88

பாடம் - 1

உயிர் ஒலிகள்

1.0 பாட முன்னுரை

இப்பாடமானது பேச்சு ஒலிகள் பற்றியும், அவற்றின் பாகுபாடு பற்றியும் விளக்குகிறது. தமிழில் உள்ள உயிர் ஒலிகள் தோன்றி வளர்ந்த வரலாற்றை விவரிக்கிறது. உயிர் ஒலிகளை மொழியியலார் எதன் அடிப்படையில் பாகுபடுத்தி விவரிக்கின்றனர் என்பது பற்றி விளக்குகிறது. மேலும் அவர்கள் இவ்வுயிர் ஒலிகளை எவ்வாறு எல்லாம் விளக்கிக் காட்டுகின்றனர் என்பது பற்றியும் சொல்கிறது.

1.1 ஒலிப் பாகுபாடு

ஒவ்வொரு மொழியிலும் ஒலிகள் பலவாக உள்ளன. அவற்றை ஒலிப்பதற்கு நாக்கு, மூக்கு, பல், இதழ், அண்ணம் (மேல்வாய்) ஆகிய உறுப்புகள் பயன்படுகின்றன. சுவாசப்பையிலிருந்து (நுரையீரலிலிருந்து) எழும் காற்று இவ்வுறுப்புகளால் தடையுற்று வெளிப்படுவதே எல்லா ஒலிகளும் பிறக்கக் காரணம் ஆகும். இக்காரணம் கருதும்போது எல்லா ஒலியும் ஒன்றாகவே தோன்றும். ஆனால் நாக்கு, இதழ் ஆகிய உறுப்புகள் பல்வேறு வகையாக நின்றும், அசைந்தும் தொழிற்படுவதால் அவ்வொலியும் பல்வேறு வகைப்படுகின்றது.

தமிழ் மொழியில் உள்ள ஒலிகளைத் தமிழ் இலக்கண நூலாரும், மொழியியலாரும் உயிர் ஒலிகள் (vowels), மெய் ஒலிகள் (consonants) என இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர்.

1.1.1 உயிர் ஒலிகள் அகரம் முதல் ஒளகாரம் இறுதியாக உள்ள பன்னிரண்டு ஒலிகள் உயிர்ஒலிகள் எனப்பட்டன. இவை உயிர் போலத் தனித்து இயங்கும் ஆற்றல் உடையனவாதலின் ‘உயிர்’ எனத் தமிழ் இலக்கண நூலாரால் கூறப்பட்டன. மொழியியலாரும் இவ்வொலிகளை ‘உயிர்’ என்றே குறிப்பிடுகின்றனர்.

1.1.2 மெய் ஒலிகள் ககரம் முதல் னகரம் இறுதியாக உள்ள பதினெட்டு ஒலிகள் மெய்ஒலிகள் எனப்பட்டன. உயிருடன் கூடியே இயங்கும் மெய் (மெய்- உடம்பு) போல இவ்வொலிகள் சொல்லுக்கு முதலில் தனித்து இயங்கும் ஆற்றலின்றி உயிர் ஒலிகளுடன் கூடியே இயங்கும் இயல்புடையனவாதலின் ‘மெய்’ எனத் தமிழ் இலக்கண நூலாரால் கூறப்பட்டன. மொழியியலாரும் இவ்வொலிகளை ‘மெய்’ என்றே குறிப்பிடுகின்றனர்.

இனி, தமிழில் உயிர் ஒலிகள் தோன்றி வளர்ந்த வரலாற்றைப் பார்ப்போம்.

1.2 உயிர் ஒலிகள் தோன்றி வளர்ந்த வரலாறு

தமிழ் மொழியில் பன்னிரண்டு உயிர் ஒலிகள் இருக்கின்றன. என்றாலும் தொடக்கத்தில் மூன்று உயிர் ஒலிகள் மட்டுமே இருந்தன என்றும், அவற்றிலிருந்தே மற்ற உயிர் ஒலிகள் காலப்போக்கில் தோன்றி வளர்ந்து பல்கிப் பெருகின என்றும் மொழியியலார் கூறுகின்றனர். இது பற்றி அவர்கள் கூறும் கருத்துகளை விரிவாகக் காண்போம்.

1.2.1 அடிப்படை உயிர் ஒலிகள் மூன்று ஒரு மொழியில் அடிப்படையான உயிர் ஒலிகள் மூன்று. அவை அ, இ, உ என்பன. இவையே எந்த ஒரு மொழியிலும் முதன்முதலில் இருந்திருக்க வேண்டும் என்றும், அவற்றிலிருந்தே பிற உயிர் ஒலிகள் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும் என்றும் மொழியியலார் கூறுகின்றனர். தமிழிலும் இம்மூன்று உயிர் ஒலிகளே தொடக்கத்தில் இருந்தன.

1.2.2 ஐந்தாக வளர்தல் அ, இ, உ என்னும் மூன்று உயிர் ஒலிகள் காலப்போக்கில் ஐந்து உயிர் ஒலிகளாக வளர்ந்து அமைந்தன. இதனை மொழியியலார் ஓர் உயிர் ஒலி முக்கோணம் (vowel triangle) இட்டு விளக்கிக் காட்டுவர்.

அகரத்துக்கும் இகரத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தோன்றிய ஒலி எகரம் ஆகும். இகர ஒலி எகர ஒலியாக ஒலிக்கப்படுவதைக் கீழ்க்கண்ட சொற்கள் காட்டும்

இலை > எலை

இடம் > எடம்

விஷம் > வெஷம்

சிவப்பு > செவப்பு

இணை > எணை

இயலும் > ஏலும்

இவ்வாறான சொற்களை நோக்கும்போது, இகர ஒலியிலிருந்து எகர ஒலி தோன்றி வளர்ந்தது புலனாகும்.

இதே போல அகரத்துக்கும் உகரத்துக்கும் இடைப்பட்ட நிலையில் ஒகர ஒலி தோன்றியது. உகர ஒலி ஒகர ஒலியாக ஒலிக்கப்படுவதைக் கீழ்க்கணட சொற்கள் காட்டும்.

உலகம் > ஒலகம்

உடம்பு > ஒடம்பு

உரல் > ஒரல்

உலை > ஒலை

உயரம் > ஒயரம்

துவை > தொவை

இவ்வாறான சொற்களை நோக்கும்போது உகர ஒலியினின்று ஒகர ஒலி தோன்றி வளர்ந்தது புலனாகும்.

இவ்வாறு முதலில் அ, இ, உ என மூன்றாக இருந்த உயிர் ஒலிகள் அ, இ, உ, எ, ஒ என ஐந்தாக வளர்ந்தமைந்தன.

1.2.3 பத்தாகப் பெருகுதல் அ, இ, உ, எ, ஒ என வளர்ந்தமைந்த ஐந்து உயிர் ஒலிகளும் பின்பு காலப்போக்கில் குறுகி ஒலித்தலும், நீட்டி ஒலித்தலும் ஆகிய வேறுபாட்டைப் பெற்றுப் பத்தாய்ப் பெருகி அமைந்தன. அதாவது அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ என்று பெருகி அமைந்தன. தமிழ்மொழியில் இக்குறில் நெடில் வேறுபாடு நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கி வருகிறது. இக்குறில், நெடில்களைப் பெற்றுவரும் சொற்கள் பொருள் வேறுபாடு கொண்டனவாக உள்ளன.

சான்று:

அணி, ஆணி; பல், பால்.

இன்று, ஈன்று; விடு, வீடு.

உடல், ஊடல்; புண், பூண்.

எங்கு, ஏங்கு; கெட்டு, கேட்டு.

ஒட்டு, ஓட்டு; கொல், கோல்.

எனவேதான் தமிழில் குறிலும், அதற்குரிய நெடிலும் ஒலியனும் மாற்றொலியனுமாகக் கருதப்படாமல், தனித்தனி ஒலியன்களாகவே கருதப்படுகின்றன.

1.2.4 பன்னிரண்டாக நிறைதல் இவ்வாறு வளர்ந்தமைந்த உயிர் ஒலிகள் பத்தும் ஐ, ஒள என்னும் கூட்டொலிகளைப் பெற்றுப் பன்னிரண்டு என்ற எண்ணை அடைந்து அதற்குமேல் வளர்ச்சி எதுவும் பெறாமல் இன்றளவும் நிலைபெற்று நிற்கின்றன. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள எனப் பன்னிரண்டு உயிர்களும் தமிழில் அகர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

1.2.5 நெடில் உயிர் ஒலிகளுக்குக் குறியீடு தமிழ் இலக்கண நூலார் மேலே குறிப்பிட்ட பன்னிரண்டையும் தனித்தனி உயிர் ஒலிகளாகவே கொண்டனர். ஆனால் மொழியியலார் ஐ, ஒள என்னும் இரண்டையும், மற்ற உயிர் ஒலிகளைப் போலத் தனித்தனி உயிர் ஒலிகளாகக் கொள்ளவில்லை. அவை ஒவ்வொன்றையும் இரண்டு வேறுபட்ட ஒலிகளின் கூட்டொலிகள் என்று கொண்டனர். எனவே ஐ, ஒள என்னும் இரண்டைப் பற்றி, கூட்டொலிகள் என்னும் அடுத்த பாடத்தில் தனியே காண இருக்கிறோம். இப்பாடத்தில் ஐ, ஒள நீங்கலான ஏனைய பத்து உயிர் ஒலிகளைப் பற்றியே விரிவாகப் பார்க்க உள்ளோம்.

தமிழ் இலக்கண நூலார் ஒவ்வொரு குறில் உயிர்க்கும், அதன் இனமான நெடில் உயிர்க்கும் தனித்தனியான வடிவங்களைக் குறியீடுகளாகத் தந்துள்ளனர்.

குறில்              நெடில்

அ                              ஆ

இ                                ஈ

உ                              ஊ

எ                                 ஏ

ஒ                                ஓ

மொழியியலார் ஒவ்வொரு மொழியில் உள்ள ஒலிகளுக்கும் ரோமன் வரிவடிவத்திலே (Roman script) ஒருபொதுவான குறியீடு கொடுப்பார்கள். அவ்வகையில் தமிழ் மொழியில் உள்ள ஐந்து குறில் உயிர்களுக்குத் தனித்தனியே குறியீடுகள் தந்து, அவற்றிற்கு இனமான நெடில் உயிர்களுக்குத் தனித்தனியே குறியீடு தாராது, நெடில் உயிர் என்பதைக் குறிப்பிட /:/ என்னும் ஒரே குறியீடு மட்டுமே தருவர். அவர்கள் தரும் குறியீடுகள் பின்வருமாறு:

குறில் உயிர் ஒலிகள் ரோமன் வரிவடிவம் நெடில் உயிர் ஒலிகள் ரோமன் வரிவடிவம்

அ a ஆ a :

இ i ஈ i :

உ u ஊ u :

எ e ஏ e :

ஒ o ஓ o :

இதனால் தமிழ் இலக்கண நூலார் பத்து வரிவடிவங்களில் எழுதும் உயிர் ஒலிகளை, மொழியியலார் மொத்தம் ஆறு வடிவங்களில் கொண்டு வருகின்றனர். இதனை அவர்கள் ‘simplification’ என்பர். மேலும் ஐந்து நெடில் உயிர் ஒலிகளைக் குறிக்கக் கையாளும் குறியீட்டை அதாவது /:/ என்னும் ஒரே குறியீட்டை ‘Supra Segmental Phone’ என்றும் அழைப்பர். பத்து வரிவடிவங்களை, ஆறு வரிவடிவங்களாகக் குறைத்துக் கொள்வதில் எளிமைப் பண்பு காணப்படுகிறது.

1.3 ஒலிகளின் பிறப்பு

தமிழில் உள்ள எல்லா ஒலிகளுக்கும் பொதுவான பிறப்பு முறை பற்றியும், ஒவ்வோர் ஒலிக்கான தனிப்பட்ட பிறப்புமுறை பற்றியும் தமிழ் இலக்கண நூலாரும், தற்கால மொழியியலாரும் கூறியுள்ளனர். மொழியியலார் தமிழில் உள்ள ஒலிகளின் பிறப்புமுறை பற்றிக் கூறும்போது, அறிவியல் முறையில் மேலைநாட்டு மொழியியலார் கூறும் ஒலிகளின் பிறப்பு முறையை அடிப்படையாகக் கொள்கின்றனர். எனினும் அவர்கள் தமிழ் இலக்கண நூலார் கூறும் கருத்துகளை அடியொற்றியே மேலைநாட்டார் கூறும் பிறப்பு முறையை விளக்கிக் காட்டுகின்றனர்.

1.3.1 ஒலிகளின் பிறப்பு – பொது இலக்கணம் தொல்காப்பியர் தம்முடைய தொல்காப்பியம் என்னும் இலக்கணநூலில் உள்ள எழுத்ததிகாரத்தில் ‘பிறப்பியல்’ எனும் தலைப்பின்கீழ் ஒலிகளுக்கான பிறப்பு இலக்கணம் கூறுகிறார். இவர் கூறும் பிறப்பு இலக்கணத்தை இன்றைய மொழியியலார் பெரிதும் போற்றுகின்றனர். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் ஒலிகளின் பிறப்பை ஆராய்ந்து பார்க்கும்போது தொல்காப்பியர் பல நூற்றாண்டுகளுக்கு முன் பிறப்பியலில் சொன்ன கருத்துகள் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன.

தொல்காப்பியர் தமது இலக்கண நூலில்,

உந்தி முதலா முந்து வளி தோன்றி,

தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ,

பல்லும் இதழும் நாவும் மூக்கும்

அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்

உறுப்புஉற்று அமைய நெறிப்பட நாடி,

எல்லா எழுத்தும் சொல்லுங் காலை

பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல

திறப்படத் தெரியும் காட்சி யான

(தொல்.எழுத்து.83)

என்ற நூற்பாவில் ஒலிகளின் பொதுப்பிறப்பு இலக்கணம் கூறுகிறார்.

இந்நூற்பாவிற்கு உரை கூறவந்த நச்சினார்க்கினியர் எனும் உரையாசிரியர்.

“தமிழெழுத்து எல்லாவற்றிற்கும் பிறப்பினது தோற்றரவைக் கூறுமிடத்து, கொப்பூழ் அடியாகத் தோன்றி முந்துகின்ற உதானன் என்னுங் காற்றுத் தலையின்கண்ணும் மிடற்றின்கண்ணும் நெஞ்சின்கண்ணும் நிலைபெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் என்ற ஐந்துடனே, அக்காற்று நின்ற தலையும் மிடறும் நெஞ்சுங் கூட எட்டாகிய முறைமையையுடைய தன்மையோடு கூடிய உறுப்புகளோடு ஒன்றுற்று இங்ஙனம் அமைதலானே, அவ்வெழுத்துகளது தோற்றரவு வேறுவேறு புலப்பட வழங்குதலை உடைய”

என்று கூறுகிறார்.

கொப்பூழ் அடியில் உதானன் என்ற காற்றுத் தோன்றி வருகின்றது என்பது இன்றைய அறிவியல் ஆராய்ச்சிக்கு மாறானது. நெஞ்சில் உள்ள சுவாசப்பையில் இருந்தே காற்றுப் புறப்படும். அக்காற்று மிடற்றின் ஊடாகச் சென்று வாய்க்கு அல்லது வாய்க்கும் மூக்குக்கும் வருகின்றது என இன்றைய மொழியியலார் கொள்வர். இக்காற்றுத் தலைக்கும் செல்கின்றது எனக் கூறும் தொல்காப்பியர், தலை என்று கூறியிருப்பது எதைப் பற்றி எனத் தெரியவில்லை. ஆனால் தலைக்கு இக்காற்றுச் செல்வதில்லை என்கின்றனர் இக்கால மொழியியலார்.

தொல்காப்பியர் கூறியதையே நன்னூலார், தமது நன்னூலில் பிறப்பின் பொதுவிதியாகக் கூறும்பொழுது தலையை உச்சி என்று கூறுகிறார்.

நிறைஉயிர் முயற்சியின் உள்வளி துரப்ப

எழும்அணுத் திரள்உரம் கண்டம் உச்சி

மூக்குஉற்று இதழ்நாப் பல்அணத் தொழிலின்

வெவ்வேறு எழுத்து ஒலியாய் வரல் பிறப்பே

(நன்னூல்.74)

தலை மிடறு, நெஞ்சு என்னும் இடங்களில் நிலைபெற்று என்று தொல்காப்பியர் கூறுகிறார். ஆனால் நன்னூலார் இம்மூன்றுடன் மூக்கையும் சேர்த்து நான்கு ஆக்குகிறார்.

நன்னூலாரே தமது அடுத்த நூற்பாவில் உயிர் எழுத்துகளுக்கும் இடையினத்திற்கும் இடம் கழுத்தாகும், மெல்லினம் மூக்கை இடமாகப் பொருந்தும், வல்லினம் மார்பை இடமாகப் பெறும் என்று கூறுகிறார். ஆதலால் அவரும் உச்சியை ஏன் கூறினார் எனத் தெரியவில்லை. தொல்காப்பியர் கூறி இருப்பதனால் அவரும் கூறி இருக்கலாம் என்பர்.

அவ்வழி

ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்;

மேவும் மென்மை; மூக்கு உரம் பெறும் வன்மை

(நன்னூல்.75)

1.3.2 உயிர் ஒலிகளின் பிறப்பு உள்ளே இருந்து எழும் மூச்சுக்காற்றானது மிடற்றின் (கழுத்து) முயற்சியால் வாயின் வழியாக எந்த விதமான தடையுமின்றி வெளிப்படுவதால் பிறக்கின்ற ஒலிகள் உயிர் ஒலிகள் ஆகும் என்று இக்கால மொழியியலார் உயிர் ஒலிகளின் பிறப்புப் பற்றிக் குறிப்பிடுகின்றனர்.

தொல்காப்பியர் உயிரெழுத்துகளின் பிறப்பைப் பற்றிக் கூறும்போது, ‘பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மிடற்றின்கண் பிறந்த காற்றால் ஒலிக்கும்’ என்று கூறுகிறார். இக்கருத்தை அவர்,

அவ்வழி

பன்னீர் உயிரும் தம் நிலை திரியா

மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்

(தொல். எழுத்து. 84)

என்ற நூற்பாவில் குறிப்பிடுகின்றார். எனவே உயிரொலிகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியரும் இக்கால மொழியியலாரும் குறிப்பிடும் கருத்துகள் பெரிதும் ஒத்தே காணப்படுகின்றன எனலாம்.

1.4 உயிர் ஒலிகளின் பாகுபாடு்

மொழியியலார் தமிழில் உள்ள ஒலிகளை அவை பிறக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு அவற்றை முன் அண்ண உயிர் ஒலிகள், பின் அண்ண உயிர் ஒலிகள், முன் இடை உயிர் ஒலிகள், பின் இடை உயிர் ஒலிகள், தாழ் நடு உயிர் ஒலிகள் என ஐந்து வகையாகப் பாகுபடுத்தி விளக்குகின்றனர். அவர்கள் விளக்கிக் கூறும் கருத்துகளை ஈண்டுக் காண்போம்.

1.4.1 முன் அண்ண உயிர் ஒலிகள் (Front Vowels) நாக்கானது (tongue) வாயினுள் மேற் சென்றும், தாழ்ந்தும், முன்னும், பின்னும் நகர்ந்தும் மிடற்றிலிருந்து வரும் காற்றினை ஒரு குறிப்பிட்ட ஒலியாக வெளிக்கொண்டு வருகிறது. இதனால் நாக்கினை ‘king of organ’ என்று மொழியியலார் கூறுவர். ஏனெனில் உயிர் ஒலிகள் மொழிக்கு உயிர் போன்றனவாகும். அப்படிப்பட்ட உயிர் ஒலிகளைச் சரிவர உச்சரிக்க நாக்கின் பங்கு பெரிதும் பயன்படுகிறது. அவ்வாறு நாக்கானது மேல் எழுந்து முன்பக்கமாக அமைந்து, ஒலியைத் தடையின்றி வெளிக்கொண்டு வருகிறது. இதுவே முன் அண்ண உயிர் ஒலியாகும். இதனை இ என்பர். ‘இ’ எனும் உயிர் ஒலியினை வெளிக்கொண்டு வரும்போது வாயின் இதழ்கள் குவியாமல் (unrounded lips) இருக்கின்றன. இதே ‘இ’ எனும் உயிர் ஒலியை சற்று நீட்டி ஒலித்தால் அதனை ஈ என்பர். இவ் ‘இ, ஈ,’ என்னும் இரு உயிர்களும் ஒரே இடத்தில் பிறக்கின்றன. ஆனால் ‘இ’ குறில் ஆகும். ‘ஈ’ நெடில் ஆகும். இ, ஈ எனும் இரு உயிர் ஒலிகளை ‘Velar Vowels’ என்று மொழியியலார் கூறுவர். ‘இ’ என்பதைக் குறுகிய உயிர்ஒலி (Short Vowel) என்றும் ‘ஈ’ என்பதை நெடிய உயிர்ஒலி (Long Vowel) என்றும் மொழியியலார் அழைப்பர்.

1.4.2 பின் அண்ண உயிர் ஒலிகள் (Back Vowels) பின் அண்ண உயிர் ஒலி எனப்படுவது உ ஆகும். இவ் ‘உ’ எனும் உயிர் ஒலியை வெளிக் கொண்டுவர நாக்கானது வாயில் மேல் எழுந்து பின்னோக்கிப் போகின்றது. அந்த நிலையில் உச்சரிக்கும்போது இதழ்கள் குவிந்து (rounded lips) இருப்பதை உணரலாம். இவ்வொலியைச் சற்று நீட்டி ஒலித்தால் ஊ எனும் நெடிய உயிர் ஒலி பிறக்கிறது. உ, ஊ இரண்டு உயிர் ஒலிகளும் ஒரே இடத்தில் பிறப்பதை உச்சரிக்கும்போது நம்மால் உணர முடிகிறது. இங்கு ‘உ, ஊ’ எனும் உயிர் ஒலிகளை ‘labial vowels’ என்று மொழியியலார் கூறுவர். ‘உ’ என்பதைக் குறுகிய உயிர் ஒலி (short vowel) என்றும் ‘ஊ’ என்பதை நெடிய உயிர் ஒலி (long vowel) என்றும் மொழியியலார் அழைப்பர்.

1.4.3 முன் இடை உயிர் ஒலிகள் (Front-Mid Vowels) நாக்கானது வாயினுள் கீழிலிருந்து சற்றுமேல் எழுந்து வாயின் முன்னுக்கு நகர்ந்து காற்றினைத் தடையில்லாமல் ஒலிக்கச் செய்யும்போது எ என்னும் உயிர் ஒலி பிறக்கிறது. அவ்வாறு உச்சரிக்கும்போது நாக்கானது மிக உயரத்தில் இல்லாமலும் தாழ்ந்த நிலையில் இல்லாமலும் இடையில் நின்று இருப்பதால் இதை இடை உயிர் ஒலி (mid vowel) என்பர் மொழியியலார். இது போன்ற சூழ்நிலையில் இதழ்கள் குவியாமல் இருக்கின்றன. ‘இ’ என்பதையே சற்று நீட்டி ஒலித்தால் ஏ எனும் நெடிய உயிர் ஒலி கிடைக்கிறது என்பர் மொழியியலார். ஆனால் தொல்காப்பியர், இகரத்துடன் (இ) எகரத்தை (எ) இணைத்து அவை இரண்டனுக்கும் ஒரே பிறப்பு முறை கூறுகிறார். ஏனெனில் இகர உயிர் ஒலி பிறக்கும் இடத்திற்குச் சற்றுக் கீழே ‘எ’ என்னும் உயிர் ஒலி பிறக்கிறது.

1.4.4 பின் இடை உயிர் ஒலிகள் (Back Mid Vowels) ‘ஒ’ எனும் உயிர் ஒலி, வாயினுள் நாக்கானது சற்றுக் கீழிலிருந்து மேல் எழும்போது பிறக்கிறது. அந்த நிலையில் நாக்கானது சற்றுப் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இது போன்ற நிலையில் இதழ்கள் குவிந்து காணப்படுகின்றன. இவ்வொலியைச் சற்று நீட்டி ஒலித்தால் ஓ எனும் நெடிய உயிர் ஒலி கிடைக்கிறது. ஆனால் தொல்காப்பியர் உகரத்துடன் ஒகரத்தை இணைத்து இரண்டுக்கும் ஒரே பிறப்பு முறை கூறுகிறார். ஏனெனில் உகர உயிர் பிறக்கும் இடத்திற்குச் சற்றுக் கீழே ஒகரம் பிறக்கிறது.

1.4.5 தாழ் நடு உயிர் ஒலிகள் (Low Centre Vowels) நாக்கானது வாயினுள் தாழ்ந்த நிலையிலேயே நின்று அதிலும் நடுவினுள் இருந்து ஒலியை எழுப்புகிறது. இவ்வுயிர் ஒலியை அ என்பர். இவ் அகர ஒலியை உச்சரிக்கும்போது இதழ்கள் குவிவது கிடையாது. இவ் உயிர் ஒலியைச் சற்று நீட்டித்து ஒலித்தால் ஆ என்னும் நெடில் உயிர்ஒலி கிடைக்கிறது.

1.5 உயிர் ஒலிகளுக்கான வரைபடமும் அட்டவணையும்

தற்கால மொழியியலார் வாயினுள் நாவானது எவ்வாறெல்லாம் நின்றும், நகர்ந்தும், மேல் எழுந்தும் உயிர் ஒலிகளை ஒலிக்கின்றது என்பதைக் கீழ்க்காணும் வரைபடங்களால் விளக்கிக் காட்டுகின்றனர்.

வரைபடம் – 1

நாவானது வாயினுள் மேலும், தாழ்ந்தும், இடைப்பட்டும் நின்று உயிர் ஒலிகளை ஒலிப்பதைக் காட்டுகிறது.

வரைபடம்-2

நாவானது வாயினுள் முன்னும், பின்னும், நடுவும் நகர்ந்து உயிர் ஒலிகளை ஒலிப்பதைக் காட்டுகிறது.

வரைபடம் -

நாவானது வாயினுள் மேலும், தாழ்ந்தும், இடைப்பட்டு நின்றும், முன்னும், பின்னும் நடுவும் நகர்ந்தும் ஒலிக்கின்ற உயிர் ஒலிகள் யாவை என்பதைக் காட்டுகிறது.

உயிர் ஒலிகளின் அட்டவணை

மேலே காட்டிய வரைபடங்களின் அடிப்படையில் மொழியியலார் உயிர் ஒலிகளைப் பின்வருமாறு அட்டவணை இட்டுக் காட்டுகின்றனர்.

முன்                                    நடு                                               பின்

மேல் இ, ஈ                         –                                                    உ, ஊ

இடை எ, ஏ                        -                                                     ஒ, ஓ

தாழ் –                                 அ, ஆ                                                  -

1.6 உயிர் ஒலிகளின் மற்றொரு பாகுபாடு

உயிர் ஒலிகளை நாவின் முயற்சி அடிப்படையில் மொழியியலார் முன் அண்ண உயிர் ஒலிகள் முதலான ஐந்து வகையாகப் பாகுபடுத்திக் கூறியதை இதுகாறும் விரிவாகப் பார்த்தோம். உயிர் ஒலிகளின் பிறப்பிற்கு (உச்சரிப்பு முறைக்கு) நாவின் முயற்சியோடு, இதழ்களின் முயற்சியும் தேவைப்படுகிறது. எனவே இதழ்களின் முயற்சி அடிப்படையிலும் உயிரொலிகளை ஐந்துவகையாக மொழிநூலார் பாகுபடுத்திக் காட்டுகின்றனர். அப்பாகுபாடு வருமாறு:

இ, ஈ – முன் உயர் இதழ் குவியா உயிர் ஒலிகள் (

igh Front Unrounded Vowels)

எ, ஏ – முன் இடை இதழ் குவியா உயிர் ஒலிகள் (Mid Front Unrounded Vowels)

அ, ஆ – கீழ் அடி இதழ்குவியா உயிர் ஒலிகள் (Low Unrounded Vowels)

ஒ, ஓ – பின் இடை இதழ் குவி உயிர் ஒலிகள் (Mid Back Rounded Vowels)

உ, ஊ – பின் உயர் இதழ் குவி உயிர் ஒலிகள் (

igh Back Rounded Vowels)

இப்பாகுபாட்டை நோக்கினால், ‘அ, ஆ, இ, ஈ, எ, ஏ’ என்னும் ஆறு உயிர் ஒலிகளும் இதழ் குவியா முயற்சியால் பிறப்பன என்றும், ‘உ, ஊ, ஒ, ஓ’ என்னும் நான்கு உயிர் ஒலிகளும் இதழ்குவி முயற்சியால் பிறப்பன என்றும் அறியலாம்.

1.7 தொகுப்புரை

இதுவரை இப்பாடத்தில் பேச்சு ஒலி (speech sound) உயிர் ஒலி என்றும் மெய்ஒலி என்றும் பிரிக்கப்படுவது பற்றி அறிந்து கொண்டீர்கள். பழந்தமிழ் இலக்கண ஆசிரியர்களும் தற்கால மொழியியலாரும் ஒலிகளின் பிறப்பு முறை பற்றிக் கூறுவதில் எவ்வாறு ஒத்துப் போகின்றனர் என்பது பற்றிப் படித்தீர்கள். தடையில்லாமல் வாயினுள் நாவின் முயற்சியால் உயிர் ஒலிகள் பிறக்கின்றன என்ற கருத்தினை அறிந்து கொண்டீர்கள். தமிழில் உள்ள நெடில் உயிர் ஒலிகள் ஐந்தனையும் /:/ என்ற ஒரே குறியீடாகக் கொண்டு உணர்த்தி, அதனை மொழியியலார் ‘superasegmental sound’ என்று விளக்குவதைப் படித்துணர்ந்தீர்கள். உயிர் ஒலிகள் நாவின் முயற்சியாலும், இதழ்களின் முயற்சியாலும் ஒலிக்கப்படுவதை வரைபடங்களைக் கொண்டும், அட்டவணை கொண்டும் நன்கு விளங்கிக் கொண்டீர்கள்.

பாடம் - 2

கூட்டொலிகள்

2.0 பாட முன்னுரை

இப்பாடம் கூட்டொலி என்றால் என்ன? என்பதை விளக்குகிறது. ஐ, ஒள என்னும் இரண்டு உயிர் ஒலிகள் கூட்டொலிகளாகத் தமிழிலும், வடமொழியிலும் கருதப்படுவதைக் குறிப்பிடுகிறது. வடமொழியில் இவை எந்த ஒலிகளின் கூட்டால் உருவாயின என்பதை விளக்குகிறது. தமிழில் இவை எந்த ஒலிகளின் கூட்டால் உருவாயின என்பது பற்றி இருவேறு கருத்துகள் கூறப்படுகின்றன. எனவே அவ்விரு வேறுபட்ட கருத்துகளையும் விளக்கிக் காட்டுகிறது. மேலும் அவ்விரு கருத்துகளில் எது பொருந்துவதாக உள்ளது என்பதை மொழியியல் கண்ணோட்டத்தில் எடுத்துக்காட்டி விளக்குகிறது. சங்க காலம், இடைக்காலம், தற்காலம் எனக் காலந்தோறும் ஐ, ஒள என்னும் இரண்டும் எவ்வாறு எழுதப்பட்டும், ஒலிக்கப்பட்டும் வந்தன என்பதைச் சான்றுகளுடன் விளக்கிக் காட்டுகிறது. தமிழில் இவ்விரண்டு கூட்டொலிகளின் வருகை சொற்களில் எவ்வாறு அமைந்துள்ளது     என்பதையும் சான்றுகளுடன் விளக்கிக் காட்டுகிறது.

2.1 கூட்டொலி என்றால் என்ன?

“இரண்டு உயிர் ஒலிகளை ஒன்று சேர்த்து ஓர் அசையில் – ஒரு முயற்சியில் – ஒலிக்கும்போது உருவாகின்ற ஒலி கூட்டொலி (diphthong)” என்று ஆங்கில மொழியியல் அறிஞர் நோயல் ஆம்பீல்டு (Noel Armfield) என்பவர் கூறுகிறார்.

2.1.1 கூட்டொலிகள் யாவை? ஐ, ஒள என்னும் இரண்டு உயிர் ஒலிகளும் கூட்டொலிகள் எனக் கூறப்படுகின்றன. இவை இரண்டும் தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் எந்த எந்த ஒலிகளின் கூட்டால் உருவாயின என்று இம்மொழிகளில் கூறப்பட்டுள்ளது.

2.2 வடமொழியில் கூட்டொலிகள்

வடமொழியில் ஐ, ஒள என்னும் இரண்டும் சந்தி அக்ஷரம் என்று கூறப்படுகின்றன. சந்தி என்ற சொல்லுக்குக் கூட்டு் என்று பொருள் ; அக்ஷரம் என்ற சொல்லுக்கு எழுத்து அல்லது ஒலி என்று பொருள். சந்தி அக்ஷரம் என்பதற்குக் கூட்டெழுத்து அல்லது கூட்டொலி என்று பொருள். ஐ, ஒள ஆகிய இரண்டும், இரண்டு உயிர்களின் கூட்டால் உருவானவை என்று வடமொழியில் கூறப்படுகின்றன.

அகர உயிர் ஒலி, இகர உயிர் ஒலி ஆகிய இரண்டு உயிர் ஒலிகளின் கூட்டால் தோன்றியது ஐ என்றும், அகர உயிர் ஒலி, உகர உயிர் ஒலி ஆகிய இரண்டு உயிர் ஒலிகளின் கூட்டால் தோன்றியது ஒள என்றும் வடமொழியில் கூறப்படுகின்றன.

அ + இ = ஐ

அ + உ = ஒள

2.3 தமிழில் கூட்டொலிகள்

வடமொழியைப் போலவே தமிழிலும் ஐ, ஒள என்னும் இரண்டும் கூட்டொலிகள் எனக் கூறப்படுகின்றன. இவ்விரண்டையும் தமிழ் இலக்கண நூலார் நெடில் உயிர் ஒலிகளாகக் குறிப்பிடுகின்றனர். ஏனைய ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகிய ஐந்து நெடில் உயிர் ஒலிகளுக்கு முறையே அ, இ, உ, எ, ஒ என்னும் குறில் உயிர் ஒலிகள் இனமாக அமைந்துள்ளன. ஆனால் ஐ, ஒள என்பன நெடில் உயிர் ஒலிகளாகக் கூறப்பட்டாலும் அவற்றிற்கு இனமாகிய குறில் உயிர் ஒலிகள் இல்லை. ஏனெனில் இவை கூட்டொலிகளாக இருக்கின்றன.

2.3.1 கூட்டொலிகள் பற்றிய இருவேறு கருத்துகள் தமிழில் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் பற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. ஒன்று, இவை இரண்டும் வடமொழியைப் போல இரண்டு உயிர் ஒலிகளின் கூட்டொலி என்பதாகும். மற்றொன்று, ஓர் உயிர் ஒலி, ஒரு மெய் ஒலி ஆகிய இரண்டு ஒலிகளின் கூட்டொலி என்பதாகும். இவ்விரு கருத்துகளையும் தமிழ் இலக்கண நூலாராகிய தொல்காப்பியரும் நன்னூலாரும் குறிப்பிடுகின்றனர். மேலும் இவ்விரு கருத்துகளின் அடிப்படையில் அமைந்த ஐகார, ஒளகாரச் சொற்களைச் சங்க கால இலக்கியங்களிலும், தற்காலத் தமிழிலும் காணலாம்.

2.3.2 தொல்காப்பியர் குறிப்பிடும் கருத்துகள் அகர உயிர் ஒலியும், இகர உயிர் ஒலியும் கூடி ஐகாரம் ஆகும் என்றும், அகர உயிர் ஒலியும், உகர உயிர் ஒலியும் கூடி ஒளகாரம் ஆகும் என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். இதனை,

அகர இகரம் ஐகாரம் ஆகும் (தொல். எழுத்து, 54)

அகர உகரம் ஒளகாரம் ஆகும் (தொல். எழுத்து, 55)

என்ற நூற்பாக்களால் அறியலாம். தொல்காப்பியரின் இக்கருத்து வடமொழியில் ஐ, ஒள பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்தைப் பின்பற்றியதாகும்.

அ + இ = ஐ (a + i = ai)

அ + உ = ஒள (a + u = au)

ஐ என்பது பற்றித் தொல்காப்பியர் மற்றொரு கருத்தையும் கூறியுள்ளார். அகர உயிர் ஒலியையும், யகர மெய் ஒலியையும் இணைத்து அய் என எழுதும் கூட்டொலியாகவும் ஐகாரத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதனை,

அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்

ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்

(தொல். எழுத்து, 56)

என்ற நூற்பாவால் அறியலாம். இது போல ஒள என்பதை அகர உயிர் ஒலியையும் வகர மெய் ஒலியையும் இணைத்து அவ் என்று எழுதும் ஒலியாகத் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. எனினும், தொல்காப்பிய உரையாசிரியர்கள் இக்கருத்தை எடுத்துக்காட்டி, அதற்கு ஒளவை – அவ்வை என்பதை உதாரணமாகக் குறிப்பிடுகின்றனர்.

அ + ய் = அய் (a + y = ay)

அ + வ் = அவ் (a + v = av)

2.3.3 சங்க கால இலக்கியங்களில் ஐ, ஒள சங்க காலத்தில் தொல்காப்பிய இலக்கண நூலை அடுத்துத் தோன்றிய நூல்கள் சங்க இலக்கியங்கள் எனக் கூறப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் எவ்வாறு எழுதப்பட்டிருந்தன என்பதைக் காண்போம்.

சங்க இலக்கியங்களில் ஐகாரம் , அகரமும் இகரமும் கூடிய ஒலியாகக் கருதப்பட்டு ஐ என்று மட்டுமே எழுதப்பட்டது ; அய் என்று எந்த ஓர் இடத்திலும் எழுதப்படவில்லை. அதாவது சங்க இலக்கியங்களில் ஐவர், ஐந்து, ஐம்பது போன்ற சொற்கள் அய்வர், அய்ந்து, அய்ம்பது என்றாற்போல எந்த ஓரிடத்திலும் எழுதப்படவில்லை. ஐவர், ஐந்து, ஐம்பது என்றாற்போல மட்டுமே எழுதப்பட்டன.

ஆனால் இதற்கு மாறாக, ஒளகாரமோ சங்க கால இலக்கியங்களில் ஒள என்றும் அவ் என்றும் இரு வகையாக எழுதப்பட்டது. பௌவம் (கடல்) என்ற சொல், பௌவம் என்றும் பவ்வம் என்றும் எழுதப்பட்டது. அதே போலக் கௌவை (அலர் அல்லது பழிச்சொல்) என்ற சொல், கௌவை என்றும், கவ்வை என்றும் எழுதப்பட்டது.

நிறைஇரும் பௌவம் குறைபட முகந்துகொண்டு

(குறிஞ்சிப்பாட்டு : 47)

(நிறைந்த கரிய கடலினது நீர் குறையும் படி முகந்து கொண்டு)

பவ்வம் மீமிசைப் பாற்கதிர் பரப்பி

(பொருநராற்றுப்படை : 135)

(இளஞாயிறு கடலின்மீது பகற்பொழுதைச் செய்யும் கதிர்களைப் பரப்பி.)

ஊரனொடு எழுந்த கௌவையோ பெரிது

(அகநானூறு, 186 : 7)

(தலைவனால் எனக்கு ஊரில் ஏற்பட்ட பழிச்சொல்லோ பெரிதாகும்.)

பகல்வரின் கவ்வை அஞ்சுதும் (அகநானூறு, 118 : 6)

(தலைவனே ! தலைவியைக் காணப் பகற்பொழுதில் வரின் அதனால் ஏற்படும் பழிச்சொல்லுக்கு அஞ்சுகிறோம்.)

சங்க காலத்தில் தோன்றிய தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களை நோக்கும்போது ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் பற்றிப் பழங்காலத்திலேயே இருவேறு கருத்துகள் இருந்தன என்பது புலனாகிறது.

2.3.4 நன்னூலார் குறிப்பிடும் கருத்துகள் இடைக்காலத்தில் வாழ்ந்த நன்னூலார், தமக்கு முற்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கிய, இலக்கண நூல்களில் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் பற்றிய இருவேறு கருத்துகள் இருப்பதைக் கண்டார். எனவே அவர் தமது நன்னூலில் அவ்விரு கருத்துகளையும் சேர்த்துக் குறிப்பிடலானார்.

அம்முன் இகரம் யகரம் என்றுஇவை

எய்தின் ஐ ஒத்து இசைக்கும் ; அவ்வோடு

உவ்வும் வவ்வும் ஒள ஓரன்ன

(நன்னூல், 125)

நன்னூலார் கருத்துப்படி ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் பின்வருமாறு இருவகையில் அமைந்து விளங்கும்.

அ + இ = ஐ

அ + ய் = அய்

அ + உ = ஒள

அ + வ் = அவ்

இவ்வாறு நன்னூலார் இருவகையாகக் கூறினார் என்றாலும், அய், அவ் என்பனவற்றை முறையே அஇ (ஐ), அஉ (ஒள) என்பனவற்றிற்குப் போலி என்று கொள்கிறார். ஒரு சொல்லில் ஓர் எழுத்து நிற்றற்கு உரிய இடத்தே, அதற்குப் பதிலாகப் பிறிதோர் எழுத்து வந்துநின்றால், அதனால் அச்சொல்லின் பொருள் மாறவில்லை என்றால் அவ்வெழுத்து போலி எனப்படும். ஈண்டு அஇ, அஉ என்னும் கூட்டொலிகளில் இ, உ என்பனவற்றிற்குப் பதிலாக முறையே ய், வ் என்னும் எழுத்துகள் அவ், இவ் என்னும் சொற்களில் வந்ததால், அவ்வெழுத்துகள் போலி ஆகும்.

2.3.5 தற்காலத் தமிழில் ஐ, ஒள தற்காலத் தமிழிலும் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் முறையே அய் எனவும் அவ் எனவும் எழுதப்படுவதைக் காணலாம்.

ஐயர் – அய்யர்

ஐயா – அய்யா

ஐயனார் – அய்யனார்

ஒளவையார் – அவ்வையார்

சௌக்கியம் – சவுக்கியம்

இதுகாறும் கண்டவற்றால் தமிழில் கூட்டொலிகளாகிய ஐ, ஒள என்னும் இரண்டும் ஈருயிர்களின் கூட்டொலி என்ற முறையிலும், ஓர் உயிர் ஒரு மெய் என்ற ஈரொலிகளின் கூட்டொலி என்ற முறையிலும் ஆக இருவேறு முறையில் பழங்காலந்தொட்டுத் தற்காலம் வரை எழுதப்பட்டு வந்திருக்கும் இயல்பினை அறியலாம்.

2.4 மொழியியலார் கண்ணோட்டத்தில் கூட்டொலிகள்

மொழியியலார் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் பற்றித் தமிழில் பழங்காலந்தொட்டு இருந்துவந்த இருவேறு கருத்துகளையும் குறிப்பிடுகின்றனர். ‘அகரமும் இகரமும் கூடி ஐகாரம் ஆகும் ; அகரமும் உகரமும் கூடி ஒளகாரம் ஆகும்’ என்ற முதல் கருத்தினை வடமொழியில் உள்ள ஐ, ஒள என்னும் சந்தியக்கரங்களின் தாக்கத்தால் தமிழில் ஏற்பட்டதாகக் கொள்கின்றனர். இருப்பினும் அகரத்தின் பின்னர் யகரமெய்யும், வகர மெய்யும் இணைத்து எழுதப்பட்டவையே (அய், அவ் என்பன) ஐ, ஒள ஆகும் என்ற இரண்டாவது கருத்தே மொழியியல் முறைக்குப் பொருந்துவதாய் உள்ளது என்று மொழியியலார் கூறுகின்றனர். அக்கருத்தைத் தக்க சான்றுகள் கொண்டு வலியுறுத்துகின்றனர். அவை பின்வருமாறு :

ஐயர் என்ற சொல் உரைநடையில் அய்யர் எனவும், கைவேல் என்ற சொல் செய்யுளில் கய்வேல் (திருக்குறள், 774) எனவும் எழுதப்பட்டுள்ளன. கை என்ற சொல் பேச்சுமொழியில் கய் என உச்சரிக்கப்படுகிறது. அதேபோல் ஒளவை என்ற சொல் அவ்வை எனவும், சௌக்கியம் என்ற சொல் சவுக்கியம் எனவும் எழுதப்படுகின்றன.

இவ்வாறு ஒரு குறில் உயிரையும் (அ), ஒரு மெய்யையும் (ய் அல்லது வ்) இணைத்து எழுதுவதற்கு இடம் தரலால், தமிழில் யாப்பிலக்கண நூலார் இவ்விரண்டு கூட்டொலிகளுக்கும் ஒன்றரை மாத்திரை என்றே ஒலியளவு கூறியுள்ளனர்.

அ – ஒரு மாத்திரை

ய், வ் – அரை மாத்திரை

அய், அவ் – ஒன்றரை மாத்திரை

இவை வடமொழியில் இருப்பது போலச் சந்தியக்கரங்களாயின் இரண்டு மாத்திரை என்று கூறப்பட்டிருக்க வேண்டும். ஒன்றரை மாத்திரை எனக் கூறப்பட்டதால் இவை ஈருயிர் ஒலிகள் இணைவால் உருவாகும் சந்தியக்கரம் அல்ல என்பது புலனாகும்.

ஐகார ஈற்றுப் பெயர்ச்சொற்கள் விளியேற்கும்போது அடையும் மாற்றங்கள், தொடக்கக் காலத்தில் ஐ, ஒள ஆகிய இரண்டும் அய், அவ் என்றே இருந்திருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. அன்னை, தந்தை, குழந்தை என்ற சொற்கள் விளியேற்கும்போது அன்னாய், தந்தாய், குழந்தாய் என மாற்றம் அடைகின்றன.

அன்னை > அன்னாய் (அன்னையே)

தந்தை > தந்தாய் (தந்தையே)

குழந்தை > குழந்தாய் (குழந்தையே)

இச்சொற்களில் ஐ என்பது ஆய் என திரிந்தது என்று தொல்காப்பியர் கூறுவார்.

ஐ ஆய் ஆகும் (தொல். சொல், 121)

நன்னூலாரும் இவ்வாறே கூறுவார் (நன்னூல், 306).

தொல்காப்பியரும், நன்னூலாரும் இவ்வாறு கூறுவது பொருத்தம் உடையதாக இல்லை. மக்கள் என்ற சொல் விளியேற்கும்போது மக்காள் (மக்களே) என மாற்றம் அடைகிறது. இங்கே அள் என்பது ஆள் என நீண்டு அமைந்துள்ளது. அதேபோல,

அன்னய் > அன்னாய்

தந்தய் > தந்தாய்

குழந்தாய் > குழந்தாய்

என அய் என்பது ஆய் என்று திரிந்ததாகக் கூறுவதே பொருத்தம் உடையது. இதுவே மொழியியல் முறைக்கு ஒத்ததாக உள்ளது.

எனவே தமிழில் ஐ, ஒள என்பன அய், அவ் என்பனவற்றின் வேறல்ல என்பதும், வடமொழியில் உள்ளது போல ஈருயிர் ஒலிகளின் கூட்டொலியாகிய சந்தியக்கரம் அல்ல என்பதும் தெளிவாகின்றன என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர்.

2.5 கூட்டொலிகளின் வருகை

ஐ, ஒள ஆகிய இரண்டும், ஏனைய உயிர் ஒலிகளைப் போலத் தனி ஒலிகளாக இல்லாமல் கூட்டொலிகளாக இருப்பதால் சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய நிலைகளில் இவை எவ்வாறு வந்தமைகின்றன என்பது பற்றிச் சிறிது காண்போம்.

2.5.1 கூட்டொலி – ஐ ஐ என்னும் கூட்டொலி சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய எல்லா நிலையிலும் வருவதைக் காண முடிகிறது.

சொல்லின் முதல்

சொல்லின் முதலில் தனித்தும், மெய்யொடு சேர்ந்தும் ஐ வருகிறது.

சான்று :

ஐயம், ஐவர், ஐம்பது.

கைக்கிளை, தையல், நைந்தது, மையம்.

சொல்லின் இடை

சொல்லின் இடையில் ஐகாரம் மெய்யோடு சேர்ந்து வருகிறது.

சான்று :

இளைஞர், இடையன்.

சொல்லின் இறுதி

சொல்லின் இறுதியில் ஐகாரம் மெய்யோடு சேர்ந்து வருகிறது.

சான்று :

பகை, பசை, கதை, தலை, களை, ஒளவை.

ஐகாரம் சொல்லின் எல்லா நிலைகளிலும் வந்தாலும், ய், ர், ல், ழ், ள் ஆகிய மெய்யொலிகளுக்கு முன்னர் வருவது இல்லை.

2.5.2 கூட்டொலி – ஒள ஒள என்னும் கூட்டொலி சொல்லின் முதலில் மட்டும் வரும். அவ்வாறு வரும்போது தனித்தும், மெய்யோடு சேர்ந்தும் வரும்.

பன்னீர் உயிரும் மொழிமுதல் ஆகும்

(தொல். எழுத்து, 59)

என்ற நூற்பாவில் தொல்காப்பியர் ஒளகாரம் மொழி முதலாவதைக் குறிப்பிடுகிறார்.

ஒளகாரம் சொல்லுக்கு முதலில் மட்டும் வருமே தவிர, சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் தனித்தும், மெய்யோடு சேர்ந்தும் வருவது இல்லை.

சொல்லுக்கு முதலில் ஒளகாரம் வருவது பழங்காலத் தமிழில் மிகுதியாகக் காணப்படுகிறது.

சான்று :

ஒளவையார்

மௌவல் (முல்லை மலர்)

நௌவி (மான்)

கௌவை (அலர், பழிச்சொல்)

பௌவம் (கடல்)

2.6 தொகுப்புரை

இப்பாடத்தில் கூட்டொலி என்றால் என்ன என்பது பற்றி விளக்கமாக அறிந்தீர்கள். ஐ, ஒள என்பன கூட்டொலிகள் என்பதை அறிந்தீர்கள். அவை இரண்டும் தமிழிலும். வடமொழியிலும் காணப்படுவதைத் தெரிந்து கொண்டீர்கள். வடமொழியில் இவை எந்த ஒலிகளின் கூட்டொலிகளாக வழங்குகின்றன என்பதை அறிந்துகொண்டீர்கள். கூட்டொலிகள் பற்றித் தமிழில் இருவேறு கருத்துகள் இருப்பதையும், அவ்விரு கருத்துகளையும் தொல்காப்பியர், நன்னூலார் ஆகியோர் குறிப்பிடுவதையும் தெளிவாக விளங்கிக் கொண்டீர்கள். கூட்டொலிகள் பற்றிய இரு கருத்துகளுள் மொழியியல் முறைக்குப் பொருந்தும் கருத்து யாது என்பதைச் சான்றுடன் அறிந்து கொண்டீர்கள். மேலும் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய நிலைகளில் எவ்வாறு வருகின்றன என்பதையும் விளக்கமாக அறிந்து கொண்டீர்கள்.

பாடம் - 3

மெய் ஒலிகள்

3.0 பாட முன்னுரை

இப்பாடத்தின்கீழ் மெய் ஒலிகள் என்றால் என்ன என்பது பற்றியும், அவை எங்கு, எவ்வாறு பிறக்கின்றன என்பது பற்றியும், அவற்றின் பாகுபாடு பற்றியும் அறிய இருக்கிறோம். தமிழ் இலக்கண நூலார் மெய் ஒலிகளை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகப் பிரித்தது பற்றி அறிய இருக்கிறோம். மெய் ஒலிகளைத் தற்கால மொழியியலார் வெடிப்பொலிகள், மூக்கொலிகள், மருங்கொலிகள், வருடொலிகள், உரசொலிகள், அரை உயிர்கள் என ஆறுவகையாகப் பிரித்து விளக்குவது பற்றியும் அறிந்து கொள்ள இருக்கிறோம். மேலும் மெய் ஒலிகள் பிறக்கும் இடங்கள் பற்றியும், அவ்விடஙகளில் அம்மெய் ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன என்பது பற்றியும் விளக்கமாகக் காண இருக்கிறோம்.

3.1 மெய் ஒலிகள் - ஒரு விளக்கம்

நெஞ்சினின்று எழும் காற்றானது வாய் அறையின் (oral cavity) உள் புகும்போது அங்குள்ள நா, இதழ் முதலான ஒலி உறுப்புகள் அதிர்ந்து, அக்காற்றை அடைத்தோ, அதிரச்செய்தோ வெளிவிடுவதால் பிறக்கும் ஒலிகள் மெய் ஒலிகள் எனப்படும்.

3.2 மெய் ஒலிகளின் பாகுபாடு

மெய் ஒலிகளைத் தொல்காப்பியர், நன்னூலார் போன்ற தமிழ் இலக்கண நூலாரும், தற்கால மொழியியலாரும் அவற்றின் பிறப்பிடம், ஒலிப்புமுறை ஆகியவற்றைக் கொண்டு பலவாறு வகைப்படுத்திக் காட்டியுள்ளனர்.

3.2.1 தமிழ் இலக்கண நூலார் பாகுபாடு தமிழ் இலக்கண நூலார் மெய் ஒலிகளை மூன்று வகையாகப் பிரித்துக் கையாளுகின்றனர். அவையாவன:

1. வல்லினம்

2. மெல்லினம்

3. இடையினம்

க, ச, ட, த, ப, ற என்பனவற்றை வல்லின ஒலிகளாகவும் ங, ஞ, ண, ந, ம, ன ஆகியவற்றை மெல்லின ஒலிகளாகவும், ய, ர, ல, வ, ழ, ள என்பனவற்றை இடையின ஒலிகளாகவும் பிரிக்கின்றனர். இதனை,

வல்லெழுத்து என்ப கசட தபற

மெல்லெழுத்து என்ப ஙஞண நமன

இடையெழுத்து என்ப யரல வழள

(தொல். எழுத்து, 19-21)

என்ற நூற்பாக்களில் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

வல்லின ஒலிகள் மார்பினை இடமாகக் கொண்டும், மெல்லின ஒலிகள் மூக்கை இடமாகக் கொண்டும், இடையின ஒலிகள் மிடற்றினை (கழுத்து) இடமாகக் கொண்டும் பிறக்கின்றன என்றகிறார் நன்னூலார். இதனை,

அவ்வழி

ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்;

மேவும் மென்மை மூக்கு; உரம் பெறும் வன்மை

(நன்னூல். எழுத்து. 75)

என்ற நூற்பாவில் அவர் உணர்த்துகிறார்.

3.2.2 தற்கால மொழியியலார் பாகுபாடு தற்கால மொழியியலார் தமிழில் உள்ள மெய் ஒலிகளை இருவகை நோக்கில் பாகுபாடு செய்துள்ளனர். அவை ஒலிக்கருவிப் பாகுபாடு, ஒலிப்புமுறைப் பாகுபாடு என்பன ஆகும். இவ்விருவகைப் பாகுபாட்டில் தமிழில் காலந்தொட்டு வழங்கிவரும் பதினெட்டு மெய் ஒலிகளோடு தற்காலத் தமிழில் வழங்கும் கிரந்த எழுத்துகளாகிய ‘ஸ’, ‘ஷ’ ஆகிய இரண்டையும் மொழியியலார் சேர்த்துக்கொள்கின்றனர்.

ஒலிக்கருவிப் பாகுபாடு

மொழியியலார் மெய் ஒலிகளைப் பாகுபாடு செய்யும்போது, ஒலிக்கும் கருவிகளாகிய (பேச்சு உறுப்புகளாகிய) இதழ், நா, பல், அண்ணம் என்பனவற்றால் பிறத்தலை (points of articulation) ஒட்டிப் பின்வரும் ஏழு வகைகளாகப் பாகுபாடு செய்துள்ளனர். (இதழ், நா, பல், அண்ணம் ஆகியவற்றை மெய் ஒலிகள் வாயின்கண் பிறத்தற்கு உதவும் இடங்கள் (places of articulation) என்றும் மொழியியலார் கூறுவர்,

1. ஈரிதழ் (Bi-labial) – ப, ம

2. பல் இதழ் (Labio-dental) – வ

3. பல் (Dental) – த, ந

4. அண்பல் (Alveolar) – ர, ல, ழ, ன, ஸ

5. வளை நா (Retroflex) – ட, ண, ள, ஷ

6. முன் அண்ணம் (Palatal) – ச, ஞ, ய, ற

7. பின் அண்ணம் (Velar) – க, ங

ஒலிப்புமுறைப் பாகுபாடு

மெய் ஒலிகளின் ஒலிப்பு முறையை (Manner of articulation) ஒட்டித் தமிழில் உள்ள மெய் ஒலிகளைப் பின்வரும் ஆறு வகைகளாக மொழியியலார் பாகுபாடு செய்துள்ளனர்.

1. வெடிப்பொலிகள் (Plosive Sounds) – க, ச, ட, த, ப

2. மூக்கொலிகள் (Nasal Sounds) – ங, ஞ, ண, ந, ம, ன

3. மருங்கொலிகள் (Lateral Sounds) – ல, ள

4. வருடொலிகள் (Flap Sounds) – ர, ழ, ற

5. உரசொலிகள் (Fricative Sounds) – ஸ, ஷ

6. அரை உயிர்கள் (Semi-Vowels) – ய, வ

இவ்விருவகையான பாகுபாடு குறித்து மொழியியலார் கூறும் கருத்துகளை விரிவாகக் காண்போம். முதற்கண் ஒலிப்புமுறைப் பாகுபாடு பற்றி மொழியியலார் கூறும் கருத்துகளைக் காண்போம்.

3.3 ஒலிப்புமுறைப் பாகுபாடு

மொழியியலார் தமிழில் உள்ள மெய் ஒலிகளை அவற்றின் ஒலிப்புமுறை அல்லது பிறப்புமுறை அடிப்படையில் வெடிப்பொலிகள், மூக்கொலிகள், மருங்கொலிகள், வருடொலிகள், உரசொலிகள், அரை உயிர்கள் என்னும் ஆறு வகைகளாகப் பாகுபாடு செய்திருப்பதை சற்று முன்னர்ப் பார்த்தோம். இங்கு அப்பாகுபாடு ஒவ்வொன்று பற்றியும் அவர்கள் கூறும் கருத்துகளை விளக்கமாகக் காண்போம்.

3.3.1 வெடிப்பொலிகள் வாய் அறையின் (oral cavity) ஓர் இடத்தில் மூச்சுக்காற்று, குரல்வளை மடலால் முழுவதும் தடை செய்யப்பட்டுத் திடீரென்று வெடிப்போடு வெளியேறினால் அதனை வெடிப்பொலி அல்லது தடையொலி (Plosive or Stop Sound) என்பர் மொழியியலார். க், ச், ட், த், ப் என்பன வெடிப்பொலிகள் ஆகும்.

இவ்வெடிப்பொலிகள் ஒவ்வொன்றும் சொற்களில் வரும் இடம் நோக்கி இருவேறு வகையான ஒலிகளாக ஒலிக்கும். அவை குரல் இலா ஒலி (voiceless sound), குரல் உடை ஒலி (Voiced Sound) என்பன ஆகும். இவ்விரு வகை ஒலிகள் குறித்து மொழியியலார் தரும் விளக்கத்தைக் காண்போம்.

குரல் இலா ஒலி

குரல்வளை மடல் (vocal cords) மூடுவதால் வாயின் அறையில் உள்ள காற்று அங்கிருந்து வெளிப்படுகிறது. இதனையே குரல் இலா ஒலி என்பர்.

குரல் உடை ஒலி

குரல்வளை மடல் இறுக மூடும்போது அதன் ஒரு பகுதி சற்றுத் திறந்ததும் அதன் வழியாக மூச்சுக்காற்றானாது வேகமாக வெளிவரும்போது அந்தக் குரல்வளை மடல் சற்று அதிர்கிறது (vibration). இவ்வாறு ஏற்படும் அதிர்வு ஒலியை குரல் உடை ஒலி என்பர்.

வெடிப்பொலிகள் குரல் இலா ஒலிகளாக வருதல்

வெடிப்பொலிகள் சொல்லில் முதலில் வரும்போதும், இடையில் இரட்டித்து வரும்போதும் பின்வருமாறு வன்மையாக ஒலிக்கும்.

க் – /k/

ச் – /c/

ட்- /t/

த்- /—/

ப்- /p/

சான்று:

‘க்’ – /k/ – கடல் (Kadal). பக்கம் (pakkam)

‘ப்’ – /k/ – பட்டு (pattu), கோப்பு (Koppu)

இவ்வாறு வன்மையாக ஒலிக்கும் இத்தகு வெடிப்பொலிகளை மொழியியலார் குரல் இலா ஒலிகள் (Voiceless Sounds) என்கின்றனர். இவ்வொலிகளை நாம் ஒலிக்கும்போது குரல்வளை மடல் இறுக மூடியிருக்கும்.

வெடிப்பொலிகள் குரல் உடை ஒலிகளாக வருதல்

வெடிப்பொலிகள் சொல்லில் மூக்கொலிகளை (ங், ஞ், ண், ந், ம், ன்) அடுத்து வரும்போதும், இரண்டு உயிர்களுக்கு நடுவில் வரும்போதும் வன்மையாக ஒலிக்காமல், சற்று மென்மையாகப் பின்வருமாறு ஒலிக்கும்.

க் – /g/

ச் – /j/

ட்- /d/

த்- //

ப்- /b/

சான்று:

‘க்’ – /g/ – தங்கம் (Tangam). அகம் (Agam)

‘ப்’ – /b/ – இன்பம் (Inbam), உபயம் (Ubayam)

இவ்வாறு சற்று மென்மையாக ஒலிக்கும் இத்தகு வெடிப்பொலிகளை மொழியியலார் குரல் உடை ஒலிகள் (voiced sounds) என்கின்றனர். இவ்வொலிகளை நாம் ஒலிக்கும்போது குரல்வளை இறுக மூடியிருந்தாலும், அதன் ஒரு பகுதி சற்றே திறந்திருக்கும். அதன் வழியாக மூச்சுக் காற்று வெளிப்பட்டுக் குரல்வளை மடலை அதிரச் செய்வதால், அப்போது எழும்பும் வெடிப்பொலிகள் வன்மைத் தன்மை குறைந்து மென்மைத் தன்மை அல்லது இசைமைத் தன்மை பெற்றுத் திகழக் காணலாம்.

3.3.2 மூக்கொலிகள் வெடிப்பொலிகள் போலவே அமைந்து அண்ணக்கடை திறந்து மூக்கறை (nasal cavity) வழியே மூச்சுக்காற்று சென்று ஒலியை எழுப்பிய பின் வாயின் வழியே வெளிவருகிறது. இவ்வகையான ஒலிகளை மூக்கொலிகள் (Nasal Sounds) என்பர். மூக்கொலிகள் தோன்றும்போது குரல்வளை மடல்கள் சற்று அதிர்கின்றன. மூக்கொலிகள் வருமாறு:

சான்று:

‘ங்’ /Œ/

‘ஞ்’ //

‘ண்’ /–/

‘ந்’ /n/

‘ம்’ /m/

‘ன்’ /‹/

3.3.3 மருங்கொலிகள் வாய் அறையின் உள்ளே மூச்சுக்காற்று வரும்போது குரல் வளை மடல் அதிர்ந்தும், அதிராமலும் இருக்கும். அப்போது அண்ணக்கடை அடைப்புகளும் உண்டு. வாய் அறையினுள் அக்காற்று ஓர் இடத்தை அடைந்து நாக்கின் இரண்டு பக்கத்திலும் (இரு மருங்கிலும்) வெளிவருகின்றது. இவ்வாறு வெளிவருவதால் ஏற்படும் ஒலிகள் மருங்கொலிகள் எனப்படும். தமிழில் இரு மருங்கொலிகள் உள்ளன. அவை வருமாறு:

‘ல்’ /l/

‘ள்’ /˜/

3.3.4 வருடொலிகள்

நாக்கின் நுனி (Apex) மேலே எழுந்து உள்நோக்கி வளைந்து பின் வேகமாகக் கீழே வரும்போது அண்ணத்தில் மோதுவதால் எழுகின்ற ஒலிகளே வருடொலிகள் (Flap Sounds) ஆகும். தமிழ் மொழியில் மூன்று வருடொலிகள் உள்ளன. அவையாவன:

‘ர்’ /r/

‘ற்’ /r/

‘ழ்’ /l/

3.3.5 உரசொலிகள்

மூச்சுக்காற்றானது வாய் அறையின் உள் புகுந்து வரும்போது அதனை முழுவதும் தடுக்காமல் அது வெளியேறும் பாதையைக் குரல் ஒலிப்பினால் குறுக்கி அந்த இடுக்கின் வழியே அதனைச் செலுத்தினால் உராய்வுத்தன்மை (friction) ஏற்படுகிறது. இந்த உராய்வுத் தன்மையோடு கூடிப் பிறக்கும் ஒலிகளே உரசொலிகள் (Fricative Sounds) ஆகும். தற்காலத் தமிழில் பின்வரும் இரண்டு உரசொலிகள் உள்ளன.

‘ஸ்’ /s/

‘ஷ்’ /™/

3.3.6 அரை உயிர்கள்

‘ய்’ (y), ‘வ்’ (v) என்னும் இரண்டையும் மொழியியலார் அரை உயிர்கள் (semi-vowels) என்று குறிப்பிடுகின்றனர். தமிழ் இலக்கண நூலார் இவற்றை இடையின மெய்கள் வரிசையில் வைத்துக் கூறினாலும், உடம்படு மெய்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். உடம்படு மெய்கள் பற்றி அடுத்த பாடத்தில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

நாவின் அடிப்பகுதியானது முன் அண்ணத்தைப் பொருந்திய நிலையில், உள்ளிருந்து வரும் காற்று வாயில் சிறிது தடைப்படுத்தப்பட்டு வெளியே வருவதால் ‘ய்’ என்னும் அரை உயிர் பிறக்கிறது.

உள்ளிருந்து வரும் காற்று, மேற்பல்லும் கீழ் இதழும் இயைந்து தடை ஏற்படுத்தும் நிலையில் வெளிவருவதால் ‘வ்’ என்னும் அரை உயிர் பிறக்கிறது.

இதுகாறும் ஒலிப்புமுறை அடிப்படையில், தமிழில் உள்ள மெய் ஒலிகளை மொழியியலார் பாகுபாடு செய்து, அவற்றின் ஒலிப்புமுறை பற்றிக் கூறிய கருத்துகளை விரிவாகக் கண்டோம். இனி ஒலிக்கருவிப் பாகுபாடு பற்றி அவர்கள் கூறுவனவற்றைக் காண்போம்.

3.4 ஒலிக்கருவிப் பாகுபாடு

மொழியியலார் மெய் ஒலிகளைப் பாகுபாடு செய்யும்போது, ஒலிக்கும் கருவிகளாகிய (உறுப்புகளாகிய) நா, இதழ், பல், அண்ணம் என்பனவற்றால் பிறத்தலை ஒட்டி, ‘ஈரிதழ், பல் இதழ், பல், அண்பல், வளைநா, முன் அண்ணம், பின் அண்ணம்’ என்னும் ஏழாகப் பகுத்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இவை ஏழும் வாயின்கண் மெய் ஒலிகள் பிறத்தற்கு உரிய இடங்கள் (places of articulation) என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர். இவ்வெழு வகையான இடங்களில் ‘வெடிப்பொலிகள், மூக்கொலிகள், மருங்கொலிகள், வருடொலிகள், உரசொலிகள், அரைஉயிர்கள்’ என்னும் ஆறு வகைப்பட்ட மெய் ஒலிகளும் பிறத்தலைப் பின்வரும் அட்டவணையில் காணலாம். (அட்டவணையில் மெய்ஒலிகளுக்குத் தமிழில் உள்ள வரிவடிவங்களும், மொழியியலார் தரும் ரோமன் வடிவங்களும் (Roman Script) கொடுக்கப்பட்டுள்ளன.

இனி வெடிப்பொலிகள் முதலான ஆறுவகையான மெய்ஒலிகள் ஒவ்வொன்றும், ஏழு வகை இடங்களை ஒட்டி எவ்வாறு பிறக்கின்றன என்பது பற்றி மொழியியலார் கூறும் கருத்துகளைக் காண்போம்.

‘க்’ /k,g/

தொல்காப்யிர் கூற்றின்படி அடி நாக்கு, (back of a tangue) பின்அண்ணத்தைத் (palatal) தொடுதலால் இவ்வல்லின ஒலிகள் பிறக்கின்றன.

ககார ஙகாரம் முதல் நா அண்ணம்

(தொல்.எழுத்து.89)

(முதல் நா – அடிநாக்கு அதாவது நாவின் பின் பகுதி; அண்ணம் – மேல்வாய்)

இன்றைய மொழியியலார் இவ்வொலிகளை வெடிப்பொலிகள் என்றும் அவை நாக்கின் அடியும், பின் அண்ணமும் தொடும்போது பிறக்கின்றன என்றும் கூறுகின்றனர். இவற்றில் ‘க்’ /k/ என்பது குரல் இலா ஒலி (Voiceless Sound) ஆகும். அதே இடத்தில் சற்றுக் குரல்வளை மடல் அதிர்ந்து ஏற்படும் ஒலியாகிய ‘க்’ /g/ என்பது குரல் உடை ஒலியாகப் (Voiced Sound) பிறக்கின்றது.

‘ப்’ /p, b/

‘ப்’ எனும் வெடிப்பொலியைப் பற்றிக் கூறவந்த தொல்காப்பியர் இது இதழ் இயைந்து பிறக்கும் என்கின்றார்.

இதழ் இயைந்து பிறக்கும் பகாரம்…..

(தொல். எழுத்து.97)

இன்றைய மொழியியலார் இவ்வொலி ஈரிதழ் (bilabial) உதவியுடன் பிறக்கிறது என்பர். இதே இடத்தில் இரு வேறு வெடிப்பொலிகள் தோன்றுகின்றன. ஒன்று குரல் இலா ஒலி ‘ப்’ /p/; மற்றொன்று குரல் உடை ஒலி ‘ப்’ /b/. இந்தக் குரல் உடை ஒலி பெரும்பாலும் சொல்லில் மூக்கொலிகளுக்கு அடுத்தாற்போல் வந்து அமையும்.

‘த்’ /t,d/

இங்கும் குரல் இலா ஒலி, குரல் உடை ஒலி என இரு ஒலிகள் உள்ளன. வழக்கம் போல் சொல்லின் முதலில் வரும் போது குரல் இலா ஒலியாகவும் ‘த்’ /t/, மூக்கொலிக்கு அடுத்தாற்போல், வரும்போது குரல் உடை ஒலியாகவும் ‘த்’ /d/, வருகின்றது. இவ்வொலிகள் பல்லில் பிறக்கின்றன.

‘ட்’ /—, /

டகர ஒலியும் மற்ற வெடிப்பொலிகளைப் போல இரண்டாகப் பிறக்கின்றது. இவ்வொலிகள் வளைநா இடத்தில் பிறக்கின்றன. ஒன்று குரல் உடை ஒலி ‘ட்’ /d/; மற்றொன்று குரல் இலா ஒலி ‘ட்’ /—/.

ச், ஜ் /c,j/

சகரம், ஜகரம் என்னும் இரு ஒலிகளும் முறையே குரல் இலா ஒலியாகவும், குரல் உடை ஒலியாகவும் பிறக்கின்றன. இவ்வொலிகள் முன் அண்ணத்தின் உதவியுடன் பிறக்கின்றன.

ங், ஞ், ண், ந், ம், ன் / Œ, , –, n, m, ‹ /

இம் மூக்கொலிகள் தற்காலத் தமிழ் மொழியில் உள்ள ஒலிகள் ஆகும். இவற்றுள் ‘ந், ன்’ என்ற மூக்கொலிகள் இரண்டும் தற்காலத் தமிழில் ஒன்று சேர்ந்துவிட்டன என்பதைச் சொல்லெழுத்து மாற்ற வரலாறு என்ற பாடத்தின் கீழ் பார்த்தோம்.

‘ங்’ /Œ/ – அடிநாக்கு, பின் அண்ணத்தைத் தொடுதலால் பிறக்கிறது.

‘ஞ்’ // – முன் அண்ணத்தின் உதவியுடன் பிறக்கிறது.

‘ண்’ /–/ – வளைநா இடத்தில் பிறக்கிறது.

‘ந்’ /n/ – மேல்வாய்ப் பல்லில் பிறக்கிறது.

‘ம்’ /m/ – ஈரிதழ் உதவியுடன் பிறக்கிறது.

‘ன்’ /n/ – அண்பல்லில் பிறக்கிறது.

ல், ள், /l, ˜/

இவ்விரண்டு மருங்கொலிகளுள் ‘ல்’ , /l/ அண்பல் இடத்திலும், ‘ள்’ /˜/ வளை நாவிலும் பிறக்கின்றன.

ர், ழ், ற் /r. l. r/

இம்மூன்று வருடொலிகளுள் ‘ர்’ /r/ அண்பல் இடத்திலும், ‘ழ்’ /l/, ‘ற்’ /r/ என்ற ஒலிகள் அண்ணத்தின் உதவியுடனும் பிறக்கின்றன.

ஸ், ஷ் /s, s/

இவ்விரண்டு உரசொலிகளுடன் ‘ஸ்’ /s/ என்பது அண்பல்லிலும், ‘ஷ்’ /™/ என்பது வளைநாவிலும் பிறக்கின்றன.

ய், வ் /y, v/

‘ய்’ /y/ என்பது முன் அண்ணத்தின் உதவியுடன் பிறக்கின்றது. ‘வ்’ /v/ என்பது மேற்பல்லும் கீழ் இதழும் இயையப் பிறக்கின்றது.

3.5 தொகுப்புரை

இப்பாடத்தின்கீழ் மெய் ஒலிகள் என்றால் என்ன? அவை எங்கு, எவ்வாறு பிறக்கின்றன என்பது பற்றித் தொல்காப்பியர் முதல் இன்றைய மொழியியலார் வரை என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிப் படித்தீர்கள். குரல் இலா ஒலி, குரல் உடை ஒலிகளுக்கான வேறுபாட்டினை அறிந்தீர்கள். தமிழ் இலக்கண நூலார் மெய் ஒலிகளை எவ்வாறு பாகுபடுத்துகின்றனர் என்பதையும், மொழியியலார் எவ்வாறு பாகுபடுத்துகின்றனர் என்பதையும் அறிந்தீர்கள். வெடிப்பொலிகள், மூக்கொலிகள், மருங்கொலிகள், வருடொலிகள், உரசொலிகள், அரை உயிர்கள் என ஆறாக மெய் ஒலிகள் பிரிக்கப்பட்டமை பற்றிப் படித்தீர்கள். சொல்லில் எம்மாதிரியான இடங்களில் குரல் இலா ஒலி வருகிறது என்றும், எம்மாதிரியான இடங்களில் குரல் உடை ஒலி வருகிறது என்றும் படித்து உணர்ந்தீர்கள்.

பாடம் - 4

உடம்படுமெய் ஒலிகள்

4.0 பாட முன்னுரை

இப்பாடம் உடம்படுமெய் ஒலிகள் என்றால் என்ன என்பது பற்றியும், தமிழில் உள்ள உடம்படுமெய் ஒலிகள் யாவை என்பது பற்றியும், இருசொற்கள் சேர்ந்து வரும் புணர்ச்சியில் அவற்றின் பங்கு எத்தகையது என்பது பற்றியும் விளக்குகிறது. உடம்படுமெய் ஒலிகள் புணர்ச்சியில் எந்தெந்தச் சூழலில் வரும் என்பதைச் சான்றுகளுடன் விளக்குகிறது. உடம்படுமெய் ஒலிகள் பற்றித் தொல்காப்பியம்     குறிப்பிடும்     கருத்தை     விளக்குகிறது. தொல்காப்பியத்திலும், அதனை அடுத்துத் தோன்றிய சங்க இலக்கியங்களிலும் உடம்படுமெய் ஒலிகளின் வருகை எவ்வாறு இருந்தது என்பதை விளக்குகிறது. உடம்படுமெய் ஒலிகள் பற்றி நன்னூல் கூறும் கருத்துகளை விளக்குகிறது. தற்காலத் தமிழில் இருசொற்கள் சேர்ந்து வரும் புணர்ச்சியை மொழியியலார் அகச்சந்தி, புறச்சந்தி என இரு வகையாகப் பிரித்துக் காட்டி விளக்குவதைக்     கூறுகிறது. இவ்விருவகைப் புணர்ச்சியில் உடம்படுமெய் ஒலிகளின் வருகை எவ்வாறு அமைந்துள்ளது என்பதை விளக்கிக் காட்டுகிறது.

4.1 உடம்படுமெய் ஒலிகள் - ஒரு விளக்கம்

தமிழில் நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் ஒலிகள் வருமானால், அவ்விரண்டு உயிர் ஒலிகளையும் அடுத்தடுத்து ஒலிக்கும்போது, அவ்விரண்டுக்கும் இடையே விட்டிசை (hiatus) தோன்றுகிறது. இதனால் ஒலிக்கும் முயற்சி அருமை உடையதாகிறது. எனவே இரண்டு உயிர் ஒலிகளுக்கு இடையே தோன்றும் விட்டிசையைத் தடுக்கவும் (prevention of hiatus), ஒலிக்கும் முயற்சியை எளிமையாக்கவும் அவ்விரண்டு உயிர் ஒலிகளுக்கு இடையே ஒரு மெய் ஒலி சேர்க்கப்படும். அந்த மெய் ஒலியானது, விட்டிசைத்து நிற்கும் இரண்டு உயிர் ஒலிகளையும், விட்டிசைக்காமல் உடம்படுத்தும் காரணத்தால், உடம்படுமெய் ஒலி எனப்படுகிறது. (உடம்படுத்தல்- ஒன்றுபடுத்தல்)

சான்று:

1. எது + ஆயினும் = எதுவாயினும் (எது + வ் + ஆயினும்)

etu + āyinum = ‘etuvāyinum (etu + v + āyinum)

2. ஆ + இடை = ஆயிடை (ஆ + ய் + இடை)

ā + itai = āyitai (ā + y + i-ai)

இங்கே காட்டிய சான்றுகளில் முதல் சான்றை நோக்குவோம். அதில் எது என்பது நிலைமொழி. அதன் இறுதியில் உ என்னும் உயிர் ஒலி உள்ளது. ஆயினும் என்பது வருமொழி. அதன் முதலில் ஆ என்னும் உயிர் ஒலி உள்ளது. எது ஆயினும் என ஒலிக்கும்போது, எது என்பதை ஒலித்து, சிறிது இடைவெளி விட்டு, பின்பே ஆயினும் என்பதை ஒலிக்கிறோம். இவ்வாறு இடைவெளி விட்டு ஒலிப்பதில் அருமை (கடினம்) காணப்படுகிறது. ஆனால் எதுவாயினும் என ஒலிக்கும்போது, இடைவெளி விட்டு ஒலிப்பதில்லை. இவ்வாறு இடைவெளி இல்லாமல் ஒலிப்பதில் எளிமை காணப்படுகிறது. இதற்குக் காரணம் நிலைமொழி இறுதி உயிர் ஒலிக்கும் (உ), வருமொழி முதல் உயிர் ஒலிக்கும் (ஆ) இடையே வ் என்னும் மெய் ஒலி சேர்க்கப்படுவதே ஆகும். விட்டிசைத்து நிற்கும் இரண்டு உயிர் ஒலிகளை விட்டிசைக்காமல் உடம்படுத்தும் மெய் ஒலியாக ‘வ்’ வருவதால் அதனை உடம்படுமெய் ஒலி என்று தமிழில் கூறினர்.

அதேபோல இரண்டாவது சான்றாகிய ஆயிடை என்பதில் ய் என்னும் மெய் ஒலி, உடம்படுமெய் ஒலியாக வருவதைக் காணலாம்.

4.1.1 தமிழில் உடம்படுமெய் ஒலிகள் மேலே காட்டிய சான்றுகளை நோக்கும்போது, தமிழில் ய், வ் என்னும் இரண்டு மெய் ஒலிகள், உடம்படுமெய் ஒலிகளாக வழங்குவது புலனாகும். இவற்றுள் ய் என்பது முன் அண்ண ஒலி (palatal) ஆகும்; வ் என்பது பல் இதழ் ஒலி (Labio dental) ஆகும். இவ்விரு மெய்ஒலிகளை மொழியியலார் அரை உயிர்கள் (semi-vowels) என்று குறிப்பிடுவர். இதனை முன்னைய பாடத்தில் பார்த்தோம். இவற்றை மொழியியலார் அரை உயிர்கள் என்று கூறியது பொருத்தமே எனலாம். ஏனெனில் இவற்றின் குணத்தில் பாதி உயிர் ஒலியும், பாதி மெய் ஒலியும் கலந்திருக்கின்றன. இவை மெய் ஒலிகளாயினும், அரை உயிர்களாக இருப்பதால், விட்டிசைத்து நிற்கும் இரண்டு உயிர் ஒலிகளுக்கு இடையில் சேர்ந்து, அவை இரண்டையும் விட்டிசைக்காமல் உடம்படுத்தும் பணியைச் செவ்வனே செய்கின்றன.

4.1.2 உடம்படுமெய் ஒலிகள் வரும் சூழல் ய், வ் என்னும் உடம்படுமெய் ஒலிகள் ஒவ்வொன்றும் எந்தெந்தச் சூழலில் வரும் என்பதற்கான வரையறுத்த விதி கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலில் கூறப்பட்டுள்ளது. இவ்விதி நிலைமொழியின் இறுதியில் இருக்கும் உயிர் ஒலிகளைக் கொண்டு மூவேறு வகையாக அந்நூலில் கூறப்பட்டுள்ளது. அவை வருமாறு:

1. நிலைமொழியின் இறுதியில் இ, ஈ, ஐ என்னும் உயிர் ஒலிகள் இருக்குமானால் அந்தச் சூழலில் யகரம் உடம்படுமெய் ஒலியாக வரும்.

சான்று:

மணி + அரசன் = மணியரசன் (மணி+ய்+அரசன்)

தீ + எரிந்தது = தீயெரிந்தது (தீ+ய்+எரிந்தது)

மனை + அறம் = மனையறம் (மனை+ய்+அறம்)

2. நிலைமொழியின் இறுதியில் ஏ என்னும் உயிர் ஒலி இருக்குமானால் அந்தச் சூழலில் ய், வ் என்னும் இரண்டும் உடம்படுமெய் ஒலிகளாக வரும்.

சான்று:

தாயே + ஆனாலும் = தாயேயானாலும் (தாயே+ய்+ ஆனாலும்)

சே + அடி = சேவடி (சே+வ்+வடி)

(சேவடி – செம்மையான அடி)

3. நிலைமொழியின் இறுதியில் மேலே கூறிய உயிர் ஒலிகளைத் தவிர, ஏனைய உயிர் ஒலிகள் இருக்குமானால், அந்தச் சூழலில் வகரம் உடம்படுமெய் ஒலியாக வரும்.

சான்று:

வர + இல்லை = வரவில்லை (வர+வ்+இல்லை)

திரு + அருள் = திருவருள் (திரு+வ்+அருள்)

பூ + அழகி = பூவழகி (பூ+வ்+அழகி)

இதுகாறும் தமிழில் உள்ள உடம்படுமெய் ஒலிகள் பற்றியும், சொற்களின் புணர்ச்சியில் அவை இடம் பெறும் சூழல் பற்றியும் விரிவாகப் பார்த்தோம். மேலே சொன்ன கருத்துகளின் வழி நின்று, உடம்படுமெய் ஒலிகளின் வருகை சங்க காலத்தில் எவ்வாறு இருந்தது, இடைக்காலத்தில் எவ்வாறு மாறி வந்தது, தற்காலத்தில் எவ்வாறு இருக்கிறது என்பன பற்றி விரிவாகக் காண்போம்.

4.2 சங்க காலத்தில் உடம்படுமெய் ஒலிகள்

சங்க காலத்தில் உடம்படுமெய் ஒலிகள் வழங்கிய நிலையை, அக்காலத்தில் தோன்றிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலும், சங்க இலக்கியங்களும் தெளிவாக அறிவிக்கின்றன.

தொல்காப்பியத்தில் உடம்படுமெய் ஒலிகள்

தொல்காப்பியர் உடம்படுமெய் ஒலிகள் பற்றி, எழுத்ததிகாரத்தில் உள்ள புணரியலில் ஒரு நூற்பாவில் கூறுகிறார். அந்நூற்பா வருமாறு:

எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே

உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்

(தொல். எழுத்து, 140)

(மொழி – சொல்; உருவு – வடிவு; கொளல் – சேர்த்துக் கொள்ளுதல்; வரையார் – நீக்கார்.)

“எல்லா உயிர் ஈற்றுச் சொற்களுக்கும் முன்னர், உயிரை முதலாகக் கொண்ட சொற்கள் வரும்பொழுது, அவ்விரு சொற்களுக்கும் இடையே உடம்படுமெய்யினது வடிவைச் சேர்த்துக் கொள்ளுதலை நீக்கார்” என்பது இந்நூற்பாவின் பொருள்.

இந்நூற்பாவில் தொல்காப்பியர், நிலைமொழியின் இறுதி உயிர்க்கும் வருமொழியின் முதல் உயிர்க்கும் இடையே உடம்படுமெய் வரும் என்று பொதுப்படக் கூறியுள்ளாரே தவிர, எந்தெந்த மெய்கள் உடம்படுமெய்யாக வரும் என்று கூறவில்லை. இருப்பினும் இந்நூற்பாவிற்கு உரை வரைந்த இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தொல்காப்பியர் உடம்படுமெய் என்று குறிப்பிடுவது யகரமும், வகரமும் ஆகும் எனக் கொள்கின்றனர்.

மேலும் அவ்வுரையாசிரியர்கள் இருவரும், இந்நூற்பாவில் தொல்காப்பியர் வரையார் (நீக்கார்) என்று கூறியிருப்பது கொண்டு, உடம்படுமெய் இரண்டு உயிர்களுக்கு இடையே கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்பதில்லை எனவும், கிளி அரிது, மூங்கா இல்லை (மூங்கா- கீரி) என்றாற் போல அமைந்து வரும் சொற்றொடர்களில் இரண்டு உயிர்களுக்கு இடையில் உடம்படுமெய் இல்லாமலும் வரலாம் எனவும் கருத்துத் தெரிவிக்கின்றனர். உரையாசிரியர்களின் இக்கருத்தை இக்கால மொழியியலாரும் உடன்படுகின்றனர்.

இவ்வாறு தொல்காப்பியரது நூற்பாவிற்கு விளக்கம் காண வாய்ப்பிருந்தாலும் கூட, ஒருமொழிச் சந்தியில் உடம்படுமெய் இல்லாமல் சொற்கள் வருவது தமிழ்மொழியில் இல்லை.

சான்று:

கிளி + ஆ = கிளியா

கிளி, ஆ என்னும் இருசொற்கள் கிளியா என ஒரு சொல்லாகப் புணர்ச்சியில் இணைந்துவிடுவதால் இதனை ஒருமொழிச் சந்தி என்பர் (மொழி – சொல்; சந்தி – புணர்ச்சி). ஒருமொழிச் சந்தியில் இவ்வாறு உடம்படுமெய்யுடன் வருவதே நல்ல மொழிநடையாகக் கருதப்படுகிறது. இதை விடுத்து,

கிளி + ஆ = கிளிஆ

என்று உடம்படுமெய் இல்லாமல் சொல் அமைவது வழக்கல்ல.

அதே நேரத்தில் கிளி + அன்று என்பது, கிளியன்று என உடம்படுமெய் பெற்றோ, கிளிஅன்று என உடம்படுமெய் பெறாமலோ அமையலாம். கிளி + அன்று = கிளியன்று எனவும், கிளி அன்று எனவும் இருசொல்லாகவே இணைந்து வருவதால் இவை இரண்டும் இருமொழிச் சந்தி எனப்படும். இவ்வாறு கட்டாயம் வரவேண்டிய இடத்தில் உடம்படுமெய் பெற்றும், கட்டாயம் இல்லாத இடத்தில் உடம்படுமெய் பெற்றும் பெறாமலும் வரலாம் என்ற விளக்கத்தைக் கூறுவதற்கு ஏற்ற வகையில் தொல்காப்பியரின் இந்நூற்பா இடம் தருகிறது.

தொல்காப்பியர் காலத்தில் இரண்டு உயிர்கள் ஒன்று சேர்ந்து, உடம்படுமெய் எதுவும் பெறாமல் வழங்கியதற்கு அவரது நூலிலேயே சில சான்றுகள் காணப்படுகின்றன.

தற்காலத்தில் நாய் என்று நாம் குறிப்பிடும் சொல், தொல்காப்பியர் காலத்தில் நாய் எனவும், நாஇ எனவும் இருவேறு வடிவில் வழங்கியது. இதனை,

இகர யகரம் இறுதி விரவும்

(தொல்.எழுத்து, 58)

என்ற தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பாவால் அறியலாம். நாஇ என்ற சொல் உடம்படுமெய் பெற்ற வருவதாக இருந்தால், நாயி (நா+ய்+இ) என யகர உடம்படுமெய் பெற்றே வரவேண்டும். ஆனால் உடம்படுமெய் பெறாமல் ‘நாஇ’ என்று வழங்கியுள்ளது. ‘நாஇ’ என்ற சொல்லில் உடம்படுமெய் இல்லாமலேயே ஆ, இ என்னும் இரண்டு உயிர்கள் இணைந்து நிற்பதைக் காணலாம்.

அதேபோலத் தொல்காப்பியர் காலத்தில் தேஎம் என்ற சொல்லிலும், கோஒன் என்ற சொல்லிலும் உடம்படுமெய் இல்லாமலேயே இரண்டு உயிர்கள் சேர்ந்து வருவதைக் காண்கிறோம். (தேஎம்- தேயம், நாடு, இடம்; கோஒன் – அரசன் அல்லது தலைவன்). இவ்விரு சொற்களையும் சிலர் அளபெடைச் சொற்கள் என்று கூறுவர். அது பொருந்தாது. ஏனெனில் இவ்விரு சொற்களில், ‘கோஒன்’ என்ற சொல்லில் உள்ள ‘ஒன்’ என்பதைச் சாரியை என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் (தொல்.எழுத்து,294).

சான்று:

கோ + கை = கோஒன்கை (அரசனது கை)

மேலே கூறியவற்றால் தொல்காப்பியம் தோன்றிய காலத்தில் உடம்படுமெய் ஒலிகளின் வருகை என்பது விருப்பநிலையிலே இருந்தது எனலாம்.

சங்க இலக்கியங்களில் உடம்படுமெய் ஒலிகள்

சங்க இலக்கியங்களில் யகரமும், வகரமும் உடம்படுமெய் ஒலிகளாக வழங்குகின்றன. உடம்படுமெய் ஒலிகள் இல்லாமல் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியனவாக மேலே குறிப்பிட்ட இரு சொற்களில் தேஎம் என்பது மட்டும் அதே வடிவில் அல்லது ஒலியமைப்பில் வழங்குகிறது.

சான்று:

மாயோள் இருந்த தேஎம் நோக்கி

(நற்றிணை, 371:3)

(தலைவி இருந்த இடத்தை நோக்கி. மாயோள் – கரிய நிறத்தை உடையவள்; தலைவி.)

மற்றொரு சொல்லாகிய கோஒன் என்பது சங்க இலக்கியத்தில் கோன் என வழங்குகிறது.

கொற்றவர்தம் கோன் ஆகுவை

(மதுரைக்காஞ்சி:74)

(வெற்றி உடையவர் தம்முடைய தலைவன் ஆகுவாய்)

இங்குத் தொல்காப்பியர் காலத்தில் கோ என்பதோடு சேர்ந்து வந்த ஒன் சாரியையில்னகரம் மட்டும் வழங்குகிறது. ஒகரம் நிலைபெறாமல் நீங்குகிறது. இதற்குக் காரணம் யாது? ‘கோஒன்’ என்ற சொல்லில் உள்ள இரண்டு உயிர்களை (ஓஒ) அடுத்தடுத்து ஒலிப்பதில் விட்டிசைக்கும் அருமை உணரப்பட்டு, எளிமையாக ஒலித்தற் பொருட்டு ‘ஒ’ என்னும் உயிர் ஒலிக்காமல் விடப்பட்டது எனலாம்.

சங்க இலக்கியங்களில் யகரமும் வகரமும் உடம்படுமெய் ஒலிகளாக வழங்கினாலும், அவை இரண்டும் இன்னின்ன சூழலில்தான் வரும் என்று இடைக்காலத்தில் தோன்றிய நன்னூலில் கூறப்பட்ட விதிக்கு மாறுபட்டும் வந்துள்ளன. இதனைச் சில சான்றுகள் கொண்டு காண்போம்.

1. நிலைமொழியின் இறுதியில் ஆகாரம் வரும்போது, வகரம் மட்டுமே உடம்படுமெய் ஒலியாக வரவேண்டும். ஆனால் சங்க இலக்கியங்களில் வகரத்தோடு யகரமும் உடம்படுமெய் ஒலியாக வருகிறது.

மாயோள், மாயோன் ஆகிய சொற்களில் மா என்னும் நிலைமொழியின் இறுதியில் உள்ள ஆகார ஒலியை அடுத்து யகரம் உடம்படுமெய் ஒலியாக வரக் காணலாம்.

சான்று:

மாயோள் இருந்த தேஎம் நோக்கி

(நற்றிணை, 371:3)

மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்

(நற்றிணை, 32:1)

(திருமாலைப் போன்ற கரிய மலைப்பக்கத்தே. மாயோன்- கரிய நிறத்தை உடைய திருமால்.)

மா + ஓள் = மாயோள் ( மா+ய்+ஓள்)

மா + ஓன் = மாயோன் (மா+ய்+ஓன்)

‘ஓள்’, ‘ஓன்’ என்பன முறையே சங்க காலத்தில் வழங்கிய பெண்பால், ஆண்பால் விகுதிகள் ஆகும்.

மேலும் ஆயிடை, மாயிரு போன்ற சொற்களிலும் ஆகார உயிர் முன் யகரமே உடம்படுமெய் ஒலியாக வருகிறது.

சான்று:

ஆயிடைக் கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி

(அகநானூறு, 69:16-17)

(அவ்விடத்தே அணைத்தலை விடாத தலைவன் கைகள் நெகிழ்ந்தமை கண்டு. ஆயிடை – அவ்விடத்தே)

மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்து

(நற்றிணை 291:7)

(மிகப்பெரிய முள்ளூர்க்கு மன்னவனாகிய மலையமான் திருமுடிக்காரி என்பவன் குதிரை ஏறிச் சென்று. மாயிரு- மிகப்பெரிய)

ஆகார உயிர் ஒலி முன்னர் விதிப்படி வகர உடம்படுமெய் ஒலியும் வருவது காணப்படுகிறது.

சான்று:

மாவென மதித்து மடல் ஊர்ந்து

(நற்றிணை, 342:1)

(குதிரை எனக் கருதிப் பனைமடல் ஏறி வந்ததும். மா- குதிரை.)

மாயிரு முள்ளூர் மன்னன் மாவூர்ந்து

(நற்றிணை 291:7)

மா + என = மாவென (மா+வ்+என)

மா + ஊர்ந்து = மாவூர்ந்து (மா+வ்+ஊர்ந்து)

2. ஐகாரத்தை அடுத்து யகரமே உடம்படுமெய் ஒலியாக வரவேண்டும் எனப்படுகிறது. ஆனால் சங்க இலக்கியங்களில் யகரத்தோடு வகரமும் வருகிறது. ஐயள் என்ற சொல்லில் யகரமும், ஐவர் என்ற சொல்லில் வகரமும் வருகின்றன.

சான்று:

வைஎயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று

(நற்றிணை, 2:7)

(கூரிய பற்களை உடைய மெல்லியளாகிய மடந்தையை முன்னே செல்லவிட்டு. வை – கூர்மை; எயிறு – பல்; ஐயள்- மெல்லியள்; ஐ- மென்மை.)

ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள்

(கலித்தொகை, 25:3)

(பாண்டவர் ஐவர் இவர்கள்தாம் என்று உலகம் புகழும் தருமர் முதலியோர்.)

இச்சான்றுகளில், ஐ + அள் = ஐயள் (ஐ+ய்+அள்) என்பது யகர உடம்படுமெய் பெற்றும்,

ஐ + அர் = ஐவர் (ஐ+வ்+அர்) என்பது வகர உடம்படுமெய் பெற்றும் வருகின்றன.

3. ஓகாரத்தை அடுத்து வகரமே வரவேண்டும் எனக் கூறப்படுகிறது. ஆனால் கோ+இல் என்பது கோவில் என்று வகர உடம்படுமெய் பெறாமல், யகர உடம்படுமெய் பெற்றுக் கோயில் என வழங்குகிறது.

சான்று:

நளிமலைச் சிலம்பின் சிலம்பும் கோயில்

(நெடுநல்வாடை:100)

(மலையின் ஆரவாரம் போல ஆரவாரிக்கும் கோயில். கோயில்- அரசனது அரண்மனை.)

கோ + இல் = கோயில் (கோ+ய்+இல்)

4. ஏகாரத்தை அடுத்து யகர, வகரங்கள் இரண்டுமே வரலாம் என்பது விதி. சங்க இலக்கியங்களில் ஏகாரத்தை அடுத்து இவ்விரண்டும் வருகின்றன.

சான்று:

பகழி அன்ன சேயரி மழைக்கண்

(நற்றிணை, 13:4)

(இரத்தம் தோய்ந்த அம்பு போன்ற சிவந்த வரி படர்ந்த கண்கள். சேயரி- சிவந்த வரி.)

தாமரை புரையும் காமர் சேவடி

(குறுந்தொகை, கடவுள் வாழ்த்து:1)

(செந்தாமரை மலரைப் போன்ற அழகிய சிவந்த திருவடி. சேவடி- சிவந்த அடி.)

இச்சான்றுகளில் இடம்பெறும் சேயரி என்பது யகர உடம்படுமெய் பெற்றும், சேவடி என்பது வகர உடம்படுமெய் பெற்றும் வந்துள்ளன.

சே + அரி = சேயரி (சே+ய்+அரி)

சே + அடி = சேவடி (சே+வ்+அடி)

மேலே கூறியவற்றை ஒருசேர நோக்கினால், யகரமும் வகரமும் இன்னின்ன சூழலின்தான் வரும் என்று வரையறுத்துக் கூற இயலாத அளவுக்கு, அவற்றின் வருகை சங்க காலத்தில் ஊசலாட்ட நிலையில் அமைந்துள்ளது புலனாகின்றது.

4.3 இடைக்காலத்தில் உடம்படுமெய் ஒலிகள்

இடைக்காலத்தில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலில் உடம்படுமெய் ஒலிகளின் வருகை முறை (Distribution of semi-vowels) திட்ட வட்டமாக முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. வருமொழியின் முதலில் உயிர் ஒலிகள் வரும்போது, நிலைமொழியின் இறுதியில் இ, ஈ, ஐ என்னும் உயிர் ஒலிகள் இருக்குமானால் யகரமும், ஏ என்னும் உயிர் ஒலி இருக்குமானால் யகர வகரங்கள் இரண்டும், ஏனை உயிர் ஒலிகள் இருக்குமானால் வகரமும் உடம்படுமெய் ஒலியாக வரும் என்று நன்னூல் கூறுகிறது.

இஈ ஐவழி யவ்வும்; ஏனை

உயிர்வழி வவ்வும்; ஏமுன் இவ்விருமையும்;

உயிர்வரின் உடம்படு மெய்என்று ஆகும்

(நன்னூல், 162)

இதற்கான சான்றுகளை இப்பாடத்தில் ‘உடம்படுமெய் ஒலிகள் வரும் சூழல்’ என்ற தலைப்பில் ஏற்கனவே பார்த்தோம். அவற்றை ஈண்டு நினைவு கூரவும்.

இடைக்காலத்தில் உடம்படுமெய் ஒலிகளின் வருகையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. சங்க காலத்தில் ஓகார உயிர் ஈற்றுச் சொல்லாகிய ‘கோ’ என்பதன் முன்னர் ‘இல்’ என்ற சொல் புணரும்போது, இடையில் யகர உடம்படுமெய் ஒலி பெற்றுக் ‘கோயில்’ என வழங்கியதை ஏற்கனவே பார்த்தோம். அது நன்னூலார் காலத்தின் விதிப்படி வகர உடம்படுமெய் ஒலி பெற்றுக் ‘கோவில்’ எனவும் வழங்கியது. ‘கோவில்’ என்ற சொல் வழக்கு இடைக்கால இலக்கியங்களிலும் உள்ளது. இவ்வாறு நன்னூலார் வாழ்ந்த இடைக்காலத்தில் கோவில், கோயில் என்னும் இருசொற்கள் வழங்கவே, அவற்றுள் ஒன்றை அறிஞர்கள் போலி என்று கொண்டனர். பொருள் மாற்றம் எதுவும் இல்லாமல், இப்படிப்பட்ட ஒலிமாற்றம் (ய்>வ்) இருந்தால், அப்படி மாற்றம் பெற்று வருகின்ற சொற்களில், ஒன்றை அடிப்படைச் சொல்லாகவும், மற்றொன்றைப் போலியாகவும் கொள்வது மரபு. சான்றாகப் பந்தல், பந்தர் ஆகிய சொற்களில் பந்தல் என்பதை அடிப்படைச் சொல்லாகவும், பந்தர் என்பதைப் போலியாகவும் கொண்டனர். அது போலக் கோவில், கோயில் என்னும் சொற்களில் விதிப்படி அமைந்த ‘கோவில்’ என்பதை அடிப்படைச் சொல்லாகவும், ‘கோயில்’ என்தைப் போலியாகவும் கூறினர். நன்னூல் உரையாசிரியர்கள், கோவில் என்பதைக் கோயில் என்று கூறுவது இலக்கணப்போலி என்கின்றனர் (நன்னூல், 267.உரை).

4.4 தற்காலத்தில் உடம்படுமெய் ஒலிகள்

தற்காலத் தமிழில் யகரமும் வகரமும் உடம்படுமெய் ஒலிகளாகச் சொற்களின் புணர்ச்சியில் வருகின்றன. மொழியியலார், தற்காலத் தமிழில் இரு சொற்கள் புணரும் புணர்ச்சியை அகச்சந்தி (Internal Sandhi) என்றும், புறச்சந்தி (External Sandhi) என்றும் இருவகையாகப் பிரிக்கின்றனர். அகச்சந்தி, புறச்சந்தி என்றால் என்ன என்பதைச் சற்று விளக்கமாகக் காண்போம்.

அகச்சந்தி

ஒரு தனி உருபோடு (Free form) ஒரு கட்டுருபு (Bound form) சேர்ந்து நிற்பது அகச்சந்தி எனப்படும்.

சான்று:

கை + யை = கையை

தனி உருபு என்பது தனிச்சொல் ஆகும். இது தனித்து வழங்கும்போது, எந்தப் பொருளைத் தருகிறதோ, அந்தப் பொருளிலேயே புணர்ச்சியில் சேர்ந்து வரும்போதும் தரும். கட்டுருபு என்பது தனித்து வழங்காது. அதற்குப் பொருள் உண்டு என்றாலும், தனி உருபோடு சேர்ந்து வழங்கும்போதே அப்பொருளைத் தரும். இங்கே காட்டிய சான்றில் ‘கை’ என்பது தனி உருபு ஆகும். இது தனித்து வழங்கும் போது தரும் பொருளையே, ‘ஐ’ என்ற கட்டுருபோடு சேர்ந்து வரும்போதும் தருகிறது. ‘ஐ’ என்பது கட்டுருபு ஆகும். இது இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். இதற்குச் செயப்படுபொருள் என்பது பொருள் ஆகும். ஆனால் ‘கை’ என்ற தனிச்சொல்லோடு சேர்ந்து வரும்போதே அப்பொருளைத் தருகிறது.

புறச்சந்தி

இரண்டு தனி உருபுகள் அல்லது தனிச்சொற்கள் சேர்ந்து வருவது புறச்சந்தி எனப்படும். தனி உருபுகள் இரண்டும் தனித்தனியே வரும்போது என்ன பொருளைத் தருகின்றனவோ, அதே பொருளையே அவை சேர்ந்து வரும்போதும் தரும்.

சான்று:

தமிழ் + சங்கம் = தமிழ்ச் சங்கம் மரம் + கிளை = மரக் கிளை

அகச்சந்தியில் உடம்படுமெய் ஒலிகள்

தற்காலத் தமிழில் அகச்சந்தியில் உயிர் ஒலியை இறுதியாகக் கொண்ட நிலைமொழியும், உயிர் ஒலியை முதலாகக் கொண்ட வருமொழியும் புணரும்போது அவற்றிற்கு இடையில் உடம்படுமெய் ஒலி கட்டாயம் வரவேண்டும்.

சான்று:

யானை + ஆ = யானையா (யானையா வந்தது) யானை + ஐ = யானையை (யானையைப் பார்த்தான்) தெரு + இல் = தெருவில் (தெருவில் வந்தான்) ஆ + இன் = ஆவின் (ஆவின் பால்)

இங்கே காட்டிய சான்றுகளில் யகர, வகர உடம்படுமெய் ஒலிகள் கட்டாய நிலையில் வருகின்றன. இச்சான்றுகளில் அகச்சந்தியை மட்டும் காண்கிறோம். இவற்றை ‘யானைஆ’ யானைஐ, தெருஇல், ஆஇன்’ என உடம்படுமெய் ஒலிகள் இல்லாமல் எவரும் எழுதுவது இல்லை.

புறச்சந்தியில் உடம்படுமெய் ஒலிகள்

ஆனால் புறச்சந்தியில் யகர, வகர உடம்படுமெய் ஒலிகள் கட்டாயமாக வரவேண்டும் என்பது இல்லை.

சான்று:

இந்த ஆண்டு வேண்டிய அளவுக்கு மழை இல்லை.

இந்தத் தொடரில் புறச்சந்தியை மட்டும் காண்கிறோம். ஏனெனில் உடம்படுமெய் ஒலிகள் இல்லை. உடம்படுமெய் ஒலிகள் வந்திருந்தால் இதே தொடர்,

இந்தவாண்டு வேண்டியவளவுக்கு மழையில்லை.

என அமையவேண்டும். ஆனால் இவ்வாறு எழுதுவது பெருவழக்கு அன்று. ‘இந்த ஆண்டு வேண்டிய அளவுக்கு மழை இல்லை’ என உடம்படுமெய் ஒலிகள் இல்லாமல் எழுதுவதே ஏற்புடையதாகவும், பெருவழக்காகவும் உள்ளது.

4.5 தொகுப்புரை

உடம்படுமெய் ஒலிகள் என்றால் என்ன என்பதை விளங்கிக்கொண்டீர்கள். தமிழில் உள்ள உடம்படுமெய்கள் யாவை என்பதை அறிந்து கொண்டீர்கள். அவை இரண்டு உயிர் ஒலிகளுக்கு இடையே தோன்றும் விட்டிசையைத் தடுக்கும் இயல்பு உடையனவாய்த் திகழும் சிறப்பை அறிந்து கொண்டீர்கள். உடம்படுமெய் ஒலிகள் சொற்களின் புணர்ச்சியில் வரும் சூழலுக்கான விதிகளைத் தெரிந்து கொண்டீர்கள். தொல்காப்பியர் உடம்படுமெய் ஒலிகள் பற்றிக் கூறிய கருத்தை விளக்கமாக அறிந்துகொண்டீர்கள். அவர் காலத்தில் உடம்படுமெய் ஒலிகள் இல்லாமல் சில சொற்கள் வழங்கியமையை அறிந்துகொண்டீர்கள். சங்க காலத்தில் உடம்படுமெய் ஒலிகள் வரும் சூழலை நன்றாகத் தெரிந்துகொண்டீர்கள். இடைக்காலத்தில் உடம்படுமெய் ஒலிகள் வரும் சூழல் பற்றி நன்னூல் தெரிவிக்கும் விதிகளை அறிந்துகொண்டீர்கள். தற்காலத்தில் அகச்சந்தியிலும், புறச்சந்தியிலும் உடம்படுமெய் ஒலிகள் வருகின்ற முறை பற்றியும் விளக்கமாக அறிந்துகொண்டீர்கள்.

பாடம் - 5

ஒலி மாற்றம்

5.0 பாட முன்னுரை

பல விதமான உள்ளமைப்பினை உடையது மொழியாகும். இம் மொழியில் ஒலி அமைப்பு (phonetic system), ஒலியன் அமைப்பு     (phonemic system), இலக்கண அமைப்பு (grammatical system) போன்ற உள்ளமைப்புகள் பல உள்ளன. இந்நிலையில் பல நூற்றாண்டுக்கும் மலோக மொழியினை மனிதன் பயன்படுத்தி வருவதால் ஒரு மொழியில் மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை. தனி ஒரு மனிதனின் பேச்சிலேயே, ஒரு சமயம் பேசும் பேச்சுக்கும்,இன்னொரு சமயம் பேசும் பேச்சுக்கும் இடையே கூட, பலமாற்றங்கள் காணப்படுகின்றன. இதனால் அவன் பேச்சில் உச்சரிக்கும் ஒலியிலும் மாற்றங்கள் காணப்படுகின்றன. அவ்வாறு ஒலியில் ஏற்படும் மாற்றங்கள் எதனால் எவ்வாறு நிகழ்கின்றன என்பதை விளக்குகிறது இப்பாடம். அதனோடு ஒலி மாற்றத்தில் ஒழுங்குமுறை, ஒலி மாற்றத்திற்கான சுற்றுச் சூழல், இன ஒலி மாற்றம், ஒலி மாற்றம் மற்றும் ஒலியன் மாற்றம் ஆகியவற்றைத் தக்க சான்றுகளுடன் விளக்குகிறது. மேலும் ஓரினமாக்கம், வேற்றினமாக்கம், அண்ணமாக்கம், ஈடுசெய் நீட்டம், இடம்பெயரல் போன்ற குறிப்பிடத்தக்க மொழிமாற்றங்களையும் விளக்குகிறது.

5.1 ஒலி மாற்றம் எதனால் நிகழ்கிறது?

ஒரு மொழியின் வரலாற்றைக் காணும்போது அம்மொழி பேசப்படும் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான மாற்றங்கள் காணப்படுகின்றன என்பது தெரியவரும். ஒரு பகுதியில் காணப்படும் மாற்றமே எல்லாப் பகுதியிலும் காணப்பட வேண்டும் என்ற நியதி இல்லை. இந்நிலையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு விளங்கும் ஒரு மொழி பல்வேறு தனிமொழிகளாகப் பிரிகிற நிலை உருவாகிறது.

மனிதன் பேசும் மொழிகள் அனைத்தின் வாழ்விலும் பல்வேறு ஒலி மாற்றஙகள் நிகழ்வது இயற்கை. இத்தகைய மாற்றங்கள் பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. சில மாற்றங்கள் உடல் கூறின் காரணங்களாலும், இன்னும் சில மாற்றங்கள் சமுதாய அடிப்படையாலும், வேறு சில மாற்றங்கள் மனிதனிடம் காணப்படும் எளிமை, வேட்கை, சோம்பல் ஆகிய காரணங்களாலும் உண்டாகின்றன.

5.2 ஒலி மாற்றத்தில் ஒழுங்குமுறை

மேலே கூறியவாறு ஏற்படும் ஒலி மாற்றங்கள் ஒரு சீராக ஒழுங்காக அமைந்துள்ளன என்கின்றனர் மொழியியலார். இம்மாற்றங்களைச் சில அடிப்படை விதிகளின் கீழ்க் கொண்டு வரமுடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவ்விதிகளுள் சிலவற்றைச் சான்றுகளுடன் விளக்கமாகக் காண்போம்.

1. தமிழ் மொழியில் காணப்படும் ஐகார ஈற்றுச் சொற்களையும் அவற்றுக்கு இணையான மலையாள மொழிச் சொற்களையும் எடுத்து நோக்கினால் இவ்வுண்மை புலப்படும்.

சான்று:

தமிழ்                                         மலையாளம்

மலை                                      - மல

தலை                                       – தல

வரை                                        - வர

சிலை                                       – சில

கரை                                          - கர

இவை போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் இருமொழிகளிலும் காணப்படுகின்றன. தமிழில் ஐகாரத்தைக் கொண்டு முடிகின்ற சொற்கள் மலையாளத்தில் ஒழுங்கான முறையில் அகரத்தைக் கொண்டு முடிகின்றன. இத்தகு ஒலி மாற்றத்தை,

ஐ > அ

ai > a

என்ற விதியில் அடக்கி விடலாம்.

2. இத்தகு ஒழுங்குமுறையைத் தமிழ்மொழிக்கு உள்ளேயும் காணலாம். பழந்தமிழ் இலக்கியங்கள் என்று கருதப்படும் சங்ககால இலக்கியங்களில் யாகாரத்தை முதலாகக் கொண்ட சில சொற்கள் காணப்படுகின்றன. ஆனால் இச்சொற்கள் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் யகர மெய்யை இழந்து ஆகாரத்தை முதலாகக் கொண்ட சொற்களாக மாறி வழங்குவதைக் காணலாம்.

சான்று:

யாறு > ஆறு

யாண்டு > ஆண்டு

யாடு > ஆடு

யாமை > ஆமை

யார் > ஆர்

இத்தகு ஒலி மாற்றத்தை,

யா > ஆ

ya: > a:

என்ற விதியின் கீழ்க் கொண்டு வரலாம்.

3. தற்கால எழுத்துத் தமிழில் உள்ள ழ, ற ஆகிய மெய்கள், தற்காலப் பேச்சுத்தமிழில் முறையே ள, ர என ஒலிக்கப்படுதல் காணலாம்.

சான்று:

பழம் > பளம்

வாழை > வாளை

கறி > கரி

குறித்தான் > குரித்தான்

இந்த ஒலி மாற்றங்களை,

ழ > ள ற > ர

l > ˜ ŗ > r

என்ற அடிப்படை விதியின் கீழ்க் கொண்டு வரலாம்.

மேலே கூறியவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து நோக்கினால், மொழியில் காணப்படும் ஒலி மாற்றங்கள் தாறுமாறாக நிகழ்வன அல்ல என்பதும், அவை ஓர் ஒழுங்கான முறையிலே நிகழ்கின்றன என்பதும் நன்கு விளங்கும்.

5.3 ஒலி மாற்றத்தின் சுற்றுச் சூழ்நிலை

மேலே காட்டிய விதிகளை ஒப்பிட்டு நோக்கின் சில உண்மைகள் தெளிவாகும். சான்றாக, ழகர ளகர மாற்றம் எவ்விதச் சுற்றுச் சூழ் நிலையையும் அடிப்படையாகக் கொண்டது அன்று, பழந்தமிழில் அல்லது தற்கால எழுத்துத்தமிழில் ழகரம் எங்கெல்லாம் வருமோ, அங்கெல்லாம் பேச்சுத் தமிழில் (சில கிளை மொழிகளில்) ளகரமே வரக் காண்கிறோம். ழகரம் ளகரமாக மாறுவதற்கு எவ்வித நிபந்தனையும் இல்லை. அதாவது இன்ன சூழ்நிலையில்தான் மாறும்; வேறு சூழ்நிலையில் மாறாது என்ற நிபந்தனை இல்லை. எல்லா இடங்களிலும், எல்லாச் சூழலிலும் மாறிவரக் காண்கிறோம். இத்தகைய ஒலி மாற்றத்தை நிபந்தனையில்லா மாற்றம் (Unconditional Change) என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர். மேலே சில அடிப்படை விதிகளைக் கொண்டு காட்டப்பட்ட சான்றுகள் யாவும் நிபந்தனையில்லா மாற்றங்களாகும்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட சூழலின் அடிப்படையில் மட்டும் மாறிவரும் ஒலி மாற்றத்தை நிபந்தனை மாற்றம் (Conditional Change) என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர். இத்தகைய ஒலி மாற்றத்தைச் சான்று கொண்டு விளக்கிக் காண்போம்.

தமிழில் யகர ஒற்றுக்குப்(மெய்க்கு) பின்னாலும், இ, ஐ ஆகிய உயிர்களுக்குப் பின்னாலும் வரும் இரட்டைத் தகர ஒற்றுகள், சகர ஒற்றுகளாக மாறுகின்றன.

சான்று:

யகர ஒற்றுக்குப் பின்னால்:

காய்த்தது > காய்ச்சது

வாய்த்தது > வாய்ச்சது

இகர உயிருக்குப் பின்னால்:

சிரித்தான் > சிரிச்சான்

அடித்தான் > அடிச்சான்

ஐகார உயிருக்குப் பின்னால்:

அடைத்தான் > அடைச்சான்

படைத்தான் > படைச்சான்

இவ்வாறு இரட்டைத் தகரம், ‘ய், இ, ஐ’ என்னும் மூன்று எழுத்துகளுக்குப் பின்னால் வரும்போது மட்டுமே, சகரமாக மாறுகிறது. மற்ற எழுத்துகளுக்குப் பின்னால் வரும்போது மாறுவது இல்லை. ‘காத்தான், எடுத்தான், பூத்தது, ஒத்தது’ என்பன போன்ற சொற்களில் ‘அ, உ, ஊ, ஒ’ என்னும் நான்கு உயிர் எழுத்துகளுக்குப் பின்னால் வரும் இரட்டைத் தகரம், ‘காச்சான், எடுச்சான், பூச்சது, ஒச்சது’ எனச் சகரமாக மாறுவது இல்லை. யகரமோ, இகரமோ, ஐகாரமோ இருக்கும்போதுதான் இந்த ஒலிமாற்றம் நடைபெறுகிறது. எனவே இதனை ‘நிபந்தனை மாற்றம்’ என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர். இத்தகைய ஒலிமாற்றத்தை,

என்ற விதியில் அடக்கிக் கூறலாம்.

5.4 இன ஒலி மாற்றம்

மொழியில் காணப்படும் ஒலி மாற்றங்கள் தாறுமாறாக நடப்பவை அல்ல. நடைபெறும் மாற்றங்களுக்கிடையே ஒரு விதமான ஒழுங்கினைக் காணலாம். தமிழில் உள்ள வல்லெழுத்துகளில் ஒன்றில் ஒரு மாற்றம் நிகழும்போது அம் மாற்றம் மற்ற வல்லெழுத்துகளிலும் ஒழுங்கான முறையில் நிகழ்கிறது.

சான்றாக, வல்லெழுத்துகளில் ஒன்றான ‘க்’ (k) என்பது குரல் இலா ஒலி (Voiceless Sound) ஆகும். இது ‘ங்’ (Œ) என்ற மெல்லெழுத்திற்குப் பின்னால் வரும்போது ‘க்’ (g) என்ற குரல் உடை ஒலியாக மாறுகிறது.

சான்று:

தங்கம் (tangam)

இதுபோல், ‘ச் (c), ட் (—), த் (t), ப் (p)’ ஆகிய பிற வல்லெழுத்துகள் குரல் இலா ஒலிகளாகும். இவை முறையே ‘ஞ் (), ண் (–), ந் (n), ம் (m)’ என்ற மெல்லெழுத்துகளுக்குப் பின்னால் வரும்போது முறையே j, , d, b என்னும் குரல் உடை ஒலிகளாக மாறுகின்றன.

c → j

— →

t → d

p → b

சான்று:

மஞ்சள் (manjal)

நண்டு (na–u)

தந்தம் (ta‹dam)

கம்பர் (Kambar)

இச்சான்றுகளை நோக்கின் தமிழில் வல்லெழுத்துகள் மெல்லெழுத்துகளுக்குப் பின்னால் வரும் சூழ்நிலையில் அவை குரல் உடை ஒலிகளாக மாறும் ஒழுங்கான அமைப்புக் காணப்படுவதை அறியலாம். இத்தகு ஒலி மாற்றத்தை மொழியியலார், இன ஒலி மாற்றம் (Class Change) என்று குறிப்பிடுகின்றனர்.

5.5 ஒலி மாற்றங்களின் இரு வேறு பிரிவுகள்

ஒலி மாற்றங்கள் இருவேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. மொழிகளின் ஒலியமைப்பை ஆராய்கின்ற அறிஞர்கள் ஒலி (phone) என்றும் ஒலியன் (phoneme) என்றும் இரண்டு வகையாகப் பிரிப்பர். ஒலி என்று இங்குக் குறிப்பிடுவது மாற்று ஒலிகளையே (allophones) ஆகும். எனவே ஒன்றை ஒலி மாற்றம் (phonetic change) என்றும், மற்றொன்றை ஒலியன் மாற்றம் (phonemic change) என்றும் குறிப்பிடலாம்.

5.5.1 ஒலி மாற்றம் (phonetic change) ஒரு மொழியின்கண் குறிப்பிட்ட ஒலியன்களைக் (phonemes) காண்கிறோம். அதைப் போன்றே குறிப்பிட்ட அளவு மாற்று ஒலிகளைக் (allophones) காண்கிறோம். மொழியின் வரலாற்றில் சில ஒலி மாற்றங்கள் (sound change) நிகழும் போது ஒலியன்களின் எண்ணிக்கையை அவை பாதிப்பது இல்லை. ஒரு ஒலியன் மற்றொரு ஒலியனாக மாறுவதற்கான சூழ்நிலையைத் தோற்றுவிப்பது இல்லை . இந் நிலையில் அது மொழியின் ஒலியன் அமைப்பினைத் தாக்குவதுமில்லை. இதனையே ஒலி மாற்றம் (phonetic change) எனக் குறிப்பிடுகின்றனர்.

தமிழில் மகன் என்ற சொல்லினை எடுத்துக் கொள்வோம். இச்சொல்லின் இடையில் காணப்படும் ககரத்தை ‘g’ ஆக ‘magan’ என்று சிலர் உச்சரிக்கின்றனர். இன்னும் சிலர் ‘h’ ஒலியாக ‘mahan’ என்று உச்சரிக்கின்றனர். பண்டைக் காலத்தில் இவ்வொலி (‘h’) உரசொலியாக இருந்தது எனக் கருதலாம். உரசொலியாக இருந்த இவ்வொலி, ‘g’ ஆக உச்சரிக்கப்படும்போது ககர ஒலியனின் ஒரு மாற்றொலியாகவே காணப்படுகிறது. இன்னொரு மாற்றொலியாக இருந்த அது வழக்கொழிய அதனிடத்தில் குரல் உடை ஒலி இடம்பெறக் காணுகிறோம். எனவே இந்த ஒலி மாற்றத்தினால் மேலும் ஒரு மாற்றொலி தோன்றுகிறதே தவிரப் புதிய ஒலியன்கள் எதுவும் தோன்றவில்லை உச்சரிப்பில் மாற்றமே தவிர ஒலியன் அமைப்பில் மாற்றம் எதுவும் நிகழவில்லை. எனவேதான் இத்தகைய மாற்றம் ஒலிமாற்றம் எனப்படுகிறது.

5.5.2 ஒலியன் மாற்றம் (phonemic change) சில மாற்றங்கள் மொழிகளின் ஒலியன்களின் அமைப்பை மாற்றி விடுகின்றன. இம் மாற்றங்கள் ஒலியன்களின் எண்ணிக்கையைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யும். பழங்காலத் தமிழில் ஸகரம் (s) ஜகரம் (j) ஆகியவை ஒலியன்களாக இல்லை. ஆனால் தற்காலத் தமிழிலோ அவை இரண்டும் ஒலியன்களாக உள்ளன.

சான்று:

ஸந்தர்ப்பம் (வாய்ப்பு)

ஸாகரம் (கடல்)

போன்ற சொற்களில் ஸகரம் தனி ஒலியனாகி விட்டதைக் காண்கிறோம். இத்தகைய சொற்கள் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழில் கடன் பேறு விளைவாக வந்தனவாகும். வடமொழியில் உள்ள ஸ என்ற ஒலியனின் செல்வாக்கால், தமிழில் உள்ள ச (c) என்ற ஒலியன் ஸ (s) என்ற ஒலியனாக மாற்றி உச்சரிக்கப்படுகின்றது.

சான்று:

சோறு > ஸோறு

சிவப்பு > ஸெவப்பு

சங்கம் > ஸங்கம்

இவ்வாறு ஓர் ஒலியன் (ச) , இன்னொரு ஒலியனாக (ஸ) மாறுவது ஒலியன் மாற்றம் எனப்படுகிறது.

ஸ என்ற ஒலியனைப் போன்றே தமிழ் மொழியின் வரலாற்றில் ஜகரம் (j) புதியதொரு ஒலியனாக வருதல் காணலாம். இதுவும் பெரும்பாலும் கடன்பேற்றுச் சொற்களிலேயே காணப்படுகிறது.

சான்று:

ஜாதி

ஜாக்கிரதை

ஒலியன் மாற்றத்தை மொழியியலார் பிளவு (split) என்றும், இணைவு (merger) என்றும் இருவகைப்படுத்தியும் ஆராய்கின்றனர்.

பிளவு

ஒரு மொழியில் காணப்படும் ஒரு ஒலியன் காலப்போக்கில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒலியன்களாகப் பிரியுமானால் அதனைப் பிளவு என்று கூறுவர். தமிழில் சோறு என்பதை,

co : ŗu

so : ŗu

என இருவகையாக ஒலிப்பதால், ச /c/ என்ற ஒலியன், /c/, /s/ என்ற இரண்டு ஒலியன்களாகப் பிரிந்து விட்டது. இத்தகைய பிளவினை,

என்ற விதியின் கீழ் மொழியியலார் அடக்குவர்.

இணைவு

இரண்டு ஒலியன்கள் ஒன்றாக இணைகின்ற மாற்றத்தையே இணைவு என்று கூறுவர்.

தமிழ் மொழியில் எழுத்து வழக்கில் /ழ்/, /ள்/ என்ற இரண்டும் இருவேறு ஒலியன்கள்.

சான்று:

வாழ்

வாள்

ஆனால் தற்காலத் தமிழில் பேச்சுவழக்கில் /ழ்/, /ள்/ ஆகிய இரண்டு ஒலியன்களும் /ள்/ என்ற ஒரே ஒலியனாகி விட்டது.

சான்று:

வாழைப்பழம் > வாளப்பளம்

இத்தகு இணைவினை,

என்ற விதியின் கீழ் மொழியியலார் அடக்குவர்.

5.6 ஒலி மாற்றங்களின் வகைப்பாடுகள்

பல்வேறு மொழிகளில் பல்வேறு வகையான ஒலி மாற்றங்களைக் காணலாம். எல்லா மொழிகளிலும் ஒரே வகையான ஒலி மாற்றங்கள்தான் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. சூழ்நிலை அல்லது சுற்றுச் சூழல் ஒரே மாதிரியாக அமைந்தால் ஒரே வகையான மாற்றம் ஏற்படும் என நம்பலாம். ஆயினும் இம்மாற்றங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் எனக் கூறுவதற்கு இல்லை. ஒரு கிளைமொழியில் ஒரு மாதிரியான மாற்றம் இருக்க, அம்மொழியின் மற்றொரு கிளைமொழியில் வேறு மாதிரியான மாற்றமும் நிகழலாம். இலக்கியத் தமிழில் உள்ள ‘மலை’ என்ற சொல் பேச்சு வழக்கில் ‘மலெ’ என மாறுகிறது. இரண்டு உயிர் எழுத்துகளுக்கு இடையே வரும் வல்லொலி அல்லது வெடிப்பொலி சில மொழிகளில் குரல் உடை ஒலியாக மாற, சில மொழிகளில் உரசொலியாக மாறுகிறது. அவ்வாறு மாறும்போது ஒரு ஒழுங்கினையும் காணமுடிகிறது.

எளிமையின் காரணமாக இம்மாற்றங்கள் நிகழ்கின்றன எனலாம். சிலர் வேகமாகப் பேசும்போது சில ஒலியன்களை ஒலிக்காமல் விட்டு விடுகின்றனர். பாய்ச்சு என்ற சொல்லைப் பாச்சு எனவும், பார்த்தான் என்ற சொல்லைப் பாத்தான் எனவும் கூறுகின்றனர்.

மொழிக்கு இறுதியில் மெய்யொலிகளை விட்டுவிட்டு உச்சரிக்கின்றனர். அவள் வந்தாள் என்பதை அவ வந்தா என்றும், வந்தால் (நிபந்தனை வினை) என்பதை வந்தா என்றும் கூறுகின்றனர்.

மொழிக்கு முதலிலும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்கின்றன. யாறு > ஆறு, இங்கே மொழிக்கு முதலில் வரும் மெய் ஒலியை விட்டுவிட்டு, உயிர் ஒலியை மட்டும் ஒலிக்கிறோம்.

இது போன்ற மாற்றங்கள் மெய் ஒலிகளில் மட்டும் நிகழ்வது இல்லை. உயிர் ஒலிகளிலும் உண்டு. மாதவி என்பதை மாத்வி என்கிறோம். இங்கே மொழிக்கு இடையில் வரும் உயிர் ஒலியை விட்டு விட்டு, மெய் ஒலியை மட்டும் உச்சரிக்கிறோம்.

ஒலிகள் கெடுவது மட்டும் அல்லாமல் தோன்றுதலும் உண்டு. எலும்பு என்பதை யெலும்பு என்றும் எனக்கு என்பதை யெனக்கு என்றும் கூறுவர்.

இவ்வாறு மொழியில் ஓர் ஒலி மற்றொரு ஒலியாகத் திரிதலும், ஒலிகள் தோன்றுதலும், கெடுதலும் உண்டு. இதனையே நன்னூலார்,

தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்

மூன்றும் மொழிமூ இடத்தும் ஆகும்

(நன்னூல், 154)

என்று கூறியுள்ளார் . இத்தகைய ஒலி மாற்றங்களை மொழியியலார் ஓரினமாக்கம், வேற்றினமாக்கம், உயிர் மாற்றங்கள், அண்ணமாக்கம், ஈடுசெய் நீட்டம், இடம் பெயரல் என்று பல்வேறு வகைகளாகப் பிரித்து விளக்குகின்றனர். அவற்றைக் கீழே காண்போம்.

5.6.1 ஓரினமாக்கம் உலக மொழிகளில் மிக அதிகமாகக் காணப்படுகின்ற ஒலி மாற்றம் ஓரினமாக்கம் (Assimilation) ஆகும். இது தமிழ்மொழியிலும் மிகுதியாகக் காணப்படுகிறது. ஒரு சொல்லில் ஒரு ஒலியனுக்கு முன்னரோ அல்லது பின்னரோ வருகின்ற மற்றொரு ஒலியன், முந்திய அல்லது பிந்திய ஒலியனின் உச்சரிப்பிற்கு ஏற்ப மாறி வருகின்ற மாற்றத்தை மொழியியலார் ஓரினமாக்கம் என்பர். இம்மாற்றம் ஒலியன் பிறக்கின்ற இடத்திற்கு ஏற்பவும் (place of articulation), உச்சரிக்கப்படுகின்ற முறைக்கு ஏற்பவும் (manner of articulation) நிகழக் காணலாம்.

ஒரு சொல்லில், அடுத்தடுத்து வருகின்ற இரண்டு ஒலியன்கள் வெவ்வேறு இடத்தில் பிறக்கின்றனவாகவோ, வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவனவாகவோ இருந்தால், அவை இரண்டையும் சேர்த்து உச்சரித்தல் அரிதாகும். இதற்கு மாறாக அவை இரண்டும் ஒரே இடத்தில் பிறப்பனவாகவும், ஒரே இனத்தைச் சார்ந்தனவாகவும் இருந்தால், அவற்றைச் சேர்த்து உச்சரித்தல் எளிதாகும்.

சான்று:

செண்பகம்

இச்சொல்லில் ண், ப் ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வருகின்ற மெய் ஒலியன்கள் ஆகும். இரண்டும் வெவ்வேறு இனங்கள். ண்- மெல்லினம்; ப்- வல்லினம். இரண்டும் வெவ்வேறு இடத்தில் பிறப்பவை. ண்- வளைநா இடத்தில் பிறக்கின்றது; ப்- ஈரிதழ் உதவியுடன் பிறக்கிறது. எனவே ‘ண்’ என்ற ஒலியன், தனக்குப் பின்னால் வரும் ‘ப்’ என்ற ஒலியனின் இனவெழுத்தாகிய ‘ம்’ என மாறி,

செம்பகம்

என ஓரினமாகிறது. ‘ப்’, ‘ம்’ ஆகிய இரண்டும் ஈரிதழ் உதவியுடன் பிறப்பன ஆகும். இத்தகைய ஓரினமாக்கம் தமிழில் மிகுதியான சொற்களில் காணப்படுகிறது.

சான்று:

நன்செய் > நஞ்செய் (நஞ்சை)

புன்செய் > புஞ்செய் (புஞ்சை)

வன்சினம் > வஞ்சினம்

வெட்கம் > வெக்கம்

கட்சி > கச்சி

தன்பின் > தம்பி

எண்பது > எம்பது

5.6.2 வேற்றினமாக்கம் ஓரினமாக்கத்தைப் போன்றே வேற்றினமாக்கமும் ஒரு ஒலி மாற்றம் ஆகும். ஒரு சொல்லில் வருகின்ற ஒரு ஒலியன், அதனோடு இனத்தாலும் பிறப்பிடத்தாலும் ஒத்த ஒலியனாய் மாறாமல் தொடர்பில்லாத வேறொரு ஒலியனாய் மாறுவது வேற்றினமாக்கம் (dissimilation) எனப்படும்.

சான்று:

பட்டடை > பட்டரை (ட > ர)

ஒட்டடை > ஒட்டரை (ட > ர)

மார்வாரி > மார்வாடி (ர > ட)

போடடா > போட்ரா (ட > ர)

ரப்பர் > லப்பர் (ர > ல)

ரவிக்கை > லவிக்கை (ர > ல)

லாந்தர் > ராந்தர் (ல > ர)

தகராறு > தகராலு (ற > ர)

5.6.3 உயிர் ஒலி மாற்றங்கள் தமிழ்மொழியில் பேச்சுவழக்கில் உயிர் ஒலிகளில் ஓர் உயிர் ஒலி இன்னோர் உயிர் ஒலியாக மாறுகின்ற மாற்றம் நிறையக் காணப்படுகிறது.

முன்னுயிர், பின்னுயிராதல்

இ, ஈ என்ற முன்னுயிர்கள், உ, ஊ என்ற பின்னுயிர்களாக மாறி அமையும்.

சான்று:

வீடு > வூடு

விடு > வுடு

விழுந்தான் > வுழுந்தான்

பிடுங்கு > புடுங்கு

பின்னுயிர், முன்னுயிராதல்

உ என்ற பின்னுயிர், இ என்ற முன்னுயிராக மாறி அமையும்.

சான்று:

கத்திக்கு > கத்திக்கி

பெட்டிக்கு > பெட்டிக்கி

எழுந்திரு > எழுந்திரி

மேலுயிர், கீழுயிராதல்

இ, உ என்னும் மேலுயிர்கள் முறையே எ, ஒ என்னும் கீழுயிர்களாக மாறி அமையும்.

சான்று:

இலை > எலை

இடம் > எடம்

விஷம் > வெஷம்

சிவந்து > செவந்து

சிவப்பு > செவப்பு

உடல் > ஒடல்

உடம்பு > ஒடம்பு

உரல் > ஒரல்

உதை > ஒதை

துடை > தொடை

கீழுயிர் மேலுயிராதல்

கீழுயிராகிய ஒ என்பது, மேலுயிராகிய உ என மாறி அமையும்.

சான்று:

கொடு > குடு

5.6.4 அண்ணமாக்கம் உலக மொழிகள் பலவற்றிலும் அண்ணமாக்கத்தைக் காணலாம். அண்ணத்தை (மேல்வாயை) ஒட்டிப் பிறக்கின்ற ஒலி சகர ஒலி ஆகும். எனவே சகர ஆக்கத்தையே அண்ணமாக்கம் (Palatalization) என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர். சில ஒலிகள், அவற்றிற்கு முன்னாலோ அல்லது பின்னாலோ வருகின்ற ஒலிகளின் காரணமாகச் சகரமாக உச்சரிக்கப்படுமாயின், அதனை அண்ணமாக்கம் எனக் குறிப்பிடுகின்றனர். பொதுவாக இ, ஐ என்னும் முன்னுயிர்களாலும், யகர மெய்யாலும் இம்மாற்றம் நடைபெறக் காணலாம்.

சான்று:

அடித்தான் > அடிச்சான்

கிழிந்தது > கிழிஞ்சது

படைத்தான் > படைச்சான்

உடைந்தது > உடைஞ்சது

காய்த்தது > காய்ச்சது

செய்தான் > செஞ்சான்

5.6.5 ஈடு செய் நீட்டம் சில சொற்களில் இடையில் உள்ள ‘உயிர் மெய் ஒலி’ ஒன்று மறைந்து போக, அந்த இழப்பை ஈடு செய்யும் பொருட்டு அதற்கு முன் உள்ள குறில் உயிர் ஒலிகள் நீண்டு ஒலிக்கும். இத்தகைய நீட்டத்தை ஈடு செய் நீட்டம் (compensatory length) என்று கூறுவர்.

சான்று:

மிகுதி > மி(கு)தி > மீதி

பகுதி > ப(கு)தி > பாதி

தொகுப்பு > தொ(கு)ப்பு > தோப்பு

பகல் > ப(க)ல் > பால்

5.6.6 இடம் பெயரல் ஒரு சொல்லில் காணப்படும் சில ஒலிகள் அவை நிற்க வேண்டிய இடத்தில் நில்லாது, அடுத்து இடம் பெயர்ந்து நிற்கக் காணலாம். இம்மாற்றத்தையே இடம் பெயரல் (Metathesis) என்று கூறுவர். டாக்டர் கால்டுவெல், டாக்டர் மு. வரதராசன் ஆகியோர் இதனை மெய் இடம் பெயரல், உயிர் இடம் பெயரல் என இருவகைப்படுத்தி விளக்குகின்றனர்.

மெய் இடம் பெயரல்

ஒரு சொல்லில் மெய் ஒலிகள் தம்முள் இடம் மாறி அமைதல் மெய் இடம் பெயரல் எனப்படும். இம்மாற்றத்தால் பொருள் சிறிதும் மாறுவது இல்லை. விரைவு காரணமாகவும், ஒலி நயம் காரணமாகவும் இந்த மெய் இடம் பெயரல் நிகழ்கிறது.

சான்று:

சதை > தசை

விசிறி > சிவிறி

இடறி > இறடி

கொப்புளம் > பொக்குளம்

தப்பை > பத்தை

மதுரை > மருதை

கொப்பூழ் > பொக்குழ்

உயிர் இடம் பெயரல்

சொற்களில் உயிர் ஒலிகள் இடம் பெயரல் ஒரு புதுமையான முறையில் காணப்படுகிறது. ஓர் உயிர் ஒலியை முதலாகக் கொண்ட சொற்களில் மூன்று உயிர் ஒலிகள் வரும்போதே இந்தப் புதுமையான இடம் பெயரல் காணப்படுகிறது. அச்சொற்களில் உள்ள மூன்று உயிர் ஒலிகளும் குறிலாகவே இருக்கும். இத்தகு சொற்களில் இரண்டாவது நிற்கும் உயிர் ஒலி மறைந்து போகும். முதலாவது நின்ற உயிர் ஒலி, அவ்விரண்டாவது உயிர் ஒலி நின்ற இடத்திற்குச் சென்று, அங்கு மறைந்துபோன உயிர் ஒலிக்கு ஈடாக நெடிலாக மாறும். இதுவே உயிர் இடம் பெயரல் எனப்படும்.

தமிழில் பேச்சுவழக்கில் மூன்று உயிர் ஒலிகளைக் கொண்ட சில சொற்களில் இத்தகைய மாற்றம் நடைபெறக் காணலாம்.

சான்று:

எனக்கு > னேக்கு

ஒனக்கு (உனக்கு) > னோக்கு

ஒலகம் (உலகம்) > லோகம்

இங்கே சான்று காட்டப்பட்ட சொற்களுள், ‘எனக்கு’ என்பது ‘னேக்கு’ என மாறி அமையும் முறை பின்வருமாறு:

எ + ன் + அ + க் + க் + உ = எனக்கு

எ + ன் + x + க் + க் + உ = என்க்கு

x + ன் + எ + க் + க் + உ = னெக்கு

ன் + ஏ + க் + க் + உ = னேக்கு

இவ்வாறே மற்றச் சொற்களும் உயிர் இடம் பெயரல் முறையில் மாறி அமைவதைப் பிரித்துப் பார்த்து விளங்கிக் கொள்ளுங்கள்.

5.7 தொகுப்புரை

மொழியில் காலந்தோறும் ஒலிமாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்பதைத் தெரிந்து கொண்டீர்கள். ஒரு மொழியில் நிகழும் ஒலி மாற்றங்களுக்கான காரணங்களை அறிந்து கொண்டீர்கள். தமிழ்மொழியில் ஒலி மாற்றங்கள் தாறுமாறாக நிகழவில்லை; ஓர் ஒழுங்கான முறையிலேயே நிகழ்ந்துள்ளன என்பதைத் தெரிந்துகொண்டீர்கள். ஒலி மாற்றங்களை மொழியியலார் குறிப்பிட்ட விதிகளின் கீழ் அடக்கிக் காட்டுவதை அறிந்து கொண்டீர்கள். நிபந்தனை மாற்றம், நிபந்தனை இல்லா மாற்றம் ஆகியவற்றைப் பற்றி விளங்கிக் கொண்டீர்கள். கடன் பேற்றின் விளைவாகத் தமிழில் புதிய ஒலிகள், ஒலியன்கள் வந்தமையை அறிந்துகொண்டீர்கள். மேலும் ஓரினமாக்கம், வேற்றினமாக்கம், அண்ணமாக்கம், ஈடுசெய் நீட்டம், இடம் பெயரல் போன்ற பல்வேறு ஒலி மாற்றங்களைப் பற்றி மொழியியலார் கூறும் கருத்துகளை விளங்கிக் கொண்டீர்கள். ஒலி மாற்றங்கள் எழுத்துத் தமிழை விடப் பேச்சுத் தமிழிலேயே அதிகம் இருப்பதை இப்பாடத்தின் வாயிலாக உணர்ந்திருப்பீர்கள்.

பாடம் - 6

கிளைமொழிகளில் ஒலி மாற்றம்

6.0 பாட முன்னுரை

ஒரு மொழியானது ஒலியமைப்பு, இலக்கண அமைப்புப் போன்ற பல்வேறு காரணங்களால் பல கிளைமொழிகளாக (dialects) மாறுகிறது. கிளைமொழி என்றால் என்ன என்பது பற்றிய விளக்கத்தைச் சான்றுகளுடன் காணவேண்டும். கிளைமொழி பற்றிய தொல்காப்பியர் கருத்தையும், பழங்காலத்திலும் இடைக்காலத்திலும் எத்தனை வட்டாரங்களில் கிளைமொழிகள் இருந்தன என்பதையும், அவ்வட்டாரங்கள் யாவை என்பதையும் காணவேண்டும்.

இடைக்காலத்தில் வழங்கிய கிளைமொழிகளின் ஒலியமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வீரசோழிய உரை கொண்டும், கல்வெட்டுகள் கொண்டும் அறிய விருக்கிறோம்.

தற்காலத்தில் வட்டாரம், சமூகம், தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் மொழியியலார் கிளைமொழிகளைப் பலவாறு பாகுபடுத்தி விளக்குகிறார்கள். தற்காலத் தமிழில் வழங்கும் பல்வேறு வகைக் கிளைமொழிகளில் நிகழும் ஒலி மாற்றங்களைத் தக்க சான்றுகளுடன் காணவிருக்கிறோம்.

6.1 கிளைமொழி - ஒரு விளக்கம்

ஒரு நாட்டின் பரந்துபட்ட நிலப்பரப்பில் ஒரு மொழியைப் பேசுகின்ற மக்கள் உள்ளனர். இவர்கள் எல்லோரும் பேசுகின்ற அம்மொழி, நாடு முழுவதும் ஒன்றுபோல் இருக்கும் என்று கூறமுடியாது. இவர்களுடைய பேச்சுவழக்கில் சிறுசிறு மாற்றங்கள் அல்லது வேறுபாடுகள் இருப்பது இயற்கை ஆகும். எவ்வாறு எனில், அந்த நாட்டின் பரந்துபட்ட நிலப்பரப்பில் உள்ள இடங்களைக் காடு, மலை, ஆறு, கடல் போன்றவை பிரிக்கின்றன. இத்தகைய இயற்கைச் சூழல்களால் இயல்பாகவே பிரிபட்டு மக்கள் வாழும்போது, அம்மொழி பேசப்படும் நாட்டின் ஒரு பகுதியில் வாழும் மக்களுக்கும், மற்றொரு பகுதியில் வாழும் மக்களுக்கும் இடையே அதிகமான தொடர்பு இல்லாமல் போய்விடுகிறது. மேலும் அரசியல், சமயம், சாதி, தொழில், பொருளாதாரம் போன்றவற்றாலும் அம்மொழி பேசும் மக்களுக்கு இடையே தொடர்பு குறைந்துபோகிறது. இவற்றின் காரணமாக ஒரே மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இடையிலான பேச்சு வழக்கு வேறுபடுகிறது. இவ்வேறுபாடு ஒரு பொருளைக் குறிக்கக் கையாளும் சொற்கள், சொற்களின் ஒலியமைப்பு மற்றும் இலக்கண அமைப்பு ஆகியவற்றில் பெரிதும் காணப்படுகிறது. இவ்வாறு ஒரு மொழியைப் பேசுபவர்களுக்கு இடையே வேறுபட்டுக் காணப்படும் பேச்சுவழக்கையே மொழியியலார் கிளைமொழி (dialect) என்று கூறுகின்றனர்.

கிளைமொழிக்கான இவ்விளக்கத்தைச் சில சான்றுகள் வழி நின்று பார்த்தால் நன்கு புரிந்துகொள்ளலாம்.

தேங்காய் ஓட்டை (இரண்டாக உடைத்துப் பருப்பை எடுத்த பிறகு உள்ள ஒரு தேங்காய் ஓட்டை), தமிழ் நாட்டின் வடபகுதியில் உள்ள சென்னையைச் சார்ந்த மக்கள் கொட்டாங்கச்சி என்று கூறுகின்றனர்; தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி முதலான இடங்களில் வாழ்பவர்கள் சிரட்டை அல்லது செரட்டை என்று கூறுகின்றனர். இவ்வாறு ஒரு பொருளைக் குறிக்க இடத்திற்கு இடம் வெவ்வேறு சொற்கள் வழங்கும்போது, அச்சொற்களைக் கிளைமொழி என்று மொழியியலார் கூறுகின்றனர்.

சொற்களின் ஒலியமைப்பிலும் இடத்திற்கு இடம் வேறுபாடு காணப்படுகிறது. ‘சாமான்’ (things) என்ற சொல் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஸகர ஒலியுடன் (‘s’) சாமான் என்று ஒலிக்கப்பட, தென்பகுதியில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் ஜகர ஒலியுடன் (‘j’) ஜாமான் என ஒலிக்கப்படுகிறது. இவ்வாறு ஒலிக்கப்படும் சொல்லும் கிளைமொழியே ஆகும்.

இலக்கண அமைப்பிலும் வேறுபாடு காணப்படுகிறது. அண்ணன் வந்தான், அக்காள் வந்தாள் என்று எழுவாய் பயனிலை இயைபாகிய திணை, பால் இயைபோடு கூறவேண்டிய தொடர்களை, சமுதாயத்தில் ஒரு சில பிரிவினர் அண்ணன் வந்திச்சி, அக்கா வந்திச்சி என்று திணை, பால் இயைபில்லாமல் கூறுகின்றனர். வந்தான் என்ற ஆண்பால் சொல்லையும், வந்தாள் என்ற பெண்பால் சொல்லையும் வந்திச்சி (வந்தது) என்ற அஃறிணை ஒருமைப்பால் சொல்லால் கூறுவது இலக்கண அமைப்பில் வேறுபாடு ஆகும். எனவே வந்திச்சி என்பது கிளைமொழி எனப்படுகிறது.

6.2 கிளைமொழிப் பாகுபாடு

தமிழில் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே கிளைமொழி பற்றிய பாகுபாடு இருந்து வந்துள்ளது. அப்பாகுபாடு பற்றிப் பழங்காலத்தில் தொல்காப்பியரும், இடைக்காலத்தில் நன்னூலாரும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்காலத்தில் மொழியியலார் கிளைமொழியைப் பல்வேறு கோணங்களில் பாகுபடுத்தி விரிவாக விளக்கியுள்ளனர்.

6.2.1 பழங்காலத்தில் கிளைமொழிப் பாகுபாடு தமிழில் கிளைமொழி பற்றிய முதல் குறிப்பைத் தருபவர் தொல்காப்பியர். அவர் தமது தொல்காப்பியத்தில் இரண்டாவதாக அமைந்துள்ள சொல்லதிகாரத்தில் செய்யுள் இயற்றுவதற்கு உரிமை படைத்த சொற்களாக இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நான்கினைக் குறிப்பிடுகிறார்.

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று

அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

(தொல்.சொல், 397)

இந்நால்வகைச் சொற்களுள் திசைச்சொல் என்று தொல்காப்பியர் குறிப்பிடுவது கிளைமொழியே என்று தற்கால மொழியியலார் கூறுகின்றனர். தொல்காப்பியர் திசைச்சொல் பற்றி,

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம்குறிப் பினவே திசைச்சொல் கிளவி

(தொல்.சொல், 400)

என்று கூறுகின்றார். “செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளிலும், தாம் குறித்த பொருளை விளக்கி நிற்கும் சொற்கள் திசைச்சொல் எனப்படும்” என்பது இந்நூற்பாவின் பொருள்.

நால்வகைச் சொற்களுள் இயற்சொல் என்பது செந்தமிழ் நாட்டில் வழங்குவது; எல்லா நாட்டார்க்கும் பொருள் இயல்பாகத் தெரியக் கூடியது. ஆனால் திசைச்சொல் என்பது எல்லோருக்கும் பொருள் விளங்கக்கூடியது இல்லை; எந்த நாட்டில் வழங்குகிறதோ அந்த நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருள் தெரியக் கூடியது. இக்கருத்தையே தொல்காப்பியர் இந்நூற்பாவில் உணர்த்துகிறார்.

தொல்காப்பியர் இந்நூற்பாவில் செந்தமிழ் நாடு எது என்றோ, பன்னிரு கொடுந்தமிழ் நாடுகள் எவை என்றோ கூறவில்லை. இவை அவர் காலத்தில் கற்றறிந்த பலரும் அறிந்த ஒன்றாக இருந்திருக்கலாம்.

இடைக்காலத்தில் வாழ்ந்த நன்னூலாரும் நன்னூலில் தொல்காப்பியரை அடியொற்றி, கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டு என்று கூறினார். ஆனால் அவரும் அந்நாடுகள் எவை என்று கூறவில்லை.

இடைக்காலத்தில் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகியோரும், நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர் ஆகியோரும் அந்நாடுகள் எவை எனக் குறிப்பிடுகின்றனர். இவர்களுள் சங்கரநமச்சிவாயர் செந்தமிழ்நாடு என்பதை, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையைச் சூழ்ந்துள்ள பாண்டிய நாடு என்று கொண்டார். பண்டைக் காலத் தமிழ்ப் புலவர்கள் மதுரையைத் ‘தமிழ்கெழு கூடல்’ என்றே குறிப்பிட்டுள்ளனர். மதுரையைச் சூழ்ந்த பகுதி, பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டின் வடபகுதி ஆகும். இப்பகுதியில் வழங்கிய தமிழைச் செந்தமிழாக – எல்லோருக்கும் விளங்கும் பொதுமொழியாகக் (Standard spoken language) கொண்டு, அதிலிருந்து வேறுபட்டு ஏனைய பன்னிரு தமிழ்ப் பகுதிகளில் வழங்கும் தமிழைக் கொடுந்தமிழ் அல்லது கிளைமொழி (dialect) என்று கொண்டனர். அவர்கள் குறிப்பிடும் பன்னிரு நாடுகள் வருமாறு:

1. தென்பாண்டி நாடு

2. குட்ட நாடு

3. குட நாடு

4. கற்கா நாடு

5. வேணாடு

6. பூழி நாடு

7. பன்றி நாடு

8. அருவா நாடு

9. அருவா வடதலை நாடு

10. சீத நாடு

11. மலாடு

12. புனல் நாடு

இந்நாடுகளில் வழங்கும் திசைச்சொற்களையும், அவற்றுக்கான செந்தமிழ்ச் சொற்களையும் உரையாசிரியர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். பின்வரும் பட்டியல் உரையாசிரியர்கள் குறிப்பிடும் பன்னிரு கிளைமொழிப் பகுதிகள், அவற்றிற்குரிய தற்காலப் பெயர் கொண்ட பகுதிகள், அப்பகுதிகளில் பழங்காலத்தில் வழங்கிய திசைச்சொற்கள் அல்லது கிளைமொழிகள், அச்சொற்களுக்கு இணையாக அக்காலத்தில் வழங்கிய செந்தமிழ் அல்லது பொதுமொழிச் சொற்கள் ஆகியவற்றைக் காட்டும்.

கிளைமொழி அல்லது திசைச்சொல் வழங்கிய இடம்

தற்காலப் பெயர்

கிளைமொழி அல்லது திசைச்சொல்

பொதுமொழி அல்லது செந்தமிழ்ச்சொல்

1.தென்பாண்டி நாடு

திருநெல்வேலிப் பகுதி

பெற்றம் ஆ(பசு)

சொன்றி சோறு

2. குட்ட நாடு

கேரளாவில் கோட்டயம், கொல்லம் மாவட்டங்கள் தள்ளை தாய்

3. குட நாடு வடமலபார் அச்சன் தந்தை

4. கற்கா நாடு கோயம்புத்தூர் சார்ந்த மலைப் பகுதிகள் கையர் வஞ்சர்

5. வேணாடு திருவாங்கூரின் தென்பகுதி கிழார் தோட்டம்

6. பூழி நாடுகோழிக்கோடு

பாழி சிறுகுளம்

ஞமலி நாய்

7. பன்றி நாடு

பழனி மலை சூழ்ந்த பகுதி

செய் வயல்

8. அருவா நாடு

வட ஆர்க்காடு தென் ஆர்க்காடு செல்கல்பட்டு

கேணி சிறுகுளம்

9. அருவா வடதலை நாடு

தமிழகத்தின் வடக்குப் பகுதி

எகின் புளி

10. சீத நாடு

நீலகிரி

எலுவன் தோழன்

இகுளை தோழி

11. மலாடு* திருக்கோவலூர் சூழ்ந்த பகுதி இகுளை தோழி

12. புனல் நாடு

சோழ நாடு

ஆய் தாய்

*மலாடு- மலையமான் நாடு என்பதன் மரூஉ ஆகும். பண்டைக் காலத்தே இருந்த கடையெழு வள்ளல்களுள் ஒருவனான மலையமான் திருமுடிக்காரி என்பவன் ஆண்ட நாடு மலையமான் நாடு ஆகும்.

6.2.2 தற்காலத்தில் கிளைமொழிப் பாகுபாடு தற்காலத்தில் மொழியியலார் தமிழ்நாட்டில் பேசப்படும் கிளைமொழியை,

வட்டாரக் கிளைமொழி (Regional dialect)

சமூகக் கிளைமொழி (Social dialect)

பார்வைக் கிளைமொழி (Eye dialect)

பொதுக் கிளைமொழி (Standard dialect)

என்றாற் போலப் பலவாறு பாகுபடுத்துகின்றனர்.

கிளைமொழி தமிழ்நாட்டில் வழங்கும் இடம் பற்றி அதை ‘வட்டாரக் கிளைமொழி’ என்றும், அதைப் பேசுகின்ற மக்களின் சமூக நிலை பற்றிச் ‘சமூகக் கிளைமொழி’ என்றும் கூறுவர். கிளைமொழியை வரிவடிவத்தில் அளிக்கும்போது அதனைப் ‘பார்வைக் கிளைமொழி’ என்று கூறுவர். ஒரே மொழி வட்டாரத்திற்கு வட்டாரம், சாதிக்குச் சாதி, தொழிலுக்குத் தொழில் வேறுபட்டாலும் கூட, அவற்றிடையே ஒரு பொதுத்தன்மையைக் காணலாம். எழுத்துமொழியுடன் பெரும்பாலும் ஒத்துப் போகின்ற ஒரு கிளைமொழியைப் ‘பொதுக் கிளைமொழி’ என்று கூறுவர்.

மொழியியலார் கிளைமொழியை மேலே குறிப்பிட்டவாறு பாகுபடுத்தினாலும், வட்டாரக் கிளைமொழி, சமூகக் கிளைமொழி ஆகிய இரண்டை மட்டும் பலவாறு வகைப்படுத்தி விளக்குகின்றனர். அவற்றைப் பற்றி இப்பாட இறுதியில் தற்காலக் கிளைமொழி என்ற தலைப்பில் விரிவாகக் காண்போம்.

இனிக் காலந்தோறும் கிளைமொழிகள் எவ்வாறு இருந்தன? எவ்வாறு மாற்றம் அடைந்தன? என்பனவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

6.3 சங்க காலத்தில் கிளைமொழிகள்

சங்க காலத்தில் கிளைமொழிகள் இருந்தன என்பதற்குச் சான்றுகளை, அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் காணலாம். சங்க காலப் புலவர்கள் வடவேங்கடம், தென்குமரிக்கும் மற்றிருபுறம் கடலுக்கும் இடையே உள்ள பெருநிலப் பரப்பாகிய தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு வட்டாரங்களைச் சார்ந்தவர்கள். ஆதலால் அவரவர்கள் வட்டார வழக்கினை அவர்களுடைய பாடல்களில் காணலாம்.

புறநானூற்றில் ஓசை என்னும் சொல் ‘பொரியல்’ என்ற பொருளில் வருகிறது.

நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை

(புறநானூறு, 261:8)

(நெய் காய்கின்ற உலையின்கண் சொரியப்பட்ட ஆட்டு இறைச்சியினது பொரியல். மை – கரிய ஆடு; ஊன்- இறைச்சி; ஓசை- பொரியல்.)

கலித்தொகையில் செறு என்னும் சொல் ‘வயல்’ என்ற பொருளில் வருகிறது.

நீர்ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய

(கலித்தொகை, 75:1)

(நீர் நிறைந்த வயலில் பூத்த நெய்தல் பூவொடு. செறு- வயல்.)

சங்க காலக் கிளைமொழியில் ‘நான்கு’ என்பதை நால்கு என்றும், ‘ஒன்பது’ என்பதைத் தொண்டு என்றும் வழங்கியுள்ளனர். இக்கிளைமொழி வழக்குகள் சங்க இலக்கியத்தில் புலவர்களால், செய்யுட் ஈட்டச் சொற்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பால்புரை புரவி நால்கு உடன் பூட்டி

(பொருநராற்றுப்படை, 165)

(பரிசிலரை வழியனுப்பும்போது அவர்களைப் பால் போன்ற வெண்ணிறக் குதிரைகள் நான்கு பூட்டிய தேரில் ஏற்றி. நால்கு- நான்கு)

ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என

(பரிபாடல், 3:79)

(தொண்டு – ஒன்பது)

6.4 இடைக்காலத்தில் கிளைமொழிகள்

இடைக்காலத்தில் வழங்கிய கிளைமொழிகளைப் பற்றி அறிவதற்கு இலக்கியங்களைக் காட்டிலும், அக்காலத்தில் தோன்றிய இலக்கண நூல்களின் உரைகளும், கல்வெட்டுகளும் பெரிதும் துணைபுரிகின்றன. இடைக்காலத்தில் தோன்றிய நன்னூலும் அதன் உரைகளும் கிளைமொழிகளைப் பற்றிக் கூறிய கருத்துகளை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் அக்கருத்துகள் பழங்காலத்தில் வழங்கிய கிளைமொழிகளைப் பற்றியனவாக இருந்தனவே தவிர, இடைக்காலத்தில் வழங்கிய கிளைமொழிகளைப் பற்றியனவாக இல்லை. ஆனால் இடைக்காலத்தில் தோன்றிய மற்றோர் இலக்கண நூலாகிய வீரசோழியத்திற்கு அமைந்த உரை இடைக்காலத்தில் வழங்கிய கிளைமொழிகளைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. மேலும் இடைக்காலத்தில் தமிழ் நாட்டின் பல்வேறு வட்டாரங்களில் உள்ள கோயில்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் அக்காலக் கிளைமொழிகளின் இயல்புகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளன.

6.4.1 வீரசோழிய உரை குறிப்பிடும் கிளைமொழிகள் இடைக்காலத்தில் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் தோன்றியது வீரசோழியம். இந்நூலை இயற்றியவர் புத்தமித்திரனார். இந்நூலுக்கு இவருடைய மாணவராகிய பெருந்தேவனார் விரிவான உரை எழுதியுள்ளார். அவ்வுரையில் பெருந்தேவனார், இழிந்த பேச்சுவழக்குகள் என்று தாம் கருதும் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அவை தமிழ்நாட்டில் உள்ள மூன்று வட்டாரங்களில் பரவியிருந்தன என்று குறிப்பிடுகிறார். கருமண் நிலப்பகுதி, காவிரி பாயும் பகுதி, பாலாறு பாயும் பகுதி என்பன அவர் குறிப்பிடும் வட்டாரங்கள். இவற்றில் வழங்கிய இழிந்த வழக்குகளாக அவர் குறிப்பிடும் கிளைமொழிகளைக் காண்போம்.

கருமண் நிலப்பகுதி

இது கொங்குநாடு என்று அழைக்கப்படும் வட்டாரம் ஆகும். தற்போதைய கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் போன்ற மாவட்டப் பகுதிகளை இடைக்காலத்தில் உள்ளடக்கிய வட்டாரம் ஆகும். இவ்வட்டாரத்தில் ழகர ளகர மெய்கள் மயங்கி வருகின்றன.

1. ழ் > ள்

நாழி > நாளி

உழக்கு > உளக்கு

கோழி > கோளி

வாழை > வாளை

2. ள் > ழ்

விளக்கு > விழக்கு

பளிங்கு > பழிங்கு

இளமை > இழமை

காவிரி பாயும் பகுதி

இது இடைக்காலத்தில் சோழநாடு ஆகும். இவ்வட்டாரத்தில் இரட்டித்து வரும் இரட்டை றகரம், ‘வெற்றிலை > வெத்திலை’ என இரட்டைத் தகரமாக மாறாமல், இரட்டைச் சகரமாக மாறுகிறது.

வெற்றிலை > வெச்சிலை

முற்றம் > முச்சம்

கற்றை > கச்சை

பாலாறு பாயும் பகுதி

இது பல்லவ நாடு ஆகும். தற்போதைய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்னார்க்காடு மாவட்டப் பகுதிகளை இடைக்காலத்தில் உள்ளடக்கிய வட்டாரம் ஆகும்.

இவ்வட்டாரத்தில் ‘வீட்டின் பக்கத்தில் நின்றது’, ‘நெல்லின் பக்கத்தில் நின்றது’ என்பனவற்றிற்குப் பதிலாக ‘வீட்டுக்கா நின்றது’, ‘நெல்லுக்கா நின்றது’ என்னும் தொடர்கள் வழங்குகின்றன.

மேலும் சில கிளைமொழி வழக்குகள்

வீரசோழிய உரையாசிரியர் வட்டாரம் எதனையும் குறிப்பிடாமல், மேலும் சில இழிந்த கிளைமொழி வழக்குகளைக் குறிப்பிடுகிறார். அவை வருமாறு:

1. ரகரம் மறைதல்

இவனைப் பார்க்க > இவனைப் பாக்க

2. ஆக்க அசைநிலை தோன்றுதல்

இங்கு > இங்காக்க

அங்கு > அங்காக்க

3. இரட்டை றகரம் இரட்டைத் தகரமாதல்

சேற்றுநிலம் > சேத்துநிலம்

ஆற்றுக்கால் > ஆத்துக்கால்

4. ழகரம் யகரமாதல்

கோழி முட்டை > கோயி முட்டை

வாழைப் பழம் > வாயைப் பயம்

5. யகரம் சகரமாதல்

உயிர் > உசிர்

மயிர் > மசிர்

6.4.2 கல்வெட்டுகள் குறிப்பிடும் கிளைமொழிகள் இடைக்காலத்தில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு வட்டாரங்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், இடைக்காலக் கிளைமொழிகளைப் பற்றி அறிய உதவுகின்றன.

சொற்கள் மாற்றம்

ஒரே பொருளை உணர்த்த ஒரு சொல் ஒரு வட்டாரத்திலும், இன்னொரு சொல் மற்றொரு வட்டாரத்திலும் உள்ள கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கக் காணலாம். இதனைச் சில சான்றுகள் கொண்டு காண்போம்.

சான்று 1:

சம்வத்சரம் – வருஷம்

இங்கே கூறப்படும் ‘சம்வத்சரம்’ என்றசொல் ஆண்டைக் குறிக்கும் சொல்லாகச் செங்கல்பட்டு, வட ஆர்க்காடு மாவட்டக் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆண்டைக் குறிக்க மற்றப் பகுதிக் கல்வெட்டுகளில் ‘வருஷம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சான்று 2:

புத்திர பவுத்திர பாரம்பரியம் – மக்க மக்கள்

ஒருவனுடைய மகன் மற்றும், பேரன் வழியில் தொடர்ந்து வரக்கூடிய பரம்பரையைப் பற்றிய சொல்லாகப் ‘புத்திர பவுத்திர பாரம்பரியம்’ (புத்திர- மகன்; பவுத்திர- பேரன்; பாரம்பரியம்-பரம்பரை) என்ற சொல், மதுரை, வட ஆர்க்காடு மாவட்டக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அதே பொருளைக் குறிக்கக் கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகளில் ‘மக்க மக்கள்’ என்ற சொல் காணப்படுகிறது. தற்காலத்திலும் சில பகுதிகளில் ‘மக்க மக்கள்’ என்ற சொல் ‘மக்க மக்க’ என்று மேலே குறிப்பிட்ட பொருளில் வழங்கிவரக் காணலாம்.

சான்று 3:

அனுபவி – மய்யாள்

‘அனுபவி’ என்ற பொருளைக் குறிக்கும் ‘மய்யாள்’ என்ற சொல் கி.பி. 15, 16, 17 ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த கன்னியாகுமரி, திருநெல்வேலிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கி.பி. 1598 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டு ஒன்றில் ‘அனுபவி’ என்ற சொல்லே காணப்படுகிறது.

ஒலியமைப்பில் மாற்றம்

இடைக்காலக் கல்வெட்டுகளில் உள்ள கிளைமொழிகளில் குறிப்பிடத்தக்க ஒலிமாற்றங்களைக் காணமுடிகிறது. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

1. ன்ற் > ண்ண்

புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகளில் இந்த ஒலிமாற்றம் காணப்படுகிறது.

ஒன்று > ஒண்ணு

கொன்று > கொண்ணு

தென்மாவட்டங்களில் இருந்த இந்த ஒலிமாற்றம், வட மாவட்டங்களுக்கும் சென்றது. கி.பி. 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வடமாவட்டக் கல்வெட்டு ஒன்றில் ‘ன்ற் > ண்ண்’ மாற்றம் காணப்படுகிறது.

பன்றி > பண்ணி

2. ற்க், ட்க் > க்க்

இந்த ஒலிமாற்றம் தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் உள்ள கி.பி. 14, 15, 16 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

மேற்கு > மேக்கு

தெற்கு > தெக்கு

விற்கிற > விக்கிற

உட்கிடை > உக்கிடை

3. ரகர மறைவும், ரகரத் தோற்றமும்

இடைக்காலக் கல்வடெ்டுகளில் இம்மாற்றங்கள் காணப்படுகின்றன.

அ) கீர்த்தியை > கீத்தியை

கார்த்திகை > காத்திகை

தளர்ந்து > தளந்து

வார்த்து > வாத்து

பார்க்க > பாக்க

இச்சொற்களில் ரகரம் மறைகின்றது.

ஆ) கோவை > கோர்வை

சேவை > சேர்வை

சீமை > சீர்மை

இச்சொற்களில் ரகரம் தோன்றுகிறது.

சமூகக் கிளைமொழி

சமூகக் கிளைமொழி பற்றியும் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. கி.பி. 16 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில்,

செய்தவாள்

என்ற சொல் ‘செய்தவர்’ என்ற பொருளிலும், கி.பி. 17 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில்,

வைஷ்ணவாள்

என்ற சொல் ‘வைணவர்’ என்ற பொருளிலும் வழங்கக் காணலாம். இவ்வடிவங்களை இக்காலத்திலும் பிராமணர்களின் பேச்சு வழக்கில் காணலாம்.

6.5 தற்காலத்தில் கிளைமொழிகள்

தற்காலத்தில் தமிழ்நாட்டில் பேசப்படும் கிளைமொழிகளை மொழிநூலார், ‘வட்டாரக் கிளைமொழி, சமூகக் கிளைமொழி, பார்வைக் கிளைமொழி, பொதுக் கிளைமொழி’ என்றாற் போலப் பலவாறு பாகுபடுத்துகின்றனர். இவற்றுள் குறிப்பிடத்தக்கவை வட்டாரக் கிளைமொழி, சமூகக் கிளைமொழி ஆகியனவாகும். இவற்றைப் பற்றி மொழியியலார் கூறுவனவற்றை இங்கே காண்போம்.

6.5.1 வட்டாரக் கிளைமொழிகள் தமிழ்நாட்டில் வழங்கும் கிளைமொழிகளை அவை வழங்கும் வட்டாரத்தை அல்லது இடத்தை வைத்து மொழியியலார் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். அவை வருமாறு:

1. வடக்குக் கிளைமொழி

2. கிழக்குக் கிளைமொழி

3. மேற்குக் கிளைமொழி

4. தெற்குக் கிளைமொழி

இக்கிளைமொழிகள் தமிழ்நாட்டில் வழங்கும் இடங்கள் பற்றியும், இவற்றின் ஒலியமைப்பு, இலக்கண அமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் மொழியியலார் குறிப்பிடும் கருத்துகளைக் காண்போம்.

வடக்குக் கிளைமொழி

சென்னை, செங்கல்பட்டு, வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு முதலான வடமாவட்டங்களில் வழங்கும் கிளைமொழியை வடக்குக் கிளைமொழி என்பர்.

ஒலியமைப்பில் மாற்றங்கள்

வடக்குக் கிளைமொழியில் ழகரம், யகரமாகவும் ளகரமாகவும் ஸகரமாகவும் மாறி வழங்குகிறது.

கழுதை > கய்தை

கிழவி > கெயவி

பழம் > பயம்

குழாய் > கொயா

பிழைப்பு > பொயப்பு

பழம் > பளம்

இழுத்துக்கொண்டு> இஸ்துகினு

இலக்கண அமைப்பில் மாற்றங்கள்

i) நிகழ்கால இடைநிலையாகிய ‘கிறு’ இல்லாமல் வினைமுற்று வழங்குகிறது.

இருக்கிறது > கீது

கிழிகிறது > கீயுது

ii) ‘விட்டால்’ என்ற உருபு வரவேண்டிய இடத்தில் ‘காட்டி’ என்ற உருபு வருகிறது.

இல்லாவிட்டால் > இல்லாங்காட்டி

வராவிட்டால் > வராங்காட்டி

iii) ‘ஆக’ என்ற உருபு வருமிடத்தில் ‘கோசரம்’ என்பது வருகிறது.

எனக்காக > எனக்கோசரம்

அவளுக்காக > அவளுக்கோசரம்

iv) ஏழாம் வேற்றுமைப் பொருளைக் குறிக்க ‘ஆண்டெ’ என்ற உருபு பயன்படுத்தப்படுகிறது.

என்னிடம் > என்னாண்டெ

வீட்டில் > வீட்டாண்டெ

சொற்கள்

இலவசம் என்பதைக் ‘கொசுரு’ என்றும், பணம் என்பதைத் ‘துட்டு’ என்றும், சின்னம்மா என்பதைத் ‘தொத்தா’ என்றும், அப்பா என்பதை ‘நயினா’ என்றும், கொஞ்சம் என்பதை ‘ரவ்வுண்டு’ என்றும் இக்கிளைமொழியில் வழங்குவர்.

கிழக்குக் கிளைமொழி

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற கிழக்கு மாவட்டங்களில் வழங்கும் கிளைமொழியைக் கிழக்குக் கிளைமொழி என்பர்.

ஒலியமைப்பில் மாற்றங்கள்

i) ககரம் வகரமாக மாறுகிறது

போக > போவ

சாக > சாவ

வேக > வேவ

தோகை > தோவ

ii) பகரம் வகரமாக மாறுகிறது

கோபம் > கோவம்

கபம் > கவம்

இலக்கண அமைப்பில் மாற்றங்கள்

‘வொ’ என்னும் விகுதி உயர்திணை ஒருமையையும், அஃறிணை ஒருமையையும் பன்மைப்படுத்த வருகிறது.

அவனுவொ வந்தானுவொ (அவன்கள் வந்தான்கள்)

மாடுவொ (மாடுகள்)

சொற்கள்

திருநாள் என்பது ‘திருணா’ என்றும், எண்பது என்பது ‘எம்பளது’ என்றும், பதநீர் என்பது ‘பழணி’ என்றும் வழங்குகின்றன. இக்கிளைமொழியில் சிறிய மூட்டையைச் ‘சிப்பம்’ என்றும், குரல்வளையை ‘ஊட்டி’ என்றும் கூறுகின்றனர்.

மேற்குக் கிளைமொழி

கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி முதலான மேற்கு மாவட்டங்களில் பேசப்படும் கிளைமொழியை மேற்குக் கிளைமொழி என்பர்.

ஒலியமைப்பில் மாற்றங்கள்

i) சகரம் ஸகரமாதல்

சாப்பாடு > ஸாப்பாடு

சோறு > ஸோறு

ii) ஜகரம் ஸகரமாதல்

ராஜா > ராஸா

ஜோலி > ஸோலி

இலக்கண அமைப்பில் மாற்றங்கள்

i) மேற்குக் கிளைமொழி கொங்குநாட்டுத் தமிழ் எனப்படும். இதில் ‘ங்க’ என்ற பன்மை விகுதி, வினைமுற்றுகளில் உயர்வு ஒருமை விகுதியாக வழங்குகிறது.

வந்துடுங்கோ

பார்த்தமுங்க

ii) ‘விடு’ என்ற துணைவினைக்குப் பதிலாக, ‘போடு’ என்ற துணைவினை வருகிறது.

சொல்லிவிடு > சொல்லிப்போடு

செய்துவிடு > செய்துபோடு

சொற்கள்

தலைப்பாகை என்பதை ‘உருமாலை’ என்றும், ஒரு வேளை உணவு என்பதை ‘ஒரு சந்தி’ என்றும், தலையணை என்பதைத் ‘தலை மூட்டை’ என்றும், சமையலறை என்பதை ‘அட்டாவி’ என்றும், ஓணான் என்பதை ‘ஒதெக்காண்’ என்றும் கூறுவர்.

தெற்குக் கிளைமொழி

மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி முதலான தென்மாவட்டங்களில் வழங்கும் கிளைமொழி தெற்குக் கிளைமொழி எனப்படும்.

ஒலியமைப்பில் மாற்றங்கள்

i) ழகரம் ளகரமாகவே ஒலிக்கப்படுகிறது.

வாழைப் பழம் > வாளப் பளம்.

ii) சகரம் யகரமாக மாறுகிறது

ஊசி > ஊயி

பாசி > பாயி

iii) சில சொற்களில் மொழிமுதலில் வரும் சகரம் ஜகரமாக மாறுகிறது.

சாமான் > ஜாமான்

இலக்கண அமைப்பில் மாற்றங்கள்

i) ‘மார்’, ‘ஆக்கமார்’ என்னும் பன்மை விகுதிகள் கன்னியாகுமரித் தமிழில் காணப்படுகின்றன.

அக்காமார்

நாடாக்கமார்

ii) ‘அவனை அங்கே பார்த்தான்’ என்னும் தொடரைத் திருநெல்வேலி மாவட்டத்தில் ‘அவனை அங்ஙனே வச்சிப் (வைத்துப்) பார்த்தான்’ என்பர்.

சொற்கள்

அரைஞாண் என்பதை ‘அர்ணாக் கொடி’ என்றும், கறி என்பதை ‘வெஞ்சனம்’ என்றும், ஒன்றும் தெரியாதவனை ‘அப்ராணி’ என்றும் இங்கே, அங்கே, எங்கே என்பனவற்றை முறையே ‘இங்கிட்டு, அங்கிட்டு, எங்கிட்டு’ என்றும், இடையில் அல்லது நடுவில் என்பதை ‘வூடாலே’ என்றும் இக்கிளைமொழியில் கூறுவர்.

இதுகாறும் வட்டாரக் கிளைமொழிகளைப் பற்றிப் பார்த்தோம். இனிச் சமூக கிளைமொழிகளைப் பற்றிப் பார்ப்போம்.

6.5.2 சமூகக் கிளைமொழிகள் இந்தியச் சமூகம், சாதி அடிப்படையில் அமைந்தது ஆகும். சமூக அமைப்பில் பிராமணர்கள் உயர்ந்தோராகவும், தலித்துகள் தாழ்ந்தோராகவும் கருதப்பட்டனர். சமூக உயர்வு தாழ்வுக்கு ஏற்பப் பேச்சுமொழி வேறுபடலாயிற்று. பிராமணர்கள் பல்லாண்டு காலமாக அக்கிரகாரம் போன்ற இடங்களில் தனித்து வாழ்ந்தனர். அது போலத் தலித்துகளும் மற்றவர்களினின்று தனித்துச் சேரிகளில் வாழுகின்றனர். அதனால் அவர்களது பேச்சில் அதிக வேறுபாடு காணப்படுகிறது. தமிழில் சமூகக் கிளைமொழிகளை ஆராய்வோர் மற்றச் சமூகத்தினரைக் காட்டிலும் பிராமணர், தலித்துகள் ஆகிய இரு சமூகத்தவரின் பேச்சுமொழியையே அதிகம் ஆராய்கின்றனர்.

பிராமணர் பேச்சுமொழி

பிராமணர்கள் வடமொழியையும் ஆங்கிலத்தையும் கற்ற இரு மொழியாளர்களாக விளங்குகின்றனர். கோயில்களில் நேரிடையாகப் பெரும்பங்கு வகித்ததால் சமூகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள். இவர்கள் குமரி முதல் சென்னை வரை எந்த வட்டாரத்தில் வாழ்ந்தாலும், இவர்களது பேச்சு வழக்கினில் எந்த வேறுபாடும் காணப்படுவது இல்லை. ஆனால் இவர்களது பேச்சுத்தமிழ் மற்றவர்களது பேச்சுத்தமிழினின்று வேறுபடுகிறது.

வடமொழியில் உள்ள ஸ், ஜ், ஹ் போன்ற ஒலிகள் இவர்களது பேச்சுவழக்கில் காணப்படுகின்றன. மெய் ஒலிகள் தமிழில் மொழி முதல் வாரா. ஆனால் இவர்களது பேச்சு வழக்கில் சில நேரங்களில் மொழி முதலில் வரவும் செய்கின்றன:

மூவிடப் பெயர்களில் தன்மை ஒருமை இடப்பெயராகிய நான் என்பதும், முன்னிலை ஒருமை இடப்பெயராகிய நீ என்பதும், நான்காம் வேற்றுமைக்கு உரிய கு உருபை ஏற்கும்போது மற்றவர்கள் பேச்சுவழக்கில் எனக்கு, ஒனக்கு (உனக்கு) என மாறும். ஆனால் இவர்களுடைய பேச்சுவழக்கிலோ இவை முறையே னேக்கு, னோக்கு என வேறுவிதமாக மாற்றம் அடைகின்றன.

படர்க்கைப் பெயர்கள் எழுவாய் வடிவங்களாக இருக்கும்போது மாற்றம் அடைகின்றன.

அவன் – ஆண்பால் ஒருமை

அவெ – பெண்பால் ஒருமை (அவள்)

அவா – உயர்வு ஒருமைப் பன்மை (அவர்)

அவுங்க – பலர்பால் (அவர்கள்)

மற்றவர்கள் பேச்சில் முன்னிலையில் உள்ளவரை வினவும் போது, எப்போ வந்தீர்கள் அல்லது எப்போ வந்தீங்க என வினவுவர். இவர்கள் பேச்சில் அவ்வாறு வினவுவது எப்போ வந்தேள் என மாறி அமைவதைக் காணலாம்.

மேலும் இவர்களது பேச்சுவழக்கில் கீழ்க்கண்ட அருஞ்சொற்கள் காணப்படுகின்றன.

ஆம்படையான் (கணவன்)

ஆத்துக்காரி (மனைவி)

தோப்பனார் (அப்பா)

மாட்டுப் பொண் (மருமகள்)

ஓரகத்தி (கணவனுடைய சகோதரர் மனைவி)

சட்டகர் (மனைவியினுடைய சகோதரி கணவர்)

அத்திம்பேர் (அக்கா கணவர், அத்தை கணவர்)

பொண்டுகள் (பெண்கள்)

ஜாகை (தங்கியுள்ள இடம்)

ஜலம் (தண்ணீர்)

ஆத்துக்கு (வீட்டிற்கு)

தலித்துகள் பேச்சுமொழி

இந்து சமயச் சாதி அடிப்படைக் கோட்பாட்டின்படி தலித்துகள் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் உள்ளனர். தனியாக வாழ்தல், மற்றவர்கள் இவர்கள் மீது கொண்டுள்ள சமுதாய நோக்கு முதலியவற்றால் பல்லாண்டு காலமாக இவர்கள் தனித்து வாழ்கின்றனர். நாடு விடுதலை அடைந்த பின்னர் இவர்களது கல்வி, சமூக, பொருளாதாரத் துறையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இவர்களது பேச்சுத்தமிழ் மற்றவர்களின் பேச்சுத்தமிழினின்று வேறுபட்டுக் காணப்படுகிறது.

ஒலியமைப்பில் மாற்றம்

i) உகரம் இகரமாக மாறுகிறது.

முக்கியம் > மிக்கியம்

புல்லு > பில்லு

காசு > காசி

ii) ழகரம் ளகரமாக மாறுகிறது.

குமிழ் > கும்ளு

சிமிழ் > சிம்ளு

iii) இடையில் வரும் பகரம் வகரமாக மாறுகிறது.

சாபம் > சாவம்

கோபம் > கோவம்

iv) இடையில் வரும் ‘க’ என்பது ‘கா’ என மாறுகிறது.

தங்கச்சி > தங்காச்சி

சொற்கள்

ஏந்த்ரொம் (திரிகை)

ஏணெ (தூளி)

குந்து (உட்கார்)

கெடாசு (எறி)

பிசினி (கோந்து)

மச்சி (மனைவியின் தங்கை)

முதுக்கான் (பெரியவீடு)

தற்காலத் தமிழில் உள்ள கிளைமொழிகளைச் சமூகநிலை அடிப்படையில் காணும்போது, பிராமணர், தலித்துகள் ஆகிய இரு சமூகப் பிரிவினரின் கிளைமொழிகளைப் பற்றி மட்டுமே மேலே காண்போம். மொழியியலார் பிராமணர், தலித்துகள் மட்டுமன்றி வேறுபல சாதிப் பிரிவினரின் கிளைமொழிகளின் அமைப்பையும் ஆராய்ந்து காண்கின்றனர். மேலும் செய்கின்ற தொழில் அடிப்படையிலும் கிளைமொழிகளை ஆராய்கின்றனர். சான்றாக மீன்பிடித்தலைத் தொழிலாக உடைய மீனவர் பேச்சுமொழி பற்றி மொழியியலார் ஆராய்ந்து விளக்கியுள்ளனர். இது போலக் கிளைமொழிகள் பற்றிய பலதரப்பட்ட ஆய்வுகள் நடந்துள்ளன; நடந்து வருகின்றன.

6.6 தொகுப்புரை

இப்பாடத்தில் கிளைமொழி என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தைச் சான்றுகளுடன் அறிந்துகொண்டீர்கள். பழந்தமிழ் இலக்கணநூலாரும், தற்கால மொழியியலாரும் செய்துள்ள கிளைமொழிப் பாகுபாட்டைத் தெரிந்து கொண்டீர்கள். பழங்காலத்திலும், இடைக்காலத்திலும் கிளைமொழி வழங்கிய இடங்கள், அவ்விடங்களில் வழங்கிய கிளைமொழிகள் பற்றி உரையாசிரியர்கள் கூறும் கருத்துகளை அறிந்து கொண்டீர்கள். தற்காலத்தில் மொழியியலார் தமிழில் வழங்கும் கிளைமொழிகளை வட்டாரம், சமூகநிலை போன்றவற்றை வைத்து எவ்வாறெல்லாம் வகைப்படுத்தி விளக்கிக் காட்டியுள்ளனர் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டீர்கள்.