87

பொருள் மாற்ற வரலாறு

பாடம் - 1

சொற்பொருளியல்

1.0 பாட முன்னுரை

இதுவரை ஒலிகள் (ஒலியனியல்), சொற்கள் (உருபனியல்), தொடர்கள் (தொடரியல்), சொல்லுக்குரிய பொருள் (சொற்பொருளியல்) என்று விளக்க முறையில் தமிழ் மொழி ஆராயப்பட்டுள்ளது.

மேற்காணும் மொழியியல் கூறுகளில் சொற்பொருளியல் தவிரப் பிற கூறுகள் அனைத்தும் சற்று விரிவாகவே ஆராயப்பட்டுள்ளன. தமிழ்ச் சொற்பொருளியல் கூறுகள் மட்டுமே இன்னும் ஆராயப்பட வேண்டிய ஒரு களனாக இருக்கிறது. இக்குறையைச் சிறிதேனும் போக்கும் வண்ணம் சொற்பொருளியல் பற்றிய கருத்துகளை விளக்குவதற்கு இப்பாடம் பெரிதும் துணைபுரியும் எனலாம்..

1.1 சொற்பொருள் - வரையறை:

பொருள் எனும் சொல், உண்மை, குணம், சொல்லின் பொருள், தலைமை, பணம், தத்துவம், கடவுள், வீடுபேறு, நூற்பயன் நான்கில் ஒன்று, பல பண்டம், பிள்ளை, பொன், உண்மைக் கருத்து, காரியம், மெய்ம்மை, அறிவு, கொள்கை, பயன், தந்திரம், உறுதி, அகமும் புறமுமாகிய திணைப்பொருள், பொருள் நூல், உவமேயம், காரியம், தருமம், தன்மை ஆகியவற்றைக் குறிக்கும். (கழகத் தமிழ் அகராதி)

மொழிக்கோட்பாட்டில் பொருள் (meaning) என்பதை விளக்குவது மிக எளிதல்ல. இருப்பினும் பொருள் என்பதை, ஒரு வகையினுள் அடக்க முயற்சி செய்யலாம். அது கீழ்க்காணுமாறு அமையும்:

1. (சொல்லின்) பொருள்

2. செல்வம், சொத்து

3. உள்ள பொருள்

4. வீட்டுச் சாமான், தட்டுமுட்டு.

5. உண்மை

6. தங்கம்

7. குழந்தை

பொருள் என்பதற்குரிய விளக்கங்களில் மேலும் சிலவற்றைக் கீழே காணலாம்.

1. (பொருளின் – வஸ்துவின்) உண்மைத் தன்மை

2. அகராதி சுட்டும் பிறபொருள்கள் (வேறு சொற்கள்)

3. சொல் குறிக்கும் பொருள் (The connotation of a word)

4. ஓர் அமைப்பில் ஒரு பொருளுக்குரிய (வஸ்து) இடம் (The place of anything in a system)

5. எதிர்காலத்தில் ஒரு செயலால் ஏற்படும் விளைவு (The practical consequences of a thing in our future experience)

6. ஒருவன் (சொல்பவன்) குறிப்பிடும் பொருளின் குறியீடு (That to which the user of a symbol actually refers)

7. ஒருவன் (சொல்பவன்) குறிக்கும் சொல் உண்மையில் குறிப்பிட வேண்டிய பொருள் (That to which the user of a symbol ought to be referring)

8. ஒருவன் தான் குறிப்பிடுவதாக நம்பிக் கூறும் (பொருள்) குறியீடு (That to which the user of a symbol believes himself to be referring)

9. கேட்போன் அந்தக் குறியீடு சுட்டுவதாகக் கருதுவது (That to which the interpreter of a symbol thinks it refers)

(அ) குறிப்பிடும் பொருள் (refers)

(ஆ) தான் கருதும் பொருள் (believes himself to be referring)

(இ) சொல்பவன் குறிப்பிடுவதாகத் தான் கருதுவது (believes the user to be referring.)

பொருள் (meaning) என்றால் என்ன? என்ற வினாவிற்கு நேரடியாக விடை கூற இயலாமைக்குச் சொற்பொருளியல்தான் காரணம் என்று கூறுவதைக் காட்டிலும், அச்சொற்பொருளியலின் பல்வேறு அணுகுமுறைகள்தான் காரணம் என்று கூறலாம். இச்சொல்லும் பொருளும் குறித்துப் பல மொழியியலாளர் தம் கருத்தைத் தெரிவித்தபோதும், உரிய விடை கிடைத்ததா? என்றால் இல்லை என்றே கூறலாம். ஆனால், இக்கோட்பாட்டை மிகவும் ஆழ்ந்தும், கூர்ந்தும் நோக்க அவர்கள் முயற்சி செய்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

1.2 பழந்தமிழ் இலக்கண நூல்களில் சொல்லும் பொருளும்

மொழியானது இரண்டு கூறுகளின் அடிப்படையில் செயல்படக்கூடியது. ஒன்று சொன்மை அடிப்படை; மற்றொன்று பொருண்மை அடிப்படை. ஒலிக்கூறுகள், சொற்கூறுகள், தொடரமைப்புகள் இவற்றை ஆதாரமாகக் கொண்டு சொன்மை வெளிப்படும். இச் சொற்களும், தொடர்களும் பொருளை உணர்த்த, இதனடிப்படையில் பொருண்மை உண்டாகும். இக்கருத்தைக் கூறவந்த தொல்காப்பியர்,

“பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்

சொல்லி னாகும் என்மனார் புலவர்”

(சொல். பெயரியல்: 2)

என்று இவ்விரு கூறுகளையும் புலப்படுத்தியுள்ளார். அதாவது, ஒரு சொல் சொல்லாகிய தன்னையும் குறிக்கும்; தான் குறிப்பிடும் பொருளையும் குறிக்கும்.

எ.கா:

அவள், இவள் என்னும் சொற்கள் சொல்லின் வடிவத்தை (form) உணர்த்துகின்றன: தாம் யாரைக்குறிப்பிடுகின்றன என்பதைக் காட்டவில்லை. குறிஞ்சி என்பது குறிஞ்சி என்னும் தன்பெயரையும், குறிஞ்சியாகிய நிலத்தையும் குறிப்பிடுகிறது. இவ்வாறே பாணன் என்ற சொல்லும் தன்பெயரையும் குடிப்பெயரையும் குறிக்கிறது

சொற்கள் அனைத்துமே பொருளைக் குறிக்கும் தன்மை வாய்ந்தன அல்லவா? இக்கருத்தையும் பெயரியல் முதல் நூற்பாவில்,

“எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே”

(சொல். பெயரியல் : 1)

என்று சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பைத்தொல்காப்பியர் விளக்கியுள்ளார். இவ்வாறு சொற்கள் பொருள் உணர்த்தும் தன்மையைக் குறித்து ஆராயும் இயலை, சொற்பொருளியல் அல்லது பொருண்மையியல் (semantics) என்று வழங்கலாம்.

பொருண்மையியல் என்பது, சொல்லின் பொருளைக் குறிக்கும் தன்மையாகும். சொல்லின் பொருள் என்பது மொழியின் ஒரு கூறாகும். எனவே, பொருண்மையியலை மொழியியலின் ஒரு கூறாகக் கூறலாம். மனிதன் மொழியின் மீது எப்போதும் ஆர்வம் கொண்டவனாக விளங்குகிறான். மொழியியல் குறியீடுகளுக்கு இடையே உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வதில் நாட்டம் கொண்டவனாகக் காணப்படுகிறான். பல்வேறு கோணங்களில் இருந்து இப்பொருண்மையியல் கூறுகள் குறித்த பல்வேறு அணுகுமுறைகள் தொன்றுதொட்டு எவ்வாறு பழைய இலக்கண நூல்களில் விளக்கப்பட்டு வருகின்றன என்பதை நோக்குவோம்.

எச்சொல்லும் தனியாக இருக்கும்போது ஒரு பொருளையும், சூழலில் பல்வேறு பொருட்களையும் உணர்த்தி நிற்கும். அதுபோல, பல சூழ்நிலைகளிலும், கருத்துகளிலும் பயன்படுத்தும் பொதுவான சொற்கள் சில, அவை இடம்பெறக்கூடிய இடத்தை ஒட்டியே பொருளைத் தெளிவாக உணர்த்தும். எனவே, ஒரு சொல் தன் பொருளை உணர்த்துவதற்கு அதன் அமைப்பும், அதன் தொடர்நிலை அமைப்பும், அது அமையும் சூழலும் காரணங்களாக அமைகின்றன. இப்பொருளைத் தெளிவுற அறிவதற்குச் சூழல் அடிப்படைக் களனாக விளங்குகின்றது எனலாம். (It is context which determines the value of the word. – Vendray – Language – page. 180).

சொற்கள் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் பொருளை உணர்த்தும், சில சொற்கள் பொருள் உணர்த்தும்போது வெளிப் படையாகப் பொருளை உணர்த்தும்; சில குறிப்பாகப் பொருளை உணர்த்தும்; சில சொற்கள் சூழல் அமையாமல் பொதுவான பொருளைப் பெற்றும் விளங்கும். அப்பொருள் பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்பட்டு ஒரு பொது அமைப்பைப் பெற்று விளங்குவதாகவும் அமையும். இதனையே வெளிப்படைப்பொருள் என்று கூறலாம்.

“தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்

இருபாற்று என்ப பொருண்மை நிலையே”

(சொல். பெயரியல் : 3)

என்று சொல், தன் பொருளைக் குறிப்பதில், தொல்காப்பியரால் இருவகைப் படுத்தப்படுகின்றது.

சூழ்நிலையின் காரணமாக வெளிப்படையான பொருள் மாற்றம் பெற்று, குறிப்புப் பொருளை உணர்த்துகின்றது. அவ்வாறு அக்குறிப்புப்பொருள் வேறு ஒரு பொருளை உணர்த்துவதாக இருந்தாலும் அது வெளிப்படைப் பொருளோடு எவ்வகையிலாவது தொடர்பு பெற்று விளங்கும். ஆகுபெயரை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். அதாவது, ஒருசொல் தன்னுடைய பொருளை விளக்காது, அதனோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளை விளக்குவதே ஆகுபெயர் எனக்கொள்ளப்படுவதால் இதையும் குறிப்புப் பொருளாகக் கொள்ளலாம். அன்மொழித் தொகையையும் இவ்வாறே கொள்ள வேண்டும். அணிகளில், சிலேடையணி, பிரிதுமொழிதலணி, வேற்றுப்பொருள் வைப்பணி, உருவக அணி போன்றவற்றைக் குறிப்புப்பொருள் உணர்த்தும் அணிகளாகக் கொள்ளலாம்.

இவ்விரு பொருள் குறித்தே நன்னூலாரும்,

“ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா

இருதிணை ஐம்பாற் பொருளையுந் தன்னையும்

மூவகை இடத்தும் வழக்கொடு செய்யுளின்

வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே”

(நன். 259)

எனச் சொற்கள், பொருள் குறிக்கும் தன்மையை விளக்குகிறார். ஒருமொழி, தொடர்மொழி, பொதுமொழி என மூவகைப்படும் சொற்கள், இருதிணை ஐம்பால் பொருள்களையும் தன்னையும் விளக்கி, மூவிடத்திலும், உலக வழக்கிலும், செய்யுளிலும், வெளிப்படையாகவும் குறிப்பாகவும் பொருளை விளக்கி நிற்கும்.(தன்னை விளக்குதல் என்பது தாம் இன்ன சொல் என்று தம்மை உணர்த்துதல் ஆகும்.)

எ.கா:

அவன், இவன் – வெளிப்படை ஒருவர் வந்தார் – குறிப்பு

ஒருவர் வந்தார் என்ற தொடரில் வந்தவர் ஆணா, பெண்ணா என்பதைக் குறிப்பால் மட்டுமே, அடுத்து வரும் அல்லது முன்னால் வந்த சொற்களை ஒட்டியே உணர முடியும்.

1.3 சொல் வழங்கும் பொருள்

ஒரு சொல்லுக்குரிய பொருளாக ஒன்றிருக்க, அச்சொல் பேச்சுவழக்கில் வேறுபொருளாக மாற்றம் அடைகிறது. பேசுவோர் தம் இயல்புக்கு ஒரு பொருளை உணர்த்த, வெவ்வேறு சொற்களை எல்லாம் பயன்படுத்துவர். கற்றோர் பேச்சும், சிறுமொழி, குழந்தைமொழி முதலியவையும் சிறப்பு வழக்காகக் கொள்ளலாம். ஒரு குழுமொழியின் தோற்றத்திற்கு, புதுப்புதுச் சொற்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே காரணமாகிறது. நாளடைவில் அது ஒரு பொதுமொழியாகவும் மாறிவிடுகிறது.

எ.கா:

சொல்லின் பொருளானது உணர்வின் காரணமாக, தொடர் அமைப்புகளில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. அம்மாற்றங்களைப் பின் வருமாறு காணலாம்:

(அ) சொற்களின் ஈற்றில் இசைச் சொற்கள் சேர்தல்

வந்தார்! ஆகா! என்னே அழகு!

(ஆ) சிறப்பாக ‘ஏ’ சேர்தல்

சென்னையிலே இன்று மாலையிலே சந்திர கிரகணம் ஏற்படும்.

(இ) சொல் தொடரும் முறையை மாற்றுதல்

பேசினார் முதல்வர்

முதல்வர் பேசினார்

(ஈ) ஒரே கருத்துள்ள சொற்கள் மீண்டும் வருதல்

சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே

(உ) குறிப்பிட்ட சொற்களை மீண்டும் மீண்டும் சொல்லல்

(உணர்ச்சி மிகுதியால் இவ்வாறு நிகழும்)

பாம்பு பாம்பு – அச்ச உணர்வு

அப்பப்பா வலி தாங்க முடியலை – வியப்பு உணர்வு

ஓடினாள் ஓடினாள் அழுதுகொண்டே ஓடினாள் -

அவல உணர்வு.

1.3.1 மொழிப்பண்பாட்டின் அடிப்படையில் பொருள் மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழிக்கும், அவர்களால் பின்பற்றப்படும் ஒரு பண்பாட்டிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. தமிழ்மொழியில் உள்ள உறவுமுறைச் சொற்களுக்கும், ஆங்கில மொழியில் உள்ள உறவுமுறைச் சொற்களுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. ஆங்கில மொழியில் ‘uncle’ என்பது அப்பாவின் அல்லது அம்மாவின் தம்பியையோ (அ) அண்ணனையோ குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ ‘மாமா’ என்னும் உறவுமுறைச் சொல் பரந்த பொருளை உடையதாகக் காணப்படுகிறது. அச்சொல், தாய்மாமனையும், அத்தையின் கணவரையும், மாமா மற்றும் அத்தையின் மகன்களையும், அக்காவின் (அ) தங்கையின் கணவரையும், கணவனின் (அ) மனைவியின் தந்தையையும் குறிக்கும் பரந்த பொருளுக்குரிய சொல்லாக விளங்குகிறது.

பழந்தமிழில் கருமை, பசுமை, நீலம் இம்மூன்று நிறங்களும் பொதுப்பண்புடைய நிறங்களாகவே கருதப்பட்டு வந்தன. எனவே தான் கருநிறத்தான், பச்சைமேனியன், நீலவண்ணன் என்றெல்லாம் இலக்கியங்கள் குறித்து வந்தன

1.3.2 சூழல் உணர்த்தும் பொருள் ஒருசொல் தனியே அல்லாமல் சூழலின் மூலமாகப் பொருள் கொள்ளும் போது பொருள்மாற்றம் அடைகிறது. ‘மா’ என்ற சொல்லையே ‘மாவுடைத்தார்’ (புறப்பொருள் வெண்பாமாலை) எனக் கூறுமிடத்து வண்டு என்ற பொருளை உணர்த்துவதை அறிய முடிகிறது.

இவ்வாறு சொற்கள் தன்பொருளை உணர்த்தும்போது, வெளிப் படையாகவும், சூழலுக்குத் தக்கவாறு குறிப்பாகவும் செயல்படுகின்றன. சில சொற்கள் சூழ்நிலையே இல்லாமல் பொதுவான பொருளைப் பெற்றும் விளங்கும், அதனை வெளிப்படைப் பொருள் எனக் கூறுகிறோம். சொல் தான் இடம்பெறும் சூழ்நிலை மாற்றம் காரணமாக, வெளிப்படைப் பொருள் தவிர்ந்த வேறு ஒரு பொருளை உணர்த்துவதும் உண்டு. அதையே குறிப்புப்பொருள் என்று கூறலாம்.

வடமொழி இலக்கண நூலார், சொற்கள் பொருள்கொள்ளும் நிலைக்கு, ஆகாங்ஷா (Akanksha). யோக்யதா (yogyata), சந்நிதி (Samnidi) ஆகிய மூன்றையும் காரணங்களாகக் கூறுவர். ஆறுமுக நாவலர் இம்மூன்று நிலைகளை அவாய் நிலை, தகுதி, அண்மை நிலை என்று தமிழிலும் மூவிதமாகப் பகுத்துள்ளார்.

அவாய் நிலை

ஒருசொல் தான் உணர்த்தும் சரியான பொருளை வெளிக் கொணர்வதற்கு அருகே இருக்கும் சொல்லினைச் சார்ந்து நிற்கும். ‘கழுதை, குதிரை’ என்பது ஒரு வாக்கியமாக அமையாது. ஆனால், குதிரை ஓடியது என்பது ஒரு வாக்கியமாக அமையும். ஒரு பெயர்ச்சொல் ஒரு பெயரையோ, வினாவையோ, வினையையோ பயனிலையாகக் கொண்டு முடிந்தால்தான் சரியான பொருளைத் தரும் வாக்கியமாக அமைய முடியும்.

தகுதி

சொற்கள் சேர்ந்து நிற்கும்போது, ஒருசொல் தன்பொருள் விளங்கும்படியாக இருக்கும் நிலையே தகுதி எனப்படும். தகுதி நிலையின் அடிப்படையில் நோக்கும்போது ‘நெருப்பால் நனை’ என்ற வாக்கியம் பொருளற்ற வாக்கியமாகி விடுகிறது. நனை என்பது நீருடன் தொடர்புடையதாதலால், அச்சொல்லுடன் சேர்ந்து நின்று உரிய பொருள்தரும் தகுதி, நீர் என்ற சொல்லுக்கு மட்டுமே உண்டு. எனவே, நெருப்பால் நனை என்ற வாக்கியம் பொருளற்ற வாக்கியமாகிவிடுகிறது.

அண்மைநிலை

சொற்கள் தனிமொழியாக நின்று பொருள் உணர்த்தல் உண்டு. அதனை அடுத்து வரும் அண்மைச்சொல் அப்பொருளை, அவ்விடத்தோடு சார்த்திப் பொருள் புலப்படுத்துதலும் உண்டு. ஒரு சொல்லுக்கு உண்டாகும் பொருள் பொதுவாக அண்மைச் சொல்லாலேயே ஏற்படுகிறது எனலாம். சில இடங்களில், அண்மைச் சொல்லால்தான் பொருள் தெளிவடைகிறது.

‘நீ கொல், கொல் யானை, அது கொல், கொல்லென்று சிரித்தாள்’ – இவற்றுள் கொல் என்பது ஏவல் வினையாகவும், வினையடியாகவும், இடைச்சொல்லாகவும், ஒலிக்குறிப்பாகவும் அமைய அண்மைச் சொற்களே காரணமாக அமைகின்றன.

எ.கா. ‘பெரிய அரசன் நாடு புரந்தான்’

இத்தொடரில் ‘பெரிய’ என்பது அரசன் என்பதையும், ‘நாடு’ என்பது புரந்தான் என்பதையும் சார்ந்து பொருள் புலப்படுத்துகின்றன. பெரிய என்பதற்கும், அரசன் என்பதற்கும் கால இடைவெளியிருந்தால் ஒரு வாக்கியம் என்னும் உணர்வை அவை தராமல் போய்விடும். தொடராக நிற்கும் சொற்களைக் காலதாமதமின்றிச் சொல்வதையே இவ்அண்மைநிலை உணர்த்தும்.

1.3.3 சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்புநிலை சொற்கள் பொருள் உணர்த்தும் தன்மை சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பைப் புலப்படுத்துவதாகும். ஒரு மொழியில் இடம்பெறும் சொற்கள் அனைத்துமே அவ்வவற்றுக்குரிய பொருளை உணர்த்தி நிற்கின்றன. இத்தொடர்பை விளக்க, பொருளியல், பொருளணியியல், பொருண்மையியல், சொற்பொருளியல் என்ற பல்வேறு தொடர்கள் தற்கால மொழியியலில் பயன்படுத்தப்படுகின்றன. இச்சொற்பொருளியல் துறையை மொழியியலின் ஒரு கிளையாகக் கூறலாம்.

ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் மட்டுமன்றிப் பலபொருள்களும் உண்டு. ஒரு பொருளைக் குறிக்கின்ற வடிவமே இங்கே சொல்லாகக் கொள்ளப்படும். அப்பெயரைக் குறிக்கும் வடிவத்திற்கும், அப்பெயர் உணர்த்தும் பொருளுக்கும் உள்ள தொடர்பே இங்குப் பொருள் எனக் கூறப்படுகிறது.

எ.கா : மரம்

இச்சொல் வடிவமானது இச்சொல்லைக் கூறியவுடன் அச் சொல்லுக்குரிய பருப்பொருள் வடிவத்தையே (மரம் என்ற பொருள்) நம் கண்முன் காட்சியாகக் கொண்டு வருகிறது. இச்சொல்லைக் கூறியவுடன் சொல்லினுடைய நேரடியான பொருள் நமக்கு விளங்கு கின்றது. எத்தகைய சூழலும் இச்சொல்லின் பொருளை உணர்த்தத் தேவையானதாக அமையவில்லை. உடனடியாக, நேரடியாக அப்பொருளை நாம் உணர்ந்துவிடுகின்றோம். ஆனால், இதற்கு மாறாக, பல பொருள்களைக் குறிக்கும் ஒரே சொல்லும் உண்டு.

எ.கா : கலை

இச்சொல்லைக் கூறியவுடன் எப்பொருள் என மயக்கம் ஏற்படுகின்றது. ‘கலை’ என்ற இச்சொல் மட்டும் ஏறக்குறைய 55 பொருள்களை உடையதாக விளங்குகிறது. அவை:

அரைப்பட்டிகை; ஆண் மான்; எட்டு விநாடி அல்லது முப்பது காட்டை கொண்ட ஒரு கால நுட்பம்; ஒரு பாகையில் அறுபதில் ஒன்று; கலையென்னேவல்; கல்வி; காஞ்சி மரம்; குதிரைக்கலணை; சந்திரன்; பங்கு; சவ்வு; சீலை; சுறாமீன்; மூச்சின்பகுதி; நூல்; ஒளி; பேயாட்டம்; மகரமீன்; மகர ராசி; மரக்கொம்பு; வண்ணங்களின் ஓரடி; வயிரம்; வித்தியாதத்துவம் ஏழில் ஒன்று; விலங்கேற்றின் பொது; சரீரம்; முசுக்கலை; துர்க்கை; திறமை; கூறு; திங்களின் பதினாறு கூறுகளில் ஒன்று; பிங்கலை; நிலைகுலை; சுருதிகுலை; ஒளி; ஒருதாளப் பிரமாணம்; அறுபத்துநான்கு கலை; மொழி; இரலை; புல்வாய்; வச்சயம் (கருநிறமுள்ள மான் வகை); இடைகலை பிங்கலைகள்; மனத்தைக்கலை; நீக்கு; புணர்ச்சிக்குரிய கரணங்கள்; மரக்கவடு; மேகலை, காஞ்சி என்னும் இடையணிகள்; குலை; மரவயிரம்; வித்தை; ஒரு பொருளின் சிறிய பாகம்; காலப்பிரிவின் ஒன்று; பிறை நிரம்பல், வஞ்சகம்; விலங்கின் ஆண் பெயர்களுள் ஒன்று.

இவ்வாறு, ஒருசொல் பலபொருளாக வழங்கி வருவதை நம்மால் அறிய முடிகிறது. மேற்கூறியவாறு பல பொருளில் வழங்கிவரும் ‘கலை’ என்ற இச் சொல்லுக்குத் தனிப்பொருள் எது? சூழ்நிலையின் துணையைக்கொண்டு பொருள் அறியப்படுவதால் அதற்கென்று தனியாகப் பொருள் ஏதுமில்லை என நம்மால் கூறமுடியாது.

எனவே, சூழலை அடிப்படையாகக் கொண்டே சொற்பொருள் அறியப்படும் நிலையில் இன்றைய சொற்பொருளியல் துறை விளங்கி வருவதை நம்மால் காண முடிகிறது.

‘வா’ என்ற சொல், ஒரு வினைச்சொல் என்பதையும், ஒரு செயலை உணர்த்துவதையும் அறியலாம். ‘கரை’ என்னும் சொல் பெயர்ச்சொல்லாக (ஏரிக்கரை, கடற்கரை போல) நீர்நிலங்களின் எல்லையையும், வினைச் சொல்லாக (உப்பை நீரில் கரை,) ஒரு பொருளைத் திரவத்தில் உருமாற வைப்பதையும் உணர்த்துவதைக் காணலாம். ஆனால், ‘மா’ என்ற சொல் எவ்வகைச் சொல் என்பதை உறுதிபடக் கூற இயலாது. அது உணர்த்தும் பல பொருள்களே இந்நிலைக்கும் காரணமாக அமைகின்றன.

பெயர்ச்சொல்லாக வருமிடத்து ‘மா’ என்ற சொல், மாமரம், மான், யானை, திருமகள், பன்றி, வண்டு என்ற பொருட்களிலும், பெயரடைச் சொல்லாக வருமிடத்துப் பெரிய, கரிய, விரைவு, நிறம் ஆகிய பொருட்களிலும் சூழலுக்கு ஏற்பப் பொருள் வழங்குகிறது.

1.4 சொற்பொருளியல் - இரு அணுகுமுறைகள்

சொற்பொருளியலை ஆயும் போது இரு அணுகுமுறைகளைப் பின்பற்றலாம்.

1. குறிப்பு அணுகுமுறை (Referential Approach)

2. செயற்பாட்டு அணுகுமுறை (Operational Approach)

1.4.1 குறிப்பு அணுகுமுறை ஒரு சொல் தான் உணர்த்தும் பொருளைக் குறிப்பாக வெளிப்படுத்துவது குறிப்பு அணுகுமுறை என்பதாகும்.

குறிப்பு அணுகுமுறைக்கு ஆக்டன் (Ogden), ரிச்சர்ட்ஸ் (Richards) ஆகிய இருவரால் படைக்கப்பட்ட முக்கோணம் உரிய சான்றாக விளங்கும்.

1.4.2 செயற்பாட்டு அணுகுமுறை செயற்பாட்டு அணுகுமுறையில் சொல்லினுடைய பொருள் யாது? என்பதைப் பற்றிய விளக்கம் தேவையில்லை. அச்சொல்லினுடைய உண்மையான பொருள் என்பது, அதைப் பயன்படுத்துபவரைப் பொறுத்தே அமைவதை இவ் அணுகுமுறை சுட்டிக்காட்டுகிறது. அதாவது, ஒரு சொல்லின் பொருள் என்பது பயன்பாடே ஆகும் (The meaning of a word is its use in the language) என்று கூறலாம்.

1.5 சொற்பொருளின் வகைப்பாடு சொற்பொருளை, பின்வருமாறு ஏழு வகைப்பாட்டுள் மேலைநாட்டினர் வகைப்படுத்துகின்றனர்.

(i) கருத்தாக்கப் பொருள் (Conceptual Meaning)

(ii) உணர்த்தல் பொருள் (Connotative Meaning)

(iii) சமூகப் பொருள் (Social Meaning)

(iv) வெளிப்படுத்து பொருள் (Affective Meaning)

(v) பிரதிபலிப்புப் பொருள் (Reflective Meaning)

(vi) இணைப்புப் பொருள் (Collocative Meaning)

(vii) கருத்துப் பொருள் (Thematic Meaning)

கருத்தாக்கப் பொருள் (Conceptual Meaning)

வேறுபடுத்தல் கொள்கை (Principle of contrastiveness), அமைப்பியல் கொள்கை (Principle of structure) ஆகிய இரண்டின் அடிப்படையில் கருத்தாக்கப் பொருளைக் காணலாம்.

வேறுபடுத்தல் கொள்கையின் மூலம் ஓர் ஒலி பெற்றிருக்கும் (சாதகமான) கூறுகளைக் குறிப்பிடுவதைக் காட்டிலும், அது பெற்றிராத (பாதகமான) கூறுகளைக் குறிப்பிட இயலும்.

எ.கா. : 1

/p/ + bilabial – voice + stop – nasal என்று குறிக்கலாம்.

இதைப் போலவே, கருத்தாக்கப் பொருண்மையும் ஆராயப்படலாம்.

எ.கா. : 2

Woman + human – female + adult

Man + human – male + adult

ஒரு வாக்கியத்தின் அமைப்பினை விளக்குவது அமைப்பியல் கொள்கை. அமைப்பியல் ரீதியில் வாக்கியத்தைப் பகுத்தாய்வதற்கு இவ் அமைப்பியல் கொள்கை துணைநிற்கிறது. பொதுவாக மர வரைபடம் (tree – diagram) வாயிலாக இது விளக்கப்படும்.

அடைப்புக் குறியில் பின்வருமாறு தரலாம்!

{ (n0) (man) } { [(is)] [(an)] [(island)] } .

உணர்த்தல் பொருள் (Connotative Meaning)

காலங்காலமாக, சொற்பொருள் உணர்த்து தன்மைகள் வேறுபட்டு வந்துள்ளன. ஒரு மொழி பேசுவோருள்ளும் வேறுபடும் என்பதும் உண்மையே ஆகும்.

உணர்த்தல் பொருள் பற்றிப் பேசுகையில், ஒருவர் பேசும் போது / கேட்கும்போது நடப்பு உலகத்து அனுபவங்களை எவ்வாறு தொடர்புபடுத்துகிறார் என்பதை அறிந்தாக வேண்டும். கருத்தாக்கப் பொருளுக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. உணர்த்தல் பொருளானது மொழிக்கு மட்டுமே உரியதன்று, காட்சிக்கலை (visual art), இசை முதலானவற்றுக்கும் அது உரியதாகும் என்பதை உணர வேண்டும்.

சமூகப்பொருள் (Social Meaning)

மொழிப் பயன்பாட்டின் சூழலை எடுத்துரைக்கும் பொருள் இது. ஒரு மொழியிலான நடையின் பல்வேறு நிலைகள் மூலமாகத் தரப்பட்ட பகுதியின் சமூகப்பொருளை நாம் பகுத்தறிகிறோம். சிலவற்றைக் கண்டதும் கேட்டதும் அவை வட்டார வழக்குச் சொற்கள் என்பதை அறிந்து கொள்கிறோம்.

எ.கா.:

(அ)

வட்டார வழக்கு (Regional Dialect)

- வடார்க்காட்டு வழக்கு திருநெல்வேலி வழக்கு

(ஆ) சமூக வழக்கு (Social dialect) – (க) சாதி வழக்கு பிராமணர் வழக்கு செட்டியார் வழக்கு

- (ங) தொழில் வழக்கு வணிகர் வழக்கு ஆசிரியர் வழக்கு

(இ) காலம் (Time) – 17ஆம் நூற்றாண்டுத் தமிழ்

(ஈ) துறை (Province) – அறிவியல், சட்டம், விளம்பரம்

(உ) தகுதிநிலை (Status) – பேச்சு மொழி, இலக்கிய வழக்கு

(ஊ) வகைதுறை (Modify) – சொற்பொழிவு, சிரிப்புத் துணுக்குகள்

(எ) தனிநபர் (singularity) – ஜெயகாந்தன் நடை; நா.பா. நடை

ஆகிய காரணங்களால், மொழி நடை வேறுபட்டு விளங்கலாம்.

வெளிப்படுத்து பொருள் (Affective Meaning)

சொற்களைக் கேட்போரிடம் (காட்டுகின்ற மனப்போக்கு உள்ளிட்ட) சொற்களைப் பேசுபவரின் தனிப்பட்ட உணர்வுகளையும் மொழி உணர்த்துகிறது. எதைப் பற்றிப் பேசுகிறாரோ அதைப் பற்றிய அவரது உணர்வுகளையும் இது வெளியிடுகிறது.`இதுவே வெளிப்படுத்து பொருள் என்பதாகும்.

எ.கா.:

நோயீர் அல்லீர்நும் கணவன்தன் உயிர்உண்டீர்

பேயீரே நீர்இன்னம் இருக்கப் பெறுவீரே

மாயீர் மாயாவன் பழிதந்தீர் முலைதந்தீர்

தாயீரே நீர்இன்னும் எனக்குஎன் தருவீரே?

(கம்பராமா. அயோத்தியாகாண்டம்.

பள்ளிப்படைப்படலம்.76)

“தாயீரே நீர்! இன்னும் எனக்கு என்தருவீரே?” – என்று பரதன் தன்தாய் கைகேயியை நோக்கிக் கூறியதில் அவன் வெறுப்பைக் காணலாம். இந்த எடுத்துக்காட்டுகளில் பேசுபவரின் மனப்பாங்கு வெளிப்படையாகப் புலப்படுகிறது. இவ்வாறின்றி, நயமுடன் பேசுவதும் காணப்படுகிறது.

எ.கா.:

‘அருள் கூர்ந்து அமைதி காத்திட வேண்டுகிறோம்.’

பிரதிபலிப்புப் பொருள் (Reflective Meaning)

கருத்தாக்கப் பொருள் பலவாக இருக்கும் நிலையில் இது உருவாகிறது.

பத்திரிகைகளில் “கட்சித் தலைவர் அரசியல் துறவு’’ என்று படிக்கிறோம். அப்போது, துறவு என்னும் அன்றாட வழக்கிலான சொல் இங்கு நமக்குத் துணைபுரிகிறது. துறவு என்பது விட்டு நீங்குதல். எனவே இது தெளிவாகப் புரிகிறது. சில சொற்கள் அன்றாட வழக்கில் மிகச் சாதாரணமாகப் பயன்பட்டாலும் சில நேரங்களில் பாலியல் தொடர்பான பொருள்களைச் சுட்டுவதால் அவற்றைப் பேச இயலாத சூழல் நிலவுகிறது எனலாம்.

இணைப்புப் பொருள் (Collocative Meaning)

Pretty, handsome ஆகிய சொற்கள் ‘good-looking’ எனப் பொருள் தருவன; ஆனால், அவை எந்தப் பெயர்ச் சொற்களுடன் வருகின்றன என்பதைப் பொறுத்து வேறுபடலாம்.

தமிழில் எடுத்துக்காட்டுத் தருவதானால், முகவரிச் சீட்டில் (visiting card) கயல்விழி எம்.ஏ என்று இருந்தால், அவர் ஆணா, பெண்ணா என்று ஐயப்பட வேண்டியதில்லை. கயலை விழியோடு ஒப்பிடுவது பெண்களுக்கு மட்டுமே உரியதாகையால், அப்பெயர் பெண்ணையே குறிக்கிறது என்று முடிவு செய்யலாம்.

இவ்வாறு வருவது இணைப்புப் பொருள் தரவல்லது. ஒரு சொல், தனக்கு முன்னும் பின்னும் அமைந்துள்ள சொற்களை ஒட்டி, தன்பொருளை வெளிப்படுத்துகிறது எனலாம். இவ்வாறு லீச் கூறுகிறார். (Collocative meaning consists of the associations a word acquires on account of the meaning of words which tend to occur in its environment) என்கிறார் லீச். (1900:17)

கருத்துப்பொருள் (Thematic Meaning)

பேசுபவர் அல்லது எழுதுபவர் தாம் தரும் தகவல் கூற்றை எவ்வாறு அமைக்கிறார்? எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்? என்பதைப் பொறுத்து அமைவது கருத்துப் பொருளாகும்.

1.5.1 பாமர் கூறும் சொற்பொருளியல் பற்றிய வகைப்பாடு

பாமர் (F.R. Palmer) சொற்பொருளியலை இருவகையாகப் பாகுபடுத்துகிறார். அவை கீழ்வருமாறு:

1. சொற்பொருளியல் அமைப்புக் குறித்து ஆராய்வது.

2. பொருள் (பொருண்மை) குறித்து ஆராய்வது.

சொற்பொருளியலில் ஆய்வது என்பது சொற்களை மட்டுமே குறிக்கும் ஆய்வன்று. தொடர்களையும் வாக்கியங்களையும் ஆய்வதுடன் உணர்வுத் தொடர்பாகவும் ஆய்ந்து, வாக்கியப் பொருளுக்கும், சொற்பொருளுக்கும் இன்றியமையா இடத்தைப் பெறச்செய்தல் வேண்டும்.

1.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை சொற்பொருளியல் குறித்துப் பல செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளைத் தெரிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

சொற்பொருளுக்குரிய பல்வேறு விளக்கங்களையும், சொற்பொருள் குறித்துத் தமிழ் இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள செய்திகளையும் அறிந்து கொண்டீர்கள்.

வழங்கும் சொல்லுக்கும், அச்சொல் உணர்த்தும் பொருளுக்கும் உள்ள தொடர்பு நிலையையும், மொழி பண்பாட்டோடு தொடர்புடைய கூறு என்பதற்கான விளக்கங்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டீர்கள்.

சொற்பொருளியல் குறித்த அணுகுமுறைகளையும், சொற் பொருளியலின் பல்வேறு வகைப்பாடுகளையும், பற்பல சான்றுகளின் மூலம் நீங்கள் நன்கு உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.

பாடம் - 2

சொற்பொருள் கோட்பாடுகள்

2.0 பாட முன்னுரை

சொற்கள் தரும் பொருள் அமைப்பு, அவை வழங்கும் வழக்குப் பற்றி அமைவதாக விளங்குகிறது. இச்சொல்லுக்கு இன்ன பொருள்தான் உரியது என்பதை அறியப் பல்வேறு காரணிகள் பயன்படுகின்றன. சூழ்நிலை முதலான பல்வேறு பண்புகள் சொல்லுக்கேற்ற பொருளைத் தருவனவாக விளங்கும் அமைப்புகளாகும். இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பல்வேறு கோட்பாடுகள் சொற்பொருளை அறிய உதவுகின்றன. தக்க சான்றுகளுடன் இக்கோட்பாடுகள் பல்வேறு அறிஞர்களால் விளக்கப்பட்டுள்ளன. இத்தகைய கோட்பாடுகளே சொற்பொருளியல் குறித்த ஆய்வுகளுக்கும் தக்க வழிகாட்டிகளாக விளங்கி வருகின்றன. குறிப்பாக அகராதி மற்றும் சொற்பொருள் தொகுதிகளின் அமைப்பில் இத்தகைய கோட்பாடுகள் ஒரு தெளிவை ஏற்படுத்தி நிற்கும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

சொற்கள் பொதுவாகச் சூழ்நிலையை ஒட்டிப் பொருளை உணர்த்தும். ஒரு சொல் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் மிகுதியாக வழங்கும்பொழுது அச்சூழ்நிலையோடு அச்சொல் பெரிதும் தொடர்பு கொண்டிருக்கிறது. அதனால் அச்சொல் அச் சூழ்நிலைக்கு உரிய சொல்லாக அமைந்துவிடுகிறது. தன் இயல்பான பொருள் தன்மையை இழந்து அச் சூழ்நிலையோடு தொடர்புடைய பொருளுக்கு முழுதும் உரிமையாகிப் பொருள் மாற்றமடைகிறது. இத்தகைய பொருள் மாற்றத்தை உணரப் பல்வேறு கோட்பாடுகளை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

2.1 சொற்பொருளியலின் பல்வேறு அணுகுமுறைகள்

சொற்பொருளியலில் பொருளை விளக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகளின் விளைவாக உண்டாகிய பல்வேறு கோட்பாடுகளை மொழியியலறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். அவை:

(i) சூழ்நிலைக்கோட்பாடு

(ii) பயன்பாட்டுக் கோட்பாடு

(iii) சரிபார்த்தல் கோட்பாடு

(iv) (அ) உண்மை நிபந்தனைக் கோட்பாடு

(ஆ) பேச்சுசெயல் கோட்பாடு

(v) (அ) கிரைஸ் கோட்பாடு

(ஆ) புறப்பொருட் கோட்பாடு

இவ்வாறு வேறுசிலகோட்பாடுகளும் உள்ளன. இவற்றின் விளக்கங்களை.

2.1.1 சூழ்நிலைக் கோட்பாடு (Contextual Theory) பல்துறை அறிஞர் பெருமக்கள் சொல்லுக்குரிய பொருள் இதுவென விளக்குவதில் வெவ்வேறு வகையினைக் கடைப்பிடித்தனர். அவ்வகையில் சூழ்நிலைக் கோட்பாடு விளக்கப்பட்டுள்ளது.

பழங்குடி மக்களின் மொழிக்குறிப்புத் தொடர்பான ஆராய்ச்சியில் அறிஞர் ஈடுபட்டனர். அப்போது, அம்மொழிக் குறிப்புகளைப் பெற்ற சூழ் நிலைகளை உணராத நிலையில் மொழிபெயர்ப்பில் ஈடுபட முடியாது என உணர்ந்தனர். பழங்குடி மக்களுக்கான சொல்லகராதி ஏதும் இல்லை என்பது மற்றொரு இடையூறு. எனவே சூழ்நிலையின் முக்கியத்துவத்தை அறிஞர்கள் உணரலாயினர். இதன் விளைவாக, பொருளை விளக்க மொழிக்கூறு தோன்றும் சூழல்களை விளக்கவேண்டும் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் போது சமுதாயச் சூழல் முக்கியத்துவம் பெறுகிறது. இதை விளக்க இயலாது போனால் மொழிபெயர்ப்பு இடையூறுக்கு உள்ளாகலாம். ஒரு மொழியில் உள்ள சொற்கள், வாக்கியங்கள் ஆகியவை சூழ்நிலை தழுவியவையே. எனினும் சில சொற்களும் வாக்கியங்களும் சமுதாயச் சூழல்களைப் பெரிதும் சார்ந்திருப்பதால் அவற்றின் பொருளைச் சூழ்நிலையுடன் இணைத்தால்தான் உணர முடியும்.

சூழ்நிலைத் தொடர்புகளின் மூலமாகப் பொருளை விளக்க முடியும் என்பதை விளக்குவதே இக்கோட்பாடு. தொடரமைப்புச் சூழல், தொகுப்பமைப்புச் சூழல், பேச்சுச் சூழல் என்பனவற்றைப் பற்றி பிரித் என்பவர் குறிப்பிடுகிறார். பொருளோடு தொடர்புடையது சூழ்நிலை எனக் கருதுவோர் சூழ்நிலைக் கொள்கையாளர் (contextulalists) எனப்பட்டனர். பொருள் மாறுபடுவதற்குச் சூழ்நிலை காரணமாகலாம் எனக் கூறுவோர் தனித்துவக் கொள்கையாளர் (autonomists) என்றழைக்கப்பட்டனர். சொற்களின் தனிப் பொருள்கள்தான் முதன்மையானவை; சூழ்நிலையின் காரணமாகத் தனிப்பொருள்களிலிருந்து சூழ்நிலைப் பொருள்கள் தோற்றுவிக்கப்படுகின்றன என்பதே இவர்களின் கருத்தாகும்.

சொற்களின் தொடர்பற்ற பல பொருள்களைத் தெளிவாக உணர்வதற்குச் சூழ்நிலை பெரிதும் துணை புரிகிறது.

எ.கா :

(அ) ஒலிச் சூழ்நிலை பலகை: பலகை ; பல கை

(wooden plank)(many arms)

(ஆ) உருபன் இணைப்புச் சூழ்நிலை ஆறு : ஆற்றை ; ஆறை

(ஆறு+ற்+ஐ) (ஆறு+ஐ)

(river) (six)

(இ) இலக்கணச் சூழ்நிலை ஆடு: ஆடு ; ஆடு

(sheep) (dance)

(ஈ) சொல் இணைப்புச் சூழ்நிலை சவுக்கு: சவுக்கு மரம்; சவுக்கடி

(atree) (a whip)

(உ) பேச்சுச் சூழ்நிலை

பொருள்களைத் தனித்தனியே பிரித்துணர (அன்புள்ள நண்பர்க்கு, மனமார்ந்த நன்றி); பேச்சு நடைகளை (கதை நடை, ஏச்சு நடை) விளக்க – வகைப்படுத்த.

சூழ்நிலையைக் கொண்டே குறைமொழியை நிறைவுசெய்து உணர்ந்து கொள்ள முடியும்.

எ.கா: நான் வேலூர்

இத்தொடர்

1. நான் வேலூரைச் சார்ந்தவன்

2. நான் வேலூருக்குப் போகிறவன்

3. நான் வேலூரிலிருந்து வருபவன்.

எனப் பல பொருள்களைத் தரவல்லது.

அதாவது, பயணி பேருந்து நடத்துநரிடம் தான் போகவேண்டிய இடத்தைச் சுட்டவும், எங்கிருந்து வருகிறேன் என்பதைச் சுட்டவும், பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரிடம் தன்சொந்த ஊர் இன்னதென்பதைக் குறிக்கவும், ‘நான் வேலூர்’ எனும் தொடர் பயன்படுகிறது.

ஒரு வாக்கியத்தில் சொல் அமைந்துள்ள நிலையை விளக்குவது சொற்சூழல் ஆகும். ‘சொற்சூழ்நிலை’ (word context)யின் அடிப்படையில் லையன்ஸ் (Lyons) என்பார் சுட்டும் கொள்கையைக் காண்போம். ஒரு மொழி பேசுபவரிடம் சொற்களின் பொருள் பற்றிய உணர்வு எவ்வாறு பொதிந்து கிடக்கிறது என்பதை விளக்குவதற்கு அவர் சொற்சூழ்நிலையை அடிப்படையாகக் கொள்கிறார். ஒரு சொல்லின் பொருள் என்பது தொடர்புடைய சில சொற்களின் கலவை என்கிறார். மொழி பேசுவோரிடம் பொருள் உணர்வு (semantic intuition) காணப்படுவதாக அவர் கருதுகிறார். ஒரு சொல்லோடு பொருளில் ஒத்த வேறு சில சொற்களையும், எதிர்ப்பொருள் கொண்ட வேறு சில சொற்களையும், பொருள் பரப்பில் (semantic range) விரிந்த அல்லது முக்கிய சில சொற்களையும் சுட்டிக்காட்ட இயலும்.

2.1.2 பயன்பாட்டுக் கோட்பாடு (use theory) பொருளை உணர்ந்து கொள்வதற்கு மொழிக்கூறின் பயன்பாட்டை உணர வேண்டும் என்பதுதான் பயன்பாட்டுக் கோட்பாட்டின் அடிப்படை.

ஒரு மொழிக்கூறின் பொருளை மற்றவர்க்கு உணர்த்துவதற்குப் பின்வரும் உத்திகள் கையாளப்படுகின்றன:

(அ) மொழிபெயர்ப்பு முறை

(ஆ) சுட்டல் முறை

(இ) சூழ்நிலைகாட்டு முறை

(ஈ) எடுத்துக்காட்டு விளக்க முறை

ஒருமொழிக்கூறு வெவ்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிய, ‘பெயர்ச்சிச் சோதனை’ பயன்படலாம். ஆங்கிலத்தில் ‘is’ எனும் சொல் இரண்டு வகையில் பயன்படுவதற்கு உல்மன் காட்டும் எடுத்துக்காட்டு இதோ.

Twice two is four = Twice two equals four ஃ is = equals.

Rose is red Rose equals red ஃ is equals.

மொழிக்கும் மொழிக்கூறுகளுக்கும் அக அமைப்பு, புற அமைப்பு என இரண்டு அமைப்புகள் காணப்படும். இவற்றில் அக அமைப்பு முக்கியமானது. அக அமைப்பில் இரண்டு கூறுகள் வேறுபடுமேயானால் அவை வேறுபட்டவை ஆகும். இதை மொழிக் கூறுகளிலிருந்து பெறப்படும் தர்க்க முடிவுகளின் (logical implication) மூலம் அறியலாம். ஆங்கிலத்தில் grey, little என்ற சொற்கள் பெயரடைகள்; அவை அக இலக்கண அமைப்பில் வேறுபடுவதை, அச்சொற்கள் இடம்பெறும் வாக்கியங்கள் புலப்படுத்தும் தர்க்க முடிவிலிருந்து அறிந்து கொள்ளலாம் என்கிறார் வெல்ஸ் (Wells). அவர் தரும் சான்றை நோக்குவோம்.

எ.கா:

An elephant is an animal A grey elephant is a grey animal

An elephant is an animal A little elephant is a little animal

மொழிக்கூறின் பயன்பாட்டை இலக்கணம், தர்க்கம், பெயர்ச்சி, சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம். இவற்றில் சூழ்நிலைப்பயன்பாடு மிக முக்கியமானது. ஒரு மொழிக்கூறு பயன்படுத்தப்படும் போது, எந்தச் சூழலில் அது இடம்பெறுகிறது என்பதைக் காணவேண்டும். வெல்ஸ் என்பார் ‘numerous’ எனும் பெயரடையின் பயன்பாட்டைப் பின்வருமாறு விளக்குகிறார்:

(அ) numerous என்ற பெயரடை big எனும் பெயரடையை ஒத்துள்ளது.

எ.கா:

Enemies of the people are numerous.

Enemies of the people are big.

என்று பெயர்ச்சிச் சோதனை மூலம் இது தெரிய வருகிறது.

(ஆ) இவ்விரு சொற் பயன்பாடுகளும் எல்லாச் சூழ்நிலைகளிலும் ஏற்றன எனக் கொள்ள முடியாது.

எ.கா:

Enemies of the people are big Some enemies of the people are big.

Enemies of the people are numerous Some enemies of the people are numerous.

(இ) ஒன்றினை நிலை நாட்டுவதற்காகவே வாக்கியத்தில் numerous என்ற சொல் பயன்படுத்தப்படுகிறதே தவிர சாதாரணமாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

Enemies of the people are numerous.

(ஈ) பகைவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாகத் தெரிவித்தாலும் தெளிவற்றிருப்பது உணர முடிகிறது.

ஆதலின், numerous என்னும் சொல் சூழ்நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வகையில் பயன்படுவதை உணர முடிகிறது. நான்கு பக்கக் கட்டுரையில் 40 அச்சுப்பிழை இருந்தால் அது numerous, நானூறு பக்க நூலில் 40 அச்சுப்பிழை இருந்தால் அதை numerous என்று கூறுவதில்லை அல்லவா? சுருங்கக் கூறின், பொருள் என்பது சொல்லின் பயன்பாட்டில் வெளிப்படும். அந்தப் பயன்பாடு இலக்கண (அக, புற), தர்க்க, பெயர்ச்சி, சூழ்நிலை முதலான நிலைகளில் எல்லாம் வெளிப்படும் என்று கூறலாம்.

2.1.3 சரிபார்த்தல் கோட்பாடு (Verification Theory) மோரிஸ் (Morris.C) என்பார் வெளியிட்ட கோட்பாடு இது. பயன்பாட்டுக் கோட்பாடு வெளியிடப்படுவதற்கு முன்பு வெளியிடப்பட்ட கோட்பாடு இது.

ஒரு வாக்கியத்தின் பொருளை விளக்க அந்த வாக்கியம் உண்மையா பொய்யா என்பதைச் சரிபார்ப்பதற்கு (நிரூபிப்பதற்கு) உரிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என்பது இக்கோட்பாடு.

இவ்வாறு நிரூபிக்க இரண்டு முறைகள் பயன்படுகின்றன.

(1) தர்க்க ரீதியிலானது (logical method of verification)

(2) செயல் முறையிலானது (empirical method of verification)

(1) தர்க்க ரீதியிலான வழிமுறை

மொழிக்கென அமைந்த தர்க்க விதிகளின் அடிப்படையில் நிரூபிப்பது இது. தர்க்க அமைப்பு விதிக்கு உட்பட்டிருந்தால் அந்த வாக்கியத்தில் பொருள் உண்டு. இல்லையெனில் பொருளற்றது.

எ.கா:

பாரி நாளை வந்து விட்டான்

இது பொருளற்றது, தர்க்க ரீதியில் முரண்பட்டது.

பாரி நேற்று வந்து விட்டான்

பாரி நாளை வருவான்

என்றிருந்தால் சரியானவை என நிரூபிக்கப்படும்.

(2) செயல்முறை நிரூபண வழிமுறை

இம்முறை அனுபவத்தின் அடிப்படையிலானது.

எ.கா:

(1) நான் மிதிவண்டியைத் தூக்கினேன் – மெய்யானது

(2) ‘நான் ஸ்கூட்டரைத் தூக்கியன் – லிப்டின் (lift) உதவியால்’ என்ற நிபந்தனையுடன் மெய்யானது!

(3) நான் வீட்டைத் தூக்கினேன் – நிபந்தனையின் துணையுடனும் மெய் என நிரூபிக்க இயலாது என்பதால் பொருளற்ற வாக்கியமாகிறது.

கட்ஸ் என்பார் குறிப்பிடும் பொருளடிப்படை முரண்பாட்டு வாக்கியங்கள் பற்றி இங்குக் குறிப்பிடுதல் பொருத்தமாகும்.

எ.கா:

* என் தங்கையின் கணவர் இன்னும் திருமணமாகாதவர்.

இவ்வாக்கியத்தின் ஒரு பகுதி ஒருவரை (என் தங்கையின் கணவர்) திருமணமானவர் என்கிறது. இரண்டாம் பகுதி அவரைத் திருமணமாகாதவர் என்கிறது. எனவே பொருளடிப்படையில் இவ்வாக்கியம் முரண்பட்டுக் காணப்படுகிறதல்லவா?

மோரிசின் சரிபார்த்தல் கோட்பாடு (பயன் நிரூபணக் கோட்பாடு), சோதனை முறைப் பொருட் கோட்பாடு (Experimental theory of meaning), அனுபவ அறிவுசார் பொருள் கோட்பாடு (Experiential theory of meaning) எனவும் வழங்கப்படுகிறது.

2.2 உண்மை நிபந்தனைக் கோட்பாடும் பிறகோட்பாடுகளும்

ஒரு வாக்கியத்தின் பொருளை விவரிப்பதற்கு அவ்வாக்கியம் உண்மையானது என்பதற்கான நிபந்தனைகனை விவரித்தாக வேண்டும் என்பதுவே தார்ஸ்கி (Tarski) வகுத்த இக்கோட்பாடு எனலாம்.

எ.கா:

(அ) காகம் கருப்பு

என்ற வாக்கியம் பொருளுடையதானால் உண்மையில் காகம் கருப்பு நிறமாயிருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

(ஆ) கண்ணன் புலியைக் கொன்றான்

இது உண்மை எனக் கருதப்படுவதற்குப் புலியைக் கொல்லக் கண்ணன் எதையோ செய்தான் என்ற போதுமான நிபந்தனையும் தேவை.

இக்கோட்பாட்டின்படி உண்மை என்பது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.

(i) பகுப்பாய்வு உண்மை (Analytical truth)

எ.கா:

(அ) வேலன் படித்தவனாயிருந்தால், அவனால் புத்தகம் படிக்க முடியும்.

(ஆ) அவன் மணமானவன் எனில், ஒரு பெண்ணைக் மணந்திருப்பான்.

(இ) அவள் விதவை எனில், கணவனை இழந்தவள்.

இவ்வாக்கியங்களின் இரு பகுதிகளிலும் இயக்கம் காட்டும் பொருள் விதிகளால் இவ்வாக்கியங்களின் உண்மைத் தன்மை நிர்ணயிக்கப்படுகிறது.

(ii) தற்செயலான உண்மை (contingent truth)

எ.கா:

வேலன் ஒரு தலைமுடி கூட இல்லாதவன், ஆனால் வழுக்கையல்லன்.

இது, பகுப்பாய்வின் அடிப்படையில் பொய்யானது. ஆனால், பொய்முடி (wig) வைத்திருப்பதால் வழுக்கையல்லன் என்ற சூழ்நிலை கொண்டு மெய் எனலாம். தலைமுடியில்லாதவன் வழுக்கையன். தலைமுடியோடு காட்சி தருபவனைப்பற்றிய உண்மையைக் கூற இவ்வாறு சொல்ல வேண்டியிருக்கிறது.

(iii) தர்க்க உண்மை (logical truth)

எ.கா:

மனிதர் அனைவரும் மாண்டுபோவார்

சாக்ரடீஸ் ஒரு மனிதர் ; எனவே சாக்ரடீஸ் மாள்வார்.

தர்க்க ரீதியிலான முதல் வாக்கியத்தின் அடிப்படையில் சாக்ரடீஸ் மாள்வார் என்ற வாக்கியத்தின் தர்க்க உண்மை உறுதிப்படுத்தப்படுகிறது.

உடன்பாட்டு வாக்கியங்களின் பொருளை உணர்த்தவும் விளக்கவும் பயன்படும் உண்மை நிபந்தனைக் கோட்பாடானது, வினா, ஆணை, கூற்று ஆகிய வாக்கியங்களின் பொருளை விளக்க இயலாது என்ற குறைபாட்டினை உடையது. இக் குறைபாட்டினை நீக்கும் வகையில் பேச்சு – செயல் கோட்பாடு எழுந்தது.

2.2.1 பேச்சு – செயல் கோட்பாடு (Speech Act Theory) பயன்பாட்டுக் கோட்பாட்டைத் (use theory) தழுவி உருவான கோட்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். உண்மை நிபந்தனைக் கோட்பாட்டின் குறைபாட்டை நீக்கவந்த இக்கோட்பாடானது ஒரு வாக்கியத்தின் பொருளைப் பின்வரும் ஏழு கூறுகளுடன் தொடர்புபடுத்தவல்லது

(i) வாக்கியத்தின் பயன்பாடு (use)

வாக்கியத்தின் பொருளானது, அதன் பயன்பாட்டில் காணப்படும் ஒன்று என்பதனை ஏற்கெனவே விவரித்துள்ளோம். சூழ்நிலை அடிப்படையில் பொருள் உணர்த்தப்படுகிறது என்பது தெளிந்த உண்மை. பயன்பாட்டில் குறிப்புப் பயன்பாடு (referential use), சூழ்நிலைப் பயன்பாடு (contextual use) ஆகியனவும் அடங்கும்.

(ii) வாக்கியத்தின் நுட்பப் பயன்பாடு (technical use)

எ.கா :

அது ரோசாப்பூ – ‘பூ’ பெயர்ச்சொல்

ரோசா பூத்தது – ‘பூ’ வினைச்சொல்

இத்தகைய பயன்பாட்டை நுட்பப் பயன்பாடாகக் கொள்வதில் இடர்ப்பாடு உண்டு.

(iii) வாக்கியத்தின் பேச்சு – செயல் பயன்பாடு (Speech act use of a sentence)

ஒரு வாக்கியமானது பேச்சு – செயல்களுக்குப் பயன்படும்போது நுட்பப் பயன்பாடு கொண்டது என்பது புலனாகிறது.

வெறும் உச்சரிப்புச் சொல் (locutionary act), உணர்த்து உச்சரிப்புச் செயல் (illocutionary act), விளைவு உச்சரிப்புச் செயல் (perlocutionary act) எனும் மூவகைப் பேச்சுச் செயல்களையும் நடத்துவதற்கு வாக்கியம் மிகவும் பயன்படுகிறது. மொழி, பேசுவோர், கேட்போர் என்பனவற்றின் அடிப்படையில் இம்மூன்று செயல்களும் நிகழ்கின்றன. பேசுபவரையே இவை மூன்றும் சார்ந்துள்ளன என்பது சுட்டத்தக்கது. வாக்கியத்தை வாயிலிருந்து வெளிப்படுத்துவது வெறும் உச்சரிப்புச் செயலாகும். தமது மனநிலையை உணர்த்துவது உச்சரிப்புச் செயல். கேட்பவர் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவது விளைவு உச்சரிப்புச் செயலாகும்.

(iv) வாக்கியத்தின் உணர்த்து உச்சரிப்புப் பயன்பாடு (illocutionary act use)

விளைவினை எதிர்பார்க்காமல் நிகழ்த்துவது உணர்த்து உச்சரிப்புச் செயலாகும். வாக்கியத்தின் பொருளை உறுதிப்படுத்துவதில் இதற்கு முழுப் பங்குண்டு. குறிப்பாகவோ வெளிப்படையாகவோ வாக்கியத்தின் உதவியினால் இந்தச் செயலை நிகழ்த்தலாம்.

எ.கா:

(அ) நான் செய்ததை ஒத்துக்கொள்கிறேன்

(ஆ) நாம் ஊருக்குப் போகலாம் என்று நான் கூறுகிறேன்.

கூறு, வெளியிடு முதலான வினைச் சொற்கள் இச்செயலைப் புலப்படுத்தி நிற்கும். இச்செயலை வெளிப்படையாக நிகழ்த்தப் பயன்படும் வாக்கியங்கள் கூற்று வாக்கியங்கள் ஆகும்.

எ.கா:

அங்கு நான் வருவேன் என உறுதியளிக்கிறேன்

(நான் கட்டாயம் வருவேன் என்பதை உறுதிப்படுத்தும் வாக்கியம் இது).

(v) வாக்கியத்தின் உணர்த்து தன்மை (illocutionary act potential)

ஒவ்வொரு வாக்கியத்துக்கும் உணர்த்து தன்மைகள் சில உண்டு. வாக்கியத்தின் பொருள் என்பது, வாக்கியத்தின் உணர்த்து தன்மை எனலாம். அதாவது, ஒரு உணர்த்து தன்மை கொண்ட இரு வாக்கியங்களை, ஒரே பொருளை உணர்த்தும் வாக்கியங்களாகக் கொள்ளலாம்.

இரு சொற்களை இடம் மாற்றி அமைத்த பின்பும் அச்சொற்கள் உள்ள வாக்கியங்களின் பொருள் மாறுபடாது இருக்குமேயானால் அந்தச் சொற்களிரண்டும் ஒரே பொருள் கொண்டனவாகக் கொள்ளப்படும்.

(vi) வாக்கியத்தின் உணர்த்து தன்மைக்குரிய தக்க காரணங்கள் (condition of illocutionary act potential)

உணர்த்து உச்சரிப்பு வாக்கியங்கள் உருவாவதற்குத் தக்க காரணங்கள் இருந்தாக வேண்டும். அவை பொது, குறிப்பு என இரு வகைப்படுத்தப்படும்.

எ.கா :

நான் கூட்டத்திற்கு நாளை தவறாது வருவேன்.

இவ்வாக்கியத்தின் பின்னணியை, அதற்கான காரணங்களைக் கொண்டு ஆய்வோம்:

(அ) பேசுபவரும் கேட்பவரும் ஒரு மொழி பேசுவோர்.

(ஆ) இது பொதுவான காரணம்.

(இ) பேசுபவர் கூட்டத்திற்குப் போவார்

(ஈ) இடையூறு இருந்தாலும் தவறாது போவார்

(உ) கேட்பவர் எதிர்பார்ப்பார்

(ஊ) பேசுபவர் கூட்டத்திற்குப் போகவில்லையெனில் கேட்பவர் வருத்தப்படலாம்.

இவையனைத்தும் குறிப்பான காரணங்கள்.

எனவே, வாக்கியத்தைப் பயன்படுத்தும்போது பேசுபவர் கொண்டிருக்கும் உணர்த்து உச்சரிப்புச் செயலின் தக்க காரணங்களும் வாக்கியத்தின் பொருள் என்றாகலாம்.

(vii) வாக்கியத்தின் கொண்ட கருத்தும் (presupposition) நிலைநாட்டல் கருத்தும் (assertion)

உணர்த்து உச்சரிப்புச் செயலில் – கொண்ட கருத்து, நிலைநாட்டல் கருத்து எனும் இரண்டு பகுதிகள் இருப்பதாகச் சில மொழியியலாளரும் தத்துவ அறிஞர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர். அதாவது ஒரு கருத்தை வெளியிடுதல், நிலைநாட்டல் எனும் இரண்டு செயல்களில் பேசுபவர் ஈடுபடுகிறார்.

எ.கா:

1. வளவன் திருடியது வானொலிப் பெட்டியை,

(a) கொண்ட கருத்து வளவன் எதையோ திருடினான்

(b) நிலைநாட்டல் எதை வளவன் திருடினானோ அது வானொலிப் பெட்டி.

2. வானொலிப் பெட்டியைத் திருடியது வளவன்.

(அ) கொண்ட கருத்து யாரோ வானொலிப் பெட்டியைத் திருடினார்கள்

(ஆ) நிலைநாட்டல் கருத்து வானொலிப் பெட்டியைத் திருடியது யாரோ அவனே வளவன்.

எனவே, ஒரு வாக்கியத்தின் பொருளை – கொண்ட கருத்து, நிலைநாட்டல் கருத்து எனும் இரண்டின் கூட்டாகக் கொள்ளலாம்.

2.2.2 கிரைஸ் கோட்பாடு (Grice’s theory) பேச்சு-செயல் கொள்கையில் ஆஸ்டின் குறிப்பிடும் சிறப்பு நிலைமை, ஆயத்த நிலைமை, உத்தம நிலைமை என்ற மூன்று நிலைமைகளின் விரிவான விளக்கமாகக் கிரைஸ் (Grice) கோட்பாடு உருப்பெற்றது. பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம் நிகழும் போது எவ்வாறெல்லாம் மொழி பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குவது பயன்வழியியல் (pragmatics). இவ்வடிப்படைக் கருத்தினைப் பின்பற்றி உரையாடல் கோட்பாட்டினை (theory of conversation) கிரைஸ் உருவாக்கினார்.

இக்கொள்கை இரு பிரிவுகளை உள்ளடக்கியது.

(i) பேசுவோர் பொருள் பற்றிய விளக்கம் (definition of speaker’s meaning)

(ii) பேசுவோருக்கும் கேட்போருக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பை விளக்க உதவும் உரையாடல் நியதிகள் (maxims)

ஒத்துழைப்புக் கோட்பாடு (The Cooperative Principle) எனவும் இது அழைக்கப்படுகிறது.

வெளிப்படுத்தும் கூற்றில் பேசுபவர் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அதன் காரணமாக, கேட்பவரும் மிகுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும் என்கிறார் கிரைஸ். சூழலில் ஒரு கூற்றின் உண்மையும் அதைப் பயன்படுத்துவோர் உணர்த்த விரும்பும் பொருண்மையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. உண்மையின் அடிப்படையிலான சொற்பொருளியலின் விளக்கத்திற்கு ஏற்புடையதாக இல்லாமல் முரண்பட்டதாக கிரைஸின் கோட்பாடு அமைந்திருப்பதாக ரூத் கெம்ப்சன் (Ruth M. Kempson) சாடுகிறார்.

எ.கா:

பேசுபவர் : செழியன் நேற்று அலுவலகம் வந்தாரா?

கேட்பவர் : மலர்விழி நேற்று அலுவலகம் வரவில்லை

இதில், பின்னது குறிப்பாக உள்ளுறையாக, செழியன் வரவில்லை என்பதை உணர்த்துகிறது. இத்தகைய குறிப்பு உள்ளுறை பற்றி கிரைஸ் பேசுகிறார்.

ஒத்துழைப்புக் கொள்கையில் அவர் வகுக்கும் உரையாடல் நியதிகள் பின்வருமாறு:

(1) அளவு (quality)

(அ) உரையாடலில் தேவையான தகவலை மட்டும் தருக.

(ஆ) தேவைக்கு அதிகமாகத் தகவல் தருவதைத் தவிர்த்திடுக.

(2) பண்பு (quality)

(அ) பொய் என்று உணர்ந்தால் அதைப் பேச வேண்டாம்.

(ஆ) தேவையான ஆதாரம் ஏதுமின்றிப் பேச வேண்டாம்.

(3) உறவு (relation) ஏற்புடையதை மட்டும் பேச வேண்டும்.

(4) தன்மை (Manner) தெளிவாகக் கூற வேண்டும்.

மறைமுகமாகவோ இருபொருள்படும்படியோ இல்லாமல் சுருக்கமாக, முறையாகப் பேச வேண்டும்.

சுருங்கக் கூறின், கூற்றிலிருந்து உள்ளுறைப் பொருண்மையைக் கண்டறிவதற்கு முன்பு கூற்றின் செம்பொருண்மை, உரையாடற் சூழல், பேசுவோருக்கும் கேட்போருக்குமிடையே நிலவும் புரிதல்தன்மை, நம்பிக்கை, உரையாடல் நியதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கிரைஸ் கருதுகிறார்.

2.2.3 புறப்பொருட் கோட்பாடு (Object Theory) மொழியின் கூறுகள், வெளியுலகப் பொருள்களைக் குறிப்பதன் மூலம் தன் பொருளைப் பெறுகின்றன எனக் கிரேக்க தத்துவவியலாளர் வெளிப்படுத்தியுள்ளனர். வெளியுலகக் கூறுகளைக் குறிக்கப் பயன்படும் ஒரு கருவியே மொழி என்று அவர்கள் கருதினர். இவர்கள் அண்டப் படைப்புக் கோட்பாட்டாளர் (cosmologists) என்றழைக்கப்பட்டனர்.

இதன்படி, சொற்பொருளை உணர வேண்டுமானால் அது சுட்டும் வெளியுலகப் பொருளை அறிய வேண்டும்.

எ.கா:

(அ) மரம் – இச்சொல்லின் பொருள் அச்சொல் சுட்டுகின்ற வெளியுலகப் பொருளான மரம்.

(ஆ) கருப்பு – இச்சொல்லின் பொருள் அச்சொல் சுட்டுகின்ற வெளியுலகப் பொருளின் குணமாகிய கருப்பு (தன்மை).

(இ) நட – இச்சொல்லின் பொருள் – நடப்பதாகிய செயல்.

(ஈ) பின்னல் – இச்சொல்லின் பொருள் – வெளியுலகப் பொருள் இரண்டு நிற்கும் இடங்களைக் காட்டும் தொடர்பு.

இவ்வாறு ஒரு மொழிக்கூறின் பொருளை வெளியுலகக் (புற) கூறுகளுடன் ஒப்புமைப்படுத்தும் கோட்பாடு புறப்பொருட் கோட்பாடு என்று வழங்கப்படும். இக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள இயலாது என்பதற்குப் பின்வரும் இடையூறுகள் / தடங்கல்கள் காரணமாகின்றன:

(அ) உடைய, ஐ போன்ற வேற்றுமை உருபுகள் எந்த வெளியுலகப் பொருளையும் சுட்டவில்லை என்ற போதிலும் அவை பொருள் கொண்டவை.

(ஆ) மரம் என்ற சொல்லின் பொருள் என்ன? என்று ஒருவர் கேட்பாரே தவிர இராவணன் என்ற சொல்லின் பொருள் என்ன? என்று கேட்க இயலாது.

(இ) ‘எங்கள் நாய்’ ‘பப்பீ’ எனும் இரண்டு கூறுகளும் ஒருவர் வீட்டில் வளரும் நாயைக் குறிக்கலாம். ஆனால், அவையிரண்டும் ஒரே பொருள் கொண்டவை என்று கருத முடியாது.

(ஈ) நான் எனும் சொல் அ, ஆ, எனும் இருவரால் பயன்படுத்தப்படும் போது பேசுபவர்களான அ, ஆ என்பவர்களைக் குறிக்கும். இவ்வாறு இரண்டு வெளியுலகப் பொருள்களைக் குறிப்பதால் நான் எனும் சொல்லைப் பலபொருள் ஒருமொழி என ஏற்றுக்கொள்ள இயலாது.

(உ) வீடு எனும் சொல் குறிப்பிட்ட வெளியுலகப் பொருளைக் குறிப்பதாகக் கொண்டால் உலகில் உள்ள தனித்தனி வீடுகளையும் குறிப்பதற்குத் தனித்தனிச் சொற்களைப் பயன்படுத்த நேரிடும். அவ்வாறில்லாமல் வீடுகளின் தொகுதி (set) என்பதை வீடு எனும் சொல் குறிப்பதாகக் கொண்டால், ‘இந்த வீடு மஞ்சள் நிறம்’ ‘இந்த வீட்டுத் தொகுதி மஞ்சள் நிறம்’ எனும் வாக்கியங்களை ஒரே பொருள்தரும் இருகூறுகள் எனக்கருதி விடுவோமே!

மேற்கூறிய குறைபாடுகளைக் களையும் வகையில், கண்ணுக்குப் புலனாகும் வெளியுலகப் பொருள்கள் மற்றும் அனைத்தையும் சுட்டும் பொதுப் பொருள் எனும் இரண்டு வகையினை, சொற்கள் சுட்டுவதாகச் சிலர் கருத்துத் தெரிவித்தனர். இப்பாகுபாடானது எண்ணக் கோட்பாட்டின் தோற்றத்திற்கு வித்திட்டது.

2.3 எண்ணக் கோட்பாடும் பிறகோட்பாடும் (Ideational Theory)

எண்ணங்களைச் சுட்டுவதற்கு மொழிக்கூறுகள் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வாறு சுட்டப்படும் எண்ணங்கள் மொழிக்கூறுகளின் பொருள் ஆகும் என்பதை எண்ணக் கோட்பாடு விளக்குகிறது.

எண்ணக் கோட்பாடானது கீழ்க்காணுமாறு இருவகைப் படுத்தப்படுகிறது:

(i) மனஉருக் கோட்பாடு (Mental image theory)

கண்ணால் காணுகின்ற ஒரு பொருளை (object), பிம்பமாக (image) நிறுத்தும் தன்மை படைத்தது மனித மனம்.

எ.கா: பறவை

ஒரு பறவை நம் கண்ணில்படுகிறது. இது பறவைப் பிம்பமாக மனத்தில் உருவெடுக்கிறதல்லவா? இவ்வாறே எந்தப் பொருளையும் பிம்பமாக நிலைநிறுத்தும் ஆற்றல் படைத்தது மனம். இந்தப் பிம்பங்கள், மன உருக்கள் (mental images) ஆகும். ஒரு மொழிக்கூறின் பொருள் (meaning) என்பது அந்த மொழிக்கூறோடு தொடர்புபடுத்தப்படும் மனஉரு ஆகும் என்பதே மனஉருக் கோட்பாட்டின் அடிப்படை.

இக்கோட்பாடானது, மொழிக்கூறுகளின் பொருளை மனத்தில் நிலைபெறச் செய்வதால் புறப்பொருட் கோட்பாட்டை (object theory)க் காட்டிலும் மலோனது. மொழிக் கூறுகளுக்கும் பொருள் தருவதில் மனிதனின் பங்கு இன்றியமையாதது என்றும், மொழிக் கூறுகளின் பொருளானது வெளிப்படையானது அல்ல என்றும் இக் கோட்பாடு உணர்த்துகிறது.

இக்கோட்பாட்டிற்கு எதிரான வாதங்கள் வருமாறு:

எ.கா:

(அ) பூ

இச்சொல் ஒருவர் மனத்தில் மல்லிகையின் பிம்பத்தையும் மற்றொருவரின் மனத்தில் சாமந்தியின் பிம்பத்தையும் உருவாக்கலாம். இரண்டு மன உருக்களைச் சுட்டுவதால் பூ என்ற சொல்லைப் பலபொருள் ஒருமொழி எனக் கொள்வதில்லை.

(ஆ) அத்தான், ஆதவன், அக்காள் கணவன்

இம்மூன்று மொழிக்கூறுகளும் ஒருவர் மனத்தில் ஒரே மன உருவைத் தோற்றுவிக்கலாம். ஆனாலும், அக்கூறுகள் ஒரே பொருளைக் குறிப்பனவாகக் கருதுவதற்கில்லை.

மேற்குறிப்பிட்டவற்றால் பொருளும் மன உருக்களும் வெவ்வேறானவை என்பது புலனாகிறது.

(ii) எண்ணக் கோட்பாடு

நாம் பல நாய்களைக் காண்கிறோம். நிறம், இனம், உடலமைப்பு முதலாயவற்றில் அவை வேறுபட்டிருக்கலாம். அவற்றின் பிம்பங்கள் நமது மனத்தில் உருப்பெறுகின்றன. இந்தப் பல்வேறு பிம்பங்களிலும் சில ஒற்றுமைகளைக் காண்கிறோம். இத்தகைய ஒற்றுமைக் கூறுகளை இணைத்து ஒரு பொது எண்ணம் உருவாக்கப்படுகிறது. அது நாய் எனும் சொல்லுடன் இணைக்கப்படுகிறது. பிறகு அதுவே அச் சொல்லின் பொருளாக மாறுகிறது. இதுதான் எண்ணக் கோட்பாட்டின் கருத்தாகும்.

சொற்கள் சுட்டுகின்ற எண்ணங்களில் அவற்றின் பொருள் படிந்து கிடப்பதாகவும், அனுபவத்தின் வாயிலாக எண்ணங்கள் பெறப்படுவதாகவும் தத்துவவியலாளர் கூறுவர்.

2.3.1 பிற கூறு சுட்டல் பொருட் கோட்பாடு

ஒருமொழி பேசும் மக்களிடம் பொதுவாகவே மொழி பற்றிய அறிவு (பொருளறிவு உட்பட) இடம் பெற்றிருக்கும். இதனால்தான் மொழிபேசுவோர்,

(i) பொருள் உடைய வாக்கியங்கள் எவை என்று பொருளற்ற வாக்கியங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடிகிறது.

எ.கா:

அவள் தயிரைக் குடித்தாள் : அவள் தயிரைக் கசக்கினாள்.

அவன் மழையில் நனைந்தான் : அவன் மழையில் காய்ந்தான்.

(ii) தெளிவில்லாத, குழப்பம் உண்டாக்கும் மயக்க வாக்கியங்களைக் கண்டறிய முடிகிறது.

எ.கா:

அது பழைய மாணவியர் விடுதி

இறந்த இளங்கோவனின் தந்தை நல்லவர்.

(iii) இலக்கணச் செம்மையான வாக்கியங்களைக் கூட பொருளடிப்படையில் தவறு என்று அறிய முடிகிறது. அதாவது இலக்கண அமைப்பில் முழுவதும் சரியான வாக்கியங்கள்கூட பொருளடிப்படையில் தவறாகி விடுகின்றன.

(எ.கா.)

(அ) நிறமற்ற பச்சைக் கருத்துக்கள் சினமுற்றுத் துயில்கின்றன. Colourless green ideas sleep furiously (Chomsky)

(ஆ) வெள்ளைக் காகிதத்தின் மனத்தில் சிகப்பு எண்ணங்கள் நீரைக் குடித்தன. (செ. சண்முகம்)

தவிர, மொழி பேசுவோர், ஒன்றின் பொருளை உணர்த்த இன்னொன்றைச் சுட்டிக்காட்டுவதை இயல்பாகக் கொண்டுள்ளனர்.

பெற்றம் = பசு

தமக்கை = அக்காள்

இல்லம் = வீடு

இவ்வாறு சுட்டுவதைப் பிற குறி சுட்டல் முறை என்று கூறுகின்றனர். இதையே இக்கால மொழியியலாளர் பிற கூறு சுட்டல் பொருட் கோட்பாடு என்கின்றனர்.

ஒரு கூறின் பொருளைச் சுட்டிக்காட்ட ஒருதனிச் சொல்லையோ, இரு சொற் கூட்டத்தையோ, பலசொற்களின் கூட்டத்தையோ பயன்படுத்தலாம்.

எ.கா:

அம்மா = தாய்

சகோதரன் = உடன் பிறந்த ஆண்

ஒட்டகம் = பாலைவனத்தில் (வாழும்)

பாக்குவரத்துக்குப் பயன்படும் விலங்கு.

ஒரு சொல்லின் பொருளை உணர்த்த அதற்கு ஈடான வேறொரு சொல்லை அகராதி பயன்படுத்துவதுண்டு. அவை ஒரே மொழிச் சொற்களாக இருக்கலாம்.

எ.கா:

பெண்கள் – மகளிர்

கடல் – ஆழி

பிறமொழிச் சொற்களாக இருக்கலாம்.

எ.கா:

காலதர் – window

திண்ணம் – strength

ஒரு சொல்லின் பொருளைக் குறிக்க, சில சொற்றொடர்கள் நிகர்கூறுகளாகப் பயன்படுத்தப்படலாம்.

எ.கா:

பச்சை – ஒருவகை நிறம்

கம்மல் – காதில் அணியும் ஒருவகை அணிகலன்

இவ்வாறாக, ஒரு சொல்லின் பொருளை உணர்த்த மற்றொரு சொல்லையும், ஒரு தொடரின் பொருளை உணர்த்த மற்றொரு தொடரையும் பயன்படுத்த இயலும்.

2.3.2 கட்ஸ் கோட்பாடு (Katz’s theory)

அமைப்பு மொழியியலாளர் (Structural Linguists), சொற் பொருளைக் (meaning) கருத்தில் கொள்ளாமல் வாக்கியத்தில் சொற்கள் இடம்பெற்றுள்ள அமைப்பு முறையை மட்டும் கருத்தில் கொண்டு விளக்க முற்பட்டனர். இதன் காரணமாக மொழியிலுள்ள எல்லா வாக்கியங்களையும் அவர்களால் விளக்கிக் கூறமுடியாமல் தோல்வி கண்டனர்.

இந்நிலையில் ஹேரிஸ் (

arris) என்பார், மாற்று முறையினால் (transformation) ஒரு வாக்கிய அமைப்பு மற்றொரு வாக்கிய அமைப்பாக மாறுகிறது என்ற கருத்ைத வெளியிட்டார். இவரது மாணவரான நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) தொடரியல் அமைப்பு (Syntactic Structure) எனும் நூலை 1957-இல் வெளியிட்டுப் புதியதொரு கோட்பாட்டினை முன்வைத்தார். ஆனால் ஹேரிஸ் போன்றே இவரும் வாக்கியத்தின் புற அமைப்பிற்கு (surface structure) மட்டுமே சிறப்பளித்து, அக அமைப்பு (deep structure) உள்ளடக்கியிருக்கும் பொருள் (பொருண்மை) பற்றி ஏதும் கருதவில்லை என்பது குறையாகவே கருதப்படுகிறது.

நோம் சாம்ஸ்கியின் தொடரியல் கொள்கையைப் பின்பற்றி கட்ஸ் (Katz). போடோர் (Fodor) எனும் இருவரும் இணைந்து ‘சொற்பொருட் கோட்பாட்டின் அமைப்பு’ (The Structure of a Semantic theory) என்பதை 1963-இல் வெளியிட்டனர். வாக்கியத்தின் அக அமைப்பானது தொடரியல் அமைப்பு மற்றும் பொருண்மை பற்றிய செய்திகளை உள்ளடக்கியிருக்கும் என்பது இக்கோட்பாட்டின் சிறப்பாகும்.

2.3.3 உருவாக்கச் சொற்பொருளியல் தொடரியல் கொள்கைகளில் காணப்பட்ட குறைபாடுகளைக் காணுவதற்காக உருவானது இது. ஜார்ஜ் லேக்காப் (George Lakoff), ஜான் ராபர்ட் ராஸ் (Ross J.R), ஜேம்ஸ் மக்காவ்லே (James E. Mecawley) ஆகியோர் இப்புதிய கோட்பாட்டின் உருவாக்கத்திற்கு முதன்மையானவர்கள் ஆவர்.

ஒரு வாக்கியத்தின் முழுப் பொருளையும் தெளிவுபடுத்த இது முயல்கிறது.

லேக்கப் தரும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

Do you beat you wife enthusiastically?

You don’t beat your wife enthusiastically.

முதலாவதாகக் காட்டப்பட்ட வினா வாக்கியமும் அடுத்துக் காட்டப்பட்ட எதிர்மறை வாக்கியமும் இதுவரை மனைவியை அடித்து வந்த செயல் நிகழ்ந்தது என்பதை உணர்த்துகின்றன. பொதுக் கோட்பாட்டின்படி (Standard theory) மேற்குறிப்பிட்ட வினாவாக்கியத்தின் அக (புதை) வடிவம் (deep structure) பின்வருமாறு அமைகிறது.

அடுத்து, ஜேகண்டப் (Jackendoff) என்பாரின் கருத்தை நோக்குவோம்.

எ.கா:

Many of the arrows didn’t hit the target.

The target was not hit by many of the arrows.

தொடரியல் கோட்பாட்டின்படி இவ்விரு வாக்கியங்களும் ஒரே அக (புதை) வடிவம் பெறும் எனினும் பொருளில் அவை வேறுபடுகின்றன. இத்தகைய பொருள் வேறுபாட்டினை விளக்க முற்படுவதற்குத் திருத்திய பொதுக் கோட்பாடு (Extended Standard Theory) என்பது உருப்பெறலாயிற்று. அக வடிவத்தையும் புறவடிவத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துப் பொருளை எடுத்துரைக்க வேண்டும் என்கிறது இக்கோட்பாடு.

எ.கா : இளங்கோவன் பல நூல்களை எழுதவில்லை.

இளங்கோவனால் பல நூல்கள் எழுதப்படவில்லை.

எனும் இவ் வாக்கியங்கள் பொருளில், வேறுபட்டாலும் புறவடிவத்தில் பல எனும் எண்ணடை ((quantifier) பயனிலையாக வருமிடம் வேறுபடவில்லை. எனவே இத்தகைய பொருள் வேறுபாட்டினைத் தொடரியல் அக வடிவத்தால் விளக்க இயலாது என்று சொற்பொருளியலாளர் கருதுகின்றனர்.

2.4 வேற்றுமைப் பொருட் கோட்பாடும் பிற கோட்பாடுகளும்

இக்கோட்பாடு, உருவாக்கச் சொற்பொருளியல் கோட்பாட்டுடன் தொடர்புடையது. பில்மோர் (Fillmore) என்பாரின் இக்கோட்பாடு, வாக்கியங்களின் புற அமைப்புகளுக்கும் அக அமைப்புகளுக்கும் இடையிலான பொருண்மை உறவு நிலையை விளக்குகிறது. அவர் தரும் எடுத்துக்காட்டை நோக்குவோம்:

John opened the door with a key.

The door was opened with a key by John.

இவ்வாறு பொருண்மையியல் வடிவம் தந்து அவர் விளக்குகிறார். ஜான் சாவியால் கதவைத் திறந்தான் என்பது சாவி திறந்தது என்பதன் பொருண்மை அக அமைப்பாகும். இந்த அக வாக்கியத்தில் அமைந்துள்ள கர்த்தா, கருவி, செயப்படுபொருள் முதலிய வேற்றுமைப் பொருண்மைகளில் வருகின்ற பெயர்ச்சொற்கள் புறவாக்கிய அமைப்பில் எழுவாய்களாகச் செயல்படுவதாகப் பில்மோர் நிறுவுகிறார்.

2.5 பீல்டு கோட்பாடும் பிற கோட்பாடுகளும்.

டிரையர் (Dreyer) உருவாக்கிய பீல்டு கோட்பாடு (Field Theory) ஜெர்மனியிலும் பிற இடங்களிலும் பெரிதும் விவாதிக்கப்பட்டது. இன்றுவரையிலும் அது தொடர்வதாகக் கூட எண்ண இடமுண்டு.

சொற்பொருளியல் வளர்ச்சிக்கு இக்கோட்பாட்டின் பங்களிப்பு பின்வரும் மூன்று நிலைகளில் அமைகிறது.

1. மொழியியலின் ஒரு பகுதியாகிய / பிரிவாகிய சொற்பொருளியல் அமைப்பியலை அறிமுகப்படுத்தியதில் இக்கோட்பாடு வெற்றி கண்டுள்ளது. அதுவரை இத்தகைய அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதில் பெரிதும் தாமதம் காணப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. இத்தகு நிலையில் சேர்க்கைத் தொடர்புக் களம் (associative fields) என்ற கருத்தும், அதைத் தொடர்ந்து டிரையரின் பொருண்மைக்களம் (semantic fields) என்ற கருத்தும் சொற்பொருளியலுக்கு முக்கிய அடி எடுத்து வைப்பதற்குத் துணை நின்றன.

2. கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கப்படவிருந்த சில பிரச்சினைகளைக் கண்டறிவதற்கு இக்கோட்பாடு துணை நின்றது. ஜெர்மன் மொழியிலான அறிவுசார் பண்புக் கூறுகளை (intellectual terms) வெளிப்படுத்தும் சொற்களை டிரையர் ஆராய எடுத்துக்கொண்டதைக் குறிப்பிடலாம்.

3. எண்ணத்தின் மீதான மொழியின் செல்வாக்கு (Influence of language on thought) எனும் முக்கிய பிரச்சினையை அணுகுவதற்கு இக்கோட்பாடு மதிப்புமிக்க சிறந்த வழிமுறையை நல்கியது. இன்றைய சமூகத்தின் கருத்து, மதிப்பு, பார்வை ஆகியவற்றை மட்டுமே பொருண்மைக் களங்கள் பிரதிபலிக்கவில்லை, மாறாக, அவற்றை உருப்பெறச் செய்து நிலைபேறுடையனவாக மாற்றுகின்றன.

2.5.1 சபீர் -ஒர்ஃப் கருதுகோள் (Sabir – Whorf Hypothesis) பீல்டு கோட்பாட்டுடன் தொடர்புடைய இக்கருதுகோளை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமான ஒன்றாகும். எண்ணத்தின் மீதான மொழியின் செல்வாக்கு (தாக்கம்) பற்றிய கோட்பாடு இது.

எண்ணத்தின் மீது மொழி ஆதிக்கம் செலுத்துகிறது என்பது புதிய கருத்து அல்ல. இதைத்தான் ‘tyranny of words’ என்று டிக்கன்ஸ் (Dickens) குறிப்பிடுகிறார். அவருக்கு முன்னரே பேகனும் (Bacon)

“மொழியின் மீது மனம் ஆதிக்கம் செலுத்துவதாக மனிதர் நினைக்கின்றனர். ஆனால், நடப்பது என்ன? மனித மனங்களின் (எண்ணங் களின்) மீது மொழி ஆதிக்கம் செலுத்துகிறது” என்கிறார்.

சபீர் – ஒர்ஃப் கருதுகோள் அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. விரிவாக விவாதிக்கப்பட்டது. பீல்டு கோட்பாட்டுடனான இதன் தொடர்பு குறிப்பிடத்தக்க அளவு சிறப்புப் பெறும் என்பதில் ஐயமில்லை.

2.5.2 தூண்டல் – விளைவுக் கோட்பாடு (Stimulus – Response theory) உளவியல் அணுகுமுறையில் அமைந்த தூண்டல் விளைவுக் (துலங்கல்) கோட்பாடு (Stimulus-response theory) குறித்து இனி ஆய்வோம்.

பொருள் (meaning) என்றால் என்ன? எனும் கேள்விக்கு நேரிடையாக விடை கூற முயன்ற மூன்று கோட்பாடுகளில் தூண்டல் விளைவுக் கோட்பாடும் ஒன்று. இதைத் தூண்டல் துலங்கல் கோட்பாடு என்றும் கூறலாம்.

இக்கோட்பாடானது இக்கால உளவியலில் பெரிதும் செல்வாக்குப் பெற்று விளங்கியது. தத்துவம், மொழியியல் ஆகிய துறைகளிலும் இது பின்பற்றப்பட்டது. புளூம்பீல்டு என்பார் இக்கோட்பாட்டின் ஆசிரியர் ஆவார். Language எனும் தமது நூலில் இக்கோட்பாட்டினை அவர் விவரித்துள்ளார்.

பேசுபவர் எந்தச் சூழலில் பேசுகிறார், அப்பேச்சு கேட்பவரிடம் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதை அடிப்படையாக வைத்து ஆராய்ந்தால்தான் பொருள் என்பதற்கு விளக்கம் கிடைக்கும். பொதுவாக, பேசுபவரின் தூண்டலை மையமாக வைத்தே பொருள் என்பதற்கு விளக்கம் காண முடியும் என்கிறார் புளூம்பீல்டு. இதை behaviourist view of meaning என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஒருவரைப் பேசுமாறு (r-response) செய்த தூண்டல் (s- stimulus) இந்தப்பேச்சின் விளைவு (R-response) இதை ஆராய்ந்தால் பொருள் விளக்கிவிடும் – இதை,

S r …….. S —-R என்று வரைந்து காட்டுகிறார் புளூம்பீல்டு.

(S = Stimulus, r = response, s = speech, R = Result)

இக்கோட்பாட்டின்படி வெவ்வேறு விளைவுகளைக் காட்டும் ஒரு கூறைப் பலபொருள் குறிக்கும் ஒரு கூறு எனல் வேண்டும். இப்போது என்னுடன் வா என்ற வாக்கியம். ஒருவரிடம் எந்தவித விளைவையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். அல்லது பலவித விளைவுகளை ஏற்படுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட விளைவுகளை (அவ்வாக்கியத்தைக் கேட்டுவிட்டு சும்மா நிற்பது ஏன் என்று கேள்வி கேட்பது போன்றவை) ஏற்படுத்தும் தன்மையால் இவ்வாக்கியம் பலபொருள் குறிக்கும் ஒரு வாக்கியம் எனக் கருதப்பட வேண்டும். ஆனால், உண்மையில் அவ்வாறில்லை அல்லவா? எனவே, தூண்டல். விளைவு இரண்டினையும் பொருளின் பண்பாகக் கருத இயலாது.

2.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை சொற்பொருளியல் கோட்பாடுகள் குறித்த செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

சொற்களுக்கு உரிய பொருளை அறிவதற்கு. சூழ்நிலை முதலான காரணிகள் தேவையாகின்றன. எனவே அவற்றிற்கான கோட்பாடுகளின் இன்றியமையாமையை உணர்ந்துகொள்ள முடிந்தது.

பல்வேறு பொருளியல் கோட்பாடுகள் யார் யாரால் ஏற்படுத்தப்பட்டன என்பதையும் ஒன்றிலிருந்து ஒன்று வளர்ந்த விதத்தையும் அறிந்து கொண்டிருப்பீர்கள்.

உரிய இடங்களில் அக்கோட்பாடுகளைத் தக்க சான்றுகளுடன் வரைபடங்களுடன் நன்கு புரிந்து கொண்டிருப்பீர்கள்.

பாடம் - 3

சொற்பிறப்பு ஆய்வும் சொற்பொருளும்

3.0 பாட முன்னுரை

திராவிட மொழிகளுள் பழமை வாய்ந்த மொழியான தமிழ்மொழியில், சொல் அளவிலும் பொருள் அளவிலும் இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பலப்பல. இவ்விரு மாற்றங்களையும் தனித்தனியே ஆய்வதைக் காட்டிலும் ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்தி ஆய்வது மிகவும் சிறந்ததாகும். இவ்வாறு சொற்கள் திரிந்து மாற்றம் அடைவதுபோல, சொல்லுக்குரிய பெயரும் திரிந்து வேறு ஒரு பொருளாகத் திரிவதையும், நாம் பல சான்றுகள் மூலம் காண முடியும். பேச்சுத் தமிழில் இத்தகைய மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன. சொற்களின் பிறப்பாராய்ச்சியும், சொற்பொருள் மாற்றமும் ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க இயலாத அளவிற்கு நெருங்கிய தொடர்புடையன. இக்கருத்துக்களைத் தமிழ்மொழி வரலாற்றின் மூலம் நன்கு உணர்ந்துகொள்ள இயலும்.

3.1 சொற்பொருள் வேறுபடும் முறை

ஒரு சொல்லினுடைய பிறப்பாய்வுக்கு, அச்சொல் உணர்த்தும் பொருளும் அப்பொருள் விரிந்து மாற்றமடையும் நிலையும் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. ஒலித்திரிபுகளையும், உருத்திரிபுகளையும் ஆய்வதால் மட்டும் சொல் மாற்றத்தை முழுமையும் உணர்ந்துகொள்ள இயலாது. அடிச்சொல்லினுடைய பொருளோடு இயைந்த ஒரு பொருள் எத்தகைய மாற்றங்களுக்கு ஆளாகின்றது என்பதைச் சில சான்றுகளின் மூலம் நோக்கலாம்.

எ.கா:

(கோடகம் = நாற் சந்தி, குதிரை, புதுமை;

கடகம் = கங்கணம், வட்டம், ஒரு ராசி;

சகடம் = வண்டி, சக்கரம், சாகாடு (வண்டி);

சாகை = கிளை, வேதத்தின் ஒரு பகுதி, இலை, இறப்பு)

கோடகம் என்னும் சொல் கடகம் என ஒலிக்கப்படுகிறது. இஃது ஒலித்திரிபு ஆகும். கடகம் என்பது வட்டத்தைக் குறிப்பதால், வட்டமான சக்கரத்தைக் கொண்ட சகடம் என ஒலிமாற்றம் பெறுகிறது. இது நிலைமாற்று ஆகும். செய்யுள் ஓசை முதலிய பல காரணங்களால் அது சாகாடு என நீட்டம் பெறுகிறது. சாகாடு இறுதி நிலை கெட்டு, சாகை என்று மாறுகிறது.

கடகம் என்ற சொல்லுக்கும் சாகை என்ற சொல்லுக்கும் உள்ள பொருள் தொடர்பை ஆராயாமல் இவ்விரு சொற்களும் ஒத்த பிறப்புடையன என்று நாம் உறுதியாகக் கூறமுடியாது அல்லவா? எனவே, சொல்லினுடைய பிறப்பாய்விற்கு, சொற்பொருள் எங்ஙனம் துணைபுரிகிறது என்பதை நம்மால் நன்கு உணர முடியும்.

3.1.1 உருவம் ஒன்று ; அடிச்சொல் வெவ்வேறு ஒரே உருவத்தையுடைய இரு சொற்கள், ஒரே அடிச்சொல்லினின்றும் பிறந்தன என்று நாம் கூறமுடியாது. அவற்றின் அடிச்சொற்கள் வெவ்வேறானவை. இந்த வேற்றுமையை நமக்கு உணர்த்தக் கூடியது அவ்விரு சொற்களுக்கான பொருள் வேற்றுமையே என்று கூறலாம்.

எ.கா : 1

போது                     பூ

நேரம்

போது என்ற சொல்லின் இவ்விரு பொருளும் ஒன்றோடொன்று பொருள் இயைபு இல்லாதன. எனவே, இவை இருவேறு அடிகளினின்றும் பிறந்து, உருவம் அல்லது வடிவம் (form) ஒத்திருத்தல் வேண்டும்.

(அ) போது பூவைக் குறிக்கும் பொருள்

போது < பொந்தி < பொள் < உள்

(ஆ) போது நேரத்தைக் குறிக்கும் பொருள்

போது < பொழுது < ஒளி < எல்

என இருவேறு வரலாறுகளை உடைய இச்சொற்கள் இரு வேறு பொருளைத் தருவதும், இருவேறு அடியினின்றும் பிறப்பதும் எவ்வகையான வியப்புக்கும் உரியதன்று.

எ.கா : 2

கெழு முதல் கூடுதல், நிறைதல்

பிரகாசம், நிறம்

இவ்விரு பொருள்தரும் சொற்களும், உருவத்தில் ஒன்றாக இருப்பினும் பொருளாலும், சொற்பிறப்பாலும் வெவ்வேறு வகையின.

(அ) கெழுமுதல் நிறைவைக் குறிக்கும் பொருள்

கெழு (முதல்) < கெழு – மு < குழு -மு < குழை (வளை)

(ஆ) கெழுமுதல் ஒளி அல்லது நிறத்தைக் குறிக்கும் பொருள்

கெழுமுதல் < கெழு – மு < எழில் < எழு (எல்) [ஒளி])

மேற்கூறப்பட்ட இச்சான்றுகளிலிருந்து, சொற்பிறப்பு ஆராய்ச்சிக்கு, சொல்வடிவ ஆய்வு மட்டுமன்றி, பொருள்மாற்ற வரலாறும் மிகத்தேவையான ஒன்றாகின்றது என்பதை உணர முடிகிறது.

3.2 சொற்களின் வேர்ப்பொருளும் மாற்றமும்

தமிழில் வழங்கும் பல சொற்களுக்கு அடிப்படையான பொருளை, அண்மை, சேய்மை, கீழ், மேல் என்ற இந்த நால்வகை இடைச் சார்புகளுள் ஒன்றனைக்கொண்டு புரிந்து கொள்ளலாம். மக்களுக்கு இருக்கின்ற ஐம்பொறிகளுக்கு ஏற்ப, அவர்கள் பொருட்களுக்குப் பெயரிட்டு வழங்கினர். அவர்தம் எண்ணங்கள் உருவாகி, பின்பு விரியும் தன்மை அடைந்த போது அவ்வைம் பொறிகளுள் சிறந்த கண்ணைக்கொண்டு பொருளின் அவாய் நிலையினை உணர்ந்தனர். (அவாய்நிலை = ஒரு சொல் தன்னோடு பொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொரு சொல்லை வேண்டி நிற்கும் நிலை)

எடுத்துக்காட்டாக, கண்ணால் கண்ட பொருளை அருகில் உள்ளது, தொலைவில் உள்ளது, கீழே உள்ளது, மேலே உள்ளது என்னும் இடைச் சார்பைத் துணையாகக் கொண்டு சொல்லுக்குரிய பொருளை முடிவு செய்தனர்.

இவ் இடச் சார்பைக் கொண்டே அகலம், நீளம், தாழ்வு, உயர்வு என்னும் நால்வகை அளவில் தம் உணர்வை உள்ளத்தில் செலுத்தி, சொல்லுக்குப் பொருளை ஏற்படுத்தினர். மென்மை, கடுமை, இரக்கம், இறுக்கம் என்பனவும் அளவே என்றாலும் இவற்றை நுண்ணறிவால் மட்டுமே உணர முடியும் என்பதையும் மக்கள் உணரத்தொடங்கினர். இவ்விடச் சார்பு பற்றிய பொருளே முதன்மையாக நிற்க, சொல்லுக்குரிய பிற பொருள்கள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டன எனலாம்.

இவ் ஆய்வு முறைப்படி செய்யப்படவில்லை. எனவே, அகராதிகளில் சொல்லுக்குரிய பொருட்கள், படிநிலைகளாக அமையாமல் தனித்தனியே நிற்கின்றன. மேலைநாட்டு அகராதிகள் பல, முதலாவதாகச் சொல்லினது அடிப்பொருளையும், பிறகு அவ் அடிப்பொருளோடு தொடர்புடைய விரிந்த பிற பொருட்களையும் செம்மையாக அளித்திருத்தலைக் காணலாம்.

தமிழ் மொழியிலும் சொற்பிறப்பாய்வு, முறையாகச் செய்யப்பட்டு, ஒரு வரன்முறைக்குள்ளே அமைந்தால், சொல்லுக்குரிய படிநிலை சிறப்பாக அமையும் எனலாம்.

சான்றாக, சென்னைப்பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரகராதியிலிருந்து ஒரு சொல்லை எடுத்துக்காட்டலாம்.

(எ.கா.) எழில் (1) Beauty, comeliness, gracefulness;

அழகு. எழுதெழி லம்பலம் (பரி.பா.18:28)

(2) இளமை ; youth, (சூடா.)

(3) தோற்றப்பொலிவு ; Imposing appearance

நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம் (குறள். 407)

(4) உயர்ச்சி ;

eight, Loftiness, elevation

பகட்டெழின் மார்பின் (புறநா.13)

(5) பருமை ; Bigness, bulkiness எழிற்கலை புலிப்பாற்

பட்டென (புறநா.23)

(6) வலி ; Strength (பிங்.)

(7) வர்ணம் ; Colour, colouring, paint (w.)

(8) சந்தேகிக்கக்கூடிய நிலைமை ; Suspicious

Circumstance (J)

(9) குறிப்பு, எழிலறியாதவன் ;

int (w.)

(10) சாதுரிய வார்த்தை ; Witticism, eprigram

மேற்கூறிய எடுத்துக்காட்டிலிருந்து, ஒரு சொல்லின் பொருள் அடைந்து வரும் பல்வேறு பொருள் மாற்றங்களை நன்கு உணர முடிகிறது.

3.3 சொல் தன் சிறப்பியல்பைச் சுட்டல்

சொற்களினுடைய அடிப்படையான பொருள் மட்டுமன்றி, அதற்கும் மலோக, தம் சிறப்பியல்பைச் சுட்டும் பொருளையும் கொண்டனவாக விளங்கும்.

அடிப்படையான பொருளைச் சுற்றிப் பலபொருட்கள் ஒளிந்திருக்கக் காணலாம். இவ் அடிப்படையான பொருட்களைக் கைமுதலாகக் கொண்டு, சுற்றியுள்ள பிற பொருளுக்குப் பெயரிட நேரிடும்போது வெளிப்படையாய்த் தோன்றும் குணங்களைக்கொண்டு ஒவ்வொரு பெயரையும் உருவாக்கி வந்தனர் நம் முன்னோர். இவ்வாறு வெளிப்படையாய்த் தோன்றும் பொருள்களையே சிறப்பியல்புகள் எனலாம்.

எ.கா:

துழ – த்தல்

துழ-த்தல் இச்சொல், உழ-வன் என்னும் அடியினின்று வருவது. உழன்று வரச் செய்தல் என்னும் பொருளில் வழங்கும். துழ என்னும் அடி உழன்று வரல் என்னும் பொருளிலிருந்து சிறிது மாறி, உள்வாங்கி வரல், வளைந்து வரல், கூடல் என்னும் பொருட்களிலும் வழங்கும். ‘வளைந்து வரல்’ என்னும் குணம் அல்லது சிறப்பியல்பு, பல்பொருள் செயல்களுக்கு, துழ – என்னும் அடியை அடிப்படையாகக் கொண்டு புதுப்புதுப் பெயர்களை உருவாக்கியது.

எ.கா:

துழத்தல்

சூழ்ந்துவரல் என்னும் பொருள்

தொழுதி

கூடி வருதல் (கூட்டம், திரள், இனம்)

தோடு வேறொரு வகைக் கூட்டம்

தொகுதி தொகை, தொகுத்தல்

தொழு பசுக்கூட்டம்

தொழுவம் பசுக்கூட்டம் வாழுமிடம்

தொறு இடைச்சாதி

தொறுவன், தொறுவி, தொறுத்தி

இடையன்,இடைச்சி, இடைச்சி

தொழுவர் உழுவோர் (பொருள் வளைந்தது)

தொழுப்பு

உழவு செய்தல்

தொழில்

முயற்சி (உழவே சிறந்த முயற்சியாகும்)

தொழும்பு

எத்தொழிலுக்கும் பொதுப்பெயர்

தொழும்பர்

தொழில் செய்வோர்

துரும்பர்

தமிழ்மக்களுள் ஓர் இனம்

தொண்டு

ஊழியம்

தொண்டர்

கடவுளை வணங்குவோர்

தொழுதல்

வணங்குதல் (வளைதல்)

தொழுதல் என்னும் இச்சொல் அடிமைத்தொழில் செய்தல் என்னும் பொருளை உடையதாக இருப்பினும், கடவுளைத் தொழும் அளவில் உயர்வு பெற்றும் விளங்குகின்றது. இருந்தாலும், தொழுதூண் முதலிய சொற்களில் இழிவு பெற்றே வருகின்றது. இங்ஙனம் சொற்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து அடிச்சொற்களைக் கொண்டு பல்வேறு பொருள்களுக்கும் பெயராக வழங்குகின்றன. இப்பொருட்களின் செயலின் சிறப்பியல்பைச் சுட்டலே பெயரிடும் வழக்கத்திற்கு வாயிலாக அமைந்தது எனலாம்.

இருப்பினும் இச்சொற்பொருள் செயல்களின் சிறப்பியல்புகள், ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு விதமாக, இப்பொருளைப் பயன்படுத்தும் பலரால் பலவகையாக உணரப்படும். அதனாலேயே ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு செயலினுக்கும் பல பெயர்கள் உண்டாயின. எனவே, ஒரு பொருள் பலசொல் என்று தமிழ் இலக்கணத்தில் சொல் பாகுபாடு உண்டானது.

எ.கா. 1

பன்றி – கேழல்

புறப்பட்ட பல் நிலத்தைக் கிளைத்தல்

எ.கா. 2

அறிவு உணர்வு (உள்ளத்தில் கொள்வது)

காட்சி (நோக்கித் தெளிவது)

பிரித்துக் காண்பதாகிய அறிவு என்னும் சொல் பொதுவான சொல் எனும் நிலையையும், உணர்வு அவ் அறிவின் முதிர்ச்சியையும், காட்சி என்ற சொல் ஆராய்ந்து காணப்பெற்றமையையும் விளக்கும் சொற்களாகக் கொள்ளலாம்.

3.4 சொற்பொருளால் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள்

சொற்பொருளானது சில இடங்களில், ஒருபொருளோடு ஒருபொருள் சார்ந்து விரிந்துகொண்டே செல்லும் தன்மையுடையது. அவ்வாறே, தான் சுட்டும் பொருள், தொடர்பு பொருளோடு சார்ந்திராவிடினும் அதனோடு இனந்தழுவலால் வேறு பொருளையும் குறிக்கும் தன்மையுடையது. எனவே, பொருள்கள் சார்பு பற்றி விரிந்துகொண்டும், இனந்தழுவிப் பொருளை உணர்த்துவனவாகவும் விளங்கும்.

3.4.1 சொற்பொருள் சார்புத் தன்மையினால் விரிவடைதல் சிறப்பு இயல்பால் பெயரிடப்பட்ட சொற்கள் பிறகு, தாம் குறிக்கும் பொருளோடு சார்புடைய வேறு பொருளுக்கும் பொருந்தும் தன்மையுடையனவாக மாறும்.

எ.கா : வேலி

இச்சொல் குறிக்கும் பொருட்கள் ஒன்றை ஒன்று சார்ந்து விரிந்துகொண்டே செல்லும். முதலில், இச்சொல் எல்லையைக் குறித்தது. அதன் வளர்ச்சியே அவ்வெல்லையைச் சுட்டி நிற்கும் ‘மதிலை’ உணர்த்தியது. அம்மதிலால் பெறும் காவலைக் குறித்தது. அடுத்து அக்காவலுக்கு அடங்கிய ஊரைக் குறித்தது. பிறகு அவ்வூரின் பகுப்பாகிய நிலத்தைக் குறித்தது. இதுவே சார்பு பற்றி ஒருபொருள் விரிந்துகொண்டே செல்லும் தன்மையை உணர்த்துதற்குச் சான்றாகும்.

இச்சார்பினால் விரிந்த சொற்களுள், தலையாகி நிற்கும் சொல்லை ஆராய்ந்து தெரிந்துகொள்ளவில்லை எனில், சொற்பிறப்பைப் பற்றி நாம் அறிய முடியாது. எனவே, ஒரு சொற்பிறப்பு ஆராய்ச்சிக்கு, சொற்பொருள் எங்ஙனம் உற்ற துணையாக உதவும் என்பதை நாம் இதன் மூலம் உணர முடியும்.

‘வேலி’ என்ற அச்சொல்லின் வரிசையில் இறுதியாக நின்ற நிலப்பொருளை மட்டும் நோக்கினால், இவ்வேலி என்ற சொல்லின் தோற்றத்தை நாம் உணர முடியாமல் போய்விடும். வேலி என்ற சொல்லுக்கு நிலம் என்ற பொருள் எவ்வாறு உண்டாகும்? இவ்வினாவிற்கு விடைகாண்பது மிகவும் அரிதாகிவிடும். ஆனால், நிலப்பொருள் ஊரிலிருந்தும், ஊர்ப்பொருள் காவலிலிருந்தும், காவல் பொருள் மதிலிலிருந்தும், மதில்பொருள் எல்லையில் இருந்தும் தோன்றியதை ஆழ்ந்து ஆராயும் போது வேலி என்ற சொல்லும், எல்லை என்ற சொல்லும் ஒன்றே என்பதை அறியலாம்.

சொல்லுக்குரிய பொருட்கள் ஒன்றோடொன்று சார்ந்து விரிந்த முறை, அகராதிகளுள் காட்டப்பட வேண்டும். அதுவே, தலைசிறந்த ஒழுங்காகக் கருதப்படும். தமிழ்ச்சொற்கள் பலவற்றிற்கும் உண்மையான தோற்றங்களான அடிச்சொற்கள் வரையறுத்து வைக்கப்பட்டால், அகராதி ஆசிரியர்கள் அந்தந்தச் சொற்களின் பல பொருட்களையும் அவ்வவற்றின் வரன்முறை மாறாது உணர்த்திவிடுவர். கற்பவரும் எவ்விதக் குழப்பமும் இன்றி, சொல்லுக்கான பொருளை எளிதில் புரிந்துகொள்வர்.

3.4.2 சொற்பொருள் இனந்தழுவுதலால் விரிவடைதல் ஒரு சொல், தான் சுட்டுகின்ற பொருளோடு சார்புள்ள பிற பொருட்களையும் குறிக்கும். அது மட்டுமல்லாமல், ஒரு சொல் தான் குறிக்கும் பிற பொருளோடு சாரவில்லை எனினும், அதனோடு ஏதாவதொரு சிறப்புக்கருதி இன ஒற்றுமையால் வேறு பொருட்களையும் குறிக்கும். இவ்வாறு குறித்தல் இனந்தழுவுதல் எனப்படும்.

எ.கா:

புல் பூண்டு மூங்கில்

பனை தென்னை (சிங்களம்)

மேற்கூறிய எடுத்துக்காட்டில், தென்னையையும், பனையையும் புல் என்று கூறினால், புல் என்னும் சொல்லின் தோற்றம் எது? அத்தோற்றத்தினைப் பூண்டு மற்றும் மூங்கில் ஆகியவற்றோடு எவ்வாறு தொடர்புபடுத்த முடியும்?

புல் < புழை < பொள்

துளை உள்ளது எதுவோ அதுவே புல்லாகும். மூங்கிலும் உள்துளை உடையவை என்பதால் புல் என்று அழைக்கப்பட்டன. எனவே வெளியே வைரமும், உள்ளே மென்மையும் கொண்டு உள்துளை உடையனவாய் இருக்கின்ற பனையும், தென்னையும் புல் என்ற அப்பெயரை அடைந்தன. ‘புறக்காழனவே புல் என மொழிப’ (தொல்.மரபியல், 86) என்று இலக்கணம் வரையறை செய்வதைக் காணவும்.

3.5 சொற்பொருள் மாற்றத்தில் இயைபும் எதிர்நிலையும்

இவ்வாறு சொற்கள் பலபொருள் வேறுபாட்டை அடையும்போது, ஒரு சில சிறப்பியல்புகள் ஒரு பொருளைக் குறிக்கும் போதே அதனோடு தொடர்புடைய வேறொரு பொருளையும் குறிக்கலாம்; அல்லது அதற்கு எதிரானதொரு பொருளையும் குறிக்கலாம். இவ்விரண்டையும் முறையே சொற்பொருள் இயல்பு மற்றும் சொற்பொருள் எதிர்நிலை என்ற இரு தலைப்புகளில் கீழ்வருமாறு காணலாம்.

3.5.1 சொற்பொருள் இயைபு சொல்லினது பொருள் வேறுபாடுகளைப் பற்றிப் பல்வேறு தலைப்புகளில் கண்டு வருகிறோம். தமிழ் இலக்கணத்தில் ஆகுபெயர் எனக் குறிக்கப்படும் ஓர் இலக்கணக் கூறு சொற்பொருளோடு தொடர்புடையது. ஒரு சொல் ஒரு பொருளைக் குறிக்க, அதோடு தொடர்புடைய பிறிதொரு பொருளோடு இயைந்து பொருள்கொள்ள வருவதே ஆகுபெயராகும்.

எ.கா :

தோகை

இச்சொல் பெண்ணின் பெயராக வழங்கப்படுகிறது. தோகை என்ற இச்சொற் பொருளில் பெண்ணைச் சுட்டும் குறியீடு எதுவுமில்லை. பின் எப்படித் தொடர்பு உண்டானது?

தோகை < தொங்கு < தூங்கு < துடி < உழல்

தோகை வால் என்னும் பொருள்

தோகை தூங்கும் அது தோகையானது.

இத்தோகை என்ற சொல், சிறப்புக்கருதி வாலை உணர்த்த, சார்பினால் அவ்வாலையுடைய மயிலைக் குறித்தது. பின் கவிஞர் தம் கவிதை வேட்கையால், மயில் போலும் சாயலை உடைய பெண்ணையும் குறித்தனர். இதுவே இயைபு காரணமாகத் தோன்றிய பொருளாகும்.

3.5.2 சொற்பொருள் எதிர்நிலை

மேற்கூறியபடி சொற்கள் பொருள்கொள்கின்ற முறைகளைக் காணும்போது, இவை எவ்வாறு வந்தன என்பது பெரிதும் ஆய்வுக்கு உரிய ஒன்று.

ஒரு சொல், தான் குறிக்கும் பொருளுக்கு எதிரானதொரு வேறொரு பொருளையும் குறிக்கும் முறை தமிழ்மொழியில் காணப்படுகின்றது. இது எங்ஙனம் என்பதை அறிய, அச்சொல் பல்வேறு இலக்கியங்களுள் எவ்வாறெல்லாம் மாற்றமடைந்து வந்துள்ளது என்பதையும் ஆய்தல் வேண்டும்.

எ.கா:

நக்கல் தீண்டுதல்

சிரித்தல்

நேர்ப்பொருள்

நக்கல் கெடுத்தல்

சுடுதல்

எதிர்ப்பொருள்

சிரித்தல் என்ற பொருளுடைய அச்சொல்லே எவ்வாறு கெடுத்தல் என்ற பொருளையும் தரும்? அப்பொருளையும் ஏற்றுக்கொண்டால் அச்சொல்லினது பொருள் எங்ஙனம் விரிந்து விரிந்து திரிபடைந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நக்கல் < நக்கு < நகு

என நக்கல் எனும் சொல் நக்கு, நகு என்னும் முந்தைய உருவங்களை உடையதாக விளங்குகிறது.

நக்கல் நக்கு

நண்ணு

நத்து

நச்சு

மேலும் நகு, நண்ணு, நத்து, நச்சு என்ற இந்நான்கு சொற்களையும் நக்கு என்னும் சொல்லிற்கு இனமானவையாகக் கொள்ளலாம். நண்ணுதல் என்னும் பொருளை உடையதாய் நக்கு என்னும் சொல் தீண்டுதல் என்னும் பொருளையும் உணர்த்துகிறது. பிறகு அச்சொற்பொருள் விரிந்து, பரந்து அகற்றிவிடல், கெடுத்தல் என்னும் பொருட்களிலும் வழங்கி வருகிறது.

இவ்வாறே நக்கலோடு ஒத்த இணைச்சொல்லான நத்துதல் (நந்துதல்) என்னும் சொல்லும் வளர்தல், கெடுதல் என்னும் எதிரெதிரான பொருட்களைக் கொண்டதாக விளங்குவதையும் ஆராய வேண்டும்.

3.5.3 சொற்பொருள் வழக்காறிழத்தல் காலப்போக்கில் சொற்கள், இவ்வாறு நேர் எதிரான பொருட்களை உடையனவாக மாறுவது போல், தம் பொருள் வழக்கினை இழந்து, இழிந்த வழக்கினவாக மாற்றமடைதலையும் காணமுடிகின்றது.

எ.கா : ஆண்டவன்

இச்சொல் அகலுதல், அகழ்தல் என்னும் அடிச்சொற்களுக்கு இனமாகிய ஆள் என்னும் வழியடியாகப் பிறந்து, ஆண்டை என மாறி, எசமான் என்ற பொருளைக் குறித்தது. பின்பு ஆண்டை என்பது ஆண்டி என மருவி நின்றது. ஆண்டவன் என்ற சொல் ஆண்டி என்ற வடிவத்தைக் கொள்ளும்போது வெவ்வேறு பொருட்களைக் குறிக்கின்றது.

ஆண்டி பிச்சை எடுத்துண்ணும் ஒரு வகைச் சைவர்

உலக வழக்கில் யாருமற்ற பரதேசி

ஆண்டவன் என்ற பெயர்ச்சொல் பரதேசி என்ற பொருளில் வந்தமையால் அவ்வுயர் வழக்காறு, இழிவழக்காறாக மாறியது.

3.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை சொற்பிறப்பு ஆய்விற்கு எங்ஙனம் சொற்பொருள் ஆய்வு பயனுடையதாக விளங்குகின்றது என்பதைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளைத் தெரிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

சொற்பொருள் ஆய்வு இல்லாமல், சொற்பிறப்பை அறிந்து கொள்ளுதல் என்பது இயலாத ஒன்று என்பதை இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்டீர்கள்.

ஒரே வடிவம் கொண்ட அடிச்சொற்களின் வேர்ப்பொருள் எங்ஙனம் மாற்றமடைந்துள்ளது என்பதையும், சொல் தனது சிறப்பியல்பால் பொருளைச் சுட்டும் தன்மையினையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

சொற்பொருள் சார்புத் தன்மையாலும், இனந்தழுவுதலாலும், இயல்பு நிலையிலும், எதிர் நிலையிலும் எவ்வாறெல்லாம் தன் பொருள் விரிவடைந்து மாற்றங்களைப் பெற்றுள்ளது என்பதை நீங்கள் நன்கு உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.

பாடம் - 4

ஒரு சொல் பலபொருளும் ஒருபொருட் பலசொல்லும்

4.0 பாட முன்னுரை

தமிழ் மொழியில் அடிச்சொற்கள் பற்றிய ஆய்வு மிகப் பழங்காலத்திலேயே சொல் இலக்கணத்தின் ஒரு பகுதியாக அமைந்துவந்துள்ளது. இது குறித்து, தொல்காப்பியம், நன்னூல் போன்ற பழைய இலக்கண நூல்கள் பற்பல கருத்துகளை ஆங்காங்கே சுட்டிக்காட்டியுள்ளன. இலக்கண ஆசிரியர்கள், சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள இயைபு குறித்து பெயரியல், உரியியல் போன்ற இயல்களில் வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு சொல் குறித்த பல பொருள்களையும், ஒருபொருள் குறித்த பல சொற்களையும் தம் இலக்கண நூல்களில் விளக்கி உள்ளனர். இவற்றை எல்லாம் தெளிவாக அறிந்துகொண்டால் தமிழின் சொற்பொருள் வளத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

4.1 ஒருசொல் பலபொருள், ஒருபொருள் பலசொல் ஆகியன குறித்த விளக்கங்கள்

தொல்காப்பியத்தில் சொல்லதிகார உரியியலில், உரிச்சொல்லின் பொது இயல்பையும், பொருள் உணர்த்தும் முறையையும் குறிப்பிடும்போது ஒருசொல் பலபொருள் குறித்தும், ஒருபொருள் பலசொல் குறித்தும் விளக்கமாகத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

“உரிச்சொற் கிளவி……….

ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்

பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்”

(தொல்.சொல் – 297)

என இசை, குறிப்பு, பண்பு எனும் பொருட்கண் பெயர், வினை போலவும், அவற்றின் பகுதியாகவும் தடுமாறி, ஒருசொல் ஒருபொருளுக்கு உரியதாய் வருவதோடு, ஒருசொல் பலபொருட்கும் பலசொல் ஒருபொருட்கும் உரியனவாய் வருவன உரிச்சொற்களாகும் என்கிறார் தொல்காப்பியர்.

உரிச்சொல்லின் இலக்கணத்தைக் கூறும் நன்னூலோ,

“பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி

ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை

ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்”

(நன்னூல் : உரியியல் : 442)

என்று கூறும்போது ஒருகுணம் மற்றும் பலகுணம் தழுவிய சொற்களைப் பற்றியும் பேசுகின்றது. (குணம் = பொருள்) இவற்றிற்குரிய சான்றுகளைப் பின்வரும் தலைப்புகளில் காணலாம்.

4.1.1 ஒரு சொல் ஒருபொருள் குறித்துத் தொல்காப்பியம் தரும் விளக்கம் நாம் வழங்கும் தமிழ் மொழியில் ஒருசொல் ஒரேயொரு பொருளையும் குறிக்கும். அத்தகைய சொற்களைத் தொல்காப்பியரும் உரியியலில் விளக்கியுள்ளதைச் சில சான்றுகளுடன் காணலாம்.

வ. எண்

சொல் பொருள் சான்று

1. உரு அச்சம் உருகெழு கடவுள்

2. புரை உயர்வு புரைய மன்ற புரையோர் கேண்மை

3. உகப்பு உயர்வு விசும்புகத் தாடாது

4. உவப்பு உவகை உவந்துவந் தார்வ நெஞ்சமோ டாய்நல னளைஇ

5. மல்லல் வளமை மல்லல் மால்வரை

6. பயப்பு பயன் பயவாக் களரனையர் கல்லா தவர்

7. பசப்பு நிறம் மையில் வாண்முகம் பசப்பூரும்மே

8. இயைபு புணர்ச்சி இயைந் தொழுகும்

9. சீர்த்தி மிக்கபுகழ் வயக்கஞ்சால் சீர்த்தி

10. பழுது பயனின்மை பழுதுகழி வாழ்நாள்

11. சாயல் மென்மை (பண்பு) சாயன் மார்பு

12. முழுது எஞ்சாமை மண்முழு தாண்ட

13. வம்பு நிலையின்மை வம்பு மாரி

14. மாதர் காதல் மாதர் நோக்கு

15. புலம்பு தனிமை புலிப்பற் கோத்த புலம்பு மணித்தாலி

16. துவன்று நிறைவு ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்

17. முரஞ்சல் முதிர்வு சூன்முரஞ் செழிலி வெங்காமம்

18. வெம்மை விரும்பு வெங்காமம்

19. பொற்பு பொலிவு பெருவரையடுக்கம் பொற்ப

20. வறிது சிறிது வறிதுவடக் கிறைஞ்சிய

21. எய்யாமை அறியாமை எய்யா மையலை நீயும் வருந்துதி

22. தெவ் பகை தெவ்வுப் பலம்

23. கருவி தொகுதி கருவி வானம்

24. கமம் நிறைவு கமஞ்சூல் மாமழை

25. கவர்பு விருப்பம் கவர் நடைப் புரவி

26. வியல் அகலம் வியலுலகம்

27. வய வலிமை துன்னருந் துப்பின் வயமான்

28. வாள் ஒளி வாண்முகம்

29. உயா உயங்கல (வருந்தல்) பருத்திருந் துயாவிளி

30. உசா சூழ் உசாத் துணை

31. புனிறு ஈன்றணிமை புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி

32. வயா வேட்கை வயவுறு மகளிர்

33. யாணர் புதிதுபடல் மீனொரு பெயரும் யாணரூர

34. அமர்தல் மேவல் (விரும்பல்) அகனமர்ந்து செய்யாளுறையும்

35. ஐ வியப்பு ஐதே காமம்

36. முனைவு முனிவு (வெறுப்பு) சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்

37. வை கூர்மை வை நுனைப் பகழி

38. எறுழ் வலிமை பேரெறுழ்த் திணிதோள்

4.1.2 ஒருசொல் பலபொருள் குறித்துத் தொல்காப்பியம் தரும் விளக்கம் மேற்கூறப்பட்ட சொற்களுக்குக் காலப்போக்கில் வேறு பொருட்களும் உருவாகி அவை ஒருசொல் பலபொருள் தரும் சொற்களாக மாறியுள்ளதைக் காணமுடியும். பழந்தமிழ் இலக்கண நூலார் தொல்காப்பியரே, ஒருசொல் பலபொருள் குறித்துத் தெளிவாக விளக்கியுள்ளதைச் சில சான்றுகளின் மூலம் காணலாம்.

வ. எண் சொல் பொருள் சான்று

1.

தட (i) பெருமை வலிதுஞ்சு தடக்கை

(ii) வளைவு தடமருப் பெருமை

2. சுய (i) பெருமை கயவாய்ப் பெருங்கை யானை

(ii) மென்மை கயந்தலை மடப்பிடி

3. நளி (i) பெருமை நளிமலை நாடன்

(ii) செறிவு நளியிருள்

4. ஏற்றம் (i) நினைவு கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி

(ii) துணிவு எற்றேற்றமில்லாருள் யானேற்ற மில்லாதேன்

5. பணை (i) பிழைத்தல் பணைத்துவீழ் பகழி

(ii) பெருத்தல் வேய்மருள் பணைத்தோள்

6. படர் (i) உள்ளல் (நினைத்தல்) வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி

(ii) செல்லுதல் கறவை கன்றுவயிற் படர

7. தா (i) வலிமை தாவி என்பொன் றைஇய பாவை

(ii) வருத்தம் கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென.

8. அழுங்கல் (i) அரவம் (ஆரவாரஒலி) உயவு புணர்ந்தன்றிவ் வழுங் கலூரே

(ii) இரக்கம் பழங்கணோட்டமு நலிய வழுங்கின னல்லனோ

(iii) கெடுதல் குணனழுங்கக் குற்ற முழை நின்று கூறுஞ் சிறியவர்கட்கு

9. செழுமை (i) வளமை செழும்பல் குன்றம்

(ii) கொழுப்பு செழுந்தடி தின்ற நாய்

10. விழுமம் (i) சீர்மை விழுமியோர் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு

(ii) சிறப்பு வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து

(iii) இடும்பை (துன்பம்) நின்னுறு விழுமங் களைந்தோன்

11. இரங்கல் (i) இசை ஏறிரங் கிருளிடை

(ii) கழித்தற்கிரங்கும் செய்திரங்கா வினை.

12. கறுப்பு (i) வெகுளி நிற்கறுப்பதோ ரருங்கடி முனையள்

(ii) நிறப் பொருள் கறுத்த காயா

13. சிவப்பு (i) வெகுளி நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்

(ii) நிறப் பொருள் சிவந்த காந்தள்

14. நனவு (i) களப் பொருள் (ஆடுகளப் பொருள்) நனவுப்பகு விறலியிற் றோன்றும் நாடன்

(ii) அகலப் பொருள் நனந்தலை யுலகம்

15. மதவு

(i) மடன் (அறியாமை) பதவு மேய்ந்த மதவுநடை நல்லான்

(ii) வலிமை கயிறிடு கதச்சேப்போல மதமிக்கு

(iii) மிகுதி மதவிடை

(iv) வனப்பு மாதர் வாண்முக மதைஇய நோக்கே

16. கடி (i) வரைவு (நீக்கற்பொருள்) கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு

(ii) கூர்மை கடிநுனைப் பகழி

(iii) காவற் பொருள் கடிகா

(iv) புதுமைப் பொருள் கடிமலர்

(v) விரைவு கடுமான்

(vi)விளக்கப்பொருள் அருங்கடிப் பெருங்கால்

(vii) மிகுதி கடிமுரசியம்ப

(viii) சிறப்புப் பொருள் அருங்கடி மாமலை

(ix) அச்சப்பொருள் கடியையா னெடுந்தகை செருவத்தானே

(x) ஐயப்பொருள் கடுத்தன ளல்லளோ வன்னை

(xi) கரிப்பு (காரப்பொருள்) கடிமிளகு தின்ற கல்லா மந்தி

4.1.3 ஒருசொல் பலபொருள் குறித்து நன்னூல் தரும் விளக்கம் ‘கடி’ என்ற உரிச்சொல் காவல், கூர்மை, மணம், விளக்கம், அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஒலித்தல், நீக்கல், கலியாணம், கரிப்பு ஆகிய பதின்மூன்று குணங்களில் வரும் என்பதை,

“கடிஎன் கிளவி காப்பே கூர்மை

விரையே விளக்கம் அச்சம் சிறப்பே

விரைவே மிகுதி புதுமை ஆர்த்தல்

வரைவே மன்றல் கரிப்பின் ஆகும்”

(நன்னூல்: உரியியல் :457)

என நன்னூல் விளக்குகின்றது.

வ. எண் பொருள் சான்று

1. காவல் கடிநகர்

2. கூர்மை கடிநுனைப் பகழி

3. மணம் கடிமாலை

4. விளக்கம் கடிமார்பன்

5. அச்சம் கடியரமகளிர்

6. சிறப்பு அம்பு துஞ்சும் கடியரண்.

7. விரவு எம் அம்பு கடிவிடுதும்

8. மிகுதி கடியுண்கடவுட்குஇட்ட செழுங்குரல்

9. புதுமை கடிமணச்சாலை

10. ஆர்த்தல் (ஒலித்தல்) கடிமுரசு

11. வரவு (விலக்குதல்) கடிமது

12. மன்றல் கடிவினை முடிகென எண்ணி

13. கரிப்பு கடி மிளகு

4.2 ஒருசொல் ஒருபொருளின் வளர்ச்சி நிலை

தொல்காப்பியத்தில் ஒருசொல் ஒரு பொருளாக இருந்த பல சொற்கள், காலப்போக்கில் ஒருசொல் பலபொருளாக வளர்ந்த நிலையைப் பல்வேறு சொற்பொருட்களின் மூலமாகப் புரிந்துகொள்ள முடியும்.

எ.கா

(அ) மாதர்

1. காதல்

2. பெண்

3. அழகு

4. பொன்

(ஆ) மாலை 1. அந்திப்பொழுது

(க)2. இரா

3. இருள்

4. சமயம்

5. குற்றம்

6. மரகதக்குற்றவகை

(ங)

1. இயல்பு

2. தொகுத்த பூந்தொடை

3. மாதரணிவடம்

4. பிரபந்தவகை

5. வரிசை

6. பாசம்

7. விறலி

8. பெண்

(ச)

1. குணம்

2. தொடுக்கப்பட்டது

(இ) வம்பு

(க)

1. புதுமை

2. நிலையின்மை

3. பயனிலாமை

4. வீண் வார்த்தை

5. பழி

6. தீம்பு வார்த்தை

7. படிறு

8. சிற்றொழுக்கம்

9. அசப்பியம்

10. வஞ்சனை

11. சரசச்செயல்

12. சண்டை

13. வாசனை

14. அரைக்கச்சு

15. யானைக்கச்சு

16. முலைக்கச்சு

17. கையுறை

18. மேற்போர்வை

“பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னான”

(நன்னூல்:462)

என்ற நன்னூலார் கூற்றுப்படி ஒரு சொல்லுக்கு ஒருபொருள் இருந்த நிலைமாறி, பல்வேறு பொருள்கள் விரிவடைந்துள்ளதை நம்மால் காண முடிகிறது.

4.2.1 ஒருசொல் பலபொருள் உருவாகக் காரணங்கள் ஒருசொல், ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை உணர்த்தும் நிலை, பல்வேறு மொழிகளிலும் காணப்படுகிறது. இதைக் குறிப்பதற்கு polysemia என்னும் சொல்லை பிரெல் (Michel Breal) பயன்படுத்தினார். ஒருசொல் எந்தப் பொருளை உணர்த்தி நிற்கிறது என்பதைச் சூழல்தான் முடிவு செய்கிறது.

எ.கா

root எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம் root – (வினைச்சொல்)

1. to send down roots and begin to grow.

2. to cause to stand fixed and unmoving.

3. to establish something deeply and firmly.

4. to root something out, destroy something completely.

root எனும் ஒருசொல், பல்வேறு பொருளை உணர்த்துவதை அறிய முடிகிறது.

தொடக்கத்தில் ஒரு பொருளைக் குறிப்பிட்ட சொல்லானது, காலப்போக்கில் பல்வேறு காரணங்களினால் வெவ்வேறு பொருள்களைப் பெற்றிருக்கலாம். இதற்கு அரசியல், சமூக, பொருளியல், சமயச் சூழ்நிலை காரணமாகலாம்.

எ.கா

கோயில் அரசர்மனை, தேவாலயம் சிதம்பரம், ஸ்ரீரங்கம்

‘கோயில்’ எனும் சொல் அரசனது அரண்மனையைக் குறிப்பதை, புறநானூறு (67), நெடுநல்வாடை (அடி.100) என்பவற்றில் காணமுடிகிறது. இடைக்காலத்தில், பக்தியிலக்கியங்களில் இறைவனுடைய இருப்பிடமாகக் குறிக்கப்பட்டது. பிற்காலத்தில் குறிப்பாகத் தில்லையையும், திருவரங்கத்தையும் இச்சொல் குறிப்பதாயிற்று.

4.2.2 ஒருசொல் பலபொருளின் வகைகள் பலபொருள் காட்டும் ஒரு சொல்லைப் பின்வருமாறு பகுக்கலாம்:

1. ஒலியமைப்பில் ஒத்த சொற்கள்

ஆறு river, six [(1) நதி, (2) எண்] ஆற்றினையும் ஆறு என்ற எண்ணினையும் குறித்தல்

ஓடு run, tile, ஓடுதல், கூரை வேயும் ஓடு.

2. இரண்டுமே தனிச்சொற்கள்

தட்டு plate, clap [(1) பெயர்ச்சொல், (2) வினைச்சொல்] உண்ணும் தட்டு, கை தட்டு

3. வேற்றுமொழிச் சொற்களைப் பெறுவதனால்

மைலு மயில், மைல் அன்னம் சாதம், பறவை ஏலம் ஏலக்காய், ஏலம் (விடுதல்) நட்சத்திரம் வானில் உள்ளது [(விண்மீன்), (திரை நட்சத்திரம்)]

4. ஒரு சொல்லின் முதற்பொருள் நீட்டுப்பொருள் என்பனவற்றின் தொடர்ச்சி நீங்கிவிடும் போது:

அரை பாதி, இடுப்பு (பாதியாகிய அரை, பொருள் நீட்சியின் போது இடுப்பைக் குறிக்கிறது).

ஒட்டு ஒட்டு (வினை), ஒட்டு (உறவுப்பெயர்) (ஒட்டு என்ற வினையைக் குறிக்கும் முதற்பொருள் பொருள் நீட்சியின்போது ஒட்டு என்ற உறவுப் பெயரைக் குறிக்கின்றது.)

4. தொடர்பான பலபொருள் குறிக்கும் சொல்:

(i) பொருளுருவாக்கம் : பூ பூத்தல், மலர்

(ii) பொருள் நீட்டல் : நரி வஞ்சக விலங்கு, வஞ்சகன்

(iii) பொருள் அடைவு : மொட்டை முடியற்ற தலை, வழுக்கைத் தலை, மாடி

(iv) சமுதாயச் சூழலுடன் தொடர்புபடுத்தும் போது தண்ணீர் இறை கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்தல், நிலத்துக்கு நீர் பாய்ச்சுதல் வழுக்கை வழுக்கைத் தலை, இளநீரில் உள்ள தேங்காய்

5. உருவகம் தொடர்பான பலபொருள்களைக் குறிக்கிறது. இதைப் பின்வருமாறு (ஐந்தாக) உல்மன் வகைப்படுத்துகிறார்.

தமிழ் மொழியில் ஒரு சொல் உருவகத்தின்போது தன் முதற்பொருள் அல்லாது வெவ்வேறு பொருட்களைக் குறிப்பதைக் காண முடிகிறது.

(i) மனிதனுடன் தொடர்புடைய உருவகம் காது உடலுறுப்பு, கோப்பையின் பிடி.

(ii) கழுத்து உடலுறுப்பு, சட்டையில் உள்ள காலர்

(iii) விலங்குடன் தொடர்புடையது பன்றி – பன்றி

(iv) உருவுள்ளவையோடு தொடர்புடையது வீடு – இல்லம், மோட்சம்

(v) உணர்வுடன் தொடர்புடையது இனிப்பு – சுவை, இனிய உணர்வு.

(vi) உருவற்றதனோடு தொடர்புடையது அடுக்கு – அடுக்கிவை, வீணாகப் பேசு.

6. ஆகுபெயரும் பலபொருள் குறிக்கும் ஒருசொல் ஆகும்

தன்னை மட்டும் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய வேறு பொருட்களையும் குறிக்கும் ஆகுபெயரானது, பல பொருள் குறிக்கும் ஒரு சொல்லாகவும் விளங்குகிறது.

பொருளாகுபெயர் – காகிதம் : தாள், கடிதம் இடவாகுபெயர் – காஞ்சிபுரம் : இடம், பட்டுப்புடவை காலவாகுபெயர் – மாசம் : மாதம், குழந்தை பிறப்பதற்குரிய காலம்

சினையாகுபெயர் – படிப்பு : வாசித்தல், கல்வி குணவாகுபெயர் – இழுப்பு : இழுத்தல், காக்காய் வலிப்பு தொழிலாகுபெயர் – பூ : பூத்தல், மலர்

7, இலக்கண வகையைச் சாரும் பொருள்களைக்கொண்டது : ஒரே இலக்கண வகை

ஆள் : மனிதன், வேலையாள் (பெயர்) பார் : பார், சோதித்துப்பார் (வினை)

இரண்டு இலக்கண வகை சார்ந்தவை:

விழி : கண் (பெயர்): கண்விழி (வினை)

8. பின்வருவன பலபொருள்களைச் சுட்டும் தன்மையன:

உருபன் : ஆல் : மண்ணால் செய்த பொம்மை; தடியால் அடித்தேன் சொல் : விழி : கண்விழி (திற) : கண்கள்

சொற்றொடர் – நான் வேலூர்! நான் வேலூரைச் சேர்ந்தவன் நான் வேலூருக்குச் செல்பவன் நான் வேலூரிலிருந்து வருபவன் மரபுத்தொடர் – தொலைந்து போ: இங்கிருந்து போ; இறந்து போ.

9. பரவலான பொருளைக் காட்டும் சொல்:

அவன் சுமையை எடுத்தான் (தூக்கினான்) அவன் நல்ல பழங்களை எடுத்தான் (தெரிவு செய்தான்) அவன் பல்லை எடுத்தான் (பிடுங்கினான்) அவன் குழந்தையை எடுத்தான் (தத்தெடுத்தான்) – நகரத்தார் வழக்கு)

10. வரிசைப் பொருள்களைக் காட்டும் சொல்:

புரட்டு – மாற்று, பேச்சை மாற்று, ஏமாற்று.

இவ்வாறாக ஒருசொல் பல பொருள்களைக் காலப்போக்கில் பெற்று வருவதைக் காண முடிகிறது.

4.3 ஒருபொருள் பலசொல்

ஒருசொல் எவ்வாறு பலபொருள்களை உடையதாக விளங்குகின்றதோ அதுபோன்றே ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்கள் வழங்கி வருகின்றன. டாக்டர் மு. வ அவர்களின் கூற்றுப்படி, ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தான் இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்கள் இருப்பின் பிற பொருட்கள் மறைந்துவிடும். பொருளை வேறுபடுத்த, சில அடைகள் சேர்க்கப்பட்டும் சொற்கள் வழங்கப்படும்.

எ.கா : ‘நீர்’

‘நீர்’ என்ற சொல் தண்ணீரையும், ‘நீர்’ என்ற முன்னிலைப் பெயரையும் குறிக்கின்றது. இவ்விரண்டும் பெயர்ச்சொற்களாகவே இருக்கின்றன. எனவே, ‘நீர்’ என்பதை முன்னிலைப் பெயருக்கு உரியதாக்கியும், பருகும் நீரைத் தண்ணீர் எனவும் குறிப்பிடத் தொடங்கினர்.

தமிழ்மொழி சொல்வளம் கொண்டது என்பதால், ஒரு பொருளைக் குறிக்கவே பல சொற்களை வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட சொல்லாக்கத்தால், பல புதிய சொற்கள் தமிழ்மொழியில் வந்து பயன்படத் தொடங்கின. பழைய சொற்களுடன் புதிய புதிய சொற்களும் சேர்ந்து வழங்கி வருகின்றன. இச்சொற்கள் ஒரே பொருளை உணர்த்தினும், இவற்றிடையே சிறுசிறு வேறுபாடு இருப்பினும், அச்சொற்கள் வேறுபாட்டை எல்லாம் கடந்து ஒரே பொருளைக் குறிப்பதாக வழக்கத்தில் இடம் பெற்றுள்ளன.

எ.கா: யானை, களிறு, பிடி, ஒருத்தல்

இச்சொற்கள் எல்லாம் சிறுசிறு பொருள் வேறுபாடு உடையன.

(i) யானை – ஆனை எனும் விலங்கு

(ii) களிறு – ஆண் யானை

(iii) பிடி – பெண் யானை

(iv) ஒருத்தல் – ஆண் யானை

இருப்பினும் மேற்கூறிய நான்கு சொற்களும் ‘யானை’யையே குறிக்கின்றன.

இதுபோன்றே கடலைக் குறிக்கின்ற சொற்களையும், மலையைக் குறிக்கின்ற சொற்களையும் கீழ் வருமாறு காணலாம்.

வ.எண் பொருள் சொல் பொருள் வேறுபாடு

1. கடல் புணரி முந்நீர் ஆழி பரவை பௌவம் கடல் அலைகடல்

கடற்கரை நீர்ப்பரப்பு நுரை சமுத்திரம்

2. மலை வெற்பு சிலம்பு ஓங்கல் அடுக்கம் மலை குன்று மலை பக்கமலை மேடு ஒன்றின் மேல் ஒன்று ஏற்றல் பருப்பதம் சிறுமலை

மக்கள், குறிப்பிட்ட அப்பொருளின் மீது காட்டிய ஆர்வமே ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் தோன்றுவதற்குக் காரணமாகக் கொள்ளலாம் என டாக்டர் மு. வரதராசனார் குறிப்பிடுகின்றார் (மொழி வரலாறு ப.98, 1973). யானைப்படையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் தமிழ்மக்கள் யானையைக் குறிக்கப் பல சொற்களை வழங்கினர். அவ்வாறே ஈகைத் திறன் மீதும் (ஈ, தா, கொடு, ஈகை, கொடை, ஒப்புரவு, வழங்கல், அளித்தல்), புகழ் மீதும் (புகழ், இசை, ஒளி) கொண்ட ஆர்வத்தால் ஒருபொருட் பன்மொழிகள் தமிழ் மக்களின் பேச்சு வழக்கில் மிகுதியாகி வந்துள்ளன.

4.3.1 சூழ்நிலைக்கேற்ற ஒருபொருள் பலசொல் ஒரு மொழியைப் பொறுத்தவரை பயன்பாடு என்பதுதான் மிக உயரிய சான்றாகும்.

எ.கா : கயல் போன்ற விழி

மேற்கூறிய உவமைத் தொடர், கயல்விழி எனத் தொகையாக்கப்பட்டு, பின்னர் கயல்விழி வந்தாள் என அன்மொழித் தொகையாக, கவிஞர்களின் கைவண்ணத்தால் மாறியது. சொல்லுக்கும் பொருளுக்கும் இடையே நிலவும் தொடர்பில் மாற்றங்கள் உருப்பெறலாயின.

இரு சொற்களால் உணர்த்தும் ஒரு பொருளை ஒரே சொல்லாலும் உணர்த்த முடியும்.

எ.கா: களிறு நடந்தது

இந்த வாக்கியம் உணர்த்தும் பொருளைத்தான், ‘ஆண்யானை நடந்தது’ எனும் வாக்கியமும் தருகிறது. எனவே, களிறு எனும் சொல்லுக்குப் பதிலாக ‘ஆண்யானை’ எனும் தொடரைப் பயன்படுத்த முடிகின்ற காரணத்தால், இவ்விரு வடிவங்களும் ஒருபொருள் தன்மை வாய்ந்தவை என்பது தெரிகிறது.

சூழ்நிலைக்கேற்ப, சில சொற்கள் ஒருபொருள் தன்மை படைத்தன வாகின்றன என்பது உணரத் தக்கது.

4.4 ஒருபொருள் பலசொல் வகைகள் இனி, ஒரு பொருளைக் குறிக்கும் பலசொற்களைப் பின்வரும் வகைப்பாட்டில் காண்போம்:

1. ஒலியமைப்பில் வேறுபட்ட இரண்டு சொற்கள் ஒரே பொருளை உணர்த்தலாம்.

சந்தோஷம், மகிழ்ச்சி

பதில், விடை

கல்யாணம், திருமணம்

2. ஒலியமைப்பில் மிக நெருக்கமான இரண்டு சொற்கள் ஒரே பொருளை உணர்த்தலாம்.

சாதி, ஜாதி

பழம், பளம்

3. வேற்றுமொழிச் சொற்கள் உட்புகும் போது, ஒருபொருளைக் குறிக்கும் பலசொற்கள் உருவாகின்றன.

(அ) முற்றிலும் ஒத்த பொருளைக் குறிக்கும் சொற்கள்

சாலை, ரோடு – road

(ஆ) சற்று வேறுபட்ட (ஆனால் நெருக்கமான) பொருளைக் குறிக்கும் சொற்கள்

டாக்டர், மருத்துவர் – Doctor

(இ) சிறிது வேறுபட்ட பொருளைக் குறிக்கும் பல சொற்கள்

மேஜிக், வித்தை – magic, witchcraft

ஃபீஸ், கட்டணம் – fees, fare.

(ஈ) தாய்மொழியில் சொல் இருந்தும் மதிப்பு, உயர்வுநிலை கருதிப் புகுத்தப்படும் (பிறமொழிச்) சொற்கள்

அரங்கு, ஆடிட்டோரியம் – Auditorium

(உ) வேற்றுமொழிச் சொற்கள் உட்புகுந்த பின், அவற்றுக்கு இணையாகத் தாய்மொழியில் உருவாக்கப்படும் சொற்கள்:

டெலிவிஷன், தொலைக்காட்சி – television.

ஃபேக்ஸ், தொலை மடல் – fax

டெலிபோன், தொலைபேசி – telephone

ஆடிட்டோரியம், கலையரங்கு – Auditorium

(ஊ) தாய்மொழியில் இணையான சொற்கள் உருவாக்கப்பட்ட பின்னும், வேற்றுமொழிச் சொற்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படலாம்.

சைக்கிள், ஈருருளி, மிதிவண்டி, துவிச்சக்கர வண்டி

(bicycle)

டீ, தேநீர், சுவைநீர் – tea

இதற்கு, பழக்கவழக்கங்கள், பிறர் உருவாக்கிய சொற்களை ஏற்க மனமின்மை, சொற்கள் பொதுவானவையாக இல்லாமை, சொற்களின் கடினத்தன்மை என்பவற்றைக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.

(எ) தவிர, இணையான தாய்மொழிச் சொற்கள்

பயன்படுத்தப்படுவதால், பிறமொழிச் சொற்கள்

காலப்போக்கில் மறைய வாய்ப்புண்டு

ஆங்கிலத்தின் Director தமிழில் `டைரக்டர்’ என

வழங்கப்பட்டுவந்தது. இப்போது `இயக்குநர்’ என்பது

பயன்படுத்தப்படுவதால் நாளடைவில் `டைரக்டர்’

மறையலாம். அதே போல் ஆங்கில Cinematographer-ஐத்

தமிழில் கேமராமேன் என்று சொல்லிவந்தோம்.

`ஒளிப்பதிவாளர்’ என்பது வழக்கத்துக்கு வந்தபிறகு

ஆங்கிலச் சொல் மறைந்து விடும்.

(ஏ) வேற்றுமொழிச் சொற்களை ஒருமொழி கொள்வதால்,

ஒருபொருளைக் குறிக்க அம்மொழியில் 2 அல்லது 3

சொற்கள் இருக்கும் நிலை நிலவக் கூடும்.

நீதிமன்றம், கோர்ட்டு – Court

மிச்சம், பாக்கி, பேலன்ஸ் – balance

தொழிற்சாலை, பேக்டரி – factory

(4) நிலைபெறும் சூழல், பொருள் பரப்பு, அமைப்பு

ஆகியவற்றின் அடிப்படையில், தாய்மொழியிலான ஒரு

பொருளைக் குறிக்கும் சொற்களை முறையே

பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

(அ) மிக ஒத்த பொருளைக் காட்டும் சொற்கள்

அண்ணி, மதனி

புத்தகம், நூல்

சிறிது வேறுபட்ட பொருளைக் காட்டும் சொற்கள்:

கஷ்டம், நெருக்கடி

ஆத்திரம், ஆவேசம்

(ஆ) பொதுச்சொற்கள் – குறிப்புச் சொற்கள்

அடி, தாக்கு, உதை

இக்கட்டு, நெருக்கடி, முடை

(5) கிளைமொழிகளில் ஒருபொருளைக் குறிக்கும்

பலசொற்கள் உருவாகலாம்.

வட்டாரக் கிளைமொழி: கன்னியாகுமரி : தொந்தரவு, பசு,

புலம்பு வடார்க்காடு : சிரமம், கறவை, பெனாத்து

சமுதாயக் கிளைமொழி :

(i) சாதிச் சொற்கள்

சீனி : ஜீனி

அத்தை : மாமி

பெண்டாட்டி : ஆம்படையாள்

(ii) மதச் சொற்கள் – கோயில் – ஆலயம் -

பள்ளிவாசல் / கடவுள் – தேவன் – அல்லா /

கும்பிடு – பிராத்தி (பிரார்த்தி) – தொளுவு

(தொழு).

(6) ஒரு பொருளைக் குறிக்கும் சொற்களின் நடை பின்வருவன – வற்றிற்கேற்ப மாறுபடும்

பேசுவோரைப் பொறுத்து : வணக்கம் – நமஸ்காரம்

வரட்டுமா – வர்றேன்

பேச்சுமொழி – எழுத்துமொழி : கை – கரம்

பூ – மலர்

பண்டாட்டி – மனைவி

காலத்தைப் பொறுத்து : அக்காலம் → ஞிமிறு, நிணம்

இக்காலம் → தேனீ, சதை

தோன்றும் துறையைப் (சூழல்) பொறுத்து:

மருத்துவர் – மலம் : பேதி

சடங்கு – சடங்கு : புனித நீராட்டு

முதலிரவு – சாந்தி முகூர்த்தம்

மதம் – படு : பள்ளிகொள் (சயனி)

மனது : இருதயம்

பேசுவோர் நிலையைப் பொறுத்து : வா; வாரும்;

வாங்கோ

சூழலைப் பொறுத்து : பேச்சுச்சூழல் : நூல் /

பத்திரிகைச் சூழல்

எத்தினி – எத்தனை

அம்மாசி – அமாவாசை

சாதாரண பேச்சுச்சூழல் : சாப்பிடு

தரமற்ற பேச்சு வழக்கில் : கொட்டிக்கோ.

(7) ஒரு பொருளைக் குறிக்கும் சொற்களில் ஒன்று தனிச்சொல்லாக இருக்கலாம். பிறசொற்கள் இரட்டிப்புச் சொற்களாக, பொருளிரட்டிப்புச் சொற்களாக, எதிரொலிச் சொற்களாக (Echo words) இருக்கலாம்.

வ.எண் தனிச்சொல் இரட்டிப்பு

1.

2.

3. கபடி

சதங்கை

சந்தோஷம் சடுகுடு

கிண்கிணி

கிளுகிளுப்பு

தனிச்சொல் பொருள் இரட்டிப்பு

4.

5. ஆஸ்தி

அசௌக்கியம் பொன்னு பொருளு

நோய் நொடி

தனிச்சொல் எதிரொலி

6. பூச்சி பாம்புகீம்பு, பல்லிகில்லி.

4.5 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை ஒருசொல் பலபொருள் குறித்தும், ஒருபொருள் பலசொல் குறித்தும் பல செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்துகொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பார்க்கலாம்.

ஒருசொல் ஒருபொருள், ஒருசொல் பலபொருள், ஒருபொருட் பலசொல் குறித்துப் பழமையான இலக்கண நூல்களான தொல்காப்பியமும், நன்னூலும் கூறும் செய்திகளை அறிந்து கொண்டீர்கள்.

ஒரு பொருளுக்குப் பல சொற்கள் உருவாகக் கூடிய பல்வேறு காரணங்களையும் , அதற்குரிய சான்றுகளுடன் புரிந்துகொண்டீர்கள்.

ஒருபொருளைக் குறிக்கும் பலசொற்கள் இருப்பினும், அவற்றிடையே உள்ள வேறுபாடுகள் குறித்தும், வகைகள் குறித்தும் தக்க சான்றுகளுடன் உணர்ந்து கொண்டீர்கள்.

பாடம் - 5

சொற்பொருள் மாற்றத்தின் பல்வேறு வகைகள்

5.0 பாட முன்னுரை

ஒரு மொழியின் மேம்பாட்டுத் திட்டம் அல்லது வளர்ச்சித் திட்டம் என்பது, அம்மொழியின் தேவையை முன்னிட்டு மேற்கொள்ளப்படுவதல்ல; சமுதாயத்தின் தேவை, சூழல், வாழ்வு, வளர்ச்சி, அச்சமுதாயம் சார்ந்துள்ள நாட்டுவளர்ச்சி போன்றவற்றை அடிப்படையாகவும், மையமாகவும் கொண்டு மேற்கொள்ளப்படுவது. மொழி, முதன்மையாகவும் முக்கியமாகவும் ஒருசெய்திப் பரிமாற்றக் கருவியாகப் பயன்படுகிறது. அதனைத் தனித்துப் பார்ப்பது அல்லது அணுகுவது என்பது இயல்பானதாகத் தோன்றவில்லை. இதற்குக் காரணம், மொழியானது அது சார்ந்திருக்கும் சமுதாயத்தின் வாழ்வோடும் வளர்ச்சியோடும் இரண்டறக் கலந்து நிற்பதே ஆகும்.

இத்தகைய மொழி, மாறக்கூடிய தன்மை உடையது. மொழியிலுள்ள சொற்களிலும் சொற்கள் புலப்படுத்தும் பொருள்களிலும் ஏற்படும் மாற்றமே மொழி மாற்றத்தை உண்டாக்குகிறது எனலாம். தமிழ் மொழியில் இச்சொற்பொருள் மாற்றம் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. அத்தகைய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, சொற்கள் பொருளுணர்த்தும் தன்மையை, பல முறைகளைப் பயன்படுத்தி விளக்கலாம். இவற்றையெல்லாம் விளக்கி, இப்பாடம் நமக்குச் சொற்பொருள் மாற்றச் செய்திகள் பலவற்றை வழங்குகிறது.

5.1 சொற்பொருள் மாற்றத்திற்கான காரணங்கள்

சொற்பொருளை ஆராயும்போது, சொல் உணர்த்தும் பொருள் எவ்வெவ்வாறு வேறுபட்டுச் செல்கின்றது என்று காணல் வேண்டும்.

சொற்களின் வடிவம் திரிவதற்கு மனம் காரணம் அன்று, ஒலிக்கும் உறுப்புகளே காரணம். சொற்களின் பொருள் திரிவதற்கு உறுப்புகள் காரணம் அல்ல, மனமே காரணமாகும் எனலாம்.

சொற்கள் குறிக்கும் பொருளுணர்ச்சி, என்றும் ஒரே நிலையாக இராமல் காலப்போக்கில் மாறுவதற்கான காரணங்களைப் பின்வருமாறு வகைப் படுத்தலாம்.

சொற்பொருள் மாற்றத்திற்கான காரணங்கள்

ஒருசொல் உணர்த்தும் பொருள் விரிவானதாகவும் பலவற்றைத் தன்னுள் கொண்டதாகவும் இருப்பதால், அது மெல்ல நெகிழ்ந்து பொருள் வேறுபட இடந்தருகிறது.

ஒரு சொல்லால் உணர்த்தப்படும் பொருளின் பல பண்புகளில் அல்லது பல பகுதிகளில், ஒன்று சிறந்து விளங்குவதால், அச்சொல் மெல்லமெல்ல அந்தச் சிறப்புப் பண்பையோ பகுதியையோ உணர்த்தத் தொடங்குகின்றது.

ஒரு சொல் உணர்த்தும் பொருளுக்கு அடுத்த நிலையில், மற்றொரு பொருளும் மறைந்திருப்பதால், இரண்டாம் பொருளைச் சுட்டும் வகையிலோ அல்லது இரண்டு பொருளையும் தழுவும் வகையிலோ சொல் இடந்தருகின்றது.

ஒரு பொருளை வற்புறுத்திக் கூறும்போதும், தெளிவுறுத்திக் கூறும்போதும், உருவகப்படுத்தி அதற்கேற்ற சொல்லை ஆளும்போதும் உருவகச் சொல்லின் பொருள் திரிந்து விடுகின்றது.

உணர்ச்சி மிகுதியாகக் கூறும்போது ஒருசொல்லின் பொருளை வற்புறுத்துவதால் உண்மைப்பொருள் மறைந்து அதனினும் விரிவான அல்லது குறுகிய மற்றொரு பொருள் உணர்த்தப்படுகின்றது.

எள்ளல் முதலிய குறிப்புகள் காரணமாகவோ, இடக்கரடக்கல், மங்கலம் முதலிய வழக்குக் காரணமாகவோ ஒரு சொல்லின் இடத்தில் வேறுசொல் புகுவதால் அச்சொல் தன்பொருளை இழந்து மாறுதல் அடைகின்றது.

அறியாமை காரணமாகவோ, தெளியாமை காரணமாகவோ, ஒரு சொல்லைத் தவறான பொருளில் வழங்குவதால், அச்சொல் தன் உண்மைப் பொருளை உணர்த்தத் தவறிவிடுகின்றது.

மக்களின் வாழ்க்கையில் புதியன புகுதலால், மாறுதல் ஏற்பட ஏற்பட, புதிய கருத்துகள் புகப்புக, புதிய கருவிகள் பரவப்பரவ, அவற்றினைக் குறிக்கப் புதிய சொற்கள் அம்மொழியிலேயே ஏற்படுவதனால் பழைய சொற்களிடையே மாற்றங்கள் ஏற்படுகின்றன.

5.2 சொற்பொருள் மாற்றத்திற்கான புறக் காரணங்கள்

பொதுவாக வரலாறு, உலகம், மனம், மொழி ஆகியவற்றிலான வேறுபாடுகளுடன் இணைத்துப் பார்க்கும்போது, சொற்பொருள் மாற்றத்திற்குப் பின்வருவனவும் காரணங்களாகலாம் என்பதை அறிய முடிகிறது.

1. உலகில் ஏற்படும் மாற்றங்கள்

ஆட்சி : அரசாட்சி, மக்களாட்சி

அடுப்பு : கரி அடுப்பு, மின் அடுப்பு

2. அறிவியல் கண்டுபிடிப்புகள்

கதிர் : நெற்கதிர், கிரணம், எக்ஸ்ரே கதிர்

3. சொற்களின் பொருள் பரப்பில் ஏற்படும் மாற்றங்கள்

பள்ளி : கோயில், பள்ளிக்கூடம்

வாக்கு : வார்த்தை, வாக்குச்சீட்டு

நெய் : எண்ணெய், நெய்.

4. மனித மனவுணர்வு மனப்பாங்கிலான மாற்றங்கள்

நாற்றம் : நறுமணம், கெட்ட மணம்

5. சொற்கடன் பேறு

நட்சத்திரம் : விண்மீன், திரைப்பட நடிகை

விசிறி : விசிறி, ரசிகன்/தொண்டன்

6. மொழியலகுத் தொடர்களின் அலகு குறைப்பு

பட்டை : மரப்பட்டை, சாராயம்

காவல் : காத்தல், காவல்துறை

7. தேர்ந்தெடுத்த விளக்கம்

பாம்புராணி : அரணை, பாம்பின் ராணி

5.3 உல்மனின் சொற்பொருள் மாற்ற வகைகள்

சொற்பொருள் மாற்றங்களை நான்குவகை மாற்றங்களாகப் பின்வருமாறு வகைப்படுத்துகிறார் உல்மன்.

1. உருவகமாக்கல் மாற்றம் (Metaphor)

பொருள் ஒற்றுமை அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது.

எ.கா:

தழுவல் : ( தழுவுதல், தழுவல் இலக்கியம் )

தண்ணி : ( தண்ணீர், மது )

2. ஆகுபெயராக்கல் மாற்றம் (Metonymy)

இம்மாற்றம் பொருள் தொடர்ச்சி அடிப்படையில் அமைகிறது.

எ.கா:

கண் : கண்ணேறு (இலக்கியம்), கண் வைத்தல்

எழுத்து : எழுத்து, கடிதம் (Letter, post)

கண்காணி : கண்காணித்தல், தொழிலாளர்களைக் கண்காணிப்பவன் (watch, watchman)

3. தேர்ந்தெடுத்த விளக்கத்தாலான மாற்றம் (popular etymology)

இம்மாற்றம் அமைப்பு ஒற்றுமை அடிப்படையில் அமைவது.

எ.கா :

பாம்புராணி : அரணை, பாம்பின் ராணி

இங்கிலாண்டு : இங்கிலாந்து, இன்லேன்ட் கடிதம்

4. பெயர்க் குறுக்கத்தாலான மாற்றம் (Ellipsis)

தினசரி (பத்திரிகை) daily (paper)

எ.கா:

அறுவடையின் போது வந்தான்.

அறுவடை (காலம்) ; அறிஞர் (அண்ணா) (அண்ணா- மேன்மை உடையவர்)

5.4 தமிழ் மொழியில் சொற்பொருள் மாற்ற வகைகள்

தமிழ் மொழியிலும் காலத்திற்கேற்ப, சொற்கள் தரும் பொருளின் மாற்றங்கள் நிகழ்ந்து வந்ததைப் பல்வேறு சான்றுகளின் மூலம் உணரலாம். அம்மாற்றங்களைப் பல வகைகளாகப் பின்வருமாறு காணலாம்.

1. ஒரு சொல் ஒருபொருள்

பேச்சு மொழியில் ஒரு சொல்லானது, அதன் பொருளை உணர்த்துகின்றது. எழுத்து மொழியின் செல்வாக்கால் ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களும் வழக்கத்தில் உள்ளன. ஒருசொல் இருபொருளை உணர்த்தி வந்தால் அவற்றுள் ஒருபொருள் மட்டும் வழக்கில் வழங்க, மற்றொரு பொருள் அழிவையோ அல்லது திரிபையோ அடைகிறது.

எ.கா: கவலை

இச்சொல் இரண்டாகப் பிரியும் வழியிடத்தையும், மனக்கவலையையும் உணர்த்தி வந்தது. இன்று, மனக்கவலையை மட்டும் உணர்த்தி, மற்றொரு பொருள் அழிந்தது.

போர் என்ற சொல் வைக்கோல் போரையும், படைவகுத்து நிகழ்த்தும் போரையும் உணர்த்துவது. பண்டைக் காலத்தில் முன்னதை உணர்த்தப் ‘போர்வு’ என்று சிறிது வேறுபட்ட சொல் வழங்கியது. இக்காலத்தில், வைக்கோல் என்ற அடையடுத்து அப்பொருள் உணர்த்தப்படுகின்றது.

2. ஒரு பொருளுக்கு ஒருசொல்

ஒரு பொருளை உணர்த்த ஒரு சொல்லே வழங்கும். இருசொல் வழங்கின், ஒன்று நிற்க, மற்றொன்று அழிந்துவிடும் அல்லது வேறு பொருளுணர்த்தத் தொடங்கும்.

எ.கா

(அ) வீடு, இல், மனை.

மேற்கூறிய சொற்கள் ஒருபொருளை உணர்த்தும் சொற்களாகும். இன்று பேச்சுவழக்கில் வீடு என்ற சொல்லே அப்பொருளை உணர்த்துவதாக நிலைபெற்றுள்ளது. இல் என்பது இலக்கிய வழக்கோடு நின்றுவிட்டது. பேச்சு வழக்கில் அது அழிந்துவிட்டது. மனை என்பதோ, பேச்சுவழக்கிலும் வாழ்கின்றது. ஆனால் வீடு கட்டுவதற்குரிய நிலப்பகுதி என்று சிறிது வேறுபட்ட பொருளைக் குறிக்கின்றது.

(ஆ) குணக்கு, கிழக்கு

என்னும் இருசொல்லும் ஒரே பொருளை உணர்த்துவன. அவற்றுள் குணக்கு இன்று பேச்சுவழக்கில் இடமிழந்துள்ளது. அவ்வாறே, குடக்கு, மேற்கு என்பவற்றில் குடக்கு மறைந்துவிட்டது. ஆனால் ஒவ்வொரு சொல்லாகவே வழங்கிய வடக்கு, தெற்கு என்பன இன்றும் வாழ்கின்றன.

(இ) நடை, நடத்தல், நடக்கை, நடப்பு

இவை முதலில் ஒரு பொருளைத் தருவதாக வழங்கியிருக்கக் கூடும். இன்று, இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருளில் வழங்குகின்றன. எனினும் நான்கு சொற்களுமே வாழ்கின்றன.

3. சிறப்புப் பொருள்பேறு

ஒரு காலத்தில் பலவற்றிற்கும் பொதுவாக இருந்த சொல், தற்காலத்தில் அவற்றுள் ஒன்றையே உணர்த்துவதைச் சிறப்புப் பொருட்பேறு என்பர்.

எ.கா

(அ) தங்கம், வெள்ளி, செம்பு முதலியவற்றைக் குறித்த பொன் என்ற சொல், இன்று தங்கத்தை மட்டும் குறிக்கின்றது.

(ஆ) எள்ளின்நெய், பாலின்நெய் முதலியவற்றைக் குறித்த நெய் என்ற சொல் இன்று, பாலின் நெய்யையே குறிக்கின்றது.

(இ) பழையது

பழமையானவற்றையெல்லாம் குறித்த பழையது என்ற சொல், இன்று பழைய சோற்றையே குறிக்கின்றது.

(ஈ) இழவு

எப்பொருளை இழந்தாலும் அதனைக் குறித்த இழவு என்ற சொல், இன்று இறப்பாகிய சாவை மட்டும் உணர்த்துகின்றது.

(உ) புல்

புறக்காழ் உடைய பலவற்றையும் உணர்த்திய புல் என்ற சொல், இன்று நிலத்தில் வளரும் புல்லையே குறிக்கின்றது.

(ஊ) மான்

விலங்குகளைப் பொதுவாகக் குறித்த மான் என்ற சொல், இன்று மான் (deer) என்ற இனத்தை மட்டும் குறிக்கின்றது.

(எ) பெண்சாதி

பெண்ணினத்தைக் குறித்த பெண்சாதி என்ற சொல், இன்று மனைவியை மட்டும் குறிக்கின்றது.

(ஏ) அரண்மனை

காவல் அமைந்த வீட்டைக்குறித்த அரண்மனை என்ற சொல், இன்று அரசன் வாழுமிடத்தை மட்டும் குறிக்கின்றது.

(ஐ) கல்லறை

கல்லால் கட்டப்பெற்ற அறையைக் குறித்த கல்லறை என்ற சொல், இன்று இறந்தவர் மீது கட்டப்படும் அறையையே குறிப்பதாயிற்று.

4. பருப்பொருள் பேறு (concretion)

முதலில் நுண்மையான பொருளை உணர்த்தி வந்த சொல், பின்னர் பருப்பொருளை உணர்த்தத் தொடங்கியது.

எ.கா

விருந்து

இச்சொல் புதுமை என்னும் பண்பை உணர்த்தி வந்தது. இப்போது வீட்டிற்குப் புதியதாக வந்தவரையும், குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் இடம்பெறும் சிறப்பு உணவையும் உணர்த்துதலைக் காணமுடிகிறது.

4. மென்பொருள் பேறு (

yperbole)

முன்பு வன்மையான பொருளுடையதாக வழங்கிய சொல்லை, தற்போது சிறிது வன்மை குறைந்த ஒன்றுக்கு உரியதாக மென்மைப்படுத்தி வழங்குகின்றனர்.

எ.கா:

அமர்க்களம்

அமர்க்களம் என்ற சொல் பழங்காலத்தில் நால்வகைப் படையுடன் போரிட்ட யானையும், குதிரையும், மனிதரும் அழியும் இடத்தைக் குறித்தது. இப்போது வீட்டின் ஒரு பகுதியில் சிறுவர்கள் ஆரவாரம் செய்து விளையாடிக் குழப்பம் உண்டாக்குவதையும், இது போன்றவற்றையும் உணர்த்துகின்றது.

5. வன்பொருள்பேறு (Litotes)

முன்னர் மென்மையான பொருளுடன் வழங்கிய சொல்லை, இப்போது வன்மையான பொருள் உணர்த்த வழங்குகின்றனர்.

எ.கா

அவர் அங்கே ஒழிந்தார் என்றால் பழங்காலத்தில் மற்றவர்களோடு வெளியே புறப்படாமல் அவ்விடத்திலேயே நின்றுவிட்டார் என்பது பொருளாகும். இக்காலத்தில் அழிந்துவிட்டார் என்ற பொருள் தருகிறது.

6. மங்கல வழக்கு (Meliorative tendency)

மங்கலம் அல்லாதவற்றைக் கூறும்போது, மங்கலமான வேறு சொற்களால் மறைத்துக் கூறுவோம். அதனால் அச்சொற்களின் பொருள் வேறுபடுகின்றது.

எ.கா

துஞ்சினார், மறைந்தார் என்ற சொற்கள் இவ்வாறே செத்தார் என்ற பொருள் உணர்த்துவனவாயின.

7. இடக்கரடக்கல் (Pejorative tendency)

நாகரிகமல்லாத சொற்களை மறைத்து அவற்றின் பொருளை நாகரிகமான பிற சொற்களால் புலப்படுத்துவோம். அதனால் அச்சொற்களும் பொருள் வேறுபடுவதைக் காணமுடியும்.

எ.கா

வாய்பூசல் (உணவுக்குப் பிறகு கை, வாய் தூய்மையாக்குதல்), கால்கழுவல்

மேற்கூறிய சான்றுகளைப் போன்று பல சொற்கள் இவ்வாறு வழங்குகின்றன.

8. ஆகுபெயர் (Metonomy, Synecdoche)

ஒரு பொருளின் பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளைக் குறிக்க வழங்குவதே ஆகுபெயர்.

எ.கா

அ) வெற்றிலை என்பது சினைக்குப் பெயர்; வெற்றிலை நட்டான் என்பதில் முதலுக்கு (செடிக்கு)ப் பெயராகி நின்றது.

ஆ) உலகம் என்பது இடத்தின் பெயர்; உலகம் பொல்லாதது என்பதில் உலகமக்களை உணர்த்துகின்றது.

இவ்வாறே காலம், பண்பு, தொழில் முதலிய பலவற்றின் பெயர்கள் அவற்றோடு தொடர்புடையனவற்றை உணர்த்துதல் உண்டு.

9. உருவகம் (Metaphor)

ஒரு பொருளை அதற்கு உரிய சொல்லால் உணர்த்தாமல், தெளிவாக்க விரும்பி, உருவகப்படுத்தி அந்த உருவகச் சொல்லால் உணர்த்துதல்.

எ.கா

அ) பழுத்த கிழவர் என்பதில் பழுத்தல் என்பது உருவகமாகிப் பொருள் உணர்த்தலைக் காணமுடிகிறது. பழுத்தல் பழத்தின் தன்மை ஆதலின், இங்குக் கிழவர் பழம்போல் ஆனார் என்ற பொருள் பயக்கின்றது.

ஆ) பந்தலின் கால், மனையின் அடி, புட்டியின் கழுத்து, நாற்காலியின் கை, மரத்தின் இலை, கட்டுரையின் தலைப்புச் சொற்கள் முதலியவை உருவகப்பொருள் உணர்த்துதலைக் காணலாம்.

5.5 சொற்பொருள் மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்

சொற்பொருள் மாற்றத்தின் காரணமாகப் பலவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன. அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. பொதுப்பொருள் பேறு (Expansion or widening)

முன்னர் ஒருவகைப் பொருளுக்கே உரியதாக வழங்கிய பெயர், பிறகு அதனோடு ஒத்த பலவற்றிற்கும் பொதுப்பெயராக வழங்குதலே பொதுப்பொருள்பேறு ஆகும்.

எ.கா

அ) மரக்கால் என்பது முன்பு மரத்தால் இயன்ற முகத்தலளவைக் கருவியையே உணர்த்தி வந்தது. இப்போது இரும்பு, பித்தளை முதலியவற்றாலாகிய கருவிகளையும் குறிக்கின்றது.

ஆ) குட்டி என்பது மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, முயல், நரி, குரங்கு ஆகிய சிலவற்றின் இளமைப் பெயராக வழங்கி வந்தது. இன்று விலங்குகள் பலவற்றிற்கும் பொதுவான இளமைப் பெயராக அது வழங்கி வருகின்றது.

இ) மரம் என்ற சொல் முன்பு அகக்காழ் (வைரம்) உடையவற்றிற்கே பெயராக வழங்கியது. இன்று தென்னை, பனை முதலிய புறக்காழ் உடையவற்றையும் குறித்துப் பொதுப்பெயராக வழங்குகின்றது.

2. சிறப்புப் பொருள்பேறு (Restriction or Narrowing)

முன்பு பலவற்றிற்கும் பொதுவாக இருந்த ஒருசொல், இப்போது அவற்றுள் ஒன்றையே உணர்த்துகின்றது.

எ.கா

அ) பொன் என்பது முன்பு தங்கம், செம்பு, வெள்ளி, இரும்பு முதலான உலோகங்கள் பலவற்றிற்கும் பொதுவான பெயர், இப்போது அது ஒருவகை உலோகத்தையே உணர்த்துகின்றது.

ஆ) நெய் என்பதும் அவ்வாறே முன்பு பாலின் நெய், எள்ளின் நெய் முதலிய பலவற்றிற்கும் பொதுவாக இருந்தது. இப்போது அது பாலின் நெய் ஒன்றையே குறிக்கின்றது.

இ) பழையது என்னும் சொல் பழமையுற்ற பலவற்றையும் குறிப்பது. இன்று தனியே நின்று, பழஞ்சோற்றைக் குறிக்கின்றது.

3. உயர்பொருள் பேறு (Elevation)

முன்னர் இழிந்த பொருளைக் குறித்து வந்த சொல், தற்போது உயர்ந்த பொருளில் வழங்கி வருகின்றது.

எ.கா

அ) களிப்பு, மகிழ்ச்சி

இச்சொற்கள் முன்பு கள்ளுண்டு மயங்குதலைக் குறித்தன. ஆனால், இப்போது மனம் உவந்திருத்தல் என்னும் உயர்ந்த பொருளையே தருகின்றன.

ஆ) கழகம் என்பதும் அவ்வாறே ஆயிற்று. சூதாடும் இடத்தை உணர்த்திய அச்சொல், இன்று கலைஞர், அறிஞர் முதலானவரின் கூட்டங்களை உணர்த்துகின்றது.

4. இழிபொருள் பேறு (Degradation or degeneration)

முன்னர் உயர்ந்த பொருளில் வழங்கிவந்த சொல், தற்போது இழிந்த பொருளைக் குறிக்கத் தொடங்கிவிட்டன.

எ.கா நாற்றம்

நாற்றம் என்ற சொல், முன்பு பொதுவாக மணம் என்னும் பொருளில் வழங்கியிருக்க, இன்று கெட்ட மணத்தையே குறித்திடுதல் காண்க. சேரி, குப்பை முதலியனவும் அவ்வாறே பொருள் திரிந்தன.

5.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை சொற்பொருள் மாற்ற வகைகள் குறித்து, பல செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன கருத்துக்களையெல்லாம் தெரிந்துகொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்ந்து பார்க்கலாம்.

மொழியாய்வில் சொல் உணர்த்தும் பொருளில் ஏற்படும் மாற்றத்திற்கான பல்வேறு காரணங்களை விரிவாகத் தெரிந்துகொண்டிருப்பீர்கள்.

மேலைநாட்டுச் சொற்பொருளியல் அறிஞரான உல்மன் அவர்கள் கூறும் சொற்பொருள் மாற்றத்தின் பலவகைகளை அறிந்து கொண்டீர்கள்.

பழமையான மொழியான நம் தமிழ்மொழியில் அமைந்துள்ள சொற்பொருள் மாற்றத்தின் பற்பல வகைகளையும், அவ்வாறு ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் விளைவுகளைப் பற்றியும் பற்பல சான்றுகளின் மூலம் நீங்கள் நன்கு உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.

பாடம் - 6

காலப்போக்கில் சொற்பொருள் மாற்றம்

6.0 பாட முன்னுரை

இன்றைய மொழியியல் வல்லுநரும் வியக்கும்படியாகச் சொற்பொருள் வளங்கள், தொல்காப்பியம் எனும் மாபெரும் இலக்கணப் பேழையில் புதைந்து கிடக்கின்றன. தமிழ்மொழியிலுள்ள சொற்பொருள் மாற்றங்கள், தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்படுகின்றன. எனவே, தமிழ்மொழி வரலாறு தொல்காப்பியத்திலிருந்தே தொடங்குவதாகக் கொள்ளலாம். தமிழ்மொழியின் வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளாகப் பெரும்பாலும் இலக்கியங்களையே கொள்ளவேண்டி உள்ளது.

வரலாற்றில், பல்வேறு காலகட்டங்களில் அரசியல், பண்பாடு, வாணிகம் முதலான வேறுபட்ட சூழ்நிலைகளால் தமிழ்மொழி பலவிதமான மாற்றங்களுக்கு உள்ளாகத் தொடங்கியது. இயற்சொற்களிலும் (native words) தொடர்ச்சியான பொருள்மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. சமுதாயத்தில், காலத்திற்குக் காலம், நிகழ்ந்த வளர்ச்சிப் போக்குகளை எடுத்துக்காட்டும் வகையில் இம்மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒருசொல், தன் பொருள் எல்லையிலிருந்து வேறொரு எல்லைக்கு மாற்றமடையத் தொடங்கியது.

பல்வேறு காலங்களில் ஏற்பட்ட இத்தகைய சொற்பொருள் மாற்றங்களை எல்லாம் தகுந்த சான்றுகளுடன் வழங்கி, அவற்றை விளக்குவதாக இப்பாடம் அமைந்துள்ளது.

6.1 தமிழ்மொழி வரலாற்றில் சொற்பொருள் மாற்றம் பெறுமிடம்

டார்வின் கோட்பாட்டின்படி பரிணாம வளர்ச்சி என்பது, பல்வேறு உலக உயிர்களின் காலவாரியான வளர்ச்சி எனலாம். இவ்வளர்ச்சியை விளக்கப் பயன்படுத்தப்பட்ட இக்கோட்பாடு, நாளடைவில் மொழியின் வளர்ச்சிக்கும் பயன்படும் என்பதை மொழியியல் ஆய்வு உணர்த்துகிறது.

உலக உயிரினம் பற்றிய ஒரு அறிவியல் கோட்பாடு, அறிவியல் முறையில் ஆராயப்படும் மொழிவளர்ச்சிக்கும் விரிவுபடுத்தப்பட்டது எனலாம். ஆரம்ப காலகட்டத்தில் மொழிமீது கொண்ட தெய்வ நம்பிக்கையால், வரலாற்று முறையில் மொழியை அணுகுவதற்கே அச்சப்பட்ட காலமும் இருந்து வந்தது. திராவிட மொழிகள் அனைத்தும், தமிழ்மொழியில் இருந்தே பிறந்தன எனவும் கருதி வந்தோம். இருப்பினும் கால்டுவெல் போன்ற மேலைநாட்டினரின் வருகையால், திராவிட மொழியிலிருந்து பிரிந்த முதல்மொழி தமிழ் என்பதும், அதையடுத்தே பிற திராவிட மொழிகள் பிரிந்தன என்பதும் அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டது எனலாம்.

தமிழ்மொழியில் உள்ள சொற்களும், அச்சொற்கள் உணர்த்தும் பொருட்களும் பலவிதமான மாற்றங்களை அடைந்து வந்துள்ளமையை நன்கு உணர முடிகின்றது. எடுத்துக்காட்டாக, ‘அறம்’ என்ற சொல், அறக்கடவுள், அற நூல், நீதிநூல் என்ற பொருள் எல்லையிலிருந்து, ‘சமயம்’ என்ற பொருள் எல்லைக்கு மாறிய நிலையைக் காணமுடிகிறது. இச்சொல், அடிப்படையில், நல்லொழுக்கம் என்ற பொருளைத் தந்து வந்தாலும் பிற்காலத்தில் சமயக் கோட்பாட்டின் அடிப்படையில் நல்லன எல்லாவற்றையும் குறிக்கும் ஒருசொல்லாக மாறியது.

சங்க இலக்கியமான புறநானூற்றில் ‘கோயில்’ எனும் சொல் ‘அரண்மனை’ எனும் பொருளைத் தர, தேவாரம், நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் எழுந்த கால கட்டத்திலும், இக்காலத்திலும் ‘இறைவனுடைய இருப்பிடம்’ எனும் பொருளைத் தருகிறது. முன்பு ‘கோயில்’ எனும் சொல் இருவகைப் பொருளைத் தர, தற்காலத் தமிழில் ஒரு பொருளையே தந்து நிற்பதைக் காண்கிறோம். இந்நிலையினை, உலகமொழிகள் அனைத்திலும் காணலாம். மொழி வரலாற்றிலும் வளர்ச்சியிலும் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பாகும். வரலாற்று மொழியியல் இவற்றை அடிப்படையாக வைத்துத் தோன்றியதாகும். ஒரு சொல்லின் பொருள் தொடக்கத்தில் ஒன்றாக இருந்திருக்க, இன்று ஒருவகையாக இருக்கும். ஒரு சொல்லுக்குத் தொடக்கத்தில் அமைந்த பொருளே இன்றுவரையில் வழங்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம் முதலியவற்றைக் குறித்த ‘பொன்’ எனும் சொல், இன்று தங்கத்தை மட்டும் குறிக்கின்றது. எனவே, சொல் ஆரம்பத்தில் உணர்த்திய பொருள் ஒன்றாகவும், இன்று உணர்த்தும்பொருள் வேறாகவும் இருப்பதைக் காண்கிறோம்.

சொற்பொருள் மாற்றத்திற்கு மொழியியல் காரணங்கள், வரலாற்றுக் காரணங்கள், சமூகக் காரணங்கள், உளவியல் காரணங்கள், அயல்மொழிச் செல்வாக்கு போன்றன அடிப்படையாக அமைகின்றன.

இக்காரணங்களால் ஏற்படும் மாற்றத்தைத் தமிழ்மொழியில் ஒரு சொல்லுக்கு ஒரு பொருள், ஒரு பொருளுக்கு ஒரு சொல், உயர்பொருள் பேறு (Elevation), இழிபொருள்பேறு (Degradation), சிறப்புப் பொருள்பேறு (Restriction or narrowing), பொதுப்பொருள்பேறு (Expansion or widening), நுண்பொருள்பேறு (Abstraction), பருப்பொருள்பேறு Concretion), மென்பொருள்பேறு (

yperbole), வன்பொருள்பேறு (Litotes), மங்கல வழக்கு (Meliorative tendency), இடக்கரடக்கல் (Pejorative tendency), குழூஉக்குறி (Slang), ஆகுபெயர் (Metonomy), உருவகம் (Metaphor) போன்ற பல்வேறு வகைகளாகப் பகுக்கலாம்.

சொற்களுக்குப் புதுப்பொருள் உண்டாவதைப் போலப் பொருளைக் குறிக்கப் புதுச்சொற்களும் ஆக்கப்படுகின்றன. பழைய சொற்கள் வழக்கு மிகுதியால் பல பொருட்களுக்கும் உரிமையாவதால், நுட்பமான கருத்துக்களை விளக்கப் புதுச்சொற்கள் தோன்றுகின்றன. மொழியியல் சொற்களுக்குப் புதுப்பொருள் தோன்றுவதைப் போல, புதுச்சொற்களும் புதுச் சொல்லமைப்புகளும் தோன்றுதல் மொழியில் இயல்பானதாகும். இத்தகைய சொற்பொருள் மாற்றங்களுக்குத் தமிழ்மொழி விதிவிலக்கல்ல.

6.2 தொல்காப்பியம் - சங்க இலக்கியம் - திருக்குறள் இவற்றினிடையே ஏற்பட்ட சொற்பொருள் மாற்றம்.

தமிழ்மொழியின் வரலாற்றை அறிவதற்கு, அடிப்படையில் பெருந் துணை புரிவன பழமையான இலக்கணங்களும், இலக்கியங்களும் ஆகும். இன்று நம் தமிழ்மொழியில் காணப்படும் பழமையான இலக்கண நூல், தொல்காப்பியமே ஆகும். தொல்காப்பியத் தமிழின் மொழி இயல்பையும், சங்க இலக்கிய மொழி அமைப்பையும் நுணுகி ஆயும்போது, தொல்காப்பியமே சங்க இலக்கியத்துக்கு முற்பட்ட நூலாக விளங்குவதை அறியமுடிகின்றது. இதனையடுத்த காலகட்டத்தில், சங்க இலக்கியங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றியுள்ளன. இவ்விலக்கியங்கள் தொகுப்பாரும், தொகுப்பித்தாரும் மேற்கொண்ட முயற்சியால் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையுமாக, உருவாயின. இப்பேரிலக்கியத்தைத் தொடர்ந்து, திருக்குறள் என்னும் அறநூல் தோன்றி, தாய்மொழியின் வளர்ச்சியை அறியப் பேருதவி புரிகின்றது. திருக்குறள் உள்ளிட்ட சங்கம், சங்கம் மருவிய காலத்து அற இலக்கியங்களையும் அக, புற இலக்கியங்களையும் பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுத்தனர்.

அடுத்தடுத்த காலகட்டங்களில் தோன்றியனவாக இருப்பினும் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் ஆகிய இம் மூன்றினிடையேயும் சொற்பொருள் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைக் கீழ்வரும் பல்வேறு சான்றுகளின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்:

பொருள்

வ. எண் சொல்

தொல்காப்பியம்

சங்க இலக்கியம் திருக்குறள்

1. அரு அட்டை

-

பெறுதற்கரிய உபதேசப் பொருள்

2. தகர் விலங்குகளின் ஆண்பாற் பெயர் ஆட்டுக்கிடாய், மேட்டு நிலம், வருடைமான் கிடாய் செம்மறிக் கடா

3. மை மேகம் அஞ்சனம், கருநிறம், கருமை, அழுக்கு, இருள், ஆடு, எருமை, குற்றம், மறு, மாசு, மேகம், கருமேகம், களங்கம், பசுமை பிறவி

-

4. கடமை மான்வகை, சில விலங்குகளின் பெண் பெயர் ஒரு விலங்கு

-

5. நூல் யாப்பு வகைகளுள் ஒன்று, பனுவல், புத்தகம், இலக்கணம் பஞ்சு நூல், வாய்க் கயிறு சுவடி, இலக்கியம், நூற்பொருள்

6. சேவல் ஆண் குதிரை, ஆண் பறவை, விலங்கு, பறவைகளின் ஆண் பெயர் ஆண் அன்னம், ஆண்பறவை, கருடன்

-

7. ஆண் மரவகை வீரன்

-

8. எரி நெருப்பு கார்த்திகை,

நட்சத்திர வகை, தீ, வெம்மை நெருப்பு

9. ஏறு விலங்கின் ஆண் இடபம், அடிக்கை, பருந்தின் கவர்ச்சி, எருமைக் கடா, இடி, அழிக்கை, ஆனேறு, இடி ஏறு, எறிதல், ஆண் விலங்கு, அழித்தல், ஆண்மான், சுறா ஏறு ஆண்சிங்கம்

10. கடு நஞ்சு கடுக்காய், கடுமரம், நஞ்சு

-

11. கயந்தலை குழந்தை மெல்லிய தலை, மென்மையை உடைய தலை, யானைக்கன்று

-

12. கரகம் சிறிய கைச்செம்பு குண்டிகை, கமண்டலம், சிரகம்

-

13. அடிசில் உணவு சோறு

-

14. அணி அணிகலன், நகை அழகு, அலங்காரம், அணிகலன், ஒப்பனை,கோலம். திரட்சி

அணிகலன், நகை, அழகு, குளிர்ந்த அணி

15. அணை பஞ்சணை, மெத்தை மெத்தை, படுக்கை -

16. நெல் தானியம், நெற்பயிர் தானிய வகை, மூங்கிலின் நெல் -

17. அந்தணன் பார்ப்பனன் இறைவன், சிவபிரான், வியாழன் கடவுள்

18. நோய் துன்பம், வருத்தம், வேதனை

அச்சம், பசியும் பிணியும், வியாதி, காம நோய், வருத்தம்

துன்பம், இன்னாதன, குற்றம், உடற்பிணி, காமப்பிணி, வினைப் பயன்கள்.

19. அமரர் கடவுளர் தேவர்

-

20. அமிழ்தம் தேவர் உணவு, அமுதம் அமுதம், தேவர்களின் உணவு, வாயில் ஊறும் இனிய நீர் சாவா மருந்து, அமிழ்த்துவது, தேவாமிர்தம்

21. அழல் நெருப்பு, தீ, அக்கினி அழுதல், தீக்கொழுந்து, காமத்தீ, நெருப்பு, விளக்கு, வெம்மை, தழல், செவ்வாய் தணல்

22. அளகு கோழி, கூகை ஆகிய இரண்டு பறவையினத்திற்கும் உரிய பெண்மைப் பெயர் கோழிப்பெடை

-

23. இரலை மான்வகை, வெண்மையான முதுகையும் பிளவுபட்டு முறுக்குண்ட கரிய கொம்புகளையும் உடைய விலங்கு, புல்வாய், கலை கலைமான்

-

24. பகல் பகற்பொழுது இளவெயில், ஊழிக்காலம், பகற் காலத்தின் ஒளி, பகற்காலம், காலை முதல் மாலை வரையுள்ள காலம், சூரியன், நடுவுநிலைமை, நுகத்துப் பகலாணி, படுத்தல், ஒரு முகூர்த்தம் கூடாமை, பகலது, பகற்பொழுது

25. எரு உரம் உலர்ந்த சாணம் குப்பை, உரம்

26. ஏடு பனை ஓலை பூவிதழ், மேன்மை

-

27. ஐயர் முனிவர் இருபிறப்பாளர், தமையன்மார்

-

28. பகடு எருது (காளைமாடு) எருது, எருமைக் கடா, ஏர், பரப்பு, பெருமை, வலிமை

எருது

29. புல்வாய் கலைமான் மான்

-

30. நாழி நாழி என்னும் ஒரு அளவுப்பெயர் ஒருவகை முகத்தலளவை

-

6.3 17-ஆம் நூற்றாண்டு வரை இலக்கியச் சொற்பொருள் வழக்கு

தமிழ் வரலாற்றை நோக்கும்போது, தமிழ்மொழியில் காலந்தோறும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வந்ததை அறிய முடிகின்றது. பல்வேறு காலங்களில் மொழி அடைந்த மாற்றத்தை, காலமுறைப்படி ஆராய இலக்கிய, இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள் போன்றன துணை புரிகின்றன. பழங்காலத்தில் எழுதப்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியக் காலம் முதல் பதினேழாம் நூற்றாண்டு இலக்கியங்கள் வரை சொற்பொருள் மாற்றத்தில் சில மாற்றங்களே ஏற்பட்டிருப்பதைக் கீழ்க்காணும் அட்டவணை புலப்படுத்துவதைக் காணலாம்.

6.4 தொல்காப்பியக் காலம் முதல் தற்காலம் வரை ஏற்பட்ட சொற்பொருள் மாற்றங்கள்.

முன்னரே கூறியபடி 17-ஆம் நூற்றாண்டு வரை, இலக்கியத் தமிழில் (எழுத்து வழக்கில்) குறிப்பிடத்தக்க அளவிற்குச் சொற்பொருள் மாற்றங்கள் இல்லை எனினும், மேலைநாட்டினரின் வருகைக்குப் பின்னர், தமிழ்மொழி வரலாற்றில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இலக்கிய வரலாற்றில், மட்டுமன்றி மொழிவரலாற்றிலும் இம்மாற்றத்தை நன்கு உணர முடிந்தது. அச்சு இயந்திரங்களின் வருகையினாலும், உரைநடையின் தோற்றத்தாலும், சிறுகதை, புதினம், பத்திரிகை போன்ற பல்வேறு துறைகளில் தமிழ்மொழி, புதுமையை அடையத் தொடங்கியது. அன்று வரை எண்ணிப்பாராத பேச்சுத் தமிழுக்கு, மேலை நாட்டு அறிஞர்களான பெஸ்கி, போப், கால்டுவெல் போன்றோர் முதன்மையான இடத்தைக் கொடுத்தமையால்தான் தமிழ்மொழியின் சொற்பொருளில் ஏற்பட்ட பல மாற்றங்களை உணர முடிந்தது. காலச்சூழல், சமுதாய மாற்றம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப, தற்காலத் தமிழிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. எனவே, தொல்காப்பியக் காலத்திலுள்ள சொற்பொருளுக்கும், தற்காலத் தமிழில் இடம்பெறும் சொற்பொருளுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தைப் பின்வரும் பல சான்றுகளின் மூலம் நன்கு அறிந்துகொள்ளலாம். வரிசையில் சொல் தரப்பட்டு அதன் பொருள், இடம்பெறும் பழைய இலக்கியம், பழைய இலக்கியத் தொடர் ஆகியன பட்டியலில் தரப்படுகின்றன. அச்சொல்லுக்குரிய தற்காலப் பொருள் விரிவு கருதித் தனியாக அட்டவணையின் பின் தரப்பட்டுள்ளது.

1. கழிவு

பொருள்

இலக்கியம்

இலக்கியச் சான்று

நிகழ்காலம் திவ்யபிரபந்தம், பெரிய திருமொழி (4,3,2) இறப்பெதிர்காலக் கழிவு மானானை

இறந்தகாலம் நன்னூல், 145 கழிவும், கவ்வோடு எதிர்வும், மின்ஏவல்

சாவு சூடாமணி நிகண்டு

-

மிகுதி திவாகர நிகண்டு

-

அழிவு பிரபுலிங்கலீலை,9 கழிவிலாத வாகாயம்

பிராயச்சித்தம் காஞ்சிப்புராணம், கயிலா.30 பெரும்பாவக்கழிவு.

தற்காலப் பொருள்

1. கழிந்து போகை; passing, as time; leaving, as a place; (discharging, as form the bowles.)

2. கழிகடை; waste, refuse, leavings, dross; that which is inferior, base, vile.

3. தள்ளுபடி: Deduction, discount, rebate. தள்ளுபடியான தொகை, மொத்த வட்டியிற் கழிவு எவ்வளவு?

4. பாரிசேடம்; Reasoning by elimination.

5. தேவையற்றது என்று கழிக்கப்பட்டதாகிய) குப்பைகூளம்; (தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்டபின் சேரும் அல்லது வெளியேற்றப்படும்) ரசாயனக் கலப்புடைய பொருள்; garbage; (industrial) waste.

பெருநகரங்களில் சேரும் கழிவுப்பொருள்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். / தொழிற்சாலையின் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் மீன்வளம் குறைகிறது.

6. தரத்தில் குறைந்தது என்று நீக்கப்பட்டது; that which is discarded as inferior in quality.

கழிவுப் புகையிலை / வெற்றிலைக் கழிவுகளை வாங்கிவந்து விற்கிறார்.

7. உரமாகப் பயன்படும் கழிக்கப்பட்ட இயற்கைப் பொருள்; agricultural waste.

ரசாயன உரங்களின் வருகையால் இயற்கைக் கழிவுகள் வீணாக்கப்படுகின்றன. / விவசாயக் கழிவுகள்.

8. (ஏலச்சீட்டு முதலியவற்றில்) அளிக்கிற) தள்ளுபடி; (விற்கும்போது பொருள்களுக்கு அளிக்கப்படும்) விலைக் குறைப்பு; (in auction – Chit) balance of the Money (divided among the members after bidding); discount.

ஏலக் கழிவு போகக் கட்ட வேண்டிய பணம் எவ்வளவு? / இந்தச் சேலை, கழிவு போக இருநூறு ரூபாய்தான்.

2. காதல்

பொருள் இலக்கியம் இலக்கியச் சான்று

அன்பு அகநானூறு. 55 காதல் வேண்டி யெற்றுறந்து போதல் செல்லா என்னுயிர்

வேட்கை சீவகசிந்தாமணி. 189 காதலாற் காமபூமிக் கதிரொளியவரு மொத்தார்

மகன் கம்பராமாயணம். யுத்தகாண்டம், பிரமாத்திரப்படலம். 164 காலம் ஈதெனக் கருதிய இராவணன் காதல்

பத்தி திவ்யப்பிரபந்தம். திருமாலை. 26 காதலா னெஞ்சமன்பு கலந்திலேன்

கொல்லுகை சூடாமணி நிகண்டு

-

தாக்குகை மருதூரந்தாதி.84 காலனென்மேற் காதலை…. மாற்று

பிரபந்த விசேடம் கூளப்பநாயக்கன் காதல்

-

தற்காலப் பொருள்

1. ஆவல் ; Earnestness, intentness, eagerness

2. தறிக்கை; cutting in pieces, breaking, snapping

3. ஆந்தை முதலியவற்றின் ஒலி ; cry, chirp of certain birds, as ominous

4. எதிராப்பு; a peg for driving out a nail

5. (இனக் கவர்ச்சி அடிப்படையில் ஆண், பெண் இருவரிடையே ஏற்படும்) அன்பு; நேசம்; love (between man and woman)

6. (ஒன்றின் மேல்) ஆழ்ந்த பற்று; பிடிப்பு; விருப்பம் ; strong liking; love. அவர் இசையின் மேல் கொண்ட காதல் பெரிது.

3. கிளை

பொருள் இலக்கியம் இலக்கியச் சான்று

இனம் புறநானூறு. 17 களிறுநிலை கலங்கக் குழி கொன்று. கிளைபுகலத் தலைக்கூடி யாங்கு

ஓர் இசை பரிபாடல். 11 கிளைக்குற்ற வுழைச்சுரும்பின் கேழ் கெழு பாலை இசை

பூங்கொத்து சிறுபாணாற்றுப்படை. 160 கிளைமலர்ப் படப்பை

சுற்றம் நாலடியார். 30 களோதே வந்து கிளைகளாயில்தோன்றி

பகுப்பு கம்பராமாயணம், யுத்தகாண்டம், கும்பகருணன், 16 கிளையமை புவன மூன்றும்

ஓர் இசைக் கருவி பெரிய புராணம். திருநாவுக். 76 தண்ணுமை யாழ்முழவங் கிளைதுந்துபி

கருவி கந்தபுராணம். ஆற்றுப். 31 தாருவின் கிளைக ளென்ன

மூங்கில் பிங்கல நிகண்டு

-

தளிர் திவாகர நிகண்டு

-

தற்காலப் பொருள்

1. (கிளைக்க, கிளைந்து); (மரத்தின் தொடர்ச்சியாக) பல பிரிவுகள் ஏற்படுதல்; கப்புவிடுதல்;branch out. கிளைத்து அடர்த்தியாக இருந்தது ஆலமரம். / மாமரம் இப்போது நன்றாகக் கிளைக்கத் தொடங்கியுள்ளது.

2. ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிரிதல்; பெருகுதல்; branch off; multiply. குடும்பம் எப்படிக் கிளைத்துவிட்டது!/ தேசியக் கட்சியிலிருந்து கிளைத்த சிறுகட்சிகள் இவை.

3. மரத்தின் தொடர்ச்சியாகப் பிரிந்த இலை, பூ, காய் ஆகியவற்றைத் தாங்கியிருக்கும் பகுதி; branch (of a tree); bough. மரத்தில் ஏறிக்கிளைகளை ஒடிக்காதே!/ குரங்கு கிளைக்குக் கிளை தாவிச் செல்லும்.

4. (அலுவலகம், கட்சி நிறுவனம் முதலியவற்றின்) வேறு இடத்தில் அமைந்திருக்கும் பிரிவு; (of an institution) branch. எங்கள் வங்கியின் கிளை அயல் நாட்டிலும் உள்ளது. / கிளை நூலகம்.

5. (ஒன்றின் துணையாக, உட்பிரிவு; supplementary. கிளைக் கேள்வி/ கிளைக் கதை.

4. தோடு

பொருள் இலக்கியம் இலக்கியச் சான்று

கதிர்த்தாள் அகநானூறு 13, உரை. அழல்நுதி யன்ன தோகை….

தொகுதி புறநானூறு. 238 தோடுகொண் முரசுங் கிழிந்தன

ஓலை பெரும்பாணாற்றுப்படை. 353 வண்தோட்டுத் தெங்கின்

பூ குறள். 1105 தோட்டார் கதுப்பினாள் தோள்

காதணி மணிமேகலை 3, வரி 118 வெள்ளி வெண்தோட்டு

பூவிதழ் தேவாரம் 885, 4 தோடேறு மலர்க் கடுக்கை

தொகுதி திவாகர நிகண்டு

-

தற்காலப் பொருள்

1. காதோலைச் சுருள் – Rolled palm leaf used as an ear ornament.

2. கறிக்காக அரியப்பட்ட காயின் வட்டப் பகுதி; Round slice of fruits, used for curry.

3. வட்டத்திரணை ; Round Moulding.

4. (பெண்கள் அணியும் வைரம் முதலிய கல் பதிக்கப்பட்ட) வட்ட வடிவத் தங்கக் காதணி; ear stud (normally studded with precious stones, such as diamonds and worn by women)

5. (புளியம்பழம் போன்றவற்றின்) மேல்புற ஓடு; shell (of certain fruits, esp. tamarind)

5. பலி

பொருள் இலக்கியம் இலக்கியச் சான்று

காக்கை முதலிய பறவைகளுக்கு இடுஞ் சோறு குறுந்தொகை. 210 காக்கையது பலியே.

யாகம் முதலியவற்றில் தேவர், பிதிரர் முதலியோரை உத்தேசித்து இடும் உணவுப்பொருள். புறநானூறு. 52 பலிகண் மாறிய பாழ்படு பொதியில்

பூசையில் அர்ச்சிக்கும் பூ முதலியன ஐங்குறுநூறு. 259 மலர்சிலகொண்டு…. தேம்பலிச் செய்த வீர்நறுங் கையள்

பிச்சை தேவாரம். 47,5 பலிகொண்டுண்பவர்

சோறு திவாகர நிகண்டு -

சாம்பல் சூடாமணிநிகண்டு -

கப்பம் யாழ்ப்பாணத்து மானிப்பாயகராதி -

பலியிடுதற்குரிய பிராணி முதலியன.

-

-

தற்காலப் பொருள்

1. பலியிடுதற்குரிய பிராணி முதலியன; sacrificial animal or offering.

2. கிராமதேவதைகளுக்குப் பலியிடுவதன் பொருட்டு விடப்பெற்ற மானியம்; Inam granted for the service of making sacrifices to village deities.

3. பலிசக்கரவர்த்தி – …

4. (இவ்வாறு நடக்கும் என்று சொல்வது அல்லது இவ்வாறு நடக்க வேண்டும் என்று விரும்புவது) உண்மையாகவே நடத்தல் அல்லது நிகழ்தல் be effective; come true. ஒரு மாதத்திற்குள் வேலை கிடைக்கும் என்று ஜோதிடர் சொன்னது பலித்து விட்டதே!/ உங்கள் ஆசிர்வாதம் நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

5. (நிறைவேற்ற நினைப்பது)வெற்றி பெறுதல்; come to fruition; be successful. போன காரியம் பலித்ததா?/ உன் தந்திரமெல்லாம் அவனிடம் பலிக்காது.

6. (தெய்வத்திற்கு அளிக்கும்) உயிர்க்கொலை; காவுகொடுத்தல்; offering lives (as sacrifice) ; (human or animal) sacrifice) நரபலி.

7. (விபத்து முதலியவற்றால்) உயிர் இழப்பு; loss of life. தீ விபத்தில் நால்வர் பலி/ இந்த மலைப் பாதை பலபேரை பலி கொண்டிருக்கிறது.

8. (யாகம் முதலியவற்றில் முன்னோருக்கு இடும்) உணவுப் பொருள்; offering (given to the manes, etc) யாக பலி.

6. பட்டி

பொருள் இலக்கியம் இலக்கியச் சான்று

காவலில்லாதவ-ன்/ள் கலித்தொகை. 51 நோதக்க செய்யுஞ் சிறுபட்டி

மகன் அகராதி நிகண்டு -

களவு திவாகர நிகண்டு -

பசுக்கொட்டில் பிங்கல நிகண்டு -

இடம் பிங்கல நிகண்டு -

நாய் பிங்கல நிகண்டு -

சீலை பிங்கல நிகண்டு -

சிற்றூர் நாமதீப நிகண்டு.486 -

வியபிசாரி விறலிவிடுதூது பட்டிமகன்மோகினி மந்திரி முழுதுமறிவான்

பட்டிமாடு தாயுமான சுவாமிகள் பாடல். பெரியநாயகி.1 புலப்பட்டியும் ….. அணுகாமல்

புண்கட்டுஞ் சீலை தைலவருக்கச்சுருக்கம். தைல.128 பட்டிகட்டுதல்

பூச்செடி வகை புட்ப பலன்,65 பட்டி வெண்பூவை ஈசன் பனிமலர்த் தாளிற் சாத்தல்.

தற்காலப் 1பொருள்

1. ஆட்டுக்கிடை: sheep-fold

2. கொண்டித்தொழு ; cattle pound

3. தெப்பம்; float, raft

4. கணைக்காலிலிருந்து முழங்கால் வரை சுற்றிக் கட்டிக்கொள்ளும் கிழிப்பட்டை; puttee, cloth wound round the legs in place of high boots.

5. மடிப்புத்தையல் ;

emming

6. விக்கிரமாதித்தன் மந்திரி; The Prime minister of Vikramaditya of Ujjayini

7. அட்டவணை; list, invoice; curriculum.

8. பாக்குவெற்றிலைச் சுருள்; Betal leaf folded with arecanut.

9. (கிராமத்தில்) பிறர் நிலத்தில் பயிர்களை மேயும் ஆடு, மாடு ஆகியவற்றை (உரிமையாளர் வந்து மீட்டுச் செல்லும்வரை) அடைத்து வைக்கும் இடம்; (cattle pound). பணம் கட்டிவிட்டு மாட்டைப் பட்டியிலிருந்து ஓட்டிக்கொண்டு வருகிறேன்.

10. (சட்டை, பாவாடை முதலிய உடைகளில்) விளிம்பை மடித்துத் தைக்கும் பகுதி; மடிப்புத் தையல்; hemming).

11. சிற்றூர்; கிராமம்; hamlet; village. ஒவ்வொரு பட்டியாகப் போய்ச் செய்தியைச் சொல்லி வந்தோம்.

(7) சிலம்பு

பொருள் இலக்கியம் இலக்கியச் சொல்

மகளிர் காலணிவகை ஐங்குறுநூறு. 389 ஒன்றினவோ அவளஞ்சிலம் படியே.

மலை புறநானூறு. 143 நளியிருஞ் சிலம்பிற் சீறூர்

பக்கமலை பெரும் பாணாற் றுப்பாடை. 330 மால்வரைச் சிலம்பின்

குகை பரிபாடல் 15 சிலம்பிற் சிலம் பிசை யோவாது.

ஒலி சூடாமணிநிகண்டு

-

தற்காலப் பொருள்

1. பூசாரிகள் கைச்சிலம்பு – oblong hollow ring of brass filled with pebbles and shaken before an idol in worship, etc;

2. உள்ளீடு அற்ற வளையத்தினுள் கல் போன்றவற்றால் ஒலி எழுப்பக் கூடியதாகச் செய்யப்பட்ட தண்டை போன்ற (முற்காலத்தில் பெண்கள் காலில் அணிந்த) அணி; tinling anklets (worn by women in former times)

8. குப்பை

பொருள் இலக்கியம் இலக்கியச் சான்று

தானியக்குவியல் பொருநராற்றுப்படை. 244 குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை.

கூட்டம் கல்லாடம். 53 ஆம்பலங் குப்பையை

குவியல் திரிகடுகம்.83 உப்பின் பெருங்குப்பை நீர்படியினில்லாகும்.

மேடு சூடாமணி நிகண்டு

-

தற்காலப் பொருள்

1. செத்தை; Sweepings, rubbish, refuse

2. மலம், குப்பை எடுக்கிறவன்; dung, excrement, ordure

3. (கிழிக்கப்பட்ட தாள், கந்தல் துணி போன்ற) உபயோகம் அற்றவை என்று கழிக்கப்பட்டவை; trash; garbage. கூடையில் குப்பை நிரம்பி விட்டது, கொண்டுபோய் வெளியே கொட்டு!

4. காற்று அடித்துக்கொண்டு வரும் தூசி, செத்தை முதலியவை; dust, dried leaves, sweepings, etc. முதலில் வீட்டைப் பெருக்கிக் குப்பையை அள்ளு!

5. (வெறுப்பாகக் கூறும்போது) பயன் அற்றது; ஒன்றும் இல்லாதது; (in contempt) rubbish; trash. இது கதையா, வெறும் குப்பை.

6.5 பழங்காலத் தமிழ் - தற்காலப் பேச்சுவழக்கு ஆகிய இவற்றினிடையே ஏற்பட்ட சொற்பொருள் மாற்றம்

மொழி என்றதும் எழுத்து வடிவத்துடன் இலக்கிய, இலக்கணங்களை உடையதுதான் என்ற எண்ணம் அனைவருக்கும் வரும். எழுத்து வடிவமில்லாது பேச்சுவழக்கில் மட்டும் பயின்று வரும் ஆயிரக்கணக்கான பழங்குடி மொழிகளும் நம் நாட்டில் உண்டு. ஒரு மொழி பரந்த பரப்பில் பேசப்படும் பொழுது அதில் வேறுபாடுகள் காணப்படுதல் இயற்கையாகும். கிளைமொழி (dialect) என்பது ஒரு குறிப்பிட்ட பேச்சுமொழியின் வகையைக் குறிப்பதாகும். பல தனி மனிதப் பேச்சு வழக்குகள் ஒரு கிளைமொழியையும், பல கிளைமொழிகள் சேர்ந்து ஒரு மொழியையும் உருவாக்குகின்றன. மொழிக்குடும்ப வரலாற்றிற்கு மொழியும், ஒரு மொழி வரலாற்றிற்குக் கிளைமொழி ஆய்வும் மிகவும் தேவையானவையாகக் கருதப்படுகின்றன. எனவே தான், தமிழ்மொழி வரலாற்றைப் பற்றி ஆராயும்பொழுது, தமிழ்க் கிளைமொழிகளின் வாழ்வையும் வளர்ச்சியையும் ஆராய வேண்டியுள்ளது.

மக்கள் சிறுசிறு குழுக்களாக வாழும்போது மலை, ஆறு, கடல் போன்ற இயற்கையமைப்பில் பிரிக்கப்பட்டு அவர்களிடையே அதிகமான தொடர்பின்றி இருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இலங்கையும் இந்தியாவும் கடலால் பிரிக்கப்பட்டிருப்பதால், இவ்விரண்டு இடங்களிலும் பேசும் தமிழ்மொழியில் மிகுந்த வேறுபாட்டைக் காணலாம். செய்தித் தொடர்பில் குறுக்கீடுகள் (interferences) அதிகமானாலும் மொழியில் மாற்றங்கள் ஏற்படும். கிளைமொழியை வழங்கும் இடம் பற்றி வட்டாரக் கிளைமொழி என்றும், பேசுகின்ற மக்களின் சமூகநிலை பற்றிச் சமூகக் கிளைமொழி (social dialect) என்றும் கூறலாம்.

ஒரே மொழி வட்டாரத்திற்கு வட்டாரம், சாதிகளுக்கு சாதி, தொழிலுக்குத் தொழில் வேறுபட்டாலும் கூட, அவற்றிடையே ஒரு பொதுத் தன்மையைக் காண்கிறோம். எழுத்து மொழியுடன் பெரும்பாலும் ஒத்துச்செல்லும் பேச்சு வழக்கினைப் ‘பொதுப் பேச்சுமொழி’ (standard spoken language) அல்லது ‘பொதுக்கிளை மொழி’ (standard dialect) எனலாம்.

சங்க காலத்திலேயே கிளைமொழிகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் காண்கிறோம். சங்ககாலப் புலவர்கள் பல்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்களாதலால், அவ்வட்டார வழக்கினையும் அவர்கள் தம் பாடல்களில் காண்கிறோம். புறநானூற்றில், ‘நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை’ என்பதில் ‘ஓசை’ என்பது ‘பொரியல்’ என்ற பொருள் வழங்குகிறது. கலித்தொகையில் ‘செரு’ என்ற சொல் ‘வயல்’ என்ற பொருளிலும் திருக்குறளில் ‘பெற்றம்’ என்ற சொல் ‘பசு’ என்ற பொருளிலும்

வந்துள்ளன. தொல்காப்பியர் குறிப்பிடும் ‘திசைச்சொல்’ என்ற வழக்கு, கிளைமொழியைக் குறிப்பதாகக் கூறுவர். தொல்காப்பியர் பன்னிரண்டு வட்டாரக் கிளைமொழிகளையும், உரையாசிரியர்கள் செந்தமிழுடன் கொடுந்தமிழ், சான்றோர் வழக்கு, குழூஉக்குறி, தொழில் பற்றிய வழக்கு எனப் பல நிலைகளில் பேச்சு மொழியினையும் எடுத்துக்காட்டியுள்ளனர்.

தற்காலப் பேச்சு மொழியிலும் தொல்காப்பியர் காலச்சொற்கள் சிலவும், சங்ககாலச் சொற்கள் பலவும் வழக்கில் இருப்பினும், அந்தக் காலகட்டத்தில் உணர்த்தப்பட்ட பொருளில் இருந்து, தற்காலத்தில் உணர்த்தப்படும் பொருள் வேறுபட்டிருப்பதை நன்கு உணர முடிகின்றது. அத்தகைய மாறுபாட்டை உணர்த்த, கீழ்க்காணும் பட்டியல் பெருந்துணையாக விளங்கும்.

1. அரசு அரசாட்சி, அரசன் (தொல்காப்பியம்)

2. அரசன், அரசாட்சி (சங்க இலக்கியம்)

தற்காலப்பொருள்: 1. அரசாங்கம் / அரசு government.

குடும்பக்கட்டுப்பாடு பற்றி அரசாங்கத்தின்

/அரசின் பிரச்சாரம் பயன் அளித்துள்ளது.

2. அரசனின் ஆட்சி; rule or reign (of a

king). நீண்ட காலம் அரசு புரிந்தவர்.

3. ஒரு துறையில் ‘இணையற்றவர்’ என்ற

பொருளில் வழங்கும் பட்டம்; a word

added to the branch or field in

which one excels, used as a title.

கவியரசு.

(2) நெய் 1. எண்ணெய் (தொல்)

நெய்

2. நெய், வெண்ணெய், வெண்ணெயை உருக்கி

உண்டாக்கும் பொருள்.

தற்காலப்பொருள்: 1. (நெய்ய, நெய்து) (துணி, பாய்

முதலியவற்றை உருவாக்குவதற்காகத் தறியில்) நீளவாட்டில்

நூலை அல்லது கோரையை வைத்துக் குறுக்குவாட்டில்

கோர்த்துப் பின்னுதல்; weave (cloth, mat, etc)

2. உருக்கிய வெண்ணெய்; clarified butter; ghee

(3) பழுது 1. பயன்படாத நிலை (தொல்)

2. குற்றம், தீங்கு (பழுதெண்ணும் – குறள், 639)

தற்காலப்பொருள்: 1. சீர்கெட்ட நிலை; கோளாறு: damaged

state; பழுதான சாலைகளைச் சரிசெய்யும்

பணி விரைவில் தொடங்கும்/ இயந்திரத்தில்

பழுது எங்கிருக்கிறது என்று தெரிந்தால்

அல்லவா செப்பனிட முடியும்?

2. குற்றம் குறை; flaw; fault. செய்யும் முறை

எப்படியிருந்தாலும் அவரது நோக்கத்தில்

யாரும் பழுது சொல்ல முடியாது.

(4) உழக்கு 1. ஓர் அளவை (தொல்)

2. மிதித்தல் (கலித்தொகை, 106)

3. கொன்று திரிதல் (சினஞ்சிறந்து களன்

உழக்கவும் – மதுரைக் காஞ்சி, 48)

தற்காலப்பொருள் : 1. (முன்பு வழக்கில் இருந்த முகத்தல்

அளவையான) படியில் நான்கில் ஒரு

பாகம் அல்லது இரண்டு ஆழாக்கு; one

fourth of a measure (which is roughly

half quarter of a litre)

2. மேற்சொன்ன அளவு குறிக்கப்பட்ட கலம்;

a container of this capacity.

(5) கிழமை 1. இயல்பு; பண்பு, உரிமை (தொல்.)

2. நாலு தாக்குடைய தாளவகை, உரிமை.

(தொல்.)

தற்காலப்பொருள் : 1. வாரத்தின் ஏழு நாட்களையும் பொதுவாகக்

குறிப்பிடும் சொல்; வார நாளின்

பொதுப்பெயர்; day (of th e week).

இன்று என்ன கிழமை?

(6) இறுதி 1. முடிவு (தொல்.)

2. கேடு, முடிவுகாலம் (ச.இ)

தற்காலப்பொருள் : 1. (தொடங்கப்பட்ட ஒன்று அடையும்) முடிவு;

கடைசி; end (of something which has

begun). தன் வாழ்க்கையின் இறுதிக்

கட்டத்தில் இதை எழுதினார்./ கச்சேரியில்

இறுதிவரை யாரும் எழுந்திருக்கவில்லை.

2. மாற்ற முடியாதது; (of a decision, offer,

etc) final. வழக்கில் உச்சநீதிமன்றம்

வழங்கும் தீர்ப்பே இறுதித் தீர்ப்பு/ இது

தான் உன் இறுதியான பதிலா?

3. அதற்கு மேல் தொடராதது; கடைசி; last;

final. பொறியியல் கல்லூரி இறுதி யாண்டு

மாணவர்கள் / இறுதி ஆட்டம் நாளை

தொடங்குகிறது.

(7) இறை 1. அரசன் (தொல்.)

2. உயரம், தமையன் இறந்துபடும் செய்கை,

இறைவன், திரட்சி, வீட்டிறப்பு, முன்கை,

சந்து, தங்குதல், அரசன், கப்பம், தலைவன்

தற்காலப்பொருள்:

(இறைந்து என்னும் எச்ச வடிவம் மட்டும்) (பொருள்கள்) சிதறுதல்; அலங்கோலமாக அல்லது தாறுமாறாக விழுதல்; be spread in all directions; be strewn (all over) ; be scattered. மூடை பிரிந்து விட்டதால் வீடு முழுதும் அரிசி இறைந்திருத்தது. / திருடன் வந்துவிட்டுப் போன மாதிரி வீட்டில் சாமான்கள் இறைந்து கிடந்தன.

(இறைக்க, இறைத்து) (தாறுமாறாக அள்ளி) வீசுதல்; சிதறச் செய்தல்; throw (in a disorderly way); scatter; strew; splash. காரில் இருந்தபடியே ஒருவர் துண்டுப் பிரசுரங்களை இறைத்துக்கொண்டு சென்றார். / வேகமாக வந்த பேருந்து நடைபாதையில் நின்றிருந்தவர்கள் மீது சேற்றை வாரி இறைத்துவிட்டுச் சென்றது./ கோபத்தில் வார்த்தைகளை இறைக்காதே, பிறகு அள்ள முடியாது.

வீணாகச் செலவுசெய்தல்; விரயமாக்குதல்; squander. பணத்தை இறைத்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று ஆகிவிட்டது!

(இறைக்க, இறைத்து) (நீரை) வெளிக்கொண்டு வருதல்; வெளியேற்றுதல்; draw (water from a well); pump out (from a pit, mine, etc.) காலையில் எழுந்ததும் கிணற்றிலிருந்து பத்துக்குடம் தண்ணீர் இறைப்பார்/. நிலக்கரிச் சுரங்கத்தில் புகுந்துவிட்ட நீரைப் பெரிய இயந்திரங்களால் இறைத்தார்கள்.

(வயலுக்கு நீர்) பாய்ச்சுதல்; irrigate. இன்னும் கிராமத்தில் மலையால் வயலுக்கு நீர் இறைப்பதைப் பார்க்கலாம்.

கடவுள்; God. இறை வணக்கம்/ இறை வழிபாடு. மேற்கூறப்பட்ட பல சான்றுகளின் மூலம், பழங்காலச் சொற்கள் உணர்த்தும் பொருட்கள் பல இக்காலப் பேச்சுவழக்கில் சிற்சில மாற்றங்களை அடைந்தும், முழுமையான மாற்றங்களை அடைந்தும் மொழிவரலாற்றில், மொழி வளர்ச்சியினைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளன. மொழி வரலாற்றிற்குச் சொற்பொருள் மாற்றம் எந்த அளவில் பங்கு வகிக்கிறது என்பதை இவற்றின் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

6.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை பல்வேறு காலகட்டங்களில் தமிழ்மொழியில் ஏற்பட்ட சொற்பொருள் மாற்றங்கள் குறித்துப் பல செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப்பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளைத் தெரிந்துகொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

தமிழ்மொழி வரலாற்றில், சொற்பொருள் மாற்றம் எத்தகைய இடத்தைப் பெற்றுள்ளது என்பதை அறிந்துகொண்டீர்கள்.

பழந்தமிழ் நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் போன்ற நூல்களிடையே காணப்படும் சொற்பொருள் மாற்றத்தை உணர்ந்துகொண்டீர்கள்.

17 – ஆம் நூற்றாண்டு இலக்கிய வழக்கிலும் பழந்தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றிருப்பினும் அச்சொல்லுக்குரிய பொருள்கள் மாறியுள்ளமையை உணர்ந்துகொள்ள முடிந்தது.

தொல்காப்பியக் காலம் முதல் தற்காலம் வரை ஒரு சொல் எத்தகைய பொருள் மாற்றங்களை எல்லாம் அடைந்து வந்துள்ளது என்பதை நன்றாகப் புரிந்துகொண்டீர்கள்.

தற்காலப் பேச்சுவழக்கிலும் எவ்வாறு பழந்தமிழ்ச் சொற்கள் தம் மூலப்பொருளில் இருந்து வெவ்வேறு பொருள்மாற்றம் அடைந்துள்ளன என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.