி முதலான மொழிகளில் வேற்றுமை உருபு ஏற்கும் முறைகள் (declensions) பல. அம்மொழிகளில் பெயர்ச்சொற்களின் ஈற்றெழுத்து முதலியவற்றின் மாறுதல்களுக்கு ஏற்ப, உருபுகள் இணைக்கப்படுவதால் முறைகள் பலவாயின. ஆனால் திராவிட மொழிகளில் பெயரீற்றிற்கு ஏற்ப வேற்றுமைகள் மாறுவதில்லை. எல்லா ஈறுகளுடனும் வேற்றுமை உருபு ஒரே தன்மையாகச் சேர்ந்து நிற்கும் ; வேறுபாடெல்லாம் இடையே புகும். தமிழ் மொழியில் பெயர்ச்சொற்கள் உருபேற்கும் முறை ஒன்றேயாகும். தமிழில் உருபு ஏற்பவை பெயர்ச்சொல் (Noun), தொழிற்பெயர் (verbal noun), வினையால் அணையும் பெயர், ஆக்கப்பெயர் (participial noun) போன்றவைகளாகும். இவை அனைத்தும் பெயர்ச்சொற்களே.

சான்று:

‘ஆறு’ – பெயர்ச்சொல், ‘செய்தது’ – தொழிற்பெயர்

‘செய்தவன்’ – வினையாலணையும் பெயர்

‘நடப்பு’ – ஆக்கப்பெயர்

2.3.4 உருபு தமிழில் வேற்றுமை உருபுகள் ஒரு காலத்தில் சொற்பொருள் குறிப்பனவாகவே இருந்தன. பின்னரே தேவையைக் கருதி, தம் நிலையில் குன்றி இலக்கணப்பொருள் உணர்த்துவனவாகத் திரிந்தன. அவையே வேற்றுமை உருபுகள். ‘கொள்’ என்னும் வினைச்சொல் ‘கொண்டு’ என்ற வடிவில் வினையெச்சம் ஆயிற்று. இதனோடு ‘வா’ என்னும் வினைச்சொல் சேர்ந்து ‘கொண்டு வா’ என்னும் புதிய வினைச்சொல் உருவாயிற்று (கொண்டு வா – கொண்டு + வா). முன்பு ‘கொண்டு’ எனும் இச்சொல் சொற்பொருளை உணர்த்தியது. பின்பு இந்தக் ‘கொண்டு’ வேற்றுமை உருபாக மாறி, இலக்கணப்பொருளைத் தரலாயிற்று.

சான்று:

”கல்கொண்டு எறிந்தான்’ என்பது ‘கல்லால் எறிந்தான்’ என்பதற்கு இணையானதாக அமைந்தது.

2.4 வேற்றுமைகள் - I

பெயர்ப்பொருளை வேற்றுமை செய்வன வேற்றுமை எனப்படும். தமிழில் எட்டு வேற்றுமைகள் இருக்கின்றன. அவற்றுள் முதல் நான்கு வேற்றுமைகள் பற்றி இங்கே காண்போம்.

2.4.1 எழுவாய் வேற்றுமை எழுவாய் வேற்றுமை என்ற பெயர் முதல் வேற்றுமையைக் குறிக்கும். தொல்காப்பியர் இதனைப் ‘பெயர் வேற்றுமை’ என்றும் குறிப்பிடுகின்றார்.

அவை தாம்

பெயர் ஐ ஒடு கு

இன் அது கண் விளி யென்னும் ஈற்ற

(தொல்.சொல். 64)

மற்ற வேற்றுமைகளுக்குத் தனி வேற்றுமை உருபுகள் இருப்பதனால் அவற்றை ஐ, ஒடு என்று குறிப்பிடுகின்றார். இவ்வேற்றுமைக்கு என்று தனி ஒரு வேற்றுமை உருபு இல்லாத காரணத்தால் இதனை முதல் வேற்றுமை என்று கூறலாம். எந்த வேற்றுமை உருபினையும் வினையினையும் இது ஏற்காது. பிற சொல்லோடு சேராது, தனித்து நிற்கும், ஒரு சொற்றொடரில் பயனிலைக்கு (வினைச்சொல்லுக்கு) எழுவாயாக – முதலாக (அந்த வினையில் செயல்பாட்டுக்குக் காரணமாக) அமைவதனாலேயே இது எழுவாய் வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

அவற்றுள்

எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே

(தொல்.சொல். 65)

பிற்காலத்தில் – வேற்றுமைகளை வேற்றுமை உருபால் பெயரிட்டு அழைத்த காலத்தில் – உருபின்றி, பெயர் மட்டும் தனித்து நின்ற இவ்வேற்றுமையைப் ‘பெயர் வேற்றுமை’ என்று அழைக்கத் தொடங்கினர். பின் வந்தோரும் அவ்வழக்கைத் தொடர்ந்தனர். இவ்வேற்றுமை, ‘எழுவாய் வேற்றுமை’ என்றும், ‘முதல் வேற்றுமை’ என்றும், ‘ஒன்றாம் வேற்றுமை’ என்றும் ‘பெயர் வேற்றுமை’ என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்வேற்றுமை

எவ்விதமான உருபும் ஏற்காது. ஒரு சொற்றொடரில் உள்ள எழுவாய் திரிபு ஏதும் இல்லாது, பொருள் உணர்த்தும். இந்த எழுவாய் வேற்றுமை எந்த ஒரு வேற்றுமை உருபினையும் ஏற்காமல் இருந்தாலும் மொழியியலின்படி உருபனியியலில் (Morphology) மட்டும் இல்லாமல் தொடரியல் (Syntax) மற்றும் பொருண்மையியல் (Semantics) ஆகியவற்றில் வேற்றுமைப் பொருளை உணர்த்துகிறது. முதல் வேற்றுமை சங்ககாலம், இடைக்காலம், தற்காலம் ஆகிய முக்காலங்களிலும் எவ்விதமான வேற்றுமை உருபும் ஏற்காமல் நின்று பொருள் உணர்த்தி வருகின்றது.

சங்ககாலம்

சான்று:

மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்

(புறநானூறு . 191)

மக்களும் – எழுவாய்; நிரம்பினர் – பயனிலை

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

(குறுந்தொகை . 40)

நெஞ்சம் – எழுவாய்; கலந்தன – பயனிலை

இடைக்காலம்

ஆ, அவன், மக்கள், சாத்தன் போன்ற பெயர்கள் பயனிலை ஏற்று, எழுவாய்ப்பொருள் உணர்த்தின. நன்னூல் போன்ற இடைக்கால இலக்கணங்கள் அவற்றின் நூற்பாவில் சுட்டிக் காட்டியுள்ளன.

சான்று:

எழுவாய் உருபு திரிபில் பெயரே (நன்னூல்.295)

ஆடலன், ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே

(தேவாரம் 1.105:1)

ஆதிரையன் – எழுவாய்; அமர்ந்தான் – பயனிலை

தற்காலம்

சான்று:

கண்ணன் கதவைத் திறந்தான்

கண்ணன் – எழுவாய்; திறந்தான் – பயனிலை

2.4.2 இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை ‘ஐ’ என்ற வேற்றுமை உருபேற்று வரும்.

இரண்டா குவதே

ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு

அவ்விரு முதலின் தோன்றும் அதுவே

(தொல்.சொல். 71)

இவ்வேற்றுமையைச் ‘செயப்படுபொருள் வேற்றுமை’ என்றும் ‘ஐ’ வேற்றுமை என்றும் அழைப்பர். அன்று முதல் இன்று வரை ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபே இரண்டாம் வேற்றுமை உருபாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

சங்ககாலம்

சான்று:

…………….. ஒளிரும் தாழ்இருங் கூந்தல்

பிறரும் ஒருத்தியை நம்மனைத் தந்து

(அகநானூறு 46 : 9)

இடைக்காலம்

இடைக்காலத்திலும் எவ்வித மாற்றமும் இன்றி இது வருதலைக் காணலாம்.

சான்று:

செயிர்தரும் கொற்ற மன்னர்

சேனையை மானும் அன்றே

(கம்ப. பால. ஆற்றுப்படலம்.25)

அந்தியம் போதில் அரியுரு ஆகி

அரியை அழித்தவனை

(நாலாயிரம். திருப்பல்லாண்டு. 5.3)

தற்காலம்

சான்று:

கண்ணனைப் பார்த்தான்

அன்று முதல் இன்று வரை பெரும்பாலும் பொருள் மயங்கி வராத சூழலில் இவ்வேற்றுமை உருபு ‘ஐ’ யினைப் பயன்படுத்துவது இல்லை.

சான்று:

மரம் வெட்டினான்

கண்ணன் நாற்காலி செய்தான்

ஏனென்றால் இவ்வாறு எழுதுவது உயர்ந்த நடையென்று எண்ணி, அவ்விரண்டாம் வேற்றுமை உருபினைப் பயன்படுத்தாமல்

இருப்பதும் உண்டு.

2.4.3 மூன்றாம் வேற்றுமை மூன்றாம் வேற்றுமை உருபு ‘ஒடு’ ஆகும்.

மூன்றா குவதே

ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

வினை முதல் கருவி அனைமுதற் றதுவே

(தொல்.சொல். 73)

இவ்வேற்றுமையை ‘ஆயுத வேற்றுமை’ என்பர். இவ்வேற்றுமைக்கான வேற்றுமை உருபு ‘ஒடு’ என்பதாகும். இவற்றோடு ‘ஆன்’ என்பதனையும் தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ளமை தெரியவருகிறது. ஆனால் எவ்வேற்றுமைக்கு இதனைப் பயன்படுத்தினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

சான்று:

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே

(தொல்.பொருள். 5)

இருப்பினும் இவ் ‘ஆன்’ மூன்றாம் வேற்றுமைக்குப் பயன்பட்டது தெரியவருகிறது. நாளடைவில் ‘ஆன்’ என்னும் வேற்றுமை உருபு கருவி வேற்றுமைப் பொருளைப் பெறத் தொடங்கியது.

‘வாளான் வெட்டினான்’

ஒருசொல் எவ்வாறு எந்த நிலையில் நடந்தது என்பதைக் குறிக்க அது மாறியது எனலாம். மேலே கூறப்பட்ட சான்றினை நாம் ஆங்கிலத்தில் ‘with’ (Instrumental case marker preposition) என்பது கருவிப்பொருளும் (துணை செய்தல்) உடனிகழ்ச்சிப் பொருளையும் (கூடவே இடம்பெறுதல்) பெற்றுள்ளமையை ஒப்பு நோக்கலாம்.

e came with me’

e came with a sword’

e cut it with his sword’

சங்ககாலம்

சான்று:

‘ஒடு’

கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

(குறுந்தொகை: 3:3-4)

‘ஆன்’

அறியாமையான் மறந்து, துப்பு எதிர்ந்தநின்

பகைவர் நாடும் கண்டு வந்திசினே

(பதிற்றுப்பத்து : 15:14-15)

அக்காலத்தில் ‘ஒடு’ என்னும் வேற்றுமை உருபுக்கு ‘ஓடு’ என்னும் மாற்றுருபு பயன்பாட்டில் இருந்தது.

சான்று:

ஆவோடு அல்லது யகரம் முதலாது

(தொல்.எழுத்து. 65)

என்கிறார். ஆக ‘ஆன்’, ‘ஒடு’, ‘ஓடு’ போன்ற வேற்றுமை உருபுகள் தமக்குள் வேற்றுமையின்றி மாறி மாறி வந்தது தெரிய வருகிறது.

இடைக்காலம்

‘ஆன்’ என்ற வேற்றுமை உருபு ‘ஆல்’ ஆக மாற்று வடிவமுற்று வழங்கலானது. இம்மாற்றம் சங்க மருவிய காலம் என்று சொல்லக்கூடிய இடைக்காலத்திற்கும் சற்று முன்பாக மாறலானது.

சான்று:

வெல்லல் ஆம் இராமனால்; பிறரும் வெல்வரோ?

(கம்ப, 5949)

ஆக மொத்தம் நான்கு வடிவங்கள் வழக்கில் இருந்தன (ஆல், ஆன், ஒடு, ஓடு). இக்காலகட்டத்தில் இம் மூன்றாம் வேற்றுமை உருபு ‘ஆன்’, ‘ஓடு’ இவ்விரண்டு உருபுக்குள்ளே ஆழமான ஒரு பிரிவு ஏற்பட்டது. அதாவது ‘ஆன்’ கருவியையும் ‘ஓடு’ உடனிகழ்ச்சியையும் குறிக்க வந்தன.

மூன்றாவதன் உருபு ஆல், ஆன், ஓடு, ஒடு

கருவி கருத்தா உடனிகழ்வு அதன்பொருள்

(நன்னூல் – 297)

கருவிப்பொருள்

வாளால் வெட்டினான் (நன்னூல் உரை – 297)

உடனிகழ்ச்சி

இடைக்காலத்தில் ‘ஆல்’, ‘ஆன்’ வேற்றுமை உருபுகள் வரும் இடங்களில் ‘கொண்டு’ என்பதும், ‘ஒடு’, ‘ஓடு’ வேற்றுமை உருபுகள் வரும் இடங்களில் ‘உடன்’ என்பதும் சொல்லுருபுகளாக வந்து நின்றன. ’சொல்லுருபு’ (Postposition) என்பது வேற்றுமை உருபைப்போல் செயல்பட்டு வரும்.

சான்று:

வாள் கொண்டு வெட்டினான் (நன்னூல் உரை.297)

தந்தையுடன் மைந்தன் வந்தான் (நன்னூல் உரை.297)

தற்காலம்

தற்காலத்தில் இம் மூன்றாம் வேற்றுமையை மொழியியலார் இரண்டாகப் பிரித்துப் பயன்படுத்தி வருகிறார்கள்.

1. கருவி வேற்றுமை (Instrumental Case)

2. உடனிகழ்ச்சி வேற்றுமை (Associative Case)

என்கிறார்கள்.

கருவிவேற்றுமை (Instrumental Case)

சான்று:

‘ஆல்’

‘கண்ணன் கத்தியால் பழத்தை வெட்டினான்’

இச்சொற்றொடர் சாதாரணமாகத் தமிழில் பயன்படுத்தப்படும் எடுத்துக்காட்டு. இச்சொற்றொடரைத் தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள்,

‘கண்ணன் கத்திகொண்டு பழத்தை வெட்டினான்’

என்கின்றனர். இச்சான்றினை நோக்கும்போது இடைக்காலத்தில் சொல்லுருபாக வந்த ‘கொண்டு’ தமிழகத்தின் ஒரு பகுதியில் வேற்றுமை உருபாகப் பயன்பட்டு வருவது தெரியவருகிறது. இதனை வட்டாரவழக்கு (regional dialect) என்பர்.

உடனிகழ்ச்சி வேற்றுமை (Associative Case)

சான்று:

‘ஒடு’

‘கண்ணன் அவனோடு போனான்’ இவ்வேற்றுமையின் மற்றொரு உருபு ‘உடன்’ என்பதாகும். இவ் ‘உடன்’ என்னும் வேற்றுமை உருபு எழுத்துத்தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பேச்சுத்தமிழில் ‘ஓடு’ என்பதையே பயன்படுத்து கின்றனர்.

இவ்வாறாக இம் மூன்றாம் வேற்றுமை ஒரே வேற்றுமை உருபு கொண்ட ஒரு வேற்றுமையாகச் சங்க காலத்திலும் பல வேற்றுமை உருபுகளைக் கொண்ட ஒரு வேற்றுமையாக இடைக் காலத்திலும் விளங்கியது. தற்காலத்தில் இரண்டு வேற்றுமைகளாகப் பிரித்து மொழியியலார் கையாளுவதும் தெரிய வருகிறது.

2.4.4 நான்காம் வேற்றுமை இவ்வேற்றுமைக்கான உருபு ‘கு’ ஆகும்.

நான்கா குவதே

குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

எப்பொரு ளாயினுங் கொள்ளும் அதுவே

(தொல்.சொல். 75)

இவ்வேற்றுமைையைக் ‘கொடை வேற்றுமை’ என்பர். இதனை ஆங்கிலத்தில் ‘Dative Case’ என்பர். Dative எனும் ஆங்கிலச் சொல் ‘Dativus’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. இது ‘கொடுத்தல்’ எனும் பொருள் தரும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானதாகும்.

சங்ககாலம்

சான்று:

வரிமணல் புனைஇய பாவைக்குக்

குவவுச் சினைப் பூக்கொய்து (புறநானூறு – 1)

இடைக்காலம்

இடைக்காலத்தில் ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபோடு ‘பொருட்டு’ என்ற இன்னும் ஒரு உருபு வழங்கலானது.

சான்று:

கூழின் பொருட்டு (நன்னூல் உரை.298)

தற்காலம்

தற்காலத்தில் ‘கு’ என்ற வேற்றுமை உருபே நான்காம் வேற்றுமை உருபாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மொழியியலின்படி பிரித்துப் பார்க்கும்போது ‘-க்கு’, -உக்கு’, ‘-கு’ போன்ற மாற்றுருபுகள் வருகின்றன என்பர் மொழியியலார். மொழியியலின்படி இவ்வுருபினை விளக்குமுகமாக,

-க்கு என்னும் மாற்றுருபு, பெயர்ச்சொல் திரிந்து (Oblique form) வரும் போது இ, ஈ, ஐ, ஆய் போன்றவை ஈற்றில் வரும்போது பயன்படுத்தப்படுகிறது.

சான்று:

மரத்துக்கு – மர+த்து+க்கு

தம்பிக்கு – தம்பி+க்கு

-உக்கு என்னும் மாற்றுருபு எல்லாப் பெயர்ச்சொல்லுக்கும் வருகிறது.

சான்று:

‘குழந்தை பாலுக்கு அழுகிறது’ – (பால்+உக்கு)

-கு என்னும் மாற்றுருபு ஒலி நிரவல்களான (Euphonic increment)

இன், அன் போன்றவைகளை அடுத்துவரும்.

சான்று:

‘பாலிற்கு’ – பால்+இன்+கு – பால்+இற்+கு

‘அதற்கு’ – அது+அன்+கு – அது+அற்+கு

இங்கு வருகிற ‘அன்’, ‘இன்’ போன்ற ஒலி நிரவலுக்கு அடுத்ததாகப் பின்னண்ண ஒலி (velar sound) வருவதால் அந்த ‘இன்’, ‘-ற்-’ ஆக மாறிவிடுகிறது.

2.5 வேற்றுமைகள் - II

இனி, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை என்னும் மூன்று வேற்றுமைகள் பற்றிக் காண்போம்.

2.5.1 ஐந்தாம் வேற்றுமை ஐந்தாம் வேற்றுமை உருபு ‘இன்’ ஆகும்.

ஐந்தாகுவதே

இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

இதனின் இற்றிது வென்னு மதுவே (தொல்.சொல். 77)

இவ்வேற்றுமையை ‘நீங்கல் வேற்றுமை’ என்பர். ஏனென்றால் நீங்கல் பொருளை, ஓர் இடத்திலிருந்து பெயர்வதை உணர்த்தலாயிற்று. அதற்கு முன் இவ்வேற்றுமை ஒப்புமைப்பொருளைக் குறிக்கும் எண்ணத்தோடு வழங்கலாயிற்று.

சங்ககாலம்

சான்று:

செறி யெயிற் றரிவை கூந்தலின் (குறுந்தொகை. 2:4)

இடைக்காலம்

‘இன்’ என்ற ஐந்தாம் வேற்றுமை உருபு ‘இல்’ ஆகப் பல இடங்களில் இடைக்காலத்தின் நூல்களில் வரலானது. அதே சமயம் இரண்டு வடிவங்களும் வழக்கிலிருந்து வந்தன. நேமிநாதத்திலும் ‘இன்’ ஐந்தாம் வேற்றுமை உருபாக இருந்தமை தெரியவருகிறது.

ஐந்தாவதன் உருபு இல்லும் இன்னும்

நீங்கல் ஒப்பு எல்லை ஏதுப் பொருளே

(நன்னூல்.299)

காலம் மாற மாற ‘இல்’ , ‘இன்’ னின் இடத்தைப் பற்றிக்கொண்டது எனலாம். இவற்றோடு மட்டுமல்லாமல் இவ்வேற்றுமை இன்னும் ஒரு வேற்றுமை உருபினைத் தன்னகத்தே உள்ளடக்கிக் கொண்டது. அது ‘நின்று’ என்பதாகும்.

சான்று:

சாத்தனுழை நின்றுந் தீமை அகன்றது

(வீரசோழியம் உரை.35)

தற்காலம்

தற்காலத்தில் இவ்வேற்றுமை உருபாக ‘இருந்து’ என்பது இருக்கின்றது. இவ் ‘இருந்து’ உண்மையில் ‘இரு’ என்பதன் வினையெச்சம் (Verbal paritciple) ஆகும்.

இவ்வேற்றுமையைப் பற்றிப் பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. ‘இருந்து’ என்ற ஐந்தாம் வேற்றுமை உருபு இட வேற்றுமைக்கான ஏழாம் வேற்றுமையுடன் சேர்ந்து வருவதும் உண்டு. ‘அவனிடமிருந்து’ இவ்வாறு வருகின்றபொழுது இவ்வேற்றுமையை ஏழாம் வேற்றுமையில் அடக்கி விடலாம் என்று கால்டுவெல் கூறுகிறார். அவரைப்போலவே மு. வரதராசனார் இவ்வேற்றுமை உருபு ஏழாம் வேற்றுமை உருபுடனும் மூன்றாம் வேற்றுமையுடனும் வருகிறது என்கின்றார். ச. அகத்தியலிங்கமோ

தொழில் நடக்கும்முன் (இவ்வேற்றுமை) எங்கிருந்தான் என்பதைக் காட்டுகிற காரணத்தால் இதனை இடவேற்றுமையாகிய ஏழாம் வேற்றுமையில் அடக்கலாம் என்கிறார்.

சான்று:

‘கண்ணனிடமிருந்து வாங்கினேன்’ மற்றும் ‘அங்கு’, ‘மேல்’ போன்ற பெயர்ச்சொல்லுடன் நேரடியாகச் சேர்ந்து வருதலும் உண்டு.

சான்று:

‘அங்கிருந்து வந்தான்’

அதுபோல ஒலி நிரவல் சாரியையுடனும் (Euphonic Clific) வரும்.

சான்று:

‘வடக்கேயிருந்து வந்தது’

2.5.2 ஆறாம் வேற்றமை ஆறாம் வேற்றுமை உருபு ‘அது’ ஆகும்.

ஆறா குவதே

அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

தன்னினும் பிறிதினும் இதனது இதுவெனும்

அன்ன கிளவிக் கிழமைத் ததுவே (தொல்.சொல். 79)

இதனைக் கிழமை உடைமை வேற்றுமை என்பர். இவ்வாறாம் வேற்றுமை உருபானது வினைச்சொல்லோடு தொடர்பு கொள்ளாமல் மற்றொரு பெயர்ச்சொல்லுடன் தொடர்பு கொள்கிறது. இதுவே இதனின் தனித்தன்மையாகும்.

‘எள்ளது குப்பை’

இச்சான்றில் ‘அது’ எனும் உருபு அமைந்து வருகிறது.

சங்ககாலம்

சான்று:

‘யான்’, ‘எனது’ என்னும் செருக்கு அறுப்பான்

வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்’ (திருக்குறள்.346)

அந்தக் காலகட்டத்தில் ‘அது’ என்னும் வேற்றுமை உருபோடு ‘அ’ என்ற வேற்றுமை உருபும் ஆறாம் வேற்றுமைக்குப் பயன்படுத்தப்பட்டது தெரிய வருகிறது.

சான்று:

‘அ’

வெரிநத் தோல் (பரிபாடல்.21 : 5)

இவ்வாறாம் வேற்றுமை இன்னும் ஒரு உருபினையும் பெற்றிருந்தது. அது ‘கு’ ஆகும்.

அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்

அதுவென் உருபுகெடக் குகரம் வருமே

(தொல்.சொல். 94)

சான்று:

நம்பிக்கு மகன் (நம்பியது மகன்)

இடைக்காலம்

இடைக்காலத்தில் ‘அது’ என்ற உருபோடு ‘ஆது’, ‘உடைய’ என்ற இரு உருபுகள் பயன்பாட்டுக்கு வந்தன.

ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும்

பன்மைக்கு அவ்வும் உருபாம் (நன்னூல்.300)

சான்று:

எனாதுகை (நன்னூல் உரை.300)

தற்காலம்

தற்காலத்தில் ஆறாம் வேற்றுமை உருபுகளாக ‘இன்’ , ‘உடைய’, ‘அது’ என்னும் மூன்று வேற்றுமை உருபுகள் வழக்கிலிருந்து வருகின்றன.

சான்று:

‘கண்ணனின் வீடு’

‘கண்ணனுடைய கால்’

‘கண்ணனது பெற்றோர்’

இவ்வேற்றுமையை ‘உடைமை வேற்றுமை’ (Possessive Case) என்றும் கருதுவர். சில சமயங்களில் உருபு ஏதும் ஏற்காது வருவதும் உண்டு.

சான்று:

‘அவன் வீடு’

‘அரசன் மாளிகை’

‘சிவன் கோயில்’

2.5.3 ஏழாம் வேற்றுமை ஏழாம் வேற்றுமை உருபு ‘கண்’ ஆகும். இது ஒரு பழைய வடிவம்.

ஏழா குவதே

கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி

வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்

அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே

(தொல்.சொல். 81)

இவ்வேற்றுமைக்கு ‘இடவேற்றுமை’ என்ற பெயரும் உண்டு. ஏனெனில் இடப்பொருளை உணர்த்தப் பல்வேறு சொற்களை ஆரம்பத்தில் தோற்றுவித்து, அவற்றைப் பின்வரும் நூற்பாவில் தொகுத்து மொழிகின்றார் தொல்காப்பியர்.

கண்கால் புறம்அகம் உள்உழை கீழ்மேல்

பின்சார் அயல்புடை தேவகை எனாஅ

முன்இடை கடைதலை வலம்இடம் எனாஅ

அன்ன பிறவும் அதன்பால் என்மனார்

(தொல்.சொல். 82)

இவை அனைத்தும் வேற்றுமை உருபுகள் என்றழைக்கப்படுகின்றன. ஆனால் சேனாவரையர் இவற்றை உருபுகள் இல்லை என மொழிகிறார். சான்றாகக் கூற வேண்டுமாயின் சாரியை ஆனது பெயருக்கும் உருபிற்கும் இடையில் பெயரை அடுத்து வரும். ஆனால்,

‘ஊரகத்திருந்தான்’ (ஊர்+அகம்+அத்து+இருந்தான்)

‘ஊர்ப்புறத்திருந்தான்’ (ஊர்+புறம்+அத்து+இருந்தான்)

என்று அத்துச் சாரியை அகம், புறம் என்பனவற்றிற்குப்பின் வந்துள்ளது. எனவே அவைகள் உருபுகள் இல்லை எனலாம். எனவே ஏழாம் வேற்றுமை பற்றி மேலே கூறப்பட்ட தொல்காப்பியச் சான்று உருபின் பொருள்பட வரும் பிறசொற்களே என்று கூறுகிறார் சேனாவரையர் (தொல்.சேனாவரையர் உரை. 82).

சங்ககாலம்

சான்று:

பெண்ணை இவரும் ஆங்கண் (நற்றிணை.38:9)

இடைக்காலம்

இடைக்காலத்தில் முன்பு சுட்டப்பட்டதுபோல் அதே உருபும் அதன் பொருளும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

சான்று:

ஊர்க்கண் இருந்தான் (நன்னூல் உரை.301)

அறம் செயு மகன் தேவருள் வைக்கப்படுவான்

(நன்னூல் உரை.301)

தற்காலம்

தற்காலத்தில் ‘இல்’ மற்றும் ‘இடம்’ என்ற இரு உருபுகளால் ஏழாம் வேற்றுமை பயன்பட்டு வருகின்றது.

சான்று:

‘குருவி மரத்தில் இருந்தது’

‘ஒரு வாரத்தில் முடித்தேன்’

‘அவனிடம் அதைக்கொடு’

‘காக்கையிடம் போகாதே’

2.6 விளிவேற்றுமை

இவ் வேற்றுமைக்கென்று தனி ஒரு வேற்றுமை உருபு ஏதும் கிடையாது. பெயர்ச்சொற்களின் ஈறு அடையும் திரிபினால் இது உணர்த்தப்படுகிறது. ‘அழைத்தல்’ என்பது இவ்வேற்றுமையின் பொருள். இதற்கு அமைந்த ‘விளி’யென்னும் பெயராலேயே இன்றுவரை அழைக்கப்படுகிறது.

அவைதாம்

பெயர் ஐ ஒடு கு

இன் அது கண் விளி யென்னும் ஈற்ற

(தொல்.சொல். 64)

இதற்கு ‘எட்டாம் வேற்றுமை’ என்ற பெயரும் உண்டு. விளி வேற்றுமைக்கும் பிற வேற்றுமைக்கும் வேறுபாடு உண்டு. பிற வேற்றுமைகள் சொற்றொடரில் காணப்படும் பொருள்தொடர்பைக் காட்டுவன. ஆனால் விளி வேற்றுமைக்கும் வினைச்சொல்லுக்கும் எந்தவிதமான பொருள் தொடர்பும் கிடையாது. விளிவேற்றுமை சொற்றொடரின் அக உறுப்பாக இல்லாமல் புற உறுப்பாகவே உள்ளது. கண்ணா ! நீ எங்கே போகிறாய்? என்பதில் ‘நீ எங்கே போகிறாய்?’ என்பதே வாக்கியம். நீ- எழுவாய். எங்கே போகிறாய்?- பயனிலைத்தொடர். கண்ணா என்று ‘விளி’ வாக்கியத்திற்கு வெளியே உள்ளது.

சங்ககாலம்

சான்று:

‘தோழீ இ (அகநானூறு.352:1)

இடைக்காலம்

இடைக்காலத்தில் இது எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் முன்பு இருந்ததுபோலவே வழங்கப்பட்டு வந்தது.

சான்று:

கோத்தும்பீ (திருவாசகம், திருக்கோத்தும்பி.10:10)

‘காள்’ என்னும் சொல்லும் விளியைக் குறிக்கப் பயன்பட்டது.

சான்று:

மாமுகில்காள்

(நாச்சியார் திருமொழி,மேகவிடுதூது.2)

தற்காலம்

சான்று:

‘கண்ணா!’

இவ்வாறாக விளி வேற்றுமை யாதொரு வேற்றுமை உருபையும் ஏற்காது அழைத்தலில் வருகிறது. அதே சமயத்தில் பெயர்ச் சொல்லில் ஒரு சில எழுத்து மாற்றங்களுடன் வருவதுண்டு.

வேற்றுமைகளின் வளர்ச்சி அட்டவணை

வ. எண்              வேற்றுமை                                 சங்ககால வேற்றுமை             இடைக்கால                                          தற்கால

உருபுகள்                                   வேற்றுமை   உருபுகள்                வேற்றுமை      உருபுகள்

1.                            எழுவாய்

வேற்றுமை                              0                                                               0                                                      (Nominative Case)

2.                              இரண்டாம்                             ஐ (அ)                                                     ஐ                                                      ஐ (Accusative Case)

வேற்றுமை

3.                               மூன்றாம் வேற்றுமை    ஒடு ஓடு, ஆன்                         ஒடு ~ ஓடு,                                                   ஒடு ~ ஓடு

ஆன் ~ஆல்,கொண்டு,உடன்               (Associative Case) ஆல்                                                                                                                                                                                                                                 (Instrumental Case)

4.                           நான்காம் வேற்றுமை                கு                                     கு, பொருட்டு                                                   -க்கு, -உக்கு,

-கு (Dative Case)

5.                       ஐந்தாம் வேற்றுமை                       இன்                                 இன்~இல்,நின்று                                இருந்து, (இல்+இருந்து –                                                                                                                                                                                                                                    அஃறிணை) (இடம் +                                                                                                                                                                                                                         இருந்து – உயர்திணை)

(Ablative Case)

6.                         ஆறாம் வேற்றுமை             அது, அ, கு                        அது~ஆது,உடைய                                          அது, உடைய,

இன் (Genitive Case)

7.                           ஏழாம் வேற்றுமை           கண், இடம்,இல், உள்        கண், கால், இடம், இல்,                              இல், இடம்

உள்                                                   (Locative Case)

8.                        விளி  வேற்றுமை             ஒலியன் மாற்றம்                            ஒலியன் மாற்றம்                      ஒலியன் மாற்றம்

2.7 'கள்' எனும் பன்மை விகுதி

‘கள்’ என்பது பன்மை விகுதியாகும். இவ்விகுதி எவ்வாறு தமிழில் பயன்பாட்டுக்கு வந்தது. பின்பு அதன் வளர்ச்சி எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பற்றி இங்கு விளக்கப்படுகிறது. முற்காலத்தில் இன்னும் பல விகுதிகள் பன்மையைச் சுட்டும் விகுதிகளாகப் பயன்பட்டு வந்தன. (அர், ஆர், ஓர், இர், ஈர், அர்கள், ஆர்கள், ஓர்கள்) இருப்பினும் இங்கு நாம் பார்க்க

இருப்பது ‘கள்’ எனும் பன்மை விகுதியைப் பற்றி மட்டும்தான்.

சங்ககாலம்

சங்ககாலத்தில் கள் என்னும் பன்மை விகுதி வழங்கியது. இதனைத் தொல்காப்பியர் அஃறிணைப் பன்மைக்கு மட்டும் உரியதாகக் குறிப்பிடுகிறார்.

அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பதற்கு வழங்கும் இயற்பெயர்ச் சொற்களைப் பன்மையாக்குவதற்கு, அச்சொற்களின் பின் கள் என்னும் விகுதி சேர்த்துக் கொள்ளும் இடமும் உண்டு என்கிறார் தொல்காப்பியர்.

‘கள்ளொடு சிவணும் அவ்இயற் பெயரே

கொள்வழி உடைய பலஅறி சொற்கே

(தொல்.சொல். 169)

சான்று:

ச மரம் + கள் = மரங்கள்

யானை + கள் = யானைகள்

இந்நூற்பாவில் தொல்காப்பியர், ‘கள் விகுதி சேர்த்துக் கொள்ளும் இடமும் உண்டு’ என்று கூறியிருப்பதை நோக்கும்போது, அவர் காலத்தில் கள் விகுதி சேர்க்காமலும் அஃறிணைப் பன்மை உணர்த்தப்பட்டது என்பதை அறிய முடிகிறது. இது பற்றியும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

கள் விகுதியோடு வாராத அஃறிணை இயற்பெயர்கள், அவை கொண்டு முடியும் வினைகளை வைத்து ஒருமை, பன்மை தெரியப்படும் என்கிறார் தொல்காப்பியர்.

தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்

ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே

(தொல்.சொல். 171)

சான்று:

ஆ வந்தது (ஒருமை)

ஆ வந்தன (பன்மை)

தொல்காப்பியத்தை அடுத்துத் தோன்றிய சங்க இலக்கியங்களில், அஃறிணைப் பன்மை உணர்த்தும் முறையில் கள் விகுதி சேராமலும் சேர்ந்தும் வருகின்ற இருநிலைகளையும் காணலாம்.

கள் விகுதி இல்லாமல் வரும் அஃறிணைச் சொற்கள், தமக்கு முன்னோ பின்னோ வரும் அஃறிணைப் பன்மை வினை முற்றுகளால் பன்மை என அறியப்படுகின்றன.

சான்று:

காலே பரிதப்பினவே (குறுந்தொகை.44 : 1)

கலுழ்ந்தன கண்ணே (நற்றிணை.12 : 10)

நெகிழ்ந்தன வளையே (நற்றிணை.26 : 1)

இங்கே கால், கண், வளை (வளையல்) என்னும் அஃறிணைப் பெயர்ச்சொற்கள் முறையே பரிதப்பின (நடந்து நடந்து ஓய்ந்தன), கலுழ்ந்தன (அழுதன), நெகிழ்ந்தன (கழன்றன) என்னும் பன்மை வினைமுற்றுகள் கொண்டு முடிவதால் கால்கள், கண்கள், வளைகள் என்ற பன்மைப் பொருளை உணர்த்தல் காணலாம். இவ்வாறு பன்மை உணர்த்தும் முறையே சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகிறது.

அஃறிணை ஒருமைப் பெயர்ச்சொற்களோடு கள் விகுதியைச் சேர்த்துப் பன்மையாக்கும் முறையும் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது.

சான்று:

மயில்கள் (ஐங்குறுநூறு.29

கண்களும் கண்களோ (கலித்தொகை.39: 42)

அரண்கள் (பதிற்றுப்பத்து.44: 13)

சொற்கள் (கலித்தொகை.81: 13)

தொழில்கள் (கலித்தெகை.141: 4)

சங்க காலத்தில் உயர்திணையில் பலரைக் குறிக்கும் பெயர்ச் சொற்களில் அர் என்னும் பன்மை விகுதி வழங்கியது. (எ-டு) அவர், காதலர், சான்றோர், அரசர். காலப்போக்கில் இச்சொற்கள் பலரைக் குறிக்க வழங்குவதோடு அல்லாமல், உயர்வு காரணமாக ஒருவரை மட்டும் குறிக்கவும் வழங்கலாயின. சங்க இலக்கியங்களில் இத்தகு வழக்குகளைக் காணலாம்.

சான்று:

யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே

(குறுந்தொகை.75 : 5)

சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே

(குறுந்தொகை.102 : 4)

கண்ணீர் அருவி ஆக

அழுமே தோழி அவர் பழமுதிர் குன்றே

(நற்றிணை-88 : 8-9)

இங்கே காதலர், சான்றோர், அவர் என்ற சொற்கள் பலரைக் குறிக்காமல் ஒருவரை (தலைவனை) மட்டும் குறிக்கும் உயர்வு ஒருமைப் பெயர்களாக வழங்கின. இவ்வாறு அர் என்னும் உயர்திணைப் பன்மை விகுதி ஒருவரை மட்டும் உணர்த்தவே, பலரை உணர்த்த அர் + என்னும் அவ்விகுதி மட்டும்

போதவில்லை. எனவே அர் என்பதோடு கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதியையும் சேர்த்து அர்கள் என்னும் இரட்டைப் பன்மை (Dual Plural) விகுதி உருவாக்கப்பட்டது. அர்கள் என்ற இரட்டைப் பன்மை விகுதி கொண்டு உயர்திணையை உணர்த்துதல் முதன்முதலில், சங்க காலத்தின் பிற்பகுதியில் தோன்றிய கலித்தொகையில் காணப்படுகிறது.

சான்று:

உலகு ஏத்தும் அரசர்கள் (கலித்தொகை.25 : 11)

இடைக்காலம்

இடைக்காலத் தமிழில் கள் விகுதியின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. சங்க காலத்தில் இருநிலைகளில் பயன்படுத்தப் பட்ட கள் விகுதி, இடைக்காலத்தில் ஐந்துவகை நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

1) அஃறிணைப் பன்மை உணர்த்தும் விகுதியாக வழங்குகிறது.

சான்று:

உயிர்கள் (சிலப்பதிகாரம்.10 : 175)

மீன்கள் (மணிமேகலை.29 : 118)

யானைகள் (கம்பராமாயணம்.7318:3)

2) உயர்திணைப் பன்மைக்கு உரிய அர் விகுதியுடன் சேர்ந்து, அர்கள் என்னும் இரட்டைப் பன்மை விகுதியாக அமைந்து உயர்திணைப் பன்மையை உணர்த்த வழங்குகிறது.

சான்று:

தேவர்கள் (திவ்வியப் பிரபந்தம்.3775 : 2)

அசுரர்கள் (திவ்வியப் பிரபந்தம்.3779 : 3)

தொண்டர்கள் (பெரியபுராணம்.1608 : 3)

இவ்விரு நிலைகளும் சங்ககாலத்தில் வழங்கி வந்தவை இனிக் காணப்படும் மூன்று நிலைகளும் இடைக்காலத்தில் வழங்கி வந்தவை ஆகும்.

3) உயர்திணைப் பன்மை உணர்த்தும் விகுதியாக வழங்குகிறது.

சான்று:

இரட்டையம் பெண்கள் இருவரும்

(சிலப்பதிகாரம்.30 : 49)

ஒன்பது செட்டிகள் உடல்என்பு இவைகாண்

(மணிமேகலை.25 : 165)

நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும்

(கம்பராமாயணம்.6328 : 4)

4) கள் என்னும் பன்மை விகுதி, உயர்வு ஒருமைப் பெயர்களில் உயர்வு ஒருமை விகுதியாக வழங்குகிறது.

சான்று:

சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்

(சிலப்பதிகாரம்.16: 18)

இவ்வடியில் வரும் நோன்பிகள், அடிகள் ஆகிய சொற்கள் கோவலனைக் குறிக்கின்றன. இங்கே கள் விகுதி உயர்வு ஒருமை விகுதியாக வழங்குகிறது.

5) மூவிடப்பெயர்கள், சுட்டுப்பெயர்கள் ஆகிய பதிலிடு பெயர்களில் உள்ள பன்மை வடிவங்களில் சில உயர்வு ஒருமைப் பெயர்களாகவும் வழங்கின. எனவே பன்மை உணர்த்தவேண்டி அவற்றோடு கள் விகுதி சேர்த்துக் கூறப்பட்டது.

யாம் + கள் = யாங்கள்

நாம் + கள் = நாங்கள்

நீர் + கள் = நீர்கள்

நீயிர் + கள் = நீயிர்கள்

தாம் + கள் = தாங்கள்

அவர் + கள் = அவர்கள்

இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் இத்தகைய கள் ஈற்றுப் பதிலிடு பெயர்கள் மிகுதியாக வழங்குகின்றன.

சான்று:

நீ போ யாங்களும் நீள்நெறிப் படர்குதும்

(சிலப்பதிகாரம்.11 : 161)

நாங்கள் உன் உடம்பதனில் வெப்பை

(பெரியபுராணம்.2660 : 3)

அன்னையர்காள் ! என்னைத் தேற்ற வேண்டா

நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு?

(நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.3474)

நூல் அவையார் போல் நீங்கள் நோக்குமின் என்றாள்

(சீவகசிந்தாமணி.1046: 4)

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன

பிழைப்பில் பெரும்பெயரே பேசி

(நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.2230 : 1)

தற்காலம்

தற்காலத்தில் ‘கள்’ விகுதி இலக்கியங்களில் பன்மையைச் சுட்டி வருகின்றது.

சான்று:

‘நான்கு மாடுகள் வந்தன’

பேச்சுத்தமிழில் இவ்விகுதியை அவ்வளவாகப் பயன் படுத்துவது இல்லை எனலாம்.

சான்று:

‘நாலு மாடு வந்தது’

‘நாலு காலு’

அவ்வாறு பயன்படுத்தினாலும் ‘கள்’ இல் உள்ள ‘ள்’ என்னும் உச்சரிப்பு (Lateral sound) அதற்கு முன்னுள்ள வெடிப்பொலியுடன் (stop sound) கூடி மூக்கொலியாக (nasalization) மாறுகிறது எனலாம்.

சான்று:

‘அவுங்க’ / avunka/

இக் ‘கள்’ விகுதி கடந்த வருடங்களைச் சுட்டும்போது பயன் பாட்டுக்கு வருகிறது.

சான்று:

’1950களில்’ அது போன்ற முக்காலங்களை (இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்) ஒருங்கே இணைத்துக்கூறும் இடங்களில் கூட ‘கள்’ விகுதி வருகிறது.

சான்று:

‘நான் ஞாயிற்றுக் கிழமைகளில்

சர்ச்சுக்குப் போவேன்’

இதே ‘கள்’ விகுதி தற்காலத்தில் மூன்று வடிவங்களில் பயன்பட்டு வருகின்றது.

‘க்கள்’

பொதுவாக நெடில் வரும்போதும் அல்லது இருகுறில் வரும்போதும் இவ்வடிவம் பெறுகிறது.

சான்று:

‘பூ – க்கள்’

‘பசு – க்கள்’

‘ங்கள்’

மூக்கொலியில் (nasal sound) முடியும் (-ம்) எல்லாச் சொற்களுடனும் இவ்வடிவம் வருகிறது.

சான்று:

‘மரம்+ கள்’ = மரங்கள்

மற்ற சொற்களுக்கு வெறும் ‘கள்’ என்ற வடிவம் வருகிறது எனலாம்.

சான்று:

‘நாற்காலிகள்’

‘பலூன்கள்’

2.8 தொகுப்புரை

இப்பாடத்தில் வேற்றுமை உருபு என்றால் என்ன? அது எவ்வாறு வளர்ச்சியுற்றது? என்றும் சங்ககாலம் முதல் தற்காலம் வரை அவ்வேற்றுமை உருபுகள் அடைந்த சீரான மாற்றங்கள் என்னென்ன என்றும் விளக்கப்பட்டுள்ளன.

எத்தனை வேற்றுமை உருபுகள் அக்காலம் முதல் இக்காலம் வரை இருந்து வருகின்றன என்பது பற்றியும் செய்திகள் கிடைக்கின்றன.

எவ்வகையான காரணங்களால் வேற்றுமை உருபு பிறிதொரு சொல்லை வேற்றுமை உருபாகத் தன்னகத்தே கொண்டது என்றும் அறிந்து கொண்டீர்கள்.

தற்காலத்தில் அவ்வேற்றுமை உருபுகள் வேறுபட்ட பொருளை உணர்த்துவதற்காகப் பலவிதமாக விரிவடைந்துள்ளன என்பதைப் பற்றி அறிந்தீர்கள்.

இவற்றோடு நில்லாமல் பன்மை விகுதியான ‘கள்’ என்றதனையும் அதன் வளர்ச்சியினையும் பற்றிப் படித்தறிந்தீர்கள்.

பாடம் - 3

சொல்லுருபின் வளர்ச்சி வரலாறு

3.0 பாட முன்னுரை

இப்பாடத்தில் வேற்றுமைப்பொருள் மற்றும் உருபு என்றால் என்ன? என்பது விளக்கப்பட்டிருக்கின்றது. அதனோடு சொல்லுருபு என்றால் என்ன? என்பதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உலக மொழிகளில் எந்தெந்த முறைகளைப் பயன்படுத்தி வேற்றுமைப் பொருளை உணர்த்துகிறார்கள் என்ற செய்தி தரப்பட்டிருக்கிறது. சொல்லுருபின் வளர்ச்சி சங்ககாலத் தமிழ், இடைக்காலத் தமிழ், தற்காலத் தமிழ் எனப் பிரிக்கப்பட்டுத் தக்க சான்றுகளுடன் விளக்கப்பட்டிருக்கின்றது.

இடைக்காலத்தில் தோன்றிய நன்னூல் சொல்லுருபைப் பற்றிச் சரிவரக் குறிப்பிடாதது தெரியவருகிறது. பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து போன்ற பிறமொழி இலக்கணத்தைச் சார்ந்த தமிழ் நூல்கள் சொல்லுருபு பற்றிக் குறிப்பிட்டுள்ள செய்தி நமக்குக் கிடைக்கப் பெறுகிறது.

தற்காலத் தமிழில் அமைந்து வரும் சொல்லுருபுகளின் வகைப்பாடு சான்றுகளுடன் விளக்கப்பட்டிருக்கின்றது.

3.1 சொல்லுருபு - விளக்கம்

திராவிட மொழிகளில் வேற்றுமைப்பொருள் அனைத்தும் வேற்றுமை உருபு (Case suffix) மற்றும் சொல்லுருபுகளாலேயே (postpositions) உணர்த்தப்படுகின்றன.

வேற்றுமை உருபு மற்றும் பொருள் என்றால் என்ன?

ஒரு சொற்றொடரில் பெயர்ச்சொல்லுக்கு வினைச்சொல்லோடு உள்ள பொருள் தொடர்பை வேற்றுமைப்பொருள் என்றும் அப்பொருள் தொடர்பை உண்டுபண்ணும் உருபை வேற்றுமை உருபு என்றும் கூறுவர்.

சான்று :

‘குமார் இராமனைப் (இராமன்+ஐ) பார்த்தான்.’

சொல்லுருபு என்றால் என்ன?

ஒரு சொற்றொடரில் பெயர்ச்சொல்லுக்கு வினைச்சொல்லோடு உள்ள பொருள்தொடர்பினைத் தனி ஒரு சொல்லாக நின்று விளக்கும் சொல் சொல்லுருபு எனப்படும்.

சான்று :

‘குமார் வீடு வரை ஓடினான்.’

இச்சொற்றொடரில் வரை எனும் சொல் ஏழாம் வேற்றுமைக்கான இட வேற்றுமைப்பொருளைத் தனி ஒரு சொல்லாக நின்று உணர்த்துகிறது.

3.1.1 வேற்றுமை உருபும் சொல்லுருபும் வேற்றுமை உருபும் சொல்லுருபும் ஒரே வேலையைச் செய்கின்றன. இரண்டுமே பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் உள்ள பொருள் தொடர்பினை விளக்குமுகமாக அமைந்து வருகின்றன.

3.1.2 வேற்றுமை உருபிற்கும் சொல்லுருபிற்கும் உள்ள வேறுபாடு 1. வேற்றுமை உருபு பெயர்ச்சொல்லுக்கு இறுதியில் வரும். சொல்லுருபோ அவ்வாறு வருவது கிடையாது; பெயர்ச்சொல்லை அடுத்து ஒரு தனிச்சொல்லாக வரும்.

சான்று:

குமார் இராமனைப் பார்த்தான் (ஐ – வேற்றுமை உருபு)

குமார் வீடு வரை ஓடினான் (வரை – சொல்லுருபு)

2. வேற்றுமை உருபு ஒரு உருபாக இருப்பதால் அதனுடன் இன்னொரு வேற்றுமை உருபு சேருவதில்லை. ஆனால் சொல்லுருபு தனித்த ஒரு சொல்லாக நின்று வருகிறது. எனவே அது இன்னொரு வேற்றுமை உருபினை ஏற்கிறது.

சான்று :

வரை – வரையில்

அகம் – அகத்தொடு, அகத்தில்

வரை, அகம் என்பன சொல்லுருபுகள். இச்சொல்லுருபுகள் இல், ஒடு என்னும் மற்ற வேற்றுமை உருபுகளை ஏற்கின்றன.

3. வேற்றுமை உருபு சாரியையை அடுத்து வருகிறது.

சான்று:

மரம் + ஐ = மரத்தை (மரம் + அத்து + ஐ)

இங்கு ‘அத்து’ என்னும் சாரியையை அடுத்து ஐ என்னும் வேற்றுமை உருபு வந்துள்ளது. ஆனால் சொல்லுருபு தனித்து வருவதால் சாரியையை அடுத்து வருவது கிடையாது.

3.1.3 சொல்லுருபின் சிறப்பு சொல்லுருபின் சிறப்பு என்னவென்றால் மூன்றாம் வேற்றுமைக்கும் நான்காம் வேற்றுமைக்கும், ஆறாம் வேற்றுமைக்கும் ஏழாம் வேற்றுமைக்கும் உரிய வேற்றுமைப்பொருள்களை உணர்த்தி வருவதாகும். தற்காலத் தமிழில் சொல்லுருபு குறிப்புப்பொருள் உணர்த்தி வருவதையும் காணமுடிகிறது.

சான்று :

‘இராமன் அவனைப் பற்றிப் பேசினான்.’

இங்கு பற்றி என்பது குறிப்புப் பொருள் உணர்த்துகிறது.

3.2 வேற்றுமைப்பொருளை உணர்த்தும் முறைகள்

வேற்றுமைப் பொருள்களை உணர்த்த உலக மொழிகளில் பல முறைகள் கையாளப்படுகின்றன. அவை வருமாறு.

(1) வேற்றுமை உருபால் உணர்த்துதல் ( Case Suffix)

(2) சொல்லுருபால் உணர்த்துதல் (Postposition)

(3) முன்னுருபால் உணர்த்துதல் (Preposition)

3.2.1 வேற்றுமை உருபால் உணர்த்துதல்

வேற்றுமைப் பொருளை உணர்த்த வேற்றுமை உருபினைப் பெயரோடு இணைக்கும் வழக்கமே தமிழின்கண் மிகுதியாக உள்ளது.

சான்று :

‘குமார் இராமனைப் பார்த்தான்.’

இங்கு இராமன் என்னும் பெயருடன் ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு (Accusative case marker) இணைந்து யார் யாரைப் பார்த்தார்கள் என்ற பொருளை உணர்த்துகிறது.

3.2.2 சொல்லுருபால் உணர்த்துதல் சில சமயங்களில் வேற்றுமை உருபின் பணியை ஒரு தனிச்சொல் நின்று செய்வதையும் தமிழில் காணமுடிகிறது. அவ்வாறு அமைந்து வேற்றுமைப்பொருளை அச்சொல் உணர்த்துவதால் அதனைச் சொல்லுருபு என்று மொழியியலார் குறிப்பிட்டனர். சொல்லுருபு என்பதற்கு ‘உருபின் பணியைச் செய்யும் சொல்’ என்றோ, ‘சொல்லாக நின்று உருபாகப் பயன்படும் ஒன்று’ என்றோ பொருள் கொள்ளலாம்.

சான்று :

‘குமார் கத்தியால் வெட்டினான்.’

இங்கு ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு தனக்குரிய கருவிப் பொருளை உணர்த்தி நிற்கிறது. அதுபோலவே,

‘குமார் கத்தி கொண்டு வெட்டினான்.’

இச்சொற்றொடரில் கொண்டு என்னும் சொல் மூன்றாம் வேற்றுமை உருபாகிய (Instrumental case marker) ஆல் உணர்த்திய அதே கருவிப்பொருளை உணர்த்துகிறது. ஒரு காலத்தில் கொண்டு என்ற வினைச்சொல் தன் இயல்புப்பொருள் உணர்த்தும் தன்மை கெட்டு இன்றையளவில் சொல்லுருபாக நின்று பொருள் உணர்த்துகிறது.

3.2.3 முன்னுருபால் உணர்த்துதல்

ஆங்கிலம் போன்ற மொழிகளில் முன்னுருபுகளின் ஆட்சியைக் காண முடிகிறது. தமிழில் ‘அவன் கத்தியால் (கத்தி + ஆல்) குத்தினான்’ என வரும் சொற்றொடரில் கத்தி என்ற பெயருக்குப் பின் ஆல் என்னும் வேற்றுமை உருபு வந்து பொருள் உணர்த்துவதை ஆங்கிலத்தில் ‘

e stabbed with knife’ எனக் கூறுகின்றனர். இங்கு knife என்ற பெயருக்கு முன் with எனும் முன்னுருபு (preposition) வந்து பொருள் தருகிறது.

தமிழில் முன்னுருபுகள் இல்லை. எனவே முன்னுருபால் வேற்றுமைப் பொருள் உணர்த்தும் முறை தமிழில் இல்லை.

3.3 சங்க காலத்தில் சொல்லுருபுகள்

சங்க காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் வேற்றுமைப்பொருளை உணர்த்த வேற்றுமை உருபுகளே அல்லாமல், சில தனிச்சொற்கள் சொல்லுருபுகளாக வழங்கின. எனினும் அவ்விலக்கியங்களில் வேற்றுமை உருபுகளின் ஆட்சியை நோக்கும்போது சொல்லுருபுகளின் ஆட்சி மிகவும் குறைவாகவே உள்ளது. கொண்டு, உடன், வயின் போன்ற ஒரு சில சொல்லுருபுகள் மட்டுமே வேற்றுமைப்பொருளில் ஆட்சி புரிகின்றன.

கொண்டு

இச்சொல்லுருபு மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருவிப்பொருளை உணர்த்த வழங்குகிறது. இது சங்க இலக்கியத்தில் ஓரிடத்தில் மட்டுமே காணப்படுகிறது.

சான்று:

ஒருகணை கொண்டு மூஎயில் உடற்றி (புறநானூறு, 55:2)

(கணை = அம்பு; கணைகொண்டு = கணையால், அம்பால்)

இத்தொடரில் கொண்டு என்னும் சொல்லுருபு, ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபுக்கு உரிய கருவிப்பொருளைத் தனி ஒரு சொல்லாக நின்று உணர்த்துகிறது.

உடன்

இச்சொல்லுருபு சங்க இலக்கியத்தில் சில இடங்களில் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உடனிகழ்ச்சிப் பொருளில் வருகிறது.

சான்று:

பலர்உடன் கழித்த ஒள்வாள் மலையனது

(நற்றிணை, 170:7)

(பலர் உடன் = பலரோடு; கழித்த = சென்ற)

இத்தொடரில் உடன் என்ற சொல்லுருபு, ஒடு அல்லது ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமை உருபுக்கு உரிய உடனிகழ்ச்சிப் பொருளைத் தனியே நின்று உணர்த்துகிறது.

வயின்

சங்க கால இலக்கியத்தில் வயின் என்னும் சொல்லுருபு நான்காம் வேற்றுமைக்கு உரிய பொருளில் வழங்குகிறது.

சான்று:

பொருள்வயின் பிரிவோர் உரவோர் ஆயின்

(குறுந்தொகை, 20:2)

(பொருள்வயின் = பொருளுக்காக)

இத்தொடரில் வயின் என்னும் சொல்லுருபு, கு என்னும் நான்காம் வேற்றுமைக்கு உரிய பொருளை உணர்த்தக் காணலாம்.

சொல்லுருபுகள் சங்க இலக்கியங்களில் ஓரளவு காணப்படுவதை மேலே பார்த்தோம். சங்க இலக்கியங்களுக்குக் காலத்தால் சற்று முற்பட்டது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலாகும். இந்நூலில் தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் அமைந்த வேற்றுமை இயலில், ஒவ்வொரு வேற்றுமைக்கும் உரிய உருபுகளை மட்டும் கூறுகிறாரே தவிர, அவ்வேற்றுமைகளுக்கு உரிய சொல்லுருபு பற்றி எதுவும் கூறவில்லை. ஆயினும் அவர் ஏழாம் வேற்றுமைக்கு உரிய இடப்பொருளை உணர்த்தும் சொற்களாகக் குறிப்பிடுவன கொண்டு, உடன் என்பன போன்ற சொல்லுருபுகளே ஆகும் என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய சேனாவரையர் கருத்தாகும்.

தொல்காப்பியர் ஒவ்வொரு வேற்றுமைக்கும் ஓரிரண்டு உருபுகளையே குறிப்பிடுகின்றார். அவை வருமாறு :

இரண்டாம் வேற்றுமை – ஐ

மூன்றாம் வேற்றுமை – ஒடு, ஆன்

நான்காம் வேற்றுமை – கு

ஐந்தாம் வேற்றுமை – இன்

ஆறாம் வேற்றுமை – அது

ஏழாம் வேற்றுமை – கண்

ஆனால் ஏழாம் வேற்றுமைக்கு மட்டும் அவ்வேற்றுமையின் பொருளாகிய இடப்பொருளை உணர்த்தக் கண் என்பதோடு, ‘கால், புறம், அகம், உள், உழை, கீழ், மேல், பின், சார், அயல், புடை, தேவகை, முன், இடை, கடை, தலை, வலம், இடம்’ என்னும் பதினெட்டுச் சொற்களைச் சேர்த்துக் குறிப்பிடுகிறார். இச்சொற்களை அவர்,

கண்கால் புறம்அகம் உள்உழை கீழ்மேல்

பின்சார் அயல்புடை தேவகை எனாஅ

முன்இடை கடைதலை வலம்இடம் எனாஅ

அன்ன பிறவும் அதன்பால என்மனார் (தொல்.சொல். 82)

என்ற வேற்றுமையியல் நூற்பாவில் தொகுத்துக் கூறுகிறார்.

இந்நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடும் கண், கால் முதலிய பத்தொன்பதையும் இளம்பூரணர் (இவர் தொல்காப்பியம் முழுவதற்கும் உரை வரைந்தவர்) ஏழாம் வேற்றுமை உருபுகள் என்று கூறுகிறார். ஆனால் சேனாவரையர் கண் என்பது மட்டுமே ஏழாம் வேற்றுமைக்கு உரிய இடப்பொருளை உணர்த்தும் வேற்றுமை உருபு என்றும், ஏனைய கால், புறம் முதலிய பதினெட்டும் அவ்விடப்பொருளை உணர்த்த வந்த சொற்கள் என்றும் குறிப்பிடுகிறார். சேனாவரையர் குறிப்பிடும் இச்சொற்களை இக்கால மொழியியலார் சொல்லுருபுகள் என்று கொள்கின்றனர்.

சங்க இலக்கியங்களில் இச்சொல்லுருபுகளில் சில பெயர்ச்சொல்லுக்குப் பின்னர் வந்து நின்று ஏழாம் வேற்றுமை இடப்பொருளை உணர்த்துவதைக் காணலாம்.

கால்

ஊர்க்கால் நிவந்த பொதும்பர்

(கலித்தொகை. 56:1)

(ஊர்க்கால் = ஊர் இடத்தே)

உழை

குன்று உழை நண்ணிய முன்றில் போகாது

(நற்றிணை. 379:2)

(குன்று உழை = சிறிய மலையின் இடத்து)

கீழ்

மன்றல் வேங்கைக்கீழ் இருந்து

(கலித்தொகை. 41:43)

(வேங்கைக்கீழ் = வேங்கை மரத்தின் கீழே)

கடை

எம்இளநலம் இல்கடை ஒழியச் சேறும்

(நற்றிணை. 29:7)

(இல் = வீடு; இல்கடை = வீட்டின்கண்ணே;

ஒழியச் சேறும் = தங்கிக் கெடும்படியாகச் செல்வோம்.)

தலை

பெருங்கை யானை இரும்பிடர்த் தலைஇருந்து

(புறநானூறு. 3:11)

(இரும்பிடர் = பெரிய கழுத்து; பிடர்த் தலை இருந்து = கழுத்திடத்தே இருந்து).

3.4 இடைக்காலத்தில் சொல்லுருபுகள்

இடைக்காலத்தில் சொல்லுருபுகளின் வழக்கு, சங்க காலத்தை விட அதிகமானது. புதிய சொல்லுருபுகளின் வழக்கும் வரத் தொடங்கியது. இடைக்காலத்தில் வேற்றுமைப்பொருளை உணர்த்தும் உருபுகளோடு, எவை எவை சொல்லுருபுகளாக வழங்கி வந்தன என்பதைப் பின்வரும் பட்டியல் காட்டும்.

வேற்றுமை                                                            வேற்றுமை                                                                     உருபுசொல்லுருபு

மூன்றாம் வேற்றுமை                                ஆன், ஆல்                                                                                         கொண்டு

(கருவிப்பொருள்)

மூன்றாம் வேற்றுமை                           ஒடு, ஓடு                                                                                                      உடன்

(உடனிகழ்ச்சிப்பொருள்)

நான்காம் வேற்றுமை                                 கு                                                                                            பொருட்டு*, நிமித்தம்*

ஐந்தாம் வேற்றுமை                             இன், இல்                                                                                                  இருந்து*, நின்று*

(நீங்கல்பொருள்)

ஆறாம் வேற்றுமை                                 அது                                                                                                                   உடைய*

* – உடுக்குறியிடப்பட்டவை இடைக்காலத்தில் வந்து வழங்கிய புதிய சொல்லுருபுகள்.)

ஏழாம் வேற்றுமையைப் பொறுத்தவரை, தொல்காப்பியர் இடப்பொருள் உணர்த்தும் சொற்களாகக் குறிப்பிட்டவற்றுள் பல சொற்கள் சங்க காலத்தைப் போலவே இடைக்காலத்திலும் சொல்லுருபுகளாக வழங்கின. மேலும் வாய், திசை, வயின், பாடு, வழி, உழி, உளி போன்ற சொல்லுருபுகள் இடப்பொருளை உணர்த்தப் புதிதாக வந்து வழங்கின.

இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் சொல்லுருபுகளின் ஆட்சியைப் பின்வரும் சான்றுகள் காட்டும்.

கொண்டு

ஓடும் திமில் கொண்டு உயிர்கொல்வர் நின்ஐயர்

(சிலப்பதிகாரம், 7 : 19-1)

(திமில் = படகு ; திமில்கொண்டு – படகால்)

உடன்

உயிருடன் சென்ற ஒருமகள் (சிலப்பதிகாரம், 25 : 107)

பொருட்டு

புறவு ஒன்றின் பொருட்டாகத் துலைபுக்க பெருந்தகை

(கம்பராமாயணம்)

(புறவு = புறா ; புறவு ஒன்றின் பொருட்டாக – புறா ஒன்றினுக்காக)

நின்று

வான்நின்று இழிந்து வரம்பு இகந்த

மாபூதத்தின் வைப்பு எங்கும்

(கம்பராமாயணம், 1399:1)

(வான் நின்று = வானிலிருந்து)

உடைய

இரண்டன் உடைய உண்மையைக் காட்டுதல்

(மணிமேகலை, 29:387)

இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிய நூல்களில் சொல்லுருபுகள் எந்த அளவு பயின்று வந்துள்ளன என்பதை இதுகாறும் பார்த்தோம். இனி இடைக்காலத்தில் எழுந்த இலக்கண நூல்கள் சொல்லுருபுகள் பற்றிக் குறிப்பிடும் கருத்துகளைப் பார்ப்போம்.

வீரசோழியம்

இந்நூலை இயற்றியவர் புத்தமித்திரனார். காலம் கி.பி.11ஆம் நூற்றாண்டு. இவர் தமிழ்மொழிக்கு வடமொழி இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு இலக்கணம் அமைத்து எழுதிய நூல் வீரசோழியம். இந்நூல் சொல்லுருபு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எனினும் இந்நூல் ஏழாம் வேற்றுமைக்கு மட்டும் கே, உழை, வயின், பக்கல், உழி, இல், கண் ஆகிய ஏழு உருபுகளைக் குறிப்பிடுவது கருதத்தக்கது. இவற்றுள் கண் என்பது நீங்கலான ஏனை ஆறு உருபுகளும் சொல்லுருபுகள் ஆகும்.

நன்னூல்

இந்நூலை இயற்றியவர் பவணந்தி முனிவர். காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு. இவர் தொல்காப்பியத்தை அடியொற்றி இயற்றிய நூலே நன்னூல். எனவே தொல்காப்பியத்தைப் போலவே நன்னூலும் சொல்லுருபு பற்றி எதுவும் கூறவில்லை. எனினும் ஏழாம் வேற்றுமைக்குக் கண் என்னும் உருபோடு தொல்காப்பியர் கூறியுள்ள உருபுகளோடு வாய், திசை, வயின், முதல், பாடு, அளை, வழி, உளி, இல் என்னும் ஒன்பதனையும் சேர்த்துக்

கூறுகிறார்.

கண்கால் கடைஇடை தலைவாய் திசைவயின்

முன்சார் வலம்இடம் மேல்கீழ் புடைமுதல்

பின்பாடு அளைதேம் உழைவழி உழிஉளி

உள்அகம் புறம்இல் இடப்பொருள் உருபே

(நன்னூல், 302)

நன்னூலார் இந்நூற்பாவில் முதற்கண் குறிப்பிடும் கண் என்பதே ஏழாம் வேற்றுமை உருபு ஆகும். ஏனைய 27 உருபுகளும் ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபுகள் ஆகும்.

பிரயோக விவேகம்

இந்நூலை இயற்றியவர் சுப்பிரமணிய தீட்சிதர். காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. இந்நூல் வீரசோழியத்தின் வழியிலே, வடமொழி மரபைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ள நூலாகும். இந்நூல் ஒவ்வொரு வேற்றுமைக்கும் உரிய வேற்றுமை உருபுகளைக் கூறும்போது, அவ்வேற்றுமைகளுக்கு உரிய சொல்லுருபுகளையும் சேர்த்தே கூறுகிறது.

கூறிய ஐ இரண்டு ; ஆன் – ஒடு மூன்று ;

குவ்வோடு பொருட்டு

ஏறிய நான்கு ; மற்று ஏழொடு கூடி

இயைந்த நின்றோடு

ஆறிய இன் ஐந்து ; அது-கு-உடைய -

அ – ஆறு ; இல்-கண் ஏழ்

தேறிய சத்தம் இவற்றுள்ளும்

அத்தம் சில உளவே

(பிரயோக விவேகம், 6)

இந்நூற்பாவில் பிரயோக விவேகம் குறிப்பிடும் சொல்லுருபுகள் வருமாறு :

பொருட்டு – நான்காம் வேற்றுமை

நின்று – ஐந்தாம் வேற்றுமை

உடைய – ஆறாம் வேற்றுமை

சான்று :

கூலியின் பொருட்டு வேலை செய்தான்

மலையின் நின்று வீழ் அருவி

சாத்தனுடைய புதல்வன்

இலக்கணக்கொத்து

இந்நூலை இயற்றியவர் சுவாமிநாத தேசிகர். காலம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. இவர் புத்தமித்திரனாரைப் போல, வடமொழியின் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழுக்கு இலக்கணம் எழுதிய நூலே இலக்கணக்கொத்து. தமிழ்மொழி வரலாற்றில் சொல்லுருபு என்ற சொல்லாட்சியை முதன்முதலில் கையாள்பவர் இவரே.

சுவாமிநாத தேசிகர் வேற்றுமைப்பொருளை உணர்த்தும் உருபினை உருபு, வேறு உருபு, சொல்லுருபு என மூவகையாகப் பாகுபடுத்திக் கூறுகிறார்.

உருபு, வேறு உருபு, சொல் உருபு என்ன

வேற்றுமை உருபு மூன்றுஎன விளம்புவர்

(இலக்கணக்கொத்து. 16)

1. உருபு

ஒரு வேற்றுமைக்கு உரிய பொருளை அவ்வேற்றுமைக்கு உரிய உருபு உணர்த்துவது.

சான்று :

வாளால் வெட்டினான்.

இங்கு ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு, அவ்வேற்றுமைக்குரிய

கருவிப்பொருளை உணர்த்துகிறது.

2. வேறு உருபு

ஒரு வேற்றுமைக்கு உரிய பொருளை, வேறொரு வேற்றுமைக்கு உரிய உருபு உணர்த்துவது.

வாளின் வெட்டினான்

இங்கு மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருவிப்பொருளை இன் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு உணர்த்துகிறது.

3. சொல்லுருபு

ஒரு வேற்றுமைக்கு உரிய பொருளை அவ்வேற்றுமைக்கு உரிய உருபால் உணர்த்தாமல், சொல்லுருபால் உணர்த்துவது.

சான்று :

வாள் கொண்டு வெட்டினான்

இங்கு மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருவிப் பொருளைக் கொண்டு என்னும் சொல்லுருபு உணர்த்துவதைக் காணலாம்.

3.5 தற்காலத்தில் சொல்லுருபுகள்

சங்ககாலத்திலும் இடைக்காலத்திலும் இல்லாத அளவிற்குத் தற்காலத்தில் தமிழ்மொழியில் சொல்லுருபைப் பொறுத்தவரையில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது எனலாம். எவ்வாறு எனில் 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியத் தமிழ் அறிஞர்கள் தொடர்பினாலும் 20ஆம் நூற்றாண்டில் நவீன மொழியியல் கோட்பாடுகளின் வளர்ச்சியினாலும் தமிழ் இலக்கணச் சிந்தனையிலும் இலக்கண ஆராய்ச்சியிலும் பெரிய முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்பட்டன. சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொல்லுருபுகள் தற்காலத்தில் வழக்கு ஒழிந்துவிட்டன எனலாம்.

எடுத்துக்காட்டு :

கால், வயின், சார், புடை, முதல், அளை, உழி, உளி

இதற்குக் காரணம் தற்காலத்தமிழ் வளர்ந்ததே ஆகும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் பழைய மரபுவழி இலக்கண ஆசிரியர்கள் தமிழ்மொழியை இரண்டு பெரும்பிரிவுகளாகப் (பெயர், வினை) பிரித்தார்கள். அதன்பின்பு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலானார்கள். அவையாவன :

(1) பெயர்ச்சொல்

(2) வினைச்சொல்

(3) இடைச்சொல்

(4) உரிச்சொல்

இவற்றுள் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் முதல் வகை என்றும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் இரண்டாம் வகை என்றும் பிரித்துப் பார்த்தனர். அக்காலத்தமிழை இந்த நான்கு பாகுபாட்டிற்குள்ளேயே அடக்கி விடலாம். ஆனால் தற்காலத்தில் அவ்வாறான பாகுபாட்டை வைத்துச் சொல்லை ஆராய்வது கடினமாக இருந்தது. ஆகையினால் ஆங்கில மொழி இலக்கணப் பாகுபாட்டைப் போலத் தமிழ்ச்சொல்லையும் எட்டு வகையாகப் பிரிக்கலானார்கள். அவையாவன :

(1) பெயர்ச்சொல் (Noun)

(2) வினைச்சொல் (Verb)

(3) சொல்லுருபு (postposition)

(4) பெயரடை (Adjective)

(5) வினையடை (Adverb)

(6) அளவையடை (Quantifier)

(7) அடைகொளி அடை (Determiner)

(8) இணைப்புக் கிளவி (Conjunction)

என்பன.

இவ்வாறு பிரிப்பதில் அறிஞர்களுக்கிடையே சிறு சிறு மாற்றங்கள் காணப்படுகின்றன. இங்கு மூன்றாவதாகக் கூறப்பட்ட சொல்லுருபு (postposition) என்பதை ஆங்கில மொழியில் முன்னுருபு (preposition) என்று பிரித்துள்ளனர். ஏனெனில் ஆங்கில மொழியின் அமைப்பு அவ்வாறு இருக்கிறது என்பதை முன்பே கண்டோம்.

தற்காலத்தில் நவீன மொழியியல் கோட்பாட்டின் வளர்ச்சியின் அடிப்படையில் சொல்லுருபுகளை ஆராய்ந்து பார்க்கும்போது தமிழில் ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட சொல்லுருபுகள் பயன்பாட்டில் இருந்து வருவது தெரிகிறது. அவற்றுள் சில சொல்லுருபுகளைச் சான்றுகளுடன் காண்போம்.

சான்று :

‘குமார் சாவி மூலம் கதவைத் திறந்தான்.’

இச்சொற்றொடரில் மூலம் எனும் பெயர், சொல்லுருபாக நின்று கருவிப் பொருளை உணர்த்துகிறது. இதனை வேறொரு விதமாகக் கூறவேண்டுமென்றால்,

‘குமார் சாவியால் (சாவி+ஆல்) கதவைத் திறந்தான்’

எனலாம்.

‘குமார் வீடு வரை ஓடினான்.’

இச்சொற்றொடரில் வரை எனும் சொல் சொல்லுருபாகப் பயன்படுகிறது. அந்த வரை எனும் சொல்லுருபு திரிபு அடைந்து வரைக்கும், வரையில் என்றெல்லாம் பயன்பாட்டில் வருகிறது.

‘குமார் வீடு வரைக்கும் ஓடினான்.’

‘குமார் வீடு வரையில் ஓடினான்.’

வரை என்பது எவ்வாறு அமைந்து வந்தாலும் இடவேற்றுமைப் பொருளை உணர்த்துவதைக் காணலாம்.

அதுபோன்றே இன்னொரு வகையில் இடவேற்றுமைப் பொருளை உணர்த்தும் முறை காணப்படுகின்றது.

சான்று :

‘குமார் வீட்டுப்பக்கம் ஒரு மரம் இருக்கிறது.’

‘குமார் வீட்டுக்கிட்ட ஒரு மரம் இருக்கிறது.’

‘குமார் வீட்டு அருகில் ஒரு மரம் இருக்கிறது.’

என்றெல்லாம் பக்கம், கிட்ட, அருகில் என்னும் சொல்லுருபுகளைப் பயன்படுத்தி இடவேற்றுமைப்பொருளை (locative case) உணர்த்துவதைக் காணலாம்.

மேலே குறிப்பிட்ட சொல்லுருபுகள் பெயர்ச்சொல்லைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டவையாகும். இனி நாம் காண இருப்பவை வினைச் சொல்லிலிருந்து உருவாகும் சொல்லுருபுகள் பற்றி ஆகும்.

சான்று :

‘குமார் இராமனைப் பார்த்துப் பேசினான்.’

‘குமார் இராமனை நோக்கிப் பேசினான்.’

இச்சொற்றொடர்களில் அமைந்து வரும் பார்த்து, நோக்கி என்ற சொல்லுருபுகள் பார், நோக்கு என்ற வினைச்சொற்களிலிருந்து வந்தவையாகும். அச்சொல்லுருபுகள் திசையைச் (direction) சுட்டுவனவாக அமைந்துள்ளன.

அடுத்து வேறுவகையான பொருளை உணர்த்தப் பயன்படும் சொல்லுருபுகள் பற்றிப் பார்ப்போம்.

சான்று :

‘குமாரைத் தவிர வேறு யாரும் வரவில்லை.’

இச்சொற்றொடரில் தவிர என்ற சொல்லுருபு வந்து விதிவிலக்கு (exception) என்னும் பொருளை உணர்த்துவதைக் காணமுடிகிறது.

இறுதியாக, குறிப்புப்பொருளை உணர்த்தப் பயன்படும் சொல்லுருபுகளைப் பற்றிக் காண்போம்.

சான்று :

‘குமார் மொழியியலைப் பற்றிப் பேசினான்.’

‘குமார் மொழியியலைக் குறித்துப் பேசினான்.’

இச்சொற்றொடர்களில் வரும் பற்றி, குறித்து என்ற சொல்லுருபுகள் குறிப்புப் பொருளை உணர்த்தலாயின. இவை போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சொல்லுருபுகள் தற்காலத் தமிழ்மொழியில் அமைந்து வருவதைக் காணமுடிகிறது.

3.6 சொல்லுருபுகளின் வகைப்பாடுகள்

இன்றைய வழக்கில் தமிழில் ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட சொல்லுருபுகள் பயன்பாட்டில் இருந்து வருவதாக மொழியியலார் கூறுகின்றனர். சொல்லுருபுகள் பற்றிப் பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இங்கு நாம் காண இருப்பது ஐம்பது சொல்லுருபுகளைப் பற்றி ஆகும். இந்த ஐம்பது சொல்லுருபுகளையும் பின்வரும் நான்கு தலைப்புகளின்கீழ் அடக்கி விடலாம். அவை வருமாறு :

(1) பெயர்ச்சொல்லுக்குப் பின் – முதல் வேற்றுமையில்

(2) பெயர்ச்சொல்லுக்குப் பின் – இரண்டாம் வேற்றுமையில்

(3) பெயர்ச்சொல்லுக்குப் பின் – நான்காம் வேற்றுமையில்

(4) பெயர்ச்சொல்லுக்குப் பின் – பெயர்ச்சொல் திரிந்த வடிவில்

3.6.1 பெயர்ச்சொல்லுக்குப்பின் – முதல் வேற்றுமையில்

இத்தலைப்பின்கீழ் மூலம், வரை, நடு, இடை என்னும் நான்கு சொல்லுருபுகள் வருகின்றன. இவற்றுள் மூலம் என்ற சொல்லுருபு மூன்றாம் வேற்றுமைக் கருவிப்பொருளில் வருகிறது.

சான்று:

‘குமார் சாவி மூலம் கதவைத் திறந்தான்.’

இச்சொற்றொடரில் மூலம் என்ற சொல் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருவிப்பொருளை உணர்த்தும் ஆல் என்ற வேற்றுமை உருபுக்குப் பதிலாக ஒரு தனிச்சொல்லாக நின்று அதே கருவிப்பொருளை உணர்த்துகிறது.

அதுபோலவே வரை எனும் சொல்லுருபு ஏழாம் வேற்றுமை இடப்பொருளில் வருகிறது.

சான்று :

‘குமார் வீடு வரை ஓடினான்.’

இதே வரை எனும் சொல்லுருபு திரிபு அடைந்து வரைக்கும் என்று நான்காம் வேற்றுமையிலும் (Dative case) வரையில் என்று ஏழாம் வேற்றுமையிலும் (Locative case) வருகிறது.

சான்று :

‘குமார் வீடு வரைக்கும் ஓடினான்.’ (-க்கு)

‘குமார் வீடு வரையில் ஓடினான்.’ (-யில்)

நடு, இடை என்னும் இரு சொல்லுருபுகள் இல் என்னும் இடவேற்றுமை உருபுடனேயே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சான்று :

‘ஊருக்கு நடுவில் ஒரு கோயில் இருக்கிறது.’

‘இரு ஊருக்கு இடையில் ஒரு கோயில் இருக்கிறது.’

நடுவில், இடையில் என்று அமைந்து வரும்இச்சொல்லுருபுகள் இருந்து என்ற ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபுடனும் சேர்ந்து வருவதும் உண்டு. இத்தகைய வேற்றுமையை மொழியியலார் சிலர் Ablative case என்பர்.

சான்று :

‘நடுவிலிருந்து’

‘இடையிலிருந்து’

3.6.2 பெயர்ச்சொல்லுக்குப் பின் – இரண்டாம் வேற்றுமையில்

இங்குக் காணவிருக்கும் சொல்லுருபுகள் பெயர்ச்சொல்லுடன் இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ (Accusative case marker) இணைந்தவுடன் அதன்பின் வருகின்றன. அவை போல, மாதிரி, ஒட்டி, குறித்து, கொண்டு, சுற்றி, தவிர்த்து, தாண்டி, பற்றி, பார்த்து, விட்டு, வைத்து, நோக்கி போன்றவையாகும்.

இவற்றுள் மாதிரி எனும் சொல்லுருபு போல போன்ற ஒப்பிடுதலைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் போல எனும் சொல்லுருபு இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ என்பதைத் தொடர்ந்து வருகிறது.

சான்று :

‘குமார் பேயைப் போலக் கத்தினான்.’

அடுத்து மாதிரி எனும் சொல்லுருபு இரண்டாம் வேற்றுமை உருபைத் தொடராமலும் வருவதுண்டு.

சான்று :

‘குமார் பேய் மாதிரி கத்தினான்.’

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய சொல்லுருபுகள் பெரும்பாலும் இரண்டாம் வேற்றுமை உருபைத் தொடர்ந்தே வருகின்றன.

சான்று :

ஆற்றை ஒட்டி வீடு இருந்தது

அப்பாடத்தைக் குறித்துப் பேசினார்

கத்தியைக் கொண்டு குத்தினான்

3.6.3 பெயர்ச்சொல்லுக்குப்பின் – நான்காம் வேற்றுமையில்

இங்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சொல்லுருபுகள் நான்காம் வேற்றுமை உருபாகிய கு என்பதைத் (dative case marker) தொடர்ந்து வருகின்றன. அவையாவன :

அப்பால், அப்புறம், உள், கிழக்கு, கீழ், தெற்கு, பின், பிறகு, முன், மேல், மேற்கு, வடக்கு, பிந்தி, முந்தி.

சான்று :

‘ஆற்றுக்கு அப்பால் ஒரு கிராமம் இருக்கிறது.’

‘ஊருக்குக் கிழக்கே ஒரு கடல் இருக்கிறது.’

மேஜைக்கு மேல் ஒரு புத்தகம் இருக்கிறது.’

3.6.4 பெயர்ச்சொல் திரிந்த வடிவத்தில்

அண்டை, அருகு, ஆட்டம், கிட்ட, கீழ், பக்கம், படி போன்ற சொல்லுருபுகள் இடவேற்றுமையை உணர்த்தும்படி வருகின்றன. இச்சொல்லுருபுகளை ஏற்கும் பெயர்ச்சொல், திரிந்த வடிவத்தில் பெரும்பாலும் வருகின்றது.

சான்று :

‘அந்த வீட்டுப் பக்கம் ஒரு ஆலமரம் இருக்கிறது.’

‘அந்த வீட்டுக் கிட்ட ஒரு ஆலமரம் இருக்கிறது.’

இந்தச் சொற்றொடர்களில் வீடு என்னும் பெயர்ச்சொல் பக்கம், கிட்ட என்னும் சொல்லுருபுகளை ஏற்கும்போது வீட்டு என்று திரிவதைக் காணலாம்.

3.7 தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் வேற்றுமை உருபு என்றால் என்ன? சொல்லுருபு என்றால் என்ன? என்பனவற்றின் விளக்கத்தைப் படித்து அறிந்திருப்பீர்கள். தமிழ் இலக்கணம் எவ்வாறெல்லாம் பிரிக்கப்பட்டு வந்தது என்பதையும் அறிந்திருப்பீர்கள். வேற்றுமை உருபு போன்றே சொல்லுருபும் வேற்றுமைப் பொருள் உணர்த்தி வருவதைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அவ்வாறு சொல்லுருபுகளாக வருபவை இடப்பொருளையும் வேற்றுமையையும் காலம் காட்டுதலையும் குறிப்புப்பொருளையும் உணர்த்தித்தான் வருகின்றன என்ற செய்தியையும் அறிந்திருப்பீர்கள். சொல்லுருபுகள் தற்காலத் தமிழில் குறிப்புப்பொருள் உணர்த்திவரும் சிறப்புடையனவாய்த் திகழ்தலை அறிந்திருப்பீர்கள். சங்ககாலத் தமிழ், இடைக்காலத் தமிழ், தற்காலத் தமிழ் என மூன்று பெரும் பிரிவாகப் பிரித்துச் சொல்லுருபுகளின் வளர்ச்சி வரலாற்றினைப் படித்ததன் மூலம் தற்காலத்தில் சொல்லுருபுகளின் வளர்ச்சி பெருமளவு இருப்பதை உணர்ந்திருப்பீர்கள்.

பாடம் - 4

கால இடைநிலைகளின் வளர்ச்சி

4.0 பாட முன்னுரை

மொழிக்கு இன்றியமையாத உறுப்பு வினைச்சொல்லே ஆகும். இது சொல் பாகுபாட்டில் பெயர்ச்சொல்லுக்கு அடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஒரு பொருளைக் குறிப்பது பெயர்; அப்பொருளின் தொழிலை அல்லது செயலைக் குறிப்பது வினை ஆகும். எனவே தமிழ் இலக்கண நூலாரும் மொழியியலாரும் பொருளைக் குறிக்கும் பெயர்ச்சொல்லை முதலில் கூறி, அப்பொருளின் தொழிலைக் குறிக்கும் வினைச்சொல்லை அடுத்துக் கூறினர்.

பெயர்ச்சொல்லின் தலைசிறந்த இலக்கணம் வேற்றுமை உருபு ஏற்பது ஆகும். வினைச்சொல்லின் தலைசிறந்த இலக்கணம் காலத்தைக் காட்டுவது ஆகும். வினைச்சொல் காலத்தைக் காட்டும் சிறப்பால் தொல்காப்பியர், அச்சொல்லைக் காலக்கிளவி (கிளவி- சொல்) எனக் குறிப்பிடுகிறார். தமிழில் உள்ள வினைச்சொற்களில் காலம் காட்டுவன பெரும்பாலும் இடைநிலைகள் ஆகும். இவை வினைப்பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் காட்டுகின்றன. எனவே, இவற்றைக் கால இடைநிலைகள் என்று குறிப்பிடுவர்.

தமிழில் உள்ள வினைச்சொற்களில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் மூன்று காலத்தைத் தனித்தனியே காட்டுவதற்குப் பல இடைநிலைகள் வழங்கியுள்ளன.

சங்க காலத்தில் வழங்கிய கால இடைநிலைகள் பற்றியும் இடைக்காலத்தில் அவை வழங்கிய முறை, புதிய கால இடைநிலைகளின் வரவு பற்றியும் தற்காலத்தில் வழங்கும் கால இடைநிலைகள் பற்றியும் இப்பாடத்தில் விரிவாக விளக்கிக் கூறப்படுகின்றன.

4.1 வினைச்சொல்லும் அதன் உள்ளமைப்பும்

காலம் காட்டும் இடைநிலைகளைப் பற்றி விரிவாகக் காண்பதற்கு முன்பு, சொல்பாகுபாட்டில் வினைச்சொல் பெறும் இடம், வினைச்சொல்லின் இலக்கணம், வினைச்சொல்லின் உள்ளமைப்பு முறை ஆகியவற்றைப் பற்றிக் காண்போம்.

4.1.1 சொல்பாகுபாட்டில் வினைச்சொல் பழந்தமிழ் இலக்கண நூலாசிரியர்கள் சொல்லைப் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகையாகப் பிரித்தனர். இவற்றுள் பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இரண்டுமே முதன்மையானவை; ஏனைய இடைச்சொல்லும் உரிச்சொல்லும் அவ் விரண்டையும் சார்ந்து வழங்குபவை என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இதனை,

சொல்எனப் படுப பெயரே வினைஎன்று

ஆயிரண்டு என்ப அறிந்திசி னோரே

(தொல்.சொல். 160)

இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்

அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப

(தொல்.சொல். 161)

என்ற நூற்பாக்களால் அறியலாம்.

தமிழ் மொழியில் மட்டுமன்றி உலக மொழிகள் பலவற்றிலும் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லுமே முதன்மையான சொல்வகைகளாகக் கூறப்பட்டுள்ளன. தமிழைப் போலவே பழமை வாய்ந்தது கிரேக்க மொழி. இம்மொழியில் உள்ள சொற்களைப் பிளேட்டோ என்ற அறிஞர் பெயர், வினை என இரண்டாக மட்டுமே பகுத்தார். அவருடைய மாணவரான அரிஸ்டாட்டில் பெயர், வினை என்பனவற்றோடு, முன்னிடைச்சொல் (preposition), இணைப்புச்சொல் (conjunction) என இரண்டையும் சேர்த்துச் சொற்களை நான்கு வகையாகப் பகுத்தார். எல்லா மொழிகளிலும் சொல்பாகுபாட்டில் வினைச்சொல், பெயர்ச்சொல்லை அடுத்தே கூறப்பட்டுள்ளது. எனினும் இலக்கண உலகில் வினைச்சொல் பெயர்ச்சொல்லினும் ஆற்றல் வாய்ந்ததாகவும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாகவும் விளங்குகிறது.

4.1.2 வினைச்சொல்லின் இலக்கணம் வினைச்சொல் ஒரு பொருளினது தொழிலை அல்லது செயலைக் குறிக்கும்; பால், எண் போன்றவற்றைப் பெரும்பாலும் உணர்த்தும்; வேற்றுமை உருபுகளை ஏற்காது; காலத்தைக் காட்டும். இதுவே வினைச்சொல்லின் இலக்கணமாகும். இவற்றுள் வேற்றுமை உருபு ஏற்காமையும் காலம் காட்டுதலும் வினைச்சொல்லின் தலைசிறந்த இலக்கணங்கள் ஆகும். இதனைத் தொல்காப்பியர்,

வினைஎனப் படுவது வேற்றுமை கொள்ளாது

நினையுங் காலைக் காலமொடு தோன்றும்

(தொல்.சொல். 198)

என்று குறிப்பிடுகிறார். வினைச்சொல் மட்டுமே காலம் காட்டுவதால் அச்சிறப்பு நோக்கி, அச்சொல்லைக் காலக்கிளவி (கிளவி-சொல்) என்றும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் (தொல்.சொல். 21).

4.1.3 வினைச்சொல்லின் உள்ளமைப்பு (verb structure) இத்தலைப்பின் கீழ் ஒரு வினைச்சொல்லில் எத்தனை கூறுகள் இடம்பெற்றுள்ளன என்பது பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும் ஒரு செயலை அல்லது தொழிலை எக்காலத்தில் முடிக்கின்றது என்பது பற்றிய செய்தியையும் அறிந்துகொள்ள முடிகிறது.

வினைச்சொற்களின் அமைப்பு மொழிக்கு மொழி வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. சான்றாக ஆங்கில மொழியின் வினைச்சொல் அமைப்பு தமிழ்மொழியின் வினைச்சொல் அமைப்பிலிருந்து மாறுபட்டது. ஆங்கில மொழியின் வினைச்சொல்லில் காலம் காட்டுவதற்காக வரும் உருபு (தமிழில் உள்ள கால இடைநிலை போன்றது) இறுதியில் வரக்காண்கிறோம்.

சான்று:

alter – ed

ஆனால் தமிழ்மொழியில் வினைச்சொல்லின் நடுவில் காலஇடைநிலை வரக் காணலாம்.

சான்று:

உழு – த் – ஆன் = உழுதான்

ஆங்கில மொழியில் காலம் காட்டும் உருபுகளை அடுத்து விகுதிகள் இல்லை எனலாம்.

சான்று:

e altered -

ஆனால் தமிழ்மொழியில் காலம் காட்டும் இடைநிலைகளை அடுத்து விகுதிகள் உள்ளன.

சான்று:

விழு + ந்த் + ஆன் = விழுந்தான்

இங்கு ஆன் என்னும் விகுதி ஆண்பால் ஒருமை விகுதியாக வந்திருப்பதைக் காணலாம். இவ்வாறு ஒவ்வொரு மொழியின் சொல்லமைப்பும் வேறுவேறாக இருக்கும். அதோடு ஒவ்வொரு மொழியிலும் ஒரு குறிப்பிட்ட அமைப்பைக் கொண்டு வினைச்சொற்கள் இருக்கக் காணலாம்.

குறிப்பிட்ட ஒரு ஒட்டுக்குப் பின்னரே இன்னொரு ஒட்டு வரும். மாறிமாறி வருவது என்பது முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. தமிழ் மொழியில் வினைச்சொற்களின் உள்ளமைப்பு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைந்துள்ளது. வினைப்பகுதி முதலில் வர அதை ஒட்டிப் பின்னர் பல்வேறு ஒட்டுகள் வரக் காண்கிறோம்.

வினை + கால இடைநிலை + ஒட்டுகள் (விகுதிகள்)

சான்று:

செய் + த் + ஆன் = செய்தான்

செய் + கிறு + ஆன் = செய்கிறான்

செய் + வ் + ஆன் = செய்வான்

இங்கு முதலில் வினைப்பகுதி, அதையடுத்துக் கால இடைநிலை, அதனை அடுத்து எண், பால் காட்டும் விகுதி வருகின்றது. இது மாறிமாறி வராது. மொழியியலார் இவ்வாறு ஒவ்வொன்றாகப் பிரித்துக் கையாளுகிறார்கள். கால இடைநிலையும் மூன்று நிலையில் இருக்க அதனை விளக்க,

வினை + இறந்தகாலம் + விகுதி

நிகழ்காலம்

எதிர்காலம்

என்றார்கள் மொழியியலார் (linguists). ஒரு வினைச்சொல்லில் இறந்தகாலமோ அல்லது நிகழ்காலமோ அல்லது எதிர்காலமோ வரலாமேயன்றி மூன்றும் இணைந்து வரலாகாது எனலாம்.

4.2 சங்ககாலத்தில் கால இடைநிலைகள்

சங்ககாலத்தில் தோன்றிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் நூற்றுக்கணக்கான வினைச்சொற்கள் இடம்பெறுகின்றன. அச்சொற்களின் துணை கொண்டு சங்ககாலத்தில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களைக் காட்டும் இடைநிலைகளாக எவை எவை வழங்கின என்பதை அறிந்து கொள்ளலாம்.

4.2.1 இறந்தகாலம் சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் -த்-, -த்த-, – ந்த்-, -ட்-, -ற்-, -இ-, -இன்-, -இய்-, -ய்- ஆகியன இறந்தகால இடைநிலைகளாக வழங்குகின்றன.

சான்று:

-த்- தொழுதான் (கலித்தொகை, 55:19)

-த்த்- கொடுத்த (நற்றிணை, 110:11)

-ந்த்- வந்தனன் (நற்றிணை, 40:11)

-ட்- கண்டனம் (குறுந்தொகை, 275: 12)

-ற்- சென்றார் (அகநானூறு, 31:12)

-இ- இயலி (நடந்து) (நற்றிணை, 250:3)

-இன்- அஞ்சினன் (குறுந்தொகை, 302:6)

-இய்- பாடியோர் (புறநானூறு, 124:5)

-ய்- போய் (சென்று) (கலித்தொகை, 148: 23)

மேற்கூறியவற்றுள் -த்த்-, -ந்த்- என்பன -த்- என்பதன் மாற்றுருபுகள் ஆகும். -ட்-, -ற்- என்பன -த்- என்பதன் திரிபுகள் ஆகும். -இன்-, -இய்-, -ய்- என்பன -இ- என்பதன் மாற்று வடிவங்கள் ஆகும். எனவே சங்க காலத்தில் -த்-, -இ- என்னும் இரண்டு மட்டுமே இறந்தகாலம் காட்டும் இடைநிலைகள் என்பது புலனாகிறது.

4.2.2 நிகழ்காலம் -கின்று-, -ஆநின்று-.

சான்று:

-கின்று- ஆகின்று சேர்கின்ற (நற்றிணை, 227:9) (பரிபாடல், 22:35)

-ஆநின்று- வாராநின்றனள் (ஐங்குறுநூறு, 397:3)

4.2.3 எதிர்காலம் -ப்-, -ப்ப்-, -வ்-, -ம்-, -க்-, -த்-.

சான்று:

-ப்- காண்பேன் (நற்றிணை, 259:8)

-ப்ப்- உரைப்பல் (உரைப்பேன்) (நற்றிணை, 100:7)

-வ்- செல்வாள் (ஐங்குறுநூறு, 234:4)

-ம்- கொய்யுமோன் (பறிப்போன்) (புறநானூறு, 252:3)

-க்- ஆற்றுகேன் (ஆற்றுவேன்) (கலித்தொகை, 140:14)

-த்- விடுதும் (விடுவோம்) (புறநானூறு, 9:5)

4.3 இடைக்காலத்தில் கால இடைநிலைகள்

தொல்காப்பியர் வினைச்சொல் காலம் காட்டும் என்று கூறினார். இடையியலில் வினைச்சொற்களில் காலம் காட்டி வரும் உருபுகளை இடைச்சொற்களின் ஒரு வகையாகக் குறிப்பிட்டார். ஆனால் காலம் காட்டி வரும் உருபுகள் (இடைநிலைகள்) இன்னின்ன என்று கூறினாரில்லை. ஆனால் காலம் மூவகை எனக் குறிப்பிடுகிறார்.

சான்று:

காலம் தாமே மூன்றுஎன மொழிப (தொல்.சொல், 199)

இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா

அம் முக்காலமும் குறிப்பொடும் கொள்ளும்

(தொல். சொல், 200)

ஆனால் இடைக்காலத்தில் தோன்றிய நன்னூலார் காலம் காட்டும் இடைநிலைகள் இன்னின்ன என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுக் கூறுகிறார். அவர் நன்னூலில் பின்வருமாறு கால இடைநிலைகளைக் குறிப்பிடுகிறார் (நன்னூல், 142-144).

-த்-, -ட்-, -ற்-, -இன்- இறந்தகால இடைநிலைகள்

-கிறு-, -கின்று-, -ஆநின்று- நிகழ்கால இடைநிலைகள்

-ப்-, -வ்- எதிர்கால இடைநிலைகள்

4.3.1 இறந்தகாலம் சங்க காலத்தில் இறந்தகால இடைநிலையாக வழங்கிய -இன்- என்பது இடைக்காலத்திலும் வழங்கியது. ஆனால் பல இடங்களில் -இன்- என்பதில் உள்ள இகரம் கெட்டு னகர மெய் மட்டும் நின்று இறந்தகாலம் காட்டுகிறது. இது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

சான்று:

போனார் (மணிமேகலை, 16:100)

போனால் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்,

2270:4)

சொன்னான் (சீவகசிந்தாமணி)

மற்றபடி சங்ககாலத்தில் வழங்கிய -த்-, -ட்-, -ற்-, -இன்- என்பனவே இடைக்காலத்தில் வழங்கி வந்தன.

4.3.2 நிகழ்காலம் இடைக்காலத்தில் எழுந்த எல்லா நூல்களிலும் -கின்று- என்னும் நிகழ்கால இடைநிலை வழங்கலாயிற்று.

சான்று:

நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே

(நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 3301:2)

அண்ணலார் ஆடுகின்ற அலங்காரமே

(தேவாரம் 2ஆம் திருமுறை, 1576)

-கின்று-என்ற நிகழ்கால இடைநிலையின் மாற்றுருபான – கிறு- என்பதும் இடைக்காலத்தில் வழக்கிற்கு வரத்தொடங்கியது.

சான்று:

சாதிக்கிறநீர் அவயவமாய் உள்ள

(மணிமேகலை, 29:299)

அதுபோன்றே -கின்று-க்கான இன்னும் ஒரு மாற்றுருபு – ஆநின்று- என்பதாகும்.

சான்று:

துறைவன் துறந்தனம் தூற்றா கொல்முன்கை

இறையிறவா நின்ற வளை (திருக்குறள், 1157)

எனவே இடைக்காலத்தில் -கின்று-, -கிறு-, -ஆநின்று- என்பன நிகழ்காலம் காட்டும் இடைநிலைகளாக வழங்கின. இவற்றுள் -ஆநின்று- என்பது காலப்போக்கில் வழக்கு ஒழிந்தது.

4.3.3 எதிர்காலம் சங்ககாலத்தில் இருந்ததுபோலவே, எதிர்காலம் காட்டும் இடைநிலைகள் இடைக்காலத்திலும் வழங்கி வந்தன.

-ப்-, -வ்-, -க்- ஆகியன எதிர்கால இடைநிலைகளாக வழங்கின. இவற்றுள் ககரம் சங்ககாலத்தைக் காட்டிலும் மிகுதியாக வழங்கிவந்தது.

சான்று:

களைகேன் (சிலம்பு, 15:68)

செய்கேன் (மணிமேகலை, 16:36)

4.4 தற்காலத்தில் கால இடைநிலைகள்

தற்காலத்தில் மூன்று விதமான காலம் காட்டும் இடைநிலைகளைக் காணமுடிகிறது. தற்காலத்தில் பல மொழியியல் அறிஞர்கள் வினைச்சொல்லின் இறந்தகால இடைநிலைகளைப் பாகுபடுத்தி அவரவர்களுக்கு என்று ஒரு தனிக்கோட்பாடு வைத்துக் கொண்டு பிரித்தாளுகின்றனர். இருப்பினும் சான்றாக ஒன்றினை எடுத்துக் கொண்டு விளக்கலாம்.

கிரால் (Graul) என்னும் மேல்நாட்டு அறிஞர் இறந்தகாலத்தை ஐந்து வகையான மாற்றுருபுகளை வைத்துப் பிரித்துள்ளார். இதுவே பெரும்பாலோரால் இன்றைய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது எனலாம்.

4.4.1 இறந்தகாலம் இறந்தகாலத்திற்கான கால இடைநிலையின் மாற்றுருபுகள் -த்-, -த்த்-, -ந்த்-, -இன்-, -ட்- என்னும் ஐந்தாகும்.

சான்று:

அழு + த் + ஆன் = அழுதான்

பார் + த்த் + ஆன் = பார்த்தான்

விழு + ந்த் + ஆன் = விழுந்தான்

விழுங்கு + இன் + ஆன் = விழுங்கினான்

காண் + ட் + ஆன் = கண்டான்

4.4.2 நிகழ்காலம் நிகழ்காலத்திற்கான கால இடைநிலையின் மாற்றுருபுகள் -கிறு- , -கின்று- என்பனவாகும்.

சான்று:

அழு + கிறு + ஆன் = அழுகிறான்

அழு + கின்று + ஆன் = அழுகின்றான்

இந்நிகழ்கால இடைநிலைகள் சில சொற்களில் வேறுவிதமாகவும் வருவதுண்டு. அவை: -க்கிறு-, -க்கின்று- என்பனவாகும்.

சான்று:

படி + க்கிறு + ஆன் = படிக்கிறான்

படி + க்கின்று + ஆன் = படிக்கின்றான்

எனவே தற்காலத்தில் நிகழ்கால இடைநிலையின் மாற்றுருபுகளாக -கிறு-, -கின்று-,-க்கிறு-, -க்கின்று- என்னும் நான்கும் வழங்கி வருகின்றன எனலாம்.

4.4.3 எதிர்காலம் எதிர்காலம் காட்டும் கால இடைநிலைகளின் மாற்றுருபுகள் – வ்-, -ப்-, -ப்ப்- என்பனவாகும்.

சான்று:

அழு + வ் + ஆன் = அழுவான்

கேள் + ப் + ஆன் = கேட்பான்

படி + ப்ப் + ஆன் = படிப்பான்

போன்றவையாகும்.

4.5 தொகுப்புரை

இதுவரை நீங்கள் படித்த பாடத்திலிருந்து மரபு இலக்கண அறிஞர்களும் மொழியியல் அறிஞர்களும் தமிழ் வினைச்சொல்லை எவ்வாறு காலம் காட்டும் இடைநிலைகளுக்குத் தக்கவாறு பிரித்துக் கையாண்டனர் என்பது பற்றி அறிந்துகொண்டீர்கள். இவற்றோடு வினைச்சொல் விளக்கம், வினைச்சொல்லின் உள்ளமைப்பு போன்றவற்றையும் படித்து அறிந்தீர்கள். தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் காலஇடைநிலைகளைக் குறிப்பிட்டார். ஆனால் அவை இன்னின்ன எனக் குறிப்பிடவில்லை என்பதை உணர்ந்தீர்கள். சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் தற்காலத்திலும் வழங்கிவந்துள்ள கால இடைநிலைகளைச் சான்றுகளுடன் விளக்கமாக அறிந்து கொண்டீர்கள்.

பாடம் - 5

துணைவினைகளின் வளர்ச்சி மாற்ற வரலாறு

5.0 பாட முன்னுரை

துணைவினைகள் (Auxiliary verb) சங்க காலத்திலிருந்து இடைக்காலம்     வழியாகத்     தற்காலத்தில் வளர்ந்துள்ள நிலைகளையும்     பெற்றுள்ள     மாற்றங்களையும் தகுந்த சான்றுகளுடன்     இப்பாடத்தில்     காணலாம். சங்ககால இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட ஒருசில துணைவினைகள் மறைந்து போயின. ஒரு துணைவினை, சொற்றொடருக்குச் சொற்றொடர் வேறு வேறு பொருளை உணர்த்தி வருகின்றது. புதுப்புது எண்ணங்களால் புதிய சொற்கள் உருவாகின்றன ; அதே சமயம் அவ்வாறு உருவாகிய சொற்களில் ஓரிரண்டு சொற்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. ஆக மொத்தத்தில் படிப்படியாக, சங்க காலம் முதல் இடைக்காலம் வழியாகத் தற்காலத் தமிழில் பயன்பட்டு வரும் துணைவினைகளின் பட்டியல் நமக்குக் கிடைக்கப்பெறுகின்றது. தற்காலத் தமிழில் துணைவினைகளின் எண்ணிக்கையும் அவற்றின் ஆட்சியும் மிக அதிகம்.

5.1 துணை வினை - ஒரு விளக்கம்

வினைச்சொற்கள் தொழில் அல்லது செயலைக் காட்டும். இவை காலம் காட்டும் இடைநிலைகளையும் பால், எண் காட்டும் விகுதிகளையும் பெற்றுவரும். ஒவ்வொரு வினைச்சொல்லுக்கும் தனித்தனியே சொற்பொருள் (Lexical meaning) உண்டு. சான்றாகப் பார் என்னும் வினைச்சொல் ‘பார்த்தல்’ அல்லது ‘காணுதல்’ என்ற தனிப்பொருள் உடையது. இது போன்றே இரு, பாடு, ஆடு, செய், அழு, தள்ளு போன்ற வினைச்சொற்களும் தமக்கென்று தனித்தனியே பொருள் உடையன. இத்தகைய வினைச்சொற்களுள் சில, வேறு வினைச்சொற்களுடன் இணைந்து வருதலும் உண்டு. அவ்வாறு இணைந்து வரும்பொழுது, அவை தமக்குரிய தனிப்பொருளை இழந்து, தாம் சேர்ந்து வரும் வினைச்சொற்களுக்குப் புதிய பொருளைத் தருவனவாய் அமைகின்றன. இத்தகு புதிய பொருளை மொழியியலார் இலக்கணப்பொருள் (Grammatical meaning) என்று குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தம்பொருளை இழந்து, இலக்கணப்பொருளைத் தருகின்ற நிலையில் வரும் வினைச்சொற்களையே துணைவினைகள் (Auxillary verbs) என்று மொழியியலார் கூறுகின்றனர்.

ஆங்கில மொழியில் உள்ள have என்ற வினைச்சொல், உடைய என்ற தனிப்பொருளைத் தரும். I have a pen

போன்ற ஆங்கிலச் சொற்றொடர்களில் இந்நிலையைக் காணலாம். ஆனால், I have to go (நான் போகவேண்டும்) We have to go (நாங்கள் போகவேண்டும்)

போன்ற சொற்றொடர்களில் have என்ற சொல் உடைய என்ற பொருளைத் தரவில்லை. அச்சொல் தனக்கு உரிய அப்பொருளை இழந்து, கட்டாயம் அல்லது கண்டிப்பாக என்ற இலக்கணப் பொருளைத் தருவதைக் காணலாம். இவ்வாறான இலக்கணப் பொருளைத் தரும் வினைகளையே ஆங்கிலத்தில் துணைவினைகள் என்கின்றனர்.

தமிழிலும் இதுபோன்ற இரண்டு நிலைகளை வினைச் சொற்களில் காணலாம். சான்றாகத் தமிழில் இரு என்பது ஒரு வினைச்சொல். இதற்கு இருத்தல் அல்லது உண்டு என்ற தனிப்பொருள் உள்ளது.

சான்று :

இராமன் வீட்டில் இருந்தான்

இராமனிடம் பணம் இருக்கிறது

இச்சொற்றொடர்களில் இரு என்பது இருத்தல் என்ற தனக்கு உரிய பொருளில் வழங்குகிறது. ஆனால் இதே இரு என்ற வினைச்சொல், பிற வினைச்சொற்களோடு சேர்ந்து வரும்பொழுது, தனக்குரிய பொருளை இழந்து இலக்கணப்பொருளைத் தருகிறது. இதுவே துணைவினை எனப்படும்.

சான்று :

இராமன் வந்திருந்தான்

இச்சொற்றொடரில் இரு என்பது வா என்ற வினையடியிலிருந்து தோன்றிய வந்து என்ற வினையெச்சத்தோடு சேர்ந்து வரும்பொழுது, ‘வந்து அதன் பின்பு இருந்தான்’ என்ற தன் பொருளில் வழங்காமல், வந்தான் என்ற பொருளில் வழங்குகிறது. எனினும் இராமன் வந்த செயல் முடிவைத் தெளிவாக அல்லது உறுதியாக உணர்த்திட, வந்தான் என்ற சொல்லைக் காட்டிலும் வந்திருந்தான் என்ற சொல்லே துணைபுரிகிறது. இதற்குக் காரணம் வந்து என்பதோடு சேர்ந்து வரும் இரு என்ற வினையே ஆகும். இதுபோல ஒரு வினைக்குத் துணையாக நின்று, அவ்வினை உணர்த்தும் செயல் அல்லது தொழிலை விளக்கவோ, சிறப்பிக்கவோ உதவுவதால் இதனைத் துணைவினை என்று மொழியியலார் குறிப்பிட்டனர். இந்நிலையில் துணைவினைகளோடு சேர்ந்து வரும் வினைகளைத் (வா-வந்து) தலைமை வினை (Main verb) என்று மொழியியலார் கூறினர். வந்திருந்தான் என்பது போன்ற இரு வினைச்சொற்கள் சேர்ந்து வருவதைக் கூட்டுவினை (Compound verb) என்றும் மொழியியலார் குறிப்பிடுகின்றனர். கூட்டுவினையின் அமைப்புப் பின்வருமாறு அமையும்.

தலைமை வினை + துணை வினை = கூட்டுவினை

(Main verb) (Auxillary verb) (Compound verb)

வந்து + இருந்தான் = வந்திருந்தான்

தமிழில் உள்ள இத்தகைய கூட்டுவினைகளை ஆராய்ந்து பார்த்தால், அவற்றில் முதற்கண் வரும் தலைமை வினைகள் எல்லாம் வினையெச்ச வடிவில் இருக்கும். அவை பெரும்பாலும் செய்து, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களாக இருக்கக் காணலாம். அவ்வினையெச்சங்களோடு சேரும் துணைவினைகள் ஏவல் வடிவங்களாகவும் முற்று வடிவங்களாகவும் இருக்கும்.

சான்று :

மோது :

மோதிப் பார் (ஏவல் வடிவம்)

மோதிப் பார்த்தான் (முற்று வடிவம்)

ஊது :

ஊதித் தள்ளு (ஏவல் வடிவம்)

ஊதித் தள்ளினான் (முற்று வடிவம்)

உண் :

உண்ணச் செய் (ஏவல் வடிவம்)

உண்ணச் செய்தான் (முற்று வடிவம்)

இச்சான்றுகளில் வரும் மோதி, ஊதி என்பன செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள் ஆகும். உண்ண என்பது செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் ஆகும்.

5.2 சங்க காலத்தில் துணைவினைகள்

சங்க கால இலக்கியங்களில் துணைவினைகளின் ஆதிக்கம் அவ்வளவாக இல்லை. எவ்வாறு எனில் தற்காலத் தமிழில் வழக்கிலுள்ள துணைவினைகளை விட அதிக எண்ணிக்கையில் இல்லை என்று சொல்லலாம். சங்க கால இலக்கியங்களில் காணப்படுகின்ற துணைவினைகள்,

விடு, கொள், இரு, படு, செய், பண்ணு,

வேண்டு, வேண்டா, ஈ, அருள்

என்பன ஆகும். இவற்றின் வரவும் சங்க கால இலக்கியங்களில் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இத்துணைவினைகள் சங்க இலக்கியங்களிலும் பெரும்பாலும் செய்து மற்றும் செய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களை அடுத்தே வருவது காணலாம். இனிச் சங்ககால இலக்கியங்களில் துணைவினைகளின் ஆட்சியைச் சான்றுகளுடன் காண்போம்.

சான்று :

விடு

விதிர்த்துவிட்டன்ன அம்நுண் சுணங்கின் (நற்றிணை, 160:5)

(விதிர்த்துவிட்டு = அள்ளித் தெளித்துவிட்டால்)

கொள்

இந்நோய் நோன்று கொளற்கு அரிதே (குறுந்தொகை. 58:6)

(இந்நோய் = இக்காம நோய் ;நோன்று கொளற்கு = பொறுத்துக்

கொள்வதற்கு)

இரு

இந்த இரு என்னும் சொல் துணைவினையாக ஒரே ஒரு இடத்தில் மட்டும் வரக் காண்கிறோம்.

. . . . . . . . . . . . . . யாம் பிறர்

செய்புறம் நோக்கி இருத்துமோ? (கலித்தொகை, 111 : 16:17)

(நோக்கி இருத்துமோ = பார்த்து இருப்போமோ?)

படு

நோக்கவும் படுபவ னோப்பவும் படுமே (ஐங்குறுநூறு, 290:2)

(நோக்கவும்படும் = பார்க்கவும்படும் ;ஓப்பவும் படும் = விரட்டி

ஓட்டவும் படும்).

செய்

கதழ்பரி நெடுந்தேர் வரவாண்டு அழுங்கச்

செய்த தன் தப்பல் அன்றியும் (நற்றிணை, 203.9)

(அழுங்கச் செய்த = வருந்தச் செய்த)

பண்ணு

தொன்னிலை முழுமுதல் துமியப் பண்ணிப் (அகநானூறு, 45:9)

(துமியப் பண்ணி = வெட்டச் செய்து)

அம்சில் ஓதியை வரக் கரைந்து ஈமோ (ஐங்குறுநூறு, 391:6)

(அம்சில் ஓதி = அழகிய சிலவாகிய கூந்தலை உடைய தலைவியை

;கரைந்து ஈமோ = (காக்கையே ! கரைந்து அருளவேண்டும்).

அருள்

அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி (அகநானூறு, 98;26)

(அறிவர் = தலைவர் ;உறுவிய = செய்வித்த ;அல்லல் = துன்பம்

;கண்டு அருளி = பார்த்து அருளுதலின்).

வேண்டா

நில்லா உலகத்து நிலையா மைநீ

சொல்ல வேண்டா . . . . .. (புறநானூறு, 361:20)

(சொல்ல வேண்டா = சொல்ல வேண்டாம்).

சங்க இலக்கியங்களில் துணைவினைகளின் வரவு மிக அரிதாகக் காணப்பட்டது என்று பார்த்தோம். அவ்வாறு அரிதாக வரும் துணைவினைகளுள் வேண்டும், வேண்டா போன்றவை எச்சங்களுடன் வருவதைக் காட்டிலும் தொழிற்பெயருடன் வருவதே மிகுதியாக இருந்தது.

சான்று :

பொருள்வயின் பிரிதல் வேண்டும் (கலித்தொகை, 21:4)

(பிரிதல் – தொழிற்பெயர்)

மாலை வருதல் வேண்டும் (அகநானூறு, 142:12)

(வருதல் – தொழிற்பெயர்)

நாடினர் கொயல் வேண்டா (கலித்தொகை, 28:2)

(கொயல் – கொய்தல் ; தொழிற்பெயர்)

5.3 இடைக்காலத்தில் துணைவினைகள்

இடைக்காலத்தில் மாட்டு, ஒழி, வை, ஆக்கு, கூடு போன்ற புதிய புதிய துணைவினைகள் வழக்கில் வரலாயின. சங்க காலத்தில் வழங்கியனவாகக் கூறப்பட்ட துணைவினைகள் பலவும் இடைக்காலத்தில் வழங்கின. இடைக்காலத்தில் புதிய துணைவினைகளின் ஆட்சியைக் கீழ்க்கண்ட சான்றுகளால் அறியலாம்.

சான்று :

மாட்டு

நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்

(சிலம்பு, 7:32-3)

(மறக்க மாட்டேம் = மறக்க மாட்டோம் ;ஆல் = அசை)

ஒழி

. . . .அவன்முன் அயர்ந்து ஒழிவாய் அலை

(மணிமேகலை, 21:112)

(அயர்ந்து – மறந்து ;அயர்ந்து ஒழிவாய் = மறந்து ஒழிவாய்).

வை

ஆறைம் பாட்டினுள் அறியவைத்தனன் என்

(மணிமேகலை, பதிகம்.95)

(அறிய வைத்தனன் = அறியச் செய்தான்)

ஆக்கு

அந்தரந் திரியவும் ஆக்குமிவ் வருந்திறன்

(மணிமேகலை, 10;80)

(திரியவும் ஆக்கும் = திரியச் செய்யும்)

கூடு

குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும்

(சிலம்பு, 10;83)

(குடங்கையின் = வளைந்த கையால் ; நொண்டு = முகந்து கொள்ளவும் கூடும் = உட்கொள்ளவும் தகும்).

5.4 தற்காலத்தில் துணைவினைகள்

சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் தமிழ்மொழி இலக்கியங்கள், இலக்கணங்கள், உரைகள் என்ற அளவிலேயே வளர்ச்சி பெற்றிருந்தது. எனவே அந்நூல்களைக் கொண்டு அவ்விரண்டு காலகட்டங்களிலும் வழங்கிய துணைவினைகளைப் பற்றிய செய்திகளைக் குறிப்பிட்ட அளவிற்குள்ளேயே அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால் தற்காலத்தில் தமிழ்மொழியானது கவிதை, நாடகம், உரைநடை, சிறுகதை, புதினம், திரைப்படம், தொலைக்காட்சி எனப் பல்வேறு ஊடகங்களில் மாபெரும் வளர்ச்சி பெற்று விளங்குகிறது. நாடகம், சிறுகதை, புதினம், திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் மக்களின் பேச்சுவழக்குக்கும் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. மக்கள் பேச்சுவழக்கில், பேசுவோர் தங்கள மனவுணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் எண்ணங்களைத் தெரிவிப்பதற்கும் ஏற்றவகையில் பலவகையான பொருள்களை உணர்த்துவதற்குத் துணைவினைகளை மிக அதிகமாகப் பயன்படுத்தக் காணலாம். இத்துணைவினைகள் மேலே குறிப்பிட்ட ஊடகங்களில் அதிக அளவில் கையாளப்பட்டன. எனவே தற்காலத் தமிழில் துணைவினைகளின் எண்ணிக்கையும் அவற்றின் ஆட்சியும் அதிக அளவில் காணப்படுகின்றன.

தற்காலத் தமிழில் அடி, அருள், அழு, ஆயிற்று, இடு, இரு, எடு, ஒழி, கட்டு, கிட, கிழி, கூடு, கொடு, கொள், தள்ளு, தீர், தொலை, நில், படு, பண்ணு, பார், பிடி, போ, போக, போடு, மாட்டு, முடி, வா, வாங்கு, விடு, வேண்டு, வை போன்ற நாற்பதிற்கும் மேற்பட்ட வினைகள் துணைவினைகளாக வழங்குகின்றன.

இத்துணைவினைகள் முயற்சி, பலன் அளிக்காமை, உறுதி, துணிவு, முடிவு, மிகுதி, காரணம், கண்டிப்பு, வெறுப்பு, கோபம், சிறப்பு போன்ற பல்வேறு பொருள்களை உணர்த்துவனவாக அமைந்துள்ளன.

இவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்களை உணர்த்தும் வகையிலும் சில துணைவினைகள் அமைந்துள்ளன.

இனித் தற்காலத் தமிழில் துணைவினைகள் தரும் பொருள்களைச் சான்றுகளுடன் காண்போம்.

விடு

இத்துணைவினை உறுதிப்பொருளைத் தருகிறது.

சான்று :

எழுதி விடு

இதற்குப் பொருள் எழுது என்பதாகும். ஆனால் எழுது என்பதில் இல்லாத உறுதிப்பொருள் எழுதிவிடு என்பதில் உள்ளது. விடு என்ற துணைவினையே அப்பொருளைத் தருகிறது. அதேபோல எழுதினேன், எழுதுகிறேன், எழுதுவேன் என்ற வினைச்சொற்களில் இல்லாத உறுதிப்பொருள், அவ்வினைச்சொற்களோடு விடு என்ற துணைவினையைச் சேர்த்து முறையே எழுதிவிட்டேன், எழுதிவிடுகிறேன், எழுதிவிடுவேன் என்று கூறும்போது இருப்பதைக் காணலாம்.

விடு என்னும் துணைவினை கட்டாயம் அல்லது கண்டிப்பு என்ற பொருளைத் தருவதாகவும் வழங்குகிறது.

சான்று :

வந்து விடு

போய் விடு

சொல்லி விடு

பார்

பார் என்பது ஒரு வினைச்சொல். இதற்குப் பார்த்தல் அல்லது காணுதல் என்ற தனிப்பொருள் உள்ளது. ‘இராமன் தன்முகத்தைக் கண்ணாடியில் பார்த்தான்’ என்னும் தொடரில் வரும்போது அப்பொருளில் வழங்குகிறது. ஆனால்இதே பார் என்பது வேறு வினைச்சொற்களோடு சேர்ந்து துணைவினையாக வரும்பொழுது அப்பொருளை இழந்து வேறொரு புதிய பொருளைத் தருகிறது.

சான்று :

லஞ்சம் கொடுத்துப் பார்த்தான்

இதில் கொடுத்து என்னும் வினையெச்சத்தோடு வரும்பொழுது பார்த்தான் என்பது, லஞ்சம் கொடுத்து ஒருவரைக் கண்டான் என்னும் பொருளில் வழங்காமல், முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை என்ற புதிய பொருளில் வழங்குவதைக் காணலாம்.

ஆயிற்று

இத் துணைவினை முடிவுப்பொருளைத் தருகிறது.

சான்று :

வீட்டு வாடகை கொடுத்தாயிற்று

தீபாவளிக்குத் துணி எடுத்தாயிற்று

தொலை, தள்ளு, ஒழி, அழு

இத்துணைவினைகள் வெறுப்பு, விருப்பமின்மை, கோபம் முதலிய பொருள்களைத் தருவனவாக வருகின்றன.

சான்று :

நீயும் வந்து தொலை (விருப்பமின்மை)

அவன் எங்கே போய்த் தொலைந்தான்? (வெறுப்பு)

விட்டுத் தள்ளு (வெறுப்பு)

செத்தொழிந்தான், போயொழிந்தான் (வெறுப்பு)

அவனுக்குப் பத்து ரூபாய் கொடுத்தழுதேன் (விருப்பமின்மை)

தள்ளு என்னும் துணைவினை மிகுதிப்பொருளிலும் வருகிறது.

சிகரெட்டை ஊதித் தள்ளினான்.

கால்பந்தாட்டத்தில் கோல்களை அடித்துத் தள்ளினான்

செய், பண்ணு, வை

இத்துணைவினைகள் செய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களோடு சேர்ந்து காரணப்பொருளில் வருகின்றன. மேலும் இவை பிறவினைப் பொருளை உணர்த்தவும் பயன்படுகின்றன.

சான்று :

ஆடச் செய், உண்ணச் செய், உறங்கச் செய்,

ஆடப் பண்ணு, உண்ணப் பண்ணு, உறங்கப் பண்ணு

ஆட வை, உண்ண வை, உறங்க வை

ஆடு, உண், உறங்கு என்னும் வினைகள் தன்வினைகள். இவற்றைப் பிறவினைகள் ஆக்குவதற்கு அவற்றோடு செய், பண்ணு, வை ஆகிய துணைவினைகள் சேர்க்கப்பட்டிருப்பதை இங்கே காணலாம்.

கட்டு

இத்துணைவினை சிறப்பு, வசவு என்னும் பொருள்களைத் தருகின்றது.

சான்று :

மேடையில் ஏறி வெளுத்துக் கட்டினான் (சிறப்பு)

நன்றாக வாங்கிக்கட்டு (வசவு)

மாட்டு

இத்துணைவினை எதிர்மறைப்பொருளைத் தருகின்றது. இது செய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களை அடுத்தே வரும்.

சான்று :

வர மாட்டேன்

போக மாட்டேன்

உண்ண மாட்டேன்

வேண்டும்

இத்துணைவினை கட்டாயம் அல்லது கண்டிப்பு என்ற பொருளில் வருகின்றது. சங்க காலத்தில் இத்துணைவினை வரல் வேண்டும், தரல் வேண்டும் என்பனபோலத் தொழிற்பெயர்களுடனே மிகுதியாக வந்தது. ஆனால் தற்காலத்தில் இது தொழிற்பெயருடன் வருவது பெரும்பாலும் இல்லை. செய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களோடு மட்டுமே சேர்ந்து வருகிறது.

சான்று :

வர வேண்டும்

உண்ண வேண்டும்

தர வேண்டும்

கொடுக்க வேண்டும்

அருள்

இத்துணைவினை கருணை காட்டுதல் அல்லது அருள் செய்தல் என்ற தன் பொருளில் வழங்காமல் மரியாதைப்பொருளில் வழங்குகிறது.

சான்று :

தலைவரே ! எம்வீட்டிற்கு வந்தருளுங்கள்

இதுகாறும் துணைவினைகள் தற்காலத் தமிழில் என்னென்ன பொருளில் வருகின்றன என்பதைச் சான்றுகள் கொண்டு விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம்.

ஒரே துணைவினை பல்வேறு பொருளில் வருதல்

தற்காலத் தமிழில் துணைவினைகளின் ஆட்சி அதிகமாக இருப்பதால், ஒரு சில துணைவினைகள் ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருள்களை உணர்த்த வருவதையும் காணமுடிகிறது.

சான்றாக இரு என்ற வினைச்சொல்லை எடுத்துக் கொள்வோம். இச்சொல்லுக்கு இருத்தல் என்ற பொருள் இருப்பதை ஏற்கெனவே பார்த்தோம். இந்த இரு என்னும் சொல் வந்திருந்தான் என்னும் சொற்றொடரில் வா (வந்து) என்ற தலைமை வினையுடன் (Main verb) இணைந்து வந்துள்ளது. இங்கு இரு என்பது துணைவினையாக நின்று தன்பொருளை உணர்த்தாது, இலக்கணப் பொருளை உணர்த்துகிறது. தற்காலத்தில் இரு என்ற இத்துணைவினை வெவ்வேறு சொற்றொடர்களில் வரும்போது, ஒவ்வொரு சொற்றொடருக்கும் ஏற்றாற்போல் தன்னுடைய பொருளை மாற்றிக்கொண்டு பல்வேறு பொருள்களை உணர்த்தி வருவதைக் காணலாம்.

சான்று- 1

குமார் மதுரைக்குப் போய் இருக்கிறான்.

இச்சொற்றொடரில் இரு என்ற துணைவினை, செயல்முடிவு (perfect) என்னும் பொருளைக் காட்ட வருகிறது.

சான்று-2

குமார் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தான்

இச்சொற்றொடரில் தொடர்செயல் (progressive aspect) என்னும் பொருளை உணர்த்த வருகிறது.

சான்று-3

நேற்று இரவு மழைபெய்து இருக்கும்

இச்சொற்றொடரில், எதிர்பார்ப்பு (Supposition) என்னும் பொருளைக் காட்ட வருகிறது.

கூட்டுவினை துணைவினையாக வருதல்

பொதுவாக ஒரு தலைமை வினையுடன் ஒரு துணைவினை சேர்ந்து வருவதே கூட்டுவினை (compound verb) என்று கூறப்படும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

(எ-டு) வந்திருந்தான், மோதிப் பார்த்தான்.

ஆனால் தற்காலத் தமிழில் கூட்டுவினைகள் கூட, துணைவினைகள் போல வருகின்ற முறை காணப்படுகின்றது.

சான்று :

அவன் தன் அதிகாரியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான்

இச்சொற்றொடரில் கட்டிக்கொண்டான் என்ற கூட்டுவினை, வாங்கி என்ற வினையெச்சத்தோடு சேர்ந்து துணைவினையாக வந்து மிகுதியான வசவு என்ற பொருளில் வருவதைக் காணலாம்.

5.5 புதிய எண்ணங்களினால் ஏற்படும் மாற்றங்கள்

விகுதி சேர்ந்து வினைச்சொல் பல வகையாய்ப் பெருகுதலே அன்றி இரு, விடு, கொள், படு, உண், நில், வா, போ முதலிய துணைவினைகள் வினைச்சொல்லுடன் சேர்ந்து புதிய புதிய பொருள் வேறுபாடுகளை உணர்த்திப் பலவாய் வளர்தலும் உண்டு.

சான்றாக, எழு என்பது தன்னினும் தாழ்ந்தவர்க்கும் ஒத்தவர் சிலர்க்கும் உரிய ஏவலாக வழங்க, எழுந்திரு என்பது மற்றவருக்கு உரியதாய் வேண்டுகோள் உணர்த்துவதாய் வழங்குகின்றது. எழுது என்பதில் இல்லாத துணிவுப்பொருள் அல்லது முடிவுப்பொருள் எழுதிவிடு என்பதில் உள்ளது. பார் என்பது பொதுவாய் விளங்க, பார்த்துக்கொள் என்பது தன்நோக்கு உடையதாய் வழங்குகின்றது. இவ்வாறே பல துணைவினைகள் பொருள் வேறுபாடுகளை உணர்த்தி வினைச்சொற்கள் பெருகுவதற்குக் காரணமாக உள்ளன.

அதுபோன்றே சில வினைகள் புதிய எண்ணங்களைக் கொண்டு வருவனவாக உள்ளன.

சான்று :

அச்சடி அச்சிடு

தந்தியடி தந்திகொடு

போன்செய் போன்போடு

போன்றவையாகும். வினைச்சொல்லை அப்படியே எடுக்காது அதோடு சம்பந்தப்பட்ட பெயர்களுடன் பொருத்தமான வினைகளை இணைத்து இத்தகைய வினைகளை ஆக்கிவிடுதல் காண்கிறோம். அச்சு என்பது கட்டளைக்கருவி (mould) எனப் பொருள்படும். இத்துடன் அடி என்ற சொல்லை இணைத்து அச்சடி என்ற சொல் உருவாகி உள்ளது எனலாம்.

புதிய பொருள் உருவாகும்போது சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் உருவாகின்றன. பொருத்தமான சொற்கள் என்று சில சொற்கள் கருதப்படுகின்ற நிலையில்தான் இத்தகைய நிலை ஏற்படுகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் ஒன்று நிலைபெற்று மற்றவை வழக்கற்றுவிடக் காண்கிறோம். இப்பண்பை எல்லாவகைச் சொற்களிலும் காணலாம். universityஎன்ற சொல்லுக்கு இணையாகச் சர்வகலாசாலை, பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் உருவாயின. பின்னர்ப் பல்கலைக்கழகம் என்ற சொல் மட்டும் நிலைத்துவிட்டது இங்கு நினைவுகூரத் தக்கது. இதைப் போன்றே துணைவினைகளிலும் இந்நிலையைக் காணமுடிகிறது.

சான்று :

செய்ய வல்லேன்

செய்ய ஒல்லேன்

செய்ய முடியும்

செய்ய இயலும்

செய்ய வரும்

போன்ற சொற்கள் செய்யமுடியும் என்ற ஒரே பொருளைத் தருவனவாக அமைந்து வழங்கி வந்தன. ஆனால் தற்காலத்தில் செய்ய முடியும் என்பது மட்டுமே நிலைத்துவிட்டமையையும் ஏனைய சொற்கள் வழக்கு இழந்து விட்டமையையும் இங்குக் காணலாம்.

5.6தொகுப்புரை

இப்பாடத்தின் மூலம் நமக்கு அரிய பெரிய செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன. துணைவினை என்றால் என்ன? என்பது பற்றி விளக்கமாக அறிந்தீர்கள். துணைவினைகள் சங்ககாலம், இடைக்காலம் மற்றும் தற்காலத்தில் அடைந்துள்ள வளர்ச்சியைப் பற்றியும் பெற்றுள்ள மாற்றங்களைப் பற்றியும் நன்கு அறிந்தீர்கள். மேலும் தற்காலத்தில் துணைவினைகள், பேசுவோரின் மனவுணர்வுக்குத் தக்கவாறு புதுப் புதுப் பொருள்களைப் பலவாறு உணர்த்தி நிற்கும் சிறப்பினைச் சான்றுகளுடன் அறிந்து கொண்டீர்கள்.

பாடம் - 6

பெயரடை. வினையடை வளர்ச்சி வரலாறு

6.0 பாட முன்னுரை

தமிழ்மொழி, இலக்கணப் பாரம்பரியம் மிக்க ஒரு மொழியாகும். இம்மொழி காலந்தோறும் வளர்ந்து வருவதால் பழங்காலத்தில் எவ்வாறான     இலக்கணக்கூறுகளைக் (Grammatical category) கொண்டிருந்தது என்பது பற்றியும் தற்காலத்தில் எத்தனை வகையான இலக்கணக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பற்றியும் இப்பாடத்தில் காண இருக்கிறோம். நான்கு வகை இலக்கணக் கூறுகளைக் கொண்டிருந்த தமிழ்மொழி பின்னர் எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இலக்கணக் கூறு, இலக்கணத் தொழிற்பாடு (Grammatical function) இவற்றிற்கான வேறுபாடுகளையும் பெயரடையின் வளர்ச்சி ஒரு வரலாற்று ரீதியானது என்பதையும் தெரிந்து கொள்ளவிருக்கிறோம். சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் பெயரடையாக வழங்கிய     வடிவங்கள், வினைமுற்றாகவும் பெயராகவும் வழங்கின. தற்காலத்தில் பெயரடை, வினையடை ஆகிய ஒவ்வொன்றும் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை குறித்தும் பொதுவாகப் பெயரடை, வினையடை வளர்ந்த வரலாற்றைக் குறித்தும் இப்பாடத்தில் காணப்போகிறீர்கள்.

6.1 மரபு இலக்கணப் பகுப்பு முறை

தமிழ்ச்சொற்களை மரபு இலக்கண அறிஞர்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைகளாகப் பிரித்தனர். ஆனால் இவ்வாறு பிரிப்பதற்கு முன்பு பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் என மூன்று வகைகளாகப் பிரித்ததாகத் தெரியவருகிறது. பின்னரே உரிச்சொல் என்ற ஒன்றைச் சேர்த்து நான்கு வகைகளாகப் பிரித்தனர் இலக்கணிகள். இவற்றுள் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன. எனவேதான் தொல்காப்பியர் அவரது நூலில் பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் முதலில் தந்துள்ளார்.

சொல்எனப் படுப பெயரே, வினைஎன்று

ஆயிரண்டு என்ப, அறிந்திசி னோரே

(தொல்.சொல். 158)

அடுத்த நூற்பாவில் இடைச்சொல்லையும் உரிச்சொல்லையும் கூறுகிறார்.

இடைச்சொல் கிளவியும், உரிச்சொல் கிளவியும்

அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப

(தொல். சொல். 159)

வேற்றுமை உருபு (Case marker) ஏற்க வல்லது பெயர்ச்சொல் (noun) என்றும்,

சான்று :

கண்ணன் + ஐ = கண்ணனை

காலங்காட்டும் உருபுகளை (tense marker) ஏற்பது வினைச்சொல் என்றும் பிரித்தனர்.

சான்று:

பாடு + இன் + ஆன் = பாடினான்

மேலே கூறப்பட்ட பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் தமக்கென அகராதிப்பொருளை உணர்த்தும். அதே சமயத்தில் தமக்கென்று தனிப்பட்ட ஒரு அகராதிப்பொருள் இல்லாமல் தாம் சார்ந்து நிற்கும் பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல்லின் பொருளை இலக்கண நோக்கில் மாற்றும் இயல்பினதாக விளங்கும் சொற்கள் இடைச்சொற்கள் என்று கூறப்படும்.

சான்று :

முன்

பின்

நான்காவதாகக் கூறப்படும் உரிச்சொல், பெயர்ச்சொல்லின் தன்மையையும், வினைச்சொல்லின் தன்மையையும் விளக்கும்முகமாக அமைந்து வருவதாகும். அச்சொற்கள், வரும் இடங்களுக்கு ஏற்றவாறு திரிபு பெறும். உரிச்சொற்களில் பெரும்பாலானவை பண்பு உணர்த்துவனவாகும்.

சான்று :

உறு புகழ்

தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் உள்ள உரியியலில் ஏறத்தாழ 120 உரிச்சொற்களைக் கூறியுள்ளார். அவற்றுள் பல பெயரடைகளாகவும் வினையடைகளாகவும் வரும் என்று இக்கால மொழியியலார் சிலர் குறிப்பிடுகின்றனர்.

சான்றாகத் தொல்காப்பியர் உறு, தவ, நனி என்னும் மூன்று உரிச்சொற்களும் மிகுதி என்னும் பொருளில் வரும் என்கின்றார். இச்சொற்கள் பெயரடையாகவும் வினையடையாகவும் வரும்.

சான்று :

உறுபுகழ் (மிக்க புகழ்) – பெயரடை

தவச்சிறிது (மிகவும் சிறிது) – வினையடை

நனி பேதை (மிகவும் பேதை) – பெயரடை

நனி வருந்தினை (மிகவும் வருந்தினாய்) – வினையடை.

6.2 தற்கால இலக்கணப் பகுப்புமுறை

மொழியில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு ஏற்றபடி அந்த மொழியில் காணும் சொற்களின் வகைப்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டே தீரும். இந்த உண்மையை நன்கு உணர்ந்து இருந்ததால்தான் நன்னூலார்,

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே

(நன்னூல், 462)

என்றார்.

நீங்கள், மொழியியல் அடிப்படையில் பாடத்தினைப் படிக்க இருப்பதால் இலக்கணக்கூறுகளைப் பற்றிய ஒரு சில செய்திகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

மொழி ஆராய்ச்சியில் தொடரியல் (syntax) ஆராய்ச்சிக்கு எப்போதும் முதன்மையான இடம் உண்டு. அவ்வாறு தொடரியியலைப் பற்றி ஆராயும்போது அதன்பால் அமைந்துள்ள சொல்வகைப்பாட்டினைப் பிரிக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு சொற்களைப் பிரிப்பதால் அவற்றை இலக்கணக்கூறு (grammatical category) எனலாம்.

இலக்கணக்கூறுகளைப் பற்றி நாம் மேலும் நுட்பமாகத் தெரிந்து கொள்வதற்கு முன் இலக்கணத் தொழிற்பாடுகளையும் (grammatical functions) தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு சொற்றொடரில் பெயர்ச்சொல் அது வரும் இடத்திற்கு ஏற்ப எழுவாயாகவும் பயனிலையாகவும் செயல்படுகின்றது.

சான்று :

மரம் விழுந்தது

என்ற சொற்றொடரில் மரம் என்பது எழுவாய் ஆகும்.

இது ஒரு மரம்

என்ற சொற்றொடரில் மரம் என்பது பயனிலை ஆகும்.

மரம் என்ற பெயர்ச்சொல் ஒரு தொடரில் எழுவாயாகவும் இன்னொரு தொடரில் பயனிலையாகவும் அமைகிறது. இச்சொற்றொடர்களில் வரும் மரம் என்பது பெயர்ச்சொல். இப்பெயர்ச்சொல்லை இலக்கணக்கூறு என்றும் எழுவாய், பயனிலை என்பனவற்றை இலக்கணத் தொழிற்பாடு என்றும் தற்காலத்தில் மொழியியலார் பிரிக்கின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கி வரும் சொற்களை நான்கு வகையான (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்) பாகுபாட்டிற்குள்ளே அடக்கிவிடலாம் என்று முன்பே சில பாடங்களில் படித்துள்ளோம். அவ்வாறு நான்கு வகைப்பாட்டில் வைத்துத் தற்காலத்தமிழை அடக்கமுடியாமல் இருந்ததாலும் மேல்நாட்டு அறிஞர்கள் ஆங்கில மொழியை எட்டு வகைப்பாட்டில் அடக்கியதாலும் மேல்நாட்டுத் தமிழ் அறிஞர்கள் அதனைப் போன்றே தமிழ்மொழியையும் எட்டு வகையாகப் பிரிக்கலானார்கள்.

(1) பெயர்ச்சொல் – noun

(2) வினைச்சொல் – verb

(3) சொல்லுருபு – postposition

(4) பெயரடை – adjective

(5) வினையடை – adverb

(6) அளவையடை – quantifier

(7) அடைகொளி அடை – determiner

(8) இணைப்புக்கிளவி – conjunction

இவற்றின் அடிப்படையில் தமிழ்மொழியினை ஆராயலானார்கள். இவ்வாறாகப் பெயரடை, வினையடை என்ற இரு இலக்கணக் கூறுகள் தொடரியல் அடிப்படையில் தமிழ்மொழியை ஆராய்வதற்காகப் பயன்படலாயிற்று. பல காரணங்களால் புதிய புதிய இலக்கணக்கூறுகள் தோன்றலாயின. அவ்வாறு தோன்றும் இலக்கணக்கூறுகள் நாளடைவில் பெருகி வருவதையும் காணமுடிகிறது.

6.3 பெயரடை, வினையடைகள் பற்றி இலக்கண நூலார் கருத்து

பழைய இலக்கண ஆசிரியர்கள் பெயரடை, வினையடை ஆகியவற்றைத் தனித்தனி வகையாகக் கருதவில்லை. இருப்பினும் அவர்கள் பெயரடை வினையடை பற்றிக் கூறாமல் இல்லை. பெயரடை, வினையடை என்னும் பெயர்களால் குறிப்பிடவில்லை என்றாலும் இவற்றை முறையே குறிப்புப் பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் என்ற பெயர்களால் பழங்காலந் தொட்டே குறிப்பிட்டு வந்துள்ளனர்.

நன்னூலார் வினைச்சொற்களைத் தெரிநிலை வினைச்சொல், குறிப்பு வினைச்சொல் என இரண்டாகப் பிரித்து, அவை இரண்டும் வினைமுற்றாகவும் பெயரெச்சமாகவும், வினையெச்சமாகவும் வரும் என்கிறார்.

அவைதாம்

முற்றும் பெயர்வினை எச்சமும் ஆகி

ஒன்றற்கு உரியவும் பொதுவும் ஆகும்

(நன்னூல். 322)

எனவே நன்னூலார் கருத்துப்படி பெயரெச்சம் என்பது தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும். அதேபோல வினையெச்சம் என்பது தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும். இவற்றைச் சான்றுகளுடன் விளக்கிக் காண்போம்.

தெரிநிலைப் பெயரெச்சம்

ஒரு செயல் அல்லது தொழிலை உணர்த்தும் ஒரு வினை அடிச் சொல்லிலிருந்து தோன்றி, முக்காலம் காட்டும் இடைநிலைகளுள் ஒன்றனைப் பெற்று, பெயரெச்ச விகுதியாகிய அ என்பதோடு சேர்ந்து வருவது தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.

வினை அடிச்சொல் – செய்

இறந்தகால இடைநிலை – த்

பெயரெச்ச விகுதி – அ

தெரிநிலைப் பெயரெச்சம் – செய் + த் + அ = செய்த

இத்தெரிநிலைப் பெயரெச்சம் ஒரு பெயரைக் கொண்டு முடியும்.

செய்த பையன்

குறிப்புப் பெயரெச்சம்

ஒரு பண்பை உணர்த்தும் அடிச்சொல்லோடு பெயரெச்ச விகுதியாகிய அ என்பது சேர்ந்து வருவது குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.

பண்பு அடிச்சொல் – நல்

பெயரெச்ச விகுதி – அ

குறிப்புப் பெயரெச்சம் – நல் + அ = நல்ல

இக்குறிப்புப் பெயரெச்சம் காலம் காட்டாது ; தன்னை ஏற்கும் பெயரைச் சிறப்பிக்கும் அடையாக வரும்.

நல்ல பையன்

இவ்வாறு பெயரைச் சிறப்பிக்கும் அடையாக (நல்ல) வருவதால், குறிப்புப் பெயரெச்சம் என்று தமிழிலக்கண நூலார் கூறிய அதனை, இக்கால மொழியியலார் பெயரடை (Adjective) என்று குறிப்பிடுவது மிகப் பொருத்தமே எனலாம்.

தெரிநிலை வினையெச்சம்

ஒரு செயல் அல்லது தொழிலை உணர்த்தும் ஒரு வினை அடிச் சொல்லிலிருந்து தோன்றி, முக்காலம் காட்டும் இடைநிலைகளுள் ஒன்றனைப் பெற்று, வினையெச்ச விகுதிகளாகிய அ, உ என்பனவற்றோடு சேர்ந்து வருவது தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

வினை அடிச்சொல் – செய்

இறந்தகால இடைநிலை – த்

வினையெச்ச விகுதி – உ

தெரிநிலை வினையெச்சம் – செய் + த் + உ = செய்து

இத்தெரிநிலை வினையெச்சம் ஒரு வினையைக் கொண்டு முடியும்.

செய்து வந்தான்

குறிப்பு வினையெச்சம்

ஒரு பண்பை உணர்த்தும் அடிச்சொல்லோடு, வினையெச்ச விகுதிகளாகிய அ, உ என்பன சேர்ந்து வருவது குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

பண்பு அடிச்சொல் – மெல்

வினையெச்ச விகுதி – அ

குறிப்பு வினையெச்சம் – மெல் + அ = மெல்ல

இக்குறிப்பு வினையெச்சம் காலம் காட்டாது, தன்னை ஏற்கும் வினைச்சொல்லைச் சிறப்பிக்கும் அடையாக வரும்.

மெல்ல வந்தான்

இவ்வாறு வினைச்சொல்லைச் சிறப்பிக்க வரும் அடையாக (மெல்ல) வருவதால், குறிப்புப் பெயரெச்சம் என்று தமிழ் இலக்கண நூலார் கூறிய அதனை, இக்கால மொழியியலார் வினையடை (Adverb) என்ற பெயரால் குறிப்பிடுவது மிகப் பொருத்தமே எனலாம்.

தமிழிலக்கண நூலார் பெயரடை, வினையடை ஆகியவற்றை முறையே குறிப்புப் பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் என்ற பெயர்கள் இட்டுக் கூறினாலும், அவை இரண்டையும் இக்கால மொழியியலார் பலவாறு வகைப்படுத்தி விளக்குவது போல விளக்கினார்கள் இல்லை. இக்கால மொழியியலார் பெயரடை, வினையடை இரண்டையும் பலவாறு வகைப்படுத்தி விளக்கிக் காட்டியுள்ளனர்.

இனி முதற்கண் பெயரடைகளின் வளர்ச்சி வரலாற்றினைப் பற்றிக் காண்போம்.

6.4 பெயரடையின் வளர்ச்சி வரலாறு

பண்பு அடிச்சொல்லோடு பெயரடை விகுதியாகிய அ என்பது சேர்ந்து பெயரடைகள் தமிழில் உருவாகின்றன. இவை பெயர்ச்சொற்களுக்கு முன்னர் வந்து அப்பெயர்ச்சொற்களின் பொருளைச் சிறப்பிக்கின்றன அல்லது விளக்குகின்றன.

சான்று :

நல்ல பையன்

இத்தொடரில் நல்ல என்பது பெயரடை. இது பையன் என்ற பெயருக்கு முன் வந்து, அவனுடைய பண்புகளைச் சிறப்பிக்கிறது. எனவே நல்ல என்பது பெயரடை ஆகும். நல்ல பையன் என்பதை ஆங்கிலத்தில் good boy என்று கூறுவர். எனவே ஆங்கிலத்தில் good என்பது பெயரடை (Adjective) எனப்படும்.

இத்தகைய பெயரடைகள் சங்க காலந்தொட்டுத் தற்காலம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிய நூல்களில் வழங்கிவருகின்றன.

6.4.1 சங்க காலத்தில் பெயரடைகள்

சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் பெயரடைகள் காணப்படுகின்றன. நல் (நன்மை), சிறு (சிறுமை), பெரு (பெருமை), அரு (அருமை) முதலான பண்பு அடிச்சொற்கள் அ என்னும் பெயரடை விகுதியுடன் சேர்ந்து நல்ல, சிறிய, பெரிய, அரிய போன்ற பண்பு அடைகளாகி, பெயர்ச்சொற்களுக்கு முன்னர் வந்து அச்சொற்களின் பொருளைச் சிறப்பிக்கின்றன.

சான்று :

நல்ல

நல்ல பெருந் தோளேயே (நற்றிணை, 13 :5)

(நல்ல பெரிய தோள்களை உடையவளே)

பெரிய

பெரிய

கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை

(அகநானூறு, 8 :5-6)

(பெரிய ஆண்பன்றியைக் கொன்ற பிளந்த வாயினை உடைய ஆண் புலி. கேழல் – ஆண்பன்றி ; ஏற்றை – ஆண்புலி)

சிறிய

துறைவன் எம்

சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே

(நற்றிணை, 388 : 9-10)

(தலைவன் எம்முடைய சிறிய உள்ளத்தினின்று நீங்குதலை அறியாதவன். துறைவன் = நெய்தல் நிலத் தலைவன்)

அரிய

அரிய கானம் சென்றோர்க்கு (குறுந்தொகை, 77 : 5)

(கடத்தற்கு அருமை உடைய காட்டில் என்னைப் பிரிந்து சென்ற தலைவர்க்கு)

நல்ல, பெரிய, சிறிய, அரிய போன்ற சொல் வடிவங்கள், சங்க இலக்கியங்களில் மேலே கூறப்பட்டதுபோலப் பெயரடைகளாக மட்டுமன்றி, வினைமுற்றுகளாகவும் பெயர்களாகவும் வழங்கின.

அவை வந்தன

அவை சென்றன

போன்ற தொடர்களில் வரும் வந்தன, சென்றன என்ற வினைமுற்றுகளின் இறுதியில் வரும் அ என்னும் விகுதி பன்மையைக் காட்டுகிறது.

பல

சில

என்னும் பெயர்ச்சொற்களின் இறுதியில் உள்ள அ என்பது பன்மையைக் காட்டுகிறது.

எனவே நல் என்னும் பண்பு அடியோடு அ சேர்ந்து நல்ல என்பது,

ஒரு பெயரோடு சேர்ந்து அதற்கு முன்னர் வரும்போது பெயரடையாக வரும். இதனைத் தமிழிலக்கண நூலார் ‘குறிப்புப் பெயரெச்சம்’ என்பர்.

ஒரு சொற்றொடரின் முடிவில், அத்தொடரின் பொருளை முற்றுவித்து (முடியச்செய்து) வரும்போது, வினைமுற்றாக வரும். இதனைத் தமிழ் இலக்கண நூலார் ‘குறிப்பு வினைமுற்று’ என்பர்.

ஒரு வினைச்சொல்லுக்கு முன்னால் வரும்போது பெயராக வரும். இதனைத் தமிழ் இலக்கண நூலார் ‘குறிப்பு வினையால் அணையும் பெயர்’ என்பர்.

நல்ல என்னும் சொல் வடிவம் இம்மூன்று நிலைகளிலும் வருவதைச் சங்க இலக்கியத்தில் காணலாம்.

நல்ல – பெயரடை

சான்று :

நல்ல பெருந்தோ ளோயே (நற்றிணை, 13 : 5)

இங்கே நல்ல என்பது, பெருந்தோள் என்னும் பெயர் கொண்டு முடிந்திருப்பதால் பெயரடை ஆகும்.

நல்ல – வினைமுற்று

அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே

(ஐங்குறுநூறு, 193 : 4)

(ஒலிக்கின்ற கடலில் உள்ள வெண்மையான சங்கால் செய்யப்பட்ட வளைகள் நல்லனவோ?)

ஈண்டு நல்ல என்பது நல்லன என்ற வினைமுற்றுப் பொருளில் வந்திருப்பதால் வினைமுற்று ஆகும்.

நல்ல – பெயர்

சான்று :

கல்உயர் நனந்தலை நல்ல கூறி

(குறுந்தொகை, 297 : 5)

(மலைகள் ஓங்கி உயர்ந்த அகன்ற இடத்தில் தலைவர் நல்ல சொற்களைக் கூறி)

இங்கே நல்ல என்பது, நல்ல சொற்கள் என்ற பெயராக வந்திருப்பது காணலாம்.

6.4.2 இடைக்காலத்தில் பெயரடைகள்

இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் பெயரடைகள் அதிக அளவில் வழங்கின. இனிய, வல்ல, நல்ல, சிறிய, பெரிய, எளிய போன்ற பெயரடைகள் வழங்கின.

இனிய

இனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார்

(கம்பராமாயணம், 4751 4)

வல்ல

வல்ல மந்திரியரோடு (கம்பராமாயணம், 4451 : 1)

(அறிவிலும் சூழ்ச்சித்திறத்திலும் வல்ல அமைச்சரோடு)

சிறிய

சிறிய என்ஆருயிர் உண்ட திருவருளே

(நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 3722 : 4)

பெரிய

நாவலம் பெரிய தீவினில் வாழும்

(நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 274 : 1)

நல்ல

நல்ல சொல் வல்லீர்

(கம்பராமாயணம், 4802 : 3-4)

எளிய

எளிய எம்பெருமான்

(நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 2807 : 2)

சங்க காலத்தைப் போலவே இனிய, சிறிய, பெரிய என்பன போன்ற சொற்கள் பெயரடை, வினைமுற்று, பெயர் என்னும் மூன்று நிலைகளிலும் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் வழங்குகின்றன. சான்றாக இனிய என்ற சொல் இம்மூன்று நிலைகளில் வழங்குவதைக் காண்போம்.

இனிய – பெயரடை

யாதினும் இனிய நண்ப ! இருத்திஈண்டு எம்மொடு

என்றான்

(கம்பராமாயணம், 2060 : 4)

இங்கே இனிய என்பது, நண்பனே என்னும் பெயர்கொண்டு

முடிந்திருப்பதால் பெயரடை ஆகும்.

இனிய – வினைமுற்று

பொன் நகரத்தினும் பொலம்கொள் நாகர்தம்

தொல் நகரத்தினும் தொடர்ந்த மாநிலத்து

எந் நகரத்தினும் இனிய

(கம்பராமாயணம், 3462 : 1-3)

(இந்திரனின் பொன் அமராவதி நகரத்தைக் காட்டிலும் நாகர் உலகத்தில் உள்ள பழைய நகரத்தைக் காட்டிலும் உலகில் உள்ள எல்லா நகரங்களைக் காட்டிலும் எம் இலங்கை மாநகரம் இனியது.)

இங்கே இனிய என்பது, தொடரின் பொருளை முற்றுவித்து நிற்பதால் வினைமுற்று ஆகும்.

இனிய – பெயர்

இருக்க என இருந்தபின் இனிய கூறலும்

(கம்பராமாயணம், 221 : 2)

(இனிய கூறலும் – இனிய சொற்களைக் கூறலும்)

இங்கே இனிய என்பது, இனிய சொற்கள் என்று பெயராக வந்து நிற்பது காணலாம்.

6.4.3 தற்காலத்தில் பெயரடைகள் தற்காலத்தமிழில் பெயரடைகளின் எண்ணிக்கையும் அவற்றின் ஆட்சியும் மிக அதிகம். ஆங்கிலச் சொல்பாகுபாட்டில் பெயரடை (Adjective) என்ற ஒரு தனிப்பிரிவு வகுக்கப்பட்டது போலத் தற்காலத்தில் தமிழ்ச்சொல் பாகுபாட்டிலும் பெயரடை என்பது மொழியியலாரால் ஒரு தனிப் பிரிவாகக் கொள்ளப்பட்டது.

சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் நல்ல, இனிய, பெரிய, சிறிய போன்ற சொற்கள் மூன்று நிலைகளில் வழங்கலாயின எனப் பார்த்தோம். ஆனால் தற்காலத்தில் அச்சொற்கள் பெயரடை என்ற ஒரு நிலையில் மட்டுமே வழங்கி வருகின்றன. அச்சொற்கள் வினைமுற்றாகவும் பெயராகவும் வழங்கிவந்த பழைய நிலை முற்றிலும் வழக்கிழந்தது. எனவே, தற்காலத்தில் பண்படியுடன் – அ என்ற ஒட்டு (பெயரெச்ச விகுதி) சேர்த்துப் பெயரடையாக வழங்குகின்ற முறை மட்டுமே உள்ளது.

சான்று :

நல்ல பையன்

இனிய புதல்வன்

பெரிய நாடு

சிறிய வீடு

மொழியியலார் தற்காலத்தமிழில் வழங்கும் பெயரடைகளைத் தனிப்பெயரடை (Simple adjective) எனவும், ஆக்கப் பெயரடை (Derived adjectives) எனவும் இருவகையாகப் பிரித்து விளக்கிக் காட்டுகிறார்கள்.

தனிப்பெயரடை

பண்பு அடிச்சொல்லோடு அ என்னும் விகுதி சேர்ந்து வருகின்ற பெயரடைகள் எல்லாம் தனிப்பெயரடைகள் என்று கூறப்படும்.

சான்று :

நல்ல பையன்

கெட்ட பழக்கம்

தீய ஒழுக்கம்

பழைய பாடல்

புதிய நட்பு

சிறிய உள்ளம்

பெரிய வீடு

இத்தகைய பெயரடைகளையே ஆங்கிலத்தில் ‘Adjectives’ என்று கூறுகின்றனர்.

ஆக்கப் பெயரடை

பெயர்ச்சொற்களுடன் ஆன என்னும் ஆக்க விகுதியைச் சேர்ப்பதால் தற்காலத்தமிழில் எண்ணற்ற பெயரடைகள் உருவாக்கப்படுகின்றன. அழகு, மோசம், உயரம், குட்டை, வட்டம், நீளம், அகலம், நாகரிகம் முதலான பண்புப் பெயர்ச் சொற்களுடன் ஆன என்னும் ஆக்க விகுதி சேர்ந்து,

அழகான பெண்

மோசமான வேலை

உயரமான மாப்பிள்ளை

குள்ளமான மனிதன்

வட்டமான முகம்

நீளமான மூக்கு

அகலமான மார்பு

நாகரிகமான பெண்

என்ற ஆக்கப்பெயரடைகள் தோன்றி வழங்குகின்றன.

பண்பை உணர்த்தும் உண்மை, மென்மை, வலிமை, எளிமை, கடுமை, செம்மை என்னும் மை ஈற்றுச்சொற்களுடன் ஆன என்ற ஆக்க விகுதி சேர்ந்து,

உண்மையான ஒழுக்கம்

மென்மையான இதயம்

வலிமையான உடல்

எளிமையான வாழ்க்கை

கடுமையான தோற்றம்

செம்மையான வாழ்க்கை

என்ற ஆக்கப்பெயரடைகள் உருவாகி வழங்குகின்றன.

பெயர்ச்சொற்களுடன் ஆன என்னும் ஆக்க விகுதி சேர்ந்து ஆக்கப் பெயரடைகள் உருவாவதுபோல, அற்ற என்ற எதிர்மறைப் பெயரெச்ச வடிவம் சேர்ந்து பல பெயரடைகள் தற்காலத்தமிழில் தோன்றி வழங்குகின்றன.

அழகற்ற பெண்

நாகரிகமற்ற வாழ்க்கை

வினையடிச்சொற்களினின்று பெயரடை உருவாதல்

பெயரடைகள் பண்பு அடிச்சொற்களினின்றே தோன்றி அமைகின்றன. ஆனால் தற்காலத்தமிழில் தாழ், உயர் என்னும் வினையடிச்சொற்களுடன், இறந்தகால இடைநிலையாகிய த் என்பது சேர்ந்து வரும் தாழ்ந்த, உயர்ந்த என்னும் பெயரெச்சங்களும் பெயரடைகளாக வருகின்றன. ஆனால் இவை பெயரடைகளாக வரும்போது காலம் காட்டுவது கிடையாது.

சான்று :

தாழ்ந்த நிலை வரும்

உயர்ந்த வேலையில் இருக்கிறான்

6.5 வினையடையின் வளர்ச்சி வரலாறு

பண்பு அடிச்சொல்லோடு வினையடை விகுதிகளாகிய அ, உ என்பன சேர்ந்து வினையடைகள் தமிழில் உருவாகின்றன. இவை வினைச்சொற்களுக்கு முன்னர் வந்து, அவ்வினைச்சொற்கள் உணர்த்தும் வினையைச் (செயலை) சிறப்பிக்கின்றன.

சான்று :

மெல்ல வந்தான்

இத்தொடரில் மெல்ல என்பது வந்தான் என்ற வினைக்கு முன் வந்து, அவ்வினை உணர்த்தும் செயல் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விளக்குகிறது. எனவே மெல்ல என்பது வினையடை ஆகும். மெல்ல வந்தான் என்பதை ஆங்கிலத்தில்

e came slowly என்று கூறுவர். எனவே ஆங்கிலத்தில் Slowly என்பது வினையடை (Adverb) எனப்படும்.

இத்தகைய வினையடைகள் சங்க காலம் முதல் தற்காலம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிய நூல்களில் வழங்கி வருகின்றன.

6.5.1 சங்க காலத்தில் வினையடைகள் சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் வினையடைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. மெல், நல், பெரு, சிறு போன்ற பண்பு அடிச்சொற்கள் அ, உ என்னும் வினையடை விகுதிகளுடன் சேர்ந்து மெல்ல, நன்கு, பெரிது, சிறிது என்ற அடைகளாகி, வினைச்சொற்களுக்கு முன்னர் வந்து அச்சொற்களின் பொருளைச் சிறப்பிக்கின்றன.

மெல்ல

மெல் (மென்மை) என்ற பண்பு அடிச்சொல்லோடு அ என்னும் வினையடை விகுதி சேர்ந்து இவ்வினையடை உருவாகிறது.

மெல்ல வந்துஎன் நல்லடி பொருந்தி

(புறநானூறு, 73 : 1)

(மெல்ல வந்து – மெதுவாக வந்து)

நன்கு

நல் என்ற பண்பு அடிச்சொல்லோடு உ என்னும் வினையடை விகுதி சேர்ந்து இவ்வினையடை உருவாகின்றது.

தவறும் நன்கு அறியாயாயின் (நற்றிணை, 315 : 10)

(தவறும் வாராதபடி நன்றாக அறிந்துகொள்வாய் எனில்)

பெரிது

ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே

(புறநானூறு, 278 : 9)

(போர்க்களத்தில் தன் மகன் விழுப்புண்பட்டு இறந்து கிடப்பதைக் கண்ட தாய், அவனை ஈன்ற பொழுதைக் காட்டிலும் பெரிதும் மகிழ்ந்தாள்)

சிறிது

அன்னையும் சிறிது தணிந்து (நற்றிணை, 115 : 3)

(அன்னையும் நம்மீது கொண்ட கோபம் சிறிது தணிந்து)

இனிது

. . . . . . . . . . . . மாஅ யோெளாடு

புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல்லூர்

(நற்றிணை, 139 : 7-8)

(தலைவியோடு கூடி, அவளது அழகினை இனிதாக நுகர்ந்து யான் உறைகின்ற ஊர்)

பண்பை உணர்த்தும் அடிச்சொற்களோடு அ, உ என்னும் விகுதிகளைச் சேர்த்து வினையடைகள் உருவாக்கப்படுவதே பெரும்பான்மை. ஆனால் சங்க இலக்கியத்தில் வினையை உணர்த்தும் அடிச்சொற்களாகிய நிறை, மிகு, ஆர் என்பனவற்றோடு, அ என்னும் விகுதி சேர்ந்து, நிறைய, மிக, ஆர என்று அமைந்த வினையடைகளும் சிறுபான்மை காணப்படுகின்றன. ஆனால் இவ்வினையடைகள் காலம் காட்டுவது இல்லை.

நிறைய

பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்

(புறநானூறு, 115 : 2)

(பாணர் கையில் ஏந்திய மண்டை போன்ற வடிவினை உடைய பாத்திரத்தில் மதுவினை நிறையுமாறு பெய்வார்கள்)

மிக

உலகுமிக வருந்தி அயாவுறு காலைச்

சென்றனர் ஆயினும் (நற்றிணை, 164 : 3-4)

(கதிரவன் வெப்பத்தால் உலகம் மிக வருந்தித் துன்புற்ற காலத்துத் தலைவர் நம்மைப் பிரிந்து சென்றாராயினும்)

ஆர்

ஆர் என்ற வினை அடிச்சொல்லுக்கு நிறைதல் என்று பொருள். இதனோடு அ என்னும் ஒட்டுச் சேர்ந்து, ஆர என்னும் வினையடை உருவாகிறது. இதற்கு நிறைய என்று பொருள்.

மான்மறி, சுரைபொழி தீம்பால் ஆர மாந்தி

(குறுந்தொகை, 187 : 1-2)

(மான் குட்டி தன் தாயின் மடியினின்று சுரக்கின்ற இனிய பாலை வயிறு நிறைய உண்டு)

தற்காலத்தமிழில் ‘வயிறார உண்டான்’ என்று வழங்குவதில் ஆர என்பது நிறைய என்ற பொருளில் வருவது இங்கே கருதத்தக்கது.

6.5.2 இடைக்காலத்தில் வினையடைகள் சங்க காலத்தைப் போலவே பண்பு அடிச்சொற்களினின்று உருவாக்கப்பட்ட மெல்ல, நன்கு, சிறிது, பெரிது போன்ற வினையடைகளும் வினை அடிச்சொற்களினின்று உருவாக்கப்பட்ட மிக, நிறைய போன்ற வினையடைகளும் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் காணப்படுகின்றன.

மெல்ல

விழித்து வெய்து உயிர்த்து மெல்ல நடுங்கி

(சீவகசிந்தாமணி, 715 : 2)

(திகைத்துப் பெருமூச்செறிந்து மெல்ல நடுங்கி)

நன்கு

நயனம் நன்கு இமையார்

(கம்பராமாயணம், 4571 : 1)

(கண்களை நன்றாக இமைக்கமாட்டார்கள். நயனம் – கண்)

சிறிது

ஆசையால் உழலும் கூற்றும்

சுவைசிறிது அறிந்தது அன்றே.

(கம்பராமாயணம், 417 : 4)

(உண்ணும் ஆசையால் மனம் சுழலும் எமனும் அன்றைய போரில் ஊன் சுவையைச் சிறிதாக அறிந்தான்)

பெரிது

ஆசையோ பெரிது கொள்க

அலைகடல் வண்ணன்பால்

(நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 2487 : 4)

(பாற்கடலில் பள்ளிகொண்ட மணிவண்ணனிடம் ஆசை மிகவும் கொள்க)

மிக

மிக விரும்பும் பிரான் என்றும்

(நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 2930 : 2)

(மிகவும் விரும்பும் கடவுள் என்றும்)

நிறைய

. . . . . . . . அம் பொற்கலம்

நிறைய ஆக்கிய நெய்பயில் இன்னமுது

(சீவகசிந்தாமணி, 131 : 2-3)

(அழகிய பொற்கலத்திலே நிறையச் சமைத்த நெய் கலந்த சோறு)

6.5.3 தற்காலத்தில் வினையடைகள் தற்காலத்தமிழில் பெயரடைகளைப் போலவே வினையடைகளின் எண்ணிக்கையும் ஆட்சியும் அதிகமாக உள்ளன. தமிழ்ச்சொல் பாகுபாட்டில் பெயரடையைப் போலவே வினையடையும் தனி ஒரு பிரிவாகத் தற்கால மொழியியலாரால் கொள்ளப்படுகின்றது.

மொழியியலார் தற்காலத்தமிழில் வழங்கும் வினையடைகளை, பெயரடைகளைப் போலவே தனிவினையடை (Simple adverb) எனவும் ஆக்க வினையடை (Derived adverb) எனவும் இருவகையாகப் பிரித்து விளக்குகிறார்கள்.

தனி வினையடை

பண்பு அடிச்சொல்லோடு உ, அ என்னும் வினையடை விகுதிகள் சேர்ந்துவரும் நன்கு, சிறிது, பெரிது, மெல்ல, பைய, நிரம்ப, நிறைய போன்றவை தனி வினையடைகளாகத் தற்காலத் தமிழில் வழங்குகின்றன.

சான்று :

நன்கு பேசினான்

சிறிது தந்தான்

பெரிது உவந்தான்

மெல்லச் சிரித்தாள்

பையப் போனான்

உரக்கக் கத்தினான்

நிரம்ப உண்டான்

நிறையக் கற்றான்

அடிக்கடி, இனிமேல், இன்னும், மறுபடியும், மீண்டும், திரும்பவும் போன்ற சொற்கள் தற்காலத்தமிழில் வினையடைகளாக வருகின்றன. இச்சொற்களைப் பார்க்கும்போது அவை வினையடைகளா அல்லது சொல்லுருபுகளா என்று கூறமுடியாத அளவில் உள்ளன.

சான்று :

என் வீட்டிற்கு அடிக்கடி வந்தான்

என் வீட்டிற்கு இனிமேல் வராதே

என் வீட்டிற்கு மறுபடியும் வந்தான்

என் வீட்டிற்கு மீண்டும் வந்தான்

என் வீட்டிற்குத் திரும்பவும் வந்தான்

ஆக்க வினையடை

பண்பைக் குறிக்கும் பெயர்ச்சொற்களோடு ஆக அல்லது ஆய் என்னும் ஆக்கச்சொல்லை விகுதியாகச் சேர்ப்பதால் அமைகின்ற வினையடைகள் ஆக்க வினையடைகள் எனப்படும்.

வேகம், ஆத்திரம், கோபம், வெறுப்பு, கூச்சல், வளர்த்தி, செம்மை, பசுமை, நேர் முதலான சொற்களுடன் ஆக அல்லது ஆய் சேர்ந்து ஆக்க வினையடைகள் உருவாகி அமைவதைத் தற்காலத்தமிழில் நிரம்பக் காணலாம்.

சான்று :

அவன் வேகமாய் ஓடினான்

அவன் ஆத்திரமாகப் பேசினான்

அவன் கோபமாய்ப் பார்த்தான்

வரவர வாழ்க்கையே வெறுப்பாய்ப் போய்விட்டது

வகுப்பறையில் கூச்சலாய் இருக்கிறது

அவன் நல்ல வளர்த்தியாக உள்ளான்

அவன் வேலையைச் செம்மையாகச் செய்தான்

வயல்வெளி பார்ப்பதற்குப் பசுமையாக இருந்தது

அவன் நேராக நடந்தான்

மேலும் ஒரு பொருளை அல்லது தொழிலைக் குறிக்கின்ற பெயர்ச்சொற்கள், காலத்தைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள், எண்ணுப் பெயர்கள் சிலவற்றோடு ஆக அல்லது ஆய் சேர்ந்து ஆக்க வினையடைகள் உருவாகி அமைவதையும் தற்காலத்தமிழில் காணலாம்.

சான்று :

அவன் பெட்டிப்பாம்பாக அடங்கினான்

அவன் ஒரு வேலையாகச் சென்னைக்கு வந்தான்

அவன் பத்து மாதமாக வேலை செய்து வருகிறான்

கரும்பை இரண்டாக வெட்டு

இவைபோன்ற பலவகைகளில் தற்காலத் தமிழில் வினையடைகள் அமைந்து வருகின்றன.

6.6தொகுப்புரை

இப்பாடத்தைப் படித்தபின் நீங்கள் பெயரடை, வினையடை என்பன பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள். மரபு இலக்கணிகள் தமிழ் மொழியைப் பழங்காலத்திற்கு ஏற்றாற்போல் நான்கு வகைகளாகப் பிரித்தனர் என்பதையும் மொழி வளரும் தன்மை கொண்டிருந்ததால் அது காலத்திற்கு ஏற்ப வளர்ந்து வந்ததையும் அறிந்தீர்கள். தமிழ்மொழியை எவ்வாறான இலக்கணக்கூறுகளாகப் பிரித்து ஆண்டனர் என்பதை உணர்ந்தீர்கள். ஒரு மொழியைச் சாதாரணமாகப் பயிலும்போது ஒருவிதமாகவும் அதனையே மொழியியல் அடிப்படையிலும் தொடரியல் அமைப்பிலும் ஆராயும்போது வேறுவிதமாகவும் இலக்கணக்கூறுகள் தேவைப்பட்டன என்பது பற்றியும் அறிந்திருப்பீர்கள். தமிழ்மொழியின் வளர்ச்சியில் காலந்தோறும் பெயரடைகளும் வினையடைகளும் எவ்வாறு கையாளப்பட்டு வந்தன என்பதைத் தக்க சான்றுகள் வாயிலாக அறிந்தீர்கள்.