9

நிகழ்வுகள் அல்லது செய்திகளின் பண்பு , இதன் மூலமாகப் புறக்கணிக்கப்படுகின்றது : வரிசை முறை மட்டுமே சொல்லப்படுகிறது .

ஆனால் அமைப்பியலை விளக்கும் லெவ் ஸ்ட்ரோஸ் , நிகழ்வுகளின் பண்புகளை எடுத்துக்கொண்டு , அந்தப் பண்புகள் காரணமாகவே , அந்த அமைப்புக் கட்டப்பட்டிருக்கிறது என்று விளக்குகிறார் .

படம் , பாடம் ; படம் , பழம் ; பழம் , பணம் - இப்படி இணைகளை எடுத்துக்கொள்வோம் .

இவை வேறு வேறு பொருளை உணர்த்துவன .

இந்த வேறுபாடுகள் எதனால் வெளிப்படுகின்றன ?

தொல் மானிடவியல் அடிப்படையில் பண்பு x பண்பாடு ( nature x culture ) என்ற ஒரு இருநிலை எதிர்வை அவர் விளக்குகிறார் .

பண்பு என்பது இயற்கையானது ; ஏற்கெனவே இருப்பது .

பண்பாடு என்பது ஆக்கிக் கொள்வது ; பண்படுத்தப்படுவது .

இரண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை யென்றாலும் முரண்பட்டவை .

இதனை , பதனப்படாதது x பதனப்பட்டது - ( raw x cooked ) என்ற எதிர்வாகக் கொள்ளலாம் .

இத்தகைய பண்பு , அமைப்பு முழுக்க விரவிக்கிடப்பதாகவும் , அதன் இயக்கம் இத்தகைய ஆற்றலினால் அமைந்துள்ளது என்றும் அமைப்பியல் காட்டுகிறது .

நல்லவன் x கெட்டவன் ; வலியவன் x மெலியன் ; ஆண் x பெண் ; கதாநாயகன் x வில்லன் என்று இந்தப்பண்புகளின் நீட்சியைக் கூறிச்செல்லலாம் .

கதை கூறும் உத்தியில் இந்தப் பண்புகளை அறிந்துகொள்ளவேண்டும்

1.3 கதைப் பின்னல்

கதை அல்லது கதைப் பண்பு கொண்ட நிகழ்ச்சிவருணனை ( narrative ) யில் , கதைக்குரிய பண்பு , அதாவது ஒன்றற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் , கதைத்தன்மையுடையனவாக எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்று விளக்குகின்றபோது , அது , கதைப்பின்னல் ( plot ) என்பதனால் ஆனது என்று அமைப்பியல் கூறுகிறது .

இது , சிறு சிறு நிகழ்ச்சிகளின் கூட்டு வடிவமாகத் தோன்றினாலும் , தன்னளவில் இது முழுமையானது , தன்னளவில் கட்டுக்கோப்பானது .

பாடுபொருள் அல்லது கரு ( theme ) என்று சொல்லப்படுவதை விளக்குவதாகவும் அதனை ஒரு தூலப்பொருளாக ஆக்குவதாகவும் கதைப்பின்னல் அமைகின்றது .

“ உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் ” என்பது சிலப்பதிகாரத்தின் பாடுபொருள் எனக் கொண்டால் , அதனை அவ்வாறு கொண்டுவருவதற்குக் காரணமாகவும் , அதனை விளக்குகிறதாகவும் அமைவது கதைப்பின்னலாகும் , கண்ணகி , தெய்வமாகிறாள் , கவுந்தியடிகள் எனும் சமணத்துறவி முதல் பலரும் அவளைப் பாராட்டுகின்றனர் ; சேரன் செங்குட்டுவன் , இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து பத்தினிக் கோட்டம் சமைக்கிறான். - இது கதைப்பின்னல் ஆகும் .

இத்தகைய சிறப்புடன் கதைப்பின்னல் இல்லையென்றால் , சிறுகதையோ , நாவலோ , காவியமோ சிறப்படையாது .

1.4 பின்னை அமைப்பியல் : அறிமுகம்

அமைப்பியலின் வளர்ச்சியாக எழுந்தது - பின்னை அமைப்பியல் ( post structuralism ) ஆகும் .

வளர்ச்சி என்றால் , முந்தையது போதாது என்ற நிலையில் தோன்றியதேயாகும் .

போதாது எனும்போது , பழையதிலிருந்து மாறுபடவும் , பழையவற்றுள் பலவற்றை மறுப்பதாகவும் அமைவது .

எனவே , பின்னை அமைப்பியல் என்பது , அமைப்பியலுக்குப் பின்னர்த்தோன்றியது என்று கூறுவதை விட , அமைப்பியலை மறுதலிப்பதாக அது எழுந்தது என்றே கொள்ள வேண்டும் .

இது பிரான்சில் தோன்றியது .

நவீனத்துவம் என்ற போக்கு மேலோங்கியிருந்த ஒரு சூழலில் , பல துறைகள் பற்றிப் பல விவாதங்கள் தோன்றின .

அந்தச்சூழலில் தோன்றியதுதான் பின்னை அமைப்பியல் எனும் சிந்தனைமுறை / இலக்கியத்திறனாய்வு முறை ஆகும் .

பின்னை அமைப்பியலின் எழுச்சிக்கு அதன் தொடக்கத்தில் வித்திட்ட அறிஞர் யார் ?

பின்னை அமைப்பியலின் எழுச்சிக்கு அதன் தொடக்கத்தில் வித்திட்ட அறிஞர் ரோலந் பார்த் ( Roland Barthes ) என்பவர் .

இதனை வழிநடத்தி முன்கொண்டு சென்றவர் டெர்ரிடா ( Jacques Derrida ) என்பவர் ஆவார் .

தொடர்ந்து , மிக்கேல் ஃபூக்கோ ( Michael Foucault ) எனும் சமுதாயவியல் அறிஞரும் லக்கான் ( Jacques Lacan ) எனும் உளவியல் பகுப்பாய்வாளரும் , ஜூலியா கிறிஸ்தோவா ( Julia Kristeva ) எனும் பெண்ணியலாளரும் மற்றும் காயத்ரி ஸ்பைவக் , பால் டிவேர் முதலியோரும் பின்னை அமைப்பியலுக்கு முக்கியமான பங்களிப்புகளையும் , பரிமாணங்களையும் தந்துள்ளார்கள் .

இது , செல்வாக்கு மிகுந்த ஒன்று என்பது மட்டுமல்லாமல் , பின்னர் வந்த கொள்கைகளில் இது பெருந்தாக்கம் ஏற்படுத்தியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

1.4.1 பின்னை அமைப்பியல் : அடிப்படைகள்

அமைப்பியல் பனுவல் , வாசகன் ஆகியவற்றை முதன்மைப் படுத்தியது .

அதற்குமுன்பு , படைப்பு - படைப்பாளிக்குத் திறனாய்வில் முக்கியத்துவம் தரப்பட்டது .

படைப்பிலிருந்து நகர்ந்து அதன் முக்கியத்துவம் பனுவல் எனும் கட்டுக்கோப்பான அமைப்பை நோக்கி நகர்கிறபோது , பின்னை அமைப்பியல் தோன்றுகிறது என்று போலந் பார்த் என்ற பிரபல ஃபிரஞ்சுத் திறனாய்வாளர் கூறுவார் .

அது போல் , இலக்கியம் என்பது , வரையறைகளுக்குட்பட்ட பொருள்களைக் கொண்டது என்றும் , அது தன்னுள் முடிவு பெற்ற - அதாவது , வேறு எதனையும் வேண்டிப் பெறாத - ஓர் அமைப்பு என்றும் முன்னர்க் கருதப்பட்டது .

இதனைப் பின்னை அமைப்பியல் மறுக்கிறது ; பன்முகமான தளங்களை நோக்கிப் பனுவலின் விளக்கம் நகர்கிறது என்று அது விளக்குகிறது .

இலக்கியம் என்பது எழுதப்பட்ட ஒரு பனுவல் .

அது இயங்குதல் தன்மை பெற்றது , உயிர்ப்புக் கொண்டது .

அதனை ஒரு வாசகன் வாசிக்கிறான் ; ஒரு பொருள் கொள்கிறான் ; சில நாள் கழித்து மீண்டும் வாசிக்கிறான் ; வேறொரு பொருள் விளக்கம் கொள்கிறான் .

அதுபோல் ஒரு வாசகன் குறிப்பிட்ட ஒரு விதத்தில் பொருள் கொள்கிறான் என்றால் , இன்னொரு வாசகன் , அவனுடைய பயிற்சி , புரிதல் திறன் , சூழல் முதலியவற்றின் காரணமாக இன்னொரு பொருள் கொள்கிறான் .

இப்படியே ஒரு வாசிப்பு .

மீண்டும் ஒரு வாசிப்பு .

அதன் காரணமாக , அந்த வாசகன் கொள்ளும் ஒரு பனுவல் .

இன்னொரு பனுவல் .

என்று ஒரு பன்முகத்தன்மை ( multiple reading , plural text ) ஏற்படுகிறது .

1.5 மொழியும் பனுவலும்

மொழி , அற்புதமான ஆற்றல் படைத்தது . அமைப்பியல் , மொழியின் ஆற்றலை அதன் அமைப்புக்குள்ளிருந்து ( மட்டும் ) பார்க்கிறது .