சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும், சிற்பக் கலையும் ஓவியக் கலையும் சிறந்து விளங்கின. இவற்றின் மாட்சியை இன்று நாம் இலக்கியச் சான்றுகளைக் கொண்டு மட்டுமே அறிய இயலுகிறது. அக்காலத்தில் சிற்பங்கள் சுதையாலும் (சுண்ணாம்புக் காரை), மரத்தாலும் செய்யப்பட்டதால் கால வெள்ளத்தில் அழிந்து விட்டன.
தமிழகத்தில் முதன் முதலாகக் கோயில் கட்டுவதற்குக் கற்கள் பயன்படுத்தப் பட்டமையைப் பல்லவர் காலம் முதலே அறிய இயலுகிறது. ஆயினும் பல்லவர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழகத்தில் நடுகல் வழிபாடு இருந்து வந்துள்ளது என்பது இங்குக் குறிப்பிடத் தக்கது.
நடுகற்கள்
தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே நடுகற்கள் கிடைத்துள்ளன. இவை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலம் முதல் விசயநகர – நாயக்கர் காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றினைக் கொண்டுள்ளன.
நடுகல் என்பது போரில் இறந்துபட்ட அல்லது பொதுமக்களது நல்வாழ்விற்காக உயிர் துறந்த வீரனது நினைவாக அமைக்கப்படுவதாகும். இது வீரக்கல் (
அதன் பின்னர்ப் பல்லவர்களே முதன்முதலாகக் கற்களைக் கோயில் கட்டவும், இறையுருவைச் செய்யவும் பயன்படுத்தியவர் ஆவர்.
பல்லவ மன்னன் மகேந்திர வர்மன், சாளுக்கியரோடு அரசியல் தொடர்பு கொண்டிருந்தான். அதன் காரணமாக வாதாபியில் இருந்த குடைவரை மரபினைப் பின்பற்றித் தொண்டை மண்டலத்தில் குடைவரைகளை அமைத்தான். குடைவரைகளுக்கு அடுத்து, மகேந்திரனின் மகன் நரசிம்ம பல்லவனின் ஒற்றைக்கல் இரதங்களும், இராச சிம்மனது கட்டுமானக் கோயில்களும் சிறப்பிடம் பெறுகின்றன.
மகேந்திர வர்மனது காலம் தொடங்கிக் கோயிற் சிற்பங்கள் அடைந்த வளர்ச்சி நிலைகளை இப்பகுதியில் காணலாம்.
பல்லவர்களும் பாண்டியர்களும் குடைவரைகளையும் கட்டட வகைக் கோயில்களையும் கட்டினர். குடைவரைக் கோயில்கள் அமைக்கும் மரபு மறையும் காலத்தில் சோழர்கள் கட்டுமானக் கோயில்களைக் கட்டத் தொடங்கினர். சோழர்களது பெரும்பாலான கோயில்கள் காவிரியாற்றின் இருகரைகளிலுமே அமைந்துள்ளன. இவர்களது கோயிற் கட்டடக் கலையும் சிற்பக் கலையும் பல்லவ பாண்டியர் கலைகளில் இருந்து வளர்ச்சி அடைந்தவை ஆகும். சோழர்கள் மிக உயர்ந்த விமானங்களைக் கட்டினர். கோபுரங்களைச் சிறியதாக அமைத்தனர். பரிவார தேவதைகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். பெரும்பான்மையும் கோயிலின் அனைத்துப் பகுதிகளையும் கல்லினால் கட்டினர்.
சோழர்கள் கட்டடத்திற்கும் சிற்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்தனர். இந்தப் பாடத்தில் சோழர், பல்லவர், காலச் சிற்பங்கள் பற்றிக் காணலாம்.
சங்க காலம், சங்கம் மருவிய காலம் ஆகிய காலப் பகுதிகள் பல்லவர் காலத்திற்கு முந்தியவை ஆகும். அக்காலச் சிற்பங்களைக் குறித்து இலக்கியங்கள் வாயிலாகவே அறிய இயலுகிறது.
அக்காலச் சிற்பக் கலைஞரைச் சிலப்பதிகாரம் ‘மண்ணீட்டாளர்’ (5 : 30) என்கிறது. சிவபெருமானுக்கும், திருமாலுக்கும், முருகக் கடவுளுக்கும், கொற்றவைக்கும் கோயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை சுடுமண் கொண்டு அமைக்கப்பட்டவை. பரிபாடல் மரச் சிற்பங்கள் பற்றிக் கூறுகின்றது. தமிழகத்தில் கொற்கை, அரிக்க மேடு, உறையூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழ்வு ஆய்வுகளில் அக்காலச் சுடுமண் ஓடுகளும், சிற்பங்களும் கிடைத்துள்ளமை மேற்கண்ட கருத்திற்கு அணி சேர்ப்பதாக அமைகின்றது.
(1) குடைவரைக் கோயில்
(2) கட்டட வகைச் சிற்பம் அல்லது ஒற்றைக் கற்கோயில்
(3) கட்டுமானக் கோயில்
கால வளர்ச்சியில் இவை ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றியவை. இவற்றில் பல்லவர்களின் சிற்பக் கலைச் சிறப்பு எவ்வாறு அமைந்துள்ளது என இனிக் காணலாம்.
புடைப்பு உருவங்கள் (Bas Relief)
இவனது காலக் குடைவரைகளில் வாயிற் காவலர் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டனவே அன்றிக் கருவறைகளில் இறையுருவங்கள் கல்லினால் அமைக்கப்படவில்லை. மரத்தாலோ, சுதையாலோ அல்லது உலோகத்தாலோ செய்யப்பட்ட இறையுருவங்கள் வைக்கப்பட்டு இருந்திருக்கலாம். அவை வைக்கப்பட்ட பள்ளம் மட்டும் கருவறைகளில் உள்ளன. கருவறை என்பது இறைவனது உருவம் வைத்து வழிபடப்படும் முக்கியமான இடமாகும்.
(1) மகிடாசுர மர்த்தினி
(2) அனந்த சாயி
(3) கோவர்த்தன தாரி
(4) பூவராக மூர்த்தி
ஆகியனவாகும். இவை தவிரத் திறந்த வெளிப் பாறைச் சிற்பமான பகீரதன் தவம் அல்லது அர்ச்சுனன் தவம் எனப்படும் சிற்பம், இந்தியாவில் உள்ள மிகப் பெரிய சிற்பங்களில் ஒன்றாகும். இவை மகாபலிபுரத்தில் உள்ளன. இச்சிற்பத் தொகுதிகள் அனைத்தும் புராணக் கதைகளைக் கருவாகக் கொண்டு வடிக்கப்பட்டவை. இனி இவற்றுள் ஒவ்வொன்றின் சிறப்புகளையும் காணலாம்.
மகிடாசுர மர்த்தினி
இக்குடைவரையின் முன் மண்டபத்து இருபக்கச் சுவர்களில் ஒன்றில் அனந்தசாயி திருமாலின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் மகிடாசுர மர்த்தினி புடைப்புச் சிற்பம் இடம் பெறுகிறது. மகிடாசுர மர்த்தினி – மகிடாசுரன் என்ற எருமைத் தலை அசுரனைக் கொன்ற துர்க்கை. அசுரனால் துன்புற்ற தேவர்களையும் மக்களையும் காப்பாற்ற, அவனோடு போர்புரிந்து கொன்றாள் துர்க்கை. இக்குடைவரை சிவனுக்குரிய குடைவரைக் கோயிலாக இருப்பினும், மகிடாசுர மர்த்தினி சிற்பத்தின் சிறப்பால் அப்பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத் தகுந்ததாகும்.
மகிடாசுர மர்த்தினி
தேவி, சிம்மத்தின் மீது அமர்ந்து பல கரங்களில் பல விதமான படைக் கலங்களை ஏந்திப் பாய்ந்து வருவது போலக் காட்டப் பட்டுள்ளாள். தேவியின் பணிப்பெண்களும், பூத கணங்களும் கத்தியும் கேடயமும் ஏந்தி வருகின்றனர். எதிரே எருமைத் தலையுடைய மகிடாசுரனும் அவனது அசுரப் படையும் தோற்றுப் பின்வாங்குகின்றனர். அசுரர்கள் சிலர் வெட்டுப் பட்டுக் கீழே விழுவதும், சிலர் புற முதுகிட்டு ஓடுவதும் இதைக் கண்டு தேவியின் பூத கணங்கள் எக்காளத்துடன் முன்னேறுவதுமாக இச்சிற்பம் அமைந்துள்ளது. தேவியின் இடக் கையில் உள்ள வில், அம்பு பாய்ச்சும் நிலையில் அமைந்துள்ளது. தேவியின் வாகனமான சிம்மம் கூடச் சினத்துடன் பாய்வதாக வடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத்தின் அழகினை நம் நாட்டுக் கலை வரலாற்று அறிஞர்களும், வெளிநாட்டு அறிஞர்களும் வியந்து பல விதமாகப் பாராட்டியுள்ளனர்.
அனந்த சாயி
மகிடாசுர மர்த்தினி சிற்பத்திற்கு எதிரில் அமைந்துள்ளது அரவணையில் துயிலும் திருமாலின் சிற்பம். அனந்த சாயி: பாம்பணை மீது துயில் கொள்ளும் திருமால் மகிடாசுர மர்த்தினி சிற்பம் போர்க் காட்சியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அனந்த சாயி சிற்பமோ அமைதியை அடிப்படையாகக் கொண்டு திகழ்கிறது. திருமால் அறிதுயில் நாராயணனாகக் கிடந்த கோலத்தில் காணப்படுகிறார். அவர் அருகே பூமகள் கீ்ழே அமர்ந்து வணங்குகிறாள். சக்கரத்தாழ்வாரும் மார்க்கண்டேய மாமுனியும் அருகில் அமர்ந்துள்ளனர். கந்தர்வ உருவங்கள் மேலே பறந்து செல்கின்றன. மாலின் திருவடிகளுக்கருகே மது, கைடபர் என்னும் அசுரர்கள் உள்ளனர். இந்த அசுரர்களிடமிருந்து நான்முகனைக் காப்பாற்ற அவர்களைக் கொன்றதைக் காட்டுவது இச்சிற்பம்.
அனந்த சாயி
கோவர்த்தன தாரி
கோவர்த்தன கிரி மண்டபத்தின் பின் சுவர் முழுவதுமாகக் கோவர்த்தன தாரி கண்ணனின் சிற்பத் தொகுதி அமைந்துள்ளது. இந்திரனது ஆணையால் வருணன் கல் மழை பொழிவிக்கிறான்.
அத்துன்பத்தில் இருந்து ஆயர்களைக் காக்க ஆயர்தம் குலத் தலைவனான கண்ணன் கோவர்த்தன மலையைத் தன் கையால் தூக்கிக் குடையாய்த் தாங்கும் காட்சி அழகாகச் சிற்பமாகியுள்ளது. அதனருகே சிறு குழந்தையை ஏந்தியபடி செல்லும் ஆயன், தாடியுடன் கையில் கோல் கொண்டு செல்லும் முதியோன், இடைச்சி, ஓலைப் பாயைச் சுருட்டித் தலையில் வைத்துக் கொண்டு உரியில் வரிசையாய் அடுக்கிய தயிர்க் குடங்களுடன் செல்லும் பெண், கன்றை நாவால் தடவும் பசு, பாற்குடம் ஏந்திப் பால் கறக்கும் ஆயன், துள்ளி விளையாடும் கன்று, ஆநிரைகள் என ஓர் ஆயர் பாடியை அப்படியே கண் முன் நிறுத்தும் காட்சியாக இச்சிற்பத் தொகுதி விளங்குகிறது.
பூவராக மூர்த்தி
ஊழிக் காலத்தில் பொங்கும் கடல் அலைகளிலிருந்தும், அசுரனிடமிருந்தும் நிலமகளைக் காப்பாற்ற, அவளைத் தூக்கி எடுக்கும் வராக அவதாரக் (பன்றி வடிவம்) காட்சி வராகர் குடைவரையில் செதுக்கப்பட்டுள்ளது.
வராகர், திருமகள், கொற்றவை, திரிவிக்ரமன் ஆகிய நான்கு சிற்பங்கள் இங்குக் காணப்படுகின்றன.
பூவராக மூர்த்தி
பூவராக மூர்த்தி பின்னிரு கைகளில் சங்கும் சக்கரமும் கொண்டுள்ளார். முன்னிரு கரங்களில் பூமகளைத் தூக்கித் தன் வலப்புறத்தில் தாங்கியுள்ளார். அவரது வலது கால ஆதிசேடனாகிய பாம்பின் மீது இடம் பெறுகிறது.
அரச அரசி உருவங்கள்
பல்லவர் காலத்திலேயே இறையுருவங்களைப் போல அரச, அரசி உருவங்களை உயரமாகச் செதுக்கும் வழக்கம் இருந்துள்ளது. இதனை வராகர் குடைவரையில் இடம் பெற்றுள்ள பல்லவ மன்னர்கள் இருவருடைய உருவங்களை வைத்து அறியலாம். சிம்ம விஷ்ணுவும், மகேந்திர வர்மனும் தத்தம் தேவியருடன் செதுக்கப்பட்டுள்ளனர்.
பாறைச் சிற்பம்
கோவர்த்தன கிரி மண்டபத்தின் அருகில் 96 அடி அகலமும் 43 அடி உயரமும் உள்ள மிகப் பெரிய பாறை ஒன்று உள்ளது. அப்பாறையின் இடையில் மேலிருந்து கீழ்நோக்கிய பள்ளம் ஒன்று காணப்படுகின்றது. இந்த இயற்கையான பாறை அமைப்பைக் கண்ட சிற்பிகள் தம் கற்பனையைக் கலந்து இதை மிகச் சிறப்பான சிற்பத் தொகுதியாகக் காட்சிப் படுத்தியுள்ளனர்.
இப்பாறையின் ஒரு பக்கத்தில் கங்கையைத் தேவ லோகத்திலிருந்து பூலோகத்திற்குக் கொண்டு வருவதற்காகப் பகீரதன் ஒற்றைக் காலில் நின்று சிவனை நோக்கித் தவமிருக்கும் காட்சி சிற்பமாகியுள்ளது. இவரது தவத்தைப் பாராட்டி வரம் அளிக்கச் சிவபெருமான் பறந்து வருகிறார். பாறைகளுக்கு இடையே இருக்கும் பள்ளத்தைத் தேவ கங்கையாக உருவகப்படுத்தி அது தேவலோகத்திலிருந்து பூமியை அடைந்து பாதாள லோகத்திற்கும் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்பள்ளத்தில் நாக உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தேவலோகத்தைச் சார்ந்த கணங்கள், கின்னரர், கிம்புருடர், கந்தர்வர் போன்ற உருவங்கள் இடம் பெற்றுள்ளன. புதரிலிருந்து எட்டிப் பார்க்கும் புலி, பாய்ந்து செல்லும் மான், ஆமை, படுத்து மூக்கைத் தடவிக் கொள்ளும் மான், குட்டிக்குப் பால் கொடுக்கும் புலி, பாய்ந்து வரும் சிங்கம், வேடுவர்கள் என ஒரு காடே காட்சி ஆக்கப்பட்டுள்ளது. இப்பாறையில் மிகப் பெரிய இரு யானை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் இப்பாறைச் சிற்பம் அனைவரையும் கவர்வதாக அமைந்துள்ளது. இதில் இடம் பெற்றுள்ள பகீரதன் தவக் காட்சியை அர்ச்சுனன் தபசு என்றும் கூறுவதுண்டு.
இக்கல் இரதங்களில் திரௌபதி இரதத்திலும், தர்மராசா இரதத்தி்லும் கருவறைகளில் பிரதானக் கடவுளரின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த இரதங்களின் வெளிச்சுவர்களில் அழகுறச் செதுக்கப்பட்ட பல சிற்பத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் தேவ கோட்டங்களில் இறையுருவங்களும் கோட்டங்களில் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டுக்கு ஒரு சில இரதங்களைப் பற்றியும் அவற்றில் இடம் பெற்றுள்ள சிற்பங்களைப் பற்றியும் காணலாம்.
கோட்டம் : கோயில் விமானத்தில் – கருவறைச் சுவரின் வெளிப் பக்கத்தில் குடையப்படும் சிறுகோயில் அமைப்பு.
தேவ கோட்டம் : விமானப் பகுதியில் இடம்பெறும் சிறு கோயில் அமைப்பு. இறை உருவங்கள் வைக்கப்படுவதால் தேவ கோட்டம் எனப்படுகிறது.
திரௌபதி இரதம்
இந்த இரதத்தின் முன் சுவரில் துவார பாலகிகளின் சிற்பங்களும் ஏனைய பக்கங்களில் உள்ள தேவ கோட்டங்களில் பிற சிற்பங்களும் இடம் பெறுகின்றன. பின் சுவரில் தாமரை மலர்மேல் நிற்கும் துர்க்கை மற்றும் அவள் காலடியில் அமர்ந்துள்ள பணியாளர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளமை காணத் தக்கதாகும். இதில் ஒரு மனிதன் தனது தலையைத் தானே வெட்டி அம்மனுக்குச் சமர்ப்பிக்க முயலும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இது ஒருவகை வழிபாடு ஆகும். இவ்வழிபாடு நவகண்ட விதி எனக் கூறப்படும்.
திரௌபதி இரதம்
அர்ச்சுனன் இரதம்
இதன் ஒரு புறத்தில் சிவபெருமான் தனது வாகனமான நந்தியின் மீது சாய்ந்தபடி ரிசபாந்திகராகக் (ரிசபத்தின் மீது சாய்ந்திருப்பவர்) காட்சியளிக்கிறார். அவருடைய அமைதியான சிரிப்பும், தெய்வீகக் களையும் கவர்பவை.
அர்ச்சுனன் இரதம்
எதிர்ப்புறத்தில் நடு மாடக் குழியில் நான்கு கரங்களுடன் கூடிய கருடாந்திக விஷ்ணு (கருடனுடன் உள்ள திருமால்) இடம் பெறுகிறார்.
அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகள் சிற்பமும், துவார பாலகர் சிற்பமும் குறிப்பிடத் தக்கவை.
தர்மராசா இரதம்
ஒற்றைக்கல் இரதங்களிலேயே மூன்று தளங்களையுடைய தர்மராசா இரதம் மிகச் சிறந்த படைப்பாகும். இதுவே பிற் காலத்தில் தோன்றிய அஷ்டாங்க விமானக் கோயில்களுக்கு அடிப்படையாகும். இதன் கண் இடம் பெற்றுள்ள புடைப்புச் சிற்பங்கள் பல்லவ இறையுருவங்களின் அருங்காட்சியகம் எனலாம்.
தர்மராசா இரதம்
கீழ்த் தளத்தின் சுவர்களில் சிவபெருமான் சிற்பங்கள் மூன்று, ஹரிஹரன், பிரம்மா, சுப்பிரமணியர், அர்த்த நாரீசுவரர், நரசிம்ம வர்மன் ஆகிய சிற்பங்கள் உள்ளன. அர்த்த நாரீசுவரர் சிற்பம் கவனத்தைக் கவர்வது. இடத்தோள், பெண் உருவத்திற்கு ஏற்றாற் போலக் கீழ்நோக்கிச் சரிந்தும் இடை வளைந்தும், கைகள் அழாகத் தொங்கியும் காணப்படுகின்றன.
நடுத்தளத்தில் கங்காதரர், கருடாந்திக விஷ்ணு, நடராசர், ரிசபாந்திக மூர்த்தி, வீணாதர தட்சிணா மூர்த்தி, கங்காள மூர்த்தி, நர்த்தன தட்சிணா மூர்த்தி, காளிய நர்த்தன கிருஷ்ணன் எனப் பல சிற்பங்கள் அமைந்துள்ளன.
மேல் தளத்தில் சோமாஸ்கந்தர் சிற்பத் தொகுதி இடம் பெற்றுள்ளது. சிவனும் உமையும் முருகக் குழந்தையோடு அமர்ந்திருப்பதே சோமாஸ்கந்தர் சிற்பமாகும்.
இவ்வாறாக மாமல்லன் காலத்தைக் சேர்ந்த கற்சிற்பங்களான ஒற்றைக்கல் இரதங்கள் ஒரே கல்லில் செதுக்கப்படும் மரபிற்கு அடிப்படையாய் அமைந்தன. எனினும் பின்னர்ப் பாண்டியரால் தோற்றுவிக்கப்பட்ட தென்னக எல்லோரா என்று அழைக்கப்படும் கழுகுமலை வெட்டுவான் கோயில் தவிர இந்த அமைப்பில் வேறு கோயில்கள் ஏனோ தோன்றவில்லை.
கடற்கரைக் கோயில், மகாபலிபுரம்
மேற்கு நோக்கிய கோயில் கருவறையின் பின் சுவரில் சோமாஸ்கந்தர் புடைப்புருவம் மட்டும் இடம் பெறுகிறது. இக்கோயிலின் பெயர் இராச சிம்மப் பல்லவேசுவரக் கிருஹம் என்பதாகும்.
கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிய கோயில்களுக்கு இடையே உள்ள கோயில் நரபதி சிம்ம பல்லவ விஷ்ணுக் கிருஹம் எனப்படும். இதன் கருவறையில் திருமால் பள்ளி கொண்ட பெருமாளாகக் காட்சி தருகிறார்.
கடற்கரைக் கோயிலும் அதன் கண் உள்ள சிற்பங்களும்தாம் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்ட முதல் கட்டுமானக் கோயிலும், தனி்ச் சிற்பங்களும் ஆகும்.
காஞ்சி – கைலாச நாதர் கோயில்
விமான கிரீவத்தில் உள்ள கோட்டங்களில் கிழக்கே, சிவனும் தெற்கே தட்சிணாமூர்த்தியும், மேற்கே திருமாலும், வடக்கே பிரம்மாவும் வைக்கப்பட்டுள்ளனர். இக்கோயில் கருவறையின் பின்சுவரில் சோமாஸ்கந்தர் புடைப்புருவமும் கருவறையின் நடுவில் சிவலிங்கமும் உள்ளன.
(விமான கிரீவம் : விமானக் கூரையில் உள்ள தளத்தில் ஒவ்வொரு திசைக்கும் ஓர் இறையுருவம் இடம் பெறுகிற பகுதி)
வைகுந்தப் பெருமாள் கோயில்
அஷ்டாங்க விமானம் என்பது மூன்று கருவறைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவதாகும். இம்மூன்றிலும் திருமாலுடைய நின்ற, இருந்த, கிடந்த கோலச் சிற்பங்கள் இடம் பெறும்.
வைகுந்தப் பெருமாள் கோயிலில் நான்கு கருவறைகளை உடைய விமானம் அமைந்துள்ளது. இதில் கீழிருந்து மலோக முறையே நின்ற, அமர்ந்த, கிடந்த கோலங்களில் திருமாலின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. நான்காவது கருவறை இறையுரு இன்றி உள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள சுவரின் உட்பகுதியில் உள்ள புடைப்புச் சிற்பங்கள் பல்லவரது வரலாற்றை விளக்கும் சிற்பங்களாகும்.
தமிழகச் சிற்பங்கள்
இங்கு இந்திய – தமிழ்நாட்டுச் சிற்பக் கலை பற்றிய ஓர் அடிப்படைப் பண்பைப் புரிந்துகொள்ள வேண்டும். கிரேக்க – ரோமானியச் சிற்பங்கள் மனித உருவங்களை உள்ளது உள்ளபடியே அமைத்துக் காட்டும் தத்ரூபக் கலையைச் சார்ந்தவை. ஆனால் நம் நாட்டுச் சிற்பங்கள் அளவு, உறுப்புகள், தோற்றம் ஆகிய எல்லாவற்றிலும் கற்பனை கலந்து அமைந்தவை. உருவங்களின் மூலம் கருத்தும் உணர்ச்சியும் புலப்படுத்துபவை; குறியீட்டுப்பொருள் (Symbolism) உடையவை. நான்கு கைகள், எட்டுக் கைகள், நான்கு தலை போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
பெண் சிற்பங்களின் அமைப்பு
பெண் உருவங்கள் இளமையோடு காணப்படும். அவர்களது இடை சிறுத்துக் காணப்படும். அடிவயிற்றுப் பகுதி முன்பக்கம் சற்றுப் புடைத்தும் காணப்படும். சிற்பங்களின் பார்வை கருணையுடன் கூடியதாக இருக்கும். இடுப்பின் இருமருங்கிலும் ஆடை பரந்து விரிந்து செல்வதாகக் காணப்படும். சிற்பங்களில் உள்ள காதணிகள், குறிப்பாகக் குண்டலங்கள் தடித்தவையாகவும், கேயூரங்கள் (தோள் அணி) வேலைப்பாடு அற்றவையாகவும் இருக்கும். அணிகலன்கள் குறைவாகவே இருக்கும். பெண் சிற்பங்களில் சில சிற்பங்களுக்கு மட்டுமே மார்புக் கச்சை அமைக்கப் பட்டிருக்கும்.
பெண் உருவங்கள்
துவார பாலகர் சிற்ப அமைப்பு
பல்லவர் காலத்துக் குடைவரைக் கோயில்களில் தொடக்க காலத்தில் அமைக்கப்பட்ட துவார பாலகர் சிற்பங்களில் இரண்டு கைகள் மட்டுமே இடம் பெற்றன. பிற்காலத்தில்தான் நான்கு கரங்களுடைய துவார பாலகர் சிற்பங்கள் அமைக்கப் பெற்றன. இவைகளில் சில கொம்புகளுடனும், வேறு சில சங்கு சக்கரத்துடனும் செதுக்கப்பட்டன. தொடர்ந்து வந்த காலங்களில் துவார பாலகர்களது கைகளில் கருவறையின் உள்ளிருக்கும் இறைவனது ஆயுதங்களை அப்படியே அளிக்கும் வழக்கம் தோன்றியது.
துவார பாலகர்
புடைப்புச் சிற்பங்களின் அமைப்பு
பல்லவர்கள் தனிச் சிற்பங்களை விடப் புடைப்புச் சிற்பங்களையே அதிகமாகச் செதுக்கியுள்ளனர். இவர்களது மகாபலிபுரப் புடைப்புச் சிற்பங்கள் உலகளாவிய சிறப்புப் பெற்றவை.
இவர்களது கட்டுமானக் கோயிற் கருவறைச் சுவர்களில் சோமாஸ்கந்தரது புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டது. இம்மரபைத் தோற்றுவித்தவன் பரமேசுவர வர்மனாவான். எனினும் இராச சிம்மனது காலத்தில் இவ்வழக்குச் சிறப்பு நிலை அடைந்தது.
இராசராச சோழன்
சோழர்கள் பெற்ற பெரும் வெற்றிகளின் காரணமாகவும், தமது மெய்க்கீர்த்திகளின் (சிறப்புப் பெருமை) அடிப்படையிலும் பெரும்பாலான சிற்பங்களை அவ்வாறு அமைத்துள்ளனர். எடுத்துக்காட்டாக இராசராச சோழன் பெற்ற பெரும் வெற்றிகளால், தான் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தனது பெயராலே இராச ராசேச்சுரம் என்று பெயரிட்டான். அடுத்ததாகக் கருவறையைச் சுற்றியுள்ள கோட்டங்களில் திரிபுராந்தகர் (அசுரர்களின் திரிபுரங்களை எரித்த சிவன்) சிற்பங்களைப் பல்வேறு கோணங்களில் படைத்துள்ளான். சிவபெருமான் அசுரர்களை வென்று பெற்ற வெற்றிகளைப் போலத் தான் பெற்ற வெற்றிகளை நினைத்து இத்தகைய சிற்பங்களை இவன் படைத்துள்ளதாகக் கருதலாம்.
பிற்காலச் சோழர் சிற்பங்களில் அணிகலன்களும் அலங்காரங்களும் முற்காலச் சோழர் சிற்பங்களைவிடச் சற்று அதிக அளவில் இடம்பெற்றன. சிற்பங்களின் முகம் வட்டமான அமைப்பினை உடையதாயும், இலேசான சதைப் பற்றுடனும் காணப்பட்டது. உடலமைப்பு குறுகிக் காணப்பட்டது. ஆடைகளில் பூவேலைப்பாடுகள் இடம்பெற்றன. அலங்காரத்துடன் கூடிய கேயூரம் மற்றும் கழுத்தணிகளுடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. இவ் உருவங்களின் தலைக்குப் பின்பகுதியில் இடம்பெறும் சிரச் சக்கரத்தில் தாமரை இதழ்கள் வட்டமான பகுதியின் உள்ளடங்கிக் காணப்படும்.
பிற்காலச் சோழர் சிற்பங்களை விட முற்காலச் சோழர் சிற்பங்களே கலை வரலாற்று அறிஞர்களால் பெரிதும் பாராட்டப் பெறுகின்றன.
சோழப் பேரரசை நிறுவிய விசயாலய சோழன் தஞ்சையில் கட்டிய நிசும்ப சூதனி கோயிலில் ஆறடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் கைகளில் பயங்கர ஆயுதங்களை ஏந்திக் கபாலப் பூணூல் அணிந்து, தலையில் தீச்சுடர் முடி அலங்காரத்துடன் அமர்ந்த கோலத்தில் நிசும்ப சூதனியின் சிற்பம் அமைந்துள்ளது. அம்மனது காலடியில் அசுரர் படை மாய்கிறது.(நிசும்ப சூதனி – சும்ப நிசும்பர் என்னும் அரக்கரை அழித்த காளி)
நிசும்ப சூதனி
நாம் ஏற்கெனவே கண்டது போல விசயாலயன் எதிரிகளை ஒழித்துச் சோழப் பேரரசை நிறுவியதால், அந்தக் கருத்தமைப்புடன் இந்தத் தேவியின் சிற்பத்தை அமைத்திருக்கலாம்.
கொடும்பாளூர்
நடுவில் உள்ள கோயிலின் மேற்கு கிரீவ கோட்டத்தில் காணப்படும் உமா சகிதர் சிற்பம் மிகவும் நேர்த்தியுடன் காணப்படுகிறது. நாணத்துடன் காட்சியளிக்கும் உமையைச் சிவபெருமான் அன்பு கனிந்த பார்வையுடன் நோக்கும் அழகு மிகு சிற்பம் இதுவாகும்.
சிற்பம்
தெற்கே உள்ள கோயிலில் இடம் பெற்றுள்ள கால சம்ஹாரரது (காலனை அழித்தவர்) சிற்பம் மிகுந்த அழகுடன் அமைந்துள்ளது. செப்புத் திருமேனியில் காணப்படும் வடிவழகை இக்கற்சிற்பத்தில் படைத்துள்ள சிற்பியின் திறனை என்ன வார்த்தைகள் சொல்லிப் புகழ்ந்தாலும் தகும்.
1.8.2 கும்பகோணம் நாகேசுவரர் கோயிற் சிற்பங்கள்
இக்கோயிலின் விமானச் சுவர்களிலும் மண்டபங்களிலும் காணப்படும் தேவ லோக நடன மாதரின் சிற்பங்கள் மிக அழகாகச் செதுக்கப் பட்டுள்ளன. மெல்லிய உடல், நீண்ட கைகள், குறுகிய இடை ஆகியவை இச்சிற்பங்களை அழகு உருவங்களாகக் காட்டுகின்றன. இங்கு இடம்பெறும் பிச்சாடனர் மற்றும் பிரம்மனது சிற்பங்களும் சோழர் கலைத் திறனுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன.
நாகேசுவரர் கோயில் சிற்பம்
கண்டச் சிற்பங்கள்
விமானத்தின் அதிட்டான உறுப்புகளுள் ஒன்று கண்டம். இக்கண்டத்தில் இடம்பெறும் சிற்பங்கள் கண்டச் சிற்பங்கள் ஆகும். பல்லவர் காலத்திலேயே கோயில் விமான அதிட்டான கண்டத்தில் சிற்பங்கள் செதுக்கும் வழக்கம் இருந்திருப்பினும் முற்காலச் சோழர் பெரும்பான்மையான கோயில்களில் இத்தகு கண்டச் சிற்பங்களை இடம்பெறச் செய்தனர். இவைகள் 1/2×1/2 அடி சதுர அளவினையுடையதாக இருக்கும். இச்சிற்பங்கள் பெரும்பாலும் இராமாயணம், சிவ புராணம், பெரிய புராணம், கிருஷ்ண லீலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். கம்பராமாயணம் தமிழில் தோன்றுவதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாக இச்சிற்பங்கள் உள்ளன. எனவே இவை வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டே செதுக்கப்பட்டுள்ளன என உணரலாம். கும்பகோணம் நாகேசுவரர் கோயில் இராமாயணக் கண்டச் சிற்பங்களுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
வடக்கே பிரம்மன் – புள்ள மங்கை
கணபதி பிரம்மன் அகத்தியர்
தஞ்சைப் பெரிய கோயில்
பெரிய கோயிற் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் உயரத்திற்கு ஏற்பக் கருவறையின் முன்னே இருபுறமும் துவார பாலகர் சிற்பங்கள் சுமார் பன்னிரண்டு அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன.
கருவறைச் சுவரில் பெரிய அளவிலான திரிபுராந்தகர் சிற்பங்கள் பல்வேறு நிலைகளில் இடம் பெற்றுள்ளன. அவை இன்ன காரணத்திற்காக அமைக்கப் பட்டிருக்கலாம் என்பதை முன்னரே கண்டோம். மேலும் கோட்டச் சிற்பங்களாக இடம்பெற்றுள்ள கஜ லட்சுமி, சரசுவதி, கால சம்ஹார மூர்த்தி ஆகிய உருவங்கள் மிக அழகாக அமைந்துள்ளன. தெற்குச் சுவரில் உள்ள நடராசர் சிற்பம் இயக்க நிலையில் காணப்படுகிறது. இச்சிற்பம் செப்புத் திருமேனியின் அமைப்பில் மிக மென்மையானதாகக் காணப்படுகிறது. (கஜ லட்சுமி – தாமரையில் அமர்ந்துள்ள திருமகளுக்கு, இருபுறமும் நின்று இரு யானைகள் குடத்தில் நீரெடுத்து ஊற்றுவது போன்ற அமைப்பு)
கரணச் சிற்பங்கள்
கருவறையின் உட்சுவரில் 108 பரத நாட்டியக் கரணங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலிலும் இத்தகு கரணச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் பெரிய கோயிலில் இடம்பெற்றுள்ள 108 கரணச் சிற்பங்களிலும் சிவபெருமானே நடனம் ஆடுவதாக அமைக்கப் பட்டுள்ளது சிறப்பானதாகும். பிற்காலச் சோழர் கோயில்கள் பலவற்றிலும் இத்தகு கரணச் சிற்பங்களைக் காணலாம். சோழர்கள் காலத்தில் பல்வேறு கலைகளுக்குச் சிறப்பிடம் அளிக்கப் பட்டிருந்ததை இதன் மூலம் அறியலாம்.
கரணச் சிற்பம்
சண்டேச அனுக்கிரக மூர்த்தி
இராசராசன் தன் வெற்றிகளின் நினைவாகத் திரிபுராந்தகர் சிற்பங்களைப் பெரிய கோயிலில் அமைத்தது போல. இராசேந்திரன் சண்டேச அனுக்கிரக மூர்த்தி சிற்பத்தை இரண்டு விதமான கருத்துகளின் அடிப்படையில் அமைத்துள்ளான். சிவபெருமான் தனக்குப் பால் முழுக்குச் செய்ததைத் தடுத்த தன் தந்தையின் கால்களை வெட்டிய சண்டேசருக்கு அனுக்கிரகம் செய்தல் என்ற புராண அடிப்படையிலான கருத்து ஒன்று. மற்றொன்று இராசேந்திர சோழன் கங்கைவரை சென்று வெற்றி பெற்றதனைப் பாராட்டிச் சிவபெருமானே அம்மன்னனுக்குப் பரிவட்டம் கட்டி வாழ்த்துவதாக உள்ள கருத்து.
கலைமகள்
கலைமகள் சிற்பம் இரண்டு கரங்களோடு அமைந்துள்ளது. கால்கள் இரண்டையும் மடக்கி அமர்ந்த கோலத்தில் காணப்படும் கலைமகள் தன் கரங்களில் மலர்ச் செண்டுகளோடு காணப்படுகிறாள். தலையில் காணப்படும் கரண்ட மகுடம் அழகு வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. கழுத்திலும், காதிலும் அணிகலன்கள் அழகு செய்கின்றன. அருகில் இரண்டு பெண்கள் கையில் சாமரத்துடன் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் மார்பிலே கச்சை காணப்படவில்லை. ஆனால் கலைமகளுக்கு மார்புக் கச்சை உள்ளது. அணிகலன்களும் ஆடையும் குறைந்த நிலையில் இயற்கையான அழகுடன் விளங்கும் கலையன்னையின் சிற்பம், கண்டு இன்புறத் தக்கதாகும்.
ரிசபாந்திக அர்த்த நாரி
கோட்டச் சிற்பங்களுள் சிறப்பான நிலையில் காணப்படும் அடுத்த சிற்பம் ரிசபாந்திக அர்த்த நாரி சிற்பம் ஆகும். சிவபெருமானின் உருவங்களில் அர்த்த நாரி என்பது சிவனும் சக்தியும் இணைந்த அமைப்பாகும். இது இவ்வுலகம் இயங்க ஆண் பெண் ஒற்றுமை அவசியம் என்பதை உணர்த்துவதாக அமைகிறது. ரிசபாந்திகர் என்பது சிவபெருமான் தனது வாகனமான இடபத்தின் (எருது) மீது சற்றே சாய்ந்த நிலையில், தனது வலக்கையினை இடபத்தின் மீது வைத்திருக்கும் வடிவம் ஆகும். இச்சிற்பம் சிற்பியின் கைவண்ணத்திற்கும் பிற்காலச் சோழர் சிற்பங்களின் அழகிற்கும் உதாரணமாக விளங்குகிறது.
அர்த்த நாரி
ஹரிஹரர்
நின்ற நிலையில் வடிக்கப்பட்டு உள்ள ஹரிஹரர் (சிவனும் திருமாலும் சரிபாதியாக இணைந்த உருவம்) சிற்பத்தில் நான்கு கரங்கள் காட்டப் பட்டுள்ளன. பின்னிரு கரங்களில் சிவபெருமானுக்கு உரிய வலப்பாகத்தில் வலக்கரத்தில் மழுவும், திருமாலுக்கு உரிய இடப்பாகத்தில் இடக் கரத்தில் சங்கும் அமைந்துள்ளன. முன் இரு கைகளில் வலக்கை அபயத்திலும் இடக்கை கடிஹஸ்தத்திலும் உள்ளன. இங்கு இடம்பெறும் சிற்பங்களில் நர்த்தன கணபதி, அர்த்த நாரி, ஹரிஹரன், தட்சிணா மூர்த்தி, நடராசன், கங்காதரர், சுப்பிரமணியர் என எல்லாச் சிற்பங்களுமே அதிக உயரம் இன்றி அழகுறச் செதுக்கப் பட்டுள்ளன.
ஹரிஹரர்
தட்சிணா மூர்த்தி
தட்சிணா மூர்த்தி மேருவின் மேல் அமர்ந்த நிலையில் இடக் காலை மடக்கி வலக் காலின் மேல் வைத்துக் காணப்படுகிறார். கால் முயலகன் மீது உள்ளது. நான்கு கரங்களில் பின்னிரு கைகளில் உத்திராட்ச மாலையும் பூச்செண்டும் உள்ளன. முன்னிரு கரங்களில் வலக் கரம் சின்முத்திரை காட்டுகிறது; இடக் கரத்தினைக் காலில் வைத்துக் கருணை வடிவாகக் காணப்படுகிறார்.
நடராசர்
நடராசர் சிற்பத்தில் நடராசர் சிரித்த முகத்துடன் ஆடுவது அழகுடையதாகும். நடராசருக்குக் கீழே சிவ கணங்கள் மேளம் தட்டுகின்றன. சில இசைக் கருவிகளை இசைக்கின்றன. அவற்றிற்கு அருகே காரைக்கால் அம்மையார் பேயுருவமாக அமர்ந்திருப்பது போல் செதுக்கப்பட்டு உள்ளது. முயலகன் சிற்பம் சிவபெருமானின் காலுக்கடியில் கையில் நாகத்தைப் பிடித்தபடி காட்டப்பட்டு உள்ளது. சிவபெருமானுக்கு அருகே சிவகாமியின் நடன உருவம் சிறிய உருவமாக இடம்பெற்று உள்ளது.
நடராசர்
திருமால்
திருமால் சிற்பம் நின்ற நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நான்கு கரங்களுடன் காட்டப்பட்டு உள்ளது. பின்னிரு கரங்களில் சங்கும் சக்கரமும் உள்ளன. முன்னிரு கரங்களில் வலக் கரம் அபய முத்திரையிலும் இடக் கரம் கடிஹஸ்தத்திலும் காணப்படுகின்றன. பூணூல் அழகுறக் காட்டப்பட்டு உள்ளது. தலையில் கிரீட மகுடம் உயரமாகவும் வேலைப்பாடுகளுடனும் அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் கையில் மலர்ச்செண்டுடன் இருபுறமும் காணப்படுகின்றனர்.
தாராசுரம் ஐராவதேசுவரர்
கஜ சம்ஹாரர்
கருவறையின் வடக்குப் பக்கம் இருப்பது கஜ சம்ஹார மூர்த்தி சிற்பம். வேழம் உரித்த நாயகன் எனத் தேவாரத்தில் போற்றப்படும் சிவபெருமான் இயக்க நிலையில் காட்டப்பட்டு உள்ளார்; எட்டுக் கரங்களுடன் நடனக் கோலத்தில் வேழத்தை உரிப்பது போல் செதுக்கப்பட்டு உள்ளார். இவரது வேகமான ஆற்றலைக் கண்டு பார்வதி தேவி பயந்த நிலையில் அருகே சிறிய உருவமாகக் காட்டப்பட்டு உள்ளார். சோழரது சிற்பக் கலை தமிழகச் சிற்பக் கலை வரலாற்றில் சிற்பக் கலையின் பொற்காலம் என்று கூறும் அளவிற்கு வளர்ந்திருந்தது. முற்காலச் சோழர் சிற்பங்கள் மிக அழகுடனும் செய்திறனுடனும் காணப்படும் அளவிற்குப் பிற்காலச் சோழர்களது சிற்பங்களில் அத்தகு கலைக் கூறுகளைக் காண முடியவில்லை என்பது கலை வரலாற்று அறிஞர்களது கூற்றாகும். பிற்காலச் சோழர்கள் வானளாவிய விமானங்களைக் கட்டுவதில் கவனம் செலுத்தியதால் கட்டடக் கலை அளவிற்குச் சிற்பக் கலையில் ஆர்வம் காட்டவில்லை என்பது விளங்குகிறது.
சிற்பக் கலையில் சோழர்களது காலம் பொற்காலம் என்று கூறும் அளவிற்குக் கோயில்களில் கல்லினாலான சிற்பங்களை அழகுற அமைத்துப் போற்றி வந்துள்ளனர் சோழ மன்னர்கள். இன்றும் அவற்றுள் பெரும்பாலானவை காணக் கிடைக்கின்றன.
பாடம் - 2
ஒற்றைக்கல் இரதமான கழுகுமலை வெட்டுவான் கோயில் இன்றளவும் மிகச் சிறப்பான ஒரு படைப்பாகக் கருதப்படுகிறது. காரணம், வேறு ஒற்றைக்கல் இரதங்கள் பாண்டிய நாட்டில் தோற்றுவிக்கப் படவில்லை என்பதுவே. மேலும் கலை அழகு வாய்ந்த, எழிலார்ந்த சிற்பங்களைக் கொண்டு விளங்குவதால் அது தென்னக எல்லோரா என்று சிறப்பிக்கப்படுகிறது.
கழுகுமலை வெட்டுவான் கோயில்
முற்காலப் பாண்டியர்களின் கட்டுமானக் கோயில்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. பிற்காலப் பாண்டியர்களின் கட்டுமானக் கோயில்களில் சில மட்டுமே எஞ்சியுள்ளன. அவற்றில் காணப்படும் சிற்பங்கள் பாண்டியர்களுக்கே உரிய கலைப் பாணியை உணர்த்துவனவாக உள்ளன.
விசயநகர-நாயக்க மன்னர்களது காலத்தில் கோயில்களில் சிற்பங்கள் பெரிதும் போற்றப்பட்டன. இச்சிற்ப அமைப்புகளைச் சுதைச் சிற்பங்கள், கல் சிற்பங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். இவைகளில் சுதைச் சிற்பங்கள் கோயில் விமானத்தின் தளங்களில் இடம்பெற்றன. சுதைச் சிற்பங்கள் இடம்பெறும் விமானங்களின் உயரத்தைச் சுருக்கியும் கோபுரங்களின் உயரத்தைக் கூட்டியும் இவர்கள் அமைத்ததால் சுதைச் சிற்பங்களைக் கோபுரங்களில் அதிக அளவில் காணலாம். கற்சிற்பங்கள் பெரும்பாலும் மண்டபங்களில் தூண்களை ஒட்டி ஆளுயரச் சிற்பங்களாக அமைக்கப்பட்டன. இவை தவிரத் தூண்களின் சதுரப் பகுதிகளிலும் கற்சிற்பங்கள் இடம்பெற்றன.
பாண்டியர்களின் குடைவரைகளில் பல்லவர்கள் படைத்தது போன்ற புராணக்கதை உணர்த்தும் சிற்பத் தொகுதிகள் இடம்பெறவில்லை. தனித்தனிச் சிற்பங்களே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. ஐந்து கடவுள் வணக்கமான “பஞ்சாயதனம்” எனும் அமைப்பில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிவன், திருமால், கணபதி, முருகன், துர்க்கை ஆகிய இறையுருவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆறு கடவுள் வணக்கமான “சண்மதம்” என்னும் மரபும் பின்பற்றப்பட்டு இறையுருவங்கள் படைக்கப்பட்டுள்ளன. இம்மரபில் சிவன், திருமால், கணபதி, முருகன், துர்க்கை அல்லது சூரியன், பிரம்மா ஆகிய உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில குடைவரைகளில் இவ்விரு மரபும் இணைந்த நிலையில் இறையுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இனிப் பாண்டியர்களின் குடைவரைகளில் சிறப்பான சிலவற்றைப் பற்றிக் காணலாம்
2.1.1 ஆனைமலை – குடைவரைச் சிற்பங்கள்.
ஒத்தக் கடை (ஒற்றைக் கடை) மதுரைக்கருகே அமைந்துள்ள ஊர் ஆகும். அவ்வூரின் அருகே உள்ள ஆனை மலையில் இரு குடைவரைகள் உள்ளன. ஒன்று நரசிங்கப் பெருமாள் கோயில். மற்றொன்று லாடன் கோயில் எனப்படும் முருகன் கோயில்.
நரசிங்கப் பெருமாள் கோயில்
இது கி.பி. 770 ஆம் ஆண்டு ஜடில பராந்தகநெடுஞ்சடையனது காலத்தில் அவனுடைய அமைச்சராகிய மாறன் காரியால் தொடக்கப்பட்டு இடையில் அவர் மறைந்தபடியால் அவர் தம்பி மாறன் எயினனால் முடிக்கப்பட்டது. இதன்கண் கருவறையில் நரசிம்மர் யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் யோகப் பட்டையுடன் அழகுறக் காணப்படுகின்றார். இரு முழங்கால்களையும் இணைக்கும் துணியாலான இணைப்பு யோகப் பட்டை எனப்படும், நான்கு கரங்களுடன் படைக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தில் பின்னிரு கைகள் சங்கு சக்கரத்துடனும் முன்னிரு கைகள் அபய வரத முத்திரையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளன. இது ஐந்தடி உயரப் புடைப்புச் சிற்பம் ஆகும்.
முருகன் கோயில்
பராந்தக மாறன் சடையன் காலத்தைச் சேர்ந்த லாடன் கோயில் எனப்படும் முருகன் கோயில் கருவறையில் முருகனும் தேவயானையும் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இதில் முருகன் முப்புரி நூலும் போர்த் தெய்வங்கள் அணியும் சன்ன வீரம் என்னும் அணிகலனும் அணிந்துள்ளான். தேவயானை கையில் மலர்ச் செண்டு தாங்கியபடி சற்றுச் சாய்ந்த நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். கருவறையின் வெளிச்சுவரில் பூத கணங்கள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. அவைகளை அடுத்து முருகனுடைய சேவல் கொடியும் வாகனமான மயிலும் இடம் பெற்றுள்ளன. கோட்டங்களில் (சுவரில் மாட அமைப்பில் குடையப்பட்ட இடம்) வலப்புறம் ஒரு பக்தனும், இடப்புறம் கோயிலைக் கட்டுவித்ததாகக் கருதப்படும் பட்டக்குறிச்சி சோமாசியார் என்னும் அந்தணரும், காணப்படுகின்றனர். சோமாசியாருக்கருகே பாண்டிய மன்னன் அவரை மண்டியிட்டு வணங்குவது போலச் செதுக்கப்பட்டுள்ளான்.
கோயில் முருகன்
திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
இக்குடைவரைக் கோயில் இரட்டைக் கருவறை அமைப்புடைய கோயிலாகும். இரட்டைக் கருவறை என்பது எதிரெதிராக இரண்டு கருவறைகள் கொண்ட அமைப்பு. ஒன்று சிவனுக்குரியது; மற்றொன்று திருமாலுக்குரியது. இத்தகைய இரட்டைக் கருவறை அமைப்பு பல்லவர், முத்தரையர் போன்ற எந்த அரச மரபினரும் செய்யாத, பாண்டியர்கள் மட்டுமே உருவாக்கிய அமைப்பாகும். திருச்சி கீழ்க்குடைவரையும், சொக்கம் பட்டிக் குடைவரையும் இரட்டைக் கருவறை அமைப்புடையவை ஆகும்.
திருப்பரங்குன்றம் குடைவரையில் கிழக்கு நோக்கிய சிவனது கருவறையில் சிவலிங்கமும் பின் சுவரில் சோமாஸ்கந்தர் புடைப்பு உருவமும் இடம் பெற்றுள்ளன. இக்கருவறைக்கு எதிரே மேற்கு நோக்கிய கருவறையில் திருமாலின் அமர்ந்த கோலச் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இவ்விரு கருவறைகளுக்கு இடையே உள்ள மண்டபத்தின் பின் சுவரில் மூன்று மாடக் குழிகள் வெட்டப்பட்டு அவற்றில் நடுவில் துர்க்கையும் வலப்பக்கம் முருகனும் இடப்பக்கம் கணபதியும் புடைப்பு உருவங்களாகச் செதுக்கப்பட்டு உள்ளனர். ஐந்து கடவுளர் இக்குடைவரையில் இடம் பெற்றுள்ளதால் ‘பஞ்சாயதன’ மரபுப்படி இங்குச் சிற்பங்கள் அமைக்கப் பட்டுள்ளதாகக் கூறுவர். சிவனது கருவறை வெளிச் சுவரில் அமைந்துள்ள சிவனது சதுர தாண்டவச் சிற்பம் அரிய சிற்பமாகும். முயலகன் மீது அவர் ஆடுகின்ற நடனத்தைப் பார்வதி தேவி நந்தியின் மீது சாய்ந்து கொண்டு பார்த்து மகிழ்கிறாள். திருமாலும், பிரம்மாவும் சிவ நடனத்தைக் காண்பது போன்றும், சிவ கணங்கள் இசைக் கருவிகளை மீட்டி இசையை எழுப்புவது போன்றும் அமைத்துள்ளான் சிற்பி.
திருமாலது கருவறை வெளிச் சுவரில் நரசிம்மர், பூவராகர், வைகுண்ட நாதர் ஆகியோரின் புடைப்பு உருவங்கள் அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம் குடைவரையில் காணப்படும் அனைத்துச் சிற்பங்களும் கலையழகு மிக்கவையாகும்.
சிவனது கருவறையில் இடம்பெறும் சோமாஸ்கந்தர் புடைப்பு உருவம் பல்லவர்களால் பல இடங்களில் செதுக்கப்பட்ட சிற்பமாகும். ஆனால் பாண்டிர்களின் குடைவரைகளில் திருப்பரங்குன்றம் குடைவரையில் மட்டுமே அச்சிற்பம் இடம்பெற்றுள்ளது. பிற குடைவரைகளில் இடம் பெறவில்லை.
பிள்ளையார் பட்டிக் குடைவரைக் கோயில்
இக்குடைவரை சிவன் கோயில் ஆகும். பின்னர் இக்கோயில் பிள்ளையார் வழிபாட்டுக்கு உரிய கோயிலாக மாறிவிட்டது. குடைவரையின் கருவறையில் இன்றும் சிவலிங்கம் இடம்பெற்று உள்ளதைக் காணலாம். புடைப்பு உருவமாகப் பிள்ளையார் இடம்பெற்றுள்ள முக மண்டபத்தையே கருவறையாகக் கொண்டு பிற்காலத்தில் கட்டுமானக் கோயில் மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 6 அடிக்கு மேல் அமர்ந்த திருக்கோலமாக, இரண்டு கரங்களுடனும் பூணூல் இன்றியும் எளிமையாகக் காணப்படும் பிள்ளையார் பட்டிக் கற்பக விநாயகர் சிற்பமே பாண்டியரது குடைவரையில் இடம்பெறும் கணபதி சிற்பங்களில் பழமையானதாக இருக்க முடியும். ஆடை அணிகளின் தன்மை, முகப்பொலிவு, தலைக்கோலம், கையில் லிங்கத்தை ஏந்தியுள்ள சிறப்பு இவை இதன் பழமையைக் காட்டும். முற்காலப் பாண்டியர்களின் சிற்பப் படைப்புகளில் எளிமைக்கும் அழகுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது இச்சிற்பம்.
திருமாலும் பிரம்மனும் சிவனின் அடி, முடிகளைக் காண முயன்று தோற்ற நிகழ்வைக் காட்டும் இலிங்கோத்பவர் (அடிமுடி காணா அண்ணல்) புடைப்புச் சிற்பம், இவ்வகைச் சிற்பத்தின் முன்னோடியாகும். இதனை முதன் முதலில் படைத்த பெருமை பாண்டியர்களுக்கே உரியது.
இக்குடைவரையும் சிற்பங்களும் கி.பி.எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவை ஆகும்.
முக மண்டபத்தின் பின் சுவரில் கணபதி, பிரம்மா, முருகன், சூரியன், துர்க்கை ஆகியோருடைய சிற்பங்கள் புடைப்பு உருவங்களாகச் செதுக்கப் பட்டுள்ளன. இதில் துர்க்கையின் அருகே ஒருவர் தன் தலையை அறுத்து “நவகண்டம்” கொடுக்க முற்படுகிறார். இது மகாபலிபுரத்தில் உள்ள திரௌபதி இரத நவகண்டச் சிற்பத்தோடு ஒத்துள்ளது. இக்குடைவரையில் சிவன், விஷ்ணு கருவறைகளுக்கு முன் இரண்டிரண்டு துவார பாலகர் சிற்பங்களும், பிற இறையுருவங்கள் இடம்பெறும் இடத்தின் இருமருங்கிலும் இரு துவார பாலகரும், குடைவரையின் முகப்பில் இருவரும் என எட்டுத் துவார பாலகர் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. பாண்டியர் குடைவரைகளில் எட்டுத் துவார பாலகர் இடம்பெறும் குடைவரை இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
பாண்டியர்களால் செதுக்கப்பட்ட குடைவரைகள் பல இருப்பினும் கலையியல் நோக்கில் முக்கியத்துவம் பெற்ற சிற்பங்கள் அமைந்த குடைவரைகளைப் பற்றி மட்டும் மேலே கண்டோம். பாண்டியரது குடைவரை மரபு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுடன் முடிவடைந்து விட்டது. அதன்பின் அவர்கள் கட்டுமானக் கோயில்களில் அதிகக் கவனம் செலுத்தினர்.
இதன் விமான கிரீவத்தின் நான்கு மூலைகளிலும் நந்திகள் செதுக்கப்பட்டுள்ளன. கிரீவ கோட்டத்தில் கிழக்கே உமா சகித மூர்த்தியும், தெற்கே தட்சிணா மூர்த்தியும், மேற்கே நரசிம்மரும், வடக்கே பிரம்மாவும் செதுக்கப் பட்டுள்ளனர். அதேபோல் கீழே உள்ள தளத்தின் தெற்கே தட்சிணா மூர்த்தியும், மேற்கே திருமாலும், வடக்கே விஷபா ஹரணரும் செதுக்கப் பட்டுள்ளனர். இங்குச் சிற்பங்கள் அதிக அளவில் இல்லை என்றாலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள் அழகுடையனவாக அமைந்துள்ளன என்பதில் ஐயமில்லை.
பாண்டியர்களின் பெரும்பாலான கோயில்களில் கூரையின் மேற்பகுதி செங்கற்களால் கட்டப்பட்டதால் அவற்றில் இருந்த சிற்பங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. சில கோயில்கள் மட்டும் முழுமையாகக் கற்களினால் கட்டப்பட்டமையால் அவற்றில் உள்ள சிற்பங்களை மட்டும் காணலாம். பெரும்பாலான கோயில்கள்பெரும் மாற்றத்திற்கும் உட்பட்டுள்ளன. மேலும் தேவ கோட்டங்களிலும் சிற்பங்களை அமைக்கவில்லை. எனவே கட்டுமானக் கோயில் சிற்பங்கள் அதிகம் கிடைக்கவில்லை.
கூடலழகர் கோயில்
சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலின் வெளிப் பிரகாரத்தின் வடக்கே நரசிம்மர் இரணியனோடு சண்டையிடும் சிற்பம் உள்ளது. இரணியனை வதம் செய்து அவனது குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்து கொள்ளும் காட்சியைச் சித்திரிக்கின்ற சிற்பமும் மிக அழகு வாய்ந்ததாகும். இரணியன் சிவபெருமானிடம் ஆயுதங்களாலும் சாவு வரக் கூடாது என்று வரம் பெற்றிருந்தான். இந்த இரு சிற்பங்களிலும் நரசிம்மர் கரங்களில் சங்கு சக்கரம் கூட இன்றிப் படைக்கப் பட்டிருப்பது தனிச் சிறப்புடையதாகும்.
அழகர் கோயில் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாகும். ஆனால் அது சிதைவுறவே வாணாதி ராயர்களில் சிறந்த அரசரான சுந்தரத் தோளுடைய மாபலி வாணாதி ராயர் என்பவரால் புதுப்பிக்கப் பட்டது. எனினும் பாண்டியர் காலக் கற்களை அப்படியே வைத்து அமைப்பு மாறாமல் கட்டியுள்ளனர். இக்கோயில் கருவறையில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் இறைவனான பரம சுவாமி என்று அழைக்கப்படும் திருமால் சிற்பம் மிக அழகு வாய்ந்ததாகும். இது பஞ்ச ஆயுதங்களுடன் செதுக்கப் பட்டுள்ளது. இவரது கையில் உள்ள சக்கரம் பிரயோக நிலையில் இருக்கிறது.
அழகர் கோயில்
நாங்குநேரி வான மாமலைப் பெருமாள் கோயில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டுப் பின்னர் நாயக்கர் காலத்தில் புதுப்பிக்கப் பட்டுள்ளது. அம்மாற்றத்தின் பொழுது பிற்காலப் பாண்டியர் சிற்பங்கள் சில கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரச் சுவரருகே இடம் பெற்றுள்ளன.
பிற்காலப் பாண்டியர்களின் கட்டுமானக் கோயில் சிற்பங்கள் அதிகம் கிடைக்கவில்லை. மேலும் இவர்களின் சிற்பங்களைப் பல்லவர், சோழர் சிற்பங்களுக்கு இணையான கலையழகு வாய்ந்தவை என்றும் கூற இயலாது.
உதாரணமாக, விசயநகரச் சிற்பங்கள் அளவான உயரத்துடனும் ஆபரணங்களுடனும் காணப்படும். ஆனால், நாயக்கர் சிற்பங்கள் சுமார் எட்டு அடி உயரத்துடனும் கம்பீரமான தோற்றத்துடனும் காணப்படும். உடை, நகை இவற்றில் அலங்காரம் அதிகமாகக் காணப்படும். பக்கவாட்டுக் கொண்டை அமைப்பு விசயநகர- நாயக்கரது சிற்பக் கலை மரபுக்கே உரிய பாணியாகும். ஆண் சிற்பங்களிலும் பெண் சிற்பங்களிலும் இப்பாணி இடம் பெற்றுள்ளது. தோள்கள் உருண்டு திரண்டும், கண்கள் அகன்றும், மூக்கு கூர்மையாகவும், உதடுகள் பருத்தும் இளநகையுடனும் காணப்படும். கை மற்றும் கால் விரல்களில் நகங்கள் கூட இயற்கையான அமைப்பில் காட்டப்பட்டிருக்கும். பெண் உருவங்களில் மார்பகங்கள் பெரிய அளவில் அமையும். சிற்ப உருவங்களின் முழங்கால் முட்டிகள் வட்டமாகவும், கணுக்கால் சதைப் பற்றுடனும் காணப்படும். கலை வரலாற்றில் சோழர் காலச் சிற்பங்கள் புனையா ஓவியம் எனில் நாயக்கர் காலச் சிற்பங்கள் புனைந்து நன்கு வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்கள் என்று உவமிக்கலாம். எனினும் கலை வரலாற்று அறிஞர்கள் நாயக்கர் காலச் சிற்பங்களைப் பாராட்டுவது அருகியே காணப்படுகிறது. காரணம், இவற்றில் உள்ள மிகையான அலங்காரங்களே ஆகும்.
ஆயிரக்கால் மண்டபம்
சிற்பங்கள் புராணக் கதைகளையோ, இதிகாசங்களையோ, நாட்டுப்புறக் கதைகளையோ காட்டுவனவாக அமையும். இவை தவிர, அம்மண்டபங்களைக் கட்டிய அரசர்களின் ஆளுயரச் சிற்பங்களை அவற்றில் அமைக்கும் மரபும் உண்டு.
(புருஷாமிருகம் – விலங்கும் மனிதனும் கலந்த உருவம். மகாபாரதத்தில் வீமனுடன் போரிட வரும் உருவம்)
பிச்சாடனர்
அர்ச்சுனன் பேடி
அர்ச்சுனன் பேடி உருவம் கொள்வதைக் காட்டும் சிற்பமும் இங்கு உள்ளது. தாடி மீசையுடன் மார்பகங்களும் கொண்ட சிற்பமாக இது அமைந்துள்ளது. ரதி, மன்மதன் சிற்பங்கள் எதிரெதிராக மிக அழகாகச் செதுக்கப்பட்டு உள்ளன. ரதி, மன்மதன் சிற்பங்கள் நாயக்கர் காலத்துக் கலைகளில் முக்கியமான கூறாக விளங்குகின்றன. தாடிக் கொம்பு சௌந்திர ராசப் பெருமாள் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் எனப் பிற கோயில்களிலும் இச்சிற்பங்களைக் காணலாம்.
திருமலை நாயக்கரும், இராணியும் காஞ்சி வரதராசப் பெருமாள் கோயில் தூண்
இதே போன்ற அரச – அரசியர் சிற்பங்களைத் தாடிக்கொம்பு, திருமெய்யம், திருப்புல்லாணி, திருக்கோட்டியூர், நாங்குனேரி, திருமோகூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருக்குறுங்குடி, திருவரங்கம். வேலூர் ஜலகண்டேசுவரர் கோயில் எனப் பல்வேறு கோயில்களில் காணலாம். மதுரைப் புதுமண்டபத்தில் விசுவநாத நாயக்கர் முதல் திருமலை நாயக்கர் வரையிலான காலத்தைச் சேர்ந்த 10 மன்னர்களின் சிற்பங்கள் இடம்பெற்று உள்ளன.
நாடோடி ஆண் மற்றும் நாடோடிப் பெண் சிற்பங்கள் திருக்குறுங்குடி நம்பி கோயில், கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இதில் நாடோடி ஓர் இளவரசியைத் தூக்கிச் செல்கிறான். அவனது தோளில் அமர்ந்துள்ள இளவரசி மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள்.நாடோடிப் பெண் சிற்பத்தில் அப்பெண்ணின் தோளில் இளவரசன் ஒருவன் அமர்ந்திருக்க, அப்பெண் ஓடுவது போல் அமைந்து உள்ளது. இச்சிற்பங்களின் அடிப்படை, நோக்கம் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள குறவன், குறத்தி சிற்பங்கள் அவர்களின் இயல்பை நன்கு காட்டும் வகையில் மிக அழகாக வடிக்கப்பட்டு உள்ளன. குறவன் ஒரு கையில் ஈட்டியையும், மற்றொரு கையில் உடும்பையும் பிடித்திருப்பான். அவனருகே குரங்கு ஒன்று இருக்கும். குறவனுக்கு அடுத்துக் குறத்தி பின்னப்பட்ட கூடையைக் கையில் இடுக்கிக் கொண்டு, ஒரு குழந்தையைத் தோளிலும் மற்றொரு குழந்தையை இடுப்பிலும் ஏந்தியபடி நிற்பாள்.
பாலியல் சிற்பங்கள்
தமிழகக் கோயில்களில் பாலியல் சிற்பங்கள் இடம் பெறுவது விசயநகர-நாயக்கர் காலக் கோயில்களில்தான். வடக்கே கஜு ராஹோ கோயிலில் இத்தகு பாலியல் சிற்பங்கள் அதிக அளவில் செதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் ஆகிய இடங்களில் இத்தகைய பாலியல் சிற்பங்கள் சில இடம் பெற்றுள்ளன.
யாளிச் சிற்பங்கள்
யாளி என்பது சிங்கமும் யானையும் கலந்த கற்பனை உருவமாகும். விசயநகர-நாயக்க மன்னர்கள் தாம் கட்டிய மண்டபங்களில் யாளி உருவங்களைப் படைத்துள்ளனர். சில கோயில்களில் யாளி மண்டபங்கள் உள்ளன.
யாளி
தமிழகச் சிற்பக் கலை வரலாற்றின் இறுதிக் காலமே நாயக்கர் காலம். பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான கலை வளர்ச்சியில் நாயக்கர் காலச் சிற்பங்கள் உன்னதமான கலைப் படைப்புகள் ஆகும். அவர்கள் மண்டபங்களை அதிக அளவில் அமைத்ததோடு, மண்டபங்களில் அதிக அளவில் சிற்பங்களையும் அமைத்து அழகுபடுத்தினர். சிற்பக் கலைப் படைப்பில் நாயக்கரது பாணியைத்தான் இன்றுவரை பின்பற்றுகின்றனர்.
பாடம் - 3
உலோகத்தால் செய்யப்படும் இறையுருவங்களையும் மனித உருவங்களையும் செப்புத் திருமேனிகள் எனப் பொதுவாகக் கருதுவர். தமிழகத்தில் பல்லவர், சோழர், பாண்டியர், விசய நகர நாயக்க மன்னர்கள் காலங்களில் பல்வகைப் பட்ட செப்புத் திருமேனிகள் வடிக்கப் பட்டன. இவை பொதுவாகக் கோயில் திருவிழாக்களின் போது திருவீதி உலா வருவதற்காக எடுத்துச் செல்லப் படுவதற்காகவே வடிக்கப் பட்டன. செம்பு, வெள்ளி, தங்கம், பித்தளை, தகரம் ஆகிய ஐந்து உலோகங்களின் கலவையினால் செய்யப் படுவதால் இவற்றைப் ‘பஞ்சலோகப் படிமங்கள்’ என்றும் கூறுவர்.
சுடுமண் சிற்பங்கள் இந்தியாவில் தொன்று தொட்டுச் செய்யப் பட்டு வருகின்றன. சிந்து சமவெளி நாகரிகக் காலத்திற்குச் சற்று முந்திய காலத்திலேயே இவ்வகைச் சிற்பங்கள் செய்யப் பட்டன. இதனைப் பலுச்சிஸ்தானத்தில் குல்லி, ஜோப் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வின் மூலம் அறிய முடிகிறது. சிந்து சமவெளிப் பகுதியிலும் ஏராளமான சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பிற பகுதிகளிலும், தமிழகத்திலும் சுடுமண் சிற்பங்கள் செய்யப்பட்டன. இன்றும் அவை வழக்கிலிருக்கின்றன. சுதைச் சிற்பங்கள் செய்து அவற்றிற்கு வண்ணம் தீட்டுவதும் தமிழகத்து மரபுகளில் ஒன்றாகும். சுதைச் சிற்பங்கள் இரண்டு வகையாகச் செய்யப் படுகின்றன. ஒன்று கோயில்களிலும், கோபுரங்களிலும் நிரந்தரமாகச் செய்து வைப்பது. மற்றொன்று திருவிழாக்களுக்காகத் தற்காலிகமாகச் செய்து திருவிழா முடிந்ததும் உடைத்தோ அல்லது நீரில் கரைத்தோ விடுவது என்று வகைப்படுத்திச் செய்யப் படுவதாகும். இவை தவிர நவ பாஷாணக் கலவை, கடு சர்க்கரைக் கலவைச் சிற்பங்களும் தமிழகத்தில் செய்யப்பட்டன.
மைத்ரேயரின் உருவம்
அருங்காட்சியகம்
பல்லவர் காலப் படிமங்களில் குறிப்பிடத் தக்கது, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப் பெற்றுள்ள கூரம் என்ற இடத்தில் கிடைக்கப் பெற்ற ஊர்த்துவத் தாண்டவ நடராச மூர்த்தியாகும். ஊர்த்துவத் தாண்டவம் என்பது ஒரு காலை நெற்றி வரை தூக்கி ஆடுவதாகும். இது கி.பி.9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் படைக்கப் பட்டிருக்கலாம் எனத் தெரிகின்றது. இத்தகைய அமைப்புடைய படிமம் இது ஒன்றேயாகும்.
ஊர்த்துவத் தாண்டவ நடராச மூர்த்தி
பிற இடங்கள்
சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவெண்காட்டு அர்த்தநாரிப் படிமம் ஆண் மற்றும் பெண்ணின் அவயவங்களில் நளினங்களைச் சிறப்பாகக் காட்டுகிறது. திருநெய்ப்பூரில் கிடைத்துள்ள நின்ற நிலையிலுள்ள விஷ்ணுவின் படிமம் பல்லவர் காலத்ததேயாம். கீழப்புதனூரில் இக்காலத்தைச் சேர்ந்த விஷபாகரணர் படிமம் கிடைத்துள்ளது. இது தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே விஷபாகரணரின் செப்புப் படிமம் இந்த ஒன்றுதான் என்பது நினைவில் கொள்ளத் தக்கதாகும். சிவபெருமான் விஷத்தை வேண்டி வாங்கி உண்டு நீலகண்டன் என்னும் பெயர் பெற்றதைக் குறிப்பதே விஷபாகரணர் உருவ அமைப்பாகும். திருவாலங்காடு என்னும் இடத்திலுள்ள சோமாஸ்கந்தர் படிமம் தொடக்கக் காலப் பல்லவர் கலையின் கூறுகளைக் கொண்டுள்ளது. இதில் சிவனும், பார்வதியும், கந்தனும் அமர்ந்துள்ளனர். இதுவே பல்லவர்களது கட்டுமானக் கோயில்களில் பிரதானச் சிற்பமாய் அமைந்தது. பல்லவர்களது சிற்பங்களில் பூணூல் வலது கைக்கு மேலே சென்று வருவது போல் அமைக்கப் படுவது வழக்கமாயிருந்தது. இவ்வகையில், பெருந்தோட்டம் என்ற இடத்தில் கிடைத்துள்ள விஷ்ணு செப்புப் படிமமும், தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள நின்ற நிலையில் உள்ள விஷ்ணு படிமமும், புஞ்சையூரில் உள்ள சிவனது படிமமும், பட்ட மங்கலத்திலுள்ள உமா மகேசுவரர் படிமமும், தண்டந் தோட்டத்திலுள்ள சுப்பிரமணியர் படிமமும் இக்காலத்தினைச் சேர்ந்தவையாகும்.
திருவெண்காட்டு அர்த்தநாரி
அமைப்பு
சோழர் காலத்துச் செப்புப் படிமங்களை எளிதில் இனம் காணலாம். உடலமைப்பு அழகாகவும், உயிரோட்டமும் அழகியல் உணர்வும் ஒருங்கே கொண்டவையாகவும் அமைக்கப்பட்டுள்ளன. முற்காலச் சோழர் படிமங்கள் பிந்திய காலத்தை விட இயல்பாகப் படைக்கப்பட்டன. பிந்திய சோழர் காலப் படிமங்களில் முகங்களில் சற்றுக் கடுமையும், பளிச்செனத் தெரியும் எடுப்பான நாசியும், தன்மையான உடலமைப்பும் காட்டப் பட்டிருக்கும். பல்லவர் காலமும் சோழர் காலமும் ஒன்றொடொன்று இணையும் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வடிக்கப்பட்ட படிமங்களில் உன்னதமான படைப்பு வடகலத்தூர் கல்யாண சுந்தரர் திருமேனி ஆகும். தமிழகத்துச் செப்புப் படிமங்களில் குறிப்பிடத் தகுந்த ஒன்றான இச்சிற்பத் தொகுதியில் சிவபெருமான் இளைஞனாக மணக்கோலத்தில், பார்வதி தேவியின் ஒரு கரத்தைப் பற்றியவாறு வடிக்கப் பட்டுள்ளார். மணப் பெண்ணான தேவி இளமை ததும்பும் நாணத்தோடு காணப்படுகின்றார். முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக் காலத்தில் செய்விக்கப்பட்ட எழில்மிகு நடராசர் சிற்பமும் பார்வதியின் படிமமும் கரைவீரம் என்ற இடத்தில் கிடைத்துள்ளன. ஆனந்தத் தாண்டவ நடராசர் திருமேனிகளில் இதுவே முதலாவதாகும் என்று கருதப்படுகிறது. பல்லவனீச்சுரம் என்ற இடத்தில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உமையும் குழந்தை கந்தனும் ஒரே பீடத்தில் அமர்ந்துள்ள காட்சி அற்புதப் படைப்புக்களில் ஒன்றெனலாம்.
வடகலத்தூர் கல்யாண சுந்தரர்
இராம, இலக்குவர் உருவங்கள்
முதலாம் பராந்தக சோழனின் தந்தையான ஆதித்த சோழன் காலத்தில் இராமர், இலக்குவன், சீதை, அனுமன் உருவங்கள் வார்க்கப்பட்டன. இவன் காலத்து இராமர் குழுப் படிமங்கள் பருத்தியூரில் கிடைத்துள்ளன. இவை அனைத்துமே அழகு மிக்கனவாகும். பராந்தகன் காலத்து இராமர் குழுச் செப்புப் படிமங்கள் இராமேசுவரத்தில் கிடைத்துள்ளன. வடக்குப் பனையூரில் உன்னதமான இராமர் குழுச் சிற்பத்தைக் காணலாம். வடக்குப் பனையூர், கப்பலூர் ஆகியவற்றின் படிமங்கள் முற்காலச் சோழர் கலையின் புகழ் பாடுகின்றன. பருத்தியூர் விஷ்ணுவும், கீழையூர் சுகாசன சிவமூர்த்தியும் இக்காலத்தைச் சேர்ந்தவர்களே. தஞ்சைக்கு அருகில் திருமெய்ஞானம் என்ற இடத்தில் உள்ள ஞான பரமேசுவரர் கோயிலில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராசர் மற்றும் உமா (சிவகாமி) படிமங்கள் சிறப்பானவையாகும். திருச்சேறையில் நடனமாடும் குழந்தைக் கிருஷ்ணர் உருவமும் காணத் தக்கதாகும்.
சீதை, இராமர், இலக்குவன், அனுமன்
செம்பியன் மாதேவி காலம்
பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் செம்பியன் மாதேவியால் ஏராளமான படிமங்கள் வடிக்கப்பட்டன. இக்காலத்தில் உடலமைப்பு மெல்லியதாயும் ஆபரணங்கள் சற்றுக் கூடியும் அமைந்துள்ளன. செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட கோனேரி ராசபுரம் உமா மகேசுவரர் கோயிலில் உள்ள ரிஷபாந்திக மூர்த்தி, திரிபுராந்தக மூர்த்தி, பார்வதி, கணபதி, கல்யாண சுந்தரமூர்த்தி ஆகிய படிமங்கள் வியக்கத் தகுந்தவையாகும்.
இராசராசன் காலம்
சோழப் பேரரசர்களில் சிறந்தவனான முதலாம் இராசராசன் தான் கட்டிய தட்சிண மேரு என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெரிய கோயிலில் பல செப்புப் படிமங்கள் அமைத்தான். அவற்றின் அமைதியையும் அளவுகளையும் கல்வெட்டுகளில் பொறித்தான். தமிழக வரலாற்றில் செப்புத் திருமேனிகள் பற்றிய ஆவணச் செய்திகளைக் கல்வெட்டில் பொறித்தது இம்மன்னன் காலத்தில்தான்.
தஞ்சைக் கலைக் கூடம்
இம்மன்னன் காலத்தில் நடராசர் படிமங்கள் ஏராளமாக வார்க்கப்பட்டன. அவற்றில் கி.பி.1011 மற்றும் 1012ஆம் ஆண்டைச் சேர்ந்த பிட்சாடனர் படிமங்கள் குறிப்பிடத்தக்கன. இக்கலைக் கூடத்தில் உள்ள திருவெண்காட்டு ரிஷபாந்திகர் படிமத்தில் சிவபெருமான் நந்தி மீது சாய்ந்தாற்போல், அதாவது அவரது வலது கை நேர்த்தியாக நந்தி மீது சாய்க்கப்பட்டது போல் அமைந்துள்ளது. ஆனால் நந்தியின் உருவம் காட்டப் படவில்லை. இங்கு நந்தி இருப்பதாக ஒரு யூகமே காட்டப்பட்டு உள்ளது. இக்கலைக் கூடத்தில் உள்ள மற்ற திருவெண்காட்டுப் படிமங்களாவன, கல்யாண சுந்தரர், பைரவர், கண்ணப்பர், ரிஷபவாகனர், உமா பரமேசுவரர் போன்றவர்களது படிமங்களாகும்.
நடராசர் படிமங்களில் சிறந்ததெனக் கருதப்படுவது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவாலங்காடு நடராசர் ஆவார். நடராசர் தனது வலது காலை முயலகன் மீது அழுத்தி இடதுகாலை நளினமாகத் தூக்கி ஆடும் இக்காட்சியைக் கண்டு வியந்து கலையின் இயற்கையான இயக்கத்திற்கு ஓர் உன்னத எடுத்துக்காட்டு என பிரஞ்சுச் சிற்பி ரோடின் கூறியுள்ளார். இதுபோன்று டெல்லி தேசிய அருங்காட்சியகத்திலுள்ள திருவரங்குளம் சதுர தாண்டவ நடராசரின் படிமம் அழகிய அவயவங்களுடன் விளங்குகிறது. வளோங்கன்னியைச் சேர்ந்த நடராசர் திருமேனி ஒன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. நடராசரின் தலையில் கங்கை இருப்பது போல் காட்டப்பட்ட முதல் செப்புப் படிமம் விருத்தாசலம் கோயிலில் உள்ளது. சோழர் காலத்து நடராசர் செப்புப் படிமங்கள் பத்தூர், நல்லூர், ஆனைக்குடி, பெருந்தோட்டம், திருமெய்ஞானம், கொடுமுடி, தண்டந்தோட்டம், சிவபுரம், திருப்பழனம், கருந்தாட்டாங்குடி, தஞ்சாவூர், சேமங்கலம், ஒக்கூர், புஞ்சை மேலப் பெரும்பள்ளம், திருப்பனந்தாள், வெள்ளானகரம், ஊட்டத்தூர் போன்ற இடங்களில் கிடைத்துள்ளன.
கல்யாண சுந்தரர் திருவாலங்காடு நடராசர்
நடராசர் சிற்பங்களுக்கு அடுத்த படியாக அதிக அளவில் கிடைப்பது திரிபுராந்தகரது உருவமாகும். இது கோனேரி ராசபுரம், மாயவரம், தஞ்சைக் கலைக்கூடம், கீழப்பழுவூர், வெள்ளனூர், ஆவரணி புதுச்சேரி, தரங்கம்பாடி, இடும்பவனம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இராமர் குழுச் சிற்பங்கள் பருத்தியூர், வளர்புரம், மனக்கல், திருக்கடையூர் போன்ற கோயில்களில் காணப்படுகின்றன. கல்யாணசுந்தரர் உருவம் முன்னமே குறிப்பிட்டது போல் வடக்கலத்தூரிலும், திருவேள்விக்குடி, திருவெண்காடு, திருவொற்றியூர், திருமணஞ்சேரி ஆகிய கோயில்களிலும் செய்விக் கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் படிமம் தனியாகவும் தேவியருடனும் வடிக்கப்பட்டது. தனியாக அமைக்கப் பட்டவையே எண்ணிக்கையில் அதிகம். இவற்றைக் கொடுமுடி, திருச்சேறை பருத்தியூர், ராசிபுரம், திருப்பழனம், திருவேள்விக்குடி ஆகிய கோயில்களில் காணலாம். பல்லவனேசுவரம், கோனேரி ராசபுரம், தண்டந் தோட்டம், கீழப்பழுவூர், திருக்கரவாசல், திருவெண்காடு, கங்கைகொண்ட சோழபுரம் போன்ற இடங்களில் ரிஷப வாகன மூர்த்தி உருவங்கள் அமைக்கப்பட்டன. பல்லவர்கள் கல்லிலே சோமாஸ்கந்தர் அதாவது சிவனும், பார்வதியும் அவர்களுக்கு நடுவே குழந்தை கந்தனும் அமர்ந்திருக்கும் உருவமைப்பை நிலைச் சிற்பங்களாக அமைத்தனர்.
திரிபுராந்தகரது உருவம்
சோழர்கள் இதனைச் செப்புத் திருமேனியாகச் சொரக்குடி, சிவபுரம், வெல்லூர் சிறுவரை, குன்னாண்டார் கோயில் போன்ற இடங்களில் இடம் பெறச் செய்தனர்.
தென்னிந்தியாவிற்கே உரிய தட்சிணா மூர்த்தி சிற்பம் பல்லவர் காலத்தில் கைலாசநாதர் கோயிலிலேயே கற்சிலையாக இடம் பெறத் தொடங்கியது. சோழர் கோயில்கள் அனைத்திலும் தெற்குப்புறத் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி வைக்கப்பட்டார். சோழர் கோயில்கள் சிலவற்றில் வீணை வாசிக்கும் நிலையில் அமர்ந்தோ நின்று கொண்டிருப்பது போன்றோ தட்சிணாமூர்த்தி இடம் பெறலானார். வீணாதர தட்சிணாமூர்த்தி என அழைக்கப்படும் இவரது செப்புத் திருமேனியும் சில கோயில்களில் செய்து வைக்கப் பெற்றது. இதனைத் திருப்புறம்பியம், திருநாமநல்லூர், மேலப் பெரும் பள்ளம் ஆகிய இடங்களில் காணலாம். மேலப் பெரும்பள்ளம் வீணாதர தட்சிணாமூர்த்தி நேர்த்தியான அமைப்புடையதாகும். இக்கோயிலிலுள்ள இம்மூர்த்தி பற்றி அப்பர் சுவாமிகள் முன்னமே, தம் தேவாரத்தில் (6829) பாடியுள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கந்தனின் செப்புப் படிமம் முதலாம் இராசேந்திரனின் காலத்ததாகும். போர்த் தளபதியாக இருக்கும் இக் கடவுளது கரங்களில் வாள், கேடயம், அவரது கொடியைக் காட்டும் சேவல் ஆகியவை உள்ளன. இதன் அழகு காண்போரைக் கவரும் தன்மை உடையதாகும். கீழையூரிலும் ஒரு சுப்பிரமணியர் படிமம் உள்ளது. இவை தவிரத் துர்க்கை, நடமாடும் காளி, மகிஷ மர்த்தினி, காளிங்க நர்த்தன கிருஷ்ணர், வேணுகோபாலர், மகாலட்சுமி, பார்வதி போகேசுவரி (தனி அம்மன்), கிராத மூர்த்தி, சந்திரசேகரர், பிரம்ம சாஸ்தா, சண்டேசர், மகேசுவரி, கணபதி, பைரவர், யோக நரசிம்மர், சூரியன் போன்ற இறையுருவங்களும் சோழர் காலத்தில் வடிக்கப்பட்டன. நாயன்மார்களான சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் ஆகியோருக்குச் செப்புப் படிமங்கள் செய்யப்பட்டன. குலோத்துங்க சோழன் மற்றும் அரசமா தேவிக்கும் செப்புத் திருமேனி செய்விக்கப்பட்டது. சக்கரம் என்ற விஷ்ணுவின் ஆயுதமும், சிவனின் திரிசூலமும் செம்பில் வார்க்கப்பட்டன.
பௌத்த சமண சமயத்தாருக்கும் செப்புத் திருமேனி செய்விக்கப் பட்டது. பல்லவர் காலத்தைச் சேர்ந்த அவலோகிதேசுவரர் திருமேனி ஒன்று இலண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது. இதனைச் சோழர் காலத்துத் தொடக்கத்தில் அமைக்கப் பட்டதெனவும் கருதுகின்றனர். கி.பி.1000 இல் வடிக்கப்பட்ட சோழர் காலத்துப் புத்தர் திருமேனி ஒன்று சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இங்கு நின்ற நிலையில் அபயம் காட்டியிருக்கும் புத்தர் உருவம் கி.பி. ஒன்பது – பத்தாம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டதாகும். சோழர்களுடைய படைப்பான இவ்வுருவம் நாகப்பட்டினத்தில் கிடைத்துள்ளது. மங்களூர் மாவட்டத்தில் 11ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட சோழர்களது புத்தர் உருவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் அவர் வியாக்யான முத்திரை காட்டுகின்றார். இங்குக் கிடைத்துள்ள அவலோகிதேசுவரர் உருவம் திருவொற்றியூரில் உள்ள லகுலீசரின் உருவத்தை ஒத்துள்ளது.
புத்தர் உருவம்
கால்மாறி (இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி) ஆடும் நடராசர்
பாண்டியர்களின் செப்புத் திருமேனிகள் தலையில் உயர்ந்த மகுடமும் காதில் மகர ஓலைக் குழைகளும் தரித்துக் காணப்படுகின்றன. நடராசர் சிற்பங்கள் தலையில் விரிசடை இன்றி நீண்ட சடை மகுடத்துடனும், கொக்கிறகுக் கொண்டையுடனும் காணப்படுகின்றன. இதற்கு முக்கிய உதாரணமாக இராமேசுவரத்தில் உள்ள நடராசர் திருமேனியைக் குறிப்பிடலாம். கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராசர் திருமேனி ஒன்று திருவாடானைக்கு அருகிலுள்ள சுந்தர பாண்டியப் பட்டினத்தில் கிடைத்துள்ளது. ஏறத்தாழ இதே காலத்தினைச் சேர்ந்த நடராசர் திருமேனி ஒன்று பழனி பெருவுடையார் கோயிலில் காணப்படுகிறது. குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் கோயிலில் அழகான நடராசர் படிமம் உள்ளது. இவரது தலையில் உள்ள சடைமுடி தாழ்சடையாகப் பின் தோள்களில் விழுந்து சரிந்து செல்லும் பாங்கு காண்போரைக் கவர்வதாகும்.
கி.பி. 12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராசர் மற்றும் சிவகாமி திருமேனிகள் காரைக்குடிக்கு அருகில் உள்ள இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் கோயிலில் கிடைத்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டூர் சோழீசுவரமுடையார் கோயிலில் நடராசர், சிவகாமி படிமங்கள் உள்ளன.
இவை 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றில் சோழர் கலையின் சாயலைக் காணமுடிகிறது. ஏறத்தாழ இதே காலத்தைச் சேர்ந்த நடராசர், சிவகாமி படிமங்கள் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருங்குள நாதசுவாமி கோயிலிலும், வராப்பூர் கோயிலிலும் கிடைத்துள்ளன. வராப்பூர் நடராசரின் தலையை அலங்கரிக்கும் மகுடம் வனப்பு மிக்க வேலைப்பாடு உடையதாகும். இதற்குச் சற்றுப் பிந்திய நடராசர் படிமம் புதுக்கோட்டை மாவட்டம் விராச்சாலை வில்வ வனேசுவரர் கோயிலில் காணப்படுகிறது. இம்மாவட்டத்தில் கீரனூரிலும், துர்வாச புரத்திலும் இதே காலத்தைச் சேர்ந்த நடராசர். சிவகாமி படிமங்கள் உள்ளன. அண்மையில் துர்வாசபுரம் சுந்தரேசுவரர் கோயில் கிணற்றில் தூர் வாரும்போது சிவகாமி, நடராசர், நர்த்தனமாடும் ஞானசம்பந்தர் ஆகியோரின் செப்புப் படிமங்கள் கண்டெடுக்கப் பட்டன. இங்குள்ள நடராசர் சிற்பம் உயர்ந்த சடைமகுடத்தைக் கொண்டுள்ளது. இரணியூரில் உள்ள ஆட்கொண்ட நாதர் கோயிலில் உள்ள நடராசரின் நெற்றியில் மூன்றாவது கண் அழகாக வைக்கப் பட்டுள்ளது. இச்சிற்பத்தில் இறைவனின் பக்கத்தில் முயலகனுக்குப் பின்புறம் உள்ள ஆடும் அரவம் அப்பெருமானின் வலது திருவடி முழங்காலின் கீழ் சாய்ந்த வண்ணம் காட்டப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி கண்ணீசுவர முடையார் கோயிலின் வளாகத்தில் புதையலாகக் கிடைத்த நடராசர், சிவகாமி, சோமாஸ்கந்தர், தனியம்மன், சந்திரசேகரர் ஆகியோர் படிமங்கள் கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இவற்றின் காலத்தைத் தெளிவாக்கும் வகையில், இச்சிற்பங்களில் நீண்ட உடலமைப்பும், உயரமான மகுடமும், இளநகை ததும்பும் முக வனப்பும், கனமான ஆடையும், அதிகமான அணிகலன்களும், முட்டி எலும்புகள் தெரிவதும் அழகாகக் காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் பலவற்றில் திருவாசி (பிரபா மண்டலம்) இணைந்திருக்கின்றது. முயலகன் கையிலிருக்கும் அரவம் தலை நிமிர்ந்து இறைவனின் ஆட்டத்தைக் கண்டு களிப்பது போலவும் காணப்படுகின்றது.
சிவகாமி ஞானசம்பந்தர்
பிறை சூடிய சந்திரசேகர மூர்த்தியின் செப்புத் திருமேனிகள் பிள்ளையார் பட்டி, திருநெல்வேலி, பாபநாசம், தேவதானம், மதுரை, வீரபாண்டி, கோவிலூர் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. பார்வதியும், சந்திரசேகரரும் ஒரே பீடத்தில் நின்றுள்ளது போல் அமைக்கப்பட்ட படிமங்கள் உமா சகித சந்திரசேகர மூர்த்தி என்றும், இவ்வாறு அமைந்ததோடு சிவன் பார்வதியின் இடையைத் தழுவிய நிலையில் அமைக்கப்படும் உருவங்கள் உமை தழுவிய சந்திரசேகரர் எனவும் அழைக்கப்படுகின்றன. முன்னதற்குக் காரைக்குடிக்கு அருகில் உள்ள இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் கோயில் படிமத்தையும், பின்னதற்குத் திருவரங்குளம் கோயில் சிற்பத்தையும் கூறலாம். இவற்றைப் பிரதோஷ நாயகர் படிமங்கள் என அழைப்பது மரபு.
சிவபெருமானும் பார்வதியும் அவர்களுக்கு நடுவே குழந்தை கந்தனும் அமர்ந்துள்ளது போன்ற அமைப்புடையது சோமாஸ் கந்தர் படிமம் ஆகும். பல்லவர் காலத்தில் பிரபலமாக விளங்கிய இச்சிற்பம், அவர்களது சம காலத்துப் பாண்டியர்களால் அமைக்கப்பட்ட திருப்பரங்குன்றம் குடை வரைக் கோயிலில் அமைக்கப் பட்டது. இதுபோன்றே செப்புத் திருமேனிகளிலும் இந்த அமைப்பு இடம் பெறலாயிற்று. இதனை விராச்சிலை, சூரக்குடி, மதுரை, பேரையூர், வீரபாண்டி, கங்கை கொண்டான் ஆகிய இடங்களில் காணலாம். இவற்றில் விராச்சிலையிலும் சூரக்குடியிலும் கிடைத்தவை பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். வீரபாண்டியைத் தவிர்த்த ஏனையவை பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாகும்.
பிரபஞ்சத்தின் குருவான தட்சிணா மூர்த்தி சிற்பமானது தென்னகத்தில் பிரபலமான ஒன்றாகும். இவர் வீணை வாசிப்பது போன்று அமைந்துள்ள சிற்பம் வீணாதரர் சிற்பம் எனப்படுகிறது எனக் கண்டோம். பாண்டியர் காலத்தில் தெக்காத்தூர், இலுப்பைக்குடி, கோயிலூர், உத்தமபாளையம் ஆகிய ஊர்களில் செய்து வைக்கப் பெற்ற வீணாதரர் வடிவங்கள் சிறப்பானவையும் அழகு வாய்ந்தவையும் ஆகும். இவற்றில் எதிலுமே கைகளில் வீணை வைக்கப் படவில்லை. வீணையை ஏந்தும் பாவனைகள் கைகளில் முத்திரைகளாக அமைக்கப் பட்டுள்ளன. பாண்டியர் காலத்தில் வீணாதரர் தவிரத் தட்சிணா மூர்த்தியின் பிற வடிவங்கள் செம்பில் வார்க்கப் படவில்லை. தவிர, சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர் உருவமும், தென்காசி காசி விசுவநாதர் கோயிலிலுள்ள கங்காள மூர்த்தி படிமமும், திருப்பத்தூர் திருத்தளி நாதர் கோயிலிலுள்ள சட்டை நாதர் உருவமும் பாண்டியர்களின் படைப்பேயாகும்.
பைரவர் உருவம்
சிவபெருமானின் பல்வேறு உருவமைப்புகள் மட்டுமன்றி, சைவ நாயன்மார்களுக்கான செப்புப் படிமங்களும் இக்காலத்தில் செய்விக்கப்பட்டன. இலுப்பைக் குடியிலும் வீரபாண்டியிலும் சண்டிகேசுவரர் படிமங்கள் செய்விக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் சேரன் மாதேவியில் அம்ம நாத சுவாமி கோயிலில் அதிகார நந்தியின் படிமம் அமைக்கப்பட்டது. மதுரை மீனாட்சி சந்தரேசுவரர் கோயிலில் உழவாரப் படையைத் தோளில் சாய்த்துக் கொண்டு உள்ள அப்பரது படிமம் உள்ளது. இலுப்பைக்குடி, பேரையூர் ஆகிய இடங்களில் திருஞான சம்பந்தர் படிமம் செய்விக்கப்பட்டது. சுந்தரருக்கும் அவரது மனைவியரில் ஒருவரான பரவை நாச்சியாருக்கும் இலுப்பைக் குடியில் படிமம் அமைக்கப்பட்டது. திருவரங்குளம், பேரையூர், திருநெல்வேலி, திருவாதவூர், அரண்மனைச் சிறுவயல், ஆத்தூர், மதுரை, திருப்பத்தூர், வடவம்பட்டி, கானாடு காத்தான், கண்டதேவிக் கோட்டை ஆகிய இடங்களில் மாணிக்க வாசகரின் செப்புப் படிமம் செய்விக்கப் பெற்றது. குற்றாலம், ஆத்தூர் ஆகிய ஊர்களில் காரைக்காலம்மையாரின் செப்புப் படிமம் உள்ளது.
சைவத் தொடர்பான படிமங்கள் போன்றே விஷ்ணுவின் பல்வேறு அவதாரச் சிறப்பினைக் காட்டும் செப்புப் படிமங்களும் பாண்டியர் காலத்தில் அமைக்கப் பட்டன. திருமோகூர் அழகர் கோயில், திருத்தங்கல், திருமயம், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருவில்லிப்புத்தூர், நான்குனேரி, வானவன் மாதேவி, சேரன் மாதேவி, கங்கை கொண்டான், ஆத்தூர், பழனி, திருக்கோளுர், மதுரை, இராமேசுவரம் ஆகிய இடங்களில் இவர்கள் காலத்து வனப்பு மிகு வைணவப் படிமங்கள் உள்ளன. இராமர், சீதை, இலக்குவன், அனுமன் ஆகியோர் கொண்ட இராமர் குழுப் படிமங்கள் திருப்பத்தூர், ஆத்தூர், சேரன்மாதேவி போன்ற இடங்களில் செய்விக்கப்பட்டன. வெண்ணெய் உருண்டையைக் கையில் ஏந்தி ஆடும் கண்ணன் (கிருஷ்ணன்) செப்புத் திருமேனிகள் கங்கை கொண்டான், சேரன் மாதேவி ஆகிய ஊர்களில் வடிக்கப்பட்டன. சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சுகாசனத்தில் அமர்ந்துள்ள விஷ்ணு படிமம் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இது சேரன் மாதேவி கோயிலில் அமைக்கப் பட்டதாகும். அழகர் கோயிலில் நின்ற நிலையில் உள்ள சுந்தர ராசப் பெருமாளின் படிமம் பெயருக்கு ஏற்ற வனப்புடையதாகும். திருக்கோட்டியூரில் பன்னிரண்டு ஆழ்வார்களின் செப்புத் திருமேனிகள் உள்ளன. இவை 13-14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
சிவகங்கை மாவட்டம் கீழவளவுக்கு அருகில் சுத்தமல்லி என்ற ஊரில் சமண சமயத்தின் 24ஆவது தீர்த்தங்கரரான மகாவீரரின் செப்புத் திருமேனி ஒன்று கிடைத்துள்ளது. இராமேசுவரத்திற்கு அருகில் அரியாங்குண்டு என்ற இடத்தில் பௌத்த சமயத் தொடர்பான இரண்டு சிறிய படிமங்கள் கிடைத்துள்ளன.
சோமாஸ்கந்தர் திருமேனி
அதாவது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகும். உயிர்களின் நன்மைக்காக இறைவன் உலகத்தைப் படைத்து, காத்து, அழிக்கிறான். இவ்வாறு செய்வது அருள் காரணமாக, உயிர் பக்குவப்பட்டு வரும் வரை உண்மையை மறைத்து வைக்கிறான். இறுதியில் அருளைப் பொழிந்து உயிரை உய்விக்கிறான். இவ்வாறு சைவ சித்தாந்தம் விளக்குகிறது.
நடராசரின் கைகளில் உடுக்கையும் தீப்பிழம்பும் உள்ளன. உடுக்கை படைத்தலையும், தீ அழித்தலையும் குறிப்பிடுகின்றன. கீழ்வலதுகை ‘அஞ்ச வேண்டாம் (அபயம்)’ என்பதைக் காட்டுகிறது. இதுவே காத்தலைக் குறிப்பிடுகிறது. காலின் கீழுள்ள முயலகன் ஆணவத்துக்கும், அவன் மீது ஊன்றிய கால் மறைத்தலுக்கும் அடையாளம். தூக்கிய திருவடி அருளல் என்பதைக் குறிக்கிறது.
விஷ்ணுவின் கைகளில் உள்ள சங்கு முதலியவையும் குறியீடுகளே. சங்கு நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாசம் ஆகிய ஐம்பூதங்களைக் குறிப்பதாகக் கருதுவர்; சக்கரம் பிரபஞ்சம் அனைத்தையும் குறிப்பதாகும். அவர் கையிலிருக்கும் கதை பிரபஞ்ச ஞானத்தைக் குறிப்பிடுகிறது. பத்மம் (தாமரை) உற்பத்தியாகி வளர்ச்சியடையும் உலகைக் குறிக்கின்றது. இராமாவதாரம் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இதனால்தான் சைவ சமயத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்த சோழர்கள் கூட இராமர் குழுச் செப்புத் திருமேனிகளை வார்த்தனர். இச்செப்புத் திருமேனிகள் கோயில்களில் உற்சவ மூர்த்திகளாகவும், திருவிழாக் காலங்களில் வீதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் இறையுருவங்களாகவும் பயன்படுத்தப்பட்டன.
இலக்கியத்தில் மரச் சிற்பங்கள்
புறநானூற்றில் தச்சன் தேர் செய்வது பற்றிய குறிப்பு வருகிறது. அரண்மனை வாயில் பின் கதவுகளில் கொற்றவையின் உருவம் செய்விக்கப் பட்டிருந்ததாக மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது. காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்த வாயிற் கதவுகளில் புலியின் உருவம் பொறிக்கப் பட்டிருந்ததாகப் பட்டினப் பாலை கூறுகிறது. பரிபாடலில் மரப் பதுமைகள் பற்றிய குறிப்பு வருகிறது.
மணிமேகலையில் மரத்தாலும் பிற பொருட்களாலும் தெய்வ உருவங்கள் செய்யப் பட்டதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பெருங்கதையிலும் “புது மரப்பாவை பொறியற்றாங்கு” என்று வருகிறது.
சிற்பங்கள் செய்யப்பட்ட மரங்கள்
பலா, தேக்கு, கருங்காலி, சந்தனம், மாவலிங்கை என்பன முதல் வகை. செண்பகம், தும்பை, வன்னி, மருது, கருவேம்பு, முள்பூ மருது, துவளை, மருக்காரை, பல முள்ளிப் பாலை, இலுப்பை, வேங்கை, வேம்பு ஆகியன இரண்டாம் வகை மரங்களாகும். வெட்பாலை, மராமரம் அல்லது ஆச்சம், வாகை, எலுமிச்சை, காசா, வெள்ளைக் கருங்காலி, அசோகம், கருவேம்பு ஆகியவை மூன்றாம் பிரிவு மரங்களாகும். முறளம், நமை, சுரபுன்னை, திப்பிலி, கடம்பு, நீர்க்கடம்பு, செண்பகம், மஞ்சம், பச்சிலை, கொங்கு ஆகியன நான்காம் வகையைச் சேர்ந்த மரங்களாகும். இத்தனை வகை மரங்கள் கூறப்பட்டிருப்பினும் பெரும்பான்மையாக இலுப்பை, ஆச்சம், வேங்கை, தேக்கு, மகிழம், வாகை, சந்தனம், கருமருது, புள்ளமருது ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.
கதவுகளில் சிற்பங்கள்
வட இந்தியாவைப் போன்றே, தமிழகத்திலும் பல்லவ, பாண்டிய, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கோயில் வாயிலின் நிலைகளின் மேற்பகுதியில் சிற்பங்கள் அமைக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டது. நிலைக்காலின் இரண்டு பக்கங்களிலும் வளமையைக் காட்டும் செடி கொடிகளின் உருவங்கள் செதுக்கப்பட்டன. விசய நகர நாயக்கர் காலத்தில் இம்மரபு மாற்றமடைந்தது. கோயில் வாயிற் கதவுகளில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. இவை பொதுவாகத் தனியாகச் செய்து கதவுகளில் பொருத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான கருத்துகளைப் புராணங்களிலிருந்தும், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்தும் எடுத்துக் கொண்டனர். இதுபோல் சிற்பங்களுடன் அமைக்கப்பட்ட கதவுகள் தமிழகத்தில் பல கோயில்களில் காணப்படுகின்றன. அவற்றில் அழகு மிகுந்தனவும், கருத்தமைதி உடையனவும் சில கதவுகளேயாகும். இதற்கு உதாரணமாக அழகர் கோயில், பிரம்ம தேசம், கல்லிடைக் குறிச்சி, பாபநாசம், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் (ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள கதவு) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அழகர் கோயில், கல்லிடைக் குறிச்சி ஆகிய கோயில் கதவுகளில் வைணவம் தொடர்பான சிற்பங்களும், மற்றவற்றில் சைவம் தொடர்பான சிற்பங்களும் உள்ளன. வைணவக் கோயில் கதவுகளில் மேல் தட்டில் விஷ்ணுவின் அவதாரச் சிற்பங்களும், கணபதி சிற்பமும் உள்ளன. அடுத்த தட்டில் இராமாயணச் சிற்பங்கள் தொடர்ச்சியுடைய கதை நிகழ்ச்சிகளாகவோ, அல்லது குறுக்கு வெட்டு அமைப்பிலோ செதுக்கப்பட்டிருக்கின்றன. இதற்குக் கீழே மகாபாரதச் சிற்பங்கள் இதே அடிப்படையில் அமைந்துள்ளன. அதற்கும் கீழ்த்தட்டில் பாலியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. எவ்வாறு இதிகாச, புராண மற்றும் பிற கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இஃது உணர்த்துகிறது.
அனைத்துக் கதவுகளிலும் கணபதி சிற்பம் அமைக்கப் பட்டிருப்பதற்குக் காரணம் அவர் கதவுகளின் காவலன் என்னும் கருத்து மேலோங்கி இருப்பதே ஆகும். கதவுகளில் விஷ்ணு அனந்தசாயியாக (அரவத்தின் மீது துயில் கொள்வது) உள்ள சிற்பம் அமைக்கப்படும் வழக்கம் உள்ளது. இது வைகுண்டத்தை அடைவதற்காகத் திறக்கப்படும் கதவின் குறியீடாக உள்ளது.
தமிழகத்துக் கோயில் கதவுகளில் உள்ள இதிகாசச் சிற்பங்களில் கதைத் தொடர்ச்சியைக் காணமுடிகிறது.
தேர்ச் சிற்பங்கள்
மரங்களை வைத்துத் தேர் செய்யும் மரபு தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்துள்ளது. மரத் தேர்களின் அடிப்படையில்தான் கல்தேர்கள் என்னும் ஒற்றைக்கல் ரதங்கள், பல்லவர்களால் மாமல்ல புரத்திலும், பாண்டியர்களால் கழுகு மலையிலும் அமைக்கப்பட்டன. இருப்பினும் பழங்காலத்தில் அமைக்கப் பட்ட தேர்களைக் காண முடியவில்லை. இருப்பினும் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தேர்கள் அக்காலத்தில் இருந்தமைக்கான செய்திகள் உள்ளன. அவை நெடுந்தேர், பொற்றேர், கொடிஞ்சி நெடுந்தேர், கொடித்தேர், அணிகொள்தேர் என்றெல்லாம் அழைக்கப்பட்டிருக்கின்றன. சிலப்பதிகாரம் புத்தக் கடவுளுக்கு என்று தேர்த்திருவிழா நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது.
தேர்ச் சிற்பம்
தேரின் பயன்பாடு
தற்போது பெரும்பான்மையான கோயில்களில் தேர்கள் உள்ளன. அவை இடைக் காலத்திலிருந்து இன்றுவரை செய்து வைக்கப்பட்டவையாகும். பல கோயில்களின் தேர்கள் விசயநகர நாயக்கர் ஆட்சிக் காலத்தில் செய்விக்கப்பட்டவை ஆகும். திருவிழாக் காலங்களில் இறையுருவங்களை வீதிகளுக்கு எடுத்துச் செல்லவே கோயில் போன்ற அமைப்புடைய இத்தேர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 866 தேர்கள் இருப்பதாகக் கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.
தேரின் அமைப்பு
தேரின் அமைப்பு
இந்த நடமாடும் கோயில்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கனமான சக்கரங்களைக் கொண்டவையாகும். இவற்றின் மூன்று பக்கங்களிலும் இறையுருவங்களும், புராணக்கதைத் தொகுதிகளைக் காட்டும் சிற்பத் தொகுதிகளும், மிருகங்கள், செடி கொடிகள் ஆகியவற்றின் உருவங்களும், ஆங்காங்கே பக்தர்கள் மற்றும் கொடையாளிகளின் உருவங்களும் செதுக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.திருவிழாக் காலங்களில் அவற்றின் மீது எண்ணெய் பூசுவதால் இச்சிற்பங்கள் அழகாகக் கற்சிற்பங்கள் போன்று கருமை நிறத்தில் காட்சியளிக்கும்.
தேரிலுள்ள சிற்பங்கள்
தமிழகத்துத் தேர்களில் முக்கியத் தட்டுகளில் (tiers) உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரமுள்ளனவாக அமைந்துள்ளன. சிற்றுருச் (miniature) சிற்பங்கள் ஆறு அங்குலம் உயரம் உடையனவாகும். தேரின் அச்சுப் பகுதியில் கணபதி, முருகன், பூத கணங்கள் ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தேர்களின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றனர். தேர்களில் அதிட்டானப் பகுதிகளில் இந்து சமயத் தொன்மக் கதைகளும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் செய்திகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. தேரின் பீடத்தில் நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை மீட்டுவோர், ஆச்சார்ய புருஷர்கள், அஷ்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
வாகனங்கள்
கோயில்களில் திருவிழாக் காலங்களில் இறையுருவங்களை வீதி உலாவிற்கு எடுத்துச் செல்வதற்காக அந்தந்த இறையுருவத்திற்குத் தொடர்பான வாகனங்கள் மரத்தினால் செய்யப் பட்டன. தஞ்சாவூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் இன்றும் வாகனங்கள் செய்யும் தொழில் நடைபெற்று வருகின்றது. அங்கு அன்னம், மயில், சிங்கம், நந்தி, கருடன், யானை, காமதேனு போன்ற வாகனங்கள் செய்விக்கப் பட்டுக் கோயில்களுக்கு விற்பனை செய்யப் படுவதைக் காணலாம். இவ்வாகனங்கள் இந்து சமய மேல்தட்டுக் கருத்துகளுக்கும் நாட்டுப்புறக் கலைக்கும் பாலங்களாக அமைகின்றன. கோயில்களுக்குள் இறைவனின் கற்சிற்பங்களுடன் சேர்த்துச் செய்யப்படும் வாகனங்கள் அவ்விறைவனுக்கு நிகராகவே வணங்கப் படுகின்றன. இவை தற்காலிகமாக, முக்கியத் திருவிழாக்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியனவாகும். இன்று பெரும்பான்மையான கோயில்களில் உள்ள வாகனங்கள் நானூறு ஆண்டுகளுக்கு உள்ளாகச் செய்விக்கப் பட்டவையாகும்.
சிற்பங்கள்
இவ்வீடுகளின் பிரதான மரக் கதவுகள் மிகப் பெரிய நிலைகளைக் கொண்டவை. இரட்டைக் கதவுகள் அமைக்கப் பட்டிருக்கும். கதவுகளிலும், நிலைகளின் இரு பக்கங்களிலும் நேர்த்தியான சிற்பங்கள் செதுக்கப் பட்டிருக்கும் அவை பெரும்பாலும் முப்பரிமாணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கதவுகளிலுள்ள சிற்பங்கள் பெரும்பாலும் கிளி முதலிய பறவைகள், மிருகங்கள், செடிகொடிகள், தாமரை, கடவுள்கள், கஜலட்சுமி, இலட்சுமி, ரதிமன்மதன் போன்றவைகளாகும். பதினாறு – பதினேழாம் நூற்றாண்டின் நாயக்கர் காலச் சிற்ப அமைப்புகளே செட்டி நாட்டு நகரத்தாருக்கும் கலைஞர்களுக்கும் முன்மாதிரியாக அமைந்தன. இம்மரபைப் பின்பற்றியே செட்டியார்கள் தாம் கட்டிய மற்றும் புதுப்பித்த கோயில்களில் சிற்பங்கள் அமைத்துள்ளனர்.
செட்டிநாட்டு மரச் சிற்பங்கள்
தெய்வச் சிற்பங்கள்
செட்டி நாட்டுக் கதவுகளில் அவர்கள் வணங்கிய தெய்வங்களின் உருவங்களே அதிகம் காணப்படுகின்றன. அனைத்துக் கதவுகளிலும் இலட்சுமி பிரதான இடத்தைப் பெற்றுள்ளாள். இவ்வுரு பெரும்பாலும் கஜலட்சுமியாக, அதாவது நடுவில் தேவி அமர்ந்து கொண்டிருப்பது போலவும், அவளுக்கு இரண்டு பக்கமும் யானைகள் நின்று கொண்டு அத்தேவிக்கு நீர்கொண்டு அபிடேகம் செய்வது போலவும் அமைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். அடுத்த முக்கியமான கதவுச் சிற்பம் சிவனும் பார்வதியும் நந்தியின் மீது அமர்ந்துள்ள இடப வாகன மூர்த்தியின் சிற்பமாகும். இது அவர்களது திருமண வாழ்வையும், குடும்பத்தின் மகிழ்ச்சியையும் குறி்ப்பதாகும். செட்டியார்களின் தாலிகளில் கூட இவ்வுருவம் பொறிக்கப் படுவது வழக்கமாகும். இராமர், சீதை பட்டாபிடேகக் காட்சியும் கதவுச் சிற்பமாகக் காணப்படுகிறது. கணபதி, கருடன் மீது அமர்ந்துள்ள விஷ்ணு, முருகன் ஆகியோரின் உருவங்களும் கதவுகளில் வைக்கப் பட்டுள்ளன.
காரைக்குடியில் உள்ள ஒரு வீட்டின் கதவில் விஷ்ணு அனந்த சயன மூர்த்தியாகக் கோயில் கொண்டிருப்பது போன்று மரச் சிற்பம் அமைந்துள்ளது. ஏழு தலை நாகம் தாங்கியுள்ளது போன்ற பீடத்தின் மீது ஒரு விமானம் அமைந்துள்ளது. விமானத்தின் அடித்தட்டில் மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்று கொண்டுள்ளார். அதற்கு மேல் உள்ள தட்டில் விஷ்ணு அனந்த சயனத்தில் உள்ளார். அதற்கு மேல் விமானத்தின் மேற்பகுதி உள்ளது. இது மொத்தத்தில் ஒரு நாயக்கர் காலக் கோயில் போன்றே உள்ளது.
காரைக்குடிச் சிற்பங்கள்
காரைக்குடியில் உள்ள சில வீடுகளில் பெரிய யாளியின் உருவங்கள் காணப் படுகின்றன. கோயில்களில் இருப்பது போன்று இறையுருவங்களின் இரண்டு பக்கங்களிலும் துவார பாலகர் (வாயிற்காப்போர்) சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வளோங்கன்னி மாதா
உதாரணமாக வளோங்கன்னி கோயில் தமிழகத்துக் கத்தோலிக்கத் திருச்சபைகளில் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். இத்திருச்சபைச் சடங்குகளில் சிரிய அல்லது இலத்தீன் மொழி பயன்படுத்தப் படுகின்றது. ஆயினும், பக்திச் செயற்பாடுகள் இந்து சமயத்தினை ஒத்துள்ளதைக் காணலாம். இங்கு, திருவிழாக்களின் போது மரத்தாலான தேரில் வளோங்கன்னி மாதாவின் மரச் சிற்பம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் படுவது வழக்கமாக உள்ளது. இத்தேரில் இயேசு நாதரின் வாழ்க்கை மற்றும் விவிலியத் தொடர்பான கதைகள் சிற்பங்களாக வடிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.
காரைக்காலில் உள்ள ஏஞ்சல்ஸ் மாதா கோயிலிலும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு மாதத்தில் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் பத்தாவது நாளில் மாதாவின் திருவுருவம் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் படுகிறது.
சென்னை மைலாப்பூரில் உள்ள புனித லாஸரஸ் கத்தோலிக்கத் திருச்சபைத் திருவிழாவிலும் புனிதர்களின் உருவங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
வளோங்கன்னி கோயில்
திருச்சபைத்தேர்
பிரசித்தி பெற்ற திருச்சபைத் தேர் ஒன்று திருச்சி மாவட்டம் புரத்தாக்குடி என்ற ஊரில் உள்ள மாதா கோயிலில் உள்ளது. இத்தேரின் அமைப்பும், இதில் செய்விக்கப்பட்டுள்ள சிற்பங்களும் இந்துக் கோயில் தேர்களை நினைவூட்டுவனவாக உள்ளன. இதில் ஓராண்டில் சமுதாயத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளும், மேடை நாடக நிகழ்ச்சிகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இதில் இயேசுவின் வாழ்க்கை, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு தொடர்பான சிற்பங்கள் உள்ளன. விசயநகர மன்னர்களது அரசச் சின்னமும் இதில் இடம் பெற்றுள்ளது. இது போன்ற தேர்கள் ஆவூர், மலையடிப்பட்டி, ஆலம் பாக்கம், புல்லம் பட்டி ஆகிய ஊர்களிலும் உள்ளன. இவை கடந்த நானூறு ஆண்டுகளுக்குள் செய்யப்பட்டவையாகும்.
பீடம்
தமிழகத்தில் உள்ள பல திருச்சபைகளில் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட மரத்தாலான பீடம் (altar) அமைந்துள்ளது. அவற்றில் தேவ கோட்டங்கள் போன்ற அமைப்பில் சிற்பங்கள் வைக்கப் பெறும். இவற்றில் இயேசு, மேரி, புனிதர்கள் ஆகியோரின் உருவங்கள் அடங்கும். பிறருடைய உருவங்கள் பீடத்தின் தூண்களில் வைக்கப்படுகின்றன. சென்னை மைலாப்பூரில் உள்ள புனித லாஸரஸ் திருச்சபையில் யாளியின் உருவம் காணப்படுகிறது.
சிற்பமேயன்றி மன்னர்கள் உறங்கும் கட்டில்களும், இறைவன் துயிலும் கட்டில்களும் பல்லக்குகளும் தந்தத்தால் செய்யப்பட்டன. அவற்றில் சிறுசிறு உருவங்களும் செய்விக்கப் பட்டன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பயன்படுத்திய கட்டில் பற்றி நக்கீரரால் நெடுநல் வாடையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அக்கட்டில் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்து போரில் இறந்துபட்ட யானையின், தாமாக விழுந்த கொம்புகளைக் கொண்டு செய்யப் பட்டதாம். சிங்கம் முதலிய விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற காட்சிகள் பொறிக்கப்பட்ட தகடுகள் அக்கட்டிலில் பொருத்தப்பட்டனவாம். சேர மன்னன் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் கட்டில் பற்றிப் பதிற்றுப் பத்து கூறுகிறது.
தந்தத்தால் ஆகிய சிற்பம்
லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்
இலண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள குழந்தைக் கிருஷ்ணர் தந்தச் சிற்பம் நேர்த்தியான அழகுடையதாகும். இதில் கிருஷ்ணன் ஆலிலையில் படுத்துக் கொண்டு பாத விரலைச் சுவைப்பது போல் உள்ளார். இலண்டனில் தனியார் சேகரிப்பில் இராமாயணத் தொடர்பான சிற்பங்கள் உள்ளன. இதில் இராமன் ஆசனத்தில் அமர்ந்திருக்க இலக்குவன் அவனருகில் நின்று கொண்டிருக்கிறான்.
விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகம்
விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் சிவன்- பார்வதி திருமணக் கோலத் தந்தச் சிற்பம் உள்ளது. நின்ற நிலையிலுள்ள இவ்விறை உருவங்கள் கிரீடம், காதணி மற்றும் பிற ஆபரணங்களுடன் திகழ்கின்றன. சிவன்- பார்வதிக்குப் பின்னால் மகாவிஷ்ணு நிற்கிறார். தல விருட்சம் உள்ளது. இது பதினேழாம் நூற்றாண்டின் மதுரை நாயக்கர்களின் கல் திருமேனிகளைப் பெரிதும் ஒத்துள்ளது. இச்சிற்பத் தொகுதியில் உள்ள ஆடை அலங்காரம் மிக நேர்த்தியாக மடிப்புகளுடன் காணப்படுகிறது. விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ள தந்தச் சீப்பில் உள்ள சிற்பமொன்றில் ஒரு தம்பதியர் நான்கு பணிப் பெண்கள் சூழ உள்ளனர். பணிப் பெண்களின் கைகளில் மலரும், பறவையும் காணப்படுகின்றன. தனியார் பாதுகாப்பில் உள்ள தந்தச் சீப்பு ஒன்றில் ஒரு ஆண் பஞ்சு மெத்தையில் படுத்துள்ளான். தனது மனைவியின் தலைமுடியைக் கோதுகிறான். அப்பெண் அவனது கால் ஒன்றினை வருடிக் கொண்டிருக்கிறாள். கட்டிலுக்கடியில் பூனை ஒன்றுள்ளது.
வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகம்
வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகத்தில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் சிற்பம் உள்ளது. இது 27 சென்டி மீட்டர் உயரமுள்ளது. இச்சிற்பத்தில் அழகான தலைப்பாகை, நீண்ட காது வளையம், ஆபரணங்கள் செறிந்த ஆடை, இடது கையில் கத்தி ஆகியவை நேர்த்தியாக அமைந்துள்ளன.
எடின்பர்க் ராயல் ஸ்காட்டிஷ் அருங்காட்சியகம்
எடின்பர்க்கில் ராயல் ஸ்காட்டிஷ் அருங்காட்சியகத்தில் தம்பதியர் உருவங்களில் ஒரு பெண் ஆடவனுக்கு வெற்றிலை மடித்துத் தருவது போன்ற சிற்பங்கள் உள்ளன. ஒரு பெண்ணின் கால் பாதத்திலிருந்து ஒரு பணியாள் முள் எடுக்கின்றான். பாரீஸ் அருங்காட்சியகத்தில் உள்ள தந்தச் சிற்பம் ஒன்றில் நாயக்க மன்னர் ஒருவரின் முன்னால் நின்று கொண்டிருக்கும் ஒரு பெண் தன் கைகளில் பறவை மற்றும் பழம் ஏந்தியுள்ளாள். மன்னரின் தலைப்பாகையும் ஆடையும் சிறப்பாக அலங்கரிக்கப் பட்டுள்ளன.
வெர்ஜீனியா அருங்காட்சியகம்
வெர்ஜீனியா அருங்காட்சியகத்தில் ஆண், பெண் இருவருடைய தந்தச் சிற்பங்கள் உள்ளன. அவர்களது ஆடை, ஆபரண அலங்காரங்கள் சிறப்புற அமைக்கப் பட்டுள்ளன. ஆண் ஒரு கையில் கத்தியும், மற்றொரு கையில் மலரும் வைத்துள்ளான். அவனது தலைப்பாகை நாயக்க மன்னர்களது கிரீடத்தை ஒத்துள்ளது. பெண்ணின் ஆடைகள் விலையுயர்ந்த அணிகலன்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளன.
சான்பிரான்ஸிஸ்கோ ஆசியன் அருங்காட்சியகம்
சான்பிரான்ஸிஸ்கோ ஆசியன் அருங்காட்சியகத்தில் திருவரங்கம் கோயில் போன்று கட்டப்பட்ட அமைப்பில் திருவரங்கம் அரங்கநாதர் துயில் கொண்டிருப்பது போல் அழகிய தந்தச் சிற்பம் உள்ளது. மேல் பகுதியில் நின்று கொண்டிருப்பது போன்று சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே விஷ்ணு அனந்த சயனத்தில் உள்ளார். அதற்குக் கீழ் உற்சவர் தேவியருடன் காட்சி தருகின்றார். துவார பாலகர்களும் கணபதியும் இடம் பெற்றுள்ளனர். இத்தந்தச் சிற்பம் காண்போரை வியக்க வைக்கும் அழகுடையது. இச்சிற்பம் பதினேழாம் நூற்றாண்டில் செய்யப் பட்டதாகும்.
திருவரங்கம் கோயில் அருங்காட்சியகம்
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் தந்தத்தினால் ஒப்பற்ற சிற்பங்களை உருவாக்கச் செய்துள்ளார். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்திலும், அழகர் கோயிலிலும் திருவரங்கத்திலும் ஏராளமான சிற்பங்கள் தந்தத்தால் செய்விக்கப்பட்டன. இவற்றில் சில திருவரங்கம் கோயில் அருங்காட்சியகத்திலும் இன்னும் சில மதுரைக் கோயில் காட்சிக் கூடத்திலும் உள்ளன. இந்தத் தந்தச் சிற்பங்களிலும் சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகன் போன்ற தெய்வங்களின் உருவங்கள் உள்ளன. கிருஷ்ணர், இராமர் உருவங்களும் காணப்படுகின்றன. திருவரங்கம் கோயிலில் உள்ள திருமலை நாயக்கர் உருவம் மிக அழகு வாய்ந்ததாகும். இங்கு, சில ஐரோப்பியருடைய தந்தச் சிலைகளும் உள்ளன. இதில் ஒருவர் வாள் வைத்துள்ளார். அவருக்கு அருகில் நாய் உள்ளது. சுந்தர்வர்கள், விண்ணோர்களுடைய உருவங்கள், இறக்கைகளைக் கொண்ட ஏஞ்சல்ஸ் போன்ற அமைப்பில் உள்ளன. இது நாயக்கர் காலத்து மேலை நாட்டுக் கலைத் தொடர்பைக் காட்டுகிறது. முத்து விசயரங்க சொக்கநாதர் என்பவர் திருவரங்கத்து அரங்கன் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தார். அக்கோயிலில் பல திருப்பணிகளைச் செய்த அம்மன்னர் அங்கு ஐந்து அடி உயரமான தனது உருவச் சிலையையும், தன் மனைவி மற்றும் மகனது உருவச் சிலைகளையும் தந்தத்தால் செய்து வைத்துள்ளார். இன்றும் இவ்வுருவங்களுக்குத் தனியாகப் பரிவட்ட மரியாதை நடந்து வருகிறது.
சுடுமண் சிற்பம்
தொன்மையான சுடுமண் பொருள்கள்
தமிழகத்தில் தொல்லியல் துறையினரால் பல இடங்களில் அகழ்வாய்வு செய்யப் பட்டது. அவற்றில் கண்டுபிடிக்கப் பட்ட சுடுமண் பொருட்கள் பலவாகும். மனித உருவங்கள், விலங்குகளின் உருவங்கள், விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள், இலிங்கங்கள், காதணிகள், நூற்புக் கருவிகள், வளையங்கள், மட்பாண்டங்கள், சமையற் கருவிகள், உருளைகள் போன்றவை அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இவற்றில் கலை நுட்பங்களும் காணப்படுகின்றன. இவை கைத்திறனால் செய்யப் பட்டவையாக உள்ளன. திருக்காம் புலியூரில் கண்டெடுக்கப் பட்ட ஒரு சிலையின் சிகை அலங்காரம் காந்தாரக் கலையை நினைவூட்டுகிறது. இராமநாதபுரத்திற்கு அருகில் கிடைத்துள்ள புத்தரது சுடுமண் சிற்பத்திலும் இதே போன்று சுருள்முடி அமைப்புக் காணப் படுகின்றது. இது ஏறத் தாழ 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உள்ளது.
அகழ்வாய்வில் பல காலத்தைச் சேர்ந்த சுடுமண் பாவைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் சில சுடுமண் பாவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்கள் யாவும் பெரும்பாலும் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் போளுவாம் பட்டி என்ற இடத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இங்குக் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இயக்கன் என்னும் சிறு தெய்வத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்திலேயே அகழ்வாய்வில் சுடுமண் பொம்மைகள் மிகுதியாகக் கிடைத்துள்ளது இவ்வூரில்தான். தர்மபுரி மாவட்டத்தில் குசானர் (கி.பி. 1 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை) கலையோடு தொடர்புடைய சிற்பம் கிடைத்துள்ளது. 12-13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்களும் கோவை மாவட்டத்தில் கிடைத்துள்ளன.
இராமநாதபுரம் மாவட்டம் கொந்தகை என்ற இடத்தில் 14 – 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்கள் உள்ளன. தஞ்சாவூருக்கு அருகில் இராஜாளி விடுதி என்ற இடத்தில் நாயக்கர் கால மண்பாவைகள் கிடைத்துள்ளன.
மிக அண்மையில் தமிழகத் தொல்லியல் துறையினரால் திருத்தங்கலில் நடைபெற்ற அகழ்வாய்வில் ஸ்ரீவத்ஸம் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் செங்கல் கிடைத்துள்ளது. இது சங்க காலத்தினைச் சேர்ந்ததாகும்.
வடஆர்க்காடு மாவட்டம் பையம் பள்ளியில் சுடுமண் பொம்மைகளும், சுடுமண் விளக்குகளும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
திருச்சிக்கு அருகில் உறையூரில் நடந்த அகழ்வாய்வில் உடைந்த சுடுமண் பொம்மைகள் பலவும் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மனித உருவங்களாகும், காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சுடுமண் பொம்மைகள் மற்றும் சுடுமண்ணாலான யானைத் தலை ஆகியன உள்ளன. தர்மபுரி மாவட்டம் குட்டூரில் நடத்திய அகழ்வாய்வில் சுடு மண்ணாலான விலங்குகளின் உருவங்கள், பெண்ணின் தலை, பகடைக் காய்கள், புகைக் குழல்கள் போன்றவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. காவிரிப் பூம்பட்டின அகழ்வாய்வில் தலைப்பாகையுடன் கூடிய மனித உருவங்கள் கிடைத்துள்ளன.
கிராம தேவதைகள்
தமிழகத்துக் கிராமங்களில் இன்றும் சுடுமண் இறை உருவங்களைக் கொண்ட கோயில்கள் உள்ளன. பொதுவாக அய்யனார், மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், கருப்பசாமி, பைரவர், மதுரை வீரன் கோயில்களில் சுடுமண் பொம்மைகள் ஏராளமாக வைக்கப் பட்டுள்ளன. சில இடங்களில் திருவிழாக் காலத்தில் மட்டும் இறையுருவங்கள் செய்து வைத்து வணங்குவர். திருவிழா முடிந்ததும் அவ்வுருவங்களை எடுத்துச் சென்று உடைத்திடுவர்.
அய்யனார் குதிரை
இந்தியா முழுவதுமே சுடுமண் குதிரை உருவம் பிரபலமானதாகும். தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்துக் கிராமங்களிலும் இதனைக் காணலாம். தலைவர்கள் அல்லது நாயகர்கள் கடவுள் தன்மையை அடைந்தனர் என மக்கள் நம்பினர். அவர்கள் ஏறிச் சென்ற குதிரையும் புனிதத் தன்மை பெற்றது. யாகங்களின் சின்னமாகவும் குதிரை கருதப்பட்டது. வேண்டுதல் நிறைவேறினால் கோயில்களில் சுடுமண் குதிரை செய்து வைக்கும் வழக்கமும் இருந்து வருகின்றது. கடவுளர்களில் அய்யனாருக்குக் குதிரை வாகனம் உண்டு. எனவே அவரே கிராமங்களைக் காப்பவர் என்ற நம்பிக்கை பெருக ஆரம்பித்தது. அய்யனாரது தளபதிகளும் குதிரை மீதமர்ந்து வருவதாகக் கருதப்பட்டது. இதன் விளைவாகக் கிராமங்களின் வெளியே நீர்நிலைகள் இருக்கின்ற இடங்களில் அல்லது குளக்கரைகளில் அய்யனார் கோயில்கள் அமைக்கும் மரபு தோன்றியது. அய்யனாரும் அவரது தளபதிகளும் கிராமங்களை மட்டுமின்றி அக்கிராம நீர் நிலைகளையும் காக்கின்றனர். இது நீரின் இன்றியமையாமையைக் குறிக்கின்றது.
அய்யனார் குதிரை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகில் பதினைந்தடி உயரமான குதிரை அமைக்கப் பட்டுள்ளது. திருவண்ணாமலைக்குக் கிழக்கே சிறுநந்தூர் என்ற இடத்தில் இரண்டு உயரமான, சிவப்பு வெள்ளை வண்ணம் பூசப்பட்ட குதிரைகள் உள்ளன. குமாரமங்கலம் என்ற இடத்தில் அச்சுறுத்தும் பாணியில் ஒரு குதிரை உள்ளது. திருப்பாச்சேத்தி கண்மாய்க் கரையில் பிரமாண்டமான குதிரையில் அய்யனார் அமர்ந்துள்ளார். மதுரை கோச்சடையில் இரண்டு பெரிய குதிரைகளில் அய்யனாரும், அவரது தளபதியும் அமர்ந்துள்ளனர். குதிரை மீது மட்டுமின்றி அய்யனார் தனியாக மேடை மீது அமர்ந்திருக்கும் பெரிய சிற்பங்களும், சுடுமண்ணில் அமைக்கப்பட்டன. இதற்கு உதாரணமாகப் பாண்டிச்சேரிக் கோயிலைக் கூறலாம். திருச்செந்தூருக்கு அருகில் அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் உள்ளது. அய்யனார் அன்றி அம்மன் (காளி) சிலை குதிரைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்படும் வழக்கமும் சில இடங்களில் உண்டு. இதற்கு உதாரணமாக மதுரைக்கு அருகில் மடப்புரம் காளியம்மன் கோயிலைக் குறிப்பிடலாம்.
பைரவர் சிற்பம்
சில ஊர்களில் சிவபெருமானின் பைரவ உருவமும் சுடுமண்ணால் செய்து வைக்கப் பட்டுள்ளது. பைரவர் கிராமக் காவல் தெய்வமாகவே கருதப்படுகிறார். திண்டிவனத்திற்குக் கிழக்கே எட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் அய்யனார் கோயில் ஒன்றுள்ளது. அதற்கருகில் பைரவர் உருவம் வைக்கப் பட்டுள்ளது. இது சுடுமண்ணாலான மிகப் பெரிய உருவமாகும். இரண்டு நாய்கள் அருகில் வைக்கப் பட்டுள்ளன. விஷ்ணுவின் நெற்றியில் குத்தி, பிரம்மாவின் ஒருதலையை வெட்டி, அதனை விஷ்ணுவின் நெற்றியிலிருந்து வடியும் இரத்தத்தைக் குடிக்க வைத்தவர் பைரவர் என்பர். எனவே இங்கு இரத்தப் பலி நடக்கிறது.
பைரவர் உருவம்
மதுரை வீரன்
இது கிராம தேவதையாகும். பல ஊர்களில் இவருக்குக் கோயில் கட்டப் பட்டுள்ளது. இவரது உருவம் சுடுமண்ணால் செய்யப் படுவது வழக்கம். தஞ்சாவூரில் குதிரை மீதமர்ந்துள்ள மதுரை வீரன் சிலை உள்ளது.
ஏழு கன்னிமார்கள்
சகோதரிகள், தாய்மார்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கன்னிமார்களுடன் இரண்டு ஆண் கடவுளரும் செய்து வைக்கப்படுவது மரபு. அவர்கள் பொதுவாக சப்த கன்னிகள் என்றும் ஆகாச கன்னிகள் என்றும் கன்னிமார்கள் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் நீர்நிலைகளின் கடவுளராவர். எனவே, குளக்கரைகளில் அமைக்கப்படுவர். மதுரைக்கு அருகில் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள விரகனூரில் இக்கன்னிமார்களின் சுடுமண் சிற்பங்கள் உள்ளன. இக்கன்னிமார்களே பிற்காலத்தில் கோயில்களில் சப்த மாதர்கள் என்ற பெயரில் இடம் பெற்றனர். கடலூருக்கு அருகில் தேவனாம் பட்டினத்தில் மீனாட்சி கோயில் உள்ளது. அங்கு சப்த கன்னிகளின் சுடுமண் சிலைகள் உள்ளன. வடஆர்க்காடு மாவட்டத்தில் இக்கன்னிகளின் சிலைகள் கிடைக்கின்றன.
மாரியம்மன்
தமிழ்நாட்டுக் கிராம தேவதைகளில் ஒன்று மாரியம்மன் ஆகும். இது அம்மை, காலரா, காய்ச்சல் போன்ற வேனில் காலத்து நோய்களைத் தீர்க்கும் தாய்த் தெய்வமாக நம்பப்படுகிறது. இத்தேவியின் அருளைப் பெற ஆண்டு தோறும் சித்திரை – வைகாசி மாதங்களில் கிராமங்களில் திருவிழாக் கொண்டாடுவர். மட்பாண்டஞ் செய்வோர் இத்தேவியின் உருவங்களைச் சுடுமண்ணால் செய்து கொடுப்பர். இத்தெய்வம் கிராம தேவதை என்று போற்றப் படுகிறது. திருவிழாக் காலங்களில் மிருக பலி நடைபெறும். இது போன்றே காளியம்மன், முத்தாலம்மன் திருவிழாக்களும் கிராமங்களில் நடைபெறும். திருவிழா முடிந்ததும் சுடுமண் உருவங்கள் அகற்றப்படும்.
பூதங்கள்
திருநெல்வேலி மாவட்டப் பகுதியில் பூத வழிபாடு அதிகம் உள்ளது. பெருஞ்சதுக்கத்துப் பூதம் என்று இலக்கியத்திலேயே சொல்லப் பட்டிருக்கின்றது. பூதங்களைக் காவல் தெய்வங்களாகவும், சத்திய வாக்குகளைக் காக்கும் கடவுளாகவும் வணங்குவர். இப்பூதங்களின் உருவங்கள் சுடு மண்ணால் செய்யப் பட்டவையாகும். இம்மாவட்டத்தில் உள்ள ஆறுமுக மங்கலம் என்ற ஊரில் பூத வழிபாடும் மாடன் வழிபாடும் இன்றும் சிறப்பாக நடைபெறுன்றன. ஈரோடு மாவட்டத்தில் அண்ணன்மார் கோயில்கள் உள்ளன. அவற்றிலும் சுடுமண் சிற்பங்கள் வைக்கப் பட்டுள்ளன. தென்ஆர்க்காடு மாவட்டத்தில் கன்னியம்மன் என்னும் கிராம தேவதைக்குக் கட்டப் பட்டுள்ள கோயிலில் ஏழு சகோதரர்களின் சுடுமண் சிற்பங்கள் உள்ளன.
கருப்பணசாமி
அய்யனார் கோயில்களில் துணைக் கோயிலாகவும் மற்றும் தனிக் கோயிலாகவும் கருப்பணசாமி வழிபாடு நடந்து வருகிறது. இவர் கிராம தேவதைகளின் காவல் தெய்வம் என்பர். இவரது சிற்பங்களும் பல இடங்களில் சுடுமண்ணால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப் பட்டுள்ளன. இதனை மதுரைக்கு அருகே கீழக் குயில்குடியிலும், செக்கானூரணியிலும், கோச்சடையிலும், சங்கராபுரத்திலும் பிற இடங்களிலும் காணலாம்.
நேர்த்திக் கடன் உருவங்கள்
பல கிராமக் கோயில்களில் நேர்த்திக் கடனைச் செலுத்தும் பொருட்டுச் சுடுமண் உருவங்கள் செய்து வைப்பது மரபு. குதிரை, யானை போன்றவை பல கோயில்களில் இடம் பெற்றுள்ளன. குழந்தை வரம் வேண்டுபவர்கள் சுடுமண்ணால் தொட்டிலும் குழந்தையும் செய்து வைப்பர். கை, கால் சுகம் வேண்டுவோர் உடல் உறுப்புகளைச் செய்து வைப்பர். இதனை மடப்புரம், திருப்பாச்சேத்தி, கோச்சடை போன்ற இடங்களில் காணலாம். சேலத்திற்கு அருகில் சஞ்ச வாடி என்ற இடத்தில் நாகர் உருவங்கள் செய்து வைக்கப் பட்டுள்ளன. இங்குள்ள நாகர் சிற்பங்கள் பெரும்பாலும் சுடுமண்ணால் செய்விக்கப் பட்டவையாகும். இதுபோன்று பல கிராமக் கோயில்களிலும் காண முடிகிறது.
காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்த மாளிகைகளில் சுதையினால் செய்யப்பட்ட சிற்ப உருவங்கள் அமைக்கப் பட்டிருப்பதை, இந்திர விழாவின் போது அந்நகரத்துக்கு வந்த மக்கள் கண்டு களித்தனராம். இதனை மணிமேகலை, கூறுகிறது.
கோயில் கருவறைகளில் சுதைச் சிற்பங்கள்
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் (கி.பி590- 630) காலத்தில் வெட்டப்பட்ட குடைவரைக் கோயில்களில் கல்லினால் இறையுருவம் செய்யப்படவில்லை. சில கோயில்களில் கருவறைகளில் சுதையாலான சிற்பமே இருக்கக் காணலாம். அவற்றிற்கு இன்றும் திருமஞ்சன நீராட்டு நடைபெறுவதில்லை. எண்ணெய்க் காப்பு (தைலக் காப்பு) மட்டுமே நடைபெறும். உற்சவருக்கு மட்டுமே திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். வைணவர்கள் கோயில் என்று சொன்னாலே திருவரங்கம்தான் நினைவில் எழும் திருவரங்கத்தில் பச்சை மாமலை போன்றுள்ள இறைவனின் கிடந்த கோலத் திருமேனி சுதையால் ஆனதாகும். இத்திருமேனி கல்லால் வடிக்கப்பட்டு, மேற்புறம் சுதையைப் போன்று தோற்றமளிக்கும் நிலையிலே ஒரு வகைக் கலவைப் பொருளால் பூசப்பட்டது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அதற்குச் சரியான ஆதாரம் தெரியவில்லை. அவ்விறை வனுக்குத் தைலக் காப்பே சாத்தப் படுகிறது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு அருகில் பாண்டவ தூதுப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் விசுவ ரூபக் காட்சி தரும் கிருஷ்ணராவார். இவ்வுருவம் சுதையாலானது. 26 அடி உயரமும், 14 அடி அகலமும் கொண்டது. இங்கு இறைவன் உடுத்திருக்கும் பஞ்ச கச்சத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கலைத் திறமையுடன் கூடிய அணிநலம் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.
அழகர் கோயில்
மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோயில், திருமாலிருஞ் சோலை என்று பரிபாடலிலும் சிலப்பதிகாரத்திலும் புகழப் பட்டிருக்கும் திருத்தலமாகும். இங்குள்ள மூலவர், தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கும் இவ்வுருவம் சுதையாலானது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தைலக் காப்பு நடைபெறும். மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் மூன்று அடுக்குகளில், கீழிருந்து மலோக முறையே அமர்ந்த, நின்ற, கிடந்த நிலையில் பெருமாள் திருவுருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை சுதை உருவங்களாகும்.
சமயபுரம்
திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. கிராம தேவதைகளில் மிகவும் குறிப்பிடத் தக்க ஒன்று மாரியம்மன் ஆகும். மாரியம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்ற ஒன்று சமயபுரம் மாரியம்மன் கோயில். இங்குள்ள அம்மன் சிற்பம் சுதையாலானதாகும். இதுபோன்று பெரும் பாலான அம்மன் கோவில்களில் மூலவர் சிற்பங்கள் சுதையாலானவை ஆகும்.
சீர்காழி
சிதம்பரத்திற்கு அருகில் உள்ள சீர்காழி சிவன் கோயிலில் இறைவனது திருக்கோலங்கள் குரு, இலிங்கம், சங்கமம் ஆகிய அடிப்படையில் அமைந்துள்ளன. இக்கோயிலில் அடித்தளத்தில் உள்ள பிரம்மபுரீசுவரர் இலிங்க அமைப்பு உடையவர், முதல் தளத்தில் உள்ள தோணியப்பர் குரு அமைப்புடையவர். இரண்டாம் தளத்தில் உள்ள சட்டையப்பர் உருவம் சங்கம அமைப்புடையது. தோணியப்பரின் உருவம் சுதையுருவமாகும்.
விமானங்களில் சுதைச் சிற்பங்கள்
கருவறையின் அடித்தளத்திலிருந்து மேலே உள்ள கலசம் வரையான மொத்தப் பகுதியும் விமானம் ஆகும். கருவறையின் மேற்பரப்பில் வெளிப் பக்கத்தில் சுதையாலான உருவங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தொடக்கக் காலக் கோயில்கள் முழுதும் கல்லாலானவை. பின்பு கருவறையின் பிரஸ்தரப் பகுதி வரை கல்லிலும் அதற்கு மேல் சுதையாலும் கட்டி அவற்றில் சுதைச் சிற்பங்களையும் வைத்தனர். சில இடங்களில் கல்லாலான சிற்பங்களின் மீது சுதையும் பூசியுள்ளனர் உதாரணமாக, இராமேசுவரம் கோயில் வளாகத்தில் உள்ள பூந்தோட்டத்திற்குள் கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சன்னதிகள் உள்ளன. அவற்றின் மேற்பரப்பில் கல் சிற்பங்களின் மீது சுதை பூசப் பட்டிருப்பதைக் காணலாம். இராமேசுவரம் இராமநாத சுவாமி விமானத்தின் மேற்பகுதியில் ஏராளமான சுதைச் சிற்பங்கள் உள்ளன. இவற்றில் குறிப்பிடத் தக்கவை சண்டேசானுக்கிரஹ மூர்த்தி, விஷ்ணு அனுக்கிரஹ மூர்த்தி, தட்சிணா மூர்த்தியும் அவரது சீடர்களும், உமா சகித மூர்த்தி, தேவியருடன் சுப்பிரமணியர், இலட்சுமி கணபதி, நரசிம்மர், சரப மூர்த்தி, இரண்டு தேவியருடன் அமர்ந்துள்ள யோக நரசிம்மர், திருவிளையாடற் புராணக்கதையைக் கூறும் சிவன், பார்வதி, நாரை உருவங்கள், இலட்சுமி நாராயணன் போன்றவற்றைக் காணலாம். இது போன்றே சிவன் கோயில் விமானங்கள் பலவற்றில் அதிக அளவில் சிவ லீலை தொடர்பான சிற்பங்கள் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.
இராமாயண – மகாபாரதச் சிற்பங்கள்
மதுரை கூடல் அழகர் கோயில் விமானத்தில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் தொடர்பான கதைகள் சுதைச் சிற்பங்களாகச் செய்து வைக்கப்பட்டுள்ளன. இதில் இராமர் பட்டாபிடேகம், மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இராவண வதைக் காட்சியும், கிருஷ்ணர் வஸ்த்ர அபகரண மூர்த்தியாகக் கோபியரின் ஆடைகளை மரத்தின் மீது எடுத்து வைத்திருக்கும் காட்சியும் அழகாக வண்ணம் தீட்டி வைக்கப் பட்டுள்ளன. அழகர் கோயில் சோமசந்த விமானத்தில் தல புராணச் செய்திகளும், அவதாரச் செய்திகளும் சுதை வடிவங்களாகச் செய்து வைக்கப்பட்டுள்ளன. மோகினி அவதாரக் கதை சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. இவை பிற்காலத்தில் அமைக்கப்பட்ட சிற்பங்கள் ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விமானத்தில் திருப்பாவை தொடர்பான சிற்பங்களும், விஷ்ணு அவதாரச் சிற்பங்களும் உள்ளன.
கோபுரச் சிற்பங்கள்
தமிழகத்துக் கோயில் கோபுரங்கள் அனைத்திலும் உள்ள சிற்பங்கள் சுதையினால் செய்யப் பட்டவையாகும். மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் உள்ள கோபுரத்தில் விபீடணனுக்கு இராமர் பட்டாபிடேகம் செய்யும் காட்சியும், இராமர் பட்டாபிடேகக் காட்சியும் உள்ளன. கோயிலைக் காண்போர் முதலில் நல்லதைக் காண வேண்டும் என்ற நிலையில் பட்டாபிடேகக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு தளத்தில் இராமாயணக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மற்றொரு தளத்தில் கிருஷ்ண லீலைகள் தொடர்பான சிற்பங்கள் செய்து வைக்கப் பட்டுள்ளன. அழகர் கோயிலில் வெளியில் உள்ள பதினெட்டாம் படி கருப்பசாமி கோபுரம் ஏழு அடுக்குகளைக் கொண்டது. இதில் துவார பாலகர்கள் ஒவ்வோர் அடுக்கிலும் கீழிருந்து மலோக எட்டுக் கைகளிலிருந்து இரண்டு கைகள் வரை கொண்ட உருவங்களாக உள்ளனர். மேலே செல்லச் செல்லச் சிறு உருவங்களாக வருவதால் கைகளின் எண்ணிக்கையும் குறைகிறது. இதில் இராமாயணச் சிற்பங்களும், முனிவர்கள், அடியவர்கள் மற்றும் பாலியல் தொடர்பான சிற்பங்களும் உள்ளன. ஸ்ரீவைகுண்டம் விஷ்ணு கோயில் கோபுரத்தில் இராமாயணம், கிருஷ்ணாவதாரம் தொடர்பான சிற்பங்கள் உள்ளன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள வெளிக் கோபுரங்களில் ஆயிரக் கணக்கான சுதை உருவங்களைக் காணலாம். இவற்றில் சிவபுராணம், திருவிளையாடற் புராணம், இலிங்க புராணம், தேவி பாகவதம், தேவி மகாத்மியம் ஆகிய கதைத் தொடர்ச்சிகளைக் காண முடிகிறது. இச்சிற்பங்களில் அசுரர்களை வதம் செய்கின்ற காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையும் காட்சி மிக நேர்த்தியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. நன்மையும் – தீமையும், பகலும் – இரவும் போல, பாற்கடலில் தோன்றிய அமிர்தமும் ஆலகால விஷமும் தவிர்க்க இயலாதவை என்ற கோட்பாட்டை இது உணர்த்துவதாக அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுரத்தில் முருகன் வரலாறு தொடர்பான சுதைச் சிற்பங்களும், ஆறு படை வீடுகள் தொடர்பான சிற்பங்களும் உள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பர நாதர் கோயிலின் விசயநகர் காலத்துக் கோபுரம் ஏராளமான சுதைச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. சிதம்பரம் நடராசர் கோயில் கோபுரங்களில் சிவபுராணச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிற்பம்
கோயிலின் பிற இடங்களில் சுதைச் சிற்பங்கள்
தமிழ்நாட்டுச் சிவன் கோயில்கள் பலவற்றிலும் கருவறைக்கு முன்னால் சுதையாலான நந்திகள் வைக்கப் பட்டுள்ளன. அவற்றில் மிகப் பெரிய ஒன்று இராமேசுவரம் இராமநாத சுவாமி கோயிலில் உள்ளதாகும். ஒரு பக்கம் பார்த்தால் நந்தி போன்றும், மற்றொரு பக்கம் பார்த்தால் ஆஞ்சநேயர் போலவும் தோன்றும் இவ்வுருவம் சுதையால் செய்யப்பட்டு வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதன் நீளம் பன்னிரண்டு அடி, அகலம் ஒன்பதடி ஆகும். இராமேசுவரத்தின் தல புராணக் கதை சிற்ப வடிவத்தில் தனி ஒரு சன்னதியாக அமைக்கப்பட்டுள்ளது. அது இராமலிங்கப் பிரதிட்டை சன்னதி என்று அழைக்கப்படுகிறது. அதில் உள்ள இராமர், சீதை, சிவலிங்கம், தேவர்கள் ஆகிய அனைவரது உருவங்களும் சுதையால் செய்யப்பட்டு வண்ணம் பூசப்பட்டவையாகும். திருவிடை மருதூரில் மகாலிங்கேசுவரர் ஆலயத்தின் உட்புறத்தில் புராண நிகழ்ச்சிகள் சில, சுதைச் சிற்ப வடிவங்களில் அமைந்துள்ளன. மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்து மண்டபங்கள் பலவற்றிலும், சிறப்பான வகையில் கலைத்திறன் மிக்க சுதை வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இவை நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட சிற்பங்களாகும்.
விழாக் காலச் சுதைச் சிற்பங்கள்
விழாக் காலங்களில் சுடுமண் சிற்பங்கள் செய்து வைக்கப்படுவது போலவே சுதைச் சிற்பங்களும் செய்யப்பட்டன. விழா முடிந்ததும் அச்சிற்பங்கள் நீரில் கரைக்கப்பட்டன. கிராமப் புறங்களில் அய்யனார், மதுரை வீரன், சுடலை மாடன், காளியம்மன், முத்தியாளம்மன் (முத்தாலம்மன்), அங்காளம்மன், மாரியம்மன், எல்லையம்மன் முதலிய தேவதைகளின் கோயில்களில் கல் மற்றும் சுடுமண் சிலைகளேயன்றிச் சுதைச் சிற்பங்களும் செய்து வழிபடப்படுகின்றன. பல சிற்பங்கள் திறந்த வெளிகளில் செய்து வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கல் மற்றும் செப்புத் திருமேனிகளைப் போன்றே மரச் சிற்பங்களும் பரவலாகச் செய்விக்கப் பட்டன. கோயில்களிலும், கோபுரங்களிலும் அவை இடம் பெற்றன. கோயில் வாகனங்கள் அனைத்தும் தூக்கிச் செல்ல எளிதாக இருக்கும் பொருட்டு மரத்தாலேயே செய்யப் பட்டன. கோயில் கதவுகளை ஆன்மீக வாயில்கள் என்று அக்காலத்தில் கருதியிருக்க வேண்டும். அதனடிப் படையில் அவற்றிலும் சிற்பங்கள் செய்து பொருத்தப்பட்டன. திருவிழாக் காலங்களில் இறைவன் வீதி உலாச் செல்வதற்காக, நடமாடும் கோயில்களாக மரத் தேர்கள் செய்யப் பட்டன. அவற்றில் சிற்பங்கள் வடிக்கப் பட்டன. இதனால் கோயிலுக்குள் வராத ஒடுக்கப் பட்ட மக்களும் இறைவனின் பல்வேறு கதைகள் பற்றி அறிந்து கொள்ள ஏதுவானது.
தமிழகத்தில் உள்ள கிருத்தவத் திருச்சபைகளில் சிற்பங்களும், பீடங்களும் மரத்தால் செய்விக்கப் பட்டன. அவர்களது திருவிழாக் காலங்களிலும் தேர் இழுக்கப் பட்டது. அத்தேர்களில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு, பழைய புதிய ஏற்பாடுகள் தொடர்பான சிற்பங்கள் இடம் பெற்றன. இதனைத் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் அதிகம் காணலாம். மன்னர்களின் செல்வாக்குக் குறைந்த தருணத்தில் நகரத்தார்கள் கலைஞர்களை ஆதரித்தனர். இதனால் நகரத்தார் வீடுகளின் கதவுகளும் நிலைகளும் மரச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டன. இது மரக்கலை வளர்ச்சியில் ஒரு புதிய கட்டமெனலாம். தற்போது தமிழகத்தில் கிடைக்கும் மரச் சிற்பங்கள் ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு உட்பட்டவையே ஆகும்.
தந்தச் சிற்பங்கள் பற்றி இலக்கியங்களில் செய்திகள் கூறப்பட்டிருப்பினும் இன்று கிடைக்கும் சிற்பங்கள் முந்நூறு ஆண்டுகளுக்கு உட்பட்டவையே. இவை பெரும்பாலும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவையாகும். இவற்றில் சில வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும், திருவரங்கம், மதுரைக் கோயில்களின் காட்சிக் கூடங்களிலும் உள்ளன.
தமிழகத்தில் பல கிராமங்களில் சுடுமண் சிற்பங்களும், சுதைச் சிற்பங்களும் செய்து வழிபடப் பட்டன. இன்றும் திருவிழாக் காலங்களில் வழிபடப் படுகின்றன. அய்யனார், மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் சுடு மண்ணாலும், சுதையாலும் செய்யப்பட்டன. திருவரங்கம், சமயபுரம், அழகர் கோயில், சீர்காழி, மதுரை கூடல் அழகர் கோயில் ஆகிய கோயில்களில் கருவறை மூலவர் சிற்பம் சுதையால் செய்து வைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் மேற்பகுதியிலும், கோபுரங்களிலும் சுதைச் சிற்பங்கள் செய்து வைக்கப் பட்டுள்ளன. அவற்றிற்கு வண்ணமும் பூசப் பட்டுள்ளது. பழனியிலும், திருச்செங்கோட்டிலும் நவ பாஷாணக் கலவைச் சிற்பம் செய்யப்பட்டது. திருவட்டாறு, சுசீந்திரம் கோயில்களில் கடு சர்க்கரைக் கலவைச் சிற்பங்கள் உள்ளன.
செப்புத் திருமேனிகள் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு இவற்றின் கலவையால் உருவாக்கப் பட்டதாகும். தமிழகத்தில் சங்க காலத்தில் தொடங்கி, பல்லவர் காலத்தில் வளர்ந்து, சோழர் காலத்தில் இக்கலை பெருவளர்ச்சி கண்டது. தென்னிந்தியச் செப்புத் திருமேனிகள் என்றால் சோழர்கள்தாம் நினைவுக்கு வருவர். அவ்வகையில் கனமான அமைப்புடைய அவர்களது படிமங்கள் உலகப் புகழ் பெற்றனவாகும். விசயநகர – நாயக்க மன்னர்களும் இம்மரபைப் பெரிதும் பின்பற்றினர். இறையுருவங்களே அன்றிச் சமயக் குரவர்களான நாயன்மார்களுக்கும், ஆழ்வார்களுக்கும் கூடப் படிமங்கள் செய்விக்கப்பட்டன. இன்றும் இக்கலை வளர்ந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் சுவாமி மலையில் பலகலை வல்லுநர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். முன்னமே குறிப்பிட்டது போல் இத்திருமேனிகள் கோயில் திருவிழாக்களின் போது பல்லக்கில் வீதிகளுக்கு எடுத்துச் செல்லப் படுபவை ஆகும்.
தமிழகத்தில் கல் மற்றும் செப்புத் திருமேனிகளைப் போன்றே மரச் சிற்பங்களும் பரவலாகச் செய்விக்கப் பட்டன. கோயில்களிலும், கோபுரங்களிலும் அவை இடம் பெற்றன. கோயில் வாகனங்கள் அனைத்தும் தூக்கிச் செல்ல எளிதாக இருக்கும் பொருட்டு மரத்தாலேயே செய்யப் பட்டன. கோயில் கதவுகளை ஆன்மீக வாயில்கள் என்று அக்காலத்தில் கருதியிருக்க வேண்டும். அதனடிப் படையில் அவற்றிலும் சிற்பங்கள் செய்து பொருத்தப்பட்டன. திருவிழாக் காலங்களில் இறைவன் வீதி உலாச் செல்வதற்காக, நடமாடும் கோயில்களாக மரத் தேர்கள் செய்யப் பட்டன. அவற்றில் சிற்பங்கள் வடிக்கப் பட்டன. இதனால் கோயிலுக்குள் வராத ஒடுக்கப் பட்ட மக்களும் இறைவனின் பல்வேறு கதைகள் பற்றி அறிந்து கொள்ள ஏதுவானது.
தமிழகத்தில் உள்ள கிருத்தவத் திருச்சபைகளில் சிற்பங்களும், பீடங்களும் மரத்தால் செய்விக்கப் பட்டன. அவர்களது திருவிழாக் காலங்களிலும் தேர் இழுக்கப் பட்டது. அத்தேர்களில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு, பழைய புதிய ஏற்பாடுகள் தொடர்பான சிற்பங்கள் இடம் பெற்றன. இதனைத் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் அதிகம் காணலாம். மன்னர்களின் செல்வாக்குக் குறைந்த தருணத்தில் நகரத்தார்கள் கலைஞர்களை ஆதரித்தனர். இதனால் நகரத்தார் வீடுகளின் கதவுகளும் நிலைகளும் மரச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டன. இது மரக்கலை வளர்ச்சியில் ஒரு புதிய கட்டமெனலாம். தற்போது தமிழகத்தில் கிடைக்கும் மரச் சிற்பங்கள் ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு உட்பட்டவையே ஆகும்.
தந்தச் சிற்பங்கள் பற்றி இலக்கியங்களில் செய்திகள் கூறப்பட்டிருப்பினும் இன்று கிடைக்கும் சிற்பங்கள் முந்நூறு ஆண்டுகளுக்கு உட்பட்டவையே. இவை பெரும்பாலும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவையாகும். இவற்றில் சில வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலும், திருவரங்கம், மதுரைக் கோயில்களின் காட்சிக் கூடங்களிலும் உள்ளன.
தமிழகத்தில் பல கிராமங்களில் சுடுமண் சிற்பங்களும், சுதைச் சிற்பங்களும் செய்து வழிபடப் பட்டன. இன்றும் திருவிழாக் காலங்களில் வழிபடப் படுகின்றன. அய்யனார், மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் சுடு மண்ணாலும், சுதையாலும் செய்யப்பட்டன. திருவரங்கம், சமயபுரம், அழகர் கோயில், சீர்காழி, மதுரை கூடல் அழகர் கோயில் ஆகிய கோயில்களில் கருவறை மூலவர் சிற்பம் சுதையால் செய்து வைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் மேற்பகுதியிலும், கோபுரங்களிலும் சுதைச் சிற்பங்கள் செய்து வைக்கப் பட்டுள்ளன. அவற்றிற்கு வண்ணமும் பூசப் பட்டுள்ளது. பழனியிலும், திருச்செங்கோட்டிலும் நவ பாஷாணக் கலவைச் சிற்பம் செய்யப்பட்டது. திருவட்டாறு, சுசீந்திரம் கோயில்களில் கடு சர்க்கரைக் கலவைச் சிற்பங்கள் உள்ளன.
பாடம் - 4
உலகின் பல நாடுகளில் இத்தகைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. உதாரணமாகப் பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கூறலாம். இந்நாடுகளில் கிடைத்துள்ள வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களைப் போலவே இந்தியாவிலும் பல இடங்களில் இப்பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. முதல் முதலாக உலகில் பாறை ஓவியமானது ஸ்பெயின் நாட்டில் அல்டமிரா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் பிம்பெட்கா என்னுமிடத்திலும், தமிழகத்தில் முதன் முதலாக மல்லபாடி என்னும் இடத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஐம்பது இடங்களுக்கு மேல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிவதற்கு இத்தகு பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன என்பதை அறிஞர்கள் இந்த ஓவியங்களை வைத்து நிறுவியுள்ளனர்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பதற்கு எழுத்துகளைப் பயன்படுத்துவதற்கு முந்தைய காலம் என விளக்கம் தருவார் வரலாற்று அறிஞர் எச்.டி.சங்கலியா (
(2). வரலாற்றுக் காலம்
எனப் பகுப்பர்.
அக்காலக் கட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்த மனித இனம், விட்டுச் சென்ற பாறை ஓவியங்களைப் பற்றியே இப்பகுதியில் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
விசயாலயன் எனும் சோழன், தஞ்சையையும் வல்லத்தையும் வென்ற மகிழ்ச்சியில், தான் வழிபடும் தெய்வமாகிய நிசும்பசூதனி என்ற துர்க்கைக் கோயிலைத் தஞ்சாவூரில் கட்டியுள்ளான். பக்தியார்வத்தால் நார்த்தா மலையிலுள்ள விசயாலய சோளீச்சுவரம், காளியாபட்டியிலுள்ள சிவன் கோயில், பனங்குடியிலுள்ள அகத்தீசுவரம் என்ற பரமேசுவரன் கோயில், விராலியூரிலுள்ள பூமீசுவரர் கோயில், விசலூரிலுள்ள மார்க்கசகாயேசுவரம், திருப்பூரிலுள்ள சிவன் கோயில், ஏனாதியிலுள்ள சிவன் கோயில் ஆகியவை விசயாலயன் காலத்தவையாகும்.
நகரத்தார் மலை என்பது நார்த்தா மலை எனத் திரிந்துள்ளது; அது புதுக்கோட்டை வட்டத்தில் உள்ளது. இவ்வூர் எட்டுக் குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இக்குன்றுகளுள் ஒன்றாகிய மேலை மலையில் கிழக்கு நோக்கி இரண்டு குகைக் கோயில்களும், ஒரு கட்டுக் கோயிலும் காணப்படுகின்றன. வலப்பக்கத்திலுள்ள சமணர் குகைக் கோயில் வைணவக் கோயிலாக மாற்றப்பட்டுவிட்டது. தெற்கிலுள்ள குகைக் கோயில் பழியிலி ஈசுவரம் என்ற சிவன் கோயிலாகும்.
இந்த இரு குகைக்கோயில்களின் அடிவாரத்திற்குக் கிழக்கேயுள்ள கட்டுக்கோயிலில் கருவறையும் அர்த்த மண்டபமும், கற்றளி (கல்லால் ஆகிய கோயில்)யைச் சுற்றிச் சிதைந்து காணப்படும் பரிவார தேவதைகளின் ஒரு தளத்தையுடைய ஆறு சிறு கோயில்களும் உள்ளன. நடுவிலுள்ள முதன்மைச் சிறப்புடைய கற்றளியே விசயாலய சோளீச்சுவரம் ஆகும்.
வரலாற்று ஆசிரியர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் விசயாலய சோளீச்சுவரம் பற்றி எழுதுகையில், “கோயில் மேற்குப் பார்த்த சன்னிதியை உடையது. ஓங்கார வடிவுடைய கருவறை நான்கு மூலைகளிலும் நான்கு தூண்கள் நிறுவப் பெற்ற 29 அடி சதுரமுடைய மண்டபத்திற்குள் அமைக்கப் பெற்று, உருண்டை வடிவமுடைய இலிங்கம் பிரதி்ட்டை செய்யப் பெற்றுள்ளது. இது நாலு தளக் கோயிலாகும். கருவறைக்கு மேலுள்ள இரு தளங்கள் முகப்பில் சாலைகளாலும் கூடங்களாலும், இவற்றிற்கிடையே அழகிய சிலைகளைக் கொண்ட நாசிகை என்ற இடைவெளியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நான்காவது தளம் கருவறையின் அமைப்பைப் போலவே வட்டவடிவமானது. கிரீவம் (கழுத்து) எனப்படும் இதன் மேல்பாகத்தில் நாற்புறங்களிலும் தேவகோஷ்டங்களும் விமான தேவதைகளும் திகழ்கின்றன. சிகரம் வட்டவடிவமானது. இப்பொழுது காணப்படும் ஸ்தூபி பழைய ஸ்தூபியன்று.
கருவறையில் வெளிப்புறச் சுவர்களில் தேவகோஷ்டங்கள் இல்லை. வெளிப்புறச் சுவர்கள் அரைத்தூண்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் போதிகைகள் 45% கோண வடிவுடையன. இப்போதிகைகள் பல்லவர் காலத்துப் போதிகைகளைப் போல நடுவில் பட்டையாகவும் இரு புறங்களிலும் சுருண்டு வருவனவாகவும் உள்ளன. மண்டபத்தைத் தாங்க மத்தியில் கற்றூண்கள் உள்ளன.
அர்த்த மண்டப வாயிலின் இருபுறங்களையும் ஐந்தடி உயரமுடைய துவார பாலகர் இருவர் அலங்கரிக்கின்றனர்” என்று (சோழர் கலைப்பாணி, பக்- 43-44) கட்டடக் கலைக் கூறுகளை விளக்கிக் காட்டியுள்ளார்.
முன்னொரு காலத்தி்ல் கொடும்பாளூர், இருக்குவேளிரால் ஆளப்பட்ட சிறப்புடையது; பண்டு 108 கோயில்கள் இருந்தன. இக்காலத்தில் சோழர் காலத்துக் கோயில்களாக மூவர் கோயில், முசுகுந்தேசுவரர் கோயில் ஆகிய இரண்டு கோயில்கள் உள்ளன.
பல்லவர்காலத்தில் மிகச் சிறப்பாக இக்கோயில் அமைக்கப்பட்டது. நல்ல கட்டடக் கலையழகு நிறைந்த கோயிலாக இன்றும் இத்தலம் விளங்கி வருகிறது.
சிற்பச் சிறப்புமிக்க ‘வௌவானத்தி மண்டபம்’ கட்டடக் கலைக்குத் தனி முத்திரை பெற்றது. திருவீழிமிழலைத் தலத்தில் அடியார்க்கு அன்னம் பாவிக்க (உணவுதர) அப்பரும் சம்பந்தரும் அமைத்த திருமடங்களைக் காணலாம்.
தூங்கானைமாடக் கோயில் வகையைச் சார்ந்த இக்கோயிலி்ல் கருவறை அர்த்த மண்டபம் கொண்டது. இவற்றைச் சுற்றி மூடப்பட்ட பிராகாரமும், அதன் முன்னர் மகா மண்டபமும் காணப்படுகின்றன; பிற்காலத்தில் கட்டப்பட்ட கோபுர வாயிலும் உண்டு.
அர்த்த மண்டபத்தில் இரு வெள்ளெருக்கத் தூண்களும், உட் பிராகாரத்தின் கீழ்ப் பகுதியில் ஏழு கல்தூண்களும், மகா மண்டபத்தில் நான்கு அழகிய தூண்களும் அணிசெய்கின்றன.
கருவறை அர்த்த மண்டபம் முதலியவற்றின் புறச் சுவர்களை அரைத்தூண்கள், கும்பபஞ்சரங்கள், தேவ கோட்டங்கள் ஆகியவை சிற்ப வேலைப்பாட்டுடன் அழகு செய்கின்றன. தேவ கோட்டத்தின் மேலுள்ள மகரதோரணங்கள் அணிசெய்யும் பாங்குடன் நடுவில் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது. கொடுங்கையின் வெளிப்புறத்தில் கூடுகளும் அமைப்பாக உள்ளன.
ஆலயத்திற்கு விமானம் முகம் போன்றது. இக்கோயில் விமானம் மூன்று தளங்களைக் கொண்டது. முதலிரண்டு தளங்களிலும் சதுரவடிவமும் நீண்ட சதுர வடிவமும் முறையே அமைந்து சிறு கோபுர அமைப்புகளாகக் காட்சியளிக்கின்றன.
கோயிலின் தென்புறத்தில் இறைவிக்கெனத் தனிக்கோயில் உள்ளது. இங்கு கருவறை அர்த்த மண்டபம், உள்பிராகாரம், மகாமண்படம் ஆகியவற்றைக் கொண்டும், வெளிப்பிராகாரத்தில் விநாயகர் கோயில், திருமுருகன் கோயிலுடனும் உள்ளது. விநாயகர் கோயிலின் முன்பகுதியை அமர்ந்த நிலையுடைய சிங்கங்களுள்ள தூண்கள் தாங்கி நிற்கின்றன. கோயிலின் கீழ்ப்புறத்தில் மரபுப்படி நந்திபீடமும் கொடிக்கம்பமும் காணப்படுகின்றன.
1.தஞ்சாவூர் பிரகதீசுவரர் கோயில்,
2.கங்கைகொண்ட சோழேச்சுரம் கோயில்,
3.திரிபுவனம் கம்பஹரேசுவரர் கோயில்.
கி.பி. 1009-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் பரந்த வெளியில் கட்டடப்பட்ட சிறந்த கட்டடக் கலைச் சிறப்பிற்குரியது.
முதலாம் இராசராசன் காலத்திற்கு முன், கருவறையில் அமைந்த விமானம், ஆலய வாயிற்கோபுரத்தை விட உயரத்திற் குறைந்தே இருந்தது. ஆனால், இராசராசன் காலத்தில் விமானத்தை 216 அடி உயரத்தில் அமைத்துப் பெரும்புகழ் கொண்டான்.
தனித்தன்மை
கிழக்கு நோக்கிய கோயிற் கருவறையில் மிகப் பெரிய இலிங்கம் (பிரகதீசுவரர்) நிறுவி, அதனை நீராட்ட, மேனிலை ஆளோடிகள் அமைக்கப்பட்டு, மேனிலையிலே தென்பாற் சுவரில் நீர்த்தொட்டியும் அமைக்கப்பட்டது. இத்தகைய கட்டடக் கலையமைப்பினை நம் நாட்டில் இங்கு மட்டுமே காணமுடியும்.
பெரிய கோயில், பெருவுடையார், பெரிய நந்தி, ஆகியவற்றுக் கேற்பப் பெரிய விமானம் அமைந்துள்ளது. பெருவுடையாருக்கேற்ப, பெரிய நாயகியாகிய அம்மை தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
மகாமண்டபத்தையும் கருவறையையும் சுற்றிய தேவ கோட்டங்களில் சிவமூர்த்தங்களும் சக்திகளும் அமைத்திருப்பது இராசராசனின் பக்தியீடுபாட்டைப் புலப்படுத்தும்.
பரிவாரக் கோயில்களாக வராகியம்மன் கோயில், சண்டேசர் கோயில், விநாயகர் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியவை உள்ளன.
ஆகம வழிபாட்டின் ஒரு கூறாக வலம் வரும் போது, கோயில் தூபி, விழுநீர்ப்போக்கு ஆகியவற்றைத் தாண்டிச் செல்லக் கூடாது; இதனை மனத்துட்கொண்டு, விமானக் கலசத்தின் நிழல் திருச்சுற்றில் விழாதவாறு அமைத்ததும் விழுநீர்ப்போக்கு ஓர் ஆள் உயரத்தின் மேல் ஓடிவந்து விழுமாறு அமைத்ததும், அக்காலச் சிற்பியர் புரிந்த மாற்றங்களாகும்.
பரந்த வெளிப் பிராகாரத்தில், திருச்சுற்று மாளிகையில் இலிங்கங்களையும் பிற தெய்வங்களையும் நிறுவி ஆலயப் பாதுகாப்பிற்கு மன்னன் வழிதேடியுள்ளான். அனைத்திலும் சிறந்த திருப்பணியாகப் பிரமந்திரக் கல்லுடன் சார்த்தித் தட்சண மேருவை நிறுவியுள்ளது மதித்துப் போற்றத்தக்கது.
புகழ்மிக்கது
இமயத்திலும் சிதம்பரத்திலும் ‘மகாமேரு’ எனும் சக்தி தன் ஆற்றலைக் காட்டிக் கொண்டிருக்கிறது ; அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற பேருண்மையை உணர்ந்திருந்தான் இராசராசன். அதே ஆற்றலை, தான் கட்டும் தஞ்சைப் பெரிய கோயிலிலும் நிறுவ முயன்று வெற்றி பெற்றான் என்பர். டாக்டர் இரா.நாகசாமி, “உலகிலேயே மிக உயர்ந்த மலைச்சிகரம் மகாமேரு அன்று; இந்திய நாட்டில், ஏன், வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மிக உயரமான சிகரம் உடையதாகக் கட்டப்பட்ட கோயில் தக்ஷிணமேருவாம் தஞ்சைக் கோயில். மேரு தூய்மையான சுத்தமான பொருளால் ஆன மலை; அதுபோலத் தஞ்சைக்கோயில் அடியிலிருந்து முடிவரை கருங்கல்லாலேயே கட்டப்பட்ட கோயில். கல், செங்கல் அல்லது மரம் என்னும் ஏதாவது பொருளால் ஒரு கோயில் கட்டப்படுமானால் அதைச் சுத்தமான கோயில் எனக் கட்டிட வல்லுநர் கூறுவர். மேரு பொன்மயமான சிகரம் எனக்கண்டோம். தஞ்சைப் பெருங்கோயிலைக் கட்டிய இராஜராஜன் இக்கோயிலின் வானளாவிய சிகரத்தையும் பொன் வேய்ந்து ஒளிமயமான சிகரமாக்கினான்” (தஞ்சை இராசராசேச்சுரம் திருக்குட நன்னீராட்டு மலர், 1997, பக்-8) என்று விளக்கிச் செல்வது மனங்கொள்ளத்தக்க அருங்குறிப்பாகும்.
மாமன்னன் இராசராசன் கட்டிய பெரிய கோயிலுக்கு மிகவும் ஆன்மநல ஆற்றலை வழங்கக் கூடிய வகையில் அமைந்தது, நந்தி மண்டபத்திற்கு அருகில் கட்டப்பட்ட பெரிய நாயகி கோயிலாகும். தஞ்சைப் பெரிய கோயில் விமானத்துக்கு வடமேற்கேயுள்ள சுப்பிரமணியர் கோயில் நாயக்கர் காலச் சிறப்புமிகு கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
தஞ்சையில் இராசராசன் பெரிய கோயிலைத் தட்சிணமேருவாகக் கட்டிய காலத்தில், அவன் தேவி ஒலோகமாதேவி (உலக மாதேவி) உத்தர (வட) கயிலாயம் எனும் உத்தரமேருவைத் திருவையாற்றில் எடுப்பித்தாள். இ்ங்குக் கீழ்ப்பிராகாரம் நுழைகையில் ஏழுநிலை கொண்ட இராசகோபுரம் உள்ளது. அடுத்து இரண்டாம் கோபுரம் மூன்று நிலை கொண்டது; இரு கைகளுடன் துவார பாலகர்கள் உள்ளனர். கோபுர மாடத்தே நந்திதேவர் தம் தேவியுடன் காணப்படுகிறார்.
விக்கிரமசோழன் கட்டிய மூன்றாம் கோபுர முகப்பில் இருகை துவாரபாலகர்கள் உண்டு. மூன்றாம் பிராகாரத்தே தெற்கு மூலையில் (தென் மேற்கே) ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே ! எனும் வாய்மொழி இலக்கியமாக விளங்கும் ஐயாறப்பரே ஒலிப்பது (ஒரு ஒலி எதிரொலியாக ஏழு ஒலியெழும்பும் கட்டடக் கலை நுட்பமுடையது) போன்ற அற்புதம் உண்டு. தொடர்ந்து வலம் வருகையில் தங்கத்தகடு போர்த்திய கொடிமரம், சித்தி விநாயகர் அமைந்திருக்க, 200 கால் மண்டபத்தைக் காணலாம். நந்தியம் பெருமானும் காட்சியளிக்கிறார். அடுத்துச் சொக்கட்டான் மண்டபம், ஸ்நபன மண்டபம் கடந்து அர்த்த மண்டபம் அமைந்துள்ளது; கருவறையில் ஐயாறப்பரைச் சிவலிங்கவுருவில் வழிபடலாம்.
ஐயாறப்பர் கோயில் சன்னிதியின் இருபுறமும் 5 அடி உயரத்தில் இருகைகளுடன் கூடிய துவாரபாலகர்கள், பல்லவர் பாணியிலமைந்த சோழர்காலப் படைப்புகளாக உள்ளனர்.
உட்பிராகாரம்
ஐயாறப்பரை வழிபட்டுக் கொண்டு முதல் பிராகாரத்தே சிவயோக தட்சணாமூர்த்தியையும், எதிரில் சப்தமாதரையும் நாயன்மார் அறுபத்து மூவரையும் கண்டு வழிபடலாம்.
கீழ்ப்புறவாயில் வழியே வருகையில் சோமாஸ்கந்த மண்டபம் முத்திமண்டபம், ஐயாற்றுப் புராண வரலாற்றை வண்ணச் சித்திரமாகக் காட்டும் திருநட மாளிகை, ஆதிவிநாயகர், நவக்கிரகங்கள், பஞ்ச பூதலிங்கங்கள், தெய்வநலம் நிறைந்த அடியவர்கள் செபம்புரி மண்டபம் முதலியவை சிற்ப எழிலுடன் காட்சியளிக்கக் காணலாம்.
மேற்பிராகாரத்தே வில்லேந்திய வேலவன் வள்ளி தேவயானையுடன் காட்சியளிக்கிறான். வடமேற்கு முலையில் காசிவிசுவநாதர் விசாலாட்சி உடன் இருக்கும் திருக்கோலம் உண்டு. முச்சக்தி மண்டபத்தே துர்க்கை சரசுவதி திருமகள் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். அருகே சித்தர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயில் எடுப்பிக்கக் காரணராயி்ருந்த அகப்பேய்ச்சித்தர் இங்கு இலிங்க வடிவில் வழிபடப்படுகிறார்; கோயில் மரபுப்படி சண்டேசர் சன்னிதியும் உள்ளது.
ஏழூர்த்தலச் சிறப்பு
திருவையாற்றைத் தலைமைக் கோயிலிடமாகக் கொண்டு, ஆறு சிவாலயங்கள் நல்ல கட்டடக் கலைச் சிறப்புடன் உள்ளன. எல்லாவற்றையும் தொகுத்து ஏழூர்க்கோயில்கள் என்றும், சப்தஸ்தானக் கோயில்கள் என்றும் அழைப்பர்.
திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஏழும் பாடல் பெற்ற சிவாலயங்கள்; ஏழு முனிபுங்கவர் (சப்தரிஷி) ஆசிரமங்களாகப் போற்றிப் புகழப்படுபவை.
பெருமை
பதஞ்சலி முனிவரும் புலிக்கால் முனிவரும் பூசித்த பெருமை கொண்டது இந்தத் திருத்தலம் ; புலிக்கால் முனிவர் காரணமாக இத்தலத்தைப் பெரும்பற்றப் புலியூர் என்பர்.
நடராசர் தம் தேவி சிவகாமியுடன் வீற்றிருக்கும் இடமும், அதற்கருகேயுள்ள இடமும், கனக சபையும் சித் சபையுமாகும். கனக சபையாகிய பொன்னம்பலம் முதற் பராந்தக சோழனால் பொன் தகடால் வேயப்பட்டது; பிறகு, பலரும் இத்திருப்பணியில் ஈடுபட்டனர். நடராசர் சன்னிதிக்கு எதிரே பொன் தகட்டால் ஆன கொடிக் கம்பமும் பலி பீடமும் உண்டு. அதன் தென்பால் ‘நிருத்த சபை’ உள்ளது; அங்கு ஊர்த்துவ தாண்டவமூர்த்தி சன்னிதியும், சரப மூர்த்தி சன்னிதியும் அமைந்துள்ளன. நிருத்த சபைக்குச் செல்லும் படியருகே தூணில் காலசம்மார மூர்த்தியின் திருவுருவம் மிகச் சிறப்பான வடிவமைப்பினைக் கொண்டது.
ஆடல் வல்லானது பொன்னம்பலத்தைச் சுற்றித் திருச்சுற்றும், திருச்சுற்று மாளிகையும் உள்ளன.
மேற்குக் கோபுர நுழைவாயிற்கு அருகே தென்பால் கற்பக விநாயகர் கோயிலும், உள்ளே நுழைந்தால் மேற்குக் கோபுரத்தின் தென்பால் முக்குறுணி விநாயகர் கோயிலும், வடபால் சுப்பிரமணியர் கோயிலும், சோமசுந்தரக் கடவுள் கோயிலும் உள்ளன.
மண்டபங்கள்
மூன்றாம் பெரிய பிராகாரத்தில் வடபால் சிவகங்கைத் தீர்த்தக் குளம் நல்ல படிக்கரையமைப்புடன் உள்ளது; சிவகங்கைக்கு மேற்பால் ஒற்றைக் கால் மண்டபம், நூற்றுக் கால் மண்டபம், சிவகாமியம்மன் கோயில், துர்க்கைக் கோயில், பாண்டிய நாயகம் கோயில் முதலியவற்றைக் காணலாம். சிவகங்கைக்குக் கீழ்ப்புறமாக இராசசபை எனும் ஆயிரம் கால் மண்டபத்தைக் கட்டடக் கலைச் சிறப்புடன் கண்டு கொள்ளலாம்.
விலங்கு போன்று வேடம் அணிந்து ஆடுதல் என்னும் வேட்டைச் சடங்குகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்களாக இவற்றைக் கருதலாம்.
குதிரையின் மீது மனிதன் – கீழ்வாலை
அடுத்ததாகப் படகு ஒன்றில் நான்கு மனிதர்கள் செல்வது போன்ற ஓவியம் காணப்படுகிறது. இதில் நான்கு மனிதர்களது முகங்களும் பறவை முகங்களாகவே காணப்படுகின்றன.
கீழ்வாலையில் காணப்படும் மனித உருவங்களில் ஓர் உருவம் மட்டும் பெரியதாக உள்ளது; அம்மனிதனின் நீண்ட தலைமுடி இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. இது அவ்வுருவத்திற்குரிய சிறப்பைச் சுட்டுவதாக அமைகிறது. அவ்வுருவத்தை அக்குழுவின் தலைவன் என்றோ அல்லது முன்னோரது நினைவுச் சின்னம் என்றோ கருதலாம்.
மதுரை மாவட்டத்தில் திருமலை என்னும் இடத்தில் கிடைத்த பாறை ஓவியத்தில் இரண்டு மனிதர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய கையில் வில் போன்ற ஒருவகை ஆயுதம் உள்ளது. இவ்வோவியம் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளது. இவ்விரு மனித வடிவங்களுக்கு இடையே மூன்று கோடுகள் நீர் வீழ்வது போன்றும் அலை போன்றும் காட்டப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஓவியத்தை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர்.கோ.விசய வேணுகோபால் அவர்கள் கண்டுபிடித்தார். இவ்வோவியத்தில் மனித உருவங்கள் இடம் பெற்றுள்ளன. தொன்மையான ஓவியங்களில் காணப்படும் தட்டையான உடலமைப்பை உடைய உருவங்களாக இவை உள்ளன. வேட்டைக் காட்சி, ஆட்டுச் சண்டை ஆகிய இரு நிகழ்வினைக் காட்டும் ஓவியங்களில் மனித உருவங்கள் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. இவை வெள்ளை மற்றும் செந்நிறத்தால் அடர்த்தியான பூச்சு முறையில் அமைந்துள்ளன. மனித உருவங்களின் தலையைச் சுற்றி வட்ட வடிவக் கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சில உருவங்கள் தலைப்பாகை அணிந்திருப்பது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் அருகே இனக்குழுத் தலைவன் எனக் கருதப்படும் பெரிய மனித உருவம் வரையப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் காமயக் கவுண்டன் பட்டியில் கிடைத்துள்ள ஓவியத்தில் படகில் மனிதன் நின்றிருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இம்மனித உருவம் கோட்டோவியமாக அமைந்துள்ளது.
கோயம்புத்தூருக்கு அருகே உள்ள வெள்ளருக்கம் பாளையத்தில் மனிதர் எழுவர் ஒன்று சேர்ந்து கைகோத்து வரிசையாகச் செல்வது போன்று வரையப்பட்டுள்ளது. இதனை நடன நிகழ்ச்சியாகக் கருதலாம்.
நீலகிரி மாவட்டம் கொணவக்கரையில் உள்ள ஓவியத்தில் பெரிய,சிறிய உருவங்களாக மனித உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. கைகள் உயர்ந்த நிலையிலும் கைவிரல்கள் தெளிவாகவும் வரையப்பட்டுள்ளன. விரல்களின் நகங்கள் கூடத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதனை அடுத்து வரிசையாக நின்றிருக்கும் மனித உருவங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு பெரிய உருவத்தின் முன் பல சிறிய உருவங்கள் கையில் சிறிய வில்லுடன் நிற்கும் நிலையில் உள்ளன.
கிருஷ்ணகிரிக்கு அருகே மயிலாடும் பாறை என்னும் ஊரில் உள்ள ஓவியத்தில் இருவர் எதிரெதிராக இணைந்த நிலையில் வரையப்பட்டுள்ளனர். இதனை உடலுறவுக் காட்சி என்று கருதுவர். இத்தகு ஓவியம் தமிழகத்தில் கிடைத்துள்ள ஓவியங்களில் அரிதான ஒன்றாகும்.
மனித வடிவங்கள் – மயிலாடும்பாறை
இவை தவிரச் சிறுமலை, வெள்ளருக்கம் பாளையம், மல்லபாடி போன்ற இடங்களில் வேட்டையாடும் மனித ஓவியங்களைக் காணலாம்.
செத்தவரை என்னுமிடத்தில் உள்ள ஓவியத்தில் கேடயம், வேல் ஆகிய வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. இவை தவிர வேட்டைக் காட்சி தொடர்பான ஓவியங்கள் பலவற்றில் வாள் மற்றும் எறிபடை முதலான கருவிகளும் இடம் பெற்றுள்ளன.
தென்னார்க்காடு மாவட்டம் பாடியந்தல் என்னுமிடத்தில் மான்தோல் போன்ற வடிவுடைய ஒரு விரிப்பைக் காண முடிகிறது. தரை விரிப்புப் பற்றித் தமிழகத்தில் கிடைக்கப் பெற்ற முதல் ஓவியம் இதுவேயாகும்.
முதலாவது குறியீடானது, நீண்ட கோடும் அதனிடையே நான்கு குறுக்குக் கோடுகளும் கொண்டது. இது இடி அல்லது இடியுடன் கூடிய மழைக் காலத்தைச் சுட்டுவதாகக் கருதலாம். இரண்டாம் குறியீடு எட்டு எனும் எண் சற்று வலப்பக்கம் சாய்ந்து இருப்பது போல் காணப்படுகிறது. ஒரு தலைவனின் கீழ் ஊர்வலமாகச் செல்லுதல் எனப் பொருள் கொள்ளலாம் என்கிறார் ராசு.பவுன்துரை.
மூன்றாவது குறியீடு வடதிசையை நோக்கிச் செல்லுதல் என்பதைக் குறிக்கிறது எனவும், நான்காவது குறியீடு இசையொலி எழுப்புதல் என்னும் பொருளைக் குறிக்கிறது எனவும் ஐந்தாவது குறியீடு விழாக்காலம் என்பதைக் குறிக்கிறது எனவும் கொள்ளலாம் என்று மேற்சொன்ன ஆசிரியர் சுட்டுகிறார்.
இவை தவிரப் படகில் பயன்படுத்தப்படும் திசை திருப்பும் கருவி போன்ற ஒரு கருவியும் ஓவியமாக இங்குத் தீட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தில் செத்தவரை என்னுமிடத்தில் கை வடிவம் காணப்படுகிறது. இக்கை அடர்த்தியான வண்ணப் பூச்சு முறையில் தீட்டப்பட்டுள்ளது.
(1). மட்பாண்ட வண்ணப் பூச்சு
(2). மட்பாண்டக் கீறல் வரைவுகள்
(3). வண்ண வரைவுக் கல்மணிகள்
என்ற மூன்று நிலைகளில் பிரித்து அறியலாம்.
மட்பாண்ட வண்ணப் பூச்சு
பளபளப்பு ஊட்டப் பெற்று வண்ணக் கோடுகளும் வரைவுகளும் அமைந்த பல மட்பாண்டங்கள் காணப்படுகின்றன. இந்த வண்ணக் கோடுகள் வெள்ளை நிறத்திலும், செந்நிறத்திலும் அமைந்தவை. பெருங் கற்கால வரைவுகளுடன் கூடிய மட்பாண்டங்கள் பூம்புகார், உறையூர், ஆதிச்ச நல்லூர், கொற்கை, கொடுமணல், அழகன் குளம், அரிக்க மேடு போன்ற இடங்களில் கிடைத்துள்ளன.
மட்பாண்டங்களில் இடம் பெறும் மற்றொரு வகை வரைவுகள் கீறல் வடிவங்களாகும். கீறல் வரைவுகளில் கோடுகளும், குறியீடுகளும், உருவங்களும், பிற பயன்பாட்டுப் பொருட்களின் வடிவங்களும் இடம் பெறுகின்றன. அரிக்க மேட்டில் கிடைக்கப் பெற்ற மட்பாண்டத்தில் காணப்படும் பூ வேலைப் பாடுடைய கீறல் வடிவம், மனிதன், மான், மீன் வடிவங்கள் ஆகியவை ஓவியக் கலை மரபினைக் காட்ட வல்லன.
கொடுமணலில் உள்ள ஈமக் காட்டில் கற்பதுக்கைகள் மிகுதியாக உள்ளன. அவற்றில் சில அகழப்பட்ட போது அக்குழிகளில் மிக அழகிய வெள்ளை வண்ணம் பூசப் பெற்ற கார்னீலி்யன் மணிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இம்மணிகள் ஒருபுறம் வெள்ளை வண்ணப் பூச்சுடன் காணப்படுகின்றன.
பாடம் - 5
நின்குன்றத்து எழுதெழில் அம்பலங் காமவேள் அம்பின்தொழில்வீற் றிருந்த நகர்
(பரிபாடல் 18: 27-29)
ஓவியங்கள்
திருப்பரங் குன்றத்தில் இருந்த எழுத்து நிலை மண்டபம் தற்போது இல்லை. கால வெள்ளத்தில் அழிந்து போனது. இம்மண்டபத்தில் இரண்டு புராணக் கதைகள் வரைந்து வைக்கப் பட்டிருந்தன என்று பரிபாடல் கூறுகிறது. இவற்றில் ஒன்று அகலிகையின் கதை, மற்றொன்று இரதி, மன்மதன் உருவங்கள் ஆகும். இதனைக் கண்ட பெண்கள் சிலர் ஓவியத்தில் காணப்படும் உருவங்களை எவை என்று கேட்டதாகவும் அதனை அறிந்த சிலர் இது இரதியின் உருவம், இது மன்மதனின் உருவம் என்று அடையாளம் காட்டியதாகவும் பரிபாடல் தெரிவிக்கிறது. மேலும் அகலிகையின் வரலாற்றில் வரும் காட்சிகளை எழுத்து நிலை மண்டபத்தில் வரைந்து வைத்திருப்பதைக் கண்ட மக்களில் சிலர் அதில் ஒன்றிப் போயினர். அவற்றைக் கண்டவர்கள் இது இந்திரன் பூனையாக வந்த காட்சி; இது அகலிகையின் உருவம்; இது வெளியே சென்று திரும்பிய கௌதம முனிவன் உருவம்; இது கௌதமனின் கோபத்தால் கல்லான அகலிகையின் உருவம் என்று ஓவியத்தில் ஒன்றிப் போய்ப் பேசிக் கொண்டதாகப் பரிபாடலில் வருகிறது.
இரதி காமன் இவளிவன் எனா
அவிரகியர் வினவ வினாவிறுப் போரும்
இந்திரன் பூசை இவளக லிகைஇவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
ஒன்றிய படியிதென் றுரைசெய் வோரும்
இன்ன பலபல யெழுத்துநிலை மண்டபம்
(பரிபாடல் 19:48-53)
ஓவியங்கள்
காஞ்சி கயிலாச நாதர் கோயிலின் தென்புற, மேற்புறச் சிற்றாலயங்களில் இராச சிம்மன் காலத்தில் வரையப் பட்ட சில தெய்வ உருவங்களைக் காண முடிகிறது. தென்புறச் சிற்றாலயத்தின் உட்புறச் சுவர் ஒன்றில், சிவன், கந்தன், உமை சேர்ந்திருக்கும் சோமாஸ் கந்தர் உருவம் காட்சியளிக்கிறது. இவ்வுருவத்தின் பல பகுதிகள் அழிவுக்கு ஆளாகி இன்று இல்லாமல் போனாலும், எஞ்சிய பகுதிகள் பல்லவர் ஓவியக் கலையின் பேரெழுச்சியைக் காட்டுவனவாக உள்ளன. பீடம் ஒன்றின் வலப்புறத்தில் சுகாசனத்தில் சிவபெருமான் அமர்ந்துள்ளார். இடப் புறத்தில் உமை அமர்ந்துள்ளாள் அன்னையின் பாசப் பரிவுடன். அவளது மடியில் கந்தன் அமர்ந்துள்ளான். சிவனது அடியில் சிவகணம் ஒன்று பக்திப் பரவசத்துடன் அமர்ந்துள்ளது. பார்வதியின் பக்கத்தில் அவளது அடியவள் ஒருத்தி காட்சியளிக்கின்றாள். சோமாஸ் கந்தரின் உருவம் இன்று துண்டு துணுக்குகளாக இருந்தபோதிலும் அதனை வரையறுக்கும் வரிகள் வியப்பு மிக்க வீச்சைக் காட்டப் போதுமானவை என்று கலை வரலாற்றாசிரியர் க.சிவராம மூர்த்தி கருதுகின்றார்.
மேற்குப்புறச் சிற்றாலயம்
கயிலாச நாதர் கோயிலின் மேற்புறச் சிற்றாலயத்தின் புறச்சுவர்களில் கம்பீரமாக அமர்ந்த நிலையில் விளங்கும் நான்முகனின் வண்ணவுருவம் காட்சியளிக்கிறது. இதன் எதிர்ப்புற முள்ள சிற்றாலயப் புறச்சுவரில் சிவபெருமான் யோக மூர்த்தியாக யோகாசனத்தில் அமர்ந்துள்ள வண்ணக் கோலம் காணப்படுகிறது. அதன் அருகில் கின்னரப் பறவைகளின் உருவங்களும் காணப்படுகின்றன. கயிலாச நாதர் கோயில் சிற்பங்கள் மீது வெண்சுதை பூசப்பட்டு அவற்றில் வண்ணம் பூசப்பட்டமைக்கு அடையாளங்கள் உள்ளன. சிற்பங்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்பவும் ஆடை அணிகலன்களின் சிறப்பை உணர்த்தவும் இவ்வோவியப் பூச்சுகள் தரப்பட்டுள்ளன. இன்றும் கயிலாச நாதர் கோயில் சிற்பங்கள் சிலவற்றின் மீது இதனைக் காண முடிகிறது.
ஓவியங்கள்
சிவனது தாண்டவத்தைக் கண்டு தன்னை மறந்து ஆட்டத்தில் ஆழ்ந்து நிற்கும் பார்வதியின் உருவம் மட்டும் ஓவியமாக இன்று இக்கோயிலில் எஞ்சி நிற்கிறது. தொங்கல்கள் நிறைந்த விளிம்புகளைக் கொண்ட அழகான வண்ணக் குடையின் கீழே ஒரு காலை மடித்துச் சுவரில் வைத்து மற்றொரு காலைத் தரையில் ஊன்றிப் பார்வதி நிற்கிறாள். வேலைப்பாடு மிக்க மகுடம் அணிந்த தலை வலப்புறம் சாய்ந்துள்ளது. ஆட்டத்தில் ஆழ்ந்து போன நீண்ட கண்கள், வில்போன்ற புருவங்கள், கழுத்திலணிந்த ஆபரணங்கள், பூவேலை மிக்க இடையாடை ஆகியவை பார்வதியின் எழிற் கோலத்தை எடுப்பாகக் காட்டுகின்றன. பல்லவர் காலத்து அரச மகளிரின் எழிற்கோலத்தை இவ்வோவியம் காட்டுகிறது.
சமணர் கால ஓவியங்கள்
சித்தன்ன வாசல் ஓவியம்
மகேந்திர பல்லவன் கல்வெட்டுகள் திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையோடு நின்றுவிடுகின்றன. மகேந்திர வர்மனின் கல்வெட்டு என்று உறுதியாகக் கூறும் கல்வெட்டுகள் காவிரிக்குத் தெற்கே இல்லை. இந்நிலையில் மகேந்திர வர்மன் ஆட்சியில் இல்லாத புதுக்கோட்டை மாவட்டத்துச் சித்தன்ன வாசல் குடைவரைக் கோயிலை மகேந்திர வர்மன் காலத்தது என்று கருவது பொருத்தம் அற்றது. குடைவரையில் பொறிக்கப் பட்ட பாடல் வடிவில் உள்ள கல்வெட்டு மதுரையைச் சார்ந்த இளங்கௌதமன் என்ற சமண முனிவன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னனின் ஆதரவில் சித்தன்ன வாசல் அறிவர் கோயிலின் அகமண்டபத்தைப் புதுக்கி முகமண்டபத்தை எடுத்ததாகக் கீழ்வருமாறு கல்வெட்டுக் கூறுகிறது:
திருத்திய பெரும்புகழ்த் தைவ தரிசனத்
தருந்தவ முனிவனைப் பொருட்செல்வன்
அறங்கிளர் நிலைமை இளங்கௌ தமனெனும்
வளங்கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
அவனேய் பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுத
லார்கெழு வைவேல் அவநீப சேகரன்
சீர்கெழு செங்கோல் சிரீவல்லவன்
என்றிப் பலவுங் குறிகொள் இனிதவை …… . . . . . . . . . . . . . .
பண்ணவர் கோயில் பாங்குறச் செய்வித்து
அண்ணல்வாஇ லறிவர் கோஇன்
முன்னால் மண்டகம் கல்லால் இயற்றி . . . . . . . . . . . .
அழியா வகையாற் கண்டனனே . . . . . . . . . . . .
சீர்மதிரை ஆசிரியனண்ண லகமண்டகம்
புதுக்கி ஆங்கறிவர்கோயில் முகமண்டக
மெடுத்தான் முன்
இதனால் சித்தன்ன வாசலிலுள்ள ஓவியங்கள் பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் காலத்தவை என்று கூறலாம். கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் சித்தன்ன வாசலின் குடைவரைக் கோயிலின் அக மண்டபம் (கருவறை) முகமண்டபம் (முன்மண்டபம்) புதுப்பிக்கப் பட்டு அவற்றின் தூண்களிலும் விதானங்களிலும் ஓவியங்கள் தீட்டப் பட்டுள்ளன. வெண்சுதையின் மீது பொருத்தமான வண்ணங்கள் கொண்டு வரையப் பட்ட, உணர்ச்சியின் வெளிப்பாடாய் இங்குள்ள ஓவியங்கள் உள்ளன. சமண சமயத்தின் உட்பொருளை இவை உணர்த்துகின்றன. கருவறையின் உட்புறம் மேற் கட்டி விரிப்பு போன்று விதானத்தில் ஓவியம் காணப்படுகின்றது. இவற்றில் அறிவனைச் சுமக்கும் சிங்கம் சுமந்த அரியாசனமும் இயக்கர்களின் உருவங்களும் காணப்படுகின்றன.
நாட்டிய நங்கையர் ஓவியம்
முன் மண்டபத்தின் நடுவிலுள்ள தூண்களில் இக்குடைவரைக்கு வருவோரை வரவேற்கும் முறையில் ஆடல் பாடலுடன் நடனமிடும் இரு நாட்டிய நங்கையரின் எழில் கோலங்கள் வண்ண ஓவியங்களாகக் காட்சி தருகின்றன.நாட்டிய கரணங்கள் இலக்கணத்திற்கும் பொருத்த மாக இவை அமைந்துள்ளன. இங்குள்ள தூண் ஒன்றில் சிங்காரக் கொண்டை அலங்காரத்துடன் இடக்கரத்தினை இடப்பக்கத்தில் நீட்டி, வலக்கரத்தினை முன்புறம் மடித்து ஆடும் பெண்ணின் உருவம் உள்ளது. இதனை லதா விருச்சிகம் என்னும் நாட்டியக் கரணம் என்கின்றனர். மற்றொரு தூணில் உள்ள நாட்டிய நங்கையின் உருவம் இடக்கரம் வேழ முத்திரை காட்டி வலக்கரம் ஏதோ ஒரு முத்திரை காட்டி ஆடுகிறது. இப்பெண்ணின் வேலைப்பாடு மிக்க கொண்டை அலங்காரமும் கழுத்து, காதுகளில் அணிந்த ஆபரணங்களும் அக்கால ஓவியக் கலைஞனின் அழகியல் உணர்வைப் பறை சாற்றுகின்றன. இப்பெண்ணின் நாட்டியக் கரணம் புஜங்காஞ்சிதகம் என்ற வகையினைச் சார்ந்தது என்று ஒரு சாரார் கருதுகின்றனர். மற்றொரு சாரார் இங்குள்ள ஓவியங்களில் காணப் படும் நாட்டியப் பெண்களின் கரணங்கள் ஊர்த்துவ ஜானுவாகவும் புஜங்கத் ராசமாகவும் இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
தாமரைப் பொய்கை ஓவியம்
சித்தன்ன வாசல் ஓவியங்களில் தலைசிறந்து நிற்பது தாமரைப் பொய்கையின் ஓவியமாகும். குடைவரைக் கோயிலின் முகமண்டபத்து விதானத்தில் இவ்வோவியம் காணப்படுகின்றது. இவ்வோவியத்தில் பல்வேறு உயிர்களின் உணர்ச்சிகளையும், ஆரவாரத்திற்கிடையே அமைதியாய் அடங்கி நிற்கும் சமணத் துறவிகளின் உணர்ச்சிகளையும் அற்புதமாக ஓவியக் கலைஞன் வண்ணங்களைக் கொண்டு வடித்துக் காட்டியுள்ளான். இவ்வோவியத்திலுள்ள நீர் நிறைந்த தாமரைத் தடாகம் ஒன்றில் செந்தாமரையும் வெண்டாமரையும் பசுமையான இலைகளுக் கிடையே பூத்துக் குலுங்குகின்றன. இதில் முரட்டுக் குணங்கொண்ட எருமைகளும் பேராற்றல் கொண்ட யானைகளும் இறங்கி, தமது வெப்பத்தைத் தணித்துக் கொள்கின்றன. களிறுகள் களிப்புடன் தாமரை மலர்களைத் தண்டுடன் பற்றி இழுக்கின்றன. தாமரைப் பொய்கையில் கூடி வாழும் அன்னப் பறவைகள் சிறகை விரித்து, தமது குஞ்சுகளுடன் பரிதவித்து ஒலியெழுப்புகின்றன. இப்பறவைகளின் அச்சத்தை அவற்றின் இமை விரிந்து விழிகள் பிதுங்கி நிற்கும் கண்கள் புலப்படுத்துகின்றன. நீரில் வாழும் மீன்கள் விலங்குகளின் காலடியில் பட்டு அழிந்து போகாமல் இருக்க அஞ்சித் துள்ளுகின்றன. புறவுலக ஆரவாரங்களைக் கண்டு அஞ்சாமல் அவற்றைப் பொருட்படுத்தாமல் அமைதியாய்த் தாமரைக் குளத்தில் மூன்று துறவியர் அறிவனுக்குப் படைப்பதற்குத் தாமரை மலர்களைப் பறிக்க இறங்கியுள்ளனர். அரையில் கோவணம் அணிந்த ஒரு துறவியின் தோளில் அல்லியும் தாமரையும் தண்டுடன் காணப்படுகின்றன. மற்றொரு துறவி இடக்கரத்தில் மலர்க் கூடையை வைத்துக் கொண்டு வலக்கரத்தால் தாமரை மலரைத் தண்டோடு பற்றி இழுக்கின்றார். மூன்றாவது துறவி தாமரை மலரைத் தாங்கிக் கொண்டு மற்றொரு கரத்தில் முத்திரை காட்டுகின்றார். மொத்தத்தில் இயற்கையின் நாடகத்தை நன்கு உணர்ந்த ஓர் ஓவியன் அவற்றைக் காண்பவர் கண்கள் மனத்தை விட்டு அகலாத முறையில் ஓவியமாக வடித்துக் காட்டியுள்ளான் என்றே சொல்ல வேண்டும். இத்தாமரைப் பொய்கை ஓவியமும் நாட்டிய மகளிரின் ஆடற் காட்சியும் சமணர்களின் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியில் அமைந்த காதிகா பூமியைக் குறிக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தாமரைப் பொய்கை ஓவியம்
ஓவியத்தின் காரண கர்த்தாக்கள்
இத்தகைய அரிய ஓவியங்கள் உருவாவதற்குக் காரணமானவர்களின் உருவங்களும் சித்தன்ன வாசல் ஓவியத்தில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. முகமண்டபத் தூண் ஒன்றின் உட்புறத்தில் நவரத்தின மகுடம் அணிந்த அரசனும் அவனது தேவியும் சமணத் துறவி ஒருவருடன் காட்சியளிக்கின்றனர். இவர்களில் சமணத் துறவி இவ்வோவியங்கள் உருவாவதற்கும் குடைவரை புதுப்பிக்கப் படுவதற்கும் காரணமாக இருந்த இளங்கௌதமனாக இருக்க வேண்டும். அரசன், அரசியின் உருவங்கள் சமண முனிவர்க்கு ஆதரவளித்த பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் மற்றும் அவனது தேவியின் உருவங்களாக இருக்க வேண்டும். எனவே உலகப் புகழ் பெற்ற சித்தன்ன வாசல் ஓவியங்கள் பாண்டியர் கலைப் படைப்பே எனலாம். இதனை இங்குள்ள பாண்டிய மன்னனின் கல்வெட்டு அடிப்படையில் உலகிற்கு உணர்த்தியவர் டி.என்.இராமச்சந்திரன் ஆவார். இதனைக் கண்டறிந்தவர் பேராசிரியர் லூவோ துப்ராயே ஆவார்.
திருமலாபுரம் குடைவரைக் கோயில் ஓவியம்
கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டியர் கால வண்ண ஓவியச் சிதைவுகள் திருமலா புரம் குடைவரைக் கோயிலின் முன் மண்டப விதானத்தில் காணப் படுகின்றன. இதில் அன்னம், தாமரை மலர்,வேட்டுவர்,சிம்மாசனம் போன்ற பல உருவங்கள் ஓவியமாகக் காணப் படுகின்றன. இவ்வோவியம் மிகவும் சிதைவுற்றமையால் இதன் உட்பொருளை உணர முடியவில்லை. காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருப்பருத்திக் குன்றம் சமணர் கோயிலில் நேமி நாதரின் வரலாறும், சமவ சரணக் காட்சிகளும் இயக்கியர் வரலாறும், ஆதி நாதர் வரலாறும், அங்குள்ள மண்டபங்களின் விதானங்களில் ஓவியமாக வரையப் பட்டுள்ளன. ஆர்க்காட்டுப் பகுதியிலுள்ள திருமலையிலும் சமணர் சமய வரலாற்றை விளக்கும் ஓவியங்கள் காணப் படுகின்றன.
திருமலாபுரம் குடைவரைக் கோயில் ஓவியம்
தஞ்சைக் கோயில் ஓவியங்கள்
தட்சிணா மூர்த்தி ஓவியம்
கருவறையின் தென்புறச் சுவரில் தட்சிணா மூர்த்தியின் மிகப் பெரிய வடிவம் வரையப் பட்டுள்ளது. குரங்குகள், பறவைகள் நிறைந்து விளங்கும் ஆலமரத்தின் அடியில் தென்திசைச் செல்வனாய்ச் சிவ பெருமான் காட்சியளிக்கின்றார். அறமுரைக்கும் அண்ணலின் அடியில், அவர் உரைக்கும் அறத்தைக் கேட்கும் முறையில் தீவிரக் கவனத்துடன் பக்தியுடன் விளங்கும் முனிவர்கள் காணப் படுகின்றனர். சிவ பெருமானுக்கு இடப்புறத்தில் ஆலமரத்திற்கு மேலே நாயுடன் கூடிய பைரவரின் உருவம் காணப்படுகிறது.
சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு
மேற்புறச் சுவரில், சிவ பெருமான் திருமணப் பந்தலுக்கு வந்து சுந்தர மூர்த்தி நாயனாரைத் தம் அடிமை என்று கூறித் திருவெண்ணெய் நல்லூர்ச் சபையாரிடம் வழக்குரைத்தது, தம் வாழ்வின் முடிவில் சுந்தரர் கயிலை மலையை அடைந்தது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாகத் தீட்டப் பட்டுள்ளன. முதல் காட்சியில் திருமணப் பந்தலில் நடைபெறும் சமையல் காட்டப் பட்டுள்ளது. மேலும் திருமணக் கோலத்தில் நிற்கும் சுந்தரர், அவருக்கு எதிரில் கிழ வேதியராய்த் தாழைக் குடையுடன் தண்டூன்றி அடிமை ஓலையுடன் நிற்கும் சிவ பெருமான் ஆகியோர் காணப் படுகின்றனர். பின்னர் திருவெண்ணெய் நல்லூரில் நடைபெற்ற வழக்கும் அதன் பின்னர் திருவெண்ணெய் நல்லூர்க் கோயிலும் காட்டப் பட்டுள்ளன. அடுத்து வரும் காட்சியில் தில்லையம் பதியை வணங்கும் காட்சி வருகிறது. இறுதியில் சுந்தர மூர்த்தி நாயனார் வெள்ளை யானை மீது கயிலையங் கிரிக்குச் செல்லும் பயணம் சித்திரிக்கப் பட்டுள்ளது. அதன் பின்னர் சுந்தரரின் பயணத்தைக் கேள்விப் பட்டுச் சேரமான் பெருமாள் நாயனார் கடல் வழியாகக் குதிரையின் மீது புறப்பட்டுச் செல்லும் காட்சி உள்ளது.
ஆடல் மகளிர்
சுந்தர மூர்த்தி நாயனார் வரலாற்றை விளக்கும் ஓவியக் காட்சிக்கு அருகில் ஆடல் மகளிரின் அழகிய நடனக் காட்சிகள் காணப் படுகின்றன. ஆடல் மகளிரின் தொழில் நுட்பமிக்க ஆடல் காட்சியும், எண்ணத்திற்கு அடங்கா அவர்களது உடல் வனப்பும் அழகிய முறையில் தஞ்சைக் கோயில் ஓவியத்தில் காட்டப் பட்டுள்ளன.
சிற்றம்பலக் காட்சி
தஞ்சை ஓவியத்தில் சிவ பெருமான் அம்மையுடன் நடனமாடும் தில்லை நடனக் காட்சி உள்ளது. ஓடுகள் வேய்ந்த பொன்னம்பலம் இன்றிருப்பது போன்று காணப்படுகிறது. தாடியுடன் விளங்கும் ஓர் அரசன் தன் தேவியர் மூவருடன் பொன்னம்பலத்தை வழிபடுகின்றான். இவ்வுருவத்தை இராசராசன் மற்றும் அவனது தேவியர் என்று கருதுகின்றனர். இவ்வோவியத்திற்கு அருகில் தில்லைக் காளியின் உருவமும் வரையப் பட்டுள்ளது. ஓவியத்தில் தாடியுடன் விளங்கும் ஒரு துறவியின் அருகில் மன்னனின் உருவம் ஒன்று உள்ளது. இவனை இராசராசன் என்றும், இவனுக்கு அருகில் இருக்கும் துறவியினைக் கருவூர்த் தேவர் என்றும் கருதுகின்றனர். கருவூர்த் தேவர் தஞ்சைக் கோயிலைப் பாடிய சைவப் புலவர் ஆவார். தஞ்சை ஓவியத்தில் சட்டையணிந்து ஆயுதங்களுடன் நிற்கும் சோழர் காலத்து வீரர்களும் காணப் படுகின்றனர்.
திரிபுராந்தகர், இராவண அனுக்கிரக மூர்த்தி
இறுதியாக முப்புரம் எரித்த விரிசடைக் கடவுளான திரிபுராந்தகரின் உருவம் மிகப் பெரியதாக ஓவியத்தில் தீட்டப் பட்டுள்ளது. நான்முகன் தேர்ப்பாகனாக அமர்ந்து சிவபெருமானின் தேரினை ஒட்டிச் செல்கின்றார். அவரோடு விநாயகர் மூஞ்சூறு வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் செல்கின்றனர். தஞ்சைக் கோயில் ஓவியத்தில் கயிலையங் கிரியைப் பெயர்த் தெடுக்க முனைந்த இராவணன் முயற்சியையும், அவன் தோல்வியை ஏற்று அவனுக்கு அனுக்கிரகம் செய்த சிவ பெருமானையும் (இராவண அனுக்கிரமூர்த்தி) காண முடிகிறது. தமிழ்நாட்டில் காஞ்சி, சித்தன்ன வாசல் போன்ற இடங்களில் காணப்படும் தலைசிறந்த ஓவியக் கலையின் தொடர்ச்சி தஞ்சைக் கோயிலோடு உச்ச நிலையை அடைந்து நின்று விடுகிறது. அதன் பின்னர், தமிழ்நாட்டில் கோயில்களில் காணப்படும் ஓவியங்கள் எண்ணிக்கையிலும் அளவிலும் அதிகமாய் இருந்தாலும் உயர்தரமுடைய ஓவியங்களாக இல்லை என்றே கூறலாம்.
திருவண்ணாமலைக் கோயில் கோபுர ஓவியம்
திருவண்ணாமலை பதினொரு நிலைக் கோபுரத்தின் உட்புறத்தில் விசய நகர வேந்தர் தமது மெய்க்கீர்த்தியில் சிறப்பித்துக் கூறும் கஜ வேட்டைக் காட்சி சித்திரிக்கப் பட்டுள்ளது. இவ்வோவியத்தின் ஒரு பகுதியில் இக்கோபுரத்தினைக் கட்டிய கிருஷ்ண தேவ ராயரின் அதிகாரி செல்லப்ப நாயக்கர் உருவமும் உள்ளது. திருவண்ணாமலைக் கோயிலில் யானை கட்டும் மண்டபத்தில் சிவ பெருமான் உமையை மணந்த வரலாறும் பாற்கடல் கடையும் காட்சியும் வண்ண ஓவியமாக உள்ளன.
காஞ்சி வரதராசப் பெருமாள் கோயில் ஓவியம்
திருவெள்ளறை புண்டரிகாட்சப் பெருமாள் கோயில் சித்திர மண்ட பத்தில் இராமாயணத்தில் கிட்கிந்தா காண்டம் தொடங்கி இலங்கைக்கு வானர வீரர்கள் சென்று சீதையைக் சந்திக்கும் வரையிலான காட்சிகள் ஓவியமாகத் தீட்டப் பட்டுள்ளன. வாலியும் சுக்கிரீவனும் போரிடுதல், இராமன் மறைந்திருந்து வாலியின் மீது அம்பு தொடுத்தல், இராமன் மரா மரத்தினை வீழ்த்தல், அனுமன் இலங்கை அரக்கியின் வாய் வழியாக நுழைந்து காது வழியாக வெளியேறுதல், அனுமன் சீதையை அசோக வனத்தில் சந்தித்தல் போன்ற காட்சிகள் மிகப் பெரிய ஓவியமாகத் தீட்டப் பட்டுள்ளன. இவ்வோவியங்கள் தற்போது அக்கோயிலில் இல்லை. திருப்பணியின்போது அழிவுக்கு உள்ளாகிவிட்டன. திருவரங்கத்தில் கொடிக் கம்பத்திற்கு அருகிலுள்ள மண்டப விதானத்தில் இராமாயணத்தின் தொடக்கக் காட்சிகள் ஓவியமாக உள்ளன. காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயில் கருவறையைச் சுற்றி நூற்றெட்டுத் திவ்வியத் தேசங்களை விளக்கும் வண்ண ஓவியங்கள் உள்ளன.
அதமன் கோட்டை, திருவலஞ்சுழி ஓவியங்கள்
தருமபுரி மாவட்டம், அதமன் கோட்டைப் பெருமாள் கோயில் முன் மண்டபத்தில் இராமாயண ஓவியங்கள் காணப் படுகின்றன. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவலஞ்சுழி கோயிலில் சிவ பெருமான் நடனக் காட்சியும் திருமால், நான்முகன், பிட்சாடனர், இரதி மன்மதன் ஆகியோரது உருவங்களும் ஓவியமாக உள்ளன.
திருப்புடை மருதூர் ஓவியம்
திருநெல்வேலி மாவட்டம் திருப்புடை மருதூரில் சிவன் கோயில் கோபுர நிலைகளில் அறுபத்து நான்கு திருவிளையாடல் புராணக் காட்சிகளும், விசய நகர வேந்தர் படையெடுப்பின் அணிவகுப்பும் அழகுற ஓவியமாகத் தீட்டப் பட்டுள்ளன. இவற்றில் அரபியரின் குதிரை வணிகமும் ஓவியமாக இடம் பெற்றுள்ளது.
நாயக்கர் கோயில் ஓவியங்கள்
அழகர் கோயில் ஓவியங்கள்
மதுரை மீனாட்சி கோயில் ஓவியங்கள்
திருவரங்கம் கோயில் ஓவியம்
ஸ்ரீரங்கத்தில் இராச கோபுரத்தைத் தாண்டி, கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள கோபுரம் ஒன்றின் விதானத்தில் திருவரங்கநாதரின் முத்தங்கி சேவை ஊர்வலம் அழகுற வண்ண ஓவியமாக விளங்குகிறது. தாயார் சன்னதியின் திருச்சுற்று மண்டப விதானத்தில் பாகவதப் புராணக் கதை விரிவாக ஓவியமாகத் தீட்டப் பட்டுள்ளது. இராமானுசர் கோயில் மண்டபத்தில் ஆழ்வார்களின் வரலாறும் ஆச்சாரியார் வழி முறையும் வண்ண ஓவியமாகக் காணப் படுகின்றன.
சிதம்பரம் சிவகாமியம்மன் கோயில் முன் மண்டப விதானத்தில் சிதம்பரத் தல புராணக் காட்சிகளும் தாருகா வனத்து முனிவர்களின் செருக்கைச் சிவ பெருமான் அழித்த காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இவ்வோவியத்தில் சிவ பெருமான் பிட்சாடனர் வேடமிட்டுத் தாருகா வனத்தின் உள்ளே நுழைய அவரது பின்னே தாருகா வனத்து ரிஷி பத்தினிகள் மையல் கொண்டு செல்கின்றனர். மோகினி வடிவம் கொண்டு வந்த திருமாலின் பின்புறம் செருக்கழிந்த தாருகா வனத்து முனிவர்கள் செல்கின்றனர். ஆவுடையார் கோயில் ஓவியத்தில் மாணிக்க வாசகரின் வரலாறு சித்திரிக்கப் பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மலை வலம் வருகின்ற சாலையில் எழுத்து மண்டபம் என்ற பெயரில் மண்டபம் ஒன்று உள்ளது. இதில் சிவ பெருமான் உமையை மணந்தது, இராமாயணம், ஆயர் மகளிரோடு கண்ணன் புரிந்த திருவிளையாடல்கள், முருகன் வள்ளியை மணந்தது ஆகியவை வண்ண ஓவியங்களாகத் தீட்டப் பெற்றுள்ளன. திருவண்ணாமலைப் பகுதியிலுள்ள செங்கம் பெருமாள் கோயில் மண்டபத்தில் தெலுங்கு இராமாயணக் காட்சிகள் ஓவியமாக வரையப் பெற்றுள்ளன. இவற்றில் ஒரு காட்சியில் அனுமன் மண்டோதரியின் கூந்தலைப் பற்றி அடிப்பதாக உள்ள காட்சி வேறுபட்டதாகவும் புதுமையாகவும் உள்ளது.
தமிழ்நாட்டில் காலம் தோறும் ஓவியத்தில் இடம் பெறும் காட்சிகளின் பொருளும் காலத்திற்கு ஏற்றவாறு மாறுபட்டுள்ளது. இராமாயணம் போன்ற இதிகாசங்கள் மிகப் பழங்காலத்திலிருந்து இடம் பெற்றுள்ளன. பல்லவர், பாண்டியர், சோழர் காலங்களில் சைவத்தின் எழுச்சியைக் காட்டுகின்ற முறையில் சிவனது திருக்கோலங்களும் சைவ அடியார்களது வரலாறும் கோயில்களில் இடம் பெற்றுள்ளன. இக்காலத்தில் மறுமலர்ச்சி அடைந்த சமண சமயப் புராணக் காட்சிகளும் ஆங்காங்கே உள்ள கோயில்களில் இடம் பெற்றுள்ளன. இதனையடுத்து இறைவனது திருவிளையாடல் காட்சிகளும், கோயில் தலபுராணங்களும் சைவ நாயன்மார், வைணவ ஆச்சாரியர் வரலாறுகளும் கோயில் ஓவியங்களில் காணப்படுகின்றன. நாயக்கர், மராட்டியர் காலத்தில் இவ்வகை ஓவியங்கள் இடம் பெற்றன. எல்லாக் காலத்து ஓவியங்களும் அக்கால மக்களின் ஆடை, ஆபரணங்கள், பழக்க வழக்கங்கள், தொழில்கள், சமூக மரபுகள், சமய மரபுகள், அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றைத் தெரிவிக்கும் காலக் கண்ணாடியாக விளங்குகின்றன.
பாடம் - 6
இக்காலத்தில் நவீனச் சிற்பங்கள் குறிப்பிட்ட பொருள்களில் தான் படைக்கப்பட வேண்டும் என்ற சமயச் சார்பான கட்டுப்பாடுகள் உடைபட்டுவிட்டன. மரபு சார்ந்த உருவம் அல்லது இறையுருவம் என்று இல்லாமல் படைப்பாளியின் மனத்தில் தோன்றும் எந்தக் கருத்துக்கும், உணர்ச்சிக்கும் வடிவம் தருவதாக நவீனச் சிற்பம் தோற்றம் பெறுகிறது. நவீனச் சிற்பங்கள் புதிய கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.
தமிழகத்தில் விசயநகர நாயக்கரது ஆட்சிக்குப் பின் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தஞ்சையில் அறிமுகப்படுத்தி வளர்த்த ஓவியக் கலையே தஞ்சை ஓவியமாகும். இராமாயணம், பாகவதம் ஆகியவையே தஞ்சை ஓவியத்தின் உள்ளடக்கம் எனினும், படைப்பு முறையில் இது மரபு ஓவியத்திலிருந்து சற்று வேறுபட்டது.
கலைப் பொருள்களும் கலை ஆக்கமும்
இந்த ஓவியம் பலாமரப் பலகைகளில் வரையப்படுகின்றது. முதலில் பலகைகளில் கனமான பழுப்பு நிறக் காகிதத்தைப் பசை கொண்டு ஒட்டி, அதன் மீது வெள்ளைத் துணியைச் சுருக்கமின்றி ஒட்டுவர். வெள்ளைத் துணியின் மேல் பிரெஞ்சு சாக் பொடி, வஜ்ரம் ஆகியன கலந்த கலவையைப் பூசுவர். அதன்மீது படம் வரைந்து, தேவையான நிறங்களில் கற்களைப் பதிப்பர். வெள்ளைக் கண்ணாடியைச் சிறு துண்டுகளாக்கி அவற்றைச் சுற்றிலும் வைத்து ஒட்டுவர். அக்கண்ணாடித் துண்டுகளைச் சுற்றித் தங்க நிறத்தில் கெட்டியான காகிதங்கள் ஒட்டப்படும். நீலம், சிவப்பு பச்சை ஆகிய வண்ணங்கள் இந்த ஓவியத்தில் பயன்படுத்தப் படுகின்றன.
சிறப்பு
தமிழக மக்களால் மட்டுமின்றி உலக அளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய ஓவியமாகத் தஞ்சை ஓவியம் விளங்குகிறது. இவ்வகை ஓவியங்களைப் படைப்பதில் குப்புசாமி ராஜா சிறந்த இடத்தை வகிக்கிறார். மீனா முத்தையா சென்னையில் ஓவியப் பள்ளியை நிறுவி, அதில் தஞ்சாவூர் ஓவியக் கலையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்.
விடுதலைக்குப் பின் தமிழகத்தின் கலைப் போக்குகளை நான்கு பாணிகளாக வகைப்படுத்துவர். அவை
(1) ஐரோப்பியக் கலை மரபுப் (Academic) பாணி
(2) அகப்பதிவு இயல் (Impressionism) பாணி
(3) வங்காளக் கலைப் பாணி
(4) தற்காலக் கலைப் பாணி
இக்காலச் சிற்பிகளில் சிறந்த படைப்புகளைத் தமக்கே உரிய பாணிகளில் படைத்துச் செல்வாக்குப் பெற்ற சிற்பிகள் ஓவியக் கலையிலும் தேர்ச்சி பெற்றவர்களே, அவ்வாறு சிற்ப, ஓவியக் கலைகளில் சிறந்து விளங்குபவர்களாகக் கலைச்செம்மல் மூக்கையா, தனபால், வித்யாசங்கர் ஸ்தபதி, கே.எம். கோபால் ஆகியோரைக் கூறலாம். இவர்களைப் பற்றிச் சுருக்கமாக இங்குக் காணலாம்.
கலைச்செம்மல் மூக்கையா
விருதுநகர் மாவட்டம், இராமசாமி புரம் என்னும் சிறு கிராமத்தில் பிறந்தவர் மூக்கையா. சென்னை ஓவியக் கலைக் கல்லூரியில் பயின்றவர். தமிழக அரசின் கலைச்செம்மல் விருது பெற்றவர். தாம் பிறந்து வளர்ந்த கிராமச் சூழல், அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை ஆகியவை அவரது படைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
மூக்கையா, சுடுமண் சிற்பங்கள் (Terracotta) செய்வதில் வல்லவர். இவரது சுடுமண் சிற்பங்களில் செவ்வியல் கலைக் கூறுகள் இல்லை; பிரதேசத் தன்மை (நாட்டுப்புறச் சாயல்) இருக்கிறது. எனினும் இவற்றை முற்றிலும் நாட்டுப்புறக் கலை வடிவமாகக் கொள்ள முடியாது. நவீனத் தன்மை மிகுந்தவை இவை.
எஸ். தனபால்
சென்னை ஓவியப் பள்ளியின் தலைமைப் பொறுப்பில் இருந்த எஸ். தனபால் சிறந்த சிற்பியும் ஓவியரும், நடனக் கலைஞரும் ஆவார். சுடுமண்ணால் பல சிற்பங்களை உருவாக்கியவர். தமிழ்க் கலை மரபுகளைத் தற்காலச் சிற்ப வெளிப்பாட்டில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுத்தியவர். மாணவர்களை உருவாக்குவதில் இரவும் பகலும் பாடுபட்டவர் இவர். ஆதிமூலம், பாஸ்கரன், தட்சிணா மூர்த்தி ஆகிய சிறந்த ஓவியர்கள் இவருடைய மாணவர்கள். சென்னை சிற்ப ஓவியக் கலைஞர்களிடையே பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியவர். சோழ மண்டல ஓவியக் கிராமம் உருவாவதில் பெரும்பங்கு ஆற்றியவர். அதன் வளர்ச்சிக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்.
இவர் பணியாற்றிய சென்னைக் கலைக் கல்லூரியில் மேற்கத்தியப் பாணி சார்ந்த நிலை இருந்த போதிலும், மேற்கத்தியப் பாணியில் இந்தியக் கலாச்சாரத்தைப் புகுத்தித் தமது சிற்பங்களைப் படைத்தார். மரத்தினால் சிற்பங்கள் செய்ததோடு மட்டுமல்லாது பீங்கானிலும் சிற்பங்கள் படைத்துள்ளார். பல புகழ் பெற்ற தலைவர்களின் சிற்பங்களைப் படைத்துள்ளார். இவர் படைத்த ஏசுநாதர் சிற்பமும், ஒளவையார் சிற்பமும் புகழ் பெற்றவை.
வித்யா சங்கர் ஸ்தபதி
இவர் கும்பகோணம் கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் பணியாற்றியவர். இவர் மரபுக்கும் புதுமைக்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார். தமது சிற்பங்களில் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தனிப் பாணியை உருவாக்கினார். ரதி, விநாயகர், இராவணன், இரணிய வதை போன்ற உலோகச் சிற்பங்கள் பழைமையின் பின்புலத்தில் நவீனமாக வடிவமைக்கப் பெற்றவை ஆகும். உலோகச் சிற்பங்கள் தவிரச் சுடுமண் சிற்பங்களைப் படைப்பதிலும் சாதனை படைத்தவர் இவர்.
இவர் கிராம வாழ்வின் அழகில் அதிக ஈடுபாடு கொண்டவர். கிராமியக் கலைகளாலும், சுடுமண் சிற்பங்களாலும் கவரப்பட்டவர். இதனால் கிராமத்துச் சிற்பங்களின் உருவத்தைச் சிதைக்காமல் உண்மையை மிகைப்படுத்தல் என்ற உத்தியைக் கையாண்டார்.
கே.எம். கோபால்
சோழ மண்டல ஓவியக் கிராமத்தைச் சேர்ந்த சிற்பிகளுள் ஒருவரான கே.எம். கோபால் தமிழக அரசின் கலைச் செம்மல் விருது பெற்றவர். இவரது படைப்புகள் உலோகத்தால் ஆனவை. இவர் இந்து சமயம் சார்ந்த இறையுருவங்களை அதிலும், குறிப்பாக விநாயகரது உருவத்தை அதிக அளவில் படைத்துள்ளார்.
6.3.2 நவீனச் சிற்பங்கள்
மேலே கண்ட நவீனச் சிற்பிகளால் படைக்கப்பட்ட நவீனச் சிற்பங்களைச் சில வகைப்பாடுகளுக்கு உட்படுத்தி அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
சுடுமண் சிற்பங்கள்
தமிழகத்தில் உலோகச் சிற்பங்களுக்கு முன்பிருந்தே சுடுமண் சிற்பங்கள் செய்யப்பட்டு வந்துள்ளன. தமிழகத்தில் மட்டுமல்லாது பிற நாடுகளிலும் சிற்பங்கள் முதல் முதலாக மண்ணினால்தான் செய்யப்பட்டன. இந்தியாவில் சிந்து சமவெளியில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள் சின்னங்களில் சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளமை அவற்றின் பழைமையைத் தெளிவுறுத்துவதாக அமைகின்றது.
இன்றைய சுடுமண் சிற்பங்களில் கிராமத்து நடனம், பறையடித்தல், ஜல்லிக் கட்டு என எது சிற்பியின் மனத்தைக் கவர்கிறதோ அது சிற்பமாக உருவாகிறது.
மூக்கையாவின் சுடுமண் சிற்பங்களில் அலங்காரங்கள் அதிக அளவில் காணப்படுவதில்லை. உருவங்களில் அங்க இலக்கணங்கள் மீறப்பட்டிருக்கும். சான்றாக இவரது படைப்பான பறையறையும் மனிதனது சிற்பத்தை எடுத்துக் கொண்டால் அவனது முகம் வெறும் உட்குவிந்த தட்டுப் போன்று இருக்கிறது. கனமான, எடுப்பான மூக்கும், உதடுகளும் தவிரக் கண், காது, தலைமுடி போன்றவை தெளிவின்றியே படைக்கப்பட்டு உள்ளன. கண்கள் இருக்கும் இடத்தில், அமைக்கப்பட்டு் உள்ள குழியின் நிழல் கண்கள் இருப்பது போன்ற உணர்வைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.
பறை கொட்டுபவனின் பறையைத் தாங்கியுள்ள விரல்கள், உடம்பின் பிற உறுப்புகளை விடப் பெரியவையாகப் படைக்கப் பட்டிருக்கின்றன. இடையிலிருந்து மேற்பகுதியானது இடையிலிருந்து கீழ்ப்பகுதியை விடப் பெரிதாக இருக்கிறது.
ஜல்லிக் கட்டு எனும் சிற்பத்தில் காளை மாட்டின் வயிற்றுப் பகுதி பள்ளமாகக் குடைந்து எடுக்கப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது. சண்டையிடும் காளைக்குக் கனமான வயிறு தேவையில்லை என்பதால் தான் அதனை அவ்வாறு படைத்துக் காட்டியுள்ளார் மூக்கையா.
எஸ். தனபாலின் ‘தலை’ (
மரபு சார்ந்த உலோகச் சிற்பங்கள் முன்பே நம் நாட்டில் உண்டு என்பதை நாம் அறிவோம். மரபு சார்ந்த கதைகளை அடிப்படையாய்க் கொண்டு நவீன உத்திகளைப் பயன்படுத்தி உலோகச் சிற்பங்கள் இப்போது செய்யப்படுகின்றன. அவை நவீனச் சிற்பங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இவற்றை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று மரபு சார்ந்த உலோகச் சிற்பங்கள், இரண்டு முற்றிலும் நவீனத்தைச் சார்ந்த சிற்பங்கள்.
மரபு சார்ந்த உலோகச் சிற்பங்கள்
அக்னி
வித்யாசங்கர் ஸ்தபதியின் மரபு சார்ந்த சிற்பங்கள் புகழ் பெற்றவை. இவரது அக்னி உலோகச் சிற்பத்தில் தீக்கடவுள் ஐந்து தலைகளுடன் கையில் சூலத்துடன் படைக்கப்பட்டு உள்ளார். தீக் கடவுளின் உருவத்தைச் சுற்றித் தீ நாக்குகள் காட்டப்பட்டுள்ளன. இச்சிற்பம் நாட்டுப்புறச் சுடுமண் சிற்பத்தை அடியொற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இராவணன்
வித்யாசங்கரின் மற்றுமொரு படைப்பு இராவணன் உலோகச் சிற்பமாகும். சற்று வேறுபாடாக இதில் இராவணனது பத்துத் தலைகளும் மூன்று வரிசைகளில் (ஒன்றன் மேல் ஒன்றாக) அமைக்கப்பட்டு உள்ளன. முதலாவது வரிசையில் ஐந்து தலைகளும், இரண்டாவது வரிசையில் மூன்று தலைகளும், மூன்றாவது வரிசையில் இரண்டு தலைகளும் என அமைந்துள்ளன. கையில் பல்வேறு விதமான ஆயுதங்கள் தாங்கி, நின்ற நிலையில் சிற்பம் காட்சியளிக்கிறது. இச்சிற்பமும் சுடுமண் சிற்பத்தை அடியொற்றியே அமைக்கப்பட்டு உள்ளது. இது ஓர் ஆல இலையின் தலை கீழ் வடிவம் போல் காட்சியளிக்கிறது.
கணேசர்
கே.எம். கோபால் கணேசரது உருவத்தை மாறுபட்ட வடிவங்களில் அமைத்துள்ளார். சான்றாகக் கணேசருக்கே உரியதான பெரிய தொப்பை வயிற்றைச் சிறியதாகப் படைத்துள்ளார். பால கணபதியின் சிற்பத்தைக் குழந்தை, கால்களை நீட்டி அமர்ந்திருப்பது போன்று அமைத்துள்ளார். மேலும் விநாயகரைக் கணேஷ்வரி என்ற பெயரில் பெண் உருவிலும் அமைத்துள்ளார்.
நவீன உலோகச் சிற்பங்கள்
புதிய பல கருத்தாக்கங்களுடன் கூடிய நவீன உலோகச் சிற்பத்தில் மரபைக் காண இயலாது. இத்தகு நவீன உலோகச் சிற்பங்களில் சிற்பியின் மனத்தைப் பாதித்த உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
வித்யாசங்கர் ஸ்தபதி அவர்களின் நவீன உலோகச் சிற்பங்களில் குறிப்பிடத் தக்கவை ஆலமரம், கற்பக விருட்சம் மற்றும் முப்பரிமாணப் படைப்பாக விளங்கும் ரேணுகா தேவி, யுவதி, மிதுனச் சிற்பம் ஆகியனவாகும். யுவதி சிறப்பானது. மேல்பகுதி மட்டும் பெண் போன்ற தோற்றத்திலும் கீழ்ப்பகுதி தீர்மானிக்க முடியாததாகவும் உள்ளது.
மிதுனச் சிற்பம் ஆண் பெண் இருவர் படுத்திருக்கும் காட்சியாகக் காணப்படுகிறது. இவ்வுருவத்தைப் பஞ்சலோகத்தில் படைத்திருக்கிறார். இச்சிற்பத்தில் மூக்கும், கண் இமையும் சிறப்பாகப் படைக்கப்பட்டு உள்ளன.
அரசியல் தலைவர்களின் உருவங்கள்
சிற்பி தனபால் அரசியல் தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் உருவங்களை உலோகத்தில் மிக அழகுறப் படைத்துள்ளார். அவற்றுள் குறிப்பிடத் தக்கவை சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன், தந்தை பெரியார், டாக்டர் எ.இலட்சுமண சுவாமி முதலியார், பெருந்தலைவர் காமராசர் ஆகியோருடைய சிற்பங்களாகும்.
அவர் படைத்த ஒளவையார் சிற்பம் சற்றே கூன் விழுந்து கையில் கம்புடன், பொக்கை வாயுடன், நீண்ட காதுகளுடன், தோளில் பையுடன் ஆழ்ந்த கலைப் பார்வைக் உகுரியதாகக் காணப்படுகிறது.
சிற்பங்கள் செய்யப் பயன்படும் பொருட்கள்
இன்றைய நவீனச் சிற்பங்களைச் செய்யச் சுடுமண், உலோகம் ஆகிய பொருட்கள் பயன்படுவதை ஏற்கெனவே கண்டோம். இவை தவிரக் கண்ணாடி, தோல் கழிவுப் பொருட்கள், ரப்பர், களிமண், தேங்காய் நார், பனங்கொட்டை, சிமெண்ட், மரம் என பல பொருட்களிலும் சிற்பங்கள் உருவாக்கப் படுகின்றன.
ஆதிமூலம், சந்துரு, முருகேசன், பெருமாள், முனுசாமி, தனபால்,மூக்கையா ஆகியோர் சென்னைக் கலைக் கல்லூரி தந்த ஓவியர்கள் ஆவர். இவர்களில் தனபால், மூக்கையா ஆகியோரைப் பற்றிச் சிற்பிகள் எனும் பகுதியில் கண்டோம். ஏனைய ஓவியர்களைப் பற்றி இப்பகுதியில் காணலாம்.
ஆதிமூலம்
ஆதிமூலம் திருச்சி மாவட்டம் கீரப்பூரைச் சேர்ந்தவர். இவர் சந்தான ராஜ், முனுசாமி ஆகியோரிடம் பயின்ற மாணவர். இவர் தமது கோட்டோவியங்களின் மூலமாக மாறுபட்ட படைப்புகளை அளித்துள்ளார்.
ஆதிமூலம்
ஏ.பி. சந்தான ராஜின் கரிக்கோட்டு ஓவியங்களாலும் தனபாலின் தூரிகைச் சித்திரங்களாலும் கவரப்பட்டிருந்த காலமான கி.பி. 1964 ஆம் ஆண்டில் மாநில அளவிலான பரிசு பெற்றவர் ஆதிமூலம்.
தம்மைச் சுற்றி உயிர்த் துடிப்புடன் நகர்ந்து கொண்டு இருக்கும் இன்றைய அவசரமான வாழ்க்கை நிலை, மரபு சார்ந்த பழைய நாட்டுப்புறக் கலைகள் ஆகிய இரண்டுமே ஒரே நேரத்தில் இவரைக் கவர்ந்தன. முதல் நிலையில் கிராமியக் கலைப் பொருட்களைச் சற்று மாற்றம் செய்து சித்திரங்களாக வரையத் தொடங்கினார். ஐயனார் சிலைகள், சுடுமண் குதிரைகள், களிமண் தீபலட்சுமிகள் ஆகியவற்றைத் தீட்டினார். வீரன் சிலைகளில் முறுக்கிய மீசை, பிதுங்கிய கண்கள், உயர்த்திய புருவங்கள் ஆகியவை பல்வேறு கோணங்களில் இவரது கலைப் படைப்புகளில் இடம் பெற்றுள்ளன.
மரச் சிற்பங்களில் காணப்படும் உளிக் கீறல்களைக் கொண்டு படைக்கப்பட்ட இவரது காமதேனு என்னும் ஓவியம் சிறப்புடையதாகும். துணிப் பொம்மைக்குள் பஞ்சினை அடைத்து உருவாக்கப் பட்டதைப் போல் காணப்படும் குதிரை வீரனின் ஓவியமும் சிறப்புடையதாகும். உருவங்களின் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு அதிக இடம் தரும் பகுதிகளான மனிதனின் முகம், குதிரையின் முகம் போன்றவற்றைச் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.
மண்ணின் பண்பாட்டு அடையாளங்களோடு கூடிய படைப்புகளின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு தற்காலக் கலை பற்றிய விழிப்புணர்ச்சியோடு தமது படைப்பில் ஈடுபடும் ஆதிமூலத்தின் படைப்புகள் உலகளாவிய சிறப்புப் பெற்று விளங்குகின்றன.
பெருமாள்
விருதுநகர் மாவட்டத்தில் இராமசாமி புரத்தில் பிறந்தவர். சென்னைக் கலைக்கல்லூரி மாணவர் இவர். சென்னைக் கலைக்கல்லூரி உருவாக்கிய இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த முன்னணி ஓவியர்கள் மற்றும் சிற்பிகள் பலருள் குறிப்பிடத் தக்கவர். கிராமத்து விழா என்னும் வண்ண ஓவியத்திற்குத் தேசிய விருது பெற்றவர். தேசிய மற்றும் மாநிலக் கண்காட்சியில் இடம்பெற்ற இவருடைய ஓவியங்கள் இந்திய மரபின் கலையழகு குன்றாத நவீன வெளிப்பாடுகள் ஆகும்.
பெருமாள்
தமக்கென ஒரு தனிப் பாங்கை அமைத்துக் கொண்ட இவருடைய ஓவியங்கள் கிராமியக் கலை மணம் கமழும் வண்ண ஓவியங்களாகும். நாட்டுப்புற வாழ்க்கையில் நிலை கொண்டுள்ள பழைமையும் புதுமையும் இணைந்த தன்மையையும் கிராமங்களில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளையும் பிரதிபலிக்கச் செய்பவர் இவர்.
முனிசாமி
சென்னை ஓவியக் கலைப் பள்ளி உருவாக்கிய பல முன்னோடி ஓவியர்களுள் மிகவும் குறிப்பிடத் தக்கவர் எல். முனிசாமி. கலையை மரியாதைக்குரிய ஒரு தொழிலாகவே கருதிய கலையார்வம் மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்தவர். இவரது முன்னோர்கள் தெய்வச் சிலைகளை வடிக்கும் சிற்பிகள் என்பதால் அந்தப் பின்னணி, ஓவியக் கலையில் இவரை ஈடுபடச் செய்தது. இவர் தனபாலின் சீடர் ஆவார். 1948 ஆம் ஆண்டு டி.பி. ராய்சௌத்ரி அவர்கள் சென்னை ஓவியக் கலை கல்லூரியின் முதல்வராக இருந்த காலத்தில் மாணவராக அங்குப் பயின்றவர் முனிசாமி.
எல். முனிசாமி.
இவர் தொடக்க நிலையில் இயற்கைக் காட்சிகளை வரைந்து வந்த போதிலும் விரைவில் தமக்கென்று ஒரு பாணியை, இயல்புச் சித்திதரிப்பை வகுத்துக் கொண்டார். ஓவியத்தின் கருப்பொருள், கலை நுணுக்கம் ஆகியவற்றில் தீவிரக் கவனம் செலுத்தினார். இவருடைய படைப்புகள் ஒரே மாதிரியான உடல் உருவ அமைப்பிலிருந்து வேறுபடுபவை. அடிப்படையில் இயல்பு ஓவியப் பாணியை வகுத்துக் கொள்ள அவர் முயன்ற போதிலும் கோடுகள் மறையுருவம், அலங்காரம் ஆகியவற்றின் கலவையாகத்தான் அவருடைய ஓவியங்கள் இருந்தன. தமது மறைபொருள் ஓவியத்தில் இந்திய நாகரிகத்தின் தனித் தன்மை பாதிக்கப் படாமல் பார்த்துக் கொண்டார்.
வீர. சந்தானம்
ஓவியர் வீர. சந்தானம் கி.பி. 1947 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உப்பிலியப்பன் கோயில் என்னும் ஊரில் பிறந்தார். சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரியின் கீழ்ச் செயல்பட்டுவந்த கும்பகோணம் கலை மற்றும் கைத்தொழில் கல்லூரியில் கலைகளைப் பயின்றார்.
வீர. சந்தானம்
கி.பி. 1970 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் சந்தானத்தின் ஓவியங்கள் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டன. இவர் மாணவராக இருந்தபோது இந்நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத் தக்கது. அதன் பின்னர் சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், புதுடில்லி, போபால் போன்ற நகரங்களில் நடைபெற்ற கண்காட்சிகளில் இவருடைய ஓவியங்கள் இடம்பெற்றதோடு பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்றன.
இவரது படைப்புகள் புதுமையாகவும் நேரடியாக நடைமுறைப் பி்ரச்சனைகளைப் பற்றிப் பேசுவனவாகவும் அமையும். கலைகளை நேர்முகமாக எடுத்துச் சென்று பேசுவது கலைக்கு ஒவ்வாது என்று சொல்வது உண்டு. இக்கருத்துக்கு நேர்மாறாகச் சந்தானம் தம் படைப்புகளைப் படைத்து வருகிறார்.
மக்கள், அரசியல் மற்றும் விடுதலை உணர்ச்சி காரணமாகப் பாதிக்கப்படுவது போன்றவை இவரது படைப்புகளில் முக்கிய இடம் பெறுகின்றன. அவற்றை அவர் நேர்முகமான கலை படைப்புகளாக மாற்றுகிறார். தனது அனுதாபம் முழுவதையும் அவர் படைப்பு மூலம் வெளிப்படுத்துகிறார். மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை, கொடூரம், சிதைக்கப்பட்ட மக்கள், சிறைப்பட்ட மனிதர்கள் என்று மனித குல அவலம் பார்க்கின்றவர்களின் மனதில் நேரடிப் பாதிப்புகளை ஏற்படுத்துமாறு இவரது ஓவியங்கள் அமைகின்றன.
சந்துரு
சென்னை கலை கல்லூரியின் ஆசிரியர் இவர். தமிழ் மண்ணோடும் மக்களோடும் மரபுக் கலைகளோடும் தொடர்பு கொண்டவர். நம் நாட்டு விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகளோடு நேரடியான உரையாடல்களை நிகழ்த்தும் இவருடைய கலைப் படைப்புகள் அபூர்வமானவை ஆகும்.
எருதுகளை இவர் பார்க்கும் பார்வை வித்தியாசமானது. அவற்றைத் தம் சித்திரங்கள், சிற்பங்கள் ஆகியவற்றிற்குக் கருப்பொருளாக இவர் பயன்படுத்துகிறார். எருது என்னும் ஒரு விலங்கினை, அதன் அத்தனைக் கோலங்களிலும் ஒரு வடிவமாக உள்வாங்கி இருக்கிறார் என்றே சொல்லலாம். இதற்குக் காரணம் இவரது இளமைக் காலத்தின் பெரும் பகுதி மாடுகளோடு தொடர்புடையதாக இருந்ததே ஆகும். இவர் தந்தை ஒரு மாட்டு வியாபாரி. ஆகவே மாடுகளின் செயல்பாடுகள் பற்றிய பல விதமான அனுபவம் இவருக்கு உண்டு. எருது என்னும் விலங்கின் வடிவ ரீதியான பதிவுகளை மட்டுமின்றி, உணர்வு உளவியல் ரீதியான பதிவுகளையும் அவர் உள்வாங்கி வைத்திருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது. இதன் காரணமாக எருதைக் கல், மரம், உலோகம் ஆகியவற்றில் சிற்பமாகவும், ஓவியமாகவும் படைத்திருக்கிறார்.
கே.சி. முருகேசன்
கே.சி. முருகேசன் மதுரை மாவட்டம் கள்ளந்திரி என்னும் ஊரைச் சேர்ந்தவர். சென்னைக் கலைக் கல்லூரியில் பயின்றவர். படிக்கின்ற காலத்திலேயே தென்னிந்திய ஓவியர்கள் சங்கத்தின் பரிசு பெற்றவர். 1968 ஆம் ஆண்டு வன விலங்குக் கண்காட்சியில் பரிசு பெற்றவர். அகில இந்தியக் கதர் கிராமத் தொழில்கள் கண்காட்சியில் இவருடைய ஓவியம் பரிசு பெற்றது. முருகேசன் சென்னை, பெங்களூர், மதுரை ஆகிய மாநகரங்களில் ஓவியக் கண்காட்சிகளை நடத்திப் பாராட்டுப் பெற்றுள்ளார். இவருடைய ஓவியங்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா, ஸ்வீடன், மொரீசியஸ் போன்ற நாடுகளில் பல இடங்களில் அலங்காரப் பொருள்களாக இடம் பெற்றுள்ளன.
கே.சி. முருகேசன்
முத்துச்சாமி
முத்துச்சாமி தமிழக அரசின் கலைச் செம்மல் விருது பெற்றவர். இவர் ஒட்டோவியம் (Collage) தயாரிப்பதில் வல்லவர் ஆவார். இன்றைய மனிதனது வாழ்க்கை செய்தித் தாள்களால் சூழப்பட்டதாக உள்ளது. ஆகையால், முத்துச்சாமி செய்தித் தாள்களைத் துண்டு துண்டாக வெட்டி, அவற்றைப் பயன்படுத்தி ஒட்டோவியத்தைத் தயாரிக்கிறார். வண்ணங்களின் கலவைக்குப் பதிலாக அச்சடிக்கப்பட்ட காகிதங்களின் மூலமாக வித்தியாசமான கட்டமைப்பை உருவாக்குகிறார்.
இவர் பத்திரிகைகளில் வரும் வேலை வாய்ப்பு விளம்பரங்கள், ஏல அறிவிப்புகள், புத்தக விமரிசனங்கள் மற்றும் பல விளம்பரங்களைத் தெளிவிற்காகப் பெருமளவில் பயன்படுத்துகிறார்.
நவீன ஓவியமும் நாட்டுப்புறக் கலையும்
நாட்டுப் புறத்து வாழ்வின் எளிய கூறுகள், நாட்டுப்புறக் கலைக் காட்சிகள் ஆகியவற்றைப் பெருமாளின் அழகிய ஓவியங்களில் காணலாம். கணவன் தோளில் குழந்தை, மனைவி தலையில் கஞ்சிக் கலயம் – குடும்பமே விறகு வெட்டச் செல்லும் காட்சி அருமையாகத் தீட்டப்பட்டு உள்ளது. கிராமத்து விழாக்களில் தாரை தப்பட்டை அடிப்போர் உயிர் ஓவியங்களாகப் படைக்கப்பட்டு உள்ளனர். தாரையை அடிக்கும் வேகம், நடை, பாவனை எல்லாம் ஓவியத்தில் உணர்த்தப்படுகின்றன.
ஒட்டோவியம்
வரையும் ஓவியத்திலிருந்து ஒட்டோவியம் சற்று மாறுபட்ட ஓவியமாகும். செய்தித் தாள்களைப் பல்வேறு வடிவங்களில் வெட்டி வைத்துக் கொண்டு அவற்றைப் பல்வேறு தோற்றங்கள் அமையுமாறு ஒட்டி ஓவியம் தயாரிப்பதை ஒட்டோவியம் என்பர்.
வெட்டப் பட்ட செய்தித் தாள் துண்டுகளை எண்ணெய் மற்றும் வண்ணக் கலவை இவைகளினால் ஈரமாக்கப் பட்ட ஓவியத் துணியில் ஒட்டித் தேவையான ஒட்டோவியங்களை உருவாக்குவர். செய்தித் தாள்களை வெட்டி அவற்றை வைத்து ஓவியம் படைப்பதை 1912 ஆம் ஆண்டில் கியூபிஸ்ட்ஸ் என்னும் ஒருவகை ஓவியர்கள் முதன் முதலாகப் பயன்படுத்தினர். இதனைப் பின்னாளில் வந்த ஃபியூச்சரிஸ்டுகளும், டாடா(dada)யிஸ்டுகளும் பயன்படுத்தினர். எம்.கே.முத்துச்சாமியும், கே.சி.முருகேசனும் ஒட்டோவியம் படைப்பதில் வல்லவர்கள்.
முத்துச்சாமி பெரும்பாலும் கிராமத்துக் கலைஞர்களைப் படைத்துக் காட்டுவார். உதாரணமாகக் குறி சொல்லுபவர்கள், கரகாட்டக்காரர்கள், சிலம்பாட்டக்காரர்கள் போன்றோரைப் படைத்துள்ளதைக் கூறலாம். சிலம்பாட்டக்காரன் என்ற ஓவியத்தில் அவனது கால்களில் ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு வகையான செய்தித்தாள் துண்டுகளைப் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் காலில் ஒரு அசைவை ஏற்படுத்துகிறார்.
நாட்டுப்புறக் கலை வடிவங்களை மேற்கத்தியப் பாணியில் படைத்துக் காட்டுவது இவரது தனிச்சிறப்பாகும்.
கே.சி. முருகேசனின் ஒட்டோவியம்
தைல வண்ண ஓவியம் வரைவதில் தலைசிறந்த இவர் ஒட்டோவியம் தயாரிப்பதிலும் சிறந்து விளங்குகிறார். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை நிலை நிறுத்தும் வகையிலும், இந்தியக் கலாச்சார மரபைச் சிறப்பிக்கும் வகையிலும் பல ஒட்டோவியங்களை இவர் படைத்துள்ளார்.
சமய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இவர் உருவாக்கிய ஒட்டோவியம் ஒரு கருத்துப் பேழையாகும். இதில் கோயில், மசூதி, மாதா கோயில், குருத்வாரா ஆகிய அனைத்துக் கோயில்களும் இடம் பெற்றுள்ளன. சுற்றிலும் பல்வேறு சமய மக்கள் நின்ற படியும் நடுவே மூவண்ணக் கொடி யோடு இந்தியத் தாய் நின்ற படியும் உள்ள காட்சி அருமையாக அமைந்துள்ளது.
கோட்டோவியம்
கோடுகளால் மட்டும் வரையப்படும் ஓவியம் கோட்டோவியம் ஆகும். ஒவியர் சந்துரு கோட்டோவியம் வரைவதில் சிறந்தவர். இவர் வரைந்த எருது ஓவியம் பல சிறப்புகளைக் கொண்டதாகும். இவ்வோவியத்தில் ஓர் அரை வட்டம் காணப்படுகிறது. அதற்குள் தரையைக் கொம்புகளால் உரசும் மூர்க்கத்தனமான காளை வரையப்பட்டுள்ளது. காளையின் முதுகுப் பக்கத்திலிருந்து பார்த்தால் கிடைக்கும் காட்சி, பின் பக்கமிருந்து பார்த்தால் கிடைக்கும் காட்சி, வயிற்றிற்குக் கீழ்ப் பக்கமிருந்து பார்த்தால் கிடைக்கும் காட்சி என எல்லாக் கோணங்களும் ஒரே சித்திரத்தில் இடம் பெறுகின்றன. இக்கோட்டோவியத்தில் காளையின் சதைத் திரட்சி எங்கெங்கெல்லாம் இளகியிருக்கும், எங்கெங்குத் திரண்டிருக்கும் என்பதை மிக அழகுறச் சித்திரித்துள்ளார். மற்றொரு சித்திரத்தில் காளை ஒன்றைக் கூம்பு, உருளை, கன சதுரம் போன்ற வடிவங்களாலேயே படைத்திருக்கிறார்.
ஓவியர் வீர சந்தானத்தின் நாற்காலி கோட்டோவியம் புகழ்மிக்கதாகும். நாற்காலியை அவர் பலவிதமாக உருட்டியும், நிலை மாற்றியும் பார்வையாளர் மனத்தில் நாற்காலியின் பிம்பம் பாதிப்பை ஏற்படுத்துமாறு செய்திருக்கிறார். வண்ணங்கள் இன்றி வெறும் மையினால் இதனைச் சாத்தியம் ஆக்கியிருப்பது உண்மையில் ஒரு சாதனைதான். இந்த நாற்காலி என்பது பதவிக்காக அலையும் அரசியல் வாதிகளை நையாண்டி செய்யும் விதமாக அமைந்துள்ளது.
ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் பற்றி முன்னர்க் கண்டோம்.
வண்ண ஓவியம்
வண்ணத்தினால் தீட்டி அவ்வண்ணத்தின் மூலம் ஓவியன் கூறவந்த கருத்தைப் பார்ப்பவர்களது மனத்தில் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பதியச் செய்வது வண்ண ஓவியம். இங்கு ஓவியர் கே.சி. முருகேசன் அவர்களின் வண்ண ஓவியங்கள் சிலவற்றைக் காணலாம்.
பூமயில்
நர்த்தன மயில் என்றோர் ஓவியம் வண்ணத் தோகை கொண்ட வனப்பு மிக்க மயிலின் நடனக் கோலத்தைக் காட்டுகிறது. மேலோட்டமாகப் பார்க்கின்ற போது பூக்களின் குவியலாகத் தோன்றுகிறது ; அந்தப் பூக்குவியலை உற்றுப் பார்க்கின்றபோது அங்கே அழகிய மயில் தோகை விரித்து ஆடுவதைக் காணலாம்.
தீப்பிடித்த போர்க்கப்பல்
இந்த ஓவியம் ஒரு பயங்கரக் காட்சியைப் பக்குவமாகக் காட்டுகிறது. கடல் நடுவே தீ்ப்பிடித்துக் கொண்ட ஒரு கப்பலின் நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கப்பலில் எரியும் தீயின் நிழல் கடல் பரப்பில் படுவது மிக இயற்கையாகக் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளது.
போரும் அமைதியும்
இந்த ஓவியம் 1991 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ஒருமைப்பாட்டிற்கான சிறப்புப் பரிசு பெற்றது. நீலம், சாம்பல், கறுப்பு, பழுப்பு, சிவப்பு போன்ற வண்ணங்கள் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்ட ஓவியம் இது. இது போர், அழிவு, போரை வெறுக்கும் பூவையர் நடத்தும் மௌனப் போராட்டம், மக்கள் போரால் வெளியேறும் அவலம் ஆகியவற்றைக் காட்டி அனைவரது உள்ளத்தையும் கவர்வது.
முட்டைக்குள் குஞ்சு உருப்பெற்ற காட்சியினை வண்ணச் சேர்க்கையில் பிரதிபலிக்கச் செய்துள்ள இவரது ஓவியம் சிறந்த வண்ண ஓவியத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
சமாதானம்
வீர. சந்தானத்தின் ஓவியம் ஒன்றில் போர்வாள் ஒன்றை அலகில் தாங்கிய, ஒரு கால் முடமாகிய பறவை ஒன்று துப்பாக்கிக் குழலின் முனை மீது அமர்ந்திருக்கிறது. கீழே மரத்தில் செய்யப்பட்டது போன்ற முகங்கள் சிறைக் கம்பிகளின் இடையே காட்டப்பட்டு உள்ளன. அவை மண்டை ஓடுகளைப் போல் தோற்றமளிக்கின்றன. கை விலங்குகளும், கம்பிகளுக்கு இடையே காணப்படுகின்றன. வானம் எங்கும் போர்க்குறிகள் நிரம்பியிருக்கும் அமைதியற்ற இன்றைய நிலையில் இவரது பறவை எங்கும் அலைந்து திரிகிறது. நம்பிக்கையின் அடையாளமாக அதற்குத் தானியக் கதிர் எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு இளைப்பாறக் கிளை ஏதும் கிடைக்கவில்லை. இளைப்பாறக் கிடைப்பதெல்லாம் துப்பாக்கிக் குழலின் முனைதான் என இன்றைய அமைதியற்ற உலகில் சமாதானத்தின் நிலையை இந்தப் புறாவின் மூலம் சித்திரித்துள்ளார்.
தமிழக ஓவிய நுண்கலைக் குழு என்னும் மாநில அரசின் அமைப்பு கலையின் முக்கியத்துவத்தை, அதன் வரலாற்றை, நவீன மாற்றங்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு நுண்கலை என்னும் இதழை வெளியீட்டு வருகிறது.
தென்மண்டலப் பண்பாட்டு மையம் என்னும் அரசின் அமைப்பு ஓவியப் பயிற்சி அளித்தல் முதலான பணிப் பட்டறைகளை நிகழ்த்தி வருகிறது.
தமிழகக் கலை வரலாற்றில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது சென்னையில், மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள சோழ மண்டல ஓவியக் கிராமம் என்னும் நிறுவனமாகும். இது 1966 ஆம் ஆண்டில் சுமார் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டது இவ்வமைப்பு. கே.சி.என். பணிக்கர் தலைமையில் சென்னையைச் சேர்ந்த பல்வேறு சிற்ப, ஓவியக் கலை அமைப்புகள் ஒன்று கூடி இந்த அமைப்பை நிறுவின.
சென்னையில் ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்தில் சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரி (Madras School of Arts and Crafts) நிறுவப்பட்டது. பிற்காலத்தில் இது சென்னைக் கலைக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது தமிழகத்தைச் சேர்ந்த நவீனச் சிற்ப, ஓவியக் கலைஞர்கள் பலரும் இக்கல்லூரியில் பயின்றவர்கள் ஆவர்.
நெசவாளர் பயிற்சி மையங்கள் என்னும் அரசு அமைப்பு, பயிற்சி பெற்ற நல்ல ஓவியர்களைக் கொண்டு இந்தியாவின் துணிகளின் வடிவமைப்பில் புதிய மாற்றங்கள் படைத்தது. இவை தவிரப், பயிற்சி பெற்ற கலைஞர்கள் சிலர் தனியார் பயிற்சிப் பள்ளிகளையும் நடத்தி வருகின்றனர்.

