தமிழக வரலாற்றுக்கும், பண்பாட்டிற்கும் ஏற்ப ஐந்திணைகளாகப் பிரிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் கட்டப்பட்ட குடியிருப்புகள் விளக்கப்படுகின்றன.
கட்டடக்கலையின் சிறப்பை உணர்வதற்கு நகர அமைப்பின் சிறப்பும் பாகுபாடுகளும் விளக்கப்படுகின்றன. இலக்கியங்களில் மதுரை, பூம்புகார் ஆகிய நகரங்கள் வருணிக்கப்படுதலும் சுட்டிக் காட்டப்படுகிறது.
தனி மனிதக் குடியிருப்புகளும் அரசர்களின் குடியிருப்பாகிய அரண்மனையும், நாட்டுப் பாதுகாப்பிற்கான அரண்களும் கூறப்படுகின்றன. வீரர்களுக்குரிய படைக் கருவிகள் கிடைக்கும் வண்ணம் படைக்கொட்டிலும் உள்ளது என்பதும் கூறப்படுகின்றது.
மரக்கலம் (கப்பல்) செலுத்துபவர்களுக்குக் கடற்கரை தெரியும்படி ஒளிமிக்க விளக்கு உடைய கலங்கரை விளக்கம் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் முற்காலத்திலேயே இருந்துள்ளது.
கவின் கலை
அழகு அனுபவ (Aesthetic experience) வெளிப்பாடு கவின்கலை ஆகும். கவின் கலைகளுள் ஓவியம், சிற்பம், கட்டடம், நடனம், நாடகம் ஆகியவை காட்சிக் கலைகள் (Visual arts) என்ற பாகுபாட்டில் அடங்கும். இத்தகைய கலைகளுள் கட்டடக்கலை, உலகியற் பயன்மிக்கது. நாட்டு வரலாற்றுக்கும் நாகரிகத்திற்கும் பெரிதும் துணை நிற்கக் கூடிய கலையாக அது விளங்குகிறது.
கட்டடக் கலையை நன்கு புரிந்து கொள்ள, அதன் சிறப்புப் பிரிவுகளைத் தெரிந்து கொள்வது நல்லது.
1.எதற்காக ஒரு கட்டடம் கட்டப்படுகிறதோ அதற்கான சமூகத் தேவைகளை அது நிறைவு செய்ய வேண்டும்.
2.கட்டடத்திற்குப் பயன்படும் பொருள்கள் கட்டமைப்பு ஆகியவை உறுதியாகவும், பொருத்தமாகவும், நீடித்து நிற்பவையாகவும் இருத்தல் வேண்டும்.
3. கட்டடம் பார்வைக்கு அழகனுபவத்தால் இன்பந்தரக் கூடியதாகவும் அமைதல் வேண்டுமென்று அறிஞர்கள் பொதுவாகக் கூறுவர்.
சிற்பநூல் தேர்ச்சி பெற்றவர்கள், தமிழகத்தைப் பொறுத்த வரையில் கட்டடக் கலையின் தொழில் நுட்பத்தையும் சிறப்பினையும் நன்கு புரிந்து கொள்ளுவதற்கு முதலில், அடிப்படையாக ஊரமைப்பை அல்லது நகர அமைப்பைத் தெரிந்து கொள்வது சிறந்தது. எனவே, அதுபற்றித் தொடர்ந்து சில நுண்குறிப்புகளைக் காண்போம். அதற்குக் கட்டடக் கலைக் கொள்கையைத் தெரிந்து கொள்ளல் வேண்டும்.
தொன்மை
மனிதனது வாழ்வியலுடன் ஒட்டி வளர்ந்த தொன்மையான கவின் கலையாகக் ‘கட்டடக் கலை’ போற்றப்படுகின்றது. மனிதன் முல்லை நிலத்தில் வாழக்கற்றுக் கொண்ட காலத்திலேயே (chalcolithic age) தனக்கெனக் குடிசையோ வீடோ கட்டிக் கொள்ளக் கற்றுக் கொண்டான். அதற்கேற்ப அவனது கட்டடக் கலை அறிவும் வளர்ந்து வந்துள்ளது.
சங்க காலத்தில் மாட மாளிகைகளும், கூடகோபுரங்களும், கோட்டை கொத்தளங்களும், அரண்மனைகளும் இருந்தமை பற்றிச் சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்களும் கூறுகின்றன. ஆனால், இன்றைக்கு அவற்றின் இடி பாடுகள் கூடக் கிடைக்கவில்லை. பல்லவர், சோழர், பாண்டியர் முதலியோர் கட்டிய ஆலயங்கள் காணக்கிடைக்கின்றன. அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள், பாதுகாப்பு வழங்கிய கோட்டை கொத்தளங்கள் எங்கே? ஒன்று கூட இருந்த இடம் தெரியவில்லை.
இந்நிலையில் பல்லவ மன்னர்கள் குடைவரைகளையும் ஒற்றைக் கல்கோயில்களையும் கட்டுமானக் கோயில்களையும் பாறைக் கற்களால் உருவாக்கித் தந்துள்ளனர். அவற்றைக் கொண்டுதான் தமிழ்நாட்டுக் கட்டடக்கலை உருவாகி வளர்ச்சி பெற்று வருகின்றது என்பது தெளிவு; இதனையே கட்டடக் கலைக் கொள்கையாகக் கொள்ள வேண்டுமென்பர்.
தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் ஐந்திணைப் பகுதிகளிலும் மக்கள் எவ்வாறு தம் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டார்கள் என்பதைக் காண்போம்.
பெயர்கள்
ஊர்களைப் பாகுபடுத்தும் பொழுது நகரம்,பட்டணம் முதலியபத்துவகைப் பெயர்கள் கூறுவர்.
(1) சிற்றூர்
சிறிய ஊர். சில குடிசைகளையோ, வீடுகளையோ கொண்டது. வசதிகள் குறைவான இடம்.
(2) நகரம்
பல்வேறு தொழிற் சாலைகளும் அரசாங்க நிருவாக மாவட்டத் தலைமை அலுவலகங்களும், கலைக் கூடங்களும், காவல் நிலையங்களும் கூடிய மாவட்டத் தலைநகரமாகும்.
(3) பட்டினம்
ஆறுகள், கடல்துறைமுகங்கள், வணிகத் தலைமை நிலையங்கள், கருவூலங்கள், ஆபரணத் தொழிற் கூடங்கள், நெசவுச் சாலைகள், அயல்நாட்டு வணிகர் தங்குமிடங்கள், மாவட்டத் தலைமை அதிகாரிகள் தங்குமிடங்களுடன் கூடிய நகரைக் குறிக்கும்.
(4) படைவீடு (பாசறை)
நாட்டுப் பாதுகாப்பிற்காக எப்போதும் போர் வீரர்களைச் சேர்த்துச் சித்தப்படுத்துவதற்கும், போர்முகத்தில் சுற்றுப் புறங்களி்ல் அவர்களைத் தங்க வைப்பதற்கும் உரிய இடமாகும்.
(5) தலைநகரம்
அரசருடைய மாளிகை, மற்றும் அமைச்சர்கள், முதன்மையலுவலர்கள், படைவீரர்கள், பாதுகாப்புள்ள கோட்டை கொத்தளங்களுடன் சுமார் இரண்டு லட்சம் மக்கள் தொகைக்கு மேற்பட்ட அந்தணர், அரசர், வணிகர், வளோளர்கள் வாழுமிடம்.
நாட்டின் பாதுகாப்பிற்காக நான்கு பக்கங்களிலும் கோட்டைகள், பொறிகள், இயந்திரங்கள், போர்ப்படைக் கருவிகளைத் தயாரிக்கும் சாலைகள், போர் வீரர்கள் பயிற்சி பெறுமிடங்கள் முதலியவற்றையுடைய தலைநகரை அடுத்துள்ள இடம்.
மதுரை நகரின் நீர்வளத்தைப் பாண்டியன் மேம்படுத்தி, நீர்ப்பாசனத்திற்கேற்ப, மலை, காடுகள் வழியே நீர்க்கால்களை உண்டாக்கினான்; வையை எனும் ஆற்றைச் செம்மைப்படுத்தி நாட்டு வளத்தை மேம்படுத்தினான்.
மதுரைக் காஞ்சி தரும் செய்தி
மதுரை நகர்ப்புறத்தே வையை ஆற்றுத்துறைகளின் பூந்தோட்டங்களின் நடுவே பாணர் சேரிகள் அமைந்திருந்தன. மதுரை நகரைச் சுற்றிக்கிடந்த அகழி பாதுகாப்பிற்காகத் தோண்டப்பட்டது. அந்தப் பேரகழியை மதுரைக் காஞ்சி,
மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கு
என வருணித்துள்ளது.
மதுரை நகர வாயிலைக் கடந்தால், நகர்க்குள் மண்டபம், கூடம், தாய்க்கட்டு, அடுக்களை முதலியவற்றைக் கொண்ட பெரிய வீடுகள் யாவும் சிற்பவிதிப்படி கட்டப்பட்டு, உயரமாய் உள்ளன. இத்தகைய மாளிகை போன்ற பேரில்லங்களை வரிசையாக இருபுறமும் கொண்ட தெருக்கள் விசாலமாக உள்ளன; ஆறு கிடந்தாற் போன்ற அகன்ற நெடுந்தெருக்களும், பல பண்டங்கள் பெருமளவில் விற்கும் கடைத் தெருக்களும் மதுரைக்குப் பெருமை சேர்த்தன. இவ்வாறு மதுரையில் கட்டடக் கலை எந்த அளவிற்குத் தரம் உயர்ந்து நின்றது என்பதை அறியலாம்.
பரிபாடல் தரும் செய்தி
சங்க காலத்தையொட்டிய காலப்பகுதியில் மதுரை மாநகர் பரிணாம வளர்ச்சி மிகப் பெற்றுள்ளது என்பதை இலக்கியங்களின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். மதுரை, திருப்பரங்குன்றம் ஆகியவற்றின் தோற்றப் பொலிவை அறிவதற்குப் பரிபாடல் பெரிதும் துணை நிற்கும்.
உலகளாவிய நாகரிகங்கள் ஆற்றங்கரையையொட்டியே அமைந்துள்ளன என்பது பலரும் அறிந்ததே. வையைக்கரை நாகரிகத்தின் பொலிவு மதுரை மாநகரில் காணப்படும்.
வையையாற்றங்கரையில் அமைந்துள்ள மதுரையையும் கோயிலையும் இணைத்து வருணிக்கையில், திருமாலின் உந்தித் தாமரை மலரைப் போல உள்ளது மதுரை; அந்தத் தாமரையின் இதழ்களைப் போலத் தெருக்கள் அழகுற அமைந்துள்ளன; அந்த மலரிதழ்களின் நடுவேயுள்ள பொகுட்டைப் போன்று மதுரையின் நடுவில் மதுரைச் சொக்கநாதர் கோயில் அழகுறக் காணப்படுகிறது; மலரின் கண் உள்ள மகரந்தத் தூள்களைப் போலத் தமிழ்க் குடிமக்கள் இல்லங்களில் வாழ்கின்றனர்; தாமரைத் தாதுக்களை உண்ணும் வண்டுகளைப் போல இரவலர் கூட்டமும் உளது; அஃதாவது, நலமும் வளமும் நாடி இரவலர் வருகின்றனர். நான்முகன் படைத்த வேதவொலி கேட்டு அவ்வூரில் நாளும் துயில் எழுகின்றனர். இவ்வாறு பரிபாடல் மதுரையைச் சிறப்பித்துக் கூறுகின்றது.
இவ்வளவு சிறப்பிற்கும் அடிப்படைக் காரணம், பல படிநிலைகளில் அமைந்த கட்டடக்கலை என்பது தெரிய வரும்.
பட்டினப்பாலை தரும் செய்தி
நாட்டு வளத்தைப் பொறுத்தே வளமனைகளும், பிறதொழிலகங்களும் அமைவது நியதி. கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் பல்வகைக் கட்டடக் கூறுகளைப் புலப்படுத்திக் காட்டுகிறார்.
காவிரிப் பூம்பட்டினத்தில் கரும்புச் சாறு பிழியப் பெற்றுக் காய்ச்சப்படும் சர்க்கரை ஆலைகள் உள்ளன.
பெரிய வீடுகளின் அகன்ற முற்றத்தில் காயவைக்கப் பரப்பியுள்ள நெல்லைத் தின்பதற்கு வரும் கோழிகளை, அழகிய மகளிர் தம் காதிலணிந்துள்ள பொற்குழைகளைக் கழற்றி (அவற்றை) விரட்டுகின்றனர்.
நெய்தல் நிலப்பகுதியான பூம்புகாரில் உப்பு வணிகர்கள் வண்டியில் உப்பு மூட்டைகளை ஏற்றிச் சென்று மருதநிலப் பகுதியில் விற்றுவிட்டு நெல்லுடன் திரும்புகின்றனர். பெரிய பொய்கையேயல்லாமல் சோமகுண்டம், சூரியகுண்டம் எனப்பெயரிய நீர்நிலைகளும்உள்ளன.
புலி முத்திரை பொறிக்கப்பட்ட கதவுடைய மதிலைக் கொண்ட அழகிய சமையற் கூடம் உள்ளது; அது பசித்தோரின் பசிதீர்க்கும் அறச்சாலையாக விளங்குகிறது. கேணியும் முற்றமும் கொண்ட தொழுவத்தில் பெரிய காளைகள் கட்டப்பட்டுள்ளன.
சமண பௌத்தர்கள் தங்கும் பள்ளிகளும், சைவத்துறவியர் தங்கும் பொழில்களும் உள்ளன. பூதம் காக்கின்ற சூழலில் காளிகோயிலும் அங்கு உண்டு. இஃது ஒரு புறமிருக்க இளைஞர்கள் போர்ப்பயிற்சி புரியும் இடங்களும் உள்ளன. பரதவர் வாழும் குடிசைகளின் முற்றங்களில் மீன் வலைகளை உலர்த்தியுள்ளனர்.
இரவு வேளையிலும் வேந்தனுக்குரிய சுங்கப் பொருள் காக்கும் அலுலர்கள், அளந்தறியா ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்களைக் கொண்ட பொதி மூட்டைகளுக்குப் புலி முத்திரையிட்டுச் சுங்கச் சாவடி முற்றத்தில் திரட்டி வைப்பர்.
ஆவணத் தெருவிலே படிக்கால் (stairs), திண்ணை, இடை கழி முதலியவை அமைந்த மாடங்களில் இளநங்கையர் பலகணி வாயிலாகக் காணும்படி வேலன் வெறியாட்டு நடைபெறும்.
கோயில்களிலும், கடைகளிலும், பட்டிமன்றங்களிலும், புகார்த்துறையில் நங்கூரமிட்டுநிற்கும் மரக்கலங்களிலும், மதுக்கடைகளிலும் பல்வகைக் கொடிகள் பறக்கின்றன. இவ்வாறு பட்டினப்பாலை புகார் நகரக் கட்டடக் கூறுகளைக் காட்டுகின்றது.
1.3.3 காஞ்சி மாநகர்
காஞ்சிபுரம் சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும், பல்லவர் காலத்திலுமாகப் பல காலகட்டங்களில் படிப்படியே வளர்ச்சி பெற்ற மிகச் சிறந்த நகராகும்.
இது, பல்லவர் குலமுதல்வர்களாகிய தொண்டைமான்களின் ஆட்சியில் தலைநகராகிய பெருமை கொண்டது. பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலால், காஞ்சியின் இயற்கை வளமும் நகர அமைப்பும் ஓரளவு தெரிய வரும்.
உலகிலுள்ள நகரங்கள் எல்லாவற்றிலும் சிறந்து நிற்பது காஞ்சி மாநகராகும்; இப்பெருநகரைச் சுற்றிலும் செங்கல்லால் அமைந்த மதிலும், அதனைச் சார்ந்து படைவீரர்கள் தங்கியிருக்கும் படை வீடுகளும் இருந்தன என்பதைப் பெரும்பாணாற்றுப்படையால் தெரிந்து கொள்ளலாம்.
தேர்கள் ஓடும் பெரிய தெருக்கள் இருந்தன என்பதையும், பல வகையான பண்டங்களை விற்கவும் வாங்கவும் பெரிய கடைகள் இருந்தன என்பதையும், குடிமக்கள் நெருக்கமாக வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்ந்தனர் என்பதையும், இந்தக் கச்சிமாநகரில் திருவெஃகா என்ற வைணவத்தலம் உள்ளது என்பதையும் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.
நுண்வினைக் கம்மியர் காணா மரபின்
துயர்நீங்கு சிறப்பினவர் தொல்லோ ருதவிக்கு
மயன் விதித்துக் கொடுத்த மரபின இவை தாம் (106-108)
எனவரும் அடிகளை ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இனி, வீடுகட்டும் பொழுது பின்பற்றக் கூடிய சில விதிமுறைகளைக் காண்போம்.
சிறு வீடாயினும் பெரிய மாளிகையாயினும் கட்டடக் கலை அடிப்படையில் வீடு கட்டும் மனையிடத்தை வரையறை செய்து கொள்ள வேண்டும். அடுத்து, வீடு பறித்தல் (அடிப்படை – அத்திவாரம் – அமைக்கப் பள்ளம் தோண்டுதல்), கல்லும் சுண்ணாம்பும் கலந்து அழுத்தமாக அடிப்படை போடுதல், சுவர் அமைத்தல், முதல் வாயில் (முகப்பு நிலை) வைத்தல், காலதர் (ஜன்னல்) அமைத்தல், விட்டம் அமைத்தல், மேற்கூரையைத் தேர்ந்து அமைத்தல், தளவரிசை அமைத்தல், சுவர்களுக்குச் சுண்ணாம்புக் கலவை பூசுதல், வெள்ளையடித்தல், தச்சுக் கழித்தல் (கண்ணேறு படாதிருக்க ஆவன செய்தல்), புதுமனை புகுதல் முதலிய பலவும் கட்டடக் கலையுடன் தொடர்பு கொண்டவையாகும். இவற்றையெல்லாம் முன்னோர்கள் அனுபவ மரபுச் செல்வமாக (
சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்
(பெரும்பாணாற்றுப்படை. 405)
(சுடுமண் = சுட்டமண், செங்கல்)
இட்டிகை நெடுஞ்சுவர்
(அகநானூறு. 167 : 13)
(இட்டிகை = செங்கல்)
எனவரும் செய்யுட் பகுதியாலும், தூண் வைத்துக் கட்டும் இல்லம் இருந்தமை பற்றிச்,
சிற்றில் நற்றூண் பற்றி (புறநானூறு. 86 : 1)
கவை துற்ற நாற்காற் பந்தர்ச் சிறும னை வாழ்க்கை
(புறநானூறு. 29 : 19-20)
(கவைதுற்ற = பிரிவு தோன்ற)
எனவரும் செய்யுட் பகுதியாலும், புல்லாலும் வரகு வைக்கோலாலும் தென்னங் கீற்றாலும் வீட்டின் கூரை வேய்ந்த பாங்கினைப்,
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து
(புறநானூறு. 120 : 13)
படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை
(அகநானூறு. 87 : 3)
(குரம்பை = சிறுகுடில்)
பருவ வானத்துப் பாமழை கடுப்பக்
கருவை வேய்ந்த கவின்குடிச் சீறூர்
(பெரும்பாணாற்றுப்படை. 152 : 153)
பா = பரவிய;
பெரிய ; கருவை = வரகு வைக்கோல் ;
சீறூர் = சிறிய ஊர்;
எனவரும் செய்யுட்பகுதியாலும் அறிந்து கொள்ளலாம். மிகப் பண்டைய காலத்திலேயே ஓவியம் போன்ற மனைகள் கட்டடக் கலை நேர்த்தியுடன் கட்டப்பட்டிருந்தன. இதனை
ஓவத்தன்ன இடனுடை வரைப்பின் (நற்றிணை. 182 : 2)
ஓவத்தன்ன வினைபுனை நல்இல் (அகநானூறு. 98 : 11)
(ஓவம் = ஓவியம்)
எனவரும் செய்யுட் பகுதிகளால் தெரிந்து கொள்ளலாம். பெருமனைகள் கட்டிய காலத்தில், மக்கள் தம் வளத்துக்கும் வசதிக்கும் ஏற்ப வீட்டின் பல பக்கங்களிலும் படிகளுடன் கூடிய திண்ணைகளைக் கட்டி வாழ்ந்துள்ளனர்.
மாடம், மண்டபம் முதலிய உயர்தரமான கட்டடங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. மாடத்துக்குச் சித்திரம் எழிலூட்டும் என்பதைப் பிற்காலத்துப் பவணந்தி முனிவர் தம் நன்னூலில், மாடக்குச் சித்திரம் (55) எனக் கூறிக் காட்டியதை நினைவில் கொள்ளலாம்.
அழகிய அரண்மனை மாடத்தில் தீட்டப்பெற்ற வேங்கைப் புலியின் ஓவியத்தைக் கண்டதும் கரிய பெண்யானை நடுக்க முறுகிறதாம்! இளநங்கையரும் கண்டு அச்சமுற்று நடுங்குகின்றனராம்! இதனைப் பரிபாடலில்,
எழில் மாடத்துக்
கைபுனை கிளர்வேங்கை காணிய வெருவுற்று மைபுரை
மடப்பிடி மடநல்லார் விதிர்ப்புற
(10 : 45-47)
கைபுனை = கையால் எழுதப்பெற்ற ;
வெருவு = அச்சம் ;
விதிர்ப்பு = நடுக்கம்
எனவரும் பாடற் பகுதியால் அறியலாம்,
அரசர்க்கே தனிப்பட்ட முறையில் சொந்தமான சித்திரமாடங்களும் அக்காலத்தில் கட்டப்பட்டிருந்தன. அவற்றைப் பொது மக்களும் உத்திரவு பெற்ற ஓவியங்களைக் கண்டுகளிக்கக் கூடிய முறையில் வசதி இருந்தது.
பொதுவாக மக்களைக் காப்பதற்காக முற்கால அரசர்கள் ஊர்களையும் நகரங்களையும் சுற்றிக் கோட்டைகளை கட்டியிருந்தனர் என்பதை வரலாறு கூறும்.
சில குறுநில மன்னர்களுக்கு, மலைகளும் அடர்த்தியான காடுகளும் நிறைந்த பகுதிகளே பாதுகாப்பான கோட்டைபோல விளங்கின. இத்தகைய துர்க்சத்திற்கு எடுத்துக் காட்டாக வள்ளல் பாரி ஆண்ட பறம்பு மலையைக் கூறலாம்.
நகரின் அமைப்பில் அகநகர், புறநகர் என இருவகைப் பாகுபாடுகள் இருந்தன. அந்நகரில் மிகத் தேவையான கருவூலங்களும் படைக்கலக் கொட்டில்களும் அமைந்திருக்கும். புறநகரில் பல்வகைப் போர் வீரர்களும் பல்வகைத் தொழில் புரிவோர்களும் நம்பிக்கைக்குரிய நன்மக்களும் தங்கியிருப்பர். இவ்வாறு அமைந்துள்ள தலைநகரைச் சுற்றிலும் போர்த்திறம் மிக்க வீரர்கள் அருகிருக்கும் வகையில் உயரமான பெரிய மதிற்சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கும். இந்த மதிலையடுத்து வெளியே நீர் நிறைந்த ஆழமான அகழி அமைக்கப்பட்டிருக்கும். அந்த அகழியைப் பகைவர்கள் கடந்து உள்ளே வாராதவகையில் முதலைகள் அகழியில் விடப்பட்டிருக்கும்.
கோட்டை அமைப்பை அகழிகள், அரண்கள், அரண்மனைகள், படைக்கலக் கொட்டில் முதலிய பல பகுதிகளாகப் பிரித்துக் காணலாம்.
பொதுவாகக் கோட்டை மதில் எப்படிப் பாதுகாப்பு அரணாக விளங்குதல் வேண்டுமென்பதைத் திருவள்ளுவர்,
உயர்வகலம் திண்மை அருமையிந் நான்கும்
அமைவரண் என்றுரைக்கும் நூல்
(குறள். 743)
எனக் கூறிக்காட்டுகிறார். (உயரம், அகலம், திண்மை, அருமை உடையதாக அரண் அமையவேண்டும்.)
கோட்டை மதிலரண் பற்றிச் சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி புலவர் நாவினால் வரையறுக்க முடியாத பெரும்புகழ் படைத்த வீரமன்னவன். கானப்பேரெயில் கொண்ட வேங்கை மார்பன் ஆழமான அகழியையும் உயரமான கோட்டை மதிலையும் அம்பு எய்யும் அறைகளையும் அடர்த்தியான காவற்காடுகளையும் உடையவன். எனினும், பாண்டியன் உக்கிரப் பெருவழுதியால் தோற்கடிக்கப்பட்டான். அவனது கானப் பேரெயிலை வென்று கையகப்படுத்திய காரணத்தால் பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனப் புலவர்களால் போற்றப்பட்டான்.
இத்தகைய சூழலில் அந்த அரண்மனையின் கட்டுக்கோப்பினை வருணித்துக் காட்டுகிறார் கணக்காயர் மகனார் நக்கீரர்.
கட்டடக் கலைக் கூறுகள்
அரண்மனையைக் கட்டுவதற்கு முன், சிற்பநூல் விதிப்படி நண்பகலில் சித்திரைத் திங்களில் இரு கம்பு நட்டுச் சூரியன் நிழலால் திசையினைச் சரிவரக் குறித்துக் கொண்டு, திசை தெய்வங்களை வழிபட்டவாறு கட்டட வேலையைத் தொடங்கினர். மன்னர்க்கு ஏற்றவாறு மனைகளையும், அவற்றில் பாங்கான சுவர்களுடன் கூடிய வாயில்களையும், மண்டபங்கள் முதலியவற்றையும் வகுத்து அமைத்துள்ளனர். இவ்வாறான இடங்களையெல்லாம் ஒரு சேர வளைத்துப் பெரிய வலிவான மதிலையும் கட்டியுள்ளனர்.
வலிமையுடைய மதிலி்ல் உள்ள நுழைவாயிலில் மரகதவுகள், ஆணிகள், பட்டங்கள் ஆகிய பருமனான இரும்பாலே கட்டிச் சாதிலிங்கம் வழித்துப் பூசப் பெற்றது. தாழ்ப்பாளுடன் அமைந்த சிறந்த இழு கதவுகளாக அமைந்தது. கைத்தொழில் வல்ல தச்சன் திறம்பட அமைத்த காரணத்தால், இடைவெளி இல்லாமல் பல மரங்களும் தம்மில் இறுகச் சேர்ந்த உத்தரக் கற்கவியிலே (மேலே கதவு நிலையின் மேலே இடப்பட்டிருக்கும் பாவு கல்) செருகிய நிலைகளை யுடையது. உத்தரக் கற்கவி, நடுவே இலட்சுமியின் திருவுருவம் அமைக்கப்பெற்றுள்ளது. நிலைகள் வெண்சிறு கடுகை அப்பி நெய் பூசப் பெற்றுள்ளன. மேலும், வெற்றிக் கொடிகளுடன் யானைகளுடன் வீரர்கள் நுழையும்படி, உயர்ந்த மலையை நடுவே வெளியாகக் குடைந்து திறந்தாற் போன்ற கோபுரத்தை யுடைய அகன்ற வாயில் உள்ளது. அத்தகைய மன்னர் மாளிகை வெண்மணற் பரப்புடைய முற்றத்தினையும் உடையது.
அரண்மனையின் உள்ளே நிலாப்பயன் கொள்ளும் நிலாமுற்றம்; முற்றத்து நீர் வீழ்ந்து தொடும் வகையில் மீனின் திறந்த வாயைப் போன்ற தூம்பு (கால்வாய்) உள்ளது ;
பாண்டிமாதேவியாகிய கோப்பெருந்தேவி தங்கும் உட்கோட்டையில் உள்ள அந்தப்புர மாளிகை, கட்டடக் கலை நேர்த்தி வாய்ந்தது. அங்கே யவனர்கள் செய்த பாவை விளக்குகளில் நெய் வார்த்து ஏற்றிய விளக்கு வெளிச்சம் மேல் நோக்கி எரிகின்றது. நிறைந்த பாதுகாப்புடன் கூடிய பல கட்டுகளுள்ள அந்தப்புரச் சுவர்கள் மலைகளைக் கண்டாற் போன்ற உயரமுடையவை, மலைகளைச் சேர்ந்து இந்திரவில் (வானவில்) கிடந்தாற் போலப் பல நிறக்கொடிகள் காணப்படுகின்றன ; வெண்மையாக விளங்கும் சாந்து பூசப் பெற்றுப் பொலிவுடன், செம்பினாலே செய்தாலொத்த வேலைப் பாட்டுடன் கூடிய தூண்கள் கருமையும் திரட்சியும் வலிமையும் உடையவை. இத்தகைய வடிவ அழகினையுடைய, கருப்பகிருகம் (உள்அறை) உள்ளது.
இந்தச் செய்தி சங்க காலத்திலேயே மிகச் சிறந்த வேலைப்பாடு கொண்ட கட்டடங்களை அமைக்கும் கலை வல்லுநர்கள் இருந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றது.
வள்ளல் அதியமான் சிறந்த போர்த்திறம் மிக்க மன்னன். ஒரு காலத்தில் அமைதியை நாடிப் புலவர் ஒளவையாரைத் தொண்டைமானிடம் தூது விட்டான் ; தொண்டைமான் ஒளவையாரிடம் தன் பெரிய படைக்கலக் கொட்டிலைக் காட்டிச் செருக்குடன் நின்றான். அவனது செருக்கையடக்கும் நோக்கத்தில் ஒளவையார், இங்கே படைக்கருவிகள் மயில் தோகை அணியப்பட்டு மாலை சூட்டப்பட்டுத் திரண்ட காம்பும் அழகுபட அமைத்து நெய் பூசப் பெற்றுக் காவலுடன் உள்ளன ; ஆனால், அதியமான படைக்கலங்களோ பகைவரைக்குத்தி நுனி முரிந்து செப்பஞ் செய்யக் கொல்லன் உலைக்கூடத்தே கிடக்கின்றன. இதன் வழி அவன் வேல் கூர்மையானது எனக் குறிப்பிடுகிறார். (புறநானூறு : 95)
இங்குக் கூறப்பட்ட படைக்கலக் கொட்டிலும், கொல்லன் உலைக் கூடமும் கட்டடக் கலை நோக்கில் சிந்திக்கத்தகும்.
பூம்புகார்க் கடற்கரையில், இரவில் ஆழமான கடலில் செல்லும் கப்பல்களுக்கு ஒளிகாட்டி உதவிய கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படையில்,
இரவில் மாட்டிய விளங்குசுடர் நெகிழி
உரவிநீ ரழுவத் தோடுகலங் கரையும்
துறைபிறக் கொழியப் போகி
(349-351)
நெகிழி = அகல் விளக்கு;
உரவு நீர் = வலிமைமிக்க நீர்;
அழுவம் = கடல் ;
ஓடுகலம் = கடலில் செல்லும் கப்பல்
எனவரும் அடிகளால் தெரிந்துகொள்ளலாம்.
இக்காலத்தில் தான் கலங்கரை விளக்கங்கள் உள்ளன என நினைக்க வேண்டாம். பண்டைக் காலத்தில், உயரமான கட்டடம் எழுப்பி எண்ணெய் ஊற்றிய பெரிய அகல் விளக்கேற்றி நீண்ட தூரத்துக்கு வெளிச்சம் தெரியுமாறு வழிவகை கண்டிருந்தனர் என்பது போற்றுதற்குரியது.
பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் புறநானூற்றில் பாடிய பாடல் நீர் ஆதாரங்களைக் குறித்துக் கூறுவதாகும். (புறம்-95) அது, நீரை இன்றியமையாத உடம் பிற்கெல்லாம் உணவு கொடுத்தவர்களே உயிரைக் கொடுத்தவர்களாவர் ; உணவால் உளதாகியதே உடம்பு. ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தொடு கூடிய நீராகும். அந்த நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினரேல் அவர்கள் இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவராவர் (படைப்புக் கடவுளேயாவர்). நெல் முதலியவற்றை விதைத்து மழை நீரைப் பார்த்திருக்கும் புன் செய் நிலம் (வானம் பார்த்த பூமி) இடமகன்ற பெரிய நிலத்தை உடையதாயினும் மன்னனது முயற்சிக்குப் பயன்படாது. ஆதலால், பாண்டியனே ! விரைந்து நிலம் பள்ளமாக உள்ள இடத்தில் நீர் நிலை மிகுமாறு நீரைத் தடுத்துச் சேமித்து வைத்தல் நல்லது. அவ்வாறு செய்தவரே நிலைத்த புகழைக் கொண்டவர் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு நீர் ஆதாரத்தைத் தேடும் கடமையுடையவன் மன்னன் என்பதைப் பட்டினப்பாலை, குளந்தொட்டு வளம்பெருக்கி (284) என்று குறிப்பிடுகிறது. குளம் தொட்டு என்ற குறிப்பால் குளம் தோண்டப்படுவதால் உண்டாவது என்பது புலப்படும்.
நீர்ப்பாசனத்தைப் பொறுத்தவரையில், திருச்சிக்கு அருகிலுள்ள ‘கல்லணை’, ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாற்சோழனால் அமைக்கப் பெற்றது என்பது வரலாறு.
தொழில் வல்லுநர்களால் கையாளப்பட்ட பொறியியல் தொழில் நுட்பம் இன்றும் வியந்து பாராட்டுதற்குரியதாக உள்ளது. இதுபற்றி டாக்டர்.வா.செ.குழந்தைசாமி ஆராய்ந்து எழுதுகையில், “இவ்வணை, மணல்தளத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட கட்டடம். நீர்த்தேக்கங்கள் அமைப்பதில், மணல்தளத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டடங்கள் எழுப்புவது ஒரு தனிக் கலையாகும்; சற்றுக் கடினமான கலையுங்கூட, அணைக்கட்டு எழுப்பிய பின்னுங்கூட, அதன் அடியிலிருக்கும் மணல் தளத்தின் வழியாகத் தண்ணீர் துருவிச் செல்வது தொடர்ந்து இருந்துவரும். இப்படிப்பட்ட கட்டமைப்புகளை, கசியும் அடித்தளத்தில் அமைந்த கட்டடங்கள் (Structures on Previous Foundations) என்று கூறுவார்கள். அணையின்மேல் வழிந்து செல்லும் நீர், அதன் கீழ்க்கசிந்து செல்லும் நீர் இரண்டாலும் பாதிக்கப்படாத வகையில் இது போன்ற அணைகள் அமைய வேண்டும். இன்றைய வளர்ச்சி நிலையில் கூட அவை சிக்கல் நிறைந்தவை. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு கல்லணை போன்ற ஒரு சாதனத்தை எழுப்பிய சமுதாயத்தில், சில அடிப்படைப் பொறியியல் முறைகள் இருந்திருக்க வேண்டும். அவற்றை அறிவதற்கான ஏடுகள் தமிழில் இல்லை; அல்லது இதுவரை கிடைக்கவில்லை,” என்று குறிப்பிடுகிறார்.
பொறியியல் நுட்பம் தெரிந்த மற்றொரு வல்லுநர் எம்.பாண்டியராஜன், கல்லணை பற்றி எழுதுகையில், “கடலோரத்திலோ ஆற்றிலோ நிற்கும்போது நம் காலடி மண்ணை நீர் அரித்துச் செல்லும். நம் கால்கள் மணலுக்குள் அழுந்திப், புதைந்து கொண்டே போகும். ஒரு கட்டத்தில் புதைவு நின்றுவிடும். இதே தத்துவத்தை பயன்படுத்தி ஆற்றைத் தோண்டாமலேயே எத்தகையதொரு கட்டுமானத்துக்கும் அடித்தளம் அமைக்க முடியும். ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்தால் அடித்தளத்துக்கு இடவேண்டிய பொருள்களின் அளவும் பெரிதாக இருக்கும். இதுவே கல்லணைக்கு அடிப்படை” என்று குறிப்பிடுகிறார்.
காவிரி கரையுடைத்துச் செல்லும் வழியில் மிகப்பெரிய பாறைகள் போடப்பட்டன. அவை மணலில் புதையும்போது அதன் மலோக மற்றொரு பாறை, அதுவும் புதைந்தபின் அதன்மேல் மற்றொரு பாறை, ஒரு கட்டத்தில் கடினமான தரைப்பகுதி வந்ததும் பாறை கீழிறங்காமல் நிலைத்தன. பாறைக்குமேல் பாறையை நிறுத்துமுன் இடையே களிமண் மட்டுமே பரப்பப்பட்டிருக்கிறது. காவிரிக்குக் கல்லணைக்கரை தயாராகிவிட்டது.
1839 இல் கல்லணையின் மேலேயே, வெள்ளக் கால் நிலைமையைச் சமாளிக்கவும் நீரோட்டத்தை முறைப்படுத்தவும் வசதியாக 30 கண்களைக் கொண்ட பாலமொன்று கட்டப்பட்டது. (தரையோடு புதைந்துள்ள பாறைகளைப் பார்க்காமல், பார்வையில்படும் இந்த மேல் பகுதியைக் கல்லணை எனத் தவறாகக் கருதி விடுகிறார்கள்),” என (தினமணி பொங்கல் மலர், 1998, பக்.40-41) விளக்கிச் செல்வது மனங்கொள்ளத்தக்கது.
இது போன்று தமிழகத்தில் பிற ஆறுகளில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளைக் காண்கையில் தமிழர்தம் கட்டடப் பொறியியல் நுட்பம் நன்கு புலனாகும்.
பண்டைக்கால ஐந்திணை நிலப் பாகுபாடுகளுக்கு ஏற்பக் கட்டடக் கலை தொடங்கிய சூழலும், சிறுகுடிசைகளும், வீடுகளும் தெருவும், தெருக்கள் கொண்ட நகரமைப்பும் படிப்படியே வளர்ச்சி பெற்ற செய்திகள் விளக்கப்பட்டன. மதுரையமைப்பை எடுத்துக்காட்டாகக் கொண்டு இவ்வுண்மை புலப்படுத்தப்பட்டது.
தனிப்பட்டோர் வீடுகள், அரண்கள், படைக்கலக் கொட்டில், கலங்கரை விளக்கம் முதலிய கட்டடங்கள் நாட்டுக்குச் சிறப்பினை நல்கக் கூடியவை என்பதும் இப்பாடத்தால் விளங்கியது.
நாட்டு வளத்திற்காக நீர் மலோண்மையைச் சங்ககால அரசர்கள் மேற்கொண்டமை உணர்த்தப்பட்டது
பாடம் - 2
சிலப்பதிகாரம் – மணிமேகலை தோன்றிய காலத்திலும் இடைக்காலத்திலும், மக்கள் இன்பமுடன் வாழ்ந்தனர் ; பெருஞ்செல்வர்கள் மாடமாளிகைகளில் வாழ்ந்து இன்பங் கண்டனர். வாணிகம் வளர்ந்த பொழுது சுங்கச் சாவடிகள் பூம்புகாரில் ஏற்பட்டன.
வளமுள்ள நிலப்பகுதியில் தான் ஆடலும் பாடலும் நிகழும். சிலப்பதிகாரம் காட்டும் பதினோராடலும் கண்டுகளிக்கத்தக்க ஆடலரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.
காஞ்சி மாநகரம் தமிழகத்திற்குப் பலவகைகளிலும் பெருமை சேர்க்கக் கூடியது ; எனவே, அதனைப் பற்றி அறிந்து கொள்வதால் தமிழ் நாட்டுப் பண்பாட்டின் சிறப்புத் தெரியலாம்.
முற்காலக் கோட்டைகளும் பிற்காலக் கோட்டைகளும் எப்படி அமைந்திருந்தன என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் செய்திகள் முறையாகத் தரப்படுகின்றன. கோட்டைக்குப் பாதுகாப்பு எவ்வாறெல்லாம் அமைந்தாலும், இறையுணர்வும் பாதுகாப்புக்குத் தேவை என்பது ‘கோட்டையும் கோயிலும்’ என்னும் அணுகுமுறையால் தெளிவாக்கப்படுகின்றது.
திருமலைநாயக்கர் மகாலின் சிறப்பு கூறப்படுகிறது. கல்லணையில் அமைந்த பொறியியல் தொழில் நுட்பம் கூறப்படுவதால் பண்டைய தமிழர் பெருமை விளங்கும்.
சிலப்பதிகாரக் காலத்தில் பூம்புகார் நகரம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இரு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்ட்டிருந்தது.
மருவூர்ப்பாக்கம்
மருவூர்ப்பாக்கத்தில் கடற்கரையையொட்டிக் கண்ணைக் கவரும் வனப்புடைய யவனர்கள் வாழவும்; மற்றும் வாணிகத்தின் பொருட்டு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் வாழ்வதற்கும் இருப்பிடங்கள் இருந்தன. வண்ணம், சுண்ணம், சந்தனக் கலவை, பல்வகை மலர்கள் முதலியவை விற்பவர் நடமாடும் நகர வீதிகள் காணப்பட்டன. பட்டு நெசவாளர்கள், பருத்தி நெசவாளர்கள் வாழும் இடங்களும், நவமணிகளும், பொன்னும் பொன்னாபரணங்களும் விற்கும் கடைகளும், தானியங்கள் விற்கும் கடைகளும், வெண்கலக் கன்னார், செம்பு வேலை செய்வோர், தச்சர், கொல்லர், பொற்கொல்லர் ஆகியோர் வாழ்விடங்களும், குழல் யாழ் வாசிக்கும் பாணர்களும் மற்றோரும் வாழ்கின்ற இல்லங்களும் இருந்தன.
பட்டினப்பாக்கம்
பட்டினப்பாக்கத்தில் அரச வீதியும், கொடிகளையுடைய தேர் செல்லும் வீதியும், பெரிய தெருவும், வணிகர் தெருவும், மறைகள் ஓதும் அந்தணர் வாழும் வீடுகளும், வளோளர் வீதியும், மருத்துவர், சோதிடர், நின்றேத்தும் சூதர், இருந்தேத்தும் மாகதர், கூத்தர், நாழிகைக்கணக்கர் முதலானோர் வாழும் இடங்களும், யானை தேர் குதிரைகளைச் செலுத்தும் வீரர்களும் காலாட்படை வீரர்களும் சூழ்ந்து வசிக்கும் கட்டடங்களும் அமைந்திருந்தன.
நாளங்காடி
இத்தகைய சிறப்புடைய இரு பாக்கங்களுக்கும் இடையே சோலைகளின் மரங்களே கால்களாகக் கட்டப்பட்ட பகற்காலக் கடைத் தெருவாகிய நாளங்காடி காணப்பட்டது.
சிலப்பதிகாரக் குறிப்பு
வடநாட்டு மன்னர்கள் வணங்கி வழங்கிய முத்துப்பந்தர், பட்டிமண்டபம், தோரணவாயில் ஆகியவற்றை வைத்திருக்கும் மண்டபமும் பூம்புகாரில் இருந்தது என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தால் தெரிய வருகிறது ; எனினும், அத்தகைய மண்டபம் எப்படி அமைந்திருந்தது என்பது தெரியவில்லை.
பூதச் சதுக்கம்
பூம்புகாரில் பூதச்சதுக்கம் எனும் ஒரு கட்டட அமைப்பு இருந்துள்ளது ; அதனுடன் தொடர்பு கொண்ட சதுக்க பூதமும் தீயோரை ஒறுத்து நல்லோரைக் காக்கும் நோக்கில் செயற்பட்டது.
பூதச் சதுக்கமே யல்லாமல் வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பாவை மன்றம் ஆகிய மன்றங்களெல்லாம் இயற்கையிகந்த ஆற்றலுடையவையாக (super natural elements / extra – ordinary powerful forces ) மக்களிடையே காணப்பட்டன ; இவையெல்லாம் கட்டடக் கலைநோக்கில் சிந்திக்கத்தக்கவை.
ஆடலரங்கம்
இத்தகைய சிறப்புடன் விளங்கிய பூம்புகார் நகரத்தில் மாதவி ஆடிய பதினொரு ஆடல்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் ஆடலரங்கமும் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தது ; இதன் விவரம் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் காணப்படுகிறது. இவ்வாறான வளர்ச்சிகளுக்கு அடிப்படைக் காரணம் பயிர் விளைச்சலும் வணிகமும் எனக் கூறலாம். பல்வகைப் பண்டங்கள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்து துறைமுகப் பகுதியில் குவிந்திருந்தன. பண்டகச் சாலையும் நன்கு கட்டப்பட்டிருந்தது ; சுங்கச் சாவடி வாயிலாகச் சுங்கவரி வசூலிக்கப்பட்டது என்ற குறிப்பும் உள்ளது.
பூம்புகார் – கோட்டங்களும் கோயில்களும்
சங்கம் மருவிய காலத்தில் வழிபாட்டிற்குரிய தெய்வங்கள் பல உண்டாயின ; அவற்றுக்கெல்லாம் சிறு அளவில் கோட்டங்கள் கட்டப்பட்டன. இரட்டைக் காப்பியங்களில் காணலாகும் சில கோட்டங்களையும் கோயில்களையும் காண்போம்.
தேவர்களுக்குத் தலைவனாக விளங்கிய இந்திரன், முற்காலத்தில் மிகவும் போற்றப்படும் நிலையில் அவனுக்கென இந்திரவிழா தமிழர்களால் எடுக்கப்பட்டதைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் விவரிக்கின்றன. இந்திர விழாக்காலத்தில், விண்ணுளோரும் மண்ணுளோரும் வியக்கும்படி இந்திரனுக்குப் புனித நீராட்டினர். வச்சிரக் கோட்டத்தில் மங்கல முரசம் வைத்திருந்த குறிப்பினை,
வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம் என இந்திர விழவூரெடுத்த காதையில் (141) வருவதால் அறியலாம். பூம்புகாரில் சிவன், செவ்வேள், பலதேவன், திருமால், இந்திரன் ஆகியவர் கோயில்கள் இருந்ததை அதே காதையில்,
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் (சிவன்)
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் (முருகன்)
வால்வளை மேனி வாலியோன் கோயிலும் (பலராமன்)
(வால்வளை = வெண்ணிறம்)
நீலமேனி நெடியோன் கோயிலும் (திருமால்)
எனவரும் அடிகளால் காணலாம். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டு்ள்ள சோம குண்டம், சூரிய குண்டம், காமவேள் கோட்டம் முதலியவற்றைக் கட்டடக்கலை நோக்கில் சிந்திக்கலாம். அக்காலத்திலிருந்த கோட்டங்கள் பலவற்றையும் இளங்கோவடிகள்;
அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்
உச்சிக்கிழான் கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்கும் (9-13)
எனவரும் அடிகளால் அறியலாம். இவற்றோடு, அருகர் பௌத்தர் பள்ளிகளிலும், அறத்தினைச் செயற்படுத்தும் தருமசாலைகளிலும், மதிற்புறத்தேயுள்ள புண்ணியத் தானங்களிலும், நல்லறம் போதிக்கும் செயல் நடைபெறுவதை இந்திர விழவூரெடுத்த காதையால் அறியலாம்.
இவ்வாறே மதுரைக் காண்டத்திலும் வஞ்சிக்காண்டத்திலும் கட்டடக்கலைக் குறிப்புகள் நிரம்ப உள்ளன. அவற்றுள் சிறப்பாகச் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் ‘பத்தினிக் கோட்டம்’ எடுத்தது நினைவிற் கொள்ளத்தக்கது.
மணிமேகலைக் காப்பியத்திலும் சிலப்பதிகாரத்திலும் கூறப்பட்ட பளிக்கறை மண்டபம், தாமரைப் பீடிகை, புத்த பீடிகை, சக்கர வாளக்கோட்டம், கந்திற்பாவை, சிறைக்கோட்டம் முதலியவையெல்லாம் கட்டடக் கலைச் செய்திகளேயாகும்.
ஆடல் அரங்கங்கள் – கட்டட அமைப்பு
சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை முதலிய குழு ஆடல்கள் நடைபெற்ற செய்திகள் கிடைக்கின்றன. இவ்வாறான ஆடல்களை மேடையின்றியும் சமமான தரையிலும் ஆடிக் காட்டலாம். ஆனால், மாதவி ஆடிய பதினோராடல்களையும் ஆடிக்காட்டுவதற்கு ஆடுகளம் தேவைப்படும். நாடக அரங்கினைத் திருவள்ளுவர் ‘கூத்தாட்டவை’ எனக்குறிப்பிட்டுள்ளார்.
‘ஆடுகளம்’ எனும் சொல்லாட்சியைப் பெரும்பாணாற்றுப்படையில்,
நாடக மகளிர் ஆடுகளத் தெடுத்த (55)
எனவரும் அடியால் தெரிந்து கொள்ளலாம்.
நாடக அரங்கு பற்றி இளங்கோவடிகள், எண்ணப்பட்ட சிற்ப நூலாசிரியர் வகுத்த விதி்யின் படி, குற்றமில்லாத நல்லதோரிடத்திலே நிலம் வகுத்துக் கொண்டு, பொதியில் முதலாகிய மலோன மலைப்பக்க மூங்கிலில் கணுக்களுக்கிடையே ஒரு சாண் அமையுமாறு உள்ள மூங்கிலை (அரங்கம் இயற்றுவதற்கு அளக்குங்கோல் கைப்பெருவிரல் 24 கொண்டதாக) அளவுடன் நறுக்கி, அந்த அளவு கோலால் ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் குறட்டுயரமுமாக அமைத்து, தூணின் மீது வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கின் தளத்திற்கிட்ட பலகைக்குமிடையே நான்கு கோல் அளவினதாகவும் அரங்கு அமையும். அரங்கத்திலே நால்வகை வருண பூதரையும் ஓவியத்தில் எழுதி மேற்பக்கம் வைக்கப்படும். தூண்களின் நிழல் நாயகப்பத்தியின் கண்ணும் அவையோரிடத்தும் படாதபடி மிக உயர்ந்த நிலை விளக்கை நிறுத்தி வைப்பர். இடப்பக்கத் தூணிடம் உருவு திரையாக ஒரு முக எழினியும் (ஒருபக்கத்திலிருந்து இழுக்கப்படும் திரை), பொருமுக எழினியும், (இருபக்கத்திலிருந்தும் இழுக்கப்படும் திரை) கரந்து வரலெழினியும் (மறைவாக இருந்து வெளிப்படும் திரை) சித்திர விதானம் முதலிய அலங்கரித்தலும் செய்தனர் (95-113) என்பதைப் பாடியுள்ளார்.
சீத்தலைச் சாத்தனார் எழுதிய மணிமேகலைக் காப்பியமும் காஞ்சிபுரத்தைச் சிறப்பாக குறிப்பிடுகிறது. துறவறம் பூண்ட மணிமேகலை காஞ்சிபுரத்திற்கு வந்து தருமதவனம் என்ற இடத்தில் தங்கியிருக்கையில், மணிமேகலா தெய்வம் அவளை அன்புடன் அழைத்துச் சென்று, தான் அமைத்திருந்த மணிபல்லவப் பொழிலையும் கோமுகிப் பொய்கையையும் கண்டு மகிழுமாறு செய்தது.
காஞ்சி மாநகர் பௌத்தர்களுக்கேயன்றிச் சமணக் கோட்பாடு உடையவர்களுக்கும் இடந்தந்த சிறப்பினையுடையது. சைவமும் வைணவமும் சாக்கதமும் (காமாட்சியம்மன் கோயிலும்) கௌமாரமும் (குமர கோட்டமும்) பௌத்தமும் சமணமும் தத்தம் கொள்கைகளைப் பரப்புவதற்கு வாய்ப்பளித்த இடமாக விளங்கியது. தமிழ்நாட்டிலேயே கல்வியும் சமயஞானமும் போதிக்கும் கடிகை (பல்கலைக் கழகம் போன்ற நிறுவனம்) இங்கிருந்து செயற்பட்டது என வரலாற்றால் தெரிய வருவதால், இவற்றுக்கெல்லாம் இடங்கொடுக்கும் பலவகைக் கட்டடங்கள் தோன்றியதில் வியப்பில்லை.
மேலும், காஞ்சியைச் சுற்றிலும் பல கோட்டைகள் இருந்ததால் காஞ்சி உள்ளிட்ட தொண்டை நாட்டின் ஒரு பகுதியை ‘எயிற் கோட்டம்’ என்றும், காஞ்சியை ‘எயிற்பதி’ என்றும் அழைத்தனர்.
மேலும், மதுரையில் செழுங்குடிச் செல்வரும் மன்னரும் விரும்பும் வீதியும், பரத்தையரின் இருபெரும் வீதியும் செல்வம் குவிந்துள்ள அங்காடி வீதியும் இரத்தினக் கடை வீதியும் தானியம் விற்கும் கூல வீதியும் நால்வேறு தெருவும் சதுக்கமும் சந்தியும் மன்றமும் பலபிரிவுகளையுடைய தெருக்களும் திரித்து கோவலன் புறஞ்சேரிக்குத் திரும்பினான். இவ்வாறு கூறுமிடத்து பல்வகைக் கட்டடங்கள் மதுரையை அணி செய்தன என்பது புலனாகும்.
அவற்றில் பல இயந்திரப் பொறிகளும் அவற்றை இயக்கும் இயங்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கோட்டையின் உள்ளே காவல் தெய்வங்களுக்குக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1)வளை விற்பொறி - வளைந்து தானே எய்யும் இயந்திரவில்,
2)கருவிரலூகம்-கரிய விரல்களுடைய குரங்கைப் போலிருந்து அருகே வரும் எதிரிகளைப் பிடித்துக் கொல்லும் பொறி,
3)கல்லுமிழ் கவண் -தானே கற்களை எறியும் கவண்,
4)பரிவுறு வெந்நெய்-எண்ணெயைக் கொதிக்க வைத்து அருகே வருபவர் மேல் வீசுகின்ற எண்ணெய் மிடா (கொப்பரை),
5)பாகடு குழிசி-செம்பை உருக்கி வைத்திருந்து எதிரிகள் மீது வீசும் மிடா, அல்லது வெல்லப்பாகைச் சிதறும் பாத்திரம்,
6)காய்பொன்னுலை-படைக்கருவிகளை உருகக் காய்ச்சி எறிவதற்கேற்ப அமைந்த உலைகள்,
7)தொடக்கு-கழுக்கோல் போலக் கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலி,
8)ஆண்டலையடுப்பு-ஆண்தலைப் பறவை போன்ற பொறி, பகைவரது மண்டையைக் கொத்திச் சிதைக்கும் கருவி.
9)கவை-இரு பிரிவாகப் பிரிந்து அமைந்த கவைக்கோல், மதிலேறும் பகைவரை மறித்துத் தள்ளக் கூடியது,
10)கழு- கூரிய நுனியுடைய கழுக்கோல்,
11) புதை-அம்புக் கட்டுகள்
12)புழை-தாமே பகைவர் மீது அம்பெய்யும் வகையில் அமைந்துள்ள ஏவறைகள்
13)ஐயவித்துலாம்-தன்னை நெருங்கும் பகைவர் தலையை நெருக்கித் திருகும் மரம்,
14)கைபெயரூசி-மதிலைக் கைப்பற்ற முயலும் பகைவர் கையை நடுங்கச் செய்யும் ஊசிப் பொறி,
15)சென்றெறி சிரல்-பகைவர் மேல் சென்று தாக்கும் சிக்கிலிப் பறவை வடிவிலமைந்த பொறி
16)பன்றி-மதில்மீது ஏறும் பகைவர்களைத் தன்கொம்பால் கிழித்துக் கீழே தள்ளும் பன்றி போன்ற பொறி
17)பணை-மூங்கிற் கோல் போலிருந்து தானே சென்று பகைவரை அடிக்கும் பொறி,
18)எழுவும் சீப்பும் கணையமும்-கோட்டை மதிற்கதவிற்கு வலிமையாக உள்வாயிற்படியிலே பொருந்திய மரங்கள், வயிரம் பாய்ந்த கணையங்கள்
19)கோல்-எறிகோல்
20)குந்தம்-சிறுகவளமாகிய குந்தப்படை
21)வேலும் பிறவும்-வேற்படையும், தூண்டிலும், களிற்றுப் பொறியும், புலிப்பொறி முதலியவும்
மதில்மேல் பொருத்தப்பட்டிருந்தன என்ற செய்தி கிடைக்கிறது. இத்தகைய கோட்டைச் சிறப்பினை இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் – அடைக்கலக் காதையில், வருணித்துள்ளார் (207-218).
இம்மகாலின் அற்புதமான வேலைப்பாடமைந்த வளைவுகள், மேல்தளங்கள், கூடங்கள், மிகப்பெரிய தூண்கள் (ஒவ்வொரு தூணும் 40 அடி உயரம்) ஆகியவற்றைக் கண்டு வியப்புறாமல் யாரும் இருக்க முடியாது. ஒரு தூணை மூவர் அல்லது நால்வர் சேர்ந்து அணைத்தாலும் அணைக்க முடியாத அளவிற்குப் பருத்த தூண்களாக இருப்பதை இப்போதுள்ள முற்றத்தில் காணலாம்; இதற்குக் கி.பி. 1636 ஏப்ரல் திங்களில் புகுமனை புகுவிழா நடத்தினார் நாயக்கர், என்பது தெரிய வருகிறது. இது போன்ற செம்மையான முறையில் அமைந்த அரண்மனைக் கட்டடத்தைத் தென்னகத்தில் காண்பது அரிது.
சிதைத்தல்
இத்தகைய மிகச் சிறந்த கட்டடத்தை, திருமலை நாயக்கருக்குப் பேரனாகிய சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்ததும் இதன் பல பகுதிகளை இடித்து விட்டான்; இடித்த பல பொருள்களையும் பொற்கலசங்களையும் கருங்கல் சவுக்கைகளையும் இரத்தின சிம்மாசனைத்தையும் திருச்சிராப்பள்ளிக்குக் கொண்டுபோய் விட்டான்; முன்பிருந்த கட்டடத்தில் நான்கில் ஒரு பங்கே இப்போது காணப்படுகிறது.
கருங்கல்லைக் காண இயலாத இராமேசுவரம் தீவில் இவ்வாறு பல்லாயிரம் டன் கருங்கல் பாறைகளைப் பல கலை வடிவங்களாக்கிக் கொணர்ந்த தமிழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என வெளிநாட்டார் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கோயிலின் மூன்றாம் பிராகாரம் 2250 அடி நீளத்தில் (சுற்றளவு) உள்ளது தனித் தன்மை வாய்ந்தது; 1212 தூண்களுடன் இது போன்ற நீளமான கோயிற் பிராகாரம் உலகில் வேறெங்கும் இல்லை என்பர். தமிழகத்து ஆலயக் கட்டடக் கலைக்கு இந்தப் பிராகாரம் மிகுந்த சிறப்பினைச் சேர்த்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காவிரி ஆற்றங்கரையினை ஒட்டியே பல திருத்தலங்கள் அமைந்துள்ளன; அடுத்து வையை, பெண்ணை, தாமிரபரணி முதலிய ஆறுகளின் மருங்கே திருத்தலங்கள் பெரும்பாலும் அமைந்துள்ளன. மேலும் திருக்குளம் அல்லது கிணறு அமைத்துத் தீர்த்தம் எனப் போற்றி நிற்பது ஆலய மரபாக உள்ளது. கடல் அருகே உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்குக் கடலே தீர்த்தமாக அமைந்துள்ளது. ஆனால், ஆறு, குளம் ஆகியவற்றுக்குத் துறையமைப்பதும் படிக்கட்டுகள் அமைப்பதும் கட்டடக்கலைச் சார்புடையது.
பொதுவாகத் திருக்குளங்கள் சதுரமாகவும் நீண்ட சதுரமாகவும் படியமைப்புகளுடன் கட்டப்பட்டிருப்பதே பெரும்பான்மை. ஆனால், சுவஸ்திக் வடிவமைப்புடன் கூடிய தீர்த்தக் குளமும் தமிழகத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து உறையூர் வழியே செல்லுகையில் 21 கி.மீ. தொலைவிலுள்ள திருவெள்ளறை எனும் திருத்தலத்தில் சுவஸ்திக் குளம் உள்ளது. சுவஸ்திக் வடிவமைப்பில் இந்தத் தீர்த்தக் குளம் அமைந்திருப்பதால், இக்குளத்து ஒரு துறையிலே நீராடுபவர்களை இன்னொரு துறையிலிருப்பவர்கள் காணமுடியாது.
தமிழகத்திலுள்ள தெப்பக்குளங்களுள் வனப்பூட்டப்பட்ட தெப்பக் குளமாக விளங்கும் வகையில் வண்டியூர்த் தெப்பக்குளம் திருமலை நாயக்க மன்னரால் அமைக்கப்பட்டது. மதுரைக்குக் கிழக்கில் மாரியம்மன் கோயிலுக்குத் தெற்கில் இஃது அமைந்திருப்பதால் மாரியம்மன் தெப்பக்குளம் என்றும் அழைப்பர்.
இந்தத் தெப்பக் குளத்தில் நடுவேயுள்ள மைய மண்டபமும், திருக்குளத்தின் நான்கு மூலைகளிலும் விமானத்தோடு அமைந்துள்ள நான்கு மண்டபங்களும் கட்டடக் கலை நேர்த்தி கொண்டவை.
இத்தெப்பக்குளம் தெற்கு வடக்கில் 1000 அடி நீளமும், கிழக்கு மேற்கில் 950 அடி அகலமும், 9.5 லட்சம் சதுர அடிப்பரப்பும் கொண்டது. இக்குளத்தைச் சுற்றிக் கருங்கல்லால் ஏறக்குறைய 4 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது; படிக்கட்டுகளும் நன்கு அமைக்கப்பட்டுள்ளன. சுவரையொட்டி, உட்புறமாக மக்கள், குளத்தைச் சுற்றிவருதற்கு வாய்ப்பாக 5 அடி அகலத்தில் கல்வரிசை (தளவரிசை) அமைந்துள்ளது. ஒரு பக்கத்திற்கு 3 படித்துறைகளாக 12 படித்துறைகள் உள்ளன.
மைய மண்டபத்தின் நிழல் அந்த மண்டபத்திலேயே அடங்குவதன்றி வெளிப்புறம் சாய்வதில்லை. தஞ்சைப் பெரிய கோயில் நிழல் வெளியே வீழ்வதில்லையென்பர்; அதுபோல இந்த மைய மண்டபத்திற்கும் வெளியே நிழல் சாயாச் சிறப்பு உண்டு. திருக்கோட்டியூர் ஆலய விமானத்துக்கும் இத்தகைய சிறப்பு உண்டென்று கட்டடக் கலை வல்லுநர்கள் கூறுவர்.
வையை ஆற்றிலிருந்து இந்தக் குளத்திற்குத் தண்ணீர் வருவதற்கு வாய்க்கால் வசதியையும் நாயக்க மன்னர் செய்து வைத்தார்.
புதுமண்டபம் தேர்ந்த கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அது 333 அடி நீளமும், 105 அடி அகலமும் 25 அடி உயரமும் கொண்டது. இதனில் 124 சிற்பத் தூண்கள் அணி செய்கின்றன. மேல்தளம் கல்லால் மூடப்பெற்றுள்ளது. இதன் உள்வரிசைக் கால்களில் திருமலை நாயக்கர் முதலிய நாயக்க அரசர்கள் பதின்மருடைய உருவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேற்கு ஓரத்தில் ஒரு கருங்கல் சவுக்கை உள்ளது. திருவிழாக் காலத்தில் குளிர்ச்சியாய் இருக்கும் வகையில் மண்டபத்தைச் சுற்றி நான்கு பக்கமும் தண்ணீர் நிரப்பி வைக்கும் பொருட்டு அகழிபோல் அடிவாரம் உள்ளது. மழைபெய்தால் இப்பொழுதும் நான்கு பக்கமும் தண்ணீர் நிறையத் தேங்கிவிடும். கோடைக் காலத்தில் இவ்வகழி போன்ற அமைப்பில் தண்ணீர் நிரம்பி விடின் குளிர்ச்சியாக இருக்கும். இக்காலக் குளிர்பதன வசதி (Airconditioned) போலக் கட்டடக் கலை உத்தி கையாளப்பட்டிருப்பதை நன்குணரலாம்.
ஜீவ காருண்ய ஒழுக்கத்தையே உயிர்நாடியாகக் கொண்ட அந்த அருளாளர், சுத்த சன்மார்க்கம் பரவவும், பசிப்பிணியால் நலிவோருக்கு அன்னமிட வாய்ப்பாகத் தருமச் சாலை நிறுவவும் தக்க இடம் நாடி நின்றார். முக்கோண வடிவமைப்பிலே, சிதம்பரமாகிய திருத்தில்லை, விருத்தாசலமாகிய திருமுதுகுன்றம், கடலூராகிய திருப்பாதிரிப்புலியூர் ஆலயங்களின் சூழலில் நடுவணதாகிய பெருவெளி – வடலூர் எனும் உத்தரஞான சிதம்பரம் – வள்ளற்பிரானால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிற்சபை, பொற்சபை எனச் சிறு ஆலயங்களை உட்படுத்தி 16 பட்டை வடிவ அமைப்பில், நல்ல தாழ்வாரக் கட்டுமானத்துடன் சத்திய ஞானசபையை ஆலயமாகவே அமைத்தார். அங்கே அருட்பெருஞ்சோதி ஆண்டவனைக் கண்டு வழிபடும் வகையில் – சோதிக்காட்சியைத் திரையிலே கண்டு வழிபடுமாறு – ஏற்பாடு செய்துள்ளார்.
ஞானசபை மூன்றாம் பிராகாரத்தில் பக்க வழிகளில் இரண்டு வளைவுகளும், நீராழிப் பத்தியில் 22 வளைவுகளும் உள்ளன. இதனில் உள்ளடங்கிய ஏழு வாயில்களும் 14 சாளரங்களும் காணப்படும். ஞானசபையின் தென்புறத்தில் கண்ணாடிக் கதவுகளுடன் கூடிய 3 வாயில்கள் கறுப்பு நிறம் பூசப்பெற்றுள்ளன. மூன்று வாயில்களுக்கும் பொதுவான 5 படிகள் உள்ளன. கிழக்கு, மேற்கு, வடக்குப் பக்கங்களில் ஐந்தைந்து படிகள் உள்ளன.
ஞானசபையின் உள்ளே இருபக்கங்களிலும் 12 தூண்கள் உண்டு. ஞானசபையின் நடுவே அதிட்டான பீடம் உள்ளது. ஞானசபையைச் சுற்றி இருப்புச் சங்கிலியும் அமைத்துள்ளார்; அதனைத் தாங்கி நிற்க இருப்புப் பட்டையுடன் கூடிய 52 கட்டைகளும் உள்ளன. ஞானசபையின் தென்புறமாக வெளியே பெரிய கூடாரம் போன்ற கட்டட அமைப்பு உள்ளது.
இந்த ஞானசபைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், சாலைக்கு வடக்கே, தொழிலதிபர் நா. மகாலிங்கம் அவர்களால் கட்டப்பட்ட பிரார்த்தனை மண்டபம் மக்கள் பலரும் அமர்ந்து அருளுரைகளைக் கேட்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆதீனங்கள்
தமிழகத்து ஆதீனங்களுள் திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் காசிமடம், சூரியனார் கோயில், காஞ்சித் தொண்டைமண்டலம், மதுரைத்திருஞான சம்பந்தர், குன்றக்குடி திருவண்ணாமலை ஆகிய ஆதீனங்கள் தமிழ்மக்கள் போற்றும் வகையில் சமயப்பணிகள் புரிந்து வருகின்றன; கட்டடச் சிறப்பும் உடையவை. பசுக்களைக் காப்பாற்றும் பசு மடங்களையும் கொண்டு விளங்குகின்றன.
துழாவூர், வளோக்குறிச்சி, நாச்சியார் கோயில், வரணி, வள்ளலார் ஆகிய ஐந்து ஆதீனங்களும் இல்லறத்தார் ஆதீனங்கள். இவற்றுள் வள்ளலார் ஆதீனம் மறைந்து விட்டது. ஏனைய நான்கும் சமயப்பணிகளுக்கேற்ற கட்டடங்களைக் கொண்டுள்ளன. வரணி ஆதீனம் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தலைமையிடம் கொண்டிருப்பினும், வேதாரண்யத்தில் கிளைமடம் வாயிலாக வேதாரண்யம் கோயிலை நன்முறையில் நடத்தி வருகிறது.
மடங்கள்
திருமடங்களைப் பொறுத்த வரையில், மயிலம் பொம்மபுரம் மடம், பேரூர் சாந்தலிங்கர் திருமடம், விருத்தாசலம் குமாரதேவர் மடம், கோயிலூர் திருமடம், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம், சிதம்பரம் மௌனசுவாமிகள் திருமடம், திருப்போரூர் சிதம்பரசுவாமிகள் திருமடம் முதலிய திருமடங்கள் நல்ல கட்டட வசதிகளுடன் சமயப் பணியும் சமுதாயப்பணியும் புரிந்து வருகின்றன.
அத்துவைதத் திருமடங்களுள் காஞ்சிக் காமகோடி பீடம் ‘ஜகத்குரு’ சங்கராச்சாரியார் சுவாமிகள் திருமடம், திருமடங்களுள் முன்னணியில் உள்ளது. அது சமய மேம்பாட்டுக்குப் பெரும் பணிகள் புரிந்து வருகிறது.
அகோபிலம் ஜீயர் சுவாமிகள் திருமடம், திருவரங்கம் ஆண்டவன் சுவாமிகள் மடம் முதலிய பல வைணவ மடங்களும் சமய மேம்பாட்டிற்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் பல பணிகள் புரிந்து வருகின்றன. நல்ல கட்டட வசதிகளையும் அவை பெற்று விளங்குகின்றன. மகான் இராகவேந்திர சுவாமிகள் தொடர்பாகச் சில அருள்நிலையங்கள் நல்ல வசதியான கட்டடங்களில் தோற்றுவிக்கப்பட்டு, அவையும் சமய-சமுதாயப் பணிகளைப் புரிந்து வருகின்றன. சிதம்பரத்திற்கு அருகிலுள்ள புவனகிரியில் சுவாமி இராகவேந்திரர் ஆலயம் காணத்தக்க சிறப்புடையது.
மக்கள் ஆரவார நிலையிலிருந்தும் இல்லறச் சிக்கல்களிலிருந்தும் விடுபடத் துறவு மேற்கொண்டு, இயற்கை தவழ்கின்ற மலையடிவாரம், வனப்பகுதி முதலிய இடங்களுக்குச் சென்று குடில் அமைத்துக் கொண்டு, ஆன்ம நிலையில் உயர்ந்திட யோகம், தியானம், தவம் முதலியவற்றில் ஈடுபட்டனர். சில ஆசிரமங்களில் வேதம், கலை, வித்தை முதலியவற்றையும் சீடர்களுக்குப் பயிற்றுவித்த முனிவர்கள் வாழ்ந்திருந்ததாக வரலாறுகள் உண்டு.
திருவண்ணாமலையில் பகவன் இரமணர், இரமணாசிரமத்தைத் தோற்றுவித்தார். தியானமண்டபம், நூல் நிலையம் ஆகியவற்றுடன் – ரமண மகரிஷி தம் தாயாரை அடக்கம் செய்த இடத்தில் எழுப்பிய பள்ளிப்படைக் கோயில் முதலியவற்றுடன் – இன்றும் ரமணாசிரமம் நடைபெற்று வருகின்றது. அதற்கு அருகே ‘விசிறி சாமியார்’ என அழைக்கப்பட்ட சுவாமி ராம் சூரத்குமார் ஏற்படுத்தியுள்ள ஆசிரமம் வியக்கத்தக்க முன்னேற்றம் கொண்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய தியான மண்டபம் சிறந்த பொறியியல் வல்லுநர்களால் கட்டப்பட்டு மக்களுக்குப் பயன்படுகிறது. மேலும், திருக்கோயிலூருக்கு அருகே ஞானானந்த சவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரமமும் பிற ஆசிரமங்களும் ஆன்மநல முன்னேற்றத்துக்குப் பாடுபட்டு வருகின்றன; கட்டட வசதிகளும் அவை பெற்றுள்ளன.
வடஆர்க்காடு திருப்பத்தூரில் கிறித்துவர்களால் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட கிறி்ஸ்து குல ஆசிரம் உள்ளது. இது மருத்துவத் தொண்டும், சமுதாயத் தொண்டும், சமயத்தொண்டும் செய்து வருகிறது.
அரசியல் தேவைக்கேயன்றி, ஆலயத்திலுள்ள விலைமதிப்பிற்குரிய அணிகலன்களையும் நவமணிகளையும், சில வேளைகளில் சிலைகளையும் மறைத்து வைக்க வேண்டிய தேவை ஏற்படும்.
பொதுவாகவே, நகரத்தார் பெருமக்கள் ஆலயங்களுக்கும் அறச்சாலைகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வாரி வழங்கிய பெருமக்கள். அவர்கள் சார்பில் கட்டப்பட்ட நகரத்தார் கோயில்களில் கட்டடச் சிறப்பு மிகுதியாக அமைந்திருக்கக் காணலாம். “நகரத்தார் கோயிலான மாத்தூர்க் கோயிலில் அர்த்தமண்டபத்தின் கீழ்ப்பகுதியில் நிலவறை காணப்படுகிறது. போர்க்காலங்களிலும் பகைவர்கள் ஆலயத்தை நோக்கிப் படையெடுத்து வருங் காலங்களிலும் ஆலயத்திலுள்ள உற்சவ விக்கிரகங்கள், மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்களைப் பாதுகாப்பதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளது” என்று தொல்லியல் அறிஞர் மா. சந்திரமூர்த்தி தம் ‘மாத்தூர்க் கோயில்’ (பக் – 29) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பூம்புகாரில் வெளிநாட்டவரும் உள்நாட்டவரும் கலந்து இனிது வாழுவதற்கு உரிய மாடமாளிகைகளும், தெய்வக் கோட்டங்களும் ஐவகை மன்றங்களும் நாட்டுக்கு நலம் நாடும் பாங்கில் உள்ளவை என்பது தெரிகின்றது. ஆடற்கலையும் ஓங்கும் சூழல் உள்ளது.
பூம்புகாரைப் போலவே காஞ்சிபுரமும் சமயம் சமுதாயம் ஆகிய இருவகைச் சிறப்புகளும் உடையது ; இவ்விரு நகரங்களும் ஒப்பிட்டு நோக்குதற்கு உரியன.
நாட்டுவளத்திற்கான நீர் ஆதாரத்தை உயிர்க் கடமையாகக் கொண்டு போற்றிய அரசாங்கக் கடமை சுட்டப்படுகிறது.
எவ்வளவு சிறப்பாக நாடு நலமுடனிருப்பினும், சிறைச்சாலை ஒருவகைப் பின்னடைவைக் காட்டும் அடையாளமே.
பௌத்தர்கள், சமணர்கள், கிறித்துவர்கள், இசுலாமியர்கள் தத்தம் வழிபாட்டு இடங்களை எவ்வாறு போற்றி வருகின்றனர் என்பது தெரிய வந்தது.
தமிழ்நாடு பல சமயங்களும் கலந்துறவாடும் சூழலைப் பல நிலைகளில் பெற்றுள்ளது என்பது நன்கு விளக்கம் பெற்றுள்ளது.
பாடம் - 3
உலகியல் கட்டடக் கலையைவிட அருளியற் கட்டடக் கலை உயர்ந்தது என்பதைத் தெரிவிக்கும் வகையில் ஆலயக் கட்டடங்கள், அவற்றின் வகைகள் கூறப்படுகின்றன. பல்லவர்கள் தோற்றுவித்த கற்கோயில்கள் முதலியவை, பிற்காலத்து மன்னர்கள் பின்பற்றத்தக்கவையாக அமைந்தன என்பது சான்றுகளுடன் எடுத்துக் காட்டப்படுகிறது.
திருவதிகை வீரட்டானத்துக் கோயிலைக் கொண்டு பல்லவர்களின் கட்டடக் கலைத்திறமை விளக்கப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டைக் கோயில் பல்வகைக் கட்டடக் கூறுகளைக் கொண்டுள்ள சிறப்பும், மகேந்திரவர்மன் அமைத்த குடைவரைக் கோயிலும் கங்காதரர் சன்னிதியும் கொண்டுள்ள பெருமையும் வெளிப்படுத்தப் படுகின்றன.
சோழர் கால அரண்மனைச் சிறப்புக் கூறுவதால் இக்காலத்தில் எஞ்சியுள்ள தஞ்சை மராட்டியர் அரண்மனையுடன் ஒப்புநோக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வைணவச் சமயத் திருத்தலங்கள் பல தோன்றுவதற்கு வைணவ ஆசாரியப் பெருமக்கள் பெரிதும் துணை நின்றனர். பலரும் எளிதாக இறைவனைக் கண்டு தொழ, இறைவன் திருவுருவச் சிலையில் அர்ச்சாவதாரத்தில் (பூசை செய்வதற்கு உரிய திருஉருவம்) எழுந்தருளுவதே மிகச் சிறந்ததாகப் போற்றப்பட்டது. அந்நிலையில் அர்ச்சையும் ஆலயக் கட்டடக் கலைக்கு உந்து சக்தியாக உதவியுள்ளது.
தம்மை வளர்த்துப் பெருமையுடன் வாழ்வித்த முன்னோர்களை நினைத்து, நன்றியின் அறிகுறியாக மன்னர் சிலர் கோயில்கள் கட்டினர் ; அவை பள்ளிப்படைக் கோயில்களாயின. புராணங்களும் இதிகாசங்களும் பரவிய நிலையில் மக்களின் பக்தியார்வம் பல ஆலயங்கள் தோன்றுவதற்கு உந்து (தூண்டு) சக்தியாகப் பயன்பட்டுள்ளது.
கற்றதனால் ஆய பயன்என்கொல் வால்அறிவன்
நற்றாள் தொழஅ ரெனின் (குறள் – 2)
(வால் அறிவன் = தூய அறிவினையுடையவன் ; நற்றாள் = நல்லபாதங்கள்; தொழார் = தொழவில்லை)
எனக் கூறிக் காட்டியதும் பொருத்தமாக அமைந்தது.
ஆலய வழிபாடு
ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிகளெல்லாம் மக்கள் ஆலயம் கட்டுதற்குக் கைகொடுத்து உதவின.
கோயில் – விளக்கம்
கோயில் எனும் சொல்லில், ‘கோ+இல்’ எனப் பிரித்து, மன்னன் உறைவிடம் என்றும் ; பின்னர், நாட்டுக்கு மன்னனைப் போல், அனைத்திற்கும் தலைவனாகிய இறைவன் உறைவிடம் என்றும் பொருள் விரியும்.
ஆலயம் – விளக்கம்
ஆலயம் என்பது ‘ஆ’ எனும் பசு (உயிர்), ‘லயம்’ (செம்மை) கொள்வதற்குரிய இடம் எனப் பொருள் தரும். ஏதோ ஆலயம் என்றதும் ‘மக்களின் வழிபாட்டுத்தலம்’ என்ற அளவில் பொருள் கொள்வது சரியன்று. ஆலயக் கட்டடங்கள் பரிணாம வளர்ச்சியில் பெரிதும் விரிவு பெற்றன. இவற்றுக்கெல்லாம் சிற்ப நூல்களும் ஆகமங்களும் வாஸ்து நூல்களும் வழிவகுத்தன. சிற்பநூல் விதிப்படி நிலத்திணைத் தேர்ந்து, தட்ப வெப்ப நிலைகளுக்கேற்பக் கட்டப்படும் ஆலயங்கள் நிலை குலைவதில்லை. முறைப்படி உறுதியான மூலப்பொருள்களைக் கொண்டு, தேர்ந்த தொழில் வல்லுநர்களால் தெய்வ வழிபாட்டுடன் கட்டப்படும் கட்டடங்கள் சமுதாயத்திற்கு மிகவும் பயன்படுகின்றன.
ஆலயக் கட்டடக்கலை சமயவுணர்வின் உந்துதலால் தோன்றித் தத்துவக் களத்தில் வளர்ச்சி பெற்றுச் சமுதாய நலத்துக்காக – உயிரின் மேம்பாட்டுக்காக நின்று நிலைபெற வேண்டிய கவின்கலை எனலாம்.
மூர்த்தி தலம்தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு
வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே (156)
எனக் கூறியுள்ளார். கோயிலுக்கு மதிப்பு, கட்டடங்களை விரிவுபடுத்திக் கொண்டு செல்வதால் மட்டும் கிடைத்து விடாது.
விமானம் சதுரமாக அமைந்திருப்பின் ‘நாகரம்’ என்றும், வட்டமாக இருப்பின் ‘வேசரம்’ என்றும், ஆறு அல்லது எட்டுப்பட்டை அமைப்பிலிருப்பின் ‘திராவிடம்’ என்றும் ‘சில்பரத்னம்’, ‘மானசாரம்’ போன்ற சிற்ப நூல்கள் வகைப்படுத்தும். நாகரம் தேசத்தின் வட பகுதியிலும், திராவிடம் தென்பகுதியிலும், வேசரம் இடைப்பகுதியிலும் காணப்படுபவையாகக் கூறப்படும். திருநெல்வேலிப் பகுதியில் ஒரு கோயிலில் நாகர அமைப்பும், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் வேசர அமைப்பும், தஞ்சைப் பெரிய கோயிலில் திராவிட அமைப்பும் காணப்படுகின்றன என அறிஞர்கள் கூறுவர்.
கடல் மல்லை என்ற வைணவத் தலம் பூதத்தாழ்வாரால் குறிப்பிடப் பெற்றுள்ளது ; எனவே, அது மிகவும் தொன்மையானது. பல்லவர்கள் காலத்தில் குடைவரைக் கோயில்கள் பல எழுந்தன. அவை எந்த அளவு வரலாற்றுக்குத் துணை புரிகின்றன என்பதைச் சிறிது காண்போம்.
பல்லவர்களை முன்னோடிகளாகக் கொண்டு, பாண்டியர்கள், முத்தரையர்கள், அதியமான்கள், சேரமன்னர்கள், கீழைச் சாளுக்கிய மன்னர்கள் தத்தம் நாடுகளில் பல்வேறு மாற்றங்களுடன் குடைவரைக் கோயில்களை அமைத்துள்ளனர். பல்லவர் பாணியைப் பின்பற்றிச் சங்கரன் கோயிலிலிருந்து கோவில்பட்டிக்குச் செல்லும் வழியிலுள்ள வெட்டுவான் கோயில் கட்டப்பட்டுள்ளது. அங்கு முதலாவது குறிப்பிடத்தக்கது முருகன் கோயில். அந்தக் குடைவரைக் கோயிலையொட்டி அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். அடுத்துக் காணப்படுவது வெட்டுவான் கோயில்; இது முருகன் கோயிலுக்குப் பின்னால் மலையின் ஒரு பகுதியில், மலையிலிருந்து வேறுபடுத்திய நிலையில் கற்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெட்டுவான் கோயிலில் முன் பகுதியாகிய முகமண்டபம் கட்டட அமைப்பில் முடிவு பெறாமல் உள்ளது. இந்தக் கோயில் கருவறையின் மேல் எட்டுப்பட்டைகள் கொண்ட விமானம் அணி செய்கிறது ; பட்டைகள் தோறும் கூடுகள் அமைந்துள்ளன. விமானத்திலுள்ள கூடுகள் அல்லது சைதன்ய பலகணிகளில் யாளி, சிங்கமுக உருவங்கள் செதுக்கப்பட்டும், வளைந்து செல்லும் பூவேலைப்பாடுகளும் நிறைந்து, கட்டடக் கலைக்குச் சிற்பங்கள் அலங்காரக் கூறுகளாகப் பயன்படுகின்றன.
குடைவரைக் கோயில்கள் அல்லது குகைக் கோயில்கள் என்ற நோக்கில், தமிழ்நாட்டில் பல்லாவரம், திருச்சி, சித்தன்னவாசல், திருமெய்யம் போன்ற ஊர்களில் உள்ள குகைக் கோயில்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
சமயச் சார்பு
மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்ட மண்டகப் பட்டுக்கோயில் பிரமன், சிவன், வி்ஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கும் அற்புதமாக அமைக்கப் பட்டதாகும். அந்தக் குடைவரை கோயில் திருக்கழுக்குன்றத்திலுள்ள வேதகிரி மலையின் உச்சிக்கோயிலிலிருந்து கீழே இறங்கி வரும் வழியிலே மலைநடுவில் கிழக்குத் திசைநோக்கியதாக, உள்ளது; அக்கோயிலில் மும்மூர்த்திகளுக்கு அமைக்கப்பட்ட மூன்று கருவறைகளையும் துவார (வாயில்காக்கும்) பாலகர்களால் அலங்கரிக்கப்பட்ட அர்த்த மண்டபத்தையும் காணலாம்.
திருச்சிக்கு வட மேற்கிலுள்ள நாமக்கல் பகுதியை ஆண்ட குறுநில மன்னர்களாகிய அதியர் இரண்டு குடைவரைக் கோயில்களைத் திருமாலுக்கு எனக் கட்டினர். புதுக்கோட்டைப் பகுதியில் பல குடைவரைக் கோயில்களை முத்தரையர், இருக்குவேளிர் போன்றவர்கள் குடைவித்தனர். இவற்றுள் சித்தன்னவாசல் சமணப் பள்ளியாக ஆயிற்று. மற்றவை சைவ, வைணவ, சக்தி சமயச் சார்புடையவையாகும்.
சிறப்புமிகுந்தவை
புதுக்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் வழியிலுள்ள குன்னக்குடி (மூன்று குகைகள்), மிகச் சிறப்பான ‘பிள்ளையார்பட்டி’, அரிட்டா பட்டி, திருமலை போன்ற இடங்களிலும், மதுரைக்கு அருகில் மாங்குடி, ஆனைமலை (இரண்டு குகைகள்), திருப்பரங்குன்றம், மலையடிக் குறிச்சி, வீரசிகாமணி, ஆனையூர், திருமலைபுரம், சொக்கம்பட்டி, திருச்செந்தூர் ஆகிய குடைவரைக் கோயில்கள் கண்டு வியக்கத்தக்கவை, கழுகுமலைக் கோயில் மிகச் சிறப்பு வாய்ந்தது.
குமரி மாவட்டத்தில் திருநந்திக் கரை, துவரங்காடு, சிவகிரி, அழகிய பாண்டியபுரம், பூதப்பாண்டி போன்ற இடங்களில் காணப்படும் குடைவரைகள் ஆய்வேளிர் மரபினரால் அமைக்கப்பட்டவை ; எனினும் பாண்டியர் பாணியில் அமைந்தவை.
பெருமைக்குரியவை
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மாமல்லபுரத்திலே தனிப் பெரும் கற்பாறைகளைக் குடைந்தும், புராணச் சிறப்புடன் சிற்பங்களைச் செதுக்கியும், ஒற்றைக் கல் கோயில்களாக்கியும் பல்லவர்கள் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
ஒற்றைக் கல்கோயில்களைப் பஞ்ச பாண்டவர் ரதங்கள் என்று மக்கள் வழங்கினாலும், பஞ்சபாண்டவர்களுக்கும் இந்தத் தேர்க் கோயில்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.
தருமராசர் தேர் எனப்படும் கோயில் மூன்று அடுக்குகள் கொண்ட விமானத்தை உடையது. இரண்டாம் அடுக்கின் நடுவில் மாடப்புரை போல உள்ளிடம் வெட்டப்பட்டுள்ளது. அதனடியில் சோமாஸ்கந்தர் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
பீமசேனன் தேர் எனப்படும் கோயில் நீண்ட சதுர அமைப்பில் காணப்படுகிறது. அதன் விமானத்தைச் சுற்றி வழிவிடப் பட்டிருத்தலைக் காணலாம். 45 அடி நீளம், 35 அடி அகலம், 26 அடி உயரம் கொண்ட இக் கோயிலில் தூண்களின் அடிப்பாகம் அமர்ந்த சிங்க உருவத்துடன் உள்ளது. தூண் அமைப்பினைக் கொண்டே நரசிம்மவர்மனின் கலைப்பாணியைப் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப் பெற்றுள்ளது.
அருச்சுனன் தேர் எனப்படும் கோயிலின் விமானம் நான்கு நிலைகளைக் கொண்டது. 11 சதுர அடி அமைப்புடையது.
திரௌபதி தேர்எனப்படும் கோயில், தமிழ்நாட்டில் சிற்றூர்ப் புறத் தேவதைகளுக்கு அமைத்திருக்கும் சிறுகோயில் போல் உள்ளது. இதன் அடித்தளம் 11 சதுர அடி, உயரம் 10 அடி. பல்லவர் காலத்துச் சிற்பத் திறனையும் கலைக் கற்பனையையும் புலப்படுத்தும் வகையில் இத்தேரிலுள்ள துர்க்கையின் சிலை உள்ளது.
சகாதேவன் தேர் எனப்படும் கோயில் தன் பின் புறத்தில் யானையின் முதுகைப் போன்ற அமைப்பினையுடையது. பண்டைக் காலத்துப் பௌத்தர்களின் பள்ளிகளைப் போன்ற அமைப்புடையது. ஒவ்வொரு பாறைக் கல்லிலும் அமைந்த இந்தத் தேர்க் கோயில்களை முன் மாதிரியாக வைத்துக் கொண்டு, பிற்காலத்தில் பல தேர்வடிவ ஆலயக் கட்டடங்கள் அமைக்க முற்பட்டனர் என்பது மனங் கொள்ளத்தக்கது.
பரமேசுவரனுக்கு மகனான இராசசிம்மன் காலத்தில் மாமல்லபுரம், காஞ்சிபுரம், பனைமலை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் கட்டுமானக் கோயில்கள் தோன்றின. மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலின் விமானம் ஓரளவு உயர்ந்து பலநிலைகளுடன் காணப்படுகிறது. கருவறையைச் சுற்றிலும் திருச்சுற்றும் ஒரு மண்டபமும் உள்ளன. மாமல்லபுரத்தில் மற்றொரு கட்டுமானக் கோயில், மகிஷாசுர மர்த்தினி குகையின் மேலே உள்ளது ; இதன் மேல் பகுதி சிதைந்துள்ளது.
காஞ்சிக் கயிலாசநாதர்கோயில், திருக்கயிலையை நினைவுபடுத்தும் நோக்கத்தில் கட்டப்பட்டது. இராச சிம்மனால் கட்டப்பட்டதால் அதனை ‘இராச சிம்மேசுவரம்’ என்பர். பெரிய திருக்கற்றளியாகிய இதற்குப் பெரிய விமானமும், சிறு சிறு ஆலயங்களைக் கொணட திருச்சுற்றும் உள்ளன. சுற்றுச் சுவர் முழுவதும் சிவபெருமான், பார்வதி, திருமுருகன், திருமால் போன்ற திருவுருவங்களைக் காணலாம். இக் கோயிலில் பரிவார தெய்வங்களும் அவற்றுக்குரிய சிற்றாலயங்களும் உள்ளன.
திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பத்தூரில் காணப்படும் கோயிலும் இராசசிம்மனால் கட்டப்பட்டதாகவே கருதப்படுகிறது ; காஞ்சிக் கோயில்கள் போலவே காணப்படும் இக்கோயிலிலுள்ள இறைவன் பெயர் கயிலாசநாதர் என்பது சிந்திக்கத்தக்கது.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் காஞ்சி வைகுண்ட நாதர் கோயிலைப் ‘பரமேசுவர விண்ணகரம்’ என்பர். (விஷ்ணுகிருகம், விண்ணகரம் ஆயிற்று). ஒன்றற்கு மேல் ஒன்றாக மூன்று கருவறைகள் காணப்படும் இக்கோயில் விமானம் பெரியதாகவும் அழகுடையதாகவும் காணப்படுகிறது. அழகிய கட்டுமானத்துடன் கூடிய இக்கோயிலின் உட்புறச்சுவரில் – பிராகாரத்தில் – பல்லவ மன்னர்களுடைய வரலாறு தெரிந்து கொள்ளும் வகையில் திருவுருவச் சிற்பவரிசை உள்ளது.
உத்தரமேரூரில், நந்திவர்மன் காலத்ததாகக் கருதப்படும் சுந்தரவரதர் கோயிலும் உள்ளது.
பல்லவர் காலத்துக் கோயில்களெல்லாம் கருங்கல்லால் கட்டப்பட்டவை என்று பிழைபட எண்ணக் கூடாது. பெரும்பாலானவை மணற் கல்லால் கட்டப்பட்டவையும் உண்டு. இவற்றில் விமானங்கள் தான் மிகவும் உயர்ந்து நிற்கும். ஆயினும் அவை 35 அல்லது 40 அடிக்கு மேல் இருப்பதில்லை.
கி.பி. 10 – ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சோழ அரசர்கள் கருவறையைச் சுற்றிலும் அர்த்த மண்டபத்துக்கு முன்பு இன்னொரு மகா மண்டபத்தையும் அமைத்தனர். ஏனென்றால், 10 – ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு நாயன்மார்கள் ஆழ்வார்கள் முதலிய மூர்த்தங்களை (திருவுருவச் சிலைகளை) அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவ்வாறு அகநாழிகையைச் சூழ்ந்து சுற்று மண்டபங்களை அமைத்தபடியினாலே, அக மண்டபங்கள் மத்தியக் கோயிலின் பார்வையையும் அழகையும் மறைத்து விட்டன. சில கோயில்களில் கருவறை விமானம் தெரியாதபடி பிற மண்டபங்கள் மறைத்து விட்டன எனக் குறிப்பிடுவது உண்மையாகும்.
அறிஞர் ‘லாங் ஹர்ஸ்ட்’ (Long
சுருங்கக் கூறின், திராவிடக் கட்டடக்கலைக் கூறுகளின் தாக்கம் (Impact or Influence) பல்லவர்கள் அமைத்த கோயில்களில் அமைந்தது என்பதும், பல்லவர் கோயில்களில் அமைந்துள்ள கோபுரம், விமானம், திருச்சுற்று முதலிய கூறுகள் தமிழகத்தில் கட்டப்பட்ட பல கோயில்களில் இடங்கொண்டு பெருவளர்ச்சி கொண்டன என்பதும் அறியத்தக்க செய்திகளாகும்.
திருவதிகை வீரட்டானம் கோயில்
திருவதிகை வீரட்டானக் கோயில் பலவகைக் கட்டடக் கூறுகள் கொண்டு விளங்குகிறது. பல்லவன் பரமேசுவரன் காலத்தில் கட்டப்பட்டது ; நிருபதுங்கன் காலத்தில் மேலும் சில திருப்பணிகள் செய்யப்பட்டன. இக் கோயிலின் அடிப்பகுதி கல்லாலும், மேற்பகுதி முழுவதும் செங்கல்லாலும் கட்டப்பட்டுச் சுதை வேலைப்பாடு மிகுதியும் கொண்டு விளங்குகின்றது.
அட்ட வீரட்டத் தலங்களில், திருவதிகையும் வழுவூரும் கிழக்கு நோக்கியிருக்கின்றன; ஏனையவை மேற்கு நோக்கி அமைந்துள்ளன.
திருவதிகைக் கோயிலின் வாயிலில் எழு நிலைக் கோபுரம் அணி செய்கிறது ; கோயிலில் இரு திருச் சுற்றுகள் உள்ளன. கோபுர நுழைவாயிலில் நாட்டியப் பெண்கள், கொடிப்பெண்கள் (கங்கையும் யமுனையும்), திருமாலின் அவதாரத் திருவுருவங்கள் ஆகியவற்றை, சிறிய அளவில் சிற்பவுருவில் காணலாம்.
முதல் திருச்சுற்றில் கொடி மரமும், நந்தியும் காணப்படும். தென்புறத்தில் வசந்த மண்டபம், தீர்த்தம், வடபுறத்தில் நூற்றுக்கால் மண்டபம், கல்மண்டபம், திருமணவிடுதி ஆகியவற்றையும், புத்தர் சிலையையும் விநாயகரையும் முருகனையும் காணலாம்.
இரண்டாவது திருச்சுற்றில் வாயிலை ஐந்துநிலைக் கோபுரம் அழகு செய்கிறது, வடபுறத்தில் பல்லவர் காலச் சிம்மத் தூண்களைக் கொண்ட மடைப்பள்ளியைக் காணலாம். மேலும் அப்பரடிகளின் திருவுருவமும், வாயிலுக்குத் தென்புறம் யாகசாலை, நவக்கிரகங்கள், வைரவர் ஆகியோரும் காணப்படுவர். அதே இரண்டாவது திருச்சுற்றின் தென்புறத்தில் நாயன்மார், அறுபத்து மூவர், சேக்கிழார், தலமரமாகிய கொன்றை, திலகவதியார் இடங் கொண்டிருப்பதைக் காணலாம்.
இறைவியின் சன்னிதி தனியாக வலப்புறமாக அமைக்கப்பட்டுள்ளது. திருமணஞ்சேரி, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, காஞ்சி ஆகிய இடங்களில் இறைவியின் சன்னிதி, இறைவன் கருவறைக்கு வலப்புறமாக இருக்கும்.
திரிபுரமெரிக்கும் வீரநிகழ்ச்சி நடைபெறுவதால், கருவறையுடன் கூடிய விமானம் தேர் போன்று அமைந்துள்ளது.
திருச்சி மலைக்கோட்டைக் கோயில்
திருச்சி மலைமேல் எழுந்தருளியுள்ள ஈசன், ‘திருமலைக் கொழுந்து’ எனவும், கருவுற்றிருந்த வணிகப் பெண்ணிற்குத் தாயாக வந்து மருத்துவம் புரிந்தமையால் ‘தாயுமான சுவாமி’ எனவும், சாரமா முனிவர் செவ்வந்திப் பூக்களால் பூசித்ததால் ‘செவ்வந்தி நாதர்’ எனவும் அழைக்கப்பெறும் புராணச்சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டவர் ; அம்பிகையின் திருப்பெயர் மட்டுவார் குழலம்மை.
பல தெய்வங்கள் பூசித்த சிறப்பிற்குரிய இக்கோயிலில், அனுமானும் பூசித்ததற்கு அடையாளமாக அனுமக் கொடியும் அனும முத்திரையும் உள்ளன, மலைக்கோயிலின் உச்சியில், செவ்வந்தி விநாயகராகிய உச்சிப் பிள்ளையாரும், மலையடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் காட்சியளிக்கின்றனர்.
மண்டபங்கள்
இக் கோயிலில் வசந்த விழாவிற்காகத் தளவாய் முதலியாரால் கட்டப்பட்ட பதினாறுகால் மண்டபம் ஒன்று உள்ளது. அதனருகே மணி மண்டபத்தில் டன் எடையும் 4 அடி 8 அங்குல நீளமும், அடி அகலமும் உடைய கோயில் மணி உள்ளது.
மலை உச்சிக்குச் செல்லும் வழியில் அழகிய நூற்றுக்கால் மண்டபமும், அதன் எதிர்ப்புறத்தே மௌன மண்டபம் எனும் திருமடமும் சமயப்பணிகள் புரியத் துணை நிற்கின்றன.
குடைவரைக் கோயில்கள்
உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழியில் பல்லவன் மகேந்திரவர்மன் அமைத்துள்ள குகைக்கோயில் தெற்குப் பார்த்த வண்ணம் காணப்படுகின்றது. முன் மண்டபமும் அதற்குக் கருவறையும் உள்ளன. முன் மண்டபம் 30 அடி நீளம், 15 அடி அகலம், 9 அடி உயரம் உள்ளது. மண்டபத்தின் கிழக்குப் புறச் சுவரில் கருவறை மேற்குப் பார்த்த நிலையில் அமைந்துள்ளது. இதன் நீளமும் அகலமும் 7 அடி 10 அங்குலம் உள்ள சதுரமாகவும், உயரம் 7 அடியாகவும் அமைந்திருக்கக் காணலாம். இக் கருவறையின் தரையில் 2 அடிச் சதுரக்குழி உள்ளது. இதனால் முன்பு சிவலிங்கம் நிறுவப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதன் அருகே ஓரடிச் சதுரமுள்ள குழி உள்ளது. மகேந்திரவர்மனின் உருவச் சிலை சிவலிங்கத்தின் அருகே அமைந்திருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
கருவறையின் எதிரே மேற்குப்புறப் பாறையின் மண்டபச் சுவரில் சுமார் 7 அடிச் சதுரத்தில், வனப்புமிகு கங்காதர மூர்த்தியின் திருவுருவம் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மலையடிவாரத்திற்குச் சிறிது உயர்ந்த பகுதியில், மலையைக் குடைந்து மற்றொரு குகைக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் மகேந்திரவர்மன் குடைவித்ததன்று ; அவன் மகன் நரசிம்மவர்மனால் அமைக்கப்பட்டது என்பர்.
திருச்சி மலைக்கோயிலைப் பொறுத்த வரையில், அதன் சார்பாக அதனருகிலிருக்கும் தெப்பக் குளமும் காணத்தக்க கலைச் சிறப்புமிக்கது.
சோழர் ஆட்சிக் காலத்தில் நாளோலக்க மண்டபம், கருவூலம், அந்தப் புரமாகிய உட்கோட்டை, படைக்கலக்கொட்டில், கோட்டைச் சுவர்கள் முதலியவற்றைத் திட்டமிட்டுக் கட்டியுள்ளனர். சில முக்கிய நகரங்களில் தற்காலிகமாகத் தங்குவதற்கும் சித்திர மாடங்களையும் கட்டியிருந்தனர். பல்லவ, பாண்டிய மன்னர்களும், அவர்தம் காலத்தில் வாழ்ந்த முத்தரையர், இருக்குவேளிர் முதலிய சிற்றரசர்களும் தத்தம் ஆட்சிக் காலத்தில் அரண்மனை முதலிய பலகட்டடங்களையும் கட்டிக் கொண்டே வாழ்ந்தனர் என்பது வரலாறு ; ஆனால், அவையெல்லாம் சுவடு அழிந்த கலைச் சின்னங்களாகி விட்டன.
விசயாலய பரம்பரையினர்
விசயாலய சோழ பரம்பரையினர் சுமார் 350 ஆண்டுகள் ஆண்டு வந்தனர். காஞ்சிபுரத்திலும் சோழர் ஆதிக்கத்தை நிறுவிய பெருமை முதலாம் ஆதித்தனுக்கு உண்டு. அவனும் அவனுக்குப் பின் வந்த சோழர் சிலரும் காஞ்சிபுரத்தில் தங்கிக் கொண்டே ஆணைகளைப் பிறப்பித்தது பற்றிக் கல்வெட்டுகள் கூறுகின்றன. கண்டராதித்தனும் சுந்தர சோழனும் தங்கியிருந்த மாளிகை பொன்முலாம் பூசப்பட்டும், பல அடுக்குகள் கொண்டும் விளங்கியது என்பது கல்வெட்டுச் செய்தி ; இதனை உறுதிப்படுத்தும் வகையில், சுந்தர சோழனைப் ‘பொன் மாளிகைத் துஞ்சிய தேவர் ’ எனக் கல்வெட்டு வாசகம் உள்ளது.
இராசேந்திரன்
முதலாம் இராசேந்திரன் காலத்தில் பழையாறையிலும் அரண்மனை இருந்தது ; கங்கை கொண்ட சோழபுரத்திலும் பல அடுக்குகளுடன் கூடிய பெரிய அரண்மனை இருந்துள்ளது.
சோழ நாட்டில் மட்டுமல்லாமல், முதலாம் இராசேந்திரன் பாண்டி நாட்டை வென்று அங்கு ஒரு பெரிய மாளிகையைக் கட்டித் தன் மகனைப் பாண்டிய நாட்டின் மன்னனாக்கினான் ; அவனுக்குச் சோழ பாண்டியன் என்ற பட்டமும் அளித்துள்ளான்.
கங்கை வரையில் சென்று வெற்றி பெற்றுத் திரும்பிய முதலாம் இராசேந்திரன், தன் தானைத் தலைவர்களைக் கொண்டு கங்கைப் புனித நீரைக் கொணர்வித்துத், தான் கட்டிய கங்கை கொண்ட சோழீச்சுவரத்தில் வைத்திருந்து, மேற்கில் சயங்கொண்டான் செல்லும் சாலையருகே மாபெரும் ஏரியைத் தோண்டி அதனில் ஊற்றி ஜலமயமான வெற்றிச் சின்னமாகப் போற்றிக் கொண்டாடினான். சோழ கங்கையான அந்த ஏரி இக்காலத்தில் பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.
கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்த அரண்மனையும் பிறகட்டடங்களும் சிதைவுற்றன. அப்படி இங்குச் சிதைவுற்ற நிலப்பகுதியை மாளிகை மேடு என்று அழைக்கின்றனர். தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறைக் குறிப்பின்படி, இங்கு நடக்கும் அகழ்வாராய்ச்சியில் மிகப் பரந்த சுவர்ப்பகுதிகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுமார் 7 அடிக்கும் மலோக அஸ்திவாரம் போடப்பட்ட சுவர்கள் காணப்படுகின்றன. மிகப் பெரிய 5 அடி அகலமுள்ள இரண்டிரண்டு சுவர்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, அதன் மேல் தூண்களையும் சுவர்களையும் எழுப்பி அரண்மனையைக் கட்டி இருக்கின்றார்கள்; அவற்றின் பகுதிகள் இப்போது கிடைக்கின்றன. அத்துடன் வண்ணம் பூசப்பட்ட சுண்ணக்காரைகளும் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து மாளிகையின் பல பகுதிகள் அழகிய சித்திரங்கள் தீட்டப்பட்டுத் திகழ்ந்தன என்பது தெளிவு எனும் செய்திகள் (கங்கை கொண்ட சோழபுரம், பக்-13) கிடைக்கின்றன, இவையெல்லாம் மறைந்து போன / மறந்து போன மதிப்பரிய செல்வங்கள் (Forgotten Worthies) என நம் பண்டைய கட்டடக் கலைப் பெருமையை நினைவிற் கொள்ளலாம்.
மதிப்பிற்குரிய ஆலயங்கள் பலவகைகளாகக் கிளைத்தற்கும் வளர்வதற்கும் பல்லவர்கள் கற்கோவில்கள் தோற்றுவித்ததே காரணம் என்பது வரலாறு கூறும் உண்மை. மாமல்லபுரம் கோயில்களும் காஞ்சிபுரம் கட்டுமானக் கோயில்களும் பற்றிய விவரங்கள் அறிய வந்தன.
தமிழ்நாட்டில் தொன்மையான கோயில்களுள் அழியாமல் நன்கு பராமரிக்கப்படும் கோயில்களுள் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலும், திருச்சி மலைக்கோட்டைக் கோயிலும் சிறப்பிற்குரியவை ; எனவே அவை பற்றிய கட்டடக் கலைக் கூறுகள் கூறப்பட்டுள்ளன.
வரலாற்று நோக்கில், பல்லவர் காலத்திற்கு முன்பும் பின்பும் அமைந்த ஆலயக் கட்டடங்கள் பற்றிய செய்திகளும் விளக்கம் கொள்கின்றன.
சோழ மன்னர்களின் அரண்மனைக் கட்டுக்கோப்புப் பற்றிய சில விவரங்களும் கூறப்பட்டுள்ளன.
பாடம் - 4
‘கடல் போன்று விரிந்து பரந்துள்ள கவின்கலையே கட்டடக் கலை’ என்பதைப் பயில்பவர்கள் நன்கு புரிந்து கொள்ளுதற்கு உரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
விசயாலயன் எனும் சோழன், தஞ்சையையும் வல்லத்தையும் வென்ற மகிழ்ச்சியில், தான் வழிபடும் தெய்வமாகிய நிசும்பசூதனி என்ற துர்க்கைக் கோயிலைத் தஞ்சாவூரில் கட்டியுள்ளான். பக்தியார்வத்தால் நார்த்தா மலையிலுள்ள விசயாலய சோளீச்சுவரம், காளியாபட்டியிலுள்ள சிவன் கோயில், பனங்குடியிலுள்ள அகத்தீசுவரம் என்ற பரமேசுவரன் கோயில், விராலியூரிலுள்ள பூமீசுவரர் கோயில், விசலூரிலுள்ள மார்க்கசகாயேசுவரம், திருப்பூரிலுள்ள சிவன் கோயில், ஏனாதியிலுள்ள சிவன் கோயில் ஆகியவை விசயாலயன் காலத்தவையாகும்.
நகரத்தார் மலை என்பது நார்த்தா மலை எனத் திரிந்துள்ளது; அது புதுக்கோட்டை வட்டத்தில் உள்ளது. இவ்வூர் எட்டுக் குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இக்குன்றுகளுள் ஒன்றாகிய மேலை மலையில் கிழக்கு நோக்கி இரண்டு குகைக் கோயில்களும், ஒரு கட்டுக் கோயிலும் காணப்படுகின்றன. வலப்பக்கத்திலுள்ள சமணர் குகைக் கோயில் வைணவக் கோயிலாக மாற்றப்பட்டுவிட்டது. தெற்கிலுள்ள குகைக் கோயில் பழியிலி ஈசுவரம் என்ற சிவன் கோயிலாகும்.
இந்த இரு குகைக்கோயில்களின் அடிவாரத்திற்குக் கிழக்கேயுள்ள கட்டுக்கோயிலில் கருவறையும் அர்த்த மண்டபமும், கற்றளி (கல்லால் ஆகிய கோயில்)யைச் சுற்றிச் சிதைந்து காணப்படும் பரிவார தேவதைகளின் ஒரு தளத்தையுடைய ஆறு சிறு கோயில்களும் உள்ளன. நடுவிலுள்ள முதன்மைச் சிறப்புடைய கற்றளியே விசயாலய சோளீச்சுவரம் ஆகும்.
வரலாற்று ஆசிரியர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் விசயாலய சோளீச்சுவரம் பற்றி எழுதுகையில், “கோயில் மேற்குப் பார்த்த சன்னிதியை உடையது. ஓங்கார வடிவுடைய கருவறை நான்கு மூலைகளிலும் நான்கு தூண்கள் நிறுவப் பெற்ற 29 அடி சதுரமுடைய மண்டபத்திற்குள் அமைக்கப் பெற்று, உருண்டை வடிவமுடைய இலிங்கம் பிரதி்ட்டை செய்யப் பெற்றுள்ளது. இது நாலு தளக் கோயிலாகும். கருவறைக்கு மேலுள்ள இரு தளங்கள் முகப்பில் சாலைகளாலும் கூடங்களாலும், இவற்றிற்கிடையே அழகிய சிலைகளைக் கொண்ட நாசிகை என்ற இடைவெளியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நான்காவது தளம் கருவறையின் அமைப்பைப் போலவே வட்டவடிவமானது. கிரீவம் (கழுத்து) எனப்படும் இதன் மேல்பாகத்தில் நாற்புறங்களிலும் தேவகோஷ்டங்களும் விமான தேவதைகளும் திகழ்கின்றன. சிகரம் வட்டவடிவமானது. இப்பொழுது காணப்படும் ஸ்தூபி பழைய ஸ்தூபியன்று.
கருவறையில் வெளிப்புறச் சுவர்களில் தேவகோஷ்டங்கள் இல்லை. வெளிப்புறச் சுவர்கள் அரைத்தூண்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் போதிகைகள் 45% கோண வடிவுடையன. இப்போதிகைகள் பல்லவர் காலத்துப் போதிகைகளைப் போல நடுவில் பட்டையாகவும் இரு புறங்களிலும் சுருண்டு வருவனவாகவும் உள்ளன. மண்டபத்தைத் தாங்க மத்தியில் கற்றூண்கள் உள்ளன.
அர்த்த மண்டப வாயிலின் இருபுறங்களையும் ஐந்தடி உயரமுடைய துவார பாலகர் இருவர் அலங்கரிக்கின்றனர்” என்று (சோழர் கலைப்பாணி, பக்- 43-44) கட்டடக் கலைக் கூறுகளை விளக்கிக் காட்டியுள்ளார்.
முன்னொரு காலத்தி்ல் கொடும்பாளூர், இருக்குவேளிரால் ஆளப்பட்ட சிறப்புடையது; பண்டு 108 கோயில்கள் இருந்தன. இக்காலத்தில் சோழர் காலத்துக் கோயில்களாக மூவர் கோயில், முசுகுந்தேசுவரர் கோயில் ஆகிய இரண்டு கோயில்கள் உள்ளன.
பல்லவர்காலத்தில் மிகச் சிறப்பாக இக்கோயில் அமைக்கப்பட்டது. நல்ல கட்டடக் கலையழகு நிறைந்த கோயிலாக இன்றும் இத்தலம் விளங்கி வருகிறது.
சிற்பச் சிறப்புமிக்க ‘வௌவானத்தி மண்டபம்’ கட்டடக் கலைக்குத் தனி முத்திரை பெற்றது. திருவீழிமிழலைத் தலத்தில் அடியார்க்கு அன்னம் பாவிக்க (உணவுதர) அப்பரும் சம்பந்தரும் அமைத்த திருமடங்களைக் காணலாம்.
தூங்கானைமாடக் கோயில் வகையைச் சார்ந்த இக்கோயிலி்ல் கருவறை அர்த்த மண்டபம் கொண்டது. இவற்றைச் சுற்றி மூடப்பட்ட பிராகாரமும், அதன் முன்னர் மகா மண்டபமும் காணப்படுகின்றன; பிற்காலத்தில் கட்டப்பட்ட கோபுர வாயிலும் உண்டு.
அர்த்த மண்டபத்தில் இரு வெள்ளெருக்கத் தூண்களும், உட் பிராகாரத்தின் கீழ்ப் பகுதியில் ஏழு கல்தூண்களும், மகா மண்டபத்தில் நான்கு அழகிய தூண்களும் அணிசெய்கின்றன.
கருவறை அர்த்த மண்டபம் முதலியவற்றின் புறச் சுவர்களை அரைத்தூண்கள், கும்பபஞ்சரங்கள், தேவ கோட்டங்கள் ஆகியவை சிற்ப வேலைப்பாட்டுடன் அழகு செய்கின்றன. தேவ கோட்டத்தின் மேலுள்ள மகரதோரணங்கள் அணிசெய்யும் பாங்குடன் நடுவில் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது. கொடுங்கையின் வெளிப்புறத்தில் கூடுகளும் அமைப்பாக உள்ளன.
ஆலயத்திற்கு விமானம் முகம் போன்றது. இக்கோயில் விமானம் மூன்று தளங்களைக் கொண்டது. முதலிரண்டு தளங்களிலும் சதுரவடிவமும் நீண்ட சதுர வடிவமும் முறையே அமைந்து சிறு கோபுர அமைப்புகளாகக் காட்சியளிக்கின்றன.
கோயிலின் தென்புறத்தில் இறைவிக்கெனத் தனிக்கோயில் உள்ளது. இங்கு கருவறை அர்த்த மண்டபம், உள்பிராகாரம், மகாமண்படம் ஆகியவற்றைக் கொண்டும், வெளிப்பிராகாரத்தில் விநாயகர் கோயில், திருமுருகன் கோயிலுடனும் உள்ளது. விநாயகர் கோயிலின் முன்பகுதியை அமர்ந்த நிலையுடைய சிங்கங்களுள்ள தூண்கள் தாங்கி நிற்கின்றன. கோயிலின் கீழ்ப்புறத்தில் மரபுப்படி நந்திபீடமும் கொடிக்கம்பமும் காணப்படுகின்றன.
1. தஞ்சாவூர் பிரகதீசுவரர் கோயில்,
2. கங்கைகொண்ட சோழேச்சுரம் கோயில்,
3. திரிபுவனம் கம்பஹரேசுவரர் கோயில்.
கி.பி. 1009-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் பரந்த வெளியில் கட்டடப்பட்ட சிறந்த கட்டடக் கலைச் சிறப்பிற்குரியது.
முதலாம் இராசராசன் காலத்திற்கு முன், கருவறையில் அமைந்த விமானம், ஆலய வாயிற்கோபுரத்தை விட உயரத்திற் குறைந்தே இருந்தது. ஆனால், இராசராசன் காலத்தில் விமானத்தை 216 அடி உயரத்தில் அமைத்துப் பெரும்புகழ் கொண்டான்.
தனித்தன்மை
கிழக்கு நோக்கிய கோயிற் கருவறையில் மிகப் பெரிய இலிங்கம் (பிரகதீசுவரர்) நிறுவி, அதனை நீராட்ட, மேனிலை ஆளோடிகள் அமைக்கப்பட்டு, மேனிலையிலே தென்பாற் சுவரில் நீர்த்தொட்டியும் அமைக்கப்பட்டது. இத்தகைய கட்டடக் கலையமைப்பினை நம் நாட்டில் இங்கு மட்டுமே காணமுடியும்.
பெரிய கோயில், பெருவுடையார், பெரிய நந்தி, ஆகியவற்றுக் கேற்பப் பெரிய விமானம் அமைந்துள்ளது. பெருவுடையாருக்கேற்ப, பெரிய நாயகியாகிய அம்மை தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
மகாமண்டபத்தையும் கருவறையையும் சுற்றிய தேவ கோட்டங்களில் சிவமூர்த்தங்களும் சக்திகளும் அமைத்திருப்பது இராசராசனின் பக்தியீடுபாட்டைப் புலப்படுத்தும்.
பரிவாரக் கோயில்களாக வராகியம்மன் கோயில், சண்டேசர் கோயில், விநாயகர் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியவை உள்ளன.
ஆகம வழிபாட்டின் ஒரு கூறாக வலம் வரும் போது, கோயில் தூபி, விழுநீர்ப்போக்கு ஆகியவற்றைத் தாண்டிச் செல்லக் கூடாது; இதனை மனத்துட்கொண்டு, விமானக் கலசத்தின் நிழல் திருச்சுற்றில் விழாதவாறு அமைத்ததும் விழுநீர்ப்போக்கு ஓர் ஆள் உயரத்தின் மேல் ஓடிவந்து விழுமாறு அமைத்ததும், அக்காலச் சிற்பியர் புரிந்த மாற்றங்களாகும்.
பரந்த வெளிப் பிராகாரத்தில், திருச்சுற்று மாளிகையில் இலிங்கங்களையும் பிற தெய்வங்களையும் நிறுவி ஆலயப் பாதுகாப்பிற்கு மன்னன் வழிதேடியுள்ளான். அனைத்திலும் சிறந்த திருப்பணியாகப் பிரமந்திரக் கல்லுடன் சார்த்தித் தட்சண மேருவை நிறுவியுள்ளது மதித்துப் போற்றத்தக்கது.
புகழ்மிக்கது
இமயத்திலும் சிதம்பரத்திலும் ‘மகாமேரு’ எனும் சக்தி தன் ஆற்றலைக் காட்டிக் கொண்டிருக்கிறது ; அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற பேருண்மையை உணர்ந்திருந்தான் இராசராசன். அதே ஆற்றலை, தான் கட்டும் தஞ்சைப் பெரிய கோயிலிலும் நிறுவ முயன்று வெற்றி பெற்றான் என்பர். டாக்டர் இரா.நாகசாமி, “உலகிலேயே மிக உயர்ந்த மலைச்சிகரம் மகாமேரு அன்று; இந்திய நாட்டில், ஏன், வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மிக உயரமான சிகரம் உடையதாகக் கட்டப்பட்ட கோயில் தக்ஷிணமேருவாம் தஞ்சைக் கோயில். மேரு தூய்மையான சுத்தமான பொருளால் ஆன மலை; அதுபோலத் தஞ்சைக்கோயில் அடியிலிருந்து முடிவரை கருங்கல்லாலேயே கட்டப்பட்ட கோயில். கல், செங்கல் அல்லது மரம் என்னும் ஏதாவது பொருளால் ஒரு கோயில் கட்டப்படுமானால் அதைச் சுத்தமான கோயில் எனக் கட்டிட வல்லுநர் கூறுவர். மேரு பொன்மயமான சிகரம் எனக்கண்டோம். தஞ்சைப் பெருங்கோயிலைக் கட்டிய இராஜராஜன் இக்கோயிலின் வானளாவிய சிகரத்தையும் பொன் வேய்ந்து ஒளிமயமான சிகரமாக்கினான்” (தஞ்சை இராசராசேச்சுரம் திருக்குட நன்னீராட்டு மலர், 1997, பக்-8) என்று விளக்கிச் செல்வது மனங்கொள்ளத்தக்க அருங்குறிப்பாகும்.
மாமன்னன் இராசராசன் கட்டிய பெரிய கோயிலுக்கு மிகவும் ஆன்மநல ஆற்றலை வழங்கக் கூடிய வகையில் அமைந்தது, நந்தி மண்டபத்திற்கு அருகில் கட்டப்பட்ட பெரிய நாயகி கோயிலாகும். தஞ்சைப் பெரிய கோயில் விமானத்துக்கு வடமேற்கேயுள்ள சுப்பிரமணியர் கோயில் நாயக்கர் காலச் சிறப்புமிகு கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
தஞ்சையில் இராசராசன் பெரிய கோயிலைத் தட்சிணமேருவாகக் கட்டிய காலத்தில், அவன் தேவி ஒலோகமாதேவி (உலக மாதேவி) உத்தர (வட) கயிலாயம் எனும் உத்தரமேருவைத் திருவையாற்றில் எடுப்பித்தாள். இ்ங்குக் கீழ்ப்பிராகாரம் நுழைகையில் ஏழுநிலை கொண்ட இராசகோபுரம் உள்ளது. அடுத்து இரண்டாம் கோபுரம் மூன்று நிலை கொண்டது; இரு கைகளுடன் துவார பாலகர்கள் உள்ளனர். கோபுர மாடத்தே நந்திதேவர் தம் தேவியுடன் காணப்படுகிறார்.
விக்கிரமசோழன் கட்டிய மூன்றாம் கோபுர முகப்பில் இருகை துவாரபாலகர்கள் உண்டு. மூன்றாம் பிராகாரத்தே தெற்கு மூலையில் (தென் மேற்கே) ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே ! எனும் வாய்மொழி இலக்கியமாக விளங்கும் ஐயாறப்பரே ஒலிப்பது (ஒரு ஒலி எதிரொலியாக ஏழு ஒலியெழும்பும் கட்டடக் கலை நுட்பமுடையது) போன்ற அற்புதம் உண்டு. தொடர்ந்து வலம் வருகையில் தங்கத்தகடு போர்த்திய கொடிமரம், சித்தி விநாயகர் அமைந்திருக்க, 200 கால் மண்டபத்தைக் காணலாம். நந்தியம் பெருமானும் காட்சியளிக்கிறார். அடுத்துச் சொக்கட்டான் மண்டபம், ஸ்நபன மண்டபம் கடந்து அர்த்த மண்டபம் அமைந்துள்ளது; கருவறையில் ஐயாறப்பரைச் சிவலிங்கவுருவில் வழிபடலாம்.
ஐயாறப்பர் கோயில் சன்னிதியின் இருபுறமும் 5 அடி உயரத்தில் இருகைகளுடன் கூடிய துவாரபாலகர்கள், பல்லவர் பாணியிலமைந்த சோழர்காலப் படைப்புகளாக உள்ளனர்.
உட்பிராகாரம்
ஐயாறப்பரை வழிபட்டுக் கொண்டு முதல் பிராகாரத்தே சிவயோக தட்சணாமூர்த்தியையும், எதிரில் சப்தமாதரையும் நாயன்மார் அறுபத்து மூவரையும் கண்டு வழிபடலாம்.
கீழ்ப்புறவாயில் வழியே வருகையில் சோமாஸ்கந்த மண்டபம் முத்திமண்டபம், ஐயாற்றுப் புராண வரலாற்றை வண்ணச் சித்திரமாகக் காட்டும் திருநட மாளிகை, ஆதிவிநாயகர், நவக்கிரகங்கள், பஞ்ச பூதலிங்கங்கள், தெய்வநலம் நிறைந்த அடியவர்கள் செபம்புரி மண்டபம் முதலியவை சிற்ப எழிலுடன் காட்சியளிக்கக் காணலாம்.
மேற்பிராகாரத்தே வில்லேந்திய வேலவன் வள்ளி தேவயானையுடன் காட்சியளிக்கிறான். வடமேற்கு முலையில் காசிவிசுவநாதர் விசாலாட்சி உடன் இருக்கும் திருக்கோலம் உண்டு. முச்சக்தி மண்டபத்தே துர்க்கை சரசுவதி திருமகள் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். அருகே சித்தர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயில் எடுப்பிக்கக் காரணராயி்ருந்த அகப்பேய்ச்சித்தர் இங்கு இலிங்க வடிவில் வழிபடப்படுகிறார்; கோயில் மரபுப்படி சண்டேசர் சன்னிதியும் உள்ளது.
ஏழூர்த்தலச் சிறப்பு
திருவையாற்றைத் தலைமைக் கோயிலிடமாகக் கொண்டு, ஆறு சிவாலயங்கள் நல்ல கட்டடக் கலைச் சிறப்புடன் உள்ளன. எல்லாவற்றையும் தொகுத்து ஏழூர்க்கோயில்கள் என்றும், சப்தஸ்தானக் கோயில்கள் என்றும் அழைப்பர்.
திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஏழும் பாடல் பெற்ற சிவாலயங்கள்; ஏழு முனிபுங்கவர் (சப்தரிஷி) ஆசிரமங்களாகப் போற்றிப் புகழப்படுபவை.
பெருமை
பதஞ்சலி முனிவரும் புலிக்கால் முனிவரும் பூசித்த பெருமை கொண்டது இந்தத் திருத்தலம் ; புலிக்கால் முனிவர் காரணமாக இத்தலத்தைப் பெரும்பற்றப் புலியூர் என்பர்.
நடராசர் தம் தேவி சிவகாமியுடன் வீற்றிருக்கும் இடமும், அதற்கருகேயுள்ள இடமும், கனக சபையும் சித் சபையுமாகும். கனக சபையாகிய பொன்னம்பலம் முதற் பராந்தக சோழனால் பொன் தகடால் வேயப்பட்டது; பிறகு, பலரும் இத்திருப்பணியில் ஈடுபட்டனர். நடராசர் சன்னிதிக்கு எதிரே பொன் தகட்டால் ஆன கொடிக் கம்பமும் பலி பீடமும் உண்டு. அதன் தென்பால் ‘நிருத்த சபை’ உள்ளது; அங்கு ஊர்த்துவ தாண்டவமூர்த்தி சன்னிதியும், சரப மூர்த்தி சன்னிதியும் அமைந்துள்ளன. நிருத்த சபைக்குச் செல்லும் படியருகே தூணில் காலசம்மார மூர்த்தியின் திருவுருவம் மிகச் சிறப்பான வடிவமைப்பினைக் கொண்டது.
ஆடல் வல்லானது பொன்னம்பலத்தைச் சுற்றித் திருச்சுற்றும், திருச்சுற்று மாளிகையும் உள்ளன.
மேற்குக் கோபுர நுழைவாயிற்கு அருகே தென்பால் கற்பக விநாயகர் கோயிலும், உள்ளே நுழைந்தால் மேற்குக் கோபுரத்தின் தென்பால் முக்குறுணி விநாயகர் கோயிலும், வடபால் சுப்பிரமணியர் கோயிலும், சோமசுந்தரக் கடவுள் கோயிலும் உள்ளன.
மண்டபங்கள்
மூன்றாம் பெரிய பிராகாரத்தில் வடபால் சிவகங்கைத் தீர்த்தக் குளம் நல்ல படிக்கரையமைப்புடன் உள்ளது; சிவகங்கைக்கு மேற்பால் ஒற்றைக் கால் மண்டபம், நூற்றுக் கால் மண்டபம், சிவகாமியம்மன் கோயில், துர்க்கைக் கோயில், பாண்டிய நாயகம் கோயில் முதலியவற்றைக் காணலாம். சிவகங்கைக்குக் கீழ்ப்புறமாக இராசசபை எனும் ஆயிரம் கால் மண்டபத்தைக் கட்டடக் கலைச் சிறப்புடன் கண்டு கொள்ளலாம்.
நடராசர் கோயில்
சிதம்பரம் நடராசர் கோயிலில், நடராசர் சன்னிதிக்கு எதிப்புறத்தில் கொடிமண்டபத்திற்குத் தென்பால் நிருத்த சபை (நடன சபை) உள்ளது. அதன் இருபுறமும் சக்கரங்களைப் பெற்றுத் தேர்போல் காட்சியளிக்கிறது. அந்த மண்டபத்திலுள்ள சிற்ப எழில் கொண்ட 56 தூண்களும், அழகிய வேலைப்பாடமைந்த அதி்ட்டானமும் (துறவிகளைப் புதைக்கும் இடம்) கட்டடக் கலைக்குச் சிறப்பினை அளிக்க வல்லவை.
அதே நடராசர் கோயில் வளாகத்தில் (மூன்றாம் பிராகாரத்தில்) பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பாண்டிய நாயகம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. தேர் வடிவமான இக்கோயிலில் மூவருக்கு எதிரேயுள்ள மகாமண்டபம் கந்தபுராண நிகழ்ச்சிச் சித்திரங்களைத் தன் விதானத்தில் கொண்டுள்ளது.
அமிர்த கடேசுவரர் கோயில்
மேலைக் கடம்பூர் அமிர்த கடேசுவரர் கோயில், முதலாம் குலோத்துங்க சோழனால் (கி.பி. 1070 – 1125) கற்றளியாக மாற்றப்பட்ட சிறப்பினைக் கொண்டது. அதிட்டானம் தொடங்கி விமானம் வரையில் அற்புதச் சிற்பங்களைக் கொண்ட இக்கோயில் தேர்வடிவிலானது. கருவறையுடன் கூடிய விமானம் விண்ணிலிருந்து பூவுலகத்திற்கு வந்தது போன்ற தோற்றமுடையது. ஆலய நடுப்பகுதியாகிய துணைப் பீடத்தில் பக்கங்களிலே சிற்ப வேலைப்பாடு மிகுந்த தேர்ச் சக்கரங்கள் உள்ளன. இரு புறங்களிலும் தேரையிழுக்கும் குதிரைகள் காலை உயர்த்தியபடி சிற்ப எழிலுடன் காட்சியளிக்கின்றன.
நாச்சியார் கோயில்
நாச்சியார் கோயில் – பூந்தோட்டம் சாலையிலுள்ள துக்காச்சி (‘துர்க்கையாட்சி’ என்பதன் மரூஉ) ஆபத்சகாயர் ஆலயம் முதலாம் விக்கிரம சோழனால் கற்றளியாக ஆக்கப்பட்டது. இக்கோயில் தெற்கு நோக்கிய இரத மண்டபத்துடன் இணைந்த மூன்று மண்டபங்களைக் கொண்டது. இரு சக்கரங்களுடன் கூடி, தேர் மண்டபம் இரு குதிரைகளால் இழுக்கப்படுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.
தாராசுரம் கோயில்
சோழன் இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146-1172) காலத்தில் கட்டப்பட்ட தாராசுரம் (இராசராசேச்சுரம்) ஐராவதேசுவரர் கோயில் தேர் அமைப்பினைக் கொண்டது. சற்று உயர்ந்த உபபீடத்தின் மீது அமைக்கப்பட்ட இக்கோயிலின் அகர மண்டபம் ‘இராச கம்பீரன் திருமண்டபம்’ என்ற பெயருடையது. தேர் போல் அமைந்துள்ள இம்மண்டபத்தின் இரு பக்கங்களிலுமுள்ள சக்கரங்கள் சிற்ப வனப்புடன் கூடியவை.
கும்பகோணம் கோயில்கள்
கும்பகோணத்தில் சிவாலயங்களைப் பொறுத்த வரையில் நாகேச்சுவரர் கோயிலும், வைணவதிவ்ய தேசத்தைப் பொறுத்த வரையில் சாரங்கபாணி திருக்கோயிலும் தேர் வடிவ அமைப்பில் தனியே இரு கட்டடங்களைக் கொண்டவை. இரு ஆலயங்களுமே சிற்பச் சிறப்பிலும் கட்டடக் கலை நேர்த்தியிலும் காண்போரின் உள்ளங்கவரத்தக்கவை.
நாகேச்சுவரர் கோயிலில் வடபகுதியிலுள்ள ஆடல்வல்லான் மண்டபம் மூன்றாம் இராசராசன் காலத்தில் (கி.பி. 1216-1246) சன்னிதியுடன் கூடிய தேர் வடிவக் கட்டட அமைப்பாக உருவாக்கப்பட்டது. தேரின் இருபுறங்களிலும் எட்டடி விட்டமுள்ள தேர்க்கால்களுடன் – சிற்பச் சிறப்பு மிகு சக்கரங்களுடன் தோற்றமளிக்கும். சக்கர ஆரங்களில் பன்னிரண்டு இராசிகளின் தேவதைகள் சிற்ப அமைப்பில் காட்டப்பட்டுள்ளன. இத்தேரினை இரு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுப்பது போலச் சிற்பியரால் காட்டப்பட்டுள்ளன.
சாரங்கபாணி கோயிலில் குதிரைகள், யானைகள், தேர்ச்சக்கரங்களுடன் கூடிய விமானத்தை வைதிக (வேத) விமானம் என்றும், சோமச்சந்த விமானம் என்றும் அழைக்கின்றனர். தேர் போல அமைந்துள்ள கருவறை பிற்காலச் சோழர் காலத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறே தேர் போல அமைந்த ஆலயங்களும், ஆலயவளாகத்தில் அமைந்த மண்டபங்களுமாகத் தமிழகத்தில் பல உள்ளன
திருவாரூர் கோயில்
திருவாரூர் திருக்கோயிலில் மூன்றாம் பிராகாரத்துச் சுவர் அருகே மனுநீதிச் சோழன் வரலாற்றைச் சித்திரிக்கும் நோக்கில் அமைந்துள்ள தேரின் அமைப்பு காணத்தக்கது; மிகவும் போற்றத்தக்கது.
திருவக்கரை சந்திர மௌலீசுவரர் ஆலயத்தில் தேர்வடிவிலான திருக்கலியாண மண்டபம் உள்ளது.
மீனாட்சியம்மன் கோயில்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், தளபதி அரியநாத முதலியாரால் கட்டப்பட்ட ஆயிரக்கால் மண்டபம், தேர் போல அமைந்து, குதிரைகள் தேரை இழுப்பது போல் சிற்பச் சிறப்புடன் காட்டப்பட்டுள்ளது.
சிறப்பு
சிவலிங்கத்தை இராமன் பூசித்தமையால், இராமேசுவரம், தேசத்தின் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஆன்ம நலப்பாலமாக விளங்குகிறது. தீர்த்தப் பெருஞ்சிறப்புடைய இத்தலத்தின் பழைய பெயர் ‘கந்தமாதனப் பர்வதம்’ ஆகும்.
கருங்கற்பாறை கிட்டாத ஒரு தீவில் மிகப் பெரிய திருக்கோயிலைப் பல மண்டபங்களுடனும் வனப்புமிகு சிற்பங்களுடனும் உலகப் புகழ் பெற்ற பெரிய பிராகாரத்துடனும் திருப்பணி புரிந்தவர்கள் பாண்டிய, நாயக்க அரசர்களும், இராமநாதபுரத்துச் சேதுபதிகளுமேயாவர்.
சிவன் கோயில்
இங்குள்ள சிவன் கோயில் முதற்கண் இராமரால் நிறுவப்பட்டது என்பர். இக்காலத்திய அமைப்பில் கோயிலின் நீளம் 1000 அடி, அகலம் 657 அடி; மேலை வாயிலில் மட்டும் முடிவு பெற்ற கோபுரம் இருக்கிறது. இங்குள்ள நான்கு பிராகாரங்களில் மூன்று கூரையால் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. மூன்றாம் பிராகாரத்தின் இருபுறங்களிலுமுள்ள மேடைகளின் மேல் வரிசையாகத் தூண்களைக் காணலாம். தூண்கள் தாங்கிய கூரையினடியிலுள்ள நடையின் அழகு சிறப்புடையது. இக்கோயிலின் பெரும்பகுதி, 15-16ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது.
இக் கோயிலின் நான்காம் பிராகாரத்தின் மேற்புறத்தில் காணப்படும் சிவன் கோயில் சிறியது; இதுவே மிகப் பழைய ஆலயம்.
அமைப்பு
மலைமீதுள்ள பழநித்திருக்கோயில் சேரநாட்டை நோக்கி, மேற்குத் திசை பார்த்துக் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள இறைத்திருமேனி நவபாஷாணத்தால் ‘போகர்’ எனும் சித்தரால் அமைக்கப்பட்டது. போகரும், அவர் மாணவர் புலிப்பாணியும் இங்கு வாழ்ந்துவந்தமையால் ‘சித்தன் வாழ்வு’ என்றும் இப்பகுதிக்குப் பெயர் ஏற்பட்டது.
சேரமான் பெருமாள்
இந்த மலைக்கோயில் முதன் முதலில் சேரமான் பெருமாளால் கட்டப்பட்டது. மலை ஏறும்போது எதிரே முதலில் காணப்படுவது சேரவிநாயகரின் சிற்றாலயமாகும். மலைமீது காணப்படும் தண்டாயுதபாணியின் கருவறையில் வடப்பக்கத்துச் சுவரிலும் சேரமான் பெருமாள் தன் குதிரை மீது செல்லும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு
இக்கோயில், பல்வேறு கால, இன மன்னர்களால் பராமரிப்பினைப் பெற்று வந்துள்ளது. விசய நகரத்துக் கிருஷ்ணதேவராயர் திருப்பணியும் இத்தலத்துக்கு உண்டு.
உச்சியில் முருகன்
பொதினியாகிய பழநி மலைக்கோயில் மேலே அமைந்திருக்க, அடிவாரத்தில் திருவாவிùன்குடிக் கோயில் நல்ல கட்டட அமைப்புடன் விளங்குகிறது. பழநி மலைக்குச் சிறிது அருகே மற்றுமொரு சிறுகுன்று ‘இடும்பன்மலை’ என்ற பெயருடன் விளங்குகிறது. (இவை கடல் மட்டத்திற்கு மேல் 1068 அடி உயர்ந்துள்ளன.) இதனை அடுத்துள்ள ‘இடும்பன் குளம்’ 147 ஏக்கர் பரப்புள்ளது. பழநி மலை உச்சியில் அதன் மணிமுடி போல் முருகன் திருக்கோயில் விளங்கி வருகிறத.
மண்டபமும் படிகளும்
இக்கோயிலில் சுவாமிக்கு முன்பு அமைந்துள்ள மண்டபச் சிறப்பும், பக்தர்கள் வரிசையாக வந்த வழிபடுவதற்கேற்ற வழியமைப்பும் காணத்தக்கவை.
மலை ஏறுவதற்கு வசதியாகப் படிகளும், இடையிடையே தங்கு மண்டபங்களும், ஓரிடத்தில் இடும்பன் சன்னிதியும் நன்கு பராமரிக்கப்படுகின்றன. யானையடிப் பாதையும் தனியே அமைந்துள்ளது.
கல்வெட்டுச் செய்தி
ஆலிலைப் பள்ளியான் என்பதற்கு வடமொழிப் பெயரே ‘வடபத்ர சாயி’, இவ்விறைவன் கோயிலைத் திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் குலசேகர தேவன் கட்டினான் என்றும், ஆண்டாள் கோயிலைச் சுந்தரத் தோளுடைய மாவளி வாணாதிராயன் கட்டினான் என்றும் கல்வெட்டுகள் கூறும்.
வடபத்ர சயனர் கோயில்
வடபத்ர சயனர் கோயில் மிகப்பெரிய கோபுரத்துடன் விளங்குகிறது. அக் கோபுரவாயிலை யடுத்து வட புறத்தில் தெற்கு நோக்கியவாறு பெரியாழ்வார் சன்னிதி உள்ளது. இச் சன்னிதியை யடுத்து மேற்கே பெரிய பெருமாள் சன்னிதி காணப்படுகிறது. இச் சன்னிதியில் இரு தளங்கள் உள்ளன. கீழ்த்தளத்தில் நரசிங்கப்பெருமாள் சன்னிதி இதற்கு வடபுறம் ஆழ்வார் பன்னிருவரும் தசாவதார (பத்து அவதாரங்கள்) மூர்த்திகளும் அமைந்துள்ளனர். தென்புறத்தில் மேல்தளத்திற்குச் செல்ல நல்ல படிகள் உள்ளன.
மேல் தளத்திற்குச் சென்றால் ‘போபால விலாசம்’ எனும் கட்டட அமைப்பு உள்ளது. இதனையடுத்து விமல ஆகிருதி விமானத்தின் கீழுள்ள கருவறையில் வட ஆலமரத்தினடியில் ஆதிசேடன் மீது திருமகளும் பூமகளும் அடிவருட பெருமாள் கிழக்குமுகமாகப் பள்ளிகொண்டிருத்தலைக் காணலாம். அருகிலுள்ள அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் மிகப் பாதுகாப்பாக உள்ளனர்.
நாச்சியார் ஆலயம்
அடுத்ததாக, ஆண்டாள் நாச்சியாரின் ஆலயம் மிகச் சிறப்புடைய கட்டட நேர்த்தி கொண்டது. அக்கோயிலில் முதலில் காணப்படுவது ‘பந்தல் மண்டபம்’. இதன் வழியாக உள்சென்றால் இடப்பக்கம் கலியாண மண்டபமும், அதற்கடுத்து இடைநிலைக் கோபுரமும் உள்ளது.
இடைநிலைக் கோபுரத்தை அடுத்துள்ளது வெளித்திருச்சுற்று அதனில் இராமர், ஸ்ரீநிவாசன் ஆகியோர் சன்னிதிகள் காணப்படுகின்றன.
இக்கோயிலின் உள்திருச்சுற்றில் சித்திரச் சிறப்புடன் கூடிய ‘மாதவிப்பந்தல்’ உள்ளது. அடுத்ததாக மணிமண்டபம் காணப்படும். அதனையடுத்து அர்த்த மண்டபமும், கருவறையும் உள்ளன.
கருவறையில் நடுவே ரங்கமன்னாரும் (திருமாலும்), வலப்பக்கத்தே ஆண்டாளும், இடப்பக்கத்தே கருடாழ்வாரும் காட்சியளிப்பர். அவர்களுக்கு எதிரில் தங்க ஸ்தாபன கோபால மஞ்சத்தில் (தங்கத்தால் ஆன படுக்கை) அவர்களே உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியிருக்கக் காணலாம்.
இந்தக் கோயில் விமானம், தங்கத்தகடு போர்த்தப் பெற்று அழகுமிக்கது; மேலும், திருப்பாவைப் பாசுரங்களை விளக்க வல்ல திருவுருவங்கள் அழகுற அமைந்துள்ளன.
பிராகாரங்கள்
ஆலயத்தைச் சுற்றி ஏழு பிராகாரங்கள் உண்டு. அவற்றுள் முதல் பிராகாரத்திற்கு ‘அடையவளைந்தான்’ என்ற பெயர் உளது; அது சுமார் 6 கி.மீ. சுற்றளவு உடையது. அந்த ஆலயத்திற்குத் தென்புறத்து வாயில்தான் முதன்மையானது. முதல் பிராகாரத்தின் தென் புறத்துள்ள வாயிலுக்கு ‘ராய கோபுரம்’ என்ற பெயர் உள்ளது; அது மிக விசாலமானது.
மண்டபங்கள்
இந்தப் பிராகாரத்தில் சில சன்னிதிகளும் பெரிய ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன. அம்மண்டபத்தில் சிற்பங்கள் சிறப்பாக அமையவில்லை. ஆயினும், பார்வைக்கு எடுப்பான தோற்றம் உடையன. இவ்வாறே ஏனைய பிராகாரங்களும் பற்பல சன்னிதிகளாலும் மண்டபங்களாலும் சூழப்பட்டிருப்பதைக் காணலாம். உள்பிராகாரத்துள் அருள்மிகு அரங்கநாதர் பள்ளிகொண்ட திருக்கோலத்தில், கருவறையில் காட்சியளிக்கக் காணலாம். கருவறை மேலுள்ள பொன்விமானம் பிரணவாக்ருதி விமானம் எனப்படும்.
கட்டடக் கலை சிறப்பு
கருங்கல் எடுக்க அருகே சிறு குன்றோ, இயந்திர வசதியோ இல்லாத முற்காலத்தில் அமைக்கப்பெற்ற இப்பெரிய திருக்கோயில், சிறந்த கட்டுக் கோப்புடன் கூடிய பலவகைக் கட்டடங்களும் சிற்பப்படைப்புகளும் கொண்டு, வனப்பு மிகு கலைக் கூடமாகவே திகழ்கின்றது. நகரத்தையே வளைத்துப் போட்ட நிலையில், ஏழு பிராகாரங்களும் இருபத்தொரு கோபுரங்களும், உயரமான தூண்களுடன் கூடிய மண்டபங்களும் பூலோக வைகுண்டம் என நினைக்கச் செய்து வியப்பிலாழ்த்தும்.
புகழ்மிக்கது
இந்த ஆலயத்தின் கட்டடக் கலைத் திறமையையும் சிற்ப நேர்த்தியையும் காணும் நம் நாட்டவரேயல்லாமல், வரலாற்று வல்லுநர்களாகிய பர்கூசன் (Fergusson), ஹாவல் (
அச்சுத தேவராய மன்னரால் தொடங்கப்பட்டு நிறைவு பெறாத மொட்டைக் கோபுரத்தை 13 நிலைகள் கொண்ட வானளாவிய கோபுரமாகக் கட்டி முடித்த பெருமை அகோபிலமடம் ஜீயர் சுவாமிகளைச் சாரும். இந்தத் தெற்குக் கோபுரத்தின் உயரம் 235 அடி. கல் காரத்தி்ன் நீளம் 167 அடி, அகலம் 97 அடி ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் இஃது என்று புகழுமளவிற்குக் கட்டடப் பணிகள் நிறைவேறின.
பல்வேறு காலங்களில் பல்வேறு மன்னர்களாலும் அருளாளர்களாலும் செய்து முடிக்கப்பட்ட சீரிய பணியே திருவரங்கக் கோயிலமைப்பாகக் காட்சியளிக்கிறது.
சோழர்களும் அவர்கள் தேவியர்களும் புரிந்த கோயிற் பணிகள் பற்றித் தெரிந்து கொள்ளும் வகையில் தஞ்சைப் பெரிய கோயில், திருவையாற்றுக் கோயில் முதலியவை கூறப்பட்டன. மேலும், தென் கயிலாயத்திற்குச் சிறப்பளிக்கும் வகையில் ஏழூர்த்தலங்கள் இயைபுடன் சொல்லப்பட்டன. பூலோக கைலாயமாகச் சிதம்பரம் போற்றப்படுதலின் அதன் கட்டடக் கலைப் பெருமை சுருக்கமாகத் தரப்பட்டது. சக்தியின் பெருமை நோக்கில் சிவகாமியம்மன் கோயிலும் உள்ளது. இராமேசுவரம், பழநி, திருவில்லிபுத்தூர், திருவரங்கம் ஆகிய திருத்தலங்கள் மக்கள் பலரின் நாட்டத்தைக் கவரும் வகையில் கட்டடங்களும் வனப்புடன் அமைந்துள்ளன என்பது சான்றுகளுடன் தெளிவாக்கப்பட்டன.
பாடம் - 5
சிறுதெய்வக் கோயில்களை ஆற்றங்கரைகளிலும் குளக்கரைகளிலும் அமைத்தமையால் சுற்றுப்புறத்தூய்மை பாதுகாக்கப்படுகிறது என்பது நன்கு விளக்கப்படுகிறது.
நாகர் தாக்கம், மாரியம்மன், காளியம்மன், இயக்கி முதலிய பெண் தெய்வங்களும், ஐயனார், சுடலைமாடன், கருப்பசாமி, முனீசுவரன் முதலிய தெய்வங்களும் ஊர்ப்பாதுகாப்பிற்குத் துணை நிற்கும் திறம் தக்கவாறு விளக்கப்படுகிறது. கட்டடக் கலை வாயிலாகப் பண்பாடு நாகரிகம் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் அமைந்துள்ளது.
பொதுவாகக் கட்டடக் கலைக்கு அடிப்படைப் பரிமாணங்களாக நீளம், அகலம், பருமன் ஆகியவை தேவைப்படும். பழங்கால மனிதன் எப்படி முறையாகக் கட்டடம் கட்ட வேண்டுமென்று திட்டமிட்டு்ச் செயற்படவில்லை. அஃதாவது, ஆகம விதிப்படி நிலத்தைத் தேர்ந்தெடுப்பதிலோ , நிலத்தைச் சோதிப்பதிலோ , திசையைக் குறிப்பதிலோ, கால நேரம் பார்ப்பதிலோ நாட்டம் செலுத்தவில்லை; அவை அவனுக்குத் தெரியாது. மலைச்சாரற் பகுதியிலோ, காடுகளையொட்டிய பகுதியிலோ குடிசைபோட்டுக் கொண்டு வாழ்ந்தான். தன் உறவினர்களுடன் வாழ்ந்து வருகையில் அம்மை, வயிற்றுப்போக்குப் போன்ற நோய்கள் தெய்வத்தால்தான் உண்டாகின்றன என நினைத்தான். இயற்கைச் சக்திகள் ஒருபுறமிருக்க, இறந்து பட்ட முன்னோர்களின் ஆவிகளையும் திருப்திப்படுத்தினால்தான் கவலையின்றி வாழமுடியுமென்று எண்ணினான். இவ்வாறான எண்ணங்களின் விளைவாகச் சிறுதெய்வக் கோயில்கள் கட்டினான். கல்லையோ சூலத்தையோ வேலையோ தெய்வமெனக் கோயில்களில் நிறுவி, எருமை, ஆடு, கோழி முதலியவற்றை உயிர்ப்பலியாகக் கொடுக்க முற்பட்டான்; அவற்றை வெட்டுவதற்குப் பலிபீடம் உண்டாக்கினான்.
பல தெய்வங்கள்
இவ்வாறான கிராம தேவதைகள் பல அமைப்புகளில் இருந்ததால் அவற்றைக் கலைச் செல்வங்கள் என்று கூறமுடியாது. தம் குடும்பத்தில் இள வயதில் இறந்துபோன பெண்களும் தெய்வங்களாகக் கருதப்பட்டதால் அவர்களுக்கும் வழிபாடு செய்யத் தலைப்பட்டனர். இவ்வாறெல்லாம் பல நோக்கங்களில் சிறுதெய்வங்கள் பெருகின. புராணச் செய்திகள் சிற்றூர்ப்புற மக்களின் செவிகளில் எட்டியதும், அந் நிலையிலும் சில தெய்வங்களை நிறுவி மனநிறைவு கொண்டனர். எனவே, வீட்டுத் தெய்வம், குலதெய்வம், இனத்தெய்வம், புராண அடிப்படையிலான தெய்வம் எனச் சிறுதெய்வங்களின் எண்ணிக்கை வளர்ந்தது. அவற்றுக்கெல்லாம் தோப்புகளி்லும் ஆற்றங்கரைகளிலும் குளக்கரைகளிலும் சிறு கோயில்கள் கட்டப்பட்டன. சுருங்கக் கூறின், கிராமத் தெய்வங்களின் கோயில்கள், வளர்ந்த நிலையில் செங்கற்களால் கட்டப்பட்டுத் தென்னங்கீற்றாலோ, பனையோலைகளாலோ வேயப்பட்டன; அவை குறிப்பிடத்தக்க கட்டடக் கலை அமைப்பைக் கொண்டு விளங்கின எனக்கூற முடியாது. ஆனால், சிற்றூர்ப்புறப் பாதுகாப்பிற்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் ஆக்கம் தேடின எனக் கொள்ளலாம்.
அறிஞர்கள் கருத்து
நாட்டுப்புற மக்கள் தம் முன்னோர் மீது கொண்ட நம்பிக்கையால் தம் இல்லங்களையும், வழிபடும் தெய்வங்களையும், அந்தத் தெய்வங்கள் உறையும் கோயில்களையும் மனத்திற்கொண்டு, வழிபாட்டிற்குரிய சடங்குகளைப் பின்பற்றினர். இந்தக் கோணத்தில், நாட்டுப்புறக் கட்டக்கலை ( Folk architecture ) ஒருவகையில் மரபுவழிப்பட்ட கட்டடக் கலையெனலாம். மேலை நாட்டில், அறிவு சார்ந்த கட்டடக் கலை (Academic architecture), நாட்டுப்புறக் கட்டடக் கலை என இருவகையில் ஆராய்ந்து, அறிவு சார்ந்த கட்டடக் கலை உயர் வகுப்பினர்க்குரியது என்று அந்தக் கலையைப் பெரிதும் போற்றுகின்றனர். நாட்டுப்புறவியல் கட்டடக் கலையில் பெருமளவில் ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை என்றும் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்திய நாட்டில், சிறப்பாகத் தமிழ்நாட்டில் நாட்டுப்புறவியல் கட்டடக்கலை பற்றிச் சிறப்பாக ஆராய்ந்து வருகின்றனர்.
கோயிலமைப்பு
தமிழகத்தில் நாட்டுப்புற மக்கள் தாம் வசிக்கும் வீடுகளைக் கட்டுவதற்குத் தாமே இவ்வாறு அமையவேண்டுமென்று தீர்மானித்துச் செயற்படுத்தினர். தமிழகத்தில் வீடு கட்டுவதற்குத் திட்டமிடுகையில், தரையமைப்பு கூரை ஆகியவற்றின் அடிப்படையை மூன்றாக வகைப்படுத்திக் கொண்டனர; அவை,
(1) நீண்ட சதுரத் தரையமைப்பும் மட்டமான கூரையும்
(2) நீண்ட சதுரத் தரையமைப்பும் சாய்வான கூரையும்
(3) வட்டமான தரையமைப்பும் கூம்புவடிவக் கூரையும்
என்பன. இக் கட்டட அமைப்பே சிறுதெய்வக் கோயில்களுக்கும் பொருந்தும்.
அமைப்பின் வளர்ச்சி
சிற்றூர்ப் புறங்களி்ல், பரிணாம வளர்ச்சி காரணமாக இக்காலத்தில் படிப்படியாகச் சிறுதெய்வக் கோயில்களில் பலமண்டபங்களைக் கட்டி, கோயில் வளாகத்தை விரிவுபடுத்திக்கொண்டே செல்கின்றனர்; அவ்வாறு கட்டப்படும் நிலையிலும் மரபையும் நம்பிக்கையையும் விட்டுக் கொடுக்காமல், தெய்வம் நிறுவப்பட்ட கருவறையில் கூரைவேயாமல் விட்டு விடுதலும் உண்டு. கூரையில்லாக் கோயிலுக்குத் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
மூர்த்தியாகிய சிறுதெய்வச் சிலைகள் மரத்து அடிப்பகுதியில் பீடம் அமைத்து நிறுவப்பட்டுப் பூசாரிகளால் முறையான வழிபாடுகளையும் படையல்களையும் பெற்றன. மரத்தின் கீழ், வழிபடுதற்குரிய சிலையிருப்பதால், மக்கள் தம்மையறியாமலேயே தூய்மை காத்தனர்; மரத்தின் அருகே சிறுநீர் கழிப்பது கூடப் பாவம் என்றும், சுவாமி அதற்குரிய தண்டனையைக் கொடுத்துவிடும் என்றும் அஞ்சினர்; எப்படியோ ஒருவகை அச்சவுணர்வால் பக்தியும் வளர்ந்து வருகின்றது ; சுற்றுப்புறத் தூய்மையும் பாதுகாக்கப்படுகிறது. இதே நோக்கத்தைப் பின்பற்றியே ஆற்றங்கரையோரங்களிலும், குளக்கரையிலும், வேப்பமரம், அரசமரம் போன்ற மரத்து அடியிலும் பிள்ளையார், கிராம தேவதைகள் போன்ற தெய்வச் சிலைகளை மரத்தாலோ கல்லாலோ சுதையாலோ அமைத்து வழிபட முற்பட்டனர். மழையிலும் காற்றிலும் அவை பாதிக்கப்படுவதைக் கண்டு, மரத்தின் அடியிலோ அருகிலோ சிறுதெய்வங்களுக்குக் கோயில்கள் அமைக்கலாயினர். இக்காலத்திலும் கண்மாய் வெட்டினால் அதன் கரையில் ஐயனார் சிலை நிறுவுவதைத் தென்மாவட்டங்களில் காணலாம்.
குன்றுகளிலும் மலைச்சாரல்களிலும் காடுகளிலும் சிறுதெய்வக் கோயில்களை அமைப்பதால், தூய்மை பாதுகாக்கப்படுவது ஒருபுறமிருப்பினும், அங்குச் சென்று வருபவர்களுக்கு மருத்துவ மூலிகைக் காற்றால் உடல் நலமும் பாதுகாக்கப்படும் வாய்ப்பு உண்டாகிறது. எனவே, கோயிலை ஒட்டிவாழும் குடிமக்களும், குடிமக்களை ஒட்டிய கோயிலும் நன்கு அமைந்திடச் சிறுதெய்வக் கோயில்களும் துணைநிற்கின்றன எனலாம்.
இஃது ஒரு புறமிருக்க, வடவர் பண்பாடு பழக்கவழக்கங்கள், தமிழர் பண்பாடு பழக்கவழக்கங்களுடன் கலப்புற்ற நிலையி்லே, வேதம், ஆகமம் முதலியவற்றில் நம்பிக்கை ஏற்பட்டது. திருமால், முருகன், இந்திரன், வருணன், காளி ஆகிய ஐவகை நிலத்துத் தெய்வங்களுடன், மேலும் சில தெய்வங்களும் கோயில்களில் நிறுவப்பட்டு (பிரதிட்டை செய்யப்பட்டு), கோயிற் கிரியைகள் பலவாயின. பெருந்தெய்வ வழிபாடு ஒருபக்கமும், சிறுதெய்வ வழிபாடு மற்றொரு பக்கமுமாக, நூற்றுக்கணக்கான தெய்வங்கள் வழிபாடுகளைப் பெற்றன; கோயில்களிலும் அவை நிறுவப்பட்டன. எனினும், வழிபாட்டுச் சடங்கு முறைகளில் ஒவ்வொன்றும் தன் தனித்தன்மையைக் காத்துக் கொள்ள முயன்று வருதலை வரலாற்று ஏடுகள் பதிவு செய்து காட்டி வருகின்றன. கட்டடக் கலை நோக்கில் அவை பற்றி ஓரளவு காண்போம்.
சப்தமாதர்கள், சப்தகன்னியர், மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், பிரத்தியங்கராதேவி, சேட்டை (ஜேஷ்டாதேவி), கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி முதலிய ஆற்றுத் தெய்வங்கள், திரௌபதியம்மன், தீப்பாய்ந்தாளம்மன், இரேணுகாதேவி, மாதங்கி, காட்டேறி முதலிய பல தெய்வங்களுக்கும் கிராமங்களிலும், சில பேரூர்களிலும் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு தெய்வத்திடத்தும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பொறுத்தே கோயிற் கட்டடங்களின் விரிவும் சுருக்கமும் அமைந்தன.
கண்ணகியைத் தெய்வமாக்கிய நிலையில், அவள் பல பெயர்களில் கோயிலிலும் கோயில் வளாகங்களிலும் இடம் பெற்றுள்ளாள்; எடுத்துக்காட்டாகத் திருவொற்றியூர் சிவன் கோயிலில் வட்டப்பாறையம்மனைக் கண்ணகித் தெய்வமென்றே ஊர்மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
வடநாட்டுக் காப்பியமாகிய மகாபாரதத்தில், பஞ்சபாண்டவர்களின் பத்தினியாகத் திரௌபதி வருவதைப் பலரும் அறிவர். சமய நோக்கிலும் தத்துவ நோக்கிலும் திரௌபதியாகிய பாஞ்சாலி, தமிழ்ப் பெருமக்களால் பக்தியார்வத்துடன் கொண்டாடப்படுகிறாள். அவளுக்கு அமைந்துள்ள கோயிற்கட்டடங்களும் பல ஊர்களில் சிறப்பாக அமைந்துள்ளன.
தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் பிள்ளையார் கோயிலும் மாரியம்மன் கோயிலும் இல்லாத குக்கிராமத்தைக் கூடக் காண முடியாது. ஒரே ஊரில் பல மாரியம்மன் கோயில்கள் அமைந்திருந்தால், ஒவ்வொன்றுக்கும் மூர்த்திகரத்தைப் பொறுத்தும் அஃது அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தும் தெருவைப் பொறுத்தும் பெயரிட்டழைப்பர். எனினும், தென்னாட்டை, அதிலும் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலும் சமயபுரம் மாரியம்மன் கோயில், பண்ணாரிமாரியம்மன் கோயில், ஒழுகமங்கலம் மாரியம்மன் கோயில், திருவேற்காடு மாரியம்மன் கோயில், வலங்கை மாரியம்மன் கோயில், புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில், திருக்கண்ணபுரம் மாரியம்மன் கோயில், திருவாலங்காடு வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயில் (திருவாவடுதுறைக்கு அருகில்) முதலியவை முக்கியமானவை.
மாரியம்மன் கோயில்களில் மாரியம்மன் தலை மீது ஏழு நாகங்கள் குடைபிடிப்பது போல் காட்டப்பட்டிருக்கும் ; அதன் தத்துவப் பொருளாக ஏழு உலகங்களும் அவளது கட்டுப்பாட்டில் சேவை செய்கின்றன என்று கூறுவர்.
மாரியம்மன் கோயில்களைப் பொறுத்த வரையில் பல வகையில் சிந்திக்க வேண்டிய செய்திகள் உள்ளன.
மாரியம்மனுக்கும் நாகம் உறையும் புற்றுக்குமுள்ள தொடர்பினைப்போல் மாரியம்மனுக்கும் வேப்பிலைக்கும் நிரம்பத் தொடர்பு உண்டு ; எனவே, ‘வேப்பிலைக்காரி’ என்றும் அம்மனை அழைப்பர்.
தேவைக்கேற்பக் கோயிற் கட்டடங்கள் பலவாகக் கட்டப்படும். மாரியம்மனை ரேணுகாதேவி என்றும், கண்ணகி்யின் மறுவடிவம் என்றும் அறிஞர்கள் பலவாறு இனங்கண்டு கூறுவர். வேப்பிலைக்காரியாகிய மாரியம்மனுக்கும் உயரிய தத்துவம் உண்டு. மாரி எனும் மழைக்கு நாயகியாகிய அம்மன், பூமியின் சுழற்சிக்கேற்ப மழைபெய்வதேபோல், அருள் மழை பொழிவாள் என்பர். மழை இயற்கையின் சுழற்சி வட்டத்தைக் குறி்ப்பதேபோல், வேப்பிலையடிக்கையில் சுழற்சியும் வட்டமும் அமைவதால் மாரியம்மனுக்கு அஃது உவப்பாகும் என்று கூறுவர். மேலும், வேப்பிலையைக் கையிலேந்திக் கரகத்தைத் தலையிலேந்திச் சுழன்று ஆடுவதும் அம்மனுக்கு உவப்பைத்தரும் என்பர். ஒவ்வொரு மாரியம்மனுக்கும் நடைபெறும் பூச்சொரிதல், தீமிதி போன்ற திருவிழாக்களுக்கு, மக்கள் திரளுவர். அதற்கேற்பக் கோயிலிலும் மகாமண்டபம் முதலிய மண்டபங்களும் திருச்சுற்றும் சன்னிதியமைப்பும் விசாலமாக அமைக்கப்படும். எடுத்துக்காட்டாகச் சமயபுரம் திருக்கோயிலைக் காண்கையில், சிறுதெய்வமாகிய அருள்மிகு மாரியம்மன் மிகப் பெருந்தெய்வமாகவும், கோயிலும் அதற்கேற்பக் கட்டட வசதிகளைக் கொண்டதாகவும் விளங்குவதைக் காணலாம்; திருவேற்காடு மாரியம்மன் கோயிலையும் பண்ணாரியம்மன் கோயிலையும் காண்கையில் கட்டட வசதிகள் பலவற்றைப் பெற்ற பெருங்கோயில் என்பதே நினைவிற்கு வரும்.
சிவபெருமான் நாகங்களையே அணிகலன்களாகப் பூண்ட நாக அணியான்; திருமாலோ ஆதிசேடனாகிய பாம்பை அரவணையாகக் கொண்டவன்; சக்தியின் கூறுகளாகவுள்ள சக்திகள் பலவும் நாகங்களை அணியாகக் கொண்டவை. விநாயகர் நாகத்தை உதரபந்தமாகக் கொண்டவர். திருமுருகன் மயிலின் காலில் நாகம் அடங்கிக் கிடப்பதைக் காணலாம்.
சக்தியின் அருளாட்சியைப் புலப்படுத்தும் வகையில், செங்கற்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் ‘நெல்லிவனம்’ எனும் திருத்தலத்தில் வேண்டவராசியம்மன் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் அம்மனை நாககன்னியர் எழுவர் கந்தருவ உலகத்திலிருந்து வந்து வழிபட்டு அருள் பெற்றனர் என்பது புராணக் குறிப்பு. இந்தக் கோயிற் கட்டடம் கலைச் சிறப்புக் கூறுகள் கொண்டது.
திருச்செங்கோட்டு வேலவன் மலையில், மலையேறும் வழியில் மிக நீண்ட நாகச்சிலையும், மலைக் கோயிலினுள்ளே மிகப் பெரிய வடிவில் நாகம் சுருட்டிக் கொண்டு படமெடுத்த நிலையில் காட்சியளிப்பதும் காணத்தக்கவை. திருச்செங்கோட்டு மலைக்கோயில் கட்டடக் கலைக்கூறுகள் நிரம்பக் கொண்டதாகும். பேரையூர் நாகநாத சுவாமி கோயில் மண்டபங்கள் மதிற் சுவர்கள் எல்லாவற்றிலும் நாகர் வடிவங்கள் அமைந்துள்ளன.
இக்காலத்தில் சங்கரன் கோயில் என்று அழைக்கப்படும் சங்கரநாராயணர் கோயில், 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உக்கிரபாண்டியன் எனும் பெரு மன்னனால் கட்டப்பட்டது. தமிழகத்திலே வேறெங்கும் காண வியலாத சில சிறப்புகள் இந்தக் கோயிலில் காணலாம். இங்குள்ள நாகராஜா கோயிலில் பாம்புப் புற்று ஒன்று உள்ளது. அதனைச் சுற்றியே சங்கர நாராயணர் கோயில் கட்டப்பட்டுள்ளது. நாகராசர் கோயிலுக்கு வழிபாடு நி்மித்தம் வருகின்ற பலர் பாலும் பழமும் வைத்து வழிபடுவதும், புற்று மண்ணைச் சரும நோய்தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்துவதும், புற்றுமண்ணைச் சிறிது எடுத்து அருகிலுள்ள தொட்டியில் போடுவதும் செய்வர். இவ்வாறான வசதிகளுக்கேற்பக் கோயிற்கட்டட அமைப்பு நன்கு அமைந்துள்ளது; கட்டடப் பராமரிப்பும் நன்கு உள்ளது.
பாம்புக் கோயில் என்றே தமிழர்கள் போற்றி வழிபடும் ஆலயம் உள்ள நாகர் கோயிலும், நாகர்களால் புகழ்பெற்ற நாகப்பட்டினமும் நாகர்தாக்கம் கொண்டவை.
ஐயனார் பற்றிய கருத்துகள்
சங்க காலத்தில் வழிபடப்பட்ட ‘சாத்தன்’ என்ற தெய்வமே கிராமங்களில் ஐயனாராகக் கொண்டாடப்படுகிறார் என்றும், சாஸ்தா (சாத்தன்) எனும் ஐயனார், மகாசாஸ்தா, சத்ரு சாஸ்தா, ஜீவ சாஸ்தா, சர்வசாஸ்தா, சாஸ்தா, பிரசாஸ்தா என்ற பெயர்களில் ஆறுவகை உண்டென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் ; சிலர் ஒன்பது வகை சாஸ்தாக்களைக் குறிப்பிடுவர்.
1. ஆதிபூதநாதர் (ஐயனார்),
2. சம்மோகன சாஸ்தா,
5. கலியாணவாத சாஸ்தா,
4. வேத சாஸ்தா,
5. ஞான சாஸ்தா,
6. பிரம்ம சாஸ்தா,
7. ஸ்ரீதர்ம சாஸ்தா,
8. மகா சாஸ்தா,
9. வீர சாஸ்தா
இவர்களுக்கெல்லாம் ஒரு காலத்தில் கோயில்கள் இருந்தன என்பர்.
மக்களின் பக்தியார்வத்திற்கேற்ப ஐயனார் கோயிலில் கட்டட அமைப்புகள் பலவாறாக உள்ளன. சிறப்புமிகு ஐயனார் கோயில் பற்றி ஆராய்ந்து கோ.வி. இராசேந்திரன் எழுதுகையில், “மதுரை – வாழப்பாடி தாலுக்கா அய்யன் பேட்டை கிராமத்திலுள்ள அய்யனார் கோயிலில் அய்யனார் தம் மனைவிகளான பூர்ணாதேவி, புஷ்கலாதேவி ஆகியோருடன் அருள் புரியும் விதத்தில் அமைந்துள்ளது. இதில் மற்றொரு சிறப்பு, கோவிலைச் சுற்றிலும் உள்பகுதியிலும் சோனை, சின்ன கருப்பு, பெரிய கருப்பு, லாட சன்னாசி, பேச்சி, சந்தனக் கருப்பு, சிவன், வீரியப் பெருமாள், மதயானைக் கருப்பு, ராக்காயி, பத்ரகாளி உட்பட இருபத்தொரு தெய்வங்கள் உள்ளன. பொதுவாக எல்லா ஊர்களிலும் உள்ள கோயில்களில் அய்யனார் சாட்டைக் கம்புடன் அமர்ந்திருந்து அருள் புரிவார். இங்கு அய்யனார் குதிரைச் சிலையிலிருந்து அருள் புரிகிறார்”. (ஆலயங்களும் அபூர்வ தகவல்களும்’ – பக் 43) என்று கூறுவது மிகவும் சிந்திக்கத்தக்கது. இதனால், ஆலயக் கட்டடமும் அதன் முற்பகுதிப் பரப்பும் விசாலமானவை என்பது தெரிய வரும்.
தஞ்சைப் – பட்டுக் கோட்டை நெடுஞ்சாலையில், தஞ்சையிலிருந்து 9கீ.மீ. தொலைவில் சூரக்கோட்டை பரமநாத ஐயனார் கோயில் விசாலமாக உள்ளது. ஐயனார் பூரணா மற்றும் புஷ்கலா ஆகிய இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். ஐயனார் சன்னிதியின் முன்புறமாக மதுரை வீரன், பொம்மி மற்றும் வெள்ளையம்மாளுடன் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். மேலும், இக்கோயிலில் முனீசுவரன், பேச்சியம்மன், நாகப்பன் முதலியோர் சன்னிதிகளும், ஆகம விதிப்படி கன்னிமூலையில் மங்கள விநாயகரும் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். இவற்றையெல்லாம் நோக்குகையில், போதிய கோயிற் கட்டட வசதியில்லாத தெய்வங்களும் மக்களின் பக்தியார்வம் காரணமாகக் கோயி்லும் பல கட்டட அங்கங்களும் பெற்று அருள் புரியலாயின என்பது தெரிய வரும்.
மேலும், பெரும்பாலும் ஐயனாருக்குத் துணையாகக் கருப்ப சாமி விளங்குவார் என்பதைத் தென் மாவட்டங்களிலுள்ள கோயிலமைப்புகளால் தெரிந்து கொள்ளலாம்.
ஒப்பீ்ட்டு ஆய்வு முறையில் சிந்திக்கையில் சில பெருந்தெய்வங்களுக்குச் சிறுதெய்வங்கள் காவல் பொறுப்பிற்குத் துணை நிற்பது உண்டு. அகத்தியனாரின் வேண்டுகோளை ஏற்று இடும்பன் (இடும்பாசுரன்) திருக்கயிலையிலிருந்து சிவகிரி, சத்திகிரி ஆகியவற்றைக் காவடியில் வைத்துக் கொணர்ந்த பெருமை கொண்டவன். எனினும், பழநி தண்டாயுத பாணிக்கு உதவியாக அமைந்த காவல் தெய்வம். அந்தச் சிறுதெய்வத்துக்கும் பழநி மலையில் தனிக்கோயில் உண்டு.
மாடுகளுக்குப் பாதுகாப்பாக அமைந்த தெய்வமே மாடன் என்பதாகவும், அந்த மாடன் சுடலைக் கருகே கோயில் கொண்ட காரணத்தால் சுடலை மாடன் எனப் பெயர் வந்ததாகவும் கூறுவர்.
நாமக்கல் மாவட்டம் (பரமத்தி வேலூர் வட்டத்திலுள்ள) சேடர் பாளையத்திற்கு அருகில் மலிமுனீசுவரர் ஆலயம் உள்ளது. இவ்வாலயச் சிறப்பைக் குறித்து ஆ. கந்தன் எழுதுகையில், “சிறிய அளவில் கட்டலாமென்று ஆரம்பித்த முனீசுவரர் சிலை 64 அடி உயரத்தில் வந்து முடிந்தது. கோபமாகவும் இல்லாமல் சிரித்தவாறும் இல்லாமல் நடுத்தரமான நிலையில் முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டியபடி அருள் பாலிக்கிறார். முனீசுவரர் கத்தியின் உயரம் 27 அடி. அக்கத்தியின் எடை ஒரு டன் ஆகும். இந்தச் சிலையி்ன் மொத்த எடை சுமாராக 150 டன் இருக்குமெனக் கூறுகின்றனர். கை விரல்கள், கண், காது, கால், மீசை என ஒவ்வொன்றையும் மிக நுணுக்கமாக அமைத்துள்ளனர்…….. இந்தியாவிலேயே இதுபோல முனீசுவரருக்கு இவ்வளவு உயரச்சிலை இல்லையென்று சொல்வதோடு இல்லாமல் மிகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கிறது” எனக் குறிப்பிடுவது மனங் கொள்ளத்தக்கது. ஆனால், எந்தக் காலத்திலிருந்து முனீசுவரர் வழிபாடு கோயிலில் வைத்துத் தொடங்கப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை.
சாத்தனார்க்குச் சங்கிலி பூதத்தாரும், இசக்கியும் என இரு பணியாளர்கள் உள்ளனர். அந்த இயக்கியே தனியாகக் கோயில் கொண்டு, சிற்றூர்ப்புற மக்களுக்குக் காவலாக இருந்து வருகிறாள் ; இக்கருத்துக்கு அரண் கோலும் வகையில் பழையனூர் நீலியின் வரலாறும் அமைந்துள்ளது. பொதுவாகக் காடுகளிலும் நிலங்களிலும் உலவும் ஆவிகளே இயக்கியர் என்பது தெரிய வரும். டாக்டர் ச. கணபதி ராமன் இது பற்றி ஆராய்ந்த நிலையில், திருநெல்வேலிப் பகுதியில் மக்களால் வணங்கப் பெறும் இயக்கி, சமணரின் சாந்த தேவதையான யட்சி அன்று என்று தெளிவாகிறது என்று (திருநெல்வேலிப் பகுதியில் சிறுதெய்வ வழிபாடு, பக். 41) கூறுகிறார். எப்படியோ இயக்கியை ஒரு சிறுதெய்வமாகக் கொண்டு தமிழர்கள் பண்டு தொட்டே கோயில்கட்டி வழிபட்டு வருகின்றனர்.
இவ்வாறாகத் தமிழ்நாட்டில் பல சிறுதெய்வக் கோயில்கள் கட்டப்பட்டு, அவற்றில் மக்களின் பூசை வழிபாடு நடை பெற்றுக் காலவெள்ளத்திடையே எதிர் நீச்சலடித்துக் கொண்டிருக்கின்றன.
சப்தமாதர்களைக் கோயிற் கட்டடங்களில் நிறுவி வழிபடும் முறை முற்காலப் பாண்டியர்களாலும், பல்லவர்களாலும், சோழமன்னர்களாலும் முத்தரையர்களாலும் மேற்கொள்ளப்பட்டது; இதனைத் தமிழக வரலாறு நன்கு எடுத்துக் கூறுகிறது. ஆலம்பாக்கம், வேளச்சேரி, திருத்தணி, திருவக்கரை, சிவபுரிப்பட்டி ஆகிய ஆலயங்களில் பிராகாரங்களிலே நிறுவப்பட்டுள்ள சப்தமாதர் சிலைகள் பிற்காலப் பல்லவர்களாலும் சோழர்களாலும் அமைக்கப்பட்டவை ; மேலும், சிலைகள் நிறுவப்பட்ட ஆலயப் பகுதிகளும் அவர்களாலேயே கட்டப்பட்டன என்பதை வரலாறு கூறும்.
பல்லவர் காலத்தைக் காட்டிலும் பிற்காலச் சோழர்காலத்தில் சேட்டை வழிபாடு சிறப்புற்றிருந்தமையைக் கல்வெட்டுகள் கூறும். பார்த்திபேந்திரவர்மன் எனும் சோழனின் மூன்றாம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் அமைந்த உத்திரமேரூர்க் கல்வெட்டில் சேஷ்டாதேவி வழிபாடு பற்றிய குறிப்பு உள்ளது. “உத்திரமேரூரின் ஒரு பகுதியாகிய குமண்பாடி என்னுமிடத்தில் சேட்டையார் திருக்கோயில் இருந்தது. இவருக்கு அமுதுபடையலும் அருச்சனைகளும் நிகழ்ந்தன. இவ்வாறு வழிபாடாற்ற 1148 குழிநிலம் தரப் பெற்றிருந்தது.” (திருக்கோயில்- திங்களிதழ், ஜூன், 1980) என வருங் குறிப்பால் சேட்டைக்குத் தனிப்பட்ட கோவிலும், வழிபாட்டுக்கு அருச்சனாபோகமும் அமைந்திட்ட குறிப்பினைக் காணலாம்.
பல்லவன் இராச சிம்மன் எடுப்பித்த காஞ்சிக் கயிலாச நாதர் கோயிலிலும், கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை சன்னிதிக்கு வடமேற்கேயும், வெடால் ஆண்டவர் திருக்கோயில் தென் புறத்திலும் சேஷ்டாதேவியின் திருவுருவம் நல்ல கட்டமைப்புடன் கூடிய இடத்தில் இருப்பதைக் காணலாம். சேட்டையிலேயே இரத்த ஜேஷ்டா, நீல ஜேஷ்டா என இரு வகைகள் இருந்தமை பற்றி வி்ஷ்ணுதர்மோத்திரம் குறிப்பிடுகிறது.
பௌத்த மதத்தவர் வழிபாடு புரிவதற்கு வசதியாகக் கட்டியுள்ள குடைவரையமைப்புக் கட்டடத்தைச் சைத்தியம் என்பர். பௌத்தத் துறவியர் – பிட்சுகள் – தங்கி வசிப்பதற்கு வசதியாக உருவாக்கப்பட்ட கட்டடத்தை விகாரை அல்லது விகாரம் என்பர். அசோக மாமன்னன் காலத்திலிருந்து தூபிகளும் விகாரைகளும் தென்னாட்டில் பெரும்பாலும் பௌத்தச் சின்னங்களாக விளங்கின. அவற்றள் தூபிகள் கருங்கற்களாலும், விகாரைகள் பெரும்பாலும் செங்கற்களாலும் கருங்கற்களாலும் இருவகைகளிலும் அமைந்திருந்தன என்று தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
விகாரையில் புத்தரின் பாதபீடிகை அமைப்போ, புத்தரின் நினைவுச் சின்னமோ (நினைவுச் சின்னம் வைக்கப்பெற்ற பெட்டியோ) வழிபாட்டிற்கென வைத்திருந்தனர்.
முற்காலத்தில் காஞ்சியில் மட்டுமல்லாமல் பொதிகை, உறையூர், வஞ்சி, பூதமங்கலம், சங்கமங்கை, போதிமங்கை, மதுரை முதலிய பல ஊர்களில் பௌத்த உறைவிடங்கள் இருந்தன. நாகப்பட்டினத்தில் பல்லாண்டுகள் பௌத்த விகாரை இருந்ததாகத் தெரிகிறது. இங்கு நரசிங்கப் போத்தரையன் காலத்தில் சீன அரசன் கட்டிய சீனக் கோயிலை மார்க்கோபோலோ கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 1477 – ஆம் ஆண்டில் இதனைப் பர்மிய அரசர் தம் கல்வெட்டில் குறித்துள்ளார்.
பௌத்தப் பள்ளிகளும் விகாரைகளும் அழிந்துபடினும், திருமாலின் அவதாரங்களுள் ஒன்றாகப் புத்தரவதாரத்தையும் கொள்கின்ற கொள்கையால் புத்தர் என்றும் நினைவிற்கொள்ளப்படுகிறார். ஆலயத்தில் வைத்துச் சாத்தனார், ஐயனார், தருமராசர், போதிராசர் என்று மக்கள் வழிபடுவது பௌத்த வழிபாடு என்றும் கொள்ளலாம்.
இந்துக்கள் தாம் வழிபடுவதற்கென ஆலயத்தையும், அதனருகே துறவியர் தங்குவதற்கெனத் திருமடத்தினையும் அமைத்துக் கொள்வது இயல்பே; அதுபோலச் சைத்தியமும் விகாரையும் அருகருகே அமைந்திருந்தன. முன்பொரு காலத்தில் சைத்தியங்கள் பெரும்பாலும் குகைக்கோயில்களாக இருந்தன. பிறகு, படிநிலை வளர்ச்சியில் சைத்தியங்கள் நீண்ட மண்டபங்களையும், மண்டபங்களுடன் மண்டபக் கடைசியில் தூபியையும் இணைத்துக் கொண்டன. சைத்தியத்தில் இருவகைகள் உள்ளன. அவை,
1. நீண்ட சதுர முன்மண்டபம்,
2. அரை வட்டவடிவப் பிற்பகுதி,
சைத்தியங்கள் பற்றிச் சிறப்புக் குறிப்பாகக் கலைக் களஞ்சியம், “பண்டைக் காலத்தில் அரசர் அல்லது அறவோர் இறந்தபின், அவருடைய அஸ்திகளின் மீது மண்ணைக் குவிப்பது வழக்கம். அந்தக் குவியல் வடமொழியில் சைத்தியம் எனப்படும். பின்னர் இவ்வழக்கம் பௌத்தர்களிடமும் ஜைனர்களிடமும் மிகுதியாக வழங்கி வந்தது. மண்குவியலுக்குப் பதிலாகக் கல்லால் அல்லது செங்கல்லால் கும்மட்டம் போன்ற கட்டடம் எழுப்பப்பட்டது. சைத்தியம் என்பது ஒரு மண்டபத்தினுள் புனிதப் பொருள் மீதுள்ள கட்டடத்தையும், ஸ்தூபம் என்பது திறந்து வெளியிலுள்ள கோபுரத்தையும் குறிக்கலாயின. சைத்தியத்தினுள் தங்கம் வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருளால் செய்த பேழையில் இறந்தவர்களின் அஸ்தி, பல், நகம் போன்றவற்றை வைப்பர். பிற்காலத்தில் இப்பேழையில்லாமலும் சைத்தியங்கள் கட்டப்பட்டன” (தொகுதி ஐந்து, பக் – 229) என்று விளக்குவது மனம் கொள்ளத்தக்கது.
சங்க காலம் தொட்டுத் தம் கொள்கைக்காக அரசர்களும் பெரும்புலவர்களும் வடக்கிருத்தல் என்ற கடுங்கோட்பாட்டில் உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்ததை இலக்கியங்கள் கூறும். அதுபோலவே சமணத் துறவியரும் தம் கொள்கைக்காக உயிர் துறப்பர். உயிர் துறந்த இடத்தில் எழுப்பப்பட்ட கட்டடமே நிசீதிகை ஆயிற்று. இதற்குச் சான்றாகத் திருநாதர் குன்றில் காணலாகும் கல்வெட்டு ஒன்றில் (கி.பி. மூன்றாம் நூற்றாண்டு), ஐம்பத்தேழு சைனந் நோற்ற சந்திர சந்தி ஆசிரியர் நிசீதிகை என வருதலைக் காணலாம்.
சமணர்கள் தம் வாழ்க்கையில் துறவு பூண்டு வாழும் இடங்களைப் பாழி, பள்ளி, அதிட்டானம் என வழங்கினர். உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த இடமே நிசீதிகை எனப்பட்டது. இத்தகைய சிறப்பிற்குரிய இடங்களும் அவை தொடர்பான கல்வெட்டுகளும் கழுகு மலையிலும், மதுரை மாவட்டத்து ஆனைமலையிலும், திருப்பரங்குன்றத்திலும், மாங்குளத்திலும், விக்கிர மங்கலத்திலும், திருச்சி மாவட்டத்துப் புகளூர்க் குன்றிலும், புதுக்கோட்டை மாவட்டத்துச் சித்தன்னவாசலிலும் காணப்படுகின்றன.
மதுரையில் சமணர்களின் சிறுகோயில்கள் பல இருந்தன. மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள ஜடாமுனி கோயில் தெருவில் 23ஆவது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் கோயிலும், மீனாட்சி கோயில் தெருவில் 5ஆவது தீர்த்தங்கரர் சுமதிநாதர் கோயிலும் இருத்தலை இன்றும் காணலாம்.
குமரி மாவட்டத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் சமண மதம் தழைத்தோங்கியிருந்தது; இதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. திருக்கோட்டாறு, திருச்சாரணத்துமலை (சிதரால்), திருநந்திக்கரை, திருக்குறண்டி ஆகிய இடங்கள் சமணப் பிரசாரத் தாவளங்களாகத் திகழ்ந்தன. (தாவளம் = தங்குமிடம்)
திருச்சாரணத்து மலையின் உச்சியில் இயற்கையாக அமைந்த தொங்கு பாதையின் அடியில் மண்டபம், தாழ்வாரம், பலிபீடம், மடப்பள்ளி ஆகியவை அமைந்த ஒரு கோயில் உள்ளது. உட்கோயில் 3 அறைகளைக் கொண்டது. நடு அறையில் மகாவீரர் பத்மாசன நிலையில் காட்சியளிக்கிறார். அவர் அமர்ந்துள்ள பீடத்தின் கீழ், சிங்கமுத்திரையும், உச்சியில் முக்குடையும் அமைந்திருக்கக் காணலாம். மகாவீரரது இடபபக்கத்தில் படமெடுத்த பாம்பினடியில் நிர்வாண நிலையில் மூன்றாவது தீர்த்தங்கரர் பார்சுவநாதரும், மகாவீரரின் வலப்பக்கம் பத்மாவதிதேவியும் நின்று அருள்புரிவதையும் காணலாம்.
தொங்கு பாதையின் மேலே பாழடைந்த நிலையில் ஒரு கோபுரம் உள்ளது. கோயிலின் வடக்கே அமைந்த பாறையில் தீர்த்தங்கரர் இருபத்து நால்வர் திருவுருவங்களும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருத்தலையும் காணலாம்.
இசுலாமிய சமயத்தைச் சேர்ந்த ஆன்மீகப் பெரியவர்களை நல்லடக்கம் செய்த இடம் தர்கா ஆகும். அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்திய நாகூர் மீரான்சாயபு தர்கா, ஏர்வாடி தர்கா, பாதுஷா பெயரில் திருச்சியிலுள்ள பெரியதர்கா, பரங்கிப்பேட்டை ஹக்கா சாயபுதர்கா முதலியவற்றில் சந்தனக் கூடு விழா நடைபெறுகையில் மக்கள் பெருமளவில் திரள்வர்.
பொதுவாகப் பள்ளிவாசல் கட்டடங்கள் தொழுகை நடத்துவதற்கேற்ப விசாலமாகக் கட்டப்பட்டிருக்கும். பழைமையான பள்ளி வாசல்கள் பல கல்தூண்கள் தாங்கிய மண்டபங்கள் போலவே அமைந்துள்ளன. பரங்கிப்பேட்டையில் பெரியதெருவின் வடகோடிக்கு அருகே அமைந்துள்ள அழகிய மீராப் பள்ளிவாசலமைப்பினைப் பார்க்கையில் யாருக்கும் வியப்பு உண்டாகும் ; பிரம்மாண்டமான மனோரா என்ற கோபுர அமைப்புகளைக் கொண்டு பள்ளிவாசல் விளங்குகிறது.
நாகூர் மீரான் சாயபு தர்காவில், பெரியவர்கள் மூவர் அடக்கமாகிய இடங்கள், சன்னிதி போன்ற அமைப்புடன் அருகருகே உள்ளன. வெள்ளித் தகடு போர்த்திய வாயில்களும் கதவுகளுமாக அவை அமைந்திருக்கும். கருவறைக்கு மேலே விமானங்கள் உண்டு. தர்காவின் உட்பகுதியிலே மக்கள் தங்கி வழிபடுவதற்கேற்ப விசாலமான மண்டபங்கள் உள்ளன. மேற்குப்புற வாயிலிலே நெடுகக் கடைகள் உள்ளன.
தர்காவின் உள்ளேயும் வெளிப்புறத்தேயும் மினார் எனப்படும் நெடிய மனோராக்களையும் பார்க்கலாம். கட்டடக் கலை நோக்கில் பாரசீகக் கட்டடக் கலையும் தமிழகக் கட்டடக் கலையும் இணைந்து வடிவங்கொண்ட சிறப்பினைக் காணலாம். இவ்வாறே தமிழகமெங்கும் உள்ள தர்காக்களிலும் பள்ளிவாசல்களிலும் கலவைப் பண்பாட்டுக் கட்டடக்கலை யமைப்புகளே உள்ளன.
சுருங்கக் கூறின், கட்டடஅமைப்பில்,
1. நாகூர்மீரான் சாயபு தர்கா,
2. திருச்சி தப்ரே ஆலம் பாதுஷா தர்கா,
3.ஏர்வாடி இப்ராகிம் ஒலியுல்லா தர்கா,
4. மதுரை மஹ்பூப் சுபஹாணி தர்கா,
5.பரங்கிப்பேட்டை மீராப் பள்ளிவாசல் ஆகியவை சிறப்புமிகு வனப்புடைய கட்டடங்கள் எனலாம்.
தமிழ் நாட்டிலமைந்த மாதா கோயில் அல்லது தேவாலயம் (Church), பாதிரிமார் இல்லம் (Monastery), பிஷப்புகள் தங்கும் தேவாலயப் பகுதி (Chapel), கிறித்துவக் கன்னியர் மடம் (Nunnery), மலைப்பாறைப் பின்னணியில் இயேசு பிரான் காட்சியருளும் அமைப்பு (கெபி) முதலியவற்றில் ரோமானியக் கட்டடக் கலையின் தாக்கம் அமைந்திருக்கக் காணலாம். எனினும், தமிழ்நாட்டுக் கலைப் பண்பாடும் ஓரளவு இடங் கொண்டிருக்கும்.
சில மாதா கோயில்கள் வெகு உயரமான கூம்பிய கட்டட அமைப்பினையும், அரைக்கோள அமைப்பினையும், சதுரமாக உயர்ந்த கட்டட அமைப்பினையும் கொண்டு, உச்சியில் சிலுவையுடன் விளங்கும். அவற்றுள் சில, இந்துகளின் கோயிற் கோபுரங்களையும், இசுலாமியர்கள் மனோராக்களையும் ஒருவகையில் நினைவு கொள்ளச் செய்யும் வகையில் அமைந்திருக்கக் காணலாம். ஓரளவு தொலைவிலுள்ளவர்களும் மாதா கோயிலைக் கண்டு சிலுவை வணக்கம் புரிந்திடுமாறு அமைந்துள்ளமை மனங் கொள்ளத்தக்கது. இந்துக்கள் கோபுரத்தைத் தூலலிங்கமாக நினைத்து வழிபாடு புரிதலைப் போன்றது இது.
கிறிஸ்துமஸ், கிறிஸ்து உயிர்த்தெழும் நாள், புனித வெள்ளி போன்ற திருநாள்களிலும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காகவும் மக்கள் திரளாக மாதா கோவிலுக்கு வருவர். அதற்கேற்பவே மண்டபம் பெரும்பாலும் மிக விசாலமாக அமைந்திருக்கும். மாதா கோயிலில் முற்பகுதியில் முற்றமும், பக்கங்களில் தாழ்வாரங்களும் பொலிவூட்டுவனவாக அமையும்.
கத்தோலிக்கர்களின் தேவாலயங்களில் குழந்தை இயேசுவைக் கையில் கொண்ட மேரியன்னையையும், சிலுவையையும் முன்முகப்பிலும் உள்மேடையிலும் வழிபாடு புரிவதற்கேற்ற அமைப்பில் நிறுவியிருப்பர். புரோட்டஸ்டெண்டுகளின் தேவாலயங்களில் அழகிய சிலுவைகளே எங்கும் சிறப்பிடம் கொண்டிருக்கும்.
இந்துகள் தம் ஆலயங்களில் கல்லறைகளுக்கு இடமளிப்பதில்லை. ஆனால் இசுலாமியர்கள் தம் மசூதிகளின் ஒரு பக்கத்திலும், கிறித்துவர்கள் தமது கோயில்களின் ஒரு பக்கத்திலும் கல்லறைகளுக்கு இடமளிப்பது வழக்கமாகிவிட்டது.
பொதுவாகக் கிறித்துவர்கள் தம் மதத்தொடர்பான கட்டடங்களில் சித்திர வேலைப்பாட்டிற்கும் கொடிக்கருக்கு வேலைப்பாட்டிற்கும் இடந்தருவர். கிறித்துவ சமயக் கோயில் கட்டடங்களுக்குச் சான்றாக வளோங்கண்ணி மாதா கோயில், சென்னை சாந்தோம் ஆலயம், கதீட்ரல்கள் (பேராலயங்கள்) முதலியனவற்றைக் கொள்ளலாம்.
சுற்றுப்புறச் சூழலுக்கான தூய்மை, சிறுதெய்வங்களை ஆற்றங்கரை போன்ற இடங்களிலே நிறுவுவதால் உண்டாகிறது என்ற உண்மை புலப்படுத்தப்படுகிறது.
சிற்றூர்ப்புற மக்களிடம் காணலாகும் சமய நம்பிக்கை, சிறுதெய்வங்களைப் போற்றிக் கொண்டாடுவதால் வெளிப்படுத்தப்படுகிறது ; பண்பாட்டுச் சார்பான செய்திகளெல்லாம் இந்தப் பாடம் வாயிலாகத் தெரியப்படுத்தப் படுகின்றன.
பௌத்தர்கள், சமணர்கள், கிறித்துவர்கள், இசுலாமியர்கள் தத்தம் வழிபாட்டு இடங்களை எவ்வாறு போற்றி வருகின்றனர் என்பது தெரிய வந்தது.
தமிழ்நாடு பல சமயங்களும் கலந்துறவாடும் சூழலைப் பல நிலைகளில் பெற்றுள்ளது என்பது நன்கு விளக்கம் பெற்றுள்ளது.
பாடம் - 6
ஆலயம் புராண நோக்கிலும் தத்தவ அடிப்படையிலும் சமுதாயத்தின் தேவை என்பதை உணர்ந்து, கோபுரம் முதலியவற்றைச் சிறப்புற அமைக்கலாம் ; கோபுரம் தெய்வநலச் சின்னமென்பதும், அதனை வணங்குவது தூலலிங்க வழிபாடாக அமையும் என்பதும் தெளிவாக்கப்படுகின்றன.
ஆலயங்களைச் சிற்பியர் கட்டுகையில், காற்றோட்ட வசதி குறி்த்துச் சாளரங்களை எப்படி அமைத்தனர் என்பதும், கருவறை மூலவர் மீது குறிப்பிட்ட சில நாள்களில் சூரியஒளிபடுமாறும் சந்திரவொளிபடுமாறும் கலை நுட்பத்துடன் அமைத்தனர் என்பதும் விளக்கப்படுகின்றன.
தேர்வடிவ அமைப்பில் சக்தியின் சன்னிதியும், ஆலயக்கருவறை முதலியவற்றின் வெளிப்புறச் சுவர்களில் தேவகோட்டங்கள் அமைப்பது பற்றியும், கொடிக்கம்பம், பலிபீடம், மதில்கள், பிராகாரங்கள், அமைப்பது பற்றியும், இந்தப் பாடத்தில் இடம் பெறுதலைக் காணலாம்.
கோயிலில் கட்டடக் கலை உறுப்புகளாக உள்ளவற்றில் மண்டபங்கள் பலவகைப்பட்டு மக்களின் பக்தியார்வத்தை நிறைவு செய்துள்ளன என்பதும், அதிட்டானத்தின் அடிப்படையில் கருவறையும் புறச்சுவரும் அதிட்டானம் தொடங்கியுள்ள கட்டுமானக் கூறுகளுமாகியவை எவை என்பதும் விளக்கம் பெறும்.
மகா மண்டபம், நாலுகால் மண்டபம் விமானமாகும் வைணவ மரபு, ஒற்றைக்கால் மண்டபம் உள்ளிட்ட பலவகை மண்டபங்கள், கொடுங்கைகள் முதலிய பலவும் பற்றிக் கூறப்படுகிறது.
கட்டடக் கலை நுட்பங்கள் எவ்வாறு இசைத் தூண்களமைப்பில் கையாளப்பட்டன என்பதும், விளக்கப்படுகின்றது.
கருவறையமைப்பும், அதன் மேல் கட்டப்படும் விமானமும், வைணவ மரபில் விமானங்களுக்குத் தரப்படும் மதிப்பும் பெயரும் ஆகியவை பற்றிய குறிப்புகளால் கட்டடக் கலை நுட்பங்கள் புலனாகின்றன.
1. அதிட்டானம் (அடிநிலை), 2. சுவர் (கால்), 3. பிரஸ்தரம் (கூரை), 4. கழுத்து (கிரீவம்), 5. சிகரம் (தலை), 6. குடம் (ஸ்தூபி),
என ஆறு பகுதிகளாகக் கொண்டு, ஒவ்வொன்றிலும் சிற்பிகள் தம் திறமையை நுண்கலைக் கூறுகள் வாயிலாக வெளிப்படுத்துவர்.
சில தெய்வங்களைத் தவிரப் பெரும்பாலும் அருள்மிகு பெருந்தெய்வங்களுக்கு ஆலயத்தை ஊரின் நடுவில் அமைத்தல் வேண்டும். இத்தகைய ஆலயம் 2 முதல் 5 வரை சுற்றுப் பிராகாரங்களுடனும் நான்கு கோபுர வாயில்களுடனும், நடுவில் விமானங்களுடனும் அமைத்தல் வேண்டுமெனச் சைவ ஆகமங்கள் விரிவாகக் கூறுகின்றன.
நிலத்தை முறைப்படி சோதனை செய்து தூய்மை செய்வது நல்லது. பூமியை 25 அடி ஆழம் வெட்டி மண்ணை அப்புறப்படுத்திவிட்டு, ஓடு, கல், மயிர், எலும்பு முதலிய பொருள்களை நீக்கித் தூய்மையான மணலால் நிரப்பி அழுத்திவிட வேண்டும். மலைக்கோயில் கட்டுவதெனின் வேறுவகை அணுகுமுறையைப் பின்பற்றுவர்.
மானுடவுடம்பு ஐம்பூதங்களின் சேர்க்கையால் அமையப் பெற்றது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வர். இந்த அடிப்படையில் ஒவ்வொரு கோயிலும் (உடம்பையொத்து அமைக்கப்படுவதால்) ஐம்பூதங்களின் கூட்டுறவுப் பரிணாமத்தை ஒருவகையில் புலப்படுத்தும் கலைப்படைப்பாகும்.
ஒவ்வொரு கோயிலின் உறுப்புகளாக அமைந்துள்ள கற்கள் (கட்டடமும் சிற்பமும்) ‘நிலத்தைக் குறிக்கும்; கோயில் தீர்த்தமாகவுள்ள திருக்குளம் கிணறு முதலியவை ‘நீர்’ எனும் பூதத்தைக் குறிக்கும் . அவற்றுடன் (கருப்பூரச்சுடர் உள்ளிட்ட) ஒளி விளக்குகள் ‘தீ’ எனும் பூதமாகும். இங்கு ஒரு நுட்பக்குறிப்பு உண்டு; ஒளிவிளக்கு நம் கண்ணுக்குப் புலப்படினும், சுடரொளியை வழங்கத் துணை நிற்பது ‘காற்று’ எனும் பூதமாகும். ஐம்பூதங்களே மக்களுக்குப் பரம்பொருளை நினைவுபடுத்தும் வகையில் கூட்டுறவு கொண்டு எழும்பியதே கோயில் என்பது தெரியவரும்.
சுருங்கக் கூறின், எங்கும் நிறைந்த பரம்பொருளை நினைக்கும் முறையில், ஐம்புலப்பாட்டுக்கு ஏற்ற வண்ணம் ஆலயத்தின் கோபுரம், விமானம், மண்டபம், தூண், சுவர், தீர்த்தம் என்றெல்லாம் ஆகம அடிப்படையில் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது எனலாம்.
பக்தர்களை ஈர்த்துப் பக்தியைப் பரப்புவதற்கு உதவியாகக் கோபுரம் அமைக்கப்பட்டது ; எனினும் கலைக் கண் நோக்கில், கம்பீரத் தோற்றத்திற்காகக் கோபுரத்தில் ஒன்றோ பலவோ அடுக்குகள் அல்லது நிலைகள் அமைக்கப்படுகின்றன. ஆசியாவிலேயே தமிழகத்தில் உள்ள திருவரங்கத் தெற்குக் கோபுரம் 13 அடுக்குகள் கொண்டு மிக உயராமாக அமைந்து ஈடு இணையற்று விளங்குகிறது.
கோபுரத்தின் மேற்பகுதி ஒவ்வொரு அடுக்கு நிலையிலும் அலங்கார அணிகளை முன்பின் அமைத்துக் கோபுரத் தோற்றத்திற்கு எழில் கூட்டுவர். இதே போன்ற அலங்காரத்தை எல்லா அடுக்கு நிலைகளிலும் இடம் பெறச் செய்து பூமாலை போன்று சுற்றிச் சுற்றி அமைப்பர். கோபுரச் சிறப்பிற்காக, அந்த அந்தத் திசைக்குரிய தெய்வ வடிவங்களையும் கோபுரம் தாங்கிகளையும், தேவர்களையும் புராணத் தொடர்புடன் சுதையினால் வடிவமைத்துக் கட்டுவர்.
கோயிலுக்குள் சென்று முறைப்படி வழிபட இயலாதவர்களும் கூடக் கோயிற் கோபுரத்தைக் காண்கையில், தம்மை அறியாமலேயே கைகூப்பித் தொழும் வழக்கம் பலரிடம் உண்டு.
உயர்ந்த கோபுர வாயிலில் உள்ளே நிறுத்தப்பட்ட பக்கக் கால்களில் நடனச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதைச் சில தளங்களில் காணலாம். எடுத்துக்காட்டாகச் சிதம்பரம் கோயிற்கோபுர வாயிலில் நடனச் சிற்பங்களைக் காணலாம்.
முதலாம் இராசராச சோழன் காலத்திலிருந்து ஆலயக் கட்டடக் கலை புதிய உத்திகளுடன் புத்துயிர் பெற்றுச் சிறந்த வளர்ச்சிப் பெற்று வந்துள்ளது.
கோபுரத்தையும் ஆலய மதிலையும் இணைத்துக் காண்பதால் ஆலயப் பெருமை தெரியும். எடுத்துக்காட்டாகத் திருவாரூர்த் தியாகராசப் பெருமான் கோயிலில் முதன்மையான நுழைவாயில் கீழைத் திருக்கோபுரமாகும்; இதுவே பெரிய திருக்கோபுரமும் ஆகும். 110 x 60 அடி அடித்தளமும், 120 அடி உயரமும் கொண்ட நெடிதுயர்ந்த கோபுரச் சிறப்பே மதிலால் அமைகின்றது. தெற்கு வடக்கில் 666 அடி, கிழக்கு மேற்கில் 846 அடி, உயரம் 30 அடி கொண்ட திருமதிலைப் பெற்றுப் பரந்த நிலப்பரப்பிற்குப் பாதுகாவலாக உள்ளது. கோபுரமும் மதிலும் இரட்டைப் பாதுகாப்பினை இந்தத் திருக்கோயிலுக்கு வழங்குகின்றன.
தஞ்சைப் பெரிய கோயில் விமானம் கட்டுவதற்குச் சிறந்த பொறியியல் தொழில் நுட்பம் கையாளப்பட்டுள்ளது; அவ்வாறே முதற்கோபுர வாயிலாகிய கேரளாந்தகன் வாயில் கட்டுவதற்கும் சிறந்த பொறியியல் தொழில் நுட்பம் கையாளப்பட்டுள்ளது.
கேரளாந்தகன் வாயில்
இந்தத் திருவாயில் 5 நிலைகளைக் கொண்டது; 96.5 அடி நீளம், 50.5 அடி அகலமுடைய அடிப்பீடத்தின் மேல் 113 அடி உயரம் கொண்டது. இது பற்றி நன்கு ஆராய்ந்த கட்டடக் கலை வல்லுநர் சு.இராசேந்திரன், மருத்துவர் கு.பாலகுமார வேலுவுடன் இணைந்து எழுதுகையில், “முதல் இரண்டு நிலைகள் கருங்கற் கட்டுமானமாகவும், அதன் மேலுள்ள மூன்று நிலைகள் செங்கற் கட்டுமானமாகவும் உள்ளன. முதல் இரண்டு நிலைகளின் சுவர்கள் முழுவதும் கருங்கற் கட்டுமானமாய் இருப்பினும், தளங்கள் (Floors) செங்கற் கட்டுமானமாய்த் தான் உள்ளன” என்ற கருத்தை வெளியிட்டுள்ளார் ; மேலும், “கருங்கற்களைப் பொறுத்தவரையில் ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் இடையே சுண்ணாம்பு போன்ற எந்த ஒரு பிணைப்புச் சாந்தும் (Mortor) கிடையாது. கருங்கற்கள் சதுர அல்லது செவ்வக அமைப்பிலேயே இருக்க வேண்டும் என்றில்லாமல், கிடைக்கும் வடிவங்களை மட்டம் சுத்தம் செய்து அப்படியே கட்டுமானத்தில் பயன்படுத்தியிருப்பது சிறந்த திறமையாகும். இதனால் கட்டுமானத்தின் கற்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து (Strong staggered support) அந்தச் சுவரின் தாங்கு திறனைக் கூட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
கேரளாந்தகன் வாயில் நிலைக்கால்கள் “38’ x 4’ x 4’ அளவிலும் அதற்கு மலோக விட்டமும் இணைப்பு இல்லாமல் ஒவ்வொரு கல்லாலேயே அமைத்திருப்பது மகத்தான சாதனையாகும். மேலும், நிலைக் கால்களின் பக்கவாட்டில் காடி (Grooves) வெட்டி அதனைச் சுவர்க்கட்டுமானத்தோடு இணைத்திருப்பது நுட்பமிகு கட்டிடக் கலைத் திறனாகும்.
சென்னையிலுள்ள சுவாமி சின்மயானந்தா அவர்களின் பெரு முயற்சியால், அவர்களின் பக்தர்கள் ஒத்துழைப்புடன் 65 அடி நீளமுள்ள சிவலிங்க ஸ்தூபியும், மேல்தள தியானநிலையமும் சிறந்த கட்டடக் கலைத் திறமையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
1989 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருக்குடமுழுக்கு விழா நடந்தேறியது. பார்வைக்குச் சிவலிங்க வடிவமாகத் தோற்றமளிக்கும் இந்த ஆலயக் கட்டமைப்பில் சிறப்பு அமிசமாகக் குறிப்பிடத்தக்கது இங்குள்ள ஸ்படிக லிங்கமாகும்.
சீர்காழிப் பதியில் – சிவாலயத்தில் – அடுக்கு அடுக்காக மூன்று கருவறைகள் அமைக்கப்பட்டன. கீழேயுள்ள கருவறையில் பிரம புரீசுவரரையும், அதற்கு மேலுள்ள நடுக்கருவறையில் திருத்தோணியப்பரையும், அதற்கும் மேலுள்ள கருவறையில் சட்டையப்பரையும் எழுந்தருளச் செய்துள்ளனர். பிரமபுரீசுவரர் லிங்கத்தையும், திருத்தோணியப்பர் குருமூர்த்தத்தையும், சட்டையப்பர் சங்கமத்தையும் குறிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளமை போற்றுதற்குரிய திருக்குறிப்பாகும். ஆலயக் கட்டட வகை நுட்பமும் இதனுள் கண்டு மகிழலாம்.
தமிழகத்தில் தத்துவச் சிந்தனையே ஆலயக் கலைப் படைப்புகளுக்கு அடிப்படை என்பதற்குச் சீர்காழிச் சிவன் கோயிற் கருவறைகள் சீரிய எடுத்துக்காட்டாக விளங்கிவருகின்றன.
சாளரங்களின் வகைகள்
ஆலயச் சாளரங்களில், (1) சதுர வடிவத் துளைகளை உடையவை, (2) வட்ட வடிவத் துளைகளை உடையவை எனப் பொதுப்படக் கூறப்படினும், அவற்றின் தொடர்பால் அமையப்பெறும் அலங்கார அமைப்பால் பலவகைப்படும். எடுத்துக்காட்டாகக் கூடலழகர் கருவறைச் சுவர்களில் காணலாகும் ஆறு சாளரங்களில்,ஒரு சாளரத்தில் கொடிப்பெண், மனித உருவம், அன்னம் ஆகியவை காணப்படுவதும், மற்றொரு சாளரத்தில் சதுரமாகவோ வட்டமாகவோ பிரிக்கப்படாத நிலையில் அதனில் யாளிகள், சங்கு, சக்கரம், அன்னம் முதலிய உருவங்கள் காணப்படுவதும் குறி்த்தற்குரியன.
சூரிய ஒளி
காலைச் சூரியன் அல்லது மாலைச் சூரியன் ஆலய வாயில் வழியாகப் பலிபீடம், கொடிக்கம்பம், நந்தி ஆகியவற்றைக் கடந்து மூலவர் திருமேனியில் குறிப்பிட்ட சில நாள்களில் படும். இவ்வாறு நிகழ ஆலயத்தைச் சிற்பியர் கட்டவேண்டுமெனில், அவர்கள் சோதிடம், வானியல், சாத்திரம் ஆகியவற்றில் நன்கு பயிற்சியும் அனுபவமும் கொண்டிருத்தல் வேண்டும்.
இத்தகைய சூரிய வழிபாடு நிகழும் சில கோயில்கள் வருமாறு :
(1) கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய நாள்களில் காலை வேளையில் நாகேசுவர சுவாமி (இலிங்கம்) மீது சூரியவொளி படுவதை மக்கள் கொண்டாடி மகிழ்வர்.
(2) தென்னார்க்காடு (விழுப்புரம்) மாவட்டம், விழுப்புரத்திற்கு 9 கி.மீ. தொலைவில் புறவார் பனங்காட்டூர் (பனையபுரம்) பனங்காட்டீசுவரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் ஏழு நாள்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியக் கதிர்கள் முதலில் சுவாமிமீதும் பின்பு அம்மன் மீதும் படுகின்றது.
(3) வேதங்கள் பூசித்த பெருமையுடைய திருவேதிமுடி (தஞ்சை மாவட்டம்) வேதபுரீசுவரர் கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி 13, 14, 15 தேதிகளில் காலைக் கதிர்கள் மூலவர் மீதுபடுவதைக் காணலாம்.
தாரமங்கலம் சிவாலயத்தில் நந்தி மீது மாலைச் சூரியன் மறையும் வேளையில் ஒளிபடுமாறு அமைவதனைக் காணலாம். மேற்குப் பார்த்த தாரமங்கலம் கயிலாசநாதர் கோயில் வாயிலில் கொடிமரத்து அடியில் ஒரு சின்ன நந்தி நிறுவப்பட்டுள்ளது. சூரியன் மறையும்போது அந்திக் கதிர்கள் நந்தி மீது பட்டு, நந்தியின் கொம்புகளில்படும் ஒளிநிழல், உள்ளே கருவறையில் மூலவர் மீது சந்திரப் பிறைபோல விழுவது வியக்கத்தக்க காட்சியாகும்.
சந்திர ஒளி
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேசுவரம் சுவாமியின் கருவறைக்குப் பக்கத்தில் அம்பாள் சன்னிதி உள்ளது. அந்த அம்பாள்மீது ஒவ்வொரு வருடத்திலும் கார்த்திகை முழு நிலவு (பௌர்ணமி) – சந்திரவொளிக் கற்றைகள் பட்டு ஒளிவிளக்கம் தருதலைக் காணலாம். இத்தகைய சிறப்பினைக் கொண்ட இறைவியைப் பிறையணி வாணுதலாள் என்று பக்தர்கள் அழைத்து மகிழ்கின்றனர். இவ்வாறு ஆண்டுதோறும் கார்த்திகை முழுநிலவு இறைவி மீது படுமாறு கட்டட நுட்பங்கண்ட சிற்பியரையும், அவர்களை இவ்வாறு செய்ய வைத்த புரவலர்களையும் தமிழ்ப் பெருமக்கள் நினைவிற் கொண்டு போற்றுதல் தகும்.
இடி ஒளி
தமிழகத்தில் இந்திரன் சிவபெருமானைப் பல திருத்தலங்களில் பூசித்ததாகப் புராணக் குறிப்புகள் உண்டு. அத்தகைய தலங்களுள் ஒன்றாகிய திருக்கழுக்குன்றத்தில் இந்திரன் வியத்தற்குரிய பூசை புரிந்து வருகிறான். திருக்கழுக்குன்றம் மலைக்கோயில் கருவறைக் கோயிலில் கலசத்தின் மேல் துவாரம் ஒன்று போடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒருநாளில் இடிவிழும்போது அந்தத்துவாரம் வழியாக உள்ளே பாய்ந்து இலிங்கத்தைச் சுற்றி வெளிச்சம் ஏற்படுத்தும்; அந்த இடி சுவாமியைச் சுற்றி வந்து கீழே இறங்கி விடும்; கோயிலுக்கு எந்தச் சேதமும் ஏற்படுவதில்லை. இந்த நிகழ்ச்சி அறிவியலார்க்குப் புரியாத புதிராக இருந்து வருகிறது. இந்த ஆலயக் கட்டடத்திற்கு மட்டும் இத்தகைய ஒரு சிறப்பு இருந்து வருகிறது ; இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.
இங்குச் சிற்பக் கலையும் கட்டடக் கலையும் கலந்து அமைந்த புலப்பாட்டினைக் காணலாம்.
கோயில் கட்டடப் பகுதிகளில் தேவகோட்டம் (Niche) கூடு (நாசிக), தூண் (Pillar) ஆகியவை, அவை தோன்றிய காலத்தை அறிந்து கொள்ள உதவக் கூடியவை; காலந்தோறும் சில மாற்றங்கள் அவற்றில் தோன்றுவது இயல்பே.
பல்லவர் காலத் தேவ கோட்டங்களின் உச்சி வளைவு, மகர தோரண வடிவிலமைந்த திருவாசி போன்று அமைக்கும் கலையுத்தி, சோழர் காலத் தேவ கோட்டங்களில் ஓரளவு மாறுபடுதலைக் காணலாம். அஃதாவது, முதலைகளின் வாயிலிருந்து கிளைத்தெழும் கொடியாகப் படர்ந்து பின்னலிட்ட திருவாசியாக மாறியுள்ளது.
கொடிக்கம்பதத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மரம் நேராகவும், நுனி சற்று வளைந்தும் இருக்க வேண்டும். வெட்டுக்காயங்கள் படாதநிலையில், மிகவும் மென்மையானதும் வயிரம் பாய்ந்ததுமான மரம் உகந்தது. மேன்மாடம் வரை உயரமுள்ளதாக அஃது இருப்பி்ன் மிக நல்லது. அதன் உச்சியில் தொங்கும் படியாகக் கொடி ஏற்றப்படுவது மரபு.
பலிபீடம் எவ்வளவு சிற்ப நேர்த்தியுடன் அமைக்கி்ன்றனரோ அவ்வளவு சிற்பச் சிறப்பைக் கொடி மரத்திலும் அமைப்பர். கொடி மரம் உடம்பின் முதுகுத்தண்டு போலப் பாவிக்கப்படுவதால், கொடிமரத்தில் 32 வளையங்கள் (கட்டுகள்) அமைக்கப்படும். கோயிலின் பெருமைக்கும் வசதிக்கும் ஏற்பச் செப்புத்தகடு போர்த்தியோ, செப்புத்தகட்டில் பொன்முலாம் பூசியோ கொடிமரம் அமைக்கப்படும். அதனை நடுவதற்குக் கொடிமரப் பீடமும் அழகுற அமைக்கப்படும். எடுத்துக்காட்டாகச் சிதம்பரம் நடராசர் சன்னிதிக்கு எதிரே அமைந்துள்ள கொடித்தம்பம் அடி முதல் முடி வரையில் பொன்முலாம் பூசிய தகடு போர்த்தியிருப்பதைக் காணலாம்.
ஆலயக் கட்டட வளாகத்தில் கொடி மரமும் ஓர் உறுப்பாக அமைந்துள்ளது. ஆனால் இதிலும் வேறுபாடுகாட்டும் சில தலங்கள் உள்ளன.
காஞ்சிக்கு அருகிலுள்ள திருப்புட்குழி எனும் திவ்ய தேசத்தில் கொடி மரமும், பீடமும் ஆலயத்திற்கு வெளியே அமைந்துள்ளன.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக் கோயிலில் சித்திரையிலும் ஆனியிலும் பெருந்திருவிழா நடைபெறும்; பார்த்த சாரதிக்கும் அழகிய சிங்கருக்குமாகச் சிறப்பிக்கும் வகையில் இரு கொடி மரங்கள் (தனித்தனியே) அமைந்து, கொடியேற்றம் நடைபெறும்.
மாமல்லபுரம் தலசயனப்பெருமாள் கோயில் மிகத் தொன்மை வாய்ந்தது. அங்குப் பலிபீடம் கருடாழ்வாருக்கு முற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் முன்னர்ப் பஞ்சபலிபீடம், பஞ்சாக்கினி என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ளது; இத்திருத்தலத்தில் கருப்பக்கிருகம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைச்சுற்றி ஏழு இடங்களிலும், முகப்பின் உள்ளே இரு இடங்களிலுமாக ஒன்பது இடங்களில் பலி பீடங்கள் அமைந்துள்ளமை ஆலயக் கட்டடக் கலை நோக்கில் குறிப்பிடத்தக்கது.
வைணவக் கோயில்களிலும் ஆலய மரபுப்படி பலிபீடங்கள் அமைந்திருக்கும் ; எனினும், பழம் பெருமை வாய்ந்த ‘திருவெள்ளறை அருள் மிகு புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலில் சுமார் 10 அடி உயரமும் அழகிய வேலைப்பாடும் அமைந்த கருங்கல் பலிபீடம் மிக அரிதாகக் காணப்படுவது’ என்று சிறப்பித்துக் கூறுவர்.
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராசராசன் கட்டிய தாராசுரம் ஐராவதீசுவரர் ஆலயத்தில் ஒரு பலி பீடமண்டபம் உள்ளது ; இதனில் 10 படிகளைக் கொண்ட கருங்கல்லால் ஆன இசைப் படிக்கட்டு் உள்ளது. இந்த இசைப்படிகளில் கல்லால் தட்டுகையில் க, ம, ப, த, நி, ச, ரி, க என்ற சங்கராபரண ராக சுவரங்களைக் கேட்கலாம் ; பலி பீடப்பூசை நடைபெறுகையில் இசைப்பதற்காக இசைப்படிகளை அமைத்த கட்டடக் கலை நுட்பத்தைப் பெரிதும் பாராட்டலாம்.
சில பெருங்கோயில்களில் திருமதில்களைப் பெயரிட்டழைப்பதும் உண்டு. சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் திருகாலிங்கராயன் மதில் உண்டு; திருவானைக்காவில் திருநீறிட்டான் மதில் உண்டு.
திடமும் உயரமும் நல்ல வடிவமும் கொண்ட மதில்கள் பல கோயில்களில் காணப்படினும், திருவரங்கத்திலுள்ள வெளிவீதிச் சுற்றுமதில் போல் காணமுடியாது. அம்மதிலின் நீளம் 3072 அடி, உயரம் 20 அடி 8 அங்கலம், மதிற்சுவரின் பருமன் 6 அடி.
பெரும்பாலும் ஆலய மதில்கள் செங்கல்லாலும் சுண்ணாம்பாலுமே கட்டப்பட்டுள்ளன ; அண்மைக் காலமாகச் சிமெண்ட் கலவையால் கட்டப் படுகின்றன. மதில்கள் அத்திவாரமும் அடிப்பாகமும் பருத்து, மேலே செல்லச் செல்லக் குவித்துத், தலைக்கட்டினை நன்கு அமைத்துக் கட்டப்படும்.
மன்னார்குடி இராசகோபால் சுவாமிகோயில் மதில் அழகு எனக் கூறுவர் ; திருவிரிஞ்சையும் மதிலழகு கொண்டதே.
மதிற்சுவர் அமைப்பதிலும் சில வியப்பிற்குரிய உத்திகள் கையாளப்படுகின்றன. எடுத்துக்காட்டாகக் கீழைத்திருக்காட்டுப் பள்ளியில் மேற்கே பார்த்த சன்னிதியுடன் ஆரணியேசுவரர் திருக்கோயில் உள்ளது; அந்தச் சிறிய கோயில் தட்சணாமூர்த்தி சன்னிதிக்கு மேற்கில் கடலொலி போன்ற ஓசை மதிற்சுவரிலிருந்து கேட்கப்படுகின்றது ; அத்தகைய கட்டடக் கலை உத்தி எப்படி சிற்பியர் அமைத்தனர் என்பது புதிராகவே உள்ளது.
விசயநகர – நாயக்க மன்னர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் கட்டிய மதில்களாகத் தஞ்சாவூர் பெரிய கோயில், மன்னார்குடி இராசகோபால சுவாமி கோயில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில், அருளாளப் பெருமாள் கோயில், திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை, மதுரை, திருவரங்கம் முதலிய இடங்களில் காணலாம்.
பெரிய மதில்கள் எடுத்த நிலையில் மூவகைகள் உண்டு.
(1) முழுவதும் கருங்கற்களைக் கொண்டு எடுக்கப்பட்டவை.
(2) செம்புறாம் பாறைக் கற்களைக் கொண்டும் (Laterite), செங்கற்களைக் கொண்டும் எடுக்கப்பட்டவை (தஞ்சைப் பெரிய கோயிலுக்கு வெளியேயும் அகழிக்கு உள்ளேயும் காணலாம்.)
(3) செங்கற்களை மட்டுமே கொண்டு எடுக்கப் பெற்றவை.
பிராகாரங்களில் திருச்சுற்று மாளிகை அமைக்குங்கால் வலுவுடைய நிலையில் மதிற்சுவர்கள் அமைய வேண்டுமென்பதற்காக வச்சிரக் காரைகளைப் பயன்படுத்தியுள்ளனர்; அன்றியும், மண்ணைப் பனஞ்சாறு கூட்டி அரைத்துக் கட்டினார்கள் என்பதும், கட்டுங்காலத்துக் கேழ்வரகுக் கஞ்சியை (இராகிக் கூழை) இணைப்புகளில் ஊற்றுவதும், ஈயம், செம்பு முதலிய உலோகத் தகடுகளையும் கம்பிகளையும் பொருத்துவதும் அக்காலத்தொழில் நுட்ப உத்திகளாக இருந்து வந்துள்ளமை தெரியவருகிறது.
பலவகை மண்டபங்கள்
பலவகை மண்டபங்களுள் நடன மண்டபம், நாடக மண்டபம், புராண மண்டபம், தருக்க மண்டபம், ஊஞ்சல் மண்டபம், முத்தி மண்டபம், நித்த மண்டபம், வசந்த மண்டபம், நவராத்திரி மண்டபம், கொடிக்கம்ப மண்டபம், நீராழி மண்டபம், தூண்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒற்றைக் கால் மண்டபம், பதினாறு கால் மண்டபம், இருபத்துநாலு கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம் முதலியவை குறிப்பிடத்தக்கவை. இவை ஒரு புறமிருக்கப் பெருங்கோயில்களில் தேர்த்திருவிழாவுக்கு வசதியான தேரேற்று மண்டபம் ஆலயத்தின் புறத்தே அமைந்து அதுவும் கட்டடக் கலை நோக்கில் சிந்திக்கத்தக்கது.
மக்களின் நாட்டத்தை ஆலயத்தின் பால் திருப்பும் வகையில் புராணச் சொற்பொழிவுகள் நிகழ்த்த வசதியாகப் புராண மண்டபமும், புராண நோக்கில் நடன நிகழ்ச்சிகள் நடத்த நடன மண்டபமும், நாடகம் நடத்துதற்கேற்ப நாடக மண்டபமும் பயன்பட்டுள்ளன.
வாகனத்திற்கான மண்டபம்
திருவிழா எனின் ஒரு மண்டபத்தை வாகனத்துக்காகவே ஒதுக்குவது உண்டு. ஆனால், சில ஆலயங்களில் பல மண்டபங்களை வாகனங்களுக்காக ஒதுக்குவதும் உண்டென்பது தெரிய வருகிறது. எடுத்துக்காட்டாக, ஏழு மண்டபங்களுள் மன்னார்குடி இராசகோபாலசாமி கோயிலில், கருட வாகன மண்டபம், யானை வாகன மண்டபம், வெண்ணெய்த்தாழி மண்டபம், புன்னைவாகன மண்டபம் என நான்கு மண்டபங்கள் உள்ளன.
ஆயிரக்கால் மண்டபம்
ஆயிரக்கால் மண்டபம் கட்டடக் கலை நோக்கிலும் விழாக்காலங்களில் தெய்வங்களுக்கு அபிடேகம், அலங்காரம், படையல், வழிபாடு நடைபெறுவதைப் பல்லோரும் கண்டுகளிக்கும் நோக்கிலும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் திருநெல்வேலி, மதுரை, திருவாரூர், மன்னார்குடி, திருவரங்கம், திருவானைக்கா, சிதம்பரம், திருவண்ணாமலை முதலிய திருத்தலங்களில் ஆயிரக்கால் மண்டபங்கள் அமைந்துள்ளன. சற்றேறக்குறைய ஆயிரம் தூண்கள் கொண்டதாக ஆயிரக்கால் மண்டபம் என்ற பெயரில் அமைந்திருப்பதே உண்மை. ஆனால், ஆயிரக்கால் மண்டபத்தை ஆகம அடிப்படையில் அமைத்தனர்.
பெருமளவு எண்ணிக்கையுள்ள ஆயிரக்கால் மண்டபத்திலும் சிற்பியர் தம் திறமையைத் தக்கவண்ணம் காட்டியுள்ளனர்.
நூற்றுக்கால் மண்டபம்
ஆயிரக்கால் மண்டபம் போலவே நூற்றுக்கால் மண்டபங்களும் பல திருத்தலங்களில் காணப்படுகின்றன. சிலவற்றுக்கு வரலாற்றுச் சிறப்பும் உண்டு.
சிதம்பரத்தில் சிவகாமியம்மன் கோயிலுக்குத் தென்புறமாக நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. சோழன் விக்கிரமன் காலத்தில் காலிங்கராயனால் கட்டப்பட்ட இம்மண்டபத்தை விக்கிரசோழ மண்டபம் என்று வழங்குவர். இந்த இடத்தில் சோழ மன்னர்க்கு முடிசூட்டு விழா நடந்துள்ளது என்று வரலாறு கூறும்.
பதினாறு, பன்னிரண்டு கால் மண்டபங்கள்
திருவண்ணாமலை, சிதம்பரம் முதலிய பல திருத்தலங்களில் பதினாறுகால் மண்டபங்களைக் காணலாம். பதினாறு கலைகளுடன் கூடிய சந்திரனை நினைவிற் கொள்ளும் வகையில் பதினாறுகால் மண்டபம் கட்டப்படுகின்றது என ஆன்றோர் கூறுவர். பன்னிரண்டு கால் மண்டபங்கள் சில திருத்தலங்களில் காணலாம்; அவற்றைத் தத்துவ நோக்கில் ஆதித்தர்களின் (சூரியர்களின்) சின்னங்களாகப் போற்றிக் கூறுவர்.
நாலுகால் மண்டபம்
பொதுவாக நாலுகால் மண்டபங்கள் பல ஆலயங்களில் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், வைணவ நோக்கில் திருக்கண்ண மங்கையில் நாலுகால் மண்டபத்திற்கெனத் தனிச் சிறப்பு உண்டு.
அசுரர்களிடமிருந்து பிரம்மனிடம் வேதங்களை மீட்டுத் தந்த இறைவனைத் திருக்கண்ணமங்கையிலே எப்பொழுதும் அருளும்படி வேண்டி, நான்கு வேதங்களை நான்கு தூண்களாகவும் கொண்ட மண்டபத்தை அமைத்தருளினான். அந்த மண்டபமே ஸ்ரீவிமானம் என்று கூறப்படுகிறது; இது வைணவ மரபாகும்.
ஒற்றைக்கால் மண்டபம்
ஒற்றைக் காலில் மண்டபம் அமைப்பது எப்படி என்று யாரும் வினவலாம். கருவறையையொட்டி முன்னதாகச் சுவரும் தளமும் எழுப்பி, ஒற்றைத் தூணை ஒரு கோடியில் நிறுவி அமைப்பர்.
எடுத்துக்காட்டாகச் சிதம்பரம் சிவகங்கைக் குளத்திற்கு மேலே (தென் மேற்குப் படித்துறைக்கு மேற்பகுதியிலே) இருபத்திநான்கு கால் மண்டபம் உள்ளது; அதன் மேற்புறத்தே விநாயகரை ஒற்றைக்கால் மண்டபத்தில் பிரதிட்டை செய்துள்ளதைக் கூறலாம்.
விதானம்
ஆலய வளாகத்தை விரிவுபடுத்துகையில் மண்டபங்களின் உட்பக்கக் கூரையான விதானத்திலே சிற்ப வேலைப்பாடு மிகுதியாக இல்லை; காலப்போக்கில் விதானச் சிற்பங்களில் நாட்டம் செலுத்தினர். சோழர்காலத்துத் தாராசுரம் கோயிலில் விதானச் சிற்பங்கள் மிகுதி; காரணம், சாளுக்கியக்கலை மரபின் தாக்கம் என்பர். பிறகு காலந்தோறும் வளர்ச்சியுற்றுத் தாமரை மலர்கள், மலர் கொத்தும் கிளிகள், எட்டுத்திக்குப் பாலகர்கள், இராசி மண்டலங்கள், பததேவதைகள், பதமண்டலங்கள், கற்சங்கிலிகள், பாம்பு வளையங்கள் முதலிய பலவகைச் சிற்பப்படைப்புகள் விதானத்தில் இடங்கொண்டன.
அதிட்டானம்
ஆலயத்திற்கேற்பவே தாங்கு தளமாகிய அதிட்டானம் அமையும் என்பதைச் சிற்பியர் கூறுவர். இந்த அதிட்டானங்கள் சதுரமாகவும், விருத்தமாகவும், கோணங்களாகவும் அமையலாம். மயமதம் மானசாரம் முதலிய கட்டடக் கலை நூல்களில் 18 வகை அதிட்டானங்கள் கூறப்படுகின்றன; இவை கலை நுட்பங்கள் கொண்டவை.
வரலாற்றுச் சான்று
மன்னர்கள்தம் கருத்தை மனத்துள் கொண்ட சிற்பியர், ஆலயத் தூண்களைக் காலத்துக்கேற்ப ஒருவகைப் பாணியினைப் பின்பற்றினர்; எனவே, ஆலயங்கள் தோன்றிய காலத்தை ஓரளவு நிர்ணயிக்கத் தூண்களும், தூண்களுக்கு மேலுள்ள போதிகைகளும் மிகத் துணைபுரிவதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆலயங்கள் எடுக்கப்பட்ட காலத்தை நிர்ணயிக்கும் முயற்சியில் தூண்கள் மட்டுமல்ல, கருவறையமைப்பு கோபுரம் போன்றவையும் துணை நிற்கின்றன. எனினும், இந்நோக்கத்திற்குத் தூண்கள் தம் வடிவ அமைப்பால் பெரிதும் துணை புரிகின்றன.
ஆலயக் கட்டடக் கலையிலும் சிற்பியர் தூண்கள் வாயிலாகவும் சில நுட்பங்களைப் புலப்படுத்த முற்பட்டனர். இதனை நன்குணர்ந்த E.B.
பல்லவர் காலம்
தமிழக வரலாற்றில் பல்லவர் காலத்திலிருந்து ஆலயத்தூண்கள் சிற்பக் கலை நோக்கில் அமைக்கப்பட்டன. மகேந்திரவர்மன் காலத்துக் குடைவரைக் கோயில்களில் செதுக்கப்பட்ட தூண்கள், மேலும் கீழும் சதுரப்பட்டை அமைப்புடனும் இடையே எண் கோண அமைப்புடனும் இருந்தன. மேலும், அவற்றின் இடைச் சதுரத்தில் தாமரைமலர் வடிவமைப்பும் செதுக்கப்பட்டிருந்தன. இத்தூண்களில் மேலுள்ள முகப்பானது அறல் போன்ற வளைவு உடையதாய், இடையிடையே மனித முகத்தை நடுவிற் கொண்ட கூடுகளையுடையதாயும் இருந்தது.
மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் குடைவரைக் கோயில்களில் ஒற்றைக் கோயில்களிலுள்ள தூண்கள், சதுரப்பட்டையமைப்பும், இரண்டு சதுர முழத்தில் பிளந்த வாயுடன் கூடிய சிங்கம் கீழே அமர்ந்த தன் தலையால் தூணைத் தாங்கிக் கொண்டிருப்பது போன்றும் தூண் அமைப்பு இருப்பதைக் காணலாம். பிற்காலத்தில் எடுத்த பல ஆலய மண்டபங்களில் யாளித்தூண்களை அமைத்திட இந்த தூண்களே முன்னோடியாக அமைந்தன எனக் கொள்ளலாம்.
இராச சிம்ம பல்லவன் காலத்திலிருந்து தூண்கள் சிங்கத் தோற்றத்தைச் சிறப்புடன் எடுத்துக்காட்டுபவையாகவும், தோரணங்களுடனும் பிற சிற்பக் கூறுகளுடனும் எடுப்பான தோற்றமுடையவையாகவும் கலைத்தரம் மிக்கவையாகவும் உருவாக்கப்பட்டன.
சோழர் காலம், விசயநகர – நாயக்கர் காலம்
தமிழகக் கோயில் வளாகத்தில் சோழ மன்னர்களும் விசய நகர – நாயக்க மன்னர்களும் புரிந்த திருப்பணிகள், சிற்ப நோக்கிலும் கட்டடக் கலை நோக்கிலும் பொற்காலப் படைப்புகள் எனலாம். தூண்களில் சிற்ப வேலைப்பாடுகளை மிகுதியாக ஆக்கிக்காட்டிய பெருமை அவர்களுக்கு உண்டு. வனப்புடன் தூண்களை அமைக்கும் அதே வேளையில், தெய்வத் திருவுருவங்களையும், அருளாளர் திருவுருவங்களையும் கோயிற் பணிபுரிந்த மன்னர்களையும், பிற நன் மக்களையும் புடைப்புச் சிற்பங்களாக அமைத்தனர்.
தீபத் தூண்கள்
கல்லால் ஆன தீபத்தூண்களும் – அகல் விளக்குத் தூண்களும் – பல்லவர் காலத்திலே செதுக்கப்பட்டன என்பது வரலாற்றால் தெரிய வரும்.
புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ. தொலைவில் திருவாலத்தூர் மலை உள்ளது ; அங்கே மலையடிப்பட்டிக் கோயில் சிற்பக் கலைச் சிறப்புடன் அமைந்திருப்பதைக் காணலாம். அந்த மலையடிப்பட்டியில், கருவறைக்குச் சிறிது தொலைவில் வெட்டவெளியில் அகல் விளக்குத்தூண் 15 அடி உயரமுடையதாக நிறுவியுள்ளனர். இந்தத் தூணின் உச்சியில் விளக்கு வடிவிலான தொட்டிப் போன்ற அமைப்பு உள்ளது; அதில் நெய் ஊற்றி விளக்கேற்றி வந்துள்ளனர்.
ஆவுடையார் கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், திருச்சி மலைக்கோட்டைக் கோயில் முதலிய சில ஆலயங்களில் தீபத்தூண்களை இன்றும் காணலாம்.
இசைத்தூண்களில் கட்டடக் கலை நுட்பம்
பல்வேறு அழகமைப்புடன் பற்பல வடிவங்களில் பெரியனவாகவும் சிறியனவாகவும், பல வரிகளையும் உருட்டுத் திரணைகளையும் உடையனவாகவும் இசைத்தூண்கள் அமைந்துள்ளன. பொதுவாக ஆலயங்களில் காணப்படும் இசைத்தூண்கள், அவை அமைந்துள்ள மண்டபத்தின் உயரத்திற்கேற்ப உயரங் கொண்டவையாக உள்ளன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மொட்டைக் கோபுரத்திற்கு அருகிலுள்ள ஐந்து அருமையான இசைத்தூண்கள் கலைநுட்பம் வாய்ந்துள்ளவை; இவற்றிலெழும் சுரத்தின் கிளைச் சுரங்கள் பக்கத்திலுள்ள இசைத்தூண்களிலிருந்தும் அதிர்வுகளால் (vibrations) தாமாகவே ஒலித்தலைக் கேட்கலாம். மேனாட்டு இசை வல்லுநர்கள் இவற்றைக் கண்டு ‘பியானோ கம்பங்கள்’ என்றும், வடநாட்டு இசைவல்லுநர்கள் இவற்றை ‘ ஜலதரங்கத் தம்பங்கள்’ என்றும் பாராட்டுகின்றனர். இனிய இசையொலி நோக்கில் இவை வில்லோ யாழோ எனத் தமிழிசைக் கலைஞர்கள் வியந்து போற்றுகின்றனர்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் மாபெரும் மண்டபத்திலுள்ள இசைத் தூண்கள் ஒவ்வொன்றும் ஒரே பெருங்கல்லால் செய்யப்பட்டதாகும். நடுவில் பெரிதாக ஒரு தூணும், அதைச் சுற்றிலும் 48 சின்னஞ் சிறு தூண்களான உருட்டுக் கம்பிகளும் இணைக்கப்பட்டாற் போன்று செதுக்கப்பட்டுள்ளன. இந்த அற்புதமான அழகிய இசைத் தூண்களில் காணப்படும் ஒவ்வொரு சிறிய உருட்டிலும் ஒரு சிறிய குச்சியைக் கொண்டு தட்டினால் ஒவ்வொரு சுரம் எழுமாறு இத்தூண்களை அமைத்திருப்பது வியப்பையும் மகிழ்ச்சியையும் எழுப்புகிறது. இம் மண்டபத்தை அமைத்தவன் கி.பி. 7 – ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் செங்கோலோச்சிய கூன் பாண்டியன் என்று இவ்வூர்த்தல புராணம் கூறுகிறது.
மூலவர் சன்னிதிக்கு முன்புள்ள மகா மண்டபத்தில் உள்ள இரு தூண்கள் தொங்கிக் கொண்டிருப்பதை ஊன்றி நோக்கினால் தெரிந்து கொள்ளலாம். அருங்கலைப் படைப்புகளாகிய தொங்கும் தூண்களின் எடை சுமார் இரண்டு டன் இருக்கும். தூணின் அடியில் நூல் அல்லது சிறிய துணியை நுழைத்து, இருபுறமும் பிடித்துக் காட்டி வெளியில் எடுக்கையில் தொங்கும் தூண்கள் என்பது புலனாகும்.
சதுரவகைக் கருவறை
தமிழகத்தில் பல கோயில்களில் இவ்வகைக் கருவறைகளைக் காணலாம். எடுத்துக்காட்டாகத் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிற் கருவறை (29’.6”x 29’,6”) உள்ளது; இங்கு இறைவனின் நின்ற கோலத்தைக் காணலாம்.
நீள் சதுரவகைக் கருவறை
வைணவக் கோயில்களில் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கருவறை (10’.6”x 16’.6”) – நின்ற கோலம் உள்ளது.
திருக்கோளூர் வைத்த மாநிதிப் பெருமாள் கோயிலில் கருவறை (13’.8”x 23’.6”) – கிடந்த கோலம் உள்ளது.
வட்டவகைக் கருவறையமைப்பு
மதுரைக்கு அருகிலுள்ள கள்ளழகர் கோயிலில் வட்டவகைக் கருவறை (85 அடி – சுற்றளவு) உள்ளது; சுவாமி நின்ற கோலம். தமிழகத்தில் வட்டவகைக் கருவறை அமைப்பதில்லை. இங்கே சோதனை முறையில் இவ்வாறு அமைத்திருக்கலாம் எனக் கருதுவர்.
விமானத்தின் சிறப்பு
வானில் இயங்கும் அற்புத சக்திகளைத் தக்க வண்ணம் வாங்கிக் கருவறையில் செலுத்தக்கூடிய ஆற்றலுடையது அஃதென்பர். எனவே மூலத்தானமாகிய கருவறை மீது கட்டப்படும் விமானத்தைத் தூலலிங்கம் என்று சைவ சித்தாந்தம் குறிப்பிடும்.
தஞ்சைப் பெரிய கோயில் கருவறை மீது, மாமன்னன் முதலாம் இராசராசன் கட்டிய, பிரமாந்திரக் கல்லுடன் கூடிய விமானம் உலகப் புகழ் பெற்றது. “தஞ்சை விமானம் திராவிடச் சிற்பியரின் தனிச் சிறப்புமிகு கலைப்படைப்பாகும்; இஃது இந்தியக் கட்டடக் கலை மேம்பாட்டிற்கு ஒர் உரை கல்லாகும். (Unquestionably, the finest single creation of Dravidian craftsmen, the Tanjore Vimanam is the touch store of Indian architecture as a whole)” என்று வரலாற்று அறிஞர் பெர்சி பிரவுன் கூறியுள்ளார்.
கோயிலமைப்பிலே தூங்கானை மாடம் (கஜப் ருஷ்டம்) விமானத் தொடர்பில் சாதித்த பெரும் செயலாகும். திருவீழிமிழலைக் கோயிலுள்ள விண்ணிழி விமானம் திருமாலால் சிவபூசனை புரிவதற்காகவே விண்ணிலிருந்து கொணர்ந்த விமானம் என்பது புராணக் குறிப்பு. இவ்வாறெல்லாம் சிவாலயங்களில் சிறப்பிற்குரிய சில விமானங்கள் இருப்பினும், வைணவ திவ்ய தேசங்களில் அமைந்துள்ள விமானங்களே கட்டடக் கலைநுட்ப நோக்கில் சிறப்பாகப் போற்றக் கூடியவையாகும்; சமய நோக்கிலும் பெரிதும் சிந்திக்கக் கூடியவையாகும்.
விமானப் பெயர்கள்
திருமாலின் திருவுருவச் சிலைகளை அர்ச்சாவதார மூர்த்திகளாகவே வைணவர்கள் வழிபடுவர். அவர்கள் ஆலய விமானத்திற்குப் பெயரிடுகையில் சுக நாக்ருதி விமானம், புண்ணியகோடி விமானம், பிரவண விமானம், சாத்துவிக விமானம், அட்டாங்க விமானம் முதலிய பெயர்களை இட்டுப் பெரிதும் கொண்டாடுகின்றனர்.
இந்திரவிமானம்
மதுரையில் அருள்மிகு சொக்கநாதப் பெருமான் எழுந்தருளியுள்ள கருவறையில், மேலே காணப்படும் இந்திரவிமானம் புராணச் சிறப்பும் கலை நுட்பமும் வாய்ந்தது. இந்திர விமானத்தின் ஒவ்வொரு பக்கமும் இரண்டு யானைகள், சிங்கங்கள் வீதம் நான்கு பக்கங்களில் எட்டு யானைகளும், பக்கத்துக்கு எட்டு வீதம் நான்கு பக்கங்களுக்கு முப்பத்திரண்டு சிங்கங்களும், பக்கத்துக்குப் பதினாறு பூதகணங்கள் வீதம் நான்கு பக்கங்களுக்கு அறுபத்து நான்கு பூதகணங்களும் உள்ளன. எந்தப் பக்கம் நின்று பார்த்தாலும் யானை நம்மையே பார்க்குமாறு அமைந்துள்ளது.
பொன் விமானம்
சைவர்களுக்குக் கோயில் எனப் போற்றப்பெறும் சிறப்பினைக் கொண்ட சிதம்பரம், மிகச் சிறந்த பொன்விமானம் பெற்றது. எனவே, பொற்றகடுகளால் போர்த்தப் பெற்ற அந்தப் பொன்விமானத்தால் பொன்னம்பலம் என்றும், கனகசபை என்றும் தில்லைக் கோயில் சிறப்பினைக் கொண்டுள்ளது.
வைணவர்களுக்குக் கோயில் எனச் சிறப்புற விளங்கும் திருவரங்கத்திலே, அரங்கநாதப் பெருமான் பள்ளி கொண்டிருக்கும் கருவறை உள்ளது. அதற்கு மேலுள்ள விமானம் பொற்றகடு போர்த்தப் பெற்ற சிறப்பினையுடையது; அதனைப் பிரணவாகர விமானம் அல்லது பிரணவாக்ருதி விமானம் என அழைப்பர். சடாவர்மன் சுந்தர பாண்டியனது திருப்பணி இது, என்பது கல்வெட்டுச் செய்தி.
திட்டைச் சிவாலய விமானம்
தஞ்சாவூருக்கு அருகில் (9 கி.மீ.) உள்ள திட்டை எனும் திருத்தலத்தில் கட்டடக் கலைச் சிறப்புமிகு சிவாலயம் உள்ளது.
சூரிய சந்திர காந்தக் கற்கள் பதிக்கப்பட்ட விமானம் கருவறைக்கு மேலே காணப்படுவது.
இந்தக் கற்கள் சூரிய ஒளியினால் காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கல்லிலிருந்து ஈரத்தை நீராக மாற்றி மூலவராகிய சிவலிங்கத்தின் மீது 20 நிமிடத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு சொட்டாக அபிடேகம் புரிகின்ற விந்தை உள்ளது. மூலவர் மீது நீர்த்துளி விழும்வகையில், கருவறை மேல் விதானத்தில் சதுரத்துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த கட்டடக் கலை உத்தியுடன் இவ்வாறு அமைந்துள்ளது பாராட்டற்குரியது.
ஆலயப் படிக்கட்டுகள் வழியாக இறைத் திருமுன்னர்ச் செல்வதற்கேற்பக் கைப்பிடிச்சுவரோ பிடிப்பிற்கான நீண்ட குழாயோ அமைப்பர்; மிக உயரமில்லாத இடத்தில் படிக்கட்டுகளின் இரு மருங்கிலும் யானைத் துதிக்கை போன்ற சிற்ப அமைப்போ செய்தமைப்பர். இறைவன் சன்னிதியிலும் படிக்கட்டருகே இரு யானைத் துதிக்கையமைப்பைப் பொருத்திப் போற்றுவர்.
ஆலயங்களில் சமய நம்பிக்கையால் படிக்கட்டுகளைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமைத்தனர். செய்குன்றாகிய சுவாமி மலையில் பிரபவ விபவ என எண்ணும் அறுபது ஆண்டுகளையும் நினைவிற்கொள்ளுமாறு 60 படிகள் கட்டப்பட்டுள்ளன.
முருகன் எழுந்தருளியுள்ள திருத்தணிகை மலையில் 365 (அஃதாவது, ஆண்டிலுள்ள எல்லா நாள்களிலும் வழிபடும் நோக்கில்) படிக்கட்டுகள் உள்ளன.
அரக்கோணம் சந்திப்புக்கு 25 கி.மீ. தொலைவிலுள்ள சோளிங்கபுரம் எனும் வைணவத் தலம் உள்ளது. சுவாமியின் அருட்காட்சி பெற 1305 படிகளில் ஏறவேண்டும்.
கருங்கல்லாலோ உலோகத்தாலோ அமையாத தெய்வத் திருமேனிக்குத் தைலக்காப்போ புனுகு சார்த்துதலோ நடைபெறுவதால் நாள்தோறும் நீராட்டல் தேவையில்லை. ஆனால், தினமும் நீராட்டுப் புரிந்திடும் நிலையில் பிரநாளம் இன்றியமையாத் தேவையாகிறது.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கருவறையின் இடப்புறம் அமைந்துள்ள யாளித்தலையமைப்புடன் கூடிய பிரநாளம் சிற்பச் சிறப்புடன் கூடியது.
தஞ்சைப் பெரிய கோயிலில் சில இடங்களில் இத்தகைய நீர்த்தூம்புகள் உள்ளன; எனினும், கோயிலின் வடமேற்குப் பாகத்தில் காணலாகும் அருள்மிகு சுப்பிரமணியர் கோயிலில் அமைந்துள்ள நீர்த்தூம்பு, வடபால் படிக்கட்டின் அருகே உள்ளது. வாயைப் பிளந்துள்ள யாளியின் தலையமைப்பும், அதனிடமிருந்து வெளியாகும் நீர் சிதறாமலிருக்கும் வகையில் தொட்டியமைப்பும் காணலாம். நாயக்கர் காலச் சிற்பத்திறனைப் பிரநாளத்திலும் சிற்பியர் காட்டியுள்ளனர். இதனில், நீர்த்தாரை வளைந்து விழும் வகையில் வாழைப்பூ வடிவிலமைந்த கவிந்த கூம்பமைப்பினைக் கண்டு வெளிநாட்டவர்களும் வியப்படைகின்றனர்.
கோபுரம் பற்றிய விளக்கமும், கோபுரத்தின் அங்கங்களும் தக்கவாறு கூறப்பட்டுள்ளன. கோபுர வாயில் வளர்நிலைகள் பற்றியும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.
சித்தாந்த நோக்கில் ஆலயம் குரு லிங்க சங்கம அமைப்பில் சீர்காழிக் கோயில் கட்டப்பட்டுள்ள இயைபுக் கற்பனையும் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தில் காற்றோட்டத்திற்கு மட்டுமல்லாமல் அழகுணர்வுக்காகவும் சாளரங்கள் அமைக்கப்பட்ட திறம் ஆராயப்பட்டுள்ளது. ஆலயங்களில் குறிப்பிட்ட நாள்களில் சூரிய வழிபாடும் சந்திர வழிபாடும் நடைபெறும் விதத்தில் அமைந்த கட்டடக் கலை நுட்பம் போற்றப்பட்டுள்ளது.
ஆலயங்களில் அமைந்துள்ள தேவ கோட்டங்கள், கொடிக்கம்பம், பலிபீடம், பிராகாரங்கள் கட்டடக் கலை முறைப்படி கட்டப்பட்டுள்ளது.
தமிழகம் கோயிற்பண்பாட்டினைக் கொண்டு விளங்குவதால், கோயிலில் சிறந்த அங்கங்களான அதிட்டானம், கருவறை ஆகியவற்றின் அடிப்படையில், கோயில் வகைகளை இப்பாடம் புலப்படுத்துகிறது ;
கலைஞர்கள் கற்பனையால் தம் கலைப் படைப்புகளில் தனித்தன்மை காட்டும் இயல்பினர் ; அந்த நோக்கில் அவர்களால் உருவாக்கப் பெற்ற இசைத் தூண்கள் பற்றிய செய்திகளும் சுமைதாங்காத அலங்காரத் தூண்கள் இடம் பெறுதல் பற்றிய குறிப்பும் விளக்கப்படுகின்றன.
ஆலயக் கட்டுமானத்திற்குக் கருவறை மிகச் சிறந்த உறுப்பாகும்; மனிதனுக்கு முகம் போன்று அடையாளம் காட்டும் இந்த உறுப்பு, சதுரம் நீண்ட சதுரம் வட்டம் ஆகிய வடிவங்களில் அமைக்கப்படுகிறது.
பிரநாளம் எனும் நீர்த்தூம்பைக் கருவறைக்கு இடப்பாகத்தில் அமைக்கும்போது, அதனையும் ஒரு கலைப்படைப்பாகச் செய்து காட்டியுள்ளனர்; ஆலயப் படிக்கட்டுகளின் அமைப்பிலும் எண்ணிக்கையிலும் கூடத் தத்தவச் சிந்தனைக்கு வழிகோலியுள்ளனர்.

